மாதம்: திசெம்பர் 2017

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 8

 பகுதி இரண்டு : பெருநோன்பு – 2

blவாயில்கதவு பேரோசையுடன் வெடித்து திறக்க அறைக்குள் நுழைந்த துருமசேனன் இரு கைகளையும் விரித்து உரத்த குரலில் “அன்னையே!” என்றான். சுவடியை நோக்கி தலைகுனிந்திருந்த அசலை திடுக்கிட்டு உடல் அதிர அவனை நோக்கியபின் மூச்சை இழுத்துவிட்டு சலிப்புடன் சுவடியை பீடத்தில் போட்டாள். “ஒப்புதல் இல்லாமல் அறைகளுக்குள் நுழையலாகாதென்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் உன்னிடம்?” என்றாள். துருமசேனன் “இது என் அன்னையின் அறை. நான் காற்றுபோல உள்ளே நுழையலாம் என்று சொன்னார்கள்” என்றான். “யார் சொன்னார்கள்?” என்று அவள் கேட்டாள். துருமசேனன் திரும்பி பின்னால் இருந்த வாமதேவனைக் காட்டி “இவன்” என்றான்.

துருமசேனனைப் போலவே கரிய பேருடல் கொண்டிருந்த வாமதேவன் வெண்ணிறப் பற்களைக் காட்டி சிரித்து “அது முன்பொருமுறை சொன்னது. அப்போது நீங்கள் இப்படி தனியறையில் இல்லை” என்றான். “நான் உன்னை மட்டும்தான் வரச்சொன்னேன்” என்றாள் அசலை. “ஆம், நான் மட்டும்தான் கிளம்பினேன். நான் மட்டும் செல்லும்போது இவனும் வருவதுண்டு. ஆகவே இவனும் வந்தான். அப்போது பிறரும் கூட வந்தனர்” என்றான் துருமசேனன்.

அசலை திடுக்கிட்டு “பிறர் என்றால்?” என்றாள். துருமசேனன் திரும்பிப்பார்த்து “கர்க்கன், காவகன், சபரன், சம்புகன், சித்ரன் ஆகியோர் வந்திருக்கிறார்கள்” என்றபின் எட்டிப்பார்த்து “படிகளில் உக்ரனும் சதுர்புஜனும் முக்தனும் ஏறிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். அசலை தலையில் தட்டிக்கொண்டு “ஒரு படையே வருகிறது போல” என்று சலிப்புடன் சொன்னாள். “ஆம் அன்னையே, கூடத்தில் சாந்தனும் திரிகுணனும் பிரமதனும் கூர்மனும் சக்ரனும் திரிவக்ரனும் உக்ரபாகுவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களும் மேலே வந்துவிடுவார்கள்” என்றான்.

“இன்னும் ஒரு குழு முற்றத்தில் நிற்குமே?” என்றாள் அசலை மெல்ல கையூன்றி எழுந்தபின். “ஆம், எப்படி தெரியும்?” என்றான் வாமதேவன். “தெரிந்துகொள்வதற்கென்ன, நீங்கள் எவருமே தனி உள்ளம் இல்லாதவர்கள். இவன் வருவதை கண்ணால் பார்த்த அத்தனை பேருமே உடன்வந்துகொண்டிருப்பார்கள். ஆயிரம் பேரும் அரண்மனைக்குள் பெருகி நிறைந்தால்கூட வியப்படைய மாட்டேன்” என்றாள் அசலை. துருமசேனன் “நீங்கள் எதற்காக என்னை பார்க்க வேண்டுமென்று சொன்னீர்கள்? தூதன் வந்து ஒன்றும் சொல்லவில்லை” என்றான். “வெறுமனே பார்ப்பதற்காகத்தான். நேற்று மாலை உன்னை கனவில் கண்டேன். பார்த்து நெடுநாள் ஆகிறதே என்று உன்னை மட்டும் வரச்சொன்னேன். ஆனால் நீங்கள் இப்படித்தான் வரமுடியுமென்று தெரிகிறது” என்றபின் சிரித்து “ஒருவகையில் இப்படி உங்களைப் பார்ப்பதும் நன்றாகவே இருக்கிறது. நூறுமுறை பார்ப்பதை சேர்த்தே பார்ப்பதுபோல” என்றபின் “வருக!” என்றாள்.

“அன்னையே, எனக்கு நீங்கள் சிறப்பான விருந்து எதையோ இங்கு ஒருக்கியிருப்பதாக இவன் சொன்னான்” என்றான் துருமசேனன். “விருந்து ஒருக்காமல் உங்களை அழைப்பேனா?” என்று அசலை மகனின் கைகளைப்பற்றி தன் தோளில் வைத்துக்கொண்டாள். அதன் எடையால் அவள் முதுகு சற்று வளைந்தது. “இத்தனை பெரிய உடலை தூக்கிக்கொண்டு எப்படித்தான் அலைகிறீர்களோ?” என்றாள். வாமதேவன் “மாறாக இவ்வளவு பெரிய உடலை எங்கள் உள்ளத்தால் நிறைக்க முடியவில்லை. ஏராளமான இடம் மிஞ்சியிருக்கிறது. ஆகவேதான் நாங்கள் நிலையழிந்துகொண்டே இருக்கிறோம்” என்றான்.

“கதைப்பயிற்சி நடக்கிறதா?” என்றாள் அசலை. “பயிற்சி நடக்கிறதா என்றால் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. அது பயிற்சியா என்று கேட்டீர்கள் என்றால் அதை மூத்த தந்தைதான் சொல்லவேண்டும்” என்றான் வாமதேவன். அவர்கள் அறையை விட்டு வெளியே வந்தனர். பேரொலியுடன் ஒரு கூட்டம் படிகளில் ஏறி மேலே வந்தது. “பார்த்து, மாளிகையை இடித்துத் தள்ளிவிடப்போகிறார்கள்” என்றாள் அசலை. உக்ரன் இரு கைகளையும் விரித்து உரத்த குரலில் “அன்னையே!” என்றான். “கத்தாதே! உத்தரமே இடிந்து தலையில் விழுவது போலிருக்கிறது” என்றாள் அசலை. அதற்குள் சாந்தன் “அன்னையே!” என்று இரு கைகளையும் தட்டி வெடியோசை எழுப்பினான்.

“நீங்கள் ஒருவருக்கொருவர் மந்தணமாக எதையாவது சொல்லிக்கொள்வதுண்டா?” என்றாள் அசலை செவிகளை மூடிக்கொண்டபடி. “மந்தணமாகச் சொன்னால் அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது” என்றான் வாமதேவன். கும்பன் படிகளின் அருகேயிருந்த தூணில் தொற்றி மேலேறிவந்து அவள் இரு கைகளையும் பற்றி “அன்னையே” என்று கூவினான். “இன்னும் பல நாட்களுக்கு என் தலைக்குள் இந்த ஓசைதான் ஒலித்துக்கொண்டிருக்கப்போகிறது” என்றாள் அசலை.

அவளுக்குப் பின்னாலிருந்து நிகும்பன் “அன்னையே!” என்றான். திடுக்கிட்டு உடல் அதிர திரும்பிப்பார்த்து “மூடா! பின்னாலிருந்து கூச்சலிடாதே” என்றாள். “அன்னையே, நீங்கள் என்னை பார்க்கவேண்டுமென்று அழைத்தீர்களா?” என்றான் சம்புகன். “நான் பார்க்க அழைத்தது இவனை” என்றாள் அசலை துருமசேனனை சுட்டிக்காட்டி. “அதைத்தானே நான் சொன்னேன்?” என்றான் அவன். “சரி, வாருங்கள்” என்று அவள் அவர்களை அழைத்துச் சென்றாள்.

முன்னால் சென்ற ஒருவன் அங்கு பாதி திறந்திருந்த கதவை ஓங்கி உதைத்தான். பேரொலியுடன் அது கீலிலிருந்து உடைந்து அப்பால் மரத்தரையில் விழுந்து வெடியோசை எழுப்பியது. அனைத்து வாயில்களிலும் சாளரங்களிலும் சேடியரின் அஞ்சிய முகங்கள் தோன்றின. ஒருவன் ஓடிச்சென்று சாளரத்தில் தோன்றிய முதிய சேடியின் தலையைப்பற்றி இழுத்து வெளியே விட்டான். “இவள் பெயர் மரீசி. இவளை எனக்குத் தெரியும். ஒருமுறை இவள் எனக்கு பன்றியூன் பரிமாறியிருக்கிறாள்” என்றான். “பன்றியூன்! பன்றியூன்!” என்று குரல்கள் எழுந்தன. “எல்லா ஊனும் ஒருங்கியிருக்கிறது. ஓசையிடாமல் வருக!” என்று அவன் தோள்களைத் தட்டி அசலை சொன்னாள்.

“நாங்கள் அங்கே ஊனுணவு உண்டுவிட்டுத்தான் வருகிறோம். ஆனால் வரும் வழியிலேயே எங்களுக்குள் ஒரு சிறுபூசல். இவன் சொன்னான், மூன்றுமாத யானைக் குழவியாகிய சந்தீபனை அவனால் தூக்க முடியும் என்று. தூக்கிப்பார் என்று அறைகூவினேன். இவன் அருகே சென்று அதை தூக்க முயன்றபோது அதன் அன்னை இவனை துதிக்கையால் அறைந்து தள்ளிவிட்டாள். ஆகவே நாங்கள் அனைவரும் சேர்த்து இவனைத் தூக்கி ஏரியில் போட்டோம். ஏரியிலிருந்து இவன் நீந்திக் கரையேறாமலிருக்கும்பொருட்டு பிறர் ஏரியில் குதித்தார்கள். அவர்கள் கரையேறாமல் இருக்கவேண்டுமென்று கரையிலிருந்த கற்களைத் தூக்கி நாங்கள் ஏரிக்குள் எறிந்தோம். அதன் பிறகுதான் பொழுதாகிவிட்டது என்று நினைவு வந்து இங்கே வந்தோம்” என்றான் துருமசேனன்.

“யாருடைய உடையும் நனைந்ததுபோல தெரியவில்லையே?” என்றாள் அசலை. “நாங்கள் வரும்வழியில் புரவிவீரர்கள் சென்றார்கள். புரவியைத் துரத்திப் பிடிக்கமுடியுமா என்று மார்க்கன் கேட்டான். புரவியிலிருந்த வீரனைத் தூக்கி அப்பால் வீசிவிட்டு அந்தப் புரவியை சவுக்கால் அடித்து துரத்தினோம். அதைத் துரத்தியபடி வடக்கு வாயிலினூடாக புராண கங்கைக்குள் நுழைந்து காந்தாரக் குடியிருப்புகளினூடாகச் சுற்றி இங்கே வந்தோம் அதற்குள் உடைகள் காய்ந்துவிட்டன” என்றான் சாந்தன்.

துருமசேனன் “அன்னையே, உணவைப்பற்றி பேசத்தொடங்கியதுமே பசித்தது. இவ்வளவு தூரம் வருவதற்குள் பசி மிகுந்துகொண்டே செல்கிறது” என்றான். மிக அப்பால் வந்து பணிந்து நின்ற அடுமனைச் சேடியிடம் “உணவு ஒருங்கிவிட்டதா?” என்று அசலை கேட்டாள். “ஆம், அரசி” என்று அவள் சொன்னாள். “வாருங்கள், நான் உணவு அளிக்கிறேன்” என்று அசலை அவர்களை அழைத்துச் சென்றாள். “நீங்கள் மெதுவாக எண்ணி எண்ணி வைக்கிறீர்கள். எங்கள் உணவை நாங்களே அள்ளி எடுத்து உண்டால்தான் நிறையும்” என்றான் துருமசேனன். “இன்றொருநாள் ஓர் அகப்பை உணவை மட்டும் நானே வைக்கிறேன். அதன்பிறகு நீங்களே உண்ணுங்கள்” என்றாள் அசலை.

அகத்தளத்திற்குள் பெண்கள் உணவுண்ணும் கூடம் இருந்தது. அதில் மணை பரப்பி ஏற்கெனவே தொடுகறிகளை இலைகளில் பரிமாறியிருந்தனர். ஊன் உணவும் அப்பங்களும் கிழங்குகளும் கனிகளும் அருகே பெரிய கூடைகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. உணவைப் பார்த்ததும் கூச்சலிட்டபடி அவர்கள் ஒருவரை ஒருவர் உந்தி, ஒருவர் மேல் ஒருவர் தாவி, உள்ளே நுழைந்து மணைகளில் அமர்ந்தனர். “பன்றியூன்! பன்றியூன்!” என்று உதரன் கூவினான். சாந்தன் பாய்ந்தெழுந்து ஒரு பன்றித் தொடையை இரு கைகளாலும் தூக்கிக்கொண்டு சென்று தன்னிடத்தில் அமர்ந்து புலிபோல வாயால் கடித்து உண்ணத்தொடங்கினான். சில கணங்களிலேயே கூடம் மெல்லும் ஒலியால் நிறைந்தது.

துருமசேனனை கைபற்றி அழைத்துச்சென்று மணையில் அமரவைத்த அசலை “இரு, நான் பரிமாறுகிறேன் உனக்கு” என்றாள். “அதற்குள் இவர்கள் தின்று முடித்துவிடுவார்கள்” என்றான் துருமசேனன். “பொறு” என்றபின் அவள் திரும்பி அன்னம் பரிமாற ஏனத்தை எடுத்து அகப்பையை அதிலிட்டு திரும்புவதற்குள் துருமசேனன் மாட்டுத் தொடை ஒன்றை எடுத்து உண்ணத் தொடங்கிவிட்டான். கையில் அன்னத்துடன் அவள் அவனைப் பார்த்து சலிப்புடன் தலையசைத்தாள். அவன் விழிதூக்கி “இங்கு உணவு இன்னும் சுவையாக இருக்கிறது, அன்னையே” என்றான். அவள் சிரித்து “உண்ணுக!” என்று சொல்லி அவன் தலையைத் தொட்டு வருடினாள்.

மைந்தனை நினைக்கும்போது அவனை சிறுமகவாக கையிலேந்தி முலையூட்டிய நினைவுகளும், அவன் வந்து புன்னகைத்த கனவுகளும் கூடி எப்போதும் அவளை உளம் நெகிழச் செய்வதுண்டு. அவள் அந்நினைவுகளை தன்னைச் சூழ பரப்பி அதில் வாழ்ந்தாள். தன்னறையில் அவனுடைய இளமைக்கால ஆடைகளை வைத்திருந்தாள். அறைக்குள் அவற்றை வெவ்வேறு இடங்களில் பொருத்திவைத்து ஒவ்வொரு நாளும் அவனை ஒவ்வொரு அகவையில் உளம்பார்த்துக்கொண்டிருந்தாள். அவனைக் குறித்த தன் எண்ணங்களை ஒவ்வொரு நாளும் ஓலையில் எழுதி பேழையில் சேர்த்து வைப்பாள். பின்புலரியில் அவன் எப்போதும் அவள் கனவில் வந்தான்.

அவனுக்கு வெவ்வேறு மணங்கள் இருந்தன. கைக்குழந்தையாக இருக்கையில் அவன் வாயிலெழுந்த சற்றே புளித்த முலைப்பாலின் மணம். ஓடிவிளையாடுகையில் உலர்ந்த வியர்வையின் மணம். அவன் தலையிலெழும் எண்ணெயும் தாழம்பூவும் கலந்த நெடி. வளரும்போது அவன் உடல்மணம் மாறத்தொடங்கியது. உப்பு கலந்த மண் மணம். கசங்கிய தழை மணம். பின்னர் குருதியின் கிளர்ச்சியூட்டும் மணம். ஆண்புரவிகளிலும் களிறுகளிலும் அந்த மணத்தை அவள் அறிந்திருந்தாள். அன்று காலை எந்த மணத்தில் அவன் தன் கனவில் தோன்றுவான் என்பதை முந்தைய நாளிரவில் படபடப்புடன் எண்ணிக்கொள்வாள். அவள் எண்ணியதைக் கடந்து முற்றிலும் புதிய தோற்றத்திலேயே அவன் எப்போதும் இருந்தான்.

கனவுகளில் கௌரவ நூற்றுவரின் முகமும் அவனுக்கு இருந்தது. நூற்றுவரில் முதல்வனாகவும் அவனே இருந்தான். ஒருமுறை மட்டும் இளைய யாதவனின் சிற்றுடலில் அவன் முகம் புன்னகையுடன் திகழ்ந்தது. எழுந்தமர்ந்து படபடப்புடன் அக்கனவை நினைவிற்கு மீட்டுக்கொள்ள முயன்றாள். தொடத் தொட கலையும் ஒன்றை பெயர்த்தெடுத்துப் பதிப்பதன் பதற்றமும் கைசலிப்பும் உளச்சலிப்பும் கடந்து பின்னர் எழுந்து நீராடச் செல்கையில் தன் இதழ்களில் ஒரு புன்னகையை கொண்டிருந்தாள்.

அவளால் எங்கும் அவன் காலடி ஓசையை தனித்துக் கேட்கமுடியும். அவர்கள் அனைவருமே இல்லம் இடிபடும் ஓசையில் நடப்பவர்கள். இரு கைகளையும் ஓங்கி அறைந்துகொண்டு கூச்சலிட்டுப் பேசுபவர்கள். கையருகே எட்டும் ஒவ்வொன்றையுமே ஓங்கி அறைபவர்கள். அவர்களை ஒருவரிலிருந்து பிறிதொருவர் என்று பிரித்தறியவே இயலாதென்று அஸ்தினபுரியில் அனைவரும் கூறினர். ஆனால் அவள் அவனை மட்டும் அறிந்திருந்தாள்.

ஒவ்வொரு எண்ணமும் மிக இயல்பாக அவனையே சென்றடைந்தது. அடுமனை வாயிலுக்குச் சென்று உள்ளிருந்து எழும் உணவு மணத்தை முகர்ந்தபடி நிற்கையில் அவனை மிக அண்மையாக உணர முடிந்தது அவளால். சூதர்கள் புரவிகளை உருமிவிடுகையில் பளபளத்து எழுந்தமையும் இறுகிய பெருந்தசைகளை சாளரத்தினூடாக நோக்கி நிற்பாள். அவன் தோள்களும் முதுகும் நெஞ்சும் என அவை உருக்காட்டும். இறுக்கமே அசைவென்றான அவற்றின் மிடுக்கு. பரு வடிவ ஆற்றலுக்கு மட்டுமே உரிய மிதப்பு. இங்கு நான் இக்கணம் என்னும் தன்னில் நிறைவு.

ஆனால் ஒவ்வொரு முறையும் அவனை நேரில் பார்க்கையில் ஏமாற்றத்தால் அவளுக்குள் விரிந்த அனைத்தும் சுருங்கி உள்மடங்கும். முற்றிலும் பிறிதொருவனாக அவன் வந்து அவள் முன் நிற்பான். பல மாதங்களுக்கு ஒருமுறைதான் அவள் அவனை நேரில் பார்த்தாள். ஒவ்வொரு முறையும் அவன் உருமாறிக்கொண்டே இருந்தான். தோள்கள் அகன்று தடித்தன. நெஞ்சிலும் கைகளிலும் மயிர் அரும்பியது. மேலுதடுக்குமேல் மென்மயிர் முளைத்து அடர்ந்து பெரிய மீசையென்றாகியது. தாடையில் கரிய வலை என தாடி வளர்ந்தது. அவன் குழல் சுருளற்ற தடித்த கருமயிர்க்கற்றைகளால் ஆனது. நீண்ட சரங்களாக அவன் தோளில் தொங்கியது. அவன் குரல் ஒவ்வொரு முறையும் பிறிதொன்றாகியது.

அவன் கண்கள் மட்டுமே மாறாதிருந்தன. ஆனால் அவற்றை எதிர்கொள்ள அவளால் முடியவில்லை. “அன்னையே!” என்ற பெருங்குரலுடன் அவன் வந்து நிற்கும்போது ஏன் அவனை அழைத்தோம் என்றே அவள் எண்ணுவாள். அவனை முடிந்த விரைவில் திருப்பி அனுப்பிவிடவேண்டுமென்று தோன்றும். அத்தருணத்தைக் கடக்கவேண்டுமெனில் பொருளற்ற எதையேனும் பேசவேண்டும். அதை அவனே உருவாக்குவான். மிகப் பெரும்பாலும் அவன் உணவுண்ணும் பொருட்டே அங்கு வந்தான். அவன் உள்ளத்தில் அன்னை உணவின் வடிவில் அமைந்திருந்தாள். அவளும் உணவைப்பற்றிய பேச்சுகளினூடாக அவனிலிருந்து தன்னை முழுமையாக விலக்கிக்கொண்டாள்.

உணவுண்ணும்போது அவன் அவளிடமிருந்து முழுமையாக விலகிச்செல்வான். அப்போதுதான் இயல்பாக அவனை பார்க்கத் தொடங்குவாள். மெல்ல மெல்ல விழிக்குப் பழகி அன்றைய புத்துருவுடன் தன் முன் வந்து நின்றிருக்கும் அவனை தன்னவன் என்று தன்னுள்ளத்திலிருந்து தயங்கும் பெண்ணுக்கு உணர்த்துவாள். மிகத் தயங்கி நூறுமுறை பின்வாங்கி அவள் எழுந்து வந்து மைந்தனை அறியும் கணம் ஒன்று உண்டு. எப்போதும் அது ஒரு தொடுகை. நோக்கில் முற்றிலும் அயலவனாகத் தெரியும் அவன் தொட்டதுமே தன் மைந்தனாக ஆவதன் விந்தையை அவள் மீண்டும் மீண்டும் உணர்ந்தாள்.

இயல்பாக தோளையும் கையையும் தொடும்போதே கண் ஒன்று சொல்ல உள்ளம் பிறிதொன்று சொல்லும் அலைக்கழிவையே உவகையெனக் கண்டு அமர்ந்திருப்பாள். தலைக்குமேல் ஓங்கி பெருந்தோள்களும் எடைமிக்க கைகளுமாக நிற்பவன் முதிராத் தசைகொண்ட குழவி என தொடுகைக்கு தென்படுவான். புளித்த முலைப்பாலின் மணமும் பொடிவியர்வை மணமும் மூக்கினுள் எழுவதெனத் தோன்றும். அவள் அப்போது அவனை பெயர் சொல்லி அழைக்க விரும்புவாள். துருமசேனன் என்ற பெயர் அவள் நாவறியாதது. அது அவன் முதுதந்தை மடியிலமர்த்தி நிமித்திகர் வகுத்தளிக்க அவனுக்கிட்ட பெயர். அவளிட்ட பெயர் கிருஷ்ணன். அவனை அவள் அவ்வாறு ஒருமுறைகூட அழைத்ததில்லை. எப்போதும் மைந்தா என்றே அழைத்தாள். மைந்தன் என்றே சொன்னாள்.

அவள் இயல்பாக கைநீட்டி அவன் முழங்காலை தொட்டாள். பன்றி நெஞ்சை பற்களால் நொறுக்கி ஊனை இழுத்து மென்று தின்றுகொண்டிருந்த அவன் திரும்பி அவளைப் பார்த்து புன்னகைத்தான். அத்தருணத்தில் அனைத்தும் விலகி மீண்டும் கருவறையிலிருந்து குருதி மணத்துடன் வெளிவந்தான். கண்ணீர் மல்குமளவுக்கு அவள் உளநெகிழ்வை அடைந்தாள். இதழ்களை அழுத்தியபடி தலைகுனிந்து பெருமூச்சுவிட்டாள். ஏறியிறங்கும் நெஞ்சை கைகளால் அழுத்தியபடி மூச்சை இழுத்துவிட்டு மெல்ல தன்னை நிலைப்படுத்திக்கொண்டாள். பின்னர் புன்னகையுடன் “தந்தையை பார்த்தாயா?” என்றாள்.

உண்பதை நிறுத்தி துருமசேனன் “அவர்களை நான் பார்த்தே நெடுநாட்களாகின்றன” என்றான். அவனருகே இருந்த வாமதேவன் “எங்களைப் பார்த்ததுமே சினம்கொள்கிறார்கள். சென்றமுறை தந்தை துர்மதர் என்னை ஓங்கி அறைந்தார்” என்றான். “நீ என்ன செய்தாய்?” என்று அசலை கேட்டாள். “நான் காலையுணவுக்காக ஒரு கன்றுக்குட்டியை தூக்கிச் சென்றுகொண்டிருந்தேன்.” அசலை புருவத்தை சுளித்து “கன்றுக்குட்டியா?” என்றாள். “அது பசுக்கன்று என்று நான் பார்க்கவில்லை…” என்று வாமதேவன் சொன்னான். “ஏனென்றால் அதை கவிழ்த்தால்தான் பார்க்கமுடியும்” என்றான் சாந்தன்.

துருமசேனன் “சிம்மமும் புலியும் பசுவா காளையா என்று பார்த்தா வேட்டையாடுகின்றன? தந்தையருக்கு எதுவுமே புரிவதில்லை” என்றான். “ஆம், உண்க!” என்று அவன் தோளை தட்டினாள் அசலை. பின்னர் கைகளால் மெல்ல அவன் முழங்கால் தசைகளை வருடத்தொடங்கினாள். முழங்கால் முடி யானைமயிர் என தடித்து கம்பிச்சுருளாக கையில் தட்டுப்பட்டது. இறுகிய கெண்டைக்கால் தசையை வருடி உள்ளங்காலை அடைந்தாள். ஒவ்வொரு விரலும் அடிமரத்து வேர்கள்போல மண் செறிந்து விரிந்திருந்தன. தன் மெலிந்த வியர்வை கொண்ட கைகளால் அவள் ஒவ்வொரு விரலாக தொட்டு இழுத்தாள். பெரிய நகங்களின்மேல் விரலோட்டினாள். விரலிடுக்குகளில் விரல் செலுத்தி அழுத்தினாள். அவன் காலை வருடிக்கொண்டே தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.

blஏதோ கனவிலென இருந்த அவள் சூழுணர்ந்து விழித்துக்கொண்டபோது தன்னைச் சூழ்ந்து உணவுண்டுகொண்டிருந்த மைந்தர் திரளை நோக்கி ஒருகணம் எதுவும் புரியாதவள்போல திகைத்தாள். உண்ணலின் சுவையில் உடல்கள் மெல்ல அசைய கரியநீர் நிறைந்த சுனை என அலைகொண்டது அவ்வறை. ஊழ்கத்திலென நிலைமறந்த விழிகள். அவிகொள்ளும் அனலென அசைந்த உதடுகளும் கைகளும். மெல்லும், நொறுங்கும், அரையும் ஓசை. கலங்கள் ஓசையிட்டன. மூச்சொலிகள் அங்கே நாகக்கூட்டம் நிறைந்திருப்பதுபோல எண்ணச்செய்தன.

எத்தனை முகங்கள்! ஒருநோக்கில் ஒன்றுபோலெனக் காட்டி கூர்நோக்கில் ஒவ்வொன்றும் வேறென விளையாடுபவை. குருகுலத்தின் அத்தனை மூதாதையரும் முகில்திரண்டு மழையென இறங்குவதுபோல அஸ்தினபுரிமேல் பொழிந்துவிட்டனர் போலும். ஒவ்வொருவரும் பிற மானுடர் உண்பதைவிட நான்குமடங்கு உண்கிறார்கள். உண்பதற்கு மட்டுமென்றே மண்நிகழ்ந்தவர்கள்போல. ஒருகணம் அவள் உடல் மெய்ப்புகொண்டது. அதன்பின்னரே அவ்வெண்ணம் அவளுள் துலங்கியது. இனியில்லை என்றுணர்ந்து இனி ஆயிரமாண்டுகளுக்கான அன்னத்தை உண்டு செல்ல வந்திருக்கிறார்களா என்ன?

உணவுண்டு எழுந்து அவன் உரக்க ஏப்பம் விட்டபோது புன்னகையுடன் அண்ணாந்து பார்த்து “அடுத்தது என்ன? ஏதாவது யானை வாலை இழுத்துப் பார்ப்பதுதானே?” என்றாள். “யானை வாலையா? ஏன்?” என அவன் ஆவலுடன் கேட்டான். அவள் சிரித்து “அறிவிலி, நான் வேடிக்கைக்காக சொன்னேன். மெய்யாகவே சென்று யானை வாலை இழுத்துவிடாதே” என்றாள். “ஏன் இழுத்துப்பார்த்தால்தான் என்ன?” என்று அவன் திரும்பி வாமதேவனிடம் கேட்டான். “இழுக்கலாம்தான்…” என்று அவன் சொன்னான். அசலை “வேண்டாம். நேராக உங்கள் காட்டில்லத்திற்கே செல்லுங்கள்” என்றாள். “ஆம், ஆனால் இம்முறை நாங்கள் தெற்குவாயில் வழியாக செல்வதாக இருக்கிறோம்” என்றான் சாந்தன்.

துருமசேனன் “அன்னையே, போர் வந்துகொண்டிருக்கிறது என்கிறார்களே. மெய்யாகவா?” என்றான். “எவர் சொன்னது?” என்றாள். “மூத்தவர் சொன்னார். ஆகவே நாங்களெல்லாம் முறையாக கதை பயிலவேண்டும் என்றார்.” அசலை “போர் வராது” என்றாள். துருமசேனன் “வரும்!” என்று உரக்க சொன்னான். “அதில் நாங்களெல்லாம் இறந்துபோவோம்.” அசலை நெஞ்சு உறைய சிலகணங்கள் நின்று பின் கடந்து “என்ன சொல்கிறாய், அறிவிலி?” என்றாள். “நிமித்திகர் பார்த்துவிட்டார்கள். எங்களிடம் செவிலி காந்திமதி வந்து சொன்னாள்” என்றான் துருமசேனன். “நான் போரில் இறப்பதற்கு முன் நூறுபேரை கொல்வேன்.” அசலை “அதெல்லாம் வெறும் செய்திகள். போர் நிகழப்போவதில்லை” என்றாள்.

“அன்னையே, நாங்களெல்லாம் இறந்துவிட்டால் இந்த அடுமனையாளர்கள் குறைவாகத்தான் சமைக்கவேண்டும் இல்லையா?” என்றான் கும்பன். “தந்தையர் இருப்பார்களே. அவர்கள் நிறைய உண்பார்கள்” என்றான் சாந்தன். “தந்தையரும் இறப்பார்கள் என்றுதானே நிமித்திகர் சொன்னார்கள்? செவிலி சொல்வதை நீ கேட்டாய் அல்லவா?” என்றான் உக்ரன். அசலை “அதெல்லாமே பொய்… நீங்கள் வாழ்வீர்கள். சென்று விளையாடுங்கள்” என்றாள். “சென்று வருகிறோம், அன்னையே” என்று துருமசேனன் அவள் காலைத்தொட்டு தலைவைத்தான். “சென்று வருகிறோம், அன்னையே” என்று ஒவ்வொருவராக அவளை வணங்கினர். அது நெடுநேரமாக அலைகளைப்போல நிகழ்ந்துகொண்டே இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

கூச்சலிட்டபடி அவர்கள் படியிறங்கி முற்றத்தில் பரவினர். அவர்களைக் கண்டதும் ஏவலர்களும் காவல்வீரர்களும் பதறி பல திசைகளிலாக பதுங்கிக்கொண்டனர். அவள் வாயில்வரை வந்து அவர்களை புன்னகையுடன் நோக்கி நின்றாள். பின்னர் பெருமூச்சுடன் எண்ணிக்கொண்டாள், அம்முறையும் அவள் அவனை அவளுக்கு உகந்த பெயர் சொல்லி அழைக்கவில்லை.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 7

பகுதி இரண்டு : பெருநோன்பு – 1

blஅஸ்தினபுரியின் மேற்குக்கோட்டைவாயிலுக்கு அப்பால் செம்மண்ணாலான தேர்ச்சாலைக்கு இரு பக்கமும் விரிந்த குறுங்காட்டிற்குள் பிரிந்து சென்ற சிறுபாதையில் ஏழு சேடியரும் காவலுக்கு பதினெட்டு வில்லவர்களும் கரிய ஆடையணிந்த நிமித்திகர்குலத்துப் பூசகர் மூவரும் சூழ கையில் பூசனைத் தட்டுகளுடன் பானுமதியும் அசலையும் நடந்தனர். முதலில் சென்ற காவலன் ஒரு சிறுமேட்டின்மேல் ஏறி நின்று கொம்பொலி எழுப்பினான். செவிகூர்ந்த பின் வருக என பிறருக்கு கைகாட்டினான். அவர்கள் நடந்தபோது சருகுகள் நொறுங்கும் ஒலியும் கற்கள் கால்பட்டு உருளும் ஒலியும் எழுந்து காட்டின் காற்றுமுழக்கத்துடன் இணையாமல் தனித்து ஒலித்தன.

ஓசையென்று தெரிந்து கரிய பாறைகளில் ஒளியுடன் விழுந்து வளைந்து அணுகிய ஓடையின் கரையில் கற்களை அடுக்கியும் சரிந்த மண்ணில் தடம்வெட்டி மரத்தடிகளை பதித்தும் அவர்கள் மேலே செல்வதற்கான பாதை அமைக்கப்பட்டிருந்தது. ஒருவர் பின் ஒருவராகவே அந்தப் பாதையில் அவர்கள் செல்லமுடிந்தது. தொலைவில் கரிய கற்களாலான சிற்றாலயம் தெரிந்ததும் காவலர்தலைவன் கைகாட்டிவிட்டு வேலை நீட்டியபடி முன்னால் சென்றான். ஆலயமுகப்பில் நின்று வேல்முனையை மூன்றுமுறை நிலத்தில் முட்டியபோது அவ்வதிர்வால் சினம்கொண்டு சீறியபடி மண்செந்நிறமான அன்னை நரி ஒன்று வெளிவந்தது.

அன்னை நரி மூக்கை நீட்டி தலை தாழ்த்தி பழுப்புக் கற்கள் போன்ற கண்களுடன் பிடரி குலைத்து வால் சுழற்றியது. அதைத் தொடர்ந்து அதன் இரண்டு மைந்தர்களும் மயிர் சிலிர்த்த உடலும் இதழ்விரிந்து கோட்டி அசைந்த செவிகளுமாக வெளிவந்தன. அன்னை மெல்ல உறுமியது. ஒருவன் வில்லில் அம்புதொடுத்த ஒலி கேட்டு தலைவன் வேண்டாம் என கையசைத்தான். அவன் தன் வேலால் தரையைத் தட்டியபோது அத்தனை வீரர்களும் அதேபோல தரையில் வேல்தண்டுகளாலும் மிதியடிக்கால்களாலும் முட்டி ஓசையெழுப்பினர்.

நரிகள் வெருண்ட நோக்குடன் அவர்களை மாறிமாறி பார்த்தபின் கால்களைத் தூக்கி பின்னால் வைத்து பதுங்குவதுபோல பின்னடைந்தன. புதர்களில் மூழ்கியதும் காற்று செல்வதுபோல இலைத்தழைப்பில் தடம் எழ விரைந்து ஓடி அகன்றன. காவலர்தலைவன் கைகாட்ட பூசகர்கள் சென்று ஆலயத்திற்குள் நுழைந்து உள்ளே கிடந்த நரிகளின் மட்கிய முடியையும் உணவு எச்சங்களான எலும்புகளையும் வால்மயிர்களையும் கொண்டுவந்து அப்பாலிட்டு ஆலயத்தை தூய்மைசெய்தார்கள். அதுவரை பானுமதியும் அசலையும் சற்று அப்பால் காவலர் வெட்டி விரித்து அமைத்த தழைப்பரப்பின்மேல் அமர்ந்தனர்.

இரு வீரர்கள் மரக்குடுவையுடன் சென்று ஓடையிலிருந்து நீர் அள்ளிவந்து அளிக்க பூசகர்கள் அதை வாங்கி ஆலயத்திற்குள் வீசி கழுவி தூய்மை செய்தனர். ஒருவர் அங்கிருந்த கல்விளக்குகளில் நெய் ஊற்றி திரியிட்டு சுடரேற்றினார். கருவறை மட்டுமேயான ஆலயத்தின் இருளுக்குள் இருந்து கன்னங்கரிய நீளுருளைக் கல்லில் பொறிக்கப்பட்ட இரு விழிகள் தெளிந்து வந்தன. நோக்கியிருக்கவே அத்தெய்வம் பார்வையும் இருப்பும் கொண்டது. பூசகர் தலைவணங்கி முடிந்துவிட்டதென அறிவிக்க பானுமதியும் அசலையும் எழுந்து ஆலயத்தருகே சென்றனர்.

கைகூப்பியபடி பானுமதி ஆலயத்தின் முன் நிற்க அவளருகே அசலை நின்றாள். பூசகர்களில் ஒருவன் தன் தோள்பையிலிருந்து உடுக்கை எடுத்து கொட்டத்தொடங்கினான். தாளம் முறுகி எழுந்தோறும் ஆலயச்சூழல் அறியாமல் மாற்றம் கொண்டது. கண்ணுக்குத் தெரியாத தெய்வங்கள் சூழ்ந்து நின்று தங்களை நோக்கிக்கொண்டிருக்கும் உணர்வை அசலை அடைந்தாள். பூசகர் மூங்கில் பேழையிலிருந்து நீலத்தாமரையும் குவளையும் நீலச்செண்பகமும் சேர்த்துத் தொடுத்த மலர்மாலையை எடுத்து கலிதேவனுக்கு சூட்டினார். அருகே சிறிய நீளுருளைக் கல்லாக அமர்ந்திருந்த கபாலனுக்கு இன்னொரு நீலமாலையை சூட்டினார்.

அசலை கபாலனையே நோக்கிக்கொண்டிருந்தாள். கலியின் படைக்கலமான கபாலதண்டின் உருவம் அது என்று அவளுக்கு சொல்லப்பட்டிருந்தது. முன்பு அந்தத் தெய்வம் அங்கிருக்கவில்லை. எப்படி வந்ததென்று தெரியாமல் அங்கே அது வந்தமைந்தது. அதற்கான கதை உருவானது. “அஸ்தினபுரியில் மானுடரைவிட கூடுதலாகவே தெய்வங்கள் பிறந்துகொண்டே இருக்கின்றன” என்று அரண்மனை விறலி சந்திரிகை அவளிடம் சொன்னாள். கலியின் காவலன். கலியின்பொருட்டு இருளையும் கெடுமணத்தையும் சுமந்துசெல்பவன். காகமாகவும் நரியாகவும் வௌவாலாகவும் உருக்கொண்டு நகர்களுக்குள் நுழைபவன்.

இளம்பூசகர் கொண்டுவந்த அனற்கலங்களை இரு பக்கமும் வைத்து தூபம் எழுப்பினார் பூசகர். இன்னொரு பூசகர் சங்கொலி எழுப்ப உள்ளிருந்து கைமணி ஒலித்து கலிக்கு சுடராட்டு காட்டினார். பானுமதி சுடர்தொட்டு வணங்கி பூசகர் அளித்த கரிப்பொடியைத் தொட்டு நெற்றியிலணிந்துகொண்டாள். அசலை வணங்கி வந்ததும் பூசகர் “நீங்கள் செல்லலாம் அரசி, நாங்கள் தேவனுக்கு குருதிபலி கொடுத்து மீள்வோம்” என்றர். பானுமதி தலையசைத்துவிட்டு தாழ்ந்த விழிகளுடன் நடக்க அசலை உடன்சென்றாள். காவலர் அவர்களைச் சூழ்ந்து அழைத்துச்சென்றார்கள்.

அசலை கால்தளர்ந்து சற்று நின்றாள். பானுமதி திரும்பிநோக்கி “இன்று பேரரசியை சந்திக்கச் செல்லவேண்டும். பிந்திக்கொண்டிருக்கிறது” என்றாள். அசலை கூந்தலை சீர்செய்தபடி அவளருகே வந்து “இந்தத் தெய்வங்களைப்பற்றி அஸ்தினபுரியின் குலவரலாறுகளில் எங்குமே சொல்லப்பட்டதில்லை. இதைப் பூசனை செய்யவேண்டுமென்ற வழக்கம் எப்போது உருவானது?” என்றாள். பானுமதி “இது அரசரின் அடையாளதெய்வம்” என்றாள். “ஆம், அதை நானும் அறிவேன். அதை சொன்னது யார்?” பானுமதி ஒன்றும் சொல்லாமல் நடந்தாள். “அரசர் பிறந்தபோதுதான் இந்த தெய்வத்தைப்பற்றிய பேச்சுக்கள் எழுந்தன” என்றாள் அசலை.

“ஆம், ஆனால் இது அப்போது நிறுவப்பட்ட ஆலயம் அல்ல. அதற்கு பல தலைமுறைகளுக்கு முன்னரே இது இங்கிருந்திருக்கிறது” என்றாள் பானுமதி. “அப்படி நூற்றுக்கும் மேற்பட்ட தெய்வங்கள் இந்த நகரைச் சுற்றிய காட்டுக்குள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஆலயம் ஏன் கண்டடைந்து அரசருக்குரியதென்று ஆக்கப்பட்டது?” என்றாள் அசலை. “இங்கே அனைத்தையும் முடிவுசெய்பவர்கள் நிமித்திகர்கள்” என்றாள் பானுமதி. “நிமித்திகர்களை எவரேனும் செலுத்தியிருக்கக் கூடுமா? பேரரசி அவ்வாறுதான் நம்புகிறார்கள்.”

பானுமதி “அரசர் பிறந்தபோது நடந்தவை பதிவாகியிருக்கின்றன. முதலில் அவர் மதங்ககர்ப்பம் கொண்டு மண்நிகழ்ந்தார். அது அசுரர்களுக்குரிய பிறப்பு. அரசர்களில் கார்த்தவீரியர் மட்டுமே அவ்வாறு பிறந்தார் என்கிறார்கள். அவரை கருவுற்றநாள் முதல் தான் கண்ட கொடுங்கனவுகளை அரசியே முறையாக சொல்லி அரண்மனை நிமித்திகர் பதிவுசெய்திருக்கிறார்கள். அது அவர் கண்ட கனவு மட்டும் அல்ல. இந்நகரமே அக்கனவுக்குள் அன்றிருந்தது. பெருங்கோடையால் நகரைச் சூழ்ந்துள்ள காடுகள் காய்ந்து தீப்பற்றிக்கொண்டன. புகை மூடி நகர் கருகியது. நகருக்குள் நடுப்பகலிலும் நரிகள் ஊளையிட்டன. பல்லாயிரக்கணக்கான காகங்கள் நகருக்குள் நுழைந்து இங்கிருந்த காற்றே கருமைகொண்டது என்கிறார்கள்” என்றாள் பானுமதி.

“அவர் மண்நிகழ்ந்ததை ஒட்டிய நிகழ்வுகளில் உபாலன் என்னும் யானை உயிர்விட்டது. தீர்க்கசியாமர் என்னும் விழியிழந்த நிமித்திகர் எதையோ கண்டு அஞ்சி உயிரிழந்தார்” என்று பானுமதி தொடர்ந்தாள். “அனைத்தையும் எவரும் அமைக்கமுடியாது. நம்மைச் சூழ்ந்தவற்றில் நம்மைப்பற்றிய மந்தணம் ஒன்று பொதிந்திருக்கிறது. இந்த மரம் எவ்வகையிலோ நாம் இங்கு வந்ததை அறிந்திருக்கிறது. அந்தப் பறவை அக்கிளையில் அமர்ந்திருப்பதற்கும் நாம் இப்போது அதை கடந்துசெல்வதற்கும் தொடர்பிருக்கிறது. இவையனைத்தும் வெறும் தற்செயல்களே என்றால் இப்புவிமேல் நிகழ்வன எதற்கும் எப்பொருளும் இல்லை என்றே பொருள்.”

“அவர் கலியின் வடிவமென நினைக்கிறீர்களா? பேரழிவை கொண்டுவருவார் என எதிர்பார்க்கிறீர்களா?” என்றாள் அசலை. பானுமதி “நான் எண்ணுவதை நிறுத்தி நெடுநாட்களாகின்றன. என் எண்ணங்களுக்கு அப்பால் அகன்று விரிந்து சென்றுவிட்டன அனைத்தும். எண்ணிச்சலிப்பதன்றி பயன் ஒன்றும் இல்லை” என்றாள். அசலை “ஆனால்…” என்றபின் உதடுகளை அழுத்திக்கொண்டாள். “என்னடி?” என்றாள் பானுமதி. அசலை மறுமொழி சொல்லவில்லை. “என்னடி?” என்று பானுமதி நின்றாள். அசலையிடமிருந்து விசும்பலோசை கேட்டது. அவள் நின்று மேலாடையால் முகத்தை மூடி தலைகுனிந்திருந்தாள்.

பானுமதி அவள் அருகே சென்று தோளைப்பற்றி “என்னடி? என்ன இது, ஏவலர் காண பாதையில் நின்று?” என்றாள். “கண்களை துடை. ஓசையெழலாகாது” என்று மேலும் தாழ்ந்த குரலில் சொன்னாள். அசலை விம்மல்களை விழுங்கி முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு உடன்வந்தாள். “என்னடி?” என்றாள் பானுமதி. “கலிவடிவமாகிய தமையன், கொலைப்படைக்கலத்தின் வடிவமாகிய இளையோன். இங்கு வந்தநாள் முதல் கேட்ட கதை. அவற்றை அள்ளி ஒதுக்கி நெஞ்சை விலக்கித்தான் இதுவரை வாழ்ந்தேன். ஆனால்…” பானுமதி “என்ன?” என்றாள். “அச்சமெழுகிறது” என்றாள் அசலை.

பானுமதி அதற்கு மறுமொழி சொல்லவில்லை. இருவரும் பேசாமல் நடந்தனர். “அக்கையே, இதெல்லாம் பேரரசி சொல்வதுபோல வெறும் சூழ்ச்சியென்றே இருக்குமோ? இங்கு வந்து வழிபட்டுச் செல்வதனூடாக நாம் அச்சூழ்ச்சியை ஏற்று பெருக்குகிறோமா?” என்றாள். பானுமதி ஒன்றும் சொல்லாமல் நடந்தாள். “நாமறிவோம் இருவரையும். மூத்தவர் பெரும்போக்கும் நெறிநிலையும் கொண்டவர். அளி நிறைந்தவர். இளையவர் மூத்தவரை இறைவடிவெனக் காணும் எளிய உள்ளம் கொண்டவர். அவர்களை குருதிவிடாய் கொண்ட கொடுந்தெய்வங்களெனக் காண நம்மால் இயலுமா என்ன?” பானுமதி பெருமூச்சுவிட்டாள். “சொல்லுங்கள், மூத்தவளே” என்றாள் அசலை.

“ஒருமுகம் கொண்ட தெய்வம் ஏதுமில்லை” என்று பானுமதி சொன்னாள். “அவர்கள் நமக்கு இனியவர்கள். அந்த முகத்தையே நாம் கொழுநர்களெனக் கொண்டோம். மைந்தரைப் பெற்றோம்.” அசலை நின்று அச்சம் தெரிந்த குரலில் “அவ்வாறென்றால் இக்கதைகளனைத்தும் மெய்யென்றே நினைக்கிறீர்களா? குலமழிக்கும் கொடியவராக எழுவாரா அரசர்?” என்றாள். “குலம் அழிவதோ குருதி பெருகுவதோ மானுடர் எவர் கையிலும் இல்லை. அது ஊழ். ஊழ் தனக்குரிய மானுடரை தெரிவு செய்கிறது” என்றாள் பானுமதி. “நம் அரசரும் இளையோருமா?” என்றாள் அசலை. “அவர்கள் அத்தகையவர்களா?”

“அல்ல” என்று பானுமதி சொன்னாள். “அவர்களில் நல்லியல்புகள் மட்டுமே நிறைந்துள்ளன என நாம் அறிவோம். இப்புவியில் இன்று வாழ்பவர்களில் என் கொழுநருக்கு நிகரான பேரன்பும் அறப்பற்றும் கொண்ட பிறிதொரு அரசர் இல்லை.” அசலை அவளை நோக்கியபடி நடந்தாள். “ஆனால், மாவலிச் சக்ரவர்த்தியும் அத்தகையவரே. கார்த்தவீரியரும் அவ்வாறே வழுத்தப்பட்டார்” என்றாள் பானுமதி. “என்னால் நடக்கமுடியவில்லை, மூத்தவளே” என்றாள் அசலை. “சரி, நாம் இப்பேச்சை விட்டுவிடுவோம்” என்றாள் பானுமதி. “இல்லை, சொல்லுங்கள். இதை பேசாமலிருந்தால் என் உள்ளம் எண்ணி எண்ணிப் பெருகும்” என்றாள் அசலை.

“இளையவளே, மானுடரில் முழுமையாகவே தீமை உறைவதில்லை. தெய்வங்கள் எவரையும் அவ்வாறு முழுக்க கைவிடுவதில்லை. இருட்தெய்வங்கள் குடியேற ஓர் ஊசிமுனையளவுக்கு பழுது போதும்” என்றாள் பானுமதி. “இருட்தெய்வங்களின் படைக்கலங்கள் எவை என்று அறிவாயா? நல்லியல்புகள் என்கின்றனர் அறிவோர். கொடுந்தெய்வமான கலியை வழுத்தும் கலிதசகத்தில் பாவனர் பாடுகிறார், அன்பு, இரக்கம், அறம், குடிப்பிறப்பு, பண்பு, இன்சொல், பணிவு, வீரம் என்னும் எட்டு படைக்கலங்களை கைகளில் ஏந்தி அமர்ந்திருப்பவர் அவர் என்று.”

“எண்ணிப்பார், அரசர் இத்தனை துணைவர்களை எப்படி தனக்கென சேர்த்துக்கொண்டார்? அவருடைய நல்லியல்புகளால் அணுகி ஆட்பட்டவர்கள் அவர்கள். அழிவிலும் இழிவிலும் அவர்கள் அவரை விட்டு நீங்குவதில்லை. அவருள் எழுந்த இருட்தெய்வம் அவர்கள் மேலேறி பேருருக்கொள்கிறது” என்றாள் பானுமதி. அசலை பெருமூச்சுவிட்டபடி அவளை தொடர்ந்து நடந்தாள். பின்னர் “அந்தச் சிறுபழுது எதுவென எண்ணுகிறீர்கள், அரசி?” என்றாள். “மண்விழைவுதான்” என்றாள் பானுமதி. “தெய்வங்களே வந்து எதிர்நின்றாலும் அவரிலிருந்து அதை அகற்றவியலாது.”

“ஆம்” என்று அசலை சொன்னாள். “ஒவ்வொருவருக்கும் ஒன்றில் நிறைவும் மீட்பும் உள்ளது. அரசரென அமைந்து நாடாள்கையிலேயே முழுதும் நிகழ்பவர் அரசர். ஆகவே ஆளும் மண்மேல் அழியாப் பற்று கொண்டிருக்கிறார். பிறிதொருவர் பாரதவர்ஷத்தை ஆள்வதை அவரால் ஏற்கமுடியாது” என்றாள் பானுமதி. “ஆம், மெய்” என்று சொன்ன அசலை “அவள் மட்டும் மும்முடிசூடி அரசமரவில்லை என்றால் இவையெதுவுமே நிகழ்ந்திருக்காது” என்றாள். “அவளும் இவருக்கு நிகரான உள்ளம் கொண்டவள். மண்ணாளவென்றே பிறந்தவள்” என்றாள் பானுமதி.

அசலை “போரை எவராலும் தவிர்க்கமுடியாதென்று ஒவ்வொருவரும் பேசிக்கொள்கிறார்கள். நான் என் ஆழத்தில் போர் நிகழாதென்ற நம்பிக்கையை அணையாது பேணி அதன் வெளிச்சத்தில் வாழ்கிறேன். நீங்கள் சொல்வதைக் கண்டால் போர் நிகழ்ந்தே தீரும் என்று தோன்றுகிறது” என்றாள். “நிகழ்ந்தாகவேண்டும்” என்றாள் பானுமதி. “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள் அசலை. “அவள் அவைநின்று வஞ்சினமுரைத்தாள். அது நிகழவேண்டாமா என்ன?” அசலை திகைத்து “மூத்தவளே…” என்றாள்.

பானுமதி சிவந்த முகத்துடன் “அன்று நிகழ்ந்த அவைச்சிறுமையில் நீ என்னவாக இருந்தாய்?” என்றாள். அசலை “நான்…” என்றாள். “சொல்லடி, நீ என்னவாக இருந்தாய்?” அசலை “நான் திரௌபதியாக அவைநடுவே நின்று சிறுத்தேன். அவள் அனல்கொண்டு எழுந்தபோது நானும் உடன்கனன்றேன்” என்றாள். “ஆம், நீயும் நானும் அங்கிருந்த அத்தனை பெண்களும் அவ்வாறே அன்று எரிந்தோம். அந்த வஞ்சினம் அவள் உரைத்ததா என்ன? நானும் நீயும் உரைத்தது, பாரதவர்ஷத்து மகளிர் அனைவரும் அதை ஒருகணமேனும் தாங்களும் சொல்லியிருப்பார்கள். அது தோற்கலாகாது” என்றாள் பானுமதி.

அவள் முகம் குருதிகொண்டிருந்தது. கண்கள் சிவந்து நீர்படிந்திருந்தன. மூச்சு எழுந்தமைய “பெண்பழி நிகர் செய்யப்படவேண்டும். அது தோற்றதென்றால் விண்ணமைந்த மூதன்னையர் சீற்றம்கொள்வார்கள். நம் கொடிவழிகளென எழுந்துவரும் பெண்கள் பழிதூற்றுவார்கள்” என்றாள். “நம் கொழுநர் அவர்கள்” என்று நிலம்நோக்கி அசலை சொன்னாள். “ஆம், ஆயினும் ஆண்கள்” என்றாள் பானுமதி. அவளில் பிறிதொன்று குடியேறுவதை அசலை கண்டாள். வெண்ணிற வட்ட முகத்தில் நீல நரம்புகள் எழுந்தன. கழுத்தில் குருதிநாளங்கள் புடைத்தன. பற்கள் கிட்டித்து மூச்சொலி எழுந்தது.

“நீங்கள் மண்ணாளுங்கள். மண்ணுக்கென போரிட்டு நெஞ்சுபிளந்து உயிர்விடுங்கள். வீரப்பேருலகு சென்று அங்கும் நிறைந்திருங்கள். ஆனால் பெண்பழி கொண்டமைக்கு ஈடுசெய்தே ஆகவேண்டும். நெஞ்சுபிளந்து மண்ணில் கிடந்தாகவேண்டும். அதுதான் மூதன்னையர் விரும்பும் முடிவு” என்றாள் பானுமதி. மெல்ல மூச்சு தணிய உடலில் இருந்து ஒன்று எழுந்து அகன்றது. பெருமூச்சுடன் நடக்கத் தொடங்கினாள். “நாம் அவ்வாறு எண்ணலாகாது, மூத்தவளே” என்றாள் அசலை. “கொழுநன் தொழுதெழுவதே நம் அறம் என்றுதான் கற்று வளர்ந்திருக்கிறோம்.”

“ஆம், அவ்வாறுதான் நானும் இதுநாள் வரை எண்ணியிருந்தேன். இவையெவற்றையும் எனக்குள்கூட எண்ணிக்கொண்டதில்லை. அனைத்தையும் கடந்து இத்தனை ஆண்டுகளை கழித்திருக்கிறேன். ஆனால்…” என்றபின் திரும்பி “நீ கங்கைப் படித்துறைக்கு சென்றிருக்கிறாயா?” என்றாள். “ஆம்” என்றாள் அசலை. “அங்கே அம்பையன்னையின் ஆலயம் இருக்கிறது, அறிவாயா?” என்றாள் பானுமதி. “ஆம், ஒருமுறை சென்று தொழுதிருக்கிறேன்.” பானுமதி “நம் குடியின் மூதன்னை அவர்” என்றாள். “ஊழின் எந்த ஆடலால் இக்குடிக்கே நாம் மருமகள்கள் என வந்தோம்? நம்மால் எண்ணிச் சென்று தொட்டுவிட முடியாது அதை.”

“நான் அவர் ஆலயத்திற்கே சென்றதில்லை. பதினெட்டுமுறை அப்படித்துறையிலிருந்து படகு ஏறியிருக்கிறேன், ஒருமுறைகூட திரும்பி அவரை நோக்கியதில்லை. அவர் இங்கில்லை என்று எண்ணியே இத்தனை ஆண்டுகளை இங்கு கழித்தேன். ஆனால் அவர் என்னை விடவில்லை. என் கனவில் வந்தார்.” அசலை “எப்போது?” என்றாள். “அவள் கானேகல் முடித்து உபப்பிலாவ்யத்திற்கு வந்த நாளில். அவள் அங்கு வந்த செய்தியை இரண்டு நாட்களுக்குப் பின்னர் பறவைச்செய்தியினூடாகவே அவையும் அரசரும் அறிந்தனர். நானும் அப்போதே அறிந்தேன். ஆனால் அன்னை அறிந்திருந்தார்” என்றாள் பானுமதி.

“ஐம்புரிக் குழலில் குருதி சொட்ட விழிகள் செங்கனல்துண்டுகளென எரிய என் முன் எழுந்தார். வெறுமனே நோக்கிக்கொண்டு நின்றார். குழல்நுனியில் இருந்து குருதி சொட்டும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அன்னையே என்றேன். அவர் விழிகள் என்னை பார்த்தனவென்றாலும் அறிந்திருக்கவில்லை. அன்னையே, நான் உங்கள் சிறுமகள் என்றேன். அருகே ஓர் ஓசை கேட்டது. விழித்துக்கொண்டு எழுந்தமர்ந்தேன். அன்று தோன்றியது, நான் எதையும் கடந்துசெல்லமுடியாதென்று. நான் என் மூதன்னையரின் தொடர்ச்சியென்று மட்டுமே இங்கே இருக்கமுடியும். இவர்கள் எவரும் எனக்கு அணுக்கர் அல்ல. தந்தையோ கொழுநரோ மைந்தரோ அல்ல. நான் வேறு” என்றாள் பானுமதி.

“அந்தக் குருதிசொட்டும் ஐம்புரிக் குழலை நான் முதல்முறை கனவில் கண்டது அவையில் குலச்சிறுமை நிகழ்ந்த அந்நாள் இரவில். எழுந்தமர்ந்து நெஞ்சைப் பற்றிக்கொண்டு விழிநீர் உகுத்தேன். அந்நாளுக்குப் பின் நான் அவர் என்னைத் தொட ஒப்பியதில்லை. பதினெட்டாம் நாள் என் மஞ்சத்தறைக்கு வந்தார். உள்ளே அழைத்து நான் சொன்னேன். என்னை தொடுக, ஆனால் என்னுள் ஐங்குழல் விரித்து அவள்தான் இருப்பாள் என்று. அஞ்சியவர்போல பின்னடைந்தார். ஒரு சொல் இன்றி என்னை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் திரும்பிச்சென்றார். அதன்பின் இன்றுவரை நாங்கள் விழிநோக்கிக்கொண்டதில்லை” என்று பானுமதி சொன்னாள்.

“என்னை இளையவர் அந்நாளுக்குப்பின் அணுகியதே இல்லை” என்றாள் அசலை. “நானும் அதை விரும்பவில்லை என்பதனால் அவரை தேடிச் சென்றதுமில்லை. பதினான்காண்டுகளில் இருமுறை அவையில் அருகே நின்றிருக்கிறேன். ஒருமுறைகூட முகம்நோக்கவோ சொல்லாடவோ செய்யவில்லை.” தலையை அசைத்து எண்ணங்களை கலைத்தபின் “நான் சேடியர் வழியாக உசாவினேன். அவர் அதன்பின் எந்தப் பெண்ணையும் அணுகவில்லை. அவருக்கு பணிசெய்யும் பெண்களையும் விலக்கிவிட்டார். பெண்களை விழிநோக்கவே அவரால் இயலவில்லை என்றனர். ஆம், அது அவ்வாறே என நானும் எண்ணிக்கொண்டேன்” என்றாள்.

பானுமதி “ஆம், வஞ்சத்தின் விசையால் அன்று அதை செய்தனர். அதிலிருந்து எவர் அகன்றாலும் அவர்களால் அகலமுடியாது. ஏனென்றால் அவர்கள் கீழ்மைகொண்டவர்கள் அல்ல. பேரறத்தாராகிய திருதராஷ்டிரருக்கும் பெருங்கற்பினள் காந்தாரிக்கும் பிறந்தவர்கள் அவர்கள். அன்னையின் முன் இன்றுவரை அவர்கள் வந்ததில்லை” என்றாள். அசலை “அன்னை மைந்தரை மெல்ல மன்னித்துவிட்டார் என்றே எனக்குத் தோன்றியது” என்றாள். “ஆம், அவர் மன்னித்துவிட்டார். ஆனால் உள்ளே அனல் இருப்பதை மைந்தர் அறிவர். ஆகவேதான் ஒருமுறைகூட அவர்கள் அவர் முன் வந்ததில்லை” என்றாள் பானுமதி.

அவர்கள் அதன்பின்னர் பேசிக்கொள்ளவில்லை. தலைகுனிந்து தங்கள் உள்ளோட்டங்களில் சுழித்தவர்களாக நடந்தனர். தேர்ச்சாலையில் நின்ற மூடுதேரில் ஏறிக்கொண்டனர். பானுமதி தலைகுனிந்து அமர்ந்திருக்க அசலை சாளரம் வழியாக நோக்கிக்கொண்டிருந்தாள். கோட்டைக்குள் நுழைந்து ஏரிக்கரையின்மேல் சென்ற பாதையில் வந்து நகருக்குள் நுழைந்தனர். பானுமதி மேற்கு மாளிகையின் சாளரத்தருகே இரு வண்ண ஆடையசைவை கண்டாள். மகாநிஷாதகுலத்து இளவரசியரான சந்திரிகையும் சந்திரகலையும். அவர்களை அவள் பார்த்தும் நினைவுகூர்ந்தும் நெடுநாட்களாகின்றன என்று வியப்புடன் எண்ணிக்கொண்டாள்.

blபேரரசியின் அரண்மனையில் வழக்கம்போல சடங்குபோலவே ஒவ்வொன்றும் நிகழ்ந்தன. கௌரவர்களின் அரசியர் அனைவரும் முறைப்படி அரச ஆடையணிந்து வந்திருந்தனர். ஐவரும் அறுவருமாக காந்தாரியின் அறைக்குள் சென்று அவளை வணங்கி சூழ்ந்து அமர்ந்தனர். அவள் ஒவ்வொருவரையாகத் தொட்டு நோக்கி அவர்களின் பெயர்களைச் சொல்லி அழைத்து நலம் உசாவினாள். இரைதேடும் மலைப்பாம்புகள் என அவளுடைய பெரிய வெண்ணிறக் கைகள் மகளிரின் கன்னங்களையும் தோள்களையும் தழுவி வருடி அலைந்துகொண்டே இருந்தன. அவர்களில் எவர் துயருற்றிருக்கிறார்கள், எவர் சோர்வுகொண்டிருக்கிறார்கள் என அத்தொடுகையாலேயே அவள் அறிந்தாள். அவர்களை மட்டும் அருகணைத்து தோளுடன் தழுவிக்கொண்டாள்.

ஒவ்வொருவரின் மணத்தையும் அவள் நினைவில் வைத்திருந்தாள். தைலங்கள், மலர்கள், சுண்ணம், செங்குழம்பு என அவர்கள் அணிந்திருந்த அத்தனை நறுமணங்களையும் அகற்றி அவர்களின் மணத்தை பிரித்தெடுக்க அவளால் இயன்றது. அதனாலேயே அவள் மருகியர் அவளை விரும்பினர். அவளுடன் தங்களுக்கு மிக ஆழ்ந்த தனிப்பட்ட தொடர்பு ஒன்று இருப்பதாக நம்பினர். தங்களுக்கே உரிய மணமே தாங்கள் என்பதுபோல, அதை அறிபவர் தங்களுள் கரந்துள்ள அனைத்தையும் தொட்டுவிட்டார் என்பதுபோல.

காந்தாரியின் முகம் மலர்ந்து சிவந்த உதடுகள் இழுபட்டு நீண்டிருந்தன. மெல்லிய பறவையொலி போன்ற சிரிப்பு எழுந்துகொண்டே இருந்தது. மகளிர் அவளருகே வந்ததுமே அனைத்தையும் மறந்து தாங்களும் சிரித்து களியாடத் தொடங்கினர். அகவையை இழந்து மணம்முடித்து அங்கு வந்துசேர்ந்த சிறிய பெண்களாக மாறினர். பானுமதி அரசியின் அருகிலேயே அமர்ந்திருந்தாள். ஒவ்வொருவரைப்பற்றியும் காந்தாரி அவளிடம் ஒருசில சொற்களை உரைத்தாள். சிலரை அன்புடன் கடிந்துகொண்டாள். அவள் முன் பெண்களை நிரையாக அனுப்பியபடி அறைவாயிலில் அசலை நின்றிருந்தாள்.

“இவள் ஸ்வாதா அல்லவா? என்னடி மெலிந்துவிட்டாய்?” என்றாள் காந்தாரி. ஸ்வாதா “சற்று மெலியவேண்டும் என்றனர் மருத்துவர். அன்னையே, எடைமிகுந்து என் கால்கள் வலிகொண்டுவிட்டன” என்றாள். “எடைமிகுந்தால் வலியெழும் என எவர் சொன்னது? என்னளவு எடைகொண்ட எவருள்ளனர் இங்கே?” என்றாள் காந்தாரி. “நீ ஸ்வாகை அல்லவா? உன் உடன்பிறந்தாள் ஸதி எங்கே?” என்றாள். பானுமதி “அனைவர் பெயரும் எனக்கே தெரியாது, அன்னையே” என்றாள்.

“தெரியாதா? இவ்வரண்மனையில்தானே அவர்கள் வாழ்கிறார்கள்? இதோ இவள் ஸ்வாதா, அவள் துஷ்டி, அவள் உடன்பிறந்தவள் புஷ்டி. ஸ்வஸ்தி, ஸ்வாகா, காமிகை, காளிகை, ஸதி, க்ரியை, சித்தை, சாந்தி, மேதா, பிரீதி, தத்ரி, மித்யா என அவர்கள் காந்தாரத்திலிருந்து சேர்ந்தே வந்த இளவரசிகள். இவர்களை நீ அறியவில்லை என்றால் எவர் அறிவார்கள்?” என்றாள் காந்தாரி. பானுமதி அப்பெண்களை நோக்கி புன்னகை புரிந்தாள்.

அசலை விழிகாட்ட பெண்கள் எழுந்து “நாங்கள் மீண்டும் வருகிறோம், அன்னையே. அடுத்த நிரை வெளியே காத்திருக்கின்றது” என்றனர். வெளியே இருந்து அவந்திநாட்டு இளவரசியரான அபயை, கௌமாரி, ஸகை, சுகுமாரி, சுகிர்தை, கிருதை, மாயை, வரதை, சிவை, முத்ரை, வித்யை, சித்ரை ஆகியோர் ஒரு குழுவாக உள்ளே வந்து காந்தாரியை வணங்கினர். “வாடி, நீ சிவை அல்லவா? வித்யை… என்னடி தாழம்பூ சூடியிருக்கிறாய்?” ஒரு பெண்ணின் கன்னத்தை வருடி “சுகிர்தை… நேற்றுதான் உன்னை தொட்டதுபோல் உணர்கிறேன். உன் தோழி கிருதை எங்கே?” என்றாள். கிருதை “இங்கிருக்கிறேன், அன்னையே” என்றாள்.

மூஷிககுலத்து இளவரசியர் கமலை, ருத்ராணி, மங்கலை, விமலை, பாடலை, உல்பலாக்ஷி, விபுலை ஆகியோர் அசலையின் அருகே வந்து காத்து நின்றனர். அவர்கள் முகங்கள் ஆலயம் தொழும் அடியார் என மலர்ந்திருந்தன. “அந்தியாகிவிடும் போலிருக்கிறதே? அன்னை ஓய்வெடுக்க வேண்டாமா?” என்றாள் மங்கலை. “அன்னைக்கு இதுவே பெரிய ஓய்வு” என்றாள் அசலை. “என் கணவர் கேட்டார், அங்கே என்னதான் செய்வீர்கள் என்று. மகிழ்ச்சியாக இருப்போம் என்றேன். அது அவருக்கு புரியவில்லை” என்றாள் கமலை. “உணவுண்பதுபோன்ற ஒரு நிலை என்று சொல்லவேண்டியதுதானே?” என்றாள் பாடலை. அவர்கள் சிரித்தனர்.

ருத்ராணி “அவருக்கும் வர விருப்பம்தான்” என்றாள். “இங்கு ஆண்களுக்கு ஒப்புதலில்லை. ருதுபங்கம் நிகழ்ந்தபின் அன்னை ஜீவசுத்தி நோன்பு கொள்கிறார். ஆண்களை சந்திப்பதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் அதற்கு” என்றாள் அசலை. “ஆம், அறிவேன். ஆனால் அதை காட்டில் சென்றுதான் செய்வார்கள் என்று என் சேடி சொன்னாள்” என்றாள் கமலை. “காடென்பது என்ன? உலகை விலக்கிக்கொண்டால் அனைத்துமே காடுதான்” என்றாள் உல்பலாக்ஷி. “எத்தனை நேரம் கொஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்?” என்று கமலை உள்ளே நோக்கினாள். “அவர்களுக்கு இன்னும் பொழுதிருக்கிறது. அனைவருக்கும் ஒரே நேரம்தான்” என்றாள் அசலை.

“மாத்ருபிரஸ்தான விழா வருகிறது. அன்னை அதற்கு செல்லும்போது நாங்களும் உடன்செல்வோம் அல்லவா?” என்றாள் கமலை. “இல்லை, அது நோன்புகொண்டவர்களுக்கு மட்டும்.” கமலை “என்ன நோன்பு?” என்றாள். “முன்னும் பின்னும் காமவிலக்கு நாட்கள் உண்டு” என்றாள் ருத்ராணி. “நாம்தான் ஆண்டுக்கணக்காக காமவிலக்கு கொண்டிருக்கிறோமே?” என்றாள் கமலை. அசலை திகைப்புடன் அவளை நோக்கியபின் பிறரை பார்த்தாள். “காமவிலக்கா?” என்றாள். கமலை தலைகுனிந்து “ஆம், அவையில் அது நிகழ்ந்தபின் நாங்கள் அவர்களை அணுகவிடவில்லை. அவர்களுக்கும் எங்களை அணுகுவதில் தயக்கமிருக்கிறது” என்றாள். “அனைவருமா?” என்றாள் அசலை. “ஆம், ஆண்டுகள் கடந்தபோது அதுவே வழக்கமென்றாகிவிட்டது” என்றாள் பாடலை. அசலை பெருமூச்சுவிட்டாள்.

பானுமதி கையசைக்கக் கண்டு “செல்க!” என்றாள். மறுபக்க வாயில் வழியாக உள்ளிருந்தவர்கள் வெளியே செல்ல அவர்கள் உள்ளே சென்றனர். காந்தாரி நெடுங்காலம் காத்திருந்து அவர்களை சந்தித்தவள்போல கூச்சலிட்டு நகைத்தபடி கைவிரித்து அவர்களை இழுத்து அணைத்துக்கொண்டாள். சிரிப்போசையும் கூச்சல்களும் எழுந்தன.

உத்கலத்தின் இளவரசியர் திதி, சுரசை, பானு, சந்திரை, யாமி, லம்பை, சுரபி, தாம்ரை ஆகியோர் வந்து நின்றனர். அசலை அவர்களை சற்றுநேரம் நோக்கிவிட்டு “நான் ஒன்று கேட்கிறேன், மெய் சொல்க!” என்றாள். அவர்கள் ஏறிட்டுநோக்க “காமவிலக்கு நோன்பு கொண்டவர்கள் உள்ளீர்களா உங்களுள்?” என்றாள். சந்திரை தலைகுனிந்து “நாங்கள் அனைவருமே” என்றாள். லம்பை “அகத்தளத்தின் அரசியர் அனைவருமே அவ்வாறுதான்… அவர்கள் எவரும் இங்கு வருவதில்லை” என்றாள். அசலை பெருமூச்சுவிட்டாள்.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 6

பகுதி ஒன்று : பாலைமகள் – 6

blதன் அறைக்குத் திரும்பியதுமே பூர்ணையிடம் நடந்ததை சொல்லிவிட்டு தேவிகை மஞ்சத்தில் படுத்தாள். துயில் வராதென்றே உள்ளத்தின் அலைக்கழிப்பு காட்டியது. அறைக்குள் நின்றிருந்த பூர்ணையிடம் “நானும் உடன்செல்கிறேன். நெடுநாட்களுக்குப்பின் அஸ்தினபுரிக்குள் நுழைவதுதான் என்னை அலைக்கழிக்கிறதா?” என்றாள். “ஆம், அரசி” என்று பூர்ணை சொன்னாள்.

சுரபி உள்ளே வந்து “பயணத்திற்கான அனைத்தையும் ஒருக்கிவிட்டேன், அரசி” என்றாள். “நீ என்னடி நினைக்கிறாய்?” என்றாள் தேவிகை. “எதைப் பற்றி?” என்றாள் சுரபி. “நான் ஏன் அமைதிகொள்ளாமலிருக்கிறேன்?” அவள் பேசாமல் நின்றாள். “சொல், ஏன்?” என்றாள் தேவிகை. “நீ வாளால் அறுத்துச்சொல்லும் இரக்கமற்ற நெஞ்சுகொண்டவளாயிற்றே.” சுரபி “அவர்கள் ஒருதுளி விழிநீர் விட்டிருந்தால் நீங்கள் அமைதிகொண்டிருப்பீர்கள், அரசி” என்றாள். “அவ்வளவுதானா?” என தேவிகை புன்னகைத்துக்கொண்டு கேட்டாள்.

“அவர்களை நீங்கள் வெறுத்தீர்கள். அவ்வெறுப்புக்குரியவர்களாக அவர்கள் இல்லை என்பதன் ஏமாற்றம்” என்றாள் சுரபி. “மேலும் ஏதேனும் சொல்” என்றாள் தேவிகை. சுரபி பேசாமல் நின்றாள். “நீ சொன்ன இரண்டும் அல்ல” என்ற தேவிகை புரண்டுபடுத்து “பிறிதொன்று. நான் அதை தெளிவாகவே இப்போது உணர்கிறேன்” என்றாள். சுரபி புன்னகைத்து “ஆம், அரசி. சில ஆழங்கள் பொதுமைக்கு அப்பாற்பட்டவை” என்றாள். “துயில்க!” என்றபின் பூர்ணை சுரபியை தோளில் தொட்டு அழைத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

தேவிகை திரௌபதியை எண்ணியபடி கண்மூடிக்கிடந்தாள். அவள் முகம், அதில் மாறா இளமையை நிறுத்துவது எது? கண்களில் வந்துசெல்லும் சிறுமியருக்குரிய சிரிப்பு. அதற்குமப்பால் ஒன்று. அவள் மீண்டும் மீண்டும் தேடினாள். சிறிய மூக்கும் குமிழுதடும் அளிக்கும் குழந்தைமை அல்ல, அதற்கப்பால். அவள் துயிலில் இருந்து எழுந்தபோது அப்பால் என்னும் சொல் நெஞ்சில் பொருளின்றி எஞ்சியிருந்தது. பூர்ணை அவளை எழுப்பிக்கொண்டிருந்தாள். “அரசி, அரசர் அரண்மனை மீண்டுவிட்டார்” என்றாள். “எப்போது?” என்றாள். “சற்று முன்பு…” தேவிகை “அவர் எப்போது அங்கிருந்து கிளம்பினார்?” என்றாள். “நாம் இங்கு வருவதற்கு முன்னரே கிளம்பியிருக்கவேண்டும்” என்றாள் பூர்ணை.

மெல்ல அனைத்தையும் உளம்வாங்கியபின் “நாங்கள் அவரறியாமல் நாளை கிளம்புவதாக இருந்தோம்” என்றாள் தேவிகை. “அரசி, இனி அது இயலாது. நீங்கள் சென்று அவரிடம் தெரிவிப்பதே முறையாகும்.” தேவிகை “அவர் ஏன் இப்போது வந்தார்?” என்றாள். “அரசியின் உளமாற்றமோ நாம் கிளம்புவதோ அவரை சென்றுசேரப் பொழுதில்லை. அவர் அங்கிருந்து வரவே ஒருநாள் ஆகும்” என்றாள் பூர்ணை. “இது வேறேதோ செய்தியால் நிகழ்ந்தது. ஆகவே ஊழ் என்றே கொள்ளவேண்டும்” என்றாள்.

தேவிகை தன் எண்ணங்களில் தொலைவுசென்று மீண்டுவந்து “அவர் அரசி அஸ்தினபுரி செல்வதை விரும்பமாட்டார்” என்றாள். “ஏன்? அவர் போரை விழைவார் என நான் எண்ணவில்லை” என்றாள் பூர்ணை. “அவர் போரை அஞ்சுகிறார். அஞ்சுபவர்கள் ஆவலுடன் அச்சமூட்டுவதை எதிர்பார்க்கவும் செய்வார்கள். அதையே எண்ணியிருப்பார்கள். போர் நிகழாதுபோனால் மிகப் பெரிய ஏமாற்றம் கொள்பவர் அவராகவே இருப்பார்.”

பூர்ணை சற்றுநேரம் அவளை நோக்கியபின் “எவ்வாறாயினும் அவரால் தடுக்கமுடியாது” என்றாள். “அரசி வஞ்சம் தவிர்த்ததை அவர் வரவேற்றாகவேண்டும். வெறுமனே அல்ல, உளம்நெகிழவேண்டும், விழிநீர் நனைய தழுவிக்கொள்ளவேண்டும்” என்றாள். தேவிகை “அதெல்லாம் நிகழும். ஆனால் பிறிதொன்றும் நிகழும். அதைத்தான் என்னால் இப்போது கணிக்கமுடியவில்லை” என்றபின் “இதை எதிர்பார்த்திருந்தேனா? இத்தனை எளிதல்ல என்று என் அகம் அறிந்திருந்ததா?” என்றாள். “ஏனிந்த வீண் எண்ணச்சுழல்? நேராகச்சென்று அரசரை பாருங்கள். அங்கு நிகழ்வது நிகழட்டும்” என்றாள் பூர்ணை. “ஆம், நான் உடனே கிளம்பவேண்டும்” என்றாள் தேவிகை.

blதேவிகை நீராடி உடைமாற்றி வந்தபோது ஏவலன் அரசரின் அழைப்புடன் வந்திருந்தான். அவள் அவனுடன் சென்றபோது உள்ளம் ஆழ்ந்த அமைதியுடன் இருப்பதை உணர்ந்தாள். ஒரு சொல்லும் இல்லாது ஒழிந்திருந்தது நெஞ்சு. படியேறி இடைநாழியில் நடந்து அரசரின் அறைவாயிலில் நின்றாள். வாயிற்காவலனிடம் தலையசைக்க அவன் உள்ளே சென்று அவள் வருகையை அறிவித்தான். உள்ளே நகுலனும் சகதேவனும் இருப்பார்கள் என அவள் எண்ணியிருந்தாள். ஆனால் யுதிஷ்டிரரின் தோற்றத்தைக் கண்டதும் திகைத்து நின்றுவிட்டாள்.

அவள் சற்றுமறியாத முதியவர் போலிருந்தார் யுதிஷ்டிரர். முனிவரைப்போல நீண்ட நரைத்த தாடியும் தோளில் புரண்ட குழலும் தொய்ந்த தோள்களும் கூன்விழுந்த முதுகுமாக. ஆனால் சிலகணங்களுக்குள்ளேயே அவள் யௌதேயனின் முகத்தை அதில் கண்டடைந்தாள். அது மேலும் கசப்பை கொடுக்க அவள் விழிகளை திருப்பிக்கொண்டாள். நகுலனும் சகதேவனும்கூட முதுமையெய்தியிருந்தனர். அவள் பூரிசிரவஸை நினைத்துக்கொண்டாள். முகத்தின்மேல் ஆடையை இழுத்துவிடும் அசைவால் அவ்வெண்ணத்தை ஒதுக்கினாள்.

“அரசரையும் இளையோரையும் வணங்குகிறேன்” என்றாள். யுதிஷ்டிரர் “நலன் திகழ்க!” என வாழ்த்தி அமரும்படி பீடத்தை காட்டினார். அவள் இல்லை என தலையசைத்து சாளரத்தருகே சென்று ஒளி மறைக்காமல் நின்றாள். வெளியே அந்தியெழத் தொடங்கிவிட்டிருந்தது. பறவைகள் கலைந்தெழுப்பிய குரல்களால் தோட்டம் உயிர்கொண்டிருந்தது. யுதிஷ்டிரர் தலைகுனிந்து தாடியை நீவிக்கொண்டிருந்தார். அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள் என அவள் நினைத்தாள். ஆனால் அந்த எச்சத்தை அவர்களின் முகங்களில் காணமுடியவில்லை.

ஏவலன் வந்து திரௌபதியின் வரவை அறிவித்தான். தேவிகை பெருமூச்சுடன் நிமிர்ந்து நின்றாள். திரௌபதி உள்ளே வந்து முகமன் ஏதுமில்லாமல் யுதிஷ்டிரரை வணங்கி பீடத்தில் அமர்ந்தாள். “நாங்கள் உடனே திரும்பிவரவேண்டியிருந்தது. இரு செய்திகள். அஸ்தினபுரியிலிருந்து திருதராஷ்டிரரின் தனித்தூதனாக சஞ்சயன் கிளம்பி வந்துகொண்டிருக்கிறான்” என்றார். “அதோடு இளைய யாதவன் நாளை இங்கு வருவான் என்றும் செய்தி வந்துள்ளது.” திரௌபதி தலையசைத்தாள். அவள் மேலே பேசுவதற்காக காத்தபின் யுதிஷ்டிரர் “சஞ்சயன் தூதின் உள்ளடக்கம் என்ன என்று அறியக்கூடவில்லை. நிலம் அளிக்கமுடியாதென்று முற்றாக மறுத்தபின் எதை பேசமுடியும்? நன்று என்னவென்றால் நாளை சஞ்சயன் அவைநிற்கையில் இளைய யாதவனும் இருப்பான் என்பதே” என்றார்.

திரௌபதி “நான் நாளை புலரியில் கிளம்பி அஸ்தினபுரிக்கு செல்கிறேன்” என்றாள். “ஆம், தௌம்யர் சொன்னார்” என்றார் யுதிஷ்டிரர். “நான் அங்குள்ள அரசியரிடம் என் வஞ்சினத்திலிருந்து விலகிவிட்டதாக சொல்லவிருக்கிறேன். அந்த மைந்தரைத் தழுவி அவர்களின் அன்னை நான் என்று சொல்லிவர விழைகிறேன். வரும் மூன்றாம் வளர்நிலவில் மாத்ருப்பிரஸ்தான நோன்பு அஸ்தினபுரியில் நிகழ்கிறது. அதற்கு எனக்கும் அழைப்புள்ளது. அதன்பொருட்டு செல்வதுபோல செல்லலாமென்றிருக்கிறேன்” என்றாள்.

அவளுடைய இயல்பான குரலும் நேர்நோக்கும் அவரை நிலையழியச் செய்தன. குனிந்து மடியிலிருந்த தன் கைகளை நோக்கியபடி “ஆனால் இம்முடிவை நீ ஏன் உடனடியாக எடுத்தாய் என்றுதான் என் உள்ளம் ஐயம்கொள்கிறது. எங்கள் ஆற்றல்மேல் ஐயம்கொண்டாயா?” என்றார். “இல்லை” என்று அவள் சொன்னாள். அவள் மேலும் சொல்ல காத்திருந்து பின்னர் நிமிர்ந்து “இல்லையென்றாலும் அவ்வாறே அது பொருள் கொள்ளப்படும். இளையோர் இருவருக்கும் அது இழுக்கென்றே ஆகும்” என்றார்.

“இளையவர்களைப்பற்றி நான் அறிவேன். மாருதர் என் உளமறிவார். பார்த்தருக்கு நான் ஒரு பொருட்டல்ல” என்றாள் திரௌபதி. யுதிஷ்டிரரின் முகத்தில் ஒரு சுளிப்பு உருவாகியது. “நீ அவர்களை முற்றாகப் பொறுத்து கடந்துவிட்டாய் என்பதை நான் நம்பவில்லை. கான்வாழ்க்கையில் நீ இருந்த நிலையை நான் கண்டிருக்கிறேன். ஆண்டுக்கணக்கில் கந்தமாதனம்போல கனன்றுகொண்டிருந்தாய். எத்தனை இரவுகளில் துயில்நீத்திருப்பாய் என நான் சொல்லமுடியும். துயிலில்லாது உளம்வெந்து நான் எழுந்துவந்து உன் அறைக்கு வெளியே நின்றிருப்பேன். இரவெல்லாம் நீ புரண்டுபடுப்பதை, பெருமூச்சுவிட்டுக்கொண்டிப்பதை கேட்பேன். எத்தனையோ முறை உளமுருகி விழிநீர் சிந்தியிருக்கிறேன். நான் கற்றவற்றை எல்லாம் முற்றிலும் மறந்து பெருவஞ்சம் கொண்டு வானோக்கி சீறியிருக்கிறேன். எத்தனையோ முறை நெஞ்சிலறைந்து தீச்சொல்லும் இட்டிருக்கிறேன். அதையெல்லாம் கடந்துசெல்லமுடியுமா என்ன?”

“அரசே, கானேகிய நீங்களும் திரும்பிவந்த நீங்களும் ஒன்றா என்ன?” என்றாள் தேவிகை. “இல்லை, நான் சென்ற வழி நீண்டது” என்றார் யுதிஷ்டிரர். “ஆம், இளையவர் இருவரும் அதைப்போலவே நெடுவழி சென்று கண்டடைந்து மீண்டனர். நாங்கள் மூவரும் எங்கும் செல்லவில்லை. சிறியவர் எதையும் புதிதாக தெரிந்துகொள்ளவேண்டிய தேவையற்றவர். அவருக்கு இணையர் புரவிகளுடன் ஓடியே தொலைவுகளை கடந்தவர்” என்று திரௌபதி சொன்னாள். “அவர் கால்களால் சென்ற தொலைவை எல்லாம் நெஞ்சால் சென்றுகொண்டு நான் இருந்தேன். அரசே, ஊஞ்சலும் பயணம் செய்துகொண்டுதான் இருக்கிறது.”

யுதிஷ்டிரர் தம்பியர் இருவரையும் நோக்கிவிட்டு “நீ எப்படி அவ்வஞ்சத்தை கடந்தாய்? என்னால் எண்ணிநோக்கவே இயலவில்லை” என்றார். திரௌபதி “நான் அகவை முதிர்ந்தேன், வேறேதும் செய்யவில்லை. வஞ்சத்தைக் கடப்பதைவிட கடினமாக இருந்தது மண்விழைவை கடப்பதுதான். அதற்கு நான் புற்குடில்களிலும் மலைக்குகைகளிலும் மரத்தடிகளிலும் துயிலவேண்டியிருந்தது. இன்று இளையவர் வந்து என்னிடம் பேசிமீண்டபின் நான் என்னை நோக்கி மீளமீள கேட்டுக்கொண்டேன். நான் கடந்துவிட்டேனா என்று. ஆம், கடந்துவிட்டேன் என்றே என் உள்ளம் உறுதிசொன்னது” என்றாள்.

மேலும் என்ன பேசுவதென்றறியாமல் அங்கே அமைதி உருவாகியது. தேவிகை “நீங்கள் இதை மகிழ்ந்து வரவேற்பீர்கள் என நினைத்தேன்” என்றாள். அவளை நிமிர்ந்து நோக்கிய யுதிஷ்டிரர் “இல்லை, என்னால் முடியவில்லை. ஆனால் நான் போரையும் விரும்பவில்லை. எனக்கு உளக்குழப்பமே எஞ்சுகிறது. அங்கே திரண்டிருப்பவர்கள் என் உடன்பிறந்தார், என் மைந்தர். மண்ணின்பொருட்டு அவர்களுடன் போரிட நான் விரும்பவில்லை. போர் எந்நிலையிலும் தவிர்க்கப்படவேண்டும் என்றே விரும்புகிறேன். ஆனால்…” என்ற யுதிஷ்டிரர் தலையை அசைத்தார். அவர் நாவில் எழுந்த ஒன்று தயங்கியது.

பின்னர் குரல் மேலெழ விழிதூக்கி “உண்மையில் நம் நிலவுரிமையை முற்றாக விட்டுக்கொடுத்து கிழக்குநோக்கி சென்றாலென்ன என்று உசாவும்பொருட்டே சம்புகச் சோலைக்கு சென்றோம். அங்கு அமர்ந்து நாம் சென்று நிலைகொள்ளவேண்டிய இடங்களைப்பற்றிய செய்திகளை தொகுத்தோம். செல்வதெப்படி என்று வகுத்தோம். இளையோரிடம் அதைச் சொல்லி ஏற்கவைப்பதைப்பற்றிக்கூட பேசிவிட்டோம். அது பின்னடைவதுதான். கோழைகளென நம்மை இளிவரல்செய்ய வழிவகுக்கும் என்பதும் உண்மை. இளையோர் இருவருக்கும் அதில் உடன்பாடில்லை என்றும் தெரிந்தது. ஆயினும் அதில் உயர்ந்தது என ஒன்று இருந்ததாகவே உணர்ந்தேன்” என்றார்.

“என் கோழைத்தனமா அது என எண்ணி எண்ணி நோக்கினேன். எங்கோ சிறுதுளி அச்சம் இருக்கலாம். ஆனால் எனைச்சார்ந்தோர் நன்மைக்கே அதை செய்கிறேன் என உறுதியடைந்தேன். இன்று எப்பழி சூழ்ந்தாலும் சரி சில தலைமுறைகள் கழித்தேனும் என் நன்னோக்கத்தை உலகம் உணரும் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் அரசி சென்று பணிவது என்று கேட்டபோது என் உளம் கூசுகிறது. பெண் என நின்று அவள் கொண்ட வஞ்சத்தை உதறுகிறாள் என்றால் ஆணென்று சொல்லி உடனமர எனக்கும் தம்பியருக்கும் தகுதியில்லை என்று அகம் கசப்புகொள்கிறது” என்றார்.

“நான் வஞ்சத்தை தவிர்க்கவில்லை அரசே, மெய்யாகவே என்னுள்ளத்தில் இன்று வஞ்சம் இல்லை” என்றாள் திரௌபதி. “நான் இவையனைத்திலும் ஈடுபடாமல் முற்றிலும் விலகி ஏன் இருந்தேன் என்று கேட்டுக்கொண்டபோதுதான் அது எனக்குத் தெரிந்தது. வஞ்சம் இல்லை என்பதனால் வஞ்சமொழிவதன் நெகிழ்ச்சியும் மீண்டுவிட்டேன் என்னும் பெருமிதமும்கூட என்னில் இல்லை. வஞ்சமுரைத்து அவையில் நின்று கனன்ற அவள் இன்று என்னுள் இல்லை. எனக்கு அவை பிறர்வாழ்வென்றே தோன்றுகிறது.”

“இல்லை, இவள் எதன்பொருட்டு வந்தாள் என நான் அறிவேன். தன் மகனுக்காக உன்னிடம் இரந்தாள். நீ அவளுக்கு அடைக்கலம் அளித்தாய். அரசியென உன்னால் அதை செய்யாமலிருக்க இயலாது” என்றார் யுதிஷ்டிரர். “ஆம், அது உண்மை. ஆனால் அவர் வந்து பேசியபோதுதான் நான் எத்தனை விலகி எங்கோ நின்றிருக்கிறேன் என்று உணர்ந்தேன். நான் அவ்வாறு விலகி நின்றிருந்தமையால் அவர் ஏமாற்றமும் எரிச்சலும் கொண்டார் என்பதையும் உணர்ந்தேன். நான் விலகி நிற்க இயலாதென்று அவர் சொற்களிலிருந்து தெரிந்துகொண்டேன். வஞ்சத்தை என் உள்ளத்திலிருந்து விலக்கிவிட்டேன், அதை என் வாழ்விலிருந்தும் விலக்காவிட்டால் அதன் பழியை சுமக்கவேண்டியிருக்கும் என்று தெளிந்ததும் இம்முடிவை எடுத்தேன்.”

“தேவி, நான் நேரடியாகவே கேட்கிறேன். உன் மைந்தருக்காகவா அஞ்சுகிறாய்?” என்றார் யுதிஷ்டிரர். அவள் அவர் விழிகளை நோக்கி “இல்லை என்று சொல்லமாட்டேன். சிபிநாட்டரசி வந்து சொன்ன கணம் முதல் அஞ்சத்தொடங்கிவிட்டேன். என் மைந்தருக்காக மட்டுமல்ல, மைந்தர் அனைவருக்காகவும். இங்குள்ள மைந்தரை எண்ணி மட்டுமல்ல, அங்குள்ள மைந்தரையும் எண்ணித்தான்” என்றாள் திரௌபதி. “மைந்தரை வாள்தந்து களமனுப்பும் பேரன்னையின் கதைகளை கேட்டுவளர்ந்தவள்தான் நான். கானேகாமலிருந்தால் அந்தக் கதைகளுக்குள்ளேயே வாழ்ந்திருப்பேன்.”

யுதிஷ்டிரர் “என்னால் எதுவுமே எண்ண முடியவில்லை. ஆம், மைந்தருக்காக நாம் முற்றொழிவோம் என்றே எண்ணுகிறேன். ஆனால் அது நீ எடுக்கும் முடிவாக இருக்கலாகாது” என்றார். “நான் விலகிவிட்டேன். அதற்கப்பால் சொல்வதற்கேதுமில்லை” என்றாள் திரௌபதி. “நீ எண்ணுவதென்ன, இளையோனே?” என்றார் யுதிஷ்டிரர். சகதேவன் “இப்போதுதான் என்னிடம் இதை கேட்கிறீர்கள், மூத்தவரே” என்றான். அதை அப்போதுதான் உணர்ந்த யுதிஷ்டிரர் “ஆம், கேட்கவில்லை… ஏனென்றே அறியேன். இதுவே தருணம்போலும்” என்றார்.

“மூத்தவரே, அங்கே அவையில் நிகழ்ந்தது ஓர் நெறியழிவு. அந்த வஞ்சினம் மானுடரில் தெய்வமிறங்கி வந்து உரைப்பது. அதில் ஒரு நிறைவு இருந்தது. இன்று அரசி அதை கைவிடுகையில் அம்முழுமை அழிகிறது. அந்த நெறியழிதலுக்கு அளிக்கப்படும் ஒப்புதல் அது” என்றான் சகதேவன். “ஒவ்வொரு பிழையும் தண்டிக்கப்படவேண்டும். தண்டிக்கப்படாத பிழை என்பது மீண்டும் முளைத்தெழுந்து ஒன்றுநூறு ஆயிரமென தழைக்கும். நெறிநூல்கள் மீண்டும் மீண்டும் சொல்வது அதையே.”

“அரசி, அவைநடுவே பெண்ணை சிறுமைசெய்தல் எளிதாகக் கடந்துசெல்லப்பட்டதென்றால் இந்நிலத்தில் வேறு எதுதான் பிழையெனக் கொள்ளப்படும்? அரசி, நாம் அரசர்கள். எப்போதும் இன்றும் நாளையும் எதிர்காலம் முழுக்கவும் நிறைந்திருக்கும் பெருந்திரள் முன் நின்றிருக்கிறோம். நாம் செய்வன அனைத்தும் முன்நிகழ்வுகள், வழிகாட்டல்கள். எண்ணிப்பார், நாளை பிறிதொரு சிறுபிழைக்காக ஒருவனை அரசனின் கோல் தண்டிக்குமென்றால் அவன் கேட்கமாட்டானா, அவைநடுவே பெண்ணை ஆடைகளைதலைவிடவா பெரிய பிழையை நான் செய்துவிட்டேன் என்று?”

“குற்றம் குற்றமேதான், எச்சொல்லால் சொல்லப்பட்டாலும் எங்கு நின்று நோக்கினாலும் எதைக்கொண்டு நிகர்செய்தாலும். அது பருப்பொருட்களைப் போன்று நாமில்லை என்றாலும் நின்றிருப்பது” என்றான் சகதேவன். “தேவி, நெறிநூல்கள் சொல்லும் முதல் வரி ஒன்றே. குற்றமென்பது அதனால் பாதிக்கபட்டவருக்கு எதிரானது அல்ல. மானுடருக்கு எதிரானதும் அல்ல. விராடவடிவென நம்மைச் சூழ்ந்திருக்கும் பேரியற்கைக்கு எதிரானதுகூட அல்ல. இங்கே வாழ்வையும், வானில் அறிவையும், கடுவெளியில் அறியமுடியாமையையும் நிரப்பிவைத்திருக்கும் முதல்முழுமைக்கு எதிரானது.”

“எனவேதான் குற்றம் பொறுக்க எவருக்கும் உரிமை இல்லை என்று நூல்கள் சொல்கின்றன. தெய்வங்கள்கூட குற்றத்தைப் பொறுத்தருளியதாக நம் தொல்கதைகள் சொல்லவில்லை. ஒருவருக்கு ஒன்றின்பொருட்டு தண்டனை விலக்கப்படுமென்றால் தண்டிக்கப்பட்ட அனைவருமே நெறிமறுக்கப்பட்டவர்களாகிறார்கள்.” தேவிகை “அப்படியென்றால் இரக்கத்திற்கு இப்புவியில் இடமே இல்லையா?” என்றாள். “உண்டு. தனிமனித உறவுகளில். இது உறவுக்குள் நிகழவில்லை, அவையில் நிகழ்ந்திருக்கிறது. ஆயிரம் பல்லாயிரம் பேரால் அறியப்பட்டிருக்கிறது.”

“அன்று நிகழ்ந்தது என்ன என்று நீங்கள் முழுதறியவில்லை, தேவி. ஒவ்வொரு நிகழ்வும் ஒன்று ஓராயிரமென உள்ளங்களில் எழுகின்றன. ஆகவே நிகழ்வை அவை கொள்ளும் விரிவையும் கருத்தில்கொண்டே அணுகவேண்டும். அன்று நீங்கள் ஓர் அரசி என அவைநடுவே சிறுமைகொள்ளவில்லை, அங்கு நின்றவள் பெண். இங்கே இல்லந்தோறும் பெண் இருக்கிறாள். அவளை இழித்துநடத்தும் கீழ்மக்களும் இருக்கிறார்கள். அன்றுரைத்த வஞ்சினம் அவர்கள் அனைவருக்கும் எதிராகவே. கைகட்டி அமர்ந்திருந்த மூத்தோரும் கற்றோரும்கூட அதற்கு ஈடு அளித்தாகவேண்டும்.”

“நாளை ஒருவன் பெண்ணை சிறுமைசெய்ய கையெடுத்தான் என்றால் அந்தக் கை அச்சத்தில் குளிர்ந்தமைய வேண்டாமா? அவன் கால்கள் கல்லாக வேண்டாமா? பெண்சிறுமைசெய்வதென்றால் என்ன விளைவென்று பாரதம் அறியவேண்டும். துலாவின் இத்தட்டில் வைக்கப்பட்டது குலமகளின் விழிநீர் என்றால் மறுதட்டில் நூறாயிரம் தலைகள் வைக்கப்பட்டு அது நிகர் செய்யப்படட்டும். அரசி பொறுத்தருளலாம், அவள் அன்னை. நாங்கள் பொறுத்துக்கொள்ளமுடியாது. நாங்கள் இங்கு அவள் மைந்தரின் தந்தையென நின்றிருக்கிறோம்” என்றான் சகதேவன்.

“பழிவாங்குதல் குறித்து சொல்கிறீர்கள்” என்றாள் தேவிகை சலிப்புடன். “ஆண்களின் உள்ளம் அதிலிருந்து விலகவே முடியாதா என்ன?” சகதேவன் “பழிவாங்குதல் என்றால் இழிவா என்ன? நெறியின் வரலாற்றை அறிந்தோர் அதை சொல்லமாட்டார்கள். விலங்குகள் பழி வாங்குவதில்லை. ஏனென்றால் அவை ஒன்றுடனொன்று இயற்கையின் நெறியாலன்றி எந்த அறத்தாலும் கட்டுண்டிருக்கவில்லை. மானுடன் தனக்கென அறத்தை உருவாக்கி அதற்கு ஒப்புக்கொண்டதனால்தான் பழிவாங்குகிறான். தன் குருதியினனுக்காக, தன் குலத்தோனுக்காக பழிவாங்க வஞ்சினம் உரைப்பவன் முன்வைப்பது எதை? வஞ்சமெனும் கீழ்மையை அல்ல. அவன் கொண்டிருக்கும் அறப்பற்று எனும் மேன்மையை. அவன் தன் நலத்திற்காக வாளேந்தவில்லை, தன்னை ஆளும் பெருநெறி ஒன்றுக்காகவே தன்னை அழிக்கவும் சித்தமாகிறான்” என்றான்.

“அரசி, மானுடத்தில் நீதி என்பது பழிவாங்குதல் வழியாகவே நிலைகொண்டது என்று உணர்க! இன்று நீதி என்றும் நெறி என்றும் அறம் என்றும் நாம் எதைப் பேசினாலும் ஆழத்தில் உறைவது பழிக்குப்பழி என்னும் முறையே. பழிதீர்ப்பதை தன்னிடமிருந்து தன் குலத்திற்கு அளிக்கிறான் மானுடன். குலம் அதை அரசனுக்கு அளிக்கிறது. அறத்தில் கனிந்தோர் அதை தெய்வத்திற்கு அளித்து அகல்கிறார்கள். வேறுபாடு அவ்வளவே. நீதி என்பது பாகுபாடில்லாமல், நலம்நாடிச் செய்யப்படும் பழிவாங்குதல்” என்றான் சகதேவன்.

மீண்டும் ஆழ்ந்த அமைதி நிலவியது. “இதற்குமேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றான் நகுலன். தேவிகை சீற்றத்துடன் “அப்படியென்றால் இங்கே போர்தவிர்த்தல் என்று பேசிக்கொள்கிறீர்களே அதற்கு என்ன பொருள்?” என்றாள். “போரைத்தவிர்ப்பது குறித்தே பேசுகிறோம், வஞ்சம் தவிர்ப்பது குறித்து அல்ல. நாம் நிலத்தை கைவிட்டோமென்றால் போர் தவிர்க்கப்படுகிறது. ஆனால் துரியோதனன் தொடை பிளக்கவும் கர்ணனின் தலைகொய்யவும் துச்சாதனின் குருதியருந்தவும் தடையேதுமில்லை. அரசர்களை தனிப்போருக்கு அழைக்க ஷத்ரியர் எவருக்கும் உரிமை உண்டு” என்று நகுலன் சொன்னான்.

தேவிகை “அது எப்படி?” என்றாள். “நம் வஞ்சம் நீடிக்கட்டும். நம் மைந்தருக்கு நிலமும் கொடியும் அமைத்துக்கொடுப்போம். இந்த வஞ்சம் நம்முடையது, நம் மைந்தருக்குரியது அல்ல. அவர்களின் மைந்தருக்கும் இதில் இடமில்லை. இருபுறமும் திரண்டுள்ள அரசர்களும் படைகளும் இதில் ஆடவேண்டியதில்லை” என்று நகுலன் தொடர்ந்து சொன்னான். யுதிஷ்டிரர் “அவன் சொல்லும்போது அதுவே சரியென்று தோன்றுகிறது. ஆனால் உள்ளம் எதையோ எண்ணி அலைக்கழிகிறது” என்றார்.

தேவிகை “இது நன்று. நான் இதையே வலியுறுத்துகிறேன். அரசே, அரசி தன் வஞ்சினத்தை களையவேண்டியதில்லை. அதனூடாக நீங்கள் அடையும் இழிவும் தேவையில்லை. இளையவர் சொன்னபடி இங்கே நெறி நிலைகொள்ளட்டும். வஞ்சம் நம்முடையது. நாமே அதை எதிர்கொள்வதே முறை” என்றாள். திரும்பி திரௌபதியிடம் “எண்ணிப்பாருங்கள் அரசி, எவரும் எங்கும் தாழவேண்டியதில்லை. ஆனால் போர் தவிர்க்கப்படுகிறது. நம் மைந்தர் நீடுவாழவும் வழி உருவாகிறது” என்றாள்.

“நான் வஞ்சினத்தைத் தவிர்த்தது எதையும் எண்ணி அல்ல, வஞ்சமிழந்தமையால் மட்டுமே. நான் வஞ்சினம் உரைத்தது அவர்களின் அவையில். ஆகவே அவர்களின் அவையில்தான் அவ்வஞ்சினத்தை நான் விலக்கிக்கொண்டதையும் அறிவிக்கவேண்டும். எண்ணி எடுத்த முடிவு, நாளை காலை கிளம்புவதென்பது. அதை அறிவிக்கிறேன்” என்றாள். யுதிஷ்டிரர் “சகதேவன் சொன்னவற்றை நீ எண்ணவே இல்லை, அரசி” என்றார். “ஆம், எண்ணினேன். நீங்கள் வஞ்சினமொழியவேண்டும் என்று நான் சொல்லவில்லை. போரிடுவதோ தவிர்ப்பதோ தனிப்போர் செய்வதோ அதையும் கைவிடுவதோ உங்கள் விருப்பப்படி. நான் என்னைப்பற்றி மட்டுமே சொல்லமுடியும். நான் இப்போர்க்களத்தில் இனி இல்லை” என்றாள் திரௌபதி.

மேலாடையை எடுத்து அணிந்துகொண்டு “மைந்தரின் குருதி விழுமென்றால் அதில் எனக்கு பொறுப்பில்லை என்று அறிவிக்கவே செல்கிறேன். என் மைந்தர், அவர் மைந்தர். படைக்கலமேந்தி களம்புகவிருக்கும் அனைவரும் என் மைந்தரே” என்றாள். “பொறு, அரசி” என்றபடி யுதிஷ்டிரர் எழுந்தார். “நீ கிளம்புவதற்கு முன் இரண்டு செய்திகளை தெளிவுபடுத்திவிட்டு செல். சஞ்சயனிடம் அனுப்பப்பட்ட செய்தி என்ன என நீ அறிந்தாகவேண்டும்.” திரௌபதி “அது எவ்வகையிலும் என்னை மாற்றப்போவதில்லை” என்றாள்.

“ஆம், ஆனால் நீ அறிவது நன்று. அத்துடன் இளைய யாதவன் இங்கு வரவிருக்கிறான். அவனிடம் நீ செல்வதை சொல்லிவிட்டு செல்” என்றார் யுதிஷ்டிரர். “நான் எவரிடமும் சொல்லுசாவ வேண்டியதில்லை. இது என் உளம்கொண்ட மெய்” என்றாள் திரௌபதி. “ஆம், அதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் இப்போர் இங்கு நிகழ இரண்டு தூண்டுதல்கள். அதில் ஒன்றுதான் உன் வஞ்சினம். பிறிதொன்று அவன் கொண்டுள்ள வேதமுடிபுக் கொள்கை. நீ விலகிக்கொண்டாய் என்று முதலில் அறியவேண்டியவன் அவன். இப்போர் உன்பொருட்டு நிகழ்கிறது என்னும் நடிப்பு இனித் தேவையில்லை என்று அவனிடம் சொல். இதற்கு மேலும் அது நிகழுமென்றால் அது அவன்கொண்ட கொள்கையின் பொருட்டே என அவன் அறியட்டும். அதன் முழுப் பொறுப்பையும் அவனே ஏற்கவேண்டும்.”

திரௌபதி எண்ணியபடி சிலகணங்கள் நின்றாள். “எப்போது வருகிறார்?” என்றாள். “நேற்றுமுன்னாளே கிளம்பிவிட்டான். பெரும்பாலும் நாளைமாலை இங்கிருப்பான்.” திரௌபதி தனக்குத்தானே என தலையசைத்தாள். “சரி, அவரை பார்த்துவிட்டுச் செல்கிறேன்” என வெளியே சென்றாள். அதுவரை அங்குமிங்கும் பறந்து முட்டிக்கொண்டிருந்த உள்ளம் அசைவிழந்து மெல்ல படியத் தொடங்குவதை தேவிகை உணர்ந்தாள். எவரிடமென்றில்லாமல் கடும்சினம் எழுந்து அவள் கைவிரல்நுனிகள் நடுங்கின.

யுதிஷ்டிரர் பெருமூச்சுடன் கால்நீட்டி உடல்தளர்த்தி சாய்ந்து “இளையோனே, நாம் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறோம்?” என்றார். சகதேவன் எழுந்துகொண்டு “மூத்தவரே, நிலநடுக்கம் வருவதற்கு முன்பு விலங்குகள் அலைக்கழிந்து முட்டிமோதுவதை கண்டிருக்கிறீர்களா?” என்றான். யுதிஷ்டிரர் வெறுமனே நோக்கினார். “ஒருமுறை தொட்டிமீன்கள் நிலநடுக்கை உணர்ந்து நிலையழிந்து துள்ளுவதைக் கண்டேன்” என்றபின் புன்னகைத்து தலைவணங்கி வெளியே சென்றான்.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 5

பகுதி ஒன்று : பாலைமகள் – 5

blதேவிகை உபப்பிலாவ்யத்திற்குள் நுழைந்தபோது கோட்டைவாயிலில் காவலர்கள் அவளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தேர்ப்பாகன் முத்திரைக் கணையாழியை காட்டியபோது காவலன் திரும்பி தலைவனை நோக்க அவன் இறங்கிவந்து கணையாழியை வாங்கி கூர்ந்து நோக்கியபின் குழப்பம் விலகாமலேயே தலையசைத்தான். தேர் நகருக்குள் நுழைந்தபோதுதான் அத்தனை சிறிய ஊர் அது என தேவிகை உணர்ந்தாள். ஒரு சிறிய பெட்டிக்குள் நுழைந்ததுபோலத் தோன்றியது. பெரிய சகடங்கள் கொண்ட தொலைபயணத் தேரில் இருந்து நோக்கியபோது அத்தனை கட்டடங்களும் சற்று கீழே எனத் தெரிந்தன.

இடுங்கலான தெருக்களில் இருந்த நெரிசல்கூட அங்கே பாண்டவர்கள் இருப்பதனால் மிக அண்மையில் உருவானதென்று தெரிந்தது. கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டு வண்ணம்பூசப்பட்டிருந்தன. “இளைய மைந்தர் அபிமன்யூவின் திருமணத்தின்பொருட்டு செப்பனிடப்பட்டிருக்கலாம்” என்றாள் பூர்ணை. தேவிகை தலையசைத்தாள். “இது நகரமே அல்ல, எல்லைப்புற காவல்கோட்டை. நகரமாகிக்கொண்டிருக்கிறது” என்றாள் சுரபி.

அரண்மனை முகப்பில் சுரேசர் அவர்களை எதிர்கொண்டார். “தாங்கள் வந்துகொண்டிருக்கும் செய்தி நேற்றுதான் இங்கே வந்தது, அரசி. நெடுந்தொலைவுப்பயணம்… உரிய ஏற்பாடுகளுமின்றி” என்றார். “ஆம், உடனே வரவேண்டியிருந்தது” என்றாள். “அரசர் இளையவர்களுடன் அருகே உள்ள சம்புகம் என்னும் சோலைக்கு சென்றிருக்கிறார்… இங்கே நாட்கணக்காக நிகழ்ந்த அரசுசூழ்தல்களால் சலிப்புற்றுவிட்டார். சிலநாட்கள் நூலாய்ந்துவிட்டு வரலாமென்று கிளம்பினார். இளையவர்கள் நகுலனும் சகதேவனும் உடன் சென்றனர்.”

அவள் கேளாமலேயே “பீமசேனரும் பார்த்தரும் நகரில் இல்லை. பீமசேனர் மகதத்திற்கு சென்றிருக்கக் கூடும். அங்கே ஜரர்களில் நமக்கு ஆதரவாக சிலர் உள்ளனர் என்கிறார்கள். பார்த்தர் காம்பில்யம் சென்றிருக்கிறார்” தேவிகை “அரசி இருக்கிறார்களா?” என்றாள். உடனே அவள் வந்த நோக்கத்தை உணர்ந்துகொண்டு “ஆம் ஆரசி, இருக்கிறார்கள்” என்றார் சுரேசர். “தாங்கள் நீராடி சற்று ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள். நான் சந்திப்புக்கு ஒழுங்குசெய்கிறேன்.” திரும்பி அருகே நின்றிருந்த ஏவலனிடம் “அரசியருக்கான மாளிகைக்கு அழைத்துச் செல்க! நீண்டபயணம். உடல்நீவும் விறலியரை வரச்சொல்” என்றதும் தேவிகை “தேவையில்லை” என்றாள். சுரேசர் தலைவணங்கினார்.

ஏவலனைத் தொடர்ந்து மகளிர்மாளிகை நோக்கி செல்லும்போது பூர்ணை “அரசியிடம் பேசவேண்டியதென்ன என்பதை முன்னரே சொல்வகுத்துக்கொள்வது நன்று” என்றாள். “ஆம்” என்றாள் தேவிகை. “அரசி, அவர் உங்கள் இணைமனைவி என்பதை மறக்கவேண்டியதில்லை. எந்நிலையிலும் அதை பெண்ணுள்ளம் மறப்பதில்லை. அத்துடன் அவர் இந்திரப்பிரஸ்தத்தில் மும்முடிசூடி அமர்ந்தவர். அனலில் இருந்து பிறந்தவர் என்று சூதர்களால் பாடப்படுபவர். அனைத்தும் நம் உள்ளத்தில் இருக்கவேண்டும்.”

தேவிகை “நான் அன்னையென அவளிடம் பேசப்போகிறேன்” என்றாள். “ஆம், ஆனால் மானுடருக்கு அப்படி நிலையான அடையாளமேதும் இல்லை, அரசி” என்றாள் சுரபி. “அவர்கள் அந்தந்த தருணங்களில் அதற்குரியதை சூடிக்கொள்கிறார்கள். அதை முடிவுசெய்வது அச்சூழலில் எதிர்நிற்போர், அங்கு ஒலிக்கும் சொற்கள், அதற்கு முந்தைய கணத்தில் அவர்களிருந்த நிலை, அவர்கள் எதிர்பார்த்திருக்கும் வருசூழல். அரசி, மானுடர் எண்ணத்தாலோ உணர்வாலோ முடிவுகளை எடுப்பதில்லை. பெரும்பாலும் தன்முனைப்பாலேயே முடிவுகளை எடுக்கிறார்கள்.”

தேவிகை “இப்படி ஆராய்ந்துசெல்வதனால் என்ன பயன்? நான் பேசப்போவது மிகமிக எளிய செய்தி. ஓர் அன்னையென எண்ணிநோக்கும்படி கோருகிறேன்” என்றாள். பூர்ணை “ஆம், அரசி. ஆனால் அதை பாஞ்சாலத்தரசியின் ஆணவம் உரசாதபடி உரிய சொற்களில் சொல்லவேண்டும். அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் அவர்கள் விரும்புவதில்லை” என்றாள். தேவிகை தளர்ந்து “நான் என்னடி சொல்வது?” என்றாள். “எளிய முகமன்களில் தொடங்குங்கள். சிபிநாட்டிலிருந்து வந்தது உங்கள் மைந்தன் யௌதேயனையும் பிறமைந்தரையும் பார்ப்பதற்காக என்று சொல்லுங்கள். போர் குறித்து இயல்பாகவே பேச்சு வரும். அப்போது உங்கள் மைந்தரைப்பற்றி சொல்லுங்கள். அவரைப்பற்றிய உங்கள் அச்சங்களைப் பற்றி சொல்லி அழத்தொடங்குங்கள். எண்ணிக்கொள்க, உங்கள் மைந்தரைப்பற்றி மட்டும் பேசுங்கள். பேச்சினூடாக அனைத்து மைந்தருக்கும் உயிரிடர் இருப்பதைப்பற்றி சொல்லுங்கள். அவர்களை எச்சரிக்கவேண்டாம். அவர் தன் மைந்தரைப்பற்றி எண்ணவேண்டுமென்று கோரவும் வேண்டாம்.”

தேவிகை “ஆனால் அவர் மிகவும் கனிந்துவிட்டார் என்றார்கள்…” என்றாள். பூர்ணை “கனியலாம். மிளகும் கனியே” என்றாள். சுரபி “அரசி, அத்தனை எண்ணிச்சூழ வேண்டியதில்லை. நீங்கள் சந்திக்கச்சென்றதுமே அரசி அனைத்தையும் உணர்ந்துகொள்வார்கள். அவர்களின் நுண்ணுள்ளம் அத்தகையது. நேரடியாகவே உங்கள் துயர்களையும் அச்சங்களையும் சொல்லி அடைக்கலம் கோருங்கள். போரைத் தவிர்க்க ஆவனசெய்யவேண்டுமென்று சொல்லுங்கள். ஆம் என ஒரு சொல்லை அவர் சொன்னார் என்றால் நாம் வென்றோம்” என்றாள்.

தேவிகை பெருமூச்சுடன் “என்னவென்றே தெரியவில்லை. என் உள்ளம் அச்சத்தில் தவித்துக்கொண்டே இருக்கிறது” என்றபின் தனக்குள் என “அவளிடம் சென்று கையேந்தும் நிலை அமைந்துவிட்டதே” என்றாள். பூர்ணை “அரசி, இவ்வெண்ணம் உங்கள் உள்ளத்தில் துளியேனும் இருந்தால்கூட அரசி அதை அறிந்துகொள்வார்கள். நான் அஞ்சியது அதையே” என்றாள். தேவிகை “நான் அவளுக்கு எவ்வகையில் குறைந்தவள்? நானும் அரசியே” என்றாள். “ஆம் அரசி, ஆனால் நீங்கள் வஞ்சினம் உரைக்கவில்லை” என்றாள் பூர்ணை.

சுரபி “ஏன் நாம் பொய்மொழி பேசிக்கொள்ளவேண்டும்? அரசி, நீங்கள் அரசி. அவர்கள் அரசியலாளர். அவர்களே இன்று பாரதவர்ஷத்தின் இரு மையங்களில் ஒன்று. இப்போரைத் தவிர்க்க இருவராலேயே இயலும். இளைய யாதவர் எண்ணவேண்டும். இந்திரப்பிரஸ்தத்தின் அரசி உளமிளகவேண்டும். நாம் அதன்பொருட்டே வந்துள்ளோம். போரைத்தவிர்க்க விழைபவர்கள் அனைவரும் அவர்களின் காலடிகளில் பணிந்தேயாகவேண்டும்” என்றாள். தேவிகை சினத்துடன் திரும்பி அவளை நோக்கியபோது காதில் குழைகள் ஆட நிழல் கன்னத்திலும் கழுத்திலுமாக ஊசலாடியது. அவள் விழிகளை இமைக்காமல் நோக்கி நின்றாள் சுரபி. விழிவிலக்கி தேவிகை பெருமூச்சுவிட்டாள்.

blதிரௌபதியின் சேடியான சலஃபை “உள்ளே செல்லலாம், அரசி” என்றாள். தேவிகை உள்ளே சென்றபோது திரௌபதி உயரமற்ற பீடத்தில் அமர்ந்து மடிமேல் பலகையை வைத்து எழுதிக்கொண்டிருந்தாள். எழுதப்பட்ட ஓலைகள் அருகே ஒரு மரப்பேழையில் இருந்தன. புதிய ஓலைநறுக்குகள் பிறிதொன்றில் காத்திருந்தன. விழிதூக்கி “வருக!” என்றாள். தேவிகை அவளை நோக்கியபடி அசையாமல் நின்றாள். அவளிலெழுந்த முதல் எண்ணம் திரௌபதி மேலும் பலமடங்கு அழகுகொண்டிருக்கிறாள் என்பதுதான். முதுமையின் சாயல்களாலேயே அழகுமிகுவதும் இயல்வதுதான் போலும்.

காதோரமயிரில் ஓரிரு நரையிழைகள் இருந்தன. முகவாய்க்கோடுகள் அழுத்தம்கொண்டிருந்தன. கண்களுக்குக் கீழே மெல்லியநிழல். கழுத்தின் தசை சற்று தளர்ந்திருந்தது. தோள்களில் மென்மணல் என மின்னிய வரிகள்.

திரௌபதி எழுந்து வந்து அவள் முன் நின்றாள். அவள் தோள்களுக்குக் கீழே தேவிகையின் தலை இருந்தது. அண்ணாந்து நோக்கியபோது அவள் முகம் உயரத்திலென தெரிந்தது. அவள் ஆடை சீரமைப்பதுபோல சற்று விலகி தூணில் முட்டி அதை பற்றிக்கொண்டு சாய்ந்து நின்றாள். திரௌபதி புன்னகையுடன் “வருக, அரசி. பார்த்து நெடுநாளாகிறது” என்றாள். “ஆம், இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அஸ்தினபுரிக்குக் கிளம்பும்போது பார்த்தது” என்றாள்.

அச்சொல் அவள் விழிகளுக்குள் மெல்லிய மாறுதலொன்றை உருவாக்குவதைக் கண்டதும் அவளுக்குள் கூர்மை ஒன்று விழித்தெழுந்தது. “அஸ்தினபுரியில் நிகழ்ந்தவற்றை சூதர்சொல் வழியாகவே அறிந்தேன். இன்றும் என்னை பதறச்செய்கிறது அது” என்றாள். ஆனால் அவள் எண்ணியதுபோல அச்சொற்கள் திரௌபதியை மேலும் துன்புறுத்தவில்லை. அவள் புன்னகை ஒன்றை அணிந்துகொண்டு அதை தவிர்த்தாள். “ஆம், அதெல்லாம் ஊழ். இந்திரப்பிரஸ்தத்தில்தான் இருந்தீர்களா?” என்றாள். தேவிகை “இல்லை, அரசர்கள் நீங்கியதுமே நான் சிபிநாட்டுக்கு சென்றுவிட்டேன்.”

அதைச்சொன்னதுமே அவள் வென்றுவிட்டாளென்பதை தேவிகை உணர்ந்தாள். “இளவரசர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தது நன்று. துரியோதனர் தந்தையென நின்று அவர்களை வளர்த்தார் என அறிந்தேன்.” தேவிகை சொல்லிழந்து வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் “ஆம், சிபிநாட்டில் இங்கிருக்கும் ஆசிரியர்கள் இல்லை. மேலும் அவன் தன் உடன்பிறந்தாருடன் இருப்பதே நன்று என்றும் தோன்றியது” என்றாள். “அன்னையர் மைந்தருடன் இல்லாமலிருப்பதே நன்று என்றும் ஆசிரியர் சொல்வதுண்டு” என்றாள் திரௌபதி.

முழுமையாக தோற்கடிக்கப்பட்டவளாக தேவிகை நின்றாள். இவளை என்னால் வெல்லவே முடியாதென நூறுமுறை உணர்ந்தபின்னரும் ஏன் இதை செய்கிறேன்? என்னிலிருந்து ஆட்டுவிப்பதை எப்படி கடப்பேன்? தன்னிரக்கத்தால் அவள் உள்ளம் துயர்கொண்டது. கண்களில் நீர் திரள தொண்டை ஏறியிறங்கியது. “என் மகன்…” என்றாள். அச்சொல்லால் அத்துயரை மடைமாற்றி மைந்தனுக்கானதாக ஆக்கிக் கொண்டாள். “போர் அணுகுகிறது, அரசி… போரில் என் மைந்தன் படுவான் என நிமித்திகர் சொன்னார்கள்.”

“யார்?” என்று திரௌபதி கேட்டாள். அவள் விழிகள் சுருங்கியிருந்தன. “சிபிநாட்டில் பீதகிரி என்னும் மலை உள்ளது. அங்கிருக்கும் நாகசூதர்கள் வருபொருள் உரைப்பதில் வல்லவர்கள். அவர்களில் ஒருவர் நெய்க்கலம் நோக்கி சொன்னார்.” திரௌபதி சில கணங்களுக்குப்பின் “அது வருவது என்றால் நாம் என்ன செய்யமுடியும்?” என்றாள். “நாம் கைகட்டி நிற்கமுடியுமா? ஊழ் என்றால் அதன் முன் சென்று பாய்ந்து உயிர்விடவேண்டாமா? சாவித்ரி கொழுநனுக்காக யமனை வென்றதை நானும் கேட்டிருக்கிறேன்” என்றாள். திரௌபதி “ஆம், ஆனால் போரில் இறக்கும் அத்தனை மைந்தரின் அன்னையரும் உணர்வது இது” என்றாள்.

தேவிகை சீற்றத்துடன் “எவர் உணர்கிறார்கள் என்று நான் அறியேன். நான் உணர்வது இது. என் மைந்தன் களம்படலாகாது. அவனை நான் காத்தாகவேண்டும்” என்றாள். திரௌபதி “போரிலிருந்து உங்கள் மைந்தருக்கு மட்டும் விடுதல் கோருகிறீர்களா?” என்றாள். தேவிகை கடும் சினத்துடன் பற்களை இறுகக் கடித்து “விளையாடுகிறீர்களா? எவருடன் விளையாடுகிறீர்கள் என்று தெரியுமா? என்னைப்போன்றவர்களை பூனை எலியை என வைத்தாடும் வல்லமை உங்கள் உகிர்களுக்கு உண்டு. ஆனால் ஊழ் உங்களை வைத்து விளையாடும்” என்று கூவினாள்.

அவள் கொண்ட கட்டுகள் அனைத்தும் சிதறின. “அறிக, நான் கோருவது என் மைந்தனுக்காக மட்டும் அல்ல. உங்கள் மைந்தர் ஐவருக்காகவும்தான்” என்று இருகைகளையும் இறுகப்பற்றி தொண்டையில் நரம்புகள் புடைக்க விழிகள் ஈரமாக வெறித்திருக்க அவள் கூச்சலிட்டாள். “நான் கண்டேன். இறந்துகிடந்தவர்கள் உபபாண்டவர்கள் அனைவரும்தான்… ஒன்பதின்மரும் ஒருவர்கூட எஞ்சாமல் அழிவதைக் கண்டேன். நீங்கள் அன்னைப்பெரும்புலி. பெற்ற குருளைகளை உண்டு பசியாறப்போகும் குருதிவிலங்கு, அதில் என் மைந்தனும் சேரக்கூடாதென்று சொல்லவே வந்தேன்…”

“நீங்கள் அனல்மகளாக இருக்கலாம். பெருநகர் அமைத்து மும்முடிசூடி அமர்ந்த சத்ராஜித்தாக இருக்கலாம். ஆனால் ஒன்றுண்டு, நீங்களும் மானுடப் பெண்ணே. மிஞ்சிவிளையாட எவரையும் ஊழ் ஒப்புவதில்லை. உங்களை கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிறது அது. மாமலைகளைப்போல உங்கள் நெஞ்சின்மேல் பெருந்துயரை தூக்கி வைக்க அது காத்திருக்கிறது. அதைச் சொல்லவே வந்தேன்” என்றாள் தேவிகை. “இந்தப் போர் எவர் பொருட்டு? உங்கள் வஞ்சத்தின் பொருட்டு. உங்கள் ஒரு சொல்லுக்காகவே இந்திரப்பிரஸ்தத்தின் அரசர்கள் படைக்கலமெடுக்கிறார்கள். உங்களுக்காகவே இன்று பாரதவர்ஷம் இரண்டெனப்பிரிந்து போர்முகம் கொண்டுள்ளது.”

“உங்கள் வஞ்சம் வெல்லக்கூடும். ஆனால் நீங்கள் வெல்லமாட்டீர்கள். வஞ்சத்தின் பயனின்மையை உலகுக்கு உணர்த்துவதாக உங்கள் விழிநீர் என்றும் இம்மண்ணில் இருக்கும். இதைச்சொல்பவள் அரசியல்ல, பெண்ணல்ல, வெறும் அன்னை” அவள் சொல்லிழந்து தணிந்தாள். “எனக்கு சரியாக சொல்லத்தெரியவில்லை. வெற்றுணர்ச்சிகளால் ஆளப்படும் வெறும்பெண் நான். நான் எதைச்சொன்னேன் என்றே எனக்குத்தெரியவில்லை” என்று விம்மலுடன் சொல்லி மேலாடையை இழுத்து முகத்தின்மேல் போட்டுக்கொண்டாள்.

“நம் மைந்தருக்காகவே நான் கோருகிறேன். அவர்கள் இளையோர், இன்னும் இவ்வுலகில் எதையும் அறியாதவர். வாழ்ந்தோரின் வஞ்சத்தின்பொருட்டு வாழவேண்டியவர்களை ஒறுப்பதுபோல இழிவு பிறிதில்லை” என்றாள். மீண்டும் அவளிடம் சொற்கள் எழுந்தன. “மைந்தரை இழந்து எதை அடைந்து என்ன? வெல்வது நம் வீரமா அன்றி ஆணவமா? நாம் கொள்வது நிலமா அன்றி பெரும்பழியா?” அவள் பெருமூச்சுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழ சொல்லொழுக்கு முறிந்து தவித்தாள். ஆடையைப் பற்றி முறுக்கியபடி “நான் கெஞ்சி கால்பற்றி கண்ணீர்விடவே வந்தேன். நான் அரசியல்ல, இணைமனைவியும் அல்ல. அடைக்கலம் கோரி வந்த எளியவள் என்றே கொள்க!”

திரௌபதி ஒன்றும் சொல்லவில்லை. அவள் மூச்சொலிகூட கேட்கவில்லை. அவள் முற்றிலும் அங்கில்லை என புலன்கள் சொல்ல தேவிகை அவளை நிமிர்ந்து நோக்கினாள். பெரிய இமைகள் சரிய அவள் தலைகுனிந்திருந்தாள். நெற்றிமயிர்க்கற்றை முகத்தில் சரிந்திருந்தது. அந்த அமைதி தேவிகையையும் அமைதிப்படுத்தியது, “எண்ணிநோக்குக, அரசி! நான் உங்களுக்கு எதையும் சொல்லத்தகுதியற்றவள். நூலாய்ந்ததில்லை, அவையமர்ந்து அரசு சூழ்ந்ததுமில்லை. அதெல்லாம் இல்லாதவளென்பதனால் நான் அறிந்த சிலவற்றை நீங்கள் அறியாமலுமிருக்கக் கூடுமல்லவா?” என்றாள்.

சற்று அருகே சென்று “இந்தப்போர் நிகழ்வதே அரசுரிமைக்காக. இது தொடங்கி இருதலைமுறைக்காலமாகிறது. அடுத்த தலைமுறையிலும் இது நீடிக்கக்கூடாது. தன் கொடிவழியினர் பிறரின்றி நாடாளவேண்டும் என்றே அரசர்கள் இருதரப்பிலும் எண்ணுவார்கள். ஆகவே இப்போரில் முதல் அம்புகள் மைந்தர் நெஞ்சுக்காகவே குறிக்கப்படும். குறிபிழைக்காத பெருவில்லவர்களே இருதரப்பிலும் உள்ளனர். போர்தொடங்கியதுமே மைந்தர்பலிகள் நிகழத்தொடங்கும். ஐயமே வேண்டியதில்லை” என்றாள்.

திரௌபதியின் கைகளை பற்றிக்கொள்ள நீண்ட தன் கைகளை கட்டுப்படுத்திக்கொண்டு “அவர்கள் களம்படுவதே ஊழ் என்று இருந்தால்கூட நாம் ஒன்றும் செய்யவில்லை என்று இருக்கலாகாது. அரசி, அது நம்மால் நிகழ்ந்தது என்று ஒருபோதும் அமையக்கூடாது. இத்தருணத்தில் நாம் செய்யவேண்டியது அதை மட்டுமே” என்றாள். திரௌபதி மெல்ல கலைந்து திரும்பிச்சென்று தன் பீடத்தில் அமர்ந்தாள். பெருமூச்சுடன் “ஆம், உண்மை” என்றாள். “நான் இதை எண்ணவில்லை என்றல்ல. ஆனால் இவையனைத்தையும் ஏனோ ஒதுக்கிவைத்து பிறிதொரு உலகில் வாழ்ந்தேன்” என்றாள்.

சுவடிகளை எடுத்துக்காட்டி “முதற்புலவர் எழுதிய சீதையின் கதை. அதையே படித்துக்கொண்டிருந்தேன். உளம் அதில் அமையவில்லை என்று கண்டபோது அதை சுவடியில் திருப்பி எழுதத் தொடங்கினேன். மெல்ல மெல்ல உள்ளிழுத்துக்கொண்டது. இத்தனைநாட்களாக பிறிதில்லாமல் அவள் கதைக்குள்தான் இருக்கிறேன்” என்றாள். “என்னை இழுத்து தரையிலிட்டுவிட்டீர்கள். நான் செய்வதற்குரியவை பல உள்ளன என்று உணர்கிறேன். ஆனால்…” அவள் முகத்தில் தெரிந்த வலி தேவிகையை துயர்கொள்ளச்செய்தது. “அனைத்தும் மிக அப்பால் சென்றுவிட்டன என்று தோன்றுகிறது, தேவிகை” என்றாள்.

“இல்லை, அப்படி தோன்றும். ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் அஞ்சிக்கொண்டுதான் இருப்பார்கள். இவர்களை நாம் செலுத்த முடியும். முதலில் நம் கொழுநர் அவைநின்று உரைத்த வஞ்சம்தான் அவர்களை பின்னகர முடியாமலாக்குகிறது. அந்த வஞ்சத்திலிருந்து அவர்களை நாம் விடுவிக்க முடியும். முதலில் அவ்வஞ்சத்தை நாம் கைவிட்டால்போதும். அது பொருளிழந்துவிடும். அவர்கள் அதைப்பற்றி நின்று எதையும் செய்யவியலாது. அரசி, இன்று அவர்களை சவுக்கென பின்நின்று சொடுக்கி விசைகூட்டுவது உங்கள் வஞ்சினமே” என்றாள் தேவிகை.

“அது நிகழ்ந்தால் அவர்களுக்குமுன் பல வழிகள் திறந்து கிடக்கின்றன. இன்னமும் அங்கே பிதாமகரும் முதலாசிரியரும் முதுதந்தையும் இருக்கிறார்கள் என்பதே நல்லூழ். மைந்தர் அவர்கள் முன் தோள்தழுவிக்கொண்டு வஞ்சம் மறந்தார்கள் என்றால் எவரும் எவரையும் கோழையென்றும் தன்னலத்தான் என்றும் சொல்லப்போவதில்லை” என தொடர்ந்தாள். “இருகுலத்து மைந்தரும் அதேபோல இப்பால் நின்று அவர்களை இணைக்கமுடியும்.”

“.ஆயிரம்தான் போர்வஞ்சம் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு அரசரும் உள்ளூர அஞ்சிக்கொண்டே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஒருகுடிப்பிறந்தார் முடிப்பூசலிட்டு போர்முகம் நிற்பது இதுவே பாரதவர்ஷத்தில் முதல்முறை. இந்த முன்நிகழ்வு தொடர்ந்தால் அவர்கள் ஒவ்வொரு குடிக்கும் அது பேரிடராக நாளை வந்துவிழும் என்று அவர்களும் உள்ளறிந்திருப்பார்கள். போர் தவிர்க்கப்படுமென்றால் அது முன்னிகழ்வாகும். அதை எண்ணி அரசர்கள் அனைவரும் ஆறுதலே கொள்வார்கள்” என்றாள் தேவிகை.

திரௌபதி அவள் சொற்களை சரிந்த விழிகளும் சற்றே விலகிய உலர்ந்த உதடுகளுமாக கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் உடலின் கருமைக்குள் அனல்கொண்டதுபோன்றதோர் செம்மை ஓடுவதை தேவிகை கண்டிருந்தாள். அவளை அழகியாக்குவது அது. அனல் மேலும் மேலும் வெம்மைகொண்டு வருவதுபோலத் தோன்றியது. “நாம் என்ன செய்யவேண்டுமென்று தௌம்யரை அழைத்து கேட்போம். இப்போது நாம் செய்யவேண்டியது நீங்கள் வஞ்சமின்றி இருக்கிறீர்கள் என அவர்கள் அறியவேண்டும். அதன்பின் உலகறியவேண்டும்” என்று தேவிகை தொடர்ந்தாள்.

“அதற்கு ஒரே வழி நீங்கள் எந்த முறைமையும் இல்லாமல் அஸ்தினபுரிக்குள் நுழைவதுதான். எளியபெண்ணாகச் சென்று அஸ்தினபுரியின் அரசியரை தழுவிக்கொள்ளுங்கள். அங்கிருக்கும் மைந்தர் ஆயிரத்தவரை நெஞ்சோடணையுங்கள். அவர்களுடன் விளையாடுங்கள். பிதாமகரையும் முதுதந்தையையும் கால்பணிந்து வணங்குங்கள். அதன்பின் துரியோதனரின் அவையில் நின்று நீங்கள் அவர்மேல் கொண்ட வஞ்சத்தை முற்றாக மறந்துவிட்டதாக அறிவியுங்கள்.”

“முழுமையாகத் தோற்று, அடிபணிந்து, ஒன்றும் எஞ்சாதவளாக அந்நகர்விட்டு விலகி வாருங்கள். நீங்கள் அனைத்தையும் வென்றவர் ஆவீர்கள். ஆணை, அதன்பின் இப்பாரதவர்ஷமே உங்களை பேரன்னை என வணங்கும். அரசரவைகள் உங்களை என்ன சொன்னாலென்ன? அன்னையர் நாவில் அருந்ததிபோல அனுசூயைபோல சாவித்ரிபோல மைத்ரேயிபோல அழியாது வாழ்வீர்கள்” என்றாள் தேவிகை.

“அரசமுடியை கண்டுவிட்டீர்கள். கானகவாழ்விலும் உழன்றுவிட்டீர்கள். இனி உங்களுக்கு எஞ்சுவது என்ன? நம் மைந்தரை நாம் நம்புவோம். அபிமன்யூ மட்டும் போதும். கிழக்கோ தெற்கோ செல்வோம். வென்றெடுக்க மண்ணும் குலங்களும் அங்குள்ளன. நம் மைந்தர் அங்கு அரசு அமைத்து முடிசூடட்டும். அவர்கள் பிறப்பால் இளவரசர்களல்ல அரசி, தோள்வல்லமையால் இளவரசர்கள். ஷத்ரியர்களுக்கு தந்தைவழி நிலம் உகந்தது. குலவழிநிலம் மேலும் உகந்தது. வென்றடக்கிய நிலமோ விண்ணகத்திலும் புகழ்சேர்ப்பது என்கின்றன நூல்கள்.”

திரௌபதி அருகிருந்த நூலை இழுக்க வெளியே மணியோசை எழுந்தது. கதவைத்திறந்து உள்ளே வந்த சலஃபையிடம் “தௌம்யரை அழைத்துவருக!” என்றாள். பின்னர் “அமர்க, அரசி!” என்றாள். தேவிகை ஆடையை ஒதுக்கியபடி அமர்ந்துகொண்டாள். மேலும் சொல்வதற்கேதுமில்லை என்று தோன்றியது. பெருமூச்சுடன் அங்கிருந்த ஓலையை எடுத்துப்பார்த்தாள். அது தொன்மையான ஓலை, பழுப்பேறியிருந்தது. அதிலிருந்த எழுத்துக்களை அவளால் படிக்கமுடியவில்லை. “மிகத்தொன்மையானது. அன்றிருந்த எழுத்துவடிவம்” என்றாள் திரௌபதி. தேவிகை ஓலையை கீழே வைத்தாள்.

திரௌபதி ஓலைகளை ஒவ்வொன்றாக நோக்கி அடுக்கி வைத்தாள். பின்னர் பட்டுநூல்கொண்டு கட்டினாள். அவ்வாறு வெளியே ஒன்றை திருத்துவதென்பது அகம்திருத்துவதே என அறிந்திருந்தாள். அவள் தன் அணிப்பேழையை அவ்வாறு திருத்துவதுண்டு. அவள் அதையே நோக்கிக்கொண்டிருந்தாள். தொன்மையான ஓலைகள். தொன்மையான சொற்கள். கல்வி என்பது தொன்மையானவற்றை அறிவது மட்டுமே. வருவனவற்றுக்கு ஏதேனும் ஒழுங்குள்ளதா என்று அறிய வந்தவற்றை அறிவது. வருவனகுறித்த விழைவேதுமின்றி வந்தவற்றை அறிய எவருக்கேனும் இயலுமா என்ன? அவள் கண்டவர்களிலேயே நூலறிந்தவர் யுதிஷ்டிரர். அவருக்கு ஒன்றுமே தெரியாது என்றுதான் அவள் உள்ளம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தது. சொற்களில் விழைவுகளை கண்டடையும் பயிற்சியன்றி அவர் கற்றது ஏதுமில்லை.

அவள் அசைந்தமர்ந்தபோது ஏறிட்டு நோக்கிவிட்டு திரௌபதி மீண்டும் சுவடிகளை அடுக்கிவைத்தாள். சலஃபை வந்து தௌம்யரின் வரவை அறிவித்தபோது அவள் மிக விலகிவந்துவிட்டிருந்தாள், அவர் ஏன் வருகிறார் என்பதுகூட உள்ளத்தில் உறைக்காத அளவுக்கு. திரௌபதி தலையசைக்க சலஃபை சென்று தௌம்யரை உள்ளே அனுப்பினாள். அவர் வந்து வணங்கி முகமன் உரைத்து அமர்ந்தார். அவள் சுவடிக்கட்டை அப்பால் வைத்துவிட்டு நேரடியாக “தௌம்யரே, நான் அஸ்தினபுரிக்கு செல்ல விழைகிறேன்” என்றாள்.

அவர் வாய்திறந்து சொல்லெழாது அமைந்தார். “பானுமதியையும் அசலையையும் பிற பெண்டிரையும் சந்திக்கவேண்டும். முதன்மையாக பேரரசி காந்தாரியை சந்திக்கவேண்டும்” என்றாள். தௌம்யர் “ஆனால்…” என்றார். “நான் என் வஞ்சத்தை கைவிட்டுவிட்டேன் என்று அவர்கள் அறிவதற்காகத்தான் செல்கிறேன். நம் அரசர்களும் குடிகளும் அறியவேண்டும். பாரதவர்ஷமே அறியவேண்டும். என் மைந்தருக்கு உடன்குருதியரான மைந்தர் ஆயிரவர் அங்கிருக்கிறார்கள். அவர்களைக் கண்டு தழுவி மீளவிரும்புகிறேன்.”

தௌம்யர் புரிந்துகொண்டார். ஆனால் அவர் உள்ளம் அதை முழுதும் வாங்கிக்கொள்ளவில்லை. “அரசர்களின் எண்ணம்…” என தொடர்ந்தார். திரௌபதி மறித்து “இது என் எண்ணம்” என்றாள். “ஆம், அது நன்று” என்றார் தௌம்யர். “நான் செல்வதற்குரிய தருணம் உடனே ஏதேனுமுள்ளதா? அதை ஆராய்ந்துசொல்லவே அழைத்தேன்” என்றார். “தருணம் என்றால்…” என குழம்பிய தௌம்யர் முகம் மலர்ந்து “ஆம், உள்ளது. உடனடியாகவே உள்ளது. மாத்ருபிரஸ்தானநாள்… பேரரசி சத்யவதியும் அரசியர் அம்பிகையும் அம்பாலிகையும் கானேகியது அன்றுதான். இது அறுபதாம் ஆண்டு. அதை அவர்கள் அங்கே அரசமுறைப்படி கொண்டாடுகிறார்கள். முறைப்படி நமக்கும் அழைப்பு வந்துள்ளது” என்றார்.

தேவிகை “மிகப்பொருத்தமான நாள்” என்றாள். “ஆம், அரசி. அன்னையருக்குரிய நாள் இது. மூதன்னையர் இந்நாளில் தர்ப்பைப்புல் ஏந்தி நெறியுறுதி ஏற்று குடிகளிடமிருந்து முற்றிலும் விலகி புறநோன்பு வாழ்க்கைக்கு செல்வார்கள். கானேகலுக்கு நிகரானது அது. அவர்கள் கங்கைக்கரையில் புற்குடில் அமைத்து அங்கே சென்று வாழ்வார்கள். அவர்களை அவர்களின் குடியினரும் குருதியினரும் சென்று சந்திக்கக்கூடாது. குடியின் எந்த நிகழ்வுகளிலும் அவர்கள் பங்கேற்பதுமில்லை. அவர்கள் மண்நீங்கினால்கூட குருதிவழிவந்தவர்கள் அனற்கடனோ நீர்க்கடனோ செய்யக்கூடாது. இதே நோன்புகொண்ட பிறர்தான் அவற்றை செய்யவேண்டும். ஆண்டுதோறும் அளிக்கப்படும் அன்னமும் நீரும்கூட அவர்களுக்கு வேண்டியதில்லை என்பது மரபு” என்றார்  தௌம்யர்.

“அப்பூசனைக்கு நாம் செல்வோம்” என்றாள் திரௌபதி. தௌம்யர் “நீங்கள் செல்வதாக முறைப்படி அறிவித்துவிடுகிறேன்” என்றாள். “தேவையில்லை. நாளை புலரியில் நானும் இவளும் இங்கிருந்தே கிளம்புகிறோம். அச்சடங்குக்குரிய முறைமைகள் ஏதேனுமுண்டா? முன்பு சிலமுறை சென்றது நினைவிலுள்ளது” என்றாள். “மூவன்னையர் ஆலயம் கங்கையின் தெற்குக்காட்டில் உள்ளது. மிகச்சிறிய ஆலயம். மூன்று கிடைக்கற்கள் மட்டும்தான் அங்கே நிறுவப்பட்டுள்ளன. புறநோன்பு கொள்ளும் அன்னையர் ஈன்று மறைந்த குழந்தைகளின் உருவை பச்சரிசியில் அப்பம்போல் செய்து இறைவடிவாக அமைந்திருக்கும் மூன்று அன்னையருக்கும் படைப்பார்கள். பிறர் பச்சரிசியில் செய்த முகங்களை அப்பங்களாக்கி படைத்து அனைவருக்கும் அளிப்பர். வழக்கமான நீராட்டும் பூசனைகளும் மட்டுமே” என்றார் தௌம்யர்.

திரௌபதி “நன்று” என்றாள். தௌம்யர் “பூசனைக்கு ஏழுநாட்களுக்கு முன்பிருந்தே ஆண்களை முற்றிலும் தவிர்த்துவிடவேண்டும் என்பதே நெறி. பூசனையில் பூசகர் உட்பட அனைவரும் பெண்களே. தெற்குக் காட்டுக்குள்ளேயே அன்று ஆண்கள் செல்ல ஒப்புதலில்லை” என்றார். திரௌபதி “அதுவும் நன்று” என்றபின் “நான் கிளம்புவதற்குரிய ஒருக்கங்களைச் செய்ய சுரேசருக்கு ஆணையிடுக!” என்றாள். தௌம்யர் தலைவணங்கி “அவ்வண்ணமே” என எழுந்துகொண்டார்.

அவர் சென்றதும் தேவிகை “நான் இத்தனை எளிதாக அனைத்தும் முடியுமென எண்ணவே இல்லை, அரசி” என்றாள் “நெஞ்சிலிருந்து பேரெடை ஒன்று இறங்கியதாகவே உணர்கிறேன்.” திரௌபதி “பார்ப்போம், என் நெஞ்சு எடை இழக்கவேயில்லை” என்றாள். “வஞ்சத்தை மறக்க முடிவெடுப்பது முதல் அடிவைப்பு. வஞ்சத்தை மறப்பது அடுத்தது. அங்குசென்று அம்மைந்தரையும் அன்னையரையும் கண்டு தழுவிக்கொண்டால் அனைத்திலிருந்தும் விடுபட்டுவிடுவீர்கள். நீங்கள் மட்டுமல்ல, அவர்களும் நம்மவரும் அனைவருமே விடுதலைகொள்வோம்” என்றாள் தேவிகை.

திரௌபதியின் முகம் குனிந்து சொட்டப்போகும் துளி எனத் திரண்டு இருப்பதைக் கண்டு அவள் மேலும் தொடர்ந்தாள் “ஒருவேளை இது இங்ஙனம் நிகழவேண்டுமென்பதற்காகவே இப்படி கூர்கொண்டிருக்கக்கூடும். இது அன்னையர் சொல்லால் நிறைவுற்றாகவேண்டிய ஆடல்போலும்.” திரௌபதி வெறுமனே தலையசைத்தாள். “இன்று முழுக்க இதை நெஞ்சில் ஓட்டிக்கொண்டே இருங்கள், அரசி. எண்ண எண்ண இது விரிவதை காண்பீர்கள். ஒவ்வொன்றாக கடந்துசெல்வீர்கள்” என்றாள்.

“மெய்யாகவே நீங்கள் இத்தனை எளிதில் வஞ்சத்திலிருந்து விலகுவீர்கள் என நான் எண்ணவில்லை. ஆனால் இப்போது பிறிதென்ன நிகழக்கூடும் என்ற வியப்பே எழுகிறது. நீங்கள் எழுந்த உயரத்திலிருந்து இவர்களை எல்லாம் குனிந்து நோக்கி பொறுத்துக்கொள்வதுதான் இயல்பானது. கானேகி நீங்கள் கனிந்துவிட்டீர்கள் என்று சொன்னார்கள். அதற்கு முன் மும்முடிசூடியதுமே அக்கனிதல் தொடங்கிவிட்டிருக்கும் என்று நான் இப்போது எண்ணுகிறேன். எந்தப்பெண்ணும் இவ்வுலகின் வெற்றிகள்மேல் அமர்ந்து நிறைவுகொள்ள மாட்டாள். எய்தியதுமே வெறுமையை கண்டடைவாள். அதிலிருந்தே நீங்கள் தொடங்கியிருக்கிறீர்கள்.”

“மெய்தான்” என்றாள். திரௌபதி. “நான் கிளம்புகிறேன். இன்றிரவு நான் நன்கு துயில்வேன் என எண்ணுகிறேன்” என்றாள் தேவிகை. அவள் எழுந்தபோது திரௌபதியும் எழுந்து அவள் கைகளை பற்றிக்கொண்டாள். “நன்று சொன்னீர்கள், அரசி. எனக்குத் தேவையாக இருந்த சொல்” என்றாள். “நம் மைந்தருக்காக” என்றபின் பெருமூச்சுடன் தேவிகை விடைபெற்றாள். கதவைத்திறந்து வெளியே சென்றதும் மெல்லிய ஏமாற்றம்தான் தன்னுள் இருக்கிறதென்று உணர்ந்தாள். அதனுடன் கலந்த அதைவிடமெல்லிய எரிச்சல். அது ஏன் என வியந்தபடி நடந்தாள்.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 4

பகுதி ஒன்று : பாலைமகள் – 4

blதேர் மீண்டும் விடுதியை அணுகி விரைவழிந்தபோது மூவருமே சிறுசாளரங்களினூடாக வெளியே நோக்கிக்கொண்டிருந்தனர். மிகத்தொலைவிலேயே தேவிகை அங்கே பூரிசிரவஸின் புரவிகள் நிற்பதை கண்டுவிட்டாள். அருகில் அவனுடைய படைவீரன் ஒரு புரவியின்மேல் பொதிகளை கட்டிக்கொண்டிருந்தான். “கிளம்பப்போகிறார்கள்” என்றாள் பூர்ணை. “கிளம்பிக்கொண்டே இருக்கிறார்கள், நெடுநேரமாக” என்றாள் சுரபி. தேவிகை நெஞ்சு படபடக்க அதை பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் பூர்ணையின் கையைத் தொட்டு “ஏன் வந்தோம் என உணரத்தொடங்கிவிட்டேன், பூர்ணை” என்றாள்.

“என்ன சொல்கிறீர்கள், அரசி?” என்றாள் பூர்ணை. “நான் எப்படி அவர் முன் சென்று நிற்பேன்? எதை பேசத் தொடங்குவேன்? முன்பு நான் பேசியது முறைமைச்சொல். அதை எவரிடமும் சொல்லலாம். அடுத்த சொல்லை எடுப்பதுதான் கடினம்” என்றாள். “இக்கட்டான சூழல்களில் நடிப்பதுதான் நல்லது. அது ஒரு முகப்போர்வையென நம்மை காக்கும். நடிப்பில் நான் நன்கு இயன்று அமைந்தபின்னர் மெல்ல அதை விலக்கி மெய்முகம் காட்டமுடியும்” என்றாள் பூர்ணை.

தேவிகை “என்ன நடிப்பது?” என்றாள். “அங்கே உங்கள் கணையாழி ஒன்று விழுந்துவிட்டது. அதைத் தேடி வந்தீர்கள்” என்ற பூர்ணை ஒரு கணையாழியை எடுத்து “இது” என்றாள். “அதை எடுத்ததும் நீங்கள் கிளம்பும்போது தற்செயலாக அவரை பார்க்கிறீர்கள். இந்தக்கணையாழி எத்தனை இன்றியமையாதது என்கிறீர்கள். மீண்டும் கண்டதனால் முகமனுரைப்பவர்போல. பின்னர் எண்ணியிராதபடி நினைவுகூர்ந்து நீங்கள் அஸ்தினபுரிக்கல்லவா செல்கிறீர்கள் என்று கேளுங்கள். ஆம் என்று சொல்வார். அவ்வாறென்றால் ஒரு தூதை அளிக்கமுடியுமா என்று பேச்சை தொடங்குங்கள். அதற்குள் உங்கள் கால்நடுக்கம் நின்றுவிட்டிருக்கும்.”

தேவிகை சிலகணங்கள் எண்ணியபின் “சரி” என்றாள். சுரபி “அக்கணத்தில் எவ்வுணர்வு எழுமென்று முன்னரே வகுக்கமுடியாது, அரசி. எதுவாயினும் அது அக்கணத்தை ஆளும் தெய்வங்களுக்குரியதென்று கொள்ளுங்கள். நாம் எதற்கும் பொறுப்பல்ல” என்றாள். தேவிகை அவளை ஒருகணம் நோக்கி இமைக்காமல் அமைந்து மீண்டு “நம்மை மீறியா?” என்றாள். “ஆம், நாம் என்ன, பெருக்கில் துகள்கள் மட்டும்தானே?” தேவிகை பெருமூச்சுடன் “ஆம்” என்றாள்.

தேரிலிருந்து பூர்ணை முதலில் இறங்கினாள். தேவிகை இறங்கியதும் பூர்ணை மட்டும் முன்னால் சென்று அவளை எதிர்கொண்ட காவலனிடம் ஓரிரு சொற்கள் பேசிவிட்டு உள்ளே சென்றாள். சுரபியும் தேவிகையும் நடந்து விடுதிமுகப்பை அடைந்தனர். தேவிகையின் தொடைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. மூச்சில் முலைகள் எழுந்தமைந்தன. அவள் அப்போது தன் முகத்தை ஏதேனும் ஆடியில் பார்க்க விரும்பினாள். கூந்தல் கலைந்து நெற்றியில் விழுந்திருப்பதை உணர்ந்து அள்ளி காதோரம் செருகிக்கொண்டாள். நெஞ்சை உலைத்தபடி பெருமூச்சு ஒன்று வந்தது.

சுரபி “முகம் கழுவிக்கொள்ளலாம், அரசி” என்றாள். அதை தேவிகை மிக விரும்பினாள். “ஆம்” என்றபடி பக்கவாட்டில் சென்று அங்கிருந்த நீர்த்தொட்டியை அணுகி குனிந்து அதில் தன் முகத்தை பார்த்தாள். அந்தமுகம் அவளை திடுக்கிடச்செய்தது. படபடப்புடன் உதடுகளை மடித்து அழுத்திக்கொண்டாள். பின்னர் முகத்தின் மேல் நீரள்ளிவிட்டு கழுவினாள், அந்த முகத்தை நீர்ப்பாவையை என கலைக்க விழைபவள் போல. சுரபி அளித்த மரவுரியால் முகத்தை துடைத்தாள்.

சுரபி பேழையிலிருந்து கொம்புச்சீப்பை எடுத்து அளித்தாள். அவள் விழிகளை ஒருகணம் சந்தித்துவிட்டு தேவிகை அதை வாங்கி தன் தலையை சீவிக்கொண்டாள். சுரபி அவள் கழுத்திலணிந்திருந்த நகைகளை சீரமைத்தாள். தேவிகை அதை முரண்கொண்ட உடலசைவால் தவிர்த்து தானே சீரமைத்துக்கொண்டாள். ஆனால் அவள் எடுத்தளித்த நறுஞ்சுண்ணச்செப்பை மறுக்க முடியவில்லை. அவளை நோக்காமல் அதை வாங்கி சுண்ணத்தை சிறுதுணியில் சிறிது உதிர்த்து அதைக்கொண்டு முகத்தை அழுத்தி துடைத்தாள்.

“அகவைகளுக்கு அவற்றுக்குரிய அழகுகள், அரசி” என்றாள் சுரபி. அந்த மீறல் அவளை எரிச்சல்கொள்ளச்செய்ய ஒன்றும் பேசாமல் திரும்பினாள். வெளியே வந்த பூர்ணை “கிடைத்துவிட்டது, அரசி. கீழே விழுந்து கதவுக்குப்பின்னால் கிடந்தது” என்றாள். அவள் உதடுகள் வளைய “நன்று” என்றாள். உளமொருங்காமல் புன்னகைசெய்வது இத்தனை கடினமா என்ன? விடுதிக்காவலர் அவள் பின்னாலேயே வந்து “நல்லவேளை..,. இல்லையென்றால் ஏவலர் அனைவரையும் நோக்கவேண்டியிருக்கும். நாளுக்கு இரண்டாயிரம்பேர் வந்து உண்டு மீளும் விடுதி இது” என்றார்.

பூர்ணை “அரசி, இளையபால்ஹிகர் இங்குதான் இருக்கிறார். சற்றுமுன் அவருடைய ஏவலனை பார்த்தேன்” என்றாள். பொருளில்லாமல் “ஆம்” என்றாள் தேவிகை. விடுதிக்காவலர் “கிளம்பிக்கொண்டிருக்கிறார். அவர் எதையோ எழுத வேண்டியிருந்தமையால் பிந்துகிறது. பிறர் காத்திருக்கிறார்கள்” என்றார். சுரபி “இங்குதானிருக்கிறாரா? என் எண்ணம் நீங்கள் அவரைச் சந்தித்து அப்பொறுப்பை அளிக்கலாம் என்பதுதான்” என்றாள். அனைத்தும் ஒரே கணத்தில் எளிதாகிவிட்டதைக் கண்ட பூர்ணை “ஆம் அரசி, அவரிடம் சொல்லலாம். காவலரே, அரசியை அவருக்கு அறிவியுங்கள். அறையில்தான் இருக்கிறார் அல்லவா?” என்றாள்.

“ஆம், அங்குதான்… வருக, அரசி” என்றார் விடுதிக்காவலர். ஆனால் தேவிகை தயங்கி நின்றாள். “செல்க!” என்று அவள் தோளை மெல்ல தொட்டாள் பூர்ணை. அவள் காலகள் எழ மறுத்தன. “செல்க, அரசி” என்றாள் பூர்ணை. விடுதிக்காவலர் முன்னால் சென்றுவிட்டிருந்தார். “நாம் திரும்பிவிடுவோம்” என்றாள் தேவிகை. “அரசி, அவள் உங்கள் வருகையை அறிவித்துவிட்டார்” என்றாள் பூர்ணை. “ஆம், நீங்கள் திரும்பினால் பிழையென்றாகும்” என்றாள் சுரபி. “நான் எதையும் அவரிடம் பேசவிரும்பவில்லை” என்றாள் தேவிகை. “சரி, அவ்வாறெனில் முகமன் மட்டும் உரைத்துவிட்டு கிளம்புங்கள்” என்றாள் பூர்ணை.

தேவிகை தளர்ந்த காலடிகளுடன் நடந்தாள். விடுதிக்காவலர் வந்து “இளவரசர் காத்திருக்கிறார்” என்றார். “ஆம்” என்றபின் அவள் முகத்தின்மேல் ஆடையை நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டு சென்று அறைவாயிலில் நின்றாள். விடுதிக்காவலர் அதை மெல்ல தட்டி “சிபிநாட்டு அரசி” என்றார். “வருக!” என பூரிசிரவஸின் குரல் கேட்டது. அப்போது அந்தக்குரல் அவளுக்கு திகைப்பை அளித்தது. முற்றிலும் அயலான, முதிர்ந்த மனிதரின் குரல். விடுதிக்காவலர் கதவைத்திறந்து “செல்க, அரசி!” என்றார். அவள் உள்ளே சென்றாள்.

blஉள்ளே குறும்பீடத்தில் அமர்ந்திருந்த பூரிசிரவஸைக் கண்டதும் தேவிகை நின்றாள். அவனே எழுந்து தலைவணங்கி “வருக அரசி… இந்நாள் இனியது. இருமுறை அரசியால் வாழ்த்தப்பட்டேன்” என்றான். அத்தருணத்தில் முறைமைச்சொல் மிக இனிதாக இருந்தது. “ஆம், நானும். தற்செயலாக இங்கே வரவேண்டியிருந்தது. என் கணையாழி இங்கே விழுந்துவிட்டிருந்தது. நீங்கள் கிளம்பாததும் நன்றே” என்றாள். “கிளம்பிக்கொண்டிருந்தேன்… ஒரு கடிதம்” என்றான்.

அவள் கைகளை மார்பில் கட்டிக்கொண்டபோது முகத்திரை நழுவியது. அதை தலைமேல் இழுத்துவிட்டுக்கொண்டு புன்னகையுடன் “ஆம், நீங்கள் அஸ்தினபுரிக்கல்லவா கிளம்புகிறீர்கள்?” என்றாள். “ஆம், இந்த ஓலை என் மூத்தவருக்கு…” அவள் சிரித்து “என்னைப்பற்றி அல்ல என நினைக்கிறேன்” என்றாள். அவன் தலையை அண்ணாந்து உரக்க சிரித்து “இல்லை, இது ஒற்றர்செய்தி” என்றான். அவன் குரல்வளை அழகாக இருந்தது என நினைத்தாள். இளமையிலிருந்ததைவிட தோள்பெருத்திருந்தான். மலைமக்களுக்கே உரிய சுண்ணவெண்ணிறம். சிவந்த உதடுகள். காதுகள் கூட ஒளிகொண்டு சிவந்திருந்தன.

அவன் “தாங்கள் என்னிடம் பேசவிழைவதாக சொன்னார்கள்” என்றான். “ஆம், நான் ஒரு தூது சொல்லி அனுப்பலாமென எண்ணினேன்” என்றாள். “தூதா? நானா?” என்றான். கண்களில் சிரிப்புக்கு அப்பால் உள்ளம் எச்சரிக்கைகொள்வதை கண்டாள். உணர்வுகளை மறைக்கத்தெரியாத இளைஞனாகவே இருக்கிறான் என எண்ணியதும் மேலும் உளஅணுக்கம் கொண்டாள். அது அவளை அவனை நோக்கி இரண்டு அடியெடுத்துவைத்து நெருங்கும்படி செய்தது. “ஏன், எனக்காக தூதுசெல்லமாட்டீர்களா?” என்றாள். “என் கடமை அது. ஆணையிடுக!” என்றான். “எவரிடம்?”

அவள் வாய்க்குள் நாவைச் சுழற்றி சிரித்து தோள்களில் மெல்லிய குழைந்த அசைவு வெளிப்பட “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரரிடம்” என்றாள். அவன் மூச்சுத்திணறுவது நன்றாகவே தெரிந்தது. விடுவித்துக்கொண்டு சிரித்து “ஆணையிடுங்கள்…” என்றான். “வெறுமனே சொன்னேன்” என்றாள். அவள் விளையாடுவது அவனை நிலைகுலையச் செய்தது. அங்கிருந்து விலகிவிடவேண்டுமென அவன் விழைவது அவன் அசைவுகளில் தெரிந்தது. அது அவளை மேலும் உவகைகொள்ளச் செய்தது. அகவை மறந்து இளமகளென்றானதுபோல.

“நான் சொல்லும் தூது உங்கள் நாட்டு நலன்களுக்கு எதிரானது என்றால் என்ன செய்வீர்கள்?” என்றாள். அவன் “இல்லை… அதாவது, அப்படி நீங்கள் சொல்ல மாட்டீர்கள்” என்றான். “சொன்னால்?” என தலைசரித்து கேட்டாள். “சொல்லமாட்டீர்கள், அரசி.” அவள் வாய்விட்டுச் சிரித்து “மெய்யாகவே உங்கள் நாட்டுக்கு எதிரானதுதான்” என்றாள். அவன் பேசாமல் நின்றான். முகத்தில் தெரிந்த அச்சத்தையும் குழப்பத்தையும் கண்டு அவள் புன்னகையுடன் “அஞ்சவேண்டாம்… இது வேறு. எங்களுக்கும் அஸ்தினபுரிக்கும் இடையேயான பூசல்” என்றாள்.

“அதுவும் என் நாட்டுடன் தொடர்புள்ளதுதான், இளவரசி” என்றான் பூரிசிரவஸ். “நான் உங்களை துரியோதனரின் அரசி பானுமதியிடம் பேசுவதற்காக அனுப்புகிறேன்” என்றாள் தேவிகை. அவன் முகம் தத்தளிப்பு விலகி கூர்கொண்டது. அவள் அகம் ஏமாற்றமடைந்தது. அதை சொல்லியிருக்கக்கூடாது என்று எண்ணினாள். அந்தத் தூதையே தவிர்த்திருக்கவேண்டும். அந்த்த் தருணத்தை முடிந்தவரை நீட்டி அதில் திளைத்திருக்கவேண்டும். “சொல்லுங்கள், அரசி” என்றான்.

அவள் “துச்சாதனரின் துணைவி அசலையிடமும் அங்கரின் அரசி விருஷாலியிடமும் நீங்கள் என் செய்தியை கொண்டுசெல்லவேண்டும்” என்றாள். அவன் தலையசைத்தான். “கொண்டுசெல்வீர்களா?” என்றாள். அதிலிருந்த கெஞ்சலை அவள் எண்ணியிருக்கவில்லை. “சொல்லுங்கள், அரசி” என்றான். “சொல்வேன் என்று கூறுங்கள்” என்றாள். குரல் மேலும் தழைந்து கெஞ்சியது. “தூதை சொல்லுங்கள்” என்றான் பூரிசிரவஸ். “அதையொட்டியே நான் முடிவெடுக்கமுடியும்.”

அவள் உள்ளம் ஏமாற்றத்தில் சூம்பியது. நெஞ்சு விம்மிக்கொண்டிருந்தது. தொண்டை அடைக்க விழிகளை திருப்பிக்கொண்டாள். உருக்குறைந்து புழுவென்று ஆகி நிற்கிறேன். இவனிடம் இரக்கிறேனா? இவனிடமா? யார் இவன்? என் அரசரின் முன் நிகரென அமரக்கூட இடமில்லாத சிறுநாட்டின் இளவரசன். இவன் எனக்கு பரிசிலளிக்கிறானா? வேண்டாம், திரும்பிவிடுவோம். ஆனால் அவள் தொண்டையிலிருந்து மெல்லிய விம்மல் ஒன்று வெளிவந்தது. “நான், என் மைந்தனுக்காக…” என்றதுமே அழுகை பொங்கி வர அவள் கைகளால் முகத்தை பொத்திக்கொண்டாள். தோள்கள் குலுங்க விசும்பல்களும் சீறல்களுமாக அழத்தொடங்கினாள். அவன் வெறுமனே நோக்கி நின்றான்.

“என்னால்… எனக்குத்தெரிகிறது, அனைத்தும் எங்கு செல்கின்றன என்று. என் வாழ்க்கையில் நான் பொருட்டென நினைப்பது என் மைந்தனை மட்டுமே. இப்புவிவாழ்க்கையில் நான் வேறேதும் காணவில்லை. அவனை இழந்தால்…” என்றாள். கேவல்களும் விம்மல்களுமாக சொற்கள் உடைந்து தெறித்தன. பெருமூச்சுகளுடன் மெல்ல அமைதியடைந்து மேலாடையால் முகத்தை துடைத்தாள். முகத்தை நன்றாக மூடிக்கொண்டு திரும்பி நின்றாள். திரும்பிவிட்டோம் என்ற உணர்வே அவளுக்கு விடுதலையை அளித்து எண்ணங்களை திரட்டிக்கொள்ளச்செய்தது.

“என் மைந்தன் வாழவேண்டுமென்றால் போர் நிகழலாகாது. ஆனால் அங்கும் இங்கும் ஆண்களனைவரும் போரையே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அனைவரும் போரைநோக்கி காலத்தை உந்திச் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். “இல்லை இளவரசி, போரைத்தவிர்க்கவே அனைவரும் முயல்கிறோம்” என்றான் பூரிசிரவஸ். அவள் சீற்றம்கொண்டு திரும்பி “அதை மட்டும் என்னிடம் சொல்லவேண்டியதில்லை. போர் வேண்டாம் என்று நாளுக்கு நூறுமுறை சொல்பவரின் அகமென்ன என்று நானும் அறிவேன்” என்றாள்.

அவன் திகைத்து விழிவிரிய நோக்கி நின்றான். அவள் குரலைத் தாழ்த்தி “நான் கோருவது இதுவே. அரசர்களிடமும் அவையிடமும் அல்ல, என்னைப்போன்ற அன்னையரிடம். இந்தப்போர் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே செல்கிறது. இதுநிகழ்ந்தால் இங்கே எவரும் எஞ்சப்போவதில்லை. எவர் எஞ்சினாலும் உறுதியாக அழியப்போவது நம் மைந்தர். என் மைந்தன் மட்டுமல்ல அவர்களின் மைந்தர்களும்கூடத்தான். அவர்களை காக்கவேண்டியது அன்னையராக நம் கடமை.”

அவன் “அரசி, அவர்கள் அரசருக்கும் மைந்தர்களே” என்றான். “ஆம், நான் சொல்வது அதைத்தான். நிலம்வென்று கொடிவழிகளுக்கு அளிக்கநினைப்பவர்கள் முதலில் செய்வது என்னவாக இருக்கும்? தன் எதிரிகளின் கொடிவழியை முற்றழிப்பதை அல்லவா?” அந்த நேரடி உண்மையின் முன் அவன் சொல்லிழந்து உதடுகளை மட்டும் அசைத்தான். “அதுதான் நிகழும். களத்தில் இருதரப்பும் எதிர்நிற்பவர்களின் மைந்தர்களை நோக்கியே படைக்கலம் எடுப்பார்கள்… அனைவரும் கொல்லப்படுவார்கள். ஆம், ஒருவர்கூட எஞ்சமாட்டார்கள்.”

மூச்சிரைக்க அவள் சொன்னாள் “இதை நான் சொன்னதாக சொல்லுங்கள். அன்னையர் அனைவருமே அதை உணர்ந்திருப்பார்கள். சொல்லென்றாக்க அஞ்சி உள்புதைத்திருப்பார்கள். ஏனென்றால் சொல்லென்றானது நிகழ்வென்றாகும் என்பது தொல்மொழி.” பூரிசிரவஸ் “நான் சொல்கிறேன்” என்றான். “அன்னையராகிய நமக்கு நிலமில்லை, குலமும் குடியும் நகரும் கொடியும் ஒன்றுமில்லை. நாம் பெண்கள், அன்னையர். பிறிதெவருமில்லை. அதை அவர்களிடம் சொல்லுங்கள். இதோ இந்திரப்பிரஸ்தத்தின் முடியுரிமைப்போரில் என் மைந்தன் களமிறங்குகிறான். நான் இந்திரப்பிரஸ்தத்தை தெரிவுசெய்யவில்லை. அவனை ஆக்கிய உயிர்த்துளியை விரும்பி ஏற்றுக்கொள்ளவுமில்லை. பானுவும் அசலையும் அவ்வாறே, இந்தப்போர் எங்களுடையதல்ல. ஆனால் இழப்புகளனைத்தும் எங்களுக்கே. எவர் வென்றாலும் தோற்பவர் அன்னையர்…”

பெருகிவந்த சொற்கள் தடைபட அவள் மூச்சிழுத்து உதடுகளை அழுத்தியபடி தலைகுனிந்து நின்றாள். அவன் ஏதோ சொல்ல வாயெடுத்த மெல்லிய ஓசையைக் கேட்டு உளமுலுக்கப்பட்டு சொற்கள் மீண்டும் பொழிந்தன. “மகளென்று நம் சொல் அவையேறவில்லை. மனைவியென்றும் செவிகொள்ளப்படவில்லை. அன்னையென்று ஆனபின்னராவது அதற்கு ஆற்றல் வந்தாகவேண்டும். என் கொழுநர் முன் சென்று நிற்கிறேன். அவர்கள் மீறிச்சென்றார்கள் என்றால் வழியில் சங்கறுத்து விழுகிறேன். எங்கள் குருதிமேல் கடந்து அவர்கள் நிலம்கொண்டு முடிசூடட்டும். அதையே அவர்களும் செய்யவேண்டுமென்று கூறுக!”

“ஆம், நான் தங்கள் உணர்வுகளுடன் இச்சொற்களை அரசியர் மூவரிடமும் சொல்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “கூடவே அரசரிடமும் பேசுகிறேன். இளவரசர்கள் குறிவைக்கப்படுவார்கள் என்று நீங்கள் சொன்னது உண்மை என உணர்கிறேன். அதை சொல்கிறேன். முடிந்தால் இருதரப்பிலும் இளவரசர்களை அனைத்திலிருந்தும் தவிர்க்கமுடியுமா என்று பிதாமகரிடம் பேசிப்பார்க்கிறேன்.” தேவிகை சினத்துடன் உதடுகள் வளைய “பார்த்தீர்களல்லவா, நீங்களும் போரை வரவழைக்கவே அறியாது முயல்கிறீர்கள். மைந்தருக்காக அன்னையர் எழுந்தால் போர் நின்றுவிடுமோ என அஞ்சும் உங்கள் உள்ளம் கண்டுபிடித்த வழி இது” என்றாள்.

“இல்லை அரசி. மெய்யாகவே….” என்று பூரிசிரவஸ் தொடர அவள் கைகாட்டி தடுத்து “பிதாமகரோ பேரரசரோ போர் என்று வந்துவிட்டால் வேறேதும் அவர்கள் விழியில் படாது. மேலும் குடிகளின் இளமைந்தர் போரில் சாக நம் மைந்தர் மட்டும் ஒளிந்துகொள்ளவேண்டும் என்று சொன்னால் நானே அதை ஏற்கமாட்டேன்” என்றாள். “மைந்தரைக் குறிவைப்பதையாவது தடுக்கலாம்” என்றான் பூரிசிரவஸ். “மைந்தரைக் குறிவைப்பது அரசர்களோ அவர்களின் படைக்கலங்களோ அல்ல. தொல்விலங்கின் உகிர்களும் பற்களும் கொம்புகளும்” என்றாள் தேவிகை மீண்டும் சீற்றம் கொண்டு. “கானாடல்களில் குருளைகளைக் கொல்லவரும் ஆண்புலிகளையும் ஓநாய்க்கடுவன்களையும் மீண்டும் மீண்டும் கண்டிருக்கிறேன்.”

கைகளை விரித்து ஒன்றும் சொல்வதற்கில்லை என்று காட்டியபின் பூரிசிரவஸ் “நான் சென்று சொல்கிறேன், அரசி. என்னுள் வாழும் காட்டுதெய்வங்கள் என்ன எண்ணுகின்றன என்றறியேன். நான் மெய்யாகவே இப்போர் எவ்வகையிலேனும் தவிர்க்கப்பட்டாகவேண்டுமென்றே விழைகிறேன். அதன்பொருட்டு எதைச்செய்வதும் என் கடன் என்றே உணர்கிறேன். அரசியரை தனித்தனியாகக் கண்டு பேசுகிறேன். கண்ணீரையும் சினத்தையும் கொண்டு அவர்கள் போராடவேண்டுமென்று கோருகிறேன்” என்றான்.

“ஆனால் இப்போர் நிகழாதென்றே இப்போதும் எண்ணுகிறேன். நீங்கள் சொன்னதுதான் அடிப்படை. நாளுக்குநாள் பெரிதாகிக்கொண்டே செல்கிறது களம். பாரதவர்ஷமே இருகூறாக பிரிந்துகொண்டிருக்கிறது. போர்நிகழ்ந்தால் அது பேரழிவாகவே எஞ்சும். வென்றவர்கள் பெரும்பழி சூடவேண்டியிருக்கும். அந்த அச்சமே போரைத்தவிர்க்கும் விசையாக ஆகும்.” தேவிகை ஏளனத்துடன் சிரித்து “இன்னமும் மானுடரின் நல்லகத்தை நம்பும் இளையோனாகவே இருக்கிறீர்கள். எண்ணிக்கொள்க, ஓங்கிய படைக்கலம் குருதியின்றி அமையாது. நான் விழைவது என் மைந்தன் வாழும்காலம் வரை இப்போர் தவிர்க்கப்படவேண்டும் என்றே” என்றாள்.

“உண்மையில் இப்போர் தொடங்கி நீண்டகாலமாகிறது. இது சத்யவதி குறித்திட்ட போர். இருதலைமுறைக்காலம் இதை நீட்டிக்கொண்டுவந்து நிறுத்தியவர் பிதாமகர் பீஷ்மர். இன்று நாமனைவரும் முயன்றால் மீண்டும் ஒருதலைமுறைக்காலம் கடத்திச்செல்லமுடியும். தெய்வங்கள் காத்திருக்கும் ஆற்றல்மிக்கவை. ஏனென்றால் அத்தனை வேட்டைவிலங்குகளும் பொறுமையானவை. நாம் இன்று தப்புவதைப்பற்றி மட்டுமே பேசுகிறேன்” என்றாள் தேவிகை. “ஆம், அரசி. நாம் நம்மால் இயன்றதை முயல்வோம்” என்றான்.

அவள் பெருமூச்சுடன் தன் தலையாடையைத் தூக்கி அணிந்துகொண்டு திரும்பினாள். பூரிசிரவஸ் சற்று தயங்கி சொல்கோத்து “அரசி, ஒரு சொல்” என்றான். அவள் நின்றாள். “நீங்கள் செல்லவேண்டிய இடம் சிபிநாடல்ல, உபப்பிலாவ்யம்” என்றான். அவள் ஏறிட்டு நோக்கினாள். “அங்குதான் உங்கள் அரசி இருக்கிறார். குருதிவஞ்சம் அவர்களுடையது. அவர் தன் வஞ்சமொழிந்து குழல் அள்ளிமுடிந்தால் போர் பாதிமுடிந்துவிட்டது என்றே பொருள். எஞ்சியது எளிது” என்றான் பூரிசிரவஸ். அவள் தலையசைத்தாள். “ஆம், நான் அதை எண்ணிநோக்கவில்லை. நானும் எதிரியையே எண்ணுபவளாகிவிட்டேன். இங்கிருந்தே உபப்பிலாவ்யம் கிளம்புகிறேன்” என்றாள்.

“நன்று, நான் வருகிறேன்” என்று தேவிகை திரும்பினாள். கதவு தொலைவிலெனத் தெரிந்தது. காலடிகள் வைக்க வைக்க அகன்றது. பிசினில் ஒட்டிய ஈயென சிறகுகள் துடிக்க தவித்தாள். அவன் விட்ட மூச்சொலியில் மெல்லிய மெய்ப்பு கொண்டு திரும்பாமலேயே நின்றாள். “என்னை எண்ணியமைக்கு நன்றி, அரசி” என்றான். அவள் கழுத்து மூச்சில் குழிந்தெழ உடலிறுக நின்றாள். “அச்சொற்கள் பொய்யென்றும் கனவென்றும் ஆகவில்லை என்று இப்போது உணர்கிறேன்” என்றான். “வேண்டாம்” என அவள் மெல்லியகுரலில் சொன்னாள். “ஏன்?” என்றான். “நாம் அதைப் பற்றி பேசவேண்டாம்.”

அவன் அருகே வந்தான். ஒவ்வொரு காலடியோசையும் நீர்நிலையில் கல்விழுவதுபோல் அவள் உடலை அலைகொள்ளச்செய்தது. அணுகிய அவன் உடலின் மென்வெம்மையை உணர்ந்தாள். வகிட்டில் அவன் மூச்சை. “நான் இரவுபகலாக புரவியில் வந்தேன் என அறிவீர்களா?” என்றான். “ஆம்” என்றாள். ஓசை மூச்சென வெளிவந்தது. “என்றாவது என்னை எண்ணியிருக்கிறீர்களா?” என்றான். “அதெல்லாம் எதற்கு? நான் செல்கிறேன்” என்றாள். “நன்று!” என்றான்.

அவள் மேலும் சற்றுநேரம் நாண் இறுகி ஒடிவதற்கு முந்தையகணத்து வில்லென நின்றாள். பின்னர் மெல்ல தோள்தளர்ந்தாள். கைவளைகள் ஓசையிட்டு தழைந்தன. பெருமூச்சுடன் ஏதோ சொல்ல வந்தபின் தலையசைத்து அதை உளத்திலேயே கலைத்தாள். விழிதூக்கி அவனை நோக்கினாள். அவன் கன்னத்தில் தாடி நரையோடியிருந்தது. கண்களுக்குக்கீழே சுருக்கங்கள். திடீரென அகவைகொண்டுவிட்டான் என. அவள் பெருமூச்சுடன் “நான் கிளம்புகிறேன்” என்றாள். அவன் “ஆம்” என்றான்.

உடலை அசைத்தபோது அது கல்லென எடைகொண்டிருப்பதாகத் தோன்றியது. வேறேதும் சொல்லி உளம்விலக்கவேண்டுமென்று எண்ணி “கானேகியபின் திரௌபதி மிகவும் கனிந்துவிட்டாள் என்றனர்” என்றாள். “ஆம், அப்படித்தான் நானும் அறிந்தேன். மேலும் பிறரைவிட அவர்களுக்கு ஐந்துமடங்கு மைந்தர்துயர்” என்றான் பூரிசிரவஸ். அவள் சினத்துடன் கண்கள் சுருங்க “என்ன சொல்கிறீர்கள்? அவ்வாறு நாவிலெழலாமா?” என்றாள். “இல்லை, நான் நாவழங்கி…” என அவன் தடுமாறினான். அவள் மீண்டும் “நான் வருகிறேன். தேரை உபப்பிலாவ்யத்திற்கே செலுத்தச்சொல்கிறேன்” என்றாள்.

“மீண்டும் எங்காவது பார்ப்போம்” என்றான். அவள் “இல்லை, மீண்டும் சந்திக்கவேண்டியதில்லை” என்றாள். “ஏன்?” என்றான். “நான் இவ்வாறு எதிர்பார்க்கவில்லை” அவன் மீண்டும் “ஏன்?” என்றான். “இல்லை. ஒன்றுமில்லை” என்றபின் அவள் கதவைத்திறந்து வெளியே சென்றாள். அவன் அவள் பின்னால் வந்து கதவைப்பற்றியபடி நின்றான். அவன் நோக்கை உடலெங்கும் உணர்ந்தபடி அவள் நடந்து இடைநாழியை கடந்தாள். ஏன் திரும்பி நோக்கவில்லை என எண்ணியபோது அவனையே எண்ணிக்கொண்டிருந்தமையால் என மறுமொழி எழுந்தது நெஞ்சில்.

கூடத்திற்கு வந்தபோது அவள் எங்காவது படுத்துவிடவேண்டும் என எண்ணுமளவுக்கு களைப்படைந்திருந்தாள். “இளைப்பாறிவிட்டுச் செல்லலாமா, அரசி?” என்றாள் பூர்ணை. “இல்லை, கிளம்பிவிடுவோம்” என்றாள். நேராகச் சென்று தேரிலேறிக்கொண்டாள். அங்கிருந்து விலகிவிடவேண்டும் என்னும் விரைவு அவளுள் எழுந்தது. எதையோ அஞ்சுகிறவள்போல வண்டிக்குள் கதவை மூடிக்கொண்டாள். பூர்ணை ஏறிக்கொண்டதும் “நாம் உபப்பிலாவ்யம் செல்லவேண்டும்” என்றாள். “அரசி?” என்றாள் பூர்ணை. “ஆம், அங்குதான் செல்லவேண்டும். பாகனிடம் சொல்!”

பூர்ணை பாகனிடம் சொல்ல அவன் அதை வியப்பின்றி ஏற்று “ஆணை” என்றான். தேவிகை பொறுமையிழந்து “விரைக!” என்று பூர்ணையிடம் தாழ்ந்த குரலில் சொன்னாள். அவள் வியப்புடன் நோக்க முகத்தின்மேல் ஆடையை இழுத்துவிட்டுக்கொண்டு அவள் கண்மூடினாள். அவள் கால் கட்டைவிரல் நெளிந்துகொண்டே இருப்பதை பூர்ணை கண்டாள். சுரபி தேரில் ஏறி அமர்ந்ததும் பாகன் தேர்மேடைமேல் அமர்ந்தான். ஒரு புரவி உறுமியது. குளம்புகளால் தரையைத் தட்டியது.

வண்டி கிளம்பியதும் தேவிகை ஆறுதலடைந்து மீண்டும் கால்களை நீட்டிக்கொண்டாள். கண்கள் செருக துயில் உடலெங்கும் பரவியது. எண்ணங்கள் நனைந்து படிந்தன. சொற்கள் கரைந்து மறைந்தன. நெடுநாட்களுக்குப்பின் அவள் முற்றிலும் தன்னை இழந்து துயிலில் மூழ்கினாள். வண்டியின் ஆட்டத்தில் அவள் தலை ஆடிக்கொண்டிருந்தது. பூர்ணை அவளை நோக்கியபின் சுரபியை பார்த்தாள். சுரபி புன்னகைக்க அவள் விழிவிலக்கிக்கொண்டு வெளியே பார்க்கத்தொடங்கினாள்.

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 61

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 62

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 35

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 23

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 22

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 3

பகுதி ஒன்று : பாலைமகள் – 3

blசாயாகிருகத்திலிருந்து முதற்புலரியிலேயே தேவிகை சேடியருடன் கொடியில்லாத சிறுதேரில் கிளம்பி இருள் செறிந்துகிடந்த கிரிபதம் என்னும் வணிகச்சாலையினூடாக சென்றாள். தெற்கே கங்கையின் கரையிலமைந்த வாரணவதம் என்னும் துறைநகரிலிருந்து கிளம்பி யமுனையையும் திருஷ்டாவதியையும் பயோஷ்ணியையும் கடந்து வடக்கே இமயமலையடிவாரத்திலமைந்த திரிகர்த்தத்தின் தலைநகரமான பிரஸ்தலை வரை செல்லும் அந்தப் பாதை மாமன்னர் ஹஸ்தியின் காலத்தில் அமைக்கப்பட்டது. சம்வரணர் அதை அகலப்படுத்தி சாவடிகளை மும்மடங்காக்கினார். மலையுச்சிகளில் நூறு காவல்மாடங்களை உருவாக்கி அவற்றின் ஆணைக்கேற்ப விரையும் புரவிப்படைகளை நிறுத்தினார்.

அதில் ஒழியாமல் வணிகக்குழுக்கள் செல்லத்தொடங்கியதும் அவர்கள் தங்குமிடங்களிலெல்லாம் சந்தைகள் உருவாயின. அச்சந்தைகளிலிருந்து கிளைப்பாதைகள் பிரிந்து உள்கிராமங்களையும் மலையடிவாரங்களையும் சென்றடைந்தன. சந்தைகள் விரியும்தோறும் அதை ஒட்டியிருந்த ஊர்களெல்லாம் வளர்ந்து நகரங்களாயின. வடக்கே இருந்த நாடுகள் அனைத்திற்கும் குருதியும் மூச்சும் கொண்டுசெல்லும் வழிகளென்று அவை ஆயின.

உசிநாரர், திரிகர்த்தர், சௌவீரர், பால்ஹிகர், பாஞ்சாலர் என்னும் ஐந்து அரசர்களும் குருகுலத்து அரசர் பிரதீபரின் தலைமையில் வாரணவதத்தில் கூடி அப்பாதையை அரசுகளுக்கு அப்பாற்பட்டு ஆட்சிசெய்யும் கிரிபாலசஹ்யம் என்னும் பொதுக்காவல்குழு ஒன்றை உருவாக்கினர். அதில் அத்தனை அரசர்களும் இணையான அளவுக்கு படைகளை அனுப்பவேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. ஒவ்வொரு நாடும் தன் எல்லைக்குள் அச்சாலையில் சாவடிகளை அமைத்து சுங்கம் கொண்டன.

கிரிபதம் தொலைவிலிருந்து நோக்கியபோது மின்மினிகளின் ஒழுக்கென தெரிந்தது. அணுகியபோது மணியோசைகளும் சகடஒலிகளும் குளம்படிகளும் ஆணைகளும் விலங்குகளின் மூச்சொலிகளும் இணைந்த முழக்கமாகியது. அவர்களின் தேர் சிற்றோடையில் வந்த சருகு ஆற்றுச் சருகுப்பெருக்கிலென கலந்து ஒழுகத்தொடங்கியது. முன்னும் பின்னும் சென்றுகொண்டிருந்த வணிகக்குழுக்களில் இருந்து காவல் வீரர்கள் உரத்த குரலில் “ஆணை! அடையாளம் காட்டுக!” என்றனர். தேர்ப்பாகன் அடையாள முத்திரையை காட்டியதும் “நற்செலவாகுக!” என அவர்கள் வாழ்த்தினர்.

பூர்ணையும் சுரபியும் கிளம்பியதுமே துயில்கொள்ளத் தொடங்கினர். தேவிகை கூண்டில் தலைசாய்த்து வெளியே இருளிலாடிய சுடர்நிழலாட்டத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். சகடத்தின் ஒலியிலிருந்த ஒழுங்கே அவள் அகம்செல்லும் தடமென அமைந்தது. அவ்வப்போது எழும் மணியோசை என அவளறியாத ஒன்று ஊடே ஒலித்துக்கொண்டிருந்தது. பெருமூச்சு என புரவியின் சினைப்போசை. எண்ணமெனத் திரளாத உள்ளப்பெருக்கு தலை கூண்டில் முட்டியோ சகடம் கல்மேல் ஏறியோ அறுபடும்போது நீள்மூச்சுடன் அசைந்தமர்ந்தாள். அவள் அசைவில் விழித்துக்கொண்ட பூர்ணை “என்ன வேண்டும் அரசி?” என்றபோது வெறுமனே தலையை அசைத்தாள்.

இத்தனை பொருட்களும் மலைகளுக்கு சென்றுகொண்டிருக்கின்றன என வெறுமனே எண்ணினாள். கங்கை அழிமுகத்திலிருக்கும் தாம்ரலிப்தியிலிருந்து கொள்ளப்பட்ட பீதர்நாட்டுப் பட்டும் யவனர் பொற்கலங்களும் தென்னவர் முத்தும் அவற்றில் இருக்கும். அவை மலைகளுக்குச் செல்கையில் பெருமதிப்பு கொண்டுவிடும். அங்கிருந்து அருங்கற்களும் தந்தங்களும் மலையிறங்கிச் சென்று தாம்ரலிப்தியை அடையும். முகிலாக வந்து மழையாக மீண்டும் கடலுக்குச் செல்கிறது நீர். தன்னைத்தானே கலக்கிக்கொள்கிறது நீர் என அவள் இளமையில் நெறிநூல் ஒன்றில் படித்திருந்தாள். சிறுசிமிழ் நீர்கூட அலைபாய்ந்துகொண்டேதான் இருக்கிறது.

அமைதியற்றவை நீரும் நெருப்பும் காற்றும். அவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று உறவாடி புவிநாடகத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. ஒன்றையொன்று நிரப்புகின்றன. ஊட்டி வளர்க்கின்றன. உண்டு அழிகின்றன. வானும் மண்ணும் நிலையானவை, ஆகவே அமைதியானவை. ஒன்றை ஒன்று நோக்கி காலமிலாத் தவம் செய்கின்றன. நீரை மண்ணுக்கு ஏவுகிறது வான். அனலை விண்ணுக்கு செலுத்துகிறது மண். காற்று மண்ணிலெழுந்து விண்ணில் நிறைந்து திரும்பிவருகிறது.

எண்ணங்களை உணர்ந்து அவள் தன்னை நிறுத்திக்கொண்டாள். படிமங்கள் எப்போதுமே முடிவின்மை நோக்கியே செல்கின்றன. முடிவின்மையை உணர்ந்ததும் பொருளற்று நின்றுவிடுகின்றன. கற்றது மிகக் குறைவு என்பதனால்தான் கற்றவற்றை அளைந்து விரைவிலேயே சலிப்புகொள்கிறோம் போலும். யுதிஷ்டிரர் கற்றுக்கொண்டே இருப்பவர். எனவே முடிவிலாது திளைக்கிறார். “உங்களுக்கு சலிப்பதேயில்லையா?” என அவரிடம் அவள் கேட்டாள்.

அது அவர்களின் முதலிரவு. கங்கைக்கரையில் அமைந்த சாயாகுடீரம் என்னும் கோடைமாளிகை. வெளியே கங்கை சுழித்தோடும் ஓசை கேட்டுக்கொண்டிருக்கும். சாளரத்தின் அருகே சென்று நின்றால் நீரலைகள்மேல் நிலவொளி அலைவதை காணமுடியும். அவள் அங்கு சென்றதிலிருந்தே சாளரத்தருகிலும் உப்பரிகையிலும் நின்றிருப்பதையே விரும்பினாள். அவர் வரும்போதே பின்னால் தொடர்ந்து வந்த ஏவலன் ஏட்டுப்பேழையை கொண்டுவந்து இறக்கி வைத்தான். முகமலர்வுடன் அவளை நோக்கி “இன்றிரவுக்கான காவியங்கள் இவை. அனிதரின் சாரஸசந்திரிகை. கிருபாகரரின் பூர்ணஜாலகம். சொல்லில் நிலவொளியை விரிக்கத் தெரிந்தவர்கள்” என்றார்.

அவள் முதலில் அவர் விளையாடுகிறார் என்றே எண்ணினாள். புன்னகையுடன் நோக்கி நின்றிருந்த அவளிடம் பேழையிலிருந்து எடுத்த சுவடியைக் காட்டி “நிலவொளி ஊடு. நீரலை பாவு. நெய்யப்படுகிறது இவ்விரவு” என்றார். “அரிய வரி. பொருளின்மையே சொல்லுக்கு இத்தனை அழகை அளிக்கமுடியும். நீ என்ன எண்ணுகிறாய்?” என்றார். அவள் புன்னகைத்தாள். “பிறைநிலவில் விரியும் மலர்கள் மொட்டுகளாக கனவுகண்ட பிறைநிலவு எங்குள்ளது? இந்த வரியைப்பற்றி நானும் சகதேவனும் உரையாடியிருக்கிறோம். வெண்மலர்களுக்குள் நிலவொளி உள்ளது என்னும் சாரசரின் வரியை அவன் சொன்னான்.”

அவள் விழிகள் மாற நோக்கி நின்றாள். “அருகே வா… ஏன் விலகி நிற்கிறாய்?” என்றார். அவள் அருகே வந்து மஞ்சத்தில் அமர்ந்து “சுவடி பயிலவா போகிறோம்?” என்றாள். “இல்லை, இவ்விரவை இச்சொற்கள் ஒளிபெறச் செய்யட்டும் என எண்ணினேன்” என்றார். “வெளியே நிலவு பொழிகிறது” என்றாள். “ஆம், வரும்போதே பார்த்தேன். இன்று பன்னிரண்டாம் நிலவு” என்றார். “நிலவு ஓர் ஒளிவட்டம் அன்றி வேறல்ல. அதற்கு பொருள் கொடுப்பவை கவிஞர்களின் சொற்கள்.”

யுதிஷ்டிரர் “ஒற்றை ஒரு சொல்லை அறியவே வாழ்வு போதாதென்பார்கள் கவிஞர்” என்றபோது. “எனக்கு விரைவிலேயே சொற்கள் சலித்துவிடுகின்றன” என்றாள் அவள். “அது சொல்லில் இருந்து எழத் தெரியாதவர்கள் சொல்வது. சொற்கள் கருவறைச் சிலைகள்போல. வழிபடுவோனுக்கு அவற்றில் பிரம்மம் எழுகிறது.” அன்று விடியற்காலையில் அவள் ஓசையற்ற காலடிகளுடன் எழுந்துசென்று உப்பரிகையில் நின்று நிலவொளி சிற்றலைகளென பரவியிருந்த கங்கையை நோக்கிக்கொண்டிருந்தாள். அதில் வணிகப்படகுகளின் ஒளிப்புள்ளிகள் ஒழுகிச்சென்றன.

அவள் துயின்றுவிட்டிருந்ததை விழித்தபோதே உணர்ந்தாள். யௌதேயன் அவளிடம் கானேக ஒப்புதல் கோருகிறான். “நீ பயிலும் நூல்களை இங்கிருந்தே அறியலாமே? ஏன் கானேக வேண்டும்?” என்று அவள் கேட்டாள். “நூல்களின்மேல் சொற்களை கொட்டிக்கொண்டே இருக்கின்றது இந்த நகரம். காடு மொழியற்றது” என்று அவன் சொன்னான். “அங்கேயும் மானுடர் சூழவே இருக்கப்போகிறாய்” என்றாள். “அந்த மானுடரும் காட்டுக்குள் வாழ்பவர்கள். அன்னையே, நம்முள் சொல்லை நிறைப்பவை மானுடரால் அமைக்கப்பட்டவைதான். புழக்கப்பொருட்கள், இல்லங்கள், கோட்டைகள், சாலைகள். அவை ஒவ்வொன்றும் சொல்லில் இருந்து தொடங்கி பருவடிவு கொண்டவை. காட்டிலுள்ளவை அனைத்தும் சொல்லிலாப் பெருவெளியில் இருந்து தொடங்கியவை.”

பூர்ணை “சற்று ஓய்வு கொள்ளலாம், அரசி…” என்றாள். “இது எந்த இடம்?” என பாகனிடம் சுரபி கேட்டாள். “சபரிதலம் என்னும் சாவடி. இதுதான் சாவடிகளில் பெரியது… நீராடி ஆடைமாற்றக்கூட இங்கே அறைகளும் சுனைகளும் உள்ளன” என்றான் பாகன். தேவிகை மேலாடையை மூடிக்கொண்டு இறங்கினாள். அவள் உள்ளம் திடுக்கிட்டது. நெஞ்சு படபடக்க பூர்ணையிடம் “என்னடி?” என்றாள். “என்ன, அரசி?” என்றாள் பூர்ணை. “நீ என்ன சொன்னாய்?” என்றாள். “இறங்குவோம் என்றேன்.” ஏன் அந்தப் படபடப்பு வந்தது? அந்தப் பெயரா? சபரிதலம். எங்காவது அதை முன்னர் கேள்விப்பட்டிருக்கிறேனா?

பூர்ணை “வருக, அரசி” என கூடையுடன் முன்னால் செல்ல சுரபி பின்னால் வந்தாள். தேவிகை மீண்டும் நெஞ்சதிர நின்றுவிட்டாள். “என்ன, அரசி?” என்று பூர்ணை திரும்பிப் பார்த்தாள். தேவிகை அங்கு நின்றிருந்த புரவிகளை நோக்கி “அவை…” என்றாள். பூர்ணை புரிந்துகொண்டு “பால்ஹிக நாட்டு முத்திரைகொண்டவை… அங்கிருந்து எவர் வேண்டுமென்றாலும் இவ்வழிச் செல்லலாமே” என்றாள். ஆனால் அவளும் அறிந்திருந்தாள். அவர்கள் பேசிக்கொள்வதை கேட்காத சுரபி “அரசி, இளைய பால்ஹிகரின் இலச்சினை கொண்ட புரவி அது” என்றாள். பூர்ணை “பேசாமல் வாடி” என அவளை கடிந்தாள்.

தேவிகை பூர்ணையின் கையை பற்றிக்கொண்டு “நாம் திரும்பிச்சென்றுவிடுவோம்” என முணுமுணுத்தாள். “ஏன்?” என்றாள் பூர்ணை. “என்னால் எதிர்கொள்ள முடியாது…” என்றாள் தேவிகை. பூர்ணை “அரசி, தாங்கள் மும்முடிசூடி அரியணை அமர்ந்த யுதிஷ்டிரரின் அரசி இன்று. மெய்ச்சொல் அறியும் மைந்தனின் அன்னை” என்றாள். தேவிகை “நான் தேருக்குச் செல்கிறேன்” என்றபின் “நாம் சென்றுவிடுவோம்” என்றாள். “நாம் வந்ததை விடுதியினர் அறிந்துவிட்டனர். நாம் திரும்பிச்சென்றால் அது செய்தி என்றாகும். அரசகுடியினரை குடிகள் நோக்கிக்கொண்டிருக்கின்றனர் என்பதை மறக்கவேண்டியதில்லை” என்றாள் பூர்ணை. “நிமிர்ந்த தலையுடன் அவரை நோக்கி முறைமைச்சொல் உரைத்து கடந்துசெல்லுங்கள்… அதையே நீங்கள் செய்யவேண்டும்.”

“என்னால் அவர்முன் நின்று பேச முடியாது” என்றாள் தேவிகை. “ஏன்? நீங்கள் மாமன்னரின் அரசி அல்லவா?” என்றாள் பூர்ணை. “அல்ல” என்றாள் தேவிகை. பூர்ணை திகைக்க “அதை அவர் என்னை நோக்கிய கணமே அறிந்துகொள்வார். அதை நான் விரும்பவில்லை” என்றாள். பூர்ணை “அரசி, தாங்கள் என்றில்லை. மணமான எந்தப் பெண்ணும் காட்டவேண்டியது ஒரு நடிப்பையே. நீங்கள் மகிழ்வுடன் இருக்கிறீர்கள். மைந்தரும் செல்வமும் குடியும் என வாழ்வு நிறைந்துள்ளது. உங்கள் கொழுநரை அனைவருக்கும் மேலாக விரும்புகிறீர்கள். குன்றில் நின்று அடிவாரத்தை நோக்குவதுபோலத்தான் கடந்தவற்றை காண்கிறீர்கள்” என்றாள்.

“நடிப்பா?” என்றாள் தேவிகை. “நடிப்பென்று சொல்லவேண்டியதில்லை. ஒரு நிலைபேணல். அதைச் செய்யாத மங்கையர் இல்லை… வருக!” என அவள் கையைப்பற்றி பூர்ணை அழைத்துச்சென்றாள். தடுமாறும் கால்களுடன் தேவிகை நடந்துசென்றாள். தாழ்ந்த முகப்பு கொண்ட விடுதி நூறாண்டு பழமையானது. எடைமிக்க அடிமரங்களை அடித்தளமாக போட்டு அதன்மேல் அதே தடிமன் கொண்ட மரங்களை தூண்களாகவும் உத்தரங்களாகவும் அமைத்துக் கட்டப்பட்டது. அதன் முகப்புக்கூம்பின்மேல் எழுந்த கொடிக்கம்பத்தில் கிரிபாலசஹ்யத்தின் இரட்டைவாள் கொடி பறந்தது.

முகப்பில் மூங்கில் நட்டு ஈச்சஓலைக் கூரையிட்டிருந்தனர். வலப்பக்கம் ஓங்கிய தூண்களின்மேல் கூம்புவடிவக் கூரை அமைந்த கொட்டகையில் வணிகர்களும் வழிப்போக்கர்களும் கூடிய இரைச்சல் எழுந்தது. மூன்று பக்கங்களிலும் சூழ்ந்திருந்த முற்றங்களிலும் அப்பாலிருந்த குறுங்காட்டிலும் தேர்களும் வண்டிகளும் புரவிகளும் அத்திரிகளும் காளைகளும் நிறைந்திருந்தன. விடுதிக்காவலன் வந்து வணங்கி முகமனுரைத்து அவர்களை பெண்டிருக்கான இடப்பக்க கட்டடத்திற்கு அழைத்துச்சென்றான்.

அவள் கூடையை கொண்டுவரும்படி சொல்லிவிட்டு திரும்பியபோது எதிரில் பூரிசிரவஸ் வருவதை கண்டாள். புன்னகையுடன் கைகூப்பியபடி வந்து “இந்திரப்பிரஸ்தத்தின் அரசிக்கு வணக்கம். தாங்கள் வந்திருப்பதாக என் ஏவலன் சொன்னான். உள்ளே உணவு அருந்திக்கொண்டிருந்தேன். முறைமை உரைப்பதற்காக வந்தேன்” என்றான். அவள் புன்னகையுடன் அவன் முகத்தை நோக்கி “பால்ஹிக இளவரசரைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நெடுநாளாயிற்று நோக்கி” என்றாள். அவளுடைய புன்னகையால் அவன் ஒரு கணம் தடுமாறி விழிகளை விலக்கிக்கொண்டு “ஆம், நெடுநாட்கள்…” என்றான்.

“இங்கே குருஷேத்ரத்தில் ஒரு ஆலயப்பூசனை. அதன்பொருட்டு சென்றுவிட்டு சிபிநாட்டுக்கே திரும்புகிறேன்” என்றாள். அவன் “நான் அஸ்தினபுரிக்கு ஒரு தூதுச்செய்தியுடன் செல்கிறேன். அரசியை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்றான். “எந்த அரசகுடியில் மணம்செய்துகொண்டிருக்கிறீர்கள்? நான் நினைவுகொள்ளவில்லை” என்றாள். பூரிசிரவஸ் திடுக்கிட்டு விழிகள் சுருங்க “என் குடியிலேயே” என்றான். அவள் “ஆம், அதுவும் நன்றே. நன்கறிந்திருப்பீர்கள்” என்றாள். தலையசைத்து “வருகிறேன்” என்றபின் நிமிர்ந்த தலையுடன் மலர்ந்த முகத்துடன் நடந்தாள். அவளை காத்து நின்றிருந்த விடுதிக்காவலனிடம் “நான் அரைநாழிகை பொழுதையே இங்கே கழிக்கமுடியும், காவலரே” என்றபடி சென்றாள்.

பூர்ணை பூரிசிரவஸை நோக்கிவிட்டு அவளை பின்தொடர்ந்தாள். பூரிசிரவஸின் முகத்திலிருந்த மெல்லிய தவிப்பை அவள் அவன் முன் விலகியபின்பு மேலும் தெளிவுறக் கண்டாள். “பூர்ணை” என தேவிகை அழைக்க அவள் அருகே ஓடினாள். “என் பெட்டியிலிருந்து ஆடைகளை எடு…” என்றாள் தேவிகை. பூர்ணை சுரபியிடமிருந்து பெட்டியை வாங்கி ஆடைகளை எடுத்தபடி “வீணே அஞ்சினீர்கள், அரசி. இப்போது எத்தனை நிமிர்வுடனும் மலர்வுடனும் அவரை எதிர்கொண்டீர்கள்!” என்றாள். தேவிகை “நான் கைகால் கழுவிக்கொள்ள வேண்டும்” என்றாள். “எல்லா பெண்களும் இத்தருணத்தை இப்படித்தான் எதிர்கொள்கிறார்கள்” என்றாள் பூர்ணை. “போதும், வாயைமூடு!” என்றாள் தேவிகை.

blகூண்டுத்தேரிலேறிக்கொண்டு கதவை மூடியதும் பட்டுவிரித்த மெத்தைமேல் கால்களை நீட்டி தலையணையை அருகே அமைத்து சரிந்துகொண்ட தேவிகை பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டாள். “கிளம்பலாம்” என்றாள் பூர்ணை. தேர் அசைந்து கிளம்பி திரும்பி மேலேறி சாலையை அடைவதை அசைவாலேயே உணர்ந்தாள். சாலையின் வண்டிப்பெருக்கின் ஓசையில் அவள் தேர் கலப்பதை கேட்டாள். குளம்படிகளின் தாளம் சீராக எழத் தொடங்கியது.

பூர்ணை தன் தலையருகே பெட்டியை வைத்துக்கொண்டு தேவிகை மேல் கால்படாமல் அமர்ந்து கண்மூடினாள். தேரில் ஏறிக்கொண்டதுமே துயில்கொள்ளத் தொடங்கும் வழக்கம் கொண்ட சுரபி இருமுறை கொட்டாவி விட்டு உடலை நெளித்தபின் தேர்க்கூண்டில் தலைசாய்த்தாள். தேவிகையின் குறட்டையோசை கேட்கத் தொடங்கியது. பூர்ணை விழித்துக்கொண்டு அவள் முகத்தை பார்த்தாள். அவள் விழிகளும் சொக்கத் தொடங்கின. அவளை தோள்தொட்டு தேவிகை எழுப்புவதாக உணர்ந்தாள். சிபிநாட்டின் அரண்மனையின் கல்லால் ஆன மஞ்சத்தறையில் அவள் படுத்திருந்தாள். விழித்தெழுந்து “அரசி” என்றாள்.

படுத்திருந்த தேவிகை விழிகள் தாழ்ந்திருக்க “அவர் கண்களை பார்த்தாயா?” என்றாள். பூர்ணை ஒன்றும் சொல்லவில்லை. “அவர் எனக்காக எதையும் செய்வார்” என்றாள். பூர்ணை வெறுமனே தலையசைத்தாள். “நான் அவரிடம் கோரினால் என்ன?” பூர்ணை “எதை?” என்றாள். “வரவிருக்கும் போரைப்பற்றி…” பூர்ணை “அதற்கு அவர் என்ன செய்ய முடியும்?” என்றாள். “அவர் தூதுசெல்ல முடியும்…” என்றாள் தேவிகை. “அவரா?” என்றாள் பூர்ணை. “எண்ணிப்பார், இதுவரை நாம் முறைமைத் தூதுகளையே அனுப்பியிருக்கிறோம். மைந்தர் சென்றதெல்லாம் தூதே அல்ல. ஏன் உண்மையிலேயே இரு சாராரின் நலத்தையும் விரும்பும் மூன்றாம்தரப்பினர் ஒருவர் சென்று பேசிப்பார்க்கக் கூடாது?”

பூர்ணை “ஆம், ஆனால் அதை நாம் எப்படி செய்வது?” என்றாள். “நாம் மட்டுமே செய்யும் ஒன்றுள்ளது. இன்றுவரை இந்தப் போர் ஒருக்கங்களும் பேச்சுக்களும் எல்லாம் அரசியலாளர்களாலும் அரசகுலத்தாராலும் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. அவை பேசப்பட்டதெல்லாம் அவைகளிலேயே. அவை என்பது அதிலிருக்கும் அத்தனைபேருக்கும் அயலான பிறிதொரு உள்ளம் என்பார்கள். அது தன்போக்கில் செவிகொள்கிறது, சொல்லாடுகிறது, முடிவெடுக்கிறது. அங்கிருக்கும் எவரிடமும் தனிப்பட்ட முறையில் எவரும் இதுவரை நம் தரப்பைச் சொன்னதில்லை.”

பூர்ணை “ஆம், மெய்தான்” என்றாள். “அவைகளுக்கே செல்லாமல் நம் தூது ஒன்று செல்லவேண்டும். துரியோதனரிடம், சகுனியிடம், திருதராஷ்டிரரிடம், அங்கரிடம் நம் எண்ணங்களை ஒருவர் தனியாக சந்தித்து எடுத்துச் சொல்லவேண்டும். அதற்கு இவரைவிட பொருத்தமான எவருமில்லை” என்றாள் தேவிகை. “அரசி, ஆனால் இவருக்கு அத்தகைய இடம் அங்கே உண்டா? பால்ஹிகம் மிகச்சிறிய நாடு. அஸ்தினபுரியின் படையுதவியால்தான் அது இன்று அப்பகுதியில் சற்றேனும் மேல்கோன்மை கொண்டுள்ளது” என்றாள் பூர்ணை.

“ஆம், ஆனால் இவரை அவர்கள் விரும்புவர். ஏனென்றால் எத்தனை அரசியலாடினாலும் அழியாத நல்லியல்பொன்று தெரியும் முகம் இவருடையது. இன்று நான் இவரைப் பார்த்ததும் எப்படி உணர்ந்தேன் தெரியுமா?” பூர்ணை வெறுமனே நோக்கினாள். “நான் முதிர்ந்து அன்னையென்றாக இவர் அதே மாறா இளமையுடனிருப்பதாக. யௌதேயனிடம் பேசுவதைப்போலவே இவரிடம் பேசினேன்.” பூர்ணை புன்னகைத்தாள். “அதே உணர்வுதான் அங்கே அஸ்தினபுரியிலும் இருக்கும். இவர் சென்று பேசிப்பார்க்கட்டும். உள்ளத்தோடு உள்ளம் எனச் சொல்லப்படும் சொற்கள் வீண்போகாதென்று என் அன்னை சொல்வதுண்டு. ஒருவேளை அப்படி ஒரு சொல்லுக்காக அங்கும் நல்லியல்புகள் காத்துள்ளனவோ என்னவோ?”

பூர்ணை சற்றுநேரம் தன்னிலமைந்திருந்தபின் “அவ்வண்ணமெனில் நாம் ஏன் அரசர்களுக்கு தூதனுப்பவேண்டும்?” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்றாள் தேவிகை. “நீங்கள் அரசி. அஸ்தினபுரியின் அரசி பானுமதிக்கு தூதனுப்புங்கள். துச்சாதனரின் அரசி அசலைக்கும் அங்கநாட்டரசி விருஷாலிக்கும் நம் தூது செல்லட்டும். நாம் கொள்ளும் அச்சங்களையும் வெறுமையையும் அவர்களும் கொள்வார்கள். நம் சொற்கள் பிறிதெவரையும்விட அவர்களுக்கே புரியும்.”

தேவிகை “ஆம்” என்றாள். எழுந்தமர்ந்து “எண்ணிநோக்கும்போது அதுவே மிக உகந்தது என தோன்றுகிறது. ஆனால் அவர்களால் ஏதும் செய்ய இயலுமா?” என்றாள். “அவர்களால் அவையில் எதையும் நிகழ்த்தமுடியாது. ஆனால் தங்கள் கொழுநர்களின் உள்ளங்களை வெல்லமுடியும்” என்றாள் பூர்ணை. “அங்கரின் அரசிக்கு அவர்மேல் சொல் ஏதுமில்லை. ஆனால் பானுமதியும் அசலையும் தங்கள் கணவர்களை மைந்தர்களைப்போல ஆள்பவர்கள்.” தேவிகை “ஆம், அறிந்திருக்கிறேன்” என்றாள். “அரசி, மேலுமொன்றுண்டு. அவர்களனைவருமே இளைய யாதவரை இறைவடிவென வணங்குபவர்கள்” என்றாள் பூர்ணை.

தேவிகை “அத்துடன் ஒன்றையும் சேர்க்கலாம்” என்றாள். சுரபி “இளைய பால்ஹிகர் பெண்களுக்கு மிகவும் இனியவர்” என்றாள். தேவிகை திரும்பி நோக்கி “எவ்வாறு சொல்கிறாய்?” என்றாள். “அவருடைய மாறா இளமையால்” என்றாள் சுரபி. தேவிகை அவளை ஒருகணம் நோக்கிவிட்டு பூர்ணையிடம் திரும்பி “அவரிடம் பேசவேண்டும்… அவர் மறுபக்கம் நெடுந்தொலைவு சென்றிருப்பார் அல்லவா?” என்றாள். “ஆம்” என்றாள் பூர்ணை. “புரவியில் செல்வதனால் விரைவும் மிகுதி. நாம் அடுத்த காவல்மாடத்தில் சென்று கூறினால் அவர்கள் முழவுச்செய்தியினூடாக அவரை மறிக்க அங்கிருக்கும் காவல்மாடத்திற்கு ஆணையிடுவார்கள்.”

சுரபி “அவர் அங்கே விடுதியில்தான் இருப்பார்” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்றாள் தேவிகை. “அப்படி தோன்றியது. அங்கிருந்து உடனடியாக அவரால் கிளம்பமுடியாது.” தேவிகை மேலும் சற்றுநேரம் அவளை கூர்ந்து நோக்கிவிட்டு “தேரைத் திருப்பு” என்றாள். பூர்ணை “இவள் இளையவள். என்னவோ உளறுகிறாள்” என்றாள். தேவிகை ஒன்றும் சொல்லாமலிருந்தாள். தேரோட்டியிடம் தேரை மீண்டும் விடுதிக்கே விடும்படி சொன்னாள். தேர் திரும்பி ஓடத்தொடங்கியதும் தேவிகை மெல்ல உடல் இறுக்கம் தளர்ந்து பெருமூச்சுவிட்டாள். பின்னர் பூர்ணையிடம் திரும்பி புன்னகைத்து “அங்கே இருக்கிறாரா என்றுதான் பார்ப்போமே” என்றாள்.

பூர்ணை தலையசைத்தாள். “அங்கு இருக்கிறார் என்றால் நாம் அவரை தூதனுப்புவோம்” என்றாள் தேவிகை மீண்டும். பூர்ணை “ஆம்” என்றாள். “நீ என்ன நினைக்கிறாய்?” என்றாள் தேவிகை. “எதைப் பற்றி?” என்றாள் பூர்ணை. “அங்கே அவர் இருப்பாரா?” பூர்ணை ஐயமின்றி தன்னுள் உணர்ந்தாள், ஆனால் பேசாமலிருந்தாள். “இருப்பார்” என்றாள் தேவிகை. பூர்ணை ஒன்றும் சொல்லவில்லை. “இருக்கவேண்டும்” என்றாள் தேவிகை. பின்னர் சுரபியிடம் “அவர் எனக்காக ஏன் அங்கே இருக்கவேண்டும்?” என்றாள். சுரபி தயங்கி பூர்ணையை நோக்கியபின் விழிகளை விலக்கினாள்.

“என்னடி?” என்றாள் தேவிகை எரிச்சலுடன். “அவர் உங்களுக்காக அங்கே காத்திருக்கவில்லை” என்றாள் சுரபி. தேவிகை முகம் சிவக்க “பின்?” என்றாள். “அவர் அந்தத் தருணத்தை கொஞ்சம் மீட்டிக்கொள்ள விரும்புவார். அதில் இன்னும் சற்று வாழ்வதற்கு… ஆண்களுக்கு அது பிடிக்கும். பெண்கள் விரைவில் அதிலிருந்து விலகியோடவே விரும்புவார்கள்.” தேவிகை படபடப்புடன் உதடுகளை அழுத்திக்கொண்டு பூர்ணையை பார்த்தாள். அவள் வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். சிறுசாளரத்தினூடாக வந்த ஒளி அவள் முகத்தில் மின்னிச் சென்றது.

“அது என்னால் நிகழ்ந்தது அல்லவா?” என்றாள் தேவிகை. “இல்லை அரசி, ஒருவேளை நம்மைக் கண்டால் அவர் எரிச்சல்கூட கொள்ளக்கூடும்” என்றாள் சுரபி. “ஏன்?” என்றாள் தேவிகை. “அது அவர்களுக்கு மிக ஆழ்ந்த தனித்த அகநிகழ்வு. அதில் எவரும் உள்நுழைவதை விழையமாட்டார்கள்.” தேவிகை உரத்த குரலில் “அதில் நானுமிருக்கிறேன்” என்றாள். பூர்ணை திடுக்கிட்டு திரும்பி நோக்கினாள். தேவிகை முலை எழுந்தமைய மூச்சிரைத்தாள். “இல்லை அரசி, அதில் நீங்கள் இல்லை” என்றாள் சுரபி. “என்ன சொல்கிறாய், அறிவிலி?” என்றாள் தேவிகை. “அது அப்படித்தான், அரசி” என்றாள் பூர்ணை.

நெடுநேரம் தேருக்குள் அமைதி நிலவியது. தளர்ந்தவளாக தேவிகை பட்டுமேல் படுத்தாள். சுரபி “அவர்களுக்கு நாம் அளித்த அந்த உலகில் நாம் மீண்டும் நுழையமுடியாது, அரசி. இன்று நாம் அவர்கள் அறிந்தவர்கள் அல்ல” என்றாள். தேவிகை “போதும்” என்றாள். “நாம் முதுமைகொள்கிறோம்” என்றாள் சுரபி. “போதும்” என உரக்கக் கூவி தேர்த்தட்டை அறைந்தாள் தேவிகை. தேர் நின்றது. பூர்ணை சாளரம் வழியாக எட்டிப்பார்த்து “ஒன்றுமில்லை, செல்க!” என்றாள். சுரபி “முன்பு அவர்கள் கண்டதும் நாம் அல்ல” என்றாள். “வாயை மூடடி” என்றாள் பூர்ணை.

“நான் சொல்லாவிட்டால் அரசி அதை எண்ணி எண்ணி விரித்துக்கொள்வார்கள். அது துன்பம். சொன்னால் முடிந்துவிடும்” என்றாள் சுரபி. “அரசி, ஆண்கள் பெண்களிடமிருந்து பெற்றுக்கொள்வது பெண்களை அல்ல.” தேவிகை கண்களை மூடிக்கொண்டு தேரின் ஆட்டத்தில் தலை அசைய படுத்திருந்தாள். அவள் இமைகள் சுருங்கி அதிர்ந்துகொண்டிருந்தன.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 2

பகுதி ஒன்று : பாலைமகள் – 2

bl“சரஸ்வதிக்கு தெற்கே திருஷத்வதிக்கு வடக்கே இக்‌ஷுமதிக்கு கிழக்கே அமைந்துள்ளது குருஷேத்ரம் என்பது தொல்நூலோர் கூற்று” என்றார் பிரஜங்கர். “சரஸ்வதி இன்றில்லை. பயோஷ்ணி பழைய சரஸ்வதியின் தடத்தில் ஒழுகுவது என்கிறார்கள். இக்‌ஷுமதி மிக அப்பால் அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் நடுவே ஓடுகிறது. அன்றிருந்த குருஷேத்ரம் மிக விரிந்த ஒரு நிலம். அது நகரங்களும் ஊர்களும் கழனிகளும் மேய்ச்சல்நிலங்களுமாகச் சுருங்கி இன்றிருக்கும் வடிவை அடைந்து ஆயிரமாண்டுகளாகியிருக்கும்.”

தேவிகை தலையாடையை நன்றாக முகத்தின்மேல் இழுத்துவிட்டுக்கொண்டு அவர் முன் அமர்ந்து அதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு சற்று பின்னால் பூர்ணையும் சுரபியும் அமர்ந்திருந்தனர். காவகனும் கன்மதனும் கைகளைக் கட்டியபடி நின்றிருந்தனர். புண்டரீகையன்னைக்குப் பூசனைகள் முடித்து உணவுண்டு ஓய்வெடுக்க வந்திருந்தார்கள். ஆலயத்தை ஒட்டி ஈச்சஓலை வேய்ந்த கூரைகொண்ட தாழ்வான கொட்டகைக்குள் தரையில் விரிக்கப்பட்ட புல்பாயில் அவர்கள் அமர்ந்திருந்தனர்.

கொட்டகையின் தூண்கள் இரும்பாலானவை. இரும்பின்மேல்கூட சிதல்மண் ஏறி கொடிவீசி கூரையை நாடியிருந்ததை முதலில் கண்டபோது தேவிகை திகைத்து திரும்பி கன்மதனை நோக்கினாள். தரையில் கிடந்த அத்தனை பொருட்களையும் சிதல் எழுந்து மூடியிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு போடப்பட்ட ஒரு மலர்மாலை இதழ்கள் வாடுவதற்குள்ளாகவே ஒருமுனையில் சிதல் பற்றியிருந்தது. அவள் நோக்குவதைக் கண்ட கன்மதன் தூணிலெழுந்த சிதலை தட்டினான். பின்னர் “ஒவ்வொன்றையும் இங்குள்ள நிலம் கண்காணித்துக்கொண்டே இருக்கிறது, அரசி. சற்றே அசைவிழப்பதைக் கூட கைநீட்டி கவ்விக்கொள்கிறது” என்றான்.

“ஒவ்வொரு கல்லிலும் தெய்வம் உறங்குகின்றது என அறிந்திருப்பீர்கள், அரசி. அவை காலமின்மையில் உறங்கிக்கொண்டிருக்கின்றன. குருதித் துளி ஒரு கல்லில் விழுமென்றால் அதன் தெய்வம் விழித்தெழுகிறது. பலியை சுவைத்து நிறைவடைகிறது. அடுத்த பலிக்காக காத்திருக்கிறது. குருதிதொட்ட கல் மீண்டும் குருதிகொள்ளும் என்பார்கள். அதன்பொருட்டே அது பின்னர் காத்திருக்கிறது” என்றார் பிரஜங்கர்.

“இந்த நிலத்தில் பலமுறை குருதி சிதறிப்பரவியிருக்கிறது. கோடானுகோடி தெய்வங்கள் இதன் மணற்பருக்களில் விழித்தெழுந்தன. குருதி தேடித் தவித்த அவை பிரம்மனை நோக்கி தவமிருந்தன. எழுந்த படைப்புத்தெய்வம் அவற்றுக்கு நற்சொல் அளித்தார். அதன்படி அவற்றில் ஆயிரத்தில் ஒரு மணல்பரு ஆயிரமாண்டுகளுக்கு கால்களும் விழிகளும் கொடுக்கும் வாயும் கொண்டு சிதலுருக்கொண்டது. தன்னுடன் உறையும் தெய்வங்களின் பசியனைத்தையும் தான் பெற்றுக்கொண்டு மணம் தேடி அலையலாயிற்று. இங்கு விழும் அனைத்தையும் உண்டு பசியாறியது. உயிர்கொண்ட மணல் என்று இவற்றை சொல்கின்றனர் சூதர்.” அவர் சொல்வதை அவள் வெறுமனே நோக்கி நின்றாள்.

காவகன் “ஜீவரேணுக்கள் என்கிறார்கள்” என்றான். அவள் பெருமூச்சுடன் விழிவிலக்கிக்கொண்டாள். அங்கே நிறைந்திருக்கும் மணம் சிதலுக்குரியது என்று அப்போது உணர்ந்திருந்தாள். “தங்கள் எதிரியின் இல்லத்தின் அடியிலும் அவர்களின் விளைநிலங்களிலும் இங்கிருந்து புற்றுமண் எடுத்துக் கொண்டு புதைத்திடும் வழக்கம் முன்பு இருந்தது, அரசி. ஆயிரம் கொடிகளாக முளைத்தெழுந்து சிதல் அனைத்தையும் கவ்விக்கொள்ளும். புற்றுக்குமிழிகள் நாளுக்குநாளெனப் பெருகி இல்லம் மிக விரைவிலேயே மாபெரும் புற்றுமலை என ஆகும். விளைநிலம் முழுக்க கொப்புளங்கள் எழுந்துவெடிக்கும். அங்கு நடும் அத்தனை பொருட்களையும் வேருடன் சிதல் உண்டு மேலேறும்.”

“எத்தனை அள்ளினாலும் நெருப்பிட்டு எரித்தாலும் மானுடரால் அதை வெல்லமுடியாது. அதை காலரூபி என்று சூதர்கள் சொல்கின்றனர். ஏழு அடித்தட்டுகளாக மண்ணுக்குள் இறங்கிச்செல்வதனால் பாதாளரேணு என்று சொல்வதுமுண்டு” என்று அவன் தொடர்ந்தான். “மாமன்னர் ஹஸ்தி இங்குள்ள மண்ணை எடுத்துச்செல்வது கொலைக்குரிய குற்றம் என்று அறிவித்தார். ஆயினும் இரவுகளில் எவருமறியாது வந்து சிலர் கொண்டுசெல்வதுண்டு. அள்ளிக்கொண்டு செல்பவனின் ஆடையிலோ மிதியடியிலோ ஓர் அணுவாக எஞ்சியிருந்து அவன் இல்லத்திலேயே முளைத்தெழும் இது என்று சூதர்கள் பாடுகிறார்கள்” என்றார் பிரஜங்கர்.

அவள் தனக்குள் ஆழ்ந்திருப்பதைக் கண்டு பிரஜங்கர் பேச்சை நிறுத்தினார். அவள் அதை உணர்ந்து விழிதூக்கியதும் மெல்ல கனைத்தபடி மீண்டும் தொடந்தார். “இறந்தவர்களுக்குமேல் அல்லாமல் இறப்பவர்களை புதைக்கமுடியாது. சிதைமேலன்றி சிதை வைக்கமுடியாது. இல்லங்களின் மீதே இல்லங்கள் அமைகின்றன. இன்றிருக்கும் அஸ்தினபுரியின் முன்நகரம் குருநகரி. யயாதி ஆண்ட தலைநகர். அன்று இப்பெருநிலம் குருநாடு என அழைக்கப்பட்டது. அதற்கு முன்பிருந்த நகரம் குருஜாங்கலம் என்று பெயர்கொண்டிருந்தது. ஒரு நகரம் மறைகையில் அங்கிருந்து செல்பவர்கள் பெயரை மட்டும் கொண்டுசென்று புதிய இடத்தில் பதியனிடுகிறார்கள். இன்று இந்திரப்பிரஸ்தத்திற்கு அப்பால் அறியப்படாத சிற்றூரென அமைந்துள்ளது குருஜாங்கலம்.”

குருஜாங்கலத்தை தலைநகரமெனக்கொண்டு ஆண்ட மன்னர் முதற்குரு. அவரை தங்கள் பிரஜாபதி என இன்று பன்னிரு மன்னர்குலங்கள் வணங்குகின்றன. விஷ்ணுவிலிருந்து பிரம்மன் எழுந்தான். பிரம்மனின் மைந்தர் பிரஜாபதியாகிய சுயம்புமனு. அவர் மைந்தர் உத்தானபாதர். அவர் குருதியில் எழுந்தவர் அழிவற்றவரான துருவன். சிஷ்டி, ரிபு, சாக்‌ஷுவான் என நீண்ட அவருடைய கொடிவழியில் பிறந்தவர் குருமாமன்னர்.

அவருக்கு புரு, ஊரு, சதத்யும்னன், தபஸ்வி, சத்யவாக், சூசி, அக்னிஷு, அதிரதன், சுதுயும்னன், அபிமன்யூ என பத்து உடன்பிறந்தார் இருந்தனர். குருநிலம் அன்று விரிந்துபரந்திருந்தமையால் பத்து உடன்பிறந்தாரை தன் முகங்களென ஆக்கி குரு இந்நிலத்தை ஆண்டார். ஆகவே தசமுகன் என அவர் அழைக்கப்பட்டார். அறம் நிலைக்க, விளை செழிக்க, முடி ஒளிர அவர் ஆட்சிசெய்தபோதுதான் குருநாடு அதன் முழுச்சிறப்புடன் இருந்தது என்கிறார்கள். நீரூற்றின்மேல் புல் என அந்நிலம் எட்டுதிசைக்கும் பரவியது அன்று.

ஆத்ரேய குலத்தில் பிறந்த அரசியை மணந்து குரு ஏழு மைந்தர்களை பெற்றார். அங்கன், சுமனஸ், சுவாதி, கிருது, அங்கிரஸ், கயன், சிபி என ஏழு மைந்தரும் அவருக்குப்பின் குருநாட்டை ஏழாகப் பிரித்து ஆண்டனர். அங்கன் குருநகரியை ஆட்சிசெய்தார். அவர் மணந்த சுனீதையில் வேனன் பிறந்தார். அரசி, வேனனின் மைந்தராகப் பிறந்தவர் பிருது. அவரே இப்புவியை வென்றெடுத்தவர். அவருடைய மகளென்றே இந்நிலம் பிருத்வி என அழைக்கப்படுகிறது.

பேரரசர் பிருதுவுக்கு அந்தர்த்தானன், வாதி, சூதன், மாகதன், பாலிதன் என்னும் ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். சூதனிலிருந்து சூதர் குலமும் மாகதனிலிருந்து மாகதர் குலமும் உருவாகிப்பெருகின. அந்தர்த்தானன் குருநாட்டின் முடிசூடினான். அவனுக்கு சிகண்டினி என்னும் மனைவியில் ஹவிர்த்தானன் என்னும் மைந்தன் பிறந்தான். ஹவிர்த்தானன் தீஷணையை மணந்து பிராசீனபர்ஹிஸ், சுக்ரன், கயன், கிருஷ்ணன், விருஜன், அஜினன் என்னும் ஆறு மைந்தரை பெற்றான். அவர்களிலிருந்து இன்றைய அரசகுடிகள் பதினெட்டு உருவாகி பாரதமெங்கும் பரவின.

அரசியே, குருவின் மைந்தர்கள் ஒவ்வொருவரும் கொடிவழிகளாகப் பெருகி குடிகளாக விரிந்து நிலம் நாடினர். குருதிமுறை சொல்லி முடி கோரி போரிட்டுக்கொண்டார்கள். நிலத்தை அடைந்தவர்கள் மேலும் நிலம் கோரினர். நிலம் பெறாதவர்கள் நிலத்தை வஞ்சமென உளம்சூடிக்கொண்டனர். நிலம் குருதிவெறிகொண்ட கொடுந்தெய்வமென அவர்களின் கனவுகளில் நிறைந்தது. சொற்களில் நுரைத்தது. படைக்கலங்களில் ஒளிர்ந்தது. அவர்களின் குருதி விழுந்து குருஷேத்ரம் எப்போதும் ஈரமாகவே இருந்தது என்கின்றன நூல்கள்.

blமுதல் குருமன்னர் தன் கண்ணெதிரில் தன் மைந்தரும் பெயரரும் போரிட்டு இறந்து விழுந்ததைக் காணும் தீயூழ் கொண்டிருந்தார். நிலத்துக்குரியவன் மூத்தவனாகிய அங்கன். ஆனால் உடன்பிறந்தார் அறுவரும் நாடாள விழைந்தனர். அவர்களுக்குக் கீழே நூற்றெட்டு குலங்கள் அணிதிரண்டு நின்றிருந்தன. வேளாண்குடிகள் அங்கனை ஆதரித்தமையால் ஆயர் சுமனசை ஆதரித்தனர். எனவே வேடர் சுவாதியை ஆதரித்தனர். வணிகர் கிருதுவை ஆதரித்தனர். தொன்மையான வஞ்சங்கள் அனைத்தும் எழுந்துவந்து அவர்களை தங்கள் முகங்களென சூடிக்கொண்டன.

மைந்தர் கூடிய அவையில் “நாடு ஒன்றென்றிருந்தாலொழிய அசுரரையும் அரக்கரையும் எதிர்த்து நின்றிருக்கமுடியாது” என்றார் குரு. “பிரிவதென்பது ஓர் உளநிலை. இணைவதற்கு எதிர்ப்போக்கு அது. ஒரு பிரிவு மேலும் பிரிவுகளையே உருவாக்கும். விழுந்துடையும் நீர்த்துளி என இக்குலம் சிதறிப்பரந்து அழியும்” என எச்சரித்தார். “போரிடும் குலங்களின் இயல்பென்பது அவை ஒன்றை ஒன்று விட்டு செயல்படமுடியாதென்பதே. அவை போரிடுவதும் அதனாலேயே. ஆகவே போரிடும் குலங்கள் போரிட்டாலும்கூட பிரிந்துசெல்லலாகாது.”

“அறிக, ஒற்றுமை அழிந்தபின் நீங்கள் சின்னஞ்சிறுகுடியினரே. உங்களில் ஒருவரை எதிரிகள் வேட்டையாடும்போது பிறர் வாளாவிருப்பீர்கள். உடன்குருதியினரில் ஒருவரை எதிரிகள் அழிக்கையில் அந்த வேட்டைப்பொருளில் பங்குகொள்வதற்காக நீங்கள் வேட்டைக்காரர்களுடன் சேரவும்கூடும். ஏனென்றால் பிரிதலென்பது தனக்குரிய அனைத்துப் படைக்கலங்களுடன் எழும் தெய்வம். எட்டு கைகளில் சொல்திரிபு, புறம்கூறல், பெருவிழைவு, மிகைகற்பனை, சினம், கசப்பு, ஐயம், வஞ்சம் ஆகியவற்றை ஏந்தியது அது. குருதி உண்டு நாகுளிராதது. அமர்ந்த பீடத்தில் இருப்பு கொள்ளாதது.”

“ஒருங்கிணைதல் வேண்டின் அதற்கான உளநிலைகளையும் சொல்லாடல்களையும் கண்டடைந்து தொகுத்துக்கொள்வீர்கள். பிரிய விழைந்தால் அதற்குரியவற்றை அள்ளி அள்ளி அளிக்கும் ஊழ். பிரியத் தொடங்கியது பிரிந்துகொண்டே இருக்கும் என்பதே பொருளின் நெறி. உங்கள் மைந்தர்களுடனும் மைந்தர் மைந்தருடனும் பிரிவுகொள்வீர்கள். உங்கள் ஒவ்வொரு சொல்லும் ஒன்றுடனொன்று முரண்கொள்வதையே காண்பீர்கள். எனவே பிரிதல் ஒழிக!” என்றார்.

“என் விழிமுன் நீங்கள் பிரிந்தழிவதை ஒப்பமாட்டேன். இந்நிலம் ஒன்றென்றே இருக்கும். இதன் குடிகள் உடன்பிறந்தாரென்றே வாழ்வர். இதன் ஒரு படைக்கலம் பிறிதை எதிர்கொள்ளாது” என்றார் குரு. மைந்தர் அவர்முன் தலைகுனிந்து நின்று கேட்டார்கள். பிரியும்போது ஒருவர் விழியை ஒருவர் நோக்காது பிரிந்தனர். அகல்கையிலேயே அவர் சொன்னவற்றை எதிர்ச்சொற்களால் நிகர்செய்து முற்றிலும் எதிர்நிலையில் சென்று நின்றனர். அவர்கள் பிரியவேண்டுமென்பதை முன்னரே ஊழ் முடிவுசெய்துவிட்டிருந்தது. ஏனென்றால் விதைகளுக்குள் பரவுக என்னும் ஆணையாக உள்ளது பிரம்மம்.

முரண்கொண்டு பகைவளர்த்த மைந்தர் எழுவரையும் மீண்டும் மீண்டும் அழைத்து ஒப்புதல்பேச்சு நிகழ்த்தி தோல்வியுற்றார் மாமன்னர் குரு. எழுவரும் படைதிரண்டு அருகிருக்கும் சமந்தபஞ்சகம் என்னும் ஐங்குளத்துக்கு அருகே விரிந்திருந்த பெரும்பொட்டலில் நின்றிருப்பதை கேட்டார். அவர் துணைவி கண்ணீருடன் அவர் காலில் விழுந்து “சென்று என் மைந்தரை காப்பாற்றுங்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்றுவீழ்த்த விடாதீர்கள்” என கதறினாள்.

கசப்புடன் குரு சொன்னார் “அரசி, உடன்பிறந்தாரே ஒருவரை ஒருவர் கூர்ந்து வெறுக்கமுடியும். இணைக்குருதியன் கையின் படைக்கலமே குறிபிறழாது நம் நெஞ்சை வந்தடையும்.” அவள் கதறி அழுது “என் முலைப்பால் முளைத்தெழுந்த மைந்தர் அவர்கள்” என்றாள். குரு “நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. அவர்கள் ஊழ் அதுவென்றால் நம் சொற்கள் பயனற்றவை. அம்பெய்து மலையை விலகச்செய்ய முயல்வதுபோல பொருளற்றது அது” என்றார்.

அரசி வெகுண்டெழுந்து “என் மைந்தர் போரிட்டு இறந்தார் என்றால் நான் அக்கணமே நெஞ்சுபிளந்து உயிர்விடுவேன்” என்றாள். அவர் திகைத்து அவளைப்பற்றி நிறுத்தினார். “நான் சென்று அவர்களின் அம்புகளுக்கு நடுவே நிற்கிறேன். என்னைக் கொன்றபின் அவர்கள் போரிடட்டும்” என்று எழுந்தார். அமைச்சர்களை அழைத்து “எவரும் என்னை தொடரவேண்டியதில்லை” என ஆணையிட்டுவிட்டு தனியாக புரவியில் கிளம்பிச்சென்றார்.

சமந்தபஞ்சகத்தை அவர் சென்றடைந்தபோது அங்கே போர் உச்சத்திலிருந்தது. இரு கைகளையும் விரித்தபடி குரு புரவியில் விரைந்து படைகளுக்கு நடுவே சென்று நின்றார். அவரைக் கண்டதும் மைந்தர் வில் தாழ்த்தினர். “நான் ஆணையிடுகிறேன், நாடு ஏழாக பிரிக்கப்படுகிறது. அதுவே உங்கள் ஊழென்றால் ஆகுக!” என்றார். மைந்தர்கள் ஒரு சொல்லில்லாமல் பிரிந்துசென்றனர். படைகள் நிரையுடைந்து ஒழுகி விலகின. அங்கே விழுந்துடந்த சடலங்களுடன் குரு மட்டும் நின்றிருந்தார்.

உயிர்நீத்தவர்களின் உடல்கள் கண்ணெட்டும் தொலைவுவரை பரவிக்கிடந்தன. குருதி வழிந்து நிலம் நனைந்துகொண்டிருந்தது. சுற்றிச்சுற்றி நோக்கி வெற்றுக்கையுடன் நின்றிருந்த ஒரு கணத்தில் தன்னை ஒரு பேரன்னை என்றும் அவர்களனைவரையும் தன் மைந்தர் என்றும் அவர் உணர்ந்தார். அந்நிலத்தில் கால்தளர்ந்து அமர்ந்து நெஞ்சிலறைந்து அழுதார். அந்த உடல்கள் ஒவ்வொன்றையாக அள்ளி நெஞ்சோடணைத்து கதறினார். தலைமயிரை கோதினார், நெற்றியில் முத்தமிட்டார். கைகளை எடுத்து தன் முகத்திலும் நெஞ்சிலும் அறைந்துகொண்டார்.

இரவாயிற்று. சடலங்களை நாய்நரிகள் கடித்திழுத்தபோது எஞ்சிய விழைவை ஒன்றுதிரட்டி அவை எழ விரும்புபவைபோலத் தோன்றின. அவரைத் தேடிவந்த அமைச்சர்கள் பித்தன்போல களத்தில் உழன்றுகொண்டிருந்த அவரை கண்டுபிடித்து அழைத்துச்சென்றார்கள். அவர் வெறிகொண்டு அவர்களை அறைந்தார். தன் நெஞ்சிலறைந்து கூச்சலிட்டார். தொல்காடுகளின் அன்னைத் தெய்வமொன்று அவரில் எழுந்துள்ளது என்றனர் நிமித்திகர். அவரை அறையிலிட்டு பூட்டினர். அவர் கதவுகளை அறைந்தும் சுவர்களில் முட்டியும் கூச்சலிட்டார். பின்னர் களைத்து விழுந்து விம்மி அதிர்ந்துகொண்டிருந்தார்.

பதினேழாம் நாள் அவரிலிருந்து அன்னை ஒழிந்தபோது அவைகூட்டி ஆவதென்ன என்று உசாவினார். “அரசே, அந்தப் பெருநிலத்தில் இறந்த ஒவ்வொருவரும் விண்ணுலகெய்தவேண்டும். அதற்குரிய கடன்களை நீங்கள் ஆற்றவேண்டும்” என்றனர் நிமித்திகர். “அன்னையென்று உணர்ந்தீர்கள். மாண்டவர் அனைவருக்கும் மைந்தரென்று ஆகுக!” என்றனர். வைதிகர்களையும் முனிவரையும் அழைத்து தான் செய்யவேண்டிய சடங்குகள் என்ன என்று வினவினார். அவர்கள் அங்கு ஒரு அஷ்டாங்க வேள்வியை நிகழ்த்தும்படி கூறினர்.

அதை ஏற்று நூற்றெட்டு முனிவரும் ஆயிரத்தெட்டு வைதிகரும் துணைநிற்க அந்நிலத்தில் மாமன்னர் குரு எண்செயல் பெருவேள்வியை நிகழ்த்தினார். எட்டுபகுதிகள் கொண்டது அந்த வேள்வி. அனல்பேணல், வேதமோதுதல், பொற்கொடை, அன்னக்கொடை, அறமுரைத்தல், நிலமுழுதல், கதிர்கொள்ளுதல், விதைபரப்புதல். அங்கு விளைந்த பயிரின் விதை அங்கேயே விதைக்கப்படுகையில் வேள்வி நிறைவுகொள்ளும். அதன்பொருட்டு குரு அந்நிலத்தை பொற்கலப்பையால் உழுதார். அவர் குடியின் நூறு இளையோர் உடன் உழுதனர்.

அப்போது உலகியலின்பத்தின் தலைவனாகிய இந்திரனை வழிபடுபவர்களாகிய சார்வாகர்கள் எழுவர் அவர்களின் தலைவரான சக்ரர் என்பவரின் தலைமையில் அங்கு வந்தனர். அவர்கள் உழுதுகொண்டிருந்த மன்னனை தடுத்தனர். வேள்விமுறைப்படி படைக்கலம் கொண்டு வேள்வியைத் தடுப்பவரை படைக்கலத்தாலும் சொல்கொண்டு தடுப்பவரை சொல்லாலும் வெல்லாமல் வேள்வியை முன்னெடுக்கவியலாது. “அரசே, நான் கேட்கும் கேள்விகளுக்கு விடைசொல்க! இந்த வேள்வியை எதன்பொருட்டு நிகழ்த்துகிறீர்கள்?” என்றார் சக்ரர்.

“இங்கே மண்மறைந்த அனைவரும் விண்ணுலகெய்தவேண்டும்” என்றார் குரு. “விண்ணுலகம் ஏகுவதற்கு தொல்மரபு பல நெறிகளை அமைத்துள்ளது என அறிந்திருப்பீர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர், இங்குற்றதில் நிறைவுகொண்டு உடலுதறி எழுந்தவர், வேதப்பொருளுணர்ந்தவர், சொல்நிறைந்த கவிஞர், ஐந்தடக்கி அகம் முதிர்ந்த முனிவர் ஆகிய ஐவரே விண்ணுக்குச் செல்லவேண்டியவர்கள். எவருக்காகவோ எதற்காகவோ இங்கு படைக்கலம்கொண்டு வந்து பிறரைக் கொல்ல முற்பட்டு கொல்லப்பட்டவரும் அவர்களுக்கு நிகராக விண்ணேகுவார் என்றால் ஐவகைத் தவத்துக்கும் என்ன பொருள்?” என்றார் சக்ரர்.

“சக்ரரே, அந்த ஐவகைத் தவங்களும் நெறிபுழங்கும் நாட்டில் மட்டுமே நிகழமுடியும். நெறி காக்க வாளில்லையேல் அது காடென்றே அமையும். எனவே ஐவகைத் தவத்திற்கும் நிகரானது வாள்கொண்டு களம்புகுந்து மடிதல். ஐவகைத் தவத்தார் பண்புகளை, உறவுகளை, அன்னத்தை, சொல்லை, விழைவுகளை தங்கள் வேள்வியில் அவியாக்குகிறார்கள். வீரன் தன்னையே அவிப்பொருளென்று அளிக்கிறான். அந்தக் கொடையினூடாகவே அவன் தூய்மையடைகிறான்” என்றார் குரு. “ஆம்” என சக்ரர் திரும்பிச்சென்றார்.

மீண்டும் குரு நிலத்தை உழுதுகொண்டிருக்கையில் மூன்றாம்நாள் சக்ரர் திரும்பிவந்தார். “அரசே, நிற்க! நான் கேட்பவற்றுக்கு மறுமொழி சொல்க! வெறும் உலகவிருப்பால், வஞ்சத்தால் களம்பட்டவன் விண்ணுலகம் எய்துவானா என்ன? அவனுக்கு அவை மீட்பளிக்குமென்றால் விழைவும் வஞ்சமும் மெய்மை வழிகளென்றாகுமா? அவற்றைப் பேணுவது வேள்வியென்றும் தவமென்றும் பொருள்படுமா?” என்றார். குரு திகைத்து நின்றுவிட்டார். “சொல்லுங்கள், இப்புவியின் மாயைகளில் உயிரெல்லை வரை உழல்வதா அவ்வுலகில் சென்றமைவதற்கான வழி?” என்றார் சக்ரர். குரு தன் மேழியை எடுத்துக்கொண்டு திரும்பிவந்தார்.

வேதசாலைக்கு மீண்ட குரு ஏழு நாட்கள் கற்றோரிடமும் வைதிகரிடமும் முனிவரிடமும் சொல்லுசாவிவிட்டு மீண்டும் உழுவதற்காகச் சென்றார். அங்கே வந்து நின்றிருந்த சக்ரரிடம் “இந்திரவழிபாட்டாளரே, போருக்கு எழுபவன் அதற்கு முந்தைய கணத்திலேயே அனைத்தையும் துறந்துவிடுகிறான். எதன்பொருட்டு அவன் போருக்குக் கிளம்புகிறானோ அதையும் அகற்றிவைத்த பின்னரே அவன் படைக்கலம் எடுக்கிறான். இவ்வுலகில் உள்ள எது உயிருக்கு நிகராகும்? உயிரை வைத்தாடுபவன் இவ்வுலகிலுள்ள எதையேனும் உள்ளூர பொருட்டெனக் கொள்வானா என்ன? எனவே போர் என்பது துறவேயாகும்” என்றார்.

“சார்வாகரே, போருக்குக் கிளம்புவது வரைக்குமே வஞ்சமும் வன்மமும் மானுடரை ஆள்கிறது. களம்நிகழத் தொடங்கிய பின்னர் அவர்கள் முற்றிலும் தங்களை இழக்கிறார்கள். படைக்கலங்கள் அவர்களை கையில் ஏந்திக்கொள்கின்றன. போர்நின்ற எவரும் அறிவதொன்றுண்டு, போர் என்பது மானுடர் ஒருவரோடொருவர் மோதுவதல்ல. பல்லாயிரம் கைகளும் கால்களும் தலைகளும் விழிகளும் கொண்ட பேருருவம் ஒன்றின் களித்தாண்டவம் மட்டும்தான் அது. ஊழ்கத்திலிருக்கும் முனிவரின் உள்ளம்போல் அங்கே சித்தம் குவிந்திருக்கிறது. களியாடும் இளமைந்தர்போல உள்ளம் உவகைகொண்டாடுகிறது” என்றார் குரு.

சக்ரர் திரும்பிச்சென்று மீண்டும் மூன்றாம் நாள் குரு உழுதுகொண்டிருக்கையில் வந்து மேழியை மறித்தார். “அரசே, கொலைவன்மையா கொல்லாமையா எது வானோர்க்கு உகந்தது? அதைமட்டும் சொல்லிவிட்டு மேலே செல்க!” என்றார். “சக்ரரே, கொல்லாமையே அறங்களில் முதன்மையானது” என்றார் குரு. “ஆனால் கொலைவல்லமையை ஈட்டியவனே கொல்லாமையை தான்கொள்ள முடியும். அஞ்சி அமைவது கொல்லாமை அல்ல. இரங்கி விலகுவதும் கொல்லாமை அல்ல. கொலையே இவ்வுலகின் இயற்கை என்று முற்றுணர்ந்து ஆம், நான் முரண்படுகிறேன் தெய்வங்களே என்றுரைத்து திரும்பிநின்று படைக்கலம் தாழ்த்துபவனே மெய்யாக கொல்லாமைநோன்பை கடைக்கொள்கிறான். தான் கொல்லப்படினும் படைக்கலமேந்தா நிலையே கொல்லாமையின் உச்சம்.”

“அறிக, கொலைவன்மைகொண்ட வாள்களால் காக்கப்படும் நாட்டிலேயே கொல்லாமை திகழமுடியும். எனவே மண்காக்கவும் நெறிநாட்டவும் கொலைத்தொழில் செய்பவர்கள் கொல்லாமையைப் பேணும் அறம்கொண்டவர்களே” என்றார் குரு. மீண்டு சென்று மூன்றாம்நாள் வந்த சக்ரர் கேட்டார் “செயலா அதன் பின்னுள்ள புரிதலா, எது மீட்பளிக்கிறது?” திகைத்து நின்ற குருவை நோக்கி சக்ரர் மேலும் கேட்டார் “சொல்க, இப்படைவீரர்களில் எவருக்கு தாங்கள் செய்வதென்ன என்று தெரியும்?”

குரு “பெரும்பாலானவர்கள் அரச ஆணைப்படி படைக்கலமேந்தி வந்தவர்களே” என்றார். “ஆம், அவர்கள் கூலிபெற்று போருக்கெழுந்தவர்கள். அக்கூலியே அவர்கள் ஈட்டுவதென்பதனால் விண்ணுலகு அவர்களுக்குரியதல்ல. ஒன்றுக்கு இரண்டு விலை இல்லை” என்றார் சக்ரர். “சொல்க, அறியாதுசெய்வதும் அப்பயன் அளிக்குமென்றால் அவியளித்து வேள்விநிகழ்த்த வேதம் எதற்கு? சுட்ட ஊனில் எஞ்சிய நெய்யை தீயிலிடும் காட்டாளருக்கும் அமையுமா வேள்விப்பயன்?”

ஏழு நாட்கள் பொழுதுகோரிவிட்டு குரு திரும்பிவந்தார். வைதிகரையும் அறிஞரையும் கவிஞரையும் அழைத்து சொல்லுசாவினார். “ஆம், அவியால் அல்ல வேதத்தாலேயே வேள்வி நிகழ்கிறது. வேதமோதி அனலூட்டப்படும் மலமும் அவியே” என்றனர் வைதிகர். “ஓதும் சொல் தன் பொருளாலேயே அறிவென்றாகிறது” என்றனர் அறிஞர். “பதர் விதைத்துக் கொய்வதெங்கனம்?” என்றனர் உழவர். “வெற்றூழ்கம் தவமென்றால் வெயில்காயும் விலங்குகள் அனைத்தும் விண்ணேகவேண்டுமே?” என்றார்கள் முனிவர்கள்.

சோர்ந்திருந்த குருவை தேற்றி உணவருந்தச் செய்தாள் அவர் துணைவி. “என்ன விடையென்றே தெரியவில்லை. எட்டுத்திசையும் மூடியுள்ளது” என்றார் குரு. “சொல்தோன்றாது உளம் நிலைக்கையில் நீங்கள் வழக்கமாகச் செய்வதேது?” என்றாள் அரசி. “அன்னையிடம் சென்றமர்வேன். அவர்முன் குழந்தையென்றாவேன். அறிந்தவை அனைத்தும் அகன்று உள்ளம் தெளிகையில் அகன்றிருக்கும் சில உள்ளே எழுந்துவரும். அவற்றிலிருக்கும் நான் தேடியவை” என்றார் குரு. “இப்போதும் அதையே செய்க!” என்றாள் ஆத்ரேயி.

அரண்மனைக்குச் சென்று முதிய அன்னையின் காலடியில் அமர்ந்தார். அவளுக்கு பணிவிடை செய்தார். சிறுகுழவி என அவளுடன் விரல்தொட்டு விளையாடினார். “வேள்விக்கு ஏன் நீங்கள் வரவில்லை, அன்னையே?” என்றார் குரு. “நான் ஏன் வேள்வி செய்யவேண்டும்? உன்னை ஈன்றதனாலேயே வீடு பெற்றேன்” என்றாள் மூதரசி. “என்னைப் பெறுவதை எண்ணினீர்களா? என்பொருட்டு எப்படி நீங்கள் பெருமை கொள்ளமுடியும்?” என்றார் குரு. “எண்ணிப் பிள்ளைபெறும் அன்னையருண்டா என்ன? ஆனால் பிள்ளை அடைவதனைத்தையும் அன்னையே அடைகிறாள்” என்றாள் பேரரசி.

விடைபெற்று எழுந்து மீண்டும் உழுநிலத்திற்கு வந்தார். அங்கே வந்த சக்ரரிடம் “இந்திரரே, இதோ என் மறுமொழி. மண்ணில் மானுடர் ஆற்றும் எச்செயலுக்கும் அவர்கள் முழுப்பொறுப்பேற்க இயலாது. எனவே எதையும் முழுதுணர்ந்து ஆற்றுவதும் நடவாதது. தன்னை முழுதளித்து, தன்னறத்தை ஆற்றுபவன் அதற்குரிய முழுமையை அடைகிறான். அவன் ஆற்றும் செயலால் பேரழிவும் பெருந்தீங்கும் விளைந்தாலும்கூட அவனுக்கு அப்பழி இல்லை. அது அவனை ஆட்டுவிக்கும் ஊழுக்கே சென்று சேரும்” என்றார்.

“இங்கு இறந்த வீரர்கள் தங்கள் கடமையைச் செய்து மடிந்தனர். அவர்கள் அதன் அரசியலையும் அறத்தையும் முழுதறிய ஆற்றலற்றவர்கள். அறிந்த பின்னரே அவர்கள் செயலாற்றவேண்டும் என்றால் இங்கே எதுவும் நிகழாது.” சக்ரர் தலையசைத்தார். “ஆம், அவர்கள் கூலிகொண்டனர். சக்ரரே, காம இன்பத்தின்பொருட்டே உறவாடுகிறார்கள் மானுடர். அதன் விளைவாகப் பெறும் மைந்தரின் பேறுகளை பெற்றோர் அடைவதில்லையா என்ன?”

“வாழ்வறங்கள் நான்கும் துறவும் வேள்வியும் கல்வியும் தவமும் வாள்வேலியின்றி வாழாதென்று அறிந்தவர்கள் ஒருபோதும் வீரத்தையும் உயிர்க்கொடையையும் இகழமாட்டார்கள். களம்பட்டவர் விண்ணுலகு செல்லார் என்றால் பிறர் விண்ணுலகு செல்லும் பாதைகள் முழுமையாகவே மூடிவிடும்” என்று குரு சொன்னார்.

சக்ரர் “ஆம், அவ்வாறே” என்று ஒப்புக்கொண்டார். இந்திரனின் மின்படை முத்திரை பொறித்த கோலை அந்த வேள்விநிலம் மீது ஆழ ஊன்றி “இங்கு நிகழும் இந்த வேள்வி நிறைவுறுக! இங்கு களம்பட்டு மடிபவர், உளம் உதிர்த்து ஊழ்கத்திலமர்ந்து மறைபவர் அழிவற்ற பேருலகம் செல்க! அங்கே என்றும் அழியாது வாழ்க!” என்றபின் திரும்பிச் சென்றார். அந்தக் கோல் அருகே சென்று வானை நோக்கி “இடிமின்னலின் அரசே, இது உன் ஆணையென்றாகுக! இங்கு மடிபவர் அழிவின்மை கொள்க. சொல்லில், விண்ணில்” என்றார். மின்னல் வெட்டி அடங்கியது. இடி எழுந்து ஆம் ஆம் ஆம் என்றது.

“அஷ்டாங்க வேள்வி நிறைவிற்குப்பின் இந்நிலம் குருஷேத்ரம் என்றே அழைக்கப்படலாயிற்று” என்றார் பிரஜங்கர். “இங்கு எட்டு மாதகாலம் நிகழ்ந்த அப்பெருவேள்வியில் நிலம் உழுது வஜ்ரதானியத்தை விதைத்தபின் மாமன்னர் குரு தன் வேலால் தோண்டியபோது நிலம்கரந்தோடும் தொல்நதியாகிய சரஸ்வதி ஊறி எழுந்து வழிந்தோடி வேள்விப்பந்தலை நனைத்தாள். அவள் கொண்டுவந்த நீரில் விதைகள் முளைத்து மணி காய்த்தன. அவற்றை மீண்டும் விதைத்தபோது இங்கு உறைந்த அணையா உயிர்களனைத்தும் வெண்முகில்களாக மாறி விண்ணகம் சென்றன.”

“சிறுமணலூற்றென ஊறிய சரஸ்வதியை சுரேணு என்றனர் கவிஞர். குருஷேத்ரத்திற்கு வடக்கே அது இன்றும் ஒரு சிறிய ஊற்றாக எழுந்து வழிந்தோடி இக்‌ஷுமதியில் கலக்கிறது” என பிரஜங்கர் தொடர்ந்தார். “இன்று தரந்துகை அரந்துகை என்னும் இரு சிற்றோடைகளுக்கு நடுவே உள்ள நிலமே குருஷேத்ரம் என்றழைக்கப்படுகிறது. பரசுராமர் அமைத்த ஐந்து நீர்நிலைகள் இதன் மையம். இங்கே நூற்றெட்டு புனித நீரூற்றுகள் உள்ளன.”

“அரசி, இங்கே மாமன்னர்கள் வேள்விகளை செய்திருக்கிறார்கள். மாந்தாதா என்னும் மாமன்னர் செய்த மண்புரக்கும் வேள்வியால் இந்நிலம் விண்ணவர்க்கு இனியதாகியது. இங்கு விழுந்தவர்கள் அனைவரும் எழுந்துள்ளனர். இது அன்னையின் மடி என்று அறிக!” தேவிகை அவர் சொல்வதை பொருள்வாங்காத விழிகளால் நோக்கியபடி அமர்ந்திருந்தாள். “இங்கு புண்டரீகை அன்னையை நிறுவியவர் முல்க்கலர் என்னும் மாமுனிவர். இங்குள்ள நூற்றெட்டு நன்னீர்களில் பெண்கள் வந்து நீராடி வேண்டிக்கொள்வது இங்கு மட்டுமே.”

“போருக்குப்பின் அன்னையரும் கைம்பெண்களும் இங்கு கண்ணீருடன் வருவதுண்டு” என்று பிரஜங்கர் சொன்னார். “இங்கு களம்பட்ட தங்கள் மைந்தர்களுக்கும் கணவர்களுக்கும் மலரும் நீருமளித்து அன்னையை வணங்கி அவர்களை விண்ணேற்றி மீள்வார்கள்.” தேவிகை கைகளைக் கூப்பியபடி அசைவில்லாது அமர்ந்திருந்தாள். “களம்பட்ட தங்கள் மைந்தரின் பெயரையும் நாள்மீனையும் சொன்னீர்கள் என்றால் இங்கு முறைப்படி விண்ணேற்றப் பூசனைகளை ஆற்றி நிறைவுசெய்வேன்” என்றார் பிரஜங்கர்.

பூர்ணை ஏதோ சொல்ல வாயெடுக்க தேவிகை அவளை நோக்கி அடக்கியபின் “என் மைந்தன் யௌதேயன் இறக்கவில்லை” என்றாள். பிரஜங்கர் இருவரையும் மாறிமாறி நோக்கினார். “அவன் இறக்கலாகாதென்று வேண்டிக்கொள்ளவே வந்தேன்” என்றாள் தேவிகை. “அவ்வாறு வேண்டிக்கொள்ளும் வழக்கமில்லையே, அரசி” என்றார் பிரஜங்கர்.

“அன்னை என் அழலை அறிவாள்” என்றாள் தேவிகை. “அவளிடம் சொல்லியிருக்கிறேன். ஆயிரம்கோடி குருதிகண்ட விழிகள் அவளுடையவை என்கின்றன நூல்கள். அதைவிட மிகுதியாக விழிநீரையும் அவை கண்டிருக்கும். அன்னையிடம் மட்டுமே நான் சொல்வதற்குள்ளது.” பிரஜங்கர் கைகூப்பி “அவ்வாறே” என்றார்.