மாதம்: ஒக்ரோபர் 2018

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 52

bowஅவந்தி நாட்டு அரசன் விந்தன் தன் தேரில் கௌரவப் படையின் எட்டாவது அக்ஷௌகிணியின் இரண்டாம் நிரையில் வில்லுடன் நின்றிருந்தான். சற்று அப்பால் அவனுடைய இரட்டையனும் அவந்தியின் இணையரசனுமாகிய அனுவிந்தன் அவனைப் போலவே கவசங்கள் அணிந்து, அவனுடையதே போன்ற தேரில் நின்றிருந்தான். விந்தன் அனுவிந்தனைவிட ஓரிரு நொடிகளே அகவையில் முந்தியவன். அந்த ஒரு நொடி அவன் அன்னையால் அவனுக்கு சொல்லப்பட்டது. உலகுக்கும் அவளால்தான் அது சொல்லப்பட்டது. தன் உள்ளத்தால் அவன் அதை பெருக்கிக்கொண்டான். நாழிகையும் நாளும் ஆண்டும் என்றாக்கி ஒரு முழு வாழ்நாள் என்றே வளர்த்துக்கொண்டான். தன்னை மூத்தவன் என்றும் இளையோனிடமிருந்து மதிப்பையும் வணக்கத்தையும் பெறவேண்டியவன் என்றும் கருதிக்கொண்டான்.

அந்த ஒரு கணமே அவனுக்கு மணிமுடியை அளித்தது. பட்டத்தரசியின் முதல் பேற்றில் ஆண் இரட்டையர் பிறந்துவிட்டால் அக்குழவிகளில் பிந்தி வருவதை கொன்றுவிடுவது அரசகுல வழக்கமாக இருந்தது. விந்தனும் அனுவிந்தனும் உடல்தழுவி ஒற்றையுடலென வெளிவந்தனர். அவ்வாறு நிகழுமென்றால், இரு குழவியும் சேர்ந்தே மண்ணிழியும் என்றால், இரு குழவிகளையும் அருகருகே போட்டு இரண்டுக்கும் பொதுவாக ஒரு பொற்கணையாழியை நூலில் கட்டி ஆடவிடுகையில் எந்தக் குழவியின் விழி முதலில் அந்தக் கணையாழியை பார்க்கிறதோ அதுவே அரசனென்று ஆகும் விழைவெனும் தகுதியைக் கொண்டது என்று முடிவெடுப்பது மரபு. அவர்களிருவரையும் அவ்வாறு படுக்கையில் படுக்க வைத்து பொன் மணி காட்டியபோது இருவருமே ஒரே தருணத்தில் அதை நோக்கி விழிசலித்தனர். வாயில் விரல் வைத்தபோது இருவரும் ஒரே விசையில் அதை நோக்கி தலையெழுப்பினர். உள்ளங்கால்களை கைகளால் வருடி நோக்கியபோது இருவருமே உடல் விதிர்க்க கால்களை விலக்கி தொட்ட கையை உதைத்தனர்.

சூழ நின்றிருந்த வயற்றாட்டிகள் திகைத்தனர். “அனைத்திலும் இணையானவர்கள், அரசி” என்று முதுவயற்றாட்டி காளிகை சொன்னாள். அன்னை இரு குழந்தைகளையும் மாறிமாறி நோக்கியபின் விந்தனைத் தொட்டு “இவன் ஒருகணம் மூத்தவன்” என்றாள். வயற்றாட்டி ஏதோ சொல்லவர உரத்த குரலில் “இவன் ஒருகணம் மூத்தவன்! ஆம், இவனே மூத்தவன்!” என்று அவள் சொன்னாள். வயற்றாட்டி “ஆம் அரசி, இவரே மூத்தவர்” என்றாள். வெளியே சென்று அங்கு காத்து நின்றிருந்த அரசரிடம் “இரட்டையர்! ஒருவர் ஒருகணம் மூத்தவர்!” என்று அறிவித்தாள். அரசரின் விழிகள் மாறுபட்டன. அருகே நின்றிருந்த அமைச்சர் “இரட்டையர் என்றால்…” என்று தொடங்க வயற்றாட்டி “ஒருவர் ஒருகணம் மூத்தவர்” என்று மீண்டும் சொன்னாள். அரசர் “ஆம்! ஒருகணம் எனினும் அது தெய்வங்களால் அளிக்கப்பட்ட பொழுது. அம்முடிவை எடுத்த நம் குடித்தெய்வங்களை வணங்குவோம்!” என்றார்.

அவந்தியின் எட்டு குடித்தலைவர்களுக்கும் பட்டத்து இளவரசர்கள் இரட்டையராக இருப்பது எதிர்காலத்தில் பெரும்பிழையென ஆகக்கூடும் என ஐயமிருந்தது. முன்வரலாறுகள் தீய விளைவுகளையே காட்டின என நூலறிந்தோர் கூறினர். நிமித்திகர்களும் நன்று சொல்லவில்லை. ஊரில் அதைப் பற்றிய பேச்சுகள் இருப்பதை ஒற்றர்கள் அவந்தியின் அரசரிடம் வந்து சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆயினும் ஒருகணம் மூத்தவன் என்ற ஒற்றை வரியால் அரசி அவ்விருவரையும் காத்தாள். அவர்கள் இருவரும் ஆடிப்பாவைகளென வளர்ந்தனர். களிப்போரில், சொல்லவையில், கானாடலில் ஒருவரை ஒருவர் முற்றிலும் நிகர்த்தனர். ஒருவனை மற்றவன் என்று பெற்றஅன்னையும் எண்ணும் வண்ணம் ஒன்றுபோல் இருந்தனர்.

அன்னையே அவர்களிடம் ஆள்மாறி உரையாடினாள். ஒருமுறை விந்தனிடம் “இளையவனே, நீ ஒருகணம் இளையவன் என்பதை உன்னுள் வாழும் ஏதோ ஒன்று எதிர்க்கிறது என்று நான் அறிவேன். அதை வெல்க! ஒருகணமும் அது உன் எண்ணங்களையும் செயல்களையும் ஆட்டிவைக்கலாகாது. எவ்வகையிலோ உன் மூத்தவன் உன்னுள் வாழும் அவ்வெண்ணத்தை அறிந்துகொண்டிருப்பான் என்பதை உணர்ந்துகொள். அது அங்கிருக்கும் வரை நீ அவனுக்கு எதிரியாவாய். உடன்பிறந்தாரைப்போல சிறந்த எதிரி பிறிதெவருமில்லை. ஆகவே அவ்வெதிர்ப்பு நாளுமென பெருகும். அழியா வஞ்சமென்றாகும். உன் நீண்ட வாழ்நாளுக்காகவும் என் முதல் மைந்தன் பழி சூடலாகாது என்பதற்காகவும் இதை சொல்கிறேன்” என்றாள்.

சற்று துணுக்குற்றாலும் விந்தன் அத்தருணத்தில் தான் விந்தன் என்பதை அன்னைக்கு அறிவிக்காமல் “அவ்வண்ணமே, அன்னையே. என்றும் நான் இளையோன் என்றே இருப்பேன்” என்றான். ஆனால் அதன் பின் அனுவிந்தனில் உறையும் அந்த மீறலை ஒவ்வொரு கணமும் அவன் நோக்கிக்கொண்டிருந்தான். எந்த அவையிலும் அவன் ஒரு சொல்லெடுத்தால் மறுகணமே அதன் நீட்சியென்றோ மறுப்பென்றோ அனுவிந்தனின் சொல் எழுந்தது. அவன் செய்த எதையும் அனுவிந்தன் செய்யாமல் இருந்ததில்லை. ஒருமுறை காட்டில் எதிர்வந்த பன்றியொன்றின் மீது அம்பு தொடுத்து பன்றி வீழ்ந்ததும் ஏதோ ஒரு எண்ணம் தோன்ற விந்தன் தன் ஏவலனை அழைத்து அதில் எத்தனை அம்புகள் தைத்திருக்கின்றன என்று பார்க்கச்சொன்னான். “பன்னிரு அம்புகள், அரசே!” என்றான் ஏவலன். அவர்கள் இருவர் அம்புகளிலும் வெவ்வேறு அடையாளங்கள் உண்டு. “அவை எவருடையதென்று பார்” என்று அவன் சொன்னதும் ஏவலன் புன்னகைத்து “பார்க்கவேண்டியதே இல்லை. ஆறம்புகள் தங்களுடையவை ஆறம்புகள் தங்கள் இளையவருடையவை” என்றான். கைசுட்டி அவனை அகற்றிவிட்டு விந்தன் புரவியில் மேலே சென்றான்.

அன்று காட்டில் பாறை ஒன்றின் மீது அமர்ந்து வேட்டை உணவை உண்டு ஓய்வெடுக்கையில் விந்தன் அனுவிந்தனிடம் “இளையோனே, நான் இயற்றும் ஒவ்வொன்றையும் நீயும் இயற்றியாக வேண்டுமென்று ஏன் எண்ணுகிறாய்? என் சொல்லும் செயலும் ஒருமுறைகூட உன்னில் மீண்டும் நிகழாதிருந்ததில்லை” என்றான். அனுவிந்தன் நகைத்து “இதை மட்டுமே தாங்கள் நோக்கியிருக்கிறீர்கள். தாங்கள் சொன்ன இதையே நானும் சொல்ல இயலும். ஒரு சொல்லோ செயலோ என்னிலிருந்து வெளிப்பட்டால் அதன் தொடர்ச்சியும் மறுப்பும் உங்களிடமிருந்து உடனே வெளிப்படுகிறது. நான் சொன்ன ஒரு சொல்லையேனும் சொல்லாமல் நீங்கள் இதுநாள் வரை இருந்ததில்லை” என்றான். சீற்றத்துடன் விந்தன் “நான் மூத்தவன், என்னை நீதான் தொடர்கிறாய்” என்றான். “தங்களைவிட ஒரு மாத்திரை உடல்விசையும் உளவிசையும் மிகுந்தவன் நான். ஆகவேதான் தாங்கள் என்னை தொடர்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்” என்றான் அனுவிந்தன். எழும் சினத்தை அடக்கிக்கொண்டு விந்தன் மேலும் சொல்லெடுக்காமல் தவிர்த்தான்.

அதன் பிறகு அவன் அனுவிந்தனுடன் இணைந்து இருப்பதை பெரும்பாலும் தவிர்த்தான். அரசவையில் அவனுக்கும் அனுவிந்தனுக்கும் இரு வேறு இருக்கைகள் போடப்பட்டன. களரியில் வேறுவேறு பொழுதுகளில் முற்றிலும் வேறு ஆசிரியர்களிடம் பயின்றனர். ஆண்டுக்கு இருமுறை அவந்தியில் நடக்கும் அரச கொலுத்தோற்றத்தில் மட்டுமே அவர்களிருவரும் அருகருகே அமர்ந்தனர். அப்போதும் தான் பட்டத்து இளவரசன் என்பதனால் தன்னுடைய மணிமுடியில் சற்று பெரியதாக மேலும் ஒரு வைரம் பதித்தாகவேண்டுமென்றும் தோற்றத்தில் தான் தனித்துத் தெரிந்தாக வேண்டுமென்றும் அவன் அணிச்சேவகரிடம் ஆணையிட்டான் ஆயினும் அவனை அனுவிந்தன் என்று எண்ணி பேசுபவர்கள் ஒவ்வொரு நாளும் இருந்தனர். ஏவலரோ குடிகளோ அவ்வாறு பேசினால் அக்கணமே அவன் சினம்கொண்டு அவர்களை எதிர்கொண்டான். எளியோரை தண்டித்தான், பெரியவர்களை சிறுமைசெய்தான். ஆனால் தந்தையும் தாயும் ஒவ்வொரு நாளும் அப்பிழையை இயற்றுகையில் அவனால் அதற்கு மறுமொழி சொல்ல இயலவில்லை.

இருவரும் படைக்கலக்கல்வி முடித்து குண்டலம் அணிந்ததும் அவன் முதலமைச்சர் வில்வரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து தாங்கள் இருவரும் ஒரே நகரியில் இணையான அரசுநிலையில் இருப்பதை விரும்பவில்லை என்றும் இருவரும் எப்போதும் பிரிந்தே இருப்பதற்கான அமைப்பை உருவாக்குவதே அவந்தியின் எதிர்காலத்திற்கு நல்லதென்றும் சொன்னான். அவரே அதை முன்னரே உணர்ந்திருந்தார். “ஆம், நான் எண்ணியவைதான் இவை. அரசரிடம் நானே கூறுகிறேன்” என்றார். “ஒவ்வொருநாளும் உங்களுக்குள் உருவாகிவரும் அகல்வை உணர்கிறேன். விலகல் உருவானதுமே முற்றகல்வு நிகழ்ந்ததென்றால் இடரில்லை. விலகலை ஒவ்வொரு நாளும் இருவரும் எண்ணி வளர்க்கிறீர்கள். இனி கசப்புகளையும், பகைமையையும் உருவாக்கிக்கொள்வீர்கள். உளவிலகல் திறந்த புண், அது சீழ்பிடிப்பதற்கு காத்திருக்கிறது” என்றார் வில்வர்.

வில்வரின் சொல்லை அரசர் ஏற்றார். விந்தன் அவந்தியின் பட்டத்து இளவரசனாக முடிசூட்டப்பட்டான். அனுவிந்தனுக்கு உத்தர அவந்தியின் பிரபாவதி நகர் தலைநகராக அளிக்கப்பட்டு அங்கு அரசனின் ஆணைக்கோல் கொண்டவனாக ஆட்சி செய்ய அனுப்பப்பட்டான். அதன் பின்னர் ஆண்டுக்கு ஒரு முறை குடிமூத்தார் வணக்கத்தின்பொருட்டு மட்டுமே அனுவிந்தன் தலைநகருக்கு வந்தான். அன்று அந்தியில் கூடும் குடிசூழ் அவையில் மட்டுமே அவன் விந்தனின் அருகே அரசத்தோற்றம் கொண்டு அமர்ந்தான். அன்று மட்டுமே அவர்கள் ஒருவரோடொருவர் ஓரிரு சொற்கள் பேசிக்கொண்டனர். அப்போதும் ஒருவர் விழியை ஒருவர் நோக்கிக்கொள்ளவில்லை. அவர்களிடையே ஒரு வெறுப்புச் சொல்கூட பேசப்பட்டதில்லை. ஒருமுறைகூட முகம்கசந்த நோக்கு எழுந்ததில்லை. ஆகவே அவ்விலக்கம் மேலும் அழுத்தமானதாக இருந்தது. அவர்கள் அவ்விலக்கத்தையே நாணுபவர்கள்போல அத்தருணத்தை சில நொடிகளில் கடந்துசெல்ல விழைந்தார்கள்.

ஆனால் ஒவ்வொரு நாளும் அனுவிந்தனைப் பற்றிய செய்திகள் விந்தனின் செவியை வந்தடைந்தன. அவை எவ்வாறு தன்னை தேடி வருகின்றன என்று அவன் எண்ணி வியந்ததுண்டு. பின்னர் தெரிந்துகொண்டான், பல்லாயிரம் சொற்களில் அனுவிந்தனைப் பற்றிய சொற்களை மட்டும் தொட்டெடுக்கும் நுண்செவியொன்று தனக்கிருப்பதை. நகருலா செல்லும்போது சந்தையில் பலநூறுபேர் கலந்து பேசும் கலைந்த முழக்கத்தின் நடுவே அனுவிந்தர் என்ற சொல் ஒலிக்குமென்றால் அவன் உள்ளம் அங்கு நோக்கி சென்றது. அனுவிந்தனிடமிருந்து தனக்கு விடுதலையில்லை என்பதை அவன் உணர்ந்துகொண்டான். அமைச்சரிடம் “இதுநாள்வரை அவனிடமிருந்து உளம் விலக முயன்றேன். அது இயலாதென்று இப்போது தெரிகிறது. என் ஆற்றலனைத்தும் அம்முயற்சியிலேயே வீணாகின்றன. நான் முழுமைகொண்டு ஆற்றலுடன் எழ என்ன செய்யவேண்டும்?” என்றான்.

வில்வர் “அரசநெறியின்படி நீங்கள் அவரை அழிக்கவேண்டும். ஆனால் ஒருதுளியும் எஞ்சாது அழிக்கத்தக்க எதிரியையே அழிக்கவேண்டும் என்கின்றன நூல்கள். அவரை அழித்தால் ஒன்றுணர்வீர்கள், உங்கள் ஆற்றலில் பாதி அழிந்திருக்கும். ஏனென்றால் அவர் உங்களில் பாதி. உங்களில் எஞ்சும் பாதி அனைத்து இடங்களிலும் நிலைபிறழ்ந்திருக்கும்” என்றார். “ஆகவே ஒன்றே செய்யக்கூடுவது, அவரை விழுங்கி நீங்களாக ஆக்கிக்கொள்வது. ஒருவரை விழுங்கி நாமாக்கிக்கொள்வதற்குரிய சிறந்த வழி என்பது அன்புதான்” என்றார் வில்வர். “அன்பா? அவனிடமா?” என்று விந்தன் கேட்டான். “அன்பிலாத ஒன்றையே இருபத்திரண்டு ஆண்டுகளாக கணமும் எண்ணிக்கொண்டிருக்க இயலுமா என்ன? அவ்வாறு எண்ணிக்கொண்டிருப்பதனாலேயே அவர் மேல் நம்முள் அன்பு எழாதிருந்திருக்குமா என்ன? ஒரு தொழுவில் அருகருகே கட்டப்பட்டால் எந்தப் புரவியும் ஒரு வாரத்திற்குள் உடல் ஒருங்கிணைவும் உள இசைவும் கொள்வதை கொட்டில்காவலர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்” என்றார் வில்வர்.

விந்தன் சோர்ந்து இருக்கையில் சாய்ந்தான். “அவர் மேல் நீங்கள் கொண்ட அன்பை மறைப்பவை இரண்டு கூறுகளே. ஒன்று உங்கள் முதன்மையை அவர் முழுதேற்கிறாரா எனும் ஐயம். பிறிதொன்று உங்கள் முடிக்கும் உங்கள் கொடிவழியின் உரிமைக்கும் எதிராக அவரோ அவர் குடியோ குருதியினரோ எழுவார்களோ எனும் அச்சம்.” விந்தன் “அவை மெய்யான அச்சங்கள்தானே? அதுதானே உலகத்தியற்கை?” என்றான். “ஆம், மீள மீள உடன்பிறந்தாரின் உரிமைப்போர் பாரதவர்ஷத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒருபோதும் அது ஓயாது. இன்று அவர் உங்களுக்கு சொல்லளிக்கலாம், ஆனால் வரும் தலைமுறையினரை அவர் சொல் ஆளுமென சொல்லவியலாது. ஆயினும் அனைத்தையும் தெய்வங்களுக்கு ஒப்படைத்து உங்கள் இளையோனை ஆரத்தழுவிக்கொள்வதொன்றே இத்தருணத்தில் செய்யக்கூடுவது” என்றார் வில்வர்.

“நான் என்ன செய்ய வேண்டும் இப்போது?” என்றான் விந்தன். “அமைச்சனாக நான் சொல்வது படைகொண்டுசென்று அவரை வென்று உங்களை முழுதமைத்துக்கொள்ளுங்கள். அவரைக் கொன்று, அவர் இருந்த தடயங்களே இல்லாமல் செய்யுங்கள். ஒரு சொல்கூட அவருடையதென இப்புவியில் எஞ்சலாகாது. அவருக்கிருந்த அனைத்தையும் நீங்கள் அடையுங்கள். அவரை இழந்தமையால் உருவான குறைவுகளை ஈட்டி நிறையுங்கள்” என்றார் வில்வர். “அந்தணனாக நான் சொல்வது அவரை அள்ளி அணைத்து அருகமரச் செய்யுங்கள். அவர் உங்கள் மணிமுடிக்கும் கோலுக்கும் விழைவு கொண்டால் அதை அவருக்கே உளமுவந்து அளியுங்கள். அவர் உங்கள் தலையறுத்திடத் துணிந்தால் தலைகொடுக்கும் கனிவை அடையுங்கள். தமையன் என்பவன் அணுக்கம் கொண்ட தந்தையே” என்றார் வில்வர்.

விந்தன் சினத்துடன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான்.  வில்வர் “நீங்கள் தமையனென்றானால் அவர் உங்கள் தம்பி என்றாவார். கௌரவ நூற்றுவர் எப்படி ஓருடலும் ஓர் எண்ணமுமாக இருக்கிறார்கள் அறிவீர்களா? அந்நூற்றுவரில் ஒருவர் சென்று துரியோதனரிடம் மூத்தவரே அம்மணிமுடியையும் செங்கோலையும் எனக்கு அளியுங்கள் என்று கேட்பார் என்றால், ஏன் அவ்வாறு அவர் உள்ளாழத்தில் விழைகிறார் என்று தெரிந்தால், மறுஎண்ணமின்றி எழுந்து அவற்றை தம்பிக்கு அளிக்கும் தகைமை கொண்டவர் துரியோதனர். அதை நன்கறிவர் தம்பியர். ஆகவே அத்தம்பியர் அவருக்காக இந்நாநிலத்தை வெல்வார்கள். தேவையெனில் களத்தில் வீழ்வார்கள்” என்றார் வில்வர்.

“இது வீண் பேச்சு. மண்விழைவு கொள்ளாத ஷத்ரியன் எங்குளான்?” என்றபடி விந்தன் எழுந்தான். “மண்விழைவும் பொருள்விழைவும் ஷத்ரியர்களை ஆக்குகின்றன. ஆனால் பேரரசர்கள் உறவின் ஆற்றலால் தங்கள் அரியணையை உறுதி செய்துகொண்டவர்கள். ஒருவனுக்காக பல்லாயிரம் பேர் உயிர் கொடுக்கத் துணிகையிலேயே அவன் பேரரசனாகிறான். எவரும் வீணாக உயிர் கொடுப்பதில்லை. ஒருவனுக்காக அத்தனை பேர் உயிர் கொடுக்கிறார்கள் என்றால் அதற்கான தகுதியை எங்கோ அவன் ஈட்டிக்கொண்டிருக்கிறான் என்றே பொருள்” என்றார் வில்வர். “அவர்களுக்காக அவன் உயிர்கொடுப்பான் என்பதே அத்தகுதி.” “வீண்பேச்சு, எந்த விலங்கும் தன் தலையை தானே எதிரிக்கு கொடுப்பதில்லை” என்றபடி அவன் வெளியே சென்றான்.

ஆனால் அன்று இரவு முழுக்க விந்தன் அதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தான். எண்ண எண்ண நம்பிக்கையின்மையும் கசப்பும்தான் பெருகின. ஆனால் அவன் துணைவி சுதமதி “அமைச்சர் சொல்வதே நன்று என நினைக்கிறேன்” என்றாள். “நீங்கள் உங்கள் தம்பியை உடனமர்த்தி இணைநிலை அளிக்கும்போது மட்டுமே ஆற்றல் கொண்டவர்களாகிறீர்கள். இப்போது இருவருக்குமிடையே இருக்கும் தொலைவு அச்சுறுத்துவது. இதை மாளவரோ விதர்ப்பரோ பயன்படுத்திக்கொள்வார்கள் என்றால் மிக எளிதாக நம் நாட்டை இரண்டாக உடைத்துவிட முடியும்” என்றாள். அவ்வெண்ணம் ஏற்கெனவே விந்தனிடம் இருந்தது என்பதனால் அவனை அச்சொற்கள் அறைந்தன. “அவ்வண்ணம் அவர் எதிரியானால் உங்களை நீங்களே எதிர்ப்பவராவீர்கள்” என்றாள் சுதமதி.

சினந்தெழுந்து “இது தொல்புகழ் அவந்தி! கார்த்தவீரியனின் குருதியில் ஜயத்வஜனின் குடியென எழுந்தது என் அரசகுடி. ஒருபோதும் இது வீழாது. நீ பிறந்தெழுந்த மச்சநாட்டு குடிப்போர்களை இங்கு எண்ணிக்கொள்ள வேண்டியதில்லை” என்று கைவீசி அவளை விலக்கி மேலாடையை எடுத்து அகத்தளத்திலிருந்து வெளியேறி தன் அறைக்கு வந்தான். மூக்குவழி வார மது அருந்தியபடி அரண்மனை மஞ்சத்தில் கிடக்கையில் அவள் சொற்களே அவன் உள்ளத்தை சூழ்ந்துகொண்டிருந்தன. அவை முற்றிலும் உண்மை என்று அவன் அறிந்தான். காலையில் எழுந்து சிப்ரையின் ஒழுக்கின்மேல் பெருகிய காற்றில் வெண்பறவைகள் மிதந்துசெல்வதை நோக்கி நின்றிருந்தபோது ஒரு முடிவுக்கு வந்தான். அந்தக் காலை அத்தனை இனிதாக, அமைதியாக இருந்ததனால் மட்டுமே அவன் அகம் சென்றடைந்தது அம்முடிவு.

அமைச்சரை தன் அறைக்கு அழைத்து “தங்கள் எண்ணத்தையே நானும் உளம்கொண்டிருக்கிறேன், அமைச்சரே. நாம் இப்போது என்ன செய்யலாம்?” என்று உசாவினான். “இங்கு குடிமூத்தாருக்கான ஒரு பலிபூசனை நிகழவிருக்கிறது. அதற்கு அனுவிந்தரை அழையுங்கள். அவருக்கு இணையாக அரசமருங்கள். இணையரசர் அவரென்று உங்கள் நாவால் நீங்களே அறிவியுங்கள். அனுவிந்தர் இனி தனிநகர் கொண்டு எல்லையில் அமரக்கூடாது. இங்கு உங்கள் உடனிருக்கட்டும். அரசப் பொறுப்புகளை, படைகளை, கருவூலத்தை அனைத்தையுமே அவருக்கும் உரிமையாக்குங்கள். எதுவும் எஞ்சவிடவேண்டியதில்லை. தயக்கமோ ஐயமோ இன்றி இதை செய்ய முடிந்தால் உங்கள் இணையாற்றல் என்று உடனிருக்கும் தம்பி ஒருவரை பெறுவீர்கள். அவரும் நீங்களேதான் என்பதனால் உங்கள் ஆற்றலனைத்தும் முழுமை பெறுவதை காண்பீர்கள்.” “அவனை நான் எவ்வாறு நம்புவது?” என்று விந்தன் கேட்டான். “உறவை நம்புவதும் தெய்வத்தை நம்புவதும் ஊழை நம்புவதும் ஒன்றே” என்றார் வில்வர்.

உஜ்ஜயினியிலிருந்து தமையனின் அழைப்பு வந்தபோது அனுவிந்தன் வியப்பும் ஐயமும் கொண்டதாகவும் தன் அணுக்கர்களை அழைத்து அரண்மனையில் அவையில் அமர்ந்து அவ்வழைப்பின் பின்னுள்ள நோக்கமென்ன என்று உசாவியதாகவும் ஒற்றர் செய்தி வந்தது. அவன் அணுக்கர்களில் நால்வர் அது அனுவிந்தனை கொல்லவோ சிறைப்படுத்தவோ செய்யப்பட்ட சூழ்ச்சியாக இருக்கலாம் என்றனர். ஒருபோதும் தலைநகரைவிட்டு செல்லக்கூடாதென்றும், தன் படைகளனைத்தையும் எல்லைகளிலிருந்து அழைத்து சூழ்ந்து நிறுத்தி உறுதியான காவலுக்குள்தான் அவன் என்றுமிருக்கவேண்டும் என்றும் இரு படைத்தலைவர்கள் கூறினார்கள்.

ஆனால் அங்கு அவனுடைய அமைச்சராக இருந்த சுதபஸ் “அரசே, ஐயம்கொள்ளத் தொடங்கினால் எஞ்சிய வாழ்நாள் முழுக்க ஐயத்தை பெருக்குவீர்கள். ஐயம் நஞ்சென அனைத்து எண்ணங்களிலும் ஊடாடும். உங்கள் செயல்கள் அனைத்திலும் ஊடாடும். நீங்கள் பார்ப்பவை அனைத்தும் திரிபடையும். உங்கள் மூத்தவருக்கும் உங்களுக்குமிடையே ஒருபோதும் உறவு சீரடையாது. இன்று ஒரு துளி ஐயம்கொண்டீர்கள் என்றால் அவந்தியை இரண்டாக உடைக்கும் பணியை தொடங்கிவிட்டீர்கள் என்று மட்டுமே பொருள். உடைந்த அவந்தி வாழ இயலாது. இரு துண்டுகளையும் மாளவமும் விதர்ப்பமும் எடுத்துக்கொள்ளும். நீங்கள் இருவருமே அண்டை அரசர்களுக்கு அடிபணிந்து கப்பம் கட்டுபவர்களாக மாறுவீர்கள். உங்கள் கொடிவழியினர் தொழும்பர்களாவார்கள். இவை அனைத்தும் தேவையெனில் இம்முடிவை எடுங்கள். இக்கணம் உங்களுடையது” என்றார்.

அனுவிந்தன் அரியணையில் தளர்ந்து அமைந்து உளம்தவித்தபின் நொய்ந்த குரலில் “நான் என்ன செய்யவேண்டும், அமைச்சரே? நீங்களே பொறுப்பேற்று சொல்லுங்கள்” என்றான். “அந்தணர் உலகியலுக்கு பொறுப்பேற்கலாகாது. தங்கள் சொல்லுக்கு மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். ஆயினும் இத்தருணத்தில் இவ்வரசியலுக்கு முழுப் பொறுப்பேற்று சொல்கிறேன், சென்று உங்கள் மூத்தவரின் காலடியில் அமர்க! அவர் உங்கள் தலைமேல் மணிமுடியை வைக்கலாம். கழுவேற்ற ஆணையிடவும் செய்யலாம். எதுவாயினும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். தெய்வங்களிடம் நாம் கொண்டுள்ள உறவும் அத்தகையதல்லவா? அழிக்கும் ஆற்றலும் உரிமையும் கொண்டவரின் அன்பு பேராற்றல் கொண்டது” என்றார் சுதபஸ்.

மறுநாள் அனுவிந்தன் தன் படைகளுடன் கிளம்பி உஜ்ஜயினிக்கு வந்தான். அவனை அரண்மனை முகப்பில் எதிர்கொண்ட விந்தன் இரு கைகளையும் விரித்து நெஞ்சோடு தழுவி “இதுநாள்வரை அறியாத ஐயங்களாலும் அச்சங்களாலும் ஆட்டுவிக்கப்பட்டேன், இளையவனே. அவ்வெடையை எத்தனை நாள் சுமப்பதென்று என் உள்ளம் தவித்தது. என்னால் ஒருகணமும் நிறைவுற்று அமரவோ உறங்கவோ இயலவில்லை. கவலைகள் மிகுந்து தாள முடியாமல் ஆகும்போது ஒருகணத்தில் முழுக் கவலையையும் நம்மிலிருந்து இறக்கி விட்டுவிடுகிறோம். அதைத்தான் செய்யவேண்டுமென்று எண்ணினேன். ஆகவேதான் உன்னை அழைத்தேன்” என்றான். அவன் காய்ச்சல்கண்டவன்போல் நடுங்கிக்கொண்டிருந்தான்.

கண்ணீருடன் கைகூப்பி நின்ற அனுவிந்தனை தோள்பற்றி முகம் நோக்கி விந்தன் சொன்னான் “எந்தச் சுற்றுச்சொல்லும் இல்லாமல் நேரடியாகவே இதை உரைக்கிறேன். இன்றுவரை என் அரியணைக்கும் கோலுக்கும் நீ விழைவு கொள்வாய் என்றும் என் கொடிவழியினருக்கு குருதியினரின் எதிர்ப்பிருக்குமோ என்றும் நான் கொண்ட ஐயமே என்னை ஆட்டிவைத்தது. இன்று உன்னை என் இணையரசனாக அரியணையில் அமர்த்த முடிவு செய்திருக்கிறேன். நீயோ உன் கொடிவழியினரோ விரும்பினால் முழுதுரிமையையும்கூட பெறமுடியும். எனக்கு மாற்றுச் சொல்லில்லை.” அழுதபடி சரிந்து அமர்ந்து தலையை விந்தனின் பாதங்களில் வைத்து “மூத்தவரே, இணையரசன் என்றல்ல தங்கள் இளையோன் என்றும் அடிமையென்றும் இருப்பதே எனக்கு உகந்தது” என்றான் அனுவிந்தன். விழிநீருடன் அவனை அள்ளி நெஞ்சோடணைத்துக்கொண்டான் விந்தன்.

அந்தச் சொற்கள் அக்கணத்தில் தன் நாவில் ஏன் எழுந்தன என்று அவன் பின்னர் எண்ணி நோக்கியதுண்டு. முற்றத்திற்குச் சென்று நிற்கும்வரை ஐயமும் அலைக்கழிப்பும் கொண்டவனாகவே இருந்தான். பிழை நிகழ்ந்துவிடக்கூடும் என்ற எண்ணம் மேலும் மேலும் வலுத்துக்கொண்டிருந்தது. முற்றத்திலிருந்து மீண்டும் தன் அவை நோக்கி திரும்பி இளையோனை அங்கு வரச்சொல்லிவிட வேண்டுமென்று எண்ணிக்கொண்டு அவ்வெண்ணத்துடன் போரிட்டுக் கொண்டிருக்கையிலேயே அனுவிந்தன் முற்றத்திற்குள் நுழைந்தான். கைவிரித்து அவனை நெஞ்சுதழுவ அழைத்ததுகூட அவன் எண்ணியதனால் அல்ல, அவன் உடலே அதை நிகழ்த்தியது என்று தோன்றியது. நெஞ்சோடு அவன் உடலை அழுத்திக்கொண்டபோது அவன் உள்ளிலிருந்து பிறிதொருவன் எழுந்ததுபோல சொற்கள் கூறப்பட்டன.

அமைச்சரிடம் அதைப்பற்றி கேட்டான். “நீங்கள் இருவரும் உடலால் இணைந்தவர்கள், அரசே. ஒவ்வொரு நாளும் உடல் தழுவிக்கொள்க! ஒவ்வொரு நாளும் ஒருமுறையேனும் தொட்டுக்கொள்க! எங்கு அமர்ந்திருந்தாலும் உங்கள் உடல்கள் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். சொற்களால் உணராததை தொடுகையால் பகிர்வீர்கள். கருவறைக்குள் நீங்கள் ஒன்றென இருந்தீர்கள். அங்கு அவ்வாறு இருந்த பெருமகிழ்வையும் முழு விடுதலையையும் இங்கும் உணர்வீர்கள். இரட்டையர் என்று இருப்பது பெரும்பேறு. இருவரும் ஒன்றாக முடியுமெனில் அதுவே பெருங்களிப்பு” என்றார் வில்வர்.

ஓரிரு நாட்களில் விந்தன் கண்டுகொண்டான் அனுவிந்தன் அருகிருக்கையில் தன் உள்ளம் கொள்ளும் பெரும் விடுதலையை. உடற்தசைகள் அனைத்தையும் அழுத்தியிருந்த எடைகள் விலகின. களிப்பும் சிரிப்பும் கொண்டவனாக அவன் மாறினான். அரசி “உங்கள் முகத்தில் இப்புன்னகையை நான் என்றுமே பார்த்ததில்லை” என்றாள். ஏவலர்கள் அவனை அணுகுகையிலேயே முகத்தில் புன்னகை விரிய வணங்கினர். குடிகள் அவன் பெருங்கருணையுடன் மட்டுமே அவையமர்ந்து முடிவுகள் சொல்வதாக சொன்னார்கள். அறத்தின் தெய்வம் அவனுள்ளில் இருந்து எழுந்துவிட்டதென்று சூதர்கள் கூறினார்கள். இளையோன் வாள் என்றும் மூத்தவர் அதன் பொற்பிடி என்றும் கவிஞர் பாடினர். அவர்கள் இருவரின் ஆட்சியில் அவந்தி வெற்றியும் புகழும் அடைந்தது.

தொலைவில் போர் தொடங்கவிருப்பதற்கான முரசுகள் முழங்கின. அனுவிந்தன் திரும்பி அவனிடம் செல்வோம் என்று கைகாட்டினான். விந்தன் “இளையோனே, இப்போரில் நாம் எந்த இழப்புமின்றி திரும்ப உளம் கொண்டுள்ளோம். இன்று மாலை போர் நிறுத்தம் குறித்து தார்த்தராஷ்டிரரிடம் பேச விரும்புகிறோம். அதை எண்ணி உன் அம்புகள் எழட்டும்” என்றான். பேரோசையுடன் கௌரவப் படைகள் பாய்ந்து முன்னெழுந்து பாண்டவப் படையுடன் முட்டிக் கலந்தன.

காவியம்- சுசித்ரா, வெண்முரசு விவாதங்கள்

வெண்முரசு விவாதங்கள்

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 51

bowயுயுத்ஸு அவையை நோக்கியபடி கைகட்டி அமர்ந்திருந்தான். அவையிலிருந்த அமைதியில் அவ்வப்போது எவரோ பெருமூச்செறிவதோ இருமுவதோ மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. அறிவிப்பு ஏதுமில்லாமல் யுதிஷ்டிரர் வந்தமர்ந்ததும் முறைமைச்சொற்கள் இன்றி அவை போர்ச்செய்திகளை பேசத் தொடங்கியது. திருஷ்டத்யும்னன் அளித்த ஓலையை படைத்தலைவன் தீர்க்கபாகு படித்தான். யுதிஷ்டிரர் முகவாயை தடவியபடி அதை கேட்டிருந்தார். அவர் மிகவும் தளர்ந்திருந்தார். பீமனும் தளர்ந்தவன்போலிருந்தான். வழக்கமாக அவையில் நின்றுகொண்டிருக்கும் அவன் பீடத்தில் கால்நீட்டி அமர்ந்திருந்தான்.

முந்தையநாள் போரிலும் பாண்டவப் படைகளுக்கு மிகப் பெரிய இழப்புகள் அமைந்திருந்தன. பிரியதர்சனும் உத்தமௌஜனும் சத்ருஞ்ஜயனும் சுமித்ரனும் பாஞ்சால்யனும் சுரதனும் களம்பட்டதை தீர்க்கபாகு வாசித்தபோது துருபதர் பெருமூச்சுவிட்டார். அந்த ஓசை அவை முழுக்க கேட்டது. உத்தரமல்லநாட்டு தீர்க்கதந்தன் பெயர் சொல்லப்பட்டபோது துருபதரின் இருமலோசை கேட்டது. அனுபநாட்டு மூதரசர் விருத்தஷர்மரும் அவர் மைந்தன் வசுதனனும் இளையோன் நீலனும் கொல்லப்பட்டதை படித்தபோது நடுவே துருபதரின் இருமலோசை மட்டும் உரக்க ஒலித்தது. படைத்தலைவன் சற்று நிறுத்தி அவரை நோக்கினான். திருஷ்டத்யும்னன் எழுந்து சென்று துருபதரை அணுகி ஏதோ சொல்ல அவர் கைநீட்டி மறுத்தார். “மாண்டவர்கள் விண்ணின் ஒளியில் நிறைவுகொள்க! வீரர் பொன்னுலகு அவர்களுக்கு அமைக!” என்று படைத்தலைவன் படித்தான். அவையினர் “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றனர்.

அரக்கர் குலத்தலைவர்கள் வக்ரசீர்ஷரும் காகரும் இறந்த செய்தியை சொன்னதும் அரக்கர் குடித்தலைவர்கள் தங்கள் கோல்களை மேலே தூக்கி “மண்ணுள் உறங்குக! மண்ணுள் உறங்குக!” என்றனர். நிஷாதநிலத்து அரசர் மணிமானையும் அவர் மைந்தர் மணிகர்ணனையும் கீழ்நிஷாதநிலத்து அரசர் தண்டதரனையும் அவர் மைந்தர் சார்ங்கதரனையும் நிஷாதஅரசின் ஹிரண்யநாபனையும் அவன் இளையோன் ஹிரண்யபாகுவையும் படைத்தலைவன் நினைவுகூர்ந்தான். “மண்ணுள் உறங்குக! மண்ணுள் உறங்குக!” என நிஷாதர்களும் கிராதர்களும் வாழ்த்துரைத்தனர். மாண்டவர்களின் பெயர்கள் வந்துகொண்டே இருந்தன. துருபதர் இருமிக்கொண்டிருந்தார். திருஷ்டத்யும்னன் எழுந்து சென்று அவரிடம் அழுந்தப்பேசி அழைத்துக்கொண்டு வெளியே சென்றான். அவர் தொய்ந்த தோள்களும் நடுங்கும் கால்களுமாக செல்வதை அவை நோக்கி அமர்ந்திருந்தது.

யுதிஷ்டிரர் “நமக்கு பேரிழப்பு…” என்றார். சாத்யகி “நிகராகவே அவர்களுக்கும் இழப்புகள் உண்டு… நேற்று நம் இளையவர் பீமசேனர் கௌரவ மைந்தர்கள் இருநூற்றிமுப்பதேழுபேரை கொன்றார். அபிமன்யூ நாற்பத்துநான்கு பேரை கொன்றார். கௌரவர்கள் திருதசந்தனும் ஜராசந்தனும் துராதாரனும் விசாலாக்‌ஷனும் சுஹஸ்தனும் வாதவேகனும் பீமவிக்ரமனும் கொல்லப்பட்டார்கள். மகாபாகு, சித்ராங்கன், சித்ரகுண்டலன், பிரமதன், அப்ரமாதி, தீர்க்கரோமன்…” என்று தொடர யுதிஷ்டிரர் “போதும்!” என்று தலையை பற்றிக்கொண்டு சொன்னார். சாத்யகி அமரப்போக சிகண்டி “அல்ல. இளையோனே, நீ சொல்க! இது போரவை. நம் களவெற்றியைச் சொல்ல நாம் ஏன் அஞ்சவேண்டும்? சொல்க!” என்றார். சாத்யகி யுதிஷ்டிரரை நோக்கியபின் “தீர்க்கபாகுவும் சுவீரியவானும் சுவர்ச்சஸும் ஆதித்யகேதுவும் துஷ்பராஜயனும் அபராஜிதனும் சாருசித்ரனும் சராசனனும் சத்யசந்தனும் சதாசுவாக்கும் நேற்று கொல்லப்பட்டார்கள்” என்றான். “இத்தனை கௌரவர்கள் இதற்கு முன் பலியானதில்லை. ஏற்கெனவே அவர்கள் உளம் தளர்ந்திருக்கிறார்கள். மீண்டெழுவார்கள் என்று தோன்றவில்லை.”

ஆனால் பீமன் எந்த உணர்வையும் காட்டவில்லை. அங்கே நிகழ்ந்த உரையாடல்களை அவன் செவிகொண்டதாகவே தெரியவில்லை. “நம் படைசூழ்கையை திருஷ்டத்யும்னன் விளக்கட்டும்” என்று குந்திபோஜர் சொன்னார். திருஷ்டத்யும்னன் மின்கதிர்சூழ்கையின் அமைப்பைப் பற்றி விளக்கினான். நெடுந்தொலைவுக்கு உச்சவிசையில் குறைந்த நேரத்தில் தொடர்ச்சி அறுபடாது செல்லும் தன்மைகொண்டது அது. அதற்குரிய எவ்வடிவையும் எடுக்கலாம். கிளை பிரியலாம், வளைந்து சவுக்குச்சுழற்சியாகலாம், அம்பென நீண்டும் பாயலாம். அவன் அதை விளக்கியபோது எவரும் மாற்று உரைக்கவில்லை. ஐயங்களும் எழவில்லை. ஒவ்வொருவரும் சோர்வுற்றிருந்தனர். வேறு எவரோ இருமத்தொடங்கினார்கள். படைசூழ்கையை அவை ஏற்று ஓலையில் யுதிஷ்டிரர் கைச்சாத்திட்டதும் மீண்டும் அமைதி நிலவியது.

யுதிஷ்டிரர் யுயுத்ஸுவை பார்த்தார். யுயுத்ஸு எழுந்து தலைவணங்கி “அவையோரே, நம்முடன் படையில் சேர்வதற்காக உத்தர விதர்ப்பத்தின் போஜகடகத்தை ஆளும் அரசர் ருக்மி இன்று காலை நம் படைகளுக்குள் வந்துள்ளார். அவர் இளைய யாதவரை சந்தித்து வணங்கி ஒப்புதல் பெற்றுள்ளார். அவர் அவைக்கு வர ஒப்புதல் கோருகிறேன்” என்றான். மூன்றே சொற்றொடர்களில் அனைத்தையும் சொல்லிவிடவேண்டுமென அவன் எண்ணியிருந்தான். ருக்மியின் பெயரைச் சொன்னதுமே எழுந்த எதிர்ப்பு இளைய யாதவரின் பெயரால் இல்லாமலாகியது. சிகண்டி “அவருடைய நோக்கத்தை நான் ஐயப்படுகிறேன்” என்றார். அந்த நேரடிக் கூற்று அவையை திகைக்கச் செய்தது. யுதிஷ்டிரர் சினத்துடன் “அதை முடிவு செய்யவேண்டியவர் இளைய யாதவர், நாமல்ல” என்றார். “படையில் சேர்த்துக்கொள்ள வேண்டியவர் தாங்கள்” என்றார் சிகண்டி. “இல்லை, அதுவும் இளைய யாதவரின் முடிவே” என்றார் யுதிஷ்டிரர்.

அவையின் நோக்கு முழுக்க விதர்ப்ப இளவரசர்களை நோக்கி திரும்பியது. ருக்மரதனும் ருக்மகேதுவும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். ருக்மபாகுவும் ருக்மநேத்ரனும் அவைக்கு வந்திருக்கவில்லை. அவர்கள் குழம்பிய முகத்துடன் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டனர். நகுலன் “விதர்ப்பர்கள் இதைப்பற்றி தங்கள் எண்ணத்தை சொல்லலாம்” என்றான். ருக்மரதன் “நாங்கள் சொல்வதற்கேதுமில்லை. முடிவை அரசரே எடுக்கட்டும். அதற்கு எனக்கு முழு ஒப்புதலே” என்றான். சிலகணங்கள் மீண்டும் அவை தயங்கியது. அந்தத் தயக்கம் ஏன் என்று யுயுத்ஸுவுக்கு புரியவில்லை. திருஷ்டத்யும்னன் “அவ்வாறெனில் விதர்ப்ப அரசரை அவைக்கு அழைக்கலாமல்லவா?” என்றான். யுதிஷ்டிரர் ஒப்புதலளித்து தலையசைக்க சகதேவன் எழுந்து வாயிலுக்குச் சென்று நின்றான்.

ருக்மி உள்ளே வந்ததும் சகதேவன் தலைவணங்கி “விதர்ப்பத்தின் அரசருக்கு நல்வரவு… இந்த அவை தங்கள் வருகையால் நிறைவுகொள்கிறது” என்றான். ருக்மி அவனை வலக்கை தூக்கி வாழ்த்தி “நன்று திகழ்க!” என்றபின் யுதிஷ்டிரரை வணங்கி “உத்தரவிதர்ப்பத்தின் போஜகடகத்தின் அரசனாகிய ருக்மியின் வணக்கம். வெற்றியும் சிறப்புகளும் திகழ்க!” என்றான். யுதிஷ்டிரர் தலைவணங்கினார். சகதேவன் அவனை அழைத்துச்சென்று பீடத்தில் அமரச்செய்தான். யுதிஷ்டிரர் “தாங்கள் இங்கே படையுடன் வந்திருப்பதாக சொல்லப்பட்டது. தங்கள் படைகளை நமது படைகளுடன் இணைந்துகொள்ள ஆணையிடும் ஓலை இப்போதே அளிக்கப்படும்” என்றார். ருக்மி கையசைத்து அதை ஏற்றுக்கொண்டான்.

யுதிஷ்டிரர் “விதர்ப்பப் படைகள் முன்னரே எங்குள்ளனவோ அவற்றுடன் போஜகடகத்தின் படைகளும் இணைந்துகொள்வதே நன்று. அவர்களுடைய குழூஉக்குறிகளும் போர்முறைகளும் ஒன்றே என்பதனால் இணைந்து போரிட இயலும்” என்றார். ருக்மரதன் எழுந்து “நாங்கள் சிறு படை என்பதனால் விராடப் படைப்பிரிவில்தான் இணைந்துகொண்டோம். விராடர்களின் மண்மறைவுக்குப் பின் விராடப் படைகள் ஏழாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு தலைமையின்கீழ் அமைக்கப்பட்டன. எங்களை இப்போது பாணாசுரரின் மைந்தர் சக்ரர் தலைமைதாங்கும் பதினேழாம் படைப்பிரிவுடன் இணைத்திருக்கிறார்கள்” என்றான். யுதிஷ்டிரர் “நன்று, அவர் ஆற்றல்மிக்கவர். விதர்ப்பத்தின் படைகள் அவரால் ஒருங்கிணைக்கப்படட்டும்” என்றார்.

ருக்மி சினத்துடன் எழுந்து “என்ன சொல்கிறீர்கள்? விதர்ப்பப் படைகள் அசுரர்களால் நடத்தப்படுகின்றனவா?” என்றான். தன் இளையோனை நோக்கி திரும்பி “இதை அவையில் எழுந்து நின்று சொல்ல உனக்கு நாணமில்லையா? நீ பீஷ்மகரின் குருதியில் எழுந்தவன்தானா? கீழ்மகனே, அசுரருக்குக் கீழே படைக்கலமெடுத்து நிற்கிறாயென்றால் நீ அசுரனுக்கும் கீழோன்!” என்று கூவினான். “விதர்ப்பரே, இங்கே குலமல்ல திறனே நோக்கப்படுகிறது. சக்ரர் பாரதம்கண்ட பெருவீரர்களில் ஒருவர்” என்றார் யுதிஷ்டிரர். “அவனைவிட ஆற்றல்கொண்ட கரடிகளும் குரங்குகளும் காட்டில் இருக்கலாம். அவை நடத்துமா படையை? ஷத்ரியன் குலத்தால் உருவாக்கப்படுபவன், முறைமைகளால் நிலைகொள்பவன், குலமிழந்த ஷத்ரியன் வெறும் படைபயின்ற விலங்கே” என்றான் ருக்மி.

சகதேவன் “விதர்ப்பரே, உளம்கனியுங்கள். உங்கள் எண்ணத்தை புரிந்துகொள்கிறேன். இனி அப்படைகள் அனைத்துக்கும் நீங்களே தலைமைகொள்க! உங்கள் கீழ் சக்ரர் திகழ்வார்” என்றான். “அசுரர்களை நான் வழிநடத்தவியலாது” என்றான் ருக்மி. “ஒரு தனிப் படைப்பிரிவாக செயல்படும் அளவுக்கு உங்கள் படை பெரிதல்ல…” என்று சகதேவன் சொன்னான். திருஷ்டத்யும்னன் “ஒவ்வொரு குலமும் தனியாக செயல்படுவதற்கு படைத்தலைமையின் ஒப்புதல் இல்லை. அது படைகளின் ஒருமையை முற்றழிப்பது” என்றான். ருக்மி “இங்கே என்ன நிகழ்கிறது? அஸ்தினபுரியின் குலப்பூசல் என எண்ணினேன். அரக்கர்களையும் அசுரர்களையும் கொண்டா அதை நிகழ்த்துகிறீர்கள்? என்ன கீழ்மை!” என்றான்.

பீமன் “விதர்ப்பரே, எங்கள் தரப்பில் படைகொண்டு நிற்பவர்கள் பெரும்பாலும் அசுரரும் அரக்கரும் நிஷாதரும் கிராதருமே. நீங்கள் விரும்பும் தூய ஷத்ரியக் குடிகள் அங்குதான் உள்ளனர். அங்கேயே நீங்கள் செல்லலாம்” என்றான். சம்பராசுரரின் மைந்தன் கீர்த்திமான் “அங்கே சேர்த்துக்கொள்ளப்படாமல்தான் இங்கே வந்திருக்கிறார்!” என்றான். “யாரடா அவன்? இழிசொல் உரைத்தவன் எவன்?” என ருக்மி திரும்பினான். “நான்தான். என் பெயர் கீர்த்திமான், சம்பராசுரரின் மைந்தன்” என்றான். “விதர்ப்பரே, நீங்கள் போற்றும் பெருங்குலத்தார் உங்களை ஏற்கவியலாது என அனுப்பிவிட்டனர். ஆகவே நீங்கள் குலப்பெருமையை சற்றே இழக்கத்தானே வேண்டும்?” அவையிலிருந்து சிரிப்பொலி எழுந்தது.

“விதர்ப்பம் என்றும் தன் பெருமையை இழக்காது!” என்று ருக்மி கூவினான். “நாங்கள் பாரதவர்ஷத்தின் தொன்மையான அரசகுலம். தொல்புகழ் தமயந்தி பிறந்து மும்முடிசூடி அமர்ந்து பாரதவர்ஷத்தை முழுதாண்ட பெருமை கொண்டது. அப்பெருமையே எங்கள் பெருஞ்செல்வம். எந்நிலையிலும் அதை நாங்கள் விட்டுத்தரப் போவதில்லை.” முதிய கிராதமன்னர் கூர்மர் “அவ்வாறென்றால் நீங்கள் இந்தத் தரப்பில் நின்று போர்புரிய இயலாது, விதர்ப்பரே. இப்போரில் நாங்கள் வெல்வோம். அதன் பின் எங்கள் அனைவருக்குமே அவையமர்வில் நிகரிடம் அளிக்க பாண்டவப் பேரரசர் யுதிஷ்டிரர் ஒப்புக்கொண்டிருக்கிறார்” என்றார். ருக்மி சீற்றத்துடன் யுதிஷ்டிரரை நோக்கி “அது எவ்வாறு இயலும்? குடிகளை வகுத்து கடமைகளை அளிப்பது வேதம். வேதத்தை மறுக்கிறீர்களா?” என்றான். “இளைய யாதவர் வேதமுடிபை முன்வைக்கிறார் என்றே நான் அறிந்திருக்கிறேன். வேதமறுப்பை என்றால் அதற்கு என் வாள் எழாது!”

“நீங்கள் இதை அவரிடமே கேட்கலாம், விதர்ப்பரே” என்றார் யுதிஷ்டிரர். “நான் இனி சொல்வதற்கொன்றுமில்லை. இந்தப் போர் ஏற்கெனவே முழுமையாக மூண்டுவிட்டது. இதில் எவருக்கும் எத்திசையிலும் பின்னகர்வு இனி இயல்வது அல்ல. நீங்கள் முடிவெடுக்கலாம்.” ருக்மி “முடிவெடுக்கிறேன்… அதற்கு முன் நான் அவரிடமே அதைப்பற்றி பேசவேண்டும்” என்றபின் திரும்பி தன் இளையவர்களை நோக்கி “கிளம்புங்கள் என்னுடன்… நீங்கள் பீஷ்மகரின் குருதியில் பிறந்தவர்கள் என்றால் இப்போதே கிளம்புக!” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். “கீழ்மக்களே, என்ன தயங்குகிறீர்கள்? நீங்கள் ஷத்ரியர்கள் என்றால் கிளம்புங்கள்!” என்றான் ருக்மி. “நாங்கள் எந்தையின் ஆணையை ஏற்று வந்தவர்கள். அவருடைய ஆணைக்கே கட்டுப்பட்டவர்கள்” என்று ருக்மரதன் சொன்னான்.

ருக்மி கையோங்கியபடி அவனை அடிப்பதுபோல் சென்று தயங்கி நின்று “இதன் விளைவு என்ன என்று அறிவீர்களா? ஏற்கெனவே அனைத்துப் பெருமைகளையும் இழந்து அவைச்சிறுமை கொண்டு நின்றிருக்கிறது நம் குடி… அசுரருக்கும் அரக்கருக்கும் அடிமைப்பணி செய்தீர்கள் என்றால் நீங்கள் ஷத்ரியர் முன் தலைநிமிர்ந்து நிற்க இயலாது” என்றான். “நம் குடிப்பெருமைக்காகவே நான் இத்தனைநாள் நோன்புகொண்டேன். இங்கே வந்ததும் அதற்காகவே. நான் கொண்ட அனைத்தையும் இழக்கும் கீழ்மையை இவர்கள் எனக்கு அளிப்பார்கள் என்றால் அதை ஏற்க இயலாது…” என்றான். பேசமுடியாமல் அவனுக்கு மூச்சிரைத்தது.

ருக்மரதன் “மூத்தவரே, நீங்கள் கொண்ட சினம் குடிப்பெருமையின் அழிவால் அல்ல. அது உங்கள் ஆணவத்தால் மட்டுமே. நீங்கள் உங்களை இளைய பாண்டவர் அர்ஜுனனுக்கு நிகரான வில்லவராக எண்ணிக்கொள்கிறீர்கள். இளைய யாதவரின் எதிரியாக உங்களை நிறுத்திக்கொள்வதன் வழியாக அவருக்கு நிகரான பெருமையை அடைய எண்ணுகிறீர்கள்” என்றான். ருக்மி அச்சொற்களை நம்பமுடியாமல் நோக்கி நின்றான். “உங்கள் நோக்கத்தில் ஓரளவு வெற்றியையும் அடைந்தீர்கள். இளைய யாதவருடன் உங்களை இணைத்துக்கொண்டமையால் நீங்களும் அவைகளில் பேசப்படுகிறீர்கள். இளைய யாதவரின் எதிரிகளால் அவ்வப்போது புகழவும்படுகிறீர்கள். பெரிய எதிரிகளை ஈட்டிக்கொள்வது பெரியவர்களாக ஆவதற்கான குறுக்குவழிகளில் ஒன்று.”

ருக்மி கட்டற்ற வெறிகொண்டு உறுமியபடி ருக்மரதனை அடிப்பதற்காக பாய்ந்தான். அவனை சாத்யகி பிடித்துக்கொண்டான். “இது அரசவை. இங்கே அத்துமீறுதல் குற்றம்” என்று சாத்யகி சொன்னான். ருக்மி நடுங்கிக்கொண்டிருந்தான். அவன் குரலே மேலெழவில்லை. “ஒவ்வாமை கொண்டீர் என்றால் வெளியேறுக, விதர்ப்பரே!” என்றான் சாத்யகி. ருக்மியின் குரல் உடைந்து அழுகையோசை கலந்தது என ஒலித்தது. “இழிமகனே, இது என் வஞ்சினம். இது என் வஞ்சினம் என இந்த அவை அறிக! நீ என் எதிரி. உன் நெஞ்சுபிளப்பேன்… என்னைப் பழித்த உன் நாவை இழுத்துப் பறித்தெடுப்பேன்.” ருக்மரதன் “வஞ்சினங்களால் வாழ்பவர் நீங்கள்… உங்கள் முந்தைய வஞ்சினங்களுக்குப் பின் என்னிடம் வருக!” என்றான்.

ருக்மகேது “மூத்தவரே, எதன்பொருட்டு இந்த வெறி? நம் குடியின் பேரரசி தமயந்தியைப் பற்றி சொன்னீர்கள். அவள் மணந்துகொண்ட நளன் நிஷாதன் என்பதை ஏன் மறந்தீர்கள்? அவர்களிருவரின் குருதியே நம்மில் ஓடுவது. வேண்டாம்! இந்த வெற்றுச்சினங்களால் நீங்கள் வீணாகி அழிகிறீர்கள்” என்றான். ருக்மி “உங்கள் அனைவருக்கும் மேல் நின்றிருக்கும் என் வஞ்சினம்! ஆணை!” என்றபின் வெளியே சென்றான். அவையில் இருந்து சினக்குரல்களும் இளிவரல் ஓசைகளும் கலந்த முழக்கம் எழுந்தது. “அவர் இந்நாடகத்தை இங்கே நடத்தும்பொருட்டே வந்துள்ளார் போலும்!” என்றான் திருஷ்டத்யும்னன். “அல்ல, பாஞ்சாலரே. அவருடைய இயல்பு அது. எங்கேனும் பற்றி ஏறி எரிந்து தழலாடிக்கொண்டே இருப்பதே அவருடைய வாழ்க்கை” என்றான் ருக்மகேது. “அவர் தன்னைப்பற்றி மிகைமதிப்பீடு கொண்டிருக்கிறார். அத்தகையோர் புண்பட்டபடியே இருப்பார்கள், ஏனென்றால் அம்மதிப்பீட்டை உலகம் அவர்களுக்கு அளிப்பதில்லை” என்றான் சகதேவன்.

bowயுயுத்ஸு ருக்மியுடன் வெளியே சென்று “விதர்ப்பரே, நீங்கள் அனைத்தையும் புரிந்துகொண்டு இங்கே வந்தீர்கள் என எண்ணினேன். நீங்கள் இந்தப் போர்த்திரட்சியின் எல்லா அரசவைகளிலும் கலந்துகொண்டிருக்கிறீர்கள்” என்றான். “ஆம், ஆனால் இங்கே நிகழ்வது இது என நான் எண்ணியிருக்கவில்லை. கீழ்மக்களை திரட்டுகிறீர்கள் என நான் அறிவேன். ஷத்ரியர்களை அவர்களுக்கு அடிமைப்பணி செய்ய அனுப்புவீர்கள் என எண்ணியிருக்கவில்லை” என்றான் ருக்மி. “நான் அவரை பார்க்க விரும்புகிறேன். அவரிடம் கேட்டுவிட்டே செல்வேன். இதனால் அவர் அடையவிழைவதென்ன என்று… ஆம். அதை கேட்காமல் சென்றால் என் நெஞ்சு அணையாது.”

அவன் சென்று தன் புரவியில் ஏறிக்கொள்ள யுயுத்ஸுவும் புரவியில் தொடர்ந்தான். ருக்மி வழியில் புரவியை இழுத்து நிறுத்தி “இந்த நிலத்தில் அரசுகள் அமைந்திருக்கும் அடித்தளத்தை அசைக்கிறார். இங்குள்ள அரசகுலங்கள் அனைத்தும் சரியும். இங்குள்ள நெறிகள் முற்றாக அழியும். வேதமும் நெறிகளும் புரப்போரின்றி மறையும். தெய்வங்கள் அவியிலாது விடப்படும். மூதாதையர் நீரிலாது அமைவர். அதைத்தான் விழைகிறாரா அவர்?” என்றான். யுயுத்ஸு “இங்கு அனைவரும் அறிந்தது ஒன்றுண்டு. குருதிக்கலப்பற்ற ஷத்ரியர் இங்கு எவர்? பாண்டவர்களும் கௌரவர்களும்கூட சர்மிஷ்டையின் கொடிவழியினரே” என்றான். “நீங்கள் அடிபணிந்த இளைய யாதவரின் மைந்தரும் பெயர்மைந்தரும் அசுரர்குடியில் மணம்கொண்டவர்கள்.”

ருக்மி தளர்ந்து “ஆம், நான் ஏன் அதை எண்ணாமல் இருந்தேன்? என் அறிவழிந்துவிட்டது. இது குருதிக்கலப்பாளர்களின் படை. இதில் எனக்கு இடமில்லை. சினத்தில் நான் அனைத்தையும் மறந்துவிட்டேன்” என்றான். கடிவாளத்தைப் பற்றிக் கசக்கியபடி புரவிமேல் அமர்ந்திருந்தான். தலையை அசைத்து “நான் அறிந்த யுகம் அழிகிறது போலும். கலியுகம் எழுகிறது என்றனர் நிமித்திகர். குலக்கலப்புகளின் யுகம். நெறிமயக்கங்களின் யுகம். அதில் எனக்கு இடமில்லை. நான் என் நெறிகள் திகழும் உலகிலேயே வாழ விழைகிறேன். அது சின்னஞ்சிறு வட்டமாக இருப்பினும்” என்றான்.

பின்னர் புரவியை திரும்பிக்கொண்டு “அவரிடம் சென்று அதை கேட்பதில் பொருளில்லை. அவர் எண்ணிச்செய்வதே இவையனைத்தும். அவருக்கு ஷத்ரியர் அவைகளில் இடமளிக்கப்படவில்லை. அதனால்தான் சிசுபாலனை கொன்றார். அந்த வஞ்சத்தை இழிசினரைத் திரட்டி ஷத்ரியக் குடிகளை அழித்து தீர்த்துக்கொள்கிறார்” என்றான். அவன் மீண்டும் சினம் கொண்டான். பற்களைக் கடித்து “ஆனால் அவர் எண்ணுவது நிகழாது. இப்போர் முடிந்ததும் அசுரரும் ஷத்ரியரும் இணைந்த அரசகுடிகள் உருவாகும் என்றும் அவர்களுக்கு தலைக்குடியாக தன் கொடிவழியினர் அமைவார்கள் என்றும் எண்ணுகிறார். ஆனால் வேதம் அதை ஒப்பாது. வேதம் நின்றுகொல்லும் வஞ்சம் கொண்டது” என்றான்.

யுயுத்ஸு “வேதமுடிபுதான் வேதத்தின் விதை. அது முளைத்தெழும் புதிய வேதமே நாராயணவேதம். அது மெய்மையை மட்டுமே தன்னியல்பெனக் கொண்டது” என்றான். “வீண்சொற்கள்…” என கைவீசித் தடுத்த ருக்மி “இனி இங்கே எனக்கு இடமில்லை. நான் கிளம்புகிறேன்” என்று புரவியைத் தட்டி விரைவுகொண்டு அகன்றுசென்றான். அப்புரவியின் வால் சுழல்வதை யுயுத்ஸு நோக்கி நின்றான். என்ன செய்வதென்று அவனுக்கு தெரியவில்லை. அவன் சென்றுமறைந்த பின்னர் புரவியை திருப்பியபோது அதை இளைய யாதவரிடம் சொல்வதே முறை என்று தோன்றியது.

அவன் இளைய யாதவரின் குடில்முற்றத்தை அடைந்தபோது தொலைவிலேயே அவர் கவசங்களை அணிந்துகொண்டிருப்பதை கண்டான். நேமிதரன் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தான். அவனைக் கண்டதுமே இளைய யாதவர் அருகே வரும்படி கையசைத்தார். அவன் புரவியிலிருந்து இறங்கி எவ்வண்ணம் அந்நிகழ்வுகளை தொகுத்துச் சொல்வது என எண்ணியபடி சென்றான். அவருடைய புன்னகையைக் கண்டதும் அவருக்கு முன்னரே தெரியுமா என்னும் எண்ணம் ஏற்பட்டது. அதற்கு வழியே இல்லையே என குழம்பினான்.

இளைய யாதவர் “எனக்கு செய்தி வரவில்லை. ஆனால் எச்செய்தி வரும் என அறிவேன், தார்த்தராஷ்டிரரே” என்றார். யுயுத்ஸு உள்ளம் எளிதாகி புன்னகை புரிந்து “குலப்பெருமை” என்றான். “நன்று” என்றார். “படைகளுடன் திரும்பச்செல்கிறார்” என்றான் யுயுத்ஸு. “அவர் இப்போரில் கலந்துகொள்ளாமலிருப்பதனால் அவரோ விதர்ப்பமோ காக்கப்படவில்லை” என்றார் இளைய யாதவர். “போருக்குப் பின் நாம் அவர்களை தாக்குவோமா?” என்றான் யுயுத்ஸு. “நான் அதை சொல்லவில்லை. அவருடைய அவ்வியல்பாலேயே அழிவை நோக்கி செல்லவேண்டியவர் என்றேன்” என்றார் இளைய யாதவர்.

யுயுத்ஸு “அரசே, நான் ஒன்றை மட்டுமே அறிய விழைகிறேன். இன்று காலை இளைய பாண்டவரின் குடிலில் நிகழ்ந்தது நாடகமா?” என்றான். “நாடகம் என்றால் அனைத்துமே அவ்வாறுதான். அவர் என்னைக் கண்டதும் அடைந்த உணர்வெழுச்சி மெய்யானது. மீண்டும் இங்கு வந்திருந்தால்கூட அதே உணர்ச்சி எழுந்திருக்க வாய்ப்புண்டு” என்றார் இளைய யாதவர். “தங்கள் உணர்ச்சி?” என்றான் யுயுத்ஸு. “அதுவும் மெய்யானதே. நான் விழிநீர்களுக்கு முன் அறிவிலாதோன்” என்றார் இளைய யாதவர்.

காவியம் – சுசித்ரா, வெண்முரசு விவாதங்கள்

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 50

bowகோசல நாட்டரசன் பிருஹத்பலன் சொல்சூழவையிலிருந்து வெளியே வந்ததும் தயங்கி நின்றான். அவனருகே வந்த தேர்வலன் “அரசே” என்றான். அவனிடம் “செல்க!” என கைகாட்டிவிட்டு அவந்தியின் விந்தனும் அனுவிந்தனும் வருவதற்காகக் காத்து நின்றிருந்தான். அவர்கள் ஒருவர் இருவராகும் விழிமயக்கு என அருகணைந்து தலைவணங்கியதும் “நாம் பேசவேண்டும்” என்றான். விந்தன் “தனியாகவா?” என்றான். “ஆம், இங்கே பேச இயலாத சில உள்ளன” என்றான் பிருஹத்பலன். “நம் குடிலுக்குச் செல்வோம்… கவசமணிய இன்னும் பொழுதுள்ளது” என்றான் விந்தன். விந்தன் பேசுகையில் அதே முகக்குறி அனுவிந்தனின் முகத்தில் உருவானது. அவனும் அச்சொற்களைச் சொல்லி நின்றதுபோல.

பிருஹத்பலன் “நான் அனைவரிடமும் பேசவிழைகிறேன். மாளவரும் வரட்டும்” என்றான். “கிருதவர்மர் வருகிறார்” என்றான் விந்தன். “நான் யாதவர்களைப் பற்றி பேசவில்லை” என்றான் பிருஹத்பலன். “ஆம், நாம் மட்டுமே பேசவேண்டிய சில உள்ளன” என்றான் விந்தன். அவர்கள் முற்றத்தை அடைந்தபோது உள்ளிருந்து உத்தர திரிகர்த்த நாட்டு அரசன் ஷேமங்கரனும் புளிந்த நாட்டு அரசன் சுகுமாரனும் பேசியபடி வந்தனர். பின்னால் தார்விக நாட்டரசன் சசாங்கனுடன் திரிகர்த்தத்தின் மூத்த அரசர் சத்யரதர் வந்தார். பிருஹத்பலன் விந்தனிடம் “அவர்கள் அனைவரையும் என் குடிலுக்கு வரச்சொல்லலாம்” என்றான்.

தட்சிண திரிகர்த்தத்தின் சுசர்மன் பின்னால் தனியாக வந்தான். விந்தன் அதை நோக்கியபின் திரும்பி புன்னகைத்து “தந்தையும் மைந்தரும் தனித்தனியாக வருகிறார்கள். ஓரவையில் அவர்கள் ஒற்றைச் சொல் எடுத்து நான் கண்டதில்லை” என்றான். அனுவிந்தன் “நானே சென்று சொல்கிறேன், அவர்களை ஒருங்குகூட்டவேண்டியது நம் தேவை” என்று அவர்களை நோக்கி சென்றான். அபிசார மன்னர் சுபத்ரரும் அரேவாக மன்னர் சிம்மவக்த்ரரும் சேர்ந்தே வந்தார்கள். அவர்களும் சோர்ந்திருந்தனர். எனவே சொற்களில்லாத எடைகொண்ட முகத்துடன் தளர்ந்த காலடிகளுடன் அணுகினர். அபிசாரர்களின் இளவரசர்கள் நிசந்திரன், மிருதபன், சுவிஷ்டன் ஆகியோர் களம்பட்டதை பிருஹத்பலன் நினைவுகூர்ந்தான். சுபத்ரரின் கைகள் எதையோ காற்றில் துழாவுவனபோல் அசைந்துகொண்டிருந்தன.

பிருஹத்பலன் “கலிங்கர்களின் களவீழ்ச்சிக்குப்பின் ஷத்ரியர்கள் தலைமையற்றவர்களாக ஆகிவிட்டனர். போர் இன்று நம் கையிலிருந்து முற்றாக நழுவிவிட்டது” என்றான். விந்தன் குரல் தாழ்த்தி “ஆனால் திரிகர்த்தர்களை ஷத்ரியர்கள் என எவரும் ஏற்றுக்கொள்வதில்லை” என்றான். பிருஹத்பலன் சீற்றத்துடன் “நாம் இந்த குடிமேன்மைப் பேச்சை என்று தவிர்க்கிறோமோ அன்றுதான் வாழ்வோம். இங்கே களத்தில் உயிருடனிருப்பவர்கள் சிலரே. நாம் ஒருங்கிணைந்தாகவேண்டும்” என்றான். “ஆம், ஆனால் ஷத்ரியர் என்னும் அடையாளத்துடன் ஒருங்கிணைகிறோம். அப்போது எவர் ஷத்ரியர் என்று நோக்கவேண்டியிருக்கிறதல்லவா?” என்றான் விந்தன்.

பிருஹத்பலன் பெருமூச்சுவிட்டு தலையை அசைத்து “அக்கணக்கை எடுக்கப்போனால் எஞ்சுபவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அவந்தியின் அரசர்களின் குடித்தெய்வங்கள் இன்றும் காட்டில் மலைவேடர்களுக்கும் தெய்வங்களே” என்றான். விந்தன் சீற்றத்துடன் ஏதோ சொல்ல நாவெடுக்க “இதை நாம் பேசவேண்டுமென்றால் போர் முடியட்டும். நாடு பகுக்கப்படுகையில் சொல்லாடுவோம். இப்போது இக்களத்திலிருந்து நம்மில் எவர் எவ்வண்ணம் எஞ்சி மீளப்போகிறோம் என்பதைப்பற்றி மட்டுமே பேசவிருக்கிறோம்” என்றான். விந்தன் பொருமலுடன் தன் மொழியில் ஏதோ சொல்லி தலையை திருப்பிக்கொண்டான்.

பிருஹத்பலன் “நான் என் குடிலுக்குச் செல்கிறேன். அரசர்கள் ஒவ்வொருவராக அங்கே வரட்டும்” என்றான். அவன் செல்வதற்கு திரும்ப அருகே வந்த காரூஷ நாட்டு அரசர் க்ஷேமதூர்த்தி “என்ன நிகழ்கிறது? இங்கே ஒரு ஷத்ரியர் சந்திப்பு என்று என்னிடம் அவந்தியின் இணையரசன் சொன்னான். அதற்கு ஏன் திரிகர்த்தர்களை அழைக்கவேண்டும்? அவர்களின் உடலில் இன்றும் மலையூனின் மணம் வீசுகிறது. எளிய வேடர்கள். அவர்களின் மணிமுடியிலிருக்கும் இறகு என்ன? நோக்குக, அது இறகல்ல, மலையணிலின் வால்!” என்றார். பிருஹத்பலன் சலிப்புடன் “விந்தர் விளக்குவார்” என்று சொன்னபின் தன் தேர்வலனை நோக்கி தலையசைத்தான். அவன் தேரை கொண்டுவந்து நிறுத்த அதில் ஏறி அமர்ந்துகொண்டான்.

தன் பாடிவீட்டுக்குச் சென்று முற்றத்தில் இறங்கியதும்தான் அங்கே அனைத்து அரசர்களும் வந்தால் அமர இடமில்லை என்பதை உணர்ந்தான். தேர்வலனிடம் “இங்கே அரசர்கள் அமர்வதற்கான பீடங்கள் போடமுடியுமா?” என்றான். அவன் “இருக்கைகள் போட இயலாது, அரசே. ஆனால் தேரிலேறுவதற்கான படிப்பெட்டிகள் உள்ளன. அவற்றை இருக்கைகள் என இந்த மரத்தடியில் போட முடியும்” என்றான். “சரி, அவையே போதும். ஒருநாழிகைப்பொழுதுதான்… இதோ முரசு முழங்கத் தொடங்கிவிடும்” என்றான்.

அவன் பெட்டிகளை போட்டுக்கொண்டிருக்கையிலேயே கேகய மன்னன் திருஷ்டகேதுவும் மாளவ மன்னர் இந்திரசேனரும் வந்தார்கள். அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவில்லை. பிருஹத்பலன் “இங்கே நாம் ஒரு முறையான அரசவையை கூட்டப்போவதில்லை. நாம் ஒரு சில சொற்களை பேசிக்கொள்ளவேண்டியிருக்கிறது” என்றான். “நாம் முறையாகவே இரவு கூடுவோமே” என்றான் திருஷ்டகேது. “மாலையில் நம்மில் எவர் எஞ்சுவோமென தெரியாது. மேலும் மாலையில் நம் உள்ளங்கள் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றன” என்றான் பிருஹத்பலன்.

“நேற்று காலையில் நான் சுதக்ஷிணரிடம் இதைப் பற்றி பேசினேன். இன்று அவர் நம்முடனில்லை.” விந்தன் “எங்கள் மைந்தர்கள் புஷ்கரனும், புஷ்பதந்தனும், புஷ்பமித்திரனும் களம்பட்டனர். இந்தப் போர் காட்டெரியைப்போல் எங்கள் குலத்தை அழிக்கிறது” என்றான். பிருஹத்பலன் “என் குடியின் மைந்தர்கள் பன்னிருவர் களம்பட்டனர். நான் பேசத்தொடங்குவது அங்கிருந்தே” என்றான்.

இந்திரசேனர் “நாம் இழப்புகளைப்பற்றி பேசவேண்டியதில்லை. நிகழவேண்டியதென்ன என்று மட்டும் பேசுவோம்” என்றார். “ஆம், அதன்பொருட்டே கூடுகிறோம்” என்றான் பிருஹத்பலன். கூர்ஜர சக்ரதனுஸும் சைப்ய நாட்டு கோவாசனரும் சாரஸ்வதரான உலூகரும் சால்வநாட்டு த்யுமந்தசேனரும் ஆஃபிரநாட்டின் உக்ரதர்சனரும் வந்தனர். அவர்களை அமரச்செய்துகொண்டிருக்கையிலேயே வங்கத்தின் சமுத்ரசேனரும் சந்திரசேனரும் வந்தனர். மாகிஷ்மதியின் நீலரின் தேரில் சௌராஷ்டிர நாட்டின் ருஷார்திகரும் வந்தார். மேழிக்கொடி பறக்கும் விதேகநாட்டு தேர் வந்து நிற்க அதிலிருந்து அரசர் நிமி இறங்கினார். சௌவீரர் சத்ருஞ்சயர் தன் மைந்தருடன் வந்தார்.

அவர்கள் அமர்வதற்கு இடம்போதாமலாக மேலும் பெட்டிகளுக்காக ஏவலர் ஓடினர். அவர்கள் அமர்ந்ததும் பிருஹத்பலன் இன்னீரும் வாய்மணமும் கொண்டுவர தன் ஏவலரை அனுப்பினான். “பகதத்தர் வரவில்லையா?” என்று நிமி கேட்டார். சமுத்ரசேனர் “அவர் ஓய்வெடுக்கிறார். நேற்றைய போரில் இரண்டு இடங்களில் கதையால் அறைபட்டிருக்கிறார்” என்றார். “இந்தப் போரில் அறைபட்டு வீழாத எவரேனும் இருக்கிறோமா என்ன?” என்றார் நீலர். “நான் என் மைந்தரை இழந்தேன்” என்றார் மாளவ மன்னர். “என் பட்டத்து இளவரசன் உலூகன் களம்பட்டான். இளையோர் எழுவர் இறந்தனர். என் மைந்தர்கள் அசீதனும் அஸ்மாதனும் அப்ரமாதனும் நேற்றும் என் கனவிலெழுந்தனர். இந்த வேள்வித்தீயில் இனி நான் என்னைத்தான் அவியாக்கவேண்டும்.”

கூர்ஜர மன்னர் சக்ரதனுஸ் “என் பட்டத்து இளவரசன் மகிபாலன் கொல்லப்பட்டான். இளைய மைந்தன் உத்ஃபுதனையும் இழந்துள்ளேன்” என்றார். “நாம் இறந்தவர்களைப்பற்றி பேசவேண்டாம்” என்றார் உக்ரதர்சனர். பிருஹத்பலன் “நான் பேசவிழைவது நம் எதிர்காலத்தைப்பற்றித்தான்” என்றான். “இந்தப் போர் எங்கே செல்கிறது? இது தொடங்கும்போது நாம் எண்ணியதல்ல இப்போது நடந்துகொண்டிருப்பது. நாம் அழிந்துகொண்டிருக்கிறோம்.” மன்னர்கள் கூட்டமாக “ஆம்” என்றனர். சமுத்ரசேனர் “நம் மைந்தர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்” என்றார். “அது பிதாமகர் பீஷ்மர் தொடங்கிவைத்தது. அவர் முதல்நாள் அவர்களின் இளவரசர்களை கொன்றார், அவர்கள் பழிநிகர் செய்கிறார்கள்” என்றார் க்ஷேமதூர்த்தி.

சுபத்ரர் “போர் எனில் அழிவு இருக்கும்” என்றார். “ஆம், ஆனால் முற்றழிவென்பது பொருளற்றது. நாம் எந்த வஞ்சத்துக்காகவும் போருக்கெழவில்லை. குலம்காக்கவோ குடிப்பெருமைக்கோ படைக்கலம் தூக்கவில்லை. நாம் வந்தது நிலத்துக்காக. நமக்குக் கிடைக்கவிருக்கும் நிலங்களுக்காக நாம் மைந்தரை இழக்கவேண்டுமா?” என்றான் பிருஹத்பலன். “போரில் பிறகென்ன நிகழுமென எண்ணுகிறீர்கள்?” என்று நிமி கேட்டார்.

“போரில் வீரர்கள் களம்படுவார்கள். அரிதாகவே அரசகுடியினர் வீழ்வார்கள். அரசகுடியினரை அரசகுடியினரே எதிர்க்கவேண்டும் என்று நெறி உள்ளது. அவ்வாறு வீழ்வது பெருமைக்குரியதும்கூட. சூதர்சொல்லில் வீழ்ந்தவர் வென்றவருக்கு நிகராகவே வாழ்வார். அவர்கள் விண்ணுலகில் தோள்தழுவிக்கொண்டு மகிழ்வார்கள். ஆனால் இங்கே அதுவா நிகழ்கிறது? என் மைந்தர்கள் லோகிதனையும் சியாமனையும் தீர்க்கபாகுவையும் கொன்றவன் கடோத்கஜன். அவ்வரக்கன் இங்குள்ள எத்தனை பேரின் மைந்தர்களை கொன்றான் என சொல்லுங்கள்…”

அவை அமைதியாக இருந்தது. “சொல்க, எத்தனை பேரை?” என்றான் பிருஹத்பலன். “சொல்லமாட்டீர்கள். இங்குள்ள அனைவர் குடியிலும் ஓர் இளவரசனையேனும் அவன் கொன்றிருக்கிறான். இந்தப் போரில் இப்படி வல்லரக்கன் கையில் உயிர்விடவா நாம் மைந்தரை ஈன்றோம்?” என்று பிருஹத்பலன் கேட்டான். அவையினர் ஆழ்ந்த அமைதியில் அசைவிழக்க நீலன் “நம் மைந்தர் இங்கே மழைக்கால நத்தைகளை தேர்கள் அரைத்தழிப்பதுபோல பீமனாலும் அவன் மைந்தர்களாலும் கொல்லப்படுகிறார்கள். என் உடன்பிறந்தார் மணிர்மன், குரோதவான், மகாக்குரோதன், சண்டன், சுருரோணிமான் ஆகியோர் மண்புகுந்த பின் வெற்றியும் தோல்வியும் எனக்கொரு பொருட்டாகத் தெரியவில்லை” என்றார்.

“நான் எண்ணிவந்தது இதை அல்ல. இப்படி ஒரு போரை எங்கள் நூல்கள் சொல்லவில்லை” என்றான் பிருஹத்பலன். “ஷத்ரியர் நிலம் நாடி போரிடுவதுண்டு. இந்தக் கீழரக்கர்களிடம் நாம் ஏன் பொருதவேண்டும்?” அவையிலிருந்த அனைவரும் சேர்ந்து குரலெழுப்பினர். “ஆம், இது போரே அல்ல. இது வெறும் கொலைவெளி” என்றான் விந்தன். “இங்கே நாம் மைந்தரை இழந்து மீண்டு சென்று அடையப்போவது என்ன?” என்றார் உலூகர். “நாம் இங்கே போரிடுவது கீழ்மக்களிடம்… அசுரர்களும் அரக்கர்களும் நம் மைந்தரை கொல்கிறார்கள்.”

“கோசலரே, நாம் என்றாயினும் இந்த அரக்கர்களையும் அசுரர்களையும் நிஷாதர்களையும் கிராதர்களையும் அழித்தேயாகவேண்டும். உண்மையில் இவர்களை எதிர்கொண்டு அழிக்க நம்மால் இயலவில்லை என்பதனால்தான் வாளாவிருந்தோம். நாம் போருக்கெழுந்ததே இவர்கள் மீதுள்ள அச்சத்தால்தான். அவர்களுக்காக நாம் ஒருங்கிணைந்தால் அதுவே அவர்களை ஒருங்கிணைய வைத்துவிடுமென அஞ்சினோம். கீழ்மக்களுக்காக ஷத்ரியர் ஒருங்கிணைந்தனர் என்னும் பேச்சு வந்துவிடலாகாது என நாணினோம். கேளிக்கையாடி சோம்பியும் குடிப்பெருமை பேசி பூசலிட்டும் பொழுது கடத்தினோம். இது ஓர் வரலாற்று வாய்ப்பு என்று கருதியே இங்கே ஒருங்கிணைந்தோம்” என்றார் சக்ரதனுஸ்.

கேகயன் “இல்லை, அதன்பொருட்டு அல்ல. நாம் கூடியது வேதம் காக்கும்பொருட்டு” என்றான். “ஆம், அவ்வாறு எங்கும் சொல்லிக்கொள்ளவேண்டியது நமக்கு இன்றியமையாதது. ஆனால் அதை நமக்குநாமே சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை. வேதங்களை ஜராசந்தர் கால்கீழிலிட்டு அரைத்தபோது நாம் என்ன செய்தோம்? அவர் அசுரவேதத்தை மகதத்தில் நிறுவியபோது அவர் நடாத்திய வேள்விகளில் ஒன்றிலேனும் நாம் பங்குகொள்ளாதொழிந்தோமா?” என்றார் சக்ரதனுஸ். அவையினர் அமைதியிழந்து உடலசைவுகொள்ள சக்ரதனுஸ் “நாம் இன்றுகூட திரிகர்த்தர்களையும் மல்லர்களையும் உடன்வைத்து அமர்ந்திருக்கிறோம். அவர்கள் உடலிலிருந்து வேடர்களின் குருதி அகன்றுள்ளது என்று எந்தத் தெய்வம் உரைத்தது?” என்றார்.

சத்யரதர் சீற்றத்துடன் எழுந்து “என் குடியை பேசியவன் வாளை எடுக்கட்டும்… இப்போதே” என்றார். “நாங்கள் வாளை எடுத்து ஆயிரமாண்டுகளாகின்றன” என்றார் சக்ரதனுஸ். இந்திரசேனர் “நாம் இங்கே பூசலிடுவதற்காகவா கூடினோம்? பூசலிடுவதென்றால் அங்கே களத்துக்கே செல்வோம்” என்றார். “மூடர்கள்” என்றபடி அவர் எழப்போக பிருஹத்பலன் “அமர்க, அமர்க… பேசுவோம்!” என்றான். அனைவரும் எழுந்து பிறரை அமரச்செய்ய அவை மெல்ல அடங்கியது. சற்றுநேரம் அமைதி நிலவியது. சக்ரதனுஸ் “நான் சொல்லவந்ததை சொல்லலாமா?” என்றார். “சொல்க!” என்றார் இந்திரசேனர்.

சக்ரதனுஸ் “நாம் எந்த மேற்பூச்சும் இன்றி பேசுவோம். நாம் இப்போருக்கு வந்தது நம் நிலங்களைச் சூழ்ந்து நெருக்கி நம்மை குறுக்கிக்கொண்டிருக்கும் அசுரர்களையும் அரக்கர்களையும் நிஷாதகிராதர்களையும் வெல்லும்பொருட்டே. அவர்கள் நேற்றுவரை காட்டில் கற்படைசூடி, ஊன்வேட்டையாடி, தோலாடை உடுத்தி, குகைகளிலும் மரங்களிலும் வாழ்ந்தனர். இன்று அவர்களுக்கு ஊர்களும் நகரங்களும் அமைகின்றன. சந்தைகள் உருவாகின்றன. வணிகப்பாதைகள் நீள்கின்றன. அவற்றினூடாகச் செல்லும் சகடங்களுக்கு இடும் தீர்வையே நம் செல்வம். அது அவர்களை சினமூட்டுகிறது. அதற்கு எதிராக அவர்கள் படை திரட்டுகிறார்கள். தங்களுக்கான தனிப் பாதைகளையும் படித்துறைகளையும் உருவாக்கிக்கொள்கிறார்கள். நாம் அவர்களை வெல்லாமல் ஓர் அடிகூட முன்னெடுக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டோம்” என்றார்.

“இந்தப் போர் வேதங்களின் பொருட்டு, குலநெறிகளின் பொருட்டு, ஷத்ரியக் குருதியின் பொருட்டு என்ற சொற்களுக்கு அடியில் நாம் கொண்டுள்ள மெய்யான நோக்கம் இதுவே. அதை இந்தக் களத்திலன்றி நம்மால் எங்கும் நிறைவேற்றிக்கொள்ள இயலாது. இங்கேயே நாம் அவர்களை அழிக்கவேண்டும். வேருடன் பிடுங்கவேண்டும்” என்றார் சக்ரதனுஸ். “ஆகவே நமக்கு வேறுவழியில்லை.” நிமி “அந்நோக்கம் நிறைவேறுகிறதா?” என்றார். “அது இத்தனை கடினம் என நாம் எண்ணியிருக்கவில்லை. மெய்தான்” என்றார் சக்ரதனுஸ். “அவர்கள் பெருந்திரளென இப்படி ஒருங்கிணைவார்கள் என நாம் கருதவில்லை. இவ்வளவு திறனுடன் போரிடுவார்கள் என நாம் எவருமே எண்ணியிருக்கமாட்டோம்” என்றார் நீலன்.

“ஏன் அவர்கள் அவ்வாறு போரிடுகிறார்கள் என்பதை நாம் அறியோமா என்ன?” என்றார் உலூகர். “நம் தரப்பிலிருக்கும் மாபெரும் பிழை அது. அதைத் தவிர அனைத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம்.” கோவாசனர் “என்ன சொல்கிறீர்கள்?” என்றார். உலூகர் “அவர்களை மட்டும் நாம் எதிர்த்திருந்தால் இதற்குள் வென்று அவர்களின் நிலங்களை எரியூட்டியிருப்போம். அவர்களிடம் படைக்கலங்கள் குறைவு. படைசூழ்கைகள் அவர்களுக்கு தெரியாது. ஒரு பெரும்படையெனத் திரள அவர்களின் குலமுறைகளும் மூப்பிளமைகளும் இடம்தரா. இப்போது நாமே அவர்களுக்கு அவையனைத்தையும் அளித்துவிட்டோம். அரசர்களே, கீழ்க்குடியினருக்காகப் போரிட பாரதவர்ஷத்தின் மாபெரும் போர்வீரர்கள் இருவரை அளித்தது நாமே. படைசூழ்கை அறிந்த ஷத்ரியத் தலைவர்களையும் நாமே அளித்தோம். நாம் இங்கே திரண்டமையால்தான் அவர்களை பாண்டவர்கள் திரட்டிக்கொண்டனர். இன்று மறுபக்கமிருப்பது ஷத்ரியத்தலைமையால் நடத்தப்படும் அசுரவிசை. அதை வெல்வது எளிதல்ல” என்றார்.

“அவர்களை நடத்துவது அர்ஜுனனோ பீமனோ திருஷ்டத்யும்னனோ அல்ல, இளைய யாதவன்” என்றான் பிருஹத்பலன். “எந்நிலையிலும் அவனை நாம் எதிர்த்தேயாகவேண்டும். நாம் வெற்றுச்சொற்கள் பேசிக்கொண்டிருப்பதில் பொருளில்லை.” சுபத்ரர் “அவனைத்தான் எதிர்க்கவேண்டும் என்றால் அவன் பாண்டவர்களுடன் இணையாமல் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். யாதவர்களிடமிருந்து அவனை பிரித்தோம், அவ்விசையிலேயே அவனை அழிக்க முயன்றிருக்கவேண்டும்” என்றார். பிருஹத்பலன் “அவனை சூழ்ச்சியில் வெல்ல நம்மால் இயலாது. பாண்டவர்கள் அவனை தெரிவுசெய்யவில்லை, அவன் அவர்களை தெரிவுசெய்திருக்கிறான்” என்றான்.

“என்றேனும் இப்போர் நிகழும் என அறிந்திருந்தேன்” என்றார் கோவாசனர். “நாளெண்ணி காத்திருந்தேன். உண்மையில் நமக்கு ஒரே வழிதான் இருந்தது. துவாரகையை ஷத்ரியநாடென ஏற்று இளைய யாதவனை நம் அவைகளில் அமரச்செய்வது. அதனூடாக நாம் வெல்லமுடியாதவர்களாக ஆகியிருப்போம். அவனையும் நம்முடன் சேர்த்துக்கொண்டு இழிசினரை வென்று பாரதவர்ஷத்தை முழுதடைந்திருக்கலாம். நம் அறிவின்மையால், ஆணவத்தால் அவனை இழிசினர் பக்கம் சேர்த்தோம்.” பிருஹத்பலன் “எவர் சேர்த்தது? என்ன சொல்கிறீர்கள்?” என்றான். கோவாசனர் “ஆம், சேர்த்தவர்கள் நாமே. எங்கெல்லாம் இளைய யாதவன் பெண்கொண்டானோ அந்த ஷத்ரியர்களெல்லாம் அதை குலச்சிறுமையாக எடுத்துக்கொண்டார்கள். அவர்களை அவையிழிவு செய்து நாமும் அதை நிலைநாட்டினோம். எந்நிலையிலும் இளைய யாதவனை ஷத்ரிய அவைகளுக்குள் அமரமுடியாதவனாக ஆக்கினோம்…” என்றார்.

கேகயன் “எங்களை பழி சொல்கிறீர்களா?” என்று சீறியபடி எழுந்தான். கோவாசனர் “ஆம், உங்களைத்தான் பழிசொல்கிறேன். உங்கள் வஞ்சங்களை ஷத்ரியர்களின் பொது உணர்வாக மாற்றினீர்கள்” என்றார். கேகயன் “உங்கள் அறிவு எங்கு சென்றது?” என்றான். நீலன் “நாம் பூசலிட வேண்டியதில்லை… அதனால் இனி எந்தப் பயனும் இல்லை” என்றார். விந்தன் “அரசர்களே, நான் கேட்பது ஒன்றே. நாம் இளைய யாதவனை நம்முடன் சேர்த்துக்கொண்டு ஷத்ரிய அவையில் இடமளித்தோம் என்றால் எந்த இடத்தை அளித்திருப்போம்?” என்றான்.

அவையினர் சலசலக்க விந்தன் “நாங்கள் ஷத்ரியர்களாகி வேள்விகளை செய்யத்தொடங்கி ஐநூறாண்டுகளாகின்றன. ஆயினும் இன்றும் காசியும் கேகயமும் விதேகமும் எங்களுக்கு மேல்தான். அவர்களுக்குக் கீழே அமைந்த கலிங்கமும் வங்கமும் பிரக்ஜ்யோதிஷமும்கூட எங்களுக்கு மேலே. இந்த அடுக்கில் இறுதியில் நாம் அளிக்கும் ஓர் துணையரசனுக்குரிய பீடத்தில் வந்தமர இளைய யாதவன் விரும்புவான் என நினைக்கிறீர்களா? அந்த இருக்கையின்பொருட்டு நம்முடன் சேர்ந்துகொண்டு இழிசினரை முற்றழிக்க அவன் உடன்படுவான் என எப்படி கருதுகிறீர்கள்?” என்றார்.

“அரசன் குடிகளின் கொடி மட்டுமே” என்றார் சக்ரதனுஸ். “யாதவர் ஷத்ரிய அடையாளத்தை விழைகிறார்கள். அதன்பொருட்டு அவனையே துறக்கவும் ஒருங்கிவந்துள்ளனர். அன்றே அந்த அடையாளத்தை நாம் அவர்களுக்கு அளித்திருந்தோமென்றால் குடிகளை மீறி அவன் ஒன்றும் செய்திருக்கவியலாது.” பிருஹத்பலன் “அவனை நீங்கள் அறிந்தது அவ்வளவுதான்” என்றான். “அவனுடைய எண்ணங்கள் ஏதும் இன்று இக்களத்தில் வைத்து நாம் அறிந்துகொள்ளத் தக்கன அல்ல.”

உக்ரதர்சனர் “நாம் இதையெல்லாம் ஏன் பேசிக்கொண்டிருக்கிறோம்? இன்னும் சற்றுநேரத்தில் போர்முரசுகள் முழங்கும். நாம் இன்னும் கவசங்களையே அணியவில்லை” என்றார். “நான் சொல்லவந்ததை சொல்லிவிடுகிறேன். இப்போர் இவ்வண்ணமே தொடர்ந்தால் முற்றழிவுதான் எஞ்சும். இன்று ஷத்ரியர்களைவிட பிற அரசர்களின் ஆற்றல் மிகுந்துள்ளது. இப்போது கலிங்கம் அழிந்துவிட்டது. வலுவான ஷத்ரிய அரசுகளில் ஒருசில களத்தில் அழியுமென்றால் ஷத்ரிய ஆற்றலே பாரதவர்ஷத்திலிருந்து அகன்றுவிடும்.”

அவர்கள் அச்சொற்களால் தாக்கப்பட்டவர்கள்போல விழிகள் நிலைக்க நோக்கினர். “அறிக, நம் ஆற்றல்மிக்க பட்டத்து இளவரசர்கள் மறைந்துகொண்டிருக்கிறார்கள். மறுபக்கமிருந்து கடோத்கஜன் உள்ளிட்ட கீழோர் நம் இளவரசர்களையே இலக்காக்கி அழிப்பது தொலைநோக்கு கொண்டது. இப்போரில் நாம் வென்றாலும்கூட ஆற்றல்மிக்க அடுத்த தலைமுறை அரசர்கள் நம் நாடுகளில் உருவாக மாட்டார்கள்.” கோவாசனர் “ஆம், அதை நானும் உணர்ந்தேன்” என்றார்.

பிருஹத்பலன் “நாம் இன்று செய்வதற்கொன்றே உள்ளது. இப்போரை இன்றோடு நிறுத்துவோம். இரு தரப்பினரும் ஓர் உடம்பாடுக்கு வரட்டும்” என்றான். “அதெப்படி? போர் இன்று உச்சத்திலுள்ளது… துரியோதனர் வெறிகொண்டிருக்கிறார்” என்றார் இந்திரசேனர். “அந்த வெறியை அவர் நம் இழப்பின் வழியாக தீர்த்துக்கொள்ளலாகாது. அவரே நேருக்குநேர் பீமசேனரிடம் போரிடட்டும்… அவர்கள் தங்களுக்குள் கொள்ளும் பூசலுக்கு ஷத்ரியர் பலியாக வேண்டாம்” என்றான் பிருஹத்பலன்.

“நாம் பின்வாங்குவதா? நம்மை கோழைகள் என்பார்கள்” என்று நிமி சொன்னார். “அதற்குரிய வழியை கண்டுபிடிப்போம்…” என்றான் பிருஹத்பலன். “நான் அதற்கொரு வழியை எண்ணினேன். அதையே இங்கு முன்வைக்க எண்ணினேன். விதர்ப்பராகிய ருக்மி தூய ஷத்ரியக்குருதி கொண்டவர். அவருடைய வஞ்சம் குலமிலியான இளைய யாதவனுக்கு எதிரானது. அது ஷத்ரியர்களாகிய நாமனைவருமே கொண்டிருக்கும் வஞ்சம். அவரை துரியோதனர் இழிவுசெய்து அனுப்பியதில் நமக்கு உடம்பாடில்லை. ருக்மியை நம் படைக்குள் சேர்த்துக்கொள்ளவேண்டும். துரியோதனர் அவரை அழைத்துவந்து பொறுத்தருளும்படி கோரவேண்டும்.”

சக்ரதனுஸ் “என்ன சொல்கிறீர்கள்? எவர் பணிவது, தார்த்தராஷ்டிரரா?” என்றார். “ஆம், அவர் பணிய மாட்டார். அவர் பணியாவிட்டால் நாம் போருக்கு ஒப்பவும் மாட்டோம். ஷத்ரியர்களாகிய நாம் ஷத்ரியர்களில் ஒருவரின் தன்மதிப்பின்பொருட்டு போரிலிருந்து விலகுவதில் பிழையே இல்லை.” அவையில் அமைதி நிலவியது. நீலன் “நல்ல திட்டம்தான்” என்றார். “இது ஒரு நல்வாய்ப்பு… ஆகவேதான் இதை உடனே செய்யவேண்டுமென நான் முடிவெடுத்தேன்” என்றான் பிருஹத்பலன்.

“இப்போதேவா?” என்றார் சக்ரதனுஸ். “நமக்கு பொழுதில்லை… நம் தரப்பில் மாளவர் செல்லட்டும். துரியோதனரிடம் பேசட்டும்.” இந்திரசேனர் “நானா?” என்றார். “நீங்களே எங்களில் மூத்தவர்… தார்த்தராஷ்டிரர்களுக்கு சற்று அணுக்கமானவர்” என்றான் பிருஹத்பலன். “நான் சொல்கிறேன், ஆனால்…” என்றார் இந்திரசேனர். “நீங்கள் சொல்லுங்கள், நிகழ்வதென்ன என்று பார்ப்போம்” என்றான் பிருஹத்பலன்.

“சரி, நாம் விலகிக்கொண்டால் போர் நின்றுவிடுமா என்ன?” என்று கோவாசனர் கேட்டார். “நிற்கவே வாய்ப்பு. இங்குள்ள படைகளில் பெரும்பகுதி நாமே. இருக்கும் படைகளைக்கொண்டே பாண்டவர்களை வெல்ல இயலவில்லை. நாம் விலகிக்கொண்டால் தோல்விதான். ஐயமே தேவையில்லை. ஒருவேளை போர் தொடர்ந்து நிகழுமென்றால் அதுவும் நன்றே. நம் எதிரிகள் இருவருமே ஆற்றல் குன்றி அழிவார்கள். நாம் நம் ஆற்றலுடன் விலகிக்கொண்டோமென்றால் இருவரையுமே வெல்லலாம்” என்று பிருஹத்பலன் சொன்னான்.

“இருவரையுமா?” என்று சக்ரதனுஸ் கேட்டார். “ஆம், இழிசினர் நம் உடனடி எதிரிகள். ஆனால் பாரதவர்ஷம் மீது முற்றாகக் குடைவிரித்தாள எண்ணும் தார்த்தராஷ்டிரர்களும் நம் எதிரிகளே…” என்றான் பிருஹத்பலன். “அத்துடன் ஒன்றுண்டு, அசுரர்களையும் அரக்கர்களையும் நாம் ஏன் போர்முறைமைப்படி எதிர்க்கவேண்டும்? நஞ்சும் தீயுமிட்டு அழிப்போம். வஞ்சமும் சூதும் வளர்த்து அவர்களே போரிடச்செய்து ஒழிப்போம். அனைத்துக்கும் நூல்கள் ஒப்புதலளிக்கின்றன. அவர்களை நாம் அரசர்களென்றல்ல, விலங்குகள், பூச்சிகள் என்றே கருதவேண்டும். இங்கு நாம் செய்யும் பிழை அவர்களை போர்நெறிப்படி களம்நின்று எதிர்த்துக்கொண்டிருப்பதுதான்.”

இந்திரசேனர் “எண்ணிப்பார்க்கையில் உகந்த முடிவென்றே தோன்றுகிறது” என்றார். “அவ்வண்ணமென்றால் நாம் இங்கே ஒரு முடிவெடுக்கவேண்டும். நாம் ஒற்றைத்திரளென நின்றிருக்கவேண்டும். எடுக்கப்படும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டாகவேண்டும். நாம் போர்முனையிலிருந்து கிளம்புகிறோம் என்று சொன்னால் தார்த்தராஷ்டிரர்கள் நம்மை அச்சுறுத்தலாம், விழைவும் காட்டலாம். எதற்கும் நாம் மயங்கிவிடலாகாது” என்றான் பிருஹத்பலன்.

“ஆம், உண்மை!” என்றார் உக்ரதர்சனர். அவையிலிருந்த அரசர்கள் அனைவரும் “ஆம், அவ்வாறே” என குரலெழுப்பினர். “இன்று பீஷ்மர் மண்டலவியூகத்தை அமைத்திருக்கிறார். சிறுசிறு குழுக்களாக படைகளை அமைத்து ஒன்றென மையச்சரடொன்றால் திரட்டும் இச்சூழ்கை மிக ஆற்றல்மிக்கது என்பார்கள். ஒவ்வொரு யானைக்கும் ஏழு தேர்கள். ஒவ்வொரு தேருக்கும் ஏழு புரவிவேலவர். ஒவ்வொரு புரவிக்கும் பத்து வில்லவர். ஒவ்வொரு வில்லவருக்கும் பத்து நடைவேலவர் என அமைந்திருக்கும் இந்தச் சூழ்கையை உடைத்து உள்ளே நுழைவது மிக எளிது, மீள்வது அரிது. இது எறும்புகளால் அமைக்கப்படும் சூழ்கை என்பார்கள். இன்று பாண்டவர்கள் போர்தொடரவேண்டாம் என முடிவெடுக்கக்கூடும்” என்றார் உக்ரதர்சனர்.

“பாண்டவர்களுடன் இருப்பவர் இளைய யாதவர்” என்று மட்டும் இந்திரசேனர் சொன்னார். “இன்றைய போர் இன்னும் அரைநாழிகைக்குள் தொடங்கும். இனி நாம் ஏதும் சொல்லமுடியாது, நம் படைகளையும் விலக்கிக்கொள்ள முடியாது. இப்போர் முடியட்டும். இதில் பாண்டவர்களுக்கு இழப்பு என்றால் துரியோதனரிடம் பாண்டவர்கள் சோர்ந்திருக்கும் தருணம் இது, அவர்களை பேச்சுக்கு அழைப்போம் என்று சொல்வோம். மாறாக நமக்கே பேரிழப்பு என்றால் இனிமேலும் போரிடுவதில் பொருளில்லை, மண்டலச்சூழ்கையையே அவர்கள் வென்றார்கள் என்றால் இனி எதைக்கொண்டு நம்பிக்கையை பேணுவது என்று கேட்கலாம்” என்று பிருஹத்பலன் சொன்னான்.

“ஆம், இன்று மாலை மாளவர் பேசட்டும்” என்றார் சக்ரதனுஸ். அவையினரும் “ஆம், மாலை பேசுக!” என்றனர். உக்ரதர்சனர் எழுந்துகொண்டு “நாம் கிளம்புவோம்… முரசுகள் முழங்கத்தொடங்கிவிட்டன” என்றார். “இன்றைய போரில் நாம் இழப்புகளின்றி மீள முயல்வோம். கூடுமானவரை படைகளையே முன்னணிக்கு அனுப்புவோம். இன்று போர்க்களத்திலேயே சகுனிக்கு நாம் போருக்கு உளம்கொள்ளவில்லை என்பது தெளிவாவது நன்று” என்றான் பிருஹத்பலன். “ஆம், அதுவே வழி” என்று குரல்கள் எழுந்தன.

அவர்கள் கிளம்பும்போது உக்ரதர்சனர் “அவர்களின் படைசூழ்கை என்ன?” என்று கேட்டார். “நமது படைசூழ்கையை அவர்கள் இதற்குள் அறிந்திருப்பார்கள். தங்கள் சூழ்கையை வகுத்துக்கொண்டிருப்பார்கள்” என்றார் இந்திரசேனர். பிருஹத்பலன் “அவர்கள் வஜ்ரவியூகத்தை அமைத்துள்ளார்கள். வைரம்போல பட்டைகள் கொண்டது. ஒன்றுடன் ஒன்று பிரிக்கமுடியாதபடி இணைந்த கூறுகளாலானது. நம் படைகளுக்குள் ஊடுருவினாலும் அவர்களின் படையில் ஒவ்வொரு பகுதியும் முழுப்படையுடன் இணைந்தே இருக்கும்” என்றான்.

அவர்கள் பெருமூச்சுடனும் தளர்ந்த உடல்களுடனும் எழுந்துகொண்டனர். கிளம்பும்போது உக்ரதர்சனர் மெல்லிய கசப்புடன் புன்னகைத்து “இந்தப் போரில் நான் கற்றது ஒன்றே, எந்தச் சூழ்கைக்கும் இணையான சூழ்கை உண்டு. ஆகவே எச்சூழ்கைக்கும் எப்பொருளும் இல்லை” என்றார். பிருஹத்பலன் என்ன பேசுவதென்று தெரியாமல் ஒருகணம் தடுமாறி “நாம் வெல்வோம்… நம்மை உருவாக்கிய வேதமே அதற்கு பொறுப்பு” என்றான். ஒருகணம் நோக்கிய பின் புன்னகைத்து உக்ரதர்சனர் திரும்பி நடந்தார்.

 காவியம்- சுசித்ரா, வெண்முரசு விவாதங்கள்

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 49

bowதெற்கு எல்லைக்காவலரணில் நின்றிருந்த புரவிவீரர்களில் இருவர் படைத்தலைவர்களுக்கான கொடியுடன் இருப்பதை தொலைவிலேயே யுயுத்ஸு பார்த்தான். ஐயத்துடன் தன்னைச் சூழ்ந்து வந்துகொண்டிருந்த படைத்தலைவர்களிடம் விரைவு கூட்டும்படி கைகாட்டிவிட்டு பாய்ந்து அதை நோக்கி சென்றான். படைத்தலைவர்கள் எல்லைக்காவல் அரணுக்கு வருவது அரிது. அரசரோ நிகரானவரோ வந்திருக்கவேண்டும். அன்றி ஏதேனும் ஒவ்வாப் பெருநிகழ்வு அமைந்திருக்கவேண்டும்.

ஒவ்வொரு நாளும் போர் முடிந்ததும் படையிலிருந்து கிளம்பி அருகிலிருக்கும் சிற்றூரான மிருண்மயத்திற்குச் சென்று அங்கு காவலர்மாளிகையில் தங்கியிருந்த திரௌபதிக்கும் குந்திக்கும் போர்நிகழ்வை சுருக்கி சொல்லி அவர்களின் வினாக்களுக்கு விளக்கமளித்து மீளும் பொறுப்பு அவனுக்கு அளிக்கப்பட்டிருந்தது. அப்போரின் துயர்மிகுந்த நிகழ்வாக அவன் உணர்ந்தது அதைத்தான். மாளிகையின் முகப்பிலேயே அவனை எதிர்கொண்டு உள்ளே அழைத்துச்செல்ல திரௌபதியின் சேடி நின்றிருப்பாள். அவளுக்கு சற்று அப்பால் தொடர்பற்று தனியாக நிற்பதுபோல் குந்தியின் சேடி நின்றிருப்பது தெரியும். அவர்கள் அவனிடம் ஒருசொல்லும் உரைப்பதில்லை. தலைவணங்கி உள்ளே அழைத்துச் செல்வர். சொற்களை உள்ளத்தில் அடுக்கியபடி அவன் உடன்செல்வான்.

காவலர்தலைவனின் சிறிய இல்லத்தில் மரத்தாலான கூடத்தில் இரு பீடங்களில் குந்தியும் திரௌபதியும் அமர்ந்திருப்பார்கள். முதல் நாளிலிருந்தே அவர்கள் செய்தி கேட்பதற்காக முழு அரசஉடையுடன்தான் வந்து அமர்ந்திருந்தனர். அவர்களுக்குப் பின்னால் வாய்மணம் பரப்பிய தாலம் ஏந்திய சேடியர் நின்றனர். அறைக்குள் நுழைவாயிலை காத்தபடி இரு ஆணிலிகள் நின்றனர். யுயுத்ஸுவுக்கு பீடம் அளிக்கப்படுகையிலும் வாய்மணமும் இன்னீரும் அளிக்கப்படுகையிலும் அவர்கள் ஒரு சொல்லும் உரைப்பதில்லை. சேடியரும் ஆணிலிகளும் அகன்றதும் குந்தி சொல்க என கையசைத்து ஆணையிடுவாள். அவன் அவர்களின் விழிகளை நோக்காமல் நோக்கு சரித்து நிலத்தையோ அப்பால் அசையும் திரைச்சீலைகளையோ பார்த்தபடி நிகழ்வுகளை சொல்வான்.

யுயுத்ஸு முதல்நாள் அவ்வமர்வில் அவர்கள் அணிந்திருந்த அரசஉடையைக் கண்டதுமே அங்கு நடந்துகொள்ள வேண்டிய முறையை உய்த்துணர்ந்துகொண்டான். ஆகவே முறைப்படி குந்திக்கும் பின்னர் திரௌபதிக்கும் அவைமுறைமைச் சொற்களை உரைத்து தலைவணங்கி அமர்ந்தான். போர்நிகழ்வுகளை எந்த நாடகமும் இன்றி வெறுமனே செய்திகளாக எளிய சொற்களில் அவர்களிடம் சொன்னான். வெற்றியும் தோல்வியும் படைநகர்வும் சூழ்கையும் ஒரே அளவு சொற்களில் அமையவேண்டுமென்பதை உளம் கொண்டான். குரலில் உணர்வோ ஏற்ற இறக்கமோ இல்லாது பார்த்துக்கொண்டான். அவர்கள் தங்கள் முகங்களில் எந்த உணர்வும் அசைவுமின்றி நிலைத்த விழிகளுடன் கேட்டிருந்தனர்.

கொலைகள், குருதிப்பெருக்குகள் வழியாக அவனது சொற்கள் சென்று நின்றதும் மறுசொல் உரைக்காமல் கையசைத்து செல்க என்று காட்டி குந்தி எழுந்தாள். அருகே நின்றிருந்த சேடி அவள் வெண்பட்டு ஆடையின் மடிப்புகளை சீர்படுத்த கைகூப்பி அவையை என அக்கூடத்தை வணங்கி வலம் திரும்பி வெளியேறினாள். அவள் வெளியேறிய பின்னர் திரௌபதியும் எழுந்து சேடியர் ஆடை சீரமைக்க இடைகொடுத்து பின் அவை வணங்கி அத்திசையிலேயே தானும் சென்று அகன்றாள். அதன் பின் யுயுத்ஸு எழுந்து இரு பீடங்களுக்கும் தலைவணங்கி இடந்திரும்பி கூடத்திலிருந்து வெளியே வந்தான்.

ஒவ்வொரு முறை அந்த அவையிலிருந்து வெளியே வரும்போதும் பெரும் விடுதலை ஒன்றை உணர்ந்தவன்போல் அவன் நீள்மூச்செறிவான். ஒவ்வொரு முறையும் சொல்லத்தொடங்குகையில் “இன்றைய போர் நமக்கு வெற்றிமுகம் அளிப்பதாக முடிந்தது. இன்று நம் படைத்தலைவர்கள் வகுத்த சூழ்கை அதன் இலக்கை அடைந்தது. களத்தில் நம் அரசர்களும் வீரர்களும் தங்கள் குல மாண்புக்குரிய வீரத்தை வெளிப்படுத்தினர். விண்ணவரும் தெய்வங்களும் குனிந்து நோக்கி வாழ்த்தும் செயல்கள் அவை” என்று சொல்கையில் அச்சொற்களின் பொருளில்லாமை அவனை பின்னிருந்து எவரோ வேல்முனையால் தொடுவதுபோல் உறுத்தியது.

ஆனால் முதல்நாள் அப்பொருளிலாச் சொற்றொடர்கள் தொடங்கியபோது அந்த அயன்மையே அவனை இயல்பாக பேசவைத்தது. எஞ்சிய பேச்சின் ஒழுங்கையும் வடிவையும் அதுவே முடிவு செய்தது. எவ்வகையிலும் சொல்பவருக்கோ கேட்பவருக்கோ தொடர்பற்றது என்றும் எப்போதுமே சொல்லப்பட்டு வருவது என்றும் எவராலும் மாற்றிவிட முடியாத தொல்கதை என்றும் அந்நிகழ்வை அது எண்ணிக்கொள்ள வைத்தது. அவ்விலக்கத்தால் அவனால் கூரிய சொற்களை தயக்கமில்லாது சொல்லமுடிந்தது.

ஆனால் தொடர்ந்த நாட்களில் அவ்வாறு சொல்வது அவனை நெருடத்தொடங்கியது. முதலில் உள்ளே எழும் சிறு அசைவின்மை ஒன்றால் பின்னர் சொல்லிக்கொண்டிருக்கும் சொற்களின் அனைத்து ஒழுங்குகளையும் குலைக்கும்படி உள்ளிருந்து எழும் இன்னொரு குரலாக அந்த உறுத்தல் உருமாறியது. ஒவ்வொரு சொல்லையும் அதன் கவ்வுதல்களிலிருந்து பிடுங்கி உள்ளிருந்து எடுக்க வேண்டிய நிலை வந்தது. பின்னர் அவ்வுளப் போராட்டத்தின் வெம்மையால் உடல் மெல்ல நடுங்க குரல் தழுதழுக்க அவன் போர்நிகழ்வுகளை சொல்லலானான். சொல்லி முடித்ததும் தொடுத்த அம்புகளென அந்நிகழ்வுகளனைத்தும் அவனிடமிருந்து செல்ல நாண் தளர்ந்ததுபோல் அவன் உள்ளம் நிலை மீண்டது. எழுந்து வெளிவருகையில் உள்ளிருந்து அக்கதையை எதிர்கொண்ட எதிர்க்குரலே அவன் அகமென இருந்தது.

ஒவ்வொருநாளும் மிருண்மயத்தின் முற்றத்தில் வந்து இருண்ட வானை அண்ணாந்து பார்த்து விண்மீன்களை நோக்கியபடி இடையில் கைவைத்து அவன் நின்றான். வேறு எவரிடமோ தன்னுள் எஞ்சும் கதையை சொல்ல விழைபவனாக. அன்று விண்மீன்கள் தெரியாமல் முகில் மறைத்திருந்தது. இருளுக்குள் மின்னல்கள் கிழிபட்டு துடித்துக்கொண்டிருந்தன. முரசொலிகள்போல தென்மேற்குச்சரிவில் இடியோசை மெல்ல ஒலித்து எதிரொலிகளென நீண்டு தேய்ந்து மறைந்தது.

புரவியிலேறிக்கொண்டு ‘செல்வோம்’ என்று சொல்லிக் கிளம்பியபோது யுயுத்ஸு எப்போதும்போலவே அன்றும் நாளை இங்கு நான் வரப்போவதில்லை, இப்பணியை அன்றி வேறு எந்தப் பணியையும் இங்கு நான் இயற்ற இயலும், இதையே நான் ஆற்றவேண்டுமெனில் களம் சென்று நெஞ்சு கொடுத்து குருதியுடன் வீழ்வதன்றி எனக்கு வேறு வழியில்லை என்று யுதிஷ்டிரரிடம் சொல்லவேண்டுமென்று எண்ணிக்கொண்டான். புரவி மையச்சாலைக்கு வந்து மிகத் தொலைவில் வானில் செவ்வொளிக் கசிவென எழுந்திருந்த பாண்டவப் படையை நோக்கி செல்லத்தொடங்கியபோது ஒருபோதும் தான் அதை சொல்லப்போவதில்லை என்று உணர்ந்து நீள்மூச்செறிந்தான்.

காவலரணை நெருங்கியதும் யுயுத்ஸு புரவியிலிருந்து இறங்கினான். அங்கு நின்றிருந்த வீரன் அவனை நோக்கி தலைவணங்கி அருகணைந்தான். “காவலர்தலைவர்கள் இங்கு என்ன செய்கிறார்கள்?” என்று யுயுத்ஸு கேட்டான். அதற்குள் காவலரணுக்குள் இருந்து வெளிவந்த படைத்தலைவன் அவனை நோக்கி தலைவணங்கி “இளவரசே, விதர்ப்ப நாட்டு அரசர் ருக்மி வந்துள்ளார். இளைய பாண்டவர் அர்ஜுனரை பார்க்க வேண்டுமென்று விழைகிறார்” என்றான். யுயுத்ஸு நிகழ்ந்த அனைத்தையும் ஒருகணத்தில் புரிந்துகொண்டு “எங்கிருக்கிறார்?” என்றான். “அவருக்கு என்ன முறைமை செய்யவேண்டுமென்று எங்களுக்கு தெரியவில்லை. அரசர்கள் இவ்வாறு நேரடியாக தனித்து வரும் வழக்கமில்லை” என்றான் படைத்தலைவன்.

“தனித்தா வந்திருக்கிறார்?” என்றான் யுயுத்ஸு. படைத்தலைவன் “தன்னந்தனியாக வந்திருக்கிறார். படைக்கலங்கள் எதுவும் இல்லை. அரசர் என்பதற்கான கணையாழி மட்டுமே உள்ளது. அவர் அருகணைந்து ஒளிக்குள் நுழைந்தபோது யாரோ முனிவர் என்று காவலர்தலைவர் எண்ணினார். அவர் இவரெனத் தெரிந்ததும் முழவொலி எழுந்தது. நாங்கள் இங்கு வந்தோம். முடிவெடுப்பதற்குள் தாங்கள் வந்துவிட்டீர்கள்” என்றான். “அரசர்கள் முன்னரே அறிவிப்பின்றி படைக்குள் நுழையலாகாது. படை என்பது ஒரு நகரம். நகர்நுழைவுக்கான எல்லா முறைமைகளையும் அவர்கள் பேணியாகவேண்டும்” என்றான் காவலர்தலைவன்.

யுயுத்ஸு காவலரணுக்குள் நுழைந்தபோது சிறுபீடத்தில் கால்மேல் கால் போட்டு கைகளை மார்பில் கட்டியபடி சாய்ந்தமர்ந்திருந்த ருக்மியை கண்டான். அருகே சென்று தலைவணங்கி “நான் தார்த்தராஷ்டிரனான யுயுத்ஸு. பாண்டவப் படைகளின் சொல்லாயும் பொறுப்பிலிருக்கிறேன். தங்கள் பணிக்கென தலைகொண்டவன்” என்றான். ருக்மி வலக்கையால் அவனை வாழ்த்தி “இங்கு வந்ததை நான் அறியவில்லை” என்றான். யுயுத்ஸு “போர் தொடங்குவதற்கு முன்னரே வந்துவிட்டேன்” என்றான். ருக்மி “நான் முதலில் அங்குதான் சென்றேன். அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கிருந்து திரும்பி என் நாட்டிற்கு செல்லவேண்டும் என்றே கிளம்பினேன். எனது படைத்தலைவர்கள் அதை விரும்பவில்லை. கௌரவர்களால் திருப்பியனுப்பப்பட்டால் நாம் படைக்கூட்டுக்கு தகுதியானவர்கள் அல்ல என்பதையே வரலாற்றில் நிலைநிறுத்துகிறோம் என்று என் முதன்மை படைத்தலைவன் சக்ரரதன் சொன்னான்” என்றான்.

யுயுத்ஸு அவன் அப்படி நேரடியாக பேசத்தொடங்கியதை எண்ணி வியப்புகொண்டான். ஆனால் அவனறிந்த ருக்மி எப்போதுமே முறைமைகளறியாத நேர்ப்பேச்சு கொண்டவன். “நான் தூதுச்செய்தியுடன் வந்துள்ளேன்… நானே தூதனானேன். ஏனென்றால் இச்செய்தியை என்னால்தான் சொல்லமுடியும்…” என்றான். யுயுத்ஸு மெல்ல இடைமறித்து “நான் தங்களை அழைத்துச்செல்கிறேன்…” என்றான். ஆனால் ருக்மி பேசவிழைந்தான் என தெரிந்தது. அவன் மிகக் குறைவாகவே பேசுபவன். அது சொல்லடங்கியதால் அல்ல, சொல் திரளாமையால். அத்தகையோர் பேசத்தொடங்கினால் அதிலேறி ஒழுகிச்செல்வார்கள்.

ருக்மி “என் படைத்தலைவர்கள் சொல்வது உண்மை என தோன்றியது. துரியோதனரால் திருப்பி அனுப்பப்பட்டேன் என்ற செய்தியே என் குடிக்கு நஞ்சுபோன்றது. சூதர்கள் எங்களை கோழைகள் என்றும் பயிலாதோர் என்றும் நம்பத்தகாதோர் என்றும் சொல்லிச் சொல்லி நிறுத்திவிடுவார்கள்” என்றான். யுயுத்ஸு “எதன் பொருட்டு அவர்கள் உங்களை திருப்பி அனுப்பினார்கள் என்பதை சொல்லில் நிலைநிறுத்தலாமே?” என்றான். “ஆம், ஆனால் அது சூதர் பாடலில் நிலைகொள்ளாது. ஏனெனில் சூதர்கள் சொல்லிச் சொல்லி தார்த்தராஷ்டிரராகிய துரியோதனருக்கு ஓர் இயல்பை அளித்துள்ளார்கள். அதை அவர்கள் எப்போதும் மாற்றப்போவதில்லை. சூதர்பாடல்கள் ஊற்றிலிருந்து கிளம்பிய நதி போன்றவை. அவை மீண்டும் ஊற்றுக்கு ஒருபோதும் செல்வதில்லை என்பார்கள்” என்றான் ருக்மி.

“தன் இயல்புக்கு மாறான ஒன்றை அவர் கூறினார் போலும்!” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆம், நான் என் குலத்தாருடன் போரிடவேண்டாம் என்றார். எந்நிலையிலும் உடன்பிறந்தார் ஒருவரோடொருவர் போரிட்டு குருதி சிந்தலாகாது என்றார்” என்றான் ருக்மி. “மண்ணுக்காகவும் புகழுக்காகவும் நிகழ்த்தப்படும் அனைத்துப் போர்களும் பொருளற்றவையே என்றும் சொன்னார்.” யுயுத்ஸு “இந்தப் போரிலிருந்து நிறையவே கற்றுக்கொண்டிருக்கிறார்!” என்றான். ருக்மியின் உதடுகள் இகழ்ச்சியுடன் வளைந்தன. “அங்கிருப்பவர் யுதிஷ்டிரரா என்ற ஐயத்தை நான் அடைந்தேன். போர் தொடங்கியபின் துரியோதனர் யுதிஷ்டிரர் ஆகிவிட்டார் என்றால் இங்கு யுதிஷ்டிரர் துரியோதனராக இருப்பாரோ என்று எண்ணிக்கொண்டேன்” என்றான். யுயுத்ஸு “அவர்கள் இருவரும் ஒருவரே” என்றான்.

ருக்மி அதை புரிந்துகொள்ளாமல் கூர்ந்து நோக்க “விதர்ப்பரே, உங்களிடம் பேசியவையும் என் மூத்தாரின் இயல்புக்குரிய சொற்களே. அவரை இருபுறமும் இருவகையான தெய்வங்கள் நின்றாள்கின்றன. நீங்கள் சென்ற தருணம் நன்று இயற்றும் தெய்வங்களுக்குரியது” என்றான். ருக்மி “ஆம், அவர் நன்னிலையில் இல்லை என்பதை நானும் உணர்ந்தேன். ஆனால் என் படைகள் அவரால் திருப்பி அனுப்பப்பட்டன என்பதை எங்கும் என்னால் விளக்க இயலாது. நான் இயற்றவேண்டியதென்ன என்று படைத்தலைவர்களிடம் கேட்டேன். பாண்டவப் படைகளுடன் வந்து சேர்வதொன்றுதான் செய்வதற்குள்ளது என்றார்கள்” என்றான்.

யுயுத்ஸு புன்னகைத்து “உங்கள் வஞ்சினம் என்ன ஆவது?” என்றான். ருக்மி “ஆம், அது பொருளற்றுப் போகிறது. அதை என்ன செய்வதென்று தெரியாமல் வைத்திருக்கிறேன். என்னால் அசைக்க முடியாத மாபெரும் படைக்கலம் ஒன்று என் இல்லத்தில் கிடப்பது போலிருக்கிறது” என்றான். “மெய்யாகவே எனக்கு எதுவும் தெரியவில்லை” என ருக்மி எழுந்தான். மேலாடையை எடுத்து அணிந்தபடி பதற்றத்தால் சற்று நடுங்கிய குரலில் “நான் இளைய பாண்டவர் அர்ஜுனரை பார்க்கவேண்டும், அவரிடம் பேசவேண்டும்” என்றான். அவனுடைய தாடி செந்நிறமாக தழல்போல் அசைந்தது. அவர்களின் குடிக்கே ஹிரண்யரோமர்கள் என்று பெயர் என யுயுத்ஸு நினைத்துக்கொண்டான்.

“உன்னை கண்டால் யுதிஷ்டிரரைப்போல் தோன்றுகிறது. நீ எனக்கு உரிய வழிகாட்டமுடியும்” என்று ருக்மி சொன்னான். “நான் உடனே இளைய பாண்டவரை காணவேண்டும்…” யுயுத்ஸு “நீங்கள் பேச வேண்டியது மூத்தவர் யுதிஷ்டிரரிடமல்லவா?” என்றான். “அல்ல. அதற்கு முன் இளைய யாதவரிடம். அதற்கு முன்பு இளைய பாண்டவரிடம்” என்றான் ருக்மி. “இளைய பாண்டவரிடம் எனக்கு எஞ்சும் சொல் உள்ளது. முன்பு நான் துருமன் என்னும் கிம்புருடநாட்டு ஆசிரியரிடம் வில்பயின்றேன். அவர் எனக்கு அளித்த விஜயம் என்னும் வில்லுடன் நான் அஸ்தினபுரிக்குச் சென்று இளைய பாண்டவர் அர்ஜுனரை நிகர்ப்போருக்கு அழைத்தேன். அன்று இதே குருக்ஷேத்ரத்தில் நிகழ்ந்த போரில் நாங்கள் இருவரும் ஒருநாள் முழுக்க இணைநின்று போரிட்டோம். என் வீரத்தில் மகிழ்ந்த இளைய பாண்டவர் தேவையேற்படுகையில் நான் அவரை சென்று காணவேண்டும் என்றும் அவருடைய வில் எனக்கு உதவும் என்றும் சொல்லளித்தார்.”

யுயுத்ஸுவின் தோளில் கைவைத்து “இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளவேண்டிய தருணம் இது” என்று ருக்மி சொன்னான். “தாங்கள் நாடும் உதவி எது?” என்றான் யுயுத்ஸு. ருக்மி தத்தளிப்புடன் தலையை அசைத்து நீள் தாடியை கையால் பற்றி உருவி பின்னர் “என் படைகள் இங்கு சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். ஒருநாளேனும் இங்கு கௌரவரை எதிர்த்து நாங்கள் போரிடவேண்டும்” என்றான். “தங்கள் உடன்பிறந்தோர் முன்னரே இங்குதான் இருக்கிறார்கள்” என்றான் யுயுத்ஸு. “ஆம், அவர்கள் என்னை இரு கை விரித்து ஏற்றுக்கொள்வார்கள். இதுகாறும் நான் இழைத்த அனைத்துப் பிழைகளையும் அவர்கள் எப்போதோ பொறுத்திருப்பார்கள். இத்தருணத்திற்காக காத்திருப்பார்கள் என்றே நான் எண்ணுகின்றேன். அந்தத் தோளிணைவு யுதிஷ்டிரர் அவையில் நிகழ்வதென்றால் நன்று. ஆனால் அதற்கு முன்…”

சொல்லின்மையால் தத்தளித்த ருக்மி கைகளை காற்றில் அசைத்து “அதற்கு முன் எனக்கொரு சொல் தேவை. நான் அதைத்தான் இளைய பாண்டவரிடம் எதிர்பார்க்கிறேன்” என்றான். “என்ன சொல்?” என்று யுயுத்ஸு கேட்டான். “நான் இளைய யாதவர் மேல் கொண்டுள்ள வஞ்சம். நான் இதுகாறும் வாழ்ந்தது அதன்பொருட்டே. அதை நான் கைவிடவேண்டுமென்றால்… எங்கும் இளிவரல் எழாது நான் அதை கடந்துசெல்லவேண்டுமென்றால்…” என ருக்மி தடுமாறினான். “அது இளைய யாதவரால் மட்டுமே இயலும். அவர் உளம்கொள்ளவேண்டும். அதற்கு அவரிடம் இளைய பாண்டவர் சொல்லவேண்டும்.”

யுயுத்ஸு தன்னுள் எழுந்த வெறுப்பை முகத்தில் காட்டாமல் மறைத்தபடி “அவர் ஆற்றவெண்டியதென்ன?” என்றான். “வெறுமனே என்னிடம் ஒரு அடியறைவு சொல்லுதல். வெறும் சொல்தான். தன் பிழையை பொறுக்கவேண்டுமென்று ஒரு கோரிக்கை. பொறுத்தேன் என்ற ஒரு சொல்லால் அத்தருணத்தை நானும் கடந்து செல்வேன். இதுவரை அள்ளிக்கொண்டுவந்த அனைத்தையும் அங்கு உதறிவிட விரும்புகிறேன்” என்றான் ருக்மி. தலையை அசைத்து “ஆம், அதற்கு பொருளேதுமில்லை. அது வெறும் நடிப்பு. ஆனால் அத்தகைய ஒரு நாடகத்தருணம் இல்லையென்றால் இந்த நீண்ட தவத்தை என்னால் முடித்துக்கொள்ள இயலாது. என் வாழ்வே பொருளற்றதாகிவிடும்” என்றான்.

யுயுத்ஸு “விதர்ப்பரே, இக்களத்தில் இங்குள்ள அனைவருடைய வாழ்வும் பொருளற்றதாகவே உள்ளது” என்றான். யுயுத்ஸுவின் சொல்லை ருக்மியால் புரிந்துகொள்ள இயலவில்லை. “நான் கூறவருவதை இளைய பாண்டவரால் புரிந்துகொள்ள முடியும். இது அரசுசூழ்பவரின் உணர்வல்ல. வஞ்சத்தாலும் சினத்தாலும் விழைவாலும் ஆட்டுவிக்கப்படும் ஷத்ரியர்களின் தடுமாற்றம். கூற்றைவிட அவர்கள் அஞ்சுவது சூதர் சொல்லைத்தான். ஆகவேதான் அவரை பார்க்கவேண்டுமென்று கேட்டேன்” என்றான். “தங்களை அவரிடம் கூட்டிச்செல்வது என் பணி” என்று யுயுத்ஸு சொன்னான்.

அர்ஜுனனின் படைபிரிவை நோக்கி கிளம்புவதற்குள்ளாகவே அருகிலிருந்த காவல்நிலையிலிருந்து அர்ஜுனனுக்கு ஒரு புறாச்செய்தியை அனுப்ப யுயுத்ஸு ஒருங்கு செய்தான். அதில் சுருக்கமாக ருக்மியின் வருகையின் நோக்கத்தை தெரிவித்திருந்தான். அவன் செய்தியை அனுப்பிவிட்டு வந்து புரவியிலேறிக் கொண்டபோது “முழுச் செய்தியையும் நீ அனுப்பியிருக்க வேண்டியதில்லை” என்றான் ருக்மி. யுயுத்ஸு “செய்தியை அனுப்பாமல் தங்களை நான் அழைத்துச்செல்ல இயலாது. எதன் பொருட்டு தாங்கள் அவரை பார்க்கவேண்டுமென்பதை அவர் அறிந்த பிறகே முடிவெடுப்பார். ஏனெனில் இப்போர் தொடங்கியபின் படைசூழ்கைக்கான அவையில் அவர் அமர்வதில்லை. போர் குறித்த எந்தச் சொல்லாடல்களுக்கும் வந்ததில்லை. போரும் அந்திப்பொழுதின் விற்பயிற்சியும் அவ்வப்போது இளைய யாதவரை சந்தித்து ஓரிரு சொற்கள் உரையாடுவதுமன்றி இங்குள்ள எவருடனும் அவருக்கு எத்தொடர்பும் இல்லை. காட்டில் யோகிகள் வாழ்வதுபோல் இங்கு வாழ்கிறார், காட்டுடன் எத்தொடர்புமின்றி” என்றான்.

ருக்மி “அவர் அவ்வாறுதான் இருக்க இயலும்” என்றான். அவர்களின் புரவி தாளமிட்டு மரப்பாதையில் விரைந்தது. புண்பட்டோரும் மாய்ந்தோரும் அகற்றப்பட்டு களம் ஒழிந்துவிட்டிருந்ததனால் குருக்ஷேத்ரத்தில் ஓசைகள் முற்றாக அடங்கிவிட்டிருந்தன. படைப்பிரிவுகளில் இரவு விளக்குகளன்றி பிற பந்தங்கள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன. விண்மீன் பரவிய வானத்தின் அமைதி தெரிந்தது. மிகத் தொலைவில் படைக்குப் பின்புறம் மருத்துவநிலையிலும் அதற்கும் அப்பால் உலைக்கூடங்களிலும் மட்டுமே வெளிச்சம் இருந்தது. குளிர்ந்த காற்று கந்தக மணத்துடன் வீசியது. சுழன்றுவந்தபோது அடுமனை மணம் அதிலிருந்தது.

ருக்மி கை சுட்டி “காட்டுக்குள் அது என்ன ஒளி?” என்றான். “சிதைகள்!” என்று சுருக்கமாக யுயுத்ஸு சொன்னான். ருக்மி ஒன்றும் சொல்லாமல் இடக்கையால் தாடியை நீவியபடி சிதைச் செம்மையை விழிநிலைத்து நோக்கிக்கொண்டு புரவியில் அமர்ந்திருந்தான். அவன் என்ன எண்ணுகிறான் என்று யுயுத்ஸுவுக்கு புரியவில்லை. அவர் ஏதும் எண்ணுவதே இல்லையோ என்ற எண்ணம் ஏற்பட்டது. என்றேனும் தன்னைக்கடந்து ஒரு சொல் எண்ணியிருப்பாரா இவர்? தங்கள் புகழுக்கும் செல்வத்திற்குமென களம் காண்கிறார்கள். பல்லாயிரம் உயிர்களை வைத்து விளையாடுகிறார்கள்.

அர்ஜுனன் பதினெட்டாவது படைப்பிரிவில் இருப்பதாக புறா செய்தி கொண்டுவந்தது. பதினெட்டாவது படைப்பிரிவை நோக்கி சென்று முதல் காவலரணில் தன் புரவியை நிறுத்தி இறங்கிய யுயுத்ஸு தன் வருகையை அறிவித்தான். அங்கு காவலுக்கு நின்றிருந்த காவலன் “தங்களுக்காக காத்திருக்கிறார்கள்” என்றான். “யார்?” என்று யுயுத்ஸு கேட்டான். “இளைய யாதவரும் இங்கு வந்திருக்கிறார். தங்களுக்காக காத்திருக்கிறார்” என்றான் காவலன். யுயுத்ஸு அதை எப்படி எதிர்பார்க்காமல் இருந்தேன் என்று எண்ணிக்கொண்டான். காவலன் அவர்களின் வரவை அறிவிக்கும்பொருட்டு சென்றான்.

அவனுடன் நடந்து வந்த ருக்மி காவலர்தலைவன் குறிமொழியில் சொன்னதை புரிந்துகொள்ளவில்லை. “நான் இளைய பாண்டவரிடம் சொல்வதற்கொன்றே உள்ளது. என் நோக்கை அவர் இளைய யாதவரிடம் சொல்ல வேண்டும். இன்று தெளிவாக உணர்கிறேன் எனது வஞ்சத்தின் ஊற்றுமுகம் என்ன என்பதை. அது வீரனென்றும் அரசனென்றும் நான் கொண்ட ஆணவம். ஷத்ரியன் என்று அவைகளில் தருக்கி நிற்க விழைந்தேன். யாதவன் என் தங்கையை மணம்கொண்டு சென்றான். அதை தடுக்கச் சென்ற என் தாடியை மழித்து சிறுமை செய்தான். செல்லுமிடமெங்கும் சூதர் சொல்லில் அச்சிறுமை வாழ்வதை கண்டேன். அதைக் கடந்து சூதர்சொல்லில் பெருமை நிலைநாட்டி மண்நீங்கிச் செல்ல வேண்டுமென்பதற்கப்பால் நான் எதைப்பற்றியும் எண்ணவில்லை.”

“அதன் பொருட்டே இதுநாள் வரைக்கும் வாழ்ந்தேன். அவ்வஞ்சத்தை ஒவ்வொரு நாளும் நிகழ்வுகள் பெருக்கின. வெவ்வேறு அவைகளில் நானும் எந்தையும் கொண்ட சிறுமைகள். என் உடன்பிறந்தானுக்கு நிகரான சிசுபாலனை தலைவெட்டிச் சரித்து அவர் கொன்ற முறை…” என்றான் ருக்மி. யுயுத்ஸு “அவரும் இத்தகைய ஆணவத்தால் ஆட்டுவிக்கப்பட்டவரே” என்றான். “ஆம், ஆணவமே ஷத்ரியர்களை ஆக்குகிறது. ஆணவமில்லாத ஷத்ரியன் வேலேந்தி படைப்பெருக்கில் ஒரு துளியென நின்று பொருதி இறக்கும் ஊழ் கொண்டவன்” என்றான் ருக்மி. யுயுத்ஸு ஏதோ சொல்ல வந்து அச்சொல்லை தவிர்த்தான்.

“அதைவிட ஜராசந்தரின் இறப்பு!” என்றான் ருக்மி. “உடல்கிழித்து வீசப்பட்டார்! என்னளவில் அவை எளிய போர்விளைவுகள் அல்ல. அவர்கள் ஒவ்வொருவராகவும் நின்று நான் நடித்திருக்கிறேன். ஆகவே அவர்கள் ஒவ்வொருவருடனும் இறந்தேன். ஒவ்வொரு இறப்புக்குப் பின்னும் ஏழு மடங்கு வஞ்சத்துடன் எழுந்தேன். ஆனால் இதுவரை எனக்கிருந்த இழிவைவிட நூறு மடங்கு இழிவை கௌரவர்களால் போர்முனையிலிருந்து விலக்கப்பட்டமை எனக்கு அளிக்குமெனும்போது அனைத்தும் குழம்பி சரிந்து கிடக்கின்றன கண்முன்.” ருக்மி “அங்கே இளைய பாண்டவர் தனித்திருக்கிறாரா? எங்களுடன் எவரும் இருப்பதை நான் விரும்பவில்லை” என்றான். யுயுத்ஸு அதற்கு மறுமொழி உரைக்கவில்லை.

“எனக்கு ஒரு தெளிவு வேண்டும்… அதை இளைய பாண்டவர் அளிக்கமுடியும்” என்று ருக்மி சொன்னான். “நான் பாண்டவப் படைகளில் சேர்வதற்கான அழைப்பை இளைய யாதவரே எனக்கு அளிக்க வேண்டும். அவர் எனக்கிழைத்த பிழைக்கு ஒரு சொல்லளித்து என்னை அழைத்தார் என்றும் என்னால் இடர்ச்சூழலை கடந்துசெல்ல இயலும்.” யுயுத்ஸு “அதை அவரே எத்தடையுமின்றி இயற்றுவார். சூதர்சொல்லில் வாழும் பொருட்டு அவர் எதையும் இங்கு செய்யவில்லை” என்றான். “விதர்ப்பரே, ஷத்ரியர்கள் இருவகை. சூதர்களுக்கு பின் செல்பவர், சூதர்களால் தொடரப்படுபவர்.”

ருக்மி அவன் சொற்களை புரிந்துகொள்ளவில்லை. கைவீசி “வீண்சொற்களில் எனக்கு ஆர்வமில்லை” என்றான். “ஆனால் நீங்கள் சொல்வதை இளைய பாண்டவர் ஏற்றுக்கொள்வார் என்று எனக்கு தோன்றவில்லை. உங்களை அவர் ஏற்றுக்கொண்டாரெனில் அது அவருக்கே இழிவு. நான்குநாள் போரில் கௌரவருடன் எதிர்நிற்க இயலாமையால் உங்களை படைத்துணைக்கு அழைத்தார் எனும் பொருள் வரும். அவருடைய வில்வல்லமைக்கும் தோள்திறனுக்கும் அது இழுக்கு” என்றான் யுயுத்ஸு. “இளைய பாண்டவர் பீமன் இங்கிருந்தால் சினந்து இழிசொல்லுரைத்து உங்களை திரும்பிச்செல்ல ஆணையிடுவார்.”

ருக்மியின் கண்கள் இடுங்கின. “ஆம்” என்றான். “அதை என் படைத்தலைவர்கள் கூறினார்கள். ஆகவேதான் பீமனை அவையில் சந்திப்பதற்கு முன்னரே அச்சொல்லை அர்ஜுனனிடமிருந்து பெற்றுவிடவேண்டுமென்று எண்ணினேன்” என்றான். “அதை நீங்கள் இளைய யாதவரிடமிருந்தே பெறலாமே?” என்றான் யுயுத்ஸு. “அவர்முன் சென்று நின்றால் அக்கணமே இயல்பாக என் ஆணவம் வடிந்து தோள்கள் குறுகிவிடக்கூடும். என்னையறியாமலே நான் பணிந்துவிடக்கூடும்” என்றான் ருக்மி.

யுயுத்ஸு திரும்பிப்பார்த்தான். முதன்முறையாக அவனிடம் வியப்புணர்ச்சி எழுந்தது. ருக்மி “பகைமையுடன் என்றாலும் இத்தனை ஆண்டுகள் ஒவ்வொரு கணமும் என இளைய யாதவரை எண்ணியிருந்தவன் நான் என்று தார்த்தராஷ்டிரர் சொன்னார். அது மெய். இப்புவியில் அவர் மணந்த மங்கையரைவிட அவரை எண்ணிக்கொண்டிருந்தவர்கள் சிசுபாலனும் நானுமே. கொன்று அவரை விண்புகச் செய்தார். வென்று என்னை அவர் விண்புகச் செய்யக்கூடும். அத்தருணத்தை நான் அறிவேன். ஆம், ஐயமே இல்லை. அவரை எதிர்கொண்டு அருகில் கண்டால் சென்று கால் பணிந்து வணங்குவதன்றி வேறு எதையும் என்னால் செய்ய இயலாது. அதற்கு முன்னரே அவரிடமிருந்து ஒரு சொல்லில் ஓர் அழைப்பு எனக்கு இளைய பாண்டவரினூடாக கிடைக்குமெனில் என் குலத்தார் முன் நிமிர்ந்து நின்று சொல்ல ஏதுவாகும். அது ஒன்றையே இத்தருணத்தில் எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றான்.

“இப்போர் சென்றுகொண்டிருக்கும் திசையை நானறிவேன். ஒவ்வொரு நாளும் பேரழிவின் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. நானும் என் படையும் இப்போரில் அழிவோம் என்பது ஒரு வாய்ப்பே. அதற்கு நான் தயங்கவில்லை. இவை இயல்பாக உரிய முறையில் முடியவேண்டும் என்பதற்கு அப்பால் நான் எண்ணுவது பிறிதில்லை” என்றான் ருக்மி. யுயுத்ஸு “ஒவ்வொன்றும் உரிய முறையில் முடிவதற்கான வழி ஒன்றே. அவை நிகழ்வொழுக்கில் சென்று தங்கள் முடிவை தாங்களே அடைவதற்கு விடுதல். அன்றாட வாழ்க்கையில் அனைத்தையும் பற்றிக்கொள்வதே வாழ்திறன். பிறிதோர் எல்லையில் அனைத்துப் பிடிகளையும் விட்டுவிடுவதே உலகியல் முதிர்வு” என்றான்.

ருக்மி “ஆம். உன் பேச்சும் யுதிஷ்டிரரைப் போலவே” என்றான். அவர்கள் குடிலை அணுகுவதற்குள் கதவு திறந்து உள்ளிருந்து இரு கைகளையும் விரித்தபடி வெளியே வந்த இளைய யாதவர் “விதர்ப்பரே, தாங்கள் வருகிறீர்கள் என்ற செய்தி கேட்டு வந்தேன். முன்பு போரில் உங்களுக்கு பெரும்பிழையொன்றை இழைத்துளேன். அதன் பொருட்டு என்னையும் என் குடியையும் தாங்கள் பொறுத்தருளவேண்டும். தங்கள் வில்லும் தோளும் எங்கள் படைகளுக்கு துணையென அமைய வேண்டும். பெருங்குடி ஷத்ரியர்கள் பிற குலத்தோரின் பிழை பொறுத்தலினூடாகவே மாண்பு கொள்கிறார்கள்” என்றபடி வந்து ருக்மியின் கால்களை தொடுவதற்காக குனிந்தார்.

உடல் நடுநடுங்க ருக்மி இரண்டடி பின்வைத்து யுயுத்ஸுவை பற்றிக்கொண்டான். அவன் பிடித்துக்கொண்ட யுயுத்ஸுவின் கையும் நடுங்கியது. கால்தளர்ந்து நிலத்தில் அமர்ந்த ருக்மி தன் முன் நிலத்தை தொட்டு தலை தாழ்த்தி “எந்தையே! என்னிறையே! இவ்வாடலில் நான் எங்கு அமைய வேண்டுமோ அதை இயற்றுக!” என்றான். இளைய யாதவர் அவன் இரு தோள்களையும் பற்றித் தூக்கி தன் நெஞ்சோடணைத்துக்கொண்டு “நன்று திகழ்க! புகழ் பெருகுக!” என்றார்.

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 48

பகுதி ஏழு : காற்றன்

bowதெற்கெல்லையின் பன்னிரண்டாவது காவலரணின் காவலர்தலைவனாகிய சந்திரநாதன் அவனே தன்னை காணும்பொருட்டு வந்தது துர்மதனுக்கு வியப்பை அளித்தது. தெற்கு விளிம்பில் அமைந்த தன் பாடிவீட்டில் அவன் அன்றைய போரின் அறிக்கையை கேட்டுக்கொண்டிருந்தான். அவன் உடலின் புண்களுக்கு மருந்திட்டு வேது அளித்துக்கொண்டிருந்தனர் மருத்துவர். சிறு அம்புகளை அவர்கள் பிடுங்கும்போது அவன் முனகினான். அறைக்குள் கந்தகநீரின் எரிமணம் நிறைந்திருந்தது. சூழ்ந்து நின்றிருந்த படைத்தலைவர்கள் தங்கள் படைகளின் அழிவை அறிவித்துக்கொண்டிருந்தனர்.

ஒவ்வொருவரும் தங்கள் படைகளின் அழிவையும் எச்சத்தையும் அறிவித்தனர். எட்டு காலாட்படையினருக்கு ஒரு வில்லவர் என களம்பட்டிருப்பதை அவன் பார்த்தான். விழிகளை சுருக்கியபடி “காலாட்படையினரின் இறப்பின் மடங்கு பெரிதாக உள்ளதே?” என்றான். “எப்போதுமே அவ்வாறுதான். நான்கு மடங்கு என்பது கணக்கு. இப்போது சற்று மிகுதி” என்று படைத்தலைவனாகிய துர்வீரியன் சொன்னான். துர்மதன் “எட்டு மடங்கு எனில் அதை நாம் புறக்கணிக்க முடியாது” என்றான். “அது உளச்சோர்வை உருவாக்கும். காலாட்படையினர் மிக எளிதில் அஞ்சி பின்னகரக்கூடும்.”

பிறிதொரு படைத்தலைவனாகிய உஜ்வலன் “அரசே, வில்லவர்கள் படைத்தொழில் பயின்றவர்கள். விரைந்துசெல்லும் தேரில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களிடையே இடைவெளி இருப்பதனால் அகலவும் இயலும். எனவே அவர்கள் களத்தில் அம்புகளிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும். காலாட்படையினர் குறைந்த பயிற்சி பெற்றவர்கள். மேலும் அவர்கள் ஒருவரோடொருவர் நெருங்கி களம் செல்கிறார்கள். எழுந்து பொழியும் அம்பு மழையிலேயே அவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்துவிடுவதுண்டு” என்றான்.

துர்மதன் “அவர்கள் கவசங்கள் அணிந்துகொள்கிறார்களே?” என்றான். “ஆம், பெரும்பாலும் அவை எருமைத்தோல் கவசங்கள். அரிதாகவே இரும்பு. அம்புகளிலிருந்து அவை ஓரளவே காக்கும்” என்றான் துர்வீரியன். துர்மதன் “இதற்கு ஏதேனும் செய்தாகவேண்டும். மூத்தவரிடம் பேசுகிறேன். காலாட்படையினர் மேலும் சற்று இடைவெளி விட்டு அகன்று வரலாம். அவர்களுக்கு சிறந்த கவசங்கள் அளிக்கப்படலாம்” என்றான். துர்வீரியன் “போர் தொடங்கி இது ஏழாவது நாள். இனிமேல் கவசங்களுக்கோ புதிய படைக்கலங்களுக்கோ நாம் ஒருங்கு செய்ய இயலாது” என்றான்.

அப்போதுதான் ஏவலன் வந்து தெற்கெல்லைக் காவலரணின் தலைவன் சந்திரநாதன் வந்திருப்பதாக சொன்னான். துர்மதன் “தெற்கெல்லைக் காவலனிடமிருந்து தூதா?” என்றான். “தூதல்ல அரசே, அவரே வந்திருக்கிறார்” என்றான் ஏவலன். “அவனேவா? காவலரணை விட்டுவிட்டா?” என்றபடி எழுந்த துர்மதன் படைத்தலைவரிடம் கையசைத்துவிட்டு அவனே வெளியே வந்தான். தெற்கெல்லைக் காவலன் அருகே வந்து வணங்கி “அரசரைப் பார்த்து செய்தி ஒன்றை அளிக்கவேண்டும். அதன் பொருட்டே வந்தேன். இங்கு தாங்களிருப்பதை அறிந்தேன்” என்றான். “சொல்க!” என்றான் துர்மதன்.

“அரசே, விதர்ப்ப நாட்டு அரசர் ருக்மி தன் படைகளுடன் கிளம்பி வந்திருக்கிறார். நம்முடன் சேரவிழைகிறார். அரசரிடம் அளிக்கும்பொருட்டு என்னிடம் ஓர் ஓலை அளித்திருக்கிறார்” என்றான் சந்திரநாதன். முதலில் துர்மதனுக்கு அவன் சொல்வதென்ன என்று புரியவில்லை. “யார்?” என்று மீண்டும் கேட்டான். குழம்பி “அவரா? ஆனால் விதர்ப்ப நாட்டு அரசர் பீஷ்மகர் அல்லவா?” என்றான். காவலன் “அறியேன். ஆனால் விதர்ப்ப நாட்டு அரசருக்குரிய முத்திரை ஓலையுடன் வந்திருக்கிறார்” என்றான். துர்மதன் ஒருகணம் தயங்கி “அவர் எங்கிருக்கிறார்?” என்றான். “தெற்கெல்லை காவல்மாடத்திலேயே காத்திருக்கிறார்” என்றான். “அவரது படைகள்?” என்றான் துர்மதன். “அவை மூன்று நாழிகைத் தொலைவுக்கு அப்பால் காத்திருக்கின்றன” என்றான் சந்திரநாதன்.

துர்மதன் பொறு என்று கைகாட்டி தன் பாடிவீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த படைத்தலைவரிடம் “படைத்தலைவர்கள் மூவர் தெற்கெல்லைக்கு செல்க! அங்கு விதர்ப்ப நாட்டு படை மூன்று நாழிகை அப்பால் நின்றுள்ளது. அது தான் நின்றிருக்கும் இடத்திலிருந்து ஓர் அடிகூட முன்னகரக்கூடாது. நமது தொலைவில்லவர்கள் காவல் மாடங்களிலும் அரண்களிலும் காத்து நிற்கட்டும். வில் அணியும் விரைவுப்புரவி அணியும் ஒருங்கி நிற்கவேண்டும்” என்று ஆணையிட்டான். அவர்கள் தலைவணங்கினர். அவர்கள் குழப்பமடைந்திருப்பது தெரிந்தது.

துர்மதன் வெளியே வந்து “அவரை அழைத்து வா!” என்றான். “அரசரை பார்த்துவிட்டு…” என்று சந்திரநாதன் தயங்க “வேண்டியதில்லை. அவரே அரசரிடம் பேசட்டும். இன்னும் சற்று நேரத்தில் படைசூழ் அமர்வு நிகழவிருக்கிறது. அரசர் அரியணையில் அமர்ந்து அவை கேட்பார். அதில் விதர்ப்பரே தன்னுடைய சொற்களை உரைக்கட்டும்” என்றான். காவலன் தலைவணங்கி கிளம்ப “பொறு” என்று துர்மதன் மீண்டும் சொன்னான். “அவரை நானே வந்து அழைத்து வருவதுதான் முறை. அவர் அரசர்” என்றான். சந்திரநாதன் “ஆம்” என்றான்.

துர்மதன் சென்று தன் புரவியிலேறிக்கொண்டான். சந்திரநாதனை தன்னை தொடரச் சொல்லிவிட்டு படைகள் நடுவே அமைந்த பலகைகள் விரவிய விரைவுப்பாதையில் புரவிக்குளம்படி தாளம் எழுப்ப விரைந்து சென்றான். செல்லும் வழியெல்லாம் அவன் உள்ளம் குழம்பிக்கொண்டிருந்தது. திரும்பிச்சென்று துச்சகனை அழைத்து வந்தாலென்ன என்று எண்ணினான். ருக்மியுடன் அணுக்கமான கௌரவன் அவன்தான். ருக்மியை இறுதியாக எப்போது பார்த்தோம் என எண்ணிப்பார்த்தான். உள ஓவியம் திரளவில்லை.

தெற்கெல்லையை அவர்கள் அடைந்தபோது புரவிகள் வியர்த்து மூச்சிறைத்துக்கொண்டிருந்தன. துர்மதன் இறங்கி தொடர்ந்து வந்த காவலனிடம் “அவர் எங்கிருக்கிறார்?” என்றான். திரும்பிவிடலாமா என்னும் எண்ணம் அப்போதும் ஏற்பட்டது. “காவலரணின் கீழ் அறையில்” என்றான் சந்திரநாதன். “நன்று” என்றபின் துர்மதன் தன் ஆடைகளை சீர்படுத்தியபடி சென்று காவலரணின் வாயிற்காவலனை அணுகி கைகளாலேயே அவனை விலகிப்போகும்படி காட்டிவிட்டு சிற்றறைக்குள் நுழைந்தான்.

அவைகளில் பார்த்திருந்தாலும்கூட அங்கே அமந்திருந்த முனிவர்தான் ருக்மி என்று புரிந்துகொள்ள சற்று பிந்தியது. நெஞ்சுக்குக் கீழ் தழைந்த செந்தழல் தாடியும், தோள்களில் இறங்கி இடைவரைக்கும் சென்ற சடைவிழுதுகளும், மெலிந்து ஒட்டிய முகமும், சினந்தவைபோல் கூர்கொண்டிருந்த விழிகளும், சற்றே கூன் விழுந்த நெடிய உடலும் கொண்ட அவரை ஒரு நாட்டின் அரசர் என்று எண்ணி கொண்டுசென்று பொருத்துவது இயலாததாக இருந்தது. துர்மதன் நெஞ்சில் கைகுவித்து வணங்கி “விதர்ப்பத்தின் அரசரை வணங்குகிறேன். நான் அஸ்தினபுரியின் பேரரசர் துரியோதனருக்கு இளையோனாகிய துர்மதன். அஸ்தினபுரியின் படை எல்லைக்குள் தாங்கள் வந்தது எங்கள் பேறு” என்றான்.

ருக்மி மறுமுகமன் எதுவும் உரைக்காமல் “நான் உமது மூத்தவரை பார்க்க விழைகிறேன், அதன் பொருட்டே வந்தேன்” என்றான். “இன்னும் இரு நாழிகையில் அவரது பாடிவீட்டிலேயே படைசூழ்கை அமர்வு நிகழும். அவர் அமர்ந்து சொல் கேட்பார். தாங்கள் அங்கு வந்து அவையிலேயே அவரிடம் பேசலாம்” என்றான் துர்மதன். ருக்மி ஒருகணம் எண்ணியபின் “அவையிலென்றால்…” என முனகி “அதுவும் நன்று” என்றான். “தங்கள் படைப்பிரிவுகள் இப்போதிருக்கும் இடத்திலேயே இருப்பது நன்று. மூத்தவரின் ஆணை வரை” என்றான் துர்மதன். “ஆம், அவை அங்கிருக்கும். நான் என் படைகளுடன் கௌரவதரப்பில் நின்று போரிட வந்துள்ளேன்” என்றான் ருக்மி.

துர்மதன் “ஆனால் தங்கள் தந்தை பாண்டவர்களை ஆதரிக்கிறார். தங்கள் உடன்பிறந்தாரான ருக்மரதரும் ருக்மகேதுவும் ருக்மபாகுவும் ருக்மநேத்ரரும் மறுதரப்பில் இருக்கிறார்கள்” என்றான். “ஆம், அவர்கள் என்னுடன் இல்லை. நான் எனக்குரிய நிலத்தை பகுத்துக்கொண்டு நெடுநாட்களாகின்றன. குண்டினபுரிக்குள் நான் நுழைவதில்லை. போஜகடகத்தை தலைநகராகக்கொண்டு ஆள்கிறேன்” என்ற ருக்மி “கிளம்புவோம்” என்று எழுந்தான்.

துர்மதன் தெளிவுற நினைவுகூரமுடியாமல் தலையை விரல்களால் தட்டி “முதலில் தங்கள் தந்தை பீஷ்மகரும் தாங்களும் இங்கே எங்களுடன் சேர்வதாகத்தானே சொன்னார்கள்?” என்றான். “ஆம், ஆனால் அவருடனிருக்கும் குலத்தலைவர்கள் பன்னிருவரும் ஒரே குரலில் பாண்டவர்களிடம் சென்று சேரவேண்டும் என்றே சொன்னார்கள். தந்தைக்கு வேறுவழியில்லை” என்றான் ருக்மி. “ஆனால் அவருடைய சொல் என்னை கட்டுப்படுத்தாது. என் படைகள் வேறு.” உள்ளம் நிலையழிந்திருந்தமையால் அவன் செயற்கையான உரத்த குரலில் பேசினான்.

துர்மதன் ருக்மியின் பதற்றத்தை விந்தையாக நோக்கியபடி “வேறு எங்கிருந்து படைதிரட்டினீர்கள்?” என்றான். ருக்மி “என் எல்லைக்கு அப்பாலிருந்தும் படைதிரட்டினேன். ஆகவேதான் இத்தனை பிந்தினேன்… குலத்தலைவர்களில் மூவர் என்னுடன் இருக்கிறார்கள்” என்றான். ஏவலன் அருகே வந்து தலைவணங்க துர்மதன் திரும்பி ருக்மியிடம் “தங்களுக்கான தேர்…” என்றான். “தாழ்வில்லை. புரவியில் செல்வதே விரைவு” என்றான் ருக்மி. “நெடுந்தொலைவு. அங்கு சென்றபின் தாங்கள் களைத்து அவையில் அமரமுடியாமலாகலாம்” என்றான் துர்மதன். “நான் களைப்படைவதில்லை” என்று ருக்மி சொன்னான்.

ருக்மி விட்டிலொன்று தாவுவதுபோல புரவியிலேறிக்கொண்டான். புரவியில் உடன் செல்கையில் துர்மதனுக்கு அவனுக்கு கதை பயிற்றுவிக்கையில் துரோணர் சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன. “உள்ளத்தின் விசையை உடல் தவறவிட்டு நின்றுவிடுகையிலேயே தசைகள் கொழுப்பேறி பருக்கின்றன. நதி விரைவழிந்து தேங்குவதுபோல. உள்ளத்தின் விசையை உடலும் அடைகையில் உடல் இருப்பதையே உள்ளம் உணராது. வாளில் பிடியே எடை மிக்கதாக இருக்கவேண்டும், உடல் உள்ளத்தை ஏந்தியிருக்கும் பீடம்.” அவன் ஓரக்கண்ணால் திரும்பி ருக்மியை பார்த்தபடி புரவியில் சென்றான்.

அவர்கள் துரியோதனனின் பாடி வீடு அமைந்த அரசவட்டத்தை அடைந்தபோது இரவு செறிந்து படைகள் முற்றமைந்துவிட்டிருந்தன. அதற்கேற்ப கலைந்து முழங்கிக்கொண்டிருந்த ஓசை சீரடைந்து மெல்லிய உள் முழக்கமென கார்வைகொண்டிருந்தது. துச்சலன் அரசவட்டத்தின் முதன்மைக்காவலரணில் இருந்தான். துர்மதன் இறங்கிச்சென்று அவனிடம் ருக்மி வந்திருப்பதை சொன்னதும் அவன் வெளியே வந்து வணங்கி முகமனுரைத்தான்.

“அவை முன்னரே கூடிவிட்டது, விதர்ப்பரே. படைசூழ்கையை பேசிக்கொண்டிருக்கிறார்கள். தாங்கள் உள்நுழைவதற்கான தருணம் எதுவென நான் சென்று கேட்டு சொல்கிறேன். அதுவரை இக்காவலரணில் தாங்கள் இளைப்பாறலாம்” என்று துச்சலன் சொன்னான். ருக்மி கைவீசி “அமரவேண்டுமென்பதில்லை” என்று காவலரணின் முதல் தூணில் சாய்ந்து நெஞ்சில் கைகளைக் கட்டியபடி தொலைவில் காடு பற்றியதுபோல் தெரிந்த படைகளை நோக்கியபடி நின்றான்.

துர்மதன் அருகே நின்று அவன் முகத்தை நோக்கினான். மானுட முகங்களில் உணர்வுகளும் எண்ணங்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதை அவன் கண்டிருந்தான். ஒற்றை உணர்வில் மாறாது நிலைத்த முகத்தை அப்போதுதான் பார்க்கிறான் என்று எண்ணிக்கொண்டான். என்ன உணர்வு அது? வஞ்சம்! போர்க்களத்தில் தன் மைந்தரை இழந்து சீற்றத்துடன் வில்லேந்தி வந்த சாத்யகியின் முகமா அது? அந்த உச்சகணம் அப்படியே சிலைத்ததுபோல. இவருள் இப்போது வஞ்சம் கொந்தளித்துக்கொண்டிருக்கிறதா என்ன? எவர் மீதான வஞ்சம்?

ஒருமுறை அவன் உள்ளம் நடுங்கியது. ஒருவேளை அது மூத்தவர் மீதுள்ள வஞ்சமாக இருக்கலாம். அவைக்குள் நுழைகையில் இவருடைய படைக்கலங்கள் அனைத்தையும் அகற்றிவிடவேண்டும். என் வாளுடன் இவருக்கு மிக அருகில் நின்றிருக்கவேண்டும். மூத்தவரை நோக்கி இவர் ஓர் அடி எடுத்து வைத்தால் இந்நெஞ்சைத் துளைத்து இவரை வீழ்த்திவிடவேண்டும் என்று துர்மதன் எண்ணிக்கொண்டான். அவ்வெண்ணம் அவனை இயல்படையச் செய்ய உடலை எளிதாக்கி மூச்செறிந்தான்.

மேலும் சற்று நேரம் அவனை கூர்ந்து நோக்கியபோது அவ்வஞ்சம் அப்போது எழும் உணர்வல்ல என்றே தோன்றியது. ருக்மி தன் உதடுகளால் மெல்ல ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். சுட்டு விரலை காற்றில் சுழித்தான். உடலை நிலையழியச் செய்து மெல்ல அசைந்தான். அவ்வப்போது திரும்பி துரியோதனனின் பாடிவீடு இருக்கும் திசையை பார்த்தான். அவனுக்குள் எண்ணங்கள் மாறிக்கொண்டிருப்பதை அவ்வசைவுகள் காட்டின. அவன் நிலைகொள்ளாமலிருந்தான். ஆனால் முகத்தின் ஆழுணர்ச்சி அவ்வண்ணமே இருந்தது.

நெடுங்காலமாக மாறாது கொண்டிருக்கும் உணர்ச்சி முகமாக மாறிவிடும் என்று அவன் பயின்றிருந்தான். பீஷ்மரின் முகத்தில் உறுதியையும் விதுரரின் முகத்தில் கவலையையும் கர்ணனின் முகத்தில் அகன்று நிற்கும் தன்மையையும் அவன் கண்டது உண்டு. ஆனால் அவை ஓடைக்கு அடியில் பாறை என ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருக்கும் அன்றாட உணர்ச்சிகளுக்கு அடியில் நிலைகொண்டவை. இந்த முகத்தில் இந்த ஓர் உணர்வன்றி பிறிதேதும் இல்லை. தெய்வச்சிலைகளுக்குரிய மாறாமை. “மாறாமை என்பது தெய்வங்களின் இயல்பு. மானுடர் மாறுபவர் என்பதனால்தான் மாறாதவர்கள் தெய்வங்களாகிறார்கள். மாறா மானுடரும் தெய்வங்களே” கிருபரின் சொற்கள்.

இப்போது இவையெல்லாம் ஏன் எனக்கு நினைவுக்கு வருகின்றன என்று துர்மதன் வியந்தான். ருக்மியின் முகத்தை பார்ப்பது அவன் பதற்றத்தை பெருக்கிக்கொண்டிருந்தது. துச்சலன் அங்கிருந்து வருவதை கண்டான். ருக்மி திரும்பிப்பார்த்து தன் மேலாடையை இழுத்து சீரமைத்தான். அக்கணத்தில் சிறு அதிர்வென துர்மதன் ஓர் எண்ணத்தை அடைந்தான். இதே போன்று மாறா உணர்வில் நிலைத்த பிறிதொரு முகம் அவனுக்கு தெரிந்திருந்தது. எவர் முகம் அது? நன்கறிந்த முகம்! மாறாமையை தன் இயல்பெனக்கொண்ட தெய்வ முகம்! எவர் முகம் அது என அவன் உள்ளம் நெளிந்து துழாவித் தவித்தது.

bowதுச்சலன் அருகே வந்து தலைவணங்கி “தாங்கள் அவை புகலாம், விதர்ப்பரே” என்றான். ருக்மி தலையசைத்து முன்னால் செல்ல துச்சலன் பின்தொடர்ந்து செல்லும்படி துர்மதனிடம் கைகாட்டினான். துர்மதன் தலைவணங்கி ருக்மியை பின்தொடர்ந்து நடந்தான். ருக்மி பாடிவீட்டின் வாயிலை அடைந்ததும் அங்கு நின்ற காவலன் தலைவணங்கி உள்ளே சென்று அவன் வரவை அறிவித்து வெளியே வந்தான். ருக்மியின் முகத்தை அப்போது நோக்கியபோது அது வஞ்சமல்ல என துர்மதன் எண்ணினான். அது பிறிதொன்று, அவன் அறியாதது.

ருக்மி உள்ளே நுழைந்தபோது வாள் தொடும் தொலைவில் துர்மதனும் சென்றான். உள்ளே சென்ற ருக்மி அவையை ஒருமுறை விழியோட்டி நோக்கிவிட்டு துரியோதனனை தலைவணங்கினான். முகமனெதுவும் உரைக்காமல் “நான் கௌரவப் படைப்பிரிவுகளுடன் சேர்ந்து போரிடும் பொருட்டு வந்துள்ளேன், தார்த்தராஷ்டிரரே” என்றான். ஒருகணத்திற்குப் பின் துரியோதனன் விழிசுருங்க “போர் தொடங்கி ஆறு நாட்கள் முடிந்துவிட்டன” என்றான். “ஆம், நான் அறிவேன். என் படைப்பிரிவுகளை திரட்டுவதற்கு பொழுதாகியது” என்றான். “ஏன்?” என்று துரியோதனன் கேட்டான்.

“தாங்கள் அறிவீர்கள் என் தந்தைக்கும் எனக்குமான பூசலை. நான் போஜகடகத்தில் தனி நாடமைத்து தனிக்கொடியும் தலைநகரும் கொண்டு ஆள்வதே அவருக்கு எதிராகத்தான். இளைய யாதவன் என்னை சிறுமை செய்து என் தங்கையுடன் சென்று முப்பத்தாறாண்டுகள் கடந்துள்ளன. அன்று முதல் இன்று வரை ஷத்ரிய அவைகளில் அமரமுடியாதவனாகிவிட்டேன். அக்கீழ்மகனின் நெஞ்சைப் பிளந்து குருதிகொள்வேன் என்று வஞ்சினம் உரைத்தேன். அச்சொற்களை அணையா விளக்கென நெஞ்சில் ஏந்தி இதுகாறும் வாழ்ந்துளேன். தந்தையும் அன்று என் உணர்வுகளை புரிந்துகொண்டார். ஆனால் அவர் யாதவனுடன் போரிட விதர்ப்பத்தால் முடியாது என்னும் எண்ணம் கொண்டிருந்தார்.”

“அரசே, மீளமீள அரச அவைகளில் யாதவனுக்கு பெண்ணளித்தவர் என்று என் தந்தை சிறுமை செய்யப்பட்டார். ஆயினும் காலம் எளிதில் அனைத்தையும் மறக்க வைக்கிறது. இன்று அவர் அவர்களை ஆதரிக்கிறார். தன் மைந்தர்கள் நால்வரை அவர் பாண்டவர்களுக்கு ஆதரவாக படைகளுடன் அனுப்பியிருக்கிறார். நான் மறக்கவில்லை. மறப்பது எனக்கு எளிதும் அல்ல. என் வஞ்சம் நூறுமடங்கு நஞ்சும் கூரும் கொண்டுள்ளது. இளைய யாதவனை களத்தில் வென்று பழிகொள்ளவே இங்கு வந்தேன்” என்றான் ருக்மி.

“அவ்வஞ்சத்தை மறக்க முயன்றுளீரா?” என்று துரியோதனன் கேட்டான். “இல்லை” என்றான் ருக்மி. “என் முழு உயிர்விசையாலும் நெய்யூற்றி வஞ்சத்தை வளர்க்கவே முயன்றேன்.” துரியோதனன் “அது தங்கள் தோற்றத்தைப் பார்த்தால் தெரிகிறது. விதர்ப்பரே, இன்று இந்த அரியணையில் அமர்ந்து இவ்வுலகுக்கு நான் சொல்வதற்கு ஒரு சொல்லே உள்ளது, வஞ்சத்தால் எப்பயனும் இல்லை. எவ்வஞ்சமும் அது கொண்டவரைத்தான் முதலில் அழிக்கும். அது அனலின் இயல்பு. விரும்பி தன்னை ஏற்றுக்கொண்டவரை உண்டு நின்றெரித்து எச்சமிலாதாக்கி விண்மீள்வது அது” என்றான்.

ருக்மி அதை எதிர்பாராததனால் சொல் தளர்ந்து அவையை ஒருமுறை நோக்கிவிட்டு “என்னால் இளைய யாதவனை எதிர்க்க முடியும். ஏழு நாழிகைப்பொழுது தனியொருவனாக வில்விஜயனை தடுத்து நிறுத்த முடியும். அரிய அம்புக்கலைகளை கற்றிருக்கிறேன். நான் உங்கள் படைகளில் இணைவது உங்கள் வெற்றியை உறுதி செய்யும்” என்றான். “உங்களுடன் வந்துள்ள படைகள் எந்த உள நிலையில் இருக்கின்றன என்பது இப்போது நீங்கள் சொன்னதிலிருந்தே புரிகிறது. நீங்கள் உடன்பிறந்தாருக்கு எதிராக படை கொண்டெழுவதை அவர்கள் விரும்பவில்லை” என்றான் துரியோதனன்.

“அவர்களை விழைவும் அச்சமும் காட்டி திரட்டி அழைத்து வந்திருக்கிறீர். வஞ்சினம் உரைத்து வெறி கொண்டெழுந்த படைகளே இங்கு உளம் சோர்ந்து சிதைந்துள்ளன. உங்கள் விழைவும் அச்சமும் எத்தனை பொழுதுக்கு களம் நிற்கும்?” என்றான் துரியோதனன். எழாக் குரலில் ஆற்றல் வெளிப்பட “படைவல்லமையும் தோள் வல்லமையும் அல்ல ஊழ் வல்லமையாலேயே போர்கள் வெல்லப்படுகின்றன என்று உணர்ந்து இங்கு அமர்ந்திருக்கிறேன். நீங்கள் இந்த அவையில் அமர்வதற்கு எனது ஒப்புதல் இல்லை. திரும்பிச்செல்க!” என்றான்.

“நான்… ” என்று ருக்மி சொல்லெடுக்க “திரும்பிச்செல்க!” என்று துரியோதனன் உரக்க சொன்னான். “திரும்பிச்செல்லப் போவதில்லை. போருக்கென கிளம்பி வந்துவிட்டேன். போரில் ஈடுபட்டே திரும்புவேன்” என்றான் ருக்மி. “உங்கள் படை வல்லமை எனக்கு தேவையில்லை. உங்கள் போர்த்துணையையும் நான் விரும்பவில்லை” என்றான் துரியோதனன். “ஏன்?” என்று ருக்மி உரக்க கேட்டான். “நீங்கள் உங்கள் உடன்பிறந்தாருடன் போர்புரிய வேண்டியிருக்கும். விதர்ப்பர்கள் ஒருவரோடொருவர் கொன்று குவிக்க வேண்டியிருக்கும்” என்று துரியோதனன் சொன்னான்.

ருக்மி ஏளனத்தால் வளைந்த இதழ்களுடன் “அதைத்தானே இங்கே நீங்கள் இன்று செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்றான். “ஆம், ஆகவேதான் அதன் பொருளின்மையை இவ்வுலகுக்குச் சொல்லும் தகுதியுடையவன் ஆகிறேன். இனி என் ஒப்புதலுடன் ஒருபோதும் குலம் குலத்தோடும் குருதி குருதியோடும் போரிடமாட்டார்கள்” என்று துரியோதனன் சொன்னான். ருக்மி “என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிடில் அதை அவைச்சிறுமை என்றே கொள்வேன். ஏனெனில் நான் இங்கு வருவதை முரசறிவித்து குடியினருக்கும் நாட்டினருக்கும் சொல்லிவிட்டே கிளம்பினேன்” என்றான்.

அவன் குரல் தழைந்தது. “அரசே, இளைய யாதவர் மேல் நான் கொண்ட வஞ்சம் உலகறிந்தது. இத்தருணத்திற்காகவே இத்தனை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளுமெனக் காத்திருந்தேன். ஒவ்வொரு படைசூழ்கையாக பயின்றேன். நீங்கள் என்னை திருப்பி அனுப்புவது என் இலக்குகளை முற்றழிப்பது. என் வாழ்வையே பொருளற்றதாக்குவது. அளிகூருங்கள், இதை நான் ஒரு அருட்கொடையெனக் கோருகிறேன். நான் உங்கள் படைகளுடன் நிற்கவேண்டும். அந்த யாதவ இழிமகனை எதிர்கொள்ள வேண்டும். அவனை நான் கொல்ல வேண்டும். அன்றி அவன் கையால் நான் மடியவேண்டும். அதுவே என் குடிகளுக்கு முன் வீரனென்றும் ஆண்மகனென்றும் எழுந்து நிற்கும் தருணம்.”

துரியோதனன் “உம்மை என்னுடன் ஏற்றுக்கொள்ளாததற்கான அடிப்படையே இப்போது நீங்கள் சொன்னதுதான். இளைய யாதவருக்கு எதிரான வஞ்சத்துடன் எழுந்திருக்கிறீர்கள். இம்மண்ணில் எவரேனும் அவருக்கெதிரான வஞ்சத்தை நிறைவேற்ற இயலுமா என்ன? நீர் மலையில் தலைமுட்டி அழிகிறீர். அதற்கு களமொருக்குவதல்ல என் பணி” என்றான். ருக்மி சீற்றத்துடன் “நீங்களும் இங்கு யாதவருக்கு எதிராகவே போர்புரிகிறீர்கள். உங்களை அவர் முற்றழிப்பார். அது பசி கொண்ட பாம்பு, தீண்டி குறிவைக்கும், விடாது தொடர்ந்துவரும்” என்றான் ருக்மி.

துரியோதனன் புன்னகையுடன் “அறிந்துளீர்! நன்று! நானும் அதை அறிந்துளேன். எழுந்தபின் அமைவது என் இயல்பல்ல என்பதனால் இது என் வழி. உமக்குரியதல்ல அது” என்றான். ருக்மி எண்ணியிராக் கணத்தில் குரல் உடைந்து தளர உடல் வளைத்து “நான் என்ன செய்யவேண்டும்? இன்று நான் இயற்றக்கூடுவதென்ன? அதை சொல்க!” என்றான். “சென்று அவர் அடிபணிக! வஞ்சம் கொண்டேனும் இத்தனை நாள் அவரை நாளும் எண்ணியிருக்கிறீர். அதனாலேயே அவர் அருளைப்பெறும் தகுதி கொண்டிருக்கிறீர். அவருக்கு ஊர்தியாகுக! அவர் கையில் படைக்கலமாகுக! அவரால் முழுமை கொள்வீர்” என்று துரியோதனன் சொன்னான்.

ருக்மி “இதை நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. நான் அங்கு சென்று அடிபணிவதென்பது என் வாழ்க்கையின் ஒவ்வொரு எண்ணத்தையும் நானே மறுப்பதுபோல” என்றான். துரியோதனன் “வந்த பாதையை ஒவ்வொரு அணுவும் என முற்றிலும் மறுத்து திரும்பிச்செல்லாமல் எவரும் மெய்மையை அடைவதில்லை, விதர்ப்பரே” என்றான். “இத்தகைய சொற்களை நான் வெறுக்கிறேன். இவை மானுடரை சிறுமை செய்கின்றன. புழுதியின் பொடியாக மாற்றுகின்றன” என்றான் ருக்மி. “சிறுமையின் எல்லை வரை செல்லாமல் எவரும் முழுமையை உணர்வதில்லை. இந்தக் களம் ஒவ்வொருவரும் தங்கள் சிறுமையை உணர்வதற்கு உகந்தது” என்று துரியோதனன் சொன்னான்.

“நேற்று இரவு களம்பட்ட என் உடன்பிறந்தாரின் கவசங்களையும் கங்கணங்களையும் என்னைச்சுற்றி பரப்பி வைத்து ஒவ்வொன்றையும் எடுத்து நெஞ்சிலும் தலையிலும் சூடி விழிநீர்விட்டு கலுழ்ந்தேன். அப்போது அறிந்தேன் புழுதிப்பொடி மட்டுமே நான் என. அதற்கப்பால் எதுவுமே இல்லை. அத்தகைய பெரும் இழப்புகளுக்கு ஆளாகாமல் அதை நீரும் உணரமுடியுமெனில் நல்லூழ் கொண்டவர் நீங்கள்” என்றான் துரியோதனன். புன்னகையுடன் மீசையை நீவியபடி “இவ்வுலகில் ஒவ்வொருவரிடமும் கைபற்றி கண்ணீர்விட்டு தோள் அணைத்து நான் சொல்லவிருப்பது இது ஒன்றே. புழுதிப்பொடியென்று உணர்க! அறிதல் அனைவருக்கும் இயல்வது, உணர்தல் தெய்வங்களால் அளிக்கப்படுவது. அறிந்ததை தவம்செய்து உணர்க! இல்லையேல் தெய்வங்கள் அதை குருதி சிந்தி உணரச்செய்யும்” என்றான்.

பதற்றத்துடன் கைகள் அலைபாய அவையை சூழநோக்கியபின் “இறுதியாக என்ன சொல்கிறீர்கள்?” என்று ருக்மி உரத்த குரலில் கேட்டான். “இந்த அவையில் எவ்வகையிலும் நீங்கள் அமர இயலாது. கௌரவப் படைகளில் விதர்ப்பத்திற்கு இடமில்லை. இளைய யாதவர் மேல் வஞ்சமழியமாட்டீர் என்றால், போர் புரியத்தான் போகிறீர் எனில், அது உங்கள் ஊழ். அதன் பொருட்டு எங்கள் மேல் ஏறி நீர் நின்றிருக்க இயலாது. செல்க!” என்றான் துரியோதனன். சீற்றத்துடன் உடல் தத்தளிக்க “இது அவைச்சிறுமை! விதர்ப்பம் தூசியென தட்டி விலக்கப்படுகிறது. பெரும்புகழ் கொண்ட நாடு என்னுடையது. பாரதத்தின் பெருவீரர்களிலொருவனாக அறியப்பட்டவன் நான். எனது படையுதவி உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று கருதினீர்கள் என்று உங்களைச் சூழ்ந்திருக்கும் ஷத்ரியர்கள் எண்ணுவார்கள் என்றால் ஆயிரம் ஆண்டுகாலம் இந்தச் சிறுமை எங்கள் மேல் தங்கும். சூதர் சொல்லில் இது பெருகும். எங்கள் கொடிவழிகள் இதை நாணும்” என்றான்.

“இவையனைத்தும் வெறும் உளமயக்குகளே. காலத்தின் பொருட்டும், குடியின் பொருட்டும், சொல்லின் பொருட்டும் ஒருவன் வாழ்வானெனில் அவன் இருளையே சென்றடைவான். உள்ளிருக்கும் ஒளியின் பொருட்டு வாழ்க! இவை அவ்வொளியை மறைக்கும் புகை. செல்க!” என்றான் துரியோதனன். மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்து பின் சீற்றத்துடன் தன் சடைப்புரிகளை அள்ளி பின்னால் வீசி ருக்மி திரும்பிச்சென்றான். துர்மதன் அவனை தொடர்ந்து செல்லப்போக துரியோதனன் “இளையோனே, தெற்கு படைப்பிரிவின் கணக்குகளை சொல்” என்றான். துர்மதன் தலைவணங்கினான்.

வெண்முரசு விவாதங்கள்

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 47

bowபீலன் அனிலை தலைதாழ்த்தி செருக்கடிப்பதை கேட்டான். அது போருக்கு கிளம்பவிருக்கிறது என்பதை உணர்ந்ததும் திகைப்புடன் இருபுறமும் பார்த்தான். புரவிகள் அனைத்தும் செவிகோட்டி ஒலிக்காக கூர்ந்து நின்றிருந்தன. அனிலை முன்வலக்காலால் மண்ணை கிண்டியது. மீண்டும் செருக்கடித்து உடல் சிலிர்த்தது. “கிளம்புக! கிளம்புக! கிளம்புக!” என்று முழவின் ஒலி எழுந்தது. நூற்றுக்கணக்கான கடிவாளங்கள் இழுக்கப்பட புரவிகள் கனைத்தபடி, தலைசிலுப்பி, குளம்புகள் நிலத்தில் அறைந்து முழக்கமிட இடிந்து சரியும் கோட்டைபோல் படைமுகப்பு நோக்கி சென்றன.

அனிலையின் மீது அமர்ந்து வேலை சற்றே சாய்த்து பற்றியபடி தலைதாழ்த்தி முழு விரைவில் சென்றபோது பீலன் அவ்வியப்பிலேயே இருந்தான். முழவோசை எழுவதற்கு முன்னரே அனிலை அதை எவ்வாறு உணர்ந்தது? அவ்வாறு அது கணிக்கமுடியா நுண்மையொன்றால் உணர்ந்துகொண்டிருப்பவற்றை பலமுறை அவன் வியப்புடன் அறிந்திருக்கிறான். அதன் பக்கத்து கொட்டிலில் நின்றுகொண்டிருந்த புரவியான சுதீபன் காட்டில் அரவு தீண்டி உயிர்துறந்தபோது இரண்டு நாட்கள் முன்னரே அனிலை அமைதியிழந்திருந்ததை, மீண்டும் மீண்டும் சுதீபனை நோக்கி தலைநீட்டி முகத்தால் அதன் முகத்தை வருடிக்கொண்டிருந்ததை அவன் நினைவுகூர்ந்தான். முதியவராகிய கொட்டில் காவலர் காளிகர் நெஞ்சடைத்து இறப்பதற்கு முந்தைய நாள் இரவு அனிலை அவரை நோக்கி மீள மீள குரல் கொடுத்தது. நிகழ்வனவும் நிகழ்ந்தனவும் வருவனவும் ஒரு சரடின் மூன்று முடிச்சுகள்போல. சரடின் மேல் ஊர்ந்து செல்லும் எறும்புக்கு ஒன்று பிறிதொன்றுடன் தொடர்புடையதல்ல. முழுச் சரடையும் நோக்குபவருக்கு அது ஒன்றே என்று அவன் தந்தை ஒருமுறை சொன்னார்.

புரவிப்படை அவர்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த தேர்ப்படையை அணுகி தேர்கள் ஒன்றுக்குமுன் ஒன்றென அமைந்து வழிவிட்டு உருவாக்கிய நூறு பாதைகளினூடாக பீறிட்டு மறுபுறம் சென்றன. அங்கு கௌரவப் படை தேர்கள் உடைந்து, புரவிகள் தாக்கப்பட்டு நிலைகுலைந்திருந்தது. நீண்ட வேல்களால் எதிர்வந்த புரவிகளையும் தேர்வலர் வில்லவர்களையும் குத்திப் புரட்டி சரித்தபடி முன்சென்றனர் புரவிப்படையினர். பீலன் தன் நீண்ட குத்து வேலால் தேரில் நின்று வில்குலைத்த ஒருவனின் கவசத்தின் மேல் ஓங்கி குத்தினான். அவன் தோள்விசையும் தோள்வலியும் புரவிகளின் எழுவிசையும் இணைந்த அறைதலில் இரும்புக்கவசம் உடைந்தது. வேல் அவன் நெஞ்சுக்குள் புதைந்தது. புரவியை முன் செலுத்தி வேலை உருவி எடுத்து தலைக்குமேல் சுழற்றி மீண்டும் எடுத்து அதற்கு அப்பால் புரவிமேலிருந்து அம்புதொடுத்த ஒருவனின் கழுத்தை நோக்கி இறக்கினான். புரவிப்படை அணி கலைந்து குழம்பியிருந்த கௌரவப் படைக்குள் முழுமையாக ஊடுருவியது.

போரின் உச்சம். இறப்பு ஐம்புலன்களும் அறியும் பருவடிவப் பேரிருப்பென அருகே நின்றிருக்கும் தருணம். ஒவ்வொரு முறை நிகழ்கையிலும் அது விந்தையானதோர் உச்சத்தை அளிப்பதை பீலன் அறிந்திருந்தான். ஒருநாள் போர் முடியும்போது “இன்னொருநாள், மேலும் ஒரு நாள்” என உள்ளம் துள்ளும் உவகை படைப்பிரிவுகளுக்குச் சென்று அமைந்து, உடலில் பாய்ந்த அம்புகளை அகற்றி, புண்களுக்கு எரியும் மருந்திட்டு, ஊனுணவு உண்டு, அகிபீனா மாந்தி, படுப்பதற்காக சரியும்போது முற்றிலும் அணைந்துவிட்டிருக்கும். விண்ணிலிருந்த மீன்களை நோக்கியபடி எழுந்து ஓடவேண்டும் என்ற எண்ணமே எழும்.

அங்கிருந்து கிளம்பிவிடுவதைப்பற்றிய வெவ்வேறு உளநிகழ்வுகள் வழியாக தன்னிலை மயங்கும். ஆனால் புலரியிலெழுந்ததும் முதல் எண்ணம் அன்று போருக்குச் செல்லவிருப்பதாகவே இருக்கும். ஒவ்வொரு கணமென போரை எதிர்நோக்கி படைக்கலங்களைத் தீட்டி, கவசங்களை பழுதுநோக்கி, புரவியை அணிசீரமைத்து ஒருக்கி கடத்துவான். அனைத்தும் அந்த ஒரு தருணத்தின் எழுச்சிக்காகவே. அன்றாட வாழ்க்கையின் முடிவிலாத நிலையொழுக்கில் அத்தகைய தெய்வகணங்களுக்கு இடமில்லை.

முந்தைய ஐந்து நாட்களும் அனிலை உச்சகட்ட விசையுடன் போரிட்டது. களத்தை நோக்கி நடக்கையில் மெல்ல உடல்சிலிர்த்து எடைமிக்க குளம்புகளை நீட்டி வைத்து தலையசைய பிடரி நலுங்க அது நடக்கையில் முற்றமைதி கொண்டிருக்கும். நாணேற்றப்பட்ட வில்லின் அமைதியுடன் அது காத்து நின்றிருக்கும். ஆணை கிடைத்ததும் களத்திலெழுந்து பாய்ந்து செல்லும். எங்கே எவரை எப்படி தாக்கவேண்டுமென்று அதுவே முடிவெடுத்தது. அது காற்றில் தாவிஎழுந்து திரும்பும் கணத்தில் வேல்பாய்ச்ச பீலன் அறிந்திருந்தான். அது திரும்பும் அக்கணத்தைப்போல அதற்கு உகந்த பிறிதில்லை என்றும் பட்டறிவு கொண்டிருந்தான்.

அனிலை களத்திலெழுந்ததும் பிற புரவிகள் அஞ்சின. தேர்நுகத்திலேயே அவை நிலைகுலைந்து ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு அமறின. யானைகளும் தயங்கி பின்னடைந்தன. அவன் வீசிய வேலின் எடையும் விசையும் அக்களத்தில் வேறெவற்றுக்கும் இருக்கவில்லை. அந்த வேலை அவனால் தனியாக ஒற்றைக்கையால் தூக்க முடியாது. அதன் தண்டு நான்கு ஆள் நீளமான தோதகத்தில் மரக்கடைவு. அதன் முனை இரண்டு கைவிரல்களாலும் சுற்றிப்பிடிக்கத்தக்க அளவுக்குப் பெரியது. அதன் கூருக்கு இருபுறமும் கொக்கிகளும் உண்டு. “இது வேலல்ல, சிறு கதை” என்று அவன் அணுக்கர் சொல்வதுண்டு.

அனிலை முன்கால் தூக்கித் தாவி எழுகையில் அவன் வேலை பின்னிழுத்து அதன் முன்விசையாலேயே அதற்கு ஆயம் கூட்டுவான். அது பாய்கையில் வேலைச் சுழற்றி புரவியின் விசையுடன் தன் வேலின் விசையையும் சேர்த்துக்கொண்டு நீட்டி வீசுவான். அவனுடைய வேல் அனைத்துக் கவசங்களையும் பிளந்தது. யானை மருப்புகளிலேயே தைத்திறங்கியது. புரவியின் விசையில் பாய்ந்து சென்று தன் கையில் கட்டப்பட்டிருந்த சங்கிலியை இழுத்து பாய்ந்த வேலை பிடுங்கிச் சுழற்றி மீண்டும் ஆயம் கூட்டி எறிந்தான்.

முதல் நாள் முதல் போர்த்தருணத்திலேயே அவனுக்கும் அனிலைக்குமான ஒத்திசைவு கூடிவிட்டது. அவர்கள் உளம் ஒன்றாக உடல் அதனுடன் இணைய போரிட்டனர். கொல்லுந்தோறும் களிவெறி ஏறிவந்தது. அக்களிப்பை அனிலையும் அடைவதை அவன் கண்டான். களிறுகளும் புரவிகளும் களத்தில் வெறியும் களிப்பும் கொள்ளும் என அவன் கற்றிருந்தான். களத்தில் அதை அறிகையில் அவன் முற்றிலும் அறியாத பிறிதொரு விலங்கின்மேல் அமர்ந்திருப்பது போலிருந்தது.

போர்க்களத்தில் என்ன நிகழ்கிறதென்பதை அவனைப்போன்ற வீரர்கள் அறிவதற்கு வழியே இருக்கவில்லை. முன்னேறுக, வலந்திரும்புக, இடம்திரும்புக, பின்னடைக, விரைவுகொள்க என்னும் ஐந்து ஆணைகளால் அவர்கள் இயக்கப்பட்டார்கள். பீலன் தன்னருகே நின்றிருந்தவர்களையே அறிந்திருக்கவில்லை. முதல் நாள் அவனுக்கு இருபுறமும் நின்றிருந்தவர்களை போர் முடிந்ததும் தேடினான். உடலெங்கும் குருதி சொட்ட அனிலை செருக்கடித்துக்கொண்டு நின்றது. நெஞ்சில் அம்பு தைத்திருக்க, இரு கைகளையும் விரித்து மல்லாந்து கிடந்த ஒரு முகத்தை அவன் நோக்கினான். அவனுக்கு இடப்பக்கம் நின்றவன்! நோக்கை விலக்கிக்கொண்டு திரும்பிச்சென்றான். அதன்பின் எவர் முகத்தையும் நினைவில் நிறுத்திக்கொள்ளவில்லை.

அப்பால் களத்திலெழுந்த ஓசைகளைக் கேட்டு பீலன் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து அனிலையை நிறுத்தினான். அவன் உள்ளம் அறிந்ததுபோல் அது மூச்சு சீறி செருக்கடித்தபடி முன்னங்கால் தூக்கி நின்றது. அதன் உடலின் மென்மையான மயிர்ப்பரப்பில் குருதித்துளிகள் சிறுகனிகள்போல தொங்கிக்கிடந்தன. புதுக் குருதி தடம் உருவாக்கி இறங்க அது சிலிர்த்துக்கொண்டது. வாளொலிகளின் விசையை கேட்டபடி அவன் மேலும் அணுகியபோது சூழ்ந்திருந்த வீரர்கள் ஆமைகளைப்போல குனிந்து கேடயத்தை முதுகிலாக்கி வந்து சரியும் அம்புகளை தவிர்த்தபடி அங்கே கிருதவர்மனுக்கும் பீமனுக்கும் நிகழும் போரை நோக்குவதை கண்டான்.

அப்போரில் எவர் வெல்வார் என முன்னரே அனைவருக்கும் தெரிந்திருந்தது. கிருதவர்மன் பாண்டவப் படையால் சூழப்பட்டிருந்தான். போரின் விசையில் அவனுடைய தேர் அணியிலிருந்து பிரிந்து முன்னெழ அதை பாண்டவர்களின் படையினர் பின்தொடர்பை துண்டித்து உள்ளே கொண்டுவந்துவிட்டிருந்தனர். அவன் மீண்டும் தன் மையப்படையுடன் சேரும்பொருட்டு விசைகொண்டு போரிட்டுக்கொண்டிருந்தபோது கதையைச் சுழற்றியபடி உறுமலோசையுடன் பீமன் அவனை எதிர்கொண்டான். சில கணங்களிலேயே அவர்கள் கதைகளால் தாக்கிக்கொண்டார்கள்.

பீமனின் அறைகளை தாவியும் துள்ளியும் பின்னால் சென்றும் உடல்வளைந்து ஒழிந்தும் கிருதவர்மன் எதிர்கொண்டான். ஒருமுறைகூட அவன் கதையின் அடியை தன் கதைமேல் வாங்கிக்கொள்ளவில்லை. பீமனின் கதை விசையுடன் சுழன்றுவரும் ஓசையை, மெல்லிய காற்றசைவைக்கூட உணரமுடியுமென்று தோன்றியது. பீமனை சினம்கொள்ளச் செய்து நிலையழிய வைத்து தாக்குவது கிருதவர்மனின் நோக்கம் என்று தெரிந்தது. பீமன் சினம்கொள்வதை முகம் காட்டியது. மிகச் சிறுபொழுதுக்குள் கிருதவர்மனை கொன்றுமீளவேண்டும் என அவன் எண்ணியிருக்கலாம். அப்பால் பாண்டவப் படையின் மீது கௌரவர்களின் படை தன் முழுவிசையாலும் தாக்குதல் தொடுத்தது.

அவர்களின் அறைகளுக்கேற்ப பாண்டவப் படை உலைந்தும் அதிர்ந்தும் பின்வளைந்து மீண்டும் போர்விளியுடன் முன்னால் சென்று உறுதிகொண்டு ஒருங்கிணைந்தது. அங்கே துரியோதனனும் துச்சாதனனும் துர்மதனும் துச்சகனும் இருப்பதை கொடிகளிலிருந்து உணரமுடிந்தது. அவர்களை எதிர்த்து நின்றிருந்த பாண்டவர்களின் கேடயமேந்திய யானைநிரை அதிர்ந்துகொண்டே இருந்தது. “தண்டுகள்! தண்டுகள் வந்துகொண்டிருக்கின்றன!” என்று படைக்காவலன் கூவினான். “இன்னும் பெரும்பொழுதில்லை… இதோ வளையம் உடைந்துவிடும்!” என இன்னொருவன் கூவினான். இருவரிலும் அது இருவகை விளைவுகளை உருவாக்கியது. பீமன் மேலும் பதற்றம்கொள்ள கிருதவர்மன் நம்பிக்கைகொண்டு புன்னகைத்தான்.

பீமன் பாய்ந்து கிருதவர்மனின் தலைமேல் ஓங்கி அறைய அவன் அதை முற்றொழிந்து இடக்கை ஊன்றி நிலத்திலிருந்து துள்ளி எழுந்து கதையை வீசி பீமனின் விலாவை ஓங்கி அறைந்தான். பீமனின் கவசம் உடைந்து தெறிக்க அவன் பின்னால் சரிந்து நிலையழிந்த கணத்தில் கிருதவர்மன் பாய்ந்தோடி இரு தேர்களின் முகடுகளின் மேலேறி அப்பால் தாவி தன் படையுடன் இணைந்துகொண்டான். சீற்றத்துடன் தன் கதையை நிலத்தில் ஓங்கி அறைந்து கூச்சலிட்ட பீமன் “கேடயப்படை திறக்கட்டும்…” என்று ஆணையிட்டான். அவன் சொல்லாலோ மறுபக்க அறைவிசையாலோ கேடயமேந்திய யானைகளில் ஒன்று விலக அவ்விடைவெளியில் மறுபக்கமிருந்து தண்டு பாய்ந்து வந்தது. பீமன் அதன் மேல் பாய்ந்தேறி அப்பால் சென்றான்.

அந்தத் தண்டுடன் மேலுமிரு தண்டுகள் இணைந்துகொள்ள யானைகளின் சுவர் விலகியது. பாண்டவப்படை போர்க்கூச்சலுடன் பீமனை துணைக்கப் பாய்ந்தது. பீலன் தன் வேலைவீசி முதல்தண்டை ஏந்திவந்துகொண்டிருந்த யானையின் மத்தகத்தின் சென்னிக்குழியில் அறைந்து உள்ளே முனையிறக்கினான். சங்கிலியை இழுத்து வேலை பிடுங்கியபோது வெண்கூழுடன் குருதி வழிந்து அதன் துதிக்கவசத்தில் ஊறியது. பிளிறியபடி தண்டை விட்டுவிட்டு யானை வலப்பக்கமாக சரிய தண்டின் முனை நிலத்தில் ஊன்றி நிலைகொண்டது.

பின்னணியானையால் தண்டை தனியாக பிடிக்கமுடியவில்லை. அதன் துதிக்கை தண்டில் சிக்கிக்கொள்ள அனிலை பாய்ந்து தண்டைக் கடந்து அப்பால் சென்றது. அக்கணத்தில் பீலன் தன் வேலால் அந்த யானையின் மத்தகத்தை அறைந்தான். அவன் வேல் பெரிய மண்டையோட்டில் முட்டித் தெறித்தது. யானை நிலைதடுமாறி பிளிறலோசை எழுப்ப அவன் அதன் கழுத்தில் வேலை இறக்கிச் சுழற்றி அதன் மூச்சுக்குழாய்களை தொடுத்து இழுத்து நீட்டியபடி அப்பால் பாய்ந்து வேலைச்சுழற்றி விடுவித்துக்கொண்டு மறுபுறம் துரியோதனனும் பீமனும் கதை முட்டிக்கொள்வதை பார்த்தான்.

பீமன் சீற்றம் கொண்டிருந்தான். மாறாக துரியோதனன் ஆழ்ந்த துயரும் அதன் விளைவான அமைதியும் கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் மோதத் தொடங்கியபோது துச்சாதனனும் துர்மதனும் துச்சகனும் அவர்களை சூழ்ந்துகொண்டு பின்காப்பளித்தனர். வேலை ஊன்றி நின்று பீலன் அவர்களின் போரை கண்டான். பீமன் கொக்கரித்தபடி, ஆர்ப்பரித்தபடி துரியோதனனை அறைந்தான். துரியோதனன் அந்த அடிகளை தன் கதையால் இயல்பாக வாங்கி அவ்விசையை திசைமாற்றி ஒழுக்கி தன் கதையைச் சுழற்றி அவனை அறைந்தான். துரியோதனன் மேல் விழும்போது அந்த அறைகள் மென்மையான பஞ்சுப்பொதிகளால் நிகழும் போரெனத் தோன்றிய விந்தையை பீலன் உணர்ந்தான்.

மேலும் மேலும் வெறிகொண்டு கூச்சலிட்டு தேர்விளிம்புகளிலும் புரவிப்பிடரிகளிலும் மிதித்துத் தாவி காற்றிலெழுந்தும், கைவிடு வீச்செனச் சுழற்றியும் பீமன் துரியோதனனை தாக்கினான். கண்கூடாகவே துரியோதனன் ஆற்றல்கொள்வதை உணர முடிந்தது. துரியோதனன் பாறை போலவும் பீமன் அதில் அலைத்தொழுகும் நீர்போலவும் தோன்றினர். என்ன நிகழ்ந்ததென்று அறியாக் கணத்தில் பீமன் துரியோதனனின் அறைபட்டு பின்னால் சென்று விழுந்தான். அவன் நெஞ்சக்கவசம் அருகே விழுந்தது. அவன் இருமியபடி புரள துரியோதனனின் அடுத்த அறை அவன் அருகே மண்ணில் பதிந்தது.

ஆனால் மேலும் உருளவியலாமல் கவிழ்ந்த தேர்த்தண்டு ஒன்றில் பீமன் முட்டிக்கொண்டான். துரியோதனனிடமிருந்து வஞ்சினமோ சினமறைதலோ எழக்கூடுமென பீலன் எண்ணினான். ஆனால் அவன் கதையைச் சுழற்றி தலைக்குமேல் தூக்கியகணம் அனிலை கனைத்தபடி பாய்ந்து சென்று துரியோதனனை முட்டித் தூக்கி அப்பால் வீசியது. அவன் புரண்டு எழுந்து கதையை எடுக்க காற்றில் பாய்ந்தெழுந்து அவன் நெஞ்சை தன் தலையால் அறைந்தது. அவன் தெறித்துவிழுந்து கதையைத் தூக்கியபடி எழ பீலன் தன் வேலால் அவன் நெஞ்சில் குத்தி கவசத்தை உடைத்தான்.

கூச்சலிட்டபடி கௌரவர் பீலனை சூழ்ந்துகொண்டார்கள். அம்புகள் நான்கு பக்கமிருந்தும் அவன்மேல் பொழிய ஐந்து கதைகள் அவனுக்குச் சுற்றும் சுழன்றன. அவன் தன் வேலை நிலத்திலூன்றி அதிலேறி காற்றிலெழுந்து அப்பால் சென்று விழுந்தான். அனிலை துச்சலனை முட்டித் தூக்கி அப்பால் எறிந்தது. கதையுடன் வந்த கௌரவ மைந்தன் சாம்யனை கழுத்துநாளத்தைக் கடித்து தூக்கி உதறி கீழே போட்டது. குருதித்துளிகள் சிதறும் மூச்சுடன் அவர்களை நோக்கி திரும்பி நின்றது. “அனிலை, போதும்… வந்துவிடு… வா!” என பீலன் கூவினான். “வந்துவிடு… வா… வந்துவிடு” என்று நெஞ்சிலறைந்து கூச்சலிட்டான். துரியோதனனின் அறைபட்டு அது விழுந்து இறக்கப்போகிறது என எண்ணினான்.

ஆனால் கௌரவர்கள் அதன் வெறிகண்டு அஞ்சி பின்னடைந்தனர். அக்கணம் இருபக்கமிருந்தும் கேடயமேந்திய யானைகள் வந்து அனிலையை அவர்களிடமிருந்து பிரித்தன. தலைதாழ்த்தி பிடரி சிலிர்க்க நின்ற அனிலை திரும்பி பீலனை பார்த்தது. தன்னை அது அடையாளம் காணாததுபோல் தோன்ற அவன் தயங்கி நின்றான். மெல்ல அருகணைந்து அவன் அதன் கடிவாளத்தை பற்றினான். அது பெருமூச்சுவிட்டது. “அன்னையே!” என்றான் பீலன். அதன் விழிகள் மாறுபட்டன. “அன்னையே, என் தெய்வமே!” என்று அவன் மீண்டும் அழைத்தான். மெல்ல அதன் விலாமேல் கையை வைத்தான். அது மெல்ல உடல்சிலிர்த்தபடி தலைதாழ்த்தியது.

பீமன் எழுந்து நின்று அவனிடம் “அது பாஞ்சாலப் படைப்பிரிவை சேர்ந்ததா?” என்றான். “ஆம், அரசே. அவள் பெயர் அனிலை. ஆணறியா கன்னி. கொற்றவையின் முழுதியல்புகள் அமைந்தவள். வெல்லமுடியாத விசைகொண்டவள்” என்று அவன் சொன்னான். பீமன் தன்னைப் பாராட்டி ஏதேனும் சொல்வான் என அவன் எதிர்பார்த்தான். ஆனால் பீமன் சிவந்த விழிகளும் விம்மும் நெஞ்சும் கொண்டிருந்தான். அவன் விழிநோக்கி சொல்லெடுக்கத் தயங்கினான். திரும்பிச்சென்றபோது அவன் காலடிகள் நிலைகொள்ளவில்லை என்பதை அவன் கண்டான்.

அவனருகே நின்றிருந்த காவலர்தலைவன் “உன் படைப்பிரிவு எது?” என்றான். அவன் சொல்வதற்குள் “ஓடு… இனி இளைய பாண்டவர் கண்முன் நிற்காதே. நீ இனி உயிருடன் திரும்பவியலாது” என்றான். “ஏன்?” என்றான் பீலன். “ஏனென்றால் நீ வெறும் வீரன்… செல்க!” என்றான் காவலர்தலைவன். பீலன் புரவிமேல் ஏறிக்கொண்டபோது படையணியைக் கிழித்து அருகணைந்த அவனுடைய காவலர்தலைவன் “படைமுகப்புக்குச் செல்க! அங்கே பீஷ்மருக்கு எதிர்நிற்க புரவிவேலவர் தேவை” என்றான். ஒருகணத்திற்குப் பின் புரிந்துகொண்டு பீலன் புன்னகைத்தான்.

bowபடைமுகப்பில் பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் கடும்போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. பீஷ்மரிடமிருந்து பின்னடைந்து அர்ஜுனன் விலக அவரை பாஞ்சாலப் படைகள் வந்து சூழ்ந்துகொண்டன. தொலைவில் கௌரவர்களுடன் கடோத்கஜன் போரிட்டுக்கொண்டிருந்தான். அபிமன்யூ ஜயத்ரதனுடன் போரிட சுருதகீர்த்தியுடன் பூரிசிரவஸ் வில்கோத்திருந்தான். பீலன் ஒரே கணத்தில் அந்தப் போர் மீதான அனைத்து ஆர்வத்தையும் இழந்தான். அவன் உளச்சோர்வை புரவியும் அடைந்தது. கால்களை நீட்டி வைத்து அது மெல்ல நடந்தது. அவன் கவசங்கள்மேல் உலோகக் கலத்தில் மழைத்துளிகள் என அம்புகள் வந்து விழுந்துகொண்டே இருந்தன.

பீஷ்மரின் அம்புகளால் பாண்டவர்களின் தேர்ப்படை சிதறுண்டுகொண்டிருப்பதை அவன் கண்டான். மிகப் பழகிய ஏதோ சடங்கிலென வீரர்கள் தேரில் வில்குலைத்து அவர் முன் சென்று அம்பேற்று ஓசையின்றி துடித்து விழுந்துகொண்டிருந்தார்கள். நாணொலியுடன் அவரை துருபதரும் சத்யஜித்தும் எதிர்கொள்ள பாஞ்சால இளவரசர்களான பிரியதர்சனும் உத்தமௌஜனும் பாஞ்சாலப் படையுடன் துணைவந்தனர். கிராதர்களின் விற்படையை நடத்திய சுமித்ரனும் பாஞ்சால்யனும் வந்துசேர்ந்துகொண்டார்கள். சத்ருஞ்ஜயனும் சுரதனும் தங்கள் படையுடன் வந்து இணைந்துகொள்ள பீஷ்மர் அவர்களை எதிர்த்தார்.

பீஷ்மர் பின்னடையத் தொடங்குவதை பீலன் கண்டான். அவரால் அவர்களின் ஒருங்கிணைந்த எதிர்ப்பை நேர்கொண்டு நிற்க இயலவில்லை. அவர்கள் அனைவரும் நோக்குக்கு ஒன்றுபோலிருந்தனர். உடன்பிறந்தார் இணையும்போது பிழையின்றி ஒன்றாக முடிகிறது. ஒற்றைப் பேருருக்கொண்டு எழ இயல்கிறது. மேலும் மேலும் கொம்போசைகள் எழுந்தன. அனுபநாட்டு மூதரசர் விருத்தஷர்மரும் அவர் மைந்தர் வசுதனனும் இளையோன் நீலனும் வந்து சூழ்ந்தனர். தொடர்ந்து மேற்கு நிஷாதஅரசின் ஹிரண்யநாபனையும் அவன் இளையோன் ஹிரண்யபாகுவையும் மைய நிஷாதநிலத்து அரசர் மணிமானையும் அவர் மைந்தர் மணிகர்ணனையும் கீழ்நிஷாதநிலத்து அரசர் தண்டதரனையும் அவர் மைந்தர் சார்ங்கதரனையும் பீலன் கண்டான்.

அவர்கள் அந்தத் தருணத்தை முன்னரே வகுத்திருக்கவில்லை. ஆகவே அது இயல்பாக உருவானபோது வெறிகொண்டார்கள். ஒருவரை ஒருவர் நோக்கி கூச்சலிட்டும் நாணொலி எழுப்பியும் பீஷ்மரை சூழ்ந்துகொண்டனர். அவர்களின் கொம்போசைகள் ஓநாய்க்கூட்டத்தின் அழைப்பொலிபோல் ஒலிக்க மேலும் மேலும் என அரசர்கள் வந்து பீஷ்மரை சூழ்ந்தனர். உத்தரமல்லநாட்டு தீர்க்கபிரக்யரின் மைந்தர் தீர்க்கதந்தரும் வந்து சேர்ந்துகொண்டார். அரக்கர் குலத்தலைவர்கள் வக்ரசீர்ஷரும் காகரும் வந்தனர். அம்புகளை எதிர்கொள்ளவியலாமல் பீஷ்மர் மேலும் பின்னடைந்தார். அவர்களுக்கு அப்பின்னடைதல் மேலும் விசைகூட்டியது. பீஷ்மரின் கவசங்கள் உடைந்தன. அவருடைய வில் உடைய இருமுறை அவர் வில்மாற்றிக்கொண்டார்.

பீஷ்மருக்குப் பின்னாலிருந்து சங்கொலியுடன் துரோணர் தோன்றினார். நீண்ட வில் தலைக்குமேல் எழுந்து நிற்க, வலக்கை சுழன்று அம்புகளை எடுக்க, நாண் துடிக்க அம்புகள் எழுந்து பறக்க, தேரில் அணுகிவந்த துரோணரைக் கண்டதும் பீஷ்மரை எதிர்த்தவர்கள் திகைத்தனர். ஒருகணம் காற்று நின்றுவிட பறந்துகொண்டிருந்த துணித்திரை அமைவதுபோல அவர்களின் ஊக்கம் அணைவதை பீலன் கண்டான். துரோணரின் பிறையம்பு சென்று தைத்து பாஞ்சால இளவரசன் பிரியதர்சன் தலையறுந்து தேர்த்தட்டில் விழுந்தான். துருபதர் அலறியபடி வில்லை நழுவவிட்டார். பாஞ்சாலர்கள் அனைவருமே திகைப்படைந்தனர். அடுத்த கணமே பாஞ்சால இளவரசன் உத்தமௌஜனும் நெஞ்சில் துரோணரின் அம்பு ஏற்று விழுந்தான்.

துருபதர் வெறியுடன் அலறியபடி துரோணரை எதிர்த்தார். சத்யஜித்தும் சுமித்ரனும் பாஞ்சால்யனும் சத்ருஞ்ஜயனும் சுரதனும் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். பீஷ்மர் பிறரை எதிர்த்து அம்புகளால் அறைந்தபடி முன்னெழுந்தார். உத்தரமல்லநாட்டு தீர்க்கபிரக்யரின் மைந்தன் தீர்க்கதந்தன் அலறியபடி பீஷ்மரை நோக்கி வர அவ்விசையிலேயே அவன் தலை அறுந்து பின்னால் சென்றது. அரக்கர் குலத்தலைவர்கள் வக்ரசீர்ஷரும் காகரும் பீஷ்மரின் அம்புகளால் வீழ்ந்தனர். அனுபநாட்டு மூதரசர் விருத்தஷர்மரும் அவர் மைந்தர் வசுதனனும் இளையோன் நீலனும் சங்கோசையுடன் பீஷ்மரை எதிர்கொள்ள மேற்கு நிஷாதஅரசின் ஹிரண்யநாபனும் அவன் இளையோன் ஹிரண்யபாகுவும் அஞ்சி தேரில் பின்னடைந்தனர்.

ஆனால் அம்புகளால் தன்னை எதிரிட்டவர்களை தடுத்தபடியே பீஷ்மர் திரும்பி அவர்களையும் தாக்கினார். விரிசிறை அம்புகள் காற்றிலெழுந்து மிதப்பவைபோல ஒழுகி அறுபட்டவை என இறங்கின. ஹிரண்யநாபன் அம்புபட்டு தேரிலிருந்து விழுந்தான். தன் தேரிலிருந்து பாய்ந்து அப்பால் நின்ற புரவியில் ஏறிக்கொண்ட ஹிரண்யபாகுவும் கழுத்தில் அம்பு தைத்து பக்கவாட்டில் விழுந்தான். நிஷாதநிலத்து அரசர் மணிமானையும் அவர் மைந்தர் மணிகர்ணனையும் பீஷ்மர் கொன்றார். கீழ்நிஷாதநிலத்து அரசர் தண்டதரனையும் அவர் மைந்தர் சார்ங்கதரனையும் மறுகணமே வீழ்த்தினார்.

எஞ்சியவர்கள் மேலும் அழுந்தி செறிந்து வளைந்து பின்னடைய பீஷ்மரைச் சூழ்ந்து வெற்றிடம் உருவானது. அதில் தனித்துவிடப்பட்டவர்களாக அனுபநாட்டு மூதரசர் விருத்தஷர்மரும் அவர் மைந்தர் வசுதனனும் இளையோன் நீலனும் திகைத்தனர். நீலன் அம்புபட்டு விழ வசுதனன் தன் தேரை பின்னடையச் செய்யும்படி பாகனிடம் ஆணையிட்டான். பாகன் தேரை பின்னெடுப்பதற்குள் அவன் தலை அறுபட்டு தொங்கியது. வசுதனன் பாய்ந்து தரையிலிறங்கி பின்நிரை நோக்கி ஓடுவதற்குள் அவன் கழுத்தில் நீளம்பு குத்தி நின்றது. தன் வில்லை தேர்த்தட்டில் வைத்து கைகளைத் தூக்கிய விருத்தஷர்மரை பீஷ்மரின் அம்பு அறைந்து தெறிக்கச் செய்தது.

தன் விழிகளில் ஒன்றால் நிகழ்வதை நோக்குகையிலும் மறுவிழியால் களம்பார்த்து பீலன் போரிட்டுக்கொண்டிருந்தான். அனிலை தன் இலக்குகளை அதுவே தெரிவுசெய்து பாய்ந்து சென்று தாக்கித்திரும்பி சுழன்றெழுந்தது. சுமித்ரன் துரோணரின் அம்பை நெஞ்சிலேற்று வீழ்ந்தான். “மூத்தவரே, திரும்புக… போதும்!” என சத்யஜித் கூவ துருபதர் தன் மைந்தரிடம் திரும்பும்படி ஆணையிட்டார். துரோணர் அதை உணர்ந்து முழுவிசையுடன் முன்னெழுந்து சென்று சத்ருஞ்ஜயனைத் தாக்கி வீழ்த்தினார். சுரதனும் பாஞ்சால்யனும் தேர்களை பின்னடையச் செய்தனர். தேர்கள் ஒன்றை ஒன்று முட்டி அசைவிழக்க சுரதன் துரோணரின் அம்பை ஏற்று தேரிலிருந்து ஒருக்களித்து கீழே விழுந்தான்.

பின்னணியில் முரசுகள் முழங்கிக்கொண்டே இருந்தன. அவை துணைகோரும் அழைப்புகள் என பீலன் உணர்ந்தான். பாஞ்சாலப் படைகளுக்குள்ளிருந்து திருஷ்டத்யும்னன் நாணொலி எழுப்பியபடி களத்திற்கு வந்து துரோணரை எதிர்கொண்டான். திருஷ்டத்யும்னனின் அம்பு துரோணரின் தோளை தைத்தது. அவர் அதை பொருட்படுத்தாமல் பாஞ்சால்யனையும் வீழ்த்திவிட்டு அவனை எதிர்த்தார். துருபதர் கதறியழுதபடி தேர்த்தட்டில் அமர்ந்தார். திருஷ்டத்யும்னன் வெறிக்கூச்சலிட்டபடி துரோணரை எதிர்த்து அம்புகளால் அறைந்து அறைந்து பின்னால் கொண்டுசென்றான். அவர்களிருவரும் கௌரவப் படைவிரிவுக்குள் மூழ்கி அப்பால் சென்றனர்.

சாத்யகியும் அபிமன்யூவும் இருபுறங்களிலுமிருந்து எழுந்துவந்து பீஷ்மரை எதிர்த்தனர். பீலன் அனிலையை முன்னெழச்செய்து பீஷ்மருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த வில்லவர்களை எதிர்த்தான். அனிலை பாய்ந்தெழுந்து முன்செல்ல அவனுடைய வேல் தேரில் நின்றவர்களை அறைந்து வீசியது. மிக அண்மையில் சென்றுவிட்டிருந்தமையால் அவர்களின் அம்புகள் எழுந்து அனிலையையும் பீலனையும் தாக்க முடியவில்லை. உடல்முழுக்க குருதியுடன் களத்தில் நின்ற அனிலை அவர்களனைவரையும் அச்சுறுத்தியது. ஒருவன் “நோக்குக! அது குருதி குடிக்கிறது! குருதியை நக்கிக்குடிக்கிறது!” என்று கூவினான். சூழ்ந்திருந்தவர்கள் அஞ்சி கூச்சலிட்டனர். “பேய் வடிவு! குருதியுண்ணும் கானகப்பேய் இது!” என்று ஒருவன் அலறினான்.

அனிலை பசுங்குருதியை விரும்பி குடிப்பதை பீலன் களம் வந்த முதல்நாளே கண்டிருந்தான். போர் முடிந்தபின் அந்தியில் அதை கொண்டுசெல்கையில் தலைதிருப்பி தன் உடலின் குருதியை அது நக்கியதை கண்டான். பின்னர் போரிலும் அது வீழ்ந்தவர்களை கழுத்தில் கடித்து குருதியை உறிஞ்சுவதை உணர்ந்தான். களத்தில் புரவிகள் நான்கு நாழிகைப்பொழுதுக்குமேல் போரிடுவதில்லை. அவற்றை பின்னடையச் செய்து வெல்லமும் மாவும் கரைத்த நீர் அளித்த பின்னரே மீண்டும் களத்திற்கு கொண்டுவருவார்கள். அனிலை பசியும் விடாயுமில்லாமல் பகல் முழுக்க போர்க்களத்தில் நின்றிருப்பது குருதியையே உணவென அருந்துவதனால்தான்.

நேர் எதிரில் காம்போஜ மன்னன் சுதக்ஷிணனை பீலன் கண்டான். அவனுடைய படைவீரர்கள் அனிலையை சுட்டிக்காட்டி அவனிடம் கூவ அவன் வில்லைத் தாழ்த்தி அதை நோக்கினான். பின்னர் நாணொலி எழுப்பியபடி அனிலையை நோக்கி வந்தான். எதிரே நின்ற இரு புரவிவீரர்களை வீழ்த்தியபடி அனிலை அவனை நோக்கி சென்றது. சுதக்ஷிணனின் அம்புகள் அதன் கவசங்களின் மேல் பட்டுத் தெறித்தன. அம்புகள் எழுகையிலேயே திசைகணித்து ஒழியவும் கவசப்பரப்பைக் காட்டி தடுக்கவும் அனிலை அறிந்திருந்தது. சுதக்ஷிணனின் அம்பு தோளில் அறைய பீலன் புரவியிலிருந்து கீழே விழுந்தான்.

ஆனால் குன்றாவிசையுடன் உறுமியபடி மேலெழுந்த அனிலை பாய்ந்து சுதக்ஷிணனின் தேரின் புரவிகளின்மீது கால்வைத்தேறி தேர்த்தட்டில் நின்றிருந்த அவனை முட்டி அப்பாலிட்டது. அவன் எழுவதற்குள் எடைமிக்க குளம்புகளுடன் அவன் மேல் பாய்ந்தது. அவன் புரண்டு எழுந்து தன் வேலை எடுப்பதற்குள் பீலன் தன் நீள்வேலால் அவன் நெஞ்சில் அறைந்தான். சுதக்ஷிணன் நிலைதடுமாறி சரிய அவன் தலைக்கவசம் விழுந்தது. கனைத்தபடி அனிலை அவன் கழுத்தைக் கவ்வி தூக்கிச் சுழற்றி உதறி அப்பாலிட்டது. முகத்தில் வழிந்த குருதியை நக்கியபடி அது திரும்ப எதிரே பீஷ்மரின் தேர் வந்தது. அனிலை உறுமலோசை எழுப்பியபடி பிடரி உலைத்து தலைதூக்கி பீஷ்மரை நோக்கி திமிர்த்த அசைவுகளுடன் சென்றது. பீஷ்மர் அதை வெறித்த கண்களுடன் நோக்கினார். அவர் கையிலிருந்த வில் தழைந்தது.

அவருடன் போரிட்டுக்கொண்டிருந்த அபிமன்யூ “வில்லெடுங்கள், பிதாமகரே… இன்றே முடித்துவிடுவோம் இவ்வாட்டத்தை!” என்று கூவியபடி அவரை தாக்கினான். பீஷ்மர் மெல்லிய குரலில் ஆணையிட அவருடைய தேர்ப்பாகன் தேரை கௌரவப் படைகளுக்குள் கொண்டுசென்றான்.

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 46

bowபாண்டவப் படையின் நடுவே பாஞ்சால அக்ஷௌகிணியின் ஏழாவது புரவிப்படையின் பரிவீரனாகிய பீலன் அனிலையெனும் பெரும்புரவியின் மீது அமர்ந்திருந்தான். வலக்கையில் நீண்ட குத்துவேலை தண்டை நிலத்தூன்றிப் பற்றி இடக்கையால் கடிவாளத்தை தளர்வாகப் பிடித்து சேணத்தில் கால்களை நுழைத்து உடல் நிமிர்த்தி நீள்நோக்கு செலுத்தி அசையாச் சிலையென காத்திருந்தான். அவனுக்கு முன்னால் நான்கு அடுக்குகளுக்கு அப்பால் படைகளின்  பொருதுமுகத்தில் இரு எடைமிக்க இரும்புத்தகடுகள் உரசிக்கொள்வதுபோல பேரோசையும் அனல்பொறிகளென அம்புகளும் எழுந்துகொண்டிருந்தன.

ஆடியை நோக்கும் ஆடியிலென இருபுறமும் புரவிகளின் நேர்நிரை விழி தொடும் எல்லை வரை அகன்று சென்றது. அவன் அந்த எல்லையின்மையை உளம்தவிர்த்து தன் படைப்பிரிவை மட்டும் எண்ணத்தில் நிறுத்தினான். கங்கைக்கரையில் நீண்ட கொடிக்கயிற்றில் புலத்தியர் உலரவிட்ட ஆடைகள்போல அவை உள்ளதாக எண்ணிக்கொண்டான். புரவிகளின் வால்கள் சுழன்றுகொண்டே இருந்தன. அவை உடல் எடைமாற்றியும் பொறுமையிழந்தும் அசைந்தன. அவற்றின் கவசங்களும் மணிகளும் உரசும் ஒலிகளுடன் படைக்கல ஒலிகளும் இணைந்து சாலையில் வண்டிகள் பெருகிச்செல்லும் ஓசை என கேட்டுக்கொண்டிருந்தன.

அப்புரவிகள் அனைத்திலும் அனிலையே உயரமானது. எடையும் விசையும் கொண்டது. ஆகவே தேர்ந்த பரிவீரனாகிய பீலனுக்கு அது அளிக்கப்பட்டது. அவன் அதைப்பற்றி பெருமிதம் கொண்டிருந்தான். எப்போதும் முதல்நிரையில் தானும் புரவியும் நிறுத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அவனுடைய படைப்பிரிவு சீராக அணிவகுத்துச் செல்கையில் நோக்கும் படைத்தலைவர்களின் விழிகள் அனிலையைக் கண்டு விரிவதை அவன் ஒருபோதும் தவறவிடுவதில்லை. அப்போது அவன் உடல் மேலும் நிமிரும். அவர்களில் பலர் பின்னர் கொட்டிலுக்கு வந்து அனிலையை பார்த்துச் சென்றதுண்டு. துருபதரே இருமுறை கொட்டிலுக்கு வந்து அதை தொட்டு வருடிவிட்டுச் சென்றார்.

பாஞ்சாலப் படை உபப்பிலாவ்யத்திற்கு வந்த பின்னர் நகுலன் மாதமிருமுறையேனும் அனிலையை நோக்க வருவான். முதல்நாள் நகுலன் அணுகியதுமே நெடுநாட்களாக அறிந்த ஒருவனை நோக்கி உளம்பாய்வதுபோல் அனிலை நிலையழிந்து கட்டுக்கயிற்றை இழுத்து உடல்திருப்பி மெய்விதிர்த்து கனைப்போசை எழுப்பியது. அவன் வந்து அதன் பிடரியில் கைவைத்ததும் திரும்பி தன் பெருந்தலையை அவன் தோள்மேல் வைத்து அழுத்தி அவன் மணம் முகர்ந்து மூச்செறிந்தது. ஒவ்வொரு முறையும் அவன் வருவதற்கு முன்னதாகவே, அன்று காலையிலேயே அது அவனுக்காக உளமொருங்கி நிலையழிந்து குளம்புமாற்றி மிதித்தும் தலைதாழ்த்தி மூச்சுசீறியும் பிடரிகுலைத்தும் காத்திருக்கும். நகுலன் வரும் நாள் அதற்குத் தெரியும் என பீலன் எண்ணிக்கொண்டதுண்டு. ஆனால் நகுலன் சீரான நாளிடையில் வருவதில்லை என்பதை பின்னர் நோக்கியபோது புரவி எப்படி அதை அறிகிறது என அவன் வியப்புறுவான்.

அவன் தந்தை அவனிடம் “புரவி அறிவனவற்றை மானுடர் அறியவியலாது. விலங்குகள் கொள்ளும் அறிவை மானுடரால் விளக்கவே இயலாது. அவை பேரன்பால் மெய்யுணர்கின்றன” என்றார். அனிலையை அவன் தொலைவிலிருந்து நோக்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு முறையும் அந்தத் திகைப்பை அடைவான். அதற்குள் வாழ்வது எது? வலியும் நோயும் பசியும் இறப்பும் அதற்குமுண்டு. ஆனால் துயரில்லை, கவலையுமில்லை. மானுடரை விட தெய்வங்களுக்கு உகந்த ஊர்தியாக அது இருப்பது அதனால்தான் போலும். மானுடரில் நோக்கிலேயே அடிமையும் மிடிமையும் கொண்ட புல்லர்களை அவன் கண்டதுண்டு. புரவிகளில் நோயுற்றும் உணவின்றியும் நொய்ந்தவற்றையே கண்டிருக்கிறான். நிமிர்விலாத புரவியென ஏதுமில்லை. கால்மடித்து ஒருக்களித்துப் படுத்து தலைநிமிர்ந்து இளவெயில் காய்ந்து விழிமூடி அசைபோட்டுக்கொண்டிருக்கும் புரவியின் அழகு அவனை விழிநீர் கசிய வைப்பதுண்டு. பேரரசர்கள் அரியணையில் அமர்கையில் மட்டுமே எழும் நிமிர்வு அது.

புரவிச்சாலையில் பிறந்து வளர்ந்தவன் அவன். அவன் தந்தை சுபாங்கர் தேர்ந்த பரிமருத்துவர். அவர்களின் குலமே பரிமருத்துவத்தில் ஈடுபட்டு தலைமுறைகளாக அவ்வறிதலைத் திரட்டி கையளித்து சேர்த்தது. அவர்கள் உத்கலத்திலிருந்து பாஞ்சாலத்திற்கு குடிபெயர்ந்து வந்தவர்கள். முன்பு சோனக நாட்டிலிருந்து புரவிகள் உத்கலத்தின் துறைமுகங்களில் வந்திறங்குகையில் அவற்றை வாங்கி நெடுந்தொலைவிற்கு கொண்டு சென்று பிறநாடுகளில் விற்கும் தொழிலை செய்துவந்ததனர் பலர். அவன் குலம் சோனக மருத்துவர்களிலிருந்து அவர்கள் பரிமருத்துவத்தை கற்றுக்கொண்டது. வணிகர்கள் ஊர்திரும்பிவிட்ட கார்காலத்தில் மருத்துவர்களுக்கான தேவை மிகுந்திருந்தது.

நான்கு கால்கள் கொண்டவை எனினும் யானையும் பசுவும் எருமையும் அத்திரியும் கழுதையும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. அவை அனைத்திலிருந்தும் வேறுபட்டது புரவி. பிற விலங்குகளின் தசைகள் முரசில் இழுத்துக் கட்டப்பட்ட தோல் போன்றவை. புரவியின் தசை வில்லில் முறுகி நின்றிருக்கும் நாண். பிற விலங்குகளை நிற்கவைத்தோ அமரவைத்தோ படுக்கவைத்தோ மருத்துவம் பார்க்கலாம். புரவி நின்றிருக்கையிலும் விரைந்தோடிக்கொண்டிருப்பதென்றே அதன் உடல் அமைந்திருக்கும். விரைந்து புண் ஆறும். ஆறாப் புண் உயிர்குடித்துச் செல்லும். புண்பட்ட, நோயுற்ற புரவி அதுவே தான் உயிர்வாழவேண்டுமென்று எண்ணவேண்டும். அப்புண்ணை குளிர்விக்க வேண்டுமென்று அதனுள் வாழும் தெய்வங்கள் கருதவேண்டும்.

புரவி மானுடரைப்போலவே எண்ணங்களாலானது. ஐயமும் தயக்கமும் ஆறாச் சினமும் கொண்டது. ஆனால் வஞ்சமற்றது, ஆகவே துயரற்றது. மறதி இல்லாதது, ஆகவே கடந்தகாலமற்றது. “புரவி பேணுபவன் ஒவ்வொரு கணமும் உணரவேண்டியது ஒன்றுண்டு, தன்னைவிட உடலால் உள்ளத்தால் உள்வாழ்வதனால் பலமடங்கு மேம்பட்ட ஒன்றுடன் அவன் உரையாடிக்கொண்டிருக்கிறான். மண்ணில் பெருகி நிறைந்துள்ள உயிர்க்குலங்கள் பிரம்மத்தின் வடிவங்கள். எண்ணிலாக் குணங்கள் நிறைந்த பிரம்மத்தின் ஒவ்வொரு இயல்பும் ஓர் உயிர். மானுடன் பிரம்மத்தின் விழைவின் ஊன்வடிவு. புரவி அதன் விசையின் உயிர் கொண்ட உடல். புரவி வடிவிலேயே காற்று புவியில் தன்னை உடலென நிகழ்த்திப்பார்க்கிறது. எண்மூன்று மாருதர்களும் புரவியுடலில் குடிகொண்டுள்ளனர் என்றறிக!” என்றார் தந்தை.

புரவி மருத்துவன் காற்றுக்கு மருந்திடுபவன். புரவி விலங்குகளில் இளந்தளிர். மலர்களில் அது வைரம். புரவி மீதுள்ள பற்று அவன் குடியினரை பிற அனைத்திலிருந்தும் விலக்கியது. பித்துகொண்டவர்களாக அவர்கள் புரவியைப்பற்றி மட்டுமே பேசினர். புரவிகளுடன் வாழ்ந்தனர். புரவிகளை கனவு கண்டனர். அவர்களின் தெய்வங்களும் புரவி வடிவிலேயே அமைந்திருந்தன. இருபத்துநான்கு புரவி வடிவ மாருதர்களுக்கு மேல் அமைந்த ஹயக்ரீவன் அவர்களின் ஆலயங்களில் அமர்ந்து அருள்புரிந்தான். அவர்களின் குடியில் புரவிகளின் பெயரே மைந்தருக்கும் இடப்பட்டது. மண்மறைந்த புரவிகள் மைந்தராகவும் புரவிக்குருளைகளாகவும் அவர்களிடையே மீண்டும் திகழ்ந்தன.

ஆறு தலைமுறைக்கு முன் அவருடைய மூதாதை ஒருவர் புண்பட்ட புரவியின் ஊன் திறந்த வாயை தைத்துக்கொண்டிருந்தார். புண்ணை தைப்பதற்கு முன் அப்புரவியிடம் அதை அறிவித்து ஒப்புதல் பெற்றாகவேண்டும். ஏழு முறை புண்ணைத் தொட்டு ஊசியையும் நூலையும் அதன் முன் காட்டி அதன் விழியசைவை கண்டபின்னரே முதல் கண்ணியை குத்திச் செலுத்தி எடுத்து முடிச்சிடவேண்டும். அன்று அந்த மூதாதை களைத்திருந்தார். பொழுது தொடங்கியது முதல் அவர் மருந்திட்டு தைக்கும் நூறாவது புண் அது. அப்பால் கலிங்கத்திற்கும் உத்கலத்திற்கும் நடுவே அம்பொழியா பெரும்போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. புரவிகள் புண்பட்டு வந்துகொண்டே இருந்தன.

தன் உதவியாளனிடம் சினத்துடன் ஏதோ கூறிய பின் அருகிருந்த கந்தகம் கரைத்த நீருக்குள்ளிருந்து நூல் கோத்த ஊசியை எடுத்து புரவியின் முன் தோளிலிருந்த ஊன்வாயை இடக்கைவிரலால் சேர்த்துப் பற்றி வலக்கை விரல்களால் ஊசியைக் குத்தி தூக்கினார். சினந்து திரும்பிய புரவி அவர் தோள் தசையைக் கடித்துத் தூக்கி அப்பாலிட்டது. பின்னர் எழுந்து விரைந்தோடி அப்பால் சென்று நின்று நடுங்கியது. மூதாதையின் உதவியாளர்கள் சென்று அவரைத் தூக்கி எடுத்தனர். புரவியின் கடிபட்டு தசைகிழிந்து குருதி கொட்டிக்கொண்டிருந்தது. படிக்காரம் கரைத்த நீரால் அதை மும்முறை கழுவி, கந்தகப் பிசினால் நீவி மெழுகுத் துணியால் கட்டிட்டு அவரை மெல்ல பற்றி இல்லத்திற்கு கொண்டு சென்றனர்.

அப்புரவி தனக்குரிய மரத்தை கண்டடைந்து அதில் உடல் சாய்த்து நின்று முன்வலக்கால் தூக்கி விழிமூடி தலை தாழ்த்தியது. அதன் தசைகள் ஒவ்வொன்றாக நாண்தளர்ந்தன. மூன்று பகல் அவ்வாறே அது நின்றிருந்தது. புண்ணிலிருந்து குருதி ஒழுகி மறைய, உடல் நடுங்கி சோர்ந்து, பெருந்தலை எடைமிகுந்து மண்தாழ்ந்து, நீரிலாதுலர்ந்த கருமூக்கு மண்ணில் ஊன்ற, செவிகள் மடிந்து முன் தொங்க, நீர்வடிந்து காய்ந்த விழிகள் அசைவிழந்து வெறிக்க, முன்கால் மடித்து மண்ணில் அமைந்து பக்கவாட்டில் சரிந்து விழுந்து, தோல்பை என வயிறு எழுந்தமைய, புழுதிபறக்க மூச்சிரைத்து, மெல்ல அடங்கி கமுகுப்பூக்குலை வாலைச் சுழற்றி ஓய்ந்தது.

அம்மூன்று நாட்களும் தன் இல்லத்தில் கடும்காய்ச்சலில் உடல்சிவந்து, நினைவழிந்து, நாவில் பொருளிலாச் சொற்கள் எழ, அவ்வப்போது வலிப்பில் கைகால் இழுத்துக்கொள்ள, இறப்பு நோக்கி சென்றுகொண்டிருந்தார் மூதாதை. புரவி இறந்த மூன்றாவது நாழிகையில் அவரும் உயிர்துறந்தார். அப்புரவியுடன் சேர்த்து அவரையும் மண்ணில் புதைத்தனர். நாற்பத்தியோராவது நாள் நிமித்திகன் கல்பரப்பி கோள்நோக்கி கணித்து அவர் செய்த பிழையென்னவென்று உணர்த்தினான். அவர் குடியை குலம் விலக்கி வைத்தது. மூன்றாண்டுகள் பிறிதொரு நிலத்திற்குச் சென்று அங்கே பரிபேணி பிழைநிகர் செய்து மீளவேண்டுமென்று ஆணையிட்டது.

இறந்த மூதாதையின் மைந்தர் கபிலர் தன் மூன்று மனையாட்டிகளுடனும் பன்னிரு மைந்தருடனும் உத்கலத்திலிருந்து கிளம்பி பாஞ்சாலத்திற்கு வந்தார். அன்று பாஞ்சாலம் பயிலா பழங்குடிகள் ஒருவரோடொருவர் பூசலிட்டுப் பரவிய மலை நிலமாக இருந்தது. ஆண்டுக்கு இருமுறை ஏழுமடங்கு பெருகும் ஐந்து நதிகளின் சதுப்பில் அவர்கள் கோதுமையும் கரும்பும் பயிரிட்டனர். நதிகளினூடாக வந்துசேரும் பொருட்களை மலை மடம்புகளுக்குள் அமைந்த சந்தைகளுக்கு கொண்டுசெல்லும்பொருட்டு அத்திரிகளை பேணினார்கள். சுழிப் பிழையாலும், காலொருமை இன்மையாலும் போருக்கும் பயணத்திற்கும் ஒவ்வாதவை என தவிர்க்கப்பட்ட புரவிகளை வணிகர்கள் படகுகளில் ஏற்றிக்கொண்டு வந்து பாஞ்சாலப் பழங்குடிகளுக்கு விற்றனர். அவை பிறிதொரு வகை அத்திரிகள் என்றே அக்குடிகள் எண்ணின. அத்திரிகளை நிலமும் நீரும் காற்றும் ஒளியுமே பேணின.

அங்கு வந்து சேர்ந்த கபிலர் இருபுறமும் சுமைதூக்கியபடி மலைவிளிம்புகளினூடாக கொடிபோல் சுற்றிப்படர்ந்திருந்த சிறுபாதைகளில் சென்றுகொண்டிருந்த புரவிகளை கண்டார். அவற்றில் பல புரவிகள் நோயுற்றிருந்தன. முறையாக பேணப்படாமையால் உடற்குறைகள் பெருக வலிகொண்டு துயருற்றிருந்தன. அவற்றை பேணுவதெப்படி என்று அவர் அம்மக்களுக்கு கற்பித்தார். “புரவி வானுக்குரியது. வேள்விக் களத்திலெழும் அனலுக்கு நிகரானது புரவியின் உடல். அதை அவியிட்டு, நுண்சொல் உரைத்து வளர்க்கவேண்டும். மண்ணுக்கு கைப்பிடி விதையை அளியுங்கள், களஞ்சியம் நிறைய அன்னத்தை அது அளிக்கும். அனலுக்கு அவியளியுங்கள், மண் குளிர்ந்து பெருகும் மழையை அது அளிக்கும். புரவிக்கு உங்கள் அன்பை அளியுங்கள், திசைகளைச் சுருட்டி உங்கள் காலடிகளில் வைக்கும். எதிரிகளுக்கு முன் உங்கள் காவல்தெய்வமென எழுந்து நின்றிருக்கும். புரவியை அறிந்தவர்கள் மண்ணில் எங்கும் தோற்பதில்லை” என்று அவர் கூறினார்.

புரவி பாஞ்சாலத்தில் பெருகலாயிற்று. ஏழு தலைமுறைகள் கடந்தபோது பாஞ்சாலம் ஆற்றல்மிக்க ஐந்து குடிகளின் நிலமாக மாறியது. சூழ்ந்திருந்த நாடுகள் அனைத்தும் அவர்களை அஞ்சின. நகரங்களும் கோட்டைகளும் சாலைகளும் சந்தைகளும் என அந்நாடு செழித்தது. அதன் நடுவே காம்பில்யம் அருமணி ஆரத்தில் வைரமென பொலிந்தது. அதன்பின் அவர்கள் அங்கிருந்து திரும்பிச்செல்லவில்லை. பாஞ்சால அரசர்களால் பேணப்பட்டு அவர்களின் குலம் பெருகியது. நூற்றெட்டு குடிகளாகி நாடெங்கும் பரவியது. கபிலகுலத்தவர் ஒருவரேனும் ஒரு நகரியில் இருந்தாகவேண்டும் என முறையிருந்தது.

அவன் தந்தையின் தந்தை ஊர்வரர் பாஞ்சாலத்தின் தென்னிலத்தில் புண்யகுண்டம் என்னும் ஊரில் குடியேறி அங்கே நிலைகொண்டார். அவன் தன் தந்தைக்கு எட்டாவது மைந்தன். அவனுக்கு இளமையிலேயே போரில்தான் ஆர்வமிருந்தது. மருத்துவ நூல்கள் உளம்புகவில்லை. புரவித் தொழிலுடன் போர்க்கலையும் பயின்றபின் அவன் வாழ்வு தேடி காம்பில்யத்திற்கு சென்றான். அங்கே அரிய புரவிகள் கொண்ட பெரும்படை ஒன்றிருப்பதை அவன் அறிந்திருந்தான். அவன் அரண்மனையை அடைந்து அரசவைக்குச் சென்று பணிகோரினான். அவனைக் கண்ட முதல்நாளே திருஷ்டத்யும்னன் “பெரும்புரவி ஒன்று கொட்டிலில் உள்ளது. தனக்கான வழிகள் கொண்டது. அதை அடக்கி ஆளும்பொருட்டு ஒரு பரிவலரை தேடிக்கொண்டிருந்தோம். நீர் அமைந்தீர்” என்றான்.

அவனுடைய ஆணையைப் பெற்று பீலன் கொட்டிலுக்குச் சென்றான். கொட்டில் காவலனாகிய பப்ரு அவனிடம் “நீரா? இளையோனாக இருக்கிறீர். அனிலை சற்று கட்டற்றது” என்றார். அவன் “நான் உத்கலத்தின் கபிலகுலத்தவன்” என்றான். பப்ரு ஒருகணம் வெறித்து நோக்கியபின் “வருக, கபிலரே” என எழுந்தார். அவனுடைய மணத்தை அறிந்ததும் அனிலை மூச்சுசீறி பெரிய குளம்புகளை கொட்டிலின் கற்தரையில் முட்டியது. அவன் அதை அணுகி சற்று அப்பால் நின்று தன் உள்ளத்தால் அதனுடன் உரையாடலானான். “என் அன்னையே, நான் எளியவன். உன்னை பேணும்பொருட்டு வந்துள்ள அடியவன். உன் காலடிகளில் என் வாழ்க்கையை நிறைவுசெய்ய விழைபவன். எனக்கு அருள்க! என்னை உன்னருகே அணுகவிடுக!”

மீண்டும் மீண்டும் உதடுகள் மெல்ல அசைய அதை சொன்னபடி அருகே சென்று அதன் கழுத்தில் தொட்டான். தொடப்போன இடம் முன்னரே விதிர்த்தது. அனிலை திரும்பி அவன் தலைக்குமேல் தன் தலையை தூக்க அதன் எச்சில் வழிந்து அவன் மேல் விழுந்தது. அவன் முகம் மலர்ந்து அண்ணாந்து நோக்கி “அன்னையே, வணங்குகிறேன்” என்றான். பப்ருவிடம் “அன்னை என்னை ஏற்றுக்கொண்டுவிட்டாள்” என்றான்.

bowஅனிலை நான்கு அகவை வரை குழவி என்றும் கன்னி என்றும் கொட்டிலில் நின்றாள். இனிய விளையாட்டுத் தோழியாகவும் விரைவுக்கு மேல் விரைவெடுக்கும் விசைகொண்டவளாகவும் பரிவலர் அவளை எண்ணியிருந்தனர். கருவுறுவதற்காக அவளை பொலிக்குதிரைகளை நோக்கி கொண்டுசெல்லத் தொடங்கியபோதுதான் அவள் இயல்பு மாறத்தொடங்கியது. முதல் முறையாக அவளை பொலிநிலைக்கு கொண்டுசென்ற ஏவலர் அதன் வாயிலிலேயே முன்காலை அழுந்த ஊன்றி, மூக்குத்துளைகள் விரிய, விழிகளை உருட்டி நின்றுவிட்டதை கண்டனர். அவள் உடல் முழுக்க தோல் சிலிர்த்துக்கொண்டிருந்தது.

அவர்கள் மெல்ல கழுத்திலும் விலாவிலும் தட்டி “செல்க! செல்க! என் அரசியல்லவா? என் இனிய மகளல்லவா?” என்று நற்சொல் உரைத்தனர். துருத்தியென மூச்சுசீறி அனிலை மீண்டும் பின் அடி எடுத்து வைத்தாள். “செல்க!” என்று கடிவாளம் பற்றி இழுத்தார் பரிவலரான ருத்ரர். தலையால் ஓங்கி அறைந்து அவரைத் தூக்கி அப்பால் வீசி அவர் உதவியாளரை விலாவால் தட்டித் தள்ளிவிட்டு நான்கு குளம்புகளும் நிலத்தில் அறைந்து ஒலி எழுப்ப விரைந்தோடி மூடியிருந்த கொட்டில் வேலியை தாவிக்கடந்து வந்து தன் நிலையை அடைந்து உள்ளே சென்று நின்றிருந்தாள்.

அவர்கள் இருவரும் மூச்சிரைக்க ஓடி வந்தபோது கொட்டில் நிலையில் அவள் காய்ச்சல் கண்டதுபோல் நடுங்கிக்கொண்டிருப்பதை பார்த்தனர். ருத்ரர் அருகே வந்தபோது மூச்சு சீற விழிகளை உருட்டி அவள் திரும்பிப்பார்த்தாள். ருத்ரர் அதிலிருந்த குறிப்பை உணர்ந்து நின்றுவிட்டார். அவர் உதவியாளரையும் தன்னை அணுக அவள் விடவில்லை. கொட்டிலில் இருந்த வேறு இரு உதவியாளர்கள் வந்து அவள் கடிவாளத்தை பற்றிக் கட்டினார்கள். அன்று முழுக்க உணவருந்தாமல் தலை தாழ்த்தி உடல் நடுங்கி அதிர்ந்து மூச்சு சீற அவள் நின்றிருந்தாள்.

மறுநாள் புலரியில் அவள் கடிவாளத்தை அவிழ்த்து வெளியே கொண்டுவந்தபோது முன்னால் கொண்டுவைத்த மென்தவிடும் மாவும் கலந்த நீரை அவள் அருந்தவில்லை. “நோயுற்றிருக்கிறாள். உள்நோயின்றி புரவிகள் உணவு மறுப்பதில்லை” என்றார் கொட்டில் மருத்துவர் சுதலர். அவள் உடலை அவர் எங்கு தொட்டபோதும் அங்கே தோல் விதிர்த்தது. கடிவாளத்தை பற்றித் தாழ்த்தி அவள் வாயின் மணத்தை முகர்ந்து “குடலில் புண் நிறைந்திருப்பதுபோல் மணம் எழுகிறது” என்றார். “ஒரே நாளில் புண் எவ்வாறு எழும்?” என்றார் ருத்ரர். “உளம் கொதித்திருக்கிறாள். என்ன நிகழ்ந்தது?” என்று சுதலர் கேட்டார். அவர்கள் அதை சொன்னபோது “விந்தை! இப்பருவத்தில் புரவிகள் பொலிநிலையின் குருதிமணத்தை அறிந்ததுமே உவகைகொண்டு கனைப்பதையே கண்டுள்ளேன். அவற்றை நாம் உள்ளே கொண்டுசெல்லத் தேவையில்லை. நம்மை அவை இழுத்துச்செல்லும்” என்றார் சுதலர்.

அவளைச் சூழ நோக்கி “நடுக்கம் உள்ளது. அஞ்சியிருக்கிறாள். அஞ்சும்படி எதுவோ நிகழ்ந்துள்ளது” என்றார் சுதலர். ருத்ரர் “என்ன செய்வது? எப்படியும் கருவுற்றாகவேண்டுமே?” என்றார். “பார்ப்போம். இப்போது இவள் உணவுண்ண வேண்டும். இன்னும் ஒருநாள் உணவொழிந்தால் இவள் குடலும் இரைப்பையும் புண்ணாகிவிடும். அப்புண்ணை ஆற்றிய பிறகே உணவு அளிக்க இயலும்” என்றார் சுதலர். “மூங்கில்குழாய் வைத்து உணவை உள்செலுத்தலாமே?” என்றார் ருத்ரர். “தன்னினைவின்றி படுத்திருந்தால் அவ்வாறு செய்யலாம். முழு ஆற்றலுடன் நின்றிருக்கும் புரவிக்கு குழாய் வழியாக உணவுநீரூட்ட இயலாது. ஆனால் ஒன்று தோன்றுகிறது…” என்று சொன்ன மருத்துவர் கொட்டிலில் துள்ளிக்கொண்டிருந்த இரு குதிரை மகவுகளை கயிறு கட்டி இழுத்துகொண்டு வரச்சொன்னார்.

சிறு புரவியான பசலன் ஆர்வத்துடன் அருகே வந்து அனிலையின் கால்களில் தன் முதுகையும் விலாவையும் உரசி அப்பால் சென்றான். அவன் தோழனான ஹரிதன் மேலும் அருகணைந்து அவள் கால்களுக்கிடையில் புகுந்து சிறிய மடியை தன் முகத்தால் முட்டி காம்புகளில் வாய்வைத்தான். கால்களை உதறியபடி பின்னகர்ந்த அனிலை குனிந்து ஹரிதனின் வாலையும் முதுகையும் நக்கத் தொடங்கினாள். “நன்று! நாக்கு அசைந்துவிட்டது. நீரை கொண்டுவையுங்கள்” என்றார் மருத்துவர். மீண்டும் நீரை அருகில் கொண்டுவைத்தபோது அனிலை குனிந்து விழிவரை முகம் முக்கி நீர் அருந்தினாள். நீர் உள்ளே செல்லும் ஒலியை கேட்ட மருத்துவர் “அணைக! உள்ளெழுந்த அனல் முற்றணைக!” என்றார். முகவாய் முள்மயிர்களில் நீர்த்துளிகள் நின்றிருக்க தலைதூக்கி நீள்மூச்செறிந்தாள் அனிலை. தலையை உலுக்கி காதுகளை அடித்துக்கொண்டு மீண்டும் ஹரிதனை நக்கினாள்.

இரு நாட்களுக்குள் முற்றிலும் சீரடைந்து உணவுண்ணத் தொடங்கினாள். அடுத்த கருநிலவு நாளில் மீண்டும் அவளை பொலிநிலைக்கு கூட்டிச்சென்றனர். இம்முறை கொட்டிலிலிருந்து பொலிநிலைக்குச் செல்லும் சிறு பாதையின் திருப்பத்திலேயே அனிலை காலூன்றி நின்றுவிட்டாள். பின்னர் திரும்பி கொட்டில் நோக்கி நடந்தாள். அவளை பற்றிக்கொண்டிருந்த பரிநிலைக்காவலன் கடிவாளத்தைப்பற்றி இழுக்க அவனை கடிவாளத்துடன் மேலே தூக்கி சற்றே சுழற்றி அப்பாலிட்டுவிட்டு கொட்டிலுக்குள் புகுந்துவிட்டாள்.

மீண்டும் மூன்று முறை முயன்ற பின் “இவள் காமஒறுப்பு கொண்டவள் போலும். யாரறிவார், முற்பிறவியில் அருந்தவம் எதுவோ ஆற்றி அது நிறைவடையாது உயிர் துறந்திருக்கக்கூடும்” என்றார் மருத்துவர் சுதலர். அடுத்த கருநிலவு நாளில் உசிநாரத்திலிருந்து வந்திருந்த மருத்துவரான ஜம்பர் “இதை நான் பார்த்துக்கொள்கிறேன். பலமுறை செய்து வென்ற சூழ்ச்சி ஒன்றுள்ளது. அங்கிருப்பவை நூற்றுக்கு மேற்பட்ட பொலிக்குதிரைகள். அவற்றின் விந்து கலந்த மணமும் அவையெழுப்பிய விழைவொலிகளின் தொகையும் அவளை அச்சுறுத்துகின்றன. சில புரவிகள் அவ்வாறு அஞ்சுவதுண்டு. பொலிநிலைக்கு அவளை கொண்டுசெல்ல வேண்டியதில்லை. காட்டுக்குள் பொலிக்குரிய நிலை ஒன்றை அமையுங்கள்” என்றார்.

புரவிநிலைக்கு அப்பால் காட்டுக்குள் பொலிநிலை ஒன்று அமைக்கப்பட்டது. முப்புறமும் எடைமிக்க தடிகளும் மூங்கிலும் வைத்து கட்டப்பட்ட சிறிய அறையில் அனிலையை கொண்டுசென்று கட்டினர். அவள் முன்கால்களுக்குப் பின்னும் கழுத்துக்குப் பின்னாலும் மூங்கில் வைத்து இறுக்கி அசையாது நிறுத்தினர். திரும்பவோ உடலை அசைக்கவோ அவளுக்கு இடமிருக்கவில்லை. இரு பின்னங்கால்களும் மூங்கில் தூணுடன் சேர்த்து கட்டப்பட்டன. என்ன நிகழ்கிறது என்று அறியாமல் முதலில் கட்டப்படுவதற்கு இடங்கொடுத்த அனிலை பின்னர் பதற்றமடைந்தாள். பெரிய குளம்புகளால் தரையை அறைந்தபடி நிலைகுலைந்து துள்ளத்தொடங்கினாள்.

பொலிநிலையிலிருந்து குருதிவிசை நிறைந்த பொலிக்குதிரையாகிய பாவகன் அழைத்து வரப்பட்டான். அனிலையின் பின்புறத்திலிருந்து கோழையை எடுத்து மரவுரி ஒன்றில் நனைத்து பாவகனின் முகத்தருகே தொங்கவிட்டனர். மணம்கொண்டு காமம் எழுந்து உறுமி விழியுருட்டி முன்கால்களால் மண்பறித்து பாவகன் வெறிகொண்டான். அவன் ஆணுறுப்பு இரும்புலக்கையென வெளிவந்தது. அனிலையைவிட இருபிடி உயரமும் கால்பங்கு எடையும் கொண்டிருந்தான். அவனை இழுத்து வந்து அனிலையின் அருகே நிறுத்தியதும் உறுமி உடல் மெய்ப்பு கொண்டு தலைகுலுக்கியபடி அணுகினான்.

தலையைத் தாழ்த்தி விழிகளை உருட்டி அசைவிலாது நின்றாள் அனிலை. மருத்துவர் ஜம்பர் பழுப்புக் கூழாங்கல்போல பற்களைக் காட்டி “நோக்குக! உலகின் இன்சுவைகளில் முதன்மையானது காமம். தெய்வங்களுக்கு உகந்தது. அதன் முதல் கனி சற்று துவர்க்கும். பின்னர் ஒவ்வொரு கனிக்கும் இனிப்பு மிகுந்து செல்லும்” என்றபின் மேலும் நகைத்து “தோலும் கொட்டையும் இனிக்கும் ஒரு பருவமும் வந்துசேரும்” என்றார். பாவகன் அருகே சென்று உரக்க கனைத்தபடி முன்கால்களைத் தூக்கி அனிலையின் பின்தொடை மேல் வைத்து உடலை நெருக்க அனிலை பெருங்குரலில் கனைத்து தன் கழுத்தால் முன்னாலிருந்த மூங்கிலை ஓங்கி அறைந்து உடைத்தாள். மூங்கில் நெரிபடும் ஒலியுடன் திரும்பி இரு கால்களையும் காற்றில் தூக்கி ஓங்கி உதைக்க பாவகன் அறைபட்டு வலியுடன் ஓசையிட்டபடி இருமுறை தள்ளாடி பக்கவாட்டில் விழுந்தான்.

அனிலை மேலும் முன்னகர்ந்து அதே விசையில் உடலை பின்னெடுத்து முழு ஆற்றலாலும் இரு மூங்கில்களை உடைத்தபடி அறையிலிருந்து வெளி வந்தாள். தரையில் விழுந்துகிடந்த பாவகன் முன் கால்களை ஊன்றி எழ முயல ஓங்கி அவனை முட்டி அப்பாலிட்டாள். அடிவயிறு தெரிய, நான்கு கால்களும் காற்றில் உதைத்துக்கொள்ள, மல்லாந்து விழுந்த பாவகனின் மேல் தலையால் முட்டி அவன் கழுத்தைக் கடித்து தூக்கிச் சுழற்றி அப்பாலிட்டாள். பாவகனின் பெருநாளம் உடைந்து கழுத்திலிருந்து கொழுங்குருதி பீறிட்டு அனிலையின் முகத்திலும் கழுத்திலும் வழிந்தது. குழைந்து வாழைத்தண்டுக் குவியலென நிலத்தில் கிடந்த பாவகனை மீண்டும் கடித்துத் தூக்கி இருமுறை உதறினாள் அனிலை.

“இது புரவியல்ல! இது வேங்கை! புரவி இவ்வாறு செய்வதில்லை! புரவியின் இயல்பே இது அல்ல!” என்று கூவியபடி மருத்துவர் ஜம்பர் விரைந்து ஓடி அருகே நின்ற சால மரமொன்றின் கிளைகளைப்பற்றி மேலேறி உச்சிக்கிளையில் இறுகப்பிடித்தபடி அமர்ந்து நடுங்கினார். பிற ஏவலர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். முகமயிர் முட்களிலும் பிடரியிலும் குருதி செம்மணிகள்போல உருண்டு ஓடையென்றாகி வழிய, திமிர்த்த தசைகள் இறுகி நெளிந்தசைய, மெல்ல நடந்து மீண்டும் கொட்டிலுக்கு வந்த அனிலை உறுமி பரிகாவலரை அழைத்தாள். அவர்கள் எவரும் வந்து வாயில் திறக்கத் துணியவில்லை. வாயிலை தலையால் அறைந்துடைத்து உள்ளே நுழைந்தாள். மீண்டும் தன் கொட்டிலை அணுகி அங்கே நின்றுகொண்டாள்.

அனிலையின் பிறவிநூலை கணிக்க பீலனிடம் கோரினர். அவன் அவளின் ஐந்து நற்சுழிகளையும் நாநிறத்தையும் குளம்புகளின் அமைப்பையும் விழிமணிகளின் ஒளியையும் கணித்து “இவள் காமத்தை தொடப்போவதில்லை. புரவிகளில் தெய்வக்கூறுகள் மூன்று உண்டு. திருமகளின் கூறு மட்டுமே கொண்டவள் ஐம்மங்கலங்கள் நிறைந்தவள். தெய்வங்கள் ஊர்வதற்கு உரியவள். திருமகளும் கலைமகளும் கூடிய புரவி முனிவர்களுக்குரியது. திருமகளும் கொற்றவையும் கூடிய புரவி அரசர்களுக்குரியது. திருமகள் கூறோ கலைமகளின் கூறோ சற்றுமின்றி முற்றிலும் கொற்றவையின் கூறு மட்டுமே கொண்ட புரவி பல்லாயிரத்தில் ஒன்று. அவளை எவரும் ஆள இயலாது. அவள் மேல் ஊர்வதும் எளிதல்ல” என்றான்.

“ஆனால் அன்னை பெருங்கனிவு நிறைந்தவள். தன் மகவையென தன்னை ஊர்பவனை கொண்டு செல்பவள். அவன் தேவியை அடியவனென அவளை வழிபடவேண்டும். அவள் காலடியில் அமர்ந்து பணிவிடை செய்யவேண்டும். போர்முனைகளில் களிறுகளும் அவளைக் கண்டு அஞ்சுவதை காண்பீர்கள். இவளுக்கு அனிலை என்று பெயர் சூட்டியவர் நாளும் கோளும் நன்கறிந்த நிமித்திகர். அவர் வாழ்க!” என்றான் பீலன்.

 வெண்முரசு விவாதங்கள்

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 45

bowஒவ்வொரு திசையிலிருந்தும் போர்ச்செய்திகள் வந்துகொண்டிருந்தன. கடோத்கஜன் பிரக்ஜ்யோதிஷத்தின் படைகளை மத்தென கலக்கிக்கொண்டிருந்தான். முன்னூறு பேர் கொல்லப்பட்டுவிட்டனர். பகதத்தனுக்கும் கடோத்கஜனுக்கும் நேர்ப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பகதத்தன் மூன்று முறை எறிகதை வீச்சுக்கு ஆளானார். கவசங்கள் உடைந்து பின்னடி வைத்து செல்கிறார். அவருக்குத் துணையாக துச்சாதனனும் துரியோதனனும் செல்கிறார்கள். துரியோதனனின் கதைக்குமுன் நிற்கவியலாமல் கடோத்கஜன் பின்னடைகிறான்.

போரின் விசை கூடக்கூட கடோத்கஜனின் பின்னிலிருந்து திருஷ்டத்யும்னனின் ஆணை அழைத்து காத்தது. அர்ஜுனனை ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் சேர்ந்து எதிர்கொள்கிறார்கள். அம்புக்கு அம்பென நிகழ்கிறது போர். சர்வதனை இளைய கௌரவர் எழுவர் சூழ்ந்துள்ளனர். சுதசோமனை கௌரவர் பன்னிருவர் சூழ்ந்துள்ளனர். எஞ்சியவர் பீமனைச் சூழ்ந்து போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். போர் ஒவ்வொரு கணமும் நிகர்நிலையில் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் தடையற்றவராக பீஷ்மர் முன்சென்றுகொண்டிருக்கிறார். அவரிடமிருந்து அபிமன்யூவைக் காத்து கொண்டுசெல்கின்றனர். அதோ வெறிகொண்ட அபிமன்யூ கௌரவப் படையின் தேர் அணியொன்றை பிளந்துகொண்டு முன்னெழுகிறான். அவன் முன் அம்புபட்டு அலறியபடி கௌரவ மைந்தர்கள் தேரிலிருந்து உதிர்கிறார்கள்.

சுவாங்கனும் உத்வேகனும் ஊர்ஜிதனும் விழுந்தார்கள். கனகனும் சுப்ரதீகனும் சுப்ரபனும் தீர்க்கதேஜஸும் தீர்க்கரோமனும் காதரனும் வீழ்ந்தனர். அபிமன்யூ இளைய கௌரவ மைந்தர்களை கொன்று குவித்துக்கொண்டிருந்தான். வாசவனும் வக்ரனும் ருத்ரடனும் ருத்ரனும் ருத்ரநேத்ரனும் கொல்லப்பட்டார்கள். மதுபர்க்கனும் வல்லபனும் சாமனும் சார்த்தூலனும் வத்கலனும் சாலியும் வர்தனனும் சால்மலியும் வர்ச்சஸும் சமியும் வீரபாகுவும் விஜயபாகுவும் சமடனும் வீரகனும் லோகிதனும் சதபாகுவும் லோலனும் மூலகனும் லோபனும் மூஷிகனும் ரைவனும் கொல்லப்பட்டார்கள்.

சகுனி “மைந்தரை காத்துக்கொள்க… அனைத்து கௌரவர்களும் மைந்தரை சூழ்ந்துகொள்க!” என்று ஆணையிட்டார். கௌரவர்கள் இருபுறத்திலிருந்தும் திரண்டு மைந்தரின் உதவிக்காக செல்ல கடோத்கஜன் எழுந்து அவர்களைத் தடுத்து அறைந்து பின்னடையச் செய்தான். மறுபுறம் சர்வதன் அவர்களை தடுத்தான். துணையின்றி கௌரவ மைந்தர்கள் அபிமன்யூவின் முன் விடப்பட்டனர். திடஹஸ்தன், பாசன், பாமகன், சாந்தன், சுபத்ரன், சுதார்யன் என பெயர்கள் வந்தபடியே இருந்தன. சகுனி “முன்செல்க! முன்செல்க! மைந்தரை காத்துகொள்க!” என்று தன் தேர்ப்படைவீரர்களுக்கு ஆணையிட்டார். அவருடைய தேரைச் சூழ்ந்து காந்தாரப் படையும் சுபலரும் மகாபலரும் அம்புகளைத் தொடுத்தபடி வந்தனர்.

“விரைக! விரைக!” என சகுனி தேரை ஊக்கினார். தேர் படைகளைப் பிளந்தபடி அபிமன்யூவை நோக்கி சென்றது. ஆனால் பாண்டவப் படைகளுக்கு பின்னாலிருந்து வந்த தொலையம்புகளால் காந்தாரப் படை நிறுத்தப்பட்டது. கழுகிறகுகள் பொருத்தப்பட்ட அம்புகள் ஒளிரும் அலகுகளுடன் முழங்கியபடி இறங்கி தேர்களின் புரவிகள்மேல் குத்தி இறங்கி அமைந்தன. தேர்கள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்குழம்பின. “முன்செல்க! முன்செல்க!” என்று சகுனி கூவினார். அபிமன்யூவை துணைத்த பின்படையினரால் காந்தாரப் படையின் முன்னணிப் பரிவீரர்கள் விழுந்தனர். மூன்றுபுறமும் துணைப்படை தடுத்து நிறுத்தப்பட்டது. கழையன் மேலேறி நோக்கி செய்தியறிவிக்க சகுனி தன் வில்லால் தேரை ஓங்கி அறைந்து கூச்சலிட்டார்.

வலைக்குள் சிக்கிய மீன்களென கௌரவ மைந்தர்கள் சுற்றி வந்தனர். அஞ்சி கூச்சலிட்டு விற்களையும் ஆயுதங்களையும் கீழே விட்டு கைதூக்கினர். பலர் தலையைப் பொத்தியபடி உடல் வளைத்து தேர்த்தட்டில் அமர்ந்து நடுங்கினர். அபிமன்யூ ஒற்றைநாணில் கொத்துக்கொத்தென அம்புகளை எடுத்து எடுத்து அவர்களை கொன்று அழித்தான். சரணன், மானசன், வேகன், தந்தகன், பிச்சலன், விபங்கன், காலவேகன், கண்டகன், விரோகணன், பிரபாவேனன், ஹனு, அகோராத்ரன், அகோவீரன், சம்பு, விக்ரன், விமலன், ஏரகன், குண்டனன், வேணிதரன், வேணுஹஸ்தன், சார்ங்கன், கதாவேகன், மகாகாலன், சேசகன், பூர்ணாங்கன், சுதிரத்மன், ரிஷபன், சங்கு, கர்ணகன், குடாரன், குடமுகன், சுஹாசன், சுசரிதன், விரோசனன் என முழவுகள் வீழ்ந்த கௌரவ மைந்தரின் பெயர்களை அறிவித்துக்கொண்டே இருந்தன.

கைதளர்ந்து சகுனி வெறித்து நோக்கிக்கொண்டு நின்றார். நூற்றெண்பது கௌரவ மைந்தர் கொல்லபட்டுவிட்டனர். கணமொருவர் என கொல்லப்படுகிறார்கள். “பிதாமகர் பீஷ்மர் எழுக! கௌரவ மைந்தர்களை காத்துக் கொள்க!” என்று அவருடைய ஆணை முரசுகளாக வானில் முழங்கிக்கொண்டிருந்தது. விண்ணிலிருந்து எழும் மூதாதையரின் பதைபதைப்பு என. ஒலியிலிருந்து ஒலி தொடுக்க மிகத் தொலைவில் பீஷ்மர் அதை கேட்பதை அவரால் காண முடிந்தது. திரும்பி தேரைச் செலுத்தி பீஷ்மர் அபிமன்யூவை நோக்கி வந்தார். சுருதகீர்த்தி அவரை தடுக்க அவனை அம்புகளால் செறுத்து பின்னடையச் செய்து அவன் இடையில் அம்புபாய்ச்சி தேர்த்தட்டில் விழச்செய்தார். அபிமன்யூவின் பின்னணிப்படையினரின் சூழ்கையை உடைத்து உட்புகுந்து அதே விசையில் நான்கு அம்புகளால் அவன் தேர்ப்பாகனை கொன்றார். சீற்றத்துடன் திரும்பி தன் கால்களாலேயே கடிவாளத்தைப் பற்றி தேரைத் திருப்பி அபிமன்யூ பீஷ்மரை நோக்கி சென்றான். “மைந்தரை மீட்டெடுங்கள்! மைந்தரை சூழ்ந்துகொள்க!” என்று காந்தாரப் படையினருக்கு சகுனி ஆணையிட்டார்.

சுபலரும் காந்தார இளவரசர்களும் எதிரம்புகளைச் செறுத்து கடந்துசென்று எஞ்சிய கௌரவ மைந்தர்களை சூழ்ந்துகொண்டனர். அவர்கள் அனைவருமே தேர்த்தட்டுகள் மேல் உடல்குறுக்கி அமர்ந்து குளிர்கண்டவர்கள்போல் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். துர்த்தாரகன் உரத்த குரலில் “இது போரல்ல… படைக்கலம்விட்டு அமர்ந்துவிட்டவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது நெறியே அல்ல…” என்று கூவினான். சகுனியின் தேர் அருகே வந்த பரிவீரன் ஒருவன் “இருநூற்றியேழு இளவரசர்கள் கொல்லப்பட்டனர்… புண்பட்டு எஞ்சியோர் எவருமில்லை” என்றான். அருகே நின்றிருந்த தேர்வீரன் “இன்று மிகுந்த பேரழிவு, காந்தாரரே” என்றான்.

அதற்குள் முழவு இருநூற்றுப் பதினேழு கௌரவ இளவரசர்கள் கொல்லப்பட்டிருப்பதை தெரிவித்தது. “பிணங்களை கண்டெடுக்கிறார்கள்!” என்றான் பராந்தகன். கொக்கிச்சரடுகளை வீசி களத்திலிருந்து கௌரவ மைந்தரை இழுத்து எடுத்துக்கொண்டே இருந்தனர். இருநூற்றி முப்பத்தேழுபேர் என்றது முழவு. தேர்த்தட்டில் ஒருவர் மீது ஒருவரென அடுக்கப்பட்ட கௌரவர்களின் உடல்களை சகுனி ஒருமுறை மட்டும் நோக்கினார். கைகள் விரிந்து விரல்கள் அகன்று களைத்துத் துயில்பவர்கள் போலிருந்தனர். வாழ்ந்திருந்தபோது அவர்கள் அனைவர் முகங்களிலும் ஒற்றை உணர்ச்சியே திகழ்ந்தது. இறந்தபோதும் அவ்வாறே ஒற்றை உணர்ச்சிதான் நிலைகொண்டிருந்தது. வியந்து, திகைத்து, செயலிழந்தவர்கள்போல.

முதல்முறையாக அவர்களை கான்வேட்டைக்கு கொண்டுசென்றதை அவர் நினைவுகூர்ந்தார். காட்டின் ஆழத்துள் நுழைந்ததும் அவர்கள் ஓசையடங்க விழிகள் வெறித்து வாய் திறந்து புரவிகளில் அமைந்திருந்தனர். அதே நோக்கு. கதைபயிலக் கூட்டிவருகையில் மீளமீளச் சொன்னாலும் மிக எளிய பாடங்கள்கூட அவர்களுக்கு புரிவதில்லை. பலமுறை சொன்னபின் சினம்கொண்டு ஆசிரியர் அவர்களை அடிக்க தன் கதையை ஓங்கும்போதும் அதே திகைப்பையே அவர்களின் முகங்களில் காண்பார். எரிபுகுவதற்கென்றே சிறகுகொள்ளும் விட்டில்கள். சகுனி நாவில் கசப்பென ஊறிய எச்சிலை திரும்பி துப்பிக்கொண்டார். துப்புந்தோறும் கசப்பு ஏறி ஏறி வந்தது.

பீஷ்மர் அபிமன்யூவை தடுத்து மேலும் மேலும் பின்னடையச் செய்தார். “இளையோன் உயிர்கொடுக்கத் துணிந்தவனாக களம் நின்றிருக்கிறான்” என்றான் ஒரு பரிவீரன். “அவன் உயிரால் ஈடுகட்டுவோம் இன்றைய இழப்பை!” என அருகே பிறிதொருவன் கூவினான். பீஷ்மரை சூழ்ந்துகொண்ட பாஞ்சாலப் படைவீரர்கள் அலறி விழ அபிமன்யூவை காக்கும்பொருட்டு வில்லவர்கள் அரைவட்டமென பின்வளையம் அமைத்தனர். தடைகளை உடைத்தபடி கௌரவர்கள் இருபுறத்திலிருந்தும் இளைய கௌரவர் களம்பட்ட இடத்தை நோக்கி வந்தனர்.

“சூழ்ந்துகொள்க! அபிமன்யூவை சூழ்ந்துகொள்க! மைந்தரை காக்க வருக!” என்ற அவருடைய ஆணை முழங்கிக்கொண்டிருந்தது. அதை அவரே கேட்டபோது ஒருகணம் திகைத்தார். அது ஒரு சூழ்ச்சி. தூண்டிலில் மீன்களையே மீன்களுக்கு வைத்திருக்கிறார்கள். “முன்செலல் ஒழிக! கௌரவர் பின்னடைக!” என்று ஆணையிட்டார். ஆனால் அவ்வாணை ஒலிக்கையிலேயே காந்தாரப் பரிவீரன் அவர் முன் பாய்ந்து வந்து “பீமசேனரை ஏற்கெனவே நம்மவர் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்… கௌரவர் நாற்பதின்மர் அவரை ஒருங்கிணைந்து எதிர்க்கிறார்கள்” என்றான். மைந்தர் இறந்த செய்தி கௌரவர்களை வெறிகொள்ளச் செய்யும். இறந்த மைந்தரின் தந்தையர் இறப்புக்கு நெஞ்சுகாட்டி முன்சென்று களம் நிற்பார்கள். தாங்களும் வீழ்வதே அவர்களுக்கு நிறைவளிக்கும்.

“கௌரவர்களை காக்கவேண்டும்! கௌரவர் பின்னடைக!” என அவருடைய ஆணை முழங்கியது. சோமதத்தர் அவர் அருகே தேரில் வந்து “நமது படைகள் முழுமையாகவே இளைய பாண்டவனை சூழ்ந்துகொண்டுள்ளன. இதுவே நற்தருணம்” என்றார். “அவன் மைந்தன் உடனெழுவான். கௌரவர்களை உடைப்பான். கௌரவர்கள் கொல்லப்படுவார்கள்… இன்று கௌரவர்களும் கொல்லப்பட்டால் நமது படை உளம் தோற்றுவிட்டதாக பொருள்” என்று சகுனி கூறினார். நாற்புறத்திலிருந்தும் கௌரவப் படையினர் திரண்டு பீமனை நோக்கி சென்று கதைகளும் விற்களுமாக பொருதுவதை சகுனி கண்டார். “விலகுக… விலகுக!” என்று கூவியபடி அம்புகளை எய்து படைகளை விலக்கியபடி பீமனை நோக்கி சென்றார்.

அவர் எண்ணியதுபோலவே வெறிகூச்சலிட்டபடி தேர்த்தட்டில் நின்று நெஞ்சில் அறைந்து கதறி அழுதபடி கௌரவர்கள் பீமனை சூழ்ந்துகொண்டனர். செல்லும் வழியெங்கும் அவர்கள் தங்கள் மைந்தர்களின் உடல்களை கண்டிருந்தனர். “கௌரவர்கள் விலகட்டும்! போரை திரிகர்த்தர்களும் உசிநாரர்களும் முன்னெடுக்கட்டும்! கௌரவர்கள் விலகுக!” என்று சகுனி ஆணையிட்டார். அவருடைய தேர் ஊடே புகுந்த பாண்டவக் குறும்படையொன்றால் தடுக்கப்பட அவர்களை அம்புகளால் அறைந்து வீழ்த்தி விலக்கி அவர் திரும்பி நோக்கியபோது கௌரவர்களின் வளையத்தை ஒருபுறம் சுதசோமனும் மறுபுறம் சர்வதனும் உடைத்துவிட்டதை கண்டார்.

கௌரவர்கள் மேலும் பீமனை சூழ்ந்துகொண்டார்கள். அம்புகளைப் பெய்தபடி அவர் செல்லும்போதே “பிதாமகர் பால்ஹிகர் வருக! கௌரவர்களை காக்க வருக!” என ஆணையிட்டார். திருதசந்தனும் ஜராசந்தனும் பீமனின் அம்புகளால் அறையுண்டு வீழ்ந்தனர். துராதாரனும் விசாலாக்‌ஷனும் பீமனின் கொக்கிக் கயிற்றில் சிக்கி தேரிலிருந்து நிலத்தில் உருண்டனர். அவர்கள் எழுவதற்குள் பீமனின் கதை வந்து அவர்களின் தலைகளை உடைத்தெறிந்தது. அக்கணம் பாண்டவப் படையின் பின்னிரையிலிருந்து கழைமேல் எழுந்து பறந்து களம்நடுவே வந்திறங்கிய கடோத்கஜன் சுஹஸ்தனையும் வாதவேகனையும் பீமவிக்ரமனையும் அறைந்து தேரிலிருந்து சிதறடித்தான். அவர்கள் தேர்கள் தேடி ஓட பீமனின் சங்கிலியில் துள்ளிய கதை சுழன்று அவர்களை அறைந்து மண்ணில் குருதிச்சிதைவுகளாக பரப்பியது.

பீமன் தன் தேரிலிருந்து கழையூன்றி தாவி மகாபாகுவின் தேரிலேறி அக்கணமே அவனை அறைந்து கொன்றான். அருகிலிருந்த தேரிலிருந்து சித்ராங்கன் கூச்சலிட அவனை இழுத்துத் தூக்கி தன் முழங்கால்மேல் அறைந்து முதுகெலும்பை முறித்து அப்பால் வீச அவன் புழுதியில் புழுவென துடித்தான். சித்ரகுண்டலன் தேரிலிருந்து பாய்ந்திறங்க பீமனின் கொழுக்கயிற்றின் கூர்தூண்டில் அவன் கழுத்தைக் கவ்வி கவசத்துடன் கிழித்து பறந்தது. குருதிபெருகும் கழுத்தைப் பற்றியபடி அவன் மண்ணில் விழுந்தான். கௌரவர்கள் அந்தக் கொலைகளால் தளர்ந்து பின்னடையத் தொடங்க அவன் தேரிலிருந்து தேருக்கு பாய்ந்து பிரமதனையும் அப்ரமாதியையும் தீர்க்கரோமனையும் கொன்றான்.

தீர்க்கபாகு தேரிலிருந்து பாய்ந்திறங்கியபோது தேர்முகடிலிருந்து கீழே பாய்ந்த பீமனைக் கண்டு “மூத்தவரே!” என அலறினான். எட்டி அவன் நெஞ்சை மிதித்து தேர்ச்சகடத்தின் அச்சுக்கோலுடன் அறைந்தான் பீமன். கழுவில் கோத்தவன்போல் அவன் நின்று உதறிக்கொள்ள அஞ்சி தேரிலிருந்து பாய்ந்த சுவீரியவானை பின்னிருந்து கதையால் தலையிலறைந்து கொன்றான். சகுனி அம்புகளுடன் கௌரவச் சூழ்கையைக் கடந்து பீமனை அடைந்தபோது பீமன் உடலெங்கும் குருதியுடன் ஓங்கி நிலத்தை உதைத்து வெறிக்கூச்சலிட்டான். சகுனியின் இரு பேரம்புகள் பீமனின் கவசங்களை உடைக்க அவன் பாய்ந்து தன் தேரிலேறிக்கொண்டான்.

“கௌரவர் பின்னடைக… கௌரவர் பின்னடைக!” என்று சகுனி ஆணையிட்டார். அவருடைய ஆணை வீணொலியென காற்றில் நின்று அதிர கௌரவர்கள் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மேலும் மேலும் திரண்டு பீமனை நோக்கி சென்றனர். அவ்வாறு பெருந்திரளென சூழ்வதுபோல் பிழையான போர்முறை பிறிதொன்றில்லை என்று அவர் அறிந்திருந்தார். உணர்வுக் கொந்தளிப்பால் அவர்களுக்குள் எந்த ஒத்திசைவும் இருக்கவில்லை. பலர் கதறி அழுதுகொண்டிருந்தனர். நெஞ்சிலறைந்து வஞ்சினம் கூவினர். வெறிகொண்டு தலையை தூணில் முட்டிக்கொண்டனர். ஒவ்வொருவரும் தங்கள் கைகளால் பீமனை கொல்ல விழைந்தனர். எனவே நீர்ப்பரப்பிலிருந்து மீன்கள் துள்ளி எழுவதுபோல் பீமன் முன்சென்று விழுந்தனர். சுவர்ச்சஸும் ஆதித்யகேதுவும் பீமனின் அம்புகளால் கொல்லப்பட்டு தேரிலிருந்து விழுந்தனர்.

சகுனி பீமனை அம்புகளால் அறைந்து நிறுத்தியபடி துச்சாதனனும் துரியோதனனும் வந்து பீமனை எதிர்கொள்ளும்படி ஆணையிட்டார். “துரியோதனர் எழுக! துச்சாதனர் எழுக!” என அவருடைய ஆணை காற்றில் அதிர்ந்தது. ஆனால் அப்பால் வந்த துரியோதனனின் தேரை கடோத்கஜன் தடுத்து நிறுத்தினான். துச்சாதனன் துரியோதனனை விட்டுவர இயலாது தவித்தான். “ஜயத்ரதரும் அஸ்வத்தாமரும் வருக! கௌரவர்களை காத்து நிற்க வருக!” என்று சகுனி ஆணையிட்டார். அவர்கள் அர்ஜுனனால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். திருஷ்டத்யும்னன் பூரிசிரவஸை எதிர்த்து நிற்க சாத்யகி வந்து இணைந்துகொண்டான். சாத்யகி பித்தன்போல் வெறிகொண்டு தாக்க பூரிசிரவஸ் கை ஓய்ந்து அடிக்கு அடி வைத்து பின்னகர்ந்துகொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் தங்களுக்குள் மட்டுமே என போர்புரிந்துகொண்டிருக்க ஜயத்ரதன் திருஷ்டத்யும்னனை அம்புகளால் அறைந்து பின்கொண்டு சென்றான். பீமனுக்குத் துணையாக சர்வதனும் சுதசோமனும் வில்லுடன் எழ சகுனி கை ஓய்ந்து பின்னகர்ந்தார். பீமன் அந்த இடைவெளியில் பாய்ந்து மீண்டும் கழையிலெழுந்து தாவி வந்து துஷ்பராஜயனையும் அபராஜிதனையும் கொன்றான். “இளவரசர்கள் களம்பட்டதை முரசுகள் அறிவிக்க வேண்டியதில்லை” என்று சகுனி ஆணையிட்டார். அவரது ஆணை ஒலித்துக்கொண்டிருக்கையிலேயே அவர்கள் களம்பட்ட செய்தியை அறிவித்து முழவுகள் முழங்கின.

சகுனி சீற்றத்துடன் “பிதாமகர் பால்ஹிகர் எங்கே? பிதாமகர் களமெழட்டும்! பால்ஹிகர் களம் எழுக!” என்று கூவினார். ஆனால் பால்ஹிகர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. வெவ்வேறு இடங்களில் தொழும்பர்கள் மேலெழுந்து பால்ஹிகரை தேடி மிகத் தொலைவில் அவர் நிஷாதர்கள் நடுவே பாண்டவப் படைக்கு உள்ளே இருப்பதை கண்டுகொண்டனர். “பிதாமகர் துணை வருக! பிதாமகரை அழைத்து பீமனுக்கு பின்னால் கொண்டு வருக!” என்று சகுனி ஆணையிட்டார். உசிநாரர்களும் காம்போஜர்களும் இணைந்த படை கிராதர்களையும் நிஷாதர்களையும் தாக்கி வழி உருவாக்கி பால்ஹிகரை நோக்கி சென்றது. அதற்குள் சாருசித்ரனும் சராசனனும் பீமனால் கொல்லப்பட்டார்கள்.

கௌரவப் படை நொறுங்கி ஒன்றிணைவதுபோல் தோன்றியது. “துரோணரை துணை கொள்க! பால்ஹிகரை துரோணர் அழைத்து வருக!” என்று சகுனி கூவினார். துரோணர் தன்னை எதிர்த்து நின்றிருந்த பாஞ்சாலப் படைகளை விலக்கி இடைவிடாத அம்புகளால் கிராதர்களை வீழ்த்தி உருவாக்கிய பாதையினூடாக கவசமணிந்த யானைமேல் பால்ஹிகர் திரும்ப வந்தார். அவர் மையப்படையில் இணைந்துகொண்டதும் அங்கே முரசொலிகள் எழுந்தன. “பால்ஹிகரை பீமனிடம் அழைத்துச் செல்க!” என்று சகுனி ஆணையிட்டார். பீமன் தேரிலிருந்து கழையூன்றி எழுந்து பறந்து யானையொன்றின்மேல் சென்றமர்ந்து கதையால் கௌரவர்களாகிய சத்யசந்தனையும் சதாசுவாக்கையும் தலையறைந்து கொன்றான். குருதி வழிய அவன் நிமிர்ந்தபோது நேர் எதிரில் பால்ஹிகரை கண்டான். பாய்ந்தெழுந்து கதையை வீசி அவரை எதிர்கொண்டான்.

பால்ஹிகரின் பெருங்கதை காற்றில் சுழன்றெழுந்து வந்து அவன் அமர்ந்த யானையின் மத்தகத்தை அறைந்தது. அலறியபடி யானை பின்னடைந்து வலம் சரிவதற்குள் அதன் மேலிருந்து தாவி பீமன் இன்னொரு யானைமேல் ஏறிக்கொண்டான். அந்த யானையையும் அவர் அறைந்து வீழ்த்தினார். பீமன் வீழ்ந்த யானைக்கு அடியில் சிக்கிக்கொண்டான். பால்ஹிகரின் பெரிய கதை பறக்கும் மலை என அவனை நோக்கி வர மண்ணில் படுத்து அதை ஒழிந்து காலை உருவிக்கொண்டு அது மீண்டு வந்தறைவதற்குள் ஓடிச்சென்று தன் தேரில் ஏறிக்கொண்டான். அந்தத் தேரை பிதாமகரின் கதை அறைந்து சிம்புகளாக தெறிக்க வைத்தது.

மீண்டும் அவர் பீமனை தாக்குவதற்குள் அவரை கடோத்கஜன் தன் கதையால் தாக்கினான். ஆனால் பெரிய கதையின் அறைபட்டு அவன் கதை உடைந்து தெறித்தது. அவர் அறைந்தபோது கடோத்கஜனின் அணுக்கப்படையினரான இரு இடும்பர்கள் உடல்சிதைந்து துண்டுகளாக தெறித்தனர். கடோத்கஜன் தன் கொக்கிக்கயிற்றில் தொற்றிப் பறந்து அப்பால் விலகினான். சர்வதனும் சுதசோமனும் பாய்ந்து பின்னடைய திருஷ்டத்யும்னனின் ஆணையின்படி நீண்ட நிலைக்கேடயங்களை ஏந்திய யானைகள் வந்து அவனை மறைத்தன. பாஞ்சாலப் படை பீமனைத் தூக்கி அப்பால் எடுத்துச்சென்றது.

நான்கு விரல்கடை பருமனுள்ள இரும்புத் தகடாலான ஆறு ஆள் உயரமுள்ள அந்த இரும்புக்கேடயங்கள் ஒவ்வொன்றும் மூன்று யானையின் எடைகொண்டவை. முகப்பில் எதிரடியை தாங்குவதற்குரிய முழைவளைவுகள் கொண்டவை. யானைமருப்புகளை எதிர்க்கும்பொருட்டு அவற்றில் கூரிய வேல்முனைகள் பொருத்தப்பட்டிருந்தன. பின்னால் யானைகள் துதிக்கையால் பற்றும்பொருட்டு வளையங்கள் கொண்டவை. கீழே இரண்டு சிறு இரும்புச்சகடங்களில் அவற்றை உருட்டிச் செல்லமுடியும். அவற்றை மத்தகத்தால் ஏந்தி துதிக்கையால் பற்றிக்கொண்டுவந்த யானைகள் ஒன்றுடன் ஒன்று இணைத்து உருவாக்கிய இரும்புக்கோட்டைக்கு அப்பால் பாண்டவப் படை பின்வாங்கிக்கொண்டிருந்தது. அங்கே கௌரவர் கொல்லப்பட்டதை அறிவித்து வெற்றிமுரசுகள் முழங்கின. பாண்டவ வீரர்கள் “வெற்றிவேல்! வீரவேல்! வெற்றி! வெற்றி!” என்று கூச்சலிட்டனர். வேல்களும் கைவாள்களும் காற்றிலெழுந்து சருகலையென தெரிந்தன.

பால்ஹிகர் கதையை வீசி யானைகள் ஏந்திவந்த கேடயங்களை அறைந்து உடைத்தார். அவருடைய கதையின் மோதலில் இரும்புடன் இரும்பு பட்டு பொறியெழுந்தது. அறைபட்ட யானை பின்னடைய அங்கே ஈரப் பரப்பிலென குழியமைந்தது. ஆனால் பின்னிருந்து இன்னொரு யானையால் உந்தப்பட்டு கேடயம் முன்னால் வந்தது. கேடயம் உடைந்து சரிய அந்த இடைவெளியை பக்கவாட்டு யானைகள் இணைந்து உடனே மூடின. பால்ஹிகர் மீண்டும் மீண்டுமென கேடயங்களை அறைந்து உடைத்துக்கொண்டே இருந்தார். கேடயச்சுவர் நீர்விளிம்பென அலைகொள்வதை சகுனி கண்டார்.

“கௌரவ இளையோரை நோக்குக! எவரேனும் உயிர் பிழைக்கக்கூடுமா?” என்று சகுனி கேட்டார். கௌரவர்களை இழுத்து பின்னாலெடுத்துக்கொண்டிருந்தார்கள். “இருபத்திரண்டுபேர்” என்று காவலன் கூவினான். “இதோ இன்னுமொருவர்” என்றான் இன்னொருவன். “நோக்குக!” என்று ஆணையிட்டபடி சகுனி பின்னால் சென்றார். சங்கொலியுடன் துரியோதனனின் தேர் முன்னால் வர உடன் துச்சாதனனும் வந்தான். சகுனி துரியோதனனின் முகத்தை கூர்ந்து சிலகணங்கள் நோக்கிவிட்டு எதிர்த்திசையில் தேரை திருப்பிச்செல்ல ஆணையிட்டார்.

ஒருகணம் உடலில் இருந்து ஆற்றல் முற்றாக விலக மாபெரும் ஓவியத் திரைச்சீலை காற்றிலாடுவதுபோல் குருக்ஷேத்ரக் களம் அலைபாய்ந்தது. அவர் தேர்த்தூணை பற்றிக்கொண்டு மெல்ல இருக்கையில் அமர்ந்தார். கண்களை மூடிக்கொண்டு மிக அருகே என தன் மேல் பதிந்திருக்கும் ஒரு நோக்கை உணர்ந்தார். பின்னர் விழிதிறந்து திரும்பி தேரிலிருந்த ஆவக்காவலனிடம் “நீர்!” என்று கைநீட்டினார்.

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 44

bowபோர்க்களத்தில் தன் கையசைவுகள், உதடசைவுகள் வழியாக இடைவிடாது ஆணைகளைப் பிறப்பித்து சூழ்ந்திருந்த படைகளை முற்றாகவே ஆட்டுவித்துக்கொண்டு தேரில் நின்றிருக்கையில் சகுனி முதல்முறையாக நாற்களப் பகடைகளைத் தொட்டு எடுத்த நாளை எண்ணிக்கொண்டார். குழந்தையாக இருந்தபோது நிகழ்ந்தவற்றில் ஓர் அணுவிடைகூட ஒளி குன்றாது நின்றிருக்கும் நினைவு அதுதான். அவருக்கு இரண்டு அகவை. தந்தையின் மடியில் அமர்ந்திருந்தார். தந்தையின் முன் நாற்களப் பலகை விரிந்திருந்தது. எதிரே அவருடைய இளையவராகிய மகாபலர் அமர்ந்திருந்தார். அவர் தலையில் கைவைத்து கருக்களை நோக்கியபடி அமர்ந்திருக்க அவரை புன்னகையுடன் கூர்ந்து நோக்கியபடி சுபலர் பகடைகளை கையிலெடுத்தார்.

அவர்களின் முகங்களிலிருந்த உணர்ச்சிகளை சகுனி மாறிமாறி பார்த்தார். அந்த ஒருமையும் கொந்தளிப்பும் பதற்றமும் எக்களிப்பும் அவரை ஆட்கொண்டன. சுபலர் பகடைகளை உருட்டியதும் மகாபலர் தலையில் ஓங்கி அறைந்தபடி “தெய்வங்களே!” என்றார். சுபலர் “மீண்டும் என் கணக்கு” என்றார். “என்ன, தந்தையே?” என்றார் சகுனி. “ஒன்றுமில்லை, பேசாமலிரு” என்றார் சுபலர். “தந்தையே” என்று சகுனி அவர் கையை பிடிக்க அவர் மைந்தனை இறக்கி அப்பால் நிறுத்தி பகடையை உருட்டினார். மகாபலர் குனிந்து நோக்கிவிட்டு வெறிக்கூச்சலிட்டு கைகளைத் தட்டியபடி எழுந்தார். உரக்க நகைத்தபடி நடனமிட்டார். சுபலர் தலையில் கைவைத்துக்கொண்டு குனிந்தார்.

அதற்கு முன்னரும் அந்த ஆட்டத்தை சகுனி பார்த்திருந்தார். ஆனால் ஒரே கணத்தில் துயரை பெருங்களிப்பாக, பெருங்களிப்பை இருண்ட வீழ்ச்சியாக மாற்றும் ஒன்று அப்பகடைகளில் இருப்பது அப்போதுதான் அவர் நெஞ்சில் பதிந்தது. அவர் அந்தப் பகடைகளையே நோக்கிக்கொண்டிருந்தார். அவை எலும்புகளால் ஆனவை. காந்தாரத்தின் பகடைகளில் எல்லாம் ஒருபுறம் காந்தாரத்தின் ஈச்சஇலை பொறிக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் ஆறன்னையரைக் குறிக்கும் ஆறு என்னும் எழுத்து. பகடைகள் புரண்டு விரிந்து மீண்டும் சேர்ந்து சிதறிப்பரவுவதை அவர் நோக்கிக்கொண்டிருந்தார். அவை சுபலரையும் மகாபலரையும் அறியாமல் தங்களுக்குள் தாங்களே விளையாடிக்கொண்டிருந்தன. புறாக்கள்போல எழுந்து சிறகடித்து மீண்டும் அமர்ந்து. அவற்றுக்கு அப்பால் சுபலரும் மகாபலரும் கொந்தளித்தனர், கூச்சலிட்டனர், கண்ணீர்விட்டனர், மகிழ்ச்சிகொண்டாடினர்.

உச்சிப்பொழுதில் உணவுண்பதற்காக அவர்கள் எழுவதுவரை ஆட்டம் நீடித்தது. ஏவலன் வந்து அறிவித்ததும் எழுந்துகொண்ட மகாபலர் “நான் வென்ற நிலங்களை தனியாக குறித்துள்ளேன், மூத்தவரே. அவை முறைப்படி நீரூற்றி எனக்கு அளிக்கப்படவேண்டும்” என்றார். சுபலர் “ஆம், அவை உனக்குரியவை. ஆனால் இன்னும் ஆட்டம் முடியவில்லை. இறுதியில் எவர் ஈட்டுகிறார்கள் என்று பார்ப்போம்” என்றார். மகாபலர் “நான் ஆடவில்லை என்றால்?” என்றார். “ஆட்டத்தை நிறுத்திவிட்டுச் செல்ல எவருக்கும் உரிமையில்லை” என்றார் சுபலர். “எங்கேனும் நிறுத்தியாகவேண்டுமே?” என்றார் மகாபலர். “ஆம், ஆனால் என் நிலத்தை நீ கொண்டுசெல்லும் இடத்தில் அல்ல” என்றார் சுபலர்.

இருவரும் நின்று நோக்கோடு நோக்கு பொருந்தினர். இரு முகங்களிலும் இருந்த வெறுப்பையும் சினத்தையும் சகுனி நோக்கிக்கொண்டிருந்தார். சுபலர் திரும்பிச்செல்ல மகாபலர் மெல்ல துப்பியபடி திரும்பி இன்னொரு பக்கமாக சென்றார். அவர்கள் இருவரும் ஒருபோதும் பேசிக்கொள்வதில்லை என்பதை சகுனி உணர்ந்தார். இணைந்து நிற்பதுகூட அரிது. ஆனால் அமர்ந்து ஆடமுடிகிறது. அங்கே நகைப்பும் கூச்சலும் எழுகிறது. பகைக்கும் நட்புக்கும் அப்பால் நிகழும் ஓர் ஆடல் அது என்று அவர் உணர்ந்த தருணம்.

அத்தருணத்தை அவர் எண்ணி எண்ணி வளர்த்துக்கொண்டார். மானுடர் பேசிக்கொள்ளும் அனைத்துமே வெறும் முறைமைச்சொற்கள். அவையில், அறையில், தனிமையில், எங்கும். மானுடர் ஒருவரோடொருவர் உண்மையாக பேசிக்கொள்ளவே இயலாது என்ற நிலையில் எழுந்த மாற்று உரையாடலே நாற்களம். அங்கே உரையாடல்களம் வகுக்கப்பட்டுள்ளது. நான்கு களங்கள், நான்கு பகடைகள், பன்னிரு எண்கள், எழுபத்திரண்டு கருக்கள். வெளியே விரிந்துள்ள பொருட்களின், உட்பொருட்களின், பொருள்மயக்கங்களின், உள்முயக்கங்களின் வெளி அனைத்துப் பேச்சுகளையும் முடிவிலிவரை கொண்டுசென்று பொருளற்றதாக்கிவிடுகிறது. பகடை திட்டவட்டமானது, மயக்கங்களற்றது. பின்பு அவர் அறிந்தார், ஒவ்வொரு உரையாடலும் பகடையாட்டமே என. பகடையாட்டம் சாரம் மட்டுமேயான ஓர் உரையாடல் என.

அன்று அவர்கள் சென்றபின் ஏவலன் தந்தப் பேழைக்குள் எடுத்து வைத்த பகடைகளை தன்னிடம் தரும்படி கேட்டார். “இளவரசே” என தயங்கிய பின் முதிய ஏவலன் “ஒருமுறை மட்டும் தொட்டுக்கொள்க!” என்றான். அவர் அந்தப் பகடைகளில் ஒன்றை எடுத்து கையில் உருட்டினார். “இது எதனாலானது?” என்றார். “இது புரவியின் எலும்பாலானது. எல்லா போட்டிவிரைவுகளிலும் வென்று உங்கள் தந்தையை மகிழவைத்த சுபார்ஸ்வம் என்னும் புரவி அது.” அவர் அதை கையிலிருந்து உருட்டினார். “இது என்ன? இது என்ன?” என்று அவன் கையைப் பிடித்து உலுக்கினார். “இளவரசே, இது பன்னிரண்டு. நீங்கள் வென்றீர்கள்” என அவன் அதை எடுத்து பேழைக்குள் வைத்தான்.

“நான் வென்றேன்! பன்னிரண்டு! பன்னிரண்டு! நான் வென்றேன்!” என்று சகுனி சொல்லிக்கொண்டார். துள்ளியபடி ஓடிச்சென்று தன் மூத்தவரான அசலரிடம் சொன்னார். “மூத்தவரே, நான் வென்றேன்! பன்னிரண்டு! வென்றேன்!” அன்றுமுதல் அந்த எண் அவரை ஆட்டிப்படைக்கலாயிற்று. பன்னிரண்டு. துயிலிலும் விழிப்பிலும் ஆட்கொண்டிருந்த எண். ஓர் எண் நாவிலெழுமென்றால் இயல்பாகவே அது பன்னிரண்டுதான். வெற்றி இத்தனை எளிதானது. இத்தனை கூரியது. கையருகே நின்றிருப்பது. கொலைவாளின் கூர்போல் மற்றொரு பொருள் அற்றது.

ஆனால் பகடையாடத் தொடங்கியபோது வெற்றிகள் கைகூடவில்லை. பெரும்பாலானவர்கள் அவரை எளிதில் வென்றனர். பன்னிரண்டு ஒரு கனவாக, பின் ஏக்கமாக, பின் எரிச்சலாக ஆகியது. ஆட அமர்கையிலேயே சினமெழுந்தது. பகடையை கையிலெடுக்கும்போதே நெஞ்சு இறுகி முகம் கூர்கொள்ள பற்களைக் கடித்தபடி உருட்டினார். பகடை அவரை ஒவ்வொரு முறையும் வென்றது. கால்கீழிலிட்டு மிதித்தபடி குளம்படிகள் ஒலிக்க கடந்துசென்றது. அவருக்கு பகடை கற்பித்த ஆசிரியர்கள் “பகடையை இறுகப்பற்றுகிறீர்கள், இளவரசே. அதை வாளென பற்றுக! அழுந்தப்பற்றியவர்களும் நழுவவிட்டவர்களும் வெல்வதில்லை” என்றனர்.

“வென்றாலும் தோற்றாலும் நிகரே என உளம் நிலைத்தோரே பகடையில் இறுதிவெற்றியை அடையமுடியும்” என்றார் ஆசிரியரான சுஸ்ரவஸ். “ஆனால் அத்தகையோர் பகடையே ஆடுவதில்லை. ஆடுவோரில் வெல்வோர் விழைவை பிறிதிலாது சூடியவர்கள். அதில் அசைவிலாது நின்றவர்கள். கையின் ஐயத்தையும் அச்சத்தையும் பகடை அறியும். பகடை என்பது களத்தில் உருளும் உங்கள் உள்ளம் என்றுணர்க!” பகடைமேல் கொண்ட விழைவே பகடையை அவரிடமிருந்து அயல்படுத்தியது. மெல்ல மெல்ல பகடையை அஞ்சலானார். பகடை கையில் வந்ததுமே மெய் நடுங்கத்தொடங்கியது.

ஆனால் பகடையை ஒழியவும் இயலவில்லை. ஒவ்வொருநாளுமென பகடையாடி இழந்துகொண்டே இருந்தார். ஒருமுறை தன் உடன்பிறந்தானாகிய விருஷகனுடன் ஆடி இளவரசுப் பட்டத்தையும் இழந்து கணையாழியை கழற்றிக்கொடுத்துவிட்டு புரவியில் ஏறி காந்தார நகரியிலிருந்து கிளம்பிச்சென்றார். மீள முடியாத திசை என மேற்கு சொல்லப்பட்டிருந்தது. செல்லச்செல்ல மண் வெளுத்துக்கொண்டே இருக்கும். தூய வெண்ணிற மண் அலைகளென அமைந்த பாலையில் உயிர்த்துளியே இருக்காது. விடாய்மிக்க எழுபத்திரண்டு காற்றுகள் உலவும் வெளி. அவை அங்கு செல்லும் உயிர்களின் குருதியை உறிஞ்சி உண்பவை. எஞ்சாது தோற்றவர்களும் ஏதுமிலாது வென்றவர்களும் சென்றடைந்து நிறைவுகொள்ளவேண்டிய நிலம் அது.

மேற்கே சென்றுகொண்டே இருக்கையில் ஒரு நாள் அந்தியில் தொலைவில் ஒற்றைப்பறவை ஒன்று வானில் சுழல்வதை கண்டார். அத்திசை நோக்கி செல்ல மிகச் சிறிய ஸாமிமரச் சோலை ஒன்று கண்ணுக்குப்பட்டது. அங்கே முன்னரே ஓர் ஒட்டகம் நின்றிருந்தது. அதை அணுகியபோது சோலைக்குள் ஒருவரை காணமுடிந்தது. பாலைவணிகரெனத் தெரிந்தது. மணற்தரையில் தோல்விரித்து அமர்ந்து பகடையாடிக்கொண்டிருந்தார். அவர் அருகே செல்வதுவரை வணிகர் அவரை நிமிர்ந்து நோக்கவில்லை. அணுகியதும் சகுனி வணங்கி தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

சோனகரான அவர் பெயர் சுவாமர் என்று தெரிந்தது. “இந்தச் சுனை மிக மெல்லவே ஊறுகிறது. இதை அகழ்ந்து அதன்மேல் துணியை விரித்துவிட்டு நீர் ஊறுவதற்காக காத்திருக்கிறேன்” என்றார் சுவாமர். சகுனி அவர் அருகே அமர்ந்தார். “தனிமையில் பகடையாடலாமா?” என்றார். “நம்முடன் நாம் ஆடலாம். இவ்வாறு நம் நிழல் நமக்கு முன்னால் விழுந்திருக்கவேண்டும்” என்றார் சுவாமர். “நம்மை நாமே வெல்வது எளிது” என்றார் சகுனி. “அல்ல. அதுவே கடினம்” என்று சுவாமர் சொன்னார். “என்னுடன் ஆடுகிறீர்களா?” என்றார். “என்னிடம் பணயம் என ஏதுமில்லை. அனைத்தையும் இழந்த பின்னர் வந்துள்ளேன்” என்றார் சகுனி. “எஞ்சியிருப்பது உங்கள் உடல். அதை பணயமாக்கலாமே” என்றார் சுவாமர். “எனக்கு அடிமையாக இருப்பதாக சொல்க…”

நீர் அருந்தியபின் அவர்கள் ஆடத் தொடங்கினர். ஏழு சுற்று ஆட்டத்திற்குப் பின் சகுனி அவர் அடிமையாக ஆனார். “நீர் சிறுவன். என்னுடன் வருக! தொலைவிலுள்ள சோனகநிலங்களை காட்டுகிறேன்” என அவர் அழைத்துச்சென்றார். அவருடைய சுமைதூக்கியாகவும் ஏவல்சிறுவனாகவும் நான்காண்டுகாலம் அவருடன் இருந்தார். “என்றேனும் என்னை நாற்களத்தில் வென்று உமது விடுதலையை நீர் ஈட்டிக்கொள்ளலாம்” என்றார் சுவாமர். ஒவ்வொரு நாளும் அவர்கள் பகடையாடினர். மீளமீள அவர் தோற்றுக்கொண்டே இருந்தார். தன் பங்கு நீரை, உணவை பணயம் வைத்தார்.

அவர்கள் பயணம் செய்துகொண்டே இருந்தனர். சுவாமர் பாலையின் அரிய கற்களை பெற்றுக்கொண்டு பொன்னை அளிப்பவர். பாலைவெளியில் நீரிலாது வாடி உடல்வற்றி கண்கள் பழுத்து இறப்பை பலமுறை அருகில் கண்டார். வழிதவறி உயிர்பதைத்து வான்நோக்கி திகைத்து அலைந்து கண்டடையப்பட்டார். சுவாமர் அவரிடம் எந்த இரக்கத்தையும் காட்டவில்லை. “ஒரு குவளை நீர் மட்டுமே எஞ்சுகிறதென்றால் அதை பகிர்ந்துண்ணலாகாது. இருவரும் இறப்பதற்கே அது வழிகோலும். எனக்கே என எண்ணுபவனே இந்நிலத்தில் உயிர்விஞ்ச இயலும். அறிக, பாலை ஓநாய் தனித்தது! முழுத் தனிமையை அது தனக்கான காப்பாக கொண்டுள்ளது” என்றார் சுவாமர்.

நான்காண்டுகளுக்குப் பின்னர் ஒருநாள் பாலைவெளியில் தவறி நீரிலாது உடல் வற்றிக்கொண்டிருக்க பாறைநிழலில் படுத்திருக்கையில் சுவாமர் சொன்னார் “நான் இறக்கவிருக்கிறேன். உம்மை அடிமையாகக் கொண்டு நான் இறந்தால் நீரும் என்னுடன் இறக்கவேண்டும் என்பதே நெறி. நான் அளித்து நீர் பெற்றுக்கொண்டால் நீர் ஷத்ரியர் அல்ல. என்னை கொன்று விடுதலைகொள்ள நீர் இப்போது ஷத்ரியர் அல்ல. என்னை வென்றுமட்டுமே நீர் விடுதலையை அடையமுடியும்.” சகுனி திகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தார். “உமக்கு ஓர் அறிவுரையை சொல்கிறேன். நீர் நாற்களத்தை நாற்களமென்றே பார்க்கிறீர். நாற்களம் என்பது போர். இங்குள்ள அரசனும் அரசியும் புரவியும் யானையும் மெய். களம் என்பது நாடே. பகடைக்களத்தில் போரை நிகழ்த்துக!”

அன்று அவர் சுவாமரை வென்றார். இறந்த உடலின் மணம் நாடி வந்த ஓநாய்க்கு அதை விட்டுக்கொடுத்துவிட்டு காந்தார நகரிக்கு திரும்பினார். பிறகு அவர் எந்த நாற்களத்திலும் தோற்கவில்லை. பாலையில் குருதிதேடி அலைந்து பசியால் இறந்த ஓநாய் ஒன்றின் தொடையெலும்பிலிருந்து தன் பகடைகளை உருவாக்கிக் கொண்டார். அறிந்தவை அனைத்தையும் நாற்களத்தின் ஆட்டத்திலிருந்தே கொண்டார். அனைத்தையும் அக்களத்திலேயே நிகழ்த்தினார். விரிந்த வானை துளியெனச் சுருட்டி தன்னுள்கொண்ட ஆடிக்குமிழி என ஊழை உள்கொண்டது நாற்களம் என அவர் கண்டடைந்தார். அங்கிருந்து கிளம்பி அஸ்தினபுரிக்கு வந்தபின்னர் மதயானை ஒன்றின் எலும்பிலிருந்து தன் பகடைக்காய்களை உருவாக்கிக்கொண்டார்.

ஆனால் குருக்ஷேத்ரத்திற்குள் படைகள் வந்தமைந்த முதல்நாள் அந்தப் பெருவிரிவை கண்களால் அறிந்தபோது அவருடைய அகம் திகைத்து செயலிழந்தது. விழித்த வெறும்கண்களுடன் அவர் அந்த செம்மண்நிலத்தை நோக்கி நின்றார். இதுவல்ல இதுவல்ல என அகம் அரற்றிக்கொண்டே இருந்தது. குருதிப்பெருக்கு. வெள்ளெலும்புகள் புதைந்த மண் செவ்வுதடுகளில் பற்கள் தெரிய புன்னகைப்பதுபோலிருந்தது. தேர்த்தட்டில் வியர்வை வழிய நெஞ்சுத்துடிப்பை நோக்கியபடி நின்றிருந்தார். திரும்பிவிடலாம் என்று தோன்றியது. வாளை எடுத்து நெஞ்சில் பாய்ச்சி அக்களத்திலேயே உயிர்விடலாமென எண்ணம் ஓங்கியது. கையிலிருந்த கடிவாளம் நடுங்கிக்கொண்டிருந்தது.

தொலைவில் ஓநாய் ஒன்று ஊளையிட்டது. அக்கணத்தில் உள்ளே ஒரு திரை நலுங்குவதுபோல் ஓர் எண்ணம் எழுந்தது. அதை சொற்களென பின்னர்தான் மாற்றிக்கொண்டார். அப்பெரும் போர்க்களத்தை அவர் ஒரு சிறுநாற்களமென்று தன்னுள் ஆக்கிக்கொண்டார். அதில் தான் நன்கறிந்த பகடையை உருட்டி ஆடலானார்.

bowபீஷ்மர் நேர்அம்பென பாண்டவப் படைகளைக் கிழித்து உட்செல்ல அவரை சுருதகீர்த்தியும் அபிமன்யூவும் இருபுறமும் துணைக்க அர்ஜுனன் எதிர்த்தான். பிதாமகரின் அம்புகளுக்கு முன் அவர்களால் நிலைகொள்ள இயலவில்லை. பிதாமகர் ஒவ்வொரு அம்புக்கும் ஓர் அணுவென அவர்களை பின்னடக்கிச் சென்றார். பாண்டவப் படைகளுக்குள் அவர் நெடுந்தொலைவு சென்றுவிட்ட பின்னர் “அர்ஜுனன் பின்னடைகிறான்…” என்று முரசு சொன்னது. “ஊசியை நூல் என படைகள் தொடர்க! மீனுக்குள் தூண்டில் நுழையட்டும்” என சகுனி ஆணையிட்டார். பூரிசிரவஸ் திருஷ்டத்யும்னனிடமிருந்து பின்வாங்கிக்கொண்டிருந்தான். “ஜயத்ரதர் பூரிசிரவஸை துணைக்கச் செல்க!” என்றார் சகுனி.

துரோணர் நகுலனையும் சகதேவனையும் எதிர்கொண்டார். கிருபருடன் யுதிஷ்டிரரும் அவர் மைந்தர்களும் போரிட்டனர். போரில் விரிந்த வெளி வெறும் ஓசையென சகுனியின் காதுக்கு வந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு முழவுக்கும் வேறுபட்ட ஒலிகள் எழுந்தன. தோல்களின் அடர்த்தியும் வட்டத்தின் அகலமும் கோல்களின் தடிமனும் ஒலிகளை அமைத்தன. கன்றுத்தோல்கள், உடும்புத்தோல்கள், எருமைத்தோல்கள், முதலைத்தோல்கள் என ஒவ்வொன்றும் தனிக்குரல் கொண்டிருந்தன. நாய்குரைப்பதுபோல் துள்ளித் துள்ளி ஓசையிட்டுச் செல்லும் உடும்புத்தோல் முழவின் குரல் பீஷ்மரை அறிவித்துக்கொண்டிருந்தது. எருமைத்தோல் முழவு சினைப்பொலி எழுப்பி அஸ்வத்தாமனை. கன்றுத்தோலின் அமறலோசை துரியோதனனை.

முதல்நாள் முதல்நாழிகை அனைத்து ஒலிகளும் ஒன்று திரண்டு ஒற்றை முழக்கமென செவியை வந்தறைய தன் தேர்த்தட்டில் நின்று குழம்பி திகைத்து கண்களை மூடிக்கொண்டார் சகுனி. முன்பு ஒவ்வொரு ஒலியையும் ஆயிரம் முறை கேட்டு செவிக்கு பழக்கி வைத்திருந்த அனைத்தும் உள்ளத்திலிருந்து அழிந்து சென்றன. அப்பயனின்மை ஒருகணம் அச்சுறுத்தியது. வேறுவழியில்லை, இப்போர் அதன் போக்கில் தான் நிகழ ஒப்புக்கொடுப்பதைதான் செய்யக்கூடும். பீஷ்மரின் செய்தியை மட்டும் நோக்குவோம். பிற அனைத்தையும் பின்னர் கேட்டறியலாம். ஆம் ஒன்றில் நிலைகொள்க! ஒன்றில்…

பீஷ்மரின் செய்தியை கூறிக்கொண்டிருந்த தொழும்பனின் முழவொலியை செவி கூர்ந்தபோது மிக அண்மையிலென ஒலித்தது. அதன் ஒவ்வொரு தாளக்கட்டையும் ஒரு சொல்லென மாற்றியபோது தன் காதுக்கெனவே காற்றில் வந்ததுபோல் இருந்தது. “முன்னகர்கிறார் பிதாமகர்!” “எதிரில் பாண்டவ இளையோர் வந்து சூழ்ந்திருக்கிறார்கள்!” “பிதாமகர் தயங்கவில்லை!” “பிதாமகர் கொன்று முன்செல்கிறார்!” “குருதிப்பலி நிகழ்ந்துகொண்டிருக்கிறது!” உள்ளம் விசை கொண்டு முன்னெழ ஒவ்வொரு சொல்லையும் கண்முன் காட்சியென்று மாற்றி அதில் நின்று பரவி துடித்தபோது ஒரு கணத்தில் உணர்ந்தார், அனைத்து ஓசைகளையும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என.

அவை சொல்லென்றாகி நேரடியாகவே காட்சியென்றாகி குருக்ஷேத்ரப் பெருங்களத்தை வானிலிருந்து குனிந்து நோக்கும் தேவன்போல் ஒவ்வொரு தருணத்தையும் இடத்தையும் நோக்கியபடி அவர் தன் தேரில் நின்றிருந்தார். தன் கைகளால், வாயால் ஆணைகளை பிறப்பித்தார். பத்து விரல்களிலும் பட்டுச்சரடுகள் கட்டி பாவைகளை ஆட்டுவிக்கும் கூத்தன் என கௌரவப் படையின் பின்புறத்தில் நின்று அப்படையை அவர் நிகழ்த்தினார். எவர் சூழப்படவேண்டும், எவர் பிரிக்கப்படவேண்டும், எவருக்கு துணை வேண்டும், எவர் பின்னடைய வேண்டும் என.

வெற்றி அனைத்தும் அவருடையதாயிற்று. தோல்விகள் அனைத்தையும் அவரே சூடினார். முதல் நாள் பேரழிவை பாண்டவருக்கு நிகழ்த்தி அந்தியில் படை முடிவை அறிவித்தபோது மெல்ல உடல் தளர்ந்து அமர்ந்தார். ஓடிவந்து அவரது தேரில் ஏறிய துர்மதன் “வெற்றி, மாதுலரே! இன்று வெற்றி! பாண்டவப் படையின் பெரும்பகுதியை அழித்துவிட்டார் பிதாமகர். நாளைக்கு அவர்கள் படைக்கு எழுவார்களா என்பதே ஐயம்தான்!” என்றான். சுபாகு தேரில் பாய்ந்தேறி “வெற்றி! வெற்றி!” என்றான். சகுனி தளர்ந்த குரலில் “அப்படை இந்திரமாயக்காரனின் கையிலிருக்கும் பாவைகள் போன்றது. ஒரு பாவையை ஆயிரமெனக் காட்டவும் ஆயிரத்தை ஒன்றென்றாக்கவும் அவனால் இயலும்” என்றார்.

அவர் சொன்னதை புரிந்துகொள்ளாத துர்மதன் “வெற்றி! வெற்றிமுரசுகள் முழங்குகின்றன!” என்றான். சுபாகு “என்ன சொல்கிறீர்கள், மாதுலரே?” என்றான். “இப்போரை களத்தில் நிற்பவர்களில் நான் ஒருவனே முழுமையாக நோக்கிக்கொண்டிருக்கிறேன்” என்றார் சகுனி. சுபாகு “தாங்கள் சோர்ந்துள்ளீர்கள்” என்றபடி தேரிலிருந்து பாய்ந்து இறங்கிச் சென்றான். “திரும்புக!” என்று ஆணையிட்டபடி தேரில் அமர்ந்தபோது தன் காலில் முற்றிலும் வலி இல்லாதிருப்பதை அவர் பார்த்தார். அதை அசைக்க முயன்றபோது எடை மிக்க இரும்புக்கவசம் இருப்பதைப்போல் தோன்றியது. வலி எழவில்லை.

தேர் பலகைப் பரப்பினூடாக சென்றது. அனைத்துப் பாதைகளினூடாகவும் புண்பட்டோரை கொண்டுசெல்லும் வண்டிகள் களம் நோக்கி சென்றன. மெல்ல முதல் சொல் என வலி எழுந்தது. “ஆம், நீ எழுவாயென்று தெரியும்” என்று அவர் புன்னகையுடன் சொன்னார். “நீ அங்கிருக்கிறாய். நீ உடனிருப்பாய். நானின்றி நீ எங்கிருக்க இயலும்? என் அணுக்கனல்லவா? என்னை ஆட்கொண்ட தெய்வம் அல்லவா? என் பாதை நீ கொண்டுசெல்லும் திசையே அல்லவா?” வலி அவரிடம் “நீ!” என்றது. பித்தன்போல “நீ!” என்றார் அவர். அவர் அதை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். தயங்கி விசை அழிந்து ஆனால் எடைமிகுந்து “நான்!” என்றது. “நான்! நான்! நான்!” என்று எடை மிகுந்து துள்ளி செல்லத்தொடங்கியது.

செய்திகளாக வந்து சூழ்ந்து பின்னிப்பின்னி வலையென்றாகி விரிந்துகொண்டிருந்தது குருக்ஷேத்ரப் போர். அவர் ஆணைகளை இட்டுக்கொண்டே பின்னணியில் நிகராக தேரில் ஓடிக்கொண்டிருந்தார். இரு பேருருக்கள் முட்டிக்கொண்டு சீறிப்போரிட்டன. அவை ஒருங்கிணைந்த வஞ்சங்கள் ஓருருவென எழுந்த சீற்றங்கள். வீழ்ந்த படைகளின் இடைவெளிகளில் பின்னணி வீரர்கள் இயல்பாகவே வந்து நிறைந்தனர். வீழ்ந்தவர்களை கொக்கிகளால் இழுத்துக்கொண்டு சென்று அப்பாலிட்ட பின் மேலும் மேலும் என கொடிகளால் ஆணையிட்டனர் படைத்தலைவர்கள்.

“என்ன நிகழ்கிறது, மாதுலரே?” என்றான் துரியோதனன். “நாம் முன்னகர்ந்து கொண்டிருக்கிறோம்… இன்று மாலைக்குள் அவர்களின் படைசூழ்கையை எட்டு துண்டுகளாக சிதைப்போம்” என்றார் சகுனி. அந்தப் படை ஒரு மாபெரும் உள்ளம் என இயங்கிக்கொண்டிருந்தது. ஓயாத சொல்லொழுக்கு. ஒருபாதி பொய்யும் மறுபாதி கனவும். அவை சென்று சென்று அறைந்தும் கரைக்கமுடியாத பெரும்பாறையென மெய்யும். பித்தெடுத்த உள்ளம் இது. ஆனால் அத்தனை உள்ளங்களும் பித்தெடுத்தவையே. தெளிவென்பது உள்ளம் வெளிக்காட்டும் ஒரு நடிப்பன்றி வேறில்லை.

பித்துவெளி. அதன் ஒவ்வொரு உள்ளமும் பித்துப்பேழை. ஒவ்வொரு சொல்லும் பித்துத் துளி. பித்தை ஆட்டுவிக்கிறேன். பித்தின்மேல் அமர்ந்து நாற்களமாடிக் கொண்டிருக்கிறேன். ஆடல்கள் என்பவை வரையறுக்கப்பட்ட களங்களிலிருந்து மெல்ல மெல்ல பித்துநோக்கி செல்பவை. பித்து நின்றாடும் அரங்குகள். பகடைகளில் குடிகொள்பவை பித்தின் பெருந்தெய்வங்கள்.

அவர் பாலையில் ஓர் ஓநாயைக் கண்டதை நினைவுகூர்ந்தார். அது குருதிச்சுவை கண்டு உண்டு நிறைந்துவிட்டிருந்தது. மணல்மேல் சுழல்காற்றில் சருகு என தன்னைத்தான் சுழற்றிக்கொண்டு துள்ளியது. அவ்விசையில் தூக்கி வீசப்பட்டு எழுந்து தலைதூக்கி ஊளையிட்டது. வெறிகொண்டு மண்ணை கால்களால் அள்ளி அள்ளி வீசியது. பின்னர் மெல்ல அமைந்து வான்நோக்கி கூர்மூக்கைத் தூக்கி ஊளையிடத் தொடங்கியது.

அதனருகே விரிந்திருந்த அந்த மணலோவியத்தை அவர் திகைப்புடன் நோக்கினார். அறியாத் தெய்வமொன்று எழுந்தாடிச்சென்ற களமெழுத்து ஓவியம். அதன் வடிவம் எந்த ஒருமைக்குள்ளும் அமையவில்லை. ஆனால் ஒருமையற்ற வெற்றுவடிவென்றும் தோன்றவில்லை. பின்னர் ஒரு கணத்தில் உடல் மெய்ப்புகொள்ள அவர் கண்டுகொண்டார், அது அந்த ஓநாய் அப்போது எழுப்பிக்கொண்டிருந்த ஊளையின் காட்சிவடிவம் என.

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 43

bowதன்னைச் சூழ்ந்து விழிதொடும் தொலைவுவரை நிகழ்ந்துகொண்டிருந்த போரை நோக்கியபடி சகுனி அசைவிழந்து தேர்த்தட்டில் நின்றார். நாரை மெல்ல சிறகுவிரித்து அலகுநீட்டி முன்னால் சென்றது. மீன் அதை எதிர்கொண்டது. எப்பொழுதுமே படைகள் எழுந்து போர் நிகழத்தொடங்கி அரைநாழிகைக்குப் பின்னரே அவர் தேரை கிளப்புவது வழக்கம். முதல்நாள் போருக்கு முன்பு இரவில் படைசூழ்கை வகுக்கும் சொல்லாடல்கள் முடித்து தன் பாடிவீட்டுக்கு திரும்பும்போது அவர் மிகவும் களைத்திருந்தார். உள்ளம் வெறும் சொற்களால் நிரம்பி கொந்தளித்துக்கொண்டிருந்தது. அதன் எடையை தாளமுடியாததுபோல் இடையும் கால்களும் வலித்தன. புண்பட்ட கால் பெருகி பலமடங்கு பருத்து எடைகொண்டுவிட்டதுபோல் இருந்தது. நீர் நிறைந்த தோல்பையை இழுத்துச்செல்வதுபோல் காலை உந்தி வைத்து அவர் தேரிலேறிக்கொண்டார்.

பீடத்தில் அமர்ந்ததுமே கண்களை மூடி தலைதாழ்த்திக்கொண்டார். ஆழத்தில் விழுவதுபோல் இருந்தது. நெடுந்தொலைவுக்கு கேட்டுக்கொண்டிருந்த படைகளின் முழக்கம் ஒரு ரீங்காரமாக மாறி அவரைச் சுற்றி பறக்க அதன் சுழி நடுவில் அவர் விசைகொண்டு சுழன்று அமிழ்ந்துகொண்டிருந்தார். தேர் எங்கோ முட்டிக்கொண்டதுபோல் தோன்ற விழித்தெழுந்து “என்ன?” என்றார். “தங்கள் பாடிவீடு, அரசே” என்றான் பாகன். “ஆம்” என்றபடி அவர் பீடத்திலிருந்து இருமுறை எழமுயன்றார். உடல் உந்தி மேலெழவில்லை. அவர் “உம்” என்று ஒலியெழுப்ப பாகன் புரிந்துகொண்டு இறங்கி படிகளினூடாக ஏறி வந்து அவர் கையைப்பற்றி தூக்கினான்.

தேர்த்தூணைப் பற்றியபடி நின்று உடல் நிலையழிவை சமன் செய்தபடி மூச்சிரைத்தார். கண்களை மூடியபோது நிலம் சரிந்திருப்பதாகவும் தேர் கவிழப்போவதாகவும் தோன்றியது. மீண்டும் கண்விழித்து சூழ்ந்திருந்த நிலத்தை பார்த்தபோது அலையடிக்கும் நீர்ப்பரப்பொன்றின்மேல் அப்படை அமைந்திருப்பதுபோல் காட்சிகள் நெளிந்தன. அவர் நிலை மீள்வதற்காக பாகன் காத்திருந்தான். மீண்டும் விழி திறந்தபோது காட்சிகள் நிலைகொண்டிருந்தாலும் உடல் முழுக்க அனலென விடாய் நிறைந்திருந்தது. மெதுவாக புண்பட்ட காலை எடுத்துவைத்து இறங்கினார். பாகனின் தோளிலிருந்து கையை எடுத்ததும் அவன் தன் கையை விலக்கிக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் பிடித்துக்கொள்ளும் வகையில் மிக அருகே ஓசையிலாது நிழலென நடந்துவந்தான்.

தன் பாடிவீடு வரை செல்வதற்குள் அவர் மிகவும் களைத்திருந்தார். நெடுந்தொலைவென தோன்றியது. ஒவ்வொரு காலடிக்கும் உடலும் உள்ளமும் வலியால் துடித்தன. அவ்விரவுக்காகவே அத்தனை காலம் காத்திருந்தேன் என்று எண்ணிக்கொண்டார். நாளுமென சொல்சொல்லெனத் திரட்டி களஞ்சியம் என்றாக்கி சூழ வைத்திருந்தார். அத்தனை சொற்கள், விளக்கங்கள், சூழ்ச்சிகள், உரைகள், சூளுரைகள், உளநெகிழ்வுப் பேச்சுகள்… எத்தனை படைசூழ்கைச் செய்திகள், எவ்வளவு நூல்சுட்டுகள், என்னென்ன நெறிகள்! மூதாதையரின் சொற்கள் கடல்மீன்களென சூழ நிறைந்திருந்தன. நான்கு பகடைகளை மீண்டும் மீண்டும் உருட்டி முடிவிலி வரை ஆடுவதற்கு நிகர்.

அவருடைய பாடிவீடு உயரமற்றதாக இருந்தது. உள்ளே அவருக்கு மஞ்சம் விரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தச் சிறிய குடிலின் உட்பகுதியை பார்த்தபோது அச்சம் எழுந்தது. உள்ளே சென்றால் உடல் வீங்கி அங்கே செறிந்து சிக்கிவிடக்கூடும் என்று ஒரு எண்ணம் உருவாகியது. காட்டில் ஒருமுறை சாரைப்பாம்பை விழுங்கிய அரசநாகம் கல்லிடுக்கொன்றில் சிக்கி உயிர் துறந்து மட்கி எலும்புக்கூடென அமைந்திருப்பதை அவர் கண்டிருந்தார். பாம்பிற்குள் பிறிதொரு பாம்பு. அரசநாகத்தின் விலா எலும்புகள் ஒவ்வொன்றும் உள்ளிருந்த நாகத்தை ஆரத் தழுவியிருந்தன. உடன் வந்த துரியோதனனிடம் “இதில் எது எதை கொன்றது?” என்றார். துரியோதனன் கேட்டது புரியாமல் “அரசநாகம் விழுங்கியிருக்கிறது” என்றான். சகுனி வாய்விட்டு நகைத்து “கவ்வியபின் விடமுடியாத தீயூழ் கொண்டது அரசநாகம்” என்றார்.

திரும்பி தன் ஏவலனிடம் “என் மஞ்சம் வெளியில் அமையட்டும்” என்றார். அவன் தலைதாழ்த்தி உள்ளே சென்று மரவுரி மஞ்சத்தை எடுத்து வெட்டவெளியில் பரப்பினான். முருக்க மரத்தில் செதுக்கப்பட்ட தலையணைகளை வைத்தான். அவர் அவன் தோளைப்பற்றியபடி மெல்ல காலை நீட்டி மஞ்சத்தில் அமர்ந்தார். முழு உடலும் மண்ணில் அமர விழைந்தது. அன்றுபோல் பிறிதெப்போதும் படுக்கையை அவர் விரும்பியதில்லை. வானில் விண்மீன்கள் நிறைந்திருந்தன. கிழக்கு திசையில் ஒளிவிரிசல்கள்போல் சிறுமின்னல்களும் பெருங்களிற்றின் உறுமல்போல் தொலைஇடியோசையும் எழுந்தன. மழை பெய்யக்கூடும் என்று அவர் தனக்குத்தானே சொன்னார். அது தன்னிடமல்ல என்று உணர்ந்த ஏவலன் மெதுவாக தலைவணங்கினான்.

சகுனி தலையணையை சீரமைத்தபின் உடலை சரிக்கப்போக ஏவலன் “தங்களுக்கு மது…” என்றான். “கொடு” என்பதுபோல் கைதூக்கிய மறுகணமே வேண்டாம் என்று கையசைத்தார். “அகிபீனா?” என்று அவன் மீண்டும் கேட்டான். “வேண்டியதில்லை, நீ செல்க!” என்று அவர் கைகாட்டிவிட்டு உடல் சரித்து தலைவைத்து படுத்தார். இன்றிரவு துயில இயலாது. மதுவோ அகிபீனாவோ கொண்டு என் சித்தத்தை துயிலவைத்தால் இவ்விரவை இழந்தவனாவேன். அறுபது ஆண்டுகள் காத்திருந்த இரவு இது. நாளை தொடங்கவிருக்கிறது பெரும்போர். ஒவ்வொன்றும் முற்றிலும் கூடிவந்துள்ளது.

வெற்றி கண்முன் கைநீட்டி தொடும் தொலைவில் நின்றிருக்கிறது. இதற்கு அப்பால் ஒரு அரசக்கூட்டு, இதைவிடச் சிறந்ததோர் படையணி, இன்னும் உகந்த போர்நிலை பாரதவர்ஷத்தில் எவராலும் உருவாக்கப்படவில்லை. அன்று அவையில் நிகழந்த சொல்லாடலில் ஒவ்வொருவரும் உளவிசையின் உச்சத்திலிருந்தனர். வெற்றி எனும் சொல் அனைவர் நாவிலும் இருந்தது. பேசிப் பேசி பெருக அனைத்து சொற்களுமே வெற்றி என்ற உட்பொருளை கொண்டவையாயின. அவர்கள் உளம் எழுந்து கொந்தளிக்கும்தோறும் ஊசியால் தொட்டுவைத்த குருதித்துளிபோல் அவருள் ஐயம் எழுந்தது. அது மாபெரும் வெற்றி என்பதனால், மிக நெடுங்காலம் தவமிருந்து அணுகியதென்பதனால், அது அத்தனை எளிதாக இருக்கப் போவதில்லை என்று அகம் கூறியது.

எளிதாக இருந்தால் ஏமாற்றமடைவேனா? எளிதாக இருக்கலாகாதென்று என்னுள் அமைந்த ஆணவம் ஒன்று ஏங்குகிறதா? படுக்கையில் மெல்ல உடலை நெளித்தபடி சகுனி விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தார். தேவர்களின் ஒரு கணம் இங்கு ஓர் யுகம். அந்த விண்மீனின் ஒரு இமைப்புக்குள் இங்கு கோடி கோடி மாந்தர் பிறந்திறந்து மறைகிறார்கள். பேரரசுகள் உருவாகி அழிகின்றன. குமிழிகள்போல் நகரங்கள் தோன்றி மறைகின்றன. எனில் அங்கிருந்து அதை பார்த்துக்கொண்டிருப்பது யார்? அவர்கள் பார்ப்பதுதான் என்ன?

ஒற்றை விண்மீனை விழியூன்றி நோக்கியபடி படுத்திருந்தார். அது ஆபன் என்னும் வசு. விண்ணிலுள்ள தூய நீரை கறந்து புவியிலுள்ள நீர்வெளிகளை நிறைத்து வற்றாது பேணும் தெய்வம். நோக்கும்போது மெல்ல அலையடிக்கும் மீன் அது. அலைவே நீர். நிலைகொள்ளாமையின் வடிவே நீர். மானுட உடல் நீரால் ஆனது. உடலுக்குள் நீர் அலைகொண்டபடியே உள்ளது. உடலின் ஒவ்வொரு பகுதியும் வலியும் உளைச்சலும் கொண்டது. எப்படி உடலை திருப்பினாலும் ஒருகணம் இதமாகவும் மறுகணம் வலியாகவும் உடலை உணர முடிந்தது.

நாண் அவிழ்த்து ஆயுதசாலையில் வைக்கப்பட்டிருக்கும் வில்லென இவ்வுடலை எங்கேனும் தளர்த்தி வைத்தால் மட்டுமே இளைப்பாற இயலும். அந்நாண் கட்டப்பட்டிருப்பது உள்ளத்திற்குள். அறுபதாண்டுகாலம் இறுகி நின்ற நாண். சகுனி தன் காலில் வலியை உணரத் தொடங்கினார். அகிபீனா இன்றி அறுபதாண்டுகளில் ஒருநாள்கூட முழுதறிந்து துயின்றதில்லை. அகிபீனாவின் மயக்கமே உடலோய்வு. உள்ளம் அமைந்ததே இல்லை. இன்று என் உடலை நேருக்கு நேர் சந்திக்கிறேன். இறுதியாக அது என்னிடம் சொல்லப்போவதென்ன என்று கேட்கிறேன். அது சொல்வது ஒற்றைச்சொல்லையே. வலி வலி வலி வலி.

அந்த ஒற்றைச்சொல் முடிவிலாது செல்லும் கணங்களின் பெருக்கு. என் கால் நரம்புகள் இழுத்துக்கட்டிய ஒரு யாழ். ஒவ்வொரு நரம்பையும் சுண்டி விளையாடும் அறியா விரலொன்று. வலி! வலி ஓர் இசை! துள்ளும், துடிக்கும், தெறித்து கூசி, பின் நெகிழ்ந்து அமைந்து, மீண்டும் வெடித்தெழும் இரக்கமற்ற இசை! என்னால் இயலாது. இனி இயலாது என்னால். இதோ அகிபீனா கொண்டுவர ஆணையிடப்போகிறேன். இதோ எக்கணமும் எழுவேன். எழுந்து சற்று கைவீசினால் போதும், என் ஆணைக்காக காவலன் நின்றிருப்பான். அகிபீனா கொண்டு வருக! ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து. என் உடல் நிறையும் நச்சு. இக்காலில் பெருகியுள்ள நஞ்சை ஒவ்வொரு நாளும் உண்ணும் நஞ்சால் ஈடு செய்கிறேன்.

இல்லை, இவ்வொரு நாள் இந்த வலியை என்னால் எதிர்கொள்ள முடியாதென்றால் இதன் முன் தோற்றவனாவேன். இத்தனை நாள் ஒத்திப்போட்டதனைத்தும் இந்த ஒருநாளுக்காக. இதை எதிர்கொள்ளும் பொருட்டே என்னை தீட்டிக்கொண்டேன். கண்களை மூடிக்கொண்டபோது மிக அருகே அவர் காந்தாரப் பாலைஓநாயின் முகத்தை பார்த்தார். எரியும் விழிகள். திறந்த வாய்க்குள் உலர்ந்த நாக்கு செத்துக்கொண்டிருக்கும் நாகமென அசைந்தது. அது நெடுங்காலம் முன்னரே இறந்துவிட்டிருந்தது. தான் இறந்துவிட்டதை அது அறிந்தும் இருந்தது. அத்துயரம் அதன் முகத்தில் இருந்தது. அது இருக்கும் அவ்வுலகிலிருந்து ஒரு சொல்லையேனும் இங்கு அளிக்க இயலாததன் தவிப்பு தெரிந்தது.

அவர் அதை நோக்கிக்கொண்டிருந்தார். கனவுகளில் பல நூறுமுறை அது எழுந்து கொண்டதுண்டு. ஒவ்வொரு தருணத்திலும் திடுக்கிட்டு உடலதிர விழித்துக்கொண்டு மஞ்சத்தை கைகளால் அறைந்து ஏவலனை கைகளால் அழைத்து நீரும் அகிபீனாவும் எடுத்துவர ஆணையிடுவார். இம்முறை நான் உன்னை தவிர்க்கப்போவதில்லை. நீ உரைக்க விரும்புவதை எனக்கு சொல்லலாம். அதன் விழி கனிவதை காண முடிந்தது. எக்கணமும் ஊளையிட்டு அது அழுமென்று தோன்றியது.

விழித்துக்கொண்டபோது தன் கால் மேல் சம்மட்டியால் அறைவதுபோல் வலியை உணர்ந்தார். ஒருகணம்கூட துயின்றிருக்கவில்லை. கண்களை மூடி பற்களைக் கடித்து இரு கைகளையும் முட்டிச் சுருட்டி அவ்வலியை கணுக்கணுவென உணர்ந்தார். நெருப்பு சுட்டெடுப்பதுபோல். பாறாங்கற்களால் நசுக்கி அரைப்பதுபோல். தசைகளில் இத்தனை வலி எங்கிருந்து வந்தது? வெளியிலிருந்து அது வந்தணைய இயலாது. அது ஒவ்வொரு அணுவிலும் முன்னரே உள்ளது. வலியுடன்தான் அது கருக்கொண்டது. வலி என்பது அதற்கு ஒத்திவைக்கப்பட்ட அறிதல்.

வலிபோல் உடலை உணர்வதற்கு பிறிதொரு வழியில்லை. வலிபோல் விளக்கங்கள் அற்ற, மாற்றுகள் இல்லாத, ஒரு சொல்லும் சென்றமராத தூய நிகழ்வொன்றில்லை. வலி தெய்வங்களுக்குரியது. வலியினூடாக மேலும் தெய்வங்களை அணுகுகிறோம். என்னை சூழ்க! என் தெய்வங்கள் என்னை எடுத்துக்கொள்க! காற்றுகளின் அன்னையர் எழுக! ஓநாய் முகம் கொண்ட, எரியும் விழி கொண்ட, பசி வறண்ட நாக்கு கொண்ட தெய்வங்கள்! மரு, இருணை, ஃபூர்ணி, காமலை, கிலை, ஆரண்யை என்னும் அறுவர். “அன்னையரே எங்கிருக்கிறேன்? என்னை பலிகொள்க! என் அவிகொள்க!”

தன்னைச் சூழ்ந்து அவர் மெல்லிய காலடியோசைகளை கேட்டார். ஒளிரும் கண்கள் அணுகி வந்தன. வறண்ட கரிய மூக்குகள் நீண்டன. மூச்சொலி. அதில் வெந்த ஊனின் கெடுமணம். அவர் அக்கண்களை நோக்கியபடி காத்திருந்தார். உறுமலோசையுடன் ஆறன்னையரும் அவர்மேல் பாய்ந்தனர். அவர் உடலை கவ்வி கிழித்துண்ணத் தொடங்கினர். உறுமி, உதறி, இழுத்து, கவ்வி குருதி சுவைத்தனர். செவிகோட்டி சிற்றுயிர்களைத் துரத்தி நா சுழற்றி சுவை சுவை என வால் குழைய, உடல் நெளிந்தமைந்து கொப்பளிக்க அவரை உண்டனர்.

இரவெங்கும் குருதி மணம் நிறைய விழி விரித்து விண்மீன்களை நோக்கியபடி அவர் படுத்திருந்தார். புலரி முரசொலி எழுந்தபோது பெருமூச்சுடன் கையூன்றி எழுந்தமர்ந்தார். ஏவலன் அருகணைந்து “புலரி, காந்தாரரே!” என்றான். “ஆம்” என்றார். “படைசூழ்கைச் சொல்லாடலுக்கு முதற்புலரியில் செல்லவேண்டியுள்ளது.” தலையசைத்து அவர் கைநீட்ட பற்றித் தூக்கி அவரை எழுப்பினான். கால் வீங்கிப்பருத்ததுபோல் இருந்தது. வலியில் சொற்கள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொள்ள உள்ளம் அசைவிழந்திருந்தது.

அன்று அவையில் ஒவ்வொரு சொல்லையும் வலியின் ஆழத்திலிருந்து நரம்புகள் அறுந்து துடிக்க பிழுதெடுத்து முன்வைக்க வேண்டியிருந்தது. பற்களைக் கடித்து உடலை இறுக்கி அவ்வலியை உணர்ந்தார். அவை முடிந்து எழுந்ததும் துரியோதனன் அணுகி “இன்றே போர் முடிந்துவிடும் என்கிறார்கள், மாதுலரே. ஒருநாள் போருக்கே பாண்டவர்கள் தாளமாட்டார்கள் என்றுதான் நானும் எண்ணுகிறேன். பிதாமகர் பீஷ்மருக்கு நிகர்நின்றிருக்கும் ஆற்றல் புவியில் எவருக்குமில்லை” என்றான். அவர் ஒளியிலா புன்னகையுடன் “ஆம்” என்றார். “நான் கவசங்கள் அணியவேண்டும்… இளையோர் அனைவரையும் சந்திக்கவேண்டும்” என்று துரியோதனன் விடைகொண்டான்.

கவசங்கள் அணிந்து தேரை அணுகியபோது உடல் எடை முழுக்க காலில் அழுந்தியது. தேரில் நிலையமர்ந்து போரிடுவதற்கு உயரமான பீடம் அமைக்கப்பட்டிருந்தது. தேர் அருகே நின்றிருந்த துச்சலன் அவரிடம் “தாங்கள் போர்முனைக்கு வரவேண்டியதில்லை, மாதுலரே. பின்னணியில் நின்று ஆணைகளை மட்டும் அனுப்பினால் போதும்” என்றான். சகுனி இகழ்ச்சியுடன் உதடுகள் வளைய “நான் போரிடும்பொருட்டே காந்தாரத்திலிருந்து வந்தேன்” என்றார். அவர் சொன்னதன் விரிவு புரிய துச்சலன் தலைவணங்கினான்.

போர்முனையில் நின்றிருக்கையில் வலி ஒன்றே உண்மையென்றும் பிற அனைத்தும் உளமயக்கே என்றும் தோன்றியது. தேர் சற்று அசைந்தபோதுகூட சவுக்குகள் அறைவதுபோல உடலெங்கும் வலி கொப்பளித்தது. புரவியின் ஒவ்வொரு உடலசைவையும் வலியால் பன்மடங்காகப் பெருக்கி உணரமுடிந்தது. காற்று வந்து தொட்டபோதுகூட வலியெழ முடியும் என்பதை அன்று அறிந்தார். கண்களைச் சுருக்கி மூச்சை இழுத்து மெல்ல விட்டபடி வலியை உணர்ந்துகொண்டிருந்தார்.

போர்முரசுகள் ஒலித்து படை எழுந்து அலையெனப் பெருகிச்சென்று பாண்டவப் படையை சந்தித்தது. அதை வெறித்த விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தபோது அவர் ஒன்றை உணர்ந்தார், வலி முழுமையாக அகன்றுவிட்டிருந்தது.

bowவழக்கம்போல் ஒரு கணத்தில் சகுனியின் அனைத்துப் புலன்களும் விழித்துக்கொண்டன. உடல் உச்சகட்டத் துடிப்பில் இழுத்து முறுக்கிய யாழ்நரம்பென அதிர்ந்தது. பல்லாயிரம் விழிகளால் அவர் வானிலிருந்து களத்தை நோக்கிக்கொண்டிருந்தார். பல்லாயிரம் செவிகளால் ஒவ்வொரு ஒலியையும் பிரித்துக் கேட்டுக்கொண்டிருந்தார். பாண்டவப் படைமீது உலர்ந்த மணலில் நீர் பரவுவதுபோல கௌரவப் படை உட்புகுந்துகொண்டிருந்தது. பீஷ்மர் நாரையின் அலகு என தொடக்கவிசையிலேயே நெடுந்தொலைவு ஊடுருவிச் சென்றுவிட்டிருந்தார். முதல் ஐந்துநாள் போருக்குப் பின்னர் அவரை எவருமே எதிர்க்கத் துணியவில்லை. அவர்முன் ஊழ்முன் என பணிந்து தலைகொடுத்தார்கள்.

சகுனி ஆணைகளை இட்டுக்கொண்டே இருந்தார். “துரியோதனருக்கு துணைசெல்க! அவர் பீமசேனர் முன் தனித்து நின்றிருக்கிறார். கௌரவர்கள் மூத்தவரை சூழ்ந்துகொள்க!” அர்ஜுனனை அஸ்வத்தாமனும் ஜயத்ரதனும் சேர்ந்து எதிர்த்தார்கள். சகுனி படைமுகப்பை நோக்கிக்கொண்டு நின்றார். நகுலனும் சகதேவனும் ஓருடலின் இரண்டு கைகள் போரிடுவதைப்போல களத்தில் திகழ்ந்தனர். அவர்கள் இணைந்திருக்கையில் பெருவல்லமை பெறுவதை அவர் கண்டார். ஆகவே பிரிந்தால் முற்றாக ஆற்றலிழப்பார்கள் என புரிந்துகொண்டு “பூரிசிரவஸ் செவிகொள்க! சகதேவனையும் நகுலனையும் பிரியுங்கள். இருவர் நடுவே மாறா வேலி அமைக! அவர்கள் பார்த்துக்கொள்ளலாகாது. அவர்களின் சொற்கள் அரிதாகவே சென்றடையவேண்டும்” என ஆணையிட்டார்.

பால்ஹிகப் படைகள் கூர்கொண்டு எழுந்து சென்றன. பருந்தின் சிறகுகள் என நின்றிருந்த நகுலனுக்கும் சகதேவனுக்கும் நடுவே அவை தாக்கின. பூரிசிரவஸ் அப்பகுதியை அம்புகளால் தாக்க அவனைச் சூழ்ந்துகொள்ளும் வாய்ப்பென எண்ணி நகுலனும் சகதேவனும் அவன் மேலும் உள்ளே செல்லும்படிவிட்டனர். அவன் ஊடுருவி அவர்களை கடந்துசென்றதும் சகுனி “பால்ஹிகப் படைகளின் பின்பக்கத்தை சலன் காத்துகொள்க… அவர்கள் இணையலாகாது” என்று ஆணையிட்ட பின் தன் தேரைச் செலுத்தி படைமுகப்புக்குச் சென்று நகுலனை எதிர்கொண்டார்.

அவருடைய அம்புகள் நகுலனின் தேரை தாக்க அவன் திரும்பிப்பார்த்து அவரை கண்டுகொண்டான். சீற்றத்துடன் நகைத்தபடி “வருக மாதுலரே, நீங்கள் குருதியால் ஈடுகட்டவேண்டிய பழிகள் பல உள்ளன!” என்று கூவினான். அவன் உதடுகளிலிருந்து சொல்கொண்ட சகுனி “இப்போரே என் பழிகொள்ளல்தான், மருகனே” என்றபடி அம்புகளை தொடுத்தார். அவர்களின் அம்புகள் விண்ணில் உரசிச் சிதறின. இரு தேர்களும் அம்புகளின் விசையால் அதிர்ந்தன. இருவரும் ஒருவரை ஒருவர் விழிநட்டு நோக்கி மெல்ல அனைத்திலிருந்தும் விடுபட்டு எழுந்து அவ்வெளியில் நின்று போரிட்டனர்.

நகுலனின் அம்புவளையத்தைக் கடந்து கவசங்களைக் கடந்து தன் முதல் அம்பு சென்று தைத்ததை சகுனி முதலில் உடலால் உணர்ந்தார். ஒரு மாத்திரைப்பொழுது கழித்தே உள்ளம் அதை உணர்ந்து ஆம் என்றது. அதன் பின் உணர்ந்தார், அந்த அம்பை எடுக்கையிலேயே எவ்வகையிலோ அது எங்கு சென்று கொள்ளும் என்று தெரிந்திருந்தது. அந்த கணநேரத் தத்தளிப்பிலிருந்து நகுலன் மீள்வதற்குள் மேலும் மேலுமென அம்புகளால் அவர் அவனை அடித்தார். அவனுடைய பாகன் தேரை பின்னுக்கிழுக்கத் தொடங்கும்போது அப்பால் சகதேவனின் முழவொலி எழுந்தது. மறுபக்கமிருந்து சகதேவன் தன் படையுடன் ஊடே நின்ற பால்ஹிகப் படையை உடைத்து வந்தான்.

அவன் அம்புகள் பக்கவாட்டில் வந்து தன் தேரை தாக்க சகுனி தயங்கினார். நகுலன் புது விசைகொண்டு முன்னால் வர அவர்களிருவரும் மீண்டும் இணைந்துகொண்டார்கள். பின்பக்கம் பூரிசிரவஸ் திருஷ்டத்யும்னனால் எதிர்கொள்ளப்பட்டு பாஞ்சாலப் படைகளால் முற்றாக சூழப்பட்டிருந்தான். சகுனியின் பாகன் தேரை மெல்ல மெல்ல பின்னகர்த்தி கொண்டுசென்றான். நகுலனின் அழைப்பில்லாமலேயே அவன் பின்னடைவது எப்படி சகதேவனுக்கு தெரிந்தது என சகுனி வியந்தார். இருபுறத்திலிருந்தும் சலனும் சோமதத்தரும் வந்து நகுலனையும் சகதேவனையும் எதிர்கொண்டார்கள்.

சகுனியைச் சூழ்ந்து ஏழு கழையர் மேலேறி இறங்கி கையசைவுகளால் செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தனர். ஒரே தருணத்தில் அவற்றை விழிகொண்டு சொல்லாக்கி ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தார். துரியோதனனுக்கும் பீமனுக்கும் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. அஸ்வத்தாமனை கடோத்கஜன் எதிர்கொள்ள சாத்யகியால் ஜயத்ரதன் எதிர்க்கப்பட்டான். பீஷ்ம பிதாமகரை அர்ஜுனன் எதிர்கொள்ள அவனுக்கு உதவியாக அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் இருபுறமும் துணைத்தனர். துரோணருக்கும் சுதசோமனுக்கும் போர் நிகழ்ந்தது. “துணைகொள்க, பீஷ்மருக்குப் பின்னால் படைகள் இல்லை…” என சகுனி ஆணையிட்டார்.

ஒருகணத்தில் கூரிய சோர்வொன்று எழ அவர் முற்றாகவே அகம் செயலிழந்தார். அங்கே நிகழ்வதை தொடர்பற்ற எதுவோ என நோக்கிக்கொண்டிருந்தார். முன்பு பாலையில் கண்ட ஓநாயை நினைவுகூர்ந்தார். அது பசித்து இறந்துகொண்டிருந்தது. உலர்ந்த நா வெளியே தொங்கியது. கண்கள் பழுத்திருந்தன. மூச்சு மிக மெல்ல ஓடியது. அவர் புரவியிலிருந்து இறங்கி அருகே சென்றார். புரவியின் விலாவில் வேட்டைப்பொருளான முயல் தொங்கியது. அதிலொன்றை எடுத்து கழுத்தை வெட்டி குருதியை அதன் நாவருகே கிடந்த கரியிலையில் சொட்டினார். அதன் விழிகள் உயிர்கொண்டன. நாக்கு சிதைந்த புழு என நீண்டு வந்தது. குருதியை தொட வந்தது. ஆனால் அதனுள் இருந்த தெய்வம் பிறிதொன்று எண்ணியது. நாக்கை உள்ளிழுத்துக்கொண்டு அது விழிமூடியது. அதன் உடலுக்குள் அந்த தெய்வத்தின் மெல்லிய உறுமலோசை கேட்டது. அது மெல்ல மெல்ல கனல் அணைந்து கரியாவதுபோல் உயிர்துறப்பதை அவர் நோக்கி நின்றிருந்தார்.

சகுனி முழவோசை கேட்டு விழித்துக்கொண்டார். அந்த உளத்தழைவிலும் அவர் ஆணைகளை விடுத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார். “சூழ்க! கடோத்கஜனை சூழ்ந்துகொள்க!” என ஆணையிட்டபடி கைகளை வீசினார்.