மாதம்: ஜூன் 2018

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 23

tigபூரிசிரவஸ் தன்னுடைய பெருந்தோலாடையை அணிந்து அதன் கயிறுகளை முடிச்சிட்டு நிறுத்தி கைகளைத் தூக்கி அதை சரியாக உடல் பொருந்த சுருக்கிக்கொண்டான். அருகில் நின்றிருந்த பிரேமையை நோக்கி திரும்பி அவள் தோள்களில் தன் இரு கைகளையும் வைத்து “நான் மீண்டும் வருவேன். இங்குதான் நான் வந்தணைய வேண்டியிருக்கிறது” என்றான். அவள் சுண்ணக்கூழாங்கற்கள் போன்ற பற்களைக் காட்டி சிரித்து “ஆம், நீங்கள் மீண்டு வருவீர்கள். எனக்கு தெரியும்” என்றாள். அவள் முகம் கண்களைச் சுற்றியும் வாயைச் சுற்றியும் சுருக்கங்கள் கொண்டிருப்பதை அவன் கண்டான். முதல் பார்வையில் தெரிந்த அவளுடைய இளமை ஒவ்வொரு நாளாக சிறிய முதுமைத் தடங்களை காட்டத் தொடங்கியிருந்தது. அவன் அவள் காதுகளைப் பற்றி மெல்ல கசக்கியபடி “நான் எப்போதும் உன்னுடன்தான் இருப்பேன்” என்றான்.

அச்சிலநாட்களில் அவன் அந்தக் கொஞ்சலை கற்றுக்கொண்டிருந்தான். கசக்கினால் அவளுடைய வெயில்படாத வெண்காது சிவந்து செம்பலாச்சுளைகளைப்போல ஆகும். குருதிவெம்மையுடன் கதுப்பாக அது மாறியபின் அதை மெல்ல வாயால் கவ்வுவான். அவள் உடல்கூச துள்ளிப்புரண்டு சிரிப்பாள். அவனை வெறிகொண்டு தழுவிக்கொள்வாள். “நீங்கள் திரும்பி வரும்போது இன்னொரு மைந்தன் இருப்பான்” என்று அவள் சொன்னாள். “அத்தனை உறுதியா உனக்கு?” என்று அவன் கேட்டான். “உறுதிதான், ஐயமே இல்லை” என்று அவள் சொன்னாள். “வருகிறேன்” என்றபின் அவன் அவள் மீதிருந்த கையை எடுத்தான்.

விலகிய அசைவு அவனிலிருந்து எழுந்ததுமே அவள் மெல்லிய முனகலோசையுடன் முன்னால் பாய்ந்து அவனை அள்ளி தன் உடலோடு அணைத்துக்கொண்டு முகத்திலும் தோள்களிலும் முத்தமிடத் தொடங்கினாள். மெல்ல மூச்சுவாங்க ஓய்ந்த பின்னரே அதிலிருந்து விடுபடமுடியும் என்றுணர்ந்து அவன் அதற்கு தன்னை முற்றாக ஒப்புக்கொடுத்தான். சிறிய இரையைக் கொத்தி தின்றுவிட முயலும் பறவை போலிருந்தாள். பின்னர் மூச்சிரைக்க இயல்படைந்து அவனைப் பிடித்து சற்று முன்னால் தள்ளி “கிளம்புங்கள்” என்றாள். மீண்டும் “கிளம்புகிறேன்” என்று சொல்லி அவன் வெளியே வந்தான்.

அவனுடைய பொதிகளை கட்டிக்கொண்டிருந்த யாமா எழுந்து “தந்தையே, தாங்கள் கீழே செல்லும்வரை தேவையான அனைத்தும் இடப்பக்கத்திலுள்ளன. அங்கு சென்றபின் என் உடன்பிறந்தாருக்கு கொடுக்கவேண்டிய பரிசுப்பொருட்களை வலப்பக்கப் பொதியில் வைத்திருக்கிறேன்” என்றான். “என்ன பரிசுப் பொருட்கள்?” என்று அவன் கேட்டான். “மலைப்பொருட்கள்தான். அவர்கள் விளையாடுவதற்கு” என்றான். “அவர்கள் விளையாட்டுமைந்தர்கள் அல்ல” என்று பூரிசிரவஸ் சொன்னான். “என்னைவிட இளையவர்கள்தானே? நான் விளையாடுகிறேனே?” என்றான். “நீ வாழ்நாள் முழுக்க இங்கிருந்து விளையாடுவாய். கீழ்நிலத்தில் மைந்தர்கள் நெடுநாள் விளையாட இயலாது” என்றான் பூரிசிரவஸ். “இவை இங்கு மலையில் நான் நெடுங்காலமாக கண்டடைந்து சேர்த்த விளையாட்டுப்பொருட்கள். அழகானவை. கூழாங்கற்கள், விந்தையான வண்ணமுடையவை. மலைகளின் இடுக்குகளிலிருந்து ஆற்றுநீரில் இவை வருகின்றன. அவர்களுக்கு அளியுங்கள். அவர்கள் அதை விரும்புவார்கள்” என்றான் யாமா. “வருகிறேன் மைந்தா, மீண்டும் இங்கு வருவேன்” என்றான் பூரிசிரவஸ்.

அவன் “தங்களுடன் போருக்கு வந்து என் வீரத்தை காட்டியிருந்தால் நிறைவுற்றிருப்பேன், தந்தையே” என்றான். “நீ இங்கு இவ்வாறு இருக்கிறாய் என்பதுபோல எனக்கு நிறைவளிப்பது பிறிதொன்றில்லை. எப்பொழுதெல்லாம் நான் உளம் சோர்வடைகிறேனோ, இவ்வாழ்வு பயனற்றது என்ற ஐயம் எழுகிறதோ, அப்பொழுதெல்லாம் திரும்பி இப்பனிமலைகளை பார்ப்பேன். இங்கு நீயிருக்கிறாய் என்று எண்ணிக்கொள்வேன்” என்றபின் கைவிரித்தான். மைந்தன் கைவிரித்து அவனை அள்ளி தன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு மும்முறை சுழற்றினான். பின்னர் குனிந்து அவன் கன்னங்களிலும் நெற்றியிலும் முத்தமிட்டான். அவன் வாயிலிருந்து மெல்லிய ஊன் மணமடித்தது. இனிய விலங்கு ஒன்றின் மயிர்நாற்றம் அவன் கழுத்திலும் தோள்களிலும் இருந்தது.

பூரிசிரவஸின் தோள்களை தட்டியபடி “ஊருக்குச் சென்றபின்னர் நன்கு உண்ணத் தொடங்குங்கள், தந்தையே. தாங்கள் மிக மெலிந்திருக்கிறீர்கள்” என்றான். “ஆம், உண்ணவேண்டியதுதான். உன்னை நினைத்தால் உண்ணாமலிருக்க இயலாது. இங்கிருந்த நாட்களில் மிகுதியாகவே உண்டுவிட்டேன். புரவி மூச்சுவாங்கப்போகிறது” என்றபின் அவன் கைகளை பற்றிக்கொண்டு “கிளம்புகிறேன்” என்றான் பூரிசிரவஸ். யாமா தன் பெரிய மேலாடையை எடுத்து அணிந்து கட்டுகளை இறுக்கிக்கொண்டான். பொதியை எடுத்துக்கொண்டு “நான் இவற்றை புரவியில் கட்டி அந்த குலத்தூண் அருகில் நிற்கிறேன். நீங்கள் உங்கள் மூதாதையிடம் வாழ்த்துபெற்று வருக!” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்துவிட்டு குடில்களினூடாக தன் நீண்ட நிழல் வெள்ளை பூசப்பட்ட சுவர்களில் மடிந்தும் தரையில் நெளிந்தும் தொடர மெல்ல நடந்தான்.

இல்லங்களின் முகப்பில் முதியவரும் பெண்டிரும் வந்து நின்று அவனைப் பார்த்து சுருக்கங்கள் விழுந்த முகங்களில் புன்னகை விரிய, கண்கள் இடுங்க சிரித்தனர். ஒவ்வொருவரிடமாக கைவீசி முகமனுரைத்து விடைபெற்றபடி அவன் நடந்து சென்றான். பால்ஹிகரின் சிறுமைந்தர்கள் குச்சிகளால் ஒருவரை ஒருவர் அடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். மூத்தவன் அவனை நோக்கி ஓடிவந்து “முதுதந்தை நேற்று எங்கள் இல்லத்திற்கு வந்துவிட்டார்” என்றான். அவனுக்கு ஐந்து அகவைதான் என்பதை இரு நாட்களுக்கு முன்னரே பூரிசிரவஸ் அறிந்திருந்தான். “ஏன்?” என்றான் பூரிசிரவஸ்.

அவன் உவகையுடன் குதித்தபடி கைகளை வீசி, மெல்ல திக்கியும் மூச்சுத்திணறியும் சொன்னான் “அவர் தங்கியிருந்த மைந்தரும் அவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். அவர் மைந்தரைத் தூக்கி இல்லத்திலிருந்து வெளியே எறிந்து கதவை மூடினார். அவர் இரவெல்லாம் குளிரில் நின்றுவிட்டு காலையில் காய்ச்சல் வந்து படுத்திருக்கிறார். அவர் மனைவி முதுதந்தைக்கு உணவு அளிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார். ஆகவே அவர் பொதியை தூக்கிக்கொண்டு எங்கள் இல்லத்திற்கு வந்தார். குத்துக்கத்தியைக் காட்டி என் தந்தையிடம் வீட்டில் இடமளிக்காவிட்டால் குத்தி கொன்றுவிடுவேன் என்றார். என் தந்தை அஞ்சி பின் கதவைத் திறந்து வெளியே ஓடிவிட்டார். அவர் உள்ளே வந்து இருந்து என் அன்னையிடம் ஊனுணவு சமைக்கும்படி சொன்னார். அன்னை சமைத்துக்கொண்டிருக்கிறார். அவர் அனைவரையும் வசை பாடியபடி அமர்ந்திருக்கிறார்.”

பூரிசிரவஸ் புன்னகைத்தபடி “அவரது துணைவி என்ன செய்கிறார்?” என்றான். “அவர் அஞ்சுவது மூதன்னையை மட்டும்தான். இருவரும் போர் புரிந்தால் முதுதந்தை திருப்பி அடிப்பதில்லை. மூதன்னை அடிக்கிற அடிகளை வாங்கிக்கொண்டு திரும்பிவிடுவார். ஆகவே அந்தக் குடிலுக்குள் அவர் செல்வதில்லை” என்றான். “வாருங்கள்! உங்களை முதுதந்தையிடம் நான் கூட்டிச் செல்கிறேன். நீங்கள் கொடுத்த குத்துக்கத்தியை வைத்து மெருகிட்டுக்கொண்டே இருக்கிறார். அதன் கொம்புப்பிடியில் எருமைகளும் மான்களும் இருக்கின்றன. என்னிடம் மானைக்காட்டி அது மான் என்று சொன்னார். நான் மான்களை பார்த்திருக்கிறேன் என்றேன். அல்ல, அவை வேறு வகையான மான்கள் என்றார்” என்றபடி சிறுவன் அவனுடன் நடந்தான்.

பூரிசிரவஸ் குடிலின் முன்னால் சென்று நின்றபடி உரத்த குரலில் “வணங்குகிறேன், பிதாமகரே” என்றான். உள்ளிருந்து “யார்?” என்று பால்ஹிகர் கேட்டார். “நான் பூரிசிரவஸ்” என்றான். “உள்ளே வா” என்றார் பால்ஹிகர். அவன் தலைகுனிந்து உள்ளே நுழைந்தான். அங்கே தரையில் அமர்ந்து குத்துக்கத்தியின் பிடியை ஒரு தோலால் தேய்த்து மெருகிட்டுக் கொண்டிருந்த பால்ஹிகர் தலைநிமிர்ந்து அவனை பார்த்தார். “கிளம்பிவிட்டாயா?” என்றார். “ஆம் மூதாதையே, தங்கள் வாழ்த்துபெற்று கிளம்புகிறேன்” என்றான் பூரிசிரவஸ். “எழுந்து நில்லுங்கள். நான் என் வாளை எடுத்து தங்கள் காலடியில் வைப்பேன். அதை எடுத்து என்னிடம் அளித்து வெற்றி பெறுக புகழ் சேர்க என்று வாழ்த்துக!” என்றான்.

அவர் ஐயத்துடன் “நான் அவ்வாறு சொன்னால் அவை உனக்கு கிடைக்குமென்று உறுதியா?” என்று கேட்டார். “ஆம், இப்புவியில் அல்லது வேறெங்காவது” என்றான் பூரிசிரவஸ். அவர் குழப்பத்துடன் தலையசைத்து, எண்ணி நோக்கி தெளிவடையாமல் கைவீசி அவ்வெண்ணங்களை கலைத்து, கையை முழங்காலில் ஊன்றி எழுந்து நின்றார். பூரிசிரவஸ் தன்னுடைய உடைவாளை எடுத்து அவர் காலடியில் வைத்தான். அவர் குனிந்து அந்த உடைவாளை எடுத்து “என்ன இது, இவ்வளவு மெலிதாக இருக்கிறது? ஒடித்துவிடலாம் போல!” என்று வளைத்தார். “பாம்புபோல வளைகிறது” என்றார். “ஆம், இதற்கு நாகம் என்றுதான் பெயர். இது வெட்டுவதற்கல்ல, நுனியால் மெல்ல முத்தமிடுவதற்குரியது” என்றான் பூரிசிரவஸ். அவர் அதை அவனிடம் கொடுத்தார். பின்னர் “என்ன சொல்லச் சொன்னாய்?” என்றார். “வெற்றியும் புகழும் அணைக என்று வாழ்த்தச் சொன்னேன்.”

அவன் அவர் காலடியில் மீண்டும் பணிய அவர் “ஆம், அவையிரண்டும் உனக்கு அமையட்டும்” என்று அவன் தலையில் கைவைத்து வாழ்த்தினார். பூரிசிரவஸ் “வருகிறேன், பிதாமகரே” என்றபின் திரும்பினான். பால்ஹிகர் அவனை நோக்கி “நானும் உன்னுடன் வருகிறேன்” என்றபடி தன் மேலாடையை எடுத்தார். “பிதாமகரே, நான் மலையிறங்கி பால்ஹிகபுரிக்கு செல்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், நானும் உன்னுடன் பால்ஹிகபுரிக்கு வருகிறேன். அங்கிருந்து நானும் உன்னுடன் போருக்கு வருகிறேன்” என்றார் பால்ஹிகர். “நான் பெரிய மற்போர்களை பார்த்ததே இல்லை. ஆயிரம்பேர் மற்போரிட்டால் ஆயிரம் மண்டைகள் உடையும் அல்லவா?”

பூரிசிரவஸ் தவிப்புடன் “அங்கு என்ன போர் நிகழ்கிறது என்றே உங்களுக்கு தெரியவில்லை. தாங்கள் அங்கு வந்து ஆகவேண்டிய எதுவுமில்லை” என்றான். பால்ஹிகர் “தெரியும். சந்தனுவுக்கும் அவன் இளையோனுக்குமான போர்” என்றார். “இல்லை” என அவன் சொல்லப்போக “ஆ, இல்லை, போர் நிகழ்வது சந்தனுவின் மைந்தர்கள் நடுவே. நான் இருவரில் ஒருவரை ஆதரிக்கிறேன். அவனுக்காக போர்புரிகிறேன்” என்றார். “பிதாமகரே, இது தங்கள் போர் அல்ல. மேலும் கீழிருக்கும் உலகு முற்றாக மாறிவிட்டது. அதற்கும் தங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. தங்களால் அங்கு இருக்க முடியாது” என்றான் பூரிசிரவஸ். “இங்கும் மாறித்தான் விட்டது. மூத்தவர்களை இளையோர் மதிப்பதில்லை. நான் உன்னுடன் வருவேன்” என்றார் பால்ஹிகர்.

பூரிசிரவஸ் “அங்குள்ள வெப்பமே உங்களுக்கு தாங்கவொண்ணாதது” என்றான். அவர் “நான் அங்கு இருப்பதற்காக வரவில்லை, போர்புரிவதற்காக வருகிறேன். போரில் நான் இறந்தால் அது நன்று” என்றார். “என்ன சொல்கிறீர்கள்?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “நேற்று இரவு பொருத்தமில்லாமல் பல எண்ணங்கள். பல ஆயிரம் பேர் இறப்பார்கள் என்று நீ சொன்னாய். ஒரு போரில் பல ஆயிரம் பேர் இறந்துவிழும் இந்த உலகில் ஒருவன் நெடுநாள் இருந்தென்ன இறந்தென்ன? வாழ்கிறோம் என்று நினைப்பதும் வாழ்வதும் பொருளற்றவையல்லவா? அதை எண்ணிய கணமே எனக்கு அனைத்துமே சலித்துவிட்டன. நான் மேலும் வாழ விரும்பவில்லை. பல்லாயிரம் பேர் இறக்கையில் நானும் இறந்துவிடுவேன். இங்கே மலைகளில் இறப்பதைவிட அங்கே இறப்பது பொருத்தமானது என்று தோன்றுகிறது.”

அவர் முற்றாக பிறிதொருவராக தோன்றினார். அவருடைய சொற்கள்தானா என பூரிசிரவஸ் ஐயுற்றான். “இங்கே நான் தனிமையில் இறக்கவேண்டும். தனிமையில் விலங்குகள்தான் இறக்கவேண்டும். ஏனென்றால் இறக்கும் விலங்குடன் அதன் தெய்வம் இருக்கும். மலைகளில் தனியாக இறப்பவன் அங்கேயே அமைதியிலாது அலைவான். அங்கென்றால் பெருங்கூட்டத்தில் ஒருவனாக இறந்து கிடக்கலாம். ஆகவே உன்னுடன் வருவதாக முடிவு செய்தேன்” என்றார். “எப்போது முடிவெடுத்தீர்கள்?” என்று அவன் கேட்டான். “சற்று முன்பு, நீ விடைபெற்று திரும்பினாயே அப்போது” என்றபின் அவர் தன் மேலாடையின் முடிச்சுகளை இழுத்துக் கட்டி தலையில் பெரிய மென்மயிர் தொப்பியைச் சுற்றி கழுத்தருகே முடிச்சிட்டு கட்டிக்கொண்டார். சுறுசுறுப்புடன் “கிளம்புவோம்” என்றார்.

“தங்கள் மைந்தர்கள், மைந்தரின் துணைவியர் இங்கிருக்கிறார்கள். தங்கள் மனைவி இருக்கிறார்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், அவர்கள் இங்கே மகிழ்ச்சியாக இருப்பார்கள். எப்போதும் நான் உணரும் ஒன்றுண்டு, நான் முற்றிலும் இந்த மலைகளுக்குரியவன் அல்ல. கீழே பால்ஹிகபுரியின் ஒரு சிறுபகுதி என்னிடம் எஞ்சியுள்ளது. இந்த மைந்தர்கள், இவர்கள் வாழும் இந்த இல்லங்கள், இவர்கள் செல்லும் வழிகள் அடங்கிய இந்த மலை அனைத்தும் எனக்கு வேறுதான். இந்த மலைகளின் வட்டத்தைக் கடந்து அப்பால் என்ன இருக்கிறது என்று ஒருபோதும் இவர்கள் பார்த்ததில்லை. சென்ற இருபத்தைந்து ஆண்டுகளாக நான் மட்டும் ஒவ்வொரு நாளும் இங்கு இருக்கும் அனைத்து எல்லைகளையும் மீறவே முயன்றுகொண்டிருக்கிறேன். புதிய மலைகளுக்கு ஏறிச் செல்கிறேன், புதிய விலங்குகளைக் கொன்று உண்டு பார்க்கிறேன்.”

அவனை விழிசுருக்கி நோக்கியபடி “அவ்வாறெனில் இவர்களிடம் இல்லாத ஏதோ ஒன்று என்னிடம் இருக்கிறது. அது எப்போதும் எல்லையைக் கடக்க விழைவது. அது நன்றோ தீதோ அது என்னை இவர்களில் ஒருவராக அல்லாமல் ஆக்குகிறது. இவர்கள் என்னை வெறுக்கிறார்கள். இவர்கள் எவரேனும் என்னை கொல்லக்கூடும்” என்றார். “உங்களை எவராலும் கொல்ல இயலாது” என்று பூரிசிரவஸ் சொன்னான். “ஆம், இன்று கொல்ல இயலாது. ஆனால் மைந்தர் கொல்வார்கள். இன்னும் பல ஆண்டுகாலம் கழித்து அவர்கள் என்னை கொல்லக்கூடும். கொன்றால் அவர்கள் எனக்கு நடுகல் நாட்டி படையலிடுவார்கள். அதைவிட உன்னுடன் வந்தால் போரில் இறக்கலாம். போரில் இறந்தாலும் இவர்கள் இங்கே எனக்கு ஒரு சிறு ஆலயம் கட்டி படையலிடுவார்கள். இரண்டும் ஒன்றே. எவ்வேறுபாடும் இல்லை. ஆனால் எனக்கென்னவோ உன்னுடன் வருவதே உகந்ததென்று தோன்றுகிறது. தோன்றியபிறகு மறுபடியும் எண்ணும் வழக்கம் எனக்கில்லை. கிளம்புவோம்” என்றார்.

“நீங்கள் அவர்களிடம் விடைபெற வேண்டாமா?” என்றான் பூரிசிரவஸ். “வேண்டியதில்லை” என்றார் அவர். “நான் முன்னரே அறிவித்துவிட்டு இங்கு வரவில்லை அல்லவா?” பூரிசிரவஸ் “இங்கு உங்கள் பெயர்மைந்தர் நிரம்பியிருக்கிறார்கள். அவர்கள் எவரையும் நீங்கள் மறக்க இயலாது” என்றான். “இல்லை, உன்னுடன் வந்தால் புரவி ஏழடி எடுத்து வைப்பதற்குள் இந்த நகரை, இந்த ஊரை, இந்த மலைகளை முற்றாக மறந்துவிடுவேன். இவர்கள் என்னை மறக்கமாட்டார்கள், அது இவர்களுடைய இயல்பு. ஆனால் நான் இறந்த செய்தி வந்தால் நடுகல் நாட்டி மதுவுடன் ஊன் அளித்து வணங்கி உண்டு அன்றே மறந்துவிடுவார்கள். பிறகெப்போதும் எண்ணமாட்டார்கள்” என்றபின் “ஏன் இத்தனை பேச்சு? வா” என்றபடி அவர் முற்றத்தில் இறங்கினார்.

அவருடைய மருமகள் உள்ளிருந்து வந்து வாயிலில் நின்றாள். பூரிசிரவஸ் திரும்பி “மூதாதை என்னுடன் வருவதாக சொல்கிறார்” என்றான். அவள் எந்த உணர்ச்சி மெய்ப்பாடும் இன்றி தலையசைத்தாள். “ஒருவேளை மீண்டு வரமாட்டார். போரில் பங்குகொள்ளவேண்டுமென்று விரும்புகிறார்” என்று பூரிசிரவஸ் சொன்னான். அதற்கும் அவள் ஒன்றும் சொல்லாமல் தலையசைத்தாள். பால்ஹிகர் முற்றத்தில் இறங்கி நின்று இரு கைகளையும் விரித்து “குழந்தைகள் எல்லாரும் கேளுங்கள்! நான் கிளம்பி செல்கிறேன். முன்பு நான் இங்கு வந்தது போலவே. என் குடிலுக்குச் சென்று முதியவளிடம் நான் கிளம்பிச் சென்றுவிட்டேன் என்று சொல்லுங்கள். உங்கள் தந்தையர் வந்தால் அவர்களிடம் சொல்லுங்கள்!” என்றபின் “வருக!” என்று பூரிசிரவஸிடம் சொன்னார்.

சிறுவர்கள் அவர்களைச் சூழ்ந்து நின்று வியந்து நோக்கினர். பின்னர் ஒரே குரலில் கைதூக்கி கூச்சலிட்டனர். ஒரு சிறுவன் ஓடிவந்து அவர் காலைப்பற்றி “நீங்கள் போருக்குச் சென்றபின் பெரிய எருதை கொண்டுவருவீர்களா?” என்றான். “நான் வரமாட்டேன். அங்கேயே அமர்ந்து அந்த எருதை தின்பேன்” என்றபின் பூரிசிரவஸிடம் “வழக்கமாக இவர்களுக்கு நான் எருதின் கொம்புகளை கொண்டுவந்து கொடுப்பேன். இவர்கள் எல்லாரிடமும் எருதின் கொம்பினால் நான் செய்த பாவைகள் உள்ளன” என்றார். இன்னொருவன் “முதுதந்தையே, நீங்கள் மலையிறங்கிச் செல்லும்போது அங்கே பறக்கும் புரவிகள் உண்டா?” என்றான். “ஆம், அங்கே பறக்கும் புரவிகள், மிதக்கும் மலைகள், அனல் வீசும் பறவைகள் எல்லாம் உண்டு. அங்கே நீரில் மிதக்கும் மிகப் பெரிய பல்லிகள் உண்டு, அவற்றின்மேல் ஏறி நாம் ஆற்றை கடக்க முடியும்” என்றார்.

இன்னொருவன் “நீங்கள் திரும்பி வந்து அந்தக் கதைகளை என்னிடம் சொல்லுங்கள்” என்றான். இன்னொரு சிறுவன் “நான் வளர்ந்தபின் கீழே சென்று பல்லிமேல் ஏறி நீந்துவேன்” என்று சொன்னான். “வருகிறேன், வந்து கதை சொல்கிறேன்” என்றபின் “இவர்களிடம் பேசிக்கொண்டிருந்தால் பொழுதாகிவிடும், வா” என்றபடி பால்ஹிகர் முன்னால் நடந்தார். பூரிசிரவஸ் திரும்பி அக்குழந்தைகளைப் பார்த்து கையசைத்து சிலர் கன்னங்களையும் சிலர் தலைகளையும் தொட்டு இன்சொல் உரைத்தபடி, அவருக்குப் பின்னால் நடந்தான். அவர்கள் தங்கள் எல்லைவரை வந்து அங்கே கூடி நின்று நோக்கினர்.

பால்ஹிகர் அங்கு கட்டப்பட்டிருந்த புரவிகளில் பெரிய புரவி ஒன்றை அவிழ்த்தார். அதன் முதுகில் சேணத்தை எடுத்து கட்டினார். உள்ளே அவருடைய வேட்டைப்பொதி இருந்தது. அதை அவிழ்த்து உலருணவும் நீரும் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டார். அதை புரவியில் வைத்து கட்டி “நாம் சில நாட்களில் கீழிறங்கிவிடமுடியும் அல்லவா? என்னிடம் ஏழு நாட்களுக்கான உணவும் நீரும் இருக்கின்றன” என்றார். “முடியும், பிதாமகரே” என்றான் பூரிசிரவஸ். பால்ஹிகர் காலை சேணத்தில் ஊன்றி ஏறி அமர்ந்தபின் “உன் புரவி எங்கே?” என்றார். “அதோ அங்கு குலத்தூண் அருகே நின்றிருக்கிறது. மைந்தன் அருகே நின்றிருக்கிறான்” என்றான். “அவனைத் தூக்கி நிலத்தில் அடிக்காமல் செல்கிறேன். நான் சென்றபின் இப்பகுதிக்கு அவனே தலைவனாக இருப்பான்” என்றபடி பால்ஹிகர் புரவிமேல் அமர்ந்து வந்தார்.

பூரிசிரவஸ் இணையாக நடந்து “அவன் அதற்கு தகுதியானவன் அல்லவா?” என்றான். “ஆம், அவன் தூய பால்ஹிகன்” என்றார் பால்ஹிகர். குலத்தூண் அருகே அவர்கள் சென்றதும் யாமா அவன் புரவியுடன் அருகே வந்து “ஏறிக்கொள்ளுங்கள், தந்தையே” என்றான். “அனைத்தும் முறைப்படி கட்டப்பட்டுள்ளன.” பூரிசிரவஸ் “என்னை வணங்கி வாழ்த்துபெறு, மைந்தா” என்றான். “ஆம்” என்று அவன் குனிந்து பூரிசிரவஸின் கால்களைத் தொட்டு தலையில் வைத்தான். அவன் தலைமேல் கைவைத்து “குன்றாத மகிழ்வுடன், இளமையுடன் என்றும் இங்கிரு, மைந்தா” என்று வாழ்த்தினான். பிறிதெப்போதும் எவரையும் அதுபோல நெஞ்சு நிறைந்து அவன் வாழ்த்தியதில்லை என்று உணர்ந்தான்.

பால்ஹிகர் புரவியிலிருந்து இறங்கி கீழே நின்று “மைந்தா, என் காலையும் தொட்டு வணங்கு. உன்னை நான் தூக்கி அறையாமல் செல்கிறேன். எனக்குப் பின் இந்த ஊர் உனக்கு கட்டுப்படும்” என்றார். “ஆம், முதுதந்தையே” என்றபின் மைந்தன் குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினான். அவர் அவன் தலையில் கை வைத்து “அவன் சொன்னதையே நானும் சொல்கிறேன்” என்றார். பின்னர் “ஆனால் ஒரு ஆணை. நீ என் மைந்தர்களை கொல்லக்கூடாது” என்றார். “இல்லை, எந்நிலையிலும் கொல்லமாட்டேன்” என்று யாமா சொன்னான். பால்ஹிகரின் புரவி முன்னால் செல்ல அவன் புரவி தொடர்ந்தது. வளைவு திரும்பி ஆழத்தில் இறங்கிய பின் அவன் திரும்பிப் பார்த்தபோது மேலே மலைவிளிம்பில் சுண்ணப்பாறையாலான சிற்பமென தன் மைந்தன் நிற்பதை பார்த்தான்.

மலையிறங்கும்போது பால்ஹிகர் அமைதியாக இருந்தார். சுழன்று சுழன்று இறங்கிக்கொண்டிருக்கையில் பூரிசிரவஸ் மலைகள் தன்னை சுற்றிச் சுற்றி வருவதாக உணர்ந்தான். உச்சிவெயில் வெக்கையை நிரப்ப வியர்வை வழிந்தது. அவன் தன் தோல்மேலாடையை அவிழ்த்து திறந்தான். சில கணங்களிலேயே வியர்வை குளிர்ந்து நெஞ்சு குளிரத் தொடங்கியது. மீண்டும் மூடி நாடாக்களை கட்டிக்கொண்டான். முதல் சுனை அருகே புரவிகளை நிறுத்தினர். பால்ஹிகர் இறங்கி புரவியை நீர் அருந்தவிட்டார். பூரிசிரவஸின் புரவி கனைத்தது. அவன் இறங்கியதும் சென்று குனிந்து நீர் குடிக்கத் தொடங்கியது. பால்ஹிகர் “ஆ!” என்றார். பூரிசிரவஸ் “என்ன?” என்றான். “உனக்கு மைந்தர்கள் உள்ளனர் அல்லவா?” பூரிசிரவஸ் “ஆம்” என்றான். “அவர்களுக்காக நான் சில கொம்புப்பாவைகளை எடுத்து வந்திருக்கலாம். நாம் திரும்பிச்சென்று மீண்டால் என்ன? அருகேதானே?”

பூரிசிரவஸ் “இல்லை பிதாமகரே, ஏற நெடுநேரமாகும். இன்றிரவுக்குள் நாம் முதற்சாவடிக்கு சென்றாகவேண்டும்” என்றான். “ஆனால் மைந்தருக்கு நான் பரிசுகளை அளிக்கவேண்டுமே?” என்றார். “மைந்தன் பரிசுகள் கொடுத்தனுப்பியிருக்கிறான். அவற்றையே கொடுப்போம்” என்றான் பூரிசிரவஸ். “அவனா? அவனுக்கென்ன தெரியும் அறிவிலி. நீ அந்த பரிசுகளை காட்டு” என்றார் பால்ஹிகர். “அவை உள்ளே பொதிக்குள் உள்ளன” என்றான். “எடுத்துக் காட்டு” என்றார். அவரே சென்று அவன் பொதியை அவிழ்த்து நீட்டலானார். “இருங்கள், அனைத்தையும் அவிழ்க்கவேண்டாம்… பொறுங்கள்” என அவன் பொதியை அவிழ்த்தான். அதன் உள்ளே ஒரு தோல்பொதி. அதை எடுத்து விரித்தான். இளவெயிலில் ஒரு கணம் அவன் கண்கள் கூசின. குனிந்து நோக்கிய பின் நடுங்கும் கைகளை கொண்டுசென்று அவற்றை தொடப்போனவன் தயங்கினான். அவை அருமணிக் கற்கள். செவ்வைரங்கள், நீலவைரங்கள். பச்சைநிறமான மரகதக்கற்கள் சில.

பால்ஹிகர் குனிந்து நோக்கி “கற்கள்… அந்த மூடன் இவற்றையே அளிப்பான் என எனக்கு தெரியும். என்னிடம் மிக அரிய கொம்புகள் இருந்தன” என்றார். பூரிசிரவஸ் புன்னகையுடன் “இவற்றில் சிலவற்றை நீங்கள் அளித்தவை என மைந்தருக்கு கொடுக்கலாம்” என்றான். “இவற்றையா? கற்களையா?” என்றபின் பால்ஹிகர் புரவியில் ஏறிக்கொண்டார். “அவர்களுக்கு நான் மலையின் கதைகளை சொல்கிறேன்… அவர்கள் விரும்புவார்கள்.” பூரிசிரவஸ் அந்த மணிகளை மீண்டும் நோக்கினான். நெல்லிக்காய் அளவுள்ள வைடூரியங்கள். சற்று அசைத்தாலே உருண்ட நிறமற்ற அரிய வைரங்கள். பேரரசுகளின் கருவூலங்களிலேயே அவற்றுக்கு நிகரான செல்வம் இருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 22

tigபுலரியில் பூரிசிரவஸ் விழித்துக்கொண்டபோது சாளரம் திறந்து உள்ளே ஒளி சரிந்து விழுந்திருந்தது. கண்கள் கூச மீண்டும் மூடிக்கொண்டு போர்வைக்குள்ளிருந்த வெப்பத்தை உடலால் அளைந்தபடி கவிழ்ந்து படுத்தான். போர்வைக்குள் இருந்த வெம்மை உணர உணர கூடி வருவதாகவும் புழுங்கத் தொடங்குவதாகவும்கூட தோன்றியது. துயின்றுகொண்டிருந்தபோது இமைகளுக்குமேல் விழுந்த ஒளி உள்ளே செந்நிறத்தை நிரப்பியிருந்தமையால்தான் விழிப்பதற்கு முன்பு புலரியிலும் அந்தியில் செவ்வொளி பரவிய கங்கையின் கரையில் நின்றிருப்பதாக கனவு கண்டோம் என்று எண்ணிக்கொண்டான். பின்னர் அது மலைமுகடுதானா என்ற ஐயம் எழுந்தது. திடுக்கிட்டவன்போல கையூன்றி புரண்டு அவ்வொளியை பார்த்தான்.

அறையை பார்த்த பின்தான் முந்தைய நாள் தான் துயின்ற அதே இடம் என்பதை உறுதி செய்துகொண்டான். போர்வையை காலால் விலக்கி எழுந்து நின்றான். கைகளை உதறி உடலை விரித்துக்கொண்டபோது புதிதாக பிறந்தெழுந்ததுபோல் தோன்றியது. கைகளை சிறுவன்போல் விரித்து அவ்வொளியில்காட்டி அளைந்தான். மெல்லிய தூசுத்துகள்கள் அதற்குள் பறந்துகொண்டிருந்தன. போர்வையை விலக்கியபோது அதிலிருந்து எழுந்த பொடி. பெரும்பாலும் மெல்லிய மயிர்த்துகள்கள் அவை. அவன் சாளரத்தினூடாக வெளியே பார்த்தான். வெளியே ஒளிரும் நீர்போல வெயில் நிரம்பி நிற்கக் கண்டான்.

அவன் எழுந்த ஓசை கேட்டு உள்ளே வந்த பிரேமை “நன்கு புலர்ந்துவிட்டது. மைந்தன் காட்டுக்குச் சென்றிருக்கிறான்” என்றாள். “இவ்வளவு வெயில் இங்கு வருமா?” என்றான். “காலையில் எப்போதும் நல்ல வெயில் இருக்கும். உச்சிப்பொழுதுக்குப் பின்னர்தான் இருளத் தொடங்கும்” என்றபின் “முகம் கழுவி வந்தால் உங்களுக்கு இன்நீர் அளிக்கிறேன்” என்றாள். “ஆம்” என்றபடி அவன் தன்னுடைய மேலாடையையும் கழற்றிவிட்டு மெல்லிய உள்ளாடையுடன் இல்லத்தின் பின்பக்கம் சென்றான். மரக்குடைவுத் தொட்டியில் நிரம்பியிருந்த நீரில் கையால் அள்ளி முகத்தை கழுவினான். நீர் பனியென குளிர்கொண்டிருந்தது. தொட்டிக்குள் பனிக்கட்டி கரைந்து முனைகள் கல்லுடைசல்போல கூர்கொண்டிருந்தன.

தண்ணீர் பட்டதுமே உடல் குளிரத்தொடங்கியது. சற்று நேரத்திலேயே உடலில் நடுக்கம் வருவதை உணர்ந்தான். அவ்வளவு வெயிலிருந்தும்கூட காற்றிலிருந்த குளிரை குறைக்க இயலவில்லை. முகம் கழுவிவிட்டு வந்து பிரேமை அளித்த கொதிக்கும் இன்நீரை துளித்துளியாக அருந்தினான். அவள் “மேலாடையை அணிந்துகொள்ளுங்கள். இங்கு நெஞ்சு மறைக்காமல் இருக்கலாகாது. நெஞ்சுக்குள் இருக்கும் அனல் நம்மை நெடுநேரம் வெம்மையுடன் வைக்கும். ஆனால் எண்ணியிராது அணைந்துவிடும். அதன்பின் வாழ்நாளெல்லாம் மூச்சுத் திணறல் வரும்” என்றாள். “ஆம்” என்றான். அவன் மலைவணிகர்கள் மூச்சுத்திணறல் நோய் வந்து துன்புறுவதை கண்டிருக்கிறான். தரைக்கு வந்த மீன்போல வாய்திறந்து மூச்சுக்கு தவிப்பார்கள். மூச்சுவிடும்போது குழலோசை கேட்கும். அவர்களின் விழிகளிலேயே மூச்சுக்கு தவிப்பதன் ஒளி இருக்கும்.

அவள் எடுத்துக்கொடுத்த தோலாடையை அணிந்து அதன் முன்புற கயிறுகளை முடிச்சிட்டுக் கொண்டிருந்தபோது வெளிமுற்றத்தில் உரத்த குரலில் “என்னைத் தேடி வந்தவன் யார்?” என்று குரல் ஒலித்தது. அவன் திடுக்கிட்டு பின் உவகைகொண்டு கதவைத் திறந்து வெளியே சென்றான். இரு பெரும்கைகளையும் விரித்து முற்றத்தில் நின்றிருந்தவர் பால்ஹிகர் என்று அவன் உள்ளம் உணர்ந்தது, விழிகள் திகைத்தன. அவர் தன் முதுமையை இழந்து அகவை மீண்டு சென்றிருந்தார். கழுத்தில் தொங்கிய தசைப் பை மறைந்திருந்தது. உடலெங்கும் தளர்ந்து சுருங்கியிருந்த தசைகள் பருத்து இறுகிச் செறிந்திருந்தன. இமைகளில் மயிர் தோன்றியிருந்தது. நரையிலாத கருமயிர். அவர் “நீயா என்னைத் தேடி வந்தாய்?” என்றபோது அவருடைய பற்கள் தெரிந்தன. மஞ்சள் நிறமான மாட்டுப்பற்கள். அவருக்கு பற்கள் இருக்கவில்லை என்பதை அவன் நினைவுகூர்ந்தான்.

“நான் பால்ஹிகன். நீ என் எதிரி என்றால் வெளியே வா” என்றார் பால்ஹிகர். அவருடைய இமைகள் மட்டும் சற்றே தளர்ந்து தொங்கியதுபோல் கண்ணுக்குமேல் கிடந்தன. பச்சை விழிகள் சிறுவர்களுக்குரிய ஒளியுடன் புதியனவாக இருந்தன. பூரிசிரவஸ் முற்றத்தில் இறங்கி “நான்தான், பிதாமகரே. பால்ஹிக இளவரசனும் சோமதத்தியுமாகிய பூரிசிரவஸ். தங்களை காணும்பொருட்டு வந்தேன்” என்றான். “ஆம், நீ பால்ஹிகன். நீ சிபி நாட்டில் என்னை பார்க்க வந்தாய். என்னை ஒரு கல்லறைக்குள் போட்டு புதைத்திருந்தார்கள். நீ என் கனவின் வழியாக உள்ளே வந்தாய்…” என்றார் பால்ஹிகர். “ஆனால் நீ அன்று ஆணும்பெண்ணும் அற்றவனாக இருந்தாய்… உன் பெயர் சிகண்டி என்றாய்.” பூரிசிரவஸ் அப்பேச்சை தெளிவுபடுத்த முனையாமல் அவரை அணுகி “பிதாமகரே, என்னை வாழ்த்துக!” என்று சென்று அவர் காலைதொட்டு வணங்கினான்.

அவர் தனது பெரிய கையால் அவன் தலையை மெல்ல அடித்து “உன்னை நான் மறந்துவிட்டேன். நேற்று யாரோ என்னை பார்க்க வந்திருக்கிறார்கள் என்று அவள் சொன்னபோது என்னால் உன்னை நினைவுகூர முடியவில்லை. எனக்காக நீ கொண்டு வந்த குத்துக்கத்தியை நான் இளைய மகனுக்கு கொடுத்துவிட்டேன். இன்னொரு குத்துக்கத்தி எனக்கு இப்போது வேண்டும். நான் அதன்பொருட்டே வந்தேன்” என்றார். “இன்னொன்றும் இருக்கிறது. நான் அளிக்கிறேன், உள்ளே வருக!” என்றான். “இது அவன் வீடு, இதற்குள் நான் நுழையக்கூடாது. அவன் என்னை தூக்கி அறைவதாக வஞ்சினம் உரைத்திருக்கிறான். பார்த்துக்கொண்டே இரு, இன்னும் சில நாட்களில் நான் அவனை மும்முறை தூக்கி அறைகிறேன். இந்த ஊரில் எவரும் எனக்கு நிகர் அல்ல” என்றபின் “ஊரிலிருந்து யவன மது கொண்டு வந்தாயா?” என்றார்.

“ஆம் பிதாமகரே, ஆனால் இங்குள்ள எவரும் அதை அருந்துவதில்லை என்றார்கள்” என்றான் பூரிசிரவஸ். “இங்குள்ள மூடர்கள் அருந்துவதில்லை. நான் அருந்துவேன்” என்றபின் “எத்தனை நாள் இருப்பாய்?” என்றார் பால்ஹிகர். “நான் தங்களைப் பார்த்து வாழ்த்து பெற்று செல்வதற்காக வந்தேன், வாழ்த்து பெற்றதும் கிளம்பிவிடுவேன்” என்றான். “என்னிடம் எதற்கு வாழ்த்து பெறவேண்டும்? மறுபடியும் பெண்களை மணக்கப்போகிறாயா?” என்றார். “இல்லை பிதாமகரே, கீழே பெரும்போரொன்று வரவிருக்கிறது. அதில் நான் கலந்துகொள்கிறேன், உயிர்துறக்கவும் நேரலாம். அதற்கு முன் மூத்தவர்களிடம் வாழ்த்துபெற வேண்டும். எங்கள் குடியில் இப்போது இருப்பவர்களில் தாங்களே மூத்தவர். தங்கள் கால்தொட்டு வாழ்த்து பெற்று செல்லவேண்டும் என்று தோன்றியது. எச்சமின்றி போருக்கு செல்லவேண்டுமென்ற சொல்லை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.”

“யாருக்கு நடுவே போர்?” என்று அவர் கேட்டார். “பாண்டவர் தரப்புக்கும் கௌரவர் தரப்புக்கும்” என்றான் பூரிசிரவஸ். “அவர்கள் யார்?” என்று அவர் கேட்டார். பூரிசிரவஸ் சில கணங்கள் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு “பிதாமகரே, தங்களுக்கு தேவாபி என்றொரு மூத்தவர் இருந்ததை நினைவுகூர்கிறீர்களா?” என்றான். அவர் தன் முடியற்ற தலையில் தட்டி “ஆம்… தேவாபி… தேவாபி… அப்பெயர் நினைவிருக்கிறது. யார் அவர்?” என்றார். “அவரை நீங்கள் தோளில் சுமந்தீர்கள். உங்கள் மூத்தவர்” என்றான் பூரிசிரவஸ். “ஆ! நினைவுகூர்கிறேன். அவர் என் கனவில் வருவதுண்டு. என் தோளில் ஒரு எடையற்ற விலங்கை சுமந்துகொண்டு மலையில் செல்வதுபோல் கனவு காண்பேன். அது என்னிடம் பேசுவது போலிருக்கும். விழித்துக்கொண்டால் அவரை நினைவுகூர்வேன். இப்போது அவர் எங்கே?”

பூரிசிரவஸ் “விண்ணுலகடைந்துவிட்டார். நெடுங்காலமாகிறது” என்றான். “பிதாமகரே, நீங்கள் யயாதியின் கொடிவழியில், குருவின் குலத்தில், பேருடலராகிய பீமனின் சிறுமைந்தனாக, பிரதீபருக்கு மைந்தனாக பிறந்தீர்கள். உங்கள் அன்னை சிபிநாட்டு அரசி சுனந்தை. உங்களுக்கு மூத்தவர் தேவாபி. இளையவர் சந்தனு” என்றான் பூரிசிரவஸ். “ஆம், சந்தனு. அவனும் விண் சென்றுவிட்டானா?” என்று அவர் ஆர்வமாக கேட்டார். பூரிசிரவஸ் “ஆம், நெடுங்காலமாகிறது” என்றான். “ஆம், சந்தனுவுக்கு இரு மைந்தர். அக்குழவிகளை நான் பார்த்ததில்லை” என்ற பால்ஹிகர் “ஆனால் ஒருமுறை பார்த்தேனா என்றும் ஐயமாக உள்ளது” என்றார். மயிரற்ற மண்டையை கையால் தட்டி “ஆனால் இவையெல்லாம் எங்கே நிகழ்கின்றன?” என்றார்.

“சந்துனுவின் முதல் மைந்தர் தேவவிரதராகிய பீஷ்மர். அவருடன் நீங்கள் மற்போரிட்டிருக்கிறீர்கள்” என்றான் பூரிசிரவஸ். பால்ஹிகர் முகம் மலர்ந்து இரு கைகளையும் ஓங்கி ஒன்றுடன் ஒன்று தட்டியபடி “ஆம், அவனை நினைவுகூர்கிறேன். என்னைவிட உடல் மெலிந்தவன், என்னளவுக்கே உயரமானவன். என்னுடன் நிகர்நின்று போரிட்டான்” என்றார். “அவனுடன் மீண்டும் போரிட விரும்புகிறேன். இப்போது நான் மேலும் பேருடல்கொண்டிருக்கிறேன். இன்று அவனை கால்நாழிகையில் தூக்கி நிலத்திலறைவேன்.” பூரிசிரவஸ் “சந்தனுவின் மற்ற இரு மைந்தர்கள் சித்ராங்கதரும் விசித்திரவீரியரும்” என்றான். “ஆம், பல தலைமுறைகள்” என்றார். “அவர்கள் என்ன செய்கிறார்கள்? பீஷ்மன் உயிரோடு இருக்கிறானா?” என்றார். “ஆம், அவர் மட்டும் இருக்கிறார்” என்றான்.

அவர் கையை பின்னால் கட்டிக்கொண்டு “ஆம், அவன் என்னைப்போல, எளிதில் சாகமாட்டான். இம்முறை அவனுடன் நெறிகளற்ற வன்போர் செய்யவேண்டும் என்று விழைகிறேன். இங்கே மலைகளில் நான் விண்ணிலிருந்து உயிராற்றலை பெற்றுக்கொண்டிருக்கிறேன். அதோ அந்த வெண்ணிற மலை. அதன் மேல்தான் ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் அமுது இறங்குகிறது. வெண்ணிற பால் பொழிவு போலிருக்கும். அங்கு சென்று நின்றால் அதை அருந்தலாம். நான் ஏழுமுறை அங்கு சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறை அங்கு செல்லும்போதும் எனது இறப்பை பல ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கிறேன்” என்றார். “கீழிருப்பவர்கள் உண்ணுவதும் உயிர்ப்பதும் நஞ்சு. ஆகவே நாள்தோறும் அவர்கள் நலிகிறார்கள்.”

பேச்சு திசை மாறாமலிருக்க வெறுமனே தலையசைத்தபடி ஒருசொல்லும் பேசாமல் நின்ற பூரிசிரவஸ் மீண்டும் தொடங்கினான். “பிதாமகரே, விசித்திரவீரியருக்கு இரண்டு மைந்தர்கள். மூத்தவர் விழியற்றவரான திருதராஷ்டிரர். இரண்டாமவர் நோயுற்றவர், அவர் பெயர் பாண்டு. மூத்தவருக்கு நூறு மைந்தர்கள். அவரில் மூத்தவர் துரியோதனன். அவரே இப்போது அஸ்தினபுரியின் அரசர்.” பால்ஹிகர் “அவன் மல்லனா?” என்றார். “ஆம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “பாண்டுவுக்கு ஐந்து மைந்தர்கள்” என்று அவன் சொல்ல “ஆம்! ஆம்!” என்று அவர் தன் தொடையில் ஓங்கி தட்டினார். “அதில் இரண்டாமவனை நினைவுகூர்கிறேன். அவன் பெயர் பீமசேனன். பிற நால்வரையும் அவன் தோளில் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் செல்வதைப்போன்று ஒரு கனவு எனக்கு வந்துள்ளது.” பூரிசிரவஸ் “அவரேதான். அவர் பெருந்தோளர்” என்றான்.

பால்ஹிகர் எண்ணத்திலாழ்ந்தார். முதியவர் அனைத்தையும் நினைத்து எடுத்துவிட்டார் என்று உறுதி செய்தபின் “அஸ்தினபுரியை இப்போது ஆள்பவர் துரியோதனர். மூத்தவர் திருதராஷ்டிரர் என்ற வகையில் அவரே அந்நிலத்திற்கும் மணிமுடிக்கும் உரிமையானவர். ஆனால் ஓரிரு நாட்கள் முன்னதாக பிறந்துவிட்டார் என்பதனால் யுதிஷ்டிரரும் அவரது உடன்பிறந்தவர்களும் அந்நாட்டையும் மணிமுடியையும் கோருகிறார்கள். ஆகவேதான் அங்கு போர் நிகழ்கிறது” என்றான். விழிப்புகொண்டு “யுதிஷ்டிரர் யார்?” என்று பால்ஹிகர் கேட்டார். பூரிசிரவஸ் பொறுமையை தக்கவைத்து “அவர் விசித்திரவீரியரின் இரண்டாவது மைந்தர் பாண்டுவின் மைந்தர்” என்றான். “விசித்திரவீரியன் யார்?” என்றார் பால்ஹிகர். பூரிசிரவஸ் கையை வீசி அதை கலைத்து “பிதாமகரே, அஸ்தினபுரி உங்களுடைய நாடு. உங்கள் தந்தையர்நிலம் அது. அங்குள்ள இரு தரப்பினர் ஒருவருக்கொருவர் போரிடுகிறார்கள். துரியோதனர் நெறிகளின்படி நாடாள்கிறார். யுதிஷ்டிரர் நெறிமீறி அந்நிலத்தை கோருகிறார்” என்றான். “அவ்வாறு ஷத்ரியரிடையே போர் நிகழ்வது அரிதாயிற்றே? அரக்கர்கள்தானே போர் புரிவார்கள்?” என்றார் பால்ஹிகர். “ஷத்ரியர்களும் போர் புரிவார்கள்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

பால்ஹிகர் இரு கைகளையும் விரித்தபடி உடல்தசைகள் ததும்ப முற்றத்தில் சிறுவளையங்களாக நடந்தார். பின்னர் “ஆகவே அங்கு போர் நிகழவிருக்கிறது, இல்லையா? மற்போர்தானா?” என்றார். “இல்லை, பிதாமகரே. இரு தரப்பிலும் பல லட்சம் படைவீரர்கள் திரண்டிருக்கிறார்கள். அங்கு நிகழவிருப்பது பலநாட்கள் நீடிக்கவிருக்கும் மாபெரும் போர். பல லட்சம் வீரர்கள் இறந்து விழக்கூடும்” என்றான் பூரிசிரவஸ். “லட்சம் என்றால்?” என கைகளை விரித்து “அந்த அளவுக்கா?” என்றார். “எண்ணமுடியாத அளவுக்கு” என்றான். அவர் முகம் மலர்ந்தது. “எண்ணமுடியாத அளவுக்கு! இந்த மலைகளைப்போல?” என்றார். “ஆம்” என்றான் பூரிசிரவஸ். “அப்போரில் நானும் கலந்துகொள்ளவிருக்கிறேன். நான் களம்படக்கூடும். அதற்கு முன் தங்களைப் பார்த்து வாழ்த்துபெறவே வந்தேன். நாளை நான் கிளம்பும்போது வந்து தங்களைப் பணிந்து வாளை தங்கள் காலடியில் வைத்து முறைப்படி விடைபெறுகிறேன். என்னை சொல்லளித்து அனுப்புங்கள்.”

அவர் “ஆனால் ஏன் அவ்வாறு இறக்கவேண்டும்? வென்றவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? அவர்களுக்கு என்ன பரிசு அளிக்கப்படும்?” என்றார். “அவர்கள் நிலத்தை அடைவார்கள், பிதாமகரே” என்றான் பூரிசிரவஸ். அவர் அவனை ஐயமாக கூர்ந்து நோக்கினார். “நிலத்திற்காகவா?” என்று அவனுக்கு மட்டுமாக கேட்டார். “ஆம்.” அவர் “நிலத்தை என்ன செய்வார்கள்?” என்றார். “உரிமைகொள்வார்கள்” என்றான். “உரிமையா?” என அவர் சுற்றிலும் பார்த்தார். “இங்கே முடிவிலாமல் நிலம் இருக்கிறதே. இங்கிருந்து கிளம்பி இப்படியே சென்றால் ஆயிரம் ஆண்டுகாலம் எந்த மானுடரையும் சந்திக்காமல் சென்றுகொண்டே இருக்குமளவுக்கு நிலம் உள்ளது. ஆனால் இதை எப்படி மானுடன் உரிமைகொள்ளமுடியும்?”

பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லவில்லை. அவர் எண்ணங்கள் மலைத்து உறைய தலையை உலுக்கி விடுபட்டு “அந்தக் குத்துவாளை நீ எடுத்துக்கொடுத்தால் நான் இப்போதே கிளம்புகிறேன். மலைகளுக்குமேல் நான் ஒரு காட்டு ஆட்டை பார்த்திருக்கிறேன். என்னைப்போன்றே முதியது. அதை நான் உண்டால் இருவருக்குமே நன்று” என்றபின் கண்சுருக்கங்கள் இழுபட்டுக் குவிய சிரித்து “கனிந்த பழம்போல அது மலைகளில் காம்பு இற்று காத்திருக்கிறது” என்றார். “பொறுங்கள்! நான் வாள்களை எடுத்துவருகிறேன். தங்களுக்குரிய குத்துவாளை தாங்களே எடுத்துக்கொள்ளலாம்” என்று சொல்லி பூரிசிரவஸ் உள்ளே சென்று தனது பொதியை தூக்கி வந்தான். அதை முற்றத்தில் விரித்து அதிலிருந்த குத்துவாட்களை காட்டினான். பால்ஹிகர் முழந்தாளிட்டு அமர்ந்து அந்தக் குத்துவாட்களை கைகளால் புரட்டினார். முழந்தாளிட்டு அமர்ந்தபோதே அவர் நின்றிருந்த பூரிசிரவஸின் நெஞ்சளவுக்கு இருந்தார். அவரது கைகளுக்கு குத்துவாள்கள் மிகச் சிறியவையாக தெரிந்தன.

மிகக் கூர்மையான நோக்குடன் முழுதாக ஈடுபட்டு அவர் வாள்களை எடுத்து நோக்கினார். வீசியும் குத்தியும் வீசியெறிந்து பிடித்தும் கூரை வருடியும் அவர் அவற்றை ஆராய்ந்தார். அவற்றின் நாவை மட்டுமே அவர் நோக்கினார். பிடி அவருக்கு பொருட்டாகவே தோன்றவில்லை. ஊரில் குறுவாட்கள் அணிச்செதுக்குப் பிடிகளுக்காகவே மதிப்பு கொள்கின்றன. ஆனால் மலைகளில் அதற்கு பொருளே இல்லை. அவர் முதலிலேயே எடுத்துக்கொண்ட, அவற்றில் பெரிய குத்துவாளை இறுதியாகவும் எடுத்துக்கொண்டு “இதை நான் வைத்துக்கொள்கிறேன்” என்றார். பிறகு மற்ற குத்துவாட்களை பார்த்து “இவற்றை எவருக்கு கொடுக்கப் போகிறாய்?” என்றார். “இங்குள்ளவர்களுக்குத்தான்” என்றான் பூரிசிரவஸ். அவருடைய விழிகள் மாறுபட்டன. இன்னொரு குத்து வாளை எடுத்துக்கொண்டு “இதையும் நான் வைத்துக்கொள்கிறேன். எனக்கு இரண்டு குத்துவாட்கள் வேண்டும்” என்றார்.

“தாங்கள் விழைந்ததை எடுத்துக்கொள்ளுங்கள், பிதாமகரே” என்றான் பூரிசிரவஸ். அவர் மீண்டும் ஒன்றை எடுத்துக்கொண்டு “மூன்று குத்துவாட்கள் வைத்துக்கொள்கிறேன். இனி இவ்வூரில் மூன்று குத்துவாட்கள் உள்ள ஒரே ஒருவன் நானே” என்றார். பின்னர் எழுந்துகொண்டு அவனை பார்த்து “ஆனால் மூன்று குத்துவாட்களை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யவிருக்கிறேன்? ஏற்கெனவே என்னிடம் இரண்டு உள்ளன. ஐந்து குத்துவாட்கள் எதற்கு?” என்றார். பூரிசிரவஸ் புன்னகைத்தான். அவர் “ஐந்து குத்துவாட்கள் பெரிய பொறுப்பு. அவற்றை நான் காவல் காக்கவேண்டும். ஒரு குத்துவாள் என்றால் என் இடையிலேயே வைத்துக்கொள்வேன்” என்றபின் பிற இரு குத்துவாட்களையும் வைத்துவிட்டு “நன்று, நீ செல்லும்போது என்னிடம் வா. உன்னிடம் என்ன சொல்லவேண்டுமென்பதை என்னிடம் முன்னரே சொல்லிவிடு. அச்சொற்களை நான் திருப்பி சொல்வேன்” என்றபின் தனது பெரிய கைகளால் அவனது தோளை தட்டினார்.

“ஆம், பிதாமகரே” என்றான் பூரிசிரவஸ். “நான் என்னிடமிருக்கும் குத்துவாட்களை மைந்தர்களுக்கு கொடுக்கிறேன். அவர்கள் விரும்புவார்கள்” என்றபின் அவர் “நீ நல்லியல்பு கொண்டவன். நீ ஏன் திரும்பிச் செல்லவேண்டும்? இங்கேயே இரு. உன்னை நான் அமுதுபெய்யும் மலைக்கு கூட்டிச்செல்கிறேன்” என்றார். பூரிசிரவஸ் புன்னகைத்தான். அவர் “நாளை என்னை வந்துபார். உனக்கு நான் அரிய ஊன்கொழுப்பு தருகிறேன். சோள அப்பத்தில் உருகவிட்டு உண்டால் மணமாக இருக்கும். நானே காட்டுமாட்டின் நெஞ்சுக்குமிழியை வெட்டி எடுத்தது. அது ஆண்மைமிக்க மாடு. அகவை முதிர்ந்தது. காட்டுமாடுகள் இரவில் மலையுச்சியின் அமுதத்தை உண்கின்றன. அந்த அமுது அவற்றின் முன்கால்களின் நடுவே அமுதகலமென தொங்கிக்கிடக்கும்…” என்றார். மீண்டும் அவன் முதுகை அறைந்தபின் கிளம்பிச் சென்றார்.

அவன் அவர் செல்வதை நோக்கிக்கொண்டு நின்றான். பிரேமை வந்து அவனருகே நின்றாள். “அவர் பற்கள் பதித்திருக்கிறாரா?” என்று அவன் கேட்டான். “இல்லை, பற்கள் அவருக்கு முளைத்தன. நூற்றைம்பது அகவை கடந்தால் மீண்டும் பற்கள் முளைக்கும்.” அவன் நம்பாமல் திரும்பி நோக்கினான். “ஆம், அவர்களை தெய்வங்கள் மீண்டும் குழவிகளாக எண்ணுகின்றன. அவர்களின் முகம் குழந்தைபோலவே தோன்றும். உள்ளமும் குழந்தைகளுக்குரியது” என்றாள். “அவர் எவர் எதை கேட்டாலும் கொடுத்துவிடுவார். எவர் அளித்தாலும் உண்பார். அவருக்கு அச்சமென்பதே இல்லை” என்று அவள் சொன்னாள். “மூத்தவள் ஹஸ்திகை இறந்தபோது ஒருநாள் முழுக்க மலைமடிப்பொன்றில் சென்று படுத்துக்கொண்டு அழுதார். திரும்பி வந்தபோது ஒரு காட்டு ஆடு அவர் தோளிலிருந்தது. முகம் மலர்ந்திருந்தது. அவர் அவளை நினைப்பதே இல்லை.”

“நான் இறந்தபின் நீ என்னை நினைப்பாயா?” என்றான். அவள் விழிதாழ்த்தி “இருப்பவர்களை மட்டுமே நினைக்கவேண்டும் என்பது மலைவழக்கம்” என்றாள். அவன் சீற்றம்கொண்டான். “மறந்துவிடுவாயா?” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “மறந்தால்தான் கனவில் நான் நீங்கள் இருக்கும் உலகுக்கு வரமுடியும்.” அவன் அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். “நீ மறுமணம் செய்துகொண்டிருப்பாய் என நினைத்தேன்” என்றான். “ஆம், அதுவே இங்குள்ள வழக்கம். மூன்று வசந்தகாலம் வரை கணவர் திரும்பவில்லை என்றால் மலையுச்சியில் நின்று தெற்குநோக்கி ஒரு கல்லை தலைசுற்றி வீசியெறிய வேண்டும். அதன்பின் உள்ளத்திற்கு உகந்தவரை மணக்கலாம்” என்றாள் பிரேமை. “நீ ஏன் மணக்கவில்லை?” என்றான். “என்னிடம் பலர் கோரினர். ஆனால் நீங்கள் கனவில் வந்துகொண்டே இருந்தீர்கள். ஆகவே நான் அவர்களை மணக்கவில்லை.”

அவன் அவளை நோக்கிக்கொண்டிருந்தான். “பெண்ணின் கருப்பை ஒழிந்துகிடக்கக் கூடாது என்று அன்னை சொன்னாள். ஆனால் நான் ஒவ்வொருநாளும் உங்களுடன் இருந்தேன். விழாக்காலங்களில் மதுவருந்தினால் மட்டும் நான் அழுவேன்” என்றாள். அவன் அவள் தோளை வளைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டான். பெருமூச்சு எழுந்து நெஞ்சை அசையச் செய்தது. “நீங்கள் உண்ணவேண்டும் அல்லவா? நான் அடுமனைக்கு செல்கிறேன்” என அவள் திரும்பிச் சென்றாள். அவன் அப்பால் இளவெயிலில் தன் பெயர்மைந்தர்களுடன் குறுவாளை வீசி விளையாடும் பால்ஹிகரை நோக்கிக்கொண்டிருந்தான். அவர் ஓட அவர்கள் கூச்சலிட்டபடி துரத்திச் சென்றார்கள். அவரைப் பிடித்து வீழ்த்தி அவர்மேல் ஏறி உருட்டினார்கள். அவர்களை திசைக்கொருவராக உதறிவிட்டு அவர் எழுந்து ஓடினார். வால் சுழற்றியபடி நாய்கள் உடன் ஓடின. அவர்களின் நிழல்களும் உடன் ஆடின. கூச்சல்கள், சிரிப்புகள், நாய்க்குரைப்புகள்.

அவர்களுக்குமேல் மலைச்சரிவுகளில் முகில்நிழல்கள் விழுந்துகிடந்தன. பனிமலைமுகடுகள் வெண்குவைநிரைகள் என ஊழ்கத்திலமர்ந்திருந்தன. வானில் வெண்முகில்கள் மெல்ல சென்றுகொண்டிருந்தன. அவன் மலைப்பக்கங்கள் ஒளிகொண்டு மின்னுவதை நோக்கிக்கொண்டிருந்தான். உள்ளத்திலிருந்த அனைத்து எண்ணங்களும் அசைவிழந்து ஒன்றுடன் ஒன்று தொடர்பழிந்து உதிரிச்சொற்களாக ஆகி பின் கரைந்து மறைந்தன. அவன் உள்ளமும் அதே ஒளியையும் அமைதியையும் கொண்டிருந்தது. இல்லத்தின் முகப்பிலமர்ந்தபடி மலைகளை நோக்கிக்கொண்டிருந்தான். நெடுநேரம் கழித்து அவன் பிரேமையின் அழைப்பால் தன்னிலை உணர்ந்தான். பிதாமகரும் மைந்தரும் அப்போதும் விளையாடிக்கொண்டிருந்தனர். இளவெயிலையும் மலைகளையும் நோக்கியபடி அச்சிற்றூரின் அனைவருமே ஆங்காங்கே வெறுமனே அமர்ந்திருப்பதை அவன் கண்டான். மலைகளைப்போல அவர்களும் ஊழ்கத்திலிருந்தனர். அங்கே ஊழ்கமே அன்றாட வாழ்வென்று திகழ்கிறது என எண்ணிக்கொண்டான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 21

tigபூரிசிரவஸ் விழித்துக்கொண்டபோது குடிலுக்குள் ஊன்கொழுப்பு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. நிழல்கள் அசைய பிரேமை நடந்தாள். அவன் எங்கிருக்கிறோம் என்று உணராது மலைத்த உள்ளத்துடன் நோக்கியபடி கிடந்தான். பிரேமை வந்து அவனைக் கண்டு “விழித்துக்கொண்டீர்களா?” என்றாள். அவள் கையில் சிறிய ஊன்நெய் விளக்கு இருந்தது. “ஆம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “எழுந்து முகம் கழுவுங்கள். உணவு சித்தமாக உள்ளது” என்றாள். “உணவா? இனி நாளை காலையில் மட்டுமே என்னால் உணவு உண்ண முடியும்” என்று அவன் சொன்னான். “முகம் கழுவி வாருங்கள். துயிலெழுந்ததும் இங்கே பசிக்காது. குளிருக்காக உடல் எரியத் தொடங்கும்போதே பசி எழும். முதலில் ஊன்சாறு சற்று அருந்துங்கள். குடல்களை துயிலெழுப்ப வேண்டாமா?” என்று அவள் சொன்னாள். “கொண்டு வா” என்று அவன் மெத்தையிலேயே எழுந்து அமர்ந்தான். “இங்கு அருந்தலாகாது. உங்களுக்கு இருப்பிடம் ஒருக்கியிருக்கிறேன்” என்றாள்.

அவன் சோம்பல்முறித்தான். நெடுநேரத் துயிலுக்குப் பிறகு உடல் முழு உயிரையும் திரும்பப் பெற்றுவிட்டிருந்ததனால் கண்கள் ஒளிகொண்டிருந்தன. அச்சிறு இல்லத்தின் ஒவ்வொரு பொருளையும் துலக்கமாக பார்க்க முடிந்தது. வெளியே சென்று முகம் கழுவும்போது கடுங்குளிர் நிறைந்த காற்று சுழன்றடிப்பதை உணர்ந்தான். தன் புரவி அக்குளிரை தாங்குமா என்ற எண்ணம் எழுந்தது. குடிலுக்குள் திரும்ப வந்து “குளிர்காற்று வீசுகிறது. எனது புரவி எங்கே?” என்றான். “அதை இங்கு கூட்டிவந்துவிட்டேன். நமது குடிலுக்குள்தான் இருக்கிறது. அங்கும் கணப்பிட்டிருக்கிறேன்” என்று அவள் சொன்னாள்.

பூரிசிரவஸ் தளர்ந்த காலடிகளுடன் சென்று இருக்கையில் அமர்ந்தான். ஊன்சாறின் மணம் எழுந்ததும் தனக்கு பசி எடுப்பதை உணர்ந்தான். புன்னகைத்து “நன்கு பசிக்கிறது. இங்குதான் இப்போதுதான் உடல் உடைந்து திறந்துவிடுமளவுக்கு உண்டேன். மீண்டும் பெரும்பசி. விந்தைதான்” என்றான். அவள் பெரிய பற்களைக் காட்டி சிரித்து “எப்போது உண்டீர்கள்?” என்றாள். “இன்று உச்சிப்பொழுதில்” என்றான். “இன்றல்ல, நேற்று” என்று அவள் சொன்னாள். “நேற்றா? நான் இன்றுதானே வந்தேன்?” என்று அவன் சொல்ல “நேற்று உச்சிப்பொழுது உணவுண்டபின் படுத்து இரவெல்லாம் துயின்று பகலிலும் துயின்று இப்போதுதான் விழித்தெழுகிறீர்கள்” என்று அவள் சொன்னாள்.

“ஒரு நாள் முழுக்க துயின்றிருக்கிறேனா?” என்று அவன் திகைத்தான். “ஒரு நாளுக்கும் நான்கு நாழிகை கூடுதலாக” என்று அவள் சொன்னாள். பூரிசிரவஸ் நம்பமுடியாமல் அவள் இளையவளை பார்த்தான். “ஆம், நீங்கள் துயில்வதை நான் நாழிகைக்கொருமுறை வந்து பார்த்துக்கொண்டிருந்தேன்” என்றாள். பூரிசிரவஸ் “இன்றுதான் எனக்கு இவ்வளவு நீண்ட துயில் தேவைப்பட்டிருக்கிறது. நான் சென்ற இருபதாண்டுகளில் ஒருமுறைகூட நான்கு நாழிகைக்குமேல் துயின்றதில்லை. ஒவ்வொரு சிறு ஒலிக்கும் எழுவேன். தொடர்ந்து துயில் அமைந்ததே இல்லை” என்றான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “பணிகள். ஒவ்வொரு முறையும் ஒரு பணியை அறுத்து நிறுத்திவிட்டுத்தான் படுப்பேன். கனவுக்குள் அது உருமாறி என்னை தொடர்ந்து வரும். விழித்த முதல் கணமே பணிதான் வந்து நிற்கும். இருபதாண்டுகளுக்கும் மேலாக இடைவெளியே இல்லாமல் பணிபுரிந்துகொண்டிருந்தேன்.”

புருவங்களில் மடிப்பு விழ “பணி எதன்பொருட்டு?” என்று அவள் கேட்டாள். பூரிசிரவஸ் ஒருகணம் திகைத்து பின்பு வெடித்து நகைத்து “பணிபுரிபவர்கள் அந்தக் கேள்வியை கேட்கலாகாது. அக்கேள்வியை எழுப்பிக்கொள்பவர்கள் எப்பணியும் செய்ய இயலாது” என்றான். அவள் புரியாமல் “எதன்பொருட்டு பணிபுரிந்தீர்கள்?” என்று மீண்டும் கேட்டாள். “என் நாடு வலுவுறும்பொருட்டு. என் குடி சிறப்புறும்பொருட்டு. அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் நடத்தும் அரசியலாடலில் எங்கள் பங்கைப்பெறும் பொருட்டு” என்றான். பின்னர் “அப்படி சொல்லிக்கொள்ளலாம். அதை நம்பி செயல்பட்டேன், அவ்வளவுதான்” என்று சேர்த்துக்கொண்டான்.

அவள் “உங்கள்மேல் எதிரிகள் படையெடுத்து வந்து உங்களை தோற்கடித்தால் என்ன செய்வது?” என்றாள். “எங்கள் எதிரிகளை நாங்கள் வெல்வோம்” என்றான். அதன் பிறகுதான் அவள் என்ன கேட்டாள் என்பதை உணர்ந்து நகைத்து “ஆம், ஒரு படையெடுப்பு நிகழ்ந்தால் போதும். ஒரு நிலப்பெயர்வு உருவானால்கூட போதும். வாழ்நாள் முழுக்க நான் இயற்றிய உழைப்பனைத்தும் வீணாகிவிடும். ஆனால் முற்றிலும் பயனுறுதி கொண்ட ஒன்றை மட்டுமே இயற்றவேண்டுமென்று எண்ணி எவரும் எதையும் செய்ய இயலாது” என்றான். “பிறகெதற்கு பணியாற்றவேண்டும்?” என்று அவள் கேட்டாள். “எனது நிறைவுக்காக. நான் வாழ்கிறேன் என்பதற்காக” என்றான் பூரிசிரவஸ்.

அவள் “அந்நிறைவு உங்களுக்கு வந்துவிட்டிருக்கிறதா?” என்று கேட்டாள். இவள் அறிந்துதான் கேட்கிறாளா என்ற துணுக்குறலை அவன் அடைந்தான். அவள் விழிகளை சில கணங்கள் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் மிக எளிமையாக சிறுமிபோல் அதை கேட்டாள் என்பதால் கண்கள் சிரிப்பை காட்டின. புன்னகைத்து “தெரியவில்லை” என்றான். பிறகு “உண்மையை சொல்லப்போனால் இல்லை. இது எனக்கு நிறைவு தரும் என்று எண்ணி இதில் இறங்கினேன். இது என் கடன் என்று நம்பினேன். நிறைவு தரவில்லை என்று உணர்ந்தேன். என் கடன் அல்ல என்று ஐயம் கொண்டேன். ஆயினும் தொடங்கியதை விடமுடியாமல் அதன் பின்னர் சென்றேன்” என்றான்.

அவன்மேல் மெல்ல கையை வைத்து “இங்கிருந்துவிடுங்கள்” என்று அவள் சொன்னாள். “இங்கிருக்கலாம். ஆனால் நான் விசையுடன் ஓடப் பழகிய புரவி. இங்குள்ள மலைப்பாறைகள் காலமின்றி, அசைவின்றி இருப்பவை. இப்போது ஒரு தருணம் முடிவடையப் போகிறது. போர் அணுகவிருக்கிறது. போரில் நான் கலந்துகொள்வேன். இப்போரில் நான் உயிருடன் மீண்டேன் என்றால் பிறிதொரு வாழ்க்கையை தொடங்கவேண்டும் என்று எண்ணுகிறேன். எதன்பொருட்டுமின்றி, எதற்குப் பின்னாலும் ஓடாமல் அமையும் ஒரு வாழ்க்கை. இந்த மலைப்பாறைகளைப்போல அல்ல. அது இப்பிறவியில் எனக்கில்லை. ஆனால் கீழிருந்து இந்த மலைப்பாறைகளை நோக்கி தவம்செய்யும் சிறிய பாறைகளுண்டு. அவற்றிலொன்றென ஆக விழைகிறேன்” என்றான்.

அவளுக்கு அவன் சொன்னது எதுவும் புரியவில்லை. “போரில் உங்களுக்கு எதிராக யார் வருவார்கள்?” என்றாள். “பலர்” என்றான். “அதெப்படி ஒருவருக்கெதிராக பலர் வரமுடியும்?” என்றாள். பூரிசிரவஸ் “போர் என்றால் என்ன என்று உனக்கு என்னால் விளக்க முடியாது” என்றான். ஊன்சாறைக் குடித்து எழுந்தபின் அவள் “சற்று நேரம் ஓய்வெடுங்கள். அதற்குள் ஊனுணவு ஒருங்கிவிடும். மைந்தன் வேட்டைக்கு சென்றிருக்கிறான்” என்றாள். பூரிசிரவஸ் “வேட்டைக்கா? எப்போது சென்றான்?” என்றான். “நீங்கள் துயின்றவுடனே சென்றான். உங்களுக்கு காட்டுமானின் கன்றுக்குட்டி ஒன்றை கொண்டுவரப்போவதாக சொன்னான். நேற்று உங்களுக்கு அளித்த ஊன் கடினமானதாக இருந்தது என்று என்னிடம் சினந்தான். நீங்கள் அறிவிக்காமல் வந்தால் நான் என்ன செய்வது என்று கேட்டேன். அவனுக்கு நான் சொன்னது புரியவில்லை. உடனே ஈட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்” என்றாள்.

பூரிசிரவஸ் இல்லத்தின் சிறிய கூடத்தில் தரையிலிட்ட மெத்தையில் அமர்ந்து கால்மேல் தடித்த மென்மயிர்த்தோலாடையை எடுத்து போர்த்திக்கொண்டான். காற்று சீழ்க்கையொலியுடன் ஓடுவதை செவிகொண்டு அமர்ந்திருந்தான். அடுமனைக்குள் பிரேமையின் குரலும் அடுகலங்களின் ஓசையும் கேட்டுக்கொண்டிருந்தன. வெளியே புரவியொன்றின் கனைப்பொலி கேட்டது. எழுந்து எவரென்று பார்க்க அவன் விழைந்தான். ஆனால் அந்தப் போர்வைக்குள் அவன் கால்கள் உருவாக்கியிருந்த இளவெம்மையை இழக்க விரும்பவில்லை. பிறரறியா இனிய  கனவு போலிருந்தது அந்த வெம்மை. அது தானே உருவாக்கும் வெம்மை என்பதனால் தனக்கு அத்தனை இனிது போலும் என்று எண்ணிக்கொண்டான்.

அவ்வில்லத்தின் கதவுகள் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் இரண்டு வெவ்வேறு திசைகளில் திறக்கும்படி அமைக்கப்பட்டிருந்தன. முதல் கதவு திறந்தது. இரண்டாவது கதவு திறந்ததும் குளிர்காற்று வந்து அறைந்தது. அதற்குள் முதற்கதவு மூடிக்கொண்டது. உள்ளே வந்த மைந்தன் “விழித்துக்கொண்டுவிட்டீர்களா? நீங்கள் நெடுநேரம் துயில்வீர்கள் என்று எண்ணினேன்” என்றான். “இப்போதுதான் விழித்தேன்” என்றான் பூரிசிரவஸ். “உங்களுக்கு இளம் கன்றொன்றை கொண்டுவந்திருக்கிறேன்” என்று யாமா சொன்னான். அவன் ஆடை முழுக்க பனி சிறிய பளிங்கு மணிகளாக தொங்கிக்கொண்டிருந்தது.

பூரிசிரவஸ் “வெளியே கடுங்குளிரென்று எண்ணுகின்றேன்” என்றான். “இல்லை, கடுங்குளிரென்றால் இடுப்புவரை பொருக்குப்பனி நிறைந்திருக்கும். இது குளிர்காற்றுதான். மலைகளின் இடைவெளி வழியாக வழிந்திறங்குகிறது. அங்கே எழுந்துநிற்கும் வெண்மலைகளின் மூச்சு இது. நாளை காலைக்குள் திசைமாறிவிடும். பனிக்காலத்திற்கு இன்னும் பல மாதங்கள் உள்ளன” என்றான். தன் ஆடையை உருவி அருகிருந்த சிற்றறையில் கொண்டுசென்று உதறி அங்கேயே தொங்கவிட்டான். உள்ளே அணிந்திருந்த மென்மயிராடையுடன் திரும்பி வந்தான். அவன் கைகள் இரு பெரிய விலங்குகள் போலிருப்பதாக தோன்றியது. உரிக்கப்பட்ட இரு மான்குட்டிகள்.

பிரேமை அகன்ற மரப்பாத்திரத்தில் கொதிக்கும் நீர் கொண்டுவந்து வைத்தாள். அவன் அதற்குள் கைகளை வைத்து சூடுகொண்டான். பின் அதில் துணியை முக்கி தன் காதுகளிலும் முகத்திலும் ஒற்றி எடுத்து வெப்பப்படுத்தினான். “மூத்த பால்ஹிகர் வந்திருக்கிறார், தந்தையே” என்று திரும்பி அவனிடம் சொன்னான். “எங்கு?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “அவருக்கும் மைந்தர்களுக்குமான பூசல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவர் காட்டிலிருந்து பெருங்காளையொன்றை வேட்டையாடி கொண்டுவந்திருக்கிறார். அதை தன் மூன்றாவது மைந்தனுக்கு பரிசளித்து அவன் இல்லத்தில் இப்போது தங்கியிருக்கிறார். பிற மைந்தர்கள் மனைவியரும் குழந்தைகளுமாகச் சென்று அந்த இல்லத்தைச் சூழ்ந்து கூச்சலிடுகிறார்கள். அவர் உள்ளிருந்து திருப்பி ஓசையிடுகிறார்” என்றான்.

“நான் வந்திருப்பதை சொன்னாயா?” என்றான் பூரிசிரவஸ். “அவரிடம் நான் பேசுவதில்லை. எப்போது அவரைத் தூக்கி நிலத்தில் அறைகிறேனோ அதற்குப் பின்னர்தான் அவரிடம் பேசமுடியும்” என்று யாமா சொன்னான். “எனக்கு இந்த ஊர் பழக்கங்கள் எதுவுமே புரிவதில்லை” என்று பூரிசிரவஸ் சொன்னான். தொட்டியை பிரேமை எடுத்துப்போக சைலஜை பெரிய குடுவை நிறைய ஊன்சாறு கொண்டு வந்து மைந்தனிடம் கொடுத்தாள். அவன் அதை வாங்கி தன் முன் வைத்து இரு கைகளிலும் பெரிய கரண்டியை ஏந்தி வேகமாக அருந்தத் தொடங்கினான். பூரிசிரவஸ் “நான் சென்று அவரை பார்க்கவேண்டும். அவரிடம் வாழ்த்து பெற்றுபோவதற்காகவே வந்தேன்” என்றான்.

யாமா முகத்தைத் தூக்கி “எதன் பொருட்டு வாழ்த்து?” என்றான். “நீ அறியமாட்டாய். அங்கு நிலத்தில் ஒரு பெரும்போர் நிகழவிருக்கிறது. நான் அதில் கலந்துகொள்ளவிருக்கிறேன்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “எக்குடிகள் நடுவே போர்?” என்று அவன் ஆர்வத்துடன் கேட்டான். போர் என அவன் எண்ணுவது அங்கு நிகழும் தோள்பொருதல்களின் கொண்டாட்டத்தை என பூரிசிரவஸ் உணர்ந்தான். “அனைத்துக் குடிகளும் ஒருவரோடொருவர் போர்புரிகிறார்கள். ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பார்கள்.” அவன் “ஏன்?” என்றான். “ஏனென்றால் அதுதான் போர். பல லட்சம்பேர் செத்துவிழுவார்கள்.” அவன் கரண்டிகள் காற்றில் அசைவிழந்தன. யாமா “லட்சம் என்றால்?” என்றான். அவன் “ஆயிரம்பேராக ஆயிரம்மடங்கு…” என்றான். கரண்டிகள் மரக்குடுவையை முட்டி ஒலித்து கீழே விழுந்தன. அவன் பெருமூச்செறிந்தபோது பெருந்தசைத்திரள்கள் கொப்பளித்து அமைந்தன.

பூரிசிரவஸ் “போர் என்பது அதுதான்” என்றான். திகைத்த விழிகளுடன் யாமா அவனை பார்த்தான். பின்னர் மெல்ல சிரித்து “அனைத்துக் குடிகளும் போரிடுவார்களா? யார் யாரை வெல்வார்கள்?” என்றான். “யாரும் யாரையும் வெல்ல முடியாது. எல்லோரும் தோற்றுப்போகும் ஒரு போராகக்கூட இருக்கலாம். உனக்கு அதற்குமேல் புரியாது” என்றபின் “அருந்து” என்றான் பூரிசிரவஸ். “அப்போரில் உங்கள் குடியும் கலந்து கொள்ளப்போகிறதா?” என்றான். “ஆம்” என்றான் பூரிசிரவஸ். யாமா “நீங்கள் அதில் போரிடுவீர்களா?” என்றான். “ஆம்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

யாமா வெடித்து நகைத்து “குழந்தையைப்போல் உடல் கொண்டிருக்கிறீர்கள். உங்களை அவர்கள் எளிதில் வென்றுவிடுவார்களே?” என்றான். பூரிசிரவஸ் “இது உடலால் ஆன போரல்ல, மைந்தா. படைக்கலங்களால் ஆன போர். ஆற்றல் என்பது உடலில் அல்ல, உள்ளத்தில் திகழ்கிறது. உள்ளத்தைப் பயிற்றுவித்து கண்களையும் கைகளையும் உடன்செல்ல வைத்தவனே வீரன்” என்றான். யாமா “நீங்கள் வீரரா?” என்றான். “என் கையில் வாளிருந்தால் பாரதவர்ஷத்தில் மிகச் சிலரே எனக்கு முன்னால் இமைக்கணத்திற்குமேல் எதிர்நிற்கமுடியும். அங்க நாட்டரசர் கர்ணன் மட்டுமே நான் அஞ்சுவதற்குரியவர்” என்றான்.

யாமா “வாள்?” என்றபின் “நீங்கள் வாளால் வெட்டினால் உங்களை உதைக்கவோ பிடித்துத் தள்ளவோ செய்யலாமே?” என்றான். பின்னர் “மிகப் பெரிய ஒரு வாளுடன் வந்தால்? உங்களால் எவ்வளவு பெரிய வாளை ஏந்தமுடியும்?” என்று கேட்டான். “நீ என் வாள் சுழற்சியை பார்த்ததில்லை” என்ற பூரிசிரவஸ் திரும்பிப்பார்த்து அறை மூலையில் இருந்த தன் பொதியைச் சுட்டி “அதற்குள் என் வாள் இருக்கிறது, எடு” என்றான். யாமா எழுந்து சென்று அவன் வாளை உருவி எடுத்தான். மிக மெல்லிய வாள் அவன் கையில் நீண்ட தாலப்பனையோலைச் சுவடிபோலிருந்தது. அவன் அதை பிடித்து வளைத்து “இது என்ன கொடி போலிருக்கிறது? காற்றில் வளையுமென்று தோன்றுகிறது” என்றான். “ஆம், இது வளையும் வாள். ஆகவே இதை நம்ரை என்று சொல்கிறார்கள். இது வாள்களில் பெண்” என்றான்.

“வளையும் வாளால் எப்படி வெட்டமுடியும்? இது உடைந்துவிடுமே?” என்றான். “பெண் எதையும் எதிர்கொள்வதில்லை. தவிர்ப்பதே அவள் வழி. நடனமே அவளுடைய போர்” என்றான் பூரிசிரவஸ். “இதை சர்ப்பினி என்றும் சொல்வதுண்டு. பாம்புகள் அனைத்துமே பெண்தான் என்று ஒரு சொல் உண்டு. நீ பாம்பை பார்த்திருக்கிறாயா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “இங்கு அவை இல்லை. கதைகளில் வணிகர்கள் சொல்வார்கள் அதைப்பற்றி. தோல் சவுக்கு போலிருக்கும். நீரோடைபோல வளைந்து வளைந்து ஓடும். நாவு அனலால் ஆனது. அதன் வாயில் ஒரு முள் உண்டு. அது நச்சுமுள். அது நம்மீது பட்டால் நாம் இறந்துவிடுவோம். அதன் செவிகள் உள்ளே புதைந்திருக்கும். ஓசைகேட்டு எழுந்தால் இருபக்கமும் செவிமடல்கள் விரியும்” என்றான் யாமா.

“ஓர் எருதை மெல்லிய தொடுகையால் கொன்றுவிடும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “அது வளையக்கூடியது தெரிந்துகொள்.” அவன் சொன்னது புரியாமல் யாமா வாளை அவனிடம் நீட்டினான். பூரிசிரவஸ் தன் காலிலிருந்த ஆடையை தள்ளிவிட்டு எழுந்தான். வாளை வாங்கி அதை பிடித்துக்கொண்டான். “என்னை பிடி பார்ப்போம்” என்றான். “உங்களையா?” என்று மைந்தன் கேட்டான். பூரிசிரவஸ் புன்னகையுடன் “ஆம்” என்றான். “நீ என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். எந்தப் படைக்கலத்தையும் பயன்படுத்தலாம்.” யாமா இரு கைகளையும் நீட்டிக்கொண்டு முன்னால் வர பூரிசிரவஸின் வாள் மெல்லிய மூச்சொலியுடன் மும்முறை சுழன்றது. யாமாவின் உடலிலிருந்து அவன் அணிந்திருந்த மென்மயிர் ஆடை முடிச்சுகள் வெட்டுப்பட்டு கீழே சரிந்தது. அவன் திகைத்து நின்றான்.

“உன் உடலில் ஏழு நரம்புகளை நான் இதற்குள் வெட்டியிருக்கமுடியும். நீ இன்னொரு அடியெடுத்து வைக்கமுடியாமல் இங்கேயே விழுந்து இறந்திருப்பாய்” என்றான் பூரிசிரவஸ். “உண்மையில் வெட்டுப்பட்டதேகூட தெரியாது. அலறவும் ஓசையெழாது. உடல் துடிக்கும். அதன் நிகர்நிலை இழப்பதால் பக்கவாட்டில் விழுந்து உடல் இழுத்துக்கொள்ளும். உள்ளே ஓடும் எண்ணமே அறுந்து சொல்துடிக்க அக்கணமே உயிர்பிரியும்” என்றான். “இமைக்கணத்தில் ஏழு இலக்குகளை என்னால் வெட்டமுடியும். என் வாளை எவரும் வெறும்விழிகளால் பார்க்கமுடியாது.”

எண்ணியிராக் கணத்தில் மைந்தன் மீண்டும் பூரிசிரவஸை பிடிக்க வந்தான். சீறலொலியுடன் சுழன்ற வாள் அவன் இடையிலிருந்த பட்டையை வெட்ட இடையாடை கீழே சரிந்தது. சீற்றத்துடன் அவன் கீழே கிடந்த கலங்களை எடுத்து பூரிசிரவஸ்மேல் வீசினான். அவன் உடல் இயல்பாக வளைந்து அனைத்தையும் தவிர்த்தது. யாமா திகைத்து நின்றான். “இதை எப்படி செய்கிறீர்கள், தந்தையே? இது மாயமா?” என்றான். “இது பயிற்சிதான். எந்தப் படைக்கலமும் உடலுக்கும் உள்ளத்துக்கும் அதை பழக்குவதில்தான் ஆற்றல்கொள்கிறது. நான் எண்ணுவதை செய்யும்படி இவ்வாளை பழக்கியிருக்கிறேன். ஆனால் படைக்கலம் நம்மால் தேர்ந்தெடுக்கப்படுவது அல்ல. நாம் பிறக்கும்போதே எந்தப் படைக்கலத்திற்குரியவர் நாம் என்பது உடன் முடிவாகி வருகிறது. நாமே அதை கண்டுகொள்கிறோம். நாம் அப்படைக்கலத்தை நம் உடலாகவே உணர்வோம்.”

“எந்தப் போர்க்களத்திலும் எவரையும் நான் வெட்டுவதில்லை. நான் கடந்து செல்லும்போது மெல்லிய வெள்ளி மின்னல்போல இந்த வாள் என்னைச் சுற்றி பறந்துகொண்டிருக்கும். தொலைவிலிருந்து பார்க்கையில் மின்னல் வளையங்களுக்குள் நான் செல்வது போலிருக்கும். என்னை சூழ்ந்திருப்பவர்கள் கண்ணுக்குத் தெரியாத எவராலோ உதைத்து வீழ்த்தப்பட்டவர்போல் விழுந்துகொண்டிருப்பார்கள். எவருக்கும் ஒரு சிறு முள்குத்தும் காயத்திற்குமேல் நான் அளித்ததில்லை. பாம்பு கடிப்பது போலத்தான். இறந்தவனைப் புரட்டித் தேடினாலொழிய எங்கு வாள் வெட்டியிருக்கிறதென்று கண்டுபிடிக்க முடியாது. பெரும்பாலும் நெஞ்சுக்கும் தலைக்கும் குருதி செல்லும் முதன்மைக் குழாய்களிலொன்றை துண்டித்திருப்பேன்” என்றான்.

யாமா கைகளை விரித்தபின் குனிந்து தன் ஆடையை எடுத்து அதன் பட்டையை பார்த்தான். அது வெட்டுண்டிருக்கும் விதத்தைப் பார்த்து “அது மிகக் கூர்மையான வாள் அல்லவா?” என்றான். “ஆம், எடையைவிட கூர்மை மேல். கூர்மையைவிட விசை மேல். விசையைவிட கோணம் மேலானது. கோணத்தை விட தருணம் முதன்மையானது” என்று பூரிசிரவஸ் சொன்னான். “இதை எனக்கு கற்றுத்தாருங்கள், தந்தையே” என்றான் யாமா. “இல்லை, நீ வைத்திருக்கும் அந்த முரட்டு கதையும் வேலுமே உனக்கு போதுமானது” என்றான் பூரிசிரவஸ். “இந்த மலையில் இக்கலை உனக்கு தேவையில்லை.”

யாமா “நான் ஊருக்குள் வந்தால் போரிடவேண்டாமா?” என்றான். “நீ என் ஊருக்குள் வரப்போவதில்லை” என்றான் பூரிசிரவஸ். யாமா சினத்துடன் “நமது குடியின் போரென்றால் நான் கலந்துகொள்ள வேண்டுமல்லவா?” என்றான். “நீ எனது குடியல்ல. நீ உனது அன்னையின் குடியை சார்ந்தவன். மைந்தா, அங்கு நிலத்தில் மனிதர்கள் தங்கள் கைகளாலும் படைக்கலங்களாலும் போரிடவில்லை. தங்கள் வஞ்சங்களாலும் நஞ்சுகளாலும் போரிடுகிறார்கள். அப்போருக்கு நீ ஒருபோதும் இறங்கிவரலாகாது. அவர்கள் எவரும் இங்கு வரமுடியாது. ஆகவே அவர்கள் உங்கள் பகைவர்களும் அல்ல. இங்கிரு, அங்குள்ள எதையும் விழையாதே, அங்குள்ள எதையும் எப்போதும் பெற்றுக்கொள்ளாதே. இது என் ஆணை.” யாமா மேலும் ஏதோ சொல்ல வாயெடுக்க “என் ஆணை” என்றான் பூரிசிரவஸ். அவன் தலைவணங்கி “ஆம், தந்தையே ” என்றான்.

tigஉணவுக்குப்பின் பூரிசிரவஸ் தன் குளிராடைகளை அணிந்து அதற்குமேல் பிரேமை அளித்த பெருந்தோலாடையை போட்டு உடலை குறுக்கிக்கொண்டு வெளியே இறங்கி தன் புரவியை பார்க்கச் சென்றான். அத்தோலாடை ஒரு கூடாரம்போல் அவன்மேல் கவிந்திருந்தது. உயிருள்ள கரடி ஒன்றை தன் தோளிலிட்டு கைகளைப்பற்றி தூக்கிக்கொண்டு செல்வதுபோல் அவனுக்குத் தோன்றியது. வீசிக்கொண்டிருந்த காற்றில் அத்தோலாடையின் மேலிருந்த மென்மயிர்ப்பரப்புகள் இளம் புல்வெளிபோல அலையடித்தன. காற்று அனைத்து மரங்களையும் யாழின் தந்திகள்போல் அதிரவைத்து ஓலத்தை எழுப்பியது. மலைகளின் மீது வான்திரை இழுத்துவிடப்பட்டிருந்தது.

அவன் சிறிய கதவைத் திறந்து உள்ளே சென்றபோது அங்கு கணப்பின் வெப்பம் இருப்பதை உணர்ந்தான். மூன்று குதிரைகள் ஒன்றுடன் ஒன்று உடல் ஒட்டி அவ்வெப்பத்தில் திளைத்தபடி நின்றிருந்தன. அவனுடைய மணம் பெற்று புரவி அவனை நோக்கி கனைத்தது. அவனைக் காணாது அது உளம் தவித்துக்கொண்டிருந்தது என்று அவன் உணர்ந்தான். அருகே சென்று அதன் கழுத்தையும் தாடையையும் முதுகையும் தடவிக்கொடுத்தான். அது தலைதிருப்பி அவன் கைகளை நக்கியது. பெருமூச்சுவிட்டபடி உடல் சிலிர்த்தது. அதன் வயிற்றை தொட்டுப்பார்த்தான். நன்கு உணவுண்டு நிறைந்திருப்பது தெரிந்தது. வாயிலிருந்து வழிந்த கோழை அது உண்டதை அசைபோட்டுக் கொண்டிருப்பதை காட்டியது. அவன் அதன் நெற்றியையும் மூக்கையும் வருடிக்கொடுத்தான். அதன் விழிகள் உருண்டன. அதன் விலாவிலும் முதுகிலும் தசைகள் விதிர்த்தன. அதனை பற்றிக் கொண்டிருந்த பதற்றம் மெல்ல வடிவதை அவ்வசைவிலிருந்து உணர்ந்தான்.

மீண்டும் மீண்டும் அதை தட்டி ஆறுதலளித்த பின் கதவைத் திறந்து வெளியே சென்றான். அதற்குள் அவன் உடல் முழுக்க குளிர் பரவி நடுக்கு தோன்றிவிட்டது. விரைந்த காலடிகளுடன் இல்லத்தை அடைந்து கதவைத் திறந்து உள்ளே சென்றான். யாமா எழுந்து வந்து அவன் மேலாடையைக் கழற்றி எடுத்து உதறி கணப்புக்குச் சற்று அப்பால் மாட்டினான். கணப்பை அணுகி இரு கைகளையும் காட்டி வெம்மையூட்டியபடி பூரிசிரவஸ் அமர்ந்தான். வெளியே அந்திக்கு முந்தைய வெளிச்சமிருப்பதை உணர்ந்து திரும்பிப்பார்த்து “இப்போது பொழுதென்ன?” என்றான். “இரவு எழுந்துவிட்டது” என்றான் யாமா. “ஆனால் வெளியே வெளிச்சமிருக்கிறது” என்றான். “கோடையில் இங்கு இரவு முழுக்கவே வெளிச்சமிருக்கும். பனிப் புயலடிக்கையில் சற்றே இருண்டு மீண்டும் வெளுக்கும்” என்றான் யாமா.

பூரிசிரவஸ் கைகளை உரசியும் உடலை திருப்பியும் தன்னை வெப்பப்படுத்திக்கொண்டு எழுந்தான். “படுத்துக்கொள்ளுங்கள், தந்தையே” என்றான் மைந்தன். “இப்போதுதான் தூங்கி விழித்தேன். மறுபடியும் துயில முடியுமா என்று தெரியவில்லை” என்றான் பூரிசிரவஸ். “நீங்கள் துயில்வீர்கள். உங்கள் உள்ளத்திற்கு துயில் தேவைப்படுகிறது.” “ஆம், இங்கு என்னுள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் சொல்நிரைகள் நின்றுவிட்டிருக்கின்றன. துவண்டுகிடக்கிறது அகம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “அங்கே நிகர்நிலத்தில் நாங்கள் காற்றை சொற்களால் நிரப்பி வைத்துக்கொண்டிருக்கிறோம். சொற்களையே மூச்சாக விட்டு சிந்தையென ஆக்கி அதில் திளைக்கிறோம். உளச்செயல் மலையேறுவதற்கிணையாக களைப்பூட்டுவது.”

“துயிலவிடாதது அதுதான்” என்று யாமா சொன்னான். “இங்குளோர் பெரும்பாலான பொழுதுகளில் துயில்கொண்டுவிடுகிறார்கள். குளிர்காலத்தில் ஒருநாளில் நான்கு நாழிகைப்பொழுதுகூட நாங்கள் விழித்திருப்பதில்லை. மிகுதியாகத் துயில்வதனால் மிகுதியாக வாழ்கிறோம்” என்றான். “துயில்வது என்பது இங்கிலாதாவது மட்டும்தான், தந்தையே. துயிலில் நாம் சென்றடையக்கூடிய இன்னொரு உலகம் இருக்கிறது. அங்கு அனைத்தும் பிறிதொருவகையில் அமைந்துள்ளன. அது மாறா வசந்தகாலம் திகழும் நிலம். எங்கும் மலர்கள் முளைத்து நிறைந்திருக்கும். இனிய பறவைகள்!” கைதூக்கி கண்மூடி தனக்குள் மகிழ்ந்தவனாக புன்னகைத்து “அழகிய பெண்டிர்! அங்கு நாம் முடிவிலாது வாழமுடியும். மனிதர்களுக்கு தெய்வங்கள் இரு உலகங்களை இவ்வாறு படைத்தளித்திருக்கின்றன” என்றான்.

பூரிசிரவஸ் “ஆம்” என்று புன்னகைத்தான். பிரேமை உள்ளிருந்து வந்து அவனிடம் “உங்களுக்கு படுக்கை ஒருக்கியிருக்கிறேன்” என்றாள். அவன் “நன்று” என்று எழுந்துகொண்டான். அவள் முன்னால் செல்ல அவன் பக்கவாட்டில் அந்தச் சிற்றறைக்குள் சென்றான். மரத்தாலான பெட்டி போன்றிருந்தது அப்படுக்கையறை. முன்னர் அவன் படுத்திருந்தது மைந்தனின் படுக்கை என்று தோன்றியது. அது சிறிதாக இருந்தமையால் வெம்மை தங்கியிருந்தது. முகப்பறையிலிருந்த கணப்பிலிருந்து வெங்காற்று வருவதற்கான மண்குழாய் அங்கே வாய் திறந்திருந்தது. கம்பளி மெத்தைக்குமேல் தெய்வங்களின் காப்புக்கென இறகுகளால் ஆன கொத்து ஒன்று தொங்கியது.

அவன் மெத்தையில் படுத்து தன்மேல் மென்மயிர் போர்வையையும் அதற்குமேல் தோல் போர்வையும் எடுத்து போர்த்திக்கொண்டான். உள்ளே கைகளையும் கால்களையும் நடப்பதுபோல் அசைத்து வெம்மையை உருவாக்கினான். பெரிய குடுவையில் நீருடன் பிரேமை அறைக்குள் வந்தாள். அதன் கதவை மூடி தாழிட்டபின் குடுவையை அருகே வைத்துவிட்டு முழந்தாளிட்டு அவனருகே நெருங்கி போர்வையைத் தூக்கி உள்ளே நுழைந்து தன் கைகளாலும் கால்களாலும் அவனை பற்றிக்கொண்டாள். அவன் ஏதும் சொல்வதற்குள் இதழோடு இதழ் பொருத்தி முத்தமிடத் தொடங்கினாள்.

அவன் அவளை தன் உடலுடன் இறுக கட்டிக்கொண்டான். அவள் காதில் “உன்னைப் பார்த்த கணம் முதல் காமம் கொண்டேன்” என்றான். “ஆம், தெரிந்தது” என்று அவள் சொன்னாள். பின்னர் அவனை வெறிகொண்டவள்போல் முத்தமிட்டாள். தன்மேல் பெரிய துளிகளாக மழை பொழிவதுபோல் அவன் உணர்ந்தான். மெய்ப்பு கொண்டு கைகால்கள் நடுங்க அவளை தழுவினான். அவளுடைய பெரிய உடலை அவனால் வளைத்து அணைக்க முடியவில்லை. அவள் அவன் தலையை எடுத்து தன் மார்புகளுக்கு நடுவே வைத்து புதைத்தபடி அவன் செவியில் “எனக்கு இன்னொரு மைந்தன் வேண்டும்” என்றாள்.

“ஆனால் நான் சற்று முதிர்ந்துவிட்டேன்” என்று அவன் சொன்னான். “அதனால் என்ன? நான் விழைகிறேன். என் விழைவு மிகப் பெரியது. அதை தெய்வங்கள் அறியும்” என்று அவள் சொன்னாள். “பிறிதொரு மைந்தன்…” என்று அவன் முகம் தூக்கி அவளைப் பார்த்து சொன்னான். “ஆம், எனக்கு வேண்டும். எனக்கு வேண்டும். எனக்கு வேண்டும்” என்று அவள் வெறிகொண்டவளாக முனகினாள். பெண்களின் கண்களில் எழும் அந்த வெறியும் மயக்கும் தோன்றின. அவள் வாயில் இனிய பச்சைக்குருதி மணம். தோள்களில் எழுந்த வெம்மைமிக்க தோல்மணம். அவள் மெல்ல மெல்ல இனிய, கட்டற்ற விலங்கென மாறிக்கொண்டிருந்தாள். மிக ஆழமான, மிகமிகத் தனிமையான குகை ஒன்றுக்கு அவனை கவ்விக்கொண்டு சென்றாள்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 20

tigபிரேமை “நம் மைந்தன் பெருவீரன். காட்டெருதுகளை தோளில் தூக்கி வருபவன். ஒருமுறை சேற்றில் சிக்கிய பொதிவண்டியையே தூக்கி அப்பாலிட்டான். எங்கள் குடியின் பேருடலன். உங்கள் பால்ஹிக மூதாதையை ஒருநாள் அவன் தூக்கி மண்ணில் அறைவான்” என்றாள். பூரிசிரவஸ் “நன்று, நான் விழைந்த வடிவம்” என்றான். கால்கள்மேல் தோல்போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டு அவன் அமர்ந்திருந்தான். பிரேமை சிறுமணையை அவன்முன் இட அதன்மேல் சைலஜை ஊன்துண்டு இட்டு கொதிக்கவைத்த சோளக்கஞ்சியை மரக்கோப்பையில் கொண்டு வந்து வைத்தாள். மரக்குடைவுக் கரண்டியால் அவன் அதை அள்ளி உறிஞ்சினான். இனிப்பாக இருந்தது. தலைதூக்கி “இது வெல்லமிட்ட ஊன் கஞ்சியா?” என்றான்.

முகம்மலர “ஆம், இந்த மலைப்பகுதியில் இப்போது இதுதான் விரும்பப்படும் உணவு” என்றாள் சைலஜை. “முன்பு இன்கஞ்சி இருந்ததில்லையா?” என்றான். “இங்கே இனிப்பே இருந்ததில்லை என இப்போது தேனும் வெல்லமும் வந்தபின்னரே தெரிகிறது. நாங்கள் சோளத்தின் மெல்லிய சுவையையே இனிப்பு என்று எண்ணிக்கொண்டிருந்தோம்” என்று பிரேமை சொன்னாள். பூரிசிரவஸ் அதன் வெம்மையை உடலெங்கும் உணர்ந்தான். “நன்று” என தலையசைத்தான். அவன் குடிப்பதை அவள் நோக்கி அமர்ந்திருந்தாள். சைலஜையும் அருகே நிற்க அவள் “போடி” என்றாள். அவள் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள்.

“ஊரில் உங்களுக்கு எத்தனை மனைவியர்? எவ்வளவு குழந்தைகள்?” என்று அவள் கேட்டாள். “நான்கு மனைவியர், ஏழு மைந்தர்கள். நான் என் குலத்தில் ஒவ்வொரு குடிக்கும் ஒரு பெண்ணென கொள்ளவேண்டியிருந்தது” என்றான் பூரிசிரவஸ். “ஆம், அங்கு அதுதான் வழக்கமென்றார்கள். அந்த மைந்தர்கள் எப்படிப்பட்டவர்கள்? என் மைந்தனுடன் நிகர்நிற்க முடியுமா?” என்றாள். “ஏழு மைந்தரையும் உனது மைந்தன் ஒற்றைக்கையால் அள்ளித்தூக்கிவிட முடியும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “என் கனவுகள் இங்கு ஒரு மைந்தனாயின. என் அச்சங்களும் தயக்கங்களும் விழைவுகளும் அங்கு ஏழு மைந்தராயின” என்றான்.

“இப்படித்தான் நூல்களில் உள்ள வரிகளை சொல்கிறீர்கள்” என்று சொன்ன பிரேமை “நான் சொன்ன எதுவும் என் அன்னைக்கோ தங்கைக்கோ இதுவரை புரிந்ததில்லை. இப்போது உங்கள் பேச்சைக் கேட்டால் திகைப்பார்கள்” என்றாள். “தங்கைக்கு குழந்தைகள் இல்லையா?” என்றான் பூரிசிரவஸ். “அவளுக்கு மூன்று மைந்தர்கள். அவர்கள் தந்தையின் ஊருக்கு வேட்டைபயிலும்பொருட்டு சென்றுள்ளனர்” என்றாள் பிரேமையின் அன்னை. பூரிசிரவஸ் அந்த உலகியல் உரையாடலினூடாக அக்குடிக்குள் தன்னை முற்றாக பொருத்திக்கொண்டான். அன்னை “பேசிக்கொண்டிருங்கள்” என்று சொல்லி அறைக்குள் சென்றாள்.

“நான் நீர் எடுத்து வைக்கிறேன். இவர் நீராடி ஆடை மாற்ற வேண்டுமல்லவா?” என்றாள் சைலஜை உள்ளிருந்து. “சொன்னால்தான் செய்வாயா?” என்றாள் பிரேமை. பூரிசிரவஸ் தனியாக அவளுடன் அமர்ந்தபோது நெஞ்சு மீண்டும் படபடக்கத் தொடங்கியதை உணர்ந்தான். அவள் தோள்களையும் கழுத்தையுமே அவன் விழிகள் பார்த்தன. எத்தனை அணுக்கமானது. ஒவ்வொரு மயிர்க்காலும் நினைவில் நிற்குமளவுக்கு அவன் அறிந்தது. அப்பொழுதும் அதே பெருங்காமம் அவள்மேல் எழுவதை உணர்ந்தான். ஆணென்று நின்று தான் விரும்பிய ஒரே பெண். அரசனென்றும் தொல்குடியினனென்றும் விழைந்ததும் அடைந்ததுமான பெண்டிர் பிறிதொருவருக்குரியவர்கள். எனக்குரியவள் இவள் மட்டுமே.

அவன் விழிகளைப் பார்த்து அவள் விழிகள் மாறுபட்டன. “இங்கு எவ்வளவு நாள் இருப்பீர்கள்?” என்றாள். “சிலநாட்கள்… நான் செல்லவேண்டும்” என்றான். அவள் மெல்ல கிளுகிளுத்துச் சிரித்தபடி “நான் நாம் தனித்திருந்ததை நினைத்துக்கொண்டே இருப்பேன். பிறகு எனக்கு ஐயம் வந்தது. அவ்வாறு தனித்திருந்ததை நினைத்தால் குழந்தை பிறந்துவிடுமா என்று. ஏனெனில் நிறைய முறை கனவுகளில் நாம் ஒன்றாக இருந்திருக்கிறோம். ஆகவே குலப்பூசகனிடம் சென்று கேட்டேன். கனவில் நிகழ்வதனால் எவரும் கருவுறுவதுமில்லை, குழந்தை பிறப்பதுமில்லை என்று அவர் சொன்னார். நினைப்பதனால் நினைப்பிலேயே குழந்தை பிறக்குமல்லவா என்று நான் கேட்டேன். ஆமாம், அந்தக் குழந்தை பிறர் விழிக்குத் தெரியாமல் உன்னுடன் இருந்துகொண்டே இருக்கும் என்றார்.”

ஒழுக்கென பெருகிய சொற்கள் அவளை கொண்டுசென்றன. அவன் தொடையைத் தட்டி அழைத்து அழைத்து சொல்லிக்கொண்டே சென்றாள். “கனவில் பிறந்த குழந்தை கனவில் வாழும் என்றார். எனக்கு கனவில் இன்னொரு மைந்தன் இருக்கிறான். அவன் மிகச் சிறியவன். பெரியவனை என்னால் இப்போதெல்லாம் அணுகவே முடியவில்லை. சிறியவன் மேலும் அன்பானவன். உங்களைப்போலவே மென்மையாகவும் ஏதும் புரியாமலும் பேசுபவன். எனக்கு அவனைத்தான் மேலும் பிடித்திருக்கிறது” என்றாள். “இன்னும் நிறைய குழந்தைகள் வேண்டும்… ஏராளமான குழந்தைகள்.” பூரிசிரவஸ் “எவ்வளவு குழந்தைகள்?” என்று கேட்டான். “நூறு” என்று அவள் சொன்னாள். பத்து விரல்களைக் காட்டி “நூறு குழந்தைகள். நான் தனியாக படுத்திருக்கும்போது என்னைச் சுற்றி சிறுகுருவிகள்போல ஒலியெழுப்பி அவர்கள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். நூறு குழந்தைகள்” என்றபின் அவனை நோக்கி குனிந்து குரலைத் தாழ்த்தி “அவ்வளவு முறை நாம் ஒன்றாக இருந்திருக்கிறோம் தெரியுமா?” என்றாள்.

அவன் அவளிடம் தன் உணர்வுகளை சொல்ல விரும்பினான். நீயே என் ஒரே பெண் என்று. வெறும் ஆணாக இருப்பதை அஞ்சியே உன்னை தவிர்த்தேன் என்று. ஆனால் அவன் என்ன சொன்னாலும் அவள் புரிந்துகொள்ளப் போவதில்லை என்று தெரிந்தது. ஒன்றுமட்டும் சொல்லாமலிருக்க இயலாதென்று தெரிந்தமையால் அவன் அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு “நான் மெய்யாகவே ஒன்று சொன்னால் நீ அதை நம்பவேண்டும்” என்றான். “என்ன?” என்று அவள் கேட்டாள். ஆனால் அவள் தான் மேலும் சொல்லவிருக்கும் சொற்களால் கண்கள் மின்ன புன்னகை கொண்டிருந்தாள். “இப்புவியில் நான் அணுக்கமாக உணர்ந்த பிறிதொரு உயிர் நீ மட்டுமே. அன்பென்றும் காதலென்றும் நான் அறிந்தது உன்னிடம் மட்டுமே. பிறிதெவருக்கும் நான் கணவனோ காதலனோ அல்ல” என்றான். அவள் விழி கனிந்து “அது எனக்குத் தெரியும்” என்றாள். “எப்படி தெரியும்?” என்று அவன் கேட்டான். “எப்படியோ தெரியும்” என்று சொல்லி “நீங்கள் எவ்வளவு நாள் இங்கிருப்பீர்கள்?” என்று கேட்டாள். முன்னரே சொன்னது அவள் உள்ளத்தை சென்றடைந்திருக்கவில்லை. “சில நாட்கள். நான் உடனே திரும்பவேண்டும். அரசுப் பணிகள் உள்ளன” என்றான். அதுவும் அவள் உள்ளத்தை சென்றடையவில்லை.

வெளியே புரவிக்குளம்படி கேட்டது. “வந்துவிட்டான்!” என்றபடி அவள் எழுந்து வெளியே ஓடினாள். அவன் “யார்?” என்று கேட்டான். ஆனால் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. “நம் மைந்தன்” என்றபடி அவள் வெளியே சென்றாள். பூரிசிரவஸ் மெத்தையில் அமர்ந்திருப்பதா எழுந்து நிற்பதா என்று தெரியாமல் தவித்தான். பின்னர் தன்னை அடக்கிக்கொண்டு அசையாது அமர்ந்திருந்தான். புரவியிலிருந்து மைந்தன் இறங்குவதும் அவள் மலைமொழியில் அவனுடன் உரக்கப் பேசுவதும் அவன் குறுமுழவின் கார்வைகொண்ட குரலில் அவளுக்கு மறுமொழி உரைப்பதும் கேட்டது. அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. அவள் மேலும் மேலும் உரக்க நகைப்பதும் கொந்தளிப்பும் கொப்பளிப்புமாக பேசுவதும்தான் புரிந்தது. உள்ளே வந்து அவன் என்ன கேட்கப்போகிறான் என்று அவன் எண்ணினான். உடனே அதை எண்ணுவதில் பொருளே இல்லை, எதுவானாலும் அத்தருணத்திற்கு முற்றாக தன்னை அளித்துக்கொள்வதே செய்யக்கூடுவது என்று தோன்றியது.

மைந்தன் தன் நெடிய உடலைக் குனித்து இரண்டாக மடிந்தவன்போல சிறிய வாயிலினூடாக உள்ளே வந்தான். பூரிசிரவஸ் அவனுடைய கால்களைத்தான் பார்த்தான். ஃபூர்ஜ மரத்தின் அடிக்கட்டைபோல் உறுதியாக மண்ணில் பதிந்தவை. பெருநரம்புகள் புடைத்து ஆற்றலின் வடிவென்றானவை. விழிதூக்கி வான்தொடுவதுபோல் நின்றிருந்த மைந்தனை பார்த்தான். இரண்டு பெரிய கைகளும் சற்றே தூக்கியவைபோல் நின்றன. எவ்வளவு பெரிய விரல்கள் என்று சிறுவனைப்போல அவன் உள்ளம் வியந்தது. தோளில் கிடந்த கன்னங்கரிய நேர்குழல். சிறிய விழிகள். கீறப்பட்டவை போன்ற உதடுகள். விரிந்த தாடை. சுண்ணக்கல்லின் நிறம். முகத்தில் மீசை அரும்பியிருக்கவில்லை. புகைபோல மென்மயிர் படிந்திருந்தது. அவன் தன் உள்ளம் அச்சத்தில் துடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தான். சினம்கொண்டு எழுந்து அவன் தன் நெஞ்சில் மிதித்தால் அக்கணமே குலைவெடித்து குருதிபீறிட அங்கே விழுந்து உயிர்துறக்கவேண்டியதுதான். எண்ணும் மறுசொல் எழவும் பொழுதிருக்காது.

அவன் முன்னால் வந்து குனிந்து பூரிசிரவஸின் கால்களைத்தொட்டு தலைமேல் சூடி “வணங்குகிறேன், தந்தையே” என்றான். பூரிசிரவஸ் தன் நடுங்கும் கைகளை அவன் தோளில் வைத்தான். மனித உடலை தொட்டதுபோல் தோன்றவில்லை. எருதின் புள்ளிருக்கையை தொட்டது போலிருந்தது. மானுடத் தசைகளுக்கு இத்தனை இறுக்கம் இருக்க இயலுமா என்ன? இளைய பாண்டவர் பீமனையோ அஸ்தினபுரியின் அரசர் துரியோதனனையோ அங்க நாட்டரசர் கர்ணனையோ ஒரே வீச்சில் அடித்து மண்ணில் வீழ்த்திவிட இவனால் முடியும். ஒருவேளை இப்புவியில் இன்று வாழ்வதிலேயே மாபெரும் மல்லன். மலையிறங்கி வந்தால் அனைத்து அவைகளிலும் அரசர்கள் எழுந்து பணியும் பேருருவன். பூரிசிரவஸ் கண்கள் நிறைந்து கன்னத்தில் வழிந்த விழிநீருடன் நடுங்கும் உதடுகளைக் கடித்தபடி நோக்கிக்கொண்டிருந்தான்.

“வாழ்த்துங்கள், தந்தையே” என்று அவன் சொன்னான். பூரிசிரவஸ் அவன் தலையில் கைவைத்து “என் வாழ்த்துக்கள் எப்போதும் உனக்குண்டு, மைந்தா. நினைவிலேயே உன்னை ஒவ்வொரு நாளும் வாழ்த்தியிருக்கிறேன்” என்றான். “ஆம், நான் அதை அறிவேன். என் கனவுகளில் நீங்கள் வந்து விளையாடியதுண்டு. இதே வடிவையே நான் பார்த்திருக்கிறேன்” என்றான் யாமா. பூரிசிரவஸ் “எப்படி?” என்றான். “அன்னை கீழிருந்து வந்த சிலரை சுட்டிக்காட்டி இவர்போல் காது, இவர்போல் மூக்கு என்று சொல்வாள். இணைத்து நான் உருவாக்கிய அதே முகம் தாங்கள் கொண்டிருப்பது” என்றான். அவனிடம் நெகிழ்வோ துயரோ வெளிப்படவில்லை. நேரடியான உவகை மட்டுமே இருந்தது. அது அவன் முகத்தில், தோள்களில் எங்கும் வெளிப்பட்டது.

பூரிசிரவஸ் “அது நானேதான். நான் உன்னிடம் வந்துகொண்டே இருந்திருக்கிறேன்” என்றான். அவன் திரும்பி பிரேமையிடம் “தந்தை வந்திருக்கிறார் என்று இவ்வூருக்கு தெரியுமா?” என்று கேட்டான். அப்பால் நின்றிருந்த பிரேமை “தெரியாது. முதுபால்ஹிகர் வீட்டுக்குச் சென்றுவிட்டு இங்கு வந்திருக்கிறார். அவர்கள் எவரிடமும் சொல்லமாட்டார்கள்” என்றாள். “நான் சொல்கிறேன். தந்தை வரப்போகிறார் என்று சொல்லும்போது இங்குள்ளவர்கள் சிரிப்பதுண்டு. இப்போது சிரிக்கட்டும்” என்றபின் எதிர்பாராத கணத்தில் அவன் பூரிசிரவஸை இரு கைகளாலும் தூக்கிக்கொண்டான். “என்ன செய்கிறாய்? என்ன செய்கிறாய்!” என்று கூவி பூரிசிரவஸ் அவன் தோளில் அறைந்தான். ஆனால் சிறு பாவையென அவனை வெளியே கொண்டுசென்று தலைக்குமேல் தூக்கிச் சுழற்றியபடி உரத்த குரலில் “எல்லோரும் கேளுங்கள்! தந்தை வந்திருக்கிறார்! என் தந்தை வந்திருக்கிறார்! கேளுங்கள் ஊராரே! நோக்குக குடிகளே!” என்று அவன் கூவினான். பூரிசிரவஸ் நகைத்தபடி “என்ன செய்கிறாய்? அறிவிலி… விடு. விடு என்னை” என்று அவன் கையிலிருந்து கைகால்களை உதைத்து கூச்சலிட்டான்.

tigமலையேறியதிலிருந்தே உடல் குளிருக்கு எதிராக இழுத்துக் கட்டப்பட்ட நாண்போல் நின்றிருந்ததை சிறிய குளியலறைக்குள் கொதிக்கும் வெந்நீரால் உடலை கழுவிக்கொள்ளத் தொடங்கியபோதுதான் உணர்ந்தான். முதலில் தசைகள் அதிர்ந்து உடல் மெய்ப்பு கொண்டது. பின்பு இறுகியிருந்த குருதி உருகியதுபோல் உடலெங்கும் வெம்மை பரவியது. சில கணங்களுக்குள் மென்மையான கள்மயக்குபோல் ஒரு உவகை நிலை அவன் உடலில் பரவியது. சிறிதாக நீரை அள்ளி உடலில் விட்டுக்கொண்டே இருந்தான். குளியலறைக்கு வெளியே நின்று யாமா “மேலும் நீர் கொண்டுவந்திருக்கிறேன்” என்றான். “போதும்” என்று பூரிசிரவஸ் சொல்வதற்குள் அவனே கதவைத் திறந்து உள்ளே வந்து நீரை மரத்தொட்டியில் ஊற்றினான்.

பூரிசிரவஸ் ஆடையின்றி நீராடிக்கொண்டிருந்ததனால் திடுக்கிட்டு பின்னால் திரும்பிக்கொண்டான். ஆனால் யாமா எத்தயக்கமும் இல்லாமல் நின்று “மறுபடியும் நீரை கொதிக்கவைத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் கண்கள் எரியத் தொடங்கும்வரை குளிக்கலாம்” என்றான். பூரிசிரவஸ் “சரி” என்றான். அவன் இயல்பாக அவனுக்கு முன்னால் வந்து இன்னொரு கொப்பரையை எடுத்து “இதைக்கொண்டு நீரை அள்ளி ஊற்றுங்கள். ஒவ்வொரு குடுவை நீரும் உடல்முழுக்க படவேண்டும். உடலில் ஒரு பகுதி குளிர்ந்தும் இன்னொரு பகுதி வெம்மைகொண்டும் இருக்கக்கூடாது” என்றான். தன் ஆடையின்மையை அவன் பார்த்துவிட்டது அவனை விதிர்க்கச் செய்தது. ஆனால் யாமா அதை பொருட்டாக எண்ணவில்லை. “தசைகளை உருக்கி திரும்பவும் அமைப்பது மிக நன்று. நான் மாதமொருமுறை நீராடுவேன்” என்றான்.

பூரிசிரவஸ் சில கணங்களுக்குப்பின் அவனை நோக்கி நன்றாகவே திரும்பி “ஆம், இனிது” என்றான். யாமா “உங்களுக்கு உடல் தேய்த்துவிடவேண்டுமென்றால் நான் அதை திறம்பட செய்யமுடியும். இங்கு தேவதாரு மரப்பட்டையிலிருந்து எடுத்த நார்ச்சுருள்கள் உள்ளன. நானே என் கையால் உரித்து உலரவைத்தவை. குளித்துமுடித்தபின் உடல் நறுமணம் கொண்டிருக்கும்” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான். மைந்தன் வெளியே சென்று மரப்பட்டைச் சுருளைக் கொண்டுவந்து அவன் உடலை மென்மையாக உரசி தேய்த்துவிட்டான். அவன் கைகள் தன் உடலில் படும்போதெல்லாம் பூரிசிரவஸ் புரவி சிலிர்ப்பதுபோல் மெய்ப்பு கொண்டான். பின்னர் அவனே கொதிக்கும் நீரை அள்ளி பூரிசிரவஸின் உடலில்விட்டு நீராட்டினான்.

கண்கள் எரிந்து வாய்க்குள்ளும் மெல்லிய எரிச்சல் தொடங்கும் வரை பூரிசிரவஸ் நீராடிக்கொண்டிருந்தான். பின்னர் குளியலறையிலேயே தலையையும் உடலையும் நன்கு துவட்டி அங்கேயே ஆடை அணிந்து வெளியே வந்தான். கொல்லும் பசி எழுந்து அவன் உடலை பதற வைத்தது. “உணவு ஒருங்கிவிட்டது” என்று பிரேமை சொன்னாள். கம்பளி மெத்தைமேல் அவன் அமர சிறுமேடை ஒன்றை அவன் முன்னால் போட்டு அதில் மரக்கிண்ணத்தில் ஊன் சாறு கொண்டுவந்து வைத்தாள். கொதித்து குமிழியிட்டுக்கொண்டிருந்தது அது. மரக்கரண்டியால் அதை அள்ளி மெல்ல அவன் உண்டான். அன்றைய உணவு அது என்றுதான் அவன் எண்ணினான். உணவுக்கு முந்தைய தொடக்கம் மட்டும்தான் என்பது அவன் பாதி அருந்திக்கொண்டிருக்கும்போதே பெரிய மரத்தாலங்களில் சுடப்பட்ட ஊனுடனும் கிழங்குகளுடனும் ஆவிபறக்க வேகவைக்கப்பட்ட அப்பங்களுடனும் பிரேமையும் மைந்தனும் வரும்போதுதான் தெரிந்தது. “எவருக்கு இத்தனை உணவு?” என்று அவன் திகைப்புடன் கேட்டான். “தங்களுக்குத்தான், தந்தையே” என்றான் யாமா. “நான் இந்த ஊன்சாறையே உணவென அருந்துபவன்” என்றான் பூரிசிரவஸ். “இவ்வளவா? இதை உண்டால் உங்களால் இங்கு ஒருபாறையைக்கூட ஏறிக்கடக்க முடியாது” என்றான் யாமா.

யாமாவும் பிரேமையும் அவனுக்கு இருபுறங்களிலுமாக அமர்ந்து அள்ளி அள்ளி உணவை வைத்தனர். அன்று உண்டதுபோல் வாழ்நாளில் அவன் எப்போதும் உண்டதில்லையென்றாலும் “இவ்வளவு குறைவாக உண்டால் நீங்கள் விரைவிலேயே இறந்துவிடுவீர்கள்” என்றான் மைந்தன். “குறைவாக உண்பதே உயிர்வாழ்வதற்குத் தேவை என்று எங்கள் ஊரில் சொல்கிறார்கள்” என்றான் பூரிசிரவஸ். “நாங்கள் மிகுதியாக உண்கிறோம். நாங்கள் நெடுங்காலம் உயிர் வாழவில்லையா?” என்று யாமா கேட்டான். “இது வேறு உலகம்” என்று பூரிசிரவஸ் புன்னகைத்தான்.

உண்டு முடித்து மைந்தனின் கைபற்றி எழுந்தபோது அவன் கையை விட்டால் எங்காவது விழுந்துவிடுவோம் என்று தோன்றியது. விழுந்த இடத்தில் மண் குழிந்து பள்ளம் உருவாகுமென்று எண்ணியபோது புன்னகை வந்தது. துயில் கொள்ளவேண்டும் என்று அவன் சொன்னான். “ஆம், உணவுக்குப்பின் துயில்வது நல்லது. உடலுக்குள் வாழும் மலைத்தெய்வங்கள் நம் கைகளிலிருந்தும் கால்களிலிருந்தும் கிளம்பிச்சென்று அவ்வுணவை தாங்கள் உண்கின்றன” என்று யாமா சொன்னான்.

வெளியே குளிர்காற்று வீசத்தொடங்கியிருந்தது. சாளரங்கள் அனைத்திலும் சீழ்க்கை ஒலி கேட்டது. பூரிசிரவஸ் தரையிலிட்ட கம்பளி மெத்தையில் படுத்தான். அவனுக்குமேல் கம்பளிப் போர்வையை போர்த்தி அதற்குமேல் மென்மயிர் படர்ந்த தோல் போர்வையை போர்த்தி “துயில்க, தந்தையே!” என்றான் யாமா. அவன் அப்போதுதான் புரவியிலிருந்து எடுத்த தனது பொதியை கொண்டுவரவில்லை என்று நினைவுகூர்ந்தான். “எனது பரிசுப்பொதி மூத்த பால்ஹிகர் இல்லத்தில் உள்ளது. அதை எடுத்துவரச் சொல்லவேண்டும். அதிலிருப்பவை உனக்கும் உன் அன்னையருக்கும் உரியவை” என்று அவன் சொன்னான். “நான் எடுத்துக்கொள்கிறேன்” என்றான் மைந்தன். மேலும் பேச முடியாத அளவுக்கு அவன் நா தளர்ந்தது. தாடை வலுவிழந்து கீழே விழுந்து தன் மூச்சொலியை தானே கேட்டு, மயங்கும் எண்ணங்களில் எங்கோ சென்றுகொண்டிருந்தான்.

அவன் மைந்தனையே நோக்கிக்கொண்டிருந்தான். யாமா அவனருகே அமர்ந்தான். அவன் கைநீட்டி மைந்தனின் கால்களை தொட்டான். “என்றாவது என்மேல் சினம் கொண்டிருக்கிறாயா?” என்றான். “சினமா? எதற்கு?” என்று யாமா கேட்டான். அவனுடைய தெளிந்த விழிகளை பூரிசிரவஸ் நோக்கிக்கொண்டிருந்தான். ஐந்து அகவை நிறைந்த சிறுவனுக்குரியவை அவை என்று எண்ணினான். அவன் கண்கள் மெல்ல சரிந்தன. அஸ்தினபுரியின் ஓசைகள் வழக்கம்போல அவனை சூழ்ந்துகொண்டன. அவையில் சகுனி பேசிக்கொண்டிருந்தார். அவன் ஒரு காவல்மாடத்தின் உச்சியில் நின்று படைகள் இடம்மாறுவதை நோக்கிக்கொண்டிருந்தான். முரசுகள் ஒலித்துக்கொண்டே இருந்தன. ஆற்றங்கரையில் ஒருவன் புரவியை நிறுத்திவிட்டு அவனை நோக்கி வந்தான். “இந்த ஆற்றை நாம் கடக்கமுடியுமா?” என்றான். “ஆம், நாமிருவரும் சேர்ந்து கடப்போம்” என்றான் பூரிசிரவஸ்.

திடுக்கிட்டு அவன் விழித்துக்கொண்டான். கைகால்கள் இழுத்துக்கொள்வதுபோல நடுங்கின. எழுந்து திரும்பிய யாமா திகைத்து “என்ன? ஏன் நடுங்குறீர்கள், தந்தையே?” என்றான். “ஒரு கனவு” என்றான் பூரிசிரவஸ். “என்ன கனவு?” என்று அவன் கேட்டான். “வழக்கமானதுதான்… இவ்வாறு பலமுறை நான் இரவுகளில் விழித்துக்கொள்வேன்” என்றான் பூரிசிரவஸ். “என்ன கனவு?” என்று அவன் மீண்டும் கேட்டான். “என் கைகள் வெட்டப்படுவதுபோல. நெடுநாட்களாகவே அக்கனவு என்னை துரத்துகிறது” என்றான் பூரிசிரவஸ். “நீ செல். நான் துயில்கொள்கிறேன்.” யாமா அமர்ந்து அவன் தலையை எடுத்து தன் தொடைமேல் வைத்துக்கொண்டான். “துயில்க, தந்தையே… இனி அக்கனவு வராது” என்றான். பெருமரம் ஒன்றின் வேர்ப்புடைப்பில் தலைவைத்தது போலிருந்தது.

மெய்யாகவே தன்னுள் எப்போதும் இருந்துகொண்டிருந்த பதைப்பு ஒன்று அகல்வதை பூரிசிரவஸ் உணர்ந்தான். அது வெறும் தோன்றலா? ஆனால் அத்தருணத்தில் மிகவும் எளிதாக மாறிவிட்டிருந்தது உள்ளம். பனியில் நடந்து இளஞ்சூடான இல்லத்திற்குள் நுழைந்துவிட்டதுபோல. எங்கோ பனிக்காற்றின் ஓசை கேட்டது. கூரை படபடத்து அமைந்தது. அவன் இமைகள் சரிந்தன. சிறுமைந்தனாக மாறிவிட்டிருந்தான். மிகப் பெரிய வெண்ணிறமான மரத்தின் அடியில் சோமதத்தரின் மடிமேல் அவன் படுத்திருந்தான். வாயில் பீதர்நாட்டு இனிப்பொன்றை மென்றுகொண்டிருந்தான். காட்டின் ஓசைகள் சூழ்ந்திருந்தன. அவன் துயில்கொண்டதும் கண்கள் மேலும் காட்சிகொண்டன. அந்த வெண்மரம் படமெடுத்து நின்ற மாபெரும் நாகம் என தெரிந்தது. அசையாது குடைபிடித்து அது நின்றிருந்தது.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 19

tigபூரிசிரவஸ் புரவியை திருப்பியபடி சிற்றூருக்குள் நுழைந்து சிறுமண் பாதையில் தளர்நடையில் புரவியை நடத்திச் சென்றான். காலையில் மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளின் குளம்புகள் பட்டு உருண்ட கற்களும், இடம் பெயர்ந்ததன் வடுக்களும் பதிந்த செம்மண் பரப்பு இரவின் பனியீரம் உலராமல் நீர் வற்றிய ஓடை போலிருந்தது. இளவெயில் அது காலையென உளமயக்களித்தது. ஆனால் அப்போது உச்சிப்பொழுது கடந்திருந்தது. மலைகளில் எப்போதுமே இளவெயில்தான் என்பதை எண்ணத்தால் உருவாக்கி உள்ளத்திற்கு சொல்லவேண்டியிருந்தது.

அவன் தன் நீள்நிழலின்மேல் புரவியால் நடந்து தொலைவில் தெரிந்த ஊரை நோக்கி சென்றான். கல்லடுக்கிக் கட்டப்பட்ட உயரமான புகைக்குழாய்களில் இருந்து இளநீலச்சுருள்கள் எழுந்து வானில் கரையாமல் நின்றன. நாய் குரைப்பின் ஓசை தொலைவில் கேட்டுக்கொண்டிருந்தது. வெள்ளை பூசப்பட்ட சுவர்களின்மேல் விழுந்த சாய்வெயில் அவற்றை கண்கூசும் சுடர்கொள்ளச் செய்தது. மட்கும் வைக்கோல்களின் மணமும் சாணியின் மணமும் வெயிலில் ஆவியெழக் கலந்த காற்று சூழ்ந்திருந்தது. மிக அப்பால் ஓர் ஓடை ஆழத்தில் விழும் ஓசை.

இரண்டு முதிய பெண்டிர் மூங்கிலால் செய்யப்பட்ட தோல்கூடைகளில் மலைகளில் சேர்த்த காளான்களையும் கனிகளையும் ஏந்தியபடி சரிவிறங்கி வந்து பாதையில் இணைந்துகொண்டனர். அவர்களிலொருத்தி கொல்லப்பட்ட மலைக்கீரிகள் இரண்டை ஒரு கொடியில் கோத்து வலக்கையில் வைத்திருந்தாள். கண்மேல் கைவைத்து அவர்கள் பூரிசிரவஸை பார்த்தனர். அவன் அருகே வந்ததும் முகமனேதுமில்லாமல் “எவர்?” என்றொருத்தி கேட்டாள். ஆனால் அவள் முகம் சிரிப்பில் மலர்ந்திருந்தது. பூரிசிரவஸ் “வணங்குகிறேன், அன்னையரே. நான் கீழே பால்ஹிக நாட்டிலிருந்து வருகிறேன். இவ்வூரில் என் மூதாதை ஒருவர் இருக்கிறார். மஹாபால்ஹிகரை நான் சந்திக்க விரும்புகிறேன்” என்றான்.

முதியவள் “முதியவரா?” என்றாள். “ஆம், முதியவர். ஒருவேளை இம்மலைப்பகுதியிலேயே அகவை முதிர்ந்தவராக அவர் இருக்கலாம்” என்றான். “அதோ தெரியும் ஏழு வீடுகளின் நிரைதான். உயரமான புகைக்குழாய். வாயிலில் அத்திரி நின்றுள்ளது” அவள் சொன்னாள். “அதன் அருகே தெரியும் சிறிய இல்லமும் அவருடையதுதான். அவருடைய மைந்தர்கள் அந்த ஏழு இல்லங்களிலாக வசிக்கிறார்கள். ஒற்றை புகைக்குழாய் இல்லத்தில் அவருடைய துணைவி நிதை இருக்கிறாள்” என்றாள். “அவருடைய முதல் மனைவி ஹஸ்திகை நான்காண்டுகளுக்கு முன்பு காட்டெருது முட்டியதனால் இறந்துவிட்டாள். ஆனால் இந்த எட்டு வீடுகளிலும் அவர் பெரும்பாலும் இருப்பதில்லை” என்றாள் அடுத்தவள்.

“ஏன்?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “அவருக்கு மலைகளிலிருந்து மலைகளுக்கு தனியாக அலைவதே பிடித்திருக்கிறது. மலைகளில் அலைவதனால்தான் அவருக்கு நோயே வருவதில்லை” என்றபின் “நீங்கள் அவருக்கு என்ன உறவு?” என்றாள். “எனது தொல்மூதாதை அவர்” என்றபோது ஒருத்தி புன்னகைத்தாள். பூரிசிரவஸ் சிரித்து “ஆம், அவரது கையளவுக்கே நான் இருப்பேன். ஆனால் கீழே நிகர்நிலத்திற்கு செல்லுந்தோறும் நாங்கள் உருச் சிறுக்கிறோம்” என்றான். அவள் “வணிகர்கள் சொல்வதுண்டு” என்றாள். “முன்னால் செல்க!” என்று முதியவள் கைகாட்டினாள். தலைவணங்கி பூரிசிரவஸ் அந்தப் பாதையில் சென்றான்.

அவனை நோக்கி நான்கு நாய்கள் குரைத்தபடி ஓடிவந்தன. உடல் கொழுத்து செம்மறியாடளவுக்கே முடி சுருண்டு செழித்த நாய்கள். முன்பு அங்கு நாய்கள் இருந்ததில்லையோ என்று அவன் ஐயுற்றான். நாய்களைப் பார்த்த நினைவு எழவில்லை. பின்னால் நின்றிருந்த முதுமகள் சீழ்க்கை அடித்ததும் நாய்கள் குரைப்பை நிறுத்தி அவனை நோக்கி வாலாட்டின. இரண்டு நாய்கள் அவனை நோக்கியபடி நிற்க பிற இரண்டு நாய்களும் கடந்து சென்று முதுமகள்களை அடைந்தன. அவன் புரவியில் கடந்து சென்றபோது இரு நாய்களும் மூக்கை நீட்டி குதிரையை மோப்பம் பிடித்தபடி பின்னால் வந்தன. அவன் மோப்ப எல்லையைக் கடந்ததும் திரும்பி அப்பெண்களை நோக்கி வால்சுழற்றி உடல்குழைத்து முனகியபடி சென்றன.

அவன் ஊரெல்லையாக வைக்கப்பட்டிருந்த உயர்ந்த தேவதாருத் தடியின் அருகே சென்று நின்றான். அதில் அக்குலக்குழுவின் மூதாதையர் முகங்களும் அவர்களின் குலமுத்திரையும் செதுக்கப்பட்டிருந்தன. அதற்குமேல் கட்டப்பட்டிருந்த மஞ்சள் நிறமான கொடிப்பட்டம் காற்றிலெழுந்து பறந்துகொண்டிருந்தது. அது காற்றின் திசையை கணிப்பதற்கான கொடியும் கூட. அதற்குக் கீழே மரக்குடைவாலான நாமணி ஒன்றிருந்தது. நிலைத்தூணின் கீழே சுருட்டி இழுத்துக் கட்டப்பட்டிருந்த அதன் சரட்டைப் பிடித்து இழுத்து அடித்தான். அதன் ஒலி கூரற்றதாக இருந்தாலும் அங்கிருந்த அமைதியில் தெளிவாக கேட்டது.

சற்று நேரத்தில் முதன்மை இல்லத்திலிருந்து முதுமகன் ஒருவர் கண்களின்மேல் கையை வைத்து அவனை பார்த்தார். எதிர்வெயிலில் அவருக்கு தன் செந்நிழலே தெரியும் என்று பூரிசிரவஸ் எண்ணினான். உரத்த குரலில் “நிகர்நிலத்தில் பால்ஹிக நாட்டிலிருந்து வருபவன். என் மூதாதை பால்ஹிகர் இங்குளார். அவரை சந்திக்க விரும்புகிறேன்” என்றான். அவர் அங்கிருந்து வரும்படி கைகாட்டினார். அவன் புரவியை அங்கேயே நிறுத்திவிட்டு இறங்கி நடந்து சென்று அவரை நோக்கி தலைவணங்கி “நான் பூரிசிரவஸ். பால்ஹிக நாட்டின் இளவரசன்” என்றான். அவர் அதை பெரிதாக நினைக்கவில்லை. பொதுவாக புன்னகைத்து தலைவணங்கி “வருக!” என்று அழைத்துச் சென்றார்.

முதல் இல்லத்தில் பால்ஹிக மைந்தர்களில் மூத்தவனின் துணைவியும் அவர்களின் மைந்தரும் தங்கியிருந்தனர். “இங்கே அவருடைய முதல் மைந்தன் குடியிருக்கிறான்” என முதியவர் சொன்னார். உள்ளிருந்து தடித்த கம்பளி ஆடையும் தோல் தொப்பியும் அணிந்த சிறுவர்கள் வெளியே வந்து அவனை பார்த்தபடி நின்றனர். அனைவரும் அவன் தோள் அளவுக்கே உயரமானவர்கள். தோள்களும் கைகளும் விரியத்தொடங்கியிருந்தன. பின்பக்கம் அவர்களை பார்த்தால் வளர்ந்த இளைஞர்கள் என்றே தோன்றும். முகங்கள் அவர்களுக்கு பத்து வயதுக்குள்ளேதான் இருக்குமென்று காட்டின. சிறுவர்களுக்குரிய நிலையற்ற அசைவுகள். குளிரில் வெந்ததுபோல் செம்மை கொண்ட கன்னங்கள். சிறிய பதிந்த மூக்கு. அவன் அவர்களின் நீலக் கண்களை மாறி மாறி பார்த்தபின் “நான் முதுபால்ஹிகரை பார்க்க வந்தேன்” என்றான்.

ஒரு சிறுவன் “முதுதந்தை இங்கில்லை. அவர் பதினேழு நாட்களுக்கு முன் மலையேறி சென்றார். திரும்பி வரவில்லை” என்றான். “தனியாகவா?” என்று அவன் கேட்டான். இன்னொருவன் “அவர் எப்போதும் தனியாகத்தான் செல்கிறார்” என்றான். உள்ளிருந்து ஆடைகளை திருத்தியபடி பெண்கள் வெளியே வந்தனர். அவர்களில் மூத்தவள் “வருக, பால்ஹிகரே! அவர் இங்கில்லை. எங்கள் கொழுநர்களும் வேட்டைக்குச் சென்றிருக்கிறார்கள். அமர்க!” என்றாள். பூரிசிரவஸ் தலைவணங்கிய பின் முதியவரிடம் “எனது புரவிக்கு நீர்காட்டி உணவு அளிக்கவேண்டும். அதன் பொதிகளை இங்கே கொண்டுவரவேண்டும்” என்றான். அவர் தலைவணங்கி திரும்பிச் சென்றார்.

பூரிசிரவஸ் தன் சேறு படிந்த காலணிகளை கழற்றிவிட்டு உள்ளே அணிந்திருந்த கம்பளிக் காலுறையுடன் அந்த தாழ்ந்த இல்லத்தின் சிறிய வாயிலுக்குள் குனிந்து உள்ளே சென்றான். அங்கு தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளி மெத்தைமேல் அமர்ந்தான். கால்களை நீட்டி கைகளை மடித்து வைத்துக்கொண்டு “உங்களை சந்திக்க நேர்ந்ததில் மகிழ்ச்சி. நான் இந்த மலைக்குமேல் வந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது” என்றான். “ஆம், உங்களைப்பற்றி கேள்விப்பட்டுள்ளோம்” என்றாள் அவள். பக்கத்து இல்லத்திலிருந்து மேலும் மூன்று பெண்கள் உள்ளே வந்தனர். “மூதாதையின் துணைவி எங்குள்ளார்?” என்றான். “அவர் கன்றோட்டி மலைக்குச் சென்றுவிட்டார். நாங்கள் கைக்குழந்தை வைத்திருப்பதால் இங்கிருக்கிறோம்” என்றாள் இன்னொருத்தி.

அப்போதுதான் அவ்வேழு பேரில் மூவர் கருவுற்றவர்கள், நால்வர் கைக்குழந்தை வைத்திருப்பவர்கள் என்பதை அவன் உணர்ந்தான். ஒவ்வொரு குழந்தையும் இருமடங்கு பெரிதாக இருந்தது. அவர்களின் பெரிய கைகளுக்கு அவை இயல்பாக தோற்றமளித்தன. தன்னால் அவற்றை இயல்பாக எடுத்து கொஞ்சமுடியாது என்று நினைத்துக்கொண்டான். சிறிய கண்களால் அவனை ஐயத்துடனும் குழப்பத்துடனும் அவை நோக்கிக்கொண்டிருந்தன. ஒரு குழந்தையைப் பார்த்து அவன் புன்னகைத்தபோது அது திடுக்கிட்டு திரும்பி அன்னையை கையால் அணைத்துக்கொண்டு அவள் தோளில் முகம் புதைத்தது.

“அவர்கள் அயலவர்களை பார்த்ததில்லை” என்று அந்தப் பெண் சொன்னாள். “நான் முறைப்படி அவர்களுக்கு தந்தை உறவு கொண்டவன். குழந்தைகளை இங்கு கொடுங்கள்” என்று பூரிசிரவஸ் கேட்டான். இளையவள் அவள் கையிலிருந்த குழந்தையை அவனிடம் நீட்ட அது திரும்பி அன்னையை பற்றிக்கொண்டு வீறிட்டது. “சரி, வேண்டியதில்லை” என்று பூரிசிரவஸ் சிரித்துக்கொண்டே சொன்னான். “அவர்கள் என்னை கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். நான் இடரற்றவன் என்று புரிந்துகொள்ள சற்று பொழுதாகும். அதன்பின் அவர்களே என்னிடம் வருவார்கள்.”

“முதுபால்ஹிகருக்கு தாங்கள் என்ன உறவு?” என்று இளையவள் கேட்டாள். “அவருடைய கொடிவழியில் வந்தவன். எனக்கு அவர் முதுதந்தையின் முதுதந்தை என முறை வரும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். மூத்தவள் “தந்தைக்கும் மைந்தர்களுக்கும் எப்போதுமே பூசல். சில நாட்களுக்கு முன் வாய்ச்சொல் மிகுந்து அவர் தன் இரு மைந்தர்களைத் தூக்கி நிலத்தில் அறைந்தார். அதன் பிறகு வளைதடியையும் குத்துக்கத்தியையும் எடுத்துக்கொண்டு மலையேறிச் சென்றார். அவர்கள் ஆறேழு நாட்கள் படுத்து நோய் தீர்க்கவேண்டியிருந்தது” என்றாள். “உங்கள் பெயரென்ன?” என்று அவன் கேட்டான். அவள் தன் பெயரை சற்று நாணத்துடன் சிரித்தபடி சொன்னாள். “ஆர்த்ரை.”

முதியவர் வாசலில் வந்து பொதியுடன் நின்று “பொதிகளை கொண்டுவந்துள்ளேன். புரவி நீர்காட்டப்பட்டுவிட்டது” என்றார். பூரிசிரவஸ் மைந்தர்களில் ஒருவனிடம் பொதியை வாங்கி வைக்கும்படி சொன்னான். அவர்கள் அதை வாங்கி வைத்ததும், அதன் முடிச்சுகளை அவனே அவிழ்த்து உள்ளிருந்து அவன் கொண்டுவந்த பரிசுப்பொருட்களை எடுத்து அவர்களுக்கு அளித்தான். கொம்புப்பிடியிட்ட கலிங்கநாட்டுக் கத்திகள், வெள்ளிப் பேழைகள், தங்கச் சிமிழ்கள், யவன மதுக்குடுவைகள். அவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றை பரிசாக கொடுத்தான். யானைத்தந்தத்தில் கடையப்பட்ட சிறிய பாவைகள் இருந்தன. அவற்றை அவன் ஒவ்வொருவருக்காக கொடுக்க மைந்தர்கள் ஆர்வத்துடனும் உடற்தயக்கத்துடனும் வந்து பெற்றுக்கொண்டனர்.

அவற்றை பேருவகையுடன் திருப்பித் திருப்பி பார்த்த பின் ஓடிச்சென்று தங்கள் அன்னையரிடம் காட்டினர். அவர்கள் மைந்தர்களின் தலையைத் தட்டி சிரித்தபடி “விளையாடிக்கொள்” என்றனர். சிறு குழந்தை சிரித்தபடி எம்பிக் குதித்து கைநீட்டியது. பூரிசிரவஸ் ஒரு பாவையை எடுத்து “இந்தா” என்று நீட்டினான். அது திரும்பி அன்னையின் தோளில் முகம் புதைத்தது. அதன் உள்ளங்கால் நெளிந்தது. இன்னொரு குழந்தை “தா! தா!” என்று கைநீட்டியது. அவன் அதனிடம் அதை நீட்ட அதன் அன்னை குனிந்து அவனை நோக்கி குழந்தையை நீட்டினாள். அப்பாவையை அது பெற்றுக்கொண்டது. முதற்குழந்தை “எனக்கு!” என்றபடி தாவி இறங்க முயன்றது. பூரிசிரவஸ் எழுந்து சென்று அதற்கு ஒரு பாவையை கொடுத்தான். பிற குழந்தைகளும் பாவைக்காக கூச்சலிட்டன.

அவன் பாவைகளைக் கொடுத்து முடித்து பொதியை மூடினான். இன்னொரு பொதியைத் திறந்து உள்ளிருந்து வெல்லக்கட்டிகளையும் நறுமணப் பொருட்களையும் எடுத்து அப்பெண்டிருக்கு அளித்தான். பரிசுப்பொருட்களால் அவர்கள் உளம் மகிழ்ந்து வாய்விட்டு சிரித்துக்கொண்டனர். அம்மகிழ்வை சற்றே அடக்கிக் கொள்ளவேண்டும் என்ற முறைமை ஏதும் அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. பூரிசிரவஸ் “இங்கு பிரேமை என்னும் பெண் இருந்தாள். நான் முன்னர் வந்தபோது அவளை மணந்துகொண்டேன். அவளில் எனக்கொரு மைந்தன் இருக்கிறான் என்று கேள்விப்பட்டேன். அவன் பெயர் யாமா” என்றான்.

பெண்டிர் முகங்கள் மாறுபட்டன. மூத்தவள் “ஆம், இங்கிருக்கிறான். அவ்வண்ணமென்றால் உங்கள் மைந்தன் என அவன் சொல்லிக்கொள்வது உண்மைதான் அல்லவா?” என்றாள். இளையவள் “எங்கள் கொழுநர்களுக்கு அவன்தான் முதல் எதிரி. இங்கு அவர்கள் வெல்லப்படமுடியாதவர்களாக இருந்தனர். அவர்கள் எழுவரையுமே மற்போரில் தூக்கி அறைந்துவிட்டான். முதுபால்ஹிகரை மட்டும்தான் அவன் இன்னும் தோற்கடிக்கவில்லை. அதுவரைக்கும்தான் எங்கள் குடிக்கு இவ்வூரில் முதன்மை இருக்கும்” என்றாள். இன்னொருத்தி “அவன் தந்தையா நீங்கள்? அவன் உடலில் ஒரு பகுதி போலிருக்கிறீர்கள்” என்றாள். பூரிசிரவஸ் புன்னகைத்து “அவன் தன் அன்னையை கொண்டிருக்கிறான்” என்றான். “அவளுடன் எங்களுக்கு பேச்சே கிடையாது” என்று ஒருத்தி சொன்னாள். “அவள் இல்லத்தை மட்டும் காட்டுக!” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

மூத்தவள் தன் மைந்தனிடம் “இவரை அங்கு அழைத்துச் செல்” என்றாள். அவன் முன்னால் வந்து தன் தோலுடையை சீரமைத்து “வருக! நான் அழைத்துச் செல்கிறேன். ஆனால் அவர்கள் இல்லத்துக்குள் நான் நுழையமாட்டேன். தந்தையின் ஆணை” என்றான். “நீ இல்லத்தை மட்டும் காட்டினால் போதும்” என்று பூரிசிரவஸ் எழுந்துகொண்டான். அவர்களை வணங்கி விடைபெற்றான். “அன்னை வந்தால் சொல்லுங்கள். வந்து வணங்கி சொல்பெறுகிறேன்” என்றான்.

சிறுவனுடன் நடக்கையில் பூரிசிரவஸ் “இங்கு வெளிநிலத்து வணிகர்கள் என்ன பொருட்களை கொண்டுவருகிறார்கள்?” என்று கேட்டான். அவன் ஊக்கமடைந்து கையை மேலே தூக்கி “அனைத்துப் பொருட்களும்! நாங்கள் இனிய உணவுகளை விரும்புகிறோம் என்பதனால் அவை நிறையவே கொண்டுவரப்படும். இங்கு வேல்முனைகளும் வில்முனைகளும் கத்திகளும் வாள்களும் முழுக்க அங்கிருந்துதான் வரவேண்டும். எங்களுடைய வில்கூட இப்போது கீழிருந்து வருபவைதான். அவை அம்புகளை வடக்குநிலத்து நாரைகளைப்போல பறக்கவிடுகின்றன” என்றான்.

“ஆடைகள்?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “அங்குள்ள ஆடைகளை நாங்கள் அணியமுடியாது. ஆனால் திருமணங்களுக்கும் விருந்துகளுக்கும் மட்டுமென்று சில ஆடைகளை நாங்கள் வைத்திருக்கிறோம். அவை முதற்பனிபோல அவ்வளவு மென்மையானவை. அவற்றை அவர்கள் ஏதோ பூச்சியின் எச்சிலிலிருந்து எடுக்கிறார்கள்” என்றான். கையை ஆட்டி முகம் உளவிசையில் அதிர “அந்தப் பூச்சிக்கு அவர்கள் ஏதோ நுண்சொல் சொல்லி அவற்றின் சிறகுகளை ஆள்கிறார்கள். அப்பூச்சிகள் வந்து அவர்களின் இல்லங்களில் சிறிய இலைகளில் குடியேறுகின்றன. அங்கிருந்து அவை புல்லாங்குழல் போலவும் யாழ் போலவும் இசை மீட்டுகின்றன. அந்த இசையை இரவுகளில் நூலாக மாற்றிவிடுகின்றன. அந்த நூலைக்கொண்டு இந்த ஆடைகளை அவர்கள் செய்கிறார்கள்” என்றான்.

துள்ளித்துள்ளி நடந்தபடி திரும்பி அவனை நோக்கி “நான் ஒரு மெய்ப்பையும் தலைப்பாகையும் வைத்திருக்கிறேன். என் தந்தை நான் திருமணம் செய்துகொள்ளும்போது மட்டும்தான் இனி அடுத்த ஆடை வாங்கிக்கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்” என்றான். பின்பக்கமாக நடந்தபடி உரக்க நகைத்து “நான் விரைவிலேயே திருமணம் செய்துகொள்வேன். எனக்கு இரண்டு பெண்களை தெரியும்” என்றான். பூரிசிரவஸ் “நான் மலையிறங்கிச் சென்றபின் உங்கள் அனைவருக்கும் உயரிய பட்டு ஆடையை வாங்கி அளிக்கிறேன்” என்றான். அவன் சிரித்து “ஆம், அதை பட்டு என்றுதான் சொல்கிறார்கள்” என்றான். அதன் பின் “அதோ, அந்த இல்லம்தான்” என்று சுட்டிக்காட்டினான்.

பூரிசிரவஸ் அந்தச் சிறு உரையாடலை தன்னுள் எழுந்த பதற்றத்தை மறைக்கும்பொருட்டுதான் மேற்கொண்டிருக்கிறோம் என உணர்ந்தான். அந்த இல்லத்தைக் கண்டதுமே அவன் உள்ளத்தில் அனைத்து சொற்களும் அசையாது நின்றன. கால்கள் மட்டும் பிறிதொரு விசையால் நடந்துகொண்டிருந்தன. ஒருசில கணங்களுக்குள் அந்த வீட்டை அவன் அடையாளம் கண்டான். முன்பிருந்த அதே இல்லம். ஆனால் முகப்பு விரிவாக்கி கட்டப்பட்டிருந்தது. முற்றம் இன்னும் அகலமாக்கப்பட்டிருந்தது. முற்றத்தில் ஒரு அத்திரி நின்று தலையசைத்து எதையோ தின்றுகொண்டிருந்தது.

சிறுவன் நின்று “இதற்கு மேல் நான் வரக்கூடாது. நான் பெரியவனான பிறகு இங்கு வருவேன். அவரை போருக்கு அறைகூவுவேன். அவரைத் தூக்கி நிலத்தில் அறைந்தால் அதன் பிறகு நான் அந்த வீட்டிற்குச் சென்று அங்குள்ள பெண்களில் எனக்குப் பிடித்த பெண்ணை தெரிவு செய்வேன்” என்றான். “அங்கு பெண்கள் இருக்கிறார்களா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “இல்லை. அவர்கள் இன்னும் பிறக்கவில்லை” என்றான் சிறுவன். அவன் தோளைத் தொட்டபின் பூரிசிரவஸ் சீரான காலடிகளுடன் நடந்து அவ்வீட்டின் முன் சென்று நின்றான்.

உள்ளே பேச்சுக்குரல் கேட்டுக்கொண்டிருந்தது. கலங்கள் மெல்ல மோதும் ஓசை எழுந்தது. யாரோ எவரையோ அழைத்தனர். முதல் முறையாக அவனுள் ஓர் ஐயம் எழுந்தது. பிரேமை மீண்டும் மணம் செய்துகொண்டிருக்கக்கூடும். பிறிதொரு மலைமகனில் அவளுக்கு மேலும் குழவிகள் இருக்கக்கூடும். அதை அவன் பால்ஹிகரின் மறுமகள்களிடம் கேட்கவில்லை. அவன் அவ்வெண்ணத்தின் எடையை தாளாதவன்போல் கால் தளர்ந்து தோள் தொய்ந்தான். உள்ளே இருக்கும் அக்குழவியரை அவன் எப்படி எதிர்கொள்வான்? அதைவிட முற்றிலும் பிறிதொருத்தியாகிப் போன பிரேமையை அவனால் அடையாளம் காணக்கூட முடியாது போகலாம்.

பெண்களின் விழிகள் பிறிதொரு ஆணை அடைந்ததும் மாறிவிடுகின்றன. ஆண்களைப்போல் பெண்கள் தங்களுக்குள் தங்களை வகுத்துக்கொண்டவர்கள் அல்ல. பெண்களால் ஆண்கள் மாறுவதில்லை. பெண்கள் ஆண்களை ஏற்று முழுமையாகவே உருவும் உளமும் மாறிவிடுகின்றனர். இப்போது வெளிவரப்போகும் அவளில் இன்று அவளுடன் இருக்கும் ஆண் திகழ்வான். புரவியென அவளில் ஏறிவருபவன். தான் எதிர்கொள்ளவிருப்பது அவ்வாண்மகனை. முற்றிலும் அயலவன். அரிதென தான் உளம்கொண்ட ஒன்றை வென்றவன்.

மறுகணம் பிறிதொரு குரல் நீ இழைத்த அறமின்மை ஒன்றை நிகர்செய்தவன் என்றது. ஆம், அதுவும்தான் என்று பூரிசிரவஸ் சொல்லிக்கொண்டான். அந்த அயலவன் தன் விழிகளை வேட்டை விலங்கு இரையையென நோக்கக்கூடும். தணிந்த குரலில் எவர் என கேட்கக்கூடும். ஏதோ ஓர் உள்ளுணர்வால் தான் யாரென்று அவனும் உணர்ந்திருப்பான். ஆகவே ஐயமும் விலக்கமும் அவ்விழிகளில் தெரியும். அவன் முன் விழிதூக்கி நின்று நான் யார் என்று சொல்ல என்னால் இயலாது. என் குரல் நடுங்கும். என் பெயரை அன்றி பிறிதெதையும் என்னால் கூறமுடியாது. ஒரு வேளை என் குலத்தையும் அரசையும் மேலும் சற்று உறுதிக்காக நான் சொல்லிக்கொள்ளக்கூடும். ஒருபோதும் அவளை மணந்தவன் என்றோ அவள் குழந்தைக்கு தந்தையென்றோ சொல்ல முடியாது.

பூரிசிரவஸ் திரும்பிச் சென்றுவிடவேண்டுமென்று எண்ணி திரும்பி வந்த பாதையை பார்த்தான். நெடுந்தொலைவில் அச்சிறுவன் இரு கைகளையும் சுழற்றியபடி சிறு துள்ளலுடன் நடந்துசெல்வது தெரிந்தது. மிக அப்பால் அவனுடைய புரவி தன் முன் போடப்பட்ட புற்சுருள்களை எடுத்து தலையாட்டி மென்றுகொண்டிருந்தது. அதன் வால் சுழற்றல் ஒரு சிறு பூச்சி அதனருகே பறப்பதுபோல் தெரிந்தது. இல்லை, இது வீண் சொல்லோட்டல்தான். இத்தருணத்தை நீட்டி நீட்டி உணர்வுச்செறிவாக்கிக்கொள்ள நான் விழைகிறேன். இதை நான் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். துயரும் கொண்டாட்டமே. இன்பத்தைவிடவும் பெரிய கொண்டாட்டம் பதற்றமே.

உள்ளே வளையலோசை கேட்க அவன் திரும்பிப்பார்த்தான். வாசலில் பிரேமை நின்றிருந்தாள். திடுக்கிட்டு நெஞ்சத் துடிப்பு உடலெல்லாம் பரவ கைகள் நடுங்க அவன் நின்றான். அவள் நெஞ்சில் கைவைத்தாள். கண்கள் சுருங்கி கூர்கொண்டன. பின்பு முகம்மலர, உரக்கச் சிரித்தபடி இரு கைகளையும் விரித்து படிகளிலிறங்கி ஓடிவந்து அவன் கைகளை பற்றிக்கொண்டாள். “வந்துவிட்டீர்களா? வருவீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன். வருக… வருக…” என்றபின் உள்ளே திரும்பி உரத்த குரலில் “சைலஜை, இங்கு வந்திருப்பது யாரென்று பார்! நான் சொன்னேனல்லவா? நான் கனவு கண்டேன் என்று கூறினேனல்லவா?” என்றாள்.

“சைலஜை யார்?” என்று அவன் கேட்டான். “என் இளையவள்” என்று அவள் சொன்னாள். உள்ளிருந்து இன்னொரு பெண் எட்டிப்பார்த்து “இவரா? நான் எண்ணியபடியே இல்லையே” என்றாள். “நீ எண்ணியபடி ஏன் இருக்கவேண்டும்? போடி” என்றபின் பூரிசிரவஸிடம் “வருக!” என்று சொல்லி பிரேமை அவன் கைகளைப்பற்றி இழுத்துச் சென்றாள். சைலஜை “மாவீரர் என்று சொன்னாய்?” என்றாள். “போடி… நீ பொறாமைகொண்டவள்” என்றாள் பிரேமை. “இவள் என் சிற்றன்னைக்குப் பிறந்தவள். இவளுடைய கணவன் மலைகளுக்கு அப்பாலுள்ள குடியினன்” என்று பூரிசிரவஸிடம் சொல்லி அவனை கூட்டிச்சென்றாள்.

அவள் கைகள் மிகப் பெரியவையாக இருந்தன. அவள் பிடிக்குள் அவன் கை குழந்தைக் கைபோல் தோன்ற படிகளில் ஏறுகையில் அவன் காலிடறினான். அவள் அவனைத் தூக்கி உள்ளே கொண்டுசென்றுவிடுபவள்போல் தோன்றினாள். அப்போதுதான் ஒரு சிறு மின்னென அவன் உணர்ந்தான். அவளுக்கு முதுமையே அணைந்திருக்கவில்லை. அவன் இருபதாண்டுகளுக்கு முன் கண்ட அதே வடிவிலேயே அவளிருந்தாள். “நீ… நீ பிரேமைதானே?” என்றான். “என்ன ஐயம்? என் முகம் மறந்துவிட்டதா?” என்று அவள் கேட்டு அவன் கன்னத்தைப்பற்றி உலுக்கினாள்.

“இல்லை, நான்…” என்றபின் “உனக்கு அகவை முதிரவேயில்லையே?” என்றான். “ஆம், இங்கு எல்லாரும் அதைத்தான் சொல்லுகிறார்கள். இங்கு எவருக்குமே விரைவாக அகவை அணுகுவதில்லை. நீங்கள்கூட முன்பு நான் பார்த்த அதே வடிவில்தான் இருக்கிறீர்கள்” என்றாள் பிரேமை. “இல்லையே, என் காதோர முடி நரைத்துவிட்டது. உடல் தொய்ந்துவிட்டது” என்றான். “ஆம், காதோரம் சற்று நரை உள்ளது. மற்றபடி நீங்கள் இங்கிருந்து சென்ற அதே வடிவில்தான் இருக்கிறீர்கள்” என்றாள் பிரேமை. “வருக!” என்று உள்ளே சென்று அவனை தோள்பற்றி உள்ளறைக்குள் கொண்டுசென்று அங்கிருந்த மெத்தைமேல் அமரவைத்தாள்.

அவன் முன் கால்மடித்து அமர்ந்து “நான் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். பெரும்பாலான நாட்களில் காலையில் நீங்கள் வந்து கதவைத் தட்டுவதுபோல கனவு கண்டுதான் விழிப்பேன். ஒரு நாள் அவ்வாறு கனவு வந்துவிட்டால் பல நாட்களுக்கு எனக்கு உவகையே நிறைந்திருக்கும்” என்றாள். திரும்பி தன் இளையவளிடம் “அன்னையிடம் சொல் யார் வந்திருக்கிறார்கள் என்று. அருந்துவதற்கு இன்நீர் எடு” என ஆணையிட்டாள். பூரிசிரவஸிடம் “ஊனுணவு இருக்கிறது, உண்கிறீர்களா?” என்றாள். “ஆம், உணவுண்ணவேண்டும்” என்றபின் அவன் பெருமூச்சுவிட்டான்.

வெளியே ஒளிக்கு கண்பழகியிருந்தமையால் அந்த அறை இருட்டாகத் தெரிந்தது. கதவு வழியாகத் தெரிந்த ஒளியில் நிழலுருவாக அவள் தோன்றினாள். குழலிழைகள் முகத்தை ஒளிகொண்டு சூழ்ந்திருந்தன. அவள் கண்கள் ஈரமென மின்னின. அவன் எண்ணியிராதெழுந்த உள எழுச்சியால் கைநீட்டி அவள் கையைப்பற்றி “உன்னிடம் நான் என்ன சொல்வது? பெரும்பிழை இயற்றினேன் என்று எனக்குத் தெரியும். அது என் ஆணவத்தால் என்று எண்ணியிருந்தேன். இப்போது உன்னைப் பார்த்தபோது அது என் தாழ்வுணர்ச்சியால் என்று தெரிகிறது. உனக்கு நிகராக என்னால் நின்றிருக்க முடியாது என்பதனால். அதைவிட உன் மலைஉச்சியில் நான் ஒரு பொருட்டே அல்ல என்பதனால்” என்றான்.

“என்ன சொல்கிறீர்கள்?” என்றபின் அவள் சிரித்தபடி அவன் தொடையை அறைந்து “அன்றும் இவ்வாறுதான், எனக்கு எதுவுமே புரியாமல்தான் பேசிக்கொண்டிருந்தீர்கள்” என்றாள். “நான் இத்தனை ஆண்டுகளில் அன்று நீங்கள் பேசிய அனைத்தையுமே எண்ணிப்பார்த்ததுண்டு…” என்றபின் உரக்க நகைத்து “இப்போதும் ஒன்றுமே புரிந்ததில்லை” என்றாள். பூரிசிரவஸ் நகைத்து “அன்று பேசியவற்றை இன்று கேட்டால் எனக்கும் என்னவென்று புரியாது” என்றான். “ஆனால் அது நன்று. இத்தனை காலம் எண்ணிக்கோக்க எனக்கு எத்தனை சொற்கள்!” என்று பிரேமை சொன்னாள்.

உள்ளிருந்து அவள் அன்னை வெளியே வந்து கைதொழுது நின்றாள். பூரிசிரவஸ் எழுந்து அவளை கால்தொட்டு வணங்கினான். “நான் பால்ஹிகன். என் துணைவியை பார்த்துச்செல்ல வந்திருக்கிறேன்” என்றான். முதுமகள் சினத்துடனோ துயருடனோ ஏதோ சொல்வாளென்று அவன் எண்ணினான். அவள் முகம் சுருக்கங்கள் இழுபட காற்றிலாடும் சிலந்தி வலைபோல அசைந்தது. கண்கள் இடுங்க சிரித்தபடி “உங்களுக்கு நீங்கள் அஞ்சும் மைந்தன் பிறந்திருக்கிறான். மைந்தனைக் கண்டு அஞ்சும் பேறு என்பது அரிதாகவே அமைகிறது. காட்டிற்குச் சென்றிருக்கிறான். இப்போது வந்துவிடுவான்” என்றாள். பூரிசிரவஸ் நெஞ்சு பொங்க “ஆம், அவனைப்பற்றி கேள்விப்பட்டேன்” என்றான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 18

tigக்ஷீரவதியை கடந்தபோது இந்திர மாயக்காரன் தன் கோலை வீசியதுபோல் பூரிசிரவஸின் உள்ளம் நிலைமாறியது. அதுவரை ஒவ்வொரு புரவிக்குளம்படிக்கும் உள்ளம் ஓரடி பின்னெடுத்து வைத்துக்கொண்டிருந்தது. அதன்பின் புரவிக்கு மிக முன்னால் சென்று வருக வருக என்று அது தவித்தது. அழைத்தது. மேலும் மேலுமென அதை குதிமுள்ளால் குத்தி ஊக்கினான். ஆனால் புழுதியும் உருளைக்கற்களும் பரவிய, சுழன்று சுழன்றேறும் சிறிய பாதையில் விரைவிலேயே புரவி வாயிலிருந்து நுரைவலை தொங்க தலைதாழ்த்தி உடலதிர்ந்து நின்றுவிட்டது.

அவன் கீழிறங்கி அதன் கழுத்தைத் தடவி ஆறுதல்படுத்தி கடிவாளத்தைப்பற்றி இழுத்துச் சென்றான். சற்று தொலைவிலிருந்த சிறிய சுனையைக் கண்டதும் அங்கே கொண்டு அதை நிறுத்தினான். மூச்சிளைப்பால் நீரருந்தாமல் வாய்திறந்து தலைதூக்கி ஏங்கியது புரவி. அவன் நீரில் இறங்கி பனிபோல் குளிர்ந்திருந்த நீரை அள்ளி முகத்திலும் கழுத்திலும் விட்டுக்கொண்டான். பின்னர் அங்கிருந்த பாறையில் கால்களை நீட்டியபடி சாய்ந்தமர்ந்தான். காலை வெயில் உறைக்கத் தொடங்கியிருந்தது. இன்னும் நெடுந்தொலைவு செல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.

கீழிருந்து ஒரு வணிகக்குழு வளைந்தேறி வருவது தெரிந்தது. அதிலிருந்தவர்களை அவன் நோக்கிக்கொண்டிருந்தான். பால்ஹிகநகரியிலிருந்து பொருட்களை வாங்கிக்கொண்டு மலைக்கு மேல் செல்லும் வணிகர்கள். மூன்றாவது வளைவை அவர்கள் கடந்தபோது அவர்கள் மலைமேல் வாழும் தொல்குடிகள் என்று தெரிந்தது. மஞ்சள் படிந்த பெரிய முகமும் இடுங்கிய சிறுவிழிகளும் கரிய நீள்மயிரும் கொண்டிருந்தனர். சென்ற பத்தாண்டுகளாகவே மலைக்கு மேலிருந்து பொருட்களை வாங்கிக்கொண்டு விற்றுவரும் தொல்குடி வணிகர்கள் உருவாகிவிட்டனர் என்று அவன் அறிந்திருந்தான். அவர்களை அங்கிருக்கும் பழங்குடிகள் எளிதில் நம்பியமையால் பிறரைவிட அவர்களால் வெற்றிகரமாக வணிகம் செய்யமுடிந்தது.

புரவி நீரை உறிஞ்சிக்குடித்து தலைதூக்கி முகத்தை விலாநோக்கி வீசி தாடையை உதறி துளிகளை தன்மேல் தெறித்துக்கொண்டது. மூச்சுசீறியபடி பிடரி சிலிர்த்து மீண்டும் குனிந்து நீரை அள்ளியது. பூரிசிரவஸ் வளைந்து மேலேறி வந்த அந்த வணிகக்குழுவை நோக்கிக்கொண்டிருந்தான். மேலும் நெருங்கி வந்தபின்னர்தான் அதில் ஒருவர் பெண் என்று தெரிந்தது. முதுமகள், ஆனால் உரம் மிக்க உடலும் பெரிய கைகளும் கொண்டிருந்தாள். பால்ஹிகக்குடியை சேர்ந்தவள் என்பது அவள் உடல் அளவுகளிலே தெரிந்தது. அவன் அவளருகே சென்றுநின்றால் அவள் தோள்களே தலைக்குமேல் இருக்குமென்று தோன்றியது.

நெஞ்சில் ஒரு திடுக்கிடலுடன் அவன் அம்முகத்தை பார்த்தான். அவளுக்கு எவ்வளவு அகவை இருக்கும்? அவன் மலைக்கு மேல் சென்றபோது பிரேமைக்கு அவனைவிட ஓரிரு அகவைகள் மிகுதியாகவே இருந்தன. அப்படியென்றால் அவள் இவளை போலிருப்பாள். அவர்கள் மிகச் சீரான விரைவில் வந்து அவனை அணுகி கடந்து சென்றனர். ஒவ்வொருவரும் திரும்பி அவனைப் பார்த்து தலைவணங்கி தங்கள் மொழியில் முகமனுரைத்துச் சென்றனர். புரவிகளின் வியர்வை மணமும் நிலப்பகுதியின் நீராவிபடிந்த மென்மயிராடைகள் உலர்வதன் புழுங்கல் மணமும் எழுந்து மெல்ல கரைந்தன. புரவிகளின் வால்கள் சுழல்வதை அவன் நோக்கிக்கொண்டு நின்றான்.

அவர்கள் சீரான விரைவில் செல்வதனால் அங்கு நிறுத்தி ஓய்வெடுக்க வேண்டியிருக்கவில்லை. உள்ளத்தை எப்போதும் புரவிக்குப் பின்னால் நிறுத்தவேண்டும் என்று மலைப்பயணங்களை கற்றுத்தந்த முன்னோர்கள் சொன்னதை அவன் நினைவுகூர்ந்தான். புரவி தன் விரைவை தானே முடிவு செய்ய விடவேண்டும். அதை ஊக்கும்தோறும் அது வலுவிழக்கும். அவனுடைய புரவி நீரருந்திவிட்டு அங்கிருந்த பாறையொன்றில் தன்னுடலை மெல்ல சாய்த்து இடது முன்காலைத் தூக்கி கண்களை பாதி மூடி துயிலத்தொடங்கியது. அதன் வாயிலிருந்து அருந்திய நீரின் எச்சம் சிலந்தி வலையிழைபோல் தொங்கி ஆடியது.

அவன் புரவியை வெறுமனே நோக்கிக்கொண்டு எண்ணத்தில் அலைந்தான். அவள் எப்படியிருப்பாள்? முதுமை அணுகியிருக்கும். இந்த மலைப்பகுதிகளில் பெண்கள் மிக விரைவாக இளமையின் செழுமையை இழந்துவிடுகிறார்கள். முகம் பனியில் சிவந்து, கருகிய மலர்போல் ஆகிவிடுகிறது. கண்களைச் சுற்றியும் வாயோரங்களிலும் அடர் சுருக்கங்கள் உருவாகின்றன. நெற்றியில் ஆழ்ந்த வரிகள். பின்னர் அவர்களுக்கு அகவையே ஆவதில்லை. நாற்பது அகவைப் பெண்ணும் நூறு அகவையானவளும் எந்த வேறுபாடையும் காட்டுவதில்லை. இப்போது கடந்துசென்றவளுக்கு நாற்பது இருக்கலாம், நூறும் அதற்கு மேலும் கூட இருக்கலாம். இங்கு பெரும்பாலும் அனைவருமே நூற்றியிருபது வயது வரை வாழ்கிறார்கள்.

பனி மூடி, பின் உருகி, மீண்டும் மூடி இந்த மலைகளை பாதுகாக்கிறது. மாபெரும் வெண்ணிறப் பறவை மென்சிறகு சரித்து முட்டைகளை காப்பதுபோல என்பது தொல்பாடகர்களின் வரி. மண்ணிலிருந்து வரும் எந்த மாசும் மலையில் படிவதில்லை என்பார்கள். பனியைக் கடந்து எதுவும் செல்வதில்லை. நிகர்நிலத்தின் புழுதிப்புயல், நோய்கள், மானுடரின் மொழிகள், வஞ்சங்கள். மானுடரின் நாணயங்களுக்குக் கூட அங்கே மதிப்பில்லை.

பாதுகாக்கப்பட்ட செல்வம் அம்மக்கள். என்றோ ஒருநாள் விண்ணிலிருந்து அனலிறங்கி மனுக்குலமனைத்தையும் சாம்பலாக்குமென்றும், அதன்பிறகு கோபுரங்களுக்குமேல் கலங்களில் சேமிக்கப்பட்டிருக்கும் இவ்விதைமணிகளை புவியெங்கும் தெய்வங்கள் கொண்டுசென்று பரப்பும் என்றும், பேருடலும் நிலைமாறா உள்ளமும் குறைந்த சொற்களும் ஒருவரோடொருவர் உளம் கோத்துக்கொள்ளும் எளிமையும் கொண்ட மக்களின் பிறிதொரு யுகம் எழுமென்றும் பால்ஹிகத் தொல்கதைகளில் அவன் கேட்டிருந்தான்.

நீள்முச்சுடன் அவன் எழுந்தபோது புரவி விழித்துக்கொண்டு தலையை ஆட்டி சீறல் ஓசையெழுப்பியது. அவன் கைசொடுக்கியதும் சேணங்கள் இழுபட அருகே வந்து நின்றது. அதன் கழுத்தும் விலாவும் சிலிர்த்துக்கொண்டிருந்தன. அவன் அதன் பிடரியை மெல்ல அளைந்தபின் சேணத்தில் காலூன்றி ஏறிக்கொண்டான். செல்க என்று அதை மெல்ல ஊக்கினான். சீரான அடிகளுடன் தலையசைத்தபடி அது செல்லத்தொடங்கியது.

மலைகளுக்கு மேல் கோடைகாலத்தில் அந்தி மிகவும் பிந்தித்தான் வருமென்பதை அவன் அறிந்திருந்தான். அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் இருக்கும் நிகர்நிலங்களில் இரவான பின்னரே பால்ஹிகபுரியில் இருள் கசியத்தொடங்கும். அப்போதும் சூழ்ந்திருக்கும் மலைஉச்சிகள் விண்ணிலிருந்து ஒளியைப்பெற்று மின்னிக்கொண்டிருக்கும். அவை அன்னைப்பசுவின் வெண்பாலருந்தும் கன்றுக்குட்டிகளென்பது பால்ஹிகர்களின் தொல்கூற்று. கதிரவன் முற்றிலும் மேற்கில் மறைந்த பின்னரும்கூட மலைகளின் ஒளி நெடுநேரம் எஞ்சியிருக்கும். கீழிருந்து இருள் ஊறிப்பெருகி ஊர்களை மூழ்கடித்த பின்னரும்கூட பனிமலை உச்சிகள் ஒளிகொண்டிருக்கும். சில தருணங்களில் அவை இரவெல்லாம் அணைவதே இல்லை.

அவன் புரவி மிகவும் களைத்துவிட்டிருந்தது. அது ஒவ்வொரு காலடியாக எண்ணி எண்ணி எடுத்துவைத்து தலைதாழ்த்தி மூச்சுசீறி பின் உடலை உந்தி முன்னெடுத்து நடந்தது. அவ்வப்போது நின்று மீண்டும் உடல் விதிர்த்து முன்னகர்ந்தது. தொலைவில் தங்கும்விடுதியின் விளக்கொளியை பார்த்ததும் அவன் புரவியிலிருந்து இறங்கி அதன் கடிவாளத்தைப்பற்றி இழுத்துக்கொண்டு நடந்து சென்றான். அது ஊக்கமடைந்து அவனை தொடர்ந்து வந்தது. அவன்மேல் அதன் வாய்க்கோழை சொட்டியது. அவ்விடுதியைக் கண்டபின்னர் அதை அணுகுவது கடினமாயிற்று. நடக்க நடக்க அகன்றது அதன் சாளர ஒளி.

மரப்பட்டைக் கூரையும் உருளைக்கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட சுவர்களும் உயரமான புகைபோக்கிகளும் கொண்ட தாழ்வான கட்டடம். கோடையாதலால் அங்கே வணிகர்கள் பலர் தங்கியிருந்தனர். புரவிகள் தங்குவதற்கான மூடப்பட்ட கொட்டில்கள் இருந்தன. வெளியே இருந்த மரத்தொட்டியில் புரவிக்கு நீர்காட்டி கொட்டிலுக்குள் சென்று கட்டினான். உப்புசேர்த்து உலரவைக்கப்பட்ட மலைப்புல் தனிக்கொட்டகையில் சுருள்களாக வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்துவந்து புரவிக்கு போட்டபின் தொட்டிநீரில் கைகளையும் முகத்தையும் கழுவினான். மலைச்சரிவிலிருந்த பாறையிடுக்கிலிருந்து ஊற்றுநீர் பாதியாகப் பிளந்த மூங்கிலால் ஆன ஓடை வழியாக வந்து தொட்டியில் விழுந்தது. பனியுருகிய நீர் தண்மையால் எடைகொண்டிருந்தது.

உள்ளும் புறமும் என இரு கதவுகள் கொண்ட வாயிலினூடாக விடுதியின் நீள்சதுர அறைக்குள் நுழைந்தான். எடை கட்டப்பட்ட இரு கதவுகளும் முனகியபடி மூடிக்கொண்டன. உள்ளே கணப்பு எரிந்துகொண்டிருந்ததனால் முதல்கணம் அலையென வெம்மை வந்து அவனை சூழ்ந்தது. அதில் அவன் உடல் சிலிர்த்தது. தன் எடைமிக்க தோலாடையைக் கழற்றி அங்கிருந்த மூங்கில் கழியில் தொங்கவிட்டான். உள்ளே அணிந்திருந்த மென்மயிர் ஆடையைக் கழற்றி உதறி இன்னொரு கழியில் தொங்கவிட்டான். தடித்த மரவுரி ஆடையுடன் சென்று கணப்பருகே அமர்ந்து கைகளை அதில் காட்டி சூடுபடுத்திக்கொண்டான்.

அறையெங்கும் மலைவணிகர்கள் தடித்த தோல் போர்வைகளை போர்த்தியபடி உடலுடன் உடல் ஒட்டி படுத்திருந்தனர். சிலர் படுத்தபடியே ஒருவரோடொருவர் தாழ்ந்த குரலில் தங்கள் மொழியில் உரையாடிக்கொண்டிருந்தனர். புரவியிலிருந்த பையில் உணவும் நீருமிருந்ததை அவன் எண்ணினான். குளிரினால் விரைந்து உள்ளே நுழைந்துவிட்டிருந்தான். மீண்டும் எழுந்துசென்று பொதிகளை அவிழ்த்து அவற்றை எடுத்துக்கொண்டு வருவதற்கு தயக்கமாக இருந்தது. அங்கு துயில்வதற்கு தன்னிடம் போர்வை ஏதுமில்லை என்பதை நினைவுகூர்ந்தான்.

கணப்பருகே படுத்திருந்த மலைவணிகன் ஒருவன் ஒருக்களித்து “வெளியே சென்று தங்கள் பொதிகளை எடுத்துவர தயங்குகிறீர்களா, இளவரசே?” என்றான். பூரிசிரவஸ் “நான் இளவரசனென்று எப்படி அறிந்தாய்?” என்றான். “தங்களை நான் பால்ஹிகபுரியில் கண்டிருக்கிறேன்” என்றான். “ஆம்” என்று அவன் சொன்னான். “என் பெயர் ஜம்பா. அன்பானவன் என்று பொருள்” என்றான் மலைவணிகன். “பொறுங்கள், நான் சென்று எடுத்துவருகிறேன்” என்று சொல்லி எழுந்து வெளியே சென்றான். திரும்பி வந்து பூரிசிரவஸின் பொதியை அவனிடம் அளித்தான். அவன் அதை அவிழ்த்து உள்ளிருந்து உலர்ந்த அப்பத்தையும், வாட்டிய இலையில் பொதிந்து கட்டப்பட்ட ஊன்கொழுப்பையும் எடுத்தான். அப்பத்தை தீயில் காட்டி அதில் கொழுப்பை வைத்து அது உருகியதும் இன்னொரு அப்பத்தை அதன்மேல் வைத்து கடித்து உண்ணத்தொடங்கினான்.

“நீங்கள் மது எதுவும் கொண்டுவரவில்லையா?” என்று ஜம்பா கேட்டான். “இல்லை” என்று பூரிசிரவஸ் சொன்னான். “இம்மலைப்பகுதியில் இரவில் சற்றேனும் மது இல்லாமல் துயில்வது நன்றல்ல. குருதி உறைந்துவிடும். பொறுங்கள், என்னிடம் உள்ளது” என்றான். எழுந்து சென்று தன் பொதியைத் திறந்து அதிலிருந்து சிறு உலோகத்தாலான புட்டியை எடுத்தான். அதன் மரத்தாலான மூடியை பல்லால் கடித்துத் திறந்து “அருந்துக!” என்றான். அரக்கு உருகும் மணம் எழுந்தது. “நேரடியாகவா?” என்றான் பூரிசிரவஸ்.

“இதை நீர்போலவோ யவனமதுபோலவோ அருந்தலாகாது. ஓரிரு சொட்டு வாய்க்குள் விட்டு மூக்கின் வழியாக வெளியே ஆவி வரவிடவேண்டும். தொண்டையை எரித்து நெஞ்சை புகையவைத்தபடி அது உள்ளிறங்க விடவேண்டும். குருதியில் அது வெம்மையாகக் கலப்பதை உணர்ந்தபின் அடுத்த துளி. ஓர்இரவுக்கு பத்து பன்னிரண்டு துளிகள் போதுமானவை. இதன் பெயர் சாங். அரிசியிலிருந்து எடுக்கப்படும் மது. எங்கள் மலைப்பகுதிகளில் இதை நீரனல் என்கிறோம்” என்றான்.

பூரிசிரவஸ் அதை வாங்கி முகர்ந்து பார்த்தான். எரிமணம் மூக்கை எரித்தது. “அஞ்ச வேண்டாம். இது நரம்புகளை முறுக்கவிழச் செய்யும். தசைகளை மென்மையாக்கும். இரவில் இனிய பெண்களை கனவில் வரவழைக்கும்” என்றான் ஜம்பா. புன்னகையுடன் பூரிசிரவஸ் ஓரிரு மிடறுகள் அருந்தினான். ஜம்பா சொன்னதுபோல உடலெங்கும் வெம்மை பரவத்தொடங்கியது. மீண்டும் மீண்டும் அதை உறிஞ்சவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. சற்று கழிந்ததும் ஜம்பா கைநீட்டி “போதும், இதற்கு மேல் அருந்தினால் இரவெல்லாம் துயிலின்றி நீரருந்தத் தோன்றும். காலையில் தலை பத்து மடங்கு எடைகொண்டிருக்கும்” என்றபடி அதை திரும்ப வாங்கிக்கொண்டான்.

பூரிசிரவஸ் பொதியிலிருந்து எடுத்த தன் போர்வையை உடல்மேல் இழுத்துக்கொண்டு படுத்தான். வெளியே குளிர்காற்று வீசியடிக்கும் ஓசை கேட்டது. பெரிய மலைக்கற்களை அடுக்கி கட்டப்பட்ட சுவர்கள் கொண்டிருந்த விடுதியின் வெளியே காற்று நுழையாமலிருக்க சேறு கொண்டு பூச்சிடப்பட்டிருந்தது. அதன்மேல் அறைந்து எழுந்த காற்று கூரைப் பலகைகளை அதிரச்செய்தது. “தங்களை ஒரே ஒருமுறை சந்தையில் பார்த்திருக்கிறேன். தங்களை இங்கு தொல்கதைகளின் பெருவீரர்களுக்கு நிகராக எண்ணுகிறார்கள். மைந்தர்களுக்கு தங்கள் கதைகளை சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆனால் சிலரே உங்களை பார்த்தவர்கள்” என்றான் ஜம்பா.

பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லவில்லை. “மலைக்குமேல் தாங்கள் இதற்கு முன்பு வந்திருக்கிறீர்களா, இளவரசே?” என்றான். “ஆம், நெடுங்காலத்துக்கு முன்பு” என்றான் பூரிசிரவஸ். “என்னுடைய மூதாதை ஒருவர் இங்கு மலையேறி வந்தார். அவர் இங்கு ஒரு பெண்ணை மணந்தார். இங்கேயே இருந்துவிட்டார். அவரைத் தேடிவந்தேன்.” ஜம்பா கையை ஊன்றி எழுந்து “முதிய பால்ஹிகரை சொல்கிறீர்களல்லவா?” என்றான். ஆர்வத்தை வெளிக்காட்டாமல் “ஆம்” என்றான் பூரிசிரவஸ். “அவர் நலமுடன் இருக்கிறாரா?” என்றான்.

“மிகுந்த நலமுடன் இருக்கிறார். அவருக்கு இரண்டு மனைவிகளிலாக ஏழு மைந்தர்கள். ஒரு மனைவி இறந்துவிட்டார். அவர்கள் எழுவரில் ஒருவருக்கு நிகராக நம்மில் பத்து பேர் மற்போரிட இயலாது. வெண்பாறையில் செதுக்கப்பட்ட சிலைகள் போன்றவர்கள். மூதாதையர் அவ்வடிவில்தான் இருந்தார்கள் என்கிறார்கள். ஆனால் மைந்தர் எழுவரையுமே தோள்வல்லமையால் வென்றவர் முதியவர்” என்றான் ஜம்பா. “உண்மையில் இன்று மலையில் அவரை வெல்ல எவரும் இல்லை. வெல்லும் வாய்ப்புள்ள ஒருவன் இருக்கிறான். பால்ஹிகரின் மறைந்த துணைவியின் மூத்தவரது பெயரன். அவன் பால்ஹிகரைத் தூக்கி அறைந்தால் அவனே அந்த மலைக்குடிக்கு தலைவனாவான்.” பூரிசிரவஸ் போர்வைக்குள் குளிர் நுழைந்ததைப்போல் மயிர்ப்பை அடைந்தான். “அவன் பெயரென்ன?” என்றான்.

“யாமா என்று அவனை அழைக்கிறார்கள். பால்ஹிகர்களின் பேருடலும் வெண்ணிறமும் கொண்டவன். ஆனால் நீலக்கண்கள் மட்டுமில்லை. அவன் கண்கள் அங்கே மலைக்குக் கீழே உங்கள் நிலத்தில் வாழும் மக்களுக்குரியவை. முன்னர் எப்போதோ வந்து தங்கிச்சென்ற அவன் தந்தையின் கண்கள் அவை என்கிறார்கள்.” பூரிசிரவஸ் உளம் விம்மி உதடுகளை அழுத்தியபடி கண்களை மூடிக்கொண்டான். “பால்ஹிகரின் மைந்தர்கள் எழுவரையும் மற்போரில் அவன் வென்றிருக்கிறான். ஒருமுறை மலையேறிச்சென்று ஒரு காட்டு எருதைக் கொன்று அதை தூளில் தூக்கி மூன்று மலையேறி இறங்கி தன் இல்லத்திற்கு வந்திருக்கிறான்.”

ஜம்பா மெல்ல சிரித்து “இன்று மலைப்பெண்கள் அனைவரும் விரும்பும் ஆண்மகன் அவன். இன்னும் சில ஆண்டுகளில் இந்த மலைமுழுக்க அவனுடைய மைந்தர்கள் வளரத் தொடங்கிவிடுவார்கள்” என்றான். பூரிசிரவஸ் மெல்லிய விம்மலோசை எழுப்பினான். “என்ன சொன்னீர்கள்?” என்று ஜம்பா கேட்டான். இல்லை என்று அவன் தலையசைத்தான். “களைத்திருக்கிறீர்கள். உங்களை அறியாமலேயே குறட்டையொலி வருகிறது. துயில்க!” என்று சொல்லி ஜம்பா போர்வையை தன்மேல் இழுத்துக்கொண்டான்.

போர்வைக்குள் நிறைந்த வெம்மையை குருதி ஏற்றுக்கொண்டது. தசைகள் குளிருக்காக இறுகியிருந்த செறிவு உடலிலிருந்து விலக உருகி மெல்ல பரவுவதுபோல் தன் உடலை உணர்ந்தான். மயங்கி மயங்கி உருவழிந்து பரவிய நனவில் மிக அருகிலென அவன் தன் மைந்தனை கண்டான். அவன் முன்பே அவனை அறிந்திருந்தான். பேருடல் கொண்ட பூரிசிரவஸ். தொல்பால்ஹிகன். அவன் கண்களை மூடி மிக அருகே தன் மைந்தனின் முகத்தை பார்த்தபடி படுத்திருந்தான்.

tigமறுநாள் புலரியில் பூரிசிரவஸ் ஒரு கனவு கண்டான். ஒரு மலைச்சரிவில் இளவெயில் விழும் முற்றத்தில் அவன் மைந்தனுடன் அமர்ந்திருந்தான். ஓர் அகவை அடைந்த குழவி என்றாலும் மைந்தன் மிகுந்த எடைகொண்டிருந்தான். அவன் கால்களின்மேல் அமர்ந்து கைகளை வீசியபடி எம்பி எம்பி குதித்தான். திறந்த சிவந்த இதழ்களிலிருந்து வாய்நீர் வழிந்தது. மேல் ஈறில் இரண்டு பாற்பற்கள். குழிகள் விழுந்த கன்னம். அவன் சிரிப்பின் ஒலி குருவிகளின் குரலென கேட்டது. பிரேமை உள்ளிருந்து வந்து அவனைக் கடந்து மரத்தாலான குடத்துடன் சென்றாள். குடத்திலிருந்த நீர் அவன் தோளில் விழுந்தது. குளிர்ந்த நீர். அவன் உடல் சிலிர்த்தது.

விழித்துக்கொண்டபோது அவன் தன் முதுகிலும் தோளிலும் போர்வை விலகியிருப்பதை உணர்ந்தான். இழுத்து மூடிக்கொண்டு புரண்டபோது காலின்மேல் ஒரு வணிகன் தலைவைத்து துயில்வதை அறிந்தான். மெல்ல கால்களை உருவிக்கொண்டான். கதவு திறந்து உள்ளே வந்த ஜம்பா “விழித்துவிட்டீர்களா? கிளம்பலாம்… இன்று நல்ல வெயில் இருக்கும். வழித்தடை இருக்காது” என்றான். “விடிந்துவிட்டதா?” என்றான் பூரிசிரவஸ். “இருளவே இல்லை என்று சொல்லவேண்டும். நான் இரவில் எழுந்து பார்த்தேன். பனிமலை ஒளியில் கூழாங்கற்களை பார்க்கமுடிந்தது” என்றான் ஜம்பா.

மேலும் சற்றுநேரம் பூரிசிரவஸ் படுத்தே கிடந்தான். தன் உடல் உருவாக்கிய அனலில் தானே இதமாக நனைந்தபடி. இனிமை இனிமை என உள்ளம் அரற்றியது. ஏன் இந்த இனிமை? அரிதாக மதியத்துயில் விழிக்கையில், எங்கும் எந்த ஓசையும் இல்லாதிருந்தால், வெளியே வெயில் முறுகி தேன் நிறம் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு படுத்திருக்கையில் அந்த இனிமையை உணர்ந்திருக்கிறான். வெறும் இனிமை. இருத்தல் மட்டுமே அளிக்கும் இனிமை. மெய்யான இனிமை என்பது எதன்பொருட்டும் எழாததாகவே இருக்கமுடியும்.

அவன் எழுந்து போர்வையை சுருட்டிக் கட்டினான். ஜம்பா “நேற்று நீங்கள் நன்றாக துயின்றீர்கள். நான் பார்த்தேன். மது சிறப்பான துணைவன்” என்றான். பூரிசிரவஸ் “ஆம், இனிய கனவுகள்” என்று புன்னகை செய்தான். வெளியே சென்று மரத்தொட்டிக்குள் குடுவையை விட்டபோது அது கல்லில் முட்டியது. குனிந்து பார்த்தபோது நீர் உறைந்து மிதப்பது தெரிந்தது. அதை ஒதுக்கி சற்று நீரள்ளி கண்களையும் வாயையும் கழுவிக்கொண்டான். “உணவுக்கு இங்கிருக்க வேண்டியதில்லை. சென்றபடியே உண்ணலாம். புரவி உண்டு துயின்று புத்துணர்வுடன் இருக்கிறது. அது சலிப்பதற்குள் நாம் நெடுந்தொலைவு சென்றுவிடலாம்” என்றான் ஜம்பா.

பூரிசிரவஸ் தொழுவுக்குள் சென்றான். அங்கே நான்கு புரவிகள்தான் எஞ்சியிருந்தன. அவன் புரவி அவனை நோக்கி தலைதாழ்த்தி கனைத்து முன்காலால் நிலத்தை தட்டியது. அவன் அதை அணுகி மெல்ல தட்டியபின் அவிழ்த்து வெளியே கொண்டுவந்தான். அது சீறிய மூச்சுடன் தரையை முகர்ந்தது. மூடிய அறைக்குள் அது தரைக்காக ஏங்கியிருக்கிறது. ஜம்பா பொதிகளை கொண்டுவந்து புரவியின்மேல் வைத்து கட்டினான்.

“இவ்வளவு இறுக்கமாக பொதிகளை கட்டக்கூடாது. தளர்வாகவும் கட்டக்கூடாது. சிறுசிறு பொதிகளாகக் கட்டி அவற்றை ஒன்றாகத் தொகுத்துக் கட்டவேண்டும். மலையேறும்போது பொதி அசையக்கூடாது, பொதிக்குள் உள்ளவையும் அசையக்கூடாது. அதுவே புரவிக்கு பிடிக்கும். அதன் விசை குறையாதிருக்கும்” என்றான். அவனே பொதிகளைக் கட்டியபின் தன் அத்திரியை அழைத்துவந்தான். அதைக் கண்டதும் பூரிசிரவஸின் புரவி மெல்ல கனைத்தது. “செல்வோம்” என்றான் ஜம்பா. அவர்கள் மலைச்சரிவில் வளைந்து மேலேறத் தொடங்கினர்.

வெண்பனிமலைகள் உறைந்து சூழ்ந்திருந்தன. கதிர் எழ நெடுநேரமாகும் என்று தெரிந்தது. வானம் சாம்பல்நிற ஒளியுடன் முகில்களே இல்லா வெளியாக வளைந்திருந்தது. பறவைகளே இல்லை. குளிர்காலத்திற்கு முன்னர்தான் வடக்கிலிருந்து பறவைகள் கூட்டம் கூட்டமாக மலைகளைக் கடந்து தெற்கே செல்லும் என பிரேமை சொன்னதை நினைவுகூர்ந்தான். பனித்துகள்கள் பறந்துசெல்வதுபோலத் தோன்றும். மலைகளுக்கு மேலிருந்து ஒளியும் அமைதியும் வழிந்து சரிவுகளில் பரவியிருந்தன. குளிரில் வெடித்த, வெளிறி பொருக்குபடிந்த மலைப்பாறைகள் துயிலில் என பதிந்திருந்தன. அவற்றை நோக்க நோக்க உள்ளத்துள் சொற்கள் விசையழிந்து சிறகுதிர்ந்து விழுந்தமைந்தன.

வழியெல்லாம் ஜம்பா பேசிக்கொண்டே வந்தான். அவனால் பேச்சை நிறுத்த முடியாது என்று தோன்றியது. பேச்சினூடாக அவன் எதை அடைகிறான் என்று பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டிருந்தான். அவன் எதையும் புனைந்துருவாக்கவில்லை. கூரிய நிகழ்வுகள் எதுவும் அவன் மொழியிலெழவில்லை. விந்தையானதோ எண்ணத்தை தூண்டுவதோகூட அவனால் சொல்லப்படவில்லை. எளிய அன்றாட வாழ்க்கைத் தருணங்கள் மட்டுமே. பின்னர் அவனுக்கு தோன்றியது, மொழியினூடாக வாழ்ந்ததை திரும்ப வாழ்கிறான் என்று. இவ்வாறு இவன் செல்லும் வழிகள் அனைத்திலும் உடன் செல்பவருடன் பேசினான் என்றால் ஒரு வாழ்க்கையை எத்தனை முறை வாழமுடியும்?

இந்த மலைப்பகுதிகளில் ஒன்றுமே நிகழ்வதில்லை. ஒருதுளி வாழ்க்கையை நிகழ்வுப்பெருக்கென ஆக்கிக்கொள்ளும் பொருட்டே இவன் பேசிக்கொண்டிருக்கிறான். அப்பேச்சை வழிநடத்த பூரிசிரவஸ் முற்படவில்லை. அவனுக்கு தன் மைந்தனைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு ஆர்வமிருந்தது. ஆனால் அதைப்பற்றி கேட்கப்போனால் மிக ஆழமானதும் அவனுக்கே உரித்தானதுமான ஒன்றை எடுத்து வெளியே வைப்பதுபோலத் தோன்றி உளம்கூசினான். ஆனால் எங்கேனும் தன் மைந்தனைப் பற்றிய பேச்சு எழுமோ என்று அனைத்து சொற்களிலும் செவி நாட்டினான். சுழன்று வரும் பேச்சில் மீண்டும் மைந்தனைப் பற்றிய ஒரு குறிப்பு வரும்போது ஓசை கேட்டு சிலிர்க்கும் வேட்டைவிலங்கென அவன் அனைத்துப் புலன்களும் விழிப்பு கொண்டன. நெஞ்சு படபடத்தது. முகம் கனிந்து விழிநீர்மை கொண்டது. அம்மெய்ப்பாடுகளை அவன் காணாமல் இருக்கும்பொருட்டு வேறு பக்கம் திரும்பி ஆர்வமற்றவன்போல் உம் ஒலியெழுப்பிக்கொண்டிருந்தான்.

ஜம்பா மீண்டும் மீண்டும் மைந்தனின் பெருந்தோள் வல்லமை பற்றியே சொன்னான். எங்கும் எதிலும் தயக்கமற்றவன். எண்ணி முடிவெடுப்பதில்லை. ஒருமுறை மதங்கொண்ட மலை எருது ஒன்று சரிவில் விரைந்து ஓடி சாலையில் சென்று கொண்டிருந்த வணிகக்குழுவை நோக்கி வந்தபோது அனைவரும் அலறி பின்னால் சென்றனர். அவன் ஒரு கணமும் எண்ணாமல் முன்னே சென்று கீழே கிடந்த கல்லை எடுத்து அதன் தலையில் ஓங்கி அறைந்தான். அது நிலைதடுமாறி விழுந்ததும் கால்களைப்பற்றி சரிவில் உருட்டிவிட்டான். ஆழத்தில் அது விழுந்து அதன் உடல் உடைந்ததும் மேலிருந்து சற்றும் தயங்காமல் குதித்து அதனருகே சென்றான். அதை இரு கால்களைப் பற்றி தோளிலேற்றிகொண்டு மேலே வந்தான். “ஒருவாரம் எங்கள் குடி உண்ணுவதற்குரிய உணவு” என்று பெரிய பழுப்பு நிற பற்களைக்காட்டி சிரித்தபடி சொன்னான்.

“தயங்காமையே அவன் ஆற்றல். ஏன் அவன் தயங்குவதில்லை என்றால் அவன் தோள்கள் வலிமை மிக்கவை” என்றான் ஜம்பா. ஆம் என்று பூரிசிரவஸ் தனக்குள் சொல்லிக்கொண்டான். என் உருவம், என் தோள்கள். இவையே என்னை எங்கும் தயங்க வைக்கின்றன. பெருந்தோள் கொண்டு தயங்காது முன்செல்லும் ஒரு களிற்றெருது என்னுள் இருந்துள்ளது. அவ்விதை முளைத்தவன் அவன். ஒவ்வொரு அடிக்குமென மைந்தன் அவனுள் உருத்தெளிந்துகொண்டிருந்தான். அவனை இளங்குழவியாக கையிலெடுத்து உடலோடணைத்து முத்தமிட்டதாக, கருவறைமணம் முகர்ந்ததாக அவன் உள்ளம் கனவுகொண்டது. அவன் தோள்கள் வளர்வதை ஒவ்வொருநாளுமென தொட்டறிந்ததாகவே அது நம்பலாயிற்று.

அவனால் பிரேமையின் ஊர் நெருங்குவதை உணரமுடியவில்லை. அச்சாலையின் இரு மருங்குகளும் முற்றாக மாறிவிட்டிருந்தன. முன்பு ஒரு பொதிசுமக்கும் அத்திரி வந்தால் பிறிதொரு அத்திரி மலைவிளிம்பில் ஒண்டி நின்று வழிவிடவேண்டுமளவுக்கு சிறிதாக இருந்தது அப்பாதை. இப்போது பொதிவண்டிகளே ஒதுங்காமல் வழிவிட்டுச் செல்லுமளவுக்குப் பெரிதாக வெட்டி அகலப்படுத்தப்பட்டிருந்தது. ஷீரவதிக்குப் பின் பிரேமையின் ஊர்வரைக்கும் முன்பு ஓரிரு சாவடிகளன்றி வீடே இல்லை. இப்போது மலைச்சரிவுகளில் பல இடங்களில் மலையூர்களின் வழக்கப்படி தாழ்வான மரக்கூரை கட்டி, மேலே மண்பெய்து உருவாக்கப்பட்ட இல்லங்கள் கண்ணுக்குப்பட்டன. ஆடுகளையும் மலை மாடுகளையும் மேய்த்தபடி இடையர் குடிகள் நிற்பது தெரிந்தது.

ஜம்பா தலைவணங்கி “நாம் வந்துவிட்டோம்” என்று சொன்னபோது “எங்கு?” என்று அவன் கேட்டான். “தாங்கள் விரும்பிய இடத்திற்கு. இங்குதான் தங்கள் மூதாதை பால்ஹிகர் நான் கிளம்பும்போது தங்கியிருந்தார். தன் மைந்தரோடு அவ்வப்போது பூசலிட்டு மலையேறிச் சென்றுவிடுவது அவருடைய வழக்கம். மைந்தர்கள் எழுவரும் தங்கள் மனைவியருடன் இங்கு ஏழு இல்லங்களிலாக வசிக்கிறார்கள். அவருடைய துணைவி ஓர் இல்லத்தில் தனியாக வாழ்கிறார். அவர் ஏதேனும் ஓர் இல்லத்தில் இருப்பார். அவர்களுடன் அவர் இப்போது இருந்தாரென்றால் நீங்கள் சந்திக்கலாம்” என்றான் ஜம்பா. “நன்று” என்று தலைவணங்கி கைவிரித்து அவனை மும்முறை தழுவி விடையளித்தான் பூரிசிரவஸ்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 17

tigபால்ஹிகபுரியின் குடிப்பேரவைக்கு பூரிசிரவஸ் கிளம்பிக்கொண்டிருந்தபோது மைந்தர் அவனைக் காண விரும்புவதாக ஏவலன் வந்து சொன்னான். மேலாடையை சீரமைத்தபடி அவன் சென்று பீடத்திலமர்ந்து அவர்களை வரச்சொல்லும்படி கைகாட்டினான். முதல் மைந்தன் யூபகேதனன் முன்னால் வர மைந்தர்கள் நிரையாக உள்ளே வந்தனர். யூபகேதனன் கைகூப்பியபடி உள்ளே வந்து அவனருகே குனிந்து கால்தொட்டு வணங்கினான். அவன் தலையில் கைவைத்து “நீடுவாழ்க! வெற்றியும் புகழும் சேர்க!” என்று அவன் வாழ்த்தினான். மைந்தர்கள் கால்தொட்டு வணங்கி வாழ்த்துகொண்டு சுவர் அருகே நின்றனர்.

பூரிசிரவஸ் மைந்தர்களை ஏறிட்டுப் பார்க்க விரும்பவில்லை. எப்பொழுதும் பார்த்ததுமே அவர்களை அள்ளி தோளோடும் நெஞ்சோடும் அணைத்துக்கொள்வது அவன் வழக்கம். அவர்களிலொருவராக புரவி ஊர்வதும், போர்க்களியாடுவதும், நீர்விளையாடுவதும், அவர்களின் மன்றுகளில் அமர்ந்து சொல்லாடுவதும் அவன் இயல்பு. அவர்களும் தங்களில் ஒருவராகவே அவனை எண்ணினர். யூபகேதனனும் இளையவன் யூபகேதுவும் சேர்ந்து சென்றமுறை கைகால்களைப் பற்றித் தூக்கி குளிர்ந்த ஆற்று நீரில் வீசினர். ஒருமுறை அவன் ஆடைகளைப் பறித்து அவனை மலைச்சரிவில் விட்டுவிட்டு அவர்கள் ஓடிச் சென்றதுண்டு. அன்று முதல்முறையாக அவர்களிடமிருந்து ஒரு விலக்கத்தை உணர்ந்தான்.

யூபகேதனன் “தந்தையே, அன்னை தங்களுடன் நடந்த உரையாடலைப் பற்றி சொன்னார்” என்றான். பூரிசிரவஸ் விழிதூக்காமல் “ஆம், இன்று அவையில் அவர்கள் எனக்கு மறுப்புரைக்கப் போவதாக சொன்னார்கள்” என்றான். யூபகேதனன் “அவர்கள் உரைக்கலாம். ஆனால் அவையில் நாங்கள் எழுந்து தங்களுடன் வருவதாக கூறப்போகிறோம். குண்டலம் அணியாத இளையவர்கள் மட்டும் இங்கிருக்கட்டும். அன்னையருக்கு மைந்தராக அவர்கள் எஞ்சட்டும். நாங்கள் களம் காண்பதாக முடிவெடுத்திருக்கிறோம்” என்றான்.

பூரிசிரவஸ் சீற்றத்துடன் விழிதூக்கி அவனைப் பார்த்து “போருக்கெழுகையிலேயே திரும்பிவருவதில்லை என்ற எண்ணம் கொண்டிருக்கிறீர்களா?” என்றான். யூபகேதனன் அஞ்சாமல் “ஆம் தந்தையே, நன்கு அறிந்திருக்கிறோம் திரும்பி வரமுடியாது என” என்றான். “ஏன்?” என்று அவன் கேட்டான். “நாங்கள் குறுகிய தொலைவில் விரைந்து வில்லெடுக்கும் மலைவீரர்கள். ஆகவே எங்களைத்தான் முதன்மைப்படையாக அனுப்புவார்கள். முதன்மைப்படையில் பெரும்பாலும் எவரும் எஞ்சுவதில்லை” என்று யூபகேதனன் சொன்னான். பூரிசிரவஸ் கைவீசி “அதைப்பற்றி நாம் பேசவேண்டியதில்லை. இறப்பை எண்ணி எவரும் போருக்குச் செல்லலாகாது என்பார்கள்” என்றான். “இறப்புக்குத் துணிந்து செல்லவேண்டும் என்பதுண்டு” என்று யூபகேதனன் சொன்னான்.

யூபகேது “இத்தருணத்தில் நாம் படைக்குச் செல்லாமல் ஒதுங்கியிருப்பது பால்ஹிகக் குடிக்கு உருவாக்கும் இழிபெயர் சிறிதல்ல. நூற்றாண்டுகள் இது நிற்கும். நாம் கோழைகள் என்று அறியப்படுவோம். அச்சொல் பரவினால் இங்கு சூழ்ந்திருக்கும் அனைத்துக் குடிகளும் ஓயாமல் நம்மீது படைகொண்டு வருவார்கள். பல தலைமுறைகள் நாம் அவர்களால் தாக்கப்பட்டுக்கொண்டே இருப்போம். இன்று ஓரிருவர் களம்படக்கூடும் என்று அஞ்சி தயங்கினோம் என்றால் நமது தலைமுறைகள் களத்தில் இறந்துகொண்டே இருப்பார்கள்” என்றான்.

“மாறாக குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் பால்ஹிக வீரர்கள் முன்னின்று பெருந்திறலுடன் போர்புரிந்து மடிந்தார்கள் என்னும் புகழ்ச்சொல் பரவினால் பின்னர் இயல்பாகவே இம்மலைக்குடிகளின் தலைமைப்பொறுப்பு நமக்கு வந்து சேரும்” என்றான் தூமகர்ணன். “இன்று நாம் செல்வம் மிகுந்த நாடாக மாறிவிட்டோம். வீரர்கள் என்று நிறுவவேண்டிய இடத்திலிருக்கிறோம். வீரமில்லாத செல்வம் முச்சந்தியில் திறந்துவைக்கப்பட்ட கருவூலம் போன்றது என்பார்கள்.” பூரிசிரவஸ் “ஆம், ஆனால் பால்ஹிக நெறிகளின்படி உங்கள் அன்னையர் முடிவெடுக்க உரிமையுள்ளவர்கள். அவர்கள் ஒப்புதல் அளிக்காமல் எவரும் போருக்குச் செல்ல இயலாது” என்றான்.

யூமகேதனன் “அன்னையர் முடிவெடுக்கும் இடத்திலிருப்பதனால்தான் நாம் போர்த்திறனற்றவர்களாக இதுவரை தேங்கியிருந்தோம். நான் நூல்சூழ்ந்து நோக்கியது இது, தந்தையே. அன்னையர் முதன்மை கொண்ட குடிகள் வளர்வதே இல்லை. ஏனெனில் நிலைக்கோள் என்பதே பெண்டிர் இயல்பு. அன்னையர் தங்கள் மைந்தர்களை தாய்க்கோழி சிறகுக்குள் என அடைகாத்து வைத்திருக்கிறார்கள். வெல்வதும் கடந்து செல்வதும் அவர்களுக்கு புரிவதில்லை. ஒவ்வொன்றையும் அவ்வண்ணமே பேணுவதே அவர்களின் கடன் என தெய்வங்கள் வகுத்துள்ளன. அன்னையர் முடிவெடுக்கும் மரபிலிருந்து நாம் மீறிச் சென்றாக வேண்டும். தந்தை முதன்மை கொள்ளும் குடியாக நாம் மாறியாகவேண்டும்” என்றான்.

பூரிசிரவஸ் “நன்று. ஆனால் என்றும் பால்ஹிக அவையென்பது தொல்குடிகளாலானது. ஷத்ரியர் அவைகளெதிலும் பெண்டிர் வந்தமரவும் முடிவுரைக்கவும் இடமில்லை. நாமோ முதன்மை முடிவையே அவர்களுக்கு விட்டுவிட்டவர்கள். இப்போருக்காக இத்தருணத்தில் அதை மாற்றுவது எளிதல்ல” என்றான். “நாங்கள் போருக்கெழுகிறோம். எங்கள் அன்னையர் அதற்கு ஒப்புக்கொண்டாக வேண்டும்” என்று யூபகேது சொன்னான். “அவர்கள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று சற்று முன் சொன்னார்கள். அவர்கள் எண்ணத்தை என்னால் மாற்றமுடியுமென்று தோன்றவில்லை. உங்களைவிட அவர்களை நான் நன்கறிவேன்” என்றான் பூரிசிரவஸ்.

யூபகேதனன் மெல்ல புன்னகைத்து “ஆம் தந்தையே, எங்களைவிட அவர்களை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் உங்களைவிட எங்களுக்கே அவர்கள்மேல் பிடிப்பு மிகுதி. அவர்கள் நாங்கள் களம்செல்வதை ஒப்பியாக வேண்டும். இல்லையேல் நாங்கள் அறுவரும் அவர்கள் முன் வாளால் கழுத்தறுத்து விழுந்து இறப்போம் என்று குலத்தின்மேல் ஆணையாகக் கூறுகிறோம்” என்றான். பூரிசிரவஸ் திகைப்புடன் “என்ன உரைக்கிறீர்கள்? அறிவின்மை!” என்றான். யூபகேதனன் “ஆம், அவ்வாறே கூறவிருக்கிறோம். அவர்கள் எங்களை களத்திற்கு அனுப்பினால் சிலரேனும் மிஞ்ச வாய்ப்புள்ளது. இல்லையென்றால் எங்கள் அறுவரையும் இன்றே பிணமென அவர்கள் பார்க்கவேண்டியிருக்கும்” என்றான்.

“இது முறையல்ல. இவ்வாறு கூறுவதென்பது அன்னையரை சிறுமை செய்வது” என்று பூரிசிரவஸ் சொல்ல “இது எங்கள் முடிவு. இதில் தாங்களும்கூட சொல்லற்றவரே” என்று தூமகர்ணன் சொன்னான். “அவையில் தாங்கள் எங்களை படைமுகம்கொண்டு செல்லக்கூறும்போது நான்கு அன்னையரும் மறுப்புரைக்கமாட்டார்கள். நாங்கள் எழுந்து வாளெடுத்து வஞ்சினம் உரைப்போம். பால்ஹிக மைந்தர்கள் பதினெண்மர் இப்போரில் கலந்து கொள்வோம். மூத்த தந்தை சலனின் மைந்தர் சுபூதரும் அவர் இளையவர் காதரரும் மட்டுமே இங்கிருப்பார்கள். அவர்கள் அஸ்தினபுரியின் படைசூழ்கைகளையும் நகராளும் நுட்பங்களையும் நேரில் கற்றவர்கள். அவர்கள் இங்கே இருந்து நம் குடியை வழிநடத்தட்டும்.”

“முடிவை எடுத்துவிட்டு என்னிடம் சொல்ல வந்திருக்கிறீர்களா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். யூபகேதனன் “ஆம், தந்தையே. சற்று முன் நாங்கள் மூத்தவரின் அவைக்கூடத்தில் கூடினோம். இயல்வதென்ன என்று பேசினோம். இதை முடிவென எடுத்து அன்னையர் எண்மருக்கும் அறிவித்து அதன் பின் அவைக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம்” என்றான். பூரிசிரவஸ் சற்று தளர்ந்து பீடத்தில் நன்கு சாய்ந்து சிலகணங்கள் அமைதியாக இருந்தான். பின்பு “இதில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. நன்று நிகழ்க!” என்றான்.

சோமதத்தரின் குடியவையில் அஸ்தினபுரியில் நிகழ்வதை பூரிசிரவஸ் விரித்துரைத்தான். “இப்போர் இன்று தவிர்க்க இயலாத வருநிகழ்வாக எழுந்து நின்றுள்ளது. பாரதவர்ஷம் கண்டதில் மிகப் பெரும்போர். ஆகவே தலைமுறைகள் இதை சொல்லெனப் பேசி நினைவில் கடத்திக் கொண்டுசெல்லும். இதில் ஒவ்வொருவரும் ஆற்றும் பங்களிப்பினால்தான் இனி வரலாறு அமையவிருக்கிறது. நமது பங்களிப்பு சற்றும் குறையலாகாது. அஸ்தினபுரியிலிருந்து நாம் படைபாதுகாப்பு கொண்டோம். அஸ்தினபுரி நமது சாலைகளை பாதுகாத்ததனால்தான் நமது செல்வவளம் பெருகியது. அரசென இன்று நாம் கொடியும் கோட்டையும் அரண்மனையுமென்று அமைந்திருப்பது அஸ்தினபுரியால்தான். அதற்கு நிகர் செய்யவேண்டிய தருணம் இது.”

“ஆகவே, இதில் பால்ஹிகப் படை கலந்துகொள்ள வேண்டும். பால்ஹிகக் கூட்டமைப்பில் இப்போது சிபி நாடு மட்டுமே பாண்டவர்களின் தரப்பில் உள்ளது. மத்ரர் அங்கு செல்லக்கூடுமென்று எண்ணியிருந்தோம். அவரும் கௌரவர் தரப்புக்கு வந்துள்ளார். ஆகவே பால்ஹிகக் கூட்டமைப்பின் முழுப் படைகளும் கௌரவர் தரப்பில் நின்று போர்புரியப் போகின்றன. நமது கொடைக்கு நிகராக போருக்குப் பின் பெற்றுக்கொள்வோம். இன்று நம்மில் மிகச் சிறந்ததைக் கொண்டு களம் காண்போம். இது வேள்வி. ஊர்கூடி இயற்றினாலேயே வேள்வி தெய்வங்களுக்கு உகந்ததாகிறது என்பார்கள். ஒரு மணி அரிசியேனும் ஒரு கை அன்னமேனும் ஒரு துளி நெய்யேனும் வேள்விக்கு ஒவ்வொரு குடியும் அளித்தாகவேண்டும். குண்டலம் அணிந்த நமது மைந்தர்கள் அனைவரும் இப்போரில் கலந்துகொள்ள வேண்டும். குடிக்கு ஒருவர் எஞ்ச பிறர் கலந்து கொள்ளவேண்டுமென்பது எனது விழைவு. அரசாணை கோருகிறேன்” என்றான்.

சோமதத்தர் மைந்தர்களை மாறி மாறி பார்த்தார். சலன் “இம்முடிவை மைந்தர்களுக்கே விட்டுவிடுவோம்” என்றான். பூரிசிரவஸ் “அவர்கள் முன்னரே முடிவெடுத்துவிட்டதை என்னிடம் சொன்னார்கள்” என்றான். யூபகேதனன் எழுந்து “இங்கு பால்ஹிகபுரியின் இளவரசர்கள் பதினெண்மர் உள்ளோம். இதில் ஐவர் ஒழிய பதின்மூன்றுபேர் போரில் கலந்துகொள்வதாக முடிவெடுத்திருக்கிறோம். எங்கள் அன்னையரிடம் அதற்கான ஒப்புதலை பெற்றிருக்கிறோம்” என்றான். சோமதத்தர் திரும்பி “அன்னையரின் ஆணை என்ன?” என்றார்.

அரசியர் தலைகுனிந்து விழிதாழ்த்தி அமர்ந்திருந்தனர். குக்குட குடித்தலைவரும் பாமைக்குத் தந்தையுமான சுகேதர் “அன்னையருக்கு மறுப்பேதும் இல்லை அல்லவா?” என்று கேட்டார். அவர்கள் ஒன்றும் சொல்லாமலிருக்கக் கண்டு “மறுப்புரை இல்லையா? மறுப்புரை இருக்குமெனில் கூறுக! இது இறுதிக் கோரிக்கை. எவருக்கும் மறுப்பில்லையா?” என்று குடித்தலைவர் கேட்டார். பின்னர் தன் குடிக்கோலைத் தூக்கி “மறுப்பில்லையெனில் அவ்வாறே ஆகுக!” என்றார். கரபஞ்சகம், கலாதம், குக்குடம், துவாரபாலம் எனும் நாற்பெரும் குலங்களின் தலைவர்களும் எழுந்து கோல்தூக்கி அரசருக்கு ஆதரவளித்தனர்.

பின்னர் கூடியிருந்த அனைத்து சிறுகுடித்தலைவர்களும் தங்கள் கோல்களைத் தூக்கி வாழ்த்துரை எழுப்பினர். “பால்ஹிகக்குடி வெல்க! சோமதத்தர் வெல்க! அஸ்தினபுரி வெல்க! ஆளும் பேரரசர் துரியோதனர் வெல்க! அருள்க குலதெய்வங்கள்! அருள்க மூதாதையர்! அருள்க அன்னையர்! அருள்க மலைவாழும் தொல்தெய்வங்கள்!” என்று அவை முழங்கியது. பூரிசிரவஸ் தன் துணைவியரைப் பார்த்தான். பாமை தலைகுனிந்து அமர்ந்திருக்க கண்ணீர் வழிந்து மடியில் சொட்டிக்கொண்டிருந்தது. பால்ஹிகபுரியின் அனைத்து அரசிகளுமே கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தனர்.

tigதன் அறைக்கு மீண்டு மறுநாள் புலரியில் பயணம் செய்வதற்கான ஒருக்கங்களை ஏவலருக்கு ஆணையிட்டுவிட்டு பூரிசிரவஸ் மாளிகையின் படிகளில் ஏறினான். தனியாகச் செல்ல அவன் எண்ணியிருக்கவில்லை. ஏவலன் “எவரெவர் உடன் வருகிறார்கள், அரசே?” என்றதும் இயல்பாகவே “நான் மட்டும், தனியாக” என்று அவன் வாய் சொன்னது. அதன்பின்னரே வேறெவரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்வதைப்பற்றி அவன் எண்ணியிருக்கவே இல்லை என அவன் உணர்ந்தான். அப்பயணத்தை அவன் உள்ளம் மீளமீள நிகழ்த்திக்கொண்டிருந்தது. அதில் அவன் புரவியில் அமர்ந்து தனியாக சென்றுகொண்டிருந்தான். குளிர்பனி முகடுகளுடன் மலைகள் சூழ்ந்து அமைதியலைகளாக நின்றிருந்தன.

அப்பாதைபோல அவனுக்கு அணுக்கமான பிற பாதை இல்லை என உணர்ந்தான். அங்கிருந்த ஒவ்வொரு கூழாங்கல்லும் நன்கறிந்திருந்ததுபோலத் தோன்றியது. பிறிதொருமுறை செல்லாத அப்பாதையில் பலநூறு முறை உள்ளத்தால் பயணம் செய்துகொண்டிருந்தான். கனவுகளில் அதில் விரைந்தான். இளமையில் இன்னும் சிலநாட்களில் கிளம்பிவிடுவோம் என்று ஒவ்வொரு முறையும் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பணி வந்து அவனை தடுத்தது. அல்லது அவ்வாறு தடுக்கும் ஒரு பணிக்காக அவன் உள்ளத்தின் ஒரு பகுதி தேடிக்கொண்டிருந்தது. பின்னர் ஆண்டுகள் கழியக் கழிய ஒவ்வொருமுறை கிளம்ப எண்ணும்போதும் அத்தருணத்தை எப்படி எதிர்கொள்வது என்னும் தயக்கமே கால்களை இழுத்தது.

அவனுள் வாழும் ஒரு தெய்வம் அவன் கிளம்புவதை விரும்பவில்லை என்பதுபோல அதற்கென்றே சிறு தடைகளும் அப்போது எழும். ஒருமுறை புரவியின் இருபுறமும் பனியாடைகளும், வழியுணவும், பரிசுப்பொருட்களும் கொண்ட பொதிகளை தொங்கவிட்டு அவன் அதன் கழுத்தை நீவி தாடையை அழுத்தி மெல்லிய குரலில் “கிளம்புவோம்” என்று சொல்லி சேணத்தில் கால்வைக்கும்போது அரண்மனைக்குள்ளிருந்து அவன் இளைய மைந்தன் பிரபாவன் இறங்கி ஓடிவந்து “தந்தையே, அஸ்தினபுரியிலிருந்து ஓலை. பேரரசர் இன்னும் பதினைந்து நாட்களில் பேரவை கூட்டப்போகிறார். தாங்கள் வாரணவதம் சென்று அங்குள்ள படைத்தலைமையை சீர்படுத்திவிட்டு அவைக்குச் செல்ல வேண்டுமென்று ஆணை” என்றான். அப்போதுதான் தான் மீண்டும் ஒருமுறை ஷீரவதியை கடக்கவே போவதில்லை என்ற எண்ணத்தை அவன் அடைந்தான்.

அது அவனை ஆறுதல்படுத்தியது. அதில் காவியங்களுக்குரிய முழுமை இருந்தது. அங்கு மீண்டும் அவன் செல்லாதொழிவது அவன் அங்கு செல்லாதிருப்பதற்குரிய தண்டனையேதான். விண்ணுலகில் மீண்டும் பிரேமையை சந்திப்பதைப்பற்றி பின்னர் அவன் எண்ணலானான். அங்கு அவள் தெய்வ உருக் கொண்டிருப்பதனால் மனிதர்களின் அனைத்துப் பிழைகளையும் பொறுத்தருளும் தன்மை கொண்டிருப்பாள். அவளை கைவிட்டதைப்பற்றி ஒரு சொல்லும் அவனிடம் உசாவமாட்டாள். முதற்கணம் கண்ட அந்த விலங்குக் காமத்தின், எளிய பேரன்பின் நீட்சியை மட்டுமே அங்கே அவளிடம் காண முடியும். அத்துடன் அவள் அதே இளமையுடன் இருப்பாள்.

ஒவ்வொரு ஆண்டும் கடக்கும்தோறும் அவன் பிரேமையின் உருவை தன் உள்ளத்தில் வரைந்துகொண்டான். எத்தனை கற்பனையை ஓட்டினாலும் அவளை அகவை முதிர்ந்த பெண்ணாக எண்ண முடியவில்லை. மீண்டும் மீண்டும் பூர்ஜ மரப்பட்டையின் வெண்மைகொண்ட அவளுடைய பெருந்தோள்கள், அதிலோடும் நீல நரம்புகள், சற்றே பழுப்பேறிய பற்கள் தெரியும் சிரிப்பு, இளநீலக் கண்கள், அடர்ந்த புருவங்கள் மட்டுமே அகத்தில் எழுந்தன. சூடான சந்தனச் சேறு கொண்ட சுனையொன்றில் மூழ்கித் திளைப்பதுபோல் அவள் உடலுக்குள் தன்னை புதைத்துக்கொண்டு அடைந்த காமம். பிறிதொன்றை அதற்குப் பின் நிகராக அவன் அடைந்ததே இல்லை.

அவள் ஒரு பெண்ணல்ல என்று சில தருணங்களில் தோன்றும். அவள் இரு கைகளும் இரு சிறு பெண்கள்போல. இரு தொடைகளும் வேறு இரு பெண்கள்போல. பெண்களின் ஒரு சிறு குழு அவள் உடல். ஆண்கள் பெண்டிர் சூழ காமமாடுவதையே ஆழ்மனக் கனவாக கொண்டிருக்கிறார்கள் என்று ஒருமுறை நிமித்திகன் சொன்னான். அவளுடன் அடைந்த காமமென்பது ஒரு அகத்தளம் நிறைய பெண்டிருடன் ஆடியதற்கு நிகர். பின்னர் அவனறிந்த அனைத்துப் பெண்களும் மிக எளியவர்கள். உடலாலன்றி உள்ளத்தாலும். ஆண்களின் அன்பு குறித்த ஐயத்தால் ஆட்டுவிக்கப்படுபவர்கள். சற்றே உளம் நெகிழ்ந்தாலும் “என்மேல் அன்புள்ளதா? எவ்வளவு அன்பு?” என்று கேட்கத் தொடங்கிவிடுபவர்கள்.

கையில் ஊன்கூடையுடன் தலையில் தோலாடையை எடுத்துப் போட்டுக்கொண்டு பசித்த ஓநாய்கள் நடுவே இறங்கிச் செல்லும் பிரேமையைப்பற்றி ஒருமுறை அவன் தன் நான்காவது துணைவி சாந்தையிடம் சொன்னான். அவள் பால்ஹிகக் குடியில் பிறந்து தன் சிற்றூருக்குள்ளேயே வளர்ந்தவள். ஆண்டுக்கொருமுறை வரும் பெருவெள்ளத்தாலேயே காலத்தை கணக்கிடக் கற்றவள். பிற மூவரைப்போலன்றி அவனுடன் ஒரு கணத்திலும் முரண்படாதவள். அவன் தன் உளச் சித்திரங்களை அவளுக்காகவே சொல்தீட்டினான்.

அவள் அக்கதையை ஒரு தொல்கதையென்றே கேட்டாள். கண்கள் வியப்பில் விரிய கைகளால் வாயை பொத்திக்கொண்டாள். பின்னர் மஞ்சத்தில் தன் உடலைசேர்த்து தலையணையில் முகத்தை அழுத்தி அமைதியாக படுத்திருந்தாள். அவன் அவளுடைய மெலிந்த தோள்களை, நரம்புகள் புடைத்த புறங்கையை மெல்ல வருடியபடி “நான் இதை உன்னிடம் சொல்லியிருக்கக்கூடாதோ?” என்றான். அவள் அவன் கையை உதறிவிட்டு மல்லாந்து “அவள் பெண்ணல்ல. அவளில் மலைத்தெய்வம் ஏதோ குடியிருக்கிறது” என்றாள்.

அவள் கண்கள் நீரணிந்திருப்பதைக் கண்டு பூரிசிரவஸ் உளம் கனிந்தான். அவள் நெற்றியைத் தொட்டு சுருண்ட குழலை அள்ளி காதுக்குப் பின் செருகி “நன்று, நீ சொல்வதுபோல் இருக்கலாம். மலைமக்கள் நம்மைப்போன்றவர்கள் அல்ல” என்றான். அவள் “நான் கேட்டிருக்கிறேன். இங்கிருந்து பார்த்தால் வெள்ளிக்கோடெனத் தெரியும் ஷீரவதிக்கு அப்பால் வாழ்பவர்கள் கின்னரர்கள். அதற்கப்பால் பனிமலைகளில் வாழ்பவர்கள் கந்தர்வர்கள். அவர்கள் மனிதர்களைக் கொன்று உண்பவர்கள். ஆகவேதான் பேருடலும் ஆற்றலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தங்களால் உண்ணப்படுபவர்களின் உயிரை எடுத்துக்கொள்வதனால் அவர்களுக்கு அகவை இல்லை” என்றாள்.

பூரிசிரவஸ் புன்னகைத்துவிட்டான். அவள் “சிரிக்கவேண்டாம், உங்களை அவர்கள் கொன்று உண்ணவில்லையென்பதனால் அவர்கள் நல்லவர்களாகிவிடுவதில்லை. நீங்கள் அங்கு மேலும் சில நாட்கள் தங்கியிருந்தால் உங்களை உண்டிருப்பார்கள்” என்றாள். “ஆம், உண்மைதான்” என்று பூரிசிரவஸ் சொன்னான். அவள் தணிந்து கையூன்றி எழுந்து அவன் மார்பில் தனது சிறிய முலைகளைப் பதித்து கைகளால் அவன் கழுத்தை வளைத்துக்கொண்டு “மெய்யாகவே சொல்கிறேன், அவளுக்கு உங்கள் காமம் சலிக்கவில்லை. ஓரிரு நாட்களில் சலித்திருக்கும். அதன் பிறகு உங்களை உண்டிருப்பாள்” என்றாள். “இதற்குள் அங்கு சென்ற பல மலை வணிகர்களை அவள் உண்டிருப்பாள். மாறா இளமையுடன் இருப்பாள்” என்றாள்.

பூரிசிரவஸ் சிரித்தபடி அவள் இதழ்களில் முத்தமிட்டு “அப்படியென்றால் நன்றல்லவா? அழியா அழகு கொண்டிருப்பாள்” என்றான்.   அவள் அவன் மார்பை உந்தி விலக்கி எழுந்து “மெய்யாகவே சொல்கிறேன், திரும்ப நீங்கள் அங்கே செல்லக்கூடாது. சென்றால் உயிருடன் மீளமாட்டீர்கள். அது மீளவே முடியாத பெருஞ்சுழி. மண்ணுக்கு அடியில் உள்ள ஆழங்களுக்கு எடுத்துச்செல்லும் சுழிகள் நிலத்திலும் நீரிலும் உண்டு. அதைப்போலவே விண்ணாழத்திற்கு எடுத்துச்செல்லும் சுழிகளும் உண்டு. மலைகளுக்குமேல் அவை இருப்பதாக எனது மூதன்னை சொல்லியிருக்கிறாள்” என்றாள்.

பின் அவன் கையைப்பற்றி தன் நெஞ்சில் வைத்து “நமது மைந்தரை எண்ணுங்கள். இந்த அரசின் குடியை எண்ணுங்கள். இனி அருள்கூர்ந்து மலை ஏறிச் செல்வதைப்பற்றி கருதவேண்டாம்” என்றாள். “இல்லை, எண்ணப்போவதில்லை” என்று அவன் சொன்னான். “பொய்” என்று அவள் சொன்னாள். “இல்லை, ஆணை” என அவன் அவள் தலையை தொட்டான். தலையைத் தொட்டால் பொய்யல்ல என்று அவள் நம்புவாள். அவன் அவளை மகிழ்விக்கும்பொருட்டு தலையைத் தொட்டால் பிழையல்ல என்று எண்ணுபவன். ஆனால் அன்று பிறகொருபோதும் மலைக்குமேல் ஏறப்போவதில்லை என்றே எண்ணினான்.

ஆனால் அவள் சொன்ன அந்த வரி அவனுள் எப்போதும் இருந்தது. மலை உச்சியில் அவள் மாறா இளமையுடன் இருக்கக்கூடும். அதை எண்ணுவது சுவையாக இருந்தது. ஒரு தருணத்தில் தன்னுடலில் குடியேறிக்கொண்டிருந்த முதுமையை அதனூடாக வெல்வதுபோல. அங்கிருந்து ஒரு சரடு தன் அருகே தொங்கியிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு அழிவின்மைக்கு, மாறா இளமைக்கு சென்றுவிடமுடியும். பிறிதொரு தருணத்தில் அவளுடைய அவ்விளமை தன்னுடைய முதுமையை நினைவுபடுத்துவதாகத் தோன்றியது. இங்கு வாழும் தனது உயிரை ஒவ்வொரு துளியும் உறிஞ்சித்தான் அவள் இளமை கொள்கிறாள். அவளைப்பற்றி எண்ணும் ஒவ்வொரு முறையும் எனது உயிரின் ஒரு துளியை அவளுக்கு அளித்துவிடுகிறேன்.

பின்னிரவுவரை அவனுக்கு அரசப்பணிகள் இருந்தன. படைகள் கிளம்புவதற்கான ஒருக்கங்கள் குறித்த அரசாணைகளை எழுதி தூதர்களிடம் அளித்துவிட்டு அமைச்சர் கர்த்தமரிடம் “நான் மீள்கையில் மறுநாளே படை கிளம்பும்படி அனைத்தும் ஒருங்கியிருக்கவேண்டும்” என்று ஆணையிட்டான். களைப்புடன் மஞ்சத்தில் படுத்து இருண்ட மேற்தளத்தை நோக்கிக்கொண்டிருந்தபோது அவளை சந்திக்க அதுவரை ஏன் செல்லவில்லை என்ற வியப்பை புத்தம்புதியதாக அவன் அடைந்தான். அஞ்சித்தான் என்று முதலில் தோன்றியது. அவளுடன் இருக்கையில் எல்லாம் உள்ளாழத்தில் மெல்லிய சிறகடிப்புபோல் ஓர் அச்சமிருந்தது. அதை அப்போது ஓர் உவகையாகவே அறிந்தான். அவ்வுறவைக்கொண்டாட்டமாக ஆக்கியது அது. பின்னர் அது அவன் ஆணவத்தை சீண்டியது.

அவள் முன் அவன் ஆண்மகனாக எழ இயலாது. வீரனாக, அரசனாக நின்றிருக்க முடியாது. வெறும் மானுடனாகவே எஞ்சுவான். அவள் தன் அளியால் அவனை மைந்தன் என கைகளில் எடுத்துக்கொள்வாள். அவளுக்குள் குழவி என அவன் பொருந்துவான். ஆனால் உள்ளிருக்கும் ஒன்று சீற்றம்கொண்டு எழுந்தபடியேதான் இருக்கும். ஆணவத்தைப் பெருக்கி ஆற்றலென்றாக்கி அரசவைகள்தோறும் எழுந்து சொல்லாடவும், படைநடத்திச் செல்லவும், அரியணை அமர்ந்து நெறிவழங்கவும், கோட்டைகளையும் காவலரண்களையும் அமைக்கவும் தன்னை தகுதிப்படுத்திக்கொண்ட இக்காலகட்டத்தில் மீண்டுமொரு அறியாச் சிறுவனாக அங்கு சென்று அமர்ந்திருக்க இயலாது.

அவன் அஸ்தினபுரியில் ஒவ்வொருநாளும் வளர்ந்துகொண்டிருந்தான். ஒவ்வொரு செயல் வழியாகவும் விடுபட்டுக்கொண்டிருந்தான். மலைமகனுக்குரிய தாழ்வுணர்ச்சிகளிலிருந்து. ஆழத்தைக் கட்டியிருந்த தயக்கங்களிலிருந்து. ஆகவே ஒவ்வொரு வெற்றியும் அவனுக்கு பெருங்கொண்டாட்டமாக இருந்தது. வெற்றியால் அவன் மேலும் பெரிய பணிகளை நோக்கி ஈர்ப்படைந்தான். மேலும் மேலுமென எழுந்தான். அங்கே ஒவ்வொன்றிலும் முழுமையாக திளைத்தான். ஆனால் எங்கோ ஒரு புள்ளியில் அந்தக் காலகட்டம் முடிவுக்கு வந்துவிட்டதென்று அவன் உள்ளம் சொன்னது. அது இளைய யாதவர் பானுமதி அளித்த கணையாழியை மறுத்து இனி இந்நகருக்கோ அரசுக்கோ நான் பொறுப்பல்ல, என் கால்பொடியை தட்டிவிட்டு கிளம்புகிறேன் என்று சொல்லி அஸ்தினபுரியின் வேதியர் அவையிலிருந்து கிளம்பிய அன்று.

போர் உறுதியாயிற்று என்ற எண்ணம் அனைவருக்குமே அன்று எழுந்தது. அவனுக்கு அது அஸ்தினபுரியின் முற்றழிவு என்றே அகம் நிலைகொண்டது. எவரும் இனி அந்நகரை, அக்குடியினரை, துரியோதனனை காக்கப் போவதில்லை. பிதாமகர் பீஷ்மரோ, பெருந்திறல் வீரன் கர்ணனோ, துரோணரோ, ஜயத்ரதனோ, சல்யரோ. வீரமென்பதற்கும் சூழ்திறன் என்பதற்கும் அப்பால் பேருருக்கொண்டு நிற்பதொன்றுண்டு. அது வேதியர் அவையிலெழுந்து அந்நகரை முற்றழிக்கவும் அக்குடியை துளியெஞ்சாது அழிக்கவும் தான் முடிவு செய்துவிட்டதை அறிவித்துச் சென்றது.

அன்று அஸ்தினபுரியின் வேள்வியவையில் இருந்து சென்று மது அருந்திவிட்டு மஞ்சத்தில் படுத்து சிலகணங்கள் களிமயக்கில் துயின்று பின்னர் விழித்துக்கொண்டு ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற எண்ணங்களின் பெருக்காக உள்ளத்தை அறிந்தபடி கிடந்தபோது அவன் முடிவெடுத்தான், பிரேமையை சென்று சந்திக்கவேண்டும் என்று. அவளிடம் அங்கு திரும்பி வருவதைப்பற்றி ஒவ்வொரு நாளும் எண்ணினேன் என்று மட்டும் சொல்லவேண்டும். ஆணவம் பெருகிய நாட்களின் நிரை முடிந்தது. மீண்டுமொரு மைந்தனாக அவள் முன் நின்று தன் அறியாமையை, இயலாமையை, சிறுமையை சொல்லி விடைகொண்டால் இவ்வட்டம் முழுமையடைகிறது. இவை தொடங்கியது அங்குதான். நெடுங்காலம் முன்பு அவள் உடலின் வெம்மையிலிருந்து விடுபட்டு புரவியேறி ஷீரவதியைக் கடந்தபோது உணர்ந்த தற்சிறுமையிலிருந்து முளைத்து எழுந்து பெருகி என்னை சிறகிலேற்றிக்கொண்ட ஆணவம் இது.