மாதம்: ஜூன் 2018

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 30

tigபூரிசிரவஸ் இடைநாழியினூடாக செல்கையில் சிற்றமைச்சர் மனோதரர் எதிர்பட்டார். “கனகர் எங்கே?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “பெருவைதிகர்களை அழைப்பதற்காக சென்றிருக்கிறார். பேரவையில் தென்னெரி எழுப்பப்படவேண்டும் என்றும், சிறு வேள்வி ஒன்று நடத்தப்பட வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறார்” என்றார் மனோதரர். அது எதற்கு என பூரிசிரவஸ் சொல்வதிலிருந்து உய்த்தறிய அவர் விழைவது தெரிந்தது. பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லாமல் நின்றிருக்க “இங்கிருப்பவர்கள் அவைமுறைமைப்படி வாழ்த்துரைக்கும் எளிய வைதிகர்கள். வேள்விக்குரிய வைதிகர்கள் அல்ல. அவர்களை முறைப்படி அரிசியும் மலரும் பொன்னுடன் அளித்து அரசகுடியினர் ஒருவர் அழைக்கவேண்டும். அமைச்சர் கனகர் இளவரசர் துச்சகருடன் சென்றிருக்கிறார்” என்றார்.

பூரிசிரவஸ் அதற்குள் முடிவெடுத்தான், அத்தருணத்தில் நகருக்குள் சென்று பால்ஹிகரை திரும்ப அழைத்து வருவது வீண். அதற்கு படைத்தலைவரிடமே ஆணை அனுப்பிவிட்டு மீண்டும் அவைக்குச் செல்வதே நன்று. இது வரலாற்றுத் தருணம். அதில் தான் உடன் இருக்க வேண்டுமென்ற விழைவே தன்னுள் முதன்மையாக இருக்கிறது என்பதை உணர்ந்தபோது அவன் உள்ளத்தில் அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்தது. இயல்பாக நடந்து களிற்று முற்றத்தை அடைந்தான். அங்கிருந்த துணைப்படைத்தலைவன் சக்ரநாபன் விரைந்து அருகே வந்து பணிந்தான். “பேரரசரின் ஆணை இது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக பால்ஹிக மூதாதை அரண்மனைக்கு திரும்ப வேண்டும். அவர் அவைக்கு முன் தோன்றவேண்டும் என்பது பேரரசரின் விழைவு. செல்க!” என்றான். அவன் தலைவணங்கினான். “அவர் களிற்று முற்றத்திற்கு வந்ததும் என்னிடம் வந்து கூறுக! நான் வந்து அழைத்துச் செல்கிறேன். அவரிடம் இங்கு வருவதாக சொல்லவேண்டாம், மறுக்கக்கூடும். மேலும் எங்கோ செல்வதாகச் சொல்லி சுழன்று அவைமுகப்புக்கே வந்தால் போதும்” என்றபின் மீண்டும் இடைநாழியினூடாக நடந்தான்.

அனைத்துச் சிற்றமைச்சர்களும் பரபரப்புடனும் பதற்றத்துடனும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது. சிறுவாயிலினூடாக அவைக்குள் நுழைந்தான். எதிரே வந்த அவையமைச்சர் சுநீதரிடம் “பால்ஹிக மூதாதையிடம் அவைக்குத் திரும்பும்படி தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று மட்டும் பேரரசரிடம் சொல்க!” என்றபின் அரசர்கள் நடுவே குனிந்து சென்று சலனின் அருகே அமர்ந்தான். சலன் திரும்பிப்பார்த்து “எங்கிருந்தாய்?” என்றான். “பேரரசர் சிறிய பணியொன்றை அளித்தார்” என்றான். “இப்போது அவையின் உளநிலையே மாறிவிட்டது” என்று சலன் சொன்னான். “இங்கு போர் அறைகூவல் விடுக்கப்படும்போது பெரும்பாலானவர்களின் உள்ளம் ஆழத்தில் எங்கோ சற்று நிலையின்மை கொண்டிருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் அந்த நிறைவின்மை எனக்கும் இருந்தது. இது எப்படி நோக்கினாலும் ஒரு எளிய குடிப்போர். உளந்திறந்து பேசி முடித்திருக்கப்படவேண்டிய முடிப்பூசல். இருபுறமும் பாரதவர்ஷத்தின் அனைத்து அரசகுடிகளும் தொல்குடிகளும் திரண்டு நின்று போரிட்டு முற்றழிவை நிகழ்த்தி எய்தவேண்டியது ஏதுமில்லை.”

“போருக்குப் பின் எவர் வென்றாலும் தோற்றாலும் இங்குள்ள அரசுச் சூழல் எப்படியிருக்குமென்று எவராலும் இன்று சொல்ல முடியாது. மெய்யாக சொல்லப்போனால் இப்போரில் ஈடுபடும் அனைவருமே ஆற்றல் குன்றி அழிய, இப்போருக்கு அப்பாலிருக்கும் அறியா தொல்குடியினர் படைகொண்டுவந்து பாரதவர்ஷம் முழுமையும் கைபற்றி ஆளக்கூடுமென்று நான் அஞ்சுகிறேன். நேற்று மாலை ஊட்டறையில் ஷத்ரியர்களிடமும் சிற்றரசர்களிடமும் பேசியபோது அனைவருமே அந்த அச்சத்தை விரைந்து பகிர்ந்துகொண்டனர். ஏனெனில் ஏதோ ஒருவகையில் அனைவருமே அதை எண்ணிக்கொண்டிருந்தனர். போருக்குப் பின் எவருமே முந்தைய ஆற்றலுடன் எழப்போவதில்லை. ஆகவே இன்று போருக்கான அரச வஞ்சினம் உரைக்கப்படுகையில் செயற்கையாக உந்தி ஊதி எழுப்பி நிறுத்தப்படும் உளவிசையே இங்கு வெளிப்படும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் பிதாமகர் தோன்றியதுமே அனைத்தும் மாறிவிட்டது. அவர் பொருட்டு உயிர்துறப்பதும் பெருமை என்று அனைவருமே எண்ணத்தலைப்பட்டுள்ளனர்” என்றான் சலன்.

பூரிசிரவஸ் பெருமூச்சுவிட்டான். “என்ன?” என்று சலன் கேட்டான். “ஒன்றுமில்லை” என்று பூரிசிரவஸ் சொன்னான். “நீ பெருமூச்சுவிட்டதைப் பார்த்தால் அரசரின் மணிமுடியுரிமை மேல் ஏதோ இடர் எழுகிறது என்று தோன்றுகிறது” என்றான் சலன். பூரிசிரவஸ் திரும்பிப் பார்த்தான். சலன் எத்தனை கூர்மையாக தன் உள்ளத்தை தொடர்கிறான் என்று எண்ணியதும் பிறிதெங்கிருந்தோ ஓர் குரலென தனியொரு எண்ணம் தோன்றியது. குருக்ஷேத்திரப் போரில் தான் இறந்தால்கூட பால்ஹிக நகரிக்கு பேரரசனாக சலன் திகழமுடியும். போருக்குப் பிந்தைய சூழல் எதுவாக இருந்தாலும் அதில் பால்ஹிகபுரியை அவன் நடத்திக்கொண்டு செல்ல முடியும். அது நிறைவையும் ஏக்கத்தையும் அளித்தது.

“மூத்தவரே, பேரரசர் திருதராஷ்டிரர் இம்மணிமுடிக்குரியவர் பால்ஹிகரே என்று எண்ணுகிறார். முடியை அவருக்கே திருப்பி அளித்தால் பாரதவர்ஷத்தில் போர் நின்றுவிடுமென்று திட்டமிடுகிறார்” என்றான். சலன் புன்னகைத்து “ஆம், சிறந்த எண்ணம். எனக்குக்கூட அவ்வாறு தோன்றவில்லை. குலமுறைப்படி மணிமுடிக்குரியவர் பால்ஹிகரே. அவர் மணிமுடிசூடுவதை எவர் எதிர்க்கப்போகிறார்கள்?” என்றான். பூரிசிரவஸ் “ஒருபோதும் முடிதுறப்பதை துரியோதனர் ஏற்கமாட்டார்” என்றான்.

“ஏற்காமலிருக்க அவரால் இயலாது. முரண்பட்டால் தனது அணுக்கச் சிறுபடையினருடன் பிரிந்து சென்று ஒரு சிறு பூசலை மட்டும் இவரால் நிகழ்த்த முடியும். பார்த்தாயல்லவா இங்கிருக்கும் அரசர்கள் அனைவரும் பால்ஹிகர் காலடியில் தங்கள் தலைகளை வைத்துவிட்டார்கள்?” என்றான் சலன். “நன்று நிகழ்ந்தது. நீ அவரை மலைமீதிருந்து அழைத்து வந்தபோது ஏன் இந்த வீண் வேலை என்று எண்ணினேன். இங்கு இவ்வாறு ஒரு நன்று நிகழ்வதன் பொருட்டுதான் அது நிகழ்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது. விண்ணில் நிலைகொண்டிருந்த மூதாதையர்கள்தான் மலையுச்சியிலிருந்த அவரை கீழிறக்கியிருக்கிறார்கள்.”

“அதையேதான் திருதராஷ்டிரப் பேரரசரும் சொன்னார்” என்றான் பூரிசிரவஸ். “என் உள்ளத்திலிருந்து எடையொன்று அகன்றது, இளையோனே. வெறும் அரசியல் நலனுக்காக பொருந்தாப் போர் ஒன்றில் படையுடன் வந்து சேர்ந்துகொண்டிருக்கிறோம் என்ற உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. இப்போர் தவிர்க்கப்படுமெனில் அதில் பேருவகை கொள்பவர்களில் ஒருவனாக நானும் இருப்பேன்” என்றான் சலன். பூரிசிரவஸ் “தவிர்க்கப்படுமெனில் நன்று” என்றான். “ஏன்?” என்று சலன் கேட்டான். “தெரியவில்லை. தவிர்க்கப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளுமே எண்ணி நோக்குகையில் கண்ணில் படுகின்றன. ஆனால் பிறிதொரு நோக்கில் சென்ற பல ஆண்டுகளாக நிகழ்வன ஒவ்வொன்றும் ஒவ்வொருவரையும் அப்போரை நோக்கியே செலுத்திக்கொண்டிருந்தது. அது முன்னரே தெய்வங்களால் முடிவெடுக்கப்பட்டுவிட்டது. அதுவன்றி பிறிதேதும் நிகழ வாய்ப்பே இல்லை. தீட்டப்பட்ட வாள் குருதியை அடையும் என்பார்கள்” என்றான்.

சலன் சோர்வுடன் “ஆம், நீ சொல்லும்போது அதுவும் சரிதான் என்றே எனக்குத் தோன்றுகிறது” என்றான். பூரிசிரவஸ் “மூத்தவரே, பெருநிகழ்வுகள் மலையுச்சிப் பெரும்பாறை உருண்டு கீழிறங்குவதுபோல. தொடங்கிய பின் அனைத்துத் தடைகளையும் நொறுக்கியபடி சென்று கொண்டேதான் இருக்கும்” என்றான். சலன் மறுமொழி சொல்லாமல் தலையசைத்த பின் கைகளை மார்பில் கோட்டியபடி அவையை நோக்கிக்கொண்டிருந்தான். பூரிசிரவஸும் பெருமூச்சுடன் உடலை எளிதாக்கி அவையில் விழிசெலுத்தினான்.

அவையில் அரசர்களும் குடித்தலைவர்களும் நிரந்து அமர்ந்துவிட்டிருந்தனர். பீஷ்மரும் கிருபரும் துரோணரும் ஒன்றாக அவைக்குள் நுழைந்தனர். ஒவ்வொரு முகமும் மலர்ந்திருப்பதை பூரிசிரவஸ் பார்த்தான். துரோணர் ஏதோ சொன்னதற்கு பீஷ்மர் புன்னகைத்து தலையசைக்க கிருபர் வெடித்து நகைத்தார். ஜலகந்தன் அவர்களை அழைத்துச் சென்று பீடத்தில் அமரவைத்தான். சகுனி வந்து தன் இடத்தில் அமர இரண்டு ஏவலர்கள் மூங்கில் தூளியில் கணிகரை தூக்கிவந்து அவருடைய மெத்தைமேல் இறக்கி படுக்க வைத்தனர். கௌரவர்கள் வெளியே அரசர்கள் எவரும் எஞ்சவில்லை என்பதை உறுதி செய்த பின் தாங்களும் வந்து அவைக்குள் அமர்ந்தனர்.

மேடையில் துரியோதனன் வந்து அமர்ந்த பின் சிற்றமைச்சர் வெளியே சென்று சொல்ல திருதராஷ்டிரர் அவைபுகுந்து தன் பீடத்தில் அமர்ந்தார். பூரிசிரவஸ் திருதராஷ்டிரரின் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். அப்போதுதான் ஒன்றை அவன் உணர்ந்தான். அவரருகே இருக்கும்போது உடலசைவுகளினூடாகவே அவரது எண்ணத்தை புரிந்துகொண்டிருந்தான். தொலைவிலிருந்து நோக்குகையில் முகம் எவ்வுணர்வையும் வெளிக்காட்டாததாக இருந்தது. விழியின்மையே அம்முகத்தில் உணர்வுகளை அறியமுடியாததாக ஆக்கியது. சற்றே தலை திருப்பி, விழி என அமைந்த தசைக்குமிழிகள் உருள, வாயை இறுக்கி தாடையை முன் நீட்டியிருந்தார். எதையோ கவ்விப் பற்றியிருப்பதுபோல் இருந்தது.

சிம்மவக்த்ரரால் அழைத்துவரப்பட்டவராக பால்ஹிகர் உள்ளே நுழைந்தபோது பூரிசிரவஸ் திகைப்புடன் சலனிடம் “நான் அவரை அழைத்துவரும்படி சொல்லவில்லை” என்றான். “அது கனகரின் செயல் என நினைக்கிறேன். அவர் பதற்றத்தில் அனைத்தையும் முந்தியே செய்கிறார்” என்றான் சலன். பால்ஹிகர் அவருக்கென இடப்பட்டிருந்த ஹஸ்தியின் அரியணையில் அமர்ந்து தன் இடையிலிருந்து குத்துவாள் ஒன்றை எடுத்து அதன் செதுக்கு வேலைகளை கூர்ந்து நோக்கினார். துரியோதனனிடம் கனகர் ஏதோ சொன்னபோது ஏறிட்டு கூர்ந்து நோக்கிவிட்டு மீண்டும் குறுவாளை வெவ்வேறு கோணத்தில் திருப்பி நோக்கலானார்.

நிமித்திகன் மேடையேறி அவை மீண்டும் தொடங்கவிருப்பதை அறிவித்தான். அவை முழுமையான உளக்கிளர்ச்சியுடன் இருந்ததை உணரமுடிந்தது. அரசரின் வெறிகொப்பளிக்கும் போர்வஞ்சினத்தை, அதைத் தொடர்ந்து படைத்தலைமை அறிவிப்பை மட்டுமே அது எதிர்பார்த்திருந்தது. அக்கணமே அனைத்துத் திசைகளிலும் கரையுடைக்கும் ஏரியெனக் கிளம்ப சித்தமாக இருந்தது. அதன் உள்ளத்தை செவிகளாலேயே உணரமுடிந்தது. பலமுறை நிமித்திகன் கைவீசி அமைதி கோரினாலும்கூட அவை அடங்கவில்லை. அலைகளென வந்து தன்னைச் சூழ்ந்துகொண்டிருந்த ஓசையில் மீண்டும் மீண்டும் பிதாமகரென்ற சொல்லே ஒலிப்பதை பூரிசிரவஸ் கேட்டான். அல்லது அது உளமயக்கா என வியந்தான்.

நிமித்திகன் உரத்த குரலில் “அவையீரே, இன்று இந்த அவையில் அஸ்தினபுரியின் தொல்குடி மரபின் அடையாளமாக விண்வாழும் மூதாதைநிரைகளில் ஒருவராக விளங்கும் பால்ஹிக பிதாமகர் மலையிறங்கி வந்து அரியணை அமர்ந்து நம்மை வாழ்த்தினார். இந்த மண்ணும் முடியும் கொடியும் கோலும் நம் அரசருக்குரியதென ஐயம் திரிபற அறிவித்தார். இதற்கு எதிராக எழும் ஒவ்வொரு சொல்லும் மூதாதை மீதான வசை, தெய்வப்பிழை. அதற்கெதிராக வாள் கொண்டெழுவது நம் கடமை. மீறுபவர்களின் குருதிமேல் நின்றாடுவது நம் உரிமை. வெல்க அஸ்தினபுரி! வெல்க குருகுலம்! வெல்க குடியறம் பேண எழுந்த படைப்பிரிவுகள்! வெல்க அவற்றை ஆளும் அரசர்கள்!  வெல்க அறத்தின் கொடி!” என்று சொல்லி தலைவணங்கி விலகினான்.

துரியோதனன் தான் சொன்னதை சகுனியிடம் கூறியிருப்பானா என்று பூரிசிரவஸ் ஐயம் கொண்டான். சகுனியின் முகத்தை பார்த்தபோது எந்த மாற்றமும் தெரியவில்லை. எத்தனை திறமையுடன் முகத்தை வைத்துக்கொண்டிருந்தாலும்கூட அதை மறைக்க முடியாது என்று அவனுக்குத் தோன்றியது. அத்துடன் சகுனி முன்பிருந்த உளமசையா நிலையில் இப்போதில்லை என்றும் அவன் அறிந்திருந்தான். போர் அணுகுந்தோறும் அவர் பதற்றமும் நடுக்கமும் கொண்டவராக மாறிவிட்டிருந்தார். ஒவ்வொரு நாளுமென முதுமை அணுகி அவரை சூழ்ந்துகொண்டிருந்தது. துரியோதனன் நிகர் நிலையும் அழகும் கொண்டு தெய்வ உருவென மாறுந்தோறும் சகுனி வெளிறி தேய்ந்து மறைந்துகொண்டிருந்தார்.

துரியோதனன் எழுந்து வஞ்சினம் உரைக்கும் பொருட்டு அவை காத்து நின்றது. கைகூப்பியபடி அவன் எழுந்ததுமே அவனையும் குருகுலத்தையும் வாழ்த்தி அவை பேரோசையிட்டு கொந்தளித்தது. “குருகுலத்தோன் வெல்க! மண்வந்த ஹஸ்தி வாழ்க! அஸ்தினபுரி வெல்க! அமுதகலம் வெல்க! ஷத்ரியப்பெருங்கூட்டு வெல்க!” தலைக்குமேல் கைகூப்பி அவன் வணங்கியதும் கொம்புகள் முழங்க அவை அமைதியடைந்தது. அவன் வஞ்சினம் உரைப்பதற்குள் திருதராஷ்டிரர் எழுந்து மாற்றுச் சொல் உரைப்பார் என்று பூரிசிரவஸ் எதிர்பார்த்தான். ஆனால் திருதராஷ்டிரர் தலையை உருட்டியபடி தன் இருக்கையில் நிலையற்றவர்போல் அமர்ந்திருந்தார்.

துரியோதனன் “அவையீரே, ஷத்ரியகுடியின் பெருமைமிக்க அரசர்களே, தொல்நிலம் ஆளும் குடித்தலைவர்களே, படைக்கலம் ஏந்தி இங்கமர்ந்திருக்கும் என் போர்த்துணைவர்களே, என் குருதி பெருகி விரிந்த உடன்பிறந்தவர்களே, இது தெய்வங்களும் மூதாதையரும் அருளிய பொற்தருணம். புகழும் பெருமையும் நமக்கென கனிந்து விண்ணில் திரண்டு நின்றிருக்கும் பொழுது. இத்தருணத்தில் நான் உரைப்பது ஒன்றே. நான் இங்கு போர்க்கோலம் பூண்டு நின்றிருப்பது நிலத்தின் பொருட்டோ முடியின் பொருட்டோ என் கொடிவழியினரின் பொருட்டோ அல்ல என்று பசப்புரைக்கப்போவதில்லை. ஆம், அவற்றின் பொருட்டே! நாம் அனைவரும் போர்கொண்டெழுவது அவற்றின் பொருட்டே! ஏனெனில் நான் அரசன், ஷத்ரிய குலத்தவன்” என்றான். அவையினர் “ஆம்! ஆம்!” என்று கூவினர்.

“மண்ணும் முடியும் கொடிவழியுமே மெய்யான ஷத்ரியர்களின் இலக்கென்று அமையவேண்டும். அரசர்களே, சிறந்த ஷத்ரியன் என்பவன் யார்? தன் ஆற்றலால் நிலம் வெல்பவன். தன் திறமையால் அந்நிலத்தை காப்பவன். தந்தையென்றமைந்து ஐவகைக்குடியினரையும் பேணி வளம்பெறச் செய்பவன். ஆபுரப்பவன், அந்தணர் பணிபவன். முனிவர் சொல் கொள்பவன். மூதாதையர் வாழ்த்தும் தெய்வங்களின் அருளும் பெற்று கோலேந்தி நின்றிருப்பவன். இங்கிருக்கும் அவையினரில் எவரேனும் ஒருவர் எழுந்து இந்த ஷத்ரிய அறங்களில் ஒன்றிலேனும் ஓர் அணுவேனும் நான் பிழை செய்துள்ளேன் என்று உரைப்பீரெனில் எந்தைமேல், தாய்மேல், என் குடிவழியினரின்மேல் ஆணையிட்டுரைக்கிறேன்; இக்கணமே இச்செங்கோலை இங்கு வைத்துவிட்டு அவை நீங்குகிறேன்.”

அவை அமைதியாக விழிகள் விரிந்திருக்க சூழ்ந்து அமர்ந்திருந்தது. துரியோதனன் தொடர்ந்தான் “பிறகு எதன் பொருட்டு என்னை இவ்வரியணையிலிருந்து நீங்கச் சொல்கிறார்கள்? பாரதவர்ஷத்தில் எந்த ஷத்ரியக் குடியிலும் இல்லாத ஒரு நெறியின் பொருட்டு. என்னைவிட ஓரிரு மாதங்கள் முன்னரே பாண்டுவின் மைந்தன் பிறந்திருக்கிறான் என்பதனால் எந்தை பதினெட்டாண்டுகளுக்கு மட்டுமென கடன் கொடுத்த நாட்டை தங்களுக்கும் தங்கள் கொடிவழியினருக்கும் என வைத்துக்கொள்ள வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்.” அவை வெறுப்பும் ஏளனமுமாக கூச்சலிட ஒப்பி காத்திருந்து அதன் அலை அடங்கியதும் துரியோதனன் தொடர்ந்தான்.

“பாதி மண் கேட்டனர். ஐந்து ஊர் கேட்டனர். ஐந்து இல்லம் கேட்டனர். ஷத்ரியனாகிய நான் எனது நாட்டின் ஒருதுளி மண்ணைக்கூட அளிக்கமுடியாது என்றேன். ஏனென்றால் ஒரு பிடி மண்ணை அளிப்பதுகூட அவர்களுக்குரிய மண்ணுரிமையை ஏற்பதுதான். அந்த மண்ணில் அவர்கள் வேள்விக்காவலர் என்றமர்ந்து எரி எழுப்பி அவியிட்டு தேவர்களை வரவழைத்தால் அவர்களை அரசரென்றே விண்ணகம் கருதும். அவர்களின் கொடிவழியினருக்கு மண்ணும் முடியும் கொடியும் அமையவேண்டுமென்று அவர்கள் வேள்வி இயற்றினால் அதற்கு தேவர்கள் அருளியாகவேண்டும். அரசர்களே, நீங்கள் அறியாதது அல்ல. அரசன் தன் நிலத்தில் பிறர் அரியணையிட்டு முடிசூடுவதையோ வேள்விக்காவலனாக கோல்கொண்டமர்வதையோ அனுமதிக்கலாகாதென்றே வேதநெறி ஆணையிடுகிறது. தன் நிலத்தில் ஒரு சிறு பகுதியை அளிப்பவன் அந்நிலத்தின் மீதுள்ள முழுதுரிமையை விட்டுக்கொடுப்பவன். உங்கள் அன்னையின் கையை வெட்டி வளர்ப்பு விலங்கிற்கு உணவூட்ட ஒப்புவீர்களா? நிலத்தை அன்னையென்கின்றன நூல்கள். தன் துணைவியில் பிறன் காமம் கொண்டாட ஒப்புவோன் எவன்? அரசுரிமையை துணைவி என்கின்றனர் கவிஞர்.”

அவையின் கொந்தளிப்பையும் அமைவையும் மீளெழுகையையும் பூரிசிரவஸ் நோக்கிக்கொண்டிருந்தான். ஒற்றைப்பேருரு என எழுந்து கூச்சலிட்ட அவையுடன் தனிப்பட்ட உரையாடலில் நின்றிருப்பவன் போலிருந்தான் துரியோதனன். அதன் முழக்கத்தின் எழுச்சியமைவுகளில் அவன் எழுந்தமைந்து சென்றான். “அஸ்தினபுரியை நான் என் மண்ணெனக் கருதுவது உடைமையாக அல்ல, உறவாக அல்ல, என் மூதாதை தெய்வமாக. இது எனக்கு முற்றுரிமைகொண்ட நிலம். அதில் ஒருபிடி மண்ணைக்கூட எவரிடமும் என்னால் பகிர்ந்துகொள்ள முடியாது. அவ்வாறு பிறருக்களிப்பேனெனில் ஒவ்வொரு நாளும் இவ்வரியணையில் அமர்ந்து வருந்தி உயிர் துறப்பேன். என் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளாத அரசர்கள் எவரேனும் இங்குள்ளனரா? சொல்க, இவ்வாறு எண்ணாத ஷத்ரியர் எவரேனும் உள்ளனரா இங்கு?”

அரசர்கள் அனைவரும் தங்கள் கைக்கோல்களையும் படைக்கலங்களையும் தூக்கி “இல்லை! இல்லை!” என்று முழக்கமிட்டனர். “மண்ணுக்குப் பொருதுவோம்! மண்ணுக்கென வீழ்வோம்!” என்று திரிகர்த்த நாட்டரசர் சுசர்மர் கூவினார். “ஆம்! ஆம்!” என்று அவை கொந்தளித்தது. துரியோதனன் மேலும் உரத்த குரலில் “நான் சிறந்த ஆட்சியாளன் என்பது என் செங்கோலால் புரக்கப்படும் ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு உயிருக்கும் தெரியும். என் பலியேற்கும் ஒவ்வொரு தெய்வமும் அதை ஏற்கும். இதிலொரு பகுதியை பகுத்து பிறிதொருவருக்கு அளிப்பேனெனில் அவர்களுக்கு நான் அறப்பிழை செய்தவனாவேன். நாளை கோழையும் அறக்குழப்பம் மிகுந்தவனுமாகிய யுதிஷ்டிரனால் இந்நிலம் துயர்படுமெனில் என் குடிகளின் பொருட்டு நான் துயர் கொள்வேன். தன் மைந்தரில் ஒருவரை பிறருக்களிக்கும் எவரேனும் இங்குள்ளனரா என்று கேட்க விழைகிறேன்” என்றான்.

“இல்லை! இல்லை!” என்று அவை கூச்சலிட்டது. உசிநார மன்னர் சிபி எழுந்து தன் கோலைத் தூக்கி வீசிப்பிடித்து “ஒரு பரு மண் அளிப்பவன் அரசன் அல்ல, பாங்கன்! அவன் மூச்சுக்காற்றும் ஷத்ரியருக்கு இழிந்தது” என்று கூச்சலிட்டார். “ஆம், அஸ்தினபுரி எனக்குரியது. உயிர் வாழும் காலம் வரைக்கும் அது எனக்குரியதே. அதை தனக்குரியதென எண்ணுவோன் என் எதிரி. அவன் குருதிகாண்பதே என் கடமை!” அவையினர் வெறிகொண்டு கூச்சலிட்டனர். கைகளை விரித்து நடமிட்டனர். உச்சகட்ட உணர்ச்சிகளை நிலைகொண்ட உடலால் வெளிப்படுத்த முடிவதில்லை. பேச்சென கூறமுடிவதில்லை. துரியோதனன் பேச்சு வெறியாட்டெழும் பூசகனின் பாடல்போல இசைமை கொண்டிருந்தது. தசைத்திரள் அலைபுரள கைகளை வீசி அவன் அவைமேடையில் முன்னும்பின்னும் ஆடியும் திரும்பியும் சொன்னது நடனமெனத் தோன்றியது.

பூரிசிரவஸ் பால்ஹிகரை நோக்கிக்கொண்டிருந்தான். அவர் தனது பெரிய கைகளை மொத்த மடிமேலும் வைத்து அவையிலிருந்தவர்களை மாறி மாறி சிறுவனுக்குரிய விந்தை நிறைந்த விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தார். எவராவது எழுந்து உரக்க பேசினால் ஆர்வத்துடன் உடலை முன்னகர்த்தி அவனை பார்த்தார். அவர்கள் விந்தையான தலையணியோ மாறுபட்ட உடைகளோ கொண்டிருந்தால் அவரை அறியாமலேயே வலக்கை சுட்டுவிரலால் அவர்களை சுட்டிக்காட்டி புன்னகைத்தார்.

“எழுக போர்! ஆம், இது மண்ணுக்கான போர். ஏனென்றால் மண்ணாள்வதே அரசர்களின் முதலறம். பிற சொற்களனைத்தும் பசப்பே. ஷத்ரியர்களே, இப்பாரதவர்ஷம் நமக்குரியது. ஏனென்றால் இதை உழுதுபண்படுத்தி விதைத்துப் புரந்தவர் நாம். அறுவடை செய்யவேண்டியதும் நாமே. கதிர்க்களத்தில் வந்துகுவியும் பறவைகளை நம் கவண்கல்லால் ஓட்டுவோம். நம் முரசொலி கேட்டு அவை சிதறிப்பறக்கட்டும். நாம் எந்தக் கொள்கையும் பேசவேண்டியதில்லை. இந்த மண்ணை வென்று முழுதாளவும் நம் கொடிவழிகளுக்கு அளித்துச்செல்லவும்தான் நாம் படைக்கலம் கொள்கிறோம். நம் உரிமையைப் பழிக்கும் பொய்வேதங்களை சொல்லொடு சொல் நில்லாது அழிப்போம். அதை ஏந்திவருவோர் புரங்களை கல்லொடு கல் நில்லாது சிதைப்போம். அதைச் சொல்லி எழுவோர் தலைகொய்து குருதியாடுவோம்! வெற்றிவேல்! வீரவேல்!”

அவை “வெற்றிவேல்! வீரவேல்!” என்று வெறிக்கூத்தாடியது. பூரிசிரவஸ் திகைத்தவனைப்போல தன்னைச் சூழ்ந்து அலையடித்த உடல்களை கண்டான். அரசர்களும் குடித்தலைவர்களும் வெறும் துள்ளும் உடல்களாக, வெறித்த விழிகளாக, புடைத்த தொண்டைகளாக, பற்களாக மாறிவிட்டிருந்தனர். கைகளை விரித்து வீசி மூன்று புறமும் திரும்பி துரியோதனன் அந்த வெறியை மீட்டினான். “எழுக அனல்! அனலென எழுக நம் குருதி! எழுக நம் படைக்கலங்கள்! நாகநாக்கென, சிம்மவாயென, பருந்துகிர் என எழுக நம் கொலைக்கலங்கள்! குருதியாடுவோம். இனி நம் நீராட்டு கொழுங்குருதியில். குருதி! குருதியன்றி பிறிதெதிலும் அமையமாட்டோம்! வெற்றிவேல்! வீரவேல்!”

tigதுரியோதனன் படைவஞ்சினம் உரைத்து அமர்ந்ததும்தான் பூரிசிரவஸ் திருதராஷ்டிரரை நினைவுகூர்ந்தான். திகைப்புடன் திரும்பி அவரை நோக்கினான். சூழ்ந்தொலிக்கும் போர்க்கூச்சலுக்கேற்ப அவரும் கைகளை வீசியபடி தெய்வமெழுந்தவர்போல ஆடிக்கொண்டிருந்தார். பீஷ்மரும் துரோணரும் கிருபரும்கூட விழிகள் ஒளிர முகம் உணர்வெழுச்சியால் அலைவுகொள்ள கைகளை வீசி ஆடிக்கொண்டிருந்தனர். அந்த அவையில் கணிகர் மட்டுமே முற்றாக பிறன் என எங்கோ விழிநட்டு அமர்ந்திருந்தார். அந்த அசைவுகளினூடாகச் சென்று அவருடைய அசைவின்மையை தொட்ட விழிகள் திடுக்கிட்டன. பூரிசிரவஸ் நோக்கை விலக்கிக்கொண்டான்.

நிமித்திகன் அறிவிப்பு மேடையில் எழுந்து “அவையோரே, படைகொண்டெழுந்த அரசர்களே, பெருங்குடியினரே” என்று கூவினான். பலமுறை கூவி கொம்புகளும் மீள மீள முழங்கிய பின்னரே அவை அமைதியாயிற்று. “அவையோரே, இனி நம் படைநகர்வுகளையும் படைத்தலைமையையும் குறித்து எண்ணுவோம். போர்விரும்பும் விண்ணகத் தெய்வங்களும் குருதிவிடாய்கொண்ட ஆழுலகத் தெய்வங்களும் இங்கு சூழ்க!” என்றான். பூரிசிரவஸ் பெருமூச்சுடன் மெல்ல கைகளை நீட்டினான். சலன் “ஒரு பெரும்பித்துக்குள் சென்று மீண்டது போலுள்ளது, இளையோனே” என்றான். பூரிசிரவஸ் விழிகளை மூடிக்கொண்டான். குருதி நுரைத்தடங்க, உடல் வியர்வைகொண்டு குளிர, மெல்ல நனைந்த நிலத்தில் விழும் துணி என படிந்துகொண்டிருந்தான்.

அவையில் ஒவ்வொருவராக எழுந்து படைநகர்வு குறித்த தங்கள் கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தனர். பெரும்பாலான எண்ணங்கள் முன்னரே விரிவாக பேசப்பட்டுவிட்டிருந்தன. முற்றுமுடிவு எடுக்கப்பட்டு ஓலை வழியாக அறிவிக்கவும் பட்டுவிட்டிருந்தன. ஆயினும் ஒரு போர் புறப்பாட்டுக்கான அவையில் தாங்களும் எழுந்து ஏதேனும் சொல்ல வேண்டுமென அவர்கள் விழைந்தனர். அனைத்து கருத்துக்களும் ஒரே உணர்வு கொண்டிருந்தன. “எழுந்து சென்று முழுவிசையுடன் தாக்குவோம், முதல் அடியிலேயே வெல்வோம். தயங்குவதில் பொருளில்லை” என்றே அவை முடிந்தன. முன்னரே பலமுறை கேட்டிருந்தும்கூட ஒவ்வொருவரும் அதை கேட்டு கொந்தளித்தனர். கைகளையும் படைக்கலங்களையும் குடிக்கோல்களையும் தூக்கி ஆரவாரம் செய்தனர்.

அவர்களுக்கு அச்சொற்கள் மேலும் மேலும் இனிதாக இருந்தன. அவர்கள் தங்களுக்குள் சொல்லிச் சொல்லி பெருக்கிக்கொண்டவை அவை. மாளவ அரசர் இந்திரசேனர் எழுந்து வலக்கை சுட்டுவிரலை தலைக்குமேல் தூக்கி “நான் சொல்வது ஒன்றே. நாம் முதல் நாள், முதல் தாக்குதலிலேயே வெல்லவிருப்பது நாமே என நிறுவியாகவேண்டும். சற்றே தாக்கி விளைவு நோக்கி சூழ்கை வகுத்து மிகுந்து தாக்கும் முறையொன்றுண்டு. அதுவே போருக்குரியதென்று நூலோர் வகுத்துள்ளனர். இப்போரில் அவ்வழி நமக்குரியதல்ல. ஏனெனில் நாம் மும்மடங்கு படைகொண்டு, நூறுமடங்கு உளவிசை கொண்டு ஆயிரம் மடங்கு நம்பிக்கை கொண்டு களத்தில் இறங்குகிறோம். நமது படைவீரர்கள் வெற்றியன்றி பிறிதெதையும் எவ்வகையிலும் எண்ணாதவர்களாக இருக்கிறார்கள். முதல் அடியிலேயே பாண்டவர்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டோம் என்றால் அது மாளிகையின் அடித்தளத்தை விரிசலிட்டுவிடும். மாளிகை ஓர் உந்துதலுக்கே சரிந்து விழும்” என்றார்.

ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு கோணத்தில் புரிந்துகொண்டனர். அவந்தியின் விந்தர் எழுந்து “நாம் மிகுந்து தாக்குவது நன்று. ஆனால் ஒருவேளை அதற்கடுத்த தாக்குதல் செய்வோமெனில் அது முந்தையதைவிட விசைமிகுந்ததாக இருக்கவேண்டும். இரண்டாவது தாக்குதல் விசை குறைந்ததாக அமையுமெனில் நாம் தணிகிறோம் எனும் எண்ணம் எதிரிகளிடையே உருவாகிவிடக்கூடும். அது அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். ஏனென்றால் வெல்கிறோம் என்ற எண்ணத்தைப்போல களத்தில் கைநீட்டி உதவ வரும் தெய்வம் வேறில்லை என்பார்கள். அதைவிட தோற்கிறோம் என்ற எண்ணம்போல கணம் ஆயிரமெனப் பெருகும் நஞ்சும் பிறிதில்லை” என்றார்.

அவந்தி நாட்டுக்கும் மாளவத்துக்குமான தொன்மையான பூசல்களை உணர்ந்த சகுனி எழுந்து கையமர்த்தி அவர்களை சொல் தடுத்து “ஆம், முதல் விசையிலேயே அவர்களின் அடித்தளத்தை நொறுக்குவோம். மேலும் மேலும் எழுந்து தாக்குவோம். நமது விசை ஒவ்வொரு தாக்குதலுக்கும் மிகுந்தே வரும். ஐயம் தேவையில்லை” என்றார். அவர்கள் மேலும் பேசவிழைய சகுனி அவர்களின் சொற்களை வாழ்த்துவது போன்ற முகத்துடன் அவர்களை அமரவைக்கும் கையசைவை காட்டினார். அவர்கள் வெவ்வேறு குரல்களில் பேசிக்கொண்டே செல்ல அவர் அந்தக் கையசைவை விடாமல் தொடர்ந்து அவர்கள் அமர்ந்ததும் “இந்தப் போரில் படைசூழ்கைகள் முன்னரே வகுக்கப்பட்டிருக்கின்றன. படைசூழ்கை வகுக்கப்படாமல் போருக்கு செல்லமுடியாது. ஆனால் வகுத்த படைசூழ்கையை அவ்வாறே நிறைவேற்றி எப்போரும் நிகழ்த்தப்படுவதும் இல்லை. போர் அங்கு சென்ற பின்னர் ஒவ்வொரு தருணத்தையும் எதிர்கொண்டு தானாகவே உருமாறும் படைசூழ்கைகளால்தான் வெற்றி நோக்கி செல்கிறது. வில் உருகி வாளென்றும் வாள் பெருகி கதையென்றாகும் ஓர் ஆடலே போர் என்று நூல்கள் சொல்கின்றன. நாம் வகுத்த இப்படைசூழ்கை அங்கு சென்று எதிரே நிற்கும் பாண்டவர்களின் படைசூழ்கையை கண்ட பின்னரே இறுதி வடிவத்தை அடையமுடியும். எனவே இங்கு மிகையாக சொல்லெடுப்பதில் பொருளில்லை” என்றார்.

“ஆம், அதைத்தான் நான் கூறவருகிறேன்” என்று கூறியபடி கலிங்க மன்னர் ஸ்ருதாயுஷ் எழுந்தார். “நான் கூறுவது பிறிதில்லை. நாம் பெருகிச் செல்கையில் எண்ணுவதும் இயல்வதும் நாம் நமது மூதாதையர் சொல்லுக்கென்று படைகொண்டு செல்கிறோமென்றே ஆகும். எவருடைய முடியுரிமைக்காகவும் அல்ல. எவரும் நிலம் வென்றமைய வேண்டும், புகழ் ஓங்க வேண்டும் என்பதற்காகவும் அல்ல. நம் ஒவ்வொருவருடைய மூதாதையரும் நம்மை மண்ணில் அமர்த்தியது தங்கள் சொல்லின் ஆற்றலாலேயே” என்றார். அச்சொல் செல்லும் திசை உணர்ந்த சகுனி “ஆம், அச்சொல்லுக்காகவே நாம் படைகொண்டு செல்கிறோம். ஐயம் தேவையில்லை” என்று கைகூப்பி அடுத்த சொல்லை எடுக்க முயன்றார்.

கலிங்கர் “ஆகவே எது குலமென்றும் எது நெறியென்றும் முடிவுசெய்யப்படும் போர் இது. அதை நாம் ஒவ்வொருவரிடமும் சொல்லியாகவேண்டும். வென்றபின் கொள்வதற்கு ஏதேனும் உண்டு என்றெண்ணி போர் செய்பவர்கள் வெற்றியின் விலையை ஒவ்வொரு கணமும் கணக்கிட்டபடி இருப்பார்கள். இது மிகுவிலை என்று தோன்றிய அக்கணமே களத்திலிருந்து பின்வாங்குவார்கள். அவ்வாறு நிகழலாகாது. பல்வேறு நாட்டங்களுடன் போருக்கு வந்திருக்கும் சிறு நாடுகளின் படைகளை படைப்பெருக்குக்கு நடுவே அமைப்போம். ஆற்றல் மிக்க பெரும் படை கொண்ட நாடுகள் சில பின்னாலும் இருக்கவேண்டும். எவரேனும் பின்னடி எடுத்து வைப்பார்கள் என்றால் அவர்களே நமது எதிரிகள். முன்னாலிருப்பதைவிட பெரிய கொலைக்களத்தை அவர்கள் பின்னால் சந்திக்கவேண்டும்” என்றார்.

சீற்றத்துடன் எழுந்த மல்ல நாட்டு அரசர் ஆகுகர் “இது வீண்பேச்சு! கலிங்கம் இதுவரை சந்தித்த அனைத்துப் போர்களிலும் ஒன்று பின்னடைந்துள்ளது அல்லது போர்முறி செய்துள்ளது. ஆகவே அது சிறுநாடென்று பொருளல்ல. சிறிய நாடாகிய நாங்கள் இன்றுவரை எப்போரிலும் பின்னடி எடுத்துவைத்ததில்லை” என்றார். அவையிலிருந்த சிறுநாட்டரசர்கள் அனைவரும் தங்கள் கோல்களை எழுப்பி நகைத்து ஏளனக் கூச்சலிட்டனர். துஷார நாட்டு அரசர் வீரசேனர் “கலிங்கத்துக்குப் பின்னால் என் நாட்டுப் படைவீரர்கள் நிலைகொள்ளவேண்டும்” என்றார்.

சொல்லாடல்கள் எல்லை மீறிப்போவதை கண்ட சகுனி கனகரை நோக்கி மெல்ல தலையசைத்தார். கனகர் கைவீசி ஓசையமையச் செய்து “அவையோரே, எப்படைகளுக்கு எவர் தலைமை தாங்குவதென்று முன்னரே முடிவெடுத்திருக்கிறோம். அவை ஓலை வழியாக அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கே அரசர் முறையாக அறிவிப்பார்”  என்றார். அத்தருணத்தில் சஞ்சயன் திருதராஷ்டிரரின் அருகிலிருந்து எழுந்து கைகளைத் தூக்கி “அவையீரே, பேரரசர் திருதராஷ்டிரர் இந்த அவையிடம் சில சொற்களை உரைக்க விழைகிறார்” என்றான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 29

tigஅவையில் அரசகுடிகள் அனைவரும் பால்ஹிகரை வணங்கி வாழ்த்து பெற்று முடிந்ததும் நிமித்திகன் மேடையேறி சிற்றுணவுக்கான பொழுதை அறிவித்தான். பால்ஹிகர் எழுந்து நின்று தன் மேலாடையை இழுத்து கழுத்தில் சுற்றிக்கொண்டு பூரிசிரவஸை விழிகளால் தேடினார். அவன் ஓடி அருகே சென்று வணங்கிநிற்க “யானை உணவுண்டுவிட்டதா?” என்றார். முதலில் அவனுக்கு புரியவில்லை. பின்னர் தன்னை மீட்டுக்கொண்டு “வருக, பிதாமகரே!” என்று அவரை அழைத்துச்சென்றான். வெளியே சென்றதும் அவருக்குப் பின்னால் வந்த கனகர் “நல்லவேளை! இவை இப்படி சிறப்பாக முடியுமென்று சற்றும் எண்ணியிருக்கவில்லை” என்றார்.

பூரிசிரவஸ் “அவர் எப்போதும் ஏமாற்றியதே இல்லை, அமைச்சரே. அத்தனை பித்துக்கும் பேதைமைக்கும் அடியில் அவர் இவ்வரசகுடியின் மூதாதை” என்றான். கனகர் “நம் யானைகளிலேயே முதன்மையான யானையை ஒருக்கி நிறுத்த ஆணையிட்டேன். செய்திருப்பார்கள்” என்றார். பூரிசிரவஸ் “ஆம், நானும் அவரிடம் அதைத்தான் சொன்னேன்” என்று பால்ஹிகரை கையைப் பிடித்து முன்னால் கொண்டுசென்றான். “நீங்கள் களிற்று முற்றத்திற்கு செல்லுங்கள். நான் பிறவற்றை ஒருக்குகிறேன்” என்றபின் கனகர் திரும்பிச்சென்றார்.

களிற்று முற்றத்தில் படைத்தலைவரான சிம்மவக்த்ரர் காத்து நின்றிருந்தார். அவர்களை நோக்கி அவர் ஓடிவர பால்ஹிகர் சிரித்து அவரை சுட்டிக்காட்டி “மூடன், யானையைக் கண்டு அஞ்சி ஓடிவருகிறான்” என்று சொன்னார். பூரிசிரவஸ் “ஆம், அது மிகப் பெரிய யானை. தங்களை மட்டுமே அது அஞ்சும்” என்றான். “நான் அந்தக் கவச உடைகளை அணிந்துவிட்டு மேலே ஏறியிருக்கலாம். அவை வெயிலில் பளபளவென்று மின்னும். என்னை நான் பெரிய உடைவாள் என்று நினைத்துக்கொள்வேன்” என்றார். “இப்போது தாங்கள் மேலும் அழகாக இருக்கிறீர்கள். இதுதான் யானைக்கு பிடித்த கோலம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “ஆம், நாம் அதை ஏமாற்றுகிறோம்” என்று சொல்லி பால்ஹிகர் கண்களைச் சிமிட்டி சிரித்தார்.

சிம்மவக்த்ரர் அருகே வந்து “பட்டத்து யானை ஒருங்கியிருக்கிறது, பால்ஹிகரே” என்றார். குரலைத் தாழ்த்தி “மெய்யாகவே பட்டத்து யானையா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “பீஷ்ம பிதாமகரின் ஆணை, பட்டத்து யானை மேல் பிதாமகரை அமரவைத்து நகரத்தின் அனைத்து தெருக்களையும் சுற்றிவரச் சொல்லியிருக்கிறார்” என்றார். களிற்று முற்றத்தில் அங்காரகன் முழுதணிக்கோலத்தில் மெல்ல ஆடியபடி செவிவீசி நின்றிருந்தது. அதன் பொன்னிற முகபடாம் அலைநுரையென ஒளிகொண்டிருந்தது. முதுகிலிடப்பட்டிருந்த பெரிய அணிபடாமின் நுனியிலிருந்த பொற்குமிழ் மணிகள் அசைவின் தாளத்திற்கு ஏற்ப குலுங்கின.

பால்ஹிகர் திகைப்புடன் கைசுட்டி “இது என்ன?” என்றார். “பிதாமகரே, இதுதான் அங்காரகன், பட்டத்து யானை” என்றான் பூரிசிரவஸ். “இது ஏன் இத்தனை துணிகளை அணிந்திருக்கிறது? அனைத்தையும் கழற்றச் சொல்” என்றார். “பட்டத்து யானை அவ்வாறு அணிகளை அணியவேண்டும், பிதாமகரே” என்றான் பூரிசிரவஸ். “ஆனால் அது யானை போலவே இல்லையே? திரையணிந்த சாளரம் போலல்லவா தோன்றுகிறது?” என்றார். “இல்லை. தாங்கள் அதன்மேல் ஏறியதும் அது யானைபோல் ஆகிவிடும்” என்றான் பூரிசிரவஸ். “யானையை துணிகளை கழற்றச் சொல்” என்று அவர் மீண்டும் சொன்னார். “பிதாமகரே, ஆடைகளை கழற்றினால் யானை நாணம் கொள்ளும். சினம்கொண்டு தங்களை மேலேற்றாமலாகும்” என்றான் பூரிசிரவஸ். பால்ஹிகர் சில கணங்கள் யானையையும் அவனையும் மாறி மாறி பார்த்தபின் “அப்படியானால் நன்று” என்று சொன்னார்.

“பிதாமகரே, தாங்கள் யானையைவிட்டு எதன்பொருட்டும் கீழிறங்கக்கூடாது. யானை கால்களை மடித்ததும் தரையிலிறங்கினால் போதும்” என்றான் பூரிசிரவஸ். “நான் இறங்கமாட்டேன். யானை கால்களை மடித்தாலும் நான் இறங்கப்போவதில்லை” என்று பால்ஹிகர் சொன்னார். “தாங்கள் அதன் மேலேயே அமர்ந்திருக்கலாம். தங்களை இந்நகர் முழுக்க கொண்டு செல்லப் போகிறார்கள். தங்கள் மேல் மலர்களும் மஞ்சள்அரிசியும் தூவி குடிகள் வாழ்த்துவார்கள்” என்றான் பூரிசிரவஸ். “எதன் பொருட்டு?” என்று அவர் கேட்டார். பூரிசிரவஸ் “தாங்கள் யானைமேல் அமர்ந்திருப்பதால். இங்கு வேறு யாரும் அந்த யானைமேல் அமரமுடியாதல்லவா?” என்றான். “ஆம், மெய்தான்” என்றார். “ஆகவே அவர்கள் ஊக்கமிகுதியால் கூச்சலிடுவார்கள். மகிழ்ச்சியால் கைவீசுவார்கள். தாங்கள் அவர்களை நோக்கியபடி கைவீசி இந்நகரை சுற்றிவருக! படைப்பிரிவுகள் அனைத்தையும் பார்த்து அந்தியில் நகர் நுழைக!” என்றான்.

பால்ஹிகர் “இதை நான் எப்போது மலைமேல் கொண்டு செல்வது?” என்றார். “நீங்கள் இந்நகரத்தை சுற்றிவருக! வந்து ஓய்வெடுத்து நாளை காலை தென்மலைக்கு செல்லலாம்” என்றான். பால்ஹிகர் சில கணங்கள் எண்ணிவிட்டு “ஆனால் நான் குருக்ஷேத்திரப் போருக்குத்தானே வந்தேன்?” என்றார். “ஆம், போர் முடிந்து நீங்கள் செல்லலாம்” என்றான். “போரில்தான் நான் இறந்துவிடுவேனே?” என்றார் பால்ஹிகர். பூரிசிரவஸ் அக்கணம் ஒரு சலிப்பை உணர்ந்தான். பால்ஹிகர் புன்னகைத்து “நாளை நான் தென்மலைக்கு சென்றுவிட்டு உடனே திரும்பிவந்து போரில் கலந்துகொண்டு உயிர்துறக்கிறேன்” என்றார். “நன்று, பிதாமகரே! தாங்கள் யானைமேல் ஏறிக்கொள்ளுங்கள்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

சிம்மவக்த்ரர் “பிதாமகரே, வருக” என்றார். “யாரிவன்?” என்று பால்ஹிகர் கேட்டார். “இவர்தான் யானைக்கு பொறுப்பானவர். யானைக்குக் கீழே இவர் புரவியில் அமர்ந்திருப்பார்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “தங்களுக்கு என்ன தேவையென்றாலும் இவரிடம் சொல்லலாம்.” பால்ஹிகர் “நான் யானையிடம் சொல்ல முடியாதா?” என்று கேட்டார். “யானையிடமும் சொல்லலாம். ஆனால் யானையின் காது கீழே இருக்கிறது. தாங்கள் சொல்வது யானைக்கு கேட்காது. நீங்கள் இவரிடம் சொன்னால் யானையிடம் இவர் சொல்வார்” என்றான். “மெய்தான்” என்றபின் படிகளில் இறங்கி களிற்று முற்றத்தினூடாக பால்ஹிகர் நடந்தார். பூரிசிரவஸ் படிகளிலேயே நின்றான். சிம்மவக்த்ரர் அவனை நோக்கி திரும்பி தலைவணங்கிவிட்டு பால்ஹிகருடன் சென்றார்.

யானையின் அருகே பால்ஹிகர் நின்றபோதுகூட அவர் உருவம் சிறிதென தெரியவில்லை என்பதை பூரிசிரவஸ் வியப்புடன் உணர்ந்தான். அவருடன் நின்ற பாகர்களும் படைத்தலைவர்களும் எல்லாம் அவர் நெஞ்சுக்குக் கீழே இருந்தனர். அவர் தலை யானையின் காதளவு உயரமிருந்தது. அதன் காதைப்பற்றி அசைத்தபின் அவர் சிம்மவக்த்ரரை பார்த்து புன்னகைத்தார். பாகன் ஆணையிட யானை முன்காலை தூக்கியது. அவர் அதில் மிதித்து ஏறி மேலே சென்று அங்கிருந்த அம்பாரிமேல் அமர்ந்தார். அவருக்கு மேல் அஸ்தினபுரியின் வெண்கொற்றகுடையை பற்றியபடி வீரனொருவன் அமர்ந்தான். முகப்பில் வெண்ணிறத் தலைப்பாகை அணிந்த யானைப்பாகன் அமர்ந்தான்.

இரு யானைப்பாகர்கள் இருபுறமும் யானையின் காதுகளை பற்றிக்கொண்டனர். தலைமைப்பாகன் ஆணையிட அது மெல்ல வலக்காலை எடுத்து வைத்து முற்றத்திலிருந்து சாலை நோக்கி சென்றது. அங்கே முன்னரே அணிகொண்டிருந்த மங்கல இசைச்சூதர்கள் தங்கள் தேரில் ஏறிக்கொண்டனர். இசைத்தேர் முன்னால் செல்ல அதைத் தொடர்ந்து பட்டத்து யானைமேல் அமர்ந்து பால்ஹிகர் சென்றார். அவர் நகைத்துக்கொண்டே இருப்பதை பூரிசிரவஸ் பார்த்தான். திரும்பி பூரிசிரவஸை நோக்கி கைவீசி சிரித்தார். அவருக்குப் பின்னால் ஒளிரும் படைக்கலங்களுடன் வீரர்கள் தொடர்ந்து சென்றனர். அந்த ஊர்வலம் களிற்று முற்றத்திலிருந்து பெருவீதியை அடைந்து மறைந்தது.

tigபூரிசிரவஸ் நீள்மூச்சுடன் திரும்பி இடைநாழியினூடாக நடந்து சற்று நேரம் சென்ற பின்னரே அது உணவுப்பொழுதென்று உணர்ந்தான். உணவுக்கூடம் நோக்கி சென்றான். அங்கு ஏற்கெனவே அரசர்கள் உணவுண்ணத் தொடங்கிவிட்டிருந்தனர். சிற்றுணவு என்று சொல்லப்பட்டாலும் அனைவருக்கும் ஊனுணவும் அன்னங்களும் பரிமாறப்பட்டன. அரசர்கள் அவையிலிருந்த உளநெகிழ்வு உவகையாக மாற நிலைமறந்து கை வீசி உரக்க கூவி பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் நடுவே சென்றபோது ஒவ்வொருவரும் பால்ஹிகருக்கும் தங்கள் குடிக்குமான குருதியுறவைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பதை அவன் அறிந்தான். உதிரிச் சொற்களினூடாகவே அவர்கள் சொல்ல விழைவது தெளிந்தெழுவதை எண்ணி புன்னகைத்துக்கொண்டான்.

கூடத்தின் வலது ஓரத்தில் சலன் அமர்ந்து உண்டுகொண்டிருப்பதை பார்த்தான். அருகே சென்று தனக்குரிய பீடத்தில் அமர்ந்தான். சலன் அவனிடம் “பிதாமகர் யானைக் கொட்டிலுக்கு திரும்பிவிட்டாரா?” என்றான். “இல்லை, பட்டத்து யானைமேல் ஏறி நகர்வலம் வருகிறார்” என்றான் பூரிசிரவஸ். சலன் புருவம் சுளித்து “யார் ஆணை?” என்றான். “பிதாமகர் பீஷ்மரின் ஆணை. இக்குடியின் மூதாதை நேரில் எழுந்தருள்வது போன்றது அது. அதைப்போல எழுச்சியூட்டுவது வேறில்லை” என்றான் பூரிசிரவஸ். “சில நாட்களாகவே அவர் இங்குதான் இருக்கிறார். நகர்மக்கள் பாதிபேர் அவரை பார்த்திருப்பார்கள்” என்றான் சலன். “ஆம், முன்னரே அவருடைய பேருடலைப் பற்றி மட்டுமே எண்ணியிருப்பார்கள். இன்று இவ்வரச கோலத்தில் அவரை பார்த்தால் கைகூப்பி கண்ணீர்மல்க விழுந்து வணங்குவார்கள்” என்றான் பூரிசிரவஸ்.

சலன் திரும்பி “மெய்தான். முதற்கணம் அவர் அரச மேடையில் வந்து நின்றபோது மானுட உடல் கொண்டெழுந்த தெய்வம் ஒன்றைத்தான் பார்த்தேன். என் மெய்ப்பு அடங்க வெகுநேரமாயிற்று. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. இளையோனே, நானும் கைகூப்பி அழுதுகொண்டிருந்தேன்” என்றான். “பார்த்தேன்” என்று பூரிசிரவஸ் புன்னகையுடன் சொன்னான். “மெய்யாகவே இவர் மானுடரல்ல என்றிருக்குமோ? நீ மலைக்குச் சென்று நம் மூதாதையர் வடிவை எடுத்து விளையாடிக் கொண்டிருக்கும் மலைத்தெய்வம் ஒன்றைத்தான் அழைத்து வந்தாயா?” என்றான். பூரிசிரவஸ் அவ்வெண்ணத்தால் மெய்ப்பு கொண்டான். பின்னர் சிரித்து “எதிர்காலத்தில் சூதர்கள் எழுதப்போகும் கதையை இப்பொழுதே உருவாக்குகிறீர்கள், மூத்தவரே” என்றான். சலன் தானும் நகைத்து “ஆம், இது ஒரு பெருங்காவியத்திற்கான தொடக்கம்தான்” என்றான்.

உணவுண்டு முடித்து ஒட்டியிருந்த கொட்டகையில் அமர்ந்து அரசர்கள் வாய்மணமும் இன்நீரும் கொண்டனர். ஒருவருக்கொருவர் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர். நல்லுணவே கள்மயக்கை அளிப்பது என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். சிலர் இனிய களைப்பில் இருந்தனர். சிலர் துயிலில் விழிசரித்தனர். சிலர் வியர்வை வழிய கூச்சலிட்டு சிரித்துப்பேச சிலர் பூசலிடும் உளநிலை கொண்டனர். மொத்த ஓசையும் எழுந்து அலையலையென கூரையை அறைந்தது. சலன் “நகர் முழுமைக்கும் பெருங்கொட்டகையாக போட்டிருப்பார்கள் போலுள்ளது” என்றான். “இந்நகருக்குள் இன்றிருக்கும் மானுட எண்ணிக்கைக்கு சாலைகளைக்கூட இணைத்து ஒற்றைபெரும் மாளிகையாக மாற்றிவிடவேண்டியதுதான்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

கூட்டத்தினூடாக கடந்து வந்த கனகர் பூரிசிரவஸிடம் “அவை கூடவிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் கொம்புகள் ஒலிக்கும்” என்றபின் குரல் தாழ்த்தி “பேரரசர் திருதராஷ்டிரர் தங்களை சந்திக்க விரும்புகிறார்” என்றார். “என்னையா?” என்ற பூரிசிரவஸ் எழுந்தான். “ஆம், வருக!” என்று கனகர் சொன்னார். சலனிடம் விடைபெற்றுக்கொண்டு அக்கொட்டகையில் நிறைந்திருந்த அரசர்கள் நடுவே எதிர்ப்பட்டவர்கள் அனைவரையும் தலைவணங்கி ஓரிரு சொல் முகமனுரைத்தபடி கனகரைத் தொடர்ந்து அவன் சென்றான். இடைநாழியில் செல்கையில் கனகர் “பேரரசர் சற்றே உளம் திரிபு கொண்டிருக்கிறார்” என்றார். “ஏன்?” என்று அவன் கேட்டான். “அதை நீங்களே பேசிக்கொள்ளுங்கள்” என்று கனகர் சொன்னார்.

அரசவையை ஒட்டிய சிற்றறைக்குள் திருதராஷ்டிரர் ஓய்வெடுத்துக்கொண்டிருந்ததை வெளியே இருந்த கொடி காட்டியது. அவர்கள் சென்றதும் வாயில்காத்த சங்குலன் அவர்களை நோக்கி விழிதூக்காமலேயே உள்ளே செல்லும்படி பணித்தான். பூரிசிரவஸ் கைகூப்பியபடி உள்ளே சென்று அங்கே பெரும்பீடத்தில் கால் நீட்டி உடல் தளர்த்தி அமர்ந்திருந்த திருதராஷ்டிரரை அணுகி தாள்பணிந்து “அரசே, நான் பால்ஹிகன், பூரிசிரவஸ்” என்றான். “தெரிகிறது. உன் மணத்தை நான் மறக்கவில்லை” என்று சொன்ன திருதராஷ்டிரர் கைவீசி “அமர்க!” என்றார். அவர் உடலில் தசைகள் நெகிழ்ந்து இறுகி சிற்றலை கொண்டிருந்தன. பற்களை கடித்திருந்தமையால் தாடை இறுகியசைந்தது.

பூரிசிரவஸ் அமர்ந்தான். அவர் “பிதாமகர் எங்கிருக்கிறார்?” என்றார். பூரிசிரவஸ் “அவர் யானைமேல் ஏறி நகர்வலம் சென்றிருக்கிறார். பீஷ்ம பிதாமகரின் ஆணை அது” என்றான். “நன்று” என்று திருதராஷ்டிரர் முனகிக்கொண்டார். கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து இறுக்கிக்கொண்டு “அது நன்றே. அவரை மக்கள் காணட்டும். அவரே இக்குடியின் முதன்மையர் என அவர்கள் அறியட்டும்” என்றார். பின்னர் “பால்ஹிகனே, இப்போது குருகுலத்தின் முடிக்கு முழுதுரிமை கொண்டவர் யார்?” என்றார். அவர் எண்ணுவதை உணர்ந்துகொண்ட பூரிசிரவஸ் “பால்ஹிக மூதாதைதான்” என்றான். “ஆம், அவர் துறந்தமையால்தான் மணிமுடி பிறருக்கு வந்தது. அவர் இல்லை என்பதனால்தான் அரசர் சூடமுடிகிறது” என்றான்.

“பால்ஹிகனே, இப்போர் ஒழிவதற்கு வழி ஒன்றே. அதை நான் இன்று அவையில் கண்டுகொண்டேன். மணிமுடி பால்ஹிகப் பிதாமகருக்குரியது என நான் அவையில் இன்று அறிவிக்கிறேன். அவர் அதை சூடட்டும். அவர் இந்நிலத்திற்கும் குடிக்கும் தலைமைகொள்ளட்டும். அதன்பின் போர் நிகழ வாய்ப்பில்லை” என்றார் திருதராஷ்டிரர். “இல்லை, பேரரசே. அது தவறான கணிப்பு. அங்ஙனம் போர் நின்றுவிடாது. பாரதவர்ஷத்தின் அரசர்கள் போருக்கென திரண்டெழுந்துவிட்டனர். படைகள் கூடிவிட்டன. போர் ஒருக்கங்கள் முடிந்துவிட்டன. போர்வஞ்சினம் இன்று உரைக்கப்படவுள்ளது. ஓரிருநாட்களில் படைகள் குருக்ஷேத்திரம் நோக்கி செல்லப்போகின்றன.”

“எவருக்கு எதிராக?” என்றார் திருதராஷ்டிரர். “பால்ஹிகப் பிதாமகர் முடிசூடினால் அதை யுதிஷ்டிரன் மறுக்கப்போவதில்லை. அவன் மறுத்து படைகொண்டுவராவிட்டால் எவருக்கு எதிராக இவர்கள் போரிடுவார்கள்?” அவர் முகம் கோணலாகி இழுபட தலை ஆடியது. இடக்கை அடிபட்ட நாகம்போல் துவண்டு அசைந்தது. “அல்லது நான் மணிமுடியை என் மூதாதைக்கே திருப்பியளிப்பதை துரியோதனன்தான் மறுக்கப்போகிறானா? மறுத்தால் அஸ்தினபுரியின் படைகளும் குடிகளும் அதை ஏற்பார்களா? பால்ஹிகனே, இங்குள்ள ஷத்ரியர் படைகொண்டு எழுந்திருப்பதே ஷத்ரிய குடிமுறைமைகளை காக்கவும் அக்குடிமுறைகளுக்கு அடிப்படையாக உள்ள வேதத்தை நிலைநிறுத்தவும்தானே? மூதாதைக்கு முடி மறுப்பவனை அவர்கள் ஆதரிப்பார்களா?”

பூரிசிரவஸ் மறுமொழி சொல்லவில்லை. அதெப்படி என்று உள்ளம் வியந்தாலும்கூட அது நிகழக்கூடியதே என்று தோன்றிக்கொண்டிருந்தது. “என் கண்முன் என் மைந்தர் அழிவதை தடுக்க எனக்கு மூதாதையர் அளித்த வாய்ப்பு இது. அரச உடையணிந்து பேருருக்கொண்டு என் மூதாதை இன்று அவைக்கு வந்த கணமே அதை உணர்ந்தேன். ஹஸ்தி இன்று அவையிலெழுந்தருளினார். ஹஸ்தியின் முன் நான் அடிபணிந்தேன். என் மூதாதையரின் ஆணை இது. அவர்கள் முன் எச்சமின்றி பணிந்து அமைவது மட்டுமே என் கடன்” என்றார் திருதராஷ்டிரர். “ஆம், போர் முடிந்துவிட்டது. அதை அருகென காண்கிறேன். இனி என் மைந்தர் போரிட்டு அழியமாட்டார்கள்.”

பூரிசிரவஸ் பெருமூச்சுவிட்டான். “மூதாதை அரசமைக்கிறார் என்று யுதிஷ்டிரனிடம் சென்று சொல்லச் சொல். விதுரனிடம் சொல். அவனை என்னை வந்து பார்க்கச்சொன்னேன், அவன் வரவில்லை. அவன் வரட்டும். அவனே சென்று பாண்டவர்களிடம் சொல்லட்டும். அவர்கள் இங்கே வருவார்கள். என் மைந்தருடன் கைகோப்பார்கள். என் மைந்தர்…” உதடுகள் விம்மலில் வெடிக்க உடல் மெல்ல அதிர திருதராஷ்டிரர் விம்மி அழுதார். “என் மைந்தர் மீண்டும் ஒன்றாவார்கள். இந்த அஸ்தினபுரியின் தொன்மையான முற்றத்தில் மீண்டும் இளையோர் என அவர்கள் தோள்தழுவி விளையாடுவார்கள். மீண்டும் இந்நகரை நோக்கி விண்ணமர்ந்த சந்தனுவும் விசித்திரவீரியரும் புன்னகைப்பார்கள்.”

“தெய்வங்களே, மூதாதையரே, எனக்கு மீண்டும் ஒரு நல்வாய்ப்பை அளித்தீர்கள்… என்னை மீண்டும் நம்பிக்கையுடன் வாழச் செய்திருக்கிறீர்கள்… இனி நான் இறக்கவியலும். இந்த அஸ்தினபுரியின் அரண்மனை முற்றத்திலிருந்து நான் சிதைநோக்கி செல்கையில் ஒருமுனையில் பாண்டவரும் மறுமுனையில் கௌரவரும் என் படுசேக்கையை ஏந்தியிருப்பார்கள். நான் எரிகையில் இருசாராரும் விழிநீர் சிந்துவார்கள்…” அவர் கையை தூக்கி விழிகளென்றான தசைக்கோளங்கள் உருள திணறினார். புன்னகையில் கரிய முகத்தில் பெரிய பற்கள் ஒளியுடன் எழுந்தன.

“ஆம்! நான் விண்ணேகி அன்னை சத்யவதியிடம் சொல்வேன். ஒரு வெறும் ஊடல். குருதியிலெழுந்த சிறு குமிழி. அனைத்தும் சீராகிவிட்டது. அன்னையே, கீழே நோக்குங்கள். அங்கே நம்குடியின் சிறுமைந்தர் கைகோத்து ஆடிக்களிப்பதை. நம் நிலம் வெல்லமுடியாததாக ஆகியிருப்பதை. கருவூலங்களில் பொன்நிறைய களஞ்சியங்களில் நெல்நிறைய ஆபெருக்க நீர்செழிக்க காடு தழைக்க நம் நாட்டின்மேல் தேவர்கள் நிறைந்திருப்பதை… அங்கே எங்கள் அன்னையர் அம்பிகையும் அம்பாலிகையும் இருப்பார்கள். என் இளையோன் பாண்டு…”

அவர் மீண்டும் விம்மியழுதார். தொண்டை அடைக்க செருமி முனகி “என் இளையோன் பாண்டு… அவன் அங்கிருப்பான். அவனை என்னால் அணைத்து நெஞ்சோடு சேர்க்க முடியும். நம் மைந்தர் நலம்கொண்டனர் இளையோனே என்று சொல்லமுடியும்…” என்றார். அவர் முகம் உறுதிகொண்டது. ஆம் என தலையை அசைத்தபடி “மாற்று எண்ணத்துக்கே இடமில்லை. நான் முடிவுசெய்துவிட்டேன். குருகுலத்தின் மணிமுடி பால்ஹிகப் பிதாமகருக்குரியது. நீ இதை எவரிடமும் சொல்லவேண்டியதில்லை. மீண்டும் அவைகூடும்போது பிதாமகர் அவையில் இருக்கவேண்டும்” என்றார்.

“ஆணை” என்றான் பூரிசிரவஸ். “அவரை அழைத்து வந்து அவ்வரியணையில் மீண்டும் அமர்த்துக! ஹஸ்தியின் மணிமுடி கருவூலத்திலுள்ளது அதை எடுத்துவரும்படி ஆணையிட்டிருக்கிறேன். பால்ஹிகப் பிதாமகர் அதைச் சூடி அமரட்டும். இன்று அவையில் எழுந்த உளக்கொந்தளிப்பை பார்த்தாயல்லவா? எண்ணிக்கொள், வாழ்த்தொலி அன்றி பிறிதொரு சொல்லும் எழாது. அஸ்தினபுரியின்கீழ் அனைத்து ஷத்ரியக்குடிகளும் ஒன்றென நின்றிருக்கும். கிராதரும் நிஷாதரும் அசுரரும் அரக்கரும் அஞ்சி பின்னடைவர். பாரதவர்ஷம் வேதச்சொல் திகழ வாழும்… ஆம், அதுவே நிகழவிருக்கிறது.”

மீண்டும் பூரிசிரவஸ் “ஆணை” என்றான். “செல்க!” என்றார் திருதராஷ்டிரர். தலைவணங்கி பூரிசிரவஸ் வெளியே நடந்தான். வெளியே நின்றிருந்த கனகர் “என்ன சொல்கிறார்?” என்றார். “பெருங்கனவு… இனி கனவுகளில்தான் அவர் தன்னை நிறைவடையச் செய்யவேண்டும்…” என்றான் பூரிசிரவஸ். “என்ன சொன்னார்?” என்று கனகர் கேட்டார். “ஹஸ்தியின் மணிமுடியை அவைக்கு கொண்டுவரச்சொல்லி ஆணையிட்டிருக்கிறார்” என்றபடி முன்னால் நடந்த பூரிசிரவஸின் பின்னால் வந்தார். “பால்ஹிக மூதாதையை முடிசூட்டிவிட்டால் போர் ஒழிந்துவிடும் என எண்ணுகிறார்” என்றான் பூரிசிரவஸ். கனகர் நின்றுவிட்டார். பின்னர் மீண்டும் ஓடிவந்து “அது நிகழக்கூடும்!” என்றார். “நிகழாது” என்றான் பூரிசிரவஸ். “அனைத்தும் அவ்வாறு நிகழ்வதற்கு உகந்தவையாகவே தெரிகின்றன. ஆனால் தெய்வங்கள் அதை விழையவில்லை என்பதும் கண்கூடாகத் தெரிகிறது.”

tigஇடைநாழியினூடாக பூரிசிரவஸ் நடந்தான். அப்பால் கொம்போசை எழுந்தது. ஏவலர்களும் காவலர்களும் ஊட்டறைக்கும் அரசர்கள் அமர்ந்த கொட்டகைக்கும் சென்றனர். அங்கிருந்து அரசர்கள் எழுந்து ஆடை திருத்தி தங்கள் அணுக்கர்களுடன் உரையாடியபடியே அவை நோக்கி செல்லத்தொடங்கினர். அவன் எங்கு செல்வதென்று அறியாமல் தயங்கி நின்றான். முதலில் தோன்றியது விதுரரிடம் சென்று என்ன நிகழவிருக்கிறது என்று சொல்ல வேண்டுமென்றுதான். ஆனால் அவர் விழிகள் இறந்துவிட்டிருந்தன. சொல்கேட்க அவ்வுடலுக்குள் எவருமில்லை. அல்லது துரியோதனனிடம் சொல்லவேண்டும். அதற்கு முன் அரசரின் ஆணையை நிறைவேற்றியாக வேண்டும்.

ஆனால் மேலும் சில எட்டுகள் வைத்தபோது அரசரின் ஆணைக்கு முன்னரே தான் செய்யவேண்டியது துரியோதனனை சந்தித்து அரசரின் எண்ணப்போக்கை அறிவிப்பதுதான் என்று அவன் எண்ணினான். மேலுமிரு எட்டு வைக்க அவன் உள்ளம் சொல்கோத்து அமைத்ததும் எண்ணம் உறுதியாயிற்று, இப்போது மணிமுடிசூடி அரியணையில் அமர்ந்திருப்பவர் துரியோதனர். எனது கடப்பாடு இக்குடிக்கோ கொடிவழிக்கோ அல்ல. இதன் மணிமுடிக்கு மட்டுமே. அச்சொற்றொடரை சொல்லச் சொல்ல அவன் மேலும் தெளிவடைந்தான். திரும்பி இரு சிற்றறைகளினூடாக துரியோதனன் அமர்ந்திருந்த அரசஅறை நோக்கி சென்றான். செல்லும் வழியிலேயே சுபாகு அவனைக் கண்டு அருகே வந்து “என்ன?” என்றான். தன் முகக்குறி கவலையை காட்டுவதை உணர்ந்து அவன் புன்னகையைக் காட்டி “ஒன்றுமில்லை. அரசரிடம் தனியாக சில சொற்கள் பேசவேண்டும்” என்றான். “தனியாகத்தான் இருக்கிறார். உடன் மூத்தவர் துச்சாதனர் மட்டுமே” என்றான் சுபாகு.

“நன்று” என்றபின் அவன் சென்று சிற்றறை வாயிலில் காவலுக்கு நின்றிருந்த துர்மதனிடம் “அரசரை பார்க்க வேண்டும்” என்றான். அவனுடைய முகக்குறியால் துர்மதனும் விழிமாறினான். துர்மதன் உள்ளே சென்று ஒப்புதல் பெற்று வெளியே வந்து கைகாட்டினான். சிற்றறைக்குள் தன் கால்களை சிறுபீடத்தின்மேல் தூக்கி வைத்து சாய்ந்த பீடத்தில் படுத்ததுபோல் துரியோதனன் அமர்ந்திருந்தான். கைகளை தன் வயிற்றின்மேல் கட்டியிருந்தான். அப்பால் சாளரத்தருகே துச்சாதனன் கைகட்டி நின்றிருந்தான். உள்ளே வந்த பூரிசிரவஸ் தனக்குப் பின்னால் கதவு மூடப்பட்டதை திரும்பிப் பார்த்தபின் “வணங்குகிறேன், அரசே. சற்று முன் நான் பேரரசரை சந்திக்க வேண்டியிருந்தது. என்னை சந்திக்குமாறு அழைப்பு அனுப்பியிருந்தார்” என்றான்.

“ஆம், கனகர் தங்களை அழைத்ததை அறிந்தேன்” என்றான் துரியோதனன். தான் அவனிடம் சொல்லவந்தது எத்தனை நன்று என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். “பேரரசர் என்னிடம் உடனடியாக மூதாதை பால்ஹிகரை அவைக்கு அழைத்துவரும்படி ஆணையிட்டிருக்கிறார்.” துரியோதனன் புருவங்கள் சுருங்கின. “அவர் அவைக்கு வரவேண்டுமென்று ஆணை” என்று மீண்டும் பூரிசிரவஸ் சொன்னான். “சொல்க!” என்று துரியோதனன் கைகாட்டினான். “அவ்வாணையை நிறைவேற்றுவதற்கு முன்னர் தங்களை சந்தித்து அவரது எண்ணத்தை சொல்லிவிட்டுப் போகவேண்டுமென்று தோன்றியது. அரசே, பால்ஹிகரின் வருகை விண் வாழும் மூதாதை ஒருவர் மண் இறங்குதல் என்று அரசர் எண்ணுகிறார். முன்னரே போரை எண்ணி அவர் உள்ளம் கலங்கிக்கொண்டிருக்கிறது. இப்போரில் தன் மைந்தர் முற்றழிவார்கள் என்று அவர் அஞ்சுகிறார்.”

துரியோதனன் “ஒவ்வொரு நாளும் நிமித்திகர்கள் அவரிடம் அதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்றான். “ஆம், அதை தவிர்க்கும் பொருட்டுதான் மண்மறைந்த மூதாதையர் பால்ஹிகரை அனுப்பியிருக்கிறார்கள் என்று எண்ணுகிறார். குலமுறைப்படி ஹஸ்தியின் கொடிவழியில் இன்றிருக்கும் மூத்தவர் பால்ஹிக பிதாமகரே. எனவே அவருக்குத்தான் மணிமுடி உரியது. தான் தந்தையிடமிருந்து பெற்ற மணிமுடியை திரும்ப அவருக்கே அளித்துவிடப்போவதாக பேரரசர் கூறுகிறார்” என்றான்.

துரியோதனன் முகத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை ஆனால் விழிகள் பூரிசிரவஸின் மேல் அசைவின்றி பதிந்திருந்தன. “அவர் கூறுவது குலமுறைப்படி சரியானதே. முன்னர் பிதாமகர் பீஷ்மர் அளித்ததன் பொருட்டே மணிமுடி பேரரசருக்கு வந்தது. இன்று அவையில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அரசர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பு மேலும் மேலுமென கிளர்ந்துகொண்டிருக்கின்றது. பேரரசர் அவையெழுந்து தன் மணிமுடியை திரும்பவும் பால்ஹிகருக்கே அளிப்பதாக சொன்னாரென்றால் அவையில் எழுவது வாழ்த்தொலிகளும் விழிநீர் கொந்தளிப்புமாகவே இருக்கும். அதனால் போர் நின்றுவிடுமென்று அவர் எண்ணுகிறார். பால்ஹிகரை மீறி எண்ண அஸ்தினபுரியின் குடிகளாலோ படைவீரர்களாலோ இயலாது. பாண்டவர்களாலும் அதை எண்ணிப் பார்க்க இயலாது” என்றபின் பூரிசிரவஸ் “மெய்யாகவே போரை நிறுத்துவதற்கான மிகச் சரியான வழி இதுதான். போர் எதன்பொருட்டேனும் நிற்குமென்றால் இதன்பொருட்டே” என்றான்.

துச்சாதனன் “மூத்தவரே, நான் மாதுலரையும் கணிகரையும் இங்கு வரவழைக்கிறேன்” என்றான். “வேண்டாம்” என்று துரியோதனன் கையசைத்து அவனை தடுத்தான். பூரிசிரவஸ் “அரசே, முடியை திருப்பி அளிக்க முடியாதென்று தாங்கள் நிலைகொள்ளலாம். ஆனால் எந்த அரசனும் தன் குடிகளையும் படைகளையும் பகைத்துக்கொண்டு மணிமுடி சூடி அமர இயலாது. அரசரின் மணிமுடி என்பது குடிகளால் சூட்டப்படுவதும் படைகளால் நிலைநிறுத்தப்படுவதுமாகும். குடிகளும் படைகளும் குலநெறிப்படியும் தொல்லறங்களின்படியுமே அரசர்களை ஏற்றுக்கொள்கிறார்கள்” என்றான். பின்னர் “அனைத்தையும்விட போர்வீரர்களின் நம்பிக்கை முதன்மையானது. உயிர்துறக்கச் செல்வோர் உறுதிகொண்டிருக்கவேண்டும். அது கலைந்தால் ஒரு சொல், ஒரு கணநேரத் தயக்கம் போதும், அணிகுலைந்து அவர்கள் பின்வாங்கத் தொடங்குவர்” என்றான்.

துரியோதனன் சிலகணங்கள் அசைவின்றி அமர்ந்திருந்தபின் சற்றே கலைந்து பூரிசிரவஸிடம் “எதுவாயினும் பேரரசரின் ஆணை, அதை நீர் இயற்றியாகவேண்டும். சென்று பிதாமகரை அவை திரும்பும்படி செய்க!” என்றபின் திரும்பி துச்சாதனனிடம் “நாம் அவை புகுவோம், இளையோனே” என்றான். துச்சாதனன் தலைவணங்கினான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 28

tigபூரிசிரவஸ் அஸ்தினபுரியின் அரசவையிலிருந்து வெளியே வந்து இடைநாழியினூடாக விரைந்தபடி தன்னை நோக்கி ஓடிவந்த பால்ஹிகபுரியின் காவலர்தலைவன் நிகும்பனிடம் “என்ன செய்கிறார்?” என்றான். அவன் மூச்சிரைக்க அணுகிவந்து “அணி செய்துகொண்டிருக்கிறார்” என்றான். சென்றபடியே “ஒத்துழைத்தாரா?” என்றான் பூரிசிரவஸ். அவனுக்குப் பின்னால் குறடுகள் ஒலிக்க வந்த நிகும்பன் “இல்லை. அவருக்கு என்ன நிகழ்கிறது என்று புரியவில்லை. யானை மேல் ஏற்றி நகருலா கொண்டுசெல்லப் போகிறோம் என்று சொன்னதனால்தான் வந்தார். யானை மேல் அமரவேண்டுமென்றால் இவற்றை அணிக என்று சொன்னதனால் ஆடையணிகளை சூடியிருக்கிறார். அவருக்கு முன் ஆடி எதையும் காட்ட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன்” என்றான்.

“நன்று” என்று சொன்னபடி பூரிசிரவஸ் அணிச்சிற்றறைக்குள் நுழைந்தான். அங்கே ஏழு சமையர்கள் அவர்களின் தோள்களுக்குமேல் தலையெழ அமர்ந்திருந்த பால்ஹிகருக்கு ஒப்பனை செய்துகொண்டிருந்தார்கள். பூரிசிரவஸை கண்டதும் அவர்கள் திரும்பி வணங்கினார்கள். பால்ஹிகர் பூரிசிரவஸை திரும்பிப்பார்த்து “யானை ஒருங்கிவிட்டதா?” என்றார். “வெளியே நின்றிருக்கிறது. தங்களுக்காக காத்திருக்கிறது. இன்னமும் இவையெல்லாம் முடியவில்லையா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “ஆம், முடிந்துவிட்டது” என்று அவர் எழுந்தார். “இல்லை, இல்லை. இன்னும் சற்று எஞ்சியிருக்கிறது. அமருங்கள், பிதாமகரே” என்றான் மூத்த சமையன்.

“இவன் என்னை ஏதோ செய்கிறான். என்மேல் சேற்றை பூசுகிறான்” என்றார் பால்ஹிகர். “இவன் தலையை அறைந்து உடைத்து மூளைக்குழம்பு வழிவதை பார்க்கவேண்டும் என்று சற்றுமுன் நினைத்தேன்.” சமையர் திகைத்து பின்னகர்ந்து மூச்சை இழுத்துப்பிடித்தனர். அவர்களை நோக்கி ஆறுதலாக புன்னகைத்தபின் “அது சேறல்ல பிதாமகரே, செங்குழம்பு” என்றான் பூரிசிரவஸ். “அது எதற்காக? ஏன் அதற்கு அவ்வளவு கெடுமணம்?” என்றார் பால்ஹிகர். பூரிசிரவஸ் “அது கெடுமணமல்ல, நறுமணம் பிதாமகரே” என்றான். “இல்லையே, இது குட்டிபோட்ட ஓநாயின் அடிவயிறுபோல மணம் கொண்டிருக்கிறது” என்று அவர் சொன்னார். பூரிசிரவஸ் அதில் சற்று புனுகு உள்ளது என்பதை உணர்ந்து “அந்த மணம் ஏதென்று நீங்கள் இன்னுமா உணரவில்லை? யானைத்துதிக்கையின் குழாய்க்குள் உள்ள மணம் இது. யானைக்கு இது பிடிக்கும்” என்றான். பால்ஹிகர் முகம் மலர்ந்து “ஆம், நான் எண்ணினேன். நறுமணம்” என்று தன் கையைத் தூக்கி முகர்ந்தார். “சற்று பொறுங்கள்! இதோ முடிந்துவிடும்” என்று அவன் சமையர்களுக்கு கண் காட்டினான்.

பூரிசிரவஸிடம் அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே சமையர்கள் அவரை அணிந்தொருக்கினர். அவர் இடையில் வெண்ணிறப் பட்டாடை அணிந்து பொற்பட்டுக் கச்சை கட்டியிருந்தார். மேலாடையாக பொன்னூல் பின்னல்கள் செய்த சீனப்பட்டுச் சால்வையை அவருக்கு போர்த்தினார்கள். அவர் அதை எடுத்து பிரித்துப் பார்த்து “இது எதற்காக?” என்றார். “பிதாமகரே, தாங்கள் இதை அணிந்துகொள்ள வேண்டும். மேலாடையின்றி நாம் யானைமேல் அமரக்கூடாது” என்றான். “யானைக்கு அது எப்படி தெரியும்? அதன் கண்கள் கீழே அல்லவா உள்ளன?” என்று அவர் கேட்டார். பூரிசிரவஸ் “அதன் கண்கள் மேலேயும் பார்க்கமுடியும்” என்றவுடன் அவர் எழுந்து “நான் உடனே அந்த யானையை பார்க்க வேண்டும்” என்றார். “சற்று பொறுங்கள், ஒருசில கணங்கள்” என்று அவன் மீண்டும் அவரை அமரவைத்தான்.

அவர் எழுவதையும் அமர்வதையும் பொருட்படுத்தாமலேயே சமையர்கள் அவருக்கு கைவளையையும் கச்சைமுறியையும் அணிவித்தனர். கழுத்தில் மணியாரமும் சரப்பொளி ஆரமும் அணிவிக்கப்பட்டபோது அவர் குனிந்து பார்த்து புன்னகைத்து பூரிசிரவஸிடம் “இவை நன்று. இவற்றை எனக்கே கொடுத்துவிடச் சொல்” என்றார். “தங்களுக்குத்தான்” என்றான். “எனக்கு இவற்றை ஒரு பொதியில் கட்டி கொடுக்கச் சொல். நான் மலைக்கு கொண்டுசெல்கிறேன்” என்றார். “உங்கள் இல்லத்து மறுமகள்களுக்கு இதை அளிக்கவிருக்கிறீர்களா?” என்றான். “எந்த மறுமகள்கள்?” என்று அவர் ஆர்வமாக கேட்டார். “பனிமலைமேல் இருப்பவர்கள். ஏழு மைந்தரின் மனைவியர்” என்றான். “எந்தப் பனிமலை? ஏழு மைந்தர் எவருக்கு?”

பூரிசிரவஸ் புன்னகைத்து “நீங்கள் செல்லவிருக்கும் மலை எது?” என்றான். அவர் குழம்பி சுட்டுவிரல் அசைவிலாது நிற்க புன்னகையுடன் சிலகணங்கள் எண்ணி நோக்கி “தெற்கே… பெரிய மலை ஒன்று… யானைதான் அதன்மேல் ஏறும்” என்றார். பின்னர் தன் மணியாரத்தை அசைத்து “யானை இதைப்போலத்தான் ஆரம் அணிந்துள்ளது. ஆனால் அதில் நல்ல ஓசை எழுகிறது” என்றார். “இதிலும் ஓசை எழும்” என்றான் பூரிசிரவஸ். “அது இன்னும் பெரியது” என்றார் பால்ஹிகர். “இது எனக்குரியதுதானே?” என்று சமையர்களை ஐயமாக நோக்கியபடி கேட்டார். “தாங்கள் யானையிலிருந்து இறங்கியதுமே கழற்றிக் கொடுத்துவிடச் சொல்கிறேன்” என்றான் பூரிசிரவஸ்.

அவர் இரு கால்களையும் விரித்து கைகளை நீட்டியபடி “யானைமேல் படுக்கமுடியுமா?” என்றார். “தாங்கள் யானைமேல் நின்றிருக்கக்கூட முடியும்” என்றான் பூரிசிரவஸ். பால்ஹிகர் “நிற்க முடியுமா?” என்று ஆவலுடன் திருப்பி கேட்டார். பூரிசிரவஸ் “முடியும். நான் நிற்கச் செய்கிறேன்” என்றான். மென்மையாக “அந்தப் பொன்முடியை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்” என்றான். “இது எதற்காக?” என்று அதை கையிலே வாங்கி பார்த்தார். அதை தலைகீழாகத் திருப்பி “உணவுண்ணும் கலம் போலிருக்கிறது” என்றார்.

“நீங்கள் இதை தலையில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் யானை ஒப்புக்கொள்வதில்லை” என்றான் பூரிசிரவஸ். “யானைக்கு இதெல்லாம் எப்படி தெரியும்?” என்று அவர் கேட்டார். “யானை பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது, பிதாமகரே. அது அரசர்களை மட்டுமே தன் மேலேற்றும். தாங்கள் அரசர்போல் தோற்றமளிக்க வேண்டுமல்லவா?” என்றான் பூரிசிரவஸ். பால்ஹிகர் அதை புரிந்துகொண்டு “ஆம்” என்றபின் கண்சிமிட்டி “நாம் யானையை ஏமாற்றிவிடலாம் இல்லையா?” என்றார். பின்னர் கண்களை மூடிக்கொண்டு “நான் யானைமேல் ஏறி மலையுச்சிக்கு செல்லமுடியுமா?” என்றார்.

அவர் தலையில் சமையர் பொன்முடியை பொருத்தினார். காதுகளில் குண்டலங்களை இருவர் சீரமைத்தனர். தோள்வளைகளை இருவர் கட்டினர். “ஆம் பிதாமகரே, யானை மலைமேல் ஏறும்” என்றான் பூரிசிரவஸ். “அது முகில்மேல் நடக்குமா?” என்று அவர் கேட்டார். “ஆம், அதன் கால்கள் பெரியவைதானே?” என்று அவன் சொன்னான். “ஆம், எனக்கும் தெரியும்” என்ற பின் அவர் கண் திறந்து அவனை நோக்கி புன்னகைத்தார். “ஆம், மிகப் பெரிய கால்கள்” என்றார். கண்களைத் திறந்து அவனை நோக்கி “நான் அதில் ஏறி முகில்கள்மேல் சென்று…” என்றபின் கையை தூக்கி “பார்த்திபன் எங்கே?” என்றார். பின்னர் தலையை அசைத்தபடி “நான் என் நான்கு உடன்பிறந்தாரையும் அன்னையையும் சுமந்துகொண்டு மலைமேல் ஏறினேன். ஆனால்…” என்றபின் அவனிடம் “யானை இருந்தால் தேவைப்படாது” என்றார்.

பூரிசிரவஸ் விந்தையானதோர் உளஎழுச்சியை அடைந்தான். அவர் மூன்று வயது சிறுவனுக்குரிய புன்னகையையும் கண்களையும் கொண்டிருந்தார். அகவை என்பது ஒரு வட்டச்சுழற்சி போலும். கைக்குழந்தை ஆகிவிடுவாரா என்ற எண்ணம் எழுந்ததும் அவனுக்கு புன்னகை எழுந்தது. ஆனால் ஒருகணம் கழித்து அந்த உள எழுச்சி ஏன் என்று புரிந்தது. “பிதாமகரே, என்ன சொன்னீர்கள்? நான்கு உடன்பிறந்தாரும் அன்னையுமா? நீங்கள் சுமந்தீர்களா?” பால்ஹிகர் அதை செவிகொள்ளாமல் “யானையின் பெயரென்ன?” என்று கேட்டார். பூரிசிரவஸ் பெருமூச்சுடன் இயல்பாகி “அங்காரகன்” என்று சொன்னான். “அங்காரகனா? அது திசையானை அல்லவா?” என்றார். “ஆம், செவ்வாயும்கூட. முப்புரமெரித்தவனின் மூன்றாம் விழியான வீரபத்ரரே செந்தழலாக எரிந்து அங்காரகன் ஆனார். செவ்வாய் என்று அவரை வழிபடுகின்றனர்” என்றான் பூரிசிரவஸ். ஆர்வத்துடன் எழுந்து “இந்த யானை என்ன வண்ணம்?” என்று பால்ஹிகர் கேட்டார். பூரிசிரவஸ் புன்னகையுடன் “கருமைதான்” என்றான்.

“அதைப்பற்றி சொல்” என்றார் பால்ஹிகர். “அங்காரகன் பாரத்வாஜ கோத்திரத்திற்குரியவர். அவந்திநாட்டுக்கு முழுமுதல் தெய்வம். கதை, முப்புரிவேல், வாள், வேல் கொண்ட நான்கு கையர். அனலாடை தழல்ஆடை எரிமணிமாலை சூடியவர். செங்கொன்றை மலர் அவருக்குரியது. எட்டு செவ்வாடுகள் பூட்டிய தேரில் மேருமலையை வலம் வருகிறார். கதிர்மண்டலத்திற்கு தெற்கே இவருடைய இடம்” என்றான் பூரிசிரவஸ். “அந்தப் பெயரை ஏன் யானைக்கு இட்டார்கள்?” என்றார் பால்ஹிகர். “பிதாமகரே, முப்பதாண்டுகளுக்கு முன் அரசருக்கு பிறவிநூல்கணித்த நிமித்திகர் ராசிமண்டலத்தில் செவ்வாய்க்குறை உள்ளது என்றனர். அதன்பொருட்டு அஸ்தினபுரிக்குத் தெற்கே அங்காரகன் ஆலயம் அமைக்கப்பட்டு அழல்வேள்வியும் பலிகொடையும் நிகழ்ந்தது. அரசர் அந்நோன்பிலிருக்கையில் அங்காரகனை சிறுமகவாக இங்கே கொண்டுவந்தனர். நிமித்திகர் அந்த நற்பொழுதை கணித்து அதற்கு அங்காரகன் என்று பெயரிட்டனர்.” பால்ஹிகர் கண்களை மூடிக்கொண்டு “ஆம்” என்றார். மெல்லிய குறட்டை ஒலி அவரிடமிருந்து எழ தலை சற்றே அசைந்தது.

சமையர் “முடிந்தது” என்றார்கள். பூரிசிரவஸ் அவர் தோளை தொட்டான். பால்ஹிகர் எழுந்து நிற்க பொன்பூச்சுள்ள குறடுகளை சமையர் எடுத்து முன்னால் இட்டார்கள். “இதை அணிந்து கொள்ளுங்கள்” என்றான் பூரிசிரவஸ். “இது எதற்காக?” என்றபின் பூரிசிரவஸை பார்த்து “யானை இதை விரும்பும் அல்லவா?” என்றார். “ஆம், யானை குறடுகளை விரும்புகிறது. வருக!” என்று அவர் கைகளை பற்றிக்கொண்டான். அவர் காலெடுத்துவைத்து நடந்தபடி “நல்ல ஓசை. ஆனால் இரும்புக் குறடுகள் இன்னும் ஓசையெழுப்புபவை” என்றார்.

இடைநாழியில் அவர் அவனுடன் நடக்கையில் எதிர்நின்ற வீரர்கள் அனைவரும் திகைத்து வாய்திறந்து விழிமலைக்க அசைவிழப்பதை அவன் பார்த்தான். பதற்றத்தில் தான் அவரை சரியாக பார்க்கவில்லையோ என்ற எண்ணம் வந்து திரும்பி நோக்கியபோது அவனுக்கும் உளநடுக்கு ஏற்பட்டது. பால்ஹிகர் மானுடர் எவருக்கும் இயலாத பேருரு கொண்டிருந்தார். அவரது தலை அவனுடைய நோக்குக்கு மிக அப்பால் எங்கோ இருந்தது. மெல்லிய பனித்துகள்தொகை போன்ற வெண்தாடியின் கீழ்ப்பகுதியைத்தான் அவனால் அண்ணாந்து பார்க்கமுடிந்தது. மூக்குத்துளைகள் கீழிருந்து நோக்க அகன்று தெரிந்தன. வெண்ணிறத் தோள்கள், நீலநரம்போடிய புயங்கள், தசையிறுகி தோல்வார்களென இழுத்துக்கட்டப்பட்ட முழங்கைகள். ஒவ்வொரு கையும் ஒரு தனி விலங்குபோல் பெரிதாக இருந்தது. அவர் மலைமேல் சென்றபின்னர் மேலும் உயரமும் பருமனும் ஆற்றலும் கொண்டுவிட்டிருந்தார் என்று அப்போதுதான் புரிந்தது.

அவரை கண்ணெதிரில் நோக்கி, கையால் தொட்டு அழைத்துச்சென்றபோதுகூட உள்ளம் மானுடன் என்று நம்ப மறுத்தது. விண்ணிறங்கி வந்த கந்தர்வன். இறப்பே அற்றவன். அவன் நோக்கின் முன் பெருநகரங்கள் உருவாகி வந்திருக்கும். பேரரசுகள் அழிந்து மறைந்திருக்கும். தலைமுறைகள் அலையடித்துக் கொண்டிருக்க அனைத்துக்கும் அப்பால் இளமைந்தனுக்குரிய தாவிச்செல்லும் விழிகளும் கள்ளமற்ற புன்னகையுமாக அவர் நின்றிருந்தார். அனைவரும் சொல்லிழந்து நிற்க அவருடைய குறடோசை சுவர்கள் எதிர்கூற ஒலித்தது.

எதிரே வந்த கனகர் பால்ஹிகரை பார்த்ததும் திகைத்து ஓரடி பின்னால் எடுத்து வைத்து நின்றார். பூரிசிரவஸ் “பிதாமகரை அவைக்கு கொண்டுசெல்வோம்” என்றான். “யானை எங்கே?” என்று கனகரிடம் பால்ஹிகர் கேட்டார். கனகரின் வாய்மட்டும் திறந்தமைந்தது. பூரிசிரவஸ் “நாம் யானையை நோக்கித்தான் செல்கிறோம், பிதாமகரே. அதற்கு முன் இங்கொரு சிறு பணி உள்ளது. இங்கு ஓர் அவையில் அரசர்கள் அனைவரும் கூடியிருக்கிறார்கள். அவர்கள் நடுவே நீங்கள் சென்று ஒரு பீடத்தில் அமரவேண்டும்” என்றான். “எதற்காக?” என்றார் பால்ஹிகர். “அது நல்ல பீடம். இந்த ஆடையுடன் தாங்கள் அந்த பீடத்தில் அமர்வது மிக அழகாக இருக்கும்” என்றான்.

பால்ஹிகர் குனிந்து தன் கச்சையையும் இடையாடையையும் பார்த்து “ஆம், இவை நல்ல ஆடைகள்” என்றபின் மேலாடையை கையால் தூக்கி “ஆனால் இது எனக்கு பிடிக்கவில்லை” என்றார். “என் மேல் எதுவோ விழுந்துகிடப்பதுபோல் இருக்கிறது.” பூரிசிரவஸ் “அது அவ்வாறே இருக்கட்டும். சற்று நேரம்தானே?” என்றான். “யானைக்கும் இது பிடிக்காது” என்று அவர் சொன்னார். “யானை பெயர் செவ்வாய்தானே?” பூரிசிரவஸ் “இல்லை, அங்காரகன்” என்றான். “ஆம், அங்காரகன். செந்நிறமான யானை.” அவர் திரும்பி கனகரிடம் “செந்நிறமான யானை. காந்தள் மலர்போல!” என்றார்.

அவை வாயிலில் நின்றதும் “பிதாமகரே, இந்த அவையில் தங்களை அனைவரும் வணங்குவார்கள்” என்றான் பூரிசிரவஸ். “ஏன்?” என்று அவர் நின்றார். “தாங்கள் மூத்தவர் என்பதனால்” என்றான். பால்ஹிகர் “யார்?” என்று கேட்டார். “மூத்தவரே, தாங்கள் யானைமேல் ஏறப்போகிறீர்கள் அல்லவா?” பால்ஹிகர் “ஆம், ஏறுவேன்” என்றார். “அந்த யானைமேல் வேறு எவரும் ஏறமுடியாது. பேருருவர் என்பதனாலும், அச்சமற்றவர் என்பதனாலும்தான் அந்த யானைமேல் தாங்கள் மட்டும் ஏறமுடிகிறது.” பால்ஹிகர் தலையாட்டி புன்னகைத்து “ஆம், எனக்கு அச்சமில்லை” என்றார். தலையை ஆட்டி “நான் யானையை அஞ்சுவதே இல்லை” என்றார். “ஆகவே தங்களை அனைவரும் வணங்குவார்கள். அவர்களிடம் நீங்கள் தலைதொட்டு நீடுழி வாழ்க வெற்றி கொள்க என்று வாழ்த்த வேண்டும். அதன் பின்னர்தான் நாம் யானைமேல் ஏறப்போகிறோம்” என்றான் பூரிசிரவஸ்.

பால்ஹிகர் “நன்று” என்றபின் “இவன் யார்?” என்று கனகரைச் சுட்டி கேட்டார். “இவர் அமைச்சர்” என்றான் பூரிசிரவஸ். “இவன் உடம்பு ஏன் இவ்வாறு வெளிறியிருக்கிறது? உடும்பின் அடிப்பகுதியை போலிருக்கிறான்” என்றார். பூரிசிரவஸ் “அதனால்தான் அவரை யானை ஒத்துக்கொள்வதில்லை” என்றான். “ஆம்” என்றபின் பால்ஹிகர் தன் பெரிய கைகளை நீட்டி கனகரின் தோளை பிடித்தார். “அழுத்தி கசக்கினால் இவன் எலும்புகள் முறிந்துவிடும். யானை துதிக்கையால் மெல்ல தட்டினாலே போதும், இவன் விழுந்துவிடுவான்” என்றார். கனகர் குளிர் கொண்டவரைப்போல் நின்று நடுங்கினார். பூரிசிரவஸ் அவரை கண்களால் பார்த்து ஒன்றுமில்லை என்றபின் “வருக, பிதாமகரே!” என்று அவையை ஒட்டிய நுழைவறைக்குள் அழைத்துச்சென்றான்.

அவனைத் தொடர்ந்து வந்த கனகர் தாழ்ந்த குரலில் “இவர் மானுடரா என மெய்யாகவே ஐயம்கொள்கிறேன், பால்ஹிகரே” என்றார். “மானுடரேதான்” என்றான் பூரிசிரவஸ். “நாம்தான் முழுமானுடரல்ல.” கனகர் “சற்று முன்னர் பார்த்தபோதுகூட திகைப்பெழவில்லை. இப்போது இவர் மானுடரல்ல என்றே தோன்றுகிறது. இவர் பிறிதொருவர்” என்றார் கனகர். “அஞ்சவேண்டியதில்லை, அமைச்சரே. சென்று அலுவல்களை பாருங்கள். அவையில் அழைப்பு வரும்போது சொல்லுங்கள்” என்றான். “அழைப்பு பலமுறை வந்துவிட்டது” என்று கனகர் சொன்னார்.

பூரிசிரவஸ் “பிதாமகரே வருக, நாம் அவை நுழைவோம்” என்றான். பால்ஹிகர் அங்கிருந்த பெரும்பீடத்தை தன் இடக்கையால் தூக்கிக்கொண்டு வந்தார். “இதை அங்கு வையுங்கள், இது எதற்கு?” என்றான். “நமக்கு அங்கு அமர பீடம் வேண்டுமல்லவா?” என்றார் பால்ஹிகர். “நான் எங்கு சென்றாலும் எனக்கான பீடத்தை எடுத்துச் செல்வேன். நானே மரத்தால் பீடம் செய்து வைத்திருந்தேன். பாறையில் அமர்ந்தால் குளிருமல்லவா?” பூரிசிரவஸ் “அங்கு வேறு பீடம் இருக்கிறது” என்று அதை வைக்கும்படி கையால் அழுத்தினான். அதை வைத்துவிட்டு “இது நல்ல பீடம். இதை நான் மலைக்கு கொண்டு செல்கிறேன்” என்றார்.

“கொண்டு செல்வோம். தாங்கள் யானைமேல் ஏறிய பிறகு இந்த பீடத்தை தங்களுக்கு அளிக்கச் சொல்கிறேன். வருக!” என்று கைபற்றி வாயிலின் அருகே சென்று நின்றான். கனகர் வெளியே சென்று எதையோ பார்த்தபின் விரைந்து அவைக்குள் ஓடினார். அவருடைய உடல்தசைகள் குலுங்கின. மேலாடையை சீர்செய்து அரசவைக்குள் நுழைந்து நிமித்திகனிடம் ஓரிரு சொற்கள் பேசியபின் திரும்பி பூரிசிரவஸை பார்த்து கைகாட்டினார். “வருக, பிதாமகரே! கைகூப்பியபடி நுழைக!” என்றான். பூரிசிரவஸின் தோள்களில் கையை வைத்து “எனக்கு உண்மையில் இந்த அவை பிடிக்கவில்லை. அங்கே ஏராளமான ஓநாய்கள் கூடியிருப்பதுபோல் ஓசை எழுகிறது” என்றார். “அது அரசர்களின் ஓசை. அந்த ஓசையை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை” என்றான் பூரிசிரவஸ்.

tigபால்ஹிகர் இரு கைகளையும் கூப்பியபடி சீர்நடையிட்டு முகப்பு வாயிலினூடாக அவைக்குள் நுழைந்தார். அவரைத் தொடர்ந்து சென்ற பூரிசிரவஸ் அவருடைய உடலால் அவை முற்றிலும் மறைக்கப்பட்டிருந்த போதிலும்கூட ஆயிரம் பெருமுரசுகள்மீது ஒன்றாக கோல் விழுந்ததுபோல் எழுந்த பெரும் கார்வையோசையை கேட்டான். கூடியிருந்த அவையினர் அனைவரும் தங்களை அறியாமலேயே கைகூப்பியபடி எழுந்து நின்றனர். திருதராஷ்டிரரும், பீஷ்மரும், துரோணரும், கிருபரும், சல்யரும் எழுந்து கைகூப்பினர். அவர்களின் விழிகளில் தெரிந்த மலைப்பை பூரிசிரவஸ் கண்டான்.

முன்னரே எழுந்து நின்றிருந்த துரியோதனனும் துச்சாதனனும் கைகளைக் கூப்பியபடி பால்ஹிகரை நோக்கி வந்து அவர்முன் குனிந்து கால்தொட்டு வணங்கி சென்னி சூடினர். அவர் அவர்கள் தலைமேல் கைவைத்து “வெற்றி சூழ்க! புகழ் நிறைக!” என்று வாழ்த்தினார். பின்னர் துச்சாதனனைப் பார்த்து “இவன் தோள்கள் பெரியவை. இவனிடம் நான் மற்போரிட விரும்புகிறேன்” என்றபின் பூரிசிரவஸ் எங்கே என்று திரும்பிப் பார்த்தார். பூரிசிரவஸ் “இவர்கள் தங்கள் பெயர் மைந்தர்கள். இவர்கள் அனைவரிடமும் தாங்கள் போர்புரிய முடியும். வருக!” என்று அவரை பீடம் நோக்கி அழைத்துச் சென்றான்.

பால்ஹிகருக்கான அரியணை அரசஅரியணைக்கு நிகராக போடப்பட்டிருந்தது. மாமன்னர் ஹஸ்தியின் அரியணை அது. கைப்பிடியில் சிம்மங்கள் வாய்திறந்து செவ்வைர விழிகள் சுடர நின்றிருந்தாலும் தலைக்குமேல் மத்தகம் தூக்கிய இரு யானைகள் துதிக்கை பின்னி உருவாக்கிய மலர் மேல் தாமரைக்குடை கொண்டிருந்தது. துரியோதனனின் அரியணையைவிட இருமடங்கு பெரியதாக இருந்த அதில் ஹஸ்திக்குப் பின் எவரும் அமர்ந்ததில்லை. ஆண்டுக்கொருமுறை மூதாதை ஹஸ்திக்குரிய மீன்நாளில் பலிகொடையும் பூசனையும் அளிக்கப்படும்போது மட்டும் கருவூலத்தில் இருந்து அதை கொண்டுவந்து அரசவையில் அமைப்பார்கள். ஹஸ்தியின் மாபெரும் வாளையும் பேருருக்கொண்ட கவசங்களையும் அதில் வைத்து அரசரும் குடிகளும் வணங்கினர். அந்த அரியணையும் கவசமுமே ஹஸ்தியின் பேருருவை அவர்களின் கனவில் வளர்ந்தெழச் செய்தது.

அஸ்தினபுரியின் துணையரசர்கள் அதை முன்னர் பார்த்திருக்கவில்லை.  அதன் அளவைப் பார்த்து அவர்கள் குழம்பியிருந்தனர். அஸ்தினபுரியின் வெற்றிச்சிறப்பை காட்டும்பொருட்டு உருவாக்கி கொண்டுவந்து போடப்பட்ட ஒரு சிறப்பு அடையாளம் அது என சிலர் உய்த்துக்கொண்டனர். “ஹஸ்தியின் பீடம் அது என்கின்றனர்” என்றார் கலிங்கர். “குலப்பெருமையை அவைக்கு காட்டும்பொருட்டு கொண்டுவந்து போட்டிருக்கின்றனர்.” அவர் அருகே அமர்ந்திருந்த மாளவர் “ஹஸ்தி மானுடன் அல்லவா? இது மானுடர்க்குரியதல்ல” என்றார். ஆனால் பால்ஹிகர் அதில் அமர்ந்ததும் அவருடைய உடலுக்கு அது பொருந்துவதைக் கண்டு அனைவரும் சொல்லவிந்தனர். அவையினரின் விழிகள் சூழ அவர் அதில் அமர்ந்து கைகளை கைப்பிடியில் வைத்து அவையை கூர்ந்து நோக்கியபின் பூரிசிரவஸை பார்த்தார்.

வாழ்த்தொலிகள் எழாமல் அவை பெருமுரசின் உட்பக்கம் போன்ற அழுத்தமான முழக்கத்தையே எழுப்பிக்கொண்டிருந்தது. கனகர் அவை மேடையிலேறி கைகளை விரித்து “குருகுல பிதாமகர் வாழ்க! ஹஸ்தியின் பெயர்மைந்தர் வாழ்க! மண்ணிறங்கி வந்த விண்ணுருவர் வாழ்க!” என்று கூவியதும் அவையினர் அனைவரும் வெறிகொண்டவர்போல் கைகளை வீசி வாழ்த்தொலி எழுப்பினர். பலர் வெறியாட்டெழுந்திருப்பதைப்போல் தன்னிலை மறந்திருப்பதை பூரிசிரவஸ் கண்டான். சிலர் அழுதுகொண்டிருப்பதுபோல் தோன்றியது. “பிதாமகரே! பிதாமகரே!” என்று பலர் பொருளற்று கூவினர். தெய்வக்கருவறை முன் நின்றிருக்கும் நிலைமறந்த அடியார் போலிருந்தனர்.

முன் நிரையிலிருந்து பல அரசர்கள் உணர்வெழுச்சியுடன் கைகளை விரித்தபடி அவை மேடை நோக்கி வர பிதாமகர் பீஷ்மர் எழுந்து கைகளை விரித்து அவர்களை அவையமரச் சொன்னார். “பிதாமகரை வணங்கியாக வேண்டும்! பிதாமகர் அருகே சென்றாக வேண்டும்!” என்று கூவினர். பீஷ்மர் “இங்கிருக்கும் அனைவருக்கும் அவர் பிதாமகரே. இவ்வவையினர் அனைவரும் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவோம். ஒருவர்பின் ஒருவராக அவை மேடைக்கு செல்வோம். அமைக! அமைக!” என்று கூவினார். துரோணர் “அவை அடங்குக! அனைவரும் அவரை அடிபணிய வாய்ப்பமையும்” என்றார்.

பால்ஹிகர் பூரிசிரவஸை தன் சுட்டுவிரலை நீட்டி அழைத்து “நான் யானைமேல் ஏறவேண்டுமே?” என்றார். “பொறுங்கள் பிதாமகரே, இந்த அவையினர் தங்களிடம் வாழ்த்து பெற்ற பின்னர் யானைமேல் ஏறலாம். யானை இப்போது உணவுண்டு கொண்டிருக்கிறது” என்றான். “உணவா?” என்று அவர் கேட்டார். “ஆம், நாம் நெடுந்தொலைவு செல்லவேண்டியிருக்கிறது. மலைமேல் ஏறவேண்டுமென்றால் அதற்கு உணவு தேவையல்லவா?” என்றான் பூரிசிரவஸ். பால்ஹிகர் “ஆம், உணவு கொடுக்கச் சொல்” என்றபின் அவையை நோக்கி திரும்பி “பெருங்கூச்சலிடுகிறார்கள். யானையைக் கண்டு அஞ்சியிருப்பார்கள் என்று எண்ணுகிறேன்” என்றார்.

நிமித்திகன் அறிவிப்புமேடையேறி “பிதாமகர் பீஷ்மர் பேசுவார். அவையோர் அமைக! பீஷ்மர் பேசவிருக்கிறார்” என்று கூவ பீஷ்மர் படியேறி மேலே வந்தார். பூரிசிரவஸ் அவரை வணங்க அவர் தாழ்ந்த குரலில் “அவ்வாறே இருக்கிறாரா?” என்றார். “ஆம், பிதாமகரே” என்றான் பூரிசிரவஸ். “உளம் அழிந்துவிட்டிருக்கிறது. அவையில் அமர்வாரா?” என்றார். “ஆம்” என்ற பூரிசிரவஸ் மேலும் தாழ்ந்த குரலில் “ஆனால் எவரையும் தெரியவில்லை அவருக்கு” என்றான். “எண்ணினேன்” என்றார் பீஷ்மர். பின்னர் கைகளை கூப்பியபடி முன்னால் சென்று பால்ஹிகரின் கால்களைத் தொட்டு சென்னி சூடி வணங்கினார். பால்ஹிகர் அவர் தலைமேல் கைவைத்து “புகழ் சேர்க!” என்றார்.

பீஷ்மர் எழுந்து பூரிசிரவஸிடம் “தன்னை அறியாமல் சொல்கிறார். எனினும் சரியாகவே அவர் நாவில் வருகிறது. மூதாதையரும் அன்னையரும் நாமறந்தும்கூட நாம் வெற்றி பெறுவோம் என்று வாழ்த்துவதில்லை” என்றார். எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்று பூரிசிரவஸுக்கு தெரியவில்லை. அவன் புன்னகைப்பதுபோல் உதடுகளை நீட்டினான். “இங்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். படை ஒருக்குவதற்காக எல்லையிலிருந்ததனால் உடனே இங்கு வரமுடியவில்லை. முன்னரே வந்து பிதாமகரை சந்தித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது” என்றார் பீஷ்மர்.

“அவர் தங்களை அடையாளம் காணவில்லை” என்றான் பூரிசிரவஸ். “நான் அவரை அடையாளம் காண்கிறேன். உண்மையில் என் தோள்களிலிருந்து பெருஞ்சுமையொன்று எழுந்தகன்றது போலிருக்கிறது. இக்குடியின் மூத்தவரென்ற நிலையில் இருந்தேன். இன்று அதை இவருக்கு அளித்துவிட்டேன்” என்றார். பீஷ்மரைத் தொடர்ந்து வந்த கிருபரும் துரோணரும் பிதாமகரை வணங்கி வாழ்த்துகொண்டு பீஷ்மர் அருகே வந்து நின்றனர். துரோணர் “என்னை வாழ்த்தினார், அழியா புகழ் கொள்க என்றார்” என்று சொல்ல கிருபர் “அவர் அனைவரிடமும் அச்சொல்லையே உரைக்கிறார்” என்றார்.

திருதராஷ்டிரர் சங்குலன் தாங்க, சஞ்சயன் தொடர, மேடையேறி வந்து பால்ஹிகரை வணங்கினார். பீடத்திலிருந்து எழும்போதே அவர் விழிநீர் வழிய நடுங்கிக்கொண்டிருந்தார். பலமுறை தள்ளாடியபடி நிற்க சங்குலன் அவரை நிலைப்படுத்தினான். பால்ஹிகரை வணங்கும்போது திருதராஷ்டிரர் மெல்ல விசும்பினார். பால்ஹிகர் அவர் தலையைத் தொட்டதும் கேவியபடி தரையில் அவர் காலடியில் அமர்ந்துவிட்டார். சங்குலன் அவரை தூக்க சஞ்சயன் “அரசே, எழுக… மேலும் அரசர் வணங்க வருகிறார்கள்” என்றான்.

அவர் தன் கைகளால் துழாவி பால்ஹிகரின் கால்களை தொட்டார். பெரிய பாதங்களை அவர் விரல்கள் வருடி வருடி பதைத்து அலைந்தன. சஞ்சயன் “அரசே, எழுக!” என்றான். சங்குலன் அவரை தூக்க அவர் அவனுடைய கைகளில் தொய்ந்து கிடந்தவராக மேடையிலிருந்து கீழிறங்கினார். பீடத்தை அடைந்தபோது தோள்கள் குலுங்க அழுதுகொண்டிருந்தார். பீடத்திலமர்ந்து இரு கைகளாலும் தலையைத் தாங்கி விம்மி விம்மி அழுதார். சல்யரும் சகுனியும் ஜயத்ரதனும் மேடையேறி பால்ஹிகரை வணங்கினர்.

கனகர் “அஸ்தினபுரியின் துணை அரசர்கள் அனைவரும் பிதாமகரை வணங்கலாம்” என்று அறிவித்தார். ஒவ்வொருவராக மேடையேறி வந்து அவர் காலடி தொட்டு சென்னிசூடி வணங்கினர். பல மன்னர்கள் கைகூப்பி உடல் நடுங்க விழிநீர் வழிந்து மார்பிலும் ஆடைகளிலும் சொட்ட நடந்து வந்தனர். சிலர் அவர் கால்களைத் தொட குனிந்தபோது நிலைதடுமாறி முன்னால் விழப்பார்த்தனர். உடன் வந்த இளவரசர்கள் அவர்களை பற்றிக்கொண்டனர். சிலர் அவர் கைகளைத் தொட்டு தங்கள் தலைமேல் வைத்து கண்களில் ஒற்றினர். சிலர் முழந்தாளிட்டு அவர் முன் அமர்ந்து அவர் தொடைமேல் தலைவைத்துக்கொண்டனர்.

மெல்ல மெல்ல அவ்வுணர்ச்சிகள் எழுந்து பெருகி அவையை ஆட்கொண்டன. அங்கிருந்த அனைவருமே அழுதுகொண்டிருப்பதை பூரிசிரவஸ் பார்த்தான். மெல்லிய விசும்பலோசையுடன் அவன் திரும்பிப் பார்த்தபோது மேடையில் அவனருகே நின்றிருந்த பீஷ்மரின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அவன் பார்ப்பதை பார்த்ததும் புன்னகைத்து “பொருளற்ற உணர்ச்சிதான், ஆனால் இப்புவியில் இதைவிடப் பொருளுள்ளது எதுவுமில்லை என்றும் படுகிறது” என்றார். பூரிசிரவஸ் புன்னகைத்தான்.

பீஷ்மர் “அகவை மூத்தவர் மட்டுமல்ல, அனைவருக்கும் மூதாதையாக இருக்கும் தகுதியும் கொண்டவர்” என்றார். பூரிசிரவஸ் “ஆம் பிதாமகரே, இப்போதுகூட இங்கிருக்கும் எவரும் அவருடன் நிகர்நின்று தோள்பொருத முடியாது” என்றான். பீஷ்மர் நெடுமூச்சுவிட்டு “மனிதர்கள் இறப்பதில்லை. இப்புவியெங்கும் பரவியுள்ள உலகியலெனும் கரையானால் அரிக்கப்படுகிறார்கள். அவை சென்று எட்டாத உயரத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார். இங்கு உயிர்துறப்பதற்காக வந்திருக்கிறார்” என்றார். பூரிசிரவஸ் “ஆம்” என்றான்.

பீஷ்மர் தனக்குத்தானே என “அதுவும் ஒருவகையில் சரிதான். ஷத்ரிய மரபின்படி நோயுற்றிறப்பது ஓர் இழிவு. படைக்களத்தில் இறப்பவரே விண்ணுக்குரியவர்” என்றார். பின்னர் இடறிய தாழ்ந்த குரலில் “தன் குருதியினன் ஒருவன் கையால் இறப்பதென்பது மேலும் சிறப்பு. அது தன்னால் தான் தோற்கடிக்கப்படுதல். மண்ணில் பிற குருதியர் எவர் முன்னாலும் தோற்றதில்லை என்ற புகழுடன் விண்ணேக இயலும்” என்றார்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 27

tigஅரசப்பேரவை முன்னரே நிரம்பத் தொடங்கியிருந்தது. ஷத்ரிய அரசர்கள் இளைய கௌரவர்களாலும் சிற்றரசர்கள் உபகௌரவர்களாலும், சிற்றமைச்சர்களாலும் அவைமுகப்பில் தேரிறங்கும்போதே எதிர்கொண்டு வரவேற்கப்பட்டு அவைக்கு கொண்டுசென்று அமர்த்தப்பட்டனர். பூரிசிரவஸ் அவைமுகப்பில் நின்றுகொண்டு அங்கே அமர்ந்திருக்கும் அரசர்களை விழிதொட்டு நோக்கி சென்றான். வெளியிலிருந்து அவந்தியின் அரசர்கள் விந்தரும் அனுவிந்தரும் துர்மதனாலும் துச்சகனாலும் வரவேற்று கொண்டுசென்று அவையமர்த்தப்பட்டனர். பிறிதொரு வாயிலினூடாக கோசலமன்னன் பிருஹத்பலனை சுபாகு உள்ளே அழைத்துச் சென்றான்.

பூரிசிரவஸை அணுகிய சிற்றமைச்சர் மனோதரர் “பால்ஹிகரே, ஓர் உதவி. கலிங்கமன்னர் ஸ்ருதாயுஷ் வந்துகொண்டிருக்கிறார். அவருக்கு முதன்மை ஷத்ரிய அரசர்களுக்குரிய அவைமதிப்பை அளிக்கவியலாது. ஆனால் பெரும்படையுடன் வந்தவர். நீங்கள் அரசரின் தனிநண்பராக அறிமுகம் செய்துகொண்டு அவரை வரவேற்றால் நன்று. பிறர் அதை மறுத்துக் கேட்டால் நீங்கள் முதன்மை ஷத்ரியக்குடி அல்ல என்று சொல்லமுடியும்” என்றார். பூரிசிரவஸ் சிரித்தபடி “நன்று” என்று சொல்லி வெளியே சென்றான். அங்கே லக்ஷ்மணன் தம்பியர் தீர்க்கபாகுவும் தீர்க்கஸ்தம்பனும் துணைக்க நின்றிருந்தான். பூரிசிரவஸ் அருகே சென்று “கலிங்கரை நானும் சேர்ந்து வரவேற்கவேண்டும் என்பது ஆணை” என்றான்.

“நன்று, நான் பதற்றம் கொண்டிருந்தேன். கலிங்கரின் அமைச்சர்கள் வந்து எவர் வரவேற்பது என்று கேட்டுச்சென்றனர். மனோதரரிடம் சொன்னேன்” என்றான் லக்ஷ்மணன். சிறுகுடி மன்னர்களுக்கான மறுபக்க வாயிலின் வழியாக தட்சிண மாகிஷ்மதியின் நீலன் படைத்தலைவர் வக்ரதந்தரால் அழைத்துசெல்லப்பட்டதை கண்டான். மாளவ மன்னர் இந்திரசேனர் முந்தைய வாயிலில் இறங்க அவரை துச்சலனும் துர்முகனும் அழைத்துக்கொண்டு சென்றார்கள். பிரக்ஜ்யோதிஷத்தின் மறைந்த பேரரசர் பகதத்தரின் மைந்தர் பகதத்தன் அமைச்சர் குந்தரால் அழைத்துச்செல்லப்பட்டார்.

ஜராசந்தனின் மைந்தனும் மகதமன்னனுமான ஜயசேனன் பெருமுற்றத்தில் தேரிலிருந்து இறங்கியதும் சித்ரனும் உபசித்ரனும் அவனை வரவேற்று எதிர்கொண்டு முகமனுரைத்து இருபக்கமும் நின்று புன்னகையுடன் பேசி அவைக்கு கொண்டுசென்றனர். அந்தத் தேர் முற்றத்திலிருந்து அப்பால் செல்வதற்காக வெளியே சாலையில் கலிங்கனின் தேர் காத்து நின்றது. முகப்பில் மிகப் பெரிய கதிரவனின் சிற்பம் வெள்ளியில் பொறிக்கப்பட்டிருந்த தேர் உள்ளே நுழைந்ததும் ஏவலர்கள் அதை நோக்கி ஓடினர். கால் தொட்டிறங்க மரப்படிகள் அமைக்கப்பட்டன. அரச உடையில் சூரியபட மணிமுடி அணிந்த கலிங்க அரசர் ஸ்ருதாயுஷ் மைந்தர் ருதாயுவுடன் கைகூப்பியபடி இறங்கி நின்று இருபுறமும் பார்த்தார். லக்ஷ்மணனும் தம்பியரும் தன்னை நோக்கி வருவதைக் கண்டதும் அவர் முகம் சிறுப்பதை பூரிசிரவஸ் கண்டான். அவர்களின் முகம் பார்த்து பேசாமல் முன்னால் விரிந்திருந்த கூடத்தை நோக்குபவர்போல விழிதூக்கி உதடுகளால் மட்டும் முகமனுரைத்து நீரில் நடப்பவர்போல கால் நீட்டி வைத்து மெதுவாக ஸ்ருதாயுஷ் நடந்து வந்தார்.

பூரிசிரவஸ் ஸ்ருதாயுஷை அணுகி பணிந்து “நான் பால்ஹிகனாகிய பூரிசிரவஸ். அஸ்தினபுரியின் அரசரின் போர் அணுக்கன்” என்றான். ஸ்ருதாயுஷ் முகம் மலர்ந்து “ஆம், நாம் முறைமையுடன் சந்தித்திருக்கிறோம்” என்றார். “அரசர் அவைக்குப் பின் தனியாக தங்களை சந்திக்க விழைகிறார். அவைநிகழ்வுகளைப் பற்றி மட்டுமல்ல, பிறர் அறியத்தேவையில்லாத சில செய்திகளையும் சொல்லவேண்டுமென எண்ணுகிறார். ஆகவே அவைக்குப் பின் தாங்கள் நேரம் ஒதுக்கவேண்டும்” என்றான். ஸ்ருதாயுஷ் முகம் மலர, ஆனால் செயற்கையான கடுமையுடன் “என்ன செய்தி தொடர்பாக?” என்றார். “அரசே, தீர்க்கதமஸின் கொடிவழியில் சிலர் எதிர்ப்பக்கம் சென்றுள்ளனர். அதோடு…” என குரல் தாழ்த்தி “அங்கரும் படையில் இல்லை” என்றான் பூரிசிரவஸ். “ஆம், அதை அறிந்தேன். அவன் படையில் இல்லாமலிருப்பதே நமக்கு ஆற்றலளிக்கும். நான் பேசிக்கொள்கிறேன்” என்று முன்னால் சென்றார்.

லக்ஷ்மணன் அவனை விழிகளால் நோக்கி புன்னகைக்க பூரிசிரவஸ் பிறர் அறியாமல் புன்னகைத்தபடி விலகினான். விவித்சு, விகடானனன் இருவரும் ஆனர்த்த நாட்டு கிருதவர்மனை வரவேற்று அழைத்துச்செல்வதை கண்டான். யாதவர்களுக்கு அரசவரவேற்பே ஊதியம், அதை அளிக்காமலிருக்க முடியாது. ஆனால் நூற்றுவரில் அறியப்படாத இருவரே முன்னிற்க முடியும். அவன் மனோதரரின் திட்டங்களை எண்ணி வியந்துகொண்டான். ஆடையை சீரமைத்தபடி துணைவாயிலினூடாக அவைக்குள் நுழைந்தான். விழிகளால் துழாவியபோது அரசர்கள் பெரும்பாலும் அவையமர்ந்திருப்பது தெரிந்தது. குலக்குழு அரசர்களின் நீண்ட நிரையின் இடப்பக்க ஓரமாக சலன் அருகே சோமதத்தருடன் அமர்ந்திருந்தான்.

பூரிசிரவஸ் செல்லும் வழியிலிருந்த அரசர்களை வணங்கி ஓரிரு சொற்களில் முகமனுரைத்தபடி சலனின் அருகே சென்றான். சலனின் அருகே அவனுக்கான பீடம் ஒழிந்திருந்தது. அதில் அமர்ந்து “சற்று பிந்திவிட்டேன், மூத்தவரே” என்றான். “நெடுநேரமாக இந்த அவையமர்தல் நடந்துகொண்டிருக்கிறது. இறுதியாக வரும் உரிமை பெருநில அரசர்களுக்குரியது போலும். நான் வந்து இரு நாழிகையாகிறது” என்று சலன் சொன்னான். பூரிசிரவஸ் “ஆயினும் இப்பெரிய அவையில் நாம் அமர்ந்திருக்கிறோம். நமக்கு அவ்வாய்ப்பு இந்தத் தலைமுறையில்தான் அமைந்தது” என்றான். “நாமும் குருகுலத்துக் குருதிதான்” என்றான் சலன். “அதை நாமே சொல்லிக்கொண்டால்தான்” என்றான் பூரிசிரவஸ்.

சலன் கைகளைக் கட்டியபடி சாய்ந்து “உண்மையில் இத்தகைய பெரிய அவைகள்தான் பாரதவர்ஷத்தில் ஒருபோதும் போர் முடிவடையாமல் செய்கின்றன. இங்கிருக்கும் மேல்கீழ் அடுக்கில் ஒருமுறை வந்தமர்ந்தவர் பின் ஒவ்வொரு கணமும் அடுத்த அடுக்குக்கு நகர்வதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருப்பார். அதன்பொருட்டு சூழ்ச்சி செய்வார், போர்புரிவார், மணக்கூட்டுகள் அமைப்பார். ஒருபோதும் தான் இருந்த இடத்தில் அமையமுடியாது அவரால்” என்றான். பின்னர் பூரிசிரவஸிடம் “இளையவனே, தெரிந்தோ தெரியாமலோ இப்பெருஞ்சுழற்சியில் எங்களை மாட்டிவிட்டிருக்கிறாய். இனி பால்ஹிகர்களால் தங்கள் மலைநகருக்குள் வாழ்வில் நிறைந்து இருக்க இயலாது. இனி வென்றாக வேண்டும், அடைந்தாக வேண்டும், முன்சென்றாக வேண்டும்” என்றான். பூரிசிரவஸ் “அவ்வாறுதான் இங்குள்ள அனைத்துப் பேரரசுகளும் உருவாகின்றன, மூத்தவரே” என்றான். “ஆம், ஐம்பத்தாறு அரசுகள் உருவாயின. அவற்றில் எட்டு அரசுகள் பேரரசுகளாயின. அதற்காக எஞ்சியவை அழிந்து மண்ணோடு ஒட்டிக்கிடக்கின்றன. ஐம்பத்தாறாயிரம் சிற்றரசுகள் முற்றாக அழிந்திருக்கும்” என்று சலன் சொன்னான். பூரிசிரவஸ் மறுமொழி எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தான்.

சற்றுநேரம் கழித்து “பிதாமகர் எங்கிருக்கிறார்?” என்று சலன் கேட்டான். “யானைக்கொட்டடியில். அவர் வருகை இங்கு அறிவிக்கப்படும்போது அவையில் தோன்றுவார். அதற்கு சற்று முன்னர் அவரை அழைத்து வந்து அருகிருக்கும் அணியறையில் அமர்த்தி அரச ஆடைகள் புனைய ஆணையிட்டிருக்கிறேன். தன் மேல் அணிவிக்கப்படும் எதையும் அவர் அக்கணமே கழற்றிவிடுகிறார். அந்த இரும்புக்கவசமன்றி வேறெதுவும் அவருக்கு உவப்பதில்லை. கவச உடையில் அவையில் அவரை கொண்டுவருவது கேலிக்குரியது. அரச உடை அணிவித்த சில கணங்களிலேயே அவரை அவைக்குள் கொண்டுவருவது உகந்ததென்று தோன்றியது” என்றான். சலன் சிரித்து “பெரும் கேலிக்கூத்து. சூதர்கள்கூட இதற்கிணையான கேலிக்கூத்தை நிகழ்த்திவிட முடியாது” என்றான். பூரிசிரவஸ் நகைத்து “இதை அவைசூழ்தல் என்றும் போர் என்றும் சொல்கிறார்கள்” என்றான்.

பேரவை பெரும்பாலும் நிறைந்துவிட்டதென்பதை சற்றே உடல் தூக்கி தலை சுழற்றி நோக்கி பூரிசிரவஸ் புரிந்துகொண்டான். அவையின் முகப்பிலிருந்த சிறுவாயிலினூடாக கனகர் எட்டிப்பார்த்தார். பின்னர் அவரும் விதுரரும் கைகளை கூப்பியபடி அவைக்குள் நுழைந்தனர். விதுரர் நோயுற்று, மெலிந்து, அகவை மிக முதிர்ந்த தவமுனிவர் போலிருந்தார். கண்கள் குழிவிழுந்து உள்ளே செல்ல, வாய் வற்றியிருந்தமையால் பற்கள் உந்தி வெளிவந்திருக்க, கரிய சிற்றுடலுடன் அனைத்துப் பொலிவையும் இழந்து, அணிந்திருந்த அப்பட்டாடையும் அருங்கல் மணிமாலையும் இல்லையென்றால் எவரும் பட்டினியில் தவித்து அன்ன விடுதி நோக்கிவரும் எளிய சூதன் என்று எண்ணும்படி இருந்தார். நடக்கையில் சருகு காற்றிலென தத்தித் தத்தி எடையிலாது வந்தார். அவருக்கான பீடத்தில் அதன் கைப்பிடியைப் பற்றி மெல்ல நடுங்கியபடி குனிந்து அமர்ந்தார். இரு கைகளையும் நெஞ்சில் கூப்பி தலையைக் குனித்து தோள் தொய்ய அமர்ந்திருந்தார்.

கனகர் திரும்பிச் சென்று இணையமைச்சர்களிடமும் துணையமைச்சர்களிடமும் கைகளை வீசி ஆணைகளை விடுத்துக்கொண்டிருந்தார். தொலைவிலேயே தன் ஆணைகள் எதையுமே அவர் பின் தொடராததனால் அவையெதுவும் பொருட்படுத்தப்படவில்லையென்றும், அவர் பிற அமைச்சர்களால் ஒரு பெரிய தொல்லையென்றே பார்க்கப்படுகிறார் என்றும் தெரிந்தது. அவன் என்ணத்தை உணர்ந்ததுபோல் சலன் “நன்று, பாரதவர்ஷம் கண்ட பெரும்போருக்கு முதன்மை அமைச்சர் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்றான். சோமதத்தர் திரும்பி நோக்க சலன் “நான் நகையாடவில்லை. உச்சியிலிருப்பவன் எதையும் அறியாதவனாகவும் புரிந்துகொள்ள முடியாதவனாகவும் இருக்கையில் அவன் உள்ளம் நிலைபேறு கொண்டிருக்கிறது. புரிந்துகொள்ளத் தொடங்கினால் பேதலித்து அவனும் பித்தனாகிவிடுவான்” என்றான்.

கௌரவ நூற்றுவர்களும் அவர்களின் ஆயிரம் மைந்தர்களும் வணங்கியபடி வந்து தங்கள் பீடங்களில் அமர்ந்தனர். அவையின் ஒருபகுதி முழுக்க அவர்களே இருப்பதை எண்ணி பூரிசிரவஸ் மீண்டும் புன்னகைத்துக்கொண்டான். சலன் அவன் உள்ளத்தை அணுக்கமாகத் தொடர்ந்து வந்து “அவர்களே ஒரு சிறு படை போலிருக்கிறார்கள். இருள் உருகி வழிவதுபோல் அவர்கள் அவை நுழைவதாக முன்பு ஒரு பாடலில் சூதனொருவன் பாடியிருந்தான். எத்தனை பொருத்தம் என்று தோன்றுகிறது” என்றான். பூரிசிரவஸ் அவையை மீண்டும் விழியோட்டிப் பார்த்தான். காம்போஜத்தின் அரசர் சுதக்ஷிணர் சால்வருடன் குனிந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார். “வத்ஸம் நமதுபக்கம் சேரவில்லையா?” என்றான் சலன். “வத்ஸர்களும் மத்ஸ்யர்களும் பாண்டவர்களுடன் சென்றுவிட்டனர். இறுதிக்கணம் வரை முயன்றோம்” என்றான் பூரிசிரவஸ். “தராதர்களும் சகர்களும் யவனர்களும் பாண்டவர்களையே ஆதரிக்கிறார்கள்.” சோமதத்தர் “ஆம், அவர்கள் நிஷாதர்கள்” என்றார். பூரிசிரவஸ் “காம்போஜர்கள் அவர்களின் குலம் அல்லவா? சுதக்ஷிணர் பெரும்படையுடன் இங்கு வந்துள்ளாரே?” என்றான். சலன் நகைத்து “இளையோனே, ஷத்ரியநிலை என்பது பிற ஷத்ரியர்களால் வழங்கப்படுவது” என்றான்.

வெளியே பெருஞ்சங்கங்கள் முழங்கின. மங்கல இசை எழுந்து அலைகொண்டது. வாழ்த்தொலிகள் சூழ துரோணரும் கிருபரும் கைகளைக் கூப்பியபடி வந்து தங்கள் பீடத்தில் அமர்ந்தனர். சலன் அவனிடம் திரும்பி “இம்முறை குழப்பம் ஏதுமின்றி பிதாமகர் பீஷ்மரையே முதன்மை படைத்தலைவராக அமைத்துவிடப்போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அஸ்தினபுரியின் அவையில் சொற்பூசலின்றி எதுவும் நிறைவுறாதென்பது வரலாறு” என்றான். பூரிசிரவஸ் “ஆம், அவ்வாறு நிறைவேற வேண்டுமென்றால் பெரும்பூசலொன்று அதற்கு முன்னரே முடிந்திருக்கவேண்டும்” என்றான். “என்ன பூசல்?” என்று சலன் கேட்டான்.

பூரிசிரவஸ் ஒருகணம் தயங்கியபின் “மூத்தவரே, முதன்மை படைத்தலைவராக இருப்பதற்கு முதற்தகுதி கொண்டவர் அங்க நாட்டரசர் கர்ணன். அவர் கீழ் தாங்கள் படைகொள்ள மாட்டோம் என்று ஷத்ரியர்கள் அறிவித்துவிட்டமையால்தான் அவருக்கு நிகராக பீஷ்மரை நிறுத்துகிறார்கள். பிறிதெவரை நிறுத்தினாலும் அவர் கர்ணனுக்கு நிகரல்ல என்ற பேச்சு எழுந்துவிடும். பிதாமகரைக் குறித்துகூட அவ்வாறு ஒரு எண்ணம் பலருக்கு இருந்தாலும் முதியவர் என்பதனாலும் பிதாமகர் என்பதனாலும் அவையில் எவரும் அதை சொல்லப்போவதில்லை” என்றான். சலன் வெறுமனே பேசவிரும்புகிறான் என்று அவனுக்கு தோன்றியது.

“அதைவிடப் பெரியது அவர்களின் திட்டம், இளையோனே” என்றான் சலன். “அர்ஜுனன் தன் எதிரே பீஷ்மரை கண்டால் கைதளர்ந்து காண்டீபத்தை நழுவ விடுவார்.” பூரிசிரவஸும் பேச விரும்பினான். “அவர் இன்றிருக்கும் நிலை வேறு என்றனர். இளைய யாதவரின் கொள்கைக்கு முழுதளித்து உள்ளம் உறுதிகொண்டிருக்கிறார்” என்றான் பூரிசிரவஸ். “அவ்வண்ணமென்றால் அவர் பிதாமகரை கொல்லவேண்டும். அது அஸ்தினபுரியின் குடிகள் அனைவரையுமே அவர்கள்மேல் சினம்கொள்ளச் செய்யும். இந்நிலத்தை அவர்கள் ஒருபோதும் முழுதாளமுடியாது” என்றான் சலன். “களத்தில் எதிரே பிதாமகரை பார்ப்பதே பாண்டவப்படைகளை தளரச் செய்யும்” என்று அவன் தொடர பூரிசிரவஸ் “களத்தில் அவர்கள் பாஞ்சாலர்களையோ விராடர்களையோதான் முதனிலையில் அமைப்பார்கள்” என்றான்.

முரசொலிகளும் கொம்பொலிகளும் எழ விஸ்வசேனர் தொடர பீஷ்மர் கைகூப்பியபடி அவைக்குள் வந்து தன்னுடைய பீடத்தில் அமர்ந்தார். வழக்கம்போல மரவுரி ஆடையும் கழுத்தில் ஒற்றைச் சங்குமணியும் அணிந்திருந்தார். நீண்ட நரைத்த கூந்தலை தோல்பட்டையால் கட்டி முதுகில் தொங்கவிட்டிருந்தார். பெரும்பாலும் மயிர் உதிர்ந்து முதிய கொக்கின் சிறகு போலாகியிருந்த தாடி மார்பில் திரிகளாக விழுந்துகிடந்தது. நீண்ட மெலிந்த உடலை பீடத்தில் சரித்து மடித்தமர்ந்து இடக்காலைத் தூக்கி பீடத்தின்மேல் வைத்து தன் கால் விரல்களை கையால் நீவிவிடத் தொடங்கினார். சலன் “இந்த அவைக்கு அங்கர் வர வாய்ப்புண்டா?” என்றான். “இல்லை” என்றான் பூரிசிரவஸ். “வேள்வி முடிந்த சில நாட்களிலேயே கிளம்பி அங்க நாட்டுக்கு சென்றார். நேற்று தன் வேட்டைக்குழுவுடன் காட்டுக்குள் சென்றுவிட்டதாகவும் மறுமுறை அவரிடமிருந்து செய்தி வரும்வரை எங்கிருக்கிறார் என்பதையே கூறமுடியதென்றும் ஓலை வந்துள்ளது.” சலன் வெறுமனே தலையசைத்தான்.

மீண்டும் மங்கல இசை முழங்கியது. கொம்புகளும் முரசுகளும் பிளிறி ஆர்த்தன. வெள்ளிக்கோல் ஏந்திய நிமித்திகன் அவைக்குள் நுழைந்து அதை மும்முறை சுழற்றி தலைமேல் அசைத்தான். வாழ்த்தொலிகள் வெளியே முழங்கின. “அஸ்தினபுரியை ஆளும் அரசர், தார்த்தராஷ்டிரர், யயாதியின் கொடிவழி வந்தவர், பாரதவர்ஷத்தின் பேரரசர் துரியோதனர் அவை நுழைவு!” என்று நிமித்திகன் அறிவித்தான். அவையிலிருந்த மன்னர்களும் சிற்றரசர்களும் தங்கள் கைக்கோல்களைத் தூக்கி “அவை முதல்வர் வெல்க! அஸ்தினபுரியின் அரசர் வெல்க! வெற்றி சூழ்க!” என்று வாழ்த்தினர்.

மங்கலத் தாலங்களுடன் அணிச்சேடியரும் அவர்களுக்குப் பின்னால் ஐந்திசைக் கலங்களை முழக்கியபடி அவைச்சூதரும் இரண்டு நிரைகளாக உள்ளே நுழைந்து பிரிந்து அவையில் பரவினர். அஸ்தினபுரியின் அமுதகலக்கொடியுடன் முழுக்கவச உடையணிந்த படைவீரன் ஒருவன் உள்ளே நுழைந்து அதை அவை முன் பொருத்தியபின் தலைவணங்கி பின்நகர்ந்தான். துரியோதனன் அரச தோற்றத்தில் கைகளைக் கூப்பியபடி நடந்து வர அவனுக்கு வலப்பக்கம் துச்சாதனன் உடைவாள் ஏந்தி நடந்து வந்தான். பின்னால் இருந்து வெண்கொற்றக்குடை எழுந்து அவன் மேல் கவிழ்ந்து உலைய, அதன் முத்துச்சரங்கள் குலுங்கின. தொடர்ந்து வந்த படைத்தலைவர்களும் வாளேந்தியிருந்தனர்.

அவைக்குள் நுழைந்து பிதாமகரையும் ஆசிரியரையும் அவையையும் வணங்கி துரியோதனன் அரியணையில் சென்று அமர்ந்தான். அது அரசுசூழ் மேடையென்பதனால் இணையாக அரசிக்கு அரியணை போடப்பட்டிருக்கவில்லை. அவையின் வலப்பக்கம் பட்டுத்திரைக்கு அப்பால் அரசி பானுமதியும் துணையரசியர்களும் வந்தமர்வதை நிழலசைவென காணமுடிந்தது. பாற்கடலில் தெரியும் பாவைகள்போல என்று அத்தருணத்திற்கு முற்றிலும் பொருத்தமில்லாத ஓர் ஒப்புமை பூரிசிரவஸின் உள்ளத்தில் எழுந்தது. தன் உள்ளம் ஏன் அத்தனை எளிதாக அனைத்தையும் புன்னகை மட்டுமே கொண்டு பார்ப்பதாக மாறிவிட்டிருக்கிறதென்று அவனே வியந்துகொண்டான்.

மீண்டும் மங்கல இசையெழ துரியோதனன் அரியணையிலிருந்து எழுந்து கைகூப்பியபடி நின்றான். அஸ்தினபுரியின் அமுதகலக்கொடியுடன் ஒரு வீரன் முன்னால் வர சஞ்சயனும் யுயுத்ஸுவும் இருபுறத்திலும் தொடர திருதராஷ்டிரர் கைகூப்பியபடி அவைக்குள் நுழைந்தார். அவருக்குப் பின்னால் அவர் அணுக்கச்சேவகன் சங்குலன் தன் பேருடலுடன் நடந்து வந்தான். சலன் “இவன்தான் அந்த மாமல்லன் அல்லவா? பேருடலன், இவனைவிடப் பெரியவர் பால்ஹிகப் பிதாமகர் மட்டுமே” என்றான். யுயுத்ஸுவின் தோளைப் பற்றியபடி திருதராஷ்டிரர் தன் பீடத்தில் அமர்ந்தார். முனகலுடன் உடலை விரித்து கைகளை மார்மேல் கட்டிக்கொண்டு தலைகவிழ்ந்தார். அவருடைய தாடை இறுகி அசைவதையும் தோள்தசைகள் இழுபட்டு இழுபட்டு நெகிழ்வதையும் தொலைவிலேயே காண முடிந்தது, அவருடைய கரிய தோலுடல் ஒரு கூடாரமென, அதற்குள் ஒரு மல்லர் கூட்டம் போரிடுவதுபோல. இன்றென்ன ஒவ்வொரு எண்ணமும் விந்தையாக இருக்கிறதே என்று அதை புன்னகையுடன் தானே திரும்பி பார்த்துக்கொண்டான்.

அதன்பின்னர்தான் மறுபக்க வாயிலினூடாக சகுனியும் கணிகரும் வந்து அவையமர்ந்துவிட்டிருப்பதை பூரிசிரவஸ் கண்டான். சலனிடம் “அவர்கள் முன்னரே வந்துவிட்டார்களா?” என்றான். “ஆம், அரசர் அவையமர்ந்தபோதே அவர்கள் உள்ளே நுழைந்தனர்” என்று சலன் சொன்னான். பின்னர் “ஓசையின்றி, நரிகளைப்போல” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். பூரிசிரவஸ் சினத்துடன் “சூதர்களின் பாடல்களை அரசர்கள் உளம் தொடரலாகாது, மூத்தவரே. இப்போரின் முதன்மை களஞ்சூழ்வோர் அவர்களே. மெய்யில், இப்போரென்பது அவர்கள் தங்கள் நாற்களத்தில் நிகழ்த்தும் காய் நகர்வன்றி பிறிதல்ல” என்றான். “அதைத்தான் நானும் சொன்னேன்” என்று சலன் திரும்பிப்பார்க்காமலேயே சொன்னான்.

பூரிசிரவஸ் சகுனியை பார்த்தான். அவர் உடலில் மெல்லிய நடுக்கு ஒன்றிருப்பதுபோல் தொலைவிலிருந்து பார்த்தபோது தோன்றியது. வாயில் எதையோ போட்டு மென்று கொண்டிருப்பதுபோல இருபுரியாகப் பிரிந்த மென்தாடி அசைந்தது. ஆனால் உதடுகளை பார்த்தபோது அவர் எதையும் மெல்வது போலவும் தெரியவில்லை. அவன் அங்கிருந்து கணிகரை பார்க்க முயன்றான். நிலத்தில் இடப்பட்ட மெத்தையில் ஒசிந்து படுத்திருந்த அவருடைய குடுமியின் ஒரு பகுதி மட்டுமே தெரிந்தது. பூரிசிரவஸ் சலனிடம் “இப்போரில் ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்பொருள் உள்ளது. சென்றடைய ஓர் இலக்கு, வென்று கொள்ள சில. எதன்பொருட்டுமன்றி போரின் பொருட்டே இப்போரில் இருப்பவர் கணிகர் ஒருவரே. தன் இயல்பாலேயே அவர் இப்போரை வழிநடத்துகிறார்” என்றான்.

வியப்புடன் மூச்செறிந்தபடி நிமிர்ந்து அமர்ந்து “இதுவரை எனக்கு இது  தோன்றவில்லை. இந்த அவையில் அமர்ந்து அவரை நோக்கிக்கொண்டிருக்கையில் நெடுங்காலமாக ஒவ்வொரு சொல்லாக அவர் இப்போரை நோக்கி அனைவரையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் என்று தோன்றுகிறது” என்றான். “அவரை முதலில் கண்டு, அவர் சொன்ன முதற்சொல்லை செவிகொண்டபோதே நான் அதை உணர்ந்தேன்” என்று சலன் சொன்னான். பூரிசிரவஸ் திரும்பி அவனை பார்த்துவிட்டு அது மெய்யென்று உணர்ந்தான். தன்னையும் ஓர் அரசுசூழ்கையாளனாக எண்ணிக்கொண்டிருப்பதனால் தன்னால் பலவற்றை உணரமுடியாமல் போயிருக்கிறது. இவை அனைத்தையும் தன்னால் மாற்றி அமைத்துவிட முடியும் என்ற எண்ணத்தால் கணிகரை குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். ஒருகணம் அங்கிருப்பவர்களில் முற்றிலும் அறிவற்றவன் தான்தானோ என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. ஆனால் அது மீண்டும் மெல்லிய புன்னகையைத்தான் உருவாக்கியது.

அரசமுறைச் சடங்குகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. வைதிகர் மேடையேறி கங்கை நீர் தெளித்து அரிமலர் தூவி வேதமோதி துரியோதனனை வாழ்த்தினர். தொடர்ந்து அஸ்தினபுரியின் மூத்த குடிகள் மேடையிலேறி யயாதியின் மணிமுடியை அவனுக்கு சூட்டினர். உடைவாளையும் செங்கோலையும் அளித்தனர். அரச அணிக்கோலத்தில் அவன் வீற்றிருந்தபோது மங்கல இசையும் முழவுகளும் முரசுகளும் முழங்கின. அவை அவனை வாழ்த்தி குரலெழுப்பியது. அவையிலிருந்து அரிமலர் எழுந்து அவன் மேல் பொழிந்தது. கைகூப்பி அவ்வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட பின் அவன் செங்கோலையும் மணிமுடியையும் உடைவாளையும் மறுபக்கம் நின்றிருந்த அணிச்சேவகனிடம் அளித்தான். இயல்பாக கால்களை நீட்டி கைகளை கைப்பிடியில் வைத்து அரியணையில் நிமிர்ந்தமர்ந்தான்.

கனகர் முரசுத்தாளத்தை வழிநடத்துபவர்போல கைகளை வீசி வீசி ஆணையிட்டுக் கொண்டிருக்க நிமித்திகன் விழிகளால் அவரை சந்தித்து ஆணை பெற்று தன் வெள்ளிக்கோலுடன் அறிவிப்பு மேடைமேல் ஏறினான். கொம்பு மும்முறை பிளிறி அமைந்ததும் அவை அமைதியடைந்தது. நிமித்திகன் தன் கோலை இருமுறை வீசி தலைக்கு மேல் தூக்கி “வெற்றி நிகழ்க! வளம் நிறைக! அறம் வெல்க! மூதாதையர் அருள்க! தெய்வங்கள் கனிக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று உரத்த குரலில் கூவினான். பின்னர் அவையைச் சூழ்ந்த மணிக்குரலில் அஸ்தினபுரியின் குடிவரிசையை சொன்னான்.

“விஷ்ணுவிலிருந்து பிறந்த குலத்தை வாழ்த்துக! பிரம்மன் அத்ரியில் பெற்ற சந்திர குலத்தை வாழ்த்துக! புதன், புரூரவஸ், ஆயுஸ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யூ, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன், ஹஸ்தி, அஜமீடன், ருக்‌ஷன், சம்வரணன், குரு என நீளும் பெருமைமிக்க கொடிவழியை வாழ்த்துக! குருகுலத்தோன் துரியோதனன் புகழ் வெல்க! குலமூதாதை குருவின் குருதியில் எழுந்த ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்‌ஷன், பீமன், பிரதீபன், சந்தனு என தொடரும் குருதிவழியில் வந்த விசித்திரவீரியனை, அவர் பெற்ற திருதராஷ்டிரரை வணங்குவோம்.” பூரிசிரவஸ் திருதராஷ்டிரர் தலையை அசைத்தபடி எழப்போவதுபோல ஓர் அசைவை கொண்டதை கண்டான். பின்னர் அவர் கண்களை தன் கைகளால் பொத்தி விழிநீரை ஒற்றலானார்.

“அவையோரே, இங்கு அவையமர்ந்திருக்கும் அஸ்தினபுரியின் அரசர் தார்த்தராஷ்டிரரான துரியோதனர். குருவின் முடிசூடி ஹஸ்தியின் தோள்கொண்டு அரியணை கொண்டவர். பாரதவர்ஷத்தை மும்முடி சூடி முழுதாளவிருக்கும் பேரரசர் துரியோதனரின் ஆணையின்படி அவரை வாழ்த்தி இங்கமர்ந்திருக்கும் பிதாமகர் பீஷ்மருக்கும், அவருக்கு அருளுரை கூறி ஆற்றுப்படுத்தும் ஆசிரியர்களுக்கும், அவருக்கு படைத்துணையென திரண்டிருக்கும் அரசர்களுக்கும், அவருடைய பெருகிய நூறு தோள்களென செறிந்திருக்கும் உடன்பிறந்தோர்க்கும் இந்த அவையின் வணக்கம் தெரிவிக்கப்படுகிறது” என்று நிமித்திகன் சொன்னான்.

“இந்த அவை அஸ்தினபுரியின்மீது நம் அரசருக்கு இருக்கும் குலமுறை உரிமையும் கோலுரிமையும் கொடிக்கோள் உரிமையும் வாளுரிமையும் வழுவாது நிலைகொள்ளவேண்டும் என்று வலியுறுத்தும்பொருட்டு அமைந்தது. அவ்வுரிமையை மறுத்து குலநெறி மீறியும் அறநெறி மீறியும் ஷத்ரிய குடிக்குரிய வாள்நெறி மீறியும் உரிமை கொண்டாடும் பாண்டுவின் மைந்தர்களுக்கெதிராக இங்கே போர் அறிவிப்பு நிகழவிருக்கிறது. முதன்மை படைத்தலைவர்களும் பிற படைகளின் தலைவர்களும் முறையாக அறிவிக்கப்படுவார்கள். அறிவிக்கப்பட்ட அக்கணத்திலிருந்து இறுதி வெற்றி வரைக்கும் ஒருகணமும் ஓயாத போர் தொடங்குகிறது. நம்முள் வாழ சொல்மகளும் நம்மை காக்க கொற்றவையும் நமக்கு அருள திருமகளும் காத்திருக்கின்றனர்.”

அவை வாள்களையும் கைக்கோல்களையும் தூக்கி “வெற்றிவேல்! வீரவேல்! வெல்க குருகுலம்! வெல்க ஷத்ரியப் பெருங்குலம்! போர்! எழுக போர்!” என்று முழங்கியது. மீண்டும் கொம்பொலி எழுந்து அவை அடங்கியதும் நிமித்திகன் “இந்த அவை குலநெறி சார்ந்ததென்பதற்கு சான்று இங்கே குருகுலத்துக் குருதியின் மூத்தவரான பீஷ்ம பிதாமகர் அமர்ந்திருப்பதே. அவரே தன் கைகளால் அஸ்தினபுரியின் அரசருக்கு மணிமுடி சூட்டியவருமாவார். ஆனால் பெரும்பாலானோர் அறிந்திருக்காத ஒன்றுண்டு. அஸ்தினபுரியின் அரசக் குருதியில் இன்றிருப்பவர்களில் மூத்தவர் பிறிதொருவர்” என்றான்.

அவையில் வியப்பொலி எழுந்தது. அது அடங்க காத்திருந்த நிமித்திகன் சொன்னான். “பிரதீபருக்கு சிபிநாட்டரசி சுனந்தையில் பிறந்த மைந்தரும், தேவாபிக்கும் சந்தனுவுக்கும் இளையவருமான பால்ஹிகர் இன்றும் உயிருடன் இருக்கிறார். அவருடைய மூத்தவர் தேவாபி துறவு பூண்டு விண்புகுந்தார். சந்துனு நாடாண்டு நிறைவடைந்தார். சந்துனுவின் கொடிவழியில் விசித்திரவீரியரும் திருதராஷ்டிரரும் தோன்றினர். நமது அரசர் அலைகடலில் கதிரவனென எழுந்து இங்கு அரியணை அமர்ந்திருக்கிறார். அரசகுடியினரே, அன்று தன் தமையன் காடேகிய பின்னர் தான் பிறந்த சிபிநாட்டுக்குச் சென்ற பால்ஹிகர் அங்கிருந்து பால்ஹிகபுரிக்கும் பிறகு அங்கிருந்து கந்தர்வர்களும் கின்னரரும் வாழும் வெண்மலைமுடிகளுக்கும் சென்றார். அங்கு காலமிலாவெளியில் நூறாண்டு வாழ்ந்தார். இப்போது அவருக்கு நூற்றெழுபத்திரண்டு அகவை ஆகிறது. தன் கொடிவழிவந்த மைந்தனின் முடியுரிமையை வலியுறுத்தும்பொருட்டு மீண்டும் நிலமிறங்கி வந்திருக்கிறார். அவர் இந்த அவை புகுந்து அரசரை வாழ்த்துவார். இங்கிருக்கும் அனைவருக்கும் தந்தையென அமர்ந்து அருள்புரிவார்.”

“அவையோர் அறிக, அஸ்தினபுரியின் அரியணை எவருக்குரியதென்பதற்கு இனி மறுசொல்லொன்று தேவையில்லை. குலநெறிப்படியும்கூட வாழ்பவரில் மூத்தவர் எவரோ அவருக்கே மணிமுடி உரிமைப்பட்டது. தேவாபியும் பின்னர் சந்துனுவும் மறைந்த பின்னர் உயிருடன் வாழும் பால்ஹிகரே அந்த மணிமுடிக்குரியவர். சந்தனுவின் இறப்புக்குப் பின் இயல்பாகவே அது பால்ஹிகருக்கே சென்றடையவேண்டும். அவர் இங்கில்லாததனால் அவர் அதை விட்டுக்கொடுத்தார் என்றுதான் குலநெறி பொருள்கொள்ளும். அவரிடமிருந்து விசித்திரவீரியருக்கும் திருதராஷ்டிரருக்கும் பின்னர் பாண்டுவுக்கும் கையளிக்கப்பட்டு இன்று நம் அரசரால் சூடப்பட்டுள்ள அம்மணிமுடிக்கு மெய்யான உரிமையாளர் பால்ஹிகரே. அவரே இன்று இந்த அவைக்கு வந்து தன் சிறுமைந்தர் சூடியிருக்கும் மணிமுடியை குருகுலத்தின் குலநெறிப்படியும் ஷத்ரிய மரபின்படியும் வேதம் வகுத்த முறைமையின்படியும் உறுதி செய்வார். அரசரின் பொருட்டு தான் வாளேந்தி துணை நிற்பதாக சொல்லளிப்பார். தெய்வம் விண்ணிறங்கி வந்து தன் சொல்லை நேரடியாக அளிப்பதற்கு நிகர் அது. அருள்க தெய்வங்கள்!”

அவை தங்கள் கைக்கோல்களையும் படைக்கலங்களையும் தூக்கி வாழ்த்து கூவியது. அலையலையென எழுந்து எழுந்து அடங்கிக்கொண்டிருந்த அந்த வாழ்த்தொலியை தலைதிருப்பி நோக்கிக்கொண்டு திகைத்து அமர்ந்திருந்தான் பூரிசிரவஸ். சலன் அவனைத் தொட்டு “பிதாமகரை அவை புகச்சொல்” என்றான். “ஆம், ஆம்” என்று அவன் எழுந்து பீடங்களின் நிரையில் குனிந்து விரைந்து அவையின் விளிம்பை அடைந்து சிறுவாயிலினூடாக வெளியே சென்றான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 26

tigபால்ஹிகபுரியைவிட்டு பயணம் தொடங்கி பதினாறு நாட்களுக்குப் பிறகு பால்ஹிகருடன் பூரிசிரவஸ் அஸ்தினபுரியை சென்றடைந்தான். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவன் விட்டுச்சென்ற நகரமாக அது இருக்கவில்லை. எறும்புப்புற்றுபோல இடைவெளியில்லாமல் மனிதத் தலைகளால் நிறைந்திருந்தது. தெருவெங்கும் புரவிகளும் தேர்களும் செறிந்து நெறித்தன. எவரும் எவரையும் விழிநோக்காமல், அறியாமல் ஆகிவிட்டிருந்தனர். ஒவ்வொருவரும் பிறரை நோக்கி கூச்சலிட்டனர். அக்கூச்சல் இணைந்து பெருமுழக்கமாக எழுந்தமையால் மேலும் கூச்சலிட்டே அவர்களால் பேச முடிந்தது. ஒவ்வொருவரும் பிறரிடமிருந்து நெடுந்தொலைவு விலகிச் சென்றுவிட்டவர்கள்போல் தோன்றியது. வெறித்த முகங்களும் திறந்த வாய்களும் புடைத்த தொண்டைகளுமாக அத்தனை முகங்களும் அவனைச் சூழ்ந்து திரை கொண்டன. கால்கள் கலங்கிக் குழம்பின. கைகள் அலையடித்தன. தேர்முகடுகளும் தலைக்கவசங்களும் மிதந்து சுழித்தன.

அஸ்தினபுரியின் தரப்பைச் சேர்ந்த அனைத்துப் படையினருக்கும் பொதுவான படைக்கூறை வகுத்து அளிக்கப்பட்டிருந்தது. அவன் கிளம்பிச்சென்றபோது ஷத்ரியப்படைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணப் படைக்கூறையுடன் வந்தன. அனைத்து வண்ணங்களிலும் படைகள் பெருகி நகரைச் சூழ்ந்திருந்த குறுங்காட்டை நிரப்பி கங்கையின் எல்லைவரை விரிந்தன. காவல்மேடைமேல் நின்று நோக்கியபோது பச்சையும் சிவப்பும் நீலமும் மஞ்சளும் என நூறுநூறு வண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று ஊடுருவி கண்களை பித்தாக்கின. செந்நிறப் படை நகர்ந்து வந்தபோது எரி பற்றிப்பரவுவதுபோல தோன்றியது. நீலம் பெருவெள்ளமென விழி திகைக்கச் செய்தது. பச்சை காடு தளிர்த்ததுபோல.

படைக்கூறையை முடிவெடுக்க அமர்ந்த அவையில் பிறவிநாள் கணித்து கோள் ஆய்ந்து துரியோதனனுக்கு உகந்த நிறம் நீலம் என்று நிமித்திகர் கூறினர். “கருநீலம் நன்றல்ல, அதை அணிபவர்கள் உள்ளம் குன்றுவர். படைக்கூறை ஒளிவிடும் வண்ணத்தில் இருக்கவேண்டும். ஒருவர் தன் படைத்தோழரை நோக்கும்போது அவர் ஒளிர்ந்துகொண்டிருந்தால் உளம் மலர்ந்து நம்பிக்கை கொள்கிறார்” என்றான் ஜயத்ரதன். “ஒளிவிடும் வண்ணங்களில் ஆடையமைக்கலாகாது. அதில் குருதிபட்டால் மேலெழுந்து தெரியும். போர்நிகழ்கையில் அறியாது விழிதிருப்பும் படைவீரன் தன்னைச் சூழ்ந்துள்ள படையே குருதி பெருக்கிக்கொண்டிருப்பதைக் கண்டால் அஞ்சி செயலற்றுவிடுவான். குருதி தெரியாத ஆழ்செம்மையோ மண்செம்மையோ போருடையாக தெரிவுசெய்யப்படும் மரபு அதனால் உருவானதுதான்” என்றார் சகுனி. “ஆனால் அரசருக்குரிய வண்ணம் நீலம். அரசருக்கு நலம்செய்யும் தெய்வம் எழுந்து களம்நின்று துணையளிக்கவேண்டும்…” என்றார் முதுநிமித்திகர்.

துரியோதனன் மீசையை நீவியபடி கணிகரை நோக்க அவர் விழிதூக்காமல் தாழ்ந்த குரலில் “செந்நீலம்” என்று சொன்னார். நிமித்திகர் “ஆம், அதுவும் உகந்ததே” என்றார். “செந்நீலத்தில் குருதி தெரியாது” என்று கணிகர் தனக்குத்தானேபோல் முனகிக்கொண்டார். “ஆம், செந்நீலம் நன்று. எருக்கமலரின் நிறம் அது. முப்புரம் எரிக்கையில் மூவிழியன் சூடியிருந்தது. பெரும்பித்தின் வண்ணம்” என்றார் சல்யர். கணிகர் “அதர்வத்தின் ஆணைப்படி எருக்கணிந்து செருக்களம் செல்வோன் அழிவின் தெய்வங்களால் துணைக்கப்படுவான்” என்றார். அவையில் அமைதி நிலவியது.

துரியோதனன் “நன்று, செந்நீலம். முடிவு செய்வோம். பாண்டவர் தரப்புக்கு செய்தி சொல்க!” என்றான். “அவர்கள் எந்த வண்ணத்தை முடிவு செய்துள்ளனர்?” என்று சல்யர் கேட்டார். “அவர்கள் எவ்வண்ணத்தையும் இன்னும் முடிவெடுக்கவில்லை. அது அவர்களுக்கு எளிதும் அல்ல. தொல்குடிகள் தங்கள் படைக்கூறைகளை குடிமரபின்படி அணிந்திருப்பார்கள். அவற்றை தெய்வங்கள் முன் வைத்து எடுத்திருப்பார்கள். பெரும்பாலான நிஷாதர்கள் கரியநிறப் படைக்கூறை அணிபவர்கள். பொதுவான படைக்கூறைக்கும் பொதுவான கொடிமொழிக்கும் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள் என்றால்தான் அவர்கள் படை என்றாவார்கள். அதுவரை வெறும் மக்கட்திரள்தான்” என்றான் ஜயத்ரதன். “என் படைகளில் இருந்த பாலைநிலத்துக் கிராதரை பொதுவான படைக்கூறையை அணியச்செய்ய ஓராண்டுகாலம் சொல்லாடி அவர்களின் குடித்தெய்வங்களை நிறைவுசெய்ய வேண்டியிருந்தது.”

சர்மாவதிக்கு அப்பால் பாறையிலிருந்து கூறைக்குரிய வண்ணங்களை வாற்றி எடுக்கும் நிஷாதர்குடிகள் அஸ்தினபுரிக்கு வந்தனர். அவர்களுடன் வந்த வண்டிகளில் பெரிய மரப்பீப்பாய்களில் வண்ணப்பொடி நிறைந்திருந்தது. அவ்வண்டிகள் சென்ற இடங்களிலெல்லாம் மூக்குமடல் எரியும் அனல்மணம் எழுந்தது. அக்குடிகள் அதற்கு பழகியிருந்தன. கங்கைக்கரையில் அவர்களுக்கான குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. அங்கே பெரிய சூளையடுப்புகளை நிறுவி அவற்றின்மேல் தாழிகளை வைத்து நீரில் அப்பொடியை இட்டு கொதிக்கச் செய்தனர். குமட்டவைக்கும் கந்தகவாடையுடன் இளநீலப்புகை எழுந்து காற்றை நிறைத்தது. அந்தக் குழம்புடன் வனநீலி மலர்களைப் போட்டு கொதிக்கச்செய்தனர். நாவல் மரப்பட்டை, வெட்டுபலாப் பட்டை ஆகியவற்றை இட்டு அதை சுண்டக் காய்ச்சி குழம்பாக்கினர். சாயம் முக்குவதற்கென்றே குயவர்கள் செய்தளித்த படகுபோன்ற பெரிய மண்கலங்களை அடுப்பிலேற்றி அதில் அக்குழம்பை ஊற்றி நீருடன் கலந்து கொதிக்கவைத்து மரவுரிகளையும் பருத்தியாடைகளையும் அதிலிட்டு ஒருநாழிகைப்பொழுது வேகவைத்து எடுத்து நிழலில் காயவைத்து எருக்குமலரிதழ்போல ஆக்கினர்.

அஸ்தினபுரியை நெருங்க நெருங்க மரங்களின் பசுமையைவிட எருக்கமலர் வண்ணமே மிகுந்திருப்பதாக தோன்றியது. முதலில் கண்களுக்குள் அவ்வண்ணம் கொப்பளித்து நுழைந்து எண்ணங்களையும் மாற்றியது. பின்னர் விழித்தாலும் மூடினாலும் அவ்வண்ணமே தெரிந்தது. மெல்ல அது பழகி அது பின்புலமாக விரிய பிற வண்ணங்கள் தென்படலாயின. அவ்வண்ணத்தைப் பார்ப்பதையே தவிர்த்துவிட்டது உள்ளம் என எண்ணியபோது வெயிலில் எதிரே வரும் ஒற்றைவீரன் செந்நீலமாக எரிந்தபடி நெருங்கிக் கடந்து மறைவான். “உறைந்த குருதியின் மணம்.” அவன் அச்சொற்களைக் கேட்டு திடுக்கிட்டான். திரும்பி உடன்வந்த படைவீரர்களை பார்த்தான். எவரேனும் சொன்னார்களா, அன்றி செவிமயக்கா என திகைத்தான்.

அஸ்தினபுரியின் எல்லையிலமைந்த முதற்காவல்மாடத்திலிருந்து கோட்டை முகப்பு வரை செல்வதற்குள்ளாகவே ஒரு முழுப் பகலும் ஆயிற்று. ஒவ்வொரு ஆள்கூட்டமுடிச்சிலும் தயங்கி, முட்டி மோதி கூட்டத்தைப் பிளந்து வழி ஏற்படுத்தி, மேலே செல்லவேண்டியிருந்தது. எவருமே அவனை அறிந்தவர்கள்போல தென்படவில்லை. விழிகள் அனைத்துமே மானுடரை அறியாத தெய்வநோக்கு கொண்டிருந்தன. வெறியாட்டெழுந்தவர்கள் போல். அவை ஒழுங்கற்ற திரள்கள் அல்ல. முற்றிலும் சீரான அசைவுகள் ஒன்றுடன் ஒன்று பிழையின்றி ஒத்திசைவுகொண்ட படைப்பிரிவுகள். ஆனால் அச்சிறு நகரத்தின் அளவைவிட பெரிதாக அவை மாறியிருந்தமையால் அவ்வொழுங்கே தடையென்று ஆயிற்று. ஒரு படைப்பிரிவு பலநூறு கால்களும் கைகளும் கொண்ட ஒற்றை விலங்கு. அது ஒரு வழித்தடையில் தனிமனிதர்களாகப் பிரிந்து சிறு இடைவெளிகளினூடாக வழிகண்டு செல்ல இயலவில்லை. தன் அளவுக்கேற்ற இடைவெளி அமையும் வரை நின்ற இடத்திலேயே பெருவிலங்கு என அது தயங்கி நின்றது. மனிதர்கள் மட்டுமன்றி யானைகளும் புரவிகளும்கூட அந்த ஒழுங்கமைவுக்குள் முழுமையாக தங்களை பொருத்திக்கொண்டுவிட்டிருந்தன.

கோட்டை முகப்பிலிருந்த காவலனிடம் அவன் தன் கணையாழியை அளித்து நகர்நுழைவை அரண்மனைக்கு அறிவிக்கும்படி கோரினான். அவன் “இங்கிருந்து இப்போது முரசொலியினூடாக எச்செய்தியையும் அனுப்ப இயலாது, பால்ஹிகரே” என்றான். “ஏன்?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “கேட்டீர்களல்லவா? இடைவெளி இல்லாமல் இந்நகரம் முழுவதும் முரசுகள் முழங்கிக்கொண்டிருக்கின்றன. ஆகவே முரசொலி என்பதே எவருக்கும் செவியில் விழுவதில்லை” என்றான். பூரிசிரவஸ் விந்தையுடன் தலையசைத்தான். “இங்கே பிறர் பேசும் எச்சொல்லும் எவர் செவியையும் அடைவதில்லை. நாவென்று இங்கு திகழ்பவை கொடிகள் மட்டுமே. கொடியசைவுகள் அவற்றுக்குரிய படைப்பிரிவுகளை சென்றடைகின்றன. திரளாகவே மனிதர்கள் செவியும் விழியும் கொண்டிருக்கிறார்கள். தனி விழி, தனிச் செவி என்று எதுவும் இல்லை” என்று காவலர்தலைவன் சொன்னான். “பறவைத்தூது அமைச்சருக்கு செல்லும். ஆனால் நீங்கள் அது செல்லவேண்டிய சிற்றமைச்சரை குறிப்பாக சொல்லவேண்டும். அவரிடம் செல்லும் பறவை இங்கு எஞ்சியிருக்கவும் வேண்டும்.” பூரிசிரவஸ் “வேண்டியதில்லை, நானே செல்கிறேன்” என்று முன்னால் சென்றான்.

அஸ்தினபுரியின் தெருக்களினூடாக அடிமேல் அடியென புரவியை நடக்கவிட்டு சென்றான். அவன் அறிந்த நகரடையாளங்கள் எவையும் அங்கில்லையென்று தோன்றியது. காவல்மாடங்களிலும் மாளிகைமுகப்புகளிலும் கொடிகள் அசைந்தன. கொடிகளைக் கண்டு கொடிகள் அசைய அதன்வழியாக நகரம் தன்னுள் தான் உரையாடிக்கொண்டிருந்தது. நூற்றுவர் தலைவர்கள் மஞ்சள் நிறத்திலும் ஆயிரத்தவர் நீல நிறத்திலும் அக்ஷௌகிணித்தலைவர்கள் கருஞ்செம்மை நிறத்திலும் கொடிகள் கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கருஞ்செம்மைக் கொடி ஒருமுறை அசைந்ததும் நீலநிறக் கொடிகளில் அவ்வசைவு பற்றிக்கொண்டு பரவியது. சற்றுநேரத்திலேயே மஞ்சள்நிறக் கொடிகளின் கொந்தளிப்பாக மாறியது. பெருகிச்செல்லும் புழுதிக்காற்று என அச்செய்தியை கண்ணால் பார்க்க முடிந்தது. மாளிகைகள் அனைத்திலும் வெவ்வேறு அரசர்களின் குலக்குறிகள் பொறிக்கப்பட்ட கொடிகள் பறந்துகொண்டிருந்தன. இருமருங்கும் எப்போதும் திரண்டு ததும்பும் அஸ்தினபுரியின் குடிகள் ஒருவர்கூட தெருக்களிலில்லை. உப்பரிகைகளிலோ இல்லமுகப்புகளிலோ அங்காடிகளிலோகூட எவருமில்லை. விழிசுழற்றித்தொடும் தொலைவனைத்திலுமே படைவீரர்கள்தான் தெரிந்தனர். பல்லாயிரம் படைக்கலங்களுடன் அஸ்தினபுரி ஒரு மாபெரும் முட்காடென மாறிவிட்டிருந்தது.

அரண்மனையை அவன் அடைந்ததும் அவனை வரவேற்ற துணை அமைச்சர் மனோதரர் ஒருகணம் அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவன் தன் கணையாழியை நீட்டியதும் அதை வாங்கி நோக்காமல், விழிசந்திக்காமல் “தாங்கள் தங்கள் படைப்பிரிவுகளுக்கு செல்ல வேண்டுமென்று எண்ணுகின்றேன், வீரரே” என்றார். “மனோதரரே, நான் பூரிசிரவஸ், படைநகர்வின் முதன்மைக் குழுவில் பங்குபெறுபவன். அரசரைப் பார்க்கும்பொருட்டு வந்திருக்கிறேன்” என்றான். அதன்பின்னரே அவர் அவனை அடையாளம் கண்டுகொண்டு “ஆம், மறந்துவிட்டேன். மெய்யாகவே தங்கள் முகம் நினைவிலில்லை. பால்ஹிகரே, இச்சில நாட்கள் ஒவ்வொரு நாழிகையும் ஒரு நாளென நீண்டுவிட்டன. பல ஆண்டுகாலம் வாழ்ந்துவிட்டேன் என உணர்கிறேன்” என்றார்.

தலையை தட்டியபடி “ஒரு நாளைக்கு இரு நாழிகைகூட துயிலில்லை. மெய்யாக இங்கு எவருக்கும் என்ன நிகழ்கிறதென்றே தெரியவில்லை. அனைவருமே தங்களுக்குரிய பித்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு உள்ளத்தையும் பித்தெடுக்க வைத்த பின்னும் இங்கொரு நகரம் திகழ்கிறதென்றால் அது எங்கள் அனைவருக்குள்ளும் குடியிருக்கும் தெய்வங்களால்தான். சூதர்கள் சொல்வது மெய்யாக இருக்கலாம். விண்ணிலிருந்து போர்வெறி கொண்ட கந்தர்வர்களும் யட்சர்களும் கின்னரர்களும் நகரில் இறங்கி தங்களுக்குரியவர்களை தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றபின் “வருக!” என்று உள்ளே அழைத்துச் சென்றார் மனோதரர்.

செல்லும் வழியிலேயே மனோதரர் என்ன நிகழ்கிறதென்று சொன்னார். “பேரரசர் திருதராஷ்டிரரின் தலைமையில் இன்று மாலை அரசப்பேரவை கூடவிருக்கிறது. படைப்பிரிவுகளுக்கான தலைமைப் பொறுப்புகள் அளிக்கப்படவுள்ளன. அங்கே உபப்பிலாவ்யத்தில் நாளை மாலை அரசப்பேரவை கூடுமென்றும் படைப்பிரிவுகளுக்கான பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் செய்தி வந்துள்ளது. மேலும் சில நாட்கள் கழித்து கொற்றவை பூசனைக்குப் பின்னரே அவர்களின் படை குருக்ஷேத்திரத்திற்குள் செல்லும். நாம் இங்கு நம்மை இன்னும் ஓரிரு நாட்கள்கூட தக்கவைக்க முடியாது. ஒவ்வொரு நாளுமென நமது படைகள் வந்து சூழ்ந்துகொண்டிருக்கின்றன. தாங்கள் வரும்போது பார்த்திருப்பீர்கள் அஸ்தினபுரியின் படை கங்கையின் எல்லையில் இருந்தே தொடங்கிவிட்டது.”

“ஆம், இங்கிருந்து எத்திசைக்குச் சென்றாலும் இரண்டு பகல்பொழுதுகள் பயணம் செய்தாலொழிய நமது படையின் மறு எல்லையை காண முடியாது” என்றான் பூரிசிரவஸ். “ஆம், அனைவருக்கும் உணவும் தங்குமிடமும் இங்கு ஒழுங்கு செய்வதற்கு முடியாமலாகிவிட்டது. ஆகவே பல படைப்பிரிவுகளை செல்லும் வழியிலேயே ஆங்காங்கு நிற்கச் சொல்லிவிட்டோம். முடிந்த விரைவில் படைகளை குருக்ஷேத்திரத்திற்கு கொண்டு செல்வதே ஒரே வழி என்று அரசரிடம் சொன்னேன். இங்கு கொற்றவை பூசனை நாளை முதற்பொழுதிலேயே முடிந்துவிடுகிறது. நாளையே இங்கிருந்து நமது படைகள் கிளம்பப்போகின்றன” என்றார். “அதன்பின்னரே நகர்மக்கள் வெளியே வரமுடியும்… அவர்கள் காணும் நகரில் வெறுமைதான் நிறைந்திருக்கும்” என்றார் மனோதரர்.

பூரிசிரவஸ் “முதன்மைப் படைத்தலைவராக யார் பெயர் சுட்டப்பட்டுள்ளது?” என்றான். “அங்கநாட்டரசர் பெயர் தவிர அனைத்துப் பெயர்களும் சுட்டப்பட்டுவிட்டன. அவர் பெயர் சுட்டப்பட்டால்தான் அது சரியான தேர்வாக இருக்கும்” என்று மனோதரர் சொன்னார். “அவர் இப்போது காட்டுக்குள் இருக்கிறார். எந்தத் தொடர்பும் இல்லை. இங்குள்ளோர் அவரைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர் இருந்தால் வெற்றி உறுதி. அவர் வென்றால் புகழ் அவருக்கே. அவ்விரு நிலையில் உழல்கிறார்கள் ஷத்ரியர்.” பூரிசிரவஸ் இயல்பாக திரும்பிப்பார்த்து அதன் பின்னர்தான் பால்ஹிகரை நினைவுகூர்ந்தான். அவன் நகருக்குள் நுழைந்தபின் அவரை இயல்பாக திரும்பிப்பார்த்தன்றி நினைவுக்குள் கொள்ளவேயில்லை.

பதற்றத்துடன் “என்னுடன் பிதாமகர் வந்திருக்கிறார். பிதாமகர் பால்ஹிகர்!” என்று சொன்னான். “உங்கள் குடி மூதாதையா? இப்போர்க்காலத்தில் அவரை எதற்கு அழைத்து வந்தீர்கள்?” என்று மனோதரர் கேட்டார். “எனது குலமூதாதை மட்டும் அல்ல, அஸ்தினபுரியின் உயிர்வாழும் மூதாதை. தேவாபியின் இளையவராகிய பால்ஹிகர்” என்றான். “எவரை சொல்கிறீர்கள்?” என்று மனோதரர் திகைப்புடன் கேட்டார். “நமது அரசர் துரியோதனரின் தந்தையாகிய திருதராஷ்டிரரின் தந்தை விசித்திரவீரியரின் தந்தை சந்தனுவின் மூத்தவராகிய பால்ஹிகர்” என்று அவன் சொன்னான். மனோதரரின் இரு கைகளும் தளர்ந்தவைபோல் விழுந்தன. பின்னர் “தாங்கள் நகையாடவில்லையே?” என்றார்.

திரும்பி வாயிலுக்கு விரைந்தபடி “இல்லை, இது அதற்கான பொழுதா என்ன? மெய்யாகவே அவர் உயிருடன் இருக்கிறார். இன்று குருகுலத்தில் உயிருடன் இருப்பவர்களில் அவரே மூத்தவர். ஒருவேளை பாரதவர்ஷத்தில் உயிருடன் இருப்பவர்களிலும் அவரே மூத்தவராக இருக்கக்கூடும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “எங்கே அவர்?” என்றார் மனோதரர் அவனுடன் மூச்சுவாங்க வந்தபடி. “என்னுடன் வந்தார். தங்களைப் பார்த்ததும் எழுந்த குழப்பத்தில் அவரை மறந்துவிட்டேன். இருங்கள்” என்று சொல்லி பூரிசிரவஸ் வெளியே சென்றான்.

பதற்றமாக மனோதரர் உடன் வந்தபடி “அங்கே பெருங்கூட்டம் நெரிபடுகிறதே. எங்கென்று தேடுவது? மிக முதியவர் என்றால் நடமாட வாய்ப்பில்லை. பல்லக்கில்தானே வந்தார்? அதற்குள்தான் இருப்பார்” என்றார். அரண்மனை முற்றத்தில் நின்றிருந்த இரு போர்யானைகளின் நடுவே கவச உடையணிந்து இரு கைகளாலும் அவற்றின் தந்தங்களை பிடித்தபடி பால்ஹிகர் நின்றுகொண்டிருந்தார். “அவரா?” என்று மனோதரர் கூவினார். பின்னர் “மானுட உடலா அது?” என்று மூச்சொலியுடன் சொன்னார். பால்ஹிகரைச் சூழ்ந்து நின்றிருந்த அஸ்தினபுரியின் வீரர்களும் திகைப்புடன் இருந்தனர்.

“அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். பேருடலர் என்று தொல்கதைகள் உரைக்கின்றன. மெய்யாகவே உயிருடன் இருக்கிறாரா?” என்று மனோதரர் கேட்டார். “உயிருடன் என்றாலும் எழுந்து நிற்க இயலுமா?” என்று அவர் சொன்னபோது பால்ஹிகர் இரு தந்தங்களையும் பற்றி உடலை உந்தி மேலெழுப்பி தந்தங்களில் மிதித்து மத்தகத்தின்மேல் ஏறினார். மனோதரர் “தெய்வங்களே!” என்றார். பால்ஹிகர் அங்கிருந்து அவனை நோக்கிக் கூவி நகைத்தபடி “மைந்தா, இவ்விரு யானைகளில் என்னை கொல்லப்போவது எது என்று அவற்றிடம் கேட்டேன். ஒன்று தலையாட்டுகிறது” என்றார்.

மனோதரர் பூரிசிரவஸை பார்க்க “அவரது உள்ளம் சற்று நிலைகுலைந்துள்ளது, முதுமையினால்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “ஆம், வேறு வழியில்லை. இத்தனை நீண்ட காலத்தை ஒருவர் தன்னை சிதைத்துக் கொள்வதினூடாகவே எதிர்கொள்ள முடியும்” என்றார் மனோதரர். பால்ஹிகர் யானையிலிருந்து சரிந்திறங்கி அருகே வந்து “எனக்கு பசிக்கிறது. இங்கு அடுமனை எங்குள்ளது?” என்றார். மனோதரர் “இங்கே அருகில்தான். நான் உங்களை அழைத்துச்செல்ல ஆணையிடுகிறேன்” என்றபின் பூரிசிரவஸிடம் “ஐயமே இல்லை, இவர் குருகுலத்தவர், ஹஸ்தியின் குருதிதான்” என்றார். பூரிசிரவஸ் புன்னகைத்தான்.

காவலர் வழிகாட்ட செல்கையில் பால்ஹிகர் “நான் சென்று உண்டுவருகிறேன், மைந்தா. இந்த யானைகள் எனக்கு பிடித்திருக்கின்றன. போதுமான அளவு பெரியவை” என்றார். “அவர் கவசங்களைக் கழற்ற ஏற்பாடு செய்க!” என்றார் மனோதரர். “அவர் கழற்றுவதில்லை, அமைச்சரே” என்றான் பூரிசிரவஸ். “உணவுண்ணும்போது…” என்று அவர் சொல்ல “துயில்கையிலும்” என்றான் பூரிசிரவஸ். மனோதரர் “தெய்வங்கள் நகையுணர்வு மிக்கவை. இத்தகைய ஒரு போரின் தருணத்தை கேலிசெய்ய வேண்டுமென்றே முதுமூதாதை ஒருவரை எஞ்சவைத்து அனுப்பியிருக்கின்றன” என்றார்.

tigபூரிசிரவஸ் அஸ்தினபுரியின் அரசப்பேரவைக்கூடத்தை நோக்கி செல்கையில் இடைநாழியின் இருபுறமும் திறந்திருந்த அமைச்சர்களின் அலுவல் அறைகளை மாறி மாறி பார்த்துக்கொண்டே நடந்தான். அவன் எண்ணியது போலவே துணையமைச்சர் ஒருவரின் சிற்றறைக்குள் கனகர் மடியில் எழுத்துப்பலகையை வைத்து சுவடிகளை பரப்பிக்கொண்டு பதற்றமாக அமர்ந்திருந்தார். சற்றே திறந்திருந்த கதவினூடாக அவன் அவருடைய முகத்தோற்றத்தின் ஒரு கீற்றைத்தான் பார்த்தான். மெல்ல கதவைத் தட்டிய பின் “அமைச்சரே” என்றான். “உள்ளே வருக!” என்று அவர் சொன்னார். அவன் உள்ளே சென்றதும் “கதவை மூடுங்கள்” என்று கனகர் பதறினார். அவன் கதவை மூடிவிட்டு அவர் முன் சென்று அமர்ந்தான்.

“இங்கு அமர்ந்திருக்கிறீர்கள்!” என்றான். “நான் இங்கிருப்பேன் என்று உங்களுக்கு தோன்றியிருக்கிறதே” என்று அவர் சொன்னார். “இந்த உச்சகட்டத்தில் தலைமைப் பொறுப்பிலிருக்கும் அனைவருமே செயலற்றுவிடுகிறார்கள். அரசரும் பிதாமகர் பீஷ்மரும் காந்தாரர் சகுனியும்கூட அப்படித்தான் இருப்பார்கள் என்று எண்ணுகிறேன்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “ஆகவே உங்களை எண்ணமுடியாத இடமொன்றில் எதிர்பார்த்தேன்.” கனகர் “மெய்தான். பேரமைச்சர் விதுரர் அனைத்திலிருந்தும் முற்றாக ஒதுங்கிவிட்டார். பெரும்பாலான பொழுதுகளில் தன்னுடைய அறைக்குள்ளேயே அமர்ந்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் நான் காலையில் சென்று முறையாக பணிந்து நிகழ்வன உரைத்து ஆணை பெற்று வருவதுண்டு. ஆனால் ஒரு சொல்லும் அவர் உள்ளத்தில் ஏறவில்லையென்று தெரிகிறது. ஆகவே என்னையறியாமலேயே அவருடைய இடத்திற்கு நான் தள்ளப்பட்டுவிட்டேன்” என்றார்.

பெருமூச்சுடன் “நெடுங்காலமாக அவருடன் இருந்துகொண்டிருக்கிறேன். ஆனால் அவர் நிறைத்திருந்த இடமென்ன என்பது இப்போதுதான் தெரிகிறது. என் உடல் உடைந்து தெறித்து நூறு ஆயிரமாக பரவினாலொழிய அவ்விடத்தை நிரப்ப முடியாது” என்றபின் கையிலிருந்த எழுத்தாணியை சிறு பேழையில் போட்டு அதை மூடிவிட்டு சலிப்புடன் “மெய்யாகவே கடந்த பதினைந்து நாட்களாக இங்கு என்ன நிகழ்கிறது என்றே எனக்கு தெரியவில்லை. நாம் கடிவாளத்தை தெய்வங்களுக்கு கொடுத்துவிட்டோம். இனி அவர்கள் முடிவு செய்யட்டும்” என்றார். பூரிசிரவஸ் “ஆம், நானும் அதைத்தான் எண்ணிக்கொண்டுவந்தேன்” என்றான்.

கனகர் திடீரென்று விழித்துக்கொண்டு “தாங்கள் மட்டும் தனியாக வந்திருக்கிறீர்கள். பிதாமகர் எங்கே?” என்றார். “அவர் நேற்று நள்ளிரவில் படுக்கையிலிருந்து எழுந்து சென்றிருக்கிறார். அவருடன் இருந்த காவலன் அவர் யானைக்கொட்டிலில் இருப்பதாக எனக்கு செய்தி அனுப்பியிருந்தான். அவர் யானைகளை மட்டுமே பொருட்டென கருதுகிறார். அதுவும் நன்றே” என்றான் பூரிசிரவஸ். “அவரை அழைத்து வரவேண்டுமல்லவா? இன்று நம் அரசப்பேரவை முன்வைக்கப்போகும் முதன்மை உருவே அவருடையதுதான்” என்று சொன்ன கனகர் புன்னகைத்து “நன்று, இங்கிருக்கும் சூழலுக்கு முற்றிலும் சித்தம் கலங்கிய ஒருவரே சிறந்த முதல் அடையாளமாக இருக்கமுடியும்” என்றார். பூரிசிரவஸ் புன்னகைத்து “சித்தம் கலங்கினாலும் இங்கிருக்கும் பிற எவரையும்விட அவரால் சிறப்பாக போரிட முடியும், அமைச்சரே” என்றான். “நானும் அதைத்தான் சொன்னேன். சித்தம் கலங்கியவர்கள்தான் இப்போரில் சிறப்பாக செயல்பட முடியும். எப்போரிலும் சற்று சித்தம் கலங்காமல் ஈடுபடமுடியாதென்றே எனக்கு இப்போது தோன்றுகிறது” என்றார்.

பூரிசிரவஸ் சிரித்து “அவர் அவைக்கு வருவார். நான் ஏற்பாடு செய்துள்ளேன். இப்போதே அவரை அங்கு அழைத்துச் சென்றால் எதுவுமே அவருக்கு ஒவ்வாது. அவ்வளவு நேரம் அவர் அவையில் அமரமாட்டார்” என்றான். “அவரை அரசரோ, பேரரசரோ சந்திக்கவில்லை என்பது விந்தைதான்!” என்று கனகர் குரல் மாற, விழிகள் கூர்கொள்ள சொன்னார். “அவர்களுக்கு அவரை சந்திக்கையில் என்ன செய்வதென்று தெரியவில்லை என எண்ணுகிறேன். தொல்நூல்களில் கதையென படித்தறிந்த மூதாதை உடலுடன் உயிருடன் எழுந்தருள்வதற்கு முன்நிகழ்வு இல்லை அல்லவா?” பூரிசிரவஸ் “அவை என்றால் எளிது, அங்கே எல்லாமே வெறும் முறைமைகள். அதை நடிக்க அவர்களுக்கு தெரியும். தனியாக சந்திப்பது இயல்வதல்ல” என்றான். கனகர் “நான் சொன்னேனே, அத்தனைபேரும் வெறியாட்டெழுந்த தெய்வங்கள் போலவோ கனவில் விழித்தெழுந்த மைந்தர்போலவோதான் இருக்கிறார்கள்” என்றார்.

“இது அவருடைய அரண்மனைதானே? அவர் இங்கே இருந்த காலம் முதல் இப்படித்தான் இருக்கிறது. இங்கே ஏன் அவர் தங்கமுடியவில்லை?” என்றார் கனகர். பூரிசிரவஸ் “அதுதான் எனக்கும் விந்தையாக இருந்தது. இந்த அரண்மனையின் ஒரு அறையைக்கூட அவர் நினைவுகூரவில்லை. அரண்மனை முகப்பில் வந்தபோது மேலே உப்பரிகைகளையும் சாளரங்களையும் நோக்கி திகைத்தவர் போலிருந்தார். அவருள் நினைவெழுகிறது என்று எண்ணினேன். ஆனால் சில கணங்களுக்குப் பின் இது எந்த இடம் என்று அவர் கேட்டபோது மெய்யாகவே அதிர்ச்சிதான் ஏற்பட்டது. நடிக்கிறாரா என்று அவர் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தேன். உண்மையிலேயே அவருக்கு இந்த இடம் தெரியவில்லை. இங்குள்ள எதுவுமே அவருக்கு அணுக்கமானதாக இல்லை” என்றான்.

கனகர் “ஒருவகையில் அதுவும் இயல்புதான். இத்தனை பெரிய நினைவுச் சுமையை அவர் ஏற்றிக்கொண்டிருந்தாரென்றால் முதுகெலும்பு இத்தனை நிமிர்ந்து இருந்திருக்காது” என்றபின் “அவரை எப்போது அவைக்கு கொண்டுவரலாம்?” என்றார். “தெளிவாக ஆணைகளை பிறப்பித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். அவை கூடட்டும். அரசர் வந்து அவையமரட்டும். தாங்கள் மேடையேறி பிதாமகரைப் பற்றி சொல்லி இப்போரை வழிநடத்திக் கொடுக்கும்பொருட்டு மலைத்தெய்வங்களின் அருளுடன் அவர் இறங்கி வந்திருப்பதாக கூறும்பொழுது எனது அணுக்கர்கள் அவரை அவைக்கு கொண்டுவருவார்கள். ஆனால் ஒன்று நினைவுகூருங்கள். அவையில் அவர் நெடுநேரம் இருக்க முடியாது. இருப்பது நன்றும் அல்ல. பீடத்தில் அமர்ந்து அனைவருக்கும் வாழ்த்துரைத்த உடனேயே அவரை மீண்டும் கொண்டு சென்றுவிடவேண்டும். யானைக்கொட்டிலில் அவர் இருப்பது நன்று. அவருடைய உள்ளத்தை அது முழுமையாக கவர்ந்து கட்டிப்போட்டிருக்கிறது. வேறெங்குமிருந்தால் அரைநாழிகைக்குமேல் அவரால் உளம் நிலைக்க இயலவில்லை. ஆகவே எப்படியாவது வழி நடத்தி அவரை யானைக்கொட்டிலில் கொண்டுவிடும்படி எனது அணுக்கர்களுக்கு நான்தான் ஆணையிட்டிருந்தேன்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

கனகர் பெருமூச்சுவிட்டு “தாங்கள் அவைக்கு செல்லுங்கள். நான் இந்த ஆணைகளை பிறப்பித்துவிட்டு வர இன்னும் பொழுதாகும்” என்றார். “என்ன ஆணைகள்?” என்றான். “படைப்பிரிவுகளை எவர் தலைமை கொள்வது என்ற ஆணைகள்தான். ஒரு மொத்த ஆணையிலிருந்து தனித்தனி ஆணைகளாக பிரித்து எழுதிக்கொண்டிருக்கிறேன்” என்றார். “நாளை படைநகர்வு என்றார்கள். இன்றுதான் படைபிரிவுகளுக்கு தலைவர்கள் அமைக்கப்படுகிறார்களா?” என்றான் பூரிசிரவஸ். “பால்ஹிகரே, ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் முன்னரே தலைவர்கள் இருக்கிறார்கள். சொல்லப்போனால் அப்படைப்பிரிவுகளே அத்தலைவர்களின் பொறுப்பில்தான் உருவாகி வந்திருக்கின்றன. பிறிதொருவரை எப்படைப்பிரிவுக்கும் அமைக்க முடியாது. ஆனால் இது ஓர் ஆவணம். இதை கையில் வைத்திருக்கையில் அப்படைத்தலைவன் தான் அரசஆணை பெற்றுவிட்டதாக எண்ணுகிறான். பிறருக்கும் அவன் புதிதாக மீண்டும் பொறுப்பேற்றுவிட்டது போன்ற மாயத் தோற்றம் உருவாகிறது. இவ்வாறு பலநூறு பாவனைகளினூடாகத்தான் மேலிருந்து கீழ் வரைக்கும் ஆட்சிமை சென்று சேர்கிறது” என்றார்.

பூரிசிரவஸ் தன் தொடைகளைத் தட்டியபடி சிரித்துக்கொண்டு எழுந்து “நான் அவைக்கு செல்கிறேன். உண்மையில் அஸ்தினபுரிக்கு வருவதுவரை பதற்றமும் நிலைகொள்ளாமையும் இருந்தது. இங்கிருக்கும் முழுமையான பித்தைப் பார்த்தபின் சிரிக்கத் தொடங்கிவிட்டேன். நேற்றிரவு துயில்கையில் என் முகத்தில் சிரிப்பிருப்பதை நானே உணர்ந்து அது ஏன் என்று எண்ணிப்பார்த்தேன். பித்தர் நடுவே பித்தில்லாதிருப்பது ஒரு பெரும்பேறு. முடிவில்லாது சிரிப்பதற்கு ஏதோ கிடைக்கிறது” என்றான். “முடிவில்லாது அழுவதற்கும் கிடைத்துக்கொண்டிருக்கும், ஒருநாள் இங்கு என் பீடத்தில் அமர்ந்துபாருங்கள்” என்றார் கனகர். பூரிசிரவஸ் புன்னகைத்து கதவைத் திறந்து வெளியே சென்றான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 25

tigஅஸ்தினபுரியை அணுகுவதற்குள்ளாகவே பால்ஹிகபுரியின் படைப்பிரிவுகள் சலன் தலைமையில் அஸ்தினபுரியை சென்றடைந்துவிட்டிருந்தன. சோமதத்தரும் உடன்சென்றார். பால்ஹிகபுரியின் பொறுப்பை பூரியிடம் அளித்துவிட்டு பூரிசிரவஸும் கிளம்பினான். அஸ்தினபுரியிலிருந்து தனக்கு வந்த ஆணையின்படி அவன் வாரணவதத்திற்குச் சென்று மேற்பார்வையிட்டு ஆணைகளை பிறப்பித்துவிட்டு அங்கிருந்து அஸ்தினபுரியின் எல்லைக்காவல் நிலைகள் ஒவ்வொன்றையும் சீரமைத்தபடி தலைநகர் நோக்கி சென்றான். அவனுடன் தனித்தேரில் பால்ஹிகரும் வந்தார்.

பால்ஹிகரை சலனுடன் அனுப்புவதாகத்தான் அவன் முதலில் திட்டமிட்டிருந்தான். ஆனால் அவர் சலனை அடையாளம் காணவே இல்லை. பால்ஹிகபுரியில் பூரிசிரவஸைத் தவிர பிற மனிதர்கள் எவருமே அவர் விழிகளுக்கு படவில்லை. அரண்மனைக்குச் சென்ற மறுநாளே கிளம்பி அவர் முன்பு வந்தபோது தங்கிய சிபிரரின் பழைய இல்லத்தின் முகப்பில் சென்று நின்றிருந்தார். அரண்மனையில் அவரை காணவில்லையென்ற செய்தி வந்ததும் பூரிசிரவஸ் திகைத்தான். ஒற்றர்களை தூமவதி முதல் க்ஷீரவதி வரை செல்ல அனுப்பிவிட்டு நகரை சுற்றிவந்தபோதுதான் அவர் அங்கிருக்கக்கூடும் என்ற எண்ணம் வந்தது.

புரவியைத் தட்டி விரைந்து சென்றபோது அவ்வில்லத்தின் முன் இரு கைகளையும் கன்னத்தில் ஊன்றி திகைத்து நோக்கி நின்றிருந்த பால்ஹிகரை பார்த்தான். அங்கிருந்த சிறுவர்களும் முதுபெண்டிரும் முற்றத்தில் இறங்கி நின்று அவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் அவர்களை விந்தையான விலங்குகளை பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு இருபுறமும் பால்ஹிகபுரியின் வீரர்கள் படைக்கலங்களுடன் நின்றனர். பூரிசிரவஸ் புரவியை விரைவழித்து நிறுத்தி விரைந்து அவரை அணுகி “பிதாமகரே, இங்கிருக்கிறீர்களா?” என்றான். அவர் திரும்பி அவனைப் பார்த்து “இது எந்த ஊர்?” என்றார்.

“இது பால்ஹிகபுரி, பிதாமகரே. நான் உங்கள் சிறுமைந்தன் பூரிசிரவஸ்” என்று அவன் சொன்னான். அவருடைய கண்கள் கலங்கியிருந்தன. “நான் கங்கைக்கு செல்ல வேண்டும். நீராட வந்தேன்” என்றார். “பிதாமகரே, இங்கு கங்கை இல்லை” என்றான். “இது அஸ்தினபுரி அல்லவா?” என்று அவர் கேட்டார். “அஸ்தினபுரியின் அருகிலும் கங்கையில்லை” என்று அவன் சொன்னான். அவர் தலையை அசைத்துக்கொண்டே இருந்தார். “பார்த்திபன்… பார்த்திபனின் இல்லம்… ஆனால்…” பின்னர் அங்கே நின்றிருந்த முதியவரை கைசுட்டி “இவன் பார்த்திபன்” என்றார். அவர் “இளவரசே, என் பெயர் சிபிரன்…” என்றார். தலையை தட்டியபடி “என் சித்தம் குழம்புகிறது. பார்த்திபர் என் முதுதாதையின் பெயர். அவர் இங்கிருந்து மறைந்து நூறாண்டுகளுக்கும் மேலாகின்றன” என்றார். அவருக்குப் பின்னால் வந்து நின்ற அவருடைய துணைவி “இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் இன்னொரு பால்ஹிக மூதாதை இதேபோல வந்து எங்கள் வீட்டுக்கு முன் நின்றார்” என்றார்.

பால்ஹிகர் “கல்லாலான அறை… அறைகளுக்குள்…” என்று ஏதோ சொல்லி கையை மேலே தூக்கினார். பின்னர் “எனது புரவி எங்கே?” என்று அவனிடம் கேட்டார். “இங்கிருக்கிறது, வருக!” என்று அவன் அவர் கைபற்றி அழைத்துச் சென்றான். அவர்களுக்குப் பின்னால் “அவர் மானுடர்தானா?” என்று எவரோ கேட்டனர். “அரக்கர் குலத்தவரா?” என ஒரு குரல். “வாயை மூடு! தொல்பால்ஹிகர்கள் பேருருவர்கள்” என்றது பிறிதொரு குரல்.

புரவியில் ஏறிக்கொண்டு அரண்மனைக்கு திரும்புகையில் “பிதாமகரே, நீங்கள் என் மூத்தவருடன் அஸ்தினபுரிக்கு செல்லலாம்” என்றான். “அவருடன் படைகள் செல்கின்றன. நீங்கள் பாதுகாப்பாக செல்லமுடியும்.” அவர் “எவருடன்?” என்று கேட்டார். “சலன், எனது மூத்தவர். அவர்தான் பால்ஹிகபுரியின் பட்டத்து இளவரசர்” என்றான். “சலன் யார்?” என்று அவர் மீண்டும் கேட்டார். பூரிசிரவஸ் தலையை அசைத்து பெருமூச்சுவிட்டான்.

சலன் திட்டவட்டமாகவே சொன்னான் “இவருக்கு நமது படைவீரர்கள் தளபதிகள் எவரையுமே அடையாளம் தெரியவில்லை. இவர் சொல்லும் அத்தனை பெயர்களும் இங்கே நூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களுடையது. எங்கள் எவருக்கும் இவரிடம் பேசுவதற்கு சொற்களில்லை. இவரை அழைத்துச் செல்வது எளிதல்ல. அனைத்துக்கும் மேலாக வழியில் காணாமல் போய்விட்டாரென்றால் திரும்ப கண்டுபிடிப்பதும் இயல்வதல்ல. உன்னுடன் வரட்டும். உன்னுடன் பேசிக்கொண்டிருப்பதுவரை உன்னைவிட்டு செல்லமாட்டார். பித்தின் போக்கில் வழி தவறினாலும்கூட உன் பெயரை சொல்ல அவருக்கு தெரிந்திருக்கிறது.”

சலன் படைகளுடன் கிளம்பிய மறுநாளே பூரிசிரவஸ் பால்ஹிகருடன் சிறிய படையொன்றை அழைத்துக்கொண்டு கிளம்பினான். அவர் சிந்தாவதியின் கரை வழியாக சுற்றிலும் நோக்கியபடி வந்தார். பின்னர் முகம் மலர “அஸ்வயோனி! அஸ்வபக்ஷம் வழியாக செல்லும்போது…” என்றார். அஸ்வயோனி என்றழைக்கப்பட்ட சிறிய பாறையிடுக்கு பெரிய சாலைமுகமாக ஆகியிருந்தது. அஸ்வபக்ஷம் என்று சொல்லப்பட்ட பாறையடுக்குகளை தீயிட்டு வெடிக்கச்செய்து நெம்புகோல்களால் உடைத்துத் தள்ளி பாதையை அமைத்திருந்தனர். அச்சொற்களையே அனைவரும் மறந்துவிட்டிருந்தனர்.

“ஆம் பிதாமகரே, நாம் அங்குதான் செல்கிறோம்” என்றான் பூரிசிரவஸ். “அங்கிருந்து அப்பால் மலைச்சரிவு. வாரணவதம். அங்கு ஒருபெண். அவள் பெயர்…” என்றபின் “அவள் பெயர் என்ன?” என்றார். பூரிசிரவஸ் “நினைவில்லை” என்றான். “அவள் பெயர்…” என பால்ஹிகர் தன் உள்ளத்துக்குள் தேடினார். நூற்றியிருபதாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண். அவளும் உயிர்வாழ்கிறாள் என்றால் எப்படி இருக்கும்? காலம் என்ற ஒன்று பொருளிழந்து ஈசலிறகுபோல் உதிர்ந்துகிடப்பதாக அவன் எண்ணிக்கொண்டான்.

பால்ஹிகர் தன் இரும்புக்கவசத்தின் தலையணியை மட்டும் அணிந்திருந்தார். அவர் பால்ஹிகபுரிக்கு வந்ததுமே அவன் இரும்புக்கொல்லர்களை வரவழைத்து அவருக்கென தனியான கவசங்களை வார்த்தெடுக்கச் செய்தான். கால்குறடுகளும் முழங்கால்காப்புகளும் தோளிலைகளும் மணிக்கட்டு வளைகளும் மானுடருக்குரியவையா என்ற வியப்பை எழுப்பும் அளவுக்கு பெரிதாக இருந்தன. அவற்றை கொல்லன் தன் வண்டியில் கொண்டுவந்து முற்றத்தில் இறக்கினான். பெரிய தோல் பையிலிருந்து அவற்றை அவன் எடுத்து வைத்தபோது பூரிசிரவஸே “நீர் சரியாக அளவுகள் எடுத்துக் கொண்டீரல்லவா?” என்றான்.

கொல்லன் புன்னகைத்து “அஞ்ச வேண்டியதில்லை, இளவரசே. அவருக்குப் பொருந்துவதாகவே அமைத்தேன்” என்றான். “ஆனால் என் உதவியாளர்கள் நான் பிழையாக அளவெடுத்துவிட்டேன் என்றும் இவை எந்த மானுடருக்கும் உரிய அளவுகள் அல்ல என்றும் சொன்னார்கள். இவர் எளிய மானுடரல்ல என்று சொன்னேன்” என்றான். இரும்புச் சங்கிலிகளால் ஆன மார்புக்கவசத்தை கொல்லனால் இரு கைகளாலும் தூக்க முடியவில்லை. பூரிசிரவஸ் ஒருபக்கம் தூக்க இருவரும் தூக்கி எடுத்தபோது யானை மத்தகத்திற்கு போடவேண்டிய கவசம்போல தோன்ற பூரிசிரவஸ் புன்னகைத்தான்.

அவன் எண்ணத்தை உய்த்துணர்ந்த கொல்லன் “ஆம், யானைகளுக்குரிய கவசங்கள் போலத்தான். ஒன்று கருதுக, இளவரசே! இவ்வீரர் களத்தில் மானுடரால் கொல்லப்பட மாட்டார். இவரை கொல்பவன் உண்டென்றால் இவருடைய குருதியில் இவருக்கு நிகரான உடல்கொண்டவனாகவே இருப்பான்” என்றான். “இறப்பார் என்று எவர் சொன்னது?” என்று பூரிசிரவஸ் மெல்லிய புன்னகையுடன் கேட்டான். “இப்போரிலும் இறக்கவில்லையென்றால் பிரம்மனுக்கு பித்து எழுந்துவிட்டது என்றுதான் பொருள். அவருக்கு என்ன அகவை? நூற்றி இருபது கடந்துவிட்டதா?”

“நூற்று எழுபது அகவை” என்று பூரிசிரவஸ் சொன்னான். “நூற்றெழுபது அகவை வரை மானுடர் உயிர்வாழ்வதா? நல்லவேளை பிரம்மன் பல்லாயிரத்தில், லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த நீள்வாழ்வை அளித்திருக்கிறான். அனைவருக்கும் அளித்திருந்தால் இப்புவியே முதியவர்களால் நிறைந்திருக்கும்” என்றார் அருகே நின்றிருந்த அமைச்சரான சுதாமர். “பிதாமகரை அழைத்து வருக!” என்று பூரிசிரவஸ் ஏவலனிடம் சொன்னான். கொல்லன் “மெய்யுரைப்பதென்றால் கவசங்களை வடிக்கையில் உருவாகும் நிமித்தங்களை கணிக்கும் ஒரு முறைமை உண்டு, இளவரசே. இக்கவசங்கள் வடிக்கப்படும்போது எழுந்த எதிர்நிமித்தங்கள் இவர் களம்படுவார் என்பதையே காட்டுகின்றன” என்றான்.

பால்ஹிகர் ஏவலருடன் வந்தார். “பிதாமகரே, உங்கள் கவசங்கள்” என்று பூரிசிரவஸ் காட்டினான். பால்ஹிகரால் அவை என்ன என்று புரிந்துகொள்ள முடியவில்லை. “என்ன அது?” என்றபடி அருகே வந்தார். மணிக்கட்டு வளையை எடுத்து “இது எதற்காக?” என்றார். பூரிசிரவஸ் அதை வாங்கி அவர் கைகளில் பொருத்தினான். “தங்களுடன் போர் புரிபவர்களின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக, மூத்தவரே” என்றான். “அவர்களும் இதேபோல் அணிந்திருப்பார்களா?” என்றார். “ஆம்” என்றான். “அவ்வாறெனில் நாமும் எவரையும் கொல்ல முடியாதே?” என்று அவர் கவலையுடன் கேட்டார்.

“கொல்லமுடியும், கவசங்களை உடைக்க முடியும்” என்றான். “உடைக்க முடியும் என்றால் நாம் ஏன் இதை அணியவேண்டும்?” என்றார். பூரிசிரவஸ் நகைத்து “பிதாமகரே, தங்கள் கையின் வாளும் கதையும் நூறுமடங்கு விசைகொண்டவை. அவை பிறர் கவசங்களை உடைக்கும். தங்கள் கவசங்களை உடைக்கும் அளவுக்கு பெரிய வாளையோ வேலையோ ஏந்தும் வீரர்கள் எவருமில்லை” என்றான். “இருக்கிறான். அவன் பெயர் பீமன்” என்றார் பால்ஹிகர். பூரிசிரவஸ் திகைத்தான். “எவர் சொன்னது?” என்றான். “உன் மைந்தன் காகளன். அவனிடம் நான் இன்று விளையாடும்போது அவன் பந்தை எடுத்து வீசினேன். என்னை பீமன் கொல்வான் என்று அவன் சொன்னான்” என்றார் பால்ஹிகர்.

பூரிசிரவஸ் பேச்சை விலக்கி கொண்டுசெல்லும் பொருட்டு “இவற்றை பாருங்கள்… உங்கள் உடலுக்குரியவை” என்றான். பால்ஹிகர் குழந்தைகளுக்குரிய ஆர்வத்துடன் கவசங்கள் ஒவ்வொன்றையாக எடுத்து பார்த்தார். அவற்றை தன் உடலில் வெவ்வேறு இடங்களில் பொருத்தி மெல்ல அவற்றின் உருவங்களை தன் உடலில் கண்டுகொண்டார். “என் உடல்போலவே இருக்கின்றன. நான் இரும்பாக மாறியதுபோல” என்றார். நகைத்தபடி எழுந்து “இது என் தோள்களுக்குரியது. என் தோள்களில் இது பொருந்துகிறது. ஆம், என் தோள்களுக்குரியது!” என்று கூவினார். “ஆம், பிதாமகரே. உங்கள் தோள்களுக்குரியவை அவை. தோள் அளவுக்கே வடிக்கப்பட்டவை” என்றான். “இதில் நான் கால் நுழைத்துக்கொள்ள முடியும்” என்று அவர் கால்கவசங்களை காட்டி சொன்னார். “ஆம், தங்கள் கால்களுக்குரியவை” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

அவர் அவற்றை எடுத்து தன் கால்களில் அணிந்துகொண்டு மரத்தரையில் ஓசையுடன் நடந்தார். அந்த ஓசை உவகையளிக்க காலை ஓங்கி ஓங்கி தட்டினார். “இவற்றால் நான் பாம்புகளைக்கூட மிதித்துக் கொல்லமுடியும்” என்றார். “ஆம், பிதாமகரே. தாங்கள் முள்ளிலும் அனலிலும்கூட இவ்விரும்புக் குறடுகளுடன் நடக்க முடியும்” என்று அவன் சொன்னான். அவர் அவற்றை குனிந்து நோக்கி “ஆனால் நான் இவற்றுக்குள் இல்லாதபோது இவை தாங்களே நடந்துசென்றுவிடுமோ?” என்றார். பூரிசிரவஸ் புன்னகைத்தான்.

அவர் நெஞ்சுக்கவசத்தை எடுத்து குலுக்கிப் பார்த்தார். சிறிய குழந்தை கிலுகிலுப்பையை ஆட்டுவதுபோல் இருந்தது. பெருமையும் மகிழ்ச்சியுமாக பூரிசிரவஸை பார்த்தார். “இதை சலங்கையாக யானைக்கு கட்டலாம்” என்றார். பூரிசிரவஸ் “ஆம்” என்றான். “ஆனால் இங்கே யானை இல்லையே?” என்றார் பால்ஹிகர். “அஸ்தினபுரியில் ஏராளமான யானைகள் உள்ளன” என்றான் பூரிசிரவஸ். “ஆம், அங்கே யானைகள் உள்ளன” என அவர் தலையசைத்தார். “தாங்கள் இதை தங்கள் மார்பில் அணிந்துகொள்ளலாம். வேல்கள் மார்பில் பதியாமல் இது காக்கும்” என்றான்.

பால்ஹிகர் ஒவ்வொரு சங்கிலியாக எடுத்து சற்று முறுக்கி மறுபடியும் கீழே விட்டார். “மார்பில் பொருத்திக்கொள்ளுங்கள், பிதாமகரே” என்றான். அவர் அதை தன் மார்பில் வைத்து “இதை வைத்தால் நான் யானை போலிருப்பேன். என் நெஞ்சு யானையின் முகபடாம் அணிந்ததுபோல் தென்படும்” என்றார். “ஆம், பிதாமகரே” என்றான். “ஆனால் நான் அம்பால் சாகமாட்டேன். கதையால்தான் சாவேன்” என்றார். “இளையவன் சொன்னான். நான் பீமனின் கதையால் சாவேன் என்று” என்றபின் இன்னொரு கவசத்தை எடுத்தார்.

திடீரென்று ஐயம்கொண்டு “இவை எனக்குத்தான் அல்லவா? பிற எவரும் இதை பகிர்ந்துகொள்ள மாட்டார்களல்லவா?” என்றார். பூரிசிரவஸ் “உங்களுக்கேதான். நீங்களே வைத்துக்கொள்ளலாம். நீங்கள் இவற்றை அணிந்துதான் போருக்கு செல்லவிருக்கிறீர்கள்” என்றான். “ஆம், நான் இவற்றை அணிந்துகொண்டு போரில் இறந்து விழுவேன்” என்று அவர் சொன்னார். பூரிசிரவஸ் வாய்விட்டு நகைத்துவிட்டான்.

அவர் அக்கவசங்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார். பின்னர் அவற்றை முறையாக அணிந்துகொண்டு அவன் அறைக்கு வந்து கதவை தட்டினார். சுவடிகளை பார்த்துக்கொண்டிருந்த அவன் எழுந்து கதவை திறந்தபோது முற்றிலும் கவச உடையணிந்து பளபளக்கும் இரும்புப் பாவையென பேருருக்கொண்டு நின்றிருந்த அவரைக் கண்டு திடுக்கிட்டான். அவர் “நாம் எப்போது போருக்கு கிளம்புகிறோம்?” என்றார். “பிதாமகரே, இவற்றை நாம் போர்க்களத்தில்தான் அணிந்துகொள்ள வேண்டும்” என்றான். “ஏன்? இப்போது அணிந்தால் என்ன?” என்று அவர் கேட்டார்.

“இப்போது அணிந்தால் இவற்றின் எடை நம்மை வருத்தும். நம்மால் அமரவோ படுக்கவோ இயலாது” என்றான். “அத்தனை பெரிய எடையெல்லாம் ஏதுமில்லை” என்று அவர் சொன்னார். “நான் இவற்றை நேற்றுமுதல் அணிந்திருக்கிறேன். இரவில் இவற்றை அணிந்தபடியேதான் துயின்றேன். நான் இவற்றை அணியாமல் இருந்தால் வேறு எவரேனும் எடுத்து அணிந்துவிடுவார்கள்” என்றார். “இல்லை பிதாமகரே, வேறு எவரும் இவற்றை அணியப்போவதில்லை. இவை தங்களுக்குரியவை” என்று அவன் சொன்னான்.

பால்ஹிகர் அவனை ஐயத்துடன் பார்த்து “உனக்கு வேறு கவசங்கள் உள்ளனவா?” என்றார். “ஆம், இருக்கிறது பிதாமகரே. மேலும் தங்கள் கவசங்களை வேறு எவருமே அணிய முடியாது” என்றான். அவர் அவனை சில கணங்கள் கூர்ந்து நோக்கியபின் “நான் கழற்றப்போவதில்லை துயிலும்போதும் கழற்றப்போவதில்லை” என்றபின் திரும்பிச் சென்றார். அவன் அவருக்குப் பின்னால் ஓரடி எடுத்து வைத்துவிட்டு புன்னகையுடன் நின்றுவிட்டான்.

ஒருவகையில் அது நன்றுதான் என்று பின்னர் தோன்றியது. அவரால் அக்கவச உடையுடன் நெடுந்தொலைவு செல்ல இயலாது. எங்கும் விழிகள் திடுக்கிட்டு திரும்பி நோக்கும். மேலும் இரண்டு நாட்கள் ஆயிற்று அவர்கள் கிளம்புவதற்கு. அதுவரை அவர் அந்தக் கவச உடைக்குள்ளாகவே இருந்தார். சலனுடன் படைகள் கிளம்பிச் சென்ற பின்னர் பூரிசிரவஸ் தானும் கிளம்ப முடிவெடுத்தான். அவனுடைய சிறிய படை வாள்களும் வேல்களுமாக ஒருங்கி அரண்மனை முற்றத்தில் நின்றிருந்தது.

அவன் அவர் அறைக்குச் சென்று “பிதாமகரே, நாம் கிளம்புவோம்” என்றான். அவர் தன் அறைக்குள் ஈட்டி முனையொன்றை தனியாக கழற்றி எடுத்து அதைக் கொண்டு தனது கால் குறடை சுரண்டிக்கொண்டிருந்தார். அவனை நிமிர்ந்து பார்த்து “எங்கே?” என்றார். “நாம் போருக்கு கிளம்புகிறோம்” என்றான். உடனே அவனுக்கு அச்சம் எழுந்தது. முதியவர் முற்றத்தில் இறங்கியதுமே அங்கு நின்றிருக்கும் காவல் வீரர்களை தாக்கத் தொடங்கிவிடக்கூடும் என்று அவன் எண்ணினான். “போர் இங்கல்ல பிதாமகரே, போர் நிகழ்வது நெடுந்தொலைவில். அஸ்தினபுரியில்” என்றான். “ஆம், அஸ்தினபுரியில்” என்றார் பால்ஹிகர். அஸ்தினபுரி என மெல்ல நாவுக்குள் சொல்லிக்கொண்டார்.

“போர் அறைகூவல் எழுவதுவரை தாங்கள் போர் செய்ய வேண்டியதில்லை” என்றான் பூரிசிரவஸ். “ஆம், போர் அறைகூவல் கேட்க வேண்டும். நான் அதன்பிறகு போர் செய்வேன். ஆனால் நான் யாரை கொல்லவேண்டும்?” என்று அவர் கேட்டார். “அங்கு சென்ற பின்னர் தாங்கள் கொல்லவேண்டியவர்களை சுட்டிக்காட்டுவோம். அவர்களை மட்டும் தாங்கள் கொன்றால் போதும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “ஆம்” என்றபின் அவர் கண்களை மூடி புன்னகைத்து “போர்க்களத்தில் என்னை ஒரு யானை கொல்லும்” என்றார். “யார் சொன்னது?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “நான் கனவுகண்டேன்” என்றார். “நான் நிமித்திகனிடம் அது உண்மையா என்று கேட்டேன். அவன் தெரியாது என்றான். ஆகவே நான் அவனைத் தூக்கி உப்பரிகையிலிருந்து கீழே போட்டேன்.”

பூரிசிரவஸ் பால்ஹிகருடன் முற்றத்திற்கு வந்தபோது அங்கு கூடி நின்றிருந்த வீரர்கள் அனைவரும் அவருடைய பெருந்தோற்றத்தைக் கண்டு திகைத்து மறுகணம் அவர்களை அறியாமலேயே “வெற்றிவேல்! வீரவேல்!” என்று கூவினார்கள். பால்ஹிகர் படைக்கலங்களை எடுத்துவிடக்கூடும் என்று எண்ணி அவன் திரும்பிப் பார்த்தான். அவர் இரு கைகளையும் விரித்து “வெற்றிவேல்! வீரவேல்!” என்று சொன்னபின் பூரிசிரவஸை நோக்கி பெருமையுடன் புன்னகைத்தார். அவர் நிமிர்ந்த தலையுடன் நடந்தபோது பூரிசிரவஸும் மெய்ப்பு கொண்டான்.

பால்ஹிகபுரியிலிருந்து கிளம்பும்போது பூரிசிரவஸ் பெரும் அச்சமும் தயக்கமும் கொண்டிருந்தான். செல்லும் வழியெங்கும் முதியவர் செய்யக்கூடிய பிழைகள் என்னென்ன என்று எண்ணி அவன் கணக்கிட்டுக்கொண்டே வந்தான். காணாமலாகிவிடக்கூடும், பிழையாக எவரையேனும் கொன்றுவிடக்கூடும், வழியில் விலங்குகளைக் கண்டு வேட்டையாடும் பொருட்டு பின்னால் சென்றுவிடக்கூடும். எப்பொழுதும் அவர் அருகே ஐந்து வீரர்கள் இருக்கவேண்டுமென்று அவன் ஆணையிட்டிருந்தான். அவர்கள் அச்சமும் ஆர்வமுமாக எப்போதும் அவருடன் இருந்தனர். அவர் அவர்கள் தன்னைச் சூழ்ந்து தொடர்வதை உணரவேயில்லை.

அவர் அவனுடன் மலையிறங்கி பால்ஹிகபுரிக்கு வந்தபின் அறிந்த ஒன்று, அவர் முற்றிலும் துயில்வதே இல்லை என்பது. பகலில் அவர் நிலைகொள்ளாமல் அரண்மனையிலும் சுற்றியிருந்த சிறு காட்டிலும் அலைந்துகொண்டிருந்தார். இரவில் அவரை பேச்சுக்கொடுத்து அழைத்துச் சென்று அறைக்குள் படுக்க வைத்தார்கள். சற்று நேரம் மஞ்சத்தில் படுத்து தலையை அசைத்தபடி தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தார். பின்னர் திடுக்கிட்டவர்போல் எழுந்து அமர்ந்தார். தன் அறையையும் அறைக்குள் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் கூர்ந்து ஆராய்ந்தார். எழுந்து எச்சரிக்கையுடன் வெளியே வந்து இடைநாழியை பார்த்தார். மிக மெல்ல இடைநாழியை அடையாளம் கண்டுகொண்டதும் அதனூடாக நடந்து மீண்டும் காட்டுக்குள் சென்றார். அவரை கண்காணிக்கும் வீரர்கள் ஓசையில்லாமல் அவரைத் தொடர்ந்து சென்றனர்.

இரவுகளில் காடுகளில் என்ன செய்கிறார் என்று உடன் சென்ற வீரர்களிடம் அவன் கேட்டான். “வேட்டையாடுகிறார். உயிர்களைக் கிழித்து அனல் மூட்டி சுட்டு முழுமையாகவே உண்கிறார். ஒரு முழு மானை எச்சமின்றி உண்டு திரும்பி வருகிறார்” என்று வீரன் சொன்னான். இன்னொருவன் “இளவரசே, அவர் மானுடர் அல்ல. மலையிலிருந்து தாங்கள் விண்வாழ் கந்தர்வர் எவரையோ அழைத்து வந்திருக்கிறீர்கள் என்று இங்கே குடியினர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். “அவரால் அத்திமரத்தை வெறும் கைகளால் உலுக்கி காய்களை உதிர்க்கமுடிகிறது” என்றான் இன்னொருவன்.

ஆனால் பால்ஹிகர் பால்ஹிகபுரியின் எல்லையைக் கடந்ததுமே ஆழ்ந்த அமைதி கொண்டார். பால்ஹிகபுரியின் எல்லையில் அமைந்த சிற்றாலயத்தில் அவருக்கே கட்டப்பட்ட ஆலயத்தின் கருவறைக்குள் அமர்ந்திருந்த சிலையைப் பார்த்து கைசுட்டி “இதுதான் அந்தச் சிலை” என்றார். அங்கிருந்த பூசகர் உள்ளிருந்து அனலும் புனலும் காட்டி பூசை முடித்து சுடர் கொண்டு அவருக்கு காட்டினார். அவர் அதை தொட்டு வணங்கவில்லை. “எவர்?” என்று பூரிசிரவஸ் குழப்பத்துடன் கேட்டான். “பால்ஹிகன்!” என்று அவர் சொன்னார். பூரிசிரவஸ் “தங்களிடம் எவர் சொன்னது?” என்றான். “நான் சிறுவர்களுடன் சேர்ந்து இங்கு வந்தேன். உள்ளே இருப்பது யார் என்று கேட்டேன். பால்ஹிகர் என்றார்கள்” என்று பால்ஹிகர் சொன்னார்.

பால்ஹிகபுரியின் குடிகள் இறுதி வரை அவர்களின் தெய்வம் நேரில் எழுந்ததை உணர்ந்துகொள்ளவே இல்லை. அவர்கள் பால்ஹிகர் எனும் மூதாதை தெய்வத்தின்மேல் ஏற்றிவைத்த கதைகள் எதுவும் அவர்மேல் படியவில்லை. அத்தெய்வம் ஆழ்ந்த அமைதியும் அருள்புரியும் விழிகளும் கொண்டிருந்தது. அவர்களின் அனைத்துச் சொற்களையும் செவிகொடுத்து கேட்டது. அவர்களின் கோரிக்கைகளுக்கு கனிந்தது. எப்போதும் அவர்களுடன் இருப்புணர்த்தி துணையென அமைந்தது. அவர் அவர்களின் அனைத்துச் சொற்களுக்கும் அப்பாற்பட்டவராக அவர்கள் எவரையும் அறியாதவராக இருந்தார். அவர்களுடன் கொடூரமாக விளையாடினார். அவர்களின் குழந்தைகளைத் தூக்கி வானில் எறிந்து வெறும் கைகளால் பிடித்தார். அவர்களின் பசுக்களை தூக்கிச் சுழற்றி அப்பால் வீசினார். அவருடன் சிறு பூசல் எவருக்கேனும் எழுமென்றாலும் சினந்து அறைந்தார். அவரிடம் அறைபட்டவர்கள் பலநாட்கள் கழித்தே நினைவு மீண்டனர். புரவிகளும் யானைகளும்கூட அவரை அஞ்சி பின் காலெடுத்து வைத்தன.

பால்ஹிகர் எல்லையை அடைந்ததுமே அவனிடம் “நாம் அஸ்தினபுரிக்கு செல்கிறோம்” என்று அறிவித்தார். “ஆம் பிதாமகரே, அஸ்தினபுரிக்கு செல்கிறோம்” என்றான் பூரிசிரவஸ். “அங்கு நாம் போரிடுகிறோம். ஏராளமான அரக்கர்களை கொல்கிறோம்!” என்றார். “அரக்கர்களையா?” என்று அவன் கேட்டான். “ஆம், சிறகுகள் உள்ளவர்கள். அவர்கள் வாயில் நாக்கு அனலென்றிருக்கும். சிறிய செவிகள்” என்று அவர் விரலை காட்டினார். “அஸ்தினபுரியில் நான் ஆயிரம் அரக்கர்களை கொல்வேன். அதன்பிறகு பீமன் என்பவன் யானையாக வந்து என்னை கொல்வான். மிகப் பெரிய யானை. அது எட்டு பெருங்கொம்புகள் கொண்டிருக்கும்” என்றார்.

“இவற்றை யார் சொன்னது?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “அங்கே வடக்குத் தெருவில் பீலன் என்றொரு சிறுவன் இருக்கிறான், அவன் சொன்னான்” என்றார் பால்ஹிகர். பகலில் பெரும்பாலான பொழுதுகளில் நகரின் சிறுவர்களுடன்தான் செலவிடுகிறார் என்பதை பூரிசிரவஸ் அறிந்திருந்தான். உள்ளத்தின் ஒழுங்கு சிதறியமையால் அவரால் பெரியவர்களின் சொற்களை உள்வாங்க இயலவில்லை. ஆனால் குழந்தைகள் பேசும் ஒவ்வொன்றும் அவருக்கு பொருள்பட்டன. மகிழ்ந்து சிரித்தபடி அவர்கள் பேசுவதை அவர் கேட்டுக்கொண்டிருப்பதை பலமுறை அவன் பார்த்திருந்தான்.

செல்லும் வழியெங்கும் பால்ஹிகர் சிறுவர்களைப்போல ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி “அது என்ன?” என்று வினவினார். அவன் மறுமொழி சொல்வதற்குள்ளாகவே அவை என்ன என்று அவரே சொன்னார். ஒவ்வொன்றும் முற்றிலும் வேறாக, திகைப்பும் நகைப்பும் ஊட்டுவதாக அவருக்குள் உருமாறி பதிந்திருந்தன. கோட்டைகள் மிதக்கும் கலங்களாக தெரிந்தன. காவலர்கள் ஏந்திய ஈட்டிகள் அவர்களின் தலையில் எழுந்த கூரிய கொம்புகளாக தோன்றின. தேர்கள் விந்தையான விலங்குகள். காவல்மாடங்களை அவர் பூதங்கள் என்றார்.

அவன் மலைச்சாலையின் உச்சியில் நின்று திரும்பி பால்ஹிகபுரியை நோக்கினான். கோட்டைசூழ்ந்த நகரம் ஓர் இல்லம்போல் தோன்றியது. மலைகளின் மகவு. தூமவதி, ஷீரவதி, பிரக்யாவதி, பாஷ்பபிந்து, சக்ராவதி, சீலாவதி, உக்ரபிந்து, ஸ்தம்பபாலிகை, சிரவணிகை, சூக்ஷ்மபிந்து, திசாசக்ரம் என்னும் அன்னையரின் ஒரே பேறு. அது மழலை மாறி வளர்ந்துவிட்டிருந்தது. ஆயினும் அன்னையருக்கு அது குழவியே. அவன் பனிமலையடுக்குகளை நோக்கிக்கொண்டு நின்றான். படைத்தலைவன் “இளவரசே” என்றதும் நிலைமீண்டு பெருமூச்சுடன் புரவியை செலுத்தினான்.

நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 24

tigபால்ஹிகருடன் ஷீரவதியை கடந்தபோதுதான் முதன்முறையாக அவரை அரசரும் குடிகளும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற வியப்பை பூரிசிரவஸ் அடைந்தான். அதுவரை அவர் தன்னுடன் வருவதிலிருந்த விந்தையிலேயே அவன் உளம் திளைத்துக்கொண்டிருந்தது. முதல்நாள் பகல் முழுக்க அவர் மெய்யாகவே மலையிறங்கி பால்ஹிகபுரிக்கு வருவார் என்ற நம்பிக்கையை அவன் அடையவில்லை. எக்கணமும் உளம் மாறி எதிர்ப்படும் காட்டெருதின் பின்னாலோ ஓநாய்க் கூட்டத்தை தொடர்ந்தோ அவர் சென்றுவிடக்கூடும் என்று அவன் எண்ணினான். அவர் அதற்கேற்ப புரவியில் வரும்போது மலையூரில் அவர் அடைந்த வெற்றிகள், தீர்க்கவேண்டிய கணக்குகள் ஆகியவற்றை பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.

அவருக்கு பால்ஹிகபுரியை குறித்தோ சிபிநாட்டை குறித்தோ எந்த நினைவும் இருப்பதாக தெரியவில்லை. பேசியபோது அறியும் ஆர்வமும் வெளிப்படவில்லை. பாண்டவ கௌரவ போரைப்பற்றிகூட அவருக்கு அறிந்துகொள்ள ஆர்வமில்லையென்பதை உணர்ந்த பின் அவர் நினைவை தூண்டும்பொருட்டு பூரிசிரவஸ் சில வினாக்களை கேட்டான். எதையுமே அவர் எதிர்கொள்ளவில்லை. “ஆம், கீழே மிக வெப்பமாக இருக்கும்” என்று மட்டும் திரும்பத் திரும்ப சொன்னார். அங்கிருக்கும் வெப்பம் தவிர பிற அனைத்துமே அவர் உள்ளத்தில் எங்கோ மூழ்கி மறைந்துவிட்டன என்பதை அவன் உணர்ந்தான். எந்த முகத்தையாவது அவரால் நினைவுகூர முடியுமா என்று எண்ணினான். நெடுநேரம் பேசிய பின் அவர் கைகளைத் தூக்கி கண்கள் இடுங்க சிரித்து “பார்த்திபன்!” என்றார். அவர் யார் என அவனுக்கு தெரியவில்லை.

அவர் நினைவுகூரும் தகைமை கொண்ட முகங்கள் அங்கு எத்தனை உள்ளன என்று மீண்டும் ஒரு எண்ணம் எழுந்தது. எவருடனும் அவருக்கு அணுக்கமோ தொடர்ந்த உறவோ இருக்கவில்லை. அவரை சிபி நாட்டிலிருந்து கூட்டிவந்து பால்ஹிகபுரியில் குடியமர்த்தியவன் அவன் என்பதனால் அவன் முகத்திற்கு சற்றே அழுத்தமிருக்கலாம். ஆனால் அவன் முகத்தைக்கூட அவர் முழுமையாக நினைவுகூர்வதாக தெரியவில்லை. இரண்டு முறை “நீ என்னை எங்கு பார்த்தாய்?” என்று கேட்டார். ஒருமுறை “பார்த்திபனிடம் புரவிகளை வாங்கிவரச் சொன்னவன் நீதானே?” என்றார். அவர் அவன் தந்தையின் தந்தை பிறந்தபோது பால்ஹிகபுரியில் வாழ்ந்திருக்கிறார். அவர் தன் பிதாமகர். ஆனால் மெய்யாகவே அவர்தானா அந்த பால்ஹிகர்? ஏழன்னையரை மணந்து பால்ஹிகக் குடியை உருவாக்கிய பிரஜாபதி?

பால்ஹிகர் களைப்பை அறியாதவராக இருந்தார். பகல் முழுக்க புரவியில் அமர்ந்திருந்தபோதும்கூட சற்றும் மூச்சு வாங்கவில்லை. உடல் சலித்து சோம்பல்முறிக்கவோ புரவியிலிருந்து இறங்குகையிலும் ஏறுகையிலும் அலுப்பொலி எழுப்பவோ இல்லை. பூரிசிரவஸ் வழியில் மூன்று இடங்களில் இறங்கி உடல் ஓய்வுகொண்டு மீண்டெழுந்தான். அப்பொழுதெல்லாம் புரவியை இளைப்பாறவிட்டுவிட்டு அவர் பக்கவாட்டில் மலைச்சரிவில் தொற்றி ஏறி அங்கு பதிந்திருந்த கால்தடங்கள் வழியாக அங்கு உலாவும் விலங்குகளை மதிப்பிட்டார். உரத்த குரலில் அங்கிருந்து “இன்றிரவு இவ்வழியாக பெரிய காட்டுமாட்டு மந்தை ஒன்று சென்றிருக்கிறது. அதன் பிறகு நான்கு நாழிகை கடந்து ஓநாய்க் கூட்டமொன்று அதை தொடர்ந்திருக்கிறது” என்றார்.

அரைத்துயிலில் விழிகள் சரிய படுத்திருந்த பூரிசிரவஸ் அவரை பொருளின்றி வெறித்து நோக்கிக்கொண்டிருந்தான். “நெடுந்தொலைவு போயிருக்க வாய்ப்பில்லை. இங்கிருந்து விரைந்து சென்றோமென்றால் வரும் இரவுக்குள் அதை பிடித்துவிடமுடியும். உப்பிட்டு உலரச்செய்து வைத்துக்கொண்டால் குளிர்காலத்திற்குத் தேவையான உலர்ஊன் எஞ்சும்” என்றார். அதன் பின்னர்தான் அவர் முந்தைய நாளிரவை இன்றிரவு என்கிறார் என்று அவன் புரிந்துகொண்டான். மலைப்பகுதிகளில் இரவு முதல் பகல் வரைதான் ஒரு நாள் என்பதை நினைவுகூர்ந்து புன்னகைத்தான்.

அவர் நடந்து வந்து சாலையின் உயரமான விளிம்பிலிருந்து செம்மண் பரப்பை நோக்கி குதித்து அவனை அணுகி “இந்தக் காட்டு மாடுகள் சுவையானவை அல்ல. ஆனால் இவற்றின் ஊன் எளிதில் கெடுவதில்லை. ஆண்டுமுழுக்ககூட இருக்கும். குளிர்காலத்தில் கொதிக்கும் ஊன் குழம்பில் அவற்றை உண்கையில் நாம் காட்டு மாடுகளை மிக இனிமையானவையாக எண்ணுவோம்” என்றார். பூரிசிரவஸ் “பிதாமகரே, தாங்கள் எதன்பொருட்டு நிலத்திற்கு வரவேண்டும் என விழைகிறீர்கள்?” என்றான். அவர் “எதன்பொருட்டும் அல்ல. வரவேண்டுமென்று தோன்றியது” என்றார். பிறகு “அப்படியும் சொல்ல முடியாது. அந்த இடம் முடிந்துவிட்டது என்று தெரிந்தது, அவ்வளவுதான். அது ஒரு மரக்கிளை. நான் அதிலிருந்து உதிர்ந்தாக வேண்டுமென்று நினைத்தேன்” என்றார்.

அவர் அப்போது உண்மையாகவே அகவை முதிர்ந்தவரைப்போல் இருந்தார். “ஏன்?” என்று அவன் கேட்டான். “ஏன் என்று என்னால் சொல்லமுடியவில்லை, அவ்வாறு தோன்றியது” என்றார். “செல்லுமிடத்தில்கூட பிறிதொரு வாழ்க்கையை நீங்கள் தொடங்கமுடியும், பிதாமகரே. நான் அறிந்த எந்த இளைஞரைவிடவும் உடலாற்றல் மிக்கவராக இருக்கிறீர்கள்” என்றான் பூரிசிரவஸ். புன்னகையுடன் “பிறிதொரு மங்கையைக்கூட நீங்கள் மணம்புரிந்துகொள்ள முடியும்” என்றான். அவர் புன்னகைத்து “ஆம், மெய்யாகவே என்னால் முடியும். ஆனால் சலித்துவிட்டது. அனைத்துமே சலித்துவிட்டது” என்றார்.

“தங்களுக்கு நாம் செல்லுமிடம் ஏதேனும் நினைவுக்கு வருகிறதா?” என்றான் பூரிசிரவஸ். “இல்லை, நான் நினைவுகூர முயல்வதே இல்லை. என் கனவுகளிலும் கடந்த காலம் வருவதில்லை. மிகத் தொலைவிலிருந்து சில பெயர்களை எவரேனும் சொன்னால் பெயர்த்தெடுக்க முடியும். நான் அதற்கு முயல்வதே இல்லை” என்றார். “ஒருவேளை உங்கள் நீண்ட வாழ்நாள் அதன்பொருட்டு அமைந்ததாககூட இருக்கலாம்” என்றான் பூரிசிரவஸ். பால்ஹிகர் மறுமொழி சொல்லாமல் “நாம் கிளம்புவோமா?” என்றார்.

அவன் புரவியில் அவருடன் நீள்நடையில் செல்லும்போது அவரது உடலை பல கோணங்களில் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தான். தலையிலிருந்து கால்வரை மனித உடலடையும் பழுதற்ற முழுமை அவரில் குடியிருந்தது. இழுத்துக் கட்டப்பட்டவை போன்ற தசைகள். இரும்பில் வார்த்து தோல்போர்த்தவை போன்ற எலும்புச்சட்டகம். அசைவுகளில் முற்றிலும் நிகர்நிலை. அவர் பெரும்கலத்தின் அமரமுனையிலிருக்கும் சிற்பம்போல அசைவற்று புரவியில் ஒழுகிச் சென்றார். அவனைவிட இருமடங்கு எடைகொண்டவர் எனினும் முற்றிலும் நிகர்நிலையுடன் அவர் அதன்மேல் அமர்ந்திருந்ததனால் அவனுடைய புரவியைவிட எளிதாக அப்புரவி நடந்து சென்றது.

பூரிசிரவஸ் பெருமூச்சுவிட்டான். பின்னர் “பிதாமகரே, தாங்கள் இறப்பதன் பொருட்டு அங்கு வருவதாக சொன்னீர்கள்” என்றான். “ஆம், நான் அங்கு இறந்துவிடுவேன்” என்றார். “ஆனால் அங்கு நீங்கள் ஏன் இறக்கவேண்டும்? அது குருக்ஷேத்திரம். அங்கு இதற்கு முன்னரும் பல பெரும்போர்கள் நிகழ்ந்துள்ளன. தொல்பழங்காலத்தில் இந்திரனும் விருத்திரனும் அங்கு போர் புரிந்ததாக சொன்னார்கள். பரசுராமர் அங்கு ஷத்ரியர்களை வென்று ஐந்து பெருங்குளங்களை குருதியால் நிரப்பினார். ஒரு நினைவின் சுவடுகூட அங்கில்லை. அங்கு இறப்பதைப்போல் பொருளற்றது ஏதுமில்லை. அது ஆழி. அனைத்தையும் உள்ளிழுத்த பின்னர் அமைதியை போர்த்தி விரிந்திருக்கும். இங்கென்றால் உங்கள் இறப்புக்கு ஒரு முழுமையும் பொருளும் அமைகிறது” என்றான்.

“என்ன பொருள்?” என்று அவர் கேட்டார். “என்ன பொருள் என்றால்…” என்றபின் பூரிசிரவஸ் சொன்னான் “எதுவும் ஏதேனும் ஒரு பொருளுடையதாக அமைவது நன்றல்லவா?” அவர் சிரித்து “எவருக்கு அப்பொருள்?” என்றார். “வரும் தலைமுறைகளுக்கு” என்று அவன் சொன்னான். “வரும் தலைமுறைகளுக்காக நான் ஒரு கணமும் வாழ்ந்ததில்லை” என்றார் பால்ஹிகர். அக்கூற்றிலிருந்த கூர்மை அவனை உலுக்கியது. வரும் தலைமுறையை எண்ணாமல் ஒருகணமும் அவன் வாழ்ந்ததில்லை என்று நினைவுகூர்ந்தான். மேலும் பேச அவனுக்கு நாவெழவில்லை.

மீண்டும் அவர் உடலை நோக்கினான். அவன் அறிந்த பால்ஹிகரின் உடல் அல்ல. மண்ணில் விழுந்த மரத்திலிருந்து புது மரம் என அப்பழைய உடலில் இருந்து அவர் மீண்டும் முளைத்தெழுந்திருந்தார். அவர் குருக்ஷேத்திரத்தில் களம்படுவதைப்போல் மாபெரும் வீணடிப்பு பிறிதில்லையென்று தோன்றியது. புரவியை குதிகாலால் உந்தி மீண்டும் அவரருகே சென்று “பிதாமகரே, உங்கள் உடலை பார்த்துவருகிறேன். பிரம்மன் பல தலைமுறைகளுக்கு ஒருமுறை வடிக்கும் பழுதற்ற சிற்பம் போலிருக்கிறீர்கள். மனித உடல் வாழும் மீயெல்லை வரை வாழ்ந்துவிட்டீர்கள். இதன்பின் வெறும் உடற்குவியலாக அங்கே சரியப்போகும் பல லட்சம் வீரர்களில் ஒருவராக நீங்கள் மடிவது பிழையென்று உங்களுக்கு தோன்றவில்லையா?” என்றான்.

பால்ஹிகர் அவனை நோக்கி திரும்பி மலையை சுட்டிக்காட்டி “இது ஒரு மாபெரும் இறப்புவெளி. ஒருநாள் குடிலிலிருந்து கிளம்பினால் பத்து பதினைந்து இறப்புகளை காணாது நான் திரும்பி வருவதில்லை. எங்கு மண்ணை கிளறினாலும் எலும்பு சிக்காமலிருப்பதில்லை. அதில் என்ன பொருளிருக்கிறது? எங்காயினும் இறப்பு அவ்வாறே. வீண் இறப்பென்று மண்ணில் எதுவுமில்லை, ஏனென்றால் வீண் பிறப்பும் இல்லை” என்றார். பூரிசிரவஸ் “தாங்கள் ஒரு மாபெரும் பனிப்பிளவில் விழுந்து இறக்கவேண்டும். உங்கள் உடல் அதில் பேணப்படவேண்டும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப்பின் வரும் தலைமுறையினர் தங்களை அகழ்ந்தெடுத்து இவ்வண்ணம் ஓருடல் இங்கு வாழ்ந்ததென்பதை அறியவேண்டும்” என்றான்.

பால்ஹிகர் உரக்க நகைத்தபடி புரவியில் முன்னால் சென்றார். புரவியில் அவன் அவருடன் சென்றபடி “ஏன் நகைக்கிறீர்கள்?” என்றான். “ஒன்றுமில்லை” என்றபடி அவர் நகைத்துக்கொண்டே இருந்தார். அவன் மீண்டும் தொடர்ந்து சென்று “சொல்லுங்கள், ஏன் நகைக்கிறீர்கள்?” என்றான். “தெரியவில்லை, ஆனால் சிரிப்புக்குரியதாக தோன்றியது” என்றார். அவன் “தாங்கள் கூறியாகவேண்டும், எதன் பொருட்டு நகைத்தீர்கள்?” என்றான். “நான் அவ்வாறு எண்ணி முடிவெடுத்து நகைப்பதில்லை. நகைத்து முடித்த பின் ஏன் நகைத்தோம் என்று எண்ணுவதுமில்லை” என்றார் அவர்.

சற்றுநேரம் அவரை பார்த்த பின் பூரிசிரவஸ் தலையசைத்து அமைதியடைந்தான். தொலைவில் ஷீரவதி தெரிந்தது. பூரிசிரவஸ் “நாம் இந்த ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்” என்றான். அவர் தலையசைத்தார். “இதன் பெயர் ஷீரவதி” என்றான். “ஆம், பால் வெண்மை. இவ்வாற்றுக்கு அப்பால்தான் ஷீரபதம் எனும் மலைச்சரிவு தொடங்குகிறது” என்று சொல்லி “இதை கடந்து ஒரு மலை உச்சியில் நின்றால் நெடுந்தொலைவில் ஆழத்தில் உனது நகர் தெரியுமல்லவா?” என்றார். “ஆம், தாங்கள் நினைவுகூர்கிறீர்களா?” என்று அவன் கேட்டான். “மெல்ல நினைவுகள் எழுகின்றன” என்றார் பால்ஹிகர்.

அவர்கள் ஷீரவதியை கடந்து மறுபுறம் இறங்கிச் சென்றுகொண்டிருந்தபோது “நான் ஒருவனை நினைவுகூர்கிறேன்” என்று பால்ஹிகர் சொன்னார். “யார்?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “அவன் பெண்ணுடல் கொண்டவன். என்னை பார்க்க வந்தான். நெடுங்காலத்துக்கு முன் நான் இறப்பும் காலமும் அணுகாத கல்லறைக்குள் நுழைந்து வேறொரு உலகில் வாழ்ந்தேன். அவன் படிகளினூடாக இறங்கி என்னை அணுகினான். ஓர் யானையின் உடலுக்குள் நான் குடியிருந்தேன் என்று அப்போது தோன்றிக்கொண்டிருந்தது. யானையின் வயிற்றில் கத்தியொன்றை இறக்கியதுபோல அவன் உள்ளே புகுந்தான்.”

“சிகண்டியா? அவர் பெயர் சிகண்டியா?” என்று பூரிசிரவஸ் உளக்கிளர்ச்சியுடன் கேட்டான். “ஆம் ஆம், நினைவுறுகிறேன். அவன் பெயர் சிகண்டி. அவன் பீஷ்மனை கொல்லும்பொருட்டு வஞ்சினம் உரைத்திருந்தான்” என்றார். “ஆம், அவர் மீண்டு வந்திருக்கிறார். உங்களைப்போலவே நூறாண்டு எங்கோ வாழ்ந்து வஞ்சம் பெருக்கி மீண்டிருக்கிறார். பாண்டவர் தரப்பில் வந்து போர்முகம் கொண்டிருக்கிறார்” என்றான். பால்ஹிகர் பெருமூச்சுவிட்டு “ஒற்றை இலக்குடன் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவன்” என்றபின் மீண்டும் நகைத்தார்.

“இப்போது எதன்பொருட்டு நகைத்தீர்கள், பிதாமகரே?” என்றான் பூரிசிரவஸ். “இப்போது என்னால் அதை சொல்ல முடியவில்லை. அவனை முதலில் பார்த்தபோதும் நான் நகைத்தேன்” என்றார். பூரிசிரவஸ் மெல்ல ஓர் ஐயத்தை அடைந்தான். அவர் நிகர்நிலத்தில் இருக்கையில் உளம் கலங்கியவராக இருந்தார். மலையேறிய பின்னரே உளம் தெளிந்து இயல்பு நிலையடைந்தார். மீண்டும் அவர் உளம் கலங்கிக்கொண்டிருக்கிறதா? கீழே பால்ஹிகபுரியை அடையும்போது முற்றிலும் தன்னில் தொலைந்து போனவராகிவிடுவாரா? அவன் ஐயத்துடன் ஓரவிழியால் அவரை பார்த்தபடி சென்றான்.

சாலையில் ஒவ்வொரு பொருளையும் கூர்ந்து நோக்கியபடி பால்ஹிகர் வந்தார். “நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள், பிதாமகரே?” என்று அவன் கேட்டான். “எதை?” என்று அவர் திருப்பி கேட்டார். “சிகண்டியால் பீஷ்மரை கொல்ல முடியுமா?” என்றான். “முடியும்” என்று அவர் சொன்னார். “எவ்வாறு?” என்று பூரிசிரவஸ் உரக்க கேட்டான். “அத்தனை பெருமை கொண்டவர்! தங்களாலேயே வெல்லமுடியாதவர்! பரசுராமரை எதிர்த்து நின்றவர்! அவரை எப்படி அந்த ஆணிலி கொல்லமுடியும்?” பால்ஹிகர் “அவ்வாறெனில் கொல்லமுடியாது. அதிலென்ன?” என்றபின் மீண்டும் நகைக்கத் தொடங்கினார்.

நெடுநேரம் இடைவெளியில்லாமல் நகைத்துக்கொண்டிருந்தார். சிரிப்பு ஓய்ந்து மூச்சுகளாகி அமைதியடைந்து மீண்டும் ஏதோ புள்ளியில் வெடித்துக் கிளம்பியது. பூரிசிரவஸ் உறுதி அடைந்தான். அவரது உள்ளம் மீண்டும் முழுமையாகவே சிதைந்துவிட்டிருந்தது. அவன் அவரிடம் ஓரிரு சொற்கள் பேசமுயன்றான். அவரை அவை சென்றடையவில்லை. அவனை நோக்கி வெடித்து நகைத்தபடி “பனி! பனியுருகும்…” என்றார். “என்ன சொல்கிறீர்கள், பிதாமகரே?” என்றான். “அங்கே பனி உருகுகிறது. நாளும் பனிமலைகள் உருகிக்கொண்டே இருக்கின்றன.”

tigபால்ஹிகபுரியை சென்றடைந்தபோது பால்ஹிகர் முற்றிலும் புதியவராக ஆகிவிட்டிருந்தார். சொற்கள் முழுமையாக நின்றுவிட்டன. எந்த வினாவுக்கும் வெடித்த நகைப்பையே அளித்தார். பூரிசிரவஸுடன் வந்த வணிகர்கள் பாதுகாப்பான தொலைவு அகன்று அவருடன் வந்தனர். முதுவணிகன் சாகதன் அவனிடம் “அவர் உளங்கலங்கியிருக்கிறார். உளம் கலங்கியவர்களை கையாள்வது மிக கடினம். இவரோ நாம் அனைவரும் சேர்ந்து பற்றினாலும் அடக்கிவிடமுடியாத அளவுக்கு உடலாற்றல் மிக்கவர். அவருடன் எந்தச் சிறு முரண்பாடும் நிகழவேண்டியதில்லை” என்றார். “நன்று என்னவென்றால் இப்பாதை நேராக பால்ஹிகபுரிக்கு மட்டுமே செல்லும். ஆகவே அவரை நாம் வழிநடத்தவோ திசைதிருப்பவோ வேண்டியதில்லை. அவருடன் எந்த சொல்லாடலையும் வைத்துக்கொள்ளவேண்டியதில்லை.”

பூரிசிரவஸ் ஏற்கெனவே அம்முடிவை அடைந்திருந்தான். ஒவ்வொரு கணமும் அஞ்சியபடி அடாதது ஒன்றை எதிர்பார்த்தபடி அவர்கள் மலையிறங்கினர். பால்ஹிகபுரி அணுக்கத்தில் தெரியத்தொடங்கியதும் பூரிசிரவஸ் நீள்மூச்செறிந்தான். படைவீரர்கள் தென்படத் தொடங்கியதும் துணிவு கொண்டான். முதல் காவலரண் செய்தி எட்டும் தொலைவுக்கு வந்ததும் அவன் வணிகரிடம் வானில் எரியம்பு எய்யச் சொன்னான். அதிலிருந்த மந்தணச் செய்தியை கேட்டு இருபது புரவி வீரர்கள் மேலேறி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் பால்ஹிகர் கைசுட்டி உரக்க நகைத்தார்.

அவர்கள் அவரை உடனே புரிந்துகொண்டு விலகி அவனை அணுகினர். காவலர்தலைவன் “இளவரசே, இந்த மலைமுதியவரின் உளம் கலங்கியிருக்கிறது” என்றான். “ஆம், அதன் பொருட்டே உங்களை வரச்சொன்னேன். படைக்கலங்களை எவரும் எந்நிலையிலும் எடுக்கலாகாது. அனைவரும் இறந்தாலும் அவர்மேல் கீறல்கூட விழக்கூடாது. ஆனால் அவர் நம் நடுவிலிருந்து தப்பிச் சென்றுவிடவும் கூடாது. அவருக்கு முன்னும் பின்னும் இரு பக்கங்களிலும் முழுமையாகவே நம் வீரர்கள் சூழ்ந்துகொள்ளட்டும்” என்று அவன் ஆணையிட்டான். “ஆனால் அதை அவர் அறியக்கூடாது.”

அவர்கள் மிக இயல்பாக பரவி வலைபோலாகி பால்ஹிகரை சூழ்ந்துகொண்டனர். அவர் அதை எவ்வகையிலும் உணரவில்லை என்பது இருபுறமும் நோக்கியபடி அவ்வப்போது நகைத்து எதையாவது சுட்டிக்காட்டியபடியும் அவ்வப்போது வெடித்துச் சிரித்தபடியும் சென்றதிலிருந்து தெரிந்தது. நிகர்நிலத்தை அடைந்து பால்ஹிகபுரிக்கான சாலையில் செல்லத்தொடங்கியபோது பூரிசிரவஸ் ஒன்றை உணர்ந்தான். அவர் அவனையும் முழுமையாக மறந்துவிட்டிருந்தார்.

நகரின் வெளி எல்லையில் குடிகள் கூடிநின்றிருக்க ஆலயப் பூசனை நிகழ்ந்துகொண்டிருந்ததை அவன் தொலைவிலேயே கண்டான். ஒருகணம் கழித்தே அவன் உள்ளத்தில் உறைத்தது, அது வடக்கெல்லையில் அமைந்த பால்ஹிக மூதாதையின் ஆலயம். அங்கு மாதம் இருமுறை உயிர்ப்பலியளித்து படையலிட்டு வேண்டுதல் செய்வது பால்ஹிகக் குடிகளின் வழக்கம். ஒருகணம் அவன் அந்தப் பொருளற்ற விந்தையில் அகம் திளைக்க ஒருவகை மெய்யிறந்த நிலையில் புரவியில் அமர்ந்திருந்தான். தெய்வம் உயிருடன் குருதியும் தசையுமாக அவர்கள் முன் எழுந்தருள்கிறது. ஆனால் அவர்கள் அவரிடமிருந்து அத்தெய்வத்தன்மையை தனித்தெடுத்து கற்சிலையாக்கி அங்கே நிறுவியிருக்கிறார்கள். அவர்களுக்கு அத்தெய்வத்தன்மையை மீண்டும் ஒரு மானுடனில் காண்பது இயல்வதல்ல.

அணுகியதும் அவன் ஆலய முகப்பில் தன் தந்தையையும் சலனையும் பூரியையும் பார்த்தான். அரசகுடிகள் அனைவருமே அங்கு கூடியிருந்தனர். அங்கிருந்து ஐந்து புரவி வீரர்கள் அவர்களை நோக்கி வந்தனர். பால்ஹிகர் வெடித்து நகைத்து இரு கைகளையும் விரித்து அவர்களை நோக்கி பொருளற்ற மலைமொழியில் ஏதோ சொன்னார். காவலர் தலைவன் அவரை அணுகி, தயங்கி வளைந்து கடந்து, பூரிசிரவஸை நெருங்கி வணங்கி வியப்புடனும் குழப்பத்துடனும் பால்ஹிகரை பார்த்தபின் “இளவரசே, அரசர் அங்கு பால்ஹிக மூதாதையருக்கு பூசனை செய்து கொண்டிருக்கிறார். அஸ்தினபுரியிலிருந்து முறையான படைஅழைப்பு வந்துவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் நமது படைகள் கிளம்புகின்றன. அனைத்து மூதாதையருக்கும் பலிபூசனை செய்து வழிபட்டுக்கொண்டிருக்கிறோம். இன்று மூன்றாவது நாள்” என்றான்.

ஒருகணத்தில் பூரிசிரவஸ் முடிவெடுத்தான். அவனிடம் “இவர் நமது விருந்தினர். சற்று உளம் மயங்கிய நிலையில் உள்ளார். எங்கும் செல்லாது நகரினூடாகவே இவரை அழைத்து செல்க! எவரும் இவர் வருகையை அறியலாகாது. முடிந்தால் கோட்டைமுகப்பிலேயே ஒரு கூண்டுவண்டியில் இவரை ஏற்றிக்கொள்க! அரண்மனைக்குள் தனியறையில் இவர் இருக்கட்டும். அங்கு அரசருக்கு நிகரான அனைத்தும் இவருக்கு ஒருக்கப்படவேண்டும். ஆனால் வீரர்களின் பிடியிலிருந்து வெளியேறவோ பிறர் அவரைப் பார்க்கும் வாய்ப்பு அளித்தலோ கூடாது” என்றான். காவலர் தலைவன் “ஆணை” என தலைவணங்கி திரும்பி அவரை பார்த்து “முன்பு எப்போதோ பார்த்த முகம் போலுள்ளது” என்றான். பூரிசிரவஸ் மறுமொழி சொல்லாமல் “அழைத்து செல்க!” என்றான்.

தன் புரவியை கடிவாளத்தை இழுத்து விரைவழிந்து பின்னால் நகர்ந்தான் பூரிசிரவஸ். பால்ஹிகர் படைகள் சூழ முன்னால் சென்றுகொண்டே இருந்தார். பூரிசிரவஸ் நின்றுவிட்டதையோ தான் முற்றிலும் படைகள் சூழ அழைத்துச் செல்லப்படுவதையோ அவர் உணர்ந்ததாக தெரியவில்லை. அந்தத் திரள் முன்னால் சென்று தொலைவில் மறைந்தபின் புரவியை திருப்பிக்கொண்டு அரசகுடியினர் பூசனை செய்துகொண்டிருந்த ஆலய முகப்பு நோக்கி சென்றான். தந்தையிடம் என்ன சொல்வதென்று சொற்களை ஒவ்வொன்றாக கோத்துக்கொண்டான்.

தொலைவிலேயே அவனை பார்த்துவிட்ட சலன் கையசைத்து அருகே வரும்படி சொன்னான். புரவியை சாலமரத்தடியில் நிறுத்தி இறங்கி தலைப்பாகையையும் ஆடையையும் சீரமைத்துக்கொண்டு அரசரையும் சுற்றத்தையும் நோக்கி சென்றான். சோமதத்தர் அவனை நோக்கி திரும்பி “நேராக வருகிறாயா? எங்கே பிதாமகர்? உன்னுடன் வருவதாக பறவையோலை வந்ததே?” என்றார். பூரிசிரவஸ் தலைவணங்கி தாழ்ந்த குரலில் “வந்துவிட்டார், அவரை அரண்மனைக்கு அனுப்பிவிட்டேன்” என்றான். சலன் “உன்னுடன் அவர் இருந்தாரா?” என்றான். “ஆம், எல்லையிலேயே நம் படைகளை வரச்சொல்லி அவரை சூழ அழைத்துச்செல்லும்படி சொல்லிவிட்டேன்” என்றான். “ஏன்?” என்று சலன் கேட்டான். “மண்ணில் இறங்க இறங்க அவர் உள்ளம் திரிபடைந்து முன்போலவே ஆகிவிட்டது” என்றான் பூரிசிரவஸ். “முன்பு போலவே என்றால்?” என்றான் சலன். “உளம் உடைந்துவிட்டது. அவரால் நம் எவரையும் அடையாளம் காண முடியாது” என்றான் பூரிசிரவஸ்.

“அவர் ஏன் உன்னுடன் வந்தார்?” என்று சலன் கேட்டான். “மூத்தவரே, அவர் நம்முடன் குருக்ஷேத்திரப் போர்முனைக்கு வரவிழைகிறார்” என்றான் பூரிசிரவஸ். “போர்முனைக்கா? அவரா? முதியவராக இருப்பாரே? நடக்கும் நிலையிலிருக்கிறாரா?” என்று சோமதத்தர் கேட்டார். “அவரைச் சுற்றி முப்பதுபேர் கொண்ட படை ஒன்றை அனுப்பியிருக்கிறேன். அவர் மெய்யாகவே பூசலிட்டால் அந்த முப்பது பேரையும் கழுத்தை ஒடித்து கொல்வதற்கு இருபது நொடி நேரமே ஆகும்” என்றான். சோமதத்தர் நம்பாமல் அவனை விழித்துப் பார்த்தார்.

“நீ அவரை அழைத்தாயா?” என்று சலன் கேட்டான். “இல்லை மூத்தவரே, நான் வணங்கி வாழ்த்துபெற்று திரும்பினேன். தானும் வருவதாக சொன்னார்” என்றான் பூரிசிரவஸ். சலன் “அங்கும் உளம் கலங்கியவராக இருந்தாரா?” என்றான். “இல்லை, அங்கு அவர் பேராற்றல் கொண்ட மலைமகனாக இருந்தார். ஏழு மைந்தர்கள். அவர்களுக்கும் மனைவியரும் குழந்தைகளும் இருக்கின்றனர்” என்றான். சோமதத்தர் “இப்புவியில் இத்தனை நாள் வாழ்ந்தும் வாழ்க்கையின் எந்நெறியையும் புரிந்துகொள்ள என்னால் இயன்றதில்லை. ஆகவே நான் வியப்புறவில்லை” என்றார்.

சலன் “என்னால் இதை வகுத்துக்கொள்ள முடியவில்லை, இளையவனே. எதன் பொருட்டு அவர் மலையிறங்கி வந்தார்? கௌரவர்களும் பாண்டவர்களும் இடும் இந்தப் போரில் அவருடைய இடமென்ன? எவருக்காக அவர் களம் நிற்கப் போகிறார்?” என்றான். “ஏன்?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “ஏனென்று நீ உணரவில்லையா? இன்று வாழும் குருகுலத்து வழித்தோன்றல்களில் இவரே அகவை மூத்தவர். இதுவரை அகவை மூத்தவராக இருந்தவர் பீஷ்மர். அவர் கௌரவர் தரப்பில் இருப்பதனாலேயே கௌரவர்களுக்கு ஷத்ரிய ஆதரவும் குடிகளின் ஆதரவும் இருந்துகொண்டிருக்கிறது. பால்ஹிக மூதாதை பாண்டவர் தரப்புக்கு சென்றாரென்றால் அனைத்து அரசியல் நிகர்நிலைகளும் குலையும்.”

பூரிசிரவஸ் அதை உணர்ந்துகொண்டு “ஆனால் அஞ்ச வேண்டியதில்லை, மூத்தவரே. அவர் அங்கு செல்ல வாய்ப்பில்லை” என்றான். “அவருக்கு போருக்குச் செல்வது மட்டுமே உள்ளத்தில் அமைந்துள்ளது. குருக்ஷேத்திரத்தில் இறப்பேன் என்றே வந்தார்” என்றான். “இறப்பதற்காகவா?” என்று சோமதத்தர் சிரித்தார். சலன் “அதில் நகைப்பதற்கு ஒன்றுமில்லை. அங்கு செல்லும் பெரும்பாலானவர்கள் அங்கு தங்கள் இறப்பு நிகழுமென்று எண்ணியே செல்கிறார்கள்” என்றான்.

பூரிசிரவஸ் “அவரை நாம் நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து குருக்ஷேத்திரத்திற்கு கொண்டு செல்வோம். அங்கு அவர் களப்பலி ஆவார் என்றால் அதுவே நமக்கு மேலும் ஆற்றல் அளிக்கும். நாம் வெல்வோம். அவர்கள் வென்றால்கூட தங்கள் குலத்தின் முதுமூதாதையை கொன்று பாண்டவர்கள் அடையும் வெற்றியை எந்நிலையிலும் பெரும்பழி தொடரும்” என்றான். “ஆம், அவ்வாறு நிகழ்ந்தால் அவரது வருகை நன்றே” என்று சலன் சொன்னான்.

ஆலயத்தில் பூசனை நிகழ்ந்துகொண்டிருந்தது. கருவறைக்குள் பெரிய ஆடொன்றை தோளில் தூக்கியபடி நின்றிருந்த பால்ஹிகரின் வெண்கற்சிலையை பூரிசிரவஸ் பார்த்தான். அவருக்கு சற்று முன்பு பலி கொடுக்கப்பட்ட முட்டாடு ஓரமாக இழுத்துப் போடப்பட்டிருந்தது. பலிபீடத்திலிருந்து கொழுவிய அக்குருதி நாற்புறமும் வழிந்து அதன் சிற்பச் செதுக்குளினூடாக சொட்டியது. அக்குருதியில் சிறிது எடுத்து படையல் அன்னத்தில் தெளித்து அதை உருட்டி ஏழு உருண்டைகளாக்கி ஏழு தனி இலைகளில் படைத்தார் பூசகர். பூரிசிரவஸ் “இந்தப் படையலுணவு எங்கு சென்று சேர்கிறது என்ற எண்ணம் எழுகிறது, மூத்தவரே” என்றான். “ஏன்?” என்று சலன் கேட்டான். “இது விண்வாழும் பால்ஹிகருக்கு அளிக்கப்படுகிறது” என்றான் பூரிசிரவஸ். சலன் நகைத்து “மீண்டும் மண்ணுக்கே மழையாகப் பெய்து அவரை அடையும், அஞ்சாதே”’ என்றான். பூரிசிரவஸ் “இருபத்தைந்தாண்டுகள் பலியன்னம் பெற்று மலைமேல் இருந்திருக்கிறார்” என்றான். “அவரவர் அன்னம் அவரவரைத் தேடி அணையும் என்றல்லவா தொல்நூல்கள் சொல்கின்றன?” என்றான் சலன்.

மணியோசையுடன் பூசகர் வெளியே வந்தார். சோமதத்தர் கை நீட்ட அவருக்கு மலரும் நீரும் அளித்தார். அரசகுடியினர் ஒவ்வொருவராக சென்று பணிந்து வணங்கினர். புரவியோசை கேட்டு பூரிசிரவஸ் திரும்பிப் பார்த்தான். தொலைவில் உச்ச விரைவில் வரும் புரவியில் அமர்ந்திருப்பது பால்ஹிகர்தான் என்று அவனுக்கு தெரிந்தது. “அவர்தான்!” என்றான். சலன் “என்ன ஆயிற்று?” என்றான். “நம் வீரர்களால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை” என்று சொன்ன பூரிசிரவஸ் “சினந்து வருகிறார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒருவேளை அவரை என் சொற்கள் கட்டுப்படுத்தலாம்” என்றபடி கைவிரித்து நின்றான்.

தொலைவிலிருந்தே உரக்கக் கூச்சலிட்டபடி வந்த பால்ஹிகர் புரவி நிற்கும் முன்னரே குதித்திறங்கி கடிவாளத்தை வீசிவிட்டு அவனை நோக்கி வந்தார். “உன்னை அவர்கள் கொன்று தூக்கி வீசிவிட்டார்கள் என்று எண்ணினேன். ஆகவேதான் என்னை பிடிக்க வந்த இருவரை கழுத்தை முறித்து தூக்கி அப்பால் வீசினேன். பிறர் அஞ்சி ஓடிவிட்டார்கள். இங்கு நின்றிருக்கிறாய்” என்ற பால்ஹிகர் அருகே நெருங்கினார். சலனை நோக்கி “உன்னை பிடித்தது யார்? இந்தச் சிறுவனா?” என்றார். சோமதத்தரை நோக்கி “இந்தக் கிழவன் எவன்?” என்றார்.

“பிதாமகரே, இவர் என் தந்தை. இவர் என் தமையன். அது என் இன்னொரு உடன்பிறந்தான்” என்றான் பூரிசிரவஸ். அவர் ஆலயத்தை நோக்கி “இது என்ன ஆலயம்?” என்றார். பின்னர் திரும்பி ஆலயத்திற்குள்ளே பார்த்தபின் “அன்னம் படைக்கப்பட்டிருக்கிறது. மைந்தா, நெடுநாட்களாயிற்று நான் நிலத்தின் அன்னத்தை உண்டு. இது வேறு சுவையுடையது” என்றபடி முன்னகர்ந்து படைக்கப்பட்டிருந்த அன்னத்தில் ஒரு கவளத்தை எடுத்தார். பூசகர் உரத்த குரலில் “அது படையலன்னம். மானுடர் உண்ணலாகாது” என்றார். பூரிசிரவஸ் “அவர் மானுடரல்ல, பூசகரே” என்றான். அவர் பால்ஹிகரின் பேருடலை நோக்கியபடி பின்னடைந்தார்.