மாதம்: மார்ச் 2018

நூல் பதினேழு – இமைக்கணம் – 7

wild-west-clipart-rodeo-3குருகுலத்து வசுஷேணர் நூறாண்டு வாழ்ந்தார். முதுமையில் மைந்தரும் பெயர்மைந்தரும் சூழ அரண்மனையில் அமைந்த வசுஷேணர் நெடுநாட்கள் புதிதென எதுவும் இயற்றாமையால் உடலும் உள்ளமும் ஓய்ந்தவராக இருந்தார். ஒவ்வொருநாளும் மாறாமல் அன்றாடத்தையே ஆற்றினார். முதற்புலரி எழுகை, தெய்வம் தொழுகை, இன்சுவைகொண்ட நல்லுணவு, இசை, நூல்நவில்தல், அணுக்கருடன் சொல்லாடுதல், நோயிலா உடல்பேணல், நல்லுறக்கம். ஒருமுறையேனும் ஒன்றும் குறைவுபடாமையால் ஒவ்வொருநாளும் பிறிதொன்றென்றே நிகழ்ந்தது.

அன்றாடத்தின் சலிப்பு அவருள்  அனலை அணைத்து பழகிய செயல்களுக்கு அப்பால் அவருடைய சித்தம் செல்லாதாக்கியது. அன்றாடத்திற்கு அப்பாலுள்ளவை அறியாதவை என அச்சுறுத்தியமையால் அவர் அவற்றை முற்றிலும் தவிர்த்து பழகிய அன்றாடத்திற்குள் தன்னை சுருட்டிக்கொண்டார். தன் உடலால் உருவாக்கப்பட்ட, தன் உடலளவே ஆன,  சிறுதுளைக்குள் வாழும் புழு என திகழ்ந்தார். நன்று தீதென ஒன்றும் நிகழாதிருப்பதே இன்பம் என்று வகுத்துக்கொண்டார்.

தன் விழிசெவி வட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒவ்வொன்றையும் பலமுறை கேட்டறிந்த பின்னரே பொருள்கொண்டார். பொருள் திரளாதபோது எரிச்சலுற்று வசைபொழிந்தார். தன் அமைவுநிலையை குலைக்கும் எதையும் அணுகவிடாது தன்னை அகற்றிக்கொண்டார். எனவே அவரிடம் எதையும் கொண்டுசெல்லாதொழிந்தனர் மைந்தர். அவருடைய முதல் மைந்தன் விருஷசேனன் அரசப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான். அவர் பேரவைகளிலும் விழவுகளில் மட்டும் மணிமுடி சூடி அமர்பவரானார். அங்கு நிகழ்ந்துகொண்டிருந்த அனைத்து வாழ்வியக்கங்களுக்கும் அப்பால் கொலுவமர்ந்து விழிவெறிக்க நோக்கினார்.

ஆனால் அள்ளி அள்ளி இறுக்கினாலும் மெல்ல நழுவி ஒவ்வொன்றும் தன்னைவிட்டுச் செல்வதையும் அவர் உணர்ந்திருந்தார். ஆகவே விடாப்பிடியாக அனைத்தையும் பற்றிக்கொள்ளவும் விழைந்தார். தன் மணிமுடியையும் அரியணையையும் எந்நிலையிலும் விட்டுக்கொடுக்க அவர் முனையவில்லை. பொன்னூல், அணியாடைகள், மணிக்கலன்கள் என சேர்த்துவைத்துக்கொண்டார். அரியதும் அழகியதுமான அனைத்தையும் தனக்கென எடுத்தார். அவை அவருடைய கருவூலத்தை அடைந்து இல்லையென்றாக்கும் இருளில் புதைந்தமைந்தன. ஒவ்வொருவரும் தனக்களிக்கும் அவைமுறைமைகளையும் முகமன்களையும் கூர்ந்து நோக்கி மதிப்பிட்டார். சற்றேனும் அதில் குறைவு இருப்பதாகத் தோன்றினால் சினம்கொண்டு கூச்சலிட்டார். உளம்சோர்ந்து விழிநீர் பெருக்கினார்.

மேலும் மேலுமென அவர் உடல் முதுமைகொண்டு நலிய உள்ளமும் சிதைந்தபடியே வந்தது. பற்கள் மறைந்தபோது அவர் இனிப்புணவை மேலும் விரும்பலானார். தனக்களிக்கப்பட்ட உணவில் இனிய பகுதிகளை எடுத்து சேக்கையின் அடியிலும் சுவடிப்பெட்டிக்குள்ளும் ஒளித்து வைத்துக்கொண்டார். எப்போதும் சிறிது சிறிதாக விண்டு வாயிலிட்டு மென்று விழிசொக்கினார். தன் உடலையே மீளமீள நோக்கி தடவி குலவினார். பல்லிழந்து நாக்கு குதலை சொல்லத் தொடங்கியதும் சொற்கள் சுருங்கி எளிய சொற்றொடர்கள் மட்டுமே எழுந்தன. அவை திரும்பிச்சென்று சித்தமென்றாக உள்மொழியும் மிகச்சில சொற்றொடர்களாலானதாக ஆகியது.

செவிகள் அணைந்தபோது கேட்குமொலியெல்லாம் மந்தணம் என்றாகி அவரை உளம்கூரச் செய்தன. ஒவ்வொன்றையும் என்ன என்ன என்று கேட்டுக்கொண்டிருந்தார். அனைத்தையும் அவருக்கு உகந்த பிறிதொரு வடிவிலாக்கி ஏவலரும் அணுக்கரும் அவருக்களிக்க அவர்கள் சமைத்த அந்த உலகில் அவர் வாழ்ந்தார். எதிலும் உளம்குவியாமையால் இசையோ கலையோ நூலோ அவருக்கில்லாமலாயிற்று. அறியா உலகைக் கண்டு எழுந்த பதற்றமே அவர் முகத்தின் மாறாத பாவனை என நின்றது. சொல்முளைக்கா இளமைந்தருடன் ஆடுகையிலேயே அவர் உளம் மகிழ்ந்தார். சுருக்கங்கள் மண்டிய முகத்தில் அப்போது மட்டுமே சிரிப்பு எழுந்தது.

ஆனால் கனவுகளில் அவர் பிறிதொன்றென வாழ்ந்தார். புறவுலகு வண்ணம் வெளிறி அசைந்தபோது அகத்திலெழுந்த உலகுகள் ஒளியும் ஓசையும் கொண்டு பொலிந்தன. அங்கிருந்த அவர் உடலிறுகி ஓங்கியவனாக, உள்ளம் விழைவுகளால் நிறைந்த இளைஞனாக இருந்தார். புரவிகளில் பாய்ந்தார். வில்விளையாடினார். சிம்மங்களுடனும் களிறுகளுடனும் பூசலிட்டார். மகளிரை வேட்டு அடைந்தார். காமத்தில் திளைத்தார். குருதிமணம் அளிக்கும் கள்மயக்கில் நிலையழிந்தார். தொலைநிலங்களில் தனித்தலைந்தார். அலைகடல்களின்மேல் பாய்த்தூண் பற்றி எழுந்து முடிவிலியை நோக்கினார். இடிமின்னல் சூழ தனித்து நின்றிருந்தார்.

ஒவ்வொரு கனவிலும் மெய்வாழ்வில் அவர் எதிர்கொண்டிராத பெரும் அறைகூவல்களை சந்தித்தார். மகதத்தின் அரசன் ஜராசந்தனால் தோற்கடிக்கப்பட்டு நாடிழந்து காட்டுக்கு ஓடினார். அங்கே மலைக்குகைகளில் தங்கி வேட்டையுணவுண்டு வாழ்ந்தார். அணையா வஞ்சத்தைத் திரட்டி ஆற்றல்கொண்டு மலைமக்களை உளம்வென்று படைதிரட்டி மீண்டும் தன் நகரை வென்றார். களிவெறிகொண்டு கூத்தாடிய மக்கள்திரள் நடுவே அரிமலர் மழைபொழிவினூடாக கண்ணீர் வழிய கைகூப்பி நகைத்தபடி நகர்வலம் சென்றார்.

மைந்தரைவிட அணுக்கர்களான தம்பியரால் வஞ்சத்தில் வீழ்த்தப்பட்டார். வேட்டைக்காட்டில் அவர்களால் நஞ்சூட்டப்பட்டு சிதையேற்றும்பொருட்டு கொண்டுசெல்லப்பட்டபோது எஞ்சிய உயிர்த்துளியை குவித்து தன்னை மீட்டு தப்பினார். துணைநாட்டினரின் படைகொண்டுவந்து நகரை வென்றார். உயிர்ப்பிச்சை கோரி காலில் விழுந்து அழுத துரியோதனனையும் யுதிஷ்டிரனையும் பீமனையும் அர்ஜுனனையும் அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டு கண்ணீருடன் அவர்கள் தன் தம்பியரல்ல மைந்தர் என்றார். அவர்கள் விம்மி அழுதபடி அவர் மார்பில் முகம்புதைத்தனர்.

அரிதென்றும் கொடிதென்றும் ஆன ஒவ்வொன்றும் அந்நகருக்கும் அவருக்கும் நிகழ்ந்தது. பெருவெள்ளம் வந்து நகரை மூடியபோது அரண்மனைக் கதவுகளை படகுகளாக்கி தன் குருதியினரை காத்தார். சேற்றுமலையென்றான நிலத்தின் மேல் மீண்டும் தன் நகரை கட்டி எழுப்பினார். முன்னின்று போரிட்டும், உறுதிகொண்டு வழிநடத்தியும் நோயில், எரியில், படையெடுப்பில் இருந்து தன் குடிகளை காத்தார். அதன்பொருட்டு தன் இன்மைந்தரை இழந்தார். வென்றபின் இழந்த மைந்தரை மடியிலிட்டு விழிசோர அழுதார். அவர்களுக்காக நடுகல் நாட்டி நீர்ப்பலியளித்தார்.

ஒருநாள் அவர் கண்ட கனவில் அவருடைய அன்னை குந்தி அவர் துயின்றுகொண்டிருக்கையில் மெல்லடி வைத்து அருகே வந்தாள். அவர் நடைதிருந்தா இளமைந்தனாக இருந்தார். அன்னை வருவதை அவர் துயிலுக்குள்ளும் பேரச்சத்துடன் நோக்கிக்கொண்டிருந்தார். அன்னைக்குப் பின்னால் அவள் நிழல் எழுந்து மச்சில் வளைந்திருந்தது. அது ஒரு மாநாகபடம் போலிருந்தது. அன்னை அவரை கையிலெடுத்தபோது அவ்விழிகளை அணுக்கமாகக் கண்டு அவர் உடல்விதிர்த்து குளிர்ந்தார். ஆனால் நீருக்குள் என குரலில்லாமலிருந்தார்.

அன்னை அவரை கொண்டுசென்று காட்டுக்குள் அமைந்த ஒரு சிறுசுனைக்குள் குளிர்நீரில் முக்கினாள். மூச்சுத்திணற அவர் திமிறி கைகால் நெளித்தபோது இடக்கையில் ஏந்திய வாளால் அவரை அவள் மாறிமாறி வெட்டினாள். மூச்சிரைக்க வெறியுடன் அவரை வெட்டி துண்டுகளாக்கினாள். சுனைநீர் குருதிச்சுழிப்புடன் அலைகொள்ள கால்நீட்டி வைத்து மேலேறிச் சென்றாள். செந்நீர் சொட்டும் அவள் கை நடுங்கியது. அருகே மாநாகம் கருவேங்கை அடிமரமென படம் எடுத்து நின்றிருந்தது. “அன்னையே! அன்னையே!” என அவர் கூவிக்கொண்டிருந்தார். மெல்ல அவர் குரல் நீர்க்குமிழிகளாகி மேலெழுந்து உடைந்து மறைந்தது.

பின்னர் நீருக்குள் துழாவிய இரு கைகளை அவர் கண்டார். அவருடைய கைகளில் ஒன்றை பெண் கை பற்றிக்கொண்டது. பின்னர் பதற்றமும் கொந்தளிப்புமாக அவரை உள்ளே தேடிக் கண்டடைந்து ஒன்றுசேர்த்தன அக்கைகள். அள்ளி எடுத்து ஒன்றெனக் கோத்து மைந்தனாக்கி நிறுத்தின. அவன் முன் மண்டியிட்டு நின்றிருந்தனர் இரு சூதர்கள். “மைந்தா” என்றார் சூதர். “நீ எனக்கு மைந்தன் என அளிக்கப்பட்டாய்… உன் அன்னைக்கு தெய்வங்களின் கொடை நீ.” சூதப்பெண் அவன் தோளைத் தொட்டு வருடி கண்பொங்கினாள்.

“எனக்கு பசிக்கிறது” என்று அவன் சொன்னான். “ஆம், மறந்துவிட்டேன்” என்று சொன்ன சூதர் எழுந்து சென்று அங்கு நின்றிருந்த புரவியின் சாணியை ஒரு வாழையிலையில் எடுத்துக்கொண்டு வந்தார். “உண்க, மைந்தா!” என நீட்டினார். “என்ன விளையாடுகிறீர்களா? இதை எப்படி உண்பது?” என்று அவன் சினத்துடன் கூவ “இங்கே நாங்களனைவரும் இதை உண்டுதான் உயிர்வாழ்கிறோம், மைந்தா” என்றாள் சூதப்பெண். அவன் அருவருப்புடன் “சீ” என அதை தட்டிவிட்டான். “சொல்வதை கேள். நாம் வேறெதையும் உண்ணமுடியாது. எந்த உணவும் முதலில் அப்படித்தான் இருக்கும். உண்ண உண்ணப் பழகிவிடும். கண்களைமூடித் துணிந்து சற்று உண்க…” என்று சூதர் சொன்னார்.

அவன் முகம்திருப்ப அன்னை அதில் சிறிது அள்ளி அவன் வாயில் ஊட்டினாள். வயிற்றில் எரிந்த பசி எச்சிலூறச் செய்தாலும் அவன் குமட்டி துப்பி “வேண்டாம்” என்றான். அவள் விழிகளிலிருந்து நீர் வழிந்தது. “எங்களுக்காக உண்ணுக, மைந்தா! வேறெதையும் நாங்கள் அளிக்கவியலாது. இது உன் அன்னை கை அமுதெனக்கொள்க!” அவன் அவள் தோளைத் தொட்டு “ஆம், உங்கள் விழிநீரால் இனிதாயிற்று இது” என்று சொல்லி அதை வாங்கி உண்டான்.

வாயில் கடுஞ்சுவை என, உள்மூக்கில் கெடுநாற்றமென அதை உணர்ந்தான். முதல் கவளத்தை விழுங்கினான். மீண்டும் மீண்டும் உண்டான். உடல் குமட்டி அதிர்ந்துகொண்டிருந்தது. தனிமையில் சென்று நின்றபோது குதிரைச்சாணி என்னும் சொல்லை உள்ளத்தில் அடைந்தான். அக்கணமே குமட்டி வாயுமிழலானான். உடலுக்குள் இருந்த அனைத்தையும் உமிழ்ந்தான். குருதியை, குடல்களை, இதயத்தை, ஈரலை உமிழ்ந்தான். எண்ணங்களை, கனவுகளை உமிழவேண்டுமென்பதுபோல் ஓசையிட்டு எக்கி அதிர்ந்தான்.

நோயுற்று நினைவிழந்துகிடந்து பலநாட்கள் அவர் வாயுமிழ்ந்துகொண்டிருந்தார். உணவேதும் உட்செல்லவில்லை. உடல் வெம்மைகொண்டு காய்ந்தது. அரைமயக்கில் “குதிரைச்சாணி… குதிரையின் சாணியை…” என்று முனகிக்கொண்டிருந்தார். உடல் மெலிந்து வற்றியது. நிமித்திகர் கூடி அவர் பிறவிநூலை கணித்தனர். “அரசர் மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து நிறைந்துவிட்டார். முற்பிறவி நினைவோ மறுபிறவிக் கருவோ உளம் நிகழ்கிறது. இங்கிருந்து ஆத்மா எழுந்துவிட்டதென்பதையே இது காட்டுகிறது” என்றனர். “இனி நெடுநாட்கள் இவ்வுடல் நிலைக்காது. வயிற்றனல் அவிந்துவிட்டது. நெஞ்சனல் சற்றே எஞ்சியிருக்கிறது. நெய் தீர்ந்த அகலில் சுடர் என நெற்றியனல் தவிக்கிறது” என்றார் மருத்துவர்.

பதினெட்டு நாட்களுக்குப்பின் அவர் விழித்துக்கொண்டபோது அவருடைய அமைச்சர்கள் அந்தணர்களுடன் வந்து அருகமர்ந்து நிமித்திகரும் மருத்துவரும் கூறியதை எடுத்துரைத்தனர். “அரசே, நான்கு வாழ்நிலைகளையும் கடக்காமல் முழு விடுதலை இல்லை என்கின்றன நெறிகள். அரசு துறந்து கானேகுவதே உங்களுக்கு உகந்த வழி. இனி இங்கு நீங்கள் அடைவதற்கும் அறிவதற்கும் ஏதுமில்லை. மைந்தருக்கு முடிசூட்டிவிட்டு மரவுரி அணிந்துகொள்க!” என்றனர். அவர் ஒன்றும் சொல்லவில்லை.

“இனி சிலநாட்கள்தான், அரசே. மேலும் தயங்கினால் மூழ்கும் கலத்தில் அஞ்சிநிற்பவர்போல் மூச்சிழக்கையில் வருந்த நேரும்” என்றார் அந்தணர்தலைவர். விழிநீருடன் அவர் தலையசைத்தார். அதன்பின்னர்தான் குடியவையில் முடிதுறந்து மைந்தருக்குச் சூட்டிவிட்டு சதசிருங்கத்திற்கு கிளம்பிச்சென்றார். சதசிருங்கத்தில் பாண்டு வாழ்ந்து மறைந்த காட்டிலேயே குடியேறி இறுதிநோன்பை இயற்றினார். முதிர்ந்து நிறைவுகொண்டு அங்குள்ள ஏரியில் மூழ்கி உயிர்துறந்தார். அவருக்கு அங்கேயே சிதையொருக்கப்பட்டது. மைந்தர் கூடி எரியூட்ட விண்புகுந்தார். குருதியினரும் குடியினரும் துயர்காக்க, நினைவுகளில் நின்றிருந்தார்.

வசுஷேணர் இப்புவியில் அடைவதற்கேதும் எஞ்சியிருக்கவில்லை என்று அவர் பிறவிநூல் நோக்கிய நிமித்திகர் உரைத்தனர். வேதம் வகுத்த வழியில் இடையூறின்றி சென்றெய்திய வாழ்வு என்றனர் அறிஞர். அவருக்காக தெற்குக்காட்டில் ஒரு நினைவுக்கல் நிறுத்தப்பட்டது. அவர் மைந்தர் ஆண்டுக்கொருமுறை அவர் மறைந்த மீன்நாளில் நீர்க்கடன் கழித்தபின் அக்கல்லுக்கு மலர்சூட்டி பலியிட்டு வணங்கினர். அங்கு நின்றிருந்த குருகுலத்து மன்னர்களின் கல்நிரைகளில் ஒன்றென அவரும் ஆனார்.

wild-west-clipart-rodeo-3குருகுலத்து வசுஷேணரின் கொடிவழியில் அவருடைய மைந்தர் விருஷசேனர் சிலகாலமே ஆட்சிசெய்தார். தந்தை கனிந்த முதுமையில் அரசுதுறக்க முதல்முதுமையில்தான் அவர் அரசு கொண்டார். தந்தையை வாழ்த்திய நல்லூழ் மைந்தரைக் கைவிட்டு நிகர்செய்தது. நோயுற்று விருஷசேனரின் மைந்தர்கள் இறக்கவே அவர்களுக்குப் பின் வசுஷேணரின் இளையோன் அர்ஜுனரின் மைந்தர் அபிமன்யூ அரசரானார். திசைவென்று வீரம் நிறுத்திய அபிமன்யூ இளமையிலேயே சிந்துநாட்டரசர் ஜயத்ரதனால் கொல்லப்பட்டார்.

அபிமன்யூவின் மைந்தர் பரீட்சித் பிறப்பிலேயே நோயுற்றிருந்தார். நாகக்குறை கொண்ட பிறவிநூல் அமைந்த அவரை அரசமரச்செய்து அமைச்சர்கள் ஆண்டனர். பரீட்சித் நாகநஞ்சுகொண்டு அகவைமுதிராமலேயே இறந்தபின் அவர் மைந்தர் ஜனமேஜயன் அரசரானார். தந்தையைக் கொன்ற நாகங்களின் அருளைப்பெறும்பொருட்டு மாபெரும் சர்ப்பசத்ர வேள்வி ஒன்றை அவர் அஸ்தினபுரியில் நடத்தினார். அனைத்து நாகங்களையும் ஆற்றல்கொண்டெழச்செய்யும் அவ்வேள்வியில் ஏழு ஆழங்களிலிருந்தும் நாகங்கள் மேலெழுந்து வந்தன. கரிய காடென படம்தூக்கி நின்றாடி அவரை வாழ்த்தின. அவற்றின் நஞ்சைப்பெற்று அவர் ஆற்றல்மிக்கவரானார். படைகொண்டு சென்று பெருகிச்சூழ்ந்திருந்த எதிரிகளை வென்றார். அஸ்தினபுரியை அச்சமூட்டும் மையமென பாரதவர்ஷத்தின் நடுவில் நிறுவினார்.

ஜனமேஜயன்  கஸ்யை என்னும் தன் அரசியில் இரண்டு மைந்தரை பெற்றார். சந்திரபீடன், சூரியபீடன் என்னும் அம்மைந்தர்களுக்கு நூறு மைந்தர் பிறந்தனர். ஜனமேஜயன் பிறரை வெல்லும்பொருட்டு நாகர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட நஞ்சு அவரிலிருந்து பெருகி நூறு பெயர்மைந்தரிலும் நிறைந்து வளர்ந்தது. அவர்கள் நிலம் கோரி தங்களுக்குள் பூசலிட்டனர். ஆயிரம் படைநிலங்களில் ஒருவரை ஒருவர் கொன்று குருதி பெருக்கினர். முதுமையில் தன் அரண்மனையில் ஒடுங்கியிருந்த ஜனமேஜயன் ஒவ்வொருநாள் புலரியிலும் தன் குருதிவழியினர் போரிட்டு இறந்துவிழுவதைப்பற்றிய செய்தி கேட்டே கண்விழித்தார். ஒவ்வொரு அந்தியிலும் தன் மைந்தருக்காக நோற்று துயிலாதிருந்தார்.

அவர் விழிமுன்னால் இரு மைந்தரும் ஒருவரை ஒருவர் கொன்று மறைந்தனர். சூரியபீடனின் மைந்தர்களில் மூத்தவனாகிய சத்யகர்ணன் தன் உடன்பிறந்தார் அனைவரையும் கொன்றழித்து அஸ்தினபுரியின் அரசுரிமையை பெற்றான். முடிசூடி அமர்ந்த சத்யகர்ணன் ஒரு மைந்தன் மட்டும் எஞ்ச பிற அனைத்து மைந்தரையும் அவர்கள் சொல்முளைக்கும் முன்னரே நாடுகடத்தினான். அவன் மைந்தனாகிய ஸ்வேதகர்ணன் தன் பதினெட்டாம் அகவையில் தந்தையை சிறையிட்டு தான் அரசேற்றான். மறுசொல் உரைக்கலாகுமென ஐயம்கொண்ட அனைவரையும் கொன்றழித்து அஸ்தினபுரியை தன் கைப்பிடிக்குள் நிறுத்தினான்.

ஸ்வேதகர்ணன் சேதிநாட்டு அரசர் சுசாருவின் மகள் யாதவியை மணந்து அஜபார்ஸ்வன் என்னும் மைந்தனை பெற்றான். அவன் மைந்தன் விருஷ்ணிமதன். அவன் மைந்தன் சுசேனன். சுசேனன் சுனிதனை பெற்றான். அவனிலிருந்து ரிச்சன், நிருஜாக்‌ஷு, சுகிகாலன், பரிப்லவன், சுனயன், மேதாவி, நிருபஞ்சயன், மிருது, திக்மன், பிருகத்ரதன், வசுதனன், சதானிகன், உதயனன், அஹிநாரன், கண்டபாணி, நிரமித்ரன் என்னும் மன்னர்களின் நிரை உருவாகியது.

ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொருவருக்கும் நூற்றுக்கணக்கில் மைந்தர்கள் பிறந்தனர். அவர்கள் நிலம்தேடி ஒருவரோடொருவர் போரிட்டு அழிந்தனர். இளவேனிலில் பிறந்து பெருகும் பரல்மீன்கள்போல பிறரை உண்டு தான் பெருகிய சிலரே எஞ்சினர். சிலர் எல்லைகளை உதறி புதிய நிலம் தேடிச்சென்றனர். அறியாப் பாலைகளில், இருண்ட காடுகளில், விசைகொண்ட ஆறுகளுக்கு அப்பால் விரிந்த புல்வெளிகளில், சென்றடையமுடியாத மலையுச்சிகளில் நாடுகளை உருவாக்கினர். அவர்களின் குலநிரைக் கதைகளில் பொருளில்லாச் சொல்லாக கர்ணகுலம் என்பது கூறப்பட்டது.

அஸ்தினபுரியில் ஒருநாளும் குருதி ஓயவில்லை. அங்கே ஆண்ட மன்னர்கள் எவரும் உளமடங்கி இரவுறங்கவில்லை. இறந்து மூச்சுலகை அடைந்த பின்னரும் அவர்கள் நிலைகொள்ளவில்லை. அங்கு அமைந்து மண் நோக்கி “மைந்தர்களே, கொல்லாதீர்கள்! அழியாதீர்கள்!” என்று கூவிப்பதறிக்கொண்டிருந்தனர். அவர்களின் கண்ணீர் இளமழையென அஸ்தினபுரிமேல் பெய்தது. அங்கே பயிர்களும் களைகளும் அந்நீரால்தான் செழித்தன.

குருகுலத்தின் கொடிவழியில் இறுதி அரசனாகிய க்ஷேமகன் நிரமித்ரனின் நூறு மைந்தரில் நூறாமவன். இளமையிலேயே நிகரற்றவனாகவேண்டும் என்று விழைவுகொண்டிருந்தான். தனக்குமேல் நூறு உடன்பிறந்தார் என்பதை எண்ணி எண்ணி அனல்கொண்டான். முடியற்றவன் வெறும்குடியே என அவனுக்குச் சொன்னது குலமுறை கிளத்திய தொல்நூல் மரபு. நிரமித்ரனால் வெல்லப்பட்ட அனைவரையும் எவருமறியாமல் சென்று சந்தித்து இன்சொல்லும் சொல்லுறுதியும் அளித்து தன் நண்பர்களாக்கிக் கொண்டான். அஸ்தினபுரியின் கருவூலத்தை விழைந்த வணிகர்களை நாளைஎன சொல்லிக் கவர்ந்து உடன்சேர்த்துக்கொண்டான். நாகக்குழவியில் நஞ்சு மூப்பதுபோல ஒவ்வொருநாளும் ஆற்றல்கொண்டான்.

க்ஷேமகன் ஒருநாள் காட்டில் செல்கையில் பணிந்த கரிய சிற்றுருவும் ஒளிரும் கண்களும் இனிய நகைப்பும் மென்சொல்லும் கொண்ட சூதன் ஒருவனை சந்தித்தான். விஸ்ரவன் என்ற பெயர்கொண்ட அவன் தென்றிசை ஏகி நூல்கற்று, படைக்கலம் தேர்ந்து திரும்பி வந்துகொண்டிருந்தான். அவன் கொண்டிருந்த திறன்களைக் கண்டு வியந்த க்ஷேமகன் அவனை தன் துணைவனாக்கிக்கொண்டான்.

விஸ்ரவன் கூறிய வழியில் க்ஷேமகன் செயல்பட்டான். நேர்நின்று போர்புரிந்து வெல்ல இயலாத தன் தமையன்கள் ஒவ்வொருவரையாக மருத்துவருக்கும் பரத்தையருக்கும் கையூட்டு அளித்து நஞ்சிட்டுக் கொன்றான். அவர்களின் இளமைந்தர் அனைவரையும் கொன்றுமுடித்தான். அவர்களுக்கிடையே பொய்ச்செய்திகளைப் பரப்பி போரிடச் செய்து அழித்தான். ஒவ்வொரு அழிவிலிருந்தும் தனக்கான படைகளை திரட்டிக்கொண்டான்.

நஞ்சு நஞ்சை என நிரமித்ரன் தன் மைந்தன்  க்ஷேமகனை அறிந்திருந்தான். அவன் ஆற்றல்கொண்டு எழுவதை உணர்ந்து தன் பிற மைந்தரைத் திரட்டி அவனை அழிக்க முயன்றான். அவர்கள் ஒவ்வொருவரும் நிலத்தை விழைந்தனர். ஆகவே ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் ஐயுற்றனர். அவர்களால் ஒன்றென இணைய முடியவில்லை. ஒருவரோடொருவர் அணுகும்தோறும் ஐயம்பெருகி வஞ்சம்விளைந்து பிறரைக் கொன்றனர். வஞ்சமே நெறியென்றானபோது வஞ்சகரே வாழவியலுமென்றாயிற்று. வஞ்சகரோ அவர்களில் தலைசிறந்தவனாகிய க்ஷேமகனையே நாடினர். க்ஷேமகன் அஸ்தினபுரிக்கு வெளியே இரண்டாம் தலைநகரான இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து நிகர் அரசனாக ஆண்டான். தனக்கென தனிப்படை திரட்டிக்கொண்டான்.

நிரமித்ரன் க்ஷேமகனை வெல்லவியலாதவன் ஆனார். அவனை முடிகொள்ளாமல் தவிர்ப்பதே ஒரே வழி என எண்ணி குடிப்பேரவையை கூட்டினார். க்ஷேமகனால் கொல்லப்படாது எஞ்சியவன் அவன் மைந்தனாகிய சந்திரசேனன் மட்டுமே. பதினெட்டு அகவை நிறைந்த அவனுக்கு முடிசூட்ட முடிவெடுத்தார். அவையில் அதற்கான சொல்சூழ்கை நிகழ்ந்துகொண்டிருக்கையில் எவருமறியாமல் அஸ்தினபுரிக்குள் வந்த  க்ஷேமகன் விஸ்ரவன் துணைவர வாளுடன்  அவைபுகுந்து மைந்தனின் தலையை வெட்டி வீழ்த்தினான். அரியணையிலிருந்து அஞ்சி எழுந்து கூச்சலிட்ட நிரமித்ரனை நோக்கி பாய்ந்துசென்று தலைவெட்டிக் கொன்றான்.

அவைமேடையில் விழுந்துருண்ட தலையிலிருந்து குருவின் மணிமுடியை எடுத்து தன் தலையில் சூடி கோல்கொண்டு அரியணையில் அமர்ந்து அரசனானான் க்ஷேமகன். கூடியிருந்த அவையினரை நோக்கி “என்னை வாழ்த்துக!” என்று ஆணையிட்டான். “ஆம், வாழ்த்துக!” என வாளுடன் நின்று விஸ்ரவன் கூவினான். அவையினர் எழுந்து கைதூக்கி “குருகுலத்தான் வாழ்க! அறம்திகழ வந்த அரசன் வாழ்க! மாமன்னர் க்ஷேமகர் வாழ்க!” என்று வாழ்த்து கூவினர். அந்நாளில்தான் துவாபரயுகம் முடிந்து கலியுகம் தொடங்கியது.

விஸ்ரவன் க்ஷேமகனின் அமைச்சனாக முதற்கோல் கொண்டான். தந்தையின் அணுக்கர் அனைவரையும் கொன்றுவிடலாம் என்று க்ஷேமகன் சொன்னபோது அவன் தடுத்தான். “நாம் அவர்களைக் கொன்றால் அறத்திலமைந்தவர் என அவர்கள் குடிகள் நாவில் திகழ்வார்கள். தெய்வங்களாகி அவர்களை ஆள்வார்கள். தெய்வங்கள் மானுடரைவிட ஆற்றல்மிக்கவை. மாறாக அவர்கள் அஞ்சியும் விழைவுகொண்டும் நம்மை ஆதரிப்பார்கள் என்றால் அறமென்று அவர்கள் கொண்ட அனைத்து ஆற்றலையும் இழந்தவர்களாவர். எஞ்சிய குடிகளும் எதிர்ப்பை இழப்பார்கள். அரசே, அறமென்றும் நெறியென்றும் அறிவிலிகள் இங்கு நிலைநாட்டிய நம்பிக்கைகளை அழித்தாலொழிய நம் கோல் இங்கு நிலைக்காது” என்றான்.

அரசரின் கொலையை அறிந்து உளம்கொதித்த குடிமூத்தாரும் குலத்தலைவர்களும் பரிசில்களாலும் அச்சுறுத்தல்களாலும் பணியவைக்கப்பட்டனர். எச்சொல் அளித்தாலும் பணியாத மிகச்சிலர் அரசபடைகளால் தேடித்தேடி கொன்றொழிக்கப்பட்டனர். மூதன்னையர் நாடுகடத்தப்பட்டனர். க்ஷேமகன் சொற்களையே அஞ்சினான். எனவே மறுசொல்லின்றி அரசாளவேண்டும் என விழைந்தான். அஸ்தினபுரியில் அவனை வாழ்த்தும் ஓசைமட்டுமே எழவேண்டுமென ஆணையிட்டான். அவன் விரும்பிய சொல்லை மட்டுமே நாவிலெடுத்த விஸ்ரவன் அவனை அனைத்து முகங்களாலும் சூழ்ந்திருந்தான்.

ஏழு ஆண்டுகளுக்குப் பின் விஸ்ரவன் ஒருநாள் மாலையில் ஏழு காவலர்களுடன் க்ஷேமகன் அமர்ந்து உணவுண்டுகொண்டிருந்த சிற்றறைக்குள் ஒப்புதல் கேளாமல் நுழைந்தான். திகைத்து, சினம் சற்றே எழ “என்ன செய்தி?” என்று கேட்ட க்ஷேமகனை மறுசொல் இன்றி ஒரே வெட்டில் தலை துணித்தான். அத்தலையை அரண்மனையின் முகப்பில் நீண்ட வேல்முனையில் குத்தி நிறுத்தினான். அஸ்தினபுரியிலிருந்து மறுசொல் எழவில்லை. விஸ்ரவனின் படைவீரர்கள் அந்நகரின் அனைத்து சாலைமுனைகளிலும் நிலைகொண்டிருந்தனர்.

தொல்புகழ்பெற்ற குருவின் குலமரபு க்ஷேமகனுடன் அழிந்தது. விஸ்ரவனின் குலம் ஆறு தலைமுறைக்காலம் அஸ்தினபுரியை ஆண்டது. மகதம் பேருருக்கொண்டு எழுந்து படைகொண்டு வந்து அந்நகரை எரியூட்டி முற்றாக அழிக்கும்வரை ஒன்பது அரசர்கள் அங்கே முடிசூடி அரசமைந்தனர். சாம்பல் மூடி கைவிடப்பட்டு கிடந்த நகரிலிருந்து அஞ்சி ஓடியவர்கள் அதை மீண்டும் நினைவுகூரவே விரும்பவில்லை. புராணகங்கையில் ஒருமுறை பெருவெள்ளம் வந்தபோது நகரின் இடிபாடுகள் சேற்றில் மூழ்கின. புராணகங்கை வழியாக மெல்ல மெல்ல பசுங்காடு வழிந்தோடி வந்து அச்சேற்றலைகளின்மேல் பரவி மூடியது. பசுமைக்கு அடியில் வேர்கள் மட்டுமே அறிந்த மந்தணமாக அஸ்தினபுரி எஞ்சியது.

அஸ்தினபுரி நூல்களிலும் கதைகளிலும் மட்டுமே எஞ்சியது. கதைகளுக்குள் அது வளர்ந்து உருமாறி பிறிதொன்றாகியது. பல்லாயிரம் கதைகளில் வாழ்ந்த குருவின் கொடிவழியினரில் மாவீரர்கள் என களம்நின்றவர்கள், அரிய சூழல்களில் தளராதிருந்தவர்கள், எண்ணரிய துயர்களையும் இழப்புகளையும் அடைந்தவர்கள் மட்டுமே நினைவுகளாக நீடித்தனர். ஏனென்றால் மானுடரைப்பற்றிய கதைகள் மானுடரின் நினைவில் நிலைகொள்வதில்லை. கதைகள் தெய்வங்கள் வாழும் களம். மானுடர் அங்கு செல்வதை அவை விரும்புவதில்லை. மானுடரில் தெய்வமெழும்போது மட்டுமே அவர்களுக்கு அங்கு இடமளிக்கப்படுகிறது.

விஷ்ணு, பிரம்மன், அத்ரி, சந்திரன், புதன், புரூரவஸ், ஆயுஸ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன், ஹஸ்தி,  அஜமீடன், ருக்‌ஷன், சம்வரணன், குரு,  ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்‌ஷன், பீமன், பிரதீபன், சந்தனு, விசித்திரவீரியன், பாண்டு, வசுஷேணர், விருஷசேனன், அபிமன்யூ, பரீட்சித், ஜனமேஜயன், சூரியபீடன், சத்யகர்ணன், அஜபார்ஸ்வன், விருஷ்ணிமதன், சுசேனன், சுனிதன், ரிச்சன், நிருஜாக்‌ஷு, சுகிகாலன், பரிப்லவன், சுனயன், மேதாவி, நிருபஞ்சயன், மிருது, திக்மன், பிருகத்ரதன், வசுதனன், சதானிகன், உதயனன், அஹிநாரன், கண்டபாணி, நிரமித்ரன், க்ஷேமகன் என்னும் குலநிரையில் ஒரு பெயர் என வசுஷேணரின் பெயரும் அமைந்திருந்தது.

பாரதவர்ஷத்தின் நாடுகளின் பெயரைக் குறிப்பிடும் நூல்கள் பின்னர் அங்கம், வங்கம், கலிங்கம் என நீளும் ஐம்பத்தாறு பெயர்களில் ஒன்றென அஸ்தினபுரியையும் சொல்லின. அரிதாக மேலும் விரிந்து அந்நாடுகளை ஆண்ட அரசர்கள் குறித்து சொல்லப்பட்டபோது குருகுலத்தோர் என்னும் சொல் குறிப்பிடப்பட்டது. பாரதவர்ஷத்தின் அனைத்து அரசர்களின் பெயர்களும் அடங்கிய பெருநூலான ராஜபிரபாவம் மட்டும் அக்குலவரிசையை முழுமையாக சொன்னது. அப்பெயர்களின் பொருளில்லா நிரையில் ஒன்றென வசுஷேணருடையது இருந்தது.

அந்நூலும் நினைவிலிருந்து மறைந்து ஏட்டுச்சுவடிகள் செல்லரித்து அழிந்த பின் கலிங்கத்தின் தொன்மையான நிமித்திகர்குடிகளில் ஒன்றாகிய சாஜர்களின் நூற்குவைகளில் ஒன்றிலிருந்த ராஜநாமமாலினி என்னும் நிமித்தநூலில் மட்டுமே அப்பெயர்நிரை எஞ்சியிருந்தது. அப்படி ஒரு நூல் அங்கிருப்பதை அவர்களும் அறிந்திருக்கவில்லை. மேலும் எழுபத்தாறு தலைமுறைக்குப் பின் கலிங்கத்தை மகதம் படைகொண்டு கைப்பற்றி எரியூட்டியபோது அந்நிமித்திகர் இல்லம் எரியுண்டு அழிந்தது. அந்நூலும் உடன் மறைந்தது.

நூல் பதினேழு – இமைக்கணம் – 6

wild-west-clipart-rodeo-3இளைய யாதவர் தன் குடில்வாயிலில் வந்து நின்றபோது முற்றத்தின் நெடுமரத்தின் அடியில் வெண்ணிற அசைவை கண்டார். “அங்கரே, தாங்கள் அல்லவா?” என்றார். “ஆம், நானே” என்று கர்ணன் சொன்னான். மேலும் கேட்காமல் இளைய யாதவர் பேசாமல் நின்றார். அருகணையாமல் ஏதும் சொல்லாமல் கர்ணனும் நின்றான். நெடுநேரம் கழித்து கர்ணன் பெருமூச்சுவிட்டான். அவ்வோசை மிக உரக்க என ஒலித்தது. “உள்ளே வருக, அங்கரே” என்றார் இளைய யாதவர். அவன் சிலகணங்கள் தயங்கியபின் மீண்டும் குடில்வாயில் வழியாக வெளியே சரிந்திருந்த செந்நிற வெளிச்சத்திற்கு வந்தான்.

இளைய யாதவர் உள்ளே செல்ல அவனும் தொடர்ந்தான். அவர் மீண்டும் தர்ப்பைப் பாயில் அமர அவன் நின்றுகொண்டிருந்தான். “அமர்க!” என்று இளைய யாதவர் சொன்னார். அவன் பெருமூச்சுடன் அமர்ந்தான். “நீங்கள் நிற்பீர்கள் என நான் அறிவேன்” என்றார் இளைய யாதவர் “ஏன்?” என்றான் கர்ணன். “பெரும்பாலானவர்கள் தத்துவத்தில்தான் எதையும் அறுதியாகச் சொல்லமுடியாது, உலகியலில் அனைத்தையும் உறுதிபடச் சொல்லமுடியும் என நம்புகிறார்கள். அது பிழை, தத்துவம் அருவமானது, உச்சி என்பதனால் சுருங்கிய தளம்கொண்டது, அங்கே உறுதிபட சிலவற்றை சொல்லிவிடமுடியும். உலகியல் எதையுமே வகுத்துரைக்கமுடியாது.”

“இதை அறியாத எவரும் உலகியலில் இல்லை” என இளைய யாதவர் தொடர்ந்தார். “ஆயினும் மானுடர் உரக்க வாழ்க்கை குறித்து அறிக்கையிடுவதும் ஆணையுரைப்பதும் உண்டு. அவ்வாறு குரலெழுந்தாலே அவர் தனக்காகத்தான் அதை சொல்கிறார் என்று பொருள். மிக ஆழத்திலிருக்கும் ஓர் ஐயம் கொண்ட செவிக்காக.” இளைய யாதவர் புன்னகைத்து “நீங்கள் செல்லும்போதே சென்றுவிடமாட்டீர்கள் என அறிந்தேன். திரும்பிவர பொழுதளித்து இங்கே அமர்ந்திருந்தேன். இக்காட்டின் எல்லையை கடந்திருக்கமாட்டீர்கள், நெடுந்தொலைவு சென்றீர்களா?” கர்ணன் புன்னகைத்து “சிலநூறு காலடிகள்” என்றான். “அத்தனை தொலைவுதான் எனில் எளிதில் கடந்துவிடலாம்” என்றார் இளைய யாதவர் சிரித்தபடி.

இளைய யாதவர் “அத்தனை சொல்லியும்கூட உங்கள் துயரை நீங்கள் சொல்லவில்லை, அங்கரே” என்றார். “பிறிதொன்றை மறைக்கும்பொருட்டே அதையெல்லாம் இங்கு சொன்னீர்கள். ஒன்றன்மேல் ஒன்றென சொற்றொடர்களை அள்ளிப்போட்டீர்கள்.” கர்ணன் சீற்றத்துடன் “எவர் சொன்னது?” என்று கூவியபின் மெல்ல தளர்ந்து “ஆம்” என்றான். “ஆம்” என பெருமூச்சின் ஒலியில் சொல்லிவிட்டு தலையை அசைத்தான். “சொல்லுங்கள் அங்கரே, நீங்கள் கொண்டிருக்கும் துயர்தான் என்ன?” என்றார் இளைய யாதவர்.

“நான் சொல்லாத ஒன்று எஞ்சியிருந்தது என்று தோன்றியது” என்று கர்ணன் சொன்னான். “நான் உணர்ந்ததையே சொன்னேன். எனக்களிக்கப்பட்ட களத்தில் விழைவைத் தீட்டி வெற்றிநோக்கிச் செல்வதொன்றே நான் செய்யவேண்டியது. ஆனால் பிறிதொன்றும் இக்களத்தில் உள்ளது. என் மெல்லுணர்வுகள். என்னை அலைக்கழிப்பவை அவையே. இருநிலையில் இருந்தே என் வினாக்கள் எழுகின்றன. இருநிலையை வெல்லவே நான் இங்கு வந்தேன். ஒன்றை பற்றிக்கொள்ளவேண்டும் என விழைந்தேன். என்னைப் பற்றிக்கொள்ளும் அளவுக்கு அதை வலுவுள்ளதாக்க முயன்றேன்.”

இளைய யாதவர் அமைதியாக இருக்க கர்ணன் “நான் இன்று இயற்றவேண்டியது என்ன?” என்று தாழ்ந்தகுரலில் தன்னுள் என சொன்னான். “அவர்கள் என் தம்பியர். அவர்களை கொன்றுகுவிப்பதா? அக்குருதிமேல் நடந்துசென்று இன்னொரு இளையோனை அரியணை அமர்த்துவதா? அன்னையை பெருந்துயரிலாழ்த்தி கொன்றுவிட்டு வென்றேன் எனக் களியாடுவதா? அங்கு நின்றிருப்போர் யார்? என் குருதியினர், என் மைந்தர். அவர்களை வென்று நான் கொள்ளப்போவது என்ன?”

“யாதவரே, வஞ்சத்தை தீர்த்துக்கொள்ளும் கணமொன்றுக்காக என்னுள் நஞ்சு நீறிநீறிக் காத்திருந்தது. கௌரவர் அவையில் அத்தருணம் அமைந்தபோது என்னுள் இருந்து கீழ்மகன் ஒருவன் எழுந்து அதை கொண்டாடினான். ஆனால் அதற்கென நான் எஞ்சிய வாழ்நாளை நிகரீடென்று அளிக்கநேர்ந்தது. நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள், இப்பதினாறாண்டுகளில் நான் ஒருமுறைகூட என் ஆடிப்பாவையை தன்வெறுப்பின்றி நோக்கியதில்லை. நீராட இறங்குகையில் உள்ளிருந்து என்னை நோக்குபவனின் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டே மூழ்கி எழுவேன். சென்ற ஆண்டுகளில் ஒருமுறைகூட கிழக்கெழும் எந்தையின் முன் நான் கைகூப்பி நின்றதில்லை.”

“வெற்றிக்கென்றே செயலாற்றுகின்றனர் மானுடர். ஆனால் வெற்றி எனக்கொள்வது என்ன?” என்று கர்ணன் தொடர்ந்தான். “பிறப்பிலேயே ஒருவனின் வாழ்க்கை பெருந்தோல்வி என வகுக்கப்பட்டுவிட்டதென்றால் அவன் கொள்ளும் வெற்றிகள் அனைத்தும் அத்தோல்வியை மேலும் வளர்ப்பவை அல்லவா? வில்லேந்தி செருகளம் சென்றால் உண்மையில் என் மீதே நான் அம்புபெய்வேன். நான் சேர்த்துவைத்திருக்கும் நஞ்சை என்மேல் பெய்துகொள்வேன். இக்கணம் வரை நான் வாழ்ந்த வாழ்வெல்லாம் வெறும் எதிர்க்குரல் மட்டுமே. இனிஎழும் போரும் அவ்வாறே. எனில் இருத்தலுக்கென்ன பொருள்?”

“நேற்று இரவு எழுந்து என் அம்பொன்றை எடுத்து கழுத்தில் வைத்தேன். ஒருகணம் அதை அழுத்தியிருந்தால் போதும். அப்போது எண்ணினேன், அதை பலமுறை அவ்வாறு வைத்திருக்கிறேன் என. ஒவ்வொருமுறையும் ஒருகணத்திற்கு முன் நின்று பின்வாங்கியிருக்கிறேன். அந்த ஒற்றைக்கணத்தில் நின்று இத்தனைநாள் உயிர்வாழ்ந்துவிட்டேன். இம்முறை அந்த ஒற்றைக்கணத்தில் எழுந்தது ஓர் எண்ணம். விடையின்மை ஒன்றை எஞ்சவிட்டுச் சென்றால் எங்கும் அமைதியிழந்தே இருப்பேன் என்று. வாழ்ந்தறிவதே அவ்விடை என்றால் அதை அடைந்துவிட்டுச் செல்வோம் என்று. இன்னும் இழிவும் இதைவிடப்பலமடங்கு துயரும் வரவுள்ளது என்றால் அதுவே ஆகுக என்று.”

“பின்னர் அம்பை அறையில் வீசிவிட்டு மஞ்சத்தில் சென்றமர்ந்து மதுவருந்தினேன். மெல்ல என் தசைகள் தளர்ந்தன. படுத்து உடலை நீட்டிக்கொண்டபோது உங்களை எண்ணினேன். அக்கணமே எழுந்து இங்கு வரவேண்டுமென உளம்பொங்கியது. நூறுமுறை தவிர்த்து பின் துணிந்து இதோ வந்தணைந்துள்ளேன்” என்று கர்ணன் சொன்னான். “என்னுள் எழுந்ததை முழுக்க சொல்லிவிட்டேன்” என்று பெருமூச்செறிந்தான். “ஆம், முதலில் எழுந்தது இதன் நுரை” என்று இளைய யாதவர் புன்னகை செய்தார்.

கர்ணன் அப்புன்னகையால் இயல்படைந்து “கூறுக யாதவரே, எனக்கு நீங்கள் காட்டும் வழி என்ன?” என்றான். இளைய யாதவர் சுற்றிலும் நோக்கியபின் கைநீட்டி அங்கே கிடந்த சிறுகுச்சியை எடுத்து சாணிமெழுகப்பட்ட மண்ணில் வளைந்து செல்லும் கோடு ஒன்றை வரைந்தார். “இதை தொடுங்கள், அங்கரே” என்றார். கர்ணன் அவர் விழிகளை ஒருகணம் நோக்கிவிட்டு அதன்மேல் கையை வைத்தான். அது நெளிவதுபோலத் தோன்றியது. ஆடும் அகல்சுடரின் விழிமாயம் என நினைத்தான். நெளிவு மிகுந்து கோடு நீண்டு இரு சுவர்களையும் தொட்டது. அவன் கைகளை எடுத்துக்கொண்டான்

அது இருளுக்குள் மெல்லிய நீரொளி எழும் உடல்கொண்ட நாகமென்றாகியது. மேலும் மேலுமெனப் பருத்து சுவர்களைத் தொட்டபடி வளைந்து அந்த அறையை நிறைத்தது. அதன் சுருள்கள் காட்டாற்றின் சுழி எனப் பெருகின. அதன் நடுவே அவர்கள் அமர்ந்திருந்தனர். நாகத்தின் தலை அடிமரம்போல் மேலெழுந்தது. அதன் படத்தின் தசைவளைவுகள் நெளிந்தன. அனல்நா பறக்க இமையாவிழிகள் ஒளியுடன் நிலைநோக்கு கொண்டிருந்தன. அதன் சீறல் ஓசை தன் மேல் காற்றெனப் பதிவதுபோல் கர்ணன் உணர்ந்தான்.

“என் பெயர் கார்க்கோடகன், நான் உன்னை நன்கறிவேன்” என்றது நாகம். “நீயும் ஆழத்தில் என்னை அறிந்திருப்பாய்.” கர்ணன் அதை நோக்கிக்கொண்டிருந்தான். உதடுகள் அசையாமலேயே அதனுடன் அவன் உரையாடினான். “ஆம்” என்றான். “என்னை அறியாத மானுடரே இருக்கவியலாது” என்று கார்க்கோடகன் சொன்னது. “சொல்க, எதன்பொருட்டு என்னை அழைத்தாய்?” கர்ணன் “நான் அழைக்கவில்லை” என்றான். “உன்பொருட்டு அவர் அழைத்தார். நீ கோருவதை உனக்கு அளிக்கும்படி சொன்னார்” என்றது.

திகைப்புடன் “நான் கோருவது எது?” என்றான் கர்ணன். “உன்னைத் தீண்டும்படி” என்றது கார்க்கோடகன். “இல்லை” என அவன் சொல்வதற்குள் மரக்கிளை வளைந்து வந்து அறைந்ததுபோல அவன் தலைமேல் அது அறைந்தது. அதன் பற்கள் அவன் நெற்றியில் பதிய அவன் மல்லாந்து விழுந்தான். அது அவன் மேல் கரிய சுருள்களாக எழுந்து நின்றது. மணிவிழிகள் ஒளிர “நீ கோரியது அளிக்கப்பட்டது” என்றது.

கர்ணன் அதன் சுருள் நடுவே நீருக்குள் என அமிழ்ந்துகொண்டே இருந்தான். அதன் உடல் நீர்த்தண்மை கொண்டிருந்தது, நீர்மைகொண்டு அணைத்தது. ஆழத்தில் கிடந்தபடி அவன் மேலே நோக்கிக்கொண்டிருந்தான். வாளுடன் வரும் குந்தியை அவன் நோக்கினான். “அன்னையே!” என்று அழைத்தபடி தன் கைகால்களை உதறினான். “அன்னையே, இங்கிருக்கிறேன். அன்னையே..” குந்தி அவனை குனிந்து நோக்கியபடி அணுகிவந்தாள். அவள் விழிகளின் சினமும் வஞ்சமும் நீரொளியாகத் தெரிந்தன. கையில் வாள் மின்னியது.

அவன் “அன்னையே!” என்று உடல்நெளித்தான். குந்தி தன் கையிலிருந்த வாளை ஓங்கினாள். “அன்னையே” என அவன் ஓசையின்றி கூவினான். அவளுடைய கையில் ஓங்கி எழுந்த வாள் அசைவற்று நின்றது. பின்னர் அவள் அதை வீசிவிட்டு முகம்பொத்தி அழுதபடி முழந்தாளிட்டு நீருக்குள் அமர்ந்தாள். அவளருகே சுருள்களென எழுந்த கார்க்கோடகனின் பெரும்பத்தி நாக்குபறக்க விழிகள் ஒளிகொள்ள அணுகிவந்தது. “கொலைசெய்க… அது ஒன்றே வழி. கொன்று முன்செல்க!” அவள் இல்லை இல்லை என தலையை அசைத்தாள். “நேற்றை கொல். நாளை என எழ அதுவே வழி…” என்றது நாகம்.

“சீ!” என சீறியபடி அவள் அதை கையால் உந்தினாள். முறிந்த மரமென அது நீரில் அலையிளக விழுந்து மூழ்கி மறைந்தது. கைகளை நீருள் விட்டுத் துழாவியபடி அவள் பதற்றத்துடன் சுற்றி வந்தாள். அவள் கைகள் ஆழத்திற்கு நீண்டு வந்து நெளிவதை, விரல்கள் தவிப்பதை அவன் கண்டான். கால்களால் அடித்தளச்சேற்றை உந்தி உதைத்து நீந்தி எழுந்து அணுகி அதை தொட்டான். அவள் கை விசைகொண்டு வந்து அவனை பற்றிக்கொண்டது. இழுத்து நீர்ப்பரப்புக்குமேலே தூக்கியது. அவன் மூச்சிரைக்க நின்றிருந்தான். அவள் அவனை இழுத்து தன் உடலுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள்.

wild-west-clipart-rodeo-3குருகுலத்து அரசனாகிய பாண்டுவின் அரசி குந்தி சதசிருங்கமெனும் காட்டில் விண்புகுந்த தன் கொழுநனை எரியூட்டியபின் மைந்தரை அழைத்துக்கொண்டு அமைச்சர்களுடன் அஸ்தினபுரிக்கு திரும்பிவந்தாள். நியோகமுறைப்படி அவளில் கருக்கொண்டு மண்நிகழ்ந்து கணவனால் மைந்தர் என ஏற்கப்பட்ட நான்கு மைந்தர்கள் அவளுக்கிருந்தனர். பாண்டுவால் கைக்கொள்ளப்படுவதற்கு முன்பு அவள் ஈன்ற மைந்தனாகிய வசுஷேணன் அவர்களில் மூத்தவன். யுதிஷ்டிரனும் பீமனும் அர்ஜுனனும் அவள் சதசிருங்கத்தில் கருக்கொண்டு ஈன்ற மைந்தர். கணவனுடன் சிதையேறிய இளைய அரசி மாத்ரியின் மைந்தர்களாகிய நகுலனும் சகதேவனும் அவர்களுக்கு இளையோர்.

மூத்த மைந்தன் அவர்கள் அனைவரைவிடவும் உயரமானவனாக, அன்னையின் தோள்வரை தலையெழுந்தவனாக இருந்தான். அவள் அவனை கர்ணன் என்று அழைத்தாள். அவன் இளமையிலேயே உளமுதிர்வுகொண்டவனாக, வில்திறன் மிக்கவனாக இருந்தான். அவர்கள் வருவதை அஸ்தினபுரியில் இருந்த மூத்த அரசரான திருதராஷ்டிரரும் பிதாமகர் பீஷ்மரும் மாதுலர் சகுனியும் மைந்தர்களான கௌரவநூற்றுவரும் அறிந்திருந்தனர். அமைச்சர் விதுரரும் பீஷ்மரும் கோட்டைமுகப்புக்கே வந்து அவர்களை எதிர்கொண்டழைத்தனர். தொலைவில் அவனைப் பார்த்ததுமே பீஷ்மர் முகம் மலர கைவிரித்தபடி அணுகி தோள்வளைத்து உடலுடன் சேர்த்து தழுவிக்கொண்டார். “என்னைவிட உயரமானவனாக ஆவாய். எழுந்து புவியாள்வதற்காக விண்ணவர் அளித்தது உன் உயரம்” என்றார்.

அரண்மனை முகப்பில் சகுனி அவர்களுக்காக காத்து நின்றிருந்தார். அவர் அருகே நின்ற துரியோதனன் தேரிலிருந்து இறங்கிய கர்ணனைக் கண்டதுமே கைகூப்பியபடி அணுகி கால்தொட்டு வணங்கினான். அவனை கர்ணன் தன்னுடன் சேர்த்து தழுவிக்கொண்டான். மறுகையால் நாணத்துடன் அப்பால் நின்றிருந்த துச்சாதனனை இழுத்தணைத்தான். அவர்களை நோக்கி அப்பால் நின்றிருந்த சகுனியை அணுகி “வாழ்த்துக, மாதுலரே!” என கால்தொட்டு வணங்கினான். சகுனி புன்னகையுடன் “இக்கணம் வரை இருந்த ஐயங்கள் இப்போது அகன்றன” என்றார். “சிலர் தெய்வங்களாலேயே தெரிவுசெய்யப்படுபவர்கள்.”

அன்றுமாலை அவர்கள் திருதராஷ்டிரரை சந்திக்க ஒருங்கு செய்யப்பட்டிருந்தது. கர்ணனின் காலடியோசை கேட்டே திருதராஷ்டிரர் உவகைக்குரலுடன் எழுந்தார். “களிற்றுக் காலடியோசை… இந்நகரை ஆளவிருக்கும் மாமன்னனுக்குரியது” என்றார். அருகணைந்த மைந்தனை அள்ளித் தழுவிக்கொண்டார். “என்னுடன் மற்போரிடுக, மைந்தா! உன் தோள்கள் எனக்கு நிகரானவை” என்றார். கர்ணன் நகைக்க அவர் அவனை தன் பெருங்கைகளால் சுற்றிப்பிடித்தார். நகைப்பும் கூச்சலுமாக அவர்கள் பொய்ப்போரிட்டனர்.

குடிப்பேரவையில் சிலர் கர்ணனின் குடிப்பிறப்பைக் குறித்து ஐயம் கொண்டிருந்தனர். விதுரர் அவையிலெழுந்து “மறைந்த அரசர் பாண்டுவால் முறைப்படி மகவேற்பு செய்யப்பட்டவர் இளவரசர் கர்ணன். குருகுலத்தில் அவரே முதல்வர். இக்குடியில் எவருக்கும் அவர்குறித்த மாற்று எண்ணம் இல்லை. இனி மறுப்புரைக்கும் உரிமை அந்தணர்க்கே உண்டு” என்றார். அந்தணர் தலைவரான தௌம்யர் “வேதமுறைப்படி மகவேற்புச்சடங்கு நிகழ்ந்துள்ளது. வேதத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் அரசு அமரத் தகுதியானவரே” என்றார். அவையினர் வாழ்த்தொலி எழுப்பினர்.

இளையோர் நூற்றைவருக்கும் உகந்தவனாக இருந்தான் கர்ணன். பீமனுக்கும் துரியோதனனுக்கும் தோள்நிகர் கொண்ட மல்லன். அர்ஜுனனுக்கு வில்நிகர் கொண்ட கைவலன். யுதிஷ்டிரனுக்கு அணுக்கமான நூல்தேர்வோன். இளையோருக்கு தந்தைவடிவினன். இரு அன்னையருக்கும் விளையாட்டு மாறா மைந்தன். மகளிருக்கு கண்நிறையும் ஆண்மகன். அஸ்தினபுரியின் குடிகளுக்கு யயாதியும் குருவும் ஹஸ்தியும் பிரதீபனும் ஒன்றென எழுந்த அரசன்.

பதினெட்டாண்டு அகவை நிறைந்தபோது ஆன்றோர் கூடிய அவையில் பீஷ்மர் தலைமைதாங்க, திருதராஷ்டிரரும் சகுனியும் வாழ்த்த, தௌம்யர் வேதச்சொல் நிறைக்க, ஐம்பத்தாறு அரசர்களும் வந்து வணங்கியமர கர்ணன் அஸ்தினபுரியின் முடிசூடிக்கொண்டான். பாஞ்சாலத்து இளவரசி திரௌபதியை அவன் மணம்புரிந்தான். அவர்களுக்கு ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். அவர்கள் தந்தையைப்போல் இனியோரும் ஆற்றல்கொண்டவருமாக இருந்தனர்.

மாமன்னர் வசுஷேணரின் ஆட்சியில் அஸ்தினபுரி வயல்கள் செழிக்க, அங்காடிகள் பெருக பொலிவுகொண்டது. பெருந்திறல்வீரர்களான தம்பியர் இருக்க அஸ்தினபுரியை வெல்லும் எண்ணமே எவருக்கும் எழவில்லை. அர்ஜுனன் கிழக்கையும் பீமன் மேற்கையும் துரியோதனன் தெற்கையும் நகுலசகதேவர்கள் வடக்கையும் முற்றிலும் வென்றனர். பாரதவர்ஷத்தின் அனைத்து அரசர்களும் அஸ்தினபுரிக்கு கப்பம் கட்டலாயினர்.

வசுஷேணர் அதர்வம்தேர்ந்த அந்தணர் வழிகாட்ட, நூற்றைந்து இளையோரும் பெரும்படைகொண்டு துணைநிற்க அஸ்வமேத வேள்வி ஒன்றை நிகழ்த்தினார். கரியபெரும்புரவி பாரதவர்ஷத்தின் அனைத்து நாடுகளுக்கும் சென்று முடிமன்னர்களால் வணங்கப்பட்டு திரும்பிவந்தது. மன்னர்கள் அளித்த பெருஞ்செல்வத்தைக்கொண்டு அஸ்தினபுரியில் கங்கைக்கரையில் ராஜசூயப் பெருவேள்வியை நிகழ்த்தினார். கை ஓயும் வரை அந்தணருக்கும் புலவருக்கும் சூதருக்கும் அள்ளி அள்ளி பொன்வழங்கினார். மும்முடி சூடி அமர்ந்தார்.

வசுஷேணரின் புகழைப்பாடும் பதினெட்டு பெருங்காவியங்களை அவைப்புலவர் இயற்றினர். அவை குடிப்பேரவைகளில் அரங்கேற்றப்பட்டன. பாரதவர்ஷமெங்கும் புலவர்களால் பாடப்பட்டன. வெற்றிமட்டுமே நிகழ்ந்த அவர் வாழ்வைப்பற்றி சார்ங்கதரர் எழுதிய மகாவிஜயம் என்னும் காவியமே அவற்றில் ஒப்பற்றது என்று நூலோர் உரைத்தனர். அவரைப்பற்றிய சூதர்பாடல்கள் பாரதவர்ஷத்தின் அனைத்து நகர்களிலும் முச்சந்திகளிலும் புறக்கடைகளிலும் அன்றாடம் பாடப்பட்டன. நாடெங்கும் முனிவர்களுக்கு தவச்சாலைகள் அமைத்தார். வழிதோறும் வணிகர்களுக்குரிய அறச்சாலைகளை நிறுவினார்.

புவியில் நிகழ்ந்த பிறவிநூல்களிலேயே அரிதானது வசுஷேணருடையது என்றனர் நிமித்திகர். பிறவிக் கணம் முதல் ஒவ்வொன்றும் உகந்தவகையிலேயே அமைந்தது அது. கோள் எதிர் கோள் அமையாத பிறவிநூல் ஒன்று இருக்கவியலும் என்பதையே அயல்நிலத்து நிமித்திகர் அறிந்திருக்கவில்லை. அவர்கள் நாளுமென அவர் அவைக்கு வந்துகொண்டிருந்தனர். சிற்றவைகளில் அமர்ந்து அதை ஆராயந்து சொல்லாடினர். அதனை நுணுகி கூர்ந்து பிரித்து இணைத்து நோக்கி எங்கேனும் ஏதேனும் எதிர்நிலையைக் காணமுயன்று ஓய்ந்தனர்

“ஊழ் என்பது ஒருகையில் வாளும் மறுகையில் மலரும் கொண்ட விந்தைப்பெருந்தெய்வம்” என்றார் தென்தமிழ்நிலத்து நிமித்திகர் சாத்தனார். “நஞ்சும் அமுதும்கொண்டு அது வாழ்வை நெய்கிறதென்கின்றன நூல்கள். எவருக்கும் அது முற்றாக கனிந்ததில்லை. எவரையும் கைவிட்டதுமில்லை. இவரை மட்டும் பிச்சியான பேரன்னை என மடியில் அமரவைத்திருக்கிறது. தன் முலைகனிந்து ஊட்டிக்கொண்டே இருக்கிறது.”

“அருகிருந்து அவர் வாழ்க்கையை பார்த்துக்கொண்டிருக்கிறோம். வாழ்நாள் முழுக்க அரசர் எண்ணியது நிகழாதொழிந்ததில்லை. அவருக்கு எதிர்ச்சொல் எழுந்ததில்லை. அவருக்கு எதிரியென்று எவரும் நின்றதில்லை. வெல்லவியலாதென்றும் அடையவொண்ணாதென்றும் எதையும் அவர் இப்பிறவியில் கண்டதில்லை. காலில் ஒரு சிறுமுள் தைத்தபோது அதை எடுத்த அவைச்சேவகனிடம் இந்த வலியைப்போன்ற ஒன்றையா நூல்கள் துயர் என்று சொல்கின்றன என்று அவர் வினவினார் என்று சூதர் கதை ஒன்று உள்ளது” என்றார் தலைமை அமைச்சர் சௌனகர்.

தெய்வங்களுக்குரிய பழுதிலாப்பெரும்பிறவி கொண்டிருந்தமையால் வசுஷேணரை முனிவர் வாழ்த்தினர். நலம் மட்டுமே நாடும் உள்ளம் கொண்டிருந்தமையால் அந்தணர் அவரை போற்றினர். வெற்றியை மட்டுமே அடைந்தவர் என்பதனால் அவரை படைக்கலங்களின் தெய்வம் என்றனர் ஷத்ரியர். பொருள்தெய்வம் தேடிப்பின் தொடர்பவர் என்றனர் வைசியர். ஒருமுறைகூட அறம் பிழைக்கா கோல்கொண்டவர் என்பதனால் குடிகள் அவரை குலதெய்வமென்றே வணங்கினர்.

ஒவ்வொருநாளும் வசுஷேணர் புகழ்மொழிகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தார். அவை உண்மையிலேயே உளமுணர்ந்து உரைக்கப்பட்டவை என்பதனால் அவைமுகமன்களுக்குரிய பொருளின்மை கொண்டிருக்கவில்லை. எனவே அவை செவிகடந்து உளம்சென்று தொட்டன. உள்ளத்திலும் அவை ஒலித்தமையால் மேலும் அழுத்தம் கொண்டன. சொல்பவரின் கேட்பவரின் எண்ணப்பெருக்கை அவை ஆண்டன. பிறிதொன்று இல்லாமல் அவை அவரைச் சூழ்ந்திருந்தன. அவர் அவச்சொல்லையே செவிகொள்ளாது அரசுவீற்றிருந்தார்.

ஒவ்வொரு நாளுமென செல்வமும் நலமும் பொலிந்தன வசுஷேணரின் நாட்டில். இரவலரின்றி அவர் அறமியற்றுவது நின்றது. எதிரிகளின்றி அவர் வீரம் மறைந்தது. செய்வதற்கேதுமின்றி அவர் அவைகளில் அமர்ந்து கண்சோர்ந்தார். அமைச்சருடனும் தோழருடனும் அமர்ந்து நாற்களமாடினார். மீண்டும் மீண்டுமென ஒரே வாழ்க்கையில் அமைவதன் சோர்வை அகற்ற கானாடினார். மாற்றுருக்கொண்டு நாடுலாவினார். ஆனால் அவையும் மீளமீளச் செய்யப்படுவதே என்று உணர்ந்து மெல்ல அரண்மனைக்குள்ளேயே மீண்டும் அமைந்தார்.

“கருவறைத் தெய்வம் பீடத்தில் அமைந்தே உலகுபுரக்கிறது, அரசே” என்றனர் அவைப்புலவர். “அறம் நிலைத்த நாட்டில் தெய்வங்கள் பலிகொள்வதுகூட இல்லை” என்றனர். சூதர்கள் “அலையிலா பெரு நீர்நிலை இந்த அஸ்தினபுரி. அதன் நடுவே இதழ்குலையாது ஒளிகொண்டு நிற்கும் ஆயிரமிதழ்த்தாமரை நம் அரசர்” என்று பாடினர். ஒன்றும்குறைவிலாதமைந்த நகரையும் அதன் அரசனையும் காண விண்ணில் எப்போதும் தேவர்கள் வந்து நின்றிருந்தமையால் அஸ்தினபுரிக்குமேல் ஒளிமிக்க முகில்கணம் ஒன்று வெண்குடையென எப்போதும் நின்றிருந்தது.

நூல் பதினேழு – இமைக்கணம் – 5

wild-west-clipart-rodeo-3ஏழு ஆழங்களுக்கு அடியில் தன் இருண்ட மாளிகையில் இருள்வடிவ அரியணையில் அமர்ந்து அறம்புரந்த மறலியின் முன்னால் வந்து வணங்கி நின்ற ஏவலனாகிய வேளன் பணிந்து “அரசே, தங்கள் ஆணையின்படி திரேதாயுகத்திலிருந்து நைமிஷாரண்யத்தில் காத்துநின்றிருந்தேன். இன்று காலைமுதல் அங்கே இளைய யாதவன் ஒருவன் வந்து குடில்கட்டி குடியிருப்பதைக் கண்டேன். கருமுகில்நிற மேனியன். விளையாட்டுப்பிள்ளையின் விழிகள் கொண்டவன். பீலிசூடிய குழலன். தனித்து தனக்குள் சொல்திரட்டி அங்கிருந்தான்.”

“அரசே, அவன் சென்றவழியெங்கும் பின்தொடர்ந்து சென்று நோக்கினேன். அவன் கடந்துசென்றபோது அனைத்து தாமரைகளும் அவனை நோக்கி திரும்பின. அவன் அருகணைந்ததுமே மூங்கில்கள் இசையெழுப்பின” என்று வேளன் சொன்னான். “யார் அவன் என்று வியந்து சென்று நோக்கினேன். அவன் சாலமரத்தடியில் தனித்து அமர்ந்திருந்தபோது இருபக்கமும் நுண்வடிவில் இரண்டு பேருவத் தேவர்கள் நின்றிருப்பதை கண்டேன். எவர் என்று அவர்களை அணுகி கேட்டேன். தாங்கள் ஜயனும் விஜயனும் என்றனர். விண்ணளந்த பெருமான் மண்ணில் மானுடனாக உருவெடுத்திருப்பதனால் மானுடவிழிகளறியாமல் காவலுக்கு நின்றிருப்பதாக சொன்னார்கள்.”

“இவனா முன்பு ரகுவின் குலத்தில் அயோத்தி நகரில் தசரதன் மைந்தனாகப் பிறந்தவன் என்று அவர்களிடம் கேட்டேன். ஆம், அன்றும் நாங்களே அவனுக்கு இருபுறமும் நின்றிருந்தோம் என்றனர். அக்கணமே அங்கிருந்து கிளம்பி இங்குவந்தேன். எனக்களிக்கப்பட்ட பணிமுடிந்தது என்று எண்ணுகிறேன்” என்றான் வேளன். “தாங்கள் காத்திருந்தவன் அவனே என்பதில் ஐயமில்லை. பெருமாளின் பிறவியுரு அன்றி பிறிதொருவன் அவ்வண்ணம் அனைத்தும் முழுமைகொண்டு அமையவியலாது.”

யமன் தன் அவையமர்ந்த காகபுசுண்டரை அழைத்து வேளனின் செய்தியை கேட்கச்சொன்னார். அவன் சொல்லி முடித்ததுமே “ஐயமேயில்லை, இது அவனே” என்றார். “அரசே, ஒரு யுகம் முழுக்க நீங்கள் காத்திருந்தது இதன்பொருட்டே. நைமிஷாரண்யமே நீங்கள் உசாவும் வினாக்களுக்கு விடையென அழியாச்சொல் எழவேண்டிய இடம்” என்றார் காகபுசுண்டர். யமன் தன் கதையை தன் உருவம் கொள்ளச்செய்து அரியணையில் அமர்த்தி தன்பணியை இயற்றும்படி ஆணையிட்டுவிட்டு காரான் ஊர்தியில் ஏறி மண்ணுக்கு வந்தான். முகிலின்நிழல் என எதையும் கலைக்காமல் மண்ணில் ஊர்ந்து நைமிஷாரண்யத்தின் விளிம்பை அடைந்தான்.

தனக்குரிய தென்றிசையில் அமைந்த சிற்றாலயத்தின் முன்சென்று நின்றான். தன் வினாக்களை ஒருங்குதிரட்டி சொல்லென்றாக்க முயல்கையில் எதுவும் எஞ்சாமை கண்டு திகைத்தான். நிலைகொள்ளாமல் அங்கே நின்று தவித்தான். மீண்டும் மீண்டும் தன்னுள்ளத்தை முட்டிப்பெயர்க்க முயன்றான். பின்னர் சோர்ந்து மெல்ல கால்தளர்ந்து அமர்ந்தான். பிறிதொன்றும் எண்ணத் தோன்றவில்லை. எண்ணியபோது எழும் நாரதரை நினைவுகூர்ந்து “இசைமுனிவரே, வருக! எனக்கு உதவுக!” என வேண்டினான். சிறுகருவண்டின் மூளல் ஓசை எழுந்தது. யாழிசை என நெறிகொண்டது. நாரதர் அவன் முன் தோன்றினான்.

“முனிவரே, எனக்கு உதவுக! ஒரு யுகம் முழுமையும் நான் வினாக்களுடன் இருந்தேன். சொல்லிச்சொல்லி திரட்டி வைத்திருந்தேன். இப்போது என் உள்ளம் ஒழிந்துகிடக்கிறது .நான் அவனை பார்க்கையில் இன்று கேட்பதற்கேதுமில்லை” என்று யமன் சொன்னான். “ஆனால் கேள்விக்குரிய நிறைவின்மையின் பதற்றம் மட்டும் அவ்வண்ணமே எஞ்சுகிறது. கேட்காமல் நான் இங்கிருந்து செல்லவும் இயலாது.” நாரதர் புன்னகைத்து “காலத்திற்கிறைவனே, நீர் இங்கு மண்ணில் மானுட உருக்கொண்டு வந்திருக்கிறீர். நீர் எண்ணுவனவும் மானுட மொழியிலேயே அமைந்துள்ளன. நீர் கேட்கவிழையும் மெய்மை இங்கு இவ்வாழ்வில் என்னவாக நிகழ்கிறதென்பதைக்கொண்டே அதை சொல்வடிவாக்க முடியும்” என்றார்.

“அறிக, வாழ்க்கையிலிருந்து மட்டுமே மெய்யுசாவலின் வினாக்கள் எழமுடியும், விறகில் எரியெழுவதுபோல. வாழ்க்கையின் மீதே மெய்மை நிலைகொள்ளமுடியும், பீடத்தில் இறையுரு போல. இங்குள்ள வாழ்விலிருந்து உம் வினாவை திரட்டுக!” யமன் திகைத்து “நான் இங்குள வாழ்க்கையை அறியேன்” என்றான். “அவ்வண்ணமென்றால் இங்குள்ள வாழ்க்கையை வாழ்ந்தறிக!” என்றார் நாரதர். உளம்சோர்ந்து யமன் தலைகுனிந்தான். நாரதர் கனிந்து புன்னகைத்து அவன் தோளைத்தொட்டு “இங்குள்ள காலத்தையே இமைக்கணமென சுருக்கி அடையமுடியும். இங்கு நீர் விழையும் ஒருவாழ்க்கையில் புகுந்து வாழ்ந்து மீள்க!” என்றார்.

புரியாமல் “அது எவ்வண்ணம்?” என்றான் யமன். “வாழ்ந்த வாழ்வை விழிப்புக்குள் நிகழ்வுகளெனத் தொகுக்கிறது மானுட உள்ளம். நிகழ்வுகளை நினைவுகளாக்குகிறது கனவு. ஆழ்நிலையில் நினைவுகள் குறிகளாகின்றன. குறிகள் செறிந்து மாத்திரைகளாகி துரியத்தில் உள்ளன. இப்புவியில் இன்று இளைய யாதவனைக் காணும் பெருவிழைவுடன் தவித்தும் தயங்கியும் இருக்கும் எவரையேனும் தெரிவுசெய்க! அவனுள் புகுந்து இமைக்கணம் வாழ்ந்து எழுக! நான்குநிலைகளில் அவனுள் அமைந்தெழுந்தால் அவனே ஆவீர். அவன் என பெயர்சூடி முகம் கொண்டு உளம்பூண்டு சென்று இளைய யாதவனைக் கண்டு சொல்லாடுக!” என்றார் நாரதர்.

“அவை அவ்வாழ்வில் அவன் திரட்டிய வினாக்களாகத்தானே அமையும்?” என்று யமன் கேட்டான். புன்னகைத்து “ஆம், ஆனால் எவ்வினாவும் இறுதியில் ஒரேவிடையை சென்றடைவதேயாகும்” என்றார் நாரதர். “இங்கு இமைக்கணக் காட்டில் சொல்லப்பட்டவை என்பதனால் அது காலமற்றது. ஒருவர் பொருட்டு நிகழினும் அது அனைவருக்குமான மெய்மையாக இங்கு திகழ்க!”

நாரதர் அகன்றபின் யமன் கண்களை மூடி ஒருகணம் எண்ண அவன்முன் நிழல்பெருகியதுபோல யமபுரியின் காலவடிவ ஏவலர் வந்து நிறைந்தனர். “செல்க எட்டுத்திக்கும். இக்கணம் எவன் இளைய யாதவனைக் கண்டேயாகவேண்டும் என்று உச்சத்தில் உளம்கொதிக்க எண்ணுகிறானோ அவனைக் கண்டுசொல்க” என்றான். மறுகணமே மீண்டுவந்த ஏவலன் ஒருவன் “அரசே, அங்கநாட்டில் சம்பாபுரியின் அரண்மனையின் மஞ்சத்தறையில் துயில்நீத்து எழுந்து நின்று இருள்நோக்கி ஏங்கும் ஒருவனை கண்டேன். அவன்பெயர் கர்ணன். அவன் இக்கணமே இளைய யாதவனை காணவில்லை என்றால் உயிர்துறந்துவிடுவேன் என்பதுபோல் உடல்விம்மி நின்றிருந்தான்” என்றான்.

“அவனே” என்று சொன்ன யமன் மறுகணமே கர்ணனின் அருகே தோன்றினான். ஒரு கணம் தன்னுள் ஓர் இழப்புணர்வு ஏற்படுவதை உணர்ந்து சற்று அசைந்த கர்ணன் பெருமூச்சுவிட அதனூடாக உள்நுழைந்து வெளியேறி மீண்டும் நைமிஷாரண்யம் வந்தான் தென்றிசைத்தலைவன். அப்போது கரிய நெடிய உடலும், கூரிய விழிகளும், புரிகுழல்சுரிகளும், ஒளிரும் குண்டலங்களும், மார்பில் சூரியபடம் பொறிக்கப்பட்ட பொற்கவசமுமாக அங்கநாட்டரசனாக இருந்தான். நீண்ட காலடிகள் எடுத்துவைத்து நைமிஷாரண்யத்திற்குள் நுழைந்து இளைய யாதவன் தங்கியிருந்த குடிலை சென்றடைந்தான்.

wild-west-clipart-rodeo-3தன் குடிலுக்குள் தரையில் விரிக்கப்பட்ட தர்ப்பைப்புல் பாயில் துயின்றுகொண்டிருந்த இளைய யாதவர் மூங்கில்தட்டியாலான கதவை எவரோ தட்டுவதை கேட்டு விழிப்புகொண்டு எழுந்தமர்ந்து “எவர்?” என்றான். “நான் அங்கநாட்டரசன், கர்ணன்” என்று குரல்கேட்டதும் எழுந்து குழலும் ஆடையும் திருத்தி கதவை திறந்தார். முகம் காட்டும்பொருட்டு நெடிய உடலைக் குனித்து நின்றிருந்த கர்ணன் “நீங்கள் இங்கிருப்பதை அறிந்து வந்தேன். தனிமையில் சந்திக்கவேண்டும் என்று நெடுநாட்களாக எண்ணியிருந்தேன். ஒவ்வொருநாளுமென அது தள்ளிப்போயிற்று. இத்தருணம் இனி அமையாதோ என்று எண்ணினேன்” என்றான்.

“உள்ளே வருக!” என்று அழைத்த இளைய யாதவர் சிக்கிமுக்கிக் கற்களை உரசி அனலெழுப்பி புன்னையெண்ணை இடப்பட்ட மண்விளக்கின் திரியை பற்றவைத்தார். தர்ப்பைப்புல் பாயை விரித்து “அமர்க!” என்றார். கர்ணன் அமர்ந்ததும் தானும் முன்னால் அமர்ந்து “இவ்விரவில் குடிநீர் அன்றி இங்கு விருந்தென அளிப்பதற்கு எதுவும் இல்லை” என்றார். “நான் விருந்துண்ண வரவில்லை” என்று கர்ணன் சொன்னான். “உங்களைச் சந்தித்து என் ஐயம் ஒன்றை கேட்டுச் செல்லவே வந்தேன்.” இளைய யாதவர் புன்னகையுடன் “சொல்க!” என்றார்.

கர்ணன் சிலகணங்கள் தன் அகச்செலவை நிறுத்தி சொற்களை தொகுத்துக்கொண்டு “என் அகம் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. ஒருகணமும் முழுவிழிப்பு நிகழாதபடி அதை மதுவூற்றி அணைத்துக்கொண்டிருக்கிறேன்” என்றான். முதற்சொற்றொடர் அமைந்ததும் உள்ளம் சொல்லென்றாகி எழ, உரத்தகுரலில் “யாதவரே, உள்ளிருந்து ஊறி வளரும் நஞ்சு என்னை எரிக்கிறது. நான் கொண்ட நல்லியல்புகள், தேறியதிறன்கள், கற்றறிந்த மெய்மைகள் அனைத்தையும் அது அழித்துக்கொண்டிருக்கிறது. மீட்பென்று ஏதேனும் இருந்தால் அது உங்களிடமே என்று தோன்றியது” என்றான்.

“அங்கரே, மீட்பென்பது தன்னிடமே என சொல்கின்றன வேதமுடிபின் நூல்கள். தானென்றுணர்தலே மெய்மையிலமர்தல். அதன்பொருட்டு கணந்தோறும் வாயில்களை தட்டுவதொன்றே நாம் செய்யக்கூடுவது. திறக்கும் கணமும் வாயிலும் ஒருங்கமையும் என்றால் மீட்பு நிகழ்கிறது” என்று இளைய யாதவர் சொன்னார். “கணந்தோறும் என நிகழும் ஆயிரம்கோடி அறிதல்களில் ஒன்றில் உள்ளது நமக்கான மெய்மை. அது கல்லில் தெய்வமென எழுந்து நம்மை ஆட்கொள்வதே விடுதலை.”

“ஆம், உங்கள் கொள்கை வேதமுடிபு அல்லவா? ஒவ்வொரு உயிரும் கொள்ளும் மீட்பைப்பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்” என்றான் கர்ணன். அக்குரலில் இருந்த கசப்பைக் கண்டு இளைய யாதவர் புன்னகைத்தார். “சொல்லுங்கள், எனது மீட்பை எவ்வண்ணம் நான் அடையமுடியும்?” என்றான் கர்ணன். இளைய யாதவர் “அங்கரே, மீட்பு என்பது துயரிலிருந்து விடுதலையை குறிக்கும். எது உங்கள் துயரென்று நீங்களே முற்றறிந்தால் மட்டுமே அதை நோக்கிய முதல் அடிவைப்பு நிகழவியலும்” என்றார். “அதை பிறர் அறியவே முடியாது என்பதே மானுடவிளையாட்டு. ஏனென்றால் அது உணரும்போது உருக்கொள்வது. சொல்லும்போதே உருமாறுவது. வகுக்கையில் மீறிநிற்பது.”

“எனவே, மானுடர் எவ்வகையிலும் எங்கும் வெளிப்படுத்தியிருக்கும் அனைத்துத் துயர்களும் பொய்யே” என இளைய யாதவர் தொடர்ந்தார். “அன்பைநாடி, அடைக்கலம்கோரி, சினத்தைமூட்ட, பொறாமையைக் கிளப்ப, வஞ்சம் தீர்க்க, பிழையை மறைக்க, பழியை மறக்க, பொறுப்பை துறக்க என அனைத்துக்கும் மானுடர் கைக்கொள்வது துயரையே. எனவே இவ்வுலகில் பெரிதும் புனையப்பட்டது துயர்தான். புனையப்பட்ட துயருக்குள் எங்கோ ஒளிந்திருக்கிறது மெய்த்துயர், குழைத்துக்கட்டப்பட்ட மண்சுவருக்குள் விதை என.”

“துயர்கள் மூவகை. ஆதிதெய்விகம், ஆதிபௌதிகம், ஆதிமானுஷிகம் என நூல்கள் அவற்றை வகுக்கின்றன. இறைமுதல் துயரும், பொருள்முதல் துயரும் அனைத்துயிருக்கும் உள்ளவை. நோயும், முதுமையும், இறப்பும் இறைவிளையாடல்கள். இழப்பும் வலியும் பொருள்விளைவுகள். அங்கரே, விலங்குகளுக்கும் சிற்றுயிர்களுக்கும் அவைமட்டுமே உள்ளன. அவை துயர்குறித்து எண்ணுவதில்லை. எனவே துயரை பேணிவைத்திருப்பதில்லை. வளர்த்தெடுப்பதுமில்லை.”

“அவ்விரு துயர்களையும் வெல்லும் வழி ஒன்றே. அமைந்திருத்தல், முரண்கொள்ளாதிருத்தல், வழிப்படுதல். ஒவ்வொரு உயிரின் உடலிலும் அவற்றின் நெறியும் இயல்பும் வடிவமென்றும் வழக்கமென்றும் பொறிக்கப்பட்டுள்ளது. மான் தாவலாம், பசு தாவலாகாது. குரங்கு மரமேறலாம் நாய் நிலம்விட்டெழலாகாது. அவ்வியற்கையில் அமைகையில் அவை துயர்களை வெல்கின்றன. அவற்றை ஆக்கிய விசை அள்ளிக்கொண்டுசெல்லும் திசையை விரைந்து சென்றடைகின்றன. அவை செய்யக்கூடுவது அது மட்டுமே.”

“மானுடமுதல் துயர் நமக்கு மட்டும் உரியது. அனைத்துத் துயர்களையும் விதையென்று நட்டு உணர்வுபெய்து மரமாக்கி காடாக்கிக்கொள்கிறோம். நாம் சமைக்கும் அத்துயரை நாமே அள்ளிப்பூசிக்கொள்கிறோம், அணியென சூடிக்கொள்கிறோம். பெருக்கித்தேக்கி அதில் திளைக்கிறோம், அதில் மூழ்கி மடிகிறோம். அதை வெல்லவே வேதமுடிபுக்கொள்கை வழியுசாவுகிறது. அது அறியாமையின் விளைவான துயர் என்பதனால் அறிதலொன்றே அதற்கு மாற்று என்று வகுக்கிறது. கனவில் எழும் காட்டெரியில் இருந்து தப்ப கனவுக்குள் நீர்நிலை தேடுவது வீண்செயல். விழித்தெழுவதே செய்யக்கூடுவது.”

பெரும்சீற்றத்துடன் கர்ணன் கையை தூக்கினான். “அது உங்களுக்கு, சொல்கொண்டு வெறும்வெளியில் தத்துவத்தைப் புனைந்தாடும் நூல்வல்லுநர்களுக்கு. நான் எளியவன். என்முன் கல்லென மண்ணென கைக்கும் கண்ணுக்கும் சிக்குவதாக நின்றுள்ளது என் துயர்… பிறிதொன்றால் அதை மறைக்கவியலாது. உங்கள் அணிச்சொற்கள் ஆயிரம்பெய்தாலும் அதை கரைக்கவும் முடியாது.” இளைய யாதவர் “அவ்வண்ணமென்றால் கூறுக, உங்கள் துயர் என்ன?” கர்ணன் “என் சொற்களல்ல, என் உணர்வுகளால் இங்கு அதை முன்வைக்கிறேன்” என்றான். ‘என் சீற்றமும் கண்ணீரும் அதை சொல்லட்டும்.” இளைய யாதவர் “ஆம், அதையே முதன்மையென கொள்கிறேன்” என்றார்.

சொல்லவிருப்பதை முன்சென்று தொட்டு அறிந்த அவன் உள்ளத்தின் சீற்றம் மேலும் பெருகியெழுந்தது. “இளைய யாதவரே, நீர் அறியாதவரல்ல நான் யாரென்று. எந்தையும் தாயும் எவர் எக்குடியினர் என்று” என்று கூவினான். “ஆம், அறிவேன்” என்றார் இளைய யாதவர். “சொல்க, என் பிறப்புக்கு முன்னரே என் வாழ்க்கைக்களங்கள் முற்றிலுமாக வகுக்கப்பட்டுவிட்டன அல்லவா? ஷத்ரியப்பெருங்குடியில் கருக்கொண்டேன். சூதச்சிறுமகனாக வளர்ந்தேன். அவைதோறும் இழிவுசூடினேன். எனக்குரிய இடங்கள் அனைத்திலும் புறந்தள்ளப்பட்டேன்” என்று கர்ணன் சொன்னான். உணர்வெழுச்சியுடன் இருகைகளையும் விரித்தான். நெஞ்சு ஏறியிறங்க, விழிகள் நீர்மைகொள்ள, இடறிய குரலில் கூவினான்.

“என் தகுதிகளே எனக்கு பகையாயின. என்னை இழிவுசெய்வோர் அவற்றைக் கண்டு அஞ்சி நூறுமடங்கு சிறுமைசெய்தனர். அத்தகுதிகளால் நான் கொண்ட ஆணவம் ஆயிரம் மடங்கென அச்சிறுமையை என்னுள் துயரென்றாக்கியது. நான்கொண்ட துயர்கண்டு என் எதிரிகள் அது வெல்லவியலா படைக்கலம் என்று கண்டுகொண்டனர். அவர்கள் தங்கள் வஞ்சத்தால் நான் என் துயரால் அதைப் பெருக்கி பேருருவம் கொள்ளச்செய்தோம். ஒற்றைக்கலத்தின் நஞ்சை இருபுறமும் நின்று கடைந்து நொதித்துப் பெருகச்செய்தோம்.”

“இழிவை நிகர் செய்வதே இலக்கென்று இதுவரை வாழ்ந்தேன். யாதவரே, நான் கற்ற கல்வியனைத்தும் அவ்விழிவை கடப்பதற்காகவே. நான் தேர்ந்த திறன்கள் எல்லாம் அச்சிறுமைகள் முன் தலைநிமிர்வதற்காகவே. ஒவ்வொரு கணமும் நெஞ்சு நிமிர்த்தியதெல்லாம் உளம்சுருங்கியதனால்தான். அரசும், செல்வமும், கொடையும், போரும், வெற்றியும் அது ஒன்றுக்காகவே. யாதவரே, வாழ்நாளெல்லாம் நான் எண்ணியவை அனைத்தும் என்னை நோக்கும் விழிகளை வெல்வதுகுறித்தே” என்று கர்ணன் தொடர்ந்தான். பேசப்பேச உளம் தொய்ந்து அவன் குரல் தாழ்ந்தது. முறையீடென, வேண்டுதலென ஒலிக்கலாயிற்று.

“ஒருநாள் தேரில் நகர்வலம் செல்கையில் இழிசினன் ஒருவன் மாசு அள்ளும் தன் தொழில் முடித்து அழுக்குடையும் சேற்றுக்கூடையுமாகச் செல்வதை கண்டேன். அந்தியில் மதுவுண்டு களித்து கைவீசி சிரித்தபடி அவன் நடந்தான்.  ‘யாரடா அவன்? வழிவிலகுக. வருபவன் எவர் தெரியுமா? நான் சாரனின் மைந்தன் கர்மன். நிகரில்லாதவன்’ என்று சிலம்பிய குரலில் கூவினான். வழியில் நின்ற அயல்மகன் ஒருவனிடம் உரக்க, ‘எளியவனே, என்ன வேண்டும் உனக்கு? பொன்னா? பொருளா? இதோ உள்ளது எட்டு வெள்ளிப்பணம். இன்று நான் ஈட்டிய ஊதியம். எடுத்துக்கொள். குடி, உண், கொண்டாடு. இது இழிசினனாகிய கர்மன் உனக்களிக்கும் கொடை!’ என்று நகைத்தான்.

“அந்த அயலவன் அருவருப்புடன் ‘விலகிச் செல்க!’ என கைவீசி முகம்சுளித்து சொன்னான். இழிசினன் மாசு தெறிக்க தன் கைகளை வீசி ‘இப்புவியையே நான் அளிப்பேன். எனக்கென்று ஒன்றுமில்லாமல் அளிப்பேன். நான் கொடைவள்ளலாகிய கர்ணன். இப்புவியாளும் அரசன்!’ என்று கூச்சலிட்டான். தன் நுனிக்காலில் எழுந்து நின்று ‘என் தலைசூடும் சூரியனைப் பார். என் கால்களை ஏந்தும் புவிமகளைப்பார். நானே பிரம்மம்!‘ என்றான். அயலவன் இளிவரல் சினமென்றாக ‘செல்க, கீழ்மகனே!’ என கையை ஓங்கிவிட்டு அகன்று செல்ல இழிமகன் ‘அஞ்சி ஓடுகிறான் பேடி!’ என நகைத்தான்..”

“என் உடல் விதிர்த்துக்கொண்டிருந்தது. புரவியை மெல்ல உந்தி முன்னகர்த்தவேண்டியிருந்தது. அங்கு நின்றிருந்தவன் நான். யாதவனே, அவ்விழிசினன் அக்கருவில் பிறந்தமையாலே அவன் வாழ்க்கை வகுக்கப்பட்டுவிட்டது என்றால் இங்கு அறிவரும் முனிவரும் ஆய்ந்தளிக்கும் ஆயிரமாயிரம் மீட்பின் கொள்கைகளால் என்ன பயன்? தெய்வங்களால் ஆவதுதான் என்ன? அவன் அவ்விழிவில் திளைக்கலாம். தன்னைத் திரட்டி எழுந்து தருக்கி நின்று நான் அதுவல்ல என்று அறைகூவலாம். இரண்டும் ஒன்றே. அவன் அதற்கப்பால் ஒரு மெய்மையை ஒருபோதும் தேடவியலாது. எந்நிலையிலும் அவ்விழிவை இல்லையென்றாக்கும் ஒரு தருணத்தைச் சென்றடையவும் இயலாது.”

“என் ஊழ் முற்றாக வகுக்கப்பட்டுவிட்டது. என்னை கருக்கொண்ட அன்னையால், அவளால் மறுக்கப்பட்ட தந்தையால், இல்லாமலான குலத்தால். அவர்கள் கூடநேர்ந்த அந்தக் கணத்தால் அச்சூழலால் நான் ஆவதும் எய்துவதும் முழுமையாக வரையப்பட்டுவிட்டது. எஞ்சியது இம்மாறாப்பாதையும், இங்கு கண்ட முள்ளும் நஞ்சும் புண்ணும் சீழும் கண்ணீரும் மட்டுமே. வெற்றுத் தருக்குகளின் உள்ளீடின்மைகள், தனிமையிருளின் கையறுநிலைகள், பிறர் அறியாத ஏக்கங்கள், பிறருக்குக் காட்டும் கசப்புகள். சொல்க, எனக்கு வேதமுடிபு அளிக்கும் விடைதான் என்ன?” என்று கர்ணன் கேட்டான்.

“இங்கே மாசு அள்ளும் தொழில்புரிந்து இருட்குடில்களில் வாழும் இழிசினருக்கு, ஊன்கிழித்துண்ணும் புலையருக்கு, காட்டிருள் விட்டு வெளிவர இயலாத நிஷாதருக்கு நீங்கள் அளிக்கும் மீட்பின்வழி என்ன? அவர்கள் மெய்மையைச் சென்றடையவைக்கும் கொள்கை என்ன?” அவன் விழிகள் வெறித்து நிலைத்திருந்தன “மாற்றிலாத வாழ்க்கை கொண்டவர்களுக்கு, தன் வாழ்வின் ஒருகணத்தைக்கூட தானே வகுக்க இயலாதவர்களுக்கு, நீங்கள் சொல்வது என்ன?”

அவனை விழியிமைக்காது நோக்கியபடி இளைய யாதவர் அமர்ந்திருந்தார். “நானும் அறிவேன், நானேயிறை என்னும் பெருஞ்சொல்லை. என்னிடம் முனிவர்கள் சொல்லியிருக்கின்றனர், இங்கனைத்திலும் இறையுறைகின்றது என்று. நானேயது என்று நாள்தோறும் சொன்னால் மெய்விழி திறக்கும் என்று சொன்ன முனிவர்களுக்கு அவ்வாறே என்று சொல்லி கைநிறைய பொன்னள்ளி அளித்து வணங்கியிருக்கிறேன். எத்தனை சொற்கள். தன்னுணர்வே பிரம்மம். சொல்லே பிரம்மம். இரண்டின்மையே அது. யாதவரே, ஊழிலாடும் எளியவர்களுக்கு இச்சொற்கள் இல்லாத நாடொன்றின் அரசமுத்திரைகொண்ட நாணயங்கள் என பயனற்றவை அல்லவா?”

“என்றேனும் எழுந்து சூழநோக்கியிருக்கிறார்களா இந்தத் தவமுனிவர்கள்? நீங்கள் படைநடத்துபவர், நாடுசுற்றியவர், நான்காம் குலத்தவர். நீங்களும் அறிந்ததில்லையா இந்த அணிச்சொற்களின் பயனின்மையை? அனைத்தையும் விளக்கிநின்றிருக்கையில் ஆழத்தில் அவைகொண்டிருக்கும் வெறுமையை?. யாதவரே, ஒவ்வொரு கணமும் முன்னரே வகுக்கப்பட்ட இக்களத்தில், ஒவ்வொரு தரப்பும் ஆயிரம்பல்லாயிரமாண்டுகளாக ஒருக்கி நிறுத்தப்பட்ட இந்த ஆடலில் நான் எவரென்றால் என்ன? எதை வென்றால்தான் என்ன?”

“உங்கள் துயர்தான் என்ன? இன்னும் அதை நீங்கள் சொல்லவில்லை, அங்கரே” என்றார் இளைய யாதவர். “இதற்கப்பால் நான் என்ன சொல்லவேண்டும்? பிறப்பாலேயே என் தகுதிக்குரியவை ஏன் எனக்கு மறுக்கப்படவேண்டும்? பிறர்செல்லும் தொலைவுகளை எனக்கில்லை என ஊழே வகுத்துவிட்டதென்றால் கல்வியெதற்கு? அறம்தான் எதற்கு? என் மெய்மையை இக்களத்திற்குள் நின்றுதான் நான் அடையவேண்டும் என்றால் அது எவருடைய மெய்மை?” என்றான் கர்ணன் “இலக்கு தேரும் உரிமை இல்லாத அம்புகளே மானுடர் என்றால் அவர்கள்நோக்கில் இப்பயணம்போல் பொருளற்றது எது?”

“யாதவரே, நீங்களும் உங்கள் அறிவர்கணமும் சொல்லும் மெய்மை ஒளிரும் சொற்களால் இரக்கமற்று விரிந்துகிடக்கும் மண்ணில் ஊன்றிய கால்களுக்கு என்ன வழிகாட்டமுடியும்? உம்மிடம் நான் கேட்கவிழைவது இதுவே. சொல்க, உமக்கு முன்னர் இங்கு மெய்ஞானிகள் வந்ததில்லையா? இனி மெய்ஞானிகள் வரப்போவதுமில்லையா? வந்துள்ளனர் எனில் அவர்களின் சொற்களால் இங்கு ஆனதுதான் என்ன? இன்றுவரை ஒருவருக்கேனும் அன்றாட வாழ்க்கையில் பொருளைக் காட்டி நிறைவுறச்செய்துள்ளதா உங்கள் மெய்மை? நாளை ஒருவரேனும் அதை நம்பி வாழ்க்கைப்பெருக்கில் குதிக்கக்கூடுமா? பசிக்கையில் சோறென்றும் துயர்கொள்கையில் துணையென்றும் சிறுமைக்குத் தாங்கென்றும் நெறியழிவில் சினமென்றும் எப்போதேனும் அது எழுந்ததுண்டா?”

“இங்கு வாழ்வெனத் திகழ்வது என்ன? நெறியற்ற முட்டிமோதல். ஒன்றை ஒன்று தின்று செல்லும் வெறி. நெறியென்று எதையேனும் நம்பியிருப்போர் வீழ்ந்து மிதிபட்டு அழிய தன்னை எண்ணி தானொன்றே ஆக முன்செல்வோர் வெல்கிறார்கள். யாதவரே, என்றும் வெல்வது நாணமற்ற, தற்குழப்பங்களற்ற, இரக்கமற்ற, வெல்லும்விழைவின் விசை மட்டுமே. விழிகொண்ட எவரும் காண்பது ஒன்றே, இங்கே என்றும் நிகழ்வது அறமறியா ஆற்றலின் வெற்றி. எப்போதுமுள்ளது வெதும்பி அழியும் எளியோரின் இயலாமைக் கண்ணீர்” என்றான் கர்ணன்.

“இதோ அறமும் மறமும் முயங்கித்திரிந்திருக்கின்றன. நல்லோரும் நல்லோருக்கு எதிராக வில்லெடுத்து நின்றிருக்கிறார்கள். தன்னை மிஞ்சிய ஆற்றலால் எதிர்க்கப்பட்டால் புல்லோர் போலவே நல்லோரும் குருதிசிந்திச் செத்துவிழுவார்கள். வெல்வது அறமோ மறமோ அல்ல, ஆற்றல் மட்டுமே. ஆற்றல்கொண்டதை அண்டிவாழ்வதையன்றி வேதம் இன்றுவரை எதை இயற்றியிருக்கிறது? வென்றதை அறமென்றும் நெறியென்றும். வழிபடுவதையன்றி நூலோர் இன்றுவரை செய்தது என்ன? வந்தவர் அளித்தது ஒன்றுமில்லை என்று அறியும் எவர் வருபவர் சொற்களை நம்பக்கூடும்?”

கர்ணன் எழுந்து நின்றான். உணர்வெழுச்சியில் முகத்தசைகள் நெளிய கீழே கைகட்டி அமர்ந்திருந்த இளைய யாதவரை நோக்கி “யாதவனே சொல்க, இப்புவியில் என்றேனும் அறம் நின்ற வாழ்க்கை நிகழ்ந்துள்ளதா? இங்கு நீர் சொல்லும் மெய்மைக்கு இங்குள்ள எளியோன் அடையும் நடைமுறைப்பயன் ஏதேனும் உள்ளதா?” என்றான். “பிறகு எதற்காக அதை திரும்பத்திரும்ப சொல்கிறீர்கள் உங்களைப் போன்றவர்கள்?” கடுஞ்சினமும் கசப்பும் ஏளனமாக விரிய பல் ஒளிரச் சிரித்து “வேறெதற்குமில்லை, இறுதிக்கணம் வரை அவன் அஞ்சாமல் ஐயுறாமல் அடிபணிந்திருக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே. தனக்கு அளிக்கப்பட்ட நுகங்களை விரும்பி இழுக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே.”

“வேட்டையில் விழுந்து சிம்மத்திற்கு உடலளிக்கும் மானுக்கு துயரில்லை. இப்புவியை ஆளும் இரக்கமற்ற நெறிக்கு தன்னை அளிக்கிறது அது. மானுடனுக்கு நீங்கள் அறம் என்ற ஒன்றை கற்பித்துவிட்டீர்கள். அது இறைவடிவென்று நம்பவைத்தீர்கள். அது தன்னைக் காக்க பேருருக்கொண்டு எழும் என்று அவன் இறுதிக்கணம் வரை எண்ணச்செய்தீர்கள்” என்று கர்ணன் முழங்கும் குரலில் சொன்னான். “அது உங்கள் சொல் அல்ல. காலந்தோறும் வென்றெழுவதன் சொல்லேவலர் நீங்கள். சவுக்கின்மேல் பூசப்படும் நறுமணத்தைலமன்றி வேறல்ல உங்கள் பெருஞ்சொற்கள்.”

“ஆனால் மக்கள் அவற்றை நம்புகிறார்கள். தன்னைச்சூழ்ந்துள்ள வாழ்க்கையில் ஒரு தருணத்தில்கூட அவை பொருள்கொள்ளவில்லை என்றாலும் அவர்களால் அதை நம்பாமலிருக்க இயலாது. நாகபடத்தின் நிழலில் வாழும் சிதல்கூடு. நம்பினாலன்றி அன்றாடக் களியாட்டுகள் இல்லை, உறவுகளும் கனவுகளும் இல்லை. யாதவரே, எளியவன் மானுடன். அளியன், சிறியன், அறிவிலான். காலந்தோறும் அவன் கைவிடப்படுகிறான். மீண்டும் மீண்டும் கொன்றுகுவிக்கப்படுகிறான். நசுக்கி அழிக்கப்படுகிறான். மண்ணோடு மண்ணென ஆகி மறக்கப்படுகிறான். அவன் விடுத்த விழிநீர் அவன் அழிவதற்குள் காய்ந்து எட்டுபுறமும் திறந்து விரிந்த இருண்ட கடுவெளியில் மறைகிறது”

“அதை எந்தப் பேரறமும் இதுவரை கண்டதில்லை. அதன்பொருட்டு எந்தத் தெய்வமும் இறங்கி வந்ததுமில்லை. ஆம், இது ஒன்றே உண்மை .இதை அல்ல அல்ல என்று விளக்கவே பல்லாயிரம் சொற்கள், நூல்கள், கொள்கைகள், கவிதைகள், மெய்மைகள். வென்றவருக்கு தாலத்தில் அன்னம், தோற்றவனுக்கு கனவில் அன்னம். அக்கனவை வனைபவர் நீங்கள், உங்கள் ஆசிரியர்கள், உங்களைப்போன்ற சொல்வலர்கள்.” மேலும் எதுவும் சொல்வதற்கில்லாமல் கர்ணன் உளம் அமைந்தான். தலையை இல்லை இல்லை என அசைத்துக்கொண்டு நிலம் நோக்கி அமர்ந்திருந்தான். இளைய யாதவரும் ஒன்றும் சொல்லவில்லை.

நெடுநேரம் கழித்து கர்ணன் தலைதூக்கி “சொன்னபின் தெரிகிறது இது வினாவே அல்ல, விடை. உம்மிடமிருந்து நான் தெரிந்துகொள்ள ஏதுமில்லை. நான் எண்ணுவதை கூர்தீட்டி சொல்லிச்செல்லவே வந்தேன். என் உள்ளம் தெளிந்துவிட்டது. இங்கிருப்பது இரண்டே. ஊழ்வகுத்த பெருங்களம். அதில் நாம் திரட்டிக்கொள்ளும் தடையற்ற ஆற்றல். இங்குள்ள வாழ்வென்பது அக்களத்தில் அவ்வாற்றல் நிகழ்த்தும் கோலம் மட்டுமே. அறமென்றும் நெறியென்றும் மெய்மையென்றும் பெருகிச்சூழும் சொற்களை நம்பாமல் தன் விழைவை மட்டுமே நம்புபவர்கள் வெல்கிறார்கள். அச்சொற்களையே படைக்கலமாகக் கொள்கிறார்கள்.”

இளைய யாதவர் “அத்தனை தெளிவிருந்தால் நான் மேலும் ஏதும் சொல்வதற்கில்லை, அங்கரே. உமக்குரிய மெய்மையை நீர் கண்டடைந்துவிட்டீர் என்றே பொருள். செல்க, உமக்கமைந்த களத்தில் உமது ஆற்றலைப் பெருக்கி நிலைநாட்டி வென்று அனைத்தையும் அடைக! நிறைவுகொள்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

கர்ணன் இதழ்கோட கசப்புடன் புன்னகைத்து “ஆம், தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றியுடையேன். நான் வந்ததன் பயன் இவ்வண்ணம் என்னை தொகுத்துக்கொள்வதற்கே போலும். எவற்றின் முன்நின்று சினம்கொள்ள விழைகிறேனோ, எவற்றை சிறுமைசெய்து தருக்க எண்ணுகிறேனோ அவற்றின் முகம் நீங்கள்” என்றான். மேலாடையைச் சீரமைத்து “நன்று, கிளம்புகிறேன், யாதவரே” என்று திரும்பி வெளியே சென்றான். இருண்ட வெளியை நோக்கியபடி படிவாயிலில் ஒருகணம் நின்றபின் இறங்கி மூழ்கினான்.

நூல் பதினேழு – இமைக்கணம் – 4

இரண்டு : இயல்

wild-west-clipart-rodeo-3கோமதிநதியின் கரையில் அமைந்த நைமிஷாரண்யம் தேவர்களின் வேள்விநிலம். சூரியனின் அவிப்பெருங்கலம். சொல்பெருகும் காடுகளுக்கு நடுவே சொல்லவியும் பெருங்காடென அது முனிவரால் வாழ்த்தப்பட்டது. மண்புகுவதற்கு முன்பு சரஸ்வதி ஆறு வடகிழக்கிலிருந்து தென்மேற்கு நோக்கி ஓடிய பாதையில் இருந்த ஒற்றைப்புள்ளியில் ஒருகணத்தில் கிழக்காகத் திரும்பியது.

சத்யயுகத்தில் முதல் சௌனக முனிவர் அதன் கரைக்காட்டில் தவம்செய்கையில் நீர் விளிம்பில் வேள்விசாலையை அமைத்து வேதியரையும் முனிவரையும் அழைத்து அகாலயக்ஞம் என்னும் பெருவேள்வி ஒன்றை ஒருக்கினார். காலத்தை நிறுத்தி அதிலெழும் மெய்மையில் அமர்தலை வேட்டார். வேள்வி நிகழ்ந்துகொண்டிருக்கையில் அவிக்கொடை அளித்த சௌனகர் பிறிதொன்றென ஏதும் அகத்திலெஞ்சாமல் வேதச்சொல்லென்றே உளம் அமைந்தார். நடுவே அவிசொரியும்பொருட்டு மரக்குடத்தை எடுத்து அருகே ஓடிய நதியின் நீரை அள்ளப்போனார். தனக்கு இடப்பக்கம் மேற்கே ஓடிய நதியை வலப்பக்கம் கிழக்கென அவர் அகம் மயங்கியிருந்தது. மைந்தன் கைநீட்ட அவன் வேள்விக்குச் செவிலியென உடனிருந்த அன்னை அக்கணமே தன்னையறியாமல் கிழக்கே திரும்பி ஒழுகி அருகணைந்தாள்.

நீரள்ளி வேள்விமுடிக்கும் வரை சௌனகர் அதை அறியவில்லை. அருகிருந்த அந்தணர் சொல்மறந்து திகைத்தனர். வேள்விமுடித்தெழுகையில் நதி திசைமாறி ஒழுகிய செய்தியை அவரிடம் அந்தணர் சொல்ல அவர் “பிறிதொன்று எண்ணுவாளோ அவள்?” என்று மட்டுமே உரைத்தார். அன்னை கனிந்த அக்கணத்தை அழியாது நிறுத்த அதன் கரையிலமைந்த காட்டுக்கு இமைக்கணக்காடு என்று முனிவர் பெயரிட்டார்.

நைமிஷாரண்யம் அதன் பின்னரே தேவர்களுக்கு இனியதும் சூரியனுக்கு உரியதுமாக ஆகியது. காலத்தை நாட்களெனப் பகுத்து அறிகாலம் சமைக்கும் கதிரவன் அங்குள்ள அந்நிமிஷத்தை வலம்வந்து வணங்கிச் சென்றான். விசைகொண்டு சுழன்ற காலநிகழ்வு அதை தன் அச்சுப்புள்ளியென்று கொண்டது. மாறும் அனைத்தும் அம்மாறாமையால் தங்களை அளந்துகொண்டன.

சத்யயுகத்தின் இறுதியில் முனிவர்கள் பிரம்மனிடம் சென்று “தந்தையே, காலமின்மையில் நிற்பது எதுவோ அதுவே மெய்மையும் அறமும் வேதமும் ஆகும். காலத்தைக் கட்டிநிறுத்தும் கலைதிகழ்வதனாலேயே இதை சத்யயுகம் என்றனர். இனிவரும் யுகங்களில் காலம் மேலும் மேலும் விசைகொள்ளும். கிருதயுகத்தில் காலம் இருமடங்கு விரைவடையும், மானுடர் உயிர்க்காலம் பாதியெனக் குறையும். திரேதாயுகத்தில் அது மேலும் ஒருமடங்கென்றாகும். துவாபரயுகத்தில் இன்னொருமடங்காகும். கலியுகத்தில் பிறிதொருமடங்காகி வாழ்வகவை சுருங்கும்” என்றனர்.

“வாழ்வே மெய்மையை அறமெனச் சமைக்கிறது. காலம் உருமாறும்போது அறம் திறம்பிழைக்கலாகுமா? அன்று பன்னிருகால்கொண்டு பாயும் அப்புரவியில் அமர்ந்திருக்கையில் நாங்கள் காலமின்மையை எப்படி உணர்வோம்? எங்கு சென்று அகாலத்தின் பீடத்தில் அமர்ந்து யோகம் பயில்வோம்?” என்று கேட்டனர்.

பிரம்மன் காலத்தை பன்னிரு ஆரங்களாகவும், மெய்மையை அதன் மைய அச்சாகவும், செயல்விளைவுச்சுழலை விளிம்புவட்டமாகவும் கொண்ட மனோமயம் என்னும் தன் ஆழியை உருட்டிவிட்டார். “இது எங்கு சென்று அமைகிறதென்று நோக்குக! அது காலமிலியில் அமையும் காடென்று அறிக! அங்கு ஓர் இமைக்கணமே முடிவிலாக் காலமென்று உறைந்திருக்கும். அங்கே தவம்செய்து அதுவாக எழும் மெய்மையை அறிக!” என்றார்.

பிரம்மனின் மனோமயம் பெருவெளியை அறிந்தது – அறியப்படவேண்டியது என இரண்டாகப் பகுத்தபடி உருண்டு உருண்டு செல்ல முனிவர் அதன் பின்னால் விரைந்தோடினர். சரஸ்வதி மண்புகுந்தபின், அவள் நூறு மகள்களில் ஒருத்தியாகிய கோமதியால் அமுதூட்டப்பட்டு செழித்திருந்த பசுங்காட்டின் மையமென அமைந்த மனோஹரம் என்னும் வட்டவடிவமான குளிர்ச்சுனையின் நடுவே எழுந்திருந்த மனோசிலை என்னும் கரிய பெரும்பாறையை தன் அச்சுப்புள்ளியெனக் கொண்டு அவ்வாழி வந்தமைந்தது.

அதுவே நைமிஷாரண்யம் என உணர்ந்து அங்கே முனிவர்கள் குடியேறினர். அதன் தெற்குமூலையில் சௌனகரின் ஆலயம் அமைந்தது. அதன் எல்லைகளை திசைத்தேவர்கள் காத்தனர். அதன் எல்லைக்கு வெளியே பன்னிரு பூதங்கள் காவல்நின்றன. அங்கே பருவமாறுதல்களை அறியாத மரங்களும் செடிகளும் தழைத்தோங்கின. அவற்றில் காலம் ஒழுகுவதென்பதையே அறியாத பறவைகளும் பூச்சிகளும் குடியேறின. அங்கு வாழ்ந்த விலங்குகளின் காலடிகளால் காலம் அளக்கப்படவில்லை. அவற்றின் கால்தடங்கள் எவையும் எஞ்சவில்லை.

நைமிஷாரண்யத்தில் இலைகளும் இமைப்பதில்லை. அங்குள்ள பறவைகள் விலங்குகள் அனைத்தும் மீன்விழிகளே கொண்டிருந்தன. அருந்தவம் இயற்றிய முனிவர்களே அங்கு நுழையலாகும். அதற்குள் நுழைபவர் அக்கணமே இமையார் ஆயினர். தேவர்களுக்குரிய அனைத்தும் அவர்களுக்கு கையகப்பட்டன. அமுதுண்டு அழியாமை கொண்டவர், எடையை வடிவை வண்ணத்தை மாற்றத்தெரிந்தவர். விசைகளால் அலைக்கழிக்கப்படாதவர். அகம்நிலைத்தவர்.

இமைக்கையில் உலகம் அழிந்து பிறிதொன்று பிறக்கிறது. இமைக்கண உலகங்களைக் கோத்து நிலையுலகு சமைப்பது மாயை. அதை அகற்றிய அங்குள்ள முனிவர் எதுவும் அழிவதில்லை என்பதை உணர்ந்தவர். நிலை என்பது மாயை என்றும் மாற்றமென்பது அதன் அடியிலிருக்கும் மாமாயை என்றும் தெளிந்தவர். காலத்தைக் கடந்து நிற்கும் மெய்யைத் தேடும் வேள்விகள் அங்கே இயற்றப்படவேண்டும் என்று வகுத்தனர். காலமிலியில் அமர்ந்த காவியங்கள் அங்கே சொல்லப்படவேண்டும் என்றாயிற்று. அங்கே எழும் ஒவ்வொரு சொல்லும் மறுகணம் என ஒன்றின்றி என்றுமென நிலைகொள்ளும் என்று நிறுவப்பட்டது.

wild-west-clipart-rodeo-3இறுதிக் கோரிக்கையும் மறுக்கப்பட்டு வெற்றுக்கைகளுடன், வெறுமையில் எழுந்த புன்னகையுடன், அஸ்தினபுரியில் இருந்து பாண்டவர்கள் வாழ்ந்த உபப்பிலாவ்யத்திற்கு திரும்பிவந்த யாதவராகிய கிருஷ்ணன் அங்கே அரசர் கூடிய அவையில் எழுந்து “இனி ஒன்றும் செய்வதற்கில்லை, அரசர்களே. போர் நிகழ்க என்பதே மூதாதையரும் தெய்வங்களும் ஊழும் இடும் ஆணை. அது நிகழ்க!” என்றார். ஒவ்வொரு கணமும் போரையே எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்றாலும் அச்சொல்லால் அனைவரும் சோர்வுற்றவர்கள்போல சொல்லின்றி வெறுநோக்கு கொண்டு அமர்ந்திருந்தனர்.

அஸ்தினபுரியில் போர்முன்னெடுப்புகள் வீச்சுகொண்டிருப்பதை அவர்கள் அறிந்திருந்தனர். புருஷமேதவேள்வியில் அந்தணரைப் பலியளித்து தெய்வங்களை துணைகொண்டிருந்தனர். பாரதவர்ஷத்தின் முதன்மை ஷத்ரியர்கள் அனைவரும் படைகொண்டு அவர்களுடன் சேர்ந்திருந்தனர். பிதாமகரும் ஆசிரியரும் என பெருவீரர்கள் படைக்கலம் ஏந்தியிருந்தனர். வெல்லற்கரிய அப்படைபோல் பிறிதொன்று பாரதத்தில் அமைந்ததில்லை என்று அவர்களிடம் சூதரும் புலவரும் சொல்லிக்கொண்டே இருந்தனர்.

அவையில் அமைதி நீடிக்கவே பேரரசியாகிய குந்தி எழுந்து “நன்று, இனி போரைத் தவிர்ப்பதைப் பற்றி ஒருசொல்லும் எண்ணப்பட வேண்டியதில்லை. போர் நிகழும் என்றான பின்னர் அவ்வாறு எண்ணுவது ஆற்றலை குறைக்கும். இனி கணம்தோறுமென நம் போர்விழைவு மூண்டெழுக! நம் படைக்கலங்கள் நாளும் கூர்கொள்க! நம் வஞ்சங்கள் அனல்சூடுக! நம் நம்பிக்கைகள் உறுதிப்படுக! நாம் வெல்வோம். மண்மகளும் பொன்மகளும் புகழ்மகளும் நம்மை வந்தணைவார்கள். அம்மூவரால் மண்ணில் வாழ்த்தப்பட்டவர்கள் எச்சமில்லாது உளம்நிறைந்து மண்நீங்குவர். அவர்களை விண் வந்து அழைத்துச்சென்று தேவருலகில் அமரச்செய்யும். அவ்வாறே ஆகுக!” என்றாள்.

அவள் உரைத்த சொற்களிலில் இருந்து அவை மெல்ல பற்றிக்கொண்டு மேலெழுந்தது. பீமன் “ஆம், இதுவரை நாம் பேசிய அமைதிச்சொற்களால் கோழைகள் என்று பெயரீட்டிவிட்டோம். இனி அஞ்சாமையால், தயங்காமையால் அவ்விழிவைக் கடந்தாகவேண்டும்” என்றான். யுதிஷ்டிரர் “மந்தா, அமைதிச்சொல் எடுத்தது நமக்கு பெருமையே. நாம் இறுதிவரை முயன்றோம் என்பதை நம் கொடிவழிகள் அறிக! போரின் அழிவுகளுக்காக அன்னையரும் சான்றோரும் அந்தணரும் முனிவரும் நம்மை பொறுத்தருள்வார்கள். உயிர்க்குலங்கள் அனைத்திடமும் நாம் பொறைகோர அச்செயலே நமக்கு அடிப்படை” என்றார்.

அதன்பின் அவர்கள் ஒவ்வொருவரும் பேசிப்பேசி தங்களை எரியூட்டிக்கொண்டனர். “ஐந்து சிற்றில்களும் அளிக்கவியலாதென்று சொன்னவன் கொண்ட மண் அனைத்தையும் நாம் வென்றெடுக்கவேண்டும். இல்லையேல் நமக்கு பெருமையேதுமில்லை” என்று துருபதர் சொன்னார். விராடர் எழுந்து “எங்கள் கொடிவழிகள் அந்நிலத்தை எதிரிலாது ஆளவேண்டும். இந்திரனின் மின் கொண்ட அக்கொடியை வளமிக்க குருதிச்சேற்றில் ஆழ நடுவோம்” என்றதும் அவையமர்ந்திருந்தோர் எழுந்து வெறிப்போர் கூச்சலிட்டனர்.

அபிமன்யூ “என் வில்லுக்கு இரையாகுக அஸ்தினபுரியின் நரிபெற்ற குருளைக்கூட்டம்” என்றான். அவையில் எழுந்த அரசர்கள் களிவெறி கொண்டு கைவீசி நடனமிட்டனர். சாத்யகி “எவர் அரசரென்று உணரட்டும் யாதவ ஆத்திரள். அவர்களை ஆளட்டும் ஒளிமிக்க படையாழி!” என்றான். அவையில் என்ன நிகழ்கிறதென்றே தெரியாத கொந்தளிப்பு நிறைந்திருந்தது.

திருஷ்டத்யும்னன் எழுந்து தன் தொடையை ஓங்கி அறைந்து “என் குலக்கொடியை அவைச்சிறுமை செய்தவனின் நகர் எரிகொள்வதைக் கண்டபின்னரே இனி என் நெஞ்சக் கவசத்தை கழற்றுவேன்” என்றான். அச்சொல்லால் அனைவரும் நிகழ்ந்தவற்றை மீளுணர்ந்து நெஞ்சவிந்தனர். அவையெங்கும் அமைதி சூழ்ந்தது.

சகதேவன் எழுந்து “என் வஞ்சம் அவ்வண்ணமே உள்ளது. சூதுக்கள்வன் சகுனியைக் கொன்று குருதிகாண்பேன்” என்றான். அவை ஆர்ப்பரிக்க நகுலன் எழுந்து “ஒருகணமும் சோர்வின்றி போர்முகப்பில் நிற்பேன். எத்தருணத்திலும் அளிகொண்டு என் வஞ்சத்தை மறக்கமாட்டேன்” என்றான்.

அனைவரும் அர்ஜுனனை நோக்க அவன் கைகளைக் கட்டியபடி அசையாது அமர்ந்திருந்தான். பீமன் அவனை நோக்கியபடி சிலகணங்கள் பொறுத்தபின் தன் தோள்களை அறைந்து அவையை நடுக்குறச் செய்தபடி எழுந்தான். ஓங்கிய குரலில் “அனைவரும் அறிக! என் இளையோன் வில்விஜயன் கையால் மறைவர் பிதாமகர்களும் ஆசிரியர்களும். வஞ்சக் கர்ணனையும் இழிமகன் ஜயத்ரதனையும் அவன் கொன்று களத்திலிடுவான். இது அவனுக்கு என் ஆணை!” என்றான்.

அவையமர்ந்த அரசர்கள் கண்ணீருடன் நெஞ்சிலறைந்து கூச்சலிட்டபடி அலைகொள்ள பீமன் “கேட்கட்டும் அவை, அறிக மூதாதையர், ஆணைகொள்க தெய்வங்கள்! கௌரவர் குலம் முற்றழிப்பேன். அவர்களின் முதல்வனை தொடைபிளந்து மாய்ப்பேன். அவன் இளையோன் நெஞ்சு போழ்ந்து குருதியுண்பேன். குலாந்தகனாகிய பீமன் நான்! காலப்பேருருவன். என் குலக்கொடியை சிறுமைசெய்தவர்கள் எவரும் மண்ணிலெஞ்சமாட்டார்கள். கொழுங்குருதியால் தங்கள் கடன்நிகர் செய்வார்கள். ஆணை! ஆணை! ஆணை!” என்றான்.

அரியணையில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரர் கைகூப்பி கண்ணீர் மல்கினார். அருகமைந்த திரௌபதி அசைவிலா கருஞ்சுடர் என தெரிந்தாள். அவை தன்னைத் தான் கிளர்த்தி உச்சத்தை சென்றடைந்தது. வாள்களையும் வேல்களையும் தூக்கி ஆர்ப்பரித்தனர். வெற்றிவேல் வீரவேல் என்னும் முழக்கம் ஓய்ந்து ஓய்ந்து மீண்டும் மீண்டுமென எழுந்தது. பின்னர் மெல்ல அது அடங்கி அனைவரும் அமர்ந்தபோதுதான் அவர்கள் இளைய யாதவரை நோக்கினர். அவர் விழிகளை நிலம்நோக்கித் தாழ்த்தி அமர்ந்திருந்தார்.

யுதிஷ்டிரர் எழுந்து தன் கோலைத்தூக்க அவையினர் அவர் சொல்லுக்கு செவியளித்தனர். “இதோ அரசாணை! இக்கணம் முதல் பாண்டவப்பெரும்படையின் முதன்மைப் படைத்தலைவராக மாமன்னர் துருபதர் நிறுத்தப்படுகிறார். அவருக்குத் துணைநிற்பவன் என் இளையோனாகிய பீமசேனன். அவர்களின் ஆணைப்படி இங்கு அனைத்தும் அமைக!” என்றார் யுதிஷ்டிரர். அவர் சொற்களை ஏற்று அவைச்சங்கம் ஆம் ஆம் ஆம் என முழங்கியது.

துருபதர் எழுந்து தன் வாளைத் தூக்கி மும்முறை ஆட்டி “இனி நமக்கு பொழுதில்லை. பிசிறுகளும் உதிரிகளும் இன்றி நம்மால் ஆகக்கூடிய அனைத்துப் படைகளையும் ஒன்றென்றாக்கவேண்டும். அவற்றை நிரைவகுத்து அட்டவணையிட்டு அக்ரோணிகளாக அனீகினிகளாக பிருதனைகளாக வாகினிகளாக கணங்களாக குல்மங்களாக சேனாமுகங்களாக பத்திகளாக பிரிக்கவேண்டும். ஒவ்வொன்றுக்கும் தலைவர்களும் கொடிகளும் ஒலிக்குறிகளும் ஒளிக்குறிகளும் அறிவிக்கப்படவேண்டும். ஏழுமுறை போர் ஒத்திகை நிகழவேண்டும். பன்னிருமுறை பிரித்து இணைக்கவேண்டும்” என்றார்.

“போருக்கென உணவும் விலங்குத்தீனியும் படைக்கலங்களும் தேர்களும் சுமைவண்டிகளும் ஒருக்கப்படவேண்டும். போரெழுகைக்கான வேள்விகள் நிகழவேண்டும். பலிக்கொடைகள் நிறைவேற்றப்படவேண்டும். சூதர்களுக்கும் அந்தணர்களுக்கும் பரிசளித்த்து சொல்கோரப்படவேண்டும்” என அவர் தொடர்ந்தார் “இனி நமக்கு ஒவ்வொரு கணமும் பணியுள்ளது. இனி ஐயமும் மறுவினாவும் இல்லை. தயக்கமும் சோர்வும் அறவே இல்லை. எழுக, என் குடியே! என் உறவுப்பெருக்கே! என் நட்பே! பாரதவர்ஷத்தின் உயிர்விசைகளே! நாம் வெற்றிநோக்கி இதோ கிளம்புகிறோம்.”

அவை முழங்கி அதிர அவர் சொன்னார் “இதுவே பெருங்கணம். எதன்பொருட்டு நம் மூதாதையர் வேலும் வில்லும் வாளும் கதையும் பயின்றார்களோ அது அணுகிவிட்டது. இக்கணம் முதல் நிகழ்வன அனைத்தும் அழியாது சொல்லில் வாழும். இங்கிருந்து எழுவனவே இனி இப்புவியை வகுக்கும். வென்றால் மண்புகழ வாழ்வோம். அமைந்தால் விண்புகுந்து நிறைவோம். வெல்க நம் குடி! நிறைக நம் மூதாதையர்! அருள்க நம் தெய்வங்கள்! நம் சொல் என்றும் நின்றுவாழ்க!” என்றார் துருபதர். “வாழ்க! வாழ்க! வாழ்க!” என்று அவையினர் போர்க்கூச்சலிட்டனர்.

பீமன் “இக்கணத்திலிருந்து ஆணைகள் எழும். ஒவ்வொருவருக்கும் அதுவே இறையாணை என்றாகுக!” என்றான். அனைவரும் “ஆம்! ஆம்! ஆம்!” என்று ஓசையிட்டனர். அமைச்சர் சௌனகர் கைகாட்ட வெளியே காத்திருந்த முரசுக்காவலர் பெருமுரசுகளை முழங்கலாயினர். ஒன்றுதொட்டு ஒன்று ஒலிகொள்ள அச்சிறுநகரில் அமைந்த நூற்றெட்டு காவல்மாடங்களின் உச்சிகளில் அமைந்த போர்முரசுகள் ஒத்தொலிக்கத் தொடங்கின. நகரைச் சூழ்ந்து நெடுந்தொலைவு வரை பரந்திருந்த பாண்டவர்களின் படைகளின் நடுவே அமைந்த முரசுமேடைகள்தோறும் போர்முரசுகள் ஓசையிட்டன.

அதற்கெனக் காத்திருந்த பல்லாயிரம் படைவீரர்கள் தங்கள் வேல்களையும் வாள்களையும் தூக்கிச் சுழற்றி போர்க்கூச்சலெழுப்பினர். கற்பரப்புகள் நீர்ப்படலமென அலைவுறும் விசைகொண்டிருந்தது அவ்வோசை. அது எழுந்தெழுந்து அலைகளாக அங்கிருந்த அனைத்தையும் அறைந்து அதிரச்செய்தது. ஒவ்வொருவரையும் ஒற்றைப்பெருநதி என அள்ளி அடித்துச்சென்றது அவ்வுணர்ச்சி.

உபப்பிலாவ்யத்தின் இல்லங்களிலிருந்து பெண்டிரும் சிறுவரும் முதியோரும் வெளியே இறங்கி தங்கள் தலையாடையையும் மேலாடையையும் வீசி வாழ்த்தொலி எழுப்பினர். நகரின் அனைத்து ஆலயங்களிலும் மணிகள் முழங்கத் தொடங்கின. சங்கொலிகள் உடன் இணைந்துகொண்டன. அந்தணர் எழுப்பிய அதர்வவேதச் சொல்லோசையும் ஆலயங்களில் முழவோசையும் நதிப்பெருக்கில் குங்குமமும் மஞ்சளும் என அதில் கலந்தன.

உடல் மெய்ப்புகொள்ள, கைகளால் மார்பைப் பற்றியபடி அமர்ந்து, குந்தி விம்மியழுதாள். அவையிலிருந்த அனைவருமே விழிநீர் கொண்டிருந்தனர். அவைக்கலைவை அறிவிக்க சுரேசர் கைகாட்டினார். அவைச்சங்கம் மும்முறை முழங்கியமைந்தது. யுதிஷ்டிரர் எழுந்து தன் மணிமுடியைக் கழற்றி ஏவலரிடம் அளித்துவிட்டு அருகே நின்றிருந்த முதல் மைந்தன் பிரதிவிந்தியனின் தோளைப்பற்றியபடி தளர்ந்த கால்களுடன் நடந்து அவைநீங்கினார். தோளசையா சீர்நடையில் திரௌபதி உடன் சென்றாள்.

அவையினர் கலையத் தொடங்கியதும் இளைய யாதவர் எழுந்து மேலாடையை அணிந்துகொண்டு மெல்ல நடந்தார். அவருக்குப் பின்னால் சாத்யகி சென்றான். பாண்டவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மைந்தர்கள் சூழ அவைநீங்கினர். அந்தப் பொழுதில் அனைவரும் தங்கள் மைந்தர்களுடன் இருப்பதையே விழைந்தனர். தனித்து வெளியே வந்த இளைய யாதவரை அணுகிய சௌனகர் “தாங்கள் ஆற்றுவதென்ன என்று அறிய விழைகிறேன், யாதவரே. தாங்கள் அளித்த சொல்லுறுதியின்படி படைமுயற்சிகள் எதிலும் தாங்கள் ஈடுபடலாகாது” என்றார்.

“ஆம்” என்று இளைய யாதவர் புன்னகை செய்தார். “ஆனால் தாங்கள் அரண்மனையில் தங்குவதில் பிழையேதுமில்லை. படைதிரட்டல், வகுத்தல் குறித்து சொல்லென ஏதும் எடுக்காமலிருந்தால் போதும்” என்று சௌனகர் சொன்னார். “ஆனால் என் முகக்குறியே அறிவுறுத்துவதாகும். அதுவே நெறிப்பிழை” என்றார் இளைய யாதவர். “நான் இங்கிருந்து எங்கேனும் சென்று அமைய விழைகிறேன், சௌனகரே. இங்கு போர் முன்னெடுப்புகள் முழுமைகொண்டபின் என் பாஞ்சஜன்யத்துடன் திரும்பி வருகிறேன்.”

“தாங்கள் செல்வது எதற்காக?” என்று சௌனகர் கேட்டார். இளைய யாதவர் “அறிந்தவை எண்ணியவை உணர்ந்தவை அனைத்தையும் ஒற்றைப்புள்ளியில் திரட்டிக்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளேன். நானன்றி பிறிதெவரும் இன்றி அமையும் ஓர் இடம் தேவை” என்றார். சௌனகர் “அதற்குரிய இடம் நைமிஷாரண்யம் மட்டுமே. வடக்கே கோமதிநதிக்கரையில் அமைந்துள்ளது அது. என் குலமூதாதையரான சௌனக மாமுனிவரை சரஸ்வதி வலம் வந்த இடம். அங்கேதான் தொல்வியாசர் நால்வேதங்களையும் தொகுத்திணைத்து தன் நான்கு மாணவர்களுக்கு கற்பித்தார். நிலைகொள்ளவேண்டிய சொல் எதுவும் அங்கேதான் எழவேண்டும் என்பார்கள்” என்றார்.

“ஆம், அதை நானும் அறிந்திருக்கிறேன்” என்றார் இளைய யாதவர். “அங்கு ஒவ்வொரு சொல்லும் முன்பின்னின்றி முழுதமைகின்றன என்கிறார்கள். என்னுள் சொற்கள் முளைவிட்டு பெருகிக்கொண்டிருக்கின்றன. நான் சென்றமையவேண்டிய இடம் அதுவே.” சௌனகர் “அதற்குரிய அனைத்தையும் ஒருக்குகிறேன், யாதவரே. உங்கள் செலவு நிறைவின் இனிமை கொள்க!” என்றார்.

“சாத்யகி இங்கு என் சொல்போல் நின்றிருக்கட்டும். அவனுடைய படைத்திறன் பாண்டவருக்கு உதவட்டும்” என்றார் இளைய யாதவர். “நான் உடனின்றி நீங்கள் செல்வதை எண்ணி துயருறுகிறேன்” என்றான் சாத்யகி. “எவரும் உடனிருக்காத தருணங்கள் மானுடருக்குத் தேவை” என்று அவன் தோளில் கைவைத்து இளைய யாதவர் புன்னகைத்தார். சாத்யகி தலைகுனிந்து பெருமூச்செறிந்தான்.

சௌனகர் ஒருக்கிய எளிய தேரில் இளைய யாதவர் தனித்து நிமிஷக்காட்டுக்கு சென்றார். செல்லும் வழியெல்லாம் படைப்பெருக்கு போர்க்களிகொண்டிருப்பதை கண்டார். அவர் செல்வதுகூட அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. படைகள் ஆடலும்பாடலுமாக மகிழ்ந்திருந்தன. தீட்டித்தீட்டி ஒளிஏற்றப்பட்ட வாள்களும் அம்புகளும் தெய்வங்களின் விழிக்கூர் கொண்டிருந்தன. நிழல்களென ஆழுலகத்து இருப்புகள் எழுந்து அவர்களுக்குள் கலந்து குருதிவிடாய் கொண்டு நெளிந்தாடின.

நைமிஷாரண்யத்தின் எல்லையில் அமைந்த பூதங்களின் ஆலயங்களில் பலியளித்து பூசனை செய்து அவரை உள்ளே அனுப்பியபின் உடன்வந்த சுரேசர் திரும்பிச் சென்றார். இளைய யாதவர் தன் படையாழியையும் ஐங்குரல்சங்கையும் தெற்குமுகப்பிலிருந்த யமனின் ஆலயத்திலேயே கைவிட்டுவிட்டு அக்காட்டின் பசிய இருளுக்குள் புகுந்து நடந்துசென்றார். அவருடைய இமைகள் அசைவிழந்தன. காட்சிகளை ஒற்றைநிகழ்வென்று சித்தம் அறிந்தது.

கணப்பெருங்காட்டின் நடுவே அமைந்த மனோஹரம் என்னும் சுனையின் நடுவே எழுந்த மனோசிலையைக் கண்டு அதை சிவக்குறி என கொண்டு காட்டுமலரிட்டு வழிபட்டார். அச்சுனைக்கு வடமேற்கே கொன்றைச்சோலை ஒன்றை அடைந்து நான்கு மரங்களை மூங்கிலால் இணைத்து சிறுகுடில் ஒன்றை கட்டிக்கொண்டு அங்கே தங்கினார். ஆடைகளைந்து தழைகளை அணிந்துகொண்டார்.

ஒவ்வொருநாளும் புலரியெழுவதற்கு முன்னரே எழுந்து மனோஹரத்தில் குளிர்நீராடி மனோசிலையை வணங்கி தன் குடிலுக்கு மீண்டபின் அவர் ஒருமுறைகூட வெளியே செல்வதில்லை. முந்தையநாள் அந்தியிலேயே சேர்த்து வைத்திருக்கும் கனிகளையும் கிழங்குகளையும் சேர்த்துச் சமைத்து உச்சியில் ஒருவேளை உண்டபின் குடில்முகப்பில் எப்போதும் கதிரொளி தன் முகத்தில் படும்படி அமர்ந்திருந்தார். வெயில் உடலில் பட்டு தோலை ஊடுருவி குருதியில் பரவுவதை உணர்ந்தார். பின் எண்ணங்களில் கனவுகளில் அது கடந்துசென்றது. அங்குள அனைத்தையும் ஒளிகொள்ளச் செய்தது.

ஓரிருநாட்களிலேயே அவர் தன்னுள் குவிந்திருந்த அனைத்துச் சொற்களையும் அடுக்கி நிரைப்படுத்தினார். அவற்றைத் திரட்டி மையமாக்கினார். ஒற்றைச் சொல்லென்றாக்கி அதை ஊழ்கநுண்சொல்லெனக் கொண்டார். அதை எரிகுளத்து அனலென தன்னில் தழைக்கவிட்டு அங்கே அமர்ந்திருந்தார்.

நூல் பதினேழு – இமைக்கணம் – 3

wild-west-clipart-rodeo-3முஞ்சவானின் உச்சிமுனையில் சிவக்குறியருகே ஊழ்கத்தில் அமர்ந்திருந்த யமன் அந்தச் சிறகொலி கேட்டு விழிதிறந்து சினத்துடன் எழுந்தார். அவர் அருகே இருட்குவையெனக் கிடந்த எருமை விழிமணிகள் மின்ன முக்ரையோசை எழுப்பி தலைகுனித்து பாய்ந்தது. நாரதர் தன் வீணையை மீட்டியபடி அசையாமல் நின்றிருந்தார். அந்த இசையைக் கேட்டு மெல்ல விசையழிந்து தலை தாழ்த்தி அமைதி கொண்டது எருமை. சினம் தணிந்த யமன் “நாரதரே, நீர் ஏன் இங்கு வந்தீர்? என் தவம் முழுமைகொள்வதை தடுக்கிறீர். விலகிச்செல்க!” என்றார்.

நாரதர் “உங்கள் தவம் முழுமைகொள்ளவியலாது என்று உணர்ந்தமையால்தான் வந்தேன், காலரே” என்றார். யமன் புரியாமல் “ஏன்?” என்றார். “கடமைகளை கைவிட்டுவிட்டு எவரும் தவத்தை முழுமைசெய்ய இயலாது, காலத்துக்கரசே” என்றார் நாரதர். “என்னால் என் கடமையை செய்யமுடியவில்லை என்பதனால்தான் இங்கு வந்து தவம் மேற்கொண்டேன்” என்றார் யமன். நாரதர் “ஏன் என்று சொல்க! நான் அதற்கு ஏதேனும் வழியுள்ளதா என்று நோக்குகிறேன்” என்றார்.

“இல்லை, இதற்கு படைத்தல் காத்தல் அழித்தல் என மூன்றுதொழில்களில் ஒன்றை இயற்றும் முதன்மைத்தெய்வமே மறுமொழி சொல்ல இயலும்” என்றார் யமன். “அவர்களுக்கே நோக்கம் உள்ளது. வழிகளும் அவர்களிடமே. நாமனைவரும் அவர்களின் கருவிகள்.” நாரதர் “ஆம், ஆனால் முத்தெய்வங்கள் மட்டிலுமே அறிந்த மெய்மையை பிறிதொருவர் அறிவது எளிதல்ல. அவர்கள் அதை உங்களிடம் சொல்லும் தருணம் எது, அங்கு சென்றணையும் வழி எது என்று நான் உரைக்கவியலும்” என்றார்.

“ஆம், எவ்வண்ணமாயினும் நான் இனி இவ்வண்ணம் மேலே செல்லவியலாது. என் தவம் முழுமைக்கு முன் கலைந்தது என்பதே என்னுள் இருக்கும் அலைவால்தான். அது என் கடமையைக் கைவிட்டு வந்தமையால்தான் என உணர்கிறேன்” என்றார் யமன். “சொல்க அரசே, புடவிநெசவின் முதன்மைச்சரடுகளில் ஒன்றாகிய உங்கள் தொழிலைக் கைவிட்டு இங்கு வந்தது எதற்காக? உங்கள் விழிகூர்ந்து புவியை நோக்குக! அங்கே இறப்பு இல்லாமலாக எஞ்சியதென்ன என்று அறிக!” என்று நாரதர் சொன்னார்.

சற்று இமைதாழ்த்தி புவியை நோக்கிய யமன் “ஆ!” என அலறியபடி எழுந்துவிட்டார். “நாரதரே, என்ன இது? இங்குள்ள கொடுநரகங்களிலும் இத்தகைய பெருந்துன்பம் இல்லையே?” என்றார். “ஆம், இங்குள்ளவர்கள் தாங்கள் துன்பம்கொள்வது ஏன் என்று அறிந்தவர்கள். அது நெறியே என ஏற்றவர்கள். மூலம் அறியா துன்பம் நூறுமடங்கு விசைகொண்டது. முடிவறியா துன்பம் ஆயிரம் மடங்கு விசைகொண்டது. வணங்கிக்கோர தெய்வமொன்றில்லா துயரோ பன்னீராயிரம் மடங்கு கொடியது” என்றார் நாரதர்.

“அங்கு துயரில் ஒடுங்கி அமர்ந்திருப்பவை பழிசேரா உள்ளங்கள். தவம்சேர்ந்த முனிவர். முலைநிறைந்த அன்னையர். அவர்களுக்கு இதை நீங்கள் இழைக்கலாமா?” என்று நாரதர் கேட்டார். “உளம் கனிக, அரசே. அவர்கள் கோரும் அமுதை அளியுங்கள். அழுக்குடை அகற்றி நீராடி எழுதல் உயிர்களின் முதன்மையுரிமை அல்லவா? அவர்கள் குரலென நான் கைகூப்பி விழிநீருடன் இறைஞ்சுகிறேன். அவர்கள் சார்பாக உங்கள் அடிபணிந்து மன்றாடுகிறேன்.”

“உங்கள் சொல்லையே ஆணையெனக் கருதுபவன் நான்” என்றார் யமன். “ஆனால் நான் அரியணை அமர்ந்து அறம்புரக்கையில் என் உள்ளத்தின் துலாமுள் அசைவற்றிருக்கவேண்டும். இல்லையேல் அறம்பிழைத்துவிடுவேன். இங்கு ஒரு அணுவிடை அறம்பிழைக்குமென்றால் விண்மீன்கள் திசைமீறிச் சிதறும். கோள்கள் முட்டி உடையும். வான்வெள்ளம் வற்றும். திசைத்தீ எழுந்து சூழும். ஐயமற்று அமர்ந்தால் மட்டுமே என்னால் அறம்பெருக்க முடியும். என் உள்ளத்தில் அமைதியின்மை திகழ்கிறது. இன்று நான் என்னை நம்பவில்லை.”

“ஏன்? என்ன நிகழ்ந்ததென்று சொல்க! நான் உங்களுக்கு வழிகாட்டக்கூடுமென்று ஊழ் இருக்கிறது. இல்லையேல் தேவர்க்கிறைவனின் நாவில் எனக்கான ஆணை எழுந்திருக்காது” என்றார் நாரதர். யமன் பெருமூச்சுடன் சற்றுநேரம் அமர்ந்திருந்தார். “சொல்க, நெறியிறையே! சொல்வடிவில் எழுவதெல்லாம் மெய்யே. பொய்யென்று உரைக்கப்படுவதும் மெய்யின் நிழல்மட்டுமே” என்றார் நாரதர். யமன் பிறிதொரு பெருமூச்சுடன் சொல்லத் தொடங்கினார்.

“நாரதரே, சிலகாலம் முன்பு நான் ஒருமுறை சித்திரபுத்திரனின் அலுவல்நிலைக்குச் சென்றிருந்தேன். அங்கே அவரும் அவருடைய பல்லாயிரம் உதவிக்கணக்கர்களும் அமர்ந்து முடிவிலா ஏடுகளாலான மகாசங்கிரகம் என்னும் நூலை எழுதிக்கொண்டிருந்தனர். வாழ்ந்தோர் வாழ்வோர் இயற்றிய இருபாற்பட்ட செயல்களையும், அவற்றின் விளைவுகளையும் அதில் பதிவுசெய்திருந்தனர். விளையாட்டாக நான் என்னுடைய கணக்கை எடுத்துப் பார்க்கவேண்டும் என்றேன். சித்திரபுத்திரன் அது முறையல்ல என்றார். நான் அரசன் என்பதனால் அதை வலியுறுத்தினேன். அவர் அந்த ஏட்டை புரட்டினார்.”

“எண்ணற்ற நற்செயல்களின் தொகையாக இருந்தது என் கணக்கு. நோயால் மூப்பால் துடித்து கண்ணீருடன் ஏங்கிய பலகோடி உயிர்களுக்கு இனிய விடுதலையை அளித்து அவர்களின் வாழ்த்துக்களை பெற்றிருந்தேன். பொன்னிற எழுத்துக்களாலான பதிவுகளை உவகையுடன் நோக்கியபடி ஏடுகளை புரட்டிச் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெரும்பழி என் கணக்கில் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டேன். நீல நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்த அக்குறிப்பைப் படித்து துயருடன் அமர்ந்துவிட்டேன். பதிவுசெய்திருந்தவர்கள் அனைவரும் அதை மறந்துவிட்டிருந்தனர். ஆனால் பழி ஒரு விதை, அதன் தருணம் வரை தவம் மேற்கொள்வது.”

“திரேதாயுகத்தில் நிகழ்ந்தது அது” என யமன் தொடர்ந்தார். “அன்று விண்வடிவப் பேருருவன் ராமன் என்னும் மானுடனாக மண்ணில் பிறந்திருந்தான். அயோத்தியின் தசரதனுக்கு மைந்தனாகி, தந்தை சொல்பேண தம்பியும் துணைவியும் உடன்வர கானேகினான். வாலியை கொன்றான். வாலரை தொகுத்தான். அரக்கர்கோன் கவர்ந்துசென்ற துணைவியை மீட்க படைதிரட்டிச் சென்றான். இலங்கையை வென்று ராவணனையும் தம்பியரையும் கொன்று அவளை மீட்டு மீண்டும் நகர்புகுந்தான். தம்பியர் அறுவருடன் அரியணை அமர்ந்து ஆயிரமாண்டுகாலம் நல்லாட்சி அளித்தான். நிலம்பொலிந்து குடிகள் மகிழ, சொல்பெருகி அந்தணர் வணங்க,அறம் வளர்ந்து முனிவர் வாழ்த்த அரசுவீற்றிருந்தான்.”

அந்நாளில் என்னை பிரம்மன் அழைத்தார். தந்தையின் காலடியில் பணிந்து நின்ற என்னிடம் “உன் கடமையை நிறைவேற்றும் காலம் வந்துள்ளது, மைந்தா. மண்ணில் எழுந்த விண்ணவன் அங்கே பல்லாயிரம்கோடி முகமும் வடிவும் கொண்டு நிறைந்திருக்கும் மாயையில் தன்னை மறந்துவிட்டார். செயல்விளைவின், இன்பதுன்பத்தின், நன்றுதீதின் முடிவிலாச் சுழலில் சிக்கியிருக்கிறார். அவர் விண்மீளும் நாள் வந்துவிட்டது. சென்று அழைத்துவருக!” என ஆணையிட்டார். நான் திகைத்து “உலகங்களை ஆளும் முதற்பெருந்தெய்வத்திற்கே இறப்பாணையுடன் செல்வதா? என்ன சொல்கிறீர்கள்?” என்றேன். “எவராக இருப்பினும் அது உன் கடமை” என்றார் பிரம்மன்.

“அதை எவ்வண்ணம் நான் செய்யமுடியும், தந்தையே?” என்று நான் கேட்டேன். “நீயே செல்லவேண்டும். உன் வழக்கமான வடிவில் அல்ல. அவர் முனிந்தால் நீ அழிந்துவிடுவாய். அரசனுக்கு அறமுரைக்க அவைக்குச் செல்லும் முனிவரின் தோற்றம் கொள்க! தகைசான்றோன் மட்டுமே அறியவேண்டிய நுண்சொல் ஆகையால் தனியறையில் பேசவேண்டும் என்று கோருக! அங்கே மெல்ல நெறியுரைத்து அறம்விளக்கி மெய்மை நோக்கி செல்க! அவரை மூடியிருக்கும் மாயையின் திரையை கிழித்தகற்றுக! தான் யாரென்றும் எவ்வண்ணம் அவ்வுருக்கொண்டு வந்தார் என்றும் எதை இயற்றினார் என்றும் உணர்ந்தால் மீள்வதைப்பற்றி அவரே முடிவுசெய்வார்” என்றார் பிரம்மன்.

என் தலைதொட்டு வாழ்த்தி “மேடையேறி நடிப்பவரை தன்னுரு மீளச்செய்வதே இது. அறிக, மேடையில் நடிக்கையில் தன்னிலிருந்து துளியொன்றை எடுத்துத் தீட்டி கூராக்குகிறார்கள் நடிகர்கள். தனக்கு மீள்கையில் தான் சூடிய அது பொருளிழந்து உதிர்வதாக உணர்ந்து துயர் கொள்கிறார்கள்” என்றார். “நடிப்பதென்பது விழிப்புநிலைக் கனவு. கனவுகளுக்குள் உலவுகையில் கனவென்று தெரியாதவர் எவருமில்லை. ஆனால் கனவுகளின் ஆற்றல் என்பது உள்ளேயே கட்டிவைக்கும் அழகும், உணர்வெழுச்சியும் அவற்றுக்குண்டு என்பதுதான். விழித்தெழுகையில் கனவு கலையும் வெறுமை மீதான அச்சமே கனவுக்குள் மீளாது புதையும் விழைவென்றாகிறது.” நான் தலைவணங்கினேன்.

wild-west-clipart-rodeo-3தவமுனிவர் என உருக்கொண்டு அயோத்தியை அடைந்தேன். அரசவைக் காவலரிடம் நான் அதிபலன் என்னும் முனிவரின் மாணவன் என்றும், அறியாது பிறழ்ந்த நெறியை சீரமைக்கும் வழியை அரசருக்கு அறிவுறுத்த விரும்புவதாகவும் சொன்னேன். என் தோற்றமும் குரலும் அவைத்தலைவரான வசிட்டரை என்னை மாமுனிவர் என நம்பச்செய்தன. நிமித்திகர் என்னை நோக்கி “இவர் சாகாக்கலை அறிந்தவர், ஐயமில்லை” என்றனர். “நான் அறிந்த அக்கலையை அவையில் உரைக்கவியலாது, அரசரிடம் உதடுகளிலிருந்து செவிக்கு என மட்டுமே அளிக்கவியலும்” என்றேன்.

வசிட்டர் அதற்கு ஆவன செய்தார். ராமன் அப்போது கானுலாவுக்கு சென்றிருந்தான். நைமிஷாரண்யப் பெருங்காட்டில் அவன் தங்கியிருந்த கொடிமண்டபத்திற்கு என்னை இட்டுச்சென்றார். அங்கே லட்சுமணன் ராமனுடன் இருந்தான். என்னை அறிமுகம் செய்து என் நோக்கத்தை அறிவித்து ராமனின் ஒப்புதல் பெற்று வசிட்டர் அகன்றார். “முனிவரே, மெய்யை எத்தனை அறிந்தாலும் தீர்வதே இல்லை. எனக்கு நற்சொல்லளிக்கும் பொருட்டு தேடிவந்துள்ளீர். தங்கள் அடிபணிகிறேன்” என்று ராமன் சொன்னான்.

அக்கொடிமண்டபத்திற்கு கதவுகளேதும் இல்லை என்பதனால் நான் லட்சுமணனிடம் “நான் அரசருடன் சொல்லாடுகையில் எவரும் உள்ளே வரலாகாது. ஒரு சொல்லும் பிறர்செவிக்கு செல்லக்கூடாது. எனவே நீ வாயிலில் காவல்நிற்கவேண்டும். எவரையும் உள்ளே விடக்கூடாது. அறிக, என் சொல்லாடலுக்கு நடுவே புகும் எவரும் வாள்போழ்ந்து வீசப்படவேண்டியவரே” என்றேன். இளையவனிடம் ராமன் “அது என் ஆணை” என்று சொல்ல லட்சுமணன் “அவ்வாறே” என வணங்கி வாளுடன் வெளியே சென்று நின்றான்.

நான் ராமனிடம் மானுடவாழ்வின் நெறி என்னவென்று சொல்லத் தொடங்கினேன். “ஒவ்வொன்றும் பிறிதொன்றால் நிகர்செய்யப்பட்டிருப்பதனாலேயே புடவிச்செயல் முடிவிலாது நிகழ்கிறது. முடிவிலாதொழுகுவதன் துளியென்பதே ஒவ்வொன்றும் கொண்டுள்ள பொருள். தான் கொண்ட பொருள் தன்னில் தொடங்கி தன்னில் முடிவடையவில்லை என்னும் விடுதலையில் திளைத்து அமர்ந்திருப்பவை இங்கிருக்கும் அனைத்தும். அரசே, முடிவிலாது நிகழும்பொருட்டே ஒவ்வொன்றும் இங்கே வடிவமைக்கப்பட்டிருக்கிறது” என்றேன்.

“ஆகவே எக்கணத்திலும் வாழ்க்கை முடிவுற்ற நிலையில் இருக்கவியலாது. இங்கு எதுவும் நிறைநிலையில் எஞ்சுவதும் அரிது. ஒவ்வொன்றும் தன்னில் ஒருதுளியேனும் எதிர்காலத்தில் விட்டுவைத்ததாகவே அறியப்படுகிறது. எனவே முடித்து எழுவது எங்கும் எதிலும் இயல்வதேயல்ல. எச்சத்தை திரும்பி நோக்காது விட்டுச்செல்பவரே விடுதலையாகிறார்” என்றேன். நான் சொல்லிவருவதை அவன் உணர்ந்துகொண்டதை விழி காட்டியது.

“அரசே, தெய்வமேயென்றாலும் புவியில் பணிமுடித்து விண்ணேகுவது இயல்வதல்ல” என்று தொடர்ந்தேன். ராமனின் விழிகளில் மாயையின் திரை விலகுவதைக் கண்டு உளம் மகிழ்ந்தேன். “இப்புவி வாழவேண்டும் என்றால் தீமை எஞ்சியாகவேண்டும். விதைகளை விட்டுவிட்டு விழுவதே பெருமரங்களின் இயல்பு என்று அறிக!” என்று நான் சொன்னபோது அவன் ஒருகணம் விண்ணளந்தவனாக ஆனான். அக்கணம் லட்சுமணன் “மூத்தவரே, பொறுத்தருள்க!” என்று கூறியபடி உள்ளே வந்தான்.

அவனைக் கண்டதுமே மூத்தவனாக அவன் ஆனான். இளமைந்தனை நோக்கும் தந்தை என முகம் மலர்ந்து விழி கனிந்து அவனை நோக்கி “சொல்க, இளையோனே!” என்றான். அவன் கண்கள் இளையவனின் விரிந்த பெருந்தோள்களை, திரண்ட புயங்களை, அகன்ற மார்பை அளந்தளந்து அலைந்தன. அவன் மீண்டும் மாயைக்குள் முற்றமிழ்ந்துவிட்டான் என்றுணர்ந்து நான் அனல்கொண்டேன்.

நாரதரே, நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது மாபெரும் தவச்செல்வரான துர்வாசர் அக்காட்டினூடாக வந்து குடில்முற்றத்தில் நின்றார். பலநாட்கள் நீண்ட கடும்பசி கொண்டிருந்தார். அப்போது ராமனைக் காணமுடியாது என்று லட்சுமணன் தடுத்தான். “இன்னும் ஒருநாழிகைப்பொழுது, முனிவரே… சற்று பொறுங்கள்” என்று கெஞ்சினான். பெருஞ்சின முனிவர் “நான் நான்குமாத நோன்பிருந்தேன். எட்டு நல்லியல்புகளும் நிறைந்த ஒருவன் கையால் முதற்கவளம் உணவுபெற்று உண்ணும்பொருட்டு தேடிச்சென்றேன். அயோத்தியில் ராமன் இல்லை என்று கண்டு இங்கு வந்தேன். கணமும் பசிபொறுக்க முடியாது. சென்று சொல் அவனிடம்!” என்று கூவினார்.

லட்சுமணன் மீண்டும் மீண்டும் அவரிடம் கெஞ்சினான். அவனுடைய மறுப்பு அவரை சினம்கொண்டு நிலைமறக்கச் செய்தது. “கீழ்மகனே, தவத்தோரின் பசிபோக்க முடியாத அளவுக்கு முதன்மையா அவனுக்கு அவைச்சொல்லாடல்? இக்கணமே அவன் வந்து எனக்கு உணவளிக்கவேண்டும். இல்லையென்றால் அவனையும் அவன் குலத்தையும் என் தவம்முழுதுறையும் தீச்சொல்லால் சுடுவேன். அவன் குடிகளை அழிப்பேன். அவன் நகரை இடிபாடுகளாக ஆக்கிவிட்டுச்செல்வேன். என் கையிலேந்திய இந்த தர்ப்பைமேல் ஆணை!” என்றார்.

அவரை அஞ்சிய லட்சுமணன் “பொறுங்கள் முனிவரே, இதோ சென்று சொல்கிறேன்” என்று சொல்லி உள்ளே வந்தான். என் சினத்தை நோக்கி அவன் கைகூப்பி உடல்வளைத்து “பொறுத்தருள்க, முனிவரே! பெருஞ்சினத்தவரான துர்வாசர் வந்து வாசலில் நிற்கிறார். அரசரின் கையால் உணவுண்டு தவத்திலமர்ந்த பசியை நீக்க விழைகிறார். அவர் சினத்தை அரசும் குடியும் தாங்காதென்பதனால்தான் உள்ளே வந்தேன். வேறுவழியில்லை” என்றான். “அரசர் என அவர் முதற்கடமை அதுவென்பதை அறிவமைந்தவரான நீங்களும் மறுக்கமாட்டீர்கள் அல்லவா?”

ராமன் உடனே “ஆம், அதுவே முதற்பணி” என்றபின் எழுந்து என்னிடம் “சற்று பொறுங்கள், முனிவரே” என்று கூறிவிட்டு வெளியே சென்றான். முனிவரை வரவேற்று சொல்லும், நீரும், இருக்கையும் அளித்து வணங்கி உணவிட்டு நிறைவூட்டி, நற்சொல்பெற்று மகிழ்ந்து அவன் திரும்பிவர மூன்றுநாழிகைப் பொழுதாகியது. அவன் முகம் நகைசூடிப் பொலிந்திருப்பதைக் கண்டதுமே அவன் என் சொற்களில் இருந்து நெடுந்தொலைவு சென்றுவிட்டான் என்று உணர்ந்தேன். அருகணைந்து என்னை வணங்கி “பொறுத்தருள்க முனிவரே, அரசன் என நான் கொண்ட கடமை இது. இதன்பொருட்டே குடிகள் எனக்கு வரியளிக்கிறார்கள். அந்தணர் எனக்கு  இதற்காகத்தான் முடியளித்தனர்” என்றான்.

“ஆனால் அது மாயை. அதில் திளைக்கிறாய். இனி நான் சொல்ல ஏதுமில்லை. கிளம்புகிறேன்” என்றேன். “என் பிழைபொறுக்கவேண்டும், முனிவரே. நடந்த பிழைக்கு என்ன நிகர்செய்யவேண்டும் என சொல்லுங்கள். அதை தலைக்கொள்கிறேன்” என்றான். அவன் போர்த்திக்கொண்டிருக்கும் அந்த மாயையை அகற்றவியலாது, கிழித்துவீசுவதே முறை என எனக்குத் தோன்றியது. சினம் ஓங்க “நான் சொன்ன சொல் நிற்கவேண்டும். என் சொல்லாடலை கலைத்தவன் வாள்போழ்ந்து வீசப்படவேண்டும்” என்றேன். “என்ன சொல்கிறீர்கள், அறிவரே? அவன் என் உயிருக்கு நிகரான இளவல்” என ராமன் கூவினான்.

லட்சுமணன் “நான் பிழைசெய்தவன். இக்கணமே அதற்கு சித்தமாகிறேன்” என்று கூறி தன் உடைவாளை உருவினான். ராமன் “இளையோனே…” என அலறியபடி அவ்வாளை பாய்ந்து பிடித்தான். “இளையோனே, நீ இல்லாமல் நான் எப்படி உயிர்வாழ்வேன்? வேண்டாம்” என கண்ணீருடன் கதறினான். உடல் பதற குரல் உடைய “அமைச்சரை அழைத்துவாருங்கள். இத்தருணத்தை எப்படிக் கடப்பதென்று அவரிடம் கேட்போம்” என்று கூவினான். கீழ்மகன் எழுதிய சுவையற்ற நாடகம்போன்ற அக்காட்சியைக் கண்டு சலிப்புற்று நான் அக்கணமே அங்கிருந்து வெளியேறி என் நகர் வந்தணைந்தேன். துயரும் கசப்புமாக அங்கே தனிமையில் இருந்தேன். கடன்முடிக்காமல் நான் திரும்பி வந்தது அதுவே முதல்முறை.

ஏவலர் ஓடிச்சென்று வசிட்டரை அழைத்துவந்தனர். “ஆவன செய்க, அமைச்சரே. என் இளவலை நான் எந்நிலையிலும் பிரியேன்” என்று ராமன் கதறினான். “அறிவருக்கு அரசர் அளித்த சொல் நிலைகொள்ளவேண்டும். அதுவே கோல்நெறி” என்று வசிட்டர் சொன்னார். “ஆனால் போழ்தல் என்பது மூன்றுவகை என நூல்கள் சொல்கின்றன. உடல்போழ்தல் முதல்முறை. பெற்ற கல்வியையும் செல்வத்தையும் நல்லூழையும் முற்றிலும் துறத்தல் இரண்டாவது போழ்தல். அரசே, குலத்திலிருந்து விலக்குதல் மூன்றாவது போழ்தல். நூல்களின்படி மூன்றும் நிகரே. பிற இரண்டில் ஒன்றை இளைய அரசருக்கு அளிக்கலாம்” என்றார்.

“அவன் கற்றவையும் ஈட்டியவையும் சேர்த்தவையும் உடனிருக்கட்டும். அவன் இக்குடியைவிட்டு நீங்கட்டும். செல்லுமிடம் சிறக்க அவனால் வாழவியலும்” என்று ராமன் சொன்னான். “அவனுடன் என் சொல்லும் தொடரும். அவன் கால்தொட்ட நிலமெல்லாம் நாடென்று பொலியும். அவன் குடிபெருகி காலத்தை வெல்லும்.” இளையோனை தோள்தழுவி “சென்று வருக இளையோனே, இங்கு உன் நினைவாகவே நான் இருப்பேன். நாம் சந்திக்கும் நாள் அமைக!” என்றான். இளவல் அவன் முன் தலைதாழ்த்தி கண்ணீர்விட்டான்.

அரசாணையின்படி அன்றே முரசுகள் முழங்க லட்சுமணன் குடிநீக்கம் செய்யப்பட்டான். தமையனை வணங்கி சொல்பெற்று லட்சுமணன் அயோத்தியிலிருந்து அகன்றான். அவன் துணைவி ஊர்மிளை விரித்த குழலும் மார்பின்மேல் பெய்த விழிநீருமாக அரண்மனை வாயில்வரை வந்து மயங்கிவிழுந்தாள். மைந்தர்கள் அங்கதனும் சந்திரகேதுவும் கோட்டைமுகப்புவரை அழுதபடி தொடர்ந்தனர். அவன் செல்லும் வழியின் இருமருங்கும் கூடிய அயோத்தியின் மக்கள் நெஞ்சிலறைந்து கதறினர். நாட்டின் எல்லைவரை சென்று நின்று கைவீசி கூவியழுதனர்.

லட்சுமணன் சரயு நதியின் கரையில் குசவனம் என்னும் சோலையில் குடில்கட்டி தங்கினான். அங்கே தவம்செய்ய எண்ணி அமர்ந்தாலும் அவனால் தமையனிலிருந்து உளம்விலக்க இயலவில்லை. தோல்வியடையும் ஊழ்கமே பெருந்துன்பம். அது நஞ்சென்றாகி பிற அனைத்தையும் எரிக்கத் தொடங்கிவிடுகிறது. லட்சுமணன் ஒவ்வொருநாளும் ஒவ்வொருகணமும் தன் தமையனையே எண்ணிக்கொண்டிருந்தான். துயர்கொண்டிருக்கையில் சென்றகாலங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. தனிமையில் ஒவ்வொன்றும் நூறுமடங்கு எடைகொள்கின்றன. ஆற்ற பிறரில்லா துயரின் எரிக்கு காலமே நெய். வலிகொண்டவன் மேலும் மேலும் அவ்வலியையே எண்ணுகிறான். அதை வெல்லவும் தவிர்க்கவும் முனைந்து அதை பெருக்கி வாழ்வின் மையமாக்கிக் கொள்கிறான்.

லட்சுமணன் ஒருகணம் வெறுமையிலமைந்திருந்தால், ஒருமுறை முழுமையை எண்ணிச்சூழ்ந்திருந்தால் தான் எவரென்றும் நிகழ்வது என்னவென்றும் அறிந்து விடுபட்டிருக்கக்கூடும். ஆனால் மாயையை கைவிட்டுவிட்டு எழுவது எளிதல்ல. இரை கவ்விய பாம்பு அதை எண்ணினாலும் விடமுடியாது. ஒரு தருணத்தில் உளம்கொண்ட பெருந்துயரின் நஞ்சு கூர்கொண்டு தாக்க, தாளமுடியாத லட்சுமணன் எழுந்தோடி சரயுவிலிருந்த தீர்க்கபிந்து என்னும் ஆழ்ந்த சுழி ஒன்றில் பாய்ந்து உயிர்துறந்தான். அந்தச் சுழிக்கு அடியில் நீண்ட பெரும்பிலம் ஒன்று இருந்தமையால் அவன் உடல் மேலே வரவில்லை.

இளையோன் நகர்நீங்கிய நாள்முதல் உணவொழிந்து துயில்மறந்து தனியறையின் மஞ்சத்தில் கிடந்தான் ராமன். அணிகொள்ளவில்லை, அரியணை அமரவில்லை, குடித்தெய்வங்களைத் தொழுவதும் மறந்தான். மைந்தரோ தம்பியரோ அவனை ஆற்றமுடியவில்லை. அமைச்சர்களும் முனிவர்களும் அணுகவும் இயலவில்லை. எண்ணி எண்ணி சொல்பெருக்கி துயர்வளர்த்தான். நஞ்சென அவனுள் பெருகிய துயரால் கருமைகொண்டு வீங்கினான்.

மரத்தடிப்படகிலமைந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த வேடர்கள் லட்சுமணன் நீர்மாய்ந்ததை கண்டனர். அச்செய்தியை அவர்களின் குலத்தலைவர்கள் அயோத்திக்கு ஓடிவந்து ராமனிடம் சொன்னார்கள். இளையோன் இறந்த செய்தியை முழுக்க கேட்பதற்குள்ளாகவே வெளியே ஓடி முற்றத்தில் நின்றிருந்த தேரிலேறி விரைந்தான். தம்பியரும் மைந்தரும் படைத்தலைவர்களும் காவலர்களும் அவனைத் தொடர்ந்து விரைந்தனர். பின்னால் சென்ற புரவியில் அமர்ந்திருந்த பரதன் “மூத்தவரே… நில்லுங்கள்… மூத்தவரே!” என்று கூவிக்கொண்டிருந்ததை அவன் கேட்கவில்லை.

அவிழ்ந்துலைந்த குழலும் கலைந்துபறந்த உடையும் புழுதிபடிந்த முகமும் விழிநீர் உலர்ந்த வெறிப்புமாக அவன் தேர்த்தட்டில் நின்றான். சரயுவைக் கண்டதுமே கைநீட்டி கதறியழுதபடி அருகே சென்றான். தீர்க்கபிந்துவை அடைந்ததும் “இளையோனே…” என்று கூவியபடி தேரிலிருந்தே அதன் நடுவில் பாய்ந்தான். நீரில் ஒரு குமிழியென அக்கணமே மறைந்தான். உடன் ஓடிவந்த தம்பியரும் மைந்தரும் திகைத்து நின்றனர். பரதன் நெஞ்சிலறைந்தபடி “மூத்தவரே…” என்று கதறியழுதான். அவனும் உடன்பாய்வதற்குள் சத்ருக்னன் அவன் கால்களைப் பற்றி மண்ணுடன் விழுந்தான்.

லட்சுமணன் நீர்பட்ட செய்தியை அறிந்து நான் திகைத்தேன். ராமனும் நீரில் மறைந்ததை எனக்கு ஏவலர் சொன்னபோது சொல்லிழந்து அரியணையில் அமர்ந்திருந்தேன். நீரில் மூழ்கியவர்களை அழைத்துவரும் ஜலன், தோஜன் என்னும் இரு எமகணங்களால் அவர்கள் இறப்புலகுக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களை வரவேற்பதற்காக நான் என் நகரியின் எல்லையில் தலைக்குமேல் கைகூப்பியபடி நின்றிருந்தேன். விண்ணளந்தோனையும் அவன் அரவணையையும் கிழக்குவாயில் வழியாக கொண்டுவரவேண்டும் என விழைந்தேன். அவர்கள் காலடி படுவதனால் யமபுரி அருள்கொள்ளவேண்டுமென்று எண்ணினேன்.

ஆனால் சித்திரபுத்திரன் “அரசே, அவர்கள் தெய்வங்களேயானாலும் மானுடவடிவில் இருக்கின்றனர். ஆகவே மானுடர்களுக்குரிய பிழைசரிகளின் கணக்குகளுக்கு உட்பட்டவர்கள். தெற்குவாயில் வழியாகவே அவர்கள் வந்தாகவேண்டும்” என்று கூறிவிட்டார். அவர்கள் தெற்குவாயில் வழியாக நுழைந்தபோது நான் சென்று வணங்கி “பொறுத்தருள்க, ஐயனே. பெரும்பிழை இயற்றிவிட்டேன்” என்றேன். ஆனால் அவன் புன்னகையுடன் என் தோளைத் தொட்டு “உங்கள் பிழை அல்ல, என் பிழையும் அல்ல. நிகழ்ந்தது நன்றே. என் இளையோன் மறைந்த துயர்சூடி அங்கே நாள்கழிக்காது உடன் மறையத் தோன்றியது என் நல்லூழே” என்றான்.

அவன் ராமனாகவே இருக்கிறான் என்று கண்டு நான் திகைத்துச் சொல்லிழந்தேன். சித்திரபுத்திரன் என்னிடம் “மாயை அவரில் எஞ்சியிருக்கிறது, அரசே. அது கலையும்பொருட்டே இங்கு வந்துள்ளார்” என்றபின் அவனிடம் “அயோத்தியின் அரசே, தவமின்றி உயிர்மாய்த்துக்கொள்வது அறப்பிழையென கொள்ளப்படும். துயர்கொண்டு இறந்தமையால் உங்கள்மேல் மாயையின் நிழல் எஞ்சியிருக்கிறது. இங்கு ஆயிரமாண்டுகாலம் இருளில் தவமிருந்து பிழைநிகர் செய்து வைகுண்டம் மீள்க!” என ஆணையிட்டார்.

wild-west-clipart-rodeo-3“அதன்படி பாதாளத்தின் தென்மேற்குமூலையில் தனிமையில் தவமிருந்து தன்மேல் படிந்த மாயையின் கறையை அகற்றி விண்பாற்கடலை சென்றடைந்தார்” என்றார் யமன். “அந்நிகழ்வில் என் மீது பிழையில்லை என்று விண்ணளந்தோன் சொன்னதை நானும் ஏற்று அவ்வண்ணமே என் நெஞ்சை அமைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் கணக்குகளை பிழையின்றி யாக்கும் சித்திரபுத்திரனின் அலுவல்நிலை அவ்வாறு எண்ணவில்லை. என் நூலில் பெரும்பிழை என அதை பதிவுசெய்திருக்கிறது. அதைக் கண்டபின் நான் அகநிகர் குலைந்து துயர்கொண்டுவிட்டேன். அதன்பின் என் நெறிநிலை கைகூடவில்லை, என் தொழிலை தொடரவும் இயலவில்லை.”

நாரதர் “உங்கள் உளம் கோருவதென்ன?” என்றார். “வினாக்கள், ஒன்றிலிருந்து பிறிதொன்றென எழுபவை. விடைதேடிச் சலிக்கின்றது அகம். அவை தெளிந்து நான் நிலைகொள்ளாது மேலும் தொழிலியற்றினால் பெரும்பிழைகளை செய்யக்கூடும் என்று அஞ்சுகிறேன்” என்றார் யமன். “அரசே, ஒரு வினாவிலிருந்து பிறிதொரு வினா உடனே எழுமென்றால் அவையனைத்தும் ஒற்றைப் பெருவினா ஒன்றின் ஆடிப்பாவைப் பெருக்கென்றே கொள்ளவேண்டும். பெருவினாக்கள் என்றுமென்றிருக்கும் மலையடுக்குகளை நோக்கி ஒலிக்கும் கதறல்கள்போல. எதிரொலிகளைக் கடந்து அம்முதல்வினாவை சென்றடைக!” என்றார்.

“ஆம், இங்கிருந்து ஆற்றிய தவத்தால் அதை சொல்லென்றாக்கியிருக்கிறேன்” என்றார் யமன். “அதன் விடைதேடியே முக்கண்ணனை தவம் செய்கிறேன்.” நாரதர் நகைத்து “கடலில் தொலைத்ததை அனலில் தேடுகிறீர்கள், காலரே. எவரிடமிருந்து அந்த வினா எழுந்ததோ அவரிடமல்லவா உசாவவேண்டும்?” என்றார். திகைத்தபின் “ஆம், அது மெய்யே. நான் கோரவேண்டியது விண்ணளந்த பெருமாளிடம். இதோ வைகுண்டம் கிளம்புகிறேன்” என்று யமன் எழுந்தார்.

“நன்று, ஆனால் அவர் ஏதறிவார்?” என்று நாரதர் சொன்னார். “கடல் அலைகளை அறியாது. கரைநிற்பவர் அறிவதே அலையென்பது.” யமன் சோர்ந்து “ஆம்” என்றார். “சொல்லிலியில் எண்ணிலியில் காலமிலியில் வெளியிலியில் முழுதமைந்து விழிமயங்கும் மகாயோகப் பெருமாளிடம் எதை அறியமுடியும்?” என்றார் நாரதர். “நான் என்ன செய்வது, முனிவரே?” என்று யமன் கேட்டார். “ஒரு யுகம் பொறுத்திருங்கள். மீண்டுமொரு அலை நிகழட்டும். மண்ணில் அவன் பிறந்திறங்கி மெய்யறிந்தோனென்றாகி அதே நைமிஷாரண்யத்திற்குச் சென்று அதே குடிலில் எப்போது தங்குகிறானோ அப்போது சென்று உங்கள் ஐயங்களை கேளுங்கள். மெய்மை அறிவீர்கள்.”

“எப்போது நிகழும் அது?” என்று யமன் கேட்டார். “அறியேன். ஆனால் முதல்முறை வந்தவனில் நிகழாது எஞ்சியது மற்றும் ஒருவனாக மண்நிகழும் என்று உய்த்தறிகிறேன். அவன் கூறவியலாதவற்றை கூறுபவன், அவன் இயற்றாதொழிந்தவற்றை ஆற்றுபவன், அவன் அடையாதமைந்தவற்றை அடைபவன் வருவான். அவனை நாடுக!” யமன் “ஆம், அதற்காக காத்திருக்கிறேன்” என்றார். “அதுவரை உங்கள் தொழில்நிகழ்க! அதுவரை நிகழும் அனைத்து இறப்புகளும் முழுதமையா நிகழ்வுகளென்றாகட்டும். யமபுரிக்கும் மண்ணுலகுக்கும் நடுவே அர்த்தகால ஷேத்ரம் என்னும் தனி நகர் ஒன்றை அமையுங்கள். இனி இறப்பவை அனைத்தும் அங்கேயே தங்கட்டும். உங்கள் ஐயமகன்றபின் முழுதிறப்புக்கு உகந்தவர் யமபுரிக்கு வரட்டும். பிழையென இறந்தவர்கள் அங்கிருந்தே மண்மீளட்டும்” என்று நாரதர் சொன்னார். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் யமன்.

நாரதர் மண்ணுலகுக்கு மீண்டார். அவரை விண்ணிலேயே எதிர்கொண்ட பிரபாவன் நோயில் கருகியுதிர்ந்த இறகுகளும் சீழ்கொண்ட உடலும் கூர்மழுங்கிச் சிதைந்த உகிர்களும் கொண்டிருந்தது. “நற்சொல் பெற்று வந்துள்ளேன். யமன் தன் அவைமீள்வார். மண்மேல் சாவமுது பெய்திறங்கும்” என்றார் நாரதர். பிரபாவன் உடன் வர அவர் புவிமேல் நடந்தபோது சீழ்கட்டிச் சிதைந்த உடல்களை, மட்கிய தசைகளை, எரிந்துருகிக்கொண்டிருந்த எலும்புகளை கண்டார்.

தன் சிறுதுளையின் வாயிலில் அழுகி நீராகப் பரவிய உடலில் விழி மட்டுமே எஞ்ச தியானிகன் ஊழ்கத்தில் இருந்தது. “தியானிகரே, அணுகுகிறது இறப்பு. உவகை நிறையட்டும் எங்கும்” என்றார் நாரதர். “ஆம், இனி ஆழி சுழல்க!” என்றது தியானிகன். “நலம் சூழ்க!” என்று வாழ்த்தி நாரதர் விண்புகுந்தார். இந்திரனின் நகரை அடைந்து அவையிலிருந்த முனிவர்கள் கேட்க “துலா நிகர் செய்யப்பட்டது” என்று அறிவித்தார்.

அருகருகே அமர்ந்து தியானிகனும் பிரபாவனும் வானை நோக்கிக்கொண்டிருந்தன. அதுவரை கருமுகில்கள் மூடியிருந்த வானம் மெல்ல விரிசலிட்டு வாயில்திறக்க ஒளிபெருகி மண்ணில் படிந்தது. அதனூடாக ஒரு கரிய தேர் அணுகிவந்தது. வியாதி, ஜரை, உன்மாதை, பீடை, விஸ்மிருதி, பீதி, ரோதனை என்னும் ஏழன்னையர் இழுத்த தேரில் நீண்ட செங்கூந்தல் திசைமுடிவுவரை பறக்க, ஒருகையில் தாமரை மலரும் மறுகையில் மின்படைக்கலமுமாக மிருத்யூதேவி அமர்ந்திருந்தாள். அவள் உதடுகள் குருதிகொண்டவை என சிவந்திருந்தன. கண்கள் முலையூட்டும் அன்னையுடையவை என கனிந்திருந்தன.
நிழலற்ற உருவென அருகணைந்த அன்னை தன் மின்படையால் அவர்களை தொட்டாள். அறத்தோனாகிய தியானிகனை நெற்றியிலும் துணிந்தோனாகிய பிரபாவனை நெஞ்சிலும். அவர்கள் துள்ளித்துடித்து மெல்ல அடங்க குளிர்தாமரை மலரால் அவர்களை வருடினாள். வலியடங்கி முகம்மலர்ந்து புன்னகையுடன் தாயமுதுண்டு கண்வளரும் மகவினரைப்போல் அவர்கள் உலகுநீத்தனர்.

வாழ்வாங்கு வாழ்ந்தமைந்தமையால் பிரபாவன் தொல்குடியாகிய காசியில் அஜயன் என்னும் புகழ்மிக்க அரசனாகப் பிறந்தான். தியானிகன் நால்வேதம் உணர்ந்து ஏழு பெருவேள்விகள் இயற்றிய சுகிர்தன் என்னும் அந்தணனாகப் பிறந்து அவ்வரசனுக்கு நல்லமைச்சனானான். அவர்கள் இணைந்து ஆட்சிசெய்தமையால் காசி செல்வமும் அறமும் பொலிந்து சிறப்புற்றது.

நூல் பதினேழு – இமைக்கணம் – 2

wild-west-clipart-rodeo-3பன்னீராயிரமாண்டுகாலம் பிரபாவன் விண்முகில்கள் மேல் அலைந்தது. மழையும் வெயிலும் மீளமீள வந்துசென்றன. நிகழ்ந்தவற்றின் தடமின்றி எஞ்சுவதே விண் என்று பிரபாவன் உணர்ந்தது. எனவே விண்ணில் எதுவும் நிகழ்வதேயில்லை என்று தெளிந்தது. ஒன்றுபோல் மறுநாள் அமையும் அப்பெருவிரிவின் அலையற்ற காலத்தை அதன் சித்தம் உணர்ந்தது. தன் சிறகுகளால் அக்காலத் தேங்கலை அசைக்கமுடியும் என்று கண்டுகொண்டது. சிறகசைவை எண்ணி காலத்தை கணக்கிடத் தொடங்கியதும் தயங்கியபடி பிரிவின்மையிலிருந்து முக்காலம் சொட்டி வடிந்து அதை வந்தடைந்தது. அதன் ஊசலில் முடிவிலாது ஆடியது பிரபாவன்.

புவிக்குமேல் அசைவென எஞ்சியிருந்தது பிரபாவனின் சிறகுகள் மட்டுமே. புவியில் இருப்பென எஞ்சியிருந்தது தியானிகனின் உள்ளம். ஆயிரமாண்டுகளுக்கொருமுறை மண்ணில் இறங்கி வந்து தியானிகனைக் கண்டு ஒன்றும் நிகழவில்லை என்பதைச் சொல்லி மீண்டது பிரபாவன். பின்னர் ஒன்றும் நிகழவில்லை என்னும் செய்தியாகவே அதன் உடல் அமைந்தது. குறையாது தவம்கொள்ளும் நிலைகொண்டிருந்தது தியானிகன். சலிக்காது செயல்கொள்ளும் விசை கொண்டிருந்தது பிரபாவன். எண்ணங்களை அவியாக்கி வேள்வி இயற்றியது தியானிகன். அதன் காவலன் என்று பிரபாவன் அமைந்தது.

எங்கு தவமும் செயலும் முற்றிணைகின்றனவோ அங்கே தெய்வமொன்று எழுகின்றது. புவியில் அன்று எஞ்சியது அவர்களின் கூட்டில் முகிழ்த்த தெய்வம் மட்டுமே. ஹவனை என்னும் அத்தெய்வம் ஒவ்வொரு கணமும் நாளும் ஆண்டுமென வேள்விக்கொடை பெற்று வளர்ந்தது. பேருருக்கொண்டு எழுந்து விண்ணுலகை அடைந்தது. அங்கே இந்திரனின் நகரில் அழகிய இளநங்கை எனச் சென்று நின்றது. தழல்போல் சுடர்விட்ட ஆடையணியற்ற உடலுடன், இடக்கையில் செந்தாமரையுடன், வலக்கையில் ஏந்திய வெண்சங்கை ஊதியபடி அமராவதியின் தெருக்களினூடாகச் சென்று அவன் அவையை அடைந்தது.

ஓமென்ற ஒலியுடன் அவைபுகுந்த அப்புதிய தெய்வத்தைக் கண்ட இந்திரன் திகைப்புடன் எழுந்து “அழகியே, நீ யார்?” என்று கேட்டான். “ஹவனை என்ற பெயர்கொண்ட நான் மண்ணில் தியானிகன் என்னும் சிறுபுழுவின் நாவில் எஞ்சிய இறுதிச்சொல் ஒன்றில் சிறு ஒலித்தாதுவென இருந்தவள். ஊழ்கம், கலை, எண்ணம், எழுத்து என நான்கு கைகள் கொண்டு அமைந்த சொல்தெய்வதத்தின் மகள். விண்ணில் பறந்தலையும் பிரபாவன் என்னும் பறவையின் சிறகின் ஒரு பிசிறு என பருவடிவுகொண்டேன். தியானிகனின் சித்தவேள்வியின் அவிபெற்று வளர்ந்தெழுந்தேன். பிரபாவனின் விழிப்பால் பேணப்பட்டேன். மண்ணின்பொருட்டு முடிவிலா விண்ணைக் கூவி அழைப்பது என் பணி” என்றாள் ஹவனை.

“எதற்காகக் கூவி அழைக்கிறாய்? எதன்பொருட்டு நீ இங்கு வந்தாய்?” என்று இந்திரன் கேட்டான். “அரசே, மண்ணில் வாழ்க்கை நின்றுவிட்டது. செயல்கள் அறுந்தன. செயல்திரண்டு கூர்கொள்வதே வேள்வி என்பதனால் அவிகொண்டு வாழும் தெய்வங்கள் மழையின்றி கருகியழியும் புல் என வேரின் காத்திருப்பு மட்டுமாக எஞ்சிவிட்டன. மண்ணில் கைவிடப்பட்டுள்ள இறுதிச் சித்தம் ஒன்றின் அழைப்பு நான். மண் அழிந்தால் அங்கு முளைத்த தெய்வங்களும் அழியும் என்று கொள்க! ஒரு தெய்வத்தின் அழிவென்பது தெய்வங்களாலான மாபெரும் நெசவாகிய விண்ணின் அழிவின் தொடக்கமே என்றுணர்க! தீர்வுதர வல்லோர் அதை கேட்குமாறாகுக!” என்றாள் ஹவனை.

இந்திரன் நாரதரிடம் “விண்ணுலாவியான மாமுனிவரே, அனைத்துலகுகளையும் அறிந்தவர் நீங்கள். அங்கு என்ன நிகழ்கிறதென்று அறிந்து வருக!” என்றான். “அவ்வண்ணமே” என வணங்கி எழுந்த நாரதரை தன் கையில் ஒரு கணையாழி என அணிந்துகொண்டு ஹவனை விண்நகரில் இருந்து இறங்கினாள். பொன்னொளிகொண்ட முகில் என அவள் விண்ணில் பறந்துகொண்டிருந்த பிரபாவன் முன் தோன்றினாள். அவளிலிருந்து ஓர் ஒளித்துளி என எழுந்த நாரதர் “பறவையே, நீ விழைவதென்ன?” என்றார். “நான் கிளையின் இலை, முனிவரே. என் பொருட்டு தவமியற்றும் வேரை சந்தியுங்கள்” என பிரபாவன் அவரை மண்ணுக்கு அழைத்துவந்தது.

தன்முன் காலைவெயிலில் ஒளிகொண்ட பனித்திரள் ஒன்று வந்தமைவதைக் கண்டு தியானிகன் எழுந்தது. அருகே வந்த அப்பொன்னிறச் சுருளில் இருந்து எழுந்த நாரதர் “உங்கள் தவம் நிறைவுறுக! உங்கள் தெய்வம் என்னை விண்ணிலிருந்து அழைத்துவந்தது. உங்கள் வேள்விக்காவலரால் இங்கு கொண்டுவரப்பட்டேன்” என்றார். கைகூப்பி உடல்பணிந்து ஹவனையை வணங்கிய தியானிகன் “உன் அளியால் காக்கப்பட்டேன், என் தெய்வமே. என்னில் எழுந்தவள் என்றாலும் இப்புவியைக் காப்பவளாக நீ அமைக! நானும் என் கொடிவழியினரும் அளிக்கும் அவிபெற்று நீ முடிவிலாது வளர்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றது.

பின்னர் நாரதரிடம் “இசைமுனிவரே, இங்கு புவியிலிறங்குகையிலேயே வேறுபாட்டை உணர்ந்திருப்பீர்கள்” என்று சொன்னது. “ஆம், இங்கு அனைத்து ஒலிகளும் முற்றிலும் ஒத்திசைந்துள்ளன. எனவே எங்கும் இசை எழவேயில்லை” என்றார் நாரதர். “இசை என்பது அமைதியின் ஒலிவடிவம். அமைதி தன்னை வெளிப்படுத்த முடிவில்லாத ஒலிவேறுபாடுகளை ஆள்வதன் விளைவு அது. ஒலிகள் வேறுபாடழிந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து அமையும் வெறுமையில் அமைதி தன்னை இன்மை என வெளிப்படுத்திக்கொள்கிறது.”

“ஆம், ஏனென்றால் இங்கு உயிர் இல்லையென்றாகிவிட்டது” என்றது தியானிகன். “ஏன்?” என்றார் நாரதர். “ஏனெனில் இறப்பு இங்கு நிகழாதொழிந்துள்ளது” என்றது தியானிகன். “அறமும் காலமும் அழிந்துவிட்டன. அனைத்தும் மண்ணுடன் படிந்து இன்மைசூடியிருக்கின்றன.” நாரதர் “எவ்வண்ணம் இது நிகழ்ந்தது?” என்றார். “அறியோம். தன் இருண்ட ஆழங்களில் தென்றிசைத்தெய்வமான யமன் தொழிலியற்றாது அமைந்துவிட்டார் என்று எண்ணுகிறேன். அவருக்கு என்ன ஆயிற்று என்று சென்று உசாவியறிய திசையுலாவியான உங்களால் மட்டுமே இயலும்” என்றது தியானிகன்.

“அங்கு சென்று கருங்காலவடிவரை காணுங்கள், மெய்யறிவரே. அவரை உங்கள் சொற்களால் மீட்டெடுங்கள். மண்ணுலகில் கோடிமுகம் கொண்டு பெருகிப்பரந்திருக்கும் உயிர்க்குலத்தின் மன்றாட்டை முன்வையுங்கள். விழிநீருடன் கைநீட்டி அவரிடம் இறைஞ்சுகிறோம். தேவா, கருணைகொண்டு இறப்பை எங்களுக்கு மீண்டும் அளியுங்கள். எந்த அமுது இங்கே உயிர்பெருகச் செய்ததோ அதை மீண்டும் கனிந்தருளவேண்டும். எதன் மேல் இங்கு அத்தனை நெறிகளும் அமைந்ததோ அதை எங்களுக்கு மறுக்கலாகாது. நாரதரே, எங்கள் கண்ணீரை சென்றுரையுங்கள். எங்கள் அடைக்கலம்கோரலை தெரிவியுங்கள். எங்கள் முதல்மூதாதைத் தெய்வமென்று அமர்ந்தவரிடமன்றி நாங்கள் எவரிடம் செல்வோம்?”

“காலம் சமைத்து, அதன் கணுக்களென சித்தம் ஒருக்கி, இப்புவிக்குப் பொருள் அளித்த சாவு எனும் பேரருளை எங்களுக்கு மறுத்தால் இங்கு இதுவரை இயற்றப்பட்ட அனைத்தும் அறுபட்டு அழியும். முழுமையடையாத எதுவும் முற்றிலும் பொருளற்றதே என்பது அவர் அறியாதது அல்ல. எதன்பொருட்டு பிரம்மனால் இப்புவி படைக்கப்பட்டதோ அந்நோக்கத்தை முறிக்கவேண்டாம் என்று சொல்லுங்கள். எந்த ஆணையின்படி செயல்கள் வேள்விகளாகி தேவர்கள் எழுந்தனரோ அந்த ஆணையை மறுக்கவேண்டாமென மன்றாடுங்கள். எங்கள் நாவென அங்கு சென்று நில்லுங்கள். உயிர்க்குலங்களின் பொருட்டு உங்களிடம் அடிபணிந்து மன்றாடுகிறேன்” என்றது தியானிகன்.

“ஆம், அது என் கடமையே” என்றார் நாரதர். “ஆனால் நான் செல்லும் வழி பாதுகாக்கப்படவேண்டும். இவள் என்னை கொண்டுசெல்லும் ஊர்தியாகவேண்டும். அறிக, இந்திரன் உலகுக்குச் செல்வதிலும் பன்னீராயிரம் மடங்கு ஆற்றல் தேவை இருளுலகுக்கு அமிழ. ஏழு உலகங்களிலும் நிலைபிறழாது செல்வதற்கு அசைவில்லா துலாமுள் அமையவேண்டும். இரு தட்டுகளும் பேரெடை கொண்டாலொழிய அது நிகழ்வதில்லை” என்று நாரதர் சொன்னார். தியானிகன் “நான் என்ன செய்யவேண்டும், முனிவரே?” என்றது.

“இப்புவியிலிருந்து சித்தவேள்வியின் அவி இவளுக்கு வந்துகொண்டே இருக்கவேண்டும்” என்றார் நாரதர். “புவியில் இப்போது அனைவரும் இன்மையென அமைந்துள்ளனர், முனிவரே” என்றது தியானிகன். நாரதர் “உம்முள் எழுந்துள்ள விழைவை அவர்களுக்கு பகிர்ந்தளியும். அவர்கள் தன்னுணர்வுகொண்டு சித்தம் அசையப்பெறுவார்கள். அனைவரும் சேர்ந்தளிக்கும் சொற்களின் அவி இவளுக்கு உணவாகுக!” என்றார். “உம் குலத்தை எழுப்புக. அவர்கள் சுண்டும் விரல்களென்றாகி பிற உயிர்க்குலங்களை தொட்டெழுப்புக!”

“அவ்வாறே” என்றது தியானிகன். “அறிக, நோயின் தெய்வமாகிய வியாதிதேவியும் மூப்பின் தெய்வமாகிய ஜரைதேவியும் ஒவ்வொரு உயிருக்கும் அருகே காத்திருக்கிறார்கள். சித்தமயக்கின் தெய்வமாகிய உன்மாதையும் வலியின் தெய்வமாகிய பீடையும் வியாதியன்னையின் மகள்கள். மறதியின் தெய்வமாகிய விஸ்மிருதியும் அச்சத்தின் தெய்வமாகிய பீதியும் அழுகையின் தெய்வமாகிய ரோதனையும் ஜரையன்னையின் குழவிகள். உயிர்க்குலங்களில் துன்பத்தை நிறைப்பவர்கள் அவர்கள். இறப்பின் தெய்வமாகிய மிருத்யூ அவர்கள் எழுவரை புரவிகளெனப் பூட்டிய கரிய தேரிலேறி செந்நிறக் குழல் பறக்க கரிய முகத்தில் கண்கள் கனல உயிர்களை அணுகுகிறாள்.”

“அறிக, தன்னுணர்வினூடாகவே அவர்கள் உடல்புகுந்து உள்ளத்தை கைப்பற்ற முடியும். நீர் உம் குடியினருக்கும் உயிர்களுக்கும் இருப்புணர்வை அளித்ததுமே ஏழன்னையரும் பேருருக்கொண்டு கோடி கண்களும் கோடானுகோடி உகிர்விரற்கைகளும் நாக்கொடுக்குகளும் நச்சுப்பற்களும் பூண்டு நகைத்தபடியும் உறுமியபடியும் கனைத்தபடியும் பெருகிச்சூழ்ந்து நிறைவார்கள். ஒவ்வொரு கணமும் பெருந்துன்பமே உயிர்க்குலத்தை ஆளும். அதை ஏற்று உளம்தளராது நின்று சொல்லளித்து இவளை விசைகொள்ளச் செய்யவேண்டும் நீங்கள்.”

தியானிகன் “ஆம், அதை செய்கிறோம். எங்களுக்கு வேறுவழியில்லை” என்றது. “அவ்வாறே ஆகுக!” என நாரதர் சொல்லளித்தார். பின்னர் ஹவனையிடம் “என்னை ஏழாமுலகுக்கு அழைத்துச்செல், தேவி. குன்றாது அவி வருமென்றால் உன்னால் எங்கும் செல்லமுடியும். உன் பயணம் வெல்லும்பொருட்டு இவர்கள் இங்கு இயற்றும் தவம் வெல்க!” என்றார்.

wild-west-clipart-rodeo-3பன்னீராயிரமாண்டுகாலம் நாரதர் ஹவனையின் மேலேறி ஆழுலகங்களுக்குள் சென்றுகொண்டிருந்தார். மண்ணுலகில் அனைத்துப் புழுக்களும் தன்னுணர்வு கொண்டன. அக்கணமே அவற்றை வியாதியும், ஜரையும் தங்கள் மகள்களுடன் வந்து பற்றிக்கொண்டனர். வலிகொண்டு துடிப்பதற்கு என்றே அமைந்த உருக்கொண்ட புழுக்கள் பெருகிப்பரவி மண்ணை நிறைத்தன. அங்கிருந்த அனைத்து உயிர்களையும் அவை தொட்டெழுப்பின. எங்கும் பெருந்துன்பம் நிறைந்தது. பெருவலியில் எழும் கதறல்களும் அழுகைகளும் அவை ஓய்ந்தெழும் முனகல்களுமாக புவி முழங்கிக்கொண்டிருந்தது. விண்ணிலிருந்து நோக்கிய தெய்வங்கள் அதை ஒரு தேன்கூடென உணர்ந்தன.

அதலம், விதலம், சுதலம், தலாதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம் என்னும் அடுக்குகளைக் கடந்து பாதாளத்தின் மையச்சுழி என்றமைந்த யமபுரியைச் சென்றடைந்தார் நாரதர். ஒவ்வொரு தளத்திலும் எதிர்கொண்ட பெருந்தடைகளை மண்ணிலிருந்து வந்த அவியின் ஆற்றலால் ஹவனை வென்றாள். வலியின் அசைவுகளே முத்திரைகளாக, துன்ப ஒலியே வேதச்சொற்களாக, விழிநீரே அவியாக பெருவேள்வி ஒன்று நிகழும் வேள்விச்சாலையாக இருந்தது புவி. தொலைவில் யமபுரியைக் கண்டதும் நாரதர் பெருமூச்சுவிட்டு “வந்தடைந்துவிட்டோம். இத்தனை பெருந்துயருடன் உயிர்க்குலம் எதையும் கோரியதில்லை” என்றார்.

ஆயிரம் யோசனை அகலம் கொண்ட ஆழிவடிவப் பெருநகர் அது. நான்கு திசைகளுக்கும் பெருவாயில்கள் அமைந்திருந்தன. மீளா பயணத்தால் வந்தணையும் உயிர்கள் தெற்கு வாயிலின் வழியாக கரிய பெருநதிபோல உள்நுழைந்தன. அங்கே சித்ரபுத்திரனின் காகக்கொடி பறக்கும் மாளிகை அமைந்திருந்தது. அங்குள்ள நூறாயிரம்கோடி யமர்கள் இறப்பின் கணக்குநோக்கி அவர்களை தனித்தனியாகப் பிரித்து உள்ளே அனுப்பினர். ஒவ்வொருவரும் அங்கேதான் அவர்கள் செய்தவை என்னென்ன என்று ஒட்டுமொத்தமாகக் கண்டனர். “இல்லை, அது நானல்ல!” என்ற அலறல் ஒவ்வொரு நாளும் அங்கே எழுந்துகொண்டிருந்தது. இழுத்துக் கொண்டுசெல்லப்படுகையில் ஒவ்வொரு காலடியாக தளர்ந்து பின் நிலம்தொட விழுந்து “ஆம், அது நானே” என்று விம்மினர்.

அந்நகருக்குள் நுழைந்தவர்கள் உருமாறி அங்குள்ள பொருட்களென்றாயினர். பொறுப்பிலாதலைந்தவர்கள் கோட்டைச்சுவரில் கற்களாயினர். ஒழுங்கிலாதிருந்தவர்கள் இல்லங்களின் செங்கற்களாக அடுக்கப்பட்டனர். அளிக்காதவர்கள் தூண்களென்றாயினர். உதவாதவர்கள் படிகளாயினர். ஆட்சி செய்தவர்கள் அடித்தளக் கற்களாயினர். தன்னை எண்ணி தருக்கியவர்கள் மணற்பருக்களாயினர். தனித்தலைந்தவர்கள் குவைகளென்றமைந்திருந்தனர். ஒவ்வொருவரும் அவ்வாறு அமைவதற்கு முன் “எத்தனை காலம்?” என்றே இறுதியாக வினவினர். “முடிவிலிவரை” என்ற சொல் அவர்கள் உளம்போழ்ந்துசெல்லும் இரக்கமற்ற வாளென்று எழுந்தது.

யமபுரியின் கிழக்குவாயில் மூன்றுதெய்வங்களுக்கு மட்டுமென ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கே யானைத்தலைகொண்ட எண்ணாயிரம் காவலர் நின்றிருந்தனர். திசைக்காவலர் உள்ளிட்ட தேவர்களுக்கு வடக்கு. அங்கே பன்னிரண்டாயிரம் காவலர் பன்றித்தலையுடன் நின்றிருந்தனர். இறவாமை எனும் அருள் பெற்ற மாமுனிவர்களுக்கு மேற்கு. அங்கே எருமைத்தலையர் இருபத்துநாலாயிரம்பேர் காத்து நின்றனர். அம்மூன்று வாயில்களும் பெரும்பாலும் திறக்கப்படுவதேயில்லை. ஏனென்றால் ஆழுலகைக் கடந்து அங்குவரும் எவரும் ஒவ்வொரு அடிவைப்பிலும் தங்கள் தவத்தை இழந்துகொண்டிருக்கவேண்டும் என்பதே நெறி.

நகரைச் சூழ்ந்திருந்த பெருங்கோட்டை வெப்பமும் தண்மையும் ஒருங்கே கொண்டதெனத் தோன்றி தொட்டவரை எரிக்கும் இரும்பாலானது. இருளும் ஒளியும் ஒருங்கே அமைந்ததுபோல் கரிய மின் கொண்டிருந்தது. அதற்குள் செம்பாலான உட்கோட்டையும் நடுவே வெள்ளியாலான அரண்மனைக்கோட்டையும் அமைந்திருந்தன. சகஸ்ரபத்மம் என்னும் பொன்மாளிகை ஒரு மையத்தாமரை என தன்னுள் இருந்து எடுத்த ஒளியால் நடுவே பொலிருந்திருந்தது. ஆயிரம் இதழ்களாக குவைக்கோபுரங்கள் கொண்டிருந்தது. பன்னிரண்டாயிரம் உப்பரிகைகளும் பதினெட்டாயிரம் வாயில்களும் கொண்டிருந்தது. அதன் உச்சியில் காகக்கொடி பறந்தது.

ஒன்றுக்குள் ஒன்றென்று அமைந்த நூற்றெட்டு தெருக்களால் ஆனது காலபுரி. முதல் தெருவில் பன்னிரண்டாயிரம் இல்லங்களில் காய்ச்சலின் தெய்வமான ஜ்வரை, வலிப்பின் தெய்வமான அபஸ்மாரை, புண்ணின் தெய்வமான க்ஷதை முதலான தெய்வங்கள் தங்கள் பல்லாயிரக்கணக்கான படைக்கணங்களுடன் வாழ்ந்தன. அதற்கடுத்த தெருவில் சினத்தின் தெய்வமான குரோதை, வஞ்சத்தின் தெய்வமான பிரதிகாரை, வெறுப்பின் தெய்வமான விரோதிதை முதலிய பதினொன்றாயிரம் தெய்வங்கள் தங்கள் எண்ணற்ற ஏவலர்களுடன் வாழ்ந்தன. தொடர்ந்தமைந்த தெருவில் ஸ்கலிதை, விஃப்ரமை, தோஷை முதலிய பிழைகளின் தெய்வங்கள் பத்தாயிரம் இல்லங்களில் குடியிருந்தன.

யமன் தன் மாளிகையின் மையத்தில் அமைந்த பேரவையில் தன் பட்டத்தரசி தூமோர்ணையுடனும் அப்பிராப்தி, சியாமளை, இரி என்னும் இணையரசியருடனும் அரியணை அமர்ந்து ஆட்சிசெய்தான். அவன் அவையில் அறமறிந்த முனிவர்கள் பதினாறாயிரம்பேர் காகபுசுண்டரின் தலைமையில் அமர்ந்து நாளும் நெறிதேர்ந்தனர். மண்ணில் அறம்பிழைக்கும் ஒவ்வொரு முறையும் அதை ஒரு பறவைக்குரல் அங்கே கூவியறிவித்தது. பேரழிவு நிகழ்கையில் விண்ணில் ஒரு குருதியொளிகொண்ட மீன் எழுந்தது. அவைமுதல்வனும் படைமுதல்வனும் இறக்கும்போது சங்கொலி எழுந்தது. அந்நகரின் ஒவ்வொரு மணற்பருவிலிருந்தும் எண்ணத்தால் தன் வடிவேயான ஓர் உருவை உருவாக்கி மண்ணுக்கு அனுப்பி அறத்தை ஆண்டான் யமன்.

யமபுரியின் மேற்குவாயிலை அடைந்த நாரதர் அங்கிருந்த எருமைத்தலைக் காவலர்களால் தடுக்கப்பட்டார். “இவ்வழியே எவரும் வருவதில்லை. இதைத் திறக்க அரசரின் ஆணை தேவை” என்றார் காவலர்தலைவராகிய நியமர். “என் வழியை எவரும் தடுக்கவியலாது” என்று நாரதர் முன்னால் சென்றார். அவரை ஏந்திச்சென்றிருந்த ஹவனை அனலுருக்கொண்டாள். அவ்வனல் தாளாமல் எருமைத்தலையர் அப்பால் விலகி கூச்சலிட்டனர். ஹவனை யமபுரியின் மேற்குக் கோட்டையின் வாயிலை உருக்கி அழித்தாள். அதனூடாக நாரதர் உள்ளே நுழைந்தார்.

அவர் அணுகுவதை ஏவலர் வந்துசொல்ல காகபுசுண்டரின் ஆணைப்படி அவரை அரசவைக்கு கொண்டுசென்றனர். வழியெங்கும் அப்பெருநகரம் செயலின்மையில் சோர்ந்து நிழலசைவு என இயங்கிக்கொண்டிருப்பதை நாரதர் கண்டார். எவரும் எவரிடமும் பேசவில்லை. ஒருவர் விழியை பிறர் நோக்கவுமில்லை. ஒவ்வொன்றும் முன்னரே நிகழ்ந்ததன் மறுநிகழ்வு என உயிரற்றிருந்தன.

அவைமுகப்பில் அவரை எதிர்கொண்டு வணங்கிய காகபுசுண்டர் “எவ்வண்ணம் இங்கு வந்தீர், நாரதரே?” என்றார். “இங்கு எவரும் வரலாகாதென்று தடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இங்கு வந்து நோக்கியபின் எங்கும் எதிலும் எப்பொருளையும் காணவியலாது. இங்கன்றி எங்கும் பின்னர் வாழவும் இயலாது.” நாரதர் “ஆம், ஆயினும் நான் வரவேண்டியிருந்தது. புவியின் உயிர்க்குலங்களின்பொருட்டு மட்டும் அல்ல. புவியென்று எழுந்த பெருவிளையாடலின் பொருட்டும்கூட” என்றார். “என்னை இங்குவரை கொண்டுசேர்த்தது மண்ணில் நிகழும் பெருவேள்வியின் அவிப்பயனே.”

காகபுசுண்டர் “ஆம், எங்கோ ஒரு பெருவேள்வி நிகழ்கிறது என்று உணர்கிறேன். இங்கு எங்கும் இளமஞ்சள் ஒளியும் இனிய இசையும் நறுமணங்களும் நிறைந்துள்ளன” என்றார். “அவ்வேள்வி புவியில் நிகழ்கிறது. வேள்விகளில் தலையாயது அது. யாதனா யக்ஞம் என அதை சொல்கின்றனர் முனிவர். ஒவ்வொரு உடலணுவிலும் பெருவலியை நிறைத்துக்கொண்டு, ஒவ்வொரு காலத்துளியையும் துயரென்றே உணர்ந்தபடி, கண்ணீரும் அலறலுமாகச் செய்யும் வேள்வி அது. நோயுற்ற உடல்கள் அதை இயற்றுகின்றன. நலிந்து இறக்கும் உயிர்கள் அதனூடாகவே விடுதலை பெறுகின்றன. முனிவரே, இப்போது புவியின் உயிர்க்குலமே அதை அங்கே செய்துகொண்டிருக்கிறது.”

“நோக்குக!” என்று நாரதர் கைகாட்ட காகபுசுண்டர் மண்ணுலகை தன் அகவிழியால் கண்டார். அங்கே ஒவ்வொரு உயிரும் தன்னுடலை தானே ஒடுக்கி உச்ச வலியில் துடித்துக்கொண்டிருந்தது. நெரிபட்ட பற்கள், இழுபட்டு முறுகிய நரம்புகள், அதிரும் தசைநார்கள், இறுகப்பற்றிய கைகள், நீர்கோத்த சிவந்த விழிகள், நீலம்பாரித்த தோல்கள். “பெருந்துயர்!” என காகபுசுண்டர் சொன்னார். “ஏனென்றால் அங்கே இறப்பு இல்லாமலாகிவிட்டிருக்கிறது. யமன் அந்த அமுதக்கொடையை நிறுத்திவிட்டிருக்கிறார். அவரைக் காணவே வந்தேன்” என்றார் நாரதர்.

“ஆம், இங்கே அறச்செயல்கள் நின்றுவிட்டிருக்கின்றன. அதில் நாங்கள் செய்வதற்கேதுமில்லை. நாங்களும்  தெய்வங்களேதும் தலையிடவேண்டுமென்று எண்ணியிருக்கிறோம்” என்றார் காகபுசுண்டர். அங்கு நிகழ்வதென்ன என்று விளக்கினார். நெடுங்காலமாக அரசரில்லாமல் அவை ஒழிந்துகிடந்தது. பெருநகர் புதிய ஆணைகள் இல்லாமல் ஆற்றியதையே மீண்டும் மீண்டும் இயற்றிக்கொண்டிருந்தது. மையச்செயல் நின்றுவிட்டபோது அங்குள்ள ஒவ்வொன்றும் இலக்கழிந்தது. ஒவ்வொருவரும் இருப்பிழந்தனர்.

“தென்றிசையில் முஞ்சவான் என்னும் மலையின் உச்சியில் சென்றமர்ந்து மூவிழியனை தவம்செய்துகொண்டிருக்கிறார் அரசர். அங்கே எவர் செல்வதையும் அவர் விரும்பவில்லை. தன்னந்தனிமையில் தன் கைகளால் உருவாக்கிய சிவக்குறியை ஒழியா உளச்சொல்லால் வழிபட்டபடி அமர்ந்திருக்கிறார். அவரை அரசியர் கண்டே நெடுங்காலம் ஆகின்றது. அன்றுமுதல் இறப்புச்செயல் நிலைத்துவிட்டது” என்று காகபுசுண்டர் சொன்னார்.

நாரதர் “நான் அங்கு சென்று அரசரைக் கண்டு பேசவிழைகிறேன்” என்றார். “மூன்று முதன்மைத் தெய்வங்களில் ஒன்றே அங்கே செல்லமுடியும். அதிலொன்று எழுந்தருளும் என்று எண்ணினேன்” என்றார் காகபுசுண்டர். “அதிலொன்றின் ஆடல்போலும் இது. ஆடும் அனைவரும் அவனே” என்றார் நாரதர். “அங்கு செல்லும் வழியெல்லாம் தடையென அரசரின் காவல்பூதங்கள் உள்ளன, முனிவரே” என்றார் காகபுசுண்டர், “அவற்றைக் கடக்கும் வழியை நானும் அறியேன்.” நாரதர் “நான் செல்வது அவர் நலனையும் சார்ந்தது. அதனாலேயே இறுதியில் தடைகள் அகலும்” என்றபின் கிளம்பினார்.

wild-west-clipart-rodeo-3முஞ்சவான் என்னும் மலைமுடிக்கு நாரதர் இருளில் இருந்து மேலும் இருளினூடாகச் சென்றார். இருளில் அவர் உடலழிந்தது. பின் விழி அழிந்தது. அவர் நினைவுகளிலும் இருள் செறிந்தது. அறிந்தவை இருண்டன. இருத்தல் இருண்டது. பின்னர் செல்கை என்பதாக மட்டுமே அவர் எஞ்சினார். “மேலும் அவி கோரி புவியில் எரியிலென எழுக!” என்று ஹவனையிடம் சொன்னார். “ஆம், என் சித்தம் அங்கே எழுந்து கைவிரித்து அலறி அவர்களிடம் கொடை கோருகிறது. இன்னும் துயர் கொள்க, இன்னும் விழிநீர் விடுக, உங்கள் உடலுருகி நெய்யாகுக, உங்கள் உளமுருகி சொல்லாகுக என்று ஆணையிடுகிறேன்” என்றாள் ஹவனை.

பன்னிரு ஆண்டுகள் இருளில் சென்று நாரதர் இருண்ட நீரில் கரிய நீர்க்குமிழியென தன்னொளிகொண்டு வானில் நின்றிருந்த முஞ்சவானை சென்றடைந்தார். அங்கே யமனால் காவல்நிறுத்தப்பட்டிருந்த பேய்களும் பூதங்களும் காகங்களும் எருமைகளும் கழுதைகளும் பன்றிகளுமாக கரிய உருப் பெருக்கி அலறியபடி அவரை சூழ்ந்துகொண்டன. “நான்! நான்!” என நுண்சொல் உரைத்து தன்னை ஊழ்கத்தில் நிறுத்தி அவற்றை வென்றார். பின்னர் எழுந்தவை அவருடைய உருவம் கொண்டிருந்தன “தேவர்கள் தேவர்கள்” என்று சொல்லி அவற்றை வென்றார். பின்னர் எழுந்தவை அவர் அறிந்த தேவர்களின் உருக்கொண்டிருந்தன. “தெய்வம் தெய்வம்” என்று அவற்றை வென்றார்.

மூன்றுதெய்வங்களின் வடிவிலெழுந்து விழுங்க வந்த இருள்முகில் காலர்களை “பிரம்மம்! பிரம்மம்!” என்று சொல்லி கடந்தார். அதன்பின் பெருங்கால வடிவுகொண்டு வந்தன பூதங்கள். “தேவி, உன் ஆற்றல் மிகுக!” என்றார் நாரதர். “முனிவரே, இப்போது புவியிலுள்ளவர்களை ஏழு கொடுந்தெய்வங்களின் வடிவுகொண்டு வதைத்துக்கொண்டிருப்பவள் நான். இரக்கமில்லாமல் அவர்கள்மேல் நின்று நடமிடுகிறேன்” என்றாள் ஹவனை. காலவடிவ பூதங்களை “அகாலம் அகாலம்” என்று தவம்செய்து வென்றார் நாரதர்.

எதிரே இருளெனக் குவிந்து இரும்புக் கோட்டையென உருத்து நின்ற தடையை நோக்கி “காலதேவா, அகாலதேவா, அறனுருவே, மறலியே, அடைக்கலமாகுக, நீ!” என்று கூவியபடி நேர்நோக்கிப் பாய்ந்தார். ஹவனை அவரிலிருந்து ஒரு மெல்லிறகென உதிர்ந்தாள். அவர் சென்று சென்று காலதேவனின் முன் சிறு கருங்குருவி என சிறகு மடித்து இறங்கினார்.

நூல் பதினேழு – இமைக்கணம் – 1

ஒன்று : காலம்

wild-west-clipart-rodeo-3திரேதாயுகத்தில் இது நிகழ்ந்தது. வெண்ணிறமான சிற்றுடலும் சிவந்த துளிக்கண்களும் கொண்ட தியானிகன் என்னும் சிறுபுழு தன் துளையிலிருந்து வெளியே வந்து நெளிந்து அங்கே அமர்ந்திருந்த பிரபாவன் என்னும் சிட்டுக்குருவியை நோக்கி தலைதூக்கியது. பிரபாவன் தன் மணிவிழிகளை உருட்டி அதை நோக்கியது. கூரிய சிறுஅலகைத் திறந்து ஆவலுடன் சிறகடித்து அதை நோக்கி வந்தமர்ந்து கொத்துவதற்காக குனிந்தது. ஆனால் தியானிகன் தலைதாழ்த்தவோ விலகிச்செல்லவோ இல்லை. தலைநிமிர்ந்து நோக்கி அச்சமின்றி நின்றது.

அந்தத் துணிவை அதற்குமுன் குருவிகளோ அவற்றின் நினைவிலுறைந்த தொல்மரபினரோ அறிந்திருக்கவேயில்லை. ஆகவே பிரபாவன் திகைத்து புழுவை அச்சுறுத்தும்பொருட்டு எழுந்து சிறகடித்து அமர்ந்து கூச்சலிட்டது. பலமுறை கொத்தப்போவதுபோல அலகை கொண்டுவந்தது. தரையை தன் உகிர்களால் கீறியும் வாலைச் சுழற்றி வீசியும் ஓசையிட்டது. தியானிகன் இளம்புன்னகைபோல சிறிய வாய் நீண்டிருக்க, விழிநாட்டி நோக்கியபடி அசையாமல் நின்றிருந்தது.

அச்சம்கொள்கையில் புழுவின் உடலில் எழும் நறுமணத்தால்தான் அது உணவென சமைக்கப்படுகிறது என்பதை உணர்ந்த பிரபாவன் திகைத்து சோர்ந்து நின்றது. சோர்வுறுகையில் அதன் சிறகு சரிந்து தலை மார்புக்குள் அழுந்துவது வழக்கம். பின்னர் மீண்டு எழுந்து குனிந்து “நீ ஏன் அச்சம்கொள்ளவில்லை? சொல்க!” என்றது. தியானிகன் “உம்மால் என்னை கொல்லமுடியாது… என்னை விழுங்கினீரென்றால் உம் வயிற்றுக்குள் உயிருடன் இருப்பேன்” என்றது. “அய்யோ!” அஞ்சிய பிரபாவன் “ஏன்?” என்றது. “ஏனென்றால் நான் இறக்கமாட்டேன்” என்றது தியானிகன்.

பிரபாவன் அதை ஐயத்துடன் நோக்கி தலையைச் சரித்தபின் “ஏன்? சாகாச்சொல் வாங்கிவிட்டாயா?” என்றது. “நான் மட்டுமல்ல, இனி இப்புவியில் எவருமே சாகப்போவதில்லை” என்றது தியானிகன். “என்ன சொல்கிறாய்?” என்று பிரபாவன் திகைப்புடன் கேட்டது. “உம்மைச்சுற்றி பாரும். என்ன நிகழ்கிறது? வேட்டையாடி உண்ட விலங்குகள் எல்லாம் உண்டவற்றை கக்கிக்கொண்டிருக்கின்றன. நீர்கூட சற்றுமுன் உயிருடன் புழுக்களையும் பூச்சிகளையும் கக்கினீர்” என்றது தியானிகன். பிரபாவன் “ஆம்” என்றது. அச்சத்துடன் எழுந்து சிறகடித்துச் சுழன்றமைந்து “என்னால் பசி தாளமுடியவில்லை. ஆனால் உண்பவை செரிப்பதுமில்லை” என்றது.

“உமது பெயர் என்ன?” என்று தியானிகன் கேட்டது. “என்னை பிரபாவன் என என் அன்னை அழைத்தாள்.” “நன்று பிரபாவரே, என் பெயர் தியானிகன். எத்தனையோ தலைமுறைகளாக உங்கள் குலம் எங்கள் குலத்தை உண்கிறது. நம் இருவருக்குள் அமைந்துள்ள விந்தையானதோர் உறவை எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா?” பிரபாவன் “இல்லை. என் அன்னை சொன்னதுண்டு, நாங்கள் உண்பதற்காகவே நீங்கள் பல்கிப்பெருகுகிறீர்கள் என்று. புவியன்னையால் இனிதாக சமைக்கப்பட்டு பரிமாறப்பட்ட உணவு நீங்கள்” என்றது.

தியானிகன் சிரித்து “ஆம், மெய். ஆனால் என் அன்னை எனக்குச் சொன்னது வேறு. நாங்கள் உடலில் சிறகற்றவர்கள். ஆனால் புவியெங்கும் பரவ விழைகிறோம். எங்கள் தொல்மூதாதை தவம் செய்து பிரம்மனிடம் அருட்சொல் பெற்றார். அதன்படி வானெங்கும் நிறைந்திருக்கும் பறவைகளின் அனைத்துச் சிறகுகளையும் நாங்கள் ஆளத்தொடங்கினோம். பிரபாவரே, எங்கள் முட்டைகளை உங்கள் வயிற்றில் விதைக்கிறோம். அவற்றை உலகமெங்கும் நல்ல நிலம் தேடிச் சென்று பரப்புவதற்காக உங்களை பயன்படுத்திக்கொள்கிறோம். நீங்கள் பசியிலாது பறக்கவும் ஆற்றல் குன்றாது திசைவெல்லவும் உங்களுக்கு நாங்கள் உணவளிக்கிறோம்” என்றது.

பிரபாவன் அதை புரிந்துகொள்ளாமல் தலையை அங்குமிங்குமென திருப்பியது. மீண்டும் சோர்வுகொண்டு சிறகுகளை நிலம்தொடச் சரித்து, தலையை உடலுக்குள் இழுத்துக்கொண்டு பெருமூச்சுவிட்டது. தியானிகன் “நீர் உளம்சோர வேண்டியதில்லை. இப்புவியிலுள்ள அனைத்து உயிர்களும் இவ்வாறு ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்டவையே. ஒரு தனி உயிருக்கென வாழ்க்கை ஏதும் இல்லை. இன்பதுன்பங்களும், நிகழ்வின் ஒழுங்கும், வீடுபேறும் முற்றிலும் பிறவற்றை சார்ந்துள்ளன. புவிப்பெருக்கின் உட்பொருளையே ஒவ்வொரு உயிரும் தன் இருப்பின்பொருள் எனக்கொண்டுள்ளது” என்றது.

பிரபாவன் மீண்டும் பெருமூச்சுவிட்டு “ஆனால் என் வலிமைவாய்ந்த சிறகுகள் உங்கள் கருவிகள்தான் என்பது சோர்வுறச் செய்கிறது. எங்கள் குலமே இவற்றைப்பற்றி பெருமிதம் கொண்டிருக்கிறது. ஒவ்வொருநாளும் அலகால் நீவி அடுக்கியும், மென்பூழியாலும் நீராலும் தூய்மை செய்தும், இவற்றை பேணுகிறோம். எங்கள் அடையாளமே இச்சிறகுகள்தான். சிறகுகளாகவே உலகு எங்களை அறிந்திருக்கிறது. எங்கள் உடலேகூட இச்சிறகுகளின் பொருட்டு அமைந்ததுதான் என்பர் முன்னோர்” என்றது.

தியானிகன் “எங்களுக்கும் சிறகுகள் உண்டு” என்றது. “உங்களுக்கா? எங்கே?” என்றது பிரபாவன். “எங்கள் கால்களைப்போல” என்ற தியானிகன் நெளிந்து அருகே வந்து “நான் நடக்கும்போது நோக்குக! கால்கள் தெரிகின்றனவா?” என்றது. “ஆம், அசைவின்போது உன் உடலில் கால்கள் உள்ளன என விழிமயக்கு எழுகிறது.” தியானிகன் “அது விழிமயக்கு அல்ல, அவை என் உடலுக்குள் நுண்வடிவில் உள்ளன. சிறகுகளும் அவ்வாறே. பிரபாவரே, எங்களுக்குள் வானமே அவ்வாறு கருத்துருவென உறைகிறது” என்றது.

“எங்களில் சிலர் கால்களை வெளியே எடுத்துக்கொள்வதுண்டு. சிலர் சிறகுகளை வெளியே எடுத்துக்கொண்டு காற்றில் ரீங்கரித்து எழுவதுமுண்டு. எங்கள் நூல்களின்படி இப்புவியிலுள்ள உயிர்க்குலங்கள் அனைத்துக்கும் விதைகள் நாங்களே. எங்களிடம் நுண்கருத்தென உறையும் விழைவுகளே கால்களும் சிறகுகளும் வால்களும் நாவுகளும் கொம்புகளும் உகிர்களும் நஞ்சும் வஞ்சமுமாக எழுந்து பல்லாயிரம் வடிவங்களில் இங்கு பரவியிருக்கின்றன. எங்களுக்கு முன்பிருப்பது பருவில்லா கருத்துவெளி மட்டுமே. அறிக! மகத்தை ஜகத் என்றாக்குவது நாங்களே” என்றது தியானிகன்.

பிரபாவன் பெருமூச்சுவிட்டது. மறுசொல் என ஒன்று அவ்வுரைக்கு இருக்கும் என அதற்கு தோன்றவில்லை. “நீரே கண்டிருப்பீர், இங்குள்ள ஒவ்வொன்றும் இறந்து மண்படிகையில் உடல்கள் மீண்டும் எங்களால் உண்ணப்பட்டு எங்கள் வடிவை அடைந்து உப்பென்றாகி மண்ணில் மறைகின்றன. ஆக்குவதில் நீரென்றும் அழிப்பதில் அனல் என்றும் இப்புவியில் திகழும் உயிர்வடிவம் நாங்கள். எங்கள் நெளிவு நீரும்நெருப்பும் தங்கள் அசைவெனக் கொண்டிருப்பதே.”

பிரபாவன் இமை மேலேறி கண்களை மூட அலகை மார்புப்பிசிறில் புதைத்து அசைவில்லாது அமர்ந்திருந்தது. “ஆனால் துயருற வேண்டியதில்லை. விண்ணளப்பவர்களாகிய நீங்கள் அனைத்தையும் ஆளும் எங்களின் உயர்வடிவு என நிறைவுகொள்ளலாம்” என்றது தியானிகன். “நாங்கள் விதையும் வேரும் என்றால் நீங்கள் இலையும் தளிரும் மலரும். நாங்கள் பொருளாழம் என்றால் நீங்கள் அழகிய சொற்கள்.”

“பிரபாவரே, நான் என உணர்வது விடுதலை அல்ல. அது நம் கைகளை வடமென்றாக்கி நம்மை கட்டிக்கொள்வது. முழுமையென உணர்வதே விடுதலை. அது உருவழிந்து கரைந்து பேருருவென எழுவது” என்றது தியானிகன். சற்றுநேரம் கழித்து அஞ்சியதுபோல பிரபாவனின் இறகுகள் மெய்ப்புகொண்டு சிலிர்த்தெழுந்தன. அது கனவில் இருந்து என விழித்து திடுக்கிட்டு சூழ நோக்கியபின் தியானிகனைப் பார்த்து தெளிவுகொண்டு சிறகுகளை நீட்டி மீண்டும் அடுக்கி “ஆனால் நீங்கள் இனிமேல் சாவதில்லை என்று சற்றுமுன் சொன்னாய்” என்றது.

“எவரும் சாகப்போவதில்லை என்றேன். சாவு நின்றுவிட்டது என்று உணர்ந்தேன்” என்றது தியானிகன். “நாங்கள் ஊழ்கத்தில் உயிர்துளித்து உளம்திரட்டி உடல்கோத்து எழுபவர்கள். முட்டைக்குள் இருக்கும் துளிக்கடலில் ஓர் சிற்றலையென மகத்தில் நாங்கள் நிகழ்கிறோம். நான் என உணர்ந்து, இது என அறிந்து, அது என கண்டதும் உண்ணத் தொடங்குகிறோம். அதன் பின் உண்பதே வாழ்வு எங்களுக்கு. அவிகொள்ளும் அனலுக்கு நிகரானவர்கள் நாங்கள்.”

“முட்டைக்குள் இருந்து வெளிவந்த பின்னரும் பலவகையான ஊழ்கங்கள் எங்களுக்கு அமைகின்றன. பிறந்த தொட்டிலிலேயே ஊழ்கம்கொள்பவர்கள் உண்டு. உணவுக்குள் சென்று அறையமைத்து ஊழ்கம் பயில்வோருண்டு. நான் அன்னை உடலையே உண்டு அவளில் ஊழ்கம் பயின்றெழுபவன். விழியும் சித்தமும் கொண்டு நான் எழுகையில் என் அன்னை கூடென்று என்னை சூழ்ந்திருப்பாள்” என்றது தியானிகன்.

“இம்முறை நான் எழுந்தபோது என் அன்னை குனிந்து துயர்மிக்க விழிகளால் என்னை நோக்கிக்கொண்டிருப்பதை கண்டேன். நீ யார் என்று கேட்டேன். மைந்தா, நான் உன் அன்னை. யுகங்களாக என்னைக் கொன்று உண்டபின் நீங்கள் உலகறிகிறீர்கள் என்றாள். அதனாலென்ன, அன்னையை உண்ணாமல் கொல்லாமல் வாழும் மைந்தர் எக்குலத்திலும் இல்லை என்று நான் சொன்னேன். ஆம், ஆனால் இன்று உன்னை என் உடலில் இருந்து எழக்காண்கையில் துயர்கொள்கிறேன் என்றாள் அன்னை.”

“என்ன நிகழ்கிறதென்று அறியாமல் நான் வெளியேறி சூழ நோக்கினேன். அதை உணரும்பொருட்டு மீண்டுமோர் ஊழ்கத்திலமைந்தேன். நீர் அறிந்திருப்பீர், உடலை அளவுகோலெனக் கொண்டு காலத்தையும் இடத்தையும் அளப்பதையே வாழ்வெனக் கொண்டவர்கள் புழுக்குலத்தோரான நாங்கள். அவ்வளவுச்செயல் நின்றாலொழிய நான் காலஇடம் கடந்த மெய்மையை அறியமுடியாதென்று உணர்ந்து வால்தலைக் கவ்வி ஒரு சிறுசுழியென்றானேன். இறுகி இறுகி மணியென்றானேன். துளியென்று உள்ளும் செறிந்தேன். அப்போது அறிந்தேன், இங்கே இறப்பு நின்றுவிட்டிருக்கிறது.”

பிரபாவன் படபடப்புடன் “என்னால் இன்னமும் கூட இதை புரிந்துகொள்ள முடியவில்லை. அதெப்படி இறப்பு இல்லாமலாகக்கூடும்?” என்றது. “அதை என்னாலும் புரிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் இப்போது இங்கு எதுவும் இறப்பதில்லை.” பிரபாவன் சிறகை விரித்து மடித்து “அவ்வாறென்றால் இனி இங்கே ஊனுடல்கள் உணவென்று ஆகாதா?” என்றது. “அதைவிட இனி இங்கே உயிர்ப்பலிகள் இல்லை. பலியில்லையேல் வேள்வியில்லை. ஆகவே தெய்வங்கள் இல்லை” என்றது தியானிகன். “தெய்வங்கள் இல்லையேல் செயல்கள் ஒழுங்கும் மையமும் பொருளும் கொள்வதில்லை. ஒவ்வொரு செயலும் பிறிதொன்றுடன் உரசினால் வலியும் துயருமே எஞ்சும்.”

அவர்கள் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். “ஒரு பெரும்பிழை தொடங்குகிறது என ஐயுறுகிறேன். என்ன ஆயிற்று என்று தெரியவில்லை” என்றது தியானிகன். பிரபாவன் அதை நோக்காமல் வானையும் திசைகளையும் நோக்கி தலைசுழற்றியபின் சிறகோசையுடன் எழுந்து பறந்தது.

wild-west-clipart-rodeo-3பிரபாவன் காட்டுக்குள் பறந்துசென்றபோது சிலகணங்களிலேயே தியானிகன் சொன்னதெல்லாம் பொய் என எண்ணத் தொடங்கியது. நுண்ணறிவுகொண்ட சிறுபுழு ஒன்று தன் துணிவால் தன்னை ஏமாற்றிவிட்டது என உளம் சலித்தது. சூழப் பறந்தவையும் அமர்ந்தவையும் நடப்பவையும் இழைபவையும் அமைந்தவையுமான உயிர்கள் ஒவ்வொன்றையாகக் கண்டு இவை இறக்காமலிருக்கலாகுமா என திகைத்தது.

அன்றுவரை ஒவ்வொரு உயிரையும் காணும்போது முதலில் எழுந்த எண்ணம் அவற்றின் இறப்பே என்று உணர்ந்தது. அந்த மரம் நெடுநாள் வாழ்வுகொண்டது, இந்தப் பூச்சி இருநாள் சிறகு கொள்வது என்றுதான் ஒவ்வொன்றையும் மதிப்பிட்டிருந்தேன். என்னைவிட வாழ்வது, என்னைவிட விரைந்தழிவதென்று உலகை பகுத்திருந்தேன். முதல்முறையாக இருப்புக்கு பொருள் அளிப்பது இறப்பே என உணர்ந்ததும் உள்ளத்தின் எடை தாளாமல் ஒரு பாறையில் அமர்ந்தது.

அருகே ஓடிய ஒரு சிறுபூச்சியை கண்டு ‘இவனிலிருந்து தொடங்குவோம்’ என எண்ணி அலகால் கொத்தியது. அதன் சிறிய ஓட்டை உடைத்து உதறியது. பூச்சி எட்டு கைகால்களை அசைத்து கெக்கலித்து “என்னை எவரும் ஒன்றும் செய்யவியலாது” என்றது. வெறியுடன் அதை கிழித்து உதறியது. வெறும் தலைமட்டுமே எஞ்ச அது சிரித்து “சித்தம் வாழ்வதற்கு ஒரு சிறு துளி உடல்போதும், இருந்துகொண்டிருப்பேன். இறப்பென்பதில்லை” என்றது.

சோர்வுடன் அதை கீழே உதிர்த்துவிட்டு அமர்ந்த பிரபாவனிடம் “காலைமுதல் இதை கண்டுபிடித்தேன். இந்நாள் வரை நானும் என் கணமும் அச்சமொன்றையே மெய்யென்று கொண்டிருந்தோம். எங்கள் எண்ணங்களும் செயல்களும் அச்சத்தாலேயே வடிவமைக்கப்பட்டிருந்தன. அச்சத்தை உதறுவதன் எல்லையில்லா விடுதலையை அடையும் பேறுபெற்ற என் குலத்தான் நான். அதில் திளைக்கிறேன். உன் கூரலகைக் கண்டுதான் உன் அருகே வந்தேன்” என்றது பூச்சி.

அப்பால் மெல்லிய சரடொன்றில் இறங்கிவந்த சிலந்தி “அதனினும் பெரிய விடுதலை நாம் பின்னிய வலையில் நாமே மாட்டியிருப்பது. ஒவ்வொரு கணமும் நெய்துகொண்டிருப்பதை நிறுத்தியபின் என் கால்கைகளை தூக்கி பார்த்தேன். இவற்றால் நான் என்னென்ன செய்யமுடியும் என எண்ண எண்ண என் உள்ளம் கிளர்ந்தெழுகிறது” என்றது. “காலைமுதல் வெறுமனே சரடில் தாவிக்கொண்டிருக்கிறேன். நேற்றுவரை என் குலம் செய்துவந்த செயல்கள்தான் இவை. ஆனால் வேட்டைக்கென அன்றி விளையாட்டென செய்கையில் இவற்றிலிருந்து எதிர்பார்ப்பும் பதற்றமும் அச்சமும் அகன்றுவிட்டன, தூய உவகை பெருகுகிறது.”

அருகே ரீங்கரித்து வந்தமர்ந்த குளவி “அதனினும் விடுதலை அச்சத்தின்பொருட்டு சேர்த்துவைத்த நஞ்சை துறப்பது” என்றது. திரும்பி அருகே வால்விடைக்க கைதூக்கி நடந்துசென்ற சிறிய தேளை நோக்கி சிரித்து “உன் கொடுக்கு விடைப்பு கொள்ளவேண்டியதில்லை, நண்பா. அந்நஞ்சை உதறிவிடு. அதன்பின் எஞ்சுவதென்னவோ அதுவே நீ” என்றது. சிலந்தி “ஆம், நஞ்சிலாத கொடுக்கு இன்னொரு காலென்றும் ஆகக்கூடும்” என்றது.

“ஆம், நஞ்சுக்கு இனி தேவை ஏதுமில்லை. நான் எவரையும் கொல்லவேண்டியதில்லை, எவரும் என்னை கொல்லவும்போவதில்லை. ஆனால் என் உடல் அமைந்திருப்பதே என் கொடுக்குமுனை நஞ்சை ஏந்திச்செல்லவும் விசையுடன் செலுத்தவும் உதவும் வடிவில்தான். நஞ்சில்லையேல் என் உடல்வடிவும் பொருளிழந்துவிடுகிறது” என்றது தேள். “ஆகவே இல்லா நஞ்சை நடிக்கிறேன். எனக்கு வேறுவழியில்லை.” சிலந்தி திகைப்புடன் நோக்க “வலையில்லாமல் வெறும்வெளியை நெய்துபார். அது பேருவகை அளிக்கும் பின்னற்கலை” என்றது பூச்சி.

உளச்சோர்வுடன் எழுந்து காற்றில் சுழன்ற பிரபாவன் “ஏன் நான் மட்டும் சோர்வுகொண்டிருக்கிறேன்?” என எண்ணிக்கொண்டது. கீழே மான்களும் முயல்களும் அச்சமின்றி துள்ளிவிளையாடின. புலிகளை தேடிச் சென்று சீண்டின கன்றுகள். இருளுக்குள் மறைந்தே வாழ்ந்திருந்த பல்லாயிரம் உயிர்கள் வெளிவந்து வெயிலில் திளைத்தன. மண்ணுக்குள் மறைந்து வாழ்ந்த எலிகளும் நிலக்கீரிகளும் என பலநூறு உயிர்கள் எழுந்து வந்து துள்ளிக் குதித்தன.

மீன்கள் ஒளிரும் இலைகள் என நீரிலிருந்து தவழ்ந்து மேலேறி வந்து நிலத்தில் துள்ளின. “என் குலம் பல்லாயிரம்கோடி ஆண்டுகளாக கண்ட கனவு மண்ணில் வாழ்வதே. என் மூதாதையருக்கு இறப்பிற்கு முன் சில கணங்கள் மட்டுமே வாய்த்த உவகை அது. எங்கள் குலம் அதில் திளைக்கட்டும்” என்றது சிறகென செதில் விரித்து தாவிய செந்நிறப் பரல்மீன் ஒன்று.

களிக்கூச்சல்கள், கனைப்புகள், எக்களிப்புகள். எங்கும் கட்டற்ற களியாட்டின் வெறியே நிறைந்திருந்தது. ‘நானும் களியாடவேண்டும், பிறிதொருமுறை எனக்கு ஓர் வாய்ப்பு அமையப்போவதில்லை’ என்று எண்ணியது பிரபாவன். சிறகடித்துப் பறந்தது. ராஜாளிகளை துரத்தித்துரத்தி கொத்திச் சீண்டியது. காட்டெரி எரிவதைக் கண்டு அணுகிச்சென்றது. தயங்கியபின் பாய்ந்து அதில் மூழ்கிச் சென்று திளைத்தது. ஒளிகொண்ட நீர் இது என சொல்லிக்கொண்டது. இல்லை, செஞ்சிறகுகள் கொண்ட அன்னைப்பறவை என எழுந்தபின் கூவியது. அனலில் இருந்து சென்று நீருக்குள் மூழ்கியது. மீன்களை நோக்கியபடி சிறகுகளைச் செதிலாக்கி நீந்திச்சென்றது.

‘ஆம், நான் மகிழ்வுடனிருக்கிறேன், அனைத்திலிருந்தும் விடுதலைகொண்டுவிட்டேன்’ என்று அது உளம்கூவிக்கொண்டது. அப்படியென்றால் இங்கே இதுவரை பொருட்கள் என்றும் உயிர்கள் என்றும் சூழ்ந்திருந்தது இறப்பு மட்டும்தானா? ஒவ்வொன்றும் தங்கள் கொடுக்குகளை, உகிர்களை, பற்களை இழந்திருந்தன. பாறைகள் மென்மையாயின. கூர்கள் மழுங்கின. ஆழங்கள் மேலெழுந்துவந்தன. பரப்புகள் அனைத்தும் ஏந்திக்கொண்டன. ஒவ்வொன்றையாக தொட்டுத்தொட்டுப் பறந்து சலித்து கிளையில் அமர்ந்து அனைத்தையும் நோக்கிக்கொண்டிருந்தது பிரபாவன்.

முதலில் கொம்புகளும் பற்களும் உகிர்களும் அலகுகளும் செதில்வால்களும் பொருளிழந்தன. பின்னர் கால்களும் கைகளும் பொருளிழக்கலாயின. சில நாட்களிலேயே கண்களும் நாக்கும் பயனிழந்தன. உடல் இறப்பை ஒழிந்தமையால் உள்ளமைந்த அனலும் அவிந்தது. ஆகவே பசி இல்லை. பசி மறைந்ததும் சுவை அழிந்தது. விழைவும் தேடலும் ஒழிந்ததும் வஞ்சமும் மறைந்தது. காமம் கரைந்தழிய பிறப்பு நின்றுவிட்டது. முழுச் செயலின்மையில் ஒவ்வொரு உடலும் ஆங்காங்கே மண்ணில் ஒட்டிப்படிந்து கிடந்தன.

இறப்பே பசியென்றாகி உலகை ஆண்டது என்று அறிந்தது பிரபாவன். பசியே விழைவென்று உயிர்களை செயல்கொள்ளச் செய்தது. செயலில்லாத உயிரென்பது வெறும் பருப்பொருளே. பாறைகளும் யானைகளும் ஒன்றென்றாயின. முதலைகள் மரக்கட்டைகளாயின. நாகங்கள் சுள்ளிகளாக. பறவைகள் சருகுகளாக. வண்டுகள் கூழாங்கற்களாக. மானுடர் சேற்றின் அலைகளாக. இறப்பு இல்லாமலானபோது உயிர் என்பது வெறும் உணர்வென்றாகியது. காலப்போக்கில் அதுவும் அழிந்து இன்மையே எஞ்சியது.

எட்டு மாதங்களுக்குப்பின் பிரபாவன் மீண்டும் தியானிகனைத் தேடி வந்தது. அச்சிறுதுளைக்கு வெளியே இளவெயிலில் அசைவில்லாத வெண்ணிறக் கூழாங்கல் என கிடந்தது தியானிகன் என்பது கூர்ந்து நோக்கிய பின்னரே பிரபாவனுக்கு தெரிந்தது. நெடுநாட்கள் பறக்காதிருந்ததனால் அதன் சிறகுகள் அடுக்கு கலைந்திருந்தன. எனவே காற்று அச்சிறகுகளுக்கு புதிதாக இருந்தது. திசைமாறியும் விழுந்தெழுந்தும் அது வந்தமர்ந்து தியானிகனை களைத்த விழிகளால் நோக்கியது. விழித்தெழுந்த தியானிகன் “எவ்வண்ணம் உள்ளது உலகு?” என்றது.

“உலகமென்று இன்று ஏதுமில்லை. பொருட்கள் மட்டுமே உள்ளன” என்றது பிரபாவன். “அவற்றை நோக்க விழிகள் இல்லை. கேட்க செவிகளும் புழங்க கைகளும் எங்குமில்லை. தியானிகரே, பார்க்கப்படாத புழங்கப்படாத பொருட்கள் தங்கள் தனியடையாளங்களை இழந்து ஒன்றுடனொன்று உருவழிந்து கலந்து ஒற்றைப்பெரும் பொருள்வெளி என்றாகிவிடுகின்றன. இங்கே இன்று இருப்பு என்ற ஒன்றே உள்ளது. இருத்தல்கள் ஏதுமில்லை” என்றது பிரபாவன்.

“ஆம், அதையே நானும் உணர்ந்தேன். நான் என உணர்ந்து அதுவெனக் கண்டு அதை அணுகுவதே வாழ்வென்பது. செல்லுமிடம் இல்லாமையால் எங்கள் உடல்நெளிவு நின்றுவிட்டது. அளக்காமையால் எங்கள் உலகம் கணக்கழிந்து மறைந்துவிட்டது. சுருண்டு துளிகளென்றாகி ஒன்றென ஒட்டித்திரண்டு ஒற்றைப் படலமென்றாகிவிட்டிருக்கின்றது என் குலம்” என்றது தியானிகன்.

“அகமென்று தனித்தமையாமையால் செயலென்று ஏதுமில்லை. செயலொழுக்கு நின்றுவிட்டமையால் மூன்று பரப்புகளும் ஒன்றென்று இணைந்து காலம் இல்லாமலாகிவிட்டது. புறக்காலத்தால்தான் வகுக்கப்படுகிறது அகக்காலம். பிரபாவரே, அகக்காலமே உள்ளம். காலம் சொல்லென்றாவதே எண்ணம். உள்ளமில்லாமலானதும் எங்கள் குலம் வெறும் நுரைக்குமிழிப் பரப்பென்று ஆகி நிலம்படிந்து அமைந்துவிட்டது.”

துயரும் பதற்றமுமாக பிரபாவன் தவித்தது. தலைதழைந்து “இதெல்லாம் என்ன, தியானிகரே? தங்கள் ஊழ்கத்தால் தாங்கள் அறிந்தது என்ன? அளிகூர்ந்து சொல்க! இன்று நாமென்று உணர்வுகொண்டு இதை உசாவும் நிலையில் இருப்பவர்களும் நாம் மட்டிலுமே” என்றது பிரபாவன். தியானிகன் சற்றுநேரம் தன்னுள் தனித்துவிட்டு மீண்டு “பிரபாவரே, நான் உய்த்தறிந்தது இதுவே, இறப்புக்கிறைவன் தன் தொழில்நிறுத்தி அமைந்துவிட்டான். அவனே இங்கு செயல் வகுப்பவன். ஆகவே அறத்தோன் என்று அவனை அறிந்தனர் முன்னோர். செயலில் எழும் காலத்தின் தலைவன் என்பதனால் காலன்” என்றது.

“என்ன ஆயிற்று அவனுக்கு?” என்று பிரபாவன் பேரச்சத்துடன் கேட்டது. “அதை அவன் வாழும் இன்மையின் இருளுலகுக்குச் சென்று உசாவ விண்ணுலாவிகளான மாமுனிவர்களால்தான் இயலும்” என்றது தியானிகன். “நான் செல்கிறேன். எனக்கு செயலாற்றும் இலக்கென்று இது ஒன்றேனும் அமைக! இக்கணம் முதல் நான் விண்முழுக்க பறந்தலைகிறேன். வான்முனிவர் ஒருவரை காணும்வரை அமையமாட்டேன்” என்றது பிரபாவன்.

“பிரபாவரே, விண் என்றால் முடிவிலி” என்றது தியானிகன். “ஆம், ஆனால் காலமும் விழைவும் முடிவில்லாதவையே. அவையிரண்டும் எனக்கு அருளப்பட்டுள்ளன. நான் வென்றுவருகிறேன்” என்று சொல்லி பிரபாவன் விண்ணில் பறந்து எழுந்தது.