மாதம்: ஜூலை 2018

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47

tigவிதுரரின் மாளிகையிலிருந்து அரண்மனை திரும்பும் வரை அரசியர் மூவரும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. தங்கள் எண்ணங்களில் மூழ்கி தேரின் ஒற்றைப் பீடத்தில் மூன்று வெவ்வேறு உலகங்களிலென அமர்ந்திருந்தனர். விதுரரின் நிலைகுலைவு அவர்களை வெவ்வேறு வகையில் உலுக்கிவிட்டிருந்தது. அவ்வரண்மனையில் ஒவ்வொன்றும் காற்றுகளால் அலையடிக்கும் ஆடைகள்போல கொந்தளித்துக்கொண்டிருக்கையில் விதுரர் அசையாத் தூண் என நின்றிருந்தார் என்னும் உளப்பதிவு பானுமதிக்கு இருந்தது. எப்போதோ ஒருமுறை “மைந்தரிடையே போர் என்பது முற்றழிவு என்று தெரியாதவரா அமைச்சர்? எவருக்கோ என விலக்கம் கொண்டிருக்க எப்படி இயல்கிறது அவரால்?” என்று அவள் அசலையிடம் சினந்து கேட்டதும் உண்டு. ஆனால் திருதராஷ்டிரரைவிடவும் அவர் உள்ளுலைந்துவிட்டிருக்கிறார் என்று தெரியவந்தமை அச்சத்தையே அளித்தது. சொல்லளிக்க நிலையுள்ளம் கொண்ட எவரும் இனி இந்நகரில் இல்லை என அவள் எண்ணிக்கொண்டாள். தாரை பெருமூச்சுடன் அசைந்தமர்வது கண்டு திரும்பி நோக்கினாள். அசலை தன் ஆடைநுனியை கசக்கி முறுக்கிக்கொண்டு உதடுகளை இறுக்கியபடி தேரின் சாளரத்தினூடாக ஒளிப்பரப்புகளாக அணுகி அகன்ற மாளிகைச்சுவர்களை நோக்கிக்கொண்டிருந்தாள்.

அரண்மனை முகப்பிலேயே பானுமதிக்காக அரசுச்சேடியர்  காத்து நின்றிருந்தனர். அவள் உள்ளே நுழைய அவர்கள் இருபுறமும் என உடன் நடந்தபடி செய்திகளை சொன்னார்கள். முதுசேடியும் அமைச்சியுமான சுதாமை வணங்கி “ஒற்றர்கள் தங்களுக்காக காத்து நின்றிருக்கிறார்கள், அரசி” என்றாள். “அவர்களை சிற்றவைக்குள் அமரச்செய்க!” என்றபின் அவள் இரண்டாவது சேடியை பார்த்தாள். அவள் வந்து வணங்கி “அரசரின் அவைச் செய்தி தங்களுக்கு தனியோலையாக அனுப்பப்பட்டுள்ளது, அரசி” என்றாள். பானுமதி தலையசைத்தாள். “நாளை முதல்நாழிகையில் அரசர் தம் தம்பியர் ஐவருடன் வந்து பேரரசியின் வாழ்த்துகளைப் பெற்று கிளம்பவிருக்கிறார். தாங்கள் அங்கு உடனிருக்க வேண்டுமென்று அரசர் விரும்புகிறார்” என்றாள்.

பானுமதி மூன்றாவது சேடியை பார்த்தாள். துரியோதனனின் தனிச்சேடியான அவள் “அரசர் அன்னையிடம் செல்வதற்குமுன் தங்களைத் தேடி வருவார், அரசி” என்றாள். பானுமதி விழிகளை திருப்பிக்கொண்டாள். அவள் நெஞ்சு படபடத்தது. துரியோதனன் அவள் மஞ்சத்தறைக்கு வருவதில்லை என்பதை அரண்மனையில் அனைவருமே அறிந்திருந்தார்கள். அவள் அசலையிடம் திரும்பி “பேரரசியிடம் சென்று சொல்! நாளை பிரம்மப் பொழுதில் அரசர் அங்கு வருவார். அதற்கு முன்னரே நான் அங்கு வருவேன். அங்கு மூத்த அரசியர் ஒன்பதின்மரும் இருக்கவேண்டும். முறைப்படி வாழ்த்து அளித்து செஞ்சாந்திட்டு அனுப்புவதற்கான அனைத்தும் சித்தமாக இருக்கவேண்டும்” என்றாள்.

தாரை முணுமுணுப்பாக “அதை அங்கே சேடியர்களே செய்துகொள்வார்களே…” என்றாள். பானுமதி “பேரரசியின் உளநிலை எவ்வாறு இருக்குமென்று இப்போது சொல்ல இயலாது. முன்னரே சென்று அதை கணித்து அரசர் வருவதற்குள் எனக்கு செய்தி அனுப்பவேண்டும்” என்றாள். அசலை “ஆம்” என்று தலை வணங்கினாள். பானுமதி நான்காவது சேடியை பார்த்து “கற்றுச்சொல்லிகள் ஓலையுடன் சித்தமாக இருக்கும்படி சொல்க! எஞ்சிய ஆணைகளை நான் பிறப்பிக்க வேண்டியுள்ளது” என்றாள். தாரையும் அசலையும் வணங்கி விடைபெற்றனர். அவள் இடைநாழியில் நடக்க மேலும் நான்கு சேடியர் அவளைத் தொடர்ந்து நடந்தபடி செய்திகளை சொன்னார்கள். அனைத்து கௌரவர்களும் தங்கள் துணைவியரிடம் விடைபெற்று படைப்பிரிவுகளுக்கு கிளம்பிவிட்டனர். உபகௌரவர்கள் ஒவ்வொருவராக தங்கள் துணைவியரிடம் விடைபெற்று கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

“இளந்துணைவியர் துயருற்றிருக்கிறார்களா?” என்று பானுமதி கேட்டாள். “ஆம் அரசி, பலர் உளம் மயங்கி விழுந்துவிட்டார்கள். நூற்றுக்கு மேற்பட்டவர்களை மருந்துநிலைகளுக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். கௌரவ இளவரசர்களின் அரசியரிலேயே பலருக்கு தன்னினைவு இல்லை. அகிபீனா உண்டு துயில்வதனால் அவர்கள் பித்துக்கு அண்மையில் என உளம்சிதைந்துள்ளனர்.” பானுமதி வெறுமனே தலையசைத்தாள். “விடைபெறும் சடங்குகள் அனைத்தும் முடிந்துவிட்டன. அமைச்சர்களில் எழுவர் மட்டுமே இங்கு எஞ்சப்போகிறார்கள். அனைத்துப் பொறுப்புகளும் இன்று நள்ளிரவில் முறைமாற்ற மணி ஓசையிடும்போது அவர்களுக்கு சென்றுசேரும்” என்றாள் இன்னொரு சேடி.

“அனைத்து ஆணையோலைகளும் தங்கள் அறையில் காத்திருக்கின்றன. தாங்கள் ஒப்புதலை அளித்தால் அவற்றை அனுப்பிவைப்போம்” என்று ஒரு சேடி சொன்னாள். “நான் அரைநாழிகைப்பொழுதில் அங்கு வருகிறேன், செல்க!” என்று அவளிடம் சொல்லிவிட்டு சிற்றவைக்குள் நுழைந்தாள். அங்கு அமர்ந்திருந்த ஒற்றர்கள் எழுந்து வணங்கினார்கள். அவள் அவ்வணக்கங்களை ஏற்று பீடத்தில் சென்று அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டாள். சேடி கதவை வெளியிலிருந்து மூடினாள். ஒற்றர்கள் அவளைச் சூழ்ந்து தாழ்வான பீடங்களில் அமர்ந்தனர். நடுவே அரசிக்குரிய பீடத்தில் கைகளை மார்பில் கட்டியபடி விழிமூடி அவள் அமர்ந்திருந்தாள். ஒவ்வொரு ஒற்றராக எழுந்து வந்து அவள் அருகே இருந்த பீடத்தில் அமர்ந்து தணிந்த குரலில் உணர்ச்சிகள் ஏதும் கலக்காமல் அணிச்சொற்களோ முறைமைக்கூற்றுகளோ இன்றி தங்கள் செய்தியை உரைத்தனர். நுண் விவரிப்புகள் செறிந்ததும் தன் கருத்துகளோ உணர்ச்சிக் கூற்றுகளோ இல்லாததுமான அவ்வுரைகள் அனைத்தும் ஒன்றேபோல ஒலித்தன. ஆனால் ஒவ்வொன்றிலும் அவ்வொற்றரின் பார்வையும் அவருடைய கள வாழ்வின் கால அளவும் தெரிந்தது.

வடபுலத்து ஒற்றர் சுக்ரர் “அஸ்தினபுரியின் படைகளில் பெரும்பகுதி கங்கையை கடந்துவிட்டது, அரசி. கோட்டையைச் சூழ்ந்திருக்கும் படைகளும் அகன்றுகொண்டிருக்கின்றன. நாளை உச்சிப்பொழுதுக்குள் படைகள் முழுமையாகவே இங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடும்” என்றார். “பதினெட்டு பிரிவுகளாக படைகள் நின்றுள்ளன. எவை எப்போது கிளம்பவேண்டும் என்று முன்னரே வகுக்கப்பட்டு ஆணைகள் அளிக்கப்பட்டுவிட்டன. ஜயத்ரதரும் அஸ்வத்தாமரும் அவற்றை வகுத்துள்ளமையால் பிழைகளின்றி நிகழ்கின்றன அனைத்தும். ஊற்றிலிருந்து ஆறு கிளம்பி துணையாறுகளை இணைத்துக்கொண்டு பெருகிச்செல்வதுபோல படைகள் செல்லும். குருக்ஷேத்திரத்தை அணுகியதும் மீண்டும் பதினெட்டு கிளையாறுகளாகப் பிரிந்து முதல்கிளை முகப்பாகவும் பதினெட்டாம்கிளை இறுதியாகவும் அமையும்.”

அதை அஸ்வத்தாமன் ஜலபத வியூகம் என்று அழைத்தான். அவள் அதை அவையில் கேட்டிருந்தாள். ஓலையில் பார்த்துமிருந்தாள். ஆனால் அவள் முகத்தில் ஏதும் வெளிப்படவில்லை. அரைக்கண் மூடி வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தாள். ஊர்ப்புலத்து ஒற்றரான சிபிரர் “போர் அறிவிக்கப்பட்ட பின் ஒவ்வொரு நாளுமென பெருகி வந்த உளஎழுச்சி இன்று காலை முதல் அடங்கத் தொடங்கியிருக்கிறது, அரசி” என்றார். “பெரும்பாலான ஊர்களில் துயரம் மிகுந்த அமைதியே நிலவுகிறது. அது இயல்புதான் என்று தோன்றினாலும் இயல்பல்ல என்ற உள்ளுணர்வை நான் அடைந்தேன். பெரும்பாலான நகர்களில் நிமித்திகர்கள் தீய விளைவுகளையே குறி நோக்கி சொல்லியிருக்கிறார்கள். மலைக்குடிகளின் பூசகர்களில் தெய்வங்கள் வெறியாட்டெழுந்து பேரழிவை முன்னுரைத்திருக்கின்றன. மூதன்னையர் கனவுகளில் மண் மறைந்த அன்னைத்தெய்வங்கள் எழுந்து துயர் வருவதை கூறியிருக்கின்றன. பெண்கள் பலர் தீய கனவுகளை கண்டிருக்கிறார்கள். மூத்தோரும் நீத்தோரும் ஒரு சொல்லும் உரைக்காமல் அழுத கண்ணீருடன் வந்து அவர்கள் கனவுகளில் நின்றிருக்கிறார்கள்.”

“தீய நிமித்தங்கள் பலவற்றை பார்த்தோம் என்ற பேச்சு எங்கும் உலவிக்கொண்டிருக்கிறது” என்று அவர் தொடர்ந்தார். “இன்று புலரியில் பெண்கோழி கூவியதை பார்த்ததாக பல சிற்றூர்களில் பேச்சு எழுந்தது. வெண்காகம் ஒன்று இல்லமுற்றத்தில் வந்து அமர்ந்தது என்று தென்புலத்து ஊர்கள் தோறும் பெண்கள் சொல்ல கேட்டேன். எறும்புகள் நிரைகுலைந்து செல்வதையும் பசுக்கள் விடாமல் அழுதுகொண்டிருப்பதையும் மீன்கள் ஒழுக்குக்கு எதிராக நீந்தி எங்கோ செல்வதையும் கண்டோம் என்கிறார்கள். அச்சம் மேலும் அச்சத்தை உருவாக்குகிறது. ஒரு தீய நிமித்தம் நூறு தீய நிமித்தங்களை விழியில் கொண்டுவந்து வீழ்த்துகிறது. நம் குடிகள் இப்போதே போரில் முற்றாக தோற்றுவிட்டவர்களாக உணர்கிறார்கள்.”

பானுமதி மெல்ல கலைந்து “அது அவர்களின் உளவிழைவாகவும் இருக்கலாம்” என்றாள். அம்மறுமொழியை எதிர்பாராத சிபிரர் தடுமாறி “அறியேன். இருக்கலாம்” என்றார். படைப்பிரிவுகளின் ஒற்றரான சந்திரர் “ஆனால் நமது படைகள் வெறிகொண்டுதான் செல்கின்றன. போருக்குச் செல்கிறோம் என்பதே அவர்களை பித்துகொள்ள வைக்கிறது. அதற்கு மேல் ஒவ்வொருவருக்கும் உடல் நிறைந்து மூக்கினூடாக சொட்டுமளவுக்கு மது அளிக்கப்பட்டுள்ளது” என்றார். படைப்பிரிவுகளிலிருந்து வந்த மற்றொரு ஒற்றரான மூர்த்தர் “நம் படைவல்லமை பெரிது என்பது அனைவரையும் எழுச்சிகொள்ளச் செய்துள்ளது. பீஷ்ம பிதாமகருக்கு எதிராக அர்ஜுனர் வில்லெடுக்க மாட்டார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆகவே போர் முதல்நாளிலேயே முடிந்துவிடும் என எண்ணுகிறார்கள்” என்றார்.

சாலைகளின் ஒற்றரான குமுதர் “வணிகர்கள் பெரும்பாலானவர்கள் பாரதவர்ஷத்தின் தென்பகுதியை நோக்கி நகரத்தொடங்கிவிட்டார்கள்” என்றார். “எனது துணை ஒற்றர்களின் அனைத்துச் செய்திகளையும் தொகுத்துப் பார்க்கையில் பெரும்பாலான வணிகக்குழுக்கள் ஏற்கெனவே விந்திய மலையை கடந்துவிட்டன என்று தெரிகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இங்கு காங்கேயத்திலும் சைந்தவத்திலும் பெருவணிகர் குழுக்களே இல்லாமல் ஆகக்கூடும்” என்றார். பானுமதி முகமாறுதல் இல்லாமல் கண்மூடி அதை கேட்டிருந்தாள். “அவர்கள் சென்ற இடங்களை உள்ளூர் சிறுவணிகர் நிரப்புவதனால் இப்போது பெரிய இழப்பு தெரியவில்லை. ஆனால் இன்னும் சிலநாட்களில் வருபொருள் இன்மையால் வணிகம் தேங்கும். பொருட்சுழற்சி நிலைக்கும். அதை நம்பி வாழ்வோரின் வாழ்க்கை இடருக்குள்ளாகும்.”

“போருக்குப் பின் இங்கு பெரும்பாலான படைவீரர்கள் இறந்துவிடுவார்கள் என்று அவர்கள் கணிக்கிறார்கள். ஆகவே இந்நாடுகள் அனைத்திலுமே மிகுதியும் கைம்பெண்களே எஞ்சுவார்கள். அவர்கள் பொருள் வாங்கி நுகர்வது குறையும். துயர்காக்கும் குழந்தைகளுக்கும் அரிய பொருட்கள் வாங்கப்படமாட்டாது” என்று அவர் தொடர்ந்தார். “போருக்குப் பின் இங்குள்ள அரசர்களின் கருவூலங்கள் முற்றொழிவதனால் மிதமிஞ்சி வரி கொள்வார்கள். அவற்றை அளித்த பின் வாங்குவதற்கு எவரிடமும் பணம் இருக்கப்போவதில்லை. ஆகவே இங்கு இனி பெருவணிகத்திற்கு வாய்ப்பில்லை. அன்றாட உணவுப்பொருட்களும் ஆடைகளுமன்றி எதுவும் வாங்கப்படாது. வணிகத்தில் பெரும்பகுதி அழகுக்கும் பெருமைக்கும் வாங்கப்படும் பொருட்களே என்பதனால் வணிகர்களுக்கு முதற்பொருள் பெருக வாய்ப்பில்லை என்று எண்ணுகிறார்கள்.”

பானுமதி விழிகளை திறக்காமலேயே தலையசைத்து “அத்துடன் அனைத்து நாடுகளும் வணிகர்களுக்கு மேலும் வரி சுமத்தக்கூடும். சுங்க நிலைகளில் கொள்ளையே நிகழ வாய்ப்புள்ளது” என்றாள். “ஆம் அரசி, அவ்வாறு அவர்கள் அஞ்சுகிறார்கள். இங்கு அனைத்தும் கலங்கி தெளிந்த பின்னரே தென்னகத்திலிருந்து வணிகக் குழுக்கள் இங்கு மீண்டும் வரும்” என்றார் குமுதர். பானுமதி “இதுநாள்வரை இந்நாடுகள் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று இணைத்தவை வணிகநிரைகளே. அவர்கள் அகல்வார்கள் என்றால் இந்நிலவிரிவு ஆயிரம் துண்டுகளாக சிதறும். அசைவழிந்து, எடைமிகுந்து படிந்து நிலைகொள்ளும். மீண்டு எழுவதற்கு நெடுங்காலமாகலாம்” என்றாள். அரசியல் ஒற்றரான பிரகம்பர் “அவ்வாறல்ல அரசி, வென்றவர்களில் ஒருவர் முதன்மை ஆற்றல் கொண்டவர் ஆகி பூசல்கள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்து ஒற்றைப்பேரரசை உருவாக்கி ஆண்டார் என்றால் எல்லை கடந்து சென்று அயலாரை வென்று கப்பம் கொண்டு வந்து கருவூலத்தை நிறைக்க முடியும். சில ஆண்டுகளிலேயே இங்கு மீண்டும் வணிகம் தழைக்கக்கூடும். முதிய வணிகர் ஒருவர் அதை சொல்லக் கேட்டேன். போரென்பது காட்டெரி. அதற்குப் பின் புதிய மரங்கள் துளிர்த்து காடு மேலும் தழைக்கும் என்று அவர் சொன்னார்” என்றார்.

அந்தண ஒற்றரான சௌம்யர் “அமைச்சராகவும் பூசகராகவும் வேதியராகவும் போருக்குச் செல்லும் அந்தணர்களை அந்தணர்குழுக்கள் குலநீக்கம் செய்யும் அதர்வவேதச் சடங்குகள் நிகழ்ந்து வருகின்றன, அரசி. குருதிக்களத்திற்குச் செல்பவர்கள் மூன்று வேதங்களையும் துறக்கவேண்டும் என்பது தொல்நெறி. எரிவளர்த்து அனலோனை வரவழைத்து அவியூட்டி அதில் தங்கள் முப்புரி நூலை களைந்திட்டு குலமொழிகிறார்கள். குழல் களைந்து நதியில் மூழ்கி எழுந்து திரும்பி நோக்காமல் அகல்கிறார்கள். சென்றவர்களின் பெற்றோரும் மைந்தரும் அவர் இறந்தவர் என்று கருதி நீத்தார்களுக்குரிய நீர்ச்சடங்குகள் இயற்றுகிறார்கள். மனைவியர் கைம்பெண்நோன்பு கொள்கிறார்கள்” என்றார்.

“போர்முடிந்து மீள்பவர்களுக்கு மறுபிறப்புக்குரிய சடங்குகள் இயற்றி, நுண்சொல் செவியுரைத்து, முப்புரிநூல் அணிவித்து குலத்திற்கு மீண்டும் எடுத்துக்கொள்வார்கள். மனைவியையே மீண்டும் மணந்துகொள்வார்கள்” என்றார் சௌம்யர். “எளிய சடங்குதான். ஆனால் நெடுங்காலமாக இங்கே அவ்வகைச் சடங்குகள் நிகழ்ந்ததில்லை. நூல்களை நோக்கி அதை செய்கிறார்கள். சடங்குதான் என்று உணர்ந்தாலும் செல்பவர்களின் மைந்தரும் மகளிரும் கதறியழுகிறார்கள். பெற்றோர் துயர்தாளாமல் விழுந்துவிடுகிறார்கள். அவர்களில் சிலர் அரசர் மேல் பழிகூவினர். அங்கே கூடி நின்றிருந்த எவரும் மறுப்புரை எழுப்பவில்லை. அவர்கள் அச்சொற்களுடன் உளமொப்புகிறார்கள் என்றே தோன்றியது.”

அவர்கள் ஒவ்வொருவருடனும் அவர்கள் முன்பு சொன்ன செய்திகள் இணைந்துகொண்டன. ஓரிரு சொற்களுக்குப் பின் அவள் அந்த நிலத்தில் விழிவிரிய செவிகூர்ந்து சென்றுகொண்டிருந்தாள். அவர்கள் சொன்னவற்றை அவள் அங்கு நிகழ்வனவாக கண்டாள். சொற்களை அவ்வாறு ஓவியங்களாக விரித்துக்கொள்வது அவற்றின் அனைத்து கூர் செய்திகளையும் சொல்லப்படாத மடிப்பாழங்களையும் விரித்துக்கொள்வது என அவள் உணர்ந்திருந்தாள். செய்திகள் வந்தணைவதில் உள்ள ஒரு ஒழுங்கை அவள் முன்பே அறிந்திருந்தாள். அஸ்தினபுரியிலிருந்து அகன்று அகன்று செல்லும் வரிசையில் செய்திகள் அவளிடம் வந்தணைந்தன. தொலைதூர எல்லைப்புறச் செய்தி இறுதியாக வந்தணைந்தது. அலையொன்று விரிந்து பெருகி விசை தளர்ந்து செல்வதன் ஓவியம் அவளுள் எழுந்தது. ஒவ்வொரு நிகழ்வும் மையத்தில் ஒன்றெனவும் எல்லைகளில் பிறிதொன்றெனவும் மாறிவிட்டிருந்தது. மையத்தில் நிகழ்ந்த ஒன்று எல்லையை அடைந்து பிறிதொன்றாகி அவளை வந்தடையும்.

“எல்லைப்புறச் சிற்றூர்களில் உணவுப்பொருட்களை கரந்துவைக்கத் தொடங்கிவிட்டனர், அரசி” என்றார் காவல் ஒற்றராகிய பத்ரர். “முதலில் பேரூக்கத்துடன் அவர்களே உணவும் நெய்யும் படைகளுக்கு அளித்தனர். தங்களுக்கான வரைவெல்லை கடந்ததும் அவற்றை சேர்த்து நமக்கு விற்கத்தொடங்கினர். ஆனால் நாமளிக்கும் செல்வம் ஓலைக்குறிப்பென்றே வந்தணைகிறது என்று உணர்ந்ததும் அவர்களின் உளம் மாறத்தொடங்கிவிட்டது. அரசக்குறிப்பு பொருளென்று ஆகவேண்டுமெனில் அங்கு அரசென்று ஒன்று இருக்கவேண்டும். போருக்குப் பின் எவ்வரசு எவ்வண்ணம் இருக்குமென்று இப்போது எவரால் உரைக்க முடியுமென்று ஒரு முதியவர் சொல்வதை கேட்டேன். அவர்கள் நெல்லையும் கோதுமையையும் கலங்களில் போட்டு விளிம்புகளை மெழுகும் களிமண்ணும் கலந்த பிசினால் ஒட்டி உருக்கிச் சுட்டு மண்ணில் ஆழப்புதைத்து வைக்கிறார்கள். உலர்ந்த கிழங்குகளை பெரிய தோலுறைகளுக்குள் பொதிந்து புதைக்கிறார்கள். நெய்க்கலங்களை சுனைகளின் ஆழங்களுக்குள் வேர்களில் கட்டி வைத்திருக்கிறார்கள். நாம் எண்ணுவதைவிட மிகுதியான உணவு அங்கே உள்ளது. போர் முடிந்து ஆறுமாதம் உண்பதற்குரிய உணவு பெரும்பாலான மலைச்சிற்றூர்களில் எஞ்சியுள்ளது.”

பானுமதி எரிச்சலடைந்தாள். களைப்பு அவ்வெரிச்சலைப் பெருக்கி உடலெங்கும் பரப்புவது. அதை உணர்ந்து அவள் தன் கைவிரல்களை ஒவ்வொன்றாக தளர்த்தி நீட்டி மெல்ல தன்னை எளிதாக்கிக்கொண்டாள். “அவர்களுக்கு போர் குறித்த செய்திகளை எவர் சொல்கிறார்கள்?” என்றாள். “அரசி, அவர்கள் போரைப் பார்த்து இரண்டு தலைமுறைகாலமாகிறது. ஆனால் நாம் படைகொண்டு சென்ற எல்லைப்புறங்களுக்குச் சென்றவர்கள் ஒவ்வொரு சிற்றூரிலும் ஒருவரேனும் உள்ளனர். போரென்பது களத்தில் நடக்கும் படை நடத்தும் களமோதல் மட்டுமல்ல. போர் என்பது களம் முடிந்த பின் வரும் எரிபரந்தெடுத்தல், கொள்ளை, சூறையாடல், படைக்கட்டின்மை, அரசின்மை அனைத்தும் கலந்ததே என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். எந்தப் போர் முடிந்த பின்னரும் ஏழு நாட்கள் படைவீரர்களை அவர்களின் தலைவர்கள் கட்டுப்படுத்த இயலாதென்றும், அந்தக் கட்டுப்பாடு உருவாகி வருவதற்குள் குடியினர் பெருமளவில் இழந்துவிட்டிருப்பார்கள் என்றும் அனைவருக்குமே தெரிந்துள்ளது.”

“அவ்வாறு ஒவ்வொரு முறையும் நிகழவேண்டியதில்லை” என்று பானுமதி முனகிக்கொண்டாள். “ஆம், ஆனால் அவ்வாறன்றி முறைப்படி நிகழ்ந்த போரெதுவும் எந்த வீரரின் நினைவிலும் இல்லை. எந்த நூலும் இதுவரை அப்படி ஒரு போரை சொன்னதில்லை. ராகவராமன் படைகொண்டு சென்று இலங்கையை வென்றபோதுகூட ஏழு நாட்கள் அந்நகர் சூறையாடப்பட்டது என்றே தொல்கதைகள் சொல்கின்றன” என்றார் பத்ரர். பானுமதி தலையசைத்தாள். “விளைவயல்களை எரிப்பதும் குடிநீர் நிலைகளில் களிறுகளை இறக்கி அழிப்பதும்கூட போர்களுக்குப் பின் வழக்கமாக உள்ளது. போர் முடிந்து பின்னர் குருதி உலர்ந்து அனைத்தும் சொற்களென்றாகி நினைவுகளுக்குச் சென்று சுருங்கிய பின்னரே மேழி எடுத்து வயலில் வைக்க முடியும். அதன் பின் பயிர் வளர்ந்து விளை பெருகி பெறுவதே உணவு. அதுவரைக்குமான உணவு ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டும். போருக்குப் பிந்தைய அரசர்கள் வென்றவராயினும் தோற்றவராயினும் வெறிகொண்ட திருடர்களே. அவர்கள் கவர்ந்து சென்றது போகவே நம் மைந்தருக்கு உணவென்றாகும் என்று மூத்தவர்கள் சொல்கிறார்கள்” என்றார் பத்ரர்.

பானுமதி சில கணங்களுக்குப் பின் சூதர்குலத்து ஒற்றரான ஊர்த்துவரிடம் “நீர் என்ன எண்ணுகிறீர், ஊர்த்துவரே?” என்றாள். அவர் சற்று தயங்கிய பின் “நாம் அனைத்தையும் பேசித்தான் ஆகவேண்டும். அரசுகாலத்தை அறப்பொழுதென்றும் மறப்பொழுதென்றும் தொல்மரபு பிரித்துக்கொள்கிறது. முடிமன்னரின் கோல் தொல்நெறிகளும், முனிவரும், அந்தணரும் வகுக்கும் முறையில் நின்றிருக்கும் அமைதிக்காலமே அறப்பொழுது. எதன்பொருட்டு எழுந்தது என்றாலும் போருக்கு முன்பும் போருக்குப் பின்பும் உருவாவது மறப்பொழுது. அங்கு அறங்களென எதுவும் திகழ்வதில்லை” என்றார். பானுமதி “அது படைகளைப்பற்றிய குடிகளின் அச்சமும் ஐயமும் மட்டுமே” என்றாள். “ஆம், ஆனால் அவை எப்போதும் உள்ளன. அவற்றை எவ்வரசரும் நோக்காதொழிய இயலாது” என்று ஊர்த்துவர் தொடர்ந்தார்.

“எங்கும் படைகளின் உளநிலை ஒன்றே. உயிர் கொடுக்கப்போகிறோம் என்னும் உணர்வால் தாங்கள் செய்வதனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படுமென்று படைவீரர்கள் எண்ணுகிறார்கள். போருக்குப் பின் உயிர் கொடுத்தோம் என்னும் உணர்வால் எதையும் செய்யலாம் என்று துணிகிறார்கள். செருகளத்தில் பல்லாயிரக்கணக்கில் தன்னவர் இறந்துகிடப்பதைக் கண்டு குருதியிலாடி மீண்டபின் ஒவ்வொரு படைவீரனும் வெறிகொண்டிருக்கிறான். போருக்கெழாது ஊரில் குடியிருக்கும் அனைத்து குடிகள் மேலும் அவன் தீரா பெருவஞ்சம் கொண்டிருக்கிறான். அவர்களின் பொருட்டே தானும் தன்னவரும் குருதி சிந்தியதாக எண்ணிக்கொள்கிறான். அவர்கள் எவ்வகையிலோ தங்களை இறப்பு நோக்கி செலுத்தியதாகவும் அதற்கான பொறுப்பை அவர்கள் ஏற்கவேண்டுமென்றும் அதன் பொருட்டு அவர்கள் பொருட்கொடையும் தேவையெனில் உயிர்க்கொடையும் அளிக்கவேண்டுமென்றும் அவன் கருதுகிறான். போருக்குப் பின் நிகழும் கொள்ளை எந்த வீரருக்கும் குற்றஉணர்வை அளிப்பதில்லை.”

பானுமதி அந்த நேரடியான கூற்றை எதிர்பார்க்கவில்லை. எண்ணங்கள் ஓய்ந்து அவள் மறுசொல்லின்றி அமர்ந்திருந்தாள். “போருக்குப் பின் வீரர்கள் பெண்கவர்தலும் வல்லுறவு கொள்ளுதலும்கூட தொல்முறைகளால் மறைமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. உயிர் மீண்டதுமே படைவீரன் கொள்ளும் முதல் எண்ணம் காமமாகவே இருக்கிறது. வாழ்கிறேன் என்று தனக்கும் தன் தெய்வங்களுக்கும் அவன் அறிவித்துக்கொள்வது அது. வாழ்ந்திருக்கும் கணங்களை கொண்டாடுவது. திரும்பும் படைகள் தங்கள் நாட்டு ஊர்களின் மீதே மலையிறங்கும் பெருமழையென பரவுகின்றன.  பெண்டிர் அனைவரும் அவர்களின் களியாட்டிற்கு உரியவர்களாகிறார்கள்” என்றார் ஊர்த்துவர். “தொன்றுதொட்டு இவ்வழக்கம் பழங்குடிகளிடமும் முறைமையென ஒப்புக்கொள்ளப்பட்டது. வென்று வருபவன் வீரன் என்றும் பெண்கள் அவனுடன் உறவுகொண்டு பிறக்கும் குழந்தைகள் வெற்றி வீரர்களாக இருப்பார்களென்றும் குலம் பெருக்கும் களிறுகளென எழுவார்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். சிறுகுடிகளில் படைவென்று வரும் வீரர்களுக்கு மகளிரைத் திரட்டி அளிக்கும் வழக்கமே உள்ளது. விலங்குகளில் வென்று வரும் கடுவன் பேடைகள் அனைத்தையுமே தனக்கென கொள்ளும் வழக்கமுள்ளதுபோல.”

“உண்மையில் அதை பெண்டிர் அஞ்சுகிறார்களா விரும்புகிறார்களா என்று கண்டறிய இயல்வதில்லை. எப்போதும் அனைத்துப் பெண்டிரும் அதை அஞ்சுகிறார்கள். தங்கள் கணவர்களுக்கும் தந்தையருக்கும் பிழை செய்வதாகவே அதை கருதுகிறார்கள். மாற்றான் தொடுவதற்கு முன் உயிர் மாய்த்துக்கொள்ளவேண்டும் என்ற பேச்சு சிற்றூர்கள் அனைத்திலுமே திகழ்வது. ஆனால் போர் வெற்றிகொண்ட வெறிக்களிப்புடன் திரும்பிவரும் வீரர்களை காண்கையில் அவர்களின் கருப்பைகளில் குடிகொள்ளும் தெய்வங்கள் எழுமென்றும் அவர்களை அவையே தங்கள் கருவிகளாகக் கொள்ளும் என்றும் பெண்டிர் காமவிடாயும் களிப்பும் கொண்டு அவர்களை நோக்கி சென்று காமம் கொண்டாடுவார்கள் என்றும் தொல்கதைகள் கூறுகின்றன” என்று ஊர்த்துவர் சொன்னார்.

“இது சூதர்மொழி… அவர்கள் என்றும் அறம், ஒழுக்கம், மரபு அனைத்துக்கும் எதிர்நிலைகொள்பவர்கள்” என்றார் முதிய ஒற்றரான சுக்ரர். “என் சொல் விரும்பப்படவில்லை எனில் நிறுத்திக்கொள்கிறேன்” என்றார் ஊர்த்துவர். “சொல்க, இதுவும் ஒரு நோக்குதான்” என்றாள் பானுமதி. “ஒரு போருக்குப் பின் போர்வென்றவர்களின் மைந்தர்களால் அந்நிலம் புதுத் தளிர் கொண்டெழவேண்டும். அதுவே உயிரின் இயல்பு. ஆகவே மகளிர் போர்வென்று வரும் வீரர்களை அஞ்சி வெறுக்கிறார்கள், அவர்களின் உயிர்த்துளியை எண்ணி அவர்களின் உடல்கள் காத்திருக்கின்றன” என்றார் ஊர்த்துவர். “இழிசொல்… இது மகளிரைப்பற்றிய இழிசொல் அன்றி வேறல்ல” என்றார் சுக்ரர். பிறர் சினத்துடன் மெல்ல முனக பானுமதி “ம்” என்றாள். அவ்வோசை அவிந்தது.

பானுமதி “என்ன நிகழுமென்று இப்போது நம்மால் சொல்லக்கூடுவதில்லை. ஆனால் எவர் வென்றாலும் அவர்கள் அஸ்தினபுரிக்கு அயலவர்கள் அல்ல. அஸ்தினபுரியை பேணும் உரிமையின் பொருட்டே இருசாராரும் போருக்கெழுந்திருக்கிறார்கள். அதை நம்புவதன்றி இப்போது வேறு வழி இல்லை” என்றாள். ஒற்றர்கள் எழுந்து வணங்கி வெளியேறினர்.

tigபானுமதி எழுந்தமர்ந்தபோது சுதாமை உள்ளே வந்து “ஒற்றர்பெண்டுகள் வந்துள்ளனர், அரசி” என்றாள். மீண்டும் சாய்ந்துகொண்டு “வரச்சொல்க!” என்றாள். ஓசையில்லாமல் ஒற்றர்பெண்டிர் வந்து அவளைச் சூழ்ந்து அமர்ந்தனர். சூதமகளிராகவும் வேட்டுவ வணிகர்களாகவும் ஊர்கள்தோறும் செல்பவர்கள். அவள் அவர்களிடம் பேசும்படி கைகாட்டினாள்.

சிற்றூர் ஒற்றர்பெண்டான அமிதை முதலில் சொல்லத் தொடங்கினாள். “பெரும்பாலான சிற்றூர்கள் தங்கள் ஊருக்கு வரும் பாதைகளில் காவல்நிலைகளை அமைத்திருக்கின்றன. முதுபெண்டிரில் ஒருவரும் முதுவீரர் ஒருவரும் வில்திறனும் வாள்திறனும் கொண்ட படைப்பெண்டிரின் சிறு குழுவும் அடங்கியது ஓர் வழிக்காவல் அலகு. அவர்கள் சின்னாட்களிலேயே தங்கள் வழிகள் அனைத்தையும் காத்துக்கொள்ளத் தொடங்கினர். ஓரிரு நாட்களுக்குள்ளேயே அவ்வழி செல்பவரிடம் அக்காவலுக்குரிய சிறு பணத்தை கேட்டு பெறத்தொடங்கினர். இன்று எல்லைப்புறங்கள் முழுக்க அவை சுங்கநிலைகளாக மாறிவிட்டன.”

பானுமதி அதை அறிந்திருந்தாள். “வணிகர்கள் நம் எல்லையிலிருந்து கடந்து செல்கிறார்கள். ஆகவே இறுதியாகக் கொடுப்பதுதானே என்ற எண்ணத்தில் கேட்ட சுங்கத்தை அவர்கள் அளிக்கிறார்கள். சுங்கம் மிகுதியாக கிடைக்குந்தோறும் விழைவு பெருகுகிறது. வழிகளைத் தவிர்த்து காட்டுப்பாதைகளினூடாக வணிகர்கள் செல்லத்தொடங்கும்போது காவல்குழுக்கள் சுங்கச்சாவடிகளைவிட்டு நீங்கி வேட்டைக் குழுக்களைப்போல வணிகர்களை தேடிச்சென்று பொருள் கொள்கிறார்கள். மிக அரிதாகவே இது நிகழ்கிறது. ஆனால் இது ஒரு தொடக்கமென்றாகலாம்.”

வழிநிலைகளின் ஒற்றர்பெண்டான சக்ரை “பிற நாடுகளிலும் இது நிகழ்கிறதென்கிறார்கள் வணிகர்கள். ஏனென்றால் ஆண்களைவிட பெண்கள் பொருள்விழைவு மிக்கவர்கள் என்கிறார்கள். மிக விரைவில் பெண்கள் விழுமியங்களை கைவிட்டுவிடுவார்கள். ஏனெனில் ஆண்களைப்போல் ஊர்முறைமையும் குலமுறைமையும் தெய்வமுறைமையும் அவர்களை கட்டுப்படுத்துவதில்லை. அவர்கள் அறிந்த முறைமை குடிமுறைமை மட்டுமே. தங்கள் குடிக்கு வெளியே தயக்கமின்றி எதையும் செய்ய அவர்களால் இயலும்” என்றாள். பானுமதி “அனைத்தையும்விட அவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக கவலை கொள்கிறார்கள். போருக்குப் பின் பஞ்சம் வருமென்று அவர்கள் செவிச்செய்தியாக அறிந்திருப்பார்கள். ஒவ்வொருவரும் தங்கள் களஞ்சியங்களை நிறைத்துவைக்க முயல்வார்கள்” என்றாள்.

ஊர்க்குழுக்களின் ஒற்றர்பெண்டான சுதீரை “சில இடங்களில் ஊர்க்காவல் குழுக்களிடையே சிறுபூசல்கள் தோன்றியிருக்கின்றன. சாலைகளில் சுங்கம்கொள்வதில் எல்லைகள் சரியாக வகுக்கப்படவில்லை. நாடெங்கும் அவ்வாறு வகுப்பது இப்போது எளிதுமல்ல. பூசல்கள் பெரிதாகக்கூடும். அவர்களை இப்போதே கட்டுப்படுத்தவேண்டும்” என்றாள். எல்லையூர்களின் ஒற்றர்பெண்டான சத்ரை “எல்லைகளில் ஊர்க்குழுக்களிடையே குல மேன்மை குறித்த பூசலும் தொடங்கியுள்ளது, அரசி. இப்போது அவை சொல்லாடலாகவே உள்ளன” என்றாள். பானுமதி “அவர்களை இப்போது நாம் எவ்வகையிலும் தடுக்க இயலாது. நம்மிடம் இப்போது படைகள் இல்லை. நம்மிடம் இருக்கும் படைகள் இந்நகரைக் காக்கவே போதுமானவை” என்றாள்.

“பொதுவாக படைகளால் தனிக்குழுக்களை வெல்ல இயலாது. எல்லைப்புற குலக்குழுக்கள் எப்போதுமே படைகளுக்கு பெருந்தொல்லைதான். படைகள் தங்கள் பெரிய எண்ணிக்கையால், தங்களுக்குப் பின்னிருக்கும் பேரரசு எனும் அச்சுறுத்தலால் மட்டுமே எல்லைப்புறச் சிற்றூர்களை வென்றுள்ளன. எதிர்த்தவர்களை முற்றழித்து எஞ்சாமல் ஆக்குவதே அரசநிலைகளின் வழக்கம். அச்செய்தி உருவாக்கும் அச்சம் நிலைத்திருப்பதனால்தான் எல்லைகள் ஆளப்படுகின்றன. இப்போது நாம் படைகொண்டு சென்று அவற்றில் ஒரு படையை அவர்கள் வென்றார்கள் என்றால் எஞ்சியிருக்கும் அச்சம் முற்றாக விலகும். தேனீக்கூடு அப்பால் நின்று பார்க்கையில் ஒரு பொதியெனத் தோன்றும். ஒரு சிறு அசைவில் தனித்தேனீக்களாக சிதறி இன்மையென்றாகக்கூடும். நாடுகளும் அவ்வாறுதான். இதை ஒன்றென நிறுத்தும் விசை என்பது அச்சமும் தன்னலமும் தொல்குடிகளின் நம்பிக்கையும்தான்.”

“பூசல் பெருகினால் நம்மால் கட்டுப்படுத்த இயலாது” என்றாள் அந்தணர்குலத்து ஒற்றர்பெண்டான ஹம்ஸை. பானுமதி “சில நாட்களுக்குள்ளேயே எல்லைப்புறமெங்கும் ஓரிரு பெரிய குழுக்கள் உருவாகிவிடும். அக்குழுக்களுக்கே அப்பகுதியை ஆளும் பொறுப்பு அளித்து அவற்றை நம் கைகளாக மாற்றிக்கொள்வோம். எப்போதும் அரசுகள் அவ்வாறுதான் அமைக்கப்பட்டுள்ளன. திருடன் கொழுத்தால் அரசன், அரசன் மெலிந்தால் திருடன் என்று முதுசொல் ஒன்று உண்டு” என்றாள். ஒற்றர்பெண்டுகள் புன்னகைத்தனர். பானுமதி எழுந்து தலையசைக்க ஒற்றர்பெண்டுகள் தலைவணங்கி ஒவ்வொருவராக ஓசையின்றி வெளியே சென்றனர். அவள் பெருமூச்சுடன் எழுந்தாள். களைப்பால் தலைசுழன்றது. ஆனால் படுத்துக்கொண்டே செய்திகளை கேட்டமையால் உடல்கொண்ட ஓய்வு சற்று உயிரை மீட்டளித்தது. கதவைத் திறந்து வந்து பணிந்த சுதாமையிடம் “கற்றுச்சொல்லிகளை அழை. ஆணையோலைகள் அனைத்தும் இன்றே சென்றுவிடவேண்டும்” என்றாள்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46

tigவிதுரரின் மாளிகை முற்றத்தில் அரசியர் மூவரும் அமர்ந்த அணித்தேர் சென்று நின்றது. முன்னரே அங்கு அணிவகுத்திருந்த காவலர்கள் வாள் தாழ்த்தி வாழ்த்துரை முழக்கினர். மாளிகையின் உள்ளிருந்து மூன்று சேடியர் கையில் மலர்த்தாலமும் சிற்றகல்சுடரும் மஞ்சள்நீருமாக வெளியே வந்து அரசியரை வரவேற்றனர். தாரையும் அசலையும் இறங்கி நின்றபின் பானுமதி கைகூப்பியபடி இறங்கினாள். தாலத்தில் இருந்த நீரை சேடி அவள் காலில் விட்டு கழுவ மலர் எடுத்து குழலில் சூடி, சுடர் தொட்டு கண்ணில் ஒற்றி அவள் மாளிகைக்குள் நுழைந்தாள்.

அவளை எதிர்கொண்ட முதிய சேடி தயக்கத்துடன் “பொறுத்தருள்க, அரசி! அமைச்சர் தன் அறையில் இருக்கிறார். தாங்கள் வருவதை மூன்று முறை சென்று உரைத்தேன். நீ செல்க, நான் வருகிறேன் என்றார். முறைப்படி அவர் வந்து தங்களை வரவேற்க வேண்டும் என்று நான் மூன்றாம் முறையும் சொன்னபோது…” என்று சொல்லிச்செல்ல பானுமதி கையமர்த்தி தடுத்தாள். “எங்கிருக்கிறார் என்று மட்டும் காட்டுக!” என்றாள். முதுசேடி “அவர்…” என மேலும் தயங்கி “அவர் வழக்கமில்லாமல் இன்று…” என்றாள். “சொல்க!” என்றாள் பானுமதி. “அறியேன். ஆனால் அகிபீனா கொண்டிருப்பாரோ என ஐயமாக உள்ளது” என்றாள். பானுமதி தலையசைத்தாள். “வருக, அரசி!” என்று முதுமகள் மரப்படிகளினூடாக பானுமதியை மேலே அழைத்துச் சென்றாள்.

பானுமதி இடைநாழியில் நின்று அங்கு திறந்துகிடந்த சாளரத்தைப் பார்த்து ஒருகணம் தயங்கி பின் முதுசேடியிடம் “அந்தச் சாளரமா?” என்றாள். “ஆம், இரவும் பகலும் அங்குதான் அமர்ந்திருக்கிறார். துயில்வதேயில்லை, சற்றே அயர்ந்து விழிப்புகொள்வதுடன் சரி” என்றாள் முதுமகள். “சற்று முன் சிறுமருத்துவர் ஒருவர் வந்தார். துயிலுக்கு மருந்து கோரியிருக்கிறார் என்று எண்ணினேன்… ஆனால் அவர் துயிலவில்லை.” பானுமதி தலையசைத்து “துயில் எளிதல்ல” என்றாள். “இப்போது எங்கிருக்கிறார்?” என்று தாரை கேட்டாள். “தன் தனியறைக்குள். அவ்வறையை ஒட்டி மிகச் சிறிய வைப்பறை ஒன்றும் உள்ளது. அதற்குள் உள்ள பேழைகளில் என்ன இருக்கிறதென்று அறியேன். பெரும்பாலான பொழுதுகளில் அங்குதான் இருக்கிறார். பொருட்களை ஒன்றிலிருந்து ஒன்று எடுத்து இடம் மாற்றுகிறார் என்று தோன்றுகிறது” என்றாள் சேடி.

பானுமதி “அவரை அழை” என்றாள். முதுசேடி அறைக்கதவருகே சென்றாள். பெரிய ஒற்றைக்கதவு மூடப்பட்டிருக்கவில்லை. சேடி அதை மெல்ல தட்டி “அமைச்சரே! அமைச்சரே!” என்று அழைத்தபோது உள்ளிருந்து “யார்?” என்றொரு குரல் கேட்டது. “நான் சூக்தை, கதவை திறவுங்கள்” என்றாள் சேடி. “யார்?” என்றார் விதுரர். அவர் குரல் குழறியது. “அமைச்சரே, அரசியர் வந்துள்ளார்கள். பட்டத்தரசி வந்துள்ளார்” என்று அவள் சொல்ல “நான் இங்கு அலுவலில் உள்ளேன்” என்றார் விதுரர். “என் மருகியர் கீழே இருப்பார்கள். அல்லது சுருதையிடம் சொல். அவர்களுக்குத்தான் அதெல்லாம் தெரியும்.” பானுமதி “நன்றாக தட்டு” என சொல்ல சேடி வலுவாகத் தட்டி “அமைச்சரே…” என்றாள். விதுரர் எரிச்சலுடன் “உள்ளே வா” என்றார்.

சேடி உள்ளே செல்ல முயல மெல்ல அவள் தோளை தொட்டபின் கதவைத் திறந்து பானுமதி உள்ளே நுழைந்தாள். கைகூப்பியபடி “வணங்குகிறேன், அமைச்சரே” என்றாள். சிறிய அறைக்குள் விதுரர் மஞ்சத்தில் அமர்ந்து தன்னைச் சூழ்ந்து வெவ்வேறு பொருட்களை பரப்பி வைத்து நோக்கிக்கொண்டிருந்தார். திரும்பி நோக்கி திகைத்து எழுந்து நின்று “அரசி, தாங்களா? தாங்கள் வருவதை எவரும் சொல்லவில்லை” என்றார். “மறந்துவிட்டிருப்பார்கள்” என்றபடி நான் “அமரலாமல்லவா?” என்றாள் பானுமதி. “அமர்க! அமர்க!” என்றபின் தாரையையும் அசலையையும் பார்த்து “வருக! அரசியர் என் இல்லத்திற்கு வந்தது பெரும்பேறு. பொறுத்தருள்க! இங்கு தங்களை வரவேற்க பெண்டிர் எவரும் இல்லை. என் இரு மகன்களும் மருகியரும் யாதவ நிலத்திலிருக்கிறார்கள். நான் வேண்டுமென்றால் கீழே சென்று…” என்று உடலில் கிளம்பும் அசைவை கொண்டார்.

“அமருங்கள், அமைச்சரே. தங்களை சந்தித்து சொல்லுரைத்துச் செல்லலாம் என்றுதான் வந்தேன்” என்றாள் பானுமதி. “ஆம், நான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். இன்று இரவுக்குள் நான் கிளம்பிச் செல்லவேண்டும். நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. கங்கையில் படகுக்கு சொல்லிவிட்டேன். மூத்தவரிடம் விடை பெற்றுவிட்டேன். பிறிதொன்றும் இங்கு செய்வதற்கில்லை” என்று விதுரர் சொன்னார். விந்தையானதோர் விசையும் உரத்த ஒலியும் அவர் குரலில் இருந்தது. அது அவரை பிறிதொருவர் என காட்டியது. அவர் உடலில் மெல்லிய நடுக்கு இருந்துகொண்டிருப்பதை பானுமதி பார்த்தாள். வெவ்வேறு அளவிலான பேழைகளும் சிமிழ்களும் மஞ்சத்தில் பரவிக்கிடந்தன.

அவள் விழிபோன திசையில் அவரும் நோக்கினார். “இவை என் மறைந்த துணைவி சுருதையின் நகைகள். நான் அனைத்தையும் மருகியருக்கு அளிக்கவில்லை. சிலவற்றை நானே வைத்துக்கொண்டேன். இந்த நகைகளில் அவள் வாழ்கிறாள். இதோ இப்படி இந்த மஞ்சத்தில் இந்த ஆரத்தை பரப்பி வைத்தால் சற்று நேரத்தில் அவளை பார்த்துவிட முடியும். இளமையாக இருப்பாள்.” முகம் மலர “அவளை முதுமையில்தான் நான் கூடுதலாக பார்த்தேன். இளமையில் அவளைவிட அலுவல்களே பெரிதென்று எனக்கு தோன்றின. ஆனால் இன்று அவளுடைய முதுமைத்தோற்றம் முற்றாகவே என் நினைவிலிருந்து அகன்றுவிட்டிருக்கிறது. ஏனென்றால் அவள் இன்றிருக்கும் விண்ணுலகில் முதுமை இல்லை. அழியா இளமை வாழும் இடம் அது” என்றார்.

பேச்சை மாற்றும்பொருட்டு பானுமதி “நீங்கள் அமைச்சர்களிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா?” என்றாள். விதுரர் “இங்கே எனக்கு இப்போது அமைச்சுப்பொறுப்பு என ஏதுமில்லை… உண்மையில் எனக்கு இன்று எவரிடமும் எப்பொறுப்பும் இல்லை” என்றபின் உரக்க நகைத்தார். “நான் இப்போது விரும்பினால் இந்த உடைவாளை எடுத்து என் கழுத்தை அறுத்துக்கொள்ளலாம். நான் சற்று முன் எண்ணினேன், அந்த ஆரத்தின் பதக்கம் வேல்முனை போலிருப்பதாக. அது சுருதை அணிந்த ஆரம். அவள் நெஞ்சில் எப்போதுமிருந்த வேல்முனை அது. அதை எடுத்து என் நெஞ்சில் பாய்ச்சினாலென்ன என்று எண்ணினேன். முன்பு செவ்வேள் முருகனுக்கு பலிகொடுக்கும் விலங்குகளை பொன்வேலால் குத்திக் கொல்வார்கள். நான் பலிவிலங்குபோல் தூயவன் அல்ல.” அவர் மீண்டும் நகைத்து “ஆனால் பலியாகப்போவதனாலேயே எவ்விலங்கும் தூயதாகிவிடுகிறது” என்றார்.

பானுமதி மீண்டும் பேச்சை மாற்றினாள். “எப்போது செல்லவிருக்கிறீர்கள்?” என்றாள். “இன்றே. சொல்லப்போனால் இப்போதே. நான் சில பொருட்களை எடுத்துச்செல்லவேண்டும். அவற்றை தேடிக்கொண்டிருந்தேன். நீங்கள் வருவீர்கள் என எண்ணவில்லை. ஆகவே உங்களிடம் என்ன பேசுவதென்று எனக்கு தெரியவில்லை” என்றார் விதுரர். “ஆனால் நான் சென்றாகவேண்டும். இங்கிருந்து படைகள் கிளம்புவதற்கு முன்னரே நான் கிளம்பியாகவேண்டும். படைகள் கிளம்பிய பின் இந்நகர் எப்படி இருக்கும்? அம்பு அகன்ற வில் என நாண் தளரும். இல்லை கொலைவாளின் குருதிபூசிய அமைதி கொண்டிருக்குமா? அதை பார்க்க நான் விரும்பவில்லை. உண்மையில் அதை பார்த்தால் என் பெருந்தவிப்பு ஒன்றுக்கு விடை கிடைக்கும். ஆனால் நான் இங்கிருக்க முடியாது. நான் இன்றே செல்லவேண்டும். எவர் சொல்லையும் நான் கேட்கப்போவதில்லை.”

பானுமதி “தாங்கள் ஏன் செல்கிறீர்கள் என்று நான் கேட்கப்போவதில்லை, அமைச்சரே. அது தங்கள் உரிமை. இப்போரில் நீங்கள் நடுநிலை வகிப்பதே அனைத்து வகையிலும் உகந்தது என்றும் தோன்றுகிறது” என்றாள். விதுரர் சீற்றம்கொண்டு எழுந்து உரத்த குரலில் “நடுநிலை வகிக்கப்போவதில்லை, வேண்டிக்கொள்ளப்போகிறேன். பாண்டவர்கள்தான் என் மைந்தர். அவர்கள் வெல்ல வேண்டுமென்று வேண்டுவேன். அறச்செல்வனாகிய யுதிஷ்டிரன் அஸ்தினபுரியையும் இந்திரப்பிரஸ்தத்தையும் கைப்பற்றி முடிசூடவேண்டுமென்று வேண்டுவேன். என் மைந்தனென்றால் அவன் யுதிஷ்டிரனே. சுசரிதனோ சுபோத்யனோ அல்ல. உடலில் எழுந்தவரா மைந்தர்கள்? உள்ளம் கொண்டவற்றுக்கு உரிமை உள்ளவர்களே மைந்தர்கள். ஆம், என் மைந்தன் அவனே” என்றார்.

“யுயுத்ஸுவும் என் மைந்தன்தான். அவன் இங்கு இருந்ததனால்தான் நான் இங்கு இருந்தேன். அவனிடம் நான் சொல்லிக்கொண்டிருந்தேன், அறத்தின்பொருட்டு உயிர்துறப்பவனுக்குரியதே வீடுபேறு என்று. என் சொற்கள் அவனில் முளைத்தெழுந்தன. அவன் என்னிடம் வந்து அங்கு செல்லப்போவதாக சொன்ன அன்றே முடிவு செய்துவிட்டேன். நானும் அங்கு செல்லவேண்டுமென்று.” அவருடைய சொற்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதுவனபோல் வெளிவந்தன. “ஆனால் அங்கு நான் சென்றால் அது அவர்களுக்கு பெருஞ்சுமை. களம் நின்று பொருதும் உடல் எனக்கு இல்லை. வெறுமனே அங்கு அரண்மனையில் அமர்ந்திருக்கவும் என்னால் இயலாது. படைசூழ்கைகளைப்பற்றி எதுவும் சொல்லும் நிலையிலும் நானில்லை. ஆனால் நான் அஸ்தினபுரியின் அனைத்துப் படைசூழ்கைகளையும் முன்னுரைத்துவிட்டேன் என்னும் பழியும் பாண்டவர்களுக்கு வரும். ஆகவேதான் அஸ்தினபுரியிலிருந்து கிளம்பி மிகிர நாட்டுக்கு செல்கிறேன்.”

“மிகிரநாட்டில் எனக்கான குடில் ஒருங்கியுள்ளது. ஆனால் அது தவக்குடில் அல்ல. அங்கு என் உள்ளம் போரில்தான் ஈடுபட்டிருக்கும். இப்பிறப்பில் தவமும் தனிமையும் எனக்கு அமையப்போவதில்லை. நான் வாளேந்தாத படைவீரன்… களம்நில்லாமல் கொல்பவன், குருதிசிந்துபவன்” என்றார் விதுரர். தொடர்ந்து பேசியதன் இளைப்பில் இடையில் கையூன்றி நின்றார். மூச்சுக்களாலேயே பேசிவந்ததன் தொடர்ச்சியை இழந்து தலையை அசைத்தார். கசப்புடன் சிரித்தபடி மீண்டும் மஞ்சத்தில் அமர்ந்தார். “இந்த நகரின் முகப்பில் தலைமுறை தலைமுறையாக அம்புகள் இறுகிக் காத்திருக்கும் கைவிடுபடைகளைப் போன்றவன் நான். அவை தங்கள் விசையால் தங்களையே கட்டி வைத்திருப்பவை.” நீள்மூச்சுடன் மஞ்சத்தில் கிடந்த ஒரு சிமிழை எடுத்து நோக்கியபடி விழிதாழ தலைதாழ்த்தி தன்னுள் ஆழ்ந்து அமைதியானார். நுரைக்குமிழிகள் உடைந்தழிவதுபோல கண்முன் அவர் சுருங்கி இல்லாமலாவதை பார்ப்பதுபோல் பானுமதி உணர்ந்தாள். தாரையின் வளையல்கள் ஒலித்த ஓசையில் அவர் நிமிர்ந்து அவர்கள் எவர் என வியப்பதுபோல அவளை பார்த்தார்.

பானுமதி “தங்கள் விழைவு எதுவாயினும் அது நிகழட்டும். அஸ்தினபுரியின் மணிமுடியின் சார்பாக நான் வந்து தங்களுக்கு முறைப்படி விடையளிக்கவேண்டும். ஆகவேதான் இளையோருடன் வந்தேன்” என்றாள். விதுரர் மிகையான பணிவுடன் உடல்வளைத்து வணங்கி “அஸ்தினபுரியின் அரசி இங்கு வந்தது என்னை மகிழ்விக்கிறது. ஆனால் அஸ்தினபுரியின் அவையிலிருந்து நான் தலைப்பாகை நீங்கி நெடுநேரமாகிறது. அறுபதாண்டுகள் இந்நகரின் அமைச்சனாக இருந்தேன். இந்நகரை நான் ஆள்கிறேன் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். சிலந்திபோல வலை பின்னி இந்த நாட்டின் அனைத்துச் சிற்றூர்களையும் ஒருங்கிணைத்து மையத்தில் நச்சுக்கொடுக்குடன் அமர்ந்திருக்கிறேன் என்று நான் சொன்னதுண்டு. எல்லாம் வெறும் உளமயக்குகள். யானையை தான் செலுத்துவதாக பாகன் எண்ணிக்கொள்வதைப்போல…” என்றார்.

“நான் அங்கே சாளரத்தில் இரவுகளில் அமர்ந்திருக்கையில் சில தருணங்களில் மிக அருகிலென அன்னை சத்யவதியை காண்கிறேன். அவர் விழிகளில் சிறிய நகைப்பு இருக்கிறது. இளமையில் நான் போர் குறித்து பேசும்போதெல்லாம் அவர் அந்நகைப்பையே காட்டினார். அன்று நான்…” என தொடங்கி நிறுத்திக்கொண்டு உளச்சோர்வுகொண்டவராக தலையை அசைத்து “நாம் ஏன் இதை பேச வேண்டும்? எல்லாம் வீண்மயக்குகள். நன்று, இத்தருணம் தெய்வங்களுக்குரியது. நானும் துரோணரும் பீஷ்மரும் சல்யரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தெளிவுகொண்டு துலங்கியிருக்கிறோம். நாங்கள் சூடிய அனைத்தையும் களைந்து வெறும் மண்ணில் நின்றிருக்கிறோம்” என்றார்.

விதுரர் முன்பின் தொடர்பற்ற சொற்களால் பேசுவதை அதற்கு முன் பானுமதி கேட்டிருக்கவில்லை. விதுரரின் வடிவில் பிறிதொருவர் அங்கிருப்பதாக அவள் உள்ளம் எண்ணியது. அத்தருணத்தை முடித்து எழுந்துசெல்ல அவள் விழைந்தாள். “தாங்கள் எங்களை வாழ்த்தி விடைகொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம், அமைச்சரே” என்றாள். “நலம் சூழ்க! அதுவன்றி வேறெதை சொல்வேன்! நீங்கள் அறியாததா என்ன? விண்பேருருவன் இந்நகரைவிட்டு செல்லும்போது உரைத்ததென்ன? இந்நகரில், இவ்வரசில், இங்குள்ள குடிகள் மேல், இனி அவருக்கு பொறுப்பேதுமில்லை. தெய்வம் கைவிட்ட பின் எச்சிறப்பு கூடும்? எவர் தங்கி வாழமுடியும்? கெட்டது குடி, பட்டது கொடிநகர், பரவி நிறைகிறது இருள் எங்கும்!”

விதுரரின் விழிகள் வெறிப்புகொண்டிருந்தன. “நான் இருளை மட்டுமே பார்க்கிறேன். ஒருதுளி ஒளிக்காக இரவும் பகலும் விழி துழாவியதுண்டு. ஆனால் இருளை மட்டுமே பார்க்கிறேன்” என்றார். விரைந்த உடலசைவுகளுடன் எழுந்து கதவைத் திறந்து வெளியே சென்று சாளரத்தைச் சுட்டி அங்கு நின்றபடியே பதறும் குரலில் சொன்னார் “முன்பு இந்தச் சாளரத்தில் நின்று என் அன்னை பார்த்ததென்ன என்று நான் வியந்ததுண்டு. அங்கே உங்கள் மாளிகையில் சம்படை தேவி அமர்ந்து பார்த்ததென்ன? இன்று அமர்ந்திருக்கும் இளவரசியர் பார்ப்பது என்ன? நான் சொல்கிறேன் எதை பார்க்கிறார்கள் என்று. இருளை!”

அவருடைய விழிகள் பித்தனின் விழிகள்போல் நிலையற்று அலைந்தன. “இருளை! முற்றிருளை! குருதியால், கண்ணீரால், தனிமையால், வெறுமையால் நிறைக்கப்பட்ட இருளை! அதைத்தான் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நாமெல்லாம் வேறெதையோ நோக்கி உழன்றுகொண்டிருக்கையில் அவர்கள் மெய்யுருவான அதை பார்த்தார்கள். செல்வழியில் ஒரு திருப்பத்தில் நாம் பேய்த்தெய்வம் ஒன்றை பார்த்துவிடுவதைப்போல.” கைகளைத் தூக்கி விரித்து “இருள், வேறொன்றுமில்லை… வேறொன்றுமில்லை!” என்றார். “அவர்கள் எண்ணியிருக்கவில்லை. ஆனால் பார்த்துவிட்டார்கள். இப்போது நானும் அதை பார்த்தேன்.”

தன்னிலை உணர்ந்து பெருமூச்சுவிட்டு தோள் தளர்ந்து அவர் மீண்டும் வந்து தன் மஞ்சத்தில் அமர்ந்தார். “என்ன பேசிக்கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை. எனக்கு பித்தெழுந்துவிட்டதா என்றே ஐயுறுகிறேன். நான் சற்று அகிபீனா புகை கொண்டேன். இந்த அலைக்கழிப்பில் இருந்து விடுதலைபெற எண்ணினேன். தமையனிடம் விடைபெற்று வரும்போது என் உள்ளம் சிதறிவிடும் என்று தோன்றியது. சற்றேனும் துயின்றாலொழிய நிலையுள்ளத்துடன் நகர்நீங்க இயலாது என்று கருதினேன். ஆனால்…” அவர் கைகூப்பி “நன்று! தாங்கள் வந்தது எனக்கு பெரும்பேறு. என் துணைவி இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பாள். தெரிந்திருக்கும், அவள் பெயர் சுருதை. உத்தர மதுராபுரியின் தேவகரின் மகள். அவள் தமக்கைதான் தேவகி. அவ்வகையில் இளைய யாதவன் எனக்கு மகன்” என்றார்.

அவர் உதடுகள் கடுங்குளிரில் என நடுங்கின. “அவள் இன்று இருந்திருக்கலாம். இப்புவியில் ஏதேனும் ஒன்று எஞ்சியிருக்கும் எனக்கு. நான் பற்றிக்கொள்ள ஒரு கோல்.” அக்கணமே உள்ளம் பற்றிக்கொள்ள கைவீசியபடி கொந்தளிப்புடன் அவர் எழுந்தார். “கணவனை விட்டு முன்னரே மறையும் மனைவியரைப்போல் கொடியவர் எவருமில்லை. அவனைத் தூக்கி முடிவிலாத் தனிமையில் வீசிவிட்டுச் செல்கிறார்கள். இரக்கமே இல்லாமல் அவனுக்கு அவர்கள் அளித்த அனைத்தையும் திரும்ப எடுத்துச்செல்கிறார்கள். அவள் மேலே எங்கிருந்தோ நோக்கி நகைக்கிறாள் என்று நினைக்கிறேன். வாழ்நாளெல்லாம் அவளுக்கு நான் ஒரு வஞ்சம் இழைத்தேன். உள்ளத்தின் ஆழத்தில் அவள் அதை அறிந்திருப்பாள். அதன் பொருட்டே இந்தப் பெருவஞ்சத்தை எனக்கிழைத்துச் சென்றிருக்கிறாள்.”

விதுரர் நகைத்து “என்ன வஞ்சம் என்கிறீர்களா? என் ஆணவத்தால் நான் உருவாக்கிக்கொண்ட வஞ்சம். என் தகுதிக்கு ஒரு பேரரசி எனக்கு துணைவியாக வேண்டாமா? பட்டத்து யானைக்கு சற்றும் குறைவான எதில் நான் ஊரமுடியும்? ஆம், அதுதான். ஆனால் அதை நான் கூறப்போவதில்லை” என்றார். அவர் ஒரு பேழையை சுட்டிக்காட்டி “இங்கிருந்து கிளம்புகையில் நான் அதை எடுத்துச்செல்லக்கூடாதென்று எண்ணினேன். என் தமையன் எனக்கு அளித்த அஸ்வதந்தம் எனும் வைரம் அது. இத்தனை நாள் என்னை ஆணவத்தில் ஆழ்த்தியது அது. இந்நகரை நான் ஆள்கிறேன் என்ற உளமயக்கை எனக்கு அளித்தது. நானில்லையேல் இந்நகரில்லை என்று எண்ணிக்கொள்ள வைத்தது. அதைச் சுழற்றி அப்பால் வீசியிருந்தால் என்றோ விடுபட்டிருப்பேன். எத்தனை ஆயிரம் முறை அதை வீசியிருப்பேன்! எத்தனை முறை அதை வெறுத்து கடுஞ்சொல் உரைத்திருப்பேன்! ஆனால் என்னால் இயலாதென்று சற்று முன்னர்தான் உணர்ந்தேன்” என்றார்.

“ஏனென்றால் அது இல்லையேல் நான் வெறும் சூதன். கொடுநரகில் உழல்வதைவிட நான் அஞ்சுவது வெறும் சூதன் என்னும் நிலையை. அவ்வாறாகாமல் இருக்கும்பொருட்டு நான் எவ்வஞ்சத்தையும் இயற்றுவேன். பெற்ற தாயை கொல்வேன்…” என்றார் விதுரர். “நீங்கள் வருவதற்கு முன் அதை எடுத்து வீசினேன். கிளம்பிச் செல்வதற்குரிய மரவுரி ஆடைகளை கட்டி அதோ அங்கே வைத்தேன். ஆனால் மீண்டும் அதை எடுத்தே ஆகவேண்டுமென்று தோன்றியது. வேண்டாம் கிளம்புக கிளம்புக என்று எனக்கு நானே ஆணையிட்டேன். சவுக்கடிபோல அந்த வலியை வாங்கிக்கொண்டு என் உள்ளம் பின்னால்தான் சென்றது. அப்போதுதான் சேடி வந்து சொன்னாள் நீங்கள் வந்திருப்பதாக. ஆம், அவள் சொன்னாள். நினைவிருக்கிறது. ஆனால் நான் திரும்பிச் சென்று அதை தேடத் தொடங்கினேன். மீண்டும் மீண்டும் அவள் வந்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். சினந்து செல்க, நான் வருகிறேன் என்றபின் மீண்டும் தேடினேன்.”

அவர் அப்பேழையை திறந்தார். உள்ளே ஏதுமில்லை “ஆ!” என்று பதறியபின் திரும்பி அறைக்குள் அலைமோதினார். “இங்குதான் இருந்தது. நான் தேடி எடுத்தேன். அதை எவரோ கவர்ந்துவிட்டனர்… இல்லை, இங்கே எங்கோ உள்ளது அது.” ஒவ்வொரு பொருளாக எடுத்து நோக்கி வீசியெறிந்தார். பின் நினைவுகூர்ந்து எழுந்து துணியை பற்றமுடியாதபடி பதறி நடுங்கிய கைகளால் தன் கச்சையை அவிழ்த்து அதிலிருந்து அஸ்வதந்தத்தை எடுத்துக்காட்டினார். வெண்ணிறமான சிறு கூழாங்கல்போல் அது ஒளியற்றிருந்தது. பற்கள் தெரிய பித்துச்சிரிப்புடன் “இதுதான் அஸ்வதந்தம்! மொத்த அஸ்தினபுரிக்கும் இது நிகரானது. என் உடன்பிறந்தார் பாண்டு எனக்கு இதை அளித்தார். நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். அஸ்தினபுரிக்கு நிகராக அளிக்கப்பட்டது இது. அதைவிட பெரிய பலவற்றுக்கும் நிகரானது” என்றார். அவர் அந்த வைரத்தை நீட்டிக்காட்டினார். அது மிக மெல்ல ஒளிகொள்ளத் தொடங்கியது. பறவைவிழி இமை தாழ்ந்து ஒளிகொள்வதுபோல. பின்னர் உப்புக்கல் என மின்னியது.

அவர் அதை தன் இரு விரல்களில் வைத்து ஓட்டிக்கொண்டிருந்தார். “புரவியின் பல்! ஊழிப்புரவி! வடவைப் பேரெரி!” அவர் அதை மீண்டும் தன் மடியில் வைத்தார். உடனே மீண்டும் அதை எடுத்து நோக்கினார். “தென்னெரி இல்லங்களில் எரிவது. வடஎரி வானில் திகழ்வது. இரண்டு எரிகள். இரண்டுக்கும் நடுவே அலைக்கழிபவன் நான்.” பானுமதியை நோக்கி நீர்ப்படல விழிகளுடன் “அறிக, தென்னெரிகள் அனைத்திற்கும் அனல் அளிப்பது வடக்கே எரியும் ஊழிக்கனல்தான். பெருவெள்ளம் எழுந்து ஊற்றுகளையும் கிணறுகளையும் நிறைப்பதுபோல் வடஎரி எழுகையில் தென்னெரி மறைந்துவிடும்” என்றார். அந்த வைரம் அவர் கையில் அனல் என ஒளிவிடத் தொடங்கியது. சிறிய அகல்போல அவர் கை தோன்ற அதில் ஏற்றப்பட்ட சுடராக அது தோன்றியது. “அரசி, இதை நான் எடுத்துச் செல்கிறேன். இது இல்லாமல் சென்றால் நான் விடுபடுவேன். ஆனால் என் உள்ளம் விடுபடுதலை விரும்பவில்லை. திரும்ப வரவேண்டுமென்று அது ஆணையிடுகிறது. இப்புரவியின் வாலை பற்றிக்கொண்டு ஒருகணமும் நில்லாமல் ஓடுவதே என் ஊழ்.”

“நான் எளியவன், சிறியவன். அதை இப்போது உணர்கிறேன். இதை எனக்கு அளிக்கையில் என் தமையன் என்ன எண்ணியிருப்பார்? உனக்கு வேண்டியது இதுதானே என்றா? எஞ்சிய வாழ்நாளெல்லாம் இதை வைத்து என்னை கட்டிப்போட முடியுமென்றா? எத்தனை சரியாக என்னை புரிந்துகொண்டிருக்கிறார்!” பெருமூச்சுடன் அவர் மீண்டும் அமைதியடைந்தார். “பேசலாகாதென்று என் ஆவியை கட்டுப்படுத்தினேன். சென்ற பல மாதங்களாக அவைகளில் நான் சொல்லுரைத்ததில்லை. இப்போது ஏன் இத்தனை பேசுகிறேன் என்று தெரியவில்லை. ஆம், நான் அகிபீனா இழுத்தேன். முன்பும் சிலமுறை இழுத்துள்ளேன். துயில்வதற்காக. ஆனால் துயில் என்னைவிட்டு முழுதாக நீங்கிவிட்டது. நான் துயின்றால் அந்தப் பொழுதில் போர்மூண்டு இந்நகரும் என் குடியும் முற்றழிந்துவிடும் என அஞ்சுகிறேன். சற்று கண்ணயர்ந்தாலும்கூட போர்முரசுகளும் படையோசைகளும் சாவோலங்களும் கேட்டு விழித்துக்கொள்கிறேன்.”

அவர் முற்றாக அணைந்து நனைந்த துணியென உடல் துவண்டார். நெஞ்சில் கைவைத்து தலைவணங்கி “நீங்கள் என்னை வழியனுப்ப வந்திருக்கிறீர்கள். உங்களிடம் நற்சொல் உரைத்து முறைமை செய்யும் பொறுப்புள்ளவன் நான். அதைத்தான் நான் செய்யவேண்டும்” என்றார். எழுந்து தன் மேலாடையை சரிசெய்து கைகூப்பி வணங்கி “நீங்கள் வந்தமைக்கு நன்றியுடையவனாக இருப்பேன். உள்ளம் நிறைவுற்றது” என்றார். பானுமதி எழுந்து “நன்று அமைச்சரே, சென்று வருக! அஸ்தினபுரி உங்கள் முன் பணிந்து வழியனுப்புகிறது. தாங்கள் திரும்பி வரும்போது இதே பணிவுடன் இந்நகர் தங்களை வரவேற்கும். அமைச்சரென்றும் சென்ற மூதரசரின் மைந்தரென்றும் இன்றுள பேரரசரின் இளையோர் என்றும் தங்களுக்கு இருக்கும் இடம் ஒருபோதும் இல்லாமல் ஆவதில்லை” என்றாள்.

“ஆம், அதை நான் அறிவேன்” என்று சோர்ந்து தழைந்த குரலில் அவர் சொன்னார். பானுமதி “பாண்டவர்களின் வெற்றிக்காக நீங்கள் வேண்டிக்கொள்வது எவ்வகையிலும் தவறல்ல, அமைச்சரே. ஆனால் எளிய பற்றுகளின் பொருட்டு சார்புநிலை எடுப்பவர்கள் துயரத்தை மட்டுமே ஈட்டுகிறார்கள்” என்றாள். அவர் முள்ளால் குத்தப்பட்டதுபோல் உடலில் மெல்லிய துடிப்பெழ “எவர் மேல் பற்று?” என்று கேட்டார். “எவர்மேல் எனக்கு பற்று? சொல்க!” பானுமதி “அறத்தின்மேல் பற்றுகொள்க! பேரறத்தானாக நின்றிருக்கும் இளைய யாதவர்மேல் பற்று கொள்க! நீங்கள் கொண்ட பற்று அதுவல்ல. அது நீங்கள் கைக்கொள்ள முனைந்து ஊழால் தவிர்க்கப்பட்ட ஒன்று. அது நீங்களே சற்று முன் சொன்னதுபோல் வெற்றாணவம் மட்டுமே” என்றாள்.

விதுரர் “ம்” என முனகியபடி மஞ்சத்தில் அமர்ந்தார். “எப்பெருந்தவமும் ஒருநாள் நிறைவேறும் என்று சொல்லுள்ளது, அமைச்சரே. ஆனால் உலகியலில் எதையேனும் தவம் செய்து அடைந்தவர்கள் அத்தவத்திற்கு முன் தாங்கள் வென்றடைந்தது மிக மிகச் சிறிதென்று உணர்வார்கள். அதுவே தங்களுக்கும் நிகழும்” என்றாள். விதுரர் மெல்லிய விம்மலோசை ஒன்றை எழுப்பினார். “தங்களை துன்புறுத்தும் பொருட்டு சொல்லவில்லை, அமைச்சரே” என்றாள் பானுமதி. “இல்லை, நான் அறிவேன். நீங்கள் பிறவியிலேயே பேரரசி. மும்முடி சூடி புவியாள பெற்றி கொண்டவர். அன்னை பெருந்தெய்வங்களின் சொல் உங்கள் நாவில் எழுகிறது. அது நிகழ்க! அவ்வாறு நிகழ்ந்து அதிலிருந்து நான் விடுபட்டேனெனில் அதுவே எனக்கு வீடுபேறு. அவ்வாறே ஆகுக!” என்றார் விதுரர்.

“நான் கிளம்புகிறேன், அமைச்சரே” என்று சொல்லி மீண்டும் பானுமதி கைகூப்பினாள். திரும்பி தன் இளையோரை நோக்கியபின் மேலாடையை இழுத்து அணிந்துகொண்டு திரும்பி நடந்தாள். விதுரர் மெல்ல நடுங்கியபடி கைகூப்பி நின்றார்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45

tigபானுமதி ஆடிமுன் அமர்ந்திருக்க சேடியர் அவள் ஆடைகளையும் குழலையும் சீர்படுத்தினர். கைகளைக் கட்டியபடி அவளுக்கு முன்னால் நின்று நோக்கிக்கொண்டிருந்தாள் தாரை. பின்னால் சுவர்சாய்ந்து அசலை நின்றிருந்தாள். பழக்கமற்ற இளம்சேடி சிறு பொற்பேழையிலிருந்து ஒரு கணையாழியை எடுக்க அசலை அதை பார்த்து “அது பாஞ்சாலத்து அரசி அளித்தது அல்லவா?” என்றாள். “எது?” என்றாள் தாரை ஆவலுடன் குனிந்து நோக்கி. “இந்தக் கணையாழியை பாஞ்சாலத்து அரசி எனக்காக சாத்யகியிடம் கொடுத்தனுப்பினாள். நான் அதை எப்போதும் அணிந்திருந்தேன். பின்னர் அகற்றிவிட்டேன்” என்றாள் பானுமதி.

தாரை அதை எடுத்து நோக்கி “இதுதானா?” என்றாள். “கள்ளிச்செடியின் தண்டில் துளிக்கும் பால்துளி போலிருக்கிறது” என்றபடி அதன் அருமணியைச் சுழற்றி அதிலிருந்து வந்த ஒளித்துளியை தன் இடது உள்ளங்கையில் வீழ்த்தி “பழுதற்றது. ஒளி கூர்மைகொண்டுள்ளது” என்றாள். அசலை “எப்போது கழற்றினீர்கள்? நான் அதை நோக்கவேயில்லை” என்றாள். பானுமதி விழிகாட்ட சேடியர் பணிந்து அறையிலிருந்து விலகினர். பானுமதி நீள்மூச்சுடன் உடலை எளிதாக்கி நீட்டி “இளைய யாதவர் இறுதிச் சொல்லுரைத்து இங்கிருந்து சென்ற அன்று” என்றாள். “அன்றுதான் அனைத்தையும் இறுதியாக முடிவெடுத்தேன்.”

அசலை அதை புரிந்துகொண்டு அமைதியானாள். அத்தருணம் இருவருக்குமே மழைக்கு முந்தைய வெம்மைபோல் மூச்சுத்திணறச் செய்வதாக இருந்தது. அதை எப்படி கடப்பதென்று அறியாதவர்கள்போல் அமர்ந்திருந்தார்கள். தாரை அந்த ஒளிப்புள்ளியையே நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் “முன்பு கலிங்கத்தில் ஓர் அரசனின் மாளிகையையே வைரம் ஒன்று எரித்தழித்தது என்று ஒரு கதை உண்டு” என்றாள். பானுமதி அதை செவிகொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் தாரை அதை சொல்ல விரும்பினாள். எனவே எழுந்து நின்று அந்த அருமணியை சாளர வெளிச்சத்தில் காட்டி அதன் குவியொளிப் புள்ளியை அங்கிருந்த திரைச்சீலை ஒன்றில் வீழ்த்தி “இவ்வாறுதான் அது நிகழ்ந்தது” என்றாள்.

“அவள் பெயர் சித்ரிகை. மச்சர்குலத்தில் பிறந்தவள். அவள் குடி முன்பு அரசர்களாக கங்கைவெளியை ஆண்டது. ஷத்ரியர்களால் அவர்கள் வெல்லப்பட்டனர். கங்கைநீரை இழந்து உள்காடுகளின் சுனைகளை நம்பி வாழலாயினர். சித்ரிகை தன் தந்தையுடன் மீன்பிடித்து வாழ்ந்தாள். அவள் விரலில் ஒரு கணையாழி இருந்தது. அதில் இருந்த மீன்கண் வைரம் கூரிய ஒளிகொண்டது. மச்சர்குலத்தின் பேரரசியரான மூதன்னையர் அணிந்திருந்தது. வழிவழியாக அன்னையரினூடாக அவளை வந்தடைந்தது.” கதை சொல்லத் தொடங்கியதுமே அக்கதையை அவள் அன்னையரிடமிருந்து கேட்ட நினைவை நோக்கி சென்றாள். ஆகவே சிறுமிக்குரிய குரலும் சொற்களும் அவளிடம் எழுந்தன. விழிகளை உருட்டி கைகளை அசைத்து அவள் பேசினாள். அவ்வாறு இளமைக்கு மீண்டமை அவளை அனைத்திலிருந்தும் விடுவிக்கவே முகமும் மலர்ந்தது.

“சித்ரிகை ஒருநாள் தன் படகுடன் எல்லை கடந்து கங்கைநீர்வெளிக்கு சென்றாள். அவள் அங்கே மீன் வேட்டையாடிக்கொண்டிருந்தபோது அவ்வழியாக அரசப்பெரும்படகில் சென்ற கலிங்க மன்னன் அவளை கண்டான். காலை இளவெயிலில் அவள் அழகைக் கண்டு பித்து எழுந்த அவன் தன் வீரரை அனுப்பி அவளை சிறைப்பிடித்துவரச் செய்தான். படகிலேற்றி தன் தலைநகருக்கு கொண்டுசென்றான். தன்னை அவன் தொடலாகாது என அவள் விலக்கினாள். என்னுடன் அனல் உள்ளது, உன் அரண்மனையுடன் உன்னை எரித்தழிப்பேன் என்றாள். அவன் அவளை எள்ளி நகையாடி தன் அரண்மனையின் எட்டாவது மாடத்தில் சிறைவைத்தான். அவளுக்கு அன்னமும் நீரும் ஆடையும் மட்டும் அளிக்கப்பட்டன. அவ்வறைக்குள் அகல்சுடர்கூட ஏற்றப்படவில்லை. சொல்லால் அனல் ஏற்ற முடியுமா, அன்றி உன் விழிதான் எரிக்குமா? காட்டுக என்று அரசன் அவளை எள்ளிநகைத்தான்.”

“அவன் அவளை வன்மையால் அடைந்தபின் மஞ்சத்தில் துயில்கையில் அவள் எழுந்து சென்று சாளரத்தினூடாக வந்த காலைக்கதிரில் தன் மீன்விழி கணையாழியை காட்டினாள். அவ்வொளிப்புள்ளி திரைச்சீலையை பற்றி எரியச் செய்தது. அரக்குபூசி கட்டப்பட்ட அவ்வரண்மனை முற்றாக எரிந்தழிந்தது. சாம்பல்மேடு என்றான அரண்மனையில் அரசனும் அவன் ஏவலரும் வெள்ளெலும்புகளாக கிடந்தனர். சித்ரிகையின் வெள்ளெலும்பின்மேல் அவள் கணையாழியின் அருமணியிலிருந்து வந்த ஒளி வந்து தொட்டதும் அவள் ஓர் அழகிய வெண்கொக்கென்றானாள். சிறகு விரித்து எழுந்து பறந்தாள். அருகிருந்த பெருநதியின் கரையில் சென்றமர்ந்த கொக்கு தன் நிழலை கரையில் விட்டுவிட்டு நீருக்குள் வெள்ளிநிறமான மீனாக மாறி பாய்ந்து மூழ்கி திளைத்து ஆழத்தை சென்றடைந்தது.”

“அதன்பின் கலிங்கத்தில் ஒழிந்த நதிக்கரைகளில் கொக்குநிழலை மக்கள் கண்டனர். தொலைவில் கொக்கென்று தோன்றி அருகணைகையில் நிழலென்று கரைவது. நீராழத்தில் கொக்கென வெள்ளை சிறகசையப் பறக்கும் வெள்ளிமீன் ஒன்று வாழ்வதையும் அவர்கள் கண்டனர்” என்று தாரை சொன்னாள். “அந்த அருமணி ஒரு மரமாக அங்கே முளைத்தது. அதன் சின்னஞ்சிறு கனிகள் கண்ணீர்முத்துக்கள் போலிருந்தன. அந்த மரம் பாஷ்பபிந்து என்று அழைக்கப்பட்டது. அவ்வரண்மனைக்குமேல் அது விழிநீர் உகுத்தபடியே நின்றது. கலிங்க அரசியர் அந்த மரத்தின் மணிகளாலான மாலை அணிந்தபடி அங்கே பூசனை செய்வதுண்டு.”

அவள் சொன்ன அக்கதையை உளம்வாங்காமல் அவர்கள் இருவரும் வெறுமனே நோக்கினர். அவள் அக்கதையால் வேறெங்கோ கொண்டுசெல்லப்பட்டு அமைதியடைந்தாள். காற்றில் சாளரத்திரை படபடக்கும் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. சற்றுநேரம் கழித்து மீண்டு வந்த பானுமதி “நாம் கிளம்பவேண்டும்” என்றாள். தாரை “ஆம்” என்றாள். பானுமதி நிலம் நோக்கி குனிந்து அமர்ந்திருந்த அசலையை சற்றுநேரம் நோக்கிக்கொண்டிருந்தாள். அசலை அந்தக் கணையாழியை வெறுமனே நோக்கி அமர்ந்திருந்த பின் திரும்பி பானுமதியிடம் “மாயை உபப்பிலாவ்யம் சென்று எரிபுகுந்தாளென்ற செய்தியை நேற்றுதான் முழுமையாக கேட்டறிந்தேன்” என்றாள்.

பானுமதி ஒன்றும் சொல்லவில்லை. அவள் முகத்தை கூர்ந்து பார்த்தபடி அசலை “அத்தனை படை அடுக்குகளையும் கடந்து அவள் சென்றது விந்தையானது என்று சூதர் சொன்னார்கள். நுண்ணுருக்கொண்டு குளிர்ந்த காற்றாக அவள் படைகளைக்கடந்து சென்றாளென்று கதை மாறிவிட்டிருக்கிறது” என்றாள். தாரை “இளைய யாதவர் எண்ணினால் அதை எளிதில் இயற்றியிருக்க முடியும்” என்றாள். “ஆம், அது அவருடைய திட்டம்தான். ஆனால் இங்கிருந்து எவரோ உதவாமல் அது நிகழாதென்றே நான் உய்த்துணர்ந்தேன்” என்றாள் அசலை. தாரை அதை உளம்கொள்ளாமல் எழுந்துசென்று சாளரத்தினூடாக அந்த அருமணியை நீட்டினாள். திரும்பி நோக்கி “எந்தப் பறவையாவது இதை தானியமணி என எண்ணி கொத்திச்செல்லுமா?” என்றாள். அசலை புன்னகைத்து “பறவைக்குத் தெரியாதா?” என்றாள். தாரை வெளியே நோக்கி “ஆம், அவை அறிந்திருக்கின்றன” என்றாள்.

பானுமதி அசலையை நோக்காமல் “என் கணையாழியை கொடுத்தனுப்பியிருந்தேன்” என்றாள். அசலை அதை முன்னரே உய்த்திருந்தாள். உணர்வில்லாமல் “ஏன்?” என்று கேட்டாள். “அவள் அங்கு செல்லவேண்டியவள். உரு அங்கிருக்க நிழல் இங்கிருக்க இயலாது” என்று பானுமதி சொன்னாள். அசலை “அவள் அங்கு சென்றதனால்தான் பாஞ்சாலத்து அரசி மீண்டும் கொற்றவை வடிவு கொண்டாள். அவளுடைய அறைகூவல்தான் இன்று அப்படைகளை தெய்வஆணைபோல் ஒருங்கிணைத்து ஆற்றல் கொள்ளச் செய்கிறது” என்றாள். பானுமதி “ஆம், அது அவ்வாறே நிகழவேண்டும்” என்றாள். “அதுவே ஊழெனில் நாம் அதை மறுக்க இயலாது.”

சென்ற பல மாதங்களாகவே தங்களுக்குள் சொற்கள் மிகவும் குறைந்துவிட்டன என்று பானுமதி எண்ணினாள். நாளெல்லாம் முறைமைச்சொற்களும் அணிச்சொற்களும் உரைத்தபின் நாதளர்ந்து உள்ளம் ஒழிந்துதான் அவர்கள் தனியறைக்கு மீண்டனர். சொல்லின்மையை உணர்ந்தபடி அருகருகே ஒருவரை ஒருவர் நோக்காமல் அமர்ந்திருந்தனர். பேச்சு நின்றுவிட்டால் அதை முயன்று முன்னெடுக்கவேண்டியிருந்தது. இல்லையேல் எவரேனும் அங்கு வந்து அழைப்பது வரை அமைதி நீடித்தது. பானுமதி அசலையை நோக்காமல் “மாயை அங்கு சென்று பாஞ்சாலத்தரசியை உயிர்கொண்டு எழுப்பவேண்டுமென்று எண்ணியே நான் அனுப்பினேன்” என்றாள். அசலை “அது உங்கள் கொழுநருக்கு எதிரான செயலல்லவா?” என்றாள். “இல்லை. அதற்கு முன் அவரிடம் அதை செய்யப்போவதாக சொன்னேன். அவர் அறியாத எதையும் இயற்றுபவளல்ல நான்” என்றாள் பானுமதி.

அசலை எழுந்து அருகே வந்து “அவர் என்ன சொன்னார்?” என்றாள். பானுமதி “அவர் விழிகளில் எந்த மாற்றமும் தென்படவில்லை. உன் விழைவுப்படி நிகழ்க என்றார். நான் மீண்டும் ஏதோ சொல்லத் தொடங்குகையில் அரசி இந்நகர் உனது ஆட்சியில் உள்ளது என்றார்” என்றாள். அசலை “விந்தைதான். போரில் அதன் விளைவுகளை அறியாதவரா என்ன?” என்றாள். பானுமதி “நன்கு அறிவார். இந்தப் போரை எந்த ஊடுவழியினூடாகவும் வென்றெடுக்க இன்று அவர் விரும்பவில்லை. பாண்டவர்கள் தங்கள் முழுவிசையுடன் எழுந்து வரவேண்டுமென்றே அவர் எண்ணுகிறார். பாண்டவர் படைகளுக்குள் எண்ணத்திரிபுகளையும் நம்பிக்கை மாறுபாடுகளையும் உருவாக்கலாம் என்று ஒருமுறை அவையில் சகுனிதேவர் உரைத்தபோது முதற்சொற்றொடரிலேயே கைநீட்டி அதை தடுத்தார். சூழ்ச்சிகள் இன்று எனக்கு உகந்தவையல்ல. நான் தேவன். என் எதிரிகளும் தேவர்களாகவே எழவேண்டும் என்றார். மேலும் ஏதோ பேச சகுனிதேவர் நாவெடுத்தபோது கணிகர் கைநீட்டி அவர் காலைத்தொட்டு நிறுத்துவதை கண்டேன்” என்றாள்.

அசலை “ஆம், அரசர் முற்றாக பிறிதொருவராக ஆகிவிட்டிருக்கிறார்” என்றாள். பானுமதி “இன்று நம் முன் நின்றிருக்கும் அரசர் விண்வல்லமைகளில் ஒன்றான கலியின் வடிவம். களிறுகள் அரசப்பெரும்பாதையில் மட்டுமே செல்ல முடியும்” என்றாள். அசலை “நீங்கள் அத்தெய்வத்தால்தான் கவரப்படுகிறீர்களா, அரசி?” என்றாள். “ஆம் என்று இப்போது உணர்கிறேன். எப்போதுமே கருவடிவில் அத்தெய்வம் அவருடன்தான் இருந்துகொண்டிருந்தது. அவரில் என்னை கவர்ந்தது அதுவே” என்றாள் பானுமதி. “முற்றிலும் பொலிந்து அது எழுந்தபோது ஐயமறக் கண்டேன். தெய்வமெதுவானாலும் அதற்கு நம்மை முற்றளிப்பதில் பெருநிறைவு உள்ளது.”

அசலை மேலும் பேச விழையாமல் சொல்மாற்றும்பொருட்டு “நமது இளையோன் இங்கு படைப்பிரிவுடன் வந்து சேர்ந்துள்ளான், அக்கையே” என்றாள். “ஆம், என்னை வந்து கண்டு வாழ்த்து பெற விரும்பினான். அஸ்தினபுரியின் அரசி எந்தத் தனியரசனிடமும் அணுக்கம் கொண்டவளல்ல, அவைக்கு வந்து வாழ்த்து பெற்றுச்செல்க என்று சொல்லி அனுப்பினேன். நேற்று முன்னாள் என் அவைக்கு முன் வந்து வாள் தாழ்த்தி வணங்கி நற்சொல் பெற்று சென்றான்” என்றாள். அசலை மீண்டும் சொல்லணைந்து விழிகளைத் தாழ்த்தி அமர்ந்திருந்தாள்.

முற்றளித்தல் என்ற சொல் மட்டும் பானுமதியின் உள்ளத்தில் இருந்தது. வேறு எவரோ சொல்லி அங்கே எஞ்சவிட்டுச் சென்றதுபோல, எங்கிருந்தோ தொடர்பிலாது நினைவில் நீடிப்பதுபோல. அவள் “இளையவர் விடைகொள்ள வந்தாரா?” என்றாள். அசலை திடுக்கிட்டு விழித்து அவ்வினாவை உணர்ந்து “ஆம்” என்றாள். “நேற்று இரவே வந்து விடைபெற்றுவிட்டார்” என்றாள். “நேற்றே வந்தாரா?” என்றாள் பானுமதி. “இன்று அவர் அரசரைவிட்டு எங்கும் செல்லவியலாது என்றார்.”

அவள் பேசுவதற்காக பானுமதி நோக்கி அமர்ந்திருந்தாள். “குடித்தெய்வங்களுக்கு பூசனை செய்து கொண்டுவந்த செஞ்சாந்துடன் என் மஞ்சத்தறையில் காத்திருந்தேன். நெடுநேரம் ஆன பின்னர் சலித்து சற்றே துயின்றுவிட்டேன். பின்னிரவில் அவர் வந்தார். அவரது எடைமிக்க காலடி ஓசையை தொலைவிலேயே கேட்டேன். எத்தனை ஓசையிலும் அதை மட்டும் நான் தவறவிடுவதில்லை. ஆனால் என்னால் எழ முடியவில்லை. அத்தனை களைப்பு. கலைமகளுக்குரிய பொழுதில் காலையில் எழுந்தது. ஒருகணமும் அமராமல் பகல் முழுக்க அலைந்துகொண்டிருந்தேன். எழவேண்டும் எழவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். உண்மையில் எழுந்து அமர்ந்து அவரை வரவேற்றுவிட்டேன் என்றுகூட கனவுக்குள் நடித்தேன். ஆனால் படுத்துக்கொண்டிருக்கிறேன் என்பதும் தெரிந்தது” என்று அசலை சொன்னாள்.

அவர் உள்ளே வந்து என் அருகே மஞ்சத்தில் அமர்ந்தார். கைகளைக் கட்டியபடி என்னை பார்த்துக்கொண்டிருப்பதாக நான் விழிமூடியே உணர்ந்தேன். எழவேண்டும் என்று எண்ணிக்கொண்டே துயின்றுகொண்டிருந்தேன். அல்லது விழிப்பில் துயிலையும் கலந்துகொண்டிருந்தேன். அவர் நெடுநேரம் அப்படி என் அருகே அமர்ந்திருக்கவேண்டும். வேறு எவரோ வெளியே வந்து அவரை அழைத்தார்கள். “ஆம்” என்றபடி அவர் எழுந்தபோது பீடம் எழுப்பிய ஒலியைக் கேட்டு நான் விழித்துக்கொண்டேன். அப்போது அவர் வாயிலைச் சென்றடைந்து அங்கு நின்றிருந்த சேடியிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் எழுந்தமர்ந்த ஓசையைக் கேட்டு திரும்பி என்னை பார்த்தார். நான் எழுந்து “துயின்றுவிட்டேன்” என்றேன். அவரிடம் விழிநோக்கி நான் பேசி பதினைந்தாண்டுகளுக்கும் மேலாகிறது. அச்சொல்லையே என்னுள் இருந்து வேறெவரோ முனகினார்கள்.

அவரும் என்னை நேர்நோக்கவில்லை. அந்த அவைநிகழ்வுக்குப் பின் அவர் எந்தப் பெண்ணையுமே நேர்நோக்குவதில்லை என்றார்கள். “உன் துயிலிலேயே பெரும் களைப்பு தெரிந்தது. எழுப்ப வேண்டாமென்று எண்ணினேன்” என்றார். “நான் உங்களுக்காக பூசனை செய்திருந்தேன்… செஞ்சாந்தும் குருதியும் இருக்கிறது” என்றேன். “அதை பெற்றுக்கொள்ளத்தான் வந்தேன். நான் உடனே கிளம்பிச் செல்ல வேண்டும். மூத்தவர் எனக்காக காத்திருக்கிறார்” என்றார். அந்த உரையாடல் முற்றிலும் அயலவர் இருவர் நடுவே நிகழ்ந்தது. ஆனால் மிக அணுக்கமான இருவர் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டனர். என் நெஞ்சு படபடத்தது. புதுமணப்பெண் என வியர்த்து உடல்மெய்ப்பு கொண்டு கால்தளர்ந்து நின்றேன். அவர் குரலும் உடைந்து தழுதழுத்தது. “நான் செல்லவேண்டும்…” என்றார்.

“அவரை சற்றுநேரம் அங்கே தங்கவைக்க விரும்பினேன். ஆனால் அத்தருணத்திற்குரிய சொல்லொன்றை எடுக்க என்னால் இயலவில்லை. இயல்பாக என் உள்ளம் கண்டுகொண்டது அப்போது பேசவேண்டியது மைந்தனைப் பற்றி என்று. “மைந்தனும் உங்களுடன்தானே வருகிறான்?” என்றேன். “ஆம், மைந்தர்கள் அனைவரும் உடன் வருகிறார்கள்” என்று அவர் தடுமாறினார். “நான் கேட்டது நம் மைந்தனைப் பற்றி…” என்று எரிச்சலுடன் சொன்னேன். அந்த எதிருணர்வு அத்தருணத்தின் சங்கடத்தை குறைத்தது. நான் அவர் விழிகளை நோக்கி பேசமுடிந்தது. “அவன் பெயர் துருமசேனன்… அதுவாவது நினைவிலுள்ளதா?” என்றேன். “ஆம், ஆம், துருமசேனன். நம் மைந்தன் அல்லவா?” என்றார்.

என் உள்ளம் மலர்ந்துவிட்டது, அக்கையே. அறிவின்மைக்கு ஓர் அழகு உண்டு. ஆண்களிடம் பெண்டிர் அதையும் விரும்பக்கூடும். அவரை அப்பேருடலுடன் சிறுவனென்றாக்குவது அது. மைந்தரிடையே அவருக்கு எவ்வேறுபாடும் இல்லை என்று அறிந்திருந்தேன். மலர்வை முகத்தில் காட்டாமல் “அவனை நான் உங்களை நம்பியே களத்திற்கு அனுப்புகிறேன். அவன் முகத்தையாவது நினைவில் இருத்துங்கள்” என்றேன். “ஆம், அவர்களை தனியாகவே பேணவேண்டும் என்றார் மூத்தவர்” என்றார். அவர் உள்ளத்தில் அந்த வேறுபாட்டை புகுத்தவே முடியாதென்று உணர்ந்ததும் என் உள்ளத்தில் புன்னகை பெரிதாகியது. “நான் செல்லவேண்டும்” என்றார். “அவ்வளவுதானே? செல்க!” என்றபடி எழுந்து தாலத்தை எடுத்து நீட்டினேன். குருதியைத் தொட்டு அவர் நெற்றியில் இட விரலெடுத்ததும் “வேண்டாம்” என்றார். அவரே குருதிக்குழம்பை தொட்டு நெற்றியில் அணிந்து “இதுவே போதும், விடைகொள்கிறேன்” என்றார்.

என் மலர்ச்சி முழுமையாக வடிய, வெறுமனே நோக்கி நின்றேன். என் விழிகளில் துயர் தெரிந்திருக்கலாம். “நீ கொண்ட தொடாநோன்பை இத்தருணத்திற்கென முறிக்கவேண்டியதில்லை” என்று என் விழிகளை நோக்காமல் அவர் சொன்னார். தடுமாறிய குரலில் “இங்கு பிறிதெவர் அதை பிழையெனக் கண்டாலும் நான் அவ்வாறு எண்ணவில்லை. மாண்புள்ள அரசமகளிர் செய்யக்கூடுவது அதையே” என்றார். அவர் முகத்தில் எல்லா உணர்வுகளும் மிகையாகவே வெளிப்படும். அன்று அவர் பெருவலி கொண்டவர்போல தோன்றினார். “அன்னை வயிற்றில் பிறந்த மைந்தர் எவரும் செய்யக்கூடாததை நான் செய்தேன். அதில் எனக்கு இப்போதும் வருத்தமில்லை. என் தமையனின் பொருட்டு அதனினும் இழிந்ததையும் செய்வேன். ஆயிரமாண்டு காலம் கெடுநரகில் உழலவும் செய்வேன்” என்றபின் சொல்லுக்காக திணறி பின் வெறுமனே கையசைத்து “நன்று, என் இல்லத்தில் அறமகள் நிலைகொள்கிறாள் என்பதே எனக்கு நிறைவளிப்பது” என்றார்.

“என்னால் விழிநீரை அடக்க இயலவில்லை. மஞ்சத்தில் அமர்ந்துகொண்டு இரு கைகளிலும் முகம் புதைத்துக்கொண்டு அழுதேன். அவர் என்னை சிலகணங்கள் நோக்கிவிட்டு திரும்பிச் சென்றார். எடைமிக்க காலடிகளில் இருந்த தளர்வை நெடுநேரம் நான் கேட்டேன்” என்றாள் அசலை. பானுமதி திரும்பி தாரையை நோக்கினாள். அவள் அந்த அருமணியை கையில் வைத்துச் சுழற்றி அதன் ஒளியை வெவ்வேறு இடங்களில் வீழ்த்தி விளையாடிக்கொண்டிருந்தாள். “நான் அதன்பின் அவரிடம் நெடுநேரம் பேசியதில்லை, அக்கையே. அன்று பேசவேண்டும் என எண்ணினேன். ஆனால் சொல்லவேண்டியவற்றை நேர்நோக்கியபோது என் அகம் கூசியது. அந்த எதிர்நாடகத்தினூடாகவே என்னால் அவ்வாறாயினும் பேசமுடிந்தது” என்றாள் அசலை.

“பின்னர் எண்ணிக்கொண்டேன், நான் நெறியில் உறுதிகொண்டவள் அல்லவா என்று. நான் நம்புவனவற்றில் நிலைகொள்ள என்னால் ஏன் இயலவில்லை? என் உள்ளம் அவரை நூறுமுறை ஆரத்தழுவிக்கொண்டது. பதினைந்தாண்டுகள் நான் கொண்ட நோன்புகள் அனைத்தும் அத்தருணத்திலேயே பொருளற்றவை ஆயின” என்று அசலை சொன்னாள். பானுமதி “அதன்பொருட்டு வருந்தவேண்டியதில்லை. அத்தனை கௌரவ அரசியரும் நேற்றும் இன்றும் நோன்பு முறித்துக்கொண்டனர் என அறிந்தேன்” என்றாள். அசலை “அவருக்காக நான் வேண்டிக்கொள்கிறேன். உளமுருக, முற்றளித்து தெய்வங்களை தொழுகிறேன். அவர் வென்று மீண்டு வரவேண்டும். அவர் தோள்தழுவி என்னை பொறுத்தருள்க என்று கேட்கவேண்டும். அனைத்தும் முன்பென துலங்கவேண்டும்” என்றாள்.

“அவைநின்று பெரும்பத்தினி உரைத்த சொல்லை ஒருபோதும் தெய்வங்கள் கையொழிவதில்லை என்று அறிவேன். ஆனால்…” என்றபின் அசலை பெருமூச்செறிந்தாள். பானுமதி “இளையோளே, இவர்கள் கொண்ட அன்னைப்பழி கணம் நூறெனப் பெருகுவது. இவர்களில் எழும் நம்பிக்கையும் ஆணவமும் பெருவிழைவும் அப்பழியால் உருவாக்கப்படுவதே. பலிபீடத்திற்கு கனவுநடையில் செல்லும் விலங்குகள்” என்றாள். “செருகளத்தில் இவர்கள் வீழ்கையில் குடிகளோ வீரரோ கண்ணீர்சிந்தப் போவதில்லை. அணி களைகையில் நாம் மட்டுமே கலுழ்வோம். நம் நோன்பினூடாக அவர்களை நாம் விண்ணேற்றுவோம்” என்றாள். “நாம் அவர்கள் எஞ்சவிட்டுச் செல்லும் பெரும்பழியை எஞ்சிய நாளெல்லாம் சுமக்கவிருப்பவர்கள். கைம்பெண்ணென இங்கு வாழ்ந்தாலும் பெரும்பத்தினியின் பழிச்சொல் நம்மை சூழ்ந்திருக்கும். இப்பிறவி முழுக்க அதன் இழிவை சூடுவோம்.”

அசலை “நான் அவர் மனைவி என்றே இன்று உணர்கிறேன். அதன்பொருட்டு எந்த கெடுநரகிலும் உழல சித்தமாக உள்ளேன்” என்றாள். பின்னர் உளம் விம்மி எழுந்ததை அடக்கி “அதை அவரிடம் சொல்லியிருக்கலாம். என்னால் இயலவில்லை” என்றாள். “அவ்விழிநீர் போதும், அவர் உணர்ந்திருப்பார்” என்றாள் பானுமதி. “அவர் களம்பட்ட பின் உன்னிலெழுந்த சீற்றம்கொண்ட அந்தப் பெண்ணும் மறைவாள். அன்புகொண்ட துணைவி மட்டுமே எஞ்சுவாள். அதன் பின் உனக்கு இத்துயரிருக்காது. இருநிலையே அழல். எஞ்சும் வாழ்நாள் சிறிதே. அதை எண்ணி எண்ணி கடந்துவிடலாம்” என்றாள்.

தாரை அவர்கள் அருகே வந்து இடையில் கைவைத்து நின்று “அரசி, தங்கள் கொழுநர் திரும்பமாட்டாரென்று உறுதியாகவே எண்ணுகிறீர்களா?” என்றாள். பானுமதி திடுக்கிட்டு அவளை நோக்கி சில கணங்களுக்குப் பின் ஒன்றும் சொல்லாது திரும்பிக்கொண்டாள். “நான் நம்புகிறேன்” என்றாள் தாரை. “அவைநின்று பழிகொண்ட பெண் சொன்ன சொல் அவ்வண்ணமே நிகழ்ந்தாக வேண்டும். அதுவே இங்கு பெண்ணுக்குக் காவலென தெய்வங்கள் உண்டென்பதற்கான சான்று. தலைமுறை தலைமுறையென பிறந்தெழுந்து வரும் பெண்கள் அனைவருக்கும் நம் மூதாதையர் உரைக்கும் சொல்லுறுதி அது. பிறிதொன்று நிகழாது.” பானுமதி அவள் விழிகளை நோக்கினாள். வஞ்சமோ சினமோ இல்லாமல் தெளிந்திருந்தன அவை.

“விகர்ணன் உன்னிடம் விடைபெற்றாரா?” என்றாள். “ஆம், இன்று காலை” என்று அவள் சொன்னாள். “ம்” என்றாள் பானுமதி. “என் அறை வாயிலில் வந்து நின்று கதவை தட்டினார். நான் உள்ளே தாழிட்டிருந்தேன். பலமுறை கதவு தட்டப்படுவதை கேட்டபின்னர் எழுந்து இப்பால் நின்று பெண்சிறுமை செய்தவரின்பொருட்டு வாளெடுத்து போரிடுவதாக வஞ்சினம் உரைக்கபோகிறீர்கள் என்றால் என்னை நீங்கள் பார்க்கவேண்டியதில்லை என்றேன். ஆம், நான் என் மூத்தவரின் குருதியின் ஒரு துளி என்றார். அதுவே உங்கள் வழி என்றாகுக, எனக்கு உங்களிடம் உறவேதுமில்லை என்றேன்.”

அவர் திகைத்தவராக நின்றார். பின்னர் “என்னிடமிருந்து முற்றறுத்துக் கொள்கிறாயா?”  என்றார். “ஆம், நீங்கள் களம்பட்ட செய்தி வருகையில் மரவுரி அணிந்து நோன்பு கொள்வேன். இங்கிருந்து கிளம்பி என் நாட்டுக்கு செல்வேன். அதன் பின் ஒருகணமும் உங்களை எண்ணமாட்டேன்” என்றேன். மறுபக்கம் ஓசையெழவில்லை. ஆனால் அவர் இருப்பை உணரமுடிந்தது. நெடுநேரத்திற்குப் பின் “இத்தகைய நெறிகளுக்கு அப்பாற்பட்டு நீ என்மேல் கொள்ளும் அன்பென்று ஏதுமில்லையா?” என்றார். “இல்லை, நெறிகளின்பொருட்டு நான் வாழ்கிறேன். பெண்ணென்றால் நெறியே என்பது எங்கள் குலத்தியல்பு. நெறிமீறுவதென்பது எங்களுக்கு இறப்பே” என்றேன். சிலகணங்களுக்குப் பின் அவர் திரும்பிச் செல்லும் காலடி ஓசை கேட்டது.”

பானுமதி “விகர்ணன் இப்போது குண்டாசியின் அறையிலிருக்கிறார். உடல் உருகுமளவுக்கு மது அருந்தியிருக்கிறார்” என்றாள். தாரையின் முகத்தில் எந்த மாறுபாடும் தெரியவில்லை. அசலை “அன்று அவையில் கௌரவரின் அறக்குரலாக எழுந்து ஒலிக்க அவரால் மட்டுமே இயன்றது. அதன் பொருட்டேனும் நீ அவரிடம் சற்று அளி கொள்ளலாம்” என்றாள். “ஒருவன் நாவில் ஒரு சொல் எழுவதென்பது அதற்குரிய தெய்வத்தின் ஆணை. தன்னிலெழுந்த சொல்லுக்கு தன்னை ஒப்புக்கொடுப்பவனே அத்தெய்வத்தை நிறைவுசெய்கிறான். அழியாச் சொற்களால் ஆனது இப்புடவி” என்றாள் தாரை.

பானுமதி “உன் உறுதி எனக்கு புரிகிறது. ஆனால் என் உள்ளம் அதை ஏற்கவில்லை. நீ அவரை துறந்ததனூடாக இப்புவியில் எவருமற்ற தனியராக அவர் ஆகிவிட்டார். அவர் நாளை களம்படலாம். தன்னந்தனிமையில் ஒருவர் மடிவதென்பது தெய்வங்களும் மூதாதையரும் ஏற்காத துயரம். அப்பழி அவர் மனைவியையே சேரும்” என்றாள். தாரை எந்த உணர்வுமாற்றமும் இல்லா முகத்துடன் நேர்நோக்கி “எங்கள் குடியில் ஒரு சொல் உண்டு. பிறப்பதும் மடிவதும் தன்னந்தனியாகவே. பிறக்கையில் ஊழும் மடிகையில் அறமும் துணை நிற்கின்றன. அவருக்கு தனிமை எஞ்சுவது ஒழியாத் தெய்வம் என உடனிருந்த அறத்தை அவர் துறந்ததனால்தான்” என்றாள்.

மூவரும் தங்கள் உளச்சொற்களில் அழுத்தப்பட்டவர்களாக நெடுநேரம் அமைதியாக இருந்தனர். பெருமூச்சுடன் எண்ணம் கலைந்த அசலை “ஒவ்வொரு விடைகொள்ளலும் ஒவ்வொரு வகையில் நிகழ்கின்றது” என்றாள்.  பானுமதி “நான் இன்னமும் அரசரை சந்திக்கவில்லை. இன்றிரவு வருவாரென்று எண்ணுகின்றேன்” என்றாள். “அவர்கள் இன்னும் அன்னையிடமும் விடைபெறவில்லை” என்று அசலை சொன்னாள். பானுமதி “ஆம், அவர் இன்று இவ்வரண்மனையில் எதிர்பார்ப்பது அன்னையின் வாழ்த்தை மட்டும்தான்” என்றாள்.

“அன்னையின் வாழ்த்து எழவேண்டும்” என்று அசலை சொன்னாள். “ஏனெனில் இவையனைத்தும் நெடுங்காலத்திற்கு முன் காந்தாரப் பெரும்பாலையில் நின்றபடி கீழ்த்திசையை நோக்கி அன்னை சொன்ன ஓர் விழைவிலிருந்து தொடங்குகிறது.” தாரை “அதை அன்னை உணராதிருப்பாரா?” என்று கேட்டாள். “இவ்வளவு குருதிப்பெருக்கும் தன் பொருட்டே என்று எண்ணியிருந்தால் அவரால் எப்படி அத்தனை இயல்பாக இருக்க இயல்கிறது? நான்கு நாட்களுக்கு முன்னர்கூட அவரை சென்று பார்த்தேன். ஆலய பூசனை முடித்து செஞ்சாந்தும் ஊனுணவும் கொண்டு வந்து கொடுத்தபோது தொட்டு வணங்கி நெற்றியிலணிந்தார். என்றுமிருப்பதுபோல் அதே முகமும் அதே சொற்களுமாகவே தெரிந்தார்.”

பானுமதி “அவர் கண்ணை கட்டிக்கொண்டிருக்கிறார்” என்றாள். “ஊன்விழியை” என்றாள் அசலை. “ஆம். ஆனால் வெளிவிழியை கட்டிக்கொண்டால் காலப்போக்கில் உள்விழிகளும் மூடத்தொடங்குகின்றன” என்றாள் பானுமதி. வாயிலில் ஏவற்பெண்டு வந்து நின்றாள். பானுமதி நோக்க “தேர்கள் ஒருங்கிவிட்டன” என்றாள். “கிளம்புவோம்” என்று எழுந்துகொண்ட பானுமதி “அந்தக் கணையாழியை நீயே வைத்துக்கொள்ளடி” என்று தாரையிடம் சொன்னாள்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44

tigபானுமதி தாழ்வான சாய்ந்த பீடத்தில் தலைசரித்து கால்நீட்டி அமர்ந்து மார்பில் கைகளைக் கட்டியபடி விழிமூடி கேட்டுக்கொண்டிருக்க அவளுக்கு இருபுறமும் அமர்ந்த கற்றுச்சொல்லிப் பெண்டிர் ஓலைகளை படித்துக்காட்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கற்றுச்சொல்லிக்கும் இரு எடுத்தளிப்புச் சேடியர் வலமும் இடமுமென அமர்ந்து ஒருத்தி சுவடியை கொடுக்க பிறிதொரு சேடி வாங்கி மீண்டும் பேழையில் அடுக்கிக்கொண்டிருந்தாள். ஒரு கற்றுச்சொல்லி ஓர் ஓலையை படித்து முடித்ததுமே பானுமதி ஒற்றைச் சொல்லால் ஆமென்றோ அல்லவென்றோ ஆணையிட்டாள். அரிதாக தன் எண்ணத்தை உரைத்து ஆவன செய்யவேண்டியவற்றை கூறியதுமே அவற்றை ஆணை என அவர்கள் எழுதிக்கொண்டனர். ஒரு கற்றுச்சொல்லி ஒரு ஓலையை படித்து முடித்ததுமே அடுத்தவள் தன் கையில் எடுத்து வைத்திருந்த ஓலையை படிக்கத்தொடங்கினாள். ஆகவே இடைமுறியாத ஒற்றை ஒழுக்கென அவ்வோலைத்திரள் ஒலித்துக்கொண்டிருந்தது.

பெரும்பாலானவை அஸ்தினபுரியின் தொல்குடி மறவர்களின் இல்லங்களுக்கு அரண்மனைக் கருவூலத்திலிருந்து அளிக்கவேண்டிய பொருட்கொடைகளை பற்றியவை. ஓர் இல்லத்தில் மூவருக்கு மேல் போருக்குச் சென்றிருந்தால் மூன்றுகழஞ்சும், ஒருவர் மட்டும் போருக்குச் சென்றிருந்தால் அரைக்கழஞ்சுமென பொன் அளிக்கப்பட்டது. அஸ்தினபுரியை சுற்றியிருந்த அனைத்துச் சிற்றூர்களிலிருந்தும் போருக்கென அளிக்கப்பட்ட உலர் உணவு, நெய், மரவுரி போன்ற பொருட்களுக்கு அவர்களுக்கு வகுக்கப்பட்டிருந்த அளவுக்குமேல் மட்டும் பொன்னில் விலை மதிப்பிடப்பட்டது. ஆனால் அந்தப் பொன்னை போர் முடிந்தபின்னர் கருவூலத்திலிருந்து பெற்றுக்கொள்ளும்படி அரசியின் முத்திரை பொறிக்கப்பட்ட ஓலையே அளிக்கப்பட்டது. எத்தனை பெற்றாலும் போதாதபடி படைப்பிரிவின் களஞ்சியக் காப்பாளர்கள் மேலும் மேலும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். “படை என்பது காட்டெரி. உண்ணும்தோறும் பசிபெருகுவது. உண்பதை சாம்பலாக்கி சென்ற இடம் கருக்கி முன் செல்வது” என்றார் அமைச்சர் மனோதரர்.

அஸ்தினபுரியின் காவல்படைகள் அனைத்து நிலைகளிலிருந்தும் திரும்பப் பெறப்பட்டு போர்ப்படைகளின் நிரைகளுடன் சேர்க்கப்பட்டன. சாலைமுனைகள், சாவடிகள், காவல்நிலைகள், சிற்றூர்முகப்புகள் அனைத்திலும் ஆங்காங்குள்ள போர்ப்பயிற்சிகொண்ட இளம்பெண்களை இணைத்து காவல்நிலைகள் உருவாக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கான செயல்முறைமைகளும் தலைமைப்பொறுப்புகளும் வகுத்து அளிக்கப்பட்டிருந்தன. அவையனைத்தும் அரண்மனையிலிருந்து அரசியின் முத்திரைகொண்ட ஓலைகளாக வழங்கப்பட்டன. பெண்டிரில் வில்பயின்றவர்களும், வாள்தேர்ந்தவர்களும், புரவி ஊர்பவர்களும் அடங்கிய ஒரு குழுவிற்கு தொல்மறவர் குடியிலிருந்து முதிய போர்வீரர் ஒருவர் தலைமை தாங்கினார்.

முதுவீரர் இல்லாத இடங்களில் மூதன்னையர் அங்கே அமைக்கப்பட்டார்கள். தலைமை தாங்கும் முதுமகள் வளர்ந்த மைந்தரை களத்திற்கு அனுப்பிய அன்னையாகவும், ஓரிருமுறையாவது காவல் பணிபுரிந்த முன்பழக்கம் கொண்டவளாகவும் இருக்கவேண்டுமென்று பானுமதி ஆணையிட்டாள். ஆனால் பல சிற்றூர்களில் படைக்கலப் பயிற்சிகொண்ட பெண்டிர் எவரும் இருக்கவில்லை. அஸ்தினபுரியின் எல்லைக்குள் போரென்றும் பூசலென்றும் ஏதேனும் நிகழ்ந்து பல தலைமுறைகள் ஆகிவிட்டிருந்தன. பல சிற்றூர்களில் பெண்களுக்கான களரிகளே நெடுங்காலத்துக்கு முன் முற்றாக நின்றுவிட்டிருந்தன. தங்கள் குலதெய்வங்களின் வழிபாட்டிற்கு என வாள் எடுத்து ஏழுமுறை நடைவரிசை செய்யும் அளவுக்கு பயின்ற பெண்டிரே அஸ்தினபுரியின் பல குடிகளில் இருந்தனர். முறையாக வாள்தேர்ந்தவர்கள் நகரிலிருந்து தொலைவில் காடுகளின் எல்லையில் அமைந்த சிற்றூர்களை சார்ந்தவர்கள்.

படைக்கலம் பயின்ற பெண்டிரை சிறு குழுக்களாக்கி நாடெங்கும் சென்று பொறுப்பேற்கும்படி அரண்மனையிலிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. தங்கள் மகளிரை வெளியே அனுப்ப அக்குடிகள் மறுத்தன. புது ஊர்களில் அப்பெண்டிர் படைக்கலத்துடன் சென்று பொறுப்பேற்றுக்கொண்டபோது அங்கிருந்த பெண்டிர் அவர்களை ஏற்றுக்கொள்வதில் பூசல்களும் முரண்பாடுகளும் எழுந்துகொண்டே இருந்தன. அப்பூசல்களை பேசித் தீர்ப்பளிக்கும் உரிமை மறக்குடி மூதன்னையருக்கு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு அந்த உரிமையை அளிக்கும்பொருட்டு அரண்மனையிலிருந்து அரசியின் முத்திரைச் சாத்து வழங்கப்பட்டது. ஒவ்வொரு தருணத்திலும் உருவான எதிர்ப்புகளையும் முரண்பாடுகளையும் மறுக்கமுடியாதபடி அரசமுத்திரையுடன் வந்த அரசியின் ஆணையே தீர்த்துவைத்தது.

ஓர் இடத்து நெருப்பு அணைக்கப்படுகையில் பிறிதோரிடம் பற்றிக்கொண்டது. ஒவ்வொன்றையும் முன்னரே எதிர்பார்த்து அங்கே அரசியின் ஆணை சென்று நின்றது. மெல்ல மெல்ல அரசியின் ஆட்சி என்பது அனைத்து இடங்களையும் தொட்டுப்பின்னி விரிந்த பெருவலை என்பதை அனைவரும் புரிந்துகொண்டார்கள். அவளுடைய பேருரு தெரியுந்தோறும் அவர்கள் அவளை அஞ்சவும் பணியவும் தொடங்கினர். அவள் ஆணையுடன் வருபவர்களின் கண்களிலும் நாவிலும் அவள் திகழ்ந்தாள். ஆனால் அவள் எவரையும் தண்டிக்கவில்லை, எங்கும் குருதிவீழ்த்தவில்லை. அவள் அனைத்தும் அறிந்திருக்கிறாள் என்ற எண்ணமே அவளை ஆற்றல்கொண்டவளாக்கியது. “நேற்றுவரை உறைக்குள் இருந்தது இக்கூர்வாள்” என்றனர் மூத்தோர். “எட்டாம் நிலவு வரை கொற்றவையின் படைக்கணங்கள் ஆளும், எட்டாம் நாள் அன்னையின் விழிகளால் புவி புரக்கப்படும்” என்றனர் சூதர்.

போர்முன்பொழுதுக்கு உரிய ஒவ்வொரு செயலும் முற்சுட்டு ஏதுமில்லாத புதியது. ஆகையால் அமைச்சர்கள் ஒவ்வொரு தருணத்திலும் குழம்பினர். அரசமுத்திரையின் சொல்லுறுதி அனைத்து இடங்களிலும் தேவைப்பட்டது. சிற்றமைச்சர்கள் நாட்டை நூற்றெட்டு சிறுபிரிவுகளாக பிரித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக பொறுப்பேற்றுக்கொண்டு ஆண்டனர். அனைத்துச் செய்திகளையும் சுவடிகளிலாக்கி பானுமதியிடம் சாத்து பெற்று அரசாணைகளாக்கிக் கொண்டார்கள். ஆகவே ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசாணைகளை பானுமதி அளித்துக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு ஓலையையும் தான் செவிகொள்ளாமல் முத்திரை அளிக்கலாகாதென்றும் அவளுக்கு உறுதியிருந்தது. பொழுதிடைவெளிகளில் எல்லாம் அவள் அமர கற்றுச்சொல்லிகள் ஓலைகளுடன் அருகமைந்தனர். அவர்கள் அவள் அமரும் தருணம் நோக்கி எப்போதும் உடனிருந்தனர்.

சென்ற சில மாதங்களாகவே அஸ்தினபுரியிலும் சூழ்ந்திருந்த காடுகளில் அமைந்த படைநிலைகளிலும் புலரி முதல் பின்னிரவு வரை ஓயாது சந்திப்புகளும் அவைநிகழ்வுகளும் விருந்துகளும் நிகழ்ந்துகொண்டிருந்தன. அஸ்தினபுரிக்கு வரும் ஷத்ரிய அரசர்களுடன் அரசியர் இருந்தார்களென்றால் அவர்களின் குலநிலையின்படி பட்டத்தரசியோ, அரசியரில் ஒருவரோ நேரில் சென்று வரவேற்கவேண்டியிருந்தது. அவர்களுக்கான விருந்துகள் அரண்மனையில் தொடர்ந்து நிகழ்ந்தன. அரசர் கூட்டிய அவைகளில் அவள் ஆணைபிறப்பிக்கப்படும் பொழுதுகளில் மட்டுமேனும் அமரவேண்டியிருந்தது. ஏதேனும் ஓர் அவையில் அமராமலாகி ஓரிரு சொல்லாடல்களை விட்டுவிட்டால்கூட அந்தக் குறை அனைத்து ஆட்சிச்செயல்களிலும் பரவி விரிந்து இடர்களை உருவாக்கியது. ஒரு சிறு விடுபடல் செயல்மிகுந்தோறும் வளர்ந்து வெல்லமுடியாத பூதமென முன்னால் நின்றது. எங்கோ எதுவோ தன் அறிதலுக்கு அப்பால் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்ற பதற்றத்தால் அவள் அனைத்து அவைகளிலும் அமர்ந்திருந்தாள். அவற்றில் பெரும்பாலான அவைகள் வீண் முறைமைகளும் வெற்று ஆணவப் பரிமாற்றங்களுமாக பொழுதை வீணடித்தன.

ஒவ்வொருநாளும் ஆணைகொள்ள அவைக்கு வரும் ஆட்சியிடர்கள் பெருகின. ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து கீழிறங்குவதுபோல என்று அவளுக்கு தோன்றியது. முதலில் மேல்நிலையின் பெரிய இடர்கள் எழுந்து வந்தன. அவற்றை தீர்க்கும்தோறும் கீழிருந்து இடர்கள் மேலே வந்தன. முதலில் வந்தவை எண்ணிக்கையில் குறைவாகவும் பொதுத்தன்மை மிக்கவையாகவும் இருந்தன. பின்னர் வரத்தொடங்கியவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவையாகவும், இடத்துக்கும் குலத்துக்கும் மானுடருக்கும் ஏற்ப மாறுவனவாகவும் இருந்தன. ஒவ்வொரு நாளும் என அவை பெருகிப்பெருகி வந்தன. ஓர் இடரை அரசவை தீர்த்துவைத்தது என்றால் அதுவே அத்தகைய நூறு இடர்களில் சிக்கியவர்களுக்கு நம்பிக்கை அளித்து அவை நோக்கி கொண்டு வரச்செய்தது.

ஒரு கட்டத்தில் அவள் திகைத்து செயலிழந்தாள். அத்தனை சிற்றூர்களின் அத்தனை ஆட்சிச்சிக்கல்களையும் தானே கையாளவேண்டுமோ என்று எண்ணி மலைத்தாள். ஆனால் அறியாத ஏதோ புள்ளியிலிருந்து அவை முன் எழும் இடர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அவள் விடுத்த ஆணைகளிலிருந்தே முறைமைகளும் நெறிகளும் உருவாகி வந்தன. அவை கண்ணுக்குத்தெரியாத ஆட்சியாளராக, கைவிடுபடைப்பொறியாக மாறி பல்லாயிரம் கண்களும் செவிகளும் கைகளுமாக பெருகி நாட்டை வளைத்துக்கொண்டன. அந்த அருவமான ஆட்சியாளரின் மேல் அவள் அமர்ந்திருந்தாள். அது தன்னைக் கடந்து எதையும் மேலே அனுப்பத் தயங்கியது. தன்னைக் கடந்து ஒன்று மேலே செல்வதே தன் ஆளுகைக்கு ஊறு என எண்ணியது. தனக்குரிய ஆணைகளை மட்டுமே அது அவளிடமிருந்து பெற்றுக்கொண்டது. அதன்பின் அரியவையும் முதன்மையானவையுமான நிலைகளுக்கு மட்டுமே அவளிடமிருந்து ஆணை கோரப்பட்டது.

படைகள் திரளத் தொடங்கியதும் புதிய இடர்கள் எழுந்தன. அஸ்தினபுரியின் படைகள் பிற அரசப்படைகளுடன் இணைந்தபோது எழுந்த நூற்றுக்கணக்கான ஆட்சியிடர்களும் ஆணவப்பூசல்களும் அந்தந்த படைத்தலைவர்களாலேயே தீர்க்கப்பட்டன. படைத்தலைவர்களுக்கு அதற்கென முன்னரே உறுதிசெய்யப்பட்ட முறைமைகள் இருந்தன. படைகளிடையே பொது இயல்பு இருந்தது. கடுந்தண்டனைகளை படைவீரர்களுக்கு அளிக்கவும் இயன்றது. முறைமையற்ற பொதுத்தன்மையே இல்லாத குடிப்பெருக்கை கடுந்தண்டனைகள் இல்லாமல் அச்சத்தாலும் குடிமுறைமைகளாலும் ஆள்வதென்பது பன்மடங்கு சுமை என அவள் உணர்ந்தாள்.

அனைத்துப் படைப்பிரிவுகளும் ஒன்றென்றாகி கௌரவப் படை என்று பொதுமுகமும் உள்ளமும் கொண்டபோது அவை ஆங்காங்குள்ள ஊர்களுடன் ஒழியாது பூசலிட்டன. பொருள் பிடுங்கின, பெண் கவர்ந்தன, முதியோரையும் தெய்வங்களையும் சிறுமை செய்தன. குடிகளின் அனைத்து முறையீடுகளும் அவளிடமே வந்தன. முதலில் அவள் அச்செய்திகளால் சீற்றம் கொண்டாள். அவற்றை படைத்தலைவர்களிடமும் இறுதியாக துரியோதனனிடமும் கூறினாள். அவர்கள் அதை பொருட்டெனக் கருதாது சிரித்து கடந்தனர். “போருக்கெழும் படைகளின் இயல்பு அது. அவை கொதித்தபடியேதான் இருக்கும். வஞ்சமும் சினமும் மறுபக்கம் காமத்தாலும் ஆணவத்தாலும் நிகர்செய்யப்பட்டவை. அகிபீனா அளித்து வெறியேற்றப்பட்ட களிறு போன்றது போர்முகம் கொள்ளும் படை. அணுகுவோர்தான் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்” என்றான் துரியோதனன்.

இறுதியாக அவள் சென்று பீஷ்மரிடம் சொன்னாள். “அது அவ்வாறுதான், அரசி. ஆண் எனும் தருக்கின் பெருந்தொகையையே படை என்கிறோம். அது பல்லாயிரம் கால்களும் கைகளும் ஒற்றைவிழைவும் கொண்ட விலங்கு” என்று அவர் சொன்னார். “அவர்கள் நம் குடிகளை காக்கும்படை… நம் குடிகளை அவர்கள் சூறையாட நாம் ஒப்பலாகுமா?” என்றாள். பீஷ்மர் “அது அமைதிக்காலத்துப் படை. அங்கே ஒவ்வொருவரும் தனியர். ஆகவே குலமும் குடியும் முறையும் முகமும் கொண்டவர். போர்ப்படை ஒற்றைப்பெருந்திரள் மட்டுமே. அது போர் செய்ய மட்டுமே பயன்படும். குருதியை மட்டுமே விரும்பும். அதற்கு நம்மவர் பிறன் என்று வேறுபாடு இல்லை” என்றார் பீஷ்மர். “இறக்கப்போகிறோம் என்னும் உணர்வு பெரும் விடுதலை ஒன்றை அளிக்கிறது, அரசி. அது அளிக்கும் முதன்மை விடுதலை அறவுணர்விலிருந்துதான்.”

போர் நெருங்குந்தோறும் குலதெய்வங்களுக்கும் நீத்தாருக்கும் போர்த்தெய்வங்களுக்கும் உரிய பூசனைகள் பெருகி வந்தன. ஒவ்வொரு நாளும் வழிபடவேண்டிய தெய்வங்கள் பெருகிவந்ததைக்கண்டு ஒருமுறை அவள் மெல்லிய புன்னகையுடன் காந்தாரியிடம் “ஒரு தருணத்தில் அஸ்தினபுரியில் போரில் மடிந்த அனைவருமே தெய்வங்களாகி இங்கு மீள்வார்கள் போலும். கணந்தோறும் குருதி கொள்பவர்கள் பெருகிவருகிறார்கள்” என்றாள். காந்தாரி அப்புன்னகையை உணராமல் “ஆம், எந்தப் போரையும் முன்னரே நிகழ்ந்த போர்களின் தொடர்ச்சியென்று எண்ணிக்கொள்ளாமல் மானுடரால் வாளேந்த இயலாது. வழிவழியாக வந்த ஒன்றின் பொருட்டே மானுடர் தலைகொடுக்க ஒருங்குகிறார்கள்” என்றாள்.

அஸ்தினபுரியின் அத்தனை மறக்குடியினரும் தங்களுக்கென அறுகொலைத் தெய்வங்களையும் களப்பலித் தெய்வங்களையும் நீத்தார் தெய்வங்களையும் கொண்டிருந்தனர். தெற்குக் காடெங்கும் பல்லாயிரக்கணக்கான நடுகற்கள் இருந்தன. அவை புதர்களுக்குள் சருகு மூடி மறைந்து பல தலைமுறைகளாக எவராலும் நினைவுகூரப்படாமல் காத்திருந்தன. குடிமூத்தாரின் உள்ளத்து ஆழத்தில் அவை எஞ்சின. போர் அணுகிவருந்தோறும் ஒவ்வொரு நாளும் என அவர்கள் அம்மூத்தவர்களின் கனவுகளில் தோன்றி குருதி கோரினர். துயரும் தனிமையும் வெறுமையுமாக வந்து “விடாய்கொண்டிருக்கிறோம் மைந்தர்களே, எங்களை நினைவுகூர்க!” என்றனர்.

கருக்கிருட்டு வெளிறத்தொடங்குவதற்குள்ளாகவே ஒவ்வொரு நாளிலும் அஸ்தினபுரியின் குடிகள் பெருநிரையாக அஸ்தினபுரியின் தெற்கு வாயிலினூடாக அப்பால் விரிந்திருந்த காடுகளுக்குள் நுழைந்து பரவினர். அவர்கள் செல்வதற்காக தெற்கு இடுகாடுகள் முழுக்க மூங்கில்கள் நடப்பட்டு இரவெல்லாம் பந்தங்கள் எரியவிடப்பட்டன. புதர்கள் நீக்கப்பட்டு வெளிப்போந்த நடுகற்கள் செவ்வொளியில் குருதியூறிய தசைத்துண்டுகள் என நின்றன. நிழல் பெருகிய மக்கள்திரள் பேருருக்கொண்ட மூதாதையரால் கொண்டு செல்லப்படுவதுபோல் தோற்றமளித்தது. நடுகற்களுக்கு செங்காந்தள், செவ்வரளி, தெச்சி மாலைகள் சூட்டி கள்ளும் ஊன்சோறும் படைத்து வழிபட்டனர். அறுகொலைத் தெய்வங்களுக்கு மட்டும் சிற்றுயிர்களை குருதி கொடுத்து அப்பசுங்குருதியில் அன்னம் உருட்டி படைத்து வணங்கினர்.

சென்றவர்கள் தெற்குக்காட்டினூடாகவே அப்பால் சென்று சுழன்று மேற்கு வாயிலினூடாக நகருக்குள் நுழைவதற்கு ஒருங்கு செய்யப்பட்டிருந்தது. காவல் மாடத்தில் நின்றிருந்தவர்கள் தெற்கு வாயிலின் வழியாகச் சென்று மேற்கு வாயில் வழியாக வந்த மக்கள்திரளின் சுழிப்பை கண்டனர். பெரும் சகடமொன்று மெல்ல சுழல அஸ்தினபுரி தேரென்றாகி எங்கோ சென்றுகொண்டிருப்பதுபோல் விழிமயக்கு கூட்டியது அது. பலிகோரும் நீத்தோர் எண்ணிக்கை பெருக குடியினர் ஒவ்வொருவரும் தனித்தனியாக அப்பொறுப்பை ஏற்றனர். இறுதியில் அகவைமுதிராத சிறுமியர்கூட தனியாக சென்று குருதி அளித்து நீத்தோருக்கு பலிகொடுத்து மீண்டனர்.

பானுமதியும் அரசியரும் ஒவ்வொருநாளும் அஸ்தினபுரியின் மூத்தோருக்கு குருதி பலியளித்தார்கள். குலதெய்வங்களுக்கு வழிபாடு நடந்தபடியே இருந்தது. அவைநிகழ்வும் ஒற்றர்கூடலும் விருந்துகளும் ஒழிய எஞ்சும் சிறுபொழுதுகளில் ஓய்வெடுக்கையில் கற்றுச்சொல்லிகள் படித்துக்காட்டிய ஓலைகளைக்கேட்டு ஆணைகளை பிறப்பித்தாள். மீண்டும் மீண்டும் ஒரே சொற்றொடர்களில் அமைந்த ஒரே ஆணைகளே அவ்வோலைகளில் இருந்தன. அரசாணைகளின் சொற்றொடர்களை மாற்றலாகாதென்பது தொல்நெறி. சொல்லிச் சொல்லி ஐயமோ குழப்பமோ அற்றவையாக மாறிவிட்டிருந்தன அச்சொற்றொடர்கள். அச்சொற்றொடர்களின் தொன்மையே அவற்றின் மறுக்க முடியாமையை உருவாக்கியது. எனவே பழைய ஓலைகளைப் பார்த்து புதிய ஓலைகள் எழுதப்பட்டன. பெயர்களும் இடங்களும் எண்களும் மட்டுமே மாறிக்கொண்டிருந்தன.

ஏழு சிறகுள்ள காற்றாடி ஒன்று முடிவிலாது சுழன்றுகொண்டிருப்பதுபோல அந்த ஓலைகள் என்று அவளுக்கு தோன்றியது. பொதுவாக ஏழு வகையான ஆணைகளே அவ்வோலைகளில் பெரும்பகுதி. ஆனால் மீளமீள ஒன்றே நிகழ்வதுபோல ஒருகணமும் ஒவ்வொரு ஓலையிலும் ஒருதுளி தனிவாழ்க்கை இருப்பதாக மறுகணமும் தோன்றிக்கொண்டிருந்தது. மீண்டும் வழக்கமான ஒரு ஓலை என்று தோன்றியது. கேட்ட மறுகணமே அவ்வாணையிலிருந்து ஒரு முகம் தெளிந்தெழுந்தது. ஒரு துயர் தனித்து தோன்றியது. எங்கோ அதற்காகக் காத்திருக்கும் இரு விழிகள் கண்முன் என தெரிந்தன. எனவே கொடைகள் எதையும் அவள் விலக்கவில்லை.

பன்னிரண்டு நாள் அவள் தொடர்ந்து ஆணைகளை பிறப்பித்த பின் கனகர் அவளை அணுகி பலமுறை தயங்கி “இது என் சொல் அல்ல, அரசி. கருவூலக் காப்பாளர்கள் என்னிடம் சொன்னதை தங்களுக்கு உரைக்கிறேன். தாங்கள் அனைத்து பொருட்கோரிக்கைகளுக்கும் ஒப்புதல் வழங்க வேண்டுமென்பதில்லை. ஒரு படைபெயர்வென்பது கருவூலம் எட்டு திசைகளில் உடைத்துக்கொண்டு வெளியே ஒழுகுவதற்கு நிகரானது. அஸ்தினபுரியின் கருவூலம் அடியிலி வரை நிறைந்தது என்பது தொல்கூற்று. அது ஓரளவுக்கு உண்மை. ஆயினும் இப்பெரும்படையெழுச்சி என்பது நமக்கே தாங்கக்கூடியதாக இல்லை. உண்மையில் படையெழுச்சியை எண்ணியபோது பொருளைப்பற்றி ஒருகணம்கூட நான் கவலைகொள்ளவில்லை. பாரதவர்ஷத்தையே படைகொண்டு வெல்லும் அளவுக்கு செல்வம் இங்குள்ளது என்று எண்ணினேன். ஆனால் ஒவ்வொரு கணமுமென பொன்னும் மணியும் அகன்று கருவூல அறைகள் வெறுமையாவதை கண்டேன். அரசி, நமது கருவூலத்தில் பத்திலொன்றுகூட இப்போது எஞ்சவில்லை” என்றார்.

பானுமதி “ஆனால் படைக்குச் செல்பவர்கள் இங்கு தங்கள் மைந்தர்கள் நம்மை நம்பி வாழ்வார்கள் என்று எண்ணி செல்கிறார்கள். குடிகளில் தந்தை இல்லாதபோது அரசனின் கோலே தந்தை. அஸ்தினபுரியின் எல்லைக்குள் எந்தக் குழந்தையும் உணவின்றி இருக்க நான் ஒப்பமாட்டேன்” என்றாள். “அது தேவைதான், அரசி. ஆனால் நாம் எண்ணியதைவிட மேலும் சில நாட்கள் போர் நீளுமென்றால் நம் கருவூலம் அதை தாளாமல் ஆகும். பொருளில்லாமல் போர் பின்னடையுமென்றால்…” என்று அவர் தயங்க “பொருளால் எப்போரும் வெல்வதில்லை. அள்ளக்குறையாத கருவூலம் நமக்கு இருக்கிறது. அவர்களிடம் என்ன இருக்கிறது? பாஞ்சாலமும் விராடமும் அளிக்கும் செல்வம் அளவுக்குட்பட்டது. எப்படி படைக்கான பொருட்களை அவர்கள் திரட்டினார்கள்?” என்றாள் பானுமதி.

“அரசி, அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் நிஷாதர்களும் கிராதர்களும். அவர்களுக்கு பொருளென்று பெரிதாக ஏதும் தேவையில்லை. அங்கு களஞ்சியத்திலிருந்து படைகளுக்கு உணவே அளிக்கப்படுவதில்லை என்று ஒற்றர்கள் சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் செல்லும் வழியிலேயே எலிகளையும் பாம்புகளையும் பிற சிற்றுயிர்களையும் வேட்டையாடி உணவு கொள்கிறார்கள். படைவீரர்களே காடுகளில் புல்லரிந்தும் கிளைவெட்டியும் விலங்குகளுக்கு தீனி சேர்க்கிறார்கள். மரவுரி அணிந்து வெறுந்தரையில் துயில்கிறார்கள். இங்கு நமது படைகளில் பெரும்பாலானவர்கள் ஷத்ரியர்கள். உண்பதிலும் குடிப்பதிலும் எக்குறையையும் அவர்கள் தாங்குவதில்லை” என்றார் கனகர். “நமது படைச்செலவுகளில் பெரும்பகுதி அரசர்களுக்கு நாம் அளித்த விருந்தும் அவர்களின் அகம்படியினருக்கான செலவுகளும்தான். இங்கு தொடர்ந்து நிகழ்ந்த அவையமர்வுகள் எத்தனை செலவுமிக்கவை என தாங்கள் அறிவீர்கள்.”

பானுமதி எரிச்சலுடன் “பல தருணங்களில் இங்கு நிகழ்வது படையெழுச்சியா பெருவிழவா என்றே எனக்கு ஐயம் வருகிறது. ஒரு படையெழுச்சிக்கு ஏன் இத்தனை கூத்தும் நாடகமும்? ஏன் இத்தனை சூதர்கள் உடன்வரவேண்டும்? செல்வத்தில் ஒரு பகுதி சூதர்களுக்கும் பரணி பாடும் புலவர்களுக்கும் அளிக்கப்படுகிறது” என்றாள். “இவற்றில் சற்றும் குறைவைக்க முடியாது, அரசி. அவர்களின் சொற்களால்தான் நம் படைகள் ஊக்கம் பெற வேண்டும்” என்றபின் கனகர் “ஆனால் மறுபக்கம் அப்படி அல்ல. நிஷாதர்களும் கிராதர்களும் அசுரர்களும் தாங்களே பாடிக்கொள்வார்கள். தாங்களே நடனமிடுவார்கள். தாங்களே மகிழ்வு கொண்டாடுவார்கள்” என்றார். பானுமதி “இயல்பாகச் செய்யும் ஒவ்வொன்றுக்கும் இங்கு நாம் பொருள் அளிக்கிறோம். பெண்டிரும் குழந்தைகளும் உண்பதற்கு கணக்கு பார்க்கிறோம் அல்லவா?” என்றாள். கனகர் மறுமொழி சொல்லாமல் தலைவணங்கினார். “செல்க!” என்று பானுமதி கைகாட்டினாள்.

tigஏவல் பெண்டு வந்து அப்பால் நின்று தலைவணங்க சுவடியை படித்துக்கொண்டிருந்த கற்றுச்சொல்லி ஒருகணம் நிறுத்தினாள். விழி திறந்த பானுமதி “என்ன?” என்றாள். “அரசியர் தாரையும் அசலையும் வந்துள்ளனர்” என்றாள். “வரச்சொல்” என்று கைகாட்டியபின் அவள் மீண்டும் விழிகளை மூடிக்கொண்டாள். கற்றுச்சொல்லி ஓலையை மீண்டும் படிக்கத்தொடங்கினாள். எல்லைப்புறத்து மறக்குடியான மிருகர்களில் ஆண்கள் அனைவருமே போருக்கு சென்றுவிட்டிருந்தனர். உடற்குறை கொண்ட மூவர் மட்டுமே ஊரில் எஞ்சியிருந்தனர். அம்மூவரும் அங்குள பெண்டிரை மணப்பார்கள் என்றால் வரும் தலைமுறையில் குடியின் ஆண்மை குறையக்கூடும் என்றும், தகுதியான படைவீரன் ஒருவன் அக்குடியில் போருக்குச் செல்லாது எஞ்சவேண்டும் என்று மூதன்னை ஒருத்தி கோரியிருந்தாள். அதற்கு அக்குடியில் பதினெட்டு அகவை நிறைந்த ஓர் இளைஞன் போருக்குச் செல்லாது குடியில் தங்க வேண்டுமென்று அரசாணை கோரப்பட்டிருந்தது.

அவ்விளைஞனின் பெயர் பானுமதியை புன்னகைக்க வைத்தது. மகாவஜ்ரன். அவன் முகத்தை அவள் அருகெனக் கண்டாள். ஒருவேளை தன் குடியின் ஆண்கள் அனைவருக்காகவும் காமம் பயிலப்போகிறவன். பெருவெள்ளத்தில், காட்டெரியில் அழியாது எஞ்சும் பொருட்டு கலத்தில் வைத்து உருக்கி ஒட்டப்பட்டு நூறு அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட விதைநெல். அவள் ஆணையை பிறப்பித்துவிட்டு போதுமென்பதுபோல் கைகாட்டினாள். அசலையும் தாரையும் உள்ளே வந்து வணங்கினர். கற்றுச்சொல்லிகள் தங்கள் சுவடிகளுடன் எழுந்து செல்ல தாரை அவளருகே வந்து அமர்ந்து “இரு விருந்துகள் முடிந்தன. இனி இன்று விருந்துகள் ஏதும் இருக்காதென்று எண்ணுகிறேன்” என்றாள். “ஆம், இனி விடைபெறல்கள் மட்டுமே” என்று பானுமதி சொன்னாள்.

“நாளை காலையில் அஸ்தினபுரியிலிருந்து அனைத்து படைப்பிரிவுகளும் விலகிச்செல்லும். ஒரு நாளில் அனைத்தும் பிறிதொன்றென மாறும். சென்ற சில மாதங்களாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஓயாது பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். நாளை பொழுதுக்குப்பின் வெறுமனே இங்கு அமர்ந்திருக்கப்போகிறோம்” என்று அசலை சொன்னாள். தாரை “வெறுமனே அமர்ந்திருக்கப்போவதில்லை, காத்திருக்கப்போகிறோம்” என்றாள். “செயலாற்றுகையில் ஒருநாள் ஒருகணமென்றாகும். காத்திருக்கையிலோ ஒருகணம் ஒரு ஆண்டுக்குமேல் நீளம் கொண்டது.”

அசலை “இப்போர் எத்தனை நாட்கள் நீடிக்குமென்று எண்ணுகின்றீர்கள், அரசி?” என்றாள். பானுமதி “இப்போது அதை எவராலும் கூறிவிட இயலாது. நேற்று அரசவையில் அரசரும் பிறரும் பேசுவதை வைத்து பார்த்தால் மூன்று நாட்களில் போர் முடிந்துவிடும். பீஷ்மப் பிதாமகருக்கு நிகர்நிற்க அங்கு எவருமில்லை. அவருக்கெதிராக அர்ஜுனனின் வில் உறுதிகொள்ளவும் வாய்ப்பில்லை. மூன்று பொழுதணைவுக்குள் போர் முடித்து வில்லை திரும்ப வைத்து முடியை அரசருக்கு உறுதி செய்வதாக பீஷ்மர் வஞ்சினம் உரைத்திருக்கிறார்” என்றாள். தாரை “அதை எவரேனும் உள்ளூர நம்பினரா?” என்றாள். “ஏன்?” என்று பானுமதி கேட்டாள். தாரை “மூன்று நாட்களுக்கு மட்டுமேயான உணவுடன் இங்கிருந்து எவரேனும் கிளம்பிச் செல்வார்களா?” என்றாள்.

பானுமதி “அதெப்படி? எந்தப் போருக்கும் அவ்வாறு செல்ல இயலாது. ஒரு நாழிகைப்பொழுதுக்கு மட்டுமே போர் நீடிக்கும் என்று எண்ணினாலும்கூட பலநாட்களுக்குரிய உணவும் வைக்கோலும் கொண்டு செல்ல வேண்டும்” என்றாள். தாரை “பலநாட்களுக்குரிய உணவு கையிலுள்ளது என்பதே போர் நீடிக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கும்” என்றாள். அசலை சலிப்புடன் “நாம் அதைப்பற்றி ஏன் பேசவேண்டும்?” என்றாள். “நாம் வேறெதைப்பற்றியாவது பேசியிருக்கிறோமா?” என்று தாரை கேட்டாள். பானுமதி “மெய்தான். இங்கு எவரும் வேறெதைப்பற்றியும் எண்ணுவதில்லை” என்றபின் “மானுடர் எப்போதாவது தனித்தனியாக எதையேனும் எண்ணுகிறார்களா என்றே ஐயம் வருகிறது. தாங்கள் தனியான எண்ணம் கொண்டிருப்பதாக அவர்கள் கருதலாம். ஆனால் எப்போதும் மானுடம் ஒன்றாகவே எண்ணம் சூழ்கிறது. ஒரு நகரம், ஒரு குடி, ஒற்றை எண்ணத்தையே அது கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் அதில் ஒரு துளி என்றே உளம் கொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

அவர்கள் சற்றுநேரம் சொல்லவிந்தனர். பானுமதி எழுந்து “நான் ஆடைமாற்றிக்கொள்ளவேண்டும். வந்த அவ்வண்ணமே ஓய்வெடுக்க அமைந்தேன்” என்றாள். தாரை “விதுரர் இன்று அந்தியில் கிளம்பவிருக்கிறார் என்றார்கள். தாங்கள் அறிவீர்களல்லவா?” என்றாள். “ஆம்” என்று பானுமதி சொன்னாள். தாரை “அவர் தன் மூத்தவரிடமும் ஒப்புதல் பெற்றுவிட்டார். அரசரிடமோ இளையோரிடமோ கூறாமல் கிளம்புகிறார். அவ்வாறு அவர் கிளம்புவது எவ்வகையிலும் நமக்கு மாண்பல்ல” என்றாள்.

பானுமதி “அதைத்தான் நானும் எண்ணினேன். ஆனால் இத்தருணத்தில் அரசரோ அவர் தம்பியரோ அவரை ஒருபொருட்டென எண்ணுவார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. அவர்களுக்கு அவர் ஒரு சீண்டலாகவும் இடையூறாகவும் தோன்றத் தொடங்கி நெடுநாட்களாகிறது. அவரை பார்க்கையிலேயே அரசரின் முகம் சுளிக்கிறது. அரசவைகளுக்கு அவர் வருவதை தவிர்க்கும்படி கனகரிடம் சொல்லி அனுப்பியிருந்தார். பேரரசர் வரும் அவைகளுக்கு மட்டுமே அவர் வருவது வழக்கம். உண்மையில் போருக்குக் கிளம்புவதற்கு முந்தைய நாளே விதுரர் அவ்வாறு கிளம்பிச் செல்வதை அரசர் பெரிதும் விரும்புவார். நாளை காலை அவர் இங்கிருந்தார் என்றால் அவரிடம் விடைபெற்றுச் சென்றாகவேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏனெனில் குருதிவழியில் அவர் அவர்களுக்கு தந்தை. ஆம், அதை தவிர்க்கத்தான் விதுரர் கிளம்புகிறார்” என்றாள்.

“அரசி, அரசரின் பொருட்டு தாங்கள் சென்று அவருக்கு நல்விடை அளிக்கவேண்டும்” என்றாள் அசலை. பானுமதி “நான் என்ன சொல்வது?” என்றாள். “வெறும் முறைமைச் சொற்களே போதும். உண்மையில் தாங்கள் சொல்வதற்கொன்றே உள்ளது. அவர் மீண்டு வரும்போது அவர் இருக்கை அவ்வண்ணமே அவருக்காக காத்திருக்கும். அதை முடிகொண்ட அரசிதான் சொல்லவேண்டும்” என்றாள் அசலை. பானுமதி “ஆம், அதை நானே சென்று சொல்லலாம் என்று எண்ணுகிறேன். நீங்களும் உடன் வருக!” என்றாள்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43

tigதீர்க்கனைத் தொடர்ந்து வந்த இரண்டு ஏவலர்கள் மதுக்குடுவைகளையும் வெள்ளிக்கோப்பைகளையும் கொண்டுவந்தனர். அவற்றை தாழ்வான பீடத்தில் வைத்து மதுவை ஊற்றி இருவருக்கும் அளித்தனர். விகர்ணன் பீதர் மதுவை கையிலெடுத்தபோதே குமட்டி உலுக்கிக்கொண்டான். குண்டாசி “தங்களுக்கு பழக்கமில்லை, மூத்தவரே. தாங்கள் யவன மதுவையே அருந்தலாம்” என்றதும் “இல்லை” என்றபின் வாயில் வைத்து ஒரே மூச்சாக உறிஞ்சி விழுங்கி குமட்டி வாயை கையால் பொத்திக்கொண்டு குனிந்தமர்ந்து உடல் உலுக்கிக்கொண்டான். இருமுறை எதிர்க்கெடுத்துவிட்டு சிறிய ஏப்பத்துடன் “நீ சொன்னது சரிதான். இது வெறும் அனல். நேரடியாகவே அனலை விழுங்குவதுதான் இது” என்றான்.

“தாங்கள் சற்று நீர் அருந்தலாம்” என்றான் குண்டாசி. “நான் அனலை அணைக்க விரும்பவில்லை” என்று விகர்ணன் சொன்னான். அவன் வாய் திறந்தபோதெல்லாம் வயிற்றின் ஆவி வெளிவந்தது. “அனற்புகை” என்றான். குண்டாசி மதுக்கோப்பையை கையில் எடுத்தான். அந்த இளமஞ்சள் நிறமான திரவத்தை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான். மீண்டும் ஒருமுறை நீண்ட ஏப்பம் விட்ட விகர்ணன் கோப்பையை நீட்டி “இன்னும் சற்று…” என்றான். தீர்க்கன் “முதன்முறை என்றால் இதுவே மிகுதி. போதும், இளவரசே” என்றான். “ஊற்றுக!” என்று விகர்ணன் சொன்னான். ஏவலன் ஊற்றியவுடன் ஒருகணமும் தயங்காமல் அதை அப்படியே விழுங்கி கோப்பையை கீழே போட்டுவிட்டு மேலாடையால் வாயை பொத்திக்கொண்டு உடலை இறுக்கி அமர்ந்தான். பின்னர் வாயுமிழும் ஓசையெழுப்பி குனிந்தான்.

“தங்களுக்கு இது பழக்கமில்லை” என்று சொன்னான் குண்டாசி. விகர்ணன் தலையை அசைத்தபடி உடல் வியர்வைகொள்ள மல்லாந்து மூச்சை இழுத்துவிட்டான். அவன் தொண்டைமுழை ஏறியிறங்கியது. குண்டாசி ஏவலனை நோக்கி “நீங்கள் செல்லலாம்” என்று சொன்னான். தீர்க்கன் “நான் மதுகோப்பைகளை எடுத்துப்போகச் சொல்கிறேன், இளவரசே” என்றான். விகர்ணன் புரண்டு தலைதூக்காமலேயே கைவீசி “இல்லை, எனக்கு இன்னும் தேவையாகும்” என்றான். “எடுத்துச் செல்லுங்கள்” என்று தீர்க்கன் உறுதியான குரலில் சொன்னான். ஏவலர் மதுக்கோப்பைகளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றனர். விகர்ணன் “இன்னும் சற்று தேவையாகும்… என் உடல் இன்னமும் தளரவில்லை” என்றான்.

தன் கையில் பீதர் மதுக்கோப்பை வாய்தொடாமல் இருப்பதை குண்டாசி உணர்ந்தான். மீண்டும் அந்த திரவத்தை பார்த்தான். அது சீழ் என்ற எண்ணம் எழுந்தது. உடல் உதறிக்கொள்ள குமட்டி வந்தது. அதை பீடத்தில் திரும்ப வைத்தான். “ஏன், நீ அருந்தவில்லையா?” என்றான் விகர்ணன். “நோயுற்றிருக்கிறேன், மூத்தவரே. இன்று காலை மூத்தவர் என்னை தாக்கியதனால்” என்றான்.  “ஆம், மூத்தவர் உன்னை தாக்கியது எனக்கும் விந்தையாகவே இருந்தது. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை” என்றான் விகர்ணன். குண்டாசி “எனக்குத் தெரியும், நான் அவரை சீண்டினேன்” என்றான். “ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவர் தெய்வச் சிலைகளுக்குரிய உறுதியும் நிகர்நிலையும் கொண்டவராக இருக்கிறார். ஒவ்வொரு சொல்லும் எண்ணி எடுக்கிறார். எதனாலும் உளநகர்வற்றிருந்தார். இன்று காலை உன்னைக் கண்டதும் ஏன் கொதித்தெழுந்தார்?” என்றான்.

“அதற்கான விடை சற்றுமுன் கிடைத்தது” என்று குண்டாசி சொன்னான். மீண்டுமொருமுறை குமட்டி வாயுமிழ்வதுபோல் கேவலோசை எழுப்பியபடி முன்னால் குனிந்து வாயை பலமுறை திறந்து மூடிய விகர்ணன் நீண்ட இருமல் தொடரொன்றில் சிக்கி நெடுந்தொலைவு சென்று தலையை அசைத்தபடி பீடத்தில் மல்லாந்தான். “என் தசைகள் அனைத்தையும் எரிக்கிறது இது. என் தலைக்குள் தீக்கங்குகள் நிறைந்துள்ளன” என்றான். “ஆனால் முன்னர் இருந்த தீ அணைந்திருக்கும்” என்றான் குண்டாசி. “இல்லை அனைத்துத் தீயும் இணைந்து பெருகியிருக்கின்றன” என்று விகர்ணன் சொன்னான். மீண்டும் மீண்டும் இருமியும் குமட்டியும் உடல் உலுக்க தவித்தான். மெல்ல அடங்கி தலை சரிந்தான். இருமுறை மூச்சில் குறட்டை கலந்தொலித்தது.

பின்னர் விழித்துக்கொண்டு “நீ என்ன சொன்னாய்? இருமுறை குறிப்பு கொடுத்தாய் மூத்தவர் உன்னிடம் ஏதோ சொன்னதாக” என்றான். “ஒன்றுமில்லை” என்று குண்டாசி சொன்னான். விகர்ணன் தலையை அசைத்து “என்ன நிகழ்கிறது என்று எனக்கு தெரியவில்லை. என் கைகளும் கால்களும் உடலில் இருந்து கழன்றுவிட்டதுபோல் தோன்றுகின்றன” என்றான். அவன் நாக்கு தடிக்கத் தொடங்கியிருந்தது. கழுத்துத் தசைகள் இழுபட்டு அதிர்ந்தபடி இருந்தன. குழறலாக “உருகிக்கொண்டிருக்கிறேன்” என்றான். குண்டாசி “நீங்கள் ஓய்வெடுக்கலாம்” என்றான். “ஓய்வு… ஆம், அது தேவை. ஆனால் என்னால் என் அறை வரைக்கும் செல்ல இயலாது. நான் இங்கேயே படுத்துக்கொள்கிறேன்” என்றான் விகர்ணன்.

ஆவி கொப்பளிக்கும் அடுகலத்தின் அருகே நிற்பவன்போல் விகர்ணன் வியர்த்திருந்தான். அவன் நெற்றியில் பரவிய வியர்வைத்துளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வழிந்து கன்னத்தில் இறங்கின. புருவத்தில் துளிகளாகத் தங்கி நின்றன. மூக்கு நுனியிலிருந்து அவன் மடியில் ஒரு வியர்வைத்துளி சொட்டியது. கழுத்தும் தோள்களும் மெல்ல அதிர்ந்து இழுத்துக்கொண்டிருந்தன. தொய்ந்துகிடந்த வலதுகையின் சுட்டுவிரல் சுழன்று காற்றில் ஏதோ எழுதுவதுபோன்ற அசைவை காட்டிக்கொண்டிருந்தது. “மூத்தவரே, நீங்கள் இம்மஞ்சத்திலேயே படுத்துக்கொள்ளலாம்” என்று குண்டாசி சொன்னான்.

விகர்ணன் தலையை தூக்கியபோது இரு இமைகளும் தடித்துச் சிவந்து எடை தாங்காது தழைந்தன. வாயில் ஊறிய கோழையை அருகிலேயே துப்பிவிட்டு “என் தலை இரும்பாலானதுபோல் இருக்கிறது. எங்கோ எவரோ அறையும் ஓசை கேட்கிறது. அடுகலனில் சட்டுவத்தால் அடிப்பது போல… யார் அது?” என்றபின் இரு கைகளையும் ஊன்றி பீடத்திலிருந்து எழமுயன்று முடியாமல் மீண்டும் பீடத்திலேயே அமர்ந்தான். “அறைந்துகொண்டே இருக்கிறார்கள்… அவர்களிடம் அதை நிறுத்தும்படி சொல்” என்றான். மீண்டும் ஒருமுறை எதிர்க்கெடுத்து ஓங்கரிப்பு ஓசையை எழுப்பினான். “என்ன ஆகிறது எனக்கு? மிதமிஞ்சி அருந்திவிட்டேனா? ஒருவேளை நெஞ்சுடைந்து இறந்துவிடுவேனா?” என்றான்.

“இல்லை, நீங்கள் களத்தில்தான் இறப்பீர்கள்” என்றான் குண்டாசி. விகர்ணன் அவனை விழிதூக்கி நோக்கி “ஆம், களத்தில்தான். களத்தில்தான் இறப்பேன், ஐயமில்லை” என்றான். கண்களை மூடி தலையை அசைத்துக்கொண்டே இருந்தான். அவன் வாய் தாடையுடன் ஒருபக்கமாக கோணி இழுபட அதற்கேற்ப இடப்பக்கக் காலும் இழுபட்டு அசைந்தது. “தண்ணீர்! தண்ணீர்!” என்றான். குண்டாசி அருகிலிருந்த கலத்திலிருந்து நீரை ஊற்றி அவனுக்கு அளித்தான். அதை வாங்கி பார்த்தபின் பற்கள் கிட்டித்துக்கொள்ள கை நடுங்கி மீண்டும் பீடத்திலேயே வைத்தான். “இல்லை, நீரைப் பார்த்தாலே குமட்டுகிறது” என்றபின் பீடத்தில் இருந்த குண்டாசியின் மதுக்கோப்பையைப் பார்த்து “அதை நீ அருந்தப்போவதில்லையா?” என்றான்.

குண்டாசி அந்த மதுக்கோப்பையைத் தூக்கி மறுபக்கமாக வைத்து “வேண்டாம், மூத்தவரே” என்றான். “கொடு அதை! இன்னும் சற்று மது. இன்னும் சற்று இடம் ஒழிந்திருக்கிறது. அதை நிரப்பினால் இந்தக் கொப்பளிப்பு இருக்காது” என்றான் விகர்ணன். குண்டாசி “இது சற்று நேரம்தான். தலை மதுவால் முழுக்க நனைந்தபின் துயின்றுவிடுவீர்கள். காலையில் நல்ல தலைவலி இருக்கும்” என்றான். “காலையில்… ஆம் காலையில் விடியுமுன்னரே நாம் எழுந்திருக்க வேண்டும். அங்கே அரண்மனை முற்றத்தில் அணிவகுக்கவேண்டும், மூத்தவரின் ஆணை” என்றான். “இப்போது தாங்கள் படுத்தால் காலையில் எழுந்துவிடலாம்” என்றான் குண்டாசி.

விகர்ணன் “நீ என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய்?” என்றான். சிரித்தபடி “இந்த வினாவைக் கேட்க இவ்வளவு பீதர்நாட்டு மது உங்களுக்கு தேவைப்பட்டிருக்கிறது” என்றான் குண்டாசி. விகர்ணன் “ஆம், அவ்வாறே கொள். நீ என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய்?” என்றான். குண்டாசி “எதைச் சார்ந்து?” என்றான். “நான் எதன்பொருட்டு என் மூத்தவருடன் நின்றிருக்கிறேன்?” என்றான் விகர்ணன். “அதை சொல்லிவிட்டீர்கள், செஞ்சோற்றுக்கடன்” என்றான் குண்டாசி. “ஆனால் ஒருவனுக்கு அறத்தின்மேல் இருக்கும் பற்று அதைவிட ஒருபடி மேலானதல்லவா? இந்த செஞ்சோற்றுக்கடன் அன்று அவையில் எழுந்து என் மூத்தவரை பழித்துரைக்கும்போது எனக்கு ஏன் எழவில்லை?” என்றான் விகர்ணன். “அதையும் விளக்கிவிட்டீர்கள். அது அவையறம், இது குலஅறம்” என்றான் குண்டாசி.

“அச்சொற்கள் அனைத்தும் வீண். அறம் அவ்வாறெல்லாம் பிளவுபடாது. அறம் என்று ஒன்று இருக்குமென்றால் அது எங்கும் அறம்தான். ஒருவனால் இடத்திற்கேற்ப அறத்தை மாற்றிக்கொள்ள முடியுமென்றால் அக்கோழை அறம் என்ற சொல்லையே சொல்லக்கூடாது” என்றான் விகர்ணன். “ஆம், சொல்லக்கூடாது” என்று குண்டாசி சொன்னான். “நானும் கிளம்பிச் சென்றிருக்கவேண்டும். வாளெடுத்து பெண்பழி தீர்க்கும்பொருட்டு போரிட்டிருக்கவேண்டும். ஆண்மையுள்ளவனின் வழி அது. காலத்தைக் கடந்து கொடிவழியினரால் போற்றப்படும் செயல் அது” என்றான் விகர்ணன். புன்னகையுடன் “ஆம், அதை செய்திருக்கலாம்” என்று குண்டாசி சொன்னான். விகர்ணன் நெஞ்சில் கைவைத்து விசும்பினான். “ஆனால் அதைச் செய்ய என்னால் இயலவில்லை. ஏனெனில் நான் என் மூத்தவரிடம் இருந்து உளம் விலக்க இயலாது.”

குண்டாசி சலிப்புற்றான். “ஆம், அது உண்மை” என்றான். “அப்படியென்றால் நான் யார்? இதுவரைக்கும் நான் பேசிய அனைத்துமே வெறும் பசப்புகள்தானா?” என்றான் விகர்ணன். குண்டாசி எரிச்சலுடன் “மூத்தவரே, இப்புவியில் நெறியில் மாறாமல் நின்றிருப்பவரென எவருமில்லை. தலைமுறைகளுக்கு ஒருவர், ஆயிரத்தில் லட்சத்தில் ஒருவர், அவ்வாறு வருவார். அவர்களும் ஆழத்தில் பிறரறியாத் தனிமையில் அறம் பிழைத்தவராகவே இருப்பார்கள். இல்லாத ஒன்றை எண்ணி நம்மை நாம் சிறுமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை” என்றான். விகர்ணன் தன் நெஞ்சில் ஓங்கியறைந்தான். குழறிய குரலில் “இல்லை, நான் என்னை வெறுக்கிறேன். மெய்யாகவே வெறுக்கிறேன். நான் செய்திருக்கவேண்டியது ஒன்றே. அவைச்சிறுமை செய்யப்பட்ட அரசியின் பொருட்டு வாளெடுத்திருக்கவேண்டும். செய்யவேண்டியதை செய்ய இயலாதவனே மிகுதியாக எண்ணம் ஓட்டுகிறான். நூறு ஆயிரம் செவிகளுக்குமுன் தன்னை மீளமீள முறையிடுகிறான். நூறு கோணங்களில் தன் தரப்பை முன்வைக்கிறான். அவ்வாறாக அவன் மெதுவாக தன்னை நிறுவிக்கொள்கிறான். வீணர்களின் வழி. கோழைகளின், சிறுமதியர்களின் வழி” என்றான்.

“நீங்கள் எதை சொன்னாலும் அதை ஆமென்று சொல்லுமிடத்திலிருக்கிறேன்” என்றான் குண்டாசி. “நான் செய்வதற்கொன்றே உள்ளது. அதை மட்டுமே செய்திருக்க வேண்டும். ஆனால் அதை இன்று செய்யக் கூடாது, அன்று அவைக்களத்தில் நம் குலத்துக்கு வந்த அரசி சிறுமை செய்யப்பட்ட அந்த அவையில் வாளெடுத்து என் சங்கில் குத்தியிறக்கியிருக்க வேண்டும். அவர்கள் இங்கிருந்து துரத்தப்பட்டபோது அது அறமின்மை என்று ஓங்கி உரைத்து அவர்களுடன் நானும் கிளம்பிச்சென்றிருக்க வேண்டும். அல்லது இங்குள்ள அனைத்தையும் துறந்து வெறும் மனிதனாக காடேகியிருக்க வேண்டும். எதையும் நான் செய்யவில்லை. இங்கிருந்து அரசருக்கும் மூத்தவர்களுக்கும் அறமுரைக்கிறேன் என்று என்னை ஏமாற்றிக்கொண்டேன். பூசல்களைப் பேசி சீரமைக்க முயல்கிறேன் என்று நடித்தேன்.”

அவன் குரல் உடைந்தது. விம்மல்களும் விசும்பல்களுமாக அழுதான். இடதுவிழியிலிருந்து மட்டும் நீர் வழிந்தது. “அனைத்தும் ஒன்றுக்காகவே. செய்யவேண்டிய ஒன்றை செய்யவில்லை. செய்யும் துணிவும் திறனும் இல்லை. ஆம், நான் கோழை.” அவன் பற்கள் தெரிய இளித்தான். தன் ஒழிந்த கோப்பையை சுட்டிக்காட்டி “நன்று! கோழைகள் அனைவரும் தவறாது வந்து சேருமிடத்திற்கு நானும் வந்து சேர்ந்துவிட்டேன். நீ அந்தக் கோப்பையை இங்கு கொடு. அதையும் அருந்தினால் நான் நிறைவுறக்கூடும்” என்றான். குண்டாசி அக்கோப்பையை நீட்டி “ஆம், இச்சொற்களை நிறுத்திக்கொண்டால்தான் நீங்கள் துயில்வீர்கள். அருந்துக!” என்றான். அதை வாங்கி இரண்டு மிடறுகளாக அருந்தி கோப்பையை கீழே நழுவவிட்டு “இம்முறை இது அத்தனை அனலென தோன்றவில்லை” என்றான் விகர்ணன்.

“தாங்கள் படுத்துக்கொள்ளலாம்” என்று குண்டாசி சொன்னான். “நான் அறிவேன் அவர் ஏன் அதை செய்தார் என்று. கௌரவ நூற்றுவர்களும் அதை அறிவார்கள். நாங்கள் நூற்றுவரும் ஓருடல், ஓருளம். அவர் ஏன் அதை செய்தாரென்று நான் அறிவேன். அதை அறிந்தமையால் அன்று சினங்கொண்டேன். அதை அறிந்திருந்தமையால்தான் அறம் அறிந்தும் அதை ஆயிரம் நடிப்புகளால் கடந்துவந்தேன்” என்றான் விகர்ணன். அவன் குரல் தழைந்து வந்தது. கையைத் தூக்கி அசைத்து “ஆனால் சிறுமை என்பது…” என்றான். இருமுறை குமட்டி உமிழ்ந்தபின் “சிறுமை என்பது… ஆனால்” என்றான். “பீஷ்மர் அறிவார். ஏனெனில் தன் குருதியை அறியாதவர் எவரும் இல்லை. பீஷ்மருக்குத் தெரியும். தந்தைக்கும் தெரியும். அனைவருக்கும் தெரியும். நான் சொல்கிறேன், ஆயிரம் உபகௌரவர்களுக்கும் தெரியும். ஆண் என பிறந்த அனைவருக்கும் சற்றேனும் தெரியும்…”

“இன்றுவரை இந்நிலத்தில் அப்படி எத்தனை அவைகள்! எத்தனை அன்னையர்! அதை செய்தவர் கோடி. ஆனால் அதை செய்து…” அவன் விக்கல் கொண்டு அது இருமலாக உடல் எழுந்து எழுந்து அசைய தவித்தான். பின்னர் மூக்கிலும் வாயோரமும் வழிந்த கோழையுடன் “நான் அவரே. ஆனால்…” என்றான். சுட்டுவிரலைத் தூக்கி “அதை எவர் செய்தாலும்… நான் பார்த்தேன். நானே பார்த்தேன். ஆனால் அது வேறு. நான் பார்த்தேன் என்று சொன்னேன் அல்லவா? அப்போது அங்கிருந்த ஆண்களின் கண்கள்… ஆம், அங்கிருந்த அத்தனை கண்களும்…” என்றான். “எனக்கு இன்னும் சற்று மது வேண்டும்” என்றான்.

குண்டாசி மறுமொழி ஏதும் சொல்லாமல் விகர்ணனை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். அவன் கட்டைவிரல் இழுத்து இழுத்து துடித்தது. பீடத்தில் ஒருபக்கமாக சரிந்து கைப்பிடியில் முழு உடலை அழுத்தி தொய்ந்தான். அவன் வலது கை விழுந்து தரையை தொட்டது. தலை எடைகொண்டு மேலும் சரிய வாயிலிருந்து எச்சில் கோழை தோளில் வழிந்தது. குண்டாசி “தீர்க்கரே…” என்று அழைத்தான். வெளியிலிருந்து தீர்க்கன் வந்தான். “மூத்தவரைத் தூக்கி படுக்கவையுங்கள்” என்றான் குண்டாசி. தீர்க்கன் ஒன்றும் சொல்லாமல் வந்து விகர்ணனை தூக்கினான். “என்னை தூக்க வேண்டியதில்லை. நான் இந்த ஆற்றில் நீராடும்போது…” என்றான் விகர்ணன். “ஆனால் இது இத்தனை வெம்மையாக இருக்கிறது. இந்த ஆறு… இந்த ஆறு செல்லுமிடம்… தொலைதூரத்தில் இந்த ஆறு” என்று குழறினான்.

அவனைத் தூக்கி மஞ்சத்தில் படுக்க வைத்து ஆடைகளையும் கச்சையையும் தளர்த்தி கைகால்களை விரித்து தலையணை கொடுத்து தலையை சற்றே தூக்கி வைத்தான் தீர்க்கன். குண்டாசி “கள்மயக்கில் விழுந்தவனை எப்படி படுக்கவைப்பதென்பதில் நெடுங்கால கைப்பழக்கம் கொண்டிருக்கிறீர், தீர்க்கரே” என்றான். தீர்க்கன் அவனை திரும்பிப்பார்க்க “இன்று எனக்கு உமது உதவி தேவைப்படாது” என்றான். தீர்க்கன் ஒன்றும் சொல்லவில்லை. விகர்ணன் “நான் அவளை பார்க்க வேண்டும். அவள் என்னிடம் சொன்னாள், அவள் என்னிடம் சொன்னதுதான் உண்மை, அவளை நான் பார்க்கவேண்டும். அவளைப் பார்த்து…” என்று குழறியபடி படுக்கையில் நீந்துவதுபோல் கைகால்களை அசைத்தான்.

“அவள் என்னிடம் சொல்லி… அவள் என்னிடம் சொன்னது…” என்றான். அவன் உதடுகள் ஓசையற்ற சொற்களையும் கொண்டு அசைந்தன. “அவள் சொன்னாள்… அவள் சொன்னாள்… அவள்…” என சொற்கள் ஓய்ந்தன. உதடு வெடித்த ஒலியுடன் மூச்சு வெளிவந்தது. ஆழ்தொண்டையிலிருந்து குறட்டை வந்தது. அதன் அடைப்பால் உடல் அதிர்ந்து விழித்துக்கொண்டு “அவள் சொன்னது…” என்றான். மீண்டும் “அவள்…” என்றான். அவள் என்ற ஒலியில் ஒன்றி துயிலில் வீழ்ந்தான். குண்டாசி “இறுதியாக அவர் சொன்னதுதான் அனைத்துக்கும் அடியில் உள்ளது. தன் துணைவியை காணச் செல்வதை தவிர்க்கும் பொருட்டு இங்கு வந்திருக்கிறார்” என்றான்.

தீர்க்கன் அதற்கு மறுமொழி சொல்லாமல் “தாங்களும் சற்று துயிலலாம், இளவரசே” என்றான். “இல்லை, நான் உடனே கிளம்புகிறேன்” என்றான் குண்டாசி. “இப்போதேவா?” என்று தீர்க்கன் கேட்டான். “ஆம், இவர் இங்கிருக்கட்டும். விழித்தெழுந்தால் அழைத்துச்செல்ல ஏவலரிடம் சொல்லுங்கள். என் கச்சையும் வாளும் ஒருங்கட்டும்.” தீர்க்கன் “நீங்கள் விடைகொள்ளவில்லை” என்றான். “வேண்டியதில்லை” என்று குண்டாசி சொன்னான். “பேரரசியிடமாவது ஒரு சொல் உரைப்பது நன்று.” குண்டாசியின் உதடுகள் ஒரு சொல்லுக்கென அசைந்தன. தனக்குத்தானே என தலையசைத்து “வேண்டாம்” என்றான். “நீராட்டறை ஒருங்கட்டும்” என்று அவன் சொன்னான். தீர்க்கன் தலைவணங்கி வெளியே சென்றான்.

குண்டாசி நீராட்டறையில் அரைத்துயிலில் என அமைதியுடன் இருந்தான். அவன் கள்மயக்கில் இருப்பதாக எண்ணிய சமையர் அவ்வாறல்ல என்று உணர்ந்ததும் விந்தையுடன் ஒருவரை ஒருவர் விழிமுட்டிக்கொண்டனர். ஆடியில் தன் உடலை நெடுநேரம் பார்ப்பது அவன் வழக்கம் என்பதை அறிந்திருந்தவர்கள் அவன் ஒருகணம்கூட பாவையை நோக்காமல் கிளம்பியது கண்டு திகைப்படைந்தனர். அவன் அணியறைக்கு வந்தபோது தீர்க்கன் இரு படைவீரர்களுடன் அங்கே காத்திருந்தான். அவன் சென்று பீடத்தில் அமர்ந்தபோது அவர்கள் அவனுக்கு தாளாடையை முழங்கால்முதல் இடைவரை சுற்றிச்சுற்றிக் கட்டினர். கச்சைமுறியை இறுக்கி முடிச்சிட்டனர். எருமைத்தோலால் ஆன மணிக்கட்டுக் காப்பையும் முழங்கால் காப்பையும் பொருத்தியமைத்தனர். அவன் குழல்கற்றைகளை அள்ளிச்சுருட்டிக் கட்டி தோல்வாரிட்டு முடிந்து கொண்டையாக்கினர்.

இடைக்கச்சையில் அஸ்தினபுரியின் அமுதகல முத்திரை கொண்ட குறுவாளை செருகியபடி குண்டாசி எழுந்து நின்றான். ஆடியில் தெரிந்த தன் உருவத்தை நோக்கிக்கொண்டிருந்தான். அவர்கள் அவன் நெற்றியில் கொற்றவை அன்னையின் செங்குருதிச் சாந்தால் நீள்குறியிட்டதும் பின்நகர்ந்து தலைவணங்கி அணி முடிந்துவிட்டது என்று காட்டினர். குண்டாசி தீர்க்கரிடம் “சென்று வருகிறேன், தீர்க்கரே. இப்பிறப்பில் கடன் என எஞ்சுவது உமக்கே. மறுமையில் அதை ஈடு செய்கிறேன்” என்றான். தீர்க்கன் விழிகளில் மெல்லிய ஈரத்துடன் உணர்வற்ற முகத்துடன் கைகூப்பி நின்றான். குண்டாசி அவன் கைகளை தொட்டபின் வெளியே சென்றான்.

இடைநாழியில் நடந்து படிகளில் இறங்கி கூடத்தை அடைந்தான். அவனுக்கான தேர் முற்றத்தில் நின்றிருப்பதை கண்டான். முற்றத்தின் சாயும்வெயில் கண்கூசச் செய்தது. தலைகுனிந்தபடி சென்று தேரிலேறிக்கொண்டான். தேர்ப்பாகன் மெல்லிய குரலால் ஆணையிட்டதுமே புரவிகள் விரைந்த காலடிகளுடன் செல்லத் தொடங்கின. காவல்மாடத்தைக் கடந்து பெருஞ்சாலையில் ஏறியபோது குண்டாசி மீண்டும் அந்த விளக்கவியலாத இனிமையுணர்வை அடைந்தான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42

tigகுண்டாசி முகவாய் மார்பில் படிந்திருக்க தாழ்வான பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டி மஞ்சத்தின் சேக்கைமேல் வைத்திருந்தான். இரு கைகளும் தொங்கி நிலத்தை உரசியபடி கிடந்தன. மெல்லிய காலடிகளுடன் அறைக்குள் வந்த தீர்க்கன் “இளவரசே…” என்றான். இருமுறை அவன் அழைத்த பின்னரே குண்டாசி விழிப்புகொண்டு தலைதூக்கி வெற்று நோக்குடன் அவனை பார்த்தான். “தாங்கள் உணவருந்தவில்லை” என்று அவன் சொன்னான். “ஆம்” என்று குண்டாசி முனகல்போல சொன்னான். “தாங்கள் விரும்பினால் இங்கே உணவை கொண்டுவரச் சொல்வேன்” என்றான் தீர்க்கன். குண்டாசி வேண்டாமென்று கையசைத்தான். தீர்க்கன் சிலகணங்கள் தயங்கி நின்றபின் “தாங்கள் மது அருந்தும் விடாய் கொண்டிருப்பின்…” என்று தொடங்க “வேண்டாம்” என்று குண்டாசி சொன்னான்.

ஆழ்ந்த அமைதியுடன் ஒருவரை ஒருவர் உணர்ந்தபடி அந்த அறையில் இருவரும் காலத்தை கடந்தனர். பின்னர் குண்டாசி தலைதூக்கி புன்னகைத்து “முதன்முறையாக மது வேண்டாம் என்று சொல்கிறேன் அல்லவா?” என்றான். ஆம் என்று தீர்க்கன் தலையசைத்தான். “நன்று! ஒருநாள் அவ்வாறு சொன்னேன் என்பது உமது நினைவில் இருக்கட்டும். நாளை காலைப்பொழுதுக்குப் பிறகு நாம் பார்க்கப்போவதில்லை” என்றான் குண்டாசி. தீர்க்கன் “சூதர்கள் ஏவலர்களாக களத்திற்கு வருவதற்கு நூல் ஒப்புதல் உள்ளது” என்றான். குண்டாசி “ஆனால் அரசர்கள் மட்டுமே ஏவலரை அழைத்துச்செல்லவேண்டும் என்பது வழக்கம்” என்றவன் புன்னகைத்து “நான் அரசரின் உடலில் ஒரு சிறு பகுதியாக செல்கிறேன்… சுண்டுவிரலாக, காலின் சுண்டுவிரலாக, அதன் நகமாக” என்றபின் “நோயுற்று உடைந்த நகம்” என்றான்.

பின்னர் முகம் மாறி “எனது போர்க்கச்சையும் படைக்கலங்களும் ஒருங்கியிருக்கட்டும். நாளை காலை விடிவதற்குள் நான் படைப்பிரிவுகளை சென்றடையவேண்டும்” என்றான். தீர்க்கன் “நாளை முதற்காலையில் இங்கு விடைகொளல் சடங்கு நிகழ்கிறது. கௌரவர்களும் உபகௌரவர்களும் சென்றாகவேண்டும்” என்றான். “நான் அவர்களில் ஒருவனல்ல” என்றான் குண்டாசி. “இன்றிரவு மது அருந்தாமல் துயில முடியுமா என்று பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் சென்று அணையும் அந்த இருண்ட ஆழம் இன்று எனக்கு தேவையில்லை என்று தோன்றுகிறது.” ஆனால் தீர்க்கனின் முகத்தில் கவலை நீடித்தது. சொல்லின்றி தலைவணங்கி வெளியே சென்றான்.

குண்டாசி மார்பில் கைகளை கட்டிக்கொண்டு இலைகள் அசைந்த சாளரத்தை நோக்கிக்கொண்டிருந்தான். பின்னுச்சிப்பொழுது வெயில் உருகியதுபோல் வெளியே தேங்கி நின்றது. இலைகளில் அசைவே இல்லை. பறவைக்குரல் ஏதும் எழவில்லை. மிக அரிதாக அவன் உச்சிப்பொழுதுக்குப்பின் விழித்தெழுவதுண்டு. மது அளவோடு அருந்தி துயின்றிருந்தால் அவ்விழிப்பு மிக இனிய பிறிதொரு காலத்தில் சென்று கண் விழித்தது போலிருக்கும். உயிருடனிருப்பதே தித்திப்பானதென்றும், சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு பொருளும் இனிதென்றும் தோன்றும். சற்றே அசைந்தால்கூட அவ்வினிமை கலைந்துவிடும் என்று அஞ்சியவன்போல அவன் படுத்திருப்பான். அதே இனிமை அப்போது ஒரு பழைய நினைவுபோல தோன்றியது. மறுகணமே வந்து சூழ்ந்துகொண்டது. ஆனால் இருத்தலின் தித்திப்பாக அது இல்லை. இழந்த ஒன்றை நினைவுகூர்வதன் துயர் கலந்த இனிமை. அது உவகைதானா? கொப்பளித்து எழாது அசையாக் குமிழியென்று நிற்கும் உவகை ஒன்று உண்டா என்ன? அவன் உளம் கரைந்து விழிநீர் வடிக்கத் தொடங்கினான். ஏன் அழுகிறோம் என்று உள்ளூர ஒரு தன்னிலை வியந்தது. அவ்வாறு அழுவதே இனிதாக இருந்தது.

தீர்க்கனின் காலடிகளைக் கேட்டு அவன் திரும்பிப்பார்த்தான். தலைவணங்கி “இளவரசர் விகர்ணன்” என்றான் தீர்க்கன். “என்னை பார்க்கவா?” என்றபடி எழுந்துகொண்ட குண்டாசி மேலாடையை எடுத்து அணிந்துகொண்டு “வரச்சொல்க!” என்றான். தீர்க்கன் சென்று சில கணங்களிலேயே விகர்ணன் உள்ளே வந்தான். குண்டாசி கைகூப்பி “வருக, மூத்தவரே! என் அறைக்கு தாங்கள் வருவது ஒரு வாழ்த்து” என்றான். “இங்கு வர எண்ணியதுண்டு” என்று விகர்ணன் சொன்னான். “நெடுநாள் வரை நீ ஒருவன் இருப்பதையே என் உள்ளம் உணராதிருந்ததுண்டு. உன் அணுக்கத்தை உணர்ந்த பின்னர் உன்னை எனக்குரிய வடிவில் மாற்றி புனைந்துகொண்டேன். உன்னை உன் இயல்பில் அறிந்துகொள்வதை முற்றிலும் தவிர்த்தேன்” என்றபின் “இன்று இங்கு வரத் தோன்றியது. இத்தருணத்தில் இங்கு எவரும் என்னுடன் இருக்க இயலாதென்று எண்ணினேன்” என்றான்.

அமரும்படி குண்டாசி கைகாட்டினான். பீடத்தில் அமர்ந்த பின் விகர்ணன் “அஸ்தினபுரியெங்கும் இப்போது பல்லாயிரக்கணக்கில் விடைகொளல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இவ்வரண்மனையில் ஒவ்வொருவரும் பிறரை சந்தித்து விடைபெற்றுக்கொண்டிருக்கிறார்கள். நான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை”  என்றான். குண்டாசி “அல்லது நீங்கள் என்னிடம் கொற்றவையின் ஆலயத்தில் பேசியவற்றில் ஏதேனும் எஞ்சியுள்ளது என்று எண்ணுகிறீர்களா?” என்றான். விகர்ணன் அந்த நேரடி வினாவால் ஒரு கணம் திகைத்து பின் கசப்புடன் நகைத்து “இதனால்தான் கௌரவர் உன்னை அஞ்சுகிறார்கள். உன் நாவில் நஞ்சிருக்கிறது. காமரூபத்தில் மண்புழுவைப்போன்ற பாம்பொன்று உண்டு என்கிறார்கள். மிகச் சிறிது, மண்ணோடு மண்ணாக நெளிவது. பாம்பிற்குரிய விரைவோ அழகோ இல்லாதது. துயிலும் விலங்குகளை அணுகி அவற்றின் செவிக்குள் அவையறியாமல் மெல்ல நெளிந்து நுழைந்துகொள்ளும். அங்கு நச்சு கக்கி அவற்றை பித்தெழச் செய்து கொல்லும். அவை மட்கி மறைவதுவரை உள்ளேயே வாழும். நஞ்சினால் அது நாகம், மெய்யில் ஒரு புழு” என்றான். “பாம்பே ஒருவகை புழுதான், தன்னை புழுவென்று உணர்ந்ததனால்தான் அது நச்சை ஈட்டிக்கொண்டது” என்று குண்டாசி சொன்னான்.

“இங்கு வருவதற்கு முன் உன்னிடம் சொல்வதற்கென சில சொற்கள் சேர்த்துவைத்திருந்தேன். இப்போது அவற்றை நீ எப்படி எதிர்கொள்வாய் என்று எண்ணி தயங்கத் தொடங்கிவிட்டேன்” என்றான் விகர்ணன். பின்னர் “சொற்களை விடு. நான் சொல்லாட வரவில்லை. உன்னுடன் அமர்ந்து மதுவருந்தலாம் என்று வந்தேன்” என்றான். குண்டாசி சிரித்து “மதுவா? தாங்கள் அருந்துவதில்லையே?” என்றான். விகர்ணன் “எப்போதாவது தமையன் அளிக்கும் உண்டாட்டில் மூத்தவருடன் அமர்ந்து மட்டுமே அருந்துவேன். அதில் எனக்கு எந்த ஆர்வமும் இருந்ததில்லை. ஏனெனில் என்னை அழுத்தி மண்ணோடு நிறுத்தும் தன்னுணர்வால் ஆனது என் உள்ளம். மது அருந்தினால் அது நனைந்து மேலும் எடைகொண்டதாகிறது. பிறர் மது அருந்தி தங்களை மறந்து தாங்கள் எதையெல்லாம் ஒளித்தும் திரித்தும் அகற்றியும் வைத்திருந்தார்களோ அவையனைத்துமாகி நின்றிருப்பதை பார்க்கையில் பொறாமை கொள்வேன்” என்றான்.

குண்டாசி “அவ்வாறு எவரும் தன்னிலை அழிவதில்லை. தன்னிலை ஒரு நடிப்பு, தன்னிலை மறப்பது பிறிதொரு நடிப்பு” என்றான். விகர்ணன் “தனிமையில் நான் ஒருபோதும் மது அருந்தியதில்லை. இன்று என் அறையில் அமர்ந்து மதுவருந்தலாம் என்று தோன்றியது. ஆனால் மது வந்தபோது அதை திரும்பக்கொண்டுபோகச் சொல்லிவிட்டு எழுந்து இங்கு வந்தேன்” என்றான். சிரித்தபடி “விந்தை என்னவென்றால் நான் மதுவருந்தாமல் அமர்ந்திருக்கிறேன்” என்று குண்டாசி சொன்னான். “நீயா?” என்று விகர்ணன் வியந்து பார்த்தான். “மது அருந்துபவர்கள் அருந்தாதபோதும் அதே கள்மயக்கு கொண்டவர்கள்போல் இருப்பார்கள். நீங்கள் மது அருந்திய பின்னும் தன்னிலை கொண்டிருப்பதுபோல” என்று சொன்ன குண்டாசி “எதன் பொருட்டாயினும் நீங்கள் என்னைத் தேடி வந்தது நன்று” என்றபின் “தீர்க்கரே” என்றான்.

வாயிலருகே தீர்க்கன் தோன்றினான். “எனக்கு பீதர்நாட்டு மது. மூத்தவருக்கு யவனமது” என்றான் குண்டாசி. “இல்லை, எனக்கும் பீதர்நாட்டு மது” என்றான் விகர்ணன். “அது அனல், உள் எரிப்பது” என்றான் குண்டாசி. “எனக்கு அதுதான் வேண்டும். யவன மது என்னை மயக்குற வைப்பதில்லை” என்றான் விகர்ணன். குண்டாசி “அனல் அனலால் அணையும் என்பதுபோல உள்ளே அனலிருந்தால் மட்டுமே பீதர்நாட்டு மது அருந்தவேண்டும், மூத்தவரே” என்றான். “ஆம். அதுவே கொணர்க!” என்றான் விகர்ணன்.

தீர்க்கன் சென்ற பின்னர் மது குறித்த எண்ணம் இருவரையும் எளிதாக்க கைகால்களை நீட்டிக்கொண்டு அமர்ந்தனர். விகர்ணன் ஏதோ முனகிக்கொண்டான். “தாங்கள் சற்று நிலையழிந்திருக்கிறீர்கள்” என்றான் குண்டாசி. “ஆம்” என்றான் விகர்ணன். “ஏனென்று உன்னால் சொல்ல முடிகிறதா? நீதான் அறியாது அகம்நுழையும் மண்ணுளியாயிற்றே?” குண்டாசி கோணலாக நகைத்து “மிக எளிதாக சொல்ல முடியும். தாங்கள் யுயுத்ஸுவை பார்த்துவிட்டு வருகிறீர்கள்” என்றான். விகர்ணன் “விந்தைதான்! உண்மை அது” என்றபடி சற்றே முன்னால் நகர்ந்தான். “எப்படி இதை நீ சொல்கிறாய்?” குண்டாசி “எளிது” என்று மேலும் நகைத்தான். “கௌரவ நூற்றுவர்களிலேயே உளக்கூர்மை மிக்கவன் நீதான் என்று சொல்வார்கள். அனைவரையும் கசந்து நகையாடுவதனூடாக அப்பெயரை நீ ஈட்டியிருக்கிறாய் என்றுதான் எண்ணியிருந்தேன். மெய்யாகவே உளம் புகுந்து எண்ண உன்னால் இயல்கிறது” என்றான் விகர்ணன்.

“இதில் உளம்புக என்ன உள்ளது? இன்று இவ்வரண்மனையில் அனைவருமே அவனைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருப்பார்கள். அவனை சந்திக்காமல் தவிர்க்க எண்ணுவார்கள். சந்தித்தே ஆகவேண்டும் என்ற அழுத்தம் இருப்பது உங்களுக்குத்தான்” என்றான் குண்டாசி. “ஏன்?” என்று விகர்ணன் புருவம் சுளித்து கேட்டான். “அவன் உங்கள் இன்னொரு நிகழ்வாய்ப்பு அல்லவா?” என்றான் குண்டாசி. “அவனா?” என்று விகர்ணன் கேட்டான். “ஆம், அவனாகி நீங்கள் நடித்துச் சலிக்கிறீர்கள்” என்று குண்டாசி சொன்னான். “அல்ல!” என்று விகர்ணன் எதிர்பாராமல் கூச்சலிட்டான். “பிறகு ஏன் அவனை சந்தித்தீர்கள்?” என்றான் குண்டாசி. “அவன் கிளம்புகிறான் என்று அறிந்தேன். மூத்தவரிடம் ஒப்பும் வாழ்த்தும் பெற்றான் என்று அறிந்தபோது முதலில் நம்ப இயலவில்லை. பின்னர் அதுவன்றி பிறிதெதையும் ஆற்ற மூத்தவரால் இயலாதென்று தெளிந்தேன். ஏனோ அது என்னை எரிச்சலடையச் செய்தது. எண்ண எண்ண உளம் கொதித்தது. அவனிடம் சென்று சில வினாக்கள் கேட்க வேண்டுமென்று தோன்றியது” என்றான்.

குண்டாசி புன்னகைத்து “செஞ்சோற்றுக்கடன் குறித்து அல்லவா?” என்றான். “சொல், உன் நஞ்சு எவ்வளவு தொலைவு செல்கிறதென்று பார்க்கிறேன்” என்றான் விகர்ணன். குண்டாசி “நஞ்சென ஏதுமில்லை, மூத்தவரே. இதுவரை பிறர் உள்ளங்களின் கரவுகளுக்குள் எவ்வாறு கடந்துசென்று தொட்டறிந்தேன் என்று சற்று முன்னர் மூத்தவர் எனக்கு சொன்னார். என் உள்ளத்துக் கரவால்” என்றான். பற்களைக் கடித்தபோது அவன் வஞ்சத்துடன் சிரிப்பதுபோலிருந்தது. அவன் தாடை அசைந்தது. “அதன் பின் என்னில் எழும் ஒவ்வொரு எண்ணத்தையும் நான் ஐயுறுகிறேன். தன் வாயிலூறும் எச்சிலை ஒருவன் மலமென எண்ணத்தொடங்கினால் என்ன ஆவான்? அதுதான் என் நிலை” என்றான். “என்ன சொன்னார்?” என்று விகர்ணன் கேட்டான். அவன் முகம் கொண்ட மாறுதல் குண்டாசியை சினம்கொள்ளச் செய்தது. “அதை விடுங்கள். நீங்கள் யுயுத்ஸுவிடம் என்ன சொன்னீர்கள்?” என்றான்.

“நான் அவன் அறைக்குச் சென்றபோது அவன் கிளம்பும் பணியிலிருந்தான். கனகரை வரவழைத்து அவனுக்களிக்கப்பட்ட இறுதிப் பொறுப்புகளின் செய்திகளை அளித்துக்கொண்டிருந்தான். அனைத்தையும் முன்னரே ஓலைகளில் எழுதியிருந்தான். அவற்றை கனகருக்கு அளித்து முறைமைச் சொல் உரைத்து விடைகொண்டான்” என்று விகர்ணன் சொன்னான். “நான் உள்ளே நுழைந்தபோது அவர்களின் இறுதிச் சொல்லளிக்கை நிகழ்ந்துகொண்டிருந்தது. என்னைக் கண்டதும் சற்றுபொறுங்கள் மூத்தவரே இப்பணியை முடித்துவிடுகிறேன் என்று அவன் இயல்பாக சொன்னான். அன்றாட அரசியல் பணி ஒன்றை செய்வதுபோலிருந்தான்.” குண்டாசி “ஆம், அது அவன் இயல்பு. அவன் யுதிஷ்டிரரின் பிறிதுவடிவம்” என்றான். “மெய், அதை அங்கே கண்டேன்” என்று விகர்ணன் சொன்னான்.

நான் அவன் சொல்வதைக் கேட்டு நின்றிருந்தேன். அவன் தொன்மையான சடங்குக்குரிய நுண்சொல் என சீராக சொல்லடுக்கினான். “இந்தக் கணம் நிறைவுறுக, இதற்குப் பின் நான் இந்நகருக்கும் குடிக்கும் எந்தத் தொடர்பும் அற்றவன் ஆகுக! இதன் தெய்வங்கள் என்னை விட்டு ஒழிக! மூதாதையர் என்னை கைவிடுக! அஸ்தினபுரியின் அரசப்பணிகள், படைசூழ்கை, குடிமுறைமைகள் குறித்த ஒரு சொல்லும் நினைவென என்னில் எஞ்சாது ஒழிக! என் நினைவு அஸ்தினபுரியின் குடிகளிலும் அரசிலும் ஒரு துளியும் மிஞ்சாமல் அழிக! நான் இங்கு பிறந்ததற்கு முந்தைய கணம் இனி அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான். கனகர் ஓலைகளை வாங்கிக்கொண்டு தடுமாறிய குரலில் “ஆம், அதுவே ஆகுக!” என்றார். அவன் என்னை நோக்கி தலைவணங்கி “இதோ வருகிறேன், மூத்தவரே” என்று சொல்லி அருகிலிருந்த அறைக்குள் சென்றான்.

நான் கனகரிடம் “இத்தனை பொறுப்புகளையா இவன் நடத்தி வந்தான்?” என்று கேட்டேன். அவர் கையில் நூற்றுக்கு மேல் ஓலைகள் அடங்கிய கட்டு இருந்தது. அவர் புன்னகைத்து “இங்குள்ள ஒவ்வொருவரும் தாங்கள் ஆற்றும் பணியை இதேபோல நூறுநூறு ஓலைகளாக எழுதலாம். ஒற்றைச் சொற்றொடரில் உரைக்கவும் ஆகும்” என்றபின் “இதனால் எப்பொருளுமில்லை. தான் ஆற்றிவந்த அனைத்தையும் இவ்வாறு எழுத்தில் பதிவு செய்வதென்பது அவற்றை தொகுத்துக்கொள்ள அவருக்கு உதவுகிறது. துறப்பதற்கு துறப்பது எது என்று தெரிந்திருக்கவேண்டும் அல்லவா? ஆற்றிலும் அளந்தே வீசவேண்டும் என்பர் வணிகர்” என்றார். “இவற்றை இன்னொருவர் படித்தறியவே நீணாளாகுமே?” என்றேன். “இளவரசே, இங்கு எவரும் எந்த ஓலையையும் படித்து உள்வாங்கும் நிலையை இழந்து சில நாட்களாகின்றன. பிறர் சொல்லும் சொற்களையே எவரும் உளம் வாங்குவதில்லை. ஒவ்வொரு அகமும் அதன் உச்சத்தில் தன்னுள் இருப்பவற்றைச் சுழற்றி விசை கொண்டிருக்கிறது” என்றபின் “வருகிறேன்” என்று தலைவணங்கி வெளியே சென்றார்.

அவன் என்னிடம் எதையோ அளிக்கவிருக்கிறான் என்று எண்ணி நான் காத்திருந்தேன். ஆனால் மரவுரி அணிந்து, அணிகளேதும் இன்றி வெறும் கைகளுடன் அவன் என் முன் வந்தான். “இந்த ஆடை முன்னரே இங்கிருந்ததா?” என்றேன். அந்தக் கோலம் என்னை எரிச்சலடையச் செய்தது. “ஆம் மூத்தவரே, இந்த ஓலைகளை எழுதத் தொடங்கியபோதே மரவுரியையும் வாங்கி வைத்துவிட்டேன்” என்றான். “எப்போதிருந்து?” என்று நான் கேட்டேன். “மூன்றாவது தூது முடிந்து தன் கால்பொடியைத் தட்டி இங்கிருந்து இளைய யாதவர் கிளம்பிச் சென்ற அன்று முதல்” என்று அவன் சொன்னான். அறத்தான் என தன்னை நம்புபவனின் நடத்தையில் ஏன் அத்தனை பொய்மை குடியேறுகிறது என்று எண்ணிக்கொண்டேன். அவனை ஓங்கி அறையவேண்டும் என்று என் உள்ளம் எழுந்தது. அவன் உள்ளம் சிதறும்படி எதையேனும் சொல்லவேண்டும். ஆனால் அவன் அனைத்தையும் கடந்தவன் என்னும் தோற்றத்தினூடாக அனைத்தையும் கடந்துசெல்வான் என்றும் அறிந்திருந்தேன்.

“நீ மூத்தவருக்கோ தந்தைக்கோ எந்த எடுத்துரைப்பும் அளித்ததில்லையே? இவையனைத்தும் உன்னுள் நிகழ்ந்திருந்தன என்பதற்கான சான்றே இல்லையே?” என்றேன். ஆனால் அது நான் எண்ணியதுபோல் குற்றச்சாட்டாக அன்றி மன்றாட்டாக ஒலித்தது. “ஆம், இவை என்னுள் நிகழ்ந்துகொண்டிருந்தன. ஆனால் பிறருக்கு உரைக்கும் அளவுக்கு தெளிவில்லை. நான் உரைத்துக் கேட்கும் அளவுக்கு எனக்கு செவிகொடுப்பார் எவரும் இங்கு இல்லை” என்று அவன் சொன்னான். அது உண்மை என நானும் உணர்ந்தேன். அவனை சொல்திருந்தா இளையோன் என்றே தந்தையும் மூத்தவரும் நடத்தினார்கள். “அனைத்தையும் இளைய யாதவர் பொருட்டு துறக்கிறாய். அப்படி ஒரு முற்றளிக்கையை எவ்வண்ணம் அடைந்தாய்?” என்றேன். பேசப்பேச என் சினம் தணிவதையும் உணர்ந்தேன்.

“மூத்தவரே, பிறந்த நாள் முதலே நான் இளைய யாதவரின் பெருமைகளையே கேட்டு வளர்ந்திருக்கிறேன். வழிபடு தெய்வத்திற்கு நிகரென என்னுள்ளத்தில் அவர் அமர்ந்திருந்தார். ஆயினும் அவரை நான் அணுகினேன் என்று உரைக்க இயலாது. முதன்முறை அரச அவையில் அவர் வந்து தூதுரைத்தபோது பக்தி நிறைந்த நெஞ்சுடன் கைகளைக் கூப்பியபடி அவர் முகத்தை நோக்கி அமர்ந்திருந்தேன். விண்ணில் தோன்றும் பொன்னிற முகில்போல நாமறியா நம் சிற்றுள்ளத்தை பித்துற வைக்கும் கனவு அவர் முகம். நெடுநாள் அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் என்னுள் மீளமீள நிகழ்த்தியபடி இருந்தேன். என்னுள் அழியாது நிலைகொண்டன அவர் விழிகள்” என்று அவன் சொன்னான், கள்மயக்கு கொண்டவன்போல் இமைகள் சரிய, முகம் உவகையில் விரிய. அவனை வியப்புடன் நோக்கி அமர்ந்திருந்தேன்.

“மீண்டும் ஷத்ரியர்களின் பேரவைக்கு வந்து தூதுரைத்தபோது அவருடைய நெஞ்சை பார்த்தேன். பிறிதொன்றையும் அன்று பார்க்கவில்லை. மணியொளி கொண்டது. அதன் நடுவே பெருஞ்சுழி ஒன்றின் கருமை. உலகளந்த பெருமானின் கௌஸ்துப மயிர்ச்சுழியை தானும் கொண்டவர் அவர் என்று சூதர்கள் சொல்லி கேட்டிருந்தேன். அது மெய் என்று கண்டேன். மூத்தவரே, அன்று அவை முடிந்து வெளியே வந்தபோது நான் அழுதுகொண்டிருந்தேன்” என்று அவன் சொன்னான். அப்போதும் அவன் அழுபவன்போல் குரல் தழைந்து உதடுகள் விதும்ப தெரிந்தான்.

“அஸ்தினபுரியில் என் உள்ளத்தைப் பகிர எவருமில்லை. நானறிவேன், இங்குள அத்தனை பெண்டிரும் கோபிகைகள் என. அவருக்காக என்று உளம் கனிந்தவர்கள். நானோ ஆண், அடியான் என்று உணர்பவன். அவர்களிடமும் என்னால் அணுக இயலாது. அஸ்தினபுரி போர்வெறி கொண்டு கொப்பளித்துக்கொண்டிருந்தது. படைவீரர்களின் கண்களில் பித்தின் களிப்பு. குடிகள் தங்கள் தலைமுறைகள் திளைத்த பெருஞ்சலிப்பிலிருந்து எழுந்து பறந்து சுழன்றுகொண்டிருந்தார்கள். குருதி குருதி என்று ஒவ்வொரு சொல்லும் பொருள்கொண்டிருந்தது. அவர்கள் நடுவே முற்றிலும் அயலவனாக, ஒருவராலும் நோக்கப்படாதவனாக நெஞ்சோடு கைசேர்த்து விழிநீர் உதிர்த்தபடி நான் சுற்றிவந்தேன்.”

“மூத்தவரே, மூன்றாம் முறை அவர் வேள்வி நிலையில் தூதுவந்தபோது நான் அவர் கால்களை மட்டுமே பார்த்தேன். அதற்கு மேல் விழிதூக்க என் உள்ளம் துணியவில்லை. அவர் சொற்கள்தவிர வேறொன்றும் என் செவியில் விழவுமில்லை. கைகூப்பியபடி நோக்கியிருந்தபோது நானே அனைத்தும் என்று ஒரு மொழி விண்ணை நிரப்பும் இடியோசைபோல் எனக்கு கேட்டது. திடுக்கிட்டவனாக ஒருகணம் விழிதூக்கியபோது அவர் பேருருவை பார்த்தேன். ஆம், விண்பேருருவை. கோள்களையும் விண்மீன் பெருக்கையும் கடுவெளியையும் அலகிலியையும் அணையா வெறுமையையும்கூட தானெனக் கொண்டு நின்றிருந்த பரம்பொருளை நான் பார்த்தேன். அவர் அதை எனக்கு அங்கு காட்டினார். ஆம், நான் பார்த்தேன், ஐயமே இல்லை. நான் பார்த்தேன்” என்று அவன் கூவினான்.

அவன் விழிகளை என்னால் நேருக்குநேர் நோக்கமுடியவில்லை. அவற்றிலிருந்த பித்து என்னை அச்சுறுத்தியது. அவன் “இக்கணம் வரை இதை நான் எவருக்கும் சொன்னதில்லை. ஆனால் அவர் விண்ணளந்தோன் கொண்ட மண்வடிவம். ஐயமே இல்லை. என்னை ஆட்கொள்ளவே அன்று இங்கு எழுந்தருளினார். வேதம் ஓதித் தெளிந்த அந்தணரும், வேதமுடிபு கற்ற அறிவரும், ஊழ்கத்திலமர்ந்து உயர்ந்த படிவரும் நிறைந்திருந்த அவ்வவையில் வேறெவரும் அவ்விண் பேருருவை காணவில்லை. நான் மட்டுமே கண்டேன். அதன் பின் எனக்கு மாற்றெண்ணம் என ஒன்றில்லை” என்றான்.

பித்தர்கள் நம்மை ஏன் அச்சுறுத்துகிறார்கள்? கூடவே நம்மை ஒருகணமும் உளவிலக்கம் கொள்ள இயலாதபடி கவரவும் செய்கிறார்கள். பித்து என்பது ஒரு திறந்த பெருவாயில். அப்பாலிருப்பது வெளி. பித்தன் தரையில் கால்படியாது காற்றில் எழுந்துநிற்பவன்போல் நமக்கு திகைப்பூட்டுகிறான். பித்தை விரும்பாத எவர் இருக்கிறார்கள்? நீ கள்ளிலும் சிலர் கவியிலும் ஞானியர் மெய்மையிலும் எளியோர் உறவுகளிலும் தேடித் தேடி சிறு துளியென அடைந்து களிப்பது பித்தை அல்லவா? பெரும்பித்து சிலருக்கு அருளப்படுகிறது. அதன்பிறகு அவர்களுக்கு இங்குள்ள எதுவும் ஒரு பொருட்டல்லாமலாகிறது.

பித்திலாது புழங்குவதற்குரியது இவ்வுலகு. இல்லங்களுக்குள் வந்துவிட்டால் பறவைகள் எப்படி நிலைகுலைகின்றன என்று பார்த்திருக்கிறேன். ஏனென்றால் மனிதர்களும் விலங்குகளும் புழங்கும் எல்லையுள்ள வெளியில் பறவைகள் வாழ முடியாது. விண்ணிலேயே அவை நிறைவுற்றிருக்கின்றன. பித்தர்கள் இங்குள்ள அனைத்தையும் உதறிவிடுகிறார்கள். என் உளஎழுச்சியை வன்மையான வினா ஒன்றினூடாக கடந்தேன். “நீ எந்தைக்கும் என் தமையனுக்கும் செஞ்சோற்றுக்கடன் பட்டவனல்லவா?” என்று கேட்டேன். கேட்டதுமே அவ்வினா எத்தனை சிறியதென்றும் உணர்ந்தேன். அவன் “இப்புவியிலுள்ள அனைவருமே என் தலைவனுக்கு செஞ்சோற்றுக்கடன் பட்டவர்கள்தான். நான் உண்டது அவர் உணவு, வாழ்ந்தது அவர் நிழலில், உறவென்றும் காவலென்றும் எனக்கு பிறிதெவரும் இல்லை” என்றான்.

அதன் பின்னர் என்னால் ஒன்றும் சொல்ல இயலவில்லை. “நன்று! நலம் சூழ்க!” என்று எழுந்துகொண்டேன். “நான் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டேன், மூத்தவரே. செல்லும்போது எவரிடமும் சொல்லக்கூடாதென்று எண்ணினேன். தங்களிடம் சொல்லிவிட்டுச் செல்லவேண்டுமென்பது என் தலைவரின் ஆணை போலும். அவர்தான் தங்களை இங்கு வரவைத்திருக்கிறார். எனக்கு விடைகொடுங்கள்” என்றான். “சென்று வருக!” என்று நான் சொன்னேன். அவன் வெறுங்கைகளுடன் வெளியே இறங்கி இடைநாழியில் நடந்து படிகளில் இறங்கி முற்றத்தின் வெயிலில் ஒளிகொண்டு அப்பால் சென்று அகன்றான்.

“அங்கு நின்றிருக்கையில் அறியா உளநடுக்கொன்று எனக்கு ஏற்பட்டது. அங்கிருந்து உடனடியாக இங்கு வரவேண்டுமென்று தோன்றியது. அதைக் கடந்தே என் அறைக்குச் சென்றேன். அங்கு அமரவியலாது இங்கு வந்தேன். வழியிலேயே ஓர் எண்ணம் வந்தது. ஒருவேளை நீயும் கிளம்பியிருப்பாய் என்று” என்றான் விகர்ணன். “நானா? நான் எங்கு கிளம்புவது?” என்றான் குண்டாசி. “தார்த்தராஷ்டிரர்களில் நாம் மூவரும் ஒன்றின் மூன்று முனைகளல்லவா?” என்று விகர்ணன் சொன்னான். “சற்றுமுன் யுயுத்ஸுவை நான் சென்று கண்டது அதனால்தான் என்றுதான் நீயும் சொன்னாய்.” குண்டாசி “அப்படியென்றால் தாங்களும் கிளம்பியிருக்கக்கூடுமோ?” என்றான். நெடுநேரம் ஒன்றும் சொல்லாமல் விகர்ணன் அமர்ந்திருந்தான். பின்னர் “இளையோனே, அவன் கிளம்பிச் சென்றபோது அவனுடன் எனது ஒரு பகுதியும் செல்வதை உணர்ந்தேன். நான் கொண்ட உள நடுக்கு அதனால்தான்” என்றான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41

tigதுரியோதனன் “அஸ்தினபுரியிலிருந்து நீ விரும்பியதை கொண்டுசெல்லலாம், இளையோனே” என்றான். “இங்கு நீ கௌரவரில் ஒருவன். கருவூலத்தில் நூற்றொன்றில் ஒன்று உன்னுடையது. அஸ்தினபுரியின் படைகளிலும் நூற்றொன்றில் ஒன்று உனக்குரியது.” யுயுத்ஸு “இங்கிருந்து நான் எதையும் எடுத்துச் செல்லலாகாதென்று உறுதிகொண்டிருக்கிறேன். ஆகவே இந்நகரின் எல்லையில் இவ்வாடைகளையும் களைந்து மரவுரி அணிந்தபடி இளைய யாதவரை நோக்கி செல்லவிருக்கிறேன்” என்றான்.

“நன்று! அது உன் விருப்பம். இங்கிருந்து நினைவுகளையும் உணர்வுகளையும்கூட எடுத்துச் செல்லவேண்டியதில்லை, இளையோனே” என்றான் துரியோதனன். குண்டாசி “அதாவது அஸ்தினபுரியின் படைசூழ்கைகளை அவையில் அமர்ந்து அறிந்திருக்கிறாய். அத்தகவல்களை நீ பாண்டவர்களுக்கு சொல்லக்கூடாது என்று பொருள்” என்றான். சினத்துடன் திரும்பி நோக்கிய துரியோதனன் பின்னர் தன்னை வென்று மெல்ல சிரித்து “இங்கு உன் சிறுமையினூடாக இருப்பு அறிவிக்க வேண்டுமென்று எண்ணுகிறாய் அல்லவா?” என்றான்.

“அல்ல, இங்கு வருகையில் இத்தருணத்தின் மங்கலத்தை கெடுக்க எதையும் செய்யக்கூடாது என்று எண்ணிதான் வந்தேன். ஆனால் அமர்ந்த பின் தோன்றியது நான் எதையும் குலைக்கவில்லை என்று. ஏனெனில் மிகச் சிறியவன். களிமகனாகவும் வீணனாகவும் என்னை ஆக்கிக்கொண்டதனூடாக என் சொற்களுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் செய்து கொண்டவன். ஆகவே எந்த அவையில் எதை சொன்னாலும் எதுவும் நிகழ்வதில்லை. சொல்வதன் பயன் எனக்கு மட்டுமே. அந்தப் பயன் ஒவ்வொரு தருணத்திலும் எது உண்மை என்று மழுப்பாமல் தொட்டெடுப்பது” என்றான் குண்டாசி. “எனக்கு பலிகொள்ளும் பள்ளிவாள் போன்ற இரக்கமில்லாத கூர்மைகொண்ட உண்மை தேவை, மூத்தவரே. நான் பேசுவது அதன்பொருட்டே.”

“இவன் நம் தந்தையிடம் சொல்பெறும் தருணத்தில் அங்கிருந்தேன். தந்தை எந்தத் தயக்கமுமின்றி இவனுக்கு சொல்லளிப்பார் என்று அறிந்திருந்தான். வெளிவரும்போது என்னிடம் சொன்னான், அன்னையரும் மறு எண்ணமின்றி வழியனுப்புவார்கள் என்று. நீங்களும் அவ்வாறே என்று நான் அறிந்திருந்தேன். நம் அனைவருடைய பெருந்தன்மையை பயனென ஈட்டி இவன் இங்கிருந்து கிளம்புகிறான். அப்பெருந்தன்மையை நாம் எதற்காக நடிக்கிறோம்? மெய்யாகவே அப்பெருந்தன்மை நமக்கிருக்குமென்றால் ஏன் நாம் அவர்களை காட்டுக்கு துரத்தினோம்? ஏன் நிலம் மறுத்தோம்? அவர்களின் அரசியை அவைச் சிறுமை செய்தபோது எங்கு சென்றது இப்பெருந்தன்மை?” என்று குண்டாசி கேட்டான். ஏதோ சொல்ல வாயெடுத்த சுபாகு துரியோதனனின் முகத்தை பார்த்த பின் அடக்கிக்கொண்டான்.

“நாம் ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொன்றாக நம்மை வெளிப்படுத்திக்கொள்கிறோம். அத்தருணங்களுக்கிடையே இணைப்பென்றிருப்பது நாம் பின்னர் எண்ணி உருவாக்கிக்கொள்ளும் எண்ணங்கள் மட்டும்தானா?” குண்டாசி யுயுத்ஸுவை பார்த்தான். “ஆகவே கௌரவ நூற்றுவரில் எஞ்சியிருக்கும் சிறுமையின் முகமாக நின்று இவனிடம் பேசலாமென்று தோன்றியது. உன்னை நாங்கள் வாழ்த்தி அங்கு அனுப்புவது அது எங்கள் அச்சமின்மையின் அடையாளமாக அவர்களுக்கு தெரியட்டும் என்பதற்காகத்தான். மண் மறுத்ததனால் நாங்கள் சிறுமை கொண்டவர்களல்ல என்றும் அரசியை அவையிழிவு செய்ததனால் சிறியோரும் அல்ல என்றும் இது காட்டக்கூடும். ஆம், அதன்பொருட்டே.”

“வாயை மூடு!” என்று துச்சாதனன் கூவினான். “ம்” என்று அவனை துரியோதனன் அடக்கினான். குண்டாசி அந்த எதிர்ப்பாலேயே ஊக்கம் பெற்று தொடர்ந்தான். “அதைவிட ஒன்றுண்டு. நாளை நாங்கள் நூற்றுவரும் களத்தில் மடிவோம் எனில் தார்த்தராஷ்டிரக் குருதியின் ஒரு துளியென நீ அங்கு எஞ்சியிருப்பாய். இப்புவியில் ஒரு துளியேனும் நம் குருதி எஞ்சவேண்டும். குருகுலத்தின் அறத்தின் வடிவென நீ இன்று அங்கு செல்கிறாய். நாளை உன்னை அவர்களும் அவர்களின் சூதர்களும் அவ்வாறு சொல்லவும் கூடும். ஆனால் நீ தார்த்தராஷ்டிரன். எங்கள் அனைவரிலும் இருக்கும் அத்தனை இழிவும் சிறுமையும் உன்னிலும் இருக்கும்.”

குண்டாசி கூவினான் “எத்தனை மதிக்கூர்மை! எவ்வளவு முன்திட்டம்! பேருருக்கொண்டு பல்லாயிரம் கைகளால் யாதவர் கௌரவர்களை முற்றழிக்கலாம். அவரது காலடியிலேயே நாங்கள் ஒரு துளியென எஞ்சியிருப்போம். எங்களை அழிக்கையிலேயே எங்களில் ஒரு பகுதியை அவர் பேணுவார். நன்றல்லவா? பெரும் காவியஆசிரியன் ஒருவன் எழுதிய நாடகத்தருணமல்லவா? இதற்கிணையான சூழ்ச்சியை இந்திரனும் செய்ததில்லை. ஆம், அதன் பொருட்டே உன்னை அங்கு அனுப்புகிறோம்.”

யுயுத்ஸு “எத்தருணத்தையும் இவ்வாறு எல்லாத் திசைக்கும் இழுக்கமுடியும், மூத்தவரே” என்று அமைதி மாறாத குரலில் சொன்னான். “எத்திசைக்கு இழுத்தாலும் அங்கு ஓர் உண்மையும் நின்றிருக்கும். நான் அவ்வாறு எண்ணம் சூழ்வதில் நம்பிக்கை கொண்டவனல்ல. ஒருபோதும் அதை இயற்றியவனுமல்ல.” குண்டாசி நகைத்து “நன்று! பெருந்தன்மையை எதிர்கொண்ட நீ சிறுமையை எப்படி எதிர்கொள்வாய் என்று பார்க்கிறேன்” என்றான். பற்களைக் கடித்து சிரிப்பதுபோல் முகம் இளிக்க “இங்கிருந்து கிளம்புகையில் உன் அன்னையின் சொல்லை நீ பெற முடியாது என்று என்னிடம் சொன்னாய். ஆனால் மெய்யாகவே உனக்குக் கிடைத்தது உன் அன்னையின் சொல் மட்டுமே. பிறர் தங்கள் பெருந்தன்மையால் அதை அளித்தார்கள். உன் அன்னை தன் சிறுமையால் அதை அளிக்கிறாள். அது மேலும் மெய்.”

“ஆம், அவள் தன் சிறுமையால் உன்னை உள்ளூர வாழ்த்துகிறாள். ஆகவே அதை தன்னிடமிருந்தும் மறைத்துக்கொள்கிறாள். நீ இன்று திருதராஷ்டிரரை விட்டு கிளம்புவது எந்த அறத்தினாலும் அல்ல. காந்தாரத்திலிருந்து இங்கு வந்து வைசியர் மகளாக இருப்பினும் சூதர்குலத்தவளாக ஐம்பதாண்டுகள் அரண்மனையில் சிறுமை பெற்று அமர்ந்திருந்த உன் அன்னையின் உளஆழத்து வஞ்சமல்லவா அது? அவள் அளித்த நஞ்சை நீ உன் தந்தைக்கு ஊட்டி கிளம்பிச் செல்கிறாய்” என்றான் குண்டாசி.

யுயுத்ஸு எந்த முகமாற்றமும் இல்லாமல் “அவ்வாறும் இருக்கலாம். ஒவ்வொரு தருணத்திலும் ஓராயிரம் தெய்வங்கள் நிற்கின்றன. ஊசிமுனைமேல் ஓராயிரம் வேழங்கள் என்பார்கள். சொல் பிரித்தாடுவதில் எனக்கு தேர்ச்சியில்லை. தங்கள் சொற்களையும் அவ்வாறே எடுத்துக்கொள்கிறேன்” என்றான். அவன் கண்களையே குண்டாசி கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். “நீ இங்கு நடிக்கிறாய். இத்தருணத்தை அந்நடிப்பினூடாக கடந்து செல்கிறாய். ஆனால் இந்நகரைவிட்டு நீங்குகையில் உன் உள்ளத்திலிருந்து கொந்தளித்துக்கொண்டிருப்பது நான் இப்போது சொன்ன இதுவாகவே இருக்கும்” என்றான்.

“இல்லை மூத்தவரே, இங்கிருந்து கிளம்புகையில் நன்றோ தீதோ என்னிடம் ஒரு சொல்லும் எஞ்சாது” என்று யுயுத்ஸு சொன்னான். “நீ காந்தாரப்பேரரசியிடம் என்ன சொன்னாய்? அதை மட்டும் சொல். நான் அறியவிரும்புவது அதை மட்டும்தான்” என்றான் குண்டாசி. “நான் அவர்களிடம் சென்று பணிந்து இளைய யாதவருக்கு என்னை ஒப்புக்கொடுக்கவிருக்கிறேன். இத்தருணம் அவருடன் நிற்பவர்கள் யார் என்று துலங்கும்பொருட்டே இங்கு நிகழ்கிறது. ஆகவே இதை நான் தவறவிடவில்லை. என்னை வாழ்த்துக அன்னையே என்றேன். அன்னை தன் இரு கைகளையும் என்னை நோக்கி நீட்டினார். நான் அருகே சென்று குனிந்ததும் என் தலைமேல் கைகளை வைத்து நன்று சூழ்ந்தாய், உன்னிலிருந்து வழிகாட்டும் உன் தெய்வம் உனக்கு அருளட்டும், நலம் சூழ்க என்றார்” என்றான் யுயுத்ஸு.

குண்டாசி “உன் அன்னையைப்பற்றிய ஒரு சொல்லும் அங்கு பேசப்படவில்லையா?” என்றான். “இல்லை” என்று யுயுத்ஸு சொன்னான். “நீ அன்னையை எண்ணினாயா?” என்றான் குண்டாசி. “ஆம்” என்று யுயுத்ஸு சொன்னான். “நீ எண்ணியதென்ன?” என்றான் குண்டாசி. “பேரரசியிடம் விடைபெற்றுவிட்டேன் என்று அன்னையிடம் சொல்லவேண்டுமென்று” என்று யுயுத்ஸு சொன்னான். “அல்ல, அதற்கப்பால் நீ ஒன்று எண்ணியிருப்பாய். அது என்ன?” என்றான் குண்டாசி. யுயுத்ஸு “அன்னை என்னை வாழ்த்தி அனுப்பமாட்டார். ஒருகணமும் திருதராஷ்டிரரிடமிருந்து தன்னை அவர் பிரித்துக்கொள்ள மாட்டார் என்று எண்ணினேன்” என்றான்.

“இல்லை! இல்லை! அதற்குமேல் நீ ஒன்று எண்ணினாய். அதை நான் இப்போது சொல்கிறேன்” என்றபடி குண்டாசி பீடத்திலிருந்து எழுந்தான். “திருதராஷ்டிரரை பேரரசி கைவிட்டார், வைசியஅரசி கைவிடவில்லை என்று உன் அன்னை ஓர் உளநிறைவை அடைவாள். ஆகவே அவள் வாழ்த்தாவிட்டாலும் நன்று என்று நீ எண்ணினாய்” என்றான். “ஆம், அதை எண்ணினேன்” என்றான் யுயுத்ஸு. “சிறுமை! இந்த ஒரு துளிச் சிறுமை போதும், நீ இன்றுவரை நடித்த நன்மை அனைத்தையும் அது நஞ்சென்று ஆக்கிவிடும்” என்றான் குண்டாசி.

“அது சிறுமையென்று நான் எண்ணவில்லை. சிறுமையென்றாலும்கூட என் அனைத்துச் சிறுமைகளுடன் என்னைக் கடந்து செல்லும் பேருருவனுடன் செல்லவே விரும்புகிறேன்” என்றான் யுயுத்ஸு. குண்டாசி பற்களைக் காட்டி நகைத்தபோது பசியுடன் சீறும் ஓநாய் போலிருந்தான் “நீ உன் அன்னையைப்பற்றி எண்ணியபோது பேரரசியும் அவளைப்பற்றி எண்ணினார். உன் அன்னையிடம் வாழ்த்துபெற்ற பின்னர்தான் தன்னை சந்திக்க வந்தாயா என்று உன்னிடம் கேட்க பேரரசி எண்ணினார். ஆனால் அதை கேட்காமல் தவிர்த்தார்” என்றான். “எண்ணியிருக்கலாம்” என்று யுயுத்ஸு சொன்னான். “அது அவர் கொண்ட சிறுமை” என்றான் குண்டாசி.

நகைத்தபடி திரும்பி துரியோதனனிடம் “மூத்தவரே, ஒரு மாறுதலுக்காக நாம் அனைவரும் ஏன் அவரவர் சிறுமைகளை படைக்கலங்களாக வெளியே எடுத்து அவற்றை வைத்து போராடக்கூடாது? பெருந்தன்மையை கவசங்களாக வேண்டுமானால் அணிந்துகொள்ளலாம்” என்றான். துரியோதனன் “உன்னில் இருந்து மகிழும் அந்த இருண்ட தெய்வத்தை நான் நன்கு அறிவேன். இத்தருணத்தை இரக்கமின்றி எதிர்கொள்கிறாய் என்று நீ சொல்லிக்கொள்கிறாய். அதே இரக்கமின்மையுடன் நீ இந்த ஆடலை இங்கு ஏன் நிகழ்த்துகிறாய் என்று எண்ணிப்பார்” என்றான்.

“எதன் பொருட்டும் அல்ல. உண்மையின் பொருட்டு, உண்மையின் பொருட்டு மட்டுமே” என்று உரத்த குரலில் குண்டாசி சொன்னான். “சற்று ஒதுங்கியிருந்து அவ்வுண்மையை ஆராய்ந்து பார்” என்றபின் துரியோதனன் யுயுத்ஸுவிடம் “நன்று இளையோனே, இப்போது கௌரவர்களின் அறியாத பக்கங்களையும் பார்த்துவிட்டாய். சென்று உன் தலைவனிடம் சொல், இந்தப் போர் வென்றாலும் தோற்றாலும் நான் நிறைவு கொள்வேன் என்று. எது எனக்கு அளிக்கப்பட்டதோ அதை முழுமையாக நிறைவேற்றுகிறேன் என்று” என்றான்.

யுயுத்ஸு தலைவணங்கினான். துரியோதனன் “என் தம்பியரில் உள்ளத்திற்கு மிக அணுக்கமானவனை யுதிஷ்டிரனிடம் அனுப்புகிறேன். இனி அவன் ஐவருக்கு மூத்தவன்” என்றான். யுயுத்ஸு மீண்டும் தலைவணங்கி திரும்பிச் சென்றான். அவன் செல்வதை நோக்கி நின்றிருந்த துச்சாதனன் நீள்மூச்செறிந்தான். துர்மதனும் சுபாகுவும் உடல்தளர்ந்தனர். துரியோதனன் பீடத்தில் சாய்ந்து கால்நீட்டினான்.

குண்டாசி “அவன் ஏன் செல்கிறான் என்று நான் சொல்கிறேன். ஒருவேளை இங்கு போரில் நாம் அனைவரும் இறந்தால் நம் நிலத்துக்கு அவனை துணையரசனாக ஆக்கி அவர்கள் ஆள்வார்கள். ஒருவேளை அவர்களும் இறந்தால் முழுநாட்டுக்கும் அவனே முடிசூடக்கூடும். ஏனெனில் ஒருநாள் அஸ்தினபுரியின் முடியை அவன் சூடுவான் என்று நிமித்திகர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்றான். பீடத்திலிருந்து எழுந்து நின்று “அவனை அழையுங்கள்! இதை அவனிடம் நான் சொல்ல வேண்டும். அவனிடம் நான் காட்டவேண்டிய இறுதிச் சிறுமை” என்றான்.

துரியோதனன் “ஆம், என்னிடமும் அதை நிமித்திகர்கள் சொன்னதுண்டு. அவன் ஒருவேளை முடிசூடக்கூடும்” என்றான். குண்டாசி துரியோதனனை சில கணங்கள் பார்த்துவிட்டு மீண்டும் பீடத்தில் அமர்ந்தான். அவனை இயக்கிய விசை தளர்ந்து இருமல் ஆட்கொண்டது. இருமி இருமி அவன் உடல் துவண்டது. கால்கள் வலிப்புகொண்டவைபோல இழுபட்டன. கண்களில் நீர் வழிய மெல்ல மீண்டு அவன் திரும்ப துர்மதன் கோளாம்பியை எடுத்து நீட்டினான். அதில் துப்பி ஓய்ந்து தளர்ந்து அவன் பீடத்தில் சாய்ந்தான். அதுவரை உருவிலாது அங்கிருந்த ஒரு தேவன் வெளிப்பட்டதுபோல அங்கிருந்த அனைத்து இறுக்கங்களும் உணர்வுகளும் மறைந்து தாளமுடியாத வெறுமை உருவாகியது. கணம் கணமென அது பெருகியது. துரியோதனன் மட்டும் அதே நிமிர்வுடன், அசைவின்மையுடன் அமர்ந்திருந்தான்.

பெருமூச்சுடன் மீண்டு வந்த குண்டாசி அரைத்துயிலில் தழைந்த தன் இமைகளை மேலே தூக்கி இருமுறை தொண்டையைச் செருமி “சொல்க, மூத்தவரே! சொல்வதாகச் சொன்னீர்களே! நான் இந்த நாடகத்தை ஏன் இங்கு நடத்துகிறேன்? என்னை அறிஞனென்றும் இரக்கமில்லாமல் உண்மையை நாடிச் செல்பவன் என்றும் எனக்கு நானே காட்டிக்கொள்ளவா?” என்று கேட்டான். “அல்ல” என்று துரியோதனன் சொன்னான். “நீயும் தார்த்தராஷ்டிரனே. எங்கள் அனைவருக்குள்ளும் நீ கொண்ட அறம் சற்று குடியிருக்கிறது. ஆகவே நாங்கள் அனைவரும் கொண்ட தீமையும் உன்னிலிருக்கிறது. அதை வெல்லத்தான் இத்தனை நஞ்சை நீ அருந்திக்கொண்டிருக்கிறாய்.”

குண்டாசி அவனை சிலகணங்கள் கூர்ந்து பார்த்தபின் உதடுகள் வளைய நகைத்து “என்னை புண்படுத்தி துரத்த எண்ணுகிறீர்கள். அம்புபட்ட நாய்போல் நான் அலறியபடி இங்கிருந்து வெளியே சென்றால் நிறைவடைவீர்கள்” என்றான். “அல்ல, இரக்கமின்றி கிழித்துப் பார்ப்பதாக நீ சொன்னாய். இரக்கமின்றி தன்னை கிழித்துப்பார்த்த எவரும் இப்படி அலைமோதுவதில்லை. கள்மயக்காலும் சொற்பெருக்காலும் உணர்வலைகளாலும் தன்னை தன்னிடமிருந்து மறைத்துக்கொள்வதுமில்லை. நீ இரக்கமின்றி ஒருபோதும் உன்னை கிழித்துக்கொண்டதில்லை” என்றான் துரியோதனன்.

“நான் கிழித்துக்கொண்டுவிட்டேன். அதனால் நோயுற்றேன். மறு எல்லைக்குச் சென்று வாழ்ந்தேன். மீண்டும் இருண்டேன். அதன் பின்னரே இந்த நிலைகுலையாமையை அடைந்தேன்” என்று துரியோதனன் சொன்னான். குண்டாசி சிரித்து “அந்த நிலைகுலையாமையை எனக்கும் அருள்க, மூத்தவரே!” என்று ஏளனமாக சொன்னான். “வாரணவதத்தில் அவர்களை எரித்த செய்தி உனக்கு அளித்ததுதான் இந்த அனல் அல்லவா?” என்றான் துரியோதனன். “ஆம்” என்றான் குண்டாசி. “வாரணவதத்தில் அரக்குமாளிகையை எரித்தவர்களின் குருதியே நீயும் என்பதனாலா?” என்று துரியோதனன் கேட்டான். “ஆம்” என்று குண்டாசி சொன்னான். அவன் நடுங்கிக்கொண்டிருந்தான்.

துரியோதனன் கண்கள் இடுங்க அவனை கூர்ந்து நோக்கினான். “அல்லது நீயும் உன் உள்ளத்தால் அவ்வெரித்தலை நிகழ்த்தினாய் என்பதனாலா?” குண்டாசி “இதைக் கேட்டு நான் புண்படுவேன் என்று எண்ணுகிறீர்களா? எண்ணி கடந்து நீங்கள் வந்து சேரும் அந்த நச்சுமுனை இவ்வளவுதானா?” என்றான். “அல்ல” என்றான் துரியோதனன். “வாரணவதம் தொடக்கமல்ல. அதற்கு முன்பும் ஒன்று நிகழ்ந்தது. அன்று பீமனை நஞ்சூட்டி கைகால் கட்டி கங்கையிலிட்டதை நீ அறிவாய்.” குண்டாசி திடுக்கிட்டு எழுந்து விட்டான். “இல்லை, அன்று நான் மிக இளையவன். நான் ஏதும் அறியவில்லை” என்றான்.

“நீ அறிவாய். நீ அறிவாய் என்று அன்றே எனக்கு தெரியும். அதை நீ எவரிடமும் பகிர்ந்ததில்லை. நீ சொல்லமாட்டாய் என்றும் நான் அறிந்திருந்தேன். பதினெட்டாண்டுகாலம் அதை உன்னுள் கரக்க உன்னால் முடிந்திருக்கிறது. ஆகவேதான் வாரணவதம் உன்னை பற்றி எரியச்செய்தது.” குண்டாசி கால்கள் நடுங்க பின்னால் நகர்ந்து பீடத்தில் உடல்முட்டி விழுந்து அமர்ந்தான். இரு கைகளையும் தலைமேல் வைத்து உடலை வளைத்து அமர்ந்து உடல் விதிர்த்தான். “அன்று நஞ்சுண்டவன் அவன் மட்டுமல்ல, நீயும்தான். உன் தலையை அவன் கதைக்கு பலி கொடுக்கவேண்டுமென்று நீ சொல்வது வாரணவதத்தின் பொருட்டல்ல, அந்த கங்கை நிகழ்வின் பொருட்டுதான். அது நிகழ்க!” என்று துரியோதனன் சொன்னான்.

குண்டாசி மெல்ல முனகினான். மீண்டும் எழுந்தபோது வலியின் கேவல்போல் அது ஒலித்தது. கையூன்றி எழமுயன்றான். அவன் வலது காலும் கையும் இழுத்துக்கொண்டன. இடக்கையை விசையுடன் ஊன்றி எழுந்து நின்று காலை இழுத்தபடி வாயில் நோக்கி சென்றான். செல்லும் வழியிலேயே வலப்பக்கமாக ஓர் உதை விழுந்ததுபோல் உணர்ந்து சரிந்து கீழே விழுந்து வலிப்பெழுந்து வாயிலிருந்து நுரை வழிய துடிக்கத் தொடங்கினான்.