மாதம்: ஓகஸ்ட் 2018

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 82

tigகதிர் இறங்கிய பின்னரும் மண்ணில் வான்வெளிச்சம் எஞ்சியிருந்தது. உலோகப்பரப்புகளில் ஒளி ததும்பியது. சாத்யகி தன் புரவியில் களத்தினூடாகச் சென்று திரண்டு மீண்டும் நிரைகொண்டுவிட்ட பாண்டவப் படைகளின் நடுவே மையப்பாதையில் நுழைந்தான். புண்பட்ட வீரர்களை கொண்டுசெல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய பலகைப்பாதைகளினூடாக ஒற்றை அத்திரிகள் இழுத்த இருசகட வண்டிகள் நீண்ட நிரையாக சென்றுகொண்டிருந்தன. தோளுடன் தோள் என இணையாக அடுக்கப்பட்டிருந்த வீரர்கள் குருதி வழிய முனகிக்கொண்டும் அரற்றிக்கொண்டும் இருந்தனர். வண்டிகளில் இருந்து சொட்டிய குருதியால் பலகை சிவந்து தசைக்கதுப்புபோல் ஆகிவிட்டிருந்தது. வண்டிகள் சென்ற வழியெங்கும் குருதி ஊறி வழிந்தது. சாலையின் பலகைப்பொருத்துக்களில் சகடம் விழ வண்டி அதிர்ந்தபோது புண்பட்டவர்கள் உடல் உலைந்து அலறினார்கள்.

சாத்யகி முகங்களை நோக்கிக்கொண்டு சென்றான். புண்பட்டவர்களில் சிலர் பித்துநிறைந்த கண்களுடன் வெறித்து நோக்கினர். சிலர் காய்ச்சல்கண்டவர்களாக நடுங்கிக்கொண்டிருந்தார்கள். சிலர் தங்களுக்குள் மென்குரலில் அரற்றினார்கள். சிலர் அருகே செல்பவர்களை நோக்கி “வீரர்களே! தலைவர்களே!” என கூவி அழைத்தனர். அவர்களில் சிலர் ஏற்கெனவே இறந்துவிட்டிருந்தனர் என்பது நிலைத்த விழிகளில் இருந்து தெரிந்தது. ஒன்றன்பின் ஒன்றாக வண்டிகள் முடிவிலாது சென்றுகொண்டே இருந்தன. அவற்றை ஓட்டிச்சென்றவர்களும் குருதியில் நனைந்திருந்தார்கள். போர் நிகழ்ந்த பகல் முழுக்க குருதிமணம் நிறைந்திருந்த காற்று சித்தத்தை அடையவில்லை. விழிகளும் செவிகளும் விழிசெவியென்றான உடலும் மட்டுமே புலன்களென்றிருந்தன. போர் அணைந்த மறுகணமே மூக்கு உயிர்கொண்டது. வானும் மண்ணும் குருதிவாடையால் மூடப்பட்டன.

களத்தில் இருந்த அனைத்தும் வெட்டிவைத்த தசைகளின் வாடைகொண்டிருந்தன. காற்று சுழன்றடிக்கையில் குமட்டல் எழுந்தது. அறியாமல் வயிறு அதிர வாய் ஊறிக்கொண்டே இருந்தது. அங்கிருந்த அனைவருமே காறிக்காறி துப்பினர். களத்தில் விரிந்து கிடந்த சடலப்பரப்பை அவன் இடையில் கைவைத்து நின்று விழியோட்டி நோக்கினான். உடல் வலிப்புகொண்டமையால் முகம் கோணலாகி உதடுகள் இழுபட பற்கள் வெறித்து அவை நகைப்பவைபோல் தோன்றின. வெட்டுண்ட தலைகளில் மட்டும் விழிமூடிய ஆழ்ந்த அமைதி தெரிந்தது. உடலின் பொறுப்பிலிருந்து விடுபட்டமையின் அமைதியா அது?

ஒருவன் அலறிக்கொண்டே இருந்தான். அவனை நோக்கியபின்னரே அந்த அலறல் காதில் விழுந்தது. அவன் எவரையும் நோக்கி அழவில்லை. வானிடம் இறைஞ்சிக்கொண்டிருந்தான். புண்பட்ட அனைத்து விலங்குகளுமே வானிடம்தான் முறையிடுகின்றன. அங்கு எவரேனும் இருக்கிறார்களா? தேவர்கள், தெய்வங்கள், அலகிலியாகிய பிரம்மம்? இல்லை என்றால் இந்தக் கண்ணீருக்கும் முறையீட்டுக்கும் என்ன பொருள்? எதற்குத்தான் பொருள்? அன்பு, அளி, மானுடம் அனைத்தும் போர் தொடங்குவதற்கு முன்னரே பொருளிழந்து உதிர்ந்துவிடுகின்றன. நெறி, அறம் என ஒவ்வொன்றாக உடைந்து களத்தில் சரிகின்றன. வெற்றி என்ற சொல் மட்டுமே எஞ்சியிருக்கிறது. தெய்வங்களே, மூதாதையரே, இறுதியில் அச்சொல்லேனும் பொருளுடன் எஞ்சவேண்டும்.

உயிர்நோக்கிகள் நீண்ட ஈட்டிகளுடன் சடலங்களின் நடுவே கால்தூக்கி வைத்து நடமிடுபவர்கள்போல சென்றனர். கீழே கிடந்த உடல்களைப் புரட்டி நோக்கி உயிரில்லை என்றால் அப்பால் சென்றனர். தேறும்புண்பட்டு உயிர் எஞ்சியிருப்பதைக் கண்டால் அவ்வுடல் மேல் வெண்சுண்ணத்தால் வட்டமுத்திரை ஒன்றை பதித்தபின் அருகே ஒரு சிறிய வெண்கொடி கட்டப்பட்ட மூங்கிலை நட்டுவிட்டு முன்னால் சென்றனர். சிறுவிரல் அளவுள்ள மூங்கில்களின் கீழ்நுனியில் இரும்புக்கூர் இருந்தது. குருதி நனைந்து ஊறிய தரையில் அதை எளிதில் குத்தி நிறுத்த முடிந்தது.

அவர்களுக்கு அப்பால் வந்துகொண்டிருந்த களக்காப்பர்கள் அந்தக் கொடிகளை அடையாளமாகக் கொண்டு அணுகி புண்பட்டவர்களின் அருகே குருதியில் ஊறி துளிசொட்டிக்கொண்டிருந்த மரவுரியை விரித்து உடல்களை புரட்டி அதிலிட்டு இருபுறமும் பற்றித்தூக்கி சகடப்பரப்பில் வைத்தபின் மரவுரியை உருவி எடுத்தனர். உடலில் தைத்திருந்த அம்புகளை அவர்கள் பிடுங்கவில்லை. அம்புகள் அசைந்தபோது புண்பட்டோர் முனகினர், விழித்தவர்கள் கூச்சலிட்டனர். விழுந்த மரங்களில் எழுந்த தளிர்கள் என அவன் உடல்களில் நின்ற அம்புகளைப்பற்றி எண்ணினான். பின்னர் அவ்வெண்ணத்திற்காக நாணி அகம் விலக்கிக்கொண்டான்.

அலறிக்கொண்டிருந்தவனை அணுகிய உயிர்நோக்கிகளில் ஒருவர் குனிந்து அவன் உடலை நோக்கினார். அவன் வயிற்றில் பெரிய வாய் ஒன்று திறந்திருந்தது. உள்ளே செக்கச்சிவந்த நாக்கு ஒன்று தவித்தது. அவன் “மூத்தோரே! மூத்தோரே!” என்று கூவினான். உயிர்நோக்கி முதிர்ந்தவராக இருந்தார். விழிகள் விலங்கு விழிகள் என உணர்வற்று, மானுடரை அறியும் மொழியொளி அற்று, இரு வெறிப்புகளாக தெரிந்தன. அவர் கையை அசைக்க பின்னால் வந்த வீரன் ஈட்டியை ஓங்கினான். அவர் தலையசைத்ததை உணர்ந்த புண்பட்டவன் “வீரரே! தந்தையே” என்று கூவி கையை நீட்டி தடுக்க அவன் மிக இயல்பாக, செயல்தேர்ந்த கையசைவின் பிழையின்மையுடன் ஈட்டியால் அவன் நெஞ்சில் இரு விலாவெலும்புகளுக்கு நடுவே குத்தி இறக்கி சற்றே சுழற்றினான். ஈட்டியை உருவியபோது குருதி சொட்டியது. அதை அப்புண்பட்டவனின் உடையிலேயே துடைத்தபின் அவன் முன்னால் சென்றான்.

நெஞ்சக்குமிழை ஈட்டிமுனை வெட்டியதனால் இருமுறை உடல் உலுக்கிக்கொண்டு புண்பட்டவன் வாய்திறந்து ஒலியிலாச் சொல் உரைத்து உறைந்தான். உயிர்நோக்கிகள் அவனை திரும்பி நோக்காமல் முன்னால் சென்றனர். இன்னொருவனை குனிந்து நோக்கி மீண்டும் தலையசைத்தார் முதியவர். மீண்டும் ஈட்டி மேலெழுந்து இறங்கியது. அதே விலாவெலும்பின் இடைவெளி. அதேபோன்ற ஆழ்நடுகை. அவர்களின் ஒவ்வொரு செயலிலும் தேர்ச்சியின் முழுமை இருந்தது. இக்களத்தில் இன்று பல்லாயிரம்பேர் விழுந்திருக்கக்கூடும். மானுடருக்கும் உடல்களுக்கும் நடுவே மெல்லிய வேறுபாடு மட்டுமே. அதை அவர்கள் அறிவார்கள். அவர்களின் விழிகள் அதை மட்டுமே அறியும்.

tigசாத்யகி திருஷ்டத்யும்னனின் கூடாரத்தை அணுகியபோது மிகவும் தளர்ந்திருந்தான். வெளியே தோல்வார்கள் இழுத்துக் கட்டிய உயரமற்ற கட்டிலில் ஆடையில்லாமல் திருஷ்டத்யும்னன் படுத்திருந்தான். அவன் உடலில் இருந்து அம்புமுனைகளையும் உடைந்த தேர்ச்சிம்புகளையும் மருத்துவர் பிடுங்கிக்கொண்டிருந்தனர். அவன் அவ்வப்போது நடுங்கி முனகிக்கொண்டிருந்தாலும் சூழ்ந்து நின்றிருந்த துணைப்படைத்தலைவர்களுக்கு ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தான். படைத்தலைவன் சிம்மவக்த்ரன் பாண்டவப் படைகளின் இழப்பை சொல்லிக்கொண்டிருந்தான். “இன்னும் கணக்கு எடுக்கப்படவில்லை. இறந்தவர்களை முத்திரை நோக்கி கணக்கிட ஏவலர்களை அனுப்பியிருக்கிறோம். ஆனால் விழிநோக்கிலேயே தெரிகிறது நம் இழப்பு அரை அக்ஷௌகிணிக்கு குறையாது…” பின்னர் தயங்கி “ஒருவேளை ஓர் அக்ஷௌகிணிகூட இருக்கலாம்” என்றான்.

திருஷ்டத்யும்னன் “ஆம், இருக்கும். பீஷ்மர் இன்று ஆடிய கொலைத்தாண்டவம் எண்ணற்கும் அரிது” என்றான். “இத்தனை நாள் இரவும்பகலும் அவர் பயின்ற வில் இதன்பொருட்டே போலும்… இளமைந்தர்களின் குருதியாட!” கசப்புடன் சிரித்து “இறந்த மைந்தர்களின் ஆத்மாக்கள் இன்று அவர் துயிலும் கூடாரத்தை சூழ்ந்திருக்கும்… நன்கு உறங்கட்டும் பிதாமகர்” என்றான். சாத்யகியை கண்டதும் “யாதவரே, நமது பிணங்களை முறைப்படி விண்ணேற்றும் பொறுப்பை உம்மிடம் அளிக்கிறேன். எரியேற்றுவதும் புதைப்பதும் அந்தந்தக் குடிகளின் முறைமைப்படி நிகழ்க! சுடலைப்பொறுப்பை மூத்தவர் சிகண்டி ஏற்றுக்கொண்டிருக்கிறார்” என்றான். “முறைப்படி அதை செய்ய ஈராயிரம் ஏவலர்களை எட்டு பிரிவுகளாக அமைத்துள்ளேன். ஆயிரம் வண்டிகள் அதற்கென்றே அனுப்பப்பட்டுள்ளன. நள்ளிரவுக்குள் மானுடர் அனைவரும் மண்ணோ எரியோ புகுந்தாகவேண்டும். அதன்பின் விலங்குகள். விடிவதற்குள் மீண்டும் களம் தூய்மையடையவேண்டும்” என்றான்.

சாத்யகி தலையசைத்தான். “ஒருவர் உடல்கூட முறைப்படி இறுதிச்செயல்கள் இன்றி செல்லக்கூடாது. அதை உறுதிசெய்க! இறந்தவர்களின் எண்ணிக்கை புலரிக்கு முன் என் கைக்கு வரவேண்டும். முற்புலரியில் அரசர் அவைகூடும்போது நான் அதை அளிக்கவேண்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆணை!” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் அருகே நின்றிருந்த படைத்தலைவன் சிம்ஹநேத்ரனிடம் “எனக்கு ஒவ்வொரு படைப்பிரிவிலும் எஞ்சியுள்ளோரின் கணக்கு இன்று இரவு எழுவதற்குள் வந்தாகவேண்டும். நள்ளிரவுக்குள் தேய்ந்துவிட்ட படைப்பிரிவுகளுக்கு புதிய வீரர்களை அனுப்பவேண்டும்” என்றான். சாத்யகி தலைவணங்கி விடைகொண்டான்.

மீண்டும் புரவியை அடைந்தபோது அவன் இறப்பின் தருணம் என களைத்திருந்தான். எங்காவது விழுந்து மண்ணில் உடல்பதித்து மறந்து உறங்கவேண்டும் என விழைந்தான். புரவிமேல் உடல் கோணலாக அமைய தளர்ந்த தோள்களுடன் அமர்ந்திருந்தான். எச்சில் மார்பில் விழுந்தபோதுதான் விழித்துக்கொண்டான். புரவி குளம்புகள் செந்தாளம் இட சீராக சென்றுகொண்டிருந்தது. அவன் தன் சித்தத்துக்குள் பெரும்போர் ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்ததை எண்ணி பெருமூச்சுவிட்டான். அங்கிருந்து நோக்கியபோது எறும்புநிரை என புண்பட்டோரை ஏற்றிய அத்திரிவண்டிகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கியபடி மருத்துவநிலை நோக்கி செல்வதை கண்டான். ஒழிந்த வண்டிகள் இன்னொரு சாலையினூடாக மீண்டும் களம்நோக்கி சென்றன. நீர் இரைக்கும் சகடக் கலநிரை என அவ்வரிசை சுழன்றுகொண்டிருந்தது.

அவன் எரிநிலையை சென்றடைந்தபோது அங்கே சிகண்டி இருக்கவில்லை. அவருடைய துணைப்படைத்தலைவன் காதரன் “பாஞ்சாலர் தெற்குக் காட்டுக்குள் சென்றிருக்கிறார், யாதவரே” என்றான். “நான் அரக்கு கொண்டுசெல்லும் வண்டிகளை கணக்கிட்டு செலுத்தும்பொருட்டு இங்கே அமைக்கப்பட்டுள்ளேன்.” சாத்யகி தெற்கே விரிந்திருந்த குறுங்காட்டுக்குள் சென்றான். தொலைவிலேயே பேச்சொலிகள் கேட்டன. அவன் உள்ளே நுழைந்தபோது சிகண்டியின் அணுக்கக் காவலன் வணங்கி எதிர்கொண்டான். சாத்யகி “மூத்த பாஞ்சாலரை பார்க்கவந்தேன்” என்றான். அக்காவலனுக்கும் சிகண்டியின் உயிரிழந்த விழிகள் இருந்தன. அவன் சொல்லில்லாமல் தலைவணங்கி அவனை உள்ளே அழைத்துச் சென்றான்.

குறுங்காட்டில் நீர் வழிந்தோடி உருவான ஆழமான பள்ளத்திற்குள் பத்து பெருஞ்சிதைகள் ஒருக்கப்பட்டுக்கொண்டிருந்தன. எருதுகள் இழுத்த வண்டிகளில் கொண்டுவரப்பட்ட எடைமிக்க விறகுக் கட்டைகள் பள்ளத்திற்குள் உருட்டப்பட்டன. அங்கிருந்தவர்கள் அவற்றை பிடித்துத் தூக்கி அடுக்கினர். இரண்டு சிதைகள் அடுக்கப்பட்டு இறுதிநிலையில் இருந்தன. மேலே அரக்குக் கட்டைகளை அடுக்கி அவற்றின்மேல் மெல்விறகை நிரப்பினர். சிகண்டி அப்பால் ஏவலருடன் பேசிக்கொண்டு நின்றிருந்தார். அவன் அருகே சென்று தலைவணங்கினான். “சொல்!” என்று அவர் சொன்னார். “பாஞ்சாலரே, இறந்தவர்களின் மொத்தக் கணக்கு நாளை காலைக்குள் அரசருக்கு அளிக்கப்படவேண்டும் என்றார் படைத்தலைவர்” என்றான் சாத்யகி. “கணக்கிடாமல் இங்கே எரிப்போம் என எவர் சொன்னது?” என்றார் சிகண்டி. அவருடைய எரிச்சலை நோக்கி மேலும் பணிவுகொண்டு “இல்லை, பாஞ்சாலரே. நீங்கள் முறையாகவே செய்வீர்கள் என அறிவேன். அனைத்தையும் ஒருங்கிணைப்பது மட்டுமே என் பணி” என்றான் சாத்யகி.

“பிணக்கணக்கு குறிப்பதற்கு அறுபது பேரை அமரச்செய்துள்ளேன். இறந்தவரின் பெயர், குலம், படைப்பிரிவு, நாடு ஆகியவை முறையாக பதிவுசெய்யப்படும். கிளம்பும்போதே அனைத்துச் செய்திகளும் ஏடுகளில் பதிவுசெய்யப்பட்டிருந்தன. அச்சுவடிகளின் பிறிதோலைகள் அனைவரிடமும் அளிக்கப்பட்டுள்ளன. நோக்கி கண்டு பதிவுசெய்வார்கள்” என்று சிகண்டி சொன்னார். சாத்யகி “நன்று” என்றான். “எங்களுக்கிருக்கும் மிகப் பெரிய இடர் பிழையாக அடையாளம் காணப்பட்டு கௌரவர் தரப்பினரின் உடல்கள் இங்கு வந்துவிடுவது. அவற்றை மீண்டும் திரும்ப கொண்டுசெல்வது பெரும்பணி. அங்கு சென்று அடையாளம் காணும் பணிகளை மேலும் செம்மை செய்க… இதுவரை எழுபது உடல்கள் வந்துவிட்டன” என்றபின் அவன் செல்லலாம் என கைகாட்டியபடி சிகண்டி அப்பால் சென்றார்.

சாத்யகி அருகே நின்ற சூதரை நோக்கி புன்னகைத்தான். அவரும் புன்னகைக்கும் வழக்கம் இல்லாதவராக, இறந்த விழிகொண்டவராக தோன்றினார். எதையாவது பேசவேண்டும் என்பதற்காக “ஏன் குழிகளில் சிதைகள் ஒருக்கப்படுகின்றன?” என்றான் சாத்யகி. “மேட்டில் என்றால் சிதை மேலும் மேடாகும். விறகுகளைத் தூக்கி மேலே கொண்டுசென்று அடுக்கவேண்டியிருக்கும். சிதையடுக்க யானைகளை கொண்டுவரும் வழக்கமில்லை” என்றார் சூதர். சினம் எழுந்தாலும் அவன் அதை அடக்கிக்கொண்டான். “நன்று” என்றபடி நடந்தான்.

சிதைகளை அடுக்கிக்கொண்டிருந்தவர்கள் பெரும்பாலும் படைவீரர்கள். பிறப்பால் இடுகாட்டுத்தொழில் செய்பவர்கள் அங்கே மேல்நோட்டப் பொறுப்புகளை மட்டுமே ஆற்றினர். சிதைகளின் அளவை அப்போதுதான் அவன் நோக்கினான். ஒவ்வொன்றும் மூன்று ஆள் உயரம் இருக்கும். இருபது வாரை நீளமும் இரண்டுவாரை அகலமும் கொண்ட விறகுக்குவைகள். “ஒவ்வொன்றிலும் எத்தனை பேரை எரிப்பார்கள்?” என்றான். மேல்நோட்டக்காரர் திரும்பி “ஒன்றில் இருநூறுபேர் வரை அடுக்கலாம்” என்றார். அவன் உள்ளத்தில் ஓடிய எண்ணத்தை உணர்ந்து “குருதியும் சலமும் நிறையவே இருக்கும். ஆகவேதான் இத்தனை விறகு. அரக்கும் இருப்பதனால் விறகு எளிதில் எரிந்தேறும். ஆனால் பேரனல் எழுந்துவிட்டதென்றால் வாழைத்தண்டையும் விறகாக்கலாம்” என்றார்.

அப்பால் நின்றிருந்த முதிய சிதைக்காரர் ஈறிலிருந்து நீண்டு நின்ற பற்களைக் காட்டி சிரித்து “முதல் நூறு எரிந்துகொண்டிருக்கையிலேயே அடுத்த நூறை உள்ளே செலுத்துவோம். பின்னர் விறகே தேவையில்லை. உடல் உருகும் கொழுப்பே எரியுணவாகும். ஒரு பிணம் இன்னொரு பிணத்துக்கு விறகாகும்” என்றார். அவன் அவர்களின் முகங்களை மாறிமாறி நோக்கினான். அவற்றில் ஓர் அறியவொண்ணா நுண்களிப்பு இருக்கிறதா? அது தங்கள் பணியை திறம்படச் செய்பவர்களுக்கு உருவாகும் நிறைவா? அடுமனையாளர் விழவூட்டுகளில் அடையும் உவகை. அன்றி வேறேதுமா? அவனுக்கு சிதையில் ஊனுண்ண வரும் பாதாள தெய்வங்களைக் குறித்த சூதர்பாடல்கள் நினைவிலெழுந்தன. அத்தெய்வங்கள் இவர்களில் குடியேறியுள்ளனவா?

அவன் சிதைகளில் இருந்து விலகிச்சென்றான். சிற்றமைச்சர் ஜலஜர் சாலமரத்தடியில் நிற்பதை கண்டான். அவனைக் கண்டதும் அவர் தலைவணங்கினார். அவன் அருகணைந்து “தாங்கள் இங்கு பொறுப்பிலிருக்கிறீர்களா, உத்தமரே?” என்றான். “இல்லை, இங்கு நிகழவேண்டிய வைதிகச் சடங்குகளுக்கு மட்டுமே நான் பொறுப்பு” என்றார். “நாங்கள் நூறு அந்தணர் இங்கு வந்துள்ளோம். வைதிக முறைப்படி இறந்தவர்களுக்கு அவர்களின் மைந்தர்களோ தந்தையோ ஆசிரியரோ எரியூட்டி இறுதிச்சடங்கு இயற்றலாம். ஆசிரியர்களாக நின்று நாங்கள் அதை செய்வோம்.” அப்பால் ஒரு கூண்டு வண்டியில் இருந்து வைதிகர்கள் இறங்கி வெண்ணிற ஆடைகள் அந்திவெளிச்சத்தில் துலங்கித்தெரிய கைகளில் தர்ப்பையும் மரக் கமண்டலங்களுமாக ஓசையில்லாமல் நடந்து வந்தனர்.

“தாங்கள் இங்கே பொறுப்பு கொள்கிறீர்களா?” என்றார் ஜலஜர். “ஆம், இவையனைத்தையும் ஒருங்கிணைக்க என்னிடம் பணித்துள்ளனர். ஆனால் இங்கே நான் செய்வதற்கென்ன உள்ளது என்றுதான் புரியவில்லை” என்றான் சாத்யகி. ஜலஜர் “ஆம், பாஞ்சாலர் இங்கு வருவதற்குமுன் உபப்பிலாவ்யத்திலேயே இங்கு எத்தனை பேர் இறக்கக்கூடும் என மதிப்பிட்டிருந்தார். இன்று போர் முடிந்ததுமே எத்தனை பேர் இறந்திருப்பார்கள் என முழுமையாக கணக்கிட்டுவிட்டார். விறகு, அரக்கு வண்டிகள், அத்திரிகள், அந்தணர் என அனைத்தையும் முன்னரே முடிவுசெய்துவிட்டார்” என்றார். “மெய், நான் அவரிடம் ஒரு சொல்லும் உசாவமுடியாது என்றும் உணர்ந்துகொண்டேன்” என்றான் சாத்யகி. “புதைப்பவர்களை என்ன செய்கிறார்கள் என்று மட்டும் நோக்கிவிட்டால் களத்துக்கு செல்வேன்.”

ஜலஜர் “முன்னரே பாஞ்சாலர் இக்களத்திற்கு வந்து நோக்கி புதைப்பதற்கு உரிய எளிய வழிகளை கண்டடைந்துவிட்டிருக்கிறார். இங்கே மண்ணுக்குள் மாபெரும் வெடிப்புகளும் பிலங்களும் உள்ளன. அவ்வெடிப்புகளில் உடல்களைப் போட்டு மண்ணிட்டு மூடுகிறார்கள். மண்ணுக்குள் ஓடும் பிலங்களுக்குமேல் சிறு குழிகளை தோண்டி அத்துளைகளினூடாக பிணங்களை உள்ளே போட்டு துளையை மூடுகிறார்கள்” என்றார். “இல்லாவிடில் இத்தனைபேருக்கும் குழிகள் தோண்டுவது போரைவிட பெரிய பணி. நள்ளிரவுக்குள் பிணங்கள் முழுமையாகவே மறைந்துவிடும். நாளை களம் தூய்மையாக இருக்கும்.” அவர் பற்கள் தெரிய சிரித்து “உண்ட தாலத்தை அடுத்த உணவுக்கு கழுவி வைப்பதுபோல” என்றார்.

சாத்யகி “முன்பும் இவ்வாறுதான் செய்தார்கள் போலும்” என்றான். அங்கே பெரும்பாலானவர்கள் எதையாவது சொல்லி சிரிப்பதை அவன் உணர்ந்தான். அச்சிரிப்பு அவர்களின் உள்ளம் கொள்ளும் இறுக்கத்தை நிகர்செய்யும் வழியா? அதனூடாக அவர்கள் உடையாது தங்களை தொகுத்துக்கொள்கிறார்களா? அன்றி அவர்களில் வந்தமர்ந்து அறியாத் தெய்வங்கள்தான் மானுடரை நகையாடுகின்றனவா? ஜலஜர் “ஆம், பெரும்பாலான பிளவுகளுக்குள் நொதிக்கும் செஞ்சேறு குருதி என நிறைந்துள்ளது. ஓரிரு நாட்களில் உடல்களை செரித்துக்கொள்ளும் பசி கொண்டவை அவை. பிலங்கள் அடியிலிபோல் ஆழமானவை. இங்குள்ள முழுப் படையினரையும் உள்ளே செலுத்தினாலும் நிறையாதவை” என்றார். சாத்யகி பெருமூச்சுவிட்டான். “பிலங்களுக்குள் பல்லாயிரமாண்டு எலும்புகள் குவிந்திருப்பதாகவும் பலகோடி பேய்கள் வாழ்வதாகவும் கதைகள் உள்ளன, யாதவரே” என்றார் ஜலஜர்.

மீண்டும் புரவியிலேறி குறுங்காட்டின் மறுபக்கம் வழியாக அவன் வெளியே சென்றான். அங்கே உடல்களை ஏற்றிய வண்டிகள் எருதுகளால் இழுக்கப்பட்டு நீண்ட நிரையாக வந்து வளைந்து நின்றன. அவற்றிலிருந்து பிணங்களை இறக்கி நீண்ட பன்னிரு வரிசைகளாக அடுக்கி நிரத்தினர் வீரர்கள். தோளோடு தோள் ஒட்டி மல்லாந்து கிடந்த உடல்களில் அறுபட்ட தலைகளை பொருத்தாமல் சற்று அப்பால் தனியாக வைத்தனர். வெட்டுண்ட கைகளையும் கால்களையும் வயிற்றின்மேல் வைத்தனர். உடல்களை அடையாளம் காண்பதற்குரிய முத்திரைகளையும் படைக்கலங்களையும் பிற பொருட்களையும் மார்பின் மேல் சீராக அமைத்தனர். அங்கிருந்து நோக்கியபோது ஒரு பெரும்படையை கிடைமட்டமாக பார்ப்பதுபோல் தோன்றியது. அவர்களனைவரும் எங்கோ போருக்கு சென்றுகொண்டிருப்பதுபோல.

துணைக்கணக்கர்கள் ஒவ்வொரு சடலத்தையாக நோக்கி அடையாளங்களைக் கொண்டு குலத்தையும் பெயரையும் படைப்பிரிவையும் நாட்டையும் அடையாளம் கண்டு உரக்க கூவிச் சொன்னார்கள். “கிருவிகுலத்தைச் சேர்ந்த முத்ரன். எட்டாவது பாஞ்சாலப் படைப்பிரிவு.” அந்த இளைஞனின் தலை தனியாக தரையில் மல்லாந்து விண்நோக்கி வெறித்திருந்தது. வெண்பற்களுடன் அவன் எதையோ சொல்ல விழைவதுபோல. அவனுடைய உடல் அந்த ஓசைக்கு அப்பால் வெறும் பருப்பொருளாக கிடந்தது. விழிகள் இருந்தமையால் அந்தப் பெயரை அவன் தலை அறிந்தது, ஆனால் அதற்கு எதிர்வினை ஆற்றவில்லை. அந்தப் பெயரையும் குலத்தையும் படையையும் நாட்டையும் கேட்டு அது திகைப்பதுபோல தோன்றியது. பெயர்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. “துர்க்ரும குலத்து அகாதன். மூன்றாவது விராடப் படைப்பிரிவு.” அவன் கண்மூடி துயின்றுகொண்டிருந்தான். சூழ நிகழ்வதை அவன் கேட்பதுபோல, அவன் கனவுக்குள் வேறொன்றாக அதை அறிந்துகொண்டிருப்பதுபோல.

மீண்டும் செல்லத்தொடங்கியபோதுதான் ஏன் தலைகள் இணைத்து வைக்கப்படவில்லை என்பதை சாத்யகி எண்ணி புரிந்துகொண்டான். வெட்டுண்ட தலை சேர்க்கப்பட்டால் பாதாள உயிர்கள் அவ்வுடலில் குடியேறிவிடக்கூடும். புதிய விழிகளுடன் எழுந்து நிற்கக்கூடும். ஏனென்றறியாமல் அவன் உடல் மெய்ப்புகொண்டது. தன் உடலெங்கும் வந்து மொய்த்த அறியா விழிகளின் நோக்கை அவன் உணர்ந்தான். இறந்தவர்களின் விழிகள்! காற்றில் எழுந்த அவர்களின் ஆத்மாக்களின் மூச்சு அவன் மேல் மெல்லிய காற்றென தொட்டது. அவன் புரவிக்கு வலப்பக்கம் முடிவிலாது பிணங்களின் அடுக்கு வந்தபடியே இருந்தது. அது முடிந்ததை விழிதிருப்பாமலேயே கண்டு அவன் நீள்மூச்சுவிட்டு எளிதானான்.

தென்மேற்கே ஏழு ஆழ்ந்த நிலவெடிப்புகள் உண்டு என அவன் கேட்டிருந்தான். புரவியை அவன் செலுத்தாமலேயே அது அத்திசை நோக்கி சென்றது. அங்கேயும் பிணங்களின் நீண்ட நிரை உருவாகிக்கொண்டிருந்தது. அவன் சென்று இறங்கி அங்கே நின்றிருந்த துணைப்படைத்தலைவனிடம் “பாஞ்சாலர் ஆணைப்படி கணக்குகள் பதிவாகின்றன அல்லவா?” என்றான். அத்துணைப்படைத்தலைவனின் முகமும் சிகண்டியின் முகம்போலவே இருந்தது. எப்போதோ உள்ளூர இறந்துவிட்ட முகம். “ஆம், இப்போதுதான் தொடங்கியிருக்கின்றன” என்று அவன் சொன்னான். சாத்யகி உள்ளே சென்றான்.

அங்கே நிலப்பிளவின் விளிம்பில் படைவீரர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் அனைவருமே நிஷாதர்களும் கிராதர்களும் அரக்கர்களும் அசுரர்களும்தான் என்பதை கண்டான். அகன்ற பலகைகள் சாலையென வந்து உடைந்த பாலம்போல பிலத்தின் விளிம்பில் நீட்டி நின்றன. நிரையிலிருந்து ஓர் உடலை ஒருவர் சிறு நடைவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டுவந்து அந்தப் பலகையில் வைத்தார். குடிமூத்தார் ஒருவர் தலையில் கழுகிறகு சூடி குடிக்கோலை இடக்கையில் ஏந்தி நின்றிருந்தார். அவருக்கு உதவ இருவர் தாலங்களில் காட்டு மலர்களுடன் பின்னால் நின்றனர். குடிமூத்தார் “சூக குலத்து காரகனே, மூதாதையருடன் மகிழ்ந்திரு! உனக்கு அங்கே நிறைவுண்டாகுக! உன் கொடிவழியினருக்கு நீ வேரென்றாகுக! மண்ணுக்கு அடியில் இருந்து உயிரும் உப்புமென எழுந்து நீ மீண்டும் வருக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார். அவ்வுடல்மேல் ஒரு மலர் வைக்கப்பட்டதும் ஏவலன் பலகையை சரித்தான். உடல் சரிந்து ஆழத்தில் சென்று விழுந்தது. அடுத்த உடல் கைவண்டியில் அருகணைந்தது.

சாத்யகி அதை நோக்கியபடி நின்றான். இருபது இடங்களில் அவ்வாறு நீப்புச்சொற்களுடன் உடல்கள் மண்ணுக்குள் செலுத்தப்பட்டன. பசிஅணையா வாய் ஒன்றுக்கு ஊட்டிக்கொண்டே இருந்தனர். எடைகொண்டு குளிர்ந்திருந்த கால்களை உந்தி நீக்கியபடி நடந்து அவன் மீண்டும் புரவியை அணுகினான். துணைப்படைத்தலைவனிடம் “நான் புலரிக்கு முன் வந்து இந்த பெயர்பதிவை பெற்றுக்கொள்கிறேன்” என்றபின் கிளம்பினான். இருட்டத் தொடங்கிவிட்டிருந்தது. அவன் படைமுகப்பு நோக்கி செல்லத் தொடங்கியபோது தொலைவில் ஒரு சங்கொலி கேட்டது. மணியோசையும் வாழ்த்துக்குரல்களும் உடன் எழுந்தன. அவன் நின்று செவிகூர்ந்தான். பின்னர் அத்திசைநோக்கி புரவியை செலுத்தினான்.

அப்பகுதி குறுங்காட்டில் தனியாக காவலிட்டு பிரிக்கப்பட்டிருந்தது. அவன் அணுகியபோது அங்கிருந்த காவலர்தலைவன் தலைவணங்கி உள்ளே செல்ல ஒப்புதல் அளித்தான். உள்ளே மேலும் காவலர்கள் தென்பட்டனர். சிற்றமைச்சர் சந்திரசூடர் அங்கே நின்றிருந்தார். அவனைக் கண்டதும் அருகணைந்து தலைவணங்கினார். “என்ன நிகழ்கிறது?” என்றான். “இங்கே அரசகுடியினருக்கான எரியூட்டல் நிகழ்கிறது. இளவரசர் அரவான் முதலில் சிதைகொள்கிறார்” என்றார். தயக்கத்துடன் “அந்த உடல் இங்குதான் உள்ளதா?” என்றான் சாத்யகி. “ஆம், யாதவரே. பிற இளவரசர்களின் உடல்கள் அவர்களின் படைப்பிரிவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. அங்கே அரசகுடியினருக்குரிய நீப்புச்சடங்குகள் நிகழ்கின்றன. அவை இங்கே நள்ளிரவுக்குப் பின்னர்தான் ஒவ்வொன்றாக வந்துசேரும்” என்றார் சந்திரசூடர். “இந்நாளில் பெரும்பலி விராடர்களுக்கும் குலாடர்களுக்கும்தான். அவர்களின் உடல்கள் அங்கே குடிச்சடங்குகளுக்காக வைக்கப்பட்டுள்ளன. அரசரும் உடன்பிறந்தாரும் அங்கு சென்றுள்ளனர்.”

பின்னர் குரல் தாழ்த்தி “இது அரவானின் உடல் மட்டுமே. முறைப்படி நாகர்குடிக்குரிய சடங்குகள் அந்த தலைக்குத்தான் செய்யப்படும். இதை வெறுமனே எரித்துவிடும்படி ஆணை” என்றார். “எச்சடங்கும் இன்றியா?” என்றான் சாத்யகி. அவருடைய விழிகள் மேலும் சுருங்கின. “சடங்கு என்றால்…” என்றபின் “அந்த ஆணிலி வந்திருக்கிறாள். அவள் அவரை தன் கணவன் என்கிறாள். அவருடன் சிதையேறுவேன் என்று சொல்கிறாள். அதை ஒப்புவதா என்று அறியாமல் குழம்பி அரசருக்கே செய்தியனுப்பினோம். அவள் விருப்பம் நிறைவேறுக என ஆணை வந்துள்ளது” என்றார்.

சாத்யகி புரவியில் இருந்து இறங்கி குறுங்காட்டின் சிறு பாதையினூடாக நடந்தான். அவன் உடல் ஓய்ந்து தசைகள் உயிரற்றவைபோல தோன்றின. கண்ணிமைகள் அவனை மீறி மூடிமூடி எழுந்தன. ஒரு சில கணங்கள் எண்ணங்கள் சூழலிழந்து எங்கோ அலைந்து மீண்டன. சற்று பள்ளமான இடத்தில் ஓர் ஆள் உயரமுள்ள நீண்ட சிதை ஒருக்கப்பட்டிருந்தது. அதன்மேல் அரக்குபொழிந்த விறகு அடுக்கப்பட்டு அரவானின் தலையிலாத உடல் வெண்கூறை மூடி வைக்கப்பட்டிருந்தது. அவன் கீழே செல்ல எண்ணினாலும் உடலை அசைக்காமல் மேலேயே மகிழமரத்தின் அடியில் நின்று நோக்கிக்கொண்டிருந்தான். அரவானுக்கான சிதைநெருப்பை வைக்கும் அந்தணர் தெற்குமூலையில் அமர்ந்து சடங்குகளை செய்துகொண்டிருந்தார். அங்கிருந்து நோக்கியபோது அவர் செய்வதென்ன என்று தெரியவில்லை. அவர் அருகே முழவும் மணியும் சங்கும் கொண்டு மூவர் நின்றிருந்தனர்.

கீழே சிதையின் கால்பகுதியில் கைகளைக் கூப்பியபடி ரோகிணி நின்றிருப்பதை கண்டான். அவள் அருகே குலாடகுடியின் இரு படைத்தலைவர்கள் உருவிய வாளுடன் நின்றனர். அவள் செந்நிறமான புத்தாடை சுற்றி கழுத்தில் செம்மலர்மாலை அணிந்திருந்தாள். குழலிலும் மலர்களை சூடியிருந்தாள். முகம் சிலைபோல் உறுதிகொண்டிருந்தது. முழவொலியும் சங்கொலியும் மணியோசையும் எழ அந்தணர் சடங்குகளை முடித்து கையில் அனற்கலத்துடன் எழுந்தார். அவருக்கு முன்னால் சங்கூதியபடி ஒருவன் சென்றான். அவர் மும்முறை சிதையை வலம் வந்து அதன் காலடியை வணங்கியபின் நெஞ்சில் அனல்கலத்தை வீசினார். மீண்டும் மும்முறை வணங்கிவிட்டு திரும்பிப்பாராமல் நடந்து அப்பால் சென்றார். முழவும் மணியும் உச்சவிசைகொண்டு ஓசையெழுப்பி ஓய்ந்தன. சங்கை மும்முறை ஊதியபின் அவர்கள் சென்று ரோகிணியின் அருகே நின்றனர்.

அரக்கில் நெருப்பு பற்றிக்கொண்டு செவ்விதழ்களாகப் பெருகி கொழுந்துவிட்டு எரிந்து மேலேறுவதை சாத்யகி கண்டான். அவன் உள்ளம் எந்தப் பரபரப்பும் இன்றி உறைந்து கிடந்தது. இப்பெரும்போருக்குப் பின் அன்றி வேறெப்போதாவது இந்நிகழ்வை பார்த்திருந்தால் உடலும் உள்ளமும் பதறித் துடித்திருக்கும் என்று எண்ணிக்கொண்டான். மீண்டும் சூதர்கள் முழவுகளையும் மணிகளையும் முழக்கத் தொடங்கினர். மும்முறை சங்கு முழங்கியது. ரோகிணி சிதையின் எரியும் கால்பகுதியை வணங்கி கைகளை கூப்பியபடி மும்முறை சுற்றிவந்தாள். முழவோசை தேம்பல்போல ஒலித்தது. மூன்றாவது சுற்றுக்குப்பின் அவள் சற்றே பின்னகர்ந்து பாய்ந்து சென்று சிதைமேல் ஏறி கைகளை விரித்தபடி அரக்குடனும் விறகுடனும் உருகி உடைந்து பொசுங்கி கொழுந்தாடி எரிந்துகொண்டிருந்த அரவானின் உடல்மேல் விழுந்தாள். அவள் உடல் அங்கே இருமுறை துள்ளியது. பின்னர் தழல்கள் அவளை முழுமையாக மூடிக்கொண்டன.

சாத்யகி தழலை நோக்கிக்கொண்டிருந்தான். அதற்குள் அவள் உடலின் அசைவுகள் தெரிவன போலவும் அது தழலாட்டம் மட்டுமே என்றும் தோன்றியது. பின்னர் பெருமூச்சுடன் திரும்பியபோது இடக்கால் செயலிழந்ததுபோல மண்ணில் பதிந்திருந்தது. அவன் காலை இழுத்து நடந்தபோது ஒரு தசைமட்டும் விதிர்த்தபடியே இருந்தது.

tigபூரிசிரவஸ் கௌரவப் படைகளினூடாக புரவியில் செருமுகப்பு நோக்கி சென்றான். படைகள் முற்றமைந்துவிட்டிருந்தமையால் மரத்தாலான பாதையில் அவனால் விரைந்து செல்ல முடிந்தது. வானில் வெளிச்சம் மீதியிருந்தது. தொலைவில் மருத்துவநிலைகளில் மட்டும் நெய்விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. அடுமனை நெருப்புகளை தொலைவில் காணமுடிந்தது. அந்தச் செவ்வெளிச்சத்தை பார்த்ததுமே பசி பொங்கி எழுந்தது. சூடான ஊன்கஞ்சி, இப்பொழுதை நிறைக்கவல்லது அதுதான். இப்போது இங்கிருக்கும் வீரர் அனைவருக்கும் பிற எவற்றையும்விட முதன்மையானது சூடான புத்துணவு.

பிறிதெப்போதும் உணவு இத்தனை சுவைகொள்ள வாய்ப்பில்லை. உணவு என உருக்கொண்டு மண் தன் அத்தனை சுவைகளுடன் சூழ்ந்துகொள்ளும். வானம் அத்தனை மணங்களுடன் அணைத்துக்கொள்ளும். உயிர் “ஆம், இதோ நான்” என்று உணவிடம் சொல்லும். உணவு “ஆம், இதோ நீ” என்று உயிரிடம் சொல்லும். நல்லுணவுக்குப்பின் மல்லாந்து மண்மேல் படுத்து விண்ணைநோக்கும் வீரன் நிறைவுடன் புன்னகைப்பான். ஒவ்வொருநாளும் மரங்கள் விண் நோக்கி அடையும் விரிவை முதல்முறையாக தானும் அடைவான்.

பூரிசிரவஸ் படைமுகப்பை அடைந்தபோது மெல்லிய பாடலோசை கேட்டது. அதை முதலில் அழுகையோசை என்றுதான் பழகிப்போன செவி புரிந்துகொண்டது. மேலும் அணுகியபோதுதான் அது பலர் இணைந்து மெல்லிய குரலில் பாடுவது என்று புரிந்தது. அவன் புரவிமேல் தளர்வாக அமர்ந்து அப்பாடலை கேட்டுக்கொண்டே சென்றான். சொற்கள் புரியவில்லை. ஆனால் சீரான தாளத்துடன் அது அமைந்திருந்தது. அதில் துயரில்லை என்பது முதலில் தெரிந்தது. மெல்லிய களியாட்டு இருப்பது பின்னர் புரிந்தது. மேலும் அணுகியபோதுதான் அது செருகளத்தின் பிணக்குவியல்களின் நடுவிலிருந்து ஒலிப்பதை அவன் புரிந்துகொண்டான்.

செருகளம் முதற்பார்வைக்கு பெருவெள்ளம் வடிந்தபின் சேற்றை நிறைத்துப் பரவியிருக்கும் மட்கிய மரக்கட்டைகளின் குவியல்போல தெரிந்தது. இடைவெளியே இல்லாமல் உடல்கள். மனிதர்கள், புரவிகள். நடுவே பாறைகள் என ஆங்காங்கே யானைகள். அவற்றின் நடுவே அலைநீரில் ஆடுபவைபோல சிறிய நெய்விளக்குகள் அலைந்தன. அவற்றின் பின் அவற்றை ஏந்தியவர்களின் நிழல்கள் எழுந்து ஆடின. சிறுகுழுக்களாக அவர்கள் செருகளத்தில் பரவியிருந்தனர். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அப்பாடலை பாடிக்கொண்டிருந்தார்கள். பிணங்களின் நடுவே காலடி வைத்து நடக்கும்போதும் பிணங்களை குனிந்து நோக்கும்போதும் அவர்களின் உடல்கள் இயல்பான தாளத்துடன் அசைய அந்தப் பாடல் எழுந்தது.

விளக்கொளியால் பிணங்களின் அடையாளங்களை நோக்கி கண்டடைந்ததும் “யானை!” என்றோ “எருது!” என்றோ கூவினர். யானை என்பது கௌரவப் படையை குறிக்கிறது என்று அந்த உடல் உடனே அங்கிருந்து தூக்கப்பட்டு கிழக்குப் பக்கமாக ஒதுக்கப்படுவதிலிருந்து பூரிசிரவஸ் அறிந்தான். ஒதுக்கி வைக்கப்பட்ட பிணங்களை அவை அணிந்திருந்த ஆடையால் தலையும் உடற்பகுதிகளும் சேர்த்து தரையிலிட்டு உருட்டி சுற்றிக் கட்டினர். அவற்றை இருவர் தூக்கி சிறிய கைவண்டிகளில் வைக்க ஒருவர் தள்ளிக் கொண்டுவந்து செருகளத்தின் விளிம்பில் மரப்பாதைமேல் நின்றிருந்த பிணவண்டிகளில் அடுக்கினர். விறகுபோல ஒன்றன் மேல் ஒன்றென வண்டி நிறைந்து கவியும் அளவுக்கு அடுக்கியதும் அது முன்னகர அடுத்த வண்டி வந்து நின்றது. வண்டியோட்டிகளும் அப்பாடலை மெல்ல பாடிக்கொண்டிருந்தார்கள்.

பூரிசிரவஸ் அங்கே நின்று அவர்களின் பணியை நோக்கிக்கொண்டிருந்தான். மேலும் சற்று தொலைவில் நின்று அந்த இடத்தை நோக்கினால் அங்கே உளம்நிறைவடையச் செய்யும் இனிய சடங்கொன்று நிகழ்வதாகவே எவருக்கும் தோன்றும் என எண்ணிக்கொண்டான். அந்தப் பாடல் கொஞ்சுவதுபோலவும் வேடிக்கையாக ஊடுவதுபோலவும் ஒலித்தது. ஆனால் மென்முழக்கமாக ஒலித்தமையால் சொல் புரியவில்லை. அந்தப் பாடலில் அவர்கள் வானிலிருந்து தொங்கும் சரடு ஒன்றில் ஆடிச் சுழலும் பாவைகள் என ஆனார்கள். சற்றுநேரம் கழித்தே அவர்கள் ஒரே திரளாக பணியாற்றுவதை அவன் உணர்ந்தான். அவர்களில் இரு தரப்பிலும் இருந்து வந்த ஏவலர் இருந்தனர். ஓர் உடலை மேற்கே இழுத்து விலக்கிவிட்டு இன்னொன்றை கிழக்கே கொண்டு சென்றனர்.

அப்பால் புரவியில் வருவது சாத்யகி என அவன் புரவியில் அமர்ந்திருந்ததில் இருந்தே உணர்ந்தான். சாத்யகி புரவியை இழுத்து நிறுத்தி அவர்களை நோக்கினான். அவன் தன்னை பார்த்துவிட்டதை பூரிசிரவஸ் உணர்ந்தான். “அவர்கள் கழையர்கள், முரசும் கொம்பும் ஒலிக்கும் அறிவிப்பாளர்கள்” என்று அவன் வேறெங்கோ நோக்கியபடி சொன்னான். அது அவனை நோக்கி சொல்லப்படாததனாலேயே விந்தையானதோர் அழுத்தம் கொண்டிருந்தது. சற்றுநேரம் கழித்து “ஆம்” என்றான். “அவர்கள் போரின் நடுவே இருக்கிறார்கள். ஆனால் போரிடுவதில்லை. முழுப் படையையும் பறவைநோக்கில் பார்க்கிறார்கள். அவர்கள் பார்க்கும் படையை பிற எவரும் பார்ப்பதில்லை” என்று சாத்யகி மீண்டும் சொன்னான். அப்பேச்சு ஏன் என அவனுக்கு புரியவில்லை. சாத்யகி பேசவிழைகிறான் என்று மட்டும் புரிந்தது. ஆனால் அதன்பின் நெடுநேரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

மீண்டும் பேசியபோது சாத்யகியின் குரல் மாறிவிட்டிருந்தது. “வலுவான புண்களேதும் இல்லையே?” என்றான். “இல்லை, தங்களுக்கு?” என்றான் பூரிசிரவஸ். “இல்லை” என்று சாத்யகி சொன்னான். படைகளில் பந்தங்கள் எழத்தொடங்கின. சற்றுநேரத்தில் நெடுந்தொலைவு வரை செந்தழல்களின் நிரை எழுந்தது. சாத்யகி “இன்னும் சில நாழிகைகளில் மனித உடல்கள் அகற்றப்பட்டுவிடும்” என்றான். “ஆம், ஆனால் அதன்பின்னர் புரவிகளும் யானைகளும் உள்ளன. தேர்களின் உடைவுகளை நீக்கவே நெடும்பொழுதாகும்” என்றான். சாத்யகி “யானைகளை அரசன்போலவும் புரவிகளை வீரன்போலவும் எரியூட்டவேண்டும் என்று நெறி” என்றான்.

பூரிசிரவஸுக்கு அது புதிய செய்தியாக இருந்தது. “மெய்யாகவா?” என்றான். “ஆம், யானைகள் கான்வேந்தர் என்றே நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. யானைகள் இறந்தால் அரசனின் ஓலை படிக்கப்பட்டு முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு சிதையேற்றப்படவேண்டும். ஏழாண்டுகள் நீர்க்கடன் அளிப்பார்கள்” என்றான் சாத்யகி. “புரவிகள் இறந்தால் புதைக்கலாம். ஆனால் அவற்றுக்கு நடுகல் நிறுத்தப்படும். ஓராண்டு நிறைவில் கள்ளும் மலரும் படைத்து வணங்கி விண்ணேற்றுவார்கள்.”

மீண்டும் அவர்கள் சொல்லின்மையை அடைந்தனர். பூரிசிரவஸ் சிலமுறை பேச எண்ணினான். ஆனால் சொற்கள் எழவில்லை. பின்னர் அவன் அம்முயற்சியை கைவிட்டு அமைதியிலாழ்ந்தான். சாத்யகியும் பிறகு பேச முற்படவில்லை. ஆனால் அருகருகே இருக்க விழைந்தனர். களம் முழுக்க ஒலித்துக்கொண்டிருந்த அந்தப் பாடலை கேட்டபடி நின்றிருந்தார்கள்.

[செந்நா வேங்கை நிறைவு]

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 81

tig“திரும்புக, பின் திரும்புக… எதிர்கொள்ளல் ஒழிக! நிலைக்கோள்! நிலைக்கோள்” என பாண்டவப் படையின் முரசுகள் முழங்கிக்கொண்டிருந்தன. திருஷ்டத்யும்னன் தன் படைகளுக்கு “நிலைகொள்ளுங்கள்… எவரையும் பின்நகர விடாதிருங்கள்” என்று ஆணையிட்டபடி தேரிலிருந்து தாவி புரவியிலேறிக்கொண்டு படைகளினூடாக விரைந்தான். அவனைச் சூழ்ந்து அம்புபட்டு பாண்டவப் படையின் வீரர்கள் விழுந்துகொண்டிருந்தனர். ஒன்றுமேல் ஒன்றென விழுந்து குவியல்களாக துடித்துக்கொண்டிருந்தன சாகும் பிணங்கள். அவன் புரவி பல இடங்களில் தயங்கி கனைத்தபடி மறுபக்கம் தாவிச்சென்றது.

யுதிஷ்டிரரின் தேரை அணுகியதும் அவன் விரைவை குறைத்தான். மறுபக்கம் தேரில் வந்த சாத்யகி புரவியில் வந்து யுதிஷ்டிரரின் தேரின் அருகே நின்றான். யுதிஷ்டிரர் தேர்த்தட்டில் அமர்ந்திருந்தார். அவருடைய புண்களுக்கு மருத்துவன் வெதுப்புமருந்து வைத்து ஒட்டிக்கொண்டிருந்தான் “என்ன நடந்தது?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். “சல்யருக்கும் அரசருக்குமான தனிப்போர்… அரசரை மீட்கும்படி ஆகிவிட்டது” என்றான் சாத்யகி. அவனும் பதற்றம் கொண்ட நிலையில்தான் இருந்தான். நெடுந்தொலைவுவரை அலைக்கொந்தளிப்பின் சருகுப்படலம் என நெளிந்தமைந்த பாண்டவப் படை முழுக்க பதற்றம் நிறைந்திருந்தது. “அரசே” என்றான் திருஷ்டத்யும்னன்.

யுதிஷ்டிரர் விழிதிறந்து பதறியபடி எழுந்தார். “என்ன நிகழ்கிறது? நம் தரப்பின் இளையோர் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். பீஷ்மர் இரக்கமே இன்றி சிறுவர்களை கொன்று குவிக்கிறார். உங்கள் சூழ்கைக் கணக்குகள் அனைத்தும் பிழைத்துவிட்டன. சிறுவரை முன்னே அனுப்பினால் பிதாமகரின் வில் தயங்கும் என எண்ணினீர்கள். சிறுவர்களைக் கொன்று வீசி தான் எதனாலும் தயங்கப்போவதில்லை என அவர் தன் படைகளுக்கு காட்டிவிட்டார். அவருடைய தயங்காமை கண்டு கௌரவர் வெறிகொள்ள நம்மவர் சோர்ந்துவிட்டனர்… பேரழிவு… முதல்நாளே நம் படைகளில் ஐந்திலொன்று அழிந்துவிட்டது…” என்று கூவினார். மூச்சுவாங்காமல் “போதும், இனி இளையோர் அழியக்கூடாது… பின்வாங்கும்படி சொல்க… இளையோர் எவரும் படைமுகம் செல்லக்கூடாது” என்றார்.

திருஷ்டத்யும்னன் “அரசே, பீஷ்மர் எண்ணியிராதபடி கொலைவெறி கொண்டிருக்கிறார். நிகழ்ந்தது பேரழிவு. இரண்டுமே உண்மை. ஆனால் இத்தருணத்தில் நாம் பின்வாங்குவோம் என்றால் நாளை நம்மால் எழவே முடியாது. இன்று மாலை வரை எதிர்த்து நிற்போம்… இப்போதே வெயில் மங்கலடைந்து வருகிறது. இன்னும் சற்றுநேரம்தான்…” என்றான். பற்களைக் கடித்து விழிகளில் ஈரத்துடன் “நிறுத்து… இது போரே அல்ல. இது வெறும் படுகொலை. பலியாடுகள் என சென்று நின்றிருக்கிறோம்…” என்று யுதிஷ்டிரர் கூவினார். “அரசே, நீங்கள் உளம்சோர வேண்டியதில்லை. அர்ஜுனர் பீஷ்மரை நிறுத்தினார். அதைவிட இளையவர் அபிமன்யூவால் பீஷ்மர் வெல்லப்பட்டார். நாம் வெல்வோம்…” என்றான் திருஷ்டத்யும்னன். “அது பிதாமகரின் விளையாட்டு… வெல்லமுடியும் என விருப்பு காட்டி நம் மைந்தரை களத்திற்கு ஈர்க்கிறார். அவர்களை இன்றே அவர் கொன்று கூட்டுவார்… வேண்டாம்! இக்கணமே அவர்கள் திரும்பியாகவேண்டும்.”

சாத்யகி “நாம் பொருதிநிற்கவேண்டும் என்றே எண்ணுகிறேன், அரசே” என்றான். மேலும் உரக்க “போரில் தோற்பவர்கள் தோல்வியை முன்னரே ஏற்றுக்கொண்டவர்கள்தான். நாம் தோற்கக்கூடும் என்ற ஐயமே எழக்கூடாது. நம்மால் வெல்லமுடியும்” என்றான். யுதிஷ்டிரர் சினத்துடன் “எப்படி? கொன்றுகுவித்துக்கொண்டிருக்கிறார் முதியவர். நச்சு கலக்கப்பட்ட குளத்தில் மீன்கள்போல கிடக்கிறார்கள் நம் வீரர்கள். இனிமேலும் நாம் நம் இளையோரை பலிகொடுக்க வேண்டியதில்லை” என்றார். சாத்யகி “இளையோர் செல்லவேண்டியதில்லை. நாம் செல்வோம். அரசே, பாண்டவ மைந்தர் அபிமன்யூ முதியவரை ஒரு நாழிகைப்பொழுது திணறச்செய்தார். நாம் இளைய பாண்டவர் அர்ஜுனரையும் அபிமன்யூவையும் சுருதகீர்த்தியையும் சேர்த்து அனுப்பி அவரை தடுத்து நிறுத்துவோம்” என்றான்.

“இளையோர் செல்லவேண்டாம்… இது என் ஆணை! பார்த்தனும் திருஷ்டத்யும்னனும் நீயும் சென்று அவரை செறுத்து நிறுத்துங்கள்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். அப்போது படைகளிலிருந்து பெருங்குரலில் வாழ்த்தொலிகள் எழுந்தன. “என்ன? என்ன நிகழ்கிறது அங்கே?” என்றார் யுதிஷ்டிரர். ஒரு வீரன் புரவியில் விரைந்து வந்து திரும்பி “அரசே, தன் தந்தையையும் உடன்பிறந்தாரையும் கொன்ற துரோணருக்கும் சல்யருக்கும் பீஷ்மருக்கும் எதிராக மண்ணில் கையறைந்து வஞ்சினம் உரைத்து சங்கன் எழுந்துள்ளார்” என்றான். யுதிஷ்டிரர் “அறிவிலி… அறிவிலி… உடனே செல்க! அவனை தடுத்து நிறுத்துக!” என்றார்.

“அரசே, அவர்களை கொல்வேன் என அவர் மண்ணறைந்துள்ளார்” என்றான் வீரன். “அவன் சொன்ன சொற்களை சொல்” என்றார் யுதிஷ்டிரர். “தமையன் கொல்லப்பட்டதைக் கேட்டதும் அவர் தேரிலிருந்து பாய்ந்திறங்கினார். வானை நோக்கி கைநீட்டி தெய்வங்களே மூதாதையரே என்று கூவினார். நாங்கள் அவரை சூழ்ந்தோம். மண்ணில் மும்முறை அறைந்து வஞ்சினம் வஞ்சினம் என்றார். கண்ணீர் வழிய என் மூத்தோரை, என் படைத்துணைவரைக் கொன்றழித்த துரோணர், சல்யர், பீஷ்மர் எனும் மூவரையும் களத்தில் எதிர்த்து நின்று கொல்வேன். குருதிப்பழி கொள்வேன். ஆணை என்றார். நாங்கள் தெய்வங்கள் அறிக, வானோர் அறிக, மூத்தோர் அறிக, வஞ்சம் நிகழ்க, வெற்றிவேல் வீரவேல் என வாழ்த்து கூவினோம்” என்றான் வீரன்.

“வஞ்சினம் உரைத்தவனை அதை ஒழியச்செய்வது மாண்பல்ல” என்றான் சாத்யகி. “நன்று, அவ்வஞ்சம் நடக்கட்டும். ஆனால் அதில் இன்று மாலைக்குள் என்னும் சொல் இல்லை. ஆகவே இன்றல்ல, வரும்நாளில் அவன் தன் வஞ்சத்தை நிறைவேற்றட்டும். இது என் ஆணை!” என்றார் யுதிஷ்டிரர். திருஷ்டத்யும்னனை நோக்கி “முதியவர்களை பின்னர் பார்த்தன் எதிர்கொள்வான். குலாடகுடியின் இளையோனின் வஞ்சம் நம்மால் முடிக்கப்படும். இப்போது அவனை தடுத்து நிறுத்துக! அவன் பிதாமகரின் முன் சென்றுவிடலாகாது” என்றார்.

திருஷ்டத்யும்னன் தலைவணங்கி புரவியைத் திருப்பி படையணிகளின் நடுவே பாய்ந்துசென்றான். அம்புகள் படாமலிருக்க அவன் புரவிமேல் முதுகு வானுக்குக் காட்டி நன்கு குனிந்திருந்தான். அவன் புறக்கவசம்மீது அம்புகள் கூழாங்கல் மழை என உதிர்ந்துகொண்டிருந்தன. அலறி விழுந்துகொண்டிருந்த வீரர்களின் உடல்கள் மேல் பாய்ந்து சென்றுகொண்டிருக்கையில் அவன் உள்ளம் சொல்லின்றி திகைத்திருந்தது. முதல்நாள் முதல்நாள் என்று அது துடித்து விழித்துக்கொண்டது.

அவன் சங்கனை தொலைவிலேயே பார்த்துவிட்டான். கைகளைத் தூக்கி “சங்கனை சூழ்ந்துகொள்க!” என ஆணையிட்டான். அவன் உதடுகளில் இருந்தும் கையசைவிலிருந்தும் ஆணையைப் பெற்ற கேட்டுச்சொல்லி அதை உரையாக்க முரசுகள் அதை இடியோசையாக்கின. கவசவீரர்களும் வில்லவர்களும் சங்கனை சூழ்ந்தனர். கேடயத் தேர்கள் சங்கனை மறித்து கோட்டை அமைத்தன. அவன் அவர்களை நோக்கி “வழிவிடுக… வழிவிடுக!” என்று கூவினான். அவனை அணுகிய திருஷ்டத்யும்னன் “இளையோனே, இது அரசாணை. இன்று நம் போர் முடிந்துவிட்டது. குறைந்த இழப்புகளுடன் காப்புப்பூசல் நிகழ்த்தி அந்தியை அணைவதே இனி நம் போர்முறை. போதும், பின்வாங்குக! உன் படைகளைத் தொகுத்து மீண்டும் வேல்முனைச் சூழ்கை அமைத்துக்கொள்க! குறைந்த இறப்புகளுடன் பின்நகர்ந்து மையப்படையுடன இணைக!” என்றான்.

சங்கன் வெறிகொண்டிருந்தான். “இல்லை பாஞ்சாலரே, இனி இக்களத்திலிருந்து நான் குருதிப்பழி கொள்ளாது மீள்வேன் என்றால் எனக்கும் என் குலத்திற்கும் இழிவு… நான் வஞ்சினம் உரைத்துவிட்டேன்” என்றான். “வஞ்சினம் அவ்வாறே இருக்கட்டும். இன்று மட்டும்தான் பின்னடைகிறோம். அந்தியில் அமர்ந்து புதிய படைசூழ்கைகளை அமைப்போம். ஆற்றலை தொகுத்துக்கொண்டு நாளை வந்து திருப்பி அடிப்போம். அதுவே அறிவுடைமை. இன்று முந்துவது பொருளிலாச் செயல். நாம் செல்லவேண்டிய தொலைவு மிகுதி” என்றான் திருஷ்டத்யும்னன். “இல்லை, உரைத்த வஞ்சினத்திற்கே வீரன் கடன்பட்டவன். தெய்வங்களைவிட, மூதாதையரைவிட, அரசனையும் தந்தையையும்விட” என்றான் சங்கன்.

“ஆம், உன் வஞ்சினம் நிலைகொள்ளட்டும். இன்று மாலைக்குள் குருதிப்பழி கொள்வேன் என நீ சொல்லவில்லை அல்லவா?” என்றான் திருஷ்டத்யும்னன். “இன்று மாலைக்கு இன்னும் மிகைப்பொழுதில்லை. நோக்கியிருக்கவே கதிரிறக்கம் நிகழும்.” வெறியுடன் சிரித்தபடி சங்கன் “நீங்கள் சொல்வது புரிகிறது, பாஞ்சாலரே. அது நான் என்னையே ஏமாற்றிக்கொள்வதன்றி வேறல்ல. நான் வஞ்சினம் உரைக்கையில் இன்று இக்கணம் என எண்ணியே சொன்னேன். அதுவே நான் கொள்ளும் பொருள்” என்றான். “இது முதன்மை படைத்தலைவனாக என் ஆணை!” என்றான் திருஷ்டத்யும்னன். “அதை நான் மீறுகிறேன். விழைந்தால் என்னைக் கொல்ல ஆணையிடுக!” என்றபடி சங்கன் தன் தேரைச் செலுத்தும்படி பாகனுக்கு ஆணையிட்டான்.

தேர் விசைகொண்டு சென்று கேடயத்தேர் ஒன்றை முட்டியது. அது உருவாக்கிய இடைவெளியினூடாக சங்கன் அப்பால் சென்றான். “அவரை சூழ்ந்துகொள்க! எக்கணமும் அவர் உதவிக்கு இரும்புத்திரை எழவேண்டும்” என்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான். “அரசே, துரோணரின் தாக்குதல் மிகுந்து வருகிறது. நெடுந்தொலைவு உள்ளே வந்துவிட்டார்” என்றான் தூதன். “இதோ” என்று அவன் புரவியைத் திருப்பி விரைந்து தன்னை நோக்கி வந்த தேரில் ஏறிக்கொண்டான். துரோணருடன் அபிமன்யூ வில்கோத்திருந்தான். “அபிமன்யூவை காத்து நில்லுங்கள். சுருதகீர்த்தி சல்யரை எதிர்கொள்ளட்டும். பாண்டவ மைந்தர் பின்னடைக! அபிமன்யூவின் பின்னால் சாத்யகி செல்க!” என அவன் ஆணையிட்டான்.

சங்கன் கைகளைத் தூக்கி கூச்சலிட்டபடி பீஷ்மரை நோக்கி செல்வதை திருஷ்டத்யும்னன் கண்டான். தேரைத் திருப்பி சங்கனின் பின்னால் செல்ல ஆணையிட்டான். “ஆலிலை, பன்னிரண்டாவது பிரிவு இரண்டாக உடைந்துள்ளது. நடுவே துரியோதனரின் படை உட்புகுந்துள்ளது” என செய்தி வந்தது. “ஆணை, அர்ஜுனன் அங்கே சென்று அப்படைப்பிரிவை இணைக்கவேண்டும். கௌரவர் பின்னுக்குத் தள்ளப்படவேண்டும்” என்றான். அலறியபடி துதிக்கை வெட்டுண்ட யானை ஒன்று ஓடி வந்தது. எதிர்ப்பட்டவர்களை மிதித்துத் தள்ளியபடி தேர்களைச் சரித்தபடி வந்து முழங்கால் மடித்து விழுந்து கொம்புகள் நிலத்தில் குத்தியிறங்க உடல்துடித்து பக்கவாட்டில் சரிந்தது.

அந்த யானை உருவாக்கிய வழியில் பூரிசிரவஸ் தோன்றினான். உடலெங்கும் யானையின் கொழுங்குருதி உருகிய செவ்வரக்கென விழுதுகளாக வழிய அவன் தன் வழுக்கும் வில்லை ஏந்தி அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்தான். சங்கனும் பூரிசிரவஸும் விற்களால் எதிர்கொண்டார்கள். அம்புகள் பறந்து முட்டி உதிர நோக்கை மறைக்கும் குருதிவழிவை தலையை உதறித் தெறிக்கவைத்தபடி சங்கன் போரிட்டான். இரு தேர்களும் ஒரு சுழலும் சகடத்தின் இருமுனைகளில் அமைந்த ஆணிப்புள்ளிகள் என ஒன்றையொன்று சுற்றிவந்தன. கீழே கிடந்த குதிரை ஒன்றின்மேல் ஏறிய பூரிசிரவஸின் தேர் சற்றே சரிய அவன் தலையை அறைந்து கவசத்தை உடைத்தது சங்கனின் அம்பு. மீண்டுமொரு அம்பு பூரிசிரவஸின் தலைக்குச் செல்ல அவன் திரும்பி அதை ஒழிந்தபோது கன்னத்தை கீறிச்சென்றது. அவன் விட்ட அம்பு சங்கனின் தோளிலையை உடைத்தது.

திருஷ்டத்யும்னன் மேலே நோக்கினான். கதிரவன் மேற்கே சரியத் தொடங்கிவிட்டிருந்தான். பாண்டவப் படையின் நீள்நிழல்கள் கௌரவப் படைகள் மேல் விழுந்து சுழன்றாடின. கௌரவர்கள் அனைவருமே அனல் பற்றி எரிவதுபோல் ஒளிகொண்டிருந்தார்கள். கவசங்களிலிருந்து தழலெழுந்தாடுவதுபோல தோன்றியது. இன்னும் சற்று பொழுது. பூரிசிரவஸின் புரவி ஒன்று சங்கனின் அம்பில் கழுத்து அரிபட்டு தலைதாழ்ந்துவிட அவன் தேர் சரிந்தது. அவன் தன் வாளை உருவியபடி தேரிலிருந்து பாய்ந்து நிலத்தில் நின்று அறைகூவினான். திருஷ்டத்யும்னன் “சங்கனை காக்க!” என ஆணையிட்டபடி தன் புரவியில் பிணக்குவியல்களைக் கடந்து தாவி “பால்ஹிகரே, என்னுடன் பொருதுக! இளையோனுடன் ஆற்றல்காட்டி தருக்கவேண்டாம்” என்றான்.

பூரிசிரவஸ் நகைத்து “நீர் அங்கநாட்டரசர் அல்ல என்றால் இன்று என் வாளுக்கு பலியாவீர். இந்நிலத்தில் வேறெவரும் எதிர்நிற்கவியலாது என்று அறிந்திருப்பீர்” என்று கூவினான். சங்கனை கேடயப்படை சூழ்ந்து அப்பால் தள்ளிக்கொண்டு சென்றது. திருஷ்டத்யும்னன் நிறைவுணர்வுடன் பூரிசிரவஸை வாளெதிர்கொண்டான். “நோக்குவோம்… போரில் திறனல்ல, தெய்வங்களே ஊழாடுகின்றன” என்றான் திருஷ்டத்யும்னன். தன் வாளால் அவன் பூரிசிரவஸின் வாளை சந்தித்தான். அவன் வாள் எடைமிக்கது, நீண்டது. அதன் ஓர் அடியை பூரிசிரவஸின் வாள் எதிர்கொள்ளவியலாது. ஆனால் விழிநோக்கவியலா விரைவுகொண்டது பூரிசிரவஸின் வாள் என அவன் அறிந்திருந்தான். அவன் தன் வாளைச் சுழற்றி வீச கைகளால் காற்றை உந்தி மெல்ல எழுந்து பின் விலகி அந்த வீச்சை ஒழிந்தான் பூரிசிரவஸ்.

அவன் முழு விசையுடன் வாளை சுழற்றிக்கொண்டிருந்தான். வண்ணத்துப்பூச்சியை வாளால் வெட்ட முயல்வதுபோல தோன்றியது. எதிர்பாராத கணத்தில் பூரிசிரவஸ் பாய்ந்து முன்னால் வந்தான். அவன் கண்கள் இரு கரிய வண்டுகள் என நேருக்குநேர் பறந்து வரக் கண்டு அவன் உள்ளம் திகைத்தது. அவன் வாள் அப்போது ஒரு வீச்சின் சுழற்சியில் வளைந்து அப்பால் சென்றிருக்க அவன் நெஞ்சு காப்பற்றிருந்தது. அவன் கவசத்தின் இடைவெளியில் புகுந்தது பூரிசிரவஸின் வாள். அவன் தன் உடலை உந்தி பின் தள்ளி மல்லாந்து விழுந்தான். வாள் தன் நெஞ்சை ஊடுருவிவிட்டதென்றே தோன்றியது. வலக்கை தனியாக துடித்தது. அதிலிருந்த வாள் கீழே விழுந்தது.

கேடயங்களுடன் காப்புப்படை வந்து அவனை சூழ்ந்துகொண்டது. இரண்டு வீரர்கள் தூண்டில்கொக்கிகளை அவனை நோக்கி வீசி அவன் கச்சையில் கோத்து இழுத்து தூக்கிக்கொண்டனர். கேடய வீரர்கள் இருவரை வீழ்த்திவிட்டு பாய்ந்து புரவியொன்றின்மேல் ஏறிய பூரிசிரவஸ் அதன் விலாவில் தொங்கிய வில்லை எடுத்து அவன் மேல் அம்புகளை எய்தான். திருஷ்டத்யும்னனை தேரிலேற்றிக்கொண்டு பின்னகர்ந்தனர் பாஞ்சாலர். பூரிசிரவஸுடன் வந்து சேர்ந்துகொண்ட சலனும் தார்விக நாட்டரசன் சசாங்கனும் திரிகர்த்த நாட்டரசன் ஷேமங்கரனும் சௌவீர நாட்டரசன் சுமித்ரனும் அம்புகளால் பாண்டவப் படைகளை தாக்கி பின்னடையச் செய்தனர். எடை மிகுந்தோறும் தாழும் தூளி என பாண்டவப் படை தழைந்து வளைந்து பின்னடைந்தது. தேரில் படுத்தபடி திருஷ்டத்யும்னன் “மேலும் படைகள் இம்முகப்புக்கு வருக! அவர்களை தடுத்து நிறுத்துக” என ஆணையிட்டான்.

அணுக்கன் தேரிலேறி அவன் தோள் கவசத்தை கழற்றினான். புண்மேல் மெழுகுச்சீலையை வைத்து இறுகக் கட்டினான். குருதி நின்றாலும் தீப்புண் என காந்தியது தோள். “கழுத்துநரம்புக்கு வந்த வெட்டு இளவரசே, திறம்படத் தப்பிவிட்டீர்கள்” என்றான் அணுக்கன். “திறமையால் அல்ல, கால்தடுக்கி பின்னால் விழுந்தேன். மூத்தோர் அருளால். நாம் செல்ல இன்னும் நெடுந்தொலைவுள்ளது. ஆற்றவேண்டிய கடமைகள் பல உள்ளன” என்றான் திருஷ்டத்யும்னன். அவனிடம் ஓடிவந்த படைத்தூதன் “நூற்றுவர்தலைவர் எழுபதுபேர் இறந்தனர் இளவரசே, ஆயிரத்தவர் அறுவர் பூரிசிரவஸால் கொல்லப்பட்டுவிட்டனர்” என்றான். “கழையர் நோக்குக!” என்று அவன் சொன்னான். ஏறி இறங்கிய கழையன் “இளவரசே, நமது படைகள் மிகவும் பின்வாங்கிவிட்டிருக்கின்றன. செருகளத்தின் எல்லைவரை நம்மை செலுத்திவிட்டனர் கௌரவர்” என்றான். “சொல்க!” என அவன் கூவினான். “அர்ஜுனர் துரோணருடன் பூசலிடுகிறார். துரியோதனருக்கும் பீமனுக்கும் போர் நிகழ்கிறது. சகுனியை சாத்யகி எதிர்கொள்கிறார். அப்பால் ஜயத்ரதரிடம் அபிமன்யூ போரிட்டுக்கொண்டிருக்கிறார். அவருக்குத் துணையாக சர்வதனும் சுதசோமனும் இருபுறமும் நின்றிருக்கிறார்கள்.”

திருஷ்டத்யும்னன் “சங்கன் எங்கே? சங்கன் என்ன ஆனான்?” என்றான். “அரசே, அவர் பீஷ்மரை எதிர்கொள்கிறார்.” திருஷ்டத்யும்னன் தேரில் கையூன்றி எழுந்தமர்ந்து “எங்கே?” என்றான். “எத்தனை பொழுதாக?” வீரன் “அரைநாழிகைப்பொழுதாக. அவர் துரியோதனரை எதிர்கொண்டார். அங்கிருந்து பீஷ்மரிடம் சென்றார்” என்றான். தேர்த்தூணைப் பற்றி எழுந்து நின்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான் “செல்க! படைமுகப்புக்கு… பீஷ்மரின் முன்னிலைக்கு!” தேர்ப்பாகன் “அரசே…” என “செல்க!” என அவன் கூவினான். தேர்ப்பாகன் புரவியை தட்டியதுமே அது கிளம்பி பாய்ந்தது. தேரின் ஒவ்வொரு அசைவுக்கும் அவன் உடல் அதிர்ந்து புண் வலிகொண்டது. “விரைக! விரைக!” என கூவினான். தேர் சென்றுகொண்டிருக்கையிலேயே “சங்கனை காத்துகொள்க!” என ஆணையிட்டான். “கேடயப் படை அவனை சூழ்க!”

திருஷ்டத்யும்னன் வானை பார்த்தான். முகில்கள் ஒளியிழந்து வெண்பஞ்சுகளாகிவிட்டிருந்தன. “இன்னும் எத்தனை பொழுது?” என்றான். “இளவரசே, ஒரு நாழிகை… மிஞ்சினால் ஒன்றேகால்” என்றான் பாகன். “நிமித்திகர் அதை முடிவெடுக்கவேண்டும். நாம் அவர்களை நம்பியுள்ளோம்.” அவன் சங்கனை பார்த்துவிட்டான். சங்கன் அருகே ஒருபுறம் பாஞ்சாலத்தின் சத்ருஞ்ஜயனும் விரிகனும் நின்றிருக்க மறுபக்கம் மத்ஸ்யநாட்டு சதானீகன் நின்றிருந்தான். அவர்கள் இணைந்து பீஷ்மரை எதிர்கொண்டனர். அம்புத்திரைக்கு அப்பால் உதடுகளை உள்மடித்து அரைவிழி மூடி ஊழ்கத்திலென பீஷ்மரின் முகம் தெரிந்தது. அவனை நோக்கி ஓடிவந்த பாஞ்சால இளவரசன் யுதாமன்யு “இளையோனே, இங்கு நிகழ்ந்துகொண்டிருப்பது வெறும் படுகொலை. பீஷ்மரின் உடலில் ஒரு கீறலைக்கூட எம்மவரால் அளிக்கமுடியவில்லை. அவர் அறுவடைசெய்வதுபோல் கதிரும் தளிருமாக சீவி அடுக்கிக் கொண்டிருக்கிறார்” என்றான்.

திருஷ்டத்யும்னன் “இன்னும் ஒரு நாழிகை… அதுவரை எதிர்த்து நில்லுங்கள். நாளை என்ன செய்வதென்று எண்ணுவோம்…” என்றான். அவனை நோக்கி புரவியில் வந்த உத்தமௌஜன் “இளையோனே, உபமல்லநாட்டு இளவரசர்கள் கார்த்தன், கடம்பன், கருணன், கும்பிகன் ஆகியோர் கொல்லப்பட்டுவிட்டனர். இன்று இறந்த இளவரசர்களின் எண்ணிக்கை எண்பதை கடந்துவிட்டது” என்றான். “ஒரு நாழிகைப்பொழுது…” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். “ஒரு நாழிகைப் பொழுது மட்டும் நிலைகொள்ளுங்கள்.” அவன் உடல் வலியால் சோர்ந்தது. தேரின் தூணை பற்றிக்கொண்டு நின்றான். தலைசுழல கண்களை மூடிக்கொண்டான். “உபநிஷாத நாட்டு இளவரசர்கள் சுந்தரனும் சுதீரனும் காமிகனும் கொல்லப்பட்டார்கள்” என குரல் எழுந்தது. “நூறு… இன்று அணைவதற்குள் நூறு இளையோரின் உயிர் உண்பார் பிதாமகர்” என்று பாகன் சொன்னான். “அவரை சூழ்ந்துகொள்க!” என்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான்.

எதிரில் சங்கன் வெறிகொண்டவனாக பீஷ்மரிடம் பொருதிக்கொண்டிருப்பதை அவன் கண்டான். அவன் தேர்மாடமும் கொடியும் சிதைந்திருந்தன. தேர்த்தூண்கள் சிம்புகளாக உடைந்து நின்றிருந்தன. வலத்தோளின் தோளிலை உடைந்திருக்க அங்கே ஓர் அம்பு தைத்து நின்றது. தொடைக்கவசத்தை உடைத்து ஓர் அம்பு பாய்ந்திருந்தது. “ஒரு நாழிகை பிதாமகர் முன் நின்றுவிட்டார். இன்று உயிருடன் மீண்டார் எனில் இவரே இன்றைய நாளின் வீரர்” என்று பாகன் சொன்னான். சங்கனின் தோள்களின் விசை வியப்புறச் செய்தவாக இருந்தது. அவன் அம்புகளில் அவ்விசை இருந்தது. அவன் அம்புபட்டு பீஷ்மரின் குதிரை ஒன்று கழுத்தறுந்து மூச்சு சீறி குருதி தெறிக்க முகம் தாழ்த்தி முன்னால் விழுந்தது. பீஷ்மரின் தேர் நிலைகுலைய அசைந்து அலைக்கழிந்த தேர்மேல் அவர் விளக்குச்சுடர் என நிலையழியாமல் நின்றார்.

“விலகுக!” என்று கூவியபடி திருஷ்டத்யும்னன் அச்சூழ்கை நடுவே புகுந்தான். “என்னை தொடர்க!” என்று கேடயவீரர்களுக்கு ஆணையிட்டு சங்கனை நோக்கி சென்றான். கேடயத் திரையால் மறைக்கப்பட்ட சங்கன் அவனை நோக்கிய அம்புகள் இரும்புப்பலகைகள் மேல் அறைபடுவதைக் கேட்டு திரும்பிநோக்கி “விலகுக பாஞ்சலரே, இது என் பகைமுடிக்கும் பொழுது” என்று கூவினான். “நீ வென்று நின்றுவிட்டாய், இளையோனே… போதும்” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். “இதோ பொழுதணைகிறது. இன்று நீ அவரை எவ்வண்ணமும் கொல்லவியலாது. திரும்பு!” சங்கன் “என்னை தடுக்கவேண்டாம், பாஞ்சாலரே” என்று கூவ “அவனை அழைத்துச்செல்லுங்கள்” என்றான் திருஷ்டத்யும்னன்.

கேடயப்படை சங்கனை தள்ளிக்கொண்டு சென்றது. கைதூக்கி “சூழ்ந்துகொள்க… பிதாமகர் இந்த வட்டத்தைவிட்டு மீறலாகாது” என்று ஆணையிட்டு திரும்பிய திருஷ்டத்யும்னன் தன் எதிரே துரோணரை கண்டான். தாடிமயிர் குருதி உலர்ந்து சடையென கருமைகொண்டு தொங்க தேரில் அமர்ந்து அணுகிய துரோணர் நகைத்து “இன்று என்னுடன் பொருதுக, பாஞ்சாலனே! உன் தந்தையின் கடனை நீ முடி, அல்லது நான் முடிக்கிறேன்” என்றார். “இதோ… இதுவே அத்தருணம்” என்றபடி திருஷ்டத்யும்னன் தன் நாணை ஒலிக்கவிட்டுக்கொண்டு அவரை நோக்கி சென்றான். ஆனால் பின்னால் விராடரின் குரல் கேட்டது. “விலகுக பாஞ்சாலரே, இது என் மைந்தனின் சாவுக்கு என் வஞ்சம்… விலகுக!” அவன் “செல்க, விராடரே! இது உங்களுக்குரிய போர் அல்ல” என்று சொன்னான். அதற்குள் விராடர் தன் தேருடன் துரோணரின் அம்புவளையத்திற்குள் புகுந்து வெறிகொண்டு தொடுக்கத் தொடங்கிவிட்டிருந்தார்.

விராடர் அழுதுகொண்டும் பொருளிலாது கூச்சலிட்டுக்கொண்டும் அம்புகளை எய்தார். அவருடைய பயிலா கைகளால் ஒற்றை அம்பைக்கூட துரோணரை அணுகச்செய்ய முடியவில்லை. துரோணரின் அம்புகள் அவரை அறைந்து அறைந்து கவசங்களை உடைத்தன. அவர் வில் ஒடிந்தது. தோளில் பாய்ந்த அம்புடன் அவர் தேர்த்தட்டில் அமர்ந்தார். துரோணரின் அம்புகளால் அவர் தேர்ப்புரவிகள் வெட்டுண்டு சரிந்தன. தேர் அவரைச் சரித்து கீழே தள்ளி சகடங்கள் உருள இழுத்துச்சென்றது. திருஷ்டத்யும்னன் “துரோணரே, இது நமது போர்” என்று கூவியபடி அவரை நோக்கி பாய்ந்து அம்புகளால் அவர் தோளிலைகளை உடைத்தான். அவர் உடலின் கவசங்களை அணுக்கன் அகற்றிக்கொண்டிருக்க அதை அறியாதவர்போல் அவர் வில்தொடுத்துக்கொண்டிருந்தார்.

பின்னாலிருந்து சங்கன் “தந்தையே…” என்று கூவியபடி வந்தான். விராடர் மண்ணில் உருண்டு எழுந்து ஓடிச்சென்று மைந்தனின் தேரில் ஏறிக்கொண்டார். சங்கனைத் தழுவியபடி அவர் “நம் குடியை முற்றழித்தவர் இவர்… மைந்தா, நம் குடியை முற்றழித்தவர்கள் இவரும் பீஷ்மரும்” என்று கூவியபடி நடுங்கினார். “அமைதிகொள்க, தந்தையே!” என்று சொன்னபடி சங்கன் தேரை முகப்புக்கு செலுத்தினான். “விலகுக… விலகிச்செல்க!” என்றான் திருஷ்டத்யும்னன். “இன்னும் பொழுதில்லை… இதோ முடிகிறது இந்நாள். நீ களம்நின்று காட்டிவிட்டாய், மைந்தா. செல்க!” என்று கூவிக்கொண்டே துரோணரை எதிர்த்தான்.

சங்கன் “என் குலத்தோரின் குருதிக்கு இன்றே பழிநிகர் செய்கிறேன்” என்றபடி அம்புகளை ஏவிக்கொண்டு துரோணர் முன் சென்றான். அவன் தலைக்கவசம் ஓசையுடன் உடைந்தது. அவன் திரும்புவதற்குள் பிறையம்பு அவன் தலையை வெட்டி வீழ்த்தியது. தலையற்ற உடல் விராடரின் மடியில் விழுந்து துள்ளியது. கவிழ்த்த குடத்தில் இருந்து என குருதி அவர் மேல் கொப்பளித்துக் கொட்டியது. விலங்கொலியில் “மைந்தா! என் மைந்தா!” என்று கூவியபடி விராடர் உடல் வலிப்புகொள்ள நினைவிழந்து பின்னால் சரிந்தார். அவரை கேடயப்படை சூழ்ந்துகொண்டது.

தொலைவில் பொழுதணைந்துவிட்டதை அறிவித்தபடி எரியம்புகள் எழுந்தன. முரசுகள் தொடர்ந்து முழங்கலாயின. படைவீரர்கள் காற்று ஓயும் காடு என மெல்ல அசைவிழந்தனர். வெட்டுண்டவர்கள் இறுதியாகச் சரிய வெட்டியவர்கள் அவர்களை என்ன நிகழ்ந்தது என்று அறியாதவர்கள்போல் திகைத்து நோக்கி நின்றனர். “போர் முடிவு! போர் முடிவு!” என அறிவித்தபடி கொம்புகள் ஒலித்தன. படைகளின் பின்னிரையில் இருந்து ஆர்ப்பொலிகளும் கூச்சல்களும் எழுந்தன. முன்னிரையில் நின்றவர்கள் கால்கள் தாளாமல் உடல் எடைகொண்டவர்கள்போல் வாளையும் கதையையும் ஊன்றி நின்றனர். சிலர் கால்தளர்ந்து அமர்ந்தனர். சிலர் புண்களில் இருந்து குருதி வழிய நிலத்தில் படுத்தனர்.

“கூடுக! கூடுக! கூடுக!” என முரசு முழங்கியது. படைவீரர்கள் ஒருவரோடொருவர் தழுவியபடி சிறு தொகைகளாக மெல்ல நடந்தார்கள். ஒவ்வொருவரும் முற்றிலும் எண்ணமொழிந்து தெய்வமொழிந்த வெறியாட்டன்போல உடல்மட்டுமாக எஞ்சினார்கள். கௌரவப் படைகளில் இருந்து “வெற்றி! வெற்றி! வெற்றி!” என முரசு முழங்கத் தொடங்கியது. அங்கே பின்நிரையில் இருந்த வீரர்கள் படைக்கலங்களைத் தூக்கி “வெற்றிவேல்! வீரவேல்! கௌரவர் தலைவருக்கு வெற்றி! அஸ்தினபுரிக்கு வெற்றி!” என முழக்கமிட்டனர்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80

tigஉத்தரன் களம்பட்ட செய்தியை முரசுகளின் ஓசையிலிருந்து ஸ்வேதன் அறிந்தான். விராடர் களத்தில் விழுந்த செய்தியால் விராடப் படையினர் உளஎழுச்சி அணைந்து ஒருவரை ஒருவர் தோளோடு தோள்பட அழுத்தியபடி பின்னகர்ந்துகொண்டிருந்தனர். உத்தரன் இறந்த செய்தி அவர்களை மேலும் தளரச்செய்தது. உடலில் இருந்து உடலுக்கெனப் பரவிய சோர்வு அவர்களை அலைவளைவென பின்னகரச் செய்தது. படைகளின் பின்னால் இருந்த அறிவிப்பு மேடையிலிருந்து “விராடப் படைகளை தடுத்து நிறுத்துங்கள். அவை கலைந்து குவிவதை தடுங்கள். அவற்றுக்கிடையே ஐந்து விரல்களென பாஞ்சாலத்தின் படைகளும் இந்திரப்பிரஸ்தத்தின் படைகளும் ஊடுருவட்டும். ஒவ்வொரு விராடப் படைப்பிரிவுடனும் பிற படைப்பிரிவு ஒன்று இணைந்திருக்கவேண்டும். பின்னடைவை நிறுத்துக! ஒருமுனை கொண்டு எழுந்து நில்லுங்கள்!” என்று ஆணை வந்துகொண்டிருந்தது. அந்த ஆணையால் சிறுமையுணர்ந்த ஸ்வேதன் தன் படைகளை நோக்கி “முன்னேறுங்கள்! முன்னேறுங்கள்!” என்று கூச்சலிட்டான்.

விராடர்களின் உளநிலையை குலாடர்களும் அடைந்தனர். அவர்களுக்கிடையே எந்த ஒப்புமையும் உரையாடலும் இல்லாத போதும்கூட உடல்மொழியால், புரவிகளை செலுத்தும் முறையால் ஒருவரோடொருவர் அடையாளம் கண்டுகொண்டிருந்தனர். தன்னுடைய படை பின்னால் செல்வதைக் கண்டு ஸ்வேதன் கையை தூக்கி “பின்னிருக்கும் படை அசையாமல் நிற்க வேண்டும். பின்னிருந்து தேர்நிரையொன்று முன்னால் காலாட்களை உந்தி வரவேண்டும். புரவிப்படைவீரர்கள் பதினெட்டு பிரிவுகளாக பிரிந்து தங்கள் நடுவே காலாட்படைகளுக்கு இடங்கொடுங்கள். புரவிப்படையும் காலாட்படையும் இணைந்து முன்னகர வேண்டும்” என்று ஆணையிட்டான்.

புரவிப்படை காலாட்கள் நடுவே செல்லும்போது அதன் விரைவு குறைகிறது.  விரைவு குறைவது ஆற்றலை குறைக்கும். ஆனால் பின்நகர்கையில் அதுவே பின்நகர்வதற்குரிய தடையுமென்றாகி படையை நிறுத்தும். “முன்நகர்க! முன்நகர்க!” என்று கூவியபடி அவன் தன் தேரை எதிர்த்து வந்துகொண்டிருந்த கௌரவப் படைகளின் நடுவே நிறுத்தி அம்புகளால் தாக்கிக்கொண்டிருந்தான். கௌரவ நூற்றுவரும் இருண்ட கோட்டைச்சுவரென தங்கள் தேர்களில் நின்றவாறு பிறை வடிவில் அவனை சூழ்ந்துகொண்டிருந்தனர். உலோகநீரலை ஒன்று உலோகநீரலையைச் சந்திப்பதுபோல அம்புகளால் முட்டியபடி அவன் துச்சகனை எதிர்கொண்டான். அம்புகளால் பொருதி ஒருசிறு இடைவெளியினூடாக துச்சகனின் கவசத்தை உடைத்தான். அவன் நெஞ்சிலும் தோளிலும் அம்பை செலுத்தி தேர்த்தட்டில் விழவைத்தான். அவனை காக்கும்பொருட்டு இடைபுகுந்த துர்மதனின் தலைக்கவசத்தை சிதறடித்து அவன் காதை சீவி எறிந்தான். பிறிதொரு அம்பினால் அவன் கழுத்தில் தாக்கி குருதி பீறிட தேரிலிருந்து பாய்ந்திறங்கச் செய்தான்.

விந்தனும் அனுவிந்தனும் அவர்களின் காவலுக்கு வர அவர்களை ஒரே தருணத்தில் எதிர்கொண்டான். தொடைக்கவசம் உடைந்து தெறிக்க அம்பு பாய்ந்து தேரிலிருந்து புரண்டுவிழுந்த விந்தனை படைவீரர்கள் சூழ்ந்தனர். அனுவிந்தன் தன் புரவியை இழுத்தபடி பின்னால் சென்றான். துச்சலன் “கொல்லுங்கள் அந்த விராடனை! கொல்லுங்கள் நிஷாதனை! அவனை கொல்லாமல் இன்னொரு அடியை நாம் முன்னெடுக்க இயலாது” என்று கூவினான். உரக்க நகைத்தபடி ஸ்வேதன் “என்னை கொல்ல உங்களால் இயலாது, கௌரவரே. நான் வில்விஜயனின் மாணவன்” என்று கூவினான். சதாசுவாக், உக்ரசிரவஸ், உக்ரசேனன், சேனானி ஆகியோர் வில்கொண்டு முன்னால் வந்தனர். அவர்களின் விற்களை உடைக்கவும் கைகளிலும் தோளிலும் கவசங்களை உடைத்து அம்புகளை செலுத்தவும் அவனுக்கு சில கணங்களே தேவைப்பட்டன.

அத்தருணத்தில் துச்சலன் எய்த அம்பு வந்து அவன் நெஞ்சுக் கவசத்தை தாக்கியது. அவன் நிலைகுலைந்து தேர்த்தட்டில் முழங்காலிட்டு அமர தலைக்கவசத்தை பிறிதொரு அம்பு உடைத்துச் சென்றது. தான் ஓர் அடி பின்னகர்ந்தால்கூட தன் ஒட்டுமொத்தப் படையும் இடிந்து பின்னால் சரியும் என்று உணர்ந்து “முன்நகர்க! முன்நகர்க!” என்று கூவியபடி ஸ்வேதன் தேரை செலுத்தினான். அவனைத் தொடர்ந்து குலாடர்களின் படை முட்டித்ததும்பி வந்தது.  “ஒரு கணமும் நில்லாதீர்கள்! அம்பு தொடுங்கள்! தயங்கவேண்டாம்!” என்று அவன் கூவினான். பின்னாலிருந்து சாத்யகியின் மைந்தர்கள் உத்ஃபுதனும் சந்திரபானுவும் சபரனும் சாந்தனும் முக்தனும் தேரில் வந்தனர். பாஞ்சால மைந்தர்கள் திருஷ்டகேதுவும் க்ஷத்ரதர்மனும் க்ஷத்ரஞ்சயனும் மனாதனும் உடன் எழுந்து வந்தனர். படைகளிலிருந்த இளையோரின் திரளொன்று அவனைச் சூழ அவர்கள் வெறிகொண்டு அம்புகளால் தாக்கியபடி கௌரவர்களை பின்னகர்த்திச் சென்றனர்.

பூரிசிரவஸின் குரல் அப்பால் கேட்டது. “பாண்டவ இளையோர் இங்கிருக்கிறார்கள்! அவர்களை சூழ்ந்துகொள்க!” ஸ்வேதன் பூரிசிரவஸை நோக்கி சென்றான். கௌரவப் படையிடம் “இளையோர் அச்சமற்றவர்கள். அவர்களின் விசை நம்மை இரண்டாகப் பிளந்துவிடக்கூடும்” என்றான் பூரிசிரவஸ். ஸ்வேதன் தொலையம்பை எடுத்து பூரிசிரவஸின் தேரை தாக்கினான். அம்பு குறிதவறி பூரிசிரவஸின் தேர்ப்பாகனின் தலையை துண்டித்தது. தேர் மேடையிலிருந்து விழுந்து புரவிகளின் காலடியில் அவன் சிக்கிக்கொண்டான். பூரிசிரவஸ் முழந்தாளிட்டு அமர்ந்து புரவிகளின் கடிவாளத்தை பிடித்து இழுத்து தேரை திருப்பி அப்பாலிருந்த தன் படைகளுக்குள் புகுந்தான். கௌரவ மைந்தர்கள் எழுவர் கூச்சலிட்டபடி விற்களுடன் அவனை நோக்கி வந்தனர். ஸ்வேதன் அவர்களை ஒவ்வொருவரையாக அம்பால் அறைந்தான். சப்தமனும் தசமனும் வராகனும் விப்ரலிப்தனும் ஒவ்வொருவராக அவன் அம்புகளை நெஞ்சிலும் கழுத்திலும் ஏற்று தேரிலிருந்து அலறி விழுந்தனர். கராளனும் முகுந்தனும் முத்ரனும் தலையறுந்து விழுந்தார்கள். கௌரவ மைந்தர்களை காக்க மேலும் இளையோர் அங்கிருந்து கிளம்பி கூச்சலிட்டபடி வந்தனர்.

ஸ்வேதன் ஒவ்வொருவரையாக வீழ்த்தினான். ஒருவர் வீழ்வது இன்னொருவரின் கண் பிறழவும் கை தளரவும் செய்தது. மாளவ மன்னனின் இளைய மைந்தன் உலூகனையும் கூர்ஜர மன்னனின் இளைய மைந்தன் உத்ஃபுதனையும் அவன் அம்புகளால் துளைத்து சரியச்செய்தான். தொடர்ந்த விசைகொண்ட தாக்குதலால் கௌரவர்கள் பின்னடையத் தொடங்கினர். குறையா விசையுடன் பாண்டவர்களை பின்தள்ளிக்கொண்டிருந்த கௌரவப் படையின் அப்பகுதி மட்டும் தொய்வுற்றுப் பின்னகரத் தொடங்கியது. “விடாதீர்கள்! மேலும் சற்று தொலைவுதான்! இப்படையை இரண்டாக பிளந்துவிடலாம்! ஊடுருவி பிளந்துவிட்டால் அதன் பிறகு அவர்களால் முன்னேற இயலாது” என்று ஸ்வேதன் கூவினான். வெற்றி இளையோரை களிப்புறச் செய்தது. ஒருவருக்கொருவர் கூச்சலிட்டு நகையாடியபடி அவர்கள் கௌரவர்களை அழுத்தி வளைத்து பின்னால் கொண்டுசென்றனர்.

பின்னடைந்த விராடர்களின் படையை சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் நகுலனும் இணைந்து தடுத்து ஒன்றாக்கினர். படைகளின் பின்நிரையில் நின்றிருந்த யானைப்படை பெரிய கேடயத் தடுப்புகளை துதிக்கைகளால் தூக்கி ஒன்றுடன் ஒன்று பொருந்தவைத்து ஒரு கோட்டைச்சுவரென்று ஆக்கி பின்னகர்ந்தவர்களை தடுத்து முன்னால் உந்திகொண்டு வந்தது. முன்நகர்வு நிகழ்ந்ததுமே ஒவ்வொரு படைவீரனுக்கும் அது ஓர் உடற்செய்தியாக சென்று சேர்ந்தது. சில அடிகள் முன்நகர்ந்ததுமே பின்னடைய வேண்டுமென்ற விழைவை அவர்கள் இழந்தார்கள். தன்னியல்பால் மேலும் மேலும் முன்னகரத் தொடங்கினர். உடலின் முன்நகர்வே உள்ளத்தின் முன்நகர்வாக மாற வெறிக்கூச்சலெழுப்பி மேலும் சென்றனர். அவர்கள் முன்நகர்ந்து வரக்கண்டதுமே தடையின்றி முன்நகர்ந்து கொண்டிருந்த கௌரவப் படைகள் அறியாமல் பின்னடி வைத்தன. அவர்களை பின்னடைய வைக்க முடிகிறது என்ற எண்ணம் பாண்டவப் படைகளை மேலும் விசைகொண்டு முன்நகரச் செய்தது.

கௌரவப் படைகளின் சூழ்கை மெல்ல மாறிக்கொண்டிருப்பதை ஸ்வேதன் பார்த்தான். மான்கொம்பின் கிளைகள் ஒன்றின் வாலை பிறிது விழுங்கும் நாகங்கள் என கவ்விக்கொண்டு பெருஞ்சுருள் என்றாயின. அச்சுழியின் மையத்தில் பீஷ்மர் நின்றிருந்தார். அணுகும் அனைவரையும் சுழற்றி இழுத்துக்கொண்டு சென்று பீஷ்மர்  முன் செலுத்தியது அச்சுழியின் சுழற்சி. “மண்டலச்சூழ்கை!” என்று அவன் கூவினான். திருஷ்டத்யும்னன் அதை உணர்ந்திருக்கிறானா என்று அவன் எண்ணி திரும்புவதற்குள் “மண்டலம் சூழ்கிறது. பின்நகர்ந்து ஒன்றுதொடுத்துக்கொள்க! மின்கதிர் எனச் சூழ்க!” என்று முரசொலி எழுந்தது.

பாண்டவப் படையினர் ஒருவரோடொருவர் மலர்கள் சரமாவதுபோல் தொடுத்துக்கொள்ள மின்கதிர் என சூழ்கை ஒருங்கியது. சவுக்கென நெளிந்தும் நாகமென பாய்ந்தும் சுருங்கி விரிந்து தாக்கியது அவர்களின் படை. “மின்படை கூர்கொண்டு செல்க! மண்டலத்தின் வளைவுகளை உடைத்து சிதறடியுங்கள்!” என ஆணை எழுந்தது. சுழியின் அறுபடாச் சுழற்சியே அதன் ஆற்றல். அதை எங்கு உடைத்தாலும் அது சிதறத்தொடங்கும். ஸ்வேதன் “முன்செல்க… வளையத்தை உடையுங்கள்!” என்று ஆணையிட்டபடி முன்னால் பாய்ந்தான்.

அவர்களின் முதல் அடியிலேயே கௌரவப் படையின் அலைவளைவு இரண்டாக துண்டிக்கப்பட்டது. “தொடர்ந்து செல்லுங்கள்! அவ்விரிசலை விரிவாக்குங்கள்! அவர்களை இணைய விடாதீர்கள்!” என்று பின்னாலிருந்து திருஷ்டத்யும்னன் கூவினான். எஞ்சிய விராடப்படையும் குலாடர்களின் படையும் இணைந்து அந்த இடைவெளியினூடாக உள்ளே நுழைந்தன. கௌரவப் படைகளின் பிளவின் இரு விளிம்புகளையும் ஒன்றாக இணைக்கும்பொருட்டு ஒருபுறம் அஸ்வத்தாமனும் மறுபுறம் ஜயத்ரதனும் அம்புகளை எய்தபடி தங்கள் படைகளால் அழுத்தினர். ஆனால் முன்நகரும் விசைகொண்டிருந்த குலாடர்களின் படை அவர்களை மேலும் மேலும் விலக்கிச் சென்றது.

“இன்றொரு நாள்! இன்றொரு நாள்!” என்று ஸ்வேதனின் உள்ளம் தாவியது. உள எழுச்சியால் கைவிரல் நுனிகளில் குருதி உறுத்துவதை அப்போதுதான் உணர்ந்தான். எழும் படையை பின்னடையச் செய்துவிட்டால் இந்த நாளை கடந்துவிடுவேன். இன்றொரு நாள்! குலாடம் பாரதவர்ஷத்தை வென்று முன் நிற்கும். என் மூதாதையர் ஆயிரமாண்டு கண்ட கனவு. இதை எங்கிருந்து எண்ணிக்கொண்டிருக்கிறேன்? என் கைகள் வெறிகொண்டு அம்புகளை எய்கின்றன. என் உள்ளம் ஒவ்வொரு இலக்கை வெல்லும்போதும் கூச்சலிடுகிறது. என் சித்தம் அம்புகளையும் படைநகர்வுகளையும் எதிரியின் சூழ்கைகளையும் அங்கிருக்கும் ஒவ்வொரு படைவீரனின் எண்ணத்தையும் தொட்டு கணக்கிடுகிறது. இவற்றுக்கு அப்பால் நின்று காலமின்மையில் திளைத்து இத்தருணத்தை நோக்கிக்கொண்டிருக்கிறது பிறிதொன்று. ஒரு மனிதனுக்குள் குடிகொள்வது எத்தனை ஆழம்? பல்லாயிரம்பேர் திரண்டு ஓருடலென போர்புரியும் இப்படைப்பிரிவும்கூட ஓர் உடல்தானா? சிதறிப்பரந்த பெருமானுடன்! ஒன்றென்று குடிகொள்பவன்!

அப்பாலிருந்து சங்கொலி எழுந்தது. “பீஷ்மர்! பீஷ்மர்!” என்று குரல்கள் முழங்கின. பீஷ்மர் வந்துகொண்டிருக்கிறார் என்று பாண்டவர்களின் முரசுகள் ஆணையிட்டன. “சூழ்ந்து கொள்ளுங்கள்! பீஷ்மரை இவ்விரு படைகளை இணைக்கும் இடத்துக்கு வரவிடாதீர்கள்! முன்னேறுங்கள்! ஒருகணமும் நில்லாதீர்கள்!” என்று ஆணையிட்டபடி தன் படைவீரர்கள் தன்னைத் தொடர கைகாட்டி கௌரவர்களின் தேர்நிரையை உடைத்து சித்ரகுண்டலனையும் சுஜாதனையும் அம்புகளால் அறைந்து தேர்த்தட்டில் விழச்செய்தான் ஸ்வேதன். சுஜாதனின் தேர்ப்பாகன் தலையறைந்து விழ தேர்கள் விசைகொண்டு முன்நகர்ந்து கவிழ்ந்தன. அதில் முட்டி குண்டசாயியின் தேர் கவிழ்ந்தது. சித்ராயுதன் அம்புபட்டு புரவியிலிருந்து விழுந்தான். சுஜாதன் அம்பு பாய்ந்த விலாவுடன் புண்பட்ட காலை இழுத்து கூச்சலிட்டபடி துர்விகாகனின் தேரை நோக்கி ஓடினான்.

ஸ்வேதன் தன்னை வழிமறித்த புரவிகள் இரண்டை வாளால் வெட்டிச் சரித்து அந்த இடைவெளியினூடாக புரவியை கொண்டு சென்று பீஷ்மரை அணுகினான். பின்னாலிருந்து “பீஷ்மரை சூழ்ந்துகொள்க! வில்லவர் அனைவரும் பீஷ்மரை சூழ்ந்துகொள்க!” என்று முரசு ஆணையிட்டது. மல்ல நாட்டு இளவரசர்கள், கிராதர்கள், அசுரர்கள், அரக்கர்கள் என வில்லவர் அனைவரும் தங்கள் தேர்களில் வெவ்வேறு படைகளிலிருந்து பிதுங்கி திரண்டெழுந்து வலை போலாகி பீஷ்மரை சூழ்ந்துகொண்டனர். ஸ்வேதன் தலை திருப்பி நோக்கியபோது அனைவருமே இளமைந்தர் என்பதை கண்டான். பீஷ்மர் அவர்களை எப்படி எதிர்கொள்வார் என்று எழுந்த எண்ணம் முடிவதற்குள்ளகாவே மச்சர் குலத்து இளவரசன் குண்டலன் தலையறுந்து தேர்த்தட்டில் விழுந்து துடித்தான். கீர்வ நாட்டு இளவரசன் ஹயன் பிறையம்பால் துண்டுபட்டு கீழே விழுந்தான். மீசைஅரும்பாத முகம், சிறுகுழவிக்குரியவை என உதடுகள், அப்போதும் புன்னகை எஞ்சியிருந்த அழகிய விழிகள்.

உடலெங்கும் நடுக்கு எழ ஸ்வேதன் பீஷ்மரை பார்த்தான். அவர் தலையிலிருந்து கால்வரை நிணமும் குருதியும் வழிந்துகொண்டிருந்தன. நாணிழுத்து அம்புவிட்டபோது துடித்த வில்லிலிருந்து குருதித்துளிகள் தெறித்தன. இளையோரின் அம்புகள் எவையும் அவரை சென்றடையவில்லை. ஆனால் அவர் விடுத்த ஒவ்வொரு அம்பும் இளவரசர்களின் தேர்களை சிதைத்தன. கவசங்களை உடைத்து வீழ்த்தின. அவர்கள் நிலைதடுமாறிய கணம் கழுத்தறுத்து வீசின. நெஞ்சுபிளந்து தேர்த்தட்டிலிருந்து கீழே சரித்தன. வெறிகொண்டவர்போல் நகைத்தபடி பீஷ்மர் இளையவரை கொன்று குவித்தார். மகாநிஷாதகுலத்து சந்திரகனும் அவன் ஏழு உடன்பிறந்தாரும் இறந்து விழுந்தனர். குலித குடியின் இளவரசன் உக்ரசீர்ஷனும் பன்னிரு உடன்பிறந்தாரும் கொல்லப்பட்டார்கள். சுருதசேனன் நெஞ்சில் அம்புபட்டு தேர்த்தட்டில் விழுந்தான். அவனுக்கு உதவச்சென்ற சதானீகன் தொடையில் அம்புபட்டு தேரிலிருந்து கீழே விழுந்தான். அவர்களை கொக்கிகளை வீசி தூக்கி எடுத்து அகற்றி கொண்டுசென்றனர் காப்புப்படையின் கேடய வீரர்கள்.

பீஷ்மரைச் சூழ்ந்து இளைய உடல்கள் மண்ணில் புழுத்திரள் எனத் துடித்துக் குமிழியிட்டுக்கொண்டிருந்தன. தலையோ கால்களோ அறுபட்டு உருவழிந்ததுமே தசையென்றாகிவிடுகின்றன உடல்கள். உயிர் வெற்றசைவென எஞ்சியிருப்பவை. இறுதிவிசையால் முள்ளில் சிக்கியிருக்கும் ஆடை காற்றிலெழுந்து பறப்பதுபோல விலகி அகல விழைந்து துடிக்கிறது உடல். மண்ணில் உதைக்கும் கால்கள். காற்றைப் பற்றும் கைகள். வெறித்த விழிகள், வெண்பற்கள். இவன் அஸ்வகுடியின் இளவரசன் காமிகன். இவன் காந்தகுடியின் குமுதன். அதோ மாதல குடியின் சுதீரன். போர் என்று உளம் கிளர்ந்து எழுந்த இளையோர். அன்னையர் மடியில் அமர்த்தி ஊட்டிய பால்சோறு இன்னமும் அவர்களின் உடல்களில் இருந்து அகன்றிருக்காது. சாவின் பெருங்களம். தன் நெஞ்சில் அச்சொற்கள் துயரில்லா பெருக்கென ஓடுவதை ஸ்வேதன் உணர்ந்தான். சாவின் பெருங்களம் என்ற சொல் காற்றில் ஒரு சித்திரப்பதாகை என அவன் முன் நின்றது. அதை கிழித்தபடி அவன் முன்னால் சென்றான்.

“இளையோர் பின்வாங்குக! இளையோர் பின்வாங்குக!” என்று முரசு முழங்கத் தொடங்கியது. ஆனால் இளவரசர்கள் எவரும் அதை செவி கொள்ளவில்லை. கூர்வ குலத்து இளவரசன் சம்ப்ரகன் “முன்னேறுக! இது தருணம்! வெல்வோம் அல்லது வீழ்வோம்!” என்று கூவியபடி பீஷ்மரை நோக்கி அம்புகள் தொடுத்தபடி முன்னேறினான். அவன் கை துண்டாகி கீழே விழ திகைத்துத் திரும்பிய உடல் இறந்த மீனை பசித்த மீன்கள் கொத்தித் தூக்கி குதறுவதுபோல அம்புகளால் அலைக்கழிக்கப்பட்டது. தேர் தூணில் ஒட்டி உடலெங்கும் அம்புகளுடன் நின்று துடித்தபின் அவன் சரிந்து ஓடிக்கொண்டிருந்த குதிரைகளின் காலடியில் விழுந்தான். அவன் மேல் ஏறி அப்பால் சென்றது அவனுடைய தேர். ஜம்புக குடியின் இளவரசன் சுக்ரனை பீஷ்மரின் அம்புகள் நீர்பட்ட அகல்சுடர் என துளைத்து துள்ளி நடமிட்டு  சரியச் செய்தன. ஸ்வேதன் தன் அம்புகளைப் பெய்தபடி நடுவே புகுந்து இளையோரைக் காத்து அப்பால் இட்டுச்சென்றான்.

எதிர்த்துவந்த இளவரசர் அனைவரையும் கொன்று சரித்தபின் பீஷ்மர் நாணொலி எழுப்பியபடி அவனை நோக்கி வந்தார். அவன் வில்லோசையுடன் அவரை நோக்கி செல்ல அவனுக்குப் பின்னால் திருஷ்டத்யும்னனின் குரல் கேட்டது. “குலாடரே, பின்நகருங்கள். பிதாமகர் கொலைவெறியுடன் இருக்கிறார். பார்த்தரன்றி பிறர் எவரும் அவரை எதிர்கொள்ள இயலாது. பின்நகர்க! பின்நகர்க!” அவன் அச்சொற்களைத் தவிர்த்து “முன்னால் செல்க!” என்று காலால் தன் தேரோட்டியின் விலாவை மிதித்தான்.  “இளவரசே… மைந்தர்களை பீஷ்மர் கொல்லாது தவிர்ப்பார் என்று எண்ணி இச்சூழ்கையை அமைத்திருக்கிறார்கள். அது பொய்யாயிற்று. தளிர்மரங்களை ஒடித்துக்குவிக்கும் மதவேழம்போல் வந்துகொண்டிருக்கிறார். இது நம் தருணமல்ல… வேண்டாம் திரும்புவோம்” என்று பாகன் சொன்னான்.

“செல், மூடா! முன்னால் செல்!” என்றபடி ஸ்வேதன் அவன் விலாவை ஓங்கி ஓங்கி மிதித்தான். பற்களைக் கடித்தபடி சவுக்கை எடுத்து ஓங்கி அறைந்த பாகன் கண்ணில் நீருடன் “இது உகந்ததல்ல, குலாடரே! இது போரல்ல, தற்கொலை!” என்றான்.  “முன்னால் செல்! முன்னால் செல்!” என்று ஸ்வேதன் கூவினான். பீஷ்மரின் அம்பு வளையத்திற்குள் சென்றதும் நாணிழுத்து முதல் அம்பால் அவர் தலையிலணிந்திருந்த தோல்பட்டையை அறைந்தான். பீஷ்மர் திரும்பி நகைத்தபடி “வருக! நீ ஒருவனே எஞ்சியிருக்கிறாய்” என்றபடி எட்டு அம்புகளால் அவனை எதிர்கொண்டார். அவன் இணையாக அம்புகளை அவர்மேல் எய்தான்.

அம்புகள் ஒன்றையொன்று விம்மிக்கடந்து செல்கையில் ஸ்வேதன் ஒன்று உணர்ந்தான். முதியவர் இளமைந்தரை கனிந்து எதிர்கொள்வார் என்று எண்ணியதைப்போல் பிழை பிறிதில்லை. தந்தையாயினும் மூதாதையாயினும் உடலால் உள்ளத்தால் அவர் முதியவர் என்பதே முதன்மையானது. மண்ணிலுள்ள அனைத்து இளையவரும் முதியவர்களுக்கு எதிரிகளே. அவர்கள் கொண்டுள்ள இளமையால், அவர்களுக்கு எஞ்சியிருக்கும் வாழ்க்கையால், எங்கும் முதுமை தளர்ந்து கைவிடும் இடங்களையெல்லாம் எடுத்துக்கொள்வது இளமை என்பதனால். வாழ்த்தும் கைகளுக்கும் நோக்கி மகிழும் கண்களுக்கும் அடியில் வஞ்சம் கொண்ட விலங்கொன்றிருக்கிறது. பீஷ்மர் அங்கு போரிட்டுக்கொண்டிருப்பது குருக்ஷேத்ரத்தில் அல்ல. அவருள் என்றுமிருந்த தொல்தெய்வம் ஒன்று எழுந்து ஆயிரம் கை கொண்டு நின்றது.

அவர்களுக்குக் குறுக்கே அம்புடன் புகுந்த சுதீர நாட்டு இளவரசன் கபந்தன் தலையறுந்து விழுந்தான். காகன், ககோலன், ககோடன், குனிலன் என இளவரசர்கள் அவர் அம்புக்குமுன் அலறியும் ஓசையிலாது உடல்துடித்தும் அனல்பட்டதுபோல் துள்ளிவிதிர்த்தும் விழுந்துகொண்டே இருந்தனர். நெஞ்சு துளைத்த அம்பு முதுகில் புடைத்தெழ சம்புகன் விழுந்தான். சுகிர்தன் நெஞ்சில் தைத்த அம்பைப் பற்றியபடி சரிந்தான். கவசங்களை எளிய முட்டை ஓடு என உடைக்கும் விசைகொண்டிருந்தன பீஷ்மரின் அம்புகள். எங்கோ ஒரு கணத்தில் ஸ்வேதன் தன் உடல் நெஞ்சு துளைபடக் கிடந்து துடிக்கும் காட்சியைக் கண்டான். அவன் உடலெங்கும் வெப்ப அலை ஒன்று எழுந்தது. அது உடனே குளிர்ந்து நடுக்கென்றாகியது. அக்காட்சி அவன் மிக நன்றாக அறிந்ததாக இருந்தது

அறியாது தன் வில்லை ஸ்வேதன் தாழ்த்த பாகன் அதை உணர்ந்து தேரை திருப்பி பின்னடையச் செய்தான்.  பீஷ்மர் “அறிவிலியா நீ? அஞ்சி திரும்புவதென்றால் ஏன் வில்லெடுத்து வந்தாய்?” என்று கூவியபடி முன்னால் வந்தார். ஸ்வேதன் தன் நெஞ்சுக்குள் எடைமிக்க பாறாங்கல் என அச்சம் திரள்வதை உணர்ந்தான். கைகளும் கால்களும் அசைவிழந்தன. ஆனால் மறுகணம் முழு விசையையும் திரட்டி தேர்ப்பாகனின் விலாவை உதைத்து “முன்னால் செல்! முன்னால் செல்!” என்று கூவினான். பாகன் “வேண்டாம், குலாடரே” என்று கூவினான். அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.  ஸ்வேதன் தொண்டை உடைந்தொலித்த குரலில் “அறிவிலி! முன்னால் செல்!” என்றான். தேர்ப்பாகன் இரு கால்களையும் நுகத்திலூன்றி எழுந்து நின்று சவுக்கை வீசி புரவிகளை முன்னால் செலுத்தினான்.

பீஷ்மரின் அம்புகள் பறக்கும் சிம்மங்களென ஓசையிட்டபடி அவனை கடந்துசென்றன. தேர்ப்பாகன் தலையறுந்து குதிரை மேலேயே விழுந்தான். அவன் கழுத்திலிருந்து குருதி வெண்குதிரையின்மேல் பெருகிவழிந்து செம்மணிகளென உருண்டது. ஒரு குதிரை தலையறுந்து துண்டாகி குருதியுடன் தொய்ந்து விழ தேர் பக்கவாட்டில் சரிந்து விழுந்தது. சகடம் ஒன்று விலகிச்சுழல அதன் நுகத்திற்கடியில் இருந்து உதைத்து எழுந்த இன்னொரு புரவியால் தேர் மீண்டும் நிலைகொண்டது. நிலத்தில் விழுந்து உருண்டு எழுந்த ஸ்வேதன் தன் முழு ஆற்றலையும் திரட்டி நாணிழுத்து அம்பை எய்து பீஷ்மரின் தோள்கவசத்தை சிதறடித்தான். அவர் திரும்பி நோக்கும் அரைக்கணத்திற்குள் அவர் தோளில் அம்பை பாய்ச்சினான். பிறிதொரு அம்பால் அதே அம்பை முறித்து இன்னொன்றைப் பாய்ச்சினான். செயலிழந்த இடக்கையை உதறியபடி காலால் வில்லைப் பிடித்து ஒற்றைக்கையால் அம்பெடுத்து இழுத்துத் தொடுத்து அவன் நெஞ்சின் மேல் எய்தார் பீஷ்மர்.

அந்த அம்பு பறந்து வரும் ஒவ்வொரு கணத்துளியையும் அவன் பார்த்தான். பெருவிசையுடன் வந்து அவன் கவசத்தைப் பிளந்து நெஞ்சுக்குள் சென்றது. அவன் எண்ணிக்கொண்டிருந்த உளச்சொல்லை இரண்டாகத் துண்டித்தது. “என்ன?” எனும் சொல்லை அவன் உளம் இறுதியாக அடைந்தது. தரையில் விழுந்து வானை பார்த்தான். மிக அண்மையில் பிறிதொரு அம்பு வந்து குத்தி நின்றது. ஸ்வேதன் “ஆம்!” எனும் சொல்லை தன்னுள் மிக ஆழத்தில் உணர்ந்தான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 79

tigபோர்முரசு கொட்டும் கணம் வரை என்ன நிகழ்கிறது என்பதையே உணராதபடி பலவாகப் பிரிந்து எங்கெங்கோ இருந்துகொண்டிருந்தான் உத்தரன். இளமைந்தனாக விராடநகரியின் ஆறுகளில் நீந்திக் களித்தான். அரண்மனைச் சேடியருடன் காமம் கொண்டாடிக்கொண்டிருந்தான். அறியா நிலமொன்றில் தனித்த புரவியில் சென்றுகொண்டிருந்தான். அர்ஜுனனுடன் வில்பயின்றுகொண்டிருந்தான். கனவு நிலமொன்றில் எவரென்றறியாத நாககன்னிகை ஒருத்தியை துரத்திக்கொண்டிருந்தான். படைமுழக்கம் எழுந்து கண்முன் இரு படைகளும் அலையோடு அலையென மோதிக்கொள்வதை கண்ட பின்னரே திடுக்கிட்டு விழித்தான். இரு கைகளையும் தூக்கி “வெற்றிவேல்! வீரவேல்!” என்று பெருங்குரலெழுப்பியபடி “செல்க! செல்க!” என்று தன் பாகனை ஊக்கினான். தேர் அதற்கென படைபிளந்துகொண்டு அமைந்த பாதையினூடாக விரைந்து முன்னகர்ந்தது.

அம்புகளை ஆவக்காவலரிடமிருந்து வாங்கி வாங்கி நாணேற்றி காதளவு இழுத்து செலுத்தினான். ஒவ்வொரு அம்புடனும் தன்னுள் ஒரு துளி எழுந்து விம்மிச்செல்வதை கண்டான். அது சென்று தைத்து சரித்த வீரனை முற்பிறவிகளில் அறிந்திருந்தான். கொல்பவனுக்கும் கொல்லப்படுபவனுக்கும் நடுவே அவ்விறுதிக் கணத்தில் நிகழும் விழித்தொடர்பு எத்தனை விந்தையானது! “பீஷ்மரை அணுகுக! பீஷ்மரை!” என்று அவன் கூவினான். பாகன் சவுக்கை வீசி புரவிகளை ஊக்கி தேரை அணிபிளந்து செலுத்தி பீஷ்மரை நோக்கி கொண்டுசென்றான். அங்கிருந்து பார்க்கையில் பீஷ்மரின் முகம் பின்புறம் எழுந்த சூரியனின் ஒளியில் பொற்கம்பிகளாக கூந்தலிழைகள் மின்ன வெண்ணிறத் தாடி பறக்க மூதாதை தெய்வம் ஒன்று எழுந்து வந்ததுபோல் தெரிந்தது.

பீஷ்மரின் தேர் நீரலைபோல் மின்னிக்கொண்டிருந்தது. அவர் கையிலிருந்த வில்லை விழிகொண்டு நோக்க இயலவில்லை. வலக்கை அம்பறாத்தூணிக்கும் நாணுக்குமென சுழல்வது பறக்கும் பறவையின் சிறகென ஓர் அரைவட்டமாக, பளிங்குத்தீற்றலாக, நீர்வளையமாக தெரிந்தது. அவரிலிருந்து எழுந்த அம்புகள் தீப்பொறிபோல் இருபுறமும் சிதறித் தெறித்து படைவீரர்களை சாய்த்தன. ஒற்றைக்கணத்தில் வெடித்து விழிநோக்கவே பதினெட்டு முப்பத்தாறு அறுபத்துநான்கு என்று பெருகும் அம்புகளை அவர் வில் தொடுப்பதுபோலிருந்தது. அவர் சென்ற வழியெங்கும்  வெற்றிடமென தடம் எஞ்சியது.

“மேலும் நகர்க! ஒவ்வொரு கணமும் அவரை எதிர்கொள்க!” என்று உத்தரன் தனது படைவீரர்களுக்கு ஆணையிட்டான். அவர்கள் முன்னால் விழுந்த பிணங்களையே தங்களுக்கு எல்லைக்காப்பென அமைத்து மேலும் மேலும் என இறந்துவிழுந்து முன்னேறினர். விழுந்தவர்கள் எழுவதுபோல் விழிமயக்கு காட்டியது அந்நகர்வு. முன்னேறிச்சென்ற தேர்கள் புரவிகள் அம்புபட்டு விழ விசை நிலைமாறி பக்கவாட்டில் சரிந்தன. பிறையம்புகளால் தலையறுந்து விழுந்து துடித்த குதிரைகள்மேல் ஏறி மேலும் சரிந்தன தேர்கள். குளம்புகள் உதைக்க கனைத்துப் புரண்டெழுந்த புரவிகளை மீண்டும் சாய்த்தன அம்புகள். அம்புகளின் பெருக்கு கரையுடைத்து பெருவெள்ளம் ஒன்று அலைசுருண்டு முன்வருவதுபோல் தோன்றியது. பல்லாயிரக்கணக்கில் எழுந்த பறவைக்கூட்டம்போல வளைந்து படைகளின் மீது பொழிந்தது.

உத்தரன் தன் கை அம்புகளை, நாணை, இலக்கை தானே அறிந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். தன் கட்டுகளுக்கு அப்பாலென தன் முன் எழுந்து செல்லும் தன் அம்புகளை அவனுள் அமைந்து அவனே திகைத்து நோக்கினான். பீஷ்மரின் அம்புவெளிக்குள் அவன் குளிர்நீர் பெய்யும் மலையருவிக்குள் என தலைதாழ்த்தி உடல்குறுக்கி நுழைந்தான். அவன் உடலெங்கும் பீஷ்மரின் அம்புகள் உலோக முத்தங்களுடன் மொய்த்து கீழே உதிர்ந்தன. விரிகலத்தில் கொதிக்கும் நெய்யின் குமிழியுடையும் ஓசை. வெறிக்கூச்சலுடன் அவன் தன் அம்புகளை அவரை நோக்கி தொடுத்தான். முட்ட வரும் களிற்றெருதை எதிர்கொள்வதுபோல் அந்த அம்புக்கொந்தளிப்பில் முட்டிக்கொண்டான். எதிரே வந்த பீஷ்மரின் அம்புகளால் அவை ஒவ்வொன்றும் காற்று வெளியிலேயே முறியடித்து கீழே உதிர்க்கப்பட்டன.

மேலும் மேலுமென சலிக்காமல் அம்புகளை செலுத்திக்கொண்டே இருந்தான். தன் கை நூறு அம்புகளுக்குள் சலித்துவிடுவதையே முன்னர் அவன் அறிந்திருந்தான். ஆனால் களத்தில் ஒவ்வொரு அம்புக்குமென தோள்களின் ஆற்றல் பெருகி வந்தது. விழிகள் கூர்மை கொண்டன. அம்பும் விழியும் கைகளுமன்றி பிற எதுவும் அவனல்ல என்று ஆயிற்று. அவன் அம்பொன்று சென்று பீஷ்மரின் தேரின் தூணில் பட்டு நின்றது. பீஷ்மர் திரும்பி அவனை நோக்கி புன்னகைத்தார். “ஆசிரியரே, இதோ உங்களுக்கு என் அன்பு!” என்றபடி உத்தரன் இன்னொரு அம்பை எய்தான்.  “மேலும் அணுகுக! மேலும் அணுகுக!” என்றபடி தன் பாகனை தூண்டினான். அம்புகள் சென்று எதிரம்பால் தடுக்கப்பட்டு சரிந்தபடியே இருக்க பிறிதொரு அம்பு பீஷ்மரின் மிக அருகே சென்று தேர்த்தூணில் பாய்ந்தது. மறுகணம் பீஷ்மரின் அம்பு ஒன்று அவன் தோளை தைத்தது.

அது அளித்த சிற்றுதையால் நிலைநடுங்கி சற்றே பின்னடைந்தபின் அவன் மீண்டும் வெறிகொண்டு அம்புகளை எய்தான். அவனுடைய விழி தொடுமிடமெல்லாம் அம்புகள் உள்ளத்திலிருந்தே ஆணை பெற்று சென்று கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அருகணைந்து அவன் இன்னொரு அம்பை அவருடைய நெஞ்சுக்கு எய்தான். அம்பறாத்தூணியிலிருந்து அம்பெடுக்கும் விசையாலேயே அதை தட்டித் தெறிக்கவிட்டு அவ்வம்பினாலேயே அவன் நெஞ்சுக்கவசத்தை பிளந்தார் பீஷ்மர். அவன் முழந்தாளிட்டு தேரில் அமர்ந்து காவலன் எடுத்தளித்த அடுத்த கவசத்தை நெஞ்சில் பொருத்திக்கொண்டான். அதே விசையில் எழுந்து இன்னொரு அம்பை அவரை நோக்கி எய்தான். “நன்று! நன்று!” என்று பீஷ்மர் சிரித்து கூச்சலிட்டார். மீண்டும் ஓர் அம்பு அவன் தலைக்கவசத்தை உடைத்தெறிந்தது. அவன் அம்பெடுப்பதற்குள் அவனது இரண்டாவது கவசமும் உடைத்தெறியப்பட்டது. மூன்றாவது அம்பு அவன் தோளில் தைத்து நின்றது.

மீண்டும் ஓர் அம்பு அவன் விலாவில் தைத்ததுமே பின்னிருந்து அர்ஜுனன் “விலகு! விலகு!” என்று கூவியபடி தன் தேரில் பாய்ந்து முன்னால் வந்தான். அவன் தேரின் முன்னால் சவுக்குடன் அமர்ந்திருந்த இளைய யாதவர் புன்னகைப்பதுபோல் தோன்றியது. இரு பக்கங்களிலும் இருந்து தேர்ப்படை எழுந்துவந்து இரும்புக்கேடயங்களை சுவர்கள் என்றாக்கி உத்தரனை சூழ்ந்துகொண்டது. தேர்த்தட்டில் அவன் விழுந்து கிடக்க பாகன் தேரை பின்பக்கம் கொண்டு சென்றான். “என் அம்புகளை பிடுங்குக! அம்புகளை பிடுங்குக!” என்று உத்தரன் கூவினான். தேரில் பாய்ந்தேறிய அணுக்க வீரனொருவன் அவன் உடலில் இருந்து அம்புகளை பிடுங்கி எடுத்தான். உருகிக்கொண்டிருந்த தேன்மெழுகில் மூலிகைச்சாறு கலந்து அக்காயங்களின் மேல் வைத்து துணியால் அழுந்தக் கட்டினான். வலியுடன் முனகியபடி உத்தரன் கண்களை மூடிக்கொண்டான். “தசைக்காயங்கள்தான், விராடரே” என்றான் அணுக்கன். உத்தரன் கையூன்றி எழுந்து தேர்த்தூணைப் பற்றியபடி நின்று தொலைவில் பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்குமிடையே மூண்டுவிட்ட கடும்போரை பார்த்தான்.

அர்ஜுனன் தன் முதல் அம்பை எடுத்து பீஷ்மரின் காலடியை நோக்கி செலுத்தினான். அவரது இரு கால்களுக்கு நடுவே சென்று தைத்து நின்று சிறகதிர்ந்தது அது. பீஷ்மர் அதை நோக்கியபின் அவனைப் பார்த்து புன்னகைத்தார். அவருடைய அம்பு ஒன்று பறந்து வந்து அர்ஜுனனின் தலைக்கவசத்திலிருந்த செம்பருந்தின் இறகை தட்டியெறிந்தது. அக்கணமே என எழுந்த இருவரின் அடுத்த அம்புகளும் வானில் ஒன்றையொன்று முறித்து கீழே விழுந்தன. இயல்பாக அவர்களை சூழ்ந்திருந்தவர்கள் போரை நிறுத்திக்கொண்டு நோக்கி நிற்கலாயினர். படைக்கலங்களில் இருந்து பித்து ஒழிய, உடற்தசைகள் தளர, விழிகளும் முகங்களுமென்றாகி சூழ்ந்தனர். பின்னர் போரில் அவர்களின் உள்ளங்கள் ஈடுபட்டன. கூச்சல்கள், முனகல்கள், சிரிப்புகள், வாழ்த்தொலிகள் என அவர்கள் அப்போருக்கு அருகு வகுத்தனர்.

பீஷ்மரின் தேரிலிருந்த விஸ்வசேனர் பீஷ்மரே பிறிதுடலாக ஆனது போலிருந்தார். பீஷ்மர் அவரிடம் ஒரு சொல்லும் உரைக்கவேண்டியிருக்கவில்லை. இளைய யாதவரோ தானே வில்லேந்தி தேர்த்தட்டில் நின்றிருப்பதுபோல் தேர் செலுத்தினார். சூழ்கையையும் திசையையும் விசையையும் தேரிலிருந்தே பார்த்தனின் வில் பெற்றுக்கொண்டது. ஒருசில கணங்களில் இரு தேர்களும் இரு சிம்மங்கள் என நிலம் அறைந்து இடியோசை எழுப்பி சுற்றிவந்து பாய்ந்து அறைந்து விலகி பதுங்கி மீண்டும் பாய்ந்து அப்போரை நிகழ்த்திக்கொண்டிருப்பதாக தோன்றியது. பருப்பொருட்கள் மானுடரை புரிந்துகொள்ளும் தன்மைபோல் விந்தை பிறிதில்லை என உத்தரன் எண்ணினான். பருப்பொருட்களில் தன் உள்ளத்தைப் பொறித்து எடுத்து மானுடன் செய்தவை தேர்கள், படைக்கலங்கள். அவை தங்கள் பருவியல்பை உதறி விழிநோக்கும் மானுட உள்ளமென்றாகும் தருணம் எழும்.

அம்புகளாலான ஓர் உரையாடல். அம்புகள் வானில் தங்களுக்கென ஒரு உலகை அமைத்துக்கொண்டவைபோல. அந்த உலகில் அவை காமம் கொண்டாடின. சிணுங்கியும் சிரித்தும்  சொல்லாடிக்கொண்டன. முத்தமிட்டன. தழுவிச் சரிந்தன. இருவர் கவசங்களும் உடைந்தன. வீரர்கள் எடுத்தளித்த மறு கவசங்களை மறுகணமே அணிந்துகொண்டனர். கவசங்களை அணிவதும் அம்பை எடுப்பதும் தொடுப்பதும் ஆகிய மூன்று செயல்களையும் ஒற்றை அசைவாலேயே செய்ய அவர்களால் இயன்றது. பீஷ்மர் புன்னகைத்து அர்ஜுனனை நோக்கி கையசைத்தார். அர்ஜுனனின் மார்புக்கவசம் பிளந்துவிழுந்தது. அவன் அதை நோக்கும் கணத்தில் அவன் தொடைக்கவசமும் பிளந்தது. பிறிதொரு அம்பு அவன் தலைகொய்ய வர இளைய யாதவர் புரவிக்கடிவாளத்தைப் பற்றி மெல்ல இழுத்துத் திருப்பி அதை கடந்துசெல்லச் செய்தார். கூகைபோல் கதறியபடி வந்தது பின்னும் ஒரு வாளி. மீண்டும் ஒன்று. கழுதைப்புலி என நகைத்தபடி மின்அதிர்ந்து வந்தது பஞ்சமுக ஆவம்.

இளைய யாதவரின் கையில் கடிவாளம் தேர்ந்த இசைச்சூதனிடம் யாழ்நரம்பென இழுபட்டு சுண்டப்பட்டு தெறிப்புகொண்டது. அக்கடிவாளத்தின் அசைவுகளை புரவிக்குளம்புகள் பெருக்கி தாங்களும் நடித்தன. தேர் இளவிறலி என நடனமிட்டது. தரையில் கிடந்த சடலங்களின் மேல் கழைக்கூத்தி என நின்று ஆடியது. பீஷ்மரின் அம்புகள் வேழாம்பல் என முறச்சிறகு வீசும் ஒலியுடன் வந்து பதிந்தன. தேரின் தூண்கள் சிதறின. கொடியுடன் முகடு உடைந்து சிம்புகளாகத் தெறித்தது. அர்ஜுனன் அம்புகள் பீஷ்மரைச் சூழ்ந்து பறந்து திகைத்து அப்பால் விழுந்தன. விஸ்வசேனரின் கைகள் அசைவதாகவே தெரியவில்லை. ஆனால் கடிவாளங்களினூடாக புரவி அவர் எண்ணுவதனைத்தையும் அறிந்தது. அர்ஜுனனின் தலைக்கவசம் உடைந்தது. அவன் குனிந்து தலையை காக்க கழுத்துக்கு வந்த பிறையம்பு கடந்துசென்று ஒரு வீரனை தலைகொய்து சென்றது. அவன் எழுவதற்குள் பிறிதொரு அம்பு அவன் காதுள் கொசுவென மீட்டிக் கடந்துசென்றது. அவன் எய்த மூன்று அம்புகளில் ஒன்று பீஷ்மரின் முழங்காலில் குத்தி நின்றது. அதேகணம் அவர் எய்த அம்பு அவன் தோளிலையை உடைத்தெறிந்தது. மறுகணமே அடுத்த அம்பு தோளில் குத்தி நின்றது.

இளைய யாதவர் கைவீச அர்ஜுனனை காப்பாற்றும்பொருட்டு பின்பக்கம் படைநிரையிலிருந்து முரசொலி எழுந்தது. பீமனும் மறுபுறம் திருஷ்டத்யும்னனும் அம்புகளை எய்து பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் நடுவே திரையொன்றை அமைத்தபடி அணுகி வந்தனர். கவசத்தேர்கள் உள்ளே புகுந்து முற்றிலும் அம்புகளைத் தடுத்து சுவரென்றாக்கின. குருதி வழிய தேர்த்தட்டில் சற்றே தளர்ந்த அர்ஜுனனை இளைய யாதவர் ஒரே கணத்தில் தேரைத் திருப்பி எழுப்பி படைநிரைகளுக்குள் புதைத்து மூழ்கடித்து அப்பால் கொண்டு சென்றார். அவன் அந்த அம்பை பிடுங்கி எடுக்க முயல “வேண்டாம், தசையை கிழித்துக்கொள்ளாதே!” என்று இளைய யாதவர் கூவினார். அவர்கள் மறைந்த இடைவெளியிலிருந்து வில்லவர்கள் நின்ற விரைவுத்தேர்கள் புற்றிலிருந்து ஈசல்கள் என கிளம்பி வந்தன. அம்புகள் பீறிட்டு பிஷ்மரை சூழ்ந்தன. ஆனால் பீஷ்மரை எவரும் அணுக இயலவில்லை. பீமன் அவருடைய அம்புச்சுழலுக்குள் சிக்கிக்கொள்ள “பின்னகருங்கள்… தனியாக செல்லவேண்டாம்” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். பீமன் உடைந்த கவசங்களும் தோளிலும் மார்பிலும் பாய்ந்த அம்புகளில் ஊற்றெடுத்துப் பெருகிய குருதியுமாக பின்னடைந்தான்.

“துணை! துணை! துணை!” என முரசுகள் முழங்கின. நகுலனும் சகதேவனும் சிசுபாலனின் மைந்தன் திருஷ்டகேதுவும் அம்புகளைப் பெய்தபடி பிதாமகரை சூழ்ந்துகொண்டார்கள். “முழுப் படையும் எழுக! முழுப் படையாலும் பிதாமகரை செறுத்து நில்லுங்கள்” என்று முரசொலி அறைகூவியது. “பிதாமகர் முதல் நாள் முதல் போரிலேயே முற்றிலும் கொலைவெறி கொண்டிருக்கிறார்” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். “பிதாமகர் பீஷ்மரை படைத்தலைவர் அணுக வேண்டியதில்லை… பிதாமகர் பீஷ்மரை அணுக வேண்டியதில்லை” என்று முரசுகள் ஆணையிட்டுக்கொண்டே இருந்தன. “கவசவீரர்கள் மட்டும் அவரை சூழ்ந்துகொள்க! அம்புகளை எதிர்கொண்டு அவரை தடுத்து நிறுத்துக!” நூறு தேர்வீரர்களால் பீஷ்மர் சூழப்பட்டார். செந்நாய்த்திரளை மதயானை என அவர் அவர்களை எதிர்கொண்டார். “கேடயங்களால் சூழ்ந்துகொள்க!” என்று முரசு அறைகூவியது. பெருங்கேடயங்களை கொண்டு சுவரமைத்து அவரை சூழ்ந்தனர் தேர்வீரர்கள். ஆனால் பீஷ்மரின் அம்புகள் தைக்க புரவிகள் கால்மடிந்து வீழ்ந்தன. நிலையழிந்த தேர்வீரனின் கேடயம் சரிய அவ்விடைவெளியில் நாகமென நுழைந்து அவனை கொன்றது அவருடைய வாளி. ஒருவன் விழுந்தால் அவ்விடைவெளியை இன்னொரு தேர் நிறைப்பதற்குள் மூவர் அலறிவிழுந்தனர். உடைந்த தேர்களும் துடிக்கும் குதிரையுடல்களும் அவற்றுக்குமேல் அலறிவிழும் வில்லவர்களுமாக அப்பகுதி சூழப்பட்டது.

பீஷ்மருடன் போரிடுகையில் அர்ஜுனன் கையிலிருந்து அம்புகள் தவறிவிட்டதை உத்தரன் பார்த்தான். அவ்வாறு நிகழுமென்று அவன் எண்ணவேயில்லை. “பார்த்தன் கை தளர்வதென்றால் நம் படைகள் தோற்றுவிட்டன என்று பொருள்” என்றான். தேர்ப்பாகன் “அவருடைய புண் எளியதுதான்” என்றான். அப்பால் நின்றிருந்த திருஷ்டத்யும்னன் “பீஷ்மர் பல்லாயிரம் கைகொண்டு எழுந்திருக்கிறார். இப்போது முக்கண் விழியனோ உலகளந்தானோகூட அவரை எதிர்கொள்ள இயலாது… விலகிசெல்க!” என்றான். மறுபக்கம் பீமன் தன் புண்களை மெழுகுத்துணியால் கட்டிக்கொண்டு மீண்டும் பீஷ்மரை எதிர்கொண்டான். “விலகுக!” என்று கூவி இரு தேர்களை விலக்கி அவன் உட்புகுந்தான். அவன் அம்புகளில் ஒன்று பீஷ்மரின் புரவி ஒன்றை கொன்றது. அவருடைய தேர் நிலையழிய அவன் அவருடைய தோளிலையை உடைத்தான். விஸ்வசேனர் அக்கணமே புண்பட்ட புரவியை தேரிலிருந்து அறுத்து அகற்றி தேரை திருப்பி நிலைமீட்டார்.

உறுமியபடி பீஷ்மர் ஒரே வீச்சில் எழுந்த பன்னிரு அம்புகளால் பீமனின் கவசங்களையும் காதிலணிந்த குண்டலம் ஒன்றையும் வெட்டி எறிந்தார். குனிந்தும் துள்ளியும் அவ்வம்புகள் தன் தலையை அறுக்காமல் தப்பிய பீமன் தேர்த்தூணருகே மண்டியிட்டமர்ந்தான். பீஷ்மர் கைதூக்கி “ஓடுக சிறியவனே, உயிர் கொண்டு ஓடுக!” என்று கூவினார். “உங்கள் கண்முன் கௌரவக்குடியை கொன்றழிப்பேன் பாருங்கள், பிதாமகரே! ஒன்று உணர்க, எந்நிலையிலும் குந்தியின் மைந்தன் புறம்காட்டமாட்டான்!” என்று பீமன் கூவினான். மீண்டும் மீண்டும் பீமனை அம்புகள் தாக்கின. இருண்ட பலநூறு வௌவால்களால் தாக்கப்படும் கரடி என அவன் தேர்த்தட்டில் நிலைகுலைந்து சுழன்றான். “பீமனை காக்கவேண்டும்! பீமனை காக்கவேண்டும்!” என்றது முரசு. படை அலையெழுந்து அணையும் சுடரை கைகாப்பதுபோல பீமனைக் காத்து அப்பால் எடுத்துச் சென்றது.

உத்தரன் “என்னை களமுகப்புக்கு கொண்டு செல்க!” என்றான். துயருடன் “விராடரே…” என்று தேர்ப்பாகன் அழைத்தான். “இல்லை, இனி தயங்குவதில்லை. இத்தருணத்தில் தயங்கினால் இனி ஒருபோதும் நாம் வெல்லப்போவதில்லை” என்று உத்தரன் கூவினான். “நாம் இங்கு வந்ததே பெருவாய்ப்பு. முதலணி பின்வாங்கிய படை வென்ற வரலாறே இல்லை.” அவனுக்குப் பின்னால் விராடப் படைகள் பின்வாங்கத் தொடங்கியிருந்தன. இரு கைகளையும் விரித்து “முன்னேறுக! முன்னேறுக!” என்று கூவியபடி அவன் தேரை முன்னோக்கி செலுத்தினான். நீர்ப்பாசியை சுட்டுவிரல் என அவன் தேரால் அவனுடைய படை இழுபட்டு தேருக்குப் பின்னால் ஒழுகி வந்தது.

பீஷ்மரைச் சுற்றி குவிந்துகிடந்த பிணங்களைக் கண்டு ஒருகணம் உத்தரன் உளம் தயங்கினான். பின்னாலிருந்த திருஷ்டத்யும்னன் “நீ அவரை எதிர்கொள்ள இயலாது. எவ்வகையிலும் அவருக்கு முன்நிற்க இயலாது. விலகுக! விலகிச் செல்க!” என்று கூவினான். “இல்லை, நான் அவரை எதிர்கொள்வேன். இக்களத்தில் புகழுடன் இறப்பேன்! முதற்பலியென என்னை இங்கு நிறுவுவேன்!” என்று உத்தரன் கூவினான். “இத்தருணத்தில் இங்கு என்னை நான் நிறுவிக்கொள்ளாவிட்டால் இனி ஒரு தருணம் எனக்கு வாய்க்கப் போவதில்லை! செல்க! செல்க!” என்றான். அவனுக்குப் பின்னால் தன் அம்புகளை ஏவியபடி வந்த திருஷ்டத்யும்னன் “வேண்டாம் இளையோனே, நமக்கின்னும் போர்க்களங்கள் பல உள்ளன!” என்று கூவினான். உத்தரன் அச்சொற்கள் தேய்ந்து அகல முன்னேறி முகப்புக்கு சென்றான்.

உத்தரன் தனக்கு முன்னால் தோன்றிய அஸ்வத்தாமனை எதிர்கொண்டான். அஸ்வத்தாமன் “விலகி ஓடுக, மைந்தா! இப்போரில் முதல் நாள் பலி நீயாக வேண்டியதில்லை” என்றான். “ஆம், நானே முதற்பலி. அதன்பொருட்டே வந்துளேன். உங்கள் கையால் அல்ல, பிதாமகர் பீஷ்மரின் கையால்” என்றான் உத்தரன். அஸ்வத்தாமனின் மேல் அம்புகளை எய்தபடி அவன் முன்னால் செல்ல அஸ்வத்தாமன் அவனை தடுத்தான். திருஷ்டத்யும்னன் உத்தரனைத் தொடர்ந்து வந்து அஸ்வத்தாமனை எதிர்கொண்டான். இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி பெய்த அம்புகளால் இணை நின்று பொருதியபடி சுழன்று வர திருஷ்டத்யும்னன் உத்தரனிடம் “பிதாமகர் முன் நம் கேடயத்தேர்கள் மட்டும் எழட்டும். ஆணை, அவர் முன் எவரும் நிற்கலாகாது” என்றான். உத்தரன் “இல்லை, பாஞ்சாலரே. அவர் குருதிவெறி கொண்டுவிட்டார். விசை கொண்டுவரும் பெருந்தேரின் முன் மரச்சக்கையை இட்டு விரைவழிப்பதுபோல அவர் முன் செல்கிறேன்” என்று கூவியபடி தன் தேரை பீஷ்மரை நோக்கி செலுத்தினான்.

பீஷ்மரைச் சூழ்ந்து நின்றிருந்த கேடயத்தேர்களின் நடுவே இடைபிளந்து அவன் அவ்வளையத்தின் உள்நுழைந்தான். பீஷ்மர் அவனைக் கண்டதும் உரக்க நகைத்து “மீண்டும் வந்துளாய், வா!” என்றார். “ஆம், உங்கள் எதிர்நிற்கப் போகிறேன்” என்று அவன் கூவினான். பீஷ்மரின் அம்புகள் அவனை அறைந்தன. அவ்வம்புமுனைகளையன்றி அவன் பிறிதொன்றையும் பார்க்கவில்லை. தன் அம்புகளால் ஒவ்வொன்றையும் அடித்து கீழே உதிரச்செய்தான். எத்தனை பொழுதென்பதே அவன் முன் உள்ள வினாவாக இருந்தது. அம்புகள் சென்று அறைந்தபடியே இருந்தன. பீஷ்மரின் அம்புகளால் செத்து உதிர்ந்துகொண்டிருக்கும் வீரர்களை அவன் நோக்கினான். உடைந்த தேர்களால், விழும் பிணங்களால் அவன் அகற்றப்பட்டான்.

அவன் புரவிகளில் ஒன்று வெட்டுண்டு சரிய தேர் நிலையழிந்தது. தொடர்ந்த அம்புகளால் அவன் புரவிகள் அனைத்தும் கழுத்தறுந்து முகம் பதித்து நிலத்தில் விழ அவன் தேர் சரிந்தது. அவன் பிணங்கள் நடுவே விழுந்தான். “இளவரசே…” என அலறியபடி எழுந்த தேர்ப்பாகனின் தலை அறுந்து சரிய அவன் அசைந்தாடி உத்தரன் மேல் விழுந்தான். அவன்மேல் ஒரு தேர்ச்சகடம் ஓடி அப்பால் சென்றது. தன்மேல் விழுந்த பிணங்களை உந்தி அகற்றியபடி உத்தரன் தவழ்ந்து இரு தேர்களினூடாக அப்பால் சென்றான். பின்னிருந்து திருஷ்டத்யும்னன் மேலும் மேலுமென தேர்நிரைகளை அனுப்பினான். அலையென அவை அவனைத் தூக்கி அகற்றின.

உடலெங்கும் குருதியும் நிணமுமாக உத்தரன் எழுந்து நின்றான். வெறியுடன் இரு கைகளையும் விரித்து வானோக்கி கூவினான். திரும்பி அங்கே கிடந்த நீண்ட வேலை எடுத்துக்கொண்டு நோக்கியபோது மேலிருந்து பாகன் விழுந்துவிட நிலையழிந்துகொண்டிருந்த கேடயம் ஏந்திய களிற்றை கண்டான். ஓடிச்சென்று அதன் கழுத்துக்கயிற்றைப் பற்றி தொற்றி மேலேறினான். அதன் இரு விலாவிலும் எடைமிக்க வேல்கள் அடுக்கப்பட்ட தூளிகள் தொங்கின. கைவேலைச் சுழற்றி அங்கே நின்ற கௌரவ நூற்றுவர்தலைவனை நோக்கி வீசினான். அவன் இரும்புக்கவசத்தை உடைத்து உட்புகுந்து அப்பால் சென்று தேர்த்தட்டில் அவனை தைத்தது அது. வேல்களை உருவி தேர்வீரர்களை எறிந்து வீழ்த்தியபடி அவன் முன்னெழுந்தான்.

“நில், விராடனே!” என்று கூவியபடி சல்யர் அவனெதிரே வந்தார். சீற்றத்துடன் கூவியபடி அவன் அவரை எதிர்கொண்ட முதற்கணத்திலேயே அவருடைய தேரின் மூன்று புரவிகளை வேலெய்து வீழ்த்தினான். சரிந்த தேரிலிருந்து அருகே வந்த புரவிமேல் பாய்ந்த சல்யர் அப்புரவியும் அவன் வேலால் குத்தப்பட்டு சரிய நிலத்தில் பாய்ந்து நின்றார். ஒரு தேர் அவரை மறைத்தபடி சென்றமையால் அவர் நெஞ்சுநோக்கி அவன் செலுத்திய வேலில் இருந்து தப்பினார். தேர்ச்சகடத்துக்கு அப்பால் ஒளிந்துகொண்டு வில்லை இழுத்து நாண் தொடுத்து அவன் தோளில் எய்தார். அவன் வீசிய வேல் அவர் அருகே வந்து தைக்க பாய்ந்து நிலத்தில் விழுந்து சுழன்று எழுந்த விசையில் அடுத்த அம்பை எய்தார். அவன் யானைமேலிருந்து கீழே விழுந்தான். அவர் கீழிருந்து வாளொன்றை எடுத்தபடி பாய்ந்து ஒரே வீச்சில் அந்த யானையின் துதிக்கையை வெட்டி எறிந்தார்.

சரிந்து விழுந்த யானைக்கு அடியிலிருந்து உருண்டு உடல் விடுவித்து எழுந்த உத்தரன் இறுதி வேலை அவர் மேல் வீச அவர் அதை ஒழிந்தபோது தொடையில் வேல் குத்தியது. ஆழ இறங்கிய வேலுடன் அவர் நின்று தள்ளாடினார். யானையின் உயிர்த்துடிப்புக்கு அடியில் இருந்து அவன் தன்னை முழுமையாக விடுவித்து காலூன்றி எழுந்தபோது வெறிகொண்டு கூவியபடி பாய்ந்து அவன் நெஞ்சில் ஓங்கி உதைத்தார். அவன் நிலையழிந்து தள்ளாட மேலும் உதைத்த சல்யர் அதே வீச்சில் மல்லாந்து விழுந்த அவன் தலையை வெட்டினார். கழுத்திலிருந்து துண்டுபட்ட அவன் தலை உருண்டு தெறிக்க அதை அவர் ஓங்கி உதைத்து உருட்டினார். உடல் நிலத்தில் கிடந்து கைகளை மண்ணில் அறைந்து கால்கள் உதைத்துக்கொண்டு துடித்து இழுபட அவர் வேல் தைத்த காலை நிலத்தில் ஊன்றி நின்றபின் நிலையழிந்து வேலுடன் பக்கவாட்டில் தள்ளாடி விழுந்தார்.

உத்தரன் கொல்லப்பட்டதை கண்ட முதல் வீரன் தன் இடையிலிருந்த கொம்பை எடுத்து ஊத ஒன்றிலிருந்து ஒன்றென கொம்புகளும் முரசுகளும் ஒலிக்கலாயின. சூழ்ந்திருந்த படைவீரர்கள் அதிர்ந்து படைக்கலம் தாழ்த்தி செய்வதறியாது நின்றனர். முரசொலிதான் அவர்களுக்கு “வீழ்ந்தார் விராடர்! விராடர் வீரச்சாவு! விராட பெரும்பலி!” என்று கூவி அறிவித்தது. பாண்டவப் படையிலிருந்து “விராட மைந்தர் விண்ணேகுக! வீரவிராடர் நிறைவுறுக! விராடகுலச் சிம்மம் புகழ் நிலைகொள்க!” என வாழ்த்தொலிகள் எழுந்தன. திருஷ்டத்யும்னன் தன் தேரைத் திருப்பி விரைந்து வந்து துண்டாகிக் கிடந்த உத்தரனின் உடலைக் கண்டு திகைத்து வில் தாழ்த்தினான். உடைந்து குவிந்த தேர்களினூடாக சல்யரின் மகன் ருக்மாங்கதன் தலைமையில் வந்த கௌரவப் படையினர் சல்யரைத் தூக்கி தேரிலிட்டு கொண்டுசென்றார்கள். எலும்பில் கோத்த அவருடைய தொடைவேல் நின்று ஆடியது. அவர் கை வாளை இறுகப்பற்றியபடி நினைவிழந்திருந்தார். சல்யரின் இளைய மகன் ருக்மரதன் தன் கொம்பை எடுத்து வெற்றிக்கூச்சலை எழுப்ப  கௌரவப் படை வெற்றிமுழக்கமிடத் தொடங்கியது.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78

tigஆடிப்பீடத்தில் முகவாயை அழுத்தி ஒரு கண் மூடி ஒரு கண்ணால் கூர்ந்து நோக்கி வலக்கையால் இரு ஆடிகளையும் விலக்கியும் இணைத்தும் பார்வையை முழுப் படை நோக்கி விரித்தும் தனிவீரன் விழியளவு நோக்கி குவித்தும் குருக்ஷேத்ரப் போர்க்களத்தை நோக்கிக்கொண்டிருந்த சஞ்சயன் ஆடிக்குழிவால் சூரியன் இரண்டாக தெரிவதைக் கண்டான். ஒன்றையொன்று காய்ந்தன இரு எரிவட்டங்களும். ஆடியை விலக்கி இணைத்து ஒரு கணம் சேய்மை பிறிதொரு கணம் அண்மையென்றாக்கி நோக்கினான். தன் விழிதொட்ட அனைத்தையும் அக்கணமே சொல்லாக்கினான். மிக விரைவிலேயே அச்செயல்கள் அனைத்தும் முற்றிலும் ஒத்திசைவு கொள்ள அவனிடமிருந்து இடைமுறியாது எழுந்த சொற்பெருக்கில் திருதராஷ்டிரர் அங்கு அமர்ந்திருப்பதை முற்றிலும் மறந்து இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடிகளை பற்றிக்கொண்டு உடல் முன்சரித்து தலையை சற்றே திருப்பி தசைகள் விதிர்க்க உதடுகள் குவித்தும், மீண்டும் பற்களைக் கடித்தும், அவ்வப்போது முனகியும், ஊடே கூச்சலிட்டலறியும் மெய்ப்பாடுகளை காட்டியபடி களத்தை கண்முன் பார்த்துக்கொண்டிருந்தார்.

பருந்தென அகன்றும் சிறுபுள்ளென களத்திற்குள் தோளிலிருந்து தோள்பாய்ந்தும் சஞ்சயன் அனைத்தையும் பார்த்தான். “பேரரசே, இரு கண்ணீர்த்துளிகளுக்கு நடுவே என இந்த ஆடிகளுக்குள் காலமும் வெளியும் மடிந்து மடிந்து செறிந்துள்ளன. என் சித்தத்தால் ஒவ்வொரு அடுக்காகப் பிரித்துக்கொண்டிருக்கிறேன்” என்றான். “இதோ இரு படைகளும் ஒன்றுடன் ஒன்று ஊடுருவி நெடுந்தொலைவுக்கு சென்றுவிட்டிருக்கின்றன. இங்கிருந்து பார்க்கையில் இரு படைகளுக்கும் நடுவே அச்சந்திப்புக்கோடு பாறைவெளியில் சரிந்திறங்கி வரும் வெண்நுரை ஆற்றுவழிவுபோல கொந்தளிக்கும் நீண்ட பெருக்கென்று தோன்றுகிறது. அதில் நுரைக்குமிழிகள் என தேர்முகடுகளும் தலைக்கவசங்களும். இரு படைகளின் வண்ணங்களும் ஒன்றுடனொன்று கலக்கின்றன. செம்மஞ்சள் நிறமும் செந்நீலமும் கலந்து உருவான புதிய வண்ணம் சொல்லற்கரியது” என்றான்.

நமது படைகள் மான்கொம்பின் வடிவை தக்கவைத்துக்கொண்டே போரிடுகின்றன. மான்கொம்பு விரிந்தும் ஒவ்வொரு கணுவும் ஒரு விழுதுபோல் நீண்டும் சென்று பாண்டவர்களின் படைப்பிரிவுகளை வளைத்துக்கொள்கின்றன. பீஷ்மரும் அஸ்வத்தாமரும் நடத்தும் படைகளால் ஆன இரு கணுக்களின் நடுவே விராட மைந்தனாகிய உத்தரன் சிக்கிக்கொண்டிருக்கிறார். அவருக்கு வலப்பக்கம் ஜயத்ரதரும் இடப்பக்கம் சல்யரும் இப்போது நின்றிருக்கிறார்கள். ஆயினும் அவர் அஞ்சியதுபோல் தெரியவில்லை. போர்க்களம் அவரை மேலும் மேலும் ஆற்றல்கொள்ளச் செய்கிறது.

பீஷ்மர் மான்கொம்பின் முனையிலிருந்து சருகுப்பரப்பை எரித்து ஊடுருவும் அனல்துளிபோல பாண்டவர்களின் படைப்பிரிவுக்குள் நுழைந்திருக்கிறார். பீஷ்மரின் அம்புகளால் அவரைச் சூழ்ந்துள்ள பரப்பு நாம் நோக்கியிருக்கவே ஆளொழிந்து வெட்டவெளியென்றாகிறது. இங்கிருந்து பார்க்கையில் அவருடைய தேர்முகடு காலைஒளியில் வெண்சுடர்விடுகிறது. இதோ அணுகிச்சென்று அவர் முகத்தை பார்க்கிறேன். கண்கள் நன்கு இடுங்கி இருப்பதனால் அவரது உணர்வை கண்டுபிடிக்க இயலவில்லை. காற்றில் தாடி பறந்துகொண்டிருக்கிறது. அதில் குருதி வழிந்து மயிர்முனைகளில் செம்மணிகளெனத் திரண்டு காற்றில் பறக்கிறது.  அவர் கொன்ற வீரர்கள் அலறிச் சரிகையில் தெறிக்கும் குருதிச்சாரல் பட்டு அவரது வில் கையில் வழுக்குகிறது.

அரசே, இத்தனை தொலைவில் இருந்தும், ஒவ்வொன்றும் அசைவின்மை கொள்ளும் தேவர் நோக்கிலும், என்னால் அவருடைய கையசைவை பார்க்க இயலவில்லை. அவருடைய அம்புகள் மிகச் சிறியவை. அவை எழும் கணத்தை வில்லதிர்வால் நோக்குகிறேன். தொடும் கணத்தை வீழ்பவனில் பார்க்கிறேன். அவை எழுந்து காற்றிலேறிச் செல்வதைக் காண இங்கிருந்து மேலும் பின்னகர்ந்து விண் விளிம்பில் நின்றிருக்க வேண்டும் போலும். படைகள் நீள்வாக்கில் சிறு அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆகவே பெரிய பல்கொண்ட சீப்பால் சீவி நிறுத்தப்பட்ட கூந்தலென அவை இங்கே தெரிகின்றன. ஒரு படையென முன்னெழுகையிலும் அவர்கள் தனிநிரைகளென்றே செல்கிறார்கள். இது நிரைகள் விலகிப் பரக்கவும் மீண்டும் இணைந்து இறுகவும் உதவுகிறது. ஒரு சரடு சற்றே விலக அவ்விடைவெளியில் பிறிதொன்று புகுந்துகொள்கிறது. வீழ்பவர்களை வருபவர்கள் இடைவெளியின்றி நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். படைமுகப்பில் குவிந்த பிணங்களைக் கடந்து தேர்களும் புரவிகளும் செல்கின்றன. இப்போரில் இதுவரை யானைகள் களமிறக்கப்படவில்லை.

இதோ அர்ஜுனரை பீஷ்மர் எதிர்கொள்கிறார். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துவிட்டதுமே சூழ்ந்திருக்கும் இரு தரப்புப் படைகளும் விற்களையும் வேல்களையும் தூக்கி கூச்சலிடுகின்றன. அவ்வசைவை ஒரு சிற்றலையென இங்கிருந்து பார்க்க முடிகிறது. அனைவரும் விலகி உருவான வட்டத்திற்குள் அவர்கள் இருவரின் தேர்களும் ஒன்றையொன்று சந்திக்கின்றன. அர்ஜுனர் பீஷ்மரை நோக்கி வணங்கி முதல் அம்பை அவர் காலடி நோக்கி எய்கிறார். அடுத்த அம்பு அவருடைய நெஞ்சுக்குச் செல்ல அதை அவர் தடுக்கிறார். அவர் கையிலிருந்த அம்பு அர்ஜுனர் தலையிலிருந்த செம்பருந்தின் இறகை சீவிச்செல்கிறது. இரு வீரர்களுக்கும் நடுவே புகைக்கீற்று ஒன்று இருப்பதுபோல் ஒளிரும் அம்புகள் படலமாகி அலைகொண்டு தெரிகின்றன. ஒளிவிடும் அம்புகளால் ஆன வளைந்த பாலம். இந்தத் தொலைவில் அது ஓர் இறகுக்கீற்று.

அரசே, அதோ இரு படைகளும் எல்லைக்கு வெளியிலிருந்து நிரைநிரையாக அம்புகளை ஒற்றைப்புரவிகள் இழுக்கும் சிறுவண்டிகளில் படைமுகப்புக்கு கொண்டுசென்று கொண்டிருக்கிறார்கள். எரியனலில் அவியூற்றுவதுபோல அம்புகள் அப்பொருதுமுனை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. செருகளத்தை அடியிலி நோக்கி திறக்கும் பெரும் பிலம் என்று எண்ணுகிறேன். இருபுறத்திலிருந்தும் நீர்ப்பரப்பு பெருகிவந்து மடிந்து அதிலிறங்கி மறைந்துகொண்டிருக்கிறது. மானுட உயிர்கொள்ளத் திறந்த கவந்தனின் வாய். சுவைத்து உண்டு மேலும் பசிகொண்டு உறுமி அதிர்ந்துகொண்டிருக்கிறது அது.

அரசே, அஸ்வத்தாமரை திருஷ்டத்யும்னர் எதிர்கொள்கிறார். அப்பால் பீமன் ஜயத்ரதரை சந்திக்கிறார். இருபுறமும் அம்புகளால் வெறிகொண்டு தாக்கிக்கொள்கிறார்கள். பீமன் தன் தேரிலிருந்து பாய்ந்திறங்கி கதையைச் சுழற்றியபடி முன்னகர்கிறார். தேரிலிருந்து ஜயத்ரதரும் இறங்கி நிற்கிறார். இருவரும் கதைகளால் ஒருவரை ஒருவர் குறிநோக்கியபடி மண்டிலக் கால்வைத்து மெல்ல சுழன்றுவருகிறார்கள். ஒருகணம் மறுகணம் என காலம் செல்ல சூழ்ந்து நின்றிருக்கும் படைவீரர்கள் மூச்சடக்கி காத்திருக்கிறார்கள். இரு குமிழிகளென கதையுருளைகள் தாக்கிக்கொள்கின்றன. சூழ்ந்திருக்கும் வீரர்கள் படைக்கலங்களைத் தூக்கி கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கிறார்கள். இருபுறமும் கதைகள் பறக்கும் வட்டம் ஒரு நீர்ச்சுழி. அல்ல, ஒரு வெள்ளி நாகம். அவர்கள் அதன் நடுவே நின்று நடனமிடுகிறார்கள்.

பீமனின் அறைபட்டு ஜயத்ரதரின் கவசம் உடைந்து தெறிக்கிறது. பீமன் கதையைச் சுழற்றி அவர் தலையை அறைந்துடைக்கச் செல்கிறார். பின்னிருந்து பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தரும் உத்தரகலிங்க நாட்டு சூரியதேவரும் இரு கைகளென நீண்டு வந்து ஜயத்ரதருக்கும் பீமனுக்கும் நடுவே நுழைகிறார்கள். அவர்கள் ஜயத்ரதரை அள்ளி விலக்கி கொண்டுசெல்ல கௌரவர்களின் தேர்ப்படையினர் இடைபுகுந்து அவர்களை பீமனிடமிருந்து விலக்கி கொண்டுசெல்கிறார்கள். பீமன் தன் கதையை வானில் தூக்கி வெறிக்கூச்சலிட்டு நகைக்கிறார். ஜயத்ரதரை வீரர்கள் தேரிலிட்டு கொண்டுசெல்ல அணுக்கர் தேரிலேறி அவர் புண்களை பார்க்கிறார்கள். அவர் கலம்நிறைய மதுவாங்கி அருந்தி ஓய்வெடுக்கிறார். அவர் உயிர்ப்புண்பட்டிருக்கவில்லை என்று தேர்த்தட்டில் எழுந்து நிற்பதிலிருந்து தெரிகிறது.

“ஆம், கதைப்போரில் என் மைந்தனன்றி எவர் பீமனை எதிர்க்கவியலும்?” என்று திருதராஷ்டிரர் சொன்னார். சஞ்சயன் தொடர்ந்தான். “இங்கிருந்தே குருதிச்செம்மையை பார்க்க இயல்கிறது. பொருதுகளமே சிவந்து நீண்ட சாட்டைப் புண்போல் தெரிகிறது. செந்நிறக் கரையிட்ட பெருந்துகில் என குருக்ஷேத்ரத்தை பார்க்கிறேன். முன் முகப்பில் விழுந்த வீரர்களை ஈடு செய்ய பின்னிருந்து படைகளை அனுப்பும் கொடிகள் அசைகின்றன. இரு படைகளும் பின்னிரையிலிருந்து பெரிய ஒழுக்குகளாக மழைநீர் ஓடைகளெனப் பெருகி ஆறு நோக்கி செல்வதுபோல பொருதுமுனை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். அரசே, பொருதுமுனை மிக மெல்ல பாண்டவர் படைகளை பின்னுக்குத் தள்ளி முன்னேறுவதை பார்க்கிறேன்.

இரு கைகளாலும் தொடையை அறைந்தபடி “ஆம்! பீஷ்ம பிதாமகர் வெல்வார்! அவருக்கு நிகர் எங்கும் இல்லை! அவரை எதிர்கொள்ள அவர்களால் இயலாது!” என்று திருதராஷ்டிரர் கூவினார். “ஆம் அரசே, பீஷ்மர் நெடுந்தொலைவு உள்ளே சென்றுவிட்டார். அவர் உருவாக்கிச் சென்ற பாதையினூடாக பூரிசிரவஸும் அஸ்வத்தாமரும் பின்தொடர்ந்து அவ்விரிசலை அகற்றி பெரிதுபடுத்துகிறார்கள். இரு எல்லையில் கிருபரும் துரோணரும் பாண்டவப் படைகள் தங்கள் பிறை வட்டத்தை முழுமை செய்து கௌரவப்படைகளை வளைத்துக்கொள்ளாமல் காக்கிறார்கள். அரவொன்றின் தலையை துரோணர் அம்புகளால் அறைந்தறைந்து பின்னுக்கு தள்ளுகிறார். அதன் வாலை கிருபர் அறைந்து பின்செலுத்துகிறார். எதிரியை சுற்றிவளைத்து கவ்வ முயன்ற நாகம் உயிர்வலி கொண்டு நெளிகிறது. எனினும் இழந்த வஞ்சத்தை மீட்டுக்கொண்டு மீண்டும் மீண்டும் நெளிந்து வருகிறது.

பாண்டவப் படைகள் அடிவைத்து அடிவைத்து பின்னகர்கின்றன. நமது படைகள் ஒவ்வொரு முன்னகர்வுக்கும் களிகொள்கின்றன. நான் கௌரவ அரசரை பார்க்கிறேன். யானையிலிருந்து இறங்கி தேரிலேறிக்கொண்டு முன்னால் செல்கிறார். தனது தேர்த்தட்டில் களிவெறிகொண்டு கூச்சலிட்டபடி தோளிலும் தொடையிலும் ஓங்கி அறைந்து அவர் நடனமிடுகிறார். அவருக்கு வலப்பக்கம் துச்சாதனர் கூச்சலிட்டபடி தேர்த்தட்டில் நின்று சுழல்கிறார். துர்மதர் முன் நோக்கி அம்பு செலுத்தி பின்நோக்கி ஆணைகளை கூவுகிறார். இதோ இதோ அவர் உதடுகளை நான் பார்க்கிறேன். அவர் சொல்வதென்ன? வென்றுவிட்டோம்! வெல்கிறோம்! இதோ சரிகிறது அந்த மாளிகை. அடித்தளம் விரிசலிட்டுவிட்டது. தூண்கள் நிலையழிகின்றன. செல்லுங்கள் இன்னும் ஒரு முட்டு. இன்னும் ஓர் உந்தல். முற்றிலும் நிலைசரிந்து விழும் அது. எழவிடாதீர்கள். ஒருவரையும் எஞ்சவிடாதீர்கள்.

வெறிகொண்டு தேரிலிருந்து தன் கதையுடன் இரு புரவிகளின்மேல் கால்வைத்து பாய்ந்து முன்னால் மண்ணில் இறங்கி தன் முன்வந்து நின்ற படைவீரர்களின் தலைகளை அறைந்து உடைத்து மூளையும் குருதியும் சிதறி தன்மேலேயே விழுந்து உடல் நனைத்து வழுக்கிச் சொட்ட முன்னகர்கிறார் அரசர். அவரை எதிர்கொள்ள வருகிறார்கள் கிராத மன்னர் கார்த்தரும் ஏழு இளவரசர்களும். அவர்களின் தலைகள் சிறுகுமிழிகள் என உடைந்து தெறிக்கின்றன. மல்ல நாட்டு இளவரசர்கள் பிரதக்ஷிணரும் உபபிரதக்ஷிணரும் சிதைந்தனர். கீழமச்ச நாட்டு சம்ப்ரதனும் சௌகிருதனும் சௌமூர்த்தனும் இதோ இறந்தனர். யானை சேற்றுவயலை மிதித்து குழப்பி முன்செல்வதுபோல் சென்றுகொண்டிருக்கிறார் அரசர். அரசே, விராட நாட்டு அரசர் இப்போது உங்கள் மைந்தரை எதிர்கொள்கிறார். தன் கதையை எடுத்தபடி தேரிலிருந்து இறங்கி அவர் ஓடி வருகிறார். வெறிநகைப்புடன் துரியோதனர் அவரை நோக்கி செல்கிறார். அவர்களை சுற்றி படைகள் விலகி அமைந்த சிறுகளத்தின் நடுவே இருவரும் கதைகளால் முட்டிக்கொள்கிறார்கள்.

முதல் அறையிலேயே விராடரின் நெஞ்சை அறைந்து பிளக்கிறார் துரியோதனர். வாயிலும் மூக்கிலும் குருதி வழிய மல்லாந்து விழுந்த விராடரின் தலையை பிறிதொரு அறையால் உடைக்க முன்னெழுகிறார். கொக்கிச்சரடை வீசி விராடரின் கால்தளையில் கொளுத்தி இழுத்து பின்னால் எடுத்துக்கொள்கிறார்கள் விராடப் படையினர். தரையில் விழுந்து கிடந்த விராடரின் கொழுங்குருதியை ஓங்கி காலால் மிதித்து சிதறடிக்கிறார் அரசர். சூழ்ந்திருந்த நமது வீரர்கள் பெருங்கூச்சலெழுப்பி ஆர்ப்பரிக்கிறார்கள். விராடர்கள் அஞ்சி நடுங்கியபடி பின்னகர்கிறார்கள். துச்சாதனர் “தொடருங்கள்! ஒரு அணுவும் இடைவிடாது தொடருங்கள்” என்று கூச்சலிட்டபடி தன் படைத்திரளை குவித்து முன்னகர்கிறார்.

விராட இளவரசர் உத்தரன் தன் தந்தை கொல்லப்பட்டதாக எண்ணி பெருஞ்சினம் கொண்டு கைகளால் தொடையிலும் நெஞ்சிலும் அறைந்தபடி வில்லுடன் படைகளைப் பிளந்தோடி வருகிறார். அவரைத் தொடர்ந்து வரும் விரைவுப் புரவிப்படையின் அம்புகளால் நமது புரவி வீரர்கள் மடிந்து உதிர்கிறார்கள். நிலையழிந்த புரவிகள் சுற்றிச் சுற்றி வர அவற்றை தன் கதையால் அறைந்து விலக்கியபடி உத்தரனை நோக்கி செல்கிறார் துரியோதனர். தன் தேரிலேறிக்கொண்டு வில்லெடுக்கிறார். இருவரும் அம்புகளால் சந்தித்துக்கொள்கிறார்கள். ஒவ்வொரு அம்பும் இலக்கு தேடி மயிரிழையில் தவறவிட்டு உதிர்கின்றன. ஒன்றுடன் ஒன்று மோதி முறிகின்றன. நம் அரசரின் தேர் முள்ளம்பன்றியின் உடலென தைத்த அம்புகளால் நிறைந்திருக்கிறது. உத்தரனின் வெறிகண்டு நம் அரசரே சற்று உளம் திகைத்தவர் போலிருக்கிறார். அவரது கை சோர்ந்துவிட்டது.

உத்தரனின் அம்பொன்று அரசரின் மணிக்கட்டை தாக்குகிறது. கையை உதறி அவர் பின்நகர வலப்பக்கத்திலிருந்து பூரிசிரவஸ் தன் அம்புகளை ஒன்றன்பின் ஒன்றென ஏவி ஒரு முள்வேலியை ஏற்படுத்தியபடி உதவிக்கு வருகிறார். மறுபக்கத்திலிருந்து அஸ்வத்தாமரும் வருகிறார். அரசரை மீட்டு பின்னால் கொண்டுசெல்கிறார்கள். இருவருக்கும் நடுவே கேடயங்கள் சுமந்த படையொன்று திரையென இழுத்துவிடப்படுகிறது. தேர்த்தட்டிலிருந்து நின்று தலையை அறைந்தபடி வெறிக்கூச்சலிடுகிறார் உத்தரன். விராடர் இறக்கவில்லை என அவரிடம் சொல்கிறார் திருஷ்டத்யும்னர். உத்தரனை சினமடங்கச்செய்து அழைத்துச்செல்கிறார்.

நான் குலாடகுடியின் ஸ்வேதனை பார்க்கிறேன். அரசே, அவர் இப்போது பகதத்தரை எதிர்க்கிறார். இளையவனென்று எண்ணி சற்றே இயல்பு நிலையுடன் அவரை எதிர்கொண்ட பகதத்தர் தொடர்ந்து வந்த அம்புகளால் நிலையழிந்து பலமுறை தேர்த்தட்டில் பின்வாங்கினார். அவரது கவசங்கள் உடைந்தன. காலின் உருளைக்கவசம் உடைய தொடையில் அம்பொன்று தைத்தது. முழந்தாளிட்டு அமர்ந்தபோது அவர் கொல்லும் வெறியுடன் தன் தலைக்கு மேல் சென்ற மூன்று அம்புகளை பார்த்தார். மீண்டும் அம்பெடுத்தபோது வில் உடைந்து தெறித்தது. அடுத்த அம்பில் தலைக்கவசம் உடைந்து விழுந்தது. தேர்த்தட்டிலேயே அவர் உடல் பதிக்க அவர் பாகன் தேரைத் திருப்ப பின்னணியில் வந்துகொண்டிருந்த நூறு தேர்களுக்கு நடுவே சென்று மறைந்துகொண்டார்.

நூறு தேர் வீரர்களும் அம்பெடுத்து எய்ய அந்த அம்பு மழையிலிருந்து தப்பும்பொருட்டு உடல் வளைத்து தலைகுனிந்து தேர்ப்பாகனிடம் பின்னால் நகர ஆணையிட்டார் ஸ்வேதன். அவரது தேர்ப்படையினர் இருபுறத்திலிருந்தும் வந்து அவரை காத்தனர். இரு தேர்ப்படைகளும் அம்புகளால் ஒன்றையொன்று தாக்கிக்கொண்டன. தேர்த்தட்டிலிருந்து வில்லவர்கள் அலறிவிழுகிறார்கள். ஆளற்ற தேர்கள் விசையழியாது ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொள்கின்றன. கவிழ்ந்த தேரின் சகடமொன்று பித்தெடுத்ததுபோல் சுழன்றுகொண்டிருக்கிறது. எழமுயன்ற புரவிகள் மேல் மீண்டும் மீண்டும் அம்புகள் விழுந்து இறங்குகின்றன. அவற்றின் விழித்த கண்ணுருளைகளை, வெறித்த சோழிப்பல்நிரைகளை காண்கிறேன். அவை சென்ற பிறவியில் களம்படாது இறந்தவர்களின் மறுபிறவிகள். துடித்துத் துடித்து தங்கள் கடன் முடிப்பவை.

துரோணரை யுதிஷ்டிரர் எதிர்கொள்கிறார். அவரது அம்புகளை மிக எளிதில் அறைந்தொடுக்கி அவர் நெஞ்சு நோக்கி பேரம்பு ஒன்றைத் தொடுத்து உரக்க நகைக்கிறார் துரோணர். திகைத்து ஒரு கையில் அம்பும் ஒரு கையில் வில்லுமென நின்றிருக்கும் யுதிஷ்டிரரை பார்த்து “செல்க! எனது அம்பு இலக்கு பிழைப்பதில்லை” என்றபின் துரோணர் திரும்பி மறுபக்கம் சென்றார். நான் யுதிஷ்டிரர் கண்களை பார்க்கிறேன். சிறுமைகொண்டு துயருற்று தேரில் நிற்கிறார். அவர் உதடுகளை பார்க்கிறேன். “போதும், திரும்புக!” என்று அவர் தன் பாகனிடம் சொல்கிறார். அவரை காக்கும்பொருட்டு இரு மைந்தர்கள் தேர்களில் அம்பு தொடுத்தபடி வருகிறார்கள்.

ஒருபுறம் சுருதசேனனும் மறுபுறம் சுருதகீர்த்தியும் வந்து அவருக்கு அரணமைக்க தொலைவில் இருந்து அபிமன்யூ தன் பெருந்தேரில் ஊடே சென்ற வில்லவர் புரவிகளை விலக்கி முன்னால் வருகிறார். “நில்லுங்கள், ஆசிரியரே! நில்லுங்கள்!” என்று அவர் துரோணரை அழைக்கிறார். துரோணரும் அவரும் அம்புகளால் சந்தித்துக்கொள்கின்றனர். துரோணரின் அம்புகள் முறிந்து தெறிக்கின்றன. அவரது நெஞ்சுக்கவசம் உடைந்து தெறிக்கிறது. இதோ தலைக்கவசம் சரிகிறது. துரோணரின் விலாவிலும் நெஞ்சிலும் அவர் அம்புகள் தைக்கின்றன. ஒரு அம்பைக்கூட அவரால் அபிமன்யூ உடலில் செலுத்த முடியவில்லை. இளையோன் காற்றில் தாவும் சிறு புள் போலிருக்கிறார். வில்லை நாணேற்றி அம்பு தொடுத்தபடியே தேரிலிருந்து புரவிகளில் தாவுகிறார். புரவித்தலைமேல் கால் வைத்து பிறிதொரு தேர் மேல் ஏறிக்கொள்கிறார். தேரிலிருந்து தேர் முகடுக்குச் சென்று அம்பு விடுகிறார். அங்கிருந்து விரையும் புரவிகள் மீதும் நின்றிருக்கும் அறிவிப்புமாடத்தின் விளிம்பிலும் தொற்றிகொள்கிறார். அரசே, அவர் ஊர்வதற்கு காற்றே போதுமென்று தோன்றுகிறது.

நச்சை உமிழ்ந்து காட்டுப்பறவைகள் அனைத்தையும் கொன்று சருகுகள் என உதிர்க்கும் பெருநாகம்போல் சென்ற வழியெங்கும் அவர் வீரர்களை அழிக்கிறார். துரோணர் இப்போது அம்புகளால் தன்னை தற்காத்துக்கொள்கிறார். அம்புகளை எய்தபடியே தன் தேரை பின்னெடுத்துச் செல்கிறார். அவர் பின்னகர்வதைக் கண்டு உதவிக்கு இருபுறமும் மாளவ மன்னர் இந்திரசேனரும் பால்ஹிக இளவரசன் சலனும் வருகிறார்கள். அவர்களும் கவசமுடைந்து  அம்புபட்டு தேர்த்தட்டில் விழுகிறார்கள். கூர்ஜர இளவரசன் மஹிபாலன் நெஞ்சுக்கவசம் உடைய கழுத்தில் அம்பு பாய்ந்து தேர்த்தட்டில் கைவிரித்து மல்லாந்து விழுகிறார். மேலும் மேலுமென பின்னகர்ந்து துரோணர் தன் வில் குலைத்து அம்புவிட்டுக்கொண்டே மறைகிறார்.

உரக்க நகைத்து “செல்க ஆசிரியரே, பிறிதொரு முறை நாம் எதிர்கொண்டால் உங்கள் உயிருடன் திரும்பிச் செல்வேன்” என்று அபிமன்யூ கூச்சலிடுகிறார். சுருதகீர்த்தி ஜயத்ரதரை எதிர்கொள்கிறார். புண்பட்டிருப்பதனால் ஜயத்ரதர் சுருதகீர்த்தியை எதிர்கொள்ளத் திணறுகிறார். அதோ சுதசோமனும் துச்சாதனரும் கதையுடன் சந்தித்துக்கொள்கிறார்கள். அப்பால் சர்வதனும் லட்சுமணனும் கதையுடன் போர்புரிகிறார்கள். நான் பார்ப்பது ஒவ்வொருவரும் தங்களுக்கு நிகரானவருடன் செய்துகொண்டிருக்கும் போரை.

இதோ இந்த தனிவீரனை பார்க்கிறேன்.  பாஞ்சாலத்தின் முத்திரை கொண்டவன். இன்னமும் அவனுக்கு மீசை முளைக்கவில்லை. பற்களைக் கடித்து வெறிகொண்டு அம்புகளை தொடுத்தபடி புரவியை பாயச்செய்கிறான்.  மேலும் மேலும் புரவியை விரையச் செய்து கௌரவப் படைகளுக்குள் தாவுகிறான். அரசே, பிறையம்பு ஒன்று அவன் தலையை வெட்டி அப்பாலிட உடல் மட்டும் புரவியூர்ந்து பாய்ந்து செல்கிறது. உடல் உதிர்ந்த பின்னரும் விசையழியாத புரவி முன்னால் சென்று வீழ்ந்து கிடப்பவனின் தூக்கிய வேல்மேல் பாய்ந்து அடிவயிற்றில் செருகிய வேலுடன் நின்று குளம்பு காற்றில் உதைத்துக்கொள்ள சடலங்கள் மேல் புரண்டு அப்பால் உருண்டு செல்கிறது.

அவனுக்கு நேர் பின்னால் ஒரு கௌரவ வீரன் சற்றுமுன்னர்தான் கைவெட்டப்பட்டான். பிறிதொரு கையில் வாளுடன் முன் செல்கிறான். அவனை எதிர்கொண்ட இன்னொருவன் தலையை வெட்டி அவன் உடலை சரித்து விழச்செய்கிறான். ஓங்கிய கையிலிருந்து வாள் விசை குறையாமல் காற்றை வெட்டுவதை காண்கிறேன். இதோ பிறிதொரு இளைஞன் கதை சுழற்றியபடி முன்னால் பாய்கிறான். கௌரவ மைந்தனான குஜநாசன் அவனை எதிர்கொள்கிறார். இளவரசர் விந்தரின் மைந்தன். அவர்கள் கதைகள் சுழன்று தாக்குகின்றன. மூன்றாவது சுழற்சியில் தலையுடைந்து அவ்வீரன் விழுகிறான். குஜநாசன் தன் கதையை வானில் தூக்கிப்போட்டு பிடித்து வெறிக்கூச்சல் எழுப்புகிறார். அவர் தசைகள் வெறிகொண்டு கொப்பளிப்பதை காண்கிறேன்.

இங்கு நிகழ்வது போரெனில் நாம் நூல்களில் கற்ற எதுவும் போரல்ல. இது வெறும் கொலை வெறியாட்டென்றால் இங்கு இனி போரென்பது இதுதான். நமது கௌரவ மைந்தர் ஆயிரத்தவரும் இதோ களத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் கதைகொண்டு போரிடுகிறார்கள். சுருதசேனனின் அம்புகளுக்கு முன் நமது ஆயிரத்தவர் மைந்தர் இருவர் இதோ அலறி மண்ணில் விழுகிறார்கள். சர்வதன் கதை வீசி மூவரின் தலைகளை அறைந்து உடைக்கிறார். சுதசோமனை சூழ்ந்திருக்கிறார்கள் கௌரவ மைந்தர் எழுவர். ஒருவனை ஒருவன் எதிர்கொள்ளவேண்டுமென்பதை அவர்கள் வெறியில் மறந்துவிட்டார்கள் போலும். ஏழு கதைகளை தனி கதையால் எதிர்கொள்கிறார் சுதசோமன். அரசே, ஒவ்வொருவராக எழுவரும் தலையுடைந்து விழ தன் கதையை சுழற்றியபடி வெறிகொண்டு கூச்சலிட்டு ஓடிச்சென்று தேரிலேறி முன்னால் செல்க என்று கைவீசி கூச்சலிடுகிறார்.

போர் நிகழும் மண்ணை வேட்டை முடித்த வேங்கையின் செந்நா என்கின்றன நூல்கள். வானளாவிய வேங்கையொன்றை நான் பார்க்கிறேன். விண்ணிலெழுந்துள்ளன இரு பெருவிழிகள். பேரரசே, அதோ அக்களத்தின் தெற்கு மூலையில் களிமண்ணால் எழுப்பிய பெருமேடைக்குமேல் அரவானின் தலை வெறித்த விழிகளுடன் அங்கு நிகழ்வன அனைத்தையும் நோக்கி அமர்ந்திருக்கிறது. அத்திறந்த வாயில் பற்களில் நான் ஒரு பெருஞ்சிரிப்பை பார்க்கிறேன்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 77

tigசங்கன் ககனவெளியிலிருந்து பல நூறு தெய்வங்கள் திரண்டெழுந்து தன் உடலில் வந்து பொருந்தும் உணர்வை அடைந்தான். உடற்தசைகள் அனைத்தும் வெவ்வேறு உயிரும் தனித்தனியே விழைவும் தமக்கென்றேயான அசைவும் கொண்டவைபோல் தோன்றின. தோள்கள் சினமெழுந்த இரு பெரும்மல்லர்கள். இரு கால்களும் புரவிகள். நெஞ்சுள் தேரேறிய வில்லவர்கள் இருவர். விழிகளில், செவிகளில், உடலெங்கும் பரவி பலகோடி விழிகளென்றான தோலில் தெய்வங்கள் கூர்கொண்டன. வில்லை நாட்டி அம்பை கையிலெடுத்து செவிவரை நாணிழுத்து முதல் அம்பை தொடுத்தான்.

அது விம்மிச் சென்று தைக்க உடல் திடுக்கிட்டு பாய்ந்துவந்த கரிய புரவியிலிருந்து சரிந்து உதிர்ந்த கௌரவ வீரனின் இறுதி விழிமின்னை ஒருகணம் அருகிலென கண்டான். அத்தருணத்தில் உடல்விதிர்க்க எழுந்த துள்ளல் தன்னுடையதல்ல என்றுணர்ந்தான். அது பல்லாயிரம் குருதி குடித்து சுவையறிந்த தொல்தெய்வமொன்றின் களிப்பு. ஒவ்வொரு அம்பும் நாணிழுக்கப்படுகையில் தன்னுள் முறுகி மேலும் மேலும் என்று வெறிகொண்ட தெய்வங்களின் ததும்பலை அவன் அறிந்தான். இம்மென்று ஒலித்து எழுந்து சென்ற அம்புடன் அவர்கள் தாங்களும் பறந்து சென்றனர். சென்று தைத்து மெல்ல இறகு நடுங்கி நின்ற அம்பிலிருந்து அவ்வுடலுக்குள் பாய்ந்தேறினர். வழிந்த குருதியை ஆயிரம் மென் நாக்குகளால் நக்கி உண்டு திளைத்தனர். சரிந்து மண்ணில் அறைந்து விழுந்த அவ்வுடலுக்குள் ஒருவரோடொருவர் முட்டிமோதி கொந்தளித்து களித்தனர்.

இறந்த விழிகளில் இருந்த வியப்பை அவன் பார்த்தான். அன்றுவரை அவர்கள் காணாத ஒன்றைக் கண்டு அக்கணமே நிலைத்தவை. ஆனால் அவர்கள் நன்கறிந்திருந்தவை. எப்போது முதலில் புண்பட்டார்களோ,  முதற்குருதித்துளி தொட்டு சுட்டுவிரலால் தரையில் இழுத்து விளையாடினார்களோ, என்று முதற்படைக்கலத்தை ஆசிரியன் தொட்டளிக்க வாங்கி அச்சமும் தயக்கமுமாக மெல்ல சுழற்றி நான் நான் என்று உணர்ந்தார்களோ அப்போது அவர்கள் கண்டது அந்த தெய்வம். என்றும் உடனிருந்தது. கனவுகளில் வந்து புன்னகைத்தது. தனித்தது, மானுடனை நன்கறிந்தது, முடிவிலாது காத்திருப்பது.

அம்புகள் சென்று சென்று தைத்து வீரர்களை வீழ்த்திக்கொண்டிருந்தன. எண்ணியவை பிழைத்தன. எண்ணா இலக்கில் சென்று தைத்தன சில. மண்ணில் தைத்து நடுங்கின சில. தேர்த்தட்டில் முட்டி உதிர்ந்தன பிற. இலக்கடையாத தெய்வங்கள் சீற்றம்கொண்டு திரும்பி வந்தன. குருதிக்கென நெடுந்தவம் இருந்தவை. விழிகொண்டு நாநீட்டி எழுந்தவை. அவை கணத்திற்கொன்று படைக்கலத்திற்கொன்று. ஒன்று பிறிதொன்றாகின்றவை. ஒன்றிலிருந்து நூறு ஆயிரமென முளைத்தெழுபவை. தெய்வங்களாலான பெருவெளிக்குக் கீழே அவற்றின் கால்புழுதியின் கொந்தளிப்பென இரு படைகளும் ஒன்றுடன் ஒன்று சென்று நெஞ்சறைந்துகொண்டன. கைகளும் கால்களும் பின்னிக் கோக்க ஒற்றை உடலென ஆகி இறுகி விதிர்த்து விசையுச்சியில் அசைவிழந்து பின் சுழன்றன.

ஒவ்வொரு வீரனும் முற்றிலும் தனித்தவனாக, தன்னை முழுமையாக தன்னுள் எழுந்த தெய்வங்களுக்கு ஒப்புக்கொடுத்தவனாக, நூறு கைகளும் நூறுநூறு கால்களும் ஆயிரம் விழிகளும் ஆயிரமாயிரமென பெருகும் செவிகளும் கொண்டு எழுந்தான். அம்புகள் பறவைகளாக எழுந்து சிறகு விம்ம வளைந்திறங்கி தைத்து நடுங்கின. உடல்களை துளைத்து சரிந்து உடன் விழுந்து துடிக்கும் உடல்மேல் குத்தி நின்றிருந்தன. வாள்கள் காற்றில் குறுமின்னல்களென வளைந்து சுழன்றன. வேல்கள் எழுந்து அரைவட்டமென சுழன்று வெட்டி, குருதி தெறிக்க மீண்டும் சுழற்சி கொண்டன. கைகளிலிருந்தெழுந்து விசையுடன் வளைந்து உடல்களில் குத்திச் சரித்து மண்ணிலிறங்கி நின்றதிர்ந்தன. விழுந்தவர்கள்மேல் விழுந்தவர்கள் இறுதித் திணறலில் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டனர். மண்ணில் ஒரு திரள் மற்போர் என.

விழுந்தவர்களின் துடிப்புகள் திளைப்பு கொள்ள அவற்றுக்கு மேல் புரவிகள் குளம்புகள் அறைந்து தாவி முன் சென்றன. தேர்ச்சகடங்கள் ஏறி விழுந்து அதிர்ந்து மீண்டும் ஏறிச் சென்றன. சகடங்களால் எலும்புகள் உடைவதை தசைகள் கிழிபடுவதை மேலிருந்தே உணரமுடிந்தது. படைகள் முதலில் எழுந்த விசையை எதிரிப்படையின் விசை தடுக்க விரிசலிட்டு பக்கவாட்டில் விரிந்தன. அவை உருவாக்கிய இடைவெளியில் பின்னாலிருந்த படைகள் வந்து நிறைய நீண்ட கூர்முக்கோணமென அமைந்திருந்த சங்கனின் படை விரிந்து பிறைவடிவம் கொண்டது. வில்ஓயாது அம்புதொடுத்தபடி அவன் ஆணைகளை கூவினான். அங்கே எழுந்த பேரொலியில் சொற்கள் சிதறி மூழ்கின. ஆனால் உதடுகளை விழிகளால் கூர்ந்தால் அச்சொற்களை செவி சென்றடைந்தது. அவன் சொற்களை நோக்கியபடி இரு துணைப்படைத்தலைவர்கள் இருபுறமும் வந்துகொண்டிருந்தனர். அவன் ஆணைகளை அவர்கள் கூவ கொடிமேடையில் இருந்து அவை விழிச்சொல்லாயின. முரசொலியென எழுந்து இடிகொண்டன.

ஒருநோக்கை தான் தாக்கும் இலக்குக்கும் மறுநோக்கை தன்னைச்சுற்றி இருந்த படைக்குமென மாறி மாறி அளித்தபடி அவன் முன்சென்றான் “இதோ! இதோ!” என்று அம்பெடுத்து எய்து நகைத்த மறுநாவசைவால் “வலதுமுனை முன்னேறுக! வலதுமுனைக்கு மேலும் எண்பதின்மர் செல்க! பன்னிரண்டாவது நூற்றுவன் பின்னடைகிறான். உதவிக்கு செல்க!” என்று ஆணைகளை கூவினான். அவனது ஒவ்வொரு சொல்லும் மறுகணமே கொடியசைவென வண்ண நா கொண்டது. ஒலிவடிவென எழுந்து படைக்குமேல் முழங்கியது. அவன் எண்ணியது சிலகணங்களில் நிகழ்வென்று மாறியது. சற்று நேரத்தில் அந்த ஒத்திசைவு முழுமையாக கைகூட அப்படையை அவன் தன் எண்ணத்தால் ஆண்டான். தன் கைகளென அதை உணர்ந்தான். பேருருக்கொண்டு எதிரிப் படைப்பிரிவை தாக்கினான்.

தனக்கு முன் அஸ்வத்தாமனின் தேர் வருவதை சங்கன் கண்டான். அவனுடைய தேரின் விரைவு மிகுதியாக இருக்க தொடர்ந்து வந்த காவல்படைகளை அம்புகள் தாக்கி தயங்கச்செய்தமையால் தனித்து முன்னால் வந்துவிட்டிருந்தான். “தாக்குக! இன்று நமக்கு ஒரு பெருந்தலை சிக்கவிருக்கிறது! முன்னேறுக!” என்று கூவியபடி அஸ்வத்தாமனை நோக்கி சென்றான். “மும்மடங்கு அம்புகள் பொழியவேண்டும். துணைப்படையினர் அருகணையாது வானில் வேலியெழுக!” என்றபடி கையை தூக்கி போர்க்கூச்சலெழுப்பினான். அஸ்வத்தாமனின் காவல்படை முன்னால் விழுந்த புரவிகளின் உடல்களில் தொடர்ந்த புரவிகள் கால்தடுக்க மேலும் மேலும் பின்னடைந்தது. குலாடர்களின் விரைவுக் குதிரைப் படை அஸ்வத்தாமனின் படையைச் சூழ்ந்து வந்த புரவிகளை எதிர்கொண்டது. அலறல்களும் குருதித் தெறிப்புகளும் தலைக்கவசங்களின் கொப்பளிப்புமாக அப்பகுதி ஏரியில் இரைவீசப்பட்ட மீன்கொப்பளிப்பு என கொந்தளித்தது.

சங்கனின் தேர் அஸ்வத்தாமனை நோக்கி சென்றது. தேர்த்தட்டில் நின்ற அஸ்வத்தாமன் அவனைக் கண்டு நகைத்து “மைந்தா, இல்லத்துக்கு திரும்புக! இளமைந்தரை நான் கொல்வதில்லை” என்றான். சங்கன் “இளமைந்தரால் உயிர்துறப்பதென்பது நற்பேறு. உங்கள் தந்தையின் நல்லூழால் அது அமைந்துள்ளது, பாஞ்சாலரே” என்றான். அவனுடைய சொற்களை உதடசைவிலிருந்தே புரிந்துகொண்ட அஸ்வத்தாமன் விழிதொடரா விரைவுடன் கைசுழல அம்பெடுத்து அவன்மேல் எய்தான். சங்கன் முழந்தாளிட்டு அவ்வம்பை தவிர்த்த மறுகணமே தன் அம்பை எய்தான். இரு அம்புகளும் ஒன்றையொன்று விண்ணில் சந்தித்தன. உலோக நகைப்பொலி எழுப்பி முட்டிக்கொண்டு உதிர்ந்தன.

சங்கனின் வில் போர்வெறி எழுந்ததுபோல் நின்று துள்ளியது. அவன் அம்புகள் இரைகொண்டுவரும் அன்னையைக் கண்ட குருவிக்குஞ்சுகள் என தூளியில் எம்பித்தாவின. அவன் நாண் விரல்விளையாடும் யாழின் நரம்பென அதிர்ந்து முழங்கியது. காற்றாடி இறகென கைசுழல அவன் அம்புகளை செலுத்தினான். ஒவ்வொரு அம்பும் தைக்குமிடத்தில் ஒருகணம் விழிசென்று தொட்டது. உளம் சென்று தொட்ட இடத்தில் தான் சென்று தொட்ட அம்பு தன் கனவிலிருந்து எழுவதுபோல் தோன்றியது. ஒருபோதும் அவன் அம்புகள் அத்தனை கூர்மையாக இலக்கடைந்ததில்லை.

அவர்களிருவரையும் இரு பக்கங்களிலும் காத்த புரவிவீரர்கள் அம்புகளால் சூழ வேலியொன்றை அமைத்தனர். அதில் முட்டிச் சிதறியவர்களாக புரவியூர்ந்த வீரர்கள் விழுந்தனர். அஸ்வத்தாமனின் வில்லை தன் அம்பு முறித்தபோது ஒருகணம் திகைத்து பின் கைதூக்கி வெடிப்பொலி எழுப்பினான் சங்கன். அஸ்வத்தாமன் அதை எதிர்பாராமல் துணுக்குற்று மறுகணமே இடக்காலால் இன்னொரு வில்லை எடுத்து நாணிழுத்து சங்கனின் தேரை அடித்தான். தேர்த்தூணில் பட்டு அந்த அம்பு துள்ளியது. அஸ்வத்தாமன் “நன்று! நீ வில் பயின்றிருக்கிறாய்! நன்று!” என்று கூவினான். “இன்னும் காண்பீர்கள், பாஞ்சாலரே” என்றபடி சங்கன் தன் பிறையலகு அம்புகளை தொடுத்தான். அஸ்வத்தாமன் வெடித்து நகைத்து “நன்று! நன்று!” என்று கூவினான்.

அம்புகளாலேயே ஆன சரடால் தொடுத்துக்கொண்டு மெல்ல சுழன்றனர். சங்கன் அப்பெருங்களத்தை, அங்கு நின்றுகொண்டிருந்த படைப்பெருக்கை, போர்க்கொந்தளிப்பை முற்றிலும் மறந்தான். அஸ்வத்தாமனும் அவனும் மட்டுமே அங்கே இருந்தனர். ஒருவரையொருவர் அம்புச் சரடுகளால் தொடுத்துக்கொண்டு அம்புகளினூடாகவே ஒருவரையொருவர் முற்றிலும் அறிந்தவர்களாக தனிமையில் அங்கு நின்றனர். வேறெப்போதும் இன்னொரு மானுடனை அவ்வளவு அணுக்கத்தில் உணர்ந்ததில்லை என்று சங்கன் அறிந்தான். அஸ்வத்தாமனின் ஒவ்வொரு விழியசைவையும் அவனால் பார்க்க முடிந்தது. அவனுடைய கை எழுவதற்குள் அது எடுக்கும் அம்பை அவன் விழிதொட்டுவிட்டிருந்தது.  தன்னை அவ்வாறே அவன் உணர்கிறான் என்பதை அவன் அறிந்தான். ஒருவர் இருவரென பிரிந்து நின்றாடும் ஆடல் போரிலன்றி மானுடரால் இயலாது. போரென்பது உடல்உதறி உள்ளங்கள் எழுந்த ஒரு வெளியில் ஒன்றாகி நின்றிருக்கும் தருணம்.

மேலும் மேலும் என்று அவர்கள் சுற்றிவந்தனர். பெருங்காதலுடன் காமம் கொண்டாடுபவர்களின் முத்தங்கள்போல அம்புகளால் மொய்த்துக்கொண்டார்கள். ஊடே புகுந்த ஒவ்வொருவரும் அலறி வீழ்ந்தனர். குருதியால் நனைந்த செம்மண் மீது விழுந்து துடித்தவர்களின்மேல் சகடங்கள் ஏற உடலுடைந்து அலறிய ஓலம் எங்கிருந்தோ என கேட்டது. இளஞ்சாரல் என குருதித்துளி தெறித்தது. குருதி வழிந்து உடல் குளிர்ந்து தசைகளில் வெம்மையை ஆற்றியது. உலர்ந்த குருதி தோல் மேல் பிறிதொரு தோலென இருக்க அதன் மேல் விழுந்த பசுங்குருதி உப்பு கரைத்து நிணவிழுதென்றாகி தயங்கி வழிந்தது. தன் புருவங்களிலிருந்தும் மூக்கு நுனியிலிருந்தும் சொட்டும் குருதியை தலையுதறி அவன் உதிர்த்தான்.

ஒருவரை ஒருவர் அணுகிய ஒரு கணத்தில் தன் தொடையில் ஓங்கி அறைந்து கூச்சலிட்டபடி சங்கன் கதையை எடுத்துக்கொண்டு பாகனைத் தாண்டி புரவிமேல் நடந்து குதித்து தரையில் இறங்கினான். அதை ஏற்று நகைத்தபடி அஸ்வத்தாமன் தன் கதையுடன் பறந்து இறங்கி மண்ணில் சிறகொடுக்கி அமையும் சிறுபுள்ளென குதித்து கதையுடன் நிலத்தில் நின்றான். சங்கனின் கதையின் ஐந்திலொரு பங்கு எடையும் அளவும்தான் அஸ்வத்தாமனின் கதைக்கு இருந்தது. அவன் எண்ணியது போலவே அஸ்வத்தாமனின் கதை விழிதொட்டு நோக்க இயலாத விரைவு கொண்டிருந்தது. இரு கதைகளும் ஒன்றையொன்று முட்டிய கணத்தில் விசையாலேயே அது எடைகொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.

கதைகளின் இரும்புத்தலைகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு அனல் தெறித்தன. கால்களை நிலைமண்டிலமாக விரித்து தோள்களை அகற்றி கதை சுழற்றி அவன் அஸ்வத்தாமனை எதிர்கொண்டான். கீழே விழுந்து ஒன்றின் மேல் ஒன்றென அடுக்கப்பட்டவைபோல் கிடந்த சடலங்களின் மீது கால் வைத்து அவர்கள் தாவியும் அமைந்தும் எழுந்தும் போரிட்டனர். இரும்புக்கோள்கள் இருவரைச் சுற்றி பறந்தன. காற்றுவெளியில் மோதி மோதி அனல்தெறிக்க அதிர்ந்தன. சுழலும் கதையின் இரும்புக்குமிழ் பெருகி உருவான கவசமொன்றை அஸ்வத்தாமன் அணிந்திருந்தான். அதில் சிறுவிரிசல் தேடி தவித்தது சங்கனின் கதை. அமர்வதற்கு கிளை தேடும் பறவையென சங்கனைச் சூழ்ந்து பறந்தது அஸ்வத்தாமனின் கதை.

பின் ஒரு கணத்தில் என்ன நிகழ்ந்ததென்று அறியாமல் சங்கன் பின்னால் சரிந்து விழுந்தான். அவன் தோளை அறைந்த அஸ்வத்தாமனின் கதை சுழன்று தலை நோக்கி வருவதற்குள் பின்னாலிருந்து விரைந்து வந்த திருஷ்டத்யும்னனின் புரவி சங்கனை அணுகி அவன் மேல் தாவி அப்பால் சென்றது. அதே விசையில் குனிந்த திருஷ்டத்யும்னன் சங்கனின் தோள் பற்றி சுழற்றித் தூக்கி தன் முன் படுக்கவைத்து கொண்டுசென்றான். திருஷ்டத்யும்னனை தொடர்ந்து வந்த படைகள் அரண்போல அஸ்வத்தாமனுக்கும் அவர்களுக்கும் நடுவே குவிந்தன. அஸ்வத்தாமனின் கதையால் தலை உடைபட்டு வீரர்கள் நிலத்தில் விழுந்தனர். அவர்களின் அலறல்களும் சிதறும் குருதியும் அவர்களை சூழ்ந்தன.

திருஷ்டத்யும்னன் “தேர் வருக! தேர் நிரை தொடர்க!” என்று கூவினான். சங்கனின் தேர் தொடர்ந்து வந்தது. அவன் மீண்டுமொருமுறை சங்கனை தூக்கிச் சுழற்றி தேர்த்தட்டிலிட்டான். சங்கன் தேர்த்தட்டில் கையூன்றி புரண்டெழுந்து நின்றான். “இளையோனே, செல்க… சற்றே ஓய்வெடு” என்றான் திருஷ்டத்யும்னன். “இல்லை, தசை மட்டுமே அடிபட்டிருக்கிறது. மீண்டும் களம் நிற்போம். தாழ்வில்லை” என்று சங்கன் கூவினான். திருஷ்டத்யும்னன் “நன்று இளையோனே, நீ நமது படைகளின் சுவையின் ஒரு திவலையை அவர்களுக்கு அளித்துவிட்டாய்” என்று கைதூக்கிக் கூவியபடி முன்னால் சென்றான். அவன் கையசைவுக்கு ஏற்ப பின்னால் காவல்மாடத்திலிருந்து “அணிகொள்க! அடியை மீண்டும் இறுக்குக!” என்று ஆணை எழுந்தது.

சிதறிப்பரந்த படைவீரர்கள் பின்னகர்ந்து எஞ்சியவர்கள் ஒருங்கிணைந்து மீண்டும் முப்புரிவேல் வடிவத்தை அடைந்தனர். போர் விசைகொண்டு மீண்டும் தொடங்கியபோது சங்கன் தன்னுள் தெய்வங்கள் உறுமியெழுவதை உணர்ந்தான். தன் வில்லை எடுத்து நிறுத்தி நாணிழுத்தபோது உடலில் ஒரு சிறு நிலையின்மை தோன்றியது. மறுகணம் உள்ளிருந்து ஒரு தெய்வம் “செல்க… செல்க!” என ஆர்ப்பரித்தது. வலத்தோளை அசைக்க இயலவில்லை. முழுமூச்சையும் இழுத்து எரிய வைத்து ஆற்றல்திரட்டி எய்தான். அவ்விசையிலேயே மீண்டும் தன்னை முன்செலுத்திக்கொண்டான்.

முதல் அம்பிலேயே எதிரிவீரனின் உடல் தைத்து அப்பால் சென்றது அம்பு. அடுத்த அம்பு இன்னொருவனின் நெஞ்சுபிளந்து நின்றது. இன்னொருவன் கவசம் உடைந்து தெறிக்க சரிந்து விழுந்தான். அவன் தலையை கொய்தது பிறையம்பு. தலையற்ற உடல் தள்ளாடி முன்னகர்ந்து அணைப்பதுபோல் கைவிரித்து மண்ணில் விழுந்தது. திகைத்த புரவி தன்னைத்தான் சுழன்றபடி கனைத்தது. சங்கன் வெறிகொண்டு கூவியபடி முன்னால் சென்றான். “செல்க! ஒருகணமும் நில்லற்க!” என்று கூச்சலிட்டான். கௌரவ மைந்தர் குத்ஸிதனும் சுபானுவும் அவனை எதிர்கொண்டனர். இரு அம்புகளால் அவர்களின் கவசங்களை உடைத்து கொன்றுவீழ்த்தினான். வெறிக்கூச்சலுடன் வந்த அவர்களின் மூத்தவனான உன்மத்தனை கொன்றபடி கடந்துசென்றான்.

அப்பால் அஸ்வத்தாமனுக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் உச்சகட்டப் போர் நிகழ்வதை அவன் பார்த்தான். மறுபக்கம் நகுலனின் தேரை சகுனியின் தேர் எதிர்கொண்டது. துரியோதனனைச் சூழ்ந்து தாக்கிக்கொண்டிருந்தனர் பாண்டவ மைந்தர். காற்றில் இறகதிரும் அம்புகள் நிறைந்திருந்தன. சருகுப்புயலடிக்கும் காட்டுக்குள் என தன்னை உணர்ந்தான். ஏதோ ஒருகணத்தில் போர் தனக்கு சலிப்பூட்டும் என முன்னர் எண்ணியிருந்தான். ஆனால் அது ஒவ்வொரு கணமும் பெரும் களியாட்டென்று தொடர்ந்தது. இத்தனை ஆண்டுகள் அள்ளி உண்ட உணவனைத்தும் இத்தருணத்திற்காகவே. அன்னை கருவிலிருந்து உடல் திரட்டி எழுந்ததும் இதற்காகவே. இன்றொரு நாள்! இன்று! ஆம் இன்று! இத்தனை அம்புகளுக்குப்பின் இருக்கும் ஊழ்க நுண்சொல் அது! இன்று!

இன்று இன்று இன்று இன்று… ஒவ்வொரு சொல்லுக்கும் அம்புபட்டு வீரர்கள் விழுந்துகொண்டிருந்தனர். அவன் கவசத்தின்மீது வந்து முட்டி உலோக ஓசையை எழுப்பி விழுந்தன அம்புகள். அவன் தலைக்கவசத்தை உரசி கேவலொலி எழுப்பிச் சென்றது ஓர் அம்பு. புரவி ஒன்று அவனை விரைந்தணுகி அம்புபட்டு கனைத்தபடி விழியுருட்டி சரிந்தது. அதன் குளம்புகள் உதைத்துக்கொள்ள அதன் மேல் உருண்டு வந்து கவிழ்ந்தது ஒரு தேர். ஒரு கேடயம் பறந்து வந்து பூழி மண்ணில் விழுந்தது. அதன்மேல் கணகணவென ஒலியுடன் அம்புகள் பெய்தன.

“சைந்தவரை சூழ்க!” என்று அவன் ஆணையிட்டான். அவன் படை அக்கணமே இரு கைகளாக மாறி நீண்டு அணைப்பதுபோல் ஜயத்ரதன் படைகளை நோக்கி சென்றது. ஜயத்ரதன் படைகளிலிருந்து எழுந்த இரு கைகள் அவற்றை கோத்துக்கொள்ள இரு மல்லர்கள் என படைகள் கைகோத்துக்கொண்டன. படைசுழிப்பென போர் நிகழத்தொடங்கியது. அம்புகளால் எதிர்ப்படுபவரை வீழ்த்தி வழிவகுந்தபடி விழுந்த உடல்களின் மேல் ஏறி தேர் முன்செல்ல அவன் ஜயத்ரதனை அணுகினான்.

அவன் அணுகுவதை பாராமல் மறுபக்கம் அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்தான் ஜயத்ரதன். களத்தில் அத்தனை ஒன்றி அவனால் போர்புரிய முடிவதை சங்கன் வியந்தான். அத்தனை பொறுப்பின்மையுடன் இருக்குமளவுக்கு தன் ஆற்றல் மேல் நம்பிக்கையுடன் இருப்பதை எண்ணி வியந்தான். அவன் அம்பு ஜயத்ரதனை நோக்கி சென்றபோது விழி அறியாமலேயே அவன் உடல் நெளிந்து அதை தவிர்த்தது. மீண்டும் மீண்டுமென பதினெட்டு அம்புகளை அவன் ஜயத்ரதனை நோக்கி அனுப்பினான். ஒவ்வொரு அம்பையும் அவன் உடலே ஒழிந்தது.

தான் எடுத்த இலக்கை முற்றாக அழித்தபின் ஜயத்ரதன் திரும்பினான். நிஷாதகுடித் தலைவர்கள் எழுவர் தலையறுந்து விழ அவர்களைச் சூழ்ந்து படை வீரர்களின் உடல்கள் விழுந்து துள்ளிக்கொண்டிருந்தன. அவர்கள் வந்த பகுதியே ஒழிந்து ஒரு வெற்றிடமாக அங்கு எழுந்த வெறுமையை நோக்கி களிக்கூச்சலிட்டபடி திரும்பி அவன் சங்கனை பார்த்தான். “நீயா? வா வா… இன்று ஒரு பெரிய மீனுடன் பாடிவீடு திரும்புவேன்” என்றபடி அவன் சங்கனை நோக்கி வந்தான். நீந்துபவனுக்கு முன் எழும் அலை என அவனுக்கு முன்னால் அம்புச்சுழல் எழுந்து அணைந்தது. அவ்வம்புகளாலேயே அவன் சுமந்து கொண்டுவரப்படுபவன் போலிருந்தான்.

சங்கனைச் சுற்றி நூறுநூறு அம்புகள் பறந்துகொண்டிருந்தன. பெருநதியின் ஆழத்தில் நீந்தித் திளைக்கையில் வெள்ளி மீன்களால் சூழப்பட்டிருப்பதுபோல் அவன் உணர்ந்தான். அவன் கவசங்களை அம்புகள் அறைந்தறைந்து துடிக்கவைத்தன. மீன்கள் கொத்தி புரட்டும் தசைத்துண்டென அவன் அவற்றால் சுழற்றப்பட்டான். தன்னை தேர்த்தட்டிலிருந்து விலக்கி தூணுடன் உடல் ஒட்டி நிறுத்திக்கொண்டபடி அவன் அம்புகளை எய்து ஜயத்ரதனை தாக்கினான். “ஓர் அம்பு! இளையோனே, ஒரேயொரு அம்பேனும் என் மேல் தொடுத்தாய் என்றால் நீ வென்றாய்” என்று சிரித்தபடி ஜயத்ரதன் கூவினான். அவன் பற்களின் மின்னலை, கண்ணிலெழுந்த நகைப்பின் ஒளியை மிக அருகிலென கண்டான்.

பாரதவர்ஷத்தின் மாபெரும் வில்லவன் ஒருவனை எதிர்கொண்டிருக்கிறேன். இத்தருணத்தில் அரைநாழிகைப் பொழுது இங்கு தலையறுந்து விழாது நின்றிருப்பேனெனில் என் குடி எனக்காக பெருமைகொள்ளும். “ஒருநாழிகைப்பொழுது! ஒரேநாழிகை!” சங்கன் உள்ளம் கூவியது. ஜயத்ரதன் அம்பு அவன் தேர் முகடை உடைத்தெறிந்தது. அவனுக்குப் பின்னால் நின்ற அறிவிப்பாளனின் தலை தெறித்து அப்பால் விழ அவன் தேர்த்தட்டில் தள்ளாடி சங்கனின் மேல் விழுந்தான். அவனை வலது தோளால் உந்தி அப்பால் தள்ளிய சங்கன் அம்புகளை தெறிக்கவிட்டான். ஜயத்ரதனின் தேரை ஓர் அம்புகூட நெருங்க இயலவில்லை.

“ஓர் அம்பு! ஒருநாழிகைப்பொழுது!” என்று உள்ளம் ஓலமிட சங்கன் அம்பை எய்துகொண்டிருந்தான். இதோ… இதோ… எத்தனை பொழுது ஒருகணத்திற்கு? ஓர் அம்பு! ஒருகணத்திற்கு நூறு அம்புகள் எதிர்வருகின்றன. கணம் கணமெனச் செல்லும் காலம். ஒரு நாழிகையின் நீளமென்ன? இக்கணம் உயிர்பிழைத்தேன். மீண்டும் ஒரு கணம். ஒருகணத்தில் மானுடன் இத்தனை நெடுந்தூரம் வாழ முடியுமா? ஒருகணத்தில் இத்தனை அறிந்து, இத்தனை துயருற்று, இவ்வளவு களிகொண்டு நிறைய முடியுமா? ஒவ்வொரு கணமும் தோள்களால் அசைக்க முடியாத பெரும்பாறைபோல் கடந்து சென்றது. கணம் கணமென உந்தி உந்தித் தள்ளி அவன் போரிட்டுக்கொண்டிருந்தான்.

காதளவு இழுத்து விட்ட நாணின் ஓசை அவனுடன் பேசிக்கொண்டிருந்தது. விம் விம் என்று ஒற்றைச் சொல். பின் அது ஒரு மொழியாயிற்று. இத்தருணம். புகழ்கொள்ளும் தருணம். இதுவரை நீ வாழ்ந்தது ஒருகணம். இக்கணம் முழு வாழ்வின் பெருக்கு. இங்கிரு! இதை நிறை! இதை வென்று ஆள்! இதிலிருந்து வென்றெழுவது என ஏதுமில்லை. இரு! இருந்துகொண்டிரு! நிறை! நிறைந்து கடந்து அப்பால் செல்! அவன் தோள் கவசம் உடைந்து தெறித்தது. ஜயத்ரதனின் அம்பு ஒன்று வந்து அவன் தோளில் தைத்து நின்றது. ஒருநாழிகைப் பொழுதுக்கு இன்னும் எவ்வளவு கணம்? இந்நாழிகையை நான் நிறைவுறச் செய்யப்போவதில்லை. இதோ இது அறுபட்டு நிற்கும். இவ்வம்பில். இது பிழைத்தது. அதில். அதுவும் பிழைக்கிறது. பிழைக்கும் அம்புகளாலானது என் காலம்.

நிற்பேன். விழமாட்டேன். ஒருநாழிகைப்பொழுது ஜயத்ரதன் முன் நின்ற முதல் வீரன் நான். ஆனால் இதோ தொடுவானில் இருக்கிறது இந்நாழிகையின் எல்லை. ஒருகணம் அவன் உளம் சோர்ந்தான். மறுகணம் உள்ளிருந்து எழுந்த பிறிதொரு தெய்வம் அவன் பிடரியில் ஓங்கி அறைந்து ஆணையிட்டது. “முன்செல், மூடா! இத்தருணத்தில் இறந்தால் நீ மூங்கில் கழைமேல் துடித்து எழும் வெற்றிக்கொடி!” அவன் தன் முழுவிசையால் உடல் திரட்டி எழுந்து மீண்டும் அம்புகளால் ஜயத்ரதனை அடித்தான். அவன் நெஞ்சக்கவசம் பிளந்தது. சற்றே திரும்புவதற்குள் அவன் இடத்தோள் தசையை சீவிச்சென்றது ஓர் அம்பு.

“இளையோனே, செல்! அவ்வளவுதான், போர் முடிந்துவிட்டது” என்று ஜயத்ரதன் கூவினான்.  “வெற்று நெஞ்சுடன் என் முன் நிற்கத் துணிபவர் பாரதவர்ஷத்தில் எவருமில்லை. செல்க!” சங்கன் தன் அம்பை இழுத்து ஜயத்ரதனின் கவசத்தை அறைந்தான். கைவிலக்கி அதை ஏற்று நகர்ந்த ஜயத்ரதன் “துணிவு கொண்டிருக்கிறாய், நன்று!” என்றான். “இன்னும் ஒரு சில கணங்கள்! ஒரு நாழிகைப்பொழுது உங்கள் முன் நின்றிருக்கிறேன். ஓர் அம்பையாவது உங்கள் உடலில் தொடுக்காமல் அகலமாட்டேன்.” சங்கன் ஒவ்வொரு அம்பும் எழுகையில் ஒரு துளி குருதி அகன்றதுபோல் உடல் ஒழிந்து எடை இழந்தான். ஒவ்வொரு எண்ணமும் விலக உளமொழிந்து வெற்றுத் தக்கையென அங்கே அலையடித்த உடற்பெருக்கின் மேல் ததும்பினான்.

ஜயத்ரதன் தன் வில்லை தூக்கி “வென்றுவிட்டாய் குலாடனே, ஒரு நாழிகை என் முன் நின்றாய். நீ எனக்கு நிகரானவன் என்று இதோ அறிவிக்கிறேன்” என்றான். “ஆம், உங்களை வெல்லவும் கூடும் நான்” என்றபடி அவன் நாணிழுத்து அம்பைவிட்டான். அது பறந்து சென்று சற்றே வளைந்து ஜயத்ரதனின் கவசங்களுக்கு நடுவே முழங்கையை தைத்தது. உரக்க நகைத்தபடி அந்தக் கையை மேலே தூக்கி “நன்று! நன்று!” என்று அவன் கூவினான்.  படைகள் “வெற்றிவேல்! வீரவேல்! குலாடர் வெல்க! பெருவீரர் சங்கர் வெல்க!” என்று கூவின.

சங்கன் முழு ஆற்றலையும் இழந்தவன்போல் தேர்த்தட்டில் சாய்ந்தான். அவனுக்கு பின்பக்கமிருந்து சாத்யகியின் படை பெருகிவந்து அவர்களுக்கு நடுவே புகுந்தது. ஜயத்ரதன் தன் தேரை திருப்பிக்கொண்டு மறுபக்கம் செல்ல வாழ்த்தொலிகளும் வெற்றிக்கூச்சல்களுமாக வீரர்கள் சங்கனின் தேரை கைகளால் தள்ளி முன்னெடுத்தனர். தேர்த்தட்டில் நீண்ட மூச்சுவிட்டு தன் தோளிலிருந்த அம்பை சங்கன் உருவி எடுத்தான். ஜயத்ரதனின் கையில் பதிந்திருந்த தன் அம்பை மிக அருகில் காண்பவன்போல் நினைவுகூர்ந்தான். அதில் குலாடகுடியின் போர் முத்திரை இருந்தது. அது ஜயத்ரதன் தனக்களித்த பரிசு என்று அப்போது அவன் உணர்ந்தான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 76

tigகரிச்சான் குரலெழுப்பிய முற்புலரியிலேயே சங்கன் விழித்துக்கொண்டான். முந்தையநாள் முன்னிரவிலேயே அவன் துயின்றுவிட்டிருந்தான். வழக்கத்திற்கு மாறாக அன்று ஒளியறா மாலையிலேயே உணவு பரிமாறப்பட்டுவிட்டிருந்தது. பன்றியிறைச்சித் துண்டுகள் இட்டு சமைக்கப்பட்ட ஊனுணவை தொட்டியில் இருந்து பெரிய உருளைகளாக அள்ளி உண்டபடி இடக்கையில் இருந்த ஆட்டுத் தொடையையும் கடித்துத் தின்றான். வயிறு நிறைந்த உணர்வை அடைந்தபின் எழுந்து குடில் வாயிலுக்கு வந்து மெழுக்கு படிந்த கையை மண்ணில் துடைத்தபின் அங்கேயே படுத்து விண்மீன்களை பார்த்துக்கொண்டிருந்தான்.

பெரும்பாலும் திறந்த வானின் கீழ் வெறுந்தரையில் துயில்வதே அவன் வழக்கம். குலாடகுடியின் இளையோர் பலரிடம் அவ்வழக்கம் இருந்தாலும் அரசிளமைந்தன் அவ்வாறு துயில்வது குறித்த ஏளனச் சொற்கள் அங்கிருந்தன. “மண்ணில் படுத்து விண்ணை நோக்காதவன் துயிலென்பதை அறிவதில்லை” என்று அவனுக்கு கதைப்படை பயிற்றுவித்த குலாட மூத்தவரான விசோகர் கூறியது அவன் நினைவில் எழுவதுண்டு. இளநாள் முதலே விண்மீன்களை விழித்துநோக்கிக்கொண்டு எண்ணங்கள் மெல்ல நிலைக்க உளமழிந்து துயிலில் ஆழ்வது அவன் வழக்கம். மண்ணிலுள்ள அனைத்துப் பொருட்களும் ஏதேனும் பொருள் கொண்டவையாக இருக்க விண்மீன்கள் மட்டிலும் முற்றிலும் பொருளற்றவையாக விழிநிறைத்து வெளி அமைத்து இருப்பதாக அவன் எண்ணினான். ஒரு விண்மீனைக்கூட தனித்துப் பார்த்ததில்லை என்று முன்பொருமுறை அவன் வியந்துகொண்டதுண்டு. ஒருமுறை நோக்கிய விண்மீனை மறுமுறை அடையாளம் கண்டுகொண்டதில்லை. ஒவ்வொரு நாளும் அங்கெழுவது ஒவ்வொரு விண்மீனா என்றும் தோன்றும்.

அன்று சித்தத்தின் இறுதித் துளியில் ‘நாளை’ என்றொரு சொல் எஞ்சியிருந்தது. முதல் விழிப்பில் அச்சொல்லே மீண்டும் எழுந்துவந்தது. நாளை! ஆனால் மறுகணம் சிறு துரட்டியால் குத்தப்பட்டதுபோல உடல் அதிர அச்சொல் அவனுள் உருமாறியது… ‘இன்று’. “ஆம், இன்று!” என்றபடி இரு கைகளையும் தரையில் அறைந்து எழுந்து அமர்ந்தான். சூழ நோக்கியபோது பாண்டவப் படைகளில் பந்தங்கள் ஒழுகி அலையத் தொடங்கியிருப்பதை கண்டான். வானை நோக்கி விடிவதற்கு மேலும் பொழுதிருப்பதை உணர்ந்தான். எழுந்து ஆடையிலிருந்த மண்ணையும் பொடியையும் உதறி உடல் நிமிர்த்திக்கொண்டான். தசைகள் இழுபட்டு நிமிர்கையில், எலும்புகள் ஓசையுடன் மூட்டுகளில் அமைகையில் எழும் உடலின்பமே அவனுக்கு இருக்கிறேன் என்னும் உணர்வென்றாவது. ஒவ்வொருநாளையும் அழகுறச் செய்யும் தொடக்கம்.

புலரியின் குளிர்காற்று உடலை மெய்ப்பு கொள்ளச் செய்தது. அதில் குதிரைகளும் யானைகளும் வீழ்த்திய சாணியும் சிறுநீரும், அரைபட்ட புல்லும் கலந்த மணம் நிறைந்திருந்தது. குலாடபுரியிலேயே அவன் பெரும்பாலும் யானைக்கொட்டிலருகேதான் துயில்வது வழக்கம். புலரியில் மட்டும் எழும் அந்த வாடையே புலரிக்கான மணம் என்று அவன் உள்ளத்தில் பதிந்திருந்தது. அரிதாக சூதர் பாடல்களை செவிகொள்கையில் புலரி மணமென்பது மலர்களிலிருந்து எழுவது என்றும் புலரியின் ஓசையென்பது பறவைகளின் குரல்களே என்றும் அவர்கள் பாடக் கேட்பான். ஒருபோதும் அவன் அதை உணர்ந்ததில்லை. தொழுமணமும் யானைச்சங்கிலிகளும் குதிரைமணிகளும் ஒலிக்கும் ஓசை குளம்போசையுடன் கலந்தொலிக்கும் முழக்கமும் அச்சொற்களின் பொருளென்று அவனுள் மாறின.

அவன் சிறுகுடிலை அடைந்து அதன் வாயில் திரையை விலக்கி உள்ளே பார்த்தான். தென்மேற்கு மூலையில் அரவான் நிமிர்ந்த உடலுடன் கைகளை மடியில் கோத்து விழிமூடி ஊழ்கத்தில் அமர்ந்திருப்பதை கண்டான். அவன் முகம் கனவுகண்டு புன்னகைக்கும் குழந்தையினுடையதாக தோன்றியது. சிறிய சிவந்த உதடுகள் மெல்ல அசைவு கொள்கின்றனவா? திரும்பி வந்து குடிலுக்கு அப்பால் பாயில் ஒருக்களித்து துயின்றுகொண்டிருந்த ஸ்வேதனை அணுகி “மூத்தவரே…” என்றான். முதல் அழைப்பிலேயே விழித்துக்கொண்ட ஸ்வேதன் எழுந்தமர்ந்து “புலரி அழைப்பு எழுந்துவிட்டதா?” என்றான். “இல்லை. ஆனால் இன்னும் சற்று நேரத்தில் எழும்” என்றான் சங்கன்.

ஸ்வேதன் எழுந்து தன் ஆடைகளையும் குழலையும் புழுதி போக தட்டிக்கொண்டான். சங்கன் கிழக்கே குருக்ஷேத்ரத்தின் உயரமான எல்லையில் அமைக்கப்பட்டிருந்த ஏழு அடுக்குள்ள பொழுதறிவிப்பு மேடையை எண்ணிக்கொண்டான். கௌரவர்களும் பாண்டவர்களும் சேர்ந்து அமைத்த நிமித்திகர் குழு அங்கே முதல்தளத்தில் அமர்ந்திருந்தது. அவர்களின் அறிவிப்புகளை படைகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு முரசறைவோரும் எரியம்பு எய்வோரும் கொம்பூதிகளும் இரண்டாம் தளத்தில் நின்றனர். மூன்றாம் தளத்தில் படைக்கலமேந்திய காவலர். இரு பக்கமும் பல்லாயிரம் விழிகளும் செவிகளும் கிழக்கே அந்த மேடையைத்தான் கூர்ந்திருக்கின்றன என்று சங்கன் எண்ணினான்.

“உணவருந்தினாயா?” என்றான் ஸ்வேதன். “இல்லை, மூத்தவரே. இப்போதுதான் எழுந்தேன். தங்களை எழுப்பிவிட்டுச் செல்லலாம் என்றிருந்தேன்” என்றான் சங்கன். “அரவான் எங்கே?” என்று ஸ்வேதன் கேட்டான். சங்கன் “ஊழ்கத்தில் அமர்ந்திருக்கிறார்” என்றான். “நேற்று முன்னிரவில் அமர்ந்தது” என்றான் ஸ்வேதன். சங்கன் தலையசைத்தான். சங்கனை நோக்காமல் “அவள் எங்கே?” என்று ஸ்வேதன் கேட்டான். “அடுமனைப்பிரிவில் வைப்பறைகளின் இடுக்கில் அவள் அமர்ந்திருப்பதை நேற்று அந்தியில் பார்த்தேன்” என்று சங்கன் சொன்னான். “எவர் முகத்தையும் ஏறிட மறுக்கிறாள். எவர் சொல்லையும் செவி அறிவதில்லை. தெய்வமெழுந்தவள்போல் விழிகொண்டிருக்கிறாள்.”

ஸ்வேதன் அக்கறையில்லாதவன் போன்ற ஒலிக்குறிப்புடன் “அழுகிறாளா?” என்றான். சங்கன் “இல்லை. வேறெங்கோ இருந்துகொண்டிருக்கிறாள்” என்றான். ஸ்வேதன் “நான் அவனிடம் பொழுதணைகிறதென்று சொல்கிறேன். நீ ஒருங்கி உணவுண்டு சித்தமாகு. இன்று நம் நாள்” என்றான். இன்று எனும் சொல் சங்கனை அதிரச்செய்தது. “ஆம் மூத்தவரே, இன்று” என்றான். ஸ்வேதன் திரும்பிப் பார்க்கவில்லை. “நான் நேற்று முன்மாலையிலேயே இளைய பாண்டவரைக் கண்டு கால்தொட்டு வணங்கி வாழ்த்து பெற்றேன்” என்றான் சங்கன். ஸ்வேதன் “நன்று!” என்றபடி அரவானை எழுப்ப குடிலுக்குள் நுழைந்தான்.

சங்கன் தன் புரவியிலேறிக்கொண்டு விரைந்து அடுமனைப் பகுதியை அடைந்தான். அங்கு அவனுக்கு அணுக்கமான அடுமனையாளர்கள் விதர்க்கரும் விடங்கரும் புன்னகையுடன் தலைவணங்கினர். “உணவு ஒருக்கமல்லவா?” என்று அவன் கேட்டான். “புலரியில் அடுமனை எழவேண்டியதில்லை என்று ஆணை. நேற்றைய உணவு பெருமளவு எஞ்சியுள்ளது. படைகளுக்கான உணவு அனைத்தும் இரவே அளிக்கப்பட்டுவிட்டன” என்றார் விதர்க்கர். “நன்று! சிறுபொழுது” என்றான் சங்கன். பின்னர் “அவள் என்ன செய்கிறாள்?” என்றான். “அவ்வண்ணமே” என்றார் விடங்கர். ஒருகணம் அவரை நோக்கிவிட்டு அவன் சென்று காலைக்கடன் முடித்து அங்கிருந்த கொப்பரையிலிருந்த சிறிதளவு நீரில் முகம் கைகழுவி வந்தமர்ந்தான்.

முந்தைய நாள் எஞ்சிய உணவு இரு மரத்தொட்டிகளில் அவன் முன் கொண்டுவைக்கப்பட்டது. பன்றியூன் துண்டுகளை இரு கைகளாலும் எடுத்து விரைந்து உண்டான். அப்பங்களையும் கள்ளையும் அருந்தி முடித்து எழுந்து கைகளை உதறியபடி “நான் படைமுகம் கிளம்புகிறேன்” என்றான். “வெற்றி சூழ்க!” என்றார் விடங்கர். சங்கன் “இந்நாட்களில் என் நாவும் வயிறும் மகிழும்படி உணவளித்தீர்கள், விடங்கரே. உங்கள் அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இச்சொல் ஒன்றே இப்போது என்னால் அளிக்கத்தக்கது” என்றான். விடங்கர் “இவ்வாய்ப்பும் இச்சொல்லும் இறை எங்களுக்கு அளித்த பரிசு. என்றும் எண்ணியிருப்போம், இளவரசே” என்றார்.

மீண்டும் அவன் தன் குடிலை அடைந்தபோது அங்கு அவனுக்கான கவசங்களுடனும் படைக்கலங்களுடனும் ஏவலர் காத்திருந்தனர். அவன் அவற்றை நோக்கியபடியே அணுகினான். அது அவனுடைய பிறிதுடல் என சிதறிக்கிடந்தது. அவ்வெண்ணம் எழுந்ததுமே உள்ளம் அதிர்ந்தது. அவன் சென்று நின்றதும் அவர்கள் அவன் தோளிலும் மார்பிலும் இரும்புவலையாலான கவசங்களை அணிவித்தனர். தோளிலைகளும் முழங்கைக்காப்பும் முழங்கால்காப்பும் கைகால்களில் மூட்டுக்காப்பும் பொருத்தி ஆணியிட்டு இறுக்கினர். அவன் எழுந்ததும் இடையில் இரும்புக்கச்சையை கட்டி அதில் உடைவாளையும் குத்துக்கத்தியையும் பொருத்தினர்.

அவன் விரலில் தோலுறைகளை அணிந்து விரல்களை நீவி இழுத்துவிட்டான். இரு கால்களிலும் இரும்புப் பட்டையிட்ட தோல்குறடுகளை ஏவலர் அணிவித்து இறுக்கிக் கட்டினர். தன் உடல் இருமடங்கு எடைகொண்டுவிட்டதென்று தோன்றியது. காலடி எடுத்துவைத்து சற்று நடந்தான். பின்னர் திரும்பி புன்னகைத்து “யானையென்று உணர்கிறேன்” என்றான். அவன் தலைக்கவசத்தை ஒரு வீரன் கையில் வைத்திருந்தான். அரைக்கணம் விழிதிருப்பியபோது தன் தலையே அவன் கையிலிருப்பதாக உளமயக்கெழ சங்கன் உரக்க நகைத்து “நன்று! உடைந்தால் மீண்டும் அணிந்துகொள்ள இன்னொரு தலை” என்றான். பின்னர் அதை கையில் வாங்கிக்கொண்டு “என் கதை தேரிலிருக்கட்டும். வில்லும் அம்புகளும் ஆவக்காவலனிடம்” என்றான். “ஆணை!” என்று ஏவலன் தலைவணங்கினான்.

சங்கன் காலடிகள் மண்ணில் அழுந்தி ஒலிக்க நடந்து ஸ்வேதனின் குடில் முகப்பை அடைந்தான். அங்கு ஸ்வேதனுக்கு இரண்டு ஏவலர் கவசங்களை அணிவித்துக்கொண்டிருந்தனர். கையுறைகளை இழுத்தணிந்தபின் எழுந்த ஸ்வேதன் அவனை நோக்கி திரும்பி “கற்சிலை போலிருக்கிறாய், இளையோனே” என்றான். “சற்றுமுன் யானை என உணர்ந்தேன்” என்றபடி சங்கன் அருகே வந்தான். ஸ்வேதன் அணிந்த இரும்புக்கவசத்தின் மார்புவளைவில் தன் முகத்தை பார்த்தான். அது நீரலையிலென வளைந்திருந்தது. “நேற்று நன்று துயின்றீர்களா, மூத்தவரே?” என்றான். “ஆம்” என்றான் ஸ்வேதன். “சற்றுநேரம்தான். ஆனால் ஆழ்ந்த உறக்கம்.”

“போருக்கு முன்னர் வீரர்கள் ஆழ்ந்துறங்குவர் என்று கேட்டிருக்கிறேன்” என்றான் சங்கன். “நானும் நன்கு உறங்கினேன். ஆனால் அது வழக்கமான உறக்கம் என்று எண்ணிக்கொண்டேன்.” ஸ்வேதன் “ஆனால் பின்னிரவிலேயே விழித்துக்கொண்டேன். என்னுள் ஏற்கெனவே படுகளம் பேரோசையுடன் நிகழத்தொடங்கிவிட்டது” என்றான். “நான் பார்க்கும் அனைவரும் போர்க்களத்துள் நிற்பதுபோன்ற விழிகளுடன்தான் தெரிகிறார்கள்” என்றான் சங்கன். ஸ்வேதன் “போரைப்போல மானுடன் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் பிறிதொன்று இல்லை” என்றான். “நாகர் எழுந்துவிட்டாரா?” என்றான் சங்கன். “ஆம், ஆடைமாற்றிக்கொண்டிருக்கிறான்” என்று ஸ்வேதன் சொன்னான்.

“நாம் விடைகொள்கிறோம், மூத்தவரே. எனது இடம் இடது எல்லையில். தங்களது வலது எல்லை. இன்று போர் அணைந்து இரவெழுகையில் இறையருளிருந்தால் மீண்டும் பார்ப்போம்” என்றான் சங்கன். ஸ்வேதன் தன் உணர்வுகளை வென்று புன்னகைத்து “எங்கிருந்தாலும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருப்போம், இளையோனே” என்றான். சங்கன் குனிந்து ஸ்வேதனின் கால்களைத் தொட்டு தலைசூடி “வாழ்த்துக, மூத்தவரே!” என்றான். “என்றும் என் தந்தையின் இடத்தில் தாங்கள் இருந்தீர்கள்.” ஸ்வேதன் உணர்ச்சிகளை உள்ளே சுருக்கிக்கொண்டு அவன் தலையில் கைவைத்து “சிறப்புறுக! தெய்வங்கள் துணையமைக! மூதாதையர் வாழ்த்துக!” என்று வாழ்த்தினான்.

குடிலுக்குள்ளிருந்து அரவான் பாண்டவப் படைகளுக்குரிய செம்மஞ்சள் வண்ண உடையுடன் வெளிவருவதை சங்கன் கண்டான். புன்னகைத்து “படைக்கோலம் பூண்டுவிட்டீர்கள், நாகரே” என்றான். அரவான் புன்னகைத்து “ஆம், நான் பிறிதொரு ஆடையை அணிவது வாழ்வில் முதல்முறை” என்றான். சங்கன் “பிறிதொருவர் ஆகிறீர்கள்” என்றான். வானில் ஒரு சிறுபறவை இன்குரலெழுப்பி கடந்து சென்றது. அரவான் அண்ணாந்து நோக்கி “நற்பொழுது” என்றான்.

சங்கன் தன் தேரில் ஏறி பாகனிடம் “படைமுகப்புக்கு” என்றான். தேர்த்தட்டில் அவனுடைய கதை வைக்கப்பட்டிருந்தது. வில்லும் ஆவநாழியும் கொண்டு ஆவக்காரன் நின்றிருந்தான். சங்கன் தேர்த்தட்டில் கைகளைக் கட்டியபடி நின்று இருபுறமும் பாண்டவப் படைகள் அரையிருளில் அசைவதை நோக்கினான். பந்தங்கள் அலைந்துகொண்டிருந்தன. படைவீரர்கள் அனைவருமே விழித்தெழுந்து ஒருக்கச்செயல்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு செயலில் கலைந்திருந்தாலும் அதற்குள் வழியும் நீருக்குள் படிகளின் வடிவம் என படையணிவகுப்பு தெரிந்தது. அவன் நோக்கியபடியே சென்றான். ‘என் படை!’ என்ற எண்ணம் முதன்முதலாக எழுந்தது. ‘நான்!’ என அவ்வெண்ணம் வளர்ந்தது.

கிழக்கில் தொலைவில் புலரியெழுகையை அறிவிக்கும் ஏழு எரியம்புகள் ஒன்றன்மேல் ஒன்று எழுந்து இருண்ட விண்ணில் புதைந்தன. அவ்வொளியின் ஒலிவடிவமாக கொம்புகள் ஆர்த்தன. போர்முரசுகள் அதிரத்தொடங்கின. ஒரு முரசிலிருந்து பிறிதொன்று தொடுத்துக்கொண்டு விரிந்து ஒற்றைப்பேரலை என படைப்பெருக்கினூடாக கடந்து விளிம்புகளை நோக்கி சென்றது அவ்வோசை. தொடர்ந்து பெருமுழக்கத்துடன் படை தன்னுணர்வு கொண்டது. அத்தருணம் பாகனின் சவுக்கினூடாக புரவியை அடைந்து அதை ஓடச்செய்தது. சங்கன் “மெல்ல” என்றான். பாகன் புரவியின் மேல் மெல்ல தட்டி விரைவழியச் செய்தான். இடைச்சாலையினூடாக பலகை மேல் சகடங்கள் ஓசையிட தேர் விரைந்து சென்றது.

படை கிளர்ந்தெழுந்துவிட்டிருந்தது, அதற்குள் இருந்து பேருருக்கொண்ட பிறிதொன்று எழத் திமிறுவதுபோல. பெருவெள்ளம் எழுகையில் கங்கையின் நீருக்குள் போர்வைக்குள் போரிடும் பெருமல்லர்கள் இருப்பதாக சிற்றகவையில் அவன் எண்ணுவதுண்டு. கவசங்களை பொருத்தியவர்களும், காப்புகளில் ஆணியை இறுக்கிக்கொண்டிருந்தவர்களும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டார்கள். அனைவருமே உளவிசையால் உடல் ததும்பிக்கொண்டிருந்தனர். ஆகவே ஒவ்வொன்றையும் மிக விரைவில் ஆற்றினர். ஒருவரையொருவர் நோக்கி வீசும் கையசைவுகளுடன் கூச்சலிட்டனர். எதையேனும் எடுப்பதற்கு ஓடிச்சென்றனர். சந்துவழியில் எதிர்ப்பட்டவர்களிடம் ஒற்றைச் சொல்லாடினர். சிலர் வெடித்து நகைத்தனர். சிலர் இரு கைகளையும் விரித்து உடலை பெருக்கிக்கொள்வதைப்போல் நெஞ்சு விரிப்பதை, சிலர் தங்கள் படைக்கலங்களை தீட்டி கூர்நோக்குவதை அவன் பார்த்தான்.

படைகளில் பெரும் சோர்வு ஒன்றிருப்பதாக முந்தைய நாள் ஸ்வேதன் சொன்னதை நினைவுகூர்ந்தான். அத்தருணத்தில் அவர்கள் அனைவரும் கிளர்ந்தெழுந்தவர்களாகவே தோன்றினர். அவன் விழிகளை நோக்கிக்கொண்டே சென்றான். ஊக்கமும் திளைப்புமே தெரிந்தது. ஆனால் சற்றுநேரம் கழித்து இயல்பாக ஒருவனின் விழிகளை நோக்கியபோது அவன் உணர்ந்தான், அவனிடம் போருக்குரிய உணர்வு இல்லை என. உடனே அத்தனை முகங்களிலும் அதை காணலானான். அவர்கள் ஒரு பெருவிழவுக்கு எழும் கொண்டாட்டத்தையே கொண்டிருந்தனர். போர் ஒரு பெருவிழவு, ஆனால் இறப்பால் அடியிடப்பட்டது. அனைத்திற்கும் அடியில் அச்சமென ஒன்று இல்லாமலிருக்காது. பொருளின்மை ஒன்றை உளம் சென்று தொடாமலிருக்காது.

போர்முகம் கொள்ளும் படைவீரர்களின் விழிகளில் வெறி நகைப்பும், புரிந்துகொள்ள இயலாமை ஒன்றின் திகைப்பும் தெரியுமென்று அவன் ஆசிரியர் சொன்னதை நினைவுகூர்ந்தான். “இவர்கள் போரை எதிர்நோக்கவில்லை” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். தங்கள் முன்னணிப்படைவீரர் இறந்து விழும்போது, பின்னால் செல்பவர்கள் அந்தப் பிணக்குவையில் முட்டி விழுந்து குருதிபூசி எழுந்து நிற்கும்போது, அருகே நின்றிருப்பவர் அலறிவிழத் தொடங்கும்போது, என்றும் கண்டு கண்பழகிய படைக்கலங்களின் கூர்களனைத்தும் புதுப்பொருள் கொள்ளத் தொடங்கும்போது இக்கொண்டாட்டம் நீரலைபட்டு சுடர்கள் அணைவதுபோல் மறையும். இவர்கள் என்ன செய்வார்கள்? அஞ்சி அலறியபடி பின்வாங்குவார்களா?

பின்வாங்கும் படை என்பது அதிலுள்ள அனைவரையும் அடித்துச் சுழற்றிக் கொண்டுசெல்லும் பேராற்றல் கொண்டது. பின்வாங்கும் எண்ணம் அனைவருக்கும் எழவேண்டியதில்லை. எவரோ ஒருவர் உள்ளத்தில் தோன்றினால் போதும். சொல்லின்றியே அது பரவும். கணப்பொழுதில் முழுப்படையும், வளைந்து பின்மடிந்துவிடும். அதன்பின் எதுவும் அவர்களை தடுக்கவியலாது. குலாடகுடியின் முதல் போர். இதில் அவர்கள் பின்வாங்கினால் பெரும்போர்களுக்குரியவர்களல்ல நிஷாதர் என்னும் இழிசொல் மீண்டும் உறுதிப்படும். இன்னும் ஆயிரமாண்டுகாலம் குலாடர் அரசர்களென்று அறியப்பட இயலாது.

இப்போரில் ஒருவர் எச்சமின்றி கொல்லப்பட்டால்கூட அவர்களின் புகழ் நிலைகொள்ளும். அவர்களை பின்னகர விடக்கூடாது. பின்னகர்ந்தாலும் அம்புகளால் கொன்று முற்றழிக்கப்படும்படி அமைக்கவேண்டும் தன் படைநிலையை. ஆனால் அதை முன்னரே ஷத்ரியர் கணித்துவிட்டனரா? அவர்களின் படைகளை அதனால்தான் முன்னால் நிறுத்தினார்களா? அவர்களுக்கு நேர்பின்னால் திருஷ்டத்யும்னனின் படைகளும் அதற்குப் பின்னால் நகுலனின் படைகளும் நின்றன. பின்னகர விடாத தடைச்சுவர்கள் அவை. அவ்வாறென்றால் இன்று அவர்களின் நாள். பலிபீடம் ஒருங்கிவிட்டிருக்கிறது.

படைமுகப்பில் அவனுடைய தேர் வந்து நின்றபோது அவன் உள்ளம் எண்ணங்களால் கொந்தளித்துக்கொண்டிருந்தது. அவனைக் கண்டதும் வாழ்த்தொலிகள் எழுந்தன. இடையில் கைவைத்தபடி அவன் தன் படைகள் அணிவகுப்பதை நோக்கி நின்றான். ஒவ்வொருவரும் முன்னரே தங்களுக்கு அளிக்கப்பட்ட இடத்தை சென்றடைய அரைநாழிகைக்குள் அவன் படை செங்கல் அடுக்கிக் கட்டப்பட்ட சுவராகி மடிந்து மாளிகையாகி எழுந்தது. சங்கன் எங்கேனும் சிறு பிழையோ பழுதோ உள்ளதா என்று விழிகளால் தொட்டு தேடினான். ஒவ்வொன்றும் முழுதமைந்திருந்தன. ஒவ்வொரு படைவீரனும் முற்றிலும் அணியும் ஆடையும் கொண்டிருந்தான். படைக்கலங்களின் விளிம்புகள் ஒற்றை நேர்கோடென நின்றன.

விழிசுழன்று மீண்டும் வருகையில் அவன் ஒரு படைக்கலம் சற்றே விலகி நிற்பதை கண்டான். அது அவனுக்கு விந்தையான ஓர் ஆறுதலை அளித்தது. அதை சீரமைக்க முயலாமல் புன்னகையுடன் கடந்து அப்பால் சென்றான். படைமுகப்பில் வந்து அவன் தேர் நின்றபோது அவனுக்குப் பின்னால் குலாடர்களின் படை பன்னிரண்டு நிரைகளாக நின்றது. அங்கிருந்து அவனால் பாண்டவப் படைகளின் விரிவை உளத்தால் அறிய இயலவில்லை. அவன் படை முப்புரிவேலின் ஒரு முகம். நடுவில் உத்தரனின் படை. அப்பால் ஸ்வேதனின் படை. வேலுக்கு ஏழு கவர்கொண்ட பிடியென பாண்டவர்களும் திருஷ்டத்யும்னனும் சாத்யகியும்.

படைப்பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நீளுருக்கொள்வதை அவன் கண்டான். பொழுது எழுவதற்காக பாண்டவப் படை காத்து நின்றது. முகில்களையே அவர்கள் நோக்கிக்கொண்டிருந்தனர். சங்கன் செருகளத்தின் செம்மண் பரப்பை பார்த்தான். முந்தைய நாள் அதில் விழுந்த காலடிகள் அனைத்தையும் இரவெலாம் சுழன்று வீசிய காற்று அகற்றி மெல்லிய செவ்வலைவெளியை உருவாக்கியிருந்தது. தோல் உரிக்கப்பட்ட ஊன்பரப்பென அது உயிரசைவு கொண்டிருப்பதாக தோன்றியது. இன்னும் சற்று நேரத்தில் பல்லாயிரம் அம்புகள் எழுந்து அதன் மேல் தைக்கும். பல்லாயிரம்பேர் குருதி வழிய அலறி அதில் விழுவார்கள். அதில் உடல் புதைந்து துடித்து உயிர் விடுவார்கள். அது குருதிச்சேறென்றாகி மிதிபட்டு குழம்பும். அதன் மடிப்புகளில் குருதி ஓடையென செல்லும்.

அவ்வெண்ணம் தன்னுள் எந்த அச்சத்தையும் உருவாக்கவில்லை என்று அவன் உணர்ந்தான். ஆனால் கிளர்ச்சியையும் உருவாக்கவில்லை. முன்னரே நிகழ்ந்து முடிந்த ஒன்றை எத்தொடர்பும் இன்றி எண்ணுவதாகவே தோன்றியது. முகில்களின் விளிம்புகள் ஒளிகொள்ளத் தொடங்கின. அவன் கையசைக்க கழையறிவிப்பாளன் தன் கணுக்கழையை நாட்டி அதன் மேல் தொற்றி அணிலென ஏறி ஒரேகணம் நாற்புறமும் நோக்கி உடனே கீழிறங்கினான். “படைகள் முற்றணிகொண்டுவிட்டன! முப்புரிவேல் கௌரவப்படை நோக்கி நின்றுள்ளது. மறுபுறம் கலைமான் கொம்பு எழுந்துள்ளது. அதன் முகப்பின் முதல்கூர் என பிதாமகர் பீஷ்மரின் படை. பீஷ்மர் தன் வில்லும் அம்பும் கொண்டு தேர்த்தட்டில் அமர்ந்திருக்கிறார்” என்றான்.

சங்கன் மீண்டும் தன் உடலை நிமிர்த்தி கைகளை இறுக்கி பின்பு தளர்த்தினான். துளித்துளியென பொழுது கடந்துகொண்டிருந்தது. அங்கிருந்து பார்க்கையில் விராடர் படைப்பிரிவின் கூர்மூக்கின் வளைவு துலக்கமாக தெரிந்தது. அங்கே அரவான் இருக்கக்கூடும் என்று எண்னினான். அரையிருளில் விழிகூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். நோக்க நோக்க தெளிவதுபோல் காலை எழுந்தது. ஒருகணத்தில் அவன் அரவானை பார்த்தான். படைமுகப்பில் இடையில் தன் நாகக்கத்தியுடன் வெறுந்தரையில் அவன் நின்றிருந்தான். அவனுக்குப் பின்னால் உத்தரன் தேரில் நின்றிருக்க வலது பக்கம் விராடரின் தேர் நின்றது. அரவான் தனித்து நின்றிருந்தான். காட்டிலிருந்து ஓர் இலை மட்டும் உதிர்ந்து விலகிக்கிடப்பதுபோல. அப்படையினர் அனைவரும் நிகழப்போவதென்ன என்று அறிந்திருந்தார்கள் என்று தோன்றியது.

சங்கன் மீண்டும் கையசைக்க கழையன் மேலேறி நோக்கி இறங்கி “கௌரவப் படைகளில் அனைவரும் கொடியுடன் தேரிலெழுந்துவிட்டனர், இளவரசே. கலைமான் கொம்பின் பத்து கவர்முனைக் கூர்கள் என துரோணரும் கிருபரும் சல்யரும் துரியோதனரும் அஸ்வத்தாமரும் ஜயத்ரதரும் கிருதவர்மரும் மாளவர் இந்திரசேனரும் கலிங்கமன்னர் ஸ்ருதாயுஷும் பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தரும் நின்றிருக்கிறார்கள்” என்றான். “போர் வெடிப்புறுவதற்கு முந்தைய கணங்கள் முற்றமைந்துவிட்டன என்பதை படைநிலைகள் காட்டுகின்றன. நம் படைகளில் விழிதொடும் எல்லை வரை அசைவின்மை ஆற்றல்கொண்டு நின்றுள்ளது” என்றான்.

சங்கன் கைவீசினான். அவன் கழையை சரித்தபடி முன்னால் சென்று நின்றான். சங்கன் பெருமூச்சுவிட்டு தன் வில்லை எடுத்து இணையாக நிறுத்தி அதன் நாணை கையால் வருடினான். அவன் மட்டுமே கேட்கும்படி அது “ஆம்” என விம்மியது. ஓர் அம்பை எடுத்து அதில் குலாடகுடியின் முத்திரையை பார்த்தான். முதல் அம்பு. அதற்கு இரையாகும் கௌரவ வீரன் இப்போது பொறுமையிழந்து போர் தொடங்குவதற்காக காத்திருப்பான். கனியின் கனிந்த காம்பு என அவன் கால் மண்ணிலிருந்து எழ வெம்பிக்கொண்டிருக்கும்.

வானில் ஒற்றை எரியம்பு எழுந்து சுடர்ந்து அணைந்தது. படைகளிலிருந்து குரலற்ற ஓசை ஒன்று முழக்கமென எழுந்து சுழன்றது. முகில்கள் ஒளிகொள்வதை சங்கன் கண்டான். ஒவ்வொரு கணமும் அத்தனை நீளம் என அப்போதறிந்தான். இரண்டாவது அம்பு எழுந்து வெடித்து அணைந்தது. செவிகள் மேலும் மேலும் துலங்க பெருமுழக்கத்திற்குள் ஒவ்வொரு தனியோசையும் தெளிந்தது. ஒவ்வொரு படைக்கலமும் தனியாக ஒலித்தது. ஒவ்வொரு மூச்சொலியையும் தனித்தனியாக கேட்க இயலும் என தோன்றியது. தலைப்பாகைகள் வண்ணம் துலங்கின. வாள் முனைகளில் ஒளிப்புள்ளிகள் குடியேறின. தேர்வளைவுகளும் கவசங்களின் பரப்புகளும் மெழுக்கும் மினுக்கும் கொண்டன. புலரியில் அவன் அன்று அடைந்த சொல்லை மீண்டும் அடைந்தான். ‘இன்று! ஆம், இன்று!’

மூன்றாவது அம்பு எழுந்து அணைந்ததும் பொழுது அறிவிப்பு முரசுகளும் கொம்புகளும் முழங்கின. தொடர்ந்து இரு படைகளிலும் பல்லாயிரம் போர்முரசுகள் ஒற்றைப் பெருங்குரலில் ஒலித்தன. அவ்வோசை கேட்டு உடலில் குடியேறிய விதிர்ப்புடன் அவன் விழிகள் படைகளில் அலைந்தன. மறுகணம் சித்தம் சென்று தொட அவன் ஆழம் திகைத்தெழுந்தது. விழிகளால் துழாவி அரவானை பார்த்தான். அவன் தன் நாகக்கத்தியை தூக்கியபடி கூச்சலிட்டு முன்னால் ஓடி செருகளத்தின் எல்லையைக் கடந்து சிவந்த மண்ணில் விழுவதுபோல சென்று முழங்கால் மடிய அமர்ந்து வான் நோக்கி இரு கைகளையும் விரித்து மும்முறை குரலெழுப்பியபின் இடக்கையால் தன் குடுமியை பிடித்திழுத்து வலக்கையால் தன் கழுத்தை கத்தியால் அறுத்தான்.

இழுத்த இடக்கையில் அவன் தலை தனியாக பிரிந்து விலகி அதிர்ந்தது. வலப்பக்கமாக அவன் உடல் மண்ணில் விழுந்தது. அவன் தலையை இடக்கை நீட்டி பிடித்திருக்க அவன் உடல் அங்கு கிடந்து துடிப்பதை சங்கன் பார்த்தான். தன் இடத்தொடை வெட்டுண்டதுபோல் துள்ளிக்கொண்டிருப்பதை உணர்ந்து அதை கையால் பற்றி நிறுத்தினான். படைமுகப்பில் நின்ற உத்தரன் தன் வாளை உருவி மும்முறை ஆட்டி “வெற்றிவேல்! வீரவேல்!” என்று கூவினான்.    அக்கூச்சலுடன் அவன் தேர் கிளம்பிய அக்கணம் “வெற்றிவேல்! வீரவேல்!” என்ற போர்க்குரல் எழுந்தது. பாண்டவப் படை பேரலையென பெருகிச் சென்று செருகளத்தை அடைந்தது.