மாதம்: திசெம்பர் 2017

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 15

பகுதி இரண்டு : பெருநோன்பு – 9

blஅசலை காந்தாரியின் அறைவாயிலை அடைந்தபோது அங்கு நின்றிருந்த சேடி வியப்புடன் அவளை நோக்கி புருவம் தூக்கி அவ்வசைவை உடனே தன்னுள் ஆழ்த்தி தலைவணங்கினாள்.  “பேரரசி உணவருந்திக்கொண்டிருக்கிறார்கள். இளைய அரசிகள் உடனிருக்கிறார்கள்” என்றாள். “நான் பேரரசியை பார்க்கவேண்டும், உடனடியாக” என்றாள் அசலை. “தாங்கள் அதை முன்னரே அறிவித்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள் முதிய சேடி. “இல்லை, ஓர் எண்ணம் தோன்றி எழுந்து வந்தேன். அவரை நான் சந்தித்தாகவேண்டும்” என்று அசலை சொன்னாள். சில கணங்களுக்குப் பின் “நன்று, நான் தங்கள் வரவை அறிவிக்கிறேன். பேரரசி விரும்பினால் தாங்கள் சந்திக்கலாம்” என்று முதுமகள் சொன்னாள்.

அவள் உள்ளே செல்ல கதவு மூடியபோது அசலை மீண்டும் தனிமையை உணர்ந்தாள். மூச்சை இழுத்துவிட்டு தன்னுள் கலைந்து கிடந்த சொற்களை ஒன்றன்பின் ஒன்றென அடுக்கிக்கொண்டாள். கைவளைகளைப்பற்றி திருகியபடி கதவு திறப்பதற்காக காத்து நின்றிருந்தாள். மெல்லிய ஓசையுடன் கதவு திறந்தபோது உள்ளத்தில் ஓர் அதிர்வு எழ சொற்கள் கைபட்ட தேனீக்கூட்டமென கலைந்து ரீங்கரித்து பறக்கலாயின. தன்னை உந்தி உள்ளே செலுத்தவேண்டியிருந்தது. ஒவ்வொரு எண்ணமும் நம்பிக்கையூட்டி உளவிசை கூட்டுகிறது. அணுகும்தோறும் பொருளிழந்து இறந்து குளிர்ந்து கிடக்கிறது. ஏன்? என்ன ஆயிற்று எனக்குள்?

அறைக்குள் தரையில் அமர்ந்து குறுபீடத்தில் உணவை வைத்து காந்தாரியும் ஒன்பது அரசியரும் உணவருந்திக்கொண்டிருந்தனர். ஏழு சேடியர் அவர்களுக்கு உணவு பரிமாறினர். அவர்கள் எவரும் பேசிக்கொண்டிருக்கவில்லை. கலங்களின் ஓசையும் நாவுகளின் ஓசையும் கலந்த ஓசை பொருட்களின் உரையாடலென கேட்டுக்கொண்டிருந்தது. அசலை உள்ளே நுழைந்தபோது அரசியர் அனைவரும் நிமிர்ந்து அவளை பார்த்தனர். சத்யசேனை மட்டும் “அமர்ந்துகொள்” என்று சொல்லி அருகிருந்த குறும்பீடத்தை காட்டினாள். “நான் முன்னரே உணவருந்திவிட்டேன், அன்னையே” என்றாள் அசலை. “தாழ்வில்லை, சற்று ஊன்சாறு அருந்து” என்றாள் சத்யசேனை.

குறுபீடத்திற்குப் பின்னால் அமர்ந்து ஆடையை சீர்செய்துகொண்டாள் அசலை. முதிய சேடி அவளுக்கு வெள்ளித்தாலத்தை வைத்து அதில் ஊன்சாறையும் தீயில் சுட்ட அரிசி அப்பத்தையும் வைத்தாள். அசலை ஐம்பருக்களை நுண்சொல்லால் வணங்கிவிட்டு அதை உண்ணத் தொடங்கினாள். அங்கே ஒலித்த சீரான நாவோசை அவளுக்கு ஓர் அமைதியை அளித்தது. மீண்டும் தன்னுள் சொற்களை திரட்டிக்கொண்டாள். அவள் பேசுவதற்காக காந்தாரியும் அரசியரும் காத்திருந்தனர். இருமுறை நாவசைத்த பின் “நான் பேரரசியிடம் ஒரு சொல்லை உரைக்கும்பொருட்டு வந்தேன்” என்று அசலை சொன்னாள்.

காந்தாரி அவள் சொற்களைக் கேட்க முகம்திருப்பி செவிகளை இயல்பாக சரித்தாள். “அரசி, தாங்கள் இன்னமும்கூட இப்போரை தவிர்க்க இயலும்” என்றாள். காந்தாரி “நேற்றைய அவை என்னிடம் காட்டியது ஒன்றே. அனைத்துத் தரப்பிலிருந்தும் நம்மிடம் நாம் வெறும் பெண்கள் மட்டுமே என்கிறார்கள். நம் ஆடையும் அணியும் அரியணையும் மணிமுடியும் வெறும் அடையாளங்கள் மட்டுமே என்று நம்மிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். “ஆம், ஆனால் இங்குள்ள ஒவ்வொருவருமே அவ்வாறு அடையாளங்களை மட்டுமே சூடிக்கொண்டிருக்கிறார்கள். தன்முடிவால் எதையும் ஆற்றும் இடத்தில் எவருமே இல்லை” என்று அசலை சொன்னாள். “பேரரசி, இன்னமும்கூட இந்நகரில் பிறர்மேல் சொல் ஆதிக்கம் கொண்டவர்களில் முதன்மையானவர் தாங்களே.”

“இனி எவரிடம் பேசுவதற்கு இருக்கிறது? ஒவ்வொருவரும் தங்களை அறிவித்துவிட்டார்கள்” என்றாள் காந்தாரி. “ஆம் அன்னையே, ஆனால் இன்னமும் ஒருவர் தன்னை அறிவிக்காமல் இருக்கிறார்” என்றாள் அசலை. காந்தாரி புருவம் சுளித்தாள். “தாங்கள் பேரரசரிடம் பேசலாம்” என்றாள் அசலை. காந்தாரி புன்னகைத்தாள். பின்னர் கைகளை நீட்ட முதிய சேடி யானத்தில் நறுமணநீரை வைத்து அவள் கையைப்பற்றி அதில் வைத்து கழுவினாள். சேடி அளித்த மரவுரியால் கைகளை துடைத்தபடி “நீ அவர் எப்படி இருக்கிறார் என்பதை அறிந்திருக்கமாட்டாய். ஒவ்வொரு வாயில்களாக மூடி மிக உள்ளே சென்றுவிட்டிருக்கிறார். இப்போது சென்று சொல்லப்படும் எந்தச் சொல்லும் அவரை சென்றடையாது” என்றாள்.

பெருமூச்சுடன் “தன்னை இசை சற்றே நெகிழ்த்துகிறது என்று உணர்ந்து அதையும் துறந்துவிட்டிருக்கிறார். அரசன் இறுகியிருப்பதைவிட மேலும் இருமடங்கு இறுகியிருக்கிறார்” என்றாள். “அவ்வாறுதான் நானும் உங்களிடமிருந்து அறிந்துகொண்டிருந்தேன். ஆனால் சற்றுமுன் என் கனவில் அவர் தோன்றினார்” என்றாள். அனைத்து விழிகளும் முள்ளம்பன்றி முள்முனைகள் என சிலிர்த்து அசைந்து அவளை நோக்கின. “யார்?” என்று காந்தாரி கேட்டாள். “இன்று காலை முழுக்க நிலையழிந்திருந்தேன், அன்னையே. என்னென்னவோ எண்ணங்கள். உணர்வுகள் உருத்திரளாத அலைக்கழிப்பு. உணவுக்குப் பின் சற்று துயின்றேன். அதில் ஒரு கொடுங்கனவு” என்று அசலை சொன்னாள். “ஆம், வேறெதையும் எவரும் கனவு காண்பதில்லை” என்றாள் காந்தாரி.

அசலை கனவுநிறைந்த விழிகளுடன் “பெருங்களம். அதில் அப்போது முடிந்த போரில் கொன்று குவிக்கப்பட்ட வீரர்களின் உடல்கள் திசையெல்லை வரை சிதறிக்கிடந்தன. துடித்துக்கொண்டிருக்கும் புரவிகள், உடைந்து சிதறிய தேர்கள். அதனூடாக கூந்தல் பறக்க ஆடை நெகிழ நெஞ்சில் ஓங்கி அறைந்து கதறியபடி விரைந்தோடுகிறேன். தொலைவில் இளைய அரசர் விழுந்துகிடப்பதை பார்க்கிறேன். கைகளால் என் நெற்றியின் குங்குமத்தை அழித்தபின் ஓடிச்சென்று அவர் அருகே மண்டியிட்டு கால்களை பற்றிக்கொண்டேன். அவர் மார்பு பிளக்கப்பட்டிருந்தது. உள்ளிருந்து செங்குலையென நெஞ்சு பிடுங்கி வீசப்பட்டிருந்தது. அவர் கால்களை பற்றிக்கொண்டு கதறி அழுதேன். தலையை அவர் பாதங்களில் அறைந்தேன்” என்றாள்.

“அப்போது அவர் மெல்ல முனகுவதை கேட்டேன். வலது கையை ஊன்றி மெல்ல எழுந்தமர்ந்து இடக்கையை என் தலைமேல் வைத்தார். திடுக்கிட்டு நான் அவர் முகத்தை பார்த்தேன். அது பேரரசரின் முகம். நோக்கற்ற விழிகள். உதடுகள் மெல்ல அசைய அவர் எதையோ சொல்லிக்கொண்டிருந்தார். என்ன சொல்கிறீர்கள் என்று நான் கேட்டேன். அவர் சொல்லிக்கொண்டிருந்த சொற்கள் எனக்கு நன்றாகவே கேட்டன. ஆனால் முற்றிலும் நானறியாத பிறிதொரு மொழி என அது தோன்றியது. நான் விழித்துக்கொண்டேன். அக்கனவை எண்ணி நடுங்கியபடி மஞ்சத்தில் அமர்ந்திருந்தேன். பின்னர் எழுந்து வந்து யானத்திலிருந்து குளிர்நீரை அள்ளி முகத்தை கழுவினேன். மரவுரியால் துடைத்துக்கொண்டிருந்தபோது தோன்றியது, அது என் கனவல்ல அவருடைய கனவு என்று. ஆகவேதான் தங்களைப் பார்க்க ஓடிவந்தேன்” என அசலை சொன்னாள்.

சத்யசேனை “என்ன சொல்கிறாய்?” என்றாள். சத்யவிரதை “இத்தகைய கனவுகள் அனைவருக்கும் வருகின்றன. இங்கிருக்கும் சூதர்கள் சொல்லிச் சொல்லி கனவுகளை உருவாக்கி நம்மேல் திணித்திருக்கிறார்கள். நாம் இவற்றுக்கு அடிமைப்பட்டிருக்கிறோம்” என்றாள். அசலை “அவர்கள் புதிய கனவுகளை உருவாக்கவில்லை, அரசி. நாம் அனைவரும் காணும் கனவுகளை அவர்கள் ஒன்றுடன் ஒன்று இணைத்து பின்னி பெருங்கனவாக்கி இந்நகர்மேல் பரவச்செய்திருக்கிறார்கள். இப்போது நாமனைவரும் ஒரே கனவில் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்றாள். “ஆனால் அது அவர்களின் கடமை. கலைஞர்களும் கவிஞர்களும் காலந்தோறும் செய்துகொண்டிருப்பது அதையே.”

அவள் சொன்னது அவர்களுக்குப் புரியவில்லை என விழிகள் காட்டின. “சொல்க!” என்றாள் காந்தாரி. “பேரரசி, அங்கே தன் அறையில் பேரரசர் தொடர்ந்த கொடுங்கனவுகளில் வாழ்கிறார். ஆயிரம் மைந்தரின் தந்தை ஒவ்வொரு மைந்தருடனும் தானும் இறந்து மீண்டுகொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஆயிரம் இறப்புகள். மீண்டும் பிறக்கும் இறப்புகளே துயரத்தின் உச்சிப்புள்ளிகள். இன்று அவர் இருக்கும் கொடுநரகில் ஆயிரம் பழிசேர்த்து தெய்வத்தீச்சொல் பெற்றவர்கள்கூட இருந்ததில்லை. தாங்கள் அவரை கைவிட்டுவிட்டீர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது” என்றாள்.

காந்தாரி சேடியை நோக்கி நீட்டிய மரவுரி அவ்வாறே அசைவற்று நிற்க அவளை நோக்கி செவிநாட்டி நிலைத்தாள். பின்னர் பெருமூச்சுடன் கைகளைத் தாழ்த்தி “மெய்தான்” என்றாள். “துயர் கொண்டவுடன் நாம் பிறரை நோக்கி ஓடுகிறோம். பகிர்ந்துகொள்ளத் துடிக்கிறோம். ஆனால் பெருந்துயர் கொண்டதும் அனைத்து வாயில்களையும் மூடி தனிமை கொள்கிறோம். முற்றிலும் பிறர் அறியாது நம்மை ஒடுக்கிக்கொள்கிறோம். ஏனெனில் துயர்கள் மானுட உருவாக்கம், பெருந்துயர் என்பது தெய்வத்தின் கொடை” என்று அசலை சொன்னாள். “நீங்கள் இருவரும் முற்றாக விலகிக்கொண்டுவிட்டீர்கள். சென்ற பதினைந்தாண்டுகளில் நீங்கள் ஆண்டுக்கொருமுறை அவருடன் அரியணை அமர்ந்ததற்கு அப்பால் அவரை அணுகியதே இல்லை.”

காந்தாரி “மெய்தான், நானும் அத்தகைய பெருந்துயரில்தான் இப்பதினைந்து ஆண்டுகளை இங்கு கடந்தேன்” என்றாள். “ஆனால் அது அன்னையின் துயர். அது உடல் சார்ந்தது, எனவே பருவடிவு கொண்டது. இப்புவியில் பருப்பொருள் தன் அளவை விட்டு பெருகாதென்னும் தெய்வ ஆணையை கொண்டுள்ளது. அன்னையே, தந்தையின் துயர் இருளென, வெறுமையென நுண்வடிவானது. கணம் கோடிமடங்கென பெருகும் வல்லமை கொண்டது அது. அது கடல் எனில் உங்கள் துயர் துமி” என்றாள் அசலை. காந்தார அரசிகள் ஒன்பதின்மரும் பெருமூச்சுவிட்டனர். சத்யசேனை “மெய்தான், நாங்களும் அவரை முற்றாக கைவிட்டுவிட்டோம். எங்கள் துயரை வெல்ல அக்கையுடன் ஓருடலென ஒட்டிக்கொண்டோம்” என்றாள்.

தசார்ணை “சில நாட்களுக்கு முன் அவர் அறைக்குச் சென்று எதையோ அளித்தபோது மஞ்சத்திலிருந்து எழும்பொருட்டு என் கையை பற்றினார். என் உடல் சிலிர்த்து குளிர்ந்தது. அவர் ஏற்கெனவே இறந்துவிட்டாரென்றும் உடல் குளிர்ந்துவிட்டிருக்கிறதென்றும் எனக்குத் தோன்றியது. பின்னர் அவ்வறைக்குள் செல்வதைப்பற்றி என்னால் எண்ணவே இயலவில்லை. அவ்வுடலிலிருந்து குளிர்காற்று கிளம்பி அம்மஞ்சத்தையும் அறைகளையும் அங்கிருக்கும் பீடங்களையும் கலங்களையும் தண்ணென்றாக்கிவிட்டிருக்கிறது. குளிர்நீர் நிறைந்த சுனையில் முங்குவது போன்றது அவர் அறைக்கதவைத் திறந்து அவ்வறைக்குள் நுழைவது” என்றாள்.

“என் கனவில் அவர் வருகையிலெல்லாம் வெம்மை கொண்டிருக்கிறார். அவர் காதுகளிலிருந்தும் கண்களிலிருந்தும் சூளையின் துளைகளினூடாக தழல் என அனல் பீறிடுவதை கண்டிருக்கிறேன்” என்றாள் சுதேஷ்ணை. சத்யவிரதை “இருமுறை என் கனவில் அவர் வந்தார். அஞ்சி விழித்துக்கொண்டு அக்கையை நோக்கி ஓடிவந்தேன்” என்றாள். சம்ஹிதை “இங்கு அக்கையுடன் இருக்கையில் அவர் கனவுகளில் எழுவதில்லை. செம்மண் அலைகளெனப் படர்ந்து வான்விளிம்பால் எல்லையிடப்பட்ட காந்தாரப் பெருநிலத்தில் வாழமுடிகிறது” என்றாள்.

“நீங்கள் அனைவரும் அவர்மேல் உள்ளூர வெறுப்புத்துளி ஒன்றை கொண்டிருந்தீர்கள். அதையே அவருக்கு மைந்தர்களென பெருக்கி திருப்பியளித்தீர்கள். மைந்தர்கள் கணவர்களை நோக்கும் அன்னையரின் கண்மணிகளுக்குள் ஒளியென்றோ இருளென்றோ முதலில் தோன்றுகிறார்கள் என்று நூல்கள் சொல்கின்றன” என்றாள் அசலை. அவர்கள் எவரும் மாற்றுச்சொல் எடுக்கவில்லை. சற்று அசைந்த சத்யசேனை “ஏன் நாங்கள் அவரை வெறுக்கவேண்டும்?” என்றாள். “பெண்கள் கொழுநரை சற்றேனும் வெறுக்காமலிருக்க முடியாது, அரசி” என்றாள் அசலை. “ஏனென்றால் பெண்களின் முற்றுவகை முதிரா இளமையில் மட்டுமே. இளமையை இழப்பதே அவர்களின் துயர். அத்துயரின் விழிதொடு வடிவென இருப்பவர் கொழுநர்.”

அரசியர் அமைதியிலாழ்ந்து அமர்ந்திருந்தனர். விழிகள் ஒவ்வொரு கோணத்தில் தரையிலும் அருகிருந்த பொருட்களிலும் ஊன்றி தழைந்திருந்தன. “உங்கள் எவருக்கும் அவருடன் சொற்தொடர்போ உளத்தொடர்போ இன்றில்லை. அத்தொடர்பு உள்ளவர் சூதஅரசி அன்னை பிரகதி மட்டுமே” என்றாள் அசலை. காந்தாரி சீற்றத்துடன் “அவளா?” என்றாள். “ஆம், தாங்கள் சற்று அறிந்திருப்பீர்கள். இன்று ஒவ்வொரு நாளும் யுயுத்ஸுவின் அன்னை மட்டுமே அவரைச் சென்று சந்திக்கிறார். பகலெல்லாம் அவர் அறைக்குள் இருப்பவர் அவர் மட்டுமே. பேரரசர் அவருடனும் சஞ்சயனிடமும் யுயுத்ஸுவிடமும் மட்டுமே சொல்லெடுக்கிறார்” என்றாள் அசலை.

இளைய அரசியர் சீறி எழுவர் என்று அசலை நினைத்தாள். ஆனால் அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். காந்தாரி “ஆம், அவள் இதற்காக காத்திருந்தாள். அத்தனை துணைவியராலும் அவர் கைவிடப்படும்போது அருகே சென்றமர்ந்து தன் இடத்தை உருவாக்கிக்கொள்ளலாம் என்று எண்ணினாள். ஊழ் அதற்கான வாய்ப்பை அளித்தது” என்றாள். “நன்று, அம்மைந்தனுக்கு மணிமுடியும் அமைக!” அத்தனை அரசியரும் திகைப்புடன் விழிதூக்க அசலை துயருடன் புன்னகைத்தாள். “நான் இன்று விழைவதெல்லாம் சத்யவதி சென்றதுபோல காடணைவதை மட்டுமே…” என்றாள் காந்தாரி. “ஆனால் இங்கல்ல. மீண்டும் காந்தாரச் செம்புலத்திற்கு.”

“அன்னையே, உண்மையில் இப்படியொரு தருணம் அரசருக்கு வருமென்று எண்ணித்தான் தெய்வங்கள் அன்னை பிரகதியை அவருக்கு சேர்த்தனவோ?” என்றாள் அசலை. சத்யவிரதை உரத்த குரலில் “இப்படியெல்லாம் இதை விளக்கிக்கொள்ளவேண்டிய தேவையென்ன? அவர் காட்டை நிறைக்கும் மதகளிறு. ஆயிரம் பெண்டிர் அவருக்கு. யார் அமைந்தாலென்ன, மறைந்தாலென்ன?” என்றாள். “அது உண்மையல்ல என உங்களுக்குத் தெரியும்” என்றாள் அசலை. “இதைப்பற்றி நீ பேசவேண்டியதில்லை” என்றபடி சத்யவிரதை எழுந்து அருகே வந்தாள். “எதற்கு இப்போது வந்தாய்? எங்கள்மேல் பழிசுமத்தவா? அன்றி, அக்கையை துன்புறுத்தவா?”

கையசைவால் அவளை அமரவைத்த காந்தாரி “நீ சொல்வது மெய். அவரை நாங்கள் விலக்கினோம். அவ்விடத்தில் அவள் சென்று அமர்ந்தும்விட்டிருக்கிறாள். ஆனால் எனக்கு முள்முனையளவுகூட குற்றஉணர்வு இல்லை” என்றாள். “அன்று அவையில் எழுந்து சூழ்ந்து பெண்ணை துகில் களைந்து இழிவுபடுத்தியது அவருடைய குருதி. மைந்தரை தந்தையிலிருந்து பிரித்துப் பார்க்கவேண்டியதில்லை” என்றாள். அசலையின் இதழ் மெல்ல பிரிந்த ஓசையைக் கேட்டவள்போல “ஆம், அவர் பேரறத்தான் என்றும் பெருந்தன்மையே அன்றாட இயல்பென்று கொண்டவரென்றும் நான் அறிவேன். ஆனால் உள்ளாழத்தில் எங்கோ உறையும் இருள் ஒன்று அவருள்ளில் இருந்துவந்து மைந்தராகிப் பெருகி இந்நகரை நிறைத்திருக்கிறது” என்றாள் காந்தாரி.

“திரௌபதி சிறுமை செய்யப்பட்டபின் அவரை நான் சந்தித்தபோது நெஞ்சுடைந்து கதறி அழுதார். அவ்வழுகை எத்தனை மெய்யானது என்று எனக்குத் தெரியும். அதன் பின்னரும் பலநாட்கள் எண்ணி எண்ணி கலுழ்ந்தார். சொல்லிச் சொல்லி நெஞ்சாற்றாமல் கைகளால் தரையை ஓங்கி அறைந்துகொண்டு விம்மும் அவரை இளையவர்கள் கண்டிருக்கிறார்கள். அவ்வுணர்வுகள் முற்றிலும் மெய்யானவை. ஐயத்திற்கு இடமில்லை. ஆனால் அது அச்செயலை இயற்றியது தானே என்னும் உணர்விலிருந்து எழுந்ததல்லவா? அச்செய்தியைக் கேட்டதும் ஒருகணமேனும் மைந்தரென நின்று அவர் அதை நடிக்கவில்லையா? அவ்வினாவை நான் சென்றடைந்த அன்றே அவரிடமிருந்து ஒழிந்தேன்.”

உரத்த குரலில் காந்தாரி சொன்னாள் “அப்பழியிலிருந்து அவர் ஒருபோதும் விலகமுடியாது. தன் கைகளால் குருதிபலி அளித்து அப்பழியை அவர் ஈடுகட்டியாகவேண்டும். இரக்கத்துக்குரியவர் என்பதில் மாற்று எண்ணமில்லை எனக்கு. பழிக்குரியவர் என்பதிலும் பிறிதொரு கருத்தில்லை.” சிறிய உதடுகளை வெண்முனைப் பற்கள் கடித்து அழுத்த அவள் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். முகம் சிவந்து குருதிவண்ணம் கொண்டிருந்தது. கழுத்திலும் தோளிலும் கன்னங்களிலும் பச்சை நரம்புகள் புடைத்திருந்தன. மூச்சில் பெருமுலையின் இடுக்கு அசைந்தது.

அசலை பெருமூச்சுவிட்டு “இத்தனை பெருவஞ்சத்தையா நாம் இங்கு ஈட்டியிருக்கிறோம்?” என்றாள். பின்னர் “அன்னையே, நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் என் கணவரைப்பற்றி நானும் எண்ணியிருக்கிறேன். இப்போது இச்சொற்கள் என் செவியில் விழுகையில் ஆம் ஆம் என்று என் உள்ளமே எழுகிறது” என்றாள். காந்தாரி நாகச்சீறலென “ஆம், பெருவஞ்சமேதான். வஞ்சம் பாஞ்சாலத்து அரசியுடையது அல்ல, பெண்குலத்து முழுமைக்கும் உரியது. பேரன்னையருக்கு உரியது. அறிக, இந்தச் சிற்றறையில் அமர்ந்திருக்கும் நான் இம்மண் மறைந்த அத்தனை பேரன்னையரின் தசைவடிவம். எந்நிலையிலும் அச்செயலுக்காக இவர்களை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அன்னையென்று ஆயிரம் கைநீட்டி கண்ணீருடன் மைந்தருக்காக எழுகையிலேயே குருதி குருதி என்று கூவும் ஒரு கொடுந்தெய்வத்தையும் என்னுள் கொண்டிருக்கிறேன். அப்பழியின் முதல் புள்ளி பேரரசரே” என்றாள்.

அசலை உள்ளம் எடைகொண்டு மெல்ல அசைய அணியோசை ஒரு சொல்லென காந்தாரியிடம் எதையோ உரைத்தது. அவள் முகம்தூக்கி “அவர்மேல் காழ்ப்பு என்று சொன்னாய் அல்லவா? அது மெய். எங்கிருந்து எழுகிறது அது என்று அறிவாயா?” என்றாள். “முன்பு நானும் இதை எண்ணியதுண்டு. சுனையில் மிதக்கும் ஓர் இலையின் நிழல் ஆழத்தில் அதன் சேற்றுத்தட்டில் விழுந்திருப்பதைபோல அவர் உடல்கொண்ட இவ்விழியின்மை உள்ளாழத்தில் எங்கோ நிழலாக விழுந்து வடுவென பதிந்துள்ளது. அவர் கொண்ட நல்லியல்புகள் அனைத்தும் அதற்கெதிராக அவர் கற்று எண்ணி நிரப்பிக்கொண்டவையே. நாம் காணும் பேரரசர் அந்நல்லியல்புகளால் மட்டுமே ஆனவர். ஆனால் துலாவின் மறுதட்டில் சற்றே மிகுந்த எடையுடன் அக்கருந்துளி அமைந்திருக்கிறது. வென்று தன்னுள் ஒடுக்கி அவர் ஆண்ட அக்கருநிழலே மைந்தரென எங்கள் வயிற்றினூடாக எழுந்து பெருகி அவரைச் சூழ்ந்துள்ளது. அவை நடுவே அரசியை சிறுமை செய்த கீழ்மை எது? அது ஒரு விழியின்மை அல்லவா?”

அசலை “அன்னையே, அவ்விழியின்மை இல்லாத ஆண்கள் உண்டா? அவ்விழியின்மை இல்லாத ஒருவர் பெருந்தந்தை என்று ஆகமுடியுமா?” என்றாள். “தீர்க்கதமஸின் கதையை நாம் அறிவோம். பெருங்காமமும் பெருவிழைவும் பேராற்றலும் விழியற்றவை. விழியின்மையே வேதப்பெற்றியென்றான தீர்க்கதமஸின் குருதியிலிருந்து பிறந்தவர்களல்லவா இன்று பாரதவர்ஷத்தை நிறைத்திருக்கும் அரசர்களில் பெரும்பகுதியினர்?” காந்தாரி அதை எண்ணியதனால் மெல்ல தணிந்து “ஆம், தீர்க்கதமஸின் விழியின்மையே இங்கு படைக்கலங்களாகி பெருகி பாரதவர்ஷத்தை நிறைத்திருக்கிறது. மாறி மாறி கொன்று களம்பட்டு குருதி பெருக்கி அழியப்போவது அதுதான்” என்றாள்.

“அக்கையே, இத்தனைக்கும் அப்பால் நாம் ஒருபோதும் மறுத்துவிட முடியாத ஒன்றுண்டு. அவர் நம் மைந்தரின் தந்தை” என்றாள் சத்யவிரதை. சத்யசேனை “ஆம், நம் மைந்தரின் தந்தை அவர். நம் மைந்தர் எவராயினும் நாம் அளித்த குருதிகொண்டவர் என்பதை மறக்க முடியாது. உளம் அளித்தது தந்தையென்றால் உடல் அளித்தது நாம். அப்பழியிலிருந்து நமக்கும் மீட்பு கிடையாது” என்றாள். அசலை “நான் சொல்லவந்ததும் அதுதான், அன்னையே. தாங்கள் பேரரசரை சென்று சந்திக்கவேண்டும். அதற்கு முன் யுயுத்ஸுவையும் அவர் அன்னையையும் சந்தித்தாகவேண்டும்” என்றாள். காந்தாரி “நானா?” என்றாள். “ஆம், அது தாங்கள் இறங்கும் எளிமையின் இறுதி எல்லை என்று நானும் அறிவேன். மைந்தர்பொருட்டு அங்குவரை நீங்கள் சென்றீர்கள் என்று இருக்கட்டும்” என்றாள் அசலை.

“பிரகதியை நான் இன்றுவரை அரசவிழாக்களிலன்றி எங்கும் சந்தித்ததில்லை. முறைமைச்சொற்களுக்கு அப்பால் ஒன்றும் பேசியதில்லை” என்றாள் காந்தாரி. “ஆனால் யுயுத்ஸுவை மைந்தர் என நெஞ்சிலேற்றியிருக்கிறீர்கள். அதுவே அவ்வன்னைக்கு நீங்கள் அளிக்கும் நற்சொல்தான். அன்னை பிரகதியிடம் தாங்கள் நேரில் பேச வேண்டிய சொல் இதுவே என முன்னரே ஊழ் வகுத்திருக்கும் போலும்” என்று அசலை சொன்னாள். “அவர்களிடம் சென்று சொல்லுங்கள் அன்னையே, அவர்களின் சொல்லே இன்று பேரரசரின் உள்ளத்தில் நுழையும் என்று. அவர் கட்டிவைத்திருக்கும் கோட்டைச் சுவர்கள் அனைத்தையும் கடந்து சென்று ஆழத்தில் ஒளிந்திருக்கும் அவ்வெளிய உயிரிடம் அன்னை பிரகதி பேச முடியும்.”

“நடுங்கி கூசி சிறுத்து அமர்ந்திருக்கும் அவ்வுயிரிடம் அவர் சொல்லட்டும், இத்தருணத்தில் இனியும் ஒன்று அவர் செய்வதற்கு உள்ளதென்று. யுதிஷ்டிரர், பீமசேனர், அர்ஜுனன், இளையோர் இருவரும் என ஐவரும் செவிகொள்ளும் ஒரு சொல் இன்று பேரரசருடையதே. ஏனென்றால் இப்புவியில் அவர்களுக்குச் செவியறியும் தந்தைசொல் என இருப்பது இது ஒன்றே” என்றாள் அசலை. காந்தாரி தலையசைத்தாள். தாழ்ந்த குரலில் “அதைவிடவும் பேரரசி குந்தி அவர் சொல்லை கேட்பார். எங்கோ உள ஆழத்தில் யாதவப் பேரரசிக்குள் நம் பேரரசர் வாழ்கிறார்…” என்றாள்.

காந்தாரி கைநீட்டி சொல்மறித்து “பெண்டிருக்குள் என்றாலும் நாம் பேசக்கூடாத சில உள்ளன” என்றாள். அசலை தணிந்து “ஆம்” என்றாள். சத்யவிரதை “மெய்தான், பேரரசரின் சொல்லென ஒன்றை யாதவஅரசி அடைந்தால் அவள் மறுக்க மாட்டாள்” என்றாள். காந்தாரி “அதைவிட பீமன் மறுக்கமாட்டான். தெய்வங்களுக்குப் பின் அவன் உள்ளத்தில் வாழும் மானுடன் பேரரசராகவே இருப்பார். தந்தையென பிறிதொருவரைக் கொள்ள அவனால் இயலாது” என்றாள். அசலை “பேரரசரின் சொல் ஒன்று பாண்டவர்களைச் சென்று அடையட்டும். எதன்பொருட்டும் இப்போருக்கு அவர்கள் துணியலாகாதென்று அவர்களிடம் பேரரசர் சொல்லவேண்டும்” என்றாள்.

“எப்படி அதை அவர் சொல்லமுடியும்? அவர்களுக்கு உகந்த பங்கை அளிக்க தன் மைந்தருக்கு ஆணையிடும் இடத்தில் அவர் இல்லையே” என்றாள் காந்தாரி. “மெய். கௌரவர்களின் தந்தையென அமைந்து பேரரசர் அச்சொல்லை அனுப்பவேண்டியதில்லை. பாண்டவர்களின் தந்தையென அச்சொல் எழட்டும். கௌரவர் அளிப்பது எதுவோ அதை பெற்றுக்கொண்டு அமையும்படி அவர் ஆணையிடட்டும்.”

“எதுவோ என்றால்?” என்றாள் சத்யசேனை. “எதுவாயினும். தாங்கள் கோருவன அனைத்தையும்கூட போரைத் தவிர்ப்பதற்காக அவர்கள் கைவிடவேண்டுமென்று பாண்டவர்களுக்கு பேரரசர் ஆணையிடட்டும். அவ்வாணை தலைமேல்கொள்ளப்படும், ஐயமே வேண்டியதில்லை” என்றாள் அசலை. “ஆனால் பேரரசி பிரகதியை சந்திப்பதென்பது…” என்று சத்யசேனை சொல்லத்தொடங்க காந்தாரி கைநீட்டி “நான் செல்கிறேன். பிறிதொரு எண்ணம் தேவையில்லை. நான் செல்கிறேன்” என்றாள்.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 14

பகுதி இரண்டு : பெருநோன்பு – 8

blவிகர்ணனின் துணைவி தாரை பானுமதியின் அறைவாயிலில் நின்றிருந்தாள். அகலத்திலேயே அசலையைக் கண்டதும் அணிகள் குலுங்க ஓடி அணுகி “அக்கையே, தங்களை அரசி இருமுறை உசாவினார்” என்றாள்.

அசலை களைத்திருந்தாள். அன்று காலைமுதலே அவளை பெருவிசையுடன் இயக்கிய உள்ளாற்றல் சற்றுமுன் தன் அறையிலிருந்து கிளம்பிய கணம் ஏனென்றறியாமல் முற்றிலுமாக வடிந்துமறைய நின்றிருக்கக்கூட முடியாமல் உடல் எடைகொண்டு இருபுறமும் நிலையழிந்து தள்ளாடியது. மீண்டும் சென்று மஞ்சத்தில் படுத்து விழிகளை மூடிவிட வேண்டுமென்று தோன்றியது. புற உலகென சூழ்ந்திருக்கும் காட்சிகளிலிருந்தும் ஓசைகளிலிருந்தும் முழுமையாக அவள் அகம் தன்னை விடுவித்துக்கொண்டது. அந்த விடுபடல் நிகழ்ந்த கணமே அனைத்தும் பொருளற்றவையாயின. பொருளற்றவற்றை உள்ளம் விலக்கத்தொடங்கி மேலும் சற்று நேரத்தில் அவள் எதையும் அறியாதவளானாள். அவள் கால்களே நடந்துகொண்டிருந்தன.

பின்னர் அவளது அணுக்கச் சேடி “அரசி” என்று பலமுறை அழைத்தபோதுதான் தான் நின்றுவிட்டிருப்பதை உணர்ந்தாள். அடுத்த அடியை எடுத்து வைப்பது நெடுந்தொலைவை தாவிக்கடப்பதுபோல் தோன்றியது. மலைவிளிம்பில் நின்றிருப்பதுபோல் ஆயம்கூட்டி, கால்பதறி, மூச்சிழுத்து, முழு உளவிசையாலும் காலை உந்தி தூக்கி வைத்து அதை கடந்தாள். அதன் பின் ஒவ்வொரு காலடியையும் உளம் செலுத்தி தூக்கிவைக்க வேண்டியிருந்தது. எங்கு செல்கிறோம் என்றும் எதை விழைகிறோம் என்றும் அவளால் எண்ணிக்கொள்ள இயலவில்லை. பானுமதியின் அறை வரைக்கும் செல்வதற்கு அப்பால் தனக்கென்று இலக்கேதுமில்லை என்று தோன்றியது.

தாரையைப் பார்த்த பின்புகூட முதல் சில கணங்கள் அவள் எவளென்றே புரிந்துகொள்ள முடியவில்லை. அணிகள் குலுங்க, ஆடை நலுங்க, அவள் ஓடி அருகணைந்து மூச்சிரைக்க பேசத்தொடங்கிய பின்னரே அவளை உணர்ந்து தோள்மேல் கைவைத்தாள். “உடல்நலமில்லையெனத் தோன்றுகிறீர்கள்” என்றாள் தாரை. “ஆம், துயில்நீப்பின் களைப்பு” என்றாள் அசலை. சொன்ன பின்னரே அது மெய் என்று தோன்றியது. அவள் முந்தையநாளிரவு முழுக்க துயிலின்றி விழித்து படுத்திருந்தாள். எண்ணங்கள் அவளை மீறி பெருகிச் சென்றுகொண்டிருந்தன, ஒன்றுடனொன்று இணையாத சொற்களாகவும் காட்சிகளாகவும்.

பானுமதியின் முதலறைச்சேடி அறைக்கதவைத் திறந்து வெளிவந்து அசலையைப் பார்த்து “வருக, அரசி. பட்டத்தரசி புறப்படவிருக்கிறார்கள்” என்றாள். அசலை “வா” என்று சொல்லிவிட்டு பானுமதியின் அறைக்குள் நுழைந்தாள். “என்னடி, ஏன் பிந்திவிட்டாய்? அரசர் அவையமர்வதற்காக எனக்காக காத்திருக்கிறார் என்று செய்தி வந்தது. நீயில்லாமல் செல்ல வேண்டாமென்று நான் பொழுதுகடத்தினேன்” என்றாள் பானுமதி. அசலை புன்னகைத்து “நான் அணிகொள்ள சற்று பொழுதாகியது” என்றாள். “அப்படியொன்றும் கருதி அணி செய்ததுபோல் தெரியவில்லையே” என்றபின் “இது சிற்றவை. அரசருடன் இதில் பேரரசரும் பேரரசியும் கிருபரும் துரோணரும் விதுரரும் மட்டுமே கலந்துகொள்கிறார்கள்” என்றாள்.

“ஆம்” என்றாள் அசலை. “பீஷ்ம பிதாமகர் அரசரிடம் தனது முடிவை இன்று அறிவிப்பார் என்று அவருடைய மாணவர் சொன்னார். நீ கூறியதுபோல அந்த முடிவு நமக்குகந்ததே என அவர் எண்ணுவதாகச் சொன்னார். இந்த அவையிலேயே அரசரை அவரது எண்ணங்களிலிருந்து நம்மால் பின்னிழுக்க முடியும் என்றால் நன்று” என்றாள். அசலை ஒளியற்ற புன்னகையுடன் “பார்ப்போம்” என்றாள். “என்னடி? நேற்று இரவு வரை முழுநம்பிக்கையுடன் இருந்தவள் நீ. இன்று என்ன ஆயிற்று?” என்றாள் பானுமதி. “இல்லை, இப்போதும் நம்பிக்கையுடன்தான் இருக்கிறேன். சற்று தலை வலிக்கிறது. நேற்றிரவு சரியாக துயிலவில்லை” என்று அசலை சொன்னாள்.

அவளை ஐயத்துடன் பார்த்தபின் பானுமதி “கிளம்புக!” என்றாள். அவள் கைகாட்ட சேடியர் மங்கலத்தாலங்களுடன் முன்னால் சென்றனர். நிமித்தச்சேடி சங்கு ஒலித்து அவள் கிளம்புவதை அறிவித்தாள். பானுமதியுடன் அசலையும் தாரையும் இருபக்கமும் நடந்தனர். பானுமதி தாழ்ந்த குரலில் “இன்று பிதாமகரின் கூற்றுக்குப்பின் பிறிதொரு முடிவெடுக்க அரசருக்கு சூழல் இருக்காது என எண்ணுகிறேன் துரோணரும் கிருபரும் பிதாமகருடன் நின்றிருப்போமென சொல்லளித்துள்ளார்கள். பேரரசியும் பேரரசரும் போர் தவிர்க்கப்பட்டாகவேண்டுமென்று உறுதி கொண்டிருக்கிறார்கள். நானும் நீயுமிருக்கிறோம். அரசருக்கு உகந்ததைப் பேச இன்று சிற்றவையில் எவரும் இருக்கப்போவதில்லை” என்றாள். மேலும் குரல் தழைத்து “இதை எண்ணியே அங்கர் இந்த அவைக்கு வராமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றாள்.

அசலை “காந்தாரரும் கணிகரும் வரமாட்டார்களல்லவா?” என்றாள். “ஆம், அவர்களிருவரும் இன்று நகர்புகும் மாளவ அரசரை வரவேற்கும்பொருட்டு கோட்டை முகப்புக்கு சென்றிருக்கிறார்கள். சிற்றவை முடிந்த பின்னரே இப்படி ஒன்று நடந்தது காந்தாரருக்கு தெரியவரும்” என்றாள் பானுமதி. அசலை மீண்டும் நீள்மூச்செறிந்து “பார்ப்போம்” என்றாள். “உன்னுடைய சோர்வு எனக்கும் தொற்றிக்கொள்கிறது. இந்நாளில் இவ்வரண்மனையிலுள்ள அனைவருமே உளச்சோர்வு கொள்வதற்கான உந்துதலுடன் இருக்கிறார்கள். அஸ்தினபுரியில் இன்று சுட்டுவிரலால் உந்தி களிறுகளை சாய்த்துவிடமுடியும் என்று நேற்றுமுன்னாள் ஒரு விறலி பாடினாள். ஆம் என்று நான் எண்ணிக்கொண்டேன்” என்று பானுமதி சொன்னாள்.

“நான் சோர்வுறவில்லை, அக்கையே. நன்று நிகழுமென்றே எண்ணுகிறேன்” என்று அசலை சொன்னாள். அச்சொற்களை அவள் தனக்கென்றே சொல்லிக்கொண்டாள். ஆம், சோர்வு கொள்வதற்கு என்று எதுவுமில்லை. போரைத் தவிர்க்கவேண்டுமென்பதில், அது முதன்மையாக குலப்பிதாமகராகிய தனது கடமை என்பதில், பிதாமகர் உறுதி கொண்டிருப்பதாக விஸ்வசேனர் அவளிடமும் சொன்னார். அவையில் பிறிதொன்றை பீஷ்மர் சொல்ல வாய்ப்பில்லை அதன் பின்னர் அரசர் எந்நிலைப்பாடும் எடுக்க முடியாது. பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அஸ்வத்தாமனும் இன்றி துரியோதனர் களமிறங்கமுடியாது.

அங்க நாட்டரசரின் ஆற்றலை அனைவரும் அறிவர் என்றாலும் அவர் படைமுகம் நின்றால் ஷத்ரிய அரசர்கள் பின்நிற்பார்கள் என்று சொல்ல முடியாது. அவருடைய குலம் அவர்களுக்கு ஏற்புடையதல்ல. மேலும் வேதச்சொல் காக்க வில்கொண்டு எழுவதாக ஆரியவர்த்த மன்னர்கள் கொண்டுள்ள தன்விளக்கம் அங்கர் களம் முன் நிற்பதனாலேயே பொய்யென்றாகும். அவர் நாகவேதத்தின் காவலராக சொல்லுறுதி கொண்டவரென்பது செவியுலாச் செய்தியாக அனைவரும் அறிந்ததே.

எந்தக் கோணத்தில் எண்ணினாலும் பிறிதொன்று நிகழ வாய்ப்பில்லை. ஆனால் எண்ணி எண்ணி உள்ளம் முன்செல்கையில் அறியாது பின்னகர்ந்துகொண்டிருக்கும் ஆழம் எதை அறிந்தது? அதற்கென்று வேறு புலன்கள் உள்ளனவா என்ன? அசலை மீண்டும் பெருமூச்சுவிட்டாள். உளச்சுமை ஏன் பெருமூச்சை எழுப்புகிறது? உள்ளிருக்கும் கரிய நாகமொன்றின் சுருளவிழும் சீறல்போலும் அது.

சிற்றவை வாயிலில் நின்றிருந்த விகர்ணன் பானுமதியைக் கண்டதும் கைகூப்பி “வருக அரசி, தங்கள் வரவை அவைக்கு அறிவிக்கிறேன்” என்றான். பானுமதி “நன்று திகழ்க!” என்று வாழ்த்தினாள். அவளுக்கு முன் மங்கலத்தாலத்துடனும் வலம்புரிச்சங்குடனும் நின்றிருந்த சேடியர் இருபுறமும் தலைவணங்கி அகன்றனர். விகர்ணன் உள்ளே சென்று அவள் வரவை அறிவித்தபின் கதவைத் திறந்து பணிந்து நிற்க கைகளைக் கூப்பியபடி பானுமதி அறைக்குள் நுழைந்தாள். அசலையும் தாரையும் கைகளைக் கூப்பியபடி பின்னால் நுழைந்தனர்.

நீண்ட சிற்றவைக்கூடத்தில் மான்தோலிட்ட பீடங்களில் கிருபரும் துரோணரும் அமர்ந்திருந்தனர். அவள் வருகையைக் கண்டதும் அவர்கள் இருவரும் எழுந்து கைகூப்பினர். அவர்களைப் பணிந்து வணங்கி வாழ்த்துபெற்று வலப்பக்கமாக ஒதுங்கி நின்றாள். அவளருகே அசலையும் தாரையும் நின்றனர். பானுமதி அவை புகுந்த செய்தி சங்கொலியாக அறிவிக்கப்பட்டதும் அருகிலிருந்த அறையிலிருந்து துரியோதனன் துச்சாதனன் தொடர கைகூப்பியபடி அறைக்குள் நுழைந்தான். துரோணரையும் கிருபரையும் குனிந்து கால்தொட்டு சென்னிசூடி வணங்கியபின் தன் அரியணைப்பீடத்தருகே கூப்பிய கைகளுடன் அமர்ந்தான்.

பிறிதொரு சங்கொலி எழ மறுபக்க அறையிலிருந்து சஞ்சயனின் கைகளைப் பற்றியபடி திருதராஷ்டிரரும் சத்யசேனையால் வழிநடத்தப்பட்டு காந்தாரியும் உள்ளே நுழைந்தனர். துரியோதனனும் பானுமதியும் சென்று திருதராஷ்டிரரையும் காந்தாரியையும் கால்தொட்டு வணங்கி வாழ்த்து பெற்றனர். கிருபரையும் துரோணரையும் வணங்கியபின் திருதராஷ்டிரர் தனக்குரிய பெரிய பீடத்தில் அமர்ந்தார். அவர் அருகே காந்தாரி அமர்ந்தாள். துரியோதனன் அரியணைப்பீடத்தில் அமர, அருகமைந்த பீடத்தில் பானுமதி அமர்ந்தாள். துரியோதனனுக்கு வலப்பக்கம் கைகளைக் கட்டியபடி துச்சாதனன் நின்றான்.

அவையமைப்பாளராகிய கனகர் கைகாட்ட ஏவலர் தாலங்களில் இன்நீரும் வாய்மணமும் கொண்டுவந்து அனைவருக்கும் அளித்தனர். எவரும் ஓரிரு முறைச்சொற்களுக்கு அப்பால் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. உடலசைவுகளின் ஒலி மட்டுமே அவைக்குள் நிறைந்திருந்தது. அசலை அந்த அறை தனக்குள் என எதையோ முணுமுணுத்துக்கொண்டிருப்பதாக எண்ணினாள். கண்ணுக்குத் தெரியாத எவரோ அங்கு உலவுவதின் ஓசை என்று பின்னர் தோன்றியது. அறியாத பேருருவங்கள் கைகளை கோத்துக்கொள்கின்றன. உடல்கள் உரச, மூச்சொலிகள் ஒன்றையொன்று கலைக்க, விழிகளை இணைத்துக்கொண்டு மெல்ல சுற்றிவருகின்றன. மாபெரும் மற்போரொன்றின் தொடக்கம் என.

வாய்மணத்தை மென்றபடி திருதராஷ்டிரர் “விதுரன் எங்கே?” என்றார். கனகர் “வந்துகொண்டிருக்கிறார். பிதாமகர் கிளம்பிவிட்டாரா என்பதை உறுதிசெய்துவிட்டு வருவார்” என்றார். துரியோதனன் “காந்தாரர் வருகிறாரா?” என்றான். கனகர் “அவர் மாளவரை எதிர்கொள்வதற்காக கோட்டை முகப்புக்கு சென்றிருக்கிறார். மாளவருக்குரிய அரண்மனைக்கு அவரை கொண்டுசென்று அமர்த்திவிட்டு அங்கிருந்து கணிகரை அழைத்துக்கொண்டு வருவார்” என்றார். அந்த உரையாடலும் அங்கிருந்த தயக்கத்தை உடைக்கவில்லை. மேலும் சற்று அமைதி நீடித்தது.

துரியோதனன் “இச்சிற்றவைக் கூட்டம் எதன்பொருட்டு? பிதாமகர் என்னிடம் எதையோ சொல்ல விழைவதாக எனக்கு சொல்லப்பட்டது” என்றான். கனகர் “அதை அமைச்சரே தங்களிடம் உரைப்பார், அரசே. இதோ, அவர் வந்துவிட்டாரென்றே எண்ணுகிறேன். நான் அழைத்து வருகிறேன்” என்றபின் கதவைத் திறந்து வெளியே சென்றார். அசலை தன் உள்ளம் மெல்ல அச்சம்கொள்ளத் தொடங்குவதை உணர்ந்தாள். அச்சமூட்டும் எதையோ அவள் விழிகளுக்கு அப்பாலிருக்கும் தன்னுணர்வு ஒன்று கண்டுவிட்டிருந்தது. அதை எங்கு கண்டேன் என அவள் விழிகள் வியந்தபடி, பதற்றமடைந்தபடி அறையை சுற்றிவந்தன. ஒவ்வொரு முகங்களாகத் தொட்டு ஒவ்வொரு உடல்களாக வருடி எதையும் காணாமல் சலித்து மீண்டும் மீண்டும் சுழன்றலைந்தன.

கதவு திறந்து உள்ளே வந்த கனகர் தலைவணங்கி “அமைச்சரும் பிதாமகரும் காந்தாரரும் அவைபுகுகிறார்கள், அரசே” என்றார். பானுமதி திகைப்புடன் அசலையைப் பார்க்க கால்கள் தளர்ந்து அசலை சற்று பின்னடைந்து சுவருடன் சாய்ந்து கொண்டாள். துரியோதனன் “நன்று, அனைவருமே வந்துவிட்டார்கள். இனி தடையேதுமில்லை. அவை நிகழட்டும்” என்றான். கனகர் தலைவணங்கி வெளியே சென்று முகமன் கூறி வரவேற்று பீஷ்மரையும் சகுனியையும் விதுரரையும் உள்ளே அழைத்துவந்தார்.

விதுரர் அறைக்குள் நுழைந்த முதற்கணமே துரோணரை நோக்கி விழிவிலக்கிக்கொள்வதை அசலை கண்டாள். உடனே அவளுக்கு தன் உளம் தொட்ட அந்த செய்தியென்ன என்று புரிந்தது. துரோணரின் விரல்கள் ஒன்றையொன்று தட்டிக்கொண்டிருந்தன. அது அவர் அறிந்திருக்கிறாரென்றும் எதிர்பார்க்கிறாரென்றும் அதில் மகிழ்கிறாரென்றும் காட்டின. அங்கு நிகழப்போவதென்ன என்று ஐயமின்றி அவள் ஆழத்தில் உறையும் பேருருக்கொண்ட பிறிதொன்று அறிந்துவிட்டிருந்தது. அவள் உள்ளத்திலிருந்து பதற்றம் முழுமையாக விலகியது. அதுவரை இருந்த சோர்வும் அகல கைவளைகள் ஒலிக்க மார்பில் கைகளை கட்டிக்கொண்டு தயக்கமற்ற விழிகளால் அவைநுழைந்த பீஷ்மரையும் சகுனியையும் பார்த்துக்கொண்டு நின்றாள்.

பீஷ்மர் கைகூப்பி நிற்க துரோணரும் கிருபரும் எழுந்து கைகூப்பி “பிதாமகருக்கு வணக்கம். தங்கள் சொல்கேட்கும் இந்நாள் சிறப்புறுக!” என்று முகமன் உரைத்தனர். திருதராஷ்டிரரும் காந்தாரியும் எழுந்து கைகூப்பி “வாழ்த்துங்கள், பிதாமகரே” என்றனர். வலக்கையால் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி பின்னர் அப்பால் நின்றிருந்த அரசியரை நோக்கி வாழ்த்தும் முகமாக கைகாட்டிவிட்டு அவர் தன் பீடத்தில் அமர்ந்தார். துரியோதனனும் பானுமதியும் அவர் கால்களைத் தொட்டுவணங்கி வாழ்த்து கொண்டனர். சகுனி துரோணரையும் திருதராஷ்டிரரையும் வணங்கிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தார்.

விதுரர் அவை நடுவே நின்று “பிதாமகர் பீஷ்மரின்பொருட்டு இந்தச் சிற்றவை கூட்டப்பட்டுள்ளது. சில முதன்மை முடிவுகளை அவர் எடுத்திருப்பதாகவும் இந்த அவையில் அவற்றை அரசருக்கும் பிறருக்கும் உரைக்க விரும்புவதாகவும் கூறினார். இங்கு எடுக்கும் முடிவுக்குப் பின்னரே அரசப் பேரவையில் இதை முன்வைக்க வேண்டுமென்று விழைந்தார். நலம் திகழ்க!” என்றார். கனகரும் சஞ்சயனும் தலைவணங்கி வெளியே சென்றனர். விதுரரும் திரும்ப திருதராஷ்டிரர் “நீ எங்கே செல்கிறாய், மூடா?” என்றார். விதுரர் “இது அரசகுடியினருக்குள் மட்டும் நிகழும் உரையாடலாக அமையட்டும் என்று பிதாமகர் விரும்பியமையால்…” என்றார்.

“அதைத்தானே சொன்னேன்? நீயின்றி எப்படி அவை முழுமையடையும்? சொற்பொருளை நீ விளக்காமல் வேறு யார் செய்வார்கள்?” என்றார் திருதராஷ்டிரர். “அறிவிலி…” என தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டு தலையை அசைத்தார். “இருக்கிறேன், மூத்தவரே” என்றார் விதுரர். “எதையுமே சொன்னால் மட்டும் புரிந்துகொள்… மூடன்” என்றார் திருதராஷ்டிரர். “இங்கே வந்து என் அருகே அமர்க!” விதுரர் “இல்லை மூத்தவரே, நான் இங்கு நின்றுகொள்கிறேன்” என்று சொன்னார்.

அசலை அங்கு நிகழ்ந்த முறைமைகளையும் வணக்கங்களையும் விழியசைவுகளால் நோக்கிக்கொண்டு நின்றாள். அவை ஒவ்வொன்றும் முற்றாக வகுக்கப்பட்டிருந்தன. மீண்டும் மீண்டும் ஆற்றப்பட்டு பழுதற்ற அசைவுகள் கொண்டிருந்தன. ஒவ்வொரு சொல்லும் பல்லாயிரம் முறை கூறப்பட்டதன் முழுமை பெற்றிருந்தன. ஒவ்வொன்றும் அத்தனை பழகியதாக பிழையற்றதாக மாறுந்தோறும் அவை குறிக்கும் உறவுகள் மேலும் சிக்கலானவையாக, உள்மடிப்புகள் மிக்கவையாக மாறிக்கொண்டிருந்தன. முதலில் இன்சொற்கள் அங்குள்ள சிடுக்குகள் அனைத்தையும் மறைப்பவையாக ஆயின. பின்னர் அவ்வுள முடிச்சுகளை ஒவ்வொருவரும் பிறருக்குணர்த்தும் அடையாளங்களாக உருமாற்றம் பெற்றுவிட்டிருந்தன.

முறைமைகள் அனைத்தும் முடிந்த பின்னர் சொற்கள் எழவில்லை. ஒவ்வொருவரும் தங்களை அங்கு நிகழ்த்துவதைப்பற்றி எண்ணியபடி, பிறரை கூர்ந்தபடி, தங்கள் அறைகளின் வாயில்களுக்கு அப்பால் தயங்கி நின்றிருந்தனர். எத்தனை நேரம் அது நீளுமென்று பார்க்கலாமென்று அசலை எண்ணினாள். முதலில் அவ்வமைதியை பீஷ்மரே உடைப்பார் என்று அவள் அறிந்திருந்தாள். அங்கிருந்தவர்களில் முறைமைகளுக்கு அப்பால் செல்பவர் அவர் ஒருவரே. தான் கிளம்பிவந்த கங்கர்நாட்டுக் காடுகளில் தன் பெரும்பகுதியை இன்னமும் வைத்திருப்பவர். தன்னை முற்றிலும் மறைத்து பிறிதொருவராக காடுகளிலும் பாலைகளிலும் அறியா நகர்களிலும் அலைபவர்.

காந்தாரியின் மூச்சொலி கேட்டது. கிருபர் அசைந்தமர்ந்தபோது அவரது கை பீடத்தின் கைப்பிடியில் முட்டிய ஓசை எழுந்தது. மீசையை மெல்ல நீவிவிட்ட துரியோதனனின் கங்கணம் குலுங்கியது. பானுமதியின் அணிகள் மெல்ல அசைந்து ஒலித்தன. சாளரத் திரைச்சீலை காற்றில் இருமுறை படபடத்து அமைந்தது. அப்பால் தோட்டத்தில் பறவைகளின் ஓசைக்கு நடுவே அறியாத பறவையொன்றின் நீளொலி எழுந்தமைந்தது. மிகத் தொலைவில் உலோக ஓசையொன்று செவித்தீற்றலாக கடந்து சென்றது. எவரோ எங்கோ மழுங்கிய குரலில் எதையோ ஆணையிட்டனர்.

அசலை மீண்டும் துரோணரை பார்த்தாள். அவர் விழிவிலக்காது பீஷ்மரையே பார்த்துக்கொண்டிருந்தார். அவரை தான் அறிந்துவிட்டேன் என்பதை அவருக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று அசலை விரும்பினாள். அவர்மேல் விழிநிறுத்தி நின்றாள். நோக்கை உணர்ந்து தடுமாறி அவளை நோக்கிய துரோணர் அவள் விழிகளை சந்தித்ததும் பதறி திரும்பிக்கொண்டார். ஒன்றுடன் ஒன்று கோக்கொண்டிருந்த விரல்கள் விலகின. இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடியைப் பற்றி நடுங்கும் விரல்களால் அதை வருடத் தொடங்கினார். மீண்டும் அவர் நோக்கு வந்து அசலையின் கண்களை சந்தித்து மீண்டது. மூச்சு எழ அதை அடக்கி தாடியை விரல்களால் சுழற்றி நீவியபடி கண்களை சரித்தார். அவர் முகம் சினம்கொண்டதுபோல, நாணுவதுபோல சிவந்தது.

பீஷ்மர் சற்று முன்னால் சரிந்த ஓசை கேட்டு அனைவரும் அவரை நோக்கினர். அவர் “இந்த அவையில் நான் கூறுவதற்கு ஒன்றேயுள்ளது. நேற்று பேரரசியும் அதன்பின் இளைய அரசியும் வந்து என்னை பார்த்தனர். இப்போரை நிறுத்தவேண்டுமென்றும் இது என் கொடிவழியினரை பேரழிவுக்கு இட்டுச் செல்லுமென்றும் அறிவுறுத்தினர். இப்போரில் குடித்தலைவனாகவும் நாற்படை நடத்துபவனாகவும் நான் கலந்துகொள்ள முடியாதென்று இங்கு அறிவிக்க வேண்டுமென்று கோரினர். நேற்று இரவு முழுக்க அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார்.

“என்னை எவ்வாறு நான் வனைந்துகொள்கிறேன் என்பது முதன்மையான வினா என்று இன்று புலரியில் கண்டடைந்தேன். இளஅகவையில் வரலாற்றுத்தலைவனாக நான் என்னை எண்ணிக்கொண்டேன். நானறிந்த மெய்மையின் அடிப்படையில் வரலாற்றை திசைதிருப்ப வேண்டுமென்றும் மாற்றியமைக்க வேண்டுமென்றும் கற்பனை செய்தேன். நீங்கள் அனைவரும் அறிந்ததுபோல் அம்பெய்து ஆற்றுக்கு அணைகட்ட முயன்றவன் நான். கங்கையை அவ்வாறு அணைகட்ட இயலாதென்று இந்த அகவையில் உணர்கிறேன். கங்கையை அம்பெய்து நிறுத்தும் ஆற்றல்கொண்ட தெய்வங்கள்கூட விண்ணுலாவும் முகில்பெருக்கை நிறுத்த இயலாது.”

“பின்னர் என்னை இக்குடியின் பிதாமகன் என்று எண்ணிக்கொண்டேன். என் கண்ணெதிரில் இவர்களின் வாழ்வழியலாகாதென்ற இலக்கொன்றை முன்வைத்து இதுநாள் வரை வாழ்ந்தேன். அதுவும் என் நெஞ்சுக்கும் அறிவுக்கும் கைகளுக்கும் அப்பாற்பட்டதென்று இப்போது உணர்கிறேன். இன்று என்னை எளிய முதுமகன் மட்டுமே என எண்ணுகிறேன். அதுவாக என்னை நிறுத்திக்கொள்கையிலேயே என்னால் இயன்ற ஒன்றை உறுதியாக இயற்ற முடியும்” என்றார் பீஷ்மர். “அவையீரே, முதுமகனாகிய நான் இரண்டு நெறிகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டவன். என் அன்னையரும் தந்தையரும் குலமும் மூதாதையரும் எனக்களித்த ஆணைகளுக்கு முதலில். நான் பிறருக்கு அளித்த சொற்களுக்கு பிறகு. அதையன்றி பிறிதனைத்தையும் என்னிலிருந்து உதிர்த்துவிட முடிவெடுத்தேன்.”

“எந்நிலையிலும் அஸ்தினபுரியின் முடிக்குக் காவலாக படைக்கலமேந்தி துணை நின்றிருப்பேன் என்பது என் அன்னை சத்யவதிக்கும் தந்தை சந்தனுவுக்கும் நான் அளித்த சொல். அதிலிருந்து எதன்பொருட்டும் நான் பிறழ முடியாது. தொல்காலம் முதல் இக்குடி பேணிவரும் நெறிகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவன் என்பது நான் என் பிறப்பால் தலைக்கொண்ட கடமை. இங்கு எவரை அரியணை அமர்த்தவேண்டுமென்பது எனது பொறுப்பல்ல. அரியணை அமர்ந்தோருக்குக் காவலென அமைவதே நான் செய்யக்கூடியது. எது குடிமுறையோ அதை பிழையின்றி பேணியாகவேண்டியவன் நான்.”

“குலநெறிகளின்படி இந்த மணிமுடி என் மைந்தன் திருதராஷ்டிரனுக்குரியது. பதினெட்டு ஆண்டுகளுக்கு அவனால் பாண்டுவுக்கு கையளிக்கப்பட்டது. அச்சொல் மூதாதையருக்கும் தெய்வங்களுக்கும் முன் என் விழிசெவி சான்றாக அளிக்கப்பட்டதாகையால் எந்நிலையிலும் மாற்றத்தக்கதல்ல. அவனால் கூட. ஆகவே பதினெட்டாண்டுகள் அகவை நிறைவடைகையிலேயே திருதராஷ்டிரனின் மைந்தன் துரியோதனன் அரியணைக்குரியவனாகிவிட்டான். அவன் கோல்கொண்டு முடிசூடி இங்கு அமர்ந்திருப்பது மாறாத குலநெறிகளின்படியே.”

“ஒரு குடியின் மூத்த மைந்தனே முடிசூட வேண்டுமென்பது தொல்மரபு. ஆனால் அவர்களில் எந்த மைந்தன் முடிசூட வேண்டுமென்று தந்தையர் விரும்புகிறார்களோ அவர்களுக்கே மேலும் உரிமை என்பதும் தொல்மரபே” என பீஷ்மர் தொடர்ந்தார். “குடிமைந்தரில் மூத்தவர் எவர் என்பதும் எளிதில் வகுக்கக்கூடியதல்ல. இன்று ஒருவர் மூத்தவராக இருக்கலாம். உண்மையில் பிறிதொருவரே மூத்தவரென்று பின்னர் தெரியவரலாம். அவ்வாறு தெரியவரும்போதெல்லாம் முடியுரிமை தொடர்ந்து மாற்றப்படுமென்றால் அக்கோல் நிலைபெறாது.”

“ஆகவே அஸ்தினபுரியின் அரசனென அறுதியாக துரியோதனனை நான் ஏற்கிறேன். இனி அதில் எந்த பிறசொல்லுக்கும் இடமில்லை. அவன் அருகே வாளேந்தி நிற்கவும் அவனுக்காக களம்புகவும் உறுதி கொண்டிருக்கிறேன்” என்றார் பீஷ்மர். “அவையோரே, எனது சொல் இருமுறை அளிக்கப்பட்டது. முதற்சொல் என் மைந்தனாகிய திருதராஷ்டிரனுக்கு நான் அளித்தது, இறுதி வரை அவனுக்கும் அவன் மைந்தருக்கும் கொடிவழியினருக்கும் உரியவனாக நின்றிருப்பேன் என்று. அவன் ஆணவமனைத்தையும் இழந்து விழியிழந்த வெறும் இளையோனாக அன்று என் முன் வந்துநின்றான். தந்தை என என் உளம் நெகிழ்ந்தது. அச்சொல்லை நான் அவனுக்களிக்கையில் வானும் மண்ணும் சான்றாகுக என்றேன்.”

திருதராஷ்டிரர் விழிகளில் நீர்வழிய கைகூப்பி அமர்ந்திருந்தார். “இரண்டாவது சொல் நான் காந்தாரருக்கு அளித்தது” என பீஷ்மர் தொடர்ந்தார். “அஸ்தினபுரியின் மணிமுடி பாண்டுவுக்கு அளிக்கப்படுகையில் பதினெட்டாண்டுகளுக்குப் பின் அதை நானே பெற்று காந்தார அரசியின் மைந்தனுக்கு அளிக்கிறேன் என்று இளைய காந்தாரருக்கு சொல்லுறுதி அளித்தேன். அதிலிருந்து எந்நிலையிலும் நான் வழுவ இயலாது.” சகுனி தலைவணங்கினார்.

பீஷ்மர் “இவ்விரு சொற்களுக்கும் என் வாழ்வை அளிக்கும் பொறுப்பும் எனக்கு உண்டு. இதற்கப்பால் அஸ்தினபுரியில் அரசுசூழ்தலில் என்ன நிகழ்கிறது என்பதை அறியவோ, வழிநடத்தவோ, முரண் கொள்ளவோ நான் முனையப் போவதில்லை. போர் நிகழவேண்டுமா, நிலம் பகுக்கப்படவேண்டுமா, பிறிதேதும் வழிகள் உண்டா என்பதை இவ்வரசும் அவையும் தங்கள் விருப்பப்படி முடிவெடுக்கட்டும். அதில் ஒருபோதும் ஒரு சொல்லையேனும் நான் உரைக்கப் போவதுமில்லை. இனி எவரும் இதன்பொருட்டு என்னை அணுகவேண்டியதும் இல்லை” என்றார்.

நெடுநேரம் அவை அமைதியில் உறைந்திருந்தது. வேறெங்கோ சென்று மீண்டு கலைந்து எழுந்து அவர் அவையை வணங்கி விதுரரிடம் தான் வெளியேறுவதாக கைகாட்டிவிட்டு நடந்தார். விதுரர் கதவைத் தட்ட வெளியே இருந்து கனகர் கதவை திறந்தார். பீஷ்மர் வெளியே சென்று கதவு மூடப்பட்டதும் துரோணர் எழுந்து “அரசே, நாங்களும் பிறிதொன்று சொல்வதற்கில்லை. அரசுசூழ்தலில் எந்நிலையிலும் நானும் கிருபரும் தலையிடுவதாக இல்லை. பீஷ்ம பிதாமகரின் வழி எதுவோ அதுவே எங்களுடையதும்” என்றபின் தலைவணங்கினார். கிருபரும் உடன் எழுந்து தலைவணங்க விதுரர் கதவை தட்டினார். வெளியே இருந்து கனகர் கதவை திறக்க அவர்கள் வெளியேறினர்.

மலர்ந்த முகத்துடன் துரியோதனன் “முன்னரே அறிந்தது என்றாலும் பீஷ்ம பிதாமகர் இத்தனை தெளிவாக தன் நிலைபாட்டை அறிவித்துவிட்டபின் இதைப்பற்றி நாம் பிறிதொன்றும் பேசவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இதை முறையாக பேரவையிலேயே அறிவித்துவிடலாம்” என்றான். சகுனி “ஆம், அவருடைய சொற்கள் இக்குடியை ஆளும் மூதாதை நாவிலிருந்து எழுந்தவைபோல. இந்நகர்மேல் அவை திகழ்க!” என்றார். தாரை அசலையின் செவியில் மெல்ல “தமக்குத்தாமே நடித்துக்கொள்வதில் மானுடர் பல்லாயிரமாண்டு தேர்ச்சி கொண்டவர்கள்” என்றாள்.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 13

பகுதி இரண்டு – பெருநோன்பு – 7

blஇடைநாழியினூடாக அசலையின் தோள்களை பற்றிக்கொண்டு சிறிய காலடிகளை எடுத்துவைத்து மூச்சுவாங்க நடந்த காந்தாரி நின்று நீள்மூச்செறிந்து “நெடுந்தொலைவு வந்துவிட்டோம் போலும்!” என்றாள். “இல்லை அன்னையே, நாம் இரு இடைநாழிகளையே கடந்துள்ளோம்” என்று அசலை சொன்னாள். “நான் முன்பு கால்களாலும் எண்ணங்களாலும் அறிந்த அரண்மனையல்ல இது. மிகப் பெரிதாக பரந்துவிட்டது” என்றாள் காந்தாரி. அசலை “காலம் அவ்வாறு பரந்துவிட்டது போலும்” என்றாள். “வருக!” என்று மீண்டும் அவளை அழைத்துச் சென்றாள்.

முகம் சிவந்து உருகிவிடப்போவதுபோலிருக்க மூச்சு சீறியபடி “ஒவ்வொரு தூணுக்குமிடையே இத்தனை இடைவெளி இருந்ததில்லை. ஒவ்வொரு படிக்கட்டும் இத்தனை மடிப்புகள் கொண்டிருந்ததும் இல்லை. இந்த அரண்மனைக்கு என்ன ஆயிற்று?” என்றாள் காந்தாரி. அசலை “அது நம்முடன் விளையாடுகிறது, பேரரசி. நம் மைந்தர்களுக்கு முன் சின்னஞ்சிறு மரப்பெட்டி போலாகிவிடுகிறது. அவர்கள் இதன் ஒருமுனையிலிருந்து மறுமுனைக்கு கிளை விட்டு கிளை தாவும் குரங்குகள்போல செல்கிறார்கள்” என்றாள். “வீடுகள் ஒருபோதும் நிலையாக இருப்பதில்லை என்று எங்கோ சூதர்கள் பாடி கேட்டிருக்கிறேன். தவழும் குழந்தைகளுக்கு சுவர்களும் தரையும் மென்பஞ்சுகளென குழைந்து சூழ்ந்து கொள்கின்றன. முதியோருக்கு கடுமை கொண்டு காத்து நிற்கின்றன” என்றாள் காந்தாரி.

ஒரு தூணைப் பற்றியபடி நின்று “முதுசெவிலி அகலிகை சென்ற ஆண்டு அடுமனை வாயிலில் முட்டி விழுந்தபோது மருத்துவர் பிரகதர் கூறினார், ஒவ்வொரு சுவரும் படிகளும் தூண்களும் வஞ்சத்துடன் முதியோரை சூழ்ந்திருக்கின்றன என்று. உரிய தருணம் அமையும்போது அறைந்து வீழ்த்துகின்றன. பன்னிரண்டு நாட்கள் படுக்கையில் உழன்றபின் அவள் இறந்தாள். அவள் அரண்மனைக்குள் நுழைந்தபோது பதின்மூன்று வயது. அறுபதாண்டுகாலம் அந்த உத்தரம் அவளுக்காக காத்திருந்திருக்கிறது என்றாள் விறலி. ஆயிரம் முறை அது அவளை அறைய எழுந்து பின் தவிர்த்திருக்கவும் கூடும்” என்றவள் மீண்டும் உடலை எழுப்பியபடி “இன்னும் எவ்வளவு தொலைவு?” என்றாள்.

“இந்த இடைநாழிக்கு அப்பால்…” என்றாள் அசலை. “அங்கு யார் இருக்கிறார்கள்? துரோணர் மட்டுமா?” என்று காந்தாரி கேட்டாள். “இல்லை பேரரசி, விதுரரையும் கிருபரையும் வரச்சொன்னேன்” என்றாள் அசலை. காந்தாரியின் முகம் சுருங்கியது. “விதுரர் எதற்காக?” என்றாள். அசலை “நம்பொருட்டு அவரும் பேசுவார் என்று எண்ணினேன்” என்றாள். காந்தாரி தலையசைத்து “இல்லை. அவர் முன் அவர்கள் உளம் திறக்கமாட்டார்கள். அவர் அங்கு இருக்கவேண்டியதில்லை” என்றாள். “நான் சொல்கிறேன் அவரிடம்” என்று அசலை சொன்னாள்.

மீண்டும் நடந்தபடி “அவர் முன் நானும் உளம் திறக்க இயலாது” என்று காந்தாரி சொன்னாள். “எப்போதுமே அவரை நான் விரும்பியதில்லை. எங்கோ உள ஆழத்தில் அவரும் என்னை வெறுக்கிறார் என்று அறிவேன். எங்கள் இருவருக்கும் தலைவர் ஒருவர் என்பதால்…” அசலை இடைநாழியின் ஓரமாக நின்ற சேடியை விழிகளால் அருகழைத்து தாழ்ந்த குரலில் “அறைக்குள் இரு ஆசிரியர்களை மட்டுமே பேரரசி பார்க்க விழைகிறார்” என்றாள். காந்தாரி பதறி “அல்ல, இது என் ஆணை அல்ல. என் விழைவும் அல்ல. அவ்வாறு அவரிடம் சொல்லவேண்டியதில்லை” என்றாள்.

அசலை “அவள் நுட்பமறிந்த சேடி. முறைப்படி அதை அவரிடம் கூறுவாள்” என்றாள். “வேண்டியதில்லை. எப்படி கூறினாலும் என் விருப்பின்மை அவள் சொற்களில் எழுந்துவிடும்” என்று காந்தாரி சொன்னாள். “இல்லையேல் நம் சந்திப்பே வீணாகிவிடக்கூடும், பேரரசி” என்றாள் அசலை. “நான் அமைச்சரிடம் சொன்னது அவர் அறியாமல் இங்கொரு சந்திப்பு நிகழ இயலாது என்று அறிந்திருந்தமையால்.” காந்தாரி “தாழ்வில்லை, அவர் இருக்கட்டும்” என்றாள். “அவரை விலக்க நாம் எவ்வாறு முயன்றாலும் அவர் அறிவார். அவருடைய சிறு உளச்சுளிப்பையும் அவர் தமையன் அறிவார்.”

சேடியை விழிகளால் விலக்கிவிட்டு அவள் தோள்களைப்பற்றி அசலை அழைத்துச் சென்றாள். சிற்றறையின் வாயிலை அவர்கள் அடைந்தபோது அங்கு நின்றிருந்த காவலன் தலைவணங்கி வாழ்த்துரை சொன்னான். அசலையின் தோள்களைப் பற்றியபடி நின்ற காந்தாரி “முற்றிலும் பிறிதொரு இடத்திற்கு வந்துவிட்ட உணர்வு. அஸ்தினபுரிக்கு அப்பால் இதுவரை நான் அறிந்திராத ஒரு புதுநகர்போல இது உள்ளது” என்றாள். “அரண்மனையின் இப்பகுதிகளுக்கெல்லாம் நீங்கள் வந்து பல ஆண்டுகளாகின்றன, பேரரசி” என்றாள் அசலை. “ஆம், நான் மிகக் குறைவாகவே அகத்தளத்திலிருந்து வெளியே வருகிறேன். படியிறங்கி தேர் முற்றத்திற்கு செல்வதற்கப்பால் இவ்வரண்மனையில் நான் உலவுவது மிகக் குறைவு” என்றாள் காந்தாரி.

அறைக்கதவு திறந்து வெளியே வந்த விதுரர் “பேரரசியை வணங்குகிறேன். தங்கள் பணிக்காக காத்திருக்கிறேன்” என்றார். “ஆசிரியர்கள் இருவரையும் என் தனி நலன்பொருட்டு சந்திக்கலாம் என்று விழைந்தேன், அமைச்சரே” என்றாள் காந்தாரி. விதுரர் அசலையிடம் காந்தாரியை உள்ளே கொண்டு செல்லும்படி விழிகாட்டிவிட்டு “அவ்வண்ணமே ஆகுக! சந்திப்பு முடிந்ததும் நான் வந்து தங்களை பார்க்கிறேன்” என்றார். அசலை சிறிது துணுக்குறலுடன் விதுரர் முகத்தை பார்க்க அங்கே ஏதும் தெரியவில்லை. காந்தாரி “நன்று!” என்றபின் தன்னை உள்ளே அழைத்துச் செல்லும்படி கைகாட்டினாள். விழியின்மையால் அவள் தன் முகவுணர்வுகளை மறைக்க முடியவில்லை என்பதை அசலை கண்டாள். விதுரர் அதை நோக்கினாரா என அறியமுடியவில்லை.

அசலை காந்தாரியை உள்ளே அழைத்துச் சென்றபின் கதவை மூடினாள். அறைக்குள்ளிருந்த கிருபரும் துரோணரும் எழுந்து “காந்தாரப் பேரரசிக்கு வணக்கம். தங்கள் வருகையால் மாண்புற்றோம்” என்றனர். துரோணர் “இது என் குடிக்கும் எனக்கும் நற்பொழுது, பேரரசி” என்றார். காந்தாரி கைகூப்பியபடி “என் மைந்தர்களின் ஆசிரியர்கள் என் குடிக்கு அருள்புரியும் தெய்வங்களைப் போன்றவர்கள். உங்கள் வாழ்த்துக்களால் நானும் என் கொடிவழியினரும் நலம்பெற்று பொலிகிறோம்” என்றபின் பீடத்தில் உடல் பொருத்தி அமர்ந்தாள். தன் கால்களை அவள் நீட்ட அசலை மண்டியிட்டு அவள் கால்களைப் பற்றி மெல்ல நீவி இழுத்துவிட்டாள்.

அலுப்புடன் முனகியபடி இரு கைகளையும் இரு பீடத்தில் வைத்து சாய்ந்துகொண்ட காந்தாரி கிருபரிடம் “இது அரச முறை சந்திப்பு அல்லவென்பதனால் தங்களை என் அரண்மனைக்கு அழைக்கவில்லை. முறைப்படி தங்களை தங்கள் பயிற்றுக்குடில்களில் வந்து நான் பார்க்கவேண்டும். என் உடலின் இயலாமையால் அது அரிதென்பதனால் பொதுவாக இங்கு வரச்சொன்னேன். பிழையாக எண்ணலாகாது” என்றாள். கிருபர் “இது எங்கள் பேறு, பேரரசி. தங்கள் ஆணை எதுவும் எங்கள் கடமையே” என்றார். துரோணர் “எங்களிடம் தாங்கள் எந்நிலையிலும் பேரரசியென்றே சொல்லாடலாம்” என்றார்.

காந்தாரி “நான் எதன்பொருட்டு தங்கள் இருவரையும் சந்திக்க விரும்பினேன் என்று ஒருவாறு உணர்ந்திருப்பீர்கள், ஆசிரியரே” என்றாள். துரோணர் தாடியை கைகளால் சுழற்றி நீவி கசக்கியபடி கிருபரை பார்த்தார். கிருபர் “ஆம் பேரரசி, அரண்மனையிலும் நகரிலும் அணுகிவரும் போரைப்பற்றியன்றி பிறிது எதைப்பற்றியும் எவரும் பேசாமாலாகியிருக்கிறார்கள்” என்றார். “ஆம், ஏனெனில் இப்போர் நிகழுமென்றால் அணுக்கமான ஒருவரையேனும் இழக்காமல் எக்குடியும் பாரதவர்ஷத்தில் எஞ்சாது. பாரதவர்ஷத்திலேயே தீயூழ் நிறைந்தவள் நானாக இருப்பேன். எப்படி இருப்பினும் நான் என் மைந்தர்களிலும் பெயர்மைந்தர்களிலும் பெரும்பாலானவர்களை இழந்துவிடுவேன்” என்றாள்.

துரோணர் “அந்த அச்சம் தேவையில்லை, பேரரசி. என் வில்லும் என் மைந்தனின் வில்லும் என் தோழர் கிருபரின் வில்லும் தங்கள் மைந்தர்க்கு அரண் என நின்றிருக்கும்” என்றார். “ஆம், அதை அறிவேன். அவ்வேலியைக் கடந்து தேவர்களும் வரமுடியாதென்று அறிவேன். ஆனால் ஊழுக்கு வேலி கட்ட இயலாது என்று இளமையிலேயே கற்றவர்கள் நாமனைவரும். ஊழ் வடிவாக மானுடர் எழுகிறார்கள். ஆசிரியர்களே, நான் அஞ்சுவது மின்னலின் மைந்தன் வில்லை அல்ல. காற்றின் மைந்தனின் கதாயுதத்தையும் அல்ல. இளைய யாதவனை மட்டுமே” என்றாள் காந்தாரி.

கனவிலென அவள் சொன்னாள் “ஏனெனில் நான் அவனை மிக அணுக்கமாக அறிவேன். என் மைந்தரைவிட, என் ஆயிரம் பெயர்மைந்தரைவிட, இப்புவியிலுள்ள வேறெந்த மானுடரையும் விட. எண்ணப்போனால் நானறிந்தவன் அவன் ஒருவனே. அவன் சொல் வெல்லும். அதன் முன் வெற்புகளும் பெருங்கடல்களும்கூட நிற்க இயலாது. தடைநிற்கும் எவரும் அழிவர். என் மைந்தர் அவன் சொல்லுக்கு எதிர்நிற்கலாகாது. என் மைந்தர் இன்னமும் அவன் பெருந்தோற்றத்தை உணரவில்லை. தங்கள் தோள்களிலும் தோழர்களின் படைக்கலங்களிலும் மிகை நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். பருப்பொருட்கள் பருப்பொருட்களுடனேயே மோதமுடியும், நுண்வடிவான ஊழுடனல்ல. பேருருக்கொண்டு கைபெருகி விழிபெருகி நின்றிருக்கும் ஊழின் வடிவே அவன். அவர்களிடம் கூறுக, எந்நிலையிலும் இப்போரில் அவர்கள் வெல்லமுடியாது! முற்றிலும் குல அழிவு மட்டுமே அவர்களுக்கு எஞ்சியிருக்கிறது.”

கிருபரும் துரோணரும் சொல்லிழந்ததுபோல் அமர்ந்திருந்தனர். கிருபர் மெல்லிய குரலில் “இதை தாங்களே தங்கள் மைந்தரிடம் சொல்லியிருக்கலாமே, பேரரசி” என்றார். “சொன்னதுண்டு, ஆனால் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு அன்று அச்செய்தியைக் கேட்டபின் அவன் என் மைந்தனல்ல என்று விலக்கிக்கொண்டேன். பிறிதொரு பெண்ணின் பெற்றி அறியாதவன் அன்னையை அறிந்தவன் அல்ல. பெண்ணுக்கிழைக்கும் சிறுமை எதுவும் தன் மூதன்னையருக்கு எதிரானதே என்றுணராதவனிடம் எச்சொல்லை நான் உரைப்பது? அவன் அழிந்தால் அதை மூதன்னையரின் சொல் என்றே கொள்வேன். எனக்கு அதில் துயரேதுமில்லை.” அதிர்ந்தவர்போல கிருபர் துரோணரை நோக்கினார். துரோணர் விழிதாழ்த்தியிருந்தார்.

“இப்போர் திரண்டெழுவதை பல மாதங்களாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதை தவிர்க்கவியலாதென்றும் அறத்தின் ஆறு இதுவென்றும் எண்ணினேன். இவள் வந்து என்னிடம் சொன்னாள், என் பெயர்மைந்தரின் பொருட்டேனும் இப்போரை தவிர்க்க வேண்டும் நான் என்று. இங்கு நான் வந்திருப்பது என் மைந்தரின் பொருட்டல்ல. அவர்களின் முடிவை அவர்களே தங்கள் செயல்களால் வடித்துக்கொண்டார்கள். என் பெயர்மைந்தர் ஏதுமறியாதவர்கள். காட்டில் விளையாடும் களிற்றுக்குழவிகள்போல இனிய அறியாமையால் நிறைந்தவர்கள். அவர்கள் வாழ்வதற்கு முன் மண்படுவது துயர்மிக்கது. அது நிகழலாகாது. அதன்பொருட்டே உங்களிடம் மன்றாட வந்தேன்.”

துரோணர் கிருபரை பார்த்துவிட்டு “நாங்கள் அரசரிடம் என்ன சொல்லமுடியும், அரசி? போர் ஒழியவேண்டுமென்றால் நிலம் பகுக்கப்படவேண்டும். அதை ஒருபோதும் அரசர் செய்யமாட்டார்” என்றார். கிருபர் “படை திரண்டுவிட்டது. ஷத்ரியப் பேரவை ஒன்று விரைவில் கூட்டப்படவிருக்கிறது. அதில் படைத்தலைவர்களும் அறிவிக்கப்படுவார்கள். இந்நிலையில் போரைத் தவிர்ப்பது குறித்து நாம் பேச என்ன இருக்கிறது?” என்றார். “நீங்கள் இருவரும் படைக்கலம் கொண்டு அவனுக்காக களம் நிற்கமாட்டீர்கள் என்று சொல்லுங்கள். உங்களை நம்பி போருக்கெழவேண்டாம் என்று அறிவுறுத்துங்கள்” என்றாள் காந்தாரி.

துரோணர் “அது தங்கள் ஆணை என்றால் அதை மீற இயலாது. ஆனால் அதன்பின் உயிர்துறப்பதன்றி எங்களுக்கு வேறுவழியில்லை, பேரரசி. எங்கள் வில் அரசருடன் நிற்குமென்று சொல்லளித்தவர்கள் நாங்கள். எதன்பொருட்டும் கடமையிலிருந்து விலகி நிற்பது எங்களால் இயலாது” என்றார். கிருபர் “நீங்கள் பிதாமகரிடம் பேசிப்பார்க்கலாம். இத்தருணத்தில் அவர் ஒருவரே அரசருக்கு அறிவுறுத்தும் நிலையிலிருப்பவர்” என்றார். “நான் அவரிடமும் பேசினேன்” என்றாள் காந்தாரி. “இங்கிருக்கும் ஒவ்வொருவரிடமும் பேசுவதாக இருக்கிறேன். அங்கன் என் மைந்தனுக்கு ஒரு படி மேலானவன். அவனை அழைத்து சொல் பெறலாமென்றும் எண்ணுகின்றேன்.”

துரோணர் “பாரதவர்ஷமே இரு அணிகளாக பிரிந்துவிட்டது, பேரரசி. தொல்புகழ் வேதங்களின் தரப்பு நாம். வேதத்திற்கு அரணென எழுந்த ஷத்ரியர் அனைவரும் இங்கு அணிவகுத்திருக்கிறார்கள். இங்கு நின்றிருப்பதே பிதாமகரும் நாங்களும் இயல்பாக எடுக்கக்கூடிய நிலை. வேதம் மறுத்து பிறவேதம் காண்பவர் எவராக இருந்தாலும் இங்கு தங்கள் பிழையுணர்ந்து வந்து பணிந்து மறுவழி தேர்வதே உகந்தது” என்றார். காந்தாரி புருவம் சுளித்து அவர் சொல்லை கேட்டு அமர்ந்திருந்தாள். கிருபர் “ஆம், குடிக்கும் மண்ணுக்கும் நெறிக்கும் சொல்லுக்கும் மேலானது வேதக்கடன்” என்றார்.

அசலை “வேதம் வகுத்த வழியில் எனில் அந்தணர் அரசாள்வதெப்படி, ஆசிரியரே?” என்றாள். “மகளே…” என்று காந்தாரி அசலையின் கைகளை பற்றினாள். துரோணரின் கைகள் நடுங்கத் தொடங்கின. “என்ன சொல்கிறாய்? யாரிடம் பேசுகிறாய் என்று தெரிகிறதா?” என்றார். “தங்களிடம்தான், ஆசிரியரே. வேதம் அந்தணருக்கு வேள்வியையும் ஊழ்கத்தையும் மட்டுமே அறிவுறுத்தியது. இரந்துண்ணுதலும் துறந்து மீளுதலுமின்றி பிறிதொரு வாழ்வையே அவர்களுக்கு அது வகுக்கவில்லை. வில்லேந்தி போரிடுவதோ மண்வென்று முடிசூடுவதோ அவர்களுக்கு உகந்ததல்ல. வேதமறுப்பென்றால் அதன் முதன்மை பழி உங்களுக்கே அமையும்” என்றாள்.

துரோணர் பீடம் ஓசையிட விசையுடன் எழுந்து “என்னை சிறுமை செய்யும்பொருட்டு பேசுகிறாயா?” என்றார். “மெய் உங்களை சிறுமை செய்யும் என்றால் பொய் மேலும் சிறுமை செய்யும் என்று உணர்க!” என்று அசலை சொன்னாள். “உங்கள் உள்ளம் எவ்வகையில் ஓடுகிறதென்று உணர்வது மிக எளிது. உங்கள் மைந்தர் பாஞ்சாலத்தின் அரசரென முடிசூடியபோது உங்களுள் வாழ்ந்த அந்தணர் முற்றாக மறைந்தார். அவையில் பட்டுத்துணிக்கு இப்பால் அமர்ந்து உங்கள் சொற்களை கூர்ந்து கேட்டிருக்கிறேன். எந்த அவையிலும் உங்கள் மைந்தரின் புகழ் பாடாமல் நீங்கள் இருந்ததில்லை” என்றாள் அசலை.

“ஆம், அவன் என் மைந்தன். வில்லேந்தினால் பாரதவர்ஷத்தை வென்று மும்முடி சூடும் ஆற்றல் கொண்டவன். அவன் வேண்டாமென ஒழிந்த நிலத்தை ஆள்பவரே உங்கள் அரசர்கள் என்று உணர்க!” என்றார் துரோணர். “திரைநீக்கி ஆணவம் வெளிவந்தது நன்று. இனி பிறிதொன்றை எண்ணி மயங்கி சொல்லெடுக்க வேண்டியதில்லை. நேரிடையாகப் பேசுவோம்” என்று அசலை சொன்னாள். “நீங்கள் அறிவீர்கள் வில்லெடுத்த அந்தணர் என்பதனால் உங்களுக்கு வேதமுறைமை சார்ந்த ஒப்புதல் இல்லை என்று. வேதத்தின்பொருட்டு வில்லெடுப்பதாக நடித்தால் இப்போருக்குப்பின் உங்கள் மைந்தரின் கொடிவழிகளுக்கு முறைமை ஒப்புதல் கிடைக்கும் என்று எண்ணுகிறீர்கள். இது அறத்தால் அல்ல, கடமையால் அல்ல, தன்னலத்தால் எடுக்கப்பட்ட முடிவு.”

துரோணர் பதறும் குரலில் உரக்க “ஆம், இத்தரப்பிலும் மறுதரப்பிலும் படைகொண்டு வந்து கூடியுள்ள அத்தனை பேரும் தங்கள் நலம் கருதியே வருகிறார்கள். இப்புவியில் தங்கள் நலம் கருதித்தான் உழவர் வளம் பெருக்குகிறார்கள். ஆயர் உயிர் பெருக்குகிறார்கள். அரசர் கோல் கொண்டிருக்கிறார்கள். அந்தணர் வேள்விகள் செய்கிறார்கள். நான் இவ்வுலகைத் துறந்து இன்னும் காடேகவில்லை. என் கொடிவழிகள் இங்கு பேரரசர்களின் நிரையெனப் பெருகவேண்டுமென என் உள்ளம் விழைகிறது. அதை எந்த அவையிலும் சொல்வதற்கு எனக்கு தயக்கமில்லை” என்றார்.

சொல்லச் சொல்ல தன் சொற்களை அவர் கண்டுகொண்டார். “ஆம், நான் இத்தரப்பிலேயே நின்றிருக்கமுடியும். இங்குதான் என் குலம் மதிப்புகொள்ளும். நிஷாதரும் அசுரரும் கூடிய பாண்டவர் தரப்பில் நின்று இழிவுசூட எனக்கு விருப்பில்லை” என்றார் துரோணர். “நன்று, குல இழிவின் துயரை அறிந்தவர் நீங்கள். பிற குலத்தை இழிவுசெய்தே அதிலிருந்து மீளமுடியுமென்று கண்டுகொண்டிருக்கிறீர்கள். நலம் திகழ்க!” என்றாள் அசலை. ஒருகணம் சினத்துடன் பற்களைக் கடித்த துரோணர் உடனே தன்னை வென்று “ஆம், அது மெய்யே. இழிவுசெய்யப்பட்ட நான் என் திறனால் வென்று உயர்ந்தேன். திறன்கொண்டவர்கள் எழுக! அதுவே உயர்வுதாழ்வின் நெறி” என்றார்.

காந்தாரி அசலையிடம் “போதும் மகளே, நாம் இங்கு பூசலிட வரவில்லை” என்றபின் துரோணரிடம் “பொறுத்தருள்க, ஆசிரியரே! இவள் நாத்துடுக்கை நானும் கணிக்கவில்லை” என்றாள். “ஒருவர் நாவிலெழுவது பிற அனைவரின் உள்ளத்தில் ஊறியதே” என்றார் துரோணர். “ஆம் அந்தணரே, இந்நகரில் அனைவரும் எண்ணியதே நான் சொன்னது” என்றாள் அசலை. “போதும்” என்று உரக்க காந்தாரி கூவினாள். அவள் முகம் குருதிச் செம்மை கொண்டது. “போதும். இனி ஒரு சொல்லும் எவரும் எடுக்கவேண்டியதில்லை” என்றாள்.

கிருபர் “அமர்க, ஆசிரியரே! அமர்க!” என்றார். துரோணர் மூச்சுவாங்க தன் பீடத்தில் அமர்ந்து “பேரரசி ஆணையிட்டால் நான் அரசரிடம் சென்று இப்போரில் நான் பங்கெடுக்கவில்லை என்று சொல்கிறேன். அவர் கூறுவாரென்றால் என் மைந்தனையும் போரிலிருந்து விலக்குகிறேன். ஆனால் அதன் பிறகு நான் உயிர்வாழமாட்டேன். சொல்லுக்கு என்னை ஆளும் பொறுப்பை அளித்துவிட்டமையால்தான் நான் ஆசிரியன்” என்றார். “வேண்டியதில்லை. நான் கேட்டதற்கு பொறுத்தருள்க!” என்றாள் காந்தாரி.

கிருபர் “நாம் இயற்றக்கூடியதொன்றே, பேரரசி. பீஷ்மப் பிதாமகர் முடிவுசொல்லட்டும். இப்போரிலிருந்து அவர் ஒழிவாரென்றால் அவரை நாங்கள் துணைக்கிறோம். அது எங்கள் சொல் மீறலாகாது. நாங்கள் சொல்லளித்திருப்பது அவருக்காகத்தான். துரோணரும் அவருக்கே கட்டுப்பட்டவர்” என்றார். “ஆம்” என்று துரோணர் சொன்னார். “அவர் எடுப்பது எந்த முடிவாயினும் அவருடன் நான் நிற்கிறேன்.”

காந்தாரி இரு கைகளையும் விரித்து “இன்று காலை நான் அவரிடம் பேசினேன். என் சொற்களை அவர் மறுத்துவிட்டார்” என்றாள். அசலை “இல்லை, அதன் பின் நான் சென்று அவரிடம் பேசினேன்” என்றாள். கிருபர் திகைப்புடன் அசலையைப் பார்த்து “தனியாகவா ?” என்றார். “ஆம், அவரது நீண்ட வாழ்வில் இரண்டாம் முறையாக அவர் விழிகளைப் பார்த்து பேசிய பெண் நான். அவர் கேட்க விரும்பாத அனைத்தையும் சொன்னேன். அவையனைத்தும் உண்மையென்று அவர் உணர்ந்தார். அவர் ஒப்புவார்” என்றாள்.

“அவர் வந்து அவையில் உரைப்பாரா, எழவிருக்கும் இப்போரிலிருந்து தான் முற்றொழிவதாக??” என்று கிருபர் கேட்டார். “ஆம், அவர் ஒழிவார். பிறிதொரு நிலையும் அவர் எடுக்க இயலாது” என்று அசலை சொன்னாள். “பிறகென்ன? அவர் ஒழிவாரெனில் நானும் துரோணரும் போர் ஒழிகிறோம்” என்று கிருபர் சொன்னார். “நாங்கள் மூவரும் போரிலில்லை என்றால் அங்கனை மட்டும் நம்பி இளைய யாதவனை எதிர்க்க முடியுமா என்று அரசர் எண்ணாமலிருக்க மாட்டார். ஒருகணம் அவ்வாறு அவர் ஐயுற்றால்கூட அதை பற்றிக்கொண்டு போரிலிருந்து நீங்கள் அவரை பின்னிழுக்க முடியும்.”

காந்தாரி தளர்ந்தவள்போல் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அசலை “அவர் அரசரிடம் அதை கூறட்டும். அதன் பின் அரசரை போரிலிருந்து பின்னிழுக்க நானும் அரசியும் முயல்கிறோம்” என்றாள். துரோணர் “உன் உணர்வுகள் புரிகின்றன, அரசி. அன்னையென மைந்தரையன்றி பிற எதையும் நீங்கள் எண்ணவில்லை. அதுவே உயிர்களுக்கு இறையளித்த தன்னியல்பு. உங்கள் முயற்சி வெல்லட்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

காந்தாரி அசலையின் கைகளைப் பற்றியபடி நடந்தாள். “பழுதற்ற பெருஞ்சுவர்முன் நிற்பதைப்போல் உணர்கிறேன்” என்றாள். “ஏதேனும் ஒரு வழி இருக்கக்கூடும். இருந்து அதை நாம் ஆராயாமல் விட்டுவிட்டோமென்று ஆகவேண்டியதில்லை” என்றாள் அசலை. “இவர்கள் தவிர்க்கிறார்கள். போரை விரும்பும் அகம் தெரிகிறது” என்றாள் காந்தாரி. “அவர்கள் போரை விரும்புவது உலகியல்நலன் நாடி மட்டும் அல்ல. அவர்கள் சலித்திருக்கிறார்கள். வாழ்நாளெல்லாம் படைக்கலங்களுடன் புழங்கியவர்கள். படைக்கலம் அவர்களை கையிலெடுத்துவிட்டது.”

அசலை “இருக்கலாம், அன்னையே. ஆனால் அவர்களுக்குள்ளும் தந்தையர் வாழ்வர். இத்தனை சொல்லெடுத்தாலும் துரோணர் உள்ளாழத்தில் தன் மைந்தனின் உயிருக்காக அஞ்சுவார் என்றே எண்ணுகிறேன். அதை நோக்கியே நான் பேசினேன். அவர் மகனை நினைவுறுத்தாமல் நாம் அவரிடம் எதையும் கோரமுடியாது” என்றாள். காந்தாரி “அவரை வெல்லப்போவது எதுவென்று பார்ப்போம்” என்றாள். “மூதன்னையரே, வாழ்வதே வீணென்று தோன்றும் கணம் எத்தனை கொடிது” என தனக்குத்தானே என சொல்லிக்கொண்டாள்.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 12

 பகுதி இரண்டு : பெருநோன்பு – 6

blதேர் உருளத்தொடங்கியதுமே அசலை சினத்துடன் காந்தாரியிடம் “அவர் நம்மை தவிர்க்கிறார். எது மெய்யோ அதை எதிர்கொள்ளாதொழிகிறார்” என்றாள். “அது முதியவர்களின் இயல்பு. அவர்களின் உள்ளம் ஆற்றல் இழந்திருக்கிறது. உணர்வுகள் தொடர்ச்சியை இழந்துவிட்டிருக்கின்றன. புலன்கள் கூர் மழுங்கியிருக்கின்றன. ஆகவே சூழ நிகழ்ந்துகொண்டிருப்பதை ஒன்றோடொன்று பொருத்தி முழு வடிவாக உருவாக்கிக்கொள்ள அவர்களால் இயல்வதில்லை. தங்களால் புரிந்துகொள்ள முடியாதவற்றை முற்றாக தவிர்ப்பது முதியவர்களின் இயல்பு. தாங்கள் இளமையில் புரிந்துகொண்ட மெய்மையை திரும்பச் சென்று தழுவிக்கொள்வதும் அதை கொண்டுவந்து நிகழ்காலத்தின் மீது கண்மூடித்தனமாக பொருத்தி வைப்பதும் அவர்கள் எங்கும் செய்வதுதான்” என்றாள்.

காந்தாரி கைகளைக் கட்டியபடி அசையாது அமர்ந்திருந்தாள். தேரின் சகடகுலுக்கலில் அவள் உடலின் தசைகள் மெல்ல ததும்பிக்கொண்டிருந்தன. “அவர் சொல்வது மெய். அரசர் அவர் சொல்வதை கேட்கப்போவதில்லை. நூற்றுவர் கௌரவரும் கேட்கப்போவதில்லை. ஒருவேளை படைத்தலைவர்களும் அவரை தவிர்க்கலாம். அங்கர் முன்நின்று நடத்தினால் அஸ்தினபுரி அவரை மீறி படைமுகம் கொள்ளவும்கூடும். ஆனால் இக்குலப்பேரழிவை நோக்கி செல்கையில் மூதாதையர் தரப்பிலிருந்து ஓர் எதிர்க்குரல் எழுந்ததென்று வேண்டாமா? அவர்கள் அழியவேண்டுமென்றால் அவர்களை மீறிச்சென்று அழிந்தால்தானே அது முறையாகும்? அவர்களுடன் தானும் சென்று வில்லேந்தி நிற்பேன் என்று சொல்வது பிழையென அவருக்கு ஏன் தோன்றவில்லை?” என்றாள் அசலை.

காந்தாரி அவள் சொற்களைக் கேட்டதுபோலவே தெரியவில்லை. அவள் கைகளைப்பற்றி மெல்ல உலுக்கி அசலை “அன்னையே, தன் வாழ்நாளெல்லாம் எதன்பொருட்டு போராடினாரோ அதை இறுதியில் போட்டுடைக்க எப்படி அவரால் இயல்கிறது? என்ன நிகழ்கிறதென்று அவர் உணர்ந்திருக்கிறாரா என்ன? ஒவ்வொன்றையும் கண்முன்னால் இழந்துவிட்டு வெறுமையுடன் திரும்பப்போகிறாரா?” என்று கேட்டாள். “மானுடர் முன்வாழ்வில் வென்று எழுந்தபின் பின்வாழ்வில் தங்களைத்தாங்களே தோற்கடித்துக்கொள்கிறார்களா?”

காந்தாரி மெல்ல உடலை அசைத்தபின் “அனைத்திற்கும் விடையாக அவர் ஒன்றை சொன்னார். அவரிடம் முற்றிலும் அன்பில்லையென்று” என்றாள். “அது எப்படி முதுதாதை ஒருவர் முற்றிலும் அன்பிழந்து போகமுடியும்?” என்றாள் அசலை. “அவர் அதை சொன்னதுமே அது பொய்யல்ல என்று உணர்ந்தேன்” என்று காந்தாரி சொன்னாள். “என் உள்ளத்தின் ஆழத்தில் ஒன்று அக்கணமே அதை ஏற்றுக்கொண்டு ஆம் ஆம் என்றது. நீயும் நானும் அன்பில் நின்றுகொண்டு பேசுகிறோம். அன்பு மிகச் சிறிய பீடம். அன்பின்மை சூழ்ந்திருக்கும் எல்லையின்மை. இங்குள எளிய உண்மைகள் மட்டுமே அன்பினால் அறியப்படும். என்றுமுள பேருண்மைகள் அன்பின்மையில் அமைந்தவை. அவர் அவற்றை கண்டிருக்கலாம். இங்கு நின்றபடி நாம் அவரிடம் சொல்லாட முடியாது” என்றாள்.

“என்ன சொல்கிறீர்கள், அன்னையே? நாம் அன்பின்மை கொள்ளமுடியுமா என்ன?” என்றாள் அசலை. காந்தாரி தன் சிறிய செவ்விதழ்களை அழுத்தியபடி அமர்ந்திருந்தாள். தேரசைவில் அவள் உடல் குலுங்கியதில் உள்ளே சொற்கள் முண்டியடித்து வெளிவர உந்துபவைபோல் இருந்தன. பின்னர் “இப்போது மேற்கு மாளிகை சாளரத்தோரம் இருவர் அமர்ந்திருக்கிறார்களே, இறுதியாக அவர்களை எப்போது நீ எண்ணினாய்?” என்றாள். அசலை எதிர்பாராத குளிர்ந்த அடியென அதை ஏற்று உடல்குலுங்கினாள். காந்தாரியை தொட்டிருந்த அவள் கைகள் அறியாமல் நழுவி பின்னகர்ந்தன.

“மகாநிஷாதகுலத்து இளவரசியரான சந்திரிகையும் சந்திரகலையும். அதற்கு முன் அங்கு சம்படை அமர்ந்திருந்தாள். அவளுக்கு முன் சிவை அமர்ந்திருந்தாள். சம்படையை இளமையில் என் இடையிலிருந்து நான் இறக்கிவிட்டதே இல்லை. ஒவ்வொரு நாளும் அவளுக்கு உணவூட்டி உறங்க வைத்த பின்னரே நான் மஞ்சத்திற்கு செல்வேன். என் கையாலேயே அவளுக்கு ஆடை அணிகளும் பூட்டுவேன். எத்தனை எளிதாக அவளை மறந்தேன்! எவ்வளவு இயல்பாக ஒவ்வொருவரும் அவர்களிடமிருந்து விலகுகிறோம்! நம் அன்பின் வலையில் ஏன் அவர்கள் இல்லை?” என்றாள் காந்தாரி.

அசலை மூச்சை நிறுத்த முயல்பவள்போல் உதடுகளை அழுத்தி தோள்களை குறுக்கினாள். “ஏனெனில் அன்பில் திளைத்து நாம் வாழ்வது அது இனிதென்பதனால்தான். மைந்தரை நெஞ்சோடணைப்பதும், கொழுநருடன் தழுவியிருப்பதும், உடன்பிறந்தவருடன் ஆடிக்களிப்பதும் உவகை அளிக்கிறது. முற்றிலும் உவகையளிக்காத ஒன்றை முழுமையாகவே நம் உலகிலிருந்து விலக்கிவிடுகிறோம்” என்றாள் காந்தாரி.

“நான் எண்ணிப்பார்க்கிறேன், சம்படை நோயுற்றிருந்தால் நாங்கள் பத்து உடன்பிறந்தாரும் ஒவ்வொரு கணமும் அவளை உடனமர்ந்து பேணியிருப்போம். ஏனெனில் நோயுற்ற ஒருவரை பேணுவதென்பது முதல் நோக்கில் துயரென்றாலும் அடியில் இன்பமளிப்பது. நம்மை அளிநிறைந்தவர்கள் என்றும் அருள்கொண்டவர்கள் என்றும் நமக்குக் காட்டுவது. இது அப்படியல்ல. அவர்கள் ஏன் நம்மால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார்கள்? ஏனெனில் நம் அனைவரிலும் ஒரு சிறுபகுதி அவர்களாகவும் இருக்கிறது. அது நாம் பார்க்க விரும்பாத பகுதி. அதை நம்மிலிருந்து வெட்டி வீசினாலொழிய நாம் மகிழ்ந்திருக்க இயலாது.”

“இதெல்லாம் நாமே நம்மை துன்புறுத்தும்பொருட்டு எண்ணிக்கொள்வதுதான். நமது குற்றஉணர்வையும் நாம் இனிதென சுவைக்கிறோம்” என்றாள் அசலை. “இல்லை, எந்தப் பேரன்பின் பீடமும் அன்பின்மை எனும் வேலியால் பாதுகாக்கப்பட்டே நிலைகொள்கிறது. அன்பின் எந்த எல்லையையும் இறுதிவரை சென்று தொட்டுப்பார், அப்பால் விரிந்திருக்கும் அன்பின்மையின் பெருவெளி காணக்கிடைக்கும். அதுவே மெய்மை. அவர் அங்கிருக்கிறார்” என்றாள் காந்தாரி.

அசலை பற்களை இறுகக்கடித்து காந்தாரியின் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் கழுத்தில் வெண்ணிறத் தசை மூச்சில் அசைந்தது. இரு புயங்களிலும் வெண்தசை அதிர்ந்துகொண்டிருந்தது. அக்கணம் அவள்மேல் அத்தனை வெறுப்பு ஏன் வருகிறதென்று அசலையின் உள்ளாழம் அவளை நோக்கியே வியந்தது. மறுகணம் கூர்கொண்டு சினம்கொண்டு முன்னெழுந்தது. “நாம் இதை ஏன் பேசிக்கொள்கிறோம்? ஏனெனில் இத்தருணம் அடைபட்டுவிட்டது என்று நமக்குத் தோன்றுகிறது. ஆகவே இப்படி சில கொள்கைகளை உருவாக்கிக்கொண்டு அதை கடந்து செல்கிறோம். வேறொன்றுமில்லை” என்று அசலை சொன்னாள். “ஆனால் நான் அன்னை. என்னால் அப்படி இயல்வது எளிதல்ல. அனைத்து வாயில்களையும் நான் முட்டியாகவேண்டும்.”

காந்தாரி “ஆம், அன்னையர் இறுதிக்கணம் வரை முயல்வார்கள். விலங்குகளும் பறவைகளும்கூட அப்படித்தான். ஒருபோதும் அவை பின்வாங்குவதில்லை” என்றாள். “நானும் அன்னையென உன்னுடன் எழவே விரும்புகிறேன். நீ சொல்வது எதுவானாலும் அதை இயற்றுகிறேன். எனக்கு எண்ணங்கள் எழவில்லை. என் உள்ஆழத்தில் கதவுகள் ஒவ்வொன்றாக மூடிக்கொண்டிருக்கின்றன. நான் சொன்னது அதைப்பற்றி மட்டும்தான்” என்றாள் காந்தாரி. “அப்படியானால் தேரை திருப்பச் சொல்லுங்கள். பீஷ்மரிடம் செல்வோம், அவர் உருவாக்கி வைத்திருக்கும் அந்த சொற்கவசத்தை உடைப்போம். அதற்குள் முதுமையின் வெற்றுச் செயலின்மை மட்டுமே உள்ளது, எந்த அறமும் அல்ல என்று அவருக்குக் காட்டுவோம்” என்றாள் அசலை.

மீண்டும் காந்தாரியின் கைகளைப்பற்றி மெல்ல உலுக்கி “அன்னையே, இத்தருணத்தில் இப்போரில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என்று ஒரு சொல் மட்டும் அவரால் உரைக்கப்படுமென்றால் அதிலிருந்து நாம் நெடுந்தொலைவு செல்லமுடியும். கிருபரையும் துரோணரையும் பின்னிழுக்க முடியும். நம் படையில் பாதியையேனும் தயங்கவைக்க முடியும். தங்கள் ஆற்றல் பாரதவர்ஷத்தையே வெல்லும் தகைமைகொண்டதென்ற எண்ணத்தால்தான் அரசர் இங்கு போருக்கெழுந்திருக்கிறார். அவரை நம்மால் நிறுத்த முடியும்” என்றாள்.

காந்தாரி “மீண்டும் முயல்வதில் எனக்கு தடையேதுமில்லை. ஒருமுறை என்ன நூறுமுறை உன்னுடன் வந்து அவருடன் சொல்லாடுகிறேன். இப்போது நாம் அரண்மனைக்கு மீள்வோம். பிறிதொரு தருணத்தில் அவரை சந்திப்போம்” என்றாள். “இன்று நாம் அவரைப் பார்த்த இடமும் பொருத்தமானதல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. அந்தக் காடும் தனிமையும் ஊழ்கத்திற்குரியவை. அங்கிருப்பவர் தன்னை முனிவரென்று உருவகித்துக்கொண்டு நம்மிடம் பேசினார். அவர் படைக்கலம் பயில்கையில் அல்லது அவையமர்ந்து நெறிநூலாய்கையில் சென்று மீண்டும் அவரை பார்ப்போம். அங்கிருப்பவர் தன்னை களவீரரென்றும் அரசுசூழ்பவரென்றும் உருவகித்துக்கொண்டிருப்பார். அவரிடம் சொல்லவே நம்மிடம் சொற்கள் உள்ளன.”

“ஆம் அன்னையே, நாம் மீண்டும் அவரை சந்திப்போம். அவர் இப்போருக்கு எதிர்நின்றாக வேண்டும், நமக்கு வேறுவழியில்லை” என்று அசலை சொன்னாள்.

blகாந்தாரியின் அரண்மனையில் அவளை கொண்டு இறக்கிவிட்டு தன் அரண்மனை நோக்கி செல்கையிலேயே அசலை கடந்ததொன்று நினைவுமீள்வதுபோல் இயல்பாக அவ்வெண்ணத்தை அடைந்தாள். பீஷ்மரின் குடிலிலிருந்து கிளம்பிய கணம் முதல் தன் உள்ளத்தின் ஒரு பகுதி திரும்பிச் சென்று அக்குடிலில் அவருடன் இருந்துகொண்டிருப்பதையும் அவருடைய ஒவ்வொரு அசைவையும் உற்றுநோக்கிக்கொண்டிருப்பதையும் அவள் உணர்ந்தாள். அமைதியிழந்தவராக வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு பயிற்சிக்களத்திற்கு சென்றார். இலக்குகளை மேலும் மேலும் சேய்மையானவையாகவும் சிறியவையாகவும் அரிதானவையாகவும் மாற்றி பயிற்சி செய்துகொண்டிந்தார். ஒவ்வொருமுறை இலக்கு எய்தப்படுகையிலும் அவர் மேலும் நிறைவின்மை கொண்டார்.

மீண்டும் மாளிகை முற்றத்திற்கு வந்து தேர்ப்பாகனை கையசைத்து அருகே அழைத்தாள். ஏறி அமர்ந்துகொண்டு பீஷ்மரின் குடிலுக்கு செல்லும்படி ஆணையிட்டாள். தேர் கிளம்புவது வரை அவளிடம் ஒரு பதற்றம் இருந்தது. இரு கைகளையும் விரல்கோத்து மடியில் வைத்து பிசைந்துகொண்டிருந்தாள். சகட ஒலியுடன் தேர் கிளம்பி முற்றத்தைக் கடந்து சாலையை அடைந்து சீராக ஓடத்தொடங்கியதும் சற்று இயல்புநிலையடைந்து பின்னால் சாய்ந்து அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டாள். மெல்ல மெல்ல தன் உள்ளத்தை தளர்த்தி கண்களை மூடி அமர்ந்தாள். மெல்லிய துயில் ஒன்று அவள்மேல் படிந்து அவள் சித்தப்பெருக்கை கலைத்து விளையாடியது. அதற்குள் ஆயிரம் இளமைந்தர்களின் கூச்சல்களும், கங்கையின் கோடைக்கால நீர்ப்பெருக்கும், மிக அப்பால் எங்கோ கேட்டுக்கொண்டிருக்கும் மணியோசையும் ஊடுருவின. ஒரு மயிற்பீலி. அகலுமொரு குழலோசை. இவை இல்லாத கனவு எனக்கில்லையா? நான் கனவா கண்டுகொண்டிருக்கிறேன்? இல்லை, தேரில் அமர்ந்திருக்கிறேன்.

விழித்தெழுந்து ஆடையை சீர்படுத்தி வெளியே பார்த்தபோது அஸ்தினபுரியின் தெருவினூடாக தேர் சென்றுகொண்டிருப்பதை உணர்ந்து எங்கு சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை மீட்டுக்கொண்டாள். அக்கணமே அவள் உள்ளம் பீஷ்மரின் குடிலுக்கு சென்றுவிட்டிருந்தது. அவரிடம் பேசவேண்டிய சொற்றொடர்களை ஒவ்வொன்றாக எடுத்து முறையாக அடுக்கிக்கொண்டாள். அது ஒழுங்குபெறும்தோறும் தன்னம்பிக்கையும் மெல்லிய உளநிறைவும்கூட அவளுக்கு ஏற்பட்டது.

பீஷ்மரின் குடில் முன்னால் தேர் சென்று நின்றபோது இறங்கி தேர்ப்பாகனிடம் அதை அப்பால் கொண்டுசென்று நிறுத்தும்படி ஆணையிட்டுவிட்டு குடில் நோக்கி சென்றாள். சகட ஒலி கேட்டு உள்ளிருந்து வந்த விஸ்வசேனர் அவளைப் பார்த்ததும் வியந்து பின் அதை மறைத்துக்கொண்டு கைகூப்பியபடி அருகணைந்தார். அவரது இரு மாணவர்களும் பின்னால் வந்தனர். முகமன் ஏதும் உரைக்காமல் “நான் பிதாமகரிடம் ஒன்று சொல்ல விட்டுவிட்டேன். அவரிடம் பேச வேண்டும்” என்று அசலை சொன்னாள்.

“பொறுத்தருள்க, அரசி! அவர் விற்பயிற்சிக் களத்திலிருக்கிறார். உளம்கூரும்பொருட்டு அவர் அங்கு செல்கையில் இங்கிருந்து ஒரு சொல்லும் அங்கு செல்லக்கூடாதென்பது ஆணை” என்றார் விஸ்வசேனர். “நன்று, ஆனால் எங்கிருந்து எச்சொல் வந்தாலும் உளம்கூர்வதற்கான பயிற்சியல்லவா மெய்யானது?” என்று சொல்லி புன்னகைத்த அசலை “என் வருகையை கூறுக! அவர் என்னை மறுதலித்தால் திரும்பிவிடுகிறேன்” என்றாள்.

“இல்லை, நாங்கள் அவரிடம் செல்லவேகூடாது என்பது ஆணை” என்று விஸ்வசேனர் சொன்னார். “சரி, நானே செல்கிறேன். அதன்பொருட்டு அவர் அம்புகளில் ஒன்று என்னை நோக்கி வருமென்றால் ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொன்ன அசலை “பயிற்சிக்களம் இத்திசையில்தானே?” என்று திரும்பினாள். அவளுக்குப் பின்னால் வந்தபடி விஸ்வசேனர் “அரசி, இது ஒப்புதலற்ற செயல்” என்று சொல்ல “நான் பார்த்துக்கொள்கிறேன், துயருற வேண்டாம்” என்று அவரை கையமர்த்திவிட்டு அவள் நடந்தாள்.

முதலில் காட்டுக்குள் செல்கையிலேயே அந்தப் பெரிய பயிற்சிக்களத்தை அவள் கண்டிருந்தாள். அங்கு மட்டும் மரங்களும் செடிகளும் வெட்டி விரிவாக்கப்பட்டு ஒளி ஒரு பெருங்குளம்போல் தேங்கிக் கிடந்தது. தொலைவிலேயே பீஷ்மரின் உடலசைவுகளை அவள் கண்டாள். வானில் தான் ஏவிய அம்புகளைத் தொடர்ந்த அம்புகளால் தைத்து மெல்ல கீழிறக்கிக்கொண்டிருந்தார். அவள் வருவதை உடை வண்ண அசைவிலிருந்தே உணர்ந்து திரும்பிப் பார்த்தார். அவர் உடலில் சினம் தெரிவதை அவள் கண்டாள். எனினும் நடையின் விரைவை குறைக்காமல் அவரை அணுகி “வணங்குகிறேன், பிதாமகரே” என்றாள்.

பீஷ்மர் மறுமொழி சொல்லாமல் அவளை உற்றுப்பார்த்துக்கொண்டு நின்றார். “தங்களிடம் சில சொற்கள் சொல்ல விட்டுப்போய்விட்டது. அரண்மனைக்குச் சென்ற பிறகே அதை உணர்ந்தேன். ஆகவே திரும்பி வந்தேன்” என்றாள் அசலை. “இங்கு எவருக்கும் நுழைவொப்பு இல்லை” என்று பீஷ்மர் சொன்னார். “ஆம், அறிவேன். அதன்பொருட்டு தாங்கள் ஏவும் அம்பை பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்லித்தான் இங்கு வந்தேன்” என்று அசலை சொன்னாள்.

பீஷ்மர் விழிகளை திருப்பிக்கொண்டு “நான் தனிமையில் பெண்டிரை சந்திப்பதில்லை” என்றார். “அத்தனை நொய்மையானதா உங்கள் நோன்பு?” என்று அசலை புன்னகையுடன் கேட்டாள். கடுஞ்சினத்துடன் திரும்பி “என்ன சொல்கிறாய்?” என்று பீஷ்மர் கேட்டார். “அத்தனை நொய்மையான ஒன்றை பற்றிக்கொண்டா இத்தனை காலம் வாழ்ந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். சொல் பயின்றும் வில் பயின்றும் இத்தனை ஆண்டுகளாகப் புதைத்தும் அது இன்னமும் மட்கவில்லையா?”

பீஷ்மர் பெருகிஎழுந்த சினத்தை மெல்ல அடக்கி உதடுகள் இழுபட புன்னகைத்து “என்னை சீண்டும்பொருட்டு வந்தாய் போலும்” என்றார். “இல்லை, மூத்தவர்களின் மென்மையும் தயக்கமும் இல்லாமல் நேரடியாகச் சென்று உண்மைகளைத் தொடுவது என் வழக்கம். பிதாமகரே, இந்தப் போர் தொடங்குவது உங்கள் உள்ளுறைந்த ஒழியாக் காமத்திலிருந்து என்பதை தாங்கள் அறிவீர்கள்” என்றாள் அசலை. பீஷ்மர் “நீ இன்னும்கூட கடுமையாக சொல்லலாம். உனக்கு அது நிறைவளிக்குமெனில் நன்று” என்று புன்னகைத்தார்.

“இப்புன்னகையினூடாக நீங்கள் எதையும் மறைத்துவிட முடியாது. இது என்னை தடுக்கவும் இயலாது” என்று அசலை சொன்னாள். “இங்கு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு அம்பை வந்து நின்றாள். அன்று உங்கள் உதடுகளிலிருந்து எழுந்த இதே போன்ற நச்சுப்புன்னகை ஒன்றுதான் அவளில் அனல் எழச்செய்தது. அஸ்தினபுரியின் நுழைவாயிலில் அணையாது அமைந்த அந்த எரியிறைதான் மூண்டெழுந்து இந்நகரை இன்று அழிக்கப்போகிறது” என்றாள்.

பீஷ்மர் “சூதர் கதைகளை நன்கு கேட்டிருக்கிறாய்” என்றார். “ஆம், அவையன்றி கடந்த காலத்திற்குச் செல்ல நமக்கு வழியேதும் இல்லை. ஆனால் அந்நிகழ்வை கதையென்று நீங்கள் கடந்துசெல்ல முடியாது. இங்கு நீங்களும் இருக்கிறீர்கள். அழியாக் குருதிவிடாயுடன் அங்கு அவளும் அமர்ந்திருக்கிறாள்” என்றாள் அசலை. “உங்கள் பிழைக்கு உங்கள் கொடிவழியினர் முழுமையாக பலிகொடுக்கப்பட வேண்டுமா?” என்று அசலை சீற்றத்துடன் கேட்டாள். அவளுடைய நிகர்நிலை அழியலாயிற்று. மூச்சில் முலைகள் எழுந்தமைய முகம் சிவந்து கண்கள் நீர்மைகொண்டன.

பீஷ்மர் உரக்க நகைத்து “இதைத்தான் கேட்க விட்டுப்போனாயா? செல்லும் வழியிலும் மீளும் வழியிலும் இச்சொற்களை புனைந்துகொண்டாயா?” என்றார். “இந்நகைப்பும் எதையும் மறைப்பதோ விலக்குவதோ இல்லை, பிதாமகரே” என்றாள் அசலை. “நீங்கள் அறிவீர்கள், இப்புவியில் எவரும் இளைய யாதவரை வெல்ல இயலாது. ஆகவே களம் அமையுமென்றால் உங்கள் மைந்தரும் பெயர்மைந்தரும் வழிமைந்தரும் முற்றாக இறந்தொழிவார்கள் என்பதும் உறுதி. எதன்பொருட்டு அப்பலியை கொடுக்கிறீர்கள்? அன்று அம்பையின் முன் ஓர் அம்பெடுத்து சங்கறுத்து குருதி சிந்த விழுந்திருந்தீர்கள் என்றால் அன்றே முடிந்திருக்கும் உங்கள் அழல். அன்று செய்யத் தவறியதை ஆயிரம் பல்லாயிரம் மடங்கு துயர் பெற்று நிகர்செய்ய விரும்புகிறீர்களா?”

பீஷ்மர் பொறுமையிழப்பதை அவரது கைகள் காட்டின. ஆனால் முகம் அதே புன்னகையை கொண்டிருந்தது. “உங்கள் மைந்தர் அனைவரையும் போரில் பலியிட்டு விண்ணுக்கான உங்கள் பாதையை அமைத்துக்கொள்ளுங்கள். நான் அன்னை. என் மைந்தரை இழக்க நான் ஒருபோதும் ஒப்பமாட்டேன். அதை உங்களிடம் சொல்லிவிட்டுச் செல்லவே வந்தேன்” என்றாள் அசலை. அவள் குரல் எழுந்தது. சினத்துடன் அவரை நோக்கி இரு காலடி வைத்து அணுகி கைநீட்டி கூவினாள்.

“இதையும் சொல்கிறேன்… நான் பெண்ணென்பதால் போருக்குப் பின்னரும் எஞ்சியிருப்பேன். உங்களுக்கு நீர்க்கடன் கொடுக்க எவன் கங்கையில் கைப்பிடி அள்ளியெடுக்கிறானோ அங்கு சென்று அவனிடம் சொல்வேன், ஆணவத்தால் அல்லது அச்சத்தால் ஆற்றவேண்டிய ஒன்றைத் தவறவிட்டு ஆயிரம் மடங்காக திருப்பி அளித்த அறிவிலி ஒருவருக்கான நீர் அது என. அதற்கு உன் அகமளித்தால் நீயும் அறிவிலிகளின் உலகிற்கே செல்வாய். தவிர்த்துவிடுக என்பேன். இங்கிருந்து என் எஞ்சிய வாழ்நாள் எல்லாம் உங்களை வீணரென்றும் கோழையென்றும் சொல்லில் நிறுத்துவேன். இது என் மைந்தர்மேல் ஆணை!”

பீஷ்மர் சினத்துடன் கைதூக்கி ஏதோ சொல்லவந்து, அச்சொல்லை அடக்கி வெறும் கையசைவாக அதை மாற்றி தலைதிருப்பி நின்றார். இல்லை என்பதுபோல் தலையசைத்து “நீ செல்லலாம். உன்னிடம் நான் பேசவேண்டியது ஒன்றுமில்லை” என்றார். “உங்கள் நோன்பில் உறுதியிருந்தால் என் விழிகளை நோக்கி பேசலாமே?” என்று அசலை சொன்னாள். “செல்க!” என்று பீஷ்மர் நடுங்கும் குரலில் சொன்னார். “உங்களிடம் உறுதியை எதிர்பார்க்கிறார்கள். நானும் எதிர்பார்த்தேன். ஆனால் அவ்வுறுதி சற்றேனும் இருந்திருந்தால் அன்று அம்பையை எதிர்கொண்டிருக்கலாம். ஒரு மூதாதை தன்னால் சுமக்க முடியாத எடையொன்றை தோளில் ஏற்றிக்கொண்டதன் விலையை அஸ்தினபுரி இன்று அளித்துக்கொண்டிருக்கிறது” என்றாள் அசலை.

அக்கணம் பொறையுடைந்த பீஷ்மர் திரும்பி உறுமியபடி கையை ஓங்கிக்கொண்டு அவளை நோக்கி வந்தார். அசையாது அவர் விழிகளைப் பார்த்து “நன்று” என்று அசலை சொன்னாள். “சென்றுவிடு!” என்று இறுகிய பற்களூடாக மூச்சொலியுடன் பீஷ்மர் சொன்னார். “உங்கள் கையிலிருக்கும் அம்பால் என் கழுத்தை வெட்டலாம். வாழ்நாளில் முற்றுறுதியுடன் ஒரு முடிவையேனும் எடுத்தீர்கள் என்ற புகழ் உங்களுக்கு அமையும்” என்று அசலை சொன்னாள். பீஷ்மர் தோள்கள் தொய்வுற தளர்ந்த காலடிகளுடன் பின்னகர்ந்து சென்று அங்கு இடப்பட்டிருந்த மூங்கில் பீடத்தின்மேல் அமர்ந்தார். தனக்குத் தானே என “இத்துயரையும் நான் தாங்கவேண்டுமென்பது ஊழ் போலும். இது ஒன்றுதான் எஞ்சியிருந்தது போலும்” என்றார்.

அசலை அவர் அருகே வந்து “இதுவும் தாங்கள் நடிக்கும் ஒரு மாற்றுரு மட்டுமே. நினைவறிந்த நாள் முதலே ஒன்றிலிருந்து பிறிதொன்றென மாற்றுருக்களைத் தாங்கி இந்த மேடையில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். பிறருக்குமேல் எழுந்த தலைகொண்ட பெருவீரர். ஆனால் நீங்கள் செருவென்ற களங்கள் எவை? அன்னைக்கென நோன்பு பூண்டவர். ஆனால் அணுகிய அத்தனை பெண்களுக்கு முன்னாலும் தோற்றவர். பிறருக்கென துயர் தாங்குபவர், ஆனால் குடியை முற்றழித்த மூதாதை. அனைவராலும் புறக்கணிக்கப்படுபவர், மைந்தராலும் பெயர்மைந்தராலும் துயருறுபவர். ஆனால் தன்னையன்றி பிறரை எண்ணாதவர். பிதாமகரே, நீங்கள் இவர்களில் எவருமல்ல. இத்தனை மாற்றுருக்களுக்கும் அடியில் உங்கள் மெய்யுரு என்ன என்று இத்தனிமையிலிருந்து எண்ணிக்கொள்ளுங்கள்” என்றாள்.

பீஷ்மர் விழிகளைத் தூக்கி அவளைப் பார்த்து “நான் மட்டும்தான் இவ்வண்ணம் இருக்கிறேனா? மானுடர் அனைவரும் மாற்றுருக்களிலிருந்து பிறிதொரு மாற்றுருவுக்குச் செல்வதையே அகநிகழ்வெனக் கொண்டவர்கள் அல்லவா?” என்றார். “அனைவரும் அல்ல” என்று அசலை சொன்னாள். “தன் குருதியறத்தை மட்டுமே அறிந்தவர்கள், ஐயமின்றி தன் கடமையை ஆற்றுபவர்கள், ஊழ்கத்தில் அமர்ந்து உய்பவர்கள் தங்கள் மெய்யுருவிலேயே அமைகிறார்கள். பிதாமகரே, அன்னையர் அன்னையராக நிற்கையில் தாங்களாகவே நிலைகொள்கிறார்கள்” என்றாள் அசலை. “அன்னையென்று உணர்கையில் பிறிதொன்றும் அல்ல நான் என்று உறுதி கொள்கிறேன்.”

“சொல்க!” என்றார் பீஷ்மர். “என்னையாவது எதிர்கொள்வீர்கள் என எண்ணினேன். இத்தனை அகவைமுதிர்வுக்குப் பின்னரும் நீங்கள் என்னை தவிர்க்கவே முயல்கிறீர்கள்” என்றாள் அசலை. பீஷ்மர் நடுங்கும் நீள்விரல்களால் தாடியை நீவினார். அவள் திரும்பியபோது பின்னிருந்து அவர் குரலெழுந்தது. “என்னை யார் என்று நீ பார்க்கிறாய்? இத்தருணத்தில் நான் செய்ய வேண்டியதென்ன ?” என்றார்.

“நீங்கள் வெறும் ஒரு முதியவர் மட்டுமே. உடலுருக்கொள்ளாத பல்லாயிரம் மைந்தரின் தந்தை. நுண்வடிவில் அவர்கள் அனைவரும் வாழ்வது உங்கள் உடலுக்குள்” என்றாள் அசலை. “பிதாமகரே, நிகழா மைந்தரை உடன்பிறந்தார் குருதியில் கண்டு அதன் இசைவையும் இசையாமையையும் மாறி மாறி உணர்ந்து அலைக்கழிந்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். பாலையின் முளைக்காத விதைமண்ணின் துயரம்தான் நீங்கள். இன்று கௌரவமைந்தரின் பெருக்கைக்கண்டு நீங்கள் கொண்டிருப்பது அன்பின்மை அல்ல, விலகலும் கசப்பும்தான். உங்கள் குருதியில் இக்கொடிவழி முளைத்திருந்தால் இம்மைந்தரும் பெயர்மைந்தரும் சிறப்புற்று அமைந்திருப்பார்களென்று ஒருகணமேனும் நீங்கள் எண்ணியதுண்டா?”

பீஷ்மர் அவளை ஒரு கணம் நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டார். “சொல்லுங்கள், உங்கள் மைந்தரும் பெயர்மைந்தரும் உங்களுக்கு அளிக்கும் ஒவ்வாமையைத்தானே அவர்கள் மீதான பற்றாகவும் கடமையாகவும் மாற்றிக்கொண்டிருந்தீர்கள்? அவர்கள் பொருட்டு வில்லேந்தவும் வேலேந்தவும் உங்களைத் தூண்டுவது நீங்கள் அவர்களை வெறுக்கிறீர்கள் என்பதுதானே?”

பீஷ்மர் அவளை நோக்கி “உறவுகளை இப்படி ஆராய்ந்தால் ஒன்றும் எஞ்சாது, பெண்ணே. ஒவ்வொருமுறையும் ஒவ்வொன்றும் உண்மையென்று தோன்றும். எதையும் எப்படியும் விளக்கிக்கொள்ளவும் இயலும்” என்றார். “அவையமர்ந்திருக்கையில் உங்கள் கண்களில் தெரியும் விலக்கத்தையும் கசப்பையும் தொலைவிலிருந்து நோக்கிக்கொண்டிருப்பவள் நான். பதினைந்தாண்டுகளாக நான் நன்கறிந்தவை அவ்வுணர்வுகள். பிதாமகரே, பல தருணங்களில் தாங்களாக மாறி பீடத்தில் அமர்ந்து அந்த அவையை நானே நோக்கியதுண்டு” என்றாள் அசலை.

பீஷ்மர் “உள்ளத்தைப்பற்றி எவரும் எதையும் சொல்லிவிடமுடியாது, அல்லது எவரும் எதையும் சொல்லலாம்” என்றார். “ஆம், முழுமையாக எதையும் சொல்லிவிடமுடியாது. ஆனால் அத்தருணத்தில் அக்காலத்தில் பொருத்தி சிலவற்றை வகுத்துரைக்கவும் கூடும்” என்று அசலை சொன்னாள். “இன்று நீங்கள் வில்லேந்தி களம்புகுவது எதற்காக? இவர்கள் அனைவரும் இறந்து மறைகையில் உங்கள் உள்ளம்கொண்ட கசப்பு நிறைவடையும். அவர்களின் பொருட்டு வில்லேந்தி உடன்நின்று பொருதி விழுந்தால் உங்கள் குற்றவுணர்வும் சொல்நிகர் அடையும். உங்கள் முடிவுக்கு வேறென்ன அடிப்படை?” என்றாள்.

பீஷ்மர் “இத்தனை சொல்லாய்வும் மெய்யாய்வும் செய்து நாம் அடையப்போவதென்ன?” என்றார். அவர் விழிகளில் ஏளனம் எழுந்தது. துடுக்காகப் பேசும் இளமகளிடம் விளையாடும் தந்தை என முகம்சூடி “இந்த ஆடலால் நாம் நம்மை அறிந்துள்ளோம், பிறரை அதைக்கொண்டு உய்த்துள்ளோம் என்னும் நம்பிக்கையன்றி வேறென்ன கிடைக்கிறது?” என்றார்.

அசலை “உங்கள் உள்ளத்தை நீங்கள் எதிர்கொள்வதே இல்லை. பிதாமகரே, மிக இளமையில் காமத்தை விட்டு ஒழிந்துசெல்வதே அதை வெல்வதற்கான வழி என்று கண்டுகொண்டீர்கள். அதன்பொருட்டே பாரதவர்ஷத்தின் காடுகளிலும் நகரங்களிலும் மாற்றுருக்கொண்டு அலைந்தீர்கள். பின்னர் ஒவ்வொன்றிலிருந்தும் ஒழிந்துசெல்வதே கடந்துசெல்வது என்று கற்றுக்கொண்டீர்கள். இதோ, இவ்வெளிய உண்மையிலிருந்து ஒழிந்துசெல்லும் பொருட்டே இத்தருணத்தில் நீங்கள் எடுக்கவேண்டிய முடிவை தவிர்க்கிறீர்கள்” என்றாள்.

“இப்போது பெருந்தந்தையென தலையெழுந்து நின்று இப்போரை தவிர்க்கும்படி நீங்கள் ஆணையிடவேண்டும். இல்லை, எந்நிலையிலும் என் மைந்தர் களமெதிர் நின்று குருதி சிந்த நான் ஒப்பேன் என்று நீங்கள் சொல்ல வேண்டும். ஆம், அவர்களில் ஒருசாரார் உங்களை புறந்தள்ளி முன்செல்வார்கள். ஒருவேளை அங்கரையோ சல்யரையோ முன்நிறுத்தி களம்காணவும் கூடும். ஆனால் அவர்கள் அதை செய்தால் உங்கள் சொல்லை கடந்துசென்றே அதை செய்யவேண்டும். இருசாராரும் உங்களை கொன்றுவிட்டே தங்களுக்குள் மோதிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் எது உகந்தததோ அதைச் செய்தவர் ஆவீர்கள். பிற அனைத்தும் வெறும் நடிப்புகளே.”

பீஷ்மர் அவளை நோக்கிக்கொண்டு வெறுமனே அமர்ந்திருந்தார். “இங்கு இந்தப் பொருளற்ற பயிற்சிகளைச் செய்துகொண்டு, காட்டிலும் களத்திலும் ஒடுங்கி அமர்ந்திருந்தால் பிறிதொருநாள் தெய்வங்களுக்கு முன் பெரிய ஒரு நிகர்பலியை நீங்கள் அளிக்கவேண்டியிருக்கும். கருதுக, ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒழிந்துசென்றதை ஓராயிரம் மடங்காக திருப்பி அளிக்க வேண்டியிருந்திருக்கிறது. இது இறுதி வாய்ப்பு. இத்தருணத்திலும் ஒழிந்தீர்கள் என்றால் எஞ்சுவதென ஏதுமில்லை. இதற்கப்பால் தங்களிடம் நான் சொல்வதற்கு என்னிடம் ஒருசொல்லும் இல்லை” என்றாள் அசலை.

பீஷ்மர் விழிதாழ்த்தி புன்னகைத்தார். உளவிசை தளர உடல் தொய்வுகொள்ள “நான் அறிவின்மை பல சொல்லியிருக்கக்கூடும். அதை நான் அறிவேன். அச்சொற்களனைத்தும் என் உளமறிந்த மெய் என்பதற்கப்பால் எனக்கு சொல்வதற்கொன்றுமில்லை” என்றாள் அசலை. பீஷ்மர் விழிதூக்கி “அல்ல, நான் அறிந்த அரசுசூழ் உரைகளில் இப்போது நீ நிகழ்த்தியதே மிகச் சிறந்தது. இத்தனை கூரிய சொற்களையும் முழுமுற்றான சொல்லாடலையும் உன்னால் எப்படி இயற்றிக்கொள்ள இயன்றது என்று வியந்தேன்” என்றார்.

அசலை நீள்மூச்சுடன் புன்னகைத்து “தன் குஞ்சுகளைக் காக்க சிறுதாய்க்குருவி கருநாகத்தை கொத்தி துரத்துவதை தாங்கள் கண்டிருக்கலாம். இது அன்னையரில் தெய்வங்கள் எழுந்தளிக்கும் ஆற்றல்” என்றபின் “வணங்குகிறேன், பிதாமகரே” என்றாள். பீஷ்மர் கைதூக்கி அவளை வாழ்த்தினார்.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 11

பகுதி இரண்டு : பெருநோன்பு – 5

blஅரசத்தேருக்கு காவலாகச் சென்ற புரவிவீரர்கள் குடில்முற்றத்தில் சென்று பரவி நின்றனர். குடிலிலிருந்து பீஷ்மரின் மாணவர் விஸ்வசேனர் தன் மாணவர்களுடன் கைகூப்பியபடி வெளியே வந்தார். தேர் குடிலின் முற்றத்தில் நுழைந்து நின்றது. புரவிகள் குளம்பு மாற்றிவைத்து பிடரி சிலுப்பி தலைகுலுக்கி பெருமூச்சுவிட்டன. அவற்றின் வியர்வை இளவெயிலில் ஆவியாக எழுந்தது. வீரர்களில் ஒருவன் வந்து தேரின் கதவைத் திறந்து மரப்படிக்கட்டுகளை எடுத்து வைத்தான். அசலை கைகளைக் கூப்பியபடி படிகளினூடாக இறங்கி கீழே நின்று காந்தாரியை கைபற்றி மெல்ல இறக்கினாள்.

பீஷ்மரின் முதன்மை மாணவரான விஸ்வசேனர் கூப்பிய கைகளுடன் அருகே வந்து “இத்தவக்குடிலுக்கு பேரரசியின் வருகை எங்கள் அனைவருக்கும் அன்னையின் வாழ்த்தென அமைகிறது. இந்நாள் தங்கள் தண்ணளியால் பொலிகிறது” என்று முகமன் உரைத்தார். காந்தாரி கைதூக்கி அவர் தலையில் வைத்து “நல்லூழ் தொடர்க! நலம் பெருகுக!” என்று வாழ்த்தினாள். விஸ்வசேனரின் மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து காந்தாரியை கால்களைத் தொட்டு சென்னி சூடினார்கள். ஒவ்வொருவர் தலையிலும் கைவைத்து “வெற்றி கொள்க! புகழ் விளைக!” என்று அவள் வாழ்த்தினாள்.

விஸ்வசேனர் “குடிலுக்குள் வந்து அமர்க, அரசி! எங்கள் எளிய இன்னீரில் ஒரு வாய் அருந்தினீர்கள் என்றால் தலைமுறைகள் அதைப் பெருமையென சொல்லிக்கொள்ளும்” என்றார். அசலை மெல்லிய குரலில் “பிதாமகர் எங்கே?” என்றாள். விஸ்வசேனர் “சோலைக்குள் இருக்கிறார். இப்போதெல்லாம் நாங்கள் எவரும் அவருடன் செல்வதில்லை. அவர் எங்களிடம் பேசுவதை நிறுத்தியே பல ஆண்டுகளாகின்றன” என்றார். காந்தாரி “நான் அவரிடம் தனியாக பேசவே வந்தேன், விஸ்வசேனரே” என்றாள். விஸ்வசேனர் “ஆம், அதை அவரிடம் தெரிவித்தோம். மறுமொழி ஏதும் அவர் சொல்லவில்லை” என்றார்.

அசலை “குடிலுக்குள் நுழைந்து அமர்ந்துவிட்டு செல்வோம் அரசி, அதுவே முறை” என்றாள். “ஆம்” என்று காந்தாரி சொல்லி அசலையின் தோளைப்பற்றியபடி சந்தன மிதியடிகளிட்ட தனது கால்களை பசுஞ்சாணி மெழுகிய முற்றத்தில் மெல்ல எடுத்துவைத்து நடந்தாள். வெட்டுகல்லாலான படிகளிலேறி குடிலின் திண்ணையில் விரிக்கப்பட்ட மான் தோல் பீடத்தில் அமர்ந்தாள். விஸ்வசேனர் கண்காட்ட இரு மாணவர்கள் உள்ளிருந்து மரக்குடைவுக் கலத்தில் காய்ச்சிய பசும்பாலை கொணர்ந்தனர். விஸ்வசேனர் அதை வாங்கி காந்தாரியிடம் அளித்து “எங்கள் எளிய கொடை, பேரரசி” என்றார். “காராம்பசுவென்று நினைக்கிறேன். நறுமணம் கொண்டுள்ளது பால்” என்றபடி காந்தாரி குவளையை எடுத்து மூன்று முறை அருந்தி அருகே வைத்தாள். “இஞ்சிப்புல்வெளியில் மேய்கிறது போலும். பாலில் அந்த மணமும் உள்ளது.”

விஸ்வசேனர் முகம் மலர்ந்து “ஆம் பேரரசி, சுமதி என்று அப்பசுவுக்கு பெயர். இது இரண்டாவது பேறு” என்றார். “நன்று, அவளுக்கு எனது வணக்கங்களை தெரிவியுங்கள்” என்று காந்தாரி கைகூப்பியபின் “உங்கள் மாணவர்களில் ஒருவர் என்னோடு வரட்டும். பிதாமகர் இருக்கும் இடத்தை காட்டுங்கள்” என்றாள். விஸ்வசேனர் தன் மாணவர்களில் ஒருவரிடம் பேரரசியை அழைத்துச்செல்லும்படி கைகாட்டினார். அவன் அருகே வந்து “வணங்குகிறேன், பேரரசி” என்றான். காந்தாரி அசலையின் தோளைத்தொட்டு எடைமிக்க உடலை உந்தி மேலெழுப்பி எழுந்து கைநீட்டி அசலையின் தோளை பற்றிக்கொண்டாள். அசலை “வழியில் நீ பேசவேண்டியதில்லை. பாதையைப் பற்றி நான் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது” என்று அவனிடம் சொன்னாள். அவன் தலையசைத்தான்.

குடிலிலிருந்து மீண்டும் முற்றத்திற்கு இறங்கி, பக்கவாட்டில் திரும்பி, அதற்குப் பின்னால் பசுமை செறிந்து திசைமூடி விரிந்து கிடந்த ஒழுங்குபடுத்தப்படாத தோட்டத்திற்குள் நுழைந்துசென்ற ஒற்றையடிப் பாதையில் அவர்கள் நடந்தனர். அசலை “ஒற்றையடிப் பாதை. செம்மண் புழுதி” என்றாள். காந்தாரி அச்சொற்களிலிருந்து பாதையை தனக்குள் எழுப்பி மெல்ல காலெடுத்து வைத்து நடந்தாள். “இருபுறமும் மந்தார மரங்கள். வழியருகே நீண்ட ஒரு கிளை” என்று அசலை சொன்னாள். “இலஞ்சி மரம். வேர்கள் பாதையில் பரவியுள்ளன. மெல்லிய சரிவு, இடவளைவு” என்று சொல்லிக்கொண்டே நடந்தாள்.

மேலும் மேலும் சோலைக்குள் புதைந்துசென்ற அப்பாதை முன்னந்தி என இருள் காட்டியது. காந்தாரி “இது பராமரிக்கப்படாத சோலை” என்றாள். “ஆம், அன்னையே” என்றாள் அசலை. “இத்தனை மரங்கொத்திகளின் ஒலி பராமரிக்கப்படும் சோலையில் எழுவதில்லை” என்று காந்தாரி கூறினாள். “ஆம், காடுபோலவே மரங்களனைத்திலும் கொடிகள் படர்ந்து ஏறியுள்ளன. ஒற்றையடிப் பாதையன்றி வேறு வழிகளேதும் இங்கில்லை. அடிமரம் பெருத்து வேர்கள் நிலம்கவ்வ எழுந்த பெருமரங்கள். அத்திகள், ஆலமரங்கள், மருதுகள், வேங்கைகள்” என்றாள் அசலை. “பாதை சரிந்திறங்குகிறது. சரளைக்கல் வழுக்கக்கூடும்” என்றாள்.

காந்தாரி மிக மெதுவாக தயக்கமில்லாத காலடிகளை வைத்து நடந்தாள். பின்னர் பெருமூச்சுடன் நின்று சிறிய உதடுகள் குவிய வாய் குவித்து மூச்சுவிட்டாள். அவளுடைய வெண்ணிறத் தோளிலும் கழுத்திலும் வியர்வை வழிந்தது. “அமர்கிறீர்களா, அன்னையே?” என்று அசலை கேட்டாள். “இல்லை, சற்று மூச்சு திரட்டிக்கொண்டேன். செல்வோம்” என்று காந்தாரி மீண்டும் நடக்கையில் “மண் மாறுபடுகிறது. இது சற்று இறுகிய சேற்றுப்பாறைநிலம்” என்றாள். “ஆம் அன்னையே, உலர்ந்த ஊன்போல இங்கே கற்கள் சிதறிக் கிடக்கின்றன” என்று அசலை சொன்னாள்.

காந்தாரி மூச்சுத் திணறும் குரலில் “ஏராளமான நாவல்பழங்கள் தரையெங்கும்” என்றாள். “ஆம், நாவல் மரங்கள் செறிந்துள்ளன” என்று அசலை சொன்னாள். “பறவைகளின் களியாட்டை கேட்கிறேன்” என்று காந்தாரி கூறினாள். மேலும் சரிந்திறங்கிய பாதை ஊடாக கடந்துசென்ற சிறிய ஓடையை தாண்டியது. “ஊற்றிலிருந்து வரும் நீர், இளவெம்மை கொண்டிருக்கிறது. ஊற்று மிக அருகிலுள்ளது” என்றாள் காந்தாரி. “ஆம் அன்னையே, இங்கிருந்து பார்த்தாலே தெரிகிறது” என்று அசலை சொன்னாள்.

காந்தாரி “அவர் இங்கு அருகேதான் இருக்கிறார்” என்றாள். அசலை சுற்றுமுற்றும் பார்த்தபடி “இல்லை அன்னையே, தெரியவில்லை” என்றாள். “என் உள்ளுணர்வு சொல்கிறது. மிக அருகிலேதான் இருக்கிறார்” என்றபின் இளைஞனிடம் “எங்கிருக்கிறார் என்று பார்” என்றாள். அவன் “ஆணை” என்றபின் காட்டுக்குள் சென்று சுற்றும் நோக்கிவிட்டு வந்து தாழ்ந்த குரலில் “அருகிலேதான். ஓடைக்கரையில் பாறையில் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கிறார்” என்றான். “என்னை அழைத்துச் செல்” என்றாள் காந்தாரி. அசலை அவள் கைகளைப் பற்றி ஓடையினூடாகவே அழைத்துச் சென்றாள்.

ஓடைக்கரையில் அமைந்த கரிய பாறையை நீர் வளைந்து கடந்து சென்றது. அதன் மீது விழிமூடி கைகளை மடியில் வைத்து நிமிர்ந்த முதுகுடன் பீஷ்மர் அமர்ந்திருந்தார். நரைத்த வெண்தாடி காற்றில் உலைந்துகொண்டிருந்தது. சற்றுமுன் நீராடி விரல்களால் நீவி முதுகிலிட்ட வெண்ணிறக் குழல்கற்றைகள் திரிகளாக தோளில் பரவி காய்ந்திருந்தன. உடல் உலர்ந்திருந்தாலும் நீராடியதன் ஒளி தெரிந்தது. கால்களின் நகங்கள் காய்ந்த நெற்றுகள்போல நீண்டு சுருண்டிருப்பதை அசலை பார்த்தாள். உள்மடிந்த உதடுகள்மேல் மூக்கு வளைந்து தொங்கியதுபோல் இருந்தது. மூச்சு ஓடுவதை அங்கிருந்து பார்க்க முடியவில்லை, ஆனால் அவர்களின் காலடிகளை அவர் கேட்டுவிட்டாரென்பதை அவர் முகம் எவ்வாறோ காட்டியது.

காந்தாரி இளைஞனிடம் “நீ செல்லலாம், மைந்தா” என்றாள். அவன் “ஆணை” என்று தலைவணங்கி ஓசையற்ற காலடிகளுடன் விலகிச்சென்று ஓடையினூடாக அப்பால் மறைந்தான். அசலை “தாங்கள் தனியாக உரையாடுவதென்றால்…” என்றாள். காந்தாரி “இல்லை, அது முறையல்ல. நீ அருகிருக்கவேண்டும்” என்றாள். அசலை “ஆணை” என்றாள். காந்தாரி தனக்குத்தானே என புன்னகைத்து “நெறியேற்புக் காமஒறுப்பாளர்களை சிதைவரைக்கும்கூட தெய்வங்கள் நம்புவதில்லை. சுற்றமும் சொல்லும் அவர்களை ஆயிரம் விழிகளால் நோக்கிக்கொண்டிருக்கின்றன” என்றாள்.

பாறையின் அருகணைந்ததும் அசலை “பிதாமகரே, அஸ்தினபுரியின் பேரரசி தங்களைப் பார்க்கும்பொருட்டு வந்துள்ளார்” என்றாள். பீஷ்மரின் இமைகள் கைதொட்ட தொட்டால்சிணுங்கி இலைகள்போல் சுருங்கி அசைந்தன. பின்னர் விழிகளைத் திறந்து அவர்களை பார்த்தார். சிலகணங்கள் அவர் அவர்களை அடையாளம் காணவில்லை என்று தோன்றியது. அசலை மீண்டும் பணிந்து “நான் அசலை, அஸ்தினபுரியின் கௌரவ இளவரசர் துச்சாதனரின் மனைவி.  பேரரசி காந்தாரியை தங்களை சந்திக்கும்பொருட்டு அழைத்து வந்திருக்கிறேன்” என்றாள்.

பீஷ்மர் காந்தாரியை பார்க்க அவள் இரு கைகளையும் கூப்பி தலைவணங்கி “தங்கள் கால்களை சென்னி சூடுகிறேன், பிதாமகரே. இத்தருணம் என் மைந்தருக்கும் கொடிவழிகளுக்கும் நலம் பயப்பதாக அமையட்டும்” என்றாள். பீஷ்மர் வலக்கையைத் தூக்கி அவளை வாழ்த்தியபின் அருகிருந்த மரத்தடியை நோக்கி அமரும்படி கைகாட்டினார். அசலை சுற்றுமுற்றும் பார்த்தபின் அருகே நின்றிருந்த பெரிய இலை கொண்ட பகன்றையிலிருந்து நாலைந்து இலைகளைப் பறித்து தரையில் வைத்தாள். காந்தாரியின் கைபற்றி “அமர்க, பேரரசி!” என்றாள்.

அவள் தோளைப்பற்றியபடி எடை மிக்க உடலை மெல்ல தாழ்த்தி பெருமூச்சுடன் காந்தாரி அமர்ந்தாள். “எனக்குப் பின்னால் நீ நின்றுகொள்” என்றாள். பீஷ்மர் “இந்த ஓடையின் நீர் அருந்துவதற்கு உரியதே” என்றார். காந்தாரி “ஆம், சற்று நீர் தேவை எனக்கு” என்றாள். அசலை பகன்றையின் இன்னொரு இலையைப் பறித்து அதை தொன்னையாகக் கோட்டி ஓடை நீரை அள்ளி காந்தாரிக்கு அளிக்க அவள் அதை அருந்தி இலையை திரும்ப அளித்தாள்.

மேலாடையால் முகத்தையும் கழுத்தையும் துடைத்தபின் “பிதாமகரே, நான் தங்களிடம் ஒரு கொடையை கோரி வந்துள்ளேன்” என்றாள். “இன்று தங்கள் முன் அரசியாக அல்ல, தங்கள் குடியின் மருமகளாக அமர்ந்து இதை கோருகிறேன்.” சொல் என்பதுபோல் பீஷ்மர் கையசைத்தார்.

காந்தாரி “பெரும்போர் ஒன்று அணுகிவருகிறதென்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். நினைவறிந்த நாள் முதல் தாங்கள் ஆற்றிய அனைத்துமே இப்போரை தவிர்ப்பதற்காகத்தான். என் கணவரும் அவருடைய இளையோரும் பிறப்பதற்கு முன்னரே இப்போர் கருக்கொண்டுவிட்டது என்கிறார்கள் அரசுசூழ்வோர். இது ஊழெனில் இதன் முன் வணங்கி நிற்பதன்றி நாம் செய்வதற்கொன்றுமில்லை. ஆயினும் அன்னையென என் உள்ளம் ஏங்குகிறது. என் மைந்தர் அலைகளென எழுந்து என்னைச் சூழ்ந்து நிறைந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் களம்பட்டால்கூட அது எனக்குப் பெருந்துயர். இதுவரை பேரன்னையென அவை நிறைந்து வாழ்ந்தேன். அரசித்தேனீ என்று என்னை சூதர்கள் பாடுகிறார்கள். நான் வேண்டுவதெல்லாம் ஒன்றே. பிதாமகரே, என் கண் முன் என் மைந்தர் களம்படலாகாது. எனவே இப்போர் நிகழக்கூடாது” என்றாள்.

பீஷ்மர் தாழ்ந்த இமைகளுடன் இடக்கை தாடியை அளைந்துகொண்டிருக்க தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் என்ன எண்ணுகிறார் என்று அசலை உளம் ஓட்டி நோக்கினாள். உண்மையில் அவருள் எண்ணமென்றே எதுவும் ஓடவில்லை என்று தோன்றியது. உள்ளம் இயங்குவதற்கும் விசை தேவைப்படுகிறது. அதையும் இழந்து வெற்றுடலென அவர் அங்கு இருப்பதுபோல் தோன்றியது. காந்தாரி “அரசர் எனில் மண்ணுக்காக போரிடுவார்கள். களம்படாது போர் நிகழவேண்டுமென்று விரும்பும் அறிவிலியுமல்ல நான். ஆனால் இது அத்தகைய போர் அல்ல. இரு தரப்பிலும் நின்றிருப்பவர்கள் உடன்பிறந்தார். ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்களே முழுமையாக வெறுக்க முடியும் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். பிதாமகரே, உடன்குருதியினர் தொடுக்கும் இலக்குகள் ஒருபோதும் பிழைப்பதில்லை. இரு படைகளிலிருந்தும் முதன்மைப் படைக்கலங்கள் இங்குள்ள இளமைந்தரையே நோக்கி எழும் என்று தாங்களும் உணர்ந்திருப்பீர்கள்” என்றாள்.

“மைந்தரை களப்பலியிட்டு நாம் அடையப்போவது என்ன?” என்றபோது அவள் குரல் ஓங்கியது. “என் மைந்தனிடம்தான் நான் முதன்மையாக பேசவேண்டும். ஆனால் ஒரு சொல்லும் ஊடுருவமுடியாத கற்பரப்பென ஆகியிருக்கிறது அவன் உள்ளம். என் கொழுநர் எதையும் செவிகொள்ளாமல் வாயில்களை மூடிவிட்டு அமர்ந்திருக்கிறார். நான் பேசக்கூடுவது மூவரிடம்தான். உங்களிடமும் துரோணரிடமும் கிருபரிடமும். அஸ்தினபுரியின் நால்வகைப் படைகளும் உங்கள் சொல்லின்படியே இயங்குகின்றன. உங்கள் வில்லாற்றலை நம்பியே அவன் போர் வெற்றி குறித்து உறுதி கொண்டிருக்கிறான். நீங்கள் முடிவெடுத்தால் இந்தப் போர் இக்கணமே நின்றுவிடும் என்பதில் ஐயமில்லை.”

“எனவேதான் உங்களிடம் வந்தேன். என் மைந்தரை வாழவிடுங்கள். இப்போரை நிறுத்துங்கள். உங்கள் கொடிவழிகள் உங்கள் விழிமுன் குருதி சிந்தி அழிவதை ஒப்பாதீர்கள். இந்த எளியவள் தங்களிடம் சொல்வதற்கு இதற்குமேல் ஒன்றுமில்லை” என்றாள் காந்தாரி. பேச்சின்போதே அவள் விழிகள் நீரணிந்து ஒளிகொண்டன. மூக்கு சிவந்து முகம் சுண்டியது. அவளை அறியாமல் கைகூப்பியிருந்தாள் கண்களைக் கட்டியிருந்த நீலப்பட்டு விழிநீரால் நனைந்து நிறம் மாறியது. அதன் விளிம்புகளில் கசிந்த கண்ணீர் கன்னங்களை நனைத்து கீழிறங்கியது. ஒன்றையொன்று அழுத்தி உள்மடிந்திருந்த சிறிய சிவந்த உதடுகள் நெளிந்தன. வெண்ணிறக் கழுத்தில் நீலநரம்புகள் எழுந்து மெல்ல அசைந்தன. மூச்சில் ஏறியிறங்கிய பெருந்தோள்களும் குவைமுலைகளும் மெல்ல அடங்கின.

பீஷ்மர் இமை தூக்கவோ உடலில் அசைவெழவோ இல்லை. அவர் அங்கு இல்லையென்ற எண்ணத்தையே அசலை மீண்டும் அடைந்தாள். ஒரு சொல்கூட அவரை சென்றடையவில்லையென்று. நெடுந்தொலைவிலிருந்து அவர் மெல்லிய ஏளனத்துடன் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பதைப்போல. தெய்வங்களுக்குரிய ஏளனம் அது. கருவறை இருட்டுக்குள் மறைந்து கைகூப்பி நின்றிருக்கும் மானுடரை நோக்கி தெய்வங்கள் புன்னகைத்துக் கொள்கின்றன. ஒருவரோடொருவர் நோக்கி சொல்லில்லாது இளிவரல் பரிமாறிக்கொள்கின்றன. மானுடரை முழுக்க நோக்கி புன்னகை புரியத் தொடங்குகையில் ஒவ்வொருவரும் தெய்வமாகிறார்கள் போலும். இங்கிருந்து விண்ணோக்கி எழுந்து அப்பெரும்பரப்பில் பதிந்து கீழே நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் விழைவுகள் விளையாடும் களம். அவர்களின் வெற்றிகள் தோல்விகள். வெற்றியிலும் தோல்வியிலும் அவர்களிலெழும் சிரிப்பு.

பொழுது ஓடிக்கொண்டிருந்தது. காந்தாரி மீண்டும் சொல்லெடுக்கவில்லை. ஒருமுறை அவள் வாய்நீர் விழுங்கும் ஓசைக்கு அப்பால் எதுவும் எழவில்லை. அசலை கால்மாற்றி நின்று கைநீட்டி அருகிருந்த அடிமரத்தை பற்றிக்கொண்டாள். ஒருகணத்தில் சலிப்பெழுந்து பெருகி அங்கு நிற்க முடியாதென்று தோன்றியது. இருவரையும் அப்படியே விட்டுவிட்டு விலகிச்சென்று அந்தத் தோட்டத்தின் பசுமையலைகளுக்குள் மூழ்கி மறைந்துவிடவேண்டுமென்று எண்ணினாள். எத்தனை நேரமாகியிருக்கும்? நெடுநேரமாகியிருக்கும். உள்ளத்தின் நேரம் வேறொரு விசை கொண்டது. அரிதாகவே அது புறப் பொழுதை இணைகொள்கிறது.

நாவெடுத்து ஏதேனும் சொன்னால் என்ன? ஆனால் ஒரு சொல்லும் அவளுக்குள் எழவில்லை. அல்லது ஏதேனும் ஓசையையாவது எழுப்பவேண்டும். இந்த மரக்கிளையைப் பிடித்து உலுக்கலாம். கால்களால் இந்த உருளைக்கல்லை உதைத்து இருளை நோக்கி உருட்டிவிடலாம். ஆனால் அவளாலும் தன் உடலை அசைக்க முடியவில்லை. அத்தனை திமிறிக்கொண்டிருந்தாலும் உள்ளத்தின் பிறிதொரு பகுதி அசைவிழந்து குளிர்ந்தே கிடந்தது.

அவள் மூச்சை இழுத்து பெருமூச்சுவிட்டு தன்னுடலை உயிர்கொள்ளச் செய்தாள். அவ்வோசையால் கலைந்தவர்போல பீஷ்மர் விழிதூக்கி அவளைப் பார்த்தார். சிவந்த கண்கள் அப்போது தணலில் இருந்து எடுத்த கூழாங்கற்கள்போல் இருந்தன. விழிகளும் நரைக்குமா என்ன? முதுமையில் அவரை இவையனைத்திலிருந்தும் அப்பால் எனக் காட்டுபவை அந்த நரைத்த விழிகள். அன்போ கனிவோ அறிமுகமோ அற்றவை. சிறுத்தையின் கொலைவிழிகள். தெய்வச் சிலைகளின் கல்லித்த நோக்கு.

பீஷ்மர் காந்தாரியை நோக்கி திரும்பி “நான் இல்லையெனிலும் இப்போர் நிகழும், அரசி” என்றார். “உண்மையில் நெடுங்காலம் நானே இப்போரை தடுக்கும் ஆற்றல் கொண்டவன் என்று எண்ணியிருந்தேன். ஒவ்வொரு முறையும் இப்போரை ஒத்திப்போட்டவன் நானே என்று தருக்கினேன். இதுநாள் வரை என் வாழ்வில் நான் கொண்ட இன்பம் என்பது இவையனைத்தையும் நான் ஆள்கிறேன் என்னும் ஆணவம்தான். நெடுங்காலம் முன்னரே அது கலைந்துவிட்டது. எப்போது இந்நகருக்குள் பயின்ற வில் கொண்டு பெருந்தோளுடன் அங்கன் நுழைந்தானோ அன்று. பேரரசி, உங்கள் மகன் இன்று நால்வகைப் படைக்கும் தலைவன் என்றும் களம் நின்று வெற்றியை ஈட்டித்தருபவன் என்றும் கருதுவது என்னையோ துரோணரையோ அல்ல, அங்கனைத்தான்.”

“அத்துடன் அது வீண் நம்பிக்கையும் அல்ல” என்றார் பீஷ்மர். “பாரதவர்ஷத்தில் இன்றிருக்கும் முதன்மைப் படைத்தலைவனும் களவீரனும் அவனே. அதையறிந்தமையால்தான் முதற்கணமுதல் அவனை நான் வெறுத்தேன். அவைகளில் அவனை இழிவுசெய்து அவன் கொண்ட தன்னம்பிக்கையை குலைக்க முயன்றேன். அவனுக்கும் உங்கள் மைந்தனுக்குமான நல்லுறவை அழிக்கவும் முயன்றேன். அவ்வாறு முயன்றபோதே ஒவ்வொரு முறையும் என் ஆணவத்தை இழந்துகொண்டே இருந்தேன். இன்று அறிகிறேன், இரு சாராரால் எவ்வகையிலும் பொருட்படுத்தப்படாத ஒரு முதியவன் மட்டும்தான் நான்.”

“ஆகவே, நீங்கள் எண்ணுவது பிழை. என் சொல்லில் இல்லை, அஸ்தினபுரியின் நால்வகைப் படைகள். ஆம், மரபுப்படி இந்த முடி எனக்குரியது. அவையெழுந்து நான் நாற்படைத் தலைவர்களுக்கும் ஆணையிடலாம். ஆனால் அவர்களே அதை மீறிச்சென்றார்கள் என்றால் என்னால் செய்யக்கூடுவது ஏதுமில்லை. ஒருபோதும் நாம் நமது புலன்களை, நமது அறத்தை, நமது சொல்லை அவற்றின் இறுதி எல்லைவரை சென்று உரசிப்பார்க்கலாகாது. அவை நமக்களிக்கும் வாய்ப்புகளின் தொடக்கத்திலேயே நின்றுவிடுவதே நன்று. மறுஎல்லையிலிருப்பவை மானுடனை வெல்லத்துடிக்கும் தெய்வங்கள்” என்றார் பீஷ்மர்.

காந்தாரி “அஸ்தினபுரியின் படைத்தலைவர்கள் அனைவரும் தங்கள் கொடிவழியினர். உங்களைக்கண்டு வளர்ந்த மூன்றாம் தலைமுறை. உங்கள் சொல் அவர்களுக்கு வேதம்” என்றாள். “ஆம், இக்கணம் வரை அவ்வாறே. ஆனால் அவர்களில் ஒருவர் ஒரு சொல் எனக்கெதிராக உரைத்துவிட்டாரென்றால் இங்குள்ள அனைவரும் அனைத்துச் சொற்களாலும் என்னை மறுதலித்துவிட்டதாகவே பொருள். இன்று இங்கு நான் நின்றிருப்பது மண்மறைந்த நமது மூதாதையர்நிரையின் முகமாக. அவர்களின் சொல் என் நாவில் எழுகிறது. அது மறுக்கப்படுமென்றால் அவர்கள் அனைவரையும் இந்நகரம் உதறிவிட்டதென்றே பொருள். அந்த எல்லைவரை நான் செல்லலாகாது, என் குடியை கொண்டுசெல்லவும் கூடாது” என்றார் பீஷ்மர்.

காந்தாரி “நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பது முறைமைகளைப்பற்றி. நான் என் மைந்தரின் இறப்பைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன்” என்றாள். “இறப்பு அவர்கள் ஊழென்றால் அவ்வாறே ஆகட்டும். என் தோள்களும் நெஞ்சும் தளர்ந்துவிட்டன. பேரெடை தாங்கி இத்தனை காலம் வாழ்ந்துவிட்டேன். இனி என்னால் ஆகக்கூடியதொன்றுமில்லை” என்றார் பீஷ்மர். “தங்கள் சொல் மறுக்கப்படும் என்று அஞ்சுகிறீர்களா?” என்றாள் காந்தாரி. அவள் முகத்தை நோக்கி “ஆம், அதைத்தான் அஞ்சுகிறேன்” என்றார் பீஷ்மர். “ஏனென்றால் முதியவர்களின் கெடுநரகம் என்பது இளையோரால் மறுக்கப்படுதல். முதுமை அவ்வாறு மறுக்கப்படுவதற்கான அனைத்தையும் அமைத்து அளிக்கவும் செய்கிறது.”

தலையை அசைத்து பெருமூச்சுடன் “நோயிற்கொடிது முதுமை. உளநிகரை, அறிவை, மெய்யுணர்தலை அழிக்கிறது. வெற்றுத்தசைக்குவியலென மானுடரை ஆக்குகிறது. அனைத்தையும் அழித்த பின்னரும் இருந்துகொண்டிருப்பதற்கான விழைவை மட்டும் எச்சம் வைக்கிறது. இங்குள்ளவை அனைத்தும் வெற்றுத்துயரென்று ஆனபின்னரும் ஒவ்வொன்றாக முகர்ந்து முகர்ந்து நீள்மூச்செறிந்தபடி சித்தம் சுழன்று அலைந்து சலிக்கிறது” என்றார். அவர் விரல்கள் ஒன்றையொன்று தொட்டு வருடிச் சலித்து விலகி மீண்டும் கவ்வி தவித்துக்கொண்டிருந்தன.

அசலை அந்தத் தவிப்பைக் கண்டதனாலேயே உளவிலக்கம் கொண்டாள். அது சினமென்று உள்ளே ஊறியது. “பிதாமகரே, இங்கும் இன்னும் தங்கள் ஆணவமல்லவா எழுந்து நிற்கிறது?” என்றாள். பீஷ்மர் விழிகளை தூக்கினார். “உங்கள் மைந்தர்மேல் உங்களுக்கு அன்பிருக்குமென்றால், முதுதந்தையாக அவர்களை ஆயிரம் கைவிரித்து நெஞ்சோடணைத்துக்கொள்வீர்கள் என்றால் உங்கள் சொல் மறுக்கப்படுவதைப்பற்றி எண்ணுவீர்களா?” என்றாள். நடுங்கும் தலையுடன் அவளை சில கணங்கள் கூர்ந்து பார்த்த பீஷ்மர் உதடுகள் வளைய புன்னகைத்து “நீ எண்ணுவது உண்மை. இவர்களின் இறப்பு எனக்கு எவ்வகையிலும் பொருட்டாகத் தெரியவில்லை. தந்தையென என் உள்ளம் கனிவு கொள்ளவும் இல்லை” என்றார்.

மீண்டும் நஞ்செழ நகைத்து “ஆனால் அது என் ஆணவத்தால் அல்ல. நீ சொன்னபின்னர் என் உளம்நோக்கி நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். மெய்யாகவே அது ஆணவத்தால் அல்ல. அன்பின்மையால்தான்” என்றார். அசலை அவர் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். மீண்டும் புன்னகைத்து பீஷ்மர் சொன்னார் “ஆம், முற்றிலும் அன்பற்றவனாக இருக்கிறேன். இங்குள்ள இளமைந்தர்மேல், என் குடியினர்மேல், இந்நகர் மக்கள்மேல், இப்புவியிலுள்ள மானுடத்தின்மேல் அன்பென்றும் கனிவென்றும் ஒருதுளிகூட என்னில் எஞ்சவில்லை.” அவர் வஞ்சமென விரிந்த புன்னகையுடன் தாடியை நீவினார். “என் உடலைப்பற்றி அன்றி நான் எதைப்பற்றியும் இன்று எண்ணவில்லை. நெறியென்றும் கடனென்றும் பற்று என்றும் என்னை ஆண்ட அனைத்திலிருந்தும் விடுபட்டுவிட்டேன்.”

“ஒருவேளை, அன்பிலிருந்து விடுதலை கொள்வதுதான் முதுமையோ? அதுதான் முழுமையோ?” என்று அவர் சொன்னார். “யோகியர் தவம் செய்து அடைந்த விடுதலையை விரும்பியும் வெறுத்தும் இங்கு வாழ்ந்து வாழ்ந்து உழன்றுச் சலித்து நான் அடைந்துவிட்டேன் போலும்.” வில் என உடல் துள்ள எழுந்து “இதற்குமேல் ஒன்றும் சொல்வதற்கில்லை, மகளே. மைந்தர் அனைவரும் களத்தில் இறந்து குவிந்து கிடந்தால்கூட ஒருதுளி விழிநீர் என்னில் எழுமென்று எனக்குத் தோன்றவில்லை. இது என் களமே அல்ல” என்றபின் திரும்பி ஓடையினூடாக நடந்து சென்றார்.

அவர் கால்கள் நீரை அளையும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. அசலை உளக்கொதிப்புடன் திரும்பி காந்தாரியை பார்த்தாள். அவள் தன் கையை நீட்டி “என்னை தூக்கு. என் கால்கள் மரத்துள்ளன” என்றாள். அவளது சிறிய உள்ளங்கையைப்பற்றி முழு உடல் விசையாலும் தூக்கினாள் அசலை. காந்தாரியின் கைத் தசைகள் தொங்கி ஆடின. உடலை எழுப்பும் விசையில் கழுத்துத் தசைகள் இறுகி அதிர்ந்தன. எழுந்து நின்று மூச்சுவிட்டு “உண்மையில் இங்கு வரும்போது இதைத்தான் எதிர்பார்த்தேன். எப்போதுமே உணர்ந்து வந்த ஒன்றுதான் இது. இப்போது சொல்லென முன்வந்து நிற்கையில் இது இவ்வாறுதான் என்று அறிந்த ஆறுதலே எஞ்சுகிறது” என்றாள். அசலையின் தோள்மேல் கைவைத்து “செல்வோம்” என்றாள்.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 10

பகுதி இரண்டு : பெருநோன்பு – 4

bl“பேரரசி உணவருந்திக்கொண்டிருக்கிறார்” என்று சத்யசேனை சொன்னாள். அசலை “நாங்கள் காத்திருக்கிறோம்” என்றாள். சத்யவிரதை “உணவுண்கையிலேயே உங்களிடம் பேசவிரும்புகிறார்களா என்று கேட்டுச் சொல்கிறேன்” என்று உள்ளே சென்றாள். அவளுடன் வந்த காந்தார இளவரசியர் ஸ்வாதா, துஷ்டி, புஷ்டி, ஸ்வஸ்தி, ஸ்வாகா, காமிகை, காளிகை, ஸதி, க்ரியை, சித்தை, சாந்தி, மேதா, பிரீதி, தத்ரி, மித்யா ஆகியோர் நின்றனர். அவர்கள் வருவதைக் கண்டதுமே சத்யசேனையின் முகம் மாறிவிட்டது. அவர்களின் விழிகளை ஏறிட்டு நோக்க அவள் அஞ்சுவதுபோலத் தோன்றியது.

கோசல இளவரசிகளான காமிகை, கௌசிகை, கேதுமதி, வசுதை, பத்ரை, சிம்ஹிகை, சுகிர்தை ஆகியோர் தனியாக அப்பால் நின்றிருந்தார்கள். அவர்களுடன் அவந்திநாட்டு இளவரசியரான அபயை, கௌமாரி, ஸகை, சுகுமாரி, சுகிர்தை, கிருதை, மாயை, வரதை, சிவை, முத்ரை, வித்யை, சித்ரை ஆகியோர் இணைந்துகொண்டனர். வேசரநாட்டு இளவரசியரான குமுதை, கௌமாரி, கௌரி, ரம்பை, ஜயந்தி ஆகியோர் ஒட்டரநாட்டு அரசியர் விஸ்வை, பத்ரை, கீர்த்திமதி, பவானி, வில்வபத்ரிகை, மாதவி ஆகியோருடன் பிறிதொரு குழுவாக நின்றிருந்தனர். அவர்களின் மூச்சொலியும் ஆடைநலுங்கும் ஒலியும் பெரிய கூடத்தை நிறைத்திருந்தது.

சத்யவிரதை வெளியே வந்து “இத்தனைபேர் உள்ளே செல்லமுடியாது. அக்கை உணவருந்தி முடித்துவிட்டார். கைகழுவியதும் வெளியே கூட்டிவருகிறோம்” என்றாள். அசலை “நன்று” என்றாள். சத்யவிரதையும் அவள் விழிகளை நோக்குவதை தவிர்த்தாள். அவர்கள் எவரும் எவர் விழிகளையும் நோக்கவில்லை. கூடத்தின் சாளரங்களில் திரைச்சீலைகள் அலைபாய்ந்துகொண்டிருந்தன. மூஷிககுலத்து இளவரசியர் கமலை, ருத்ராணி, மங்கலை, விமலை, பாடலை, உல்பலாக்ஷி, விபுலை ஆகியோர் காமரூபத்து இளவரசியர் ஏகவீரை, சந்திரிகை, ரமணை, நந்தினி, ருக்மிணி, அபயை, மாண்டவி, சண்டிகை ஆகியோருடன் உள்ளே வந்தனர். உள்ளே இருந்தவர்கள் அவர்களை விழிகளால் வரவேற்றனர்.

எப்படி இயல்பாகவே நூற்றுவரும் பல தனிக் குழுக்களாக ஆகிக்கொள்கிறார்கள் என அசலை வியந்தாள். நூற்றுவர் என்பது ஒரு குழுவல்ல, திரள். திரளாக இருப்பது நெருக்கடிகளில் ஆற்றலையும் பாதுகாப்புணர்வையும் அளிக்கிறது. ஆனால் சிறுகுழுக்களே அன்றாடத்துக்கு உதவுவன. பகிர்வதற்கும் பிறரை உருவாக்கிக்கொண்டு வெறுப்பதற்கும். இந்த நூற்றுவரும் மடிப்பு மடிப்பாக விரிந்து சென்ற அரண்மனைகளுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் சார்ந்தும் வெறுத்தும் புறம்கூறியும் இக்கட்டுகளில் உதவியும் வாழ்க்கையை கழித்துவிட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே நெற்றியோரம் நரைவரிகள் எழுந்திருந்தன. கண்கள் நிழல்கொண்டிருந்தன.

ஆனால் முதுமையை முதலில் வெளிக்காட்டுவது பற்கள். அவை ஈறுகளிலிருந்து நீட்டிக்கொள்வது. வாயைச் சூழ்ந்து விழும் கோடு. நானும் இப்படித்தான் இருக்கிறேனா என அசலை எண்ணிக்கொண்டாள். இன்னமும்கூட எனக்கு அகவை தெரியலாம். இவர்கள் அனைவரிலும் விளக்கவியலாத சிறுமியரியல்பு ஒன்றும் திகழ்கிறது. அவர்கள் விழிகளை உருட்டி, தலையை ஆட்டி பேசிக்கொள்கையில், வாய்பொத்தி கண்கள் ஒளிர நகைக்கையில், ஒருவரோடொருவர் தாழ்ந்த குரலில் பூசலிடுகையில், துயர்கொண்டு கண்ணீர் மல்குகையில் அவர்களுக்கு பதினைந்து அகவை கடக்கவில்லை என்றே தோன்றும்.

இந்த அரண்மனைக்குள் காலமில்லை போலும். எவரையும் சந்திக்காமல், எந்த இடர்களிலும் தொட்டுக்கொள்ளாமல் இவர்கள் காலத்தை கடந்து வந்துவிட்டார்கள். அகவை என்பது வாழ்தலின் தடம். இவர்கள் வாழவே இல்லை. நாளை இவர்களின் உடல்கள் முதுமைகொண்டு சிதையிலேறுகையில் ஆத்மா காற்றில் எழுந்து நின்று ஏன் என்றறியாது தவிக்கும் போலும். பிறிதொரு பிறவிகொண்டு துயர்களும் உவகைகளுமாக இருண்டும் ஒளிர்ந்தும் வாழ்ந்து நிறைந்தாலொழிய இவர்களுக்கு விண்ணுலகில்லை. அவ்வெண்ணங்களைக் கருதி அவளே உள்ளத்துள் புன்னகைத்துக்கொண்டாள்.

மச்சநாட்டு இளவரசியர் சிம்ஹிகி, தாரை, புஷ்டி, அனங்கை, கலை, ஊர்வசி, அமிர்தை ஆகியோர் மல்லநாட்டு இளவரசியர் தேவமித்ரை, தேவபிரபை, தேவகாந்தி, தேவமாயை, தேவகி ஆகியோருடன் வந்தனர். மச்சர்களும் மல்லர்களும் நிஷாதர்களிடமிருந்து எழுந்துவந்த அரசகுடியினர். அவர்களின் குலம் அவர்களின் தோற்றத்திலேயே தெரிந்தது. கரிய பெரிய உடல்களும் எருமைவிழிகளும் ஒளிரும் வெண்பற்களும் கொண்டவர்கள். உத்கலத்தின் இளவரசியர் திதி, சுரசை, பானு, சந்திரை, யாமி, லம்பை, சுரபி, தாம்ரை ஆகியோர் வந்தபோது அவர்கள் முறைப்படி சொல்லுரைத்தாலும் வெளிர்நிறமும் சிறிய விழிகளும் ஒடுங்கிய தோள்களும் கொண்ட அவர்களுடன் ஒன்றாகச் சேரவில்லை. இருவண்ணப் பறவைகள் என தனியாகவே அவர்கள் குழுக்கொண்டனர்.

விதேகநாட்டு இளவரசியர் துஷ்டி, வபுஸ், சாந்தி, ஸித்தி ஆகியோர் ஔஷதி, இந்திராணி, பிரபை, அருந்ததி, சக்தி, திருதி, நிதி, காயத்ரி ஆகிய திரிகர்த்தர்நாட்டு இளவரசிகளுடன் உள்ளே வந்தனர். அனைவரும் வந்துவிட்டார்களா என எண்ணிப்பார்க்கவேண்டும் என அசலை எண்ணியதுமே அறியாது புன்னகைத்தாள். அப்புன்னகை சத்யசேனையை சீண்டியதுபோல அவள் “எவர் பேரரசியிடம் பேசப்போகிறீர்கள் என்பதை முன்னரே வகுத்துக்கொள்க! அக்கை அமர்ந்தபின் இங்கே கூச்சல்கள் எழலாகாது” என்றாள். “நான் மட்டுமே பேசப்போகிறேன்” என்றாள் அசலை.

மச்சநாட்டு அரசி தாரை “நானும் பேசவேண்டுமென்று வந்துள்ளேன்” என்றாள். அசலை அவளை திகைப்புடன் பார்த்தாள். அவளை முன்னரே கண்டதாகக்கூட நினைவு சொல்லவில்லை. “நான் விகர்ணரின் துணைவி” என அவள் அசலையின் திகைப்பைக் கண்டதும் சொன்னாள். “ஆம், நினைவுகூர்கிறேன்” என்றாள் அசலை. அந்தப் பெண் அதற்குமுன் எங்கும் குரலெழுப்பியதை அவள் கேட்டதே இல்லை. ஷத்ரிய குலத்து அரசர்கள் நடுவே அவள் குலத்தவர் சேடியர்போலவே உடலசைவு கொண்டிருப்பார்கள். “ஆம், நீயும் பேசலாம். ஆனால் ஓரிருவரே பேசமுடியும். பேசுபவர் எவர் என்பதை இப்போதே சொல்லிவிடுங்கள்” என்றாள் அசலை. வேறு எவரும் எதுவும் சொல்லவில்லை. தாரை “நான் பேசுகிறேன்” என்றாள்.

அசலை அவளை நினைவுகூர்ந்தாள். விகர்ணன் மணந்த காந்தார நாட்டு விருஷகரின் மகள் மித்யை மகட்பேறில் இறந்தபோது அவன் மறுமனைவியாக அவளை மணந்தான். மச்சநாட்டு இளவரசியும்  வாதவேகனின் அரசியுமான அனங்கையின் இளையவள் அவள்.  மெலிந்த சிற்றுருவுடன் சிறுமியைப்போல வந்தவள். அரண்மனையின் சூழலில் முற்றிலும் அயலவளாக தன் தமக்கையின் சேடியென திரிந்தவள். காலை சற்று தட்டினாலே மயிர்சிலிர்த்து விழித்து உறையும் எலி போன்றவள். ஆனால் அவள் அனைத்தையும் கூர்ந்து நோக்கும் விழியொளி கொண்டிருந்தாள். கூர்ந்து நோக்குபவர்கள் எப்போதும் கடந்துவிடுகிறார்கள்.

சத்யசேனை காந்தார இளவரசி ஸ்வாதாவிடம் “நீ பேசவேண்டாமா?” என்றாள். ஸ்வாதா ஆம் என்று தலையசைத்தாள். “அப்படியென்றால் பேசவேண்டும் என சொல்வதற்கென்ன? மண்பாவை என நின்றிருக்கிறாய்?” என்றாள் சத்யசேனை. ஸ்வாதா தலைகுனிந்தாள். சத்யவிரதை உள்ளிருந்து வந்து “பேரரசி வருகிறார்” என்றாள். இரு சேடியர் வந்து காந்தாரி அமர்வதற்கான இருக்கையை பட்டுவிரித்து செம்மையாக்கினர்.

பேரரசி கால்வைப்பதற்கான பட்டுத்தலையணை பீடத்தின் அருகே கொண்டு வைக்கப்பட்டது. அந்த ஏற்பாடுகள் வழியாகவே நுண்வடிவில் அவள் வந்துவிட்டதாகத் தோன்றியது. அங்கிருந்த ஒவ்வொருவரும் அவள் இருப்பை உணரத்தொடங்கினர். அணியாடைகளை சீர்படுத்தினர். நிமிர்ந்தும் தனித்தும் நின்றனர். சத்யசேனை குரல் கொடுத்ததும் பணிப்பெண் முன்னால் வந்து சங்கு ஊதி “பேரரசி காந்தாரி வருகை!” என்றாள். காந்தாரியின் உருவம் வாயிலில் தோன்றியதும் மருகியர் அனைவரும் ஒரே குரலில் வாழ்த்துரைத்தனர்.

blசத்யவிரதையின் தோளைப்பற்றியபடி பெருமூச்சுவிட்டுக்கொண்டு மெல்ல காந்தாரி நடந்துவந்தாள். அவளுடைய பெரிய வெண்ணிற உடலில் தசைகள் அலையடித்தன. கழுத்திலும் தோள்களிலும் மென்தசை நனைந்த வெண்பட்டு என ததும்பியசைந்தது. சின்னஞ்சிறிய கால்களால் அவள் எடையை தாளமுடியவில்லை. பெரிய கைகளின் முடிவில் மிகச் சிறிய மணிக்கட்டும் குழந்தைகளுடையதுபோன்ற உள்ளங்கையும். அவள் மெல்ல பட்டுப்பீடத்தில் அமர்ந்துகொண்டு பெருமூச்சுவிட்டாள். “என்னடி, நேற்றுதான் வந்தீர்கள்? என்ன மீண்டும்?” என்றாள். அசலை “நான்தான் தங்களை சந்திக்க விரும்பினேன். இவர்களும் உடனிருக்க விழைந்தனர்” என்றாள்.

“நீதான் நாளும் என்னை வந்து பார்க்கிறாயே? பிறகென்ன?” என்றாள் காந்தாரி. “இது அரசமுறையான சந்திப்பு, பேரரசி” என்றாள் அசலை. காந்தாரியின் முகம் சுருங்கியது. மற்ற பெண்களை நோக்கி செவிகூர்ந்தபோது அவள் முகம் கோணலாக திரும்பியது. பெருமூச்சுவிட்டு “சொல்!” என்றாள். அசலை “பேரரசி, இப்போது என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று அறிந்திருப்பீர்கள்” என்றாள். “பெரும்போர் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. அரசியலாளர் சொல்வதைப் பார்த்தால் ஒரு மாதத்திற்குள் போர் மூண்டுவிடக்கூடும். நாடெங்கிலுமிருந்து படைகள் அஸ்தினபுரி நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. தெற்கே திருவிடத்திலிருந்தும் தமிழ்நிலத்திலிருந்தும்கூட படைகள் கிளம்பி வருகின்றன.”

காந்தாரி தலையசைத்தாள். “பாரதவர்ஷம் கண்டவற்றிலேயே பெரும்போராக அது இருக்கலாம். இங்கே என்னென்னவோ முரண்கள் சென்ற பலநூறாண்டுகளாகவே வளர்ந்து வந்துள்ளன. ஷத்ரியர்களுக்கும் பிற குடி அரசர்களுக்கும் பூசல். தொல்குடிகளுக்கும் பிறருக்குமான பூசல். கடல்வணிகத்தால் வளர்ந்த நாடுகளுக்கும் உள்நில நாடுகளுக்குமான வணிகச்சிக்கல்கள். சாலைகளில் சுங்கவரி கொள்வதைப்பற்றிய மோதல்கள். தொல்வேதங்களுக்கும் எழும்வேதங்களுக்குமான கருத்துப்போர். நம்மால் புரிந்துகொள்ளவே முடியாத அளவுக்கு சிக்கலானவை அவை. அனைத்தும் இந்த ஒற்றைமுனையில் இன்று கூர்கொண்டு நின்றிருக்கின்றன. நம் குடிப்போரில் பாரதவர்ஷம் தன் அனைத்துச் சிக்கல்களையும் தீர்த்துக்கொள்ள எண்ணுகிறது.”

“வீழ்வது நம் குருதி, அரசி” என்றாள் அசலை. “நம் இளமைந்தரே இப்போரில் முதற்களப்பலியாவர். நாம் நம் குடிப்பூசலை நமக்குள்ளேயே தீர்த்துக்கொள்ளவேண்டும். குடும்பப்பூசலில் ஊர் தலையிட்டால் அது அக்குடும்பத்தையே பலிகொள்ளும் என சிற்றூரில்கூட பேசிக்கொள்வதுண்டு. இந்தப் போர் பொருளற்ற பேரிழப்பு. அதற்கு நாம் ஒப்புக்கொள்ளலாகாது.” காந்தாரி ஏதோ சொல்வதற்குள் அசலை குரலை உயர்த்தி “நாம் பெண்கள். நாம் செய்வதற்கு எல்லை உண்டு. நாம் சொல்வதை அவர்கள் இதுவரை பொருட்படுத்தியதில்லை. இனிமேல் பொருட்படுத்துவார்கள் என்றும் சொல்லமுடியாது. ஆனாலும் நாம் முழுமூச்சாக முயலவில்லை என்றே சொல்வேன். நம் உயிரையும் முன்வைத்து எதிர்க்கவில்லை. நம் மைந்தருக்குமுன் நாம் இறப்போம் என நாம் அவர்களிடம் இன்னும் சொல்லவில்லை” என்றாள்.

காந்தாரி அமைதியிழந்து தலையை அசைத்தாள். அவளுடைய சிறிய சிவந்த வாய் திறந்து மூடியது. மீண்டும் பெருமூச்சுவிட்டு “மூத்தவள் எங்கே?” என்றாள். “அக்கை உங்களிடம் தனியாக பேசுவார்கள். இளையவர்களுடன் வந்து உங்களை சந்திக்கும்படி அவர்கள்தான் சொன்னார்கள்” என்றாள் அசலை. “உம்” என்ற காந்தாரி மீண்டும் தலையை அசைத்துக்கொண்டே இருந்தாள். அவள் விழிகள் நெடுநாட்களாகவே நோக்கின்றியிருந்தமையால் சூழுணர்வை முற்றாகவே இழந்துவிட்டிருந்தாள். அங்கிருந்து எழுந்துசெல்ல விரும்புபவள்போலத் தோன்றினாள்.

மூச்சுத்திணற முனகியபடி கைகளால் துழாவி காந்தாரி “சத்யை” என்றாள். சத்யசேனை “அக்கையே” என்றாள். “இளையவள் எங்கேடி?” சத்யவிரதை “இங்கிருக்கிறேன், அக்கை” என்றாள். “என் நஸ்யம் எங்கே?” என்றாள் காந்தாரி. சத்யவிரதை சிறிய தந்தச் சிமிழை அளிக்க அதை வாங்கி மூக்கில் வைத்து அதிலிருந்த ஊசித்துளை வழியாக ஏலக்காய்ச்சுக்குப் பொடியை சற்று உறிஞ்சினாள். முகம் இழுபட்டு கோணலாகியது. ஓங்கி தும்மி அடங்கினாள். சத்யவிரதை அளித்த பட்டுத்துணியால் மூக்கை துடைத்துக்கொண்டாள். அசலையிடம் திரும்பி “அசலைதானே பேசிக்கொண்டிருந்தாய்?” என்றாள்.

“பேரரசி, நான் சொன்னவற்றை தாங்கள் உளம்கொள்ளவேண்டும். இது எங்கள் மைந்தரின் வாழ்வு. உங்கள் மருகியர் அனைவரும் இங்கே வந்துள்ளோம். இந்தப் போர் எவ்வகையிலேனும் நிறுத்தப்பட்டாகவேண்டும்” என்றாள். காந்தாரி “நாம் என்னடி சொல்வது? தீர்வை மூத்தவர்கள் அல்லவா கண்டுபிடிக்கவேண்டும்?” என்றாள். “மூத்தவர்கள் அதில் தோற்றுவிட்டார்கள். எப்போது பெண்ணை அவைநடுவே துகிலுரிந்தபோது நோக்கியிருந்தார்களோ அப்போதே அவர்கள் அதற்கான ஆற்றலை இழந்துவிட்டார்கள். நாம் சொல்லியாகவேண்டும். இந்நாடே பாண்டவர்களுக்குரியது. அனைத்து அரசமுறைகளின்படியும் இது அவர்களுக்குரிய நிலம்” என்றாள் தாரை.

“என்னடி சொல்கிறாய்?” என்றாள் காந்தாரி. “ஆம், இது அவர்களின் நிலம். அவர்கள் வைத்திழந்தது மட்டுமல்ல. மொத்த அஸ்தினபுரியே அவர்களின் தந்தை பாண்டு வழியாக அவர்களுக்குரியதே” என்றாள் தாரை. “அவர்களுக்கு காண்டவப்பிரஸ்தத்தை மட்டும் அளித்து அனுப்பியதுதான் முதற்பெரும்பிழை. அங்கு நம் குரல் எழுந்திருக்கவேண்டும். அப்போது செய்த பிழையே பெருகிப்பெருகி பூதப்பேருருவென நம் முன் வந்து நின்றிருக்கிறது.”

சீற்றத்துடன் கைநீட்டி முன்னால் வந்த சத்யசேனை “என்ன உளறுகிறாய்? இது பாண்டுவுக்கு பதினெட்டாண்டு காலம் மட்டும் ஆட்சிசெய்யும்பொருட்டு அளிக்கப்பட்டது. பட்டத்து இளவரசன் துரியோதனன் அகவைநிறையும்போது இயல்பாகவே அவனுக்கு வந்துவிட்டது” என்றாள். “இது எந்த ஊர் வழக்கம்? முன்பு பாரதவர்ஷத்தில் இது நடந்துள்ளதா என்ன?” என்றாள் தாரை. “அரசமுடி என்பது முற்றுரிமைகொண்டது. முடிசூட்டிக்கொண்டவர் அதை தெய்வங்களிடமிருந்தே பெற்றுக்கொள்கிறார், எந்த மானுடரும் அதை அளிக்கவில்லை என்றே நெறிநூல்கள் சொல்கின்றன. பாண்டு முடிசூட்டிக்கொண்டதுமே இந்நாட்டின் முழுமுதல் உரிமையாளர் ஆகிவிட்டார். அவர் அளித்தாலொழிய இந்நிலம் பிறருக்குரியதல்ல. அவர் அளித்திருந்தாலும்கூட அவர் மைந்தர் அதை மறுக்க நூல்கள் ஒப்புகின்றன.”

சத்யசேனை திகைத்துவிட்டாள். உதவிக்கு என அவள் சத்யவிரதையையும் அசலையையும் பார்த்தாள். காந்தாரி “அதை இப்போது நாம் பேசவேண்டியதில்லை” என்றாள். “இப்போது நாம் செய்யவேண்டியதென்ன?” தாரை “நாட்டை அவர்களிடம் அளிக்கவேண்டும். அவர்கள் அளிக்கும் நிலத்தைப்பெற்று கௌரவர்கள் ஆளட்டும். அதுவே நெறி. நெறி ஒன்றே பாதுகாப்பு. தலைமுறைகளைக் காப்பதும் அதுவே” என்றாள். அசலை “வீண்பேச்சு வேண்டியதில்லை” என்றாள். “பேரரசி, அஸ்தினபுரியின் அரசர் பாண்டவர்கள் ஒப்புக்கொள்ளும் குறைந்த ஒத்துதீர்ப்புக்கு முன்வரவேண்டும். அதை பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அவருக்கு சொல்லவேண்டும்” என்றாள்.

“அவர் சொன்னால்கூட இன்று அவன் கேட்கமாட்டான்” என்றாள் காந்தாரி. “நான் பலமுறை அவனிடம் சொல்லமுயன்றேன். என் சொற்கள் எழவே அவன் ஒப்புவதில்லை.” அசலை பேசுவதற்குள் தாரை “பேரரசி, இதெல்லாம் நாம் எவரை ஏமாற்ற சொல்லிக்கொள்வது? பிதாமகர் பீஷ்மரே இன்றும் குருகுலத்தின் மூத்தவர். விழைந்தால் இந்த நாட்டின் மணிமுடியை கொள்ளவும் உரிமைகொண்டவர். நால்வகைப் படைகளும் அவர் ஆணைப்படியே என்பது எவருக்குத் தெரியாது? அவர் படைகளுக்கு ஆணையிடாமல் அஸ்தினபுரி போருக்கு எழமுடியுமா என்ன? அவர் போருக்கு மறுக்கட்டும். படைகளை தன் ஆணையில் எடுத்துக்கொண்டு அஸ்தினபுரியின் அரசருக்கு ஆணையிடட்டும்” என்றாள்.

அசலை அவளையே நோக்கிக்கொண்டிருந்தாள். மாநிறமான சிறிய வட்டமுகம். நீண்ட கண்கள். சிறிய உதடுகள். குழந்தைபோலவே அவள் முகபாவனைகள் இருந்தன. குரலும் மழலையுடன் இருந்தது. ஆனால் சொற்கள் பலமுறை எண்ணிக்கூர்கொண்டவை போலிருந்தன. சத்யசேனை “நாம் அவரை வழிநடத்துவதா? பேசுவதற்கும் ஒரு முறை வேண்டும்… யாரிடம் கேட்டு இதையெல்லாம் இங்கே சொல்கிறாய்?” என்று கூவ காந்தாரி கையமர்த்தி அவளை அமையச்செய்துவிட்டு “அவள் சொல்வதும் சரிதான். பிதாமகருக்கு இன்று அவனை நிறுத்தும் உரிமை உண்டு. அவர் அதை செய்யட்டும்” என்றாள்.

“நாம் அதை அவரிடம் சொல்லமுடியுமா, அக்கையே?” என்றாள் சத்யசேனை. “இப்படி எண்ணித்தான் இதுவரை அகத்தளத்திலேயே இருந்துவிட்டோமா என எண்ணுகிறேன். நான் என்னை அனைத்திலுமிருந்தும் விலக்கிக்கொண்டது போலவும் அனைத்தும் நன்மைக்கே முடியும் என்றும் கற்பனை செய்துகொண்டேன். அது என் துணிவின்மையை மறைத்துக் கொள்வதற்காகவே. பேரன்னையாக நான் இன்று எழுந்து என் மக்களைக் காக்காவிடில் பேரழிவே எஞ்சும். நான் சென்று பீஷ்மரை பார்க்கிறேன். அவரிடம் சொல்கிறேன், இப்போர் நிகழலாகாது என்று. நிகழ்ந்தால் அவரே அதற்கு முழுப் பொறுப்பு என்று.”

அசலை “அத்துடன் நீங்கள் உங்கள் இளையவருக்கும் ஆணையிடவேண்டும், பேரரசி” என்றாள். “இவ்வழிவின் ஊற்றுமுகம் அவர் என்பதை மறக்கவேண்டாம்.” அவள் சொல்லிமுடிப்பதற்குள் தாரை “அவரல்ல, பேரரசியேதான். பேரிழப்பு அணுகுவது அவருக்கே. எனவே அதன் கருத்துளியும் அவரிலிருந்தே எழுந்திருக்கும்” என்றாள். சத்யசேனை பாய்ந்து தாரையை ஓங்கி அறைந்தாள். அந்த ஓசை கூடமெங்கும் ஒலித்தது. கன்னத்தைப் பற்றியபடி தாரை உடல்வளைத்து தலைகுனிந்தாள். “கொன்றுவிடுவேன், கீழ்மகளே. உன் குலத்துக்குரிய கீழ்மையை காட்டிவிட்டாய்” என்றாள்.

காந்தாரி “என்ன செய்தாய்? என்ன செய்தாய், அறிவிலி? கைநீட்டினாயா? விலகு… போ உள்ளே!” என்றாள். சத்யசேனை “அக்கையே…” என்றாள். “போடி உள்ளே” என்று காந்தாரி கூவினாள். சத்யசேனை சினத்துடன் உள்ளே சென்றாள். காந்தாரி “அருகே வா, மகளே” என்றாள். தாரை ஒரு கையால் கன்னத்தைப் பொத்தியபடி அருகணைந்தாள். காந்தாரியின் பெரிய கை நீண்டு அவளை தேடியது. அசலை அதைப்பற்றி தாரையின்மேல் வைத்தாள். அவள் தோளைத்தொட்டு தன்னருகே இழுத்தாள்.

தாரை அருகே நிலத்தில் அமர்ந்தாள். அவள் தலையை வருடியபடி “நீ சொன்னது உண்மை, மகளே. உண்மைதான் அவர்களை கொந்தளிக்கச் செய்கிறது” என்றாள் காந்தாரி. “நெடுநாட்களுக்கு முன்பு நான் என் இளையோனுடன் காந்தாரப்பாலையில் புரவியில் பாய்ந்தோடி விளையாடினேன். ஒரு மலைமேல் ஏறிநின்று தொலைநிலத்தை நோக்கினேன். கிழக்கே பசுமை நிறைந்த பெருநிலங்கள் பரவிக் கிடப்பதாக அன்று நூல்களில் கற்று அறிந்திருந்தேன். முகில்கள் இடைவிடாது மழைபொழியும் வானம். வானவிற்கள் சூடிய திசைகள். பொன்விளையும் வயல்கள்… நான் அந்நிலத்தை வெல்ல விரும்பினேன்.”

காந்தாரி பெருமூச்சுவிட்டாள். “அந்நாளை நன்றாகவே நினைவுகூர்கிறேன். செம்மண்புழுதி தரைமுகில்கள்போல சுழன்றுபரவிய பாலைநிலம். அந்தியின் செந்நிற ஒளி. அன்று நான் சொன்ன சொற்களை இன்று என நினைவுகூர்கிறேன்.” பிறிதொரு காலத்திற்குச் சென்று நிற்பவள்போல அவள் சொன்னாள் “இந்த மண்மீது குதிரையில் விரைகையில் இதை தழுவிக்கொள்வதாகவே உணர்கிறேன், மைந்தனை தழுவித்தழுவி நிறைவுகொள்ளாத அன்னைபோலத்தான் நானும்.”

தன்னுள் ஆழ்ந்து அமைந்திருந்துவிட்டு அவள் தொடர்ந்தாள் “அன்று அச்சொற்களை என் நாவில் வந்தமைத்த தெய்வம் எது என எண்ணி வியந்துகொள்கிறேன். என்னைச் சூழ்ந்து மைந்தர்களை நிரப்பியது அது. அவர்களைப் பெருக்கி ஒரு குலமென்றாக்கியது. எண்ணி எண்ணி நினைவில்கொள்ளமுடியாதபடி மைந்தர். தழுவித் தழுவி தீராத தோள்கள். இன்று கேட்கிறது அக்கொடுந்தெய்வம். இப்போது சொல், இத்தனை மைந்தரையும் அளித்தால் நீ விழையும் நிலத்தை தருகிறேன் என்று. தெய்வங்களுக்கு மானுடர்மேல் உள்ள வஞ்சத்துக்கு அளவேயில்லை. ஆணவத்தையும் பெருவிழைவையும் கருக்களாகக்கொண்டு அவை ஆடும் ஆடலுக்கு முடிவுமில்லை.”

“அன்று அவன் சொன்னான், நான் அடையவேண்டியவை எல்லாம் அங்கே இருக்கின்றன. என் நிலம்… தென்குமரி முனைவரை செல்லும் பாரதவர்ஷம் என. அன்று அவன் விழிகள் மின்னியதை நான் அருகிருந்து கண்டேன். என் கண்ணில் உடன்பிறந்தான் என எஞ்சியிருப்பது அந்த முகம்தான். பொருள்வல்லமையே படைவல்லமையாகவும் குலப்பெருமையாகவும் மாறும் யுகம் பிறந்துகொண்டிருக்கிறது என்று அவன் அன்று சொன்னான். அவன் நாடுவது எது என இன்றும் எனக்குப் புரியவில்லை. ஒன்று தெரிகிறது, முதிரா இளமையில் உள்ளத்தை அள்ளிக்கொண்டுவிடும் பெருங்கனவுகள் கொடியவை. அவை நச்சுநோய் என உடலில் ஊறி நிறைகின்றன. எஞ்சிய வாழ்க்கையை முழுக்க உண்டு திகழ்கின்றன. அழித்துவிட்டே செல்கின்றன” என்றாள் காந்தாரி.

அவைக்கூடத்திலிருந்த பெண்கள் விழிகளில் நீர்மை மின்ன அசைவிலாது அமர்ந்திருந்தனர். தாரை அண்ணாந்து காந்தாரியின் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். “ஆம் குழந்தை, நீ சொல்வது மெய். நன்றும்தீதும் பிறர்தர வாரா” என்றாள் காந்தாரி. “என் பெருந்துயர் என்னிலிருந்து எழுந்தது. நான் அதை என்னால் முடிந்தவரை சிறைகட்ட முயல்கிறேன். அது என்னைக் கொன்று கடந்துசெல்லுமென்றால் அவ்வாறே ஆகுக!” அசலை “நீங்கள் சொல்வதை பேரரசர் தட்டமாட்டார்” என்றாள். காந்தாரி மெல்ல உதடு கோணலாக நகைத்து “மதயானைக்கு காதுமடல், ஒட்டகத்திற்கு மூக்குச்சவ்வு. ஆற்றல்மிக்க எவருக்கும் மிக மெல்லிய இடமொன்று உண்டு. அணையின் ஆற்றலை அதன் மிக நொய்ந்த பகுதியைக்கொண்டே கணிக்கவேண்டும்” என்றாள்.

அசலை அவள் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். விழியற்றிருந்தமையாலேயே அனைத்தையும் நோக்குபவள் என்று அப்போது காந்தாரி தோற்றமளித்தாள். அவைக்கூடத்தில் மீண்டும் அமைதி நிலவியது. காந்தாரி “நான் பசுநிலப்பெருக்கை விழைந்தபோது என் பின்னால் நின்று இளங்காற்றாக நகைத்தது என் ஊழின் தெய்வம். இளையோரே, நான் பசுமையையே கண்டதில்லை. என் விழிகளில் எஞ்சியிருப்பது நான் பிறந்து வளர்ந்த காந்தாரத்துச் செம்புலம்தான்” என்றாள். அவள் முகம் மெல்ல மலர்ந்தது. “ஆனால் இன்று அது பேரழகுமிக்கதாகத் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகளில் அது என் கனவுக்குள் வளர்ந்துவிட்டது. ஒவ்வொரு கணமும் அழகுகொண்டபடியே செல்கிறது.”

“என் மைந்தர், மைந்தர் மைந்தர், அவர் மகளிர் அனைவருமே அந்தச் செம்புலத்து புழுதிப்பரப்பில்தான் வாழ்கிறார்கள்” என்று அவள் தன் சிறிய பற்கள் தெரிய சிரித்தாள். அவள் பற்கள் சிறுகுழந்தைகளின் பற்கள்போல உப்புப்பரலென மின்னின. “நான் இறக்கையில் என்னை நீங்கள் இங்கே பச்சைபொலியும் பெருங்காட்டில் எரித்தாலும் நான் எரிவது செம்புழுதிமேட்டில்தான். எனக்கு நீங்கள் இங்குள்ள எதையும் சொல்லி புரியவைக்கவே இயலாது.” அவள் முகம் விரிந்துகொண்டே சென்றது. “என்ன ஒரு நல்லூழ்! இதை நான் தெய்வங்களிடம் கோரவில்லை, அவை எனக்கு கனிந்தளித்தன. ஆயிரம் பெயர்மைந்தருக்கு அன்னையான பின்னரும் பிறந்த நிலத்திலேயே வாழ்வதுபோல பேறு வேறுண்டா என்ன?”

மீண்டும் அவள் முகம் எண்ணத்தால் முழுத்தது. “என் திருமணநிகழ்வுக்கு தாலிப்பனையின் பூ வேண்டுமென்றனர் பூசகர். எங்கள் தொல்குடிப்பெண்டிர் பாலையெங்கும் அலைந்தனர். இறுதியில் ஒருத்தி தனித்து நின்ற தாலிப்பனையை கண்டுபிடித்தாள். தாலிப்பனை எப்போதும் பாலைநிலத்தின் சரிவில் தனித்தே நிற்கும். அது நின்றிருக்கும் இடத்தின் அடியில் மந்தண ஊற்றொன்று இருக்கும். அது மலர்விட்டிருந்தது. மலர் என்றால் பெரிய சாமரக்குடைபோல் ஒன்று. அதைக் கொண்டுவந்து என் மணநிகழ்வை நடத்தினர்.”

“அதன் சிறப்பு என்னவென்றால் ஒரு மலரிலிருந்து ஒரு பாலையையே நிறைக்கும் மகரந்தப்பொடி கிளம்பும் என்பதுதான். காற்றில் பறந்து பல நாழிகை தொலைவு செல்லும். தன் இணையை கண்டுகொண்டு கருவுறும். பாலையில் கோடியில் ஒன்று கருவுற்றால் நன்று. மாருதர்கள் அருளவேண்டும்” என்றாள் காந்தாரி. “தாலிப்பனை கங்கைச்சதுப்புக்கு வந்ததென்றால் அதற்கு இந்நிலம் போதுமா என்ன?” அவள் சொல்லோய்ந்து அமர்ந்திருந்தாள். நெடுநேரம் அங்கே ஒலியே எழவில்லை. பின்னர் “இளையவளே” என்றாள். சத்யவிரதை “அக்கையே” என்றாள். காந்தாரி கைநீட்ட அவள் பற்றித்தூக்கினாள்.

எழுந்துநின்று “நான் பீஷ்மபிதாமகரையும் துரோணரையும் இளையோனையும் சந்திக்கிறேன். அசலை…” என்றாள். “பேரரசி” என்றாள் அசலை. “நீயும் உடனிரு…” என்றாள் காந்தாரி. “நன்று நிகழுமென எண்ணுகிறேன்” என்றபின் “தாரை” என்றாள். “பேரரசி” என்றாள் அவள். அவள் தலையைத்தொட்டு “எண்ணுவதில் உறுதிகொள், மகளே. நீ அகநிறைவுகொள்வாய்” என்றபின் “செல்வோம்” என்று சத்யவிரதையிடம் சொன்னாள். தங்கை தோள்பற்றி அவள் மெல்ல நடந்து உள்ளே செல்ல அனைவரும் நோக்கி அமர்ந்திருந்தனர். எவரோ பெருமூச்சுவிட்ட ஒலியில் கலைந்து ஆடையோசையும் அணியோசையுமாக கூடம் உயிர்கொண்டது.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 9

பகுதி இரண்டு : பெருநோன்பு – 3

blஅறைக்குள் அசலை நுழைந்தபோது பானுமதி மான்தோல் விரிப்பில் அமர்ந்து மடியின்மேல் மென்பலகையை வைத்து அதில் பரப்பப்பட்ட ஓலைகளை கூர்ந்து படித்துக்கொண்டிருந்தாள். நிமிர்ந்து நோக்கி “வாடி” என்று புன்னகைத்து அருகே விரிக்கப்பட்ட மான் தோல் இருக்கையை காட்டினாள். அசலை சுவரில் சாய்ந்தமர்ந்து கைகளை மார்பில் கட்டிக்கொண்டாள். பானுமதி மேலும் சுவடிகளை படித்து முடித்து கட்டிவைத்துவிட்டு “நாம் அனுப்பிய ஓலைக்கு மறுமொழிகள் வந்துள்ளன” என்று சொன்னாள். “ஆம், அனைத்தும் சுருளோலைகள், நோக்கினேன்” என்றாள் அசலை.

“பெரும்பாலான அரசர்கள் லட்சுமணனுக்கு மகள்கொடை அளிப்பதை தங்கள் பேறென்றே மறுமொழி அளித்திருக்கின்றனர். ஒரு சில அரசர்கள் மட்டும் தங்கள் குலக்குழுக்களைக் கூட்டி உசாவிவிட்டு மறுமொழி அளிப்பதாக எழுதியுள்ளார்கள். மறுத்து எவருமே எழுதவில்லை” என்றாள் பானுமதி. அசலை “ஆம், அனைவரும் ஒரு பெரும்போரை எதிர்பார்க்கிறார்கள். அதில் அஸ்தினபுரி வெல்லுமென்பதில் எவருக்கும் ஐயமில்லை. சத்ராஜித்தாக மும்முடி சூடப்போகும் துரியோதனரின் பட்டத்து இளவரசருக்கு தன் மகளை கொடுக்க விரும்பாத அரசர் எவரும் இருக்கமாட்டார்கள்” என்றாள்.

பானுமதி போர் குறித்த சொல்லால் சற்று உளம் சீண்டப்பட்டு முகம் சுளித்தாள். ஆனால் உடனே கடந்துவந்து புன்னகைத்து “உடனடியாக மைந்தரில் மூத்தவர்கள் அனைவருக்குமே பெண்நோக்கி மணம் செய்வித்துவிடலாம் என்று நினைக்கிறேன். லட்சுமணனின் மணத்தூதுக்கு அரசர்கள் எந்த வகையில் எதிர்வினையாற்றுவார்கள் என்றுதான் சற்று தயங்கினேன். இது நம்பிக்கையளிக்கிறது” என்றாள். “அஸ்தினபுரியின் இளவரசர்களுக்கு மகள்கொடை அளிக்க எவர் தயங்க வேண்டும்?” என்றாள் அசலை. “அது நீயும் நானும் எண்ணுவது. நம் மைந்தரைப்பற்றி பாரதவர்ஷம் முழுக்க இருக்கும் சித்திரம் பிறிதொன்று. கல்லாதவர்கள், கடும்போக்கு கொண்டவர்கள், மானுட உடல் கொண்ட விலங்குகள்… சூதர்கள் சொல்லி பரப்பிவைத்திருக்கிறார்கள்” என்றாள் பானுமதி.

அசலை புன்னகைத்து “ஒரு போரில் வென்றுவிட்டார்கள் என்றால் அதுவேகூட அவர்களுக்கு புகழ்சேர்க்கும். ஏனெனில் பாரதவர்ஷத்தின் பெரும்பாலான அரசர்கள் அத்தகையவர்கள்” என்றாள். பானுமதியும் சிரித்து “ஆம், ஒருவகையில் அது உண்மை” என்றபின் கைகளைத் தூக்கி சோம்பல்முறித்து “அமைச்சரை அழைத்து பிற அனைவரின் இயல்புக்கேற்ப பெண்கள் எங்குள்ளனர் என்று பார்க்கச் சொல்லியிருக்கிறேன். இப்போது வந்திருக்கும் ஒப்புதல் ஓலைகளிலிருந்து லட்சுமணனுக்கு உகந்த பெண் யாரென்று தேர்ந்தெடுக்க வேண்டும். கலிங்க அரசனின் மகள் சௌபர்ணிகை அழகி. நிமித்திகர் அவளுக்கு பன்னிரண்டு மைந்தர் பிறப்பார்கள் என்று கணித்திருக்கிறார்கள். கலிங்கம் நமது நட்பு நாடும்கூட” என்றாள்.

அசலை புன்னகைத்தாள். பானுமதி “மாளவ அரசமகள் சுப்ரதீபையை அடுத்ததாக எடுத்து வைத்திருக்கிறேன். படைக்கலம் பயின்றவள். அங்கு அவையமரும் வழக்கமும் அவளுக்கு இருக்கிறது” என்றாள். “காந்தாரத்திலிருந்தும் ஓலை வந்துள்ளது. அவனுக்கு இரண்டு துணைவியர் அமைவதை தவிர்க்க முடியாது. ஒருத்தி பாரதவர்ஷத்தின் ஷத்ரிய குலத்திலிருந்தும் இன்னொருத்தி காந்தார நாட்டின் தொல்குடியிலிருந்தும். இரு வல்லமைகளாக அவர்கள் அவன் பின்னால் நிற்க வேண்டும். என்றிருந்தாலும் காந்தாரமே அவனுடைய அடித்தள வல்லமை.”

அசலை “ஆம், அதையும் எண்ணிப் பார்க்கவேண்டியதுதான்” என்றாள். பானுமதி சுவடிகளை பேழையில் இட்டு அப்பால் நீக்கிவிட்டு “ஏன் ஆர்வமின்றி பேசுகிறாய்?” என்றாள். “இல்லையே” என்றாள் அசலை. “மைந்தனின் திருமணம் எனும்போது அன்னைக்கு வரவேண்டிய உளஎழுச்சி உனக்கு ஏற்படவில்லை” என்றாள் பானுமதி. “அவ்வாறு ஒரு உளஎழுச்சி ஏற்படுமா என்ன?” என்று அசலை கேட்டாள். பானுமதி சில கணங்களுக்குப்பின் முகம் மாறுபட “உருவாகாதுதான். அவனுக்கு மணம்தேவை எனும் எண்ணம்கூட என்னில் எழவில்லை. அதை தந்தை சகுனிதான் என்னிடம் சொன்னார்” என்றாள்.

“ஆமாம், நானும் அப்போது இருந்தேன்” என்றாள் அசலை. “அவர் சொன்னது வேறு பொருளில். போர் நிகழ்வதற்குள் மைந்தர் அனைவருக்கும் திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று அவரிடம் கணிகர் சொல்லியிருக்கிறார். மைந்தரின் கொடிவழியினர் அவர்களின் மகளிர் கருவில் உருவான பிறகு அவர்கள் களம் காணலாம் என்னும் பொருளில். அவர் அவ்வாறு சொன்னதே எனக்கு கடும்கசப்பை உருவாக்கியது. என் முகத்தைப் பார்த்ததும் அவர் சொல்மாற்றிக்கொண்டார். நாம் படை திரட்டிக்கொண்டிருக்கிறோம் அரசி, இளவரசர்களுக்கு மணம் செய்விப்பதனூடாக அரசர்களைத் திரட்டி குருதியுறவினூடாக இறுக்கி செறிவாக்கிக்கொள்ள முடியும் என்றார். ஆம் அது நன்று என்று சொல்லி திரும்பிவந்தேன்.”

“உண்மையில் ஓரிரு நாட்கள் அவ்வெண்ணத்தையே என் உள்ளத்தில் எழவிடாமல் ஒதுக்கினேன். தந்தை சகுனி சொல்லியனுப்பினார் என்று சேடியர் வந்து என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். உகந்த முறையில் அனைவருக்கும் ஓலை செல்லட்டும் என்று ஓர் ஆணையை பிறப்பித்துவிட்டு அதை அப்படியே மறந்துவிட்டேன். இன்று கலியின் ஆலயத்திற்குச் சென்று வணங்கி மீள்கையில்தான் என்னென்ன ஓலைகள் வந்துள்ளன என்று பார்க்கவேண்டுமெனத் தோன்றியது. இவற்றை தந்தை சகுனியின் அமைச்சுநிலையிலிருந்து வரவழைத்தேன்” என்றாள். அசலை பெருமூச்சுவிட்டாள். “என்னடி?” என்றாள். “மணம் என்பது மங்கலம். ஆனால் இன்று அதைப்பற்றிய பேச்சு குறைமங்கலமாகவே காதில் ஒலிக்கிறது.” பானுமதி “ஏனடி?” என்றாள். அசலை தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். “சொல்லடி” என்றாள் பானுமதி.

“இன்று காலைமுதலே என்னில் ஒரு நிலைகுலைவு இருந்தது. புலரியில் கனவில் மைந்தனை பார்த்தேன். அவனை அழைத்து பார்த்துவிடவேண்டும் என்று எண்ணினேன். அந்நினைவுடன்தான் கலி ஆலயத்திற்கு வந்தேன். அவன் என்னை பார்க்க வந்தான். உணவு பரிமாறி அனுப்பினேன். ஆனால் அவன் சென்றபின் அப்படியே படுத்துவிட்டேன். உள்ளத்திலிருந்தும் உடலிலிருந்தும் அனைத்து விசைகளும் ஆற்றலும் ஒழுகி மறைய, இமையைக்கூட அசைக்க முடியாதென்று தோன்றியது. மஞ்சத்தில் பிணமெனப் படுத்திருந்தேன். நீங்கள் அழைக்கும் செய்தி வந்தபோது சேடியர் பலமுறை என்னிடம் சொல்லவேண்டியிருந்தது.”

பானுமதி அவளை கூர்ந்து நோக்கி “நாம் எதை அஞ்சுகிறோம்?” என்றாள். அசலை “நாம் அதைப்பற்றி பேசவேண்டாமே” என்றாள். “அஞ்சுவதிலிருந்து ஒளிந்தால் அது கரவுப்பாதைகளினூடாக வந்து நம்மை சூழ்ந்துகொள்ளும். அச்சமூட்டுவதை விழிதூக்கி நேருக்கு நேர் நோக்குவதே நன்று என்று இளமையிலேயே நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது” என்றாள் பானுமதி. அசலை “அச்சம் ஒன்றுமில்லை” என்றாள். “புரிந்துகொள்ளமுடியாத ஒரு வெறுமை, அல்லது பொருளின்மை. அல்லது உள்ளீடின்மை என்று அதை சொல்லவேண்டுமா? எப்படி சொன்னாலும் எஞ்சும் ஓர் உளநிலை அது.”

பானுமதி கைகளை மார்பில் கட்டியபடி பின்னுக்கு சாய்ந்தாள். இருவருக்கும் இடையே பொழுது கடந்துசென்றது. சிறிய அசைவொன்றில் உயிர்கொண்டு திரும்பிப்பார்த்த பானுமதி “இன்று கலிதேவனிடம் என்ன வேண்டிக்கொண்டாய்?” என்றாள். “நானா?” என்றாள் அசலை. “ஆம், நீதான். என்ன வேண்டிக்கொண்டாய்?” என்றாள் பானுமதி. “என் மைந்தனுக்காக.” பானுமதி “மைந்தனுக்காக மட்டுமா?” என்றாள். அசலை அவள் விழிகளைப் பார்த்து “ஆம்” என்றாள். பானுமதி “நான் என் மைந்தனுக்காகவும் உடன்பிறந்தாருக்காகவும் மட்டுமே வேண்டிக்கொண்டேன்” என்றாள். “அதுவே நம் இயல்பு. நாம் நம்மை ஏமாற்றிக்கொள்ள வேண்டியதில்லை” என்று அசலை சொன்னாள்.

பானுமதி பெருமூச்சுடன் “ஒவ்வொரு நாளும் இந்த அரண்மனை சுருங்கிச் சுருங்கி வருகிறது. இதன் சுவர்கள் இருபுறமும் அழுத்தி விலாவெலும்புகள் நொறுங்கும்படி விசை கொள்கின்றன” என்றாள். “நான் நன்கு உறங்கி பதினான்காண்டுகளாகின்றன. உடலும் உள்ளமும் களைத்து பின்னிரவில் சற்றே துயில்வேன். முன்புலரியில் ஏதேனும் ஒரு கனவில் விழித்தெழுவேன். பின்னர் நெடுநேரம் நெஞ்சழிந்து அமர்ந்திருப்பேன்” என்றாள் அசலை. “இன்று எனக்கும் ஒரு கனவு. எப்போதும்போல கொடுங்கனவு” என்றாள் பானுமதி.

அசலை பேசாமல் அமர்ந்திருந்தாள். “என்ன கனவு என்று கேட்கமாட்டாயா?” என்றாள் பானுமதி. அசலை அவளை நோக்கி திரும்பவேயில்லை. சில கணங்கள் காத்திருந்துவிட்டு பானுமதி தன் விழியை திருப்பிக்கொண்டாள். அசலை எழுந்து “நான் கிளம்புகிறேன்” என்றாள். “ஏனடி இந்த ஓலைகளை நீ பார்க்கவேண்டாமா?” என்றாள் பானுமதி. “இதில் எந்த முடிவையும் நாம் எடுக்க முடியாது. இவ்வோலைகள் அனைத்தையும் காந்தார அரசரிடமே அளித்துவிடுவோம். மைந்தருக்குரிய இளவரசியை அவர் தெரிவு செய்யட்டும்” என்றாள் அசலை. “ஏன்?” என புருவம் சுளித்து பானுமதி கேட்டாள். “நாம் தெரிவுசெய்வதில்தான் மங்கலப்பிழை உள்ளது.”

பானுமதி விழிநிலைக்க நோக்கி அமர்ந்திருந்தாள். “நாம் செய்யவேண்டியது மைந்தரின் அன்னையென்று அவை சென்று நிற்பதை மட்டுமே” என்றாள் அசலை. மீண்டும் ஓர் அமைதி உருவாகியது. விண்ணிலிருந்து எடைமிக்கதும் விழியறியாததுமான ஒரு அரக்கு உள்ளே பொழிந்து அனைத்தையும் கவ்வி நிறுத்திவிட்டதைப்போல. அங்கிருக்கும் அனைவரும் அதில் சிக்கிச் சிறகடித்துக்கொண்டிருக்கிறார்கள். நெடுநேரம் கழித்து பானுமதி மீண்டுவந்து “மைந்தன் எப்படி இருக்கிறான்?” என்றாள். “அவனுக்கென்ன? வழக்கம் போல உணவும் களியாட்டும்” என்றாள் அசலை. பானுமதி புன்னகைத்து “நல்லூழ்கொண்டவர்கள். அவர்கள் துயரென்பதையே அறிந்ததில்லை” என்றாள்.

“ஆம், நானும் அதையே எண்ணினேன். மானுடர்க்குரிய உளச்சோர்வும் தனிமையும் வெறுமையும்கூட அவர்களிடம் உருவானதில்லை. எப்போதும் மாபெரும் பறவைக்கூட்டம்போல கலைந்து சுழன்றுகொண்டே இருக்கிறார்கள்” என்றாள் அசலை. பானுமதி “அவர்கள் இங்கு அரசர் பிறந்தபோது வந்து சூழ்ந்த காகங்களின் மானுடப்பிறப்பு என ஒரு சூதர்சொல் உண்டு” என்றாள். அசலை “எனக்கு அவர்களைப் பார்க்கும்போது ஏரியில் அலைகள் அடித்துக்கொண்டிருப்பதைப்போல் தோன்றுகிறது. ஒரு கணமும் ஓயாது ஏதோ நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கூர்ந்து நோக்கினால் ஒன்றேதான் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. மீண்டும் கூர்ந்து நோக்கினால் ஓர் அலைபோல் பிறிதொன்று இல்லை” என்றாள்.

பானுமதி உரக்க நகைத்து “நல்ல ஒப்புமையடி. இதை ஏதேனும் சூதனிடம் சொல். பாட்டில் வைப்பான்” என்றாள். அசலை சிரித்தபடி “வருகிறேன்” என்று திரும்பியபோது கதவு திறந்து பானுமதியின் அணுக்கச்சேடி சத்யை வந்து தலைவணங்கினாள். பானுமதி “என்ன?” என்றாள். “இளைய பால்ஹிகர் தங்களை சந்திக்கும்பொருட்டு பொழுதுகோரியிருக்கிறார்” என்றாள் சத்யை. “யார், பூரிசிரவஸா?” என்று பானுமதி கேட்டாள். “ஆம், இன்று காலைதான் அவர் நகர் நுழைந்திருக்கிறார். அவையில் தோன்றி முறைமைகளை முடித்தபின் அரசரையும் காந்தாரத்து அரசரையும் சந்தித்திருக்கிறார். இப்போது ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். மாலையில் தங்களை சந்திக்க முடியுமா என்று பொழுது கோரினார்.”

“தனியாகவா?” என்று பானுமதி கேட்டாள். “இல்லை, இளைய அரசியும் கூடவே இருக்கலாம் என்று அவரே சொன்னார்” என்றாள் சத்யை. பானுமதி அசலையை பார்த்துவிட்டு “பெண்களை நன்றாக பயின்றவர்” என்றாள். அசலை புன்னகைத்தாள். “என்னடி?” என்றாள் பானுமதி. “பெண்களைப் பயில்பவர்கள் அவர்களை அடைவதே இல்லை” என்றாள் அசலை. “பிறகு?” என்றாள் பானுமதி சிரிப்பு தெரிந்த முகத்துடன். “விற்கலை பயில்பவர்களே பறவைகளை அடைகிறார்கள். பறவைகளை நோக்குபவர்கள் கவிதைகளை எழுதுகிறார்கள்” என்றாள் அசலை. பானுமதி உரக்க சிரித்தாள். அவள் சிரிக்க விரும்பியது தெரிந்தது.

சத்யை “நான் என்ன சொல்ல?” என்றாள். “எதன்பொருட்டு சந்திப்பு என்று சொன்னாரா?” என்றாள் பானுமதி. “இல்லை அரசி, தனிப்பட்ட சந்திப்பென்று மட்டுமே சொல்லப்பட்டது” என்றாள் சத்யை. “இன்று மாலை புறத்தோட்டத்தில் சந்திக்கலாம் என்று அவரிடம் சொல்” என்று பானுமதி சொன்னாள். சத்யை வணங்கி வெளியே சென்றாள். “எதற்காக என நினைக்கிறீர்கள்?” என்றாள் அசலை. “தெரியவில்லை. பெரும்பாலும் மைந்தர்களின் மணம்குறித்ததாக இருக்கும்” என்றாள் பானுமதி.

அசலை “இல்லை, வேறேதோ ஒன்று” என்றாள். பானுமதி “வேறென்ன?” என்றாள். அசலை “அவர்தான் இங்கே போருக்கான அனைத்தையும் ஒருங்கமைக்கிறார். தூதுகள் செல்கிறார். அது குறித்த ஒன்று. அக்கையே, அது பெரும்பாலும் வரவிருக்கும் போர்குறித்தே” என்றாள். பானுமதி எண்ணி தலையசைத்து “ஆம்” என்றாள்.

blபூரிசிரவஸ் அவர்களை நோக்கி சீரான நடையில் வருவதை அசலை நோக்கினாள். அவன் அரசமுறையாக வருவதை அந்நடை வழியாக தனக்கே சொல்லிக்கொள்கிறான் எனத் தோன்றியது. அவர்களை அணுகி முறைப்படி தலைவணங்கி “அஸ்தினபுரியின் அரசியையும் இளைய அரசியையும் வணங்குகிறேன். இந்நாள் எனக்கு சிறப்புற அமைந்துள்ளது. என் குடியின்பொருட்டும் வணக்கங்களை தெரிவிக்கிறேன்” என்றான். பானுமதி “மலைநாட்டின் இளவரசரை சந்திப்பது எனக்கும் நற்பேறு” என்றாள். பூரிசிரவஸ் அவள் காட்டிய இருக்கையில் கால்களைச் சேர்த்து முறைப்படி அமர்ந்து “நான் தங்கள் பொழுதை வீணடிக்க விழையவில்லை, அரசி. என் செய்தியை சொல்லிவிடுகிறேன்” என்றான். பானுமதி “சொல்க!” என்றாள்.

“சில நாட்களுக்கு முன்னர் பால்ஹிகத்திலிருந்து வரும்போது வழியில் ஒரு சாவடியில் இந்திரப்பிரஸ்தத்தின் இளைய அரசியும் சிபிநாட்டு மகளுமான தேவிகையை சந்தித்தேன். குருஷேத்ரத்தில் புண்டரீகம் என்னும் வாவியில் நீராடி பூசனைசெய்து திரும்பிக்கொண்டிருந்தார்கள்.” பானுமதி “ஆம், அவர்களுக்கும் உங்கள் அரசுக்குமான குடித்தொடர்புகளை அறிவேன்” என்றாள். அச்சொல்லில் இருந்தே அவள் குறிப்பதை உணர்ந்துகொண்ட பூரிசிரவஸ் சற்று முகம்சிவந்து மெல்லிய மூச்சுத்திணறலுக்கு ஆளானான். “ஆம், அவர்களை நான் முன்னரே அறிவேன்” என்றான்.

“புண்டரீகத்திற்கு எதற்காகச் சென்றாள்?” என்றாள் பானுமதி. “அங்கே வாவிநீராடி அன்னையை வணங்கினால் மைந்தர்நலம் திகழும் என அவர் நாட்டு நாகசூதன் கணித்துரைத்திருக்கிறான்” என்றான் பூரிசிரவஸ். “அனைத்து அன்னையரும் மைந்தர்களின் பிறவிநூல்களுடன் நிமித்திகரை அணுகிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள் பானுமதி. “அரசி, சிபிமகள் என்னிடம் சொன்னதை சொல்கிறேன். அவர் மைந்தர் போரிலிருந்து மீளமாட்டார் என்பது நாகசூதனின் குறிச்சொல். இருதரப்பிலும் மைந்தர்களே உயிரிழப்பார்கள் என்று அவர் சொன்னார். அது உண்மை என்று அக்கணமே நானும் உணர்ந்தேன்.”

“ஏனென்றால் இது நிலவுரிமைக்கான போர். நாளை தன் கொடிவழிகளுக்கும் இதே நிலப்பூசலின் இடர் எழக்கூடாதென்றே இருசாராரும் எண்ணுவார்கள். அரசி, போர் நிகழ்ந்தால் முதல் அம்புகளே இளையவர்களை நோக்கித்தான் தொடுக்கப்படும்” என்று பூரிசிரவஸ் தொடர்ந்தான். “பெருமழை என கூடிப்பெருகி சூழ்ந்து வந்துகொண்டிருக்கிறது போர். இதுவரை பாரதவர்ஷத்தில் அத்தனை அரசர்களும் இரு தரப்பிலாக அணிதிரண்டதில்லை. இந்நிலம் இரண்டாகப் பிளந்து மோதிக்கொள்ளவிருக்கிறது.” அசலை “ஆனால் அதை ஒருக்கூட்ட முயன்றவர்களில் நீங்கள் முதன்மையானவர்” என்றாள்.

“மெய்தான். கலிங்கம், வங்கம், பௌண்டரம், கூர்ஜரம், மாளவம், அவந்தி, காமரூபம், அயோத்தி, கோசலம், விதர்ப்பம் என அனைத்து நாடுகளுக்கும் மன்னர்பொருட்டு தூதுசென்றவன் நானே. நம் தரப்பு வலுவாக ஆவதே போர் தவிர்க்கப்படுவதற்கான சிறந்த வழி என எண்ணினேன். வெல்லற்கரிய தரப்பாக நம்மை நிறுத்திக்கொண்டால் அனைத்தும் அடங்கிவிடுமென்றுதான் அனைவரையும் நம் தரப்புக்கு கொண்டுவந்தேன்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

“இன்று என் கணிப்புகள் இரு வகையில் பிழையாகிவிட்டன என உணர்கிறேன். நான் இளைய யாதவர் என்னும் பேராற்றலை கணிக்கத் தவறிவிட்டேன். இந்நாட்டில் ஷத்ரியர்களுக்கு மட்டுமே பயின்ற படைகள் உள்ளன என்றும் அவர்களே ஒப்பந்தங்களின்படி இணைந்து போரிடமுடியும் என்றும் எண்ணினேன். அசுரரும் நிஷாதரும் ஒன்றிணைந்த படைகளாக ஆன வரலாறே பாரதவர்ஷத்தில் இல்லை. அதை இளைய யாதவர் நடத்திக்காட்டிவிட்டார். உருவாகி வந்துள்ள பாண்டவப் படையும் நமக்கு பெரும்பாலும் நிகரானதே” என்றான் பூரிசிரவஸ். “அதோடு அவர்களிடமிருப்பவர்கள் அசுரர்களும் நிஷாதர்களும். அவர்கள் களத்தில் யுதிஷ்டிரரின் ஆணைகளை நிறைவேற்றுவர் என எண்ணவேண்டியதில்லை. நம் குழந்தைகளை அவர்கள் வெறும் அம்பிலக்காகவே எண்ணுவர்.”

பெருமூச்சுடன் “நிலைமை இதுதான், அரசி. நீங்கள் இதை எந்த அளவில் உணர்ந்துள்ளீர்கள் என அறியவில்லை. ஆகவேதான் நான் வந்தேன். இன்றுகூட அவர்கள் வெல்லும் நிலையில் இல்லை. ஆனால் அவர்களால் நமக்கு பேரழிவை அளிக்கமுடியும். நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றும் வென்றுவிட்டோமென்றும் எவ்வகையிலும் எண்ணிக்கொள்ள வேண்டியதில்லை” என்றான் பூரிசிரவஸ். பானுமதி “நாம் வெல்லமுடியாது” என்றாள். “ஏன்?” என அவன் திகைப்புடன் கேட்டான். “ஏனென்றால் அவரை மானுடர் எவரும் வெல்லமுடியாது” என்றாள் பானுமதி. “அத்துடன் அவளுடைய சொல் நின்றுவெல்லும் பெருந்தழல்.”

பூரிசிரவஸ் சொல்லவிந்து அமர்ந்துவிட்டான். அசலை “அவள் என்ன சொன்னாள்?” என்றாள். பூரிசிரவஸ் மீண்டுவந்து “இப்போரை தவிர்க்கவேண்டும் என்றார். இது ஆண்களின் போர், ஆனால் அழிவும் துயரும் பெண்களுக்கே மிகுதி. ஆகவே அவர்கள் போரைத் தவிர்க்க முயன்றாகவேண்டும் என்றார். பேரரசி காந்தாரியும் நீங்களிருவரும் இளவரசி துச்சளையும் அங்கநாட்டு அரசியும் இதில் இணைந்துகொள்ளவேண்டும். என்ன செய்யலாமென்று எண்ணி இயன்ற எல்லா வழிகளிலும் முயலவேண்டும். தங்கள் மைந்தரைக் காப்பதே அவர்களின் முதன்மைக்கடன்” என்றான்.

“அதை முதலில் எண்ணவேண்டியவர் பாஞ்சாலத்து அரசி” என்றாள் அசலை. “ஆம், அதையே நானும் சொன்னேன். பாஞ்சாலத்தரசியிடம் சென்று பேசுமாறு சொல்லி சிபிமகளை அனுப்பினேன். உங்களிடம் சொல்லும்பொருட்டு நான் இங்கு வந்தேன்” என்றான் பூரிசிரவஸ். “பால்ஹிகரே, பாஞ்சாலத்தரசி பகையொழிந்தாலும் அவள் சொன்ன வஞ்சினம் மறையாது. சொல்லப்பட்ட சொற்கள் சொன்னவர்களுக்குரியவை அல்ல. அவை பிறந்த மைந்தர்போல. கருவறை குழவிகளை திரும்ப உறிஞ்சிக்கொள்ள முடியாது” என்றாள் பானுமதி. பூரிசிரவஸ் அவள் சொற்களை நம்பமுடியாதவன்போல பார்த்தான்.

“அந்தச் சொற்கள் நின்றிருக்கும். முழுமைகூடிய எதுவும் தெய்வமே என்கின்றன நூல்கள். நன்றோ தீதோ, அன்போ பகையோ. அச்சொற்கள் பகைகொண்டெழுந்த தெய்வங்கள். அவை உரிய குருதிபலி கொள்ளாமல் அமையா” என்று பானுமதி சொன்னாள். பூரிசிரவஸ் வாய்நீர் விழுங்கும் ஒலி மட்டும் கேட்டது. அவன் இமையசையும் ஒலி கேட்கிறதா என அசலை எண்ணினாள். “அரசி…” என அவன் தொண்டையைக் கமறியபடி அழைத்தான். “அவ்வஞ்சினத்தில்கூட நம் மைந்தர் குறிக்கப்படுவதில்லை.” பானுமதி “ஆம், நம் மைந்தர் அந்தப் பன்னிரு படைக்களத்தில் இல்லை” என்றாள். “அதனால் என்ன? இது அவர்களின் தந்தையரின் போர். அவர்கள் களம்புகாதொழிந்தால் அவர்களுக்கு என்ன மதிப்பிருக்கமுடியும்?”

பூரிசிரவஸ் “அரசி, அவ்வஞ்சினம் அவ்வண்ணமே நிகழட்டும். அதற்கும் போருக்கும் என்ன தொடர்பு?” என்றான். “போர் அந்த வஞ்சினத்துக்காக அல்ல. அது ஒரு முகம் மட்டுமே. போர் நிகழ்வது மண்ணுக்காக. அஸ்தினபுரி மண்ணுக்காக மட்டும் அல்ல, பாரதவர்ஷ மண்ணுக்காக. மண்ணை ஆளும் கொள்கைகள் போரிடுகின்றன. அப்போரை நாம் தவிர்ப்போம். வஞ்சினத்தின்பொருட்டு நிகழும் போர் அவற்றுக்குரியவர் நடுவே நிகழ்க! பீமனும் அர்ஜுனனும் அரசரையும் இளையவரையும் சகுனியையும் தனிப்பட்ட முறையில் அறைகூவட்டும். நெஞ்சுபிளக்கட்டும், குருதியுண்ணட்டும். அத்தகைய போர்கள் முன்னரும் நிகழ்ந்துள்ளன இங்கு.”

“ஆம்” என்றாள் பானுமதி. “அதுவே நானும் சொல்லிவருவது. இப்பெரும்போர் தவிர்க்கப்படவேண்டும். இது மைந்தரை மைந்தருக்கு எதிராக நிறுத்தும் போர்.” பூரிசிரவஸ் “நான் நேரடியாகவே சொல்கிறேனே. பீமனின் கதையும் அபிமன்யூவின் அம்புகளும் நம் குலத்தை முற்றழிக்க எழுந்துள்ளன. நாம் அவற்றுக்கும் நம் மைந்தருக்கும் குறுக்காகச் சென்று நின்றாகவேண்டும்” என்றான். பானுமதி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். “சொல்லுங்கள், அரசி. உங்கள் சொல்லுக்கு பெருமதிப்புண்டு” என்றான் பூரிசிரவஸ். “நான் என்ன சொல்லவேண்டும்?” என்றாள் பானுமதி. “நீங்கள் அரசரிடம் பேசுங்கள்” என்றான் பூரிசிரவஸ். “இல்லை, நான் அவரிடம் பேசமுடியாது” என்றாள் பானுமதி.

சற்றுநேரம் கழித்து “நீங்கள் பிதாமகர் பீஷ்மரிடம் பேசலாம். துரோணரிடமும் கிருபரிடமும் பேசலாம். இருவரும் இணைந்து பேரரசி காந்தாரியிடம் பேசலாம். அங்கர் நம் குரலை உணர்ந்தாரென்றாலே போர் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுவிட்டது என்றே பொருள்” என்றான் பூரிசிரவஸ். “இப்போரை எவராலும் எப்போதைக்குமாக தவிர்க்கமுடியாதென்று எனக்குத் தெரியும். மீண்டும் ஒரு தலைமுறைக்கு ஒத்திப்போடலாம். நம் கண்முன் நம் மைந்தர் இறப்பதை மட்டும் தவிர்க்கலாம்…” பானுமதி “அவர்கள் வாழவேயில்லை, பால்ஹிகரே. நான் எண்ணுவது அதை மட்டுமே” என்றாள்.

“இரண்டு தலைமுறைக்காலம் இப்போரை தள்ளிவைக்க பீஷ்மரால் இயன்றது. அவர்பொருட்டு நாம் மீண்டுமொருமுறை இதை செய்வோம். தன் குடி முழுதழிவதைக் காணும் தீயூழை அவருக்கு அளிக்காமாலிருப்போம்” என்றான் பூரிசிரவஸ். பானுமதி பெருமூச்சுவிட்டு “நான் பீஷ்மபிதாமகரிடம் பேசுகிறேன்” என்றாள். “நீங்கள் அரசரிடமும் பேசலாம்” என்றான் பூரிசிரவஸ். “அதனால் பயன் ஏதுமில்லை, பால்ஹிகரே. அதை நான் நன்கறிவேன்” என்றாள் பானுமதி. “போர் ஒத்திவைக்கப்படவேண்டும் என்றால் இறுதியாக எதை அளிக்கவேண்டியிருக்கும்? ஆகக் குறைந்த அளவில்?” என்றாள். பூரிசிரவஸ் “அஸ்தினபுரியின் நிலம். அவர்கள் ஒப்புக்கொள்ளுமளவுக்கு சற்றேனும்” என்றான். “அது நிகழாது” என்றபடி பானுமதி எழுந்துகொண்டாள்.

பூரிசிரவஸும் எழுந்தான். “அங்கே தேவிகை பாஞ்சாலத்து அரசியிடமும் பிற அரசியரிடமும் பேசுகிறேன் என்று சென்றிருக்கிறார். அவருடைய கண்ணீரின் ஆற்றலை நான் நம்புகிறேன். அதைவிட பாஞ்சாலத்து அரசியின் உள்ளக்கனிவை.” பானுமதி மெல்ல புன்னகைத்து “அவள் கனிவாள் என்றே நான் எண்ணுகிறேன், பால்ஹிகரே. கனியாதது ஒன்றே. இளைய யாதவர் உள்ளம். அது கனியாதவரை ஒன்றும் நிகழாது” என்றாள். “அவர்…” என பூரிசிரவஸ் தடுமாறினான். “வெறும் போர்வீரர் அல்ல. அவர் சாந்தீபனி குருநிலையின் இன்றைய முதலாசிரியர்… அவரிடம் கனிவில்லையேல்…”

பானுமதி “மலரின் உச்ச வடிவமே வைரம்” என்றாள். அசலையின் தோளைத் தொட்டு “செல்வோமடி” என்றாள். திகைப்பு மாறா முகத்துடன் பூரிசிரவஸ் “விடைகொள்கிறேன், அரசி” என தலைவணங்கினான். அவன் செல்வதை நோக்கியபடி பானுமதி பெருமூச்சுவிட்டாள். “வா” என்றபடி பானுமதி நடக்க எடைமிகுந்து தலை தழைய அசலை உடன்நடந்தாள்.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 8

 பகுதி இரண்டு : பெருநோன்பு – 2

blவாயில்கதவு பேரோசையுடன் வெடித்து திறக்க அறைக்குள் நுழைந்த துருமசேனன் இரு கைகளையும் விரித்து உரத்த குரலில் “அன்னையே!” என்றான். சுவடியை நோக்கி தலைகுனிந்திருந்த அசலை திடுக்கிட்டு உடல் அதிர அவனை நோக்கியபின் மூச்சை இழுத்துவிட்டு சலிப்புடன் சுவடியை பீடத்தில் போட்டாள். “ஒப்புதல் இல்லாமல் அறைகளுக்குள் நுழையலாகாதென்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் உன்னிடம்?” என்றாள். துருமசேனன் “இது என் அன்னையின் அறை. நான் காற்றுபோல உள்ளே நுழையலாம் என்று சொன்னார்கள்” என்றான். “யார் சொன்னார்கள்?” என்று அவள் கேட்டாள். துருமசேனன் திரும்பி பின்னால் இருந்த வாமதேவனைக் காட்டி “இவன்” என்றான்.

துருமசேனனைப் போலவே கரிய பேருடல் கொண்டிருந்த வாமதேவன் வெண்ணிறப் பற்களைக் காட்டி சிரித்து “அது முன்பொருமுறை சொன்னது. அப்போது நீங்கள் இப்படி தனியறையில் இல்லை” என்றான். “நான் உன்னை மட்டும்தான் வரச்சொன்னேன்” என்றாள் அசலை. “ஆம், நான் மட்டும்தான் கிளம்பினேன். நான் மட்டும் செல்லும்போது இவனும் வருவதுண்டு. ஆகவே இவனும் வந்தான். அப்போது பிறரும் கூட வந்தனர்” என்றான் துருமசேனன்.

அசலை திடுக்கிட்டு “பிறர் என்றால்?” என்றாள். துருமசேனன் திரும்பிப்பார்த்து “கர்க்கன், காவகன், சபரன், சம்புகன், சித்ரன் ஆகியோர் வந்திருக்கிறார்கள்” என்றபின் எட்டிப்பார்த்து “படிகளில் உக்ரனும் சதுர்புஜனும் முக்தனும் ஏறிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். அசலை தலையில் தட்டிக்கொண்டு “ஒரு படையே வருகிறது போல” என்று சலிப்புடன் சொன்னாள். “ஆம் அன்னையே, கூடத்தில் சாந்தனும் திரிகுணனும் பிரமதனும் கூர்மனும் சக்ரனும் திரிவக்ரனும் உக்ரபாகுவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களும் மேலே வந்துவிடுவார்கள்” என்றான்.

“இன்னும் ஒரு குழு முற்றத்தில் நிற்குமே?” என்றாள் அசலை மெல்ல கையூன்றி எழுந்தபின். “ஆம், எப்படி தெரியும்?” என்றான் வாமதேவன். “தெரிந்துகொள்வதற்கென்ன, நீங்கள் எவருமே தனி உள்ளம் இல்லாதவர்கள். இவன் வருவதை கண்ணால் பார்த்த அத்தனை பேருமே உடன்வந்துகொண்டிருப்பார்கள். ஆயிரம் பேரும் அரண்மனைக்குள் பெருகி நிறைந்தால்கூட வியப்படைய மாட்டேன்” என்றாள் அசலை. துருமசேனன் “நீங்கள் எதற்காக என்னை பார்க்க வேண்டுமென்று சொன்னீர்கள்? தூதன் வந்து ஒன்றும் சொல்லவில்லை” என்றான். “வெறுமனே பார்ப்பதற்காகத்தான். நேற்று மாலை உன்னை கனவில் கண்டேன். பார்த்து நெடுநாள் ஆகிறதே என்று உன்னை மட்டும் வரச்சொன்னேன். ஆனால் நீங்கள் இப்படித்தான் வரமுடியுமென்று தெரிகிறது” என்றபின் சிரித்து “ஒருவகையில் இப்படி உங்களைப் பார்ப்பதும் நன்றாகவே இருக்கிறது. நூறுமுறை பார்ப்பதை சேர்த்தே பார்ப்பதுபோல” என்றபின் “வருக!” என்றாள்.

“அன்னையே, எனக்கு நீங்கள் சிறப்பான விருந்து எதையோ இங்கு ஒருக்கியிருப்பதாக இவன் சொன்னான்” என்றான் துருமசேனன். “விருந்து ஒருக்காமல் உங்களை அழைப்பேனா?” என்று அசலை மகனின் கைகளைப்பற்றி தன் தோளில் வைத்துக்கொண்டாள். அதன் எடையால் அவள் முதுகு சற்று வளைந்தது. “இத்தனை பெரிய உடலை தூக்கிக்கொண்டு எப்படித்தான் அலைகிறீர்களோ?” என்றாள். வாமதேவன் “மாறாக இவ்வளவு பெரிய உடலை எங்கள் உள்ளத்தால் நிறைக்க முடியவில்லை. ஏராளமான இடம் மிஞ்சியிருக்கிறது. ஆகவேதான் நாங்கள் நிலையழிந்துகொண்டே இருக்கிறோம்” என்றான்.

“கதைப்பயிற்சி நடக்கிறதா?” என்றாள் அசலை. “பயிற்சி நடக்கிறதா என்றால் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. அது பயிற்சியா என்று கேட்டீர்கள் என்றால் அதை மூத்த தந்தைதான் சொல்லவேண்டும்” என்றான் வாமதேவன். அவர்கள் அறையை விட்டு வெளியே வந்தனர். பேரொலியுடன் ஒரு கூட்டம் படிகளில் ஏறி மேலே வந்தது. “பார்த்து, மாளிகையை இடித்துத் தள்ளிவிடப்போகிறார்கள்” என்றாள் அசலை. உக்ரன் இரு கைகளையும் விரித்து உரத்த குரலில் “அன்னையே!” என்றான். “கத்தாதே! உத்தரமே இடிந்து தலையில் விழுவது போலிருக்கிறது” என்றாள் அசலை. அதற்குள் சாந்தன் “அன்னையே!” என்று இரு கைகளையும் தட்டி வெடியோசை எழுப்பினான்.

“நீங்கள் ஒருவருக்கொருவர் மந்தணமாக எதையாவது சொல்லிக்கொள்வதுண்டா?” என்றாள் அசலை செவிகளை மூடிக்கொண்டபடி. “மந்தணமாகச் சொன்னால் அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது” என்றான் வாமதேவன். கும்பன் படிகளின் அருகேயிருந்த தூணில் தொற்றி மேலேறிவந்து அவள் இரு கைகளையும் பற்றி “அன்னையே” என்று கூவினான். “இன்னும் பல நாட்களுக்கு என் தலைக்குள் இந்த ஓசைதான் ஒலித்துக்கொண்டிருக்கப்போகிறது” என்றாள் அசலை.

அவளுக்குப் பின்னாலிருந்து நிகும்பன் “அன்னையே!” என்றான். திடுக்கிட்டு உடல் அதிர திரும்பிப்பார்த்து “மூடா! பின்னாலிருந்து கூச்சலிடாதே” என்றாள். “அன்னையே, நீங்கள் என்னை பார்க்கவேண்டுமென்று அழைத்தீர்களா?” என்றான் சம்புகன். “நான் பார்க்க அழைத்தது இவனை” என்றாள் அசலை துருமசேனனை சுட்டிக்காட்டி. “அதைத்தானே நான் சொன்னேன்?” என்றான் அவன். “சரி, வாருங்கள்” என்று அவள் அவர்களை அழைத்துச் சென்றாள்.

முன்னால் சென்ற ஒருவன் அங்கு பாதி திறந்திருந்த கதவை ஓங்கி உதைத்தான். பேரொலியுடன் அது கீலிலிருந்து உடைந்து அப்பால் மரத்தரையில் விழுந்து வெடியோசை எழுப்பியது. அனைத்து வாயில்களிலும் சாளரங்களிலும் சேடியரின் அஞ்சிய முகங்கள் தோன்றின. ஒருவன் ஓடிச்சென்று சாளரத்தில் தோன்றிய முதிய சேடியின் தலையைப்பற்றி இழுத்து வெளியே விட்டான். “இவள் பெயர் மரீசி. இவளை எனக்குத் தெரியும். ஒருமுறை இவள் எனக்கு பன்றியூன் பரிமாறியிருக்கிறாள்” என்றான். “பன்றியூன்! பன்றியூன்!” என்று குரல்கள் எழுந்தன. “எல்லா ஊனும் ஒருங்கியிருக்கிறது. ஓசையிடாமல் வருக!” என்று அவன் தோள்களைத் தட்டி அசலை சொன்னாள்.

“நாங்கள் அங்கே ஊனுணவு உண்டுவிட்டுத்தான் வருகிறோம். ஆனால் வரும் வழியிலேயே எங்களுக்குள் ஒரு சிறுபூசல். இவன் சொன்னான், மூன்றுமாத யானைக் குழவியாகிய சந்தீபனை அவனால் தூக்க முடியும் என்று. தூக்கிப்பார் என்று அறைகூவினேன். இவன் அருகே சென்று அதை தூக்க முயன்றபோது அதன் அன்னை இவனை துதிக்கையால் அறைந்து தள்ளிவிட்டாள். ஆகவே நாங்கள் அனைவரும் சேர்த்து இவனைத் தூக்கி ஏரியில் போட்டோம். ஏரியிலிருந்து இவன் நீந்திக் கரையேறாமலிருக்கும்பொருட்டு பிறர் ஏரியில் குதித்தார்கள். அவர்கள் கரையேறாமல் இருக்கவேண்டுமென்று கரையிலிருந்த கற்களைத் தூக்கி நாங்கள் ஏரிக்குள் எறிந்தோம். அதன் பிறகுதான் பொழுதாகிவிட்டது என்று நினைவு வந்து இங்கே வந்தோம்” என்றான் துருமசேனன்.

“யாருடைய உடையும் நனைந்ததுபோல தெரியவில்லையே?” என்றாள் அசலை. “நாங்கள் வரும்வழியில் புரவிவீரர்கள் சென்றார்கள். புரவியைத் துரத்திப் பிடிக்கமுடியுமா என்று மார்க்கன் கேட்டான். புரவியிலிருந்த வீரனைத் தூக்கி அப்பால் வீசிவிட்டு அந்தப் புரவியை சவுக்கால் அடித்து துரத்தினோம். அதைத் துரத்தியபடி வடக்கு வாயிலினூடாக புராண கங்கைக்குள் நுழைந்து காந்தாரக் குடியிருப்புகளினூடாகச் சுற்றி இங்கே வந்தோம் அதற்குள் உடைகள் காய்ந்துவிட்டன” என்றான் சாந்தன்.

துருமசேனன் “அன்னையே, உணவைப்பற்றி பேசத்தொடங்கியதுமே பசித்தது. இவ்வளவு தூரம் வருவதற்குள் பசி மிகுந்துகொண்டே செல்கிறது” என்றான். மிக அப்பால் வந்து பணிந்து நின்ற அடுமனைச் சேடியிடம் “உணவு ஒருங்கிவிட்டதா?” என்று அசலை கேட்டாள். “ஆம், அரசி” என்று அவள் சொன்னாள். “வாருங்கள், நான் உணவு அளிக்கிறேன்” என்று அசலை அவர்களை அழைத்துச் சென்றாள். “நீங்கள் மெதுவாக எண்ணி எண்ணி வைக்கிறீர்கள். எங்கள் உணவை நாங்களே அள்ளி எடுத்து உண்டால்தான் நிறையும்” என்றான் துருமசேனன். “இன்றொருநாள் ஓர் அகப்பை உணவை மட்டும் நானே வைக்கிறேன். அதன்பிறகு நீங்களே உண்ணுங்கள்” என்றாள் அசலை.

அகத்தளத்திற்குள் பெண்கள் உணவுண்ணும் கூடம் இருந்தது. அதில் மணை பரப்பி ஏற்கெனவே தொடுகறிகளை இலைகளில் பரிமாறியிருந்தனர். ஊன் உணவும் அப்பங்களும் கிழங்குகளும் கனிகளும் அருகே பெரிய கூடைகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. உணவைப் பார்த்ததும் கூச்சலிட்டபடி அவர்கள் ஒருவரை ஒருவர் உந்தி, ஒருவர் மேல் ஒருவர் தாவி, உள்ளே நுழைந்து மணைகளில் அமர்ந்தனர். “பன்றியூன்! பன்றியூன்!” என்று உதரன் கூவினான். சாந்தன் பாய்ந்தெழுந்து ஒரு பன்றித் தொடையை இரு கைகளாலும் தூக்கிக்கொண்டு சென்று தன்னிடத்தில் அமர்ந்து புலிபோல வாயால் கடித்து உண்ணத்தொடங்கினான். சில கணங்களிலேயே கூடம் மெல்லும் ஒலியால் நிறைந்தது.

துருமசேனனை கைபற்றி அழைத்துச்சென்று மணையில் அமரவைத்த அசலை “இரு, நான் பரிமாறுகிறேன் உனக்கு” என்றாள். “அதற்குள் இவர்கள் தின்று முடித்துவிடுவார்கள்” என்றான் துருமசேனன். “பொறு” என்றபின் அவள் திரும்பி அன்னம் பரிமாற ஏனத்தை எடுத்து அகப்பையை அதிலிட்டு திரும்புவதற்குள் துருமசேனன் மாட்டுத் தொடை ஒன்றை எடுத்து உண்ணத் தொடங்கிவிட்டான். கையில் அன்னத்துடன் அவள் அவனைப் பார்த்து சலிப்புடன் தலையசைத்தாள். அவன் விழிதூக்கி “இங்கு உணவு இன்னும் சுவையாக இருக்கிறது, அன்னையே” என்றான். அவள் சிரித்து “உண்ணுக!” என்று சொல்லி அவன் தலையைத் தொட்டு வருடினாள்.

மைந்தனை நினைக்கும்போது அவனை சிறுமகவாக கையிலேந்தி முலையூட்டிய நினைவுகளும், அவன் வந்து புன்னகைத்த கனவுகளும் கூடி எப்போதும் அவளை உளம் நெகிழச் செய்வதுண்டு. அவள் அந்நினைவுகளை தன்னைச் சூழ பரப்பி அதில் வாழ்ந்தாள். தன்னறையில் அவனுடைய இளமைக்கால ஆடைகளை வைத்திருந்தாள். அறைக்குள் அவற்றை வெவ்வேறு இடங்களில் பொருத்திவைத்து ஒவ்வொரு நாளும் அவனை ஒவ்வொரு அகவையில் உளம்பார்த்துக்கொண்டிருந்தாள். அவனைக் குறித்த தன் எண்ணங்களை ஒவ்வொரு நாளும் ஓலையில் எழுதி பேழையில் சேர்த்து வைப்பாள். பின்புலரியில் அவன் எப்போதும் அவள் கனவில் வந்தான்.

அவனுக்கு வெவ்வேறு மணங்கள் இருந்தன. கைக்குழந்தையாக இருக்கையில் அவன் வாயிலெழுந்த சற்றே புளித்த முலைப்பாலின் மணம். ஓடிவிளையாடுகையில் உலர்ந்த வியர்வையின் மணம். அவன் தலையிலெழும் எண்ணெயும் தாழம்பூவும் கலந்த நெடி. வளரும்போது அவன் உடல்மணம் மாறத்தொடங்கியது. உப்பு கலந்த மண் மணம். கசங்கிய தழை மணம். பின்னர் குருதியின் கிளர்ச்சியூட்டும் மணம். ஆண்புரவிகளிலும் களிறுகளிலும் அந்த மணத்தை அவள் அறிந்திருந்தாள். அன்று காலை எந்த மணத்தில் அவன் தன் கனவில் தோன்றுவான் என்பதை முந்தைய நாளிரவில் படபடப்புடன் எண்ணிக்கொள்வாள். அவள் எண்ணியதைக் கடந்து முற்றிலும் புதிய தோற்றத்திலேயே அவன் எப்போதும் இருந்தான்.

கனவுகளில் கௌரவ நூற்றுவரின் முகமும் அவனுக்கு இருந்தது. நூற்றுவரில் முதல்வனாகவும் அவனே இருந்தான். ஒருமுறை மட்டும் இளைய யாதவனின் சிற்றுடலில் அவன் முகம் புன்னகையுடன் திகழ்ந்தது. எழுந்தமர்ந்து படபடப்புடன் அக்கனவை நினைவிற்கு மீட்டுக்கொள்ள முயன்றாள். தொடத் தொட கலையும் ஒன்றை பெயர்த்தெடுத்துப் பதிப்பதன் பதற்றமும் கைசலிப்பும் உளச்சலிப்பும் கடந்து பின்னர் எழுந்து நீராடச் செல்கையில் தன் இதழ்களில் ஒரு புன்னகையை கொண்டிருந்தாள்.

அவளால் எங்கும் அவன் காலடி ஓசையை தனித்துக் கேட்கமுடியும். அவர்கள் அனைவருமே இல்லம் இடிபடும் ஓசையில் நடப்பவர்கள். இரு கைகளையும் ஓங்கி அறைந்துகொண்டு கூச்சலிட்டுப் பேசுபவர்கள். கையருகே எட்டும் ஒவ்வொன்றையுமே ஓங்கி அறைபவர்கள். அவர்களை ஒருவரிலிருந்து பிறிதொருவர் என்று பிரித்தறியவே இயலாதென்று அஸ்தினபுரியில் அனைவரும் கூறினர். ஆனால் அவள் அவனை மட்டும் அறிந்திருந்தாள்.

ஒவ்வொரு எண்ணமும் மிக இயல்பாக அவனையே சென்றடைந்தது. அடுமனை வாயிலுக்குச் சென்று உள்ளிருந்து எழும் உணவு மணத்தை முகர்ந்தபடி நிற்கையில் அவனை மிக அண்மையாக உணர முடிந்தது அவளால். சூதர்கள் புரவிகளை உருமிவிடுகையில் பளபளத்து எழுந்தமையும் இறுகிய பெருந்தசைகளை சாளரத்தினூடாக நோக்கி நிற்பாள். அவன் தோள்களும் முதுகும் நெஞ்சும் என அவை உருக்காட்டும். இறுக்கமே அசைவென்றான அவற்றின் மிடுக்கு. பரு வடிவ ஆற்றலுக்கு மட்டுமே உரிய மிதப்பு. இங்கு நான் இக்கணம் என்னும் தன்னில் நிறைவு.

ஆனால் ஒவ்வொரு முறையும் அவனை நேரில் பார்க்கையில் ஏமாற்றத்தால் அவளுக்குள் விரிந்த அனைத்தும் சுருங்கி உள்மடங்கும். முற்றிலும் பிறிதொருவனாக அவன் வந்து அவள் முன் நிற்பான். பல மாதங்களுக்கு ஒருமுறைதான் அவள் அவனை நேரில் பார்த்தாள். ஒவ்வொரு முறையும் அவன் உருமாறிக்கொண்டே இருந்தான். தோள்கள் அகன்று தடித்தன. நெஞ்சிலும் கைகளிலும் மயிர் அரும்பியது. மேலுதடுக்குமேல் மென்மயிர் முளைத்து அடர்ந்து பெரிய மீசையென்றாகியது. தாடையில் கரிய வலை என தாடி வளர்ந்தது. அவன் குழல் சுருளற்ற தடித்த கருமயிர்க்கற்றைகளால் ஆனது. நீண்ட சரங்களாக அவன் தோளில் தொங்கியது. அவன் குரல் ஒவ்வொரு முறையும் பிறிதொன்றாகியது.

அவன் கண்கள் மட்டுமே மாறாதிருந்தன. ஆனால் அவற்றை எதிர்கொள்ள அவளால் முடியவில்லை. “அன்னையே!” என்ற பெருங்குரலுடன் அவன் வந்து நிற்கும்போது ஏன் அவனை அழைத்தோம் என்றே அவள் எண்ணுவாள். அவனை முடிந்த விரைவில் திருப்பி அனுப்பிவிடவேண்டுமென்று தோன்றும். அத்தருணத்தைக் கடக்கவேண்டுமெனில் பொருளற்ற எதையேனும் பேசவேண்டும். அதை அவனே உருவாக்குவான். மிகப் பெரும்பாலும் அவன் உணவுண்ணும் பொருட்டே அங்கு வந்தான். அவன் உள்ளத்தில் அன்னை உணவின் வடிவில் அமைந்திருந்தாள். அவளும் உணவைப்பற்றிய பேச்சுகளினூடாக அவனிலிருந்து தன்னை முழுமையாக விலக்கிக்கொண்டாள்.

உணவுண்ணும்போது அவன் அவளிடமிருந்து முழுமையாக விலகிச்செல்வான். அப்போதுதான் இயல்பாக அவனை பார்க்கத் தொடங்குவாள். மெல்ல மெல்ல விழிக்குப் பழகி அன்றைய புத்துருவுடன் தன் முன் வந்து நின்றிருக்கும் அவனை தன்னவன் என்று தன்னுள்ளத்திலிருந்து தயங்கும் பெண்ணுக்கு உணர்த்துவாள். மிகத் தயங்கி நூறுமுறை பின்வாங்கி அவள் எழுந்து வந்து மைந்தனை அறியும் கணம் ஒன்று உண்டு. எப்போதும் அது ஒரு தொடுகை. நோக்கில் முற்றிலும் அயலவனாகத் தெரியும் அவன் தொட்டதுமே தன் மைந்தனாக ஆவதன் விந்தையை அவள் மீண்டும் மீண்டும் உணர்ந்தாள்.

இயல்பாக தோளையும் கையையும் தொடும்போதே கண் ஒன்று சொல்ல உள்ளம் பிறிதொன்று சொல்லும் அலைக்கழிவையே உவகையெனக் கண்டு அமர்ந்திருப்பாள். தலைக்குமேல் ஓங்கி பெருந்தோள்களும் எடைமிக்க கைகளுமாக நிற்பவன் முதிராத் தசைகொண்ட குழவி என தொடுகைக்கு தென்படுவான். புளித்த முலைப்பாலின் மணமும் பொடிவியர்வை மணமும் மூக்கினுள் எழுவதெனத் தோன்றும். அவள் அப்போது அவனை பெயர் சொல்லி அழைக்க விரும்புவாள். துருமசேனன் என்ற பெயர் அவள் நாவறியாதது. அது அவன் முதுதந்தை மடியிலமர்த்தி நிமித்திகர் வகுத்தளிக்க அவனுக்கிட்ட பெயர். அவளிட்ட பெயர் கிருஷ்ணன். அவனை அவள் அவ்வாறு ஒருமுறைகூட அழைத்ததில்லை. எப்போதும் மைந்தா என்றே அழைத்தாள். மைந்தன் என்றே சொன்னாள்.

அவள் இயல்பாக கைநீட்டி அவன் முழங்காலை தொட்டாள். பன்றி நெஞ்சை பற்களால் நொறுக்கி ஊனை இழுத்து மென்று தின்றுகொண்டிருந்த அவன் திரும்பி அவளைப் பார்த்து புன்னகைத்தான். அத்தருணத்தில் அனைத்தும் விலகி மீண்டும் கருவறையிலிருந்து குருதி மணத்துடன் வெளிவந்தான். கண்ணீர் மல்குமளவுக்கு அவள் உளநெகிழ்வை அடைந்தாள். இதழ்களை அழுத்தியபடி தலைகுனிந்து பெருமூச்சுவிட்டாள். ஏறியிறங்கும் நெஞ்சை கைகளால் அழுத்தியபடி மூச்சை இழுத்துவிட்டு மெல்ல தன்னை நிலைப்படுத்திக்கொண்டாள். பின்னர் புன்னகையுடன் “தந்தையை பார்த்தாயா?” என்றாள்.

உண்பதை நிறுத்தி துருமசேனன் “அவர்களை நான் பார்த்தே நெடுநாட்களாகின்றன” என்றான். அவனருகே இருந்த வாமதேவன் “எங்களைப் பார்த்ததுமே சினம்கொள்கிறார்கள். சென்றமுறை தந்தை துர்மதர் என்னை ஓங்கி அறைந்தார்” என்றான். “நீ என்ன செய்தாய்?” என்று அசலை கேட்டாள். “நான் காலையுணவுக்காக ஒரு கன்றுக்குட்டியை தூக்கிச் சென்றுகொண்டிருந்தேன்.” அசலை புருவத்தை சுளித்து “கன்றுக்குட்டியா?” என்றாள். “அது பசுக்கன்று என்று நான் பார்க்கவில்லை…” என்று வாமதேவன் சொன்னான். “ஏனென்றால் அதை கவிழ்த்தால்தான் பார்க்கமுடியும்” என்றான் சாந்தன்.

துருமசேனன் “சிம்மமும் புலியும் பசுவா காளையா என்று பார்த்தா வேட்டையாடுகின்றன? தந்தையருக்கு எதுவுமே புரிவதில்லை” என்றான். “ஆம், உண்க!” என்று அவன் தோளை தட்டினாள் அசலை. பின்னர் கைகளால் மெல்ல அவன் முழங்கால் தசைகளை வருடத்தொடங்கினாள். முழங்கால் முடி யானைமயிர் என தடித்து கம்பிச்சுருளாக கையில் தட்டுப்பட்டது. இறுகிய கெண்டைக்கால் தசையை வருடி உள்ளங்காலை அடைந்தாள். ஒவ்வொரு விரலும் அடிமரத்து வேர்கள்போல மண் செறிந்து விரிந்திருந்தன. தன் மெலிந்த வியர்வை கொண்ட கைகளால் அவள் ஒவ்வொரு விரலாக தொட்டு இழுத்தாள். பெரிய நகங்களின்மேல் விரலோட்டினாள். விரலிடுக்குகளில் விரல் செலுத்தி அழுத்தினாள். அவன் காலை வருடிக்கொண்டே தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.

blஏதோ கனவிலென இருந்த அவள் சூழுணர்ந்து விழித்துக்கொண்டபோது தன்னைச் சூழ்ந்து உணவுண்டுகொண்டிருந்த மைந்தர் திரளை நோக்கி ஒருகணம் எதுவும் புரியாதவள்போல திகைத்தாள். உண்ணலின் சுவையில் உடல்கள் மெல்ல அசைய கரியநீர் நிறைந்த சுனை என அலைகொண்டது அவ்வறை. ஊழ்கத்திலென நிலைமறந்த விழிகள். அவிகொள்ளும் அனலென அசைந்த உதடுகளும் கைகளும். மெல்லும், நொறுங்கும், அரையும் ஓசை. கலங்கள் ஓசையிட்டன. மூச்சொலிகள் அங்கே நாகக்கூட்டம் நிறைந்திருப்பதுபோல எண்ணச்செய்தன.

எத்தனை முகங்கள்! ஒருநோக்கில் ஒன்றுபோலெனக் காட்டி கூர்நோக்கில் ஒவ்வொன்றும் வேறென விளையாடுபவை. குருகுலத்தின் அத்தனை மூதாதையரும் முகில்திரண்டு மழையென இறங்குவதுபோல அஸ்தினபுரிமேல் பொழிந்துவிட்டனர் போலும். ஒவ்வொருவரும் பிற மானுடர் உண்பதைவிட நான்குமடங்கு உண்கிறார்கள். உண்பதற்கு மட்டுமென்றே மண்நிகழ்ந்தவர்கள்போல. ஒருகணம் அவள் உடல் மெய்ப்புகொண்டது. அதன்பின்னரே அவ்வெண்ணம் அவளுள் துலங்கியது. இனியில்லை என்றுணர்ந்து இனி ஆயிரமாண்டுகளுக்கான அன்னத்தை உண்டு செல்ல வந்திருக்கிறார்களா என்ன?

உணவுண்டு எழுந்து அவன் உரக்க ஏப்பம் விட்டபோது புன்னகையுடன் அண்ணாந்து பார்த்து “அடுத்தது என்ன? ஏதாவது யானை வாலை இழுத்துப் பார்ப்பதுதானே?” என்றாள். “யானை வாலையா? ஏன்?” என அவன் ஆவலுடன் கேட்டான். அவள் சிரித்து “அறிவிலி, நான் வேடிக்கைக்காக சொன்னேன். மெய்யாகவே சென்று யானை வாலை இழுத்துவிடாதே” என்றாள். “ஏன் இழுத்துப்பார்த்தால்தான் என்ன?” என்று அவன் திரும்பி வாமதேவனிடம் கேட்டான். “இழுக்கலாம்தான்…” என்று அவன் சொன்னான். அசலை “வேண்டாம். நேராக உங்கள் காட்டில்லத்திற்கே செல்லுங்கள்” என்றாள். “ஆம், ஆனால் இம்முறை நாங்கள் தெற்குவாயில் வழியாக செல்வதாக இருக்கிறோம்” என்றான் சாந்தன்.

துருமசேனன் “அன்னையே, போர் வந்துகொண்டிருக்கிறது என்கிறார்களே. மெய்யாகவா?” என்றான். “எவர் சொன்னது?” என்றாள். “மூத்தவர் சொன்னார். ஆகவே நாங்களெல்லாம் முறையாக கதை பயிலவேண்டும் என்றார்.” அசலை “போர் வராது” என்றாள். துருமசேனன் “வரும்!” என்று உரக்க சொன்னான். “அதில் நாங்களெல்லாம் இறந்துபோவோம்.” அசலை நெஞ்சு உறைய சிலகணங்கள் நின்று பின் கடந்து “என்ன சொல்கிறாய், அறிவிலி?” என்றாள். “நிமித்திகர் பார்த்துவிட்டார்கள். எங்களிடம் செவிலி காந்திமதி வந்து சொன்னாள்” என்றான் துருமசேனன். “நான் போரில் இறப்பதற்கு முன் நூறுபேரை கொல்வேன்.” அசலை “அதெல்லாம் வெறும் செய்திகள். போர் நிகழப்போவதில்லை” என்றாள்.

“அன்னையே, நாங்களெல்லாம் இறந்துவிட்டால் இந்த அடுமனையாளர்கள் குறைவாகத்தான் சமைக்கவேண்டும் இல்லையா?” என்றான் கும்பன். “தந்தையர் இருப்பார்களே. அவர்கள் நிறைய உண்பார்கள்” என்றான் சாந்தன். “தந்தையரும் இறப்பார்கள் என்றுதானே நிமித்திகர் சொன்னார்கள்? செவிலி சொல்வதை நீ கேட்டாய் அல்லவா?” என்றான் உக்ரன். அசலை “அதெல்லாமே பொய்… நீங்கள் வாழ்வீர்கள். சென்று விளையாடுங்கள்” என்றாள். “சென்று வருகிறோம், அன்னையே” என்று துருமசேனன் அவள் காலைத்தொட்டு தலைவைத்தான். “சென்று வருகிறோம், அன்னையே” என்று ஒவ்வொருவராக அவளை வணங்கினர். அது நெடுநேரமாக அலைகளைப்போல நிகழ்ந்துகொண்டே இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

கூச்சலிட்டபடி அவர்கள் படியிறங்கி முற்றத்தில் பரவினர். அவர்களைக் கண்டதும் ஏவலர்களும் காவல்வீரர்களும் பதறி பல திசைகளிலாக பதுங்கிக்கொண்டனர். அவள் வாயில்வரை வந்து அவர்களை புன்னகையுடன் நோக்கி நின்றாள். பின்னர் பெருமூச்சுடன் எண்ணிக்கொண்டாள், அம்முறையும் அவள் அவனை அவளுக்கு உகந்த பெயர் சொல்லி அழைக்கவில்லை.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 7

பகுதி இரண்டு : பெருநோன்பு – 1

blஅஸ்தினபுரியின் மேற்குக்கோட்டைவாயிலுக்கு அப்பால் செம்மண்ணாலான தேர்ச்சாலைக்கு இரு பக்கமும் விரிந்த குறுங்காட்டிற்குள் பிரிந்து சென்ற சிறுபாதையில் ஏழு சேடியரும் காவலுக்கு பதினெட்டு வில்லவர்களும் கரிய ஆடையணிந்த நிமித்திகர்குலத்துப் பூசகர் மூவரும் சூழ கையில் பூசனைத் தட்டுகளுடன் பானுமதியும் அசலையும் நடந்தனர். முதலில் சென்ற காவலன் ஒரு சிறுமேட்டின்மேல் ஏறி நின்று கொம்பொலி எழுப்பினான். செவிகூர்ந்த பின் வருக என பிறருக்கு கைகாட்டினான். அவர்கள் நடந்தபோது சருகுகள் நொறுங்கும் ஒலியும் கற்கள் கால்பட்டு உருளும் ஒலியும் எழுந்து காட்டின் காற்றுமுழக்கத்துடன் இணையாமல் தனித்து ஒலித்தன.

ஓசையென்று தெரிந்து கரிய பாறைகளில் ஒளியுடன் விழுந்து வளைந்து அணுகிய ஓடையின் கரையில் கற்களை அடுக்கியும் சரிந்த மண்ணில் தடம்வெட்டி மரத்தடிகளை பதித்தும் அவர்கள் மேலே செல்வதற்கான பாதை அமைக்கப்பட்டிருந்தது. ஒருவர் பின் ஒருவராகவே அந்தப் பாதையில் அவர்கள் செல்லமுடிந்தது. தொலைவில் கரிய கற்களாலான சிற்றாலயம் தெரிந்ததும் காவலர்தலைவன் கைகாட்டிவிட்டு வேலை நீட்டியபடி முன்னால் சென்றான். ஆலயமுகப்பில் நின்று வேல்முனையை மூன்றுமுறை நிலத்தில் முட்டியபோது அவ்வதிர்வால் சினம்கொண்டு சீறியபடி மண்செந்நிறமான அன்னை நரி ஒன்று வெளிவந்தது.

அன்னை நரி மூக்கை நீட்டி தலை தாழ்த்தி பழுப்புக் கற்கள் போன்ற கண்களுடன் பிடரி குலைத்து வால் சுழற்றியது. அதைத் தொடர்ந்து அதன் இரண்டு மைந்தர்களும் மயிர் சிலிர்த்த உடலும் இதழ்விரிந்து கோட்டி அசைந்த செவிகளுமாக வெளிவந்தன. அன்னை மெல்ல உறுமியது. ஒருவன் வில்லில் அம்புதொடுத்த ஒலி கேட்டு தலைவன் வேண்டாம் என கையசைத்தான். அவன் தன் வேலால் தரையைத் தட்டியபோது அத்தனை வீரர்களும் அதேபோல தரையில் வேல்தண்டுகளாலும் மிதியடிக்கால்களாலும் முட்டி ஓசையெழுப்பினர்.

நரிகள் வெருண்ட நோக்குடன் அவர்களை மாறிமாறி பார்த்தபின் கால்களைத் தூக்கி பின்னால் வைத்து பதுங்குவதுபோல பின்னடைந்தன. புதர்களில் மூழ்கியதும் காற்று செல்வதுபோல இலைத்தழைப்பில் தடம் எழ விரைந்து ஓடி அகன்றன. காவலர்தலைவன் கைகாட்ட பூசகர்கள் சென்று ஆலயத்திற்குள் நுழைந்து உள்ளே கிடந்த நரிகளின் மட்கிய முடியையும் உணவு எச்சங்களான எலும்புகளையும் வால்மயிர்களையும் கொண்டுவந்து அப்பாலிட்டு ஆலயத்தை தூய்மைசெய்தார்கள். அதுவரை பானுமதியும் அசலையும் சற்று அப்பால் காவலர் வெட்டி விரித்து அமைத்த தழைப்பரப்பின்மேல் அமர்ந்தனர்.

இரு வீரர்கள் மரக்குடுவையுடன் சென்று ஓடையிலிருந்து நீர் அள்ளிவந்து அளிக்க பூசகர்கள் அதை வாங்கி ஆலயத்திற்குள் வீசி கழுவி தூய்மை செய்தனர். ஒருவர் அங்கிருந்த கல்விளக்குகளில் நெய் ஊற்றி திரியிட்டு சுடரேற்றினார். கருவறை மட்டுமேயான ஆலயத்தின் இருளுக்குள் இருந்து கன்னங்கரிய நீளுருளைக் கல்லில் பொறிக்கப்பட்ட இரு விழிகள் தெளிந்து வந்தன. நோக்கியிருக்கவே அத்தெய்வம் பார்வையும் இருப்பும் கொண்டது. பூசகர் தலைவணங்கி முடிந்துவிட்டதென அறிவிக்க பானுமதியும் அசலையும் எழுந்து ஆலயத்தருகே சென்றனர்.

கைகூப்பியபடி பானுமதி ஆலயத்தின் முன் நிற்க அவளருகே அசலை நின்றாள். பூசகர்களில் ஒருவன் தன் தோள்பையிலிருந்து உடுக்கை எடுத்து கொட்டத்தொடங்கினான். தாளம் முறுகி எழுந்தோறும் ஆலயச்சூழல் அறியாமல் மாற்றம் கொண்டது. கண்ணுக்குத் தெரியாத தெய்வங்கள் சூழ்ந்து நின்று தங்களை நோக்கிக்கொண்டிருக்கும் உணர்வை அசலை அடைந்தாள். பூசகர் மூங்கில் பேழையிலிருந்து நீலத்தாமரையும் குவளையும் நீலச்செண்பகமும் சேர்த்துத் தொடுத்த மலர்மாலையை எடுத்து கலிதேவனுக்கு சூட்டினார். அருகே சிறிய நீளுருளைக் கல்லாக அமர்ந்திருந்த கபாலனுக்கு இன்னொரு நீலமாலையை சூட்டினார்.

அசலை கபாலனையே நோக்கிக்கொண்டிருந்தாள். கலியின் படைக்கலமான கபாலதண்டின் உருவம் அது என்று அவளுக்கு சொல்லப்பட்டிருந்தது. முன்பு அந்தத் தெய்வம் அங்கிருக்கவில்லை. எப்படி வந்ததென்று தெரியாமல் அங்கே அது வந்தமைந்தது. அதற்கான கதை உருவானது. “அஸ்தினபுரியில் மானுடரைவிட கூடுதலாகவே தெய்வங்கள் பிறந்துகொண்டே இருக்கின்றன” என்று அரண்மனை விறலி சந்திரிகை அவளிடம் சொன்னாள். கலியின் காவலன். கலியின்பொருட்டு இருளையும் கெடுமணத்தையும் சுமந்துசெல்பவன். காகமாகவும் நரியாகவும் வௌவாலாகவும் உருக்கொண்டு நகர்களுக்குள் நுழைபவன்.

இளம்பூசகர் கொண்டுவந்த அனற்கலங்களை இரு பக்கமும் வைத்து தூபம் எழுப்பினார் பூசகர். இன்னொரு பூசகர் சங்கொலி எழுப்ப உள்ளிருந்து கைமணி ஒலித்து கலிக்கு சுடராட்டு காட்டினார். பானுமதி சுடர்தொட்டு வணங்கி பூசகர் அளித்த கரிப்பொடியைத் தொட்டு நெற்றியிலணிந்துகொண்டாள். அசலை வணங்கி வந்ததும் பூசகர் “நீங்கள் செல்லலாம் அரசி, நாங்கள் தேவனுக்கு குருதிபலி கொடுத்து மீள்வோம்” என்றர். பானுமதி தலையசைத்துவிட்டு தாழ்ந்த விழிகளுடன் நடக்க அசலை உடன்சென்றாள். காவலர் அவர்களைச் சூழ்ந்து அழைத்துச்சென்றார்கள்.

அசலை கால்தளர்ந்து சற்று நின்றாள். பானுமதி திரும்பிநோக்கி “இன்று பேரரசியை சந்திக்கச் செல்லவேண்டும். பிந்திக்கொண்டிருக்கிறது” என்றாள். அசலை கூந்தலை சீர்செய்தபடி அவளருகே வந்து “இந்தத் தெய்வங்களைப்பற்றி அஸ்தினபுரியின் குலவரலாறுகளில் எங்குமே சொல்லப்பட்டதில்லை. இதைப் பூசனை செய்யவேண்டுமென்ற வழக்கம் எப்போது உருவானது?” என்றாள். பானுமதி “இது அரசரின் அடையாளதெய்வம்” என்றாள். “ஆம், அதை நானும் அறிவேன். அதை சொன்னது யார்?” பானுமதி ஒன்றும் சொல்லாமல் நடந்தாள். “அரசர் பிறந்தபோதுதான் இந்த தெய்வத்தைப்பற்றிய பேச்சுக்கள் எழுந்தன” என்றாள் அசலை.

“ஆம், ஆனால் இது அப்போது நிறுவப்பட்ட ஆலயம் அல்ல. அதற்கு பல தலைமுறைகளுக்கு முன்னரே இது இங்கிருந்திருக்கிறது” என்றாள் பானுமதி. “அப்படி நூற்றுக்கும் மேற்பட்ட தெய்வங்கள் இந்த நகரைச் சுற்றிய காட்டுக்குள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஆலயம் ஏன் கண்டடைந்து அரசருக்குரியதென்று ஆக்கப்பட்டது?” என்றாள் அசலை. “இங்கே அனைத்தையும் முடிவுசெய்பவர்கள் நிமித்திகர்கள்” என்றாள் பானுமதி. “நிமித்திகர்களை எவரேனும் செலுத்தியிருக்கக் கூடுமா? பேரரசி அவ்வாறுதான் நம்புகிறார்கள்.”

பானுமதி “அரசர் பிறந்தபோது நடந்தவை பதிவாகியிருக்கின்றன. முதலில் அவர் மதங்ககர்ப்பம் கொண்டு மண்நிகழ்ந்தார். அது அசுரர்களுக்குரிய பிறப்பு. அரசர்களில் கார்த்தவீரியர் மட்டுமே அவ்வாறு பிறந்தார் என்கிறார்கள். அவரை கருவுற்றநாள் முதல் தான் கண்ட கொடுங்கனவுகளை அரசியே முறையாக சொல்லி அரண்மனை நிமித்திகர் பதிவுசெய்திருக்கிறார்கள். அது அவர் கண்ட கனவு மட்டும் அல்ல. இந்நகரமே அக்கனவுக்குள் அன்றிருந்தது. பெருங்கோடையால் நகரைச் சூழ்ந்துள்ள காடுகள் காய்ந்து தீப்பற்றிக்கொண்டன. புகை மூடி நகர் கருகியது. நகருக்குள் நடுப்பகலிலும் நரிகள் ஊளையிட்டன. பல்லாயிரக்கணக்கான காகங்கள் நகருக்குள் நுழைந்து இங்கிருந்த காற்றே கருமைகொண்டது என்கிறார்கள்” என்றாள் பானுமதி.

“அவர் மண்நிகழ்ந்ததை ஒட்டிய நிகழ்வுகளில் உபாலன் என்னும் யானை உயிர்விட்டது. தீர்க்கசியாமர் என்னும் விழியிழந்த நிமித்திகர் எதையோ கண்டு அஞ்சி உயிரிழந்தார்” என்று பானுமதி தொடர்ந்தாள். “அனைத்தையும் எவரும் அமைக்கமுடியாது. நம்மைச் சூழ்ந்தவற்றில் நம்மைப்பற்றிய மந்தணம் ஒன்று பொதிந்திருக்கிறது. இந்த மரம் எவ்வகையிலோ நாம் இங்கு வந்ததை அறிந்திருக்கிறது. அந்தப் பறவை அக்கிளையில் அமர்ந்திருப்பதற்கும் நாம் இப்போது அதை கடந்துசெல்வதற்கும் தொடர்பிருக்கிறது. இவையனைத்தும் வெறும் தற்செயல்களே என்றால் இப்புவிமேல் நிகழ்வன எதற்கும் எப்பொருளும் இல்லை என்றே பொருள்.”

“அவர் கலியின் வடிவமென நினைக்கிறீர்களா? பேரழிவை கொண்டுவருவார் என எதிர்பார்க்கிறீர்களா?” என்றாள் அசலை. பானுமதி “நான் எண்ணுவதை நிறுத்தி நெடுநாட்களாகின்றன. என் எண்ணங்களுக்கு அப்பால் அகன்று விரிந்து சென்றுவிட்டன அனைத்தும். எண்ணிச்சலிப்பதன்றி பயன் ஒன்றும் இல்லை” என்றாள். அசலை “ஆனால்…” என்றபின் உதடுகளை அழுத்திக்கொண்டாள். “என்னடி?” என்றாள் பானுமதி. அசலை மறுமொழி சொல்லவில்லை. “என்னடி?” என்று பானுமதி நின்றாள். அசலையிடமிருந்து விசும்பலோசை கேட்டது. அவள் நின்று மேலாடையால் முகத்தை மூடி தலைகுனிந்திருந்தாள்.

பானுமதி அவள் அருகே சென்று தோளைப்பற்றி “என்னடி? என்ன இது, ஏவலர் காண பாதையில் நின்று?” என்றாள். “கண்களை துடை. ஓசையெழலாகாது” என்று மேலும் தாழ்ந்த குரலில் சொன்னாள். அசலை விம்மல்களை விழுங்கி முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு உடன்வந்தாள். “என்னடி?” என்றாள் பானுமதி. “கலிவடிவமாகிய தமையன், கொலைப்படைக்கலத்தின் வடிவமாகிய இளையோன். இங்கு வந்தநாள் முதல் கேட்ட கதை. அவற்றை அள்ளி ஒதுக்கி நெஞ்சை விலக்கித்தான் இதுவரை வாழ்ந்தேன். ஆனால்…” பானுமதி “என்ன?” என்றாள். “அச்சமெழுகிறது” என்றாள் அசலை.

பானுமதி அதற்கு மறுமொழி சொல்லவில்லை. இருவரும் பேசாமல் நடந்தனர். “அக்கையே, இதெல்லாம் பேரரசி சொல்வதுபோல வெறும் சூழ்ச்சியென்றே இருக்குமோ? இங்கு வந்து வழிபட்டுச் செல்வதனூடாக நாம் அச்சூழ்ச்சியை ஏற்று பெருக்குகிறோமா?” என்றாள். பானுமதி ஒன்றும் சொல்லாமல் நடந்தாள். “நாமறிவோம் இருவரையும். மூத்தவர் பெரும்போக்கும் நெறிநிலையும் கொண்டவர். அளி நிறைந்தவர். இளையவர் மூத்தவரை இறைவடிவெனக் காணும் எளிய உள்ளம் கொண்டவர். அவர்களை குருதிவிடாய் கொண்ட கொடுந்தெய்வங்களெனக் காண நம்மால் இயலுமா என்ன?” பானுமதி பெருமூச்சுவிட்டாள். “சொல்லுங்கள், மூத்தவளே” என்றாள் அசலை.

“ஒருமுகம் கொண்ட தெய்வம் ஏதுமில்லை” என்று பானுமதி சொன்னாள். “அவர்கள் நமக்கு இனியவர்கள். அந்த முகத்தையே நாம் கொழுநர்களெனக் கொண்டோம். மைந்தரைப் பெற்றோம்.” அசலை நின்று அச்சம் தெரிந்த குரலில் “அவ்வாறென்றால் இக்கதைகளனைத்தும் மெய்யென்றே நினைக்கிறீர்களா? குலமழிக்கும் கொடியவராக எழுவாரா அரசர்?” என்றாள். “குலம் அழிவதோ குருதி பெருகுவதோ மானுடர் எவர் கையிலும் இல்லை. அது ஊழ். ஊழ் தனக்குரிய மானுடரை தெரிவு செய்கிறது” என்றாள் பானுமதி. “நம் அரசரும் இளையோருமா?” என்றாள் அசலை. “அவர்கள் அத்தகையவர்களா?”

“அல்ல” என்று பானுமதி சொன்னாள். “அவர்களில் நல்லியல்புகள் மட்டுமே நிறைந்துள்ளன என நாம் அறிவோம். இப்புவியில் இன்று வாழ்பவர்களில் என் கொழுநருக்கு நிகரான பேரன்பும் அறப்பற்றும் கொண்ட பிறிதொரு அரசர் இல்லை.” அசலை அவளை நோக்கியபடி நடந்தாள். “ஆனால், மாவலிச் சக்ரவர்த்தியும் அத்தகையவரே. கார்த்தவீரியரும் அவ்வாறே வழுத்தப்பட்டார்” என்றாள் பானுமதி. “என்னால் நடக்கமுடியவில்லை, மூத்தவளே” என்றாள் அசலை. “சரி, நாம் இப்பேச்சை விட்டுவிடுவோம்” என்றாள் பானுமதி. “இல்லை, சொல்லுங்கள். இதை பேசாமலிருந்தால் என் உள்ளம் எண்ணி எண்ணிப் பெருகும்” என்றாள் அசலை.

“இளையவளே, மானுடரில் முழுமையாகவே தீமை உறைவதில்லை. தெய்வங்கள் எவரையும் அவ்வாறு முழுக்க கைவிடுவதில்லை. இருட்தெய்வங்கள் குடியேற ஓர் ஊசிமுனையளவுக்கு பழுது போதும்” என்றாள் பானுமதி. “இருட்தெய்வங்களின் படைக்கலங்கள் எவை என்று அறிவாயா? நல்லியல்புகள் என்கின்றனர் அறிவோர். கொடுந்தெய்வமான கலியை வழுத்தும் கலிதசகத்தில் பாவனர் பாடுகிறார், அன்பு, இரக்கம், அறம், குடிப்பிறப்பு, பண்பு, இன்சொல், பணிவு, வீரம் என்னும் எட்டு படைக்கலங்களை கைகளில் ஏந்தி அமர்ந்திருப்பவர் அவர் என்று.”

“எண்ணிப்பார், அரசர் இத்தனை துணைவர்களை எப்படி தனக்கென சேர்த்துக்கொண்டார்? அவருடைய நல்லியல்புகளால் அணுகி ஆட்பட்டவர்கள் அவர்கள். அழிவிலும் இழிவிலும் அவர்கள் அவரை விட்டு நீங்குவதில்லை. அவருள் எழுந்த இருட்தெய்வம் அவர்கள் மேலேறி பேருருக்கொள்கிறது” என்றாள் பானுமதி. அசலை பெருமூச்சுவிட்டபடி அவளை தொடர்ந்து நடந்தாள். பின்னர் “அந்தச் சிறுபழுது எதுவென எண்ணுகிறீர்கள், அரசி?” என்றாள். “மண்விழைவுதான்” என்றாள் பானுமதி. “தெய்வங்களே வந்து எதிர்நின்றாலும் அவரிலிருந்து அதை அகற்றவியலாது.”

“ஆம்” என்று அசலை சொன்னாள். “ஒவ்வொருவருக்கும் ஒன்றில் நிறைவும் மீட்பும் உள்ளது. அரசரென அமைந்து நாடாள்கையிலேயே முழுதும் நிகழ்பவர் அரசர். ஆகவே ஆளும் மண்மேல் அழியாப் பற்று கொண்டிருக்கிறார். பிறிதொருவர் பாரதவர்ஷத்தை ஆள்வதை அவரால் ஏற்கமுடியாது” என்றாள் பானுமதி. “ஆம், மெய்” என்று சொன்ன அசலை “அவள் மட்டும் மும்முடிசூடி அரசமரவில்லை என்றால் இவையெதுவுமே நிகழ்ந்திருக்காது” என்றாள். “அவளும் இவருக்கு நிகரான உள்ளம் கொண்டவள். மண்ணாளவென்றே பிறந்தவள்” என்றாள் பானுமதி.

அசலை “போரை எவராலும் தவிர்க்கமுடியாதென்று ஒவ்வொருவரும் பேசிக்கொள்கிறார்கள். நான் என் ஆழத்தில் போர் நிகழாதென்ற நம்பிக்கையை அணையாது பேணி அதன் வெளிச்சத்தில் வாழ்கிறேன். நீங்கள் சொல்வதைக் கண்டால் போர் நிகழ்ந்தே தீரும் என்று தோன்றுகிறது” என்றாள். “நிகழ்ந்தாகவேண்டும்” என்றாள் பானுமதி. “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள் அசலை. “அவள் அவைநின்று வஞ்சினமுரைத்தாள். அது நிகழவேண்டாமா என்ன?” அசலை திகைத்து “மூத்தவளே…” என்றாள்.

பானுமதி சிவந்த முகத்துடன் “அன்று நிகழ்ந்த அவைச்சிறுமையில் நீ என்னவாக இருந்தாய்?” என்றாள். அசலை “நான்…” என்றாள். “சொல்லடி, நீ என்னவாக இருந்தாய்?” அசலை “நான் திரௌபதியாக அவைநடுவே நின்று சிறுத்தேன். அவள் அனல்கொண்டு எழுந்தபோது நானும் உடன்கனன்றேன்” என்றாள். “ஆம், நீயும் நானும் அங்கிருந்த அத்தனை பெண்களும் அவ்வாறே அன்று எரிந்தோம். அந்த வஞ்சினம் அவள் உரைத்ததா என்ன? நானும் நீயும் உரைத்தது, பாரதவர்ஷத்து மகளிர் அனைவரும் அதை ஒருகணமேனும் தாங்களும் சொல்லியிருப்பார்கள். அது தோற்கலாகாது” என்றாள் பானுமதி.

அவள் முகம் குருதிகொண்டிருந்தது. கண்கள் சிவந்து நீர்படிந்திருந்தன. மூச்சு எழுந்தமைய “பெண்பழி நிகர் செய்யப்படவேண்டும். அது தோற்றதென்றால் விண்ணமைந்த மூதன்னையர் சீற்றம்கொள்வார்கள். நம் கொடிவழிகளென எழுந்துவரும் பெண்கள் பழிதூற்றுவார்கள்” என்றாள். “நம் கொழுநர் அவர்கள்” என்று நிலம்நோக்கி அசலை சொன்னாள். “ஆம், ஆயினும் ஆண்கள்” என்றாள் பானுமதி. அவளில் பிறிதொன்று குடியேறுவதை அசலை கண்டாள். வெண்ணிற வட்ட முகத்தில் நீல நரம்புகள் எழுந்தன. கழுத்தில் குருதிநாளங்கள் புடைத்தன. பற்கள் கிட்டித்து மூச்சொலி எழுந்தது.

“நீங்கள் மண்ணாளுங்கள். மண்ணுக்கென போரிட்டு நெஞ்சுபிளந்து உயிர்விடுங்கள். வீரப்பேருலகு சென்று அங்கும் நிறைந்திருங்கள். ஆனால் பெண்பழி கொண்டமைக்கு ஈடுசெய்தே ஆகவேண்டும். நெஞ்சுபிளந்து மண்ணில் கிடந்தாகவேண்டும். அதுதான் மூதன்னையர் விரும்பும் முடிவு” என்றாள் பானுமதி. மெல்ல மூச்சு தணிய உடலில் இருந்து ஒன்று எழுந்து அகன்றது. பெருமூச்சுடன் நடக்கத் தொடங்கினாள். “நாம் அவ்வாறு எண்ணலாகாது, மூத்தவளே” என்றாள் அசலை. “கொழுநன் தொழுதெழுவதே நம் அறம் என்றுதான் கற்று வளர்ந்திருக்கிறோம்.”

“ஆம், அவ்வாறுதான் நானும் இதுநாள் வரை எண்ணியிருந்தேன். இவையெவற்றையும் எனக்குள்கூட எண்ணிக்கொண்டதில்லை. அனைத்தையும் கடந்து இத்தனை ஆண்டுகளை கழித்திருக்கிறேன். ஆனால்…” என்றபின் திரும்பி “நீ கங்கைப் படித்துறைக்கு சென்றிருக்கிறாயா?” என்றாள். “ஆம்” என்றாள் அசலை. “அங்கே அம்பையன்னையின் ஆலயம் இருக்கிறது, அறிவாயா?” என்றாள் பானுமதி. “ஆம், ஒருமுறை சென்று தொழுதிருக்கிறேன்.” பானுமதி “நம் குடியின் மூதன்னை அவர்” என்றாள். “ஊழின் எந்த ஆடலால் இக்குடிக்கே நாம் மருமகள்கள் என வந்தோம்? நம்மால் எண்ணிச் சென்று தொட்டுவிட முடியாது அதை.”

“நான் அவர் ஆலயத்திற்கே சென்றதில்லை. பதினெட்டுமுறை அப்படித்துறையிலிருந்து படகு ஏறியிருக்கிறேன், ஒருமுறைகூட திரும்பி அவரை நோக்கியதில்லை. அவர் இங்கில்லை என்று எண்ணியே இத்தனை ஆண்டுகளை இங்கு கழித்தேன். ஆனால் அவர் என்னை விடவில்லை. என் கனவில் வந்தார்.” அசலை “எப்போது?” என்றாள். “அவள் கானேகல் முடித்து உபப்பிலாவ்யத்திற்கு வந்த நாளில். அவள் அங்கு வந்த செய்தியை இரண்டு நாட்களுக்குப் பின்னர் பறவைச்செய்தியினூடாகவே அவையும் அரசரும் அறிந்தனர். நானும் அப்போதே அறிந்தேன். ஆனால் அன்னை அறிந்திருந்தார்” என்றாள் பானுமதி.

“ஐம்புரிக் குழலில் குருதி சொட்ட விழிகள் செங்கனல்துண்டுகளென எரிய என் முன் எழுந்தார். வெறுமனே நோக்கிக்கொண்டு நின்றார். குழல்நுனியில் இருந்து குருதி சொட்டும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அன்னையே என்றேன். அவர் விழிகள் என்னை பார்த்தனவென்றாலும் அறிந்திருக்கவில்லை. அன்னையே, நான் உங்கள் சிறுமகள் என்றேன். அருகே ஓர் ஓசை கேட்டது. விழித்துக்கொண்டு எழுந்தமர்ந்தேன். அன்று தோன்றியது, நான் எதையும் கடந்துசெல்லமுடியாதென்று. நான் என் மூதன்னையரின் தொடர்ச்சியென்று மட்டுமே இங்கே இருக்கமுடியும். இவர்கள் எவரும் எனக்கு அணுக்கர் அல்ல. தந்தையோ கொழுநரோ மைந்தரோ அல்ல. நான் வேறு” என்றாள் பானுமதி.

“அந்தக் குருதிசொட்டும் ஐம்புரிக் குழலை நான் முதல்முறை கனவில் கண்டது அவையில் குலச்சிறுமை நிகழ்ந்த அந்நாள் இரவில். எழுந்தமர்ந்து நெஞ்சைப் பற்றிக்கொண்டு விழிநீர் உகுத்தேன். அந்நாளுக்குப் பின் நான் அவர் என்னைத் தொட ஒப்பியதில்லை. பதினெட்டாம் நாள் என் மஞ்சத்தறைக்கு வந்தார். உள்ளே அழைத்து நான் சொன்னேன். என்னை தொடுக, ஆனால் என்னுள் ஐங்குழல் விரித்து அவள்தான் இருப்பாள் என்று. அஞ்சியவர்போல பின்னடைந்தார். ஒரு சொல் இன்றி என்னை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் திரும்பிச்சென்றார். அதன்பின் இன்றுவரை நாங்கள் விழிநோக்கிக்கொண்டதில்லை” என்று பானுமதி சொன்னாள்.

“என்னை இளையவர் அந்நாளுக்குப்பின் அணுகியதே இல்லை” என்றாள் அசலை. “நானும் அதை விரும்பவில்லை என்பதனால் அவரை தேடிச் சென்றதுமில்லை. பதினான்காண்டுகளில் இருமுறை அவையில் அருகே நின்றிருக்கிறேன். ஒருமுறைகூட முகம்நோக்கவோ சொல்லாடவோ செய்யவில்லை.” தலையை அசைத்து எண்ணங்களை கலைத்தபின் “நான் சேடியர் வழியாக உசாவினேன். அவர் அதன்பின் எந்தப் பெண்ணையும் அணுகவில்லை. அவருக்கு பணிசெய்யும் பெண்களையும் விலக்கிவிட்டார். பெண்களை விழிநோக்கவே அவரால் இயலவில்லை என்றனர். ஆம், அது அவ்வாறே என நானும் எண்ணிக்கொண்டேன்” என்றாள்.

பானுமதி “ஆம், வஞ்சத்தின் விசையால் அன்று அதை செய்தனர். அதிலிருந்து எவர் அகன்றாலும் அவர்களால் அகலமுடியாது. ஏனென்றால் அவர்கள் கீழ்மைகொண்டவர்கள் அல்ல. பேரறத்தாராகிய திருதராஷ்டிரருக்கும் பெருங்கற்பினள் காந்தாரிக்கும் பிறந்தவர்கள் அவர்கள். அன்னையின் முன் இன்றுவரை அவர்கள் வந்ததில்லை” என்றாள். அசலை “அன்னை மைந்தரை மெல்ல மன்னித்துவிட்டார் என்றே எனக்குத் தோன்றியது” என்றாள். “ஆம், அவர் மன்னித்துவிட்டார். ஆனால் உள்ளே அனல் இருப்பதை மைந்தர் அறிவர். ஆகவேதான் ஒருமுறைகூட அவர்கள் அவர் முன் வந்ததில்லை” என்றாள் பானுமதி.

அவர்கள் அதன்பின்னர் பேசிக்கொள்ளவில்லை. தலைகுனிந்து தங்கள் உள்ளோட்டங்களில் சுழித்தவர்களாக நடந்தனர். தேர்ச்சாலையில் நின்ற மூடுதேரில் ஏறிக்கொண்டனர். பானுமதி தலைகுனிந்து அமர்ந்திருக்க அசலை சாளரம் வழியாக நோக்கிக்கொண்டிருந்தாள். கோட்டைக்குள் நுழைந்து ஏரிக்கரையின்மேல் சென்ற பாதையில் வந்து நகருக்குள் நுழைந்தனர். பானுமதி மேற்கு மாளிகையின் சாளரத்தருகே இரு வண்ண ஆடையசைவை கண்டாள். மகாநிஷாதகுலத்து இளவரசியரான சந்திரிகையும் சந்திரகலையும். அவர்களை அவள் பார்த்தும் நினைவுகூர்ந்தும் நெடுநாட்களாகின்றன என்று வியப்புடன் எண்ணிக்கொண்டாள்.

blபேரரசியின் அரண்மனையில் வழக்கம்போல சடங்குபோலவே ஒவ்வொன்றும் நிகழ்ந்தன. கௌரவர்களின் அரசியர் அனைவரும் முறைப்படி அரச ஆடையணிந்து வந்திருந்தனர். ஐவரும் அறுவருமாக காந்தாரியின் அறைக்குள் சென்று அவளை வணங்கி சூழ்ந்து அமர்ந்தனர். அவள் ஒவ்வொருவரையாகத் தொட்டு நோக்கி அவர்களின் பெயர்களைச் சொல்லி அழைத்து நலம் உசாவினாள். இரைதேடும் மலைப்பாம்புகள் என அவளுடைய பெரிய வெண்ணிறக் கைகள் மகளிரின் கன்னங்களையும் தோள்களையும் தழுவி வருடி அலைந்துகொண்டே இருந்தன. அவர்களில் எவர் துயருற்றிருக்கிறார்கள், எவர் சோர்வுகொண்டிருக்கிறார்கள் என அத்தொடுகையாலேயே அவள் அறிந்தாள். அவர்களை மட்டும் அருகணைத்து தோளுடன் தழுவிக்கொண்டாள்.

ஒவ்வொருவரின் மணத்தையும் அவள் நினைவில் வைத்திருந்தாள். தைலங்கள், மலர்கள், சுண்ணம், செங்குழம்பு என அவர்கள் அணிந்திருந்த அத்தனை நறுமணங்களையும் அகற்றி அவர்களின் மணத்தை பிரித்தெடுக்க அவளால் இயன்றது. அதனாலேயே அவள் மருகியர் அவளை விரும்பினர். அவளுடன் தங்களுக்கு மிக ஆழ்ந்த தனிப்பட்ட தொடர்பு ஒன்று இருப்பதாக நம்பினர். தங்களுக்கே உரிய மணமே தாங்கள் என்பதுபோல, அதை அறிபவர் தங்களுள் கரந்துள்ள அனைத்தையும் தொட்டுவிட்டார் என்பதுபோல.

காந்தாரியின் முகம் மலர்ந்து சிவந்த உதடுகள் இழுபட்டு நீண்டிருந்தன. மெல்லிய பறவையொலி போன்ற சிரிப்பு எழுந்துகொண்டே இருந்தது. மகளிர் அவளருகே வந்ததுமே அனைத்தையும் மறந்து தாங்களும் சிரித்து களியாடத் தொடங்கினர். அகவையை இழந்து மணம்முடித்து அங்கு வந்துசேர்ந்த சிறிய பெண்களாக மாறினர். பானுமதி அரசியின் அருகிலேயே அமர்ந்திருந்தாள். ஒவ்வொருவரைப்பற்றியும் காந்தாரி அவளிடம் ஒருசில சொற்களை உரைத்தாள். சிலரை அன்புடன் கடிந்துகொண்டாள். அவள் முன் பெண்களை நிரையாக அனுப்பியபடி அறைவாயிலில் அசலை நின்றிருந்தாள்.

“இவள் ஸ்வாதா அல்லவா? என்னடி மெலிந்துவிட்டாய்?” என்றாள் காந்தாரி. ஸ்வாதா “சற்று மெலியவேண்டும் என்றனர் மருத்துவர். அன்னையே, எடைமிகுந்து என் கால்கள் வலிகொண்டுவிட்டன” என்றாள். “எடைமிகுந்தால் வலியெழும் என எவர் சொன்னது? என்னளவு எடைகொண்ட எவருள்ளனர் இங்கே?” என்றாள் காந்தாரி. “நீ ஸ்வாகை அல்லவா? உன் உடன்பிறந்தாள் ஸதி எங்கே?” என்றாள். பானுமதி “அனைவர் பெயரும் எனக்கே தெரியாது, அன்னையே” என்றாள்.

“தெரியாதா? இவ்வரண்மனையில்தானே அவர்கள் வாழ்கிறார்கள்? இதோ இவள் ஸ்வாதா, அவள் துஷ்டி, அவள் உடன்பிறந்தவள் புஷ்டி. ஸ்வஸ்தி, ஸ்வாகா, காமிகை, காளிகை, ஸதி, க்ரியை, சித்தை, சாந்தி, மேதா, பிரீதி, தத்ரி, மித்யா என அவர்கள் காந்தாரத்திலிருந்து சேர்ந்தே வந்த இளவரசிகள். இவர்களை நீ அறியவில்லை என்றால் எவர் அறிவார்கள்?” என்றாள் காந்தாரி. பானுமதி அப்பெண்களை நோக்கி புன்னகை புரிந்தாள்.

அசலை விழிகாட்ட பெண்கள் எழுந்து “நாங்கள் மீண்டும் வருகிறோம், அன்னையே. அடுத்த நிரை வெளியே காத்திருக்கின்றது” என்றனர். வெளியே இருந்து அவந்திநாட்டு இளவரசியரான அபயை, கௌமாரி, ஸகை, சுகுமாரி, சுகிர்தை, கிருதை, மாயை, வரதை, சிவை, முத்ரை, வித்யை, சித்ரை ஆகியோர் ஒரு குழுவாக உள்ளே வந்து காந்தாரியை வணங்கினர். “வாடி, நீ சிவை அல்லவா? வித்யை… என்னடி தாழம்பூ சூடியிருக்கிறாய்?” ஒரு பெண்ணின் கன்னத்தை வருடி “சுகிர்தை… நேற்றுதான் உன்னை தொட்டதுபோல் உணர்கிறேன். உன் தோழி கிருதை எங்கே?” என்றாள். கிருதை “இங்கிருக்கிறேன், அன்னையே” என்றாள்.

மூஷிககுலத்து இளவரசியர் கமலை, ருத்ராணி, மங்கலை, விமலை, பாடலை, உல்பலாக்ஷி, விபுலை ஆகியோர் அசலையின் அருகே வந்து காத்து நின்றனர். அவர்கள் முகங்கள் ஆலயம் தொழும் அடியார் என மலர்ந்திருந்தன. “அந்தியாகிவிடும் போலிருக்கிறதே? அன்னை ஓய்வெடுக்க வேண்டாமா?” என்றாள் மங்கலை. “அன்னைக்கு இதுவே பெரிய ஓய்வு” என்றாள் அசலை. “என் கணவர் கேட்டார், அங்கே என்னதான் செய்வீர்கள் என்று. மகிழ்ச்சியாக இருப்போம் என்றேன். அது அவருக்கு புரியவில்லை” என்றாள் கமலை. “உணவுண்பதுபோன்ற ஒரு நிலை என்று சொல்லவேண்டியதுதானே?” என்றாள் பாடலை. அவர்கள் சிரித்தனர்.

ருத்ராணி “அவருக்கும் வர விருப்பம்தான்” என்றாள். “இங்கு ஆண்களுக்கு ஒப்புதலில்லை. ருதுபங்கம் நிகழ்ந்தபின் அன்னை ஜீவசுத்தி நோன்பு கொள்கிறார். ஆண்களை சந்திப்பதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் அதற்கு” என்றாள் அசலை. “ஆம், அறிவேன். ஆனால் அதை காட்டில் சென்றுதான் செய்வார்கள் என்று என் சேடி சொன்னாள்” என்றாள் கமலை. “காடென்பது என்ன? உலகை விலக்கிக்கொண்டால் அனைத்துமே காடுதான்” என்றாள் உல்பலாக்ஷி. “எத்தனை நேரம் கொஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்?” என்று கமலை உள்ளே நோக்கினாள். “அவர்களுக்கு இன்னும் பொழுதிருக்கிறது. அனைவருக்கும் ஒரே நேரம்தான்” என்றாள் அசலை.

“மாத்ருபிரஸ்தான விழா வருகிறது. அன்னை அதற்கு செல்லும்போது நாங்களும் உடன்செல்வோம் அல்லவா?” என்றாள் கமலை. “இல்லை, அது நோன்புகொண்டவர்களுக்கு மட்டும்.” கமலை “என்ன நோன்பு?” என்றாள். “முன்னும் பின்னும் காமவிலக்கு நாட்கள் உண்டு” என்றாள் ருத்ராணி. “நாம்தான் ஆண்டுக்கணக்காக காமவிலக்கு கொண்டிருக்கிறோமே?” என்றாள் கமலை. அசலை திகைப்புடன் அவளை நோக்கியபின் பிறரை பார்த்தாள். “காமவிலக்கா?” என்றாள். கமலை தலைகுனிந்து “ஆம், அவையில் அது நிகழ்ந்தபின் நாங்கள் அவர்களை அணுகவிடவில்லை. அவர்களுக்கும் எங்களை அணுகுவதில் தயக்கமிருக்கிறது” என்றாள். “அனைவருமா?” என்றாள் அசலை. “ஆம், ஆண்டுகள் கடந்தபோது அதுவே வழக்கமென்றாகிவிட்டது” என்றாள் பாடலை. அசலை பெருமூச்சுவிட்டாள்.

பானுமதி கையசைக்கக் கண்டு “செல்க!” என்றாள். மறுபக்க வாயில் வழியாக உள்ளிருந்தவர்கள் வெளியே செல்ல அவர்கள் உள்ளே சென்றனர். காந்தாரி நெடுங்காலம் காத்திருந்து அவர்களை சந்தித்தவள்போல கூச்சலிட்டு நகைத்தபடி கைவிரித்து அவர்களை இழுத்து அணைத்துக்கொண்டாள். சிரிப்போசையும் கூச்சல்களும் எழுந்தன.

உத்கலத்தின் இளவரசியர் திதி, சுரசை, பானு, சந்திரை, யாமி, லம்பை, சுரபி, தாம்ரை ஆகியோர் வந்து நின்றனர். அசலை அவர்களை சற்றுநேரம் நோக்கிவிட்டு “நான் ஒன்று கேட்கிறேன், மெய் சொல்க!” என்றாள். அவர்கள் ஏறிட்டுநோக்க “காமவிலக்கு நோன்பு கொண்டவர்கள் உள்ளீர்களா உங்களுள்?” என்றாள். சந்திரை தலைகுனிந்து “நாங்கள் அனைவருமே” என்றாள். லம்பை “அகத்தளத்தின் அரசியர் அனைவருமே அவ்வாறுதான்… அவர்கள் எவரும் இங்கு வருவதில்லை” என்றாள். அசலை பெருமூச்சுவிட்டாள்.

நூல் பதினாறு – குருதிச்சாரல் – 6

பகுதி ஒன்று : பாலைமகள் – 6

blதன் அறைக்குத் திரும்பியதுமே பூர்ணையிடம் நடந்ததை சொல்லிவிட்டு தேவிகை மஞ்சத்தில் படுத்தாள். துயில் வராதென்றே உள்ளத்தின் அலைக்கழிப்பு காட்டியது. அறைக்குள் நின்றிருந்த பூர்ணையிடம் “நானும் உடன்செல்கிறேன். நெடுநாட்களுக்குப்பின் அஸ்தினபுரிக்குள் நுழைவதுதான் என்னை அலைக்கழிக்கிறதா?” என்றாள். “ஆம், அரசி” என்று பூர்ணை சொன்னாள்.

சுரபி உள்ளே வந்து “பயணத்திற்கான அனைத்தையும் ஒருக்கிவிட்டேன், அரசி” என்றாள். “நீ என்னடி நினைக்கிறாய்?” என்றாள் தேவிகை. “எதைப் பற்றி?” என்றாள் சுரபி. “நான் ஏன் அமைதிகொள்ளாமலிருக்கிறேன்?” அவள் பேசாமல் நின்றாள். “சொல், ஏன்?” என்றாள் தேவிகை. “நீ வாளால் அறுத்துச்சொல்லும் இரக்கமற்ற நெஞ்சுகொண்டவளாயிற்றே.” சுரபி “அவர்கள் ஒருதுளி விழிநீர் விட்டிருந்தால் நீங்கள் அமைதிகொண்டிருப்பீர்கள், அரசி” என்றாள். “அவ்வளவுதானா?” என தேவிகை புன்னகைத்துக்கொண்டு கேட்டாள்.

“அவர்களை நீங்கள் வெறுத்தீர்கள். அவ்வெறுப்புக்குரியவர்களாக அவர்கள் இல்லை என்பதன் ஏமாற்றம்” என்றாள் சுரபி. “மேலும் ஏதேனும் சொல்” என்றாள் தேவிகை. சுரபி பேசாமல் நின்றாள். “நீ சொன்ன இரண்டும் அல்ல” என்ற தேவிகை புரண்டுபடுத்து “பிறிதொன்று. நான் அதை தெளிவாகவே இப்போது உணர்கிறேன்” என்றாள். சுரபி புன்னகைத்து “ஆம், அரசி. சில ஆழங்கள் பொதுமைக்கு அப்பாற்பட்டவை” என்றாள். “துயில்க!” என்றபின் பூர்ணை சுரபியை தோளில் தொட்டு அழைத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

தேவிகை திரௌபதியை எண்ணியபடி கண்மூடிக்கிடந்தாள். அவள் முகம், அதில் மாறா இளமையை நிறுத்துவது எது? கண்களில் வந்துசெல்லும் சிறுமியருக்குரிய சிரிப்பு. அதற்குமப்பால் ஒன்று. அவள் மீண்டும் மீண்டும் தேடினாள். சிறிய மூக்கும் குமிழுதடும் அளிக்கும் குழந்தைமை அல்ல, அதற்கப்பால். அவள் துயிலில் இருந்து எழுந்தபோது அப்பால் என்னும் சொல் நெஞ்சில் பொருளின்றி எஞ்சியிருந்தது. பூர்ணை அவளை எழுப்பிக்கொண்டிருந்தாள். “அரசி, அரசர் அரண்மனை மீண்டுவிட்டார்” என்றாள். “எப்போது?” என்றாள். “சற்று முன்பு…” தேவிகை “அவர் எப்போது அங்கிருந்து கிளம்பினார்?” என்றாள். “நாம் இங்கு வருவதற்கு முன்னரே கிளம்பியிருக்கவேண்டும்” என்றாள் பூர்ணை.

மெல்ல அனைத்தையும் உளம்வாங்கியபின் “நாங்கள் அவரறியாமல் நாளை கிளம்புவதாக இருந்தோம்” என்றாள் தேவிகை. “அரசி, இனி அது இயலாது. நீங்கள் சென்று அவரிடம் தெரிவிப்பதே முறையாகும்.” தேவிகை “அவர் ஏன் இப்போது வந்தார்?” என்றாள். “அரசியின் உளமாற்றமோ நாம் கிளம்புவதோ அவரை சென்றுசேரப் பொழுதில்லை. அவர் அங்கிருந்து வரவே ஒருநாள் ஆகும்” என்றாள் பூர்ணை. “இது வேறேதோ செய்தியால் நிகழ்ந்தது. ஆகவே ஊழ் என்றே கொள்ளவேண்டும்” என்றாள்.

தேவிகை தன் எண்ணங்களில் தொலைவுசென்று மீண்டுவந்து “அவர் அரசி அஸ்தினபுரி செல்வதை விரும்பமாட்டார்” என்றாள். “ஏன்? அவர் போரை விழைவார் என நான் எண்ணவில்லை” என்றாள் பூர்ணை. “அவர் போரை அஞ்சுகிறார். அஞ்சுபவர்கள் ஆவலுடன் அச்சமூட்டுவதை எதிர்பார்க்கவும் செய்வார்கள். அதையே எண்ணியிருப்பார்கள். போர் நிகழாதுபோனால் மிகப் பெரிய ஏமாற்றம் கொள்பவர் அவராகவே இருப்பார்.”

பூர்ணை சற்றுநேரம் அவளை நோக்கியபின் “எவ்வாறாயினும் அவரால் தடுக்கமுடியாது” என்றாள். “அரசி வஞ்சம் தவிர்த்ததை அவர் வரவேற்றாகவேண்டும். வெறுமனே அல்ல, உளம்நெகிழவேண்டும், விழிநீர் நனைய தழுவிக்கொள்ளவேண்டும்” என்றாள். தேவிகை “அதெல்லாம் நிகழும். ஆனால் பிறிதொன்றும் நிகழும். அதைத்தான் என்னால் இப்போது கணிக்கமுடியவில்லை” என்றபின் “இதை எதிர்பார்த்திருந்தேனா? இத்தனை எளிதல்ல என்று என் அகம் அறிந்திருந்ததா?” என்றாள். “ஏனிந்த வீண் எண்ணச்சுழல்? நேராகச்சென்று அரசரை பாருங்கள். அங்கு நிகழ்வது நிகழட்டும்” என்றாள் பூர்ணை. “ஆம், நான் உடனே கிளம்பவேண்டும்” என்றாள் தேவிகை.

blதேவிகை நீராடி உடைமாற்றி வந்தபோது ஏவலன் அரசரின் அழைப்புடன் வந்திருந்தான். அவள் அவனுடன் சென்றபோது உள்ளம் ஆழ்ந்த அமைதியுடன் இருப்பதை உணர்ந்தாள். ஒரு சொல்லும் இல்லாது ஒழிந்திருந்தது நெஞ்சு. படியேறி இடைநாழியில் நடந்து அரசரின் அறைவாயிலில் நின்றாள். வாயிற்காவலனிடம் தலையசைக்க அவன் உள்ளே சென்று அவள் வருகையை அறிவித்தான். உள்ளே நகுலனும் சகதேவனும் இருப்பார்கள் என அவள் எண்ணியிருந்தாள். ஆனால் யுதிஷ்டிரரின் தோற்றத்தைக் கண்டதும் திகைத்து நின்றுவிட்டாள்.

அவள் சற்றுமறியாத முதியவர் போலிருந்தார் யுதிஷ்டிரர். முனிவரைப்போல நீண்ட நரைத்த தாடியும் தோளில் புரண்ட குழலும் தொய்ந்த தோள்களும் கூன்விழுந்த முதுகுமாக. ஆனால் சிலகணங்களுக்குள்ளேயே அவள் யௌதேயனின் முகத்தை அதில் கண்டடைந்தாள். அது மேலும் கசப்பை கொடுக்க அவள் விழிகளை திருப்பிக்கொண்டாள். நகுலனும் சகதேவனும்கூட முதுமையெய்தியிருந்தனர். அவள் பூரிசிரவஸை நினைத்துக்கொண்டாள். முகத்தின்மேல் ஆடையை இழுத்துவிடும் அசைவால் அவ்வெண்ணத்தை ஒதுக்கினாள்.

“அரசரையும் இளையோரையும் வணங்குகிறேன்” என்றாள். யுதிஷ்டிரர் “நலன் திகழ்க!” என வாழ்த்தி அமரும்படி பீடத்தை காட்டினார். அவள் இல்லை என தலையசைத்து சாளரத்தருகே சென்று ஒளி மறைக்காமல் நின்றாள். வெளியே அந்தியெழத் தொடங்கிவிட்டிருந்தது. பறவைகள் கலைந்தெழுப்பிய குரல்களால் தோட்டம் உயிர்கொண்டிருந்தது. யுதிஷ்டிரர் தலைகுனிந்து தாடியை நீவிக்கொண்டிருந்தார். அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள் என அவள் நினைத்தாள். ஆனால் அந்த எச்சத்தை அவர்களின் முகங்களில் காணமுடியவில்லை.

ஏவலன் வந்து திரௌபதியின் வரவை அறிவித்தான். தேவிகை பெருமூச்சுடன் நிமிர்ந்து நின்றாள். திரௌபதி உள்ளே வந்து முகமன் ஏதுமில்லாமல் யுதிஷ்டிரரை வணங்கி பீடத்தில் அமர்ந்தாள். “நாங்கள் உடனே திரும்பிவரவேண்டியிருந்தது. இரு செய்திகள். அஸ்தினபுரியிலிருந்து திருதராஷ்டிரரின் தனித்தூதனாக சஞ்சயன் கிளம்பி வந்துகொண்டிருக்கிறான்” என்றார். “அதோடு இளைய யாதவன் நாளை இங்கு வருவான் என்றும் செய்தி வந்துள்ளது.” திரௌபதி தலையசைத்தாள். அவள் மேலே பேசுவதற்காக காத்தபின் யுதிஷ்டிரர் “சஞ்சயன் தூதின் உள்ளடக்கம் என்ன என்று அறியக்கூடவில்லை. நிலம் அளிக்கமுடியாதென்று முற்றாக மறுத்தபின் எதை பேசமுடியும்? நன்று என்னவென்றால் நாளை சஞ்சயன் அவைநிற்கையில் இளைய யாதவனும் இருப்பான் என்பதே” என்றார்.

திரௌபதி “நான் நாளை புலரியில் கிளம்பி அஸ்தினபுரிக்கு செல்கிறேன்” என்றாள். “ஆம், தௌம்யர் சொன்னார்” என்றார் யுதிஷ்டிரர். “நான் அங்குள்ள அரசியரிடம் என் வஞ்சினத்திலிருந்து விலகிவிட்டதாக சொல்லவிருக்கிறேன். அந்த மைந்தரைத் தழுவி அவர்களின் அன்னை நான் என்று சொல்லிவர விழைகிறேன். வரும் மூன்றாம் வளர்நிலவில் மாத்ருப்பிரஸ்தான நோன்பு அஸ்தினபுரியில் நிகழ்கிறது. அதற்கு எனக்கும் அழைப்புள்ளது. அதன்பொருட்டு செல்வதுபோல செல்லலாமென்றிருக்கிறேன்” என்றாள்.

அவளுடைய இயல்பான குரலும் நேர்நோக்கும் அவரை நிலையழியச் செய்தன. குனிந்து மடியிலிருந்த தன் கைகளை நோக்கியபடி “ஆனால் இம்முடிவை நீ ஏன் உடனடியாக எடுத்தாய் என்றுதான் என் உள்ளம் ஐயம்கொள்கிறது. எங்கள் ஆற்றல்மேல் ஐயம்கொண்டாயா?” என்றார். “இல்லை” என்று அவள் சொன்னாள். அவள் மேலும் சொல்ல காத்திருந்து பின்னர் நிமிர்ந்து “இல்லையென்றாலும் அவ்வாறே அது பொருள் கொள்ளப்படும். இளையோர் இருவருக்கும் அது இழுக்கென்றே ஆகும்” என்றார்.

“இளையவர்களைப்பற்றி நான் அறிவேன். மாருதர் என் உளமறிவார். பார்த்தருக்கு நான் ஒரு பொருட்டல்ல” என்றாள் திரௌபதி. யுதிஷ்டிரரின் முகத்தில் ஒரு சுளிப்பு உருவாகியது. “நீ அவர்களை முற்றாகப் பொறுத்து கடந்துவிட்டாய் என்பதை நான் நம்பவில்லை. கான்வாழ்க்கையில் நீ இருந்த நிலையை நான் கண்டிருக்கிறேன். ஆண்டுக்கணக்கில் கந்தமாதனம்போல கனன்றுகொண்டிருந்தாய். எத்தனை இரவுகளில் துயில்நீத்திருப்பாய் என நான் சொல்லமுடியும். துயிலில்லாது உளம்வெந்து நான் எழுந்துவந்து உன் அறைக்கு வெளியே நின்றிருப்பேன். இரவெல்லாம் நீ புரண்டுபடுப்பதை, பெருமூச்சுவிட்டுக்கொண்டிப்பதை கேட்பேன். எத்தனையோ முறை உளமுருகி விழிநீர் சிந்தியிருக்கிறேன். நான் கற்றவற்றை எல்லாம் முற்றிலும் மறந்து பெருவஞ்சம் கொண்டு வானோக்கி சீறியிருக்கிறேன். எத்தனையோ முறை நெஞ்சிலறைந்து தீச்சொல்லும் இட்டிருக்கிறேன். அதையெல்லாம் கடந்துசெல்லமுடியுமா என்ன?”

“அரசே, கானேகிய நீங்களும் திரும்பிவந்த நீங்களும் ஒன்றா என்ன?” என்றாள் தேவிகை. “இல்லை, நான் சென்ற வழி நீண்டது” என்றார் யுதிஷ்டிரர். “ஆம், இளையவர் இருவரும் அதைப்போலவே நெடுவழி சென்று கண்டடைந்து மீண்டனர். நாங்கள் மூவரும் எங்கும் செல்லவில்லை. சிறியவர் எதையும் புதிதாக தெரிந்துகொள்ளவேண்டிய தேவையற்றவர். அவருக்கு இணையர் புரவிகளுடன் ஓடியே தொலைவுகளை கடந்தவர்” என்று திரௌபதி சொன்னாள். “அவர் கால்களால் சென்ற தொலைவை எல்லாம் நெஞ்சால் சென்றுகொண்டு நான் இருந்தேன். அரசே, ஊஞ்சலும் பயணம் செய்துகொண்டுதான் இருக்கிறது.”

யுதிஷ்டிரர் தம்பியர் இருவரையும் நோக்கிவிட்டு “நீ எப்படி அவ்வஞ்சத்தை கடந்தாய்? என்னால் எண்ணிநோக்கவே இயலவில்லை” என்றார். திரௌபதி “நான் அகவை முதிர்ந்தேன், வேறேதும் செய்யவில்லை. வஞ்சத்தைக் கடப்பதைவிட கடினமாக இருந்தது மண்விழைவை கடப்பதுதான். அதற்கு நான் புற்குடில்களிலும் மலைக்குகைகளிலும் மரத்தடிகளிலும் துயிலவேண்டியிருந்தது. இன்று இளையவர் வந்து என்னிடம் பேசிமீண்டபின் நான் என்னை நோக்கி மீளமீள கேட்டுக்கொண்டேன். நான் கடந்துவிட்டேனா என்று. ஆம், கடந்துவிட்டேன் என்றே என் உள்ளம் உறுதிசொன்னது” என்றாள்.

மேலும் என்ன பேசுவதென்றறியாமல் அங்கே அமைதி உருவாகியது. தேவிகை “நீங்கள் இதை மகிழ்ந்து வரவேற்பீர்கள் என நினைத்தேன்” என்றாள். அவளை நிமிர்ந்து நோக்கிய யுதிஷ்டிரர் “இல்லை, என்னால் முடியவில்லை. ஆனால் நான் போரையும் விரும்பவில்லை. எனக்கு உளக்குழப்பமே எஞ்சுகிறது. அங்கே திரண்டிருப்பவர்கள் என் உடன்பிறந்தார், என் மைந்தர். மண்ணின்பொருட்டு அவர்களுடன் போரிட நான் விரும்பவில்லை. போர் எந்நிலையிலும் தவிர்க்கப்படவேண்டும் என்றே விரும்புகிறேன். ஆனால்…” என்ற யுதிஷ்டிரர் தலையை அசைத்தார். அவர் நாவில் எழுந்த ஒன்று தயங்கியது.

பின்னர் குரல் மேலெழ விழிதூக்கி “உண்மையில் நம் நிலவுரிமையை முற்றாக விட்டுக்கொடுத்து கிழக்குநோக்கி சென்றாலென்ன என்று உசாவும்பொருட்டே சம்புகச் சோலைக்கு சென்றோம். அங்கு அமர்ந்து நாம் சென்று நிலைகொள்ளவேண்டிய இடங்களைப்பற்றிய செய்திகளை தொகுத்தோம். செல்வதெப்படி என்று வகுத்தோம். இளையோரிடம் அதைச் சொல்லி ஏற்கவைப்பதைப்பற்றிக்கூட பேசிவிட்டோம். அது பின்னடைவதுதான். கோழைகளென நம்மை இளிவரல்செய்ய வழிவகுக்கும் என்பதும் உண்மை. இளையோர் இருவருக்கும் அதில் உடன்பாடில்லை என்றும் தெரிந்தது. ஆயினும் அதில் உயர்ந்தது என ஒன்று இருந்ததாகவே உணர்ந்தேன்” என்றார்.

“என் கோழைத்தனமா அது என எண்ணி எண்ணி நோக்கினேன். எங்கோ சிறுதுளி அச்சம் இருக்கலாம். ஆனால் எனைச்சார்ந்தோர் நன்மைக்கே அதை செய்கிறேன் என உறுதியடைந்தேன். இன்று எப்பழி சூழ்ந்தாலும் சரி சில தலைமுறைகள் கழித்தேனும் என் நன்னோக்கத்தை உலகம் உணரும் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் அரசி சென்று பணிவது என்று கேட்டபோது என் உளம் கூசுகிறது. பெண் என நின்று அவள் கொண்ட வஞ்சத்தை உதறுகிறாள் என்றால் ஆணென்று சொல்லி உடனமர எனக்கும் தம்பியருக்கும் தகுதியில்லை என்று அகம் கசப்புகொள்கிறது” என்றார்.

“நான் வஞ்சத்தை தவிர்க்கவில்லை அரசே, மெய்யாகவே என்னுள்ளத்தில் இன்று வஞ்சம் இல்லை” என்றாள் திரௌபதி. “நான் இவையனைத்திலும் ஈடுபடாமல் முற்றிலும் விலகி ஏன் இருந்தேன் என்று கேட்டுக்கொண்டபோதுதான் அது எனக்குத் தெரிந்தது. வஞ்சம் இல்லை என்பதனால் வஞ்சமொழிவதன் நெகிழ்ச்சியும் மீண்டுவிட்டேன் என்னும் பெருமிதமும்கூட என்னில் இல்லை. வஞ்சமுரைத்து அவையில் நின்று கனன்ற அவள் இன்று என்னுள் இல்லை. எனக்கு அவை பிறர்வாழ்வென்றே தோன்றுகிறது.”

“இல்லை, இவள் எதன்பொருட்டு வந்தாள் என நான் அறிவேன். தன் மகனுக்காக உன்னிடம் இரந்தாள். நீ அவளுக்கு அடைக்கலம் அளித்தாய். அரசியென உன்னால் அதை செய்யாமலிருக்க இயலாது” என்றார் யுதிஷ்டிரர். “ஆம், அது உண்மை. ஆனால் அவர் வந்து பேசியபோதுதான் நான் எத்தனை விலகி எங்கோ நின்றிருக்கிறேன் என்று உணர்ந்தேன். நான் அவ்வாறு விலகி நின்றிருந்தமையால் அவர் ஏமாற்றமும் எரிச்சலும் கொண்டார் என்பதையும் உணர்ந்தேன். நான் விலகி நிற்க இயலாதென்று அவர் சொற்களிலிருந்து தெரிந்துகொண்டேன். வஞ்சத்தை என் உள்ளத்திலிருந்து விலக்கிவிட்டேன், அதை என் வாழ்விலிருந்தும் விலக்காவிட்டால் அதன் பழியை சுமக்கவேண்டியிருக்கும் என்று தெளிந்ததும் இம்முடிவை எடுத்தேன்.”

“தேவி, நான் நேரடியாகவே கேட்கிறேன். உன் மைந்தருக்காகவா அஞ்சுகிறாய்?” என்றார் யுதிஷ்டிரர். அவள் அவர் விழிகளை நோக்கி “இல்லை என்று சொல்லமாட்டேன். சிபிநாட்டரசி வந்து சொன்ன கணம் முதல் அஞ்சத்தொடங்கிவிட்டேன். என் மைந்தருக்காக மட்டுமல்ல, மைந்தர் அனைவருக்காகவும். இங்குள்ள மைந்தரை எண்ணி மட்டுமல்ல, அங்குள்ள மைந்தரையும் எண்ணித்தான்” என்றாள் திரௌபதி. “மைந்தரை வாள்தந்து களமனுப்பும் பேரன்னையின் கதைகளை கேட்டுவளர்ந்தவள்தான் நான். கானேகாமலிருந்தால் அந்தக் கதைகளுக்குள்ளேயே வாழ்ந்திருப்பேன்.”

யுதிஷ்டிரர் “என்னால் எதுவுமே எண்ண முடியவில்லை. ஆம், மைந்தருக்காக நாம் முற்றொழிவோம் என்றே எண்ணுகிறேன். ஆனால் அது நீ எடுக்கும் முடிவாக இருக்கலாகாது” என்றார். “நான் விலகிவிட்டேன். அதற்கப்பால் சொல்வதற்கேதுமில்லை” என்றாள் திரௌபதி. “நீ எண்ணுவதென்ன, இளையோனே?” என்றார் யுதிஷ்டிரர். சகதேவன் “இப்போதுதான் என்னிடம் இதை கேட்கிறீர்கள், மூத்தவரே” என்றான். அதை அப்போதுதான் உணர்ந்த யுதிஷ்டிரர் “ஆம், கேட்கவில்லை… ஏனென்றே அறியேன். இதுவே தருணம்போலும்” என்றார்.

“மூத்தவரே, அங்கே அவையில் நிகழ்ந்தது ஓர் நெறியழிவு. அந்த வஞ்சினம் மானுடரில் தெய்வமிறங்கி வந்து உரைப்பது. அதில் ஒரு நிறைவு இருந்தது. இன்று அரசி அதை கைவிடுகையில் அம்முழுமை அழிகிறது. அந்த நெறியழிதலுக்கு அளிக்கப்படும் ஒப்புதல் அது” என்றான் சகதேவன். “ஒவ்வொரு பிழையும் தண்டிக்கப்படவேண்டும். தண்டிக்கப்படாத பிழை என்பது மீண்டும் முளைத்தெழுந்து ஒன்றுநூறு ஆயிரமென தழைக்கும். நெறிநூல்கள் மீண்டும் மீண்டும் சொல்வது அதையே.”

“அரசி, அவைநடுவே பெண்ணை சிறுமைசெய்தல் எளிதாகக் கடந்துசெல்லப்பட்டதென்றால் இந்நிலத்தில் வேறு எதுதான் பிழையெனக் கொள்ளப்படும்? அரசி, நாம் அரசர்கள். எப்போதும் இன்றும் நாளையும் எதிர்காலம் முழுக்கவும் நிறைந்திருக்கும் பெருந்திரள் முன் நின்றிருக்கிறோம். நாம் செய்வன அனைத்தும் முன்நிகழ்வுகள், வழிகாட்டல்கள். எண்ணிப்பார், நாளை பிறிதொரு சிறுபிழைக்காக ஒருவனை அரசனின் கோல் தண்டிக்குமென்றால் அவன் கேட்கமாட்டானா, அவைநடுவே பெண்ணை ஆடைகளைதலைவிடவா பெரிய பிழையை நான் செய்துவிட்டேன் என்று?”

“குற்றம் குற்றமேதான், எச்சொல்லால் சொல்லப்பட்டாலும் எங்கு நின்று நோக்கினாலும் எதைக்கொண்டு நிகர்செய்தாலும். அது பருப்பொருட்களைப் போன்று நாமில்லை என்றாலும் நின்றிருப்பது” என்றான் சகதேவன். “தேவி, நெறிநூல்கள் சொல்லும் முதல் வரி ஒன்றே. குற்றமென்பது அதனால் பாதிக்கபட்டவருக்கு எதிரானது அல்ல. மானுடருக்கு எதிரானதும் அல்ல. விராடவடிவென நம்மைச் சூழ்ந்திருக்கும் பேரியற்கைக்கு எதிரானதுகூட அல்ல. இங்கே வாழ்வையும், வானில் அறிவையும், கடுவெளியில் அறியமுடியாமையையும் நிரப்பிவைத்திருக்கும் முதல்முழுமைக்கு எதிரானது.”

“எனவேதான் குற்றம் பொறுக்க எவருக்கும் உரிமை இல்லை என்று நூல்கள் சொல்கின்றன. தெய்வங்கள்கூட குற்றத்தைப் பொறுத்தருளியதாக நம் தொல்கதைகள் சொல்லவில்லை. ஒருவருக்கு ஒன்றின்பொருட்டு தண்டனை விலக்கப்படுமென்றால் தண்டிக்கப்பட்ட அனைவருமே நெறிமறுக்கப்பட்டவர்களாகிறார்கள்.” தேவிகை “அப்படியென்றால் இரக்கத்திற்கு இப்புவியில் இடமே இல்லையா?” என்றாள். “உண்டு. தனிமனித உறவுகளில். இது உறவுக்குள் நிகழவில்லை, அவையில் நிகழ்ந்திருக்கிறது. ஆயிரம் பல்லாயிரம் பேரால் அறியப்பட்டிருக்கிறது.”

“அன்று நிகழ்ந்தது என்ன என்று நீங்கள் முழுதறியவில்லை, தேவி. ஒவ்வொரு நிகழ்வும் ஒன்று ஓராயிரமென உள்ளங்களில் எழுகின்றன. ஆகவே நிகழ்வை அவை கொள்ளும் விரிவையும் கருத்தில்கொண்டே அணுகவேண்டும். அன்று நீங்கள் ஓர் அரசி என அவைநடுவே சிறுமைகொள்ளவில்லை, அங்கு நின்றவள் பெண். இங்கே இல்லந்தோறும் பெண் இருக்கிறாள். அவளை இழித்துநடத்தும் கீழ்மக்களும் இருக்கிறார்கள். அன்றுரைத்த வஞ்சினம் அவர்கள் அனைவருக்கும் எதிராகவே. கைகட்டி அமர்ந்திருந்த மூத்தோரும் கற்றோரும்கூட அதற்கு ஈடு அளித்தாகவேண்டும்.”

“நாளை ஒருவன் பெண்ணை சிறுமைசெய்ய கையெடுத்தான் என்றால் அந்தக் கை அச்சத்தில் குளிர்ந்தமைய வேண்டாமா? அவன் கால்கள் கல்லாக வேண்டாமா? பெண்சிறுமைசெய்வதென்றால் என்ன விளைவென்று பாரதம் அறியவேண்டும். துலாவின் இத்தட்டில் வைக்கப்பட்டது குலமகளின் விழிநீர் என்றால் மறுதட்டில் நூறாயிரம் தலைகள் வைக்கப்பட்டு அது நிகர் செய்யப்படட்டும். அரசி பொறுத்தருளலாம், அவள் அன்னை. நாங்கள் பொறுத்துக்கொள்ளமுடியாது. நாங்கள் இங்கு அவள் மைந்தரின் தந்தையென நின்றிருக்கிறோம்” என்றான் சகதேவன்.

“பழிவாங்குதல் குறித்து சொல்கிறீர்கள்” என்றாள் தேவிகை சலிப்புடன். “ஆண்களின் உள்ளம் அதிலிருந்து விலகவே முடியாதா என்ன?” சகதேவன் “பழிவாங்குதல் என்றால் இழிவா என்ன? நெறியின் வரலாற்றை அறிந்தோர் அதை சொல்லமாட்டார்கள். விலங்குகள் பழி வாங்குவதில்லை. ஏனென்றால் அவை ஒன்றுடனொன்று இயற்கையின் நெறியாலன்றி எந்த அறத்தாலும் கட்டுண்டிருக்கவில்லை. மானுடன் தனக்கென அறத்தை உருவாக்கி அதற்கு ஒப்புக்கொண்டதனால்தான் பழிவாங்குகிறான். தன் குருதியினனுக்காக, தன் குலத்தோனுக்காக பழிவாங்க வஞ்சினம் உரைப்பவன் முன்வைப்பது எதை? வஞ்சமெனும் கீழ்மையை அல்ல. அவன் கொண்டிருக்கும் அறப்பற்று எனும் மேன்மையை. அவன் தன் நலத்திற்காக வாளேந்தவில்லை, தன்னை ஆளும் பெருநெறி ஒன்றுக்காகவே தன்னை அழிக்கவும் சித்தமாகிறான்” என்றான்.

“அரசி, மானுடத்தில் நீதி என்பது பழிவாங்குதல் வழியாகவே நிலைகொண்டது என்று உணர்க! இன்று நீதி என்றும் நெறி என்றும் அறம் என்றும் நாம் எதைப் பேசினாலும் ஆழத்தில் உறைவது பழிக்குப்பழி என்னும் முறையே. பழிதீர்ப்பதை தன்னிடமிருந்து தன் குலத்திற்கு அளிக்கிறான் மானுடன். குலம் அதை அரசனுக்கு அளிக்கிறது. அறத்தில் கனிந்தோர் அதை தெய்வத்திற்கு அளித்து அகல்கிறார்கள். வேறுபாடு அவ்வளவே. நீதி என்பது பாகுபாடில்லாமல், நலம்நாடிச் செய்யப்படும் பழிவாங்குதல்” என்றான் சகதேவன்.

மீண்டும் ஆழ்ந்த அமைதி நிலவியது. “இதற்குமேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றான் நகுலன். தேவிகை சீற்றத்துடன் “அப்படியென்றால் இங்கே போர்தவிர்த்தல் என்று பேசிக்கொள்கிறீர்களே அதற்கு என்ன பொருள்?” என்றாள். “போரைத்தவிர்ப்பது குறித்தே பேசுகிறோம், வஞ்சம் தவிர்ப்பது குறித்து அல்ல. நாம் நிலத்தை கைவிட்டோமென்றால் போர் தவிர்க்கப்படுகிறது. ஆனால் துரியோதனன் தொடை பிளக்கவும் கர்ணனின் தலைகொய்யவும் துச்சாதனின் குருதியருந்தவும் தடையேதுமில்லை. அரசர்களை தனிப்போருக்கு அழைக்க ஷத்ரியர் எவருக்கும் உரிமை உண்டு” என்று நகுலன் சொன்னான்.

தேவிகை “அது எப்படி?” என்றாள். “நம் வஞ்சம் நீடிக்கட்டும். நம் மைந்தருக்கு நிலமும் கொடியும் அமைத்துக்கொடுப்போம். இந்த வஞ்சம் நம்முடையது, நம் மைந்தருக்குரியது அல்ல. அவர்களின் மைந்தருக்கும் இதில் இடமில்லை. இருபுறமும் திரண்டுள்ள அரசர்களும் படைகளும் இதில் ஆடவேண்டியதில்லை” என்று நகுலன் தொடர்ந்து சொன்னான். யுதிஷ்டிரர் “அவன் சொல்லும்போது அதுவே சரியென்று தோன்றுகிறது. ஆனால் உள்ளம் எதையோ எண்ணி அலைக்கழிகிறது” என்றார்.

தேவிகை “இது நன்று. நான் இதையே வலியுறுத்துகிறேன். அரசே, அரசி தன் வஞ்சினத்தை களையவேண்டியதில்லை. அதனூடாக நீங்கள் அடையும் இழிவும் தேவையில்லை. இளையவர் சொன்னபடி இங்கே நெறி நிலைகொள்ளட்டும். வஞ்சம் நம்முடையது. நாமே அதை எதிர்கொள்வதே முறை” என்றாள். திரும்பி திரௌபதியிடம் “எண்ணிப்பாருங்கள் அரசி, எவரும் எங்கும் தாழவேண்டியதில்லை. ஆனால் போர் தவிர்க்கப்படுகிறது. நம் மைந்தர் நீடுவாழவும் வழி உருவாகிறது” என்றாள்.

“நான் வஞ்சினத்தைத் தவிர்த்தது எதையும் எண்ணி அல்ல, வஞ்சமிழந்தமையால் மட்டுமே. நான் வஞ்சினம் உரைத்தது அவர்களின் அவையில். ஆகவே அவர்களின் அவையில்தான் அவ்வஞ்சினத்தை நான் விலக்கிக்கொண்டதையும் அறிவிக்கவேண்டும். எண்ணி எடுத்த முடிவு, நாளை காலை கிளம்புவதென்பது. அதை அறிவிக்கிறேன்” என்றாள். யுதிஷ்டிரர் “சகதேவன் சொன்னவற்றை நீ எண்ணவே இல்லை, அரசி” என்றார். “ஆம், எண்ணினேன். நீங்கள் வஞ்சினமொழியவேண்டும் என்று நான் சொல்லவில்லை. போரிடுவதோ தவிர்ப்பதோ தனிப்போர் செய்வதோ அதையும் கைவிடுவதோ உங்கள் விருப்பப்படி. நான் என்னைப்பற்றி மட்டுமே சொல்லமுடியும். நான் இப்போர்க்களத்தில் இனி இல்லை” என்றாள் திரௌபதி.

மேலாடையை எடுத்து அணிந்துகொண்டு “மைந்தரின் குருதி விழுமென்றால் அதில் எனக்கு பொறுப்பில்லை என்று அறிவிக்கவே செல்கிறேன். என் மைந்தர், அவர் மைந்தர். படைக்கலமேந்தி களம்புகவிருக்கும் அனைவரும் என் மைந்தரே” என்றாள். “பொறு, அரசி” என்றபடி யுதிஷ்டிரர் எழுந்தார். “நீ கிளம்புவதற்கு முன் இரண்டு செய்திகளை தெளிவுபடுத்திவிட்டு செல். சஞ்சயனிடம் அனுப்பப்பட்ட செய்தி என்ன என நீ அறிந்தாகவேண்டும்.” திரௌபதி “அது எவ்வகையிலும் என்னை மாற்றப்போவதில்லை” என்றாள்.

“ஆம், ஆனால் நீ அறிவது நன்று. அத்துடன் இளைய யாதவன் இங்கு வரவிருக்கிறான். அவனிடம் நீ செல்வதை சொல்லிவிட்டு செல்” என்றார் யுதிஷ்டிரர். “நான் எவரிடமும் சொல்லுசாவ வேண்டியதில்லை. இது என் உளம்கொண்ட மெய்” என்றாள் திரௌபதி. “ஆம், அதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் இப்போர் இங்கு நிகழ இரண்டு தூண்டுதல்கள். அதில் ஒன்றுதான் உன் வஞ்சினம். பிறிதொன்று அவன் கொண்டுள்ள வேதமுடிபுக் கொள்கை. நீ விலகிக்கொண்டாய் என்று முதலில் அறியவேண்டியவன் அவன். இப்போர் உன்பொருட்டு நிகழ்கிறது என்னும் நடிப்பு இனித் தேவையில்லை என்று அவனிடம் சொல். இதற்கு மேலும் அது நிகழுமென்றால் அது அவன்கொண்ட கொள்கையின் பொருட்டே என அவன் அறியட்டும். அதன் முழுப் பொறுப்பையும் அவனே ஏற்கவேண்டும்.”

திரௌபதி எண்ணியபடி சிலகணங்கள் நின்றாள். “எப்போது வருகிறார்?” என்றாள். “நேற்றுமுன்னாளே கிளம்பிவிட்டான். பெரும்பாலும் நாளைமாலை இங்கிருப்பான்.” திரௌபதி தனக்குத்தானே என தலையசைத்தாள். “சரி, அவரை பார்த்துவிட்டுச் செல்கிறேன்” என வெளியே சென்றாள். அதுவரை அங்குமிங்கும் பறந்து முட்டிக்கொண்டிருந்த உள்ளம் அசைவிழந்து மெல்ல படியத் தொடங்குவதை தேவிகை உணர்ந்தாள். எவரிடமென்றில்லாமல் கடும்சினம் எழுந்து அவள் கைவிரல்நுனிகள் நடுங்கின.

யுதிஷ்டிரர் பெருமூச்சுடன் கால்நீட்டி உடல்தளர்த்தி சாய்ந்து “இளையோனே, நாம் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறோம்?” என்றார். சகதேவன் எழுந்துகொண்டு “மூத்தவரே, நிலநடுக்கம் வருவதற்கு முன்பு விலங்குகள் அலைக்கழிந்து முட்டிமோதுவதை கண்டிருக்கிறீர்களா?” என்றான். யுதிஷ்டிரர் வெறுமனே நோக்கினார். “ஒருமுறை தொட்டிமீன்கள் நிலநடுக்கை உணர்ந்து நிலையழிந்து துள்ளுவதைக் கண்டேன்” என்றபின் புன்னகைத்து தலைவணங்கி வெளியே சென்றான்.