மாதம்: ஜூலை 2018

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 61

tigயுதிஷ்டிரரின் அவைமாளிகையை அங்கிருந்து நோக்க முடிந்தது. அவர்கள் அமர்ந்திருந்த கூடமும் ஒழுகியமையால் அது அசைவிலாது நிற்பதுபோலவும் அப்பாலுள்ள வான்புலத்தை நோக்கியபோது ஒழுகுவதுபோலவும் விழிகளுடன் விளையாடியது அது. அதன் பேருருவே அது அசையாது என்னும் எண்ணத்தை உள்ளத்துக்கு அளிப்பதை ஸ்வேதன் உணர்ந்தான். சின்னஞ்சிறுபொருட்கள் அசைவிலாதிருந்தாலும் உள்ளம் அதே துணுக்குறலை அடைகிறது. மரத்தரைகளில் அறையப்பட்டுள்ள ஆணிகளில் கால்கள் முட்டிக்கொண்டு புண்ணாவதை அவன் பலமுறை நோக்கியதுண்டு.

பதினெட்டு காளைகளால் இழுக்கப்பட்டு நாற்பத்தெட்டு சகடங்களின் மேல் மெல்லிய அதிர்வுடன் ஒழுகிக்கொண்டிருந்த அம்மாளிகையை பார்த்தபடி அரவான் “அங்குதான் அரசர் சந்திப்பு நிகழ்த்துகிறார் என்று தோன்றுகிறது” என்றான். “ஆம், இப்போது ஒற்றர்களிடம் உரையாடிக்கொண்டிருக்கிறார் என்றனர்” என்று ஸ்வேதன் சொல்லி மீண்டும் புன்னகைத்தான். “என்ன? ஏன் புன்னகைக்கிறீர்கள்?” என்று அவன் காலை தொட்டான் அரவான். “இளைய பாண்டவமைந்தர் என்னை பார்த்ததுமே அவர்களில் ஒருவர் என்று எண்ணிவிட்டார். இல்லையேல் அங்கு என்ன நிகழ்கிறதென்று என்னிடம் சொல்லியிருக்கமாட்டார்” என்றான். “இதெல்லாம் எத்தனை எளிதாக முடிவெடுக்கப்படுகிறது! இம்முடிவு இவ்வாறு எடுக்கப்படவில்லை என்றால் எண்ணுவதும் இறுதிசூழ்வதும் எத்தனை கடினமானது!”

“ஆம்” என்று அரவான் புன்னகைத்தான். “என் அன்னை சொல்வதுண்டு, செவியும் கண்ணும் வெளியுலகிலிருந்து உள்ளே வருகின்றன. நாவும் மூக்கும் உள்ளிருந்து வெளியுலகுக்கு செல்கின்றன. சுவையும் மணமுமே முடிவெடுக்க உதவவேண்டும் என்று” என்றான். பின்னர் “இத்தனை முறை ஒழுகும் மாளிகைகளை நோக்கியும்கூட இதன் விந்தை விழிக்கு சலிக்கவில்லை” என்றான். “வங்கநாட்டில் கங்கையின் அழிமுகத்தில் மிதக்கும் ஊர்கள் உண்டு. அங்கே வாழ்பவர்கள் நிலத்துக்கு வந்தால் நிலைகொள்ளாமல் தவிப்பதுண்டு. அமர்ந்து வாயுமிழ்பவர்களையும் கண்டிருக்கிறேன்” என்றான் ஸ்வேதன்.

“ஆம், அவர்கள் பீதர்குருதி கொண்ட மக்கள் என்று கேட்டிருக்கிறேன்” என்றான் அரவான். “அனைத்தும் அறிந்துள்ளாய்” என்று ஸ்வேதன் சொன்னான். “என் அன்னை என்னிடம் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பாள். இளமைமுதல் நாகசூதர்களின் கதைகள் கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள் இருவருமே” என்றான் அரவான். “உங்களுக்கு எதற்கு வெளியுலகு?” என்றான் ஸ்வேதன். “நாகம் வளைக்குள் உடல்சுருட்டி வைக்கையிலும் தலையை வாயிலில் வைத்து வெளியே விழிநட்டு அமர்ந்திருக்கும். காட்டில் நாகமறியாத எதுவும் நிகழ்வதில்லை” என்று அரவான் சொன்னான்.

மீண்டும் மாளிகையை நோக்கி “வழியில் இந்தப் பெருமாளிகை போவதற்கு இடமில்லை என்றால் என்ன செய்வார்கள்? இதை எப்படி படகுகளில் ஏற்றுவார்கள்?” என்றான். “வெறும் நாற்பத்தெட்டு மரக்கொளுவைகளால் இணைக்கப்பட்டது இம்மாளிகை. இரண்டு தச்சர்களால் அரைநாழிகையில் இந்த மாளிகையை பலகைகளாகவும் சகடங்களாகவும் மாற்றிவிடமுடியும்” என்று ஸ்வேதன் சொன்னான். “மீண்டுமொரு அரைநாழிகையில் மாளிகையாக மாற்றிவிடுவார்கள்.” அரவான் “உரகங்களில் ஒருவகை செல்வழியின் அளவுக்கேற்ப சிறிதாகும். தேவையென்றால் தன்னை துண்டுகளாக ஆக்கிக்கொண்டு மறுபக்கம் சென்று மீண்டும் இணையும் என்று ஒரு கதை உண்டு” என்றான். “நாகருலகில் அனைத்துக்கும் கதைகள் உள்ளன” என்றான் ஸ்வேதன்.

ஸ்வேதன் அம்மாளிகையை மீண்டும் நோக்கியபோது அதன் பேருரு அவனை திகைப்புகொள்ளச் செய்தது. “இங்கு போர்ச்சிற்பிகள் சில ஆயிரம் பேராவது இருப்பார்கள். அவர்களால் நாம் நோக்கி நின்றிருக்கையிலேயே கங்கைக்குக் குறுக்காக ஆயிரம் பெரும்படகுகளை நிறுத்தி இணைத்துக்கட்டி அவற்றின் மேல் பலகைகளை அடுக்கி ஒரு பாலத்தை அமைக்க முடியும். படைகள் மறுபக்கம் வந்தவுடனேயே பலகைகளை கழற்றி  படகுகளை வண்டிகளில் அடுக்கி கிளம்பிவிட முடியும்” என்று ஸ்வேதன் சொன்னான்.

“இவை மிக எடைகுறைவான பலகைகள்” என்றான் அரவான். “நன்கு பார்! இவை பலகைகளே அல்ல” என்று ஸ்வேதன் சொன்னான். தரையை சிலகணங்கள் கூர்ந்து பார்த்தபின் எழுந்து அரவான் “ஆம், மூங்கில்கள்!” என்றான். “நன்கு முற்றி மணியோசை எழும் மூங்கில்களை பிளந்து பரப்பி பெரிய உருளைகளால் உருட்டி பலகைகளென மாற்றுகிறார்கள். இவை யானை நின்றாலும் ஒடியாத அளவுக்கு எடைதாங்கும். ஒரு பெரும்பலகையை ஒரு மனிதன் தன் கையால் எளிதில் தூக்கி அடுக்கிவிடமுடியும். இவற்றை மடிக்கவும் முடியும் சுருட்டவும் முடியும்” என்று ஸ்வேதன் சொன்னான். அரவான் அப்பலகைகளை கைகளால் தடவி நோக்கி “நேற்றுகூட எண்ணினேன், இது எந்த மரப்பலகை என்று. வெண்கலம்போல் பொன்மினுப்பு கொண்டுள்ளது” என்றான்.

யுதிஷ்டிரரின் மாளிகை முகப்பில் வந்து நின்ற காவலன் சிறு கொம்போசையை எழுப்பினான். உள்ளிருந்து ஒற்றர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்து ஓசையில்லாமல் புரவிகளிலேறி கலைந்து சென்றனர். காற்றில் சருகுகள் பறப்பதுபோல என ஸ்வேதன் எண்ணினான். அடுத்த கொம்போசைக்காக அவன் புலன்கள் காத்திருந்தன. இருமுறை பெருமூச்சுவிட்டு அத்தருணத்தின் இறுக்கத்தை கடந்தான். மீண்டுமொருமுறை கொம்புகள் ஒலித்தன. அம்மாளிகையிலிருந்து புரவியிலேறி அணுகி வந்த வீரன் “இந்திரப்பிரஸ்தத்தின் அரசரின் ஆணை! அரசுசூழ் அவை கூடவிருக்கிறது. அதில் குலாடகுடியின் இளவரசர் ஸ்வேதனும் உடன் வந்த நாகர்குல இளவரசன் அரவானும் அவைமுகம் கொள்க!” என்று அறிவித்தான்.

அரவான் பதற்றத்துடன் எழுந்துகொண்டு உடனே தயங்கி நின்று “எனக்கு முறைமைகள் எதுவும் தெரியாது. தாங்கள் செய்வதை அவ்வண்ணமே நானும் செய்கிறேன்” என்றான். ஸ்வேதன் “எந்த முறைமையும் தேவையில்லை. நீ பார்க்கப் போவது மும்முடி சூடி இந்திரப்பிரஸ்தத்தின் அரியணையில் அமர்ந்த அரசரை அல்ல. உனது மூத்த தந்தையை. அவர் பேரரறத்தார், பேரன்பினர் என்பதை அறியாதவர் இல்லை. சென்றதும் கால் தொட்டு வணங்கி அருகே நில். அவர் உன்னை உடல் சேர்த்தணைத்து தழுவிக்கொள்வார்” என்றான். அரவான் அச்சம் விலகா முகத்துடன் தலையசைத்தான்.

எழுந்து அணுகியதும் மாளிகையின் சகடங்கள் பெரிதெனத் தெரிந்தன. எறும்புத்திரளால் இழுத்துச்செல்லப்படும் உணவுத்துணுக்கு என ஸ்வேதன் எண்ணினான். கீழிருந்து பார்க்கையில் தேரட்டையின் கால்கள்போல அதன் சகடங்கள் நிரையாக சென்றன. அதன் பின்னால் தானும் நகர்ந்துகொண்டிருந்த முற்றத்தில் தேர்களும் புரவிகளும் ஒவ்வொன்றாக வந்து நிற்க அவற்றிலிருந்து அரசர்களும் படைத்தலைவர்களும் இறங்கி பாண்டவ மைந்தர்களால் வரவேற்கப்பட்டு முகமனுரைகளுடன் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். பெரும்பாலான வீரர்கள் ஒளிரும் கவசங்கள் அணிந்திருந்தமையால் உருவிய உடைவாள்கள் உயிர்கொண்டலைவதுபோல தோன்றினர்.

மாளிகையின் ஓரத்தில் இருவர் சேர்ந்து செல்லும் அளவுக்கு அகலமிருந்த இடைநாழி இரண்டு வாயில்களை இணைத்தது. பின்னாலிருந்த வாயிலினூடாக அவையோர் உள்ளே கொண்டு செல்லப்பட்டனர். முதல் வாயிலில் யுதிஷ்டிரரின் காவலர்கள் இருவர் வாளுடன் நின்றிருந்தனர். ஸ்வேதன் வந்திறங்கும் அரசர்களையும் படைத்தலைவர்களையும் கூர்ந்து நோக்கி அடையாளம்காண முயன்றான். அங்கிருந்து பார்க்கையில் அவர்களின் கவசங்களிலிருந்த முத்திரைகளைக்கொண்டு நாடுகளை உய்த்துணர முடிந்தது. திருஷ்டத்யும்னன் வந்திறங்கி உள்ளே சென்றபோது அவன் அருகே நின்றிருந்த அரவானிடம் “பாஞ்சாலர்! அவரைத்தான் நாங்கள் முதலில் சந்தித்தோம்” என்றான்.

அரவான் வந்திறங்கி உள்ளே சென்றுகொண்டிருந்த அரசர்கள் எவரையும் பார்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. அங்கிருந்த முறைமைகளையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். “முறைமைகளிலுள்ள வேறுபாடு வியப்பூட்டுகிறது, மூத்தவரே” என்றான். “ஆம், முறைமைகளின் நோக்கமே வேறுபாடுகளை அழுந்த நிறுவுவதுதான்” என்றான் ஸ்வேதன். “முடிசூடியவருக்கு முதன்மை முறைமை அளிக்கப்படும். மூத்தோருக்கு பின்னர். அரசகுடியினருக்கு அதற்குப் பின்னர். படைத்தலைவர்களுக்கு அம்முறைமைகள் அளிக்கப்படுவதில்லை” என்றான் ஸ்வேதன்.

தேரிலிருந்து துருபதர் இறங்கினார். அவர் சர்வதனால் வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டார். தொலைவிலேயே உத்தரன் வருவதை ஸ்வேதன் பார்த்துவிட்டான். தன்னை அவன் பார்த்துவிடக்கூடாதென்று எண்ணியவன்போல சற்றே பின்னடைந்தான். ஆனால் தன் முகம் அவனுக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. உத்தரன் புரவியிலிருந்து இறங்கி ஆடையை சீர்படுத்தியபடி யௌதேயனிடம் பேசிக்கொண்டு இடைநாழிக்குள் ஏறி உள்ளே சென்றான். அதன் பின்னர் வந்த தேரின் கொடி தொலைவிலேயே விராடரை காட்டியது. அவன் மெல்லிய குரலில் “தந்தை” என்றான்.

அரவான் “உங்கள் தந்தையா?” என்றான். “ஆம், நெடுங்காலம் முன் என் அன்னையை துறந்துவிட்டவர்” என்றான் ஸ்வேதன். “உங்கள் முகம் நினைவிருக்குமா?” என்று அரவான் கேட்டான். “இருக்கலாம். ஆனால் என் முகம் அவருடையதல்ல. நானும் என் இளையோனும் அன்னையின் தோற்றம் கொண்டவர்கள்” என்றான் ஸ்வேதன். “அது எங்கள் நல்லூழ். இல்லையேல் குலாடகுலத்திலும் தனிமைபட்டிருப்போம்.” அரவான் “முதியவர்” என்றான்.

தேரிலிருந்து மெல்லிய நடுக்குடன் இறங்கிய விராடர் தன் உடன் இறங்கிய அமைச்சரிடம் முகம் கடுகடுக்க ஏதோ சொன்னார். பின்னர் முகமனுரைத்த நிர்மித்ரனிடம் அதே முகச்சுளிப்புடன் ஓரிரு வார்த்தைகள் சொன்னபின் நடுங்கும் சிற்றடிகள் வைத்து மாளிகை நோக்கி சென்றார். அரவான் “உடலெங்கும் நஞ்சு நிறைந்துள்ளது…” என்றான். “ஆம், படைஎழுந்தபின்னர் இரவும் பகலும் குடித்துக்கொண்டிருக்கிறார் என்றார்கள்” என்றான் ஸ்வேதன்.

அரவான் “ஓடுடன் விழுங்கிய நாகம் மிகையாக நெளியும் என எங்களிடம் ஒரு பழமொழி உண்டு” என்றான். ஸ்வேதன் பெருமூச்சுவிட்டு திரும்பி அரவானிடம் “உன் தந்தையை பார்த்தபோது என்ன உணர்ந்தாய்?” என்றான். “ஏன்?” என்று அவன் கேட்டான். “சொல், அது மகிழ்வூட்டுவதாக இருந்ததா?’ என்றான் ஸ்வேதன். அரவான் “ஆம், என் வாழ்விலடைந்த பெருமகிழ்வு என்பது அதுவே” என்றான். “அக்கணத்தில் நான் இனித்து இனித்து எழுந்துகொண்டிருந்தேன்.” புன்னகத்து “நாகர்குடியின் பழமொழி அதை தன்நிழலை இணையென எண்ணி பிணைந்து நெளியும் நாகத்தின் நிலை என்கிறது. முடிவிலா திளைப்பு அது” என்றான்.

“நீ அறிந்த அந்த உவகை எப்படிப்பட்டது? ஒரு நிலைகுலைவை பெரும்பதற்றத்தை உணர்ந்தாயா?” என்றான். அரவான் ஒருகணம் எண்ணியபின் “முதலில் அதை ஒரு பதற்றமாகவே உணர்ந்தேன். என்ன செய்ய வேண்டும் என்று தெரியாத பரபரப்பு என் உடலில் இருந்தது. எண்ணங்கள் தொடர்ச்சி கொள்ளவில்லை. ஆனால் எப்போதோ ஒரு தருணத்தில் அவர் என்னைப்போல் இருப்பதாக தோன்றியது. ஆடியில் என் முதிய உருவை பார்ப்பது போல. அப்போது என் அகம் துள்ளத்தொடங்கியது. பின்னர் அவர் என்னை சினந்த போதும்கூட உள்ளம் கொண்டாடியபடியேதான் இருந்தது” என்றான்.

ஸ்வேதன் பெருமூச்சுவிட்டு “நல்லூழ் கொண்டவன் நீ” என்றான். “உங்கள் தந்தையை பார்த்தது மகிழ்வூட்டவில்லையா?” என்றான் அரவான். “இல்லை. அது மகிழ்வூட்டாதென்றே எண்ணியிருந்தேன். ஆயினும்கூட இத்தருணம் மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது” என்றான் ஸ்வேதன். “ஏன்?” என்று அரவான் கேட்டான். ஸ்வேதன் சிலகணங்கள் வேறெங்கோ நோக்கி விழிகளில் ஒளி நின்றிருக்க அமைந்திருந்தான். பின் திரும்பிநோக்கி “மிகச்சிறியவர், மிக எளிய மனிதர்” என்று சொன்னான். அரவான் “அதை எப்படி உணர்ந்தீர்கள்?” என்றான்.

ஸ்வேதன் “தெரியவில்லை. அவரது உடலசைவிலும் முகத்திலும் அச்சிறுமைதான் இருக்கிறது. அவர் என் அன்னையை துறந்தது அன்னையின் பிழையாலோ அரசியல் அழுத்தங்களாலோ அல்ல. அவர்கொண்ட உளச்சிறுமையால், அறிவின்மையால் மட்டும்தான். என் அன்னையை அவர் அஞ்சியிருக்கலாம். அன்றி வெறுமனே அறிவின்மையால்கூட இருக்கலாம். அறிவற்றோர் நினைவுகளை தொகுத்துப் பேணும் ஆற்றல் இல்லாததனாலேயே உறவுகளில் அழுத்தமற்றவர்களாக மாறுகிறார்கள். சென்ற காலத்தை அவ்வபோது வெட்டிவிட்டு நிகழ்காலத்தில் மட்டும் வாழ்கிறார்கள். அவரிடம் என்னைப்பற்றிய நினைவுகளல்ல, என் அன்னையைப்பற்றிய நினைவுகளேகூட அழுத்தமாக இருக்க வாய்ப்பில்லை. அவருடைய இறந்தகாலமே எஞ்சியிருக்காது அவருள். உண்மையில் இப்போது இந்த அவையை விரைவாக முடித்து மதுவுண்டு மயங்கும் பொருட்டு தன் பாடிமாளிகைக்கு மீள்வதைப்பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது” என்றான். “ஆம், அவரது உடல் நடுக்கு நஞ்சு நரம்புகளை சிதைத்துவிட்டிருப்பதை காட்டுகிறது” என்றான் அரவான்.

அவை நிறைந்துவிட்டதை அறிவிக்கும் சங்கொலி எழுந்தது. “நம்மை அழைக்கவிருப்பதாக சொன்னார்கள்” என்று அரவான் சொன்னான். “நாம் அவையமர்வதற்கு வரவில்லை. அவை முன் நின்று சொல்கொள்ள வந்துளோம். அவை முறைமைகள் முடிந்தபிறகே அழைக்கப்படுவோம்” என்றான் ஸ்வேதன். அரவான் “ஓர் அவையை முற்றிலும் நோக்கி அறிவதற்கு நான் விழைகிறேன், மூத்தவரே” என்றான். அவையின் முன் வாயில் மூடப்பட்டது. அரவானிடம் திரும்பி “உங்கள் குடியில் அவை இல்லையா?” என்றான் ஸ்வேதன்.

அரவான் “அது அன்னையர் அவை. அவர்கள் முறைமைகள் எதையும் பேணுவதில்லை. சிறிய வட்டமாக அமர்ந்து மெல்லிய குரலில் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள். பெரும்பாலும் மூதன்னையர்.  அவைமூத்த அன்னை இறுதியாக உரைப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். நெடுங்காலமாக இதுவே வழக்கம்” என்றான். ஸ்வேதன் சிரித்து “நாங்கள் சற்றே முன்னகர்ந்திருக்கிறோம். எங்களுக்கும் அன்னையர் சொல்லே இறுதியானது. ஆனால் ஆண்களும் அவைகூட இயலும்” என்றான்.

tigஅவையிலிருந்து சிற்றமைச்சர் சுரேசர் இறங்கி வந்து “இளவரசர்களே, தாங்கள் அவை முன் தோன்றும்பொருட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றார். ஸ்வேதன் அதுவரை இல்லாத படபடப்பை உணர்ந்தான். அவையில் அர்ஜுனன் இல்லையா என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒருவேளை முதல் அவையிலேயே அவர்கள் உள்ளே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. மெல்ல அரவானை தொட்டு “வருக!” என்றபடி அவன் நடந்தான்.

நகர்ந்துகொண்டிருந்த அவைமாளிகையில் படிகளிலேறும்போது சற்றே இடறி தூணை பற்றிக்கொண்டான். இடைநாழியினூடாக பின்புற வாயிலில் நுழைய முற்பட்டபோது சுரேசர் “அல்ல. அவையோர் நுழைவதற்குரியது இது. அரசர் முன் நிற்போர் நுழைவதற்கான வாயில் அது” என்று முன்வாயிலை நோக்கி அழைத்துச் சென்றார். வாயிலருகே அவர்கள் இருவரையும் நிற்கவைத்துவிட்டு அவர் உள்ளே சென்று அவர்களின் வரவை அறிவித்தார். பின் வெளியே வந்து “உள்ளே செல்க!” என்றார்.

ஸ்வேதன் அரவானிடம் கைகூப்பியபடி “வருக!” என்று உள்ளே நுழைந்தான். அரவானை பார்த்ததும் அவையில் எழுந்த வியப்பொலியின் கார்வை அவனை ஒருகணம் சொல்லிழக்க வைத்தது. அறியாமொழியின் ஒற்றைச் சொல் என. முறைமைப்படி அவை வணக்கத்தையும் அரசவணக்கத்தையும் உரைப்பதற்கு அவனால் இயலவில்லை. அவையிலிருந்த முதுநிமித்திகர் உரத்த குரலில் “இளைய பாண்டவர் அர்ஜுனரின் குருதியில் நாகர்குலத்து அரசி உலூபியின் வயிற்றில் பிறந்த மைந்தன் அரவான் அவை நிகழ்ந்திருக்கிறார். இங்குளோர் அனைவரும் சேர்ந்தளிக்கும் வாழ்த்துக்களும் இன்சொற்களும் அவருக்கு உரித்தாகுக! ஆம் அவ்வாறே ஆகுக!” என்றார்.

அவையிலிருந்தவர்கள் “வாழ்க! நலம் திகழ்க!” என்று குரலெழுப்பினர். அரவான் முன்னால் சென்று கைகூப்பி தலைவணங்கினான். யுதிஷ்டிரர் எழுந்து கைநீட்டியபடி வந்து அரவானின் தோளை சுற்றிப் பற்றி தன் உடலுடன் சேர்த்துக்கொண்டார். ஸ்வேதன் அவருக்குப் பின்னால் அர்ஜுனனும் பீமனும் நகுலனும் சகதேவனும் நிற்கக் கண்டான். உடனே விழிகளை ஓட்டி அவையில் இளைய யாதவர் அமர்ந்திருப்பதை பார்த்தான். அவர் அங்கு இல்லாதவர்போல விழிசரித்து அமர்ந்திருந்தார். கைகள் இருக்கையின் பிடிகளில் தொய்ந்து அமைந்திருந்தன.

வாழ்த்தொலிகள் எழுந்தமைந்தன. ஸ்வேதன் சாத்யகியை பார்த்தான். யுதிஷ்டிரர் தாழ்ந்த குரலில் அரவானிடம் இன்சொற்களை சொல்லிக்கொண்டிருந்தார். நிமித்திகர் “குலாடபுரியின் இளவரசரும் விராடரின் மைந்தருமான ஸ்வேதனும் இளையவரும் தங்கள் படையுடன் நம் தரப்பில் நின்று போரிடும் பொருட்டு வந்திருக்கிறார்கள். அறத்திற்காக படைகொண்டு எழுந்த அவர்களின் வெற்றிக்காகவும் புகழுக்காகவும் இந்த அவை வாழ்த்துவதாகுக!” என்றார். “வெல்க! நலம் சூழ்க!” என்று அவையினர் வாழ்த்தினர்.

அப்போதுதான் பீமனுக்குப் பின்னாலிருந்து சங்கன் வந்து வணங்குவதை ஸ்வேதன் கண்டான். திடுக்கிட்டு நிலைமீண்டு அவையை நோக்கி மும்முறை வணங்கியபின் யுதிஷ்டிரரிடம் “அரசே, நானும் என் இளையோனும் எங்கள் படையுடன் இங்கு வந்துள்ளோம். இப்போரில் எங்கள் குருதியும் ஒருதுளி விழுமென்றால் எங்கள் குலம் பெருமையுடையதாகும்” என்றான். யுதிஷ்டிரர் வலதுகையால் தழுவியிருந்த அரவானை இடது கை நோக்கி கொண்டு சென்ற பின் வலக்கையை அவனை நோக்கி நீட்டினார்.

ஸ்வேதன் அந்த அழைப்பை புரிந்துகொள்ளாமல் மெல்லிய உடல் நடுக்கத்துடன் நின்றான். “வருக!” என்று யுதிஷ்டிரர் அழைத்த பின்னரே அவர் தன்னை அழைக்கிறார் என்று புரிந்துகொண்டு பதறும் கால்களை எடுத்து வைத்து அவரை நோக்கி சென்றான். அவர் கை தன் தோளில் பட்டதும் முழந்தாளிட்டு அவர் காலடியைத் தொட்டு சென்னி சூடினான். அவர் அவனை தன் உடலுடன் இணைத்துக்கொண்டு “இளையவனாக இருக்கிறாய். போருக்கு வரும் அகவை உனக்கில்லை என்று தோன்றுகிறது” என்றார்.

“எங்கள் குடி சற்று சிறிய உடல் கொண்டது, அரசே” என்று ஸ்வேதன் சொன்னான். “என் இளையோன் மட்டுமே அதற்கு மாற்று. நான் வில்பயின்றது இளைய பாண்டவரின் நினைவை நெஞ்சில் நிறுத்தி. அவன் பீமசேனரின் மாணவரென்று கதை பயிண்றான். இங்கு வந்து எங்கள் முழுதளிப்பை அவர்களுக்கு காணிக்கையாக்க விழைந்தோம்” என்றான். யுதிஷ்டிரர் திரும்பி சங்கனை அழைக்க அவன் அணுகி கால்தொட்டு வணங்கினான். “இளமையில் மந்தன் இருந்ததைப்போல் இருக்கிறான். பெருந்தீனிக்காரன் என நினைக்கிறேன்” என்றார் யுதிஷ்டிரர். “ஆம், அவனாகவே நிறுத்துவதில்லை” என்றான் ஸ்வேதன்.

யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டு “மீண்டும் மீண்டும் இளையோர்! நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எத்தருணத்தில் இம்முடிவை எடுத்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு கணமும் இதைத்தானே நீ எண்ணினாய் என்று என் முன் தளிர்களாக காட்டிக்கொண்டிருக்கிறது ஊழ்” என்றார். ஸ்வேதன் “நான் பிறந்த குடி இன்றுவரை அரசவைகளில் குடியொப்புதல் பெறாதது, அரசே. இப்போர் அதற்குரிய தருணமென்றே எண்ணுகிறேன்” என்றான். “அரசொப்புதல் பெறாத குடியா? என்ன சொல்கிறாய்? நீ விராடரின் மைந்தனல்லவா?” என்றார் யுதிஷ்டிரர். “ஆம், ஆனால் விராடபுரி எங்களை சென்ற பதினேழாண்டுகளாக ஏற்றுக்கொள்ளவில்லை” என்றான் சங்கன்.

யுதிஷ்டிரர் சினத்துடன் திரும்பி விராடரைப் பார்த்து “விராடரே, மைந்தர்களை நீங்கள் துறந்தீர்கள் என்பது உண்மையா?” என்றார். விராடர் திடுக்கிட்டு சுற்றும் நோக்கி அதன்பின்னர் கேள்வியை உணர்ந்து எழுந்து “இல்லை, அவ்வாறு முறைப்படி எதுவும் நிகழவில்லை. என் அரசு கீசகனால் கையகப்படுத்தப்பட்டது. குலாடபுரியுடனான என் உறவுகளை முறித்துக்கொள்ளும் முடிவுகளை அவனே எடுத்தான். அவனுக்கப்பால் நான் எதுவும் எண்ணக்கூடவில்லை” என்றார். யுதிஷ்டிரர் உத்தரனை நோக்கி திரும்பி “குலாடபுரியின் இளவரசர்களான இவர்களை ஏற்க உங்களுக்கு ஏதேனும் தடையுள்ளதா உத்தரரே?” என்றார்.

உத்தரன் “இல்லை அரசே, நான் இவர்களை சிற்றிளமையில் பார்த்தது. பின்னர் இவர்களைப்பற்றிய பேச்சே எழவில்லை. இத்தருணத்தில் எனக்கு ஆற்றல் கொண்ட இரு இளையோர் இருக்கிறார்கள் என்ற எண்ணமே ஊக்கத்தை அளிக்கிறது” என்றான். “ஆனால் என் இளையோன் இப்போரில் களமிறங்க வேண்டியதில்லை என்ற எண்ணமும் உடனெழுகிறது. இவர்கள் இக்களத்தில் பெரிதாக ஆற்றுவதற்கு ஏதுமில்லை. அவர்களை இங்கேயே நான் விராடபுரிக்கும் பட்டத்து இளவரசர்களாக நீர் வார்த்து அரியணை அமர்த்துகிறேன். எங்கள் இருகுடிக்கும் முடியுரிமை கொண்டவர்களாக இவர்கள் திகழவேண்டும்.”

ஸ்வேதன் “நான் முடியையோ கொடியடையாளத்தையோ நாடி வரவில்லை. என் ஆசிரியரின் அடிநிழலில் அமர்ந்து இங்கு போரிடவே வந்தேன். பிறிதொன்றையும் வேண்டேன்” என்றான். உத்தரன் மேலும் ஏதோ சொல்ல நாவெடுக்க பீமன் “போருக்கென விழைந்து வந்த எவரையும் நாம் மறுக்க வேண்டியதில்லை” என்றான். ஸ்வேதன் “போரில் சிறப்புற்று கொள்ளும் செல்வமும் மண்ணுமே எங்களுக்குரியவை. நான் விழைவது எந்தை எங்களை ஏற்கவேண்டும் என்பதை மட்டுமே. அதை அவர் அளிப்பாரென்றால் நிறைவுற்றேன்” என்றான். “இது ஊழி. விதைகள் சில பேணப்படவேண்டும்” என்றான் உத்தரன்.

இளைய யாதவர் எழுந்து அவையை நோக்கியபோது அனைவரும் அமைதி கொண்டனர். “இது பாரதவர்ஷத்தின் பெரும்போர்க்களம். உள்ளத்தாலோ கனவாலோ இதில் ஈடுபடாதோர் இந்நிலத்தில் இல்லை. ஒவ்வொருவரும் தாங்கள் யாரென்றும், தங்களால் இயல்வதென்ன என்றும் அறிந்துகொள்ளும் தருணம் இது. முனிவரை தவத்திலிருந்தும் வீரனை களத்திலிருந்தும் விலக்கலாகாதென்று தொல்நெறிகள் சொல்கின்றன. தன் முழுமை நோக்கி செல்லும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. எனவே எவரையும் நாம் விலக்கவேண்டியதில்லை” என்றார்.

“மூத்தோர் சொல்லும், தந்தையரின் அச்சமும், குலத்தோரின் விலக்கும், துணைவியின் விழிநீரும் படைக்குச் செல்பவனுக்கு குறுக்கே நிற்கலாகாது என்பது தொல்வழக்கு. இவ்விளையோர் படைகொண்டு இத்துணை தொலைவு வந்ததே இவர்களின் ஊழ் செலுத்துவதனால்தான். அது அவ்வாறே ஆகுக!” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரர் “உங்கள் சொற்களுக்கு அப்பால் எங்கள் அகம் எண்ணுவது ஏதுமில்லை. ஆனால்…” என்று சொல்லத் தொடங்க பீமன் உரத்த குரலில் “மூத்தவரே, நமது படைப்பிரிவில் இவர் அகவை கொண்ட பல்லாயிரம் இளைஞர்கள் உள்ளனர். அனைவரும் நமது மைந்தர்களே. அவ்வாறிருக்க நம் குருதியினர் பொருட்டு மட்டும் நீங்கள் கொள்ளும் இத்துயரில் அறமின்மை ஒன்று உள்ளது. அதை எண்ணுக!” என்றான்.

யுதிஷ்டிரர் தன் கைகளை விரித்து “நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இக்களத்தில் முற்றிலும் சொல்லிழந்து செயலற்றிருப்பவன் நானே. இப்பெருக்கு தன் வழி சேர்ந்து தன் இலக்கை சென்றடையும். நானும் அதில் ஒரு துளி மட்டும்தான்” என்றார்.  பீமன் திருஷ்டத்யும்னனிடம் “இவர்களின் படைப்பிரிவு நமது படையில் எங்கு எப்பணி ஆற்றும் என்பதை முதன்மை படைத்தலைவர் முடிவு செய்யட்டும்” என்றான்.

திருஷ்டத்யுமனன் “நேற்றே அப்படைகளை நோக்கிவிட்டேன். அவர்கள் குறைந்த தொலைவுக்கு விரைந்து சென்றபடி அம்பெடுக்கும் ஆற்றல் கொண்டவர்கள். ஆகவே எப்பொழுதும் படைமுகப்பிலேயே நிறுத்தத்தக்கவர்கள். அத்தகையோர் எந்த படைப்பிரிவிற்கும் பெரும் செல்வமென கொள்ளத்தக்கவர்கள். நாகத்தின் நாவாகவும் பருந்தின் உகிராகவும் நண்டின் கொடுக்கு முனையாகவும் காளையின் கொம்பென்றும் திகழும் ஆற்றல் கொண்டவர்கள்” என்றான். “இப்போது நம்மிடம் அத்தகைய படைப்பிரிவுகள் ஏழு மட்டுமே உள்ளன. குருக்ஷேத்ரத்திற்குச் சென்றபின் எதிரியின் படைசூழ்கை கண்டே நம் படையமைவை ஒருக்கவிருக்கிறோம். அங்கு சென்றபின் முடிவெடுப்போம்” என்றான். “அவ்வாறே ஆகுக!” என்று யுதிஷ்டிரர் கையசைத்தார்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 60

tigகாலையில் முதற்புலரியில் கரிச்சான் குரலெழுப்பும்போதே விழித்துக்கொண்ட ஸ்வேதன் தன்னைச் சுற்றி நிழல்கள்போல பாண்டவர்களின் படை அசைந்துகொண்டிருப்பதை கண்டான். எழுந்தமர்ந்தபோது பல்லாயிரக்கணக்கான பந்தங்களின் ஒளியில் உருவங்களும் நிழல்களும் இணைந்து பலமடங்காக பெருகிய படை பறவைமுழக்கம்போல் ஓசையெழுப்பி காலைச் செயல்களை ஆற்றிக்கொண்டிருந்தனர். அவன் எழுந்து உடலில் படிந்திருந்த புழுதியை தட்டினான். புலரிக்குளிரில் புழுதியை அள்ளியபடி தெற்கிலிருந்து மலைக்காற்று வீசியிருக்கக்கூடுமென்று உணர்ந்தான்.

குழலை அவிழ்த்து கைகளால் உதறி மீண்டும் சுழற்றிக் கட்டியபோதுதான் அரவானின் நினைவு வந்தது. குடிலுக்குள் நுழைந்து ஒருகணம் கழித்தே அவன் அங்கில்லை என்பதை உணர்ந்து திடுக்கிட்டான். வெளியே வந்து நான்குபுறமும் சுற்றிப் பார்த்தான். அங்குள்ள அத்தனை பேரும் வேறுவகையான உடல்களுடனும் அசைவுகளுடனும் நீருக்குள் தெரியும் பாவைகள்போல அப்பாலிருந்தனர். அவர்கள் எவரிடமேனும் எதையாவது சென்று கேட்க முடியுமென்று தோன்றவில்லை. அப்பெருந்திரளில் அரவான் எங்காவது சென்றிருந்தால் அவனாகவே திரும்பி வரும் வரை கண்டறிவதும் எளிதல்ல.

அவன் என்ன செய்வதென்றறியாமல் தன் குடிலிருந்த பகுதியை சுற்றி வந்தான். அங்கு படைவீரர்கள் காலைக்கழிப்புக்காக சுரைக்குடுவைகளில் நீருடன் நீண்ட நிரைகளாக நின்றிருந்தார்கள். இடைவரை உயரமான நான்கு தட்டிகளால் ஒருவர் அமரும்படி மறைக்கப்பட்ட சிற்றிடத்திற்குள் குழி தோண்டப்பட்டு அதன்மேல் குழியுள்ள பலகை போடப்பட்டிருந்தது. அந்தப் படைப்பிரிவின் அனைவரும் அங்கு மலம் கழித்ததும் அந்த துளையிடப்பட்ட மரமேடையை எடுத்தகற்றி தோண்டப்பட்ட குழியை மண்ணிட்டு மூடினர். முந்தைய நாளே ஒவ்வொருவரும் தங்களுக்கென பிடித்து வைத்திருந்த நீரில் முகம் கழுவி பல்தேய்த்துக்கொண்டனர். அதற்குள் அவ்வாழ்க்கை பழகிவிட்டிருந்தமையால் மிகுந்த விரைவுடன் அதை நிகழ்த்திக்கொண்டிருந்தனர்.

அவன் அங்கு நின்று பிறவற்றில் உளம் செலுத்தியபோது அவன் எண்ணத்தின் ஆழம் மறுதிசைக்கு சென்று அமைந்தது. அரவான் அக்குடிலுக்குள்தான் இருக்கிறான் என ஓரு நுண்புலன் சொன்னது. மீண்டும் குடிலுக்குள் சென்று அதன் உட்பகுதியின் மூலைகளை நன்கு பார்த்தான். விழிதூக்கியபோது சரிந்த கூரையின் இரு மூங்கில்களுக்கு நடுவே கூரையுடன் ஒட்டியதுபோல படிந்து அரவான் துயின்றுகொண்டிருப்பதை பார்த்தான். முதலில் ஏனென்றறியாத ஒரு நடுக்குதான் உருவாகியது. அவன் வேறோர் உயிர் என்னும் எண்ணம். பின்னர் துணிந்து கைநீட்டி அவனை தொட்டான்.

அவன் கைவிரல் பட்டதுமே உஸ் என்ற ஒலியெழுப்பி பல்காட்டிச் சீறியபடி அவன் நெளிந்து தலைதூக்கினான். ஸ்வேதன் கையை பின்னிழுத்து நகர்ந்துகொண்டான். அரவானின் விழிகள் நீள்வட்ட கருவிழியுடன் இமையா மணிகள் போலிருந்தன. அவன் உடல் அரவெனவே மூன்று நெளிவு கொண்டிருந்தது. பின் அவன் ஸ்வேதனை அடையாளம் கண்டு புன்னகைத்து “மூத்தவரே, நீங்களா?” என்றான். கைநீட்டி தூணைப்பற்றி அரவுபோல உடல் நெளித்து கீழே வந்தான் “என்ன செய்கிறாய்?” என்றான் ஸ்வேதன். “நான் நேற்று இங்கு துயில முயன்றேன். இக்குடிலின் ஓரங்களில் பதுங்கிப் பார்த்தேன். என்னால் நிலத்தில் துயில முடிவதில்லை. பொந்துகளிலோ மரக்கிளைகளிலோதான் நாங்கள் துயில்வது வழக்கம். ஆகவே மேலே சென்றுவிட்டேன்” என்று அவன் சொன்னான்.

“மேலேயா? அங்கு எப்படி துயில முடிகிறது?” என்று ஸ்வேதன் கேட்டேன். “அங்குதான் நான் இடறின்றி துயில்வேன். தரையிலிருந்தால் அனைத்து காலடி ஓசைகளும் என்னை அதிரவைத்துக்கொண்டே இருக்கும்” என்றான் அரவான். ஸ்வேதன் மேலே பார்த்து “எப்படி துயிலில் உடலோய்ந்து விழாமல் அங்கு ஒட்டியிருக்கிறாய்?” என்றான். அரவான் புன்னகைத்தான். “வருக, பொழுதாகிறது!” என்றான் ஸ்வேதன். அரவான் தன் ஆடையை சீரமைத்தபடி வெளியே வந்தான். “நமக்கான நீர் உள்ளது. விரைந்து கிளம்பு” என்றான் ஸ்வேதன். “படைகிளம்புவதற்குள் நாம் கிளம்பவேண்டும். இன்னும் சற்று நேரத்தில் இங்கிருந்து பயணம் தொடங்கினால் வெயில் எழுவதற்குள் மாமன்னர் யுதிஷ்டிரரின் படைப்பிரிவை சென்றடைவோம். அங்குதான் இன்று அவை கூடவிருக்கிறது. முறைப்படி நம்மை சந்தித்து நமக்குரிய படையாணையை அளிக்கவேண்டியது அவரே” என்றான் ஸ்வேதன்.

“ஆம், நேற்றே சொன்னார்கள். சற்று நேரத்தில் சித்தமாகிவிடுவேன்” என்றபடி அரவான் வெளியே சென்றான். ஸ்வேதன் காலைக்கடன்களை முடித்து முந்தைய இரவே ஏவலர் அளித்த உணவுருளைகளில் இருந்து ஊன்துண்டுகளை மட்டும் எடுத்து அரவானுக்கு அளித்தான். தானும் உண்டு நீரருந்தினான். பொடித்த வஜ்ரதானியமும் உலர் ஊனும் உப்புடன் சேர்த்து உருட்டப்பட்ட அவ்வுணவு சுவையாக இருந்தாலும் விழுங்குவது கடினமாக இருந்தது. அரவான் அதை மூன்று கவளங்களிலாக அப்படியே விழுங்கிவிட்டான்.

நடுநடுவே நீரருந்தியபடி உண்டுகொண்டிருந்த ஸ்வேதன் “விழுங்கிவிட்டாயா?” என்றான். “ஆம்” என்று அரவான் சொன்னான். “நேற்றும் பார்த்தேன், நீ ஊனுணவுகளை அவ்வாறே விழுங்கிவிடுகிறாய். ஆனால் அவை சிறுதுண்டுகளாக இருந்ததால் அத்தனை வேறுபாடு தெரியவில்லை” என்றான் ஸ்வேதன். “நாங்கள் உணவை விழுங்குவதுதான் வழக்கம்” என்றான் அரவான். “நெஞ்சில் அடைத்துக்கொள்ளாதா?” என்று ஸ்வேதன் கேட்டான். “இல்லையே? அவ்வாறு ஆவதில்லை” என்றபின் “நீங்கள் ஒவ்வொரு கவளத்திற்கும் நீரருந்துவதுதான் எனக்கு விந்தையாக உள்ளது” என்றான். ஸ்வேதன் ஒருகணத்திற்குப் பின் “ஆம், பாம்புகள் நீரருந்துவதில்லை” என்றான்.

ஸ்வேதன் தன் புரவியில் ஏறிக்கொண்டான். அரவான் அவனுடன் இணைவிரைவுடன் நடக்க அவர்கள் படைநடுவே செல்லத்தொடங்கினர். தொலைவில் கொம்போசை எழுந்தது. உடன் முரசு எழுந்து இணைந்துகொண்டது. கொம்பும் முரசும் கலந்த ஓசை ஒற்றைச்சொல்லென ஒலித்து எதிரொலிகளாகப் பெருகி படைமுழுக்க பரந்து தழுவியது. அவ்வோசை சென்று தொட்ட இடமனைத்தும் படையின் அசைவில் எழுந்த மாற்றத்தை விழிகளால் பார்க்க முடிந்தது. அரவான் “நீர்ப்பரப்பின்மீது காற்று படுவதுபோல் இந்த ஓசை கடந்து செல்கிறது” என்றான். மறுகணமே அந்தப் படைகளின் மாற்றத்தை சிற்றலையின் வண்ணக்குலைவாக ஸ்வேதன் பார்த்தான். கண்மூடியபோது முரசொலியை அப்படை தன் குரல்முழக்கத்தால் எதிர்கொள்வதுபோல் தோன்றியது. அவன் எண்ணுவதற்குள்ளே அரவான் “ஓசையை குகைகள் முழக்கமாக மாற்றிக்கொள்வதுபோல” என்றான்.

ஸ்வேதன் கண்ணைத் திறந்து “உன் ஒப்புமைகளைக் கொண்டே இனி நான் இப்புவியை பார்க்கமுடியும் போலுள்ளது” என்றான். படைப்பிரிவுகள் அணிவகுத்துக்கொண்டிருந்தன. அவர்கள் நூறு வாரை செல்வதற்குள் அப்பெரும்படை முழுமையாகவே சீர்கொண்டுவிட்டிருந்தது. “அரைநாழிகைக்குள் இத்தனை ஆயிரம்பேர் பிழையின்றி அணிவகுப்பதென்பது நெடுநாள் பயிற்சியினூடாக அமைவது” என்று ஸ்வேதன் சொன்னான். “ஆனால் அப்பயிற்சியை பெரும்பொருட்டு அதற்கு முன்னரே பயிற்சிகொண்ட உள்ளம் அவர்களிடம் இருக்கவேண்டும். அது தலைமுறைகள்தோறும் கைமாறி வந்தணைய வேண்டும். அப்போது மட்டுமே பயிற்றுவிக்க முடியும்.”

“யானைகளை பயிற்றுவிக்க முடியும், காட்டெருமைகளை பயிற்றுவிக்க முடியாதென்பார்கள்” என்றான் அரவான். ஸ்வேதன் “ஆம். இங்கு வந்துள்ள நிஷாதர்களிலும் கிராதர்களிலும்கூட பயிற்றுவிக்கவே முடியாத சிலர் இருந்தனர். அவர்களை தனிப்படைப்பிரிவாக பின்புறம் சேர்த்துக்கொண்டிருக்கின்றனர் என்று அறிந்தேன்” என்றான். அரவான் “எங்கள் படைகளை இவ்வாறு ஒற்றைப் பேருடலென மாற்ற முடியாது. பாம்புகள் ஒவ்வொன்றும் தனிநெளிவு கொண்டவை. நூறு பாம்புகள் செல்வதைக் கண்டால் உங்களுக்கு புரியும், அவை நூறு நெளிவுகளாகவே இருக்கும். அவற்றின் உடலிலுள்ள அவற்றுக்குரிய அந்நெளிவு பிறவியிலேயே அவற்றுக்கு வருவது. அதை அவற்றின் நுண்ணுடல் என்று எங்கள் மூத்தோர் கூறுவர்” என்றான்.

“தெய்வங்கள் காற்றிலும் ஒளியிலும் நீரிலும் இருந்து அசைவுகளை எடுத்து கலந்து அறியா வெளியில் ஒரு நாகத்தை செய்கின்றனர். உடலற்ற வெறும் நெளிவு அது. பின்னர் முட்டைக்குள் கருத் துளியென இருக்கும் ஒரு நாகத்திற்கு அதை அளிக்கின்றனர். அந்த நுண்நாகத்தை கருவடிவிலிருக்கும் பருநாகம் பெற்றுக்கொண்ட பின்னரே அது வளரத் தொடங்குகிறது. முட்டைக்குள் அதன் முதல் அசைவு நிகழ்ந்ததுமே முட்டை உடையத் தொடங்குகிறது. வெளிவந்து விழுந்ததும் தரையில் தனக்குரிய தனி நெளிவை அது நிகழ்த்துகிறது” என்றான் அரவான்.

காலையொளி எழத்தொடங்கியதும் படை ஏரிப்பரப்பென வெள்ளி மின்னல்களால் நிறைந்தது. “ஒவ்வொரு கவசப்பரப்பிலும் இப்படை பாவை ஒளிப்பு கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் தன் உடலில் இப்படையை ஏந்தியிருக்கிறார்கள்” என்று அரவான் சொன்னான். பின்னர் “விந்தைதான்! ஒவ்வொரு வேல்முனையிலும் இப்படை உள்ளது. ஒவ்வொருவர் விழிமணிகளிலும் இப்படை இருக்கும்” என்றான். ஸ்வேதன் “என் இளையோன் இருந்திருந்தால் அடுமனையிலிருந்து கற்ற எதையாவது சொல்லியிருப்பான்” என்றான்.

காவல்மாடங்களுடன் மாளிகைகளுடன் அப்படை அவர்களைச் சூழ்ந்து பெருகிச்சென்றது. அத்தனைமுறை வியந்த பின்னரும் அவன் அந்த வியப்பில் மீண்டும் திளைத்தான். ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் எல்லையென அமைக்கப்பட்ட காவல்மாடத்தில் முத்திரைக் கணையாழிகளையும் ஆணையோலைகளையும் காட்டி அவர்கள் கடந்து சென்றனர். “மேலும் மேலுமென ஒவ்வொருவரும் இப்படையின் ஒரு பகுதியாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் அரவான்.

ஸ்வேதன் “படைக்கு அவ்வல்லமை உண்டு. அதன் பெரும்பரப்பு அசைவுகளின் ஒத்திசைவு. ஒவ்வொரு தனிப்படைவீரனையும் அவன் ஆளுமையை அழித்து தன்னுள் கலந்துகொள்கிறது. இவர்களில் ஒருவரை நிறுத்தி நீ யாரென்று கேட்டால் தன் படைப்பிரிவின் பெயரையும் எண்ணிக்கையையும் மட்டுமே சொல்வார். எவரும் பிறிதெதையும் எண்ணுவதில்லை” என்றான். “படைகளுக்குச் சென்றுவந்தவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். படைப்பிரிவில் வரும் ஆழ்துயில்போல எங்கும் வருவதில்லை. ஏனெனில் முற்றிலும் கடந்தகாலம் அகன்றுவிடும்போது உள்ளம் எச்சமின்றி கரைந்தழியும் நற்துயில் அமைகிறது. உள்ளமென்பது நினைவுகளின் பெருந்தொகுதிதான். அரவின் வால் வாயால் கவ்வப்படுவதுபோல் அதன் ஒருமுனையை பிறமுனை கவ்வி எதிர்காலம் என்றாகிறது. அப்பெருஞ்சுழல் நின்றுவிடுவதுபோல் இனிய நிலை வேறில்லை.”

“தவத்தோர் அதையே ஊழ்கம் என்று சொல்கிறார்கள். படையிலமைதல் ஒருவகை ஊழ்கம். இறப்பு அருகிலிருக்கிறது. அதைவிடக் கொடிது உடற்சிதைவும் வாழ்நாளெல்லாம் எஞ்சும் அதன் துயரும். ஆயினும் படையில் மானுடர் மகிழ்ச்சியுடனிருக்கிறார்கள். போருக்குச் சென்றுவந்தவர் பின்னர் போரைப்பற்றி அன்றி பிறிதெதையும் பேசுவதில்லை. மானுடம் காதலைவிட உறவுகளைவிட பெருவிழவுகளையும் பேரழிவுகளையும்விட போரைப்பற்றியே மிகுதியாக பேசியிருக்கிறது. நம் சூதர் பாடல்களில் பெரும்பகுதி போர்களின் விவரிப்பே” ஸ்வேதன் சொன்னான்.

“போரில் அல்ல, படையென்றாவதில் மானுடர் கொள்ளும் பேருவகை ஒன்றுள்ளது. ஒவ்வொருவரும் தங்களில் உள்ள குறையொன்றை பிறரைக்கொண்டு நிரப்புகிறார்கள். தந்தையை மைந்தரும் கணவனை மனைவியும் தனியனை குடியும் நிரப்புவர். நிரம்பா இடைவெளிகள் பல. ஆயின் படை ஒவ்வொருவரையும் எச்சமின்றி நிரப்பிவிடுகிறது. ஆற்றில் விழுந்து நிறைந்து அமிழ்ந்து செல்லும் சிறுகுடுவைகளாகிவிடுகிறார்கள் மானுடர்” என்றபின் நகைத்து “நூல்களில் பயின்றது. நூல்கள் நேர்காண்கையில்தான் மெய்ப்பொருள் கொள்கின்றன” என்றான் ஸ்வேதன்.

யுதிஷ்டிரரின் மையப் படைப்பிரிவிற்கு அவர்கள் இளவெயில் வெம்மைகொள்ளத் தொடங்கும்போது சென்று சேர்ந்தனர். அவர்கள் செல்லும் செய்தி முன்னரே புறாக்களினூடாக அங்கு சென்றடைந்திருந்தது. தலைக்குமேல் பரந்திருந்த காற்றலைகளில் அப்படையை ஆளும் ஆணைகள் புறாக்களினூடாக மிதந்து கொண்டிருந்தன. “நம்மை ஆளும் சொற்கள்” என ஸ்வேதன் புறாக்களை சுட்டிக்காட்டினான். அரவான் “ஆம், புறாக்களினூடாக செய்திகள் சென்றடையுமென்று நான் அறிந்திருக்கிறேன். அப்புறாக்களுக்கு அச்செய்தி தெரிவதில்லை என்று என் அன்னை சொன்னாள்” என்றான்.

“புறாச்செய்திகள் முதன்மையான ஆணைகளை மட்டும் கொண்டு செல்கின்றன” என்றான் ஸ்வேதன். “ஒருவருக்கான புறா பிற எவரிடமும் செல்வதில்லை. அவர் எங்கு இடம் மாறினாலும் தேடிச் சென்று அவர் தோளில் மட்டுமே அமரும். அவர் துயின்றிருந்தால் காத்திருக்கும், மயங்கியிருந்தாலோ இறந்திருந்தாலோ திரும்பி வந்துவிடும். அவ்வேறுபாடு அவற்றுக்கு தெரியும்.” அரவான் வானை பார்த்தபடி வந்தான். “கழுகுகளும் செய்தி கொண்டு செல்கின்றன. இந்திரப்பிரஸ்தத்திலிருந்தும் அஸ்தினபுரியிலிருந்தும் உபப்பிலாவ்யத்திலிருந்தும் வரும் செய்திகளை அவை கொண்டு வருகின்றன” என்றான் ஸ்வேதன்.

அரவான் திரும்பி “ஏன் நாகங்களை செய்தி கொண்டுசெல்ல பழக்கலாகாது? புறாக்கள் விண்ணில் செல்வதைப்போல அவை காலடியில் செய்திகளுடன் சென்றிருக்குமே?” என்றான். ஸ்வேதன் சிரித்து “இதுவரை எவரும் அதற்கு முயலவில்லை என்று எண்ணுகின்றேன்” என்றான்.

tigயுதிஷ்டிரரின் படைப்பிரிவின் பொறுப்பாக யௌதேயனும் நிர்மித்ரனும் இருந்தார்கள். புரவியை ஏவலரிடம் அளித்தபின் யுதிஷ்டிரரின் அலுவல்மாளிகை முன் அவர்கள் சென்று நின்றதுமே யௌதேயன் நிமிர்ந்து ஒருகணம் அரவானை நோக்கினான். களைப்பால் அவன் கண்கள் தளர்ந்தவைபோல் இருந்தன. ஸ்வேதன் முகமன் சொல்வதற்குள் “நீங்கள் அந்த மையமாளிகைக்கு அருகே இருக்கும் சிறுமாளிகையில் அமர்ந்திருக்கலாம். இன்று அரசரின் அவை எட்டு நிகழ்வுகளாக ஒருங்கமைக்கப்பட்டுள்ளது. முதல் நிகழ்வில் அவர் ஒற்றர்களை சந்திக்கிறார். இரண்டாம் நிகழ்வில் படைத்தலைவர்கள் சந்திப்பு நிகழ்கிறது. மூன்றாவது சந்திப்பில்தான் படைசூழ்கைகள் குறித்த பேச்சு நிகழும். உங்களை மூன்றாவது சந்திப்பில் அழைக்க வாய்ப்பு மிகுதி. ஆனால் எப்போதுமே நீங்கள் சித்தமாக இருப்பது நன்று” என்றான்.

ஸ்வேதன் தலைதாழ்த்தி “காத்திருக்கிறோம்” என்றான். யௌதேயன் மீண்டும் அரவானை பார்த்தபின் “இவரை பார்க்க ஒருவேளை தந்தை விரும்பக்கூடும். நேற்று அவரிடம் வந்த ஓலைச்செய்தியில் இவர் சிறிய தந்தையின் இளைய வடிவம் போலிருக்கிறார் என்று ஒரு வரி இருந்தது. அதை தந்தை மிக விரும்பியதாக முகக்குறி காட்டியது” என்றான். அரவான் புன்னகைத்தான். யௌதேயன் “நீ இளமையில் சுருதகீர்த்தி இருந்ததுபோல் இருக்கிறாய் என்று எனக்கு தோன்றுகிறது. எங்களில் அவனே அழகன். நாங்கள் அனைவரும் அவனை நோக்கி மகிழ்வதுண்டு” என்றான். “நீ அவனை பார்த்தாயல்லவா?”

“ஆம்” என்றான் அரவான். “எனக்கு தனிச்செய்தி அனுப்பியிருந்தான். எங்கள் அனைவருக்குமே உன் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நாம் எந்த மகிழ்ச்சியையும் கொண்டாடக்கூடாது. படைகளில் இருக்கையில் உறவுகள் கொண்டாடக்கூடாது என நெறி உள்ளது. நீ முன்னரே வந்திருக்கலாம்” என்றான் யௌதேயன். “உன்னை படையில் சேர்த்துக்கொள்ளலாகாது என்றும் உன் குலத்துக்கு நீ எஞ்சவேண்டும் என்றும் சிறிய தந்தை விரும்புகிறார். அவர் அதை எண்ணுவதற்குள்ளே அவ்வெண்ணத்தை சுருதகீர்த்தி அடைந்திருக்கிறான்” என்று யௌதேயன் சொன்னான். அரவான் “என் பணி இங்கு போரில் ஈடுபடுவதே. என் அன்னையின் ஆணை” என்றான்.

“நீ நாகமணிபோல் அரிதாகவும் அழகாகவும் இருக்கிறாய் என்று சுருதகீர்த்தியின் ஓலையில் எழுதப்பட்டிருந்தது. படைப்பிரிவில் அருமணியும் ஒரு கூழாங்கல்லே. அடுக்கிக் கட்டலாம் பொறுக்கி எறிந்து தாக்கவும் செய்யலாம். மணிமுடியில் சூடவேண்டிய வைரம் இங்கு எடையும் கூரும் மட்டுமே” என்றான். அரவான் “நான் என் முடிவை அவரிடம் தெரிவித்துவிட்டேன்” என்றான். “எவ்வாறாயினும் இறுதி முடிவை எடுக்கவேண்டியவர் தந்தை. அவர் முடிவு இளைய யாதவரின் எண்ணப்படியே அமையும். அதற்கு நீயும் நானும் இப்படையிலுள்ள ஒவ்வொருவரும் கட்டுப்பட்டவர்கள்” என்றான். அரவான் “நான் என் அன்னைக்கு மட்டுமே கட்டுப்பட்டவன்” என்றான். அந்த மறுமொழியை எதிர்பாராத யௌதேயன் திகைத்து பின் புன்னகைத்து “நன்று” என்றான்.

ஸ்வேதன் தலைவணங்கி “செல்கிறோம்” என்று சொல்லி முன்னால் சென்றான். யௌதேயன் இயல்பாக கைநீட்டி அரவானின் தோளில் தொட்டு “எங்கள் மொழியை நன்கு பேசுகிறாய்” என்றான். பின்னர் திரும்பி தன் காவல்நிலைக்கு சென்றான். நிர்மித்ரன் “உனக்கு இரவுணவு பிடித்திருந்ததா?” என்றான். அரவான் “நான் ஊனுணவை மட்டுமே உண்பவன்” என்றான். “ஆம், அதையும் ஓலையில் சொல்லியிருந்தான். அவ்வாறே உனக்கு உணவு அளிக்க மூத்தவர் ஆணையிட்டுள்ளார்” என்றபின் தவறி கையெடுப்பதுபோல அரவானின் தோளை தொட்டான். “செல்க!” என்றான்.

கடந்து செல்கையில் ஸ்வேதன் சிரித்துக்கொண்டிருந்தான். அரவான் “ஏன் நகைக்கிறீர்கள்?” என்று கேட்டான். “ஒன்றுமில்லை” என்றபின் ஸ்வேதன் “உன்னை பார்த்த முதற்கணமே அவர்கள் நெஞ்சோடு தழுவிவிட்டார்கள். படைப்பிரிவின் நெறிகள் அதை ஒப்புவதில்லை என்பதனால் தவிர்த்தார்கள். நூறுமுறை எண்ணி கணக்கிட்டு மெல்ல தோள்தொட்டு அதை நிறைவேற்றினார்கள்” என்றான். அரவான் புன்னகைத்தபடி “அத்தொடுகையில் அது இருந்தது” என்றான். “விந்தைதான்! எவரென்றே தெரியாதவரெனினும் குருதி தொட்டுக்கொள்ள விழைகிறது” என்றான் ஸ்வேதன்.

அவர்கள் சிறிய குடிலருகே சென்றனர். அதில் படைத்தலைவர்கள் மூவர் முன்னரே காத்திருந்தனர். அவர்கள் இருவரும் படிகளில் ஏறி அங்கிருந்த பீடத்தில் அமர்ந்தனர். படைத்தலைவர்களின் நோக்கு அரவானை தொட்டதுமே மாறுவதை ஸ்வேதன் கண்டான். அவர்கள் சொல்லின்றி தலைவணங்கினர். ஒருவரை ஒருவர் விழிகளால் நோக்கிக்கொண்டனர். அரவான் ஸ்வேதனிடம் நெருங்கி அமர்ந்து “இவர்களின் ஆடைகளிலிருந்து எந்தப் படைப்பிரிவென்று சொல்லிவிடமுடியுமா?” என்று மெல்ல கேட்டான்.

“படைப்பிரிவுகள் அனைத்திற்கும் தனி அடையாளங்களும் பெயர்களும் அளிப்பது வழக்கம். பாண்டவர்களின் படைகள் முழுக்கவே இலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதோ இவர் மூன்றிலை படைப்பிரிவை சேர்ந்தவர். அதற்குக் கீழிருக்கும் எண் அவர்களுடைய பெயருக்கு நிகரானது. மின்படைக் குறியின் கீழ் இரண்டு கோடுகள் பொறிக்கப்பட்டுள்ளதால் இவர் இரண்டாம் நிலையினர். இவ்வண்ணம் ஏழு நிலைவரை உண்டு. எளிய படைவீரன் ஏழாம் நிலையினன்” என்றான் ஸ்வேதன். “இவர் அணிந்திருக்கும் கவசத்தின் வலப்பக்கம் சிந்துநாட்டின் கரடி முத்திரை உள்ளது. அதன் கீழ் உள்ள சுருள்கொடி அவருடைய தனி முத்திரை. பெரும்பாலும் அது அவருடைய குடியின் அடையாளமாக இருக்கும். இக்கவசத்தைக் கொண்டே இவர் சிந்து நாட்டில் எக்குடியில் எவ்வூரைச்சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கமுடியும். இந்தப் படைப்பிரிவின் எப்பிரிவில் எந்நிலையிலுள்ள எவ்வீரர் என்றும் அறியமுடியும்.”

அரவானின் காதில் மட்டும் விழும்படி அவன் பேசிக்கொண்டிருந்தான். அங்கிருந்த காத்திருத்தலின் இறுக்கத்தைக் கடக்க அப்பேச்சு உதவியது. அரவானிடம் சொல்வதுபோல அவனே அச்செய்திகளை சேர்த்துக்கொண்டிருந்தான். “இந்தக் கவசத்திற்கு ஓர் எண்ணுண்டு. அந்த எண் இவருடைய மணிக்கட்டில் பச்சைகுத்தப்பட்டிருக்கும். இக்கவசமின்றி இவர் களத்தில் விழுந்து கிடந்தால்கூட அவ்வெண்ணைக்கொண்டு இக்கவசத்தை கண்டெடுக்கலாம். அதில் இவருடைய செய்திகள் அனைத்தும் இருக்கும். களத்தில் அடையாளம் காணாமல் ஓருடல்கூட மறைவு செய்யப்படலாகாதென்பது தொல்நெறி” என்று ஸ்வேதன் சொன்னான்.

அரவான் எண்ணுவதை உடனே உணர்ந்துகொண்டு ஸ்வேதன் “ஆம், ஒருவர் உடல் துண்டுபடக்கூடும். ஆகவே நெஞ்சு தோள்கள் கால்கள் என ஐந்து இடங்களில் அந்த எண் பச்சைகுத்தப்பட்டிருக்கும்” என்றான். “போருக்குமுன் கவசங்களிலும் உடலிலும் எண்களையும் குறிகளையும் எழுதும் பணி பலநாட்கள் தொடர்ந்து நடக்கும். படைகளில் அது பெரிய சடங்கு. குலத்தையும் குடியையும் இளமையிலேயே பொறித்திருப்பார்கள். அரசுப்படைவீரனுக்குரிய முத்திரையும் அவன் உடலில் முன்னரே இருக்கும். இப்போருக்குரிய படைமுத்திரையை அவர்களின் படைக்களரியில் களரிதெய்வங்களுக்கு குருதிபலி கொடுத்து களரிஆசிரியர் தொட்டுக்கொடுக்க கூராணி எடுத்து பொறித்துக்கொள்வார்கள்.”

“முறைப்படி செய்திகள் உடலிலும் கவசங்களிலும் படைக்கலங்களிலும் பொறிக்கப்பட்ட வீரன் எழுதப்பட்ட ஓலை ஆகிவிடுகிறான் என்பது நம்பிக்கை. அவன் தெய்வங்களுக்கு அனுப்பப்பட்டவன். அவன் திரும்பி வரும்போது மீண்டும் விரிவான படையல் பூசனைகளுக்குப் பின் அவனுக்கு இப்போருக்கென அளிக்கப்பட்ட அடையாளங்கள் அழிக்கப்படும்” என்றான் ஸ்வேதன். அரவான் “ஏன் அவ்வாறு அடையாளம் காணப்படவேண்டும்?” என்றான். “ஒருவன் படையில் படுவான் எனில் அவன் குலம் அதை அறியவேண்டும். இங்கு அவன் எரிமறைவோ மண்மறைவோ செய்யப்பட்டாலும் அவன் குடியில் அவனுக்கொரு நடுகல் அமையவேண்டும். அங்கு அவன் கொடிவழியினர் ஆண்டுதோறும் ஊனும் கள்ளும் செம்மலர்களும் படைத்து பலிக்கொடை நிகழ்த்தி குறுமுழவு மீட்டி அவன் களம்பட்ட செய்தியை பாட்டாக பாடவேண்டும். இங்கு அவனை மண்ணுக்கோ நெருப்புக்கோ அளிக்கையில் அவன் பெயர் சொல்லி குலத்தையும் ஊரையும் உரைத்து விடையளித்து இறுதிச் செயல் முடிக்கவேண்டும்” என்றான்.

அரவான் பெருமூச்சுவிட்டான். “உங்கள் குடியில் மறைந்தவர்களுக்கு நடுகற்கள் நாட்டுவதுண்டா?” என்றான் ஸ்வேதன். “இல்லை” என்று அவன் சொன்னான். “எப்படி நினைவுகூர்வார்கள்?” என்றான் ஸ்வேதன். “எங்கள் தொல்கதைகளின்படி நாங்கள் மண்ணுக்கு மேலே வந்து மானுடர்களின் தலைகளை மட்டும் சூடிக்கொண்ட நாகங்கள். மறைந்தவர்களின் தலையை மட்டும் வெட்டி இங்கே களிமண்ணால் ஆன பீடத்தில் வைப்பார்கள். உடலை புதைத்துவிடுவார்கள். அவை கீழே நிலத்தின் வேர்வெளியாக செறிந்திருக்கும் நாகருலகுக்கு சென்றுவிடும். தலை மட்டும் பதினெட்டு நாட்கள் பூசனை செய்யப்படும். பின் அதன்மேல் ஒரு கலத்தை வைத்து மூடுவார்கள். ஓராண்டுக்குப் பின் அங்கே வெள்ளோடு எஞ்சும். அதை கொண்டுசென்று வடகிழக்கே இருக்கும் மூதாதையரின் தலையோடுகளின் பெருங்குவியலுடன் சேர்ப்பார்கள்” என்றான் அரவான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 59

tigயுதிஷ்டிரரின் அரசவை இருக்கும் படைமுன்னணி நோக்கி அரவானும் ஸ்வேதனும் சென்றனர். அரவான் புரவியில் ஏற மறுத்துவிட்டான். “என்னை கண்டாலே புரவிகள் மிரளும்…” என்றான். “ஏன்?” என்றான் ஸ்வேதன். “புரவிகள் நாகங்களை அஞ்சுகின்றன.” அவன் அருகே சென்றதும் புரவி விழிகளை உருட்டி மெய்ப்புகொண்டு மெல்ல கனைத்தபடி பின்னடி வைத்தது. மூக்கை விடைத்து வாய்திறந்து தலையை ஆட்டியது. “நீ எப்படி வருவாய்?” என்றான் ஸ்வேதன். அரவான் “நான் புரவியைவிட விரைவாக நடப்பேன். நீங்கள் ஏறிக்கொள்ளுங்கள். நான் உடன் வருகிறேன்” என்றான்.

படைகள் நடுவே செல்லும் வழியிலெல்லாம் அரவான் சொல்நிலைக்காது பேசிக்கொண்டே வந்தான். “இத்தனை பெரிய படை இங்கிருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. உண்மை, இதைவிடப் பெரிய படை அங்கிருப்பது. ஆனால் அதை முதலில் பார்த்தபோது படையை மதிப்பிட எனக்கு தெரியவில்லை. தொலைவிலிருந்து பார்த்தபோது பெரிய நீர்நிலையொன்றை பார்ப்பதுபோல் தோன்றியது. ஆம், அதன் ஓசையும் அலைகளும் தெய்வங்கள் விளையாடும்பொருட்டு அமைக்கப்பட்ட விந்தையான ஒரு நீர்நிலை என்றே எனக்கு தோன்றச் செய்தன. அருகணையுந்தோறும் அதை ஊனுடல்களால் ஆன பெருங்காடென்று எண்ணத்தலைப்பட்டேன். மேலும் அருகணைந்தபோது அது மானுடரால் ஆன ஒரு சுவர் என்றும் உள்ளே நுழைந்த பின்னர் மானுட உடல்களை அடுக்கிக் கட்டப்பட்ட வீடுகளின் நிரை என்றும் தோன்றியது.”

“அதன் பேருரு என் சித்தம் கடந்த ஒன்றாக இருந்தமையால் அதை நோக்காமல் சிறுகாட்சிகளில் விழியூன்றத் தொடங்கினேன். படைக்கலங்கள் ஒவ்வொன்றும் விந்தையானவையாக இருந்தன. நீண்ட மூங்கில்களின் முனையில் சேவலின் பின்தூவல்போல் அலகு வளைந்த ஓர் கருவியை கண்டேன். அது என்ன என்று கேட்டேன். அதன் பேர் வளரி என்றும் சுழற்றி புரவிகளின் குதிகால் தசையை அதனால் அறுத்துவிட முடியுமென்றும் அதன்பின் அப்புரவி ஒருபக்கமாக சரிந்து அதன் மேலிருப்பவரை கீழே தள்ளி தானும் விழுந்துவிடும் என்றும் சொன்னார்கள். அக்கணமே பிறிதொரு வளரியால் அப்படை வீரனின் கழுத்தை அறுத்துவிட முடியும். எறிந்தபின் திரும்பி வரும் வளைகத்தியை பார்த்தேன். கூர்முனைகொண்ட விந்தையான சகடங்கள். காற்றில் மிதந்து பறக்கும் தகடுகள். அம்பு முனைகளிலேயே எத்தனை வேறுபாடுகள்! நாகவால் என கூரியவை, நாகபடம் என அகன்றவை. நாக உடல் என மின்னுபவை. நாகமென வளைந்தவை.”

“மனிதர்கள் மனிதர்களை எப்படியெல்லாம் கொல்கிறார்கள்! விலங்குகளின் கொம்புகளை, பற்களை, நகங்களை, கொடுக்குகளை, செதில்வாலை படைக்கலங்களென உருவாக்கியிருக்கிறார்கள். படைக்கலங்களில் மிகக் கூரியது நாகப்பல். அது மட்டும் அவர்களிடமில்லை” என்றான் அரவான். “அம்பு முனைகள் அனைத்துமே பறவைகளின் அலகுகளில் இருந்து பெற்ற வடிவங்கள் என்றார் கௌரவர். அக்கணமே என் நோக்கு திசைமாறியது. வாள்கள் அனைத்தும் புல்லிதழ்களின் வடிவங்களே என்றும் வேல்களெல்லாம் நாணல்களே என்றும் உணர்ந்துகொண்டபோது நான் பிறிதொரு காட்டிலிருக்கும் உணர்வை அடைந்தேன். புல் முதிர்ந்து கதிர்கொள்வதுபோல் மானுடர்கள் படைக்கலம் கொள்கிறார்கள்.”

“அங்கிருக்கும் அத்தனை விலங்குகளும் படை பயின்றவை என்பது எனக்களித்த வியப்பு இன்னும் தொடர்கிறது. நான் கண்ட விலங்குகள் அனைத்தும் மானுடர் அறியா பிறிதொரு உலகில் வாழ்பவை. அவற்றின் மொழியும் உள்ளமும் முற்றிலும் வேறு. இங்கு யானைகள் மானுடனுடன் உரையாடின. புரவிகளும் ஆணையிட்டன, ஆணைகளுக்கு பணிந்தன. மேலே பறக்கும் கொடிகளை யானைகள் அறிந்திருக்கின்றன என்று அறிந்த கணம் திகைத்து அசையாமல் நின்றுவிட்டேன். அவை பறையோசையைக் கேட்டு புரிந்துகொள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. கொடிகளை அவை விந்தையான மலர்கள் என்றோ வானில் பறக்கும் பறவைகள் என்றோ அல்லவா எண்ணவேண்டும்? இந்த யானைகளும் புரவிகளும் காட்டையே அறிந்ததில்லை என்று எண்ணுகின்றேன். காட்டில் அவை பூசலிடுவதுண்டு. இப்படி பெருந்திரளென அணிவகுத்து போருக்குச் செல்வதில்லை. போரென்பதே மானுடர் உருவாக்கிக்கொண்ட ஒன்று என்று அதன்பிறகு எண்ணினேன்.”

“எங்கள் காடுகளில் நாகர்களுக்குள் பூசல் நிகழ்வதுண்டு. ஒருவருக்கொருவர் இருவருக்கிருவர் என்பதே அங்குள்ள நெறி. எந்நிலையிலும் நூற்றுவருக்கு மேல் போரில் ஈடுபடுவதில்லை. வென்றவர்கள் தோற்றவர்களின் காலடியில் தங்கள் படைக்கலங்களை வைத்து மும்முறை தலையை நிலந்தொட வணங்க வேண்டும். அதன் பிறகு இருவரும் தோள்தழுவி ஒற்றைக்கோப்பையில் மதுவருந்தி மகிழ்வார்கள். இங்கு போருக்குப் பின் உணவுண்பதுண்டா என்று கேட்டேன். போர் முற்றிலும் முடிந்த பிறகு செறுகளத்தில் பேரூட்டு நிகழுமென்றும் அதற்கு உண்டாட்டு என்று பெயரென்றும் சொன்னார்கள். போர் எப்போது முடியுமென்று கேட்டேன். ஏதேனும் ஒரு தரப்பு பெரும்பகுதி கொன்றொழிக்கப்பட்டு எஞ்சியவர்கள் இங்கிருந்து தப்பியோடிய பின்பு என்றார்கள். எதிர்தரப்பின் அரசர்கள் கொல்லப்படவேண்டும், அல்லது சிறைபிடிக்கப்படவேண்டும் என்றனர்.”

“இங்கு வரும் வரை நான் அதை எண்ணியும் பார்த்திருக்கவில்லை. அப்படியென்றால் இங்கு படைகொண்டு நின்றிருக்கும் இரு தரப்பினரில் எவரேனும் ஒருவர் இன்னும் சில நாட்களில் கொல்லப்படப் போகிறார், அல்லது கொண்ட அனைத்தையும் இழந்து இழிவுகொண்டு கண்காணாமல் தப்பியோடப் போகிறார். ஒன்று நானறிந்தேன், எந்நிலையிலும் கௌரவ மூத்தவர் அடிபணியமாட்டார். எந்தை பணிவதைப்பற்றி எண்ணிப்பார்க்கவே இயலவில்லை. அவ்வண்ணமெனில் இன்னும் சில நாட்களில் இங்கு இருவரில் ஒருவரின் இறப்பு நிகழும்” என்றான். “ஆம்” என்றான் ஸ்வேதன். “அதை நாம் பார்க்காமலிருக்க ஒரே வழி முன்னரே நாம் இறப்பதே.” அரவான் அதிலிருந்த நகையாடலை உணராமல் தலையசைத்தான்.

ஸ்வேதன் “நீ எப்படி எங்கள் மொழியை இத்தனை நன்றாக பேசுகிறாய்?” என்றான். அவன் திகைத்து “ஆம், இது மானுட மொழி அல்லவா?” என்றபின் “என் அன்னை எனக்கு கற்பித்தார். இது என் தந்தையின் மொழி என்று சொன்னார். என்றாவது நான் என் தந்தையிடம் இந்த மொழியில் பேசவேண்டும் என்றார்.” ஸ்வேதன் “எழுதவும் படிக்கவும் உன்னால் முடியுமா?” என்று கேட்டான். “இல்லை, என் அன்னை சில எழுத்துக்களை கற்பித்தார். அவை மணலில் நண்டுகள் போலவும் இலைகளில் எறும்புகள் போலவும் இருந்தன. நான் எழுதும்போது அவை ஒவ்வொருமுறையும் ஒவ்வொன்றாக உருக்கொண்டன. அன்னை என்னிடம் எழுத்துக்கள் உருமாறலாகாது என்றார். அன்னையே நாம் பார்க்கும் ஒவ்வொன்றும் வளர்ந்து உருமாறியும் அழிந்துகொண்டும்தான் இருக்கின்றன என்றேன். அழியாதவையே எழுத்துக்கள் என்றார். அழியாமல் நின்றிருக்கும் நண்டுகளையும் எறும்புகளையும் என்னால் எண்ணிப்பார்க்கவே இயலவில்லை. பலமுறை முயன்றபின் அன்னை உன்னால் எப்போதும் எழுத்துக்களை கற்றுக்கொள்ள முடியுமென்று தோன்றவில்லை என்றார்.”

ஸ்வேதன் “ஆனால் உங்கள் நாகர் குடியில் நூற்றுக்கணக்கான குழூஉக்குறி குறிப்புகள் உண்டல்லவா?” என்றான். “ஆம், ஆனால் அவையனைத்தும் மாறிக்கொண்டே இருப்பவை. எழுதுபவனுக்கும் பெறுபவனுக்கும் நடுவே அவை வலையிலாடும் சிலந்திபோல இருமுனையும் தொட்டு ஆடிக்கொண்டிருக்கும்” என்றான். ஸ்வேதன் புன்னகைத்தான். “மாறாதனவற்றால் ஆனது மானுட உலகு. எங்கள் இல்லங்கள் மழைதோறும் உருமாறும். எங்கள் காடு நாள்தோறும் வளர்ந்துகொண்டிருக்கும். எங்கள் தெய்வங்கள் நெளிந்தபடியே இருப்பவை” என்றான் அரவான்.

அந்தியில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறிய குடிலை சென்றடைந்தனர். அங்கு தங்கள் பொருட்களை வைத்துக்கொண்டு ஓய்வெடுத்தனர். அந்தி இறங்கத் தொடங்கியிருந்தது. தொலைவிலெங்கோ முதல் முரசு முழங்கியது. அதை கேட்டு ஒன்று தொட்டு பிறிதென படையின் அனைத்து முரசுகளும் முழங்கின. “முகில்களில் இடியொலிப்பதுபோல!” என்று அரவான் சொன்னான். “அல்லது களிறுகள் உரையாடிக்கொள்வதுபோல” என்றான். “ஒவ்வொன்றையும் பிறிதொன்றுடன் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டுமா என்ன?” என்று ஸ்வேதன் கேட்டான். “ஆம், ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டுத்தானே இரண்டையும் புரிந்துகொள்ளமுடியும்?” என்றான் அரவான்.  ஸ்வேதன் சிரித்து “மெய்தான், நாங்களும் அதைத்தான் செய்கிறோம். ஆனால் எங்கள் மொழியில் அந்த ஒப்புமைகள் முன்னரே மூதாதையரால் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. அவற்றை இளமையிலேயே கற்று திருப்பிச் சொல்வதை செய்து கொண்டிருக்கிறோம். நீ ஒவ்வொரு கணமும் புதிதாக நீயே உருவாக்கிக்கொள்கிறாய்” என்றான்.

படைகள் பின்னாலிருந்து விரைவழிந்தன. ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் நடுவே உள்ள இடைவெளி பலமடங்காக பெருக அவை ஆங்காங்கே நிலைகொண்டன. அரவான் “விந்தைதான்! ஒரு பெரும் படைப்பிரிவை உலர்ந்த அரக்கை இழுத்து நீட்ட முடிவதுபோல் நீளம்கொள்ளச்செய்ய முடிகிறது” என்றான். பின்னர் திரும்பிப் பார்த்து “வற்றிய நதியில் நீர்க்குட்டைகள் போல்” என்றான். ஸ்வேதன் “உன்னுடன் ஒருநாள் இருந்தால் இப்புடவியில் பார்க்கும் அனைத்தையும் பிறிதொன்றுடன் ஒப்பிட்டுக்கொண்டிருப்பேன்” என்றான். “மெய்யாகவே இப்புடவியிலுள்ள அனைத்தும் பிறவற்றுடன் ஏதேனும் ஒருவகையில் ஒப்பிடத்தக்கவையே” என்று அரவான் சொன்னான்.

ஸ்வேதன் மீண்டும் நகைத்து “ஒவ்வொரு சொற்றொடரிலும் வியக்க வைக்கிறாய்” என்றான். “உன் மொழியே விந்தையாக உள்ளது. நான் மலைமைந்தர்கள் எவருடனும் இத்தனை நெருக்கமாக இருந்ததிலை.” அரவான் “நீங்கள் மலைமக்களலல்லவா?” என்று கேட்டான். ஸ்வேதன் “யார் சொன்னது?” என்று கேட்டான். “நான் வரும்போது என்னுடன் வந்த படைத்தலைவன் உங்களைப்பற்றி சொன்னான். நீங்கள் குலாடகுடி எனும் மலைக்குடியை சார்ந்தவர்கள் என்றான்” என்றான் அரவான். “நாங்கள் மலைக்குடியாக இருந்த காலம் பலநூறாண்டுகளுக்கு முன்பு” என்றான் ஸ்வேதன். “அப்படியென்றால் உங்களை ஏன் இன்னமும் மலைக்குடியென்று சொல்கிறார்கள்?” என்றான் அரவான். “வாழ்வால் உள்ளத்தால் நாங்கள் மலைக்குடியல்லாமலாகி நெடுங்காலமாகிறது. ஆனால் பாரதவர்ஷத்தின் அவைகளில் மலைக்குடியல்லாமல் ஆவதற்கு இன்னும் சில நூறாண்டுகளாகும்” என்றான் ஸ்வேதன். “ஏன்?” என்று அரவான் கேட்டான். “அதை புரிந்துகொண்டால் பாரதவர்ஷத்தின் அரசியலையே புரிந்துகொண்டதைப்போல” என்றான் ஸ்வேதன்.

அனைத்து படைப்பிரிவினரும் நிரைவகுத்து வெவ்வேறு சரடுகளாக பிரிந்தனர். “நீர்க்கலம் அனைத்து துளைகளூடாக பீறிடுவதுபோல” என்று அரவான் சொன்னான். ஸ்வேதன் தலையில் கைவைத்து “உண்மையில் இதை எப்படி நீ ஒப்புமை செய்யப்போகிறாய் என்றுதான் நான் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றான். “அவர்கள் கலைகிறார்கள். இரவுக்குள் தங்கள் உடற்கடன்களை முடித்து உணவுண்டு படுப்பார்கள்” என்றான் அரவான். “கலைவது என்றால் கல்விழுந்த எறும்புக்கூடுபோல என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இப்படி நிரையெனவும் கலையமுடியும் என்பது விந்தை.” ஸ்வேதன் “அவ்வாறு கலைந்தால் இப்பெரும்படை மீண்டும் ஒருங்கிணைவதெப்படி? ஒவ்வொருவரும் இத்திரளில் வழி தவறிவிடுவார்கள்” என்றான். அரவான் “எறும்புகள் வழி தவறுவதில்லை. மிகச் சில கணங்களிலேயே அவை மீண்டும் நிரை வகுத்துவிடும்” என்றான். “எறும்புகளை நோக்கித்தான் மிகப் பெரும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எறும்புகளின் முழுமையை எந்தப் படையும் இன்றுவரை அடைந்ததில்லை” என்று ஸ்வேதன் சொன்னான்.

குடிலுக்குள் தங்கள் பொதிகளை வைத்து அவிழ்த்து உள்ளிருந்து மாற்றாடையை எடுத்துக்கொண்டனர். ஸ்வேதன் வெளியே சென்று நின்று தன் பழைய மரவுரி ஆடையை அவிழ்த்து பலமுறை உதறி அதைக்கொண்டு தன் உடலை துடைத்துக்கொண்டான். பின்னர் அதை குடிலின் வெளியே மூங்கில் கழிகளில் தொங்கவிட்டான். அரவான் “என்னிடம் ஒரு மாற்றுத்தோலாடையே உள்ளது” என்றான். “நீ இப்படைப்பிரிவில் சேருவதாக இருந்தால் பொதுவண்ணத்தில் உனக்கு ஆடையை அளிப்பார்கள். எனக்கும் ஆடை வண்ணங்கள் இன்னும் அளிக்கப்படவில்லை” என்றான் ஸ்வேதன். “நாம் எப்போது அரசரை சந்திப்போம்?” என்று அரவான் கேட்டான். “நாளை காலை” என்று ஸ்வேதன் சொன்னான்.

படையின் ஓசை கேட்கும்தோறும் மாறிவந்தது. முதலில் மெல்ல கலைவோசை எழுந்தது. அது பெருகி முழக்கமென்றாயிற்று. அதில் வெவ்வேறு அலைகளை கேட்க முடிந்தது பின்னர் சீரான ஒழுக்காக மாறி அமையத்தொடங்கியது. சற்று நேரத்தில் சீவிடுகளின் முழக்கம்போல் அமைதியென தோன்றச்செய்யும் கார்வையென்றாகியது. விழிமூடி அமர்ந்தாலே அப்படைகள் என்ன செய்கின்றன என்று சொல்ல முடியுமென்று ஸ்வேதன் எண்ணினான். படைவீரர்கள் கலைந்து தங்கள் நண்பர்களையும் அணுக்கர்களையும் சந்தித்து நட்புச் சொல்லாடினர். பின்னர் ஆடைகளைக் களைந்து புழுதி போக உதறி காற்றில் ஆறவிட்டு மாற்றாடைகளை அணிந்துகொண்டனர். பெரும்பாலும் இடை மட்டும் மறைக்கும் சிற்றாடை அது. படைகளின் விளிம்பு வட்டம் முழுக்க புகைபோடப்பட்டு கொசுக்கள் அண்டாமல் செய்யப்பட்டன. அப்புகையில் போடப்பட்ட வேப்பந்தழைகளின் மணம் காற்றில் தைலம்போல முறுகி நின்றது. பின்னர் அவர்கள் ஒருவரோடொருவர் உரையாடியபடி சிறு குழுக்களாக ஆங்காங்கே அமைந்தனர்.

உணவு வண்டிகள் படைநடுவே அமைந்த சாலைகளினூடாக ஒற்றைக்காளைகளால் இழுத்துக் கொண்டுவரப்பட்டன. படைவீரர்கள் பதின்மருக்கு ஒருவர் என்ற கணக்கில் பெரிய கொப்பரைகளுடனும் தாலங்களுடனும் சென்று நின்று வாங்கிக்கொண்டனர். அவற்றை சிறிய வட்டங்களாகக் கூடி நடுவே வைத்து இலைத்தொன்னைகளில் அள்ளி பரிமாறிக்கொண்டு உண்ணத்தொடங்கினர். உணவு அப்படைகளில் பரவி எங்கும் சென்று நிறைந்தபடியே வருவதை அவன் ஒலியில் இருந்து உளவிழிக் காட்சியாக மாற்றிக்கொண்டான். ஒரு பெருங்கலம் நீர் நிறைந்து விளிம்பை அடைந்து அமைதிகொள்வதுபோல. உணவு பரிமாறி முடித்ததும் படையின் ஓசை மிகவும் குறைந்தது. தொலைவிலிருந்து மதுக்குடங்கள் வருவதை உணரமுடிந்தது. இலைகளை உலைத்தபடி பெருங்காற்றொன்று அணுகுவதுபோல அவர்களைச் சூழ்ந்து ஓசை சுழன்று கடந்து சென்றது.

ஏவலன் ஒருவன் அவர்களுக்கு உணவை கொண்டுவந்து வைத்தான். உலர்ந்த ஊனிட்டு காய்கறிகள் உடன் சேர்த்து வேகவைக்கப்பட்ட ஊன்சோறு. குடுவைகளில் கள். அரவான் “நான் இதிலுள்ள ஊனை மட்டுமே உண்ணவிரும்புகிறேன்” என்றான். ஸ்வேதன் திரும்பி ஏவலர்களிடம் “இவர் ஊன்மட்டுமே உண்பவர். ஊன்சோற்றிலிருந்து ஊன்துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து தாலத்தில் கொண்டு வா” என்றான். அரவான் மதுவை தொடவில்லை. “உங்கள் குடியில் மது அருந்துவதில்லையா?” என்றான் ஸ்வேதன். “நாங்கள் அருந்தும் மது வேறுவகையானது. அது உரகத்தின் நஞ்சிலிருந்து எடுக்கப்படுவது. சில சொட்டுகளை நாக்கின் அடியில் விட்டு வாய்மூடி அமர்ந்திருப்போம். சற்று நேரத்தில் குருதியெங்கும் அனல் பரவ, காதுகள் கொதிக்க, களிமயக்கு ஏறத்தொடங்கும். எங்களுடைய மது நஞ்சுதான். மானுடர் அவற்றிலொரு துளி அருந்தினாலே உடற்தசைகள் நீலம் கொள்ளும். வலிப்பு வந்து உயிர்துறப்பார்கள். அந்நஞ்சுக்குப் பழகியவர்களுக்கு பிற மது அனைத்தும் நீர் மட்டுமே” என்றான் அரவான்.

ஸ்வேதன் அப்புளித்த மதுவை சிறிது சிறிதாக அருந்தி ஊன் சோற்றை உண்டான். “நான் இன்று காலை உணவுண்டது. உச்சிப்பொழுதுக்குரிய உணவை அங்கிருந்து கிளம்புகையில் எடுத்துக்கொள்ள மறந்துவிட்டேன்” என்றான். அரவானுக்கு கொண்டுவந்து வைக்கப்பட்ட ஊன் துண்டுகளை அவன் விரைந்து உண்டான். கைகளை இருமுறை உதறி துடைத்தபின் எழுந்து நின்று இடையில் கைவைத்து தொலைதூரம் வரை பரந்திருந்த பந்தங்களின் ஒளிப்புள்ளிப்பெருக்கை பார்த்தான். “விண்மீன்கள்போல, அல்லவா?” என்று ஸ்வேதன் கேட்டான். அவன் திரும்பி “அல்ல, அவை என்னவென்று எனக்கு சொல்லத்தெரியவில்லை” என்றான். பின்னர் “ஆம், வாழைக்காட்டில் மின்மினிகள்போல” என்றான். பின்னர் “இருண்ட நாகத்தின் செதில்மினுப்புப் புள்ளிகள்” என்றான்.

மிக விரைவிலேயே படைவீரர்கள் துயிலத்தொடங்கினர். ஸ்வேதன் “அனைவரும் களைத்திருப்பார்கள். மேலும் அவர்களுக்கு பேசவும் ஒன்றுமிருக்காது” என்றான். அரவான் திரும்பிப்பார்த்து “ஏன், படைகள் நடந்து கொண்டிருக்கையில் பேச இயலாதே? அவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்ளவேண்டுமென்றால் இப்போது மட்டும்தானே?” என்றான். “மெய்தான். படை நகரத் தொடங்குகையில் முதலிரு நாட்கள் அணிவகுப்பு கலைக்கப்பட்ட மறுகணமே பேசத்தொடங்குவார்கள். ஒவ்வொருவருக்கும் சொல்ல ஒவ்வொன்று இருக்கும். அணுகிக்கேட்டால் விந்தையானவற்றை எல்லாம் அறியமுடியும். இப்படைப் பிரிவை எப்படி வழிநடத்தவேண்டுமென்றும், இப்போரை எவ்வாறு நடத்தி முடிக்கவேண்டும் என்றும் ஒவ்வொரு படைவீரனுக்கும் முழுமையான திட்டங்களிருக்கும். அவற்றை உளக்கொந்தளிப்புடன் உரத்த குரலில் மாறி மாறி சொல்லிக்கொள்வார்கள். மறுப்பார்கள், எள்ளி நகையாடுவார்கள். நுணுக்கமாக விளக்குவார்கள். ஓரிரு நாட்களில் சொல்லடங்கிவிடும். ஏனெனில் ஒரு முழுப்பகலும் அவர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள். அன்று மாலை சொல்வதற்கென நிகழ்வுகள் ஏதுமிருக்காது.”

“அவர்கள் தங்கள் உள்ளங்களுக்குள் நிகழ்வனவற்றை சொல்லலாமே?” என்றான் அரவான். ”உள்ளங்களுக்குள் ஒன்றும் நிகழ்வதில்லை. உள்ளம் என்பது தனிமையில் நிகழும் ஒன்று. இப்பெரும்படையின் ஒரு துளியாக ஆகுகையில் முதலில் உள்ளமென்பது இல்லாமலாகிறது. மீண்டும் மீண்டும் ஓரிரு சொற்றொடர்களே உள்ளமென்று நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பழைய பாடலொன்றில் படைவீரர்களின் உள்ளம் குதிரை குளம்படி தாளத்தில் ஓடும் நான்கு சொற்களாலானது என்று சொல்லப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் முற்றாகவே இப்பெரும்படை சொல்லவிந்துவிட்டிருக்கும். அந்தியில் படைக்கலைவை அறிவிக்கையில்கூட ஓசையின்றி பிரிவார்கள். வட்டங்களாக அமர்ந்திருக்கையில் கையசைவுகளால் பேசிக்கொள்வார்கள். அனைத்து விழிகளும் ஒன்றேபோல மாறிவிட்டிருக்கும். சொல்லின்மை உருவாக்கும் விந்தையானதோர் ஒளி மட்டுமே எஞ்சியிருக்கும்” என்று ஸ்வேதன் சொன்னான்.

மிக விரைவிலேயே முழுப்படையும் துயில்கொள்ளத் தொடங்கியது. காவல்மாடங்களின்மேல் எரிந்த பந்தங்கள் அங்கே நின்றிருந்த படைவீரர்களை வானில் மிதக்கும் கந்தர்வர்கள்போல் காட்டின. புரவியிலேறிய இரவுக்காவலர்கள் மெல்லிய சீர்நடையில் நடுவே சென்ற பாதையினூடாக கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அரவான் “நாங்கள் திறந்த வெளியில் உறங்குவதில்லை. எப்போதும் மரப்பொந்துகளுக்குள்ளோ புற்றுகளுக்குள்ளோ உடல் ஒடுக்கி துயில்வது எங்கள் வழக்கம்” என்றான். “திறந்த வெளியில் துயில்பவை அரவுகளே இல்லையோ?” என்று ஸ்வேதன் கேட்டான். “மரக்கிளையில் உறங்குவது மலைப்பாம்பு ஒன்றுதான். ஆனால் அது தன்னை மரத்தோடு பிணைத்துக்கொண்டு மரமென்று மாறிவிட்டிருக்கும். தன்னை வெளிக்காட்டித் துயிலும் அரவொன்று இல்லை” என்றான் அரவான். “நீ இக்குடிலுக்குள் சென்று துயிலலாம்” என்றான் ஸ்வேதன். “நான் பெரும்பாலும் திறந்த வெளியிலேயே துயில்பவன், இங்கிருக்கும் இந்தக் காற்றுக்கு பழகியவன்.”

ஸ்வேதன் பாயை உதறி பெரிய கூழாங்கற்களை காலால் தட்டி அகற்றி நிலத்தில் விரித்தான். கைகளை தலைக்கு வைத்துக்கொண்டு மல்லாந்து படுத்து விண்மீன்களை பார்த்துக்கொண்டிருந்தான். குதிரைக்குளம்படிகள் அணுகிவரும் ஓசையைக்கேட்டு கையூன்றி எழுந்து பார்த்தான். மெல்லிய நடையில் அணுகிவந்த புரவியிலிருந்து சுருதகீர்த்தி இறங்கி “அரவுக்குடியினன் இங்குதான் இருக்கிறானா?” என்றான். ஸ்வேதன் “ஆம்” என்றான். சுருதகீர்த்தி இறங்கிவர உள்ளிருந்து அரவான் வெளிவந்து “வணங்குகிறேன், மூத்தவரே” என்றான். சுருதகீர்த்தி “நான் உன்னிடம் ஓர் ஆணையை கூறிவிட்டுச் செல்லவே வந்தேன். எந்தை கூறியது சரியென்று என் குடிலுக்குச் சென்றபோது உணர்ந்தேன். அங்கு உடன்பிறந்தவர் இருந்தனர். மூத்தவர் பிரதிவிந்தியன் இவ்வாணையை பிறப்பித்தார். அதை உன்னிடம் கூறவேண்டியது என் கடமை” என்றான்.

“தந்தையின் ஆணையை மீற உனக்கு உரிமை இல்லை. இவ்விரவிலேயே கிளம்பி மீண்டும் உனது காடுகளுக்கு செல்! உன் அன்னையிடம் சொல், தந்தை உன்னை தன் மைந்தனென ஏற்று இப்படைகளுக்குள் பணியாற்ற ஒப்புதல் அளிக்கவில்லை என்று” என்றான். “நான் என் சொற்களை முன்னரே கூறிவிட்டேன், மூத்தவரே” என்றான் அரவான். “மூத்தவரை எதிர்த்துப் பேசுகிறாயா? இது பாண்டவ மைந்தர்களில் மூத்தவராகிய பிரதிவிந்தியனின் ஆணை. இன்று வரை எங்களில் எவரும் மறுத்தொரு சொல் உரைத்ததில்லை” என்றான் சுருதகீர்த்தி. “நான் என் அன்னையின் பொருட்டு மறுத்துரைக்க கடன்பட்டிருக்கிறேன். என் அன்னை அளித்த ஆணை மாறாதது. அதை கடக்க எனக்கு உரிமையில்லை” என்றான் அரவான்.

சுருதகீர்த்தி “அறிவிலி, உன் குடிக்குரிய அறிவின்மையை காட்டுகிறாய். இங்கு வந்து படையில் சேருவதென்றால் என்னவென்று தெரியுமா? தந்தை ஏன் அத்தனை துயரடைந்தாரென்று புரிகிறதா உனக்கு?” என்றான். “புரிகிறது” என்று அரவான் சொன்னான். சுருதகீர்த்தி என்ன சொல்வதென்றறியாமல் தடுமாறி பின் “தந்தை நீ வாழவேண்டுமென்று விரும்புகிறார். எங்களில் தந்தையின் முழுதுருவும் அழகும் அமைந்தவன் நீ. இப்புவியில் அவர் வடிவாக நீ வாழவேண்டும். நம் தந்தை உன் குடிக்கு கனிந்து அளித்த பெருங்கொடை நீ. எண்ணுக, இப்போர் முடிந்தால் இங்குள்ள அத்தனை அரசர்களும் ஆற்றல் குன்றியிருப்பார்கள்! அன்று உன் குடிக்கு நீ படைத்தலைமை ஏற்றால் நீங்கள் நெடுங்காலத்துக்குமுன் கொண்டிருந்து பின் இழந்த அனைத்தையும் மீட்க முடியும். உன் குடிக்கு நீ தலைவனாவாய். இந்நிலத்தில் வெல்லமுடியாத பேரரசனும் ஆவாய். உன் கொடிவழிகள் இங்கு சிறப்புற்று வாழும். தந்தை உனக்களித்த ஆணை அது. சற்றுமுன் தமையனும் அதையே சொன்னார்” என்றான்.

குரல் கனிய “அவை ஆணையல்ல, உளம் நிறைந்த வாழ்த்துக்கள் என்றாவது உனக்கு புரிகிறதா?” என்றான் சுருதகீர்த்தி. “ஆம், மூத்தவரே. பிற அனைத்தையும்விட எனக்கு புரிந்தது அதுவே. ஆனால் எந்தையும் தமையனும் தெய்வங்களும்கூட என் அன்னையின் ஆணையிலிருந்து என்னை விலக்க இயலாது. இங்கு படைமுகம் நின்று தந்தையின் பொருட்டு போரிடவே வந்தேன். தன் பிறவிப் பெருங்கடமை ஒன்றை ஆற்ற தந்தை வில்லெடுத்து களம் நிற்கையில் வேறொன்று கருதி காட்டில் தயங்கி இருந்தேன் என்னும் இழிசொல் எனக்கு வரலாகாது. என் குடிக்கு அது பெருமையல்ல” என்றான் அரவான்.

சுருதகீர்த்தி தளர்ந்து திரும்பி ஸ்வேதனிடம் “எவ்வகையிலேனும் இந்த அறிவிலிக்கு இதை புரிய வைக்கமுடியுமா உங்களால்?” என்றான். “அவர்கள் வேறுவகை குடிகள், இளவரசே. பெரும்பாலும் இறுதி முடிவெடுத்த பின்னரே செயலை தொடங்குகிறார்கள்” என்று ஸ்வேதன் சொன்னான். சுருதகீர்த்தி பற்களைக் கடித்து கழுத்துத்தசைகள் இறுக “எந்தைக்கு நிமித்திகர் உரைத்த சொல்லை எண்ணி அவர் அஞ்சிக்கொண்டிருக்கிறார். அவர் மைந்தரில் எவரும் வாழமாட்டார்கள்… தெரிகிறதா? இதற்கு மேலும் சொல்லவேண்டுமா உனக்கு?” என்றான். அரவான் “ஆம், எங்கள் நிமித்திகரும் என்னைப்பற்றி அதையே உரைத்தனர்” என்றான். சுருதகீர்த்தி அரவானை சில கணங்கள் நோக்கிய பின் “இதன்பொருட்டு உன் குடி துயருறும்” என்றபின் திரும்பிச் சென்றான்.

தன் புரவியை அணுகி அதன் சேணத்தில் கால்வைத்தேறி அமர்ந்து திரும்பி அரவானைப் பார்த்து “நீ தந்தைக்கு பெருந்துயரொன்றை அளிக்கிறாய். இப்போது தன் அறையில் அவர் துயிலின்றி இருப்பார்” என்றான். அரவான் “என் ஊழ் அது என்றால் மாற்று பிறிதில்லை” என்றான். சுருதகீர்த்தி புரவியைத் தட்டி பெருநடையில் இருளுக்குள் சென்றான். ஒருக்களித்து தரையில் கையூன்றி வானை நோக்கிக்கொண்டிருந்த  அரவான் அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் அக்கணமே மறந்தவன்போல விண்மீன்களை பார்த்தான். பின்னர் சிறுகுடிலுக்குள் ஓசையிலாது நுழைந்து மறைந்தான். பாம்பென அவன் நெளிந்து உட்செல்வதாக ஒருகணம் தோன்ற ஸ்வேதன் புன்னகை புரிந்தான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 58

tigஅரவான் முன்பிருந்ததைவிட இயல்படைந்ததுபோல் தோன்றியது. அச்சூழலை அவன் தன் அகத்தால் கடந்து அப்பாலிருந்து அதை நோக்கியிருக்கலாம் என ஸ்வேதன் எண்ணினான். அல்லது அங்கு நிகழ்ந்தவற்றுக்குள் சென்று கண்டிருக்கலாம். ரோகிணி அவனிடம் “நீங்கள் நாகர்காடுகளிலிருந்து முதல் முறையாக வெளிவருகிறீர்கள் போலும்” என்றாள். “ஆம், நான் மானுடரை கண்டதே அரிது. காட்டிற்கு அருகேயுள்ள சுனையொன்றிற்கு ஊர்மக்கள் மூதாதையருக்கு குருதி பலிகொடுத்து வணங்கும்பொருட்டு வருவார்கள். நாகரல்லாத மானுடரை நான் பார்ப்பது அப்போது மட்டும்தான். அவர்கள் என்னை பார்க்கமுடியாது. காட்டுக்குள் நின்று நோக்கிக்கொண்டிருப்பேன். அவர்களின் ஆடைகளும் உடலசைவுகளும் விந்தையாக தோன்றும். ஆகவே நான் அத்தருணத்தை தவறவிடுவதில்லை” என்றான்.

தாங்கள் பேசிக்கொள்வது உள்ளிருக்கும் சுருதகீர்த்திக்கு கேட்குமென்பது ஸ்வேதனுக்கு மெல்லிய உவகையை அளித்தது. அவன் மேலும் சற்று உரத்த குரலில் “தங்கள் அன்னையின் ஆணையை ஏற்று இங்கு வந்தீர்கள் போலும். முதற்பார்வையிலேயே தாங்கள் இளைய பாண்டவரின் மைந்தர் என்று தெரிந்துகொண்டேன். மைந்தர்கள் தந்தையைப்போல் இருப்பது இயல்பு. விழியசைவிலும்கூட தந்தையென்றே மைந்தர் தோன்றுவது சற்று அரிது” என்றான். “நான் தந்தையை பார்த்ததில்லை. அவருடைய ஓவியங்களும் எங்களிடம் இல்லை. என் அன்னை சொன்ன கதைகளினூடாகவே அவரை அறிந்திருக்கிறேன்” என்றான் அரவான்.

“காட்டிலிருந்து முதல்முறையாக வெளிவந்து மானுடரை பார்த்த உடனே அவர்கள் என்னை இளைய பாண்டவராகவே பார்த்தனர். செல்லுமிடமெங்கும் நான் முதற்சொல்லெடுப்பதற்குள்ளாகவே என்னை வணங்கினர்” என்று அரவான் சொன்னான். “ஓவியத்திலோ நேரிலோ இளைய பாண்டவரை பார்க்காதவர்கள் இங்கு அரிதினும் அரிது” என்று ஸ்வேதன் சொன்னான். “அனைத்து படைக்காவல்தலைவர்களும் தலைவணங்கி என்னை உள்ளே செல்ல ஒப்பினார்கள். உண்மையில் நான் காட்டிலிருந்து வெளிவந்து நுழைந்த நிலம் கௌரவ படைக்கூட்டிலுள்ள திரிகர்த்தர்களின் நாடு. அங்கு காவலரணுக்கு பொறுப்பாக இருந்தவர் அஸ்தினபுரியைச் சேர்ந்த முதிய காவலர். என்னை பார்த்ததும் தலைவணங்கி இளவரசே தங்கள் வருகையால் அஸ்தினபுரி மகிழ்கிறது என்று சொன்னார்.”

அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் முரண்கொண்டு போரிட்டுக்கொண்டிருப்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. தந்தை அஸ்தினபுரியின் இளவரசர் என்பதை அறிந்திருந்தேன். “நான் அஸ்தினபுரியின் பாண்டுவின் மூன்றாவது மைந்தராகிய அர்ஜுனரின் மைந்தன், அவரை பார்க்க விரும்புகிறேன்” என்று சொன்னேன்.  “அவர் இப்போது எங்கள் அரசுக்கெதிராக படைகொண்டு செல்கிறார். ஆயினும் குருதி என்றும் தனிவழி கொண்டது. தாங்கள் இங்கிருந்து இந்திரப்பிரஸ்தத்தின் படைப்பிரிவுகளை சென்றடைவதற்குரிய வழியைக் காட்டி உடனழைத்துச் செல்வதற்கு வீரர்களை அனுப்புகிறேன். தங்கும் வழியெங்கும் தங்களுக்கு அரசமுறைப்படி வரவேற்பு அளிக்கப்படும்” என்று அவர் சொன்னார்.

பின்னர் சற்று தயங்கி “தாங்கள் விரும்பினால் தங்கள் பெரிய தந்தை துரியோதனரைப் பார்த்து முறைப்படி அரசவணக்கம் செய்து மறுபக்கம் செல்லலாம்” என்றார். “அவ்வாறு மரபுண்டா?” என்று நான் கேட்டேன். “ஆம், அதுவே மரபு. அரசகுடியினர் ஒரு நிலத்தில் நுழைந்தால் அரசவைக்குச் சென்று அரசரிடம் முறைமை வணக்கம் தெரிவிக்கவேண்டும்” என்றார். “அவ்வண்ணமெனில் என்னை துரியோதனரிடமே அழைத்துச் செல்க!” என்றேன்.

ஸ்வேதன் “அங்கு சென்றா வருகிறீர்கள்?” என்றான். “ஆம், நான் கிளம்பிவருவதற்குள் அஸ்தினபுரியின் படைகள் அங்கிருந்து கிளம்பி குருக்ஷேத்ரத்திற்கு வரத்தொடங்கிவிட்டன. தப்தவனம் என்னும் காடருகே நான் அஸ்தினபுரியின் படைகளை சென்றடைந்தேன். படைப்பிரிவின் தொடக்கத்திலேயே இளைய கௌரவரான துர்மதரை நான் சந்தித்தேன். என்னை அவரிடம் அழைத்துச்சென்று நிறுத்திய படைத்தலைவர் ஏதும் சொல்வதற்குள்ளாகவே ஒற்றர்களிடம் பேசிக்கொண்டிருந்த அவர் என்னை திரும்பிப்பார்த்து இரு கைகளையும் விரித்தபடி ஓடி வந்து என்னை நெஞ்சுடன் அணைத்துக்கொண்டார்” என்றான் அரவான்.

அவர் என் கைகளை பற்றியபடி “நீ அர்ஜுனனின் மைந்தன் அல்லவா? எங்கிருந்து வருகிறாய்? உன் அன்னை பெயர் என்ன?” என்று கேட்டார். நான் சொல்வதற்குள் “இரு! நீ சொல்லாதே. நீ நாகர்குல அரசி உலூபியின் மைந்தன்” என்றார். “ஆம்” என்றேன். “உன் நடை நாகர்களுக்குரியது. ஆனால் இளையவன் எங்கெங்கு சென்றிருக்கிறான், எத்தனை மைந்தர் என்று யாருக்குத் தெரியும்?” என்று நகைத்த பின் என் தோளை அறைந்தார். அங்கிருந்தவர்களிடம் “அர்ஜுனனின் மைந்தன். இளமையில் அவனை பார்த்தது போலவே இருக்கிறானல்லவா?” என்றார். அங்கிருந்தவர்களில் மூத்தவர்கள் “ஆம், அவ்வுருவேதான்” என்றனர்.

என்னிடம் “உன் விழிகள் மட்டும் சற்று நாகமணித்தன்மை கொண்டுள்ளன. அதுவும் அழகே” என்றபின் “நீ அஸ்தினபுரிக்கு வந்திருக்கவேண்டும். உன் மூத்த அன்னையர் உன்னைப் பார்த்தால் மகிழ்ந்து கொண்டாடியிருப்பார்கள். அரண்மனையில் உனது பேரன்னை இருக்கிறார். அவர் மைந்தர்களை தொட்டுப் பார்ப்பதையே வாழ்வின் கொண்டாட்டமாக கொண்டவர். நன்று, இப்படைவீட்டில் உன்னை சந்திக்கவேண்டுமென்றிருக்கிறது. மூத்தவரிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன்” என்றார். பிறிதொரு தலைவர் “தாங்கள் இங்கிருந்து இப்போது செல்ல இயலாது, இளவரசே. நம் படைகள் நாளை காலையே இங்கிருந்து கிளம்பியாகவேண்டும்” என்றார்.  “ஆம், வேறுவழியில்லை. நான் என் இளையோனை உன்னுடன் அனுப்புகிறேன். எங்களுக்குத்தான் இளையவர் நிரை பெரிதாயிற்றே!” என நகைத்தார்.

இளைய கௌரவரான சாருசித்ரருடன் நான் கிளம்பி படை நடுவே இருந்த துரியோதனரின் மாளிகைக்கு சென்றேன். அது இதைப்போலவே சகடங்களின் மீது ஒழுகிச்செல்லும் மாளிகை, இதைவிட இருமடங்கு பெரிது. அதன் அருகில் நான் அணுகுவதற்குள்ளேயே இளைய கௌரவர்களும் உபகௌரவர்களுமாக பலர் என்னை நோக்கி ஓடிவந்தனர். அனைவரும் முதலில் கண்ட துர்மதரின் பிறிது வடிவங்களாகவே தெரிந்தனர். அவர்களுள் ஒருவர் என்னை அள்ளித்தூக்கி மேலே வீசினார். மற்றவர்கள் கைநீட்டி என்னை பற்றிக்கொண்டனர். உரக்க நகைத்து கூச்சலிட்டபடி என்னை அவர்கள் தூக்கி மீண்டும் மீண்டும் வானிலெறிந்து பிடித்தனர். மென்மயிர்த்தூவல்போல ஆகிவிட்டேன் என நான் மயங்கினேன்.

என்னை அரசர்முன் கொண்டு சென்றனர். அம்மாளிகையின் படியில் நான் ஏறுவதற்குள்ளாகவே உள்ளிருந்து படைத்தலைவருடன் பேசிக்கொண்டிருந்த அரசர் இறங்கி வெளியே வந்து என்னை அள்ளி தன் கைகளில் எடுத்துக்கொண்டார். அவர் அருகே அவரைப்போன்ற மூத்தவர் லட்சுமணன் நின்றிருந்தார். அவரிடம் என்னை காட்டி “உன் இளையவன்! அர்ஜுனனின் மைந்தன்! நாகர்குலத்து உலூபிக்கு பிறந்தவன்” என்றார். “ஆம், சற்று முன் செய்தி வந்தபோதே அறிந்தேன்” என்று அவர் சொன்னார். “பார், இவன் விழிகள் நாகத்துக்குரியவை” என்றபின் என்னிடம் “உன்னால் இமையாது நோக்கமுடியுமா?” என்று கேட்டார். “ஆம், இமையா நோக்கும் சிறுவளைக்குள் பதுங்கிக்கொள்வதும் மரங்களில் இருந்து மரங்களுக்கு பறப்பதும் எங்கள் குலக் கலைகள்” என்று நான் சொன்னேன்.

“நச்சு அம்பு! நச்சு அம்பு விடுவாயா?” என்று அவர் உவகையுடன் கேட்டார். “ஆம், அரசே. நச்சம்பும் எங்கள் குலக் கலையே. சிறுநாணலை ஊதி அம்புவிடுகிறோம்” என்றேன். என் தோள்களை தன் பெரிய கைகளால் அறைந்தார். “இளமையிலேயே வில் பயின்றிருந்தால் எதிர்நிற்க எவருமிலாத வீரனாக இருந்திருப்பாய். விற்கலைக்குத் தேவையானது உடல் நெளிவு. நாகர்கள் எலும்பிலாத உடல் கொண்டவர்கள் என்பார்கள்” என்றார். “வில் எய்யும் அம்பை நோக்கலாம். எங்கள் நாணலை மானுடவிழி அறியாது” என்றேன். “ஆம், மெய்தான்” என்று சொல்லி “எப்படி மறுமொழி சொல்கிறான் பார்” என மேலும் நகைத்தார்.

அவன் அதை வேண்டுமென்றே உள்ளிருக்கும் சுருதகீர்த்தி கேட்க வேண்டுமென்பதற்காக சற்று உரக்க சொல்கிறான் என்று ஸ்வேதன் உணர்ந்தான். அவன் விழிகளை சந்தித்தபோது மீண்டும் அரவான் புன்னகைத்தான். “நான் ஒருநாள் அங்கிருந்தேன். என்னை அவர் தன்னுடன் உணவருந்தும்படி அழைத்தார். பாடிவீட்டில் அந்தியில் கௌரவர்களுடன் அமர்ந்து உணவுண்டேன். நான் ஊனுணவு மட்டுமே உண்பதைக்கண்டு அவர்கள் திகைத்தனர்” என்றான். ஸ்வேதன் “நீ ஊனுணவு மட்டுமே உண்பாயா?” என்றான். “ஆம் எங்கள் நாகர்குடியில் நாங்கள் ஊனை மட்டுமே உண்போம். பிறரைப்போல் கனிகளையும் தானியங்களையும் கிழங்குகளையும் உண்பதில்லை” என்றான். “ஏன்?” என்று ஸ்வேதன் கேட்டான். “நாங்கள் உயிருள்ள உணவுகளை உண்ணவேண்டுமென்பது எங்கள் குலமூதாதையரின் நெறி. நாகங்கள் உயிரற்றவற்றை உண்பதில்லை.” ஸ்வேதன் ஒருகணத்திற்குப் பின் புன்னகைத்து “ஆம், மெய்” என்றான்.

அன்று அனைவரிடமும் கால்தொட்டு வணங்கி வாழ்த்து கொண்டபின் அங்கிருந்து கிளம்பினேன். நூற்றுவரிடம் விடைபெற்றேன். கௌரவ மைந்தர்களிடம் விடைபெறுகையில் லட்சுமணரிடமும் துருமசேனரிடமும் கால்தொட்டு வாழ்த்துகொண்டேன். கௌரவ தந்தையர் ஒவ்வொருவராக என்னை நெஞ்சுடன் அணைத்து மீண்டும் மீண்டும் வாழ்த்தினர். மூத்த கௌரவர் துச்சாதனர் “நீ இதற்குமுன் படைப்பிரிவுகளில் பணியாற்றியிருக்கிறாயா?” என்று கேட்டார். “இல்லை, தந்தையே. நான் மானுடரையே இப்போதுதான் முதன்முறையாக அணுக்கத்தில் பார்க்கிறேன்” என்றேன். அரசர் தொடைகளில் அடித்து உரக்க நகைத்து “நாகர்கள் மானுடர்களல்ல என்பது மெய்யே” என்றார். நான் “காடுகளிலிருந்து மானுடரை பார்த்திருக்கிறேன். அவர்கள் கைகூப்பியபடி அமைதியாக வருவார்கள். வெளிப்போந்து நான் பார்த்த அத்தனை மானுடரும் உரக்க கூச்சலிட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றேன். “நாங்கள்?” என்று துச்சகர் கேட்டார். “நீங்கள் பெருமானுடர்” என்றேன்.

“இவனிடம் இன்று முழுக்க அமர்ந்து மானுடரிடம் இவன் கண்ட சிறப்பியல்புகள் என்ன என்று கேட்டு தெரிந்துகொள்ள விழைகிறேன், இளையோனே” என்றார் அரசர். “பிற மானுடரிடமிருந்து எங்களை வேறுபடுத்துவது எது?” என்று பெரிய தந்தை சுபாகு கேட்டார். “மானுடரைவிட நீங்கள் சற்று பேருரு கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் நகைப்பதைவிட நீங்கள் மிகுதியாக நகைக்கிறீர்கள்” என்றேன். சுபாகு நகைத்து “ஆம், களத்திற்கு எழுந்த பின்னர் நாங்கள் நகைப்பது மேலும் மிகுதியாகிவிட்டது” என்றார். துச்சகர் “நீ இன்றே கிளம்பியாகவேண்டுமா என்ன? உன் மூத்தவர் ஆயிரத்தவர் இங்கிருக்கிறார்கள். ஓரிரு நாட்கள் இங்கிருந்தால் அனைவருடனும் சின்னாட்கள் மகிழ்ந்து விளையாடிவிட்டுச் செல்லலாம்” என்றார்.

நானும் அங்கிருக்கவே விழைந்தேன். ஆனால் தந்தை சுபாகு இடைபுகுந்து “அல்ல, அவன் அன்னை தந்தையிடமே அனுப்பியிருக்கிறார்” என்றார். அரசர் எனக்கு அவருடைய அருமணிக் கணையாழி ஒன்றை அளித்து “உன் மூத்த தந்தையின் பரிசென இதை கொள்க! என்றேனும் என் தந்தை திருதராஷ்டிரரை நீ சந்திப்பாயென்றால் இது என்னால் தரப்பட்டது என்று காட்டுக! உன் அன்னையை மீண்டும் பார்க்கும்போது எங்கள் குடி அவர் முன் தலைவணங்குகிறது என்று கூறுக!” என்றார்.

ஸ்வேதன் உளநெகிழ்வடைந்தான். “அவரைப்பற்றி பிறிதொருவகையில் எந்த நூலும் கூறவில்லை. எந்த சூதனும் மாற்று நடித்ததுமில்லை” என்றான்.  “பிறகு ஏன் இந்தப் போர் நிகழ்கிறது?” என்றான் அரவான். “இதற்கு அவரோ வேறெவருமோ மறுமொழி சொல்லிவிடமுடியாது. இப்போரை முன்நின்று நிகழ்த்தும் இளைய யாதவரேகூட” என்றான் ஸ்வேதன். துரியோதனனின் நினைவால் முகம் மலர்ந்த அரவான் “அங்கிருந்து இங்கு வருகையில் நான் பிறிதொன்றை எண்ணிவந்தேன். என்னை இந்திரப்பிரஸ்தத்தின் படை உவகையுடன் எதிர்கொள்ளும் என்று எண்ணினேன். ஆனால் படைமுகப்பில் என்னைப் பார்த்த வீரர்கள் முறைமைப்படி தலைவணங்கினார்களே ஒழிய ஒருவரும் மகிழ்வென எதையும் காட்டவில்லை. படைத்தலைவர் சாத்யகியும் ஓரிரு சொற்கள் பேசி என் அடையாளங்களை நோக்கியபின் ஓலை அளித்து இங்கு அனுப்பினார். வழியெங்கும் என்னை விந்தையாகப் பார்க்கும் விழிகளையே கண்டேன். அது என்னை உளம் தளரவைத்தது” என்றான்.

புரவிகள் இரண்டு அணுகிவரும் குளம்படியோசை கேட்டது. சுருதகீர்த்தி உள்ளிருந்து வெளியே வந்து அவர்களிருவரையும் பார்க்காமல் படிகளிலிறங்கி அவர்களை அணுகினான். இரு புரவிகளும் விரைவழிந்து நிற்க முதற்புரவியிலிருந்து இறங்கிய அர்ஜுனன் தொடர்ந்து வந்த படைத்தலைவனிடம் குறுகிய சொற்களில் ஏதோ சொல்லி கையசைத்தபின் பாடிவீட்டை நோக்கி வந்தான். சுருதகீர்த்தியை பார்த்ததும் “ஓலைகள் வந்தனவா?” என்றான். “ஆம், அனைத்தையும் முறைப்படி அடுக்கி தங்கள் பீடத்தின் மீது வைத்திருக்கிறேன்” என்றான் சுருதகீர்த்தி. படிகளில் ஏறிய அர்ஜுனன் அரவானைப் பார்த்ததும் புருவம் சுளிக்க நின்றான். பின்னர் “உலூபியிடமிருந்து வருகிறாயா?” என்றான்.

“ஆம், தந்தையே. அன்னை என்னை தங்களிடம் வந்து சேரும்படி ஆணையிட்டார்கள். இப்போரில் நானும் பங்குகொள்ள வேண்டுமென்று அவர்கள் விழைகிறார்கள்” என்றபின் முன்னால் வந்து முழந்தாளிட்டு தன் தலையை அவன் காலடியில் வைத்து “வாழ்த்துங்கள்” என்றான். அர்ஜுனன் இடக்கையை அவன் தலையில் வைத்தபின் ஒரு சொல்லும் உரைக்காமல் உள்ளே சென்றான். சுருதகீர்த்தி படிகளிலேறி அசையாமல் நின்றான். உள்ளே அர்ஜுனன் மரத்தாலான சிறிய மணியொன்றை அடிக்கும் ஓசை கேட்டது. சுருதகீர்த்தி உள்ளே சென்று திரும்பி வந்து ஸ்வேதனிடம் “உங்களை அழைக்கிறார்” என்றான்.

ஸ்வேதன் உள்ளே சென்று அங்கு எழுத்துப்பீடத்தின் முன் தரையிலிட்ட மான்தோல் மேல் அமர்ந்திருந்த அர்ஜுனனை அணுகி கைகூப்பி வணங்கி “நான் குலாட குலத்து ஸ்வேதன். தங்கள் தாள் பணிந்து போர்ப் பணியாற்ற படையுடன் வந்தேன்” என்றான். “ஓலையில் பார்த்தேன்” என்றபின் அர்ஜுனன் “நீ விராடரின் மைந்தனல்லவா?” என்றான். “ஆம், ஆனால் அவர் அவ்வண்ணம் எங்கும் உரைத்ததில்லை. ஆகவே அதை கூறும் தகுதியை நான் இழந்துள்ளேன்” என்றான். “தந்தையின் அடையாளமில்லாதவர்களை இங்கே ஏற்கவியலாது. போர்நெறிகளில் அதுவும் ஒன்று” என்று அர்ஜுனன் சொன்னான். “நீயே படித்தறிந்திருப்பாய். போர்ச்சடங்குகளுக்கு தந்தைபெயர் சொல்லியாகவேண்டும்.”

ஸ்வேதன் அதற்கு மறுமொழியாக “என் இளையோன் தங்கள் மூத்தவரிடம் பணிக்கு சேர்ந்துள்ளான்” என்றான். “ஆம், அவர் காட்டுமனிதர். அவருக்கு நெறிகளேதுமில்லை” என்றான் அர்ஜுனன். கைகளைக் கட்டியபடி சாய்ந்துகொண்டு “நீ உன் தந்தையிடம் சொல் கோரலாம். உங்கள் குருதியை மறுக்கும் உரிமை விராடருக்கில்லை. ஏனெனில் அது குலமூத்தார் கூடி முறைப்படி நிகழ்ந்த திருமணம். விராடர் மூத்தவரின் அவையில் உங்களை தம் மைந்தரென்று அறிமுகம் செய்தாக வேண்டும். உத்தரன் தன் நிலத்தின்மேல் உரிமைகொண்டவர் என்று கூறியுமாக வேண்டும்” என்றான்.

“அது எனக்கு பெரிதாக படவில்லை. என் சிற்றூரிலிருந்து கிளம்பும்வரை அதை நான் எண்ணியதுண்டு. இன்று தங்கள் மாணவனாக படை முன் நிற்பதொழிய பிறிதொன்றும் பொருட்டெனத் தோன்றவில்லை” என்றான். அர்ஜுனன் “ஆனால் போர் ஒரு சாவுக்களம். அங்கு என்ன நிகழுமென்று எவரும் கூற இயலாது. குருதி வழி முழுமையாக ஒப்பப்பட்ட பின்னரே களம்படுவது வகுக்கப்பட்டுள்ளது. எவர் நீர்க்கடன் இயற்றவேண்டுமென்பதை வகுக்காமல் எவரும் போருக்கிறங்காலாதென்று கூறப்பட்டுள்ளது” என்றான். ஸ்வேதன் ஒருகணத்திற்குப் பின் “ஆனால் மைந்தரை தந்தையர் மதிக்க வேண்டுமென்று எந்த மூதாதையரும் ஆணையிடவில்லை. பெரும்பாலும் தந்தையர் மைந்தர்களை தேவையற்ற சுமையென்றே கருதுகிறார்கள்” என்றான்.

அர்ஜுனனின் முகம் சுருங்கி பின்னர் “நீ கூறவருவதென்ன?” என்றான். “தங்கள் மைந்தன் கால்தொட்டு வணங்கியபோது வாழ்த்தி ஒரு சொல்லும் தாங்கள் உரைக்கவில்லை” என்றான் ஸ்வேதன். “அவனை நான் இங்கு அழைக்கவில்லை. இது அவர்களுடைய போர் அல்ல” என்று அர்ஜுனன் உரக்க சொன்னான். “இது நாகர்களுக்கு எதிரான போர். இப்போருக்குப் பின் அவர்கள் எங்கும் எஞ்சமாட்டார்கள். நான் இவன் அன்னையை மறுக்கவில்லை. ஆனால் அதன்பொருட்டு இவன் என்னிடம் படைகொண்டு வந்து சேரவேண்டுமென்று கூறவில்லை. என் மைந்தர் கூறாதன இயற்றுவது எனக்கு உகந்ததுமல்ல” என்றான்.

“அவன் அன்னையின் ஆணை அதுவென்றால் அதுவே அவன் கடன்” என்றான் ஸ்வேதன்.  அர்ஜுனன் “அரசுசூழ்கையில் அவ்வாறு தனிஉணர்வுகளுக்கு இடமில்லை. அவன் இங்கு சேர்ந்துகொள்வதனூடாக நாகர்களுக்கு எதிரான என் வஞ்சம் குறைவுபடக்கூடும். போர் முடிந்தபின் நாகர்களுக்கு சில உரிமைகளை இவனூடாக நான் அளிக்கவும் நேரும். எஞ்சவிட்ட நஞ்சு என்று நாகர்களை எண்ணுகிறேன். மீண்டுமொரு நஞ்சு எஞ்சும்படிவிட எண்ணமில்லை” என்று சொன்னான். “இவனை கொல்வீர்களா?” என்றான் ஸ்வேதன். “இவன் தூய நாகன் அல்ல” என்றான் அர்ஜுனன்.

“அவன் அன்னை…” என்று ஸ்வேதன் மீண்டும் சொல்லத்தொடங்க “ஆம், அவன் அன்னையின் ஆணையை ஏற்று அவன் வந்துள்ளான். அவன் அன்னையின் எண்ணமென்ன என்று யாரறிவார்? அவள் தன் குலக்குழுவின் ஆணைக்குட்பட்டவள். இப்போரின் இருபுறமும் நாகர்கள் இருக்கவேண்டும் என்று அவள் எண்ணியிருக்கலாம். எப்பக்கம் வென்றாலும் நாகர் நிலத்தில் ஒரு பகுதி அவர்களுக்கு அரசமுறையாக அளிக்கப்படும் என்று கருதியிருக்கலாம்” என்றான் அர்ஜுனன்.

ஸ்வேதன் சலிப்புடன் தலையை அசைத்து “இதற்குமேல் நான் சொல்லெடுக்க விரும்பவில்லை. தாங்கள் என்னை படைத்துணைவனாக ஏற்கவேண்டுமென்று மட்டும் கோருகிறேன்” என்றான். அர்ஜுனன் சிலகணங்களுக்குப் பின் உடல் தளர்ந்து இடக்கையால் மீசையை முறுக்கி நீவியபடி “அடிபணிய வந்தபோதும்கூட உன் உளத்துக்குத் தோன்றிய உன் எண்ணத்தை சொல்லத் தயங்கவில்லை. அது உன் கரவின்மையையும் துணிவையும் காட்டுகிறது. நீ எனக்கு உகந்தவன். உன் படைகள் என்னுடன் நிற்கட்டும். அவையில் உன் தரப்பைச் சொல்லி உனக்குரிய இடத்தை அளிக்க ஆவன செய்கிறேன்” என்றபின் “நீ என் பொருட்டு வந்திருக்கலாம். ஆனால் உன் குலத்தின் பொருட்டே போர்புரிகிறாய். ஆகவே அரசரின் அவையில் இப்போருக்குப் பின் அரசர் உனக்கு அளிக்கவிருப்பதென்ன என்பதை கேட்டு முறையாக சொல்பெற்றுக்கொள்ளவேண்டும்” என்றான்.

ஸ்வேதன் “நாங்கள் விராடபுரிக்கோ கலிங்கத்திற்கோ கப்பம் கட்டும் நாடாக இதுவரை இருந்துகொண்டிருக்கிறோம். அரசர் யுதிஷ்டிரர் வென்று முடிசூடுகையில் நேரடியாக அஸ்தினபுரிக்கு கடன்பட்டவர்களாக திகழ வேண்டும். எங்கள் குடியில் ஓர் அரசி அஸ்தினபுரிக்கு மணமகளாக செல்லவேண்டும்” என்று ஸ்வேதன் சொன்னான். “நன்று! அதை அவையுரையாக சொல்க! மூத்தவர் ஏற்பாரென்றே எண்ணுகின்றேன்” என்றான் அர்ஜுனன். சுருதகீர்த்தியிடம் திரும்பி “இவரை அழைத்துச் செல்க! இவர் தங்கி ஓய்வெடுக்கட்டும். நாளை அரசரின் அவை கூடுகையில் இவர் வந்து அமரட்டும்” என்றான்.

சுருதகீர்த்தி தலைவணங்கி திரும்பி ஸ்வேதனிடம் மெல்ல தலையசைத்தான். ஸ்வேதன் ரோகிணியைப் பார்த்து அவளை மறந்துவிட்டதை உணர்ந்தான். அவள் இரு கைகளையும் கூப்பியபடி கண்களிலிருந்து நீர் வழிய மெல்லிய உடல் நடுக்குடன் தன்னை மறந்தவளாக நின்றிருந்தாள். அர்ஜுனன் அறைக்குள்ளிருந்து எழுந்து அவர்களுக்குப் பின்னால் வந்து “இவள் உன்னுடன் வந்தவளா?” என்று ரோகிணியைச் சுட்டி கேட்டான். “ஆம், அரசே. உங்கள் அடியாள். உங்களை எண்ணி உளம் நிறைந்தவள். உங்களை பார்க்கவென்று விழைந்தாள்” என்றான் ஸ்வேதன்.

அர்ஜுனன் குழந்தையை அணைக்க விழைவதுபோல தன் இரு கைகளையும் நீட்ட ரோகிணி அறியாது மேலும் பின்னகர்ந்தாள். புன்னகையுடன் அருகே வந்து அவள் தோள்மேல் கைவைத்து தன் உடலுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு “நீ அழகி. இங்கு நுழைந்தபோதே உன் கண்களை பார்த்தேன். நீர் நிறைந்த அழகிய கண்கள் எப்போதும் என்னை நிலைகுலைய வைக்கின்றன” என்றான். ரோகிணி முழந்தாள் மடிய நிலத்தில் விழுந்து அவன் கால்கள்மேல் தலைவைத்து உடல்குலுங்க அழுதாள். அர்ஜுனன் அவளை தோள்பற்றி தூக்கி “நீ இங்கு என்னுடன் இருக்கலாம். எனக்கு ஏவலர் இருவர் இருந்தனர். ஒருவரை நகுலனிடம் அனுப்பிவிட்டேன். நீ அணிஏவலர்களுடன் சேர்ந்துகொள்” என்றான். விசும்பல் ஓசையுடன் இரு கைகளாலும் முகம் பொத்தி ரோகிணி விழிநீர் சிந்தினாள்.

மறுபக்கம் சுவர் சாய்ந்து கூப்பிய கைகளுடன் அரவான் நின்றிருந்தான். அர்ஜுனன் அறைக்குள் செல்லும்பொருட்டு திரும்ப சுருதகீர்த்தி “தந்தையே, இவன் உங்கள் மைந்தன். உங்கள் நாவால் இவன் இன்னும் வாழ்த்தப்படவில்லை” என்றான். அர்ஜுனன் அரவானை நோக்கி திரும்பி “உனக்கு என் வாழ்த்து இல்லை. உனக்கான வாழ்த்துகளை உன் அன்னைக்கே அளித்திருக்கிறேன்.  இங்கு உனக்கு இடமுமில்லை. உன் அன்னையின் ஆணைப்படி என்னை வந்து பார்த்துவிட்டாய். திரும்பிச் செல். நான் உன்னை படைஏற்பு செய்யவில்லை என்று அவளிடம் சொல்” என்றான்.

“போரில் கலந்துகொள்ளும்படி என் அன்னையின் ஆணை. ஆகவே நான் திரும்ப எண்ணமில்லை” என்று அரவான் சொன்னான். அர்ஜுனன் உரத்த குரலில் “அறிவிலி! நான் ஏற்காது நீ இங்கு படையில் சேர இயலாது” என்று சொன்னான். பதற்றமாக கைகளை வீசியபடி “நான் வாழ்த்துரைத்தால் என் மைந்தனென்றாகிவிடுவாய். அதுவே உன் உரிமையை அளிக்கும். ஆகவே அது என் நாவிலிருந்து எழாது. செல்க!” என்றான். அரவான் “அரசகுடியினனாக இப்படைப்பிரிவில் சேர்வதற்குத்தான் தங்கள் சொல் தேவை. எளிய படைவீரனாக எங்கு சேரவும் தங்கள் வாழ்த்து எனக்கு தேவையில்லை” என்றான். “என் மறுப்பு இருக்குமென்றால் நீ இப்படையில் சேர இயலாது” என்று அர்ஜுனன் கூவினான்.

அவன் உடல் பதறுவதையும் முகம் சிவந்து கண்கள் ஈரமாவதையும் கண்டு ஸ்வேதன் அந்த மிகையுணர்ச்சி ஏன் என்று ஐயம் கொண்டான். அரவான் “எவரும் சேர்க்காவிட்டாலும் இக்களத்தில் எங்கேனும் எவ்வகையிலேனும் என்னால் இருக்க இயலும். நாகர்கள் விழியறியாது உலவும் கலையறிந்தவர்கள். களம்விட்டு நீங்கமாட்டேன். வேண்டுமென்றால் நீங்கள் என்னை கொன்று அகற்றலாம்” என்றான். “கீழ்மகனே… என்ன எண்ணிவந்தாய்? என் எதிர்நின்று ஏன் சொல்லெடுக்கிறாய்?” என்றபடி அர்ஜுனன் கையோங்கி அரவானை நோக்கி சென்றான். சுருதகீர்த்தி “தந்தையே, தாங்கள் இவன் அன்னையுடன் ஆண் என்று இருந்ததை மறுக்கிறீர்களா? பாரதவர்ஷமே அறிந்த கதை அது” என்றான். “இல்லை, அவள் என் உளத்துக்கு என்றும் இனியவள்” என்றான் அர்ஜுனன். “மைந்தனை மட்டும் ஏன் மறுக்கிறீர்கள்?” என்று சுருதகீர்த்தி கேட்டான்.

“ஏனெனில் அவன் வாழவேண்டுமென்று விழைகிறேன். அவனாவது எஞ்சியிருக்க வேண்டும். ஆகவேதான் மணிபூரகத்திலிருந்து பப்ருவாகனன் இங்கு வந்து போரில் கலந்துகொள்ளலாகாதென்று ஆணையை அனுப்பினேன். இவன் வாழும் காடுவரை இப்போர்ச் செய்தி சென்று சேருமென்று நான் எண்ணவில்லை. இவன் அன்னை இப்படி அறிவின்றி இவனை கிளப்பி இங்கு அனுப்புவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை” என்று அர்ஜுனன் உடைந்த குரலில் சொன்னான். அரவானிடம் “செல்க! உயிருடனிரு, அறிவிலி… நான் உன்னை வாழ்த்துகிறேன். இங்கிருந்தல்ல, இப்போர்க்களத்தில் உயிருடன் எஞ்சினால் உன் அன்னையிடம் வந்து வாழ்த்துகிறேன். உயிர்துறந்தால் விண்ணிலிருந்து வாழ்த்துகிறேன். இப்படைப்பிரிவில் உனக்கிடமில்லை” என்றான்.

அரவான் “தந்தையே, தாங்கள் வாழ்த்தளிக்காமல் உள்ளே சென்றபோதே நான் அதை உணர்ந்தேன். என்னைப் பார்த்த முதற்கணத்திலேயே உளம் நெகிழ்ந்து நீங்கள் அளித்த நற்சொல்லை பெற்றுக்கொண்டேன். அந்த முதற்கணத்து உளநெகிழ்வின் பொருட்டு  இங்கு படைநிற்கவும் உயிர்கொடுக்கவும் கடமைப்பட்டுள்ளேன்” என்று உரைத்தான். சுருதகீர்த்தி “தந்தை கூறுவது மெய்தான், இளையோனே. இப்போரில் முதன்மை அம்புகள் மைந்தர்களை நோக்கியே எழும். உன்னைப் பார்த்ததும் என்னுள் எழுந்த முதல் எண்ணமும் நீயும் களம்படக்கூடும் என்பதே. நீ திரும்பிச் செல்வதே நன்று” என்றான்.

“பொறுத்தருள்க, மூத்தவரே! நான் எதன்பொருட்டு காட்டிலிருந்து கிளம்பினேனோ அது எதன்பொருட்டும் மாற்றுப்படுவதில்லை” என்று அரவான் சொன்னான். தளர்ந்தவன்போல அர்ஜுனன் “எவரிடமும் எதையும் சொல்வதில் பயனில்லை. அனைத்து மானுடரையும் மீறிய ஆணைகள் இங்கு நிறைந்துள்ளன” என்றான். பொருளில்லாமல் கையை வீசியபடி அரவானை பார்க்காமல் “எதுவாயினும் என் வாழ்த்து பெற்று இப்படையில் நீ சேரப்போவதில்லை” என்றபின் தன் அறைக்குள் சென்றான். சுருதகீர்த்தி ஸ்வேதனிடம் “வருக!” என்றான். பின்பு அரவானிடம் “உன் விழைவுப்படி ஆகுக! நாளை அரசரின் அவையில் இவருடன் நீயும் சென்று நிற்கலாம்” என்றான். பின்னர் அவன் தோளைத் தொட்டு “உன்னை நான் மீண்டும் பார்க்க விரும்பவில்லை. உன் தோற்றம் அளிப்பது அனல்சுடுவதுபோன்ற வலியை” என்றபின் இறங்கி வெளியே நடந்தான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 57

tigஇருபுறமும் பெருகிப் பரந்திருந்த படைவெளிக்கு நடுவே மிகத் தொலைவில் வானில் சிறகசையாது நின்றிருக்கும் செம்பருந்துபோல தெரிந்த பொன்னிறக் கொடியில் குரங்கு முத்திரையை ஸ்வேதன் கண்டான். முதற்கணத்தில் அதை எப்படி அடையாளம் காண முடிந்ததென்று அவன் உள்ளம் உடனே வியந்து கொண்டது. அது ஒவ்வொரு கணமுமென தன் சித்தத்தில் இருந்துகொண்டிருந்தது என்றும் உள்ளிருக்கும் அந்த நோக்கே எழுந்து வெளியே அதை அடையாளம் கண்டது என்றும் எண்ணினான். அருகே வந்துகொண்டிருந்த ரோகிணியிடம் “அதுதான்” என்று சுட்டிக்காட்டினான்.

அவள் அந்தக் கொடியை அடையாளம் காணவில்லை. அப்போதுதான் அப்பகுதியெங்கும் அவ்வாறு பலநூறு கொடிகள் பறப்பதை அவன் கண்டான். தன் விழி பிறிதொன்றையும் காணவில்லை என்று எண்ணி புன்னகைத்துக்கொண்டான். ரோகிணி “எதை சுட்டுகிறீர்கள், அரசே?” என்றாள். “உன்னால் கண்டுபிடிக்க முடியாது, குரங்குக்கொடி” என்றான். “ஆம், அவரது கொடி குரங்கு முத்திரை கொண்டது என்று கேட்டிருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “மூத்த பாண்டவர் பீமசேனருக்குரியவர்கள் மாருதர்கள். அவர்கள் ஏன் இளைய பாண்டவரின் கொடியில் அமர்ந்தார்கள்?”

ஸ்வேதன் “பல கதைகள். நானறிந்த கதை ஒன்றே. படைக்கலப் பயிற்சியின்போது வாயுதேவன் தனக்கிணையாக பறந்துவந்த அம்பு ஒன்றைக் கண்டு திகைத்து நின்றார். பின்னர் அதை எய்தவனை தேடிச்சென்றார். அங்கு அர்ஜுனர் வில்பயில்வதைக் கண்டு மகிழ்ந்து அவர் யாரென்று கேட்டறிந்தார். அவர் பீமசேனரின் இளையோன் எனக்கேட்டு மகிழ்ந்து வாழ்த்தினார். தன் மைந்தர்களில் ஒருவனாகிய மனோவேகனை அர்ஜுனருக்கு தேராக அளித்தார். அது தேவையாகும்போது பெற்றுக்கொள்வதாக இளைய பாண்டவர் சொன்னார். குருக்ஷேத்ரம் அறிவிக்கப்பட்டதுமே சிற்பிகளை வரவழைத்து மனோவேகன் வந்தமையும் தேர் ஒன்றைச் செய்ய ஆணையிட்டார். இன்று பாரதவர்ஷத்திலேயே விரைவுமிக்க தேர் இது. இதைவிட விரைவாகச் செல்வது வாயுதேவனின் மேலாடை மட்டுமே. இதை பெருந்தேர்வலர் மட்டுமே செலுத்த முடியும்…” என்றான்.

ரோகிணி பரபரப்புடன் வானை துழாவிக்கொண்டிருந்தபின் “பார்த்துவிட்டேன்! அதோ, அந்தக் கொடி!” என்றாள். “ஆம், உனக்கு வில்திறன் உள்ளது… ஒப்புகிறேன்” என்று ஸ்வேதன் புன்னகைத்தான். அவர்கள் அக்கொடியை அணுகுந்தோறும் அங்கிருந்த படைப்பிரிவில் அனைவருமே வில்லவர்களென்று தெரிந்தது. அவர்கள் முற்றிலும் விழியற்றவர்கள்போல் நிலைத்த நோக்குடன் சென்றுகொண்டிருந்தனர். “வில்லவர் விழிகள் ஒன்றையே நோக்குகின்றன. ஆகவே நோக்கற்றவைபோல் சிலைத்தன்மை கொண்டிருக்கின்றன” என்று அவன் ரோகிணியிடம் சொன்னான். “அதைத்தான் நானும் எண்ணிக்கொண்டு வந்தேன். கூர்விழிகள் மானுடத்தன்மையை இழந்துவிடும் ஒரு தருணம் உண்டு” என்றாள் ரோகிணி. “மானுடமென்பதே மாபெரும் அலைக்கழிவு மட்டும்தானா?” ஸ்வேதன் புன்னகைத்தான்.

அவர்கள் முந்தையநாள் இரவு விராடர்களின் படைப்பிரிவின் குடிலில் தங்கி காலையில் கிளம்பியிருந்தனர். பகலெல்லாம் பயணம் செய்து அர்ஜுனனின் படைப்பிரிவை வந்தடைந்திருந்தார்கள். படைத்தொடக்கத்தில் இந்திரனின் மின்படை பொறிக்கப்பட்ட பெரிய பட்டம் ஒன்று மூங்கில் தூணில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. தொலைவிலிருந்து பார்க்கையில் முகபடாம் அணிந்த யானை காது அசைத்து மெல்ல திரும்புவதுபோல் தோன்றியது. அதனருகே இருந்த காவல்மாடமும் அந்தப் பட்டத்தூணும் அருகிருந்த சிற்றில்லும் சீர்நடையில் சென்றுகொண்டிருந்த படைகளுடன் சகடங்களில் ஒழுகிக்கொண்டிருந்தன. அங்கிருந்த ஒவ்வொன்றும் அடியிலொரு நதிப்பெருக்கால் கொண்டுசெல்லப்படுபவைபோல் சென்றன.

காவல்மாடத்தை அணுகியதும் அங்கு நின்றிருந்த காவலன் அவர்களை நோக்கி தலைவணங்கி “தங்கள் ஆணையோலை…?” என்றான். ஸ்வேதனுடன் வந்த திருஷ்டத்யும்னனின் துணைப்படைத்தலைவன் வஜ்ரகுண்டலன் முன்னால் சென்று ஆணையோலையை காட்டினான். காவலன் தலைவணங்கி “இளவரசர் தன் குடிலில் இப்போது இல்லை. எங்கு சென்றிருக்கிறாரென்று தெரியாது. தாங்கள் காத்திருக்கலாம். அவர் வரும்பொழுதை எவராலும் உரைக்க இயலாது. ஓய்வெடுப்பதென்றால் பாடிவீடுகளை ஒருக்கச் சொல்கிறேன்” என்றான். “வேண்டியதில்லை, காத்திருக்கிறோம்” என்று ஸ்வேதன் சொன்னான். ரோகிணியிடம் “இருபதாண்டுகளாக காத்திருக்கிறேன்” என்றான். அவள் புன்னகை புரிந்தாள். அவர்களை ஒரு வீரன் அழைத்துச்சென்றான். அந்த இடத்தை அடைந்ததுமே அதுவரை இருந்த உளக்கிளர்ச்சி அமைந்து ஆழ்ந்த நிறைவொன்றை ஸ்வேதன் அடைந்தான். “இனி அவரை பார்க்கவில்லை என்றாலும் தாழ்வில்லை. இங்கு கால்வைத்ததே நிறைவு” என்றான்.

அந்தப் பாடிவீடு எட்டு சகடங்களின் மேல் அமைக்கப்பட்டு எட்டு காளைகளால் இழுக்கப்பட்டு படையுடன் தானும் சென்று கொண்டிருந்தது. அதற்கப்பால் எழுந்து நின்ற குரங்குக்கொடி பறக்கும் கொடிக்கம்பமும் சகடங்கள் அமைந்த பீடத்தில் காளைகளால் இழுக்கப்பட்டு சென்றபடியே இருந்தது. அவர்கள் நடக்க நடக்க மிகக் குறைவாகவே இடைவெளி சுருங்கியது. ஸ்வேதனும் வஜ்ரகுண்டலனும் புரவிகளை காவலனிடம் ஒப்படைத்துவிட்டு இறங்கி மையக்குடிலுக்கு சென்றார்கள். அங்கு நின்றிருந்த காவலன் அவன் அளித்த கணையாழியையும் ஓலையையும் சீர்நோக்கி உள்ளே செல்லும்படி பணித்தான். சென்று கொண்டிருந்த பாடிவீட்டில் படிகளில் கால் வைத்தேறி உள்ளே சென்று அதன் சிறிய முகப்பில் போடப்பட்டிருந்த மூங்கில் பீடத்தில் அவன் அமர்ந்தான். வஜ்ரகுண்டலன் அருகே நிற்க விளிம்பில் ரோகிணி நின்றாள்.

உள்ளிருந்து வெளியே வந்த இளைஞனைப் பார்த்ததுமே ஸ்வேதன் அடையாளம் கண்டுகொண்டான். அவன் பார்த்த ஓவியங்களில் எழுதப்பட்டிருந்த அர்ஜுனனின் இளைய உருவம் போலவே இருந்தான். எழுந்து கைகூப்பி “பாண்டவ மைந்தர் சுருதகீர்த்தியை வணங்குகிறேன். நான் குலாட குலத்து இளவரசன் ஸ்வேதன். இளைய பாண்டவரை அடிபணிய வந்தேன்” என்றபின் திரும்பி தன் அருகே நின்ற திருஷ்டத்யும்னனின் துணைப்படைத்தலைவனை பார்த்தான். அவன் ஓலைகளையும் கணையாழியையும் நீட்ட சுருதகீர்த்தி முறைப்படி தலைவணங்கி அதை பெற்றுக்கொண்டான். “அமருங்கள், குலாடரே. தங்கள் வரவு நிறைவளிக்கிறது. இச்சந்திப்பால் நன்மை திகழ்க!” என்றான். பின்னர் ஓலையைப் படித்து கணையாழியை ஒருமுறை நோக்கியபின் அதை மட்டும் திரும்ப படைத்தலைவனிடம் கொடுத்தான்.

ஓலையை உள்ளே கொண்டுசென்று வைத்துவிட்டு திரும்பி வந்து “தந்தை இங்கில்லை. புலரியிலேயே படைகளின் அணிவகுப்பை பார்க்கச் சென்றார். அங்கிருந்து காட்டுக்குள் சென்றிருக்கக்கூடும்” என்றான். “தனியாகவா?’ என்று ஸ்வேதன் கேட்டான். சுருதகீர்த்தி புன்னகைத்து “அவர் திரும்பிவரும் பொழுதை எவரும் சொல்லிவிடமுடியாது. பெரும்பாலும் பின்காலையில் வருவார்” என்றான். ஸ்வேதன் “நான் அவருடன் படைத்துணையாக நின்றிருக்க விழைந்து வந்துள்ளேன். எனது படைகள் அங்கு திருஷ்டத்யும்னரின் படைகளுடன் நின்றுள்ளன” என்றான். “ஆம், பாஞ்சாலர் தன் ஓலையில் கூறியிருந்தார்” என்று சுருதகீர்த்தி சொன்னான். வஜ்ரகுண்டலன் வணங்கி விடைபெற்று திரும்பிச் சென்றான்.

மேலும் சொல்லெடுக்க ஏதுமின்றி இருவரும் அமைதியானார்கள். சுருதகீர்த்தி “தாங்கள் இங்கு காத்திருப்பதென்றால் நன்று. எனக்கு சில அலுவல்கள் உள்ளன. இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவேன்” என்றபின் பாடிவீட்டிலிருந்து இறங்கி தொடர்ந்து வந்துகொண்டிருந்த தன் படைவீரர்களை நோக்கி குதிரைக்காக கையசைத்தான். அவன் இறங்கியபோதுதான் அந்தப் பாடிவீடு நகர்ந்து சென்றுகொண்டிருக்கும் செய்தி மீண்டும் ஸ்வேதனின் உள்ளத்தை அறைந்தது. அருகே இருக்கும் அனைத்து சிறுபாடிவீடுகளும் நகர்ந்து வந்துகொண்டிருந்ததனால் நிலையான இடமொன்றென விழிகள் சமைத்துக்கொண்டிருந்தன. அவ்வப்போது மரங்கள் வரும்போது மட்டும்தான் ஒழுக்கு உணரப்பட்டது.

ஸ்வேதன் திரும்பி ரோகிணியிடம் “உன்னைக் குறித்து அவர் ஏதேனும் கேட்டிருந்தால் சொல்லலாம் என்று எண்ணினேன்” என்றான். “தாழ்வில்லை. எங்களை அரசகுடியினர் விழிகொண்டு நோக்குவது இல்லை. பெரும்பாலானவர்களுக்கு நாங்கள் கண்களில் படுவதே இல்லை” என்றாள் ரோகிணி. அவள் அதை புன்னகையுடன் சொன்னாலும் ஸ்வேதன் “அவர் இளைய பாண்டவரின் மைந்தர். சிற்றியல்புகள் எதுவும் அவரிடம் இருக்க வாய்ப்பில்லை” என்றான். “அவர் உங்களை ஓரவிழியால் பார்த்தார். நெடுநேரமல்ல, ஒருகணம்தான். அப்போது அவர் விழியை நான் பார்த்தேன். அதில் ஒவ்வாமை இருந்தது” என்று ரோகிணி சொன்னாள். “ஏன்?” என்று ஸ்வேதன் கேட்டான். ரோகிணி புன்னகைத்து “ஒருவேளை தாங்கள் அவர் மைந்தனோ என்று ஐயுறுகிறார் போலும். தன் தந்தைக்கு செல்லுமிடமெல்லாம் மைந்தர் என்பதை கேட்டுதானே அவரும் வளர்ந்திருப்பார்?” என்றாள்.

ஸ்வேதன் உரக்க நகைத்து “ஆனால் என்னிடம் இளைய பாண்டவரின் எந்த உருவ ஒப்பும் இல்லையே?” என்றான். ரோகிணி “உருவ ஒப்புமை என்பது குருதியினூடாக வந்து தசைகளில் திகழவேண்டுமென்பதில்லை. உள்ளத்தூடாக வந்தும் உடலசைவில் எழமுடியும். நான் முதலில் உங்களைப் பார்த்ததும் இளைய பாண்டவர் என்றே எண்ணினேன். சில கணங்களுக்குப் பின்னரே நீங்கள் பிறிதொருவர் என்று விழி தெளிந்தது” என்றாள். “நீ இளைய பாண்டவரை முன்னரே பார்த்திருக்கிறாயா?” என்றான். “இல்லை. ஆனால் சொற்களினூடாக பல்லாயிரம் முறை அவரை என் உள விழிக்குள் நிகழ்த்தியிருக்கிறேன்” என்றாள். “அது எப்படி அவரது தோற்றமாகும்? சொல் அத்தனை தெளிவாக ஒருவரை விழிமுன் நிறுத்துமா என்ன?” என்றான். “என் உள்ளம் சொற்களை உணர்வது. அவரை நிகிழ்த்தும் களமென அது முன்னரே ஒருங்கியிருந்தது. அவர் நடந்துசென்ற காலடித்தடத்தையேகூட அடையாளம் காண இயலும் என்னால்” என்றாள் ரோகிணி.

அப்பால் புரவியொன்று வந்து நிற்க அதிலிருந்து இறங்கிய இளைஞனும் துணைப்படைத்தலைவனும் அவனை நோக்கி வந்தனர். ரோகிணி “அது அவர் மைந்தர்!” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்று ஸ்வேதன் கேட்டான். “ஐயமே இல்லை, அது அவர் மைந்தர்! எங்கிருந்து வருகிறார் என்று கேளுங்கள்” என்றாள். ஸ்வேதன் எழுந்து வணங்கி “உள்ளே வருக, இளவரசே!” என்றான். வந்தவன் அர்ஜுனனின் அதே முகமும் உடலும் கொண்டிருப்பதை ஸ்வேதன் அப்போதுதான் உணர்ந்தான். அதுவரை விழியை தடுத்திருந்தது ஓர் ஒவ்வாமை. அவனால் சுருதகீர்த்தியின் ஒவ்வாமையை புரிந்துகொள்ள முடிந்தது.

அவ்விளைஞன் சுருதகீர்த்தியின் இளைய வடிவம் போலிருந்தான். சென்றுகொண்டிருந்த பாடிவீட்டிற்கு இணையாக நடந்தபடி அவன் “நான் பாண்டவர்களில் இளையவராகிய அர்ஜுனரை பார்க்கும்பொருட்டு வந்தேன். நாகர்குடியை சார்ந்தவன். என் பெயர் அரவான்” என்றான். ஸ்வேதன் “தங்களைப்பற்றி கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். தங்கள் தாயை இளைய பாண்டவர் மணந்த கதை சூதர் நாவில் திகழ்கிறது. இது அவருடைய பாடிவீடு. நானும் அவரை பார்க்கும்பொருட்டே வந்துள்ளேன். உள்ளே வருக, இளவரசே!” என்றான்.

அரவான் காலெடுத்து உள்ளேவைத்து மேலே வந்தான். ரோகிணியைப் பார்த்து தலைவணங்கி “வணங்குகிறேன்” என்றான். அவள் திகைத்து “ஆம், வணங்குகிறேன்” என்றாள். ஸ்வேதன் திரும்பிப்பார்த்து “இவள் பெயர் ரோகிணி. அடுமனையாட்டி. இளைய பாண்டவரை பார்க்கும் பொருட்டு என்னுடன் வந்தாள்” என்றான். அரவானின் விழிகளில் அவள் பெண்ணல்ல என்பது எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை என்பதை கண்டான். சிறு படபடப்புடன் அவனுடன் வந்த படைத்தலைவன் “எங்கள் தலைவர் என்னிடம் இவருடன் இங்கு வந்து ஓலை ஒன்றை கையளிக்கும்படி கூறினார்” என்றான். “நான் இப்பாடிவீட்டுக்கு பொறுப்பானவன் அல்ல. பாண்டவ மைந்தராகிய சுருதகீர்த்தியே இதை நடத்துகிறார். இன்னும் சிறுபொழுதில் அவர் இங்கு வருவார். ஓலையை அவரிடம் அளிக்கலாம்” என்றான் ஸ்வேதன்.

அரவான் நின்றுகொண்டிருக்க ஸ்வேதன் பீடத்தில் அமர்ந்த பின் “அமர்க, இளவரசே!” என்று பீடத்தை காட்டினான். அரவான் “இல்லை, நான் அவர் வரும் வரை நிற்கின்றேன்” என்றான். “அமர்வது முறைமை” என்றான் ஸ்வேதன். “அமர்ந்தாக வேண்டுமென்று நெறியுள்ளதோ?” என்ற பின் அரவான் மூங்கில் பீடத்தில் அமர்ந்தான்.

படைத்தலைவன் “நான் உடனே திரும்பிச்செல்லவேண்டும்” என்றான். “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று ஸ்வேதன் கேட்டான். “ஏழாவது பிரிவின் பதினெட்டாவது துணைப் பிரிவில் இருந்து, அதை யாதவராகிய சாத்யகி நடத்துகிறார். இந்த ஓலை அவர் அளித்தது.” அத்தருணத்தின் விந்தையால் அப்போதுதான் ஸ்வேதன் உளம் மலர்ந்தான். முற்றிலும் புதிய இருவர் இரு திசைகளிலிருந்து கிளம்பி அர்ஜுனனை பார்க்கும்பொருட்டு வந்திருக்கிறார்கள். அவர்களை அவர் மைந்தர் எதிர்கொள்கிறார்கள். ஒருவேளை ஒவ்வொரு நாளுமென மைந்தரும் மாணவரும் அவ்வாறு தேடிவரக்கூடுமோ? சுருதகீர்த்தி அரவானைப் பார்த்ததும் எப்படி எதிர்வினை புரிவான் என்னும் எண்ணம் எழுந்தது. அந்த ஒவ்வாமை மேலும் பெருகியிருக்கும் என்று தோன்றியது.

பீடத்தின் விளிம்பில் இலையில் தவளையென தொற்றி அமர்ந்திருந்த அரவான் விரல்களை ஒன்றுடன் ஒன்று கோத்திருந்தான். சிறிய உதடுகளை மடித்து கவ்வியிருந்தான். மென்மயிர் மீசையும் தாடியும் கரிய பளபளப்பான தோலும் கொண்ட முகத்தில் கண்கள் குழந்தைகளுக்குரிய தெளிவும் கற்றறிந்தோருக்குரிய கூர்மையும் கொண்டிருந்தன. உலூபியின் மைந்தன். நாகர் குலக்கன்னி. நாகமென்று மாறி இளைய பாண்டவர் புணர்ந்து பெற்றெடுத்தவன். இன்று மானுட உருக்கொண்டு அமர்ந்திருப்பினும் எக்கணமும் பாம்பென மாறி நெளிந்து சீறி படமுயர்த்த இவனால் இயலும். பத்து விரல்நகங்களும் நச்சுப்பற்களாகக்கூடும். விழிகள் இமையாமை கொள்ளும். சீறி வாய்திறந்தால் பிளந்த நாக்கு அனலென வெளிவந்து துடித்தாடும்.

கதைகளிலிருந்து மானுடர் எழுந்துவருவதை அவன் முன்னர் கண்டதில்லை. சொற்பரப்பைப் பிளந்து கதைகளை ஈரநீர்த்துளிகளென உதறி அவர்கள் வந்து நிகழ்காலம் முன் நிற்கிறார்கள். இங்குள்ள காற்றும் வெயிலும் அவர்களை உலரச்செய்து பிறிதொருவரைப் போலாக்குகிறது. மெல்ல மெல்ல நாம் அனைத்தையும் மறந்து அவர்களை நமக்கிணையானவர்கள் என்று எண்ணத்தொடங்குவோம். ஆனால் எக்கணமும் திரும்பப் பாய்ந்து அப்பெருநதிக்குள் சென்று மறைந்துவிட அவர்களால் இயலும். கதைகள் என்றுமுள்ளவை. நேற்றென்றும் நாளையென்றும் அறியாது என்றுமுள இன்றில் அலைகொள்பவை. அக்கதைப்பெருக்கில் ஒரு திவலை இவன்.

அவனால் அரவானை நோக்காமல் இருக்க இயலவில்லை. கால் நகங்களிலிருந்து புரிகுழல் அலைவரை மீளமீள பார்த்தான். பழுதற்ற முழுதுடல். முதுமையும் உலகியல் சுமைகளும் இப்போது இளைய பாண்டவரை தளர்த்தியிருக்கலாம். அவரிலிருந்து மீண்டும் மீண்டும் முளைத்தெழுந்துகொண்டே இருக்கிறது அவரென்றாகி மண்ணில் திகழும் இந்திரனின் ஒளி. அரவான் புலித்தோலாடை அணிந்திருந்தான். கழுத்தில் நாகவிழிமணிகளைக் கோத்த மாலை. நாகமண்டலிக் கொடியால் ஆன கங்கணங்கள். நாகமண்டலி பின்னிய கால்தளைகள். பாம்புத்தோலால் ஆன இடைக்கச்சை. அதில் மிகச் சிறிய குத்துவாள். காதுகளில் சிறு நாகக்குழவி சுற்றியிருப்பதுபோன்ற குண்டலங்கள். அதில் இரு ஒளித்துளிகளென கற்கள்.

இவன் அன்னை எங்கிருக்கிறார்? இப்போர் மூண்டெழுந்ததுமே மைந்தனை வாழ்த்தி இங்கு அனுப்பியது அவர்தான் போலும். இப்போரில் நாகர்களுக்கு என்ன இடம்? தன் அம்புப்பெருக்கால் மாநாகங்களின் காண்டவத்தை முற்றழித்தவர் இளைய பாண்டவர். நாகர்களின் வஞ்சம் ஒரு துளி எஞ்சவிடப்பட்டது. அது எங்கோ திரண்டு தன் துளித்தன்மையாலேயே விசைகொண்டு, ஒளிகொண்டு காத்திருக்கிறது என்கிறார்கள். இப்போரில் இந்திரனின் மைந்தனுக்கெதிராக எழுந்த இருபெரும் வல்லமைகள் கதிரவனின் வெங்கதிரும் நாகத்தின் நச்சுத்துளியும் என்று சூதர்கள் பாடுகிறார்கள். இவன் நாகத்தின் குழவி திசைமாறி அனல்நோக்கி நெளிந்தணைவதுபோல் வந்திருக்கிறான்.

புரவிக்குளம்படி கேட்டு அவன் திரும்பிப்பார்த்தான். சுருதகீர்த்தி புரவியிலிருந்து இறங்கி இயல்பாக நடந்து கால்வைத்து பாடிவீட்டின் படிகளிலேறி வந்தான். தொடர்பழக்கத்தினால் அதன் ஒழுக்கை அவன் கால் நன்கு பழகியிருந்தது. முதற்பார்வையிலேயே அவன் அரவானை பார்த்துவிட்டான். அரவான் எழுந்து நின்று கைகூப்பி தலைவணங்கினான். அவன் உடல் மெல்ல நடுங்கத்தொடங்கியதை ஸ்வேதன் கண்டான். சுருதகீர்த்தி அந்த துணைப்படைத்தலைவனைப் பார்த்து புருவம் சுழித்து “செய்தியுண்டா?” என்றான். அவன் தலைவணங்கி “பாண்டவ மைந்தர் சுருதகீர்த்தியை வணங்குகிறேன். நான் சாத்யகியின் முதற்படைத்தலைவன் அரூபன். என்னிடம் படைத்தலைவர் கொடுத்த ஓலை இது. சான்றுக் கணையாழியும் உள்ளது” என்றான்.

சுருதகீர்த்தி வலக்கையை நீட்ட அவன் அந்த ஓலையை அளித்தான். கணையாழியை கையில் வாங்கிவிட்டு திருப்பிக்கொடுத்து ஓலையை கையால் நீவி இருமுறை படித்தான். அவன் மீண்டுமொரு நோக்கு அரவானுக்கு அளிக்கவே இல்லை. ஒரு சொல்லும் உரைக்காமல் ஓலையுடன் உள்ளறைக்குள் சென்றான். துணைப்படைத்தலைவன் நிற்பதா செல்லலாமா என்று குழம்பி உள்ளறையை பார்த்துவிட்டு அரவானை பார்த்தான். ஸ்வேதன் “தங்கள் பணி முடிந்ததென்றால் கிளம்பலாம், படைத்தலைவரே” என்றான். தலைவணங்கி அவன் வெளியே இறங்குகையில் மண்ணுக்கும் பாடி வீட்டிற்குமான அசைவு மாறுபாடை கருத்தில் கொள்ளாமல் கால் வைத்து சற்றே தடுமாறி ஓரிரு அடிகள் முன்னால் வைத்து சென்றான்.

சற்று பின்னகர்ந்து அரவான் நின்றுகொண்டிருந்தான். ஸ்வேதன் “நீங்கள் அமரலாம்” என்றபின் தானும் அமர்ந்தான். அரவான் அறைக்குள் பார்த்தபின் தயங்கினான். உள்ளிருந்து சுருதகீர்த்தி வெளியே வருவான் என்று ஸ்வேதன் எதிர்பார்த்தான். சில கணங்களுக்குப் பின் அவன் வரப்போவதில்லை என்று தோன்றியது. அந்த வாயில் ஒரு விழியென மாறி அவர்களை பார்த்துக்கொண்டிருந்தது. ஸ்வேதன் அமைதியிழந்தான். அரவானை நோக்குவதை தவிர்த்தான். அரவானும் உள்ளே நோக்கவில்லை என்றாலும் அவன் உடல் பட்டாம்பூச்சி இறகென நடுங்கிக்கொண்டிருந்ததை காணமுடிந்தது.

பொழுது ஓடிக்கொண்டிருந்தது. அரவான் இருமுறை அறைவாயிலை பார்த்தபின் மெல்ல தயங்கி பீடத்தில் அமர்ந்தான். இரு கைகளையும் மடிமேல் கோத்து வைத்துக்கொண்டான். அவன் ஏன் உதடுகளை உள் மடித்து வாய்மூடியிருக்கிறான் என்று ஸ்வேதன் எண்ணினான். அது அவனை அஞ்சிய சிறுவனைப்போல் காட்டியது. கைகளை ஒருபோதும் விரல்கோத்து மடியில் வைத்துக்கொள்ளக்கூடாது, அது பணிவென்று உடல்மொழி காட்டும். தோள்கள் முன்தொய்ந்து வளையவும் வழி வகுக்கும். எங்கு அமர்ந்திருந்தாலும் இரு தோள்களையும் பின்தள்ளி நெஞ்சை முன்விரிக்கவேண்டும். அது நம்பிக்கையென வெளிப்படும். எவரையும் பார்க்காதபோது நேர்முன்னால் ஏதேனும் ஒரு பொருளில் விழிநட்டு அசையாதிருக்கவேண்டும் என்றும், ஒருபோதும் விழிதழைந்து கீழ் நோக்கியிருக்கலாகாது என்றும், மறுமொழிகளோ நேர்கூற்றுகளோ உரைக்கையில் முதற்சொல்லும் இறுதிச்சொல்லும் ஒலி குறைந்து மழுங்கிவிடலாகாதென்றும் அவனுக்கு கற்பித்திருந்தனர்.

அவன் அதையெல்லாம் அரவானிடம் சொல்ல விரும்பினான். அவன் அன்னை அச்செய்திகளை அறியாதவராக இருக்கலாம். குலாடர்களைப்போலவே நாகர்களும் அன்னைவழி குலமுறை கொண்டவர்கள். அன்னையருக்குரிய முறைமைகளும் உடல்மொழிகளும் முற்றிலும் வேறு. அவன் அன்னை கலிங்கத்திலிருந்து போர்முறைப் பயிற்சியாளர் ஒருவரை வரவழைத்து அவனுக்கு கற்பித்தார். அவர்கள் ஷத்ரியர்களாக ஆவதற்கான பயிற்சியில் இருக்கும் குடி. இவன் இன்னமும் அந்த எண்ணத்தையே அடையவில்லை. ஷத்ரியர் என்பது ஓர் எதிர்நிலை. எதிர்காற்றுக்கு நெஞ்சுவிரிப்பதுபோல. ஊழுக்கும் இறப்புக்கும் மண்ணுக்கும் சூழுக்கும் எதிராக தருக்குதல்.

உள்ளிருந்து சுருதகீர்த்தி வெளியே வந்தான். அரவானை நோக்கி “முறைப்படி அரச குடியினரல்லாதவர்கள் இங்கு பீடத்திலமர்வது ஏற்கப்படுவதில்லை. தங்களிடம் நான் பீடம் சுட்டவும் இல்லை” என்றான். அரவான் திடுக்கிட்டு எழுந்து கைகூப்பி “பொறுத்தருள வேண்டும்” என்றான். சுவரோடு சாய்ந்து “நான்… இவர் என்னிடம்…” என்று குழறினான். ஸ்வேதன் “இளவரசே, அவருக்கு பீடம் அளித்தவன் நான். நான் அரசகுடியினன். எவருக்கும் எங்கும் பீடமளிக்கும் உரிமை எனக்குண்டு. அதை நீங்கள் மறுப்பீர்கள் என்றால் என்னை இப்போதே தனிப்போரில் நீங்கள் வெல்ல வேண்டும்” என்றான்.

சுருதகீர்த்தி சினத்தில் நெரிந்த முகத்துடன் “இது உங்கள் அரண்மனையல்ல” என்றான். “நான் இருக்கும் இடமெல்லாம் என் மாளிகையே. அதை மறுக்கும் எவரிடமும் போர்புரியவும் கொன்று வெல்லவும் துணிவேன்” என்றான் ஸ்வேதன். சுருதகீர்த்தி தன்னை அடக்கிக்கொண்டு “இது என் தந்தையின் பாடிவீடு. இங்கு நீங்கள் அவருடைய விருந்தினர்” என்றான். ஸ்வேதன் குரலை உயர்த்தாமல் அழுத்தம் ஏறிய சொற்களுடன் “அதை அவரிடமும் நீங்கள் கருதியிருக்க வேண்டும். அவரும் அரசகுடியினர் ஒருவரின் ஆணையோலையும் முத்திரையும் கொண்டு உங்கள் தந்தையை பார்க்க வந்தவர். இங்கு எவரை அமரவைக்கவேண்டும் எழவைக்கவேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமைகொண்டவர் அவரை அனுப்பியவரும் அவருடைய ஓலைபெறுபவருமே ஒழிய குடில்காப்பாளரான நீங்கள் அல்ல. இவர் தனக்கு பீடம் மறுக்கப்பட்டதன் பொருட்டு உங்களை தனிப்போருக்கு அழைக்க முடியும். அவருடன் தனிப்போர் புரியும் உரிமையை உங்கள் தந்தை உங்களுக்கு அளிக்கவில்லை என்பதனால் இங்கே அவர்முன் பணியவும் வேண்டியிருக்கும். அவ்விழிவை உங்களுக்கு அளிக்காமலிருப்பது அவர் உங்களுக்கு அளிக்கும் கொடை” என்றான்.

சுருதகீர்த்தி பற்களைக் கடித்து முகம் சிவக்க “முறைமைகளை நானும் அறிவேன். எனக்கு எவரும் கற்பிக்கவேண்டியதில்லை” என்றபின் எவரையும் நோக்காமல் “இந்தப் பாடிவீட்டில் அரசகுடியினரன்றி பிறர் அமர்ந்திருப்பதை நான் விரும்பவில்லை. இப்போதே அவர்கள் கிளம்பிச் செல்வார்களென்றால் அதுவும் நன்றே. அதை எந்த அவையிலும் நான் எழுந்து சொல்கிறேன்” என்றபின் திரும்பி உள்ளே சென்றான்.

அரவான் அவன் உள்ளே சென்றதை நோக்கியபின் ஸ்வேதனைப் பார்த்து மெல்லிய புன்னகை புரிந்தான். அப்போதுதான் அவன் யார் என்று ஸ்வேதனுக்கு புரிந்தது. முற்றிலும் புதிய சூழலை எதிர்கொண்டமையால் உடலில் பதற்றமும் தத்தளிப்பும் கூடியிருந்தும் உள்ளத்தில் மாறாநிலை கொண்டிருப்பவன் அவன். அத்தருணத்தை எதிர்கொள்கையிலேயே உள்ளே ஒருபாதி விலகி நின்று நோக்கி புன்னகை கொள்ளவும் இயல்கிறது அவனுக்கு. எந்நிலையிலும் தன்னை மறந்தொரு சொல்லோ செயலோ அவனிடமிருந்து எழப்போவதில்லை. அவன் களம்நின்று பொருதும் ஆற்றல் கொண்டவன் என்பதை அப்புன்னகையே உணர்த்தியது. ஸ்வேதன் புன்னகை புரிந்து “உங்கள் பொருட்டு நானும் நின்றுகொள்கிறேன்” என்றான். அரவான் மெல்ல தலைவணங்கினான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 56

tigமீண்டும் படைகளின் நடுவே செல்லத் தொடங்கியபோது ஸ்வேதன் சற்று விரைவு குறைத்தே புரவியை செலுத்தினான். வஜ்ரகுண்டலன் அவர்களை நோக்கியபடி சற்று விலகி வந்தான். ஆணிலியுடன் செல்வதை அவன் இழிவெனக் கருதுவதை காணமுடிந்தது. பந்தங்களின் ஒளி செந்நிறமாக வழியெங்கும் சிந்திக் கிடந்தது. வழியில் யானைகளை அவிழ்த்து இரட்டைக் கந்துகளில் இருபக்கமும் சங்கிலி நீட்டி கட்டியிருந்தார்கள். அவை செவியாட்டியபடி உப்புநீரில் நனைக்கப்பட்ட உலர்புல்லைச் சுருட்டி மண்போக காலில் அறைந்து தின்றுகொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான மணிகளின் ஓசை இணைந்து முழக்கமாக சூழ்ந்தது.

“நீ எப்போது இளைய பாண்டவரை அறிந்தாய்?” என்று ஸ்வேதன் கேட்டான். ரோகிணி சிறு ஓட்டமாக அவர்களுடன் வந்தபடி “நான் மொழி அறிகையிலேயே அவரைப்பற்றி அறிந்துகொண்டேன். மணிபூரக நாட்டில் அவர் பெண்ணுருக்கொண்டு சென்று சித்ராங்கதையை வென்ற கதையை ஒருநாள் சூதர் ஒருவர் எங்கள் மன்றில் பாடினார். அப்போது நான் எந்தையுடனும் அன்னையுடனும் இருந்தேன். அப்போது அவர்கள் உத்கலத்தில் ஒரு கற்கோயிலை செதுக்கிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் சிற்பப் பணி முடிந்த பின்னர் இளைப்பாறும் பொருட்டு சூதரைக்கொண்டு கதையும் ஆடலும் நிகழ்த்தினார் அவ்வூரின் சிற்றரசர். அன்னை மடியிலிருந்து அக்கதையை நான் கேட்டேன்” என்றாள்.

“என் நாவில் அப்போதும் மொழி திருந்தியிருக்கவில்லை. செவியறியும் சொற்களுக்கு பொருள் விரியும் பருவமும் அகவையும் அல்ல. ஆயினும் அக்கதையில் நான் முழுமையாக ஆழ்ந்தேன்” என்று அவள் தொடர்ந்தாள். “கரைவிளிம்பில் நின்றிருக்கையில் கால்தவறி பெருக்கெடுக்கும் நதியொன்றில் விழுந்து கொண்டுசெல்லப்படுவதுபோல என்று பின்னாளில் அதை மீண்டும் மீண்டும் எண்ணி நோக்கியிருக்கிறேன். அந்நாளில் ஒவ்வொரு அந்தியிலும் ஒரு சூதர்கதையை கேட்டுக்கொண்டிருந்தேன். மாமன்னன் நளன் புரவி வென்ற கதை. ராகவராமன் படைகொண்டு சென்று இலங்கையை வென்றது. இந்திரன் வெண்ணிற யானை மேல் ஏறி விருத்திரனை அழித்தது. எந்தக் கதையும் பிறிதெங்கோ எவரோ இயல்வதாகவே எனக்கு தோன்றியது. அந்தக் கதையில் மட்டும் நான் இளைய பாண்டவராக மாறினேன்.”

முகம் மலர்ந்தவளாக அவள் சொல்லிக்கொண்டே வந்தாள். “வேர்கள் நெளியும் நீராழத்தில் நீந்தி வெளியே தெரியும் மங்கலான வானத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். இத்தனை ஆண்டுகளில் வேர் நெளியும் நீராழம் எத்தனையோ முறை என் கனவுகளில் வந்திருக்கிறது. ஒருமுறைக்கு மேல் அந்தக் கதையை நான் கேட்டதில்லை. அதன் சொற்களேதும் என் நினைவில் இல்லை. ஆனால் மிதக்கும் பசுந்தீவுகளில் ஏறினேன். மூங்கில் சூழ்ந்த கோட்டையை தாவிக்கடந்தேன். மூங்கிலாலான ஏழடுக்கு மாளிகை, பீதர்முகங்கொண்ட குடிகள் என ஒவ்வொரு காட்சியும் என்னுள் நூறாண்டு வாழ்ந்ததற்கு நிகராக பதிந்துள்ளது.”

“வாழ்வைவிட கனவு எத்தனை ஒளிமிக்கதாய் பழுதற்றதாய் நோக்குந்தோறும் தெளிவதாக இருக்கிறது! ஏனெனில் இவ்வாழ்வைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு பொருளும் வடிவம் கொண்டுள்ளது. நம் விழைவுக்கேற்ப உருமாறுவன எவையுமில்லை. இங்கே எட்டுத் திசைகளும் எட்டு விசைகளாக நம்மை இழுக்கின்றன. நம் கனவுகளோ நாமன்றி பிறிதொன்றிலாதவை. அங்கு தெய்வங்களுமில்லை. ஒரு தருணம் இளைய பாண்டவராக அங்கு நான் இருப்பேன். பிறிதொரு தருணம் சித்ராங்கதையாக அவர்மேல் பெருங்காதல் கொள்வேன். அரிதாக அவர்களுக்கு குற்றேவல் செய்யும் சிறுமியாக இருந்தேன்” என்றாள் ரோகிணி.

ஸ்வேதன் “அப்போதே உன்னை சிறுமி என்றுதான் எண்ணினாயா?” என்றான். அவள் திரும்பிப் பார்த்து “நான் என்னை எண்ணும்போதெல்லாம் சிறுமியாகவே உணர்ந்தேன்” என்றாள். “அக்கதையை உன்னிலிருந்து சென்று தொட்டது எதுவென்று உணர்வதொன்றும் கடினமானதல்ல” என்றான் ஸ்வேதன். ரோகிணி “ஆம், நீங்கள் சொல்வது என்ன என்று எனக்கு புரிகிறது. நான் ஆணிலியானதால் அக்கதைக்குள் சென்றேனா அன்றி அக்கதை என்னை ஆணிலியாக வார்த்தெடுத்ததா என்று நானும் எண்ணியதுண்டு” என்றாள்.

“பின்னர் பிருகந்நளையாக விராடபுரிக்குச் சென்ற கதையை கேட்டேன். அப்போது பெற்றோரைவிட்டு ஆணிலிகளுடன் சேர்ந்து பெண்ணுருக்கொண்டு ஊர்கள் தோறும் அலையத்தொடங்கிவிட்டிருந்தேன். பிறந்த குழந்தைகளை கைதொட்டு வாழ்த்தினேன். புத்தில்லங்களில் முதலில் நுழைந்தேன். இந்திரனுக்கு பூசனை நிகழும் இடங்களில் முதல்மலர் கொண்டும் செழிக்கா வயல்களில் இடக்கால் வைத்து சீற்றம்கொள்ளச் செய்தும் பாரதவர்ஷத்தின் நாடுகளெங்கும் அலைந்து திரிந்துகொண்டிருந்தேன். விராடபுரியின் பிருகந்நளையின் கதையை கேட்டுக் கேட்டு பெருக்கிக்கொண்டேன். ஒருமுறை அக்கதையை கேட்டுக்கொண்டிருந்தபோதுதான் என்னை அவரால் புரிந்துகொள்ளமுடியும் என்று தோன்றியது.”

“அந்தக் கணத்தை நினைவுறுகிறேன். சூதன் அதை பாடிக்கொண்டிருந்தான். எனக்கு மிக அருகே அவர் நின்றிருப்பதாக உணர்ந்தேன். திரும்பிநோக்கினால் அவ்வுணர்வை இழந்துவிடக்கூடும் என அஞ்சி அவ்வாறே அமர்ந்திருந்தேன். அன்றுமுதல் அவரை சென்று சேர விழைவுகொண்டேன். என்றேனும் ஒரு நாள் அவரை நான் பார்ப்பேன் என்று என் அகம் உறுதி கொண்டிருந்தது. காண்கையில் அவரிடம் எனக்கு சொல்வதற்கு ஒன்றே இருக்கிறது. என் இறையே, என்னை ஆட்கொள்க! தாங்களன்றி பிறர் என்னை அறிய இயலாது. அது ஒன்றே. அச்சொல்லுக்கு அப்பால் இப்புவியில் எவரிடமும் எனக்கு சொல்வதற்கு ஏதும் இல்லை.”

ரோகிணி பேசிக்கொண்டே சென்று சொல்முடிந்து வெறுமையை சென்றடைந்தாள். பின்னர் நெடுநேரம் தலைகுனிந்து நடந்து வந்தாள். அடுமனைகளில் பொருட்களிலிருந்து உணவு எழத் தொடங்கியது. கல்லில் தெய்வம் எழுவதுபோல என்று அதை சங்கன் சொல்வதுண்டு. அவன் புன்னகைத்தான். அத்தனை தெளிவாக, தொட்டு உண்டு உணரும்படி தெய்வத்தை அறிய வாய்ப்பவர்கள் நல்லூழ் கொண்டவர்கள்.

உணவின் மணத்தை உணர்ந்து அரைத்துயிலில் இருந்த படைவீரர்கள் எழுந்து அமர்ந்து மேலும் ஊக்கத்துடன் பேசிக்கொண்டிருந்தமையால் படைமுழக்கம் இருளுக்குள் கார்வையுடன் எழுந்தது. சங்கன் பசிகொண்டிருந்தான். அடுமனை மணம் அவனை மேலும் சோர்வுறச் செய்தது. அவர்களின் பேச்சில் அவன் உள்ளம் ஈடுபடவில்லை. புரவியின் கடிவாளத்தை தளர்வாகப் பிடித்தபடி தயங்கிய நடையில் புரவியை செல்லவிட்டு உடலை எளிதாக்கி இருபுறமும் ஆர்வமின்றி நோக்கியபடி வந்தான்.

படைவீரர்கள் சகட ஒலி கேட்டு திரும்பி நோக்கினார்கள். பேசிக்கொண்டிருந்தவர்களின் ஓசை நின்றது. அது விளக்குவண்டிகள் எனத் தெரிந்ததும் தொடர்ந்தனர். ஊன்நெய்க்கலம் ஏற்றப்பட்ட ஒற்றைச் சகடவண்டியை ஒருவன் தள்ளியபடி வர இன்னொருவன் நீள்கைக்குடுவையால் நெய்யை அள்ளி ஊற்றி கற்களால் ஆன பந்தவிளக்குகளை எரியவிட்டான். “ஏன் கல்விளக்குகள்?” என்றான் சங்கன். “அவை எரியால் வெம்மை கொள்வதில்லை” என்று ரோகிணி சொன்னாள்.

உலர்ந்து விறகுபோலான ஊன்துண்டுகளை வெட்டுவதற்கு ஒரு கருவியை உருவாக்கியிருந்தனர். பெரிய மரப்பீடத்தில் அதை ஒருவன் வைத்தான். அதை வெட்டும் கத்தியின் பிடி மிக நீளமானதாக இருந்தது. முழு எடையாலும் அதை ஒருவன் அழுத்த பாக்குவெட்டிபோல அது ஊன்தடியை நறுக்கியது. அகன்ற உருளிகளில் கொதிக்கும் அரிசியுடன் ஊன் துண்டுகளையும் காய்கறிவற்றல்களையும் உலர்கிழங்குகளையும் போட்டனர். அவை வெந்து எழ இருபுறமும் நின்றபடி துடுப்பிட்டு படகோட்டுபவர்கள்போல கிளறினர். ஊன் சோற்றின் மணம் இனிதாக இருந்தது. களத்திலன்றி வேறெங்கும் அது அத்தனை மணமும் சுவையும் கொண்டிருக்க வாய்ப்பில்லை. நினைவில் மேலும் சுவைகொள்ளக்கூடும். முதுமையில் நினைவெழுந்தால் அமுதெனவே தோன்றும்போலும்.

உருளிகளை கயிறிட்டுத் தூக்கி மெல்ல சரித்து ஊன்சோற்றை பாய்விரிக்கப்பட்ட பீடவண்டியில் கொட்டினர். அதை தள்ளிக்கொண்டுசென்று அங்கிருந்த சோற்றுமலைமேல் கொட்டிக் குவித்தனர். பந்தவெளிச்சத்தில் ஆவி தழலென சுழன்றசைந்தது. பதினெட்டு மடைப் பணியாளர் நீண்ட மூங்கில் கழியில் பாதியாக வெட்டிய கொப்பரை பொருத்தப்பட்ட அகப்பையால் சோற்றுமலையில் அள்ளி அப்பாலிருந்த அகன்ற பீடத்தில் அடித்தனர். அங்கே சோற்றுருளை உருவாகியது. அதன்மேல் இலைகோட்டிச் செய்யப்பட்ட தொன்னையை வைத்து அழுத்தி எடுத்து அப்பால் அடுக்கினர். காயில் தோல்போல சோற்றுடன் இலை ஒட்டிக்கொண்டது.

“இரண்டுநாட்களுக்குப் பின் அந்த இலையின் மணம் சோற்றை மேலும் இனிதாக்கிவிட்டது” என்று ரோகிணி சொன்னாள். அவள் தன் உளஒழுக்கில் இருந்து மீண்டுவிட்டாள் என்று தெரிந்தது. “உலருணவு சிலநாட்களில் சலித்துவிடும் என நான் எண்ணினேன். ஆனால் சுவைமிகுந்தே வருகிறது. வறுத்த கோதுமையும் துருவிய இன்கிழங்கும் உலர்மீன்பொடியுடன் ஊன்கொழுப்பு சேர்த்து உருட்டி எடுப்பது… உண்ண உண்ணப் பெருகும் உணவு அது.” சங்கன் “எங்களூரில் ஈசலையும் பனையின் விதைக்குள் உள்ள வெண்பருப்பையும் கோதுமையையும் சேர்த்து இடித்து உருட்டி கலங்களில் வைத்திருப்பார்கள். பெருமழைக்காலத்திற்கான உணவு அது” என்றான். ரோகிணி “மழையுடன் போரிடுகிறீர்கள்” என்றாள்.

“போரின்போது இனிப்பு உண்பதில்லையா? வெல்லம் கொண்டுவரப்படவே இல்லை என்று தோன்றுகிறது” என்றாள் ரோகிணி. “போரில் இனிப்பு உண்ணலாகாதென்று நூல்கள் சொல்கின்றன” என்றான் ஸ்வேதன். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “தெரியவில்லை” என்றபின் அவன் நினைவுகூர்ந்து “போருக்கெழும் படைகளில் தவிர்க்கவேண்டியவற்றின் நிரையை சொல்கிறது யுத்தவித்யா தரங்கிணி. அதில் பெண்டிர், குழந்தைகள், வீட்டு விலங்குகள், மலர்கள், பொன்னணிகள், அருமணிகள், பட்டாடைகள், நறுமணப்பொருட்கள், பஞ்சுச்சேக்கைகள், சாமரம், விசிறி, நீராட்டு எண்ணைகள், இசைக்கருவிகள், ஆடி, வாய்மணம் ஆகியவற்றுடன் பதினாறு இன்பங்களில் ஒன்றாகவே இனிப்பும் சொல்லப்பட்டுள்ளது” என்றான்.

அவள் சிரித்து “இன்பங்களும் நுகர்வுகளும் முற்றாக மறுக்கப்பட்டுள்ளன” என்றாள். “ஆம், படைவீரனை போர்த்துறவி என்று சொல்லும் வழக்கம் உண்டு. அவன் அணியும் ஆடையையும் துவராடை என்பார்கள்” என்றான். “அவர்கள் வீடுபேறை நோக்கி செல்கிறார்கள்” என்று சொல்லி அவள் மீண்டும் நகைத்தாள். ஸ்வேதன் “அவர்கள் தங்கள் துணைவியரையும் மைந்தரையும் எண்ணி துயருறுகிறார்களா?” என்றான். “இல்லை, துயருற்றால்கூட அதை சொல்லமாட்டார்கள்” என்றாள். “ஆம், படைமுகம் கொண்டு கிளம்பிவிட்டால் ஒருமுறைகூட திரும்பிநோக்கலாகாது என்று நெறியுள்ளது. திரும்பி நோக்குபவனை பிடித்துக்கொள்வதற்காக நூற்றெட்டு இருள்தெய்வங்கள் காத்து நின்றிருக்கின்றன என்கின்றன நூல்கள்.”

“அவை என்ன செய்யும்?” என்று அவள் கேட்டாள். “அவை நூறாயிரம் மாயத்தோற்றங்கள் கொள்ளும். அன்னை என்றும் மனைவி என்றும் மைந்தர் என்றும் வந்து நின்று விழிநீர் வடிக்கும். விட்டுச்சென்ற கடமைகளும் எஞ்சும் வஞ்சங்களும் எய்தாத விழைவுகளும் சலிக்காத இன்பங்களுமாக பெருகிச்சூழும். சொற்களின் பொருளனைத்தையும் திரிபடையச் செய்யும். நாடும் குலமும் கொடியும் நெறியும் கடமையும் பிறிதொன்றென தோன்றச் செய்யும். விட்டுவந்த ஒவ்வொன்றையும் கணந்தோறும் பெருக்கும். அத்தெய்வங்களால் சூழப்பட்டுவிட்ட படைவீரன் அஞ்சுவான், ஐயுறுவான், தனிமைகொள்வான், நம்பிக்கை இழப்பான், வெறுமையில் உளம்திளைப்பான்.”

“பின்நோக்கியமையால் தெய்வங்களால் பற்றப்பட்டு பித்தரானவர்கள் எப்போதும் படைகளில் இருப்பார்கள். கூச்சலிட்டு வெறிகொள்பவர்களும் நெஞ்சிலறைந்து அழுதபடி திரும்பி ஓடுபவர்களும் உண்டு. உளமுடைந்து அழுபவர்களும் சொல்லவிந்து ஆழ்ந்த அமைதிக்கு சென்றுவிடுபவர்களும் உண்டு. எப்படையிலும் ஆயிரத்திலொருவர் திரும்பி நோக்காமலிருக்க மாட்டார் என்கிறார்கள்” என்றான் ஸ்வேதன். ரோகிணி “அவர்கள் திரும்பி நோக்காமலிருக்கலாம். ஆனால் ஓட்டைக் கலம் ஒழுகுவதுபோல வழியெங்கும் அவர்கள் தங்களை உதிர்த்தபடிதான் செல்கிறார்கள்” என்றாள்.

ஸ்வேதன் “எப்படி சொல்கிறாய்?” என்றான். ரோகிணி “ஐயமிருந்தால் பின்னிரவில் எழுந்து படைகளை பாருங்கள். வழிநடந்த களைப்பாலும் அந்தியில் அருந்திய மதுவாலும் அவர்கள் விரைவிலேயே துயின்றுவிடுவார்கள். உடல் களைப்பை இழந்ததும் உள்ளம் விழித்துக்கொள்ளும். பின்னிரவில் நான் அவர்களின் நீள்மூச்சுக்களை கேட்பதுண்டு. துயிலின்றி புரண்டு புரண்டு படுப்பார்கள்” என்றாள். ஸ்வேதன் “ஆம், அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்றான்.

சங்கன் “இன்னும் நெடுந்தொலைவா, மூத்தவரே?” என்றான். “அணுகிவிட்டோம்” என்றான் ஸ்வேதன். உணவுருளைகளை ஏற்றியபடி வண்டிகள் படைகள் நடுவே செல்லத் தொடங்கின. படைவீரர்கள் கைகளை நீட்டி அவற்றை பெற்றுக்கொண்டார்கள். “நீத்தார்கடனுக்கு ஆற்று மீன்களுக்கு பொரி வீசுவதுபோலுள்ளது!” என்றாள் ரோகிணி. அந்த ஒப்புமை ஸ்வேதனை புன்னகைக்கச் செய்தது. அவள் கைவீசி பொரிபோடுவதுபோல நடித்தாள். பின் மீன்கள் பொரியை பாய்ந்து பாய்ந்து கவ்வுவதுபோல விரல்களை காட்டினாள்.

ஸ்வேதன் “நீ நடனமாடுவாயா?” என்று கேட்டான். “நான் காவியமும் இசையும் நடனமும் முறைப்படி பயின்றுள்ளேன். பாடல்களும் இயற்றுவேன். சற்றுமுன் பாடியது நான் அக்கணம் இயற்றிய செய்யுள்” என்று அவள் தாழ்ந்த குரலில் சொன்னாள். “நடனம் அறிவாய் எனில் உனக்கு வில்லும் கைப்பழக்கமே என்று எண்ணுகிறேன்” என்றான் ஸ்வேதன். “ஆணிலிகள் படைக்கலம் ஏந்தலாகாதென்பது அரசநெறி. நான் நாணல் கொண்டு பறவைகளை வேட்டையாடுவேன். தனித்த பயணங்களில் என் உணவு அவைதான். ஒருமுறைகூட இரண்டாவது அம்பொன்றை நான் செலுத்த நேர்ந்ததில்லை” என்றாள் ரோகிணி.

புரவிக்குளம்படி கேட்டுக்கொண்டிருந்தது. சிலகணங்களுக்குப் பிறகு ஸ்வேதன் “நானும் என் கனவுகளில் பெண்ணென உணர்ந்ததுண்டு” என்றான். அவள் விழிதூக்கி “மெய்யாகவா?” என்றாள். “வில்லவர் அனைவரும் எங்கேனும் ஆழத்தில் பெண்ணென்றும் இருப்பார்கள். ஏனெனில் வில்லென்பது நெளியும் பெண்ணுடல். அதனுடன் இணைந்து நெளியும் ஆணுடலில் பெண்மை குடியேறாமலிருக்காது” என்றான். “ஆம், நான் அதை உணர்ந்திருக்கிறேன். வில்பயில்பவர்களை தொலைவிலிருந்து பார்க்கையில் அவர்கள் நடனமிடுவதுபோல் தோன்றும். அங்கே தெற்கே விற்கலையை வில்நடனமென்றே சொல்கிறார்கள்” என்றாள் ரோகிணி.

ஸ்வேதன் “நடனமிலாத விற்கலையும் உண்டு. அம்மரபு பரசுராமரிடமிருந்து அங்க நாட்டரசர் கர்ணன் வரை வந்தது. இரு கைகளையும் இரு நெளியும் நாகங்களென்றாக்கி, அவை சுழன்று பற்றியிருக்கும் நெடுந்தூணாக உடலை அசைவிலாது நிறுத்தி வில் பயிலும் கலை. அது விற்கலையின் ஆண்வடிவம். இளைய பாண்டவரின் விற்பயிற்சியை தனுர்நிருத்யம் என்கிறார்கள். அங்கருடையது தனுர்தாண்டவம்” என்றான். “அவை சிவனும் சக்தியும் போல. இருவரும் ஒருவரை ஒருவர் வெல்ல இயலாது. அணுவிலும் ஆயிரங்கோடி அளவுக்கே அவர்களிடையே உள்ள வேறுபாடு. அக்கணத்தின் தெய்வங்களால் முடிவெடுக்கப்படுவது அது.”

“தாங்கள் இளமையிலேயே இளைய பாண்டவரை எண்ணியதுண்டா?” என்று ரோகிணி கேட்டாள். அவள் ஸ்வேதனுக்கு மிக அணுக்கமாகி அவன் புரவியின் கடிவாளத்தைப் பற்றியபடி நடந்தாள். ஸ்வேதன் “ஆம், நான் அன்னை மடியில் இருக்கும் அகவையில் முதல் முறையாக அவர் கதையொன்றை கேட்டேன். சுபத்திரையை தேரோட்டவிட்டு தேர்ப்பீடத்தில் அமர்ந்து இரு கைகளாலும் அம்பு தொடுத்து புயல்காற்றில் கனி உதிர்வதுபோல் உப்பரிகைகளிலிருந்தும் காவல் மாடங்களிலிருந்தும் வீரர்கள் உதிர விரைந்து சென்று துவாரகையின் எல்லையைக் கடக்கும் இளைய பாண்டவரின் காட்சி” என்றான். அவன் முகம் மலர்ந்தது. “அதன் பின் எத்தனையோ கதைகள் அவரைப்பற்றி. ஆனால் அந்த ஒரு காட்சியில் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.”

ரோகிணி “அவை மானுட உடலில் தெய்வமெழும் தருணங்கள். நாம் வழிபடுவது அத்தெய்வத்தையே” என்றாள். ஸ்வேதன் “இது விராடரின் அக்ஷௌகிணி என நினைக்கிறேன், இளையோனே” என்றான். “ஆம்” என்று சொல்லி திரும்பிய எண்ணியிராக் கணத்தில் சங்கன் மிக அப்பால் ஓர் உடலசைவை கண்டான். உடல் விதிர்த்து கடிவாளத்தை நழுவவிட்டு விந்தையான ஓர் அலறல் ஒலியை எழுப்பினான்.

ஸ்வேதன் திரும்பிப் பார்த்து “என்ன? என்ன ஆயிற்று?” என்றான். கைசுட்டி வாயசைய சங்கன் நடுங்கினான். “என்ன சொல்கிறாய்?” என்று திரும்பிப்பார்த்தபோதே ஸ்வேதன் அடையாளம் கண்டுகொண்டான். “அவர்தான்! அவர்தான்!” என்று சங்கன் கூவினான். உடலில் வலிப்பெழ புரவியிலிருந்து விழப்போகிறவன் போலிருந்தான். “கடிவாளத்தை விடாதே, அறிவிலி!” என்று ஸ்வேதன் சீறினான். “முதலில் நாம் அவரிடம் செல்வோம். நம்மிடம் நம்மை அடையாளம் காட்டும் ஓலைகள் உள்ளன. திருஷ்டத்யும்னரின் ஆணை உள்ளது.”

எச்சொற்களையும் செவிகொள்ளாமல் இரு கைகளையும் விரித்து தலை நடுங்க அமர்ந்திருந்த சங்கன் மறுகணம் தன் இரு கால்களையும் விரித்து ஓங்கி குதிமுட்களால் குதிரையின் விலாவில் குத்தி அதை பிளிறிக் கனைத்தபடி பாய்ந்தெழச்செய்து படைநடுவே அகன்ற சாலையில் கூழாங்கற்கள் அனல் பொறிகள் என மின்னி பின்னால் தெறிக்க, குதிரையின் வால் தழல்நெளிய பாய்ந்து முன்னால் சென்றான். “இளையவனே, பொறு… நில்… பொறு…” என்றபடி ஸ்வேதன் தன் புரவியை முடுக்கி பின்னால் விரைந்தான்.

முழு விசையில் புரவியில் சென்ற சங்கன் அதை நிறுத்தாமலே கையூன்றி கீழே தாவி இறங்கி பக்கவாட்டில் ஓடி அங்கு உணவுப் பொதிகளுடன் சென்று கொண்டிருந்த இரு வண்டிகளுக்கு நடுவே புரவியில் அமர்ந்து வண்டியோட்டிகளிடம் பேசிக்கொண்டிருந்த பீமனை அணுகி கைவிரித்தபடி கூவினான். “அரசே! என் இறையே!” முழங்கால் மடிந்து மண்ணில் அறைய விழுந்து “என் அரசே! என் தந்தையே!” என்று அலறினான். அவன் முகம் வலிப்புகொண்டதுபோல் இழுபட கண்களிலிருந்து நீர்வழிந்து கன்னங்கள் மின்னின. பீமன் திரும்பி அவனை பார்த்தான். புருவங்கள் சுளிக்க ஒருகணம் விழிநிலைத்தபின் தன் வலக்கையை நீட்டி வருக என்று அழைத்தான்.

கைகளை நீட்டி மூச்சிரைக்க ஓடிய சங்கன் அவ்விசையிலேயே முழந்தாள் மண்ணிலறைய விழுந்து பீமனின் வலக்காலை பற்றிக்கொண்டான். அவன் பாதக்குறடுகள்மேல் தலை வைத்து “எந்தையே! ஆசிரியரே! என் இறையே!” என்றான். பீமன் குனிந்து அவன் தோளைப்பற்றி தூக்கினான். ஓங்கி படீரென அவன் தோளை அறைந்தான். சங்கன் தன் எடைமிக்க உடலால் அந்த அறையை வாங்கிக்கொண்டு சற்றே அசைந்தான். “பசித்திருக்கிறாய்…” என்ற பீமன் திரும்பி “சுமூர்த்தரே, அந்த ஊன்துண்டை எடும்!” என்றான். உலர்ந்து சுருங்கி கருமைகொண்டிருந்த ஆட்டுக்காலை எடுத்து நீட்டிய சுமூர்த்தர் “சுடா இறைச்சி” என்றார்.

“கதிரவனால் சுடப்பட்டது” என்றபடி அதை வாங்கிய பீமன் சங்கனிடம் அதை நீட்டி “உண்க!” என்றான். சங்கன் அதை இரு கைகளாலும் வாங்கிக்கொண்டான். அதன் ஒரு பகுதியை பிய்த்து சங்கனுக்கு பீமன் ஊட்டினான். “இதை உண்டிருக்க மாட்டாய்… நம்மைப்போன்றவர் வயிறுகளில்தான் இது எரியும்” என்றான். சங்கன் மென்றபடி “நன்று” என்றான். இன்னொரு துண்டை கிழித்து தன் வாயில் இட்டபடி “கொழுப்பில் வெந்த ஊன்… கதிரவனுக்கு நிகரான அடுமனையாளன் வேறில்லை” என்றான். அவர்கள் மெல்லும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. ஸ்வேதன் அருகணைந்து புரவியில் இருந்து இறங்கி நின்றான். அடுமனையாளர்கள் தங்கள் பணிகளை தொடர்ந்தனர்.

“இன்னும் ஒன்று” என்றான் பீமன். “ஆம்” என்று சங்கன் சொன்னான். “இன்கனிகளை சமைத்த அடுமனையாளன் வாட்டிய ஊன்!” பீமன் “ஆ! இனிய சொல்… நீ சொல்பயின்றுள்ளாய்” என்று நகைத்தான். மீண்டும் இரு ஆட்டுக்கால்களை அடுமனையாளர் எடுத்து அளிக்க அவர்கள் உண்டனர். “நான் சற்றுமுன்னர்தான் உண்டேன். ஆனால் பிறர் உண்ண என்னால் பார்த்திருக்கவியலாது” என்றான் பீமன். சங்கன் “பிறர் உண்ணும் ஒலி இனிது… நாம் உண்ணும் ஒலி அளவுக்கே” என்றான். பீமன் அவன் தோளில் அறைந்து சிரித்தான். ரோகிணி “இருவரும் நீண்டகாலமாக அறிந்தவர்கள் போலிருக்கிறார்கள்” என்றாள். “அறிந்தவர்கள்தான்” என்றான் ஸ்வேதன்.

மேலும் இரு ஆட்டுத்தொடைகளை உண்டு முடிப்பது வரை அவர்களின் உலகில் எவரும் இருக்கவில்லை. ஏப்பத்துடன் எலும்பை அப்பால் வீசிய பீமன் கைகளை உரசித்துடைத்த பின் ஸ்வேதனை பார்த்தான். “யார் இவன்?” என்றான். “என் மூத்தவர், ஸ்வேதன்” என்றான் சங்கன். “உன் பெயரென்ன?” என்று பீமன் வாயைத்துடைத்தபடி கேட்டான். ஸ்வேதன் வணங்கி “அரசே, குலாடகுலத்து இளவரசனாகிய என் பெயர் ஸ்வேதன். இவன் என் இளையோனாகிய சங்கன். நாங்கள்…” என்று அவன் சொன்னதை நிறைவுறுத்தாமல் பீமன் சங்கனிடம் “நன்று, நீ இந்த உணவுக்குவைகளை ஏழாகப் பகிர்ந்து அடுமனையாளர் எழுவருக்கு அளித்துவிடு. பணிமுடித்து இன்று ஒளி அணைவதற்குள் என்னை என் தனியறையில் வந்து பார். இன்றிரவு நாம் இணைந்து உணவுண்போம்” என்றான்.

“ஆணை” என்றான் சங்கன். பீமன் அவன் தலையை அறைந்து “நீ பன்றி உணவு உண்பாயல்லவா?” என்றான். “உண்பேன், மிகுதியாக உண்பேன்” என்று சங்கன் சொன்னான். “இன்று இரவு உலர்ந்த பன்றியூனுக்கு சொல்லியிருக்கிறேன்… அதற்குள் கிழங்கை வைத்து சுடுகிறார்கள். மதுவுடன் காமம்கொண்டதுபோல் இணைவது” என்றபின் பீமன் ஸ்வேதனை மறந்து புரவியைத் தட்டி முன்னால் சென்றான். இரு கைகளையும் கூப்பியபடி சங்கன் நின்றான். ஸ்வேதன் “நாம் செல்வோம்” என்று ரோகிணியிடம் சொன்னான். “அவர்?” என்று அவள் கேட்டாள். “இனி அவனுக்கு உறவென்றும் சுற்றமென்றும் எவருமில்லை. அவன் தன் முழுமையை அடைந்துவிட்டான்” என்று ஸ்வேதன் சொன்னான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 55

tigஸ்வேதனும் சங்கனும் புரவியிலமர்ந்து இருபுறமும் சென்றுகொண்டிருந்த பாண்டவர்களின் படை அணிகளை நோக்கியபடி நடுவே ஓடிய பாதையினூடாக முன்னால் சென்றனர். அவர்களுடன் திருஷ்டத்யும்னன் அனுப்பிய துணைப்படைத்தலைவன் வஜ்ரகுண்டலன் வந்தான். குலாடப் படைகள் திருஷ்டத்யும்னனின் படைகளுடன் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இணைந்துகொண்டன. படை கிளம்பிய பின்னரே அவர்களுக்கு வழிச்செல்லும் ஒப்புதல் கிடைத்தது. படை மிக மெல்லத்தான் கிளம்பியது. “படுத்த யானை எழுவதைப்போல” என்றான் சங்கன்.

அவர்கள் கிளம்பியபோது இளவெயில் சரிந்திருந்தது. படைக்கலன்களும் இரும்புக் கவசங்களும் மின்னிக்கொண்டிருந்தன. அனைவரும் இரும்பு அடிகொண்ட தோல்காலணிகள் அணிந்திருந்தனர். அவை சீரான ஓசையுடன் நிலத்தை அறைந்து சென்ற ஒலியை விழிமூடிக் கேட்டபோது அலையலையெனத் தோன்றியது. புரவியில் அமர்ந்து தலைக்கவசங்களின் பரப்பை பார்த்தபோதும் அதே அலையை காண முடிந்தது. அது எதன் அலை? நிலப்பரப்பின் அலைகள் பேரலைகளாக படையில் எழுந்தமைகின்றன. அவற்றினுள் ஒவ்வொரு தலையும் கொள்ளும் சிற்றலைகள் செறிந்திருந்தன. மனிதர்கள் தங்கள் உடலுக்குள்ளேயே எழுந்தமைந்துகொண்டிருக்கிறார்கள். அலையென்பது அவர்களின் உள்ளத்திலும் நிகழ்வதுபோலும். நிலைகொண்ட உள்ளம் அமைந்த ஒரு வீரனாவது இப்பெருந்திரளில் இருக்கக்கூடுமா? முன்னும் பின்னுமென அலையாத உள்ளம் கொண்ட மானுடர் எவரேனும் உண்டா?

யானை நிரைகள் கோட்டைச்சுவரென பக்கவாட்டில் வந்துகொண்டிருந்தன. கரிய அலைகளாலான கோட்டை. புரவிகள் நுரைகொண்ட அலைகள். ஒரு சிறு குன்றின் மேலேறி திரும்பிப் பார்த்தபோது கரிய மணிமாலைகள்போல் வளைந்தெழுந்து சென்றன யானைநிரைகள். பிறிதொரு குன்றின்மேல் சென்று திரும்பிப் பார்த்தபோது நீண்ட கரிய தோல்பட்டையென நெளிந்தன. ஒரு கணத்தில் அவன் யானைகளாலான பெருநாகம் ஒன்றை கண்டான். ஸ்வேதன் திரும்பி சங்கனின் தோளைத்தொட்டு “நோக்குக, நாகம்!” என்றான். சங்கன் திரும்பிப் பார்த்த பின் புன்னகைத்தான்.

தேர்நிரைகளின் முகட்டுக் குமிழிகள் செறிந்து நுரையென மாறிவிட்டிருந்தன. செம்மஞ்சள்நிற ஆடைகளாலான ஒழுக்கு செந்நிறத்தில் மழைக்கலங்கல் பெருகிவரும் நதியென தோன்றியது. அவர்கள் படையின் நடுப்பகுதியை சென்றடைந்தபோது அங்கு அடுமனைப் பணியாளர்களும் உணவுப்பொருட்களும் ஏந்திய வண்டிகள் சென்றுகொண்டிருந்தன. பல்லாயிரம் வண்டிகளில் ஏற்றப்பட்ட உணவுத்தானியங்களும் உலர்கிழங்குகளும் வற்றல்காய்கறிகளும் உலர்ஊனும் வறட்டிப்பொடித்த மீனும் பெரிய மரப்பீப்பாய்களில் அடைக்கப்பட்டும் தேன்மெழுகுபூசப்பட்ட பாய்களில் சுருட்டிக் கட்டப்பட்டும் மேல்மேலென்று அடுக்கப்பட்டு எடைமிக்க சகட ஒலியுடன் குளம்புகள் மிதிபட இழுத்த மாடுகளால் கொண்டு செல்லப்பட்டன.

அடுமனைக்கலங்கள் ஏந்திய வண்டிகள் நூற்றுக்கணக்கில் செல்ல அவற்றைக் கடந்து சென்றபோது பல்லாயிரம் கூடங்களால் இரும்பு அடிபடும் கொல்லன் உலைக்களத்தில் நுழைந்து அப்பால் சென்றதுபோல் தோன்றியது. சங்கன் “உணவுவண்டிகள் ஏன் படைநடுவில் இருக்கவேண்டும்? அவை படைக்குப் பின் வரும் என்றல்லவா எண்ணினேன்” என்று கேட்டான். “எவரேனும் படைகொண்டு அவற்றை மையப்படையிலிருந்து வெட்டிவிடக்கூடும் என்றுகூட எண்ணமாட்டாயா?” என்றான் ஸ்வேதன். சங்கன் “எத்தனை கணக்குகள்!” என வியந்தான்.

பகல் முழுக்க அவர்கள் சென்றுகொண்டே இருந்தனர். படையைவிட இருமடங்கு விரைவில் சென்றாலும் படைகள் உடன் வந்துகொண்டே இருந்தமையால் விரைவு போதவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. “எத்தனை பொழுது… மூத்தவரே, இத்தனை நீளம் இப்படை என நான் என் கற்பனையை ஓட்டியும்கூட எண்ணவில்லை” என்றான் சங்கன். அக்ஷௌகிணிகளின் எல்லைகளை கடப்பது மட்டுமே அவர்கள் முன்னால் செல்வதை அவர்களுக்கு காட்டியது. இருபுறமும் சென்றுகொண்டிருந்த படைகள் ஒற்றை அசைவில் அத்தனை மனிதர்களையும் கோத்துக்கொண்டு இயங்கின. ஒரு மாபெரும் தறி என அம்மானுடரை அவை நெய்துகொண்டிருந்தன. நான்கு திசைகளிலும் பிரிந்து வளர்ந்து செல்லும் ஒரு ஆடை, ஒவ்வொரு மானுடனும் அதிலொரு கண்ணி.

உச்சிவெயில் எரிந்தெழுந்து சிவந்து மங்கலடைந்தது. உச்சியின் வெம்மையில் படைவீரர்களின் வியர்வையும் புரவிகளின் வியர்வையும் விலங்குகளின் சிறுநீரும் வண்டிப்பாய்களின் தேன்மெழுகும் அரக்கும் கலந்து உருகும் வாடையும் சூழ்ந்திருந்தன. உச்சி கடந்தபோது வியர்வையாலேயே மழைமுன்பொழுதுபோல் மெல்லிய நீராவியை உணரமுடிந்தது. அந்தியணையத் தொடங்கியபோதுதான் படைமீது மென்பட்டுப் போர்வை என மூடியிருந்த புழுதிப்படலத்தை காணமுடிந்தது. அதுவரை நோக்குமங்கலென இருந்தது அதுவே என செம்மை கொண்டபோதே புலப்பட்டது. வான்சரிவில் கதிரவனை மேலும் சிவக்கச் செய்தது அது.

பகலெல்லாம் நடந்த படைகள் உச்சியில் தளர்ந்து பின்னுச்சியில் மேலும் நடைதொய்ந்து வெயிலணைந்ததும் மீண்டும் விரைவுகொண்டன. முரசுகள் ஒலிக்கவிருப்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பதாகத் தெரிந்தது. முரசொலி எழுந்ததும் இழுபட்ட தோல்பட்டை தளர்வதுபோல படைகளில் தழைவு உருவாகியது. விழிகளுக்கே அந்தத் தொய்வு தெரிந்தது. முரசுகள் முழங்கி அமைய படைகள் விசையழிந்து மெல்ல நின்று அவ்விடத்திலேயே கால்வைத்து அடிபயின்றன. மீண்டும் கொம்புகள் ஒலித்தபோது சிறுகுழுக்களாக பிரிந்தன. “பால் திரிவதுபோல” என்றான் சங்கன். “அனைத்துக்கும் அடுமனை ஒப்புமை” என்று சிரித்தபடி ஸ்வேதன் சொன்னான்.

நிலைகொண்ட படைப்பிரிவின் நடுவில் அவர்கள் சென்றனர். படையோசை மாறிக்கொண்டே இருந்தது. படைகள் நிலைகொள்வதை உணர்ந்தவைபோல சூழ்ந்திருந்த காடுகளிலிருந்து காகங்கள் பறந்துவந்து வானில் சுழன்றன. நான்கு காளைகள் பூட்டப்பட்ட அகன்ற நுகமும் எட்டு சகடங்களும் கொண்ட பெரிய வண்டிகளில் இருந்து எடைமிக்க அடுகலங்களை மடைப் பணியாளர்கள் இறக்குவதைக்கண்டு வியந்து புரவியின் கடிவாளத்தை பற்றித் திருப்பி சங்கன் நின்றுவிட்டான். மேலும் சற்று தொலைவு சென்ற ஸ்வேதன் திரும்பிப்பார்த்து சிற்றடிகளில் அணுகினான். “நான் யானைகளைக் கொண்டு இவற்றை இறக்குவார்கள் என்று எண்ணினேன்” என்று சங்கன் திரும்பிப்பார்த்து சொன்னான். “நெடுங்காலமாக இப்பணிகள் செய்யப்பட்டுவருவதால் எளிய வழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்” என்றான் ஸ்வேதன்.

வண்டிகளுக்குப் பின்புறம் தடித்த பலகைகளை சரிவாக அமைத்து கயிறுகளால் கட்டி இழுத்தும் உந்தியும் கலங்களை அவற்றின் மேல் ஏற்றினர். மெல்ல சரித்து சறுக்கி கீழே வரச்செய்து அங்கே வைக்கப்பட்டிருந்த சகடங்கள் கொண்ட சிறிய பீடங்களின்மேல் அமரச்செய்து அங்கிருந்து தள்ளியும் இழுத்தும் அடுப்புகளை நோக்கி கொண்டுசென்றனர். அடுப்புகளின் மீது அவற்றை இழுத்துத் தூக்கி அமரவைத்தனர். நிரைநிரையாக வந்த மடைத்துணைவர் மரக்குடுவைகளில் காவடியாக கட்டி கொண்டுவந்த நீரை அவற்றில் ஊற்றி நிறைத்தனர். ஒருவர் இறங்கி நீச்சலிடும் அளவுக்கு பெரிய அடுகலங்கள் நீர் நிறைந்தபோது சிறிய குளங்கள்போல் அலைகொண்டன. அவற்றுக்குக் கீழே இடப்பட்ட அரக்குகளில் அனல் பற்றிக்கொண்டு நாகொண்டது.

எரிமணம் உணவை நினைவூட்டியமையால் இனிதாக இருந்தது. மகிழ்வுடன் முகம் திருப்பிய சங்கன் “சமைத்து குவிக்கப்படும் உணவு மலைபோன்றிருக்கும்” என்றான். “இங்கு தங்கிவிடுகிறாயா?” என்று ஸ்வேதன் கேட்டான். “இங்கு எங்கோதான் அவர் இருப்பாரென்று தோன்றுகிறது, மூத்தவரே” என்று சங்கன் சிரித்தான். “இருட்டுகிறது. நாம் தங்கவேண்டிய குடில் இன்னும் சற்று அப்பால் உள்ளது என்று வரைவு காட்டுகிறது” என்றான் ஸ்வேதன். புரவியைத் திருப்பியபடி இருவரும் சென்றனர்.

அடுகலங்களை மடை உதவியாளர் தூக்கிச் சென்றபோது யானைக்கன்றுகளும் எருமைகளும் செல்வதுபோல் தோன்றியது. மரத்தாலான குடைவுக்கலங்கள், மரச்சிம்புகளை இறுக்கி இரும்புப் பட்டையிட்ட நீள்கலங்கள், பெருங்கொப்பரைகள், நீண்ட மரப்பிடியில் பொருத்தப்பட்ட சட்டுவங்கள், கிளறிகள், சல்லரிகள். “மண்கலங்களே இல்லை” என்றான் சங்கன். அகப்பைக்கட்டுகள், நீள்பிடிகொண்ட கோருவைகள், செம்புச்சருவங்கள், நிலவாய்கள், உருளிகள், குட்டகங்கள், அடுக்குக் கலங்கள். அடுமடையர்கள் அவற்றை எடுத்து பிரித்து ஆங்காங்கே வைத்துக்கொண்டிருந்தனர். அவற்றை ஒருவன் குறித்துக்கொண்டிருந்தான். சங்கன் “மூத்தவரே, அவன் எங்கு எக்கலங்கள் உள்ளன என்பதை வரைந்து குறிக்கிறான். மிகச் சிறந்த வழி. கலங்கள் தொலைவதும் தேடுவதும்தான் அடுதொழிலில் பெரும் இடர்” என்றான்.

அடுப்புகளில் எரியெழ அனலால் ஆன நீண்ட கோடு அரையிருளில் தெரியலாயிற்று. சங்கன் “மூத்தவரே, படைகளில் எப்போதுமே புதிதாக சமைத்த உணவுதான் அளிக்கப்படுமா?” என்றான். “உணவைப்பற்றி நன்கு தெரிந்துகொண்ட பின் படைக்கு வந்திருக்கலாம் என்று எண்ணுகிறாயா?” என்றான் ஸ்வேதன். “இல்லை, தெரிந்துகொள்ளும்பொருட்டு கேட்டேன்” என்றபடி அவன் தொடர்ந்து வந்தான். “அந்தியில் புத்துணவு காலையில் உலர்சிற்றுணவு உச்சிப்பொழுதுக்கு அதிலெஞ்சியது கையுணவாக என்பது படைநெறி. படைகள் காலையில் கிளம்பிய பின்னர் அந்திவரை எதன் பொருட்டும் நிறுத்தப்படுவதில்லை” என்றான் ஸ்வேதன்.

சங்கனின் உள்ளத்தை உணர்ந்தவனாக “புரவிகளும் யானைகளும்கூட மெல்ல நடந்தபடியேதான் நீர் அருந்தும். அவற்றுக்கு நீர் கொடுப்பதற்கென்று சகடங்கள் அமைத்த தொட்டிகள் உண்டு. இப்படைப்பிரிவுகளுக்குள் அவற்றை நீ பார்த்திருக்கலாம்” என்றான். “ஆம், நான் அவை நீர் மொண்டு வருவதற்கானவை என்று எண்ணினேன்” என்று சங்கன் சொன்னான். “ஒருமுறை நின்ற படை மீண்டும் கிளம்புவதற்கு அரைநாழிகைப் பொழுதுக்கு மேலாகும். ஓர் அக்ஷௌகிணியை கலைத்துவிட்டால் மீண்டும் ஒருங்கமைவதற்கு இரண்டு நாழிகை பொழுதாகும். இவையனைத்தும் நூல்களில் கணக்கிடப்பட்டுள்ளன” என்று ஸ்வேதன் சொன்னான்.

“உணவுக்களஞ்சியம்” என்றான் சங்கன் முகம் மலர்ந்து. “அது நிறைந்திருப்பது எப்போதும் ஒரு மங்கலக்காட்சி.” அடுமனையர் உணவுப்பொருட்களை வண்டிகளிலிருந்து இறக்கிக்கொண்டிருந்தனர். வெட்டி உலர்த்தப்பட்ட மாட்டுத் தொடைகள் கருமை கொண்டு இறுகி மரக்கட்டை போலாகியிருந்தன. அவற்றில் படிந்திருந்த உப்பும் அவற்றின் இனிய கெடுமணமுமே அவை ஊனென்று காட்டின. அவற்றை எடுத்து தோளிலேற்றி கொண்டுசென்று அங்கு விரிக்கப்பட்டிருந்த பாயில் அடுக்கினர். ஆளுயர விறகுக்குவியல் போலிருந்தது அது.

சங்கன் “எவர் பாடுவது?” என்று கேட்டான். “அடுமனையர்கள் பலர் நல்ல பாடகர்கள்” என்றான் ஸ்வேதன். “அவர்கள் தனிக் குலம்போல. அவர்களின் வாழ்வும் மொழியுமே வேறு. இரவெல்லாம் சமைப்பவர்களுக்கு தங்களுக்குரிய பாடல்களும் கதைகளும் இருந்தாகவேண்டும்.” சங்கன் “ஆம், நாங்கள் சமைக்கையில் பாடும் பாடல்களை புலரி வெளிச்சம் எழுந்தபின் பாடமுடியாது. அக்கணமே நெறியும் ஒழுக்கமும் நோக்கும் மூத்தவரால் கழுவிலேற்றப்படுவோம்” என்று சிரித்தான்.

தொலைவிலெங்கோ அந்தப் பாடல் கேட்டுக்கொண்டிருந்தது. “நாளை படைநகர்வு இல்லையா என்ன? அடுமனையை முற்றாகப் பிரித்து அடுக்குகிறார்கள்?” என்று சங்கன் கேட்டான். “ஏழு நாட்களுக்கு ஒருமுறை முற்றோய்வென்பது ஓர் அக்ஷௌகிணிக்குமேல் எண்ணிக்கையுள்ள படைகளுக்கான நெறி. அன்று புரவிகளின் கால்கள் உருவிவிடப்படவேண்டும். விலங்குகளின் உடலில் எங்கேனும் நெறிகட்டியுள்ளதா என்று பார்க்கவேண்டும். சிறிய நோய்களுக்கு மருந்திடுவார்கள். படைவீரர்கள் தங்கள் பொருட்களையும் படைக்கலங்களையும் பழுதுநோக்குவார்கள். சகடங்களின் பிழைகள் களையப்படும். ஒருநாள் ஓய்வுக்குப் பின் முற்றிலும் புதிய விசையுடன் படைகள் கிளம்பும் என்கிறார்கள்” என்றான் ஸ்வேதன்.

பாடல் அணுகி வந்தது. “பெண்! ஒரு பெண் அங்கிருந்து பாடுகிறாள்” என்று சங்கன் சொன்னான். “படைகளில் பெண்கள் ஏற்கப்படுவதில்லை” என்று ஸ்வேதன் சொன்னான். “அது பெண்குரல்! ஐயமேயில்லை” என்றான் சங்கன். ஸ்வேதன் “பெண்டிருக்குள்ள பணிகளை செய்வதற்கு ஆணிலிகள் கொண்டுவரப்படுவதுண்டு” என்றான். சங்கன் அதற்குள் பாடுபவனை பார்த்துவிட்டான். “அவன் தோள்கள் காட்டுகின்றன, அவன் ஆணிலி” என்றான். “ஓர் ஆணிலியை அவள் என்று சொல்வதைப்போல் அவளை மகிழ்விக்கக்கூடும் பிறிதொன்றில்லை” என்று ஸ்வேதன் சொன்னான்.

அவர்கள் அணுகிச் சென்றபோது அங்கு அந்தக் குரலின் இனிமையால் கவரப்பட்டு பேச்சை நிறுத்தினர். அவர்களை உணர்ந்த புரவி மென்னடையில் சென்றது. அடுமனையாளர்கள் பெருவளையமாக கூடி நின்றிருக்க கவிழ்க்கப்பட்ட தொட்டியொன்றின்மேல் நின்று நடனம்போல் கைகளை அலையென வீசியும் விரல் குவித்தும் பலவகையான முத்திரைகளைக் காட்டி அந்த ஆணிலி பாடிக்கொண்டிருந்தாள். வயல்களில் முதல் பயிர் பசுமைபெற்றெழுவதை. அப்போது பிறந்த குழந்தையின் மென்மயிர்போல் அது தொடுவதற்கு இனிதாய் இருப்பதை. இளங்காலை ஒளியில் அது சுனைநீரின் நீலப்பசுமை கொள்வதை. சேற்றின் மணத்தை. கதுப்பில் விழுந்திருக்கும் சிறு குமிழிகளால் ஆன துளைகளை. அவற்றினுடாக வெளிவந்து மெல்ல குமிழியை உடைத்து எழும் அடிச்சேற்றின் புளிப்பு மணத்தை. நண்டுகளின் நான்கு கால் தடத்தை. குழிகளுக்குள்ளிருந்து மெல்ல எழும் நண்டுகளின் முன்கால் கொடுக்குகளை. வரப்பில் அமர்ந்திருக்கும் வெண்கொக்கு நிரையை. காலடியோசை கேட்டு அவை சிறகடித்தெழுவதன் படபடப்பை. இளங்காற்று வீசுகையில் வயல்மேல் பசுமை அலையென்றாவதை. வெயில் தொட்டு நீர்ப்பரப்புகள் ஆடியென்று ஒளிகொள்வதை…

அவள் பாடலைக் கேட்டு அங்கிருந்தோர் முகம் துயரிலா உவகையிலா என்றறியாத ஓருணர்வு கூட, விழிகளில் மெல்லிய நீரொளி பரவியிருக்க நின்றனர். சிலர் கைகளை நெஞ்சோடு சேர்த்திருந்தனர். சிலர் முகத்தை கைகளில் தாங்கி விழிமூடியிருந்தனர். ஸ்வேதனும் சங்கனும் குளம்படி இன்றி அருகே சென்று புரவியில் அமர்ந்தபடி அப்பாடலை கேட்டுக்கொண்டிருந்தனர். கண்ணி வடிவிலான அப்பாடல் ஒன்றிலிருந்து ஒன்றென்று ஒப்புமைகளுக்கும் நுண்ணிய விவரிப்புகளுக்கும் சென்றுகொண்டிருந்தது.

வேர் கொண்டு அள்ளுக இம்மண்ணின் உப்பை இளநாற்றே – உன்

இலைகளால் அள்ளுக இம்மண்ணின் காற்றை!

அடித்தூரால் அறிக என் மண்ணின் வெம்மையை இளநாற்றே – உன்

மென் தளிரால் அறிக என் மண் மேல் விழும் ஒளியை!

அந்த ஆணிலி அழகிய பெண் போலவே தோன்றினாள். அவள் கழுத்து முழையும் தோளெலும்புகளின் அமைப்பும் அவளை ஆணெனக் காட்டியது. முகத்தில் அரும்பிய மயிரை நன்கு மழித்து செம்மஞ்சள் பூசி பெண்மை கொள்ளச் செய்திருந்தாள். கண்களுக்கு மையிட்டு நீட்டியிருந்தாள். கழுத்தில் கல்மணி மாலை. கைகளில் சந்தனக்குடைவு வளையல்கள். பெண்களுக்குரிய மேலாடை அணிந்திருந்தாலும் இடையாடை படைவீரர்களுக்குரியதாக இருந்தது. நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. காதுகளில் வெள்ளியாலான மலர்த்தோடுகள். கையில் வைத்திருந்த மரக்கொப்பரைமேல் விரல்கள் தாளமிட கண்கள் தொடுவான் நோக்கி கனவிலென நிலைத்திருக்க அவள் பாடினாள்.

அங்கிருக்கிறது என் மண். நெஞ்சே, எங்கு சென்றாலும் நான் மீளவேண்டிய மண். என் மூதாதையர் உறங்கும் மண். நான் எங்கு விழுவேன் எவ்வகையில் மட்குவேன் என்று அறியேன். என் மண்ணுக்கு மீளும் என் உப்பு. என் மூதாதையர் உப்புகள் கலந்த மண்ணில் அதுவும் இருக்கும். என் மூதாதையரும் எங்கெங்கோ விழுந்தனர். உப்பென்று என் மண்ணை வந்தடைந்தனர். மானுடர் எழுவார்கள், பூத்து கனிந்து உதிர்ந்து மீண்டும் முளைப்பார்கள். என் நெஞ்சே, அறிக! என் கனவே, அறிக! உப்பு என்றுமிருக்கும்! உப்பு ஒருபோதும் அழிவதில்லை! உப்பு மண்ணின் பொருள்! அறியா நுண்சொல் இந்த மண். நா, அதில் அறியும் பொருள் இந்த உப்பு!

பாடி முடித்ததும் அவள் தன் கைகளைத் தூக்கி தலைக்குமேல் வணங்கினாள். அதன்பின் தலைகுனிந்து அசையாமல் நின்றாள். கூடிநின்று கேட்டவர்கள் அனைவரும் அக்கனவிலேயே நெடுந்தொலைவு சென்றுவிட்டவர்கள்போல் அசைவற்றிருந்தனர். சங்கனின் புரவி அந்த அமைதியை உணர்ந்ததும் தலையை சிலுப்பி கழுத்து மணியை ஒலிக்கச் செய்தது. ஆணிலி திரும்பி அவர்களை பார்த்தாள். பீடத்திலிருந்து கீழே குதித்து தலைவணங்கினாள். சங்கன் “அரிய பாடல்! படைப்பிரிவுகளிலிருந்து இத்தனை அழகிய பாடல் ஒன்று எழுமென்று நான் எண்ணவே இல்லை. நீ இசைச்சூதர் குலத்தவளா?” என்றான்.

ஆணிலி முகம் மலர்ந்து “அல்ல இளவரசே, நான் தெற்கே திருவிடத்திற்கும் அப்பால் தமிழ்நிலத்தை சார்ந்தவள். என் பெற்றோர் சிற்பிகள். இளமையிலேயே என்னை ஆணிலி என்று கண்டனர். உத்கலத்திலிருந்து வந்த ஆணிலிகளின் குழுவிற்கு என்னை அளித்துவிட்டுச் சென்றனர். அவர்கள் ஊர்தோறும் சென்று பாடி வாழ்பவர்கள். என் பெயர் ரோகிணி” என்று சொன்னாள். “மெய்ப்பெயர் பிறிதொன்று. நான் என்னை உடல்மாற்றிக்கொண்டபோது என் பிறவிமீனையே பெயராகக் கொண்டேன்.”

கூடி நின்றிருந்த மடைப்பணியாளர்கள் அவர்கள் அரசகுடியினர் என்று கண்டு அகன்று நோக்கிக்கொண்டிருந்தனர். ஸ்வேதன் தன் கையிலிருந்த கணையாழி ஒன்றை கழற்றி “சிறந்த பாடல்களை பலமுறை கேட்டிருக்கிறேன். தருணமுணர்ந்து பாடுகையில் பாடல் மேலும் அழகுகொள்கிறது. தருணம் பொருந்த கேட்கையில் மேலும் பலமடங்கு அழகு கொள்கிறது. இன்று கேட்ட இப்பாடல் என் வாழ்நாள் முழுக்க நினைவிருக்கும் என்று தோன்றுகிறது. இத்தருணம் அழகுறுக!” என்று சொல்லி அதை அவளிடம் நீட்டினான்.

இரு கைகள் நீட்டி அதை பெற்று விழிகளில் ஒற்றி நெஞ்சோடு சேர்த்துக்கொண்ட ரோகிணி “இளவரசே, என் சிறுவாழ்க்கையில் பொன்னணிகளுக்கோ அருமணிகளுக்கோ பயனென ஏதுமில்லை. உண்மையில் இதை நான் பேணிக்கொள்வதே அரிது. உளமுவந்து பிறிதொருவருக்கு இதை அளிப்பதே நான் செய்யக்கூடுவது. தங்கள் அன்பு இக்கொடையிலிருப்பதனால் இதை பெரும்பேறென்று பெற்றுக்கொண்டேன்” என்றாள். அவள் உள்ளத்தை உணர்ந்த ஸ்வேதன் “உன் விழைவென்ன?” என்றான். “என்னை இளைய பாண்டவர் அர்ஜுனரிடம் அழைத்துச் செல்லுங்கள். நான் அவரை ஒருகணமேனும் நேரில் பார்க்கும்பொருட்டே இப்படையில் வந்து இணைந்துகொண்டேன். என் அடுமனைத்திறனால் இவர்களுடன் இருக்கிறேன். எங்களைப் போன்றவர்கள் போர்முனைக்குச் செல்ல ஒப்புதல் இல்லை. அணிஏவலர்களாகவும் அடுமனையாளர்களாகவும் மட்டுமே படையில் இடம்பெற இயலும். நான் அணிப்பணி தெரிந்தவள். அரசகுடியினர் தங்களுக்கென தனிப்பட்ட ஏவலரையும் அணி செய்கையாளர்களையும் உடனழைத்துக்கொள்ளலாம் என்று நெறியிருக்கிறது.”

ஸ்வேதன் புன்னகைத்து “உன் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன். ஏனெனில் நீ விழைவதையே இத்தருணத்தில் நானும் விழைகிறேன். அவரை சந்திக்கத்தான் நானும் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றான். அவள் முகம் மலர்ந்து “தங்களுடன் என்னை அழைத்துச் சென்றீர்கள் என்றால் அதை என் நல்லூழ் என கொள்வேன். அவர் முன் நான் நின்றால் போதும். என்னை அவர் மறுக்கமாட்டாரென்று நன்கறிவேன்” என்றாள். ஒருகணம் எண்ணிய பின் “சரி, என்னுடன் கிளம்புக!” என்றான் ஸ்வேதன்.

அவள் சிறுமியைப்போல கூச்சலிட்டு கைகளைத் தூக்கியபடி துள்ளிக்குதித்து இரு கைகளாலும் ஆடையைப் பற்றியபடி மும்முறை சுழன்றாள். “சுதீரரே, மித்ரரே, நான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன்! மடைத்தலைவரிடம் சொல்லிவிடுங்கள்! நான் கிளம்புகிறேன்! இங்கிருந்தே” என்றாள். “உன் பொருட்களை எடுத்துக்கொள்” என்றான் ஸ்வேதன். “பொருளென்று எதுவுமில்லை, இவ்வாடைகளைத் தவிர. நான் தங்கள் புரவியுடன் ஓடியே வரமுடியும்” என்றாள். “நாங்கள் நெடுந்தொலைவு செல்வோம், விரைந்தும் செல்வோம். நாளை முழுக்க செல்லவேண்டியிருக்கும். மறுநாள் பிற்பொழுதில்தான் சென்றடைவோம்.” “எத்தொலைவாயினும் நான் உடன் வருவேன். என் உடலின் ஆற்றல் நீங்கள் எண்ணுவதை விட மிகுதி” என்றாள் ரோகிணி.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 54

tigதிருஷ்டத்யும்னனின் பாடிவீடு மென்மரப்பட்டைகளாலும் தேன்மெழுகும் அரக்கும் பூசப்பட்ட தட்டிகளாலும் ஆன சிறு மாளிகை. அதன் முகப்பில் பாஞ்சாலத்தின் விற்கொடி மையத்தில் பறந்தது. பாஞ்சாலத்தின் ஐந்து தொல்குடிகளான கேசினிகள், துர்வாசர்கள், கிருவிகள், சிருஞ்சயர்கள், சோமகர்கள் ஆகியோரின் கொடிகள் தாழ்வாக பறந்தன. கேசினிகள் மருதமரத்தின் இலையையும் கிருவிகள் எட்டிமரத்தின் இலையையும் சோமகர்கள் ஆலிலையையும் துர்வாசர்கள் வேம்பிலையையும் சிருஞ்சயர்கள் மந்தார மரத்தின் இலையையும் அடையாளமாக கொண்டிருந்தனர். அந்த அடையாளங்கள் அனைத்தையும் ஸ்வேதன் பயின்றிருந்தான். விற்கொடிக்கு நிகராக எழுந்த வெண்ணிறக் கொடியில் மந்தார இலைக்கு அடியில் அனல்குழியில் எரி எழும் அடையாளம் இருந்தது. சிருஞ்சய குடியினனாகிய திருஷ்டத்யும்னனின் போர்க்கொடி அது என தெரிந்தது.

பாடிவீட்டுக்குள் அவர்களை திருஷ்டத்யும்னன் அழைத்துச் சென்றான். “இளவரசர்களுக்கு பாஞ்சாலத்தின் குடிக்கு நல்வரவு” என முறைமைச்சொல் உரைத்து அமரச்செய்தான். “உங்கள் படைகளை இப்போது என் படைகளுடன் இணைத்துக்கொள்ள ஆணையுரைக்கிறேன், இளவரசே. இப்படையில் உங்கள் பங்களிப்பென்ன என்பதை பின்னர் முடிவெடுப்போம்” என்றான். சங்கன் “நாம் ஏன் இங்கு இருக்கிறோம்? நாம் உடனே கிளம்பி இளைய பாண்டவரை சந்திக்கப்போகிறோம் என்று எண்ணினேன்” என்றான். திருஷ்டத்யும்னன் “சில முறைமைகள் உள்ளன. நீங்கள் இங்கு வந்ததை நான் ஓலைகளினூடாக அரசருக்கும் இளைய யாதவருக்கும் அறிவிக்கவேண்டும். அவர்களிடமிருந்து ஒப்புதல் ஆணையும் வரவேண்டும்” என்றான்.

“நாங்கள் சென்றுகொண்டே இருக்கிறோம். அதற்குள் ஆணை வரட்டும்” என்றான் சங்கன். ஸ்வேதன் பொறுமையிழந்து பல்லைக் கடித்து அவனிடம் “பேசாதே” என்றான். திருஷ்டத்யும்னன் “அந்திக்குப் பின் காவலரும், தூதரும் படைத்தலைவர்களும் அன்றி எவரும் படைப்பிரிவுக்குள் பயணம்செய்வதை நெறிகள் ஒப்புவதில்லை. அது காவலுக்கு உகந்தது அல்ல” என்றான். “இன்று ஓய்வெடுங்கள். நாளை புலரியில் கிளம்பலாம். புரவிகளும் புத்தாற்றலுடன் இருக்கும். அந்திக்குள் மையத்திலுள்ள அடுமனைக் களஞ்சியங்களை அடையமுடியும். இளைய பாண்டவர் அங்கிருப்பார்” என்றான். “ஆம், அதுவே வழி” என்றான் ஸ்வேதன். “அப்படியென்றால் நாங்கள் படைகளை பார்க்கிறோம். நான் பார்க்க விரும்பும் பேருருவத் தெய்வம் இப்படையேதான்…” என்றான் சங்கன். “நன்று, நானே காட்டுகிறேன்” என திருஷ்டத்யும்னன் எழுந்தான்.

பாண்டவப் படைகளின் நடுவே அவர்கள் புரவிகளில் சென்றார்கள். பாண்டவப் படைகளின் பெருந்தோற்றம் சங்கனை கிளர்ந்தெழச் செய்தது. புரவி மேலமர்ந்து துள்ளியும் திரும்பியும் கைநீட்டி கூச்சலிட்டும் உரக்க நகைத்தும் வியப்பொலி எழுப்பியும் அவன் கொந்தளித்துக்கொண்டிருந்தான். “இவற்றை பார்த்து முடிப்பதற்குள் வாழ்நாள் முடிந்துவிடும் போலிருக்கிறது, மூத்தவரே. படையென்றால் இதுதான். நான் இவ்வாறு எண்ணவேயில்லை. படையென்பது நம் விழவுகளில் மக்கள் பெருக்கெடுத்துச் செல்வது போலிருக்கும் என்று எண்ணினேன். இதுவரை இப்படை சென்றதைப்பற்றி நம்மிடம் சொன்ன அத்தனை குடிகளும் பெருவெள்ளம் எழுவது போலென்றும், காட்டெரி படர்ந்து செல்வது போலென்றும்தான் சொன்னார்கள். இது மிக நுட்பமாக வகுத்து ஒன்றுடன் ஒன்று பொருத்தப்பட்ட மாபெரும் கைவிடுபடை போலிருக்கிறது” என்றான்.

அவனால் சொல்லெடுக்க இயலவில்லை. பலமுறை கைகளை விரித்து வியப்பைக் காட்டி பின்னர் சொல்கொண்டு “ஒன்றின் அசைவை பிறிதொன்று ஆள்கிறது. அனைத்து அசைவுகளும் சேர்ந்து ஒற்றை அசைவென்றாகின்றன. தனி ஓர் அலகை பார்த்தால் அது தன் விழைவுப்படி முழுமையாக செயல்படுவதாக தோன்றுகிறது. ஒன்றெனப் பார்த்தால் தனிஅலகுகள் அனைத்தும் இணைந்து ஓருடலாகி இயல்வது தெரிகிறது. இப்படி ஒரு படைவிரிவை துளித் துளியாக ஒருங்கு சேர்ப்பதற்கு நம்மால் இயலாது. நாம் இதுவரை படை என எதையும் அமைக்கவே இல்லை. நம்மிடம் இருப்பது வெறும் திரள்” என்றான்.

திருஷ்டத்யும்னன் “அவ்வாறல்ல, இளையோனே. உங்கள் படைப்பிரிவுகளுக்கு மட்டும் சில தனித்திறன்கள் இருக்கும். அவை உங்கள் நிலத்திலிருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் நீங்கள் கற்றுக்கொண்டவை. அத்தகைய தனித்திறன்களே ஒரு படையின் சிறப்பு. கட்டைவிரல் செய்யும் பணியை சுட்டுவிரல் செய்வதில்லை. சுட்டுவிரல் செய்யும் பணியை கட்டைவிரலும் ஆற்றுவதில்லை. பத்து விரல்களால் ஆனதே கை. ஒவ்வொரு படையும் அவ்வாறு தனியென்று இருக்கையிலேயே களவெற்றி அடையமுடியும்” என்றான்.

“இதோ இந்தப் படைப்பிரிவு பாஞ்சாலத்தின் துர்வாச குலத்தை சார்ந்தது. இவர்கள் மலைக்குடியினர். கங்கைக்கரையில் அடர்காடுகளில் மரங்களுக்குள் மறைந்திருந்து போர்செய்யும் பயிற்சி பெற்றவர்கள். இவர்களை தேர்ப்படைக்கும் யானைப்படைக்கும் ஊடாக அனுப்பலாம். ஒளியும் கலையறிந்தவர்கள் என்பதனால் எதிரி இவர்களைப் பார்ப்பது மிக அரிது. ஒவ்வொரு அம்புக்கும் வெளிப்பட்டும் மறைந்தும் குரங்குகளைப்போல்   இவர்கள் போரிடுவதனால் மாருதர் என்று அழைக்கப்படுகிறார்கள்” என்று திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான்.

“ஆனால் இவர்களை தனித்து நாம் எதிரிமுன் விட்டால் அவர்கள் தங்கள் எண்ணிக்கையால் இவர்களை அழிப்பார்கள். இவர்களுக்குப் பின்னால் பாண்டவர் படையின் ஒட்டுமொத்தமும் ஏதோ ஒருவகையில் நின்றிருக்க வேண்டும். அவ்வாறு இங்குள்ள ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் பின்துணையாக ஒட்டுமொத்த படைப்பிரிவும் இருக்கவேண்டும். அந்நோக்குடன்தான் இப்படைப்பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று கோக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வேறுபட்ட படைப்பிரிவுகளை ஓருடலென கோப்பதெப்படி என்று ஆயிரமாண்டுகளாக தொல்நூல்களில் எழுதி கற்று மீண்டும் எழுதி பல்லாயிரம் கொள்கைகளை உருவாக்கியுள்ளனர்.”

“பெரும்போர் மிக அரிதாகவே நிகழ்கிறது. ஆயினும் ஒவ்வொரு நாளுமென இப்படைசூழ்கைகள் அறிஞர்களாலும் ஷத்ரியர்களாலும் பயிலப்படுகின்றன. போர் ஏடுகளிலேயே நிகழ்ந்து நிகழ்ந்து தன்னை மேலும் மேலும் மேம்படுத்திக்கொள்கிறது. இதற்கு முன் நிகழ்ந்த பெரும்போர் என்பது மகதத்திற்கும் பிற நாடுகளுக்கும் பிருஹத்க்ஷத்ரரின் காலத்தில் நடந்தது. அதன்பின் சென்ற நூற்றியிருபது ஆண்டுகள் பாரதவர்ஷத்தில் இத்தகைய பெரும்போர் நிகழ்ந்ததில்லை. ஆனால் உள்ளத்தால் பெரும்போர் நிகழாத ஒரு நாளும் பாரதவர்ஷத்தில் இல்லை என்று என் தந்தை சொல்வதுண்டு.”

“ஏனென்றால் போரினூடாகவே ஒவ்வொரு உறுப்பும் வளர்கின்றது. காடு என்பது ஒவ்வொரு கணமும் நிகழும் பெரும்போரின் கண்நோக்கு வடிவு. மானுடகுலமும் அவ்வாறுதான். குருதிப்போர்களை கொள்கைப்போர்களாக ஆக்கிக்கொள்வதற்கே சான்றோர் முயல்கின்றனர். எளிதில் போர்நிகழாதிருப்பதே அமைதி. அதற்குரிய வழி பெரும்போர் நிகழும்படி சூழலை அமைப்பதுதான்” என்றான் திருஷ்டத்யும்னன். “படைகள் ஏதேனும் ஒருவகையில் தங்களை கட்டமைத்துக்கொண்டவை. அதையே படைசூழ்கை என்கிறோம்.”

“அனைத்துப் படைசூழ்கைகளும் இயற்கையிலிருந்து எடுத்த பல்வேறு வடிவங்களைக்கொண்டு உருவமைக்கப்பட்டவை. இப்போது நீங்கள் பார்ப்பது கொக்குகளின் கூட்டம். அவை எப்போதும் பிறை வடிவிலேயே முன்னகர்கின்றன. ஏனெனில் தலைமைகொண்டு செல்லும் முதற்கொக்கை அனைத்துக் கொக்குகளும் பார்ப்பதற்குத் தகுந்த வடிவம் அது. அத்துடன் செல்லும் வழி இடுங்கலாகுமெனில் அப்படியே நீள்பட்டு ஒடுங்கி அப்பால் கடப்பதற்கும் அது உகந்தது” என்ற திருஷ்டத்யும்னன் “கொக்குகளின் கூட்டத்தை வானில் எப்போதேனும் கூர்ந்து நோக்கியிருக்கிறீர்களா?” என்றான்.

“ஆம், சில தருணங்களில் அவை ஒன்று சேர்ந்து ஒற்றைப்பறவையின் உடலையே அமைப்பதாக தோன்றும்” என்றான் சங்கன். அவன் தோளில் கைவைத்து சிரித்தபடி “அதைத்தான் சொல்ல வந்தேன். அனைத்துப் பறவைகளும் இணைந்து உருவாகும் ஒற்றைப்பறவை. அந்தப் பெரும்பறவையின் ஆற்றலை ஒவ்வொரு பறவையும் பெற்றுக்கொள்கிறது, அதற்குப் பெயர்தான் படைசூழ்கை” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “வருக, இப்படைசூழ்கையை நீங்கள் பார்க்கலாம்!” என்று அங்கிருந்த காவல்மாடமொன்றை நோக்கி சென்றான்.

அறுபத்துநான்கு சகடங்களுக்குமேல் பெரிய பீடம் என அமைந்திருந்த பெரிய மரவண்டியில் பன்னிரு எருதுகள் இழுக்கும்படி நுகங்கள் இருந்தன. அதன்மேல் மூங்கிலால் அந்த காவல்மாடம் அமைக்கப்பட்டிருந்தது. சங்கன் அதை பார்த்து “எட்டு எட்டாக எட்டு சகடங்கள்” என்றான்.  “ஆம், சகடங்களின் எண்ணிக்கை பெருகுகையில் குழிகளிலும் பள்ளங்களிலும் விழாமல் இந்த வண்டியின் பெரும்பரப்பு செல்லமுடியும்” என்றான் திருஷ்டத்யும்னன். அவர்கள் அந்த வண்டியின் மீதேறி அதன்மீது அமைக்கப்பட்டிருந்த காவல்மாடத்தில் தொங்கிய நூலேணியில் தொற்றி மேலேறிச் சென்றனர். அங்கிருந்த படைவீரர்களில் மூவர் மறுபக்கம் வழியாக இறங்கிச் சென்று அவர்களுக்குரிய இடத்தை உருவாக்கினர்.

“ஆணைகளை அளிப்பதற்கும் முழுப் படையையும் விழிநோக்கில் வைத்திருப்பதற்கும் இத்தகைய காவல்மாடங்களின் பணி மிகப் பெரிது. நாம் நமது பாசறைகளில் அமர்ந்து ஏடுகளில் படைநிலைகளை உருவாக்குகிறோம். படைசூழ்கைகள் அனைத்தும் அங்கேயே முழுமை செய்யப்பட்டுவிடும். ஆயினும் படைத்தலைவன் என்பவன் ஒவ்வொரு நாளும் காவல்மாடத்தின் மீதேறி ஊன்விழிகளால் தன் படையை பார்க்கவேண்டும் என்பார்கள். ஒவ்வொரு முறையும் தோற்பரப்பில் படைநிலைகளை எழுதும்போது அவன் விழிகளால் பார்த்தது உளத்தில் விரிய வேண்டும். விழிகளால் பார்ப்பதற்கு நிகர் பிறிதொன்றில்லை. ஒவ்வொரு முறையும் விழிகளால் பார்க்கையில் நான் மேலும் மேலும் புதிய எண்ணங்களை அடைகிறேன். ஆகவே ஒவ்வொரு நாளும் ஐந்து முறைக்குமேல் ஏறி படைகளை நான் பார்ப்பதுண்டு” என்றான் திருஷ்டத்யும்னன்.

அவர்கள் காவல்மாடத்தின்மேலேறி அந்த பலகைப்பரப்பில் நின்றனர். சுற்றிலும் பெருகியிருந்த படையை அதுவரை உடற்பெருக்கு என பார்த்துக்கொண்டிருந்த ஸ்வேதன் அவை தலைப்பரப்பென மாறி கீழிறங்குவதை உணர்ந்தான். பின்னர் அவை உடல்களை துளிகளாகக் கொண்ட நீர்வெளி என மாறின. சுழன்று சுழன்று அவன் அவற்றை பார்த்துக்கொண்டிருந்தான். தெற்கே நான்கு திசைகளிலும் விழியெட்டும் தொலைவு வரை இந்திரப்பிரஸ்தத்தின் படைகள் தங்கியிருந்தன. மிக நெருக்கமாக ஒன்றுடனொன்று ஒட்டி அமைக்கப்பட்ட தோல்கூடாரங்களிலும் பாடி வீடுகளிலும் படைத்தலைவர் தங்கியிருந்தனர். வீரர்கள் வெறும்நிலத்தில் பாய்களிட்டு ஓய்வுகொண்டனர்.

அருகிருந்த சிறு ஆற்றிலிருந்து யானைகள் இழுத்துச் சுழற்றிய சகடங்களால் தோற்பைகளில் அள்ளப்பட்ட நீர் மூங்கில்வழியாக மேலெழுந்து சென்று அங்கிருந்த மரத்தாலான பெருங்கலத்தில் நிறைந்தது. அதிலிருந்து மூங்கில் குழாய்களினூடாக, மரத்தாலான சிற்றோடைகளினூடாக படைநிலைகள் அனைத்திற்கும் ஒழுகிச் சென்றது. மரத்தொட்டிகளில் விழுந்து நிறைந்த நீரை வீரர்கள் அள்ளி குடிப்பதற்காக எடுத்துச் சென்றனர். விலங்குகளுக்கு படகுபோன்ற மரத்தொட்டிகளில் நீர் வைத்தனர். அடுமனைகளிலிருந்து புகை எழத்தொடங்கியது. படைநிலைகளில் இருந்து ஊக்கமும் உவகையும் கொண்ட குரல்களும் முழக்கமும் எழுந்து மேலே வந்தன.

திருஷ்டத்யும்னன் “படைகளில் வீரர்கள் எப்போதும் உவகையுடன் இருக்கிறார்கள். அவர்கள் நினைவறிந்த நாள் முதலே இத்தகைய வாழ்க்கைகாக பயிற்றுவிக்கப்பட்டவர்கள். பலநூறு முறை அதை உள்ளத்தில் எண்ணி நிகழ்த்திக்கொண்டவர்கள். அது மெய்யென நிகழ்கையில் பெரும் கிளர்ச்சி அடைகிறார்கள்” என்றபின் புன்னகைத்து “ஒவ்வொருவரும் உள்ளூர அறிந்தது இறப்பு அணுகிக்கொண்டிருக்கிறது என்பது. இறப்பு எங்கோ இருக்கிறதென்னும் எண்ணமே நாட்களை வெறுமையாக்குகிறது. எண்ணி அளிக்கப்பட்ட காலம் என்பது ஒவ்வொரு துளியும் அமுது” என்றான்.

சங்கனும் ஸ்வேதனும் மெல்ல பரபரப்பு அழிந்து ஆழ்ந்த அமைதியை அடைந்தனர். ஸ்வேதன் பொருளெனத் திரளாத உள்ளத்துடன் காட்சிகளில் தன்னை அழித்துக்கொண்ட விழிகளுடன் அங்கு நின்றான். ஒரு படையென்பது பெருங்காடென்று முன்பு அவன் எண்ணியிருந்தான். ஏடுகளில் கற்று அறிந்த படைசூழ்கைகள் அனைத்துமே அவ்வெண்ணத்தையே உருவாக்கின. குலாடர்கள் பெரும்படைகள் எதிலும் பங்குபெற்றதில்லை. ஆனால் அவன் அங்கு பார்த்த பாண்டவப் படை நன்கு திட்டமிட்ட பெருநகர் போலிருந்தது. பலகையிட்டு உருவாக்கப்பட்டிருந்த எட்டு பெருஞ்சாலைகளையும் அவற்றிலிருந்து கிளைபிரியும் துணைச்சாலைகளையும் படைநடுவே தெருக்கள்போல நிலைநிறுத்தியிருந்தனர். ஒவ்வொரு தெருவிலிருந்தும் ஒவ்வொரு படைக்குழுவிற்கும் செல்வதற்கான பாதை இருந்தது. அவ்வாறு படைப்பிரிவுக்குள் சீரான பாதை அமைக்கவில்லையென்றால் ஒருமுனையிலிருந்து மறுமுனைக்கு எவரும் விரைந்து சென்றுவிட முடியாதென்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். அவன் எண்ணத்தை உணர்ந்ததுபோல சங்கன் “இப்படைப்பிரிவுக்குள் எந்த முனையிலிருந்தும் எங்கும் புரவியில் ஒருகணம்கூட தயங்காமல் பாய்ந்து ஓடிச்செல்லமுடியும், மூத்தவரே” என்றான்.

காவல்மாடங்கள் அனைத்திலும் முரசுகளும் கொடிகளும் இருந்தன. முரசு ஒலி ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொள்ளும் தொலைவில் காவல்மாடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முரசொலியைக் கேட்டு அவ்வாணையை கொடியசைவுகளாக மாற்றும்பொருட்டு படைவெளி முழுக்க புரவிகளால் இழுக்கப்பட்ட சிறிய ஆணைமேடைகள் இருந்தன. அங்கு வெவ்வேறு வண்ணங்களிலான கொடிகள் தெரிந்தன. தன்னருகே நின்றிருக்கும் திருஷ்டத்யும்னனின் ஒரு சொல் மறுகணமே முரசோசையாகவும் கொடியசைவுகளாகவும் மாறி அப்படை முழுக்க பரந்து அதை எண்ணிய வண்ணம் இயக்க முடியும் என்று ஸ்வேதன் எண்ணினான். மீண்டும் எதையோ எண்ண உளம் எழுந்தபோதுதான் அந்த எண்ணத்தின் உட்பொருளை உணர்ந்து அவன் மெய்ப்பு கொண்டான்.

பல்லாயிரம் பேரை தன் நாவின் சிற்றசைவின் மூலம் ஆட்டி வைக்கமுடியும்! நாவசைவுகூட வேண்டியதில்லை, விழியசைவே போதும். திருஷ்டத்யும்னனின் பேருருக்கொண்ட உடல் அப்படை. அவன் கால்கள், அவன் கைகள், அவன் விழிகள், அவனுடைய நாக்கு. அப்பெரும்படையின் ஆத்மா அவனில் புகுந்து அவ்வுடலை ஆள்கிறது. அப்படை தன் ஆழத்தில் விழைவதை மட்டுமே அவன் அங்கிருந்து தன் எண்ணமென அடைகிறான், சொல்லென வெளிப்படுத்துகிறான். அவன் பெருமூச்சுவிட்டான். படை என்பது மானுடர் ஓருடலாதல் மட்டுமல்ல, ஒருவன் பேருடல் ஆதலும்கூட. படையே மாமன்னர்களை உருவாக்குகிறது. படையென்றான பின்னரே மானுடன் தன் பேராற்றலை கண்டுகொண்டிருக்க முடியும். தெய்வங்களை நோக்கி விழிதூக்கியிருக்க முடியும். விருத்திரன், ஹிரண்யன், நரகன் என தொடரும் அனைத்து அசுரர்களும் படை என பேருடல்கொண்டமையால் தெய்வங்களை அறைகூவிய மண்வாழ் மானுடரே.

திருஷ்டத்யும்னனும் அப்படையின் காட்சியால் உளம் நெகிழ்ந்திருந்தான். அதை தழுவுவதுபோல கைகளை விரித்து மெல்ல சுழன்றபடி நோக்கினான். “படைசூழ்கை ஒரு பெருங்கலை. நெடுங்காலமாக மானுடர் அதை ஊழ்கத்திற்கென கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணத்துடன் தனித்திருப்பதையே வகுத்துள்ளன தெய்வங்கள். ஒவ்வொருவரும் பிறிதொருவருடன் ஒன்றென இணைந்து ஓருடலாகுகையில் மானுடரின் அவ்வெற்றி கண்டு தெய்வங்கள் மகிழ்கின்றன. இறங்கி வந்து அவனுடன் இணைந்துகொள்கின்றன. ஆணைகளினூடாகவும் பயிற்சியினூடாகவும் மட்டுமல்ல, கனவுகளூடாகவும் நம்பிக்கைகளூடாகவும்தான் பெரும்படைகள் ஒருங்கிணைகின்றன” என்றான்.

“குலதெய்வங்கள், மூதாதையர், நீத்தார், அறுகொலைகள் என ஒவ்வொரு நாளும் பாடிப் பாடி நம் அகத்தில் செலுத்திக்கொண்ட ஒன்றுதான் நம் அனைவரையும் ஒன்றெனத் திரட்டி இங்கு நிறுத்தியிருக்கிறது. தனியே மனிதர்களுக்கு அச்சமுண்டு. வஞ்சங்கள் உண்டு. படை என்பது அச்சமோ வஞ்சமோ அறியாதது. அது விழைவுகூட இல்லாதது. அதை கிளப்புவதற்கே வஞ்சங்களும் வஞ்சினங்களும் தேவையாகின்றன. கிளம்பியபின் முற்றிலும் பிறிதொன்றாக அது திரள்கிறது. அது ஒற்றைத் திரளென இவ்வுடல்கள் அனைத்தையும் இணைத்தெழும் ஒரு பெருவிசை மட்டுமே. அதன் விழைவு எந்த மானுடருக்கும் உரியதல்ல. அதற்கு இப்புவியுடன் தொடர்பே இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன்.

மெய்ப்பு கொண்ட உடலுடன் ஸ்வேதன் நோக்கி நின்றான். அந்தி சிவந்துகொண்டிருந்தது. முகில்கள் செம்மையிலிருந்து கருமைக்கு சென்றன. விழிதொடும் எல்லையில் எல்லாம் அடுமனைகளின் புகைத்தூண்கள் எழுந்து வானை தொட்டன. படைகளின் ஓசை மழுங்கலான முழக்கமாக மாறிவிட்டிருந்தது. “கிளம்புவோம்” என்று திருஷ்டத்யும்னன் அவன் தோளை தொட்டதும் அவன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். மெல்லிய மூக்குறிஞ்சல் ஓசை கேட்டு திரும்பி நோக்கினான். சங்கன் விழிநீர் வடிய அழுதுகொண்டிருந்தான். ஸ்வேதன் சங்கனை தொட்டபோது அவன் உடல் நடுங்கி விதிர்த்தது. “செல்வோம்” என்றான் ஸ்வேதன்.

tigஅன்றிரவு திருஷ்டத்யும்னன் அவர்களுக்காக ஒருக்கிய விருந்தில் பாஞ்சால இளவரசர்களான சித்ரகேதுவும் உத்தமௌஜனும் விரிகனும் பிரியதர்சனும் துவஜசேனனும் மைந்தர்களான திருஷ்டகேதுவும் க்ஷத்ரதர்மனும் க்ஷத்ரஞ்சயனும் கலந்துகொண்டனர். யவனமதுவும் நெய்யில் வறுத்த வெள்ளாட்டு ஊனும் இனிய கிழங்குகளும் அப்பங்களும் பரிமாறப்பட்டன. இரவு கனிந்து வியாழன் நிலைமாறுவதுவரை அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பங்கெடுக்கும் முதல் அரசவிருந்து அது. தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த குடிலில் உடைகளை மாற்றி முகம் கழுவிக்கொண்டிருந்தபோது ஸ்வேதன் “படைநகர்வு தொடங்கிய பின்னர் போர் முடிவதுவரை வீரர்களுக்கு நீராட உரிமையில்லை. அரசகுடியினர் மட்டும் முகங்களையும் கைகால்களையும் கழுவிக்கொள்ளலாம். போரில் மிக அரிதான பொருள் நீர்” என்றான். சங்கனின் உள்ளத்து உணர்வை புரிந்துகொண்டு “இதேபோல் ஆற்றங்கரையில் தங்கும்போதுகூட படைகள் நீரிலிறங்கி குளிப்பது ஏற்கப்படுவதில்லை. நீரிலிறங்கும் படை முற்றிலும் செயலற்றதாக இருக்கும். அத்தருணத்தில் ஒரு எதிர்தாக்குதல் வந்தால் அதனால் எதிர்கொள்ள முடியாது. நீராடும் பொருட்டு படைகளை சிறு பிரிவுகளாக பிரித்து அனுப்புவதென்பதும் மொத்தப் படையையும் கலைத்து திரும்ப அடுக்குவது போன்றது” என்றான். “நீராடாமல் இருப்பது நன்று. அனைவரும் ஒரே மணம் கொண்டவர்களாகிறார்கள். நம் தரப்பு வீரனை நாம் முகர்ந்தே கண்டுபிடித்துவிடலாம்” என்று சங்கன் சிரித்தபடி சொன்னான்.

ஸ்வேதன் உளம் கிளர்ந்திருந்தான். மாற்றாடை அணிந்துகொண்டிருக்கையில் “நம்மை பாஞ்சால அரசரே நேரில் வந்து வரவேற்பாரென்றும் நமக்கென தனி விருந்தொன்றை ஒருக்குவாரென்றும் நான் எண்ணவே இல்லை, இளையோனே” என்றான். “ஏன்? நாம் இளவரசர்களல்லவா?” என்றான் சங்கன் அவ்வுணர்வை புரிந்துகொள்ளாமல். “விராடரையே அவர்கள் இன்னும் ஷத்ரியர்களாக முழுதேற்கவில்லை. நாமோ விராடராலேயே ஏற்கப்படாத குடியினர்” என்றான் ஸ்வேதன்.

சங்கன் “நிலம்வென்று நெறிநின்று ஆளும் அனைவரும் ஷத்ரியர்களாகும்பொருட்டு இளைய யாதவரின் சொல் எழுந்திருக்கிறதென்றும் அதை ஏற்று திரண்டதே இப்பெரும் படை என்றும் நாம் அறிந்திருக்கிறோம்” என்றான். “அது கூறப்படுவது. எப்போதும் போருக்கென கூறப்படும் கொள்கைகள் பிறருக்கானவை. போரில் இறங்குபவர் அனைவருக்கும் வேறு நோக்கங்கள் இருக்கும். எளிய வீரர்களுக்குக்கூட. ஆனால் அந்நோக்கத்தின் பொருட்டு உயிர்துறப்பது பொருளற்றது என அவர்களின் ஆழம் கூறும். ஆகவே பெரிய ஒரு கொள்கையும் கனவும் அவர்களை நோக்கி சொல்லப்படும். அது பொய்யென்றறிந்தாலும் அவர்கள் அதை நம்பி உணர்வெழுச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள்” என்று ஸ்வேதன் சொன்னான்.

திருஷ்டத்யும்னனே பாடிவீட்டிலிருந்து வெளியே வந்து இருவரையும் தழுவி அழைத்து உள்ளே சென்று அமரச்செய்தான். திருஷ்டத்யும்னனின் இருபுறமும் அமர்ந்து அவர்கள் உணவுண்டார்கள். சங்கன் “நாம் இன்றிரவே கிளம்பி படைமுகப்பிற்கு செல்லக்கூடாதா?” என்றான். “எத்தனைமுறை கேட்பாய், அறிவிலி?” என்றான் ஸ்வேதன் எரிச்சலுடன். திருஷ்டத்யும்னன் பொறுமையாக “செல்லலாம். ஆனால் அதில் பொருளில்லை. எப்படியாயினும் ஒருநாள் முழுக்க பயணம் செய்து நாளை மறுநாள் பொழுது புலர்ந்த பிறகே நீங்கள் பாண்டவ இளவரசர்களை சந்திக்கமுடியும். காலையில் படைக்கணக்கு நோக்குதலையும் அணிவகுப்பை பார்வையிடுதலையும் அவர்கள் தவறவிடுவதில்லை. அவை முடிந்தபிறகு உச்சிவெயில் ஒளிகொள்ளும்போதுதான் பிறரை சந்திப்பார்கள். இப்பொழுதே சென்று அங்கு காத்திருப்பதற்கு மாறாக இங்கு நன்று துயின்று முதற்புலரியில் கிளம்பலாம்” என்றான்.

சங்கன் பெருமூச்சுடன் “ஆம், இன்னும் இரண்டு இரவுகள்!” என்றான். திருஷ்டத்யும்னன் நகைத்தபடி “பாரதவர்ஷமெங்கும் இளைய பாண்டவர் பீமனை தங்கள் உள்ளத்து ஆசிரியராக ஏற்றுக்கொண்ட பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். அனைவருமே பெருமல்லர்கள், கதை வீரர்கள்” என்றான். ஸ்வேதன் “அனைவருமே அஞ்சனை மைந்தனின் அடிபணிபவர்களும்கூட” என்றான். திருஷ்டத்யும்னன் திரும்பி சங்கனிடம் “மெய்யாகவா?” என்றான். “ஆம், நான் மாருதனை தலைமேற்கொண்டவன். ஒவ்வொரு நாளும் அவரை வழிபடுபவன்” என்றான்.

ஸ்வேதன் திருஷ்டத்யும்னனிடம் “இப்போரில் எங்களுக்கான இடம் என்ன என்று மட்டுமே அறியவிரும்புகிறோம். எங்களுக்கு எது கிடைக்கும் என்ற கணிப்பை முன்வைக்க விரும்பவில்லை. ஏனெனில் எங்கள் தலைவர்களுக்காக போரிடவேண்டும் என்ற ஒரே நோக்கில் கிளம்பி வந்தோம்” என்றான். திருஷ்டத்யும்னன் “தாங்கள் அறிந்திருப்பீர்கள் குலாடரே, இங்கு படைகொண்டு வந்திருக்கும் அரசர்களில் எவரும் மெய்யாகவே இன்றுவரை போருக்குப் பின் தங்களுக்கு கிடைப்பதென்ன என்று கேட்டதில்லை. அவர்கள் கேட்கத் தயங்கியிருக்கக்கூடுமோ என்று ஐயுற்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நான் உசாவியிருக்கிறேன். அதன் பொருட்டு விருந்துகளை ஒருக்கியிருக்கிறேன். நிஷாதர்களும் கிராதர்களும் அசுரர்களும் கோரிப்பெறுவதற்கென எதுவுமே அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அளிக்க மட்டுமே வந்திருக்கிறார்கள். பாரதவர்ஷத்தில் இதுபோல வென்ற பின் கொள்வதற்கில்லாத ஒரு படை இதற்கு முன் திரண்டிருக்காது” என்றான்.

“பின்னர் எதன் பொருட்டு அவர்கள் படைகொண்டு வந்திருக்கிறார்கள்?” என்று ஸ்வேதன் கேட்டான். “பெரும்பாலானவர்கள் பெண்பழி தீர்க்கும் கடமை தங்களுக்குண்டு என்று வந்திருக்கிறார்கள். அன்னையர் அவர்களுக்கு அளித்த ஆணையை தலைமேற்கொண்டிருக்கிறார்கள். எஞ்சியோர் இளைய யாதவரின் கொள்கைமேல் பற்று கொண்டு அதற்கென நிலைகொள்ள விழைந்து வந்தவர்கள். நானும் விராடரும் மட்டுமே யுதிஷ்டிரரின் முடி நிலைக்கவேண்டுமென்றும் அவர்கள் கொடிவழி அஸ்தினபுரியை ஆளவேண்டுமென்றும் விரும்பி வந்திருக்கிறோம். ஏனெனில் எங்கள் குருதியின் வெற்றி அது” என்றான்.

சங்கன் உணவுண்பதை இயல்பாக திரும்பிப்பார்த்த திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “இவன் இளைய பாண்டவரின் மாணவனாக இருக்கத்தக்கவனே” என்றான். “ஒருவேளை உணவுண்பதில் இவன் அவர்களை கடந்துசெல்லவும்கூடும்” என்றான் ஸ்வேதன். “இவனுடன் போட்டியாக அமரத்தக்க இரு மைந்தர் அவருக்குள்ளனர். இருவருமே பேருடலர். உண்மையில் இவர்கள் தோள்தழுவிக்கொள்ளும் காட்சியைக் காண பெரிதும் விழைகிறேன்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “ஆம், சுதசோமனும் சர்வதனும்… கேள்விப்பட்டுள்ளேன்” என்றான் சங்கன். “ஒருமுறை அவர்களுடன் நான் தோள்கோக்கவேண்டும்.”

அன்றிரவு குடிலில் ஈச்சம்பாயில் சங்கன் புரண்டு படுத்துக்கொண்டே இருந்தான். அவன் அசைவினால் துயில்கலைந்த ஸ்வேதன் எரிச்சலுடன் “என்ன செய்கிறாய், அறிவிலி?” என்று கேட்டான். “என்னால் துயில இயலவில்லை, மூத்தவரே” என்றான் சங்கன். “எனில் வெளியே சென்று நின்றுகொள். இதற்குள் ஓசையெழுப்பிக்கொண்டிருக்காதே” என்று ஸ்வேதன் சொன்னான். “ஆம்” என்று சொல்லி சங்கன் எழுந்து வெளியே சென்றான். சிறுவாயிலினூடாக அவன் கைகளைக் கட்டியபடி வானை நோக்கி நிற்பதை ஸ்வேதன் கண்டான். சற்று நேரத்தில் துயிலில் ஆழ்ந்து நெடும்பொழுதுக்குப் பின் விழித்துக்கொண்டபோது அருகே அவன் இல்லை என்பதை உணர்ந்தான். அதன் பின்னரே அவன் வெளியே சென்றதை நினைவுகூர்ந்து எழுந்து வெளியே வந்தான். பாண்டவர்களின் படைகள் பல்லாயிரக்கணக்கான பந்த ஒளிப்புள்ளிகளாக பரவிக்கிடந்தன. பந்தங்கள் நேர்கோடுகளாக ஒன்றையொன்று வெட்டி பின்னியிருந்தன. கைகளைக் கட்டியபடி அங்கிருந்த மரத்தின் அருகே அந்தப் பரப்பை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் சங்கன்.

ஸ்வேதன் அருகே சென்று நின்ற பிறகே அவனை உணர்ந்து திரும்பிப் பார்த்தான். “துயிலவில்லையா?” என்று அவன் கேட்டான். “இல்லை, நான் அவரை மீளமீள உள்ளத்தால் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். அப்போது நான் என்ன சொல்ல வேண்டும்? எப்படி நடந்துகொள்ள வேண்டும்? எத்தனை எண்ணியும் என் உள்ளம் கலைந்துகொண்டே இருக்கிறது. நாம் மலைமக்கள். நமது முறைமைகள் முற்றிலும் வேறு. இன்றுவரை பேரவை எதற்கும் நான் சென்றதில்லை. நான் நேரில் கண்ட முதல் அரசகுடியினர் திருஷ்டத்யும்னரே. முதற்கணத்திலேயே அவர் நம்மை அணைத்து தோள்தழுவி அனைத்து முறைமைகளையும் கைவிட்டுவிட்டார். ஆகவே என் இயல்புப்படி நான் இருந்தேன்” என்றான் சங்கன்.

“மூத்தவரே, இப்போது எண்ணுகையில் நாணுகிறேன். அவர் முன் அரக்கனைப்போல இரண்டு கைகளாலும் உணவை அள்ளியெடுத்து ஓசையெழ மென்று உண்டேன். ஏப்பங்கள் விட்டேன். மேலும் மேலும் என தொடையில் அறைந்து உணவை கோரினேன். ஓர் இளவரசன் நடந்துகொள்ளவேண்டிய முறைகளல்ல அவை” என்றான் சங்கன். “இவ்வண்ணம் நான் இளைய பாண்டவர் முன் இருந்தால் என்ன நிகழும்? நான் வேறொரு வண்ணம் நடக்கவும் அறியேன்.” ஸ்வேதன் புன்னகைத்து “நீ காட்டு மானுடனாக இருப்பதையே உன் தலைவர் விரும்புவார். நீ அறிந்திருப்பாய், அனைத்துச் சூதர் பாடல்களிலும் எந்த அவையிலும் தலைக்குமேல் கூரையிருப்பதை ஒப்பாத களிறு என அவர் தனித்து அமர்ந்திருந்தார் என்றே சொல்லப்பட்டுள்ளது” என்றான். “ஆம், இங்கிருக்கும் அனைத்தையும் மீறி எவ்வகையிலோ என்னால் அவரை அணுக முடியுமென்று தோன்றுகிறது. மூத்தவரே, இப்போது நான் எண்ணுவதைப்போலவே எண்ணியபடி எங்கோ அவரும் இதேபோல கைகளை மார்பில் கட்டியபடி இப்படைப்பிரிவுகளை பார்த்து நின்றிருக்கிறார் என்று எண்ணுகிறேன்” என்றான் சங்கன்.

“நீ என்ன எண்ணிக்கொண்டிருந்தாய்?” என்று ஸ்வேதன் கேட்டான். “இன்று திருஷ்டத்யும்னர் சொன்னாரல்லவா, அனைத்து மானுடரும் இணைந்து உருவாகும் ஒற்றைப்பெருமானுடனே படை என்று. ஒவ்வொருவரும் தங்களை அதற்கு முழுமையாக ஒப்புக்கொடுத்து இதை உருவாக்கியிருக்கிறார்கள். மாளிகைகளில் செங்கல் அமைவதுபோல ஒவ்வொருவரும் பதிந்துள்ளார்கள். எந்த மாளிகையிலும் முழுதுமிணையாத உருளைக்கல் அவர். அறியா மலையுச்சியிலிருந்து பெருநதியொன்றால் உருட்டிக் கொண்டுவரப்பட்டவர். என்னாலும் இந்தப் படையில் முற்றாக இணைய முடியாது. முதல் வியப்புக்குப் பின் இது என்ன என்ற துணுக்குறலே எனக்கு ஏற்பட்டது. இப்படைக்குள் நுழைகையில் இது என்னை கிளரச் செய்தது. அந்தி இருளத்தொடங்கி என்னைச் சூழ்ந்து இது ஒளியும் ஒலியுமாக மாறியபோது முற்றிலும் தனித்தவனானேன். இதன் வெற்றி தோல்விகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை” என்று சங்கன் சொன்னான். ஸ்வேதன் புன்னகைத்து அவன் தோளை மெல்ல தொட்டு மீண்டும் தன் மஞ்சத்திற்கே திரும்பினான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 53

tigஸ்வேதனும் சங்கனும் தலைமைகொண்டு நடத்திய குலாடகுடிப் படை பதின்மூன்று நாட்கள் பயணம் செய்து பீதசிலை என்னும் சிற்றூரில் பாண்டவப் படைப்பெருக்குடன் இணைந்துகொண்டது. நெடுந்தொலைவிலேயே பாண்டவப் படை அங்கு சென்றுகொண்டிருப்பதை ஒற்றர்கள் வந்து சொன்னார்கள். “இப்பகுதியினூடாக பாண்டவர்கள் படை நிரந்து சென்ற செய்தியைத்தான் ஒவ்வொருவரும் சொல்லிக்கொள்கிறார்கள். இளைய யாதவரையும் அர்ஜுனனையும் பீமனையும் தங்கள் விழிகளால் பார்த்ததாக ஒவ்வொருவரும் சொல்கிறார்கள்” என்றான் ஒற்றன். உதடுகளில் புன்னகையை காட்டாமல் “அத்தனை பேரும் பார்த்திருக்க வேண்டுமென்றால் அவர்கள் பலநாட்கள் இங்கே தங்கிச் சென்றிருக்க வேண்டும்” என்றான்.

ஸ்வேதன் “ஒரு படை சென்றபின் மக்கள் மகிழ்வுரை சொல்வது மிக அரிது” என்றான். ஒற்றன் “முன்னோடிப் படையினர் சிற்பிகளுடனும் ஏவலருடனும் பன்னிரு நாட்களுக்கு முன்னரே வந்து புதர்களை அகற்றியும், மரங்களை முறித்தும், ஓடைகளையும் குழிகளையும் நிரப்பியும், சிற்றாறுகளுக்குமேல் பாலம் அமைத்தும் படைகள் செல்வதற்கான பாதையை அமைத்துள்ளனர். சில இடங்களில் சிற்றில்லங்களும் குடில்களும் அகற்றப்பட்டுள்ளன. நான்கு தேர்கள் இணைந்து செல்லும் அகலம் கொண்ட எட்டு சாலைகள் அவர்களால் உருவாக்கப்பட்டன. அவற்றின்மேல் பலகைகள் பரப்பி வலுவாக்கினர். அதன்பின்னர் படையின் முதற்குரலோர் யானைகளில் வந்து பாண்டவப்படை வருவதாகவும் செல்லும் வழியிலுள்ளோருக்கு எந்தத் தீங்கும் வாரா என்றும் அறிவித்து குடிகள் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகளை அறிவித்தனர்” என்றான்.

“பாண்டவப் படையின் முகப்பு தோன்றி அதன் முடிவு தெரிவதற்கு நான்கு நாட்கள் ஆகியிருக்கின்றன. இங்குள உணவுப்பொருட்கள் அனைத்தையும் பொன்கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். கால்நடைகளையும் ஆடுகளையும் விலைகொண்டிருக்கிறார்கள். படைகள் சென்று மறைந்தபின் சிற்பியரும் பிறருமாக சாலைப்பலகைகளை விலக்கி, பாலங்களைக் கழற்றி கொண்டுசென்றனர். இவர்கள் அதற்கிணையான பெரும்படை எதையும் பார்த்ததில்லை என்பதனால் அதை விவரிக்கும் சொற்களின்றி தவிக்கிறார்கள். அனைவருமே கங்கையில் பெருவெள்ளம் எழுந்ததுபோல என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். ஒரு பூசகன் மட்டும் முன்பு விண்ணளந்த பெருமான் பாதாளத்திலிருந்து வாசுகியை எடுத்தபோது வாலும் தலையும் முடிவிலியில் இருக்க முடிவிலாத மடிப்புகளாக அவன் உடல் எழுந்துகொண்டிருந்ததுபோல என்று சொன்னான்” என்று ஒற்றன் சொன்னான்.

ஸ்வேதன் புன்னகைத்தான். “இளவரசே, பாண்டவப் படை நாம் எண்ணுவதைவிட பலமடங்கு பெரிது. நூறு இணைநிரைகளாக அணிவகுத்து சென்றுகொண்டிருக்கிறது அது. ஒன்றன்பின் ஒன்றென நூறு நகர்களை அடுக்கியதுபோல பாடி அமைகிறது” என்று இன்னொரு ஒற்றன் சொன்னான். “படையைவிட மும்மடங்கு நீளம்கொண்டது அதன் வால். ஏவலரும் பணியாளரும் தொடர்கிறார்கள். களஞ்சியங்கள் வண்டிகளில் செல்கின்றன.” ஸ்வேதன் “நாம் முடிந்தவரை விரைந்து சென்று சேர்வோம். இங்கிருந்து எத்தனை தொலைவில் அவர்கள் படை உள்ளது?” என்றான். “நாற்பது கல் தொலைவில் இன்று தங்கியிருக்கிறார்கள். நாம் விரைந்தால் நாளையே சென்றடைய முடியும். பெரும்படையாதலால் ஒவ்வொரு நாளும் கிளம்புவதும் தங்குவதும் நெடும்பொழுது எடுத்துக்கொண்டே நிகழ்கிறது. விலங்குகளுக்கு நீர்காட்டி புரவிகளை உடல் உருவிவிட்டு கூடாரங்களைக் கட்டி அந்தியை அமைப்பதற்குள் இரவு எழுந்துவிடுகிறது” என்றான் ஒற்றன்.

ஸ்வேதன் தன் படைவீரர்களை நோக்கி “வீரர்களே, மலையாறு கங்கையை அடைவதைப்போல நாம் இலக்கை அணுகிவிட்டிருக்கிறோம். அணுகுந்தோறும் விரைவெழ வேண்டுமென்பது நீரின் நெறி. நமக்கும் அவ்வாறே. கிளம்புக!” என்று அறைகூவினான். அவர்கள் குறுங்காடுகளை வகுந்தபடி விரைந்தனர். நடுவே சேற்றுப் பரப்புகளிலும் சிற்றோடைகளிலும் பலகைகளை நீட்டி அவற்றின்மேல் புரவிகளையும் வண்டிகளையும் கொண்டு சென்று விரைவை கூட்டினர். பெருவெள்ளத் தடம்போல படை சென்ற பாதையை விழிகளாலே பார்க்க முடிந்தது. யானைகளும் வண்டிகளும் போன சுவடுகள் நெடுங்காலமாக அங்கிருக்கும் சாலைகள்போல் தெரிந்தன. அடுக்கடுக்காக பலநூறு சாலைகள் என்ற விழிமயக்கேற்பட்டது.

ஒற்றன் “வண்டிகள் எட்டு இணைநிரைகளாக சென்றன. வண்டித்தடத்திலேயே யானைகளையும் கொண்டு சென்றனர். காலாட்படைகள் எட்டுபேர் கொண்ட சிறு குழுக்கள் நூறு நிரைகளாக சென்றன. படைகளின் அகலம் மட்டும் ஒரு நாழிகைப் பொழுதிருந்தது” என்றான். சங்கன் ஒவ்வொரு சொல்லாலும் உணர்வெழுச்சி கொண்டான். “எண்ணி நோக்கவே இயலவில்லை, மூத்தவரே. எண்ணுந்தோறும் உளவிழி மலைப்பு கொள்கிறது. பாரதவர்ஷத்தின் வரலாற்றில் எப்போதேனும் இத்தனை பெருந்திரள் படையென எழுந்ததுண்டா?” என்றான். ஸ்வேதன் “பண்டு விருத்திரனை வெல்ல தேவர்படை இவ்வாறு எழுந்ததென்று நூல்கள் சொல்கின்றன. தென்னிலங்கை வேந்தனை வெல்ல ராமன் கொண்டு சென்ற படையை தொல்காவியம் இவ்வாறு விரிக்கிறது. அவையனைத்தும் அணியுரைகளாகவே எஞ்சுகின்றன. மெய்யாகவே அப்படியொரு பெரும்படையை பார்க்க முடியுமென்று எண்ணியதே இல்லை” என்றான்.

சங்கன் ஒவ்வொரு அடிக்கும் பொறுமையிழந்து பின்னால் திரும்பிப்பார்த்து “விரைந்து வாருங்கள்! விரைக! விரைக!” என்று கூவினான். “படைகள் விரைவதற்கு ஓர் எல்லையுள்ளது, இளையோனே. சீரான விரைவில் செல்லும்போதே நெடுந்தொலைவை அடைய முடியும். நிலம் கருதாது விரைவு கொண்டு புரவிகளோ வண்டிகளோ சேற்றில் சிக்குவார்களென்றால் பொழுது வீணாகும்” என்று ஸ்வேதன் சொன்னான். “ஆனால் இவர்கள் வேண்டுமென்றே பிந்துகிறார்கள். குறுங்காடுகளை கண்டால் பக்கவாட்டில் பரவி கனிகளையும் சிற்றுயிர்களையும் கொண்டுவருகிறார்கள். தங்களுக்கு உணவில்லாமல் ஆகிவிடுமென்ற அச்சம் இவர்களை வாட்டுகிறது. எளிய மலைவேடர்கள்!” என்று சங்கன் சொன்னான். “படைகளுக்கு ஓர் கட்டுப்பாடு உண்டு. அக்கட்டுப்பாடு நிலைநிற்கவேண்டுமெனில் மிகச் சிறிய கட்டுப்பாடின்மையை நாம் ஒப்பியாகவேண்டும்” என்றான் ஸ்வேதன்.

பீதசிலையை அடையுந்தோறும் படைமுழக்கம் பேரொலியாக கேட்கத் தொடங்கியது. முதலில் அங்கு காற்று மரங்களை சுழற்றிச் செல்லும் ஓசை என்று தோன்றியது. சங்கன் திரும்பி ஸ்வேதனிடம் “அது என்ன ஓசை? அங்கு ஒரு பெருநகரம் இருப்பதுபோல” என்ற கணமே புரிந்துகொண்டு “அதுதான் படைகளின் ஓசை! ஆம், படைகளின் ஓசையேதான்!” என்றான். “இத்தனை தொலைவில் இவ்வளவு ஓசை கேட்கிறதென்றால் அங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள்! மூத்தவரே, அங்கு என்ன நிகழ்கிறது?” என்றான். “நாம் இன்னும் சில நாழிகைகளில் அதை சென்று அடைவோம். அதுவரை சொற்களை தேக்கிவைத்துக்கொள்” என்றான் ஸ்வேதன் புன்னகையுடன். “நாம் அந்திக்குள் சென்றுவிடவேண்டும், மூத்தவரே. இப்போதே வெயில் தாழத்தொடங்கிவிட்டது” என்றான் சங்கன்.

சங்கன் தன் புரவியை குதிமுள்ளால் குத்த அது கனைத்தபடி பாய்ந்தோடியது. சிறுகற்கள் பறக்க மரக்கிளைகள் அறைபட்டு வளைந்துவீச முன்னால் நெடுந்தொலைவு சென்று நின்று திரும்பி “விரைக! விரைக!” என்று கைவீசி கூச்சலிட்டான். ஸ்வேதன் புன்னகையுடன் புரவியை பெருநடையில் நடக்கவிட்டான். படை ஒழுகி வந்துகொண்டிருப்பதை அங்கிருந்து பார்த்தபின் பொறுமையிழந்து புரவியைத் திருப்பி மீண்டும் வந்தடைந்து “நாம் ஊர்ந்து சென்றுகொண்டிருக்கிறோம். அங்கிருந்து பார்க்கையில் தெரிகிறது, மிக மெதுவாக ஊர்ந்து செல்கிறோம். மழைநீர் வயலை நனைத்து ஊறிப்பரவுவதுபோல் வருகின்றன நம் படைகள்” என்றான்.

“நாம் கிளம்பி பதினாறு நாட்கள் ஆகின்றன, இளையோனே. இத்தனை நாட்களில் எப்படி முன்னால் செல்வதென்று நமது படைகள் கற்றுக்கொண்டிருக்கும். புரவிக்கால்களும் பழகியிருக்கும். இதுவே அவற்றிற்கு உகந்த சிறந்த விரைவு. இதற்குமேல் விரைவை உருவாக்க வேண்டியதில்லை” என்றான் ஸ்வேதன். “நான் மட்டும் முன்னால் செல்கிறேன். நமது படைகள் வந்துகொண்டிருக்கின்றன என்று இளைய பாண்டவரிடம் சொல்கிறேன்” என்றான் சங்கன். ஸ்வேதன் “படையுடன் செல்லும்போது மட்டுமே உனக்கு இளவரசனுக்குரிய இடம் கிடைக்கும்” என்றான். “எந்த இடத்திற்காகவும் நான் இப்போருக்கு வரவில்லை. என் தலைவரின் அருகிருக்க வேண்டும், அவருடன் இணைந்து போரிட்டேன் என்னும் பெருமை எனக்கு வேண்டும். அதற்காக மட்டுமே” என்றான் சங்கன்.

அணுகுந்தோறும் ஓசை பெருகி வந்தது. படைவீரர்கள் அனைவரும் உளக்கிளர்ச்சி கொண்டனர். மொத்தப் படையும் பேச்சொலிகளால் முழக்கமிட்டுக் கொண்டிருந்தது. பின்னர் நெடுந்தொலைவில் காவல்மாடத்தின் உச்சியில் கொடியொன்று தெரிந்தது. “அது காவல்மாடம்! அங்கு படைகள் நிலைகொண்டிருக்கின்றன!” என்றான் சங்கன். “இல்லை, அது நகரும் காவல்மாடம். வண்டிகளில் வைத்து யானைகளால் இழுத்துக்கொண்டு போகிறார்கள் என்று எண்ணுகின்றேன். நோக்குக, அது மெல்ல நகர்கிறது” என்றான் ஸ்வேதன். காவல்மாடத்தின் உச்சியில் நின்று நோக்கிய முதல் வீரன் கொம்பொலி எழுப்ப மேலும் மேலுமென கொம்போசைகள் எழுந்தன. அங்கிருந்து பதினெட்டு புரவி வீரர்கள், முகப்பில் ஒருவன் இந்திரப்பிரஸ்தத்தின் மின்படைக்கொடி ஏந்திவர, அவர்களை நோக்கி வந்தனர்.

சங்கன் “வருகிறார்கள்! நம்மை நோக்கி வருகிறார்கள்! நான் செல்கிறேன்” என்று புரவியை முடுக்கினான். “நில்! நாம் இங்கு காத்து நிற்போம். அவர்களுக்கு நாம் யாரென்று இப்போது சொல்ல வேண்டியுள்ளது” என்று ஸ்வேதன் சொன்னான். புரவியில் முன்னால் சென்ற சங்கன் வளைந்து திரும்பி வந்தான். அவன் புரவி பொறுமையிழந்து கால்வைத்து துள்ளி தன்னைத்தானே சுற்றிக்கொண்டது. அணுகிவந்த புரவி வீரர்கள் விரைவழிந்தனர். முதலில் வந்த கொடிவீரன் தன் கொடியை அங்கு நாட்டி அசைவற்று நின்றான். அவனுக்குப் பின்னால் வந்த படைத்தலைவன் அவனுக்கிணையாக நிற்க அவனுடன் வந்த இரு புரவி வீரர்கள் மேலும் முன்னால் வந்தனர்.

முதலில் வந்த தூதன் தலைவணங்கி “நாங்கள் இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரரின் படையின் பின்னணிப் பிரிவை சேர்ந்தவர்கள். உங்கள் வருகையை அங்கிருந்து பார்த்தோம். யார் நீங்கள் என்று அறிய படைத்தலைவர் விரும்புகிறார்” என்றான். ஸ்வேதன் “நாங்கள் குலாடபுரியின் படையினர். குலாடகுலத்தைச் சேர்ந்த ஸ்வேதனும் சங்கனுமாகிய நாங்கள் விராட அரசரின் மைந்தர்கள். எங்களுக்கு முறைப்படி அழைப்பில்லையெனினும் மாமன்னர் யுதிஷ்டிரர் மீதும் அவர் இளையவர்கள் மீதும் ஆசிரியர்களிடம் மாணவர்களென பெரும்பற்று கொண்டுள்ளோம். அவர்களின் படைப்பிரிவில் இணைந்து போரிட விரும்பி வந்துள்ளோம்” என்றான்.

சங்கன் நடுவே புகுந்து எழுச்சியால் உடைந்த குரலில் “நான் பீமசேனரை பார்க்கவேண்டும்! அடிபணிந்து அவருடன் நின்று போரிட விழைகிறேன்” என்றான். “தங்கள் குடியின் ஓலையையும் முத்திரைக் கணையாழியையும் அளிக்கும்படி கோருகிறேன். பின்னணிப் படையை நடத்திச் செல்பவர் பாஞ்சாலராகிய திருஷ்டத்யும்னர். அவரிடம் செய்தி அறிவித்து ஒப்புதல் பெற்று நாங்கள் மீண்டு வருகிறோம். அது வரை உங்கள் படைப்பிரிவு இங்கு நிலைகொள்க! இங்கிருந்து முன்னால் வருவீர்கள் என்றால் எங்கள் தொலைவில்லவர்களின் அம்புகளுக்குக் கீழே வருகிறீர்கள்” என்று படைத்தலைவன் சொன்னான்.

ஸ்வேதன் தன் ஓலையையும் கணையாழியையும் அளித்தான். அவர்கள் அதை பெற்றுக்கொண்டு திரும்பிச் சென்றனர். குலாடபுரியின் படை முன்னால் வந்து விரிந்து அரைவட்டமாக நிலைகொள்ள பின்னிருந்து மேலும் மேலும் வந்து செறிந்தது. சங்கன் பொறுமையிழந்து “எதற்கு இத்தனை பொழுது? என்ன பணி செய்கிறார்கள்?” என்றான். “இளையோனே, அவர்கள் சென்று தங்கள் படைத்தலைவரை பார்க்கவேண்டும்” என்றான் ஸ்வேதன். “ஒருவேளை திருஷ்டத்யும்னர் நம்மை ஏற்காமலிருக்கக்கூடும். இந்திரப்பிரஸ்தத்தின் பெண்கொடை அரசுகளில் அவர்களே முதன்மையானவர்கள். நமது படைகளும் வந்தால் விராடரின் இடம் ஓங்கிவிடுமென்று எண்ணக்கூடும். நம்மை திரும்பிச் செல்ல ஆணையிடவும் கூடும்” என்றான் சங்கன். “அவ்வாறு உரைத்தால் நான் இங்கேயே சங்கறுத்து விழுவேன்.” ஸ்வேதன் “காத்திருக்கையில் இவ்வாறு எண்ணங்களை வளர்த்துக்கொள்வது எவ்வகையிலும் பொருளற்றது” என்று பற்களைக் கடித்தபடி சொன்னான். “முதலில் அங்கு என்ன நிகழ்கிறது என்று நமக்கு தெரியட்டும். அதற்கு முன் நாம் சொல்வளர்ப்பது உணர்வுகளை வீணடிப்பதென்றே பொருள்.”

சற்று நேரத்தில் அவனும் பொறுமையிழந்தான். நெடுநேரமாக காத்திருப்பதுபோல் தோன்றியது. அவ்வாறு காத்திருப்பதில் ஓர் இழிவுள்ளதோ என்று ஐயம் கொள்ளத்தொடங்கினான். “இளையோனே, நாம் கொள்ள வரவில்லை, அளிக்க வந்திருக்கிறோம். பெற்றுக்கொள்வதற்கு இத்தனை பிந்துபவர்கள் நம்மை அங்கு எவ்வண்ணம் நடத்துவார்கள்?” என்றான். “அதைப்பற்றி நாம் ஏன் எண்ண வேண்டும்? நாம் அளிக்க வந்தது தலையை” என்று சங்கன் சொன்னான். “ஆம், ஆனால் நம் குடியின் மாண்பையும் நம் மூத்தோரின் பெருமையையும் நாம் விட்டளிக்கலாகாது. எங்கேனும் ஓர் இடத்தில் குடிமாண்பை குறைத்து ஒப்புக்கொண்டோமெனில் அது மேலும் மேலும் குறைவதற்கு ஒப்புகிறோம் என்றே பொருள். ஒரு கட்டத்தில் அனைத்தையும் இழந்தவர்களாவோம். அறிக, பாரதவர்ஷத்தில் ஒவ்வொரு நாளும் குடிகள் பெருமை கொண்டு எழுந்து ஷத்ரியர்களாகிக் கொண்டிருக்கின்றன! எங்கோ ஷத்ரிய குடிகள் நிலமிழந்து செல்வமும் பெருமையும் அகல தொல்குடிகளாக மாறி மறைந்துகொண்டுமிருக்கிறார்கள்” என்றான்.

சங்கன் “அவர்கள் என்ன செய்யவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்றான். “அவர்களின் துணைப்படைத்தலைவர் அளவுக்காவது ஒருவர் வந்து நம்மை நேரில் எதிர்கொள்ளவேண்டும். படைப்பிரிவை நோக்கி நாம் செல்கையில் அங்கு முரசொலி எழுந்து நம்மை வரவேற்க வேண்டும். இந்திரப்பிரஸ்தத்தின் கொடி தாழ்த்தி நாம் படைப்பிரிவுக்குள் அழைத்துச் செல்லப்பட வேண்டும். நம்மை சந்திக்கும் பொருட்டு திருஷ்டத்யும்னர் தன் கூடாரத்திற்குள்ளிருந்து வெளிவந்து முகமனுரைத்து வணங்க வேண்டும்” என்றான். சங்கன் “இம்முறைமைகள் அனைத்தும் நூல்களில் உள்ளவை. அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் அவற்றை கடைபிடிக்கின்றனவா என்று நமக்கெப்படி தெரியும்? மூத்தவரே, நாம் அங்கிருந்து கிளம்பும்போது இந்த எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் இவர்களுடன் சேர்ந்துகொள்வதென்றா எண்ணினோம்? சேர்ந்துகொள்வதென்ற முடிவை எடுத்தோம், அதற்காகவே வந்திருக்கிறோம். மறுஎண்ணங்கள் பொருளற்றவை” என்றான். “ஆம், ஆனால் இப்போது நம் குடிமூத்தார் நீண்ட வாழ்வறிதலின் அடிப்படையில் சொன்னவற்றை செவிகொண்டிருக்க வேண்டுமோ என்று ஐயுறுகிறேன்” என்றான் ஸ்வேதன்.

சங்கன் “வருகிறார்கள்” என்றான். படையில் கொம்புகளும் முழவுகளும் முரசுகளும் எழுவதை அவர்கள் கேட்டனர். இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடி பறக்க ஒரு படைவீரன் முன்னால் வர அவனுக்குப் பின்னால் சிறிய குதிரைப்படை ஒன்று வந்தது. அனைவரும் ஒளிரும் இரும்புக் கவசங்கள் அணிந்திருந்தனர். முதலில் வந்த படைத்தலைவன் பொன்பூசப்பட்ட தலையணி அணிந்திருந்தான். நெருங்குந்தோறும் ஸ்வேதன் உள்ளம் படபடக்க நிலையழிந்தான். “முகப்பில் வருவது யார் திருஷ்டத்யும்னரேதானா?” என்றான். “என்ன சொல்கிறீர்கள்?” என்று சங்கன் கேட்டான். “அரசகுடிப் பிறந்தவர்களுக்கு மட்டுமே பொன்பூச்சுள்ள தலைக்கவசம் அணியும் உரிமை உள்ளது” என்றான் ஸ்வேதன். “ஆம், அவரேதான். முன்பொரு முறை அவரை எங்கோ பார்த்திருக்கிறேன்… அந்த மூக்கை” என்று சங்கன் சொன்னான். “மூடா, நீ எங்கும் பார்த்ததில்லை. கதைகளைக் கேட்டு பார்த்தாய் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாய்” என்றான் ஸ்வேதன். அணுகி வருந்தோறும் மேலும் தெளிவுகொண்டு உருவம் துலங்கினான் பொற்கவசம் அணிந்தவன். “அவர் திருஷ்டத்யும்னர்தான்” என்று ஸ்வேதன் சொன்னான். “பாஞ்சாலத்தின் முத்திரை தலைக்கவசத்தில் தெரிகிறது.” சங்கன் “மூத்தவரே, அவருடையது நாம் ஓவியத்தில் பார்த்த அரசி திரௌபதியின் மூக்கு” என்றான்.

கொடிவீரன் நின்று அதை மண்ணில் நாட்டினான். அதைத் தொடர்ந்து வந்த இரு வீரர்கள் கொம்பும் சங்கும் முழங்கினர். அவர்களுக்குப் பின்னால் வந்த பொன்தலைக்கவச வீரர் புரவியை நிறுத்தி அவர்களை பார்த்தார். ஸ்வேதன் தன் புரவியை முன்னால் செலுத்த சங்கன் தொடர்ந்தான். அவர் தன் இரு அணுக்கர்களுடன் புரவியில் முன்னால் வந்தார். தலைக்கவசத்தை சற்றே மேலே தூக்கியபோது திருஷ்டத்யும்னனின் முகத்தை ஸ்வேதன் தெளிவாகக் கண்டான். திருஷ்டத்யும்னன் இரு கைகளையும் விரித்து அணுகி “விராடரின் மைந்தர்களும் குலாட குலத்து இளவரசர்களுமான ஸ்வேதரையும் சங்கரையும் தலைவணங்கி பாண்டவர்களின் படைப்பிரிவுக்கு வரவேற்கிறேன்” என்றான்.

ஸ்வேதன் பேசுவதற்குள் சங்கன் உரக்க நகைத்து “வரவேற்பின்றியும் நாங்கள் வருவோம். என் தலைவருக்கு வலத்தே நின்று போர்புரியும் பொருட்டே நான் வந்துள்ளேன்” என்றான். திருஷ்டத்யும்னன் நகைத்து “உங்கள் இருவரையும் பற்றி நான் இதுவரை எதுவும் கேள்விப்பட்டதில்லை. விராடர் உங்களைப்பற்றி சொல்லத் தயங்குகிறார் என்று எண்ணுகிறேன். ஆனால் இத்தருணம் என் வாழ்வில் மிக இனிது. கொடிவழியினர் நினைவில் என்றுமிருக்கப்போகும் இருவரை சந்திக்கிறேன் என்று என் உள்ளம் சொல்கிறது” என்றான். ஸ்வேதன் “தந்தை எங்களிடமிருந்து உளவிலக்கம் கொண்டிருக்கிறார். ஆனால் எங்களைப் பார்த்தால் அவர் உள்ளம் மாறுமென்று எண்ணுகின்றேன்” என்றான்.

“வருக! நம் குலதெய்வங்கள் இவ்வரவால் மகிழ்வு கொள்க! இனி இந்திரப்பிரஸ்தத்தின் படை உங்களுடையது. படை நிற்பதற்கல்ல, படைத்தலைமை கொள்வதற்கு உங்களை அழைக்கிறேன்” என்றான். ஸ்வேதன் “அது எங்கள் நல்லூழ். எங்கள் மூத்தோர் மகிழ்க!” என்றான். சங்கன் “பாஞ்சாலரே, பீமசேனர் எங்குள்ளார்?” என்றான். “அவர் எங்கிருப்பார் என்று எண்ணுகின்றாய்?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். “ஆம், அடுமனையில்! அடுமனையிலெங்கோ இருக்கிறார்!” என்றான் சங்கன். “உண்மையில் நானும் பெரும்பொழுதை அடுமனையில்தான் கழிக்கிறேன். மெய்யாகவே நான் நல்ல அடுமனையாளன். ஒருமுறையேனும் இளைய பாண்டவருக்கு அன்னம் சமைத்து அளிக்க இயலுமென்று எண்ணுகின்றேன்” என்றான்.

“நீ அடுமனையாளன், பெருமல்லன், கதைப்பயிற்சி கொண்டவன், பீமனை எண்ணி கதை பயின்றவன். இவையனைத்தையும் நீ நூறு வாரை அப்பால் நிற்கையிலேயே எவரும் சொல்லிவிடமுடியும்” என்று திருஷ்டத்யும்னன் சிரித்தபடி சொன்னான். திருஷ்டத்யும்னனுடன் பேசிக்கொண்டு அவன் புரவிக்கு இருபுறமும் அவர்கள் சென்றனர். சங்கன் “நமது படைகள் எப்போது குருக்ஷேத்ரத்திற்கு சென்று சேரும்? அங்கு ஏற்கெனவே நமது படைப்பிரிவுகள் சென்று நின்றுவிட்டன என்று சொன்னார்கள். நமது படைப்பிரிவுகளை ஏற்கெனவே நின்றிருக்கும் படைகளுடன் சேர்ப்போமா? இதுவே படையணிவகுப்பா? அன்றி சென்ற பின்னர் மீண்டுமொரு அணிவகுப்பு நிகழுமா?” என்று உளக்கிளர்ச்சியுடன் கேட்டான்.

“முதற்படைத்தலைவராக தங்களை தேர்ந்தெடுத்ததை அறிந்தேன். ஆனால் தாங்கள் இறுதியாகச் செல்கிறீர்கள். முதல் படைப்பிரிவிலேயே இளைய பாண்டவர்கள் அர்ஜுனரும் பீமசேனரும் இருப்பார்கள் என்று தெரிந்துகொண்டேன். நான் முதல் படைப்பிரிவில் நிற்க வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்? எங்கள் வில்லவர்கள் மிக விரைவு கொண்டவர்கள். நாங்கள் காடுகளில் விரைந்தபடியே அம்புவிடும் பயிற்சிபெற்றவர்கள். எங்கள் புரவிகளும் விரைந்து விசைகொள்பவை. தாங்களே வேண்டுமானாலும் பார்க்கலாம். எவ்வண்ணமேனும் முதல் படைப்பிரிவிலேயே எங்களை சேர்க்கும்படி சொன்னீர்களென்றால் எங்கள் வீரம் படைப்பிரிவினர் அனைவருக்கும் தெரியும்.”

அவன் மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே சென்றான். “நான் எப்போது பீமசேனரை பார்க்கமுடியும்? என்னை அவருக்கு தெரிந்திருக்காது. நான் விராடரின் மைந்தன் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் நீங்கள் வந்து என்னை அறிமுகம் செய்தீர்கள் என்றால் நன்று. இல்லை நீங்கள் அறிமுகம் செய்யவேண்டியதில்லை. நீங்களே என்னைப் பார்த்தவுடன் சொன்னீர்கள், நெடுந்தொலைவிலேயே நான் அவருடைய மாணவன் என்பதை கண்டுகொள்ளமுடியுமென்று. என்னிடம் பலர் நான் பீமசேனரின் மாணவனா என்று கேட்டிருக்கிறார்கள். உண்மையில் பலர் நான் பீமசேனரா என்றே கேட்டிருக்கிறார்கள். எனது தோள்கள் அவர் அளவுக்கு பெரியவை அல்ல. ஆனால் நான் அவரென்று நினைத்துக்கொள்வேன். அதனால் என் உடல் அவரைப்போல் அசைவு காட்டத்தொடங்கிவிடும்.”

திருஷ்டத்யும்னன் வாய்விட்டு சிரித்து “இளையோரே, உங்கள் வினாக்களை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்து மறுமொழி சொல்வதற்கு எனக்கு இந்த முழுநாளும் தேவைப்படும்” என்றான். ஸ்வேதன் சிரித்தபடி “இவன் பீமசேனரின் அருகே நின்றிருக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமே இப்போருக்கு வந்துள்ளான்” என்றான். “அது நன்று. உங்களை நான் அவரிடம் அழைத்துச் செல்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “எப்போது? நாம் இப்போதே கிளம்புகிறோமா?” என்றான் சங்கன்.

“இப்படைப்பிரிவின் முதல்நிரை இங்கிருந்து நான்கு நாட்கள் பயணத்திலிலுள்ளது” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “அடுமனைக் களஞ்சியம் இருபுறமும் சீராக உணவு செல்லும் பொருட்டு படையின் நடுவில் இருக்கிறது. அங்குதான் இளைய பாண்டவர் பீமசேனர் இருப்பார். ஒவ்வொரு அக்ஷௌகிணிக்கும் ஓர் அடுமனைப் பிரிவு உண்டு. எங்கள் அடுமனைப் பிரிவு அப்பால் உள்ளது. இப்போது நீங்கள் கிளம்பினால் சென்று சேர்வதற்கு இரவாகிவிடும். இன்றிரவு என்னுடன் தங்குங்கள். நாளை நானே உரிய தூதனுடன் உங்களை அனுப்பி வைக்கிறேன்” என்றான். “என்னால் புரவியில் அமர்ந்திருக்க முடியவில்லை. இன்றிரவு துயில்கொள்வேன் என்றே எனக்கு தோன்றவில்லை” என்றான் சங்கன்.

ஸ்வேதன் அப்படைகளை நோக்கியபடி புரவியில் தன்னை மறந்து அமர்ந்திருந்தான். படைவீரர்கள் அனைவரும் செம்மஞ்சள் வண்ணத்திலான ஆடைகள் அணிந்திருந்தனர். அவை புழுதிபடிந்து நிறம் மங்கியிருந்தன. புரவிகளும் அத்திரிகளும்கூட புழுதியில் மூழ்கியவையாக தெரிந்தன. மிக அப்பால் எங்கோ முரசொலி எழுந்தது. அது பலநூறு முரசுகளினூடாகப் பெருகி வந்து அவர்களைச் சூழ்ந்து கடந்துசென்றது. “நிலைக்கோள் ஆணை” என்று சங்கன் சொன்னான். “அந்தி அணைய இன்னும் பொழுதிருக்கிறது.” திருஷ்டத்யும்னன் “வெளிச்சமிருக்கையிலேயே படை அமையத் தொடங்குவது நன்று. கூடாரங்கள் அமைப்பதும் பிறவும் இருள்வதற்குள் நிகழ்ந்துமுடிந்தால் குறைவான பந்தங்கள் போதும். கொழுப்பும் நெய்யும் மிஞ்சும்” என்றான்.

படைப்பிரிவு நிலைகொள்ளத் தொடங்கியிருந்தது. முதலில் பின்னால் வந்தவர்கள் அசைவைக் குறைத்து நிலைகொண்டனர். அதன் பின்னர் அவ்வசைவின்மை பரவி முன்னால் சென்று முன்னணிப் படையினரை நிலைகொள்ள வைத்தது. நிலைகொண்டதுமே கொம்போசைகள் அவர்களை சிறிய பிரிவுகளாக்கின. அவர்கள் ஒருவருடன் ஒருவர் மெல்லிய குரலில் உரையாடியபடி கொம்போசைகளையும் கொடியசைவுகளையும் கொண்டு ஆணைகளைப்பெற்று தங்களை வடிவம் மாற்றிக்கொண்டனர். நோக்கி நின்றிருக்கையிலேயே நீள்சரடுகளாக இருந்த அப்படைப்பரப்பு சிறு வட்டங்களின் தொகுதியாக மாறியது. அவ்வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று நுரையின் குமிழிகள்போல இணைந்தும் பிரிந்தும் இயங்கத்தொடங்கின.

படைப்பிரிவிற்குப் பின்னாலிருந்து கூடாரத்துணிகளையும் தோல்பட்டைகளையும் பாடிவீடமைப்பதற்குரிய மென்மரப்பலகைகளையும் யானைத்தோல்களையும் ஈச்சைப்பாய்களையும் மூங்கில்தட்டிகளையும் நாணல்பாய்களையும் மூங்கில்கழைகளையும் கயிற்றுச்சுருள்களையும் ஏற்றிய வண்டிகள் படைகளின் மையம் நோக்கி சென்றன. ஆங்காங்கே பிரிந்து விலகி அவை நிலைகொள்ள அவற்றிலிருந்த தச்சர்களும் வீரர்களும் இறங்கி விரைந்த கைப்பழக்கத்துடன் அவற்றை இறக்கி பிரித்து சிறு சிறு குவியல்களாக பரப்பினர். ஒவ்வொருவரும் பிறிதொருவரின் ஆணையின்றியே செயலாற்றினர். இடம் தெரிவானதும் சிலர் தறிகளை அறைந்தனர். மூங்கில்கள் ஆழ ஊன்றப்பட்டன. கயிறுகளை வண்டிகளில் இருந்து அவிழ்க்கப்பட்ட எருதுகள் இழுத்து இறுக்கின.

அவர்களின் கண்ணெதிரே நூற்றுக்கணக்கான கூடாரங்களும் பாடிவீடுகளும் எழத்தொடங்கிவிட்டிருந்தன. பாஞ்சாலப் படைப்பிரிவுகள் பிரிந்து ஆங்காங்கே அமைந்தன. ஸ்வேதன் புன்னகையுடன் “ஆறு ஏரியாவதுபோல” என்று சொன்னான். திருஷ்டத்யும்னன் “நீங்கள் சூதர் கதைகளில் ஈடுபாடுள்ளவர் என்று எண்ணுகின்றேன்” என்றான். சங்கன் “ஆம், நடனமும் ஆடுவார். கூத்தராக மாறுதோற்றம் கொண்டு நடிப்பதுமுண்டு” என்றான். “மெய்யாகவா?” என்று திருஷ்டத்யும்னன் நகைத்தான். “அதனால் அவருக்கு இளைய பாண்டவர் அர்ஜுனரை மிகவும் பிடித்திருக்கிறது. வில்லவரும் கூட” என்று சங்கன் சொன்னான். “எண்ணினேன்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “ஆனால் அவருக்கு இளைய பாண்டவர் பிருகந்நளையாக மாற்றுருக்கொண்டது சற்றும் உகக்கவில்லை. மீளமீள அதை எண்ணி வருந்திக்கொண்டிருந்தார்” என்றான் சங்கன். “ஏன்?” என்றான் திருஷ்டத்யும்னன். ஸ்வேதன் புன்னகைத்தான். படைகளினூடாக அவர்கள் சென்று திருஷ்டத்யும்னனின் பாடிவீட்டை அடைந்தனர்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 52

tigசங்கன் போருக்கென படைக்கலங்களை ஒருக்கினான். குலாடத்தின் குன்றுக்குக் கீழே பலநூறு இடங்களில் இரவும்பகலும் அம்புகள் கூர்தீட்டப்பட்டன. வேல்கள் முனையொளி கொண்டன. விந்தையான பறவையொலி என அவ்வோசை கேட்டுக்கொண்டிருந்தது. அம்மக்களை அது கனவுகளுக்குள் வந்து எழுப்பியது. குருதி ஒளிகொண்ட பறக்கும் நாகங்கள் அவர்களை நோக்கி சீறின. குருதி குருதி என அவை சொல்லிக்கொண்டிருந்தன. “தீட்டப்படும் கூர் ஒருநாள் குருதியை அறியும் என்பார்கள், மூத்தவரே. அதன்பொருட்டே தீட்டுகிறேன். இவற்றில் குருதிநாடும் தெய்வங்கள் வந்தமைக! அவை நம்மை நடத்துக!” என்றான் சங்கன்.

ஒவ்வொரு நாளுமென சங்கன் பொறுமையிழந்துகொண்டிருந்தான். கருக்கிருட்டிலேயே தொலைதூரத்திலிருந்து வரும் புறாக்கள் அரண்மனையில் ஸ்வேதனின் அறைமுகப்பில் வந்து சேரும்படி பழக்கப்படுத்தப்பட்டிருந்தன. அவை வந்து சேர்வதற்கு முன்னரே அவன் பின்னிரவில் கிளம்பி வந்து அங்கு அவற்றுக்காக காத்திருந்தான். பொழுது துளித்துளியாக நகர்ந்ததால் சினம்கொண்டு எழுந்து மரத்தரைப் பரப்பில் குறடுகள் உரசி ஒலிக்க நடைபயின்றான். அவன் காலடி ஓசையைக் கேட்டு புறாக்கள் சாளரத்தில் இறங்காமல் விண்ணிலேயே சுழன்று பொழுது கடத்தின.

அதை ஒற்றுப்புறாப் பயிற்றுனன் கூறியபோது ஸ்வேதன் “நீ இங்கு வரவேண்டியதில்லை, இளையோனே. ஓலை வந்த அரைநாழிகைக்குள் அதன் செய்தி உனக்கு அனுப்பப்பட்டுவிடும்” என்றான். “இல்லை மூத்தவரே, அந்த ஓலையை பார்ப்பதே நான் வேண்டுவது” என்றான். “அப்படியென்றால் அசைவற்றிரு” என்று ஸ்வேதன் எரிச்சலுடன் சொன்னான். சங்கன் தலையசைத்தான். “மூடன்” என்றபடி அவன் மீண்டும் படுக்கைக்கு சென்றான். அங்கிருந்து இருளில் பீடத்தில் கைகளைக் கட்டியபடி விழிகள் மின்ன அமர்ந்திருக்கும் சங்கனின் ஓங்கிய உடலை அப்பால் நின்று பார்க்கையில் ஸ்வேதன் வியப்பும் விந்தையானதோர் தவிப்பும் கொண்டான். அவர்கள் இருவருமே செருகளத்தில் மாளக்கூடும் என்று நிமித்திகர்கள் கூறியிருந்தனர். நீர்வீழ்ச்சிகள் அணுகுகையில் மேலும் விசைகொண்டு பாறைகளில் முட்டி நுரைத்து பெருகிச்செல்லும் ஆற்றின் விழைவுதானோ அது என்று அவன் எண்ணிக்கொண்டான்.

செய்திகள் வந்ததும் சங்கன் அவற்றை எடுத்து நடுங்கும் கைகளால் பிரித்து ஒரே விழியோட்டலில் படித்து முடித்தான். பின்னர் ஒவ்வொரு எழுத்தாக மீண்டும் படித்தான். “மூத்தவரே, மீண்டும் ஒரு தூது செல்வதற்கு இளைய யாதவர் ஒருங்கியிருக்கிறார்!” என்று கூவினான். ஸ்வேதன் “ஆம், இம்முறையும் அவர் வெல்லப்போவதில்லை. மண்ணை விட்டுக்கொடுப்பதுதான் துரியோதனரின் நோக்கம் என்றால் அது எப்போதோ நடந்திருக்கும். ஒரு துளி மண்கூட அவர் அளிக்கமாட்டார். ஏனெனில் மண்ணை அளிப்பதற்கு ஒரு முறைமை உள்ளது என்றே அது குடிநினைவுகளில் பதிவாகும். ஒருபிடி மண்ணளித்தவன் பாதி நாட்டையும் அளித்திருக்கலாம் என்று பின்னர் பேச்செழக்கூடும். மண்ணில் உரிமையே இல்லை என்ற தன் சொல் நிலைநிறுத்தப்படவேண்டும் என்றே அவர் விரும்புவார்” என்றான்.

“அவ்வாறென்றால் ஏன் மீண்டும் மீண்டும் இளைய யாதவர் தூது செல்கிறார்?” என்று சங்கன் கேட்டான். ஸ்வேதன் “கைப்பிடி நிலம்கூட கேட்டுப் பார்த்தார்கள், அதுவும் துரியோதனரால் மறுக்கப்பட்டது என்று சொல்வதுதானே பாண்டவர் தரப்பை வலுப்பெறச் செய்வது? சொல்லிச் சொல்லி அதை பெருக்கி அந்த வஞ்சத்தைக் கொண்டே போர்முனைவரை படைப்பெருக்கை கொண்டுசென்று நிறுத்தமுடியுமே?” என்றான். “இப்போரின் அடிப்படைகள் எவையாயினும் ஆகுக! எளிய மக்கள் புரிந்துகொள்வது உடன்பிறந்தாரின் உரிமைப்போர் என்றுதான். எல்லைப்போரும் உடைமைப்போரும்போல மக்கள் புரிந்துகொள்வது பிறிதொன்றில்லை. ஏனெனில் ஒவ்வொரு குடியிலும் அத்தகைய பூசல்கள் எப்போதும் இருந்துகொண்டிருக்கும்.” சங்கன் “ஆம்” என்றான்.

படையெழுச்சிக்கான செய்தி வந்த அன்று அவன் பித்தன்போல கூச்சலிட்டான். “விராடபுரியிலிருந்து படைகள் கிளம்பவிருக்கின்றன. எட்டு குதிரைப்படைப் பிரிவுகள் ஒருங்கி நின்றிருக்கின்றன. நாளை அல்லது மறுநாள் அவை கிளம்பிச்செல்லக்கூடும்.” ஸ்வேதன் “எங்கு?” என்று கேட்டான். “குருக்ஷேத்ரத்திற்கு. அங்குதான் போர் நிகழும். ஏனெனில் அதுதான் குருதிநிலம். இந்திரன் விருத்திரனை வென்ற இடம். பரசுராமர் ஷத்ரியர்களின் குருதியை ஐந்து குளங்களாக தேக்கிய மண். அங்கு நிகழ்ந்தால் போர் அறத்திலேயே இறுதியில் சென்று நிலைக்குமென்று நம்புகிறார்கள். அதற்கு தொல்நூல்களில் அறநிலை என்றே பெயர் உள்ளது” என்றான்.

“விராடர் முந்திக்கொள்கிறார். தன் படைகளில் ஒன்றை அங்கு கொண்டு நிறுத்துவார். அங்கிருந்து அஸ்தினபுரிக்கு பாண்டவர்களின் அறைகூவல் சென்று சேரும். அறப்போரில் அறைகூவல் விடுப்பவரே போர் நிகழுமிடத்தை தெரிவு செய்யும் உரிமைகொண்டவர்” என்றான் ஸ்வேதன். “அஸ்தினபுரியின் படைகள் குருக்ஷேத்ரத்தில் நிலைகொண்டால் போரை அங்கு நிகழ்த்தியாகவேண்டிய இடத்திற்கு துரியோதனர் தள்ளப்படுவார்.” சங்கன் பெருமூச்சுவிட்டான். “விராடபுரியின் படைகள் பாண்டவர்களை ஆதரிக்குமா என்ற ஐயம் நேற்றுவரைக்கும் இருந்தது. அதை நீக்கவிழைகிறார்கள்” என்றான் ஸ்வேதன். சங்கன் “அவர்கள் பாண்டவர்களுக்கு பெண் கொடுத்தவர்கள். போரில் உடன் நின்றாகவேண்டிய கடன்கொண்டவர்கள்” என்றான்.

“ஆம், ஆனால் பாண்டவர்களுக்கு பெண்கொடுத்தவர்களில் முதன்மை பாஞ்சாலர்களுக்கே. அவர்கள் ஷத்ரியத் தொல்குடியினர். இப்போர் வென்றால் முதன்மைப் பயன்களை அடையப்போகிறவர்களும் அவர்களே. பாஞ்சாலர்களுக்கும் விராடர்களுக்கும் ஒருபோதும் அவையொருமையும் உளச்சேர்ப்பும் நிகழாது என்பதே கௌரவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அப்பூசல் நிகழவில்லை என்றும் தாங்கள் ஒருங்கிணைந்து படைகொண்டு சென்றிருக்கிறோம் என்றும் கௌரவர்களுக்கும் பிறருக்கும் அறிவிப்பது இத்தகைய படைநகர்வினூடாகவே இயல்வது. அத்துடன் முதலில் சென்று குருக்ஷேத்ரத்தில் நிலைகொள்ளும் படை விராடருடையதாக இருப்பதென்பது பாண்டவப் படைக்கூட்டில் விராடருடைய இடத்தை மேலும் முதன்மைப்படுத்துவது” என்றான் ஸ்வேதன்.

“முழுப் போரையும் நீங்களே நிகழ்த்திவிடுவீர்கள் போலுள்ளது” என்று சங்கன் சொன்னான். ஸ்வேதன் புன்னகைத்து “இந்தச் சிற்றூரின் எல்லைக்குள் அமர்ந்து பேரரசு ஒன்றை கனவுகாண்பவன் நான், இளையோனே” என்றான். சங்கன் உளஎழுச்சி தாளாமல் அறைக்குள் சுழன்று நடந்தபடி “போர் நிகழத்தொடங்கிவிட்டது. படைக்கலங்கள் மோதும் கணம் வரை அது நுண்வடிவில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றான். இடையில் கைவைத்து நின்று பெருந்தோள்களும் விரிந்த நெஞ்சும் உலைந்தசைய “இப்போது போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. விண்ணில் நிகழும் தேவர்களின் போரை மண்ணிலிருந்து நோக்குவதுபோல நாம் எங்கோ இருந்துகொண்டிருக்கிறோம்” என்றான்.

ஸ்வேதன் “நாம் மீண்டும் குல அவையை கூட்டுவோம். போர் நிகழட்டும். அதில் நமது பங்கும் இருக்கும்” என்றான். “நம் குலமூத்தோர் அஞ்சுகிறார்கள். இவர்கள் தொன்மையான மலைப்பாறைகளைப்போல இருந்த இடத்தில் எதுவும் மாறாமல் யுகங்கள் கடந்து செல்ல விரும்புபவர்கள். ஒருபோதும் இவர்களின் ஒப்புதல் பெற்று நாம் படைக்கு செல்லப்போவதில்லை. இவர்களைக் கடந்தே நாம் படைகொண்டெழவேண்டும்” என்று சங்கன் சொன்னான். ஸ்வேதன் “நாம் இங்கு மன்னர்கள். ஆனால் படைநகர்வுக்கு ஆணையிடும் உரிமை நமக்கில்லை. குலக்குழுவின் முத்திரையிட்ட ஓலையை அவைத்தலைவர் கோல்தூக்கி படித்துக்காட்டினால் ஒழிய எவரும் படைக்கென எழுவதில்லை” என்றான்.

“அது முதியவர்களின் உளநிலை. என்னுடன் இளையவர்கள் இருக்கிறார்கள். ஆயிரம்பேரை இங்குள்ள இளையவர்களில் எளிதாக திரட்டிவிட முடியும் என்னால். மூத்தவரே, எனக்கு ஒப்புதல் கொடுங்கள். நாம் கொண்டு செல்லும் படைகள் அவர்களுக்கு பொருட்டல்ல. நாம் சென்றோம் என்பதே முதன்மையானது. நான் கிளம்பிச்செல்கிறேன்” என்றான் சங்கன். ஸ்வேதன் “இங்குள்ள குலமூத்தாரைக் கடந்து நான் எதையும் செய்யமுடியாது. முறைமைகளை மீறுவது குறித்து இளமையில் நாம் எண்ணுவோம். முறைமைகளாலேயே நிலம் நாடாகிறது. நம் குரல் ஆணையாகிறது” என்றான். “நம் இளையோர் இன்னமும் தொல்குடி உளநிலை நீங்காதவர்கள். இறுதியில் அவர்கள் குடிமுறைமையை அஞ்சி பணிவார்கள்.”

ஸ்வேதன் திரும்பிச் செல்ல அவனுக்குப் பின்னால் உளக்கொதிப்புடன் சங்கன் சென்றான். “அங்கே விராடரின் படைகள் ஏன் முன்னரே சென்று நின்றிருக்கின்றன என்று புரியவில்லையா தங்களுக்கு? அவர்கள் கிழக்கு நோக்கி நிலைகொள்ள விரும்புகிறார்கள். மங்கலத்திசை அது. கிழக்கு நோக்கி நிற்பவர்கள் மேலும் ஒளிகொண்டு தெய்வங்களின் அருள் கொண்டவர்கள் என தோன்றுவர்” என்றான். “எனக்கு அமைச்சுப் பணிகள் உள்ளன. போர்சூழ்ந்ததுமே வணிகர்கள் ஒழிந்துவிட்டனர். ஒவ்வொன்றும் ஏழுமுறை விலையேறியிருக்கிறது. அரண்மனையின் பொருள்கோடலை கட்டுப்படுத்தாவிடில் கருவூலம் வற்றிவிடும். நீ சென்று பொற்கனவில் திளைத்துக்கொண்டிரு” என்று ஸ்வேதன் சொன்னான்.

மேலும் சில நாட்களுக்குள் மூன்றாவது தூது முடிந்த செய்தி அணைந்தது. விராடபுரியின் படைகள் குருக்ஷேத்ரத்தில் சென்று நிலைகொண்டன. இருபக்கமும் போருக்கான துணைதேடல்கள் தொடங்கின. ஒவ்வொருநாளும் இருபக்கமும் சென்றுசேர்பவர்களின் செய்திகள் வந்துகொண்டிருந்தன. சங்கன் பொறுமையிழந்து “இப்போதேனும் நாம் முடிவு செய்வோமா நாம் செல்கிறோமா இல்லையா என்று? நாம் செல்வதில்லை என்றால் அதை நமது குலஅவை முறைப்படி அறிவிக்கட்டும். நான் மட்டும் கிளம்பிச் செல்கிறேன். என் தலைவனின் பொருட்டு உடன் நின்று போரிட்டு உயிர் துறக்கிறேன்” என்றான்.

சீற்றத்துடன் தன் கையைச் சுருட்டி ஆட்டி “ஒன்று மட்டும் உறுதி கொள்ளுங்கள், எதன்பொருட்டும் நான் இங்கு தங்கமாட்டேன். கோழையென்று ஒடுங்கியிருந்தேன் என்று என் கொடிவழிகள் என்னைக் கருத இடமளிக்க மாட்டேன். நான் சென்ற பின் உளம் மாறி குலாடபுரி துரியோதனரின் பக்கம் சேரும் என்றால் குலாடர்களின் தலைகளை கதையால் உடைத்துச் சிதறடிக்கவும் தயங்கமாட்டேன்” என்றான். “என்ன பேசுகிறாய் என்று புரிந்துதான் இருக்கிறாயா? நீ ஊரும் குடியுமில்லாத படைவீரனல்ல, இளவரசன்” என்றான் ஸ்வேதன். “இல்லை. படைகொண்டு செல்லும் உரிமை எனக்கில்லை என்றால் நான் வெறும் படைவீரனே” என்று சங்கன் கூவினான். “படைவீரனுமல்ல இளவரசனுமல்ல என்ற இழிநிலை பேடிக்கு நிகரானது. அதற்கு ஒருபோதும் ஒப்பேன்.”

கண்ணீருடன் பெருந்தோள்களை விரித்து “உயிர் துறப்பதற்குரிய பேரரங்கு குருக்ஷேத்ரம். பாரதவர்ஷத்தில் இதுவரை உருவானவற்றிலேயே பெரும்போர்க்களம். எவ்வகையிலேனும் படைக்கலமேந்தி போர்புரிந்து பழகிய எவரும் இல்லத்தில் இருக்க இயலாது. இல்லத்திலிருப்பவர்கள் பெண்கள், முதியவர், குழவிகள். நான் என்னை ஆணென்று உணர்கிறேன்” என்றான். ஸ்வேதன் சற்றே சினத்துடன் “பிறருக்கு தன்மதிப்பும் ஆணவமும் இல்லையென்று நீ எண்ணக்கூடாது” என்று சொன்னான். “இருந்தால் அதை காட்டுங்கள். காட்டாதவரை அது இல்லையென்றே பொருள்” என்றபின் சங்கன் திரும்பிச் சென்றான்.

அம்முறை குலமூத்தோரின் அவையில் ஸ்வேதன் பாண்டவர்களுக்கு ஆதரவாக படைகொண்டு செல்லவேண்டும் என்ற தன் கோரிக்கையை முன்வைத்து முடித்ததும் மூத்தார் பேசுவதற்குள்ளாகவே சங்கன் எழுந்து உரத்த குரலில் கூவத்தொடங்கினான். “குலத்தலைவர்களே, உங்களுக்கும் எனக்கும் பெருத்த வேறுபாடுள்ளது. நீங்கள் காட்டில் வேட்டையாடி உண்டு மறுநாளை எண்ணாமல் முந்தைய நாளை மறந்து வாழ்ந்த தொல்குடிகளின் குருதி கொண்டவர்கள். நான் விராடரின் மைந்தன். அரசாளும் குலத்தை சார்ந்தவன். ஆம், நான் ஷத்ரியன். தொல்குடியினரின் சொல் கேட்டு அமர்ந்திருக்கும் ஷத்ரியன் கோழையோ வீணனோ அன்றி பிறனல்ல. நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் இங்கு நான் ஒடுங்கி அமர்ந்திருக்கப் போவதில்லை. நீங்கள் ஒப்புதலளித்தால் படையுடன் எழுவேன். இல்லையெனில் என் கதையுடன் கிளம்பி குருக்ஷேத்ரத்திற்கு செல்வேன். இன்றே இங்கிருக்கும் இறுதிநாள் எனக்கு” என்றான்.

மூத்த குடித்தலைவர் பொறுமையிழக்காமல் “மைந்தா, போருக்குச் செல்வதற்குமுன் அதனால் நமக்கு என்ன பயன் என்று தெரிந்துகொள்ளவேண்டுமென்று மட்டுமே விழைகிறேன். போர் என்றால் என்ன? இறப்பு, இழப்பு, துயர். இக்குடியின் ஆண்கள் அனைவரும் சென்று போரில் இறந்தால் அதன்பின் இங்குள்ள பெண்டிருக்கும் குழவிகளுக்கும் எவர் காப்பு? பிற குடிகள் வேட்டைவிலங்கென வந்து இக்குடியை சூறையாடி நம் பெண்டிரையும் ஆநிரைகளையும் கவர்ந்து சென்றால் எவர் பொறுப்பு? நம் குழந்தைகளை வணிகர் அடிமைப்படுத்தினால் எவர் நமக்கு துணைநிற்பார்கள்?” என்றார். “நான் சொல்வது ஒன்றே. ஒரு சொல் விராடரிடம் வாங்கி வாருங்கள். நாமும் அவர் குடிதான் என்று. அல்லது, பாண்டவரிடமிருந்து முறையான அழைப்பை பெற்றுக்கொடுங்கள்.  நூறாண்டுகாலம் அப்படைக்கூட்டு நீடிக்கும் என்று ஒரு சொல் அவர்களிடமிருந்து எழுந்தால் தலைமுறைகளென நாம் தழைத்தெழுவோம். அவ்வாறன்றி வெறும் இளமைத்துடிப்பால் படைகொண்டு செல்வது நம்மை நாமே அழிப்பதற்கு நிகர். அதை ஒருபோதும் மூத்தோரும் அறிந்தோருமாகிய குலக்குழு ஒப்புக்கொள்ளாது.”

“ஆனால் இது வெறும் போரல்ல” என்று ஸ்வேதன் சொன்னான். “மூத்தவரே, பாண்டவர்களுடன் சிற்றரசர்களும் நிஷாதர்களும் கிராதர்களும் அசுரரும் அரக்கரும் படைகொண்டு செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஓரிடத்தில் தங்குகிறார்கள். ஒவ்வொரு நாளும் உரையாடுகிறார்கள். அங்கு உருவாக்கிக்கொள்ளும் நட்புக்கூட்டுகளும் படைபுரிதல்களும் பாரதவர்ஷத்தின் அரசியலை முற்றாகவே மாற்றப்போகின்றன. போரில் வெற்றியும் தோல்வியும் எவ்வண்ணம் என்றாலும் ஒவ்வொருவருக்கும் நண்பர்கள் கிடைப்பார்கள். தலைமுறைகளென நீளும் உறவுகள் அமையும். குருதியுறவுகள், மணப்புரிதல்கள். இனி அவற்றிலிருந்து அகன்று எவரும் தனித்த அரசியல் செய்ய இயலாது. நாம் தனித்து நிற்க வேண்டுமென்ற எண்ணத்தையே கைவிடுங்கள். எந்நிலையிலும் அதற்கு இனி வாய்ப்பே இல்லை.”

அங்கு அமர்ந்திருந்த குல மூத்தவர்கள் முகம் மாறவில்லை. “இது புதிய ஓர் அறத்திற்கான போர்” என்று ஸ்வேதன் சொன்னான். “தொல்வேதங்கள் ஷத்ரியர்களுக்களித்த மாறா மண்ணுரிமையை ஒழித்து குடியறம் பேணுபவர்கள் அனைவருக்கும் முடிகொள்ளும் உரிமையை அளிக்கும் புது வேதத்துக்கான போர். ஆகவே இது நமக்கான போரும்கூட.” குடிமூத்தார் ஒருவர் “எந்தப் போரும் ஏதேனும் ஓர் அறத்துக்கானதே. எந்தப் போரும் குருதிப்பெருக்கு மட்டுமே” என்றார். குடித்தலைவர் “நாங்கள் மூதன்னையருடனும் பேசிவிட்டு சொல்கிறோம்” என்று சொல்ல இளையோர் எழுந்து வெளியே சென்றனர்.

உள்ளே அவர்கள் ஐயத்துடனும் தயக்கத்துடனும் ஒருவருக்கொருவர் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டனர். இழுத்துக் கட்டப்பட்ட தோல்வார்களை வருடியதுபோன்ற அவர்களின் தணிந்த குரல்கள் இணைந்த கார்வை அவைநிகழ்ந்த பெருங்குடிலுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. பின்னர் சொல்சூழ்ந்து முடித்து அவர்கள் வெளிவந்தனர். குடிமூத்தார் ஒருவர் “எங்கள் முடிவை தலைவர் அறிவிப்பார்” என்றார். குடித்தலைவர் “இக்குழு எடுத்த முடிவு இதுவே. விராடரிடமிருந்து நமது அரசியை மீண்டும் ஏற்றுக்கொள்வதாகவும் நம் குடியை தன் குருதியென ஏற்பதாகவும் ஒற்றைச் சொல் பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது பாண்டவர் தரப்பிலிருந்து நம்மை போருக்கு அழைப்பதாக ஒரு முத்திரைஓலை பெறப்படவேண்டும். அவ்விரண்டுமின்றி இங்கிருந்து படை கிளம்புவதற்கு நாங்கள் ஒப்பவில்லை” என்றார்.

சங்கன் “நன்று! இங்கே வந்து சேர்வீர்கள் என்று நான் அறிந்திருக்கிறேன். நான் கிளம்புகிறேன். எவ்வகையிலும் இனி நான் உங்களுக்கு கட்டுப்பட்டவனல்ல” என்று சொல்லி தன் இடக்கையால் கழுத்திலணிந்திருந்த கல்மாலையை அறுத்து குழுத்தலைவரின் முன் தரையில் வீசினான். குடிமூத்தார் அனைவரும் திகைத்து வியப்பொலி எழுப்பினர். குழுத்தலைவர் சினத்துடன் கோலைத் தூக்கி முன்னால் வந்து “என்ன செய்கிறாய்? அறிவிலி! என்ன செய்கிறாய் என்று எண்ணிச் செய்கிறாயா?” என்று கூவினார். “எண்ணி நூறுமுறை துணிந்த பின்னரே இதை செய்கிறேன். இனி நான் உங்கள் குலத்தோன் அல்ல. எக்குலத்தோனுமல்ல. நான் தனியன். விரும்பினால் நீங்கள் படைசூழ்ந்து என்னை கொல்லலாம்” என்றான் சங்கன்.

“அனைவரும் அறிக! இங்கிருந்து கிளம்பி பாண்டவர் படை நோக்கி செல்லவிருக்கிறேன். ஆற்றலுள்ளோர் என்னை தடுக்கலாம், அவர்களின் தலைகளை உடைத்த பின் கடந்துசெல்வேன்” என்றவன் திரும்பி அப்பால் கூடிநின்றிருந்த தன் குலத்து இளைஞர்களை நோக்கி “ஆண்மை கொண்டோர் என்னுடன் வருக! போரென்பது ஆண்களுக்குரியதென்று எண்ணுவோர் எழுக! அஞ்சி குறுகி இங்கு வேட்டைச்சிறுகுடி என வாழ விழைபவர்கள் விலகுக!” என்றபின் தன் கதாயுதத்தை தலைக்குமேல் மும்முறை சுழற்றி “வெற்றிவேல்! வீரவேல்!” என்று குரலெழுப்பி முன்னால் நடந்தான். அவனை நோக்கி நின்றிருந்த திரளிலிருந்து “வெற்றிவேல்! வீரவேல்!” என்ற குரல்கள் ஆங்காங்கே எழுந்தன. கதைகளும் வில்களுமாக இளைஞர்கள் அவனுடன் செல்லத்தொடங்கினர்.

ஸ்வேதன் திகைப்புடன் அதைப் பார்த்து நின்றான். அத்தகையதோர் எதிர்ப்புணர்ச்சி தன் குடிகளில் இருக்கக்கூடுமென்று அவன் எண்ணியதே இல்லை. மூத்தார் சொல்லை மீறி அவர்கள் எழுவதென்பது கதைகளிலும் நிகழ்ந்ததில்லை. குடிமூத்தார் கைகள் தளர வாய் திறந்திருக்க விழித்து நோக்கி நின்றிருந்தனர். மணற்கரை இடிந்து சரிவதுபோல மேலும் மேலுமென இளைஞர்கள் சங்கனைத் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தனர். ஸ்வேதன் திரும்பி “தாங்கள் ஆணைகளை மாற்றிக்கொண்டே ஆகவேண்டும், குடித்தலைவரே. இல்லையேல் நாம் நம் படைகளாலேயே கைவிடப்பட்டவர்களாவோம். ஒப்புதலளித்து நீங்கள் அவர்களை அனுப்பினால் பாண்டவர்களின் துணை நமக்கிருக்கும் என்ற அச்சமாவது நம் எதிரிகளுக்கு இருக்கும். அவர்கள் நம்மை கைவிட்டுச் சென்றால் அது நம்மைச் சூழ்ந்திருக்கும் எதிரிகளின் முன் துணையின்றி விட்டுச் செல்வதே” என்றான்.

மேலும் மேலுமென போர்க்குரல்களுடன் இளைஞர்கள் சென்றுகொண்டே இருப்பதை, அவர்களின் தந்தையரும் துணைவியரும்கூட அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்தொலி எழுப்புவதை குடித்தலைவர் கண்டார். பின்னர் “ஆம், நாங்கள் ஒப்புதல் அளிக்கிறோம். அதுவே ஊழென்றால் இனி அவ்வாறே ஆகுக!” என்று மறுமொழி சொன்னார்.

குலாடகுடியின் மிகச் சிறந்த படையை சங்கன் திரட்டினான். “நாம் பெரும்படை ஒன்றில் சென்று சேரவிருக்கிறோம். பண்டு இலங்கைகடந்த அண்ணலுக்கு வால்மானுடர் செய்த உதவிக்கு நிகர் இது. இது நாம் நம் ஆசிரியர்களுக்கு அளிக்கும் காணிக்கை மட்டுமே” என்று அவன் தன் வீரர்களுக்கு சொன்னான். விடைகொள்ளும்பொருட்டு அவர்கள் பிரதீதையை அணுகி வணங்கியபோது அவள் முகம் இறுகி குளிர்ந்தவள்போல் இருப்பதை கண்டனர். நோயுற்ற புரவி என அவள் உடல் மெய்ப்புகொண்டு நின்றது. “சென்றுவருகிறோம், அன்னையே. எங்களை வாழ்த்துக!” என்று ஸ்வேதன் சொன்னான். அவளால் ஒரு சொல்லும் கூறமுடியவில்லை. உலர்ந்த உதடுகள் ஒட்டியிருந்தன. சங்கன் வணங்கியபோது மெல்லிய முனகலோசை மட்டுமே அவளிடமிருந்து எழுந்தது.