மாதம்: செப்ரெம்பர் 2018

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 21

bowலட்சுமணன் அவையிலிருந்து வெளியே வந்து குளிர்காற்றை உணர்ந்தபோது மேலும் களைப்படைந்தான். கால்கள் நீரிலென நீந்தி நீந்தி அவனை கொண்டுசெல்வதுபோல தோன்றியது. வெளியே அவனுக்காகக் காத்து நின்றிருந்த துருமசேனன் அருகணைந்து “களமொருக்குதானே அடுத்த பணி, மூத்தவரே?” என்றான். லட்சுமணன் தலையசைத்தான். துருமசேனன் “இன்று படைவீரர்கள் சோர்ந்திருக்கிறார்கள். நேற்றும் அவர்களை கனவுகள் அலைக்கழித்தன என்கிறார்கள்…” என்றான். லட்சுமணன் “உம்” என்றான். “அதே கனவுகள்தான். பேயுருக்கொண்ட ஆழத்துதெய்வங்களும் விண்வாழ்தெய்வங்களும் மண்ணிலிறங்கி பூசலிட்டன” என்றான் துருமசேனன்.

“அவர்கள் சொல்வதை கேட்டால் இதுவரை மண்ணில் உருக்கொண்ட அத்தனை தெய்வங்களும் இங்கு வந்துள்ளன என்று தோன்றுகிறது. பல்லாயிரக்கணக்கான குலதெய்வங்கள், லட்சக்கணக்கான அன்னைதெய்வங்கள், பலகோடி மூதாதைதெய்வங்கள். இங்கே தெய்வங்களுக்குப் போக எஞ்சிய இடமே மானுடருக்கு” என்று துருமசேனன் தொடர்ந்தான். லட்சுமணன் “தெய்வங்களுக்கு ஊசிமுனைமேல் நூறு நகர் அமைக்கும் ஆற்றல் உண்டு” என்றான். “ஆம்” என்றான் துருமசேனன். லட்சுமணன் என்ன சொல்கிறான் என அவனுக்கு புரியவில்லை. “உணவுண்டாயா?” என்றான் லட்சுமணன். “ஆம்” என அவன் நாணத்துடன் சொன்னான். “நீங்கள் உணவருந்தவில்லை என அறிவேன். ஆனால் என்னால் காலையில் எழுந்தவுடன் உண்ணாமலிருக்க இயல்வதில்லை.”

லட்சுமணன் புன்னகையுடன் அவன் முதுகில் கைவைத்து “அதிலென்ன? நீ அடுமனையில் வாழ்பவன் என அறியாதவனா நான்?” என்றான். துருமசேனன் “நான் அடுமனைக்கே செல்லவில்லை” என்றான். “உணவை கூடாரத்தில் கொண்டுவந்து வைத்திருந்தாயா?” என்றான் லட்சுமணன். “எப்படி தெரியும்?” என்று துருமசேனன் கேட்டான். லட்சுமணன் புன்னகை செய்தான். துருமசேனன் குற்றவுணர்ச்சியுடன் “ஆனால் நான் உங்களுக்கான உணவை கொண்டுவந்து வைத்துள்ளேன். சென்றதுமே நீங்கள் உண்ணலாம்” என்றான். லட்சுமணன் “நன்று” என்றான்.

அவர்கள் படைகளின் நடுவே நடந்தார்கள். முந்தையநாள் களம்பட்ட இளையோர் எண்பத்தைந்து பேர் வரிசையாக சிதைக்கு முன் அடுக்கி போடப்பட்டிருந்ததை அவன் பார்த்திருந்தான். அவர்களின் உடல்கள் சிதைந்திருந்தமையால் செந்நிற மரவுரியால் சுருட்டி உருளையாக வைக்கப்பட்டிருந்தனர். “மலைப்பாறைகளால் உருட்டி சிதைக்கப்பட்டவர்கள் போலிருந்தன உடல்கள், மூத்தவரே” என்றான் துருமசேனன். லட்சுமணன் சீற்றத்துடன் “வாயை மூடு!” என்றான். ஆனால் அவனால் அந்த உளஓவியத்திலிருந்து மீளவே முடியவில்லை.

கௌரவ மைந்தர் சிலரே வந்திருந்தார்கள். “எஞ்சியவர்கள் உண்டு துயிலச் சென்றாகவேண்டும் என ஆணையிட்டேன், மூத்தவரே” என்றான் துருமசேனன். “அவர்கள் அனைவரும் துயரில் இருக்கிறார்கள். இங்கு வந்தால் தாளமாட்டார்கள். அவர்கள் ஓர் உடல்போல. ஒவ்வொருவரின் இறப்பும் தங்கள் இறப்பென்றே தோன்றும்.” லட்சுமணன் புன்னகையுடன் “நன்று, ஆயிரம்முறை இறப்பதற்கு நல்லூழ் வேண்டும். இனி பிறப்பும் இறப்பும் இல்லை போலும்” என்றான். அவன் சொல்வது புரியாமல் துருமசேனன் விழித்து நோக்கினான்.

சத்யனும் சத்யசந்தனும் அவர்களுக்குப் பின்னால் வந்தனர். நாகதத்தன், சம்பு, கன்மதன், துர்தசன், சுப்ரஜன் ஆகியோர் ஒரு சிறு குழுவாக நின்றனர். அப்பால் துந்துபி, துர்ஜயன், சுஜலன், சுமுகன் ஆகியோர் கூடி நின்றனர். சுபூதன், சுபாதன், பாவகன், பரமன் ஆகியோர் இன்னொரு குழுவாக நின்றனர். அவர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு ஒற்றை உடலென நின்றனர். அவர்கள் எப்போதுமே அப்படித்தான் நிற்பது வழக்கம், ஆகவே அவர்களை ஆலமர விழுதுகள் என பிறர் களியாடுவதுமுண்டு. ஆனால் அப்போது இழுத்துச்செல்லவிருக்கும் ஏதோ சரடு ஒன்று அவர்களை கட்டி நிறுத்தியிருப்பதுபோலத் தோன்றியது.

தனியாக நின்றிருந்த இருவரை நோக்கி லட்சுமணன் நின்றான். “அவர்கள் இளைய தந்தை குண்டாசியின் மைந்தர்கள் அல்லவா?” என்றான். “ஆம், தீர்க்கநேத்ரனும் சுரகுண்டலனும். அவர்கள் எப்போதும் தனித்தே நிற்கிறார்கள். ஒருவருக்கொருவர்கூட பேசிக்கொள்வதில்லை” என்றான் துருமசேனன். லட்சுமணன் “தந்தையிடமிருந்து நோய்களை தவறாமல் பெற்றுக்கொள்கின்றனர் மைந்தர்” என்றான். கைநீட்டி அவர்களை அருகே அழைத்தான். அவர்கள் அவன் அழைப்பை விழிகடந்து உளம் பெற்றுக்கொள்ளவே சற்று பிந்தியது. இருவருமே எதையும் நோக்காத முகம் கொண்டிருந்தனர். அருகே வந்ததும் தீர்க்கநேத்ரன் சொல்லின்றி வணங்கினான். சுரகுண்டலனின் வாயில் ஒரு சொல் எழுவதுபோல ஓர் அசைவு வந்து மறைந்தது.

லட்சுமணன் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே கைநீட்டி அவர்களின் தோளை மட்டும் தொட்டான். சுரகுண்டலன் பெருமூச்சுவிட்டான். ஏதாவது சொல்லவேண்டும் என லட்சுமணன் எண்ணினான். ஆனால் அவர்களிருவரிடமும் அவன் பேசுவதே அரிது. அவர்களின் கைகளை மட்டும் மெல்லப் பிடித்து அழுத்தினான். அங்கிருந்து நடந்தபோதும் அவர்களின் கைகளை தன் கையிலேயே வைத்திருந்தான். அவர்களும் சொல்லின்றி உடன் நடந்தார்கள். ஒவ்வொரு உடலாக பார்த்தபடி மெல்ல நடந்து சிதையை அணுகியபோது உள்ளம் வெறுமைகொண்டு எடையற்றிருந்தது.

முந்தையநாள் இறந்தவர்களுக்கான செல்கைச் சடங்குகள் அரசர்களின் பாடிவீடுகளின் முற்றங்களிலேயே நிகழ்ந்தன. களத்திலிருந்து அவர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்டு முற்றங்களில் நிரையாக வைக்கப்பட்டிருந்தன. ஷத்ரிய முறைப்படி வெண்கூறைக்குமேல் வாளும் வேலும் சாத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவ்வுடல்களுக்கு இறந்தவர்களின் தந்தையர் வாய்க்கரிசியிட்டு வணங்கினர். அவர்களின் களப்போர்த்திறத்தையும் வெற்றியையும் போற்றி பாணர் எருமைமறம் பாடினர். அங்கிருந்து உடன்பிறந்தார் தொடர அவ்வுடல்கள் எரிகளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன.

ஆனால் மறுநாளே அரசர் உடல்கள் எவையும் படைகளுக்குள் கொண்டுவரப்படலாகாது என்று ஆணையிட்டுவிட்டார். அவ்வுடல்கள் படைகளின் உளச்செறிவை அழிக்கின்றன என்று அவருக்கு சொல்லப்பட்டிருந்தது. அது உண்மை என லட்சுமணன் படைகளில் இருந்து உணர்ந்திருந்தான். போருக்குப் பின் படைகள் களைப்பையும் உயிருடனிருப்பதன் மகிழ்வையும் மட்டுமே கொண்டிருந்தன. ஆனால் தழைந்த தோற்பரப்பில் விரல்கள் குழைந்தாட பருபருத்த குரலில் பாணர் பாடிய எருமைமறப் பாடல்கள் கேட்டவர்களை விழிநீர்விடச் செய்தன. அத்துயர் சொல்லில்லாமல் கடுங்குளிர் என படையில் பரவியது.

சிதையருகே இளைய தந்தை குண்டாசி நின்றிருந்தார். அவர் ஏன் அங்கே வந்தார் என்னும் திகைப்பை அவன் அடைந்தான். பின்னர்தான் முந்தையநாளே அவர்தான் கௌரவப் படைத்தரப்பின் ஈமநிகழ்வுகளுக்கு பொறுப்பேற்றிருக்கிறார் என்று சொல்லப்பட்டது நினைவு வந்தது. அவனுடைய மெலிந்த சிற்றுடல் காற்றில் சருகு பறப்பதுபோல அங்கே தத்தி அலைந்தது. கைகளை வீசி ஆணைகளை பிறப்பித்தபடி சுற்றிவந்தான். லட்சுமணனைக் கண்டதும் அருகணைந்து “என்ன? உன் தந்தை எங்கே?” என்றான். “அரசர் வரவில்லை என செய்தி…” என்றான் லட்சுமணன். “ஆம், அது இங்கு வந்துள்ளது. வாய்க்கரிசிச் சடங்குகளுக்காக இறந்தோரின் தந்தையர் வரவேண்டும்…” என்றான் குண்டாசி. “வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று லட்சுமணன் சொன்னான். குண்டாசி தன் மைந்தர் அங்கிருப்பதை அறியாதோன்போல “பொழுதில்லை… இச்சிதை கொளுத்தப்பட்ட பின்னரே பிற சிதைகள்… இன்று மட்டும் நாநூற்று எழுபது சிதைகள். அவை முழு இரவும் எரிந்தாலே இன்று வீழ்ந்தவர்கள் விண்ணேறமுடியும். மின்னலும் தூறலும் உள்ளது, மழைவருமென்றால் இடர்தான்” என்றான்.

குண்டாசி சற்று மிகையான ஊக்கத்துடன் இருக்கிறானோ என்னும் ஐயம் அவனுக்கு எழுந்தது. அங்கே நிரையென நீண்டுசென்றிருந்த இளையோரின் உடல்களை அவன் ஒருகணத்துக்கு மேல் நோக்கவில்லை. ஆனால் அவன் உள்ளம் குளிரை உணர்ந்து நடுங்குவதுபோல் அவ்வப்போது சிலிர்ப்புகொண்டது. குண்டாசி எதையுமே எண்ணுவதுபோல தெரியவில்லை. படைப்புறப்பாட்டுக்கு முந்தைய ஏற்பாடுகளை செய்பவன்போல பரபரப்பாக இருந்தான். அவன் உடல் மெலிந்து கூன்விழுந்திருந்தமையால் அது வில்மூங்கில் நிலத்தில் ஊன்றப்படுகையில் என சற்று துள்ளுவதுபோலத் தோன்றியது.

எண்பத்தைவருக்கும் ஒற்றைச் சிதை அடுக்கப்பட்டிருந்தது. அங்கே ஆலயம் ஒன்று எழுப்பப்படவிருப்பதாகவும் மரங்கள் அடுக்கப்பட்டு அடித்தளம் ஒருக்கப்பட்டிருப்பதாகவும் தோன்றியது. அரக்கும் மெழுகும் நெய்யும் பொழியப்பட்ட விறகுகள் நனைந்தவை போலிருந்தன. குண்டாசி ஒருவனை உரக்க அதட்டி கீழ்மொழியில் ஏதோ சொன்னான். துருமசேனன் “எப்போதுமே சிறிய தந்தையை செயலூக்கத்துடன் பார்த்ததில்லை” என்றான். “இத்தருணத்துக்காகத்தான் அவர் அப்படி இருந்தார் போலும்” என்ற லட்சுமணன் எண்ணிக்கொண்டு குண்டாசியின் மைந்தர்களை பார்த்தான். அவர்கள் சொல்கேளாதோர்போல அணைந்த விழிகளுடன் இருந்தனர்.

தேர்கள் ஒலிக்க அனைவரும் திரும்பிப்பார்த்தனர். “வந்துவிட்டார்களா?” என்று கேட்ட குண்டாசி “விரைக… பொழுதணைகிறது!” என ஏவலரை ஊக்கினான். ஏழு தேர்களில் இருந்து சித்ராங்கனும், பீமவேகனும், உக்ராயுதனும், சுஷேணனும், மகாதரனும், சித்ராயுதனும், நிஷங்கியும், திருதகர்மனும், சேனானியும், உக்ரசேனனும், துஷ்பராஜயனும், திருதசந்தனும், சுவர்ச்சஸும், நாகதத்தனும், சுலோசனனும், உபசித்ரனும், சித்ரனும், குந்ததாரனும், சோமகீர்த்தியும், தனுர்த்தரனும், பீமபலனும் இறங்கி வந்தனர். ஒருவரே மீண்டும் மீண்டும் வருவதுபோல் விழிச்சலிப்பு ஏற்பட லட்சுமணன் நோக்கு விலக்கிக்கொண்டான்.

அவர்கள் வந்து நின்றதும் குண்டாசி “இறந்தவர்களின் தந்தையர் மட்டும் நிரையாக வந்து தனியாக நிற்கவேண்டும். ஒருவர் சிதையேற்றினால் போதும்” என்றான். அருகே நின்றிருந்த அந்தணர் ஏதோ சொல்ல தலையசைத்து “ஆம், ஒரு கொள்ளியை அனைவரும் கைமாற்றி இறுதியில் ஒருவர் சிதையில் வைக்கலாம்…” என்றான். கௌரவர்களில் பன்னிருவர் உடல்களில் கட்டுகள் போட்டிருந்தனர். துஷ்பராஜயனும், திருதசந்தனும் தடி ஊன்றி காலை நீட்டி வைத்து நடந்தார்கள். அவர்களின் முகங்கள் இருண்டு ஆழ்நிழல் போலிருந்தன. “விரைவு… சடங்குகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. வாய்க்கரிசியிட்டு, நீரூற்றி, மலர்பொழிந்து சிதையேற்றுவதே எஞ்சியுள்ளது” என்றான் குண்டாசி.

இறந்தவர்களின் உடல்கள் நிரையாக கொண்டுவரப்பட்டன. இறந்த மைந்தனின் தந்தை மட்டும் முன்னால் சென்று அரிசியை அள்ளி மும்முறை வாய்க்கரிசி இட்டு, நீர் தெளித்து வணங்கினான். மலரிட்டு தலைதாழ்த்தியபோது அவன் விம்மியழ அவன் துணைவர் இருவர் விழிநீர் வழிய தூக்கி அகற்றினர். சடங்குகள் முடிந்ததும் சடலங்கள் சிதைமேல் பரப்பப்பட்டன. இருபது சடலங்கள் பரப்பப்பட்டதும் அரக்கும் மெழுகும் கலந்து இறுக்கப்பட்ட பலகைகள் அவர்களுக்குமேல் அடுக்கப்பட்டு மென்விறகு செறிவாக பரப்பப்பட்டது. அதன்மேல் மீண்டும் இருபதுபேர். நான்கு அடுக்குகளாக அவர்களின் உடல்கள் அடுக்கப்பட்டபின் மேலே மீண்டும் மெழுகரக்குப் பலகைகளும் விறகும் குவிக்கப்பட்டன. அவர்கள் விழிகளிலிருந்து மறைந்ததுமே லட்சுமணன் ஒரு விடுதலையுணர்வை அடைந்தான். ஆனால் கௌரவத் தந்தையரிடமிருந்து விம்மலோசைகளும் அடக்கப்பட்ட அழுகைகளும் எழுந்தன.

தீப்பந்தம் கௌரவர் கைகளுக்கு அளிக்கப்பட்டது. பீமவேகன் அதை வாங்கத் தயங்கி பின்னடைந்தான். துஷ்பராஜயனும் பின்னடைய குண்டாசி “எவரேனும் வாங்குக… பொழுதாகிறது!” என்றான். உபசித்ரன் அதை வாங்கிக்கொண்டான். அவனிடமிருந்து சித்ரன் பெற்றுக்கொள்ள கைகள் வழியாகச் சென்ற தழல் மகாதரனை அடைந்தது. “தழல் மூட்டுக, மூத்தவரே!” என்றான் குண்டாசி. மகாதரன் தன் பெரிய வயிற்றுடன் மெல்ல கால்வைத்து நடந்தான். இருமுறை நின்றபோது “செல்க!” என்றான் குண்டாசி. சிதையருகே சென்று அவன் நின்று விம்மியழுதான். நிஷங்கியும் சுஷேணனும் அருகே சென்று அவன் தோள்களை பற்றிக்கொண்டார்கள். அவன் விழப்போகிறவன்போல காலை நீட்டி வைத்து நடந்தான். சிதையருகே சென்றதும் எதிர்பாரா விசையுடன் பந்தத்தை வீசி எறிந்தான். சிதையின் அரக்கும் நெய்யும் கலந்த ஈரம் நீலநிறமாக பற்றிக்கொண்டது. நூறாயிரம் நாக்குகள் என நீண்டு எழுந்த தழலால் சிதை கவ்வப்பட்டது. வெடித்து நீலத்தழல் துப்பி நின்றெரியலாயிற்று.

குண்டாசி “திரும்பிச்செல்லலாம். இது களமென்பதனால் இனி நீராட்டு முதலிய சடங்குகள் ஏதுமில்லை” என்றான். பின்னர் “சாவு தொடர்ந்து வந்துவிடக்கூடும் என அஞ்சவேண்டியதில்லை. அது எப்போதும் உடனுள்ளது” என்று சொல்லி புன்னகைத்தான். ஒடுங்கிய முகமும் துறித்த விழிகளும் எழுந்த பற்களுமாக அச்சிரிப்பு அச்சுறுத்தியது. மகாதரன் ஏதோ சொல்ல வாயெடுக்க சித்ரன் அவன் தோளைத் தொட்டு தடுத்தான். கௌரவர்கள் கால்களை தள்ளித் தள்ளி வைத்து தேர்களை நோக்கி நடந்தார்கள்.

சடங்குகளை முடித்து தம்பியருடன் திரும்பி பாடிவீட்டுக்குச் செல்கையில் லட்சுமணன் எதையும் உணரவில்லை. அங்கிருந்து சென்றுவிடவேண்டும் என்று மட்டுமே அகம் தவித்தது. முற்றத்தில் சென்றமர்ந்து கைகளை கழுவிக்கொண்டதும் கள்ளும் ஊனுணவும் கொண்டு வரப்பட்டது. உணவை கையிலெடுத்த கணம்தான் உடலுக்குள்ளிருந்தென ஓர் அலை வந்து அவன் நெஞ்சை அறைந்தது. தம்பியர் அனைவரும் உணவு அருந்தியாயிற்றா என்னும் சொல்லன்றி நினைவறிந்த நாள் முதல் அவன் ஒருபோதும் உண்டதில்லை. பற்கள் உரசிக்கொள்ளும் ஓசை தலைக்குள் வெடித்தது. அவன் அதிர்வதை நோக்கி “என்ன? என்ன, மூத்தவரே?” என்றான் துருமசேனன். ஒன்றுமில்லை என அவன் தலையசைத்தான். உடல் உலுக்கிக்கொண்டே இருந்தது. ஊன் துண்டை மீண்டும் தாலத்தில் வைத்துவிட்டு எழுந்து சென்றான்.

துருமசேனன் “மூத்தவரே!” என்றான். அவனை கையை காட்டி விலக்கிவிட்டு லட்சுமணன் நடக்க துருமசேனன் பின்னால் வந்து “உணவுண்ணாவிட்டால் நாளை களைத்திருப்பீர்கள். உண்க, மூத்தவரே!” என்றான். “இல்லை, என்னால் உண்ண இயலாது” என்றான் லட்சுமணன். “மூத்தவரே!” என்று அவன் மீண்டும் கூற “என்னை தனிமையில் விடு” என்றான். துருமசேனன் பேசாமல் நின்றான். லட்சுமணன் விண்மீன்களை பார்த்தபடி சாலமரத்தடியில் சரிவான பீடத்தில் சென்று அமர்ந்தான். விண்மீன்களின் பொருளின்மை அவனை திகைக்க வைத்தது. உளம் பதைத்து அதிலிருந்து விலகிக்கொள்ள முயன்றான். ஆனால் பிறிதொரு விசை விழிகளை அதிலிருந்து விலக்கவும் விடவில்லை.

நெடுநேரம் கழித்து பெருமூச்சொன்று எழ உளம் கலைந்தபோது அருகே துருமசேனன் நின்றுகொண்டிருந்ததை கண்டான். “நீ துயிலவில்லையா?” என்றான். “இல்லை” என்று அவன் சொன்னான். “இளையவர்கள் துயின்றுவிட்டார்களா?” என்றான் லட்சுமணன். “அனைவருக்கும் இருமடங்கு அகிபீனா அளிக்கும்படி ஆணையிட்டேன். பெரும்பாலானவர்கள் துயின்றுவிட்டார்கள்” என்றான் துருமசேனன். “நீ சென்று துயில்கொள்” என்று லட்சுமணன் சொன்னான். “இல்லை, மூத்தவரே” என்று துருமசேனன் சொன்னான். “நீ உணவுண்டாயா?” என்று லட்சுமணன் கேட்டான். அவன் மறுமொழி சொல்லவில்லை. பெருமூச்சுடன் “சரி, உணவை கொண்டுவா. நாமிருவரும் இணைந்து உண்போம்” என்றான் லட்சுமணன்.

தலைவணங்கியபின் துருமசேனன் சென்று தாலத்தில் ஊன் துண்டுகளை கொண்டுவந்தான். ஒரு துண்டை எடுத்தபின் இன்னொன்றை எடுத்து அவனுக்கு அளித்தான் லட்சுமணன். ஆனால் துருமசேனன் அதை கையிலேயே வைத்திருந்தான். அவன் கடித்து உண்ணத்தொடங்கிய பின்னரே உண்டான். உண்டு முடித்து கைகளைக் கழுவியதும் லட்சுமணன் “எனக்கும் அகிபீனா வேண்டும். இரண்டு உருளை” என்றான். “மூன்று வைத்திருக்கிறேன்” என்றான் துருமசேனன். “ஆம்” என்றபின் அவன் அவற்றை எடுத்துக்கொண்டான். கையிலிட்டு உருட்டிக்கொண்டே இருந்தான். அதிலிருப்பது என்ன? அது ஒரு சிறு ஊற்று. அது ஊறி ஊறிப் பெருகி பெருவெள்ளமாகி அனைத்தையும் மூடிவிடுகிறது. முழுமையாக தன்னுள் அமைத்துக்கொண்டு மெல்ல அலைகொண்டு முடிவிலாது பெருகி நிற்கிறது.

மூன்று உருண்டைகளையுமே வாயிலிட்டு கரைந்துவந்த சாற்றை விழுங்கிக்கொண்டு விண்மீன்களை பார்த்துக்கொண்டு லட்சுமணன் படுத்திருந்தான். சற்று நேரத்தில் துருமசேனனின் குறட்டையொலி கேட்கத் தொடங்கியது. விண்மீன்கள் சிலந்திகள் வலையில் இறங்குவதுபோல நீண்ட ஒளிச்சரடொன்றில் தொங்கி கீழிறங்கி வந்தன. மிக அருகே வந்து அவனைச் சுற்றி ஒளிரும் வண்டுகள்போல் பறந்தன. பறக்கும் விண்மீன்களின் சிறகோசையை அவன் கேட்டான். அந்த ரீங்காரம் யாழ்குடத்திற்குள் கார்வை என அவன் தலைக்குள் நிறைந்தது. புலரிக்கு முன் அவன் விழித்துக்கொண்டபோதும் அது எஞ்சியிருந்தது.

லட்சுமணன் படைகளை நோக்கியபடி நின்றான். அவனால் நடக்கமுடியவில்லை. “நம் இளையோர் எங்கிருக்கிறார்கள்?” என்றான். “அவர்கள் எட்டு படைப்பிரிவுகளிலாக இணைந்து பணியாற்றுகிறார்கள், மூத்தவரே” என்றான் துருமசேனன். “இப்போது கிளம்பினால் எட்டு படைப்பிரிவுகளிலும் சென்று அவர்களை நாம் பார்த்துவர முடியுமா?” என்றான் லட்சுமணன். துருமசேனன் அவனைப் பார்த்து ஒருகணம் தயங்கி “ஆம், சற்று விரைந்து சென்றால் இயலும்… ஆனால்” என்றான். “சொல்” என்றான் லட்சுமணன். “அது அமங்கலப்பொருள் அளிக்கக்கூடும்” என்றான். லட்சுமணன் “ஆம், ஆனால் அது கைநெல்லி என துலங்கும் உண்மை. அவர்களை நோக்காதொழிந்தால்…” என்றபின் “நேற்று சென்றவர்கள் என் கனவில் வந்தனர். பலரை நான் அருகணைந்து ஒரு சொல் உரைத்தே பல ஆண்டுகளாகின்றன என்று உணர்ந்தேன்” என்றான். துருமசேனன் “அழைத்துவரச் சொல்கிறேன்” என தலைவணங்கினான்.

bowலட்சுமணன் காவல்மாடத்தருகே புரவியை நிறுத்திவிட்டு இறங்கி அதன் கணுமூங்கில் வழியாக மேலேறிச் சென்றான். அங்கிருந்த ஒரு காவலன் இறங்கி அவனுக்கு இடமளித்தான். புதிய முரசின் சிவந்த தோலில் கழி விழுந்த தடம் நிறமாற்றமாக தெரிந்தது. லட்சுமணன் தன்னை நோக்கி தலைவணங்கிய காவலனிடம் “மறுபால் படைகள் எழுந்துள்ளனவா?” என்றான். “ஆம் இளவரசே, இன்று அவர்கள் மேலும் ஊக்கம் கொண்டுள்ளனர்” என்றான்.

அவன் மேலே சொல்லும்பொருட்டு லட்சுமணன் காத்து நின்றான். “அங்கே பீமசேனரின் மைந்தர் கடோத்கஜன் வந்துள்ளார். பேருருவ அரக்கர்” என்றான் காவலன். “நம்மவரும் அச்செய்தியை அறிந்துகொண்டிருக்கிறார்கள். அது அனைவரையும் அஞ்சவைத்திருப்பதையும் காணமுடிகிறது. இன்று களத்தில் பெரும் கொலைவெறியாட்டு நிகழுமெனத் தோன்றுகிறது.”

லட்சுமணன் தலையாட்டியபின் பாண்டவப் படைகளை நோக்கிக்கொண்டிருந்தான். அங்கே வாழ்த்தொலிகளும் வெறிக்கூச்சல்களும் கேட்டுக்கொண்டிருந்தன. போர்க்களத்தின் இயல்பான உளநிலை சோர்வே என்று அவனுக்கு தோன்றியது. அதை அவர்கள் வெவ்வேறு நிமித்தங்களால் ஊக்கமென மாற்றிக்கொள்கிறார்கள். மிகையாக்கி களியாடுகிறார்கள். சிரித்துக்கொண்டே சாவுக்குச் செல்வதே மேலும் எளிதானது.

துருமசேனன் வருவதை அவன் ஓரவிழியில் அசைவாகக் கண்டு திரும்பி நோக்கினான். முன்னால் துருமசேனனின் புரவி பலகைப்பாதையில் பெருநடையில் வந்தது. தொடர்ந்து அவன் தம்பியர் நிரை வந்தது. கருமணி மாலை ஒன்று நீண்டுகொண்டே இருப்பதுபோல. ஒருவரே மீளமீள வருவதைப்போல. அவர்களின் முகங்களும் தோற்றங்களும் வெவ்வேறு என்பதை விழிநிலைத்தால் காணமுடியும். ஆனால் அவர்களை ஒற்றைத்திரளெனக் காணவே உள்ளம் விழையும். அவ்வாறு ஒன்றென அவர்களைத் திரட்டும் ஏதோ ஒன்று அவர்களிடமிருந்தது.

லட்சுமணன் மேலிருந்து கீழிறங்கினான். அவன் நிலத்தை அடைந்தபோது புரவியில் அணுகி வந்த துருமசேனன் கடிவாளத்தை இழுத்து நிறுத்தி இறங்கி தலைவணங்கினான். பிறர் ஒவ்வொருவராக இறங்கினர். அவர்கள் ஆயிரத்தவராக இருந்தமையாலேயே அந்தத் திரள்தன்மை அவர்களுக்கு உருவாகிறது என லட்சுமணன் எண்ணினான். கலைந்துபரவும் கட்டின்மையை அவர்கள் எப்போதும் கொண்டிருந்தாலும் அது புகை என, நீர்ப்பாசி என தனக்குரிய ஒரு வடிவையும் கொண்டிருந்தது. அவர்களில் எவரும் தொலைந்து தனித்துச் செல்வதில்லை. அதை எண்ணியதுமே அவன் குண்டாசியின் இரு மைந்தரை நினைவுகூர்ந்தான். அவர்கள் எப்போதும் தனியர். அவர்கள் அத்திரளில் இருக்கிறார்களா என்று அவன் பார்த்தான். இல்லை என்று கண்டதும் அவன் தலையசைத்து ஆம் என எண்ணிக்கொண்டான்.

துருமசேனன் “நாங்கள் எங்களுக்கென ஒரு முரசொலியை உருவாக்கிக்கொண்டோம், மூத்தவரே. அதை எழுப்பினால் எளிதில் இணைந்துகொள்ள இயல்கிறது” என்றான். விப்ரசித்தியும் நமுசியும் நிசந்திரனும் குபடனும் அகடனும் சரபனும் வந்து அவன் அருகே நின்றார்கள். அஸ்வபதியும் அஜகனும் சடனும் சவிஷ்டனும் தீர்க்கஜிஹ்வனும் மிருதபனும் நரகனும் அவர்களுக்குப் பின்னால் நின்றனர். லட்சுமணன் அவ்வாறு அவர்களை வரச்சொன்னதை எண்ணி கூச்சமடைந்தான். அதில் மங்கலமின்மை இருந்தது. அதை அகம் உணர்ந்தது.

“நான் உங்களைப் பார்த்து சிலநாட்களாகின்றது. நலமாக இருக்கிறீர்களா என்று அறிய விழைந்தேன்” என்றான் லட்சுமணன். அவன் உள்ளத்தை அச்சொற்களிலிருந்தே உணர்ந்த துருமசேனன் “நாம் உடன்பிறந்தார் போரில் நமக்கென படைச்சூழ்ச்சிகள் சிலவற்றை வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதை சொல்ல மூத்தவர் விழைகிறார்” என்றான். ஆனால் பின்னால் நின்றிருந்த அஸ்வசங்கு “நானும் மூத்தவர் எங்களை சந்திப்பது நன்று என்று எண்ணினேன். ஏனென்றால் நேற்று மட்டும் எண்பத்துமூன்றுபேர் இறந்துள்ளனர். முதல்நாள் போரில் பன்னிருவர். அறுவர் புண்பட்டுக் கிடக்கின்றனர். இப்போது ஆயிரத்தவரில் நூற்றுவர் குறைகிறோம்…” என்றான். அவனை துருமசேனன் தடுப்பதற்குள் அவனருகே நின்றிருந்த கேசி “இன்றும் நூற்றுவருக்குக் குறையாமல் இறப்போம். எங்களை முழுமையாக மூத்தவர் பார்ப்பது நன்று என தோன்றியது” என்றான்.

துருமசேனன் அலுப்புடன் தலையசைத்தான். லட்சுமணன் அப்பேச்சை நேரடியாக எதிர்கொள்வதே நன்று என உணர்ந்து “ஆம், நாம் எஞ்சியோர் இன்றே சந்தித்துக்கொள்வதே நன்று. இப்போரில் நான் விழுந்தால் உங்கள் முகங்கள் நினைவில் எஞ்ச விண்புகுவேன்” என்றான். “இங்கிருந்தாலும் மேலுலகில் இருந்தாலும் ஒன்றென்றே இருப்போம், இளையோரே.” அதை சொன்னதும் அவன் தொண்டை இடறியது. அந்த உணர்வெழுச்சியை அவனே நாணி தலையை குனித்துக்கொண்டான். கைகளால் விழிகளை துடைக்க முயன்று அசைவு நிகழ்வதற்குள்ளே உள்ளத்தால் அடக்கினான்.

துருமசேனன் அந்த இடைவெளியை நிறைக்கும்பொருட்டு “மூத்தவரை வணங்குக!” என்று இளையோரிடம் சொன்னான். அவர்கள் ஒவ்வொருவராக வந்து லட்சுமணனை வணங்கினர். அவன் அவர்களை நெஞ்சோடு அணைத்து வாழ்த்துரைத்தான். அணைக்க அணைக்க தம்பியர் பெருகுவதுபோல் உணர்ந்தான். இறந்தவரும் இவர்களுக்குள் இருப்பார்கள்போலும் என்று எண்ணி மெய்ப்புகொண்டான். ஆயிரத்தவர். கார்த்தவீரியனின் ஆயிரம் தம்பியர். அவன் கண்களில் இருந்து நீர் வழியத்தொடங்கியது. இளையோரும் விழிசொரிந்தனர். பின்னர் அடக்கவேண்டியதில்லை என்றாக அவர்கள் விம்மலோசை எழ அழுதனர். அழுகை ஏதோ இடத்தில் நின்றுவிட சிரித்தனர்.

“மூத்தவரே, அவனை இருமுறை வாழ்த்திவிட்டீர்கள்” என்றான் சம்பிரமன். “சிலர் கூட்டத்தில் புகுந்து மீண்டும் மீண்டும் வாழ்த்து பெறுகிறார்கள். இப்படி போனால் அந்திவரை இந்த வாழ்த்துரை தொடரக்கூடும்.” லட்சுமணன் வாய்விட்டு நகைத்து “வாழ்த்து பெற்றவர்களெல்லாம் அப்பால் செல்க!” என்றான். “வாழ்த்து பெற்றவர்களின் முகத்தில் ஏதேனும் அடையாளம் வைக்கலாம்” என்றான் சத்ருதபனன். “முகத்திலா? ஓங்கி அறையலாம். சிவந்த தடம் எஞ்சும்” என்றான் துருமசேனன். சிரித்துக்கொண்டே அவர்கள் வணங்க அவர்களின் தோள்களில் அறைந்தும் முதுகைத் தட்டியும் லட்சுமணன் தழுவிக்கொண்டான்.

“மூத்தவரே, நேற்று சிறிய தந்தை பீமசேனரின் போராடலை கண்டேன். எனக்கு மெய்ப்பு எழுந்தது. போர்த்தெய்வம் எழுந்தது போலிருந்தார்” என்றான் கிரதன். தரதன் “அவருடைய கைகளையும் கால்களையும் பெருங்காற்றுகள் எடுத்துக்கொண்டன என்று சூதர் பாடினர். அவர் காற்றின் மேலேயே ஊர்வதை பலமுறை கண்டேன்” என்றான். “அவர் கையால் சாவதென்பதே நற்பேறு. நம்குடியின் மாவீரர் அவர். ஒருமுறையேனும் அவருடன் கதைபொருதி களத்தில் வீழ்ந்தால் நான் பிறந்தது ஈடேறும்” என்றான் குகரன். ”ஆம், அவருடைய தோள்தசைகளையே நோக்கிக்கொண்டிருந்தேன். கதை அவரைச் சூழ்ந்து பறக்கும் மெல்லிய இறகு போலிருந்தது” என்றான் ஆஷாடன்.

லட்சுமணன் முதலில் சற்று திகைப்படைந்தான். ஆனால் அவர்களின் முகங்களை பார்க்கையில் அவன் உள்ளம் மலர்ந்தது. “ஆம், போர்க்கலைகளில் கதைப்பயிற்சியே உச்சமென நேற்று நானும் எண்ணினேன்” என்றான். துருமசேனன் அச்சொல்லால் ஊக்கம் பெற்று “நான் அவருடன் இருமுறை கதைபொருதினேன். என் கதையை தட்டித்தெறிக்கச் செய்தார். யானைக்குப் பின் சென்று உயிர் தப்பினேன். பின்னர் எண்ணினேன், பெருங்காற்றுகளின் மைந்தனுடன் நின்று பொருதி மீண்டிருக்கிறேன். நானும் கதைத்திறலோன் என்று ஆனேன் என்று…” என்றான்.

“இளமையில் அவருடைய தோளில் தொற்றி களிநீராடியிருக்கிறோம், மூத்தவரே. அதைப்போல ஒரு விளையாட்டுதான் இது என்று எனக்கு பட்டது” என்றான் உத்வகன். லட்சுமணன் “ஆம், இது வெறும் விளையாட்டு. நாம் எஞ்சுவோம். அழியாது வாழும் ஓர் இடத்திலிருந்து இவை அனைத்தையும் எண்ணி எண்ணி மகிழ்வோம்” என்றான். துருமசேனன் “பொழுதணைகிறது, மூத்தவரே” என்றான். அவர்கள் தனி முகங்களை இழந்து மீண்டும் திரளென்றாகி தங்கள் புரவிகளை நோக்கி சென்றார்கள்.

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 20

bowதுரியோதனன் அவைக்குள் நுழைவதுவரை கலைந்த சொற்களின் முழக்கம் அங்கு நிறைந்திருந்தது. கைகளை கூப்பியபடி அவன் முதல் வாயிலினூடாக உள்ளே நுழைந்து தன் பீடத்தை நோக்கி செல்ல அவையினர் வாழ்த்தொலி எழுப்பினர். பீடத்தில் அமர்ந்து களைப்புடன் உடலை நீட்டிக்கொண்டு அருகே வந்து தலைவணங்கிய விகர்ணனிடம் தாழ்ந்த குரலில் சில ஆணைகளை பிறப்பித்துவிட்டு அவையை சிவந்த கண்களால் நோக்கினான். ஒருகணம் அவன் விழி வந்து தன்னை தொட்டுச்செல்வதைக் கண்டு லட்சுமணன் உளம் இறுகி மீண்டான். அவ்வப்போது அவனை அவையிலும் பொதுவிலும் துரியோதனனின் விழிகள் வந்து தொட்டுச்செல்வது அண்மைக்கால வழக்கமாகிவிட்டிருந்தது. முன்பெல்லாம் துரியோதனன் அவன் இருப்பதையே அறியாதவன் போலிருப்பான். அரிதாகவே விழிதொடுவான். அவனை அதுவரை மிகச் சில முறையே உடல்தொட்டிருக்கிறான்.

லட்சுமணன் தந்தையை நோக்கியபடி அவையை முற்றிலும் மறந்து அமர்ந்திருந்தான். துரியோதனன் மிகவும் உடல் தளர்ந்திருப்பதாக அவனுக்கு தோன்றியது. முந்தைய நாளிரவு அவன் இயல்பான துயிலை அடைந்திருக்க வாய்ப்பில்லை. நெடுநாட்களாகவே நற்துயில் இல்லாமை அவனது கண்களைச் சுற்றி கருமையையும் தோல்சுருக்கத்தையும் உருவாக்கியிருந்தது. இமைகள் தடித்து உதடுகள் கருகியிருந்தன. பிறர் பேசிக்கொண்டிருக்கையில் அவன் விரல்கள் பொறுமையிழந்து அசைந்துகொண்டிருப்பதை, காற்றில் எதையோ எழுதி அழிப்பதை லட்சுமணன் கண்டான். துர்மதன் துரியோதனனை அணுகி ஏதோ சொல்ல முகம் சுளித்து வேண்டாம் என்று தலையசைத்து விலகிச்செல்லும்படி கைகாட்டினான். அமைச்சர் அவை தொடங்கலாமா என விழிகளால் வினவ துச்சாதனன் ஆம் என தலையசைக்க அமைச்சர் வாழ்த்துரையுடன் அவை தொடங்கவிருப்பதை அறிவித்தார்.

அவை அமைதியாகவே இருந்தது. துச்சாதனன் பூரிசிரவஸை நோக்கி விழிகளால் பேசத்தொடங்கும்படி கோரினான். மேலாடையை இரண்டுமுறை சீரமைத்தபடி பூரிசிரவஸ் எழுந்து “அரசே, இன்றைய படைசூழ்கையை ஆசிரியர் துரோணர் வகுத்துள்ளார். இன்றும் பருந்துச்சூழ்கையே உகந்ததென்பது அவரது எண்ணம். ஒற்றை வீரரை முன் நிறுத்தி முழுப் படையும் போரிடுவதற்கு உகந்த வடிவம் அது. இன்றும் நமது முதன்மை படைக்கலம் பீஷ்ம பிதாமகரே. அவரை வெல்ல அவர்களில் எவராலும் இயலாதென்பது இரு நாட்களில் நிறுவப்பட்டுவிட்டது” என்றான். “அவர்களும் இன்று நாரைச் சூழ்கையை அமைக்கக்கூடும் என்றனர்” என்றார் சல்யர். பூரிசிரவஸ் “ஆம், அவர்களுக்கும் அர்ஜுனனே முதன்மை படைக்கலம்” என்றான்.

ஜயத்ரதன் “அல்ல, நேற்றைய போரில் பீமன் காட்டிய பெருவிசையையும் நிலைபெயரா உறுதியையும் அர்ஜுனன் வெளிப்படுத்தவில்லை. இன்னமும்கூட படைமுகப்பில் சற்றே கைதளர்பவனாகவே அவன் இருக்கிறான்” என்றான். “ஏன்?” என்று கிருதவர்மன் கேட்டான். “நேற்று பிதாமகரிடம் அவர் புரிந்த போரை நானும் பார்த்தேன். எவ்வகையிலும் கைத்தளர்வும் உளச்சோர்வும் தென்படவில்லை.” ஜயத்ரதன் புன்னகைத்து “கைகளிலோ அம்புகளிலோ அத்தளர்வு தென்படாது. அது உள்ளத்தின் ஆழத்தில் இருப்பது. மிக அகன்றிருந்து நோக்கினால் அது தெரியும். அம்புக்கு கைசெல்வதில், நாண் இழுப்பதில் தெரியும் மிகுவிரைவு தொடுப்பதற்கு முன் அரைக்கணம், அரைக்கணத்தில் ஆயிரத்திலொரு அளவு தயங்குவதை காணலாம். அதைக்கூட முகவிழியால் அல்ல மெய்விழியால்தான் காண இயலும்” என்றான்.

அவை ஜயத்ரதனை நோக்கியது. சல்யர் “அது வெறும் உளமயக்கு” என்றார். “அகன்றிருப்பவனுக்கு உளமயக்கும் விழிமயக்கும் ஏற்படுவதில்லை” என்ற ஜயத்ரதன் “அவ்வாறென்றால்கூட தாழ்வில்லை. பீஷ்ம பிதாமகரை ஏன் அர்ஜுனன் வெல்ல இயலவில்லை என்பதற்கான விளக்கம் இதுவே” என்றான். “சொல்க!” என்றான் துரியோதனன். “அரசே, இன்னமும் அர்ஜுனன் போரில் அருங்கொலை எதையும் செய்யவில்லை” என்றான் ஜயத்ரதன். பூரிசிரவஸ் “அவர் கொன்று குவித்த நம் படைவீரர்களின் எண்ணிக்கை…” என சொல்ல ஜயத்ரதன் கைகாட்டி தடுத்து “அவர்கள் முகமில்லாதவர்கள். போரில் இறப்பதற்கென்றே பிறவி கொள்ளும் படைவீரர்கள். எதிர்த்து வரும் படைக்கலங்களேந்திய கைகள் மட்டுமே போரில் நம் விழிக்கு தெரியும். எதிரிவீரனின் விழிகளை எவரும் நோக்குவதில்லை” என்றான்.

“ஆம், படைவீரனை போரில் கொல்வதில் எந்த உளத்தடையும் ஏற்படுவதில்லை” என்றான் கிருதவர்மன். “போரில் மெய்யாகவே ஓர் அருங்கொலை நிகழ்வது கொல்பவன் தன்னாலும் பொறுத்துக்கொள்ள இயலாத ஒன்றை நிகழ்த்துகையில்தான்” என்றான் ஜயத்ரதன். “தன் அனைத்து எல்லைகளையும் மீறிச்சென்று அதை அவன் ஆற்றவேண்டும். அத்தருணத்தில் அவனுள் ஏதோ ஒன்று உடைவதை காண்கிறான். பிறகு ஒருபோதும் திரும்பிச்செல்ல முடியாத இடத்திற்கு வந்துவிட்டதை திகைப்புடன் திரும்பிப்பார்க்கிறான். அதை அவன் மீண்டும் எண்ணிப்பார்க்க விரும்புவதில்லை. அது இயல்பாக எழுந்துவரும்போது உடலும் உள்ளமும் தவிக்கிறான். அதை வெல்ல ஒரே வழிதான் உள்ளது, மேலும் மேலுமென அதையே செய்து உள்ளத்தை அதற்கு பழக்கப்படுத்துதல். அவ்வழியே நெடுந்தொலைவு சென்று மேலும் மேலும் நிகழ்வுகளால் முதற்கணத்தை மூடி புதைத்துவிடுதல்.”

லட்சுமணன் ஏனென்றே தெரியாமல் மெய்க்கூச்சம் அடைந்தான். உடல் தவிக்க கைகளை இறுகப்பற்றிக்கொண்டு தலைதாழ்த்தி பற்களை நெரித்தான். அங்கிருந்து எழுந்து ஓடிவிடவேண்டும் என்றே அகம் தவித்தது. ஜயத்ரதன் இவற்றை ஏன் சொல்கிறான்? அவன் அவ்வெல்லையை கடப்பதைப் பற்றி எண்ணி எண்ணி உளம்உருட்டிக்கொண்டிருக்கிறான். அவன் அவ்வெல்லையை உறுதியாக கடப்பான். பெரும்பழி ஒன்றை செய்வதற்கு முன் மானுடர் உளம்கிளர்கிறார்கள். அவர்களின் அகம் கொண்ட சலிப்பு முற்றாக விலகிவிடுகிறது. அதை அஞ்சித்தயங்கும் ஆழமே அவர்களை கொந்தளிக்கச் செய்து அதை அருநிகழ்வாக ஆக்கிவிடுகிறது. பெரும்பழிகளைச் செய்தவர்கள் தங்கள் கட்டுகளை மீறிவிட்டதாக, ஆற்றல்பெற்றுவிட்டதாக உணர்கிறார்கள். தெய்வங்களால் அறைபட்டு விழும்வரை தருக்கி நின்றிருக்கிறார்கள்.

“போர்க்களத்தில் முதல் அருங்கொலையை செய்த பின்னரே வெல்ல முடியாதவனாக இயலும். நேற்று பீமன் அதை செய்துவிட்டான்” என்று ஜயத்ரதன் சொன்னான். “தன் கைகளால் தன் குருதிமைந்தர் எண்பத்தைந்து பேரை தலையறைந்து கொன்றான். அக்குருதியை அள்ளி தன் முகத்தில் பூசி வெறியாடினான். எங்ஙனம் அவன் திரும்பி தன் பாடிவீட்டுக்குச் சென்றான் என்பதை என்னால் உய்த்துணர இயலவில்லை. குற்றஉணர்வும் தன்கசப்பும் கொண்டு தனிமையில் ஆழ்ந்து சென்றிருக்கலாம். அல்லது இதுநாள்வரை தன்னை கட்டி வைத்திருந்த பெருந்தளையொன்றிலிருந்து விடுபட்டதன் கொண்டாட்டத்தை உணர்ந்திருக்கலாம். அல்லது இவ்விரு உணர்வுகளுக்குமிடையே இடைவிடா ஊசலாட்டமாகி நேற்றிரவை கழித்திருக்கலாம்.” தன் எண்ணங்களே சொற்களென ஒலிப்பதைக் கண்டு திடுக்கிட்டான்.

“ஆனால் அவன் நெடுந்தொலைவு வந்துவிட்டான்” என ஜயத்ரதன் தொடர்ந்தான். “அர்ஜுனன் இன்னமும் கிளம்பவே இல்லை. ஆகவே சொட்டுவதற்கு முந்தைய துளி என ததும்பிக்கொண்டிருக்கிறான்.” புன்னகைத்து “ஆனால் இது பெருங்களம். இது கடல். துளிகளனைத்தையும் இழுத்து தன்னில் சேர்த்துக்கொள்வதே கடலின் பேராற்றல். அவன் மீறி எழுவான். ஏனென்றால் ஒவ்வொரு கணமும் அவன் அகம்சீண்டப்படுகிறான். சிறுத்து ஆணவம் அழிந்து மறைந்துகொண்டே இருக்கிறான். நான் நான் என அவனுள் நின்று திமிறும் ஒன்று அவ்வில்லை ஏந்தவேண்டும். அது நிகழ்ந்தே தீரும். எப்போது எங்கு என்பதே நம் வினா” என்றான்.

சுபாகு “நாம் எதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்?” என்றான். அதுவரை ஜயத்ரதனின் சொற்களில் ஒழுகிச்சென்றுகொண்டிருந்த அவை திகைப்புடன் கலைவுகொள்ள துச்சாதனன் “ஆம், நாம் செய்யவேண்டியதென்ன என்று பேசவந்தோம்” என்றான். “அவர்கள் இனிமேல் எந்த தனி வீரரையும் முன்னிறுத்தமாட்டார்கள். ஆகவே நாரைச்சூழ்கையோ அன்றி பிற அலகுள்ள வடிவுகளையோ தெரிவுசெய்ய மாட்டார்கள். பீஷ்மரை சூழவும் சேர்ந்து அழிக்கவும்தான் முயல்வார்கள். பெரும்பாலும் நண்டு அல்லது தேள்சூழ்கை… அதையே நான் எதிர்பார்க்கிறேன்.”

“ஆம், இன்று பீமனும் திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் அர்ஜுனனுக்கு இணையான வீரத்துடன் களத்தில் நின்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இணைந்தமையும் சூழ்கைக்கே வாய்ப்பு” என்றார் சல்யர். சகுனி மெல்லிய கனைப்போசை எழுப்ப அவர்கள் அனைவரும் திரும்பி அவரை நோக்கினர். “அவர்கள் பிறைச்சூழ்கை அமைக்கிறார்கள். ஒற்றுச்செய்தி நான் கிளம்பும்போது வந்தது” என்றார். அவை மெல்லிய ஓசையுடன் எளிதானது. “அவர்கள் பீஷ்ம பிதாமகரை முழுப் படையாலும் சூழ எண்ணுகிறார்கள். அவர்களின் பெருவீரர்கள் அனைவருமே இணைநிரையென படைமுகம் நிற்பார்கள்.” துரியோதனன் “ம்ம்” என முனகி தன் கைகளால் இருக்கையின் பிடியை நெருடினான்.

“அத்துடன் நேற்று அந்தியில் பீமனின் மைந்தன் கடோத்கஜன் வந்து அவர்களுடன் இணைந்திருக்கிறான். இன்றைய போரில் அவன் ஆற்றவிருப்பதென்ன என்பதை இனிமேல்தான் பார்க்கவிருக்கிறோம்” என்றான் ஜயத்ரதன். “வெறும் காட்டுமனிதன். இத்தகைய பெரும்போரை முன்னர் பார்த்திருக்க மாட்டான். இங்கே நிகழ்வதென்ன என்று அவன் உணர்ந்துகொள்வதற்குள் நெஞ்சை பிளந்துபோட இயலும்” என்றான் கிருதவர்மன். அஸ்வத்தாமன் “அல்ல யாதவரே, அவன் நாம் அனைவரும் கொண்டிருக்கும் அந்த உளத்தடைகள் எதுவும் இல்லாதவனாக இருக்கலாம். இயல்பிலேயே நாம் சற்று முன் பேசிய அனைத்து உளத்தடைகளையும் கடந்தவனாக இருக்கலாம்” என்றான்.

சல்யர் “ஆம், போர்க்களங்களில் அரக்கர்கள் பேரழிவை உருவாக்குகிறார்கள். அவர்களிடமிருந்து வெளிவரும் குருதி வெறிகொண்ட தொல்விலங்கொன்று எளிதில் வெல்லப்பட இயலாதது” என்றார். சலன் “நம்மிடமும் ஆற்றல் மிக்க அரக்கர்கள் இருக்கிறார்கள். அவனை எதிர்கொள்ள அலம்புஷனை அனுப்புவோம்” என்றான். ஜயத்ரதன் “அலம்புஷன் வெறும் அரக்கன். அவனிடமிருப்பது கண்மூடி எழும் காற்றுவிசை மட்டுமே. கடோத்கஜன் அரக்கனின் குருதியில் ஷத்ரியன் முளைத்தெழுந்தவன். அவனை எதிர்கொள்வது மேலும் கடினம்” என்றான். சகுனி “அவர்கள் விந்தையான திறன்கள் கொண்டவர்கள் என்று ஒற்றர்கள் சொல்கிறார்கள். இடும்பவனத்திலிருந்து எந்த ஊர்திகளும் இன்றி கிளம்பி ஓரிரவில் குருக்ஷேத்ரம் வந்திருக்கிறார்கள்” என்றார்.

அவையில் வியப்பு ஒலித்தது. சல்யர் “எப்படி வந்தனர்?” என்றார். “அவர்களால் பறக்கவியலும். பறக்கும் அரக்கர் என்றே அவர்கள் அழைக்கப்படுகிறார்கள்” என்றார் சகுனி. துர்மதன் “அவர்கள் மரங்களிலிருந்து மரங்களுக்கு தாவுவார்கள். குரங்குகள் பறப்பதுபோல காற்றில் செல்லும் அவர்களின் வடிவம் இன்னும் என் விழிகளில் உள்ளது” என்றான். “அவர்களின் உடல்களும் அதற்காகவே தெய்வங்களால் அருளப்பட்டவை. குரங்குபோல சிறிய எடையற்ற கால்கள் கொண்டவர்கள். நமக்கெல்லாம் உடலின் எடையில் பெரும்பகுதி இடையும் கீழும்தான் உள்ளது. அவர்களுக்கு அது உடலெடையின் ஐந்திலொன்று மட்டுமே.” துச்சாதனன் “இயல்புக்கு மாறான உடல்கொண்ட எவரும் படைகளில் குலைவையும் அழிவையும் உருவாக்குவார்கள்” என்றான். “நான் கடோத்கஜனுடன் மற்போரிட்டிருக்கிறேன். என்னால் அவன் தோள்களை நிலைகொண்ட பாறை என்று மட்டுமே உணர முடிந்தது.”

“நாம் இக்களத்தில் வெல்ல இயலாதென்பதையா பேசிக்கொண்டிருக்கிறோம்?” என்றான் ஜயத்ரதன் எரிச்சலுடன். “அனைத்தையும் பேசித்தான் ஆகவேண்டும்” என்று சீற்றத்துடன் துர்மதன் சொன்னான். “நாம் பருந்துச்சூழ்கையை அமைப்பது தவிர்க்க இயலாது. அவர்கள் நம்மை சூழ்ந்துகொள்ளாமலிருக்க என்ன செய்யவிருக்கிறோம்?” லட்சுமணன் மெல்ல அசைந்து “அவர்கள் அனைவரும் இணைந்து சூழ்ந்துகொண்டால் நாம் பிதாமகரை மட்டும் முன்னிறுத்துவது…” என்று மெல்ல தொடங்க துரோணர் “நாம் பருந்துச்சூழ்கையை முன்பு அமைத்ததுபோல் எளிமையாக அமைக்கவில்லை. இந்தச் சூழ்கையை போர்த்தருணத்திலேயே கலைத்து நண்டோ தேளோ நாகமோ ஆக மாற்றிக்கொள்ள நம்மால் இயலும். இம்முறை பருந்தின் சிறகுகளில் முட்களும் கால்களில் கூருகிர்களும் உள்ளன. அதன் அலகின் இருபுறமும் கால்கள் எப்போதுமிருக்கும்” என்றார். “அவர்கள் ஒற்றை வீரனை நம்பி இல்லை என்பதை உளம் கொள்வோம். நாம் ஒற்றை வீரரை முன் நிறுத்துகிறோம். அவர்கள் பலர் என்பதையும் மறக்காமலிருப்போம்” என்றார்.

“பிதாமகர் பீஷ்மர் வெல்ல முடியாத களவீரர் என்பதை எவரும் மறுக்கவில்லை. ஆனால் நம் தரப்பிலும் மாவீரர் பலர் உள்ளனர். சைந்தவர் இருக்கிறார். பால்ஹிகர் இருக்கிறார். நாம் ஏன் மீள மீள இச்சூழ்கையை அமைக்கிறோம்?” என்றார் சல்யர். “ஏனெனில் பிதாமகரை மட்டுமே அவர்கள் அஞ்சுகிறார்கள். பிதாமகரிடம் மட்டுமே அர்ஜுனனின் வில் ஒருகணமேனும் தாழ்கிறது. அவரை நிறுத்தியே நாம் இப்போரை முன்னெடுக்க இயலும்” என்றார் துரோணர். சல்யர் மேற்கொண்டு பேசவிரும்பவில்லை என்பதுபோல் கையசைத்தார்.

பூரிசிரவஸ் “ஒரு படைவீரருக்குப் பின் மொத்தப் படையும் தன் ஆற்றலை செலுத்துவதற்குரியது பறவைச்சூழ்கைகள். பிதாமகரை நேற்று பருந்தின் அலகுமுனையென நிறுத்தினோம். இன்று அலகுக்குக் காவலென உகிர்களாக ஜயத்ரதரும் பால்ஹிகரும் தாங்களும் நானும் நின்றிருப்போம். கூர்கொண்டு புகுந்து பாண்டவப் படைகளுக்குள் சென்று பிளந்து கிழித்து அழிப்போம். இன்றைய போரில் பாண்டவப் படை மூன்றிலொன்றாக குறையவேண்டும். அவர்கள் எண்ணி பெருமிதம் கொள்ளும் சிலரேனும் களம்பட்டாக வேண்டும்” என்றான்.

துரியோதனன் “இன்று நாம் நிகர்நிலையில் நின்றிருக்கிறோம். முதல்நாள் போர் நமக்கு உகந்ததாக முடிந்தது. இவ்விரண்டாம் நாள் போர் அவர்களுக்கு வெற்றியாகியது. மூன்றாம் நாள் போரில் நாம் வென்றாக வேண்டும். இன்று நம்மை பார்த்தனோ பாஞ்சாலனோ ஊடுருவுவான் என்றால் நமது படைகளின் உளவிசை அழியும். நாம் எழ இயலாது” என்றான். சகுனி “மருகனே, நேற்று நம்மை ஊடுருவி துண்டுபடுத்த பீமனால் இயன்றதென்பது உண்மை. ஆனால் பீஷ்மர் கொன்று குவித்த பாஞ்சாலர்களின் எண்ணிக்கையை இன்று காலைதான் அறிந்தேன். அவர்கள் படை எண்ணியிரா அழிவுகளை கண்டுவிட்டது. இன்றும் பிதாமகரின் விசை குறையாது தொடருமென்றால் பாண்டவப் படையில் பெரும்பகுதி அழிந்துவிட்டிருக்கும்” என்றார்.

bowவெளியே கலைவோசை கேட்டது. அணுக்கக் காவலன் உள்நுழைந்து “பிதாமகர் பீஷ்மர்!” என்றான். அவையினரும் துரியோதனனும் எழுந்து கைகூப்பியபடி நிற்க வணங்கியபடி பீஷ்மர் உள்ளே வந்தார். எவரையும் பார்க்காமல் துரோணரின் அருகிலிருந்த பீடத்தில் சென்று அமர்ந்து கால்களை மடித்து வைத்துக்கொண்டார். கைகள் தாடியை நீவத் தொடங்கின. விழிகள் தழைந்திருந்தன. அவருடைய தாடி குருதிச்செம்மை கொண்டு முடியிழைகள் தடித்து பொற்கம்பிச் சுருள்கள்போல் இருந்தது. தோளில் கிடந்த குழலும் செந்நிறச் சடைத்திரிகளாகத் தெரிந்தது.

அவை பீஷ்மருக்கு வாழ்த்தொலி எழுப்பி வணங்கி மீண்டும் அமர்ந்தது. பூரிசிரவஸ் தலைவணங்கி “பிதாமகரே, இன்றும் பருந்துச்சூழ்கை அமைத்துள்ளோம். அலகென தாங்கள் நின்றிருக்க வேண்டுமென்றும் பருந்து தன் அலகால் பாண்டவப் படைகளை கிழித்து துண்டுபடுத்தி அளிக்கவேண்டுமென்றும் ஆசிரியர் துரோணர் விழைகிறார். அவ்வழியே பருந்தின் கால் உட்புகும்” என்றான். “ஆகுக!” என்று பீஷ்மர் எந்த உணர்வும் இன்றி சொன்னார். ஜயத்ரதன் “பிதாமகர் இன்னும் தன் முழு உருவை கொண்டு போரிடத் தயங்குகிறார் என்று அவையிலோர் எண்ணம் உள்ளது” என்றான்.

பீஷ்மர் சினத்துடன் “எவருக்கு அவ்வெண்ணம்?” என்றார். ஜயத்ரதன் “எனக்கு உள்ளதென்றே வைத்துக்கொள்ளுங்கள்” என்றான். “அறிவிலி” என்றபடி பீஷ்மர் கசப்புடன் முகம் திரும்பிக்கொண்டார். “நான் அறிவிலி என்பது இன்னொரு பக்கம் அமைக! பிதாமகரே, இந்த இரு நாட்களும் தாங்கள் ஆற்றல்மிக்க படைக்கருவிகளுடன் பொருதினீர்கள், பேரழிவை விளைவித்தீர்கள், ஐயமில்லை. ஆனால் நீங்கள் பயின்ற அரிய அம்புகள் எவையும் நேற்றும் முன்னாளும் களத்தில் எழவில்லை. உங்கள் நீண்ட வாழ்நாள் முழுக்க தேடியலைந்து ஈட்டிய அம்புகளெல்லாம் எங்கே? அனலெழுப்பவும் இடிமின்னல் உருவாக்கவும் ஒலியால் செவிதுளைக்கவும் விழியும் உளமும் மயங்கச்செய்யவும் ஆற்றல்கொண்ட அம்புகள் உங்களிடம் உள்ளன என்று கேட்டிருக்கிறேன்” என்றான்.

“அவையெல்லாம் வெறும் பேச்சுகள். அம்புவித்தைகள் பல உண்டு. அவை இத்தகைய அறப்போருக்குரியவை அல்ல. மாயங்கள் கோழைகளுக்குரியவை” என்றார் பீஷ்மர். துரியோதனன் பற்கள் நெரிபட, ஆனால் முகம் சிரிப்பென நீள “அறப்போரா? அது எங்கு நடக்கிறது, பிதாமகரே? இன்னும் அச்சொற்களை என் முன் உரைக்காதீர்கள்” என்றான். இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடியை அறைந்து “என் இளமைந்தர் தலையறைந்து விழுவதை என் கண்ணால் கண்டேன். அவர்களின் குருதியை முகத்தில் பூசி நின்றாடிய வெறியனை நேற்றிரவெல்லாம் என் கனவில் கண்டு விழித்தெழுந்துகொண்டிருந்தேன். மதுவருந்தி மயக்கமருந்து உண்டு அவன் முகத்தை மறைக்க முயன்றேன்” என்றான். அவன் உளவிசையால் எழுந்துவிட்டான். “எது அறம்? இன்னும் நீங்கள் சொற்களால் உங்களை ஏன் தளையிட்டுக் கொள்கிறீர்கள்?” என்றான்.

பீஷ்மர் “நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும். உன் அவையில்தான் அந்தணர் வந்து ஆணையிட்டனர், நஞ்சும் நீரும் விழிசெவிச் சூழ்ச்சிகளும் உளமாயங்களும் இப்போரில் இடம்பெறலாகாது என்று. ஆம் என்று சொல்லளித்தவன் நீ” என்றார். “ஆம், ஆனால் அச்சொற்கள் அனைத்தும் நேற்றே இறந்தன. என் குடி மைந்தர் இறந்தபோதே அனைத்து நெறிகளும் அழிந்தன. இனி எதற்கும் நான் கட்டுப்பட்டவன் அல்ல. அந்தணர் அல்ல, தேவர்களும் கந்தர்வர்களும் அல்ல, புடவியாளும் மூன்று தெய்வங்களும் எழுந்து வந்தாலும் அவர்களிடம் சொல்ல எனக்கு இனி ஒன்றே உள்ளது. இனி எனக்கு நெறிகள் இல்லை. நஞ்செனில் நஞ்சு, நெருப்பெனில் நெருப்பு ,வென்று இக்களம்விட்டுச் செல்வதொன்றே என் இலக்கு” என்றான்.

பீஷ்மர் “நான் என் நெறிகளை நானே வகுத்துக்கொண்டவன்” என்றார். “அதைத்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நெறியென்ற பேரில் உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்கிறீர்கள். ஆகவே அவர்கள் எழவும் நம் மைந்தரை நம் கண்முன்னில் தலையுடைத்துக் கொல்லவும் வழிவகுக்கிறீர்கள். பிதாமகரே, நேற்று நம் களத்தில் நிகழ்ந்த அருங்கொலைகளுக்கு பொறுப்பேற்க வேண்டியவர் நீங்கள் மட்டுமே” என்றான். துரோணர் “என்ன பேச்சு இது?” என்றார். “பிதாமகர் அல்ல, இங்கே அவையமர்ந்திருப்பவர் நம் முதன்மை வீரர்.”

பீஷ்மர் அவரை கையமர்த்திவிட்டு “ஆம், நானே பொறுப்பு. அதை மேலும் மேலும் உணர்கிறேன். இவ்வழிவெல்லாம் என்னால்தான். ஆம், மெய்தான்” என்றார். அவர் குரலில் எவ்வுணர்வும் இருக்கவில்லை. “இப்போரில் நெறிநின்றமைக்காக பழி கொள்கிறேன் எனில் அவ்வாறே ஆகுக! நெறிக்குமேல் எழுவது ஷத்ரியனின் வீரம் என்று எண்ணியிருந்தேன் எனில் இப்போரே நிகழ்ந்திருக்காது. என் குருதிவழியினர் மோதி களம்படும் காட்சியைக் கண்டு இரவெலாம் துயிலழிந்து விண்மீன்களை நோக்கி வெறுமைகொண்டு நிற்கவும் நேரிட்டிருக்காது.”

கைகளைத் தூக்கி ஏதோ சொல்லவந்து சொல்சிக்காது உழன்று மீண்டு “இந்த மணிமுடி என்னிடம் வந்தபோது சௌனகரின் தந்தை காதரர் சொன்னார், ஷத்ரியனின் கடன் முடிகொள்வதே என்று. நல்லாட்சியே அனைத்தறம் என்று. எளிய மானுடரின் நெறிகளால் ஷத்ரியனின் தனியறத்தை மீறவேண்டாம் என்று. நான் என் தந்தைக்கும் தாய்க்கும் அளித்த சொல்லை கடக்கவில்லை. நான் காத்து நின்ற நெறியால்தான் இவையனைத்தும் நிகழ்கின்றன. நன்று, இத்தனை நாள் காத்த அந்நெறியை இனியும் காத்து நிற்கிறேன். அதன்பொருட்டு களம்படுவேன் என்றால் அதுவும் ஆகுக!” என்றார்.

சல்யர் “நாம் இவற்றைப் பற்றியெல்லாம் பேசி பொழுது கழிக்க வேண்டியதில்லை. இன்றைய படைசூழ்கையை முடிவு செய்வோம்” என்றார். “அதில் பேச ஒன்றுமில்லை. அந்த முடிவு எடுக்கப்பட்டுவிட்டது” என்று துரியோதனன் சொன்னான். “இன்னும் முடிவெடுக்க வேண்டியது பிதாமகர் பீஷ்மர் தன் அனைத்துத் தடைகளையும் கடந்து முழு விசையுடன் போரிடுவாரா என்பதொன்றைத்தான்.” பீஷ்மர் “இல்லை, எனது நெறிகளுக்குள் நின்றே போரிடுவேன்” என்றார். துரியோதனன் மேலும் பேசுவதற்குள் பூரிசிரவஸ் “தாங்கள் கொள்ளும் முழு விசை எங்களுக்கு உதவட்டும், பிதாமகரே. தங்களை நம்பி களம் வருகிறோம். எங்களுக்கு வெற்றி ஈட்டித் தருக!” என்றான். “நான் போரிடுகிறேன். வெற்றியும் தோல்வியும் தெய்வங்களின் முடிவு” என்றார் பீஷ்மர். அவர் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தார்.

பூரிசிரவஸ் “இதுவே அவையின் ஆணை. இந்த அவையை இப்போதே முடிவு செய்வோம். இன்னும் அரைநாழிகைக்குள் புலரவிருக்கிறது” என்றான். பூரிசிரவஸ் கைகாட்ட அவை நிறைவை அறிவிக்கும்பொருட்டு அமைச்சர் எழுந்தார். அவையினர் தங்கள் வாள்களையும் வேல்களையும் தூக்கி வாழ்த்தொலி எழுப்பினர். துரியோதனன் எழுந்து தலைவணங்கி அவையிலிருந்து வெளியே சென்றான். பீஷ்மர் எழுந்துகொள்ள துரோணர் அவர் அருகே சென்று தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டு உடன் நடந்தார். லட்சுமணன் பெருமூச்சுடன் அவையை நோக்கி நின்றான். அவை மூலையிலிருந்து அவனை நோக்கி வந்த துருமசேனன் அவன் அருகே நின்றான். அவனை நோக்கிவிட்டு லட்சுமணன் வெளியே நடந்தான்.

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 19

bowமுற்புலரியில் கடோத்கஜன் அணிந்தொருங்கி கிளம்பியபோது ஒரே தருணத்தில் வியப்பும் ஏமாற்றமும் அசங்கனுக்கு ஏற்பட்டது. இடையில் அனல்நிறப் புலித்தோல் அணிந்து, தோளில் குறுக்காக இருள்வண்ணக் கரடித்தோல் மேலாடையை சுற்றி, கைகளிலும் கழுத்திலும் நீர்வண்ண இரும்பு வளையங்கள் பூட்டி, தலையில் செங்கருமையில் வெண்பட்டைகள் கொண்ட பெருவேழாம்பல் சிறகுகள் சூடி அவன் சித்தமாகி வந்தான். வானம் பின்னணியில் விண்மீன்களுடன் விரிந்திருக்க மயிரிலாத அவனுடைய பெரிய தலை முகில்கணங்களுக்குள் இருந்தென குனிந்து அவனை பார்த்தது. அசங்கன் உடல்மெய்ப்பு கொண்டான். சற்றுநேரம் அவனுக்கு குரலெழவில்லை.

கடோத்கஜன் “நான் நீண்டபொழுது எடுத்துக்கொள்ளவில்லை அல்லவா?” என்றான். “இல்லை, மூத்தவரே” என மூச்சிரைத்து பின் மீண்டு “இங்கு குடித்தலைவர்கள் இந்த ஆடையை அணிந்தே வருகிறார்கள்” என்றான் அசங்கன். “நீங்கள் அவர்களை அரசர்களென ஒப்பாவிட்டாலும் தங்கள் குடிக்கு அவர்கள் அரசர்களே” என்ற கடோத்கஜன் அவன் தோளில் எடைமிக்க கைவைத்து “செல்வோம்” என்றான். வெறும் தொடுகையிலேயே எப்படி பேராற்றலை உணரமுடிகிறது என அசங்கன் வியந்தான். யானையின் துதிக்கை மிக மெல்ல தோளில் படிகையில் அவ்வாறு பேராற்றலை அவன் உணர்ந்ததுண்டு என எண்ணிக்கொண்டான்.

யுதிஷ்டிரரின் அவைமாளிகைக்குச் செல்லும் பாதையின் முகப்பிலேயே பிரதிவிந்தியன் தன் உடன்பிறந்தாருடன் அவர்களுக்காக காத்து நின்றிருந்தான். அசங்கன் “உங்கள் உடன்பிறந்தார், மூத்தவரே” என்றான். கடோத்கஜன் “தெரிகிறது, முதலில் நிற்பவன் பிரதிவிந்தியன், அவனுக்குப் பின்னால் நிற்பவன் யௌதேயன். இருவரும் மூத்த தந்தையைப் போலவே இருக்கிறார்கள். அவர் எங்கள் காட்டுக்கு வந்திருந்தபோது இதே போன்ற முகத்துடன் இருந்தார்” என்றான். “அவனுக்குப் பின்னால் நிற்பவர்கள் நகுலரின் மைந்தர்கள் சதானீகனும் நிர்மித்ரனும். அவர்கள் இளைய தந்தை சகதேவரின் வார்ப்புத் தோற்றம் கொண்டுள்ளனர்.”

கடோத்கஜனின் உடலே மகிழ்ச்சியிலாடி நகைப்பதுபோல அசங்கனுக்கு தோன்றியது. “நானே சொல்கிறேன். அதோ பின்னால் நிற்பவன் சுருதகீர்த்தி, இன்னொருவன் சுருதசேனன்” என்றான். விலகி பின்னால் நின்றிருந்தவர்களை நோக்கி “அப்பெருந்தோளர்களை சொல்லவே வேண்டாம். அவர்களில் முன்னால் நிற்பவன் சுதசோமன், பின்னால் நிற்பவன் சர்வதன்” என்றான். “அடுமனை வாழ்க்கை தெரிகிறது உடலில்” என்று சொல்லி தலையை அசைத்து சிரித்தான்.

கடோத்கஜனுடன் உத்துங்கனும் உடன்வந்தான். தொலைவிலேயே அவர்களை பார்த்த பிரதிவிந்தியன் கைகளைக் கூப்பியபடி இருபுறமும் சதானீகனும் சுருதகீர்த்தியும் நிர்மித்ரனும் சுருதசேனனும் வணங்கியபடி உடன்வர அருகணைந்தான். “நீங்கள் முறைமைச்சொல் உரைக்கவேண்டும், மூத்தவரே. அவர்கள் உங்களை வணங்கினால் புகழும் செல்வமும் நல்வாழ்வும் அமைக என வாழ்த்தவேண்டும்” என்றான் அசங்கன். “இன்னொருமுறை சொல்” என்றான் கடோத்கஜன். “புகழும் செல்வமும் நல்வாழ்வும் அமைக என்று…” என்றான் அசங்கன்.

பிரதிவிந்தியன் அரசமுறைப்படி சீரான நடையுடன் வர கடோத்கஜன் சிறிய வளைந்த கால்களில் தாவித்தாவி சென்றான். இரு கைகளையும் விரித்து உரக்க நகைத்தபடி பிரதிவிந்தியனை அணுகினான். பிரதிவிந்தியனை தூக்கி தலைக்கு மேல் வீசப்போகிறான் என்று எண்ணியதுமே திகைப்பெழ அசங்கன் நின்றுவிட்டான். பிரதிவிந்தியன் குனிந்து கடோத்கஜனை கால்களைத் தொட்டு வணங்கி “வணங்குகிறேன், மூத்தவரே. தங்கள் காலடிகளை வணங்கும் பேறு வாய்த்தது” என்றான்.

கடோத்கஜன் அவன் இரு தோள்களையும் பற்றி மேலே தூக்கி தன் நெஞ்சோடணைத்துக் கொண்டான். பிரதிவிந்தியனின் கால்கள் காற்றில் தவித்தன. கடோத்கஜன் அவன் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டு நிலத்தில் நிறுத்திவிட்டு பிற உடன்பிறந்தாரை நோக்கி கைவிரித்தான். அவர்கள் குனிந்து வணங்கி முறைச்சொல் உரைப்பதற்குள்ளாகவே ஒவ்வொருவராக பாய்ந்து பற்றி இழுத்து உடலுடன் சேர்த்துக்கொண்டு முத்தமிட்டான். அவன் விட்டதுமே உத்துங்கனும் பிரதிவிந்தியனையும் இளையவர்களையும் அள்ளி அணைத்து முத்தமிட்டான். பிரதிவிந்தியன் திகைத்தாலும் உடனே புரிந்துகொண்டு நகைத்தான்.

கடோத்கஜன் நிர்மித்ரனை அவன் எதிர்பாராத கணம் தூக்கி மேலே வீசிப்பிடித்து சுழற்றினான். சதானீகனை உத்துங்கன் தூக்கி வீசிப் பிடித்தான். அவர்கள் கூவி கைவிரித்து நகைத்தனர். அனைத்து முறைமைகளும் அகல அவர்களனைவருமே கடோத்கஜனின் உடலுடன் ஒட்டிக்கொண்டிருக்க விழைந்தார்கள். அவர்களை அவன் வீசிப்பிடித்தான். குடுமியைப்பற்றிச் சுழற்றினான். தூக்கி உத்துங்கனை நோக்கி எறிய அவன் பற்றிக்கொண்டு திரும்ப வீசினான். மூச்சிரைக்க சிரிப்பு முகத்தில் அசையாச் சுடர் என நின்றிருக்க அவர்கள் ஓய்ந்தனர்.

நிர்மித்ரன் “தாங்கள் மூதன்னை குந்திதேவியை இப்படி தூக்கி வீசி விளையாடுவீர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்” என்றான். “ஆம், அது நெடுங்காலம் முன்பு… அன்று நான் இளமையாக இருந்தேன். என் தலையில்கூட புன்மயிர் இருந்தது” என்று அவன் சொன்னான். “அன்றே தாங்கள் பேருருவர் என்றார்கள்” என்றான் சதானீகன். “அரக்கர்கள் அனைவருமே பேருருவர்கள். உங்கள் தோழர்களும் தங்களைப்போல இருக்கிறார்கள்” என்றான் சுருதசேனன். “ஆம், இன்று படைகளில் எங்களைத்தான் அனைவரும் பார்த்தார்கள்” என்றான் கடோத்கஜன். “போர்க்களத்தில் கௌரவர்கள் உங்களை பார்க்கப்போகிறார்கள்” என்றான் சுருதசேனன். கடோத்கஜன் “ஆம்! ஆம்! பார்ப்பார்கள்… முழு உருவை பார்ப்பார்கள்” என்று கூவி தன் தோள்களில் அறைந்துகொண்டு நகைத்தான்.

சதானீகன் “இப்போது தாங்கள் வந்திருப்பது ஏக்கத்தையே அளிக்கிறது, மூத்தவரே. முன்னரே இந்திரப்பிரஸ்தத்திற்கு தாங்கள் வந்திருந்தால் மகிழ்ந்து கொண்டாட எத்தனையோ தருணங்களிருந்தன” என்றான். “போரும் மகிழ்ந்து கொண்டாடுவதற்கு உரியதுதானே?” என்று சொன்ன கடோத்கஜன் “நாம் போரை கொண்டாடுவோம்! போரிலாடுவோம்!” என்றான். சுருதகீர்த்தி “ஆம், போரை கொண்டாடுவோம்!” என்றான். “நம் இளையோர் அனைவரும் இங்குள்ளனரா?” என்றான் கடோத்கஜன். “இல்லை, அபிமன்யூவை நாங்கள் பார்ப்பதே இல்லை. அவன் தனக்கான தனி வழிகள் கொண்டவன்” என்றான் பிரதிவிந்தியன்.

கடோத்கஜன் திரும்பி அப்பால் நின்றிருந்த சுதசோமனையும் சர்வதனையும் பார்த்து “எந்தையின் மைந்தர்… என்ன ஆயிற்று அவர்களுக்கு?” என்றபின் குரல் தாழ்த்தி “முறைமையா?” என்றான். பிரதிவிந்தியன் “அவர்கள் தாங்கள் பெருந்தோளர்கள் என்னும் எண்ணம் கொண்டிருந்தார்கள். தங்களை பார்த்ததுமே உளம் சுருங்கிவிட்டனர்” என்றான். கடோத்கஜன் புரியாமல் “ஏன்?” என்றான். “தங்கள் தோள்களை பார்த்தால் தேவர்களே பொறாமை கொள்வார்கள், மூத்தவரே” என்றான் சதானீகன். கடோத்கஜன் நகைத்தபடி அவர்கள் அருகே செல்ல நாணத்தால் முகம் சிவந்த சர்வதன் “அவ்வாறல்ல, மூத்தவரே. ஆனால்…” என்றான். சுதசோமன் “எனக்கு எவரிடமும் பொறாமை இல்லை” என்றான்.

கடோத்கஜன் அவன் தோளை வெடிப்போசை எழ ஓங்கி அறைய சர்வதன் இரண்டடி பின்னால் நகர்ந்தான். மற்போருக்கு நிற்பதைப்போல் சற்றே குனிந்து இரு கைகளையும் விரித்து நின்றான் கடோத்கஜன். சர்வதன் பாய்ந்து கடோத்கஜனை மார்பில் தலையால் அறைய கடோத்கஜன் பின்னால் சரிந்தான். அதே விசையில் சர்வதன் கடோத்கஜனின் கால்களை தன் கால்களால் அறைந்தான். கடோத்கஜன் பின்னகர்ந்து நிலை தடுமாறி தரையில் பேரோசையுடன் வீழ்ந்தான். மறுகணமே கையூன்றி தாவி எழுந்து நின்றான். சிரித்தபடி “தரையில் நான் ஆற்றல் குறைந்தவன், இளையோனே. உங்களுடன் எதிர்நிற்க என்னால் இயலாது” என்றான்.

“ஆம், தங்கள் கால்கள் ஆற்றலற்றவை. தரையில் அழுந்த ஊன்றுவதுமில்லை” என்றான் சர்வதன். சுதசோமன் அப்போதுதான் அதை நோக்கியவன்போல முன்னால் வந்தான். “ஆம். விந்தையானவை” என்றான். “மூத்தவரே, தங்கள் கால்கள் குரங்குகளின் கால்கள் போலுள்ளன” என்று நிர்மித்ரன் சொன்னான். “குரங்குகளைப்போல மரங்களைப் பற்றும் கால்கள்!” என்றான் சதானீகன். குனிந்து நோக்கிய நிர்மித்ரன் “இன்று போர்க்களத்தில் எவ்வாறு செல்வீர்கள்?” என்றான். “நாங்கள் பறக்கும் அரக்கர்கள். தேர்களுக்கு மேல், யானைகளுக்கும் புரவிகளுக்கும் மேல்” என்றான் கடோத்கஜன். பின்னர் சுதசோமனை நோக்கி “உன் தோள்வல்லமையை பார்ப்போம்” என்றான். அவன் “ஆம்” என்றான்.

கடோத்கஜன் இரு கைகளையும் விரித்து வரும்படி அழைத்தான். சுதசோமன் மற்போர் முறையில் நிலைமண்டிலமாக நின்று இரு கைகளையும் விரித்து கூர்ந்துநோக்கியபடி மெல்ல அணுகினான். ஒருகணத்தில் அறைவோசையுடன் இருவரும் பாய்ந்து உடல்முட்டிக்கொண்டனர். ஒருவர் ஒருவரை கவ்வியபடி பெருந்தோள்கள் பின்னி முறுகி தசையதிர விசைநிகர் கொண்டு சுற்றிவந்தனர். இரு உடல்களும் ஒன்றையொன்று உந்தி தசைகள் இழுபட்டு தெறிக்க மெல்ல சுழன்றன. ஓசையில்லாமல் வெறும் விழிகளாலேயே உள்ளம் உடைந்து தெறிக்குமளவுக்கு பெருவிசையை உணரமுடிவது அசங்கனை வியப்பிலாழ்த்தியது.

தசைகள் உரசிக்கொள்ளும் முறுகலோசை எழுந்தது. ஒருகணத்தில் தன் காலால் கடோத்கஜன் காலை தடுக்கி அவனை பின்னால் தள்ளி விழவைத்தான் சுதசோமன். அவன் மல்லாந்து விழ அவன் மேல் தான் விழுந்து அவனுடைய இரு கால்களையும் தன் கால்களால் பின்னிக்கொண்டு தோளை நிலத்துடன் அழுத்திக்கொண்டான். கடோத்கஜன் நகைக்க சுதசோமன் எழுந்து நின்று கைநீட்டி அவனை தூக்கினான். சர்வதன் பாய்ந்து கடோத்கஜனை தழுவிக்கொள்ள அவர்கள் மூவரும் உடல் தழுவி மாறி மாறி தோள்களில் தட்டிக்கொண்டு நகைத்தனர். பிரதிவிந்தியன் “இப்போது இருவரும் நிறைவுற்றிருப்பார்கள். இனி இப்புவியில் அவர்களை வெல்ல எந்தையும் பால்ஹிகரும் மட்டும் உள்ளனர்” என்றான். கடோத்கஜன் “ஆம், பெருந்திறலோர் இவர்” என்றான்.

சர்வதன் “நான் அகன்று நின்று நோக்குகையில் தெரிகிறது மூத்தவரே, நீங்கள் எங்களை வெல்லவிடுகிறீர்கள்” என்றான். “ஏன் சொல்கிறாய்?” என்று கடோத்கஜன் கேட்டான். “உங்கள் பெருங்கைகளுக்கு எங்கள் உடல்கள் ஒரு பொருட்டே அல்ல. உங்களுடன் போரிட வேண்டுமென்றால் ஒன்றே வழி. உங்கள் கைகளுக்கு சிக்கக் கூடாது. நீங்கள் அறைவதை ஒழிந்துகொண்டே இருக்கவேண்டும்” என்றான். கடோத்கஜன் அவன் தோளை அறைந்து நகைத்தான். சுதசோமன் “ஆம், நானும் இப்போது அதை உணர்கிறேன். முழு வல்லமையையும் கைகளுக்கு அளிக்காமல் ஒழிந்தீர்கள்” என்றான். “நாம் பிறிதொருமுறை மெய்யாக போரிடுவோம்” என்றான் கடோத்கஜன்.

“மூத்தவரே, நீங்கள் தந்தை பீமசேனரை வெல்லக்கூடுமா?” என்றான் சர்வதன். “அவரை எவரும் வெல்லமுடியாது…” என்றான் கடோத்கஜன். “அவரை வெல்லற்கரியவராக ஆக்குவதே என் கடமை.” “அவரை இன்னும் முதுதந்தை பால்ஹிகர் களத்தில் சந்திக்கவில்லை. அவர்களின் போரை அனைவரும் எண்ணி நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் சர்வதன். “நீங்கள் இன்று களத்தில் பால்ஹிகரை எதிர்கொள்க, மூத்தவரே!” என்றான் சுதசோமன். “நாங்களும் வருகிறோம். மூவரும் சேர்ந்து அவரை சூழ்ந்து கொள்வோம்” என்றான். “ஆம், அவரை களத்தில் எதிர்ப்போம்” என்றான் கடோத்கஜன்.

“நேற்றும் இன்றும் களத்தில் அவராடிய கொலையாடல் எண்ண எண்ண மெய்ப்புகொள்ளச் செய்வது. அசைக்க முடியத பெரும் கதாயுதம் ஒன்றை சங்கிலியால் கட்டித் தூக்கி யானை மேல் அமர்ந்திருக்கிறார். ஒரே அறையில் தேர்களை சிம்புகளாக தெறிக்கவிடுகிறது அது. யானைகள் எலும்புடைந்து விழுந்து குருதி பெருகுகிறது. புரவிகள் சிறு பேன்களைப்போல் நொறுங்கித் தெறிக்கின்றன. அவர் இருக்கும் இடத்தை எவரும் அணுக இயலவில்லை. எடைமிக்க கவசங்கள் அணிந்திருப்பதால் அம்புகள் எவையும் அவரை வீழ்த்துவதுமில்லை. ஒரு நிறைவுறா மூதாதை விண்ணிறங்கி பலிகொள்ள வந்ததுதான் அவர் என்று வீரர்கள் சொல்கிறார்கள்” என்றான் சுருதகீர்த்தி.

“மூதாதையை களத்தில் எதிர்கொள்வது என்பது ஒரு பேறு” என்றான் கடோத்கஜன். பிரதிவிந்தியன் “அவை கூடியிருக்கிறது. வருக!” என்றான். அவர்கள் யுதிஷ்டிரரின் அவைமாளிகை நோக்கி செல்கையில் பிரதிவிந்தியன் “தங்கள் வேங்கைத்தோலாடை பேரழகு கொண்டிருக்கிறது. மூத்தவரே, தொலைவிலிருந்து பார்க்கையில் சிறிய தந்தைக்கு பாசுபதம் அளித்த வெள்ளிமலை கிராதனே எழுந்து வருவதுபோல் தோன்றியது” என்றான். சதானீகன் “கிராதனுக்கு சடைத்தொகை உண்டு அல்லவா?” என்றான். கடோத்கஜன் அவன் தோளை மெல்ல அறைந்து உரக்க நகைத்தான்.

bowயுதிஷ்டிரரின் அவைக்குள் கடோத்கஜன் உத்துங்கன் தொடர நுழைந்தபோது அங்கிருந்தவர்கள் சேர்ந்தெழுப்பிய வியப்பொலி வாழ்த்துபோல் ஒலித்தது. கடோத்கஜன் அவையை நோக்கி வணங்கி “என் பெயர் கடோத்கஜன். நான் என் தந்தைக்கு உதவும்பொருட்டு போரிட வந்தேன்” என்றான். யுதிஷ்டிரர் சிரித்து “எங்கே முறைமைச்சொல் எதையாவது உனக்கு பயிற்றுவிப்பதில் சாத்யகியின் மைந்தன் வெற்றிபெற்றிருப்பானோ என அஞ்சினேன்… நன்று. அமர்க!” என்றார். கடோத்கஜன் அமர்ந்து கால்களைத் தூக்கி இருக்கைமேல் மடித்து வைத்துக்கொண்டான். இரு கைகளும் இருபக்கமும் தொங்கின. அவனருகே தரையில் உத்துங்கன் அமர்ந்தான்.

“இருக்கை உள்ளது” என ஏவலன் மெல்ல சொல்ல உத்துங்கன் “இல்லை, எனக்கு தரையிலமர்வதே உகந்தது” என்றான். யுதிஷ்டிரர் “மைந்தா, இன்று நிகழவேண்டிய போரைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நேற்றைய போரில் நாம் வென்றுள்ளோம். அவர்களுக்கு பேரிழப்பு. அவர்களின் சூழ்கையை இளையோன் உடைத்துவிட்டான் என்பதே அவர்களுக்கான செய்திதான். இன்றும் நாம் வென்றாகவேண்டும்… அதன்பொருட்டே நாம் படைசூழ்கை அமைத்துள்ளோம்” என்றார்.

“படைசூழ்கை என்றால் என்ன?” என்றான் கடோத்கஜன். அவை நகைக்க பீமன் “உனக்கு கல்வி கற்பிக்கும் இடமல்ல இது. அமைதியாக இருந்து பேசுவதை செவிகொள்க!” என்றான். கடோத்கஜன் தலைவணங்கினான். யுதிஷ்டிரர் “சொல்லும் திருஷ்டத்யும்னரே, இன்றைய சூழ்கை என்ன?” என்றார். “இன்றும் அவர்கள் பருந்துச்சூழ்கை அமைக்கவே வாய்ப்பு” என்றான் திருஷ்டத்யும்னன். “ஏனென்றால் பீஷ்மரை மையமாகக் கொண்ட சூழ்கையையே அவர்கள் அமைக்கவியலும்… ஆனால் நாரைச்சூழ்கை அமைத்து பீஷ்மரை நம் படைகளுக்குள் ஊடுருவ விடமாட்டார்கள்… பீமசேனர் நேற்று பருந்தின் கழுத்தையே உடைத்துவிட்டபின் நீள்கழுத்துள்ள சூழ்கையை அமைப்பது அறிவின்மை.”

“அவர்கள் இம்முறை பருந்தின் கழுத்தை மும்மடங்கு வலுவாக அமைப்பார்கள்” என்றான் திருஷ்டத்யும்னன். “சென்றமுறை ஆற்றல்குறைவான கலிங்கர்களை அங்கே நிறுத்தியதுபோன்ற பிழையை செய்யமாட்டார்கள்.” அவன் தன் கையிலிருந்த தோல்சுருளை நீட்ட அதை ஏவலன் வாங்கி யுதிஷ்டிரருக்கு அளித்தான். “நாம் கழுகை பிடிக்கும் வலுவான வலை ஒன்றை அமைப்போம். நம் படைக்கு அரைநிலவுச் சூழ்கையை அமைத்திருக்கிறேன். அணைக்க விரிந்த மல்லனின் கைகளைபோல அது விரிந்திருக்கும். நம் வீரர்கள் அனைவருமே முன்னணியில் இருப்பார்கள். நாம் இலக்காக்குவது ஒன்றே, முடிந்தவரை அனைவரும் சேர்ந்து தாக்கி பீஷ்ம பிதாமகரை இன்றே வெல்வது…”

“ஆம், அவரை வெல்லாமல் இனி நாம் படைநடத்தவே இயலாது. நம் படைகள் பாதிப்பங்கு அவரால் கொல்லப்பட்டுவிட்டன” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “இனி எவரும் தனித்தனியாக பிதாமகரை எதிர்கொள்ள வேண்டியதில்லை. அது இயலாதென்பது உறுதியாயிற்று. நம் படையின் அனைத்து வில்லவரும் இணைநிரையாக நிற்கட்டும். வலை விரிந்து விரிந்து அவரை உள்ளே இழுத்துக்கொண்டு சுருங்கிச் சூழ்ந்து அழிக்கட்டும்” என்றான். குந்திபோஜர் “ஒரே ஒருவரை முன்வைத்த போர்” என முனகினார். திருஷ்டத்யும்னன் அவரை நோக்கி திரும்பி “ஆம், மெய். ஆனால் அவர்கள் எடுப்பதும் ஒற்றை ஒருவரை மையமாக்கிய சூழ்கையே” என்றான்.

யுதிஷ்டிரர் சுருளைச் சுருட்டி பீமனிடம் அளித்துவிட்டு “நன்றாகவே உள்ளது. இது வெல்லவேண்டும்” என்றார். பீமன் நோக்கிவிட்டு “ஆம், இதைவிடச் சிறந்த சூழ்கை இயல்வதல்ல” என்றான். சாத்யகி “படைமுகப்பில் நிற்பவர்களில் வில்லவர் அல்லாதோர் எவர்?” என்றான். “நான் நிற்கிறேன்” என்றான் பீமன். பின்னர் “என் மைந்தனும் முன்னிரையில் நிற்கட்டும்…” என்றான். திருஷ்டத்யும்னன் “அவர்களை பார்த்தேன்… அவர்களிடம் படைக்கருவிகள் இல்லை. விற்களை கேட்டும் அறியாதோர் போலிருக்கிறார்கள். தேரிலோ புரவியிலோ ஊர்வதற்கும் பயிற்சியில்லை. அவர்களை எப்படி முன்னணியில் நிறுத்துவது?” என்றான்.

“அவர்களைப்பற்றி நான் நன்கறிவேன்” என்றான் பீமன். “இப்போரில் அவர்களே முதன்மை வீரர்கள் நம் தரப்பில். அவர்களின் விசையை நாம் தேரிலேறியும் அடையமுடியாது.” திருஷ்டத்யும்னன் “எங்ஙனம்? அதை சொல்லுங்கள்” என்றான். “அவர்கள் காற்றின் மைந்தர்… காற்றே அவர்களின் ஊர்தி” என்றான் பீமன். திருஷ்டத்யும்னன் “நீங்கள் சொன்னால் மறுசொல்லில்லை. ஆனால்…” என்றான். “களத்தில் காண்போம்” என்றான் பீமன். அசங்கன் திரும்பி கடோத்கஜனை நோக்கினான். அந்தப் பேச்சே தன்னைப்பற்றியதல்ல என்பதுபோல் அவன் அமர்ந்திருந்தான். மெய்யாகவே அங்கு பேசப்படுவன அவனுக்கு புரியவில்லை என்று தெரிந்தது.

“சூழ்கைக்கான ஆணைகள் எழுதப்பட்டுள்ளன எனில் அவற்றுக்கு அமைச்சர்களே அரசச்சாத்து அளிக்கட்டும்… அவை கலையலாம்” என்றபடி யுதிஷ்டிரர் எழுந்தார். அவையினரும் எழுந்தார்கள். நிமித்திகன் எழுந்து சங்கொலி எழுப்பி யுதிஷ்டிரரின் புகழ்கூறி அவை கலைவதை அறிவித்தான். யுதிஷ்டிரர் கைகூப்பியபடி நகுலனும் சகதேவனும் தொடர நடந்து வெளியே சென்றார். பீமன் அவைமேடையில் இருந்து கீழிறங்கி வந்து கடோத்கஜனை அணுகி அவனை நோக்காமல் கடுமையான குரலில் “சென்று இளைய யாதவரை வணங்கி வாழ்த்து கொள்க!” என்றான்.

கடோத்கஜன் இளைய யாதவரை சில கணங்கள் நோக்கிவிட்டு “தாங்கள் சொன்னால் நான் வாழ்த்து கொள்கிறேன், தந்தையே. ஆனால் நான் இவரிடம் வாழ்த்து கொள்ள விரும்பவில்லை” என்றான். பீமன் சினத்துடன் கையை ஓங்கியபடி திரும்பி “என்ன சொல்கிறாய், அறிவிலி?” என்று கூவினான். இளைய யாதவர் புன்னகையுடன் நோக்க பீமன் தன்னை அடக்கி “நீ சொல்வதென்ன என்று அறிவாயா?” என்றான். கடோத்கஜன் “நான் இங்கு வந்த பின்னர்தான் அறிந்துகொண்டேன். இந்தப் போரே இவருக்காகத்தான். இவர் சொல்லும் எதையோ இங்கே நிலைநாட்டத்தான்” என்றான். பீமன் உரக்க “ஆம், அவருடைய சொல் நிலைகொள்ளும்பொருட்டே இப்போர்” என்றான்.

“தந்தையே, எவருடைய சொல்லும் மானுடரின் அழிவுக்கு நிகரானதல்ல. சொல்லுக்காக மானுடர் சாவதைப்போல் வீண்செயல் வேறில்லை” என்றான் கடோத்கஜன். “அவ்வாறென்றால் நீ ஏன் இங்கே வந்தாய்?” என்று பீமன் கூவியபடி மீண்டும் கடோத்கஜனை அறைய கையோங்கினான். அவனை அஞ்சாமல் நோக்கி கடோத்கஜன் “தங்களுக்காக” என்றான். “நான் என் மூதன்னைக்கு அளித்த சொல்லுக்காக. அதன்பொருட்டு கொல்கிறேன். ஆனால் ஒரு மானுடன் இன்னொருவனை கொல்லவேண்டுமென்றால் அது தனிப் பகைக்காகவும் தனிப் போரிலும் மட்டுமே நிகழவேண்டும். பிற இறப்புகள் அனைத்தும் வீண்கொலையே.”

“நீ எனக்காக வரவேண்டியதில்லை… கிளம்பு… என் ஆணை, கிளம்பு!” என்று பீமன் கூவினான். கடோத்கஜனின் தோளைப்பற்றி தள்ளி “செல்… இப்போதே செல்!” என்றான். “அதை சொல்லவேண்டியவர் உங்கள் மூத்தவர், பாண்டவரே” என்றார் இளைய யாதவர். “அல்லது நான்.” பீமன் தளர்ந்து “இவன், இந்த அறிவிலி…” என்று கைசுட்டி நடுங்கினான். அவன் முகம் சிவந்து மூச்சிரைத்தது. சுடரொளியில் முகம் வியர்வையால் மின்னியது. “அவர் தன் தொல்மரபிலிருந்து பெற்ற மெய்மையை சொல்கிறார்” என்றார் இளைய யாதவர். “ஆனால் இப்போரில் ஒவ்வொரு படைக்கலமும் நமக்கு தேவை.”

பீமன் இருவரையும் மாறிமாறி நோக்கியபின் திரும்பி நடந்து வெளியே சென்றான். இளைய யாதவர் “நீங்கள் உங்கள் தந்தையின்பொருட்டு களம்நிற்க வேண்டும், அரக்கரே. உங்கள் தந்தை இப்போரில் வென்றாக வேண்டும்” என்றார். “அவர் இக்களத்தில் வெல்வார்” என்றான் கடோத்கஜன். “ஆனால் முழுமையாகவே தோற்பார்.” இளைய யாதவர் அதே புன்னகையுடன் நோக்கிநிற்க “பெரியவர்கள் தோற்றாக வேண்டும். மிகப் பெரியவர்கள் முற்றாக தோற்கவேண்டும். அதுவே இவ்வுலகின் நெறி” என்றான் கடோத்கஜன். இளைய யாதவர் “ஆம், மெய்” என்று அவன் தோளில் தட்டியபின் வெளியே நடந்தார். கடோத்கஜன் திரும்பி அசங்கனை நோக்கி பெரிய பற்கள் தெரிய புன்னகைத்தான்.

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 18

bowஉணவுக்குப் பின் சகுண்டனும் உத்துங்கனும் கைகளை நக்கியபடியே எழுந்துசென்று உடல்நீட்டி சோம்பல்முறித்தபடி சுற்றுமுற்றும் நோக்கினர். “நீங்கள் ஓய்வுகொள்ளலாம். அரசரும் இளையோரும் முற்புலரியில் அவையமர்வார்கள். அப்போதுதான் நீங்கள் செல்லவேண்டும்” என்றான் அசங்கன். கடோத்கஜன் “ஆம், அவ்வாறுதான் சொல்லப்பட்டது. ஆனால் எங்கே துயில்வது?” என்றான். “இங்குதான். கூடாரங்களுக்குள் துயிலலாம். அல்லது வெளியே நிலத்தில் பாய்விரித்து…” என்றான் அசங்கன். “நாங்கள் தரையில் துயில்வதில்லை” என்றான் கடோத்கஜன்.

“இங்கே மரங்கள் இல்லையே?” என்றான் அசங்கன். “குருக்ஷேத்ரத்தில் மரங்கள் முளைப்பது அரிது… ஆகவேதான் இது தொன்மையான போர்நிலமாக உள்ளது.” கடோத்கஜன் சூழ நோக்கி “மெய்தான்… மரங்களெல்லாம் மிகச் சிறியவை” என்றான். உத்துங்கன் “நன்று, நாங்கள் அப்படியே அமர்ந்துகொள்கிறோம்” என்றான். அசங்கன்  “மூத்தவரே, நான் ஒன்று செய்கிறேன்” என்று எழுந்துசென்று கூடாரத்தின் மேலிருந்த யானைத்தோல்பரப்பை அழுத்திநோக்கி “இதன்மேல் படுத்துக்கொள்ளலாம்” என்றான். உத்துங்கன் அழுத்தி நோக்கி “ஆம், தழைக்கூரை போலவே உள்ளது” என்றபின் மூங்கில் வழியாக ஏறி மேலே சென்றான். படுத்துநோக்கி “மெய்யாகவே மரங்களின்மேல் தழைப்பரப்பில் படுத்திருப்பதுபோல” என்றான்.

சகுண்டனும் மேலேறி படுத்தான். “நீங்களும் படுத்துக்கொள்ளலாம், மூத்தவரே. நான் இங்கேயே நிலத்தில் மரவுரியில் ஓய்வெடுக்கிறேன்” என்றான் அசங்கன். “நானும் தரையிலேயே அமர்ந்திருக்கிறேன். தேவையென்றால் மேலே செல்கிறேன்” என்றான் கடோத்கஜன். அசங்கன் மரவுரியை விரித்து படுத்துக்கொண்டான். “அசையாத தரையில் படுத்தால் துயில்வது கடினம்” என்றான் கடோத்கஜன். “ஆம், சில மாலுமிகளும் அவ்வாறு பழகியிருக்கிறார்கள்” என்றான் அசங்கன். “அதைவிட மண்ணில் நாகங்கள் மிகுதி. எங்கள் முதலெதிரிகள் அவையே” என்றான் கடோத்கஜன். “இங்கே நாகங்கள் இல்லை” என்று அசங்கன் சொன்னான். “அவை இல்லாத இடமே இல்லை” என்றான் கடோத்கஜன்.

அவர்கள் விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தார்கள். கடோத்கஜனின் விழிகள் வானில் நிலைத்திருக்க முகம் மட்டும் அசைந்துகொண்டிருந்தது. அவ்விழிகளில் விளங்கவியலா துயர் ஒன்றை அசங்கன் கண்டான். கட்டுண்ட அனைத்து விலங்குகளிலும் அதை அவன் கண்டிருந்தான். மானுடருடன் கலந்து அரைமானுடராகவே ஆகிவிட்டிருந்தாலும்கூட புரவிகளின் விழிகளில் தனிமையும் துயரும் நிறைந்திருக்கும். யானைவிழிகளுக்குள் அத்துயர் மிகமிக ஆழத்திலென மின்னிக்கொண்டிருக்கும். அவன் அப்போது கடோத்கஜனிடமிருந்து மிக விலகிவிட்டிருந்தான். மீண்டும் அணுக விரும்பினான். எதையாவது பேசவேண்டும். அவன் ஆளும் அரசை. அவன் குடியை. ஆம், அவற்றைப்பற்றிய பேச்சே அவனை அருகே கொண்டுவருகிறது.

கடோத்கஜனுக்கு மைந்தர்கள் இல்லையா என்ற எண்ணம் அசங்கனின் உள்ளத்தில் எழுந்தது. அவனறிந்த கடோத்கஜனின் கதைகள் அனைத்துமே அவனுடைய சிற்றகவையிலேயே நின்றுவிட்டிருந்தன. காட்டுக்குள் பதினான்காண்டுகள் அலைந்தபோது நினைத்தபோதெல்லாம் தோன்றி குந்தியையும் ஐந்து தந்தையரையும் தன் தோளில் சுமந்து விழைவிடம் நோக்கி கொண்டுசென்ற பேருருவனாகிய சிறுவன். அவன் முன் அமர்ந்திருந்த கடோத்கஜன் முதிர்ந்தவனாக இருந்தான். அவ்வண்ணமென்றால் மைந்தர் இருக்கவேண்டும். அவர்கள் போருக்கு வந்திருக்கிறார்களா?

அதை நேரடியாக கேட்கலாமா என்று தயங்கி “உங்கள் குடியில் மணச்சடங்குகள் உண்டா?” என்றான். “என்ன?” என்று கடோத்கஜன் திரும்பி நோக்கினான். “இல்லை, கதைகளில் இளைய பாண்டவர் பீமசேனர் உங்கள் அன்னையை கொள்மணம் புரிந்ததாக வருகிறது. பல தொல்குடிகளில் முறையான மணச்சடங்குகள் இல்லை என்பார்கள். நான் எவரையும் இதற்குமுன் சந்தித்ததில்லை” என்றான் அசங்கன். “நான் மணம்புரிந்துகொண்டவன்” என்றான் கடோத்கஜன். “ஆனால் என் குடியில் அல்ல. என் குடியில் அரசர்கள் எல்லா குலக்குழுவிலிருந்தும் ஒரு பெண்ணை மணக்கவேண்டும். நான் அவ்வாறு மணம்புரிந்துகொள்ளவில்லை. நான் மணந்தவள் அரசமகள்.”

அசங்கன் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் கடோத்கஜன் பேச விரும்பினான். “நான் என் குடியிலேயே மணம்புரிந்துகொள்ள விரும்பினேன். ஆனால் மூதன்னை குந்திதேவி அதை விரும்பவில்லை” என்றபின் “எந்தையின் அன்னை. இளஅகவையிலேயே என் மூதன்னை என நெஞ்சிலமர்ந்தவர். இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசியாயினும் எனக்கு களித்தோழி என்றே ஆனவர்” என்றான். அசங்கன் “அவர் உங்களை தன் குடியின் முதல் மைந்தனாக ஏற்றுக்கொண்டதாக கதைகள் கேட்டிருக்கிறேன்” என்றான். கடோத்கஜன் முகம்மலர்ந்து “ஆம், என்னை அவர் பைமி என்றும் பைமசைனி என்றும்தான் அழைப்பார்கள். என் அன்னையிடம் தன் குலத்தின் முதல் மாற்றில்மகள் அவரே என்றும் மூத்தவரால் மணக்கப்பட்டிருந்தால் அஸ்தினபுரியின் பட்டத்தரசியென அவரை அமரச்செய்திருப்பேன் என்றும் சொன்னார்.”

தன் ஆடையிலிருந்து அருமணி பதித்த கணையாழி ஒன்றை காட்டினான். “இது பாண்டவ அரசகுடியினருக்குரியது. இடும்பவனத்திலிருந்து கிளம்பும்போது இதை மூதன்னை என் அன்னையிடம் அளித்தார்.” அதை திருப்பிக்காட்டி “அருமணி… மலர்மொட்டுபோலவோ குருதித்துளிபோலவோ தெரிவது. இதை என் கைகளில் அணிந்திருக்கவேண்டும் என்பார்கள். எப்போதும் இதை அணிந்திருப்பது கடினம். மரங்களினூடாக செல்லும்போது எங்கேனும் தவறி விழுந்துவிடும். ஆகவே இதை சரடில் கட்டி என் இடையில் அணிந்திருக்கிறேன். அரியணை அமரும்போது மட்டும் விரலில் அணிந்துகொள்வேன்” என்றான்.

அதை வாங்கி நோக்கிய அசங்கன் “பாண்டவ மைந்தர் அனைவரும் இத்தகைய கணையாழியை வைத்திருக்கிறார்கள். அவையனைத்தும் இதைவிட சிறியவை. இந்த அருமணிக்குள் விழிகளால் நோக்கமுடியாதபடி சிறிதாக அமுதகல முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது” என்றான். அதை அப்பாலிருந்து வந்த விளக்கொளியில் காட்டி அதன் ஊடொளியை தன் உள்ளங்கையில் ஏந்தினான். அதில் சிறிய நிழலுருவாக அமுதகலம் தெரிந்தது. கடோத்கஜன் “ஆம், அதில் கதிரொளி பட்டால் அமுதகலம் எழும்… அதை சுவரில் காட்டினால் பேருருவாகும்” என்றான். “உங்களில் பீமசேனர் என இது இந்த அருமணிக்குள் அமைந்துள்ளது, மூத்தவரே” என்றான் அசங்கன்.

“இது முதல் மைந்தனுக்குரியது” என்றான் கடோத்கஜன். “இந்த அருமணியால்தான் எனக்கு அரசமகள் மணமகளாக வந்தாள்.” அசங்கன் “அரசமகளா?” என்று கேட்டான். “ஆம். என் காடு நாடாகவேண்டும் என்றும் நான் வேள்விச்செயல் முடித்து அந்தணர் அரிமலரிட்டு வாழ்த்த முடிசூடவேண்டும் என்றும் அரசமகளை மணம்புரிந்து பட்டத்திலமர்த்தவேண்டும் என்றும் குந்திதேவி ஆணையிட்டார். ஆனால் நூல்கள் எதையும் நான் சென்று கற்கலாகாதென்றும் அனைத்து மெய்மையையும் என் காட்டுக்குள் அமர்ந்தே கற்றறியவேண்டும் என்றும் சொன்னார்.”

நான் கற்றுத்தேர்ந்தேன். படைதிரட்டினேன். நகர் சமைத்து கோட்டைகட்டி செல்வம் பெருக்கினேன். என் நகரில் குடியேற அந்தணர் ஒருங்கவில்லை. ஆகவே விந்தியனுக்கு அப்பாலிருந்து அனற்குலத்து அந்தணரை குடியமர்த்தி வேள்விகள் செய்தேன். அவர்களின் நூல்நெறிப்படி குடித்தலைமை கொண்டேன். முடிசூடி அமர எனக்கு அருகே அரசி அமையவேண்டும். அந்தணரே என் பொருட்டு அரசர்களிடம் தூது சென்றனர். ஆயினும் எனக்கு பெண் தருவதற்கு அரசர்கள் எவரும் சித்தமாகவில்லை. பலமுறை முயன்றும் பயனின்றிப் போயிற்று. அப்போது அவர் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தார். அரசகுடி மணமகள் அமையாமையால்தான் நான் இந்திரப்பிரஸ்த பெருவேள்விக்கு செல்லவில்லை. அதை அன்னைக்கு செய்தியாக அனுப்பினேன்.

அன்னை எனக்கு செய்தி அனுப்பினார். “நீ பாரதவர்ஷத்தின் பெருவீரனின் மைந்தன். உனக்கு நிகரான வீரர்கள் இந்நிலத்தில் மிகக் குறைவே. ஆயினும் உன் குருதியின் தோற்றமோ அரக்கர்களுக்குரியது. அரக்கர் குடிக்கு மகற்கொடை நிகழ்த்த அரசர் சித்தமாக மாட்டார்கள்” என்றார். “நான் விழைந்தால் என் மைந்தர் வென்று அடியறைவு செய்யவைக்கும் அரசர்களின் மகளிர் எவரையாவது உனக்கு மணமுடிக்க முடியும். ஆனால் நீ உன் தோள்வல்லமையால் வென்ற அரசமகளை மணப்பதே பெருமை. ஏனென்றால் நாளை உன் குடியினர் அதன்பொருட்டு பெருமைகொள்ளவேண்டும்” என்றார்.

என் குடியின் மூத்தவர்கள் நான் படைகொண்டு சென்று அரசமகள் எவரையேனும் கவர்ந்து வந்து மணமுடிக்கலாம் என்றார்கள். அரக்கர்குலத்துக்கு கொள்மணம் உகந்த நற்செயல்தான் என்றனர். ஆனால் அதை நான் விரும்பவில்லை. அன்னை எனக்கிட்ட ஆணை முறைப்படி ஷத்ரிய குடியொன்றிலிருந்து பெண்கொள்வதும் அவளுக்குப் பிறக்கும் மைந்தர்களுக்கு எனது நாட்டை உரிமையாக்குவதும்தான். எனக்கு பெண்கொடுக்கும் ஷத்ரியர் என்னை அரசன் என ஏற்கவேண்டும். தன் மகளை அரக்கன் கவர்ந்தான் என்று சொல்லி அவர் அந்தணரை அழைத்து கொல்வேள்வி செய்தால், அதற்கு பிற அரசரை அழைத்தால் அரசமகளை மணந்தமையின் நலம் ஏதும் எனக்கோ என் குடிக்கோ பிறக்கவிருக்கும் மைந்தருக்கோ அமையாது போகும்.

என் தந்தையர் காடேகி மறைந்தனர். அஸ்தினபுரி துரியோதனரால் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் சிந்து மலையிறங்கி நிலம்பரவும் காட்டில் இருந்த அஷ்டதச ஃபீகரர் என்னும் அரக்கர்களுக்கும் அங்கு குடியேறிய யாதவக்குடி ஒன்றுக்கும் பூசல்கள் நிகழ்வதாக அறிந்தேன். அவர்கள் முரு என்னும் தொல்மூதாதையின் வழிவந்தவர்கள் என்பதனால் மௌரியர் என அழைக்கப்பட்டார்கள். அவர்களின் அன்றைய அரசரின் பெயரும் முரு என்பதே. நாற்பத்தெட்டாவது முரு பதினெட்டு அரக்கர்குடிகள் இணைந்த படையிடம் தோற்று படைவீரர்களையும் குடிகளையும் இழந்து மேலும் மேலும் ஆற்றங்கரை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவர்களின் பசுக்கள் அரக்கர்களால் தொடர்ந்து கவரப்பட்டன. ஊர்கள் கொளுத்தப்பட்டன. மகளிரும் இளமைந்தரும் சிறைபிடிக்கப்பட்டனர்.

முரு தனித்திருந்தார். ஏன் அவர்களுக்கு பிற யாதவர்களின் உதவி கிடைக்கவில்லை என்பதை ஆராய்ந்தேன். கூர்ஜரத்துக்கு மேற்கே இருக்கும் வெண்பாலை நிலத்தில் வாழ்ந்த தொல்யாதவக்குடியிலிருந்து முன்பு விலக்கப்பட்டவர்கள் அவர்கள். ஒருமுறை பெரும்பஞ்சம் வந்து பாலை நிலத்தில் தனிமைப்பட்டபோது அவர்கள் தங்கள் மாடுகளைக் கொன்று தின்றதாகவும், இறுதியாக கன்றுதங்கிய வயிற்றுடன் சினைப்பசு ஒன்றை கொன்றதாகவும் அதனால் பிற யாதவர்களால் விலக்கப்பட்டதாகவும் கதைகள் கூறின.

அவர்களின் முது மூதாதையாகிய முரு தன் குலத்தாருடன் சிந்துவை அடைந்து ஆயிரம் தெப்பங்களில் நீர்ஒபெருக்கினூடாக வடக்கே வந்து இக்காட்டை அடைந்தார். அது அன்று புல் ஒழியா பெருவெளி. ஆகவே கன்றுகள் பெருகின. ஊர்களும் நடுநகரும் கோட்டையும் காவலும் மாளிகையுமென அவர்கள் நிலைகொண்டனர். நெடுங்காலத்துக்குப் பின் சிந்துவினூடாக அங்கு வந்த பரசுராமரை சென்றுகண்டு தலை தாள்வைத்து வணங்கி முருகுலத்து அஜன் தன்னை அளித்தார். அவருடன் வந்து நகரில் தங்கிய பரசுராமர் பன்னிரு நாட்கள் நீண்ட வேள்வியொன்றை நிகழ்த்தி அதன் இறுதியில் அவரை அனல்குலத்து ஷத்ரியராக ஆக்கி செங்கோல் சூடவும் மணிமுடியணியவும் அரியணை அமரவும் உரிமையளித்தார். வஹ்னி என்னும் பெயர்கொண்டு அவர் அரசரானார்.

ஷத்ரிய நிலையை அடைந்த பின்னர் தன் யாதவக் குடிகளுடன் எத்தொடர்பையும் வைத்துக்கொள்ள வஹ்னி எண்ணவில்லை. பிற அனற்குலத்து ஷத்ரியக் குடிகளிலிருந்தே மகற்கொடை பெற்றார். மேலும் அவர் குடி பெருகியபோது காடுகளுக்குள் ஊடுருவிப் பரந்தனர். புதிய சிற்றூர்களை அமைத்தனர். சிந்துவிலிருந்து தங்கள் நகர்வரை படகுகளில் சென்றுவரும் கால்வாய் ஒன்றை வெட்டிக்கொண்டார்கள். வணிகர் வந்து செல்வதனால் அங்காடியும் வணிகர் குடியிருப்புகளும் உருவாயின. பிற அனற்குலத்து அரசர்களுடன் தொடர்புகொண்டமையால் படைவல்லமை பெருகியது.

நாற்பத்திரண்டாம் முருவாகிய தேவபர் திரைகொள்ளும் பொருட்டு காடுகளுக்குள் படைகளை அனுப்பி அரக்கர் குடிகளை தாக்கினார். அவர்கள் மேலும் மேலும் காடுகளுக்குள் சென்று ஒளிந்துகொண்டனர். மேலும் செல்ல இடமில்லாதபோது நூறாண்டுகளுக்கு முன் சிதறி அழிந்திருந்த அரக்கர்கள் கூட்டமைப்பு ஒன்றை மலையடிவாரத்தில் தொல்குகையொன்றில் கூட்டினர். அங்கு அக்குடிகள் அனைவருக்கும் தலைவராக தொல்லரக்கர் குடியைச் சார்ந்த கீகடரை தேர்ந்தெடுத்தனர். அவர் தலைமையில் அரக்கர் குடிகள் முரு குடிகளை திருப்பி தாக்கத் தொடங்கினர்.

முதலில் அரக்கர்களின் கட்டுப்பாடற்ற படைகளை முரு குடியினர் எளிதில் வென்றனர். ஆனால் தோல்வியிலிருந்து மேலும் வெறிகொள்வதற்கு கற்றவர்கள் அரக்கர். உயிரிழந்தவர்களின் ஆத்மாக்கள் தங்கள் உடல்களில் வந்து அணைந்து ஆற்றல் அளிப்பதாக நம்புகிறவர்கள். இறந்தோரின் துளியுடலை உண்டு தானாக மாற்றிக்கொண்டு இருவராக ஆற்றல்கொண்டு எழுவார்கள். மழைக்காலம் வந்தபோது முருக்களின் ஆற்றல் குறைந்தது. மழையின் மறைவு அரக்கர்களுக்கு மிக உகந்தது. குளிரும் நீரும் அவர்களுக்கு இனிதானவையும் கூட. மழைக்காலப் போரில் மௌரியர்களின் மௌரியபுரியை தாக்கி கோட்டையை சிதறடித்து உட்புகுந்தனர். மாளிகைகளை உடைத்தெறிந்தனர். மகளிரை சிறைப்பிடித்தனர். இளையோரை கொன்று குவித்தனர். எஞ்சிய படைகளுடனும் குடிகளுடனும் அரசர் முரு ஊர்களை ஒவ்வொன்றாக கைவிட்டு சிந்துவின் கரைவரை சென்றார்.

அரக்கர்கள் மேலும் தாக்கக்கூடுமென அஞ்சி சிந்துவின் கரையிலேயே தங்கியிருந்தார். சிந்துவினூடாக கிளம்பி மீண்டும் அவர் வந்த மேற்குப் புல பாலைக்கே சென்றுவிட எண்ணினார். அதன்பொருட்டு தெப்பங்கள் கட்டப்பட்டன. உதவும்படி தொல்குடி யாதவர்களை நோக்கி தூதர்களை அனுப்பினார். ஆனால் கன்றுண்டவன் என்னும் பெரும்பழி இருந்ததனால் யாதவர்கள் அவரை ஏற்கவில்லை. கூர்ஜரரும் சைந்தவரும் சைப்யரும் காந்தாரரும் முரு தன்னை அரசர் என சொல்லிக்கொண்டதனால் சினம்கொண்டிருந்தனர்.

கூர்ஜரர் முரு தன் மணிமுடியையும் செங்கோலையும் களைந்து, அரியணை அமரும் உரிமையைத் துறந்து, யாதவ குடிக்குரிய வளைகோலையும் மரவுரியையும் அணிந்து அவருடைய நகருக்கு வந்து அனல் தொட்டு தானும் தன் கொடிவழியும் இனி ஒருபோதும் முடிகோரப் போவதில்லை என ஆணையிட்டு தன் அரசுக்குக் கீழ் ஒரு குடியென அமைய முடியுமெனில் தன் நிலத்திற்குள் புக இடமளிப்பதாகவும் அவ்வாறில்லையென்றால் ஒருவர்கூட எஞ்சாது கொன்றொழிப்பதாகவும் செய்தி அனுப்பினார்.

முரு அனலுக்கும் சிம்மத்துக்கும் நடுவே என நின்றிருந்த பொழுது அது. அதுவே உகந்ததென்று கண்டு நான் என் தூதர்களை அனுப்பினேன். அரக்கர்களை வென்று அவர் நகரத்தை நான் காப்பேன் என்றும் அதற்கு ஈடாக என்னை அரசனென ஏற்று அவர் மகளை எனக்கு மணமுடித்தளிக்க வேண்டுமென்றும் கோரினேன். என் தூதராகச் சென்றவர் முதிய அந்தணரான ஆக்னேயர். தன் அவையில் சுற்றத்துடன் அமர்ந்திருந்த முரு அச்செய்தியைக் கேட்டு உறுமியபடி கைகளை அறைந்து ஓசையிட்டுக்கொண்டு கல்லரியணையிலிருந்து எழுந்து “என்ன சொல்கிறீர்? இதென்ன சூழ்ச்சி?” என்று கூவினார். “இவர் அந்தணர் என்பதனால் பொறுத்துக்கொள்கிறேன். இவரை நாடுகடத்துக! இவருடன் வந்த அரக்கர்களை கழுவேற்றுங்கள்” என்று தன் படைநிரைகளுக்கு ஆணையிட்டார்.

ஆனால் அவருடைய அமைச்சராகிய மூர்த்தர் “பொறுங்கள், அரசே. உங்களிடம் மணம்கோரி வந்திருப்பவர் வெறும் அரக்கரல்ல” என்றார். “வெறும் அரக்கரோ ஆடையணிந்த அரக்கரோ, அரக்கர் குடியினரிடம் மணம்கொண்டோமெனில் அதன் பின் பாரதவர்ஷத்தில் நம் இடம் என்ன? என் மூதாதையர் பரசுராமரின் முன் அமர்ந்து பன்னிரு நாட்கள் பெருவேள்வி செய்து ஈட்டியது இச்செங்கோலும் மணிமுடியும். கூர்ஜரன் முன் இதை துறக்கமாட்டோம் என்று தயங்கியே இங்கு அமர்ந்துள்ளோம். துறந்துசென்று கூர்ஜரத்தில் தொல்குடியாக அமைவது இங்கு இவ்வல்லரக்கனின் மாதுலனாக அமைவதைவிட எத்தனையோ மடங்கு மதிப்புடையது” என்றார் முரு.

“நாம் இதைப்பற்றி மேலும் கூர்ந்து எண்ணுவோம், பொறுங்கள்” என்று மூர்த்தர் மீண்டும் மீண்டும் கூறினார். “என்ன சொல்கிறீர்கள்? என்னை குலமிலி என நீங்களும் எண்ணுகிறீர்களா?” என்று முரு கூச்சலிட்டார். சினத்தால் நிலையழிந்து அவையில் அலைமோதினார். ஆக்னேயர் அதை எதிர்பார்த்துச் சென்றிருந்தமையால் உளமழியவில்லை. தருணம் நோக்கியிருந்தார். முரு “சேற்றில் சிக்கிய யானைமேல் தவளைகள் ஏறி விளையாடுகின்றன. தெய்வங்களே, மூதாதையரே, என்ன பிழை செய்தேன்!” என நெஞ்சுலைந்தார். அதுவே இடம் என கண்டு ஆக்னேயர் எந்தையின் அடையாளமாக இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி அளித்த இக்கணையாழியை எடுத்துக்காட்டி “இது என் அரசரின் கணையாழி. இதை தன் வலக்கை ஆழிவிரலில் அணிந்து அரியணை அமர்பவர் அவர்” என்றார்.

மூர்த்தர் அதை வாங்கி பார்த்த பின் ஒன்றும் சொல்லாமல் அரசரிடம் அளித்தார். அதை முரு கையிலேந்தி சற்றே திருப்பியபோது எதிரே சுவரில் அமுதகலம் பேருருவாக எழுந்தது. “அஸ்தினபுரியை ஆளும் தேவனின் வடிவம்” என்று மூர்த்தர் சொன்னார். அதை திகைத்து நோக்கிய பின் “இதை எவர் அளித்தது?” என்று முரு கேட்டார். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசி குந்திதேவி அளித்தது இது. தங்களைப்போலவே யாதவ குடியிலிருந்து எழுந்து ஷத்ரிய அரசுகளின் தலைமைக்கு வந்தவர் அவர்” என்று ஆக்னேயர் சொன்னார். “அவர்களின் குடியின் முதல் மாற்றில்மகளாக ஏற்கப்பட்டவர் என் அரசரின் அன்னை. அரசரோ பாண்டவ மைந்தர்களில் மூத்தவர் என நிலைகொள்பவர். இந்தக் கணையாழியே சான்று.”

முரு மீண்டும் அரியணையில் அமர்ந்து அக்கணையாழியை திருப்பி நோக்கிக்கொண்டிருந்தார். மூர்த்தர் “இப்போது நமக்கு வந்துள்ள உதவி சிறிதல்ல, அரசே. வெறுமொரு அரக்கர் குடியின் உதவியல்ல இது. இந்திரப்பிரஸ்தத்தின் பாண்டவ குலத்தின் உதவி இது. நாட்டிலிருந்தாலும் காட்டிலிருந்தாலும் அர்ஜுனரின் வில்லும் பீமசேனரின் கதையுமே பாரதவர்ஷத்தை ஆள்பவை” என்றார். “நாளை இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடியே இந்நிலத்தை ஆளும். ஐயமே தேவையில்லை. இனி ஆயிரம் ஆண்டுகள் அக்கொடியே இங்கு பறக்கும். அவரது குடியின் ஒரு குருதித்தொடர்பு நமக்கு உருவாவது அனைத்து வகையிலும் நம்மை நிலைநிறுத்தும்” என்றார்.

“நமது அரசுக்கு அரக்க மகளை நாம் எடுக்கவில்லை. நமது இளவரசரின் குருதி தூயதே. அவருக்கு மகள் தேடுகையில் தூய ஷத்ரியக் குடியிலிருந்தே நாம் பெண் தேடமுடியும். மறுப்பார்களென்றால் இந்திரப்பிரஸ்தத்தின் வாளையே அவர்களிடம் காட்டி பெண் கோரமுடியும்” என மூர்த்தர் சொன்னார். “நமது குடி இங்கு வாழும். கூர்ஜரத்துக்கோ யாதவ நிலத்துக்கோ சென்றால் நாம் மேலும் மேலும் இறங்குவோம். எழுகுடி எழ வீழ்குடி வீழ வரலாறு ஒழுகுகிறது என கொள்க!” என்று மூர்த்தர் தொடர்ந்தார்.

“எண்ணுக அரசே, நிமித்திகர் கூறிய மாறாச் சொல் ஒன்று உண்டு! ஒருநாள் மௌரியப் பெருங்குலம் பாரதவர்ஷத்தை முற்றாளும். காமரூபம் முதல் காந்தாரம் வரை, காஷ்மீரம் முதல் திருவிடத்துக்கும் அப்பால் முக்கடல் முனைவரை நாவலந்தீவு முழுக்க நம் குருதிவழியில் வந்த அரசர்களின் கொடி பறக்கும். ஆற்றலும் அறமும் கொண்ட பேரரசர்களின் பெயர் இந்நிலத்தில் என்றுமிருக்கும். இன்று உருவாகியிருக்கும் இவ்வாய்ப்பு அதற்கான தொடக்கம் போலும். அருமணிகள் தெய்வத்தின் விழிகள். நம்மை நோக்கி தெய்வம் ஒன்று திரும்பியுள்ளது என்பதையே இந்த மணி காட்டுகிறது. மகற்கொடை அளிப்போம், தயங்க வேண்டாம்” என்றார் மூர்த்தர்.

முரு “ஆனால் இக்குலக் கலப்பு…” என சொல்லத் தொடங்க “குலக் கலப்பிலிருந்தே ஷத்ரியப் பெருங்குடிகள் பிறக்கின்றன. அரக்கர்குருதியோ அசுரர்குருதியோ இல்லாத தொல்குடி ஷத்ரியர் யார்? அஸ்தினபுரியின் குடியே அசுர மூதன்னை சர்மிஷ்டையிலிருந்து உருவானது என அறிக! மீனவப் பேரன்னை சத்யவதியால் குருதிகொண்டது அது. அரசே, உலோகக் கலவைகளே வலுமிக்கவை. ஷத்ரியர் என்னும் படைக்கலம் உருவாக அவையே ஏற்றவை. பொன்னுடன் இரும்பு கலந்து புதிய பெருங்குடி எழுக…” என்றார் மூர்த்தர்.

முரு பெருமூச்சுவிட்டு “என்றும் என் குடி அந்தணர் சொல்லை அடிபணிந்திருக்கும் என்று பரசுராமருக்கு எம்மூதாதை சொல்லளித்துள்ளார். தங்கள் சொல்லை தெய்வ ஆணை என்று ஏற்கிறேன், ஆசிரியரே” என்றார். ஆக்னேயர் “அந்தணர் சொல் மீறாதோன் அழிந்ததில்லை. இந்தக் கருவூலங்களில் இருந்து ஒரு செம்புநாணயத்தைக்கூட கொள்ள எண்ணாதோர் நாங்கள். தர்ப்பையே எங்கள் பொன். எங்கள் சொல்லை ஓம்புக, சிறப்புறுக!” என்றார். கைகூப்பி “அவ்வண்ணமே ஆகுக!” என்றார் முரு. அவை வாழ்த்தொலி எழுப்பியது.

மௌரிய குலத்து முருவின் முதல் மகள் அகிலாவதியை நான் மணந்தேன். வெற்றியுடன் திரும்பிவந்து முருவின் ஏற்புச் செய்தியை ஆக்னேயர் சொன்னபோது என் குலத்தாரால் அதை நம்ப இயலவில்லை. ஆனால் நான் அது நிகழுமென்றே கணித்திருந்தேன். என் குடியில் முதலில் குழப்பமும் விளக்கவியலா கலக்கமும்தான் நிலவியது. பின்னர் பதினெட்டு நாள் நீண்ட பெருங்களியாட்டு தொடங்கியது. அன்னை இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தார். நான் செய்தி அனுப்பி வாழ்த்து கோரினேன். அன்னை எட்டு சகடங்களில் பொன்னும் பட்டும் வெள்ளிக்கலங்களும் பரிசென அனுப்பினார். “நான் நகர்நீங்கா நோன்புகொண்டிருக்கிறேன். ஆகவே அங்கு வரவில்லை. நீ நுழைய இந்நகரில் உனக்கு உரிமை இல்லை. உன் மைந்தர் வழியாக என் குடி வாழ்க!” என அவருடைய சொல் வந்தது.

நான் அஸ்தினபுரிக்கு திருதராஷ்டிரருக்கும் துரியோதனருக்கும் செய்தி அனுப்பினேன். “உங்கள் குடி என நான் என்னை எண்ணுவதால் பெருந்தந்தையாகிய உங்களுக்கு இச்செய்தியை அனுப்புகிறேன். உங்கள் சொல்லன்றி ஏதும் வேண்டேன். உங்கள் காலடியில் என் தலை அமைக!” என பொறிக்கப்பட்ட என் ஓலையுடன் என் தூதராக அவையந்தணர் ஜ்வாலர் சென்றார். அச்செய்தியை கேட்டதும் திருதராஷ்டிரர் எழுந்து கைகளை விரித்து மகிழ்ச்சிக் கூச்சலிட்டார். “விரிகிறது என் குடி! காடுகளிலும் என் குருதி பரவுகிறது… விதுரா, என் பெயர்மைந்தனின் மணநிகழ்வுக்கு அரசமுறைப்படி அனைத்தும் செய்யப்படவேண்டும். இது என் ஆணை” என்றார்.

அச்செய்தியைக் கேட்டதும் அரசவையில் அரியணையமர்ந்திருந்த துரியோதனர் எழுந்து “என் குடியின் முதல் மைந்தன் மணம்கொள்கிறான். அனைத்து முறைமைகளும் நிகழ்க! நானே மணநிகழ்வுக்குச் செல்கிறேன்” என்றார். “அரசே, அது இன்னும் நாடென வகுக்கப்படாதது. நமக்கும் மகதத்திற்கும் பாஞ்சாலத்திற்கும் நடுவே உள்ளது. முறைமைப்படி அவ்விரு அரசர்களின் ஒப்புதலின்றி நீங்கள் அங்கே செல்வது உகந்தது அல்ல” என்றார் கனகர். “அவ்வண்ணமென்றால் என் இளையோர் செல்லட்டும். நானே செல்வதற்கு அது நிகர்” என்றார் துரியோதனர். அங்கிருந்து நாற்பத்தெட்டு வண்டிகளில் அருஞ்செல்வம் எனக்கு சீர்பரிசிலாக வந்தது. என் மணநிகழ்வுக்கு துச்சாதனரும் துச்சலரும் துர்முகரும் சுபாகுவும் சுஜாதரும் வந்திருந்தார்கள்.

முரு குலத்து அரசமகளுக்கு என் மூதன்னை அளித்த பீதர்நாட்டு பொன்னிழைப் பட்டும் அஸ்தினபுரியின் பட்டத்தரசி அளித்த அருமணி பதித்த பதினெட்டு சங்கு வளைகளும் வந்து சேர்ந்தன. அஸ்தினபுரியின் அரசிளையோர் முன்னிலையில் அந்த மணநிகழ்வு நடந்தது. அரக்க குடிக்கு அரசமகளைக் கொடுப்பதில் மௌரிய குடிகளுக்கு பெரும் தயக்கமிருந்தது. அவர்கள் பேசிய அலர் அரசரையும் சோர்வுறச் செய்தது. ஆனால் பதினெட்டு சகடங்களில் நான் அனுப்பிய சீர்நிரை மௌரிய நகரிக்கு வந்திறங்கியபோது அவர்கள் சொல்லடங்கினர். அவற்றின் பெருமதிப்பை வணிகர்கள் சொன்னபோது மறு எண்ணமில்லாதாயினர். அஸ்தினபுரியின் அரசரின் இணையான துச்சாதனரே வருகிறார் என்றபோது களிவெறி கொண்டனர்.

நான் திருமண அணிகொண்டு அந்நகருக்குள் நுழைந்தபோது மௌரியர்களின் பெருந்திரள் என்னை எதிர்கொள்ள நகர் வாயிலில் மங்கலங்களுடன் காத்து நின்றது. அன்றும் இவ்வாறே சென்றிருந்தேன். வேங்கைத் தோலணிந்து இரும்பு அணிகள் பூண்டு என்னைக் கண்டதும் அவர்கள் நகைக்கலாயினர். ஆனால் எவரோ வாழ்த்தொலி எழுப்ப சற்று நேரத்தில் அந்நகரமே வாழ்த்தொலிகளால் நிறைந்தது. அரிமலர் மழையெனப் பெய்ய அதன் நடுவே என் அன்னையரும் குலமூத்தாரும் தோழரும் உடன்வர சென்றேன். மாளிகை முகப்பில் கட்டப்பட்ட அணிப்பந்தலில் பேரரசி அளித்த அனல்மணி ஆழியை அகிலாவதியின் கையிலணிவித்து மணந்தேன்.

கைபற்றி அவளை அழைத்துவந்து குடிமக்கள் முன் நின்றபோது வாழ்த்தொலிகள் நெடுநேரம் எழுந்து ஓய மறுத்தன. உளம் பொறாது மீண்டும் எழுந்து அலையடித்தன. துச்சாதனரின் கால்களைத் தொட்டு வாழ்த்து பெற்றபோது எங்கோ அறியாக் காட்டில் அலையும் என் தந்தையை வணங்குவதாகவே உணர்ந்தேன். வஞ்சத்துக்கும் வெறுப்புக்கும் அப்பால் அவருடைய குருதி அதை மகிழ்ந்து ஏற்றிருக்கும் என எண்ணிக்கொண்டேன். மௌரியர்களின் தொல்தெய்வமாகிய அஜமுகி அன்னையின் ஆலயத்தின் முன் சென்று நின்றோம். குறும்பாட்டை பலிகொடுத்து குருதி காட்டி பூசகர் அன்னைக்கு படையலிட்டார்.

அப்போது வெறியாட்டெழுந்த பூசகன் நாவில் ஒரு சொல்லெழுந்தது. “அறிக, குடிகளே! அறிக, மானுடரே! இவ்வரசியின் வயிற்றில் மாவீரர்கள் பிறப்பர். அவர்களே முருக்களின் குடிக்கும் கொடிவழியாவர். அவர்களின் குருதிவழியில் எழுபவன் ஒருவன் பாரதவர்ஷத்தை முழுதாள்வான். சைந்தவமும் காங்கேயமும் தட்சிணமும் அவனால் ஒரு கொடிக்கீழ் ஆளப்படும். இது ஊழி வரை கணம் கணமென அணு அணுவென இவ்வுலகை வகுத்துள்ள தெய்வங்களின் ஆணை! ஆம், இதுவே ஆணை!” என்று கூவி, பலிகுருதி அள்ளி முகத்தில் அறைந்து, துள்ளிச் சுழன்றாடி, தன் வேலை தன் தொடையில் குத்தி, அக்குருதியை தானே அருந்தி விடாய் தீர்ந்து விழுந்து உறைந்தான். எழுந்து சென்ற தெய்வம் சொன்ன அச்சொற்கள் மட்டும் எஞ்சியிருந்தன.

“என் நகரியில் அகிலாவதியுடன் அரியணை அமர்ந்தேன். அந்தணர் அதர்வ வேதம் ஓதி அரிமலரிட்டு வாழ்த்தி கங்கைநீர் முழுக்காட்டி என்னை அரசனாக்கினர்” என்றான் கடோத்கஜன். “முருக்களின் முத்திரையாகிய பீடத்திலமர்ந்த சிம்மத்தை என் குடிச் சின்னமாக நான் ஏற்றுக்கொண்டேன். அவ்வடையாளம் பொறிக்கப்பட்ட பொன் நாணயத்தை என் நகரில் எங்கள் அச்சில் வார்த்து வெளியிட்டேன். ஆயிரத்தெட்டு பொன் நாணயங்களை அந்தணருக்கும் புலவருக்கும் சூதருக்கும் அளித்து என் ஆட்சியை தொடங்கி வைத்தேன்.”

அசங்கன் “தெய்வச்சொற்களில் பிழை வருவதில்லை” என்றான். கடோத்கஜன் “நான் நாகர்குலத்து அரசன் வக்ரனின் மகள் லக்ஷ்மணையையும் மணந்துகொண்டேன். அகிலாவதியில் எனக்கு இரு மைந்தர்கள் பிறந்தனர். மூத்தவனாகிய பார்பாரிகனுக்கு பதின்மூன்று அகவை ஆகிறது. இளையவன் மேகவர்ணனுக்கு பத்து. லக்ஷ்மணையில் பிறந்தவள் இடும்ப இளவரசி மேகவதி” என்றான். முகம்மலர்ந்து “என் மைந்தர் இருவரும் என்னைவிடப் பேருருவர்கள். என்னை வெல்லும் போர்த்தொழில் அறிந்தவர்கள். அவர்களின் குருதியில் வெல்ல முடியாத அரசநிரையொன்று எழுமென்பதை ஐயமின்றி உணர்கிறேன்” என்றான்.

அசங்கன் “அவர்கள் இடும்பவனத்தில் இருக்கிறார்களா?” என்றான். “இல்லை” என்றபின் சற்று தயங்கிய கடோத்கஜன் “இளையவன் மேகவர்ணன் அன்னையுடன் இருக்கிறான். மூத்தவன் பார்பாரிகன் பாதிப்பங்கு இடும்பர் படையுடன் கௌரவப் படைகளுக்கு ஆதரவாக போரிடும்பொருட்டு சென்றிருக்கிறான். நாங்கள் சேர்ந்தே கிளம்பினோம். குருக்ஷேத்ரத்தை அணுகியபோது பிரிந்தோம்” என்றான். அசங்கன் திகைப்புடன் “ஏன்?” என்றான். “அது என் மைந்தனின் முடிவு. தந்தைக்காக நான் இங்கே வந்து நின்றிருக்கவேண்டும். ஆனால் எங்கள் முடியை ஆதரித்த நாடு அஸ்தினபுரி. எனவே இடும்பர்கள் அங்கு செல்லவேண்டும் என்றான்” என்று கடோத்கஜன் சொன்னான்.

அசங்கன் சிலகணங்கள் வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தான். பின்னர் இமைகளை மூடித்திறந்து எண்ணம் மீண்டு “இதை என்னால் உளம்கொள்ள இயலவில்லை. ஆனால் நீங்கள் சொல்கையிலேயே அதில் பொருள் உள்ளது என்றும் தோன்றுகிறது” என்றான். “மறுபக்கம் இவ்விரவில் விண்மீன்களை நோக்கியபடி என் மைந்தன் என்னை எண்ணிக்கொண்டிருக்கிறான்.”

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 17

bowவிண்மீன்கள் விரிந்த வானின் கீழ் விளக்கொளிகளாக அரச ஊர்வலம் வருவது தெரிந்தது. சுடர்கொண்ட கொடிகள் நுடங்கின. மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் அணுகிவந்தன. தொலைவில் வெண்குடையின் கின்னரிகள் நலுங்கிச் சுழன்றன. நின்று கண்கூர்ந்து “வருவது யார்?” என்று கடோத்கஜன் கேட்டான். “தங்கள் பெரிய தந்தை, இந்திரப்பிரஸ்தத்தின் அரசர்” என்றான் அசங்கன். “அவரை மிக மெலிதாக நினைவுகூர்கிறேன்” என்று கடோத்கஜன் சொன்னான். “குழவிப்பருவத்தில் நான் அவரை கண்டதுண்டு… உடன் தந்தை வருகிறாரா?” என்றான். “ஆம் என்று எண்ணுகின்றேன்” என்றான் அசங்கன். “தந்தை வருகிறார்!” என்றபின் கடோத்கஜன் திரும்பி ஓங்கி உத்துங்கனின் தோளில் அறைந்து “தந்தை! தந்தையை பார்க்கத்தான் வந்தோம்! தந்தை வருகிறார்!” என்று கூச்சலிட்டான்.

உத்துங்கன் இரு கைகளையும் விரித்து “ஆம், வந்துகொண்டிருக்கிறார்!” என்றான். திரும்பி படையினரை நோக்கி “பீமசேனர் வருகிறார்! தந்தை வருகிறார்!” என்று கூவினான். படையினர் அனைவரும் இரு கைகளையும் தூக்கி உடலை அலையடிக்கச்செய்து பெருங்குரங்குகள்போல் ஓசையெழுப்பினர். அசங்கன் “இளவரசே, தங்கள் படையினரை சற்று அமைதியாக வரச்சொல்லுங்கள்” என்றான். “அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்!” என்றான் கடோத்கஜன். “அவர்கள் எந்த ஓசையையும் இட வேண்டியதில்லை. அவரைக் கண்டதும் முறைப்படி வாழ்த்தொலி மட்டுமே எழுப்பவேண்டும்” என்றான் அசங்கன். “வாழ்த்தொலியை இவ்வாறு எழுப்புவதுதான் எங்கள் பழக்கம்” என்றான் கடோத்கஜன். அசங்கன் ஏதோ சொல்ல விரும்பி பின்னர் அதை முற்றிலும் தவிர்த்தான். நிகழ்வது அதன் போக்கில் அமையட்டும் என்று தோன்றியது.

மங்கலத்தாலங்களுடன் பன்னிரு வீரர்கள் இரண்டு நிரைகளாக வந்தனர். அவர்கள் கடோத்கஜனின் முன்னால் வந்து தாலமுழிந்து தலைவணங்கி விலக அவர்களைத் தொடர்ந்து பறைகளும் கொம்புகளும் சங்குகளும் மணிகளும் இலைத்தாளங்களும் முழங்க ஐந்திசை பெருகிச்சூழ இசைச்சூதர் எழுவர் வந்தனர். இசைக்கேற்ப கடோத்கஜனின் உடலில் எழுந்த அசைவைக்கண்டு அசங்கன் அறியாது அவன் கைகளை பற்றினான். அசங்கனை நோக்கி “என்ன?” என்றான் கடோத்கஜன். திரும்பிப்பார்த்தபோது கடோத்கஜனின் படையிலிருந்த அனைவருமே மெல்ல நடனமிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டு அசங்கன் ஒன்றுமில்லை என்று தலையசைத்தான்.

சினியும் அவர்களுடன் சேர்ந்து தாளத்திற்கு உடலை அசைத்தபடி வந்தான். புருவத்தை நெரித்து உதட்டசைவால் ‘பேசாமல் வா’ என்று அவனுக்கு அசங்கன் ஆணையிட்டான். ஆனால் அவனைப் பார்த்து சிரித்தபடி மேலும் உடலை அசைக்கத் தொடங்கினான் சினி. பொறுமையிழந்து நோக்கை விலக்கிக்கொண்டான் அசங்கன். அவனைச் சூழ்ந்து அரக்கர்கள் அனைவரும் மெல்லிய நடமிட அவன் மட்டும் நேர்நடை கொண்டது மேலும் அமைதியின்மையை உருவாக்கியது. தன் உடலில் அந்த நடனம் கூடிவிடக்கூடாது என்பதற்காக உடலை இறுக்கிக்கொண்டான். கைகளை முறுக்கிப்பற்றியிருப்பதையும் பற்களைக் கடித்திருப்பதையும் சற்றுநேரம் கழித்தே உணர்ந்து எளிதாகி புன்னகையை முகத்தில் வரவழைத்துக்கொண்டான்.

யுதிஷ்டிரர் இரு கைகளையும் விரித்தபடி புன்னகை நிறைந்த முகத்துடன் முன்னால் வர அவருக்குப் பின்னால் நகுலனும் சகதேவனும் வந்தனர். கடோத்கஜன் விரைந்து ஓடிச்சென்று முழங்கால் தரையில் அறைபட விழுந்து தன் தலையை அவர் கால்களில் வைத்து வணங்கினான். தலையையும் கைகளையும் மும்முறை மண்ணில் அறைந்தான். அவனுக்குப் பின்னால் சென்ற அத்தனை படைவீரர்களும் அதைப்போலவே நிலம்படிய விழுந்து வணங்கினர். யுதிஷ்டிரர் குனிந்து அவனை தூக்க முயல எடையால் அவனை அசைக்க முடியவில்லை. அவன் எழுந்து யுதிஷ்டிரரின் தலைக்குமேல் தன் தோள் விரிந்திருக்க “தந்தையே, நான் உங்கள் மைந்தன் கடோத்கஜன்!” என்றான்.

அவர் அவனை கைகளால் சுற்றித் தழுவி, அவன் நெஞ்சில் தலைசாய்த்துக்கொண்டார். நகுலனும் சகதேவனும் அவன் இரு கைகளையும் தொட்டார்கள். யுதிஷ்டிரர் மெல்ல விசும்பி அழுதார். அவன் அவரை குனிந்து நோக்கி “தந்தையே, என்ன இது? தந்தையே!” என்றான். நகுலனும் சகதேவனும்கூட விழிகசிந்திருந்தனர். யுதிஷ்டிரர் தன் முகத்தை துடைத்துக்கொண்டு பெருமூச்சுவிட்டார். கடோத்கஜன் “தந்தை எங்கே?” என்றான். யுதிஷ்டிரர் திரும்பிப்பார்த்தபோது பீமன் அவர்கள் நிரையின் பின்பகுதியில் தனியாக கைகளை மார்பில் கட்டிக்கொண்டு வேறேங்கோ நோக்கியவன்போல நின்றிருப்பதை கண்டார்.

கடோத்கஜன் ஓடிச்சென்று பீமனை அணுகி கால்களில் தலை வைத்தான். பீமன் குனிந்து அவன் தலையைத் தொட்டு வாழ்த்துச்சொல்லை முணுமுணுத்தான். கடோத்கஜன் எழுந்து சற்று நிலைகொள்ளாமல் நாற்புறமும் ததும்பிவிட்டு மீண்டும் ஓடிவந்து நகுலனையும் சகதேவனையும் நினைவுகூர்ந்து கால்தொட்டு வணங்கினான். அவர்கள் அவனை அள்ளி தூக்கி அணைத்துக்கொண்டார்கள். “இளையவன் விற்பயிற்சிக்கு சென்றிருக்கிறான். இல்லையேல் அவன் இத்தருணத்தை கொண்டாடியிருப்பான்” என்றார் யுதிஷ்டிரர்.

எண்ணியிராப் பொழுதில் கடோத்கஜன் திரும்பி யுதிஷ்டிரரை இரு கைகளாலும் அள்ளி மேலே தூக்கி வீசி மீண்டும் பற்றிக்கொண்டான். அவர் பதறிப்போய் கூச்சலிட படைவீரர்கள் சிறிய அலையென அசைந்து முன்வர முயன்றனர். சகதேவன் கையசைவால் அவர்களை அகற்றினான். கடோத்கஜன் யுதிஷ்டிரரை நெஞ்சோடணைத்து உரக்க நகைத்தபடி சுற்றி வந்தான். அவர் தோள்களிலும் கன்னங்களிலும் முத்தமிட்டான். அவனுடைய படைவீரர்கள் “ஹோ! ஹோ! ஹோ!” என முழக்கமிட்டார்கள். யுதிஷ்டிரர் “மூடா! மூடா!” என கூச்சலிட்டு அவன் தலையை தன் கையால் அறைய அவன் தூக்கிவீசி பிடித்துக்கொண்டே இருந்தான்.

அசங்கன் தலையில் கைவைத்து உடல் நடுங்க நிலம் நோக்கி நின்றான். அவனைச் சூழ்ந்திருந்த கடோத்கஜனின் படைவீரர்கள் பெண்களைப்போல கைகளைத் தூக்கி குரவையோசையிட்டனர். வாயால் முழவுத்தாளமிட்டு அதற்கேற்ப உடலை அசைத்தனர். சினி அசங்கனின் ஆடையைத் தொட்டு இழுத்து “மூத்தவரே! மூத்தவரே!” என்றான். கைசுட்டி உரக்க நகைத்து “தூக்கிப்போட்டு பிடிக்கிறார். அரசரை மரப்பாவைபோல பிடிக்கிறார்!” என்றான். “விலகிச் செல், அறிவிலி!” என்று அசங்கன் பற்களைக் கடித்து மூச்சொலியால் அவனை அப்பால் துரத்தினான். அவன் கால்கள் நிலத்திலிருந்து வழுவின. ஓசைகள் மங்கலாக, காதுகள் மூளலோசை எழுப்பின. சூழ்ந்திருந்த விளக்குகளின் ஒளி விசைகொண்டு கரைந்து ஒற்றைச் செம்பரப்பாக அவனை சுற்றிச் சுழித்தது.

அசங்கன் பின்னர் விழிநிமிர்ந்து நோக்கியபோது யுதிஷ்டிரர் கண்ணீர்வர முகம் சிவந்து நகைத்துக்கொண்டிருப்பதை கண்டான். நகுலனும் சகதேவனும் சூழ்ந்திருந்த படைவீரர்கள் அனைவருமே உடல் ஓய நகைத்துக் களைத்திருந்தனர். அப்பால் பீமன் கைகளை மார்பில் கட்டியபடி உதடுகள் மெல்லிய புன்னகையில் விரிந்திருக்க கடோத்கஜனை பார்த்துக்கொண்டிருந்தான். யுதிஷ்டிரர் கடோத்கஜனிடம் “வருக, இங்கே உனக்கு இன்னுணவு இல்லையென்றாலும் நல்லுணவு உள்ளது. விருந்துண்டு அவைக்கு வருக!” என்றார். “நான் எப்போதும் ஊனுணவு மட்டுமே உண்பேன்…” என்றான் கடோத்கஜன். “நன்று, ஓய்வெடுத்துவிட்டு வருக!” என்றார் யுதிஷ்டிரர். “நான் ஓய்வே எடுப்பதில்லை” என்றான் கடோத்கஜன். “உன் படையினர் ஓய்வெடுக்கட்டும்” என்றார் யுதிஷ்டிரர். “அவர்களும் ஓய்வெடுக்கும் வழக்கமில்லை” என்றான் கடோத்கஜன்.

யுதிஷ்டிரர் சலிப்புற்று “சரி, நான் ஓய்வெடுக்கவேண்டும்… அதன் பிறகு வா” என்றபின் அசங்கனை நோக்கி “அவைக்கு அழைத்து வருக!” என்றார். அவர் தன்னை நோக்கி பேசியது அசங்கனை நிலைபதறச் செய்தது. “ஆம், அரசே” என்றபோது குரல் வரவில்லை. “ஆணை” என்று தலைவணங்கவேண்டும் என அவன் எண்ணியபோது யுதிஷ்டிரர் திரும்பிக்கொண்டிருந்தார். அசங்கன் ஏமாற்றத்துடன் அதை இளையோர் பார்த்துவிட்டார்களா என்று பார்த்தான். அவர்களின் விழி கடோத்கஜனிலேயே இருந்தது. அசங்கன் தன் ஆடையை நீட்டி இழுத்து நிமிர்ந்து நின்றான். பொறுப்பு ஒன்று வந்துள்ளது. அதை திறம்படச் செய்தாகவேண்டும் என சொல்லிக்கொண்டான். அவனுக்கு அப்போது தன்னை இளையோர் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. தொண்டையை கனைத்து “செல்வோம்” என்றான்.

bowகடோத்கஜனை பார்க்க பாண்டவப் படைவீரர்கள் முண்டியடித்தார்கள். அணிநிரைகள் கலைவதைக் கண்ட படைத்தலைவர்கள் கொம்புகளையும் முழவுகளையும் ஒலித்து அவர்களை நெறிப்படுத்தும் ஆணைகளை விடுத்தனர். யாரோ ஒருவன் “பேருருவர் வாழ்க! இளைய பாண்டவர் கடோத்கஜர் வாழ்க!” என கூவ மொத்த பாண்டவப் படையும் பெருங்குரலில் வாழ்த்தொலி எழுப்பத் தொடங்கியது. செவிகளை நிறைத்துச் சூழ்ந்த பேரொலி நடுவே கடோத்கஜன் சூழ நோக்கி தன்னை பார்த்து கையசைத்த அனைவரிடமும் சிரித்து வாழ்த்து சொல்லி நடந்தான். “இவர்கள் நம்மைக் கண்டு மகிழ்கிறார்கள், அரசே” என்றான் உத்துங்கன். “ஆம், நாம் இவர்களை மேலும் மகிழ்விப்போம்” என்றான் சகுண்டன்.

யானைத்தோல் கூடாரத்திற்குள் செல்ல கடோத்கஜன் மறுத்துவிட்டான். வெளியே சாலமரத்தடியில் கவிழ்த்திட்ட மரத்தொட்டிமேல் அமர்ந்தான். உத்துங்கனும் சகுண்டனும் அப்பால் நிலத்தில் கால்மடித்து குரங்குகள்போல அமர்ந்தனர். கடோத்கஜன் சுற்றிலும் நோக்கிவிட்டு “இத்தனை படைவீரர்கள், இவ்வளவு படைக்கலங்கள்… இருந்தும் நாம் ஏன் வெல்லவில்லை?” என்றான். “ஏனென்றால் அவர்கள் நம்மைவிட மிகுதி” என்றான் அசங்கன். “அனைவரும் சேர்ந்து போரிட்டால்…” என்றபின் கடோத்கஜன் “எத்தனைபேர் இறப்பார்கள்?” என்றான். “இரண்டு நாட்கள் நடந்த போரில் இங்கு வந்தவர்களில் பாதிப்பேர் மறைந்துவிட்டனர்” என்றான் அசங்கன். “பாதிப்பேர் என்றால்?” என அவன் வியப்பில் சுருங்கிய சிறிய விழிகளுடன் கேட்டான். “பல லட்சம்பேர்” என்றான் அசங்கன். “அவர்களை என்ன செய்தீர்கள்?” என்றான் கடோத்கஜன். “புதைத்தோம், எரித்தோம்” என்று அசங்கன் சொன்னான். அவனுக்கே ஒரு பொருளின்மை தோன்றலாயிற்று.

கடோத்கஜன் சில கணங்கள் கழித்து “இப்போர் எதற்கு?” என்றான். “நாட்டுக்காக” என்றான் அசங்கன். “நாடென்றால் நிலம் அல்லவா?” என்றான் கடோத்கஜன். “ஆம்” என்றான் அசங்கன். அவன் மேலே பேச விரும்பவில்லை. அச்சொல்லாடல் மேலும் பொருளின்மையை உருவாக்கி உயிர்கொண்டிருப்பதையே வீணென்று காட்டிவிடும் என அஞ்சினான். “நிலம் எதற்காக?” என்றான் கடோத்கஜன். “மானுடர் வாழ்வதற்காக. மானுடர் பேணும் தெய்வங்கள் பெருகுவதற்காக” என்றான் அசங்கன். “மானுடரைக் கொன்றழித்து மண்ணை வெல்வதில் என்ன பொருள்?” என்றான் கடோத்கஜன். உத்துங்கன் “ஆம், மண் வேண்டுமென்றால் பாரதவர்ஷத்தில் விரிந்துபரந்து கிடக்கிறதே” என்றான். சகுண்டன் “அவர்கள் அரசர்கள். அவர்களுக்கு இன்னொருவர் ஆளும் மண் மட்டுமே தேவைப்படும்” என்றான்.

அசங்கன் ஏனென்றறியாமல் சீற்றம்கொண்டான். “மண்ணுக்காக அல்ல. அறத்துக்காக. பாரதவர்ஷத்தை ஆளும் தொல்வேதங்களை வென்று அறத்திலமைந்த நாராயணவேதம் நிலைகொள்வதற்காக” என்றான். “ஆம், அவ்வாறு சொன்னார்கள்” என்றான் கடோத்கஜன். “ஆனால் அந்த வேதங்களே மானுடருக்காகத்தானே?” என்றான். “ஆம், ஆனால் அது நாளை வரவிருக்கும் தலைமுறைகளுக்காக. இன்று மானுடர் அதை உயிர்கொடுத்து நிலைநாட்டியாகவேண்டும்.” கடோத்கஜன் “இளையோனே, நீரில் முளைத்த செடி நீரின்றி அமையாது” என்றான். அசங்கன் உள்ளம் திடுக்கிட அவனை நோக்கினான். கடோத்கஜன் தலையை அசைத்து “ஆம், அவ்வாறே” என்றான்.

நெடுநேரம் கடந்து “குருதியில் அல்லாது அறம் நிலைகொள்ள முடியுமா?” என்றான் அசங்கன். கடோத்கஜன் “இயலவேண்டும். அவ்வாறொன்று எழவேண்டும்” என்றான். உத்துங்கன் “அது நம் மூதன்னையர் ஆண்ட நாட்களை போலிருக்கும்” என்றான். கடோத்கஜன் “நான் இன்று நம் அரசரை பார்த்தேன். எத்தனை ஆடைகள்… ஆடையே இல்லாத ஓர் அரசன் இருக்கலாகுமா என எண்ணினேன்” என்றான். குழப்பமும் கலக்கமுமாக முகம் சுளித்திருக்க “ஆடையே இல்லாத அரசர்கள். அவர்கள் போரிடமாட்டார்கள். எவரையும் தண்டிக்கமாட்டார்கள்…” என்றான். “நம் மூதன்னையர் அவர்களுக்கு காவலாக அமர்ந்திருப்பார்கள்” என்றான் உத்துங்கன்.

அசங்கன் மேலும் எரிச்சலடைந்தான். “நீங்கள் தொல்குடிகள் போரிடுவதே இல்லையா?” என்றான். கடோத்கஜன் “போரிடா விலங்குகள் எங்குள்ளன? ஆனால் குடி முற்றழியும் போர்கள் எங்களுக்குள் இல்லை” என்றான். அவனுடைய தோற்றம் எண்ணநுண்மை அற்றவன் என எவ்வாறு தனக்கு தோன்றச் செய்கிறது என அசங்கன் வியந்தான். பேருருவர்கள் அனைவருமே அந்த உளப்பதிவை உருவாக்குகிறார்கள். தன் எளிமையாலேயே நெடுந்தொலைவு செல்பவன் அவன் என்று அசங்கன் எண்ணினான். மேலும் பேச அவன் விரும்பவில்லை.

“பாவம் தந்தை” என்றான் கடோத்கஜன். “ஏன்?” என்றான் அசங்கன். “அவரால் இப்போரில் ஈடுபட இயலாது” என்றான் கடோத்கஜன். “அது மெய்யல்ல. இப்போரில் நிகர்நிற்கவியலாத வீரர் அவரே. நேற்றைய போரில் அவர் வெறிகொண்ட யானையென எதிரிகளை சூறையாடினார்” என்றான் அசங்கன். கடோத்கஜன் “அதனால் அவர் போரில் உளமீடுபட்டிருக்கிறார் என்று பொருளா என்ன?” என்றான். “உள்ளத்தால் அகன்றிருப்பதனால்கூட அவ்வாறு போரிடலாம் அல்லவா?”

அசங்கன் அவன் முகத்தை நேர்கொண்டு நோக்கி “நீங்கள் போரில் உளமீடுபாடு கொண்டிருக்கிறீர்களா, மூத்தவரே?” என்றான். “இல்லை” என்றான் கடோத்கஜன். “நான் என் தந்தையின்பொருட்டே வந்தேன். அவருக்கு மைந்தர் துணைநின்றாக வேண்டும் என்பதனால். அவர் இல்லையென்றால் இத்திசைக்கே வந்திருக்கமாட்டேன்.” அசங்கன் “எப்போரிலும் ஈடுபட்டிருக்கமாட்டீர்களா?” என்றான். “பிறரை கொன்றமைவதல்ல என் வெற்றி” என்றான் கடோத்கஜன்.

“மூத்தவரே, நீங்கள் இப்போரில் பெரும்புகழ் அடையலாம். வெற்றிக்குப் பின் உங்கள் குடியும் நாடும் செல்வமும் சிறப்பும் அடையும்” என்றான் அசங்கன். “புகழா? அதிலென்ன இருக்கிறது? எங்கள் நடுகல்குன்றுகளில் மாவீரர் நிரைநிரையாக நின்றிருக்கிறார்கள். அவர்கள் எவருக்கும் தனிப் பெயர்கள் இல்லை” என்றான் கடோத்கஜன். “உங்கள் நாட்டுக்கு நலம் அமையுமென்றால்? உங்கள் குடி வாழும் என்றால்?” என்றான் அசங்கன்.

“ஆம், அது மெய். இனியும் காடுகளுக்குள் நாங்கள் வாழவியலாது. கானுறைவாழ்விலுள்ள எந்த இன்பமும் ஊர்திகழ் வாழ்வில் இல்லை. ஆனால் கானுறைவோர் இனி அவ்வண்ணம் நீடிக்கமுடியாது. அவர்கள் அழிக்கப்படுவார்கள். பெரும்புகழ்கொண்ட அசுரகுல வேந்தர்கள் அனைவரும் அழிந்தனர். நிஷாதரும் கிராதரும் அரக்கரும் அசுரரும் வெல்லப்படுகிறார்கள். எங்கள் குலம் வாழவேண்டும் என்றால் நாங்கள் நாடாகவேண்டும். படைகொள்ளவேண்டும். எங்கள் கருவூலங்களில் பொன் இருக்கவேண்டும்” என்று கடோத்கஜன் சொன்னான்.

பன்னிரு ஏவலர் நிரைவகுத்து பெரிய கடவங்களில் கொண்டுவந்து இறக்கி அகன்ற மரத்தாலங்களில் உணவு பரிமாறினர். சுட்ட மாட்டுத்தொடைகளும் முழுப் பன்றியும் தோலுடன் பொரிக்கப்பட்ட ஆடும். கடோத்கஜன் உணவைப் பார்த்ததும் அதுவரை இருந்த உணர்வுகள் அகல கைகளை தட்டிக்கொண்டு உரக்க நகைத்தான். உத்துங்கன் எழுந்து நின்று கைகளை நீட்டி “இங்கே இங்கே” என்று கூச்சலிட்டான். உணவை முன்னால் வைத்ததும் அவர்கள் கைகளை உரசிக்கொண்டு நாவால் வாயை துழாவினார்கள்.

கடோத்கஜன் “என் படைவீரர்கள் அனைவரும் உண்டுவிட்டார்களா?” என்று கேட்டான். அடுமனையாளன் “ஆமென்று எண்ணுகிறேன். நான் வரும்போது உணவு சென்றுகொண்டிருந்தது” என்றான். கடோத்கஜன் அசங்கனிடம் “சென்று நோக்கிவிட்டு வருக! அனைவரும் உணவில் கைவைத்துவிட்டிருக்கவேண்டும். ஒருவர்கூட உணவுக்காக காத்திருக்கக்கூடாது” என்றான். அசங்கன் எழுந்து விரைந்து அப்பால் சென்று மூன்று ஏவலரிடம் ஆணையிட்டு குதிரைகளில் அவர்களை அனுப்பிவிட்டு காத்து நின்றான். அவர்கள் மரப்பாதை பெருந்தாளமிட வந்திறங்கி “அனைவருக்கும் உணவு சென்றுவிட்டது, இளவரசே. உண்ணத்தொடங்கிவிட்டனர்” என்றனர்.

அசங்கன் அதை கடோத்கஜனிடம் வந்து சொன்னான். கடோத்கஜன் பிறரை பார்க்க அவர்கள் இருவரும் உணவை கையில் எடுத்த பின்னர் தான் மாட்டுத்தொடையை எடுத்துக்கொண்டான். அசங்கன் “இது உங்கள் குலவழக்கமா, மூத்தவரே?” என்றான். “ஆம், எங்கள் குடியில் குழவியர், பெண்டிர், முதியோர், வீரர், என அனைவரும் உணவுண்ட பின்னரே அரசன் உணவுண்ண வேண்டும். ஒருவர் பசித்திருக்க அரசன் உண்டாலும் அவ்வுணவு நஞ்சு. அதற்கு அவன் ஏழுமுறை கங்கையில் நீராடி பிழையீடு செய்யவேண்டும்” என்றான்.

அசங்கன் கடோத்கஜன் உண்ணுவதை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் இரு கைகளாலும் ஊன்தடியைப் பிடித்து சுழற்றிச் சுழற்றி கடித்து இழுத்தான். பெரிய துண்டுகளாக கிழித்து ஓசையுடன் மென்றான். ஏப்பம்விட்டபடி கள்ளை குடித்து புறங்கையால் துடைத்துக்கொண்டான். அவனுடைய அசைவுகளனைத்தும் குரங்குகளுக்குரியவை. சுவையை உணர்ந்தபோது புலிபோல உறுமியபடி தன் தோழரை நோக்கி சிரித்தான்.

“தாங்கள் இப்போது இடும்பவனத்தின் அரசர் அல்லவா?” என்றான் அசங்கன். “ஆம், பதினெட்டு அகவை நிறைந்ததும் என் காட்டுக்கு பொறுப்பேற்றேன். இப்போது அது காடல்ல. கங்கைக்கரை துறைமுகத்தில் இருந்து ஏழு வண்டிச்சாலைகளால் இடும்பவனம் இணைக்கப்பட்டுள்ளது. தெருக்களும் ஆலயங்களும் கல்விச்சாலைகளும் கொண்ட இடும்பவனம் இன்று ஒரு பேரூர். நூற்றெட்டு அந்தணர்குடிகள் உள்ளன. ஆயரும் உழவரும் வாழும் தெருக்கள் நாள்தோறும் பெருகிக்கொண்டிருக்கின்றன. ஊரைச்சுற்றி மரத்தாலான கோட்டை அமைத்துள்ளேன்” என்றான் கடோத்கஜன்.

“மரத்தாலா?” என்று அசங்கன் வியப்புடன் கேட்டான். “எளிதில் எதிரிகள் அதை எரித்துவிட முடியுமே?” கடோத்கஜன் “வாழும் மரங்களால் ஆன கோட்டை. சொல்லப்போனால் செறிந்த சிறுகாடொன்றால் ஆன கோட்டை. பன்னிரு அடுக்குச்சுற்றுகளாக பெருமரங்களை வளர்த்து முள்ளாலும் மூங்கிலாலும் இணைத்துக்கட்டி உருவாக்கப்பட்டது. அனைத்து மரங்களுக்கு மேலும் எங்கள் வீரர்கள் அமர்ந்திருக்கும் காவல்மாடங்கள் உண்டு” என்றான். அசங்கன் “ஆம், அவ்வாறு கதைகளில் கேட்டுள்ளேன்” என்றான். கடோத்கஜன் “இன்று பாரதவர்ஷத்தில் எந்த அரசும் எளிதில் என் நகரை வென்றுவிட இயலாது” என்றான்.

அந்தக் கோட்டையை தன் உளவிழிக்குள் விரித்துக்கொண்டு “அங்காடிகள் உள்ளனவா?” என்றான் அசங்கன். “ஆம், நாளங்காடி கோட்டைக்கு வெளியே அமைந்துள்ளது. கங்கைக்கரையில் இன்னொரு அங்காடி. கூலமும் படைக்கலங்களும் பிற கலங்களும் படகுகளில் வந்திறங்குகின்றன. தென்மேற்கே தேவபாலபுரத்திலிருந்தும் தென்கிழக்கே கலிங்கத்திலிருந்தும் வணிகர்கள் ஆண்டுக்கு எட்டுமுறை எங்கள் ஊருக்கு வருகிறார்கள். சிந்துவிலிருந்தும் கூர்ஜரத்திலிருந்தும் மலைப்பொருள் கொள்ளும் வணிகர்கள் ஒவ்வொரு வாரமும் வருகிறார்கள்” என்று கடோத்கஜன் சொன்னான். “அல்லங்காடி கோட்டைக்குள் உள்ளது. அருமணிகளும் பூண்களும் இன்னுணவுகளும் மதுவும் விற்கும் கடைகள் நிரைகொண்ட நாற்கை வடிவம் கொண்டது.”

கடோத்கஜன் விழிகள் விரிய கைகளைத் தூக்கி சொன்னான் “நகர் நடுவே அரசமாளிகை அமைந்துள்ளது.” அவன் கையில் பன்றித்தொடை வானிலென நின்றது. “மூன்றடுக்கு மாளிகை அது.” அசங்கன் “உங்கள் அரண்மனையா?” என்றான். “ஆம், ஆனால் மண்மானுடரின் அரண்மனைகளை போன்றது அல்ல” என்றான் கடோத்கஜன். “எங்கள் மாளிகையை அரக்கர் குடிகளுக்குரிய முறையிலே அமைத்துள்ளேன். எழுந்த பெரிய மரங்களுக்குமேல் மூங்கில் வேய்ந்து உருவாக்கப்பட்டது அது. நடந்து அதில் ஏறுவதைவிட மரங்களினூடாக பறந்து செல்வது எளிது. எங்கள் இடும்பநகரியில் அனைத்து மாளிகைகளும் மரங்களுக்கு மேலேயே அமைந்துள்ளன. தரை எங்கள் விலங்குகளுக்குரியது. யானைகளும் புரவிகளும் மாடுகளும் பன்றிகளும் அங்கு வாழ்கின்றன.”

“அயல்நிலத்தாரும் அவர்களுடன் வாழ்கிறார்கள்” என்றபின் கன்றுத்தொடையை மென்றான் உத்துங்கன். கடோத்கஜன் உரக்க நகைத்து “எந்நிலையிலும் எங்களை தலை தூக்கியே நோக்கும் நிலையிலிருப்பவர்கள் அவர்கள்” என்றான். “நீங்கள் நிலத்தில் நின்றாலும் பாரதவர்ஷத்தில் பெரும்பாலானவர்கள் உங்களை அண்ணாந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது, மூத்தவரே” என்றான் அசங்கன்.

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 16

bowஅசங்கன் மூச்சுவாங்க விரைந்தோடிச் சென்று அரக்கர்நிரைமுன் வந்தவன் அருகே சிற்றுருவாக நின்று தலைவணங்கி “வணங்குகிறேன் மூத்தவரே, தாங்கள் இடும்பவனத்தின் அரசர் கடோத்கஜர் என்று எண்ணுகிறேன். நான் ரிஷபவனத்தின் சாத்யகரின் சிறுமைந்தனும் யுயுதானரின் முதல் மைந்தனுமான அசங்கன்” என்றான். கடோத்கஜன் முழு உடலாலும் புன்னகை புரிந்தான். கரிய உதடுகள் அகல பெரிய பற்கள் பளிங்குப் படிக்கட்டுகள்போல விரிந்தன. “நான் இடும்பவனத்தின் காகரின் சிறுமைந்தனும் பாண்டவர் பீமசேனரின் மைந்தனுமாகிய கடோத்கஜன்” என்று சொல்லி வணங்கி அவன் தோளில் கைவைத்து “இந்திரப்பிரஸ்தத்தின் செய்திகளை குறைவாகவே கேட்டிருக்கிறேன். உங்கள் தந்தையின் பெயர் எப்போதோ செவியில் ஒலித்திருக்கிறது. அவர் இளைய யாதவரின் படைத்தலைவர் அல்லவா?” என்றான்.

அசங்கன் கடோத்கஜனின் கைகளை பற்றிக்கொண்டு “என்னை இளையோனே என்று அழையுங்கள். உங்களுக்கு அணுக்கமாக இருப்பது என் பேறு. இங்கு அரண்மனைகள் அனைத்திலுமே உங்களைப்பற்றிய கதைகள் எப்போதும் பேசப்படுகின்றன. உங்கள் தந்தையிடம் எதிர்நின்று பொருதவும் வெல்லவும் வாய்ப்புள்ள ஒரே மானுடர் நீங்களே என அறிந்திருக்கிறேன். நான் சிறுவனாக இருக்கையிலேயே உங்களை கதைகளினூடாக நன்கறிவேன். ஒருவேளை நீங்களே அறிந்திராத உங்கள் வீரச்செயல்கள்” என்று சிரித்த அசங்கன் “என்னால் காலூன்றி நிற்கவே முடியவில்லை. என் உடன்பிறந்தார் உங்களை பார்க்கவேண்டும். என் இளையோன் சினி தங்களை பார்த்தால் அருகிலிருந்து விலகமாட்டான். இப்புவியிலேயே அவனுக்கு மிக உகந்த வீரர் தாங்கள்தான்” என்றான்.

கடோத்கஜன் இரு கைகளையும் ஓங்கி அறைந்து வெடிப்பொலி எழுப்பி முழவோசையுடன் நகைத்தான். உடலை அலைக்கழித்து துள்ளியமைவதுபோல கால்களை மடித்து நீட்டி சிரித்தபடி அருகே நின்ற அவனளவே பேருருக்கொண்ட துணைவனிடம் “சகுண்டரே, கேட்டீர்களா? நமது வீரச்செயல்கள்!” என்றான். அவன் “ஆம்!” என தலையைச் சுழற்றி சிரித்தான். கடோத்கஜன் அசங்கனை இழுத்து தன் நெஞ்சோடணைத்துக்கொண்டான். பெரிய கைகள் இரு கரிய காட்டாறுகள்போல அவனை வளைத்தன. இறுக்கத்தில் அவனுக்கு மூச்சுத்திணறியது. அவன் உடலில் கரடிகளுக்குரிய புழுதிமணமும் வியர்வைநாற்றமும் கலந்த வீச்சம் இருந்தது. கடோத்கஜனின் உடலில் எங்கும் மயிரே இல்லை என்று முகம் அவன் மார்பில் அழுந்திய போதுதான் அசங்கன் உணர்ந்தான். ஆகவே அவன் உடலின் ஒவ்வொரு நரம்பும் எலும்பும் தசையும் நன்றாகத் தெளிய அவன் கருங்கல்லில் செதுக்கப்பட்டவன்போல தெரிந்தான்.

“உன்னை சந்தித்ததில் மகிழ்வு, இளையோனே. உன் தந்தைக்கு என் வணக்கங்கள். எங்கள் காடுவரை இப்போர் நிகழும் செய்தி வந்து சேர மிகவும் பிந்திவிட்டது. அறிந்த அக்கணமே கிளம்பிவிட்டோம். போதிய படைப்புறப்பாடு எதுவும் செய்துகொள்ளவில்லை. ஆகவே எங்களிடம் குறைவாகவே படைக்கலங்கள் உள்ளன” என்றான். அசங்கன் “இங்கு படைக்கலங்களுக்கு குறைவே இல்லை. மானுடர் மீண்டு வருவதில்லை, படைக்கலங்கள் அனலாடி மீண்டு வந்தபடியே இருக்கின்றன” என்றான். “அரசர் இருக்குமிடமே இந்திரப்பிரஸ்தம். பாண்டவர்களின் நகரிக்கு தங்கள் வரவு சிறப்புறுக!” என்றான்.

பின்னர் நினைவுகூர்ந்து “இங்கு நில்லுங்கள்… ஒருகணம் இங்கு நில்லுங்கள்” என்று சொல்லி திரும்பி ஓடினான். காவல்மேடையை அவன் அடைவதற்குள் எதிரே சுவீரர் புருவங்கள் சுளிக்க கடோத்கஜனை உறுத்துப் பார்த்தபடி வேலை ஊன்றி விரைந்து வந்தார். “யாரவர்? எங்கிருந்து வருகிறார்கள்?” என்றார். அசங்கன் “சுவீரரே, இது என் ஆணை. வருபவர் என் மூத்தவர், பீமசேனரின் மைந்தர் இடும்பவனத்தின் கடோத்கஜன். அரசமுறைப்படி முரசுகள் முழங்கட்டும். கொம்போசையும் சங்கொலியும் எழ வாழ்த்துக்குரல்கள் சூழ அவரை நாம் வரவேற்கவேண்டும்” என்றான். சுவீரர் மேலும் கண்கள் இடுங்க “அதற்கான முறையான ஆணையில்லை. ஏனெனில்…” என்று சொல்ல “இது என் ஆணை” என்றான் அசங்கன்.

சுவீரர் உளநிகர் அடைந்து “இளவரசே, அவர்கள் அரக்ககுலத்தோர். அவர்களின் நோக்கமென்ன என்று இன்னமும் நமக்கு தெளியவில்லை. அவர்களை நம் படை ஏற்றுக்கொள்ளப்போகிறதா என்பதும் முடிவாகவில்லை. அம்முடிவுகளை படைசூழ்வோர்தான் எடுக்கமுடியும். அதற்குள் அரசமுறைப்படி வரவேற்பளிப்பதற்கு வழியில்லை. காவலர்களான நாம் முடிவெடுத்து முந்தலாகாது” என்றார். அசங்கன் “நான் முடிவெடுத்துவிட்டேன்” என்றான். அவன் குரல் மாறுபடுவதைக் கண்டு சுவீரர் ஏறிட்டுப் பார்த்தார். “ரிஷபவனத்து யாதவன் என்ற வகையிலும் பாஞ்சால அரசமகளை மணந்தவன் எனும் வகையிலும் உங்கள் படைப்பிரிவுகள் அனைத்திற்கும்மேல் சொல்லாட்சி கொண்டவன் நான். இது என் ஆணை” என்றான் அசங்கன்.

“இதை அரசுசூழ்தல் முறைகளால் முடிவெடுக்கவில்லை, குருதியால் முடிவெடுத்திருக்கிறேன். இப்பாண்டவ குலத்தின் முதல் மைந்தர் அவரே. முரசும் கொம்பும் வாழ்த்தொலிகளும் இன்றி அவர் எதிர்கொள்ளப்படலாகாது. என் ஆணை மீறப்படுமெனில் அரசமகன் அனைவரையும் தலைவெட்டி குவிக்க ஆணையிடுவேன். அன்றி உயிர்துறப்பேன்” என்றான். கைகளை நீட்டி “அரசே…” என்றார் சுவீரர். அசங்கன் “ம்ம்” என்று உறுமினான். “ஆணை” என்று சுவீரர் தலைவணங்கி பின்னால் திரும்பிச்சென்று இரு கைகளையும் விரித்து காவல்மாடத்திலிருந்து அவரை பார்த்துக்கொண்டிருந்த வீரர்களிடம் செய்கையால் பேசினார்.

காவல்மாடத்தில் நின்றவர்களும் முதலில் திகைப்பதை அவர்கள் அமைதியிலிருந்து உணரமுடிந்தது. பின்னர் ஒரு காவல்மாடத்திலிருந்து பெருமுரசு அரசகுடியினரை வரவேற்பதற்குரிய களிற்றுநடைத் தாளத்தை எழுப்பத் தொடங்கியது. மும்முறை மும்முறையென கொம்புகள் ஒலித்து “அரச மைந்தருக்கு நல்வரவு! பாண்டவ மைந்தருக்கு வாழ்த்து!” என்று முழங்கின. சங்குகளும் மணிகளும் இணைந்துகொள்ள பலநூறு தொண்டைகளிலிருந்து “கடோத்கஜர் வாழ்க! குருகுல மைந்தர் வாழ்க! பாண்டவ மைந்தர் வாழ்க!” என்று வாழ்த்தொலிகள் எழுந்தன.

அசங்கன் மீண்டும் கடோத்கஜனை நோக்கி சென்றான். “வருக, மூத்தவரே! தங்களை முறைப்படி வரவேற்கவேண்டும் என்பதற்காகத்தான் ஆணையிடும்பொருட்டு சென்றேன்” என்றான். கடோத்கஜன் சூழ ஒலித்த முரசொலிகளை திரும்பிப்பார்த்த பின் “இவை போர்முரசுகளா என்ன?” என்றான். “இல்லை, தங்களை வரவேற்கும் பொருட்டு ஒலிப்பவை” என்றான் அசங்கன். “எங்கள் ஊர்களில் தோட்டங்களிலோ இல்லத்தொகைகளுக்குள்ளோ யானை புகுந்துவிட்டால் இவ்வண்ணம் முழவோசை எழுப்புவார்கள்” என்றான் கடோத்கஜன். அவனுக்குப் பின்னால் நின்ற பிறிதொரு கரியவன் வெடித்து நகைத்தான். “இவன் உத்துங்கன், என் அணுக்கன்” என்றான் கடோத்கஜன்.

அசங்கன் “தங்களைப்போன்றே இருக்கிறார்” என்றபின் கடோத்கஜனின் படைவீரர்களைப் பார்த்து “அனைவருமே தங்களைப்போல பேருருவர். அனைவருமே தங்களைப்போல அள்ளிப் பற்றும் கால்களை கொண்டிருக்கிறார்கள்” என்றான். “நாங்கள் அங்கு மரங்களின் மேலே பிறந்து வாழ்கிறோம். நிலத்தில் நடப்பதே எங்களுக்கு கடினமானது” என்று உத்துங்கன் சொன்னான். “ஆம், நீங்கள் நடப்பதை முதலில் நோக்கியபோதே விந்தையை உணர்ந்தேன். உங்கள் கால்கள் கைகளைவிட மிகச் சிறியவை. பக்கவாட்டில் வளைந்தும் உள்ளன” என்றான் அசங்கன். “குரங்குகளின் கால்கள்போல” என்று சொன்ன சகுண்டன் “எங்கள் தெய்வங்கள் குரங்குவடிவம் கொண்டவை” என்றான்.

எதிரில் சுவீரர் வரவேற்பாளர்நிரை ஒன்றை இட்டுவந்தார். இருப்பவர்களைக்கொண்டு அதை அமைத்திருந்தார். ஏழு படைவீரர்கள் உணவுண்ணும் மரத்தாலத்தில் மண், நீர், அன்னம், கத்தி, குருதி என்னும் ஐந்து படைமங்கலங்களை ஏந்தி வந்தனர். கடோத்கஜன் திகைப்புடன் “என்ன கொண்டுவருகிறார்கள்?” என்றான். “ஐந்து மங்கலங்கள், இவை வரவேற்புக்குரிய சடங்கு” என்றான் அசங்கன். “அவற்றில் ஒன்றில் நீர் இருக்கிறது. அதை என்ன செய்யவேண்டும், அருந்தவேண்டுமா?” என்றான். “அல்ல, அவற்றை நோக்கி கைகூப்பிவிட்டு கடந்து சென்றால் போதும்” என்றான் அசங்கன். “வெறுமனே கைகூப்புவதற்கு இத்தனை பொருட்களா?” என்றான் கடோத்கஜன்.

“அன்னமும் உள்ளது” என்றான் உத்துங்கன். சகுண்டன் “அரசே, நாம் மௌரியர் நகருக்குச் செல்கையில் இதேபோல ஐந்து மங்கலங்களை தாலங்களில் கொண்டுவந்தார்கள்” என்றான். “ஆம், ஆனால் அவை வேறுபொருட்கள்” என்றான் கடோத்கஜன். “அவை நகர்மங்கலங்கள். இது களம். இங்கே சில பொருட்களுக்கு ஒப்புதல் இல்லை” என்றான் அசங்கன். கடோத்கஜன் “ஆம், அறிவேன்” என்றபின் பெரிய தலையை சற்றே குனித்து பற்கள் வெளிவர முகம் சுளித்து நோக்கி “நிரையாக வருகிறார்கள்” என மகிழ்ந்தான். “ஆனால் பெண்டிரைப்போல தாலமேந்தி வருகிறார்கள்” என்றான் உத்துங்கன்.

“நாம் உள்ளே செல்கையில் இனியவற்றின் மேல் நம் விழி படவேண்டுமென்பதற்காக” என்றான் அசங்கன். “ஆம், அவை இனியவை” என்ற உத்துங்கன் அதிலிருந்து தன் முகத்தில் வீசிய ஒளிக்கற்றைக்காக தலை திருப்பி “ஆடி வைக்கப்பட்டுள்ளது” என்றான். “அது ஆடி அல்ல, வாள்” என்றான் அசங்கன். “வாளை எதற்கு வைக்கவேண்டும்?” என்று கடோத்கஜன் கேட்டான். “அது மங்கலப்பொருள்” என்றான் அசங்கன். “குறுவாளா? அது எப்படி மங்கலப்பொருள் ஆகும்?” என்றான் உத்துங்கன். “தீட்டப்பட்ட வாளில் வானம் நிறைந்துள்ளது” என்றான் அசங்கன்.

கடோத்கஜன் புரியாமல் அசங்கனை சிலகணங்கள் பார்த்துவிட்டு “நான் பார்த்ததில்லை” என்றான். “மூத்தவரே, நீர்நிறைந்த ஏரியில் வானம் விரிந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்” என்றான் அசங்கன். “ஆம் ஏரியில்!” என்றபின் மேலும் குழம்பி “ஏரியில் நான் நீரைத்தான் பார்த்திருக்கிறேன்!” என்றான் கடோத்கஜன். உத்துங்கன் மேலும் ஆர்வமாக “மீன்களும் உண்டு!” என்றான். அசங்கன் வாய்விட்டு நகைத்தான். உத்துங்கன் “அந்த வாளுக்கு மாற்றாக ஆடியை வைத்திருக்கலாம். அதைவிட அழகான வேறொன்றில்லை. விளையாட உகந்தது” என்றான்.

அசங்கன் சிரித்துக்கொண்டே இருந்தான். “வருக, மூத்தவரே” என்று அவர்களை உள்ளே அழைத்துச்சென்றான். மங்கலத்தால நிரை அவர்களை அணுகி இரு பிரிவாகப் பிரிந்து தலைவணங்கியது. கடோத்கஜன் இருபக்கமும் நோக்கி ஒவ்வொருவருக்கும் தலைவணங்கினான். “இவர்கள் படைவீரர்களா?” என்று கேட்டான். “அல்ல, காவலர்கள்” என்றான் அசங்கன். “ஆம், அவ்வாறுதான் எண்ணினேன். ஏனெனில் இவர்கள் உடலில் புழுதியோ குருதியோ இல்லை” என்ற உத்துங்கன் “காவலர்கள் எதற்கு?” என்று கேட்டான். சுவீரர் “படைகளுக்கான காவல்” என்றார்.

திகைப்புடன் படைகளை நோக்கிய கடோத்கஜன் “படைக்குக் காவலா?” என்றபின் இரு கைகளையும் ஓங்கி அறைந்துகொண்டு உரக்க நகைத்தான். “முள்வேலிக்கு மூங்கில்வேலியிடுவது போலவா? படைக்கலம் ஏந்திய படைக்கு காவலர்களை நிறுத்துவதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்” என்றான். உத்துங்கனும் சகுண்டனும் உடன் சேர மொத்தப் படையும் நகைக்கத் தொடங்கியது. “படைக்கு படை காவல்… எப்படியிருக்கிறது?” என்று உத்துங்கனின் தோளில் அறைந்தான் கடோத்கஜன். உத்துங்கன் கண்ணீர்வர நகைக்க அவர்களை நோக்கி திகைத்து நின்றனர் சுவீரரின் அணியினர். அப்போதுதான் அதிலிருந்த வேடிக்கை புரிய அசங்கனும் நகைத்தான். சிரிப்பை நிறுத்தி கண்ணீரை துடைத்தபடி, நோக்கி வாய்திறந்து நின்ற சுவீரரிடம் “மூத்தோரின் வருகையை அரசருக்கு அறிவிக்க வேண்டும்” என்றான். “ஆம், புறாச்செய்தி சென்றுவிட்டது” என்று சுவீரர் சொன்னார்.

பின்னர் தன்னிலை மீண்டு கடோத்கஜனிடம் “இளவரசே, தங்கள் வருகை எங்களுக்கு நலம் பயக்கட்டும். எங்கள் படைகளுக்கும் குடிகளுக்கும் வெற்றியும் மங்கலமும் அளிக்கட்டும்!” என்றார். “வருக!” என அவனை அவர் இட்டுச்சென்றார். கடோத்கஜன் ஆடியாடி நடந்தபடி “மிகப் பெரிய படை… ஆனால் நான் இன்னும் இதை முழுமையாக பார்க்கவில்லை” என்றான். சகுண்டன் “ஆம், மிகப் பெரிய படை. காடுபோல” என்றான். உத்துங்கன் “எறும்புக்கூடுபோல” என்றான். அந்தச் சொல்லாட்சியால் கவரப்பட்ட கடோத்கஜன் திரும்பி கண்கள் இடுங்க உற்றுநோக்கினான். அவனுக்கு அது சரியாகப் புரியவில்லை. ஆகவே ஒன்றும் சொல்லாமல் திரும்பிக்கொண்டான்.

bowபடைகளினூடாக நடந்து செல்கையில் ஒவ்வொரு காலடிக்கும் கடோத்கஜனும் அவன் படையினரும் தயங்குவது போலிருந்தது. அது புதுப் பொருள்மேல் குரங்குகள் கொள்ளும் கால்தயக்கம் என்று அசங்கனுக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. அவ்வாறு தோன்றியதுமே அவர்கள் அனைவரும் பேருடல் குரங்குகள் போலவே நடப்பதை அவன் கண்டான். அவர்களின் சிறிய கால்கள் உடல் எடையால் வளைய மென்மூங்கில்மேல் என அவர்கள் ததும்பினர். தோள்கள் பேருருக் கொண்டு தசைபுடைப்புகளும் நரம்புவரிகளும் பாறைநிறக் கீற்றுகள் என தேமல்களுமாக திரண்டிருக்க தொடைகள் வற்றியிருந்தன. பின்திரட்சிகளே அவர்களுக்கு இருக்கவில்லை.

கடோத்கஜன் தவிர பிறருக்கு உடலில் மயிர் இருந்தது. உத்துங்கனின் உடலில் காய்ந்த பாறைப்புல்போல செம்மைகலந்த மயிர் புறங்கையிலும் அடர்ந்திருந்தது. தாடி தேன்கூடுபோல் முகவாய்க்கு கீழே தொங்கியது. மீசை மென்மையாக மென்பாசிப்படர்வு போலிருந்தது. ஒவ்வொரு கணமும் மின்னி மின்னி திரும்பி சூழலை நோக்கிகொண்டிருந்தன அவர்களின் சிறிய கண்கள். கடோத்கஜன் “நாங்கள் இவ்வாறு நெடுந்தொலைவு நடந்து செல்வதில்லை” என்றான். அசங்கன் “அங்கிருந்து நடந்துதானே வந்திருப்பீர்கள்?” என்றான். “நீ என்ன நினைத்தாய்? அங்கிருந்து நடந்து வந்திருந்தால் போர் முடிந்த பின்னரே வந்து சேர்ந்திருப்போம். நாங்கள் மரங்களின் மீது பாய்ந்து பறந்து வந்தோம்” என்றான் சகுண்டன்.

“அங்கிருந்து இங்குவரை தொடர்ச்சியாக மரங்கள் இருந்தனவா?” என்றான் அசங்கன். மரங்களில்லாத இடங்களில் கழைகளை கொண்டு நாங்கள் தாவினோம். பாறைகளிலும் இல்லங்களின் மீதும் தாவி வரமுடியும். அரிதாக காட்டு யானைகள் மீதும் தாவுவோம்” என்று சொல்லி உத்துங்கன் சிரித்தான். அவன் உதடுகள் கரிய படகு போலிருந்தன. அத்தனை பெரிய வாயின் நகைப்பு இந்திரப்பிரஸ்தத்தின் இந்திர ஆலயத்தின் கீழ்நிலைகளில் செதுக்கப்பட்டிருந்த பேருருவ நிலப்பூதங்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் விழிகளில் இருந்த மென்மையும் ஓசையிலிருந்த நட்பும் அச்சிரிப்பை உளத்திற்கு மிக அணுக்கமென்றாக்கின.

கடோத்கஜனின் உடலை தொட்டுக்கொண்டிருக்க அசங்கன் விழைந்தான். அவன் கைகளைப் பற்றியபடி “என் இளையோரை தங்களுக்கு அறிமுகம் செய்யவேண்டும், மூத்தவரே” என்றான். திரும்பி அருகே வந்த சுவீரரிடம் “என் தம்பியர் அனைவரும் உடனடியாக இங்கு வரவேண்டும்” என்று சொன்னான். “ஆணை” என்றார் சுவீரர். “எத்தனை உடன்பிறந்தார் உனக்கு?” என்றான் உத்துங்கன். கடோத்கஜன் அவனை ஒருமையில் அழைக்கத் தொடங்கியதுமே அவனும் அவ்வாறு அழைப்பதை உணர்ந்து அசங்கன் புன்னகைத்தான். “நாங்கள் பதின்மர்” என்றான். “அனைவருமே இங்கிருக்கிறீர்களா? நன்று நன்று!” என்றான் கடோத்கஜன்.

“இங்கே உங்களுக்கு மாபெரும் இளையோர் நிரை உள்ளது, மூத்தவரே. உங்கள் ஐந்து தந்தையரின் குருதி வழிவந்த இளையோர் ஒன்பதின்மர். எந்தையின் மைந்தர்களும் பாஞ்சால இளவரசரின் மைந்தர்களும் உள்ளனர். மேலும் பல இளவரசர்கள் இருக்கின்றனர்.” அவன் பீஷ்மரால் கொல்லப்பட்டவர்களை எண்ணினான். சொல் தணிய தலையை திருப்பிக்கொண்டான். “நான் முன்னரே பலமுறை இங்கு வர எண்ணியிருந்தேன். ஒவ்வொரு முறையும் வருகை தவிர்த்தது என் கால்கள் அளித்த தயக்கத்தால்தான். அஸ்தினபுரியிலும் நாங்கள் நிலத்தில் நடந்தே ஆகவேண்டுமென்றனர் ஒற்றர். நிலத்தில் நடந்து செல்கையில் ஆற்றலற்றவர்களாகவும் கேலிக்குரியவர்களாகவும் தோன்றுகிறோம்” என்றான் கடோத்கஜன்.

அசங்கன் “தங்கள் நடை மாறுபட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் உங்கள் குடியினரின் பெருந்தோள்களைக் கண்டு விழிமலைக்காத ஒரு வீரனைக்கூட இதுவரை பார்க்கவில்லை” என்றான். “நாங்கள் இதுவரை பார்த்த பேருருவர்கள் தங்கள் தந்தையும் கௌரவ மூத்தவரும் பேரரசர் திருதராஷ்டிரரும்தான். அனைவரை விடவும் பெரியவர் மூதரசர் பால்ஹிகர். அவர்களின் தோள்களைவிடவும் பெரியவை தங்களுடையவை. கதை ஏந்தி தாங்கள் களம்புகுந்தால் எதிர்கொள்ள இங்கு எவருமில்லை” என்றான். கடோத்கஜன் சிரித்து கண்களை சிமிட்டியபடி “படைமுகம் நிற்கவே வந்துள்ளேன். எந்தைக்கு துணைநிற்க…” என்றான். “எங்கள் உதவி களத்தில் இருக்கவேண்டும் என பேரன்னை குந்திதேவி முன்னர் சொல்லியிருந்தார்கள். ஆனால் போர் தொடங்கியபோது எங்களுக்கு செய்தி அனுப்பாதொழிந்துவிட்டார்கள்…” அசங்கன் “அது இயல்புதானே?” என்றான். “அழைக்காவிட்டாலும் வருவோம் என அவருக்குத் தெரியாது” என்றான் சகுண்டன்.

“இது மாபெரும் படை” என்றான் கடோத்கஜன். “எங்கள் இனத்துக்குள்ளேயே மற்போர்களில் ஈடுபட்டிருக்கிறேனே ஒழிய இதுவரை போரென எதுவும் புரிந்ததில்லை.” சுற்றிலும் நோக்கி “இப்பெரும்போர்… இது எங்கு நிகழ்கிறது?” என்றான். அசங்கன் குழம்பி “இங்குதான்” என்றான். “நான் படைகளை பார்க்கிறேன். நான்குபுறமும் விழிதொடும் எல்லைவரை நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் சென்று போரிடும் இடம் எது?” என்றான் கடோத்கஜன். “இளவரசே, இங்கு நம் படை நின்றிருக்கிறது. எதிரில் அவர்களின் படை. ஒவ்வொரு நாளும் புலரியிலிருந்து அந்திவரை மோதிக்கொள்வோம்.”

கடோத்கஜன் நின்று இடையில் கைவைத்து திகைப்புடன் கூர்ந்துநோக்கி “மொத்தப் படையினரும் முழுமையாகவே மோதிக்கொள்கிறார்களா?” என்றான். “ஆம் மூத்தவரே, அதுதான் போர்” என்றான் அசங்கன். “இங்கு பல்லாயிரவர் இருப்பார் போலிருக்கிறதே” என்றான் உத்துங்கன். “பல லட்சம்” என்றான் அசங்கன். “அஸ்தினபுரி இந்திரப்பிரஸ்தம் போன்ற நகரங்களைவிட மிகையான வீரர்கள் இங்கு இருக்கிறார்கள்.” சகுண்டன் “இவர்கள் அனைவரும் ஒரே தருணத்தில் ஒருவருடன் ஒருவர் போரிட்டுக்கொள்கிறார்களா?” என்றான். “ஆம்” என்று அசங்கன் சொன்னான். “தேர்ந்தெடுத்த வீரர்களை அனுப்புவதில்லையா?” என்றான் சகுண்டன்.

“இதை நான் எத்தனை விளக்கினாலும் தங்களுக்கு புரியப்போவதில்லை. நாளை ஒருநாளில் அனைத்தும் தெளிவாகிவிடும்” என்றான் அசங்கன். “ஆம்” என்று கடோத்கஜன் சொன்னான். பின்னிருந்து மரப்பலகைமேல் புரவிகளின் குளம்போசை கேட்டது. கடோத்கஜன் படையிலுள்ள அனைவரும் திடுக்கிட்டவர்கள்போல் பார்த்தனர். முதலில் வந்த புரவியிலிருந்து அசங்கனின் இளையவன் சினி இறங்கி அதே விரைவில் கைகளை விரித்தபடி ஓடினான். மூச்சுவாங்க கடோத்கஜன் அருகே நின்று தலைதூக்கி நோக்கி “இவரா?” என்றான். அவன் கை சுட்டுவிரல் நீண்டு அசைவிழிந்து காற்றில் நீண்டிருந்தது.

“ஆம், இவரேதான். நமக்கெல்லாம் மூத்தவர், குருகுலத்து முதல் மைந்தர்” என்றான் அசங்கன். “இவரது தலைதான் குடம் போன்றிருக்கும். ஆகவே தான் இவருக்கு கடோத்கஜன் என்று பெயர்” என்றபின் சினி “ஆனால் இங்கிருந்து தலை தெரியவில்லை. மிக உயரம்…” என்றான். கைகளை விரித்து “பாறைகளைப்போல… அவ்வளவு உயரம்!” என்றான். கடோத்கஜன் முழங்காலில் கைகளை வைத்து குனிந்து தலையை கீழே கொண்டுவந்தான். “தொட்டுப் பார்!” என்றான். சினி சிரித்தபடி தயங்கி பின்னடைந்தான். “அஞ்சவேண்டாம். தொட்டுப் பார்” என்றான் கடோத்கஜன் . சினி பின்னடைந்து தன் மூத்தவனாகிய உத்ஃபுதனை பற்றிக்கொண்டான்.

கடோத்கஜன் சினியின் இடையை இரு கைகளாலும் பற்றி சிறுகுழவியென தூக்கிச் சுழற்றி மேலெடுத்து தன் வலத்தோளில் வைத்துக்கொண்டான். சினி மேலிருந்து அலறிச்சிரித்தான். அச்சமும் பதற்றமுமாக கால்களை உதறினான். “தொட்டுப் பார்!” என்றான் கடோத்கஜன். சினி அவன் தலையை கைகளால் அறைந்து “யானை மத்தகம் போலிருக்கிறது” என்றான். சாந்தன் சிரித்து “மதோத்கஜன் என்று தங்களுக்கு பெயர் இட்டிருக்க வேண்டும், மூத்தவரே” என்றான். அசங்கன் நகைத்து “மதங்கோத்கஜன்… சிறந்த பெயர்! ஏன் நாம் அவ்வாறே அழைக்கக்கூடாது?” என்றான். “இது எனக்கு என் தந்தை சூட்டிய பெயர்” என்று கடோத்கஜன் சொன்னான்.

இளையோர் ஒவ்வொருவராக அவன் அருகே வர இரு கைகளாலும் அவர்களை பற்றி இழுத்து நெஞ்சோடணைத்தான். உத்ஃபுதனையும் சாந்தனையும் அணைத்து நெற்றியிலும் கன்னங்களிலும் முத்தமிட்டான். உத்துங்கனும் சகுண்டனும் பிறரும்கூட வந்து அவர்களை மாறிமாறி தூக்கி முத்தமிட்டார்கள். முத்தமிடுவது அவர்களின் குலவழக்கம் போலும் என்று எண்ணிக்கொண்டான் அசங்கன். முத்தம் பெற்றபோது மைந்தர் நாணி உடல் மெய்ப்புகொள்ள தோள் குறுகினர்.

புரவிகள் வரும் ஓசை கேட்டது. எதிரே பன்னிரு புரவிகளில் படைவீரர் சூழ வந்த ஆயிரத்தவனாகிய சூசிகட்கன் புரவியிலிருந்து பாய்ந்திறங்கி “பாஞ்சால இளவரசருக்கு செய்தி சென்றுவிட்டது. தங்களை முறைப்படி வரவேற்று கொண்டு செல்லும் பொறுப்பிலிருக்கிறேன்” என்றான். அவர்களின் கால்களை நோக்கியபின் “தங்களுக்கான தேர்கள் அல்லது புரவிகள்…” என்று தயங்கினான். “நாங்கள் பிற உயிர்கள்மேல் ஊர்வதில்லை” என்றான் கடோத்கஜன். “உயிர்கள்மேல் ஊர்பவர்களை மரங்கள் ஏற்றுக்கொள்வதில்லை” என்று உத்துங்கன் சொன்னான். அசங்கன் “அவர்கள் நடந்தே வருவார்கள்” என்றான்.

இருபுறமும் பாண்டவப் படை மணற்கரையென செறிந்து விழிகளாகி கடோத்கஜனை பார்த்தது. ஆங்காங்கே வாழ்த்துக்குரல்கள் எழுந்தாலும்கூட சொல்லற்ற பெருமுழக்கமே படையில் நிரம்பியிருந்தது. கடோத்கஜனின் தலை அவர்கள் அனைவருக்கும் மேலாக எழுந்திருந்தது. எனவே விண்ணில் ஊரும் கந்தர்வனை பார்ப்பவர்கள்போல அவர்கள் முகம் தூக்கியிருந்தார்கள். காவல்வீரர்கள் முன்னால் சென்று கடோத்கஜனின் வரவை முழவோசையால் அறிவித்துக்கொண்டிருந்தனர். அம்முழக்கம் ஒன்றிலிருந்து ஒன்றென தொட்டுப்பெருகி விலகிச்செல்ல படைகளிலிருந்து கார்வை என எதிர்முழக்கம் எழுந்தது.

அசங்கன் கடோத்கஜனுக்கு அவைமுறைமைகள் தெரியுமா என்று ஐயுற்றான். மிகவும் பிழையாக ஏதேனும் ஆகிவிடக்கூடுமென்று தோன்றியது. அவன் யுதிஷ்டிரரையும் அர்ஜுனனையும் பீமனையும் தழுவி முத்தமிடுவதைப்பற்றி எண்ணியபோது தன்னையறியாமலேயே புன்னகையை அடைந்தான். “மூத்தவரே, இங்கு அரசவையில் முறைமைகளென சில உள்ளன” என்றான். “நான் அறிவேன்” என்று கடோத்கஜன் சொன்னான். “அவர்களுக்கு நாம் புறம் காட்டலாகாது. அவர்கள் பேசுகையில் ஒவ்வொருமுறையும் தலைதாழ்த்தி ஆணை என்று சொல்லவேண்டும். அவர்கள் பேசும்போது நாம் சிரிக்கவோ ஓசையிடவோ கூடாது” என்றான். “ஆணை என ஒவ்வொரு முறையும் சொல்லவேண்டியதில்லை” என்று அசங்கன் சொன்னான். “அப்படித்தானே சொன்னார்கள்?” என்று நின்று திரும்பிப்பார்த்தான் கடோத்கஜன். ஒருகணம் எண்ணியபின் “ஆம், அவ்வாறே சொல்வதில் தவறில்லை” என்று அசங்கன் கூறினான். “அவர்கள் எவரையும் நீங்கள் தொடக்கூடாது. அவர்களே உங்களை தொட்டால் கூட அதற்கு உங்கள் உடலை அளிக்கவேண்டுமேயொழிய திரும்பி அவர்களை தொடுவதோ அணைப்பதோ கூடாது” என்றான்.

கடோத்கஜன் குழப்பமாகத் தலையை அசைத்தான். “அவர்களை ஒருபோதும் நீங்கள் என்று அழைக்கலாகாது. தாங்கள் என்ற சொல்லை தேவையென்றால் மட்டும் பயன்படுத்தலாம். அவர்களை நோக்கி பேசுகையில் விரல் சுட்டுவதோ இருப்பிடத்திலிருந்து அவர்களை நோக்கி எழுந்து செல்வதோ எவ்வகையிலேனும் படைக்கருவி எதையும் கையிலெடுப்பதோ பெரும்பிழையென கருதப்படும்.” கடோத்கஜன் மீண்டும் நின்று “இவை அனைத்தையும் என்னால் நினைவில் வைத்துக்கொள்ள இயலாது” என்றபின் உத்துங்கனை பார்த்தான். உத்துங்கன் “ஆம், ஏராளமான செய்திகள்” என்றான்.

“பேரரசர்கள் எவரையும் நான் இதுவரை நேரில் பார்த்ததில்லை. நான் பார்த்த ஒரே அரசர் மௌரிய யாதவ குடியின் அரசர் முரு மட்டுமே. அவர் கன்றோட்டிக்கொண்டு காட்டுக்குச் செல்பவர்” என்றான் கடோத்கஜன். “முதல்முறையாக ஓர் அரசரை பார்க்கும் வாய்ப்பு அமைகையில் அவரை வேடிக்கை பார்ப்பதை விடுத்து இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக எண்ணத்துள் அடுக்கிக்கொண்டிருப்பது என்னால் இயலாது.” உத்துங்கன் “ஒன்று செய்யலாம். இவனை நம் அருகில் நிறுத்திக்கொள்ளலாம்” என்றான். கடோத்கஜன் “ஆம்” என்று சொல்லி அசங்கனின் தோளில் கல்லால் ஆனதோ என எடைகாட்டிய பெரிய கையை வைத்து “நீ என்னுடன் இரு. நான் செய்யும் பிழைகளை சொல்” என்றான்.

உடன் நடந்துகொண்டிருந்த சினி கடோத்கஜனின் இடையாடையைப்பற்றி அசைத்து “மூத்தவரே, நான் உங்களுடன் இருக்கிறேன். நான் உங்களுக்கு சொல்கிறேன்” என்றான். உத்துங்கன் “ஆம், இவனென்றால் இன்னும் எளிது. ஓர் ஆடையால் இவனை உங்கள் முதுகில் சேர்த்து கட்டிக்கொள்ளலாம். பின்னாலிருந்து காதுகளில் சொல்லிக்கொண்டே இருப்பான்” என்றான்.  சகுண்டன் “கிளிபோல” என்றான். அவர்கள் வேடிக்கையாக சொல்கிறார்கள் என எண்ணி நோக்கிய அசங்கன் உண்மையாக எண்ணிச்சொல்கிறார்கள் என உணர்ந்து திகைக்க சினி “ஆம். உங்கள் உடலுடன் கட்டிக்கொள்ளுங்கள், மூத்தவரே. மெய்யாகவே என்னை உங்கள் உடலுடன் கட்டிக்கொள்ளுங்கள்” என கூவினான்.

அசங்கன் சினத்துடன் “பேசாமல் வா. இது அரச நிகழ்வு, விளையாட்டல்ல” என்றான். முன்னால் சென்ற படைவீரர்கள் அதே விரைவில் திரும்பி வருவதைக் கண்டு அசங்கன் நின்றான். “என்ன ஆயிற்று?” என்றான் கடோத்கஜன். “அவர்களை யாரோ துரத்தி வருகிறார்கள்!” என்றான் சகுண்டன். “அல்ல” என்று அசங்கன் சொல்லி முன்னால் ஓடினான். சூசிகட்கன் புரவியிலிருந்து வேகமழியாமலே தாவி ஓடி அருகே வந்து “அரசர்! பேரரசர்!” என்றான். “என்ன? என்ன?” என்றான் அசங்கன். மூச்சடைக்க “பேரரசர் நேரில் அவரே வருகிறார். அரக்ககுலத்து இளவரசரை வரவேற்பதற்கு அவரே குடையும் சாமரமும் அணுக்கப்படையுமாக வந்துகொண்டிருக்கிறார்!” என்றான்.

சூசிகட்கனால் நிற்கமுடியவில்லை “அரசரே வருவதாக புறா வந்துள்ளது. நான் ஓடிவந்தேன்” என்றான். சுவீரர் பதைப்புடன் “மெய்யாகவா?” என்றார். சூசிகட்கன் “இதற்கென்ன முறைமை என்று எனக்கு தெரியவில்லை. இங்கு இவர் என்ன ஆற்றவேண்டும்?” என்றான். அசங்கன் “தாங்கள் விலகிக்கொள்க! இதை நான் நிகழ்த்துகிறேன்” என்றான். “அரசர் பிற நாட்டின் முதன்மை அரசர்களை மட்டுமே நேரில் சென்று வரவேற்பது வழக்கம். அந்த அரசர்கள் தாங்களும் வெண்குடை சூடியிருக்க வேண்டும். இருபுறமும் சாமரங்கள் விசிறப்படவேண்டும். இரு தரப்பிலிருந்தும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் முதலில் முன்னால் செல்லவேண்டும். படைத்தலைவர்கள் முழந்தாளிட்டு அமர்ந்து வாள் தாழ்த்தி வணங்கியபின் விலக அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துச்சொல் பரிமாற வேண்டும். அதன் பின்னரே அரசர்கள் சந்திக்கவேண்டும்” என்றார் சுவீரர்.

அசங்கன் “அம்முறைமைகள் எதுவும் இங்கு தேவையில்லை. தந்தை தன் மைந்தரை பார்க்க வருகிறார் என்பதன்றி வேறெதற்கும் பொருள் இல்லை. விலகுக!” என்றான். காவலர்கள் விலக அசங்கன் தன் உள்ளம் எடைகொண்டு நிறைந்து துடிப்பதை உணர்ந்தான். தொலைவில் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடி பறப்பது தெரிந்தது. அது அணுகி வருவதை அதன் பின்னரே உணர முடிந்தது.

நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 15

bowஅசங்கன் காவல்மேடையை நோக்கி சென்றபோது உலோகப்பரப்புகள் மின்னும் அளவுக்கு காற்றில் ஒளியிருந்தது. கதிரவன் மறைந்த பின்னரும் முகில்களின் மேற்குமுகங்கள் மிளிர்ந்துகொண்டிருந்தன. படைகள் சிறுகுழுக்களாக பிரிந்து தங்கள் அணியமைவுகளை நோக்கி சென்றுகொண்டிருக்க அதுவரை எழுந்துகொண்டிருந்த போர்முழக்கம் காற்று திசைமாறுவதுபோல் பிரிந்து கலைவோசையாக மாறிச் சூழ்ந்தது. மரப்பலகை விரிக்கப்பட்ட படைப்பாதைகளினூடாக புண்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு வண்டிகள் சகட ஒலியுடன் கடந்து சென்றன. போரூழியர்களுக்கான ஆணைகளை இடும் சிறுகொம்புகள் குருவிகள்போல செவிகீறும் ஒலியெழுப்பின. அவ்வொலிகளால் களம் இணைத்து நெய்யப்பட்டது. அசங்கன் ஒரு பெரிய சிலந்திவலை என அவ்வொலி சாவுப்பரப்பென அகன்றிருந்த குருக்ஷேத்ரத்தை மூடுவதாக உள்ளத்தால் உணர்ந்தான்.

வண்டிகள் பின்கட்டையுடன் நுகம் முட்ட சென்றுகொண்டிருந்த ஏழு பாதைகளை நின்று, காத்து, இடைகண்டு கடந்து அவன் காவல் மாடத்தை அடைந்தான். அவனைக் கண்டதும் மேலிருந்த காவலன் எழுந்து சங்கொலி எழுப்பிய பின் தன் வில்லையும் அம்புத்தூளியையும் எடுத்துக்கொண்டு மறுபக்கம் வழியாக இறங்கிச் சென்றான். அசங்கனின் நரம்புகள் தளர்வுற்று உடற்தசைகள் மெல்லிய உளைச்சலுடன் தொய்ந்திருந்தன. கணுமூங்கிலைப் பற்றி ஏறும்போது எலும்புகள் உரசிக்கொள்வதுபோல் வலித்தன. இருமுறை நின்று மூச்செறிந்து மேலே சென்றான். மேலே செல்லுந்தோறும் காற்றின் வெம்மை மாறுபடுவதை காதுமடல்களில் உணர்ந்தான்.

அசங்கன் மேலேறி காவல் மாடத்தின் சிறிய சதுரப்பரப்பை அடைந்தான். அங்கு மரக்குடைவுக்கலத்தில் குடிநீர் வைக்கப்பட்டிருந்ததையே அவன் நா முதலில் நாடியது. தன் வில்லையும் அம்புத்தூளியையும் தூணில் தொங்கவிட்டு, வேலை சாய்த்து வைத்துவிட்டு நீர் அருந்தினான். மூங்கில் நீட்சியில் உடலெடையை வைத்து கைகளைக் கட்டி நின்றதுபோல் அமர்ந்தான். மேலெழுந்ததும் கீழே நிறைந்திருந்த குருதியும் சீழும் கலந்த கெடுமணம் சற்றே குறைந்து நெஞ்சு ஆறுதல் கொண்டது. குமட்டி அதிர்ந்துகொண்டிருந்த வயிறு சற்றே அமைந்தது.

அங்கிருந்து பார்த்தபோது இரு படைகளும் மேலும் மேலுமென விலகி தங்களுக்குள் சுருங்கிக்கொண்டிருப்பதை காணமுடிந்தது. சேறு உலர்ந்து வெடிப்பதுபோல் படைப்பெருக்கின் நடுவே நூற்றுக்கணக்கான பாதைகள் உருவாயின. அவை பெருகி ஒன்றுடன் ஒன்று இணைந்தன. பின் நேராகி வகுக்கப்பட்ட வயல்வரப்புகளென்றாயின. நாற்றுநிரைபோல படையணிகள். அவற்றுக்குள் மேலும் மேலும் சிறிய அணிகளாக தங்களை தொகுத்துக்கொண்ட படைவீரர்கள் ஆங்காங்கே அமர்ந்தும் படுத்தும் ஓய்வு கொள்ளத்தொடங்கினர்.

அவன் பெருமூச்சுவிட்டபடி மருத்துவநிலைகளை நோக்கி ஒழுகிச் சென்றுகொண்டிருந்த வண்டிநிரைகளை பார்த்தான். முந்தைய நாள் புண்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் உயிரிழந்துவிட்டிருந்தமையால் இப்போது செல்பவர்களுக்கு இடம் தேடுவது அரிதானதாக இருக்காது என்று தோன்றியது. இரண்டு நாள் போரிலேயே பாண்டவப் படையின் பெரும்பகுதி அழிந்துவிட்டிருந்தது. இனிவரும் போரில் தொடர்ந்து கொன்று குவிக்கப்பட்டாலும்கூட புண்பட்டோரும் இறந்தோரும் எண்ணிக்கை குறைவாகவே இருப்பார்கள் என்று அவன் மேலும் கசப்புடன் எண்ணிக்கொண்டான். தன் உடலில் குடியேறிய குமட்டல் உள்ளத்தில் உணர்வாக மாறி எல்லா எண்ணங்களுடனும் கலந்துவிட்டிருந்ததை அறிந்தான்.

மருத்துவநிலைக்குச் சென்று பார்க்கவேண்டுமென்று அவன் உள்ளம் விழைந்தது. ஆனால் பகல் அவனுக்கு அயலாகிவிட்டிருந்தது. விடிந்ததுமே படைகளுக்குப் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த இடையளவு உயரமான தோல் கூடாரங்களுக்குள் புகுந்துகொண்டு துயிலவேண்டுமென்று ஆணை. இரவில் பணியாற்ற வேண்டிய மருத்துவர்களும் ஏவலரும் சுடலைப் பணியாளர்களும் பிறரும் பகலில் எங்கும் நடமாடக்கூடாது, துயின்றே ஆகவேண்டுமென்று ஏவலர் படைகளை ஆண்ட சிகண்டியின் பிறழ்விலா ஆணை இருந்தது. முதல்நாள் போரில் எழுந்து செவிகளைத் துளைத்து, உடலெங்கும் விதிர்ந்து, வயிற்றையும் நெஞ்சையும் அதிரவைத்த பெருமுழக்கத்தால் அவனால் சற்றும் துயில இயலவில்லை. அவ்வோசையில் அவன் மிதந்து அலைந்தான். அவனுள் அது போர்வெளி ஒன்றை உருவாக்கியது.

பலமுறை எழுந்து அமர்ந்தான். அவனருகே படுத்திருந்த முதுகாவலர் உக்ரர் “எழுந்தமர்வது தண்டனைக்குரியது. படுத்துக்கொள்ளுங்கள், இளவரசே” என்றார். “என்னால் துயில முடியவில்லை. இப்போரொலி என்னை பித்தனாக்குகிறது” என்றான். “இன்று எவராலும் துயில இயலாது, ஏனெனில் இவ்வொலி புதியது. நாளை பெரும்பாலானவர்கள் துயின்றுவிடுவார்கள். இவ்வொலியை நம் துயிலுக்குரிய தெய்வங்கள் புரிந்துகொண்டுவிடும்” என்றார் அவர். பதைக்கும் குரலில் “அங்கு பல்லாயிரவர்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் அசங்கன். “ஆம், அதனால் என்ன? போரென அறிந்துதானே இங்கு வந்தோம்?” என்றார் அவர். அசங்கன் பற்களை ஓசையெழக் கடித்து உள்ளங்கையில் நகங்கள் புதையுமளவுக்கு இறுகப்பற்றி குனிந்து அமர்ந்திருந்தான்.

“அகிபீனா இருக்கிறது, உண்கிறீர்களா?” என்றார் உக்ரர். “இல்லை, வேண்டாம்” என்றான். உக்ரர் “போரை நடத்துவதாயினும் இதுவன்றி எவரும் களம் நின்றாட இயலாது. கொல்வதும் அதுவே, வலி தாங்கச்செய்து உயிர் பிழைக்க வைப்பதும் அதுவே” என்றார். கையூன்றி எழுந்து தன் சிறு தோல்பையிலிருந்து கரிய உருளை ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டி “வாயிலிட்டு அதக்கிக்கொள்ளுங்கள். கரைந்து ஊறும் எச்சிலை மட்டும் விழுங்கிக்கொண்டிருங்கள்” என்றார். “வேண்டாம்” என்றான். “வெல்லமிட்டு உருட்டப்பட்டது. இனிய சுவையுடையது. உங்கள் உள்ளம் இப்போது கொடுங்காற்றில் கொடிக்கூறை என பறந்துகொண்டிருக்கும். அதை எடைகொண்டு அமையவைக்க இதனால் இயலும்” என்றார். அவன் பேசாமல் அமர்ந்திருக்க “தயங்கவேண்டாம். தங்கள் தந்தை உட்பட இந்தப் போரில் அகிபீனா உண்ணாத எவருமில்லை” என்றார்.

அவன் ஏன் தயங்கினான் என்பது அவனுக்கு தெரிந்தது. அதை வாங்கி கையில் உருட்டிப்பார்த்தான். ஆட்டுப்புழுக்கை போலிருந்தது. அவர் புன்னகைத்து “ஆட்டுப்புழுக்கை போலவேதான். ஆட்டுப்புழுக்கையின் அளவே ஒரு மாத்திரை என்பார்கள். உண்ணுங்கள்” என்றார். அவன் அதை தன் வாயிலிட்டு உதடுகளை மூடிக்கொண்டு மீண்டும் படுத்தான். வெல்லத்தின் முதற்சுவைக்குப் பிறகு மென்கசப்பு கொண்ட தழைச்சுவை எழுந்தது. தழை உண்ட ஆட்டின் புழுக்கை. மெல்லிய குமட்டல் எழுந்தாலும் இனிப்பு அதை உணவென்று ஆக்கியது. வழுவழுப்பான எச்சில் சுரந்து தொண்டையை நனைத்தது. அதை அவன் விழுங்கிக்கொண்டே இருந்தான்.

கண்ணை மூடியபோது ஓசைகள் மிக அருகிலெனத் தெரிந்தன. கூடாரங்களுக்கு மேல் அம்புகள் பறந்து செல்வது போலவும் அலறி விழுபவர்கள் கூடாரத்தை சுற்றியே சிதறிக்கிடப்பது போலவும் தோன்றியது. கூடாரத்தின் கீழ்விளிம்புகளினுடாக குருதி ஊறி உள்ளே வருகிறது. தரையில் நனைந்துகொண்டிருக்கும் செங்குருதி. அதன் வெம்மை எழும் குமிழியுடைவுகளின் மெல்லிய ஓசை. மண்ணில் அது ஊறி இறங்குவது வெங்கல்லில் நீர் கொதித்து மறைவதுபோல ஒலித்தது. குருதி வழிந்து அவன் உடலை நோக்கி வளைந்து வந்தது. அவன் எழ விரும்பினான். அவன் உடல் முற்றாக உதிர்ந்து சிதறி தனித்தனித் துண்டுகளாக கிடந்தது. அதை குருதி தழுவியது. அவன் படுத்திருந்த மண்பரப்பு சேறாகி நெகிழ்ந்து அவன் உடலை வாங்கிக்கொண்டது. குருதியில் அவன் மிதந்து கிடந்தான்.

வெம்மையான குருதி வியர்வைபோல் அவன் உடலை முற்றாக மூடியது. ஓசைகள் மிகத் தொலைவிலென அகன்று சென்றுவிட்டிருந்தன. வேறெங்கோ நிகழ்கின்றது போர். அவன் தன் கைகால்கள் துண்டாகி குடிலுக்குள் வெவ்வேறு மூலைகளிலாக கிடப்பதை உணர்ந்தான். அந்தக் கால்களின்மேல் கடிக்கும் கொசுக்களை உணரமுடிந்தது. தலை எடைமிக்க இரும்புக்குண்டென முருக்கு மரத்தடியாலான தலையணைமேல் படிந்திருந்தது. அதை அசைக்க எண்ணினான். அவ்வெடை கழுத்தை தெறிக்க வைத்தது. இருண்ட வானை பார்த்தபடி படுத்திருந்தான். இது வானல்ல, தோல் கூடாரத்தின் அடிப்பரப்பு. ஆனால் அங்கு விண்மீன்கள் எப்படி வந்தன? விண்மீன்களின் ஒளிகள் நீண்ட வெள்ளிச்சரடுகளாக நீண்டு வந்தன. அவன் உடலை அம்புகளாக துளைத்தன. மண்ணுடன் அவனை அசையவிடாமல் தைத்தன. ஒளிரும் வெள்ளிக்கம்பிகள். கூரியவை, குளிர்ந்தவை. விண்மீன்களுக்கு நடுவே இருக்கும் இருளுக்குள் எவரோ அசைகிறார்கள். வான்படலத்தைக் கிழித்து உதிர முயல்கிறார்கள்.

மேலும் மேலும் விண்மீன்களை அள்ளிப்பரப்பினர். எவரோ “மூன்று” என்றார். என்ன சொல்கிறார்? “மூன்று!” என்று மிக அருகில் ஒலித்தது மீண்டும் ஒரு குரல். “மூன்று.” அதற்கு என்ன பொருள்? மூன்று! மூன்று! மூன்று என்பது ஓர் எண். அதன் பொருளென்ன? மூன்று என்பது ஒரு சொல். ஒரு சொல் எப்படி எண்ணிக்கையை குறிக்கிறது? ஒற்றைச்சொல்லில் எப்படி பல்லாயிரங்களை குறிக்கமுடிகிறது? மூன்று! மீண்டும் அவன் மூன்று என உணர்ந்தபோது ஓசைகள் மாறுபட்டிருந்தன. அவனருகே உக்ரர் எழுந்து அமர்ந்திருந்தார். அவன் பதறி “என்ன? என்ன?” என்றான். வேலுடன் பெரும்படை ஒன்று வாயிலில் நின்றுள்ளதா என்ன? கொலைவெறியுடன் அவனுக்காக வந்தவர்கள்?

“பொழுதணையத் தொடங்குகிறது. இன்னும் சற்று நேரத்தில் படை பின்வாங்குவதற்குரிய முரசுகள் ஒலிக்கும்” என்றார் உக்ரர். “எப்படி தெரியும்?” என்று அவன் கேட்டான். அவர் கூடாரத்தின் சிறிய ஊசித்துளையினூடாக உள்ளே விழுந்து கிடந்த ஒளிக்கோட்டின் சாய்வை சுட்டிக்காட்டினார். அவன் “நான் துயின்றுவிட்டேனா?” என்றான். “ஆழ்துயில்” என்றார். கரிய பற்கள் தெரிய சிரித்து “முதல்முறையாக அகிபீனாவை எடுக்கிறீர்கள். ஆகவே நற்பயன் கிடைத்துள்ளது” என்றார். அசங்கன் சோர்வுடன் “நான் துயின்றிருக்கக்கூடாது” என்றான். “ஏன்?” என்று அவர் கேட்டார். “போர்! அதை பார்க்கவே இத்தனை தொலைவு வந்தேன். இது ஓர் அருந்தருணம்.”

உக்ரர் புன்னகைத்து “உங்களுக்கான தருணம் வாய்க்கவேண்டும். அப்போது திகட்டத் திகட்ட பார்ப்பீர்கள்” என்றார். “என்னை காக்க எண்ணுகிறார் திருஷ்டத்யும்னர். ஆகவேதான் காவலுக்கு அனுப்பியிருக்கிறார்” என்றான். உக்ரர் “சென்றவர்களில் மீண்டவர்கள் குறைவு. இன்னும் சில நாட்கள் கடக்கையில் இங்குள்ள ஏவலர்களிடம்கூட படைக்கலத்தை அளித்து போர்முகப்புக்கு அனுப்பிவிடுவார்கள் என்று தோன்றுகிறது” என்றார். வாய்விட்டு நகைத்து “ஆகவே உங்களுக்கும் வாய்ப்பு வரும். கலங்கவேண்டாம். நாமெல்லாம் களப்பலியாவது தெய்வங்களுக்கு உகந்ததோ இல்லையோ அரசர்களுக்கு தேவையானது” என்றார்.

அவன் கையூன்றி எழுந்தபோது உடலுக்குள் திரவங்கள் குலுங்க கூடாரம் படகென மிதந்தது. “முதலில் சற்று குமட்டும். வாயுமிழத் தோன்றினால் உமிழ்ந்துவிடுங்கள். நிறைய வெல்லமிட்டு ஒரு மொந்தை புளிப்புநீர் அருந்தினால் உடலிலிருந்து அகிபீனா வெளியே செல்லும்” என்றார். “தெளிந்துவிடுவேனா?” என்றான். “இல்லை, அகிபீனா உடலிலிருந்து செல்ல ஒரு முழு நாளாகும். ஆனால் அது உடலில் இருப்பது நல்லது. மேலே காவலுக்கு அமர்கையில் காலத்தை அது அழுத்தி சுருட்டி அளிக்கும்” என்றார் உக்ரர். “நான் காவலுக்கு நன்கு பழகியிருக்கிறேன்” என்றான் அசங்கன். “ஆம். ஆனால் போர் முடிந்த இரவின் காவலுக்கு இன்னும் பழகவில்லை” என்றபின் உக்ரர் மீண்டும் புன்னகைத்தார். அவனை சிறுகுழவியெனக் கருதும் புன்னகை. அவன் எரிச்சலுடன் திரும்பிக்கொண்டான்.

அவன் வெளியே சென்று முகங்கழுவ குனிந்தபோது வயிறு குமட்டி உடல் உலுக்கியது. மும்முறை வாயுமிழ்ந்து கொப்பளித்த பின் கண்கள் சுழல அங்கு அருகிலேயே மரத்தடியில் அமர்ந்து தலையை அடிமரத்தில் சாய்த்துக்கொண்டான். உக்ரர் அவரே சென்று பெரிய மொந்தை நிறைய புளித்தநீர் கொண்டுவந்து அளித்தார். அதை பார்த்ததுமே அவன் வயிறு குமட்டியது. “வேண்டாம்” என்றான். “அருந்துக! இது உங்கள் ஆற்றலை மீட்டளிக்கும். அருந்தாமல் உங்களால் காவல்மாடத்தில் கணுமூங்கில்மேல் ஏற முடியாது” என்றார்.

அவன் அதை வாங்கி இரு கைகளாலும் பற்றி முகர்ந்தான். மீண்டும் வயிறு குமட்டி எழுந்தது. அவன் முகம் சுளிப்பதைக் கண்டு “முதல் மிடறு வயிற்றுக்குள் இருக்கும் அமிலத்தை கரைக்கும். அதன் பின்னர்தான் விடாய் எழும்” என்றார். அவன் கண்களை மூடிக்கொண்டு இரு மிடறு விழுங்கினான். வயிற்றுக்குள் நெருப்பின் அலை ஒன்றெழுந்து கொப்பளித்து அடங்கியது. அவர் கூறியது போலவே விடாய் எழுந்து மேலும் மேலுமென நீர் கேட்டது. அவன் முழுக் கொப்பரையையும் குடித்து நிலத்தில் வைத்து வாயை துடைத்தபின் கண்களை மூடி அமர்ந்தான். “சில கணங்களில் உடலெங்கும் இந்த நீர் சென்று நெருப்பை அணையவைப்பதை காண்பீர்கள்” என்றார் உக்ரர்.

நன்கு வியர்த்து மெல்லிய தலைசுற்றலுடன் அவன் விழிதிறந்தபோது அருகில் உக்ரர் இல்லை. மரத்தைப் பற்றியபடி எழுந்து நின்றான். உடல் நிலைகொண்டுவிட்டதுபோலத் தோன்றியது. ஆனால் கால்களைத் தூக்கி வைத்தபோது ஒவ்வொரு அடிக்கும் காற்றில் எழுந்து மிதந்து நெடுந்தொலைவு செல்வதுபோல எண்ணினான். பலரை தலைக்குமேல் கடந்து காலூன்றுவதுபோல. வில்லையும் அம்புத்தூளியையும் எடுத்துக்கொண்டு கணுமூங்கிலருகே சென்று நின்றான்.

பின்னர் உணர்ந்தபோது காவல் மாடத்தின்மேல் இருந்தான். சூழ நோக்கியபோது பந்தங்கள் ஒவ்வொன்றாக எரிந்துகொண்டிருப்பதை கண்டான். பல்லாயிரம் மானுட உடல்கள் விழுந்து கிடக்கும் பெரும்பரப்பு. அதை எந்த எண்ணமுமில்லாமல் நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் திரும்பி மறுபுறம் காடுகளுக்குள்ளிருந்து விளக்கொளிச் சரடுகளாக வந்துகொண்டிருந்த கிராதர்களையும் நிஷாதர்களையும் பார்த்தான். பின்னர் உணர்ந்தபோது ஓசைகள் அடங்க தென்மேற்கே சிதைநெருப்புகள் காட்டுத்தீபோல எழுந்து தழலாடுவதை பார்த்தான். தீ சிதறிச் சிதறி கிழிந்து வானில் எழ விழிவிலக்கவொண்ணாது நோக்கிக்கொண்டிருந்தான். ஒருமுறை நோக்கினால் அதிலிருந்து விலக நெடுநேரமாயிற்று. பல நாட்கள், மாதங்கள், ஆண்டுகள். பின்னர் தன்னை உணர்ந்தபோது வானில் ஒளி எழுந்திருந்தது.

அவன் உடலை எடை தாளா கணுக்கால்கள் தெறிக்க, நிலையழிந்து தோள்கள் ஊசலாட சுமந்து சென்று தன் குடிலை அடைந்தான். அங்கிருந்த உக்ரர் அவனை நோக்கி புன்னகைத்து “அகிபீனா இன்று தங்களுக்கு தேவைப்படுமா, இளவரசே?” என்றார். “ஆம், வேண்டும்” என்று அவன் சொன்னான். “அது இன்றி துயில இயலாது.” உக்ரர் கனிவுடன் “எடுத்துவைத்திருக்கிறேன்” என்றார். “என் இளையோர்… அவர்கள் எங்கிருக்கிறார்கள்?” என்று அவன் கேட்டான். “போரில் உறவுகளுக்கு பொருளேதுமில்லை. எங்கிருந்தாலும் அவர்களுக்கும் எவரேனும் அகிபீனா அளித்திருப்பார்கள். உண்க!” என்றபடி அவர் சிறிய கரிய உருளையை எடுத்து அளித்தார். அவன் அதை வாங்கி வாயிலிட்டு அதக்கியபடி கண்களை மூடி படுத்துக்கொண்டான்.

அதன் இனிய சாறு உடலுக்குள் ஒழுகி இறங்கியது. அவன் படுத்திருந்த தரை மெல்லிய ஊன்பரப்பென்றாயிற்று. மூச்சுவிடும் பசுவின் வயிற்றின்மேல் படுத்திருப்பதுபோல அசைந்தது. எங்கோ முரசொலிகள் எழுந்தன. அம்புகளின் சிறகதிர்வு. அலையோசை. பாறைகள்மேல் அலைத்து மலைச்சரிவில் இறங்கிச்செல்லும் நீர்ப்பெருக்கின் ஓசை. அவன் கண்களுக்குள் ஒரு ஒளிப்புள்ளியை பார்த்தான். மின்மினிபோல அது எழுந்து எழுந்து பறந்து சுழன்றது. உள்ளத்தால் அதை பற்ற முயன்றான். அது எழுந்து இருளில் விழுவதுபோல் தொலைவுக்குச் சென்றது. அதை தொடர்ந்து அவனும் சென்றான். செல்லச் செல்ல விசை கூடிக்கொண்டே சென்றது. முடிவிலி நோக்கி அவன் விழுந்துகொண்டே இருந்தான்.

விழித்துக்கொண்டபோது முதலில் திரும்பி விழிதுழாவி அந்த ஒளிச் சரடைத்தான் பார்த்தான். முந்தைய நாள் போலவே வெள்ளிக்கம்பியென அது நிலத்தில் ஊன்றி நின்றிருந்தது. விரல் நீட்டி அதன் முனையை கையிலேந்தினான். விரல்கள் குருதி நனைந்ததுபோல் சிவந்திருந்தன. ஆனால் உள்ளங்கையில் ஒரு வெள்ளிநாணயம். உக்ரர் “பொழுதாகிறது, இளவரசே” என்றார். “ஆம்” என்றபடி அவன் எழுந்துகொண்டான். அன்று குமட்டலெடுக்கவில்லை. புளிநீர் அருந்தியபோது உடல் ஆற்றலை மீட்டெடுத்தது. வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு கிளம்பியபோது தன் இளையவரை பார்த்தான். அவர்கள் தலைவணங்கி முகமனுரைத்தனர். “எந்தக் காவல்மாடம்?” என்று அவன் சாந்தனிடம் கேட்டான். “வடமேற்கு, எட்டு” என்று அவன் சொன்னான். அவன் விழிகள் அவனறிந்த சாந்தனை காட்டவில்லை.

உத்ஃபுதன் “நாம் போர்முகத்துக்கு செல்லபோவதில்லையா, மூத்தவரே?” என்றான். “படையில் நமது பணியை நாம் வகுக்க இயலாது. எப்பணியாயினும் அதை முற்றிலும் சிறப்பென முடிப்பது நமது கடன்” என்று அவன் சொன்னான். “நேற்று பீஷ்ம பிதாமகர் பலநூறு இளவரசர்களை கொன்று வீழ்த்தியிருக்கிறார் என்று அறிந்தேன்” என்றான் உத்ஃபுதன். “ஆம், அதனால் என்ன?” என்றான். “களம் சென்றிருந்தால் ஒருவேளை நாமும் அவர் வில்லுக்கு இரையாகியிருப்போம்” என்றான் சாந்தன். அவன் “களம் வந்தபிறகு வாழ்வும் இறப்பும் ஒன்றே” என்றான். அவர்களின் விழிகள் சொற்களை வாங்கும் நிலையில் இருக்கவில்லை. அவற்றில் அவன் என்றும் காணாத ஒரு விலக்கம் குடியேறியிருந்தது. இளையோரின் தோள்களைத் தட்டி விடைகொண்டு தன் காவல்மாடம் நோக்கி நடந்தான்.

மேலிருந்து நோக்கியபோது காடுகளுக்குள் சிறிய பந்தங்களும் விளக்குகளும் ஒளிரத் தொடங்கியதை கண்டான். அவை அணிவகுத்து அனல்வேர்ப்பரப்புகள் என்றாகி இணைந்து பெருவேராகி பாண்டவப் படைகளை நோக்கி வந்தன. காவல்மாடங்களில் இருந்தவர்கள் வருபவர்களை தொலைவிலேயே அடையாளம் கண்டு அவர்கள் மலைப்பொருட்களுடன் வரும் நிஷாதர்களும் கிராதர்களுமென உறுதிசெய்து அதை முழவொலியினூடாக அறிவித்தனர். மருத்துவநிலைகளில் அனைத்துப் பலகைகளும் நிரம்ப, வெளியே திறந்தவெளியில் நிலத்தில் மரவுரிகளையும் பாய்களையும் விரித்து புண்பட்டவர்களை படுக்கவைத்திருந்தனர். அவர்களுக்கு நடுவே சிறுதூண்களில் அகல் விளக்குகளை பொருத்தும் ஏவலர்கள் அலைகளில் சுடர்விளக்கென அலைந்தனர்.

அங்கிருந்து பார்க்கையில் விளக்குகளின் அருகில் படுத்திருந்தவர்கள் மட்டுமே தெரிந்தனர். பலர் வலி தாளாமல் புரண்டும் அசைந்தும் நெளிந்துகொண்டிருந்தனர். மருத்துவநிலைகளை நோக்கி வண்டிகளில் தேன்மெழுகும் அரக்கும் மரவுரியும் சென்றுகொண்டிருந்தன. புண்பட்டவர்கள் முழுக்க களத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகே உடல்களை எடுப்பதற்குரிய வண்டிநிரைகள் செருகளம் நோக்கி சென்றன. அவை தெற்குமூலையில் நெருங்கிச் செறிந்து மறுமுனை காட்டில் உள்ளே புதைந்திருக்க காத்து நின்றிருந்தன. புரவிகள் படை நடுவே விரிந்த மரப்பாதையினூடாக தடதடத்தோடின.

சிகண்டி ஏவலர்நிரை நடுவே கூந்தல்அலைகள் தோளில் புரள செல்வதை அவன் கண்டான். அவர் அவர்களின் நடுவே சென்று நிற்க ஏவலர்தலைவர்கள் சூழ்ந்து வணங்கினர். புரவியிலிருந்து இறங்கி அவர்களுக்கு கைநீட்டி சுட்டி ஆணையிட்டபடி அவர் சென்றார். அவரை நோக்கிக்கொண்டிருந்த அசங்கன் மிகத் தொலைவில் மரவுச்சியில் நின்றிருந்த காவலர்களில் ஒருவன் எழுப்பிய ஓசையைக் கேட்டு திரும்பி நோக்கினான். வேய்மூங்கில் ஊதுகுழலால் விந்தையான பறவைக்குரல் ஒன்றை அவன் எழுப்பினான். “அறியாதோர்! அயலோர்!” எச்சரிக்கை அடைந்து அசங்கன் எழுந்து காட்டுக்குள் விழிகூர்ந்து பார்த்தான். அவ்வொலியை அருகிலிருந்த பிற காவல்மாடங்களில் இருந்தவர்களும் கேட்டுவிட்டிருந்தனர். ஆனால் எதுவும் விழிக்கு தெரியவில்லை.

முதற்காவல்மாடத்திலிருந்து கொம்போசை எழ தொடர்ந்து அனைத்துக் காவல்மாடங்களிலும் கொம்போசை எழுந்தது. பின்புறம் படைகளிலிருந்து காவலர்கள் எச்சரிக்கை அடைந்து முழவுகளை ஒலிக்கத் தொடங்கினர். முகப்பில் இரண்டாவது சீழ்க்கை ஒலித்தது. பின்னர் காடுகளுக்குள் கோபுரமென எழுந்த தேவதாரு மரங்களின் மேலிருந்த காவலர்களின் குறுமுழவுகள் பேசலாயின. “அரக்கர் குடியினரின் படை ஒன்று அணுகுகிறது. ஆயிரத்தவர். படைக்கலங்கள் ஏந்தியிருக்கிறார்கள். முகப்பில் வருவோன் பேருருவன். அவர்கள் அனைவருமே பேருருக் கொண்டவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மரங்களினூடாக பறப்பவர்கள்போல் தாவி வருகிறார்கள்.”

அசங்கன் அவர்களை நோக்கும்பொருட்டு காவல்மாடத்தின் விளிம்பில் வந்து நின்று விழிகூர்ந்தான். இருட்டு பரவத்தொடங்கியிருந்த பெருங்காட்டுக்குள் மெல்லிய காற்று வருவது போன்ற இலையசைவு தெரிந்தது. அனைத்துக் காவல்மாடங்களிலும் வில்லவர் நாணில் அம்பு தொடுத்தனர். பின்புறம் பாண்டவப் படையிலிருந்து காவல்வீரர்கள் பூட்டிய விற்களுடனும் வேல்களுடனும் வந்து கூர்வேல் வடிவில் ஒருங்கு திரண்டனர். ஏழு படைமுகப்புகளாக மாறி மருத்துவநிலைகளையும், ஏவலர் நிலைகளையும், அடுமனை நிரைகளையும், கடந்து அப்பால் சென்று வருபவர்களுக்காக காத்து நின்றனர்.

அசங்கன் இருளில் விழிதெளிய முதலில் வருபவனை பார்த்தான். முற்றிலும் மயிரற்ற பெரிய மண்டை கலம்போல ஒளியுடன் இருந்தது. கன்னங்கரிய பேருடல். கைகள் போலவே கால்களாலும் அவனால் கிளைகளை பற்றமுடிந்தது. மரக்கிளைகளினூடாக இயல்பாகத் துள்ளி காற்றில் எழுந்து தாவி மறுகிளை பற்றி பறந்து வந்து நிலத்தில் இறங்கி இரு கைகளாலும் தரையை ஓங்கி அறைந்து தலைதூக்கி அறைகூவலோசை எழுப்பினான். எதிரே பாண்டவப் படையில் ஆயிரம் விற்கள் அம்புகளுடன் நாணிழுபட்டன. அவன் அப்படைகளைக் கண்டாலும் ஒரு பொருட்டாக கருதவில்லை. அவனைத் தொடர்ந்து வந்த அரக்க வீரர்கள் கைகளில் கல்லுருளை கொண்ட கதாயுதங்களையும் கூர்முனைகொண்ட மிக நீண்ட ஈட்டிகளையும் விற்களையும் வைத்திருந்தனர். அனைவருமே தங்கள் கைகளால் நெஞ்சில் ஓங்கி அறைந்து ஓசையெழுப்பினர். ஒரு போர்முனை இறுகித் திரள்வதுபோலிருந்தது.

அசங்கன் தன் கொம்பை எடுத்து ஊதினான். “பொறுங்கள்! பொறுங்கள்! அவரை நான் அறிவேன்!” என்றான். “நான் யாதவ அரசகுடியினன். பாஞ்சாலியின் கணவன். நான் அறிவேன் அவரை!” கொம்பின் மொழி கேட்டு கீழிருந்த காவல்படை வீரர்கள் அண்ணாந்து மேலே பார்த்தனர். “அவரை நானறிவேன்! அவரை நானறிவேன்!” என்று கொம்பு முழக்கியபடி கணுமூங்கிலினூடாக கீழிறங்கி விரிந்த நிலத்தில் புதர்களையும் பெருஞ்செடிகளையும் தாவிக்கடந்து அசங்கன் முன்னால் ஓடினான்.