மாதம்: ஜனவரி 2018

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 46

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 4

bl-e1513402911361அஸ்தினபுரியின் தென்கிழக்கில் அமைந்திருந்த இந்திரமுற்றத்தில் மரப்பட்டைகளாலும், முடைந்த ஈச்சைஓலைகளாலும், மூங்கில்களாலும் நீள்வட்டமான மாபெரும் பொதுப்பேரவை அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரம் தூண்களின் அவை என்று அதை ஏவலர் சொன்னார்கள். செவ்வரக்கு பூசப்பட்ட ஆயிரத்தெட்டு பெருமரத்தடிகள் ஆழ நிலைநிறுத்தப்பட்டு அவற்றை கால்களாகக்கொண்டு அந்த அவைக்கூடம் எழுப்பப்பட்டிருந்தது. இரண்டு வாரை உயரத்தில் பன்னிரண்டு மரப்படிகளுக்குமேல் நிரந்த மரத்தாலான அடித்தளத் தரையின்மேல் மூன்றடுக்கு மரவுரி பரப்பப்பட்டு ஓசையழிவு செய்யப்பட்டிருந்தது. அவைக்குள் தூண்கள் ஏதும் இல்லாமலிருக்கும்பொருட்டு வட்டவிளிம்பில் நின்றிருந்த பெருந்தூண்களிலிருந்து கிளம்பி மையத்தில் குவிந்த மூங்கில் உத்தரங்களால் கூரை அமைக்கப்பட்டிருந்தது. கூரைமூங்கில்கள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு இலைநரம்புகள் என பின்னிப்பரவியிருந்தன.

மரத்தாலான வளைவுச்சட்டமும் செம்பட்டுத்திரைச்சீலையும் கொண்ட நூற்றுஎட்டு வாயில்கள் கொண்டிருந்தது அவை. ஒவ்வொரு வாயிலும் ஒரு சிறு நுழைவுக்கூடத்தை நோக்கி திறந்தது. அக்கூடத்தின் இருமருங்கிலும் அரசர்கள் அமர்ந்து காத்திருப்பதற்காக பீடங்கள் போடப்பட்ட சிற்றறைகள் இருந்தன. கூடத்திலிருந்து படிகள் இறங்கி தேர்கள் அணையும் அரைவட்ட முற்றத்தை சென்றடைந்தன. நூற்றெட்டு முற்றங்களில் இருந்தும் மண்மேல் பலகை பரப்பப்பட்ட நூற்றெட்டு தேர்ப்பாதைகள் கிளம்பி வளைந்து மையப்பெருஞ்சாலையை சென்றடைந்தன. வருவதற்கும் போவதற்கும் வெவ்வேறு பாதைகள். அவை வழிகாட்டும் கொடிகளாலும் தோரண வளைவுகளாலும் அணிசெய்யப்பட்டிருந்தன.

ஷத்ரிய அரசர்கள் நகருக்குள் அமைந்த அரண்மனைகளிலும் வடக்கே புராணகங்கைக்குள் அமைந்த காந்தாரநகரியின் புது மாளிகைகளிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் நகரின் கிழக்குக் கோட்டைமுகப்பு முற்றத்திற்கு வந்து அங்கிருந்து பெருஞ்சாலையினூடாக தேர்களில் வந்து அவர்களுக்குரிய தேர்முற்றங்களில் இறங்கினர். ஒவ்வொரு அரசரும் முற்றத்திற்கு வந்துசேர்வதற்கு முன்னரே அவர்களின் கொடி அங்கிருந்த மூங்கில் கொடிக்கம்பங்களில் ஏறியது. அவர்களை வரவேற்று முரசுகள் ஆர்த்தன. காவல்மாடங்களில் எழுந்த கொம்பூதிகள் வரவேற்பொலி எழுப்பினர்.

ஒவ்வொரு அரசரும் தங்கள் படைத்துணையுடனும் அவைத்துணையுடனும் அகம்படியினருடனும் குலக்கொடி பறக்கும் தேர்களில் வந்திறங்கினர். கொடிகள் பறப்பதை நோக்கி முன்னரே வந்துவிட்டிருந்த அரசர்கள் எவர் என அறிந்தனர். அவர்களின் குலமுறைகளை கிளத்தி வாழ்த்தொலி எழுப்பும்பொருட்டு முதுசூதர்களால் தலைமைதாங்கப்பட்ட சூதர்குழுக்கள் முற்றங்களில் நின்றிருந்தனர். உடன் மங்கலத்தாலங்கள் ஏந்திய சேடியரும் இசைக்கலங்களுடன் சூதர்களும் நின்றனர். வாழ்த்தொலியும் இசையும் எழ, கைதொழுதபடி இறங்கிய அரசர்கள் முற்றத்து முகப்பில் காத்துநின்ற கௌரவர்களாலும் அமைச்சர்களாலும் படைத்தலைவர்களாலும் முறைப்படி வரவேற்கப்பட்டு சிற்றறைகளில் அமரச்செய்யப்பட்டனர்.

அவைக்குள் அவர்கள் தங்களுக்கான பீடங்களை நோக்கி செல்லும் வழியில் வேறு அரசர்கள் ஊடுசெல்லவில்லை என்று உறுதிசெய்தபின் அஸ்தினபுரியின் சிற்றமைச்சர்கள் அவர்களை வழிகாட்டி அழைத்துச்சென்றனர். ஒவ்வொரு அரசரும் முறைமைப்படி நிமித்திகர்களால் அவைநுழைவு அறிவிக்கப்பட்டு அவைக்குள் கொண்டுசென்று அமரவைக்கப்பட்டனர். இளஞ்சிவப்பு நிறமான பட்டுத்துணியால் மூடப்பட்டிருந்த பீடங்கள் சிறிய குழுக்களாக அமைந்திருந்தன. ஒவ்வொருவரின் வலப்பக்கம் அமைச்சர்களும் இடப்பக்கம் படைத்தலைவர்களும் நேர் பின்னால் அணுக்கச்சேவகர்களும் அமர்ந்திருக்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. அவர்களின் அரியணைக்குப்பின் அவர்களின் கொடி பறந்துகொண்டிருந்தது.

அரசர்கள் கூறுவதை பிறருக்கு ஏற்றுக் கூவுவதற்காக கேட்டுச்சொல்லிகள் நிற்பதற்கான பன்னிரண்டு சிறு மேடைகள் அவைக்குள் அமைக்கப்பட்டிருந்தன. ஏவலர்கள் நீருடனும் வாய்மணத்துடனும் அவர்களை அணுகும்பொருட்டு ஒவ்வொரு நிரைக்கு நடுவிலும் இடையளவு ஆழம் கொண்ட பாதைகள் அமைந்திருந்தன. அதனூடாக குனிந்த உடலுடன் எலிகளென ஏவலர்கள் அவைமுழுக்க உலவிக்கொண்டிருந்தனர். அரசர்கள் நுழையும் பெருவாயில்களுக்கு அடியிலேயே விழிக்கு எளிதில் தென்படாதபடி ஏவலர் நுழைந்து உள்ளே வந்து வெளியேறுவதற்கான சிறுவாயில்கள் அமைந்திருந்தன. அவை முற்றங்களுக்குச் செல்லாமல் அவையின் தரைக்கு அடியில் நுழைந்து மண்ணுக்குள் அமைந்திருந்த கரவுப்பாதையினூடாக அடுமனைகளுக்கும் பொருளறைகளுக்கும் ஏவலர்கொட்டகைக்கும் சென்றன.

அரசர்களுக்கான ஒன்பது விருந்து மாளிகைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தன. தொல்குடி ஷத்ரியர் பிறருடன் நிகராக உணவருந்துவதில்லை என்பதனால் அவர்களுக்கு மூன்று விருந்துமாளிகைகளும் அடுமனைகளும் தனியாக கிழக்குவாயிலினூடாகச் செல்லும் பாதையின் அருகே இருந்தன. யாதவருக்கும் பிறருக்கும் இரு விருந்துமாளிகைகள் தெற்கே அமைந்திருந்தன. சிறுகுடி ஷத்ரியர்களுக்கான நான்கு விருந்துமாளிகைகள் வடக்குச்சாலைகளின் அருகே அமைந்திருந்தன. அவற்றுக்கு பொருட்களை கொண்டுவரும் வண்டிகள் வந்துசெல்வதற்கான சாலைகள் தனியாக அமைக்கப்பட்டிருந்தன. அங்கே அடுமனைக்குரிய அன்னக்கொடிகள் பறந்தன.

அரசர்கள் ஒவ்வொருவரும் அங்கே நுழைந்த பின்னர்தான் அந்த அவை எத்தனை பெரியது என்று உணர்ந்தனர். அதில் ஒருவராக அமர்வது அவர்களை முதற்கணம் குன்றச்செய்தது. அணிகளும் ஆடைகளும் குலமுத்திரைகளும் பொருளற்றுப்போயின என உணர்ந்து அமைதியாக அமர்ந்தனர். நீரில் மூழ்கி மறைவதுபோல் மூச்சுத்திணறி வெற்றுச்சொல்லுரைத்து வெறுமனே நகைத்தனர். ஆனால் மெல்ல மெல்ல அவ்விரிவே தான் என உணர்ந்து எழுந்தமர்ந்தனர். விழியோட்டி தாங்கள் அறிந்த ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு கையசைத்தும் தலையாட்டியும் வணங்கினர்.

அவை பெருகப்பெருக அரசர்கள் உவகை கொண்டு தங்களை இழக்கலாயினர். தாங்கள் மையமென்று அமர்ந்திருக்கும் அவைகளில் எப்போதும் உடனிருக்கும் நோக்குவுணர்வால் அவர்கள் கட்டப்பட்டிருந்தனர். திரளில் ஒருவராவதென்பது அவர்கள் இளமைக்குப்பின் எப்போதும் அறிந்திராதது. அது பெருகுநீரிலிறங்கி நீந்தித்திளைப்பதுபோல் அவர்களுக்கு களிப்பூட்டியது. சொல்லெண்ணிப் பேசவேண்டியதில்லை. சீரான உடல்மொழி தேவையில்லை. ஆடையையும் அணியையும் திருத்திக்கொண்டே இருக்கவேண்டியதுமில்லை. பெருந்திரளில் ஒருவராயினும் அரசர்கள் அல்லாமலாவதில்லை. அவர்களிடம் வந்த மாற்றங்கள் அகம்படியரையும் அமைச்சர்களையும் குழப்பின. பின்னர் அவர்களும் தெளிந்து புன்னகைகொண்டனர்.

அவைக்கூடத்தின் இருநூற்றுப்பதினாறு சாளரங்களிலும் இளஞ்செந்நிற கலிங்கப்பட்டுத் திரைச்சீலைகள் காற்றில் துவண்டன. கூடையை கவிழ்த்ததுபோல் மூங்கில்கள் வளைந்து மேலேறி நடுவே இணைந்து அமைந்த கூரையிலிருந்து நூறு பட்டுப்பெருவிசிறிகள் தொங்கி வெளியே இருந்து சகடங்களினூடாக வந்த கயிறுகளால் இழுத்து அசைக்கப்பட்டன. மாபெரும் பட்டாம்பூச்சிச் சிறகுகள் என அவை கூடியிருந்தவர்களின்மேல் அசைந்துகொண்டிருந்தன.

அரசர்கள் வந்தமரும்தோறும் அவை வண்ணம் மாறிக்கொண்டே இருந்தது. மணிமுடிகளாலும் கவசங்களாலும் பொன்வண்டுகள் வந்து செறிந்த இலைபோல் மின்னத்தொடங்கியது. மன்னர்கள் அனைவரும் தங்கள் அரசணிக்கோலத்தில் வந்திருந்தனர். பொற்கவசம், பட்டுத்தலைப்பாகைகளில் அருமணிகள், சிலிர்த்தசைந்த வண்ண இறகுகள், ஒளிர்குண்டலங்கள், மணியாரங்கள், சரப்பொளிகள், தோள்செறிகள், வளைகள், கங்கணங்கள். பெருகி விழிநிறையும்தோறும் அவை நகைத்தன்மையை இழந்து மீண்டும் வெறும் பொன்னென்று ஆகி அலைகொண்டன. படைத்தலைவர்கள் வெள்ளிக்கவசங்களும், தோள்காப்புகளும், அணிச்செதுக்கு உடைவாள்களும் கொண்டிருந்தனர். அமைச்சர்கள் வெண்ணிற தலைப்பாகையும் வெண்பட்டு மேலாடையும் அணிந்து முத்தாரமோ மணிமாலையோ கழுத்திலிட்டிருந்தனர். சொற்கள் இணைந்து இணைந்து முழக்கமென்றாகி மீட்டலென்று மருவி கார்வையென்று கூரைக்குவையில் நிறைந்தன.

ஒவ்வொரு அரசரும் எவர் அருகே அமரவேண்டும் எவரெவரை சந்திக்கவேண்டுமென்பது அவையின் அமைப்பிலேயே முடிவு செய்யப்பட்டிருந்தது. கணிகரும் சகுனியும் கனகருடனும் பதினெட்டு அமைச்சர்களுடனும் நூற்றியெட்டு சிற்றமைச்சர்களுடனும் அமர்ந்து ஷத்ரிய அரசர்களின் பட்டியலை அமைத்து அவர்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து அந்த அரங்கை அமைத்த கலிங்கச் சிற்பி சந்தீபருக்கு அளித்தனர். அவர் அதை எண்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கலிங்க மன்னர் ஜோதிவர்மன் செய்த ராஜசூயத்திற்கு போடப்பட்ட பந்தலின் வடிவில் உரிய மாற்றங்களுடன் அமைத்தார்.

தொல்குடி ஷத்ரிய மன்னர்கள் கிழக்குமுகம் கொண்ட இருபத்துநான்கு வாயில்களினூடாக அவைநுழைந்தனர். சிறுகுடி ஷத்ரிய மன்னர்கள் வடக்கு நோக்கிய இருபத்துநான்கு வாயில்களில் வந்திறங்கினர். மலைநாட்டு ஷத்ரியர்களுக்கு தெற்குநோக்கிய இருபத்துநான்கு வாயில்கள் அளிக்கப்பட்டிருந்தன. பன்னிரு வாயில்கள் யாதவர் உள்ளிட்ட பிறருக்கு ஒதுக்கப்பட்டன. மேற்குநோக்கிய பன்னிரு வாயில்கள் அஸ்தினபுரியின் அரசகுடியினருக்கு ஒருக்கப்பட்டிருந்தன. நான்கு தனிவாயில்களில் ஒன்று அரசருக்கும் பிறிதொன்று அரசிக்கும் என வகுக்கப்பட்டிருந்தது. இரண்டு தனிவாயில்கள் அந்தணர் அவைபுகும்பொருட்டு அளிக்கப்பட்டிருந்தன.

bl-e1513402911361கிழக்கு முதல்முற்றத்தில் நின்றிருந்த துர்முகனும் சிற்றமைச்சர் மனோதரரும் தேர்களில் வந்திறங்கிய சாரஸ்வத நாட்டரசர் உலூகரை வரவேற்று அழைத்துச்சென்று அமரச்செய்தனர். தனக்கு முன்னரே வந்திருந்த அரசர்களின் கொடிகளில் சௌவீர நாட்டரசருடையதும் இருப்பதை அவர் இறங்கியதுமே நோக்கினார். முகமன் உரைத்து தலைவணங்கிய துர்முகனிடம் இயல்பான குரலில் “சௌவீரர் சத்ருஞ்சயர் இவ்வழியே சென்றார் என எண்ணுகிறேன்” என்றார். “ஆம் அரசே, சற்றுமுன் அவையமர்ந்தார்” என்றான் துர்முகன். “இந்த வழி தொல்குடி ஷத்ரியர்களுக்குரியது அல்லவா?” என்றார் உலூகர். “ஆம் அரசே, இங்குள்ள இருபத்துநான்கு வாயில்களும் முதன்மை ஷத்ரியர்கள் நுழைவதற்கானவை” என்றான் துர்முகன்.

உலூகரின் அமைச்சர் சதஹஸ்தர் “இளவரசே, தொன்மையான ஆரிய ஜனபதங்கள் பதினாறு என அறிந்திருப்பீர்கள். அங்கம், ஆஸ்மகம், சேதி, அவந்தி, காந்தாரம், காசி, காம்போஜம், கோசலம், குரு, மகதம், மல்லம், மச்சம், பாஞ்சாலம், சூரசேனம், விருஜம், வத்ஸம். இவற்றில் இருந்து எழுந்தவை ஐம்பத்தாறு ஷத்ரிய நாடுகள். முதல் பதினாறில் அமைந்த நாடுதான் ஐம்பத்தாறில் முதன்மை கொண்டது. அவற்றின் கொடிவழியில் எழுந்த நாடு இரண்டாம் இடம் பெறுகிறது. பிறநாடுகளுக்கு மூன்றாமிடமே என நூல்கள் நெறிவகுக்கின்றன” என்றார். துர்முகன் திகைக்க மனோதரர் “ஆம் அமைச்சரே, அது சபாக்ரமசங்கிரகம் நூலில் உள்ளது” என்றார்.

“கௌடசாரஸ்வதம் என்னும் நூலின்படி தொல்குடியாகிய காந்தாரத்தின் கொடிவழியினர் சாரஸ்வதர்களாகிய நாங்கள். சைந்தவர்களும் சைப்யர்களும் கூர்ஜரர்களும் எங்கள் பங்காளிகள். இந்நிரையில் சௌவீரர் எங்கு வருகிறார்கள்?” என்றார் சதஹஸ்தர். “அவர்கள் தொல்குடிகள்” என்றார் மனோதரர். “ஆம், அதில் மறுப்பில்லை. ஆனால் ஷத்ரிய முதற்குடிகளா என்பதே வினா. அசுரகுடிகளும் நிஷாதகுடிகளும்கூடத்தான் தொல்குடிகள். வேதத்தில் குறிப்பிடப்படுதல், தவமுனிவராகிய பிரஜாபதியை கொண்டிருத்தல், அஸ்வமேதமும் ராஜசூயமும் இயற்றி மும்முடிசூடிய முன்னோரை கொண்டிருத்தல் என்னும் மூன்று தகுதிகளில் ஒன்றேனும் இல்லையேல் அவர்கள் முதற்குடி ஷத்ரியர் ஆவதெங்கனம்?” என்றார் சதஹஸ்தர்.

துர்முகன் அப்பொறுப்பை அப்படியே மனோதரரிடம் விட்டுவிட்டு பின்னால் சென்று நின்றான். உலூகர் “நன்று, உங்களுக்கு பால்ஹிகர்கள் இன்று உற்றவர்கள். மத்ரம் துணைவந்துவிட்டது. மலைக்குடிகளின் வில்திறன் போரில் தேவையாகிறது. ஆனால் அவையில் அவர்களின் இடத்தை மாற்றியமைக்க உங்களுக்கு உரிமையில்லை. அதை செய்ய வேதத்திற்கே ஆணையுள்ளது” என்றார். பின்னால் வந்து நின்ற ஜலகந்தன் துர்முகனிடம் “விதேகமன்னர் அணுகிக்கொண்டிருக்கிறார், மூத்தவரே” என்றான்.

அதை செவிகொண்டதுமே மனோதரர் “மாமன்னர் நிமியின் குருதிவழி வந்தவரும் அரசமுனிவர் ஜனகரின் வழித்தோன்றலுமாகிய நிமி அவைபுகவிருக்கிறார். சாரஸ்வதரே, தாங்களும் அவரும் இணைந்து அவைபுகுவது சிறப்பாக அமையும்” என்றார். உலூகர் முகம் மலர்ந்து “ஆம், தொல்புகழ்கொண்ட வைதேகருடன் அவைபுகுவதற்கு சாரஸ்வதமே தகுதியானது” என்றார். “சற்று பொறுங்கள். அவரை அழைத்துவருகிறேன்” என்று மனோதரர் வணங்கி வெளியேற துர்முகனும் ஜலகந்தனும் அவருடன் வெளியே விரைந்தனர்.

துர்முகன் “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கு… வைதேகர் என்ன சொல்லப்போகிறார் என்று தெரியவில்லையே” என்றான். “அவருக்கு ஜானகியின் பெயரே எந்த அவையிலும் முதலிடத்தை அளிக்கும். ஆகவே அவர் எந்தக் கணக்கும் நோக்காதவராகவே இருப்பார்… வருக!” என்று கூறியபடி மனோதரர் முற்றம்நோக்கி சென்றார். செல்கையிலேயே “பிரமதர், அப்ரமாதி, தீர்க்கரோமர், சுவீரியவான் ஆகியோருக்கு செய்தி செல்க! அவர்கள் மணந்த விதேகநாட்டு இளவரசியரும் உடனே இங்கு வரவேண்டும்” என்றார். ஏவலன் ஒருவன் ஓடி சிறிய வாயிலினூடாக அவைமண்டபத்தின் அடிப்பக்கத்திற்குள் நுழைந்து அங்குள்ள குறுக்கு வழியினூடாக விரைந்தான்.

மேழிக்கொடி பறக்கும் விதேகநாட்டு தேர்கள் வந்து நிற்க அதிலிருந்து அரசர் நிமி இறங்கி கைகூப்பினார். வாழ்த்துரைகளும் இசைமங்கலமும் சூழ துர்முகனும் ஜலகந்தனும் மனோதரரும் அவரை வரவேற்றனர். அவர்கள் தாலமுழியப்பட்டு முகமனுரைக்கப்பட்டு கூடத்திற்குச் செல்வதற்குள் விதேகநாட்டு இளவரசியரான துஷ்டி, வபுஸ், சாந்தி, ஸித்தி ஆகியோர் தங்களை மணந்த கௌரவர்களான பிரமதன், அப்ரமாதி, தீர்க்கரோமன், சுவீரியவான் ஆகியோருடன் வந்தனர். அவர்கள் குறுக்குவழியாக விரைந்து வந்தமையால் மூச்சிரைத்துக்கொண்டிருந்தனர். அரசியர் தந்தையின் கால்தொட்டு வணங்கினர். கௌரவர்களும் வணங்கி வாழ்த்துபெற்றனர்.

மனோதரர் சிற்றறைக்குள் புகுந்து சாரஸ்வதராகிய உலூகரிடம் “அரசே, தாங்களும் எழுந்து விதேகநாட்டரசருடன் இணைந்து அவைபுகவேண்டும்” என்றார். “ஆம், அதற்காகவே காத்திருந்தேன்” என்றபடி உலூகர் எழுந்து நிற்க ஏவலர் அவருடைய ஆடைகளை சீரமைத்தனர். அவர் கைகூப்பி வணங்கியபடி மெல்ல நடந்து வெளிவந்து கூடத்தில் மறுமைந்தரும் மகள்களும் சூழ இன்சொல் எடுத்து நின்றிருந்த நிமியை அணுகி கைகூப்பினார். அவரைக் கண்டதும் வைதேகர் இரு கைகளையும் விரித்து முகம்மலர கூவியபடி அருகணைந்து தழுவிக்கொண்டு “என்ன தவம் செய்தேன்! தொல்புகழ் சாரஸ்வதரை அணுகி சந்திக்கும் நல்லூழ் அமைந்ததே!” என்றார். முகம்மலர்ந்து அமைச்சரை திரும்பி நோக்கிய உலூகர் “ஆம், இது நன்னாள். சாரஸ்வதம் தன் இணைப்பெருமைகொண்ட விதேகத்தை தழுவிக்கொள்கிறது. மகிழ்க முன்னோர்!” என்றார்.

மனோதரர் “அவைபுகலாம், அரசே” என்றார். “ஆம், செல்வோம்” என்றார் நிமி. மனோதரர் பிரமதனிடம் திரும்பி அழைத்துச்செல்லும்படி கைகாட்டினார். அவர்கள் இரு அரசர்களையும் பெருவாயிலினூடாக அவைக்குள் கொண்டுசென்றனர். மனோதரர் பெருமூச்சுவிட்டு தளர்ந்து “ஒவ்வொன்றும் ஒரு போர்க்களம்” என்றார். துர்முகன் “உண்மையில் இந்தப் பதினாறு ஜனபதம் ஐம்பத்தாறு நாடுகள் என்பவை எல்லாம் நன்கு வகுக்கப்பட்டவையா?” என்றான். “அந்தப் பதினாறிலும் ஐம்பத்தாறிலும் அஸ்தினபுரி பெரும்பாலும் இருப்பதில்லை” என்றார் மனோதரர். “ஒவ்வொரு தொல்நூலும் ஒவ்வொருமுறையில் அதை வகுத்தளிக்கிறது. வேதம் வளர்ந்த காடுகள் ஒவ்வொன்றிலும் பிறநூலை சந்திக்காத நூல்கள் விளங்குகின்றன.”

“அப்படியென்றால் நமது மரபுவழி என்ன?” என்றான் ஜலகந்தன். “முதல் பதினாறில் ஒன்று குருநாடு. இன்று அது சிறுத்து ஒரு சிற்றூராக அஸ்தினபுரியின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ளது. குருநாட்டை ஆண்ட யயாதியின் கொடிவழியினர் அஸ்தினபுரியின் அரசர்கள் என்பது பராசரரின் புராணமாலிகையினூடாக நிறுவப்பட்டது. அவ்வகையில் அஸ்தினபுரியே குருநாடு எனப்படுகிறது” என்றார் மனோதரர். “இங்கே கொடிவழிகளையும் குலமரபையும் குறித்து ஒரு பூசல் எழுமென்றால் இங்கிருந்தே பெரும்போர் ஒன்று எழுந்து ஷத்ரியக் குருதி பெருகத் தொடங்கும். ஷத்ரியர் அரக்குமுற்றி உலர்ந்து அனல்காத்துக் கிடக்கும் பெருங்காடு என்பார்கள்.”

தெற்கு அவைவாயிலில் சித்ரன், உபசித்திரன், சித்திராங்கன், சாருசித்ரன் நால்வரும் சிற்றமைச்சர்களுடன் நின்று யாதவ அரசர்களை வரவேற்றனர். போஜர்களும், குங்குரர்களும், அந்தகர்களும், விருஷ்ணிகளும் வந்திறங்கி முறைப்படி வரவேற்கப்பட்டனர். தங்களுக்கு தனி வாயில் என்பதும் அங்கே சிறுகுடி ஷத்ரியர்கள்கூட வரவில்லை என்பதும் சாலை திரும்பியதுமே அவர்களுக்கு தெரியவந்திருந்தது. ஆகவே சிறிய முகச்சுளிப்புடன்தான் அவர்கள் அவைமாளிகையின் முற்றத்தை அடைந்தனர். ஆனால் அவர்களின் குலக்கொடிகள் பட்டுத்துணியில் எழுந்தமையும், பெருமுரசுகள் முழங்கியமையும், ஒளிரும் படைக்கலங்களுடன் வீரர்கள் வணங்கியமையும் அவர்களை முகம் மலரச் செய்தது.

அவர்கள் இறங்கியதுமே கௌரவர் சென்று வணங்கி வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றனர். அவர்கள் மிகையான உடல்நிமிர்வும் எதையும் பொருட்படுத்தவில்லை என்னும் நடிப்பும் கொண்டவர்களாக மெல்ல தங்களுக்குள் பேசியபடி நடந்தனர். சிற்றறையில் காத்திருக்கையில் அளிக்கப்பட்ட இன்னீரை சுட்டுவிரலசைத்து மறுத்தனர். முகத்தை சற்றே தூக்கி பாதிவிழிகளை மூடி கழுத்தை இறுக்கி நிமிர்வுறுதியை காட்டிக்கொண்டனர். ஆனால் முறைமைகள் குறித்த ஐயம் அவர்களுக்கிருந்தது. எனவே ஒருவரை ஒருவர் ஓரக்கண்ணால் அடிக்கடி நோக்கிக்கொண்டனர். அது அவர்களின் அகத் தயக்கத்தை வெளிக்காட்டி அனைத்தையும் பொருந்தா நடிப்பென்றாக்கியது.

போஜர்குடியின் கொம்புக்குறி பொறித்த தேரில் கிருதவர்மன் வந்து இறங்கினான். “போஜர் குடியின் தலைவர், ஹ்ருதீகரின் மைந்தர், உத்தர யாதவநிலத்தின் அரசர் கிருதவர்மர் வருகை” என்று நிமித்திகர் அறிவிக்க கௌரவர்களாகிய நந்தன் உபநந்தன் இருவரும் அவனை எதிரேற்று அழைத்துச்சென்றனர். அவனைக் கண்டதும் எழுந்து வணங்கவேண்டுமா என ஐயுற்ற பிற யாதவர்தலைவர்கள் ஒருவரை ஒருவர் அரைக்கண்ணால் நோக்கி அமர்ந்திருந்தனர். ஆனால் நந்தனும் உபநந்தனும் இருபக்கமும் தொடர அவன் அறைக்குள் நுழைந்ததுமே அறியாமல் எழுந்து நின்று தலைவணங்கினர். சித்ரன் ஆணையிட சிற்றமைச்சர் பர்வதர் யாதவர்களை அவர்களுக்கான அவையிருக்கைகளுக்கு அழைத்துச்சென்றார்.

அமைச்சர் பிரமோதர் கையில் நீட்டோலையுடன் உடல்குலுங்க கீழ்வழியினூடாக மேலெழுந்து மூச்சிளைத்தபடி “எங்கே மனோதரர்? மனோதரர் எங்கு சென்றார்?” என்றார். ஊர்ணநாபன் “கிழக்குமுற்றத்தில் நின்றிருக்கிறார், அமைச்சரே” என்றபின் அவைக்குள் சென்றான். பிரமோதர் கிழக்குமுற்றத்திற்குச் சென்றபோது வத்சநாட்டு அரசர் உதயணர் வந்திறங்கிக்கொண்டிருந்தார். மனோதரரும் துர்முகனும் அவரை வரவேற்று அவைக்கு கொண்டுசென்றனர். மனோதரர் பிரமோதரை பார்த்துவிட்டார். அவைக்குள் உதயணர் சென்றதும் திரும்பி பிரமோதரின் அருகே வந்தார்.

“இது நம் தரப்புக்கு வந்துள்ள அரசர்களின் பெயர்நிரை. இன்னமும் பலர் அணையக்கூடும். சிறுகுடி ஷத்ரிய அரசர்களில் சிலர் உளமுறுதி கொள்ளாதவர்களாகவே உள்ளனர் என்கிறார் கணிகர்” என்றார் பிரமோதர் பெயரை நீட்டியபடி. “இதிலுள்ளவர்களில் அனைவரும் வந்து அவை அமைந்துவிட்டனரா என்று உறுதிசெய்த பின்னர் கணிகரைச் சென்று சந்திக்கவேண்டும்.” மனோதரர் “இங்கு வருபவர்களை அழைத்து அமரச்செய்யவே எனக்கு பொழுதில்லை” என்றார். “அதை நான் அறியேன். என்னிடம் பிற வேலைகள் அளிக்கப்பட்டுள்ளன. எவரேனும் ஒற்றரிடம் பொறுப்பை அளியுங்கள்” என்றபின் பிரமோதர் திரும்பி ஓடினார்.

மனோதரர் பெயர்நிரையை படித்தார். அவந்தியர், கோசலர், காம்போஜர், திரிகர்த்தர், மாளவர், சால்வர், சைந்தவர், சௌவீரர் என பெரிய அரசுகளின் பெயர்கள் முதலில் விழியில் நின்றன. மீண்டுமொருமுறை படித்தபோதுதான் ஆந்திரர், ஆபிசாரர், அம்பஸ்தர், அஸ்வாடகர், அஜநேயர், ஆபிரர், அரட்டர், ஆரிவேகர், கர்ணப்பிரவர்ணர், கிதவர், குந்தலர், குலூதர், கசுத்ரகர், காசர், கோவாசனர், சிச்சிலர், சீனர், சுச்சுபர், துஷாரர், துண்டிகேரர், தார்விகர், தசமேயர், நாராயர், பஞ்சநதர், பல்லவர், பானிபத்ரகர், பாரதகர், புளிந்தர், பிரஸ்தலர், மாகிஷ்மதர், முண்டர், மேகலர், லலித்தர், வங்கர், வனாயர், வசாதியர், வடாதனர், விக்ரமர், விகுஞ்சர், வேனிகர், சூரர், சுரசேனர், சம்ஸ்தானர், சிங்களர், சுரஸ்திரர், ஹம்சமார்கர் போன்ற சிறுகுடி ஷத்ரியர்களின் பெயர்கள் விழியில் நின்றன.

அதை என்ன செய்வதென்று அவருக்கு தெரியவில்லை. தத்தளித்துக் கொண்டிருந்தபோது சித்ரகுண்டலன் ஓடிவந்து “துஷார மன்னர் வீரசேனர்” என்றான். “ஆம், முந்திச்சென்று வரவேற்கவேண்டும்…” என்றார் மனோதரர். “ஆனால்…” என்று சித்ரகுண்டலன் தயங்கினான். “சொல்க!” என்றார் மனோதரர். “அமைச்சரே, அவர் தன் நண்பர் காரூஷ நாட்டு அரசர் க்‌ஷேமதூர்த்தியையும் அழைத்து வருகிறார். அவர் சிறுகுடி ஷத்ரியர். அவருக்குரிய முற்றமோ வாயிலோ அல்ல இது.” மனோதரர் அறியாமல் தலையில் கைவைத்தபின் “நன்று, ஒன்றுசெய்க! இங்கே நுழைவுக்கூடத்திலோ அறையிலோ இருக்கும் அரசர்கள் அனைவரையும் அவைக்கு கொண்டுசெல்க! அவர்களின் அகம்படியினரும் இங்கே இருக்கக்கூடாது” என்றார். “ஆம், அவ்வாறே” என்றான் சித்ரகுண்டலன்.

மனோதரர் முற்றம் நோக்கி ஓடியபடியே தன்னுடன் வந்த காவலர்தலைவனிடம் “வாழ்த்தில் காரூஷநாட்டரசரின் பெயர் முதல்முறை மட்டும் ஓங்கி ஒலிக்கட்டும், அவர் மண்ணில் கால்வைக்கும் கணத்தில். அவர் முகம்மலர்ந்த பின்னர் துஷாரரின் பெயர்சொல்லி மட்டும் வாழ்த்துரைத்தால்போதும்… எவர் செவியிலும் விழாமல் அவரை அவைக்கு கொண்டுசெல்க! செல்லும் வழியிலேயே இருவரையும் இயல்பாக பிரித்துவிடலாம்…” என்றார். தன் கையிலிருந்த ஓலையை அப்போதுதான் உணர்ந்து அதை அருகே நின்றிருந்த காவலனிடம் நீட்டி “இது உன்னிடம் இருக்கட்டும்” என்றபடி முன்னால் சென்றார். கூடத்திலிருந்தவர்களுக்கு ஆணையிட்டுவிட்டு அவருடன் ஓடிவந்தபடி சித்ரகுண்டலன் “அவர்களை எப்படி பிரிப்பது?” என்றான். “காரூஷரின் தோழராகிய அரசர் ஒருவரைக்கொண்டு அவரை மகிழ்வுடன் அணைக்கச்செய்து அழைத்துச்சென்றுவிடலாம்… அனைத்துக்கும் வழி என ஒன்று எங்கோ இருக்கும்” என்றார் மனோதரர்.

அவைமுற்றத்தில் சென்று நின்றபோது அவர் உடல் களைத்திருந்தார். ஒருகணம் கண்ணுக்குள் இருள் நுழைவதைப்போல் தோன்றியது. உடல் வியர்த்து நெஞ்சு படபடத்தது. பின்னர் விழித்துக்கொண்டு அருகே நின்ற ஏவலனிடம் “சற்று நீர் கொணர்க!” என்றார். அவன் “ஆணை” என விலகி விரைய அதற்குள் துஷாரநாட்டு தேர்கள் முற்றத்தை வந்தடைந்தன. மனோதரர் சித்ரகுண்டலனும் துர்முகனும் இருபுறமும் நின்றிருக்க முகமன் உரைத்து வீரசேனரை வரவேற்றார். தொடர்ந்து வந்து நின்ற காரூஷநாட்டுத் தேரிலிருந்து இறங்கிய க்‌ஷேமதூர்த்தியை நோக்கி அவர்கள் செல்ல சற்று பிந்தியது. அவர் பெயர் ஒலிக்கும் வாழ்த்துரைகள் எழுந்தாலும் க்‌ஷேமதூர்த்தியின் முகம் சுருங்கியது.

சித்ரகுண்டலனுடன் வீரசேனரை அனுப்பிவிட்டு மனோதரர் க்‌ஷேமதூர்த்தியை அணுகி தலைவணங்கி முகமன் உரைத்தார். தொண்டையிலிருந்து ஓசையே எழவில்லை. உடல் நீர் நீர் என தவித்தது. அத்தருணத்தை கடக்கமுடியுமா என்றே உள்ளம் ஐயம்கொண்டது. க்‌ஷேமதூர்த்தி மறுமுகமன் உரைக்காமல் “இது முதன்மை ஷத்ரிய அரசர்களுக்குரிய வாயில்தானே?” என்றார். “ஆம், அரசே” என்றார் மனோதரர். “அப்படியென்றால் இங்கே எப்படி சாரஸ்வதரின் கொடி பறக்கிறது?” என்றார் க்‌ஷேமதூர்த்தி.

மனோதரரின் உள்ளம் ஒருகணம் சொல்லின்றி நிலைத்தது. மறுகணம் அவரை அறியாமல் புன்னகை எழுந்தது. அதை அடக்கிக்கொண்டு முகமனை மீண்டும் ஒருமுறை உரைத்து “தங்களுக்காக தொல்குடி ஷத்ரியர் எழுவர் காத்திருக்கிறார்கள், அரசே. சற்றுமுன் விதேக அரசர் நிமி தங்களைப்பற்றி கேட்டார்” என்றார். முகம்மலர மீசையை நீவியபடி “ஆம், நாங்கள் பழைய நண்பர்கள். எங்களுக்கிடையே ஒருவகையில் குருதியுறவும் உண்டு” என்றபடி க்‌ஷேமதூர்த்தி முன்னால் நடந்தார்.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 45

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 3

bl-e1513402911361அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைவாயிலின் பெருமுற்றத்தின் கீழ்எல்லையில் அமைக்கப்பட்டிருந்த மரப்பட்டைக் கூரைக்குக் கீழே பானுமதி அரசணிக்கோலத்தில் நின்றிருந்தாள். அவளுக்கு வலப்பக்கம் அசலையும் அவளருகே தாரையும் நின்றிருக்க இடப்பக்கம் அணுக்கச்சேடி லதையும் செவிலியரும் நின்றனர். பின்புறம் அகம்படிப் பெண்டிர் பேழைகளும் கூடைகளுமாக நிரைகொண்டிருந்தனர். விண்மூடியிருந்த கருமுகில்களிலிருந்து ஒளித்திவலைகளென பெய்திறங்கிய சாரலில் நனைந்த முற்றம் ஓடிநின்ற புரவியின் உடற்பரப்பு என மெல்ல சிலிர்த்துக்கொண்டிருந்தது. அவர்களுக்கு வலப்பக்கம் அஸ்தினபுரியின் கைவிடுபடைகளின் ஏந்திக் கூர்ந்த அம்புகளின் முனைகளில் இருந்து நீர்த்துளிகள் சொட்டின.

மறு எல்லையில் கோட்டைவாயிலின் வலப்பக்கமாக ஏழு வைதிகர்கள் ஓலைக்குடைகளுக்கு அடியில் கங்கைநீர்க் கலங்களுடன் நின்றிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து மங்கலத் தாலமேந்திய சேடியர் பன்னிருவரும் இசைக்கலங்களுடன் சூதர்கள் பதினெண்மரும் நிரைகொண்டிருந்தனர். இடப்பக்கமாக நீரொளியில் மின்னிய இரும்புக்கவசங்களும், கன்றுவிழிகள் என ஒளிகொண்டிருந்த வேல்முனைகளும், நாகத்தோல்போல் மிளிர்ந்த வாளுறைச்செதுக்குகளுமாக அஸ்தினபுரியின் அணிக்காவல் படை நின்றிருந்தது. அவர்களுக்குமேல் பட்டுத்திரையென உலைந்தும், பீலியென வருடிச்சுழன்றும் மலை நின்றது.

முற்றத்திலிருந்து ஊறி, சிற்றோடையாக ஆகி, நாகமென உடல் வளைத்து வந்த நீர்வழிவு பந்தலுக்குள் புகுந்து பானுமதியின் கால்களை நனைத்து வளைந்து அப்பால் சென்றது. குளிரில் நீலநரம்புகள் புடைத்து வீக்கம் கொண்டன அவள் பாதங்கள். அவள் கால்மாற்றி நின்றபடி அசலையிடம் “எங்கு வந்திருக்கிறார்கள் என்பதை உசாவிச் சொல்” என்றாள். அசலை திரும்புவதற்குள் தாரை “அணுகிவிட்டார்கள். நான்காவது காவல்நிரையின் முரசொலி எழுகிறது” என்றாள். பானுமதி புன்னகைத்து “இவளுக்கு முயலின் செவிமடல்கள் ஏன் இன்னும் உருவாகவில்லை என்று ஐயுறாத நாளே இல்லை” என்றாள். அசலை புன்னகைத்தாள்.

மறுகணமே கோட்டையின் முகப்பில் பெருமுரசு முழங்கத்தொடங்கியது. அதைக் கேட்டு மேலும் இரு முரசுகள் அதிர்ந்தன. முகில்குவைகளுக்குக் கீழிருந்து அவ்வொலி மழுங்கிய இடியோசையென கேட்டது. மூன்று எரியம்புகள் மழைப் பிசிறுகளைக் கிழித்தபடி மேலெழுந்து சென்று வெடித்து அனல்சிதறி வளைந்து அப்பால் இறங்கின. மழையில் அவற்றின் ஒளி வண்ணத்தீற்றலாகப் பரவி அணைந்த பின்னரும் விழியெச்சமாக நீடித்தது. அவற்றின் ஒலி வேறெங்கிருந்தோ நீரில் கல்விழும் ஓசையென கேட்டது.

கோட்டையின் வாயில்முகப்பில் நின்றிருந்த தலைக்காவலன் தன் கைகளை விரித்து அசைக்க சேடியரும் சூதரும் படைவீரர்களும் நேர்நிலை கொண்டனர். கோட்டைக்குமேல் யாதவர் குலத்தின் பச்சைக்கொடி வளைந்து மேலேறுவதை பானுமதி கண்டாள். அது மேலேறிய பின்னரே காற்று அதை பறக்கச்செய்தது. அதிலிருந்த கன்றுமுத்திரை தெரிந்தது. பானுமதி திரும்பி “துவாரகையின் கருடக்கொடி அல்லவா மேலேறவேண்டும்?” என்றாள். அசலை “முறைப்படி அவர் இப்போது யாதவ குலத்தின் பேரரசரல்ல. அவருக்கென தனிக் கொடி இல்லையென்பதனால் குலக்கொடி ஏறவேண்டுமென்று அரசாணை” என்றாள்.

“இங்கு இப்போது ஓர் அரசமுறை வரவேற்பு அவருக்கு இருப்பதை அறிந்திருக்க மாட்டார். நம்மை அவர் புறக்கணித்து முன்செல்லவும் வாய்ப்புள்ளது” என்றாள் பானுமதி. அசலை “அது அவரது இயல்பல்ல. இவை அனைத்தையும் முன்னரே எதிர்நோக்கியிருப்பது போன்ற புன்னகையன்றி பிறிதெதையும் அவர் இதழ்களில் காணமுடியாது” என்றாள். பானுமதி “அன்று முதலே இப்படித்தான், அவர் செய்யவிருப்பதை சொல்பவள் இவள்” என்றாள். தாரை புன்னகைத்து “நாம் விழைவதை அவர் செய்கிறார். தன்னைச் சூழ்பவர் அனைவரும் விழைவதை ஒருவர் எப்படி ஆற்றமுடியுமென நானும் வியந்திருக்கிறேன்” என்றாள்.

மீண்டுமொரு எரியம்பு எழுந்து விண்ணில் வளைந்தது. அது முதற்காவல் நிலையிலிருந்து கிளம்பியதென்பதை பானுமதி உணர்ந்தாள். அவள் நெஞ்சு ஓசையிடத் தொடங்கியது. அசலை அவளைப் பார்த்து “அஞ்சுகிறீர்களா, அக்கை?” என்றாள். “எப்போதும் அவருக்கு அணுக்கமானவள் என்றே உணர்ந்திருக்கிறேன். என் குலத்தார் என்றன்றி அவரை எப்போதும் எண்ணியதில்லை. இன்று முதன்முறையாக மிகத் தொலைவில் இருக்கிறேன் என அறிகிறேன். அதுவே என்னை பதற்றமடைய செய்கிறது” என்றாள். அசலை “அவரிடமிருந்து எவரும் அகலவியலாது. அகன்று சுழன்று அருகணைவோம்” என்றாள்.

வெளியே முழவோசைகளும் கொம்புப் பிளிறல்களும் எழுந்தன. பெருமுரசுகளின் ஓசையுடன் இணைந்து அணுகி பெருகி வந்தன. கோட்டைவாயிலைக் கடந்து சாத்யகியின் பெரிய கரும்புரவி வருவதை பானுமதி கண்டாள். அசலையிடம் “கொடிவீரன் கூட இன்றி வருகிறார்” என்றாள். “கொடிவீரனை முன்னனுப்புவது அரசர்களுக்குரிய முறைமை” என்றாள் அசலை. தொடர்ந்து இளைய யாதவர் வெண்புரவி ஒன்றில் நனைந்த கரியதோள்களும், ஈரத்தில் படிந்து முதுகில் ஒட்டிய நீள்குழல்சுருள்களும், காதோரம் சூடிய மயிற்பீலியும் இடையில் செந்நிறக் கச்சையுமாக வந்து கடிவாளத்தை இழுத்து புரவியை விரைவழியச் செய்தார்.

தலைக்காவலன் கைவீச மங்கலஇசை எழுந்தது. வைதிகர் கங்கை நீர் தெளித்து வேதமோதி எதிர்கொண்டனர். அணிச்சேடியர் மூன்று நிரைகளாக மங்கலத்தாலங்களுடன் சென்று அவர் முன் நின்று முறைப்படி இடவலமும் வலஇடமும் உழிந்து குரவையிட்டு வரவேற்றனர். இளைய யாதவர் புரவியை மெல்ல தட்டி சீர்நடையில் முன்னால் வர அணிப்படையினர் தங்கள் படைக்கலங்களை மேலே தூக்கிச் சுழற்றி நிலம் நோக்கி தாழ்த்தி அவருக்கு அரச வரவேற்பளித்தனர். வாளொளிகளின் அலை சிறு மின்னல் என நீர்த்தாரைகளுக்கு அப்பால் எழுந்தமைந்தது.

பானுமதி திரும்பி தன் அகம்படியரை பார்த்தபின் முன்னால் நடக்க அவளுக்கு மேல் ஓலைக்குடை ஏந்தியபடி சேடியர் தொடர்ந்தனர். அசலை குடை வட்டத்திலிருந்து விலகி மழைச்சாரல் தன்மேல் விழ நடந்தாள். இளைய யாதவரை எதிர்கொண்ட பானுமதி கைகூப்பியபடி நிற்க அவர் புரவியிலிருந்து கால்சுழற்றி இறங்கி கைகூப்பியபடி அணுகி வந்தார். அவருக்குப் பின்னால் சாத்யகி கைகூப்பியபடி வந்து சற்று அப்பால் நின்றான். பானுமதி “அஸ்தினபுரிக்கு யாதவகுலத் தலைவரை அரசமுறைப்படி வரவேற்கிறேன். இக்குடிகளும் அரசும் வளம்பெறவும், கொடிவழிகள் செழிக்கவும், மூதாதையர் மகிழவும் தங்கள் வருகை வழிகோல வேண்டுமென்று கோருகிறேன்” என்றாள்.

இளைய யாதவர் தலைவணங்கி “அஸ்தினபுரியின் அரசியின் சொல் ஆணையென தலைக்கொள்ளப்படுகிறது. அடியேன் இன்று அரசனல்ல, எனினும் இந்த முறைமைகளும் நற்சொல்லும் என்னை அவ்வாறு ஆக்குகின்றன. மும்முடி சூடி பாரதவர்ஷத்தின் மேலமர்ந்த பேரரசனென்று இத்தருணம் உணர்கிறேன். இதன்பொருட்டு என் மூதாதையர் இந்நாளை வாழ்த்துக!” என்றார். அசலையும் தாரையும் வணங்கி முகமன் உரைத்தனர். அவர் அவர்களை நோக்கி சிரித்து “கலைமகளும் திருமகளும் மலைமகளும் வந்து வரவேற்க நற்பேறு கொண்டேன்” என்றார். புன்னகைக்கையில் சிறுமைந்தரென ஆகிவிடும் அவர் முகத்திலிருந்து பானுமதி உடனே விழிவிலக்கிக்கொண்டாள். அசலை “இந்நாள் எங்களுக்கு நல்லூழ் அமைத்தது” என்றாள்.

“வருக அரசே, தங்களுக்கான வெள்ளித்தேர் ஒருங்கி நின்றுள்ளது” என்றாள் பானுமதி. இளைய யாதவர் புன்னகையுடன் அசலையை நோக்கி “நான் இதை எவ்வாறு எதிர்கொள்வேன் என்று இளைய அரசி அறிவார்” என்றார். அசலை “ஆம், எண்ணியவாறே எதிர்கொள்கிறீர்கள்” என்றாள். இளைய யாதவர் “வெள்ளித்தேர் நன்று. இவ்விருண்ட நகரில் அது துலங்கித் தெரியும்” என்றார். அசலை சிரித்தாள். தாரை சிறுமியருக்குரிய ஊக்கத்துடன் “ஆம், கரிய நீரில் பரல் என” என்றாள். இளைய யாதவர் புன்னகைத்து அவளை நோக்கி “பரலா?” என்றார். “பரல்மீனே ஆற்றல்கொண்டது…” என்றாள் தாரை.

அவர் சிரித்துக்கொண்டு தேர்நோக்கி சென்றார். பெரியவர்களின் சிரிப்பில் கண்கள் முழுமையாக இணைந்துகொள்வதேயில்லை, மைந்தரைப்போல் முற்றிலும் சிரிக்கும் விழிகள் கொண்டிருப்பதனால்தான் இவர் அப்படித் தோன்றுகிறார் என பானுமதி எண்ணிக்கொண்டாள். முதிர்ந்தோர் விழிகள் துயர்களும் ஐயங்களும் தயக்கங்களும் வஞ்சங்களும் தனிமையும் கொண்டவையாகவே நீடிக்கின்றன. இவருக்கு அவை இல்லையா என்ன? இளைய யாதவர் அவரை அணுகிய தேர்ப்பாகனிடம் நட்புடன் ஏதோ சொல்ல அவன் சிரித்தான். ஏவலனிடம் பிறிதொன்றைச் சொல்ல இருவரும் சிரிப்பது வெண்ணிறப் பல்லொளிகளாகத் தெரிந்தது.

ஏவலர் தேரிலேறுவதற்கான படிகளை அமைக்க அவர் ஏறி அதில் அமர்ந்தார். திரைகள் தாழ்ந்தன. சாத்யகி மீண்டும் தன் புரவியிலேறி தேருக்குப் பின்னால் சென்றான். பாகன் பானுமதியிடம் “நாம் உடன்செல்லவேண்டும், அரசி…” என்றான். “ஆம், செல்வோம்” என அவள் சொன்னாள். அசலை “குன்றா இளமை கொண்டவர் என்று அவரை சொல்கிறார்கள். தேரில் சிறு பறவையென ஏறி அமர்வதைக் கண்டபோது வேறெப்படி சொல்லமுடியும் என்று எண்ணிக்கொண்டேன்” என்றாள். பானுமதி “நம்மைப்பற்றி என்ன எண்ணிக்கொண்டு செல்கிறார்?” என்றாள். “அரசி, புரவிகளை பயிற்றுநர் முதலில் ஆள்கிறார்கள். உரிமைகொள்வோர் பிறகு ஆள்கிறார்கள். அணி ஊர்வலங்களில், பெருங்களங்களில், நெடுந்தொலைவுப்பாதைகளில் அது அவர்களை கொண்டு செல்கிறது. ஆனால் இருண்ட பசிய காடு எப்போதும் அதனுள்ளில் நிறைந்திருக்கிறது. ஒரு புல்லின் இலைகொண்டு அது தன் காட்டை உருவாக்கிக்கொள்கிறது என எண்ணுகிறார்” என்றாள்.

பானுமதி மெல்லிய சிரிப்புடன் “இதை எந்த நூலில் படித்தாய்?” என்றாள். “காவியம்!” என்றாள் அசலை. “சுஃப்ரரின் பிரதீகமஞ்சரி.” லதை “அரசி, தங்களுக்கான தேர்” என்றாள். தலையசைத்துவிட்டு பானுமதி சென்று தனது தேரில் ஏறிக்கொண்டாள். அவளைத் தொடர்ந்து அசலையும் தாரையும் அத்தேரில் ஏறினர். அகம்படியர் தொடர்ந்து வந்த தேரில் ஏற அவர்கள் கிளம்பி வெள்ளித்தேரின் தடம் மீது சென்றனர். அப்பால் வெள்ளித்தேர் நீரலைக்கு அடியில் கிடக்கும் நாணயம் என தெரிந்து தெரிந்து மறைந்தது.

தேர்நிரை அஸ்தினபுரியின் தெருவினூடாகச் சென்றது. பானுமதி சாளரத்தினூடாக வெளியே நோக்கியபடி “இந்த மழை எப்போது ஓயும்?” என்றாள். “நகரமே குளிர்ந்திருக்கிறது. உலோகப்பரப்புகள் இமயப்பனிக்கட்டியென குளிர்ந்திருக்கின்றன.” தாரை “இப்படியே சில நாட்கள் சென்றால் தழல்கூட குளிர்கொண்டுவிடும்” என்றாள். அசலை “அரிய வரிகள். அதைச் சொன்னவர் யார்?” என்றாள். பானுமதி அவளை திரும்பிப் பார்த்தபின் சலிப்புடன் தலையசைத்தாள்.

தாரை “ஆனால் இந்நகர் மக்கள் மழையில் மகிழ்கிறார்கள். அதற்கு எந்த அடிப்படையும் இப்போதில்லை. கால்நடைகள் நோய்கொண்டுவிட்டன. இளமைந்தர் அனைவருக்கும் உடல் காய்கிறது. பெண்டிர் பலர் நாள்தோறும் குருதிப்போக்கு கொண்டிருக்கிறார்கள். முதியோர் ஒவ்வொருநாளும் இறந்து தென்திசை ஏகுகிறார்கள். அரண்மனையின் தென்முகப்பில் நின்று நோக்கினால் நீத்தோருக்கான காட்டிலிருந்து எழுந்த புகை விண்முகில்களுடன் சென்று இணைந்துவிட்டிருப்பதை பார்க்கமுடிகிறது. ஆனால் இப்பொழுதைப்போல எப்பொழுதுமே இந்நகர் உவகையில் இருந்ததில்லை” என்றாள்.

நகர் முழுக்க மக்கள் ஒருவருக்கொருவர் களிவெறியுடன் பேசியபடி, உடல் தழுவியபடி, ஒருவரையொருவர் முட்டித்தள்ளியபடி ததும்பிக்கொண்டிருந்தனர். “அவர்கள் அனைவரின் விழிகளும் சிவந்து அனல் போன்றிருக்கின்றன” என்று தாரை சொன்னாள். பானுமதி கூரைவிளிம்புகளிலும் கிளைகளிலும் அமர்ந்திருந்த காகங்களை பார்த்துக்கொண்டு வந்தாள். “இத்தனை பறவைகள் நகருக்குள் இருக்கின்றன. ஆனால் ஓசையே இல்லை” என்றாள். “ஓசையே இல்லாமல் விழிசுழற்சியில் எண்ணியிராது இவற்றைப் பார்க்கையில் உள்ளம் திடுக்கிடுகிறது. எவரோ சொன்ன தீச்சொல் ஒன்று நினைவிலெழுவதுபோல.” அசலை “ஆம், இவை காகங்கள்தானா என்றே ஐயுறுகிறேன். கரிய நனைந்த கொடிகளென அசைவற்றமர்ந்திருக்கின்றன. சிறகடிப்பதே அரிது. எதை உண்கின்றன? இங்கு வந்து எதற்காக காத்திருக்கின்றன?” என்றாள்.

எதிரே சாலையின் வளைவு திரும்பி ஏழு புரவிகள் வருவதை தாரை கண்டாள். “எவர் அது?” என்றாள். அசலை எழுந்து சாளரத்தினூடாக நோக்கி “அது கணிகரல்லவா?” என்றாள். “கணிகரா? புரவியிலா?” என்றபடி பானுமதி சாளரத்தினூடாக நோக்கினாள். சகுனியும் கணிகரும் இரு கரிய புரவிகளில் வர அவர்களுக்குப் பின்னால் சகுனியின் அணுக்கவீரர்கள் வந்தனர். கணிகர் இடக்கையில் புரவியின் கடிவாளத்தைப் பற்றியபடி தவளை எழுந்தமர்ந்ததுபோன்ற உடலுடன் அமர்ந்திருந்தார். “அவரது உடல்நோவு அகன்றுவிட்டதா?” என்றாள் பானுமதி.

“முன்பும் அவ்வாறே நிகழ்ந்தது. இந்நகர் நோயுறுகையில் கணிகர் நலம்பெறுகிறார்” என்றாள் அசலை. கணிகர் முன்னால் சென்ற வெள்ளித்தேரருகே புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினார். சகுனியும் ஓரிரு அடிகள் முன்னால் வந்து திரும்பிச் சென்று அவரருகே நின்றார். தேர் தயங்கியது. திரை விலக்கி வெளியே நோக்கிய இளைய யாதவர் கணிகரிடம் முகமனுரைப்பதை தொலைவிலேயே காண முடிந்தது. கணிகர் மலர்ந்த முகத்துடன் மும்முறை தலைவணங்கி முறைப்படி சொல்லுரைத்து கைகூப்பினார். தேர் முன்னால் நகர்ந்தபோது புன்னகை நிறைந்த முகத்துடன் சகுனியும் கணிகரும் முன்னால் வந்தனர்.

பானுமதி அவர்களின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். “எண்ணியதை எய்திய புன்னகை அது” என்று அசலை சொன்னாள். “எய்திவிட்டார்களா?” என்று பானுமதி கேட்டாள். “அணுகிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள் அசலை. “சில தருணங்களில் வருவன ஐயமின்றி நமக்கு துலங்கிவிடுகின்றன. மலைகளைப்போல மாறாப் பருவுருவென முன் நிற்கின்றன.” அவர்களின் தேர் அருகே வந்த கணிகர் கடிவாளத்தை இழுத்து புரவியை நிறுத்தினார். தாரை திரையை விலக்கி தலைவணங்கி “வணங்குகிறேன், ஆசிரியரே. அரசாணைப்படி இளைய யாதவரை முறைப்படி வரவேற்று அரண்மனைக்கு கொண்டுசெல்கிறோம்” என்றாள்.

கணிகர் “நன்று. இன்று அவர் ஓய்வெடுக்கட்டும். நாளை அவையில் தன் முழுஆற்றலுடன் அவர் வந்து அமரவேண்டும். இங்கு அனைவரும் சிக்கிக்கொண்டிருக்கும் இடரிலிருந்து அவரால் மீட்பு அமையுமெனில் அவ்வாறே நிகழ்க!” என்றார். அசலை “அவர் அதற்கான சொல்லுடன் வந்திருப்பார் என எண்ணுவோம், ஆசிரியரே” என்றாள். கணிகர் புன்னகைத்து “ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு அன்னம். அன்னம் மானுடனுக்கு நலம்புரிவதற்கென்றே உருவானது” என்றார். “மிகையும் குறைவும் பழையதும் முதிராததும் என அதை நஞ்சென்றாக்குவது மானுடரின் விழைவும் காழ்ப்புமே.”

பானுமதி திரைக்குப் பின்னால் தன் முகத்தை மறைத்துக்கொண்டு கணிகரை நோக்கிக்கொண்டிருந்தாள். அவர் உடலில் எப்போதும் இருக்கும் நிகரழிவு முற்றிலும் சீரமைந்திருந்தது. உடல் வளைந்து முதுகில் கூன் எழுந்து நின்றிருந்தாலும் வலி மறைந்திருப்பதை அவர் அமர்ந்திருந்த விதமே காட்டியது. அவரது புன்னகை எத்தனை அழகியதென்று ஒருகணம் எண்ணியதுமே அவளே திடுக்கிட்டாள். அவ்வெண்ணத்தால் என அக்கணமே தேர் நகர்ந்து அவள் உடலையும் அதிரச்செய்தது.

தேர் முன்னால் சென்றதும் அசலை “எத்தனை அழகிய புன்னகை!” என்றாள். அவள் என்ன சொல்கிறாள் என்பதை புரிந்துகொண்ட தாரை “அதையே நானும் எண்ணினேன். அப்புன்னகை இங்கு பிறிதொருவரிடம் மட்டுமே உள்ளது” என்றாள். அவள் தலையை ஓங்கித் தட்டி “என்ன சொல்கிறாய்? அறிவிலி!” என்றாள் பானுமதி. “என் உள்ளம் சொல்வதை” என்று தாரை வீம்புடன் தலையை அசைத்தாள். “இவ்வாறு எதை கீழிறக்க இயல்கிறாய்? இறக்கி நீ அடைவதென்ன?” என்றாள் பானுமதி. “நான் புரிந்துகொள்ள முயல்கிறேன். மானுடஉள்ளம் அள்ள முடியாத ஏதோ ஒன்றின் நுனி வந்தென்னை தொட்டுச் சென்றதுபோல் உணர்கிறேன்” என்றாள் தாரை. “உளறாதே” என்றபின் பானுமதி இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

தாரை அவள் தொடைமேல் கைவைத்து “அக்கையே, இளஅகவையில் களிறொன்றின் பெருந்தந்தம் என்மேல் பட்டது. மிக மெதுவாக அது திரும்பியபோது புறந்திரும்பி நான் அருகே நின்றிருந்தேன். அந்த மென்தொடுகையிலேயே நான் அப்பால் தெறித்து விழுந்தேன். நெடுநாட்கள் அதை எண்ணி வியந்திருக்கிறேன். மெல்ல தொடுகையிலேயே தூக்கி வீசும் பேராற்றல் அத்தந்தத்துக்குப் பின்னால் பெருகியிருக்கும் கரிய உடலில் இருந்தது. பிறிதொரு முறை நிலவைப் பார்க்கையில் கரிய பேருருவென திரண்டிருக்கும் பெருவெளியாகிய வேழத்தின் சிறு தந்தம் அது என்று தோன்றியது. இங்கு ஒளிகொண்டு நம்மை அணுகுபவை அனைத்தும் பேருருக்கொண்ட இருளால் ஏந்தப்பட்டுள்ளன” என்றாள்.

பானுமதி அசலையிடம் “நீ நூல்கற்று அடைந்த அனைத்து உளக்குழப்பங்களையும் சொற்சிடுக்குகளையும் தன் அறையில் பாவைகளை வைத்து விளையாடி இவள் அடைந்திருக்கிறாள்” என்றாள். அசலை தாரையின் தலையைப் பிடித்து செல்லமாக அசைத்து “ஆம், அவ்வப்போது நானே எண்ணுவதுண்டு. இவளை அழைத்துச்சென்று எங்காவது அமரவைத்து உள்ளிருக்கும் சொற்களை எல்லாம் உலுக்கி எடுத்தால் நானே ஒரு காவியத்தை எழுதிவிடக்கூடுமென்று” என்றாள். பானுமதி சிரித்து “அது காவியமா என்றறியேன். ஆனால் நம்மால் புரிந்துகொள்ள முடியாத சொற்கள் அவை என்பதில் ஐயமில்லை” என்றாள்.

அசலை “அக்கையே, நாம் அரண்மனை அகத்தளங்களில் பிறந்தோம். சாளரங்கள் அளந்து உள்ளே அனுப்பிய காற்றையே அறிந்திருக்கிறோம். இவள் சுழலிகளும் புயல்களும் பெருகிச்சூழ்ந்த நிலத்திலும் நீரிலும் வாழ்ந்தவள். அதை சொல்லாக்கும் கலையை இங்கு வந்து கற்றுக்கொண்டிருக்கிறாள். என்றேனும் தென்திசையில் சுகவனத்தில் தவம் செய்துகொண்டிருக்கும் இறப்பற்ற மூதாதையான கிருஷ்ண துவைபாயனர் இங்கு வருவாரென்றால் நம்மில் விழிதுழாவி அவர் நோக்கு வந்து நிற்கும் இடம் இவள் முகமாகவே இருக்கும். இவளை அருகணைத்து தன் காலடியில் அவர் அமரச்செய்வார்” என்றாள். “எதன்பொருட்டு இவளுக்குள் இச்சொற்களை நிரப்புகிறது ஊழென்று நாமறியோம். ஆனால் தெய்வங்கள் கணக்குகளின்றி எதையும் இயற்றுவதில்லை என்பார்கள்.”

bl-e1513402911361இளைய யாதவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த தெற்கு அரண்மனையை அடைந்ததும் தேர் நின்றது. தாரை முதலில் இறங்கி கைகாட்ட பின்னால் வந்த தேரிலிருந்து அகம்படிச் சேடியர் இறங்கி அதன் முற்றத்தில் நிரைவகுத்தனர். அசலை இறங்கி தன் கைகளை நீட்டி பானுமதி இறங்க உதவினாள். அவள் இறங்கி பணிப்பெண் இட்ட மிதியடிமேல் கால்வைத்து நின்றபடி “இது முன்பு மாளவர் வந்தபோது தங்கிய அரண்மனை அல்லவா?” என்றாள். “ஆம், முதன்மை அரசர்களுக்குரியது. முற்றத்தில் கொடி நிறுத்தவும், சிறுபடை அணிநிரை கொள்ளவும் இடம் உள்ளது” என்றாள் அசலை. சேடியர் குடை பிடிக்க அதற்குள் சென்று நின்று பானுமதி தன் ஆடையை திருத்திக்கொண்டாள். இரு சேடியர் அவள் குழலை சீர்படுத்தினர். தேர்கள் பின்னால் விலகி மெல்ல திரும்பி மறைய அரண்மனைமுகப்பில் நின்ற தலைமைக் காவலன் அருகணைந்து தலைவணங்கி முகமன் உரைத்து “யாதவ அரசர் உள்கூடத்தில்  தங்களுக்காகக் காத்திருக்கிறார், அரசி” என்றான். பானுமதி கைகாட்ட மூன்று சேடியர் மங்கலத் தாலங்களுடன் முன்னால் சென்றனர். தொடர்ந்து அசலையும் தாரையும் பின்னால் வர அவள் குடையின் அடியில் நடந்து படிகளை அடைந்தாள்.

மேலேறி நின்று அசலையிடம் தாழ்ந்த குரலில் “அவரிடம் பேசுவதற்கென்ன உள்ளது நமக்கு?” என்றாள். “முறைமைச்சொற்கள். பிறிதொன்றையும் இத்தருணத்தில் நாம் உரைப்பதற்கில்லை” என்றாள் அசலை. பானுமதி புன்னகையுடன் “ஒரு கோணத்தில் நோக்கினால் இதுவரைக்கும் அவருடன் முறைமைச் சொற்களன்றி பிறிதெதையும் நாம் உரைத்ததில்லை என்று தோன்றுகிறது” என்றாள். அசலை “இப்பிறப்பில் இவ்வடிவில் நாம் இவற்றை மட்டுமே உரைக்கவிருக்கிறோம்” என்றாள். தாரை அருகே வந்து “அவர் ஏவலர் எவரையும் கொண்டுவரவில்லை அல்லவா?” என்றாள். “நான் அவருக்கு அடுமனையாட்டியாக இங்கேயே இருக்கலாமா என்று கேட்கவிருக்கிறேன்.” பானுமதி அவளை நோக்கியபின் அசலையிடம் புன்னகைத்தாள்.

தலைமைக்காவலன் “வருக, அரசி” என்று உள்ளே அழைத்துச்சென்றான். முதன்மைக்கூடத்தில் இளைய யாதவர் பீடத்தில் அமர்ந்திருக்க அவருக்குப் பின்னால் சாத்யகி நின்றிருந்தான். அறைக்குள் நுழைந்ததும் இளைய யாதவர் எழுந்து தலைவணங்கி “அஸ்தினபுரியின் அரசிக்கு வணக்கம்” என்று அமர்வதற்கு பீடத்தை காட்டினார். பானுமதி பீடத்தில் அமர்ந்ததும் தாரை அவள் ஆடை மடிப்புகளை சீரமைத்து குழலை நன்கமைத்தபின் இடப்பக்கமாக நின்றாள். அசலை பின்னால் சென்று சாளரத்தோரமாக மார்பில் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றாள்.

இளைய யாதவர் “நான் தங்களை முன்னரே சந்திக்கவேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன். எண்ணியவாறே அது அமைந்தது மகிழ்வளிக்கிறது” என்றார். பானுமதி அரைக்கணம் அசலையை நோக்கிவிட்டு “இங்கு என் சொல்லுக்கு எந்த மதிப்பும் இல்லையென்று அறிந்திருப்பீர்கள், யாதவரே” என்றாள். “ஆம், இது அதன் பொருட்டல்ல. இம்முறை நான் வந்திருப்பது ஷத்ரிய அவையில் பேசுவதற்காக. குடியவைகளில் இனி நான் இயற்றுவதற்கு ஏதுமில்லை” என்றார். “அரசி, தாங்கள் அவையில் அளித்த ஆடைக்காக பாண்டவர்களும் அவர்களின் கொடிவழியினரும் கடன்பட்டிருக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தத்தின் அரசி தன் நன்றியறிதல்களை தெரிவிக்கும்படி என்னிடம் உரைத்தார். இக்குடிமீதும் இதன் மைந்தரிடமும் அவருக்கு துளியளவும் வஞ்சமில்லை என்று கூறினார்.” பானுமதி “ஆம், அது முன்னரே அரசத்தூதர் வழியாகவும் சஞ்சயனூடாகவும் எனக்கு அறிவிக்கப்பட்டது. அவ்வாறன்றி அவள் எண்ண இயலாது” என்றாள்.

அந்த உரையாடல் அவர்களை எளிதாக்கியது. முகத்தசைகள் நெகிழ்வதை உணரமுடிந்தது. இளைய யாதவர் “இங்கு நகர்நுழைந்ததுமே இந்நகர் முற்றிலும் மாறிவிட்டிருப்பதை கண்டேன். இதன் மக்கள் தங்களை முற்றாக நஞ்சுக்கு அளித்துவிட்டிருக்கிறார்கள். பேரழிவுகளுக்கு முன்பு நிகழ்வது அது. அழிவின் தெய்வங்கள் பேருருக்கொண்டு எழுகின்றன. அவற்றின் ஆற்றலைக் கண்டு வியக்கும் எளிய மக்கள் மறுஎண்ணமின்றி அடிபணிகிறார்கள். வேண்டி விழிநீர் உகுத்து நோன்பிருந்து தங்கள் நகர்நடுவே அமர்த்தி வழிபடுகிறார்கள். குருதியளிக்கிறார்கள்” என்றார்.

பானுமதி ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். “கணிகரைக் கண்டேன். நோய் அகன்று வலு கொண்டிருக்கிறார். சகுனியும் புத்துடல்கொண்டு எழுந்தவர் போலிருக்கிறார்” என்றார். தாரை “அரசர் மேலும் ஒளிகொண்டிருக்கிறார், அரசே. இளங்கதிரோன் ஏழுபுரவித் தேரில் எழுந்தவர்போல் தோன்றுகிறார். அவரை நோக்கும் விழிகளும் ஒளிகொள்கின்றன” என்றாள். “ஆம், அவ்வாறே ஆகுமென அறிவேன்” என்றார் இளைய யாதவர். எவரும் எண்ணியிராவண்ணம் பானுமதி விம்மி அழத்தொடங்கினாள். தாரை திகைத்து அருகணைந்து அவள் தோளைத்தொட்டு “அரசி… அரசி” என்றாள். அவள் கைமேல் தன் கையை வைத்து விம்மலை அடக்க, அழுகையைக் கடக்க முயன்றாள் பானுமதி. அதை மீறி மீண்டும் அழுகை எழுந்து அவளை முழுமையாக ஆட்கொண்டது.

மழையில் சுழன்றாடும் தழைமரமென அவள் விம்மலும் சீறலுமாக அழுது மெல்ல ஓய்ந்தாள். சொட்டிச் சொட்டி அவள் ஓய்வது தெரிந்தது. இளைய யாதவர் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. அசலை அவரையே நோக்கிக்கொண்டிருந்தாள். பானுமதி எழுந்து வெளியே ஓடினாள். தாரை திகைத்தபின் அவளைத் தொடர்ந்து சென்றாள். அசலை மீண்டும் ஒருமுறை இளைய யாதவரை நோக்கிவிட்டு தானும் தொடர்ந்தாள்.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 44

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 2

bl-e1513402911361அசலை வந்திருப்பதை அறிவிக்க லதை வந்து வாயிலில் நின்றாள். கையிலிருந்த பீலியை பேழைக்குள் வைத்தபடி உள்ளே அனுப்பும்படி பானுமதி தலையசைத்தாள். அவள் பீடத்தில் அமர்ந்தபோது அசலை உள்ளே வந்தாள். அமரும்படி பானுமதி கைகாட்ட அசலை அமர்ந்து ஆடையை கால்கள் நடுவே அமைத்தாள். பானுமதி “அரசரின் சேடி வந்திருந்தாள்” என்றாள். “வல்லபையா? அவள் வந்தால் அது அரசரின் செய்தி அல்ல, கணிகர் அனுப்பியது” என்றாள் அசலை. “ஆம், அறிவேன்” என்றாள் பானுமதி. “நாம் கோட்டைமுகப்புக்குச் சென்று இளைய யாதவர் நகர்புகுகையில் வரவேற்கவேண்டும்.”

அசலை சில கணங்கள் நோக்கிக்கொண்டிருந்தாள். “நான் அரசமுறைப்படி அது வழக்கமில்லையே என்றேன். அரசரின் ஆணை அது என்றும் அதற்குரிய முன்முறைமை உள்ளது என்றும் சொன்னாள்.” அசலை “எளிதில் தோன்றுவது ஒன்றே. ஏற்கெனவே இளைய யாதவர்மேல் ஷத்ரியர்களுக்கு சினம் உள்ளது. நான்காம் குலத்தவர் நிலம்வென்று அரசமர்ந்ததில் தொடங்குகிறது. சில அவைமுறைமைகளை கோரிபெற்றதில் வளர்வது. சிசுபாலரின் குரல் ஷத்ரியர் அனைவருக்கும் உரியது. இங்கே அவரை அரசரென நாம் வரவேற்பதை அவர்களால் தாளவியலாது. அவர்மேல் சினம் பெருகுவது அவர் கொண்டுவரும் தூதை அழிக்கக்கூடும்” என்றாள்.

“ஆனால் அச்சினம் நம்மீதும் எழும் அல்லவா? ஷத்ரியத்தலைமை கோரும் நாம் எப்படி அவரை அரசரென வரவேற்றோம் என?” என்றாள் பானுமதி. “ஆம், அதுதான் என்னை குழப்புகிறது. ஒருவேளை அந்த எதிர்ப்பை ஏதேனும் வழியில் கணிகர் சீரமைக்கக்கூடும். அல்லது இளைய யாதவர் இங்கே அரசமுறைப்படி மட்டுமே பேசமுடியும், இறங்கிக்கோர முடியாது என அவருக்கு உணர்த்தும் நோக்கம் இருக்கலாம். அல்லது அவரை வெறுமனே உளம்குழம்ப வைப்பதற்காக இருக்கலாம். பாண்டவர் உள்ளத்தில் நம்பிக்கையின்மையை உருவாக்கும் திட்டமிருக்கலாம்… ஆனால் எதை எண்ணினாலும் எங்கோ அது பொருந்தவில்லை” என்று அசலை சொன்னாள்.

“ஏன் நம்மை நோக்குவதற்காக இருக்கலாம் அல்லவா?” என்றாள் பானுமதி. அசலை திடுக்கிட்டு “ஏன்?” என்றாள். “நம் உள்ளம் எங்கிருக்கிறது என” என்றாள் பானுமதி. “அது மாறுமா என்ன?” என்றாள் அசலை. “இல்லை, நாம் வாழும் உலகு வேறு” என்றாள் பானுமதி. “ஆனால் இன்றிருக்கும் நிலையில் நாம் எதையாவது பிழையாக பேசக்கூடும். எங்கோ சில முடிச்சுகள் விழக்கூடும். அவர்கள் எண்ணுவது எதுவென அறியா நிலையில் நம் ஒவ்வொரு சொல்லும் செயற்கையாகவே ஒலிக்கும்.” அசலை தாழ்ந்த குரலில் “அக்கை, நம் அனைவர் குரலும் செயற்கையாகவே ஒலிப்பவை” என்றாள். சில கணங்களுக்குப்பின் பானுமதி “ஆம்” என்றாள்.

அசலை “நாம் அஞ்சவேண்டியதில்லை. அஞ்சுவதற்குரிய எதையும் நாம் ஆற்றவும்போவதில்லை” என்றாள். “நாம் நம்மியல்புப்படி இருப்போம். அவரை எதிர்கொண்டழைப்பதும் அரண்மனை அமர்த்துவதும் நமக்கமையும் நல்வாய்ப்பென்றே கருதுவோம்.” பானுமதி “நானும் இறுதியில் அதையே எண்ணினேன்” என்றாள். “நான் சற்றுமுன் அத்தையை எண்ணிக்கொண்டிருந்தேன்.” அசலை முகம் மலர்ந்து “ஆம், எவ்வகையிலோ அத்தை இவையனைத்துடனும் தொடர்புகொண்டிருக்கிறார்” என்றாள். “எப்படி?” என்றாள் பானுமதி. “தெரியவில்லை, அப்படி சொல்லத் தோன்றியது” என்றாள் அசலை. அவர்கள் தங்கள் நெஞ்சு சென்றடைந்த அப்பொருளின்மையில் திளைத்தபடி விழிசரித்து அசைவற்று அமர்ந்திருந்தார்கள்.

பானுமதி பெருமூச்சுடன் விழித்துக்கொண்டு “இளைய யாதவர் காசிக்கு வந்ததை நினைவுறுகிறாயா?” என்றாள். “ஆம், அப்போது சிறுமிபோல் உளம் கொண்டிருந்தேன். ஆனால் அவர் இருந்த ஏழு நாட்களின் ஒவ்வொரு கணமும் என் நெஞ்சில் உள்ளது” என்றாள். “அவர் சொன்னவையும் செய்தவையும் பொருள்பெருகிச் செல்கின்றன, அக்கையே. ஆனால் மிக எளிய ஒன்று நாளுக்கொருமுறையேனும் எண்ணத்தில் எழுகிறது. மரமல்லி மலரை இரு விரலால் சுழற்றி காற்றில் பறக்கவிடுவார். அது அவர் உயிரின் நீட்சியை பெற்றுக்கொண்டதுபோல சிறகுகொண்டு காற்றில் மிதந்து சென்று மீண்டுவரும். அவருடைய நீட்டிய சுட்டுவிரல்மேல் வந்து அமையும்.”

முகம் மலர அந்நிகழ்வை நோக்குபவள்போல அசலை அமர்ந்திருந்தாள். அவளை பானுமதி சில கணங்கள் நோக்கியபின் “அவர் என்னிடம் வேழம் எனை மணம்கொள்ளும் என்று உரைத்தபோது இவையனைத்தையும் அறிந்திருப்பாரா?” என்றாள். அசலை முதலில் அதை செவிகொள்ளவில்லை. பின்னர் உணர்ந்து திரும்பி நோக்கி “உணராமலிருக்க வாய்ப்பில்லை…” என்றாள். பானுமதி ஒன்றும் சொல்லவில்லை. அசலை “வேழமே அல்லவா?” என மீண்டும் சொன்னாள். “ஆம்” என்று பானுமதி பெருமூச்சுவிட்டாள். அசலை அவள் பேசப்போவதென்ன என்பதுபோல நோக்கி அமர்ந்திருந்தாள். பானுமதி ஒன்றும் சொல்லாமல் கைகள் ஒன்றையொன்று துழாவ அமர்ந்திருந்தாள். அசலை அவ்விரல்களை நோக்கினாள். அவை தேடித் தவிப்பது எதை?

பானுமதி பெருமூச்சுடன் “நன்று, பொழுதாகிறது” என எழுந்தாள். “உன்னிடம் நான் கேட்க விழைந்தது இதைத்தானடி. நான் இப்போதுகூட இதை ஒழிய முடியும். உடல்நலமில்லை என்று படுத்தால் போதும்” என்றாள். “அதை செய்யலாகாது, அரசி. இது ஒரு நல்வாய்ப்பென்றே நாம் எண்ணவேண்டும். நாம் அவரிடம் சொல்ல ஒன்றுமில்லை. ஒருவேளை அவர் நம்மிடம் சொல்ல ஏதேனுமிருக்கலாம்.” பானுமதி திகைப்பு தெரியும் விழிகளுடன் “எதை?” என்றாள். “ஏதேனும்…” என்றாள் அசலை. “அவர் சொல்லப்போவதை நாம் அறியமுடியுமா என்ன?” பானுமதி “நீ என்ன கேட்டாய்?” என்றாள். “என்ன?” என்றாள் அசலை. “வேழமே அல்லவா என்றாய்” என்றாள் பானுமதி. அசலை “ஆம்” என்றாள். “ஆம், வேழம்தான். வேழத்தை எவரும் எந்நிலையிலும் வெறுக்கவியலாது” என்றாள் பானுமதி. அசலை புரியா விழிகளுடன் நோக்கி பின் மெல்ல நகைப்பு ஒளிரப்பெற்றாள்.

ஆனால் பானுமதி பதைப்புடன் “ஆமடி. இந்தப் பெருஞ்சுழியிலிருந்து எனக்கு இப்பிறவியில் மீட்பில்லை. வெறுக்க விழைந்ததுண்டு. மெய்யாகவே விரும்புகிறேனா என மீள மீள கேட்டுக்கொண்டதுண்டு. வடக்குநோக்கிப்பொறிபோல எத்தனை அலையினும் அங்கு சென்றே நிலைகொள்கிறது உள்ளம். என்னால் இவரை வெறுக்கவியலாது. ஆம், நானும் அவரே என்று கூவி எழுந்து ஓடிச்சென்று உடன் நிற்கவே அகம் எழுகிறது. அவர் உண்ட அந்நஞ்சின் பாதியே எனக்கு அமுதாகுமென சற்றுமுன் எண்ணினேன்” என்றாள். அவள் இமைகளில் நீர்த்துளிகள் நின்றன. “காதல்கொண்ட பெண்ணென்று பேதையாகி நிற்பதில் உள்ள உவகையும் நிறைவும் வேறெதிலும் எனக்கு கூடவில்லையடி.”

“நீயும் தாரையும் பேரரசியும் துச்சளையும் போர் தவிர்க்கும்பொருட்டு கொண்ட அத்தனை முயற்சிகளையும் என் சித்தம் ஆம் அதுவே வழி என ஏற்றுக்கொண்டது. ஆழம் அவருக்கு எதிரானவை என வெருண்டு விலகிக்கொண்டது. இரு நிலையே என் இயல்பென்று எப்போதும் இருந்துள்ளேன். இப்போதும் அவ்வண்ணமே உணர்கிறேன்” என்றாள் பானுமதி. “இரு நிலை இதில் எங்கிருந்து வருகிறது, அக்கையே? நீங்கள் அவரிடம்தான் இருந்துகொண்டிருக்கிறீர்கள்” என்றாள் அசலை. “ஆம், ஒருகணமும் என் ஆழம் விலகியதில்லை என இன்று அறிந்தேன். சற்று முன்னர்… வல்லபை வந்து தூதுரைத்தபோது.”

“ஏன்?” என்றாள் அசலை. “அது எனக்கு அளிக்கப்பட்ட தேர்வு” என்றாள் பானுமதி. “நான் என் கரவறையில் வைத்திருக்கும் பீலியைத் துறக்காமல் அவரை இனி அணுகவியலாது. இரண்டிலொன்று தேர்க என்று எனக்கு உரைக்கப்படுகிறது.” அசலை முகம் சுளித்து “எவர் கூறுவது?” என்றாள். “அவரல்ல. வேழம் சிறுமையறியாதது. அது இங்குள்ள அனைவரின் சிறுமையுமென்றாகி நின்றிருக்கும் கணிகரின் செய்தி.” அசலை “ஆம்” என்றாள். “அனைத்தையும் உதறிச்சென்று அவருக்கு இடம் அமரவே நான் விழைகிறேன். நேற்றுவரை என்னை சற்றேனும் தடுத்தது மைந்தருக்கு அன்னை எனும் நிலை. இப்போது அதுவும் சுருங்கி அப்பால் சென்றுவிட்டது” என்றாள் பானுமதி.

குரல் இடற சற்று பொறுத்து உளம் எழ குரல் ஓங்கி “இம்மாமதத்தோனை அடைந்தமையால் என்னுள் நின்று தருக்கிய ஒரு பெண் இன்றும் அவ்வண்ணமே இருந்துகொண்டிருக்கிறாள். பிறிதொன்று என இங்கே நான் எதையும் உணரவில்லை. இவையனைத்திற்கும் அப்பால் என ஏங்கும் ஆழமொன்றின் துளி அப்பீலி. வானோக்கிய விழி அது. அதைத் துறந்தால் மட்டுமே இது எனக்கு கைகூடுமென்றால் அவ்வாறே ஆகுக!” என்றாள். அவள் கைவிரல்கள் குளிர்நீரில் அளைவனபோல நடுநடுங்கின. உதடுகள் துடித்தன. நெஞ்சு எழுந்தமைய தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அசலை அவள் கைகளை பற்றினாள். அவை சிறுபரல்மீன்கள் என ஈரமும் தண்மையுமாக துடித்தன.

“அக்கை, நெஞ்சு சொல்லும் வழி அதுவே எனில் அதையே தேர்க! அஞ்சியோ தயங்கியோ அகம்நிறையும் அன்பை தவிர்த்தால் பிழை செய்தவர்களாவோம்” என்றாள். “அவ்வண்ணமென்றால் நான் இளைய யாதவரை எதிரேற்கவேண்டுமா என்ன?” என்றாள் பானுமதி. “ஆம், அவ்வண்ணமென்றால்தான் எதிரேற்கவேண்டும். முற்றிலும் அரசி என. பிறிதொரு துளியும் அல்ல என. உங்கள் விழிநோக்கி அவர் அதை அறியட்டும்.” பானுமதி தலையசைத்தாள். “இத்தருணத்தை கணிகர் அமைத்தளித்தது அதன்பொருட்டே போலும். அறுத்து எழுக!” என்றாள் அசலை. “ஆம்” என பானுமதி தலையசைத்தாள். பின்னர் பெருமூச்சுவிட்டாள். அசலையும் பெருமூச்சுவிட்டு அமைந்தாள்.

சற்றுநேரம் கழித்து பானுமதி புன்னகையுடன் “நீ சொன்ன காட்சியே என்னில் எழுந்தது, இளையோளே. ஆழியெனச் சுழலும் சிறுவெண்மலர். நான் கலிநஞ்சு உண்டு கருமையடைந்தால் எனை நோக்கி எழுவது அது அல்லவா?” என்றாள். அசலை சிரித்து “அப்போதும் அது மலர்தான், அக்கை” என்றாள்.

bl-e1513402911361கதவை எவரும் திறக்கும் ஒலி கேட்கவில்லை, ஆனால் அவள் உள்ளே வந்துவிட்டிருந்தாள். பானுமதி எழுந்து “அத்தை!” என்றாள். அத்தை அவளை முற்றிலும் புதியவளை பார்ப்பதுபோல விழிசெலுத்தினாள். அவ்விழிகளை சந்தித்ததுமே அவள் அறிந்தாள், அது அத்தை அல்ல என. “யார் நீங்கள்? எவ்வாறு உள்ளே வந்தீர்கள்?” என்றாள். கதவு மூடப்பட்டிருப்பதை அப்போதுதான் அவள் நோக்கினாள். அது ஏதேனும் தெய்வமா? தேவமகளா? விண்ணேறாத மூச்சுடலா? இல்லை, இது கனவு. நான் என் மஞ்சத்தில் படுத்து கனவு கண்டுகொண்டிருக்கிறேன்.

“யார்?” என்று அவள் உரக்க கேட்டாள். “நான் உன்னைப் பார்க்க வந்தேன்” என்றாள் அவள். “ஏன்?” என்று பானுமதி கேட்டாள். அச்சம் எழுந்து நெஞ்சை பற்றியது. அறையிலிருந்து வெளியே ஓட வழியுண்டா என சித்தம் பதறியது. “நான் உன்னை வந்தடைந்தேன்” என்றாள் அவள். “நீங்கள் யார்?” என்றாள் பானுமதி. “நான் நீ வரும்வரை காத்திருந்தேன்” என்று அவள் சொன்னாள். அவளிடம் சொன்னதுபோல் அச்சொற்கள் எழவில்லை. தன்முன் பானுமதி நின்றிருப்பதையே அறியாமல் வேறேதோ வெளியில் நின்று சொல்லிக்கொண்டிருந்தாள். “நான் காத்திருந்தேன்… அது நீ என அறிந்தேன்.” பானுமதி “அத்தை!” என்றாள். “அத்தை, நீங்களா இது?” அவள் புன்னகைத்தாள். வாயின் இரு மூலையிலும் கோரைப்பற்கள் வளைந்திருந்தன. அப்போதுதான் அவள் கூந்தலை பானுமதி கண்டாள். அது அலையலையாக இறங்கி நிலத்தில் விழுந்து கதவை அடைந்து வெளியே சென்றிருந்தது. “வானின் தனிமையில்” என்றாள் அவள். “அத்தை… என்ன சொல்கிறீர்கள்?”

அச்சொல்லை அவளே கேட்டு அவள் விழித்துக்கொண்டாள். மேற்கூரையின் பலகையடுக்குகளை நோக்கியபடி உடல்ஓய்ந்து படுத்திருந்தாள். எங்கோ இரவு ரீங்கரித்துக்கொண்டிருந்தது. ஒரு பறவையின் ஒலியில் அவள் உடல் விதிர்த்தது. விடாயை உணர்ந்து எழ முயன்றாள். எழுந்து சென்று நீர் அருந்த விழைந்தாலும் உடலை இயக்க இயலவில்லை. உள்ளத்தைக் குவித்து கையை மட்டும் உடலில் இருந்து மீட்டு சேக்கைமேல் அறைந்தாள். மீண்டும் மீண்டும் அறைந்தபோது லதை வந்து வணங்கி நின்றாள். “நீர்” என்றாள். அவள் புரிந்துகொண்டு குவளையில் நீர் கொண்டுவந்து தந்தாள். கையூன்றி எழுந்து அமர்ந்து நீரை அருந்தினாள்.

நீரின் குளிர்ந்த தொடுகை உடலுக்குள் பரவியிருந்த பல்லாயிரம் இலைநுனித் துடிப்புகளை அடங்கச் செய்தது. பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டு லதையிடம் செல்லலாம் என கைகாட்டினாள். உடலுக்குள் குருதிநுரைக் குமிழிகள் விசையழிந்தன. கண்களுக்குள் சுழன்று சுழன்று இறுதிக் குமிழியும் மறைந்தபோது விழித்துக்கொண்டு அறைக்குள் சிறுசுடர் அகல் விரித்திருந்த நிழல்களை நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு அக்கனவை ஆழத்திலிருந்து இழுத்து மேலே எடுத்தாள்.

அதற்குள் அதன் பெரும்பகுதி கரைந்து உருமாறிவிட்டிருந்தது. தெளிவற்ற ஓவியமாக அத்தையின் முகம் தெரிந்தது. அவள் அந்த முகத்தை வெவ்வேறு கோணங்களில் சென்று நோக்கிக்கொண்டிருந்தாள். ஒரு கணத்தில் அக்கண்களை அருகே என கண்டாள். பிறிதெவரோ அல்ல. அத்தைதான். அக்கண்களை அவள் முன்னர் கண்டிருந்தாள். முதிரா இளமையில் ஒரு பலிச்சடங்கில். குருதியை நோக்கி நின்றிருந்த முகம் அது. ஒரு நுண்ணிய உளச்சொடுக்கலுடன் அவள் அனைத்தையும் தெளிவுற உணர்ந்தாள்.

காசியை ஆண்ட அரசர் பீமதேவரின் மகள் அம்பையையும் இளையவர்கள் அம்பிகையையும் அம்பாலிகையையும் அஸ்தினபுரியின் மூத்தவராகிய பீஷ்மர் கவர்ந்து சென்றதும் அவ்விளவரசியர் மூவருமே அந்நகரில் துயருற்று இறந்ததும் சூதர் கதைகளாக எப்போதும் உலவின. இல்லங்கள்தோறும் பெண்கள் அம்பையின் கதையைப் பாடி விழிநீர் சிந்தினர். காசித் துறைமேடையின் அருகே கங்கையின் வாய் எனப்பட்ட ஊர்த்வபிந்து எனப்படும் பெருஞ்சுழிக்கு அருகே அம்பையன்னைக்கு சிறு ஆலயம் ஒன்று அமைந்திருந்தது. பொன்னிறமான சுவர்ணை, செந்நிறமான சோபை, பச்சைநிறமான விருஷ்டி என்னும் மூன்று தேவியர் சூழ அங்கு அன்னை அமர்ந்திருந்தாள்.

இளவேனில், வேனில், மழைக்காலம் என மூன்று காலங்களிலாக மூன்று பூசனைகள் அங்கே நிகழ்ந்தன. இளவேனிலுக்குரிய அன்னையாகிய சுவர்ணைக்கு கொன்றைமலர்களும் கோடையின் பெருந்தேவியாகிய சோபைக்கு செங்காந்தளும் விருஷ்டியன்னைக்கு மழைக்குப்பின் எழும் புது அருகம்புல் மாலையும் சூட்டப்பட்டு வணங்கப்பட்டனர். குளிர்காலத்தின் இறுதியில் கருநிலவுநாளில் அம்பையன்னைக்கு நீலமலர்களால் பூசெய்கை இயற்றி குருதிபலி அளிப்பார்கள். துறைமேடைக்கு படகிலேறச் செல்லும் ஒவ்வொருமுறையும் அம்பையன்னையை நோக்குவது அவள் விழிப்பழக்கம். கருங்கல்லில் வடித்த அச்சிலை வலக்கையில் தாமரையும் இடக்கையில் அனலும் கொண்டிருந்தது.

அவள் தன் அத்தையின் சுட்டுவிரல் பற்றி அவ்வாலயத்திற்கு முதல்முறையாக சென்றபோது அத்தையை அனுபநாட்டு அரசர் மணந்திருக்கவில்லை. ஷத்ரிய நாடுகளிலிருந்து அவளுக்கான மணத்தூதுகள் அன்று வந்துகொண்டிருந்தன. ஆலயத்தில் நின்றிருந்த அம்பை அன்னையின் முன் கைகூப்பி விழிமூடி நின்ற அத்தையை ஒருமுறை அண்ணாந்து பார்த்தபின் அவள் கருவறைக்குள் இருந்த சிறிய சிலையை அருகிலென கண்டாள். இரண்டுமுழ உயரமுள்ள கற்சிலையின் முகத்தில் இரு வெள்ளிக் கண்கள் பொருத்தப்பட்டிருந்தன. முதலில் கருவறை இருளுக்குள் இருண்ட நீரில் இரு வெள்ளிப்பரல்மீன்கள்போல் அவை மட்டும் தோன்றின. பின்னர் நிழலுருவாக முகம் அவற்றுக்குப் பின்னால் எழுந்து வந்தது. பரல்கள் விழிகளென்றானபோது நோக்கு கூர்கொண்டது. சில கணங்களுக்குள் மிக அருகிலென எழுந்து வந்து உறுத்தியது.

அவள் அஞ்சி அத்தையின் ஆடையை பற்றிக்கொண்டாள். அவள் முழங்காலில் முகம் புதைத்து அந்நோக்கை தவிர்த்தாள். மீண்டும் விழிதிருப்பியபோது கன்னங்கரிய கல்லுடலுடன், மீன்செதிலென ஒளிரும் விழிகளுடன் அவளுக்கு மிக அருகே அம்பையன்னை நின்றிருந்தாள். அலறியபடி அத்தையின் கால்களை பற்றிக்கொண்டு அவள் உடல் நடுங்கினாள். குனிந்து அவளை இடையில் தூக்கி வைத்து “என்னடி?” என்றாள் அத்தை. “அங்கே…” என்று அவள் கைசுட்டினாள். “அது அன்னை. நம் குடியின் மூதன்னை அவள்” என்றாள் அத்தை.

“வேண்டாம்! வேண்டாம்! போய்விடுவோம்!” என்று அவள் கைகால்களை உதறி அத்தையின் உடலில் படிந்து துடித்தாள். “இருடி, பூசனை முடிந்தபின் செல்வோம்” என்றாள் அத்தை. “வேண்டாம்! வேண்டாம்!” என்று அவள் பதறி கீழிறங்க முயன்றாள். அத்தை திரும்பி செவிலியிடம் “அஞ்சிவிட்டாள், ஏனென்று தெரியவில்லை. தேருக்கு கொண்டு செல்க!” என்று அவளை அளித்தாள். செவிலி அவளைத் தூக்கி மூடுதிரையிட்ட தேரில் கொண்டுவந்து அமர்த்தி அருகமர்ந்து அவள் தலையைப்பற்றி தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு ”அஞ்சவேண்டாம், இளவரசி… நான் அருகிருக்கிறேன்” என்றாள். அவள் செவிலியின் மடியில் ஒண்டிக்கொண்டாள்.

அவள் குழல் வருடி “என்ன ஆயிற்று?” என்றாள் செவிலி. “அங்கே… அங்கே கண்கள்” என்றாள் அவள். “அது தங்கள் மூதன்னை. உலகு புரக்கும் அன்னைநிரையில் ஒருத்தி” என்றாள் செவிலி. “அஞ்சவேண்டாம், இளவரசி. அவளிடம் வேண்டிக்கொள்க!” என்று அவள் குழலைத் தடவி ஆற்றுப்படுத்தினாள். அவள் விசும்பியபடி மெல்ல துயின்றாள். ஆலயமுகப்பில் உடுக்கும் முழவும் ஒலிக்கத்தொடங்கின. கொம்புகள் பிளிறின. அவள் தன் கனவுக்குள் எழுந்த பெருவேழம் ஒன்றை கண்டாள். வெண்தந்தங்கள் இரு பிறைகள் என எழுந்த கருங்குவை.

அவள் குறட்டையோசையை கேட்டபின் ஓசையின்றி செவிலி கீழிறங்கிச் சென்றாள். அவள் வேழத்தின் இருளுடல் அருகே திரைச்சீலையென அசைவதை கண்டாள். அப்பரப்பில் ஒரு கருவண்டின் ஒளி. அது நீர்த்துளி. அல்ல, விழி என உணர்ந்ததும் அலறியபடி விழித்துக்கொண்டாள். யானைகள் பிளிறுவது போலவும் ஓநாய்கள் குரைப்பது போலவும் நடுவே புலி உறுமுவது போலவும் தாளக்கருவிகளின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. கொலை விலங்குகள் செறிந்த பெருங்காடெனத் தோன்றியது அந்த இருள்சூழ்கை. தேரின் திரைகளுக்குள் அமர்ந்திருப்பது காப்பென்று தோன்றியது. முழங்காலில் முகம் புதைத்து கண்களை மூடி அமர்ந்தாள்.

ஆனால் சற்று நேரத்திலேயே சலிப்புற்றாள். எழுந்து திரைவிலக்கி வெளியே பார்த்தபோது மூன்று ஆடுகளை சூதர்கள் இழுத்துச் செல்வதை கண்டாள். முன்னால் காட்டப்பட்ட பச்சை இலைகளை நோக்கி வாய் நீட்டியபடி அவை அவற்றின் பின்னால் சென்றன. இடையில் செம்பட்டுக் கச்சை இறுக்கி, செவ்வரளி மாலை அணிந்து, குடுமியில் காந்தள் அணிந்த சூதர்கள். அறியாமல் படிகளினூடாக இறங்கி அவள் அவற்றை தொடர்ந்தாள்.

அவர்கள் அம்பையன்னையின் ஆலயத்தின் முன் அந்த ஆடுகளை கொண்டுசென்றனர். அவள் கால் தயங்கி அங்கிருந்த மரத்தினருகே நின்றாள். அனைத்து விழிகளும் ஆடுகளை நோக்கிக்கொண்டிருந்தமையால் எவரும் அவளை நோக்கவில்லை. அவள் தன்னை நன்றாக அந்த மரத்தின் வேர்ப்புடைப்புக்குள் ஒடுக்கிக்கொண்டாள். முகத்தை மட்டும் நீக்கி அங்கு நிகழ்வனவற்றை நோக்கிக்கொண்டிருந்தாள்.

ஆடுகளை இழுத்துச் சென்றவர்கள் ஆலயத்தின் முன் அவற்றை ஒன்றன்பின் ஒன்றென நிறுத்தினார்கள். உடுக்கோசையும் கொம்போசையும் முழவோசையும் நிறைந்த பேரொலி ஆடுகளை நீர்த்துளியென ததும்பி நடுங்கவைப்பதாகத் தோன்றியது. தழை முன்னால் நீட்டப்பட்டபோது அவற்றில் ஒன்று முன்னால் சென்று பலிபீடத்திற்குக் குறுக்காக கழுத்தை நீட்டியது. மேலிருந்து விழுந்ததுபோல் எடை மிக்க வாளொன்று சரிந்து அதன் தலையை துண்டித்து அப்பால் இட்டது. திறந்த குடத்திலிருந்தென குருதி பீறிட்டுக் கசிய நான்கு கால்களும் உதைத்து விசைகொள்ள ஆடு தலையின்றி துள்ளி எழுந்து அப்பால் சென்று அம்பை அன்னையின் ஆலய முகப்பில் விழுந்து புரண்டு குளம்புகளை காற்றில் உதைத்தது.

அவள் அதன் பின்னரே குருதி தெறித்த உடலுடன் கையில் பள்ளிவாளேந்தி நின்ற பூசகரை பார்த்தாள். அம்பையின் அதே வெள்ளிவிழிகளை அவரது கரிய முகத்திலும் கண்டாள். நரைத்த குழல்திரிகள் தோளில் விழுந்து கிடந்தன. ஆட்டின் வால் என பருத்த நரைமீசைக்குக் கீழே தடித்த உதடுகளுக்குமேல் நான்கு பற்கள் நீண்டு பதிந்திருந்தன. பள்ளிவாளை மூன்று முறை சுழற்றி “அம்பையே, வெல்க! அன்னையே, பேரரசியே, வெல்க! விண்ணரசியே, வெல்க! பெருவஞ்சத்தோளே, வெல்க! அணையா எரியே, வெல்க!” என்று அவர் கூவ கூடி நின்றவர்கள் ஏற்று முழக்கமிட்டனர்.

கனவிலென இரண்டாவது ஆடு சென்று பீடத்திற்குக் குறுக்கே கழுத்தை நீட்டியது. வாள் அதை வெட்டி அமைந்தபோது தயங்கி பின்னால் விழுந்து மேலும் ஒரு காலெடுத்து வைத்து பின்னால் வந்து தப்பி ஓட முயல்வதுபோல கைகூப்பி நின்றிருந்த கூட்டத்திற்கு இடையே புகுந்து பக்கவாட்டில் சரிந்து விழுந்து உதைத்துக்கொண்டது. அவள் திரும்பி ஓடி தேரை அடைந்தாள். அவள் விழிகளுக்குள் ஆட்டின் துள்ளல் அப்போதும் எஞ்சியிருந்தது. “இளவரசி, இளவரசி” என்று அழைத்தபடி இரு சேடியர் அவளுக்குப் பின்னால் வந்தனர். வீறிட்டு அலறியபடி உதறிக்கொண்ட கால்களுடன் தேருக்குள் நுழைந்து பீடத்தில் விழுந்தாள். முழங்கால்களில் முகம் புதைத்து உடலை இறுக்கிக்கொண்டாள். பிறிதொரு ஓசை எழுந்தபோது அடுத்த ஆடு வெட்டப்பட்டதை அவள் உளக்கண்ணில் கண்டாள்.

திரும்பி வருகையில் தேர்த்தட்டில் உதடுகள் உலர்ந்து விழிகள் வெறித்திருக்க, கைகள் இறுகி நகங்கள் உள்ளங்கையில் பதிய, கால்விரல்கள் நீண்டு நாண்கொண்ட வில்லென நின்றிருக்க படுத்திருந்தபோதே உடல் வெம்மைகொள்ளத் தொடங்கியிருந்தது. “குருதி! குருதி!” என்று அவள் புலம்பிக்கொண்டிருந்தாள். அவள் தலையை மடியில் எடுத்து வைத்து நெற்றிக்குழலை வருடியபடி அத்தை ஒரு சொல்லும் எழாது அமர்ந்திருந்தாள். அரண்மனையை அடைந்து அவளை சேடியர் உள்ளே தூக்கிச்சென்றபோது அன்னை ஓடிவந்து “என்ன ஆயிற்று? என்ன ஆயிற்று?” என்றாள். “சற்று அஞ்சிவிட்டாள்” என்றாள் அத்தை.

அன்னை முன்னரே எச்சரித்திருந்தாள். “முதிராச் சிறுமி. அவளை எதற்கு இக்கொடுவிழவுக்கு அழைத்துச் சென்றாய்? மூத்தோர் சொல்லுக்கு இங்கு எந்த மதிப்பும் இல்லையா?” என்றாள் உரத்த குரலில். “அரசியாகப் போகிறவள். அவள் குருதி கண்டு வளரட்டும். குருதிமேல் நடக்கும் கால்கள் கொண்டவர்கள்தான் மணிமுடி சூடும் தகுதி அடைகிறார்கள்” என்று அத்தை சொன்னாள். அன்னை சொல்லடங்கி வெறுமனே நின்றிருக்க “இந்த அழலில் அவள் வென்று மீண்டுவந்தால் அவள் சொல்லில் வாழும் அரசி. இல்லையேல் அவளும் தன் அன்னையை போலத்தான். பிறகு எனக்கும் அவளுக்கும் சொல்லில்லை” என்றபின் அத்தை தன் தனியறைக்கு சென்றாள்.

ஏழு நாட்கள் அவள் காய்ச்சலில் நடுங்கிக்கொண்டிருந்தபோது ஒருமுறையேனும் அத்தை வந்து பார்க்கவில்லை. ஏழாவது நாள் வாய்க் கசப்புடன், உடல் ஓய்ச்சலுடன், மெலிந்து ஒடுங்கிய விலாவுடன் அவள் மஞ்சத்தில் படுத்திருந்தபோது அத்தை அவள் அருகே வந்தமர்ந்தாள். புன்னகையுடன் அவள் கைகளை பற்றிக்கொண்டு “எப்படி இருக்கிறாய்?” என்றாள். ஒளியற்ற புன்னகை காட்டி அவள் உதடுகளை நாவால் ஈரப்படுத்திக்கொண்டாள். “கனவுகள் கண்டாயா?” என்று அத்தை கேட்டாள். “ஆம்” என்றாள். “என்ன கனவு?” என்றாள். “குருதி” என்று அவள் சொன்னாள். “யாருடைய குருதி?” என்று கேட்டாள். “மனிதர்கள்… அறியா முகங்கள்…”

அவள் முகத்தை கூர்ந்து நோக்கியபின் “நீ என்ன செய்தாய்?” என்றாள் அத்தை. “நான் அதில் கால் அளைந்து நடந்தேன்… இளவெம்மை கொண்டிருந்தது. மென்சேற்றுக் கதுப்பென மிதிபட்டது. அதில் குமிழிகள் என விழிகள். மீன்களென வெட்டுண்ட காதுகளும் விரல்களும்…” என்றாள். அத்தை புன்னகையுடன் அவள் கையைப் பற்றி ஒரு மயிற்பீலியை வைத்தாள். அவள் கைவிரித்துநோக்கி “இது என்ன?” என்றாள். “மென்பீலி… இதை வைத்துக்கொள்.” அவள் அதை திருப்பி அது எருமைவிழி என நிறம் மாறுவதை நோக்கினாள். “அடுக்கு குலையாத ஒரு மயிற்பீலி நம் கையில் இருந்தாகவேண்டும்” என்றாள் அத்தை. “அம்பைஅன்னையும் ஒரு பீலியை வைத்திருந்தாள் என்கின்றன நூல்கள்.”

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 43

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 1

bl-e1513402911361தன் அணியறைக்குள் பானுமதி பீதர்நாட்டு மூங்கில் பீடத்தில் கைகளை தளர அமைத்து, கால் நீட்டி, தலையை பின்னால் சாய்த்து, விழிமூடி தளர்ந்து அமர்ந்திருக்க சேடியர் அவள் உடலிலிருந்து அணிகளை ஒவ்வொன்றாக அகற்றிக்கொண்டிருந்தனர். அவர்களின் கைகள் அவள் உடல்மேல் சிறு குருவிகள் என பறந்தெழுந்து அமைந்தன. சேடியர் கைகளின் தரிவளைகளின் குலுங்கலோசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. ஆடியில் அணுக்கச்சேடி லதை தோன்றியபோது அணிச்சேடி பானுமதியிடம் குனிந்து “அரசி, தங்கள் அணுக்கச்சேடி லதை” என்றாள். பானுமதி சில கணங்களுக்குப்பின் களைத்த இமைகளை மெல்ல தூக்கி சிவந்த விழிகளால் லதையை நோக்கி மெல்ல தலையசைத்தாள்.

லதை அருகே வந்து தலைவணங்கி “அரசரின் முதன்மைச் சேடி வல்லபை தங்களுக்கான செய்தியுடன் வந்திருக்கிறார், அரசி. முதன்மைச் செய்தி என்று அறிவிக்கும்படி என்னிடம் சொன்னார்” என்றாள். பானுமதியின் புருவங்கள் சுழித்தன. உதடுகள் ஏதோ சொல்ல என அசைந்து பின் நிற்க “வரச்சொல்க!” என்றாள். லதை “இங்கேயேவா?” என்றாள். பானுமதி “ஆம்” என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு அணிச்சேடியரை விலகிச் செல்லும்படி கைகாட்டினாள். அவர்கள் அதுவரைக்கும் கழற்றிய பூண்களை அவற்றுக்குரிய சிறு பேழைகளில் இட்டு அணிமேடையில் வைத்தபின் விழிகளால் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு ஓசையின்றி பின்னால் சென்று சிறுகதவுகளினூடாக வெளியேறினர்.

அக்கதவுகள் மூடப்பட்டதும் பானுமதி தனிமையை உணர்ந்தாள். அது அவளுக்கு உளவிடுதலையை அளித்தது. நிமிர்ந்தமர்ந்து இரு கைகளையும் மேலே தூக்கி சோம்பல் முறித்தாள். கலைந்து தோளில் கிடந்த குழலை அள்ளிமுடிந்து முதுகிலிட்டபின் ஆடையை சீர்திருத்தி அமர்ந்தாள். லதை உள்ளே வந்து “வருகிறார்” என்றாள். “அவரைத்தான் அன்னையிடமும் தூதனுப்பியிருக்கிறர் அரசர்” என்று தாழ்ந்த குரலில் மேலும் சொன்னாள். பானுமதி கைகாட்ட அவள் பணிந்து விலகி வெளியே சென்றாள். வல்லபை மெலிந்த கூன்கொண்ட முதுமகள்களுக்குரிய பறவைபோன்ற சிற்றடி வைப்புடன் உள்ளே வந்து முறைப்படி வணங்கினாள்.

“அஸ்தினபுரியின் முடிகொண்டு அமைந்த காசிநாட்டு அரசியை வணங்குகிறேன். இத்தருணம் எனது மூதன்னையர் பெருமை கொள்ளும்படி அமைவதாக” என்றாள் வல்லபை. அவள் குரல் காளையின் கழுத்துத் தசைபோல தொங்கி ஆடுவதாக ஓர் உளவுருவகம் அவளுக்குள் எழ அவள் மெல்லிய புன்னகையை அடைந்தாள். அப்புன்னகை வல்லபையை குழப்பியது. ஆனால் முகத்திலும் பழுத்த விழிகளிலும் ஏதும் வெளிப்படாமல் “அரசரிடமிருந்து அவைச்செய்தி ஒன்று கொண்டுவந்துள்ளேன்” என்றாள். அவளிடம் அமரும்படி பானுமதி கைகாட்டினாள். சிறுபீடத்தில் கால்மடித்து அமர்ந்த வல்லபை தன் வற்றிய கைகளை மடியில் சேர்த்து வைத்துக்கொண்டாள். அவற்றில் பற்றுகொடிகள் என பரவிச்சென்ற நரம்புகளை விழிதாழ்த்தி நோக்கியபடி பானுமதி அமர்ந்திருந்தாள்.

வல்லபை சொல் சுருக்கமும் கூர்மதியும் கொண்டவள் என்பதை பலரும் அவளுக்குச் சொல்லியிருந்தாலும் மிகக் குறைவாகவே அவள் வல்லபையிடம் உரையாடியிருந்தாள். அவளூடாக எச்செய்தியையும் துரியோதனன் அவளுக்கு அனுப்பியதில்லை. பிற அரசருக்கு அவர்களின் அகத்தளம் வரை சென்று சொல்லத்தக்க செய்திகளை கொண்டு செல்பவளாகவே வல்லபை அறியப்பட்டாள். அவளை விதுரர் வெறுத்தார். அரசவையில் வல்லபை எழுகிறாள் என்றால் விதுரர் பின்வாங்கிவிட்டார் என்பதே பொருள். “அரசர்கள் நன்றுக்கும் தீதுக்கும் அன்புக்கும் வஞ்சத்திற்கும் வெவ்வேறு தூதர்களை கொண்டிருக்கவேண்டும். ஒருகையில் நெருப்பும் மறுகையில் நீரும் இருப்பவனே ஆட்சியாளன்” என்ற வரியை அவள் நெஞ்சம் தொட்டு எடுத்தது.

“அரசர் தங்களுக்கு தன் வாழ்த்துகளை தெரிவிக்கும்படி ஆணையிட்டிருக்கிறார், அரசி” என்றாள் வல்லபை. அந்த வரி எந்நூலில் உள்ளது? தேவசேனரின் ராஜநீதிசம்கிரகமா? சுபாஷிதரின் உக்ரபிரகாசிகையா? “நாளை காலை உபப்பிலாவ்யத்திலிருந்து இந்திரப்பிரஸ்தத்தின் முன்னாள் அரசர் யுதிஷ்டிரரின் செய்தியுடன் துவாரகையின் முன்னாள் அரசர் யாதவர் அஸ்தினபுரிக்குள் நுழைவதாக செய்தி வந்துள்ளது. அவரை தாங்களே சென்று கோட்டை முகப்பில் அரசமுறைப்படி வரவேற்று அரண்மனையில் கொண்டுசென்று அமர்த்த வேண்டுமென்றும் அரசணிக்கோலத்தில் முறைப்படி தங்கள் செலவு அமையவேண்டுமென்றும் அரசர் விழைகிறார்” என்றாள் வல்லபை.

பானுமதி எழுந்து அமர்ந்தபோது அணிகள் ஓசையிட்டன. “அவ்வாறு அரசியர் செல்லும் வழக்கமில்லையல்லவா? அதிலும் அவர் முடிகொண்டு அமர்ந்த அரசர் அல்ல எனும்போது…” என்றாள். “ஆம், அவ்வாறு முன்முறைமை இல்லை. ஆனால் அவ்வாறு செய்வதற்கு தடையுமில்லை. வருபவர் நம் அரசரால் அரசகுடியினரென்றும் மதிக்கத்தக்கவரென்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டவரெனில் அது அவையாலும் ஆன்றோராலும் ஒப்பப்படுவதே ஆகும்” என்றாள் வல்லபை. அவ்வரி கிருபாகரரின் மௌலிவிலாசம் என்னும் குறுங்காவியத்தில் வருவது. பானுமதி பெருமூச்சுவிட்டாள். “அவர் வருவது நாளை மறுநாள் அஸ்தினபுரியில் கூடவிருக்கும் ஷத்ரியப்பேரவையில் பங்குகொள்வதற்காக. அவர் அரசரல்ல எனில் அங்கே அவர் அவையமரவியலாது. அதன்பொருட்டே இந்த முடிவை அரசர் எடுத்திருக்கக்கூடும்” என்றாள் வல்லபை.

பானுமதி தன் உள்ளத்துள் உழன்றபடி தலையை மெல்ல அசைத்தாள். இப்போது ஏன் என் உள்ளம் இரண்டாகப் பிரிகிறது? இத்தருணத்தை கூர்கொண்டு எதிரேற்கவேண்டியவள் நான். ஆனால் எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் உள்ளூர பிளந்துகொள்வதனூடாகவே நிகர்நிலையை அடைகிறேன். இங்கிருக்கையில் காசியிலும் இருக்கிறேன். அவையமர்கையில் சிறுமியாகவும் ஆகிறேன். நடைமுறைச் சிக்கல்களின்போது நூலாய்கிறேன். அவள் விழிமங்கி உணர்விலாதிருந்தமை வல்லபையை குழப்பியது. பற்றுக்கோடுக்காக அவள் உள்ளம் தவிப்பதை பானுமதியால் காணமுடிந்தது. அதையுணர்ந்ததும் அவள் மீண்டும் புன்னகைத்தாள்.

வல்லபை சற்றே முகம் அண்ணாந்து அவள் முகத்தை கூர்ந்து பார்த்தபடி “இது அரசாணை என்பதனால் இங்கு ஐயமோ மாற்றுச் சொல்லோ எழாதென்பது அனைவரும் அறிந்ததே” என்றாள். அவள் தன்னை முள்முனையால் குத்திச்சீண்டுகிறாள் என பானுமதி உணர்ந்தாள். ஆனால் அவள் முகம் புன்னகையுடன் மாறாதிருந்தது. அதைக் கண்டு வல்லபையின் குரல் மீண்டும் இயல்பாக ஆகியது. “இளைய யாதவர் இங்கு வரும் செய்தி நேற்று காலையே ஒற்றர்களினூடாக அவையடைந்துவிட்டது. அவருக்கு முறையான வரவேற்பு அளிக்கப்படவேண்டுமென்பது அரசரின் எண்ணம்” என்றாள்.

பானுமதி அகக்குழப்பம் விலகாமலேயே விழிதூக்கி வல்லபையின் கண்களை பார்த்தாள். நரைத்த தலைமுடி வெண்களிமண் தீற்றல்கள் என இரு பக்கங்களிலுமாக வழிந்து தலைக்குப்பின் கொண்டையிடப்பட்டிருந்தது. வாடிய கமுகுப்பாளைபோல நுண்சுருக்கங்கள் செறிந்த வெண்முகம். இருபுறமும் வற்றிய கன்னத்தசைகளால் இழுக்கப்பட்டு அமுங்கியது போன்ற மூக்கு. உள்மடிந்து சிறிய கோடென்றான வாய். கழுத்துக்கு கீழே இரு திரைத்தொங்கல்கள்போல மென்தசை தொங்கி நின்றிருந்தது. வடித்த காது குழைகளுடன் தோள்மேல் அமர்ந்திருந்தது.

எத்தனை உள்ளங்களை இவள் உள்ளம் தொட்டுச் சென்றிருக்கும் என்ற எண்ணம் பானுமதிக்கு ஏற்பட்டது. இத்தகைய ஆயிரம் உள்ளங்களுடன் விளையாடி ஒவ்வொரு பொழுதையும் கடந்து இரவு மஞ்சத்திற்கு மீளகிறோம். நச்சு நாகங்கள் நடுவே நெளிந்தும் வளைந்தும் வரும் எலி என. அரசி எனும் இந்த அடையாளமும், அதற்குரியவை என பயின்று சூடிக்கொண்ட பாவனைகளுமின்றேல் இதை இயற்றமுடியுமா என்ன? இந்தத் தோற்றமும் நிமிர்வும் என் கவசங்கள். உள்ளே அஞ்சியும் சலித்தும் விலகித் திகைத்து அமர்ந்திருக்கும் சிறுமியை இவள் அறிந்தால் நச்சுப்பல் கூர்மின்னி எழுமா என்ன?

பானுமதி “ஆனால் இங்கு இதுவரைக்கும் ஒரு முறைமையே கடைபிடிக்கப்பட்டது. பாரதவர்ஷத்தின் தொல்குடி ஷத்ரிய அரசர்கள் மட்டுமே அரசராலோ பட்டத்து அரசியாலோ கோட்டைமுகப்பில் எதிர்கொள்ளப்பட்டார்கள். இன்று முடிசூடாத இரண்டாம் குலத்தார் ஒருவரை அவ்வாறு கோட்டைமுகப்பிற்குச் சென்று வரவேற்பதை ஷத்ரிய அரசர்கள் எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் என்று எண்ணவேண்டியுள்ளது” என்றாள். “அவையனைத்தும் முன்னரே அரசரின் அவையில் இளையவர்களால் கூறப்பட்டு அரசரின் ஆணைக்கு சொல்லடங்கி ஏற்கப்பட்டது” என்றாள் வல்லபை. “இளைய யாதவர் முடிதுறந்தாலும் அத்துறப்பை அவர் மைந்தர் ஏற்கவில்லை என்று செய்தி உள்ளது. ஆகவே அவர் பேரரசர் என்றே கொள்ளப்படுவார்.”

“நன்று, அரசரின் ஆணை இது என்றால் தலைக்கொள்கிறேன்” என்றாள் பானுமதி. வல்லபை எழுந்து தலைவணங்கி “அரசி, நாளை மாலையில் ஷத்ரிய அரசர்களின் பேரவை நம் தெற்குக் கோட்டையருகே இந்திரமுற்றத்தில் அமைந்துள்ள புதிய அவைக்கூடத்தில் கூடுகிறது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மறுநாள் காலை கூடும் அஸ்தினபுரியின் அரசப்பேரவையில் அறிவிக்கவிருக்கிறார்கள். அதன் பின்னர் நம் அரசர் பாரதவர்ஷத்தில் திரண்டவற்றிலேயே மிகப் பெரிய படையின் முதன்மைத் தலைவர் என அரியணை அமர்வார். இவ்விரிநிலத்தில் விரைவிலேயே சத்ராஜித் என முடிசூடி அவர் அமர்வார் என்பதற்கான தொடக்கம் அது. அவ்வரியணையின் அருகே மும்முடி சூடி அமரவிருப்பவர் தாங்கள். இந்தத் தருணம் அதை தங்களுக்கு நினைவூட்டும் தன்மை கொண்டதாக அமைக!” என்றாள்.

“ஆம், அவ்வாறே ஆகுக!” என்று பானுமதி தலைவணங்கினாள். அதன் பின்னரே வல்லபை சொன்னவற்றின் முழுப்பொருளும் அவளுக்கு புரிந்தது. கைகூப்பி மும்முறை தாழ்ந்து வணங்கியபின் வல்லபை “விடை கொள்கிறேன், அரசி” என்று சொல்லி பின்காலடி எடுத்து வைத்து கதவை அடைந்து அதை மெல்ல தட்டினாள். வெளியிலிருந்து லதை கதவை திறக்க மீண்டுமொருமுறை தலைவணங்கி வெளியே சென்று மறைந்தாள். ஆணையை எதிர்பார்க்கும் விழிகளுடன் லதை நிற்க அவளை வெற்றுவிழிகளால் சற்றுநேரம் நோக்கியபின் “அசலையை வரச்சொல்” என்றாள் பானுமதி. லதை தலைவணங்கி வெளியே சென்றாள்.

bl-e1513402911361பானுமதி திரும்பி அருகிருந்த வெண்கல மணியை மும்முறை அடிக்க பின்பக்கக் கதவுகள் திறந்து அணிச்சேடியர் உள்ளே வந்தனர். பானுமதி கைகாட்டியதும் அவள் உடலிலிருந்து நகைகளை கழற்றத் தொடங்கினர். கால் மெட்டிகளையும் தண்டைகளையும் முன்னரே கழற்றிவிட்டிருந்தனர். கைவிரலிலிருந்த ஆழிகளையும் மலர்ப்பூட்டுகளையும் திருகாணி இறுக்கப்பட்ட கங்கணங்களையும் காதுமடல்களில் பொருத்தப்பட்டிருந்த மணிமலர்களையும் அவர்கள் கழற்றினர். அவ்விரல்கள் ஈக்களின் முன்கால்கள்போல விரைவு கொண்டிருப்பதை அவள் கண்டாள். கூடுகட்ட நார் கொண்டுசெல்லும் சிறு செந்நிறக் குருவிகள் என அவர்களின் கைகள் பறந்து எழுந்து சிமிழ்களில் நகைகளை போட்டன.

நகைகள் முழுமையாக அகற்றப்பட்டதும் அவள் எழுந்து நிற்க இருவர் ஆடைகளை கழற்றத் தொடங்கினர். திறன்கொண்ட கைகளுடன் அவர்கள் முடிச்சுகளையும் மடிப்புகளையும் செருகல்களையும் பின்னல்களையும் அகற்றி ஆடைகளைக் கழற்றி மடித்து அப்பாலிருந்த மூங்கில் பேழைகளில் இட்டனர். முற்றிலும் ஆடை விலகியதும் உடல் காற்றை உணர்ந்து மெல்லிய மெய்ப்பு கொண்டது. அவள் எழுந்து முதுகை நிமிர்த்து நின்றாள். இளமையில் கனியும் மலரும் உதிர்ந்து விடுதலைகொண்டு மேலெழும் கிளை என ஒரு சேடி சொன்ன ஒப்புமை எப்போதும் அவள் உள்ளத்தில் எழுவதுண்டு. அருகே ஆடியில் பிறிதொரு இருப்பை உணர்ந்தாள். திரும்பியபோது நோக்கை சந்தித்தாள்.

ஒவ்வொரு முறையும் ஆடையின்றி நிற்கையில் ஆடிநோக்கி விழி எழுவதை அவளால் தவிர்க்க முடிந்ததில்லை. தெரியும் அவ்வுடல் எப்போதுமே பிறிதெவருடையதோ என துணுக்குறச் செய்யும். அவள் உள்ளம் தயங்கித் தயங்கி ஒவ்வொரு தருணத்திலும் மரக்கிளைகளை, வேர்களை, கற்களை பற்றிக்கொண்டு நின்று இழுபட்டு ஒழுகிச் செல்ல பெருகி விசைகொண்டு நெடுந்தொலைவில் முன்னால் சென்றுகொண்டிருந்தது உடல். அதன் இலக்கும் விழைவும் முதுமையே என்பதுபோல. உருக்கொண்டு எழுந்ததே சிதைவுற்று அழிவதற்காகத்தான் என. மடிந்தும் தளர்ந்தும் என் உடலென்றான இந்தத் தசைத்திரள்கள், இத்தொய்வுகள், இந்நிறமாற்றங்கள் நானா? கன்னங்கள் மேலும் மடிந்திருந்தன. கண்கீழ்த்தசை கருமைகொண்டு இழுபட்டு வளைந்திருந்தது. உதடுகள் தொங்கியிருக்கின்றனவா? முகவாயின் தொய்வும் கழுத்தின் மடிப்பும் மிகுந்துள்ளனவா? தோளிலும் மார்பிலும் அமைந்த தோல்வரிகள், தோள்களின், விலாக்களின் எலும்புப் புடைப்புகள். கழுத்தில் இந்த நரம்புவரி முன்பு இத்தனை மேலெழுந்திருந்ததில்லை.

முலைகளை அவள் ஒரு கணத்திற்குமேல் நோக்குவதேயில்லை. அவை ஒவ்வொருநாளுமென அவள் உடலில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டிருந்தன. காமம் முகிழ்ப்பதென முளைவிட்டவை. முழுத்துத் துடித்தவை, கனிந்து ஊறியவை. கனல்கொண்டவை. மறைக்கப்பட்ட கூர்நோக்கு கொண்டவை. மண்நோக்கி தழைந்தன அவற்றின் கருவிழிகள். இவ்வுடல் என்னுடையதல்ல என்றே அவளுக்குள் இருந்த சிறுமி திமிறி பின்னடி வைத்தாள். ஆடிக்குள்ளிருந்து திகைத்து தன்னை நோக்குபவள் பிறிதேதோ காலத்தில் வாழும் ஒரு மூதன்னை.

அவள் தன் அத்தை சியாமளையைப் போன்ற தோற்றம் கொண்டவள் என்பது இளமையிலேயே அனைவரும் சொல்லி நிறுவிவிட்ட ஒன்று. அனுபநாட்டு அரசன் கர்மஜித்துக்கு அரசியாகச் சென்ற அத்தை சியாமளை அவள் அன்னைக்கு உகந்தவளல்ல. பருத்த வெண்ணிற உடலும், நுரைச்சுருள் குழலும், வட்டமுகத்தில் சிரிக்கும் சிறிய கண்களும், சிற்றிதழ்வாய்க்குள் அரிநிரை என சிறிய பற்களும் கொண்டிருந்த அத்தையை அவள் எப்போதும் விழிவாங்காமல் நோக்கிக்கொண்டிருப்பாள். அத்தையின் ஆடைமுனையை பற்றிக்கொண்டு அருகிருப்பதையே அவள் விழைந்தாள். அத்தை நூலாய்கையில் இசைகேட்கையில் நாற்களமாடுகையில் அவளை நோக்கியபடி அப்பால் அமர்ந்திருப்பாள்.

“என் வெண்புறாவே” என்று அத்தை அவளை அழைப்பாள். இடைபற்றி தூக்கிச் சுழற்றி இடுப்பில் வைத்துக்கொள்வாள். அத்தையின் வெண்ணிற முகத்தில் எழுந்த சிவந்த முகமுத்துக்களை அவள் சுட்டுவிரலால் தொட்டு விளையாடுவாள். அத்தை அவையமர அணிகொள்கையில் அவள் உடலில் ஒவ்வொரு அணியும் அதற்கென்றான இடத்திலெனச் சென்றமரும் விந்தையை நோக்கிக்கொண்டிருப்பாள். கழுத்திலணியும் சரப்பொளி பளிங்கில் பொன்வழிவென பதிந்தமைந்திருக்கும். கைமணிகள் வளையல்களைப்போலவே உருண்டவை. பருத்த தோள்களிலிருந்து பாலோடை என வழிந்தமைந்த கைகள் காந்தள் இதழ்களென சிவந்த சிறிய விரல்குவையில் வந்து முடியும். அத்தை மலர்தொடுக்கும்போது அவள் விரல்களும் மலர்களுடன் இணைந்துகொள்வன போலிருக்கும்.

அவள் நோக்குவதைக் கண்டு அவள்மேல் ஒரு மலரை வீசி எறிந்து “என்னடி நோக்கு?” என்று அவள் சிரிப்பாள். “நான் உங்களைப்போலவா, அத்தை?” என்று அவள் கேட்பதுண்டு. “ஆம், நீ நானேதான்” என்பாள் அத்தை. “நான் எப்போது நீங்களாக ஆவேன்?” அத்தை சிரித்து அவளை கைபற்றி அருகணைத்து செவியில் “நீ காதல்கொள்கையில்” என்றாள். அவள் குழம்பி அத்தையின் உடலை உந்தி விலகி முகம் நோக்கி “காதலென்றால் என்ன?” என்றாள். “அதை தெய்வங்கள் உனக்கு கற்பிக்கும்” என்றாள் அத்தை. அவள் “எந்த தெய்வம்?” என்றாள். “மலர்களை விரியவைக்கும் தெய்வங்கள்” என்றாள் அத்தை.

அதன்பின் அவள் மலர்களை கூர்ந்து நோக்காமல் கடந்துசென்றதில்லை. அவற்றிலமர்ந்திருக்கின்றன தெய்வங்கள். வண்ண மாறுபாடுகளின், வடிவ முடிவின்மைகளின், நறுமணங்களின் தலைவர்கள். மலர்கள் கந்தர்வர்களின் பீடங்கள். கின்னரர்களின் இசைக்கலங்கள். கிம்புருடர்களின் மாளிகைகள். வித்யாதரர்களின் ஏடுகள். மலர்களை நோக்கி கனவிலாழ்ந்து உடல்மறந்து விழிமயங்கி அவள் அமர்ந்திருப்பதுண்டு. “இப்போதே தொடங்கிவிட்டாள் கனவுகாண” என்று சேடியர் நகைப்பார்கள். ஆடிமுன் நின்று அத்தை அணிசெய்துகொள்கையில் அவள் ஆடைக்குள் உடல்மறைத்து நின்று நோக்குவது அவளுக்கு உகந்த விளையாட்டு. ஆடியில் தெரியும் அத்தையின் உருவம் தானே என எண்ணி உடல்விம்முவாள். தன்னுள் மொட்டுகளை மலர்களென்றாக்கும் ஒன்று எழுந்துவந்து நிறைந்து அதைப்போல உடல்பெருகி எழச்செய்யும் என எண்ணிக்கொள்வாள்.

காசி நாட்டு அரசர் விஜயரின் மகளாக, அரசமைந்தர் விருஷதர்பரின் இளையவளாக சியாமளை பிறந்தபோது அரண்மனையின் முகப்பிலிருந்த சுநாதம் என்னும் பெரிய மணி மும்முறை தானாகவே ஒலித்தது என்று சூதர்பாடல்கள் கூறின. தொல்குடி ஷத்ரிய மன்னர் ஒருவருக்கு அவையமர்ந்து பெரும்புகழ்கொண்ட மைந்தர்களை அவள் பெற்றெடுப்பாள் என்று நிமித்திகர் கூற்று இருந்தது. பானுமதியின் அன்னை “மூன்று கழஞ்சு பொன்னுக்கு எந்தக் கதையையும் சொல்லும் சூதர்கள் இங்கிருக்கையில் அரண்மனை முகப்பு மணியென்ன இந்திரவில்லே வந்து வானில் வளைந்து நிற்காதா?” என்று உதட்டை சுழிப்பாள். ஆனால் அவள் அத்தை சிறுசொல் செவிகொள்ளா நிமிர்வு கொண்டிருந்தாள். ஆணையிடும் விழிகளும் எங்கும் வணங்காத தலையும் நேர்நடையும் கொண்டு அரண்மனையில் நிறைந்திருந்தாள்.

ஒவ்வொரு செயலாலும் சொல்லாலும் எண்ணத்தாலும் அவள் அத்தையாகவே தன்னை ஆக்கிக்கொண்டாள். அவளுடலில் அத்தை எழுந்தோறும் அன்னை விலக்கம் கொண்டாள். “நீ அந்த ஆணவக்காரியை நடிக்கிறாய். ஆணவம் கொண்ட அனைவரையும் தெய்வங்கள் இறுதியாக ஒடித்து வீசும் என்றுணர்க! ஒருநாள் நீ சூடிக்கொண்ட இந்த நிமிர்வுக்காக துயர்படுவாய். நான் நானென தருக்கிய உனது உள்ளம் ஏன் ஏன் என விம்மி அழும்” என்று வெறுப்பில் சுளித்த முகத்துடன் அவளை நோக்கி அன்னை சொன்னாள். சீற்றத்துடன் அவளை நோக்கி நின்ற பானுமதி பின்னர் இதழ்வளைய சிரித்து “நான் அவ்வாறுதான் இருப்பேன். அதை விரும்பவும் சில தெய்வங்கள் இருக்கக்கூடும்” என்றபின் திரும்பி நடந்தாள்.

ஒருபோதும் அன்னைக்கும் அவளுக்கும் நல்லுறவு அமைந்ததில்லை. “காசி ஒன்றும் பெருநகரல்ல, உணர்ந்துகொள். இது கையளவே ஆன சிறுநாடு. இங்கு உலகாள்வோன் விரிவிழி அன்னையுடன் அமர்ந்திருப்பதனால் மட்டுமே இதை பிற ஷத்ரியர் வெல்லாமல் இருக்கிறார்கள். ஷத்ரியர்களுக்கு பெண்பெற்றுக் கொடுக்கும் சிறு ஈற்றறை இது என்று சூதர்கள் இளிவரல் உரைத்ததுண்டு. உன்னை கொள்ளவருபவன் தன் வாளால் வென்று அடைந்த பெருமை மட்டுமே உனக்குரியது. இங்கிருந்து கொண்டு சென்று நீ அங்கு நிறுத்தும் பெருமையென ஏதுமில்லை” என்று அன்னை அவளிடம் சொன்னாள்.

அப்போது அவள் கன்னியென்றாகி மணவிழைவு ஓலைகள் வரத்தொடங்கியிருந்தன. “வந்துகொண்டிருப்பவை அனைத்தும் வெவ்வேறு ஷத்ரிய அரசர்களுக்குரியவை. ஒருவருக்கு பெண் கொடுத்தால் பிறரை எதிரிகளாக்குவோம். எவரேனும் தன் தோள்வலியால் உன்னை கவர்ந்து சென்றால் அதுவே எனக்கு விடுதலை” என்று தந்தை கசப்பும் சினமும் தெரிந்த முகத்துடன் அவளை நோக்காமல் அருகிலிருந்த தூண்மேல் விழியூன்றி சொன்னார். “அவ்வாறெனில் அதுவே ஆகுக! அதற்கும் முன்மரபுகள் உண்டு” என்று அவள் சொன்னாள்.

இளையவள்களாகிய அசலையும் பலந்தரையும் தங்கள் தனியுலகில் வாழ்ந்தனர். அசலை காவியம் நவிலும் சுவைகொண்டிருந்தமையால் அவளை சம்பவரின் குருநிலைக்கு அனுப்பினார்கள். பலந்தரையே அன்னைக்கு அணுக்கமானவள். அன்னையின் மாற்றுருவாக அவள் தன்னை வடித்துக்கொண்டாள். அரசவைகளில் அன்னையுடன் சென்று அமர்ந்து முறைமையும் நெறியும் பயின்றாள். தேர்ந்து சொல்லடுக்கவும் பிறர் விழிகளுக்குள் சென்று உளம்நோக்கவும் தேர்ந்தாள். ஒவ்வொரு நிலையிலும் அவள் தன்னை வெல்ல முயன்றுகொண்டிருப்பதை பானுமதி உணர்ந்திருந்தாள். இயல்பாக பேச்சினூடாக அரசியல் சிக்கலொன்றைச் சொல்லி அவள் அதை எப்படி புரிந்துகொள்கிறாள் என்று நோக்குவாள். அவள் அதைக் குறித்து எதை சொன்னாலும் இரங்கும் புன்னகையுடன் “நன்று, நீங்கள் இன்னமும்கூட கூர்ந்து நோக்கலாம், மூத்தவளே” என்று தொடங்குவாள்.

அப்போது அன்னை அருகிலெங்கேனும் இருப்பாள். சொல்பதியா செவிகொண்டவள்போல செயல்களில் ஈடுபட்டிருப்பாள். ஒரு தருணத்தில் இளிவரல் புன்னகையுடன் திரும்பி “மலர்த்தோட்டங்களில் வாழ்வதல்ல அரசியரின் பணி. அவையே அவர்களின் இடம். அவளை உன்னருகிலேயே வைத்துக்கொண்டாயென்றால் நீ இழிவடையாமலிருப்பாய்” என்பாள். பலந்தரை “அக்கை எளிதாக கற்றுக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர், அன்னையே. அவருக்கு உளம்நிலைக்கவில்லை” என்றாள்.

அன்னை சீற்றத்துடன் “உளம்நிலைக்காதவர்களையே நான்காம்குலத்தோர் என்கிறார்கள். சொல்லில் நிலைத்தோர் அந்தணர். படைக்கலத்தில் நிலைத்தோர் ஷத்ரியர். பொன்னில் நிலைத்தவர் வைசியர் என்கின்றன நூல்கள்” என்றாள். பானுமதி புன்னகை செய்தாள். அன்னை அப்புன்னகையால் சீண்டப்பட்டு “நூல் எனும்போதே என்ன நச்சுப்புன்னகை உன் உதடுகளில்? நூல்நவில எங்களுக்கும் தெரியும். நாங்களும் அரசகுடிப் பிறந்தவர்களே” என்றாள். பானுமதி “ஆம், அதை அறிவேன்” என்றபின் எழுந்துசென்றாள்.

அத்தை நகர்நீங்கி அனுபநாட்டுக்குச் சென்றபின்னர் அவள் அரண்மனையில் தனியளானாள். உளமறிந்து சொல்லாட எவருமில்லை. முற்றிலும் அகன்று அவ்வகல்வு காட்டும் விழிகளை வெல்ல நிமிர்வு கொண்டு அங்கிருந்தாள். அசலையுடன் மட்டுமே அவள் சற்றேனும் உளமளித்து உரையாட இயன்றது. ஆனால் அவள் சொற்சுவை மட்டுமே திகழும் பிறிதொரு உலகில் இருந்தாள். சொல்லை அருமணி என திருப்பித் திருப்பி அழகறிவதன்றி எதிலும் அவள் உள்ளம் செல்லவில்லை. அடித்தட்டில் கால்தொடாது மூச்சு பதறி மூழ்குகையில் மட்டும் எட்டிப் பற்றிக்கொள்ளும் கரையோரத்து வேர் போலிருந்தாள் அசலை.

நான்காவது பேற்றில் அத்தை மறைந்த செய்தி வந்தபோது அரண்மனை அமங்கலம் கொண்டது. பதினெட்டுநாள் துயர்காத்தலும் நீத்தார் கடனளித்தலும் முடிந்து அனைவரும் நிலையமைந்த பின்னரும் அவள் மீளவில்லை. வெறித்த விழிகளும் சொல்லற்ற உதடுகளுமாக முழுத் தனிமையில் இருந்தாள். மன்றமைந்த பொழுதில் அன்னை அவளிடம் “நன்று, இனியேனும் அவளிடமிருந்து நீ விடுதலை கொள். ஒருவர் மேல் கவியும் இன்னொருவரின் அடையாளம்போல் சிறை வேறில்லை” என்றாள். அவள் அருகே அமர்ந்திருந்த பலந்தரை “அத்தையின் மைந்தர்கள் அங்கே அரசேறுவார்கள். அவர்களின் மூதன்னை நிரையில் அவர் அமைவார். அவர் இங்கு மண்நிகழ்ந்த நோக்கம் நிறைவுகொண்டது. இனி உங்களில் இருந்தும் அவர் உதிர்வதே முறை, அக்கையே” என்றாள்.

பானுமதி வெற்று விழிகளுடன் தலையசைத்து அப்பால் சென்றாள். “அவர் மீள விழையவில்லை, அன்னையே. துயரத்தின் வல்லமைகளில் ஒன்று அதற்கிருக்கும் ஈர்ப்புவிசை. தன்னை மீட்டுக்கொள்ள துயருறுவோர் விழைவதில்லை என்கின்றன நூல்கள்” என்றாள் பலந்தரை. பானுமதி தன்னை ஆடியில் நோக்கும்போதெல்லாம் அத்தையையே கண்டாள். ஒவ்வொரு முறையும் முதற்கணம் உளம் திடுக்கிட்டு பின் அதுவே தான் என உணர்ந்து அணுகினாள். மெல்ல மெல்ல அதுவே என்றானாள். அத்தையென்றும் தான் என்றும் ஒவ்வொரு தருணத்திலும் இரண்டென்றிருந்தாள்.

அப்போதுதான் இளைய யாதவர் காசிக்கு வந்தார். அவள் அவரைப்பற்றி சூதர்கதைகளில் கேட்டிருந்தாள். சூதர்கதைகள் அனைத்துமே நேற்றோ இன்றோ நாளையோ இன்றி எங்கோ இருக்கும் ஓர் உலகில் நிகழ்வன என அவள் உள்ளம் மயங்குவதுண்டு. அங்கே தெய்வங்களே இயல்பானவர்கள். உடல் களைந்து ஒளியென்றான மானுடரே அங்கு செல்லமுடியும். அசலைதான் இளைய யாதவர் வருவதை அவளிடம் சொன்னாள். அவள் “அவர் மானுடர்தானா?” என்று கேட்டாள். அசலை உள்ளக்கிளர்ச்சியுடன் “ஆம் அக்கையே, மானுடர் செல்லத்தக்க உச்சத்தை அடைந்தவர். ஆகவே தெய்வமும் ஆனவர்” என்றாள். “எங்கள் நூல்நவிலலில் ஒருநாளேனும் அவர் வந்துசெல்லாதிருந்ததில்லை. பாரதவர்ஷத்தில் வேதமோ அதன் முடிபோ உசாவும் எவரும் அவருக்கு மாணவர்களென்றானவர்களே.”

பானுமதி அவள் முகத்தில் எழுந்த ஒளியை வியப்புடன் நோக்கி “நீ அவரை நன்கறிந்திருக்கிறாய் போலும்” என்றாள். “அவரை நன்கறிந்திருக்கிறோம் என்று உணர்பவர்களே இங்கு மிகுதி. அறிந்த முதற்கணமே அவ்வெண்ணம் உருவாகிவிடும். பின்னர் அறியுந்தோறும் அவர் அகன்றகன்று செல்வார். அறியவொண்ணாதவர் என அவரை அறிந்தவர்களே அவரை அணுகியவர்கள்” என்றாள். “சொல்லடுக்க கற்றுக்கொண்டிருக்கிறாய்” என்றாள் பானுமதி சிரித்தபடி. “நூல்நவில்தலின் கொடை அது, சொல்லுரைக்க கற்போம். சொல்லவிருப்பதை வாழ்விலிருந்து கற்கவேண்டும்” என்றாள் அசலை.

“இந்திரமாயம் செய்யும் பீதர்நாட்டவன் வெறுங்கையில் விரித்துக்காட்டும் வண்ணப்பட்டோவியம்போல அவர் தென்மேற்குக் கடலோரம் ஒரு நகரை உருவாக்கியிருக்கிறார் என்கிறார்கள். அதற்கு கங்கைநீர் கொண்டுசெல்லவே வருகிறார்” என்று அசலை சொன்னாள். “இப்புவியில் நான் பிறிதெவரையும் கற்று அணுக விழையவில்லை, அக்கையே. சாந்தீபனி குருநிலையின் முதன்மையாசிரியர் இன்று அவரே.” பானுமதி “தத்துவம் பயின்றவரா?” என்றாள்.

“அக்கையே, அவர் அடைந்தது பயிற்சியல்ல, யோகம். பயில்வது எதுவும் நம்மை ஒரு பகுதியில் வளர்ந்தோங்கச் செய்கிறது. ஆகவே நம் நிகரமைவை இழக்கிறோம். கலையோ இசையோ நூலோ படைக்கலமோ எதை கற்றவராயினும் நிலையழிந்தவராகவே இருப்பது அதனால்தான். ஒன்று பிறிதொன்றால் முற்றிலும் நிகர்செய்யப்படுவதே யோகம். ஒன்றில் விடுபடுவதை பிறிதொன்றால் முழுமையாக நிரப்பிக்கொள்ளும் தவம் அது. தத்துவம் அளிக்கும் சொற்பெருக்கை குழலிசையால் முழுமையாக்கிக் கொண்டவர். படையாழியின் கூரொளியை குழல்சூடிய நீலப்பீலியால் நிகர்செய்தவர். அரசமைந்தவர் எனினும் முதிராச் சிறுவனென்றானவர். ஆழத்துச் சங்கும் முளைத்து மேலெழும் தாமரையும் ஆனது அவர் அகம். முழுமைகொண்ட யோகத்தில் அமைந்தமையால் யோகேஸ்வரர் எனப்படுகிறார்.” ஏதோ ஒரு கணத்தில் நெஞ்சு விம்ம பானுமதி விழிநனைந்தாள்.

எழுந்து குழலைச் சுருட்டி கொண்டையாகக் கட்டியபடி சிறுவாயிலைத் திறந்து அப்பாலிருந்த மஞ்சத்தறைக்குச் சென்று தன் அரையிலிருந்த சிறுதாழ் எடுத்து மஞ்சத்தின் அடியிலிருந்து இழுத்தெடுத்த ஆமாடப்பெட்டியை திறந்தாள். அதனுள் அவளுக்கு தந்தை அளித்த காசிநாட்டுச் செம்பட்டும் உலகுபுரப்போன் அகல்விழியுடன் அமர்ந்த சிறுசெம்புச் சிலையும் சந்தனத்தில் செதுக்கப்பட்ட காசிநாட்டு குடிமுத்திரையும் இருந்தன. அவள் ஆடைகளை விலக்கி உள்ளிருந்து சிறிய தந்தப் பேழையை எடுத்தாள். சிறுதுளைகளாலான மூடிகொண்ட அப்பேழைக்குள் வெண்பட்டுப்பரப்பில் பதிந்ததுபோல் இருந்த பீலியை எடுத்து நோக்கினாள்.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 42

பகுதி ஆறு : பொற்பன்றி – 7

bl-e1513402911361துச்சளை அணிகொண்டு இடைநாழிக்கு வந்தபோது தாரையும் அசலையும் அவளுக்காகக் காத்து நின்றிருந்தனர். தாரை அவளை அணுகி வணங்கி “சற்று முன்னர்தான் தாங்கள் கிளம்பிச்செல்லும் செய்தியை அறிந்தேன், அரசி. பட்டத்தரசிக்கு அறிவித்துவிட்டு ஓடிவந்தேன்” என்றாள். துச்சளை “நான் விதுரருக்கும் அன்னைக்கும் அறிவித்துவிட்டேன். பிறருக்கு முறைப்படி தெரிவிக்கப்படட்டும்” என்றாள். தாரை “சைந்தவர் இங்கிருக்கிறார். உடனிருப்பீர்கள் என்று எண்ணினேன்” என்றாள். “ஆம், அதன்பொருட்டே வந்தேன். இனி என்னால் இங்கிருக்க இயலாது. இருந்து ஆவதும் ஒன்றுமில்லை” என்றாள்.

அசலை ஒன்றும் சொல்லாமல் நின்றிருந்தாள். துச்சளை அவள் கைகளைத் தொட்டு புன்னகை செய்தாள். தாரை விசும்பும் ஒலி கேட்டு துச்சளை திரும்பி நோக்கினாள். அவள் கண்ணீர் வழிய முகம் குனித்திருப்பதைக் கண்டும் ஒன்றும் சொல்லவில்லை. அவளுடைய அணுக்கச்சேடி சாரிகை அருகே வந்து “தேர்கள் ஒருங்கிவிட்டன, அரசி. அகம்படியர் நிரைகொண்டுவிட்டனர்” என்றாள். துச்சளை “நான் கிளம்புவதற்கான ஆணையை விதுரர் அளித்துள்ளாரா?” என்றாள். சாரிகை தயங்கி “அதை நான் அறியேன்… சூர்யை அறிந்திருக்கக் கூடும்” என்றாள். “எவ்வண்ணமாயினும் நாம் கிளம்புவோம். அரச ஒப்புதல் இல்லையேல் கோட்டைவாயிலை அடைவதற்குள் நமக்கு சொல்லப்படவேண்டும்” என்றபின் மீண்டும் அசலையின் தோளைத் தொட்டபின் நடந்தாள்.

தாரையும் அசலையும் அவளுக்குப் பின்னால் ஒன்றும் சொல்லாமல் நடந்தனர். ஈரம் நிறைந்த காற்று வந்து சாளரக்கதவுகளை அறைந்து சுழன்றது. குளிரில் உடல் மெய்ப்புகொள்ள தாரை தோள்களை ஒடுக்கி கைகளை மார்பின்மேல் கட்டிக்கொண்டாள். படிகளில் மெல்ல காலெடுத்து வைத்து இறங்கி முகப்புக்கூடத்திற்கு வந்த துச்சளை நின்று இளைப்பாறி மேலே நோக்கினாள். அங்கே விழியறியா எவரோ நிற்பதைப்போல முகம் சுருங்கி உயிர்த்தபின் செல்லலாம் என சாரிகையிடம் கைகாட்டிவிட்டு முற்றம் நோக்கி சென்றாள். அங்கே காவல்நின்ற வீரர்கள் தலைவணங்கினர்.

முற்றத்தில் இளஞ்சாரல் திரைபோல காற்றிலாடியபடி நின்றிருந்தது. நனைந்து ஒளிகொண்டிருந்த மென்மயிர் உடல்களுடன் கரிய புரவிகள் தேர்நுகத்தில் நின்றிருந்தன. வெள்விழி கொண்டிருந்த வலக்குதிரை அவள் அணுகுவதை கண்ணுருட்டி நோக்கி பெருமூச்சுவிட்டு முன்கால் வைத்து தேரை மெல்ல அசைத்தது. தேர்த்தட்டிலிருந்த பாகன் அதன் முதுகில் கோலை வைத்து வருடி ஆறுதல்படுத்தினான். இடக்குதிரை பிடரியும் புட்டமும் சிலிர்க்க வால்சுழற்றியது. மழைத்திரைக்கு அப்பால் தோல்கவசமும் வேல்முனைகளும் நனைந்து மின்ன புரவிகளில் அமர்ந்தபடி அகம்படிப்படைவீரர் மூன்று நிரைகளாக அணிகொண்டிருந்தனர். அவர்களின் தலைவன் சிந்துநாட்டின் கரடிக்கொடியுடன் நின்றிருந்தான். அவனுக்குப் பின்னால் இரு அறிவிப்பாளர்கள் கொம்பும் எரியம்பு செலுத்தும் வில்லுமாக நின்றனர்.

பின்காலை ஆகியும் வெயிலெழவில்லை. நீர்த்தாரைகளினூடாக வானிலிருந்து வழிந்திறங்கிய ஊமைவெளிச்சம் நகர்மேல் படிந்திருந்தது. நனைந்த அரண்மனைக்கோட்டை கருமைகொண்டிருந்தது. காவல்மாடங்களின் குவைமுகடுகளும் கரிபடிந்திருந்தன. தேரின் பித்தளைமுகடு மட்டும் வானின் ஒளியில் மின்னியது. சூர்யை அருகணைந்து “அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்துவிட்டேன், அரசி” என்றாள். துச்சளை தலையசைத்தாள். தலைமைக்காவலன் அவளுடைய ஆணைக்காக காத்திருந்தான். அவள் மீண்டும் அசலையையும் தாரையையும் நோக்கி “சென்றுவருகிறேனடி… ஊழை தெய்வங்களே ஆள்கின்றன என்று மட்டும் நம்புக! நாம் செய்வதற்கு பிறிதொன்றுமில்லை” என்றாள்.

அசலைக்குப் பின்னால் பாதியுடல் மறைய நின்றிருந்த தாரை தலைகுனிந்து அழுதுகொண்டிருந்தாள். அவள் தலைமேல் கைவைத்து மெல்ல அழுத்தி புன்னகைத்த பின் துச்சளை தேர் கிளம்பலாம் என தலைமைவீரனுக்கு கைகாட்டினாள். அவன் கைதூக்க கொம்பூதி மும்முறை பிளிறலோசை எழுப்பினான். அகம்படிக் குதிரைகளில் சில காலெடுத்துவைத்து அசைவெழுப்பின. அவன் உரத்த குரலில் “அஸ்தினபுரியின் இளவரசி, காந்தாரக்குடித்தோன்றல், சைந்தவி, துச்சளை எழுந்தருள்கை!” என அறிவித்தான். துச்சளை மேலும் சில கணங்கள் தயங்கினாள். அவள் விழியோட்டுவதைக் கண்ட அசலை “என்ன தேடுகிறீர்கள், அரசி?” என்றாள். இல்லை என அவள் தலையாட்டினாள். பானுமதியின் அணுக்கச்சேடி சத்யை அப்பால் விரைந்து அணுகுவதைக் கண்டதும்தான் துச்சளை அவளுக்காகவே காத்திருக்கிறாள் என்று உணர்ந்தாள். சத்யை அருகணைந்து தலைவணங்கி மூச்சிரைக்க “அரசியின் செய்தியுடன் வந்தேன், அரசி” என்றாள். “சொல்க!” என்றாள் துச்சளை.

“விரைவில் அஸ்தினபுரியின் இளவரசர்களுக்கான மணநிகழ்வு இங்கு ஒருங்கும். அனைத்தும் இன்னும் இரு நாட்களில் முடிவுசெய்யப்படும். அப்போது மைந்தரின் அத்தை உடனிருக்கவேண்டும் என்பது முறைமை என்றார்கள், அரசி” என்றாள் சத்யை. மேலும் சொல்லப்படுவதற்காக விழியிமைக்காமல் துச்சளை காத்திருந்தாள். “ஆனால் அவை வாள்மாலை சடங்காக நிகழுமென்றால் அத்தையின் வாழ்த்து வாளினூடாகவே அளிக்கப்படலாம் என்றார்” என்றாள் சத்யை. துச்சளை பெருமூச்சுவிட்டு “நன்று, நான் அரசியை வணங்கி விடைகொண்டேன் என்று அவர்களிடம் சொல்க! என் கைகள் இங்கு தேவையாக இருக்கும்போது வருவேன் என்று கூறுக!” என்றபின் அசலையையும் தாரையையும் நோக்காமல் தேர்நோக்கி சென்றாள்.

சூதன் படிப்பலகையை வைக்க சாரிகையையும் சூர்யையையும் இரு கைகளாலும் பற்றிக்கொண்டு மெல்ல ஏறி அவர்களின் தோள்களிலிருந்து கைதூக்கி தேரின் தூணை பற்றிக்கொண்டு உடலை உந்தி மேலெழுந்து உள்ளே சென்று பீடத்தில் அமர்ந்தாள். அதற்குள் அவள் உடல் சற்று நனைந்துவிட்டிருந்தது. அந்தச் சிறுமுயற்சியிலேயே அவளுக்கு மூச்சிரைத்தது. சூர்யையும் சாரிகையும் உடன் ஏறிக்கொள்ள பாகன் தேர்ப்புரவிகளைத் தட்டி சகடம் கிளம்பச்செய்தான். கொடிவீரனும் அறிவிப்பாளர்களும் முதலில் செல்ல பன்னிரு புரவிவீரர் தொடர்ந்து சென்றனர். அதன்பின் அவளுடைய தேர் சென்றது. தொடர்ந்து பிற அகம்படிப்புரவியர் சென்றனர்.

காவலரணைக் கடந்து செல்லும்போதுதான் அவள் கோட்டைமேல் படிந்திருந்த கரிய படலத்தை கண்டாள். “என்னடி அது?” என்றாள். சாரிகை “அரசி, இரண்டுநாட்களுக்குள் நகரெங்கும் இந்தக் கரும்பாசிப்பரப்பு படர்ந்துவிட்டது. இது முன்னரும் இங்கிருந்திருக்கிறது என்கிறார்கள். இதன் விதை இந்த மண்ணில் மறைந்துள்ளது, இந்த மழை அதை முளைக்கச் செய்துவிட்டது என்று விறலி சொன்னாள்” என்றாள். “இதன் பெயர் மகாகலியம் என்று ஒரு முதுசெவிலி சொன்னாள்” என்றாள் சூர்யை.

துச்சளை பதற்றத்துடன் திரைவிலக்கி நகரை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். “அத்தனை சுவர்களிலும் படர்ந்திருக்கிறது…” என்றாள். “ஆம் அரசி, அந்தி கவிழ்வதுபோல வந்தமைந்துவிட்டது என்கிறார்கள்” என்றாள் சூர்யை. சாரிகை “நகரெங்கும் எலிகள் பெருகிவிட்டிருக்கின்றன. எங்கிருந்து கிளம்பிவந்தன என்று தெரியவில்லை. மண்ணுக்கு அடியிலிருந்து கரிய நீரூற்றுக்கள்போல வந்துகொண்டே இருக்கின்றன. இல்லங்களில் சுவர்களின் ஓரமாக கட்டெறும்பு நிரைகள்போல செல்கின்றன என்கிறார்கள்” என்றாள். சூர்யை “அவற்றைப் பிடிக்க நாகங்கள் வந்து சேர்கின்றன. அரண்மனையின் கீழ்த்தளம் முழுக்க நாகங்கள் என்றனர் சேடியர். நேற்று அடுகலங்களின் அறையைத் திறந்தபோது வைக்கோல்சுருட்கள் போல நாகக்குழவிகளை கோலால் அள்ளி அள்ளி வெளியே போட்டார்கள்” என்றாள்.

துச்சளை சாலையை நோக்கிக்கொண்டே வந்தாள். அத்தனை சுவர் விளிம்புகளிலும் கரிய கோடென நனைந்த காகங்கள் செறிந்து அமர்ந்திருந்தன. மரக்கிளைகள் காகங்களால் கருமைகொண்டிருந்தன. “அதோ…” என்றாள் சாரிகை. சாலையோரத்தில் இரு நாகங்கள் வால்சொடுக்கி சிறு சுவரிடுக்கு ஒன்றுக்குள் நுழைந்தன. “ஆனால் எவரும் அஞ்சுவதுபோல் தெரியவில்லை” என்றாள் துச்சளை. “ஆம் அரசி, நகர்மக்கள் நாகங்களை கொண்டாடுகிறார்கள். இந்திரவிழா எழுந்ததுபோல் அனைவரும் களிவெறி கொண்டிருக்கிறார்கள்” என்றாள் சாரிகை.

துச்சளை சாலைகளில் சென்றவர்களை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். மழையில் நனைந்த ஆடைகள் உடலோடு ஒட்டியிருக்க தலைமயிரிலும் மீசையிலும் தாடியிலும் நீர்த்துளிகள் மின்ன அவர்கள் உள்ளிருந்து எழுந்த உவகையில் சிரித்துக்கொண்டிருந்தனர். நடைகளில் துள்ளலும் கைவீச்சுகளில் விசையும் தெரிந்தது. பெண்டிரும் சிறியோரும் களிகொண்டு உரக்க கையசைத்துப் பேசினர். ஒருவரை ஒருவர் நோக்கி கூச்சலிட்டனர். நகரின் நடுவே அவர்களின் தேர் சென்றதை எவரும் ஒரு பொருட்டென கருதவில்லை. நடைததும்ப தெருவின்மேல் எழுந்து வழிமறித்தவர்களை முன்னால் சென்ற வீரர்கள் அதட்டியும் வேலால் உந்தியும் விலக்கினார்கள். “நாகங்களைக் கண்டு விழிபழகியபின் அவை மட்டுமே தெரிகின்றன. அத்தனை இடுக்குகளிலும் நிழல்களே நாகங்களாகிவிட்டிருக்கின்றன” என்றாள் சாரிகை. “நம் சித்தம்தான் மயங்கிவிட்டதா? இவை நம் உளமயக்குகளா?” என்றாள் சூர்யை.

துச்சளை அதை ஒரு கொடுங்கனவென்றே உணர்ந்தாள். மேற்குக்காட்டிலிருந்து கிளம்பி திரும்பி வரும்போதே அவள் கால்தளர்ந்து மயங்கி விழுந்தாள். கரிய நதிப்பெருக்கு ஒன்றில் மிதந்துசெல்வதாக கனவுகண்டாள். வழுப்புடல் கொண்ட மீன்களும் நெளியும் தேரட்டைகளும் உடலை தொட்டுச்சென்றன. குமிழிகளெல்லாம் புழுக்கள் என்று உணர்ந்தாள். பெரிய குமிழிகள் எருமை விழிகள், கழுதைகளின் விழிகள், பன்றிகளின் விழிகள். செவ்வொளி கொண்டிருந்தன. அது கெட்டு நிறம் மாறிய குருதியின் பெருக்கு. இழிமணம் கொண்ட சீழ். துயிலிலேயே உடல் உலுக்க வாயுமிழ்ந்தாள். மீண்டும் மீண்டும் கழுத்திறுகிய விலங்கென ஒலியெழ குமட்டிக்கொண்டிருந்தாள்.

தன் அறையில் மஞ்சத்தில் விழிப்புகொண்டபோது மூச்சுத்திணற நதியின் அடிச்சேற்றில் காலுதைத்து குளிர்ந்த நீர்ப்பரப்பை பிளந்து எழுவதுபோல் உணர்ந்தாள். உடல் நனைந்து ஆடைகள் ஒட்டியிருந்தன. இடமுணர்ந்ததும் “விடாய்! விடாய்!” என்றாள். சாரிகை கொண்டுவந்த குளிர்நீரை நான்குமிடறு உண்டதும் குமட்டி ஓசையுடன் வாயுமிழ்ந்தாள். உடல் நடுங்க கண்களில் நீர் வழிய மீண்டும் மஞ்சத்தில் படுத்திருந்தாள். அன்று முழுக்க காயும் உடலுடன் கனவிலும் நனவிலுமாக ஊசலாடிய சித்தத்துடன் மஞ்சத்தில் கிடந்தாள். முழு விழிப்பு எழுந்ததுமே கையூன்றி எழுந்தமர்ந்து “சாரிகை! சாரிகை!” என்றாள். ஓடிவந்த சாரிகையிடம் “நாம் கிளம்புகிறோம்!” என்றாள். “அரசி!” என அவள் வியக்க “இப்போதே, உடனே” என்றாள் துச்சளை.

கோட்டைமுகப்பை தேர்கள் சென்றடைந்தபோது அங்கே மனோதரர் புரவியில் அவர்களுக்காகக் காத்து நின்றிருந்தார். நனைந்த மண்ணில் புரவிக்குளம்புகள் எழுத்தாணி பொறிக்கும் எழுத்துக்கள் என பதிய ஓசையிலாது அருகணைந்து தலைவணங்கி “தங்களுக்கு விதுரரின் செய்தி உள்ளது, அரசி” என்றாள். “சொல்க!” என அவள் உணர்ச்சியேதுமின்றி சொன்னாள். “தாங்கள் நகர்நீங்குவதை அமைச்சர் விதுரர் ஏற்கிறார். சிந்துவில் நலமுடனிருக்கும்படி வாழ்த்துகிறார். தங்களுடன் வந்து கங்கையில் படகிலேற்றி அனுப்பும்படி எனக்கு ஆணை” என்றார் மனோதரர். துச்சளை “நன்று, தங்கள் துணை எனக்கு உதவும்” என முகமன் உரைத்தாள்.

மனோதரர் தலைவணங்கி விலக பின்னிருந்து துச்சளை “மானு, என்ன நிகழ்கிறது இங்கே?” என்றாள். அவர் ஒருகணம் நின்றபின் அவள் முகத்தை ஏறிட்டு நோக்கி “இது முன்பும் இங்கு நிகழ்ந்துள்ளது அரசி, இம்முறை இது நீங்கா கொடுநோய் எனத் தோன்றுகிறது” என்றார். “நகரை நஞ்சு மூடியிருக்கிறது” என்றாள் துச்சளை. “ஆம், இங்கு என்றுமிருந்ததுதான் அது. இன்னும் சில நாட்களில் இங்கு எவரும் எஞ்சப்போவதில்லை” என்றார் மனோதரர். துச்சளை பெருமூச்சுவிட்டு நிலத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். ஈரமண்ணிலிருந்த வளைந்த கோடுகள் நாகம் வழிந்துசென்ற தடங்கள் என உணர்ந்ததும் அவள் உடல் மெய்ப்புகொண்டது. அதை உணர்ந்த மனோதரர் “அவை இந்நகரை எடுத்துக்கொண்டுவிட்டன, அரசி” என்றாள்.

“விதுரர் எங்கே?” என்று துச்சளை கேட்டாள். “இந்நகரின் முதிய வைதிகரான தீப்தர் நேற்றுமுன்னாள் மறைந்தார். அவருடைய இல்லத்திற்கு அரசமுறைமையாக பட்டும் வரிசையும் கொண்டுசென்றிருக்கிறார்” என்றார் மனோதரர். “கர்க்க முனிவரின் குருமரபில் வந்தவர் தீப்தர் என்று அறிந்திருப்பீர்கள், அரசி. முன்பொருமுறை இந்நகர் காகவஞ்சத்தால் சூழப்பட்டபோது இமயமலையில் இருக்கும் காகதீர்த்தத்தில் இருந்து நீர் கொண்டுவந்து அரசரை நீராட்டி இதை விடுவித்தவர் அவர். அன்றுமுதல் இந்நகரில்தான் தங்கியிருந்தார். அவருக்கு வைதிகர் அவையில் முதன்மையிடம் இருந்தது.”

துச்சளை உளநடுக்குடன் “அவர் எப்போது மறைந்தார்?” என்றாள். “அரசர் கலிச்சுனை ஆடிய அதே பொழுதில்… அவர் இல்லத்தை காகங்கள் சூழ்ந்துகொண்டு பெருங்குரலெழுப்பின. ஓசைகேட்டு அவர் மைந்தர் எழுந்துவந்து நோக்கியபோது இல்லம் கரும்புகை என காகங்களால் மூடப்பட்டிருந்தது. முனகலோசை கேட்டு அவர் சென்று நோக்கியபோது தீப்தர் உயிர்துறந்திருந்தார்.” துச்சளை பெருமூச்சுடன் செல்வோம் என கைகாட்டினாள். மனோதரர் தலைவணங்கி கைகாட்ட தேர் முனகலோசையுடன் கிளம்பியது.

தேர் செல்லத் தொடங்கியதும் துச்சளை “கர்க்கரின் கதை என்னடி?” என்றாள். சூர்யை அக்கதையை சொல்லத் தொடங்கினாள். “கலாவதி கேட்ட அச்சொல் மறைந்த ஆசுரமொழிகளில் ஒன்றில் அமைந்தது. அதை சொல்லித்திரிவன இக்கரிய பறவைகள் என்பதனால் அவை அப்பெயரையே சூடிக்கொண்டன” என்றாள். சாரிகை “தாசார்கனின் ஒவ்வொரு கசப்பும் காழ்ப்பும் வஞ்சமும் தனிமையும் வெறுமையும் காகங்களாக எழுந்து விண்ணில் நிறைந்தன என்கிறது பராசரரின் புராணமாலிகை. அவை மானுடரை ஐயத்துடன், நட்புடன் எப்போதும் நோக்கிக்கொண்டிருக்கின்றன” என்றாள்.

துச்சளை “அது எவ்வண்ணம் கலியின் கொடியென்றாகியது?” என்றாள். சாரிகை சூர்யையை நோக்கிவிட்டு “அறியோம்” என்றாள். சில கணங்களுக்குப்பின் துச்சளை “அறியமுடியாமை ஒன்றால்தான் அவ்வண்ணம் அமையமுடியும்” என்றாள். எழுந்து அமைந்த காகம் ஒன்று “ஏன்?” என வினவியது. அவள் அதை நோக்கிவிட்டு விழிவிலக்கிக்கொண்டாள்.

bl-e1513402911361கலிவனத்தின் தலைமைநரியான அகாபிலன் மூன்று நாட்களாக காட்டுக்குள் குவிக்கப்பட்டிருந்த பலிவிலங்குகளின் ஊனை இளையோரான கிகிகன், லோமசன், கிருங்கன், சிருகாலிகன் ஆகியோருடன் இணைந்து தின்றுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்து அக்காட்டிலிருந்த அத்தனை நரிகளும் ஓநாய்களும் கழுதைப்புலிகளும் செந்நாய்களும் கழுகுகளும் கூடி ஊனுண்டன. அவையனைத்துக்கும் பல நாட்கள் உண்பதற்கான ஊனிருந்தமையால் பூசல்கள் குறைவாகவே நிகழ்ந்தன. அவை கூடியுண்ணும் ஒலி காட்டின் உறுமலென இரவும் பகலும் ஒலித்துக்கொண்டிருந்தது.

தொடக்கத்தில் காட்டுக்குள் இருந்து மெல்லிய காலடிகளும் ஒளிரும் விழிகளுமாக வந்த புலிகளும் புதர்களுக்குள் வாலசைவாகத் தோன்றி முழவோசையுடன் தலைதூக்கிய சிறுத்தைகளும் தங்களுக்கு உகந்த விலங்குகளைக் கவ்வி இழுத்துக்கொண்டு புதர்களுக்குள் சென்று மறைந்தன. அவை செல்வதற்காகக் காத்திருந்த கழுதைப்புலிகள் எக்காளமிட்டன. மரக்கிளைகளிலும் புதர்களின் மேலும் அமர்ந்திருந்த கழுகுகள் புதைந்திருந்த வெண்தலை நாகமென மேலெழ சிறகடித்து எழுந்து சுழன்றன. அகாபிலன் “என் குடியினரே, பிரிந்துசெல்லாதீர். ஒன்றாக இணைந்து ஒற்றை ஊன்குவையை அணுகுக! பிறரை அருகணைய விடாதீர்கள்” என்றான். அவன் இளையவனாகிய கிகிகன் “இந்த எருமை சுவையானது” என்றான். “ஆம், சில நாட்களில் சற்றே அழுகி மென்மையாகும். அப்போது மேலும் இனியது” என்றான் அகாபிலன்.

அவர்கள் உறுமியபடி கால்களை விரித்து ஊன்றி ஊனைக் கடித்து இழுத்து உண்டனர். நீண்ட குடல்களைக் கவ்வியபடி ஓடிய கிருங்கன் “இத்தனை நீளம்… இது முழுமையும் எனக்கு!” என மகிழ்ந்து வால்சுழற்றி குதித்தான். “ஊன்மலை! ஊன்மலை!” என தன்னைத்தானே சுற்றிவந்தபின் பெரிய துண்டுகளாக கவ்வி உண்ட லோமசன் தொண்டையில் ஊன் சிக்க விக்கலோசை எழுப்பி கக்கி மீண்டும் உண்டான். கிகிகன் இரு முன்னங்கால்களாலும் தொடை ஒன்றைப் பற்றியபடி நெஞ்சு மண்ணில் பதிய படுத்து கண்களை மூடியபடி மென்று விழுங்கிக்கொண்டிருந்தான்.

உண்டு நிறைந்ததும் அவர்கள் சற்றே விலகி அமர்ந்தனர். உண்டவற்றை கக்கி சிறிதாக அள்ளி மீண்டும் மென்று விழுங்கினர். அப்படியே விழிசொக்க விழுந்து கால்பரப்பி துயின்றனர். அவர்களின் கண்ணிமைகளும் காதுகளும் அசைந்துகொண்டிருந்தன. அவ்வப்போது வால் சுழன்றமைந்தது. ஏதோ அகவிளி பெற்ற லோமசன் எழுந்து அமர்ந்து முகத்தை வானோக்கித் தூக்கி உரக்க கூவினான். மேலும் இரு நரிகள் எழுந்து ஊளையிட்டன. படுத்திருந்தவை தலைதூக்காமலேயே ஊளையிட்டு மெல்ல ஓய்ந்து வாய் சப்பிக்கொண்டு மீண்டும் துயின்றன. கனவில் மேலும் பெரிய ஊன்மலைகளைக் கண்டு வாய் விளிம்பு ஊறி வழிய விழித்தெழுந்து உடலில் மொய்த்த ஈக்களை கடித்துத் துரத்தின. சற்றே வயிறு ஓய்ந்ததும் மெல்ல எழுந்து தவழ்ந்து சென்று மீண்டும் ஊன்குவையில் ஏறி உண்ணத் தொடங்கின.

சிருகாலிகன் மிக இளையோன். ஊனைவிட குருதிகலந்த சுனைநீரை நக்கி உண்பதில் அவன் ஆர்வம் கொண்டிருந்தான். அவனை நோக்கி அகாபிலன் “மூடா, அங்கே என்ன செய்கிறாய்? உன் வயிறு நிறைந்தால் ஊனை எப்படி உண்பாய்?” என்றான். சிருகாலிகன் துள்ளிக் குதித்து வாலைச் சுழற்றி “சுவையானது!” என்றான். “மூடன், அவனை இழுத்து வாருங்கள்” என்றான் அகாபிலன். இரு நரிகள் சென்று அவனை கவ்வி தூக்கி இழுத்து வந்தன. “உண்க, நீ வளர்வாய்!” என்று மூத்தவன் இளையவனை வாழ்த்தினான். “நான் குருதியை அருந்துவேன்” என்றான் சிருகாலிகன். “அறிவிலி, அது குருதி அல்ல, வெறும்நீர்” என்றான் அகாபிலன். “இதோ, இந்தக் கரிய பசையே குருதி. ஆற்றல் அளிக்கும் அமுது. இதை உண்க!” சிருகாலிகன் மூத்தவன் அளித்த குருதிக்குழம்பை நக்கி உண்டான். அவர்கள் மீண்டும் உண்ணத் தொடங்கியபோது திரும்பி சேற்றிலிறங்கி சுனைநீரை குடிக்கலானான்.

அவர்கள் உண்ண உண்ண ஊன் மிகுந்துகொண்டே இருப்பதுபோலிருந்தது. எரி என கொள்ளும்தோறும் விழைவுகொண்டது வயிறு. வானிலிருந்து மேலும் மேலும் கழுகுகள் வந்திறங்கின. புதிய செந்நாய்க்கூட்டங்கள் பசியோலத்துடன் வந்து ஊன்மேல் பாய்ந்தன. மெல்ல ஊன்குவை மறைந்தது. வெண்ணிற எலும்புகளும் மட்கிய தோல்களும் வால்மயிர்களுமாக அப்பகுதி எஞ்சியது. எலும்புகளை நாவால் நக்கியும் கடித்து உடைத்து மென்றும் கழுதைப்புலிகள் அங்கேயே கிடந்தன. அகாபிலன் “நாம் உண்பதற்கு இனி இங்கே ஏதுமில்லை. வருக!” என்றான்.

அவர்கள் அவனைத் தொடர்ந்து சென்றனர். செல்லும் வழியெங்கும் மோப்பம் பிடித்தபடியே நடந்த அகாபிலன் “அயலார்… கெடுமணம் கொண்டவர்கள்” என்றான். சர்ப்பன் என்னும் நரி “இங்கு எரியூட்டப்பட்டுள்ளது” என்றான். “நோக்குக, சாம்பலுக்குள் அனல் இருக்கலாம்” என்றான் அகாபிலன். அவன் தயங்கி முகர்ந்து “இல்லை முற்றணைந்துவிட்டது” என்றான். சிருகாலிகன் ஊளையிட்டபடி ஓடி வந்து வால்சுழற்றியபடி தன்னைத்தானே சுற்றினான். “என்ன அது?” என்றான் அகாபிலன். “அது மயிர்… அறிவிலி… துப்பு அதை…” சிருகாலிகன் அவனைத் தவிர்த்து அப்பால் ஓடி வாயில் முடியுடன் நின்றான். “அதை உண்ணமுடியாது, மூடா” என்றான் அகாபிலன்.

கிருங்கன் கலியின் ஆலய முகப்பில் சென்று நின்று “காகத்தின் இறகு. மட்கிவிட்டிருக்கிறது” என்றான். கிகிகன் அங்கே இருந்த நெய்விளக்குகளில் எஞ்சியிருந்த துளிகளை நக்கி பெருமூச்சுவிட்டான். அணைந்த பந்தங்களுக்குக் கீழே சொட்டியிருந்த மீன்நெய்யை லோமசன் முகர்ந்து நக்கிப்பார்த்தான். தன்னை எவரும் நோக்கவில்லை என உணர்ந்ததும் சிருகாலிகன் அருகணைந்து “உண்பதற்குரியதா?” என்றான். கிருங்கன் “நெய்…” என்றான். சிருகாலிகன் அதை நக்கி உண்ண “அவனைத் தடு… மண்ணை உண்ணப்போகிறான்” என்றான் அகாபிலன். லோமசன் “துப்பு” என்றான். சிருகாலிகன் துப்பிவிட்டு “இங்கே ஊன் மணம் வீசுகிறது” என்றான்.

கிருங்கன் ஓசைகேட்டு திரும்பி நோக்க இரு கழுதைப்புலிகள் சுனைக்குள் இருந்து அழுகிய எருமைத்தலை ஒன்றைக் கவ்வி இழுத்து சேற்றினூடாக மேலே கொண்டுசெல்வதை கண்டான். அகாபிலன் “அவர்களுடன் நாம் பூசலிட முடியாது. மேலும் நீருக்குள் அழுகியதை நாம் உண்பதில்லை” என்றான். சிருகாலிகன் “ஆகவேதான் அந்நீர் சுவையுடன் இருந்தது” என்றான். சிறிய பறவைகள் மரக்கிளைகளிலிருந்து இறங்கி ஊன்கிடந்த மண்ணைக் கிளறியும் கொத்தியும் உண்ணத் தொடங்கின. பெரிய பறவைகள் சிறகடித்ததும் அவை ஒரே அலையென எழுந்து காற்றில் சுழன்று மீண்டும் அமைந்தன.

சிருகாலிகன் “நான் சென்று அவற்றுடன் விளையாட விரும்புகிறேன், மூத்தவரே” என ஆர்வத்துடன் சொன்னான். “அவற்றை நம்மால் பிடிக்க முடியாது” என்றான் அகாபிலன். “ஆம், ஆனால் நாம் அவற்றுடன் விளையாடலாம்” என்றான் சிருகாலிகன். இரு கழுதைப்புலிகள் சுனைக்குள் இறங்கி மேலும் ஒரு எருமைத்தலையை கவ்வி கொண்டுசென்றன. கரையில் நின்றிருந்தவை இளித்தபடி குரலெழுப்பின. “அவற்றுக்கு ஒன்றும் ஆவதில்லை. அவற்றின் வயிற்றுக்குள் காட்டெரியை ஆளும் அனலை குடிகொள்கிறாள்” என்றான் லோமசன்.

எரிச்சலுடன் தன் உடலில் மொய்த்த ஈக்களை விரட்டியபின் “நம் இடத்துக்கு ஏன் இந்த மானுடர் வருகிறார்கள்?” என்றான் கிருங்கன். “அவர்கள் வந்தமையால் அல்லவா இந்த உணவு?” என்றான் லோமசன். அகாபிலன் “நாம் எவரையும் நம்பி இல்லை. நமக்கு இங்கு ஒருபோதும் உணவு குறைந்ததில்லை” என்றான். சிருகாலிகன் மெல்ல அருகணைந்து சிறுபறவைகளை வால்சுழற்றி துள்ளி பிடிக்கமுயல அவை எழுந்து பறந்தன. சிறிய உவகை ஓசை எழுப்பியபடி சிருகாலிகன் துள்ளித்துள்ளிச் சுழன்றான். மகிழ்ச்சியுடன் அவனை நோக்கிய அகாபிலன் “அழகன். நம் அன்னை அவனில் மகிழ்ந்திருந்தாள்” என்றான்.

நெய்யை முகர்ந்துகொண்டிருந்த லோமசன் “அன்னை இப்போது எங்கிருப்பாள்?” என்றான். “வேறெங்கோ அதே பெயரில் அதே வடிவில் இருப்பாள்” என்றான் அகாபிலன். “நாம் இறந்து மீண்டும் அவ்வண்ணமே பிறக்கிறோம். இதோ, இந்தப் பறவைகள், கழுதைப்புலிகள், செந்நாய்கள், கழுகுகள் அனைத்தும் அவ்வடிவில் அப்பெயரில் மீண்டும் நிகழ்கின்றன. உதிர்ந்த இலைகள் மீண்டு வருகின்றன. அலைகள் சென்று மடிந்தெழுகின்றன.” லோமசன் செவிகளை சொடுக்கியபடி கூர்ந்து நோக்கிவிட்டு திரும்பி கிருங்கனை நோக்கினான். “என்றுமிருப்போம் என்று உணர்ந்திருப்பதனால் நமக்கு இறப்பு அச்சமூட்டுவதில்லை. தெய்வங்களை நாம் வழிபடுவதுமில்லை” என்றான் அகாபிலன்.

கிகிகன் “உள்ளே எவரோ இருக்கிறார்கள்” என்றான். லோமசன் “எவர்?” என திரும்பினான். அவன் மூச்சிழுத்து பிடரி சிலிர்த்து நிற்பதைக் கண்டு “இந்த இடம் நம்முடையது அல்லவா?” என்று சொன்ன கிருங்கனும் மெய்ப்பு கொண்டு தலைதாழ்த்தினான். அப்பால் இளையவனை நோக்கி மகிழ்ந்திருந்த அகாபிலன் “என்ன செய்கிறீர்கள்?” என்றபடி திரும்பி நோக்கினான். உடன்பிறந்தார் மூவரும் நோக்கி நின்றிருப்பதைக் கண்டு “யார்?” என்றான். எதிரிகளின் மணம் எழவில்லையே என எண்ணியபோதே அவனும் கண்டுவிட்டிருந்தான். மூச்சிழுத்துவிட்டு மெல்ல காலடி வைத்து அவன் கருவறையை அணுகினான். கலிதேவன் என அமைந்த கல்லுருளையின் விழிகள் உயிரொளியுடன் திறந்திருப்பதை அவன் கண்டான்.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 41

பகுதி ஆறு : பொற்பன்றி – 6

bl-e1513402911361கலிதேவனின் சிற்றாலயத்தின் முகப்பில் நின்றிருந்த கலிங்கப்பூசகர் ஊர்வர் கைதூக்க அனைத்து இசைக்கலங்களும் ஒலியவிந்தன. அவர் உரத்த குரலில் “இருள்முகத்தோன் வெல்க! எதிரிலான் வெல்க! விழிவலியன் வெல்க!” என்று கூவினார். “வெல்க! வெல்க!” என குரல்கள் இணைந்தொலித்தன. ஊர்வரின் உடல் மழைபட்ட கரும்பாறையென இறுகித்திரண்டிருந்தது. பெரிய குடவயிற்றின்மேல் வெள்ளெலும்பில் செதுக்கிய மணிகளாலான மாலை துவண்டது. எலும்புமணிக் கங்கணம் அணிந்த வலக்கையின் சுட்டுவிரலில் நீலமணியாழி அணிந்திருந்தார். அவருக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் அவரைப்போலவே தோன்றிய துணைப்பூசகர் நின்றிருந்தனர்.

“அரசர் வருக!” என்றார் ஊர்வர். துர்மதன் திரும்பி கைகாட்ட சுபாகுவும் துச்சலனும் இருபக்கமும் வர துரியோதனன் சீர்நடையுடன் வந்தான். அவனுக்குப் பின்னால் துச்சகன் உடைவாள் ஏந்தி வந்தான். துச்சளை இருளுக்குள் கூர்ந்து அப்பால் துச்சாதனன் வருகிறானா என்று பார்த்தாள். துரியோதனன் நீலப்பட்டாடை அணிந்து கரிய கச்சையை இடையில் முறுக்கியிருந்தான். கைகூப்பியபடி வந்து ஊர்வர் முன் நின்றான். நீராடிய குழலில் இருந்து துளிகள் சொட்டி முதுகில் வழிந்தன. தாடியில் நீர்மணிகள் செவ்வொளியில் குருதியோ என மின்னின. இடையிலணிந்திருந்த சுரிகை குருதிச்செம்மை பூசியிருந்தது.

துச்சளையின் கையை தாரை மெல்ல தொட்டாள். துச்சளை திரும்பி நோக்க “நாம் சென்றுவிடுவோம், அரசி” என்றாள். “ஒருவேளை நாம் இதை பார்க்கவே வந்தோம் போலும். பார்த்தால் நம் அழல் அவியும். இல்லையென்றால் இதையே எண்ணி உழல்வோம்” என்றாள் துச்சளை. விகர்ணன் “ஆம், அதுவே மெய். இங்கேயே அனைத்தையும் கழற்றி வீசிவிட்டுத் திரும்பலாம். சாவுக்குப்பின் வரும் அமைதி… மானுடருக்கு தெய்வங்கள் அருளும் நற்கொடை அது என்பார்கள்” என்றான். அருகே நின்றிருந்த சூதமுதியவர் “ஓசையின்மை, இளவரசே” என்றார். விகர்ணன் தலையசைத்தான்.

செதுக்காத மலைக்கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட ஆலயத்திற்குள் கரிய நீளுருளைக் கல்லில் இரு கண்கள் மட்டும் பொறிக்கப்பட்ட கலியின் உருவம் அமர்ந்திருந்தது. அக்கண்கள்மேல் அரக்கு பொருத்தப்பட்டு நீலப்பட்டுத் துணியால் கட்டப்பட்டிருந்தது. கரும்பட்டும், எதிரெதிர் சிற்றாடிகளும், தோல்சவுக்கும், குறைகுடமும், கருமயிர்ச்சுருள்களும், இடம்புரிச்சங்கும் அதன் முன் படைக்கப்பட்டிருந்தன. இரட்டைத்திரி விளக்குகள் தளர்ந்து எரிந்தன. நீலமலர்தார்கள் சூட்டப்பட்டு இருபக்கமும் நெய்ப்பந்தங்கள் எரிய அமர்ந்திருந்த உருவிலாவடிவை  நோக்கிக்கொண்டிருந்தபோது அது உடல்கொண்டு கைகால்கள் நீண்டு எழுந்துவிடுமெனத் தோன்றியது. காகத்தின் இறகுகளாலான விசிறிகள் அதன் காலடியில் விரிக்கப்பட்டிருந்தன. வலமும் இடமும் இரு உயிருள்ள நாகங்கள் புகையில் மயங்கியவை என கிடந்தன.

ஊர்வர் “அரசே, முழுதளித்தல் என்றால் என்ன என்று உங்களுக்கு சொல்லியிருப்பார்கள்…” என்றார். துரியோதனன் “ஆம்” என்றான். “ஐந்து நிலைகளினாலானது இந்தத் தன்னளிப்பு. எச்சமின்றி அளித்தல், ஐயமின்றி பணிதல், பிறிதின்றி ஒழுகுதல், ஒரு போதும் திரும்பி நோக்காதொழிதல், துயரின்றி ஏற்றல். ஐவகை நோன்பில் ஒன்றில் ஒரு கடுகுமணியிடை குறைவென்றாலும் கனியும் தெய்வம் கடுஞ்சினம் கொள்ளும். அறிக, கலியின் நோக்கு கனல்விழியனையே துயருற்றலையச் செய்துள்ளது. அவன் முன் ஊழும் சுருங்கி வளையும்.”

துரியோதனன் “ஆம், அறிவேன்” என்றான். “இது மீளவழியில்லா பாதை…” என்றார் ஊர்வர். “ஆம், அறிவேன்” என்றான் துரியோதனன். ஊர்வர் புன்னகைத்து “ஆனால் இப்புவியில் அனைத்துப் பாதைகளும் மீளமுடியாதனவே” என்றார். “இது இறப்பு என்று உணர்க!” துரியோதனன் “ஆம், அறிவேன்” என்றான். “இறந்து பிறக்காதவர் எதையும் அடைவதில்லை” என்றார் ஊர்வர். “இந்த காகச்சிறைத் தடுக்கில் அமர்க!” என்றார். துரியோதனன் மழித்திட்ட தலைமயிராலானதுபோன்ற காகச்சிறகுத் தடுக்கில் அமர்ந்தான். “கைகளை மடியில் பூட்டுக! இங்கு வேறு எவரும் இல்லை என்றே கொள்க! ஒருநாழிகைப்பொழுது உங்கள் தெய்வத்தின் காலடியை நோக்கி அமர்ந்திருக்கவேண்டும்.”

“ஆம்” என்றான் துரியோதனன். “இது இறுதி வாய்ப்பு. இப்பூசனை முடிவதுவரை உங்களுக்கு பொழுதிருக்கிறது. இறுதிக்கணத்தில்கூட நீங்கள் இதிலிருந்து ஒழிவதாக அறிவித்து திரும்பிச்செல்ல முடியும்…” என்றார் ஊர்வர். துரியோதனன் “ஆம்” என்றபின் கலியின் சிலையை நோக்கியபடி நிமிர்ந்த தலையும் நிகர்த்துலாவென அமைந்த பெருந்தோள்களுமாக அமர்ந்திருந்தான். ஊர்வர் துர்மதனை நோக்கி “பூசெய்கைப் பொருட்களனைத்தும் வரட்டும். அவற்றை எண்ணி நோக்கிய பின்னரே நான் வேள்விக்கு எழமுடியும்” என்றார். துர்மதன் கைகாட்ட சூதர்கள் ஒவ்வொரு பொருளாக கொண்டுவந்தனர்.

முதலில் ஏழு குடங்களில் நீர். பின் ஏழு குடலைகளில் தாமரை, குவளை, செண்பகம், நொச்சி, ஊமத்தை, வள்ளை, சங்குமலர் என ஏழுவகை நீலமலர்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. வாழையிலையில் பொதிந்து ஆவியில் வேகவைக்கப்பட்ட அப்பங்கள் அடுப்பிலிருந்து இறக்கப்பட்டு ஏழு கூடைகளில் கொண்டுவந்து வைக்கப்பட்டன. ஏழு குடங்களில் நுரையெழும் கள். சூதர்கள் கொண்டுவந்த கூடைகளில் இருந்து  ஏழு கருங்கழுத்துக் காகங்கள், ஏழு கருநாகங்கள், ஏழு கரிய அட்டைப்பூச்சிகள், ஏழு கூகைகள், ஏழு கருங்குரங்குகள், ஏழு கரிய மீன்கள், ஏழு ஆமைகள் கொண்டுவந்து ஊர்வருக்கு காட்டப்பட்டன.

அவர் “பலிவிலங்குகள் ஒருங்கியுள்ளனவா?” என்றார். “ஆம், சுனையருகே நின்றுள்ளன” என்றான் துர்மதன். அவர் நிறைவுடன் தலையசைத்தபின் கருவறைக்குள் நுழைந்தார். துணைப்பூசகர்கள் அப்பகுதியைச் சுற்றி நெய்ப்பந்தங்களை ஏற்ற காட்டெரி என அனல் சூழ்ந்தது. நாகங்கள் வெருண்டு கூடைக்குள் எழுந்து படமெடுத்தன. அவர் கருவறைக்குள் மேலும் பந்தங்களை கொளுத்தினார். ஊர்வர் நீலக்குவளையால் அள்ளி இடக்கை சரித்து ஊற்றி ஏழுமுறை கலியை நீர்முழுக்காட்டினார். பின்னர் மணையில் கால்மடித்து அமர்ந்து ஓசையென்று ஒருபோதும் எழுந்திராத நுண்சொற்களை உதடுகளின் அசைவாக சொன்னபடி கைகளில் எழுந்த நுண்செய்கைகளினூடாக கலிதேவனுடன் உரையாடலானார்.

தாரை மெல்ல “நாம் சென்றுவிடுவோம்” என்றாள். துச்சளை மறுமொழி சொல்லாமல் விழியூன்றி நின்றாள். நீலமலர்களை அள்ளி கலிதேவன்மேல் இறைத்தபடி வாழ்த்துச்சொற்களை சொன்னார். தொன்மையான குடிமொழி எதிலோ அமைந்த அச்சொற்கள் வண்டு முரள்வதுபோலவும் புறா குறுகுவதுபோலவும் கிளி மிழற்றுவதுபோலவும் கூகை குழறுவதுபோலவும் புலி உறுமுவதுபோலவும் மாறிமாறி செவியுடனாடின. ஒருகணத்தில் முழவின் தோற்பரப்பில் கையால் வருடும் ஒலியென்றாயின. பின் குறுவில்லின் நாணொலி என உருமாறின.

துணைப்பூசகர் ஏழு இலைகளில் அப்பத்தை எடுத்து அளிக்க கலிதேவனின் முன் அவற்றை படைத்தார். பலியேற்கும்படி கையசைவு காட்டி தொழுதபின் மலர்களை அவற்றின்மேல் தெளித்தார். அவற்றில் ஓர் இலையை எடுத்துக்கொண்டு சென்று அப்பாலிருந்த காஞ்சிரமரத்தின் அடியில் வைத்துவிட்டு திரும்பி வந்தார். இன்னொரு இலையை எடுத்து மும்முறை சுழற்றி காற்றில் தென்திசை நோக்கி வீசினார். கைகூப்பி ஏழுமுறை வணங்கியபின் வெளிவந்து நின்று நான்கு திசையிலும் சூழ்ந்திருந்த இருளை வணங்கினார்.

பின்னர் துரியோதனனிடம் “சொல்க, இது தருணம்” என்றார். “ஆம், மாற்றமில்லை. என் முடிவு அதுவே” என்றான். “எழுந்து நில்லுங்கள், அரசே” என்றார் ஊர்வர். “கலிதேவனின் ஆலயப்படியை தொட்டு மூன்றுமுறை ஆணையிடுக, அதுவே உங்கள் தன்னளிப்பாகும்.” துரியோதனன் முன்னால் சென்று கல்படியில் வலக்கையால் மும்முறை அறைந்து “ஆணை! ஆணை! ஆணை!” என்றான். “இந்தச் சொற்கோள் இனி உங்களை ஆளும்!” என்றார் ஊர்வர். “இது உங்கள் கால்தாங்கும் மண்ணும் தலைகவித்த வானும் சூழ்காற்றும் பெய்யொளியும் அனலும் ஆகி உடனிருக்கும்.” துரியோதனன் “ஆம், பேறுகொண்டேன்” என்றான்.

“அரசே, நான்கு சடங்குகளால் நீங்கள் இவ்வெல்லையை கடக்கவிருக்கிறீர்கள். முதல் சடங்கு உலகளித்தல். உங்கள் பதக்கத்தை இரண்டாக உடைத்து கலிதேவனுக்குப் படைக்கும்போது உங்கள் மூதாதையருடன், குருதியுடன், குலத்துடன், நட்புடன், கடமையுடன் கொண்டுள்ள அத்தனை உறவுகளையும் அறுக்கிறீர்கள்” என்றார் ஊர்வர். துச்சலன் உதவ துரியோதனன் தன் கழுத்திலணிந்திருந்த மாலையில் தொங்கிய அரசப்பதக்கத்தை பிரித்தெடுத்தான். ஊர்வர் கைகாட்ட அதை பலிபீடத்தின்மேல் வைத்தான். துணைப்பூசகர் அளித்த வாளால் அதை ஓங்கிவெட்டி இரு துண்டுகளாக தெறிக்க வைத்தான். அதை அவர்கள் எடுத்தளிக்க மும்முறை தலையைச் சுற்றிவிட்டு கலிதேவனின் காலடியில் வைத்து வணங்கினான்.

“இரண்டாவது சடங்கு உடல் அளித்தல்” என்றார் ஊர்வர். அவன் இடப்பக்கமாக விலகி அமர முதியவரான அரசநாவிதர் தன் கருவிப்பெட்டியுடன் அருகே வந்தமர்ந்தார். அவன் தலைகுனிய அவர் தன் கத்தியை எடுத்து வெண்கல்லில் மும்முறை தீட்டிவிட்டு அவன் குழல்கற்றைகளை மழித்தார். காக்கைச்சிறகுகள் என அவை அவன் முன் விரிக்கப்பட்ட வெண்ணிறத் துணியில் விழுந்தன. தாடியையும் மழித்து முடித்தபோது அவன் முகம் புதுக்கலம் என தெரிந்தது. அவன் உடலெங்குமிருந்த மயிர்ப்பரவலை முற்றாக மழித்து வீழ்த்தினார். அந்த மயிர்க்கற்றைகளை துணியுடன் கொண்டுவந்து கலிமுன் பரப்பினர். அவன் தன் சுரிகையை எடுத்து இடக்கையின் தசைப்பரப்பை கிழித்தான். ஏழு சொட்டு குருதியை மயிர்மேல் உதிர்த்துவிட்டு அதை சுருட்டி எடுத்து மும்முறை தலையைச் சுழற்றி வலப்பக்கமாக எறிந்தான்.

“மூன்றாம் சடங்கு உள்ளம் அளித்தல். இதை கலம்முற்றொழிதல் என்பர்” என்றார் ஊர்வர். அவர் கைகாட்ட துடிகளும் முழவுகளும் கொம்புகளும் மீண்டும் முழங்கத் தொடங்கின. ஆலயத்திற்கு தென்புறமாக செங்கல் அடுக்கி அமைக்கப்பட்டிருந்த பெரிய வேள்விக்குளத்தில் ஏழு பூசகர்கள் விறகுகளை அடுக்கினர். கலிதேவனின் கருவறையில் இடப்பக்கம் எரிந்த பந்தத்திலிருந்து சுடர்பொருத்தி எடுத்துச்சென்று அந்த விறகுக்குவையை பற்றவைத்தார். தழல் எரிந்து எழத்தொடங்கியதும் முழவுகளும் துடிகளும் கொம்புகளும் அவிந்தன. துரியோதனனை ஊர்வர் அழைத்துச்சென்று தெற்குநோக்கி போடப்பட்டிருந்த தர்ப்பைப்புல் பாயில் அமரச்செய்தார். அவனுக்குப் பின்னால் தம்பியர் அமர்ந்தனர். அனலைச் சூழ்ந்து அமர்ந்திருந்த பூசகர் வேதச்சொல்லை ஓதத் தொடங்கினர்.

சற்றுநேரம் கழித்தே அச்சொற்களின் ஒலிமாறுபாட்டை துச்சளை உணர்ந்தாள். அவள் வியப்புறுவதை அவள் கையை தொட்டுக்கொண்டு நின்றிருந்த தாரை அறிந்து “அது அசுரவேதம். எங்கள் குடிகளில் மழையெழ வேண்டி நிகழும் வான்தொழு வேள்விகளில் அச்சொற்களை கேட்டிருக்கிறேன்” என்றாள். “காடுகளுக்குள் இருந்து அசுரகுடிப் பூசகரை முறைச்சொற்கள் கூறி அன்னமும் ஆடையும்  பொன்னும் பரிசில்களாக அளித்து வரவழைத்து அதை இயற்றுவோம். ஆண்டுபிறழாமல் வான்கனியச் செய்வது அவர்களின் சொல்லே.”

துச்சளை “ஆனால் நான் இதை முன்பு கேட்டது போலுள்ளது” என்றாள். “நான் கேட்ட அசுரவேதம் தவளைகளை வழுத்திப் பாடுவது. தவளைக்குரல் எனவே ஒலிப்பது” என்றாள் தாரை. “ஆம், இந்தச் சொல்லொழுக்கு அதர்வ வேதத்தைப்போல் உள்ளது” என்றான் விகர்ணன். துச்சளை “தவளைப்பாடல் வேதம் என கேட்டிருக்கிறேன்” என்றாள். “மாண்டூக்யம் அதர்வ வேதத்தைச் சார்ந்த மரபு” என்றான் விகர்ணன். அனலெழுந்து கூத்தாடத் தொடங்கியது. அதில் அவர்கள் மரக்கரண்டியால் நெய்யை ஊற்றிக்கொண்டே இருந்தனர். நடமிடும் தழலுடன் வேதச்சொல் இசையும் விந்தையை துச்சளை பலமுறை கண்டிருந்தாள். காட்டிலெழும் தழலுடன் மேலும் பிழையின்றி இணைந்தாடியது அசுரவேதம்.

தழலாட்டத்திற்கு தாளச்சொற்கட்டுபோல. தழலை செவியால் அறிவதுபோல. அறியாது விழிதிருப்பியபோது பெருநிழல்களாக எழுந்த காடு அவ்வோசையில் தாண்டவமாடுவதை துச்சளை கண்டாள். முதல்முறையாக அச்சம் அவள் நெஞ்சை கவ்வியது. அவள் கொண்ட அச்சத்தை உணர்ந்தவளாக தாரை “செல்வோம், அரசி” என்றாள். “ஆம்” என்றாள். ஆனால் அங்கிருந்து அசையமுடியுமென தோன்றவில்லை. விழிகளை காட்சியால் அவ்வாறு பிணைத்துவிடமுடியும் என அப்போது அறிந்தாள். பெருமூச்சுவிட்டபடி கால்மாற்றி நின்றாள்.

வேள்வித்தீயில் நீலமலர்கள் பொழியப்பட்டன. அவை பொசுங்குகையில் முதற்கணம் தசைவேகும் கெடுமணமெழுந்து குமட்டச்செய்தது. பின்னர் அப்பங்கள். கருகும் அன்னம் எங்கோ அறிந்த மணம் கொண்டிருந்தது. பின்னர் கனிகளும் காய்களும் அவியாக்கப்பட்டன. இறுதியாக கள்குடங்கள் அனலில் பெய்யப்பட்டன. கருகியணைந்த அனல்மேல் நெய் ஊற்றப்பட்டு தழல் மூட்டப்பட்டது. வேதக்குரல் காட்டு ஓடையின் ஓசைகொண்டு எழுந்து சூழ்ந்தது. முதலில் தேரட்டைகள் அனலுக்கு ஊட்டப்பட்டன. அவை மெழுகென உருகி எரியாயின. பின்னர் காகங்கள். அனலில் போடப்பட்டபோது அவை சிறகடித்து எழமுயன்று பொசுங்கி விழுந்து துள்ளித்துள்ளி விழுந்து அனல்கொண்டன.

தாரை குமட்டலோசையுடன் குனிந்தாள். “ம்” என விகர்ணன் அதட்ட அவள் கால்மடித்து அமர்ந்து தலையை முழங்கால்மேல் வைத்துக்கொண்டாள். குனிந்து அவளை நோக்கினால் தானும் வாயுமிழ்ந்துவிடுவோம் என துச்சளை அஞ்சினாள். கூகைகள் பின்னர் அவியாயின. அனலில் விழுந்ததுமே அவை அச்சமூட்டும் ஓசையுடன் இருமுறை துள்ளி அமைந்தன. கரிய மீன்கள் அனலை அடைந்ததுமே செந்தழலால் வாய் திறந்து கவ்வப்பட்டன. இன்னும் இன்னும் என அனல் எழுந்து கிளை விரித்தது. நாவாக, மலராக, வான்குருதியாக. அனலில் இருந்து விழிவிலக்க அவளுக்குள் சித்தம் திமிறித்துடித்தது. விழி முதலில் அனலுக்கே கட்டுப்பட்டது என அவள் எண்ணினாள்.

ஒன்றன்பின் ஒன்றாக ஏழு கருங்குரங்குகள் அனலில் இடப்பட்டன. கைகள் கட்டப்பட்டிருந்த அவற்றின் வால்கள் சொடுக்கி அதிர்ந்து நீண்டு பொசுங்கி எரிய உடல் உருகி கண் நோக்கியிருக்கவே விலாவெலும்புகள் தோல்மீறி எழுந்து வந்தன. ஒரு குரங்கின் எலும்புமுகம் தசைப்பரப்பு சேறு என வழிந்தகல உந்தி மேலெழுந்தது. அதன் விழிக்குழிகளிலும் பல்நிறைந்த வாயிலும் செவ்வழல் ஊடுருவி எழுந்தது. ஏழாவது குரங்கு முன்னர் எரிந்த குரங்குகளை தன் சிறுவிழிகளில் மின்னும் அனலுடன் வேறெங்கிருந்தோ என நோக்கிக்கொண்டிருந்தது. அதன் சேர்த்துக் கட்டப்பட்ட கைகள் கூப்பியவை போலிருந்தன. அதை பூசகர் தூக்கியபோது உளிதீட்டும் ஓசை எழ ஒருமுறை விதிர்த்து திரும்பி அவருடைய கைகளை பற்றிக்கொண்டது. அனலில் அதை அவர் வீசியதும் அஞ்சி எரியும் விறகனலைப் பற்றி அந்த அணைப்பிலேயே முடிபொசுங்கி அரக்குடன் சேர்ந்து எரிந்தது.

நாகங்களை ஒவ்வொன்றாக மண்ணில் விட்டார்கள். வேதம் ஓதியபடியே அதன் வளைந்த உடலினூடாக கைகளால் வருடினார் பூசகர். மெல்ல அது உடல்முறுக்கி ஈரமென ஒளி படர்ந்த சுருள்களுக்குமேல் படமெடுத்தது. அதன் வாலில் ஒருவர் தட்ட திடுக்கிட்டு திரும்பி மண்ணில் கொத்தியது. அக்கணமே அதை கழுத்தைப் பற்றி தூக்கினார். அவருடைய கையில் சுற்றி வால்துடித்தது. வால்முனையை இடக்கையால் பற்றி சுருளவிழ்த்து அனல்நோக்கி வீசினார். தழலுக்குள் கருந்தழல் என அதன் வால் நெளிந்து மறைந்தது.

ஏழு நாகங்களையும் அவியாக்கிய பின்னர் பூசகர் ஆமைகளை எடுத்தனர். அதை அனலில் இட்டபோது துள்ளி மல்லாந்தது. அதன் அடிவயிற்றின் தசை உருகி பற்றிக்கொண்டது. ஓடு வெடித்தபோது எழுந்துவிடுவதுபோல தீயுடன் துள்ளியது. ஏழாவது ஆமையை எடுத்து தலைக்குமேல் தூக்கி வேதச்சொல்லை உரக்கக் கூவியபின் நெருப்பிலிட்டார். பூசகர்கள் எழுவரும் இரு கைகளையும் வான்நோக்கித் தூக்கி வேதப்பேரொலி எழுப்பினர். முழவுகளும் கொம்புகளும் துடிகளும் இணைந்துகொள்ள அலையலையாக அப்பேரோசை எழுந்து இருண்ட வானை மோதியது.

ஊர்வர் “அரசே, இவ்வேள்வியில் அச்சம் எனும் அட்டையை அவியாக்கினீர்கள். விழைவெனும் காகங்கள், காமம் எனும் குரங்குகள், ஆணவமெனும் கூகைகள், சோர்வெனும் ஆமைகள் அவியாக்கப்பட்டன. மந்தணம் எனும் மீன்கள் அனலூட்டப்பட்டன. இறுதியாக நாக வடிவுகொண்ட வஞ்சங்கள். அறிக, இனி உங்களுக்கு இப்புவியில் அஞ்சவும் விழையவும் வெல்லவும் இணையவும் மகிழவும் ஏதுமில்லை. பொன்னோ மண்ணோ பெண்ணோ ஒரு பொருட்டல்ல. புகழும் விண்ணுலகும் எவ்வகையிலும் இனி உங்களுக்கு பொருள்படுவன அல்ல. அரசே, இனி உங்களுக்கு இப்புவியில் எவருடனும் வஞ்சம் என ஏதுமில்லை” என்றார் ஊர்வர். “ஆம்” என துரியோதனன் கைகூப்பினான். “இனி ஆத்மாவை அளித்தல் எனும் சடங்குமுழுமை. அது இறந்துபிறந்தெழல் என்று சொல்லப்படும்” என்றார் ஊர்வர். “ஆம்” என்றான் துரியோதனன்.

நீலக் கச்சை அணிந்த பூசகர் எரியும் பந்தத்துடன் முன்னால் நடக்க அவருக்குப் பின்னால் முழவுகளையும் கொம்புகளையும் துடிகளையும் முழக்கியபடி செவ்வாடை அணிந்த சூதர் சென்றனர். தொடர்ந்து கையில் நீர்க்குடத்துடன் ஊர்வர் நடந்தார். அவரைத் தொடர்ந்து துரியோதனன் நடக்க தம்பியர் உடன்சென்றனர். “செல்வோமா?” என்றாள் துச்சளை. தாரை தரையில் சோர்ந்து சுருண்டு படுத்துவிட்டிருந்தாள். விகர்ணன் “வேண்டாம் அரசி, இதற்குமேல் என்னாலும் இயலாது” என்றான். “ஊன் எரியும் கெடுமணம் அல்ல இது. நாமறியா பெருங்கீழ்மைகளின் நாற்றம்.”

ஒருகணம் அடிவயிறு பொங்கி நெஞ்சிலறைய துச்சளை குமட்டினாள். பின்னர் அதை உள்ளே செலுத்தி உடலை அடக்கி “நான் சென்று பார்க்கவிருக்கிறேன்” என்றாள். விகர்ணன் “வேண்டாம், இதிலிருந்து நாம் மீளவே முடியாது” என்றான். “இது என்னில் எதை நிறைக்கிறதென்று பார்க்கிறேன்” என்றாள் துச்சளை. “இதை பார்க்காதொழிந்தால் இதுவே என் நெஞ்சில் நின்று பெருகும். இத்துடன் நானும் இங்கே இறந்து பிறந்தால் அது நன்றே.” விகர்ணன் பெருமூச்சுவிட்டான். அவள் திரும்பி அவர்கள் சென்ற திசை நோக்கி சிற்றடி வைத்து நடந்தாள். கூழாங்கற்கள் நிறைந்த பாதையில் அவளால் சீராக நடக்கமுடியவில்லை. இடறி நின்றும் மூச்சிளைக்க ஓய்வெடுத்தும் தொடர்ந்துசென்றாள்.

ஒரு மருதமரத்தடியை அடைந்ததும் கால் தயங்கி நின்றாள். அதன் முதலைத்தோல் பட்டைப்பரப்பில் கையூன்றி எழுந்த வேர்புடைப்பில் மெல்ல அமர்ந்தாள். சரிந்துசென்ற பாதையின் இறுதியில் ஊர்வரும் துணைப்பூசகரும் கூடி நின்றிருந்தனர். நடுவே ஓடையிலிருந்து சால் திருத்தி கொண்டுவந்து சேர்த்த சுனை நீர்ச்சுழிமேல் அனல் அலைய இருளில் ஒரு பெருநாகவிழி எனத் தெரிந்தது. சுனையின் மென்சேற்றுக்கதுப்பு அலைவடிவுகள் நுரைக்கோடுகளெனப் பதிந்து சூழ அதில் இறங்குவதற்காக மரத்தாலான படிகள் இடப்பட்டிருந்தன. ஊர்வர் அதனருகே சென்று நிற்க துரியோதனன் அவர் அருகே சென்று வணங்கி நின்றான். ஊர்வர் கைகாட்ட ஓசைகள் ஓய்ந்தன.

ஊர்வர் “அரசே, இது இறுதிக்கணம். இனி பிறிதொரு எண்ணத்திற்கு இடமில்லை. இப்போதுகூட பின்னடி வைக்கமுடியும். உங்கள் உள்ளம் சிதைவுறும், உடல் நோயுற்று அழியும். ஆனால் எழும்பிறவிகளில் மீட்புண்டு, மண்ணிலிருந்து வரும் எள்ளும் நீரும் வந்துசேர பாதையும் எஞ்சும். இவ்வெல்லையைக் கடந்தால் உங்கள் ஆத்மா முடிவின்மையை நோக்கி வீசப்படுகிறது. முடிவற்றவை இருள், தனிமை, வெறுமை மூன்றுமே என்று அறிக” என்றார். துரியோதனன் “என் முடிவில் மாற்றமில்லை. என் தெய்வம் என்னை அணிந்துகொள்க!” என்றான்.

“அவ்வாறே ஆகுக!” என்ற ஊர்வர் துர்மதனிடம் கையசைக்க அவன் திரும்பி ஓடிச்சென்று கைவீசி பலிவிலங்குகளை கொண்டுவரச் சொன்னான். சூதர்கள் காட்டில் கட்டப்பட்டிருந்த பலிவிலங்குகளை கயிற்றைக் கட்டி இழுத்துக்கொண்டுவந்தனர். ஏழு எருமைகள் தளர்ந்த நடையுடன் உருளைக் கருவிழிகளில் பந்தவெளிச்சங்கள் துளிகொள்ள பெருமுரசுக்கோல்முழை என குளம்புகளை தூக்கிவைத்து நடந்து வந்தன. ஓசைகளுக்கேற்ப அவற்றின் செவிகள் அசைந்தன. துயிலில் என ஏழு கழுதைகள் வந்தன. தலைதாழ்த்தி ஒற்றைக்கால் தூக்கி கழுதைகள் துயின்று நிற்க எருமைகள் குனிந்து தரையிலிருந்து புல்சரடுகளை கடித்து மென்றன. ஏழு பன்றிகளை கால்கள் சேர்த்துக் கட்டி நடுவே மூங்கில் செலுத்தி தூக்கிக்கொண்டுவந்து போட்டனர். அவை கரிய தோல்நீர்ப்பை என வயிறுகள் துள்ள எம்பி எம்பி முழவொலியெழுப்பி உறுமின.

பேருடல்கொண்ட இரு துணைப்பூசகர்கள் இடையளவு உயரம் கொண்ட பெரிய பள்ளிவாட்களுடன் வந்து நின்றனர். சுனைக்கரையில் இருந்த பெரிய மரவட்டம் பலிபீடம் என்பதை துச்சளை அப்போதுதான் உணர்ந்தாள். அந்த அதிர்ச்சி அவளை அறியாமல் எழுந்து நிற்கச்செய்தது. பள்ளிவாளை ஒரு பூசகர் அசைத்தபோது அதிலமைந்திருந்த வெண்கலச் செண்டுமணிகள் சிலம்பின. முதல் எருமையை இரு பூசகர் அழைத்துவந்து பலிபீடத்தருகே நிறுத்தினர். தலையில் நீர் தெளிக்கப்பட்டதும் அது கழுத்தை நீட்டியது. எடைமிக்க வாள் மின் என இறங்கி பீடத்தில் பதிந்து நடுங்க எருமைத்தலை எடையுணர்த்தும் ஓசையுடன் அப்பால் விழுந்து சேற்றில் உருண்டு சுனைநீருக்குள் விழுந்தது.

குளம்புகள் இழுபட சேற்றில் கிடந்து துடித்த எருமையின் வெட்டுண்ட கழுத்துவழியாக குருதி கொப்புளங்களுடன் பெருகி வழிந்து சுனைநீரை அடைந்தது. அதன் பெரிய வயிறு காற்றொழியும் தோல்கலம் என அதிர்ந்து சுருங்க விலாவெலும்புகள் உள்ளே அசைந்தன. வால் சுழன்று பூழியை அளைந்தது. துணைப்பூசகன் பீடத்தை இழுத்து இடமாற்றம் செய்தான். இரண்டாவது எருமை அங்கே கொண்டுவரப்பட்டது. அதன் குருதி சிற்றோடையாக வழிந்து சுனையில் கலந்தது. குருதி கருநிறம் கொண்டிருப்பதாக துச்சளை எண்ணினாள். ஆனால் செம்மையை நினைத்ததுமே அது செந்நிறம் கொண்டது.

பலிபீடத்தை இழுத்து அகற்றி சுனையைச் சுற்றி அமைத்து ஏழு எருமைகளையும் வெட்டி குருதிபெருகச் செய்ததும் கழுதைகள் கொண்டுவரப்பட்டன. குருதி மணம் பெற்று அவை மயிர்சிலிர்த்து செவிகோட்டி மூச்சொலி எழுப்பின. இருவர் பின்னின்று தள்ள தயங்கி பிடரி அதிர நின்று பின் மெல்ல பலிபீடத்தை அணுகின. முதல் கழுதையின் வெட்டுண்ட தலை சேற்றிலேயே செவியசைத்தபடி கிடந்தது. அதை கைக்கோலால் தள்ளி நீரிலிட்டனர். தரையில் ஒருக்களித்து விழுந்து ஓட முயல்வதுபோல காலசைத்தது. இரண்டாவது கழுதை வெட்டப்பட்டபோது பின்னால் நின்ற கழுதை மெல்ல கனைத்தது. அதன் தலை நீரில் விழுந்த பின்னரும் காதுகள் அசைந்து அங்கே மீன் கொப்பளிப்பதுபோல தோன்றியது. பன்றிகளை பீடங்களின்மேல் வைத்து அடிக்கழுத்தை கிழித்து குருதி பீறிடச்செய்து தலையுடன் சேற்றில் கிடத்தினர்.

சுனையைச் சூழ்ந்து பலியுடல்கள் இறுதித்துடிப்பில் அதிர்ந்துகொண்டிருக்க சேற்றில் ஊறி வழிந்த குருதியால் சுனை பெரும்புண் என மாறியது. குருதியின் சுழிப்பு. நோக்கிழந்த ஊன்விழி.  ஊர்வர் துரியோதனனிடம் “அரசே, அணி களைக! இப்புவி அளிக்கும் ஒரு துளிகூட உடலில் இருக்கலாகாது. கருவறை விட்டுவந்த அதே தோற்றம் கொள்க!” என்றார்.  துச்சலன் துரியோதனனின் கைகளில் இருந்த அரசக் கணையாழியை கழற்றினான். இடையில் இருந்த மங்கலச்சரடை சுரிகையால் அறுத்து எடுத்தான். துர்முகன் அவன் இடையிலிருந்த ஆடையை கழற்றினான். உள்ளே கட்டியிருந்த தற்றாடையை அதன்  முடிச்சுகளை அறுத்து அகற்றினான். சுபாகு அவன் தலையில் மலரிதழ்கள் எஞ்சியிருக்கின்றனவா என நோக்கினான்.

முழுதுடலுடன் நின்ற துரியோதனனை ஊர்வர் சுற்றி வந்து நோக்கினார். உடலில் ஒட்டியிருந்த புல்சரடு ஒன்றை எடுத்து வீசினார். துணைப்பூசகரும் அவனை மும்முறை சுற்றி வந்து நோக்கினர். துச்சளை அவன் உடலையே நோக்கிக்கொண்டிருந்தாள். முன்பு பலமுறை நோக்கிய உடலென்று தோன்றியது ஏன் என அவள் அகம் குழம்பியது. மானுட உடல் அல்ல அது. கல்லில் மட்டுமே அம்முழுமை இயல்வது. மயிரற்ற உடல் உலோகப் பளபளப்பு கொண்டிருந்தது. எங்கோ என்றுமென இருக்கும் அச்சு ஒன்றில் வார்த்தெடுக்கப்பட்டது. தெய்வங்கள் மானுடக் கைகளை எடுத்துக்கொண்டு நுண்சீர் செய்தது. இனியில்லை என முழுமையைச் சென்றடைந்த தசைகள், நரம்புகள். கால்நகங்கள் சிறுத்தைக் குருளைகளின் விழிகள் என வெண்ணிற ஒளி கொண்டிருந்தன.

ஊர்வர்  துரியோதனனின் கைகளைப் பற்றியபடி அழைத்துச்சென்று நீர் விளிம்பருகே நிறுத்தி “இறங்கி நீராடுக, அரசே!” என்றார். அவன் குனிந்து நீரையே நோக்கிக்கொண்டிருந்தான். “நீராடுக!” என்றார் ஊர்வர். துரியோதனன்  திடுக்கிட்டவன்போல திரும்பி அவரை நோக்கினான். “செல்க, இது உங்கள் அன்னையின் கருக்குழி” என்றார் ஊர்வர்.  அவன் மெல்ல காலடி எடுத்துவைத்து சேற்றிலிறங்கினான். அவன் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. “கைகளை கூப்புக!” என்றார் ஊர்வர். அவன் குழந்தைபோல் அதை செய்தான். பிறிதெவரையோ என அவரை நோக்கிக்கொண்டிருந்தான். அறியாமல் நடந்து அக்குழுவருகே வந்துவிட்டிருந்த துச்சளை அவ்விழிகளை அண்மையில் நோக்கினாள். அறியாமையின் பேரழகுகொண்ட இளமைந்தருக்குரிய விழிகள் அவை. மறுகணம் வாய்திறந்து மழலைச்சொல் எடுக்கக்கூடுமென தோன்றச்செய்தவை.

சுனையில் நீர் அலைகொப்பளிக்கத் தொடங்கியது. அதற்குள் பல்லாயிரம் கருநாகங்கள் நெளிவதுபோலத் தோன்றியது. “இறங்கி மூழ்குக!” என்றார் ஊர்வர்.  “இது கருபுகுதல். அங்கு நீருள் நூற்றெட்டு நொடி அமர்ந்திருக்கவேண்டும். முதல் முழுக்கில் உங்கள் பழைய நினைவுகள் அழியும். இரண்டாம் முழுக்கில் மூதாதையரை காண்பீர்கள். மூன்றாம் முழுக்கில் அவர்களை உதைத்து உதறி தலைகீழாக மண்ணில் விழுவீர்கள்.” துரியோதனன் பால்பற்கள் கொண்ட குழவியரின் வாய்களில் மட்டுமே எழும் இனிய புன்னகையுடன் அவரை நோக்கி தலையசைத்தான். அறியா உணர்வெழுச்சியால் துச்சளை விழிநீர் மல்கினாள்.

துரியோதனன் மெல்ல படிகளில் இறங்கி இடைவரை குருதியில் நின்றான். “மூழ்குக!” என்றார் ஊர்வர். அவன் கண்மூடி நீரில் மூழ்க அவர் நூற்றெட்டு வரை விரல்விட்டு எண்ணினார். அவன் நீர் பிளந்து எழுந்தான். மழிக்கப்பட்ட தலையிலிருந்து குருதி சொட்டி வடிய வயிறுகிழித்து எழும் மகவென்றே தோன்றினான். “பிறிதொருமுறை! பிறிதொருமுறை!” என்றார் ஊர்வர். அவன் நீரில் மூழ்கியபின் அவர் எண்ணத்தொடங்கியபோது நீர் பிளந்து எழுந்த காகம் ஒன்று “கா!” என்னும் கூச்சலுடன் துளிசொட்டச் சிறகடித்து இருளில் மிதந்து சுழன்றது. மீண்டும் ஒரு காகம் எழுந்து அதனுடன் இணைந்தது. கைகூப்பியபடி எழுந்த துரியோதனன் திகைத்து நோக்க “மூழ்குங்கள்” என்றார் ஊர்வர். அவன் மீண்டும் மூழ்கியபோதும் கூச்சலிட்டபடி மேலும் காகங்கள் எழுந்து நீரைச் சிதறடித்து இருளில் சுழன்றன.

மூன்றாம் முறை துரியோதனன் நீரிலிருந்து எழுந்து கைகூப்பியபடி கரையை அணைந்தபோது தலைக்குமேல் இருளின் சுழி என நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் சுழன்று பறந்தன. அவற்றின் குரல்கள் இணைந்து எழுந்த ஓசையை அவள் முன்பு கேட்டிருந்தாள். ஊர்வர் “நேராகச் சென்று உங்கள் தெய்வத்தின் படியில் தலைவையுங்கள், அரசே” என்றார். அவன் கூப்பிய கைகளை விலக்காமல் நடந்துசெல்ல அவன் பின்னால் ஊர்வரும் துச்சாதனனும் துர்மதனும் துச்சலனும் துச்சகனும் சென்றனர். துணைப்பூசகர் தொடர்ந்தனர்.

சுனையருகே நின்றபடி துச்சளை நெஞ்சில் கைவைத்து நோக்கிக்கொண்டிருந்தாள். உள்ளிருந்து அலையலையென காகங்கள் எழுந்து இருளில் கருங்குமிழிகள் என சுழன்றுகொண்டிருந்தன. காலடியில் அசைவை உணர்ந்து அவள் திடுக்கிட்டு மேலே சென்று குனிந்து நோக்கினாள். நீருக்குள் இருந்து ஓசையிலா வழிவாக நாகங்கள் கிளம்பி அம்புகள் என இருள்செறிந்த காட்டுக்குள் சென்று புதைந்துகொண்டிருந்தன. துள்ளி ஓடி மேலேறி மருதமரத்தடியில் சென்று நின்றாள். உடல் மெய்ப்புகொண்டு தசைகள் இறுகி அதிர்ந்தன. பற்கள் கிட்டித்து கழுத்துத் தசைகள் இழுபட்டிருந்தன. அங்கும் தரையெங்கும் நிழல்களுடன் நாகங்களும் நெளிவதை கண்டாள்.

மீண்டும் ஓடி மேலே கலிதேவனின் ஆலயமுகப்பிற்கு சென்றாள். அங்கே துரியோதனன் ஆலயத்தின் படிக்கட்டில் நெற்றியை மும்முறை முட்டி வணங்கினான். திரும்பி நோக்க ஊர்வர் அவனுக்கு அவனுடைய சுரிகையை இரு கைகளாலும் எடுத்தளித்தார். அதை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டான்.  துர்மதன் அவன் ஆடைகளை எடுத்து அணிவிக்கத் தொடங்கினான்.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 40

பகுதி ஆறு : பொற்பன்றி – 5

bl-e1513402911361கரிய புரவியின் உடலில் செங்குருதியுமிழும் சிறு புண் என தொலைவில் காட்டின் நிழல்அலைகளுக்குள் சிவந்த சிறிய வெளிச்சம் தெரிந்தது. தாரை “அடிகளை அளந்து வைக்கவும். நாம் நடந்துவருவதை பறவைகளும் குரங்குகளும் நோக்கிவிட்டன. அவை நாம் சீராக சென்றுகொண்டிருப்பதுவரை மெல்லிய ஒலியே எழுப்பும். நம்மில் எவரேனும் அடிசறுக்கி மிகையசைவு அளித்தால் அஞ்சி ஓலமிடத் தொடங்கிவிடும்” என்றாள். “உலர்ந்த சுள்ளிகள், சருகுக் குழிகள், பெரிய கூழாங்கற்கள் ஆகியவற்றின்மேல் கால் ஊன்றவேண்டாம்… நான் கால்வைக்கும் இடத்தில் மட்டும் உங்கள் அடிகள் பதிக!”

துச்சளை “இந்தக் கானறிதல்களை எப்படி நினைவுகூர்கிறாய்?” என்றாள். “நான் நினைவுகூரவில்லை அரசி, என் கால்களில் உள்ளன அவை. கால்களிலிருந்து உள்ளத்திற்கு செல்கின்றன” என்றபடி முன்னால் சென்றாள். காற்றில் நீராவிமணம் இருந்தது. துயிலும் குழந்தையின் போர்வையை விலக்கும்போது எழும் வெம்மைமணம் என துச்சளை எண்ணினாள். பகலில் மரங்களென்றும் செடிகளென்றும் பெருகிக்கிடக்கும் காடு இருளில் ஒன்றென்றாகி ஒரு மாபெரும் விலங்கென ஆகிவிட்டிருந்தது. சீரான துயில்மூச்சு கொண்டிருந்தது. குறட்டை ஒலி என பல்வேறு விலங்கோசைகள்.

துச்சளை மூச்சுவாங்க நின்று “ஒளி மிக அருகில் எனத் தெரிந்தது… ஆனால் காட்டில் நாம் தொலைவை கணிக்கமுடிவதில்லை” என்றாள். “எங்குமே உள்ளத்தால்தான் அனைத்தையும் கணிக்கிறோம். உள்ளத்தை கணிக்கமுடியாதபோது எல்லாமே அகன்றுவிடுகின்றன” என்றான் விகர்ணன். துச்சளை புன்னகைத்து “ஆழ்ந்த நுண்நோக்கு” என்றாள். அவள் தன்னை பாராட்டுகிறாள் என எண்ணி விகர்ணன் திரும்பி தலைவணங்கினான். தாரை இருளிலேயே புன்னகைக்கும் பல்மின்னொளி தெரிந்தது. விகர்ணன் “காடு நமக்குத் தெரியாதது, ஆகவே நாம் தொலைவுகளை தவறாக கணிக்கிறோம்” என்றான். தாரை மீண்டும் புன்னகைத்து “ஆம்” என்றாள். அவள் விழிகளில் இருளிலேயே புன்னகை தெரிவதை கண்டு துச்சளை வியந்தாள்.

உடுக்கோசை கேட்கத்தொடங்கியது. இருளின் பரப்பிலேயே அவ்வோசை எதிரொலித்து மரவுரியால் போர்த்தப்பட்ட ஒலி என கேட்டது. விகர்ணன் “தொடங்கிவிட்டார்கள்” என்றான். துச்சளையின் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. தாரை நின்று “அங்கே நிறையபேர் இருக்கிறார்கள்…” என்றாள். “வீரர்களால் அப்பகுதி சூழப்பட்டிருக்கும். அவர்களை மீறி நாம் அணுகமுடியும் என தோன்றவில்லை.” துச்சளை “நான் முதலில் செல்கிறேன். என்னை அவர்கள் தடுக்கமுடியாது. அவரிடம் என்னை அழைத்துச்சென்றே ஆகவேண்டும்” என்றாள். விகர்ணன் “நாம் நுழைய முயன்றாலே இச்சிறிய பகுதிக்குள் அவர் செவிவரை ஓசை சென்றுவிடும்” என்றான்.

அவர்கள் இருவருக்குமே என்ன செய்வதென்று தெரியவில்லை என்று துச்சளை எண்ணிக்கொண்டாள். எண்ணம் திகைக்கும்போதுதான் பொருளற்ற சொற்கள் எழுகின்றன. பல தருணங்களில் அச்சொற்களிலிருந்து புதிய எண்ணத்திறப்புகள் எழக்கூடும் என்பதை அவள் அறிந்திருந்தாள். நா நெஞ்சறியாத சிலவற்றை அறிந்தது. அதையாளும் தெய்வங்கள் வேறு. அவளுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. எந்த நம்பிக்கையில் கிளம்பிவந்தோம் என வியந்தாள். மெய்யாகவே துரியோதனனை வெல்லும் எண்ணம் அவளுக்கு உள்ளதா? அல்லது அங்கு விந்தையாக ஏதோ நிகழவிருக்கிறது, ஆகவே அப்போது உடனிருந்தாகவேண்டும் என்னும் முதிரா உள்ளத்து ஆர்வமா? அவளால் கணிக்கமுடியவில்லை.

பெருமூச்சுடன் நின்று “என் நெஞ்சு உடைந்துவிடும்போலிருக்கிறது… நெடுந்தொலைவு” என்றாள். அவர்களும் மூச்சுவாங்க நின்றார்கள். “ஆம், காட்டுக்குள் இரவில் கானகத்தேவர்களுக்குரிய காற்று நிறைகிறது. அது மானுடரை மூச்சுத்திணறச் செய்யும் என்பார்கள்” என்றாள் தாரை. மீண்டும் நடக்கையில் துச்சளை தெளிவுகொண்டுவிட்டிருந்தாள். எப்போதுமே உள்ளத்தில் தயக்கமும் வினாவுமாக அலைக்கழிந்து எந்த அடிப்படையுமில்லாமல் எங்கிருந்தோ எழும் ஒரு விடையை சென்றடைவது அவளுடைய வழக்கம். அது பெரும்பாலும் சரியாகவே இருக்கும். அதைப்பற்றி ஒருமுறை நிமித்திகப்பெண்டு ஒருவரிடம் கேட்டபோது மூதன்னையரின் ஆணை அது என்றாள். அதன் பின் அதில் ஐயம்கொள்வதை அவள் விட்டுவிட்டாள்.

“நீங்கள் நின்றுகொள்ளுங்கள். நான் நேராகச் சென்று வீரர்களிடம் என்னை மூத்தவர் அங்கே வரச்சொன்னார் என்கிறேன். நான் தனியாகச் சென்றாலே அவர்கள் குழப்பம் அடைந்துவிடுவார்கள்” என்றாள் துச்சளை. விகர்ணன் ஏதோ சொல்ல வாயெடுக்க “ஆம், அதுவே உகந்த வழி” என்று தாரை சொன்னாள். விகர்ணன் “ஆனால்…” என்றான். “அங்கே செல்வதற்கு ஐயமின்றி ஆணையிடும் குரல் எழவேண்டும். அரசி தமையனுடன் பேசும்போது அயலவரான நாம் உடனிருக்கலாகாது” என்றாள் தாரை. விகர்ணன் “மெய்தான்” என்றான்.

அவர்கள் நின்றுவிட அவள் மட்டும் ஒளிதெரிந்த இடத்தை நோக்கி சென்றாள். குருதித்துளி சொட்டி நின்றிருக்கும் வேல்முனைகள், வாள்விளிம்புகள் என இலைகள் செவ்வொளி சூடியிருந்தன. மரங்களின் வளைவுகள் பொன்னிறம் பூசிக்கொண்டிருந்தன. நிழல்கள் எழுந்து வானில் விரிய நின்றன மரங்கள். இலைத்தழைப்புகளுக்குள் இருந்து புலரிக்கதிர் கருமுகில்களுக்கு நடுவே எழுவதுபோல நெய்ப்பந்தங்களின் ஒளி எழுந்து பரவியிருந்தது. அங்கிருந்த பறவைகள் ஒளியை உணர்ந்து எழுப்பிய ஒலி காட்டின் ஒலிப்பொதுமையிலிருந்து வேறென கேட்டது.

அவளுடைய காலடியோசைகளை வீரர்கள் கேட்டுவிட்டதை உணர்ந்தாள். முள்ளம்பன்றி சிலிர்த்துக்கொள்வதைப்போல இருளில் அம்புகள் தன்னை நோக்கி திரும்புவதை உடல்கொண்ட நுண்புலன் கூறியது. “என்ன அது?” என்றான் ஒரு வீரன். அவன் குரல் துயிலில் பேசும் குழந்தையுடையது போலிருந்தது. “அது விலங்கல்ல… நான்குகால் ஓசை அல்ல” என்றான் இன்னொருவன். மரத்திற்கு அப்பால் நின்றபடி “யார்?” என்று மற்றொருவன் கேட்டான். “நச்சு அம்பு நோக்குகிறது. நில்!”

“நான் துச்சளை, அஸ்தினபுரியின் இளவரசி” என்றாள் துச்சளை. வெளிச்சம் தன் முகத்தில் விழும்படி சென்று நின்றாள். “அரசி, தாங்களா?” என்றான் மரத்திற்குப் பின்னால் நின்றிருந்த தலைமை வீரன். இன்னொருவன் அவனுக்குப் பின்னால் வந்து நின்றான். “தாங்கள் இங்கு வருவதாக ஆணையில்லை.” துச்சளை “நான் அன்னையின் ஆணையுடன் வந்தேன்… என்னை அரசரிடம் அழைத்துச்செல்க!” என்று சொன்னாள். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். தலைவன் முடிவெடுத்து விழிகாட்ட இன்னொருவன் “ஆணை, அரசி… வருக!” என அழைத்துச்சென்றான்.

“என் காலடிகள் விழும் இடங்களில் மட்டும் காலை வைத்து வருக, அரசி… இங்கே நாகங்கள் மிகுதி.” துச்சளை “ஆம், அறிவேன்” என்றாள். அவன் வில்போன்ற காலடிகளுடன் நடந்தபடி “ஆணை என்ன என்று அறியேன். பூசெய்கை தொடங்கியபின் என்றால் எவருக்கும் ஒப்புதல் இல்லை” என்றான். அவர்கள் மேலும் ஒரு காவலர் வளையத்தைக் கடந்து சென்றனர். அங்கிருந்த முதிய வீரனிடம் சொல்லி ஒப்புதல் பெற்று அவன் அழைத்துச்சென்றான். துச்சளை நின்று மூச்சுவாங்கினாள். அவர்கள் பெரும்பாலும் கையசைவுகளாலும் முகக்குறிகளாலும் பேசிக்கொண்டார்கள். கேளா ஆணைகளினூடாக ஒவ்வொருவரும் ஒன்றென கட்டப்பட்டிருந்தார்கள். ஒரே வலையில் அமர்ந்த சிலந்திகள்போல அசைந்தன அவர்களின் கைகள்.

அப்பால் ஒரு மரத்தடியில் போடப்பட்ட மூங்கில்கூடைப் பீடம் மீது துரியோதனன் அமர்ந்திருந்தான். அவனருகே துச்சாதனன் கைகட்டி இருளை நோக்கிக்கொண்டு நின்றிருக்க அவர்களுக்குப் பின்னால் சூதர்கள்  சிலர் பூசெய்கைக்கான பொருட்களை ஒருங்குசெய்துகொண்டிருந்தார்கள். இசைச்சூதர் முழவுகளும் கொம்புகளும் சிறுபறைகளுமாக அமர்ந்திருந்த காட்சி பந்தங்களின் ஒளியில் அலையடித்துக்கொண்டிருந்தது. தொலைவில் கலிதேவனின் சிற்றாலயத்தின் முகப்பில் பூசகர்கள் பதற்றத்துடன் ஓடிய நிழலாட்டம் பாவைக்கூத்து என இருளின் பெருந்திரையிலாடியது.

முன்னால் சென்ற வீரன் துரியோதனன் அருகே சென்று பணிந்து துச்சளையின் வருகையை சொன்னதும் துச்சாதனன் திகைப்பும் சீற்றமுமாக திரும்பி அவளை நோக்கினான். துரியோதனன் முகத்திலோ உடலிலோ அச்சொற்கள் சென்று தொட்டதாகவே தெரியவில்லை. துச்சாதனன் “யார்?” என்றான். பின்னர் காலடியில் சுள்ளிகள் முறியும் ஓசையுடன் அவளை நோக்கி வந்தான். மீன்நெய் எரிந்து தழல் தெறித்துக்கொண்டிருந்த பந்தத்தின் ஒளி அவனுக்குப் பின்புலமாக விரிய பெருநிழல்பூதமென கைகள் கிளைவிரித்து காட்டின்மேல் பரவி அசைய தலை வான் நோக்கி விரிந்தெழ அணுகினான்.

துச்சளை அவனைக் கண்டு நிற்கவில்லை. அவன் அவளை அணுகி செவியருகே குனிந்து தாழ்ந்த குரலில் “ஏன் இங்கு வந்தாய்? எவ்வண்ணம் வந்தாய்?” என்றான். “நான் மூத்தவரை பார்க்க வந்தேன்” என்றாள் துச்சளை. “அவர் எவரையும் பார்க்கும் நிலையில் இல்லை” என்றான் துச்சாதனன். “அவரை அன்றி எவரையும் நான் பார்க்க விழையவில்லை. அவரை பார்க்காது திரும்பிச்செல்லவும் போவதில்லை” என்றாள் துச்சளை. “அவரைப் பார்க்க ஒப்புதல் இல்லை. திரும்பிச்செல்க…” என்றான் துச்சாதனன். அருகே நின்ற வீரனை கைசுட்டி அழைத்து “அரசியை கொண்டுசெல்க!” என்றான்.

அவள் அவ்வீரனை கைச்செய்கையால் விலக்கி “வீரர்களைக் கொண்டு என்னை வெட்டி வீழ்த்துக! அல்லது சிறையிடுக… நான் சென்றே தீர்வேன்” என்றபடி துரியோதனனை நோக்கி நடந்தாள். சீற்றத்துடன் அவளைப் பிடித்து நிறுத்த கைதூக்கிய துச்சாதனன் உள்ளிருந்து எழுந்த தடையால் தயங்கி “வேண்டாம், இளவரசி… நில்” என்றான். “என்னை நிறுத்த முடியும் என்றால் நிறுத்துக!” என்றபடி அவள் சென்றாள். அவன் அவள் பின்னால் “நில்… சொல்வதை கேள்” என உறுமியபடி வந்தான். அவனால் கைநீட்டி அவளை பிடித்து நிறுத்த முடியவில்லை. அவன் கை அதன் பொருட்டு நீண்டு தயங்கி நாகத்தலை என காற்றில் தவித்தது. அவள் மூச்சுவாங்க பெரிய உடல் அசைய முன்னால் சென்றுகொண்டிருந்தாள்.

முழு விசையையும் திரட்டி அவள்முன் வந்துநின்று இரு கைகளையும் விரித்து “நில்… நீ செல்ல விடமாட்டேன்” என்றான் துச்சாதனன். பேரெடையை தூக்கியதுபோல அவன் மூச்சிரைக்க அகன்ற நெஞ்சு ஏறியிறங்கியது. துச்சளை அவன் விழிகளை நேருக்கு நேர் நோக்கி கசப்பால் சுழித்த சிறிய உதடுகளும் நீர்மையில் தழல்செம்மை மின்னிய விழிகளுமாக “விலகு இழிமகனே, உன் கை என் மேல் பட்டால் இங்கு சங்கரிந்து விழுந்து இறப்பேன்” என்றாள். வெறுப்புடன் நிலத்தில் உமிழ்ந்து “ஐவர் இருந்தும் ஆணின்றி நின்றவள் போன்று வலியிலி அல்ல நான். என் குருதிப்பழிக்கு உன் குலத்தை ஏழு தலைமுறை அழிப்பார் என் அரசர்… விலகு!” என்றாள்.

துச்சாதனனின் இடக்கை அசையாமலிருக்க வலக்கை வலிப்பு வந்ததுபோல இருமுறை இழுத்துக்கொண்டது. பின் உயிரிழந்த பெரும்பாம்புபோல விலாவில் அறைந்தபடி விழுந்தது. அவள் அவனைக் கடந்து செல்ல அவன் கால்கள் தளர விழப்போனான். பின்னர் மெல்ல அருகே நின்ற மரத்தை பற்றிக்கொண்டு நிலைகொண்டு கால்மடிந்து வெறுந்தரையில் அமர்ந்தான். உதடுகளை இறுக்கி கண்களை மூடி தலைகுனிந்தான். அவனைமீறி எழுந்த விம்மலில் தோள்கள் ஒருமுறை அதிர்ந்தன. கன்னங்களினூடாக வழிந்த கண்ணீர் நிலத்தில் சொட்டியது. மீண்டுமொரு விம்மலில் அவன் தன்னை முற்றடக்கிக்கொண்டான்.

அப்பால் வந்து அவனை நோக்கிய துர்மதன் அருகணைந்து குனிந்து அவன் பெருந்தோள்கள்மேல் கைவைத்தான். கொப்பளிக்கும் கொதிகலத்திற்கு வெளியே தொட்டு நோக்கியதுபோல் உணர்ந்தான். சொல் அவன் நாவிலெழுவதற்குள் துச்சாதனன் எழுந்து அவனை நோக்காமல் இருளுக்குள் நடந்து மறைந்தான். அவனுடைய ஆடைவண்ணம் இறுதியாக அமிழ்ந்தது.

bl-e1513402911361துச்சளை திரும்பிநோக்காமல் சென்று துரியோதனன் முன் நின்றாள். அவள் வருகையோசை கேட்டு அவன் விழிகள் மட்டும் அசைந்து அவளை நோக்கின. எந்த முகமனும் இல்லாமல் துச்சளை “தார்த்தராஷ்டிரரே, முற்பிறப்பில் செய்த பெரும்பழியால் இப்பிறப்பில் விழியிலாதவர் ஆனார் எந்தை. மீதுற்ற பிறிதொரு பழியால் விழைந்த எதையும் அணுக முடியாதவரானார். ஏழு பிறவியில் இயற்றிய விடப்பெரும் பழியால் உங்களை மைந்தரெனப் பெற்றார். அதோ, சிறுமையும் துயரும் கொண்டு அங்கே அரண்மனையில் அமர்ந்திருக்கிறார்” என்றாள்.

அவளைக் கண்டு துச்சகனும் அப்பால் சூதர்களுக்கு ஆணையிட்டுக்கொண்டிருந்த துச்சலனும் சுபாகுவும் ஓசையற்ற காலடிகளுடன் அருகே வந்தனர். துர்மதன் பின்னால் வந்து நின்றான். அவள் மேலும் உரத்த குரலில் “அறமென்ன என்று தெளிந்து அதிலமரமுடியாதவனாக ஆவதே சிறுமையின் உச்சம். ஒருவர் தன்னை எண்ணியே உளம் நாணும் நிலை அது. இத்தனை ஆண்டுகள் அதில் உழலவிட்டீர்கள் எந்தையை. இன்று அவர் அவ்விருளில் தொட்டு அறிந்து நெஞ்சோடணைத்த அனைத்தையும் அவரிடமிருந்து அகற்றுகிறீர்கள். இம்மண்ணில் ஆற்றப்பட்ட பெரும்பழிகளில் ஒன்றை இயற்றவிருக்கிறீர்கள்…” என்றாள்.

அவள் குரல் கூர்மையும் ஓலிச்சீரும் கொண்டு அவளில் வந்தமைந்த பிறிதொரு தெய்வத்திற்குரியதென ஒலித்தது. “அரசே, நீங்கள் இதுவரை இழைத்த அறக்கொலைகள் பல. மூத்தவர் பீமசேனனை கால்கைகளைக் கட்டி கங்கையில் இட்டது முதல்பெரும் பழி. பாண்டவர்களையும் அன்னையையும் வாரணவதத்தில் மாளிகையுடன் எரித்தழிக்க முயன்றது இரண்டாவது பெரும்பழி. பாரதவர்ஷம் இதுவரை கண்ட பழிகளில் முதன்மையானது பொற்பரசியை அவைநடுவே ஆடைபற்றி இழுக்கச்செய்தது.”

கரிய படம்எடுத்து நின்றிருக்கும் பெருநாகமென அவள் தோன்றினாள். “அதன்பொருட்டு உங்கள் நெஞ்சு பிளந்து புழுதியில் கிடக்குமென்றால், உங்கள் உடன்பிறந்தார் அனைவரும் தலையுடைந்து களம்படுவார்கள் என்றால் உங்கள் குருதிவழியில் ஒருவர்கூட எஞ்சாமல் பெயர்மட்டுமே எஞ்சுமென்றால் அதுகூட அப்பழியை நிகர் செய்யாது. அதை கழுவ பாரதவர்ஷம் மும்முறை குருதியாடியாகவேண்டும். குண்டலம் கொண்ட தலைகள் மணற்பருக்கள் என விழுந்துருண்டாகவேண்டும். அது அவள் வஞ்சம் அல்ல. எங்கள் வஞ்சம். உங்கள் அகத்தளத்து மாந்தரும் உங்கள் குருதியிலெழுந்த மகளும் உங்கள் குடிகள்தோறும் அமைந்த அத்தனை மகளிரும் கொண்டிருக்கும் பெருவஞ்சம் அது.”

“அவள் அனைத்தையும் கடக்கக்கூடும். இங்குளச் சிறுமாந்தர் தலைக்குமேல் மலைமுடியென சொல்லின்மை சூடி அவள் எழக்கூடும். அங்கிருந்து குனிந்துநோக்கி அன்னையென உங்கள் அனைவரையும் அவள் பொறுத்தருளவும்கூடும். கொற்றவையும் அம்பிகையும் ஒருவரே என்று கற்ற எவருக்கும் அது வியப்பளிக்காது. ஆனால் நான் வெறும் பெண். கருவுற்று மடிநிறைத்து முலையூட்டியவள். என்னால் ஒரு கணமும் ஒரு நிலையிலும் உங்கள்மேல் கனிவு கொள்ளமுடியாது. நீங்கள் களம்பட்டுச் சிதைந்து கிடந்தால் அவள் அள்ளிக் குழல்புரட்டிய வெங்குருதியின் எச்சத்தில் ஒரு துளி தொட்டு என் நெற்றியில் அணியவும் தயங்கமாட்டேன்” என்றாள் துச்சளை.

“இங்கு நான் வந்தது உங்களுக்காக அல்ல. உங்களை இனி என் நா மூத்தவரே என அழைக்காது. அழைக்கவேண்டும் என எண்ணி முடிவெடுத்தே இந்நகர் புகுந்தேன். ஆயிரம்முறை என் நாவுக்கு ஆணையிட்டேன். என்னால் இயலவில்லை.” அவள் குரல் இடறியது. இதழ்களை மடித்து தன்னை கட்டுப்படுத்திக்கொண்டாள். நெஞ்சை வலக்கையால் அழுத்தியபடி “நான் வந்தது முதன்மையாக என் தந்தைக்காக. அவர் அங்கிருக்கும் நிலை என்னை பிச்சியாக்குகிறது. அது இறப்புக்கு முந்தைய உயிர்த்துடிப்பு போலிருக்கிறது. அந்தப் பெருவலியை ஒரு மானுட உயிருக்கல்ல, எவ்வுயிருக்கும் எந்நிலையிலும் எவரும் அளிக்கலாகாது” என்றாள்.

“ஆம், இப்புவி அறத்தால் ஆளப்படவில்லை என நான் அறிவேன். இங்கே ஆற்றொணாக் கண்ணீர் சொட்டாத நாளே இல்லை என்றும் அறிவேன். ஆயினும் இதை தெய்வங்கள் சூழ்ந்துள்ளன என்றே நான் எண்ணுகிறேன். எவற்றுக்கும் இறுதிஎல்லை என ஒன்றுண்டு, அரசே. அவ்வெல்லையை கடக்கிறீர்கள். இப்புவியில் மட்டுமல்ல அங்கு மேலுலகிலும் நிகர்செய்யவியலாத பெரும்பழியை அடையவிருக்கிறீர்கள். வேண்டாம்… உங்களிடம் மன்றாட வரவில்லை. உங்களுக்கும் எனக்கும் உறவென ஒன்றுமில்லை. உங்கள் அன்னையின் வடிவாக இங்கு வந்துள்ளேன். இது அவர் குரல் என அறிக!”

“நீங்கள் பெறவிருப்பது தந்தையின் தீச்சொல் அல்ல… உங்கள் இருண்ட உள்ளத்தில் இக்குரல் வந்தடையுமென்றால் உணர்க, உங்கள் தந்தை எந்நிலையிலும் உங்கள்மேல் வஞ்சம் கொள்ளமாட்டார். ஒருபோதும் உங்களைப் பழித்தொரு சொல் உரைக்கமாட்டார். ஆனால் அவர் வாழும் உள்ளம் என் அன்னையுடையது. தன் இறுதிப்பொறையையும் திரட்டி கட்டுப்படுத்தி அமர்ந்திருக்கிறார் அவர். அவர் ஒரு சொல் உரைத்தால் அது உங்கள் குலமழிக்கும். கொடிவழிகளின் இறுதித்துளிவரை நின்று கொல்லும் நஞ்சாகும். அதை ஏற்காதொழிக! அதைமட்டுமே சொல்லவந்தேன்.”

ஓங்கிய அவள் குரல் மீண்டும் தளர்ந்தது. இருமுறை செருமி மூச்சிளைத்து பின் சொல்லெடுத்தபோது அது துயர்நனைந்து குழைந்திருந்தது. “ஏனென்றால் நான் இடையில் தூக்கி வளர்த்த மைந்தர்கள் அவர்கள். ஆயிரம் கருமணிகள். என் மூதாதையரின் ஆயிரம் கருவிழிகள். அவர்கள் ஏதுமறியாதவர்கள். நீங்கள் ஆடும் இந்தப் பழியில் ஒருதுளியைக்கூட அவர்கள் இன்னும் தொட்டிருக்கவில்லை. அன்புகாட்ட மட்டுமே அறிந்த வேழக்குழவிகள். அவர்கள் ஒவ்வொருவரிலும் மலரும் சிரிப்பை மட்டுமே இப்போது விழிமுன் காண்கிறேன். ஆயிரம் வெண்பல்நிரைகள். ஆயிரம் வெண்மலர்கள்போல என சூதர்கள் பாடுவதுண்டு அவற்றை…”

“ஆனால் தெய்வங்களுக்கு மானுட நெறிகள் இல்லை. அவர்கள் இடியென மின் என புயல் என இரக்கமற்ற நெறிகளால் ஆளப்படுபவர்கள். உங்கள் பழிக்கு அவர்களையும் சேர்த்து அழிப்பார்கள். சொல்லன்றி ஏதும் எஞ்சாமல் செய்வார்கள்… உங்களை தலைமேற்கொண்டமைக்காக உங்கள் குடிகளும் நகரும் முற்றழிவர்… அரசே, உங்கள் மைந்தருக்காக, குடியினருக்காக இங்கு வந்து நின்றிருக்கிறேன். இது இறுதிக்கணம். உங்கள் தந்தையைத் துறந்தால் நீங்கள் துறப்பது அனைத்தையும்தான்.”

அவள் சொல்லறுந்து நின்று, சொற்கள் அளித்த விசை முற்றழிய விழப்போகிறவள் என மெல்ல ஆடினாள். கண்களை மூடி விரல்களால் இமைகளை அழுத்திக்கொண்டாள். மூச்சில் நெஞ்சு எழுந்தமைந்தது. இளையோர் அனைவர் விழிகளும் துரியோதனனிலேயே ஊன்றியிருந்தன. அவன் விழிகள் அவளை நோக்கிக்கொண்டிருந்தன, ஆனால் செவி ஒலியேற்கிறதா என்று ஐயமெழுந்தது. அப்பால் சூதர்கள் எழுந்து அசைவிலாது நின்றனர். அனைவரும் அவள் சொற்களை கேட்டுவிட்டிருந்தனர்.

துரியோதனன் தொண்டையை இருமுறை கனைத்தான். பின்னர் தாழ்ந்த குரலில் “நன்று. உன் குரல் எனக்கு புதிதல்ல, சைந்தவி” என்றான். “என்னுள் எப்போதுமே அறச்சொற்கள் உன் குரலில்தான் எழுகின்றன என நீ அறியமாட்டாய். ஏனென்றால் அறமென்று இங்குள்ள அனைத்தையும் இளமையில் உன் நாவிலிருந்தே நான் கற்றிருக்கிறேன்” என்றான். அவன் சிறுபுன்னகை செய்தான். விழிகளில் அப்புன்னகை இல்லாமல் அவை இருளை வெறித்திருந்தன. “இதைவிட நூறுமடங்கு தெளிவுடனும் உணர்வுடனும் நீ என்னுள் இருந்து பேசிக்கொண்டே இருந்தாய். உன்னைக் கடந்துசென்றே இம்முடிவை நான் எடுத்தேன்.”

“ஏனென்றால் என் திசை இது. என் நினைவறிந்த நாள் முதலே கண்முன் கண்ட ஊழ் இது. என்னை அள்ளிச்செல்லும் பேராற்றுப்பெருக்கு. இதைத் தவிர்க்கவும் உன்னருகே வந்தமையவுமே வாழ்நாளெல்லாம் முயன்றேன். இப்போது அறிகிறேன், வேறுவழி இல்லை. தெய்வங்களுக்கு மானுடன் தலைகொடுத்தே ஆகவேண்டும். போரிடுவதனால் அவன் தன் அகத்தை சிதைத்துக்கொள்வதன்றி எப்பயனும் இல்லை. முற்றளிக்கவேண்டும், மிச்சமின்றி ஆகவேண்டும். அதுவே நிறைவு. அது அழிவென்றாலும் பெரும்பழி என்றாலும் மற்றுலகின் மீளா இருளென்றாலும் மாற்றுச்செலவென ஏதுமில்லை. ஆகவே இதை தேர்ந்தேன்.”

“இதை வகுத்த தெய்வங்கள் விழைவனவற்றை இயற்றுக! அவர்கள் இப்புவியை ஆள்பவர்கள். இங்குள்ள அனைத்தையும் இயற்றுபவர்கள். கிளிக்குஞ்சை கிழித்துண்ணும் கூருகிர் கழுகில் குடிகொள்பவர்கள். மலைகளைப் பிளந்து சரிக்கும் பேராற்றல்கள். காட்டெரியில் சுழல்புயலில் குடிகொள்பவர்கள். அவர்கள் வெல்க!” என்றபடி துரியோதனன் எழுந்தான். “கருவுக்குள் புகுந்து என் மூடிய விழிக்குள் நோக்கி ஆட்கொண்டது என் தெய்வம். அன்னையும் தந்தையும் சுற்றமும்கூட அதற்குப் பின்னரே என்னை வந்தடைந்தனர். நான் அவனுக்குரியவன். அதில் மாற்றெண்ணமே இல்லை.”

“நான் உன் சொற்களனைத்தையும் முற்றிலும் உணர்ந்து என் முடிவை மீண்டும் உறுதிசெய்கிறேன், சைந்தவி” என்று அமைதியான குரலில் துரியோதனன் சொன்னான். மீண்டும் புன்னகைத்து “நான் இன்னும் சற்றுநேரத்தில் தலைகொடுக்கவிருக்கிறேன். என் தெய்வத்திடம் இனி உரையாடுக இவ்வுலகம்” என்றான். அவன் புன்னகை எத்தனை பேரழகு கொண்டிருக்கிறது என ஓர் எண்ணம் அவளுள் எழுந்ததும் மெய்ப்பு கொண்டாள்.

துரியோதனன் “இளையோனே…” என்றான். “மூத்தவரே” என்றான் துர்மதன். “ஆவன நிகழ்க!” என்றான் துரியோதனன். “ஆணை” என துர்மதன் தலைவணங்கி கைவீச கைமுழவுகளும் உடுக்குகளும் மீண்டும் ஒலிக்கலாயின. சூதர்களும் பூசகர்களும் தங்கள் பணிகளை தொடர்ந்தனர். துச்சலன் “தாங்கள் ஒருங்கவேண்டும், மூத்தவரே” என்றான். “ஆம்” என்று துரியோதனன் அவனுடன் சென்றான்.

துச்சளை பெருமூச்சுடன் உடல்தளர்ந்தாள். அதுவரை இருந்த பதற்றம் முற்றாக விலக உடலில் அனைத்து தசைகளும் தளர்ந்தன. எங்காவது அமர்ந்து உடல்நீட்டினால் அப்படியே துயின்றுவிட முடியும் என்று தோன்றியது. அருகே நின்ற காவலனை கைசுட்டி அழைத்தாள். அவன் வந்து பணிந்ததும் “காட்டுக்குள் விகர்ணரும் அவர் அரசியும் நின்றிருக்கிறார்கள், அழைத்து வருக!” என ஆணையிட்டபின் மெல்ல நடந்து அங்கே நின்ற மரத்தை பற்றிக்கொண்டு உடல் தாழ்த்தி கையூன்றி அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டாள்.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 39

பகுதி ஆறு : பொற்பன்றி – 4

bl-e1513402911361காந்தாரியின் அறைமுன்னால் வெளியேவந்து துச்சளையை கைபற்றி அழைத்துச்சென்ற சுதேஷ்ணை “என்னடி களைத்துப்போயிருக்கிறாய்?” என்றாள். துச்சளை “நானா? நன்றாகத்தானே இருக்கிறேன்” என்றாள். “கண்கள் கலங்கியவை போலிருக்கின்றன” என்றாள் சுதேஷ்ணை. “இங்கே நிகழ்வனவற்றை கேட்டால் சிரிப்பா வரும்? வாடி” என்று தேஸ்ரவை அவள் இன்னொரு கையை பற்றினாள். தசார்ணை தாரையிடம் “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றாள். “பேரரசரை பார்க்கச் சென்றோம்” என்றாள் தாரை. எப்படி இருக்கிறார் என அவள் கேட்பாளென தாரை எண்ணினாள். ஆனால் “வா” என்று மட்டும் தசார்ணை சொன்னாள்.

காந்தாரியின் அறைக்குள் சத்யசேனையும் சத்யவிரதையும் இருந்தார்கள். சத்யசேனை “வாடி…” என்றாள். துச்சளை அருகே சென்று காந்தாரியின் கால்களை தொட்டாள். காந்தாரியின் கைகள் நீண்டுவந்து அவள் தலையை தொட்டன. பின்னர் மெல்ல சரிந்து மெத்தைமேல் அமைந்தன. துச்சளை “தந்தையை பார்க்கச் சென்றேன், அன்னையே” என்றாள். “என்ன சொல்கிறார்?” என்றாள் காந்தாரி. “அழுதார்” என்றாள் துச்சளை. “ஆம், எப்போதும் அழுகிறார். எவரை நோக்கினாலும் மைந்தனிடம் சென்று பேசும்படி கோருகிறார்” என்றாள் காந்தாரி. துச்சளை “என்னிடமும் சொன்னார்” என்றாள்.

“நாம் என்ன செய்ய முடியும்?” என்று சொல்லி காந்தாரி பெருமூச்சுவிட்டாள். துச்சளை சத்யசேனையை நோக்க அவள் மெல்ல அப்பேச்சை ஒழியும்படி வாயசைத்தாள். “ஊழ் என்பார்கள். ஆனால் கண்ணெதிரே தெரிவது ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தவரை அதை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதுதான், அங்குதான் மீட்பும் இறைவனும் இருப்பதைப்போல” என்ற காந்தாரி கையசைத்து “அதை விடுக… சைந்தவர் எங்கிருக்கிறார்?” என்றாள். துச்சளை அதற்கு மறுமொழி சொல்லவில்லை. சில கணங்கள் பொறுத்துவிட்டு காந்தாரி அதை அப்படியே கடந்து “ஓய்வெடுத்தாயா? அப்படியே வந்துவிட்டவள் போலிருக்கிறாய்” என்றாள்.

துச்சளை “ஓய்வெடுக்கவேண்டும்… பொழுதிருக்கிறதே” என்றாள். காந்தாரி “நாளை காலை பிரகதியையும் பார்த்துவிடு” என்றாள். துச்சளை வியப்புடன் சத்யசேனையை பார்க்க அவள் புன்னகை செய்தாள். காந்தாரி “அவள்தான் இதற்காக முயற்சி செய்தாள். நான் சென்று அதன்பொருட்டு அவளிடம் பேசினேன்” என்றாள். துச்சளை பெருமூச்சுடன் “ஆம், அனைவரும் முயற்சி செய்யவேண்டியதுதானே” என்றாள். அத்துடன் அனைத்துச் சொற்களும் முடிந்துவிட அவர்கள் வெறுமனே அமர்ந்திருந்தார்கள்.

கலைந்தவள்போல துச்சளை “நான் கிளம்புகிறேன், அன்னையே. மூத்தவரை நாளை துயிலுக்குப் பின் நல்லுள்ளத்துடன் பார்க்கலாமென எண்ணுகிறேன்” என்றாள். “ஆம், களைத்திருப்பாய்” என்றாள் காந்தாரி. துச்சளை மீண்டும் அன்னையின் காலடிகளை வணங்கிவிட்டு எழுந்துகொண்டாள். தாரை ஏமாற்றமாக உணர்ந்தாள், ஆனால் அவ்வாறுதான் அது நிகழுமென்பதையும் முன்னரே அவள் உணர்ந்திருந்தாள். துச்சளை அன்னையரை தனித்தனியாக வணங்கி விடைபெற்றுக்கொண்டாள்.

அறையை விட்டு அவர்கள் வெளியே வந்தபோதுதான் அப்பால் சம்ஹிதையும் சுஸ்ரவையும் நிகுதியும் சுபையும் ஓடிவருவதை கண்டார்கள். சுஸ்ரவை அருகே வந்து அவள் கைகளை பற்றிக்கொண்டு “அரசப்பணிக்காக மூத்தவர் அழைத்திருந்தாரடி. இப்போதுதான் வரமுடிந்தது” என்றாள். நிகுதி “என்னடி உடனே கிளம்பிவிட்டாய்?” என்றாள். “நான் களைத்திருக்கிறேன். சற்று ஓய்வெடுக்கலாம் என்று…” என்றாள் துச்சளை. “ஆம், களைத்திருப்பாய்… நீண்ட பயணம். செல்க!” என்றாள் சம்ஹிதை. அவர்களிடம் ஓரிரு சொற்கள் பேசிவிட்டு துச்சளை நடந்தாள்.

தாரை உடன் சென்றாள். “மெய்யாகவே களைப்பாக இருக்கிறதடி” என்றாள் துச்சளை. “ஆம், அரசி. ஒருநாளில் ஏராளமான சந்திப்புகள், பற்பல உணர்வுநிலைகள்” என்றாள் தாரை. “அதல்ல…” என்று சற்று தயங்கிய துச்சளை “நான் அங்கிருக்கையில் எல்லாம் அன்னையைப்பற்றியே எண்ணிக்கொண்டிருப்பேன். இங்கே இருக்கையில் எப்படி மகிழ்ந்திருப்பேன் என உளம்விரிப்பேன். ஆனால் ஒவ்வொருமுறையும் இங்கே நுழையும் கணம் வரை உளப்பெருக்கையும் சந்திப்புகளின்போது உறைதலையும்தான் உணர்கிறேன்” என்றாள். தாரை “எனக்கும் அவ்வாறுதான். மச்சநாட்டில் இருப்பதைப்போல கனவு வராத நாளே இல்லை. ஆனால் அங்குசென்றால் மறுநாளே கிளம்பிவிடத் தோன்றும்” என்றாள்.

“நமக்கு பிறந்தவீட்டில் இடமில்லை, நம்மை வெளித்தள்ளி அவர்கள் வேறொரு உலகை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் நமக்கு நுழைவொப்புதல் இல்லை. நாம் நுழைந்தால் அவர்கள் திகைக்கிறார்கள். அயலவர் என முறைமைச்சொல் உரைக்கிறார்கள். விழிகள் நீ ஏன் இங்கு வந்தாய் என கேட்டுக்கொண்டே இருக்கின்றன” என்றாள் துச்சளை. “நாம் திரும்ப நினைப்பது உண்மையில் நம் இளமைக்கு. அதை இங்கே விட்டுவந்துள்ளோம் என எண்ணிக்கொள்கிறோம். அது இங்கில்லை, சென்றவை அனைத்தும் கரைந்துமறையும் தொடுவானில் உள்ளது. எதுவும் மீளமுடியாத முடிவிலி அது” என்றபின் துச்சளை பெருமூச்சுவிட்டு “சற்று துயில்கொள்ளவேண்டும்… நீ சென்று ஓய்வெடு” என்றாள்.

துச்சளையின் அறைவாயிலில் சாரிகை காத்து நின்றிருந்தாள். “மஞ்சம் ஒருக்கிவிட்டேன், அரசி. இரவுணவும் காத்துள்ளது” என்றாள். “வேண்டியதில்லை… நான் நேராகவே துயில்கொள்ளவிருக்கிறேன்” என்றாள் துச்சளை. “அக்கையே, நீங்கள் இன்றிரவு எதை கனவுகாண்பீர்கள் என எனக்குத் தெரியும்…” என்றாள் தாரை. துச்சளை “நீ என்ன எண்ணுகிறாய் என புரிகிறது. ஆனால் மெய்யாகவே எனக்கு அது உள்ளத்தின் ஆழத்திற்குள் சென்று மறைந்துவிட்டது. அது ஓர் அலைக்கழிப்பாக இருக்கும்வரைதான் இருப்புகொண்டிருந்தது. விடைபெற்றதுமே ஏதுமில்லை என்றாகிவிட்டது” என்றாள்.

“ஏதுமில்லை என்றா?” என்றாள் தாரை. “அவ்வாறல்ல, அது ஒரு நிறைவு. ஒரு நல்ல நினைவு. அதற்கப்பால் இன்று ஒன்றுமில்லை” என்றாள் துச்சளை. “என்ன நிறைவு? நீங்கள் எவருக்கும் பிழையிழைக்கவில்லை என்பதா?” என்றாள் தாரை. “அல்ல, அப்படி நான் எண்ணியிருந்தேன், அதுவல்ல. என்மேல் இன்னமும் அது அங்கே உள்ளதா என்ற நிலைக்கழிவுதான். அது நிறைவுற்றுவிட்டது” என்ற துச்சளை புன்னகையுடன் அவள் தோளில் கைவைத்து “அது அமைந்ததுமே இது மேலெழுந்துவிட்டதடி… இன்றிரவு நான் தந்தையை எண்ணி துயில்நீப்பேன் என நினைக்கிறேன்” என்றாள்.

“அன்னை ஏன் தந்தையைக் குறித்து அத்தனை விலகல் கொண்டிருக்கிறார்?” என்றாள் தாரை. “அவர்கள் எப்போதுமே அப்படித்தான். அவர்கள் அறிந்த அந்த முதல் திருதராஷ்டிரரை தன் விழிகளுக்குள் நிறுத்தி மேலே இறுக்கமாக கட்டுபோட்டுக் கொண்டார்கள். அதன்பின் அவர்கள் தந்தையை நோக்கியதே இல்லை. அந்த பாவையை கணவனென எண்ணி அதில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு தந்தையை மெய்யாகவே தெரியாது” என்றாள் துச்சளை. “ஆம், நானும் அவ்வாறே எண்ணினேன். அவர்கள் பதின்மரும் ஒரு குழுவாக இருப்பதனாலேயே பிறரில்லா உலகொன்று அமைந்துவிட்டது” என்றபின் “வருகிறேன், அக்கையே” என்று சொல்லி தாள்தொட்டுவிட்டுச் சென்றாள் தாரை.

துச்சளை அறைக்குள் நுழைந்து மஞ்சத்தில் அமர்ந்தாள். சாரிகை அவளுடைய கடகங்களையும் சிலம்புகளையும் குழைகளையும் பதக்கமாலையையும் சரப்பொளி மாலையையும் கழற்றி ஆமையோட்டுச் செப்பில் இட்டு அப்பால் வைத்தாள். ஒரு மரச்சீப்பைக்கொண்டு அவள் உள்ளங்கால்களையும் முழங்கால்களையும் அழுத்தமாக வாரிவிட்டாள். கண்களை மூடி அவள் அந்த மெல்லிய வலியின் இனிமையை அறிந்தாள். உடலெங்கும் முடிச்சிட்டுக்கொண்ட நரம்புகள் மெல்ல பிரிந்து தளர்வதை உணர்ந்தாள். மனம் எண்ணைப்பரப்பில் என வழுக்கி வழுக்கி எதிலோ ஏற முயன்றது.

செல்லும்போது தான் சொன்னது அல்ல மெய், எஞ்சிய ஏதோ ஒன்றுதான் என தாரை உணர்வாள் என்று தோன்றியது. தான் சொன்னதுமல்ல என இன்னொரு எண்ணம் அவளுக்குள் வந்தது. உள்ளத்தை நுணுகி ஆராய்வதெல்லாம் எவையெவை பொய் என்றும் பொருத்தமில்லாதவை என்றும் வகுத்துக்கொள்ளவே. உள்ளத்தை மொழிகொண்டு அள்ளவே இயலாது. எது அப்பாலிருக்கிறதோ அதுவே அனைத்தையும் ஆளும் உண்மை.

அதைத்தான் பிரம்மத்தைக் குறித்தும் சொல்கிறார்கள் என்று எண்ணியதும் அவளுக்கு புன்னகை வந்தது. “அரசி?” என்று சாரிகை கேட்டாள். “ஒன்றுமில்லையடி… ஏதோ எண்ணம்” என்றபின் அவள் தலையைத் தொட்டு “நீ படுத்துக்கொள்… உணவருந்தினாயா?” என்றாள். “இல்லை” என்றாள் சாரிகை. “சென்று உணவருந்தி மீள்க… நான் துயில்கிறேன்” என்றபின் அவள் மெல்ல கையூன்றி படுத்தாள். எப்போதுமே மல்லாந்து படுக்கையில் உணரும் எடையின்மை. முதுகெலும்பு சுமை ஒழிந்து விடுதலை கொள்கிறது. அவ்வுணர்வு உடலெங்கும் பரவும். உள்ளமும் ஓய்வுகொள்ளும்.

கைகால்கள் தளரத் தொடங்கின. எண்ணங்கள் எங்கெங்கோ சிக்கி நின்றன, முள்வெளியில் பரவிய பஞ்சுத்துகள்கள். மெல்லிய தென்றல் ஒன்றை அவள் உணர்ந்தாள். புன்னகையுடன் தன் முகம் விரிந்திருப்பதை உள்ளிருந்து அறிந்தாள். மூச்சுஅடைத்து உடல் உலுக்கிக்கொண்டபோது சற்று புரண்டு ஒருக்களித்துப் படுத்தாள். துயிலில் அவள் புன்னகைப்பதை சாரிகை நோக்கி நின்றாள். பின்னர் அவள் ஆழ்துயிலில் மூழ்கியதை ஓங்கிஎழுந்த குறட்டை காட்டியது.

bl-e1513402911361பின்னிரவில் தன்னை சாரிகை தட்டி எழுப்பியதைக்கேட்டு துச்சளை எழுந்து அமர்ந்தாள். சிந்துநாட்டில் இருப்பதாக எண்ணிக்கொண்டு “என்ன ஆயிற்று? என்ன?” என்றாள். “அரசி, இளைய அரசி தாரை வந்துள்ளார்” என்றாள். “இப்போது பொழுதென்ன?” என்றாள் துச்சளை. “பின்னிரவு அரசி… முதற்சாமம்.” துச்சளை “வரச்சொல்” என்றபடி எழுந்து நின்று கூந்தலைச் சுழற்றிக் கட்டினாள். அவளுடைய அணிகளை சாரிகை எடுத்து அளிக்க ஒவ்வொன்றாக அணிந்துகொண்டிருக்கையில் தாரை உள்ளே வந்து வணங்கினாள்.

“அரசி, அரசர் இன்று காலைதான் கலிதேவனுக்கான தலைக்கோள் சடங்கை செய்கிறார்.” துச்சளை “யார் சொன்னது?” என்றாள். “சற்றுமுன் என் தலைவர் வந்தார். பதற்றம் கொண்டிருந்தார். அவரை வடக்குக்கோட்டைக் காவலுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அங்கே புராணகங்கையில் இருந்து சில பூசெய்கைப் பொருட்களை ஓர் அந்தணர் குழு கொண்டுசென்றது. அவர்களனைவரும் கருநிறப் பட்டை கச்சையாகக் கட்டியிருப்பதைக் கண்டு ஐயுற்று அங்கே அவர்களுக்கு உதவிசெய்த முதியவரிடம் கேட்டிருக்கிறார். புலர்காலையில் நிகழும் ஓர் அரண்மனைப் பூசெய்கைக்காக கொண்டுசெல்வதாக சொல்லியிருக்கிறார்கள். பன்னிரு கருநாகங்கள் அவை…”

துச்சளை “அவை எதற்கு?” என்றாள். “அவை கலிதேவனுக்குரியவை. பூசெய்கைக்கெனவே கொண்டுசெல்லப்படுகின்றன. ஐயமே இல்லை” என்று தாரை சொன்னாள். “நான் உடனே நூல்களை ஆராய்ந்தேன். கலிதேவனுக்குரிய கராளகம் என்னும் பூசெய்கைக்குரிய பொருட்கள் அவை… கலிங்கப்பூசகர் எங்கே இருக்கிறார்கள் என்று என் கொழுநர் உடனே ஆராயச் சொல்லியிருக்கிறார். அவர்கள் அந்தியிலேயே மேற்குக்காட்டுக்கு சென்றுவிட்டதாக சொன்னார்களாம். உறுதிசெய்துகொண்டு இங்கே ஓடிவந்தார்.”

“என்னடி செய்வது?” என்று துச்சளை கேட்டாள். “நாம் இறுதி முயற்சி ஒன்றை செய்யலாம், அரசி. பேரரசர் கோரிய பின்னர் நாம் அதை செய்யவில்லையே என்னும் உளக்குறை நமக்கு உருவாகாது. அதன்பின்னர் இறைவழி” என்றாள் தாரை. “ஆனால்…” என துச்சளை தயங்க “அங்கே பூசெய்கை நிகழுமென்றால் செல்லும் வழி முழுமையாகவே காக்கப்பட்டிருக்கும். இப்போதே நாம் கிளம்பினால் அரண்மனையிலிருந்து மேற்குக்காட்டுக்குள் செல்லும் சுரங்கப்பாதை வழியாக அங்கே செல்லலாம். சற்று சுற்றிச்செல்வதாக இருந்தாலும் அங்கே சென்றடைந்துவிட முடியும். என் தலைவருக்கு அப்பாதை தெரியும்… அது கோட்டைச்சுவருக்கு அடியிலேயே செல்கிறது” என்றாள் தாரை.

உடலில் குடியேறிய பரபரப்புடன் துச்சளை “செல்வோமடி” என்று கிளம்பினாள். உடனே திரும்பி “என் முத்திரைக்கணையாழியை எடு” என்றாள். சாரிகை “நானும் வரமுடியாதல்லவா, அரசி?” என்றாள். “அரசகுடியினரன்றி பிறர் அந்தப் பாதையை அறியலாகாது” என்று தாரை சொன்னாள். “அவ்வாறென்றால் உடல்கொதிப்பு ஆற்றும் சூர்ணங்களை எடுத்துக்கொள்ளுங்கள், அரசி. நெடுந்தொலைவு நடக்கவேண்டியிருக்கும்” என்று சாரிகை சொன்னாள். “விரைந்து எடு… உடனே” என்றாள் துச்சளை.

சாரிகை உள்ளே ஓட “நம்மால் என்னடி செய்யமுடியும்?” என்றாள் துச்சளை. “நாம் காலில் விழுவோம். முடிந்தால் அந்தப் பூசெய்கையை மங்கலக்குறை செய்து நிறுத்துவோம். இன்று நான் செல்லும் எந்தப் பூசெய்கையும் அவ்வாறாகும். மாதக்குருதிநாள் இன்று” என்றாள் தாரை. துச்சளை புரிந்துகொள்ளாமல் விழித்து நோக்கினாள். “செல்வோம் அரசி, நமக்கு பொழுதில்லை” என்று தாரை கிளம்பினாள். “ஆம்” என்று துச்சளை உடன் கிளம்ப கையில் மருத்துவத்தூள் கொண்ட தந்தச்சிமிழுடன் சாரிகை பின்னால் ஓடிவந்து “பெற்றுக்கொள்க, அரசி” என்றாள்.

அதை வாங்கி இடையில் செருகிக்கொண்டு துச்சளை உடலை உந்தி உந்தி நடந்தாள். “நாம் அகத்தறைக்குச் செல்லவேண்டும். கருவூலம் செல்லும் பாதையில் நம்மிடம் நிற்கச் சொன்னார். அங்கிருந்து மேலும் கீழிறங்கிச்சென்று அடித்தளத்து அறையிலிருந்தே சுரங்கத்திற்குள் செல்லவேண்டுமென எண்ணுகிறேன்” என்றாள் தாரை. “எப்படி எண்ணினாய் அதை?” என்றாள் துச்சளை. “நான் முன்னரே அதை ஒருவாறாக கணித்திருந்தேன். ஏனென்றால் இங்கு வந்தநாள் முதல் இந்த அரண்மனையை கலிங்கச் சிற்பநூல்களைக் கொண்டு புரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தேன்.” துச்சளை புன்னகைத்து “உனக்கு எதிலெல்லாம் ஆர்வம்?” என்றாள். “அனைத்திலும்… ஏனென்றால் நான் இங்கே ஆற்ற பணி என ஏதுமில்லை” என்றாள் தாரை.

அவர்கள் நாலைந்து இடங்களில் நின்று மூச்சுவாங்கித்தான் கருவூலத்திற்கு செல்லவேண்டியிருந்தது. இரவுக் காவலர்களின் விழிகளில் வியப்பு தெரிந்தது. “நாம் செல்வது சற்றுபொழுதுக்குள் விதுரருக்குத் தெரிந்துவிடும். கிளம்பும்போதே கணிகர் அறிந்திருப்பார்” என்றாள் தாரை. “நம்மை அவர்கள் செல்ல ஒப்புவார்களா?” என்று துச்சளை கேட்டாள். “அவர்கள் உய்த்தறியாதது ஒன்றே, என்னால் அரண்மனையின் சுரங்கப்பாதையை அறிந்துகொள்ளமுடியும் என்று… கணிகருக்கும் விதுரருக்கும்கூட அந்தப் பாதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை…” துச்சளை “மெய்யாகவா, நீயே கண்டுபிடித்தாயா? உன் கொழுநருக்குத் தெரியும் என்றாய்?” என்றாள். “அவருக்கு நான் சொன்னேன்” என்றாள் தாரை. துச்சளை புன்னகைத்து “நீ ஒரு அரசுமதியாளராக மலரவிருக்கிறாய்” என்று சொல்லி அவள் தோளை பற்றினாள்.

நெய்ப்பந்தங்கள் எரிந்த சிறிய இடைநாழியினூடாக அவர்கள் சென்றனர். வழி மறித்த வீரர்கள் துச்சளையைக் கண்டதும் தலைவணங்கினர். கருவூலத்திற்கு அருகே விகர்ணன் நின்றிருந்தான். அவர்களைக் கண்டதும் அருகே வந்து துச்சளையிடம் தலைவணங்கி “நீ சொன்ன குறிகளைக்கொண்டு சுரங்கப்பாதையின் தொடக்கத்தை கண்டறிந்துவிட்டேன்… அது ஒரு கற்சுவர். அதனருகே மூன்றுமுகச் சிம்மமும் அதன் காலடியில் புறாக்களும் இருந்தன” என்றான். “ஆம், அதுவேதான்” என்றாள் தாரை. “வருக, இங்கிருந்து இரண்டு நிலை கீழிறங்கவேண்டும்… மிகக் குறுகலான படிகள்” என்றான்.

“பிடித்துக்கொள்ளடி” என்று துச்சளை சொன்னாள். தாரை துச்சளையை தாங்கிக்கொண்டு ஒருவர் மட்டுமே செல்லுமளவுக்கு சிறிய கற்படிகளில் இறங்கினாள். “ஈரமாக உள்ளதா?” என்றாள் துச்சளை. “இல்லை அரசி, ஆழம் என்பதனால் ஊற்றுக்குளுமை கொண்டுள்ளது” என்று விகர்ணன் சொன்னான். “சுரங்கம் நான் செல்லுமளவுக்கு பெரிதாக இருக்குமல்லவா?” என்று துச்சளை கேட்டாள். “மாமன்னர் ஹஸ்தி சென்றிருக்கிறார் என்றால் எவரும் செல்லலாம்” என்று தாரை சொன்னாள். “ஆம்” என்று துச்சளை புன்னகைத்தாள். “எங்களுக்கு இத்தனை எடையை அவர்தான் விட்டுச்சென்றிருக்கிறார்.”

அந்தச் சுவர் அருகே வந்ததும் சுற்றுமுற்றும் நோக்கிய விகர்ணன் “என்ன செய்யவேண்டும், தாரை?” என்றான். “பொறுங்கள்” என்று முன்னால் சென்ற தாரை அந்தப் புறாக்களை எண்ணி அதன் பின் விரல்விட்டுக் கணித்து ஓர் எண்ணை அடைந்து சிம்மங்களைப்பற்றி ஒன்பதுமுறை அழுத்தினாள். மெல்லிய ஓசையுடன் பித்தளை உருளைகள்மேல் அமைந்த கற்பாளம் விலகி சுரங்கப்பாதையை காட்டியது. “உள்ளே இருளாக உள்ளதே, ஒளி வேண்டாமா?” என்றாள் துச்சளை. “விளக்கு தேவை, அது அங்கே கெடுகாற்றுகள் உள்ளனவா என்று அறிவதற்கும்தான்… சிறிய சுடர்கொண்ட நெய்விளக்கு மட்டுமே உள்ளே புகைவிடாதிருக்கும்” என்றாள் தாரை. விகர்ணன் “நான் கொண்டுவந்துள்ளேன்” என தன் தோல்பையை திறந்து உள்ளிருந்து பீதர்நாட்டு சிற்றகலை எடுத்தான். அதன் நெய்த்திரியை சுடர்பொருத்தி கையிலேந்திக்கொண்டு முன்னால் இறங்கி உள்ளே சென்றான். “மிகச் சிறிய படிகள், அரசி” என்றான்.

படிகளினினூடாக இறங்கும்போது “அறியாத இருளுலகு ஒன்றுக்கு செல்வதுபோல் உணர்கிறேன்” என்றாள் துச்சளை. தாரை “இந்தப் பாதையின் பெயரே காளநாகம் என்பதுதான். நாகத்தின் வாய்க்குள் நுழைந்துள்ளோம்” என்று சொன்னாள். விகர்ணன் மேலும் சென்றபின் “இதனூடாகச் செல்லவியலாது அரசி… மிகக் குறுகிய பாதை. படுத்துத் தவழ்ந்தாலொழிய எவரும் கடக்கமுடியாது” என்றான். தாரை அருகே சென்று குனிந்து நோக்கினாள். துச்சளை “ஆம், இது எனக்கான பாதை அல்ல” என்றாள். “தவழலாம், ஆனால் எத்தனை தொலைவு அப்படிச் செல்லமுடியும்?” என்று விகர்ணன் சொன்னான்.

“பொறுங்கள்” என்று தாரை சொல்லி “விளக்கை சுவர்களில் காட்டுக!” என்றாள். விகர்ணன் விளக்கொளியை சுவர்களில் பாய்ச்ச அவள் அங்கிருந்த சிறிய படங்களை நோக்கினாள். நாகங்கள், பலவகையான பறவைகள், ஆமைகள். விரல்தொட்டுச் சென்று ஒரு புள்ளியை அடைந்து அங்கிருந்த நீட்டுகல்லை மும்முறை அழுத்தினாள். அங்கே ஒரு கற்பாளம் கீழிறங்கியது. “அதற்குள் என்ன இருக்கிறது என்று நோக்குக!” என்றாள். விகர்ணன் உள்ளே நோக்கி “படைக்கலங்கள்… அல்ல, பித்தளை அடுமனைப்பொருட்கள்” என்றான். “அல்ல, அவை வெண்கலச் சகடங்கள்கொண்ட சிறிய மென்மர வண்டிகள். அதை வெளியே எடுங்கள்” என்றாள் தாரை.

அவன் அதற்குள் இருந்து வெண்கலத்தாலான பூண்களும் சகடங்களும் கொண்ட அமரும் மணை போன்ற நான்கு வண்டிகளை எடுத்து வெளியே போட்டான். “மூன்று போதும்” என்று தாரை சொல்ல ஒன்றை திரும்ப உள்ளே வைத்தான். தாரை மீண்டும் அந்தக் கல்லை அழுத்தி வாயிலை மூடினாள். “மிகச் சிறிய சகடங்கள். ஆனால் ஆற்றல் மிக்கவை” என்று விகர்ணன் சொன்னான். “சகடங்களும் ஆரங்களும் வெண்கலம் என்பதனால் மெழுகென உருளும்தன்மையும் கொண்டவை.” தாரை “இவற்றின்மேல் நெஞ்சையும் வயிற்றையும் அழுத்திக்கொண்டு கால்களை நீட்டி கைகளால் நீந்துவதுபோல உந்தி இப்பாதையில் செல்லவேண்டும். நன்று, அக்கை நடக்கவேண்டியதில்லை. மிக விரைவாக மறுபுறம் சென்றுவிடலாம்” என்றாள்.

துச்சளை “இப்பாதையில் சேறு இருந்தால் நாம் சிக்கிக்கொள்வோம்” என்றாள். “சேறு இருக்காது, அரசி. நன்கு தீட்டப்பட்ட கற்பாதையாகவே இருக்கும். இது செல்வதற்கான பாதை. வருவதற்கு வேறு பாதை உண்டு என எண்ணுகிறேன்” என்றாள் தாரை. “முதலில் நான் செல்கிறேன்” என்ற விகர்ணன் அந்தச் சிறிய வண்டியை எடுத்துப்போட்டு அதன்மேல் படுத்துக்கொண்டு மெல்ல கைகளால் உந்தினான். அது விரைந்து உருண்டு விசைகொண்டு இருளுக்குள் மறைந்தது. “அரசி, தாங்கள்” என்றாள் தாரை. “இறுதியாக நான் வருகிறேன்.”

எடைகுறித்து எப்போதும் கால்களில் இருக்கும் அச்சத்துடன் துச்சளை நடுங்கினாள். “அமர்ந்து உடலை மெல்ல அதன்மேல் அமைத்துக்கொள்க!” என்றாள் தாரை. “ஆம்” என்றபின் அவள் தாரையின் தோள்களை பற்றிக்கொண்டு மெல்ல அமர்ந்தாள். உடலை ஒருக்களித்து அந்த வண்டியின்மேல் படுத்தாள். பின் நெஞ்சை அழுத்தி குப்புறப்படுத்தாள். “கைகளை உடலுடன் சேர்த்துக்கொள்க! ஆடையை நன்கு அமைத்துக்கொள்க!” என்றாள் தாரை. “ஆம்” என்றாள் துச்சளை. வண்டியை மெல்ல உந்திச் செலுத்தினாள் தாரை. அது ஓசையே இல்லாமல் நழுவி இருளுக்குள் சென்றது. நெய்விளக்கை அணைத்துவிட்டு அவளும் வண்டியில் ஏறி தொடர்ந்து சென்றாள்.

வண்டிகள் மிக விரைவாகவே அகன்று சென்றுவிட்டிருந்தமையால் தாரை தனியாகவே இருளுக்குள் மூழ்கி அமிழ்ந்தாள். இருபுறமும் மென்மையாக்கப்பட்ட வளைந்த கற்சுவர் இருளுக்குள் இருண்ட மின்னாக சென்று மறைவதை, காதில் காற்றின் தீற்றலை உணர்ந்தாள். ஓரிடத்தில் நீர்த்துளிகள் அவள்மேல் விழுந்து தெறித்தன. மேலே மேற்குப்பகுதியின் ஏரி இருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டாள். சகடம் ஓசையிடவேயில்லை. கற்பாளங்களை அத்தனை இசைவாகப் பொருத்தி ஒற்றைக்கல் என ஆக்கியிருந்தனர். வண்டி விரைவழிந்து மெல்ல நின்றது. சுரங்கத்தின் மறு எல்லையில் வெளியுலகின் மெல்லிய ஒளி தெரிந்தது. விகர்ணன் துச்சளையை கைபற்றி மேலே இழுக்க அவள் மூச்சுவாங்கியபடி எழுந்து படிகளில் ஏறி அப்பால் சென்றாள்.

தாரை மேலேறியதுமே தன் ஆடைகளை சீரமைத்துக்கொண்டு அங்கிருந்த சிற்றறைக்குள் அந்த வண்டிகளை எடுத்துவைக்கும்படி சொன்னாள். அவன் தூக்கி வைத்ததுமே அவை உள்ளே ஒரு பாதையில் உருண்டு செல்லத் தொடங்குவதை கேட்க முடிந்தது. “அங்கு சென்று காத்திருக்கும் போலும்” என விந்தையுடன் துச்சளை சொன்னாள். “ஆம், இது இறங்குபாதை. ஆகவேதான் நாம் மிக விரைவாக வந்தோம்… நடந்து வந்திருந்தால் இத்தொலைவுக்கு நான்கு நாழிகை ஆகியிருக்கும்” என்றாள் தாரை.

அவர்கள் அந்தச் சிற்றறையின் மேலே வந்தபோதுதான் அது ஒரு சிறிய ஆலயத்தின் கருவறை என உணர்ந்தனர். ஏகன், த்விதியன், திரையம்பகன் என்னும் மூன்று காவல்தெய்வங்களின் மண்ணாலான பெருஞ்சிலைகள் வரிசையாக இருந்தன. அவர்கள் எழுந்த பாதை அதற்கு நேர்பின்னாலிருந்தது. வெளிவந்ததும் இன்னொரு கல்லை இழுத்து தாரை அதை மூடினாள். கருவறைக்கு வெளியே முற்றத்தில் பொழிந்திருந்த வானொளியில் இலைகளின் மின் விழிக்கு துலங்கியது.

விகர்ணன் தன் மூட்டையை எடுக்க “என்ன செய்கிறீர்கள்?” என்றாள் தாரை. “விளக்கு பொருத்துகிறேன். இது அடர்காடு. நாம் சற்றுதொலைவு செல்லவேண்டும்” என்று விகர்ணன் சொன்னான். “காட்டில் விளக்கொளியால் பயனில்லை… நாம் இருப்பதை அது பிறருக்கு காட்டும். நமக்கு எதையும் காட்டாது” என்றாள் தாரை. “விழிபழகினால் நம்மால் அனைத்தையும் பார்க்கமுடியும். வானத்தை மட்டும் பார்க்கவேண்டியதில்லை.” விகர்ணன் “நான் காட்டில் இதுவரை நடந்ததில்லை” என்றான்.

தாரையே அவர்களை வழிநடத்தி அழைத்துச்சென்றாள். துச்சளை சற்று நடந்தபின் “மெய்யாகவே விழிதுலங்கிவிட்டதடி… வேர்கள் நன்கு தெரிகின்றன” என்றாள். “எவ்விருளிலும் விழி நோக்கும், அக இருளில் அன்றி என்று எங்கள் குலப்பாடல் சொல்கிறது” என்றாள் தாரை. மிக இயல்பாக அவள் அவர்களை இட்டுச்சென்றாள். “தொலைவில் ஓநாயின் முனகல் கேட்கிறது. அங்கே மானுடர் வந்திருக்கிறார்கள்” என்றாள். “இங்கிருந்து தென்கிழக்காகச் சென்றால் நாம் அந்த இடத்தை அடைய முடியும். அங்குதான் கலிதெய்வத்தின் ஆலயம்.”

“நீ வந்திருக்கிறாயா?” என்றாள் துச்சளை. “இல்லை. ஆனால் இச்செய்தியை அறிந்ததுமே இவரிடம் ஒருமுறை பார்த்துவரச் சொன்னேன். இவர் சொன்னதைக்கொண்டு என் உள்ளத்தில் இந்த இடத்தை அடையாளப்படுத்திக்கொண்டேன்” என்றாள் தாரை. அவர்கள் காட்டுப்புதர்களினூடாக நடந்தனர். “கட்டுவிரியன் மணக்கிறது. சருகுகள்மேல் கால்வைக்க வேண்டாம். நான் வைக்கும் கால்தடங்களில் மட்டுமே உங்கள் கால்கள் பதிக!” என்றாள் தாரை. “உன்னுள் இருந்து மச்சர்குலக் கன்னி எழுந்துவிட்டாளடி” என்றாள் துச்சளை. “ஆம், மெய்யாகவே இப்போதுதான் விடுதலையையும் உவகையையும் அடைகிறேன். இனி இங்கே அடிக்கடி வருவேன்” என்றாள் தாரை.

காட்டுக்குள் செல்வது துச்சளைக்கும் உவகை அளித்தது. அவளுக்குள் இருந்த அலைக்கழிப்புகள் அனைத்தும் அகன்று உள்ளம் கூர்மைகொண்டிருந்தது. முழு விழிப்பிலிருந்த ஐம்புலன்களையும் தன்னை ஐந்தாகப் பகுத்துக்கொண்டு அது பின்தொடர்ந்தது. சிற்றொலிக்கே உடல் விதிர்த்தது. இலைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு மணம் கொண்டிருப்பதை மூக்கு உணர்ந்தது. ஒரு கூழாங்கல்லின் வளைவின் ஒளி சுடரென தெரிந்தது. “காட்டில் இருந்திருக்கவேண்டுமோ? நகர்களை அமைத்துக்கொண்டதுதான் அனைத்துத் துயர்களுக்கும் தொடக்கமோ?” என்றாள்.

“ஆம், அதையே நானும் உணர்ந்தேன்” என்றான் விகர்ணன். “துயரில்லாமல் மகிழ்ச்சியை தனித்துணரமுடியாது அரசி, ஆகவே எங்கும் மானுட உள்ளம் துயரை சமைத்துக்கொள்ளும்” என்று தாரை சொன்னாள். “நோக்குக, ஒரு மலைப்பாம்பு காத்திருக்கிறது.” துச்சளை அந்த மலைப்பாம்பின் விழிகளையே நோக்கிவிட்டாள். இரு பொருளற்ற நோக்குகள். இரு மணியொளித் துளிகள். அது காத்திருந்தது, தன் வாய்க்குரிய அளவுடன் தன்னை அணுகிவரும் இரைக்காக. “தொலைவில் உடுக்கொலி” என்றாள் தாரை. அவள் சொன்ன பின்னர்தான் மிக மெல்ல செவிப்பறையில் ஊசிமுனையால் தொடுவதுபோல அவ்வோசையை துச்சளை கேட்டாள்.

“ஒரு நாழிகையில் சென்றுவிடலாம்” என்றாள் தாரை. அவளைத் தொடர்ந்து செல்கையில் காலடியிலிருந்து பெரிய சாம்பல்முயல் ஒன்று துள்ளி விலகியது. வேர்ப்புடைப்பின்மேல் ஏறி செவி விடைத்து நோக்கி உடலதிர்ந்தது. உடலை நாண் என இழுப்பதுபோல குறுகி பாய்ந்து சென்றது. “இனி நாம் பேசவேண்டியதில்லை. பறவைகள் நம் அணுகலை அவர்களுக்கும் அறிவிக்கும்” என்றாள் தாரை. துச்சளை ஓர் அதிர்வை, பின்னர் உடலெங்கும் பரவிய மெய்க்கூச்செறிதலை உணர்ந்தாள். அவள் இரையையும் பார்த்துவிட்டிருந்தாள்.

நூல் பதினாறு – குருதிச்சாரல் -38

பகுதி ஆறு : பொற்பன்றி – 3 

bl-e1513402911361இடைநாழியில் நடந்துகொண்டிருக்கையில் துச்சளை முற்றிலும் தனிமைகொண்டிருந்தாள். அருகே வந்துகொண்டிருந்த தாரை அந்தத் தனிமையை உணர்ந்தவள்போல ஒரு சொல்லும் எடுக்கவில்லை. நின்று நின்று இளைப்பாறி நடுவே ஓர் இடத்தில் சிறுதிண்ணையில் அமர்ந்து ஓய்வெடுத்து அவள் தன் அறையை வந்தடைந்தாள். பீடத்திலமர்ந்து விழிமூடிக்கொண்டாள். அவள் நெற்றிநரம்புகள் புடைத்திருப்பதை தாரை கண்டாள். கிளம்பிவிடலாம் என எண்ணி அவள் உடலில் மெல்லசைவு எழுந்ததுமே துச்சளை விழிதிறந்து “தந்தையின் கைகள்” என்று சொல்லி புன்னகைத்தாள்.

அவள் விழிகள் சிவந்திருந்தன. “தந்தையின் கைகளுக்கு தயக்கமே இல்லை. விழியுடையோர் எவருக்கும் அத்தகைய தயக்கமின்மை கைகூடுவதில்லை” என்றாள். “இளமையில் நான் விரும்பியது அவருடைய கைகளைத்தான். என்னை அவர் தொட்டுத் தொட்டு வரைந்துகொள்கிறார் என்று எண்ணினேன். அவரால் வரையப்பட்டவள்தான் நான் என பின்னர் தெளிந்தேன்.” தாரை “ஆம், அவர் என்னை ஒருமுறை தொடமாட்டாரா என ஏங்கினேன்” என்றாள். “என் தந்தை அகவைமுதிர்வுக்கு முன்புதான் என்னை தொட்டிருக்கிறார். அதன்பின் அவர் என் நெற்றியை மட்டுமே வாழ்த்தும்பொருட்டு தொட்டார்.”

“ஆம், பெரும்பாலும் தந்தையர் மகளிரை தொடுவதில்லை” என்றாள் துச்சளை. “அவ்வகையில் நான் நல்லூழ் கொண்டவள்.” ஆனால் அவள் முகத்தில் இருந்த தவிப்பு மாறவில்லை. “அவர் இன்றிருக்கும் கெடுநரகு… நரகம் முடிவிலா இருளாலானது என ஏன் சொல்கிறார்கள் என்று இன்று உணர்ந்தேன்.” தாரை “அவர் இருக்கும் நிலையை நீங்கள் அரசரிடம் சொல்ல இயலும், அரசி” என்றாள். “நான் எப்படி சொல்வது? அவர் இருக்கும் நிலை…” என்றாள் துச்சளை. “அவரிடம் இன்று நீங்களோ பேரரசியோ மட்டுமே பேசமுடியும். அவரிடம் இப்போது அணுக்கமாக பெண்டிர் எவருமில்லை” என்றாள் தாரை.

அவள் சொல்வதை புரிந்துகொண்ட துச்சளை “நான் அரசியைப் பார்த்ததுமே அதை எண்ணினேன்” என்றாள். “அறுபடல்” என்றாள் தாரை. “ஆம், குருதி வடிவது இன்னமும் நிற்கவில்லை. அவள் அவர் மீது பெருங்காதல் கொண்டவள். அக்காதல் துளி குன்றாது அவ்வண்ணமே நீடிக்கிறது இப்போதும். அவள் மறையும் கணம்வரை அவ்வாறே நீடிக்கும். ஏனென்றால் அவர் அப்படிப்பட்டவர். சில ஆண்களை அவர்களின் பெண்கள் ஒருகணமும் அகல இயலாது” என்றாள். “ஆம்” என்றாள் தாரை விழிகளைத் தாழ்த்தி.

அவளை ஒருகணம் நோக்கிய பின் துச்சளை “முன்பொருமுறை சந்திரர் என்னும் நிமித்திகர் மூத்தவரின் பிறவிநூலை நோக்கும்பொருட்டு இங்கே வந்தார். அரசி ஆர்வத்துடன் அமர்ந்து அதை கேட்டாள். இப்புவி உயிரின் பெருங்கடல் என்று அவர் சொன்னார். துகள்கள், குமிழிகள், அலைகள். சில உயிர்கள் அவற்றில் பெருஞ்சுழிகள். சில பேரலைகள். சில ஆலமரங்களைக் காண்கையில் பிரம்மத்தைக் காண்பதுபோல் உள்ளம் எழுகிறது. ஆழியில் பேருருவத் திமிங்கலத்தைக் கண்டு மீண்ட சிலர் மெய்மையை சென்றடைந்தவர்களானதுண்டு என்றார்” என்றாள்.

“எங்கள் முகங்களை நோக்கியபின் நல்லோர் என்றோ தீயோர் என்றோ பகுப்பது நம் நலன் எனும் அளவுகோலைக்கொண்டே என்றார் அவர். பிரம்மம் ஆடும் நாற்களத்தில் சில காய்கள் கருமை, சில வெண்மை. இது ஒரு பேருயிர். பெருநதி சிறுநதிகளை தன்னுடன் இழுத்து இணைத்துக்கொள்ளும் ஆற்றல்கொண்டது. தன் விசையாலேயே தன் வழிகளை அமைத்துக்கொள்வது. அதை உங்கள் கைகளால் முழம்போட்டு அளக்கவேண்டாம், அதற்குமேல் ஒன்றும் சொல்வதற்கில்லை என்று சொல்லி சுருட்டி குழாயிலிட்டு திருப்பியளித்துவிட்டார்” என்றாள் துச்சளை.

“அரசி விழிதாழ்த்தி அமர்ந்திருந்தாள். ஒரு சொல்லும் எழவில்லை. நான் அவள் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தேன். மூத்தவரைப் பற்றிய அச்சொற்கள் எனக்கு அச்சமூட்டின. ஆனால் அவள் முகம் பெருங்காதலால் மலர்ந்து விழிகள் நீர்மைகொண்டு ஒளிவிட்டதை கண்டேன். அப்போது உணர்ந்தேன், அப்பெருஞ்சிலந்தியிடமிருந்து அவளுக்கு மீட்பே இல்லை என. அதன் நஞ்சை ஏற்று உடலளித்து ஓடாவதற்காக வலையை நாடி பறந்துவந்து சிறகுகளை அளித்தவள் அவள்” என்றாள் துச்சளை. தாரை “ஆம், நானும் அதை உணர்ந்திருக்கிறேன்” என்றாள்.

“ஆனால் அவருக்கு ஒரு பெண்தான்” என்றாள் துச்சளை. “தன்னுள் ஆழ்ந்த குறையுடையவன் மட்டுமே பெண்களை அள்ளி அள்ளி நிறைத்துக்கொள்கிறான். அவனுக்கு எப்போதுமே நிறைவதில்லை. அவருடைய உடலுக்கு மட்டுமே பெண் தேவை. அதற்கு ஒருத்தியே போதும்.” தாரை “ஆம், அக்கையே” என்றாள். “சென்று ஓய்வெடுத்து வா. நான் சற்றேனும் துயின்றாகவேண்டும். இன்றே தமையனை பார்க்கவேண்டும். அதற்கு முன்னர் அன்னையை பார்ப்பேன். இங்கே என்னால் ஏதேனும் நிகழ வாய்ப்பிருப்பின் நிகழ்க. அதன்பொருட்டு முழுமையாக முயலவேண்டியது என் கடன்” என்றாள் துச்சளை. “ஆம், நான் அந்தியில் உங்களை பார்க்கிறேன்” என்றாள் தாரை.

அவள் சோர்ந்து நடப்பதைக் கண்ட துச்சளை “என்னடி?” என்றாள். “ஒன்றுமில்லை, அரசி” என்றாள் தாரை. “நன்று… விகர்ணனையும் நான் பார்க்கவேண்டும். இளமையில் அவன் மீது எனக்கு இளக்காரம் கலந்த அன்பு இருந்தது. அவனும் குண்டாசியும் என்னுடைய களிப்பாவைகள் என்பார்கள்” என்றாள் துச்சளை. “அவரை அழைத்துவருகிறேன், அக்கையே” என்றாள் தாரை. “குண்டாசியையும் பார்க்கவேண்டும்” என்றாள் துச்சளை. தாரை “அமைச்சரிடம் சொல்கிறேன்” என்றபின் வெளியே சென்றாள்.

bl-e1513402911361துச்சளை தன் அறையிலிருந்து கிளம்பியபோதுதான் தாரை அப்பாலிருந்து ஓடிவருவதை கண்டாள். “என்னடி ஓடிவருகிறாய்? நில்” என்றாள் துச்சளை. “நான் சற்று துயின்றுவிட்டேன், அக்கை. அதற்குள் அரசப்பணி என்று சுரேசர் செய்தியனுப்பியிருந்தார். மச்சர்நாட்டு அரசர்கள் இருவர் நகர்புகுந்திருக்கிறார்கள். அவர்களை சந்தித்துவிட்டு ஓடிவந்தேன்” என்றாள். “விரைந்து வா… அதற்காக ஓடிவரவேண்டுமா என்ன?” என்றாள் துச்சளை. “இங்கே அரசியர் எவரும் ஓடமாட்டார்களடி.” தாரை “ஆம், என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் என்னால் ஓடாமலும் இருக்கமுடியாது” என்றபின் “ஓடும்போது மட்டும்தான் அக்கை, நான் மச்சநாட்டவள்” என்றாள்.

துச்சளை முகம்மலர்ந்து அவள் தோளில் கைவைத்து “ஓடு… உன்னை எவர் சொல்வது? எனக்குக்கூடத்தான் ஓடவேண்டுமென்று விருப்பம். கால்கள் அசைந்தால்தானே?” என்றாள். அவளுடன் வந்த சாரிகை “அரசி பேரரசியை சந்திக்கச் செல்கிறார்கள்” என்றாள். “நன்று, நானும் உடன் வரலாமல்லவா?” என்றாள் தாரை. “உன்னை அதற்குத்தானே வரச்சொன்னேன்” என்றாள் துச்சளை. “எனக்கும் அன்னைக்குமான உறவு எப்போதுமே பாறைவெடிப்புக்குள் நீர் புகுந்ததுபோல, எங்கு செல்கிறது எப்படி வெளிப்படுகிறது என எவராலும் சொல்லமுடியாது” என்றாள்.

“நல்ல ஒப்புமை” என்றாள் தாரை. துச்சளை “யாரோ விறலி பாடியது… விறலியர் சொல்லாத எதையேனும் சொல்லும் வழக்கமே அரசகுடியினருக்கு உண்டா என ஐயமாக உள்ளது” என்றாள். “பேரரசி சோர்வுற்றிருக்கிறார். ஆனால் எதையும் எங்களிடம் காட்டிக்கொள்வதில்லை. தங்கையர் அவருக்கு பெரிய அரண்போல. நாம் அவரை அணுகுவதையும் அவர் நம்மை அணுகுவதையும் முற்றாக கட்டுப்படுத்துகிறார்கள்.” துச்சளை “அது நன்று, எந்நிலையிலும் உடனிருக்கும் உறவு என்பது பெரிய கொடை” என்றாள். “நானேகூட சிற்றன்னையரைக் கடந்து அன்னையை சென்றடைய முடிந்ததில்லை.”

தாரை தரையை நோக்கிக்கொண்டே நடந்தாள். அவள் துச்சளையிடம் அணுகிப்பேச அஞ்சினாள். துச்சளையிடம் ஒரு தயக்கமில்லாமை இருந்தது. எங்கும் நுழைபவள். விழியில்லாதவர்களுக்குரிய இங்கிதமின்மையா அது? அவள் பெருமூச்சுவிட்டாள். துச்சளை அவளை நோக்கி “என்ன எண்ணுகிறாய்?” என்றாள். “ஒன்றுமில்லை” என்றாள் தாரை. “சலிப்புறுகிறாயா?” என்றாள். “இல்லை” என்றாள் தாரை. “அன்றி எதையேனும் அஞ்சுகிறாயா?” என்றாள். “இல்லை” என்றாள் தாரை. துச்சளை “எதையும் அஞ்சாதே” என்றாள். “எதையுமா, அக்கையே?” என்றாள் தாரை. “ஆம், எதையும்…” என்றாள் துச்சளை.

தாரை சில கணங்களுக்குப் பின் “அவ்வாறு எவரேனும் இருக்கமுடியுமா?” என்றாள். “இயலாது. ஆனால் அவ்வாறு முயலாமல் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் ஆயிரம் தடைகளை கடக்கவியலாது” என்றாள் துச்சளை. தாரை மேலும் பெருமூச்சுவிட்டாள். துச்சளை மெல்லிய குரலில் ஏதோ முனகியபடி நடந்தாள். “பாடுவீர்களா?” என்றாள் தாரை. “பாடுவேன், ஆனால் அரசியர் பிறர் கேட்க பாடவும் ஆடவும் கூடாது என்பதனால் என்னுள் மட்டுமே வைத்துக்கொண்டேன்” என்றாள். “ஏன் பாடக்கூடாது?” என்றாள் தாரை. “அது பிறரை மகிழ்விப்பது அல்லவா? அதை செய்யக்கூடாது” என்றாள் துச்சளை.

சிலகணங்களுக்குப் பின் தாரை “அவ்வாறல்ல” என்று சொன்னாள். “பாடினாலோ ஆடினாலோ அரசியரும் அரசரும் இழப்பது பிறர்மேல் கொண்டுள்ள மேலெழுகையை… அவர்கள் அப்போது அரசியரும் அரசரும் அல்ல.” துச்சளை “மெய்தான்” என்றாள். “அரசர்கள் அவர்களின் உடல்களே. ஆடையணிகள், மணிமுடி, செங்கோல். பாடும்போதும் ஆடும்போதும் அவையனைத்தும் மறைந்து அவர்கள் பிறிதொருவராகிவிடுகிறார்கள்” என்ற துச்சளை மெல்லிய மூச்சொலி ஒன்றை எழுப்பினாள். “என்ன?” என்றாள் தாரை.

துச்சளை நின்றுவிட்டதை உணர்ந்து நோக்கியபின்பு விழிவிலக்கியபோதுதான் தாரை அப்பால் நின்றிருந்த பூரிசிரவஸை பார்த்தாள். அவனும் அவளை பார்த்துவிட்டு நின்றிருக்கிறான் என்று உணர்ந்தாள். அவள் உள்ளம் படபடக்கத் தொடங்கியது. பின்னர் வலக்கால் ஊன்றமுடியாதபடி துள்ளுவதை உணர்ந்தாள். துச்சளை நீண்டமூச்சுடன் தன்னை திரட்டிக்கொண்டு மெல்ல நடந்தாள். அவள் நடக்கத் தொடங்கியதும் பூரிசிரவஸும் நடக்கலானான். இருவரும் அருகருகே வந்தனர். அதுவரைக்கும் துச்சளை நிலத்தை நோக்கியிருக்க பூரிசிரவஸ் தூண்களையும் சாளரங்களையும் பார்த்தான். அருகே வந்ததும் இருவரும் விரைவழிந்தனர். பூரிசிரவஸ் தாழ்ந்த குரலில் “வணங்குகிறேன், அரசி” என்றான்.

துச்சளை “நலம் சூழ்க!” என்றாள். அவள் குரலும் மிகத் தாழ்ந்திருந்தது. “நலமா?” என்றாள். “ஆம், நலமே” என்று அவன் சொன்னான். “இன்றுதான் வந்தீர்களா?” என்றாள். “இல்லை, நான் சென்ற ஒரு வாரமாகவே இங்குதான் இருக்கிறேன். இங்கு வரும் அரசர்களை ஒருங்கிணைத்து ஷத்ரியக் குடியவையை முழுமைப்படுத்தும் பொறுப்பை என்னிடம்தான் அரசர் ஒப்படைத்திருக்கிறார்” என்றான். சொற்களால் உள்ளம் எளிதாக “நான் இப்போதுதான் வந்தேன். இன்று அஸ்வத்தாமர் நகர்புகுகிறார். அவரை வரவேற்று மாளிகைக்கு கொண்டுசென்றேன். பேரரசியை சந்திக்கும்படி ஆணை வந்தது. சந்தித்துவிட்டு மீள்கிறேன்“ என்றான்.

இருவருக்கும் பேசுவதற்கான பொருள் கிடைத்துவிட்டதென அவர்களின் முகங்கள் எழுந்து விழிகள் சந்தித்துக்கொண்டமை காட்டியது. “அன்னை ஏதேனும் மந்தணம் சொன்னாரா?” என்றாள் துச்சளை. “இல்லை அரசி, தாங்கள் அறியக்கூடாததென ஏதுமில்லை” என்றான். அவர்களின் நோக்குகளை அப்பால் நின்று பார்த்தபோது அச்சொற்கள் அங்கே ஒலிப்பது செவிமயக்கு என்று தோன்றியது.

பூரிசிரவஸ் “மூத்தவரைப்பற்றித்தான் பேசினார். நாளைமறுநாள் அவர் கலிபூசனைக்கு நாள் குறித்திருக்கிறார். அது மெய்யா என்று கேட்டார். ஆம், உண்மையே என்று சொன்னேன். நான் கேள்விப்பட்டவை அச்சுறுத்துகின்றன என்றார். ஆம், அவை அச்சமும் கவலையும் அளிப்பவையே என்றேன். அவர் கவலைகொண்டிருக்கிறார்” என்றான். “ஆம், சொன்னார்கள்” என்றாள் துச்சளை. அவள் விழிகள் பூரிசிரவஸின் முகத்தை நோக்கியபடி அலைபாய்ந்தன. வலக்கை ஆடைநுனியைப்பிடித்து முறுக்கிக் கசக்கித் தவித்தது. தாரை மெல்ல அகன்றுசெல்ல காலடி வைக்க அவள் கையைப்பற்றி அதை தடுத்தாள் துச்சளை.

பூரிசிரவஸ் “ஏதேனும் செய்யமுடியுமா என்று பேரரசி கேட்டார்கள். எவரேனும் ஏதேனும் செய்யமுடியும் என்றால் அது உங்களால் மட்டுமே என்றேன். நான் இனி ஒன்றும் செய்வதற்கில்லை, நீங்களோ அஸ்வத்தாமரோ செய்யமுடியும் என்றார். அல்ல அரசி, நாங்கள் ஏதும் செய்யமுடியாது என்றேன். அங்கன் என்ன செய்யமுடியும் என்றார். அங்கரால் மட்டுமே இனி ஏதேனும் செய்யமுடியும் என்றேன். ஆனால் அவர் மதுவில் மறந்திருக்கிறார். அவரிடம் சொல்லெடுக்கவே இயலாது என்றேன். நான் முயல்கிறேன், அவனே என் முதல் மைந்தன். இக்குடியின்மேல் பேரரசருக்குப் பின் பொறுப்பு உடையவன் அவனே என்றார். ஆம், அறிவேன் என்றேன். அதன்பின் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. நான் தலைவணங்கி வெளியேறினேன்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

“நான் அன்னையைத்தான் பார்க்க சென்றுகொண்டிருக்கிறேன்” என்றாள் துச்சளை. “ஆம், அரசி சத்யவிரதை சொன்னார்கள், நீங்கள் வரப்போவதாக. இவ்வழி வருவீர்கள் என எதிர்பார்க்கவில்லை.” அவள் கழுத்தில் நரம்பு ஒன்று அதிர்வதை தாரை கண்டாள். கைகள் ஆடைநுனியை முறுக்க “ஆகவேதான் இவ்வழி வந்தீர்களா?” என்றாள். “இல்லை அரசி, நான் தாங்கள் வருவீர்கள் என்று…” என்றான் பூரிசிரவஸ். “வருவேன் என எண்ணினீர்களா?” என்று அவள் அவன்மேல் விழிநிறுத்தி கேட்டாள்.

அவன் பதறி தாரையை நோக்கிவிட்டு “அல்ல, நான்… வேறுவழியேதும் இங்கில்லை என்பதனால்…” என்று குழறினான். “என்னை சந்திக்க விரும்பினீர்களா இல்லையா?” என்றாள் துச்சளை. “அது முறையல்ல அல்லவா?” என்றான். “எது?” என்றாள். “சந்திக்க விழைவது…” என்றான். “முறையா என கணித்த பின்னரா விழைவு எழுகிறது?” அவன் “ஆம்” என்றான். “சொல்க!” என்றாள். “என்ன?” என்றபோது அவன் விழி வந்து தாரையின் விழியை தொட்டுச்சென்றது. அவள் அப்போதுதான் அவன் முகத்தை தானும் உற்றுநோக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து விழிவிலக்கிக்கொண்டாள்.

“என்னை சந்திப்பதை விரும்பினீர்களா? அஞ்சி விலக எண்ணினீர்களா?” என்றாள் துச்சளை. அத்தனை துணிவாக அவளால் எப்படி கேட்கமுடிகிறது என தாரை வியந்தாள். பூரிசிரவஸ் தன்னை திரட்டிக்கொண்டு “சந்திக்க விழைந்தேன். சந்திக்கக்கூடும் என எண்ணியதுமே என் நெஞ்சு அதிரத் தொடங்கியது. ஆனால் அஞ்சவும் செய்தேன். ஆகவே வேறு வழி உள்ளதா என பார்த்தேன். இல்லை என்று தெரிந்தது. அஞ்சியபடின் நடந்துவந்தேன்” என்றான். துச்சளை “எவர்மேல் அச்சம்?” என்றாள். “என் மேல்தான்… நான் ஆற்றல்கொண்டவன் அல்ல” என்றான் பூரிசிரவஸ்.

துச்சளை புன்னகைத்தபோது அவள் முகம் பேரழகுடன் இருப்பதாக தாரை எண்ணினாள். கனவுகண்டு சிரிக்கும் பால்மகவின் முகம் அது. “எவர்தான் ஆற்றல் கொண்டவர்கள்?” என்றபின் “உங்கள் அரசி எப்படி இருக்கிறார்கள்?” என்றாள். பூரிசிரவஸ் “அவள் எளிய மலைமகள்” என்றான். “உங்கள் இயல்புக்கு ஏற்றவள்” என்றாள் துச்சளை. “ஆம், என் இயல்புகளில் ஒன்றுக்கு மட்டும்…” என்ற பூரிசிரவஸ் புன்னகைத்து “ஒவ்வொரு நீர்த்துளியின் அளவையும் துலாவிலிட்டு முடிவெடுத்த பின்னரே தெய்வங்கள் மண்ணுக்கு அனுப்புகின்றன என்பார்கள்” என்றான். துச்சளை சிரித்து “மெய்தான்…” என்றாள்.

பூரிசிரவஸ் “நன்று அரசி, இடைநாழியில் நின்று பேசுவது முறையல்ல. பிறிதொருமுறை அரசமரபின்படி நான் தங்களை சந்திக்கிறேன்” என்றான். “நான் தங்களை சந்திக்க விழைந்தேன்” என்றாள் துச்சளை. “என்னையா? எதற்கு?” என்றான் பூரிசிரவஸ். “நான் கேட்கவிழைந்த ஒரு வினா நெஞ்சிலேயே நின்றிருக்கிறது, நெடுநாட்களாக.” அவன் தாரையை பார்க்க அவள் விலகிச்செல்ல மீண்டும் அசைந்தாள். துச்சளை அவள் கையைப்பற்றி தடுத்தாள். “சொல்க!” என்றான் பூரிசிரவஸ். “நீங்கள் என்பொருட்டு அவர்களை கைவிட்டீர்களா?” என்றாள். “என்ன?” என்றான் அதிர்ச்சியுடன். “நான் சொல்வது உங்களுக்கு புரியும்.”

அவன் நோக்கை விலக்கி சாளரத்தை பார்த்தான். அவன் இமைகள் ஈரமாக இருக்கின்றனவா என தாரை ஐயம்கொண்டாள். அவ்வாறு நோக்கலாகாது என விலகிக்கொண்டாள். “சொல்க!” என்றாள் துச்சளை. அவன் நடுங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவன் இடக்கால் ஆடியது. “சொல்க!” என்று துச்சளை மீண்டும் கேட்டாள். அவன் “ஆம்” என்றான். திடுக்கிட்டவள்போல தாரை துச்சளையின் முகத்தை பார்த்தாள். அதில் நிறைவு தெரியும் புன்னகை எழுவதைக் கண்டு திகைப்புடன் அவனை பார்த்தாள்.

“அவர்களை நான் எவ்வகையிலும் கைவிடவில்லை. என்னைவிட்டு அவர்கள் நீங்கியது முற்றிலும் என்னை மீறிய நிகழ்வுகளால். நான் எளிய மலைமகன். அரசர்களின் கணிப்புகளை என்னால் முன்னரே உய்த்துணர முடியவில்லை. ஆனால் அத்தருணங்களுக்குப் பின் நான் அவர்களை உடனுக்குடன் உள்ளத்தால் கைவிட்டேன், அது உங்கள்பொருட்டே.” துச்சளை பெருமூச்சுடன் “நான் எண்ணினேன்” என்றாள். “ஆனால் நான் மெய்யாகவே சொல்வதை நீங்கள் நம்பியாகவேண்டும். அது உங்கள் அரசின் தகுதிக்காக அல்ல. எந்த அரசியல் கணிப்பும் அப்போது என்னுள் ஓங்கியிருக்கவில்லை. அரசியல் கணிப்புகள் அற்றவன் என நான் என்னை சொல்லமாட்டேன். ஆனால் அன்று அவை இல்லை. அன்று ஓங்கியிருந்தது…” என்றான் பூரிசிரவஸ்.

அவள் அவனை எதிர்பார்ப்புடன் நோக்கிக்கொண்டு நின்றிருந்தாள். அந்த விழிகளை நோக்கியபோது ஆழ்ந்த பொறாமைப்பொங்குதலை தாரை தன்னுள் உணர்ந்தாள். மறுகணமே துயரம் எழ விழிதழைத்தாள். “ம்?” என்றாள் துச்சளை. “நான் முதன்மையாகக் கருதியது அஸ்தினபுரியின் அரசரை. அவர் தன் பெருங்கரங்களால் என் தோள்களைத் தழுவிய கணம் மீண்டும் பிறந்தெழுந்தவன் நான். அவருக்காக களத்தில் மடியவிருப்பவன். அன்று அவர் தங்கையை நான் கைகொள்ளக்கூடும் என்ற எண்ணமே என்னை கிளரச் செய்தது. விண்ணகநிலைக்கு நிகர் அது. அதுவே மெய்.”

“அதன்பின் அஸ்தினபுரியின் பேரரசர். அவர் என்னை தழுவியிருக்கிறார். விண்முட்ட எழுந்து நிற்கும் இமயக் கொடுமுடிகளில் ஒன்று என்னை கைநீட்டி அணைத்துக்கொள்வது போன்றது அது. அவர்களின் குலத்தில் ஒருவனாதல் என்பதே என்னை எக்களிக்கச் செய்தது.” தாரை துச்சளையின் முகத்தை நோக்கினாள். அவள் விழிகள் நனைந்த பீலிகளுடன் உணர்வெழுச்சியால் சுருங்கியிருந்தன. வாயை உள்நோக்கி மடித்து தன்னை அடக்கிக் கொண்டிருந்தாள். “அதன் பின்னரே நீங்கள். உங்கள் கண்களைப்போல அன்றும் இன்றும் என்னை கவர்பவை பிறிதில்லை. அனைத்தையும்விட என் ஆணவம். ஆம், இதற்கெல்லாம் நான் தகுதியுடையவன் என்னும் பெருமிதம். என் தகுதியை நானே அறிந்த தருணம் அது” என்றான் பூரிசிரவஸ்.

“அது அல்லவென்றானபோது என் உள்ளம் சோர்ந்தது. என்னை தூக்கி வீசிவிட்டது ஊழ் என உணர்ந்தேன். ஆனால் இங்கிருந்து பால்ஹிகநாட்டுக்குச் செல்லும்போது ஒரு தருணத்தில் உங்கள் விழிகளை என் உளவிழிகளால் மிக அண்மையிலெனக் கண்டேன். அங்கு நான் கண்டது பேரன்பை. அது எது என நான் பகுத்தாயவில்லை. நான் புறக்கணிக்கப்படவில்லை என அப்போது உறுதிகொண்டேன். என் ஆணவம் கொண்டிருந்த வலி அழிந்தது. நெஞ்சு எளிதாக தென்றலில் என பால்ஹிகநாட்டுக்குச் சென்றேன். எதை இழந்தாலும் நான் முதன்மையான பலவற்றையும் பெற்றிருக்கிறேன், தெய்வங்கள் எனக்கு கனிந்தருளியவை அவை என உணர்ந்தேன். அவ்வுணர்வு இத்தருணத்திலும் நீடிக்கிறது.”

துச்சளை “நன்று, பால்ஹிகரே” என்றபின் திரும்பி நோக்காமல் நடந்தாள். அந்த விரைவு தாரையை வியப்பூட்டியது. அவள் உடன் தொடர்ந்து நடந்தாள். பின்னால் பூரிசிரவஸின் நோக்கை உணரமுடிந்தது. பின்னர் திரும்பி நோக்கியபோது அவன் நெடுந்தொலைவிலென சென்றுகொண்டிருந்தான். துச்சளை திரும்பி நோக்கவில்லை. அவள் உடல் முழுவிசையுடன் உள்ளத்தால் உந்தப்பட்டதுபோல சென்றது. திசைவெளியில் விழுந்துகொண்டிருப்பதுபோல.

துச்சளை நின்று மூச்சிரைத்தாள். மேலாடையால் முகத்தை துடைத்துக்கொண்டாள். மீண்டும் பெருமூச்சுகள்விட்ட பின் “செல்வோம், பிந்திவிட்டது” என்றாள். “நான் உடன் நின்றிருக்கலாகாது, அரசி” என்றாள் தாரை. “நீ நின்றிருக்கவேண்டும்” என்றாள் துச்சளை. “தனியாகப் பேச நான் அஞ்சினேன்.” தாரை “ஏன்?” என்றாள். “நீ நின்றிருக்கையில்தான் இந்த இடைநாழி ஒரு பொது இடம்” என்றாள் துச்சளை. “அது எவ்வாறு?” என்றாள் தாரை. துச்சளை புன்னகைத்தாள். “அதனாலென்ன?” என்றாள் தாரை.

“நீ காதலித்திருக்கிறாயா?” என்றாள் துச்சளை. “இல்லை” என்றாள் தாரை. “அப்படியென்றால் நீ நான் சொல்வதை புரிந்துகொள்ளவியலாது” என்றாள் துச்சளை. “ஆம்” என்ற தாரை பெருமூச்சுவிட்டாள். “ஒருகணம் உங்கள்மேல் பெரும்கசப்பு ஒன்று எழுந்தது, அரசி.” “ஏன்?” என்றாள் துச்சளை. “நீங்கள் இப்புவியின் இனிமை அனைத்தையும் துளி எஞ்சாமல் அடைந்துவிட்டீர்கள்.” துச்சளை “ஆம்” என்று புன்னகை புரிந்தாள். தாரை “அது பெருந்துயரும்கூட அல்லவா?” என்றாள். “நம்மை வளர்க்கும் இனிமைகள் சில உள்ளன. ஆழமான இனிமைகள் நம்மை அழிப்பவை. முற்றழிப்பதே இனிமைகளில் தலையாயது” என்றாள் துச்சளை. தாரை பெருமூச்சுவிட்டு பின் புன்னகைத்தாள்.

“நீ என்ன எண்ணுகிறாய்?” என்று துச்சளை கேட்டாள். “என் உடல் அத்தனை அழகற்றா இருந்தது?” தாரை “உடலின் அழகின்மையினூடாக நீங்கள் விடுதலையை அடைந்துவிட்டீர்கள் அல்லவா?” என்றாள். “கேள், நீ கேலிபேசுவதற்கான தருணம் இது. ஆனால் நெஞ்சில் அன்புள்ள பெண்களுக்கு அது இயல்வதே அல்ல என்று இப்போது உணர்ந்தேன்” என்றாள் துச்சளை. தாரை “நீங்கள் எப்படி இருந்தாலென்ன அக்கை, உங்கள் முகத்திலிருந்து அவர் விழி விலகவில்லை. அவர் முகத்திலிருந்தது கந்தர்வர்களுக்குரிய பேருவகை” என்றாள்.

“மெய்யாகவா?” என்றாள் துச்சளை. “மெய்யாகவா சொல்கிறாய்? என்னை மகிழ்விக்க நினைக்கிறாயா?” தாரை “இல்லை அக்கையே, மெய்யாகவேதான்” என்றாள். “அதெல்லாம் உடனே தோன்றுவது, ஆண்களின் விழிகளுக்குச் சிக்குவது உடலே. இன்னொருமுறை என்னை நோக்குகையில் பிறிதொன்றே தோன்றும்” என்றாள் துச்சளை. “அந்த அகவையை அவர் கடந்துவிட்டார்” என்றாள் தாரை. “ஆம்” என்ற துச்சளை “ஆனால் அவரிடம் அகவை தெரியவில்லை. அன்று கண்ட அதே இளமையுடன் இருக்கிறார்” என்றாள். தாரை புன்னகைத்தாள். “அது ஏன் அவர் மட்டும் அப்படியே நீடிக்கவேண்டும்? தெய்வங்கள் காட்டும் ஓரவஞ்சனை” என்று துச்சளை சொன்னாள்.

“அது உங்களுக்கு துயரளிக்கிறதா?” என்றாள் தாரை. “உண்மையை சொல்லப்போனால் ஆம், நான் விரைந்து முதுமைகொண்டுவிட்டேன்” என்று துச்சளை சொன்னாள். “அது எப்போதுமே அப்படித்தான் அரசி, பெண்களுக்கே முதுமை விரைந்து அணுகுகிறது.” துச்சளை “நாம் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம், அதனாலாக இருக்குமோ?” என்றாள். “இருக்கலாம்” என்று தாரை சிரித்தாள். “ஆனால் இதுவும் நன்றே. இதை எண்ணிக்கொள்க, மீண்டும் சந்திக்கையில் இயல்பாக நீங்கள் ஓர் இனிய பொதுநடிப்புக்கு செல்வீர்கள். அவர் மைந்தராகவும் நீங்கள் அன்னைபோலவும் ஆவீர்கள்” என்றாள் தாரை.

துச்சளை “நான் மீண்டும் அவரை சந்திக்கமாட்டேன்” என்றாள். “ஏன்?” என்றாள் தாரை. “அது பிழை” என்றாள் துச்சளை. “அரசி, அதிலென்ன பிழை?” என்றாள் தாரை. “அதிலென்ன பிழை என நமக்குத் தெரியுமே, அதுதான்” என்று துச்சளை சொன்னாள். அவர்கள் மொழியழிந்து நடந்தனர். காந்தாரியின் மாளிகை முகப்பை அடைந்தபோது தாரை “மீண்டும் சந்திக்கவே மாட்டீர்களா?” என்றாள். “அவ்வாறு எண்ணுகிறேன். தெய்வங்கள் விழைவதே நிகழும்” என்றாள் துச்சளை.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 37

பகுதி ஆறு : பொற்பன்றி – 2

bl-e1513402911361நகர்நுழைவின் களைப்பு அகல்வதற்குள்ளாகவே துச்சளை திருதராஷ்டிரரை சந்திக்கவேண்டும் என்றாள். அரண்மனையை அடைவதற்குள்ளாகவே அவள் முற்றிலும் உடல் ஓய்ந்திருந்தாள். தேரிலிருந்து காலெடுத்து படிகளில் வைக்கவே அவளால் இயலவில்லை. தேர் நின்றதும் அரைத்துயிலில் என அமர்ந்திருந்தவளிடம் சாரிகை “அரசி, அரண்மனை” என்றாள். அவள் சூழ்ந்தொலித்த ஓசைகளில் முற்றிலும் மூழ்கி வேறெங்கோ இருந்தாள். வாயை துடைத்துக்கொண்டு எழுந்தபோது தேர் ஓடிக்கொண்டிருப்பதாக எண்ணிய உடல் அலைபாய பின்னால் சரிந்து பீடத்தில் ஓசையுடன் விழுந்தாள். அவள் எடையால் பீடம் விரிசலிட்டு உடைந்த ஓசை எழுந்தது.

சாரிகை எழுந்து அவளை பிடித்தாள். “வருக… உதவி!” என அவள் கூச்சலிட வெளியே அவர்களுக்காகக் காத்திருந்த அரசியருக்கு அருகே நின்றிருந்த சேடிப்பெண்கள் இருவர் தேருக்குள் ஏறினர். அவர்கள் மூவரும் சேர்ந்து கைபற்றித் தூக்கி அவளை மெல்ல எழுப்பினர். அவள் நின்று மூச்சிரைத்து “விழுந்துவிட்டேன்” என்று புன்னகைத்தாள். பானுமதியும் அசலையும் தாரையும் வெளியே நின்று எட்டிப்பார்த்து “என்ன ஆயிற்று?” என்றனர். “ஒன்றுமில்லை… நிலைதவறிவிட்டேன்” என்றபடி சேடியர் தோள்பற்றி மெல்ல இறங்கினாள்.

மூச்சிரைக்க சேடியர் தோளைப்பற்றியபடி நின்று அண்ணாந்து அந்த மாளிகையை நோக்கினாள். “ஒவ்வொருமுறை வரும்போதும் இது சிறிதாகிக்கொண்டே செல்கிறதே!” என்றாள். பானுமதி புன்னகைத்து சேடியரிடம் கைகாட்ட மங்கல இசையும் குரவையொலிகளும் எழுந்தன. ஏழு அணிச்சேடியர் மங்கலத்தாலங்களை கொண்டுவந்து அவள்முன் உழிந்து விலகினர். ஒரு சேடி அளித்த சிறிய அகல்விளக்கை கையில் ஏந்தியபடி துச்சளை அரண்மனைக்குள் புகுந்தாள். அவளைத் தொடர்ந்து அரசியர் நடக்க தாரை அவள் தோளை ஒட்டியபடி நடந்தாள்.

“என்னடி புன்னகைக்கிறாய்?” என்று தன் பெரிய கைகளால் தாரையின் காதைப்பற்றி முறுக்கினாள். தாரை சிரித்து “யானை சேற்றில் சிக்குண்டுவிட்டது போலிருந்தது, அக்கை” என்றாள். பானுமதி தாரையை நோக்கி சினத்துடன் திரும்ப “மெய்யாகவே நானும் அப்படித்தானடி எண்ணினேன்” என்று துச்சளை வெடித்துச் சிரித்தாள். “வலி இருந்திருந்தால் பிளிறிக்கூட இருப்பேன்.” பானுமதி பொறுமையை மீட்டுக்கொண்டு “செல்வோம்” என்றாள். அசலை “எப்படி இருக்கிறீர்கள், அக்கையே?” என்றாள். “பார்க்கிறாயே? வளர்ந்துகொண்டிருக்கிறேன். ஆகவேதான் அரண்மனைகள் சிறிதாகின்றன” என்றாள் துச்சளை.

“ஆனால் அழகாக ஆகிவிட்டிருக்கிறீர்கள்…” என்று தாரை சொன்னாள். துச்சளை அவளை நோக்கி திரும்பி உதட்டைச் சுழிக்க “மெய்யாகவே, அக்கையே. எப்படியோ பேரழகி ஆகிவிட்டிருக்கிறீர்கள். உங்கள் முகத்திலிருந்து எவராலும் விழியகற்ற இயலாது” என்றாள். துச்சளை அவள் தலையைத் தட்டி “என்னடி உளறுகிறாய்?” என்று சொல்லி இழுத்து தோளுடன் சேர்த்துக்கொண்டாள். பானுமதி “பேரரசி காலையிலிருந்து பத்துமுறை சேடியை அனுப்பி வினவிவிட்டார். அறைக்குச் சென்று சற்று ஓய்வெடுத்து உடைமாற்றுங்கள். அன்னையை சென்று பார்ப்போம்” என்றாள்.

“ஆம், அதற்கு முன் நான் தந்தையையும் பார்க்கவேண்டும்” என்றாள் துச்சளை. “அவரும் நோயுற்றிருக்கிறார்” என்றாள் அசலை. “அன்னை?” என்றாள் துச்சளை. “அன்னையின் நோய் வெளியே தெரிவதில்லை” என்றாள். துச்சளை தலையசைத்து “ஆம்” என்றாள். கூடத்தினூடாக அவர்கள் நடந்தனர். முன்னால் சென்ற நிமித்தச்சேடி சங்கொலி எழுப்பி “அஸ்தினபுரியின் இளவரசி, குருகுலத்தோன்றல், காந்தாரத்து தொல்லன்னையரின் வழிவந்தவர், சைந்தவி துச்சளை வருகை!” என அறிவித்தாள். “எவரிடம் சொல்கிறாள்?” என்றாள் துச்சளை. “நம்மிடம்தான், நாம் அடிக்கடி இதை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறதே?” என்றாள் தாரை.

“இவள் முன்னர் எலிக்குஞ்சு போலிருந்தாள். நாவெழுவதே இல்லை. இப்போது நன்றாகச் சிலம்பும் மணிபோலாகிவிட்டாளே?” என்றாள் துச்சளை. அசலை “ஆம், அவைகளில் உண்மையில் ஒலிப்பது இவள் குரலே” என்றாள். பானுமதி தாரையிடம் “அரசியை அவர் அறைக்கு கொண்டுசெல்க! அனைத்தும் ஒருங்கமைந்துள்ளதா என்று நோக்குக!” என்றபின் “ஓய்வெடுத்து மீள்க, அரசி! அதன்பின் நாம் சந்திப்போம்… நான் உடனே அரசவைக்கு செல்லவேண்டியிருக்கிறது. காமரூபத்து அரசர் அவைபுகுகிறார். அவைமுறைமைகள் உள்ளன” என்றாள். “ஆம், உனக்கு இனி விடிந்திருளும்வரை இதுவே பணி என்றிருக்கும்” என்றாள் துச்சளை.

அரசியர் அனைவரும் துச்சளையுடனேயே நடந்தனர். சிம்ஹிகி, புஷ்டி, அனங்கை ஆகியோர் தாரையுடன் இணைந்து முண்டியடிப்பதுபோல் நடந்தனர். “இவர்களெல்லாம் உன் குலம் அல்லவா?” என்றாள் துச்சளை. “இவள் பெயர் சிம்ஹிகி அல்லவா?” சிம்ஹிகி “ஆம், அரசி” என்று அருகே வந்து அவள் கைகளை தொட்டாள். “அத்தனைபேரும் உங்களை சந்திக்க வர விழைந்தனர், அரசி. ஆனால் நகர்நுழையும் அரசர்களின் அரசியரையும் பிறரையும் நேரில்சென்று முறைமைசெய்ய அவர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் நாளையும் உங்களைப் பார்க்க வந்துகொண்டே இருப்பார்கள்” என்றாள் அசலை. “ஆம், மச்சர்குலத்து அரசியர் உங்களைப்பற்றி மட்டும்தான் நேற்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்” என்றாள் தாரை.

துச்சளை அவளுக்குரிய அறையை அடைந்ததும் இடையில் கையூன்றி நின்று “இத்தனை படிகளை ஏன் வைத்தார்கள் என்று தெரியவில்லை. ஏன் மஞ்சத்தறைகள் அனைத்தும் மாடியிலேயே உள்ளன?” என்றாள். “அடித்தளம் முழுக்க ஏவலருக்கு என்பதுதான் எங்குமுள்ளது” என்றாள் அசலை. “அது ஏன் என்கிறேன்” என்றாள் துச்சளை. “நான் சொல்கிறேன். எங்கள் மச்சர்நிலத்தில் மூங்கில்கால்களில்தான் இல்லங்கள் நின்றிருக்கும். அவற்றின் அடிப்பக்கம் விலங்குகளுக்கு உரியது. எருமைகள் அங்கே நிற்கும். பின்னர் அரண்மனைகளாக அவ்வில்லங்கள் வளர்ந்தபோது அங்கே காவல்வீரர்களை தங்கவைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்” என்றாள்.

“சரியாகத்தான் சொல்கிறாள்” என்றாள் துச்சளை. அசலையின் அருகே நின்றிருந்த தேவகாந்தி “சுற்றிலும் கோட்டை இருப்பதனால் கீழ்த்தளங்களில் காற்றொழுக்கு இருக்காது. அங்கே புரவிகளும் யானைகளும் இருப்பதனால் கொசுக்களும் ஈக்களும் மிகுதி. ஆகவேதான் மேல்தளங்களில் மட்டும் அரசகுடியினர் தங்குகிறார்கள் என என்னிடம் என் அன்னை சொன்னாள்” என்றாள். “அதுவும் சரியாகத்தான் தெரிகிறது” என்ற துச்சளை அசலையிடம் “பொதுவாக என்னைவிட எல்லாருமே நன்றாகவே எண்ணிப்பார்க்கிறார்கள் போலிருக்கிறதடி” என்றாள்.

அசலை “ஓய்வெடுங்கள், அரசி” என்றாள். “ஓய்வெடுக்கவா? நான் உடனே தந்தையை பார்க்கவேண்டும். ஒவ்வொரு படி ஏறுகையிலும் அவரை எண்ணி என் உள்ளம் எடைமிகுந்தபடியே வந்தது” என்றாள். “சற்று ஓய்வெடுத்து நீராடுக… நான் உடனே வருகிறேன்” என்று அசலை பிற அரசியருடன் திரும்பிச்சென்றாள். ஒவ்வொருவரும் துச்சளையிடம் வந்து விடைபெற்றனர். “சென்று வருகிறேன், அரசி. இரவு வருகிறேன். உங்களிடம் பேசவேண்டுமென்று எண்ணி எண்ணி பெருக்கிக்கொண்டிருக்கிறேன்” என்றாள் தேவமித்ரை.

அறைக்குள் சேடியர் பேழைகளை கொண்டு வைத்தனர். துச்சளை அறை நடுவே நிற்க சேடியர் அவள் ஆடைகளைக் களைந்து மாற்றாடை அணிவித்தனர். தாரை நோக்குவதைக் கண்ட துச்சளை “பெண்ணுடல் எத்தனை விரைவாக அழகிழந்துவிடுகிறது இல்லையா? ஆண்கள் இப்படி அழகிழப்பதில்லை” என்றாள். “அல்ல, அரசி. எனக்கு உங்கள் உடல் அன்னையுரு என்று தோன்றுகிறது. எங்கள் நாட்டில் களிமண்ணில் பேரன்னை உருவுகளை அமைத்து நெய்தல்பூசெய்கை நிகழ்த்துவோம். உங்களைப்போலவே இருக்கும் அவ்வுருக்கள்” என்றாள்.

ஆடை மாற்றிக்கொண்டபின் மெல்ல பீடத்தில் அமர்ந்த துச்சளை “எவ்வளவு சடங்குகள்! புலரியில் கோட்டைமுகப்பைக் கண்டதும் ஒரு நாழிகைக்குள் அரண்மனைக்குள் சென்றுவிடுவோம் என எண்ணினேன். இதோ வந்துசேர நான்கு நாழிகை கடந்துள்ளது” என்றாள். “நெடுநாட்களுக்குப் பின் அஸ்தினபுரிக்கு திரும்புகிறீர்கள். நூற்றுவருக்கு ஒரே தங்கை நீங்கள்.” துச்சளை தலைகுனிந்து விழிசரிய அமர்ந்திருந்தாள். “மக்கள் உங்களைக் காண கோட்டைமுகப்பில் நேற்றிரவே கூடி முகக்களத்தை நிறைந்துவிட்டனர் என்று அறிந்தேன்” என்றாள் தாரை.

‘ஆம், என்னைக் கண்டதும் களிவெறிகொண்டார்கள். கூச்சலும் நடனமும் என காடு புயல்கொண்டதுபோலத் தோன்றியது. கோட்டைமுகப்புக்கு விதுரர் வருவார் என நான் நினைக்கவேயில்லை. அவர் வந்ததைக் கண்டதும் விழிநீர் சிந்திவிட்டேன். தந்தையைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். தந்தைக்கு விதுரர் இருக்கிறார் என்ற எண்ணம் வந்தது…” என்றாள் துச்சளை. “நகரமே உங்களுக்காக விழா கொண்டாடியது, அரசி. காலையில் ஆலயம் செல்லும்போது பார்த்தேன். தோரணங்கள் இல்லாத இடமே இல்லை” என்று தாரை சொன்னாள்.

“அதை தனக்கான வரவேற்பாக நினைத்துக்கொள்கிறார் சைந்தவர்” என்று துச்சளை புன்னகைத்தாள். “நான் ஒன்று நோக்கினேன், அரசி. நீங்களோ அரசியரோ ஒருசொல்கூட கொழுநர்களைப்பற்றி பேசிக்கொள்ளவில்லை” என்றாள் தாரை. “நாங்கள் எப்போதுமே பேசுவதில்லை” என்றாள் துச்சளை. “ஏன்?” என்று தாரை கேட்டாள். “பேசுவதில்லை. ஏன் என்று கேட்டால் ஒருவேளை எங்களுக்கு அவர்கள் அத்தனை முதன்மையானவர்களல்ல என்று தோன்றுகிறது” என்றபின் “மெய்யாகவே எனக்கு சைந்தவர் எவ்வகையிலும் பொருட்டல்ல” என்றாள்.

“என்னால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை” என்றாள் தாரை. “நல்ல கணவர்களைப் பெற்ற பெண்களால் அதை புரிந்துகொள்ள இயலாது” என்றாள் துச்சளை. “நீங்கள் இருவரும் சேர்ந்தமர்ந்து தேரில் வருவீர்கள் என எண்ணினேன்” என்றாள் தாரை. “ஆம், அதுவே வழக்கம். மக்கள் அப்படித்தான் காணவிழைவார்கள். என்னிடம் அமைச்சர் சொன்னபோது தேவையில்லை என்று மறுத்துவிட்டேன்.” “ஏன்?” என்று தாரை கேட்டாள். “நானும் அவரும் ஆண்டுக்கொருமுறை இந்திரவிழாவின்போது அரசவையில் அருகருகே அமர்ந்திருப்போம். மற்றபடி சந்தித்துக்கொள்வதுகூட இல்லை” என்றாள் துச்சளை. “மெய்யாகவா?” என்று தாரை கேட்டாள்.

“ஆம், அவருக்குத் தேவையான பெண்கள் அவரை சூழ்ந்திருக்கிறார்கள்” என்று துச்சளை சொன்னாள். “என் உடல் இப்படியாவது வரை என்மேல் மெல்லிய ஈடுபாடு அவருக்கிருந்தது. அது அகன்று பதினைந்தாண்டுகள் கடந்துவிட்டன.” தாரை கனிந்த விழிகளுடன் நோக்க “அப்படி நோக்கி துயர்கொள்ள வேண்டியதில்லை. அது மிகப் பெரிய விடுதலை. என் உள்ளம் அதன்பின்னரே கனியத் தொடங்கியது. எனக்கு அது எப்போதுமே பெரிய துயராகவே இருந்திருக்கிறது” என்று துச்சளை சொன்னாள். “நானே எண்ணிக்கொள்வதுண்டு, என் உடல் மல்லர்களுக்குரியதா என. இது கொஞ்சப்படுவதை மறுக்கிறது.”

மாறாத மென்புன்னகையுடன் எளியதொன்றை சொல்வதைப்போல “என் உடலை அவர் ஆள்கையில் உள்ளூர சிறுமதிப்பு செய்யப்படுவதாக உணர்வேன். அதைவிட நானே என் உடலால் அதன்பொருட்டு செலுத்தப்படுகையில் மேலும் சிறுமைகொள்வேன். ஒவ்வொருமுறையும் என்னை எண்ணிக் கூசியபடியே அதிலிருந்து விலகுவேன். என்றோ ஒருநாள் இனியில்லை என்னும் எண்ணம் எழுந்தபோது மெய்ப்புகொண்டுவிட்டேன். கண்ணீர் வழியத்தொடங்கியது. அன்றெல்லாம் அழுதுகொண்டிருந்தேன். என் உள்ளம் அன்று உணர்ந்த எழுச்சி அறுபடாது இன்றுவரை நீடிக்கிறது” என்றாள்.

தாரை அவளை விந்தையாக நோக்கிக்கொண்டிருந்தாள். “உனக்குப் புரியாது” என்றாள் துச்சளை. “இழப்பு எப்படி விடுதலை ஆகும்?” என்றாள் தாரை. “மெய்யாகவே நான் உணர்வது இதுதானடி. எதையுமே விட்டுவிட மானுடனால் இயலாது, இழப்பதே விடுதலைக்கான ஒரே வழி. இழந்தவை எத்தனை விரைவாக நம்மைவிட்டு அகல்கின்றன என்பது விந்தையிலும் விந்தை. ஏனென்றால் நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொன்றும் இங்கு இப்போது மட்டுமே நீ என்று சொல்லிக்கொண்டிருக்கின்றன. எதிர்காலம் நில்லாதே வா என இழுத்துக்கொண்டிருக்கிறது.”

துச்சளை கன்னங்களில் நீள்குழிகள் எழ சிரித்து “காமம் துறக்க தவம்செய்வோர் கொள்ளும் அல்லல்களை நூல்களில் படிக்கையில் ஆழ்ந்த இரக்கமே ஏற்படுகிறது. வெட்டி வீசினால் அது மிக எளிது என அறியாதவர்கள்” என்றாள். தாரை கையால் வாய் பொத்தி சிரித்தாள். சாரிகை இன்னீர் கொண்டுவர அதை வாங்கி அருந்தியபடி “நீராடவேண்டும்” என்றாள் துச்சளை. “நீராட்டறை ஒருங்கியிருக்கிறது, அரசி” என்றாள் சாரிகை. தாரை “நீங்கள் உங்கள் உடன்பிறந்தாரை சந்திப்பதைப்பற்றி சொல்லவேயில்லை” என்றாள். “ஆம், சந்திக்கவேண்டும்” என்றபின் “அவர்கள் இப்போது இவ்வுலகில் எதனுடனும் இல்லை என எண்ணுகிறேன்” என்றாள் துச்சளை.

bl-e1513402911361திருதராஷ்டிரரின் அறைவாயிலில் நின்றிருந்த சங்குலனைக் கண்டதும் துச்சளை திகைப்புடன் “அய்யோ, இவர் விப்ரர் அல்லவா?” என்றாள். அவன் புன்னகைத்து “நான் அவர் மைந்தன், அரசி” என்றான். “இவனை நான் முன்னரே அறிவேன்… ஒருமுறை நான் கொற்றவை ஆலயத்திற்குச் செல்லும்போது இவனை பார்த்தேன். ஏனோ அன்று இவனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தூக்கி கொஞ்சிவிட்டு ஒரு முத்தாரத்தை இவன் அன்னையிடம் அளித்தேன்” என்றாள். சங்குலன் “ஆம், அரசி. அந்த முத்தாரம் இப்போதும் இருக்கிறது” என்றான்.

தாரையிடம் திரும்பி “இயல்பாக கைநீட்டி தூக்கமுயன்றேன். என்ன எடை தெரியுமா? அப்படியே குனிந்துவிட்டேன். என்ன அகவை, இரண்டா என இவன் அன்னையிடம் கேட்டேன். இல்லை இளவரசி, ஏழு மாதம்தான் என்றாள். திகைத்துவிட்டேன்” என்றாள். அவன் தோள்களைத் தொட்டு “பெருந்தோளன்… நீ மற்போர் பயின்றாயா?” என்றாள். “ஆம், தந்தையிடமிருந்து” என்றான். “விப்ரர் மாமல்லர், தெரியுமல்லவா?” என்றாள் துச்சளை. தாரை “ஆம்” என்றாள்.

“இளமையில் தந்தை பீஷ்மரிடம் மற்போர் பயின்ற காலத்தில் ஒருமுறை அவரும் இளையவர் பாண்டுவும் கங்கைவழியாக படகில் செல்கையில் வாரணவதம் அருகே சிம்ஹபதம் என்னும் ஊரில் ஓர் இளைஞர் படகு ஒன்றை தனியாகத் தூக்கி நீரிலிறக்குவதை இளையவர் கண்டு தந்தையிடம் சொன்னார். அவரை அருகழைத்து தன்னுடன் மற்போரிடும்படி தந்தை கோரினார். கரைச்சேற்றில் அவர்கள் போரிட்டனர். அவர் இறுதியில் தந்தையை வென்றார். சேற்றுடன் தந்தையை அழுத்திப்பிடித்துக்கொண்டு பொறுத்தருள்க அரசே என்று சொன்னார். தோல்வியை ஏற்றுக்கொண்டு எழுந்த தந்தை எப்படி என்னை உனக்குத் தெரியும் என்று கேட்டார். கதைகளினூடாக உங்களை ஒவ்வொருநாளும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றார். அவ்விளைஞர்தான் விப்ரர்” என்றாள் துச்சளை.

“அவரை உடனே தன்னுடன் அழைத்துக்கொண்டுவந்து அணுக்கராக வைத்துக்கொண்டார் தந்தை. அது ஒரு அரசசூழ்ச்சியாகவே செய்யப்பட்டது, அவர் எங்கும் சென்றுவிடக்கூடாதென்று. பின்னர் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கறிந்தவர்களானார்கள். பயிற்சிக்களத்தில் ஒவ்வொருநாளும் தோள்கோத்து அடைந்த அணுக்கம் அது.” துச்சளை அவனிடம் “தந்தையிடம் இப்போது நீதான் போரிடுகிறாயா?” என்றாள். “ஆம் அரசி, சென்ற பதினைந்து நாட்களுக்கு முன்புவரை” என்றான் சங்குலன். துச்சளை முகம் மாறி “எப்படி இருக்கிறார்?” என்றாள். “நலம்பெறுவார் என நம்புகிறேன்” என்றான் சங்குலன். அந்த மறுமொழியிலிருந்த நுட்பத்தை உணர்ந்து துச்சளை புன்னகைத்து “செல்வோம்” என்றாள். தாரை தயங்கி நிற்க “நீயும் வாடி” என தோளைத் தொட்டு அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

திருதராஷ்டிரரின் மஞ்சத்தறை பெரிய அவைக்கூடம்போல் எட்டு சாளரங்களும் மேலெழுந்து குவிந்த கூரையும் நான்கு வாயில்களுமாக விரிந்திருந்தது. அவருடைய மஞ்சமும் முரசுக்கட்டில்போல அகன்றிருந்தது. அதன்மேல் வெண்பட்டு விரிக்கப்பட்ட இறகுச்சேக்கையில் வெண்ணிறப் பட்டு உறையிட்ட தலையணைகளில் தலைவைத்து அவர் படுத்திருந்தார். நீண்ட நரைகுழல்சுருள்கள் தலையணைமேல் பரவியிருந்தன. பெரிய கருந்தோள்கள் வெண்பட்டின் பகைப்புலத்தில் துலங்கித்தெரிந்தன. துச்சளை அவரைக் கண்டதும் கைகூப்பியபடி கண்ணீர் வழிய அசையாமல் நின்றுவிட்டாள். சங்குலன் மெல்ல பின்னகர்ந்து வாயிலை சாத்தினான். தாரை அவ்வோசையில் சற்று அதிர்ந்தாள்.

திருதராஷ்டிரரின் கண்கள் சுருங்கி அதிர்ந்தன. இமை திறந்து செந்நிறத் தசைக்குமிழிகள் துள்ளின. “துச்சளையா? துச்சளையா?” என்றார். அவருடைய குரல்வளை எழுந்து ஆடியது. கைகள் இரண்டும் காற்றில் நீண்டு துழாவின. “துச்சளை! வந்துவிட்டாயா?” என்றார். தாரை “அரசி, அருகே செல்க!” என்றாள். அவருடைய கைகள் துழாவிக்கொண்டே இருந்தன, பசித்த யானையின் துதிக்கைகள் என. “துச்சளை, அருகில் வா… துச்சளைதானே?” தாரை துச்சளையைத் தொட்டு “அருகில் செல்க, அரசி” என்றாள். துச்சளையால் நடக்கமுடியவில்லை. நெஞ்சில் கைவைத்து அழுத்தியபடி ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்தாள். “துச்சளை!” என்றபடி திருதராஷ்டிரர் எழுந்து அமர்ந்தார். “நான் உன்னை தேடினேன்… நீ வருவாய் என்று…” என்றபின் இருமி உடல் அதிர்ந்தார்.

அருகே சென்ற துச்சளை அவர் கைதொடும் தொலைவில் நின்றாள். அவள் உடல் மெய்ப்புகொண்டு சிலிர்த்திருப்பது தெரிந்தது. அத்தனை பெரிய உடல் மெல்லிய இறகுபோல அதிர்வது தாரைக்கு விந்தையாகத் தோன்றியது. துழாவிய திருதராஷ்டிரரின் கைகள் துச்சளையை தொட்டன. திடுக்கிட்டு அசைவிழந்தன. பின்னர் உறுமலோசையுடன் அவளை அள்ளி இழுத்து தன் மார்பின்மேல் போட்டுக்கொண்டார். அச்சுறுத்தும் முனகலோசையும் உறுமலோசையும் எழ தன் பெரிய கைகளால் அவளைத் தழுவி நெஞ்சோடு இறுக்கினார். அவள் உடல் அவர் பிடிக்குள் பிதுங்கி நெரிந்தது.

அவள் மூச்சுத்திணறி இறந்துவிடக்கூடும் என்று தாரை அஞ்சினாள். ஆனால் அவள் முகம் சிறுகுழவியினுடையதுபோல அழுகையில் துடித்து நின்றது. கண்ணீர் கன்னங்களில் வழிந்து தாடையில் துளித்து சொட்டிக்கொண்டிருந்தது. திருதராஷ்டிரர் அவளை முத்தமிட்டார். கன்னங்களிலும் தோள்களிலும் நெற்றியிலுமாக. அவர் கைகள் அவள் தலையையும் கன்னங்களையும் கழுத்தையும் பருத்த தோள்களையும் உருண்ட பெரிய கைகளையும் தொட்டுத்துழாவின. அவளுடைய முலைகளைப் பற்றிநோக்கி கீழிறங்கின. வயிற்றைத் தொட்டு இடையை வருடி தொடைகளில் நடந்தன. அத்தொடுகையை தாரை தானும் உணர்ந்தாள்.

துழாவித் துழாவிச் சலித்த திருதராஷ்டிரரின் கைகள் மெல்ல ஓய்ந்தன. “நீ வந்துவிட்டாய்… நான் உன்னை தொடாமல் இறந்துவிடுவேன் என எண்ணினேன்… நீ வந்துவிட்டாய்” என்றார். துச்சளை ஒன்றும் சொல்லவில்லை. “உன்னையே நினைத்துக்கொண்டிருந்தேன்… உன் உடல் என் கைகளில் இருக்கிறது. சில தருணங்களில் முற்றிலும் அகன்றும்விடுகிறது. உன்னைத் தொட்டு எத்தனையோ ஆண்டுகளாகின்றன. உன்னை நான் தொட்டு… விதுரா… அடேய்… விதுரா, மூடா!”

துச்சளை “அவர் இங்கில்லை” என்றாள். “ஆம், அவன் இங்கு வந்துவிட்டு இப்போதுதான் சென்றான். உன் அரசனை வரவேற்கச் சென்றான்… அவனிடம் நான் சொன்னேன், நீ பருத்திருப்பாய் என்று. உன் கைகள் பெரிதாக இருக்கும் என்று. அவ்வாறெல்லாம் இருக்காது என்றான். மூடன்! என் மகள் எப்படி வளர்வாள் என எனக்குத் தெரியாதா? நான் உன்னை நாள்தோறும் வருடிக்கொண்டிருக்கிறேன். உன்னை வருடாமல் ஒருநாள் கடந்துசென்றதில்லை… தெரியுமா? உன்னை என் கை அறிந்ததுபோல அவர்கள் அறியமாட்டார்கள்… எப்போது வந்தாய்? உணவருந்தினாயா? ஓய்வெடுக்காமல் இங்கேயே வந்துவிட்டாயா? சஞ்சயா, அறிவிலி…”

துச்சளை “அவரும் இங்கில்லை, தந்தையே” என்றாள். “அவன் உன்னை பார்க்கவேண்டும். அவன் முன் நீ ஒருநாள் முழுக்க அமர்ந்திரு. உன்னைப் பார்த்து அவன் எனக்கு ஒருநாள் முழுக்க சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். நடுவே வேறு எவரும் வரக்கூடாது. ஒரு சொல்கூட நாம் பேசிக்கொள்ளக்கூடாது. உன்னைப்பற்றி அவன் சொல்வது மட்டும் என் காதில் விழவேண்டும்” என்றார் திருதராஷ்டிரர். அவர் குரல் உடைந்தது. “நான் இசை கேட்டு நெடுநாட்களாகின்றன. என் உள்ளத்திலும் இசையே இல்லை. நேற்று ஒரு பண்ணைப்பற்றி நினைவுகூர்ந்தேன். அது சொல்லாகவே என்னுள் எழுந்தது…”

“மீண்டும் இசை கேட்கலாம், தந்தையே” என்றாள் துச்சளை. நெடுநேரமாக பேசாமலிருந்தமையால் அவள் குரல் அடைத்திருந்தது. கனைத்து தொண்டையை தீட்டிக்கொண்டு “நானும் தங்களுடன் அமர்ந்து இசை கேட்கிறேன்” என்றாள். “இனிமேல் என்னால் இசை கேட்கமுடியுமென்று தோன்றவில்லை. மெய்யாகவே இனி என்னால் இயலாது… நான் அதை அத்தனை உறுதியாக உணர்கிறேன். கற்பாறையைத் தொட்டு அறிவதுபோல” என்றார் திருதராஷ்டிரர். தலையை ஆட்டியபடி அவர் விழிநீர் வடித்தார்.

“நீ அறியமாட்டாய், இசை என்றால் எனக்கு என்ன என்று. புறவுலகு பொருள்வயமானது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு வகையில் தனித்தது. ஒன்றுக்கும் பிறவற்றுக்குமான உறவை பிரம்மம் எப்படி வகுத்துள்ளது என நாம் அறியவே இயலாது. நாம் அவற்றுக்கு அளிக்கும் உறவைக்கொண்டுதான் நம் உலகு உருவாகிறது. நீங்கள் விழிகளால் அவற்றை ஒன்றாக்கிக் கொள்கிறீர்கள். உங்கள் உலகம் ஒளியாலானது. என் ஒளி இசையே. நான் தொட்டறியும் அத்தனை தனிப்பொருட்களும் என்னுள் குவிந்து மலைப்பை அளித்தபோதுதான் இசையை கண்டடைந்தேன். இசை அவற்றை இணக்கி இயையச் செய்து தொடுத்து விரித்து என் உலகை அமைத்தது, நான் அதில் வாழ்ந்தேன்.”

“இப்போது என் அகம் மீண்டும் பொருளற்ற பருக்களின் பெருங்குவியலாக கிடக்கிறது. சிலசமயம் துணுக்குறலுடன் நான் இறந்துவிட்டேனா என உணர்கிறேன். என் கைகளால் என் தோள்களையும் மார்பையும் தொட்டுத் தொட்டு நான் உயிருடன்தான் இருக்கிறேன் என நிறுவிக்கொள்கிறேன்.” அச்சொற்களை அவர் உள்ளூர பலமுறை பேசிக்கொண்டிருக்கவேண்டும். அவற்றை சீராகச் சொன்னதுமே அவர் எளிதானார். பெருமூச்சுடன் மெல்ல அமைந்து “உன்னை மீண்டும் தொடும்போது நான் மீண்டுவருவேன் என்று உணர்ந்தேன். மீண்டும் என்னால் இசை கேட்கமுடியும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார். “மெய்யாகவே முடியும், தந்தையே. இன்று இசை கேளுங்கள்…” என்றாள் துச்சளை.

அவர் பெருமூச்சுவிட்டு “ஆனால் இந்த ஆறுதல் பொய் என முதல் உள எழுச்சி அமைந்ததுமே தெரியத்தொடங்குகிறது… சுனைக்குள் இந்தக் கரும்பாறை எந்த அலையாலும் கரைக்கமுடியாதபடி அமைந்துள்ளது” என்றார். “நீ அறிந்திருப்பாய், என் மைந்தன் எனக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்போகிறான்.” துச்சளை ஒன்றும் சொல்லவில்லை. “அவன் என்னை முற்றிலும் துறக்கப்போகிறான். அச்சடங்கு நிகழ்ந்தால் நான் உயிருடனில்லை என்றுதான் என் முன்னோர் பொருள்கொள்வார்கள். நானே அவ்வாறுதான் கொள்வேன். என் கைகளும் கால்களும் அசைவிழக்கும். செத்த உடலாக இங்கே நான் கிடப்பேன். ஒவ்வொருநாளுமென அழுகிக்கொண்டிருப்பேன்.”

மீண்டும் அவர் குரல் நெகிழத்தொடங்கியது. “அவனிடம் சொல்… அவன் கால்களை பற்றிக்கொண்டு நான் கெஞ்சுகிறேன் என்று சொல். அவன் என்னை விட்டுவிடலாகாது. அவனால்தான் நான் பெருந்தந்தை. அவன் என்னை உதறினால் என் நூறு மைந்தரும் ஆயிரம் பெயர்மைந்தரும் என்னிடமிருந்து அகல்வார்கள். பின்னர் நான் வெறும் தசைக்கூண்டு… என் செல்வமே, அவனிடம் செல். உன் சொற்களால் எப்படியாவது அவனை மீட்டுக்கொண்டு வா… அவன் என்னை உதறினால் எனக்கு பின்னர் வாழ்வில்லை… அவனிடம் சொல். அவனிடம் சொல். அவனிடம் சொல், கண்ணே!”

அவர் விசும்பி அழத்தொடங்கினார். பெரிய கருந்தோள்கள் குலுங்க வேழமருப்பென விரிந்த மார்பு எழுந்தமைய கண்ணீர் உதிர அவர் அழுதுகொண்டிருப்பதை நீர்விழிகளுடன் துச்சளை நோக்கிக்கொண்டிருந்தாள். “அவனைத் தூக்கி காட்டில் வீசிவிடும்படி நிமித்திகர் சொன்னார்கள். விதுரனே அவ்வாறுதான் எண்ணினான். அவன் அன்னையும்கூட அன்றிருந்த நிலையில் அதை ஏற்றிருப்பாள். நான் அவனை நெஞ்சோடணைத்துக்கொண்டேன். நானே அவனென்று உணர்ந்தேன்… அவன் என் மைந்தன் மட்டுமல்ல. எல்லா தந்தையருக்கும் மைந்தர்கள் மூதாதை வடிவங்கள். மண்ணிழிந்த தெய்வங்கள்… அவனிடம் சொல். அவன் அடிபணிகிறேன் என்று சொல். அவன் என் தலையை உதைக்கட்டும்… அவனுக்கு நான் எந்த ஆணையையும் விடுக்கவில்லை. அவன் தன் உடன்குருதியினரை கொல்லட்டும். பாரதவர்ஷத்து நிலம் அனைத்தையும் ஆளட்டும். மண்ணில் அனைத்துப் பழிகளையும் சூடட்டும். நான் அவன் தந்தை என்றே நின்றிருப்பேன். அவன் என்னை உதறக்கூடாது. அதைமட்டும் அவன் செய்யக்கூடாது.”

அவர் அவள் கைகளைப்பிடித்து நெரித்து இறுக்கினார். அவற்றை உலுக்கியபடி மீண்டும் மீண்டும் “அவனிடம் சொல்… அவனிடம் சென்று சொல்” என்றார். ஒருகணத்தில் வெடித்தெழுவதுபோன்ற குரலில் “நான் கணிகரிடம் செல்கிறேன். அவர் காலடியில் தலைவைக்கிறேன். அவர் உமிழ முகம் கொடுக்கிறேன். அவர் இழைக்கும் திரிபு இது. அவரால் இதை மீட்கவும் இயலும்… அவர் என்னை காக்கமுடியும்… அவரிடம் செல்க! நான் அவரை சந்திக்கவருகிறேன் என்று சொல்க… அவர் சகுனியிடம் சொல்லட்டும்” என்றார்.

“நான் அவர்களிடம் பேசுகிறேன், தந்தையே” என்றாள் துச்சளை. “அவர்கள் ஒவ்வொருவரிடமும் சொல்க! நான் எளியவன், விழியற்ற பெரும்புழு. மானுடனாக அமையாத குறையுடையவன். என் துயர் என் உள்ளிருந்து வெளியே வழிய வாயிலே இல்லை. அவனிடம் சொல்… அவன் என்னை உதறக்கூடாது. அவனிடம் சொல், என் தெய்வமே!” அவர் மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டிருந்தார். சொல்லச் சொல்ல வெறியேறி பித்தர்போல, இறையேற்றம் பெற்றவர்போல அதை திரும்பத் திரும்ப சொன்னார். ஊழ்நுண்சொல் என “அவனிடம் சொல்! அவனிடம் சொல்!” என்றார். அவள் கைகளைப்பிடித்து உலுக்கினார்.

அவருடைய வெறி ஏறி ஏறி வந்தது. தாரை அச்சத்துடன் பின்னடைந்தாள். ஐம்புலன்களும் கொண்டவர்களிடம் எழும் வெறியல்ல அது என்று தோன்றியது. அது தெய்வங்களுக்கு எதிரான வஞ்சம். சூழ்ந்திருக்கும் முழு உலகுக்கும் எதிரான சினம். சங்குலன் உள்ளே வந்து எழுந்துகொள்ளும்படி விழிகாட்டினான். திருதராஷ்டிரரின் கைகள் வலிப்பு வந்தவைபோல அசைய துச்சளை எளிதாக கைகளை உருவிக்கொண்டாள். அவள் பின்னடைந்ததும் அதை உணர்ந்த திருதராஷ்டிரர் “எங்கே செல்கிறாய்? எங்கே செல்கிறாய்? அவனிடம் சொல்!” என்று கூவினார். ஓங்கி தன் நெஞ்சிலும் தலையிலும் அறைந்துகொண்டார். தன் உடலில் இரு கைகளாலும் அறைந்தபடி நெருப்புபட்ட களிறுபோல பிளிறினார்.

சங்குலன் அவருடைய இரு கைகளையும் பற்றி அவரை படுக்கையோடு சேர்த்து பற்றிக்கொண்டான். “துயில்க, துயில்க!” என்றான். கைநீட்டி அருகே இருந்த பீதர்நாட்டு வெண்களிமண்ணாலான மூக்குக்குவளையை எடுத்து அதை வாயால் ஊதி பொறி எழுப்பி அதன் புகையை அவருக்கு அளித்தான். செல்க என துச்சளையிடம் விழிகாட்டினான். துச்சளை பின்னடி எடுத்துவைத்து வெளியே செல்ல தாரை உடன்சென்றாள்.