மாதம்: ஓகஸ்ட் 2018

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 75

tigதிருதராஷ்டிரர் பரபரப்படைந்திருந்தார். இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடிகளை தட்டியபடி “என்ன நிகழ்கிறது? சொல்! என்ன நிகழ்கிறது?” என்றார். “பொறுங்கள் அரசே, முதலில் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சஞ்சயன் சொன்னான். “பொறுத்துக்கொள்வதற்காக இங்கு வரவில்லை. இன்னும் பொழுதில்லை. சொல்! அங்கென்ன நிகழ்கிறது? படைகள் எவ்வண்ணம் உள்ளன? எவர் எங்கு நிற்கிறார்கள்? என்ன சூழ்கை அமைக்கப்பட்டுள்ளது? நீ பார்க்கப் பார்க்க சொல்லிக்கொண்டே இரு” என்றார்.

சஞ்சயன் “நான் பார்த்து தொகுத்துச் சொன்னாலொழிய தங்களால் புரிந்துகொள்ள முடியாது, பேரரசே. ஒருகணம் நுண்காட்சியாகவும் மறுகணம் பெருந்தோற்றமாகவும் படைகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றான். “நான் தொகுத்துக்கொள்கிறேன். நான் தொகுத்துக்கொள்கிறேன்” என்று திருதராஷ்டிரர் கூவினார். “நீ பார்த்ததை அவ்வண்ணமே சொல்! உன் கண் அவ்வாறே சொற்களாக மாறட்டும். உன் கண்ணை நான் அடைவேன். சொல்!” என்றார். ஒரு கணம் அவரை திரும்பி நோக்கியபின் “ஆம், அதுவும் உகந்த வழியே” என்று சஞ்சயன் சொன்னான்.

“பேரரசே, கீழே குருக்ஷேத்ரப் பெருங்களம் மாபெரும் பன்னிரு படைக்களம்போல் தோற்றமளிக்கிறது. அதன் மேற்கு எல்லையில் கிழக்கு நோக்கியவர்களாக பாண்டவர்களின் படை நின்றுகொண்டிருக்கிறது. மறுபக்கம் மேற்கு நோக்கி கௌரவப் படை நிற்கிறது. இரு படைகளுக்கும் பின்புறம் மிக விலகி ஐந்து வெவ்வேறு குழுக்களாக அடுமனையாளர்களும், ஏவலர் குழுக்களும், மருத்துவ நிலைகளும், அமைச்சர் குடில்களும், பொருள் வைப்பு நிலைகளும் அமைந்துள்ளன. பாண்டவப் படைகள் முப்புரிவேலின் வடிவில் இப்போது சூழ்கை கொண்டுள்ளன. வேலின் நடுவே அதன் கூர் என விராட மைந்தனாகிய உத்தரன் நின்றிருக்கிறார். அவருக்குப் பின்னால் விராடர்களின் விரைவுப்புரவிப் படை வெள்ளி ஒளிவிடும் கவசங்களுடன் அணிவகுத்துள்ளது. தொடர்ந்து இருபுறமும் திருஷ்டத்யும்னராலும் பீமனாலும் அவர் காக்கப்படுகிறார்.”

“முப்புரிவேலின் இடப்பக்கக் கூராக குலாடகுடியின் சங்கன் தன் விரைவுப்புரவிப் படையுடன் நின்றிருக்கிறார். வலது கூர்முனையாக குலாடகுடியின் மூத்தவனாகிய ஸ்வேதன் நின்றிருக்கிறார். விரைவுப்படைகள் அனைத்தும் புரவிகளில் எடுத்துச்செல்லத்தக்க நீளமில்லாத விற்களை ஏந்தியவர்கள். அப்புரவிப்படைகளின் பின்னால் நீள்வில் ஏந்திய வில்லவர் அமர்ந்த விரைவுத்தேர்ப்படைகள் நின்றிருக்கின்றன. அவற்றுக்குப் பின்னால் காலாட்படைகள் நிலைகொள்கின்றன” என்றான் சஞ்சயன். “ஆம், விற்புரவிப் படைகள் ஊடுருவ தேர்ப்படைகள் அவற்றைத் தொடர்ந்து வழியமைக்க அதில் காலாட்படைகள் நுழையும்படி அமைந்துள்ளது சூழ்கை” என்றார் திருதராஷ்டிரர். “தேர்ப்படைகளுக்குப் பின்னால் அத்தேர்கள் அளிக்கும் இடைவெளியின் அகலத்திலேயே நீளமாக வேலேந்திய காலாட்படைகள் அமைந்துள்ளன” என்று சஞ்சயன் சொன்னான். “ஆம், அவை தேர்களால் இழுத்துச் செல்லப்படுவதுபோல் தோன்றும்” என்றார் திருதராஷ்டிரர்.

அவர் எவ்வகையிலோ விழிநோக்கு கொண்டிருக்கிறார்போலும் என்னும் திகைப்பை சஞ்சயன் அடைந்தான். “அரசே, ஒவ்வொரு படை நடுவிலும் பின்னாலிருக்கும் படை தேவையெனில் மேலும் பிரிந்து முன்னால் வருவதற்கான இடைவெளி உள்ளது. ஒன்றிலிருந்து ஒன்றை பிரித்து நீளமாக்கவும் ஒன்றுடன் ஒன்று செருகிக்கொண்டு அகலமாக்கவும் இயலும் வகையில் படைகள் அமைந்துள்ளன. படைகளின் முகப்புகளில் ஆயிரத்தவர் தங்கள் கொடிகளுடன் நின்றிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆயிரத்தவர் குழுக்களுக்குள்ளும் நூற்றுவர்களின் பத்துக் கொடிகள் தென்படுகின்றன. ஓர் ஆயிரத்தவர் குழுவுக்கு மூன்றடுக்கு கொண்ட காவல்நிலையொன்று சகடங்கள் அமைந்த பீடத்தின் மேல் ஏழு புரவிகளால் இழுக்கப்படுவதாக அமைக்கப்பட்டுள்ளது. அதன்மேல் கொடிவீரர்களும் முழவோசை எழுப்புபவர்களும் அமைந்திருக்கிறார்கள். ஓர் அக்ஷௌகிணிக்கு மையத்தில் பெருங்காவல்நிலை உள்ளது. அதன்மேல் பெருமுரசும் கொம்புகளும் ஏந்தி வீரர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.”

“ஆம், அவை வெவ்வேறு ஒலி எழுப்பும் முழவுகள். அக்ஷௌகிணிகளின் முழவுகள் இடியோசை கொண்டவை. ஆயிரத்தவர் முரசுகள் சற்றே உலோக ஒலி கலந்தவை” என்றார் திருதராஷ்டிரர். “நமது படைகளும் அவ்வாறே அணிவகுத்துள்ளன, அரசே” என்றான் சஞ்சயன். “அமுதகலக்கொடி பறக்கும் பதினெட்டு செய்திமாடங்களால் சூழப்பட்டுள்ளது நமது படையின் முகப்பு. நமது படைகள் பூண்டுள்ள மான்கொம்பு வடிவின் முதற்கிளையின் கூர்முகப்பில் மீன்கொடி பறக்கும் தேரில் தன்னைவிட இருமடங்கு பெரிய நிலைவில்லை இடக்கால் கட்டைவிரலுக்கும் நெடுவிரலுக்கும் நடுவே ஊன்றி இடையில் கையூன்றி களத்தை கூர்ந்து நோக்கியபடி பீஷ்மர் நின்றுள்ளார். அவர் வெண்ணிறத் தலைப்பாகை அணிந்திருக்கிறார். அவருடைய தேரும் வெள்ளி என ஒளிவிடுகிறது. அவருடைய முதன்மை மாணாக்கனாகிய விஸ்வசேனர் அவருக்கு தேர் செலுத்துகிறார். அரசே, ஒருகணம் பீஷ்மரே அங்கும் அமர்ந்திருப்பதாக எண்ணி திகைப்புகொண்டேன்.”

“அவருக்குப் பின்னால் பன்னிரு கவர்களாக பிரிந்து நின்றிருக்கிறது நமது படை. ஒவ்வொரு கவர் முனையிலும் நமது பெருவீரர் ஒருவர் நின்றிருக்கிறார். துரோணர், கிருபர், சல்யர், துரியோதனர், சகுனி, அஸ்வத்தாமர், ஜயத்ரதர், பூரிசிரவஸ், கிருதவர்மர், பிரக்ஜ்யோதிஷ மன்னர் பகதத்தர், மாளவமன்னர் இந்திரசேனர், கலிங்க மன்னர் ஸ்ருதாயுஷ் ஆகியோரை தெளிவாக காண முடிகிறது” என்று சஞ்சயன் சொன்னான். “ஒவ்வொருவரையாக பார்க்கிறேன், அரசே. கமண்டலமும் வில்லும்கொண்ட கொடியுடன் துரோணர், எருதுக்கொடியுடன் கிருபர், சிம்மவால் கொடியுடன் அஸ்வத்தாமர், கரடிக்கொடியுடன் ஜயத்ரதர், கலப்பைக்கொடியுடன் சல்யர், பசுக்கொடியுடன் கிருதவர்மர், சூரியக்கொடியுடன் கலிங்கனான கேதுமான், ஈச்சையிலைக் கொடியுடன் சகுனி, மலைச்சூரியக் கொடியுடன் ஸ்ருதாயுஷ், படகுக்கொடியுடன் பகதத்தர்” என்று சஞ்சயன் தொடர்ந்தான்.

“அவர்களின் கவசங்களில் அந்த முத்திரைகள் உள்ளன. தேர்க்குஞ்சியிலும் தெரிகின்றன. ஒவ்வொருவர் அருகிலும் கழையன் ஒருவன் நீள்கழையுடன் செல்கிறான். தேர்களில் ஆவத்துணைவர் இருவரும் அறிவிப்பாளர் ஒருவரும் உடன் நிற்கிறார்கள். அவர்களின் புரவிகளும் கழுத்திலும் விலாவிலும் இரும்புவலைக் கவசங்கள் அணிந்துள்ளன. முழங்கால் வளைகளும் மூட்டுக்காப்புகளும் கொண்டு காக்கப்பட்டுள்ளன” என்றான் சஞ்சயன். “மான்கொம்பின் ஒவ்வொரு கவரும் முனையில் ஒரு வேல்கொண்டு முன் வளைந்து நீண்டுள்ளது.”

“ஆம், மான்கொம்புச் சூழ்கை நன்று” என்று திருதராஷ்டிரர் சொன்னார். பெரிய வெண்பற்களைக் காட்டி சிரித்து தலையைச் சுழற்றியபடி “மிகச் சரியான படைசூழ்கை அது. முப்புரி வேலுக்கு மான்கொம்புதான் கேடயமாக இயலும். மிக எளிதில் ஏதேனும் ஒரு கவரில் வேலின் கணு சிக்கிக்கொள்ளும். சற்றே சுழற்றினால் போதும்” என்றார். அவர் கையை தூக்கி மான்கொம்பை சுழற்றுவதுபோல் அசைத்து “முப்புரிவேலை கைவிட்டுவிடவேண்டியிருக்கும். வலு காட்டினால் வேலின் மூன்று கவர்களும் ஒன்றிலிருந்து ஒன்று விலகி நெளியும். ஆம்!” என்றார். இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடியை அறைந்து “ஆம்! ஆம்! அதுதான் நிகழவிருக்கிறது. அதுதான்! நான் அறிகிறேன்! பிதாமகர் பீஷ்மர் முன்னணியில் நிற்கையில் மான்கொம்பு கொல்திறல் படைக்கலம் என்றும் ஆகும். மான்கொம்பின் இயல்பு அது. கேடயமாகவும் படைக்கலமாகவும் மாறிமாறி செயல்படும் விந்தையான கருவி” என்றார்.

சஞ்சயன் திரும்பி அவருடைய உணர்வெழுச்சியை பார்த்தான். அதுவரை அவரிலிருந்த துயரமும் விலக்கமும் முற்றாக பறந்துபோய் போர்க்களத்தில் படைக்கலமேந்தி போர்முரசு முழங்கக் காத்திருக்கும் படைவீரனின் வெறியும் உவகைக்கொப்பளிப்பும் கொண்டவராக மாறிவிட்டிருந்தார். அவர் உடலின் வாயில்களைத் திறந்து முற்றிலும் புதிய ஒருவர் வந்தமர்ந்திருப்பதைப்போல. ஆனால் அந்தப் புதியவரை அவன் மேலும் நன்கறிந்திருப்பதாக அவனுக்கு தோன்றியது. அவன் தொடர்ந்து சொன்னான். “நம் படைகள் முற்றிலும் பழுதின்றி நிரைகொண்டுள்ளன, அரசே. என்ன நிகழ்கிறதென்பதை இங்கிருந்து தெளிவாக பார்க்க இயல்கிறது. புறாக்கள் படைகளுக்குமேல் புலரி ஏரியில் நீராவிப்படலம்போல் படர்ந்துகொண்டிருக்கின்றன. அவை சென்றமரும் இடங்களில் எல்லாம் செய்திகள் சென்று விழுந்து எரியென பற்றிக்கொண்டு அக்கணமே முரசொலியும் கொம்போசையுமாக மாறுகின்றன. அதற்கேற்ப படை மேலும் மேலும் தன்னை கூர்மைப்படுத்தி திரட்டிக்கொள்கிறது.”

“படைவீரர்கள் எருமைத்தோலாலும் யானைத்தோலாலும் ஆன கவசங்களும் ஆமையோட்டுக்கவசங்களும் அணிந்திருக்கிறார்கள். வில்லவர்களை எதிர்கொள்ளும் காலாட்படையினர் மார்பில் இரும்புச் சங்கிலி பின்னிய கவசங்களை அணிந்திருக்கிறார்கள். தலைக்கவசங்கள் இரும்புக்குமிழிகள்போல் மின்ன இங்கிருந்து பார்க்கையில் ஒரு பெரும்நுரைப்படலமென தெரிகிறது படைப்பெருக்கு” என்றான் சஞ்சயன். “ஆம், அதை என்னால் பார்க்கமுடிகிறது… நுரைப்படலம்! இரும்பு நுரைப்படலம்!” என்று திருதராஷ்டிரர் கூவினார். “அரசே, இரு நகரங்கள் ஒன்றையொன்று நோக்கி அமைக்கப்பட்டுள்ளதுபோல் உள்ளன படையமைவுகள். மிதக்கும் படகுகளாலான பெருநகரங்கள் என்று சொல்லலாம். எக்கணத்திலும் தன்னை கலைத்து புதிய வடிவில் அடுக்கிக்கொள்ள வாய்ப்புள்ளவை. இங்கிருந்து பார்க்கையில் அவை ஒன்றையொன்று முட்டும்போது ஒன்றின் இடைவெளிகளில் இன்னொன்று மிகச் சரியாக புகுந்துகொண்டு ஒற்றை வெளியென ஆகும்பொருட்டு அமைக்கப்பட்டவைபோல் தோன்றுகின்றன.”

“இருவகை கவசப்படைகளை காண்கிறேன். தேர்களால் கொண்டுசெல்லப்பட்டு ஒன்றுடன் ஒன்று இணைத்து அடுக்கப்படும் ஆளுயர நிலைக்கவசங்கள். அவற்றை கொண்டுசெல்லும் தேர்களுக்கு மேல் அவை தூக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆணை எழுந்ததும் அவற்றை தாழ்த்தியபடி முன்னால் சென்று இணைத்து கவசங்களாலான சுவரை அமைக்க முடியும். யானைகள் கொண்டுசெல்லும் இரும்புக்கவசங்கள் இரண்டு ஆள் உயரமானவை. அவை யானைகளின் முட்டுதலையும் தாங்குபவை. அவற்றை தங்கள் முன் சாற்றி வைத்தபடி நின்றிருக்கின்றன யானைகள்” என்றான் சஞ்சயன். “யானைப்படை மூன்றுவகை. முள்கொண்ட உருளைகளை சங்கிலிகளில் கட்டி துதிக்கையில் வைத்திருக்கும் தாக்குதல்யானை. முன்னணி கவசத்தடைகளை உடைக்கும் நீண்ட தூண்களை ஏந்திய தண்டானை. கவசங்களை ஏந்திய தடையானை” என்றான். “இந்தப் போரில் இருபுறமும் யானைப்படை முன்னணிக்கு அனுப்பப்படவில்லை.” திருதராஷ்டிரர் “எதிரியின் படைசூழ்கை கோட்டைபோலிருந்தாலொழிய யானைகளால் பெரும்பயன் ஏதுமில்லை” என்றார்.

“நீர்ப்பரப்பில் மீன்கள் துள்ளி எழுந்தமைவதுபோல படைவெளியின் நடுவே கழையர் எழுந்து இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். படையணிவகுப்பை ஒவ்வொரு தலைவரும் தீரா ஐயத்துடன் நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். கிருதவர்மர் மேலும் மேலும் பதற்றம் கொண்டிருக்கிறார். ஏனென்றால் அவருடன் வந்திருப்பவர்கள் யாதவர்கள். அவர்களில் விருஷ்ணிகளின் நிலை குறித்த ஐயம் நின்றிருக்கிறது. படைமுகத்தில் தங்கள் தலைவரான இளைய யாதவரை கண்டால் அவர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்று பிற யாதவகுடியினர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் சஞ்சயன். திருதராஷ்டிரர் “அவர்கள் மேலும் கடுமையாக நடந்துகொள்வார்கள். மேலும் மேலுமென பாண்டவர்களை கொன்று குவிப்பார்கள். ஏனென்றால் மானுட உள்ளம் எப்போதும் ஓர் உச்சநிலையில் இருந்து மறுஎல்லைக்கே செல்கிறது. அவர்கள் பாண்டவர்கள் மீது கொண்டிருந்த அன்புக்கு அடியில் எஞ்சியிருந்த வெறுப்பு பேருருக் கொள்ளும். இளைய யாதவரை வாழ்த்தி கண்ணீர்மல்கிய போதெல்லாம் அடிபட்டு நஞ்சுகொண்ட ஆணவம் ஆயிரம் படம் விரித்து எழுந்து வரும்” என்றார்.

“அரசே, நமது படைகளில் அவந்தியின் விந்தனும் அனுவிந்தனும் மாங்கனி கொடிகளுடன் நின்றிருக்கிறார்கள். அவர்களுக்கு அருகே கோசலமன்னன் பிரஹத்பலன் மயில்கொடியுடன் நின்றிருக்கிறார். சௌவீரர்களும் பால்ஹிகர்களும் பால்ஹிக மன்னர் சலன் தலைமையில் அணிகொண்டிருக்கிறார்கள். காந்தாரர்களின் படைப்பிரிவுகளை சுபலர் தலைமைதாங்குகிறார். மறுபக்கம் ஒட்டகக் கொடியுடன் காம்போஜத்தின் சுதக்ஷிணனும் சூரியக்கொடியுடன் அங்கநாட்டரசர் கர்ணனின் மைந்தர் விருஷகேதுவும் இளையோரும் நின்றிருக்கின்றார்கள். காமரூபத்தின் படைகளை அவர்களுக்குப் பின்னால் பார்க்கிறேன். இணையாக வங்கநாட்டுப் படைகளும் நின்றிருக்கின்றன. அதற்கும் அப்பால் நின்றிருப்பவை திரிகர்த்தர்களும் உசிநாரர்களும் இணைந்த பெரும்படை. அதை திரிகர்த்தனாகிய சுசர்மன் தலைமை தாங்குகிறார். மிகத் தொலைவில் கூர்ஜரத்தின் படைகளை காண்கிறேன். அவர்கள் சைப்ய நாட்டு கோவாசனரால் நடத்தப்படுகிறார்கள்.”

திருதராஷ்டிரர் மெல்ல அமைதியடைந்தார். பற்களைக் கடித்து தாடையை முன் நீட்டி கூர்ந்த தணிந்த குரலில் “மறுபக்கம் பார்த்தனும் பீமனும் நின்றுள்ளனர் அல்லவா?” என்றார். “ஆம், அவர்கள் தங்கள் படைகளின் அணிகளை நோக்கிவிட்டு படைமுகப்புக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். முப்புரிவேலின் கைப்பிடியில் அமைந்த இரு கவர்களென அவர்களின் படைகளை நிறுத்தியிருக்கிறார்கள். இளைய பாண்டவராகிய பீமன் உடலெங்கும் இரும்புக்கவசங்கள் அணிந்திருக்கிறார். தலைக்கவசத்தை வலக்கையில் நெஞ்சோடணைத்து பற்றியிருக்கிறார். சிம்மக்கொடி பறக்கும் பெருந்தேரில் நெஞ்சகன்ற ஏழு யவனப்புரவிகள் பூட்டப்பட்டுள்ளன. தேர்த்தட்டில் நின்றபடி கைசுட்டி தன் படையின் பல்வேறு பகுதிகளை நோக்கி தேரை திருப்பும்படி பாகனுக்கு ஆணையிட்டுக்கொண்டிருக்கிறார். அவரைப்போன்றே இரும்புக்கவச உடையணிந்தவர்களால் ஆன படைகள் அவரைப்போலவே உடல்நடிக்கின்றன. அவர்களின் முகப்பில் புரவிவீரர்களும் தொடர்ந்து தேர்களும் பின்னர் காலாட்படையினரும் நின்றிருக்கிறார்கள்.”

“பார்த்தன்! பார்த்தன் எங்கே? அவர்களைப்பற்றி சொல்! அவர்களைப் பற்றி சொல்லவந்து விட்டுவிட்டாய்!” என்றார் திருதராஷ்டிரர். சஞ்சயன் “அரசே, மறுப்பக்க கவரில் இப்போது நான் அர்ஜுனரை பார்க்கிறேன். அவரது படைமுகப்பில் நின்றிருக்கும் தேரில் குரங்குக்கொடி பறக்கிறது. இளைய யாதவர் தேர்ப்பாகனாக அமர்ந்திருக்கிறார். முழுக்கவச உடையணிந்து தலையில் அணிந்த தலைக்கவசத்தை தோளுக்குப் பின்னால் சரித்து நின்றுகொண்டிருக்கிறார் பாண்டவர். இளைய யாதவர் அவருக்கு படைகளை கைசுட்டி எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறார். பின்னால் நின்றிருக்கும் இரண்டு ஆவத்துணைவர் அம்புகளை எடுத்து சீராக அடுக்கிக்கொண்டிருக்கிறார்கள். அத்தேரின் பின்பக்கம் தூண்கள் முழுக்க அம்பறாத்தூணிகள் அம்புநிறைத்து தொங்கவிடப்பட்டுள்ளன. போருக்கென அவர்கள் ஒருங்கிக்கொண்டிருப்பதுபோல் தோன்றவில்லை. ஒரு இனிய விழாவிற்கான உளநிலை அவர்கள் முகத்தில் தெரிகிறது” என்றான்.

அவன் ஆடியை மீண்டும் மெல்ல நெருக்கி “இளைய யாதவர் கனவிலிருப்பதுபோல் அரைவிழி மூடியிருக்கிறார். நான் அவர் விரல்களை பார்க்கிறேன். ஊழ்கத்தில் என அவை ஒன்றுடன் ஒன்று படிந்து அமைந்திருக்கின்றன. அவர் உதடுகளும் ஊழ்கநுண்சொல்லை உரைப்பவைபோல் மெல்ல அசைகின்றன. அவர் இளைய பாண்டவருக்கு சொல்லும் சொற்களை செவிகளால் கேட்க அவராலும் இயலாது. அவை ஒருவரை ஒருவர் நன்கறிந்தவர்கள் சொல்லின்றி அறியும் மொழியாலானவை போலும். அரசே, கார்நீலரின் தலையிலிருக்கும் பீலி விழிதிறந்து திகைத்ததுபோல் அப்பெரும் போர்க்களத்தை பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர் மஞ்சள் மரவுரி ஆடை மட்டும் அணிந்திருக்கிறார். மார்பிலோ கைகளிலோ தோளிலோ எங்கும் கவசங்களில்லை. ஏழு புரவிகள் பூட்டப்பட்ட தேர் அது. ஒன்றுடன் ஒன்று முற்றிலும் ஒத்த, மெலிந்து நீண்ட கால்களும் ஒட்டிய வயிறும் கொக்கின் கழுத்தும் கொண்ட வெண்புரவிகள். சிவந்த மூக்கும் சிவந்த கண்களும் கொண்டவை. அவை சோனக நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டவை. பாலையின் வெண்மணல் அலைகளால் உருவாக்கப்பட்ட கால்கள் கொண்டவை. மிகுவிரைவு கொள்ளும் ஆற்றல் பெற்றவை” என்றான் சஞ்சயன்.

“என் மைந்தர் எங்கே? என் மைந்தர் என்ன செய்கிறார்கள்? அதை சொல்!” என்றார் திருதராஷ்டிரர். “அரசே, துரியோதன மாமன்னர் யானைமேல் வெண்கொற்றக்குடை சூடி போர்க்களத்தின் முகப்பு நோக்கி செல்கிறார். அவரைச் சூழ்ந்து இசைச்சூதரும் பிறரும் வாழ்த்தொலி எழுப்பியபடி செல்கிறார்கள். அவருக்கு முன்னால் செல்லும் யானைமேல் அமுதகலக்கொடி பறக்கிறது. அவர் தலைக்குமேல் அரவுக்கொடி பறக்கிறது. முற்றிலும் உடல்மறைக்கும் இரும்புக்கவசத்துடன் அவர் தோன்றுகிறார். களமெழுந்த போர்த்தேவன் என தோன்றுகிறார். அவரைச் சூழ்ந்து இலங்கும் கொடிகளும் பாவட்டாக்களும் மின்னும் கொம்புகளின் வளைவுகளும் மலர்க்காடென உளம்மயங்கச் செய்கின்றன.”

“துரியோதன மாமன்னரை தலைக்கவசமின்றி நோக்கினால் பீமசேனர் என்றே தோன்றும். அவருக்கு நேர் பின்னால் துச்சாதனரும் அவர்களுக்குப் பின்னால் துச்சகரும் துச்சலரும் துர்மதரும் தேர்களில் நின்றிருக்கிறார்கள். பிற கௌரவ இளவரசர்கள் தொடர்ந்து அணி நிரந்துள்ளனர். அவருக்கு வலப்பக்கம் சுபாகு அவரைப் போலவே கவசம் அணிந்து கதையுடன் தேர்த்தட்டில் நின்றிருக்கிறார். அனைவரும் ஒருவர் பிறிதொருவர்போல் தோன்றுகிறார்கள். அவர்கள் நூற்றுவருக்குப் பின்னால் கௌரவ மைந்தர் ஆயிரத்தவரும் அதேபோல கவச உடையணிந்து புரவிகளில் அமர்ந்திருக்கிறார்கள். அனைவருமே தங்கள் தமையனுக்குரிய அரவுக்கொடியும் அரவு முத்திரையும் கொண்டிருக்கிறார்கள். அரசே, ஒருகணம் பீமனாகவும் துரியோதனராகவும் கௌரவ பாண்டவ மைந்தராகவும் உருக்கொண்டு நின்றிருப்பது ஒன்றே என்னும் உளமயக்கு உருவாகிறது.”

“மறுபக்கம் யுதிஷ்டிரர் தேருக்கு வந்துவிட்டார்” என்று சஞ்சயன் தொடர்ந்தான். “நந்தமும் உபநந்தமும் அமைந்த வெண்கொடி பறக்கும் அவருடைய தேரின் இடப்பக்கம் சரபக்கொடி கொண்ட நகுலரின் தேரும் வலப்பக்கம் அன்னக்கொடியுடன் சகதேவரின் தேரும் தெரிகின்றன. நகுலரும் சகதேவரும் தேரிலிருந்து இறங்கி மூத்தவரின் கால்தொட்டு வணங்கி வாழ்த்துகொண்டு தங்கள் படைப்பிரிவுகளுக்கு திரும்பிச்செல்கிறார்கள். அவர்கள் அகன்றதும் காத்து நின்றிருந்த அபிமன்யூ துள்ளும் மீன் பொறிக்கப்பட்ட கொடியுடன் வந்து யுதிஷ்டிரரை வணங்குகிறார். அவரைத் தொடர்ந்து சுருதகீர்த்தி காளைக்கொம்பு பொறிக்கப்பட்ட கொடிகொண்ட தேரில் வந்து அவரிடம் வாழ்த்து பெறுகிறார். பாண்டவ மைந்தர் ஒவ்வொருவராக வந்துகொண்டிருக்கிறார்கள்.”

“கோவிதாராக் கொடி கொண்ட தேரில் திருஷ்டத்யும்னர் ஆணைகளை பிறப்பித்தபடி படைமுகப்பில் தேரில் சென்றுகொண்டிருக்கிறார். விற்கொடித்தேரில் பாஞ்சாலர் நின்றிருக்க அவரைத் தொடர்ந்து அவருடைய படைகள் ஏழு நீள்சுவர்கள் என அணிகொண்டிருக்கின்றன. சாத்யகியின் காளைக்கொடியை காண்கிறேன். தொலைவுவரை விரிந்துள்ள இந்திரப்பிரஸ்தத்தின் படைகளை அவர் ஆள்கிறார். மச்சர்களின் மீன்கொடிகளும் முதலைக்கொடிகளும் மீன்குத்திக்கொடிகளும், மல்லநாட்டவரின் எருமைக்கொடிகளும் பன்றிக்கொடிகளும் கழுதைக்கொடிளும், கிராதர்களின் காகக்கொடிகளும் ஆந்தைக்கொடிகளும், நிஷாதர்களின் ஆமைக்கொடிகளும் முள்ளம்பன்றிக்கொடிகளும் அசுரர்களின் யானைக்கொடிகளும் கழுகுக்கொடிகளும் வல்லூறுக்கொடிகளும் நெடுந்தொலைவுவரை நிரந்துள்ளன.”

“கௌரவர்களின் புரவிகள் அனைத்தும் கரும்பட்டுபோல் உடல் கொண்டவை. விரிந்த நெஞ்சும் உறுதியான கால்களும் நரம்புகள் புடைத்த பெரும் கழுத்தும் கொண்டிருக்கின்றன” என்றான் சஞ்சயன். “ஆம், அவை தளராதவை. எத்தனை விரைந்தாலும் போர்க்களத்தில் அவை நாக்கை நீட்டுவதில்லை. நுரை உமிழ்வதில்லை” என்றார் திருதராஷ்டிரர். “தேர்களிலும் வேறுபாடுள்ளது. கௌரவர்களின் தேர்கள் எடைமிக்கவை, வலிமையானவை. பெரும்பாலும் அவை ஒன்றுக்குமேற்பட்ட புரவிகளால் இழுக்கப்படுகின்றன. சகடங்களில் அச்சுகளில் பிற சகடங்களை வெட்டும்படி சுழலும் கத்திகள் கொண்டவை. அவற்றின் புரவிக்கால்களிலும் அணுகுபவர்களை வெட்டும் கூர்கத்திகள் உள்ளன. பாண்டவர் படைகளில் ஒற்றைப்புரவிகளால் இழுக்கப்படும் மெல்லிய தேர்களே மிகுதி. அங்கே பெரும்பாலான படைவீரர்கள் எளிய காலாட்கள்” என்றான் சஞ்சயன். “அவர்கள் அவன் ஒருவனை மட்டுமே நம்பி வந்துள்ளனர்” என்றார் திருதராஷ்டிரர்.

“நான் இப்போது அஸ்வத்தாமரை பார்க்கிறேன். அவர் இரு கைகளையும் கட்டி ஊழ்கத்திலென முகம்கொண்டு வலக்காலை முன்வைத்து வில்லூன்றி தேர்த்தட்டில் காத்து நின்றிருக்கிறார். பீஷ்மர் அதோ தேர்த்தட்டில் அரைவிழிமூடி நின்றிருக்கிறார். அவருடைய வில்லின் நாண் மட்டும் இறுகி விம்மி நின்றுள்ளது. பூசனைக்கோ நூல்நவிலவோ அமர்ந்திருக்கும் யோகியினுடையதுபோல் தோன்றுகிறது அவர் முகம். அரசே, துரோணரை பார்க்கிறேன். அவர் தன் தாடியை மென்மயிர் வலையால் கட்டி கொண்டை போலாக்கியிருக்கிறார். தலையிலும் தோலாலான நாடாக்களைச் சுற்றி கொண்டையிட்டிருக்கிறார். அவர் மடியிலுள்ளது நீண்ட வில். அம்பறாத்தூணியை வலப்பக்கம் வைத்து ஒவ்வொரு அம்பாக எடுத்து அதன் கூர்முனையை நோக்கி மீண்டும் வைத்துக்கொண்டிருக்கிறார். முட்டை விரித்து அப்போதே வெளிவந்த சிறு கோழிக்குஞ்சுகளை கை அழுத்தாமல் எடுத்து மென்மயிர்ப்பட்டு நலுங்காமல் நோக்கி அவற்றின் நெல்மணி அலகை வருடி வைப்பவர் போலிருக்கிறார். முகமும் அவ்வண்ணமே கனிந்துள்ளது” என்றான் சஞ்சயன். “கிருபர் அருகே நின்றிருக்கும் ஏவலனுக்கு ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருக்கிறார். அவர் ஓர் வகுப்பில் இருப்பவர்போலவே தோன்றுகிறார்.”

“ஜயத்ரதர் தன் கைகளில் தோலுறைகளை ஒவ்வொரு விரலாக இழுத்து நன்கு அணிந்துகொண்டிருக்கிறார். இல்லை, அவற்றை அவர் கழற்றுகிறார். மீண்டும் அணிந்துகொள்கிறார்” என்றான் சஞ்சயன். திருதராஷ்டிரர் “ஆம், அவன் இயல்பு அது. ஒவ்வொன்றும் அதன் மிகச் சரியான வடிவிலேயே அமையவேண்டுமென்று எண்ணுபவன். ஆகவே ஓயாமல் தன்னை திருத்திக்கொண்டிருப்பவன்” என்றார். “அவ்வியல்பாலேயே அவன் இலக்குகள் குறிதவறாமல் சென்று அமைகின்றன.” “கிருதவர்மரும் தன் கவசங்களை சீரமைத்துக்கொண்டிருக்கிறார். அஸ்வத்தாமர் விழிகளைச் சுழற்றி படைகளை மீள மீள நோக்குகிறார். பூரிசிரவஸ் பதற்றம் கொண்டிருக்கிறார். தேரின் தூணை கைகளால் தட்டிக்கொண்டிருக்கிறார். கைகளை மார்பில் கட்டியபடி நிலைகொண்ட உடலுடன் இரும்புச்சிலை என வீற்றிருக்கிறார் துரியோதனர்.”

திருதராஷ்டிரர் மெல்ல தளர்ந்து “போர் ஒருங்கிவிட்டது. முன்னரே உளங்களில் நிகழத் தொடங்கிவிட்டது. நான் இப்போது என் முன் நிகழவிருக்கும் போரை கண்டுகொண்டிருக்கிறேன்” என்றார். எரிச்சலுற்றவரைப்போல “வானை பார். பொழுது விடிய இன்னும் எவ்வளவு நாழிகையிருக்கிறது?” என்றார். சஞ்சயன் “வானம் நன்கு ஒளிபெற்றுவிட்டது, பேரரசே. ஒவ்வொருவரும் பிறிதொருவர் விழியை நன்கு நோக்கும் கணம் வரை போருக்கு பொழுது விடியவில்லை என்பதே கணக்கு. ஆகவே இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு மேடையிலிருந்து செய்தி எழக்கூடும்” என்றான். “ஆம்” என்று திருதராஷ்டிரர் பெருமூச்சுவிட்டார்.

“ஒவ்வொருவரும் பொறுமையின் எல்லையில் நின்றிருக்கிறார்கள். அரசே, யானைகள் நிலையழிந்து அசைகின்றன. புரவிகள் முன்கால்களால் நிலத்தை தட்டுகின்றன. தேர்களின் சகடங்கள் முன்னும் பின்னுமென அசைந்துகொண்டிருக்கின்றன. மெல்ல திரும்பும் வேல்முனைகளில் விழியொளி தோன்றி மறைகிறது. தேர்களின் குமிழ்முகடுகளில் காலையொளி குடியேறிவிட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் உயிர்நிகழ்வின் உச்சத்தில் நின்றிருக்கிறார்கள்” என்றான் சஞ்சயன். திருதராஷ்டிரர் “ஆம், நாண் இழுபட்டு நின்றிருக்கும் அம்பின் உறைநிலை” என்றார். “அப்போது அதன் கூரில் அமைந்த தெய்வம் ஆம் ஆம் ஆம் என சொல்லிக்கொள்கிறது என்பார்கள்.”

சஞ்சயன் “அரசே…” என்றான். மேலும் பேச அவனால் இயலவில்லை. அவன் மேற்கிலிருந்து எழுந்து பாண்டவப் படைகளைக் கடந்து கிழக்குநோக்கி சென்ற காற்றை கண்களால் பார்த்துக்கொண்டிருந்தான். பல்லாயிரம் ஆடைகளும் கொடிகளும் பாவட்டாக்களும் அசைய செம்மஞ்சள் வண்ண ஒழுக்கெனச் சென்று கௌரவர் படையை அடைந்தது அது. அங்கே வண்ணம் மாறி செந்நீல அலையென்று உருக்கொண்டது. எதிர்காற்றில் கௌரவர் விழிமூடி தூசுப்படலத்தை தவிர்த்தனர். கொடிகளும் யானைகளின் செவிகளும் பின்னோக்கி திரும்பின. “என்ன?” என்றார் திருதராஷ்டிரர். “காற்று” என்று அவன் சொன்னான். “எங்கிருந்து?” என்று அவர் கேட்டார். “மேற்கிலிருந்து” என்றான். அவர் மறுமொழி சொல்லாமல் நீள்மூச்செறிந்தார்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 74

tigகுருக்ஷேத்ரத்திற்கு வடக்கே கஜபதம் என அழைக்கப்பட்ட மேட்டுநிலத்தில் அமைந்திருந்த திருதராஷ்டிரரின் பெரிய கூடாரத்திற்கு வெளியே சஞ்சயன் கைகளைக் கட்டியபடி காத்து நின்றான். உள்ளே அவரை சங்குலன் அணிவித்து ஒருக்கிக்கொண்டிருந்தான். அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது மிக அரிது என்று சஞ்சயன் அறிந்திருந்தான். பெரும்பாலும் தனக்குள் என திருதராஷ்டிரரே பேசிக்கொள்வார். சங்குலன் எப்போதாவது மறுமொழி இறுத்தால்கூட அதுவும் திருதராஷ்டிரரின் குரல் என்றே கேட்கும். வெளியே நின்றிருப்பவர்களுக்கு உள்ளே இருவர் இருக்கும் உணர்வே எழாது. இருவரும் பேருடலும் எடைமிக்க கால்களும் கொண்டவர்களாயினும் யானைபோல் ஓசையிலாது நடப்பவர்கள். ஆகவே அவ்வுரையாடல் ஒலி மிகையாக கேட்கும்.

ஒருக்கங்கள் முடிந்ததை அறிவிக்கும் பொருட்டு கைகளால் சங்குலன் இருமுறை கதவைத் தட்டியதும் சஞ்சயன் கைகளை விலக்கி தலைவணங்கி நின்றான். உள்ளிருந்து நிமிர்ந்த பேருடலுடன் வெளியே வந்த திருதராஷ்டிரர் பெருமூச்சுடன் “சஞ்சயா, என்ன செய்கிறாய்?” என்றார். சஞ்சயன் அருகே சென்று வணங்கி “இங்குளேன், அரசே” என்றான். அவன் தோளில் கைவைத்து “பொழுது புலர்ந்துவிட்டதா?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “புலர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாழிகை ஆகும் முதல் ஒளி எழுவதற்கு” என்றான் சஞ்சயன். “அப்படியென்றால் கருக்கிருட்டு…” என்றார் திருதராஷ்டிரர்.

சங்குலன் தலைவணங்கி அவர்கள் செல்லலாம் என்பதை அறிவித்தான். அவ்வசைவின் காற்றை ஏற்று சங்குலனை நோக்கி செவிதிருப்பிய பின் “இவன் வரவில்லையா?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “இல்லை அரசே, நாம் இருவர் மட்டுமே அங்கு செல்கிறோம். வேறெவரும் செல்ல ஒப்புதல் இல்லை” என்றான் சஞ்சயன். “செல்வோம்” என்றார் திருதராஷ்டிரர். அவரது வலக்கையை பற்றி அழைத்துச்சென்று அங்கே காத்து நின்றிருந்த தேரை அணுகினான். அதன் பக்கவாட்டிலிருந்த படியை விரித்து கீழிறக்கினான். திருதராஷ்டிரர் போர்த்தேருக்கு பழகிவிட்டிருந்தமையால் படியில் கால்வைத்து அதன் அமைப்பை உணர்ந்தபின் ஒரே மூச்சில் ஏறினார். பீடத்தில் எடையுடன் அமர்ந்து கால்களை நீட்டி கைகளை பீடத்தில் வைத்து முதுகை நன்கு சரித்து தலையை மேலே தூக்கி “தெய்வங்களே…” என்று முனகினார். படிகளினூடாக ஏறி உள்ளே சென்று படிகளை மடித்து பின்னால் வைத்து பாகனிடம் செல்லலாம் என்று சஞ்சயன் கைகாட்டினான். பாகன் சவுக்கு முனையால் புரவிகளை தொட அவை குளம்போசை எழுப்பியபடி விரைவு கொண்டன.

காற்று குளிராக வந்து ஆடைகளை படபடக்கச் செய்தது. குழல் கட்டவிழ்ந்து பறக்கத் தொடங்கியதும் சஞ்சயன் விடுதலை உணர்வை அடைந்தான். மலைச்சரிவில் கட்டப்பட்டிருந்த அந்தக் கூடாரத்தில் அவர்கள் வந்து தங்கியிருந்த அந்நான்கு நாட்களும் பெரும்பாலான பொழுதுகளில் முகப்பிலிடப்பட்டிருந்த மரப்பீடத்தில் திருதராஷ்டிரர் அமர்ந்திருக்க அவரருகே நின்றபடி அவன் அவர் கேட்கும் வினாக்களுக்கு மறுமொழியிறுத்துக் கொண்டிருந்தான். இரண்டு நாள் கழிந்த பின்னர் ஒரு கணம் அவன் உணர்ந்தான், அவர் மீள மீள ஐந்து கேள்விகளையே கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று. அவ்வைந்து கேள்விகளையும்கூட ஒற்றைக்கேள்வியாக சுருக்கிவிடமுடியுமென்று மீண்டும் எண்ணிக்கொண்டான். “படைகளில் என்ன நிகழ்கிறது?”

ஆனால் அவர்கள் இருந்த கூடார முகப்பிலிருந்து மிகத் தொலைவில் ஆழத்தில் குருக்ஷேத்ரமாக ஆகும் செம்மண்வெளியின் சரிவு மட்டுமே தெரிந்தது. இருபுறமும் நிலைகொண்ட படைகளின் ஓசை அங்கு ஒரு சிறு வண்டுக்கூடு இருப்பதுபோல் தோன்றச் செய்தது. “இங்கிருந்தால் எதுவும் தெரிவதில்லை, அரசே” என்று அவன் பலமுறை சொன்ன பின்னரும் என்ன நிகழ்கிறது என்று திருதராஷ்டிரர் கேட்டுக்கொண்டே இருந்தார். “என்ன செய்கிறார்கள்?” என்று சலித்துக்கொண்டார். மீண்டும் ஒரு சொல்பரிமாற்றம் நிகழ்ந்து போர் தவிர்க்கப்படுமென அவர் எதிர்பார்க்கிறாரா என அவன் எண்ணிக்கொண்டான். ஆனால் அவர் அவ்வாறு சொல்லவில்லை. உடலோ உள்ளமோ எங்கும் அமரவியலாதவராக இருந்தார்.

அவர் துயின்றுவிட்டார் என்று குறட்டையொலி கேட்டு அவன் புரிந்துகொண்டான். அவர் இரவில் துயில்வது மிக அரிதாகிவிட்டிருந்தது. ஆகவே பகலில் எண்ணங்களில் அமையும்போதெல்லாம் துயிலில் மூழ்கி குறட்டை ஒலி எழுப்பினார். முழுத் துயில் உடலை அழுத்துகையில் அந்த எடையாலேயே விழித்துக்கொண்டு உரத்த குரலில் மூச்சிரைத்து இருமி தன்னை உணர்ந்தார். ஒவ்வொரு முறை துயில் விழிக்கும்போதும் அவர் நெஞ்சில் ஒரு வேல் பாய்ந்ததுபோல் உடலில் விதிர்ப்பு பரவுவதை அவன் பார்த்திருந்தான். துயில் நீப்பினால் அவர் உடல் வெளிறி மெலிந்திருந்தது. வாய் உலர்ந்து மடிந்திருக்க, பெரிய வெண்பற்கள் எழுந்து வெளியே நீட்டியிருந்தன. பெரும்பாலான பொழுதுகளில் அவர் சீற்றம்கொண்டிருப்பதாக தோன்றச்செய்தது அது.

அவன் அறிந்திருந்த திருதராஷ்டிரர் அவ்வுடலுக்குள் தன்னை இழுத்துக்கொண்டு மறைய உள்ளே சிறு விதையென உறங்கிய பிறிதொருவர் எழுந்து அவ்வுடலில் பரவி முன்னால் நிற்பதுபோல இருந்தது. திருதராஷ்டிரர் உடலில் எப்போதும் ஓர் அழகு இருப்பதை அவன் கண்டிருந்தான். அவ்விழிகளின் வெறுமை உருவாக்கும் துணுக்குறலை விழி கடந்து சென்றுவிட்டதென்றால் ஒவ்வொன்றிலும் தணியாத ஆர்வம் கொண்ட ஒரு பேருருவச்சிறுவனை அவரில் கண்டடைய முடியும். மைந்தரையோ விலங்குகளையோ தொடுகையில் அவர் முகத்திலெழும் கனிவுக்கு நிகரான பிறிதொன்றை மானுட முகத்தில் அவன் கண்டதில்லை. இப்போது அவரால் ஒரு குழவியை தன் மடியில் எடுத்துவைத்து கனிந்து முத்தமிடமுடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை.

விழித்துக்கொண்ட திருதராஷ்டிரர் இரு தொடைகளிலும் கைகளால் அறைந்தபடி “எங்கிருக்கிறோம்? எங்கிருக்கிறோம்?” என்றார். “சென்றுகொண்டிருக்கிறோம், அரசே” என்றான் சஞ்சயன். “இங்கிருந்து படைகள் தெரிகின்றனவா?” என்று அவர் கேட்டார். “இவ்விருளில் எங்கிருந்தாலும் படை தெரியாது” என்றான் சஞ்சயன். “விடிந்துகொண்டிருக்கிறது என்றாய்?” என்றார். “இரவு என்பது விடியலின் முன்வடிவம். உள்ளத்தில் விடிவு தொடங்கி நெடும்பொழுதுக்குப் பின்னரே முதல் ஒளி வந்தடைகிறது” என்றான் சஞ்சயன். “மூடன்! மூடன்!” என்று கூறியபடி தன் இரு தொடைகளிலும் அவர் அறைந்து கொண்டார். தேர்ச்சகடம் சீராக ஒலித்தது. வளைவுகளில் நிறுத்துகட்டைகள் உரசி முனகின.

“இன்னும் நெடுந்தொலைவா?” என்றார். “அணுகிக்கொண்டிருக்கிறோம்” என்றான் சஞ்சயன். “அதுவும் இதைப்போலத்தான் அல்லவா? நாம் அணுகத்தொடங்கிய பின்னரே பாதை குறுகத் தொடங்குகிறது” என்றார் திருதராஷ்டிரர். சஞ்சயன் புன்னகைத்தான். அவன் புன்னகைப்பதை விழியின்மையாலேயே அவரால் உணரமுடியும். அது அவரை சற்றே எளிதாக்கியது. “அறிவிலி, உனக்கு சொற்கள் விளையாட்டுப் பொருட்கள். வெளியே சென்று உலகை அறியாதவன். நீ அறிந்ததெல்லாம் நூல்களில் இருந்து. இருந்த இடத்திலிருந்தே சொல்லாடி பொருளின்மையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறாய்” என்றார் திருதராஷ்டிரர். “இன்று கண்முன் நிகழ்வுப்பெருக்கை காணவிருக்கிறாய்.”

“ஆம் அரசே, சொல்லில் இருந்து காட்சிகளை உருவாக்குபவன் நான். இன்றுமுதல் காட்சிகளில் இருந்து சொல்லை உருவாக்கவேண்டும்” என்றான் சஞ்சயன். திருதராஷ்டிரர் மீண்டும் பெருமூச்சுடன் தளர்ந்து “விடியும்போது நாம் அங்கிருப்போம்” என்றார். “ஆம்” என்று சஞ்சயன் சொன்னான். “அங்கிருந்தால் படைகள் நன்கு தெரியுமா?” என்று அவர் கேட்டார். “நன்கு தெரியுமிடத்திலேயே நோக்குமாடம் அமைக்கப்பட்டுள்ளது” என்றான் சஞ்சயன். “அங்கு பீதர் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட தொலைநோக்கு ஆடியொன்று பொருத்தப்பட்டுள்ளது. அதனூடாக நாம் தேவர்களுக்கிணையாக விழிகளை பெறமுடியும். நெடுந்தொலைவை அங்கிருந்தே பார்க்கமுடியும்” என்றான். “ஆடியினூடாகவா?” என்று அவர் கேட்டார். “நீர்த்துளியை அழுத்திப் பரப்பியது போன்றது அது என்றார்கள். நான் இன்னமும் அதை பார்க்கவில்லை” என்று அவன் சொன்னான்.

“ஆம், நீர்த்துளியினூடாக நோக்கினால் பொருட்கள் அண்மையில் வரும் என்று நான் கேட்டிருக்கிறேன்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “இரண்டு நீர்த்துளிகளை ஒன்றன்பின் ஒன்றென வைத்தால் தொலைவு அவ்விரண்டிற்கும் நடுவே பலமடங்கு மடிந்து சுருங்கிவிடுகிறது என நான் கண்டுள்ளேன். அண்மையும் சேய்மையும் தங்களை நிலைமாற்றிக்கொள்கின்றன” என்றான் சஞ்சயன். “பீதர்கள் இப்பருவெளியுடன் ஓயாது விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் திருதராஷ்டிரர். சஞ்சயன் “நமது முனிவர்கள் தங்கள் அகவையுடன் விளையாடுவதுபோல” என்றான். “நம் முனிவர்கள் ஊழ்கத்தில் சென்று அடைந்த அனைத்தையும் கையிலும் கருத்திலும் தொட்டடையும் பொருள்வெளியில் அளைந்தே பீதர்களும் அடைந்திருக்கிறார்கள்.”

தேர் மலைப்பாதையின் வளைவினூடாக வளைந்து சென்றுகொண்டிருந்தது. புரவிகளின் கால்பட்டு தெறித்த சில கூழாங்கற்கள் மலைவிளிம்பினூடே உருண்டு ஆழம் நோக்கி சென்றன. பாதை மேலேறிச் சென்றமையால் புரவிகள் மூச்சிரைத்து மெல்ல விரைவழிய மேலும் மேலும் அவற்றை சாட்டையால் அடித்து ஊக்கி முன்செல்லச் செய்தான் பாகன். “அவர்கள் எங்கிருக்கிறார்கள்?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். அவர் கேட்பதை புரிந்துகொண்ட சஞ்சயன் “நேற்று ஒற்றர்களை அனுப்பி செய்தி கொண்டுவரச் சொன்னேன். பாஞ்சாலப் பேரரசி திரௌபதியும் பாண்டவர்களின் அன்னை குந்தியும் குருக்ஷேத்ரத்திற்கு வெளியே பாண்டவர்களின் படைகளுக்குப் பின்னால் மிருண்மயம் என்னும் சிற்றூரில் தங்கியிருக்கிறார்கள்” என்றான். “ம்ம்” என்றார் திருதராஷ்டிரர்.

“அங்கிருந்து ஒவ்வொரு நாளும் நூறு புறாக்கள் பாண்டவர் படைகளுக்கு சென்று மீள்கின்றன. அங்கு நிகழ்வன அனைத்தையும் ஒற்றர்களினூடாக தெரிந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் ஆணைகளை இடுகிறார்கள்” என்றான் சஞ்சயன். “வேறு பெண்டிர் எவரும் உடனில்லையா?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “இரண்டு சேடியர் உள்ளனர். அரசகுடியினர் எவருமில்லை” என்றான் சஞ்சயன். “இப்போரை நிகழ்த்துபவர்கள் அவர்கள் இருவரும்தான்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “பாண்டவரின் படை ஒரு பெருந்தேர். தேரோட்டியின் இடத்தில் குந்தி அமர்ந்திருக்கிறாள். தேர்த்தட்டில் வில்லுடன் நிற்பவள் பாஞ்சாலத்து அரசி.” மீண்டும் பெருமூச்சுடன் கைகளை உரசிக்கொண்டு “வெல்லப்போகிறவர்கள் அவர்களே. ஆனால் வெல்வதென்ன என்று அவள் இன்னும் அறிந்திருக்கவில்லை” என்றபின் “தெய்வங்களே! மூதாதையரே!” என்று முனகியபடி மீண்டும் பீடத்தில் அசைந்து அமர்ந்தார்.

தேர் மிக மெல்ல சென்றுகொண்டிருந்தது. மலை உச்சியில் தனித்த விண்மீன்போல தெரிந்த ஒளியைக் கண்டு சஞ்சயன் “அணுகிவிட்டோம். நோக்குமாடத்தின் நெய்விளக்கு தெரிகிறது” என்றான். “இன்னும் எத்தனை பொழுதாகும் அங்கு சேர?” என்றார் திருதராஷ்டிரர். “முதல் முகில் ஒளிகொண்டுவிட்டது, அரசே. நாம் அங்கு சென்று அமர்கையில் கீழே ஒளிபரந்துவிடும்” என்றான் சஞ்சயன். திருதராஷ்டிரர் “விடிவது என்பதன் பொருளே மாறிவிட்டது” என்றார். அவன் திரும்பி வானத்தை நோக்கிக்கொண்டிருந்தான். எத்தனை விரைவில் ஒன்றிலிருந்து ஒன்றென முகில்கள் பற்றிக்கொண்டன என்று வியந்தான்.

“இங்கிருந்தால் நமது படைகளின் ஓசை கேட்குமா?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “இல்லை, இது நெடுந்தொலைவு. ஆனால் அதுவும் நன்று. ஓசை திரைபோல நிகழ்வன அனைத்தையும் மறைத்துவிடும்” என்றான் சஞ்சயன். பின்னர் “தொலைவு மிக நன்று. அது விரைவை அழிக்கிறது. ஒவ்வொன்றையும் உற்று நோக்குவதற்கு நமக்கு முழுப்பொழுதும் அமைகிறது. தேவர் விண்ணிலிருந்து மானுடரை அசைவில்லாதவர்களாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு தொல்நூல் சொல்கிறது. அத்தனை பெருந்தொலைவில் இருந்து நோக்குகையில் அசைவு முற்றிலும் பொருளிழந்துவிடுகிறது” என்றான்.

“எனக்கு நீ இந்த அணிச்சொற்களால் எதையும் சொல்லவேண்டியதில்லை. உன் சொற்களினூடாக நான் அனைத்தையும் பார்க்கவேண்டும். பொருள்வய வெளியென மாறாத நுண்சொற்கள் ஒன்றுகூட எனக்குத் தேவையில்லை” என்றார் திருதராஷ்டிரர். சஞ்சயன் “அரசே, இறுதியாக நான் ஒன்றை சொல்ல விழைகிறேன். தாங்கள் எதன் பொருட்டு இதை பார்க்கவேண்டும் என்று இன்னமும் எனக்கு தெரியவில்லை” என்றான். “நானும் அறியேன். முதலில் இதை பார்க்க விழையவில்லை. ஆனால் பார்க்காமலிருக்க என்னால் இயலவில்லை என்று பின்னர் உணர்ந்தேன். இதை பார்க்காதொழிய என்னால் இயலுமென்றால் எப்போதோ இளையோனுடன் கிளம்பி நானும் காட்டுக்கு சென்றிருப்பேன்” என்றார் திருதராஷ்டிரர். “நான் இதனுள் இருக்கிறேன். இங்குள்ள ஒவ்வொரு படைவீரனுக்குள்ளும் என் ஒரு துளி உள்ளது. என்னால் இதை பார்க்காமலிருக்க இயலாது.”

“பார்த்தவற்றிலிருந்து நீங்கள் எஞ்சிய வாழ்நாள் முழுக்க விடுபட இயலாது என்று அறிந்துகொள்ளுங்கள், அரசே” என்றான் சஞ்சயன். “ஆம், அதை நானும் அறிவேன். ஆனால் அதன்பொருட்டு எவரும் வாழ்க்கையின் பெருந்தருணங்களை தவறவிடுவதில்லை” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “இது நற்தருணமாக அமைய வாய்ப்பில்லை” என்றான் சஞ்சயன். “இளையோனே, என் நீண்ட வாழ்நாளில் கண்டறிந்த ஒன்றுண்டு. வாழ்வின் பெருந்தருணங்கள் அனைத்தும் தீயவையே” என்றார் திருதராஷ்டிரர். “அதன்பொருட்டு எந்த மானுடனும் அவற்றை தவறவிடுவதுமில்லை.” சற்றுநேரத்திற்குப் பின் சஞ்சயன் “ஒருவேளை தெய்வங்கள் மானுடருக்கு வீசியிருக்கும் தூண்டிலே இதுதான் போலும்” என்றான்.

தேர் நோக்குமாடத்தின் முன் சென்று நின்றபோது இலைகள் மெழுக்குப்பூச்சொளிரும்படி தெளியுமளவுக்கு நுண்வெளிச்சம் எங்கும் பரவியிருந்தது. “இன்னும் சற்று நேரத்தில் பொழுது விடிவதற்கான அறிவிப்பு எழுந்துவிடும்” என்று அவன் திருதராஷ்டிரரிடம் சொன்னான். “ஆம், நான் பறவைக்குரல்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன். கரிச்சான் ஓய்ந்தது. காகங்கள் கரைந்து பறக்கின்றன” என்று திருதராஷ்டிரர் சொன்னார். நோக்குமாடத்திலிருந்து இரண்டு காவலர்கள் வந்து தேர் அருகே வணங்கி நின்றனர். சஞ்சயன் திருதராஷ்டிரரை மெல்ல கைபற்றி இறக்கினான். படிகளினூடாக இறங்கி நிலத்தில் நின்ற அவர் உடலை நிமிர்த்தி “தெய்வங்களே… மூதாதையரே…” என்று முனகினார்.

தேர் நகர்ந்ததும் இரு வீரர்களும் தலைவணங்கி “இவ்வழி, அரசே” என்றனர். “வருக!” என்று சஞ்சயன் அவர் கைபற்றி அழைத்துச் சென்றான். பன்னிரண்டு அடுக்குகளாக மரத்தாலும் மூங்கிலாலும் கட்டப்பட்டிருந்த அந்த நோக்குமாடத்தின் படிகளை அணுகியதும் “அரசே, செங்குத்தான படிகள். கைப்பிடியை பற்றிக்கொண்டு மெல்ல ஏறுங்கள்” என்றான் சஞ்சயன். இரண்டு படிகளில் கால் வைத்ததும் அதன் கணக்கை புரிந்துகொண்ட திருதராஷ்டிரர் விரைந்து மேலேறினார். சஞ்சயன் மெல்ல காலெடுத்துவைத்து தொடர்ந்தான்.

இறுதி நிலையை அடைந்தபோது சஞ்சயன் மூச்சிரைத்துக்கொண்டிருந்தான். திருதராஷ்டிரர் திரும்பிப்பார்த்து “என்ன ஓசை அது? நீயா மூச்சிரைக்கிறாய்?” என்றார். “ஆம்” என்றான் சஞ்சயன். “செங்குத்தான ஏணி… மிகு உயரம்.” திருதராஷ்டிரர் “சொற்களில் அளைகிறாய். ஒருநாளாவது சென்று உடல்பயில அமர்ந்துளாயா?” என்றார். சஞ்சயன் “சொற்களை நிறுத்திவிட்டு உடல்பயில வேண்டியிருக்கிறது. அது என்னைப் போன்றவர்களால் இயலாது” என்றான். “அறிவிலி” என்று கையை வீசியபின் “இங்கே எந்த இடம்?” என்றார் திருதராஷ்டிரர். “வருக!” என அவரை அழைத்துச்சென்று அங்கு அவருக்கென போடப்பட்டிருந்த பீடத்தில் அமர்த்தினான். அவர் கால்களை முன்னால் நீட்டிக்கொள்ளும் பொருட்டு குறும்பீடத்தை முன்னால் நகர்த்திவைத்தான்.

“முழுநாளும் தாங்கள் இங்கு அமர்ந்திருக்கலாம், அரசே. வெயில் தங்களைத் தொடாதபடி மேலே யானைத்தோல் கூரையிடப்பட்டுள்ளது. நோக்கு நெடுந்தொலைவை சென்றடையும்பொருட்டு முப்புறமும் முற்றிலும் திறந்திருந்தாலும் வெயிலுக்கேற்ப நாம் கூரையை வைக்கலாம்” என்று சஞ்சயன் சொன்னான். “இதோ தோல்போர்வையிட்டு மூடப்பட்டிருப்பதுதான் பீதர்நாட்டு தொலைநோக்கி என்று எண்ணுகின்றேன்” என்றான். கீழிருந்து வந்து ஓரமாக நின்ற பீதர்நாட்டு ஏவலன் “ஆம்” என்று தலைவணங்கினான். சஞ்சயன் “காட்டுக!” என்றான்.

பீதர்நாட்டு ஏவலன் அருகே வந்து அத்தோல் போர்வையை விலக்கினான். நீண்ட அமரப்பலகையின் முதல் முனையில் பெரிய குவியாடி பொருத்தப்பட்டிருந்தது. அதற்குப் பின்னால் சற்று சிறிய இன்னொரு குவியாடி இருந்தது. முதல் ஆடி மெலிந்து பரந்ததாகவும் இரண்டாம் ஆடி குவிந்து உருளைபோலவும் இருந்தது. “இரண்டு பெரிய நீர்த்துளிகளேதான்” என்று அவன் திருதராஷ்டிரரிடம் சொன்னான். “பனிக்கட்டியில் செய்யப்பட்டவை என எண்ணுக! முற்றிலும் ஒளி ஊடுருபவை. இங்கிருந்து நோக்குகையிலேயே வெளியே தெரியும் காட்சி அதற்குள் சுருங்கி சுழன்று சுழியென்று ஆவதை என்னால் காண முடிகிறது” என்றான்.

பீதர்நாட்டு ஏவலன் இரண்டாவது ஆடிக்குப் பின்னால் இடப்பட்ட சிறிய பீடத்தில் அமர்ந்தான். அதன் முன் அமைந்த சிறிய குழிவளைவின் மீது தன் தாடையைப் பதித்து இரண்டாவது ஆடியினூடக ஒருகண்ணை மூடி மறுகண்ணை கூர்ந்து பார்த்து ஆடிகளை முன்னும்பின்னும் நகர்த்தி சீரமைத்தான். “தாங்கள் அமர்ந்து பார்க்கலாம். தங்கள் விழிநோக்கின் அளவுக்கேற்ப என்னால் ஒழுங்கு செய்ய இயலும்” என்றான். அவன் எழுந்துகொள்ள சஞ்சயன் சிறுபீடத்தில் அமர்ந்து தாடையை அதில் பதித்து வைத்துக்கொண்டான். அவன் கண்களுக்குள் நேரடியாக ஒளிவிழ கூசி விழிகளை விலக்கிக்கொண்டான். பின்னர் நீர்வழியும் கண்களை துடைத்தபடி மீண்டும் நோக்கினான்.

முதலில் அவனுக்கு கண்கூசும்படி உடைந்த காட்சிகளின் சுழல் மட்டுமே தெரிந்தது. “விழி இன்னும் இவ்வாடிகளை புரிந்துகொள்ளவில்லை. கூர்ந்து நோக்குக! உளம் அதில் ஒருங்கட்டும். மெல்ல காட்சிகள் தெளியத்தொடங்கும். அதன் பின் இந்நெடுந்தொலைவை விழிகடந்து சென்று நோக்குவீர்கள்” என்று பீதர்நாட்டு ஏவலன் சொன்னான். இரு ஆடிகளையும் அவன் அணுவணுவாக நகர்த்தி ஒன்றுடன் ஒன்று இணையச் செய்துகொண்டிருந்தான். காட்சிகள் வளைந்தும் நெளிந்தும் இழுபட்டும் குவிந்தும் உருமாறிக்கொண்டிருந்தன. ஒரு கணத்தில் எதையோ அடையாளம் கண்டுகொண்ட சஞ்சயனின் உள்ளம் திடுக்கிட்டது. “பொறு” என்று கைகாட்டினான். பின் “மெல்ல மெல்ல” என்று ஆடிகளை நகர்த்தும்படி கைகாட்டினான். போதும் என்று கைகாட்டியபின் விழிகள் பொருந்தியிருக்க அசைவற்று அமர்ந்தான்.

பின்னர் விழிவிலக்கி தான் பார்த்ததென்ன என்று அவன் உளம்கூர்ந்தான். மீண்டும் நோக்கினான். அது குரங்குமுத்திரை பொறிக்கப்பட்ட கொடி. “குரங்குக்கொடி!” என்றான். பின்னர் அவனே கைநீட்டி ஆடிகளை மெல்ல நகர்த்தினான். “இளைய பாண்டவர் அர்ஜுனரின் தேர்” என்றான். திருதராஷ்டிரர் “படைமுகப்பில் நிற்கிறார்களா?” என்றார். “ஆம் பேரரசே, அவர்களின் தேர் படைமுகப்பில்தான் நின்றுள்ளது” என்றான் சஞ்சயன்.

ஆடியை கீழே சரித்து தேரை முழுவதும் பார்த்து “அவர் தேர்த்தட்டில் அமர்ந்திருக்கிறார். தேரை இளைய யாதவர் ஓட்டிக்கொண்டிருக்கிறார்” என்றான். “இளைய யாதவனா?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “ஆம், அவர்தான். நன்கு தெரிகிறது. இங்கிருந்து புரவிகளின் குளம்புகளைக்கூட நோக்க முடிகிறது. அவற்றின் விழிகளை, குஞ்சி முடிகள் ஒவ்வொன்றையும் பார்க்க இயல்கிறது” என்றான். “இளைய யாதவர் தேர்த்தட்டில் சவுக்குடன் அமர்ந்திருக்கிறார். இடையில் அவருடைய வெண்சங்கு. சூதர்களுக்குரிய வகையில் குழல்சுழற்றிக் கட்டியிருக்கிறார்” என்றான்.

“ஆழி கொண்டிருக்கிறானா?” என்றார் திருதராஷ்டிரர். “இல்லை, அவர் படைக்கலத்துடன் தெரியவில்லை” என்றான் சஞ்சயன். “அறிவிலி… அவன் படைக்கலம் இன்றி இருக்கமாட்டான். நோக்கு!” என்றார் திருதராஷ்டிரர். அவன் கூர்ந்து நோக்கி “இடையில் குறுவாள் ஒன்று இருப்பதுபோல் உள்ளது” என்றான். “அது குறுவாள் அல்ல, படையாழி. எட்டு பிறைகளாக அதை பிரிக்க முடியும். பீதர்நாட்டு விசிறிபோல் ஒன்றென விரிக்கவும் இயலும்… இப்போர்க்களத்திலேயே கொடிய படைக்கலம் அது. அது எந்நிலையிலும் இடையிலிருந்து கைகளுக்கு வராமலிருக்கவேண்டும்” என்றார் திருதராஷ்டிரர்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை- 73

tigபடைகளின் முகப்பினூடாக புரவியில் பெருநடையில் செல்கையில் திருஷ்டத்யும்னன் தன்னுள் ஒரு நிறைவை உணர்ந்தான். பலநாட்களாக செதுக்கி முடித்த சிற்பம் கண்திறந்து நிற்கக் காண்பது போலிருந்தது. எங்கோ ஒரு சிறு குறை இருப்பதாக அஞ்சி விழி துழாவிக்கொண்டே இருந்தது. அந்த விந்தையான இருநிலையை அவன் வியந்தான். குறைகளை தேடிக்கொண்டிருந்தமையால் ஒரு சிறு குறை காணநேரிட்டபோது உள்ளம் மகிழ்வுகொண்டது. ஆனால் ஒவ்வொரு குறைக்குப் பின்னரும் பதற்றமும் உருவாகியது. முன்புலரியின் அரையிருளில் முகங்கள் அனைத்தும் விழிகள் ஒளிர அரைநிழல் பரவிய நீண்ட ஆலயச் சுற்றுவட்டங்களைப் போன்று தோன்றின.

அவனை நோக்கி வந்த சாத்யகியின் மைந்தன் அசங்கன் “அரசர் ஒருங்கிவிட்டார். உங்களை உசாவினார்” என்றான். அவன் “இளையவர்கள் வந்துவிட்டார்களா?” என்றான். “சகதேவரும் நகுலரும் பின்னிரவிலேயே வந்துவிட்டார்கள். பீமசேனரும் பார்த்தரும் சற்றுமுன் வந்தனர்” என்று அவன் சொன்னான். “பாண்டவ மைந்தர் அனைவரும் அவர்களின் படைப்பிரிவுகளுக்கே சென்றுவிட்டார்கள். அங்கே சிற்றலுவல்களை நோக்க என்னிடம் பணித்தார் பாஞ்சால அரசர்.” அவன் பெருமூச்சுவிட்டான். பின்னர் “இளைய யாதவர் இருக்கிறாரா?” என்றான். “இன்னும் அவர் வரவில்லை.”

காலையில் இளங்குளிர் இருந்தது. முந்தையநாள் கீழ்ச்சரிவில் சற்று முகில்கணங்கள் சேர்ந்து இடிமுழக்கம் எழுப்பின. பின்னிரவில் காற்று விசையுடன் கிழக்கு நோக்கி சென்றுகொண்டிருந்தது. தெற்குப் படைப்பிரிவை நோக்கும்பொருட்டு அவன் சென்றபோது நீர்த்துளிகள் காற்றில் கலந்து வீச உடல் மெய்ப்பு கொண்டது. மழை பெய்யுமா என அவன் ஐயுற்றான். ஆனால் நிமித்திகர் “இன்னும் இரண்டு வாரங்களுக்கு மழை இல்லை, ஐயமே தேவையில்லை” என்று பலமுறை கூறியிருந்தனர்.

யுதிஷ்டிரரின் பாடிவீட்டின் முன்னால் காவல்படை ஒன்று அணிவகுத்து நின்றது. புலரிக்காற்றில் மின்கொடியும் யுதிஷ்டிரரின் நந்தக்கொடியும் பறந்துகொண்டிருந்தன. அவன் புரவியை நிறுத்திவிட்டு இறங்கி பாடிவீட்டுக்குள் சென்றான். அங்கு நெய்விளக்கின் ஒளியில் முதன்மைப்பீடத்தில் யுதிஷ்டிரர் அரசணிக்கோலம் பூண்டு அமர்ந்திருந்தார். அவருக்கு அருகே ஒரு சிறு மேடையில் அவருடைய மணிமுடி வைக்கப்பட்டிருந்தது. நகுலனும் சகதேவனும் முழுக்கவச உடையில் பின்னால் தலைக்கவசங்களை கைகளில் வைத்தபடி நின்றிருந்தனர். கவசம் மின்ன பீமன் எதிரே பீடத்தில் கால்நீட்டி அமர்ந்திருந்தான். பெரிய இரும்புக்கலம்போல தலைக்கவசம் அவன் மடிமேல் இருந்தது. திருஷ்டத்யும்னன் உள்ளே நுழைந்து சொல்லின்றி தலைவணங்கி பீடத்தில் அமர்ந்தான்.

யுதிஷ்டிரர் “பாஞ்சாலரே, இன்று துரியோதனன் யானைமேல் ஏறி அரசணிக்கோலத்தில் படைமுகம் கொள்ளக்கூடும் என்று செய்தி வந்தது. நான் எவ்வண்ணம் படைமுகம் கொள்வது என்று பேசினேன். கவசமும் மணிமுடியும் அணிந்து செல்வதென்று முடிவெடுத்தோம். ஆனால் யானைமேல் செல்வதில் எனக்கு உடன்பாடில்லை. போர்க்களத்தில் அம்பாரிமேல் அமரவியலாது. வெற்று முதுகின்மேல் நெடுநேரம் அமர்வது கடினம்” என்றார். திருஷ்டத்யும்னன் “அரசர்கள் போருக்கு மணிமுடிசூடி எழுவது வழக்கம்தான், அரசே. அது படைகளுக்கு ஊக்கமளிக்கும்” என்றான். “ஆனால் தேரில் எழுந்தருளினால் எவர் அதை பார்க்கவியலும்?” என்றான் நகுலன். பீமன் “செய்திமாடத்தில் ஏறி நின்றிருக்கலாம். யானைகளைக் கொண்டு அதை இழுக்கலாம்” என்றான்.

அந்த இளிவரல் யுதிஷ்டிரரை சினம்கொள்ளச் செய்தது. “மந்தா, நான் உன் அரசன். எனக்காகவே நீ படைமுகம் கொண்டிருக்கிறாய். என்மேல் மதிப்பில்லை என்றால் கவசம் களைந்து நீ கிளம்பலாம்” என்றார். “என் குலமகளின் வஞ்சம் முடித்தபின் கிளம்பத்தான் போகிறேன்” என்றான் பீமன். “அவள் எனக்கும் குலமகள்தான்” என்றார் யுதிஷ்டிரர். “மெய்யாகவா?” என்றான் பீமன். “மூத்தவரே…” என்று சகதேவன் பீமனை அடக்கினான். திருஷ்டத்யும்னன் “அரசே, உங்கள் தேருக்கு தடம் விழாது என்று அதர்வர் அருளியிருக்கிறார்” என்றான். யுதிஷ்டிரர் முகம் மலர்ந்து “ஆம், மெய்யாகவே அது உருண்டுசெல்கையில் தடம் விழவில்லை. பலமுறை நோக்கிவிட்டேன். சேற்றுப்பரப்பிலும் தடமில்லை. அதர்வர் கொண்டுவந்த கலிங்கச் சிற்பிகளின் திறனா அல்லது ஏதேனும் மாயமா என்று வியந்தேன்” என்றார்.

“அப்போதுகூட தன் அறம் மீது நம்பிக்கை வரவில்லை. அந்தத் தன்னடக்கம் நன்று” என்றான் பீமன். “வாயை மூடு, அறிவிலி!” என்று யுதிஷ்டிரர் சீறினார். “மூத்தவரே, இது நாம் போர்முகம் கொள்ளும் தருணம். இத்தனை கசப்பும் பூசலும் தேவையில்லை” என்றான் சகதேவன். “கசப்பும் பூசலும் இருப்பதனால்தான் போர்முகம் கொள்கிறோம்” என்றான் பீமன். “அன்பும் அறமும் கொண்டா மண்ணுக்கும் பெண்ணுக்கும் வாளெடுக்கிறோம்?” திருஷ்டத்யும்னனே சற்று சலிப்படைந்தான். நகுலனிடம் “இளைய யாதவர் வரவில்லையா?” என்றான். “வந்துகொண்டிருக்கிறார். அவரை எதிர்கொள்ள பார்த்தன் வெளியே சென்று நின்றிருக்கிறான்” என்றார் யுதிஷ்டிரர்.

“இந்தப் போரில் இளைய யாதவர் எப்படி கலந்துகொள்ளவிருக்கிறார்?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். நகுலன் தயங்கியபடி “அவர் இப்போது அரசர் அல்ல. ஷத்ரியரும் அல்ல. ஆகவே தேர்ச்சூதராக போர்முகப்புக்கு வருவதாக சொன்னார். மூத்தவர் பார்த்தருக்கு தேரோட்டுகிறார்” என்றான். திருஷ்டத்யும்னன் சில கணங்களுக்குப்பின் “தேரோட்டியாகவா?” என்றான். “ஆம்” என்றான் நகுலன். யுதிஷ்டிரர் “இப்படை ஒரு தேர் எனில் அவர் அதன் பாகன்” என்றார். “சூதர்பாடலுக்கு சிறந்த முதலடி” என பீமன் முனகிக்கொண்டு அசைந்து அமர்ந்தான். யுதிஷ்டிரர் சலிப்புடன் தலையசைத்து பெருமூச்சுவிட்டார். திருஷ்டத்யும்னன் மீண்டும் பேச்சை விலக்கி “அரசே, தங்கள் தேர் மண் தொடுவதில்லை என்று படைகளிடம் பேச்சு உள்ளது. அத்தேரில் நீங்கள் படைமுகப்புக்கு எழுவதே உகந்தது. அதைக் கண்டதுமே வீரர்கள் அதன் சகடங்களைத்தான் உற்றுப்பார்ப்பார்கள். தேர்த்தடம் விழவில்லை என்றால் அதுவே பெரும் கொந்தளிப்பாக ஆகும்” என்றான்.

“ஆம், அது உகந்ததே” என்றார் யுதிஷ்டிரர். “படைகளுக்கு முன் சிலமுறை முன்னும்பின்னும் ஓட்டிக்காட்டலாம்” என்றான் பீமன். திருஷ்டத்யும்னன் “மெய்யாகவே அதை செய்யலாம், மாருதரே. படைகளை பார்வையிட அரசர் அவ்வாறு செல்வது வழக்கம்தான்” என்றான். யுதிஷ்டிரர் “மூத்தவர்களும் ஆசிரியர்களும் கூடி நின்றிருக்கும் படையை எதிர்த்து நான் படைகொண்டு செல்வது அந்தத் தேர் அளிக்கும் நம்பிக்கையால்தான்” என்றார். குடிலுக்குள் அர்ஜுனன் நுழைந்தான். வெள்ளியென மின்னிய இரும்புக் கவச உடை அணிந்திருந்தான். இரும்பு வளையங்கள் பதிக்கப்பட்ட கையுறைகளை இழுத்துவிட்டபடி வந்து யுதிஷ்டிரரை வணங்கி “யாதவர் வந்துகொண்டிருக்கிறார்” என்றான். திருஷ்டத்யும்னன் “அவர் உங்களுக்கு பாகன் என்றார்கள்” என்றான். அர்ஜுனன் அவனை நோக்காமல் “ஆம்” என்றான்.

அர்ஜுனன் நிலைகுலைந்திருப்பதுபோல தோன்றியது. “அவர் உடனிருப்பது நன்று. புரவியின் உள்ளமறிந்த தேர்ப்பாகன் தேரின் ஆத்மா என்பார்கள். உன் எண்ணங்கள் அனைத்தும் அவரினூடாக புரவிக்கு செல்லும். மனோரதம்போல் தேர் உன் உள்ளமென்றே செயல்படும்” என்றார் யுதிஷ்டிரர். அர்ஜுனன் பெருமூச்சுடன் “அவர் துயருற்றிருக்கிறார்” என்றான். யுதிஷ்டிரர் அமைதியாக நோக்க “நேற்றிரவு அவரை பாடிவீட்டில் சென்று தேடினேன். அவருடன் இருந்த அணுக்கன் அவர் முன்மாலையில் கிளம்பிச் சென்றுவிட்டதாக சொன்னான். நான் அவரைத் தேடிச்சென்றேன். எப்போதுமே அவரை தேடிச்செல்கையில் என் எண்ணங்களை மயங்கவிட்டு உள்ளத்தை செல்லவிடுவேன். என்னை அது கொண்டுசென்று சேர்த்துவிடும். அவர் கிழக்குமூலை அறிவிப்புமேடைமேல் இருந்தார்” என்றான்.

“நானும் மேலேறி அவர் அருகே சென்றேன்” என்றான் அர்ஜுனன். “அவர் நான் வருவதை உணர்ந்ததாக தெரியவில்லை. அருகே நின்றிருந்தேன். நெடுநேரம் அவர் என்னை உணரவில்லை. அவர் விழிகள் எங்கிருக்கின்றன என்று பார்த்தேன். அவர் நேர்முன்னால் விரிந்துகிடந்த கௌரவப்படைகளை நோக்கிக்கொண்டிருந்தார். அவர் என்ன எண்ணுகிறார் என்று எனக்கு புரிந்தது. மூத்தவரே, அவர் அங்கே நின்றிருக்கும் தன் குடியினரை எண்ணிக்கொண்டிருந்தார்” என்றான் அர்ஜுனன். “நான் திரும்பி வந்துவிட்டேன். இன்று புலரியில் மீண்டும் அவரைத் தேடிச்சென்றேன். அவர் அதே செய்திமாடத்தில் அவ்வண்ணமே அமர்ந்திருப்பதாக சொன்னார்கள். ஆகவேதான் திரும்பிவிட்டேன்.”

“அவர் துயர்கொள்வது தன் குடியினருக்காக மட்டும் அல்ல” என்றான் பீமன். அர்ஜுனன் அவனை திரும்பி வெறுமனே நோக்கினான். யுதிஷ்டிரர் “இளையோனே, நீ ஓர் உறுதியை கொள்க! ஒருபோதும் உன் கைகளால் நீ யாதவரை கொல்லலாகாது” என்றார். “எவர் கொன்றால் என்ன?” என்றான் பீமன். “நம் கைகளால் கொல்லவேண்டியதில்லை” என்றார் யுதிஷ்டிரர். “அதாவது நாம் குற்றவுணர்வுகொள்ளாது காப்போம் என்கிறீர்கள்?” என்றான் பீமன். “உன்னிடம் பேச என்னால் இயலாது” என்று யுதிஷ்டிரர் சொன்னார். அர்ஜுனன் “என்னால் அவரை எதிர்கொள்ள முடியாது என்று தோன்றிவிட்டது, மூத்தவரே” என்றான்.

வெளியே சங்கொலி கேட்டது. யுதிஷ்டிரர் எழுந்துகொண்டு “அவரை நாம் சென்று வரவேற்போம். இது அவருடைய போர்” என்றார். கைகளைக் கூப்பியபடி அவர் செல்ல உடன் பீமனும் நகுலனும் சகதேவனும் சென்றனர். அர்ஜுனன் தயங்கி நின்றான். அருகே நின்ற திருஷ்டத்யும்னன் “அவர் இப்போரை தவிர்த்திருக்க முடியாது என்றே எண்ணுகிறேன், இளவரசே” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “ஆகவே அவர் துயர்கொள்ளவேண்டியதில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “ஞானிகள் துயர்கொள்வது தங்கள் பொருட்டல்ல, மானுடர்பொருட்டு” என்றான் அர்ஜுனன். “ஆகவே பிறிதிலாத மாற்றிலாத துயர் அது. அதன்முன் நாம் மிகச் சிறியோர்.” அவன் சொல்வது புரியாமல் வெறுமனே நோக்கி விட்டு திருஷ்டத்யும்னன் பெருமூச்செறிந்தான். பின்னர் “வருக!” என அர்ஜுனனை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான்.

பாடிவீட்டின் முற்றத்தில் யுதிஷ்டிரர் கைகூப்பி நின்றார். அவர் அருகே வலப்பக்கம் பீமனும் இடப்பக்கம் நகுலனும் சகதேவனும் நின்றனர். தொலைவில் மரப்பாதையில் குளம்படி முழங்க புரவி வருவது தெரிந்தது. இளைய யாதவருடன் வேறெவரும் இருக்கவில்லை. அவர் வந்து புரவியில் இருந்து இறங்கி கடிவாளத்தை ஏவலனிடம் அளித்துவிட்டு கைகூப்பியபடி யுதிஷ்டிரரை நோக்கி வந்தார். யுதிஷ்டிரர் அவரை வணங்கி “வருக, யாதவனே! இந்நாளில் உன் அருளால் களம்காண்கிறோம்” என்றார். “நன்று நிகழ்க!” என்று இளைய யாதவர் அவரை வாழ்த்தினார். நகுலனும் சகதேவனும் அவர் கால்களைத் தொட்டு வணங்க “வெல்க!” என அவர் அவர்களை வாழ்த்திவிட்டு அர்ஜுனனை பார்த்தார். அவர் முகம் உவகைமிக்க செய்தியொன்றை சற்றுமுன் கேட்டதுபோல் மலர்ந்திருந்தது. “போருக்கு ஒருங்கிவிட்டாய் அல்லவா?” என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான்.

அவர் அருகே வந்து அர்ஜுனனின் தோளில் கைவைத்து “மகிழ்வுடன் செய்யப்படாத எச்செயலும் முழுமைகொள்வதில்லை” என்றார். பின் திருஷ்டத்யும்னனின் தோளைத் தொட்டு “படைகள் முற்றொருங்கிவிட்டனவா?” என்றார். “ஆம், அரசே” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “நன்று, நாம் களம்செல்வதற்கான நற்பொழுது குறிக்கப்பட்டுள்ளதா?” என்றார் இளைய யாதவர். சகதேவன் “ஆம் யாதவரே, இந்த ஒருநாழிகையும் உகந்த நற்பொழுதுதான்…” என்றான். “இத்தருணத்தின் தெய்வம் எது?” என்றார் இளைய யாதவர். “கருவிழிக் கொற்றவை” என்றான் சகதேவன். “அன்னையை துதிக்கும் பாடல் எழுக!” என்றார் இளைய யாதவர். சகதேவன் கைகாட்ட ஏவலன் ஓடிச்சென்று முதிய சூதரை அழைத்துவந்தான். அவர் தன் கிணைப்பறையை மீட்டி பாடத்தொடங்கினார்.

யோகிகளின் தலைவியை வணங்குகிறேன்.

பரம்பொருளின் தோற்றமே

அலகிலியில் வாழ்பவளே

அழிவற்றவளே குன்றாதவளே

மூவிழியன் துணைவியே

கரியவளே இருண்டவளே

வணங்குகிறேன் உன்னை.

 

அடியார்க்கு அருள்பவளே

உன் அடிவணங்குகிறேன்

காளிநலமருள் நங்கை

வணங்குகிறேன் உன்னை

அனைத்தையும் அழிப்பவனின் துணையே

பெரியவளே காப்பவளே

அனைத்தும் அருள்பவளே

என்னுடன் நிலைகொள்க!

 

காத்யரின் குலத்தோளே

தொழுதற்குரியவளே

கொடியோளே வெற்றித்திருமகளே

வெற்றிவடிவானவளே

மயிற்கொடியினளே

அணிநிறைந்தோளே

அணியென சூலம் கொண்டவளே

வாளும் கேடயமும் ஏந்தியவளே

இடையருக்கு உகந்தவளே

எழுக இத்தருணத்தில்!

 

இருளெருமைச் செங்குருதி ஆடுபவளே

குசிகருக்கு உரியவளே

மஞ்சள் சுற்றியவளே

ஓநாய் பசி கொண்டு

தீயோரை விழுங்குபவளே

போரில் களிப்போளே

வணங்குகிறேன் உன்னை

வெண்ணிறத்தோளே கரியோளே

கைடபனை கொன்றவளே

அலகிலா விழியோளே

புகைவண்ண விழிவிரித்தோளே

நோக்குக என்னை

அருள்க அன்னையே!

அர்ஜுனன் கைகூப்பி விழிமூடி நின்றான். சகதேவன் கைகாட்ட குரங்குக் கொடிபறக்கும் தேர் வந்து நின்றது. அப்பால் இசைச்சூதர்கள் தங்கள் கலங்களுடன் வந்து அணிவகுத்தனர். தேர்ப்பாகன் அமரமேடையில் இருந்து மறுபக்கம் இறங்கினான். ஏழு வெண்புரவிகளும் நீண்ட கழுத்துக்களுடன் மெலிந்த கால்களுடன் நாரைகள் விலங்குருக் கொண்டவைபோல தோன்றின. இளைய யாதவர் நிலம்தொட்டு வணங்கி தேரை அணுகி வலக்கால் வைத்து ஏறி அமரமேடையில் அமர்ந்தார். அவர் கடிவாளத்தை எடுத்தபோது புரவிகளில் ஒன்று அவர் ஏறிக்கொண்டதில் மகிழ்வுற்று பர்ர்ர் என ஓசையிட்டது. இன்னொரு புரவி மணிகள் கட்டப்பட்ட தலையை அசைத்து சலங்கையோசை எழுப்பியது.

“பார்த்தா, உன் தேரில் ஏறிக்கொள்க! உன் தெய்வங்கள் உடனமைக! உன் மூதாதையர் வாழ்த்துக! சீற்றம்கொண்டெழும் அறம் உன் வில்லில் குடியேறுக! அறத்தின்பொருட்டு எழுந்த அத்தனை சொற்களும் அம்புகளென உன் ஆவநாழியில் நிறைக!” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் கைகளைக் கூப்பியபடி சென்று அங்கே நடப்பட்டிருந்த மின்கதிர்க்கொடியை வணங்கியபடி நின்றான். மிக மெல்ல ஒரு மின்னல் கீழ்வானில் எழுந்தமைய தொலைவில் ஓர் இடியோசை முழங்கியது. திருஷ்டத்யும்னன் அறியாது மெய்ப்பு கொண்டான். குளிர்காற்றில் ஆடைகள் எழுந்து சிறகடிக்க அந்த ஓசை மட்டும் கேட்டது.

அர்ஜுனன் யுதிஷ்டிரரையும் பீமனையும் வணங்கிவிட்டு தேரை சுற்றிவந்தான். இளைய யாதவரின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு நின்றான். காண்டீபத்தை இரு வீரர்கள் எடுத்துவந்தார்கள். சூதர்கள் மங்கல இசைமுழக்க அவன் காண்டீபத்தை தொட்டு வணங்கி கையில் எடுத்தான். தேரின் படியைத் தொட்டு வணங்கியபின் மேலேறி பீடத்தில் நின்று இடக்கையில் காண்டீபத்தை பற்றி தனக்கிணையாக நிறுத்திக்கொண்டான். புரவிகளில் ஒன்று முன்காலால் நிலத்தை தட்டி கனைத்தது. அர்ஜுனன் வில்லில் நாண் பொருத்தி ஒரே இழுப்பில் பூட்டினான். முழவுகள் விசைகொண்டு துடிக்க மங்கல இசை விரைவுகொண்டது.

அர்ஜுனன் தேர்த்தட்டில் நிமிர்ந்த தலையுடன் நின்றான். அவன் நெஞ்சு ஏறியிறங்கியது. இளைய யாதவர் திரும்பி நோக்கி புன்னகையுடன் “அனைத்தறங்களையும் கைவிடுக, என்னையே அடைக்கலம் புகுக!” என்றார். பின் தன் இடையிலிருந்த பாஞ்சஜன்யத்தை எடுத்து ஓங்கி முழக்கமிட்டார். அர்ஜுனன் நாணில் வலக்கை விரலோட்டி அதை விம்மச் செய்தான். உரத்த யாழிசைபோல நாண் ஒலி செய்தது. பின்னர் சிம்மம்போல் உறுமியது. அவன் தன் தேவதத்தத்தை எடுத்து ஓமென்ற ஒலியை எழுப்பினான். இளைய யாதவர் சாட்டையால் புரவியை மெல்ல தொட அவை குலுங்கி எழுந்து சீரான விரைவுத்தாளம் கொண்டு பலகைப்பாதையில் ஏறி கிழக்கு நோக்கி சென்றன.

திருஷ்டத்யும்னன் யுதிஷ்டிரரை நோக்கினான். அவர் விழிநீர் வழிய கைகூப்பி நின்றிருந்தார். நகுலனும் சகதேவனும்கூட விழிவழிந்துகொண்டிருந்தார்கள். பீமன் சினமோ சலிப்போ கொண்டவன்போல் தலையை அசைத்தான். திருஷ்டத்யும்னன் யுதிஷ்டிரரின் அருகணைந்து “தாங்கள் கிளம்பும் பொழுதும் அணைகிறது, அரசே” என்றான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 72

tigஅவை மெல்ல தளர்ந்தமையத் தொடங்கியது. பெருமூச்சுகளும் மெல்லிய முணுமுணுப்புகளும் ஒலித்தன. அதுவரை அந்தச் சொல்லாடல் செல்லும் திசை எது என்பதே அவர்களை முன்னெடுத்துச் சென்ற விசையாக இருந்தது. அது கண்ணுக்குத் தெரிந்ததும் முதலில் மெல்லிய சலிப்பும் பின்னர் சோர்வும் அவர்களை ஆட்கொண்டது. அங்கிருந்து கிளம்பிச் செல்லவும் தங்கள் சிறிய பாடிவீடுகளுக்குள், அறிந்த சுற்றங்களுக்குள் ஒடுங்கிக்கொள்ளவும் அவர்கள் விழைந்தனர்.

உத்தரன் கண்களை மூடி குருதித்துளிகள் உடலுக்குள் உதிர்ந்து அமையும் ஓசையை கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான். அதுவரை எத்தனை உளவுச்சத்தில் இருந்திருக்கிறோம் என அப்போதுதான் தெரிந்தது. குருதி படிவது இனிய களைப்பை அளித்தது. கைகால்கள் தளர்ந்து விரல்கள் விடுபட்டன. நினைவுகள் தவறித் தவறிச் செல்ல அவன் விராடபுரியில் இருந்தான். இளவேனில் எழுந்திருந்தது. அணிக்காடுகள் பூத்திருந்தன. தரையெங்கும் பொன்மலர்களை விரித்திருந்தன கொன்றையும் வேங்கையும். அவன் ஒரு மரநிழலில் அமர்ந்து அப்பால் ஒளிகொண்டு சென்ற ஆற்றை நோக்கிக்கொண்டிருந்தான்.

தன் குறட்டையை தானே கேட்டு விழித்துக்கொண்டான். பாண்டவ மைந்தர்கள் ஒருவரோடொருவர் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர் அரவானுடன் சர்வதனும் சுருதகீர்த்தியும் யௌதேயனும் சதானீகனும் நகையாடிக்கொண்டிருந்தனர். நிர்மித்ரனும் சுருதசேனனும் பிரதிவிந்தியன் அருகே நின்றிருந்தார்கள். அரவானின் தோளில் கைவைத்து சர்வதன் ஏதோ சொல்ல அவர்கள் வெடித்துச் சிரித்து உடனே ஓசை அடக்கினர். உத்தரன் அவைமேடையை நோக்கினான். அங்கே பீமன் தன் கைகளை நோக்கியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். அர்ஜுனன் வேறெங்கோ நோக்கியபடி கோணலாக பீடத்தில் வீற்றிருந்தான். யுதிஷ்டிரர் அருகணைந்த ஒற்றர்தலைவரிடம் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தார். அவ்வப்போது நகுலனிடமும் சகதேவனிடமும் ஓரிரு சொற்கள் உசாவினார். இளைய யாதவர் அங்கிலாதவர்போலிருந்தார்.

உத்தரன் நீள்மூச்சுடன் அசைந்தமர்ந்தான். ஏவலர்தலைவன் உள்ளே வந்து வணங்கினான். நகுலன் “வருகிறாளா?” என்றான். ஏவலர்தலைவன் “மணப்பெண்ணென அணிகொள்ளவேண்டும் என்றாள். அணிகொள்ளாமல் வர மறுத்துவிட்டாள். இங்கே அணிப்பொருட்கள் எதற்கும் ஒப்புதல் இல்லை. அணிசெய்வோரும் இல்லை. அடுமனைப் பொருட்களைக் கொண்டே அணிசெய்யும்படி குலாடர் ஆணையிட்டார். சற்றுநேரத்தில் வந்துவிடுவாள்” என்றான். அமைச்சர் சுரேசர் இரு துணையமைச்சர்களுடன் உள்ளே வந்து வணங்கினார். “அரசே, இங்கு படைகளில் நானே மூத்த அந்தணன். இந்த மணத்தை நிகழ்த்தும்பொருட்டு எனக்கு ஆணையிடப்பட்டது” என்றார்.

உத்தரன் ஒவ்வாமையால் உடல்கூச விழிகளை தழைத்தான். நெற்றி நரம்புகள் துடித்துக்கொண்டிருந்தன. என்ன நிகழ்கிறது என அவன் உள்ளம் சலித்துக்கொண்டே இருந்தது. எழுந்து சென்றால் என்ன என்ற எண்ணம் எழுந்ததுமே உடலில் மெல்லிய அசைவும் உருவாகிவிட்டது. அதை அடக்கும்பொருட்டு பெருமூச்சுவிட்டு தன்னை தளர்த்திக்கொண்டான். ஏன் என் உள்ளம் கூசுகிறது? ஆணிலியை மணப்பதனாலா? அல்ல, அது மணமே அல்ல. வாழ்வை முன்னிறுத்தி அது இயற்றப்படவில்லை. நீத்தார் சடங்குகளில் தெரிவதுபோல மங்கலமே மங்கலமின்மையென ஆகும் தருணம். அவ்வெண்ணத்தால் அவனே திகைத்து அதை விலக்கும்பொருட்டு தன்னை அசைத்து அமர்ந்தான்.

வெளியே சங்கொலி கேட்டது. காவலன் ஒருவன் இந்திரப்பிரஸ்தத்தின் கொடியுடன் அவைக்குள் நுழைந்தான். தொடர்ந்து ஸ்வேதன் கைகூப்பியபடி வர அவனைத் தொடர்ந்து சங்கன் வந்தான். அவர்களுக்குப் பின்னால் பொன்னிற கச்சைத்துணியை மேலாடையாக அணிந்து கழுத்தில் மலர்மாலையுடன் தலைகுனிந்து ரோகிணி நடந்து வந்தாள். வாயிலில் அவளுடைய நடை தளர்ந்தது. ஏவலன் ஏதோ சொல்ல அவள் கைகளைக் கூப்பியபடி வந்து அவைநடுவே நின்றாள். அவள் முகத்தை அங்கிருந்து நோக்க இயலவில்லை. குளிர்கொண்டவள்போல தோள்களை நன்கு குறுக்கியிருந்தாள்.

ஸ்வேதன் “அரசே, இவள் பெயர் ரோகிணி. என் குலத்தையும் தங்கையின் இடத்தையும் இவளுக்கு அளிக்கிறேன். நானும் என் இளையோனும் உடன்பிறந்தாராக இருபுறமும் நின்று இவளை இந்த அவைக்கு கொண்டுவந்தோம். தங்கள் அவையில் இவள் மாண்புறட்டும்” என்றான். ரோகிணி கைகூப்பி தலைவணங்கினாள். “குலாடகுடியினளாகிய ரோகிணியே, இங்கே நீ எதன்பொருட்டு வந்திருக்கிறாய் என்று அறிவாயா?” என்றார் யுதிஷ்டிரர். “ஆம், அறிவேன்” என்றாள் ரோகிணி. “நீ என் இளையோனின் மைந்தனுக்கு மணமகளாக வருகிறாய். மூதன்னையராலும் பேரரசியராலும் சிறப்புற்ற என் குடி உன்னால் மேலும் சிறப்புறுக! என் அன்னை குந்தியும் அம்பையும் அம்பிகையும் அம்பாலிகையும் உன்னை வாழ்த்துக! விண்ணுறையும் பேரன்னை சத்யவதி உனக்கு அருள்க!” என்றார் யுதிஷ்டிரர்.

அவர் தளர்ந்த குரலில் மெல்ல பேசினாலும் அவையிலிருந்த அமைதியால் அக்குரல் அனைவருக்கும் நன்கு கேட்டது. “எங்கு எவ்வகையில் நிகழ்ந்தாலும் மூத்தோரும் சான்றோரும் சுற்றமும் வாழ்த்தினால் அது நல்மணமே என்கின்றன நூல்கள். இந்த அவையில் நீ என் மைந்தனை மணம்கொள்கிறாய். என் குடியின் மருமகளாக நீ வருக! உனக்கு அனைத்து தெய்வங்களும் அருள் பொழிக!” ரோகிணியின் விசும்பலோசை அவையெங்கும் கேட்டது. மெல்லிய இறகு ஒன்று வந்து தொட்டு கூரிய கத்திபோல் உடல்கிழித்துச் சென்றதுபோல என உத்தரன் எண்ணிக்கொண்டான். கண்களை மூடிக்கொண்டு ஓசை வழியாகவே அங்கே நிகழ்வதை கண்டான்.

துருபதர் எழுந்து “குலாடர்களே, இந்த அவையின் மூத்தவனாகவும் ஷத்ரியக்குடிகளில் முதல்வனாகவும் இந்த மணத்திற்கு நான் ஒப்புதல் அளிக்கிறேன். இதை நடத்தி வைக்கும்பொருட்டு அந்தணராகிய சுரேசரிடம் விண்ணப்பிக்கிறேன்” என்றார். சுரேசர் கைகூப்பி அதை ஏற்றார். பின் ஸ்வேதனிடம் “குலாடரே, உங்கள் குலமகளின் கைகளை பற்றி முன்னால் வருக!” என்றார். ஸ்வேதன் ரோகிணியின் கைபற்றியபடி மூன்றடி முன்னால் சென்றான். அவனுக்குப் பின் சங்கன் வாளேந்தியபடி தொடர்ந்தான். “பாண்டவ குடியில் இளையவரான அர்ஜுனனுக்கு நாகர்குலத்து உலூபியில் மைந்தனாகப் பிறந்த அரவான் இந்த இளையோளை மணம்கொள்ள விழைந்திருக்கிறான். தந்தை கைபற்றி அவன் முன்னெழுக!” என்றார் சுரேசர்.

உத்தரன் விழிதிறந்து அர்ஜுனனை நோக்கினான். அர்ஜுனன் அதே உடற்கோணலுடன் அமர்ந்திருந்தான். “இளைய பாண்டவரே, உங்கள் மைந்தன் மணம்கொள்ள உடன் வருக!” என்று சுரேசர் சொன்னார். அர்ஜுனனின் தாடை இறுகி அசைந்தது. அவன் திரும்பவில்லை. பிரதிவிந்தியன் “அந்தணரே, என் இளையோருக்கு நான் தந்தையுமானவன். நான் கைபிடித்து மணம் செய்விக்கிறேன்” என்றான். சுரேசர் “ஆம், அதற்கும் நெறியுள்ளது” என்றார். பிரதிவிந்தியன் அரவானின் வலக்கையை பற்றி முன்னால் வர அவனுக்குப் பின்னால் சுருதகீர்த்தியும் சுதசோமனும் சுருதசேனனும் சதானீகனும் யௌதேயனும் நிர்மித்ரனும் சர்வதனும் இரு நிரைகளாக வந்தனர். கைகளைக் கட்டியபடி விழிகூர்ந்து நோக்கி அபிமன்யூ மட்டும் அப்பால் நின்றான்.

“குலமகளை கைப்பிடித்து அளியுங்கள், குலாடரே” என்றார் சுரேசர். ஸ்வேதன் ரோகிணியின் கைபற்றி அரவானிடம் நீட்டி “பாண்டவ மைந்தரே, என் தங்கையை கொள்க! இவளால் உங்கள் குடி சிறப்புறுக!” என்றான். “குலமகளை கைக்கொள்க, பாண்டவ மைந்தரே!” என்றார் சுரேசர். பிரதிவிந்தியன் “என் இளையோன் அரவானின் பொருட்டு இக்குலமகளை என் குடிக்குரியவளாக கொள்கிறேன்” என்றான். ரோகிணியின் கையைப் பற்றி அரவானின் கையில் சேர்த்து வைத்தான். அவர்கள் விரல்பற்றிக்கொள்ள மென்துகிலால் அவர்களின் கைகளை சேர்த்துக் கட்டினான்.

சுரேசர் “மனையாட்டியின் கைபற்றி கிழக்கு நோக்கி ஏழு அடி எடுத்து வையுங்கள். குலமகளே, நீ அங்கே விழியறியாது உளமறிய மின்னிக்கொண்டிருக்கும் அருந்ததியை எண்ணிக்கொள்க!” என்றார். அரவான் ரோகிணியின் கை பற்றி ஏழு அடி எடுத்து வைத்தான். அவள் நடுங்கிக்கொண்டிருந்தமையால் விழப்போகிறவள்போல தோன்றினாள். தொலைவிலேயே அவள் தோள்கள் அழுகையில் அதிர்வதை காணமுடிந்தது. “அன்னையர் என்றும் தந்தையர் என்றும் மூவர் என்றும் முப்பத்து முக்கோடி என்றும் நம் தெய்வங்கள் பலர். ஆனால் போர்க்களத்தில் வாளே நம் தெய்வம். இளையோனே, உன் வாளை உருவி மும்முறை தாழ்த்தி வணங்குக! இவள் உன் துணைவி என்றும், எந்நிலையிலும் நீ இவளுக்குரியவன் என்றும் உறுதிபூணுக!” என்றார் சுரேசர்.

அரவான் தன் வாளை உருவி மும்முறை ஓங்கி நிலம்தொட தாழ்த்தினான். “அரசரையும் தந்தையையும் வணங்குக! அவர்கள் சொல்லால் தெய்வங்கள் உங்களை ஏற்றருள்க!” என்றார் சுரேசர். ரோகிணியுடன் அரசமேடையில் ஏறிச்சென்ற அரவான் யுதிஷ்டிரரை அணுகி கால்தொட்டு வணங்கினான். அவர் இருவர் தலை மேலும் கை வைத்து “சிறப்புறுக!” என வாழ்த்தினார். பீமனை அவர்கள் வணங்கியபோது அவன் பேருடலில் தசைகள் அலையிளகின. அர்ஜுனன் முகம் திருப்பி அவர்களை நோக்காமலேயே கைகளால் இருவர் தலையிலும் தொட்டு வாழ்த்தினான். நகுலனையும் சகதேவனையும் வணங்கியபின் கீழிறங்கி வந்து துருபதரையும் விராடரையும் வணங்கி வாழ்த்து கொண்டான்.

அரவான் ரோகிணியுடன் இளைய யாதவரை நோக்கி சென்றபோதுதான் அவர் அங்கிருப்பதை மீண்டும் உத்தரன் உணர்ந்தான். அவர்கள் வணங்கும்போது இளைய யாதவரின் உணர்வு என்னவாக இருக்கும் என அவன் எண்ணினான். அவர் இனிய புன்னகையுடன் அவர்களை வாழ்த்தி நற்சொல் உரைத்தார். அரவானின் தோள்தொட்டு மெல்ல தழுவிக்கொண்டார். உத்தரன் மீண்டும் ஏனென்றறியாத எரிச்சலையும் கசப்பையும் அடைந்தான். அவன் அருகே நின்றிருந்த ஹிரண்யபாகு “அவர் அவ்வப்போது இங்கிருந்து மறைகிறார். மீண்டும் தோன்றுகிறார்” என்றான். உத்தரன் மறுமொழி உரைக்கவில்லை. “வேறு எங்கிருந்தோ அவர் நம்மை நோக்கிக்கொண்டிருக்கிறார் என்ற உணர்வை அடைந்தேன். எறும்புக்கூட்டை குனிந்து நோக்குபவர்போல நம்மை பேருருவாக நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார்” என்று ஹிரண்யபாகு மீண்டும் சொன்னான்.

மீண்டும் கொம்பொலி எழுந்தது. அரவான் அவைநோக்கி திரும்பி தலைவணங்கி “அவையினர் வாழ்த்தையும் மூத்தோரின் நற்சொல்லையும் விழைகிறேன்” என்றான். அவையிலிருந்த அனைவரும் எழுந்து நின்று தங்கள் குடிக்கோல்களையும் வாள்களையும் தூக்கி வாழ்த்துக்கூவினர். மங்கலப்பொருட்கள் எதற்கும் படையில் ஒப்புதல் இல்லாமையால் வாழ்த்தொலி மட்டுமே அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அரவான் ரோகிணியின் கை பற்றி நிலத்தில் நெற்றிதொட விழுந்து வணங்கினான்.

மீண்டும் கொம்போசை எழுந்தது. சகதேவன் “இளையோர் அவை அகல்க!” என்றான். பாண்டவ மைந்தரும் பிற இளையோரும் அவை நீங்கினர். உத்தரனும் எழுந்தான். இளைய யாதவர் “நீங்கள் இருக்கலாம், இளைய விராடரே. இங்கே நாங்கள் நாளைய படைநகர்வைப் பற்றிய இறுதிமுடிவை எடுக்கவிருக்கிறோம்” என்றார். உத்தரன் அமர்ந்தான். திருஷ்டத்யும்னன் “நமக்கு இனி நேரம் இல்லை. இப்போதே நடுநிசி. இன்னும் சில நாழிகைகளில் பொழுது விடியும். நாளை பகல் முழுக்க படைகளை அமைக்கவே தேவைப்படும். அனைத்து முடிவுகளும் இன்றே எடுக்கப்படவேண்டும். நாளை கௌரவர் படைகளிலிருந்து போர் அறிவிப்பு எழும்போது நாம் ஒருக்கமாக இருக்கவேண்டும்” என்றான்.

பீமன் “நமது சூழ்கை என்ன என்று இளைய பாஞ்சாலர் வகுத்துள்ளார் என்றால் முன்வைக்கட்டும்” என்றான். திருஷ்டத்யும்னன் “நாளைமறுநாள் நாம் முதற்செருகளத்தை சந்திக்கிறோம். எதிரியின் படைவல்லமை மட்டுமே இப்போது நமக்கு தெரியும். அவர்களின் உளவிசை நாம் இன்னும் அறியாதது. அவர்களின் கருதல்பிழைகளும் சூழ்கைப்பிழைகளும் முதற்போரிலேயே தெரியவந்துவிடும். உண்மையில் அதன் பின்னரே நாம் மெய்யாக போர்புரியத் தொடங்குகிறோம். முதற்போரில் முதன்மைப் படைவீரர்கள் முன்னணியில் நின்று பொருதும் வழக்கம் இல்லை. படைகளை மதிப்பிட்டபடி அவர்கள் பின்னணியில் நின்றிருப்பார்கள்” என்றான்.

“வெம்மையை அறியும்பொருட்டு மெல்ல தொட்டுநோக்குவதே முதல்நாள் போர் என்பார்கள்” என்றான் திருஷ்டத்யும்னன். “என் படைசூழ்கை அதனடிப்படையிலேயே அமைந்துள்ளது. முதல்நாள் நாம் அமைக்கவிருக்கும் படை மாண்டூக்யம். நான்கு கால்களை நன்கு பரப்பி மிக மெல்ல எதிரியை நோக்கி செல்கிறோம். கூடவே பெரிய விழிகளால் முப்புறமும் கூர்ந்து நோக்குகிறோம். தேவையான அனைத்தையும் அறிந்துகொள்கிறோம். நாம் நோக்குகிறோம் என்று அவர்கள் அறிவதுமில்லை. தவளையை நோக்கினால் அது கல்லென்றே தோன்றும். அதனால் விரைவுகொள்ளலாகுமா என ஐயம் எழும். ஆனால் தவளை தேவையென்றால் தாவும். எதிரி தொடுதொலைவில் வந்தால் சற்றும் எதிர்பாராத கணத்தில் நாவை எய்து கொய்தெடுத்து மீளும். முதல்நாள் போரில் ஒரேயொரு வலுவான எதிரியை வென்று மீண்டால்கூட நம் படைகளை அது ஊக்கமூட்டும். மறுநாள் புத்தெழுச்சியுடன் கிளம்பிச் செல்லச் செய்யும்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான்.

“தவளையின் கால்கள் என அர்ஜுனரும் பீமசேனரும் சாத்யகியும் விராடரும் அமைக! விழிகள் என துருபதரும் யுதிஷ்டிரரும் கூர்கொள்க! நாவென நான் நிற்பேன். விரைந்தெழுந்து நீண்டு கௌரவப் படைப்பிரிவுக்குள் ஊடுருவி அதே விரைவில் மீள்வேன். என் கொடுக்கில் ஓர் இரை சிக்குமென்று உறுதியளிக்கிறேன்” என அவன் தொடர்ந்தான். “ஆனால் மிகுவிரைவுப் புரவிகள் கொண்ட படை நமக்கு தேவை. மலைச்சரிவில் பயின்றவர்களாக அவர்கள் இருக்கவேண்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவர்களை தெரிவுசெய்துள்ளேன். விராடகுடிப் படைகள் குறுகிய தொலைவுக்கு மிகுவிரைவில் செல்லும் பயிற்சி கொண்டவை” என்றான் திருஷ்டத்யும்னன். “விராடபுரியின் நிலமும் புரவிகள் விரைவை பழகுவதற்குரியது. முதல்நாள் போரில் மையமென அமையவேண்டியவர் விராடரே.”

“ஆம், இதுவே சிறந்த படைசூழ்கை. இவ்வாறே அமைக!” என்றார் யுதிஷ்டிரர். “இளைய யாதவரின் கருத்தை அறிய விழைகிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். இளைய யாதவர் “நாம் அறியவேண்டியது பாண்டவப் படைகளை அல்ல, பீஷ்ம பிதாமகரைப் பற்றி மட்டுமே” என்றார். “முதல்நாளே நாம் அவர் முன் சென்று நிற்கவிருக்கிறோம். இப்போரின் முடிவை அமைக்கும் மாவீரர்களில் ஒருவர் முன் அவ்வாறு முதற்கணமே சென்று நிற்பதுதான் நமக்கிருக்கும் பேரிடர். அதை குறித்து மட்டுமே பேசுவோம்.”

துருபதர் “நானும் அவ்வண்ணமே எண்ணினேன்” என்றார். “நாளை மறுநாள் போரில் அவர் மெய்யாகவே போர்வெறி கொள்வாரா, கடமைக்கென வில்லேந்துவாரா என்ற ஐயம் என்னுள் அலைகொள்கிறது.” இளைய யாதவர் “நாளைமறுநாள் முதல்நிகழ்வு அரவானின் தற்பலி. அது ஒருவகையில் நன்று. அர்ஜுனனின் இளமைமுகத்தை அறிந்தவர் பிதாமகர். அவர் கண்ணெதிரே அவன் கழுத்தறுத்து விழுவது அவருக்கு நிகழப்போவதென்ன என்பதை காட்டிவிடும். அவர் வாழ்நாளெல்லாம் அஞ்சி தவிர்த்துவந்தது தொடங்கிவிட்டது என்னும் அறிவிப்பு அது. அவர் உளம் நடுங்கும் என நான் எண்ணுகிறேன். கையில் வில்லும் நடுங்குமென்றால் நமக்கு முதல் வெற்றி” என்றார் இளைய யாதவர். “அந்நடுக்கு குறைவதற்குள் நாம் அவரை கைசோரச் செய்தாகவேண்டும். அவருக்கு முன் நம் இளமைந்தர்களே படைகொண்டு செல்லட்டும்.”

திருஷ்டத்யும்னன் “ஆனால் நம் மைந்தர்…” என்று தயங்க துருபதர் “அது உகந்தது அல்ல. அங்கே அறம் உணராத சகுனியும் ஜயத்ரதனும் உள்ளனர். அஸ்வத்தாமனும் வஞ்சமென்று வந்தால் அனைத்து எல்லைகளையும் கடப்பவர். நம் மைந்தர் சிலர் களம்பட்டால் அதன் விளைவுகள் கணிக்கக்கூடியவை அல்ல. படையினர் உளச்சோர்வடையக்கூடும். பாண்டவர்களேகூட அத்துயரால் நிலையழிந்துவிடுவதும் ஆகும்” என்றார். இளைய யாதவர் “ஆம், அதையும் எண்ணித்தான் ஆகவேண்டும்” என்றார். சாத்யகி “அவ்வண்ணமென்றால் பாண்டவ மைந்தர் அல்லாத இளையோர் செல்லட்டும்” என்றான். “அவர்களுக்கு பின்துணை என நாம் நிற்போம். எதிரி அம்புகளில் இருந்து அவர்களை காப்போம். அவர்களைக் கண்டு பீஷ்மரின் உளம்தழையும் என்றால் எழுந்து நின்று அடிப்போம்.”

திருஷ்டத்யும்னன் “அவ்வண்ணமெனில் குலாடர்கள் முன்னிற்கட்டும். முதன்மைப்படைகள் குலாடநாட்டு புரவியர்களே” என்றான். சாத்யகி “ஆம், சங்கனும் ஸ்வேதனும் பெருவீரர்கள்” என்றான். உத்தரன் “எங்கள் புரவிப்படைகளே போதும். முதல்நாள் போரை நாங்கள் நிகழ்த்துகிறோம். நானும் படைமுகப்பில் நிற்கிறேன்” என்றான். “ஆனால்…” என சாத்யகி தொடங்க “யாதவரே, குலாடர் படைமுகப்பில் நிற்கையில் நான் பின்னிற்க இயலாது. நானும் முகப்பில் நிற்பேன்” என்று உத்தரன் உறுதியாக சொன்னான். இளைய யாதவர் “ஒருவகையில் அது நன்று. நாம் பயிலாத கிராதரையும் நிஷாதரையும் முன்னிறுத்தவில்லை. முன்நிற்போர் ஷத்ரியரும் அல்ல. விராடர்களும் குலாடர்களும் சிறுவெற்றிகளை அடைந்தால்கூட ஷத்ரியர் சீண்டப்படுவார்கள்” என்றார். “குலாடர்களும் விராடர்களே. நாங்கள் இப்போரை தொடங்கிவைக்கிறோம்” என்றான் உத்தரன்.

திருஷ்டத்யும்னன் “அவ்வாறே ஆகுக!” என்றபின் யுதிஷ்டிரரிடம் “எனில் உகந்த சூழ்கை முப்புரிவேல். நடுவே உத்தரர். இருபுறமும் ஸ்வேதனும் சங்கனும். நாம் வேலின் பிடி என பின்னால் நீண்டிருப்போம். வேண்டுமெனில் நீட்டிக்குத்தியும் உகந்தமுறையில் சுழற்றி வெட்டியும் முறைப்படி பின்னிழுத்தும் போரிடுவோம்” என்றான். யுதிஷ்டிரர் “முப்புரிவேலுக்கு அவர்கள் என்ன எதிர்சூழ்கை அமைக்கக் கூடும்?” என்றார். “நான் என்றால் மான்கொம்புச் சூழ்கை. மையத்தண்டென பிதாமகரும் கிளைகள் என பிறரும். முப்புரிவேலை கவர்களால் தடுக்கவும் கூர்களால் முறிக்கவும் இயலும்” என்றான். “யானைமருப்பும் நல்ல சூழ்கை. மையத்தில் கவசத்துடன் பிதாமகர். இருபுறமும் கொம்புகளாக துரோணரும் கிருபரும்” என்றார் யுதிஷ்டிரர்.

“பிதாமகரின் உளச்சோர்வு எஞ்சினால் இரு நாழிகை நீடிக்கலாம். சேற்றுக்குத் தயங்கும் யானை என கருதுக! அதற்குள் நம் இளையோர் வென்று முன்சென்றிருக்கவேண்டும்” என்றார். “ஆம், அன்றுமாலை கொண்டாடுவதற்கு சில முதன்மைத்தலைகள் கொய்யப்படவேண்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். “தெய்வங்கள் உடனிருக்கட்டும்” என்று துருபதர் சொன்னார். “களம்கண்டவர்கள் அறிவர், அறிவும் ஆற்றலும் அங்கு இரண்டாம்நிலையே. வாய்ப்பும் இறையருளுமே முதன்மை.” சாத்யகி “இறை நம்முடன் உள்ளது” என்றான். “ஆம்” என்றார் யுதிஷ்டிரர்.

சகதேவன் கைகாட்ட அவை நிறைவை அறிவித்து நிமித்திகன் எழுந்து கொம்போசை எழுப்பினான். யுதிஷ்டிரர் களைப்புடன் எழுந்து கைகூப்பி பின்னாலிருந்த சகதேவனிடம் ஏதோ சொன்னபின் வெளியே நடந்தார். சகதேவனும் நகுலனும் அவரை தொடர்ந்தனர். பீமன் கைகளை பின்னால் கட்டியபடி வெளியே சென்றான். இளைய யாதவர் தன்னருகே வந்த சாத்யகியிடம் பேசியபடி செல்ல திருஷ்டத்யும்னன் துருபதரை அணுகி சொல்லுரைத்தான். அவர் அவன் தோளைத்தொட்டு செவிகொடுத்தபடி வெளியேறினார். அர்ஜுனன் மட்டும் அந்தப் பீடத்தில் தனியே அமர்ந்திருந்தான்.

நிஷாதஅரசின் ஹிரண்யநாபனும் அவன் இளையோன் ஹிரண்யபாகுவும் உத்தரனின் தோளைத் தொட்டு “வரவில்லையா?” என்றனர். “ஆம், வரவேண்டும்” என்றான் உத்தரன். அர்ஜுனன் அருகே சென்று ஏதேனும் சொல்லவேண்டும் என அவன் விழைந்தான். ஹிரண்யநாபன் “அந்த நாகனுக்கு வேறு வழியில்லை. அவன் தந்தைக்கென உயிர்கொடுத்தாகவேண்டும். படைமுகம் நின்றால் மறுபக்கம் திரண்டுள்ள தன் குடியினரை அவன் கொல்லவேண்டியிருக்கும்” என்றான். ஹிரண்யபாகு “வருக, விராடரே!” என வெளியே நடந்தான். அவை முழுமையாகவே ஒழிந்துவிட்டிருந்தது. அர்ஜுனன் இருக்கையில் உடல்தொய்ந்து தலைசரிந்து விழிமூடியதுபோல் அமர்ந்திருந்தான். உத்தரன் ஹிரண்யபாகுவுடன் வெளியே சென்றான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 71

tigஉத்தரன் அர்ஜுனனின் முகத்தை மட்டுமே நோக்கினான். அருகே இருந்த மேற்கு நிஷாதஅரசின் ஹிரண்யநாபன் உத்தரனிடம் “என்ன சொல்கிறான் நாகன்?” என்றான். “படைகளை தூண்டும்பொருட்டு அவன் தற்கொடை அளிக்கவிருக்கிறான்” என்றான் உத்தரன். அவன் வாய் திறந்திருக்க உளமழிந்து வெறுமனே நோக்கினான். அர்ஜுனன் அரவானிடம் “உன்னை எவர் இங்கே அழைத்தது? உனக்கு பேச உரிமையளித்தவர் எவர்?” என்று திரும்பி சுரேசரை நோக்கி “அமைச்சரே, அரசர் அமர்ந்திருக்கும் இந்த அவையில் நேற்று வந்த இளையோன் எப்படி நுழைந்தான்?” என்றான். “நான் உங்கள் குருதியினன். அரசகுடியினருக்கு எந்த அவையிலும் இயல்பாகவே இடம் அமைகிறது, தந்தையே” என்றான் அரவான்.

“வாயைமூடு அறிவிலி… உன்னிடம் எவரும் இங்கு பேசும்படி சொல்லவில்லை” என்று கையை ஓங்கிக்கொண்டு அர்ஜுனன் அரசமேடையிலிருந்து பாய்ந்து கீழிறங்கினான். அப்போதுதான் தன்னால் அர்ஜுனன் உள்ளத்தை எத்தனை அணுக்கமாக தொடரமுடிகிறது என்று உத்தரன் அறிந்துகொண்டான். அந்தச் சினப்பெருக்கை அவன் நன்கறிந்திருந்தான். அதற்கு அடியில் அர்ஜுனனின் உளம்கொண்ட துயரையும் உணர்ந்திருந்தான். எழுந்து சென்று அர்ஜுனனின் அருகே நிற்க விழைந்தான். அர்ஜுனன் சற்றே திரும்பியபோது பக்கவாட்டில் அவன் விழிகள் நீர்கொண்டு மின்னுவதைக் கண்டதும் அவன் கைகளும் கால்களும் பதறின. அங்கிருந்த அனைவர் மேலும் சினம் ஓங்கியெழுந்தது. எழுந்து நின்று நெஞ்சிலறைந்து “நிறுத்துக, இந்தக் கீழ்மைகளை!” என்று கூவவேண்டும் என்று நெஞ்சு பொங்கியது.

மைய நிஷாதநிலத்து அரசர் மணிமான் “பார்த்தரே, எங்கள் மைந்தரும் களம்நிற்கிறார்கள். அவர்களும் குருதிகொடுக்கவே ஒருங்கியிருக்கிறார்கள்” என்றார். “ஆம், எங்கள் மைந்தரின் குருதியும் செந்நிறமே” என்றார் முதிய கிராதமன்னர் கூர்மர். அர்ஜுனன் ஓங்கிய கை அசைவிழக்க அப்படியே நின்றான். அவையினரின் அமைதியும் விழிக்கூர்களின் தொடுகையும் அவனை நடுக்கு கொள்ளச் செய்தன. அவன் கை மெல்ல தளர்ந்தது. “எங்கள் மைந்தருக்காக நாங்களும் இவ்வாறு கொந்தளிக்கலாம்” என்றார் அசுரர் குடித்தலைவர் காகர்.  “பாண்டவ மைந்தர்கள் அனைவரும் போரில் படைகளுக்குப் பின்னால்தான் நிற்கப்போகிறார்கள் என்றால் அதை சொல்லுங்கள்” என்றார் சம்பராசுரரின் மைந்தர் கீர்த்திமான்.

அர்ஜுனன் குரல் தளர்ந்து “அவன் என் மைந்தன் ஆயினும்…” என்றான். பொருளின்றி இருமுறை கை அசைந்தது. பின் விழிகளில் ஈரமெழ “ஆனால் அவன் இன்றுவரை இளவரசனாக வாழவில்லை. அரசகுடிக்குரிய எந்தச் சிறப்பையும் அடையவில்லை. ஆகவே அவனுக்கும் இப்போருக்கும் தொடர்பில்லை” என்றான். அரவான் “நான் என்றும் என்னை பாண்டவ மைந்தனாகவே எண்ணினேன், தந்தையே. என் கடமையை உணர்ந்தே இங்கு வரவேண்டும் என முடிவெடுத்தேன்” என்றான். அர்ஜுனன் “இல்லை, அவன் இதற்குரியவன் அல்ல. அவன் குடிக்கு நாம் செய்யும் வஞ்சம் இது… அவன் அன்னைக்கு நான் செய்யும்…” என்றபின் குரல் ஏங்க பீமனை நோக்கி “மூத்தவரே…” என்றான்.

பீமன் “மைந்தர் எவரும் பலியாக வேண்டியதில்லை. எந்த மைந்தன் பலியானாலும் அது நமக்கும் நம் படைகளுக்கும் உளச்சோர்வையே அளிக்கும். பலியாகவேண்டியவர்கள் நம் ஐவரில் ஒருவர்” என்றான். “மைந்தரை பலிகொடுத்தோம் என்பதனால் நாம் வீரர் என தெரிவோம் என்றால் அதைவிட இழிவு நமக்கு பிறிதில்லை.” அசுரர் குடித்தலைவர் காகர் “நீங்கள் வீரர்கள் என அனைவரும் அறிவார்கள், அரசே. இரக்கமற்றவர்களா, வெற்றிக்கென எதையும் செய்பவர்களா, அனைத்து இழப்புகளுக்கும் சித்தமாக இருக்கிறீர்களா என்பதே வினா” என்றார். அவைமூத்தவரான கூர்மர் “ஆம், நாம் பேசிக்கொண்டிருப்பது அதை பற்றியே” என்றார். பீமன் மேலும் எதையோ சொல்வதற்குள் “அரசே, உங்கள் மேல் நம்பிக்கையில்லை என்றே இந்த அவை சொல்கிறது” என்றார் அரக்கர் குலத்தலைவர் வக்ரசீர்ஷர். “அரிதினும் அரிதை அளிக்கவும் துணிபவர்களுக்கே தெய்வங்கள் அருள்கின்றன. நீங்களோ இல்லக்கிழவியர்போல மைந்தரை தழுவி அமைய விழைகிறீர்கள்.”

பீமன் “நான் செல்கிறேன். எவர் ஆணையும் எனக்கு தேவையில்லை” என்றான். திருஷ்டத்யும்னன் “பாண்டவ ஐவரில் எவர் முதற்பலியானாலும் அது கௌரவர்களின் முதல்வெற்றி என்றே கொள்ளப்படும். அவர்களில் ஒருவரை பீஷ்மர் கொல்வார் என்றால் அது அவர்களின் இரக்கமின்மைக்குத்தான் சான்றாகும். பிதாமகர் பீஷ்மர் அதை செய்யத் தயங்கவும் மாட்டார். எனவே அது அறிவின்மை, அதை எண்ணவே வேண்டாம்” என்றான். பீமன் “நிறுத்துங்கள் இந்த வெற்றுச்சொற்களை! சொல்லிச்சொல்லியே கோழைகளென்றும் வீணர்களென்றும் வாள்தீனியாக வந்து அமர்ந்திருக்கிறோம். செயலற்ற வெற்றுத்தசையுருளை எழுப்பும் சொல்லுக்கும் அடிக்காற்றுக்கும் வேறுபாடென்ன?” என்றான். பொறுமையிழந்த யுதிஷ்டிரர் “மந்தா, நீ சொல்லடக்கு…” என்றார்.

அரவான் “ஐயமே வேண்டாம். என் தலைக்கொடை பாண்டவர்கள் எதையும் இழக்கவும் எத்தொலைவு செல்லவும் ஒருங்கிவிட்டனர் என்பதை படைகளுக்கு காட்டும். ஏனென்றால் நான் எந்தையின் அதே உருவம் கொண்டவன். களத்தில் வாளுடன் நான் சென்று நின்றாலே படையினர் உளம்பதறி விழிநீர் விடத்தொடங்குவர்” என்றான். “எங்கள் குலத்தில் தொன்றுதொட்டே அவ்வழக்கம் இருப்பதனால் நான் அவர்களின் பெருங்கல்லுக்கு உரியவன் ஆவேன். அச்சமோ தயக்கமோ இன்றி நான் அச்செயலை செய்ய இயலும். ஏனென்றால் அதற்கான உளப்பயிற்சி பெற்றவன் நான்.” அர்ஜுனன் தளர்ந்து பீடத்தில் அமர்ந்தான். உத்தரன் தனக்கென எண்ணமில்லாமல் முகங்களிலிருந்து முகங்களுக்குச் சென்று படியும் விழிகளுடன் சொற்களை கேட்டுக்கொண்டிருந்தான்.

“அனைத்துக்கும் மேலாக ஒன்றுண்டு, நான் என் நஞ்சினால் மட்டுமே போரிடமுடியும். என் நஞ்சுக்கு மாற்றோ முறிவோ இங்கு எவரிடமும் இல்லை. மானுடர் விழிதொடவியலா அம்புகளால் நான் பீஷ்மரையும் துரோணரையும் கௌரவர் அனைவரையும் கொன்றழித்துவிடமுடியும். என்னால் கொல்லப்பட முடியாதவர் அங்கநாட்டரசர் கர்ணன் ஒருவரே. அவையோரே, நான் களமுகப்பில் நின்றால் ஒருநாள் மாலைக்குள் இப்போர் முடிந்துவிடும். எதிர்த்தரப்பில் தலைமை என எவரும் எஞ்சமாட்டார்கள். ஐயமிருப்பின் சொல்க, இந்த அவையில் நின்றபடியே அங்கிருக்கும் ஒரு தலைவனை கொன்று காட்டுகிறேன். நீங்கள் விழைந்தால் அரைநாழிகையில் பிதாமகர் பீஷ்மரை கொன்று காட்டுகிறேன்.”

உறைந்தவர்களாக அவை நோக்கியிருக்க அரவான் சொன்னான் “ஆனால் அது எந்தையின் வீரத்திற்கு மாண்பல்ல. பாண்டவ அரசருக்கு தீரா இழிவை அளிக்கும். போரில் நஞ்சூட்டுவதற்கு ஷத்ரியகுடிகளில் நெறியொப்புகை இல்லை.” புன்னகையுடன் அவன் அவையினரை நோக்கி கைகூப்பி சொன்னான் “ஆகவே வீரன், பாண்டவ மைந்தன் என நான் இங்கே செய்யக்கூடுவது களப்பலியாவது மட்டுமே.” அவை முழுமையாகவே குழம்பி நிலையழிந்து அமர்ந்திருந்தது. ஒவ்வொருவரும் தனிமைப்பட்டுப் பிரிந்து பிறிதொருவராக ஆனார்கள். அங்கிருந்து எழுந்து அகன்றுவிடவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருந்தது. அத்தருணத்தை பிறிதொருபோதும் மீண்டும் எண்ணிநோக்கவும் கூடாது என அவர்கள் விழைந்தனர். உத்தரன் தன்னைச் சூழ்ந்திருந்த உடல்கள் வெம்மையுமிழ்வதைப்போல் உணர்ந்தான்.

அரவான் அந்த அமைதியை பயன்படுத்திக்கொண்டு அத்தருணத்தை முழுமையாக நிரப்பினான். புன்னகை நிறைந்த முகமும் தணிந்த மென்குரலுமாக அவன் சொன்னான் “இச்செயல் துயரத்திற்குரியதோ அஞ்சத்தக்கதோ அல்ல. ஏனென்றால் இங்கிருக்கும் மைந்தர்களில் எவர் எஞ்சுவார் என்பதை இப்போது எவரும் சொல்லிவிடமுடியாது. மிகப் பெரும்பாலானவர்கள் களம்படுவார்கள் என்பதே உண்மை. அவர்களில் சிலர் கொடிய புண்பட்டு பலநாள் துன்புற்று உயிர்துறக்கலாம். சிலருக்கு தலையுடைவது, புறப்புண்படுவது போன்ற இழிந்த இறப்பு அமையலாம். அவையோரே, உரிய வீரரால் அன்றி கொல்லப்படுவது வீரருக்கு பேரிழிவு. களத்தில் மிக எளிய வீரன் கையால் இறப்பதற்கான வாய்ப்பு எந்தப் பெருவீரனுக்கும் உள்ளது. நான் என் இறப்பை நானே தேர்கிறேன். எம்மவர் சூழ்ந்திருக்க, வாழ்த்தொலிகள் முழங்க என் படைக்கலத்தால் மாண்புடன் உயிர்விடுகிறேன். பெருவீரர்களும் கனவுகாணும் சிறப்பை அடைகிறேன். அவ்வகையில் இது ஒரு குறுக்குவழி அன்றி வேறல்ல.”

அவன் அர்ஜுனனை நோக்கி “ஐயம் வேண்டாம் தந்தையே, உங்கள் தனிவடிவான மைந்தனை களப்பலிக்கு அனுப்பினீர்கள் என்றால் உங்கள் தயங்காமையே புகழப்படும். மண்ணுக்கும் குடிக்கும் அறத்துக்கும் நீங்கள் அளிக்கும் தற்கொடையென்றே அது கருதப்படும். இப்போரில் முதற்பெரும் வீரராக மட்டும் அல்ல முதன்மை இழப்பை அடைந்தவராகவும் எண்ணப்படுவீர்கள். நீங்களே காண்பீர்கள், நான் படைமுகத்தில் விழுந்த அக்கணமே நம் படைகளின் சோர்வு அகலும். களத்தில் தற்பலி கொடுத்துக்கொள்பவனின் குருதியைத் தொட்டு நெற்றியிலிட்டு போருக்கெழுவது மரபு. என் குருதி அனலென்றாகி நம் படைப்பெருக்கில் பற்றி எரிந்து காட்டெரியாக மாறிச் சூழ்வதை காண்பீர்கள்” என்றான்.

அவன் குரல் இறைஞ்சியது. “எந்தையே, உங்கள் படையெழுச்சிக்கு என்னால் இயன்ற பெருங்கொடை இது ஒன்றே. இத்தருணத்தை எனக்களியுங்கள், என் குடிமாண்பு குன்றாமல் புகழ்கொள்கிறேன். இது மறுக்கப்பட்டால் இப்படையில் எளியோரில் ஒருவனாக சிறுமைகொண்டு நிற்பேன். புரவிப்படை நடுவே நாகம் என மிதிபட்டு இறப்பேன். அந்த இழிவை எனக்கு அளிக்கவேண்டாம்…” மீண்டும் ஒரு முறை தலைதாழ்த்தி வணங்கியபின் கூப்பிய கைகளை பிரிக்காமல் அவன் நின்றான்.

உத்தரன் பெருமூச்சுவிட்டான். அவன் அகம் கொந்தளித்தபடியே இருந்தது. உடலுக்குள் பிறிதொன்று புரண்டு எழுந்தமைந்தது. பீமன் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் அவ்வசைவை மறித்து ஸ்வேதன் எழுந்தான். உரத்த குரலில் “அரசே, மூத்தவர்களே, மீள மீள இந்த அவையில் நிகழ்வதைக் கண்டு சலிப்புற்றுவிட்டேன். நீங்களெல்லாம் பெருவீரர்கள், களம்நின்று போர்புரியவேண்டியவர்கள், நாங்கள் பேணிக்காக்கப்பட வேண்டிய இளமைந்தரன்றி வேறல்ல என்று எண்ணிக்கொள்கிறீர்கள். அளிகூர்ந்து அதை நிறுத்துங்கள். நாங்களும் வீரர்கள்தான். நாங்களும் களம்கண்டு புகழ்பெறும்பொருட்டே படைக்கலம் ஏந்தி இங்கு வந்துள்ளோம். நாங்கள் செய்யவேண்டியதென்ன என்பதை நாங்களே முடிவெடுக்கிறோம். போரிடவும் களப்பலியாகவும் உங்கள் ஒப்புதலுக்கு நாங்கள் ஏங்கி நிற்கவில்லை” என்றான்.

சர்வதன் தன் தோளில் அறைந்து வெடிப்போசை எழுப்பி பெருங்குரலில் “ஆம், நான் சொல்ல விழைவதும் அதையே. இது களம். இங்கே தந்தையென்றும் மைந்தரென்றும் உறவு ஏதுமில்லை. படைத்தலைவர்களாக பேசுங்கள், சிற்றுணர்ச்சிகளை அவையில் காட்டி உங்களை சிறுமை செய்துகொள்ளவேண்டாம்” என்றான். சுருதகீர்த்தி “ஆம், இளையோருக்கும் எண்ணமும் தரப்பும் உண்டு என எண்ணுக!” என்றான். அர்ஜுனன் “வாயை மூடு, அறிவிலி!” என்று கூவியபடி முன்னால் வந்தான். “நான் இங்கு உங்கள் மைந்தனாக நிற்கவில்லை, தந்தையே. என் புகழ்நோக்கி செல்ல எனக்கு உரிமையுண்டு. எவரும் அதை தடுக்கமுடியாது” என்றான் சுருதகீர்த்தி. அர்ஜுனன் மேலும் ஏதோ சொல்லி முன்னெழ அவனை நகுலன் தணிந்த குரலில் பேசி தடுத்தான்.

பாண்டவ மைந்தர்கள் அனைவரும் “ஆம், நாங்கள் வீரர்கள், மழலைகள் அல்ல” என்று கூவினர். “போருக்கு வந்துள்ளோம், விளையாட்டுக்கு அல்ல.” “தந்தையரின் களிப்பாவைகள் அல்ல நாங்கள்.” “எங்களை எவரும் பேணவேண்டியதில்லை” என்று சேர்ந்து குரலெழுப்பினர். அரவான் “நான் சொன்னதையே அனைவரும் சொல்கிறார்கள், தந்தையரே. எங்கள் புகழை நாங்கள் ஈட்ட ஒப்புக்கொள்ளுங்கள். உங்கள் விழிநீருக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல நாங்கள்” என்றான். பாண்டவ மைந்தர் கை தூக்கி கூச்சலிட்டார்கள். “அஞ்சுவதில்லை, தயங்குவதில்லை.” “இங்கு ஆணென எழாவிட்டால் நாங்கள் பேடிகள் என்றே பொருள்.” பீமன் “படைபொருத வந்தீர்களா, களத்தில் மடிய வந்தீர்களா? மூடர்களாக பேசுகிறீர்கள்” என்றான்.

“ஆம், நாங்கள் அனைவரும் களம்படுவோம். அதனூடாக புகழ்பெறுவோம். எவர் தடுப்பார்?” என்றான் சுதசோமன். அவனுடன் பாஞ்சால மைந்தர்களும் சாத்யகியின் மைந்தர்களும் இணைந்துகொண்டு குரலெழுப்பினர். “வெற்றியும் புகழும் எங்களுக்கும் உரியவை! நாங்கள் களத்தில் முன்னிற்போம்…” என்றனர். “தந்தையர் விலகி நிற்கட்டும். வெற்றியை ஈட்டி உங்கள் கால்களில் படைக்கிறோம்!” என்றான் அபிமன்யூ. “ஆம், தந்தையர் விலகட்டும். நாங்கள் நடத்துகிறோம் இப்போரை” என்றான் சர்வதன். யௌதேயன் “படைசூழ்கைகளை நாங்களே அமைக்கிறோம்… தந்தையர் எங்கள் திறம் என்ன என்று இனிமேலாவது உணரட்டும்” என்றான். கூச்சல்களும் கையசைவுகளுமாக அவை கொந்தளித்தது.

துருபதர் எழுந்து கையமர்த்தி “அமைக… அமைக!” என்றார். அவர்கள் மெல்ல அமைந்ததும் “நாம் ஆற்றுவதென்ன என கூடி முடிவெடுப்போம். உங்கள் சொற்களை உரைத்துவிட்டீர்கள். படைசூழ்கையை பின்னர் வகுப்போம். இப்போது இளைய யாதவர் சொல்லட்டும், இனி ஆவதென்ன என்று” என்றார். அப்போதுதான் அங்கே இளைய யாதவர் இருப்பதை உணர்ந்தவர்களாக அனைவரும் அமைதிகொண்டனர். இளைய யாதவர் “தற்கொடை என்பது அவ்வாறு எளிதாக செய்வது அல்ல. அதற்கென நெறிகள் உள்ளன… கிராதர்களே, உங்கள் குடிநெறிகள் என்னென்ன?” என்றார்.

அரக்கர் குலத்தலைவர் வக்ரசீர்ஷர் “எங்கள் குடிமரபின்படி எட்டு இலக்கணங்கள் முழுதமையவேண்டும். தன் விண்மீன் முழுநிலையில் அமைந்த பொழுதில் பிறத்தல், அரசக்குருதி கொண்டிருத்தல், பழுதற்ற உடலும் புலன்களும் உள்ளமும் அமைதல், காமத்தை அறியாதவனாக இருத்தல், படைப்பயிற்சி பெற்றிருத்தல், எவருக்கும் ஏவலனாகவோ அடிமையாகவோ இல்லாமலிருத்தல், அன்னையிடமும் குடிமூத்தாரிடமும் முழுதுளத்துடன் விடைபெற்று வருதல், எங்கும் எஞ்சும் கடமையேதும் இல்லாதிருத்தல் என அவை வகுக்கப்பட்டுள்ளன” என்றார். அர்ஜுனன் உளவிசையுடன் “நாகர்குடியில் அவற்றில் நான்கு அமைவது மிகக் கடினம்” என்றபடி எழுந்தான்.

“இல்லை தந்தையே, நான் பிறந்ததுமே பெருமைக்குரிய இறப்பு எனக்கு அமையும் என நிமித்திகர் கணித்தனர். ஆகவே இந்த எட்டு இலக்கணமும் பொருந்தவே நான் வளர்ந்துள்ளேன்” என்றான் அரவான். “ஒன்று குறைய இவ்வெட்டும் எங்கள் குலத்திலும் உள்ள நெறிகளே.” அர்ஜுனன் சினமா கசப்பா என்று மயங்கிய முகத்துடன் “உன் அன்னையிடம் விடைபெற்றாயா? போருக்கென்று அல்ல, இங்கு தற்பலிக்கென வாழ்த்துகொண்டாயா?” என்று உரக்க கேட்டான். “மெய் சொல், உன் அன்னை உளம்கனிந்து அனுப்பினாளா உன்னை?” அரவான் “ஆம், நான் கிளம்பும்போது அன்னையிடம் சொன்னேன், வேண்டுமென்றால் தற்பலியாக என்னை அளித்து பாண்டவர்களை வெல்லச் செய்வேன் என்று. அன்னை அதற்கும் வாழ்த்தளித்தார்” என்றான்.  பீமன் இரு கைகளையும் விரித்து “அவன் இதற்கெனவே வந்துள்ளான், இளையோனே” என்றபின் சினத்துடன் தலைதிருப்பிக்கொண்டான்.

அர்ஜுனன் சோர்ந்தவனாக மீண்டும் பீடத்தில் அமர்ந்து தலையை கைகளால் பற்றிக்கொண்டான். அரவான் “நான் தற்பலியாவதனூடாகவே இப்போர் வெல்லவிருக்கிறது. இத்தருணத்தில் அதை உறுதியாக உணர்கிறேன்” என்றான். சுருதகீர்த்தி “ஆம், அவன் தேரும் வழி அதுவென்றால் அதுவே ஆகட்டும். நீ முன்னால் விண்செல்க இளையோனே, நாங்கள் அனைவரும் புகழீட்டி ஒளிகொண்டு அங்கு வந்து சேர்கிறோம்” என்றான்.  “அங்கே மீண்டுமொரு பந்தாடலை நிகழ்த்துவோம்!” என்றான் சர்வதன். சங்கன் உரக்க சிரித்தபடி “அங்கேயும் நானே வெல்வேன்! ஆம், மீண்டும் நானே வெல்வேன்!” என்றான். அவர்கள் மாறிமாறி கூச்சலிட்டு நகைத்தனர். தோள்களையும் கைகளையும் அறைந்து கொண்டாடினர்.

அரவான் “தந்தையே, என்னை வாழ்த்துக!” என்றான். அர்ஜுனன் சரிந்து நிலம் நோக்கிய விழிகளுடன் அசையாமல் அமர்ந்திருந்தான். இளைய யாதவர் “இளைய பாண்டவரே, அவன் இறப்பை தவிர்க்க ஒரு வழி உங்கள் முன் உள்ளது. அவன் உங்கள் மைந்தன் அல்ல என அவைமறுப்பு உரைக்கலாம். அவன் தற்பலியாவதே பொருளற்றதாக ஆகிவிடும்” என்றார். அரவான் திகைத்து நின்றான். இளைய யாதவர் அரவானிடம் “சென்று வணங்குக, மைந்தா! ஏற்பதும் மறுப்பதும் அவருடைய தெரிவென்றாகுக!” என்றார்.

அரவான் கைகூப்பியபடி மேடையேறி அர்ஜுனனை அடைந்து கால்தொட்டு வணங்கினான். அர்ஜுனன் உதடுகளை இறுக்கி கழுத்துத்தசைகள் இழுபட்டு அசைய நின்றான். பின் குனிந்து மைந்தன் தலையில் கைவைத்து வாழ்த்தினான். மெல்லிய கேவலோசையுடன் அவனை தோள்தொட்டு தூக்கி தன் மார்புடன் அணைத்து இறுக்கிக்கொண்டான். அவன் பிடி மேலும் மேலும் இறுக அரவான் மூச்சுத்திணறினான். அவன் தோளில் முகம் பதித்து உடல்தசைகள் நெரிபட்டு அசைய நின்றான். அவையினர் விழிகளும் நீரணிந்திருப்பதை உத்தரன் கண்டான். நகுலன் அர்ஜுனன் தோளைத்தொட்டு அவனை தன்னுணர்வுகொள்ளச் செய்தான். மைந்தனை விட்டுவிட்டு அர்ஜுனன் மறுபக்கம் திரும்பிக்கொண்டான்.

நகுலனின் காலடிகளைத் தொட்டு அரவான் வணங்கினான். அவன் தலைதொட்டு வாழ்த்தினான். சகதேவன் ஓரிரு சொற்கள் சொல்லி வாழ்த்தினான். பீமனை வணங்கியபோது அவனும் அரவானை அள்ளித் தூக்கி நெஞ்சோடு இறுக்கி அணைத்துக்கொண்டான். அரவானின் கால்கள் நிலம்தொடாமல் காற்றில் துழாவின. பீமன் அரவானின் நெற்றியிலும் தோள்களிலும் முத்தமிட்டான். நகுலன் அவன் தோளைத்தொட அரவானை கீழிறக்கிவிட்டு மீண்டும் அள்ளி அணைத்து வெறியுடன் முத்தமிட்டான். நகுலன் தோள்தொட்டு உலுக்கி அரவானை விடுவித்து யுதிஷ்டிரரிடம் வாழ்த்து பெறும்படி சொன்னான். அரவான் யுதிஷ்டிரரை வணங்கினான். அவர் உணர்வேதுமின்றி தலையில் கைவைத்து வாழ்த்தினார்.

துருபதர் “இது அவையில் முடிவாயிற்று என்றால் எவ்வண்ணம் இது நிகழவேண்டுமோ அவ்வண்ணம் அமைக!” என்றார். அரக்கர் குலத்தலைவர் வக்ரசீர்ஷர் “போர்தொடங்குவதற்கு முன்பு தன் வாளுடன் படைமுகப்புக்கு ஓடிச்சென்று எதிரித்தரப்பை நோக்கி முழந்தாளிட்டமர்ந்து குடித்தெய்வங்ளையும் மூதாதையரையும் அழைத்து எதன்பொருட்டு தற்பலியாகிறோம் என்று விண்நோக்கி கூவியறிவித்த பின் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு வலப்பக்கமாக சரிந்து விழுந்து உயிர்துறக்கவேண்டும்” என்றார். “ஆம், எங்கள் குடியின் நெறியும் அதுவே” என்றான் அரவான். அரக்கர் குலத்தலைவர் வக்ரசீர்ஷர் “இறுதிவிழைவாக மூன்றை கோரிப்பெற தற்பலிவீரனுக்கு உரிமை உண்டு என்பார்கள். இளைய நாகர் அவர் விழைவை சொல்லலாம்” என்றார்.

“ஆம், அதுவும் எங்கள் குடிமுறைதான்” என்றான் அரவான். “என் விழைவுகள் இவை. எங்கள் குடிநெறியின்படி என் உடல் மட்டுமே எரியூட்டப்பட வேண்டும். நான் கொண்ட வஞ்சினம் முழுமைகொள்ளும் வரை என் தலை இந்தக் களத்தில் ஒரு களிமண் பீடத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். பின்னர் என் மண்டையோடு என் நிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே புதைக்கப்பட்டு நடுகல் எழுப்பப்பட வேண்டும்.” அவையில் பெருமூச்சுகள் எழுந்தன. அரவான் யுதிஷ்டிரரை பார்க்க அவர் ஆகுக என கையசைத்தார். “என் தந்தைகுலத்தில் நீத்தாருக்கு அளிக்கப்படும் அன்னமும் நீரும் பதினெட்டு தலைமுறைக்காலம் எனக்கும் அளிக்கப்படவேண்டும்” என்றான் அரவான். யுதிஷ்டிரர் தலையசைத்தார். “இறுதிக்கோரிக்கை எந்தையிடம். அவர் என் அன்னையை மீண்டும் சென்று சந்திக்கவேண்டும். அவர் அன்னையுடன் ஒருநாளேனும் மகிழ்ந்திருக்கவேண்டும்.” அர்ஜுனன் சொல்லின்றி அமர்ந்திருந்தான். “எந்தை சொல்லளிக்கவில்லை” என்றான் அரவான். அர்ஜுனன் கைவீசி அதை ஏற்பதாக அறிவித்தான்.

சகதேவன் “மைந்தா, ஒன்று குறைய எட்டு நெறியும் உன் குடிக்கும் உண்டு என்றாயே, அது என்ன?” என்றான். “சிறிய தந்தையே, என் குடியில் மணமான பின்னரே தற்கொடைக்குச் செல்லவேண்டும் என்பது மரபு” என்றான் அரவான். “ஆனால் பெண்ணில் காமத்தை அறிந்தவன் போர்நிலத்திற்கு உகந்த பலி அல்ல என்பதே எங்கள் குடிவழக்கு” என்றார் அரக்கர் குலத்தலைவர் வக்ரசீர்ஷர். அரவான் “என் குடிநெறியை இங்கு நான் பொருட்டென கருதவில்லை. உங்கள் குடிநெறி திகழட்டும்” என்றான். “உன் குடிநெறியை கடந்தவன் என்றால் உனக்கு நாகநிலத்தில் கல்நிற்குமா? அறிவிலி…” என்றான் பீமன். “அவ்வாறென்றால் நான் இன்றே ஒருத்தியை மணக்கிறேன். காமத்தை அறியாது களம்புகுகிறேன்” என்றான் அரவான்.

“போர்க்களத்தில் பெண்கள் இல்லை என்று அறியாதவனா நீ?” என்றான் பீமன். “இங்கு ஒரு பெண்ணை கொண்டுவர இனி பொழுதும் இல்லை. நாளைமுழுக்க படைநிலை ஒருக்கவே தேவைப்படும்…” அரவான் “ஆம், ஆனால் இங்கு ரோகிணி என்னும் ஆணிலி இருக்கிறாள். அவளை நான் மணந்துகொள்கிறேன்” என்றான். பீமன் சீற்றம் தாளாமல் இரு கைகளையும் ஓங்கி அறைந்தபடி “என்ன பேசுகிறாய்? அறைந்தே கொன்றுவிடுவேன் உன்னை” என்றபடி அரசமேடையிலிருந்து கீழே தாவ துருபதர் எழுந்து அவனை தடுத்தார். அரவான் “அரசே, எங்கள் நாகர்குடி நெறிகளின்படி நாங்கள் அனைவருமே ஆணோ பெண்ணோ அல்லாதவர்களாகவே பிறக்கிறோம். ஆணென்றும் பெண்ணென்றும் எங்களை நாங்களே சூடிக்கொள்கிறோம். எங்கள் குடிவழக்கப்படி ரோகிணி தன்னை பெண் என உணர்கிறாள் எனில் அவள் பெண்ணே. அவளை மணப்பதில் எப்பிழையும் இல்லை” என்றான்.

“இது ஷத்ரிய நிலம். இங்கே ஆணிலியை ஆண்கள் மணப்பதில்லை” என்று துருபதரால் தடுக்கப்பட்டு அப்பால் நின்ற பீமன் கைநீட்டி கூவினான். “ஆம், ஆனால் இந்த மணமே என் குடியின் ஏற்புக்காகத்தான் செய்யப்படுகிறது” என்றான் அரவான். “இங்கு நான் நுழைந்தபோதே அவளை கண்டேன். அப்போதே அவள் எனக்கு மிக அணுக்கமானவள் என்னும் எண்ணத்தை அடைந்தேன். முற்பிறப்பின் எச்சம் ஒன்று எங்கள் நடுவே உள்ளது என எண்ணுகிறேன்.” சகதேவன் “ஆம், உன் பிறவிநூலை நான் கணித்துள்ளேன். உனக்கு மனைவி உண்டு, மைந்தர் இல்லை என்பதே நான் கண்டது” என்றான்.

“வாயை மூடு! உன் பிறவிநூல் குவியலை அள்ளி தீவைப்பேன்… அறிவிலி!” என பீமன் சகதேவனை நோக்கி சீறினான். துருபதர் “அவன் சொல்வது மெய்தான், பாண்டவரே. அவன் குடியில் அது வழக்கமென்றால் நாம் எப்படி மறுக்கமுடியும்?” என்றார். “அறிவிலிகள்…. வீணர்கள்” என்று நிலத்தில் துப்பிய பின் பீமன் வெளியே செல்ல முற்பட “மந்தா, அவைமேடையில் அமர்க!” என்றார் யுதிஷ்டிரர். “இங்கு நான் இருக்க விழையவில்லை. இது பித்தர்களின் கூட்டம் போலிருக்கிறது” என்றான் பீமன். “அமர்க, இது என் ஆணை!” என்றார் யுதிஷ்டிரர். பீமன் பற்களைக் கடித்து தன் தொடையை அறைந்தபடி எடையுடன் பீடத்தில் அமர்ந்து கைகளை கோத்துக்கொண்டான்.

யுதிஷ்டிரர் “அது அவன் விருப்பம் என்றால் அதுவே நிகழ்க! மணம் எவ்வகையில் எங்கு நிகழவேண்டும்?” என்றார். “நமக்கு பொழுதில்லை. இப்போதே அந்தி எழுந்துவிட்டது. நாளை புலரிமுதல் படைநிலை அமைக்கத் தொடங்கவேண்டும்… இங்கேயே மணம்நிகழட்டும். மூத்தோரும் அரசரும் கூடிய அவை அதற்கு பொருந்துவதே” என்றார் துருபதர். யுதிஷ்டிரர் “களத்தில் மணம் நிகழ்வதற்கென ஏதேனும் முறைமைகள் உண்டா, பாஞ்சாலரே?” என்றார். “களத்தில் மணம் நிகழ்வதில்லை. ஆனால் அரிதாக படைகள் தங்கும் ஊர்களில் மணம் நிகழ்வதுண்டு. படைக்கு வந்த அந்தண மூத்தவர் அதை முன்னின்று நிகழ்த்துவார்” என்றார். “அதற்கென தனி முறைமைகள் உண்டா என தெரியவில்லை. அந்தணர் அறிந்திருப்பார்.”

யுதிஷ்டிரர் “ஆம், அவ்வாறே ஆகுக! அந்த ஆணிலியை அழைத்து வருக! திருமணத்துக்கான அனைத்தும் ஒருங்குக!” என்றார். ஏவலர்தலைவன் தலைவணங்கி வெளியே சென்றான். அவனுடன் ஸ்வேதனும் சங்கனும் சென்றார்கள். அவர்கள் செல்வதை அவை ஓசையவிந்து நோக்கி அமர்ந்திருந்தது. உத்தரன் மீண்டும் தன்னையும் சூழலையும் உணர்ந்தான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 70

tigயுதிஷ்டிரரின் அவைக்குள் நுழைகையில் உத்தரன் தன் உடல்முழுக்க எடைமிக்க களைப்பை உணர்ந்தான். உள்ளே யுதிஷ்டிரரும் பிறரும்கூட அத்தகைய களைப்புடன் இருப்பதாகத் தோன்றியது. மதுக்களிப்பில் அகம்குழைந்து நாக்குழறி பேசிக்கொண்டிருப்பவர்களின் கூட்டம்போல அங்கிருந்த பேச்சொலிகள் முதற்செவிக்கு தோன்றின. அவன் உள்ளே நுழைந்ததும் அங்கே அமைதி உருவாகியது. அது அவன் உடலில் உருவாக்கிய கூச்சத்துடன் தலைவணங்கினான். அவனுக்குப் பின்னால் வந்த திருஷ்டத்யும்னன் தலைவணங்கி தன் இருக்கையை அடைந்து அமர்ந்தான். உத்தரன் “அஸ்தினபுரியின் அரசர் திரும்பிச்சென்றுவிட்டார், அரசே” என்றான்.

“நம் படைகளின் உளநிலை என்ன?” என்றார் யுதிஷ்டிரர். அதிலிருந்த பொருளின்மையால் உத்தரன் பேச்செழாமல் ஆனான். உரத்த குரலில் “வேறென்ன? நம் படைகள் உண்டாட்டுக்கு ஒருங்கியிருக்கின்றன. பெண் கிடைக்குமா என கேட்க விழைகின்றன, அவ்வளவுதான்” என்றான் பீமன். “இதைப்பற்றி இன்று முழுக்க இங்கிருந்து பேசுவோம். போர் தொடங்கும்போது அவர்களின் கதைகளுக்கு முன் மண்டையை கொண்டு கொடுப்போம். குமிழி உடைத்து விளையாடும் குழந்தைகள்போல அவர்கள் மகிழட்டும்.” யுதிஷ்டிரர் எரிச்சலுடன் “போதும், மந்தா!” என்றார். “அப்படியென்றால் இனி என்ன செய்யவேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள். இனி எவரும் கவலையையும் சோர்வையும் இங்கே பேசவேண்டியதில்லை” என்று பீமன் சொன்னான்.

“ஆம், அதையே நானும் எண்ணுகிறேன்” என்றான் சகதேவன். “நாம் இனி சொல்ல என்ன உள்ளது? இளைய யாதவர் சொல்லட்டும். இனி வஞ்சினங்களுக்கெல்லாம் இடமில்லை. நமக்கு பொழுதே இல்லை” என்றார் துருபதர். அனைவரும் இளைய யாதவரை பார்க்க அவர் அதே விலகிய நோக்குடன் அமர்ந்திருந்தார். “இளைய யாதவர் இத்தருணத்தில் உரிய வழியொன்றை சொல்லவேண்டும்” என்றான் நகுலன். இளைய யாதவர் காற்றில் திரையோவியம் அசைவதுபோல உயிர்கொண்டு “ஆம், உடனே ஏதேனும் செய்தாகவேண்டும்” என்றார். பின்னர் “இங்குள்ள நாம் போர்புரிந்து நெடுங்காலமாகிறது. தொடர்ந்து போரிலிருக்கும் குடிகளில் இருந்து எவரேனும் அவையிலிருந்தால் அவர்களிடம் பேச விழைகிறேன்” என்றார்.

எவரும் எழவில்லை. துருபதர் “எப்போதும் போரிலிருப்பவர்கள் என்றால் பாணாசுரரின் அசுரகுடியினர்தான்” என்றார். “அவர்கள் தங்கள் உடன்குருதியினரிடம்தான் பெரும்பாலும் பூசலில் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதேனும் தெரிந்திருக்கும்” என்றார் இளைய யாதவர். “ஆம், அது ஒரு வழி” என்றான் திருஷ்டத்யும்னன். “பாணாசுரரின் படையிலுள்ள மூத்த படைத்தலைவரை அழைத்துவருக!” என ஆணையிட்டார் யுதிஷ்டிரர். “நிஷாதர்களான மல்லர்களும் அசுரகுலத்தவரும் தொடர் போர்களில் இருப்பவர்கள். அவர்களின் தலைவர்களும் வரட்டும்” என்றார் இளைய யாதவர்.

ஏவலன் சென்றபின் தனக்குத்தானே என “நல்லவேளையாக அனைத்து மூத்த படைத்தலைவர்களையும் இங்கே அவைகூடலுக்கு வரச்சொல்லி ஆணையிட்டிருந்தேன். அருகில்தான் இருக்கிறார்கள்” என்றார். அவையில் ஒவ்வாமை உருவாக்கும் அமைதி நிலவியது. உத்தரன் பெருமூச்சுவிட்டு உடல்தளர்த்தி அமர்ந்தான். “நம் இளையோர் அனைவரும் வரட்டும். அவர்களுக்கும் ஏதேனும் தோன்றலாம். பொதுவாக இளையோர் ஊக்கநிலையில் இருப்பவர்கள். ஊக்கத்தை தக்கவைக்கும் கலை அறிந்தவர்கள்” என்றார் யுதிஷ்டிரர். “ஆம், அதுவும் நன்றே” என்ற திருஷ்டத்யும்னன் திரும்பி அவைஏவலனிடம் “இளவரசர் அனைவரும் வருக!” என்றான்.

ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். பிரதிவிந்தியனும் சுதசோமனும் சுருதகீர்த்தியும் சதானீகனும் சுருதசேனனும் முதலில் வந்தனர். யௌதேயனும் நிர்மித்ரனும் தொடர்ந்து வந்தனர். ஸ்வேதன் அரவானுடன் வந்து அமர்ந்தான். சங்கன் தனியாக வந்தான். திருஷ்டத்யும்னனின் மைந்தர்களும் சாத்யகியின் மைந்தர்களும் வந்தார்கள். அசுரர்களும் அரக்கர்களும் நிஷாதர்களும் கிராதர்களுமாக மெல்ல அவை நிறைந்தது. மேலும் வந்த இளையவர்கள் பின்னால் சுவர்சாய்ந்து நின்றனர். மேற்கு நிஷாதஅரசின் ஹிரண்யநாபனும் அவன் இளையோன் ஹிரண்யபாகுவும் உத்தரனின் அருகே வந்து நின்றார்கள். மைய நிஷாதநிலத்து அரசர் மணிமானையும் அவர் மைந்தர் மணிகர்ணனையும் அவன் கைவீசி அருகழைத்தான். அவர்களுடன் கீழ்நிஷாதநிலத்து அரசர் தண்டதரனும் அவர் மைந்தர் சார்ங்கதரனும் அவனருகே வந்து நின்றனர்.

அவையில் மூச்சொலியே முழங்கத் தொடங்கியது. “அபிமன்யூ எங்கே?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “விற்பயிற்சியில் இருக்கிறார், அழைத்துவரச்சொல்லி தூதனை அனுப்பியிருக்கிறேன்” என்றான் யௌதேயன். அனுபநாட்டு மூதரசர் விருத்தஷர்மரும் அவர் மைந்தர் வசுதனரும், இளையோன் நீலனும் உள்ளே வந்தனர். தொடர்ந்து அபிமன்யூ மூச்சிரைப்புடன் உள்ளே வந்து தலைவணங்கி பின்னால் சென்று நின்றான். அவை நிறைந்ததைக் கண்ட யுதிஷ்டிரர் “இளைய யாதவர் அவர் விழைவதை உசாவலாம்” என்றார். இளைய யாதவர் “ஆம்” என அசைந்து அமர்ந்தார். முகமன் இன்றி நேரடியாகவே பேசலானார். “மூத்த போர்வீரர்களே, நீங்கள் இதற்குள் அறிந்திருப்பீர்கள். நம் படைகள் ஊக்கமழிந்துள்ளன. போர் வரக்கூடும் என்ற நம்பிக்கையை அனைவரும் இழந்துள்ளனர். களியாட்டுநிலை கொண்டிருக்கிறார்கள். இப்படியே இவர்களை நாம் போருக்கு கொண்டுசெல்ல இயலாது. நாளை மறுநாள் புலரியில் அவர்கள் போருக்கு பொழுதுகுறித்துச் சென்றிருக்கிறார்கள்.”

“ஆம்” என்றார் பாணாசுரரின் அமைச்சரான சுபூதர். “நமது படைகள் முதுகொடிந்த மலைப்பாம்புபோல கிடக்கின்றன.” உத்தரமல்லநாட்டு தீர்க்கபிரக்யர் “அஸ்தினபுரியின் அரசர் செய்த அந்த சூழ்ச்சியை நாங்களும் செய்வதுண்டு. எதிரிகுடியின் தெய்வத்தையோ மூதாதையையோ அவர்களுக்குள் புகுந்து தொழுதுவருவோம். அவர்களின் வஞ்சத்தை அது அணையச்செய்யும், போர்விசை குறையும். கூடவே நம்முடைய தன்முனைப்பை அவர்களுக்கு காட்டும். அது அவர்களை உள்ளூர அஞ்சவும் வைக்கும்.” என்றார். அசுரகுலத்து அரசர் ஹிரண்யகட்கர் “அவர் போருக்கு நாள்குறித்துச் சென்றது உச்சகட்ட சூழ்ச்சி. இனி போரே நிகழாது, நிகழ்ந்தால் வெறும் கொலையாட்டு மட்டுமே” என்றார்.

“இந்நிலை உங்களுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்?” என்றார் இளைய யாதவர். அவர்கள் அந்த நேரடி வினாவால் குழம்பி தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். “சொல்க!” என்றார் இளைய யாதவர். “எங்கள் குடிகளுக்குள் களிப்போர் அடிக்கடி நிகழும். சிலதருணங்களில் எங்கள் வீரர்கள் நிகழ்வது களிப்போர் என்ற உளநிலையிலேயே இருப்பார்கள். அவர்களை அதிலிருந்து மீட்பது கடினம். அவர்கள் செவிகொள்வதை நிறுத்திவிட்டிருப்பார்கள். பேசி புரியவைக்க முடியாது” என்றார் அசுரகுலத்து அரசர் ஹிரண்யகட்கர். “அதற்கான பொழுதும் போர்த்தருணங்களில் நமக்கு இருக்காது. அந்நிலையில் ஒரு அருநிகழ்வுதான் நமக்கிருக்கும் ஒரே வழி. அனைத்துப் படையினரும் இடியுடன் மின் வந்து தொட்டதுபோல் அதை உணர்வார்கள். சொல்லின்றியே அவர்களை அது கிளர்ந்தெழச் செய்யும். இனி பிறிதொன்றில்லை என்ற உறுதிப்பாட்டை அளிக்கும்.”

“என்ன செய்வீர்கள்?” என்றார் இளைய யாதவர். “எண்ணவும் கடினமானதை. எண்ணினால் உளம் நடுங்குவதை” என்றார் ஹிரண்யகட்கர். “நினைவில் எழுபவை பல. எதிர்த்தரப்பிலிருந்து சிறைபிடித்துக் கொண்டுவந்து பணயப்பொருட்களாக வைத்திருந்த படைவீரர் நூற்றுவரை படைமுகப்பில் வைத்து தலைவெட்டி குவித்தோம் ஒருமுறை. அவர்களின் ஊர்களுக்குள் புகுந்து குழந்தைகளும் பெண்டிரும் துயிலும் வீடுகளுக்கு தீவைத்து சாம்பலாக்கிவிட்டு மீண்டோம். அவர்களின் குடிநீரில் நஞ்சு கலக்கி கொன்று அவர்களின் காதுகளைக் கொய்து மாலையாக்கி அணிந்துகொண்டு நான் ஒருமுறை தேரிலெழுந்து படைமுன் தோன்றியிருக்கிறேன். எதிர்த்தரப்பில் எழும் பெருவஞ்சம் நம்மில் ஒரு துளியைக்கூட எஞ்சவிடாது என்று தெரிந்தபின் நம் படைவீரர் துணிந்துவிடுவார்கள்.”

பாணாசுரரின் அமைச்சர் சுபூதர் “எங்கள் குருதிக் குடிகளுக்குள் போர் நிகழ்வதுண்டு. தங்கள் உற்றாரும் உறவினரும் மறுபக்கம் இருக்கக் கண்டு உளம் சோர்வுறுவர். தங்கள் அரசர்களும் குடித்தலைவர்களும் தங்கள் குருதியினர் ஒருவரை ஒருவர் கொன்றுகொள்வதை ஏற்க மாட்டார்கள். ஆகவே இறுதியில் எப்படியும் இப்போர் சொல்லுறுதியில் நிகர்நிலை கொண்டு நின்றுவிடும் என எண்ணிக்கொள்வார்கள். அதுவே இப்போது இங்கே படைகளில் திகழும் எண்ணம்” என்றார். “சுபூதரே, உங்கள் அசுரகுடியினர் இப்போது அவ்வாறு ஐயம் கொண்டுள்ளனரா?” என்றார் இளைய யாதவர். அவர் மறுமொழி சொல்லவில்லை. காரூஷ நிஷாதகுடித் தலைவர் அஷ்டஹஸ்தர் “ஆம், அரசே. எங்கள் குடியினர் ஐயம்கொண்டுள்ளனர்” என்றார்.

யுதிஷ்டிரர் சினத்துடன் “என்ன சொல்கிறார்கள்?” என்றார். “ஷத்ரியர்களும் அரசகுடியினரும் நேருக்குநேர் போரிடமாட்டார்கள் என்பது பேச்சு. வேண்டுமென்றால் தங்கள் தரப்புகளின் ஆற்றலை காட்டிக்கொள்ளும்பொருட்டு ஒரு சிறு போர் இங்கு நிகழும், அதில் அசுரரும் நிஷாதரும் மடிவார்கள். தங்கள் ஆற்றலை நிறுவிக்கொண்டபின் அரசகுடியினர் அமைதிப் பேச்சுக்கு என அமர்வர். சொல்லுறுதிச் சாத்திட்டபின் தோள்தழுவிக்கொள்வார்கள். பகைமறந்து கண்கனிவார்கள். இரு அரசர்களும் ஒருவரோடொருவர் காட்டும் நட்பும் கனிவும் அதையே காட்டுகின்றன என்று படைகள் எண்ணுகின்றன” என்றார் காரூஷ நிஷாதகுடித் தலைவர் அஷ்டஹஸ்தர். யுதிஷ்டிரர் “அவ்வெண்ணத்தை அகற்ற நீங்கள் என்ன செய்தீர்கள்? நான் அறியவிழைவது அதையே” என்றார். சில கணங்களுக்குப்பின் “நானும் அவ்வண்ணம் ஐயம்கொண்டுள்ளேன், அரசே” என்றார் அஷ்டஹஸ்தர்

யுதிஷ்டிரர் சொல்லவிந்தார். அவர் உடல் பதறிக்கொண்டிருப்பதை காணமுடிந்தது. “இது பெரும் குற்றச்சாட்டு. என் நேர்மையை மறுக்கிறீர்கள். என் சொற்களை புறந்தள்ளுகிறீர்கள்” என்றார். அஷ்டஹஸ்தர் மறுமொழி சொல்லவில்லை. உரத்த குரலில் “வேறு எவர் அவ்வாறு எண்ணுகிறீர்கள்? இந்த அவையில் வேறு எவருக்கேனும் அவ்வெண்ணம் உள்ளதா?” என்றார் யுதிஷ்டிரர். அவையில் அமைதி நிறைந்திருந்தது. அந்த அமைதி யுதிஷ்டிரரை அச்சுறுத்தியது. “என்ன சொல்கிறீர்கள்? அனைவரும் அந்த எண்ணத்துடன் உள்ளீர்கள் என்றா நான் கொள்வது?” என்றார். அரக்கர் குலத்தலைவர் வக்ரசீர்ஷர் “அரசே, இதில் தங்கள்மேல் நம்பிக்கையோ ஐயமோ கொள்வது என்பது எழவே இல்லை. இத்தகைய அரசுசூழ்கைகள் ஷத்ரியக் குடிகளில் இயல்பாக நிகழ்வனவே. இல்லை என நீங்கள் மறுக்கமாட்டீர்கள்” என்றார். யுதிஷ்டிரரின் உடற்தசைகள் தளர்வதை காணமுடிந்தது. பெருமூச்சுடன் அவர் தலையை அசைத்தார். அவையில் பலவகையான உடல் அசைவுகளின் ஓசைகள் எழுந்தன.

அசுரர் குடித்தலைவர் காகர் “அது தங்கள் நேர்மை மீதான நம்பிக்கையின்மையால் அல்ல அரசே, தங்கள் அறம் மீதுள்ள நம்பிக்கையால் எழும் எண்ணம். ஒருபோதும் உடன்குருதியர் போரிடலாகாதென்று எண்ணியவர் நீங்கள். மண்ணுக்காகவும் பெண்ணுக்காகவும் பிதாமகரையும் ஆசிரியர்களையும் உடன்பிறந்தவர்களையும் எதிர்க்கலாகாதென்று இறுதிக்கணம் வரை எண்ணியவர். இன்னும் ஒரு வாய்ப்பு அவ்வாறு அமையும் என்றால் அதை தவறவிடமாட்டீர்கள்” என்றார். யுதிஷ்டிரர் அந்த மறுமொழியால் சற்று அமைதிகொண்டார். ஆனால் முகம் சலிப்பும் கசப்பும் கொண்டது போலிருந்தது. பீமன் “இதை நான் எதிர்பார்த்திருந்தேன், பலமுறை இதையே சொல்லவந்தேன்” என்றான். யுதிஷ்டிரர் “மந்தா…” என்று கெஞ்சும் குரலில் சொல்ல பீமன் சினத்துடன் தலையை அசைத்தான்.

“நான் என்ன செய்யவேண்டும்? உங்கள் ஊக்கம் கெடாமலிருக்க நான் ஆற்றவேண்டியது என்ன?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். அவர்கள் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர். “நான் உங்கள் படைகளை சந்திக்கிறேன். அவர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். இது பெண்பழி தீர்க்க எழுந்த படை. அவ்வஞ்சம் அணையாமல் போரில் பின்வாங்குதல் என்பதில்லை.” பின்னிரையிலிருந்து பாணாசுரரின் மைந்தனான சக்ரன் “ஆனால் அது அரசியின் ஆணை மட்டுமே. அதை அரசி உரைப்பதுவரை உங்கள் குரல் எழவில்லை என நாங்கள் அறிவோம். ஷத்ரியகுடியினர் ஆண்களாலானவர்கள். அங்கு பெண்வஞ்சம் ஒரு பொருட்டே அல்ல என்பது தொல்கூற்று” என்றான். யுதிஷ்டிரர் ஏதோ சொல்வதற்காக வாயை அசைத்தார். பின்னர் கையசைத்து சோர்வுடன் சாய்ந்துகொண்டார்.

அவையில் இருந்த அமைதியின் எடை மிகுந்து வந்தது. அனைவரும் இளைய யாதவர் ஏதேனும் சொல்வார் என எண்ணியவர்களாக ஓரவிழியால் அவரை நோக்கி அமர்ந்திருந்தனர். திருஷ்டத்யும்னன் இளைய யாதவரை ஒருமுறை நோக்கியபின் எழுந்து “படைகள் நம்பிக்கை இழந்துள்ளன என்பது கண்கூடு. நம்பிக்கையிழப்பு இப்போது களியாட்டாக தோன்றுகிறதென்றாலும் போர்முரசு ஒலிக்குமென்றால் ஒரே கணத்தில் உளச்சோர்வாக மாறிவிடும். அது நமக்கு பேரழிவு” என்றான். “நாம் போருக்கு மெய்யாகவே எழுந்துள்ளோம் என்றும் முழுவெற்றியாலன்றி வேறெதனாலும் அமையமாட்டோம் என்றும் படைகளுக்கு சொல்லியாகவேண்டும். எத்துணை விரைவாக சொல்கிறோமோ அத்துணை நன்று. செவிகொண்டதை அவர்களின் உளம் அறியவேண்டும். அதிலிருந்து அவர்களின் எண்ணங்கள் ஊறியெழவேண்டும்… நமக்கு பொழுதில்லை. உடனே நாம் சொல்லியாகவேண்டும்.”

“இனி சொல்ல முடியாது. ஒரு படைமுன் எத்தனைமுறை வஞ்சினம் உரைப்பது?” என்று பீமன் உரத்த குரலில் சொல்ல திருஷ்டத்யும்னன் தயங்கினான். கெஞ்சும் குரலில் “மூத்தவரே…” என்றான் சகதேவன். பீமன் “ஆம், இனி எப்படி படைகளுடன் பேசுவீர்கள்? படைத்தலைவர்களிடம் நீங்கள் சொன்ன சொல் கசிந்திறங்கிப் பரவி கீழ்நிலை வீரன் செவிவரை சென்றடைய ஐந்து நாட்களாகும். அப்போது சொல்சென்று சேர தலையிருக்காது” என்றான். திருஷ்டத்யும்னன் “நான் சொல்ல வருவதும் அதைத்தான், பாண்டவரே. இனி சொற்களால் பயனில்லை. எவ்வகையிலேனும் நாம் படைகளுக்கு அறிவித்தாகவேண்டும், நாம் முற்றிலும் துணிந்துவிட்டோம் என்று” என்றான்.

“பாஞ்சாலரே, நீர் சொல்வதன் பொருளின்மை உங்களுக்கு புலப்படவில்லையா?” என்று பீமன் கை நீட்டியபடி முன்னால் வந்தான். “இங்கே நாம் போரையும், முழுவெற்றியையும், பெண்பழி தீர்ப்பதையும் பற்றியெல்லாம் வேண்டியமட்டும் பேசிவிட்டோம். அவர்கள் அப்பேச்சே பொய் என எண்ணுகிறார்கள். அது நம் மெய்யான நோக்கங்களை மறைத்துக்கொள்ளும் சூழ்ச்சி என நினைக்கிறார்கள். நமக்கு எதிரிமேல் ஆழ்ந்த பகை ஏதும் இல்லை என்றும் இது வெறும் படைவிளையாட்டே என்றும் கருதுகிறார்கள். நாம் மேலும் உணர்வெழுச்சியை காட்டலாம். மேலும் சொல்லொழுங்குடன் பேசலாம். நம் பேச்சு அழுத்தமும் விசையும் கொள்ளும்தோறும் நாம் மேலும் ஏமாற்றுக்காரர்காளாக தெரிவோம்.”

திருஷ்டத்யும்னன் கைவிரித்து “என்னால் சொல்லக்கூடுவதென ஏதுமில்லை. என் உள்ளமும் சோர்வடைகிறது” என்றபின் அமர்ந்தான். பீமன் கசப்புடன் நகைத்து “நம் அரசர் குடியறமெனும் பெரும்படைக்கலத்தை எடுத்து களம் நின்றிருக்கிறார். பிதாமகரும் ஆசிரியரும் வாழ்த்தியதும் அப்படைக்கலம் பலமடங்கு கூர்கொண்டுவிட்டது. நாம் இங்கே நம் தலைகளைக் காத்து நின்றிருப்போம். அது சென்று பகைவென்று மீளட்டும்” என்றான். “மூத்தவரே, சற்று அமர்க! அவை நிகழவிடுங்கள்” என்றான் சகதேவன். “இனி என்ன அவை? அனைவரும் கிளம்புங்கள். சென்று அறத்தை அணைத்துக்கொண்டு படுத்துத் துயிலுங்கள். நாளைமறுநாள் காலை தலைகளை கொண்டுசென்று கௌரவன் வாள்முன் வைத்து கண்களை மூடிக்கொள்ளுங்கள்… அறம் நாவில் தித்திக்கும்” என்றான் பீமன். சகதேவன் சீற்றம்கொண்டு ஓங்கி ஒலித்த குரலில் “சொல்லமைக, மூத்தவரே!” என்றபின் திரும்பி கைகூப்பி “இளைய யாதவரே, உங்களை அன்றி எவரையும் இத்தருணத்தில் நாங்கள் எண்ணவில்லை” என்றான்.

இளைய யாதவர் “நான் இத்தகைய தருணத்தை முன்னர் எதிர்கொண்டதே இல்லை” என்றார். “ஏனென்றால் இத்தகைய தருணம் முன்னர் இப்பாரதவர்ஷத்தில் அமைந்ததுமில்லை. இங்கே உள்ள இடர் என்னவென்றால் எவ்வகையிலும் ஒருவரோடொருவர் உறவில்லாத குடிகளின் திரள் ஒன்று களம்திரண்டுள்ளது. இப்படைகளில் நிற்பவர்களில் பெரும்பகுதியினருக்கு இங்கு வருவதற்குமுன் யுதிஷ்டிரர் எவரென்றே தெரிந்திருக்காது. வழக்கமாக ஷத்ரியப் படைகள் ஓர் அரசுக்கென கொடிக்கென வஞ்சினம் கொண்டு எழுந்து வந்தவையாக இருக்கும். அவர்கள் நிலமும் குலமும் காக்க படைகொண்டெழுவது தங்கள் கடன் என பிறவியிலேயே பயின்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றின்பொருட்டு களம்வந்துள்ளனர். அவை அவர்களுக்கு பிறவிமுதல் அளிக்கப்பட்ட இலக்குகள் அல்ல. கற்றவை, அளிக்கப்பட்டவை. ஆகவே ஐயம் எழுவது இயல்பே.”

அவர் என்ன சொல்லவருகிறார் என்று புரியாமல் அனைவரும் வெற்றுநோக்குடன் அமர்ந்திருந்தார்கள். “நீண்ட போர்ப்பின்னணி கொண்டவர் மூத்த பாஞ்சாலர். அவர் சொல்லட்டும், இத்தகைய தருணம் முன்னர் அவருக்கு முன் எழுந்ததுண்டா? அதற்கு என்ன செய்தார்கள்?” என்று இளைய யாதவர் கேட்டார். துருபதர் அமைதியின்மையுடன் அசைந்தமர்ந்து “படைமுகப்பில் தலைமைமீது படைவீரர் ஐயம் கொள்வது முன்பு நிகழ்ந்ததில்லை” என்றார். “ஆனால் படைவீரர் சோர்வுறுவதும் தங்கள்மேல் ஐயம்கொள்வதும் நிகழ்வதுண்டு. அத்தகைய தருணங்களில் பேச்சுக்களால் எப்பயனும் இல்லை. ஏனென்றால் படைநகர்வின் நாட்களில் எல்லாம் படைகள் கொம்பும் முழவும் கொடியும் அளிக்கும் ஆணைகளை ஏற்று பழகிவிட்டிருப்பார்கள். சொற்றொடர்களையும் கருத்துக்களையும் பொருளாக மாற்றிக்கொள்ளும் திறன் மறைந்திருக்கும். அவர்களை தூண்டுவது செயல்களே.”

“அசுரரும் நிஷாதரும் இங்கு சொன்னதே ஷத்ரியர்களும் செய்வது. படைத்திரளில் அமைந்தோர் அனைவரும் உடனடியாக அறிந்துகொள்ளும் ஒரு நிகழ்வு. அவர்களை நடுங்கச் செய்வது, கொந்தளிக்க வைப்பது. அதன் உட்பொருள் கிளர்ந்தெழுக என்னும் அறைகூவலாக இருக்கவேண்டும். இனி பின்னகர்தல் இல்லை என்னும் அறிவிப்பாக இருக்கவேண்டும். வெல்வோம் என்னும் நம்பிக்கையாக இருக்கவேண்டும். அத்தகைய ஒன்றை இயற்றுவதே ஒரே வழி” என்றார் துருபதர். “போர்முனையில் அது தனிப்பெரும் வீரமும் இணையிலா தற்கொடையுமே. படைவீரர் ஒவ்வொருவரும் அதை தானும் நடிப்பார்கள். அதனூடாக கிளர்ந்தெழுவார்கள். அது நிறுவப்பட்ட வழி.”

“எழுபது ஆண்டுகளுக்கு முன்பு உசிநாரர்களுடனான போரில் அவ்வாறு படைகள் சோர்ந்தன. ஏனென்றால் பாஞ்சாலத்தைவிட இருமடங்கு அவர்களின் படை. என் சிறுதந்தையாகிய பார்த்திபர் வாளை உருவியபடி போர்க்கூச்சலுடன் எதிரிமேல் பாய்ந்தார். வெட்டிவீழ்த்தியபடி முன்னால் சென்றார். எழுபதுபேர் அவர் வாளால் களம்பட்டனர். இறுதியில் அவர் வீழ்ந்தார். குருதியில் நனைந்த உடலுடன் அறுந்து தொங்கிய கைகளுடன் தேர்ப்பீடத்தில் அமர்ந்து எங்களை நோக்கி வெற்றிவேல் வீரவேல் என கூவினார். அடுத்த கணம் அவர் தலை அறுந்து கீழே விழுந்தது. உடல் சரிந்து தேரிலிருந்து நிலத்தில் விழுந்து துடித்தது. எங்கள் படை வெற்றிவேல் வீரவேல் என கூவியபடி பொங்கி முன்னெழுந்தது. நாங்கள் வென்றோம்.”

பீமன் தன் தோளை ஓங்கி அறைந்த ஒலிகேட்டு அவை திடுக்கிட்ட்து. “ஆம், அதுவே வழி…” என்று கூவியபடி அவன் முன்னெழுந்தான். “நான் செல்கிறேன்… நான் முன்னெழுந்து சென்று காட்டுகிறேன்.” யுதிஷ்டிரர் “வாயைமூடு, மூடா” என பற்களைக் கடித்தபடி சீறினார். பீமன் சீற்றத்துடன் திரும்பி “வேறு எவர் வாளேந்தி முன் சென்றாலும் இங்கு எழுந்துள்ள ஐயம் விலகாது. நாம் பிறரை வைத்தாடுகிறோம் என்பதே இவர்கள் கொண்டுள்ள எண்ணம். நம் ஐவரில் ஒருவர் எழுந்து சென்றாகவேண்டும்… நம் குருதி களத்தில் விழுந்தாகவேண்டும்… அல்லது நம் மைந்தரில் ஒருவர்.” பீமன் கைகளை தூக்கினான்.  வெடித்தெழுந்த குரலில் “ஆம், நம் மைந்தரில் ஒருவர், நம் குருதியினர். அதன் பின் எவருக்கும் ஐயமிருக்காது” என்றான்.

“நான் செல்கிறேன், தந்தையே” என்று சுதசோமன் கூவினான். தோளில் அறைந்து கூவியபடி சர்வதன் அரசமேடை நோக்கி சென்றான். “நான் செல்கிறேன்… நான் காட்டுகிறேன் வீரமென்றும் தற்கொடையென்றும் சொல்வதற்கென்ன பொருள் என்று…” சுருதகீர்த்தி “கதைவீரர் செல்வதில் பொருளில்லை. நான் செல்கிறேன், ஒரு நாழிகைப்பொழுது அவர்களின் முழுப்படையையும் கலங்க வைப்பேன். ஆயிரம் உடல் சரியாமல் நான் விழமாட்டேன்… ஐயமே தேவையில்லை” என்றான். அபிமன்யூ “என்னால் மட்டுமே இதை செய்ய முடியும் என்று நீங்கள் அனைவரும் அறிவீர், தந்தையே” என்றான். சதானீகனும் சுருதசேனனும் “நாங்கள் செல்கிறோம்… எங்களை அனுப்புங்கள்” என்று கூவியபடி அவைமேடையை அணுகினர்.

இளைய யாதவர் கைதூக்கி “பொறுங்கள்… இளமைந்தர் சென்று களம்நின்று வீரமென்ன என்று காட்டலாம். நம் மைந்தர் களப்பலியானால் அதன்பின் மறு சொல்லே இல்லை. நாம் எண்ணுவது குருதியை மட்டுமே என களத்திலிருக்கும் அனைவருக்கும் அறிவிப்பதுதான் அது” என்றார். “ஆனால் எதிர்முனையில் இருப்பவர் பிதாமகர் பீஷ்மர். அவர் நம் மைந்தருக்கு எதிராக படைக்கலம் எடுக்கமாட்டார். அவர்களை அவர் எதிர்க்கவில்லை என்றால், கௌரவப்படைகளை இவர்கள் கொன்று அழித்த பின்னரும் திரும்பிவர ஒப்பினார் என்றால் என்ன ஆகும்?”

அவையினர் திகைக்க பிரதிவிந்தியன் “நான் அதை எண்ணினேன். பிதாமகர் பீஷ்மர் அந்த இளமைந்தனை நோக்கி புன்னகைத்து வாழ்த்தி அனுப்பினால் அவர்கள் அறத்தால் பெருகுவர். பலமடங்கு ஆற்றல் கொண்டவர்களாக தெரிவர். நாம் கேலிக்குரியவர்களாவோம்” என்றான். “இன்னொன்றும் நிகழலாம். பிதாமகரை எதிர்க்க அஞ்சி பாண்டவர்கள் தங்கள் மைந்தர்களை அனுப்புகிறார்கள் என்று எண்ணப்படலாம். அது இவர்கள் எண்ணுவதை மேலும் உறுதிப்படுத்தும்…” யுதிஷ்டிரர் “போதும்” என சலிப்புடன் கைகாட்ட பீமனும் சோர்வுடன் கைகளை தொங்கவிட்டு பின்னகர்ந்தான்.

“இங்கு நிஷாதர்களும் கிராதர்களும் உள்ளனர். அவர்கள் சொல்லட்டும், என்ன செய்வதென்று” என்றார் இளைய யாதவர். “அவர்களின் குடிகளில் இத்தருணத்தில் என்ன செய்வார்கள்?” எவரும் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்க, இது நமக்கு இறுதி வாய்ப்பு!” என்றார் இளைய யாதவர். பின்நிரையில் இருந்த சம்பராசுரரின் மைந்தர் கீர்த்திமான் “எங்கள் வழிகள் உங்களுக்கு உவப்பானவை அல்ல” என்றார். “அதை பேசவேண்டாம்” என்று மூத்த கிராதமன்னர் கூர்மர் திரும்பி அவரை அடக்கினார். “அவர் சொல்லட்டும்… சொல்லுங்கள், கிராதரே” என்றார் இளைய யாதவர்.

“எங்கள் குடியில் போருக்குக் கிளம்புவதற்கு முன் எங்கள் மைந்தர்களில் ஒருவரை நாங்களே போருக்குரிய தெய்வமாகிய ரக்தைக்கு கழுத்தறுத்து பலிகொடுப்போம். அத்தனை போர்வீரர்களும் சூழ்ந்திருக்க இது நிகழும்… அம்மைந்தனின் குருதி எங்களால் தவிர்க்கமுடியாத ஆணை. எங்களுக்கே நாங்கள் இரக்கம் காட்டிக்கொள்ளவில்லை, எனவே எதிரிக்கு எவ்வகையிலும் இரக்கம் காட்டமாட்டோம் என்னும் அறிவிப்பு அது. எங்கள் மைந்தர்கள் அனைவரையும் போர்முன் நிறுத்தும் கட்டாயத்தை அது எங்களுக்கு அளிக்கும். எதிரியின் இளமைந்தர்களைக்கூட தயங்காமல் கொல்லும் ஆற்றலை எங்கள் போர்வீரர்களுக்கு கொடுக்கும். அம்மைந்தனின் குருதி நினைவில் இருக்கும்வரை போரில் எந்நிலையிலும் அஞ்சி பின்வாங்க முடியாது. எதன்பொருட்டும் எதிரியுடன் போர்முறிவு செய்துகொள்ள இயலாது… முழுவெற்றியோ முற்றழிவோ மட்டும்தான் என்னும் அறுதி முடிவு அது” என்றார் கீர்த்திமான்.

அவை திகைத்து அமர்ந்திருக்க அரவானின் குரல் எழுந்தது. “அதை எங்கள் குடியில் பிறிதொரு வகையில் செய்வார்கள். களத்தில் முதன்மைவீரன் ஒருவன் தன் கழுத்தை தானே அறுத்து தற்கொடை அளிப்பான்.” அனைவரும் திடுக்கிட்டு திரும்பி அவனை பார்த்தனர். புருவம் சுருங்க முகம் சுளித்து “என்ன சொல்கிறாய்?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “அவன் பெரும்பாலும் அரசனின் இளைய மைந்தனாக இருப்பான். முதற்குருதியை தன் குடியிலிருந்து அளிக்கும் அரசனின் ஆற்றல் அளவிறந்தது. அவன் சொல் மாற்றிலாதது” என்றான் அரவான். அர்ஜுனன் “இது அரசப்பேரவை, உங்கள் குடியவை அல்ல. நீ அமர்க!” என்று எரிச்சலுடன் சொன்னான்.

அரவான் தலைவணங்கி “தந்தையே, நான் இப்போரில் படைமுகப்பில் தலைக்கொடை அளிக்கிறேன்” என்றான். அவையில் மென்முழக்கம் எழுந்தது. அவன் சொற்களை உத்தரன் முதலில் செவிகொண்டாலும் உளம் தொடவில்லை. பின்னர் ஊசியால் குத்தப்பட்டதுபோல உடல் அதிர அதை உணர்ந்து திரும்பி அரவானை பார்த்தான். அவன் முகம் மலர்ந்திருந்தது. அவை தன் சொற்களை உள்வாங்கவில்லை என உணர்ந்த அரவான் “குருக்ஷேத்ரத்தில் முதலில் விழுவது என் குருதியாக அமையட்டும். என் குடிக்கும் எனக்கும் அது அழியாப் பெரும்புகழை அளிக்கட்டும்” என்றான். தன் இடையிலிருந்த சிறிய நாகக்குறுவாளை எடுத்துக் காட்டி “இது என் மூத்தார் எனக்களித்தது. இது என் கழுத்தை துணிக்கும் என்றால் அதைவிடப் பெருமை எனக்கில்லை” என்றான்.

உத்தரன் தன் இடத்தொடை துள்ளிக்கொண்டிருப்பதை உணர்ந்து கையால் அதை அழுத்திக்கொண்டான். மூச்சை பலமுறை இழுத்துவிட்டு தன்னை ஆற்றிக்கொண்டான். அவையில் அரவானின் முகம் மட்டும் தனித்துத் தெரிவதாக தோன்றியது.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 69

tigஉத்தரன் வெளியே நடந்தபோது சகதேவன் அவனுக்குப் பின்னால் வந்து தோள்தொட்டு “என்னுடன் வருக, விராடரே” என்றான். உத்தரன் அத்தொடுகையால் நெகிழ்வடைந்து “ஆம், ஆணை” என்றான். “கௌரவகுல மூத்தவர் என்னை பார்க்க வருகிறார். அவர் போருக்கு நாள்குறிக்க விழைகிறார் என்று அறிகிறேன். அதை நான் செய்யும்போது நீங்களும் உடனிருக்கவேண்டும்.” உத்தரன் விழிவினாவுடன் பேசாமல் நின்றான். புன்னகையுடன் “என் செயலுக்கு நீங்கள் சான்று” என்றான் சகதேவன்.

உத்தரன் “பாண்டவரே, அவ்வாறு நீங்கள் சான்றை உருவாக்கிக் கொள்ளவேண்டுமா? உங்கள் சொல் ஒருபோதும் பிழைக்காது என அறியாதோர் எவர்?” என்றான். “நேர்மையில் அனலோனுக்கு நிகரானவன் என்றாலும் பிறரை பாதிக்கும் செயல்களுக்கு உரிய சான்றுகளை வைத்திருக்கவேண்டும்” என்று சகதேவன் புன்னகைத்தான். “எவருக்காக இச்சான்று? உங்கள் மூத்தோருக்காகவா?” என்றான் உத்தரன். “முதன்மையாக படைகளுக்கு. பல்லாயிரம் விழிகளும் செவிகளும் கொண்ட பேருரு அது. பாண்டவகுடியின் படைகளுக்கு வெளியே நின்றிருப்பது விராடம். எங்கள் படைக்கூட்டின் அரசர்களில் ஒருவர் உடனிருப்பது நன்று” என்ற சகதேவன் “அத்துடன் இது என் மூத்தவருக்காகவும்தான். மானுட உள்ளத்தை அறிந்தவர்கள் அதை எந்நிலையிலும் முழுமையாக நம்பமாட்டார்கள்” என்றான்.

அவர்கள் வெளியே சென்று புரவிகளில் ஏறிக்கொண்டார்கள். சகதேவன் “நான் என் பாடிவீட்டுக்கு செல்கிறேன். நீங்கள் படைமுகப்புக்குச் சென்று கௌரவ மூத்தவரை முறைப்படி வரவேற்று என்னிடம் அழைத்து வாருங்கள். நிமித்திகன் தன் இடத்தில் காத்திருப்பதே முறை” என்றான். உத்தரன் தலைவணங்கினான். சகதேவன் தன் படைப்பிரிவை நோக்கி பிரிந்துசெல்ல அவன் நோக்கி நின்றான். என்ன நிகழ்கிறதென்றே அவனுக்கு புரியவில்லை. அனைத்தும் ஒருவகை கேலிக்கூத்துகளாக தோன்றின. பெருந்தன்மைகளை, நெறிச்சார்புகளை எவரிடம் காட்டிக்கொள்கிறார்கள்? ஒவ்வொன்றும் உயர்நடத்தையாகவும் போர்சூழ்ச்சியாகவும் ஒரேதருணத்தில் தோன்றும் விந்தைதான் என்ன?

அவன் படைமுகப்புக்குச் சென்றபோது அங்கே திருஷ்டத்யும்னன் ஏற்கெனவே காத்திருப்பதை கண்டான். அவன் அருகே சென்று வணங்கினான். திருஷ்டத்யும்னன் உளம் உடைந்தவன் போலிருந்தான். உடல் முழுமையாக தளர்ந்து முதுமை குடியேறியதுபோல தெரிந்தது. உத்தரன் “என்னிடம் அரசரை தன்னிடம் அழைத்துவரும்படி இளைய பாண்டவர் பணித்தார்” என்றான். “ஆம், அதை செய்ய என்னால் இயலாது. அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். நீங்கள் வந்தது நன்று” என்றான் திருஷ்டத்யும்னன்.

வெயில் ஏறிவந்தது. வியர்வை வழிய கண்கள் கூசின. விடாய் எழ உத்தரன் திரும்பி நோக்கினான். ஏவலன் கொண்டுவந்த நீர்க்குடுவையை வாயிலிருந்து எடுக்காமல் அருந்தினான். திருஷ்டத்யும்னன் விடாய்கொண்ட பறவைபோல தொண்டை அசைய சற்றே வாய் திறந்து நின்றிருந்தான். “நீர் வேண்டுமா?” என்றான் உத்தரன். அவன் வேண்டாம் என தலையசைத்தான். படைகள் வெயிலில் உருகியவைபோல வழிந்துகிடந்தன. அசைவில்லாதவை போலவும் அசைவன போலவும் விழிமயங்கச் செய்தன.

மறுஎல்லையில் முரசொலி எழுந்தது. “அவர்கள்தான்” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம்” என்று உத்தரன் சால்வையைச் சீரமைத்தான். திருஷ்டத்யும்னன் “என்னென்ன முறைமைகள் என்றே தெரியவில்லை. இவ்வகை நடத்தைகள் இதற்குமுன் போர்முனைகளில் இருந்திருக்காது… இதில் எவருக்கு உளநிலை பிறழ்ந்துள்ளது என்றே தெரியவில்லை” என்றான். படைவீரர்கள் அனைவருக்கும் என்ன நிகழ்கிறதென்று தெரிந்திருக்கிறது என்று உத்தரன் உய்த்துக்கொண்டான். அவர்கள் எப்படியோ செய்திகளை அறிகிறார்கள். உடல்களை இணைக்கும் நுண்வடிவ உள்ளம் ஒன்று அவர்களின் விழிசெவி கடந்து காற்றென ஒளியென சூழ்ந்திருக்கிறது.

திருஷ்டத்யும்னன் கைகாட்ட பாண்டவர் பக்கம் வரவேற்பு முரசுகள் முழங்கத் தொடங்கின. யானைகள் என கொம்புகள் பிளிறியடங்கின. மறுபக்கமிருந்து ஒற்றைத்தேர் அரவுக்கொடி பறக்க வெயிலில் ஒளிரும் செம்புழுதியை சிறகெனச் சூடியபடி வந்தது. அணுகும் பறவையின் அலகுபோல அதை இழுத்த ஒற்றைப்புரவி கழுத்தை முன்னால் நீட்டி கூர்கொண்டு பெருகியது. விரைவழிந்து சிறகுகள் மடக்கி நிலத்தமரும் பறவையென நின்றது. புழுதிமுகிலை காற்று பிரித்து தள்ளிச் சுழற்றி கொண்டுசென்றது. திருஷ்டத்யும்னன் கைகூப்பி வணங்கியபடி முன்னால் சென்றான். உடன் உத்தரன் நடந்தான்.

தேரிலிருந்து துரியோதனனும் துச்சாதனனும் கைகளைக் கூப்பியபடி இறங்கினர். துச்சாதனன் கையில் ஒரு மரவுரிப்பை வைத்திருந்தான். துரியோதனன் எளிய வெண்ணிற ஆடை அணிந்து தோல்கச்சை கட்டியிருந்தான். அணிகளேதும் இல்லாத கரிய உடல் வியர்வையில் நீராடிவரும் எருமைத்தோல் என மின்னியது. விழிகளும் பற்களும் மட்டும் வெண்மையுடன் தெரிந்தன. திருஷ்டத்யும்னன் துரியோதனனை அணுகி குனிந்து கால்தொட்டு சென்னிசூடி “வாழ்த்துக, மூத்தவரே!” என்றன். “நலம் சூழ்க!” என்று தலைதொட்டு வாழ்த்திய துரியோதனன் “பாஞ்சாலர் நலமாக உள்ளார் அல்லவா?” என்றான். “ஆம், நலம். அங்கு மூத்தவர் அனைவரும் நலமென எண்ணுகிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். துச்சாதனனிடம் சென்று தாள்தொட்டு வணங்கினான். அவன் திருஷ்டத்யும்னனின் தலைமேல் கைவைத்து வாழ்த்தினான்.

உத்தரன் அருகணைந்து வணங்கி “அஸ்தினபுரியின் அரசருக்கு வணக்கம். உங்கள் உடன்குருதியினரின் படைக்கு உங்கள் வாழ்த்துக்கள் அமைக!” என்றான். துரியோதனன் முகம் மலர்ந்து “விராடர்… நாம் களத்தில் சந்தித்திருக்கிறோம்” என்றான். “ஆம்” என்றபோது உத்தரன் முகம் சிவந்தான். “உங்களை அழைத்துச்செல்லும் பொறுப்பு இவருக்குரியது” என்றான் திருஷ்டத்யும்னன். “நன்று” என துரியோதனன் தன் பெரிய கையை உத்தரனின் தோள்மேல் வைத்தான். உத்தரன் என்னவென்றறியாமல் மெய்ப்பு கொண்டான். அவன் கால்கள் தளர்ந்தன. அக்கணம் தன்னுடன் சேர்ந்துகொள்ளும்படி துரியோதனன் அழைத்தால் சென்றுவிடுவோம் என்று தோன்றியது. ஏன்? அது வெறும்தொடுகை அல்ல. அத்தகைய அணுக்கத்தை அவன் எவரிடமும் உணர்ந்ததில்லை. அறியா இளமையில் விராடரிடம் அதை உணர்ந்திருக்கலாம். அது தந்தையின் தொடுகைதான். உளம்நிறைந்த கலப்பற்ற பேரன்பு திகழ்வதனாலேயே தெய்வச்சொல்போல் எண்ணும்தோறும் பொருள் நிறைந்தது.

இனி ஒருபோதும் இக்கணத்திலிருந்து என் உள்ளம் விடுபடப்போவதில்லை. எந்தையே, என் உளமுருகுவதை அறிவீர்களா? நான் என்றும் காத்திருந்தவர் நீங்கள் என்று உணர்ந்தீர்களா? அவன் விழிநீர் வந்த கண்களை சரித்து இமைகொட்டி உலரச்செய்தான். என்ன விந்தை இது! முழுப்பித்து. பித்து அன்றி வேறில்லை. ஒரு தொடுகையில் நான் முற்றாக என்னை இழந்திருக்கிறேன். இதை நானே நேற்று அறிந்திருந்தால் நகைத்திருப்பேன். ஆனால் இத்தொடுகை மானுடருக்குரியதல்ல. ஆம், இது தெய்வத்தின் தொடுகை.

துரியோதனன் “அன்று களத்தில் அஞ்சிக்கொண்டிருந்தீர். இன்று உம்மை வென்று எழுந்துவிட்டீர்… இனி நீர் வெல்ல ஏதுமில்லை” என்றான். “அரசே…” என்றபோது உத்தரன் குரல் உடைந்தது. “என்னை நீங்கள் ஒருமையில் அழைக்கலாம். உங்கள் தம்பியர் நூற்றுவரில் ஒருவனாக…” துரியோதனன் நகைத்து “தம்பியர் நூற்றுவரல்ல, அதனினும் பலர்” என்றான். உத்தரன் மீண்டும் மெய்ப்பு கொண்டான். துரியோதனன் அவன் தோளைப்பற்றி “நீர் எனக்கு கீசகரை நினைவுறுத்துகிறீர். நான் மணத்தன்னேற்பரங்குகளில் அவரை கண்டிருக்கிறேன். தோள்கோக்க விழைந்திருந்தேன். உமது முகம் அவருடையது” என்றான்.

அவர்கள் வந்த தேரில் உத்தரன் ஏறினான். முன்னோக்கு வீரர் வழிகாட்ட தேர் படைகளினூடாக செல்கையில் அவன் எங்கிருக்கிறோம் என்றறியாத பேருவகையில் உடல் திளைக்க நின்றுகொண்டிருந்தான். துரியோதனன் சூழ்ந்து நின்றிருந்த பாண்டவப் படைகளை நோக்கவில்லை. உத்தரன் ஒரு வீரனின் விழியை பார்த்தான். அதிலிருந்தது பணிவு என்று தெரிந்ததும் விழிகளை நோக்கிக்கொண்டே சென்றான். அவர்கள் நோக்குவது மானுடனை அல்ல, தெய்வ உருவை என்று தோன்றியதும் திரும்பி துரியோதனனை பார்த்தான். நிகர்கொண்ட உடல். செதுக்கப்பட்டதுபோல சீர்முகம். விழியொளி. அசைவுகளின் அமைதி. இவர் மானுடரே அல்ல என்றிருக்குமா? தெய்வமேதானா?

சகதேவனின் பாசறை முன் தேர் நின்றது. உத்தரன் இறங்கி நின்று தொழுது “வருக, அரசே!” என்றான். துரியோதனன் இறங்கியதும் துச்சாதனன் கூடவே இறங்கி நிழலென நின்றிருந்தான். உத்தரன் தன் விழிகளை சந்தித்ததும் துச்சாதனன் புன்னகைத்தான். உத்தரன் பதறி விலக்கிக்கொண்டான். தன் உள்ளத்திலெழுந்த நெகிழ்ச்சியை அவன் உணர்ந்துவிட்டான் என தெரிந்தது. அப்படி எத்தனையோ உள்ளங்களை பார்த்திருப்பான். சகதேவனின் குடில்முன் நின்றிருந்த நிர்மித்ரன் கைகூப்பியபடி அணுகினான். அவன் குனிந்து துரியோதனனின் தாள்தொட அவனை அள்ளி அணைத்தபடி “மெலிந்திருக்கிறாய்” என்றான். நிர்மித்ரன் தலைகுனிந்து “நாளும் படைக்கலப்பயிற்சி” என்றான். “உணவுண்பதற்கு என்ன? உண்பவர் இளைப்பதில்லை” என்றான் துரியோதனன். நிர்மித்ரனின் தோள்களை அழுத்தி “பயிற்சியும் பெரிதாக இல்லை” என்று துச்சாதனனிடம் சொன்னான்.

தணிந்த குரலில் நிர்மித்ரன் “தந்தை காத்திருக்கிறார், மூத்த தந்தையே” என்றான். “இவ்வழி, அரசே” என உத்தரன் அழைத்துச் சென்றான். நிர்மித்ரன் அவர்கள் வந்திருப்பதை உள்ளே சென்று அறிவித்தான். உள்ளறைக்குள் இருந்து சகதேவன் கைகூப்பியபடி வெளியே வந்து “அஸ்தினபுரியின் அரசருக்கு நல்வரவு” என்றான். துரியோதனனின் கால்தொட்டு வணங்க அவனை தலையில் கைவைத்து துரியோதனன் வாழ்த்தினான். துச்சாதனனையும் வணங்கி வாழ்த்துகொண்டு “வருக, மூத்தவரே!” என்றான் சகதேவன்.

குடிலை நிறைக்கும் பேருடலுடன் உள்ளே சென்றபடி “இளையோனே, உன்னைப் பார்த்து சில நிமித்தக்குறிப்புகள் உசாவிச்செல்லலாம் என்று வந்தேன்” என்றான் துரியோதனன். “உனையன்றி எவரையும் நான் முழுக்க நம்பவியலாதென்று உணர்ந்தேன்.” சகதேவன் “அது என் நல்லூழ். தங்கள் அளி” என்று கைகாட்டினான். உள்ளே விரித்திடப்பட்ட மான்தோலில் துரியோதனன் அமர அருகே துச்சாதனன் அமர்ந்தான். எதிரில் மரவுரியில் சகதேவன் அமர்ந்தான். குடில் முகப்பில் உத்தரன் நின்றான். அறைக்குள் ஒளி வரும்பொருட்டு நிர்மித்ரன் மறுபக்கச் சாளரத்தை திறந்தான்.

“முகமன்கள் இன்றி சொல்லவேண்டியிருக்கிறது, இளையோனே. போர் தொடங்கவிருக்கிறது, இன்னும் சிலநாட்களில். நான் போர்தொடங்குவதெனில் அதற்குரிய சிறந்த பொழுது எது? அதை நீ கணித்துச் சொல்லவேண்டும்.” சகதேவன் “சிறந்த பொழுது எனில் தாங்கள் எண்ணுவதென்ன?” என்றான். துச்சாதனன் “நாங்கள் வெல்வதற்குரிய பொழுது” என்றான். சகதேவன் “மூத்தவரே, போர் என்றல்ல அனைத்துச் செயல்களும் ஊழின் ஆடலே. ஊழ் என்பது நாம் கண்முன் காணும் பல்லாயிரம் பொருள்விசைகள். பல்லாயிரம் பல்லாயிரம் உளவிசைகள். பலகோடி இணைவுகள். முடிவிலா தகவுகள். அவையனைத்துக்கும் அப்பாலென நின்றிருக்கும் அறியவொண்ணா நோக்கம்” என்று சொன்னான்.

“எந்த நிமித்திகனும் வருவதுரைக்க முடியாது என்று உணர்ந்தவனே நல்ல நிமித்திகன். அவன் உரைக்கக் கூடுவது ஊழின் போக்கை. அதன் விசைகளின் கூட்டை. அதிலிருந்து உய்த்தறிந்து அவன் சிலவற்றை சொல்கிறான்” என்றான் சகதேவன். துரியோதனன் “நானும் அதை அறிவேன். நிமித்திகர் தெய்வங்களல்ல. நான் கோருவது நற்பொழுதை மட்டுமே. இப்போரை நான் என் முழுத்திறனாலும் நிகழ்த்தவேண்டும். ஒருதுளியும் எஞ்சாமல் என்னுள் இயல்வன அனைத்தும் வெளிப்பட்டு நிறைவடையவேண்டும். அதற்குரிய களமே இது. அதன்பொருட்டே நன்னிமித்தம் கோருகிறேன்” என்றான்.

சகதேவன் புன்னகைத்து “ஆம், அதற்கான பொழுதை நான் உரைக்கவியலும்” என்றான். “உங்கள் பிறவிநூலும் உடன்பிறந்தார் அனைவரின் பிறவிநூலும் என்னிடம் உள்ளன. அவற்றைத் தொகுத்து எண்களாலான ஒரு கோலமென்றாக்கி வைத்திருக்கிறேன்” என்றான். அருகிருந்த ஆமாடப்பெட்டியை திறந்து அதற்குள் இருந்து ஆட்டுத்தோலால் ஆன சுவடிச்சுருள் ஒன்றை எடுத்து விரித்து நீவி தன் முன் வைத்தான். “பிதாமகர் பீஷ்மர், ஆசிரியர்களான துரோணர், கிருபர், நண்பர் அங்கநாட்டரசர், துணைவர்களான சல்யர், அஸ்வத்தாமர், ஜயத்ரதர், பூரிசிரவஸ், கிருதவர்மர் ஆகியோரின் பிறவிநூல்களையும் கணித்து ஒற்றைச் சுவடியென சுருக்கியிருக்கிறேன்” என்று இன்னொரு சுவடியைப் பிரித்து தன் முன் வைத்தான்.

அவற்றில் அவன் விரல்கள் சுழித்தும் தயங்கியும் விசைகொண்டும் ஓடிக்கொண்டிருந்தன. பின்னர் கண்களை மூடிக்கொண்டு விரலோட்டினான். விரல் இயல்பான விசையுடன் சுழன்றுகொண்டிருக்க சுவடிகளை விலக்கிவிட்டு தன் முன் தரையில் சுட்டுவிரலால் வரைந்தான். உதடுகள் நுண்சொல்லில் நடுங்கிக்கொண்டிருக்க மெல்ல விழிகள் சரிந்து முகம் ஊழ்கநிலை கொள்ள தன்னுள் ஆழ்ந்தான். துரியோதனன் அவனை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். பெருமூச்சொன்று எழ உத்தரன் அதை அடக்கினான்.

சகதேவன் விழிதிறந்து மூச்சொலியாக “ஓம்!” என்றான். “நலம் திகழ்க!” என சொல்கொண்டு “தெய்வங்கள் உடனிருக்கட்டும். மூத்தார் நிறைவுகொள்ளட்டும். மூத்த கௌரவரே, நாளை மறுநாள் புலரியில் போர் தொடங்குக! அது ஆடிமாதம் தேய்பிறை முதல்நாள். உங்களுக்குரிய தேவனாகிய கலி முழு வடிவுகொண்டு எழும் பொழுது அது” என்றான். “ஒவ்வொருநாளுமென உங்கள் தேவன் உங்களை முழுதாள்வான். பதினெட்டு நாட்கள் உங்களை அவன் தன் பேருருவென்றே நிறுத்துவான். உங்கள் மண்நிகழ்நோக்கம் நிறைவேறும். எச்சமில்லாது இவ்வாழ்வை நிறைவுசெய்தவராவீர். இப்புவியில் மானுடர் பெறும் வெற்றிகளில் முதன்மையானது தன்னறம் முழுமைகொள்ளும் பெருவாழ்வே” என்றான் சகதேவன்.

“ஆடி நன்று. காற்றுகளின் மாதம்” என்றான் துச்சாதனன். “ஆடிக்குரிய தெய்வங்கள் கலியும் கொற்றவையும். இப்போர் அவர்களுக்குள் நிகழ்வது. தெய்வங்கள் ஆடுக இனி!” என்றான் சகதேவன். துரியோதனன் கைகூப்பி “அவ்வாறே ஆகுக!” என்றான். பின்னர் துச்சாதனனை நோக்கி திரும்ப அவன் தன் கையிலிருந்த மரவுரிப்பையில் இருந்து சிறு மரத்தாலத்தை எடுத்து அதில் தன் கணையாழி ஒன்றை வைத்தான். “இது நிமித்திகருக்கு அஸ்தினபுரியின் அரசனின் பரிசு. ஏற்றருள்க!” என அளித்தான். சகதேவன் அதை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டான்.

துரியோதனன் கைகூப்பியபடி எழுந்து “விடைகொள்கிறோம், இளையோனே. களத்தில் காண்போம்” என்றான். சகதேவன் எழுந்து “தங்கள் வருகையால் பெருமைகொண்டேன், மூத்தவரே” என்றான். துரியோதனன் “நீ நற்துயில் கொள்வதில்லை என எண்ணுகிறேன். விழிகளுக்குக் கீழே கருமை படிந்துள்ளது” என்றான். சகதேவன் புன்னகைத்தான். துரியோதனன் “உங்கள் படைகள் புதிய வீரர்களால் ஆனவை என்றாலும் நன்கு அணிகொண்டுள்ளன. படைத்தலைவர்களிடம் என் பாராட்டுதல்களை தெரிவி” என்றான். சகதேவன் “அவர்களுக்கு அது பெருமதிப்பு” என்றான்.

அவர்கள் வெளியே சென்றனர். சகதேவன் கைகூப்பியபடி உள்ளேயே நின்றான். உடன் சென்ற உத்தரனை நோக்கி புன்னகைத்த துரியோதனன் “நாம் பிறிதொரு தருணத்தில் சந்தித்துக்கொண்டிருக்கலாம், இளையோனே. ஆனால் இவ்வண்ணமாவது இது நிகழ்ந்தது நன்று” என்றபின் உத்தரனின் தோளை வளைத்து மெல்ல தழுவினான். உத்தரன் நிலத்தில் மண்டியிட்டு “என்னை வாழ்த்துக, அரசே!” என்றான். “புகழ்கொள்க!” என்று துரியோதனன் வாழ்த்தினான். அவர்களுடன் தேரை நோக்கி செல்கையில் உத்தரன் நடுங்கிக்கொண்டிருந்தான்.

tigதுரியோதனனும் துச்சாதனனும் ஏறிய தேர் புழுதி எழ நீரில் விழுந்த நாணயம் மூழ்குவதைப்போல் சென்று மறுபக்கப் படைப்பெருக்கில் மறைவதை நோக்கியபடி நின்றபோது உத்தரன் அரியதோர் இழப்புணர்வை அடைந்தான். வெறும் குருதியின் பொருட்டு இங்கே நின்றிருக்கிறேன் என்று அவன் அகம் அரற்றியது. மானுடரை குருதி முழுமையாக இணைக்கமுடியும் என்றால் ஏன் அறங்களென்று மண்ணில் சிலவற்றை அமைத்தன தெய்வங்கள்? அவன் பெருமூச்சுடன் திரும்பி நடந்தான். அவன் அருகே நின்றிருந்த திருஷ்டத்யும்னன் “இனி எதையுமே எண்ணவேண்டியதில்லை. நம்மை முற்றாக தோற்கடித்துவிட்டுச் செல்கிறார் கௌரவ மூத்தவர்” என்றான்.

உத்தரன் வெறுமனே நோக்கினான். “இன்று அவையிலிருந்து வந்ததுமே நோக்கினேன். எந்தப் படைவீரன் முகத்திலும் போர்வீரனுக்குரிய தோற்றம் இல்லை. இந்திரவிழவுக்கு எழுந்தவர்கள் போலிருக்கிறார்கள் மூடர்கள். பெரும்பாலானவர்கள் இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். குடியால் சிவந்து களைத்த கண்கள். ஒருவரோடொருவர் ஏளனமும் நகையாட்டுமாக சொல்லெடுக்கிறார்கள்” என்றான். “இவர்களால் போரிட இயலாது. ஐயமே தேவையில்லை. போர் அறிவிக்கப்படுமென்றால் தங்களை அரசர் யுதிஷ்டிரர் ஏமாற்றிவிட்டதாகவே உணர்வார்கள்.”

அவனுடைய முகத்தை நோக்காமல் உத்தரன் நடந்தான். தளர்ந்த குரலில் “செய்வதற்கொன்றுமில்லை. போர் முடிந்துவிட்டது. ஆம்…” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “எப்போது பாஞ்சாலத்து ஷத்ரியவீரர்கள் விலைப்பெண்டிரை படைக்குள் கொண்டுவந்தார்களோ அப்போதே போரை இழந்துவிட்டோம்… நாளைமறுநாள் ஆடித் தேய்பிறை முதல்நாள் போர் அல்லவா? பீஷ்ம பிதாமகர் பெருவில்லை ஏந்தியபடி வந்து படைமுகம் நின்று நாணொலி எழுப்பும்போது இங்கிருப்பவர்கள் அவருக்கு வாழ்த்துகூவியபடி சென்று கூடுவார்கள்…”

உத்தரன் “நாம் என்ன செய்ய இயலும் அதற்கு? எந்தப் போரும் படைகளின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழவேண்டும். வெல்வதையும் தோற்பதையும் படைகளின் ஆழுள்ளத்தில் வாழும் தெய்வங்கள் முன்னரே முடிவெடுத்துவிடுகின்றன என்பார்கள்” என்றான். “ஆம், ஆனால் இப்போதும்கூட இளைய யாதவர் ஏதேனும் செய்ய முடியும். அவருடைய போர் இது. அவர் ஒருபோதும் தோற்கமாட்டார் என்ற நம்பிக்கையையே இறுதிப் பற்றுக்கோடென கொண்டுள்ளேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “இத்தனை பெரும்போர் இவ்வளவு நுட்பமாக ஒருங்கமைவது தெய்வங்களின் விழைவாலேயே. நாம் அஞ்சுவதிலும் விழைவதிலும் பொருளில்லை. அதை சொல்லிச் சொல்லி என்னை எழுப்பிக்கொள்கிறேன். ஆனால் என் ஆழம் துவண்டுகிடக்கிறது.”

தொலைவில் வந்த ஸ்வேதனைக் கண்டு உத்தரனின் அகம் திடுக்கிட்டது. முதற்கணம் உளம் திடுக்கிட்டது தன்னையே ஆடியில் கண்டதுபோல் தோன்றியமையால் எனத் தோன்ற அவனிடம் தன் சாயல் உள்ளதா என விழிகளால் வருடிநோக்கினான். அவன் அசைவுகளில் மட்டுமே தான் இருப்பதை கண்டுகொண்டான். ஸ்வேதன் புரவியில் இருந்து இறங்கி தலைவணங்கி “ஆணைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன, இளவரசே” என்றான். திருஷ்டத்யும்னன் ஆர்வமின்றி “நன்று” என்றான். உத்தரன் ஸ்வேதனிடம் “இளையோன் எங்குளான்?” என்றான். ஸ்வேதன் “அவனுக்கு அடுமனையில் பொறுப்பு” என்றான்.

ஸ்வேதனிடம் “அந்த நாகன் எங்குளான்?” என்றான் திருஷ்டத்யும்னன். “அவனுக்கான பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறான்” என்றான் ஸ்வேதன். “அவனை புரவிகளால் மட்டும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவன் உடலில் நாகமணம் வீசுகிறது.” உத்தரன் “அவர்கள் நாகநஞ்சு உண்பவர்கள். குருதியில் நஞ்சு ஊறியிருக்கும்” என்றான். திருஷ்டத்யும்னன் தலையசைக்க அவன் திரும்பிச் சென்றான். உத்தரன் ஒரு படபடப்பை உணர்ந்தான். “என்ன?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். “இல்லை… ஒரு நிலையழிவு” என்றான் உத்தரன். “என்ன?” என்றான் திருஷ்டத்யும்னன். உத்தரன் “அறியேன்” என்றான்.

அவர்கள் புரவிகளில் ஏறினர். “நிகழ்ந்தவற்றை அரசரிடம் சொல்வோம். இப்போது அங்கே படைத்தலைவர்கள் அனைவரும் கூடியிருப்பார்கள். போர் நாளைமறுநாள் தொடங்குமென்றால் நமக்கும் பொழுதில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். உத்தரன் அந்தப் படபடப்பு ஏன் என்று உணர்ந்தான். அவன் புரவியை இழுத்ததை உணர்ந்த திருஷ்டத்யும்னன் திரும்பி நோக்கி “என்ன?” என்றான். “அவனுக்குப் பின்னால் ஒரு நிழலை கண்டேன்” என்றான் உத்தரன். “நிழல்தானே?” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம், ஆனால் வெறும் நிழல் அல்ல அது. அது பிறிதொன்று… அவன் அசைவுக்கேற்ப அது அசையவில்லை.”

திருஷ்டத்யும்னன் ஏளனத்துடன் உதட்டை சுழித்தான். “அல்ல, பாஞ்சாலரே. நீங்கள் ஷத்ரியர். உங்கள் விழிகளுக்கு அது தென்படாது. நான் இன்னமும் மலைக்குடி குருதி கொண்டவன். நான் பார்க்கிறேன். அந்நிழல்கள் ஒளியால் உருவாகின்றவை அல்ல. அவை மானுடரை தொடர்பவை. வளர்ந்தும் குறுகியும் எப்போதும் உடனிருப்பவை. அவை பேருருக்கொண்டு எழுகையில் அவர்கள் அதில் ஒரு துளியென்று ஆகிவிட்டிருப்பார்கள்.” திருஷ்டத்யும்னன் “போர்முனை இது. எளிய உளமயக்குகளுக்கு இடமில்லை இங்கே” என்றான். உத்தரன் பெருமூச்சுவிட்டான். “அவனுக்காக அஞ்சுகிறீர், விராடரே. உம் குருதியின் தழுவல் அது” என்றான் திருஷ்டத்யும்னன். “நீர் செய்யவேண்டியது ஒன்றே. உம் தந்தையிடம் சொல்க! இங்கேயே அவர் இவ்விருவரையும் தன் மைந்தராக ஏற்றுக்கொள்ளலாம். வேண்டுமென்றால் ஒரு சிறு சடங்கினூடாகவே அதை முழுமைப்படுத்தலாம்.”

உத்தரன் பேசாமல் வந்தான். “சொல்க!” என்றான் திருஷ்டத்யும்னன். “எந்தை அதற்கு ஒப்புவார் என நான் நினைக்கவில்லை” என்றான் உத்தரன். “நீர் பேசிப்பாரும்” என்றான் திருஷ்டத்யும்னன்.  “நான் அவரிடம் பேசுவதில்லை” என்றான் உத்தரன். “நான் பேசுகிறேன்… அல்லது எந்தையிடம் பேசும்படி சொல்கிறேன்.” உத்தரன் ஒன்றும் சொல்லவில்லை. “அவர்கள் இணை அகவையர். இருவருமே பாண்டவர்களுக்கு மகற்கொடை செய்தவர்கள். அவர்களால் பேசிக்கொள்ள முடியும்” என்றான் திருஷ்டத்யும்னன்.

உத்தரன் மறுமொழி சொல்லாமல் படைகளை நோக்கியபடியே சென்றுகொண்டிருந்தான். அவனால் ஒவ்வொரு முகத்தையும் தனித்தனியாக பார்க்கமுடிந்தது. எவர் முகத்திலும் அச்சமோ பதற்றமோ தென்படவில்லை. அனைவரும் முன்பிருந்ததுபோலவே களியாட்டுமுகம் கொண்டிருந்தார்கள். அனைவரும் துரியோதனன் போருக்கு நாள்குறித்துச் சென்றிருப்பதை அறிந்திருப்பார்கள். ஆனால் எவரும் அதை நம்பவில்லை. அப்படி போருக்கு நாள்குறிப்பதே இந்தப் படைசூழ்கையை முடித்துக்கொள்ளவிருக்கிறார்கள் என்று பொருள்படக்கூடும்.

ஒரு படைவீரன் தட்டிகளுக்கு சாயத்தால் எண்களிட்டுக்கொண்டிருந்தான். “என்ன செய்கிறாய்?” என்றான் உத்தரன். “எஞ்சிய தரைப்பலகைகளையும் தட்டிகளையும் கொண்டு இந்தக் குடில் அமைக்கப்பட்டது, இளவரசே. இதை கழற்றி எடுத்துக்கொண்டு சென்று மீண்டும் அமைக்கும்போது இவ்வெண்கள் தேவைப்படும்” என்றான் படைவீரன். உத்தரனின் விழிகளை திருஷ்டத்யும்னனின் விழிகள் சந்தித்தன. “நம் பொழுது அணுகுகிறது” என்று அவன் வேறுதிசை நோக்கியபடி சொன்னான்.

சற்று தொலைவு சென்றபின் திருஷ்டத்யும்னன் நின்று “சகதேவன் குறித்துக்கொடுத்த நாள் அவர்களுக்கு வெற்றியை அளிக்கும் என்றாரா?” என்றான். “அதை எவரும் சொல்லவியலாது என்றார். அப்பொழுதில் தொடங்கும் போரில் முதற்கௌரவர் தன் முழுமையை வெளிப்படுத்துவார் என்று மட்டுமே சொன்னார்” என்றான் உத்தரன். திருஷ்டத்யும்னன் மேலும் எதையோ சொல்ல விழைந்தான். ஆகவே புரவியை விரைவிலாது நடக்கச்செய்து வேறெங்கோ நோக்கியபடி பொழுதை நீட்டினான். உத்தரன் காத்திருந்தான்.

திருஷ்டத்யும்னன் “அவர் உம்மை தோள்தழுவியபோது எவ்வாறு உணர்ந்தீர்?” என்றான். உத்தரன் “எந்தை என” என்றான். மறுகணம் அவனே தன் உணர்வை கண்டுகொண்டான். “பெருந்தந்தைக்கான ஏக்கம் அனைத்து மைந்தரிடமும் உண்டு. நான் என் மதிப்பை ஈட்டாத தந்தைக்கு பிறந்தவன். அவருடைய தொடுகையில் என் மூதாதையரை உணர்ந்தேன்.” திருஷ்டத்யும்னன் “அவர் அழைத்திருந்தால் சென்றிருப்பீரா?” என்றான். உத்தரன் “அவர் அவ்வாறு எவரையும் அழைக்கமாட்டார்” என்றான். “அழைத்தால்?” என்றான் திருஷ்டத்யும்னன். “அழைத்தால் அக்கணமே செல்வேன்… அது என் தெய்வத்தின் ஆணைக்கு நிகர்” என்றான் உத்தரன்.

திருஷ்டத்யும்னன் சீற்றம் கொள்வான் என உத்தரன் எண்ணினான். அவன் புரவியில் உடல் தொய்ந்திருக்க பேசாமல் செல்வதை கண்டபோது எப்படி சீற்றம்கொள்ள முடியும் என்று தோன்றியது. யுதிஷ்டிரரின் பாடிவீட்டை அணுகுவதுவரை திருஷ்டத்யும்னன் மேலும் பேசவில்லை. அப்பால் படைமாளிகையின் ஒழுக்கை கண்டதும் கடிவாளத்தைப் பற்றியபடி நின்று “மெய்யுரைப்பதென்றால் நானும் அவ்வண்ணமே எண்ணினேன், விராடரே” என்றான். “தன் விழைவையும் வஞ்சத்தையும் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒளிக்காமல் நின்றிருப்பதில் தெய்வங்களுக்குரிய நிமிர்வு ஒன்று உள்ளது… அத்தகையவர் பெருந்தந்தை என்பதில் ஐயமில்லை.”

உத்தரன் அவன் சொல்வதை உள்வாங்கிக்கொள்ளாமல் நின்றான். திருஷ்டத்யும்னன் புரவியை ஓட்டி முன்னால் சென்று யுதிஷ்டிரரின் மாளிகை முகப்பில் தன்னை எதிர்கொண்ட யௌதேயனிடம் ஒரு சில சொற்களை உரைத்து கடந்துசெல்வதை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான்.