மாதம்: ஜூலை 2018

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 54

tigதிருஷ்டத்யும்னனின் பாடிவீடு மென்மரப்பட்டைகளாலும் தேன்மெழுகும் அரக்கும் பூசப்பட்ட தட்டிகளாலும் ஆன சிறு மாளிகை. அதன் முகப்பில் பாஞ்சாலத்தின் விற்கொடி மையத்தில் பறந்தது. பாஞ்சாலத்தின் ஐந்து தொல்குடிகளான கேசினிகள், துர்வாசர்கள், கிருவிகள், சிருஞ்சயர்கள், சோமகர்கள் ஆகியோரின் கொடிகள் தாழ்வாக பறந்தன. கேசினிகள் மருதமரத்தின் இலையையும் கிருவிகள் எட்டிமரத்தின் இலையையும் சோமகர்கள் ஆலிலையையும் துர்வாசர்கள் வேம்பிலையையும் சிருஞ்சயர்கள் மந்தார மரத்தின் இலையையும் அடையாளமாக கொண்டிருந்தனர். அந்த அடையாளங்கள் அனைத்தையும் ஸ்வேதன் பயின்றிருந்தான். விற்கொடிக்கு நிகராக எழுந்த வெண்ணிறக் கொடியில் மந்தார இலைக்கு அடியில் அனல்குழியில் எரி எழும் அடையாளம் இருந்தது. சிருஞ்சய குடியினனாகிய திருஷ்டத்யும்னனின் போர்க்கொடி அது என தெரிந்தது.

பாடிவீட்டுக்குள் அவர்களை திருஷ்டத்யும்னன் அழைத்துச் சென்றான். “இளவரசர்களுக்கு பாஞ்சாலத்தின் குடிக்கு நல்வரவு” என முறைமைச்சொல் உரைத்து அமரச்செய்தான். “உங்கள் படைகளை இப்போது என் படைகளுடன் இணைத்துக்கொள்ள ஆணையுரைக்கிறேன், இளவரசே. இப்படையில் உங்கள் பங்களிப்பென்ன என்பதை பின்னர் முடிவெடுப்போம்” என்றான். சங்கன் “நாம் ஏன் இங்கு இருக்கிறோம்? நாம் உடனே கிளம்பி இளைய பாண்டவரை சந்திக்கப்போகிறோம் என்று எண்ணினேன்” என்றான். திருஷ்டத்யும்னன் “சில முறைமைகள் உள்ளன. நீங்கள் இங்கு வந்ததை நான் ஓலைகளினூடாக அரசருக்கும் இளைய யாதவருக்கும் அறிவிக்கவேண்டும். அவர்களிடமிருந்து ஒப்புதல் ஆணையும் வரவேண்டும்” என்றான்.

“நாங்கள் சென்றுகொண்டே இருக்கிறோம். அதற்குள் ஆணை வரட்டும்” என்றான் சங்கன். ஸ்வேதன் பொறுமையிழந்து பல்லைக் கடித்து அவனிடம் “பேசாதே” என்றான். திருஷ்டத்யும்னன் “அந்திக்குப் பின் காவலரும், தூதரும் படைத்தலைவர்களும் அன்றி எவரும் படைப்பிரிவுக்குள் பயணம்செய்வதை நெறிகள் ஒப்புவதில்லை. அது காவலுக்கு உகந்தது அல்ல” என்றான். “இன்று ஓய்வெடுங்கள். நாளை புலரியில் கிளம்பலாம். புரவிகளும் புத்தாற்றலுடன் இருக்கும். அந்திக்குள் மையத்திலுள்ள அடுமனைக் களஞ்சியங்களை அடையமுடியும். இளைய பாண்டவர் அங்கிருப்பார்” என்றான். “ஆம், அதுவே வழி” என்றான் ஸ்வேதன். “அப்படியென்றால் நாங்கள் படைகளை பார்க்கிறோம். நான் பார்க்க விரும்பும் பேருருவத் தெய்வம் இப்படையேதான்…” என்றான் சங்கன். “நன்று, நானே காட்டுகிறேன்” என திருஷ்டத்யும்னன் எழுந்தான்.

பாண்டவப் படைகளின் நடுவே அவர்கள் புரவிகளில் சென்றார்கள். பாண்டவப் படைகளின் பெருந்தோற்றம் சங்கனை கிளர்ந்தெழச் செய்தது. புரவி மேலமர்ந்து துள்ளியும் திரும்பியும் கைநீட்டி கூச்சலிட்டும் உரக்க நகைத்தும் வியப்பொலி எழுப்பியும் அவன் கொந்தளித்துக்கொண்டிருந்தான். “இவற்றை பார்த்து முடிப்பதற்குள் வாழ்நாள் முடிந்துவிடும் போலிருக்கிறது, மூத்தவரே. படையென்றால் இதுதான். நான் இவ்வாறு எண்ணவேயில்லை. படையென்பது நம் விழவுகளில் மக்கள் பெருக்கெடுத்துச் செல்வது போலிருக்கும் என்று எண்ணினேன். இதுவரை இப்படை சென்றதைப்பற்றி நம்மிடம் சொன்ன அத்தனை குடிகளும் பெருவெள்ளம் எழுவது போலென்றும், காட்டெரி படர்ந்து செல்வது போலென்றும்தான் சொன்னார்கள். இது மிக நுட்பமாக வகுத்து ஒன்றுடன் ஒன்று பொருத்தப்பட்ட மாபெரும் கைவிடுபடை போலிருக்கிறது” என்றான்.

அவனால் சொல்லெடுக்க இயலவில்லை. பலமுறை கைகளை விரித்து வியப்பைக் காட்டி பின்னர் சொல்கொண்டு “ஒன்றின் அசைவை பிறிதொன்று ஆள்கிறது. அனைத்து அசைவுகளும் சேர்ந்து ஒற்றை அசைவென்றாகின்றன. தனி ஓர் அலகை பார்த்தால் அது தன் விழைவுப்படி முழுமையாக செயல்படுவதாக தோன்றுகிறது. ஒன்றெனப் பார்த்தால் தனிஅலகுகள் அனைத்தும் இணைந்து ஓருடலாகி இயல்வது தெரிகிறது. இப்படி ஒரு படைவிரிவை துளித் துளியாக ஒருங்கு சேர்ப்பதற்கு நம்மால் இயலாது. நாம் இதுவரை படை என எதையும் அமைக்கவே இல்லை. நம்மிடம் இருப்பது வெறும் திரள்” என்றான்.

திருஷ்டத்யும்னன் “அவ்வாறல்ல, இளையோனே. உங்கள் படைப்பிரிவுகளுக்கு மட்டும் சில தனித்திறன்கள் இருக்கும். அவை உங்கள் நிலத்திலிருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் நீங்கள் கற்றுக்கொண்டவை. அத்தகைய தனித்திறன்களே ஒரு படையின் சிறப்பு. கட்டைவிரல் செய்யும் பணியை சுட்டுவிரல் செய்வதில்லை. சுட்டுவிரல் செய்யும் பணியை கட்டைவிரலும் ஆற்றுவதில்லை. பத்து விரல்களால் ஆனதே கை. ஒவ்வொரு படையும் அவ்வாறு தனியென்று இருக்கையிலேயே களவெற்றி அடையமுடியும்” என்றான்.

“இதோ இந்தப் படைப்பிரிவு பாஞ்சாலத்தின் துர்வாச குலத்தை சார்ந்தது. இவர்கள் மலைக்குடியினர். கங்கைக்கரையில் அடர்காடுகளில் மரங்களுக்குள் மறைந்திருந்து போர்செய்யும் பயிற்சி பெற்றவர்கள். இவர்களை தேர்ப்படைக்கும் யானைப்படைக்கும் ஊடாக அனுப்பலாம். ஒளியும் கலையறிந்தவர்கள் என்பதனால் எதிரி இவர்களைப் பார்ப்பது மிக அரிது. ஒவ்வொரு அம்புக்கும் வெளிப்பட்டும் மறைந்தும் குரங்குகளைப்போல்   இவர்கள் போரிடுவதனால் மாருதர் என்று அழைக்கப்படுகிறார்கள்” என்று திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான்.

“ஆனால் இவர்களை தனித்து நாம் எதிரிமுன் விட்டால் அவர்கள் தங்கள் எண்ணிக்கையால் இவர்களை அழிப்பார்கள். இவர்களுக்குப் பின்னால் பாண்டவர் படையின் ஒட்டுமொத்தமும் ஏதோ ஒருவகையில் நின்றிருக்க வேண்டும். அவ்வாறு இங்குள்ள ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் பின்துணையாக ஒட்டுமொத்த படைப்பிரிவும் இருக்கவேண்டும். அந்நோக்குடன்தான் இப்படைப்பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று கோக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வேறுபட்ட படைப்பிரிவுகளை ஓருடலென கோப்பதெப்படி என்று ஆயிரமாண்டுகளாக தொல்நூல்களில் எழுதி கற்று மீண்டும் எழுதி பல்லாயிரம் கொள்கைகளை உருவாக்கியுள்ளனர்.”

“பெரும்போர் மிக அரிதாகவே நிகழ்கிறது. ஆயினும் ஒவ்வொரு நாளுமென இப்படைசூழ்கைகள் அறிஞர்களாலும் ஷத்ரியர்களாலும் பயிலப்படுகின்றன. போர் ஏடுகளிலேயே நிகழ்ந்து நிகழ்ந்து தன்னை மேலும் மேலும் மேம்படுத்திக்கொள்கிறது. இதற்கு முன் நிகழ்ந்த பெரும்போர் என்பது மகதத்திற்கும் பிற நாடுகளுக்கும் பிருஹத்க்ஷத்ரரின் காலத்தில் நடந்தது. அதன்பின் சென்ற நூற்றியிருபது ஆண்டுகள் பாரதவர்ஷத்தில் இத்தகைய பெரும்போர் நிகழ்ந்ததில்லை. ஆனால் உள்ளத்தால் பெரும்போர் நிகழாத ஒரு நாளும் பாரதவர்ஷத்தில் இல்லை என்று என் தந்தை சொல்வதுண்டு.”

“ஏனென்றால் போரினூடாகவே ஒவ்வொரு உறுப்பும் வளர்கின்றது. காடு என்பது ஒவ்வொரு கணமும் நிகழும் பெரும்போரின் கண்நோக்கு வடிவு. மானுடகுலமும் அவ்வாறுதான். குருதிப்போர்களை கொள்கைப்போர்களாக ஆக்கிக்கொள்வதற்கே சான்றோர் முயல்கின்றனர். எளிதில் போர்நிகழாதிருப்பதே அமைதி. அதற்குரிய வழி பெரும்போர் நிகழும்படி சூழலை அமைப்பதுதான்” என்றான் திருஷ்டத்யும்னன். “படைகள் ஏதேனும் ஒருவகையில் தங்களை கட்டமைத்துக்கொண்டவை. அதையே படைசூழ்கை என்கிறோம்.”

“அனைத்துப் படைசூழ்கைகளும் இயற்கையிலிருந்து எடுத்த பல்வேறு வடிவங்களைக்கொண்டு உருவமைக்கப்பட்டவை. இப்போது நீங்கள் பார்ப்பது கொக்குகளின் கூட்டம். அவை எப்போதும் பிறை வடிவிலேயே முன்னகர்கின்றன. ஏனெனில் தலைமைகொண்டு செல்லும் முதற்கொக்கை அனைத்துக் கொக்குகளும் பார்ப்பதற்குத் தகுந்த வடிவம் அது. அத்துடன் செல்லும் வழி இடுங்கலாகுமெனில் அப்படியே நீள்பட்டு ஒடுங்கி அப்பால் கடப்பதற்கும் அது உகந்தது” என்ற திருஷ்டத்யும்னன் “கொக்குகளின் கூட்டத்தை வானில் எப்போதேனும் கூர்ந்து நோக்கியிருக்கிறீர்களா?” என்றான்.

“ஆம், சில தருணங்களில் அவை ஒன்று சேர்ந்து ஒற்றைப்பறவையின் உடலையே அமைப்பதாக தோன்றும்” என்றான் சங்கன். அவன் தோளில் கைவைத்து சிரித்தபடி “அதைத்தான் சொல்ல வந்தேன். அனைத்துப் பறவைகளும் இணைந்து உருவாகும் ஒற்றைப்பறவை. அந்தப் பெரும்பறவையின் ஆற்றலை ஒவ்வொரு பறவையும் பெற்றுக்கொள்கிறது, அதற்குப் பெயர்தான் படைசூழ்கை” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “வருக, இப்படைசூழ்கையை நீங்கள் பார்க்கலாம்!” என்று அங்கிருந்த காவல்மாடமொன்றை நோக்கி சென்றான்.

அறுபத்துநான்கு சகடங்களுக்குமேல் பெரிய பீடம் என அமைந்திருந்த பெரிய மரவண்டியில் பன்னிரு எருதுகள் இழுக்கும்படி நுகங்கள் இருந்தன. அதன்மேல் மூங்கிலால் அந்த காவல்மாடம் அமைக்கப்பட்டிருந்தது. சங்கன் அதை பார்த்து “எட்டு எட்டாக எட்டு சகடங்கள்” என்றான்.  “ஆம், சகடங்களின் எண்ணிக்கை பெருகுகையில் குழிகளிலும் பள்ளங்களிலும் விழாமல் இந்த வண்டியின் பெரும்பரப்பு செல்லமுடியும்” என்றான் திருஷ்டத்யும்னன். அவர்கள் அந்த வண்டியின் மீதேறி அதன்மீது அமைக்கப்பட்டிருந்த காவல்மாடத்தில் தொங்கிய நூலேணியில் தொற்றி மேலேறிச் சென்றனர். அங்கிருந்த படைவீரர்களில் மூவர் மறுபக்கம் வழியாக இறங்கிச் சென்று அவர்களுக்குரிய இடத்தை உருவாக்கினர்.

“ஆணைகளை அளிப்பதற்கும் முழுப் படையையும் விழிநோக்கில் வைத்திருப்பதற்கும் இத்தகைய காவல்மாடங்களின் பணி மிகப் பெரிது. நாம் நமது பாசறைகளில் அமர்ந்து ஏடுகளில் படைநிலைகளை உருவாக்குகிறோம். படைசூழ்கைகள் அனைத்தும் அங்கேயே முழுமை செய்யப்பட்டுவிடும். ஆயினும் படைத்தலைவன் என்பவன் ஒவ்வொரு நாளும் காவல்மாடத்தின் மீதேறி ஊன்விழிகளால் தன் படையை பார்க்கவேண்டும் என்பார்கள். ஒவ்வொரு முறையும் தோற்பரப்பில் படைநிலைகளை எழுதும்போது அவன் விழிகளால் பார்த்தது உளத்தில் விரிய வேண்டும். விழிகளால் பார்ப்பதற்கு நிகர் பிறிதொன்றில்லை. ஒவ்வொரு முறையும் விழிகளால் பார்க்கையில் நான் மேலும் மேலும் புதிய எண்ணங்களை அடைகிறேன். ஆகவே ஒவ்வொரு நாளும் ஐந்து முறைக்குமேல் ஏறி படைகளை நான் பார்ப்பதுண்டு” என்றான் திருஷ்டத்யும்னன்.

அவர்கள் காவல்மாடத்தின்மேலேறி அந்த பலகைப்பரப்பில் நின்றனர். சுற்றிலும் பெருகியிருந்த படையை அதுவரை உடற்பெருக்கு என பார்த்துக்கொண்டிருந்த ஸ்வேதன் அவை தலைப்பரப்பென மாறி கீழிறங்குவதை உணர்ந்தான். பின்னர் அவை உடல்களை துளிகளாகக் கொண்ட நீர்வெளி என மாறின. சுழன்று சுழன்று அவன் அவற்றை பார்த்துக்கொண்டிருந்தான். தெற்கே நான்கு திசைகளிலும் விழியெட்டும் தொலைவு வரை இந்திரப்பிரஸ்தத்தின் படைகள் தங்கியிருந்தன. மிக நெருக்கமாக ஒன்றுடனொன்று ஒட்டி அமைக்கப்பட்ட தோல்கூடாரங்களிலும் பாடி வீடுகளிலும் படைத்தலைவர் தங்கியிருந்தனர். வீரர்கள் வெறும்நிலத்தில் பாய்களிட்டு ஓய்வுகொண்டனர்.

அருகிருந்த சிறு ஆற்றிலிருந்து யானைகள் இழுத்துச் சுழற்றிய சகடங்களால் தோற்பைகளில் அள்ளப்பட்ட நீர் மூங்கில்வழியாக மேலெழுந்து சென்று அங்கிருந்த மரத்தாலான பெருங்கலத்தில் நிறைந்தது. அதிலிருந்து மூங்கில் குழாய்களினூடாக, மரத்தாலான சிற்றோடைகளினூடாக படைநிலைகள் அனைத்திற்கும் ஒழுகிச் சென்றது. மரத்தொட்டிகளில் விழுந்து நிறைந்த நீரை வீரர்கள் அள்ளி குடிப்பதற்காக எடுத்துச் சென்றனர். விலங்குகளுக்கு படகுபோன்ற மரத்தொட்டிகளில் நீர் வைத்தனர். அடுமனைகளிலிருந்து புகை எழத்தொடங்கியது. படைநிலைகளில் இருந்து ஊக்கமும் உவகையும் கொண்ட குரல்களும் முழக்கமும் எழுந்து மேலே வந்தன.

திருஷ்டத்யும்னன் “படைகளில் வீரர்கள் எப்போதும் உவகையுடன் இருக்கிறார்கள். அவர்கள் நினைவறிந்த நாள் முதலே இத்தகைய வாழ்க்கைகாக பயிற்றுவிக்கப்பட்டவர்கள். பலநூறு முறை அதை உள்ளத்தில் எண்ணி நிகழ்த்திக்கொண்டவர்கள். அது மெய்யென நிகழ்கையில் பெரும் கிளர்ச்சி அடைகிறார்கள்” என்றபின் புன்னகைத்து “ஒவ்வொருவரும் உள்ளூர அறிந்தது இறப்பு அணுகிக்கொண்டிருக்கிறது என்பது. இறப்பு எங்கோ இருக்கிறதென்னும் எண்ணமே நாட்களை வெறுமையாக்குகிறது. எண்ணி அளிக்கப்பட்ட காலம் என்பது ஒவ்வொரு துளியும் அமுது” என்றான்.

சங்கனும் ஸ்வேதனும் மெல்ல பரபரப்பு அழிந்து ஆழ்ந்த அமைதியை அடைந்தனர். ஸ்வேதன் பொருளெனத் திரளாத உள்ளத்துடன் காட்சிகளில் தன்னை அழித்துக்கொண்ட விழிகளுடன் அங்கு நின்றான். ஒரு படையென்பது பெருங்காடென்று முன்பு அவன் எண்ணியிருந்தான். ஏடுகளில் கற்று அறிந்த படைசூழ்கைகள் அனைத்துமே அவ்வெண்ணத்தையே உருவாக்கின. குலாடர்கள் பெரும்படைகள் எதிலும் பங்குபெற்றதில்லை. ஆனால் அவன் அங்கு பார்த்த பாண்டவப் படை நன்கு திட்டமிட்ட பெருநகர் போலிருந்தது. பலகையிட்டு உருவாக்கப்பட்டிருந்த எட்டு பெருஞ்சாலைகளையும் அவற்றிலிருந்து கிளைபிரியும் துணைச்சாலைகளையும் படைநடுவே தெருக்கள்போல நிலைநிறுத்தியிருந்தனர். ஒவ்வொரு தெருவிலிருந்தும் ஒவ்வொரு படைக்குழுவிற்கும் செல்வதற்கான பாதை இருந்தது. அவ்வாறு படைப்பிரிவுக்குள் சீரான பாதை அமைக்கவில்லையென்றால் ஒருமுனையிலிருந்து மறுமுனைக்கு எவரும் விரைந்து சென்றுவிட முடியாதென்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். அவன் எண்ணத்தை உணர்ந்ததுபோல சங்கன் “இப்படைப்பிரிவுக்குள் எந்த முனையிலிருந்தும் எங்கும் புரவியில் ஒருகணம்கூட தயங்காமல் பாய்ந்து ஓடிச்செல்லமுடியும், மூத்தவரே” என்றான்.

காவல்மாடங்கள் அனைத்திலும் முரசுகளும் கொடிகளும் இருந்தன. முரசு ஒலி ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொள்ளும் தொலைவில் காவல்மாடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முரசொலியைக் கேட்டு அவ்வாணையை கொடியசைவுகளாக மாற்றும்பொருட்டு படைவெளி முழுக்க புரவிகளால் இழுக்கப்பட்ட சிறிய ஆணைமேடைகள் இருந்தன. அங்கு வெவ்வேறு வண்ணங்களிலான கொடிகள் தெரிந்தன. தன்னருகே நின்றிருக்கும் திருஷ்டத்யும்னனின் ஒரு சொல் மறுகணமே முரசோசையாகவும் கொடியசைவுகளாகவும் மாறி அப்படை முழுக்க பரந்து அதை எண்ணிய வண்ணம் இயக்க முடியும் என்று ஸ்வேதன் எண்ணினான். மீண்டும் எதையோ எண்ண உளம் எழுந்தபோதுதான் அந்த எண்ணத்தின் உட்பொருளை உணர்ந்து அவன் மெய்ப்பு கொண்டான்.

பல்லாயிரம் பேரை தன் நாவின் சிற்றசைவின் மூலம் ஆட்டி வைக்கமுடியும்! நாவசைவுகூட வேண்டியதில்லை, விழியசைவே போதும். திருஷ்டத்யும்னனின் பேருருக்கொண்ட உடல் அப்படை. அவன் கால்கள், அவன் கைகள், அவன் விழிகள், அவனுடைய நாக்கு. அப்பெரும்படையின் ஆத்மா அவனில் புகுந்து அவ்வுடலை ஆள்கிறது. அப்படை தன் ஆழத்தில் விழைவதை மட்டுமே அவன் அங்கிருந்து தன் எண்ணமென அடைகிறான், சொல்லென வெளிப்படுத்துகிறான். அவன் பெருமூச்சுவிட்டான். படை என்பது மானுடர் ஓருடலாதல் மட்டுமல்ல, ஒருவன் பேருடல் ஆதலும்கூட. படையே மாமன்னர்களை உருவாக்குகிறது. படையென்றான பின்னரே மானுடன் தன் பேராற்றலை கண்டுகொண்டிருக்க முடியும். தெய்வங்களை நோக்கி விழிதூக்கியிருக்க முடியும். விருத்திரன், ஹிரண்யன், நரகன் என தொடரும் அனைத்து அசுரர்களும் படை என பேருடல்கொண்டமையால் தெய்வங்களை அறைகூவிய மண்வாழ் மானுடரே.

திருஷ்டத்யும்னனும் அப்படையின் காட்சியால் உளம் நெகிழ்ந்திருந்தான். அதை தழுவுவதுபோல கைகளை விரித்து மெல்ல சுழன்றபடி நோக்கினான். “படைசூழ்கை ஒரு பெருங்கலை. நெடுங்காலமாக மானுடர் அதை ஊழ்கத்திற்கென கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணத்துடன் தனித்திருப்பதையே வகுத்துள்ளன தெய்வங்கள். ஒவ்வொருவரும் பிறிதொருவருடன் ஒன்றென இணைந்து ஓருடலாகுகையில் மானுடரின் அவ்வெற்றி கண்டு தெய்வங்கள் மகிழ்கின்றன. இறங்கி வந்து அவனுடன் இணைந்துகொள்கின்றன. ஆணைகளினூடாகவும் பயிற்சியினூடாகவும் மட்டுமல்ல, கனவுகளூடாகவும் நம்பிக்கைகளூடாகவும்தான் பெரும்படைகள் ஒருங்கிணைகின்றன” என்றான்.

“குலதெய்வங்கள், மூதாதையர், நீத்தார், அறுகொலைகள் என ஒவ்வொரு நாளும் பாடிப் பாடி நம் அகத்தில் செலுத்திக்கொண்ட ஒன்றுதான் நம் அனைவரையும் ஒன்றெனத் திரட்டி இங்கு நிறுத்தியிருக்கிறது. தனியே மனிதர்களுக்கு அச்சமுண்டு. வஞ்சங்கள் உண்டு. படை என்பது அச்சமோ வஞ்சமோ அறியாதது. அது விழைவுகூட இல்லாதது. அதை கிளப்புவதற்கே வஞ்சங்களும் வஞ்சினங்களும் தேவையாகின்றன. கிளம்பியபின் முற்றிலும் பிறிதொன்றாக அது திரள்கிறது. அது ஒற்றைத் திரளென இவ்வுடல்கள் அனைத்தையும் இணைத்தெழும் ஒரு பெருவிசை மட்டுமே. அதன் விழைவு எந்த மானுடருக்கும் உரியதல்ல. அதற்கு இப்புவியுடன் தொடர்பே இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன்.

மெய்ப்பு கொண்ட உடலுடன் ஸ்வேதன் நோக்கி நின்றான். அந்தி சிவந்துகொண்டிருந்தது. முகில்கள் செம்மையிலிருந்து கருமைக்கு சென்றன. விழிதொடும் எல்லையில் எல்லாம் அடுமனைகளின் புகைத்தூண்கள் எழுந்து வானை தொட்டன. படைகளின் ஓசை மழுங்கலான முழக்கமாக மாறிவிட்டிருந்தது. “கிளம்புவோம்” என்று திருஷ்டத்யும்னன் அவன் தோளை தொட்டதும் அவன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். மெல்லிய மூக்குறிஞ்சல் ஓசை கேட்டு திரும்பி நோக்கினான். சங்கன் விழிநீர் வடிய அழுதுகொண்டிருந்தான். ஸ்வேதன் சங்கனை தொட்டபோது அவன் உடல் நடுங்கி விதிர்த்தது. “செல்வோம்” என்றான் ஸ்வேதன்.

tigஅன்றிரவு திருஷ்டத்யும்னன் அவர்களுக்காக ஒருக்கிய விருந்தில் பாஞ்சால இளவரசர்களான சித்ரகேதுவும் உத்தமௌஜனும் விரிகனும் பிரியதர்சனும் துவஜசேனனும் மைந்தர்களான திருஷ்டகேதுவும் க்ஷத்ரதர்மனும் க்ஷத்ரஞ்சயனும் கலந்துகொண்டனர். யவனமதுவும் நெய்யில் வறுத்த வெள்ளாட்டு ஊனும் இனிய கிழங்குகளும் அப்பங்களும் பரிமாறப்பட்டன. இரவு கனிந்து வியாழன் நிலைமாறுவதுவரை அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பங்கெடுக்கும் முதல் அரசவிருந்து அது. தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த குடிலில் உடைகளை மாற்றி முகம் கழுவிக்கொண்டிருந்தபோது ஸ்வேதன் “படைநகர்வு தொடங்கிய பின்னர் போர் முடிவதுவரை வீரர்களுக்கு நீராட உரிமையில்லை. அரசகுடியினர் மட்டும் முகங்களையும் கைகால்களையும் கழுவிக்கொள்ளலாம். போரில் மிக அரிதான பொருள் நீர்” என்றான். சங்கனின் உள்ளத்து உணர்வை புரிந்துகொண்டு “இதேபோல் ஆற்றங்கரையில் தங்கும்போதுகூட படைகள் நீரிலிறங்கி குளிப்பது ஏற்கப்படுவதில்லை. நீரிலிறங்கும் படை முற்றிலும் செயலற்றதாக இருக்கும். அத்தருணத்தில் ஒரு எதிர்தாக்குதல் வந்தால் அதனால் எதிர்கொள்ள முடியாது. நீராடும் பொருட்டு படைகளை சிறு பிரிவுகளாக பிரித்து அனுப்புவதென்பதும் மொத்தப் படையையும் கலைத்து திரும்ப அடுக்குவது போன்றது” என்றான். “நீராடாமல் இருப்பது நன்று. அனைவரும் ஒரே மணம் கொண்டவர்களாகிறார்கள். நம் தரப்பு வீரனை நாம் முகர்ந்தே கண்டுபிடித்துவிடலாம்” என்று சங்கன் சிரித்தபடி சொன்னான்.

ஸ்வேதன் உளம் கிளர்ந்திருந்தான். மாற்றாடை அணிந்துகொண்டிருக்கையில் “நம்மை பாஞ்சால அரசரே நேரில் வந்து வரவேற்பாரென்றும் நமக்கென தனி விருந்தொன்றை ஒருக்குவாரென்றும் நான் எண்ணவே இல்லை, இளையோனே” என்றான். “ஏன்? நாம் இளவரசர்களல்லவா?” என்றான் சங்கன் அவ்வுணர்வை புரிந்துகொள்ளாமல். “விராடரையே அவர்கள் இன்னும் ஷத்ரியர்களாக முழுதேற்கவில்லை. நாமோ விராடராலேயே ஏற்கப்படாத குடியினர்” என்றான் ஸ்வேதன்.

சங்கன் “நிலம்வென்று நெறிநின்று ஆளும் அனைவரும் ஷத்ரியர்களாகும்பொருட்டு இளைய யாதவரின் சொல் எழுந்திருக்கிறதென்றும் அதை ஏற்று திரண்டதே இப்பெரும் படை என்றும் நாம் அறிந்திருக்கிறோம்” என்றான். “அது கூறப்படுவது. எப்போதும் போருக்கென கூறப்படும் கொள்கைகள் பிறருக்கானவை. போரில் இறங்குபவர் அனைவருக்கும் வேறு நோக்கங்கள் இருக்கும். எளிய வீரர்களுக்குக்கூட. ஆனால் அந்நோக்கத்தின் பொருட்டு உயிர்துறப்பது பொருளற்றது என அவர்களின் ஆழம் கூறும். ஆகவே பெரிய ஒரு கொள்கையும் கனவும் அவர்களை நோக்கி சொல்லப்படும். அது பொய்யென்றறிந்தாலும் அவர்கள் அதை நம்பி உணர்வெழுச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள்” என்று ஸ்வேதன் சொன்னான்.

திருஷ்டத்யும்னனே பாடிவீட்டிலிருந்து வெளியே வந்து இருவரையும் தழுவி அழைத்து உள்ளே சென்று அமரச்செய்தான். திருஷ்டத்யும்னனின் இருபுறமும் அமர்ந்து அவர்கள் உணவுண்டார்கள். சங்கன் “நாம் இன்றிரவே கிளம்பி படைமுகப்பிற்கு செல்லக்கூடாதா?” என்றான். “எத்தனைமுறை கேட்பாய், அறிவிலி?” என்றான் ஸ்வேதன் எரிச்சலுடன். திருஷ்டத்யும்னன் பொறுமையாக “செல்லலாம். ஆனால் அதில் பொருளில்லை. எப்படியாயினும் ஒருநாள் முழுக்க பயணம் செய்து நாளை மறுநாள் பொழுது புலர்ந்த பிறகே நீங்கள் பாண்டவ இளவரசர்களை சந்திக்கமுடியும். காலையில் படைக்கணக்கு நோக்குதலையும் அணிவகுப்பை பார்வையிடுதலையும் அவர்கள் தவறவிடுவதில்லை. அவை முடிந்தபிறகு உச்சிவெயில் ஒளிகொள்ளும்போதுதான் பிறரை சந்திப்பார்கள். இப்பொழுதே சென்று அங்கு காத்திருப்பதற்கு மாறாக இங்கு நன்று துயின்று முதற்புலரியில் கிளம்பலாம்” என்றான்.

சங்கன் பெருமூச்சுடன் “ஆம், இன்னும் இரண்டு இரவுகள்!” என்றான். திருஷ்டத்யும்னன் நகைத்தபடி “பாரதவர்ஷமெங்கும் இளைய பாண்டவர் பீமனை தங்கள் உள்ளத்து ஆசிரியராக ஏற்றுக்கொண்ட பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். அனைவருமே பெருமல்லர்கள், கதை வீரர்கள்” என்றான். ஸ்வேதன் “அனைவருமே அஞ்சனை மைந்தனின் அடிபணிபவர்களும்கூட” என்றான். திருஷ்டத்யும்னன் திரும்பி சங்கனிடம் “மெய்யாகவா?” என்றான். “ஆம், நான் மாருதனை தலைமேற்கொண்டவன். ஒவ்வொரு நாளும் அவரை வழிபடுபவன்” என்றான்.

ஸ்வேதன் திருஷ்டத்யும்னனிடம் “இப்போரில் எங்களுக்கான இடம் என்ன என்று மட்டுமே அறியவிரும்புகிறோம். எங்களுக்கு எது கிடைக்கும் என்ற கணிப்பை முன்வைக்க விரும்பவில்லை. ஏனெனில் எங்கள் தலைவர்களுக்காக போரிடவேண்டும் என்ற ஒரே நோக்கில் கிளம்பி வந்தோம்” என்றான். திருஷ்டத்யும்னன் “தாங்கள் அறிந்திருப்பீர்கள் குலாடரே, இங்கு படைகொண்டு வந்திருக்கும் அரசர்களில் எவரும் மெய்யாகவே இன்றுவரை போருக்குப் பின் தங்களுக்கு கிடைப்பதென்ன என்று கேட்டதில்லை. அவர்கள் கேட்கத் தயங்கியிருக்கக்கூடுமோ என்று ஐயுற்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நான் உசாவியிருக்கிறேன். அதன் பொருட்டு விருந்துகளை ஒருக்கியிருக்கிறேன். நிஷாதர்களும் கிராதர்களும் அசுரர்களும் கோரிப்பெறுவதற்கென எதுவுமே அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அளிக்க மட்டுமே வந்திருக்கிறார்கள். பாரதவர்ஷத்தில் இதுபோல வென்ற பின் கொள்வதற்கில்லாத ஒரு படை இதற்கு முன் திரண்டிருக்காது” என்றான்.

“பின்னர் எதன் பொருட்டு அவர்கள் படைகொண்டு வந்திருக்கிறார்கள்?” என்று ஸ்வேதன் கேட்டான். “பெரும்பாலானவர்கள் பெண்பழி தீர்க்கும் கடமை தங்களுக்குண்டு என்று வந்திருக்கிறார்கள். அன்னையர் அவர்களுக்கு அளித்த ஆணையை தலைமேற்கொண்டிருக்கிறார்கள். எஞ்சியோர் இளைய யாதவரின் கொள்கைமேல் பற்று கொண்டு அதற்கென நிலைகொள்ள விழைந்து வந்தவர்கள். நானும் விராடரும் மட்டுமே யுதிஷ்டிரரின் முடி நிலைக்கவேண்டுமென்றும் அவர்கள் கொடிவழி அஸ்தினபுரியை ஆளவேண்டுமென்றும் விரும்பி வந்திருக்கிறோம். ஏனெனில் எங்கள் குருதியின் வெற்றி அது” என்றான்.

சங்கன் உணவுண்பதை இயல்பாக திரும்பிப்பார்த்த திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “இவன் இளைய பாண்டவரின் மாணவனாக இருக்கத்தக்கவனே” என்றான். “ஒருவேளை உணவுண்பதில் இவன் அவர்களை கடந்துசெல்லவும்கூடும்” என்றான் ஸ்வேதன். “இவனுடன் போட்டியாக அமரத்தக்க இரு மைந்தர் அவருக்குள்ளனர். இருவருமே பேருடலர். உண்மையில் இவர்கள் தோள்தழுவிக்கொள்ளும் காட்சியைக் காண பெரிதும் விழைகிறேன்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “ஆம், சுதசோமனும் சர்வதனும்… கேள்விப்பட்டுள்ளேன்” என்றான் சங்கன். “ஒருமுறை அவர்களுடன் நான் தோள்கோக்கவேண்டும்.”

அன்றிரவு குடிலில் ஈச்சம்பாயில் சங்கன் புரண்டு படுத்துக்கொண்டே இருந்தான். அவன் அசைவினால் துயில்கலைந்த ஸ்வேதன் எரிச்சலுடன் “என்ன செய்கிறாய், அறிவிலி?” என்று கேட்டான். “என்னால் துயில இயலவில்லை, மூத்தவரே” என்றான் சங்கன். “எனில் வெளியே சென்று நின்றுகொள். இதற்குள் ஓசையெழுப்பிக்கொண்டிருக்காதே” என்று ஸ்வேதன் சொன்னான். “ஆம்” என்று சொல்லி சங்கன் எழுந்து வெளியே சென்றான். சிறுவாயிலினூடாக அவன் கைகளைக் கட்டியபடி வானை நோக்கி நிற்பதை ஸ்வேதன் கண்டான். சற்று நேரத்தில் துயிலில் ஆழ்ந்து நெடும்பொழுதுக்குப் பின் விழித்துக்கொண்டபோது அருகே அவன் இல்லை என்பதை உணர்ந்தான். அதன் பின்னரே அவன் வெளியே சென்றதை நினைவுகூர்ந்து எழுந்து வெளியே வந்தான். பாண்டவர்களின் படைகள் பல்லாயிரக்கணக்கான பந்த ஒளிப்புள்ளிகளாக பரவிக்கிடந்தன. பந்தங்கள் நேர்கோடுகளாக ஒன்றையொன்று வெட்டி பின்னியிருந்தன. கைகளைக் கட்டியபடி அங்கிருந்த மரத்தின் அருகே அந்தப் பரப்பை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் சங்கன்.

ஸ்வேதன் அருகே சென்று நின்ற பிறகே அவனை உணர்ந்து திரும்பிப் பார்த்தான். “துயிலவில்லையா?” என்று அவன் கேட்டான். “இல்லை, நான் அவரை மீளமீள உள்ளத்தால் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். அப்போது நான் என்ன சொல்ல வேண்டும்? எப்படி நடந்துகொள்ள வேண்டும்? எத்தனை எண்ணியும் என் உள்ளம் கலைந்துகொண்டே இருக்கிறது. நாம் மலைமக்கள். நமது முறைமைகள் முற்றிலும் வேறு. இன்றுவரை பேரவை எதற்கும் நான் சென்றதில்லை. நான் நேரில் கண்ட முதல் அரசகுடியினர் திருஷ்டத்யும்னரே. முதற்கணத்திலேயே அவர் நம்மை அணைத்து தோள்தழுவி அனைத்து முறைமைகளையும் கைவிட்டுவிட்டார். ஆகவே என் இயல்புப்படி நான் இருந்தேன்” என்றான் சங்கன்.

“மூத்தவரே, இப்போது எண்ணுகையில் நாணுகிறேன். அவர் முன் அரக்கனைப்போல இரண்டு கைகளாலும் உணவை அள்ளியெடுத்து ஓசையெழ மென்று உண்டேன். ஏப்பங்கள் விட்டேன். மேலும் மேலும் என தொடையில் அறைந்து உணவை கோரினேன். ஓர் இளவரசன் நடந்துகொள்ளவேண்டிய முறைகளல்ல அவை” என்றான் சங்கன். “இவ்வண்ணம் நான் இளைய பாண்டவர் முன் இருந்தால் என்ன நிகழும்? நான் வேறொரு வண்ணம் நடக்கவும் அறியேன்.” ஸ்வேதன் புன்னகைத்து “நீ காட்டு மானுடனாக இருப்பதையே உன் தலைவர் விரும்புவார். நீ அறிந்திருப்பாய், அனைத்துச் சூதர் பாடல்களிலும் எந்த அவையிலும் தலைக்குமேல் கூரையிருப்பதை ஒப்பாத களிறு என அவர் தனித்து அமர்ந்திருந்தார் என்றே சொல்லப்பட்டுள்ளது” என்றான். “ஆம், இங்கிருக்கும் அனைத்தையும் மீறி எவ்வகையிலோ என்னால் அவரை அணுக முடியுமென்று தோன்றுகிறது. மூத்தவரே, இப்போது நான் எண்ணுவதைப்போலவே எண்ணியபடி எங்கோ அவரும் இதேபோல கைகளை மார்பில் கட்டியபடி இப்படைப்பிரிவுகளை பார்த்து நின்றிருக்கிறார் என்று எண்ணுகிறேன்” என்றான் சங்கன்.

“நீ என்ன எண்ணிக்கொண்டிருந்தாய்?” என்று ஸ்வேதன் கேட்டான். “இன்று திருஷ்டத்யும்னர் சொன்னாரல்லவா, அனைத்து மானுடரும் இணைந்து உருவாகும் ஒற்றைப்பெருமானுடனே படை என்று. ஒவ்வொருவரும் தங்களை அதற்கு முழுமையாக ஒப்புக்கொடுத்து இதை உருவாக்கியிருக்கிறார்கள். மாளிகைகளில் செங்கல் அமைவதுபோல ஒவ்வொருவரும் பதிந்துள்ளார்கள். எந்த மாளிகையிலும் முழுதுமிணையாத உருளைக்கல் அவர். அறியா மலையுச்சியிலிருந்து பெருநதியொன்றால் உருட்டிக் கொண்டுவரப்பட்டவர். என்னாலும் இந்தப் படையில் முற்றாக இணைய முடியாது. முதல் வியப்புக்குப் பின் இது என்ன என்ற துணுக்குறலே எனக்கு ஏற்பட்டது. இப்படைக்குள் நுழைகையில் இது என்னை கிளரச் செய்தது. அந்தி இருளத்தொடங்கி என்னைச் சூழ்ந்து இது ஒளியும் ஒலியுமாக மாறியபோது முற்றிலும் தனித்தவனானேன். இதன் வெற்றி தோல்விகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை” என்று சங்கன் சொன்னான். ஸ்வேதன் புன்னகைத்து அவன் தோளை மெல்ல தொட்டு மீண்டும் தன் மஞ்சத்திற்கே திரும்பினான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 53

tigஸ்வேதனும் சங்கனும் தலைமைகொண்டு நடத்திய குலாடகுடிப் படை பதின்மூன்று நாட்கள் பயணம் செய்து பீதசிலை என்னும் சிற்றூரில் பாண்டவப் படைப்பெருக்குடன் இணைந்துகொண்டது. நெடுந்தொலைவிலேயே பாண்டவப் படை அங்கு சென்றுகொண்டிருப்பதை ஒற்றர்கள் வந்து சொன்னார்கள். “இப்பகுதியினூடாக பாண்டவர்கள் படை நிரந்து சென்ற செய்தியைத்தான் ஒவ்வொருவரும் சொல்லிக்கொள்கிறார்கள். இளைய யாதவரையும் அர்ஜுனனையும் பீமனையும் தங்கள் விழிகளால் பார்த்ததாக ஒவ்வொருவரும் சொல்கிறார்கள்” என்றான் ஒற்றன். உதடுகளில் புன்னகையை காட்டாமல் “அத்தனை பேரும் பார்த்திருக்க வேண்டுமென்றால் அவர்கள் பலநாட்கள் இங்கே தங்கிச் சென்றிருக்க வேண்டும்” என்றான்.

ஸ்வேதன் “ஒரு படை சென்றபின் மக்கள் மகிழ்வுரை சொல்வது மிக அரிது” என்றான். ஒற்றன் “முன்னோடிப் படையினர் சிற்பிகளுடனும் ஏவலருடனும் பன்னிரு நாட்களுக்கு முன்னரே வந்து புதர்களை அகற்றியும், மரங்களை முறித்தும், ஓடைகளையும் குழிகளையும் நிரப்பியும், சிற்றாறுகளுக்குமேல் பாலம் அமைத்தும் படைகள் செல்வதற்கான பாதையை அமைத்துள்ளனர். சில இடங்களில் சிற்றில்லங்களும் குடில்களும் அகற்றப்பட்டுள்ளன. நான்கு தேர்கள் இணைந்து செல்லும் அகலம் கொண்ட எட்டு சாலைகள் அவர்களால் உருவாக்கப்பட்டன. அவற்றின்மேல் பலகைகள் பரப்பி வலுவாக்கினர். அதன்பின்னர் படையின் முதற்குரலோர் யானைகளில் வந்து பாண்டவப்படை வருவதாகவும் செல்லும் வழியிலுள்ளோருக்கு எந்தத் தீங்கும் வாரா என்றும் அறிவித்து குடிகள் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகளை அறிவித்தனர்” என்றான்.

“பாண்டவப் படையின் முகப்பு தோன்றி அதன் முடிவு தெரிவதற்கு நான்கு நாட்கள் ஆகியிருக்கின்றன. இங்குள உணவுப்பொருட்கள் அனைத்தையும் பொன்கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். கால்நடைகளையும் ஆடுகளையும் விலைகொண்டிருக்கிறார்கள். படைகள் சென்று மறைந்தபின் சிற்பியரும் பிறருமாக சாலைப்பலகைகளை விலக்கி, பாலங்களைக் கழற்றி கொண்டுசென்றனர். இவர்கள் அதற்கிணையான பெரும்படை எதையும் பார்த்ததில்லை என்பதனால் அதை விவரிக்கும் சொற்களின்றி தவிக்கிறார்கள். அனைவருமே கங்கையில் பெருவெள்ளம் எழுந்ததுபோல என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். ஒரு பூசகன் மட்டும் முன்பு விண்ணளந்த பெருமான் பாதாளத்திலிருந்து வாசுகியை எடுத்தபோது வாலும் தலையும் முடிவிலியில் இருக்க முடிவிலாத மடிப்புகளாக அவன் உடல் எழுந்துகொண்டிருந்ததுபோல என்று சொன்னான்” என்று ஒற்றன் சொன்னான்.

ஸ்வேதன் புன்னகைத்தான். “இளவரசே, பாண்டவப் படை நாம் எண்ணுவதைவிட பலமடங்கு பெரிது. நூறு இணைநிரைகளாக அணிவகுத்து சென்றுகொண்டிருக்கிறது அது. ஒன்றன்பின் ஒன்றென நூறு நகர்களை அடுக்கியதுபோல பாடி அமைகிறது” என்று இன்னொரு ஒற்றன் சொன்னான். “படையைவிட மும்மடங்கு நீளம்கொண்டது அதன் வால். ஏவலரும் பணியாளரும் தொடர்கிறார்கள். களஞ்சியங்கள் வண்டிகளில் செல்கின்றன.” ஸ்வேதன் “நாம் முடிந்தவரை விரைந்து சென்று சேர்வோம். இங்கிருந்து எத்தனை தொலைவில் அவர்கள் படை உள்ளது?” என்றான். “நாற்பது கல் தொலைவில் இன்று தங்கியிருக்கிறார்கள். நாம் விரைந்தால் நாளையே சென்றடைய முடியும். பெரும்படையாதலால் ஒவ்வொரு நாளும் கிளம்புவதும் தங்குவதும் நெடும்பொழுது எடுத்துக்கொண்டே நிகழ்கிறது. விலங்குகளுக்கு நீர்காட்டி புரவிகளை உடல் உருவிவிட்டு கூடாரங்களைக் கட்டி அந்தியை அமைப்பதற்குள் இரவு எழுந்துவிடுகிறது” என்றான் ஒற்றன்.

ஸ்வேதன் தன் படைவீரர்களை நோக்கி “வீரர்களே, மலையாறு கங்கையை அடைவதைப்போல நாம் இலக்கை அணுகிவிட்டிருக்கிறோம். அணுகுந்தோறும் விரைவெழ வேண்டுமென்பது நீரின் நெறி. நமக்கும் அவ்வாறே. கிளம்புக!” என்று அறைகூவினான். அவர்கள் குறுங்காடுகளை வகுந்தபடி விரைந்தனர். நடுவே சேற்றுப் பரப்புகளிலும் சிற்றோடைகளிலும் பலகைகளை நீட்டி அவற்றின்மேல் புரவிகளையும் வண்டிகளையும் கொண்டு சென்று விரைவை கூட்டினர். பெருவெள்ளத் தடம்போல படை சென்ற பாதையை விழிகளாலே பார்க்க முடிந்தது. யானைகளும் வண்டிகளும் போன சுவடுகள் நெடுங்காலமாக அங்கிருக்கும் சாலைகள்போல் தெரிந்தன. அடுக்கடுக்காக பலநூறு சாலைகள் என்ற விழிமயக்கேற்பட்டது.

ஒற்றன் “வண்டிகள் எட்டு இணைநிரைகளாக சென்றன. வண்டித்தடத்திலேயே யானைகளையும் கொண்டு சென்றனர். காலாட்படைகள் எட்டுபேர் கொண்ட சிறு குழுக்கள் நூறு நிரைகளாக சென்றன. படைகளின் அகலம் மட்டும் ஒரு நாழிகைப் பொழுதிருந்தது” என்றான். சங்கன் ஒவ்வொரு சொல்லாலும் உணர்வெழுச்சி கொண்டான். “எண்ணி நோக்கவே இயலவில்லை, மூத்தவரே. எண்ணுந்தோறும் உளவிழி மலைப்பு கொள்கிறது. பாரதவர்ஷத்தின் வரலாற்றில் எப்போதேனும் இத்தனை பெருந்திரள் படையென எழுந்ததுண்டா?” என்றான். ஸ்வேதன் “பண்டு விருத்திரனை வெல்ல தேவர்படை இவ்வாறு எழுந்ததென்று நூல்கள் சொல்கின்றன. தென்னிலங்கை வேந்தனை வெல்ல ராமன் கொண்டு சென்ற படையை தொல்காவியம் இவ்வாறு விரிக்கிறது. அவையனைத்தும் அணியுரைகளாகவே எஞ்சுகின்றன. மெய்யாகவே அப்படியொரு பெரும்படையை பார்க்க முடியுமென்று எண்ணியதே இல்லை” என்றான்.

சங்கன் ஒவ்வொரு அடிக்கும் பொறுமையிழந்து பின்னால் திரும்பிப்பார்த்து “விரைந்து வாருங்கள்! விரைக! விரைக!” என்று கூவினான். “படைகள் விரைவதற்கு ஓர் எல்லையுள்ளது, இளையோனே. சீரான விரைவில் செல்லும்போதே நெடுந்தொலைவை அடைய முடியும். நிலம் கருதாது விரைவு கொண்டு புரவிகளோ வண்டிகளோ சேற்றில் சிக்குவார்களென்றால் பொழுது வீணாகும்” என்று ஸ்வேதன் சொன்னான். “ஆனால் இவர்கள் வேண்டுமென்றே பிந்துகிறார்கள். குறுங்காடுகளை கண்டால் பக்கவாட்டில் பரவி கனிகளையும் சிற்றுயிர்களையும் கொண்டுவருகிறார்கள். தங்களுக்கு உணவில்லாமல் ஆகிவிடுமென்ற அச்சம் இவர்களை வாட்டுகிறது. எளிய மலைவேடர்கள்!” என்று சங்கன் சொன்னான். “படைகளுக்கு ஓர் கட்டுப்பாடு உண்டு. அக்கட்டுப்பாடு நிலைநிற்கவேண்டுமெனில் மிகச் சிறிய கட்டுப்பாடின்மையை நாம் ஒப்பியாகவேண்டும்” என்றான் ஸ்வேதன்.

பீதசிலையை அடையுந்தோறும் படைமுழக்கம் பேரொலியாக கேட்கத் தொடங்கியது. முதலில் அங்கு காற்று மரங்களை சுழற்றிச் செல்லும் ஓசை என்று தோன்றியது. சங்கன் திரும்பி ஸ்வேதனிடம் “அது என்ன ஓசை? அங்கு ஒரு பெருநகரம் இருப்பதுபோல” என்ற கணமே புரிந்துகொண்டு “அதுதான் படைகளின் ஓசை! ஆம், படைகளின் ஓசையேதான்!” என்றான். “இத்தனை தொலைவில் இவ்வளவு ஓசை கேட்கிறதென்றால் அங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள்! மூத்தவரே, அங்கு என்ன நிகழ்கிறது?” என்றான். “நாம் இன்னும் சில நாழிகைகளில் அதை சென்று அடைவோம். அதுவரை சொற்களை தேக்கிவைத்துக்கொள்” என்றான் ஸ்வேதன் புன்னகையுடன். “நாம் அந்திக்குள் சென்றுவிடவேண்டும், மூத்தவரே. இப்போதே வெயில் தாழத்தொடங்கிவிட்டது” என்றான் சங்கன்.

சங்கன் தன் புரவியை குதிமுள்ளால் குத்த அது கனைத்தபடி பாய்ந்தோடியது. சிறுகற்கள் பறக்க மரக்கிளைகள் அறைபட்டு வளைந்துவீச முன்னால் நெடுந்தொலைவு சென்று நின்று திரும்பி “விரைக! விரைக!” என்று கைவீசி கூச்சலிட்டான். ஸ்வேதன் புன்னகையுடன் புரவியை பெருநடையில் நடக்கவிட்டான். படை ஒழுகி வந்துகொண்டிருப்பதை அங்கிருந்து பார்த்தபின் பொறுமையிழந்து புரவியைத் திருப்பி மீண்டும் வந்தடைந்து “நாம் ஊர்ந்து சென்றுகொண்டிருக்கிறோம். அங்கிருந்து பார்க்கையில் தெரிகிறது, மிக மெதுவாக ஊர்ந்து செல்கிறோம். மழைநீர் வயலை நனைத்து ஊறிப்பரவுவதுபோல் வருகின்றன நம் படைகள்” என்றான்.

“நாம் கிளம்பி பதினாறு நாட்கள் ஆகின்றன, இளையோனே. இத்தனை நாட்களில் எப்படி முன்னால் செல்வதென்று நமது படைகள் கற்றுக்கொண்டிருக்கும். புரவிக்கால்களும் பழகியிருக்கும். இதுவே அவற்றிற்கு உகந்த சிறந்த விரைவு. இதற்குமேல் விரைவை உருவாக்க வேண்டியதில்லை” என்றான் ஸ்வேதன். “நான் மட்டும் முன்னால் செல்கிறேன். நமது படைகள் வந்துகொண்டிருக்கின்றன என்று இளைய பாண்டவரிடம் சொல்கிறேன்” என்றான் சங்கன். ஸ்வேதன் “படையுடன் செல்லும்போது மட்டுமே உனக்கு இளவரசனுக்குரிய இடம் கிடைக்கும்” என்றான். “எந்த இடத்திற்காகவும் நான் இப்போருக்கு வரவில்லை. என் தலைவரின் அருகிருக்க வேண்டும், அவருடன் இணைந்து போரிட்டேன் என்னும் பெருமை எனக்கு வேண்டும். அதற்காக மட்டுமே” என்றான் சங்கன்.

அணுகுந்தோறும் ஓசை பெருகி வந்தது. படைவீரர்கள் அனைவரும் உளக்கிளர்ச்சி கொண்டனர். மொத்தப் படையும் பேச்சொலிகளால் முழக்கமிட்டுக் கொண்டிருந்தது. பின்னர் நெடுந்தொலைவில் காவல்மாடத்தின் உச்சியில் கொடியொன்று தெரிந்தது. “அது காவல்மாடம்! அங்கு படைகள் நிலைகொண்டிருக்கின்றன!” என்றான் சங்கன். “இல்லை, அது நகரும் காவல்மாடம். வண்டிகளில் வைத்து யானைகளால் இழுத்துக்கொண்டு போகிறார்கள் என்று எண்ணுகின்றேன். நோக்குக, அது மெல்ல நகர்கிறது” என்றான் ஸ்வேதன். காவல்மாடத்தின் உச்சியில் நின்று நோக்கிய முதல் வீரன் கொம்பொலி எழுப்ப மேலும் மேலுமென கொம்போசைகள் எழுந்தன. அங்கிருந்து பதினெட்டு புரவி வீரர்கள், முகப்பில் ஒருவன் இந்திரப்பிரஸ்தத்தின் மின்படைக்கொடி ஏந்திவர, அவர்களை நோக்கி வந்தனர்.

சங்கன் “வருகிறார்கள்! நம்மை நோக்கி வருகிறார்கள்! நான் செல்கிறேன்” என்று புரவியை முடுக்கினான். “நில்! நாம் இங்கு காத்து நிற்போம். அவர்களுக்கு நாம் யாரென்று இப்போது சொல்ல வேண்டியுள்ளது” என்று ஸ்வேதன் சொன்னான். புரவியில் முன்னால் சென்ற சங்கன் வளைந்து திரும்பி வந்தான். அவன் புரவி பொறுமையிழந்து கால்வைத்து துள்ளி தன்னைத்தானே சுற்றிக்கொண்டது. அணுகிவந்த புரவி வீரர்கள் விரைவழிந்தனர். முதலில் வந்த கொடிவீரன் தன் கொடியை அங்கு நாட்டி அசைவற்று நின்றான். அவனுக்குப் பின்னால் வந்த படைத்தலைவன் அவனுக்கிணையாக நிற்க அவனுடன் வந்த இரு புரவி வீரர்கள் மேலும் முன்னால் வந்தனர்.

முதலில் வந்த தூதன் தலைவணங்கி “நாங்கள் இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரரின் படையின் பின்னணிப் பிரிவை சேர்ந்தவர்கள். உங்கள் வருகையை அங்கிருந்து பார்த்தோம். யார் நீங்கள் என்று அறிய படைத்தலைவர் விரும்புகிறார்” என்றான். ஸ்வேதன் “நாங்கள் குலாடபுரியின் படையினர். குலாடகுலத்தைச் சேர்ந்த ஸ்வேதனும் சங்கனுமாகிய நாங்கள் விராட அரசரின் மைந்தர்கள். எங்களுக்கு முறைப்படி அழைப்பில்லையெனினும் மாமன்னர் யுதிஷ்டிரர் மீதும் அவர் இளையவர்கள் மீதும் ஆசிரியர்களிடம் மாணவர்களென பெரும்பற்று கொண்டுள்ளோம். அவர்களின் படைப்பிரிவில் இணைந்து போரிட விரும்பி வந்துள்ளோம்” என்றான்.

சங்கன் நடுவே புகுந்து எழுச்சியால் உடைந்த குரலில் “நான் பீமசேனரை பார்க்கவேண்டும்! அடிபணிந்து அவருடன் நின்று போரிட விழைகிறேன்” என்றான். “தங்கள் குடியின் ஓலையையும் முத்திரைக் கணையாழியையும் அளிக்கும்படி கோருகிறேன். பின்னணிப் படையை நடத்திச் செல்பவர் பாஞ்சாலராகிய திருஷ்டத்யும்னர். அவரிடம் செய்தி அறிவித்து ஒப்புதல் பெற்று நாங்கள் மீண்டு வருகிறோம். அது வரை உங்கள் படைப்பிரிவு இங்கு நிலைகொள்க! இங்கிருந்து முன்னால் வருவீர்கள் என்றால் எங்கள் தொலைவில்லவர்களின் அம்புகளுக்குக் கீழே வருகிறீர்கள்” என்று படைத்தலைவன் சொன்னான்.

ஸ்வேதன் தன் ஓலையையும் கணையாழியையும் அளித்தான். அவர்கள் அதை பெற்றுக்கொண்டு திரும்பிச் சென்றனர். குலாடபுரியின் படை முன்னால் வந்து விரிந்து அரைவட்டமாக நிலைகொள்ள பின்னிருந்து மேலும் மேலும் வந்து செறிந்தது. சங்கன் பொறுமையிழந்து “எதற்கு இத்தனை பொழுது? என்ன பணி செய்கிறார்கள்?” என்றான். “இளையோனே, அவர்கள் சென்று தங்கள் படைத்தலைவரை பார்க்கவேண்டும்” என்றான் ஸ்வேதன். “ஒருவேளை திருஷ்டத்யும்னர் நம்மை ஏற்காமலிருக்கக்கூடும். இந்திரப்பிரஸ்தத்தின் பெண்கொடை அரசுகளில் அவர்களே முதன்மையானவர்கள். நமது படைகளும் வந்தால் விராடரின் இடம் ஓங்கிவிடுமென்று எண்ணக்கூடும். நம்மை திரும்பிச் செல்ல ஆணையிடவும் கூடும்” என்றான் சங்கன். “அவ்வாறு உரைத்தால் நான் இங்கேயே சங்கறுத்து விழுவேன்.” ஸ்வேதன் “காத்திருக்கையில் இவ்வாறு எண்ணங்களை வளர்த்துக்கொள்வது எவ்வகையிலும் பொருளற்றது” என்று பற்களைக் கடித்தபடி சொன்னான். “முதலில் அங்கு என்ன நிகழ்கிறது என்று நமக்கு தெரியட்டும். அதற்கு முன் நாம் சொல்வளர்ப்பது உணர்வுகளை வீணடிப்பதென்றே பொருள்.”

சற்று நேரத்தில் அவனும் பொறுமையிழந்தான். நெடுநேரமாக காத்திருப்பதுபோல் தோன்றியது. அவ்வாறு காத்திருப்பதில் ஓர் இழிவுள்ளதோ என்று ஐயம் கொள்ளத்தொடங்கினான். “இளையோனே, நாம் கொள்ள வரவில்லை, அளிக்க வந்திருக்கிறோம். பெற்றுக்கொள்வதற்கு இத்தனை பிந்துபவர்கள் நம்மை அங்கு எவ்வண்ணம் நடத்துவார்கள்?” என்றான். “அதைப்பற்றி நாம் ஏன் எண்ண வேண்டும்? நாம் அளிக்க வந்தது தலையை” என்று சங்கன் சொன்னான். “ஆம், ஆனால் நம் குடியின் மாண்பையும் நம் மூத்தோரின் பெருமையையும் நாம் விட்டளிக்கலாகாது. எங்கேனும் ஓர் இடத்தில் குடிமாண்பை குறைத்து ஒப்புக்கொண்டோமெனில் அது மேலும் மேலும் குறைவதற்கு ஒப்புகிறோம் என்றே பொருள். ஒரு கட்டத்தில் அனைத்தையும் இழந்தவர்களாவோம். அறிக, பாரதவர்ஷத்தில் ஒவ்வொரு நாளும் குடிகள் பெருமை கொண்டு எழுந்து ஷத்ரியர்களாகிக் கொண்டிருக்கின்றன! எங்கோ ஷத்ரிய குடிகள் நிலமிழந்து செல்வமும் பெருமையும் அகல தொல்குடிகளாக மாறி மறைந்துகொண்டுமிருக்கிறார்கள்” என்றான்.

சங்கன் “அவர்கள் என்ன செய்யவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்றான். “அவர்களின் துணைப்படைத்தலைவர் அளவுக்காவது ஒருவர் வந்து நம்மை நேரில் எதிர்கொள்ளவேண்டும். படைப்பிரிவை நோக்கி நாம் செல்கையில் அங்கு முரசொலி எழுந்து நம்மை வரவேற்க வேண்டும். இந்திரப்பிரஸ்தத்தின் கொடி தாழ்த்தி நாம் படைப்பிரிவுக்குள் அழைத்துச் செல்லப்பட வேண்டும். நம்மை சந்திக்கும் பொருட்டு திருஷ்டத்யும்னர் தன் கூடாரத்திற்குள்ளிருந்து வெளிவந்து முகமனுரைத்து வணங்க வேண்டும்” என்றான். சங்கன் “இம்முறைமைகள் அனைத்தும் நூல்களில் உள்ளவை. அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் அவற்றை கடைபிடிக்கின்றனவா என்று நமக்கெப்படி தெரியும்? மூத்தவரே, நாம் அங்கிருந்து கிளம்பும்போது இந்த எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் இவர்களுடன் சேர்ந்துகொள்வதென்றா எண்ணினோம்? சேர்ந்துகொள்வதென்ற முடிவை எடுத்தோம், அதற்காகவே வந்திருக்கிறோம். மறுஎண்ணங்கள் பொருளற்றவை” என்றான். “ஆம், ஆனால் இப்போது நம் குடிமூத்தார் நீண்ட வாழ்வறிதலின் அடிப்படையில் சொன்னவற்றை செவிகொண்டிருக்க வேண்டுமோ என்று ஐயுறுகிறேன்” என்றான் ஸ்வேதன்.

சங்கன் “வருகிறார்கள்” என்றான். படையில் கொம்புகளும் முழவுகளும் முரசுகளும் எழுவதை அவர்கள் கேட்டனர். இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடி பறக்க ஒரு படைவீரன் முன்னால் வர அவனுக்குப் பின்னால் சிறிய குதிரைப்படை ஒன்று வந்தது. அனைவரும் ஒளிரும் இரும்புக் கவசங்கள் அணிந்திருந்தனர். முதலில் வந்த படைத்தலைவன் பொன்பூசப்பட்ட தலையணி அணிந்திருந்தான். நெருங்குந்தோறும் ஸ்வேதன் உள்ளம் படபடக்க நிலையழிந்தான். “முகப்பில் வருவது யார் திருஷ்டத்யும்னரேதானா?” என்றான். “என்ன சொல்கிறீர்கள்?” என்று சங்கன் கேட்டான். “அரசகுடிப் பிறந்தவர்களுக்கு மட்டுமே பொன்பூச்சுள்ள தலைக்கவசம் அணியும் உரிமை உள்ளது” என்றான் ஸ்வேதன். “ஆம், அவரேதான். முன்பொரு முறை அவரை எங்கோ பார்த்திருக்கிறேன்… அந்த மூக்கை” என்று சங்கன் சொன்னான். “மூடா, நீ எங்கும் பார்த்ததில்லை. கதைகளைக் கேட்டு பார்த்தாய் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாய்” என்றான் ஸ்வேதன். அணுகி வருந்தோறும் மேலும் தெளிவுகொண்டு உருவம் துலங்கினான் பொற்கவசம் அணிந்தவன். “அவர் திருஷ்டத்யும்னர்தான்” என்று ஸ்வேதன் சொன்னான். “பாஞ்சாலத்தின் முத்திரை தலைக்கவசத்தில் தெரிகிறது.” சங்கன் “மூத்தவரே, அவருடையது நாம் ஓவியத்தில் பார்த்த அரசி திரௌபதியின் மூக்கு” என்றான்.

கொடிவீரன் நின்று அதை மண்ணில் நாட்டினான். அதைத் தொடர்ந்து வந்த இரு வீரர்கள் கொம்பும் சங்கும் முழங்கினர். அவர்களுக்குப் பின்னால் வந்த பொன்தலைக்கவச வீரர் புரவியை நிறுத்தி அவர்களை பார்த்தார். ஸ்வேதன் தன் புரவியை முன்னால் செலுத்த சங்கன் தொடர்ந்தான். அவர் தன் இரு அணுக்கர்களுடன் புரவியில் முன்னால் வந்தார். தலைக்கவசத்தை சற்றே மேலே தூக்கியபோது திருஷ்டத்யும்னனின் முகத்தை ஸ்வேதன் தெளிவாகக் கண்டான். திருஷ்டத்யும்னன் இரு கைகளையும் விரித்து அணுகி “விராடரின் மைந்தர்களும் குலாட குலத்து இளவரசர்களுமான ஸ்வேதரையும் சங்கரையும் தலைவணங்கி பாண்டவர்களின் படைப்பிரிவுக்கு வரவேற்கிறேன்” என்றான்.

ஸ்வேதன் பேசுவதற்குள் சங்கன் உரக்க நகைத்து “வரவேற்பின்றியும் நாங்கள் வருவோம். என் தலைவருக்கு வலத்தே நின்று போர்புரியும் பொருட்டே நான் வந்துள்ளேன்” என்றான். திருஷ்டத்யும்னன் நகைத்து “உங்கள் இருவரையும் பற்றி நான் இதுவரை எதுவும் கேள்விப்பட்டதில்லை. விராடர் உங்களைப்பற்றி சொல்லத் தயங்குகிறார் என்று எண்ணுகிறேன். ஆனால் இத்தருணம் என் வாழ்வில் மிக இனிது. கொடிவழியினர் நினைவில் என்றுமிருக்கப்போகும் இருவரை சந்திக்கிறேன் என்று என் உள்ளம் சொல்கிறது” என்றான். ஸ்வேதன் “தந்தை எங்களிடமிருந்து உளவிலக்கம் கொண்டிருக்கிறார். ஆனால் எங்களைப் பார்த்தால் அவர் உள்ளம் மாறுமென்று எண்ணுகின்றேன்” என்றான்.

“வருக! நம் குலதெய்வங்கள் இவ்வரவால் மகிழ்வு கொள்க! இனி இந்திரப்பிரஸ்தத்தின் படை உங்களுடையது. படை நிற்பதற்கல்ல, படைத்தலைமை கொள்வதற்கு உங்களை அழைக்கிறேன்” என்றான். ஸ்வேதன் “அது எங்கள் நல்லூழ். எங்கள் மூத்தோர் மகிழ்க!” என்றான். சங்கன் “பாஞ்சாலரே, பீமசேனர் எங்குள்ளார்?” என்றான். “அவர் எங்கிருப்பார் என்று எண்ணுகின்றாய்?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். “ஆம், அடுமனையில்! அடுமனையிலெங்கோ இருக்கிறார்!” என்றான் சங்கன். “உண்மையில் நானும் பெரும்பொழுதை அடுமனையில்தான் கழிக்கிறேன். மெய்யாகவே நான் நல்ல அடுமனையாளன். ஒருமுறையேனும் இளைய பாண்டவருக்கு அன்னம் சமைத்து அளிக்க இயலுமென்று எண்ணுகின்றேன்” என்றான்.

“நீ அடுமனையாளன், பெருமல்லன், கதைப்பயிற்சி கொண்டவன், பீமனை எண்ணி கதை பயின்றவன். இவையனைத்தையும் நீ நூறு வாரை அப்பால் நிற்கையிலேயே எவரும் சொல்லிவிடமுடியும்” என்று திருஷ்டத்யும்னன் சிரித்தபடி சொன்னான். திருஷ்டத்யும்னனுடன் பேசிக்கொண்டு அவன் புரவிக்கு இருபுறமும் அவர்கள் சென்றனர். சங்கன் “நமது படைகள் எப்போது குருக்ஷேத்ரத்திற்கு சென்று சேரும்? அங்கு ஏற்கெனவே நமது படைப்பிரிவுகள் சென்று நின்றுவிட்டன என்று சொன்னார்கள். நமது படைப்பிரிவுகளை ஏற்கெனவே நின்றிருக்கும் படைகளுடன் சேர்ப்போமா? இதுவே படையணிவகுப்பா? அன்றி சென்ற பின்னர் மீண்டுமொரு அணிவகுப்பு நிகழுமா?” என்று உளக்கிளர்ச்சியுடன் கேட்டான்.

“முதற்படைத்தலைவராக தங்களை தேர்ந்தெடுத்ததை அறிந்தேன். ஆனால் தாங்கள் இறுதியாகச் செல்கிறீர்கள். முதல் படைப்பிரிவிலேயே இளைய பாண்டவர்கள் அர்ஜுனரும் பீமசேனரும் இருப்பார்கள் என்று தெரிந்துகொண்டேன். நான் முதல் படைப்பிரிவில் நிற்க வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்? எங்கள் வில்லவர்கள் மிக விரைவு கொண்டவர்கள். நாங்கள் காடுகளில் விரைந்தபடியே அம்புவிடும் பயிற்சிபெற்றவர்கள். எங்கள் புரவிகளும் விரைந்து விசைகொள்பவை. தாங்களே வேண்டுமானாலும் பார்க்கலாம். எவ்வண்ணமேனும் முதல் படைப்பிரிவிலேயே எங்களை சேர்க்கும்படி சொன்னீர்களென்றால் எங்கள் வீரம் படைப்பிரிவினர் அனைவருக்கும் தெரியும்.”

அவன் மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே சென்றான். “நான் எப்போது பீமசேனரை பார்க்கமுடியும்? என்னை அவருக்கு தெரிந்திருக்காது. நான் விராடரின் மைந்தன் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் நீங்கள் வந்து என்னை அறிமுகம் செய்தீர்கள் என்றால் நன்று. இல்லை நீங்கள் அறிமுகம் செய்யவேண்டியதில்லை. நீங்களே என்னைப் பார்த்தவுடன் சொன்னீர்கள், நெடுந்தொலைவிலேயே நான் அவருடைய மாணவன் என்பதை கண்டுகொள்ளமுடியுமென்று. என்னிடம் பலர் நான் பீமசேனரின் மாணவனா என்று கேட்டிருக்கிறார்கள். உண்மையில் பலர் நான் பீமசேனரா என்றே கேட்டிருக்கிறார்கள். எனது தோள்கள் அவர் அளவுக்கு பெரியவை அல்ல. ஆனால் நான் அவரென்று நினைத்துக்கொள்வேன். அதனால் என் உடல் அவரைப்போல் அசைவு காட்டத்தொடங்கிவிடும்.”

திருஷ்டத்யும்னன் வாய்விட்டு சிரித்து “இளையோரே, உங்கள் வினாக்களை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்து மறுமொழி சொல்வதற்கு எனக்கு இந்த முழுநாளும் தேவைப்படும்” என்றான். ஸ்வேதன் சிரித்தபடி “இவன் பீமசேனரின் அருகே நின்றிருக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமே இப்போருக்கு வந்துள்ளான்” என்றான். “அது நன்று. உங்களை நான் அவரிடம் அழைத்துச் செல்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “எப்போது? நாம் இப்போதே கிளம்புகிறோமா?” என்றான் சங்கன்.

“இப்படைப்பிரிவின் முதல்நிரை இங்கிருந்து நான்கு நாட்கள் பயணத்திலிலுள்ளது” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “அடுமனைக் களஞ்சியம் இருபுறமும் சீராக உணவு செல்லும் பொருட்டு படையின் நடுவில் இருக்கிறது. அங்குதான் இளைய பாண்டவர் பீமசேனர் இருப்பார். ஒவ்வொரு அக்ஷௌகிணிக்கும் ஓர் அடுமனைப் பிரிவு உண்டு. எங்கள் அடுமனைப் பிரிவு அப்பால் உள்ளது. இப்போது நீங்கள் கிளம்பினால் சென்று சேர்வதற்கு இரவாகிவிடும். இன்றிரவு என்னுடன் தங்குங்கள். நாளை நானே உரிய தூதனுடன் உங்களை அனுப்பி வைக்கிறேன்” என்றான். “என்னால் புரவியில் அமர்ந்திருக்க முடியவில்லை. இன்றிரவு துயில்கொள்வேன் என்றே எனக்கு தோன்றவில்லை” என்றான் சங்கன்.

ஸ்வேதன் அப்படைகளை நோக்கியபடி புரவியில் தன்னை மறந்து அமர்ந்திருந்தான். படைவீரர்கள் அனைவரும் செம்மஞ்சள் வண்ணத்திலான ஆடைகள் அணிந்திருந்தனர். அவை புழுதிபடிந்து நிறம் மங்கியிருந்தன. புரவிகளும் அத்திரிகளும்கூட புழுதியில் மூழ்கியவையாக தெரிந்தன. மிக அப்பால் எங்கோ முரசொலி எழுந்தது. அது பலநூறு முரசுகளினூடாகப் பெருகி வந்து அவர்களைச் சூழ்ந்து கடந்துசென்றது. “நிலைக்கோள் ஆணை” என்று சங்கன் சொன்னான். “அந்தி அணைய இன்னும் பொழுதிருக்கிறது.” திருஷ்டத்யும்னன் “வெளிச்சமிருக்கையிலேயே படை அமையத் தொடங்குவது நன்று. கூடாரங்கள் அமைப்பதும் பிறவும் இருள்வதற்குள் நிகழ்ந்துமுடிந்தால் குறைவான பந்தங்கள் போதும். கொழுப்பும் நெய்யும் மிஞ்சும்” என்றான்.

படைப்பிரிவு நிலைகொள்ளத் தொடங்கியிருந்தது. முதலில் பின்னால் வந்தவர்கள் அசைவைக் குறைத்து நிலைகொண்டனர். அதன் பின்னர் அவ்வசைவின்மை பரவி முன்னால் சென்று முன்னணிப் படையினரை நிலைகொள்ள வைத்தது. நிலைகொண்டதுமே கொம்போசைகள் அவர்களை சிறிய பிரிவுகளாக்கின. அவர்கள் ஒருவருடன் ஒருவர் மெல்லிய குரலில் உரையாடியபடி கொம்போசைகளையும் கொடியசைவுகளையும் கொண்டு ஆணைகளைப்பெற்று தங்களை வடிவம் மாற்றிக்கொண்டனர். நோக்கி நின்றிருக்கையிலேயே நீள்சரடுகளாக இருந்த அப்படைப்பரப்பு சிறு வட்டங்களின் தொகுதியாக மாறியது. அவ்வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று நுரையின் குமிழிகள்போல இணைந்தும் பிரிந்தும் இயங்கத்தொடங்கின.

படைப்பிரிவிற்குப் பின்னாலிருந்து கூடாரத்துணிகளையும் தோல்பட்டைகளையும் பாடிவீடமைப்பதற்குரிய மென்மரப்பலகைகளையும் யானைத்தோல்களையும் ஈச்சைப்பாய்களையும் மூங்கில்தட்டிகளையும் நாணல்பாய்களையும் மூங்கில்கழைகளையும் கயிற்றுச்சுருள்களையும் ஏற்றிய வண்டிகள் படைகளின் மையம் நோக்கி சென்றன. ஆங்காங்கே பிரிந்து விலகி அவை நிலைகொள்ள அவற்றிலிருந்த தச்சர்களும் வீரர்களும் இறங்கி விரைந்த கைப்பழக்கத்துடன் அவற்றை இறக்கி பிரித்து சிறு சிறு குவியல்களாக பரப்பினர். ஒவ்வொருவரும் பிறிதொருவரின் ஆணையின்றியே செயலாற்றினர். இடம் தெரிவானதும் சிலர் தறிகளை அறைந்தனர். மூங்கில்கள் ஆழ ஊன்றப்பட்டன. கயிறுகளை வண்டிகளில் இருந்து அவிழ்க்கப்பட்ட எருதுகள் இழுத்து இறுக்கின.

அவர்களின் கண்ணெதிரே நூற்றுக்கணக்கான கூடாரங்களும் பாடிவீடுகளும் எழத்தொடங்கிவிட்டிருந்தன. பாஞ்சாலப் படைப்பிரிவுகள் பிரிந்து ஆங்காங்கே அமைந்தன. ஸ்வேதன் புன்னகையுடன் “ஆறு ஏரியாவதுபோல” என்று சொன்னான். திருஷ்டத்யும்னன் “நீங்கள் சூதர் கதைகளில் ஈடுபாடுள்ளவர் என்று எண்ணுகின்றேன்” என்றான். சங்கன் “ஆம், நடனமும் ஆடுவார். கூத்தராக மாறுதோற்றம் கொண்டு நடிப்பதுமுண்டு” என்றான். “மெய்யாகவா?” என்று திருஷ்டத்யும்னன் நகைத்தான். “அதனால் அவருக்கு இளைய பாண்டவர் அர்ஜுனரை மிகவும் பிடித்திருக்கிறது. வில்லவரும் கூட” என்று சங்கன் சொன்னான். “எண்ணினேன்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “ஆனால் அவருக்கு இளைய பாண்டவர் பிருகந்நளையாக மாற்றுருக்கொண்டது சற்றும் உகக்கவில்லை. மீளமீள அதை எண்ணி வருந்திக்கொண்டிருந்தார்” என்றான் சங்கன். “ஏன்?” என்றான் திருஷ்டத்யும்னன். ஸ்வேதன் புன்னகைத்தான். படைகளினூடாக அவர்கள் சென்று திருஷ்டத்யும்னனின் பாடிவீட்டை அடைந்தனர்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 52

tigசங்கன் போருக்கென படைக்கலங்களை ஒருக்கினான். குலாடத்தின் குன்றுக்குக் கீழே பலநூறு இடங்களில் இரவும்பகலும் அம்புகள் கூர்தீட்டப்பட்டன. வேல்கள் முனையொளி கொண்டன. விந்தையான பறவையொலி என அவ்வோசை கேட்டுக்கொண்டிருந்தது. அம்மக்களை அது கனவுகளுக்குள் வந்து எழுப்பியது. குருதி ஒளிகொண்ட பறக்கும் நாகங்கள் அவர்களை நோக்கி சீறின. குருதி குருதி என அவை சொல்லிக்கொண்டிருந்தன. “தீட்டப்படும் கூர் ஒருநாள் குருதியை அறியும் என்பார்கள், மூத்தவரே. அதன்பொருட்டே தீட்டுகிறேன். இவற்றில் குருதிநாடும் தெய்வங்கள் வந்தமைக! அவை நம்மை நடத்துக!” என்றான் சங்கன்.

ஒவ்வொரு நாளுமென சங்கன் பொறுமையிழந்துகொண்டிருந்தான். கருக்கிருட்டிலேயே தொலைதூரத்திலிருந்து வரும் புறாக்கள் அரண்மனையில் ஸ்வேதனின் அறைமுகப்பில் வந்து சேரும்படி பழக்கப்படுத்தப்பட்டிருந்தன. அவை வந்து சேர்வதற்கு முன்னரே அவன் பின்னிரவில் கிளம்பி வந்து அங்கு அவற்றுக்காக காத்திருந்தான். பொழுது துளித்துளியாக நகர்ந்ததால் சினம்கொண்டு எழுந்து மரத்தரைப் பரப்பில் குறடுகள் உரசி ஒலிக்க நடைபயின்றான். அவன் காலடி ஓசையைக் கேட்டு புறாக்கள் சாளரத்தில் இறங்காமல் விண்ணிலேயே சுழன்று பொழுது கடத்தின.

அதை ஒற்றுப்புறாப் பயிற்றுனன் கூறியபோது ஸ்வேதன் “நீ இங்கு வரவேண்டியதில்லை, இளையோனே. ஓலை வந்த அரைநாழிகைக்குள் அதன் செய்தி உனக்கு அனுப்பப்பட்டுவிடும்” என்றான். “இல்லை மூத்தவரே, அந்த ஓலையை பார்ப்பதே நான் வேண்டுவது” என்றான். “அப்படியென்றால் அசைவற்றிரு” என்று ஸ்வேதன் எரிச்சலுடன் சொன்னான். சங்கன் தலையசைத்தான். “மூடன்” என்றபடி அவன் மீண்டும் படுக்கைக்கு சென்றான். அங்கிருந்து இருளில் பீடத்தில் கைகளைக் கட்டியபடி விழிகள் மின்ன அமர்ந்திருக்கும் சங்கனின் ஓங்கிய உடலை அப்பால் நின்று பார்க்கையில் ஸ்வேதன் வியப்பும் விந்தையானதோர் தவிப்பும் கொண்டான். அவர்கள் இருவருமே செருகளத்தில் மாளக்கூடும் என்று நிமித்திகர்கள் கூறியிருந்தனர். நீர்வீழ்ச்சிகள் அணுகுகையில் மேலும் விசைகொண்டு பாறைகளில் முட்டி நுரைத்து பெருகிச்செல்லும் ஆற்றின் விழைவுதானோ அது என்று அவன் எண்ணிக்கொண்டான்.

செய்திகள் வந்ததும் சங்கன் அவற்றை எடுத்து நடுங்கும் கைகளால் பிரித்து ஒரே விழியோட்டலில் படித்து முடித்தான். பின்னர் ஒவ்வொரு எழுத்தாக மீண்டும் படித்தான். “மூத்தவரே, மீண்டும் ஒரு தூது செல்வதற்கு இளைய யாதவர் ஒருங்கியிருக்கிறார்!” என்று கூவினான். ஸ்வேதன் “ஆம், இம்முறையும் அவர் வெல்லப்போவதில்லை. மண்ணை விட்டுக்கொடுப்பதுதான் துரியோதனரின் நோக்கம் என்றால் அது எப்போதோ நடந்திருக்கும். ஒரு துளி மண்கூட அவர் அளிக்கமாட்டார். ஏனெனில் மண்ணை அளிப்பதற்கு ஒரு முறைமை உள்ளது என்றே அது குடிநினைவுகளில் பதிவாகும். ஒருபிடி மண்ணளித்தவன் பாதி நாட்டையும் அளித்திருக்கலாம் என்று பின்னர் பேச்செழக்கூடும். மண்ணில் உரிமையே இல்லை என்ற தன் சொல் நிலைநிறுத்தப்படவேண்டும் என்றே அவர் விரும்புவார்” என்றான்.

“அவ்வாறென்றால் ஏன் மீண்டும் மீண்டும் இளைய யாதவர் தூது செல்கிறார்?” என்று சங்கன் கேட்டான். ஸ்வேதன் “கைப்பிடி நிலம்கூட கேட்டுப் பார்த்தார்கள், அதுவும் துரியோதனரால் மறுக்கப்பட்டது என்று சொல்வதுதானே பாண்டவர் தரப்பை வலுப்பெறச் செய்வது? சொல்லிச் சொல்லி அதை பெருக்கி அந்த வஞ்சத்தைக் கொண்டே போர்முனைவரை படைப்பெருக்கை கொண்டுசென்று நிறுத்தமுடியுமே?” என்றான். “இப்போரின் அடிப்படைகள் எவையாயினும் ஆகுக! எளிய மக்கள் புரிந்துகொள்வது உடன்பிறந்தாரின் உரிமைப்போர் என்றுதான். எல்லைப்போரும் உடைமைப்போரும்போல மக்கள் புரிந்துகொள்வது பிறிதொன்றில்லை. ஏனெனில் ஒவ்வொரு குடியிலும் அத்தகைய பூசல்கள் எப்போதும் இருந்துகொண்டிருக்கும்.” சங்கன் “ஆம்” என்றான்.

படையெழுச்சிக்கான செய்தி வந்த அன்று அவன் பித்தன்போல கூச்சலிட்டான். “விராடபுரியிலிருந்து படைகள் கிளம்பவிருக்கின்றன. எட்டு குதிரைப்படைப் பிரிவுகள் ஒருங்கி நின்றிருக்கின்றன. நாளை அல்லது மறுநாள் அவை கிளம்பிச்செல்லக்கூடும்.” ஸ்வேதன் “எங்கு?” என்று கேட்டான். “குருக்ஷேத்ரத்திற்கு. அங்குதான் போர் நிகழும். ஏனெனில் அதுதான் குருதிநிலம். இந்திரன் விருத்திரனை வென்ற இடம். பரசுராமர் ஷத்ரியர்களின் குருதியை ஐந்து குளங்களாக தேக்கிய மண். அங்கு நிகழ்ந்தால் போர் அறத்திலேயே இறுதியில் சென்று நிலைக்குமென்று நம்புகிறார்கள். அதற்கு தொல்நூல்களில் அறநிலை என்றே பெயர் உள்ளது” என்றான்.

“விராடர் முந்திக்கொள்கிறார். தன் படைகளில் ஒன்றை அங்கு கொண்டு நிறுத்துவார். அங்கிருந்து அஸ்தினபுரிக்கு பாண்டவர்களின் அறைகூவல் சென்று சேரும். அறப்போரில் அறைகூவல் விடுப்பவரே போர் நிகழுமிடத்தை தெரிவு செய்யும் உரிமைகொண்டவர்” என்றான் ஸ்வேதன். “அஸ்தினபுரியின் படைகள் குருக்ஷேத்ரத்தில் நிலைகொண்டால் போரை அங்கு நிகழ்த்தியாகவேண்டிய இடத்திற்கு துரியோதனர் தள்ளப்படுவார்.” சங்கன் பெருமூச்சுவிட்டான். “விராடபுரியின் படைகள் பாண்டவர்களை ஆதரிக்குமா என்ற ஐயம் நேற்றுவரைக்கும் இருந்தது. அதை நீக்கவிழைகிறார்கள்” என்றான் ஸ்வேதன். சங்கன் “அவர்கள் பாண்டவர்களுக்கு பெண் கொடுத்தவர்கள். போரில் உடன் நின்றாகவேண்டிய கடன்கொண்டவர்கள்” என்றான்.

“ஆம், ஆனால் பாண்டவர்களுக்கு பெண்கொடுத்தவர்களில் முதன்மை பாஞ்சாலர்களுக்கே. அவர்கள் ஷத்ரியத் தொல்குடியினர். இப்போர் வென்றால் முதன்மைப் பயன்களை அடையப்போகிறவர்களும் அவர்களே. பாஞ்சாலர்களுக்கும் விராடர்களுக்கும் ஒருபோதும் அவையொருமையும் உளச்சேர்ப்பும் நிகழாது என்பதே கௌரவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அப்பூசல் நிகழவில்லை என்றும் தாங்கள் ஒருங்கிணைந்து படைகொண்டு சென்றிருக்கிறோம் என்றும் கௌரவர்களுக்கும் பிறருக்கும் அறிவிப்பது இத்தகைய படைநகர்வினூடாகவே இயல்வது. அத்துடன் முதலில் சென்று குருக்ஷேத்ரத்தில் நிலைகொள்ளும் படை விராடருடையதாக இருப்பதென்பது பாண்டவப் படைக்கூட்டில் விராடருடைய இடத்தை மேலும் முதன்மைப்படுத்துவது” என்றான் ஸ்வேதன்.

“முழுப் போரையும் நீங்களே நிகழ்த்திவிடுவீர்கள் போலுள்ளது” என்று சங்கன் சொன்னான். ஸ்வேதன் புன்னகைத்து “இந்தச் சிற்றூரின் எல்லைக்குள் அமர்ந்து பேரரசு ஒன்றை கனவுகாண்பவன் நான், இளையோனே” என்றான். சங்கன் உளஎழுச்சி தாளாமல் அறைக்குள் சுழன்று நடந்தபடி “போர் நிகழத்தொடங்கிவிட்டது. படைக்கலங்கள் மோதும் கணம் வரை அது நுண்வடிவில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றான். இடையில் கைவைத்து நின்று பெருந்தோள்களும் விரிந்த நெஞ்சும் உலைந்தசைய “இப்போது போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. விண்ணில் நிகழும் தேவர்களின் போரை மண்ணிலிருந்து நோக்குவதுபோல நாம் எங்கோ இருந்துகொண்டிருக்கிறோம்” என்றான்.

ஸ்வேதன் “நாம் மீண்டும் குல அவையை கூட்டுவோம். போர் நிகழட்டும். அதில் நமது பங்கும் இருக்கும்” என்றான். “நம் குலமூத்தோர் அஞ்சுகிறார்கள். இவர்கள் தொன்மையான மலைப்பாறைகளைப்போல இருந்த இடத்தில் எதுவும் மாறாமல் யுகங்கள் கடந்து செல்ல விரும்புபவர்கள். ஒருபோதும் இவர்களின் ஒப்புதல் பெற்று நாம் படைக்கு செல்லப்போவதில்லை. இவர்களைக் கடந்தே நாம் படைகொண்டெழவேண்டும்” என்று சங்கன் சொன்னான். ஸ்வேதன் “நாம் இங்கு மன்னர்கள். ஆனால் படைநகர்வுக்கு ஆணையிடும் உரிமை நமக்கில்லை. குலக்குழுவின் முத்திரையிட்ட ஓலையை அவைத்தலைவர் கோல்தூக்கி படித்துக்காட்டினால் ஒழிய எவரும் படைக்கென எழுவதில்லை” என்றான்.

“அது முதியவர்களின் உளநிலை. என்னுடன் இளையவர்கள் இருக்கிறார்கள். ஆயிரம்பேரை இங்குள்ள இளையவர்களில் எளிதாக திரட்டிவிட முடியும் என்னால். மூத்தவரே, எனக்கு ஒப்புதல் கொடுங்கள். நாம் கொண்டு செல்லும் படைகள் அவர்களுக்கு பொருட்டல்ல. நாம் சென்றோம் என்பதே முதன்மையானது. நான் கிளம்பிச்செல்கிறேன்” என்றான் சங்கன். ஸ்வேதன் “இங்குள்ள குலமூத்தாரைக் கடந்து நான் எதையும் செய்யமுடியாது. முறைமைகளை மீறுவது குறித்து இளமையில் நாம் எண்ணுவோம். முறைமைகளாலேயே நிலம் நாடாகிறது. நம் குரல் ஆணையாகிறது” என்றான். “நம் இளையோர் இன்னமும் தொல்குடி உளநிலை நீங்காதவர்கள். இறுதியில் அவர்கள் குடிமுறைமையை அஞ்சி பணிவார்கள்.”

ஸ்வேதன் திரும்பிச் செல்ல அவனுக்குப் பின்னால் உளக்கொதிப்புடன் சங்கன் சென்றான். “அங்கே விராடரின் படைகள் ஏன் முன்னரே சென்று நின்றிருக்கின்றன என்று புரியவில்லையா தங்களுக்கு? அவர்கள் கிழக்கு நோக்கி நிலைகொள்ள விரும்புகிறார்கள். மங்கலத்திசை அது. கிழக்கு நோக்கி நிற்பவர்கள் மேலும் ஒளிகொண்டு தெய்வங்களின் அருள் கொண்டவர்கள் என தோன்றுவர்” என்றான். “எனக்கு அமைச்சுப் பணிகள் உள்ளன. போர்சூழ்ந்ததுமே வணிகர்கள் ஒழிந்துவிட்டனர். ஒவ்வொன்றும் ஏழுமுறை விலையேறியிருக்கிறது. அரண்மனையின் பொருள்கோடலை கட்டுப்படுத்தாவிடில் கருவூலம் வற்றிவிடும். நீ சென்று பொற்கனவில் திளைத்துக்கொண்டிரு” என்று ஸ்வேதன் சொன்னான்.

மேலும் சில நாட்களுக்குள் மூன்றாவது தூது முடிந்த செய்தி அணைந்தது. விராடபுரியின் படைகள் குருக்ஷேத்ரத்தில் சென்று நிலைகொண்டன. இருபக்கமும் போருக்கான துணைதேடல்கள் தொடங்கின. ஒவ்வொருநாளும் இருபக்கமும் சென்றுசேர்பவர்களின் செய்திகள் வந்துகொண்டிருந்தன. சங்கன் பொறுமையிழந்து “இப்போதேனும் நாம் முடிவு செய்வோமா நாம் செல்கிறோமா இல்லையா என்று? நாம் செல்வதில்லை என்றால் அதை நமது குலஅவை முறைப்படி அறிவிக்கட்டும். நான் மட்டும் கிளம்பிச் செல்கிறேன். என் தலைவனின் பொருட்டு உடன் நின்று போரிட்டு உயிர் துறக்கிறேன்” என்றான்.

சீற்றத்துடன் தன் கையைச் சுருட்டி ஆட்டி “ஒன்று மட்டும் உறுதி கொள்ளுங்கள், எதன்பொருட்டும் நான் இங்கு தங்கமாட்டேன். கோழையென்று ஒடுங்கியிருந்தேன் என்று என் கொடிவழிகள் என்னைக் கருத இடமளிக்க மாட்டேன். நான் சென்ற பின் உளம் மாறி குலாடபுரி துரியோதனரின் பக்கம் சேரும் என்றால் குலாடர்களின் தலைகளை கதையால் உடைத்துச் சிதறடிக்கவும் தயங்கமாட்டேன்” என்றான். “என்ன பேசுகிறாய் என்று புரிந்துதான் இருக்கிறாயா? நீ ஊரும் குடியுமில்லாத படைவீரனல்ல, இளவரசன்” என்றான் ஸ்வேதன். “இல்லை. படைகொண்டு செல்லும் உரிமை எனக்கில்லை என்றால் நான் வெறும் படைவீரனே” என்று சங்கன் கூவினான். “படைவீரனுமல்ல இளவரசனுமல்ல என்ற இழிநிலை பேடிக்கு நிகரானது. அதற்கு ஒருபோதும் ஒப்பேன்.”

கண்ணீருடன் பெருந்தோள்களை விரித்து “உயிர் துறப்பதற்குரிய பேரரங்கு குருக்ஷேத்ரம். பாரதவர்ஷத்தில் இதுவரை உருவானவற்றிலேயே பெரும்போர்க்களம். எவ்வகையிலேனும் படைக்கலமேந்தி போர்புரிந்து பழகிய எவரும் இல்லத்தில் இருக்க இயலாது. இல்லத்திலிருப்பவர்கள் பெண்கள், முதியவர், குழவிகள். நான் என்னை ஆணென்று உணர்கிறேன்” என்றான். ஸ்வேதன் சற்றே சினத்துடன் “பிறருக்கு தன்மதிப்பும் ஆணவமும் இல்லையென்று நீ எண்ணக்கூடாது” என்று சொன்னான். “இருந்தால் அதை காட்டுங்கள். காட்டாதவரை அது இல்லையென்றே பொருள்” என்றபின் சங்கன் திரும்பிச் சென்றான்.

அம்முறை குலமூத்தோரின் அவையில் ஸ்வேதன் பாண்டவர்களுக்கு ஆதரவாக படைகொண்டு செல்லவேண்டும் என்ற தன் கோரிக்கையை முன்வைத்து முடித்ததும் மூத்தார் பேசுவதற்குள்ளாகவே சங்கன் எழுந்து உரத்த குரலில் கூவத்தொடங்கினான். “குலத்தலைவர்களே, உங்களுக்கும் எனக்கும் பெருத்த வேறுபாடுள்ளது. நீங்கள் காட்டில் வேட்டையாடி உண்டு மறுநாளை எண்ணாமல் முந்தைய நாளை மறந்து வாழ்ந்த தொல்குடிகளின் குருதி கொண்டவர்கள். நான் விராடரின் மைந்தன். அரசாளும் குலத்தை சார்ந்தவன். ஆம், நான் ஷத்ரியன். தொல்குடியினரின் சொல் கேட்டு அமர்ந்திருக்கும் ஷத்ரியன் கோழையோ வீணனோ அன்றி பிறனல்ல. நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் இங்கு நான் ஒடுங்கி அமர்ந்திருக்கப் போவதில்லை. நீங்கள் ஒப்புதலளித்தால் படையுடன் எழுவேன். இல்லையெனில் என் கதையுடன் கிளம்பி குருக்ஷேத்ரத்திற்கு செல்வேன். இன்றே இங்கிருக்கும் இறுதிநாள் எனக்கு” என்றான்.

மூத்த குடித்தலைவர் பொறுமையிழக்காமல் “மைந்தா, போருக்குச் செல்வதற்குமுன் அதனால் நமக்கு என்ன பயன் என்று தெரிந்துகொள்ளவேண்டுமென்று மட்டுமே விழைகிறேன். போர் என்றால் என்ன? இறப்பு, இழப்பு, துயர். இக்குடியின் ஆண்கள் அனைவரும் சென்று போரில் இறந்தால் அதன்பின் இங்குள்ள பெண்டிருக்கும் குழவிகளுக்கும் எவர் காப்பு? பிற குடிகள் வேட்டைவிலங்கென வந்து இக்குடியை சூறையாடி நம் பெண்டிரையும் ஆநிரைகளையும் கவர்ந்து சென்றால் எவர் பொறுப்பு? நம் குழந்தைகளை வணிகர் அடிமைப்படுத்தினால் எவர் நமக்கு துணைநிற்பார்கள்?” என்றார். “நான் சொல்வது ஒன்றே. ஒரு சொல் விராடரிடம் வாங்கி வாருங்கள். நாமும் அவர் குடிதான் என்று. அல்லது, பாண்டவரிடமிருந்து முறையான அழைப்பை பெற்றுக்கொடுங்கள்.  நூறாண்டுகாலம் அப்படைக்கூட்டு நீடிக்கும் என்று ஒரு சொல் அவர்களிடமிருந்து எழுந்தால் தலைமுறைகளென நாம் தழைத்தெழுவோம். அவ்வாறன்றி வெறும் இளமைத்துடிப்பால் படைகொண்டு செல்வது நம்மை நாமே அழிப்பதற்கு நிகர். அதை ஒருபோதும் மூத்தோரும் அறிந்தோருமாகிய குலக்குழு ஒப்புக்கொள்ளாது.”

“ஆனால் இது வெறும் போரல்ல” என்று ஸ்வேதன் சொன்னான். “மூத்தவரே, பாண்டவர்களுடன் சிற்றரசர்களும் நிஷாதர்களும் கிராதர்களும் அசுரரும் அரக்கரும் படைகொண்டு செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஓரிடத்தில் தங்குகிறார்கள். ஒவ்வொரு நாளும் உரையாடுகிறார்கள். அங்கு உருவாக்கிக்கொள்ளும் நட்புக்கூட்டுகளும் படைபுரிதல்களும் பாரதவர்ஷத்தின் அரசியலை முற்றாகவே மாற்றப்போகின்றன. போரில் வெற்றியும் தோல்வியும் எவ்வண்ணம் என்றாலும் ஒவ்வொருவருக்கும் நண்பர்கள் கிடைப்பார்கள். தலைமுறைகளென நீளும் உறவுகள் அமையும். குருதியுறவுகள், மணப்புரிதல்கள். இனி அவற்றிலிருந்து அகன்று எவரும் தனித்த அரசியல் செய்ய இயலாது. நாம் தனித்து நிற்க வேண்டுமென்ற எண்ணத்தையே கைவிடுங்கள். எந்நிலையிலும் அதற்கு இனி வாய்ப்பே இல்லை.”

அங்கு அமர்ந்திருந்த குல மூத்தவர்கள் முகம் மாறவில்லை. “இது புதிய ஓர் அறத்திற்கான போர்” என்று ஸ்வேதன் சொன்னான். “தொல்வேதங்கள் ஷத்ரியர்களுக்களித்த மாறா மண்ணுரிமையை ஒழித்து குடியறம் பேணுபவர்கள் அனைவருக்கும் முடிகொள்ளும் உரிமையை அளிக்கும் புது வேதத்துக்கான போர். ஆகவே இது நமக்கான போரும்கூட.” குடிமூத்தார் ஒருவர் “எந்தப் போரும் ஏதேனும் ஓர் அறத்துக்கானதே. எந்தப் போரும் குருதிப்பெருக்கு மட்டுமே” என்றார். குடித்தலைவர் “நாங்கள் மூதன்னையருடனும் பேசிவிட்டு சொல்கிறோம்” என்று சொல்ல இளையோர் எழுந்து வெளியே சென்றனர்.

உள்ளே அவர்கள் ஐயத்துடனும் தயக்கத்துடனும் ஒருவருக்கொருவர் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டனர். இழுத்துக் கட்டப்பட்ட தோல்வார்களை வருடியதுபோன்ற அவர்களின் தணிந்த குரல்கள் இணைந்த கார்வை அவைநிகழ்ந்த பெருங்குடிலுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. பின்னர் சொல்சூழ்ந்து முடித்து அவர்கள் வெளிவந்தனர். குடிமூத்தார் ஒருவர் “எங்கள் முடிவை தலைவர் அறிவிப்பார்” என்றார். குடித்தலைவர் “இக்குழு எடுத்த முடிவு இதுவே. விராடரிடமிருந்து நமது அரசியை மீண்டும் ஏற்றுக்கொள்வதாகவும் நம் குடியை தன் குருதியென ஏற்பதாகவும் ஒற்றைச் சொல் பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது பாண்டவர் தரப்பிலிருந்து நம்மை போருக்கு அழைப்பதாக ஒரு முத்திரைஓலை பெறப்படவேண்டும். அவ்விரண்டுமின்றி இங்கிருந்து படை கிளம்புவதற்கு நாங்கள் ஒப்பவில்லை” என்றார்.

சங்கன் “நன்று! இங்கே வந்து சேர்வீர்கள் என்று நான் அறிந்திருக்கிறேன். நான் கிளம்புகிறேன். எவ்வகையிலும் இனி நான் உங்களுக்கு கட்டுப்பட்டவனல்ல” என்று சொல்லி தன் இடக்கையால் கழுத்திலணிந்திருந்த கல்மாலையை அறுத்து குழுத்தலைவரின் முன் தரையில் வீசினான். குடிமூத்தார் அனைவரும் திகைத்து வியப்பொலி எழுப்பினர். குழுத்தலைவர் சினத்துடன் கோலைத் தூக்கி முன்னால் வந்து “என்ன செய்கிறாய்? அறிவிலி! என்ன செய்கிறாய் என்று எண்ணிச் செய்கிறாயா?” என்று கூவினார். “எண்ணி நூறுமுறை துணிந்த பின்னரே இதை செய்கிறேன். இனி நான் உங்கள் குலத்தோன் அல்ல. எக்குலத்தோனுமல்ல. நான் தனியன். விரும்பினால் நீங்கள் படைசூழ்ந்து என்னை கொல்லலாம்” என்றான் சங்கன்.

“அனைவரும் அறிக! இங்கிருந்து கிளம்பி பாண்டவர் படை நோக்கி செல்லவிருக்கிறேன். ஆற்றலுள்ளோர் என்னை தடுக்கலாம், அவர்களின் தலைகளை உடைத்த பின் கடந்துசெல்வேன்” என்றவன் திரும்பி அப்பால் கூடிநின்றிருந்த தன் குலத்து இளைஞர்களை நோக்கி “ஆண்மை கொண்டோர் என்னுடன் வருக! போரென்பது ஆண்களுக்குரியதென்று எண்ணுவோர் எழுக! அஞ்சி குறுகி இங்கு வேட்டைச்சிறுகுடி என வாழ விழைபவர்கள் விலகுக!” என்றபின் தன் கதாயுதத்தை தலைக்குமேல் மும்முறை சுழற்றி “வெற்றிவேல்! வீரவேல்!” என்று குரலெழுப்பி முன்னால் நடந்தான். அவனை நோக்கி நின்றிருந்த திரளிலிருந்து “வெற்றிவேல்! வீரவேல்!” என்ற குரல்கள் ஆங்காங்கே எழுந்தன. கதைகளும் வில்களுமாக இளைஞர்கள் அவனுடன் செல்லத்தொடங்கினர்.

ஸ்வேதன் திகைப்புடன் அதைப் பார்த்து நின்றான். அத்தகையதோர் எதிர்ப்புணர்ச்சி தன் குடிகளில் இருக்கக்கூடுமென்று அவன் எண்ணியதே இல்லை. மூத்தார் சொல்லை மீறி அவர்கள் எழுவதென்பது கதைகளிலும் நிகழ்ந்ததில்லை. குடிமூத்தார் கைகள் தளர வாய் திறந்திருக்க விழித்து நோக்கி நின்றிருந்தனர். மணற்கரை இடிந்து சரிவதுபோல மேலும் மேலுமென இளைஞர்கள் சங்கனைத் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தனர். ஸ்வேதன் திரும்பி “தாங்கள் ஆணைகளை மாற்றிக்கொண்டே ஆகவேண்டும், குடித்தலைவரே. இல்லையேல் நாம் நம் படைகளாலேயே கைவிடப்பட்டவர்களாவோம். ஒப்புதலளித்து நீங்கள் அவர்களை அனுப்பினால் பாண்டவர்களின் துணை நமக்கிருக்கும் என்ற அச்சமாவது நம் எதிரிகளுக்கு இருக்கும். அவர்கள் நம்மை கைவிட்டுச் சென்றால் அது நம்மைச் சூழ்ந்திருக்கும் எதிரிகளின் முன் துணையின்றி விட்டுச் செல்வதே” என்றான்.

மேலும் மேலுமென போர்க்குரல்களுடன் இளைஞர்கள் சென்றுகொண்டே இருப்பதை, அவர்களின் தந்தையரும் துணைவியரும்கூட அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்தொலி எழுப்புவதை குடித்தலைவர் கண்டார். பின்னர் “ஆம், நாங்கள் ஒப்புதல் அளிக்கிறோம். அதுவே ஊழென்றால் இனி அவ்வாறே ஆகுக!” என்று மறுமொழி சொன்னார்.

குலாடகுடியின் மிகச் சிறந்த படையை சங்கன் திரட்டினான். “நாம் பெரும்படை ஒன்றில் சென்று சேரவிருக்கிறோம். பண்டு இலங்கைகடந்த அண்ணலுக்கு வால்மானுடர் செய்த உதவிக்கு நிகர் இது. இது நாம் நம் ஆசிரியர்களுக்கு அளிக்கும் காணிக்கை மட்டுமே” என்று அவன் தன் வீரர்களுக்கு சொன்னான். விடைகொள்ளும்பொருட்டு அவர்கள் பிரதீதையை அணுகி வணங்கியபோது அவள் முகம் இறுகி குளிர்ந்தவள்போல் இருப்பதை கண்டனர். நோயுற்ற புரவி என அவள் உடல் மெய்ப்புகொண்டு நின்றது. “சென்றுவருகிறோம், அன்னையே. எங்களை வாழ்த்துக!” என்று ஸ்வேதன் சொன்னான். அவளால் ஒரு சொல்லும் கூறமுடியவில்லை. உலர்ந்த உதடுகள் ஒட்டியிருந்தன. சங்கன் வணங்கியபோது மெல்லிய முனகலோசை மட்டுமே அவளிடமிருந்து எழுந்தது.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 51

tigதக்ஷிண விராடபுரி என்று அயலவரால் அழைக்கப்பட்ட குலாடபுரியில் இருந்து அதன் இளவரசனாகிய ஸ்வேதனும் அவன் இளையோனாகிய சங்கனும் ஆயிரம் புரவிவீரர்களும் ஈராயிரம் வில்லவர்களும் அவர்களுக்குரிய பொருட்களை சுமந்து வந்த ஆயிரத்து இருநூறு அத்திரிகளுமாக மலைப்பாதையினூடாக சதுப்புகளையும் ஆற்றுப்பெருக்குகளையும் கடந்து பாண்டவப் படையை சென்றடைந்தனர். குலாடநகரி அவர்களின் அன்னையான பிரதீதையால் முடிகொள்ளப்பட்டது. அவர்களின் வழக்கப்படி அன்னைசொல் கேட்டு மைந்தர் ஆட்சி செய்தனர்.

குலாடநகரி நெடுங்காலமாக பதினெட்டு குலாடர் குலங்களின் குலத்தலைவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூடி குலஅமைப்பின் மாற்றங்களையும் ஆட்சி நெறிகளையும் வகுப்பதற்குரிய இடமாக இருந்தது. குலாடகுலங்களைச் சார்ந்த குடித்தலைவர்கள் இறந்தால் அவர்களின் உடல்கள் அங்கு கொண்டுவரப்பட்டு குலாடம் என்று அழைக்கப்பட்ட பசும்புல் செறிந்த பெரிய மண்மேட்டில் புதைக்கப்பட்டன. அவர்களின் உடல்களுக்கு மேல் நிறுத்தப்பட்ட குத்துக்கற்கள் கல்லாலான காடு என அக்குன்றை முழுமையாக மூடியிருந்தன. அக்குன்று அவர்களின் மையம் என்று கருதப்பட்டது.

நெடுங்காலம் குலாடர் தங்கள் அன்னையர் குழுவால் ஆளப்பட்டனர். பின்னர் அவர்கள் அன்னையர் சொல்லுக்கிணங்க குடித்தலைவர்கள் கோல்கொண்டனர். கலிங்க மன்னன் சூரியதேவன் படைகொண்டு வந்து குலாடர்களின் அனைத்து ஊர்களையும் கைப்பற்றி அவர்களை தன் ஆட்சிக்குக்கீழ் கொண்டுவந்தபோது அந்நிலத்திற்கு ஓர் அரசனை தேர்ந்தெடுக்கும்படி ஆணையிட்டார். அதன்படி குலாடர்களின் குலத்தலைவர்கள் அக்குன்றில் கூடி அவர்களில் அகவை முதிர்ந்தவராகிய பத்ர குலாடரை தங்கள் தலைவராக தேர்ந்தெடுத்தனர். அவரை அரசராக கலிங்கம் ஏற்றுக்கொண்டது. பின்னர் பதினெட்டு தலைமுறைக்காலம் குலாட குடிகள் கலிங்கத்திற்கு கப்பம் கட்டின.

கலிங்கத்திற்கு அளிக்கவேண்டிய கப்பத்தை தங்கள் ஊர்கள் அனைத்திலிருந்தும் பெற்று தொகுத்துக்கொள்ளும் பொருட்டு ஓர் ஆட்சி முறைமையையும் அவற்றை இயற்றும் அமைச்சர்களையும் நிகுதி கொள்ளும் தண்டலர்களையும் குலாட அரசர் உருவாக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களுக்கு காப்பென்று சிறுபடை உருவாகியது. பின்னர் குலாடம் எல்லைகள் வகுத்துக்கொண்டு காவலரண்களை உருவாக்கியது. அக்காவலரண்கள் குதிரைப்பாதைகளால் இணைக்கப்பட்டன. அவற்றினூடாகச் சென்று அக்குடிகள் அனைத்தையும் ஒன்றென இணைத்து ஆளும் படைவல்லமையை அது உருவாக்கிக்கொண்டது. குலாடக் குன்றைச் சுற்றி குலாடபுரி என்னும் ஊர் எழுந்து வந்தது.

அந்நகரைச் சூழ்ந்து மூங்கிலாலும் முள் மரங்களாலுமான கோட்டை கட்டப்பட்டது. அதன் நடுவே அரச மாளிகையும் படைத்தலைவர்களுக்கான இல்லங்களும் அமைந்தன. மெல்ல குலாடபுரி வணிக மையமாகியது. கலிங்கத்திலிருந்து வந்த வணிகர்கள் அங்கு பொருட்களை கொண்டுவந்து கடைபரப்பி மலைப்பொருட்களுக்கு கைமாறு கொடுத்து திரட்டி திரும்பிச் சென்றனர். வணிகம் செழித்தபோது குலாடபுரியின் அரசகுலம் மேலும் ஆற்றல் கொண்டது. கலிங்கம் மூன்று நாடுகளாக உடைந்து பிரக்ஜ்யோதிஷத்துக்கும் வங்கத்திற்கும் வேசரத்துக்கும் கப்பம் கட்டும் நாடுகளாக மாறியபோது குலாடபுரி தன் விடுதலையை அறிவித்தது.

பின்னர் ஏழு தலைமுறைக்காலம் குலாடபுரி தனி நாடென்றே இலங்கியது. விராடபுரி எழுந்து ஆற்றல் கொண்ட நாடென்று மாறியபோது அதன் படைகளுக்கும் குலாடபுரியின் படைகளுக்கும் பூசல்கள் தொடங்கின. கலிங்கத்திலிருந்து விராடபுரிக்குச் செல்லும் பாதையை குலாடபுரி தன் ஆளுகைக்குள் வைத்திருந்தது. குலாடபுரி தன்னிடம் வரும் வணிகர்களுக்கு சுங்கம் திரட்டுவதை விராடர் விரும்பவில்லை. ஏழுமுறை நடந்த போர்களுக்குப் பின் இரு தரப்பும் ஒரு உடன்படிக்கையை சென்றடைந்தன. குலாடபுரியில் நிகழ்ந்த பெருவிருந்துக்குப் பிறகு குலாடபுரியின் அரசர் உக்ரதமஸின் மகளாகிய பிரதீதையை விராடர் மணம்கொண்டார்.

ஆனால் குலாடர்கள் தங்கள் நாட்டு எல்லையைவிட்டு செல்லலாகாது என்று குடிமுறைமை இருந்ததனால் குலாடபுரியின் அரசி தன் நகரிலேயே வாழ்ந்தாள். அவர்கள் பெண்வழி முடியுரிமை கொண்டவர்கள் என்பதனால் அவள் வயிற்றில் பிறந்த ஸ்வேதனும் சங்கனுமே குலாடபுரியின் முடியுரிமைக்கு உரியவர்களாக இருந்தனர். விராடபுரியும் குலாடபுரியும் இரு தனிநாடுகள் என்று இலங்கின. ஆண்டுக்கு ஒருமுறை விராடர் தன் படைகளுடனும் அணித்துணைவர்களுடனும் அமைச்சர்களுடனும் குலாடபுரிக்கு வந்து தங்கி அங்குள்ள பெருங்களியாட்டென்னும் திருவிழாவில் பங்கெடுத்து அரசியுடன் மகிழ்ந்திருந்து திரும்பிச் சென்றார்.

விராடபுரியின் படைப்பொறுப்புக்கு கீசகன் வந்தபோது விராடர் குலாடபுரிக்குச் செல்வது குறைந்தது. கீசகன் அவரை தன் ஆட்சிக்குக் கீழ் முழுமையாக வைத்திருந்தான். மதுவில் மூழ்கி உடல் தளர்ந்த பின்னர் மலைப்பாதையில் நெடுந்தொலைவு புரவியில் அமர்ந்து செல்வதை அவர் விரும்பவில்லை. அரசர் பொருட்டு உத்தரனே ஆண்டுக்கொருமுறை குலாடபுரிக்கு வந்து பெருங்களியாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டான். தன் இளையோர் மீது பற்றற்றவனாகவே உத்தரன் இருந்தான். அவர்களிருவருக்கும் உத்தரன் மீது ஏளனம் இருந்தது. அவனை தங்களுக்குள் பிரத்யுத்தரன் என்று அவர்கள் இளிவரலுடன் குறிப்பிட்டனர்.

உத்தரன் கொள்ளும் மிகைநடிப்புகளும் ஒவ்வொருமுறையும் தன்னை இளிவரலுக்குரியவனாக மாற்றிக்கொண்டு அவை நீங்குவதும் குலாடபுரியில் மிகப் பெரிய வேடிக்கையாக பேசப்பட்டது. அச்செய்திகள் ஒவ்வொன்றாக செவியில் விழத்தொடங்கிய பின்னர் உத்தரன் குலாடபுரிக்குச் செல்வதை தவிர்த்தான். குலாடபுரியும் விராடபுரியும் முற்றிலுமாக விலகிச் சென்றன. கீசகன் விராடபுரியில் முழுப் பொறுப்பையும் ஏற்ற பிறகு குலாடபுரி முற்றாகவே ஒதுக்கப்பட்டது. ஏழுமுறை கீசகனின் படைகள் பெருகி வந்து குலாடபுரியை தாக்கி கப்பம் கொண்டு சென்றன. குலாடபுரியைச் சூழ்ந்திருந்த அடர்காடுகளும் இரு நாடுகளுக்கும் நடுவே ஓடிக்கொண்டிருந்த நீர்மிகுந்த காட்டாறுகளும் கீசகனின் படைகள் நிலையாக குலாடபுரியை கைப்பற்றி விராடபுரியுடன் சேர்த்துக்கொள்ள தடையாக இருந்தன.

குலாடபுரி சுங்கம் கொண்டு வந்த அனைத்துப் பாதைகளிலும் கீசகன் தன் படையினரை நிறுத்தி முழுமையாக ஆட்கொண்டான். விராடபுரியின் மூன்றடுக்குச் சுங்கங்களையும் கட்டிய பிறகு வணிகர்கள் பொருட்களை கொண்டுவந்தமையால் ஒவ்வொரு பொருளும் ஏழுமடங்கு விலையேறியது. குலாடபுரியின் மலைப்பொருட்கள் அனைத்தும் ஒப்புநோக்க விலைகுறைந்தபடியே சென்றன. குலாடபுரியில் பெற்றுக்கொண்டு கலிங்கத்திற்கு கொண்டு செல்லும் பொருட்கள் மேலும் விராடபுரி சுங்கம் விடுக்கத் தொடங்கியதும் குலாடபுரி மேலும் மேலும் வறுமை கொண்டது. அதன் தொல்காலத்து வெற்றியும் புகழும் குறைந்து தொல்குடி வாழ்க்கைக்கு மீண்டது. காடுகளில் மலைப்பொருள் கொணர்ந்தும் ஆபுரந்தும் மலையோர நிலங்களில் கிழங்குகளும் நெல்லும் பயிரிட்டும் அவர்கள் புற உலகத் தொடர்பின்றி வாழத் தொடங்கினர். அச்சிறு நாட்டை விராடரும் கலிங்கரும் மறந்தனர். வணிகரன்றி பிற எவர் பேச்சிலும் அவ்வூர் இடம்பெறவில்லை.

குலாடபுரியின் இரு இளவரசர்களும் விராடநாட்டிலும் பாரதவர்ஷத்திலும் என்ன நிகழ்கிறதென்பதை ஒற்றர்கள் வழியாகவும் சூதர்கள் வழியாகவும் ஒவ்வொரு நாளுமென அறிந்துகொண்டிருந்தனர். ஸ்வேதன் இளமையிலேயே அர்ஜுனனின் வெற்றிக்கதைகளைக் கேட்டு வளர்ந்திருந்தான். சங்கன் பீமனை தன் உளத் தலைவனாக வழிபட்டான். விராடபுரியில் கீசகன் கொல்லப்பட்டது குலாடபுரியை மகிழ்வித்த பெருஞ்செய்தியாக இருந்தது. முதல்முறையாக அச்செய்தியை செவிகொண்டதுமே சங்கன் ஒருவேளை விராடபுரிக்கு பீமசேனர் வந்திருக்கக்கூடுமோ என்று ஐயுற்றான். அவர்கள் அரசவை முடிந்து இடைநாழியினூடாக தனியறைக்கு திரும்புகையில் தன் மூத்தவனிடம் அதை சொன்னான்.

ஸ்வேதன் நின்று “என்ன உளறுகிறாய்? அவர்கள் காட்டில் இறந்து மறைந்துவிட்டதாகவே சொல்லப்படுகிறது” என்றான். சங்கன் “அருமணிகள் ஒருபோதும் தொலைந்துபோவதில்லை என்று கேட்டிருப்பீர், மூத்தவரே. பெருவீரர்களுக்கு பிறவிநோக்கம் ஒன்றுள்ளது. அந்நோக்கத்தை அடையாது அவர்கள் இறப்பதில்லை. காட்டில் அவர்கள் அவ்வண்ணம் எவருமறியாமல் மறைந்தார்கள் என்றால் அதில் பெரும் காவியப்பிழை ஒன்றுள்ளது. தெய்வங்கள் அவ்வாறு ஒத்திசைவற்று செயல்படுவதில்லை” என்றான்.

“மூடன்போல் உளறுகிறாய். கதைகளைக் கேட்டு அதில் உளம் திளைத்து வாழப் பழகிவிட்டாய்” என்று ஸ்வேதன் சொன்னான். “காட்டில் எதிர்கொள்ளும் சிம்மமும் காலடியில் மிதிபடும் நாகமும் தங்கள் எல்லைக்குள் மானுடரைக் கண்ட கந்தர்வர்களும் அப்பிறவிநோக்கத்தை எல்லாம் அறிந்து செயல்படுவதில்லை” என்றான். “ஆம், அவர்களுக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொன்றையும் ஒன்றுடன் ஒன்று பிணைத்து இப்புவிநாடகத்தை இயற்றும் தெய்வங்களுக்கு தெரியும்” என்றான் சங்கன். சில கணங்கள் அவனை உற்றுப்பார்த்த பின் ஸ்வேதனும் ஐயுற்றான். “ஆம், பீமசேனரன்றி பிறரால் கீசகன் கொல்லப்பட இயலாதென்றே சொல்கிறார்கள். ஆனால் கந்தர்வர் ஒருவரால் கீசகர் கொல்லப்பட்டார் என்கிறார்கள். கந்தர்வர்கள் பெருவீரர்களை கொல்வது அரிய நிகழ்ச்சியுமல்ல” என்றான்.

“அக்கந்தர்வர் பீமசேனரா என்பதை உற்று நோக்குவோம். நமது ஒற்றர்களை விராடபுரிக்கு அனுப்புவோம்” என்றான் சங்கன். பன்னிரு நாட்களில் அங்கிருந்து ஒற்றன் செய்தி அனுப்பினான். அடுமனையாளன் ஒருவன் அனைவராலும் அஞ்சப்படுபவனாக இருக்கிறான் என. கீசகனைவிட பெருந்தோளன். இருமுறை களத்தில் அவன் பெருமல்லர்களை வென்றிருக்கிறான். கீசகனே அவனை அஞ்சிக்கொண்டிருந்திருக்கிறான். அடுமனையாளனால்தான் கீசகன் கொல்லப்பட்டிருக்கலாம் என்று விராடபுரியில் பேசிக்கொள்கிறார்கள் என்றது செய்தி.

சங்கன் அச்செய்தியை கேட்டதும் பீடத்திலிருந்து எழுந்து உரத்த குரலில் “ஐயமே இல்லை! அது அவர்தான்! பீமசேனரேதான்! அடுமனை அவருக்குரிய இடம்! எங்கேனும் ஒளிந்து தங்குவதாக இருந்தால் அடுமனையாளன் வடிவையே அவர் எடுப்பார். முன்பு கானேகியபோதும் மூன்று இடங்களில் அவர் அடுமனையாளனாக பணியாற்றியிருக்கிறார்!” என்றான். ஸ்வேதன் “அவர் மட்டும் தனியாக அங்கு வந்து தங்கியிருக்க வாய்ப்பில்லை. சென்ற ஓராண்டுக்குள் அங்கு வந்து எவ்வகையிலேனும் பிறர் நோக்கை இழுப்பவர்கள் எவரெவர் என்று கேட்டு ஒற்றர்களிடம் செய்தி அனுப்புகிறேன்” என்றான்.

மேலும் ஆறு நாட்களுக்குப் பின் அங்கிருக்கும் ஐவரையும் அரண்மனையிலிருக்கும் சைரந்திரி என்னும் சேடியையும் பற்றிய செய்திகள் அங்கு வந்தன. “அவர்களேதான்! ஐயமில்லை!” என்று ஸ்வேதன் சொன்னான். “மூத்தவரே, நான் இக்கணமே விராடபுரிக்கு செல்ல விரும்புகிறேன். அவரை நான் பார்த்தாகவேண்டும். அவர் கால்களைத் தொட்டு சென்னிசூடி என்னை வாழ்த்துங்கள் அரசே என்று சொல்லவேண்டும். இங்கு அவர் என ஓர் இரும்புக் கதாயுதத்தை வைத்து ஆசிரியர் என்று கொண்டு ஒவ்வொரு நாளும் கதை பயில்பவன் நான். அவரை ஒருமுறைகூட பார்த்திராத மாணவன். பிறிதொரு வாய்ப்பு எனக்கு அமையப்போவதில்லை” என்றான்.

ஆனால் ஸ்வேதன் தயங்கினான். கீசகனின் இறப்பு குலாடபுரியில் பெரும்களியாட்டென்று மாறியது. முதலில் அதை நகர்மக்கள் எவரும் நம்பவில்லை. முன்பும் பலமுறை அவ்வாறு கீசகன் கொல்லப்பட்ட செய்தி அவர்களுக்கு வந்திருந்தது. மீண்டும் மீண்டும் அச்செய்தி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே குலாடபுரியில் களியாட்டங்கள் தொடங்கின. தேனும் தினையும் கலந்த இனிப்புகளை ஒருவரோடொருவர் பரிமாறிக்கொண்டனர். மலர்களாலும் தளிரிலைச்செண்டுகளாலும் மாறி மாறி அறைந்து கூவி நகைத்தனர். குலாடபுரியின் மூத்தோர் குன்றின்மீதேறி நடுகற்களுக்கு மாலையிட்டு ஊனும் கள்ளும் படைத்து வணங்கி நன்றியுரைத்தனர்.

பூசகர்களில் வெறியாட்டெழுந்த மூதாதையர் குலாடபுரியின் இருண்ட காலம் முடிவுற்றுவிட்டது, ஒளியெழவிருக்கிறது என்று அறிவித்தார்கள். ஆனால் ஸ்வேதன் மட்டும் ஐயம் கொண்டிருந்தான். “ஆணிலி என்று அங்கிருப்பவர் அர்ஜுனராக இருக்க வாய்ப்பில்லை. பெருவீரர் ஆணிலியாக எப்படி இருக்க முடியும்?” என்றான். “அவரே என்பதில் எனக்கு ஐயமில்லை. விற்கலையும் நடனமும் ஒன்றே. அவர் பெருநடிகர்” என்றான் சங்கன். அதை ஸ்வேதன் அறிந்திருந்தான் எனினும் அர்ஜுனனை பெண்ணுருவில் உளத்தால் காண அவன் தயங்கினான்.

மேலும் சிலநாட்களுக்குப் பின் அஸ்தினபுரியிலிருந்து அங்க நாட்டரசர் கர்ணன் தலைமையில் துரியோதனனும் அஸ்வத்தாமனும் படைகொண்டு விராடபுரி நோக்கி வருவதை ஒற்றர்கள் வந்து உரைத்தனர். “இதுவே தருணம். தந்தையின் உதவிக்காக நாம் படைகொண்டு செல்வோம்” என்று சங்கன் சொன்னான். ஸ்வேதன் “நாம் இன்று பிறிதொரு நாடு. அவர்கள் நம்மை அழைக்காமல் இப்போருக்குச் செல்வது உகந்ததல்ல. இன்றும் நமது குலத்தலைவர்களின் அவை அறுதி முடிவை எடுக்கும் ஆற்றலுடன் உள்ளது. அவர்களிடம் கோருவோம்” என்றான்.

குலாடக் குன்றில் கூடிய குலாடர்களின் குடிப்பேரவை விராடபுரியின் அரசர் தன் முத்திரை பொறிக்கப்பட்ட ஓலையாலோ அரசத்தூதென்று வரும் அந்தணர் ஒருவராலோ முறைப்படி குலாடபுரியை போருக்கு உடன்வருமாறு அழைத்தாலன்றி அவர்கள் செல்ல வேண்டியதில்லை என்று முடிவெடுத்தது. விராடர் தன் அரசியையும் மைந்தர்களையும் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னரே முற்றாக மறந்துவிட்டிருந்தார். கீசகனின் படைகள் குலாடபுரியை சூறையாடியபோதும் விராடரின் துணைவியாகிய அரசி பிரதீதை கீசகனின் முன்னால் சென்று முடியும் அரசணியுமின்றி நின்று கைகூப்பி அடியறைவு சொல்லி கப்பம் அளித்தபோதும் விராடர் மறுவினையாற்றவில்லை. அவ்வஞ்சம் குலாடர்களிடம் நஞ்சென தேங்கியிருந்தது.

குலாடபுரியின் அரசி தனிமணிமுடி சூடலாகாதென்றும் அரியணையில் அமர்ந்து அவை நிகழ்த்தலாகாதென்றும் கீசகன் ஆணை பிறப்பித்தபோதும் விராடபுரியின் அரசரிடமிருந்து ஆதரவென்று எதுவும் எழவில்லை. “குலாடபுரியை விராடபுரியின் இணை நாடாகவும், நம் அரசியை விராடரின் அரசியாகவும் அவர்கள் ஏற்றுக்கொண்ட பின்னரே நாம் படைகொண்டு செல்லவேண்டும்” என்றனர் குலத்தலைவர்கள். “இப்போரில் விராடபுரி தோற்கும். அது நமக்கு நன்று. கலிங்கமும் விராடமும் ஆற்றல் குன்றுகையிலேயே நாம் வளர்கிறோம்” என்றார் பிறிதொருவர்.

சங்கன் “ஐயமே தேவையில்லை, விராடபுரியை இந்நிலையில் எவரும் வெல்ல இயலாது” என்றான். “ஏன்? வருபவர்கள் எவர் என்று தெரியுமா?” என்று ஒரு குடித்தலைவர் கேட்டார். “அங்கு பெருவீரன் உத்தரன் இருப்பதனாலா?” என்று அவர் சொன்னபோது அவையமர்ந்த குடித்தலைவர் அனைவரும் வெடித்து நகைத்தனர். சங்கனை விழிநோக்கிய ஸ்வேதன் பேசாதே என்று தடுத்தான். “அவர்களுக்கு கந்தர்வர்களின் அருளிருக்கிறது. கீசகனைக் கொன்ற கந்தர்வன் இப்போதும் அவர்களின் பணிக்கென அங்கிருக்கிறான்” என்றான் சங்கன்.

குடிமூத்தவர் “நீ கதைகளிலேயே உழலுகிறாய், இளையோனே. கந்தர்வர்கள் நள்ளிரவில் உலவும் மானுடரை அச்சுறுத்தி வெல்வதுண்டு. இன்று வரை எவரும் தேவர் உதவியாலோ கந்தர்வர்களின் பின்துணையாலோ போர்களை வென்றதில்லை. மானுடப் போர்களில் தெய்வங்கள் ஊடாடுவதில்லை. படைக்கலங்களில் வந்தமைந்து குருதி உண்ணும் பாதாள தெய்வங்கள்கூட போர் வெற்றிகளை முடிவு செய்வதில்லை. ஆற்றலும் உறுதியுமே போர்களை முடிவு செய்கின்றன” என்றார். சங்கன் மேலும் ஏதோ சொல்ல முனைய ஸ்வேதன் அவனை விழியால் தடுத்தான்.

அவர்கள் அஸ்தினபுரியின் படைகள் விராடபுரியை நோக்கி வரும் செய்தியை ஒவ்வொரு நாழிகையும் என ஓலைகளால் அறிந்துகொண்டிருந்தனர். விராடரின் மைந்தன் உத்தரனின் தலைமையில் படையொன்று அவர்களை எதிர்கொள்ளச் செல்கிறது என்ற செய்தி வந்தபோது “நன்று! இப்போருக்குப் பின் ஒருவேளை உத்தரபுரியையும் நமது இளவரசர்களே ஆளக்கூடும். அரசருக்கு வேறு மைந்தர்கள் அங்கில்லை” என்று குடிமூத்தார் ஒருவர் சொன்னார். “உத்தரனை தேர்த்தூணில் கைகால் பிணைத்து கட்டிவைத்து போருக்கு கொண்டு செல்லவேண்டும். கட்டு சிறிது நெகிழ்ந்தால்கூட அவர் பாய்ந்து திரும்பி ஓடிவிடக்கூடும்” என்றார் ஒருவர். அவை அதை எண்ணி எண்ணி நகைத்துக்கொண்டிருந்தது.

ஸ்வேதன் “அவருக்கு தேரோட்டிச்செல்பவர் ஆற்றல் கொண்டவர் என்கிறார்கள்” என்றான். “யாரவர்? விராடரே தேரோட்டுகிறாரா?” என்றார் குடித்தலைவர். “அல்ல. அங்கு பிருகந்நளை என்னும் ஆணிலி இளவரசிக்கு நடனம் கற்றுக்கொடுப்பதற்காக வந்திருக்கிறாள்.” அவை ஒருகணம் அச்சொற்களைக்கேட்டு அதன் பின்னர் புரிந்துகொண்டு தொடைகளிலும் பிறர் தோள்களிலும் அறைந்தபடி உரக்க நகைத்தது. மீண்டும் மீண்டுமென நகைப்பு வெடித்தெழுந்தது. முதியவர் கண்களில் நீர்வார சிரித்து “உத்தரனுக்கு பேடி தேரோட்டுகிறாள். மிகப் பொருத்தம். ஆனால் பேடிக்கு எதிர்நிற்க அங்கர் மறுத்துவிடக்கூடும். பேடிகளை எதிர்கொள்ள அவர்களிடமும் பேடிகள் இருந்தாகவேண்டும்” என்றார்.

அதற்கு மறுநாள் அஸ்தினபுரியின் படை விராடநாட்டுப் படையினரால் தோற்கடிக்கப்பட்டு எல்லைவரை துரத்தியடிக்கப்பட்டதென்றும் உத்தரர் விழுப்புண் பெற்று போர்வீரராக நகர்நுழைந்தாரென்றும் ஒற்றர் செய்தி வந்தது. என்ன நிகழ்கிறது என்று அறியாமல் குடித்தலைவர்கள் சொல்லிழந்து அமர்ந்திருந்தனர். உத்தரர் நகர்நுழைந்த வீறையும் விராடபுரியின் மக்கள் மலரள்ளி வீழ்த்தி வெறிகொண்டு கூத்தாடியதையும் ஒற்றர்கள் சொல்லச் சொல்ல அவர்களிலொருவர் “இது மெய்யென்றால் நாமறியாத ஏதோ தெய்வங்கள் இதில் ஊடாடியுள்ளன. இது மானுட நிகழ்வே அல்ல” என்றார்.

சங்கன் “அதைத்தான் நானும் கூறினேன், அங்கு ஐந்து தெய்வங்கள் ஊடாடியுள்ளன” என்றான். ஐந்து என்ற எண்ணிக்கை அவர்களனைவரையும் உலுக்க அனைவரும் அவனை நோக்கினர். ஸ்வேதன் “தேரோட்டிச் சென்றவர் பாண்டவராகிய அர்ஜுனர். போருக்கு பீமனும் சென்றுள்ளார்” என்றான். “ஆம்! ஆம்! அதுவே மெய்யென்றிருக்கவேண்டும்!” என்று குரல்கள் ஒலித்தன. “வேறெவர்? வேறெவரால் இது இயலும்!” என்றார் ஒரு குடிமூத்தார். “அவர்கள் இங்கிருப்பதை அறிந்துதான் அஸ்தினபுரியின் படைகள் வந்திருக்கக்கூடும்.”

மேலும் ஒரு நாள் கழித்து அனைத்தும் தெளிவடைந்தன. விராடபுரியின் இளவரசியை அவள் தன்னேற்புக் களத்திலிருந்து அர்ஜுனன் கொண்டுசென்று தன் மைந்தனுக்கு துணைவியாக்கினார் என்று தெரியவந்தது. விராடபுரியில் அவ்வாண்டு நிகழ்ந்த உண்டாட்டுக்கும் செண்டு விளையாட்டுக்கும் குலாடபுரிக்கு முறையான அழைப்பு வந்தது. ஆனால் குடித்தலைவர்கள் அவர்கள் செல்வதை ஒப்பவில்லை. “இவ்வழைப்பை விடுக்கவேண்டியவர் உத்தரர் அல்ல. நம் அரசியை பதினாறாண்டுகாலம் துறந்த விராடரே. உங்களிருவரையும் மைந்தர்களாக அவர் ஏற்று அங்கே உத்தரருக்கு நிகரான அரியணையில் அமர்த்துவாரென்றால் செல்லலாம். அச்சொல் பெறாமல் நாம் அங்கு செல்லக்கூடாது” என்றனர்.

அவ்விழவு முடிந்ததுமே அஸ்தினபுரியின் முடிப்பூசல் செய்திகள் வரத்தொடங்கின. பெரும்போரொன்று எழவிருக்கிறது என்று ஒவ்வொரு நாளும் ஒற்றர்கள் செய்தி கொணர்ந்தனர். மெல்ல மெல்ல குடிமூத்தவர்களும் புறவுலகை அறியலாயினர். இளைய யாதவரின் முதற்தூது முறிந்து அவர் அஸ்தினபுரியிலிருந்து கிளம்பிய அன்று வந்த ஒற்றன் அவைநின்று நிகழ்வதை விளக்கினான். அவன் குலாடனல்ல, நூல்நவின்ற சூதன். ஆகவே அவன் குரல் வேறெங்கிருந்தோ தெய்வமொன்றின் அறைகூவலென ஒலித்தது. அதை அவையில் கேட்டபோது மூத்தவர்கள் திகைத்து செயலிழந்து அமைந்திருந்தனர்.

“பாரதவர்ஷத்தின் வரலாற்றிலேயே மாபெரும் போர் நிகழவிருக்கிறது. ஒரு தரப்பில் தொல்குடி ஷத்ரியர்கள் அணிநிரக்கிறார்கள். மறுதரப்பில் இளைய யாதவருடன் பாண்டவர்களும் பாஞ்சாலர்களும் வளர்ந்தெழும் புதிய அரசுகள் அனைத்தும் நிரைகொள்கின்றன. பாரதவர்ஷமே இரண்டெனப் பிரிந்து களம் நிற்கிறது. எவர் வெல்வார் என்பதை ஒட்டியே எத்திசையில் இப்பெருநிலம் வளருமென்று கூற இயலும். கௌரவர் வென்றால் மீண்டும் இங்கு தொல்வேதமே திகழும். பாண்டவர்கள் வென்றால் வேத முடிபு ஓங்கும். இங்குள்ள அனைத்துப் புறவேதங்களையும் தன்னுள் ஏற்று பெருநெறியொன்று எழுந்து வரும். தெய்வங்கள் விண்ணிலிருந்து ஆர்வத்துடன் குனிந்து நோக்கும் தருணம் இது என்கின்றனர் புலவர்.”

“பாரதவர்ஷத்தின் அனைத்து அவைகளிலும் முனிவரும் அந்தணரும் புலவரும் அவைசூழ்வோரும் சான்றோரும் இதைப்பற்றி அன்றி பிறிதெதையும் பேசவில்லை. இன்று ஒவ்வொருவர் முன்பிலும் இருக்கும் வினா நீங்கள் எத்தரப்பு என்பதே” என்றான் ஒற்றுச்சூதன். ஸ்வேதன் “இப்போரில் நாம் கலந்து கொள்ளவேண்டும்” என்றான். குடிமூத்தார் “எவர் பொருட்டு?” என்றார். “பிறிதொரு எண்ணமே இல்லை, பாண்டவர் பொருட்டு. அவர்களே எங்கள் உள்ளத்தின் ஆசிரியர்கள். அவர்கள் பொருட்டு களம் நிற்பதில் நாங்கள் பிறவியின் நிறைவை காண்கிறோம்” என்றான் சங்கன்.

“ஆனால் நாம் இன்னும் அழைக்கப்படவே இல்லை. இருசாராரின் ஓலைகளும் இங்குள்ள அனைத்து அரசுகளுக்கும் முன்னரே அனுப்பப்பட்டுள்ளன. பாண்டவர்கள் நிஷாதர்களையும் கிராதர்களையும் அசுரர்களையும் அரக்கர்களையும்கூட தூதனுப்பி தங்களுடன் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு இன்னும் எச்செய்தியும் வரவில்லை. அழைக்காமல் போருக்குச் சென்று சேர்வதென்பது இழிவு மட்டுமல்ல, அரசுசூழ்தலில் பெரும்பிழையும் கூட. போருக்குப் பின் என்ன நிகழுமென்பதற்கு ஒரு சொல்லேனும் உறுதி நமக்களிக்கப்படவேண்டும். நம் வீரர்கள் அங்கு சென்று மறைவதற்கும் குருதி சிந்துவதற்கும் ஈடென நாம் பெறுவதென்ன என்பது இங்கிருந்து கிளம்புவதற்கு முன்னரே தெளிவுபடுத்தப்படவேண்டும்” என்றனர் குடித்தலைவர்கள்.

ஸ்வேதன் “இப்போரில் நாம் கலந்துகொள்ளாவிட்டால் தனிமைப்படுவோம். போரில் கலந்து கொண்டு வென்றவர்கள் தரப்பில் நிற்போமெனில் மேலும் வெற்றியும் புகழும் செல்வமும் நம்மை சேரும். தனித்து நிற்போமெனில் எவர் வென்றாலும் அவர்களின் எதிரியாகவே நாம் கருதப்படுவோம். நம்மை முற்றழிப்பார்கள். போரில் கலந்து கொள்ளுகையில் நாம் வெல்வதற்கான வாய்ப்புகள் பாதியாவது உள்ளன” என்றான். சங்கன் உரத்த குரலில் “எங்கு பெருங்காற்றுகளின் மைந்தன் படைக்கலமேந்தி நின்றிருக்கிறானோ அத்தரப்பே வெல்லும். ஐயமேயில்லை. இப்புவியை மாருதியின் மைந்தர் வெல்வார். களத்தில் அவரை எதிர்கொண்டு ஒருநாழிகைப்பொழுது எதிர்நிற்பதற்கு தகுதி கொண்ட எவருமில்லை. நாம் அவருடன் நிற்போம். நம் குடிகள் வாழ்வார்கள்” என்றான்.

ஆனால் குடிப்பேரவை அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. “நம் அரசியை மீண்டும் மணிமுடி சூடி அவையமரும்படி ஒப்புதல் அளித்து விராடர் ஒரு ஓலையாயினும் அனுப்பும் வரைக்கும் அவர் தரப்பில் நாம் நிற்பது எவ்வகையிலும் உகந்ததல்ல” என்று குடித்தலைவர் இறுதியாக சொன்னார். அவைநீங்கும்போது சங்கன் “ஒவ்வொரு முறையும் தவறிப்போகிறது, மூத்தவரே. இனியொரு தருணம் இல்லை. நான் அவருடன் சென்றாகவேண்டும். அவருக்கென படைக்கலம் ஏந்தியாகவேண்டும்” என்றான். ஸ்வேதன் “நாம் செல்வோம். ஆனால் அது முறைப்படியே ஆகட்டும். காத்திருப்போம்” என்றான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 50

புஷ்பகோஷ்டத்தின் மூன்றாவது மாடத்தில் சற்று வெளியே நீட்டியிருந்த சிறிய மரஉப்பரிகையில் பானுமதி அசலையுடன் அமர்ந்திருந்தாள். வெளியே இருந்து நோக்குபவர்களுக்கு உள்ளிருப்பவர்கள் தெரியாதபடி மென்மரத்தாலான மான்கண் சாளரம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு நெடுநேரம் அமர்ந்திருப்பது கடினம். பீடங்கள் குறுகலானவை. மூன்று பேர் இயல்பாக அமர்ந்திருக்கும் அளவுக்கே அதன் அமைப்பிருந்தது. ஆனால் அங்கிருந்து கீழிருக்கும் முற்றத்தையும் அப்பால் இருக்கும் கோட்டைச்சுவர் வரை விரிந்த காவலர்வெளிகளையும் அரண்மனையின் இடைநாழியையும் தெளிவாக பார்க்க முடிந்தது. முன்பு அரசியர் வந்தமர்ந்து கீழே நிகழும் காவலர்படைகளின் அணிவகுப்புகளை பார்க்கும் பொருட்டு அது அமைக்கப்பட்டது. பின்னர் அஸ்தினபுரியின் படைகளின் எண்ணிக்கை பெருகுந்தோறும் அணிவகுப்பு நிகழுமிடம் அரண்மனையிலிருந்து அகன்று சென்று கோட்டையின் கிழக்குப் பெருமுற்றத்தில் நிகழ்வதாக மாறியது. போர்க்களியாட்டுகளும்கூட செண்டுவெளிக்கு சென்றுவிட்ட பின்னர் அந்த உப்பரிகை பெரும்பாலும் எவராலும் பயன்படுத்தப்படாததாக இருந்தது.

போர் அணுகும்தோறும் ஒவ்வொருநாளும் ஏதேனும் சிறு நிகழ்ச்சிகள் அரண்மனையில் நிகழத்தொடங்கிய பின்னர் பானுமதி அந்த உப்பரிகையை தூய்மை செய்து செப்பனிடும்படி ஆணையிட்டிருந்தாள். அங்கிருந்த பீடத்தின் பலகைகள் சற்றே விரிசலிட்டு பழையதாகிவிட்டிருந்தன. மான்கண் சாளரங்களில் தூசியும் ஒட்டடையும் படிந்திருந்தன. ஒரு மாதம் முன்பு அவள் அவ்வழியே பழைய ஏடுகள் இருந்த மாடத்து அறை ஒன்றிற்குச் செல்லும்போது கீழே மங்கல இசை கேட்க அங்கு சென்று கீழே நோக்கினாள். மாளவஅரசர் இந்திரசேனரை துச்சாதனனும் கௌரவ இளையோர் பன்னிருவரும் எதிர்கொண்டு முறைமைகள் முடித்து திருதராஷ்டிரரை பார்க்கும்பொருட்டு அரண்மனைக்குள் அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர். முதல் முறையாக அனைத்திலிருந்தும் விலகி நோக்கிக்கொண்டிருப்பதான உணர்வை அவள் அடைந்தாள்.

மாளவர் தனது பதினெட்டு அமைச்சர்களுடனும் இரண்டு மைந்தர்களுடனும் படைத்தலைவர்கள் பதினெண்மருடனும் வந்திருந்தார். மூன்று நிரைகளாக மங்கலச் சேடியரும் இசைச்சூதரும் வர அவர்களுக்கு முன்னால் மாளவத்தின் கொடியேந்தி படைவீரன் வந்தான். அவர்களை வரவேற்கும் பொருட்டு புஷ்பகோஷ்டத்தின் இருபுறமும் அஸ்தினபுரியின் படைத்தலைவர்களும் காவலர்தலைவர்களும் முழுக் கவச உடையுடன் அணிவகுத்திருந்தனர். அஸ்தினபுரியின் கொடியேந்திய வீரன் சென்று அதை மும்முறை சுழற்றி வணங்கினான். அவனைத் தொடர்ந்து சென்ற மங்கல இசைச்சூதரும் அணிச்சேடியரும் இருபக்கங்களிலாக விலக துச்சாதனன் கைகூப்பியபடி முன்னால் சென்று மாளவ அரசரின் கைகளைப்பற்றி வணங்கி முகமனுரைத்தான். துர்மதனும் துச்சலனும் துச்சகனும் சுபாகுவும் அவர் அருகே சென்று முகமனுரைத்தனர். அந்நிகழ்வின் பயிற்றுவிக்கப்பட்ட அசைவுகளும் தேர்ந்த முக நடிப்புகளும் படைவீரர்களின் ஒத்திசைவுகொண்ட நடையும் ஒரு பொருத்தமற்ற கூத்தென அங்கிருந்தபோது தோன்றியது. அந்த உணர்வை அவள் விரும்பினாள். அவள் சென்று பங்கெடுக்கத் தேவையற்ற நிகழ்வுகளை அங்கு சென்று அமர்ந்திருந்து பார்ப்பது அவள் வழக்கமாயிற்று.

அசலை ஓரிருமுறை அவளுடன் வந்து அமர்ந்திருந்தாள். அவளுக்கு நெடுநேரம் மான்கண் சாளரத்திலிருந்து கீழே பார்க்க இயலவில்லை. “ஒரு கண்ணினூடாக நோக்குகையில் தெரிவது ஒரு பகுதி. பிறிதொரு கண்ணில் பிறிதொரு பகுதி. ஒவ்வொன்றும் தனித்தனியாக எனக்கு தெரிகிறது. என்னால் ஒன்றென தொகுத்துக்கொள்ள முடியவில்லை, அக்கையே” என்று அவள் சொன்னாள். தாரை ஒருமுறைதான் அங்கு வந்தாள். மான்கண் சாளரத்தினூடாக நோக்கியபின் “என்ன இது? வௌவால்களைப்போல அனைவரும் தலைகீழாக தொங்கிக்கிடக்கிறார்கள். என்னால் இதைப் பார்த்து அமர்ந்திருக்க இயலவில்லை. சலிப்பாக இருக்கிறது” என்றாள். “சலிப்பா பொறுமையின்மையா?” என்று அவள் கேட்க “இரண்டும்தான். மானுடர் இவ்வாறு தலைகீழாக தொங்கிக்கிடப்பதை பார்க்கையில் அதில் என்ன மகிழும்படி இருக்கிறது?” என்றாள். பானுமதி வேண்டுமென்றே “ஏன் வௌவால்களை பார்க்கும்போது மகிழ்ச்சி வரவில்லையா?” என்று கேட்டாள். “வௌவால்களையா? அவற்றின் முகத்தை அருகிலிருந்து பார்க்கையில் ஒரு திடுக்கிடல் ஏற்படுகிறது. சிறிய நாய்க்குட்டிகள்போல தோன்றுகிறது” என்று அவள் சொன்னாள். “அவற்றுக்கு கீழே புவியில் நடப்பது தெரியாது என்று தோன்றவில்லையா? அவற்றின் சிறு மணிக்கண்களில் ஒரு திகைப்பு எப்போதும் உள்ளதே?” என்று பானுமதி கேட்டாள்.  “எனக்கு தோன்றவில்லை. நீங்கள் பேசும் இத்தகைய அணிச்சொற்கள் எனக்கு புரிவதுமில்லை” என்று தாரை சொன்னாள்.

கீழே கொம்பொலி எழுந்தது. அஸ்தினபுரியின் இரண்டு வேலேந்திய படைப்பிரிவுகள் முற்றத்தின் இரு எல்லைகளிலிருந்து சீரான ஒத்திசைவுகொண்ட நடையுடன் நீண்டு வந்து அம்முற்றத்தை வளைத்து வேலி போலாயின. அவர்கள் அனைவரும் இரும்புக்கவச உடையணிந்து புலரியின் பந்த ஒளியில் செவ்வலைகளாக நெளிந்துகொண்டிருந்தனர்.  கையில் சிறுகொம்பு ஏந்திய படைநடத்துனர்கள் அதை முழக்கி ஆணைகளை உரக்க கூவினர். அதற்கேற்ப படைவீரர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் விலகி நான்கு அணிகளாகப் பிரிந்து நான்கடுக்குச் சூழ்கையாக மாறினர். முற்றத்தின் நடுவே பெரிய மூங்கில் கம்பத்தில் அஸ்தினபுரியின் அமுதகலக் கொடி பறந்தது. அதன் படபடப்பின் ஓசை கேட்கும் அளவுக்கு சாளரத்திற்கு இணையான உயரத்தில் இருந்தது. அக்கொடிக்குக் கீழே அவர்கள் அனைவரும் செய்து கொண்டிருந்த அனைத்தும் அந்தக் கொடியை மேலே பறக்கவிடுவதற்காகவே என்று அவள் எண்ணிக்கொண்டாள். அல்லது ஒற்றைச் சிறகுள்ள அறியாத பறவை ஒன்றுபோல அது அவர்களை அந்த முற்றத்துடன் பெயர்த்தெடுத்துக்கொள்ள முயல்கிறது.

கீழே முழவுகள் ஒலிக்க அணிஏவலர் வண்ணத் தலைப்பாகைகளும் கச்சைகளும் அணிந்து அரண்மனைக்குள் இருந்து மூன்று நிரைகளாக வந்து முற்றத்தை நிரப்பினர். தொடர்ந்து மங்கல இசைச்சூதர்கள் வந்து முற்றத்தின் மேற்குப் பகுதியில் அரைவட்ட வடிவமாக அணி கொண்டனர். முழுதணிக்கோலத்தில் சேடியர் தாலங்களுடன் வந்து கிழக்குத் திசையில் அரைவட்டமாக நிரைவகுத்தனர். மீண்டுமொரு முறை முரசு ஒலித்து அமைந்தது. கனகர் படிகளில் இறங்கி பதறும் உடலோடு முற்றத்தை அடைந்து அங்கு நின்ற அனைவரிடமும் ஆளுக்கொரு ஆணையை பிறப்பித்தார். மீண்டும் பதறியபடி அரண்மனைக்குள் ஓடினார். அரண்மனைக்குள்ளிருந்து மனோதரர் விரைந்து வெளியே வந்து மேலும் ஆணைகளை பிறப்பித்தார். அவர் மீண்டும் அரண்மனைக்குள் செல்லும்போது வெளியே வந்த கனகர் மனோதரரிடம் கைகளை அசைத்து சினமோ பதற்றமோ கொண்டவர்போல ஏதோ சொன்னார். மனோதரர் இறங்கி வெளியே ஓடி முற்றத்தைக் கடந்து கோட்டைமுகப்பிலிருந்த காவல்மாடத்தை நோக்கி சென்றார். கனகர் மீண்டும் அரண்மனைக்குள் செல்ல அங்கு நின்றிருந்த படைவீரர்கள் அவர்களின் அசைவுகளை தலையசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

உள்ளிருந்து நிமித்திகன் ஒருவன் வெளியே வந்து மங்கல இசைச்சூதரையும் அணிச்சேடியரையும் பார்த்தான். அவனும் கனகரும் படிக்கட்டில் நின்றே பேசிக்கொண்டிருந்தனர். அசலை அப்பால் முதுசேடி வருவதைக்கண்டு “அவள் வரவில்லை” என்று பானுமதியிடம் சொன்னாள். பானுமதி திரும்பிப்பார்த்தாள். சேடி பானுமதியின் அருகே வந்து “மச்ச நாட்டரசி நோயுற்றிருக்கிறார், எழ முடியவில்லை என்று சொன்னார்” என்றாள். பானுமதி ஒன்றும் சொல்லாமல் தலையசைத்தாள். அசலை “நீ பார்த்தாயா?” என்றாள். சேடியின் விழிகள் சற்றே மாறுபட “இல்லை. அவர்களின் அணுக்கச் சேடி வந்து என்னிடம் சொன்னாள். அதற்கு அப்பால் நான் எதுவும் கேட்கும் வழக்கமில்லை” என்றாள். அசலை அவள் செல்லலாம் என்று கையசைத்தாள்.

கீழே கொம்போசை கேட்டது. நிமித்திகர் குழுவொன்று வெளியே வந்தது. தலைமை நிமித்திகன் கையில் திருமுகச் சுருளுடன் முன்னால் செல்ல அவனைத் தொடர்ந்து பிறர் நடந்து முற்றத்தில் சென்று நின்றனர். தலைமை நிமித்திகன் வானை நோக்கி விண்மீன்களை கணிக்கத் தொடங்கினான். சூழ்ந்திருந்த நூற்றுக்கணக்கான பந்தங்கள் காற்றே அற்ற முதற்புலரி இருளுக்குள் மெல்லிய அசைவுகளுடன் நின்றிருந்தன. முதற்பறவை எங்கோ குரலெழுப்பியது. கரிச்சானின் குரல் செவியை கீறுவது. அந்தப் பறவை முழவில் கைஓட்டியதுபோல கார்வையுடன் கூவியது. அரண்மனையின் கூரைவிளிம்புகளில் அமர்ந்திருந்த புறாக்களின் குறுகலோசை கேட்டுக்கொண்டிருந்தது. உப்பரிகையின் அடிப்பகுதியிலேயே மரக்கூரை விளிம்பு முழுக்க சங்குகளை அடுக்கி வைத்ததுபோல் அவை உடல் குறுகி அமர்ந்திருந்தன.

முதல்நாள் அங்கு வந்திருந்தபோது அவை எழுப்பிய ஒலியை அவளால் அடையாளம் காணமுடியவில்லை. நூற்றுக்கணக்கான புறாக்களின் குறுகலோசைகள் இணைந்து சிம்மக்குரல் போலவே மாறிவிட்டிருந்தது. அவள் கையிலிருந்த சிறுகலமொன்று மரத்தரையில் விழுந்தபோது எழுந்த ஓசையில் அவையனைத்தும் ஒரே கணத்தில் சிறகடித்து காற்றில் எழுந்தபோதுதான் அது புறாக்களின் ஒலி என்று அவளுக்கு தெரிந்தது. சருகுப்புயலென புறாக்கள் காற்றில் கலைந்து சுழன்று நீரில் இழுபடும் மெல்லிய ஆடைபோல வளைந்து மீண்டும் வந்து கூரை விளிம்புகளில் அமைந்தன. புறாக்களின் ஒலி முன்பு அவளுக்கு அங்கிருந்த அமைதியை குலைப்பதாகத் தோன்றியது. ஆனால் அவற்றை அங்கிருந்து பெயர்க்க முடியாதென்று அவள் அறிந்திருந்தாள். ஹஸ்தியால் அவ்வரண்மனை கட்டப்பட்டபோது அங்கு குடியேறிய புறாக்களின் வழித்தோன்றல்கள். ஒருவகையில் அங்கு குடியிருக்கும் எந்த அரசரைவிடவும் அவ்வரண்மனைமேல் உரிமை கொண்டவை. பின்னர் அவள் அப்புறாக்களின் ஓசையை அங்கிருந்த அமைதியின் பிரதியாக மாற்ற உளம்பயின்றாள். கீழே தெரியும் சிறு சாளரத் துளையினூடாக அரிதாக புறாக்களின் உருவங்கள் தெரியும். சிறிய சிவந்த மணிகளைப் போன்ற விழிகள். அவை நோக்கு கொண்டனவா என்றே ஐயம் எழும். கீழிருக்கும் எதையும் அவை அறியவில்லை என்பதுபோல் தோன்றும். அங்கு தங்களுக்கான உணவுக்காக மட்டுமே சென்று மீள்கின்றன. அந்த மாடத்தில் அமர்ந்திருக்கையில் தன்னையும் அப்புறாக்களில் ஒன்றாக அவள் உணரத்தொடங்கினாள்.

பானுமதி ஓய்வாக உணர்ந்தாள். அன்று காலையுடன் அனைத்துப் பணிகளும் முடிவடைந்தன என்றும் வெறுமனே ஒரு மரப்பீடம்போல அரண்மனையில் இருப்பதைத்தான் இனி செய்துகொண்டிருக்கப் போகிறோம் என்றும் தோன்றியது. உடல் பீடத்துடன் படிந்து தசைகள் தொய்ந்து மூச்சு துயிலுக்கிணையாக சீரடைந்திருந்தது. உடல் ஓய்வுகொண்டதனால் உள்ளமும் விசையை இழந்து மெல்ல ஓடிக்கொண்டிருந்தது. உள்ளமும் ஆறுகளை போலத்தான். விசை குறைந்ததுமே பக்கவாட்டில் கிளைவிட்டு பிரிந்து அகலத் தொடங்கிவிடுகிறது. அசலையின் கண்களுக்குக் கீழே கருவளையங்கள் விழுந்திருந்தன. கீழிமைகள் மடிப்புகளாக தெரிந்தன. சிலநாட்களிலேயே அவள் பல்லாண்டுகளின் முதுமை கொண்டிருந்தாள். தன் முகமும் அவ்வண்ணம்தான் இருக்கும் போலும்.

கீழே மீண்டும் கொம்போசை எழுந்தது. அசலை மான்கண் துளையினூடாக பார்த்து “இளவரசர்கள்!” என்றாள். பானுமதி கீழே நோக்கி “ஆம்” என்றாள். லட்சுமணனின் தலைமையில் அரண்மனைக்குள்ளிருந்து உபகௌரவர்கள் வெளிவரத் தொடங்கினர். நான்கு இணைநிரைகளாக அவர்கள் சீர்நடையிட்டு வந்து முற்றத்தில் இறங்கி பதினெட்டு அடுக்குகளாக மாறி வெளிநிறைந்து நின்றனர். அசலை தன் மைந்தனை அடையாளம் கண்டாள். “துருமசேனன்” என்றாள். பானுமதியிடம் “அவர்கள் இதை எப்படி கற்றுக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. தந்தையின் அதே அசைவுகளை கொண்டிருக்கிறான்” என்றாள். பானுமதி “நன்று! தந்தையைப்போலன்றி தன் வாழ்க்கையை தனியாக அமைத்துக்கொண்டிருக்கிறான்” என்றாள். அசலை புன்னகைத்தாள்.

உபகௌரவர்கள் உள்ளிருந்து உடல்பெருக்காக ஒழுகி படிகளில் இறங்கி வந்து அம்முற்றத்தை நிரப்பிக்கொண்டே இருந்தனர். அனைவரும் இரும்புக்குறடுகளும் கைகளிலும் தொடைகளிலும் குழல்கவசங்களும் முதுகிலும் நெஞ்சிலும் இரும்பாலான வலைக்கவசங்களும், வெள்ளித்தகடிட்ட இரும்புத் தோளிலைகளும் அணிந்திருந்தனர். தலைக்கவசங்கள் அவர்களின் முதுகுக்குப் பின்னால் தொங்கியவைபோல கிடக்க தோல்வாரால் இழுத்துச் சுருட்டி கொண்டையென கட்டப்பட்ட தலைமயிர் உச்சந்தலையில் குவையாக அமைந்திருந்தது. அவற்றில் கொற்றவை ஆலயத்து செம்மலர்களை சூடியிருந்தனர். நெற்றிகளில் செங்குழம்புத் தீற்றல். அனைத்து முகங்களும் ஒன்றென்று தோன்றின. ஒரே உணர்வுகள், ஒரே விழியசைவுகள்தான் அவற்றில் இருக்குமென்று அவள் எண்ணினாள். அவர்கள் பெருந்திரளென ஆனதனாலேயே ஒருவரோடொருவர் மாறுபாடின்றி ஆகிவிட்டிருந்தனர். நூற்றுவர் என்பதனாலேயே கௌரவர்கள் ஒற்றைத்திரளென ஆனதுபோல. பாண்டவர்போல் ஐவரென்று இருந்தால் ஐந்து தனிஇயல்புகள் கொண்டவர்களாக இருந்திருக்கக் கூடும்.

அரண்மனைக்குள் கொம்போசையும் வாழ்த்துக்களும் எழுந்தன. அவ்வோசை அரண்மனையின் வாயில்கள் மற்றும் சாளரங்கள் வழியாக முற்றத்தில் பெருகி அங்கு சுழன்று மேலெழுந்தமையால் உப்பரிகையில் அமர்ந்து கேட்டபோது நேர் எதிர்த்திசையில் சாலையிலிருந்து பெருமுற்றம் நோக்கி திறக்கும் கோட்டை வாயிலின் வழியாக எழுவதாகத் தோன்றியது. அசலை “அங்கிருந்தா?” என்று இயல்பாக கேட்டபடி மான்கண் சாளரத்தினூடாக கீழே பார்த்தாள். அரண்மனைக்குள்ளிருந்து அஸ்தினபுரியின் அமுதகலக் கொடியுடன் முழுக்கவச உடையணிந்த வீரன் சீர்நடையிட்டு வெளியே இறங்கி முற்றத்தில் நடந்து கொடியை தரையில் ஊன்றி முழந்தாளிட்டு பிடித்துக்கொண்டான். தொடர்ந்து துரியோதனனின் அரவு பொறித்த போர்க்கொடியுடன் இன்னொரு வீரன் வந்தான். மங்கலத் தாலங்கள் ஏந்திய சேடியர் இரண்டு நிரைகளாக முன்னால் வந்தனர். தொடர்ந்து துச்சாதனனும் துர்மதனும் இருபுறமும் தொடர துரியோதனன் கைகூப்பியபடி வந்து படிகளிலிறங்கி முற்றத்தின் மையத்தை நோக்கி சென்றான்.

துரியோதனன் பொற்தகடு வேயப்பட்ட இரும்பு மார்புக்கவசமும் தொடைக்காப்பும் தோளிலைகளும் அணிந்திருந்தான். அவனுடைய தலைக்கவசத்துடன் ஒரு வீரன் அணுக்கமாக நடந்து வந்தான். துச்சாதனனும் துர்மதனும் இரும்புக்கவசங்கள் அணிந்திருந்தாலும் அவர்களின் தலைக்கவசங்கள் மட்டும் பொன்தகடு வேயப்பட்டவையாக இருந்தன. தொடர்ந்து வந்த துச்சகனும் துச்சலனும் பீமவேகனும் சுபாகுவும் பந்த ஒளியில் சுடர்கொண்ட இரும்புக்கவசங்கள் அணிந்திருந்தனர். செந்நிற ஒளியில் இரும்புக்கவசங்களுக்கும் பொன்னுக்கும் வேறுபாடு தெரியவில்லை. துரியோதனன் கைகூப்பி நிகர்நிலையில் நின்றான். அவர்கள் உடல்களில் கவசங்களின் தழல்கள் மாற்றொளி கொண்டு அப்பகுதியெங்கும் காட்டெரி பெருகியதுபோல தெரிந்தது. மேலிருந்து பார்க்கையில் ஒரு கனலடுப்பை குனிந்து பார்க்கும் உணர்வேற்பட்டது.

படைத்தலைவர்களும் அமைச்சர்களும் முறையாக இருபுறமும் நிரைகொண்டனர். தொலைவானில் மெல்லிய ஒளி தெரிவதுபோல் ஒரு விழிமயக்கு ஏற்பட்டது. மிக ஆழத்திலெங்கோ கதிரவன் தன்னை உணரும் தருணம் அது என்பார்கள். வானில் ஒளி நனைந்து ஊறிப் பரவி முகில்களை துலங்கச்செய்யும். முதல்பறவை விழிகளில் அந்த ஒளி பட்டதும் அது எழுந்து சிறகடித்து செங்குத்தாக மேலே எழுந்து “எங்கோ வாழ்!” என்று வாழ்த்துக் குரல் எழுப்பும். ஒருநாள் ஒருகாட்டில் ஒருபறவை அதற்கென தேர்வு செய்யப்படுகிறது என்றன காவியங்கள். அப்பறவை அந்நாளில் முழுமை அடைகிறது. பின்பு அத்தருணம் அதற்கு அளிக்கப்படுவதில்லை.

பானுமதி கிழக்கு வான்விளிம்பையே நோக்கிக்கொண்டிருந்தாள். புலர்வதற்கு இன்னும் நெடுநேரம் இருக்கிறது, முதற்பறவைக் குரலையே சற்று முன்னர்தான் கேட்டோம் என்று அறிந்திருந்தாள். ஆயினும் அப்போது கதிர் எழ வேண்டுமென்று விரும்பினாள். சிறு குழவிபோல் விடாப்பிடியாக அவள் உள்ளம் அந்த விழைவை ஏந்தி விண்ணுடன் மன்றாடியது. ஒரு சிறு கதிர் எழுந்து ஒரு முகில்துளி ஒளிகொண்டால் போதும். கீழ்வானின் கோடி சற்று மின்னத்தொடங்கினாலே போதும். கீழே இருளில் அமைந்திருக்கும் மாளிகைச் சுவர்கள் மிளிர்ந்து தெளிந்தெழுந்தாலே போதும். அனைத்தும் சீராகிவிடுமென்ற ஓர் உறுதிப்பாட்டை அதிலிருந்து உருவாக்கிக்கொள்ள முடியும். ஒரு சிறு நம்பிக்கையை பற்றிக்கொள்ள முடியும்.

அவள் தன் வலக்கையை நெஞ்சோடு சேர்த்து விழிமூடி தெய்வங்களை வேண்டிக்கொண்டாள். “கதிரவனே! புவி முழுதாள்பவனே! ஒளிர்பவனே! அனைத்தையும் ஒளிரச் செய்பவனே! இத்தருணத்தில் உன் அருளில் ஒரு சிறுதிவலை என் மீது தெறிக்கட்டும். உன் நோக்கின் ஒருகணம் எனக்கு அருளப்படட்டும். இத்தருணம் எழில் கொள்ளட்டும். இதிலிருந்து நான் மீண்டெழுந்து இனியொரு வாழ்வை கடக்க வேண்டும். நான் செல்லும் பாதைகள் அனைத்திலும் ஒரு கூழாங்கல்லேனும் விழியொளி கொண்டிருக்க வேண்டும். இறையுருவே, அலகிலா வெளியின் அழகிய மைந்தனே, எனக்கருள்க! இத்தருணத்தில் இங்கெழுந்தருள்க!”

அவள் விழி திறந்தபோது அவ்வேண்டுதலின் விசையாலேயே உள்ளம் அதுவரை கொண்டிருந்த பதற்றங்களனைத்தையும் இழந்து அமைதி பெற்றிருந்தது. அது அவள் முகத்தில் தெரிந்தது. பெருமூச்சுடன் கீழே நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் விழிமூடி வேண்டியதையும் முகம் அமைதி கொள்ள இயல்படைந்து அமைந்ததையும் அசலை நோக்கினாள். ஆனால் எதுவும் கேட்கக்கூடாதென்று அவள் அறிந்திருந்தாள். கீழே மீண்டும் மங்கல ஓசையும் வாழ்த்தொலிகளும் எழுந்தன. அசலை “பேரரசர் எழுந்தருள்கிறார்” என்றாள். அரண்மனைக்குள்ளிருந்து அமுதகலக்கொடியுடன் முதல்வீரன் வெளிப்பட்டான். திருதராஷ்டிரரின் சர்ப்பக்கொடியுடன் பிறிதொருவன் வெளியே வந்து அமுதகலக்கொடிக்கு அருகே அதை ஊன்றி முழந்தாளிட்டான். மங்கலச்சேடியர் மூன்று நிரைகளாக வெளியே வந்து தாலம் உழிந்து விலகினர். இசைச்சூதர் ஐம்மங்கலக் கலங்களை முழக்கியபடி மறுபக்கமாக வளைந்தகன்றனர்.

சஞ்சயன் தோளில் கைவைத்தபடி திருதராஷ்டிரர் சிற்றடி எடுத்துவைத்து வெளியே வந்தார். நிமித்திகன் கைகளை ஓங்கி தாழ்த்த முற்றத்தில் நின்றிருந்த அனைத்து வீரர்களும் பெருங்குரலில் வாழ்த்தொலி எழுப்பினர். “யயாதியின் கொடிவழிவந்தவர் வாழ்க! குருகுலத்து மூத்தோர் வாழ்க! விசித்திரவீரியரின் மைந்தர் வாழ்க! புவியாளும் பேரரசர் திருதராஷ்டிரர் வாழ்க! அஸ்தினபுரியாளும் அமுதகலக்கொடி வெல்க! வெல்க அறம்! வெல்க குலம்! வெல்க குடி! வெற்றிவேல்! வீரவேல்!” அலையலையாக எழுந்தெழுந்து அடங்கிக்கொண்டிருந்தது வாழ்த்தொலிப்பெருக்கு. அதனுடன் இணைந்து முழங்கியது மங்கல இசை. அவ்வாழ்த்தொலிகளுடன் இணைந்தபோது அச்சொற்களையே அதுவும் சொல்வதாகத் தோன்றியது.

திருதராஷ்டிரருக்குப் பின்னால் நடந்து வந்த சங்குலன் அவர் அமரவிருக்கும் பீடத்தை ஒரு கையால் தொட்டு சற்றே அசைத்தான். அவன் உறுதி செய்துகொண்ட பின்னர் திருதராஷ்டிரர் கைகூப்பியபடி அப்பீடத்தில் அமர்ந்தார். அவருக்கு வலப்பக்கம் சஞ்சயன் நின்றான். இடப்பக்கம் சங்குலன் சற்று பின்னால் தள்ளி நின்றான். காவலர்கள் இருபக்கமும் அணிவகுத்தனர். இசையும் வாழ்த்தொலிகளும் உச்சம்கொண்டு பின்னர் நிமித்திகர்களின் கையசைவுக்கு ஏற்ப மெல்ல அடங்கி அமைதிகொண்டன. மரத்தாலான சிறிய அறிவிப்பு மேடையில் ஏறி தன் வெள்ளிக்கோலை இருபுறமும் மும்முறை சுழற்றித் தாழ்த்திய நிமித்திகன் ஓங்கிய குரலில் “வெற்றி நிறைக! குருகுலம் வெல்க! அமுதகலக்கொடி எழுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான். “வெல்லும் பொருட்டு எழுந்தவர்களுக்கு தெய்வங்கள் அருள்க! அஸ்தினபுரியின் அரசர், குருகுலத் தலைவர், ஹஸ்தியின் கொடிவழி வந்தவர் தார்த்தராஷ்டிரராகிய துரியோதனரின் கையில் விளங்கும் செங்கோல் வெல்க!” என்றான். அனைவரும் “ஆம், வெல்க! வாழ்க!” என்றனர்.

“தெய்வங்களால் அளிக்கப்பட்டதும் குலமுறைகளால் உறுதி செய்யப்பட்டதும் குடியறத்தால் நிறுத்தப்பட்டதுமாகிய அச்செங்கோலுக்கு எதிராக படைகொண்டு எழுந்திருக்கும் அரச வஞ்சகர்களாகிய பாண்டவர்களையும், அவர்களை துணைக்கொண்டுள்ள அரசர்களையும் போரில் களம்கண்டு முற்றழித்து மீளும் பொருட்டு இங்கிருந்து கிளம்பவிருக்கிறார் அரசர். தன் தந்தையும் அஸ்தினபுரியின் பேரரசரும் குடிமூத்தாருமாகிய திருதராஷ்டிரரின் வாழ்த்துக்களைப் பெற்று முதல் வெற்றிக்காலடியை வைக்கப்போகிறார். இத்தருணத்தை நிறைக்கட்டும் குலதெய்வங்கள்! இங்கு மூச்சென வந்தமையட்டும் மூதாதையர்! இத்தருணத்தில் மங்கலத்தைப் பெருக்கும் தேவர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் இங்கு சூழ்க! இது சூதர் சொல்லில் எக்காலமும் வாழும் தருணமென்றாகுக! கொடிவழிகள் இதை உளக்கிளர்ச்சியுடன் நினைவுகூர்க! என்றும் இவ்வரலாறு அழியா மலைகள் என நிலைகொள்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் நிமித்திகன்.

பின்னர் கனகர் அறிவிப்பு மேடையிலேறி “தொல்முறைப்படி இங்கு வாழ்த்தும் வணக்கமும் நிகழவிருக்கிறது. மூப்புமுறைப்படி அரசரும் இளவரசர்களும் உபகௌரவர்களும் வந்து தந்தையின் வாழ்த்து பெற்றுச் செல்வார்கள்” என்றார். அமைச்சர்கள் திருதராஷ்டிரரின் முன் வணங்கி அவர் ஆற்றவேண்டியவற்றை மெல்லிய குரலில் உரைத்தனர். வைதிகர் நூற்றுவர் கங்கை நீர்க்குடங்களுடன் அணிநிரந்தனர். குடிமூத்தார் பதினெண்மர் மறுபக்கம் நின்றனர். பெருந்தாலத்தில் கொற்றவை அன்னையின் குருதிச்சாந்து கொண்டு வைக்கப்பட்டது. திருதராஷ்டிரர் தன் பெரிய தலையை பக்கவாட்டில் திருப்பி வேறெங்கோ இருந்து ஆணையிடும் எதையோ நோக்குவதுபோல் அமர்ந்திருந்தார். அவரது இரு கைகளும் பீடத்தின் பிடியில் நிலையழிந்து நெருடிக்கொண்டிருந்தன. தன்னிலும் பெரிதான ஒன்றை விழுங்க முற்படும் இரு கரிய நாகங்கள்போல.

கனகர் சென்று துரியோதனனிடம் பணிந்துரைக்க அவன் தலையசைத்த பின் கைகளைக் கூப்பியபடி சீர்நடையிட்டு வந்து திருதராஷ்டிரரின் முன் கால்களை மடித்து அமர்ந்து தன் தலையை அவர் கால்களில் படுமாறு வைத்து வணங்கினான். அவர் அவனை “வெற்றியும் சிறப்பும் கொள்க!” என்று வாழ்த்தி அருகிலிருந்த தாலத்திலிருந்து செஞ்சாந்தெடுத்துத் தீற்றி அருள் அளித்தார். மீண்டுமொருமுறை தந்தையை வணங்கியபின் வேதியர் முன் நின்றான். அவர்கள் கங்கைநீர் தெளித்து வாழ்த்தினர். குடிமூத்தார் கோல்களால் அவன் தலையைத் தொட்டு தொல்காடுகளில் இருந்து அவர்களிடம் வந்த அறியா நுண்சொற்களை உரைத்து வாழ்த்தினர். மறுபக்கம் வழியாக மீண்டும் தன் இடத்திற்குச் சென்று அவன் நின்றான். தொடர்ந்து துச்சாதனனும் துர்மதனும் துச்சகனும் மூப்பு நிலைப்படி திருதராஷ்டிரரிடம் வந்து வணங்கி செஞ்சாந்துக்குறி பெற்று திரும்பிச்சென்றனர்.

நூற்றுவர் கௌரவரும் அங்கில்லையென்பதை பானுமதி எண்ணிக்கொண்டாள். “ஆம், குண்டாசி அங்கில்லை” என்று அவள் எண்ணத்தை அறிந்ததுபோல அசலை சொன்னாள். “அவர் நேற்று மாலையே தன் படைப்பிரிவுக்கு சென்றுவிட்டார். இங்கிருந்து எவரிடமும் விடைகொள்ளவில்லை.” பானுமதி அதை அறிந்திருந்தாள். விகர்ணன் திருதராஷ்டிரரை வணங்கி செஞ்சாந்து பெற்றுக்கொள்வதை பானுமதி பார்த்தாள். அசலை “நடுங்கிக்கொண்டிருக்கிறார். நேற்று முழுவதும் கள் மயக்கில் குண்டாசியின் அறையிலிருந்தார். அங்கிருந்து எழுப்பி நீராட்டி கொண்டுவந்திருக்கிறார்கள். நோயுற்றவர் போலிருக்கிறார்” என்றாள். பானுமதி தாரையைப் பற்றி வெறுமனே எண்ணினாள். அசலை “அவள் அவரை சந்திக்க மறுத்துவிட்டாள். நான்குமுறை சேடியர் சென்று அழைத்தார்கள்” என்றாள்.

கௌரவர்கள் வாழ்த்துகொண்டு முடிந்ததும் உபகௌரவர்கள் லட்சுமணன் தலைமையில் வந்து திருதராஷ்டிரரை வணங்கினர். பின்னர் தங்கள் தந்தையர் காலடிகளை வணங்கி வாழ்த்து பெற்றனர். அசலை அத்திரளில் தன் மைந்தனையே பார்த்துக்கொண்டிருந்தாள். துருமசேனன் துச்சாதனனை வணங்கி வாழ்த்துகொண்டு தன் இடத்தில் சென்று நின்றபோது இரு கைகளாலும் மான்கண் சாளரத்தைப் பற்றி தலையை அதன்மேல் சாய்த்து உடல் தளர்ந்ததுபோல் அமர்ந்திருந்தாள். அவன் வாழ்த்து பெற்று முடித்ததும் மெல்லிய தேம்புதல் போல “தெய்வங்களே…” என்றாள். பானுமதி திருதராஷ்டிரரின் வாய் அசைந்துகொண்டே இருப்பதை கண்டாள். அவர் எதையோ பேசுவது போலிருந்தது. ஆனால் பற்களைக் கடித்து அரைப்பதுதான் அது என கூர்ந்தபோது தெரிந்தது. அவரை அவள் தலையிலிருந்து கால்வரை உற்று நோக்கினாள். அவர் கால்கள் தரையை அரைத்துக்கொண்டிருந்தன. அவர் காலடியில் ஒரு பன்றிக்குழவி தன் அமையா உடலுடன் திமிறிக்கொண்டிருப்பதுபோல.

உபகௌரவர்களும் வாழ்த்து பெற்று முடிக்கையில் வானம் நன்கு ஒளிகொண்டு சாம்பல் நிறமாக மாறிவிட்டிருந்தது. கீழ்த்திசையில் பறவைகள் தோன்றி நீரில் என வானில் நீந்தின. மேலும் சில கணங்களில் மெல்லிய செவ்வொளித் தீற்று தெரிந்தது. துரியோதனன் தம்பியர் துணையுடன் மிதப்பதுபோல் நடந்தகல வைதிகர்கள் வேதமோதி கங்கை நீர் தெளித்து அரிமலரிட்டு அவனை வாழ்த்தினர். அதர்வ வேதத்தின் ஒலி குறுமுழவை நீட்டி இழுத்து ஒலிப்பதுபோல் கேட்டது. போருக்கு உரிய பாடல் அது என்று அவள் எண்ணினாள். இருபுறமும் ஒன்றை ஒன்று நோக்கி செவி முன் கோட்டி மூக்கு நீட்டி தலைதாழ்த்தி விழிகோத்து நின்று உறுமும் செந்நாய்க்கூட்டங்களின் ஓசை. துரியோதனன் கோட்டைவாயிலை நடந்து கடந்ததும் நிமித்திகர்கள் கைகாட்ட மங்கல இசைக்கலங்கள் இணைந்தொலித்தன. வாழ்த்தொலிகள் எழுந்து கலந்தன.

அரண்மனை முற்றத்திற்கு அப்பால் பெருஞ்சாலையில் படைத்தேர்கள் ஒருங்கி நின்றிருந்தன. துரியோதனனும் துச்சாதனனும் முதல் தேரிலேறிக்கொண்டதும் பொன் தகடு பூசப்பட்ட மகுடமுகடுடன் அத்தேர் குலுங்கியபடி உயிர்கொண்டு சாலையில் ஒழுகி அகன்றது. சிறு காதுக்குழையொன்று சுண்டி வீசப்பட்டதுபோல் அது செல்வதாக அவளுக்கு தோன்றியது. விழியிலிருந்து அது மறைந்ததும் அதைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக செல்லும் தேர்களை அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். இறுதி உபகௌரவரும் வெளியே சென்று மறைந்ததும் திருதராஷ்டிரர் ஒழிந்த பெருமுற்றத்தை பார்த்தபடி இரு கைகளையும் கூப்பி தலை நடுங்கி அசைய நின்றிருந்தார். பின்னர் கைகளை தன் தலைக்குமேல் தூக்கி வணங்கி அண்ணாந்து எதையோ கோரினார். அவர் சற்று தள்ளாடுவது போலிருந்தது. சங்குலன் ஓர் அடி முன்னால் வந்து அவருடைய இடத்தோளை பற்றிக்கொள்வதை பானுமதி பார்த்தாள். வலக்கையை சஞ்சயனின் தோளில் வைத்தபடி சிற்றடிகளுடன் மெல்ல நடந்து அவர் திரும்பி மாளிகைப்படிகளை நோக்கி சென்றார்.

அப்பால் அஸ்தினபுரியின் குடிகள் எழுப்பிய வாழ்த்தொலி பெருகி எழுந்தது. அனைத்துத் திசைகளிலிருந்தும் அலையலையாக அது வந்து செவிகளை நிறைத்தது. மிகமிகத் தொலைவில்கூட படைகளும் குடிகளும் வாழ்த்து முழக்கிக்கொண்டிருந்தனர். அங்கிருந்து கேட்டபோது ஒளிகொண்டிருந்த தொலைவான்கோடு அவ்வோசையில் அதிர்ந்து நெளிவதாகத் தோன்றியது.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 49

tigபானுமதி முதற்காலையில் காந்தார அரசியரை சந்திக்கும்பொருட்டு அணியாடை புனைந்துகொண்டிருக்கையில் அமைச்சர் வந்திருப்பதாக சேடி வந்து சொன்னாள். அப்போதுதான் அவள் அனுப்பியாகவேண்டிய ஓலைகளின் நினைவை அவள் அடைந்தாள். அமைச்சரை சிறுகூடத்தில் காத்திருக்கும்படி பணித்துவிட்டுச் சென்று சிறுபீடத்தில் கால் நீட்டி அமர்ந்தாள். அங்கு காத்திருந்த கற்றுச்சொல்லிகள் அவளைச் சூழ்ந்து அமர்ந்தனர். விழிமூடி விரைந்த சொற்களால் அவள் செய்தியை சொல்ல அவர்கள் ஓலையில் எழுதிக்கொண்டனர். அவளுடைய தாழ்ந்த குரலும் அதனுடன் இணைந்துகொண்ட எழுத்தாணியின் ஓசையும் மட்டுமே அறையில் ஒலித்துக்கொண்டிருந்தது. நகரெங்கும் அனுப்பி வைக்கப்படவேண்டிய அரசாணைகளை அவள் பிறப்பித்தாள்.

எந்நிலையிலும் எங்கும் இறப்பு தண்டனை அளிக்கப்படலாகாது என்றும், இறப்புக்குரிய குற்றங்கள் செய்தவர்கள் அஸ்தினபுரிக்கு கொண்டுவரப்படவேண்டுமென்றும், சிறு குற்றங்களுக்கு மட்டுமே ஆங்காங்குள்ள மூதன்னையர் குழுக்கள் தண்டனைகள் வழங்க ஒப்புதல் உண்டு என்றும் முதலாணை. பிறிதொரு ஆணை நிலம், நீர், பாதைகள் ஆகியவற்றைப் பற்றிய பூசல்கள் எவையும் போர் முடிந்து அரசர் திரும்பிவரும் வரையில் விசாரிக்கப்படமாட்டா என்றும் அவை அனைத்தும் அரசர் அவைநீங்கும் அந்நாளில் எந்நிலையில் இருந்ததோ அவ்வண்ணமே மாற்றமின்றி நீடிக்கவேண்டும் என்றும் கூறியது. வணிகர்கள் அரசுக்கு கட்டவேண்டிய நிகுதிகள் முழுமையாகவே நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டன என்றும் நகருக்குள் வரும் வணிகர்களுக்கு தங்குமிடமும் விலங்குகளுக்கான கொட்டில்களும் அவர்கள் சிறுவணிகம் செய்வதாக இருந்தால் அவற்றுக்குரிய கடைகளும் அரசால் வழங்கப்படுமென்றும் மூன்றாவது ஆணை.

ஏழு ஆணைகள் அஸ்தினபுரியுடன் முரண்பட்டு ஆங்காங்கே தனியரசுகளை அமைப்பதாக அறிவித்துக்கொண்ட சிறுகுடித்தலைவர்களுக்கு விடுக்கப்பட்டன. உடனடியாக அவர்கள் கோல்கொண்டு அரியணை அமர்வதை தவிர்த்து, அஸ்தினபுரியின் கொடி அடையாளத்தையே தாங்களும் கொண்டு, ஒவ்வொரு நாளும் அஸ்தினபுரிக்கு உறுதிமொழிகொண்டு அவைக் கடன்களை நிறைவேற்றவேண்டும் என்றும் அவ்வாறு தாங்கள் செய்வதை முறைப்படி ஓலைகளில் பொறித்து அஸ்தினபுரிக்கு அனுப்பவேண்டும் என்றும், அவ்வோலையின் பிறிது வடிவங்கள் சூழ்ந்திருக்கும் அனைத்து குலத்தலைவர்களுக்கும் அனுப்பப்படவேண்டுமென்றும் எழுதப்பட்டன.

அஸ்தினபுரியின் படகுகளைத் தாக்கும் கள்வரோ பிறரோ துரத்திச் செல்லப்படவேண்டாம் என்றும், ஆனால் அவர்களின் குலஅடையாளங்கள் கணக்கில் கொள்ளப்படவேண்டும் என்றும், போர் முடிந்து படைகள் திரும்பிவரும்போது அக்குற்றங்களில் ஈடுபட்டவர்களின் குலத்தின் இறுதிக்குழவி வரை வேட்டையாடி கொன்று அழிக்கப்படும் என்றும், எந்நிலையிலும் எதன்பொருட்டும் இச்சூழலில் அவர்கள் செய்யும் சிறுகுற்றங்கள்கூட பொறுத்துக்கொள்ளப்படமாட்டா என்றும் நான்கு எல்லைகளுக்கும் ஆணை வரையப்பட்டது. தெய்வங்களுக்கான பலிகொடைகளும் மூதாதையருக்கான படையல்களும் மறு அரசாணை வரும்வரை நிறுத்தப்படுவதாக பிறிதொரு ஆணை.

இறுதி ஓலையை அவள் உரைத்துக்கொண்டிருக்கும்போது சேடி வந்து அசலை வந்திருப்பதை சொன்னாள். பொன்னணிகளுக்கும் பட்டாடைகளுக்கும் பீதர்நாட்டு அணிப்பொருட்கள் அனைத்திற்கும் இருமடங்கு நிகுதி வகுக்கும் ஆணையை இறுதியாக கூறிமுடித்து அவள் எழுந்தபோது அசலை வந்து அறை மூலையிலிருந்த பீடத்தில் அமர்ந்திருந்தாள். பானுமதி எழுந்து கைகளை நீட்டி சோம்பல் முறித்தாள். உடலை உணர்ந்ததுமே சிறு திடுக்கிடலுடன் அசலையின் விழிகளை சந்தித்தாள். இளமகள்போல் அவள் உள்ளம் சிறுநாணம் கொண்டது. கற்றுச்சொல்லிகள் ஓலைகளை அடுக்கியபடி அகன்றனர். அணிச்சேடியர் வந்து அவள் ஆடைகளையும் குழலையும் சீர்படுத்தினர். அசலையை நோக்காமல் குரலை இயல்பாக்கி “இளையவள் எங்கே?” என்று அவள் கேட்டாள்.

“இன்று அவள் துயின்று எழ மிகவும் பிந்தியது என்று சேடி சொன்னாள். ஆகவே அவள் வர இயலவில்லை” என்று அசலை சொன்னாள். அவள் குரல் இயல்பாக இருந்தமையால் பானுமதி திரும்பினாள். அவள் விழிகளில் அவள் நாணிய அக்கூர்மையைக் கண்டு திரும்பிக்கொண்டு “நோயுற்றிருக்கிறாளா?” என்றாள். “இல்லை, ஆனால் கடுந்துயருற்றிருக்கிறாள்” என்றாள் அசலை. பானுமதி “ஆம், விகர்ணனிடம் அவள் பேசிய சொற்கள் எஞ்சிய வாழ்நாளெல்லாம் அவளை துன்புறுத்தும்” என்றாள். அசலை “அவ்வாறு நான் எண்ணவில்லை. இந்நகர்விட்டு அவள் சென்றாளென்றால் ஓரிரு நாட்களிலேயே இங்குள்ள அனைத்தையும் மறந்துவிடுவாள். எங்கிருக்கிறாளோ அங்கு முழுமையாக ஒன்றுவது அவள் இயல்பு. இங்கிருக்கையில் அவள் மச்ச நாட்டுப் பெண்ணல்ல. எனவே அங்கு சென்றபின் அவள் அஸ்தினபுரியின் அரசியாக இருக்கவும் வாய்ப்பில்லை” என்றாள்.

பானுமதி “நாம் கிளம்புவோம்” என்று சொல்லி திரும்பி சேடியை நோக்கி கையசைத்தாள். அரசி எழுந்தருள்வதை அறிவிக்கும் கொம்போசை வெளியே ஒலித்தது. அவள் வெளியே சென்றபோது வந்து வணங்கிய அமைச்சர் மனோதரரிடம் “ஓலைகளை எழுதிவிட்டேன், அமைச்சரே. அவை இன்றே அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சேரட்டும். அவை முறைப்படி சொல்கொள்ளப்பட்டனவா என்ற செய்தியை நாளை மாலைக்குள் எனக்கு தெரிவியுங்கள். சொல்மாறு உரைத்த குலக்குழுக்களின் செய்திகள் அனைத்தும் தனியாக ஓலையில் எழுதி என் முன் வைக்கப்பட வேண்டும்” என்றாள். ஓசையின்றி மனோதரர் தலைவணங்கி திரும்பிச்சென்றார். அசலை “இது ஒருபோதும் தீராது என எண்ணுகிறேன். இந்த அரண்மனை வளாகத்தின் அன்றாட ஆட்சிக்கே என் முழுப் பொழுதும் செலவழிகிறது” என்றாள். பானுமதி “இரண்டும் ஒன்றே” என்றாள். “ஆண்கள் தங்கள் பொறுப்புகளை பகிர்ந்துகொள்கிறார்கள். நாம் அனைத்தையும் நாமே செய்யவேண்டுமென விரும்புகிறோமோ?” என்றாள் அசலை. பானுமதி வெறுமனே திரும்பி நோக்கிவிட்டு நடந்தாள்.

கொம்பும் முழவும் சங்கும் என மங்கலமூவொலி எழுப்பி இசைச்சூதர் முன்னால் செல்ல அணிச்சேடியர் மூவர் மங்கலத்தாலங்களுடன் தொடர அசலையும் பானுமதியும் இருபுறமும் சேடியர் வர நடந்தனர். பானுமதி மிகவும் களைத்திருந்தாள். அவ்வப்போது நின்று சற்றே இளைப்பாறிய பின் நடந்தாள். அசலை “மிகவும் களைப்புற்றிருக்கிறீர்கள், அரசி. அத்துடன் இந்நாட்களில் தாங்கள் நன்கு எடை மிகுந்தும் உள்ளீர்கள்” என்றாள். “ஆம், அதுதான் எனக்கு விந்தையாக இருக்கிறது. விழித்திருக்கும் நேரமெல்லாம் பணியிலிருக்கிறேன். ஒவ்வொரு நாளுமென எடை கூடிவருகிறது” என்றாள். “பணியாற்றும் சலிப்பினூடாக நாம் உணவருந்திக்கொண்டிருக்கிறோம். உள்ளம் மகிழ்ந்திருக்கையில் இத்தனை எடை கூடுவதில்லை” என்று அசலை சொன்னாள். “சென்ற ஆண்டு கானாடலுக்குச் சென்றோம். திரும்பி வருகையில் என் உடல் காற்றில் மிதப்பதாக உணர்ந்தேன்.”

பானுமதி “அஸ்தினபுரியின் குடிகள் அரசி பேருருவத்துடன் இருப்பதையே விரும்புகிறார்கள். இங்கிருந்த மூதன்னையர் அனைவருமே பருத்த உடல் கொண்டவர்கள்” என்றாள். “ஆம், சிலைகளை பார்த்துளேன்” என்று அசலை சொன்னாள். பானுமதி “மெய்யாகவே அவர்கள் பருத்த உடல் கொண்டவர்களா, அன்றி காடுகளில் தொல்குடிகள் வழிபடும் மூதன்னையர் சிலைகளைப் பார்த்து இவர்களை வடித்தார்களா என்று தெரியவில்லை” என்றாள். அசலை “சிலைகளை பேருடலுடன் வடித்திருப்பார்கள். பின்னர் மூதன்னையர் அவர்களை தங்கள் உடலில் கொணர்ந்திருப்பார்கள்” என்றாள். பானுமதி புன்னகைத்தாள். அப்பேச்சினூடாக மெல்ல மெல்ல எளிதாகி முகத் தசைகள் முறுக்கவிழ்ந்து மெல்லிய புன்னகையுடன் அவர்கள் நடந்தனர். அசலை “ஆனால் போர்த்தெய்வங்களான அன்னையர் எவரும் பருத்தவர்கள் அல்ல” என்றாள்.

tigகாந்தாரியின் அவைவாயிலில் நின்றிருந்த முதுசேடி தொலைவிலேயே கொம்போசையைக் கேட்டு உள்ளே சென்று ஆணையிட மூன்று சேடியர் மங்கலத் தாலங்களுடன் வந்து பானுமதியை எதிர்கொண்டு தலைவணங்கி முகமனுரைத்தனர். முதுசேடியிடம் “பேரரசி ஒருங்கியுள்ளார்களா?” என்று பானுமதி கேட்டாள். “ஆம், சிறுகூடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். உடன் பிற அரசியரும் அமர்ந்திருக்கிறார்கள்” என்றாள். அவள் திரும்பிப்பார்க்க சற்று அப்பால் நின்றிருந்த சிற்றமைச்சர் உத்பவர் அருகணைந்து தலைவணங்கி “இன்னும் அரைநாழிகைப்பொழுதில் அரசரும் தம்பியர் மூவரும் மாதுலர் காந்தாரருடன் இங்கு வந்து பேரரசியிடம் போர்விடைகொள்ளப்போகிறார்கள், அரசி” என்றார். “மூவர் மட்டிலுமா?” என்று அவள் கேட்டாள். “முதலில் மூவர் வருகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து பதின்மர் குழுக்களாக இளையோர் வருவார்கள். அன்னையர் அனைவரிடமும் ஒரே இடத்தில் வைத்து விடைகொள்வது எளிது என்று கனகர் வகுத்துள்ளார்” என்றார் உத்பவர். “ஆயிரத்தவர் அனைவரும் நேற்றே பேரரசியிடம் விடைபெற்றுவிட்டனர்.”

மெல்லிய உளநடுக்கு ஒன்று நிகழ முகத்தில் அதை மறைத்தபடி “பேரரசி எவ்வாறு இருந்தார்கள்?” என்றாள். “வழக்கம்போலத்தான்… அனைவரையும் உச்சிமுகர்ந்து தழுவி விடையளித்தார்கள்.” பானுமதி தலையசைத்துவிட்டு முன்னால் நடந்தாள். உடன் வந்த முதுசேடியிடம் “பேரரசி இரவில் துயின்றார்களா?” என்றாள். “இல்லை, அரசி” என்றபின் அவள் குரல் தாழ்த்தி “மூத்த அரசியர் பதின்மரும் பொதுவாக துயில்வதேயில்லை” என்றாள். பானுமதி ஒன்றும் சொல்லாமல் நடக்க அவள் மேலும் குரல் தாழ்த்தி “சிற்றரசியரிலும் எவரும் துயில்வதில்லை. பலர் பித்துகொண்டிருக்கிறார்கள். நேற்று ஓர் அரசி தலையை தூண் ஒன்றில் மோதிக்கொண்டார்கள்” என்றாள். பானுமதி அவளிடம் அகலும்படி கைகாட்டினாள்.

பானுமதி கைகூப்பியபடி உள்ளே நுழைந்தாள். தொன்மையான அவைக்கூடத்தில் கௌரவர்களின் துணைவியர் அனைவரும் அணியாடை புனைந்து நிரைவகுத்து காத்து நின்றிருந்தனர். பானுமதி அந்த அறை அதைப்போல மகளிரால் நிறைந்து அணியோசையும் ஆடையோசையும் மென்சிரிப்புகளும் குறும்பேச்சுமாக முழங்கிக்கொண்டிருந்த நாட்களை நினைவுகூர்ந்தாள். அத்தனை அரசியரும் தங்களுக்குரிய முறைமைத் தோற்றத்தில் இருந்தாலும் எவர் முகமும் அருள் கொண்டிருக்கவில்லை. பலர் தலையாடையை இழுத்து முகத்தின் மேலிட்டு மூடிக்கொண்டிருந்தனர். உவகையில் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொண்டு சிறுகுரலில் பேசிக்கொண்டிருக்கும் அவர்கள் துயரில் ஒவ்வொருவரும் முற்றிலும் தனித்தவராக மாறிவிட்டிருந்தனர். உடல்கள் ஒன்றையொன்று ஒட்டி நின்றிருந்தபோதும்கூட ஒருவரையொருவர் நோக்கிக்கொள்ளவில்லை. ஒவ்வொருவரைச் சுற்றியும் ஒலியின்மையாலான குளிர்ந்த பளிங்கு அறை ஒன்று அமைந்திருந்ததுபோல.

அவைக்கூடத்தின் நடுவே அமைந்த பெரும்பீடத்தில் காந்தாரி அமர்ந்திருந்தாள். அவளுக்கு இருபுறமும் சத்யசேனையும் சத்யவிரதையும் நின்றிருந்தனர. சுதேஷ்ணையும் சம்ஹிதையும், தேஸ்ரவையும், சுஸ்ரவையும், நிகுதியும், சுபையும், தசார்ணையும் பீடத்திற்குப் பின்னால் நிரைவகுத்து நின்றிருந்தனர். நூற்றுவர் மருகியர் அறையின் இருபுறங்களிலும் சுவரை ஒட்டி நான்கு நிரைகளாக நின்றிருந்தனர். மகாநிஷாதகுலத்து இளவரசியரான சந்திரிகையும் சந்திரகலையும் அவர்களில் இருக்கிறார்களா என அவள் ஒரு விழியோட்டலில் நோக்கி இல்லை என தெளிந்தாள். அவர்களுக்கும் அணியாடை அணிவித்து அந்த நிரையில் கொண்டுவந்து நிறுத்த துணியாமைக்காக அவள் காந்தார அரசியரை நினைத்துக்கொண்டாள்.

நிமித்திகை பானுமதியின் வரவை முறைச்சொற்களில் அறிவித்தாள். பானுமதி காந்தாரியை அணுகி கால்தொட்டு சென்னிசூடி “வணங்குகிறேன், பேரரசி” என்றாள். காந்தாரி தன் வலக்கையால் அவள் தலைதொட்டு சொல்லின்றி வாழ்த்தினாள். அசலையும் அவ்வாறே வணங்கி பானுமதியின் அருகே நின்றுகொண்டாள். பானுமதி விழிகளால் சத்யசேனையிடம் அனைத்தும் முறைப்படி நிகழ்கிறதல்லவா என்றாள். சத்யசேனை மெல்ல தலையசைத்தாள். பானுமதி தன் நெஞ்சிலிருந்து எழுந்த நீள்மூச்சை மெல்ல அடக்கி வாயால் ஊதி வெளிவிட்டாள். அங்கு குளிர்வதுபோலவும் வியர்வை எழுவதுபோலவும் ஒரே தருணத்தில் தோன்றியது. காற்று பேரெடை கொண்டு உடலை அழுத்தியது. அங்கிருந்த அனைவரும் முள்ளில் நீர்த்துளிகள் என ததும்பி நின்றிருந்தனர். சற்று அசைவெழுந்தால்கூட விழுந்துவிடுவார்கள். அவள் அவர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் நோக்க விரும்பினாள். ஒவ்வொருவரிடமும் ஓரிரு சொற்களாவது பேசவேண்டுமென்று தோன்றியது. எக்கணமும் அவர்களில் ஒருத்தி விம்மலென வெடித்துவிடக்கூடும். பித்தெழுந்து கூச்சலிட்டபடி வெறியாட்டு கொள்ளக்கூடும்.

மாளிகையின் தரை தேன்மெழுகால் மெருகூட்டப்பட்டிருந்தது. கௌரவ அரசியரின் அணியாடைகளின் வண்ணங்கள் ஈரம்போல் மின்னிய அத்தரையில் தெரிந்தன. ஒருத்தியின் தலையில் இருந்த மணிகள் பதிக்கப்பட்ட பொன்மீன் நீருக்குள் நீந்துவதுபோலத் தெரிய பானுமதி விழிதூக்கி ஒரு நோக்கில் அனைவரையும் பார்த்தாள். ஒரு பெருவிழவுக்குரிய அணித்திரள். ஒருகணத்தில் அதிலிருந்த பொருளின்மை அவளை துணுக்குறச் செய்தது. அவ்வாடைகள், அணிகள், முறைமைத் தோற்றம் அனைத்தும் ஓர் அவல நாடகத்தின் இளிவரல் ஓங்கிய பகுதிகள். அவள் சம்படையை நினைவுகூர்ந்தாள். குண்டாசியின் முகம் எண்ணத்திலெழுந்தது. மீண்டும் அரசியரை பார்த்தாள். முகங்கள் மரப்பாவைகள்போல் உயிரற்றிருந்தன. தோல் விரிசல்களுடன் உலர்ந்திருக்க கண்களுக்குக் கீழே ஆழ்ந்த கருவளையங்கள். வாயைச் சுற்றி அழுத்தமான கோடுகள். துயரம், வஞ்சம், தனிமை, கசப்பு, பித்து என ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு வகையில் முறுக்கிக்கொண்டிருந்தது. அனைவரிலும் சம்படை எழுந்திருந்தாள்.

கௌரவர்கள் அனைவரும் மணம்புரிந்து அரசியரை கொண்டுவந்த அந்நாளில் அங்க நாட்டரசன் உள்ளே நுழைய பெண்டிர் அவனை களியாடியதை அவள் எண்ணினாள். ஓங்கிய உடலை நாணத்தால் குறுக்கி எவர் விழிகளையும் பார்க்காமல், எச்சொற்களையும் கேட்காமல் ஊடே அவன் கடந்து சென்ற அதே பெண்டிர்தான். அவர்களுக்குள்ளிருந்து அன்றிருந்த ஒன்று அகன்றுவிட்டிருக்கிறது. இன்று அந்த நாட்களை அவ்வகையில் நினைவுகூரக்கூட அவர்களால் இயலாதிருக்கலாம். கனவுகளில் அங்கெங்கோதான் அவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் வாழ்ந்தது அரசியர் என மணம்கொள்ளும் வரை மட்டுமே. காட்டில் பூத்துநின்றிருக்கும் மரத்தை வெட்டிச் செதுக்கி இழைத்து அணிக்கோல் என்றாக்குவதே அதன்பின் நிகழ்வது என்று காசிநாட்டில் அவளுடைய செவிலியன்னை ஒருமுறை சொன்னாள். ஆயிரம் முறைமைகளால் கட்டுண்டவர்கள் அரசர்கள், பல்லாயிரம் எச்சரிக்கைகளால் ஆனவர்கள் அரசியர் என்றாள்.

காந்தாரி மெல்ல அசைந்து அமர்ந்தபோது சத்யவிரதை குனிந்து “என்ன, அக்கையே?” என்றாள். “ஒன்றுமில்லை” என்று காந்தாரி கைவீசி சொன்னாள். அவள் முகத்தையே பானுமதி நோக்கிக்கொண்டிருந்தாள். வெண்கல்லில் செதுக்கிய சிற்பம் போன்ற முகம். சிறிய உதடுகள், சிறிய செவிகள். அவள் கைகளும் விரல்களும் சிறியவை. சிட்டுக்குருவியின் மூக்கு போன்ற சிவந்த மெல்லிய நகங்கள் கொண்ட விரல்கள். அவ்வுடலுக்குள்ளிருந்து துரியோதனன் எழுந்திருக்கிறான். அவள் முதலைகள் முட்டையிலிருந்து விரிவதை ஒருமுறை பார்த்ததை நினைவு கூர்ந்தாள். முட்டை எனும்போது உள்ளிருந்து பறவை ஒன்றை ஈரமான மென்சிறகுடன் எதிர்பார்க்கும் வழக்கம் நெஞ்சுக்கும் விழிக்கும் இருந்தது. முட்டை உடைந்து செதில்கள் கொண்ட உடலும் நீண்ட வாலும் திறந்த வாய்க்குள் கூரிய பற்களுமாக முதலைக்குழவி வெளிப்படும்போது ஏற்படும் திடுக்கிடல்.

அவ்வெண்ணத்தை விலக்கும்பொருட்டு அவள் தன் ஆடையை சீரமைத்தாள். அவ்வசைவை அங்கிருந்த அனைத்துப் பெண்டிரும் உணர்ந்தனர். அத்தனை அசைவின்றியா இந்த நூற்றுவரும் நின்றிருக்கிறார்கள்? உடலில் அவ்வளவு அசைவின்மை கூட வேண்டுமென்றால் உள்ளத்தில் அதைவிட பலமடங்கு அசைவின்மை நிறைந்திருக்க வேண்டும். அசைவின்மை என்பது உள்ளத்தின் இயல்பே அல்ல. அது தன்னை மறக்கையில் அசைவின்மை கொள்கிறது. நோயுற்று அழிகையில் அசைவின்மை கொள்ளக்கூடும். இது பிறிதொன்று. மதங்கொண்ட யானையை எட்டுத் திசைகளிலும் இழுத்துக்கட்டிய சங்கிலிகளால் அசைவற்று நிறுத்துவதுபோல. அதன் உடலில் சங்கிலிகள் இறுக்கிய புண்களில் குருதி வழியும். ஒருகணமும் நில்லாது அது ததும்பிக்கொண்டிருக்கும். ஒருமுறை காவல் கோட்டத்தின் மேலிருந்து அவள் போர்க்களிறான நிக்ரஹன் பன்னிரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டிருப்பதை பார்த்தாள். அது நிலைகுத்தி நின்று மெல்ல அசையும் கருவிழிபோல் என்று தோன்றியது அன்று.

அவள் தன் உள்ளத்தை அஞ்சினாள். ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை என சென்றுகொண்டிருக்கும் இவ்வெண்ணங்களை எங்கு நிறுத்துவது? இந்த அறைக்குள் நூற்றிப்பத்து உள்ளங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஓசையின்றி அசைவின்றி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசை கொண்டிருக்கலாம். ஆனால் அனைத்தும் ஒன்றையே அளைந்துகொண்டிருக்கின்றன. எத்தனை சொல் பெருக்கினாலும் எவ்வளவு எண்ணி எண்ணி அடுக்கினாலும் எஞ்சிவிடும் பொருளின்மை.

வெளியே கொம்பொலி கேட்டது. சிற்றவைக்குள் பெருமூச்சொலிகள் எழுந்தன. பெண்கள் அறியா கைகளால் தங்கள் ஆடைகளையும் அணிகளையும் சீர்படுத்தத் தொடங்கினர். உலோக ஓசையும் ஆடைகளின் உரசலோசையும் மெல்லிய குரலில் உரையாடல்களும் சேர்ந்த முழக்கம். காந்தாரி மெல்ல உடல் நிமிர்த்தி அமர ஒரு சேடி வந்து அவள் அணிந்திருந்த பட்டாடையின் மடிப்புகளை சீர்படுத்தினாள். வாழ்த்தொலிகளும் மங்கல இசையும் கேட்கத் தொடங்கின. அமைச்சர் உத்பவர் உள்ளே வந்து தலைவணங்கி முறைமை முன்சொல்லாக “அரசர் தம்பியருடன் எழுந்தருள்கிறார், பேரரசி” என்றார். காந்தாரி வெறுமனே கையை மட்டும் அசைத்தாள்.

மங்கலத் தாலங்களேந்திய ஏழு சேடியர் சிற்றவைக்குள் நுழைந்தனர். அவர்களைத் தொடர்ந்து சங்கும் மணியும் கொம்பும் முழவும் இலைத்தாளமும் முழக்கிய ஐந்து இசைச்சூதர்கள் வந்தனர். இசை முழங்க அவர்கள் அத்தாலங்களை காந்தாரி முன் காட்டினர். அவள் அவற்றிலொன்றை கையால் தொட்டு ஏற்றுக்கொண்டாள். கனிகளும் மலர்களும் பொன்னும் மணியும் நீரும் அடங்கிய தாலங்களை அவளுக்கு முன் தரையில் விரித்தனர். அஸ்தினபுரியின் அமுதகலம் பொறிக்கப்பட்ட சிறு கொடியுடன் ஒரு வீரன் முன்னால் வந்து அறைக்குள் நுழைந்ததும் அவனுடன் வந்த கொம்பூதி சிறுகொம்பை முழக்கி “யயாதியின் கொடிவழி வந்தவர்! குருகுலத் தலைவர்! அஸ்தினபுரியின் அரசர்! தார்த்தராஷ்டிரராகிய துரியோதனர் எழுந்தருள்கை!” என்று அறிவித்தான்.

கொம்பூதி வலப்பக்கமாக விலக கொடியேந்தியவன் இடப்பக்கமாக விலகினான். துர்மதனும் துச்சகனும் தொடர வலப்பக்கம் துச்சாதனன் நடந்துவர துரியோதனன் அவைக்குள் நுழைந்தான். அவனுக்குப் பின்னால் சகுனி புண்பட்ட காலை இழுத்துவைத்து வலியால் வாயை கடித்திருந்தமையால் தாடியுடன் தாடை முன் நீண்டிருக்க மெல்ல நடந்துவந்தார். அவர்கள் உள்ளே வந்ததும் இசைச்சூதரும் சேடியரும் கொடிவீரனும் பிறரும் இரு வாயில்களூடாக வெளியே சென்றனர். சகுனி நின்று இளைப்பாறிக்கொள்ள அவர் உடல் மிகவும் வெளுத்து உயிரற்றதுபோல் தெரிவதை பானுமதி நோக்கினாள். துரியோதனன் சகுனியை நோக்க அவர் “முன்செல்க!” என உதடசைவால் சொல்லி கைகாட்டினார்.

துரியோதனன் முறைமைக்குரிய நீண்ட சீரடி வைத்து நடந்து காந்தாரியை அணுகினான். “அன்னையே, உங்கள் மைந்தன் வணங்குகிறேன். அஸ்தினபுரியின் கொடி காக்கவும் நம் குருதிவழியின் உரிமை பேணவும் ஷத்ரிய அறத்தை நிலைநாட்டவும் நான் இன்று போருக்கு கிளம்புகிறேன். தங்கள் மைந்தர் நூற்றுவரும் என்னுடன் வருகிறார்கள். எங்கள் மைந்தர் ஆயிரத்தவரும் உடனெழுகிறார்கள். அஸ்தினபுரியின் படைகளும் துணைக்கு எழுந்த பத்து அக்ஷௌகிணி படைப்பெருக்கும் களம்நின்று போராடவிருக்கின்றன. பிதாமகர் பீஷ்மர் தலைமை கொள்கிறார். நல்லாசிரியர் கிருபரும் துரோணரும் உடனிருக்கிறார்கள். ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் சல்யரும் கிருதவர்மனும் பூரிசிரவஸும் என் தோள்களென நிற்கவிருக்கிறார்கள். இப்போரில் நான் வென்று மீளும் பொருட்டு தங்கள் சொல்கோர வந்திருக்கிறேன்” என்றான்.

பின்னர் முறைப்படி மூன்றடி எடுத்து வைத்து முழங்கால் மடித்து நிலத்தமர்ந்து காந்தாரியின் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். காந்தாரி தன் வலக்கையை அவன் தலைக்குமேல் நீட்டி “அறம் வெல்க!” என்றாள். பானுமதி திகைப்புடன் காந்தாரியின் முகத்தை பார்த்தாள். விழியின்மையென்பது எத்தனை பெரிய திரையென்று அப்போது தெரிந்தது. சென்று தொடமுடியாத பிறிதெங்கோ வெற்றுச் சிலையென காந்தாரியின் முகம் தெரிந்தது. துச்சாதனன் திரும்பி நோக்க சகுனி “அக்கையே, தங்கள் மைந்தன் தன் முழு வெற்றியின்பொருட்டு களம்புகவிருக்கிறான். காந்தார நிலத்தின் வடிவென நீங்கள் கொண்ட அத்தொல்கனவு நிறைவுகொள்ளப்போகிறது. வெற்றிக்கென உங்களது அருள் வேண்டுகிறான்” என்றார்.

“வென்று வருக என்றுரைப்பதுதான் மரபு, பேரரசி” என்றார் அமைச்சர். காந்தாரி மீண்டும் “அறம் வெல்க!” என்றாள். சகுனி சத்யவிரதையை பார்த்து உதடுகளை அசைக்க அவள் குனிந்து காந்தாரியின் தோளைத்தொட்டு “அக்கையே, இத்தருணத்தில் தங்கள் மைந்தர் வென்று மீளவேண்டும் என்று கூறுவதே முறை” என்றாள். காந்தாரி மீண்டும் “அறம் வெல்க!” என்றாள். சத்யசேனை ஏதோ சொல்வதற்குள் சகுனி “அக்கையே, தங்கள் மைந்தர் நீளாயுளுடன் நிறைவாழ்வு பெறவேண்டும், அவர்களின் கொடி சிறக்க வேண்டுமென்று தாங்கள் வாழ்த்தலாம். மூதன்னையாக அச்சொல்லை அளிக்கும் கடமையும் தங்களுக்குண்டு” என்றார்.

காந்தாரி இரு கைகளையும் கூப்பி “அறம் வெல்க! அறம் வெல்க! அறமே வெல்க!” என்றாள். சினத்துடன் துர்மதன் ஏதோ சொல்ல கைதூக்கி முன்னகர விழிதிருப்பி வெறும் நோக்கால் அவனை துரியோதனன் அடக்கினான். பின்னர் “அன்னையே, உங்கள் சொல் திகழ்க!” என்றபின் மீண்டுமொருமுறை கால்தொட்டு சென்னிசூடி எழுந்தான். துச்சாதனன் கொந்தளிக்கும் முகத்துடன் உடலெங்கும் தசைகள் இழுபட்டு அசைய பற்களைக் கடித்தபடி நின்றான். விழிகளால் அன்னையை வணங்கும்படி துரியோதனன் ஆணையிட்டான். மேலும் சில கணங்கள் தயங்கிவிட்டு துச்சாதனன் முழங்கால் மடித்தமர்ந்து “வணங்குகிறேன், அன்னையே” என்றான். அவள் கைநீட்டி அவன் தலையை தொடாமல் வாழ்த்துரைத்தாள். துர்மதனும் துச்சகனும் வணங்கி வாழ்த்து கொண்டனர்.

சகுனியின் முகத்தையே பானுமதி நோக்கிக்கொண்டிருந்தாள். அங்கு எந்த உணர்வுமாறுபாடும் எழவில்லை. “என்னை வாழ்த்துக, அக்கையே” என்று அவள் காலடியில் குனிந்தார். காந்தாரி அசைவிலாதிருந்தாள். சத்யசேனை “அக்கையே…” என்றாள். காந்தாரியில் எந்த அசைவும் எழவில்லை. அவள் எடைமிகுந்து குளிர்ந்துகொண்டே செல்வதுபோலிருந்தது. அந்தத் தண்மையில் அக்கூடம் விறைத்துக்கொண்டதுபோல. சத்யசேனை மீண்டும் காந்தாரியைத் தொட தலையசைத்து அதை தடுத்தபின் காந்தாரியின் தாள்தொட்டு சென்னி சூடினார். கையை நிலத்தில் ஊன்றி வலிமுனகலுடன் எழுந்தார். அவர் சற்று நிலைதடுமாற அவரை பிடிக்கும்பொருட்டு கைநீட்டிய துர்மதன் அவர் எழுந்துவிட்டதைக் கண்டு பின்னிழுத்துக்கொண்டான்.

காந்தாரியின் முகம் சுண்ணக்கல் பாவை என தெரிந்தது. சகுனியின் முகத்தில் தெரிவது உணர்வின்மை அல்ல என பானுமதி எண்ணினாள். அவர் முகத்தின் அத்தனை தசைகளும் தொய்ந்து சரிந்திருந்தன. சலிப்பும் வலியும் அவற்றில் தசையமைப்பாகவே நிலைகொண்டிருந்தன. அமைச்சரிடம் ஒரு சொல்லில் ஏதோ ஆணையிட்டுவிட்டு துரியோதனன் சீர்நடையிட்டு வாயிலை நோக்கி சென்றான். துச்சாதனன் உடன் செல்ல துர்மதனும் தொடர்ந்தான். துச்சகன் சகுனிக்காக காத்து நின்றான். அவன் தோளைப் பற்றியபடி வலியுடன் மெல்ல நடந்து சகுனியும் வெளியேறினார்.

துரியோதனன் தன்னை ஒருகணமேனும் பார்ப்பான் என்று பானுமதி எண்ணினாள். ஆனால் அவள் நிற்பதையே அறியாதவனாக அவன் அறையைவிட்டு நீங்கினான். அனைவரும் வெளியே சென்றதும் அங்கு நின்றிருந்த அரசியர் அனைவருமே நீள்மூச்சுகளும் உடல் எளிதாகும் ஓசைகளுமாக நிலைமீண்டனர். அம்புகளை ஏவி தளரும் விற்களைப்போல. மீண்டும் வெளியே கொம்போசை எழுந்தது. பானுமதி நீள் கால் வைத்து அரச நடையில் செல்லும் துரியோதனனை உளவிழியால் நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் முந்தைய இரவில் கண்ட துரியோதனனை அவன் அவளிடமே விட்டுச்சென்றிருந்தான் என்று எண்ணிக்கொண்டாள்.

நிமித்திகை வந்து அறிவிப்பு அளிக்க கௌரவர்கள் இரண்டு நிரைகளாக அறைக்குள் வந்து காந்தாரியிடமும் ஒன்பது அன்னையரிடமும் வாழ்த்துகள் பெறத்தொடங்கினர். ஒருவர் பின் ஒருவராக கரிய பேருடலுடன் அவர்கள் தோன்றிக்கொண்டே இருந்தனர். காந்தாரி வெண்ணிற முகம் உறைந்திருக்க ஒவ்வொருவர் தலையாகத் தொட்டு வாழ்த்தளித்தாள். அவள் விழிகளை மூடியிருந்த நீலப்பட்டையே பானுமதி நோக்கிக்கொண்டிருந்தாள், அது சற்றேனும் நனைந்து நிறம் மாறுகிறதா என்று. அனைவரும் வந்து சொல்கொண்டு சென்றபின் மெல்ல முனகியபடி காந்தாரி கையை நீட்டினாள். சத்யசேனையும் சத்யவிரதையும் அவளைப் பற்றி மெல்ல தூக்க சிற்றடிமேல் நிற்க அவள் உடல் தடுமாறியது. பின்னர் உடன்பிறந்தார் தோள்களைப் பற்றியபடி அவள் உள்ளே சென்றாள்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48

tigபானுமதியின் மஞ்சத்தறையில் முன்னரே துரியோதனன் வந்து காத்திருந்தான். அவள் வாயிலை அடைந்தபோது அங்கு நின்றிருந்த ஆணிலி தலைவணங்கி அரசர் உள்ளிருப்பதை ஓசையின்றி குறிப்பிட்டாள். அவளிடம் செல்லும்படி கைகாட்டிவிட்டு ஒருகணம் நின்றாள். தன் ஆடையையும் குழலையும் சீரமைக்க விழைந்தாள். அங்கு ஓர் ஆடி இருந்தால் நன்று என்று தோன்றியது. கதவை மெல்ல தொட்டு மீண்டும் ஒருகணம் தயங்கி திறந்து உள்ளே சென்றாள். துரியோதனன் மஞ்சத்தில் கைகளை மார்பில் கட்டியபடி நிகர்கொண்ட தோள்களுடன் விழிதாழ்த்தி அசைவிழந்து அமர்ந்திருந்தான். அவள் கதவில் சாய்ந்து நின்றாள். அவள் வந்த ஓசையை அவன் கேட்கவில்லை. முற்றிலும் தன்னுள் ஆழ்ந்துவிட்டிருந்தான். உடலில் மூச்சு ஓடுகிறதா என்றே ஐயம் எழுந்தது.

அவள் கதவில் தோள்சாய்ந்து நின்று அவன் உடலை காலிலிருந்து தலைவரைக்கும் பார்த்தாள். ஒவ்வொன்றும் சிற்பிகளால் நோக்கி செதுக்கியதுபோன்ற முழுமை. நெடுநாட்களுக்கு முன்னர் அவள் உதறிவிட்டு வந்த காமத்தை சென்றுதொட்டது உள்ளம். ஆனால் அது உடலறியாத ஒன்றாக எங்கோ இருந்தது. அவனைத் தொட்டு பதினாறாண்டுகளுக்கு மேலாகிறதென எண்ணிக்கொண்டாள். அவள் நிழல் அப்பால் நீண்டு அவனிடமிருந்து விலகிக் கிடந்தது. அவள் மெல்ல நடந்து சாளர ஒளிக்குக் குறுக்காக சென்றாள். அவள் நிழல் அவன்மேல் விழுந்தபோது உள்ளம் கிளர்ந்தெழுந்தது. அவன் தன்மேல் கடந்த நிழலசைவைக்கண்டு திரும்பிப்பார்த்தான். புன்னகைத்தபடி எழுந்து “அரசி, உன்னிடம் போர்விடைபெற்றுச் செல்ல வந்தேன்” என்றான்.

அவள் ஏதோ சொல்ல எண்ணினாலும் அதை மூச்செனத் திரட்ட இயலவில்லை. சிலமுறை நீள்மூச்சுவிட்டு “ஆம்” என காற்றாக ஒலித்தாள். “நிமித்திகர் கூற்று நான் மீளமாட்டேன் என்கிறது” என்று அவன் சொன்னான். அவனிடம் என்றும் தோன்றாத ஓர் உணர்வுநிலை முகத்தில் பரவியது. உடனே அதை சிரிப்பென ஆக்கிக்கொண்டு “ஆனால் என் உள்ளம் நான் வென்று மீள்வேன் என்கிறது. ஆம், நான் மீள்வேன். இந்நகரை மும்முடி சூடி ஆள்வேன். அதுவே என் பிறவிநோக்கம்” என்றான். அவள் சொல்கொண்டு “போருக்கு எழுகையில் வெற்றியை அன்றி பிறிதெதையும் பேசவேண்டியதில்லை” என்றாள். “நான் நிமித்திகர் சொல் கேட்பதில்லை. ஆனால் என்னைச் சூழ்ந்திருக்கும் அனைவருமே நிமித்திகர் சொல்லை நம்பி வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரின் விழிகளிலிருந்தும் அச்சொற்கள் என்னை வந்தடைந்துகொண்டே இருக்கின்றன” என்று சொன்ன அவன் மீண்டும் புன்னகைத்து “நா தவறிவிட்டேன். ஆனால் இங்கேனும் அது நிகழ்ந்தது நன்று” என்றான்.

அவன் அந்தத் தருணத்தை எளிதாக்கிக் கடக்கும்பொருட்டு “இன்று முழுக்க அரசுப்பணியிலிருந்தாய் என்று கேட்டேன். களைத்து துயில்கொண்டிருப்பாயோ என்று எண்ணினேன். சற்று முன் துயில் கலைந்து வந்தவள் போலிருக்கிறாய்” என்றான். பானுமதி “ஆம்” என்றாள். “ஒற்றர் செய்திகளில் நன்றென மிகக் குறைவே.” அவன் புன்னகைத்து “நற்செய்திகளைச் சொல்ல ஒற்றர் தேவையில்லை. அவர்கள் குருதிதேடும் மூக்கு கொண்டவர்கள்” என்றான். “பெண்டிர் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். “ஆம், அறிந்தேன். பெண்கள் சிலநாட்களிலேயே இந்நாட்டை நுட்பமாக மாற்றிவிடுவார்கள். மீண்டு வரும் ஆண்கள் அவர்கள் அறியாத புதிய நிலம் ஒன்றில் காலடி வைப்பார்கள்.” பானுமதி புன்னகைத்து “அது அவர்கள் இளமையில் அறிந்ததாகவே இருக்கும். அடுமனையிலும் புறக்கடையிலும் நுண்வடிவில் இருந்துகொண்டிருப்பது” என்றாள்.

அந்தத் தருணத்தின் மையத்தை தொடாமல் அவர்கள் சொல்கொண்டு அகற்றினர். அது அவர்கள் நடுவே ஊசலாடியது. “நகர்முழுக்க பலியும் படையலும் வழிபாடும் பெறாத தெய்வங்கள் என ஏதுமில்லை. மண்ணில் புதைந்த அத்தனை தெய்வங்களும் விழிதிறந்து எழுந்துவிட்டன” என்று அவன் சொன்னான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “விந்தை என்னவென்றால் பெரும்பாலான போர்த்தெய்வங்கள் பெண்ணுருக் கொண்டு எழுந்தவை” என்றான் துரியோதனன். “வெற்றியையும் சாவையும்கூட பெண்ணுருவாகவே அறிந்திருக்கிறார்கள்.” அவள் “ஏனென்றால் நிலம் பெண்” என்றாள். “ஆம், அதை நான் எண்ணவேயில்லை” என்றான். ஒருகணத்தில் அவள் அனைத்துச் சொற்களிலும் சலிப்பு கொண்டாள்.

அதை அவன் பிறிதொருவகையில் புரிந்துகொண்டு எழுந்தான். “நன்று, பொழுதாகிறது. உனக்கு பணிகளிருக்கும். முறைப்படி நீ செஞ்சாந்து அணிவித்தால் விடைபெற்றுச் செல்கிறேன்” என்றான். அவள் முகம் மாறுவதை உணர்ந்து மீண்டும் புன்னகைத்து “இத்தருணத்தில் வஞ்சினச் சொற்களை உரைக்கலாகாதென்று அறிவேன். பிறிது சொற்களை உரைப்பதை நெடுநாட்களாக மறந்துவிட்டிருக்கிறேன்” என்றான். பானுமதி நிமிர்ந்து அவன் விழிகளை பார்த்தாள். தெளிந்த விழிகள், அழகிய புன்னகை. பெருந்தோள்களின் திண்மை. நிகர்கொண்ட இத்தோள்கள் ஏன் அதுவரை உள்ளத்தில் அச்சத்தை உருவாக்கின? ஆணிடம் சற்று பிழையிருப்பதை பெண் விரும்புவது எதனால்? அப்பிழையை நிறைத்துக்கொள்ளும் இடமே தனக்குரியது என எண்ணுவதனாலா? இவருக்கு பிறிதெவரும் தேவையில்லை. பெண் மட்டுமல்ல, ஆசிரியர்களோ தெய்வங்களோகூட. இந்த முழுதுடலில் நான் சென்றடைய பழுதேதுமில்லை.

“என்ன எண்ணிக்கொண்டிருக்கிறாய்?” என்று அவன் கேட்டான். ஒன்றுமில்லை என்று அவள் தலையசைத்தாள். “அரசுப் பொறுப்பு குறித்து நான் உன்னிடம் சொல்வதற்கு ஏதுமில்லை. நீ செய்திருப்பவை என்னென்ன என்று கனகர் என்னிடம் சொன்னார். என்னைவிட மும்மடங்கு தெளிவுடனும் கூர்மையுடனும் இந்நிலத்தை ஆள்கிறாய் என்று தோன்றுகிறது” என்றான். “அரசரும் அமைச்சருமாக ஆண்களைவிட பெண்களே சிறப்புற திகழ முடியுமென்று சில நாட்களாக எண்ணிக்கொண்டிருக்கிறேன். இந்நாடு ஒருபோதும் முழுமையாக எனது விழியிலும் செவியிலும் இருந்ததில்லை. இந்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களையும் அறிந்தவனாக நான் அரியணையில் அமர்ந்ததும் இல்லை. நிகழ்ந்தவற்றுக்கு தீர்வு சொல்லக்கூடியவனாக இருந்திருக்கிறேனே ஒழிய நிகழும் முன்னர் உய்த்துணர்ந்து என் கைகள் அங்கு சென்றதில்லை. நீ அன்னைத்தெய்வம்போல் இந்நிலத்தை முற்றிலும் நிறைத்திருக்கிறாய்.”

அவள் அச்சொற்களைத்தான் அவனிடம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் என அப்போது உணர்ந்தாள். நூறு கைகளும் ஆயிரம் விழிகளும் பல்லாயிரம் செவிகளுமாக அவள் பேருருக்கொண்டது அவன் சொல்பெறும்பொருட்டே. அவள் முகம் மலர்வதைக் கண்டு அவனும் புன்னகைத்தான். “ஏன் ஆண்கள் அரசாளும் முறைமையை உருவாக்கினர் மூதாதையர் என்று தெரியவில்லை. தொல்லரசுகள் அரசியரால்தான் ஆளப்பட்டன என்கிறார்கள்” என்றான். “அரசியர் போர்த்தலைவர்களல்ல” என்று அவள் சொன்னாள். “பெருந்தோள் கொண்டு அரியணையில் அமர்ந்திருக்கும் காவலன் என்னும் உளவடிவம் உருவான பின்னர் பெண்கள் சிறந்து ஆளமுடியவில்லை.” அவன் முகம் மாறி “ஆம், அரசனென்பவன் அரியணையில் வைக்கப்பட்ட ஒரு வாள்தான் என்று நூல்கள் சொல்கின்றன” என்றான்.

அந்தப் பேச்சினூடாக அவள் தான் கொண்ட விலக்கத்தைக் கடந்து அவனருகே உளம் சென்றாள். துரியோதனன் மீண்டும் மஞ்சத்தில் அமர்ந்தான். எதிரில் இட்டிருந்த சிறுபீடத்தில் அவள் அமர்வாள் என்று அவன் நோக்கினான். அவ்விழி அசைவை நோக்கியதும் அவள் உள்ளம் தெளிந்தது. ஏன் மஞ்சத்தில் அமர்ந்தாலென்ன என்ற எண்ணம் எழுந்ததுமே குருதியெழ உடல் வெம்மை கொண்டது. தோள்களும் கைகளும் வியர்த்து குழைந்தன. நான்கடி வைத்து மஞ்சத்தில் அவனருகே அமரமுடியும், ஆனால் அத்தொலைவைக் கடப்பது எளிதல்ல என்று தோன்றியது. தென்குமரிமுனை வரை நடந்தே செல்வதற்கு நிகர் அது. ஆனால் முதல் அடி எடுத்துவைத்தால் போதும், மலையுச்சியிலிருந்து விழுவதைப்போல அங்கு சென்றுவிடலாம். அதற்கு பதினாறு ஆண்டுகளைக் கடந்து, ஒவ்வொரு கணமும் நெஞ்சுள் உரைத்த சொற்களனைத்தையும் கரைத்தழித்து அங்கு செல்ல வேண்டும்.

“இந்தப் போர் இன்று நம் பக்கமே துலாத்தட்டு தாழும் நிலையில் உள்ளது” என்று துரியோதனன் சொன்னான். “பதினொரு அக்ஷௌகிணி, பதினெட்டு பெருவீரர்கள். அனைத்தையும்விட குருக்ஷேத்திரத்தின் மேடான பகுதியில் நமது படைகள் நிற்கின்றன. கீழிறங்கிச் செல்லும் நமக்கு விசை மிகுதி. பிதாமகர் பீஷ்மர் நம்முடைய முதன்மை படைக்கலம். அவர் வில்லேந்தி தேர்த்தட்டில் நின்று படைமுகப்பில் தோன்றும்பொழுதே பாண்டவப்படைகளில் பெரும்பாலானவர்கள் கைதளர்ந்து வில் தாழ்த்திவிடுவார்கள். தந்தைக்கு எதிர் நிற்பதென்பது அத்தனை எளிதல்ல. முதல் நாளிலேயே இப்போர் முடிந்துவிடவும் கூடுமென்று இன்று பேசிக்கொண்டோம். அதில் சிறு ஐயமென எஞ்சியிருப்பது இளைய யாதவரின் சூழ்ச்சித்திறன்தான்.” அவளுக்குத் தெரிந்தவைதான் அவை என்று அறிந்திருந்தாலும் எண்ணாமல் பேச அவனிடமிருந்தது போரே என்பதனால் அதையே மேலும் பேசினான்.

“அவருக்கு நிகராக இங்கு நம்மிடம் கணிகர் இருக்கிறாரே?” என்று பானுமதி சொன்னாள். அவள் அக்கேள்வியை எண்ணிக் கேட்கவில்லை. அதைப்போன்ற பேதைமை கொண்ட கேள்வி அவள் நாவில் எழுவதில்லை என்பதை அவனும் அறிந்திருந்தான். பெண்கள் தங்களை ஆண்களுக்கு ஒப்புக்கொடுக்கும் வழிகளில் அதுவும் ஒன்று. குரல்திரட்டி தன்னம்பிக்கையுடன் பேசும் நிலையை அவனுக்கு அது அளித்தது. “கணிகரும் மாதுலரும் அவைக்களத்திலும் தனியறையிலும் அரசுசூழ்வதில் நிகரற்றவர்கள். கணிகர் இங்குள்ள எவரும் சென்றடையாத தொலைவிற்கு உளம் செலுத்த வல்லவர். ஆனால் படைநகர்வுகளையும் களச்சூழ்கைகளையும் அவரால் வகுக்க முடிவதில்லை. உண்மையில் கணிகருக்கு எவ்வகையிலும் படைத்தொழில் தெரிந்திருக்கவில்லை. போர் உறுதியாகி அறிவிப்பு எழுந்ததுமே அவர் சொல்லற்றவராகிவிட்டார். ஒவ்வொரு நாளுமென மாதுலர் சகுனியின் குரல் தழைந்து வருகிறது. நெடுநாட்களுக்குப் பின் அவர் இயற்றிய அவைச்சூதென்பது பால்ஹிக மூதாதையின் முடியை கவர்ந்தது மட்டும்தான்” என்றான்.

“சில நாட்களுக்கு முன்பு நாங்களிருவரும் கோட்டைமுகப்பில் சென்றுநின்று பெருகிச் சுழித்து சென்றுகொண்டிருக்கும் படைத்திரளை பார்த்துக்கொண்டிருக்கையில் தன் கைகால்கள் பதறுவதாக மாதுலர் சொன்னார். எளிய எண்ணமென என்னுள் இருந்தது பெருகி பேருருக்கொண்டு இத்தனை பெரிதாக திசைமறைக்க சூழ்ந்திருப்பதை காண்கையில் என்னுள் இருப்பவை அனைத்தையும் நான் அஞ்சுகிறேன் மருகனே என்றார். அவர் நடுங்கிக்கொண்டிருப்பதை கண்டேன். ஓர் உள்ளத்திற்குள் எவருமறியாதிருக்கையில் எண்ணம் எத்தனை சிறிதாக இருக்கிறது! சின்னஞ்சிறு புழுபோல. அது புவி தாங்கும் ஆயிரம்தலை சேடனென்று மாறும் வாய்ப்பு கொண்டது. எண்ணங்களை தாங்களே வளரும்படி ஒருபோதும் விடக்கூடாதென்ற எண்ணத்தை அடைந்தேன் என்றார் மாதுலர். இங்குள்ள ஒவ்வொரு உள்ளத்திற்குள்ளும் வாழும் எண்ணங்கள் ஒவ்வொன்றும் அவ்வாறு பேருருக்கொள்ளும் வாய்ப்புள்ளவை. கோடானுகோடி சேடர்கள் எழுந்தால் புவி தாங்கும் சேடன் தலைதாழ்த்திவிடக்கூடும் என்றார்” என்றான் துரியோதனன். “இப்போதெல்லாம் அவர் பேசுவதென்ன என்பது எனக்கு தெளிவுற புரியாமலே இருக்கிறது.”

பானுமதி புன்னகைத்து “ஆனால் அவையில் இப்போது அவர்கள் இருவரும் எண்ணமுடியாத அளவுக்கு கூர்கொண்ட சொற்களை நீங்கள் எடுக்கிறீர்கள். உங்கள் தோற்றம் ஊழ் நடத்தும் தெய்வங்களுக்குரியது” என்றாள். துரியோதனன் முகம் மலர்ந்து “ஆம், என் இளையோர்களும் அதை கூறினார்கள்” என்றான். “நான் எதையும் கணித்துரைப்பதில்லை. என் உணர்வுகளை வகுப்பதுமில்லை. என்னிலிருந்து எழும் சொற்களின் ஒழுங்கு என் அகத்தை எனக்கு காட்டுகிறது.” அவன் மீசையை நீவி “நான் இன்று கலிவடிவன். என்னிலெழுந்த தெய்வத்தின் சொற்கள் அவை. மெய்யாக இருக்கலாம்” என்றான். “முன்பு ஒவ்வொரு நாளும் என்னை கனவுகள் அலைக்கழித்தன. இன்று அவை முற்றாக மறைந்துவிட்டிருக்கின்றன. என் அகம் கல்லெனச் சமைந்துள்ளது. அதன் நிறைவை எங்கும் உணர்கிறேன்.”

அச்சொற்கள் மீண்டும் ஆழத்தில் எதையோ சென்றுதொட இருவரும் நோக்கை விலக்கிக்கொண்டார்கள். ஒருவரை ஒருவர் உணர்ந்தபடி அமர்ந்திருந்தனர். பின்னர் துரியோதனன் “உன் நோன்பு அவ்வாறே இருக்கட்டும். அது நான் இயற்றிய எதையோ ஈடு செய்வதாகத் தோன்றுகிறது” என்றான். அவள் தன் உணர்வுகள் அலைசுருண்டு பின்னடைவதை உணர்ந்தாள். “அன்று அவையில் என் மகளும் நீயும் அரசமகளிரும் வந்து பாஞ்சாலத்து அரசிக்கு ஆடையளித்தது இத்தனை நாட்களில் எவ்வகையிலோ எனக்கு உகந்ததாக உள்ளது. ஏனென்றால் எந்த வீணனும் தன் அன்னையும் துணைவியும் மகளும் கற்பரசியராக இருக்கவேண்டுமென்றே எண்ணுவான். தன் இல்லத்தில் அன்னை தெய்வங்களின் அருள் நிறைந்திருக்கவேண்டுமென்று எண்ணுவான். எழுந்தெழுந்து விலகும் ஆண்களின் உள்ளம் அவ்வப்போது பின்திரும்பி இல்லத்தை அடைகிறது. அது நிலைக்கோளாக உறுதியுடன் இருக்கவேண்டுமென அவர்கள் விழைகிறார்கள்” என்றான் துரியோதனன்.

அவள் அவனை ஓரவிழியால் நோக்கிக்கொண்டிருந்தாள். துரியோதனன் அவளை நோக்கி விழியெடுக்காமல் “ஒருமுறை நான் தம்பியருடன் சொல்லாடிக்கொண்டிருக்கையில் இதைப்பற்றி பேச்செழுந்தது. அன்று அவையில் நீங்கள் எழுந்து வந்து அச்செயலை செய்யாதிருந்தால் என்ன ஆகியிருக்குமென்று சுபாகு கேட்டான். பெண்சிறுமை செய்யும் வீணன் தன் அன்னையும் துணைவியரும் கொண்ட நிறைபிறழ்தலிலிருந்து பிறப்பவன் என்ற நம்பிக்கை பாரதம் முழுக்க உண்டு. பிறழ்ந்தவனின் பிறப்பே எப்போதும் இழித்துரைக்கப்படும். என் குடிப்பெண்டிர் அனைவருக்கும் இழிவு சேர்ந்திருக்கும். என் கொடிவழியில் பிறக்கவிருக்கும் அனைத்துப் பெண்டிரும் சிறுமை கொண்டிருப்பார்கள். இன்று அன்னையர் குலத்தால் முற்றிலும் நான் துறக்கப்பட்டிருக்கிறேன். அச்சிறுமை என்னிலேயே தங்கிவிடுகிறது. என் குடி வேள்வியனல்போல் தூய்மையுடன் நிற்கிறது. அது அவ்வாறே இருக்கட்டும்” என்றான்.

பானுமதி “நான் அன்று அசலையிடம் சொன்னேன்” என்றாள். உணர்வுமிக்க சொற்களை அவ்வண்ணம் நடுவிலிருந்தே எடுக்கமுடியும் என்பதை அப்போது உணர்ந்தாள். “அன்று இளைய யாதவர் இறுதிச்சொல் உரைத்து கிளம்பியபோது. இளைய யாதவரின் ஆணைப்படி புடவிக்கிறைவனின் ஆலயத்தின் படிகளில் கங்கையில் மலரிதழ் இட்டு உங்களை வந்தடைந்தேன். ஏழாவது பிறவியில் களிற்றை அடைவேன் என நிமித்தச் சொல் எனக்கிருந்தது. உங்களை அவர் அளித்த கொடையென்றே கொண்டிருந்தேன். ஆகவே உங்களைத் துறக்க எனக்கு உரிமையில்லை என்று தோன்றியது. எதன்பொருட்டும் உங்களை அகலாமலிருப்பதே என் கடன்.” துரியோதனன் நிமிர்ந்து நோக்கினான். “கற்பின்பொருட்டு உங்களை விலக்கினேன். அதுவே உங்களை ஏற்க ஆணையிடுகிறது. உங்கள் பிழைகளோ பிறழ்வுகளோ எனக்கு ஒரு பொருட்டே அல்ல. நான் உங்கள் துணைவி. அதற்கப்பால் வேறெந்த நிலையும் எனக்கில்லை.”

அவன் நீள்மூச்சுடன் “அது உனது பேரியல்பு. அதை நான் ஏற்றுக்கொள்கையில் மேலும் சிறியவனாவேன்” என்றான். அவள் அவனை நேர்கொண்டு நோக்கி “களம் செல்கையில் எதுவும் எஞ்சவிட்டு எழலாகாதென்பார்கள். உங்களில் எஞ்சுவதென்ன என்று நானறிவேன்” என்றாள். அப்பேச்சு ஏன் அப்படி தொட்டுத் தொட்டு நீள்கிறது என்று அவள் அறிந்திருந்தாள். அத்தருணத்தில் திரண்டு மறுக்க முடியாததாக வந்து நின்ற ஒன்றை நேர் நோக்குவதை தவிர்க்கும்பொருட்டே அச்சொல்லாடல்கள். திருமண விளையாட்டுகளில் மலர்ப்பந்தை இருபக்கமிருந்தும் மாறி மாறி உருட்டுவதுபோல். அவன் என்ன மறுமொழி சொல்வான் என்பதை சொல்லும் முன்னரே அவள் அறிந்திருந்தாள். அவன் அதை சொன்னதும் நிறைவடைந்து பிறிதொன்றை சொன்னாள். “நீ எனக்கென எதையும் அளிக்கவேண்டாம்” என்று அவன் சொன்னான். இச்சொற்களைச் சொல்லாத ஆண்களுண்டா என்று எண்ணிக்கொண்டாள். “இது எனக்காகவே” என்றாள்.

துரியோதனன் “கலிங்க அரசியை அவள் மாளிகையில் சென்று பார்த்தேன். அவள் என்னை அறியும் நிலையில் இல்லை” என்றான். அக்கூற்றினூடாக மீண்டும் அவர்கள் மிக அகன்றனர். “ஆம், அவள் நிலையை அறிந்தேன்” என்று அவள் சொன்னாள். “அவள் அந்தச் சிற்றரண்மனையில் இருந்து வெளிவந்தே பல்லாண்டுகள் ஆகின்றன. கலிங்கத்திலிருந்து இங்கு வந்துசேரவேயில்லை. நோயுற்ற உடலும் பித்தெழுந்த விழிகளும் கொண்டிருக்கிறாள். அவளுடைய செவிலி அவளிடம் என் வருகையை திரும்பத் திரும்ப சொன்னாள். அவள் என்னை நோக்கினாலும் அடையாளம் கொள்ளவில்லை.” பானுமதி ஒன்றும் சொல்லவில்லை. “கொய்யப்பட்டதுமே அழுகிவிடும் கனிகள் சில காமரூபத்தில் உண்டு என்று கேட்டுள்ளேன்” என்றான் துரியோதனன். அதை மேலும் சொல்ல விரும்பினான். ஆனால் அதற்கப்பால் சொல்ல ஏதுமில்லை என்றும் தெரிந்தது. “பிழைகள் மீறல்கள் என ஒவ்வொருவருக்கும் சித்திரபுத்திரர் கணக்கு வைத்திருப்பார். இத்தருணத்தில் அதைத்தான் எண்ணிக்கொள்கிறேன்” என்றான்.

“குடிகளுக்கென களம்நின்று குருதி சிந்துகையில் அரசன் தான் இழைத்த அனைத்து தீமைகளுக்கும் நிகர் செய்துவிடுகிறான் என்று நூல்கள் சொல்கின்றன” என்று அவள் சொன்னாள். அவன் அதைத்தான் எதிர்பார்த்திருந்தான் என்பது முகத்தில் தெரிந்தது. “ஆம், அரசன் ஒரு வாள் மட்டுமே. அறப்பொழுதுகளில் அதன் பிடியின் நுண்செதுக்கும் பதித்த அருமணிகளும் மட்டுமே தெரிகின்றன. அதன் ஒளிரும் நாக்கு அணியற்றது. கூர் அன்றி பிறிதொன்றும் அல்லாதது” என்றான். “அணிச்சொற்கள். முன்பு நீங்கள் இப்படி பேசியதில்லை” என்று அவள் புன்னகைத்தாள். “முன்பு நான் பேசியதே இல்லை என்று இப்போது தோன்றுகிறது” என்றான். பின்னர் எழுந்துகொண்டு “முன்பின் தொடர்பிலாது பேசிக்கொண்டிருந்ததாக தோன்றுகிறது. ஏன் இத்தனை பேசினேன் என நானே வியந்துகொள்கிறேன். நான் பேச விழைந்தவை இவை அல்ல. ஆனால் பேசிவிட்ட நிறைவையும் அடைகிறேன்” என்றான்.

அவன் கிளம்புகிறான் என்னும் எண்ணம் எழுந்ததுமே அவள் பதற்றமடைந்தாள். சொற்களென ஏதும் நெஞ்சிலும் எழவில்லை. கைகளால் ஆடைநுனியைப் பற்றி சுழற்றிக்கொண்டிருந்தாள். அவன் தன் மேலாடையை மஞ்சத்தில் இருந்து எடுத்து அணிந்துகொண்டு “நான் விடைகொள்கிறேன், அரசி” என்றான். அவள் தன்னையறியாமல் தன் உடலில் ஓர் அசைவென அந்த அடிவைத்தல் நிகழ்ந்ததை உணர்ந்தாள். அதை அவன் உணர்ந்துகொண்டு அவள் விழிகளை நோக்கினான்.