மாதம்: ஒக்ரோபர் 2017

நூல் பதினைந்து – எழுதழல் – 47

ஏழு : துளியிருள் – 1

fire-iconநள்ளிரவில் அரண்மனையில் இருந்து சிற்றமைச்சர் சந்திரசூடர் வந்து துயிலில் இருந்த பிரலம்பனை எழுப்பினார். அவன் ஏவலனின் அழைப்பை துயிலுக்குள் கேட்டுக்கொண்டிருந்தான். அன்னை அவனை அழைப்பதாகவே தோன்றியது. வழக்கமாக காவல்பணிக்கு அவன் செல்லவேண்டிய பொழுது அணையும்போது அன்னைதான் அவனை தட்டி எழுப்புவாள். பெரும்பாலும் அது இளங்குளிர் போர்வையை கதகதப்பாக்கியிருக்கும் முன்விடியல். அவன் உடலை சுருட்டிக்கொண்டு முனகுவான். அவள் குரலில் எரிச்சல் ஏறிக்கொண்டே இருக்கும். அவன் சொற்களை புரிந்துகொள்ளத் தொடங்கும்போது அது வசையென ஆகிவிட்டிருக்கும்.

சினத்துடன் அவன் கால்களைப் பிடித்து இழுத்து “எழுந்திரு மூடா, வெயில் எழுந்துவிடப்போகிறது. பிந்திச் செல்வதாக உன்னைப்பற்றி நூற்றுவர்தலைவர் பலமுறை குறைசொல்லியிருக்கிறார். சவுக்கடி பட்டால்தான் உனக்கு அறிவு வருமா?” என்பாள். அவன் அச்சொல்லிலேயே சவுக்கோசையைக் கேட்டு எழுந்து அமர்வான். அதன்பின் வெந்நீர் கொட்டப்பட்டவன் போல துள்ளுவான். “எங்கே என் வாள்? என் கச்சை எங்கே? எதையுமே நான் வைத்த இடத்திலிருந்து அகற்றக்கூடாதென்று சொல்லியிருக்கிறேனே!” அன்னை “எல்லாம் அங்கேதான் இருக்கிறது” என்பாள்.

அவன் விழித்துக்கொண்டு ஏவலனைக் கண்டதும் ஆழ்ந்த ஏக்கத்தை அடைந்தான். அன்னையின் முகமே சற்று கலைந்துகொண்டிருப்பதுபோலத் தோன்றியது. “அமைச்சர் சந்திரசூடர்” என்று ஏவலன் சொன்னதும் பாய்ந்தெழுந்து கச்சையை கட்டிக்கொண்டான். வாயைத் துடைத்து தலைப்பாகையைத் தேடி எடுத்து வைத்துக்கொண்டிருக்கையிலேயே சந்திரசூடர் உள்ளே வந்துவிட்டார். “வணங்குகிறேன், அமைச்சரே” என்றான். அவர் கையசைத்து வாழ்த்திவிட்டு “இளவரசர் என்ன செய்கிறார்?” என்றார். “துயில்கிறார்” என்றான். “எழுப்பவா?”

“வேண்டாம், ஆனால் எழுந்ததும் நான் சொன்னவற்றை நீரே சொல்லும்” என்றார் சந்திரசூடர். “புலரியில் அரசர் நகர்புகவிருக்கிறார்.” பிரலம்பன் சில கணங்களுக்குப்பின் அதை புரிந்துகொண்டு “இன்றா?” என்றான். உடனே குழம்பி “நாளையா?” என்றான். “ஆம், இருட்புலரியிலேயே அவர் நுழைவார்.” பிரலம்பன் “நகர் விழாக்கோலம் கொள்ளவேண்டுமே? அனைத்து ஏற்பாடுகளும்…” என தொடங்க அவர் கையசைத்துத் தடுத்து “ஆணை சற்று முன்னர்தான் வந்தது. எந்த ஏற்பாடுகளும் செய்யக்கூடாதென்றும், அரசமுறையாக அவர் வரவு அறிவிக்கப்படவும் கூடாதென்றும் சொல்லியிருக்கிறார்” என்றார்.

பிரலம்பன் தலையசைத்தான். “நாளை அவர் நகர்நுழையும்போது நகர்வீதிகள் ஒழிந்து கிடக்கும். இங்கே இரவுகள் மிகவும் பிந்தி அணைபவை. ஆகவே பகல்கள் மிகவும் பிந்தி தொடங்குகின்றன. அதிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை. யவனர்களின் சூரியவணக்கநாள் அது. அன்று அவர்கள் பணிபுரிவதில்லை என்பதனால் துறைமேடையிலும் பிற இடங்களிலும் அலுவல்கள் பத்திலொன்றாக குறைந்திருக்கும்.” பிரலம்பன் “ஆம்” என்றான். “அவர் அறியவிரும்புகிறார், மக்களின் மெய்யான எதிர்வினை என்ன என்று” என்றார் சந்திரசூடர்.

பிரலம்பன் “ஒருவேளை…” என்றான். “என்ன?” என்றார் சந்திரசூடர். “ஒருவேளை யாதவர்கள் தங்கள் எதிர்ப்பை ஒருங்கிணைந்து காட்டக்கூடும் என அவர் எதிர்பார்க்கிறாரா?” சந்திரசூடர் “அவர் அதை அஞ்சுவாரா என்ன?” என்றார். “அஞ்சமாட்டார். ஆனால் எதிர்ப்புகள் எப்போதுமே எளிமையாக சிலரால் தொடங்கப்படுகின்றன. எளிய மக்கள் விரைவுடன் செய்யப்படுவனவற்றை பின்தொடர்கிறார்கள்.” சந்திரசூடர் அவனை சற்றுநேரம் நோக்கியபின் “ஆம், அவர் எதிர்ப்புகளையே அஞ்சுகிறார். ஆனால் மக்களிடமிருந்தல்ல” என்றார்.

“எதுவானாலும் நாளை இளவரசர் அவருடனிருக்கவேண்டும். அவர் இளவரசரைக் கண்டால் மட்டுமே நிறைவடைகிறார். பிற அனைவருமே அவருக்கு எவ்வகையிலோ மெல்லிய ஒவ்வாமையை அளிப்பவர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள்” என்றபின் “இளவரசர் ஒருவரிடமே அவர் ஏதேனும் தனிச்சொல்லை கூறமுடியும். பிறரிடம் அவரை மட்டுமே தூதனுப்பவும் முடியும்” என்றார். பிரலம்பன் “அமைச்சரே, அத்தனை தனித்துவிட்டாரா இளைய யாதவர்?” என்றான்.

“ஆம், வரும் வழியிலேயே மைந்தருக்கும் அவருக்கும் பூசல் எழுந்துவிட்டது என்கின்றனர் ஒற்றர். பிரத்யும்னர் உடனடியாக அநிருத்தரை பட்டத்து இளவரசராக முடிசூட்டவேண்டும் என்று சொன்னாராம். இளவரசர்களில் மூத்தவர் பானு. ஆனால் இளவரசர் மைந்தர்களில் அநிருத்தரே மூத்தவர். அவருக்கு பட்டம்சூட்டினால் எவரும் எதுவும் கேட்கமுடியாது என்றாராம். அதற்கு இளைய யாதவர் ஒன்றும் சொல்லவில்லை. சினம்கொண்டு சொல்லாடியபின் பிரத்யும்னர் தனியாக கிளம்பிச் சென்றுவிட்டார். இப்போது அவர் கூர்ஜர எல்லையில் இருக்கிறார். நாளையோ மறுநாளோ அவர் இங்கு வருவார் என்கிறார்கள். வராமலும் போகக்கூடும்” என்றார் சந்திரசூடர்.

“அவர் நேராக மதுராவுக்குச் செல்லக்கூடும் என எதிர்பார்க்கிறார்கள் அமைச்சர்கள். மதுராவில் மூத்த யாதவர் யாதவப்பெருங்கூட்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதற்கு கிருதவர்மர் வருவது உறுதியாகிவிட்டது. வாசுதேவரின் வாழ்த்தும் சூரசேனரின் ஒப்புதலும் அமைந்துவிட்டது.” பிரலம்பன் “சூரசேனரா?” என்றான். “குந்திபோஜரையே அழைத்திருக்கிறார்கள். யாதவர் எவரையும் விலகவிடக்கூடாது என்பது பலராமரின் ஆணை.”

பிரலம்பன் “அவரால் இத்தனை செய்ய இயலுமென எவரும் எண்ணியிருக்கமாட்டார்கள்” என்றான். சந்திரசூடர் புன்னகைத்து “அவர் தன் ஆணைகளை அகத்தறையில் இருந்து பெறுகிறார். அரசி ரேவதி புவியாள விழைகிறார். எட்டரசியருக்கும் மேலாக அவருடைய குலக்கொடி பறக்கவேண்டும் என்று அவர் அவையில் சொன்னதாகச் செய்தி” என்றார். “இளவரசரை எதற்காக அரசர் இங்கே வரும்படி சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் அமைச்சர் ஸ்ரீதமர் அது உபயாதவர்களை ஒருங்கிணைப்பதற்காகத்தான் என நம்புகிறார். உபயாதவர்களில் எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் இன்று இளவரசர்மேல் பெருங்காதல் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அவர் திரட்டமுடியும்…” பிரலம்பன் தலையசைத்தான். “நீர் அதை நம்பவில்லையா?” என்றார் சந்திரசூடர். “நான் நம்பாவிட்டால்தான் என்ன? எளிய வீரன், அரசியலறியாதவன்” என்றான் பிரலம்பன்.

fire-iconஅபிமன்யூ புரவியில் சலிப்புடன் சற்றே சரிந்து அமர்ந்து “அவர் எங்கு வந்திருக்கிறார் என ஒற்றர்கள் எவருக்கேனும் தெரியுமா?” என்றான். “விடியலில் வருவார் என்றார்கள். தோரணவாயிலின்மேல் உள்ள காவல்மாடத்தில் இருப்பவர்கள் நெடுந்தொலைவு நோக்க முடியும். பாலையில் அவருடைய படை அணுகுவதை அறிவது மிகமிக எளிது” என்றான் பிரலம்பன். “அவருடைய படை நேற்று மாலை எங்கிருந்தது?” என்றான் அபிமன்யூ. “மாளவத்திலிருந்து வரும் மையத்தடத்தில்தான்… அந்த விரைவின்படி அவர்கள் இன்று வெயிலெழுகையில் இங்கே வந்துவிடவேண்டும்… வந்துகொண்டிருப்பதாகவே செய்திகள்.”

அவர்கள் கோட்டைக்குள் நின்றிருந்தனர். விடியற்காலையின் வான்ஒளியில் காட்சிகள் சாம்பல்நீல நிறத்தில் அழுத்தவேறுபாடுகளாகத் தெரிந்தன. முப்புடையை இழந்து எண்ணைக்கறைகள் ஒன்றன்மேல் ஒன்றெனப் பதிந்ததுபோல கோட்டையும் காவல்மாடங்களும் குவைமாடமுகடுகளும் மரங்களும் யானைகளும் புரவிகளும் காவல்வீரர்களும் விழிப்புலப்பாடு கொண்டனர். ஓசைகள் உளமகல்கையில் அகன்றும் உளம்கூர்கையில் அணுகியும் விளையாடின. “நாம் வெளியே சென்று நோக்குவோம்” என்றான் அபிமன்யூ.

அவர்கள் புரவியை மெல்ல நடக்கவிட்டனர். சூழ்ந்து நிகழ்ந்துகொண்டிருந்த உடலசைவுகளை நோக்கியபோதே அங்கு எதுவுமே தெரியும்படி செய்யப்படவில்லை என்றாலும் அனைவரும் அரசரின் வருகையை அறிந்திருந்தனர் என்றும் சாலையோரங்களும் கோட்டை முகப்புகளும் அதன்பொருட்டு ஒருக்கப்படுகின்றன என்றும் தெரிந்தது. “படைக்கலத் துரு அகன்றிருக்கும். பதின்மூன்றாண்டுகால தூசு துடைக்கப்பட்டிருக்கும். மறந்துபோன சொற்கள் மீள்நினைவு கொள்ளப்பட்டிருக்கும்” என்றான் அபிமன்யூ, அவன் எண்ணியதை அறிந்ததுபோல. “ஆம்” என்றான் பிரலம்பன். “ஆனால் பெரிய இடர் இங்கே எவரை நிற்கச்செய்வதென்பது. இளையோர் அவரை குலமூத்தார் சொற்களினூடாகவே அறிந்திருப்பர். அறிந்த மூத்தவர்கள் முதிர்ந்து நரைகொண்டிருப்பார்கள்” என்றான் அபிமன்யூ.

பிரலம்பன் “அவர் மைந்தர்களே அவரை பெரிதும் அறியாதவர்கள்தான் என உணர்ந்தேன்” என்றான். “ஆம், அவர் இங்கிருந்து அஸ்தினபுரிக்குக் கிளம்பும்போது மூத்தவர் பானுவுக்கு அகவை பதின்மூன்று. எண்பதின்மரில் இளையவரான சத்யகருக்கு ஐந்துமாதம். லக்ஷ்மணை அன்னையும் காளிந்தியன்னையும் கருவுற்றிருந்தார்கள்” என்றான் அபிமன்யூ. “அவர் இங்கிருக்கையில் தன் மைந்தருக்கு அணுக்கமானவராக இருந்தார். மைந்தருடன் மைந்தராகவே விளையாடினார். அவர்களுக்கு தன் குழலை மட்டுமே காட்டினார், ஆழியை அவர்கள் அறிந்திருக்கவேயில்லை.”

“அவர் செய்த பிழையும் அதுவே” என்றான் பிரலம்பன். “அவர் பிழை செய்வார் என்று எண்ணவே அச்சமாக உள்ளது. ஆனால் மகளிர்மாளிகையில் இருந்த மைந்தரை அவர் மகளிரின் ஒருபகுதியாகவே எண்ணினாரோ என ஐயம்கொள்கிறேன். ஏனென்றால் எண்பதின்மரில் எவருமே அவரை அறிந்திருக்கவில்லை. என்னிடம் மூத்தவராகிய சுபானு தன் தந்தை நல்லூழ் கொண்டவர் என்றார். அவர் என்ன எண்ணுகிறார் என என்னால் உய்த்துணர இயலவில்லை. நான் தங்கள் சொல் புரியவில்லை இளவரசே என்றேன்.”

“அவர் தன் தந்தையின் கூர்ஜரத்து வெற்றி வெறும்நல்லூழ் என்று விளக்கினார். அணுகுதற்கரிய பெருநிலம் கூர்ஜரம். அதனாலேயே அதை எவரும் படைகொண்டு தாக்கியதில்லை. ஆகவே அவர்கள் காவலை கருத்தில் கொள்ளவுமில்லை. அதன் எல்லைகள் தலைநகரிலிருந்து மிகத் தொலைவிலிருந்தன. ஆகவே எளிதில் இளைய யாதவரால் அதன் கருவூலத்தை கொள்ளையிட முடிந்தது. அதில் அவர் எண்ணியிராத பெருஞ்செல்வம் கிடைத்தது. அன்று அங்கே மேலும் ஒருமடங்கு கூர்ஜரர் இருந்திருந்தால் அப்போதே யாதவப் பேரரசு என்னும் கனவு கலைந்திருக்கும் என்றார்.”

“அது அரசியல்விளையாட்டின் ஒத்திசைவன்றி வேறல்ல என்று உடனிருந்த இளவரசர் ஸ்வரபானு சொன்னார்” என பிரலம்பன் தொடர்ந்தான். “அவர் சொன்னது இதுதான். அன்று கூர்ஜரத்தின் அலைநிகுதியும் கலநிகுதியும் மிகையாக இருந்தன. நாள்தோறும் சிந்துவிலும் தேவபாலபுரத்திலும் வணிகம் பெருகிக்கொண்டிருந்தது. நிகுதியின் கொள்தொகை பெருகுகையில் வகுதி அளவு குறையவேண்டும். மிகச் சிறிய அளவில் தேவபாலத்திலும் கங்கையிலும் நீர்வழி வணிகம் நிகழ்ந்தபோது நூற்றிலெட்டு வகுதி அமைக்கப்பட்டது. அன்று ஒவ்வொருவருக்கும் அது சிறிய தொகை. ஆனால் பெருங்கலங்கள் கரையணைந்து ஒவ்வொருவரும் பேரளவில் வணிகம் செய்கையில் அது பெருந்தொகை. அப்பெருந்தொகையை ஒவ்வொருமுறையும் அளிப்பது அவர்களுக்கு வழிப்பறி என்றே தோன்றிக்கொண்டிருந்தது.”

“சோனகநாட்டிலும் பீதர்நாட்டிலும் இருந்த நிகுதியளவுக்கு அது மும்மடங்கு பெரிது. படகில் பொருட்களை கொண்டுவருபவர்களிடம் அலைநிகுதி கொண்டு அதை வாங்குபவர்களிடமும் கலநிகுதி கொண்டனர். விற்கையிலும் அவ்வாறே. ஒரு பொருளுக்கு இரு நிகுதி என்பது கண்ணெதிரே நிகழ்ந்தது. அக்குமுறலை சென்று உரைக்கவேண்டிய அரசனின் அவையோ மிகத்தொலைவில், அணுகவே இயலாத பாலைநிலங்களுக்கு அப்பால் கூர்ஜரத்தின் தென்னகத் தலைநகரான கோபபுரியில் அமைந்திருந்தது. இங்கிருந்த நிகுதிகொள்வோன் அரசகுடியைச் சேர்ந்தவன் ஆயினும் நிகுதியைக் குறைக்கும் பொறுப்பு அற்றவன், அதற்கான துணிவும் இல்லாதவன். ஆகவே யவனரும் பீதரும் சோனகரும் காப்பிரியரும் தேவபாலத்துக்கு நிகரான ஒரு துறைநகர் கடல்முகத்தில் அமைய விரும்பினர். அவர்களின் செல்வமும் படைவல்லமையும்தான் துவாரகையை உருவாக்கியது.”

“உலகெங்கும் சிறுநகர்கள் வணிகர்களால் உருவாக்கப்பட்டு வெற்றியும் செல்வமும் பொலிய சிலகாலம் நின்றிருந்ததுண்டு. அதைச் சூழ்ந்திருக்கும் பெரியநாடுகள் தங்களுக்குள் பூசலிட்டுக்கொண்டு அதை ஒருங்கிணைந்து தாக்காதிருக்கையில் ஒன்றுடன் கைகோத்து பிறிதொன்றை எதிர்கொள்ளும் அரசாடலைக் கொண்டு அந்நகர்நாடு நீடிக்கவும்கூடும். ஆனால் அது நிலைவெற்றி அல்ல. செல்வத்தையும் படையையும் வளர்த்துக்கொண்டு முறையான அரசியல்கூட்டுக்கள் வழியாக வெல்லற்கரிய நிலமாக தன்னை அது விரித்துக்கொண்டாலொழிய அதனால் நீடிக்க முடியாது என்றார் ஸ்வரபானு.”

“அது உண்மை” என்றான் அபிமன்யூ. “உண்மையின் ஒரு தோற்றம். அதை இங்கே சென்ற பதினான்காண்டுகளாக செதுக்கிச் செதுக்கி முழுமையடையச் செய்திருக்கிறார்கள். ஆகவேதான் அது அவர்களை அத்தனை சூழ்ந்து ஆட்கொண்டிருக்கிறது.” பிரலம்பன் அவனுடன் புரவியில் சென்றுகொண்டே “அதை ஒட்டி அவர்கள் மேலே செல்கிறார்கள். இன்று துவாரகை அடுத்த கட்டத்திற்கு செல்லவிருக்கிறது என்றார் பானுமான். இதுவரை இளைய யாதவரை எவரும் வெல்லமுடியாது என்னும் நம்பிக்கையையும் அச்சத்தையும் சூதர்பாடல்களினூடாக பரப்பி குடிகளை ஒருங்கிணைத்து எதிரிகளை அச்சுறுத்தி துவாரகையை நிலைகொள்ளச் செய்தார்கள். அது நல்ல சூழ்ச்சியே. ஆனால் விரைவிலேயே போர் எழும். பாரதவர்ஷத்தின் அரசர்களில் எவர் முதல்வர் என முடிவாகும். அதன்பின்னர் பூசல்சூழலைப் பயன்படுத்தி முளைவிட்டு நிலைகொண்டிருந்த அத்தனை அரசுகளும் படைகொண்டு வெல்லப்படும். அப்போது துவாரகை தன் நாவன்மையால் நிலைகொள்ள முடியாது. வணிகன் வழித்துணை அல்ல என்பது முதுசொல். அவர்கள் தங்கள் வணிகநலன்களை விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்றார்” என்றான்.

“ஆகவே வெல்லும் தரப்பில் சேர்ந்துகொள்வது மட்டுமே எளிய அரசுகளின் வழி என்றார் பானு. அதைத்தான் மூத்த யாதவர் செய்கிறார், இளையவர் தன்னைப்பற்றிய சூதர்பாடல்களை தானே நம்பி வழிபிறழ்ந்துவிட்டார் என்றார்” என்று பிரலம்பன் தொடர்ந்தான். “அத்தனை ஷத்ரியர்களும் ஓரணியில் திரள்கிறார்கள். அவர்கள் பெண்கொடையாலும் எல்லைப்பூசலாலும் நெடுங்காலம் பகைகொண்டிருந்தவர்கள். வேதம் காக்க எழுகிறோம் என்பது அவர்கள் பகைமறந்து ஒருங்கிணைய ஒரு நல்வாய்ப்பு. அதை உருவாக்கியவர் எவராயினும் பேராற்றல் கொண்ட சூழ்ச்சியாளர். அவர்கள் பாரதப்பெருநிலத்தை தங்களுக்குள் பகிர்ந்துகொள்வார்கள். சென்ற நூறாண்டுகளில் உருவாகி கருவூலம்நிறைத்து விரிந்திருக்கும் புதுநிலங்கள் மேய்ந்து கொழுத்த மான்கள். வேங்கைகள் புல்லுண்பது குருதியின் வடிவில்தான் என்றார்.”

“ஒரு நல்ல தலைவனுக்குரிய சொற்களும் எண்ணங்களும்” என்றான் அபிமன்யூ. “ஆனால் வெல்லும் அரசர்கள் இவ்வெல்லையையும் கடந்து எண்ணக் கற்றவர்கள். இவர் எளிய யாதவ குலத்தலைவர் மட்டுமே.” பிரலம்பன் “ஆம், நானே அதை எண்ணினேன். அலைமேல் மலைநகர்வதுபோலச் செல்லும் பெருங்கலங்களை அவற்றின் பாய்களே கொண்டுசெல்கின்றன என்று எவருக்கும் விழியே சொல்லிவிடும். ஆனால் ஒவ்வொரு பாயையும் ஒன்றுடன் ஒன்று இசைவடையச் செய்து அதன் திசைவழியை நிகழ்த்தும் சூத்திரக்கயிறுதான் கலத்தைச் செலுத்துகிறதென்று அறிந்தவனே மாலுமி. இளைய யாதவர் இல்லையேல் இவை எதுவும் நிகழ்ந்திருக்காது என அறியாதவரால் போரின் வெற்றியையும் தோல்வியையும் எப்படி கணிக்கமுடியும்?” என்றான்.

அபிமன்யூ எதையோ எண்ணி விழிகள் விரிய நிலைத்தபின் “அவர் இவ்வழியே வரப்போவதில்லை” என்றான். “ஏன்?” என்றான் பிரலம்பன். “எட்டு மைந்தர்நிரைகளும் அவர் வருவதை அறிந்திருப்பார்கள். ஆகவே இவ்வழியில் வெவ்வேறு இடங்களில் அவர்கள் நின்றிருப்பார்கள். தோரணவாயிலை ஒட்டி அவர்கள் நிற்பார்கள் என இப்போதே நோக்கமுடிகிறது. அவர் அவர்களை தவிர்ப்பார்.” பிரலம்பன் “ஆம், நானும் அவர் இங்கே வரமாட்டார் என உள்ளுணர்ந்துகொண்டிருந்தேன்” என்றான். “அவர் துறைமுகம் வழியாகவே வருவார். சிந்துவின் பெருக்கினூடாக.”

“ஆனால் அது கூர்ஜரத்தின் நிலம்” என்றான் பிரலம்பன். “அவரால் எல்லைகள் அனைத்தையும் கடக்கமுடியும். எதிரிப்படைகளிலேயே அவருக்கு ஆதரவாளர் மிகுதி” என்ற அபிமன்யூ புரவியைத் திருப்பி “துறைமுகப்புக்குச் செல்வோம்” என்றான். அவர்கள் மெல்லிய குளம்போசை எழ சீர்நடையில் புரவிகளை செலுத்தினர். அங்காடிகளைக் கடந்து சரிவுச்சுழல்பாதை துறைமேடைகளை நோக்கி செல்லத் தொடங்கியது. கடலில் நின்றிருந்த பெருங்கலங்களின் சாளரங்கள் ஒளிகொண்டிருக்க திரையிலாடிய பெருநகர் ஒன்றென தோன்றியது துறை. “அவர் துறைமேடையை அணுகிவிட்டார்” என்று அபிமன்யூ சொன்னான். “எப்படி தெரியும்?” என்று பிரலம்பன் கேட்டான். “தெரியும்” என்று அபிமன்யூ சொல்லி உடனே சிரித்து “ஏனென்றால் அவர் நானே” என்றான்.

fire-iconஇளைய யாதவரின் பீலிதான் பிரலம்பனுக்கு முதலில் விழிப்புலனாகியது. அவன் உள்ளத்தால் கைகூப்பினான். மெல்லென்று வழிப்பலகையில் ஒற்றி ஒற்றி அணுகிய கால்களை பின்னர் குனிந்து பார்த்தான். நீலத்தில் இருபது வெண்முல்லை விழிகள். அவன் உள்ளம் அதிர்ந்தது. ஒரு விழி மூடியிருந்தது. மீண்டும் அவன் அதையே நோக்கினான். அதை முன்னர் நோக்கியிருந்தான் என்றாலும் அப்போதே அதை உளமுணர்ந்தது. முழுமையை அஞ்சிய சிற்பி அமைத்த குறையா? அதுவும் முழுமையடைந்திருந்தால் அவர் இங்கு இவ்வண்ணம் இருந்திருக்க மாட்டாரா?

அபிமன்யூ அவரை அணுகி கால்தொட்டு வணங்கி முகமன் உரைக்க அவர் அவனை வாழ்த்தினார். பிரலம்பன் தயங்கி பின்னால் நின்றான். மாலுமிகளும் துறைக்காவலரும் சுமையரும் துலாநிலையரும் அவர் வருவதை எதிர்பார்க்கவில்லை. அவர் அவ்வண்ணம் அறிவிக்காமல் வந்திறங்கினால் வாழ்த்துக் கூவலாகாதென்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர் கைகளைக் கூப்பியபடி நடந்துவந்தார். கைகூப்பி அவரை அணுகி கால்தொடக் குனிந்த காவலர்தலைவனின் தலையில் கைவைத்து ஓரிரு சொற்களை உரைத்தார். அவரை வணங்கிய அனைவரிடமும் பெயர் சொல்லி இன்சொல்லாடி நடந்து வர அவருடன் அபிமன்யூ இயல்பாக இணைந்து வந்தான்.

அவரைச் சூழ்ந்துகொண்ட வீரர்களால் பிரலம்பன் பின்னுக்குத் தள்ளப்பட்டான். அவன் விலக விலக மேலும் மேலும் அப்பால் சென்றான். அவர்கள் அவரைச் சூழ்ந்து அலைவிளிம்புபோல கொப்பளித்தனர். பெரும்பாலானவர்கள் விழிநீர் வழிய விம்மிக்கொண்டும் மெல்ல விசும்பிக்கொண்டுமிருந்தனர். அவன் அருகே நின்றிருந்த முதிய காவலர் “விண்ணவனே, விண்ணளந்தவனே” என அரற்றிக்கொண்டிருந்தார். அரைவெளிச்சத்தில் ஈரம்வழிந்த கன்னங்களும் கண்களும் மின்னின. காவலர்தலைவன் “அரசருக்கு வழிவிடுக! அவர் அரண்மனைக்குச் செல்கிறார்” என்றான். அவர்கள் மெல்ல அகன்று விலக அவர் தேரை நோக்கி சென்றார்.

தேரில் அவர் ஏறிக்கொள்ள அபிமன்யூ உடன் ஏறினான். அவர் திரும்பி உதடுகளில் பிரலம்பன் என்னும் பெயர் அசைய விழியோட்டி அவனை நோக்கினார். அத்தனை இருளில் அத்தனை நெரிசலில் மிகச் சரியாக எப்படி அவர் தன்னை நோக்கினார் என அவன் திகைத்தான். புன்னகைத்து வருக என கைகாட்டினார். வழி உருவாக அவன் தேர் நோக்கி சென்றான். “ஏறிக்கொள்!” என்றார். “அரசே, இது…” என்று அவன் தயங்க “ஆம், அரசத்தேரேதான். ஏறுக!” என்றார். அவன் அதில் ஏறிக்கொண்டதும் பாகனிடம் “செல்க, மந்தரா!” என்றார். “ஆம் அரசே, இந்நாளே என் முழுமை” என்று அவன் சொன்னான்.

அவர் தேரின் பீடத்தில் அமர பிரலம்பனும் அபிமன்யூவும் இரு பக்கங்களிலும் நின்றனர். தேர் மெல்ல சுழல்பாதையில் மேலேறத் தொடங்கியது. அவர் திரும்பி பிரலம்பனிடம் “பிரம்மம் தன்னில் ஒரு குறையை உருவாக்கிக் கொண்டது. அதுவே ஜீவாத்மாக்களாக ஆகியது” என்றார். அவன் திடுக்கிட்டு “அரசே” என்றான். ஓசை வெளிவரவில்லை. அவர் சிரித்தபடி “இவன் என் கால் விரலின் வடுவையே நோக்கிக்கொண்டிருந்தான்” என்றார். “இவனுக்கு உகந்த ஒரு மறுமொழியை சொன்னேன். நாளை சூதர்களிடம் இவன் இதைச் சொல்லி நல்ல கதைகளை உருவாக்குவான் அல்லவா?” அபிமன்யூ புன்னகைத்தான். “மருகனே, அரசர்கள் சூதர்களுக்கு கதைகளையும் பெண்டிருக்கு மைந்தர்களையும் மண்ணுக்குக் குருதியையும் அந்தணர்களுக்குப் பொன்னையும் அளித்தபடியே இருக்கவேண்டும் என்பது நம் நிலத்தின் தொல்மரபு” என்றார்.

அபிமன்யூ பிரலம்பனை வெறுமனே நோக்கிவிட்டு “தங்களை நகர் காத்திருக்கிறது, மாதுலரே” என்றான். “என்ன நிகழ்கிறது அகத்தளத்தில்?” என்றார் இளைய யாதவர். “எட்டுதிசைகளும் ஒன்றிலிருந்து ஒன்று அகன்று செல்கின்றன” என்றான் அபிமன்யூ. “நன்று, திசைகள் விரியத்தானே வேண்டும்” என்றார். உதடுகளிலும் விழிகளிலும் அப்போதும் புன்னகை இருந்தது. “யாதவ மைந்தர்கள் மூத்தவரின் வழியே உகந்தது என எண்ணுகிறார்கள். ஷத்ரிய மைந்தர்கள் உங்கள் ஆணைக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்கள் அநிருத்தரை நீங்கள் பட்டத்து இளவரசராக அறிவித்துவிட்டீர்கள் என நம்புகிறார்கள்.”

இளைய யாதவர் ஒன்றும் பேசாமல் இரு பக்கமும் சென்றுகொண்டிருந்த கட்டடநிரைகளை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் விழிதூக்கி பிரலம்பனைப் பார்த்து “இந்தக் கால்விரல் வடுவே விரிந்து பதின்மூன்றாண்டுகள் என்னை மூடியிருந்தது, இளையவனே” என்றார். அதையே எண்ணிக்கொண்டிருந்த பிரலம்பன் திடுக்கிட்டு “அரசே” என்றான். பின்னர் “இங்கு நிகழ்பவை எனக்கு அச்சமூட்டுகின்றன, அரசே” என்றான். “காமகுரோதமோகம் பிரம்மத்தின் ஒரு அலைவடிவு” என்றார் இளைய யாதவர். “அவை இணைந்துகொள்ளும் கூர்முனையை ஆணவம் என்கிறார்கள்.”

“ஆனால் இங்கே இவை இப்படி நிகழுமென எவர் எதிர்பார்த்திருக்கக் கூடும்?” என்றான் பிரலம்பன். “உங்கள் காலடியில் படைக்கப்பட்ட மலர்க்களம் இந்நகர் என என் அன்னை சொல்லியிருக்கிறார்.” இளைய யாதவர் சிரித்து “உன் அன்னை பெயர் என்ன, நிவேதையா?” என்றார். “ஆம்” என்றான் பிரலம்பன். “தாங்கள் அவரை அறிவீர்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால் அறிந்திருக்கிறீர்கள் என்பது வியப்பூட்டுகிறது.” இளைய யாதவர் “நான் அனைவரையும் அறிவேன். நான் அறிவேன் என்பதை பெண்கள் அறிவார்கள்” என்றார். “நிவேதை… நல்ல பெயர். கொடையென படைக்கப்பட்டவள். அவள் உண்மையின் ஒருநிலையை மட்டுமே நோக்கும் விழிகள் கொண்டவள். இளையோனே, நீயும் இவனும் அனைத்தையும் நோக்க ஊழ்கொண்டவர்கள்.”

அவர்கள் துவாரகையின் சுருள்பாதையில் குன்றேறிச் சென்றனர். அதன் குவைமாடங்கள் வானின் ஒளியில் மென்பட்டுபோல வளைவொளி கொண்டிருந்தன. வானில் விண்மீன்கள் நடுங்கிக்கொண்டிருக்க கடற்காற்றில் கொடிகள் துடித்தன. அரண்மனைத் தொகை வான்பெருங்கலம் மண்ணிறங்குவதுபோல அணுகி வந்தது. இளைய யாதவர் ஏதேனும் மெய்ப்பாடு கொள்கிறாரா என பிரலம்பன் ஓரவிழிகளால் நோக்கிக்கொண்டிருந்தான். அவர் முகம் கருவறைத்தெய்வத்தின் கரிய உறைவாகத் தெரிந்தது.

எல்லையிலா திசைவெளியை நோக்கி ஒளிகொண்ட விழிகள். இளமைந்தருக்கும் கன்னியருக்கும் மட்டுமே அத்தனை பெரிய இமைப்பீலிகளை அவன் கண்டிருந்தான். கூர்மூக்கும் குமிழுதடும் கொழுகன்னங்களும் ஒருகணத்தில் அவரை இளமைந்தன் என்றே ஆக்கின. கணந்தோறும் அறைந்துசெல்லும் காலப்பெருங்கடலை அறியாத கரைப்பாறை. எவர் வரி? கிருஷ்ணமகாத்மியம். அல்லது யாதவகதாமாலிகா. மீண்டும் அவர் விழிகளை பார்த்தான். நெடுந்தொலைவைப் பார்ப்பவர் மானுடரில் இறப்பையன்றி எதை பார்க்கமுடியும்? பெருவிரிவைப் பார்ப்பவரால் அழகென்றும் இனிமையென்றும் எதையேனும் உணரமுடியுமா? இங்கென்றும் இனியென்றும் ஏதேனும் எஞ்சியிருக்குமா அவருக்கு?

அறியாத சிலிர்ப்பொன்றை பிரலம்பன் அடைந்தான். நடுங்கும் கைகளால் அவன் தேரின் தூணை பற்றிக்கொண்டான். அவர் உதடுகளில் தன் பெயர் அசைந்ததை அண்மையிலெனக் கண்டான். இடியோசை தன் பெயர் சொல்வதைப்போல, மின்னல் அதை எழுதிச்செல்வதைப்போல. விழிகளை மூடிக்கொண்டு அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். மிக ஆழத்தில் மிகமிக தாழ்வாக ஏதோ சொற்கள். மீண்டு வந்தபோது அவன் துவாரகையின் அரண்மனைக் கோட்டைக்குள் தேர் நுழைவதை உணர்ந்தான். வியர்வை பரவிய உடல் காற்றுபட்டு குளிர்ந்தது. மெய்ப்பு கொண்டு கழுத்தும் கன்னங்களும் அதிர்ந்தன. ஒவ்வொரு மணல்பருவும் அறியும் கடல். எந்த நூலின் சொல்லாட்சி? கிருஷ்ணவைபவமா? சாரங்கதரர் எழுதியதா?

அவன் திரும்பி இளைய யாதவரை நோக்கினான். அவர் சிரித்துக்கொண்டே அபிமன்யூவிடம் பேசிக்கொண்டிருந்தார். “ஆம், பெண்குழவிதான். நான் இங்கிருக்கும்வரை ஆண்குழவிகளே பிறக்கும் என்றனர் நிமித்திகர். அகன்றபின் எண்மரின் ஆழுளத்தவமும் குவிந்து பெண்ணாகும் என்றனர்.” அவனுள் ஒவ்வொரு மணற்பருவும் என்னும் சொல் மீண்டும் எழுந்தது. கடல் அறியும் ஒவ்வொரு மணற்பருவையும்.

நூல் பதினைந்து – எழுதழல் – 46

ஆறு : காற்றின் சுடர் – 7

fire-iconஅபிமன்யூ சீசாருவுடன் துவாரகையின் மையக் களிக்கூடத்திற்குச் செல்வதற்குள் உபயாதவர்கள் ஒவ்வொருவராக அங்கே வந்து கூடத் தொடங்கிவிட்டிருந்தனர். சாரகுப்தனும் பரதசாருவும் சாருசந்திரனும் இடைநாழியிலேயே அவனை எதிர்கொண்டனர். “இளையோனே, உன்னைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். மெய்யாகவே நீ வரக்கூடும் என்னும் உள்ளுணர்வு எங்களுக்கு இருந்தது” என்றான் சாரகுப்தன். “உன் திருமணத்திற்கு இங்கிருந்து அனைவரும் கிளம்பினாலென்ன என்று நான் எண்ணினேன். அன்னை அதற்கு அரசியல் சூழல் உகந்ததாக இல்லை என்று சொன்னார்.”

அபிமன்யூ “ஆம், திருமணம் உடனடியாக நிகழவேண்டியிருந்தது” என்று தணிந்த குரலில் சொன்னான். “திருமணம் என்றதுமே நாணுகிறான்” என்றான் சீசாரு. விசாரு “உன் தோழனை இங்கே வரச்சொல்லி ஆளனுப்பியிருக்கிறேன். இந்த நாளை நாம் தவறவிடக்கூடாது. தந்தை நகரணைந்ததுமே இங்கே அரசியல் கொப்பளிப்புகள் மட்டுமே நிகழவிருக்கின்றன” என்றான். சாரு தொலைவிலேயே ”மூத்தவரே!” எனக் கூவியபடி ஓடிவந்தான். அவ்விரைவிலேயே பாய்ந்து அபிமன்யூவின்மேல் தொற்றி ஏறிக்கொண்டு கூச்சலிட்டு நகைத்தான். அபிமன்யூ அவனைப் பற்றியபடி சுழன்றான்.

அவனை கீழே இறக்கி “நீ என்ன உண்கிறாய் இங்கே? எடைகொண்டுவிட்டாய்!” என்றான். “கதை பயில்கிறேன்” என்றான் சாரு. “நான்காண்டுகள் வில் பயின்றேன். அது எனக்கு சரியாக வரவில்லை…” என்று மூச்சுவாங்க சொல்லி “ஆனால் கதையும் சரியாக வரவில்லை. நான் வளைதடி பயிலலாம் என இப்போது எண்ணுகிறேன்” என்றான். களிக்களத்திலிருந்து ஜாம்பவதியின் மைந்தர்களான விஜயனும் சித்ரகேதுவும் வசுமானும் திராவிடனும் கிராதுவும் வெளியே ஓடிவந்தார்கள். “விஜயா, உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். ஆசிரியர் நீ வந்தபின் பெரும்பாயை விரிக்கும் கலையை மீண்டும் கற்பிப்பதாக சொன்னார்” என்று சீசாரு கூவினான். “நான் அதை முன்னரே துணியில் செய்து பார்த்துவிட்டேன்” என்றான் விஜயன்.

அபிமன்யூ “உயரமானவர்களாக ஆகிவிட்டீர்கள்” என்றான். அவன் கைகளை பற்றிக்கொண்ட வசுமான் “யாதவ மைந்தர்களில் நாங்களே உயரமனாவர்கள். எங்கள் மூதாதையர் வாழ்ந்த காட்டின் உயரம் அது” என்றான். “மூத்தவரைப் பார்த்தால் நானே அண்ணாந்துதான் பேசவேண்டியிருக்கிறது” என்றான் கிராது. சித்ரகேது “மூத்தவர் இங்கில்லை. தந்தையுடன் வந்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள். நாங்கள் அனைவரும் மூத்தவர்கள் அறியாமல் இங்கே ஒன்றுகூடிக் கொண்டிருக்கிறோம்” என்றான்.

அரசி நக்னஜித்தியின் மைந்தர்களான சித்ராகு, வேகவான், விருஷன், அமன், சங்கு, வாசு, குந்திகன் ஆகியோர் காளிந்தியின் மைந்தர்களான சுபாகு, பத்ரன், சாந்தன், தர்ஷன், பூர்ணநமாம்ஷு, சோமகன் ஆகியோருடன் வந்தனர். மிக விரைவிலேயே அப்பகுதி ஒருவரோடொருவர் உரக்கப் பேசிக்கூச்சலிட்டுச் சிரித்துக்கொள்ளும் ஒலியால் முழங்கத்தொடங்கியது. ஒவ்வொருவரும் அபிமன்யூவை அள்ளித்தழுவிக்கொண்டார்கள். தோளில் அறைந்தும் இடைவளைத்துத் தூக்கிச் சுழற்றியும் கொண்டாடினார்கள். புதியவர்கள் வந்து சேர்கையில் அனைவரும் உரக்க கூச்சலிட்டார்கள்.

லக்‌ஷ்மணையின் மைந்தர்களான பலன், பிரபலன், ஊர்த்துவாகன், மகாசக்தன், சகன், ஓஜஸ், அபரஜித் ஆகியோர் வந்தபோது அனைவரும் அவர்களை நோக்கி ஓடி அப்படியே தூக்கி அறைமூலையில் வீசினர். சில கணங்கள் அங்கே கூட்டாக மற்போர் நிகழ்ந்த உடலசைவுகள் எழுந்தன. அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பது அரிதாகவே நிகழ்கிறது என்று தெரிந்தது. அந்தக் களியாட்டு அவர்களை கட்டிவைத்திருந்த தடைக்கு எதிரானது என்று தோன்றியது.

பிரலம்பன் வந்து அந்தக் கூட்டத்தைப் பார்த்து திகைத்து நின்றான். அபிமன்யூ கைகளைத் தட்டி “மூத்தோரே, இளையோரே, இவர் பிரலம்பர், என் அணுக்க ஒற்றர்!” என்றான். “ஆ, இவன் ஒற்றனைப் பேணுபவன்” என்றான் மித்ரவிந்தையின் மைந்தனான கர்ஹன். அவன் உடன்பிறந்தானான அனிலன் “இவர் படகேறுவாரா?” என்றான். கிருதரன் “அதெல்லாம் செய்யக்கூடியவர் என்றே நினைக்கிறேன். அவர் தோள்கள் விற்பயிற்சியை காட்டுகின்றன” என்றான். பத்ரையின் மைந்தனான பிரகரணன் “வில்பயின்றவனின் தோள் என எப்படி தெரிந்துகொண்டாய்? இப்போதே சொல். இல்லையேல் உன் மண்டையை உடைப்பேன்” என்றான். கிருதரன் “அவன் தோள்கள் அபிமன்யூவின் தோள்கள் போலிருக்கின்றன” என்றான்.

“மூத்தவரே, அவன் விழிகளும் சிரிப்பும்தான் இவனைப்போலத் தெரிகின்றன” என்றான் அரிஜித். ஜயனும் சுபத்ரனும் வாமனும் கைகளைத் தட்ட “நோக்குக! அமைதி! நோக்குக! நாம் கடலாடலுக்கு வந்துள்ளோம். கூச்சலிட்டு சுவர்களை உடைப்பதற்காக அல்ல” என்றான் ஜயன். ஆயு “ஆம், ஆசிரியர்கள் நமக்காக காத்திருக்கிறார்கள்” என்றான். சீசாரு “கிளம்புக… அனைவரும் களிக்களத்திற்குச் செல்வோம்” என்றான். அவர்கள் கூச்சலிட்டபடி களத்திற்குள் நுழைந்தனர். மேலே கூரையிடப்பட்ட வட்டவடிவமான பெரிய களமுற்றத்தில் யவனக் களப்பயிற்சியாளர்கள் நின்றிருந்தனர். ஒவ்வொருவராகச் சென்று அவர்களின் கால்தொட்டு வணங்கினர். சத்யகன் “அமர்க… ஆங்காங்கே அமர்க!” என்று கூவ அவர்கள் அமர்ந்தனர்.

வர்த்தனன் அபிமன்யூவிடம் “இவர் அளிக்கும் பயிற்சிகளை நான் தவறவிடுவதே இல்லை. இவருடைய சொல்லொலிப்புபோல வேடிக்கையானது பிறிதில்லை” என்றான். “ஆம், அவர்கள் மேலுதட்டை அசைக்காமல் பேசுவார்கள்” என்றான் அபிமன்யூ. அருகே அமர்ந்திருந்த சீசாரு “நான் இவரைப்போலப் பேசுவதற்காக இவர்களின் மதுவைக்கூட பலமுறை அருந்திப் பார்த்தேன்” என்றான். பிரலம்பன் “என்ன நிகழ்ந்தது?” என்றான். “நான் மது அருந்தினால் கோகுலத்து யாதவரின் கன்றோட்டும் ஒலிகள்தான் என் வாயில் இருந்து எழுகின்றன. ஆனால் எனக்கு அது தெரியாது, பிறர் சொன்னார்கள்” என்றான். “அமைதி! அமைதி!” என்று அரிஜித் கையை தட்டினான். அனைவரும் அமைதியடைந்தனர்.

வர்த்தனன் மிக மெல்லிய குரலில் “இவர் சொல்வதை நாம் செவிகொள்ள வேண்டியதில்லை. கைகளை மட்டும் நோக்கினால் போதும். நமக்குக் கற்பிப்பவை அவையே” என்றான். “அவர் பெயர் என்ன?” என்றான் அபிமன்யூ. அவன் உதடசைவை நோக்கிய யவனஆசிரியர் “என் பெயர் அகதன். இவர் என் தோழர் தியோதரர். அவர் யூதாலியர், அருகிருப்போர் ஹெர்மியர்” என்றார். “நாங்கள் இளமையிலேயே மாலுமிகளாக யவனநாட்டிலிருந்து கிளம்பியவர்கள். உலகை வலம் வந்துகொண்டிருந்தோம். இளைய யாதவரின் தோழர்கள் என்றானபின் சென்ற இருபதாண்டுகளாக இங்கேயே வாழ்கிறோம்” என்றார்.

யூதாலியர் “அவருக்கு சிறுபடகோட்டவும் பெருங்கலம் செலுத்தவும் நாங்கள் கற்றுக்கொடுத்தோம். இப்போது ஒரு மணி வயலென்றாகி விளைந்ததுபோல அவரே பலமுகம் கொண்டதுபோல எங்களைச் சூழ்ந்து அவை நிரப்பியிருக்கிறீர்கள்” என்றார். தியோதரர் “சிறுபடகோட்டுவதைப்பற்றி சுபத்திரையின் மைந்தர் முன்னர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே அதைப்பற்றி முதலில் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். இளவரசே, நீங்கள் ஓடும்புரவிமேல் நிற்கும் பயிற்சி கொண்டவரா?” என்றார். அபிமன்யூ “ஆம்” என்றான். “நீங்கள் நேரடியாகவே சிறுபடகில் ஏறி நீர்மேல் விரையமுடியும். இது காலும் உடலும் கொள்ளும் ஒத்திசைவன்றி வேறில்லை” என்றார் தியோதரர்.

”இதன் கொள்கைகளைப்பற்றி மட்டும் சொல்கிறேன்” என்றார் தியோதரர். “மண் அனைத்தையும் தரிப்பதனால் தரித்ரி எனப்படுகிறது. இளையோரே, நீரும் நெருப்பும் காற்றும் வானமும்கூட அனைத்தையும் தாங்குகின்றன. காற்று பறவைகளை தாங்கிச் செல்வதை கண்டிருப்பீர்கள். அனல் கரித்துகள்களைத் தாங்கி நடமிடுவதை அறிவீர்கள். வானம் கோள்களைத் தாங்கி நின்றிருக்கிறதென்று எங்கள் நூல்கள் சொல்கின்றன. மீன்களை நீர் தாங்குகிறது. நீச்சலடிக்கையில் அது நம்மை ஏந்திக்கொள்கிறது.”

“அறிக, இவ்வைந்தில் மண்ணும் வானமும் மட்டுமே அசையாதவற்றை தாங்கும் தன்மைகொண்டவை! நீரும் காற்றும் அனலும் அசைவையே உடலென்று நமக்கு காட்டுபவை. அசையாதபோது அவை தெய்வங்கள் மட்டுமே அறியும் தங்கள் கருத்துருவுக்குத் திரும்புகின்றன. நெளியா நீரும் தழலா எரியும் வீசா காற்றும் தெய்வநிலை அடைந்த யோகிகள் அறிபவை என்று உணர்க!” என்றார் தியோதரர் “நீரும் காற்றும் நெருப்பும் நம்மை ஏற்றுக்கொண்டால் நம்மை அவை அன்னையென மடியிலேந்திக்கொள்கின்றன. நம்மை அவை ஏற்க நாம் அவையென்றாவதே உகந்த வழி. நீரில் ஏறிக்கொள்பவன் நீரென்று நெளிவுகொள்ளவேண்டும். காற்றில் எழுபவன் காற்றென அலைவடையவேண்டும். இளையோரே, நெருப்பென்றே ஆனவனை நெருப்பு அணைத்து தோள்சூடிக்கொள்கிறது.”

“சிறுபடகுக் கலை காற்றுடனும் நீருடனும் ஆடும் விளையாட்டு” என்றார் அகதர். “நம் உடலைத் தாங்குவது நீர். ஆகவே நம் உடல் நீரென்றே ஆகவேண்டும். அதன் அலைகளும் சுழிகளும் விசைகளும் நம் உடலிலும் கூடவேண்டும். புரவியூர்பவன் உடலில் புரவி நிகழ்வதுபோல. யானை அமர்ந்தவன் யானையென அசைவதுபோல. நீர் தன் பல்லாயிரம் கைகளால் நம்முடன் விளையாடும். முடிவிலாக் கால்களால் துள்ளும். மத்தகம் உலைக்கும். முதுகை ஊசலாட்டும். புட்டம் துள்ள எழுந்து அமையும். திமிறித் ததும்பி குதிக்கும். அதன் அசைவும் விசையும் நம்முடையதென்றே ஆகவேண்டும் . நாம் அதனுடன் முற்றிலும் உடல் ஒத்திசைந்திருப்பது வரை நம்மை முழுகடிப்பதில்லை. ஒரு பிழையசைவு, மெல்லிய பிறழ்வு நிகழ்ந்தாலும் வாய்திறந்து நம்மை விழுங்கிக்கொள்ளும்.”

“நீர் பெண். காற்று ஆண். காற்றுடன் ஒத்திசைபவனை அது அள்ளி வீசுகிறது. உதைத்துச் சிதறடிக்கிறது. தன்னை எதிர்ப்பவனை மட்டுமே தோளிலேற்றிக்கொள்கிறது” என்று அகதர் தொடர்ந்தார். ”ஆனால் நிகர் நின்று காற்றை எதிர்ப்பவன் உடைந்தழிவான். காற்றுக்கு நிகரான ஆற்றல் கொண்டவை விண்ணாளும் தெய்வங்கள் மட்டுமே. மல்லனாகிய தந்தையுடன் தோள்கோக்கும் இளமைந்தன் என காற்றுடன் போரிடவேண்டும். காற்று நம்மிடம் விளையாடவேண்டும். காற்றின் நெறிகளை நாம் அறிந்து ஆடி நாம் வெல்வதை அது மகிழும்படி அமையவேண்டும் அவ்வாடல்.”

மென்மரத்தில் செய்யப்பட்ட படகின் சிறிய பாவை வடிவம் ஒன்றை அவர் அவர்களுக்கு தூக்கிக் காட்டினார். “ஒற்றைக் காலடி அமையும் அகலம் கொண்ட நீள்பலகையில் பொருத்தப்பட்ட இரண்டு இரட்டைமடிப்புப் பாய்கள்தான் நமது படகு” என்று அகதர் சொன்னார். “தட்டாரப்பூச்சியின் சிறகுகள் இவை. நான்கு தனிச்சிறகுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் விலகியும் காற்றுடன் விளையாடுகின்றன. அவற்றை இணைக்கும் சரடுகள் இவை. இவற்றைப் பற்றிக்கொண்டு இழுத்து சிறகுகளை கையாள்கிறோம்.”

அவர் அச்சரடை இழுத்து பாய்களை வெவ்வேறு கோணங்களில் இழுத்து திருப்பிக்காட்டினார். சாளரம் வழியாக வந்த காற்றின் எதிர்முகமாக பாவைப் படகை தூக்கிக் காட்டியபோது அதன் பாய்கள் புடைத்தெழுந்தன. சரடுகளை இழுத்து பாய்களை கோணம் மாற்றியபோது படகு உயிர்கொண்டதுபோலத் திரும்பியது. “நம் கால்களை நீருக்கும் கைகளை காற்றுக்கும் அளிக்கிறோம். அன்னையும் தந்தையும் கொஞ்சிமகிழும் இளமைந்தனைப்போல விளையாடுகிறோம். இளையோரே, இதுதான் யவனத்தின் விளையாட்டுகளிலேயே மிகச் சிறந்தது.”

fire-iconஉபயாதவர் ஒவ்வொருவராக கடலில் இறங்க தியோதரரும் ஹெர்மியரும் யூதாலியரும் அகதரும் உதவினர். படகென அமைந்த மென்மரப் பலகையின் கண்ணியில் ஒற்றைக்காலைச் செருகிக்கொண்டு அதன் சூத்திரச்சரடைப் பிடித்தபடி ஒற்றைக்காலால் விந்தி விந்தி நீரை அடைந்தனர். “அலை மீள்கையில் ஏறிக்கொள்ளுங்கள். சரடை இழுத்து பாய்களை விரியுங்கள். இரண்டும் ஒரே கணத்தில் நிகழவேண்டும்” என்றார் அகதர்.

உபயாதவர்கள் முன்னரே பலமுறை அதைச் செய்து பயின்றிருந்தனர். கிளையில் இருந்து காற்றில் தாவும் கிளிக்குஞ்சுகள்போல சற்று தயங்கி அவர்கள் அலைமேல் எழுந்தனர். காற்று கடலில் இருந்து கரைநோக்கி சரிவாகப் பாய்ந்துகொண்டிருந்தது. புடைத்தெழுந்த பாய்கள் ஒன்றுடன் ஒன்று செருகிக்கொண்டு ஒன்றின் காற்றை இன்னொன்றுமேல் செலுத்தி விரிந்தன. படகுகள் நீர்ப்பறவைகள்போல அலைமேல் எழுந்தன. ஒன்றை ஒன்று தொடர்ந்து எழுந்தமைந்து கடலுக்குள் சென்றன.

பிரலம்பன் நீர்விளிம்பை அடைந்து காத்து நின்றான். அவன் கால்களை அறைந்து சிதறி விரிந்து திரும்பிச்சென்றது அலை. “எழுக!” என்றார் தியோதரர். அவன் அறியாமல் சரடை இழுத்தான். அதே கணம் கால்களை அலைமேல் வைத்தும் விட்டிருந்தான். காற்று அவனை வலப்பக்கமாக கொண்டு சென்றது. சரிந்து நீரில் புதைந்தான். உப்புநீர் வாயில் நிறைந்தது. மூக்குக்குள் நுழைந்து திணறச்செய்தது. காலை உதறி நீரில் விழுந்து நீந்தவேண்டியதுதான் என எண்ணிய கணம் அவன் கை சரடை இழுத்தது. வலப்பக்கப் பாய் சற்றே திரும்ப படகு மேலெழுந்து அடுத்த அலைவளைவின்மேல் ஏறி மறுபக்கம் தெறித்தது. அவன் கைகளுக்கு பாய்களின் ஒழுங்கமைவின் நெறி புலப்பட்டுவிட்டது.

ஆனால் அப்போதும் அவன் உள்ளம் அதெப்படி என்று வியந்துகொண்டுதான் இருந்தது. ஒவ்வொரு அலையையும் விழிகள் நோக்கியதுமே கைகள் அதைக் கடக்கும் வழியை அறிந்துகொண்டன. மானுடனுக்குள் பறவை ஒன்று வாழ்கிறது. அவன் கைகள் வேறேதோ பிறவியில் சிறகுகள் என்று இருந்திருக்கவேண்டும். மிக விரைவிலேயே அவன் காற்றிலும் நீரிலும் திளைத்துக்கொண்டிருந்தான். அப்பால் அபிமன்யூ மிக இயல்பாக சுற்றிவந்தான். அலைகளில் ஏறி ஸ்ரீபானுவின்மேல் பாய்ந்து கடந்து அப்பால் சென்றான். ஊஊ என ஊளையிட்டபடி சாருவின் அருகே பறந்து அவனை அஞ்சி விலகச்செய்தான்.

“மூத்தவரே, என்னை பிடியுங்கள்” என்று ஜயன் கூவினான். அவர்கள் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு பாய்ந்தனர். அவர்களை சுபத்திரனும் சித்ரகேதுவும் விருஷனும் சங்குவும் துரத்திச் சென்றார்கள். மிக அப்பால் விலகி மாபெரும் வட்டமென அவர்கள் சுற்றிவந்தனர். அவர்கள் சென்ற தடம் நீரில் அரைவட்டமென விழுந்து மறைந்தது. நீர்த்துளிகளுக்கு நடுவே அவர்களின் சிரிப்பு ஒளிவிடுவதை பிரலம்பன் கண்டான். சத்யகனும் வஹ்னியும் சூதியும் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடினர்.

வெண்ணிற நாரைக்கூட்டம்போல அவர்கள் சிறகு விரித்தும் சரித்தும் நீர்மீது சுழன்றனர். சகன் சரிந்து நீருக்குள் புகுந்ததும் அபரஜித்தும் வஹ்னியும் பாய்ந்து சென்று அவனை இரு பக்கமும் பற்றித் தூக்கி கொண்டுவந்தனர். வசுமானும் வாமனும் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு நீர்மேல் கிழித்துச்சென்று வான்வளைவை உரசுவதுபோல அகன்று மறைய தியோதரர் “அத்தனை தொலைவு செல்லலாகாது…” என்று கூவியபடி துரத்திச்சென்றார்.

எதிரே விளையாடிக்கொண்டிருந்த பலனும் பிரபலனும் வர்த்தனனும் கூச்சலிட்டபடி விலகினர். அவர்களை திரும்பிப்பார்த்த பிரலம்பன் மிகப்பெரிய மீன் ஒன்று அவர்கள் நடுவே நீருக்குள் இருந்து உருவப்படும் வாள் என ஒளியுடன் எழுவதைக் கண்டான். காற்றில் எழுந்து வால் சுழற்றி உடல்ததும்ப துள்ளி நீரில் மீண்டும் விழுந்து மூழ்கி மறைய அந்த அலையில் அவர்கள் நிலையழிந்தனர். அவர்களுக்கு அப்பால் இன்னொன்று அதேபோல எழுந்தமைந்தது. அவன் அருகே வந்துகொண்டிருந்த அகதர் “அச்சம் வேண்டாம். அவை ஓங்கில்கள். நம்முடன் விளையாட வந்தவை” என்றார்.

“அவை மானுடரை அறியுமா?” என்றான் பிரலம்பன். “அவை ஆழத்து மானுடர். அவற்றால் மொழியாடவும் இயலும்…” என்றார் அகதர். பிரலம்பன் தன் அருகே பேருடலுடன் ஓங்கில் ஒன்று எழுந்து மேலே சென்று நீர் அறைந்து விழுவதை கண்டான். அலையில் அவன் படகு சரிய பாய்கள் விலகின. ஊசி ஆடையில் புகுவதைப்போல அவன் படகு நீர்ப்பரப்பில் புதைந்தது. மறுபக்கம் எழுந்த ஓங்கில் தன் வாலால் அவன் படகை அறைந்து மேலெழுப்ப அவன் நிலை மீண்டு அலைமேல் ஏறிச் சுழன்று எழுந்தான். அந்த ஓங்கிலின் திறந்த வாயில் கூரிய பற்கள் தெரிந்தன. அதன் முகத்தில் புன்னகை இருப்பதுபோலத் தெரிந்தது.

நூற்றுக்கணக்கான ஓங்கில்கள் நீர்ப்பரப்புக்குமேல் எழுந்தன. பனங்குருவிகளைப்போல அவை காற்றில் பாய்ந்து பாய்ந்து நீரில் விழ அனலில் வைத்த யானத்து நீர் என கடல் கொப்பளித்து அலையடித்தது. அபிமன்யூ ஒரு கையால் சரடைப் பற்றிக்கொண்டு மறுகையால் இடையின் கச்சையை அவிழ்த்து வீசி ஓங்கிலின் முதுகிலிருந்த செதில்சிறகின்மேல் தொடுத்துக்கொண்டான். அது அவனை கழுகு குருவியை என தூக்கிக்கொண்டு சென்றது. உபயாதவர்கள் அதை நோக்கி கூச்சலிட்டனர்.

பிரகரணனும் அரிஜித்தும் இரு ஓங்கில்கள்மேல் அதைப்போல ஏறிக்கொள்ள முயல நிலையழிந்து நீரில் விழுந்து சறுக்கிச் சென்றனர். ஆனந்தனும் மகாம்சனும் பவனனும் மகாசக்தனும் சென்று அவர்களைத் தூக்கி நிலைமீட்டனர். அபிமன்யூ நெடுந்தொலைவுக்கு சென்றுவிட்டிருந்தான். “மறைந்துவிட்டான்!” என்று ஊர்த்துவாகன் கூவினான். “ஓங்கில்களின் உலகுக்குச் சென்றுவிட்டான்” என்று பலன் கூவினான். அப்பாலிருந்து அம்புபோல அபிமன்யூ பாய்ந்து வந்தான். அவன் படகு பாய் ஒடுங்கி கூர்கொண்டிருந்தது. ஓங்கில் விழிகளுக்குத் தெரியவில்லை. கண் அறியா விரலொன்று நீர்ப்பரப்பை கீறிவந்தது. அதன்மேல் எழுந்து அவன் அணுகி அதே விரைவில் சுழன்று அகன்றான்.

ஓங்கில்களைத் துரத்தியபடி உபயாதவர் நீரில் களியாடினர். அவை அவர்கள்மேல் எழுந்து விழுந்தன. அவர்களை கவிழ்த்தும் மீண்டும் தூக்கிவிட்டும் விளையாடின. வெள்ளிப் பூச்செடி என நீரை உமிழ்ந்து எருமைக்கன்றுபோல குரலெழுப்பின. வால்கள் நீரை அறைந்து உச்சிவெயிலில் சலவைக்கல் சிதறல்கள்போல பறக்கச் செய்தன. இளஞ்சாம்பல் நிறமான உடல்கள் இருண்ட நீர்த்துளிபோல் ஒளிகொண்டிருந்தன. உடைந்து உடைந்து தெறித்த நீரின் ஒளியுடன் ஊடு கலந்தவைபோல இளையோரின் முகங்கள் தெரிந்தன. முகிலாடும் விண்ணவர்போல.

ஒருவரை ஒருவர் நோக்கி கூவிச்சிரித்தனர், கைகளை வீசினர், பாய்ந்து வந்து அறைந்து திரும்பி விரைந்தனர், துரத்திச்சென்றனர், ஒருவரோடொருவர் முட்டிக்கொண்டனர், கைகள் பிணைத்துக்கொண்டு காற்றில் விரைந்தனர், சென்றபடியே உதைத்துக்கொண்டனர், பூசலிட்டனர், தோள்பிணைத்து மல்லிட்டபடி சுழன்றலைந்தனர். களியாட்டென்பது உடலுள் தேங்கிய ஆற்றலை சிதறடிப்பது மட்டுமே என பிரலம்பன் எண்ணிக்கொண்டான். சித்ராகுவும் சாந்தனும் மாறி மாறி அறைந்துகொண்டார்கள். சிரித்துக்கொண்டே விலகிச்சென்ற சித்ராகுவை சாந்தன் துரத்திச்செல்ல இருவரும் கைகள் பிணைத்து முறுக கூவியபடி சுழன்றனர். முகங்கள் களிகொண்டு மலர்ந்திருக்க தோள்கள் இறுகி நின்றன. போர் கலக்காத களியுவகையே மானுடருக்கு அளிக்கப்படுவதில்லை போலும்.

அபிமன்யூ ஓர் ஓங்கிலில் இருந்து இன்னொன்றுக்கு தாவினான். இரு ஓங்கில்கள் அவனைத் தூக்கி காற்றில் வீச தலைகீழாகச் சுழன்று இறங்கிய அவனை தன் முதுகால் ஒன்று தாங்கிக்கொண்டது. ஏழெட்டு ஓங்கில்கள் அவனை மட்டுமே சூழ்ந்து நீர்திளைத்தன. சுழன்றுவந்தபோது பிரலம்பன் தொலைவில் துவாரகையின் பெருவாயிலைக் கண்டான். அது காற்றில் பறப்பதுபோலச் சுழன்று மறைந்தது. மறுகணம் அகவிழியில் அண்மையிலென அது எழுந்தபோது கருடனின் விழிகளை கண்டான். நீர் வந்து அறைந்து அவனை அள்ளி வீசியது. சிறகு வளைத்துச் சுழன்று மீண்டபோது அவ்விழிகளில் இருந்த துயரை உணர்ந்தான்.

துயரா என உளம் வியந்தது. துயரேதான் என உறுதி செய்தது அடியுளம். துயர் ஏன்? அது களியாடும் மைந்தரை அல்லவா நோக்கிக் கொண்டிருந்தது? ஒரு கணம் உடல் விதிர்க்க அவன் கையிலிருந்து சரடு நழுவியது. நீரில் விழுந்து மூழ்கி கைவீசிப்பாய்ந்து எழுந்து படகுப்பலகையை பற்றிக்கொண்டான். மீண்டும் சரடைப்பற்றி பாயை விரித்து படகைச் சீரமைத்து திசை அமைத்தபோது உடல் முற்றிலும் தளர்ந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். உள்ளம் எடைகொண்டு ஒவ்வொரு தசையையும் அழுத்தியது. அக்கணமே இறந்துவிடவேண்டும் என்பதுபோல் தாளவியலா துயரை அவன் அடைந்தான்.

நூல் பதினைந்து – எழுதழல் – 45

ஆறு : காற்றின் சுடர் – 6

fire-iconசத்யபாமையின் அறைக்குள் அவள் இளைய மைந்தர்களான அதிபானுவும் ஸ்ரீபானுவும் பிரதிபானுவும் இருப்பார்கள் என்று அபிமன்யூ எண்ணியிருக்கவில்லை. அவனை உள்ளே அழைத்த ஏவலன் அதை அறிவிக்கவில்லை. அதில் மட்டுமல்ல அங்கே அனைத்திலும் முறைமைக்குறைவு இருந்தது. அவனை அழைத்துவந்த அமைச்சர் ஏவலனிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பிச்செல்கையில் அவன் எவரை சந்திக்கவேண்டுமென்று ஏவலனிடம் சொல்லவில்லை. ஆகவே ஏவலனே அவனிடம் “இளவரசே, தங்கள் வருகை நோக்கம் என்ன?” என்று கேட்டான். அவன் சற்று எரிச்சலுடன் “மூத்த அத்தை சத்யபாமையை சந்திப்பது” என்றான். வழியில் தெரிந்த பாவட்டாக்களில் ஒன்று சரிந்திருந்தது.

அபிமன்யூ தலைவணங்கி “வணங்குகிறேன், அத்தை” என்றான். சத்யபாமை புன்னகை இல்லாத முகத்துடன் “நீ அங்கே சென்றிருப்பாய் என நினைத்தேன்” என்றாள். “நான் ஏன் அங்கே செல்கிறேன்? எனக்குத் தெரியாதா இங்கே எவர் அரசி என்றும் எவருக்கு குலமுதன்மை என்றும்?” என்றான் அபிமன்யூ. சத்யபாமை முகம் மலர்ந்து “வா… இப்படி அமர்ந்துகொள்” என்றாள். “எப்படி இருக்கிறாள் உன் அன்னை?” அபிமன்யூ “அன்னையை நான் பார்த்தே நெடுநாட்களாகின்றன. நன்றாகவே இருப்பார்கள் என எண்ணுகிறேன்” என்றான். “ஏனென்றால் அவர்கள் இங்கே இல்லை.”

“என்ன சொல்கிறாய்?” என்று சத்யபாமை புருவம் சுருக்கியபடி கேட்டாள். “இங்கிருந்தால் ஏழு அரசியராலும் அவர்கள் துன்புறுவார்கள். நீங்களும் எத்தனை ஆறுதல்தான் அளிக்கமுடியும்? யாதவகுலத்தோர் இங்கே மதிக்கப்படுகிறார்களா என்ன?” என்று அபிமன்யூ சொன்னான். “ஆம், அதைத்தான் நானும் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றாள் சத்யபாமை. அபிமன்யூ “நான் மூதன்னை குந்தியை பார்த்தேன். உங்களைப்பற்றி எண்ணி உளமுருகினார்கள். சத்யை இல்லையேல் துவாரகையே இல்லை. யாதவகுலத்தில் இப்படி ஒரு பேரரசி பிறப்பாள் என்பதை முன்னரே நிமித்திகர்கள் சொல்லியிருந்தமையால்தான் பதின்மூன்றாண்டுகள் உளம் அமைந்திருந்தேன் என்றார்” என்றான்.

“என் இடர்கள் அன்னைக்குத் தெரியும்” என்றாள் சத்யபாமை. “ஆனால் மூத்த தந்தை பீமசேனர் உடனே சொன்னார், பேரரசியர் கையாளும் அனைத்து இடர்களும் பேரரசியரே உருவாக்குவது என்று.” சத்யபாமை முகம் மாற உடனே அபிமன்யூ “பீமசேனரை நீங்களே அறிவீர்கள், அத்தை. காட்டு மனிதர்” என்றான். சத்யபாமை “ஆம்” என்றாள். பிரதிபானு சிரிப்பதைக் கண்ட அபிமன்யூ “இளையோனின் சிரிப்பு அழகாக உள்ளது” என்றான். “சிரிக்கிறானா?” என்று சத்யபாமை திரும்பிப்பார்த்தபோது பிரதிபானு சிரிப்பை அடக்க ஸ்ரீபானுவின் முகத்தில் சிரிப்பு எஞ்சி இருந்தது. “அறிவிலி… இப்போது இங்கே சிரிக்கும்படி என்ன நிகழ்ந்தது?” என்றாள் சத்யபாமை.

“பீமசேனரை எண்ணி சிரிக்கிறான்” என்றான் அபிமன்யூ. “அவர் யாதவர்களை எளிதாக எண்ணிவிட்டார். இப்புவியில் இன்று முற்றாக ஒருங்கிணைக்கப்பட்ட குலம் யாதவர் அல்லவா?” பிரதிபானு வெடித்துச் சிரிக்க பிற இருவரும் அவன் பின்னால் ஒளிந்துகொண்டார்கள். சத்யபாமை “நீங்கள் நால்வரும் என்னை ஏளனம் செய்கிறீர்கள்” என்றாள். “மெய்யாகவே இல்லை, அத்தை. பேரரசியரை சந்திக்கையில் முகமன் உரைக்கவேண்டும் என்று அறிவேன். ஆகவேதான் சொன்னேன். ஆனால் நான் என்ன சொன்னாலும் அது பொய்யாகத் தெரிகிறது” என்றான் அபிமன்யூ. பிரதிபானுவும் ஸ்ரீபானுவும் பேரோசையுடன் சிரித்தபடி திரும்பிக்கொண்டார்கள்.

“விளையாட எனக்குப் பொழுதில்லை” என்று சத்யபாமை சொன்னாள். “நான் உன்னை வரச்சொன்னது சில செய்திகளை உசாவியறியவே. இங்கே என்ன நிகழவிருக்கிறது? அவர் எப்போது நகர்புகவிருக்கிறார்?” அபிமன்யூ “நான் என்ன அறிவேன்? உளவாளர்கள் சூழ வாழ்பவர்கள் நீங்கள்” என்றான். “அவர் இப்போது ஒவ்வொரு அசுரர்நாடுகளாக சென்றுகொண்டிருக்கிறார். உடன் மூத்தவராகிய பிரத்யும்னரும் இருக்கிறார். அநிருத்தன் பாணருடன் இப்போதும் தங்கியிருக்கிறான். அவனும் துணைவியும் கோகுலம் செல்லக்கூடும் என்றும் நந்தகோபரை அழைத்துக்கொண்டு சூரசேனரை சந்திக்க மதுவனம் செல்லத் திட்டமுள்ளது என்றும் அறிந்தேன்.”

“அங்கே அவர்கள் என்ன பேசப்போகிறார்கள்?” என்று சத்யபாமை கேட்டாள். பிரதிபானு சிரிப்பை அடக்கிய மெல்லிய ஓசை விம்மல் என கேட்டது. சத்யபாமை திரும்பி நோக்கியபின் “மூடர்கள்” என்றாள். அபிமன்யூ “அவர்கள் என்ன செய்வார்கள்?” என்றான். அவள் அதை செவிகொள்ளாமல் “அவர் எப்போது நகர்புகுவார் என்பதை ஒருவாறாக உய்த்துணர்கிறேன். இன்னும் ஏழு நாட்கள் ஆகக்கூடும். ஆனால் வந்ததுமே பிரத்யும்னன் பட்டத்து இளவரசனாக ஆக்கப்படுவானா என்று மட்டுமே நான் அறியவேண்டும்” என்றாள்.

“அந்த எண்ணம் இருக்கலாம்” என்றான் அபிமன்யூ. “ஆம், நானும் அவ்வாறே ஐயுறுகிறேன். அசுரச் சக்ரவர்த்தி தன் மகள் பேரரசியாகவேண்டும் என்றே கோருவார். அதை அளித்தே அப்பெண்ணை இல்லம் கொண்டிருக்க முடியும். பிற அசுரர்களுக்கும் அதுவே விருப்பமாக இருக்கும்” என்றாள் சத்யபாமை. “சரியாக சொன்னீர்கள். அவர் பட்டத்து இளவரசரானால் ஷத்ரியர்களும் அகம் மகிழ்வார்கள். அசுரர்களும் உடன்நிற்பார்கள்” என்றான் அபிமன்யூ. “மூடனைப்போல் பேசாதே. எந்த அடிப்படையில் அவன் முடிசூடுவது? ஷத்ரியன் என்றா? அசுரகுடியில் பெண்கொண்டவனை ஷத்ரியர் ஏற்பார்களா?” என்றாள் சத்யபாமை.

“ஆம், ஆனால் அசுரகுடியினர் என முடிசூடலாமே?” என்று அபிமன்யூ சொன்னான். “அசுரர் ஆள இது அசுரபுரி அல்ல” என்று சத்யபாமை உரக்க கூவினாள். “இது யாதவர் நகரம்… கார்த்தவீரியரின் புகழ் என்றும் வாழவேண்டிய நிலம்.” அபிமன்யூ “ஆம், ஆனால் அதை யாதவர் உணர்ந்ததாகத் தெரியவில்லையே. போஜர்களும் ஹேகயர்களும் கிளம்பிச்செல்கிறார்கள். அந்தகர்கள் உடன் செல்கிறார்கள். அவர்களின் அரசி இங்கிருப்பதையே அவர்கள் உளம்கொள்ளவில்லை” என்றான். சத்யபாமை முகம் சோர்வடைய உதடுகளை மட்டும் அசைத்தாள். “சரி, விருஷ்ணிகள் இருக்கிறார்களே என்று எண்ணலாம் என்றால் அவர்களுக்கும் மூத்த யாதவரே உகந்தவர் என்கிறார்கள்.”

சத்யபாமை “ஆம், இங்கே இன்றிருப்பதுபோல நான் எப்போதும் சோர்ந்திருந்ததில்லை” என்றாள். “என் குலத்தால் நான் கைவிடப்பட்டிருக்கிறேன். இப்போது அவள் வென்றுவிட்டிருக்கிறாள்.” அபிமன்யூ “ஆம், ருக்மிணி அத்தை வென்ற இறுமாப்பில் உள்ளார்” என்றான். “அவளா? அவள் மைந்தனை அரசனாக்க அவளால் இன்னும் இயலவில்லை. அது நடக்கப்போவதுமில்லை” என்றாள் சத்யபாமை. “ஜாம்பவதி அத்தைக்கு தன் மைந்தன் பெருவீரன் என எண்ணம்…” என்றான் அபிமன்யூ. “அறிவில்லாமல் பேசாதே. அவளுக்கு என்ன பெருமை?” அபிமன்யூ “நக்னஜித்தி அத்தைக்கும் பத்ரை அத்தைக்கும் அவர்கள் ஷத்ரியர்கள் என்பதனால்…” என்றான்.

“வாயைமூடு… இங்கே ஷத்ரியர்களின் கூட்டமைப்பு ஒன்றும் எழப்போவதில்லை” என்றாள் சத்யபாமை. “காளிந்தி அத்தை…” என அபிமன்யூ தொடங்க “நான் ரேவதியைப்பற்றி பேசுகிறேன், மூடா” என்றாள் சத்யபாமை. “நினைத்தேன்… அவர் வென்றுவிடலாமென்று எண்ணலாம். வெல்வதெப்படி என்று பார்ப்போம். அத்தை, நீங்கள் ஆணையிட்டால் நான் இன்றே படையுடன் கிளம்பி மதுராவை கைப்பற்றி…” சத்யபாமை “வீண்பேச்சு எதற்கு? இங்கே ஒருபோதும் ருக்மிணியின் மைந்தன் பட்டத்து இளவரசனாக ஆகப்போவதில்லை. இன்று என் மைந்தர்கள் நாடாள்கிறார்கள். அவர்களே ஆள்வார்கள்” என்றாள்.

“அதில் என்ன ஐயம்?” என்றான் அபிமன்யூ. “நீ என் சொல்லை சென்று ருக்மிணியிடம் சொல். உண்மையில் பல ஆண்டுகளாக எங்களுக்குள் சொல்பரிமாற்றம் இல்லை.” அபிமன்யூ “ஆம், எண்ணையும் புண்ணாக்கும்போல தனித்திருக்கிறீர்கள் என்று ஏதோ ஓர் சூதர் அணிச்சொல்லை அமைச்சர் சந்திரசூடர் சொன்னார்” என்றான். சத்யபாமை அதைத் தவிர்த்து “அவளிடம் சென்று சொல். அவள் மைந்தன் பட்டத்து இளவரசனாக ஆக வாய்ப்புள்ளது. ஆனால் இந்நகரில் ஷத்ரிய வீரர் மிகச் சிலரே. என் ஆணையில் இயலும் யாதவர் ஒருபோதும் அவள் மைந்தனை அரசன் என ஏற்கப்போவதில்லை” என்றாள். “யாதவ அரசை ஷத்ரியர் ஏற்கப்போவதில்லை. என்றேனும் இருசாராரும் களம்நிற்கவே போகிறார்கள். ஆகவே அவள் மைந்தர் அரியணையில் அமரமுடியாது.”

“ஆம், அதில் ஐயமே இல்லை” என்றான் அபிமன்யூ. “பானு பட்டத்து இளவரசனானால் பிரத்யும்னனை துவாரகை ஒழிந்த பிற நிலங்களுக்கு பொறுப்பாக அமைப்பான். அவன் தனிமுடி என ஆளலாம். அதை நான் சொல்லளிக்கிறேன் என்று அவளிடம் சொல்” என்றாள் சத்யபாமை. “அதை சொல்லிவிடுகிறேன். ஆனால் ஷத்ரிய குலத்து அரசியரும் அவர்களின் மைந்தரும்…” என அபிமன்யூ தொடங்க “மைந்தர்கள் இருக்கிறார்கள். எவரிடம் படை உள்ளது? யாதவப்படை?” என்றாள் சத்யபாமை. “ஆம், எவரிடம் உள்ளது? தங்களிடம்கூட இல்லை.”

பிரதிபானு மீண்டும் சிரித்தான். அவனை எண்ணம் அழுந்திய விழிகளுடன் திரும்பி நோக்கியபின் “ஆம், நாள் செல்லச் செல்ல என் ஆற்றல் குறைந்து வருகிறது. நாம் அவளை அச்சுறுத்தி சொல் பெற்றாகவேண்டும். ஆகவேதான் அவர் நகர்புகுவதற்குள் இதை முடிக்கவேண்டுமென விழைகிறேன். நீ அவளிடம் என் தூதனாக செல்!” என்றாள் சத்யபாமை. அபிமன்யூ எழுந்து மிகையான நாடகத்தன்மையுடன் “ஆணை, பேரரசி” என தலைவணங்கினான். சத்யபாமை அதை உளம் கொள்ளாமல் தன்னுள் ஆழ்ந்த விழிகளுடன் “எங்கே சென்றுகொண்டிருக்கிறது இது? ஒன்றும் புரியவில்லை” என்றாள்.

அபிமன்யூ வெளியே வந்தபோது மூவரும் அவன் பின்னால் ஓடிவந்தனர். “மூத்தவரே, உங்களைக் காண வரவேண்டுமென எண்ணினோம். அன்னை இங்கே வரச்சொன்னார்” என்றான் ஸ்ரீபானு. “நீ என்ன முழுப்பொழுதும் அடுமனையில் வாழ்கிறாயா?” என்றான் அபிமன்யூ. “பயிற்சிக்களம் என ஒன்று உண்டு, அறிவாயா?” பிரதிபானு “அறிவான், மூத்தவரே. அடுமனைக்கு வெளியேதான். சாளரம் வழியாக அங்கே பயிற்சி செய்பவர்களைக்கூட பார்க்கமுடியும்” என்றான். “நீ நாவை வளர்த்திருக்கிறாய்” என்றான் அபிமன்யூ. “அதை வைத்து போரிடப் போகிறாயா?”

“கட்கரசனா என்று ஒரு கந்தர்வன். அவன் நாக்கே ஒரு பெரிய வாள்…” என்று பிரதிபானு சொன்னான். “புல்லன்னைக்கு மின்னலில் பிறந்தவன். அவனைப்பற்றிய கதையை கதாமஞ்சரியில் படித்தேன்.” அபிமன்யூ “முதலில் கதாமஞ்சரியில் உன்னைப்பற்றி என்ன எழுதுவார்கள் என்று எண்ணிப்பார்” என்றான். பிரதிபானு “இங்கே சித்தம் கொண்ட ஒவ்வொருவரும் எதிலேனும் ஒளிந்துகொள்ள வேண்டியிருக்கிறது, மூத்தவரே” என்றான். அக்குரல் மாற்றத்தை உணர்ந்து தானும் மாறிய அபிமன்யூ “என்ன நிகழ்கிறது இங்கே?” என்றான்.

“ஒன்றுமே நிகழவில்லை. பதின்மூன்றாண்டுகளாக இதுவே. முறைத்துக்கொண்டும் முனகிக்கொண்டும் இருக்கிறார்கள். நாங்கள் நினைவறிந்த நாள்முதலாக இதை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்றான் ஸ்ரீபானு. “முதலில் இது மிகச் சிக்கலானது என தோன்றும், கடல் அலைகளைப்போல. ஆனால் இரண்டு நாட்கள் கடலோரம் அமர்ந்து அலைகளைப் பார்த்தால் அவற்றின் ஒழுங்கு தெரியவரும். நாலைந்து எளிய கணக்குகள் மட்டுமே. திரும்பத்திரும்ப சலிக்காமல்…” என்றான் பிரதிபானு. “நாங்கள் பதின்மூன்றாண்டுகளாக இந்த அலைகளை பார்த்துவருகிறோம். எளிமையானவை சலிப்பூட்டுகின்றன. அவ்வெளிமையை அறியாதவர்கள் கொள்ளும் அச்சமும் சினமும் விழைவும்போல வேடிக்கையும் பிறிதில்லை.”

“நான் இளைய அத்தையை சென்று பார்க்கவேண்டும்” என்றான் அபிமன்யூ. “மெய்யாகவே செல்கிறீர்களா? மூத்தவரே, இதையெல்லாம் பொருட்டாக கொள்ளாதீர்கள். நாம் கிளம்பி பாலையில் ஒரு எலிவேட்டை ஆடி வருவோம்” என்றான் பிரதிபானு. “இப்படி தூதுக்கள் சென்றபடியே இருக்கும். நுட்பமான தூதுமொழிகள், அவற்றுக்கு மிகுநுட்ப எதிர்மொழிகள் திரும்ப வரும். அவற்றுக்கு உயர்நுட்ப மொழிகள் அனுப்பப்பட்டு உச்சநுட்ப மறுமொழிகள் பெறப்படும்.”

அபிமன்யூ “இல்லை, அவர்களை சந்திக்கவேண்டியிருக்கிறது. ஆகவே நாம் சென்று நம் கடமையை ஆற்றி வருவோம்” என்றான். “நால்வராகச் செல்வது மங்கலமும்கூட.” பிரதிபானு திடுக்கிட்டு “நால்வராகவா? என்ன சொல்கிறீர்கள்?” என்றான். “பிறகென்ன, நான் தனியாகவா செல்லமுடியும்?” ஸ்ரீபானு “நான் இளைய அன்னையை பார்த்தே நெடுநாட்களாகின்றன… என் அன்னைக்குத் தெரிந்தால் கொற்றவைக்கோலம் கொள்வார்” என்றான். “இப்போது அவர்தானே உங்களை அனுப்பியிருக்கிறார்?” என்றான் அபிமன்யூ. “அவரா? எப்போது?” என்றான் ஸ்ரீபானு.

“நன்றாக எண்ணிப்பாருங்கள். என்னை தூதுபோகச் சொன்னார்கள், அப்போது நீங்கள் உடனிருந்தீர்கள்.” ஸ்ரீபானு “ஆம்” என்றான். “என்னை அவர் தன் செய்தியுடன் அனுப்பிய செய்தி வேறு எவருக்கேனும் தெரியுமா?” ஸ்ரீபானு வெறுமனே நோக்கினான். “நான் இன்றுதான் இங்கே வந்துள்ளேன். முறைமைப்படி இன்னும் இங்கே வரவேற்கப்படவே இல்லை. ஆகவே நான் சொல்வனவற்றுக்கு பொருள் இல்லை. அவை அரசியின் சொற்கள் என இரு சான்றுரைஞர்கள் சொல்லும்போதுதான் அவை பொருள்கொள்கின்றன. ஆகவேதான் தன் மைந்தர்களையும் சான்றுரைஞர்களாக அரசி அனுப்பியிருக்கிறார்கள்.”

ஸ்ரீபானு “ஆனால் அவர்கள் அப்படி அனுப்பவில்லையே?” என்றான். “அனுப்பி ஆணையிடவில்லை. ஆனால் அரசியின் உள்ளக்கிடக்கையை புரிந்துகொள்வது அல்லவா நம் பணி? நாம் என்ன எளிய ஏவலரா ஆணைகளை நிறைவேற்ற? அவர் மைந்தர்கள் அல்லவா?” பிரதிபானு ஏதோ சொல்வதற்குள் அதிபானு “இவன் சொல்வது சிறப்பாகவே தெரிகிறது, இளையோரே. நாம் செல்வோம்” என்றான். “அன்னை…” என ஸ்ரீபானு முனக “அன்னையிடம் இவன் சொல்வதை சொல்வோம்” என்றான் அதிபானு. பிரதிபானு முகம் மலர்ந்து “ஆம், அது ஒரு நல்ல வழிமுறை” என்றான். ஸ்ரீபானு “ஆனால் அன்னையிடம்…” என்றபின் “சரி” என்றான்.

fire-iconருக்மிணியின் அறையின் வாயிற்காவலாக நின்ற ஆணிலியின் முகம் அவர்களைக் கண்டதும் சற்றே மாறுபட்டது. யவனநாட்டைச் சேர்ந்தவள் அவள் எனத் தெரிந்தது. அபிமன்யூ தங்கள் வரவை அறிவிக்கும்படி சொல்லிவிட்டு ஸ்ரீபானுவிடம் “அவள் உங்களை பார்த்ததே இல்லைபோலத் தெரிகிறது” என்றான். “யவனக் காவலருக்கு இரண்டே நோக்குதான். ஒன்று நம்மை அவர்களுக்கு தெரியவே தெரியாது. அல்லது நம்மை அவர்கள் கூழாங்கற்கள் என எண்ணுகிறார்கள்.” கதவு திறந்து அவர்களை உள்ளே செல்லும்படி ஆணிலி செய்கை காட்டினாள். அபிமன்யூ உள்ளே நுழைந்து பிற மூவரையும் உள்ளே அழைத்தான். தயங்கி நின்றிருந்த அதிபானு “நீதான் எங்களை அழைத்துவருகிறாய்” என்றான். “என்ன சொல்கிறீர்கள்? மூத்தவரே, உங்களை தொடர்ந்தல்லவா நானே வருகிறேன்? வருக!” என்றான் அபிமன்யூ. அதிபானு வாய்திறந்து அசைவற்று நிற்க “நாங்கள்…” என ஸ்ரீபானு ஏதோ சொன்னான்.

உள்ளிருந்து ருக்மிணியின் மைந்தன் சீசாரு வெளியே வந்து “உள்ளே வருக!” என்றான். அவர்கள் “ஆம், நாங்கள் அதைத்தான் பேசிக்கொண்டிருந்தோம்” என தயங்கினார்கள். அவர்களை உள்ளே அழைத்துச்சென்ற சீசாரு “இளையோர், அன்னையே” என்றான். ருக்மிணி மலர்ந்த முகத்துடன் எழுந்து வந்து “வருக, மைந்தர்களே!” என்றாள். “சென்ற ஆவணி எட்டாமிரவு விழாவில் பார்த்தது… அதற்குள் வளர்ந்துவிட்டீர்கள்.” அறைக்குள் சாருதேஷ்ணனும் சுதேஷ்ணனும் நின்றிருந்தார்கள். சாருதேஷ்ணனின் முகம் மெல்லிய கசப்பு தோன்ற தெரிந்தது. சுதேஷ்ணன் மூத்தவனின் முகத்தை இயல்பாக நடிக்கும் தன்மை கொண்டிருந்தான்.

ருக்மிணி கைகளை விரிக்க பிரதிபானுவும் ஸ்ரீபானுவும் சென்று அவள் கால்களைத் தொட்டு வணங்கினர். அவர்களை தலைதொட்டு வாழ்த்திவிட்டு இரு கைகளாலும் பற்றி தோளுடன் அணைத்துக்கொண்டாள். அதிபானு அவள் காலடியை தொட்டு வணங்கி “நாங்கள் பார்க்க விழைந்தோம், அன்னையே. இவன் ஒரு சரியான விளக்கத்தை அளித்தான். ஆகவே வந்துவிட்டோம்” என்றான். ருக்மிணி நகைத்து “ஆம், இவன் எதையும் விளக்கிவிடுவான்” என்றாள். அவர்களின் தோள்களையும் தலையையும் வருடி “இளைஞர்களாக ஆகிவிட்டீர்கள்…” என்றாள்.

அபிமன்யூ அவளை தாள்வணங்கி வாழ்த்து பெற்று எழுந்து “நான் தனியாக வர அஞ்சினேன். ஏனென்றால் மிகக் கடுமையான சூழ்ச்சிகள் என்னிடம் உள்ளன” என்றான். அவள் புருவம் சுருங்க “என்ன சூழ்ச்சி?” என்றாள். “மூத்த அத்தையின் சொற்கள். அதாவது பிரத்யும்னர் முடிசூடினால் அவரை யாதவர் கைவிடுவார்கள். பிற ஷத்ரியர்களால் அவர் தோற்கடிக்கப்படுவார். ஆகவே நீங்கள் மூத்தவராகிய பானுவை அரசராக ஒப்பவேண்டும். மறுகடனாக அவர் உங்கள் மைந்தர்களை துவாரகையின் இளவரசர்கள் என்று சொல்லிக்கொள்ள ஒப்புதல் அளிப்பார். இதை நான் உங்களிடம் சொல்லி அச்சுறுத்தி ஒப்புதல் பெறவேண்டும்” என்றான்.

“அய்யோ!” என்றான் ஸ்ரீபானு. “என்ன?” என்றான் பிரதிபானு திகைப்புடன். “ஒருவேளை இதைவிட விரிவாகவும் முறையாகவும் நான் சொல்லியிருக்க வேண்டுமோ? மறந்துவிடாமலிருக்க சுருக்கி புரிந்துகொண்டிருந்தேன். அதை அப்படியே சொல்லிவிட்டேன். அத்தை, நீங்கள் இதை ஆங்காங்கே முறைமைச்சொற்கள் போட்டு விரிவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் பல்லாண்டுகாலமாக புழங்கும் மொழி அல்லவா அது?” என்றான் அபிமன்யூ.

“அன்னையே, இவன் விளையாடுகிறான். அன்னை சொன்னது என்னவென்றால்…” என அதிபானு தொடங்க ருக்மிணி “அவன் சொன்னதுதான் சரியானது. அதற்கு என் மறுமொழி இதுதான். இங்கே நாம் எவருமே களமாடுபவர்கள் அல்ல. நாம் களத்தில் காய்கள். அவர் எண்ணுவது நிகழட்டும். அவர் நகர்நுழைவது வரை காப்போம்… வேறேதும் இப்போது செய்வதற்கில்லை” என்றாள். சீசாரு “ஆம், நாம் இங்கே அரசியல் பேசவேண்டாமே” என்றான். “ஆனால் அவன் அரசியல் பேசத்தான் வந்திருக்கிறான்” என்றான் சாருதேஷ்ணன். “ஆம், யாதவர்களின் அரசர் எவர் என்பதை யாதவர்கள் முடிவெடுப்பார்கள் என்றார் அன்னை” என்றான் அபிமன்யூ.

“தன் மைந்தரில் முதல்வன் எவன் என்பதை முடிவுசெய்ய வேண்டியவர் தந்தை. அதை அவர் முடிவுசெய்துவிட்டார். அநிருத்தனின் மைந்தனே துவாரகையை ஆள்வான் என்பது அவர் அளித்த சொல். ஆகவே பிரத்யும்னரே துவாரகையின் முடிசூடுவார் என்பது வழிப்பெறுகை. உன் மூத்த அத்தையிடம் சொல்” என்றான் சாருதேஷ்ணன். “அதை அவர் முன்னரே அறிவார் என்பதனால்தான் தந்தை நகர்நுழைந்து முறைப்படி அறிவிப்பதற்கு முன்னரே பேசி முடிவெடுக்கத் துடிக்கிறார்” என்றான் சுதேஷ்ணன்.

ருக்மிணி “இதெல்லாம் எதற்கு? எவர் முடிசூடினாலும் இங்கே அனைவரும் ஒன்றாக இருந்தாகவேண்டும். இல்லையேல் அனைவருக்கும் எதிரிலக்காகிய துவாரகை வாழ இயலாது” என்றாள். “இதையே நான் சென்று சொல்லிவிடுகிறேன், அன்னையே” என்றான் அபிமன்யூ. “என்ன சொல்லவிருக்கிறாய்?” என்றான் சுதேஷ்ணன் ஐயத்துடன். “அநிருத்தரை அரசராக்க அனைத்து யாதவரும் ஒருங்கிணையவேண்டும் என்று” என்றான் அபிமன்யூ. சீசாரு சிரித்துவிட்டான். அவனை சீற்றத்துடன் பார்த்தபின் “என்ன உளறுகிறாய்?” என்றான் சாருதேஷ்ணன். “இல்லை, அநிருத்தரின் மைந்தரை…” என்ற அபிமன்யூ ஸ்ரீபானுவிடம் “அல்லது பிரத்யும்னரையா?” என்றான்.

“நீ ஒன்றுமே சொல்லவேண்டாம்… அரசர் வந்துசேரும் வரை இங்கே எதுவுமே மாறாது” என்றான் சாருதேஷ்ணன். “அரசருடன் பிரத்யும்னரும் வருகிறார். அவர்கள் நகர்நுழைந்ததும் அனைத்தும் முடிவெடுக்கப்படும்” என்றான் சுதேஷ்ணன். “நன்று, நான் இதையே சொல்கிறேன்” என்றான் அபிமன்யூ. “நீ அதையும் சொல்லவேண்டியதில்லை” என்றான் சாருதேஷ்ணன். ருக்மிணி சிரித்தபடி “அவன் உங்களிடம் விளையாடுகிறான், மைந்தா. இதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லையா உன்னால்?” என்றாள். “விளையாடவில்லை, வினையாடுகிறான்” என்றான் சுதேஷ்ணன்.

அபிமன்யூ “என்னைப்பற்றி என் அன்னையும் அப்படித்தான் சொல்கிறார்” என்றான். ருக்மிணி “இளையோரை சென்று பார். உன்னுடன் அவர்கள் விளையாடி நெடுநாட்களாகின்றன” என்றாள். அபிமன்யூ “ஆம், நான் அதற்குத்தான் இவர்களையும் கூட்டிவந்தேன்” என்றான். சீசாரு ஆறுதலுடன் “வருக, நானே அழைத்துச்செல்கிறேன். நீ வந்த செய்தி முன்னரே இங்கு வந்துவிட்டது. சாரு உன்னைத்தான் கேட்டுக்கொண்டே இருந்தான்” என்றான். அபிமன்யூவும் ஸ்ரீபானுவும் அதிபானுவும் பிரதிபானுவும் ருக்மிணியை வணங்கி விடைபெற்றுக்கொண்டனர்.

இடைநாழியினூடாகச் செல்கையில் “புட்சிறைப் படகில் கடலாடுவதாக திட்டமிட்டிருந்தார்கள். யவன மாலுமிகள் நால்வர் அதற்கான பயிற்சியை அவர்களுக்கு சென்ற சில மாதங்களாகவே அளித்துக்கொண்டிருந்தார்கள். நீயும் வந்தால் கொண்டாட்டமாக இருக்கும்” என்றான் சீசாரு. அபிமன்யூ “ஆம், அப்படி எதையாவது செய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். சில நாட்களாகவே எங்கே பார்த்தாலும் அரசியல்சூழ்ச்சிகளைக் கண்டு சலிப்பு கொண்டிருக்கிறேன்” என்றான். “எனக்கும்தான் சலிப்பாகிவிட்டது. சோர்வூட்டுவது என்னவென்றால் அனைவரும் இளவரசர்கள் என்றால் அரசியலில் திளைக்கவேண்டுமென எதிர்பார்ப்பதுதான்” என்றான் சீசாரு.

அபிமன்யூ உளஎழுச்சியுடன் “ஆனால் மூத்தவரே, போரைப்போல சிறந்த விளையாட்டு வேறில்லை. அதைக் கண்டபின் பிற அனைத்துமே குழந்தைகளுக்குரியவை என்று தோன்றிவிட்டது. நான் இன்று விரும்புவதெல்லாம் ஒரு நல்ல போரைத்தான்” என்றான். சீசாரு திரும்பிப்பார்த்து “போரா? போர் என்றால் இறப்பும் அழிவும் மட்டும்தான், மூடா” என்றான். “ஆம், அத்தனை விளையாட்டுகளிலும் நடிப்பாக இறப்பு உள்ளது” என்றான் அபிமன்யூ. “மெய்யான இறப்புமையத்தில் அமர்ந்து ஆளெண்ணி அகற்றும் விளையாட்டே சரியான விளையாட்டு. மூத்தவரே, பிறப்பும் இறப்பும்போல விரைவும் எழுச்சியும் கொண்ட ஆடல் பிறிதில்லை.”

நூல் பதினைந்து – எழுதழல் – 44

ஆறு : காற்றின் சுடர் – 5

fire-iconசிற்றமைச்சர் சந்திரசூடர் “இவ்வழி” என்று சொல்லி அபிமன்யூவையும் பிரலம்பனையும் அரண்மனையின் இடைநாழியினூடாக அழைத்துச்சென்றார். அபிமன்யூ மெல்ல உளமகிழ்வடைந்தான். “ஒவ்வொன்றும் நினைவிலிருந்து எழுந்து வருகின்றன, பிரலம்பரே. மழைவிழுந்து பாலைநில விதைகள் முளைத்தெழுவதுபோல” என்றான். கைகளை விரித்து “காடு மண்டுகின்றது. பூத்து விரிகின்றது” என்றான். “அந்த வரி பாடுவதற்குரியது” என்றான் பிரலம்பன். “ஆம், ஏதோ சூதர் சொன்னது” என்றான் அபிமன்யூ. “சூதர்கள் முழு வாழ்க்கையையும் முன்னரே பாடிவிடுகிறார்கள். நாம் மறுபடியும் அதை நடிக்கவேண்டியிருக்கிறது” என்றான் பிரலம்பன்.

“நான் இங்கே மாதுலரின் மைந்தருடன் வளர்ந்தேன். மூத்தவர்களுக்கு நான் மைந்தனைப்போல் இருந்தேன். அவர்கள் என்னைவிட பத்துப்பதினைந்தாண்டுகள் மூத்தவர்கள்” என்றான் அபிமன்யூ. “அவருக்கு எத்தனை மைந்தர்?” என்று பிரலம்பன் கேட்டான். “ஏராளம்… அவர் பாலையில் மகரந்தம் விரிந்த மரம். காற்றெல்லாம் பரவினார் என்கிறார்கள் சூதர்கள்” என்றான் அபிமன்யூ. “அந்த ஒப்புமை கூர்நோக்குக்கு உரியது. பாலைமரத்தின் மகரந்தம் காற்றில் சென்று இலைகளிலும் பாறைகளிலும்கூட படிந்திருக்கும். அடுத்த காற்றில் எழுந்து பரவும். அழிவதே இல்லை. அந்த மரம் அழிந்தபின்னரும்கூட காற்றிலிருக்கும் அதன் மகரந்தம் மலர்களை கருவுறச்செய்யும்.”

“ஆம், அஸ்தினபுரியில்கூட பல பெண்கள் அப்படி கருவுற்றிருக்கிறார்கள்” என்று பிரலம்பன் சிரித்தான். அபிமன்யூ “அவருக்கு அரசியர் எண்மர். அவர்களில் எண்பது மைந்தர்கள். அவரை உளத்தலைவனாக ஏற்றுக்கொண்டவர்கள் பல்லாயிரம்பேர். அவர்களின் மைந்தர்களையும் அவருடைய மைந்தர் என்று கொள்வதே இங்கே வழக்கம். அவர் மனைவியர் பதினாறாயிரத்தெட்டு என்றும் அவர்களின் மைந்தர்கள் லட்சம்பேர் என்றும் சூதர்கள் பாடுகிறார்கள்” என்றான்.

பிரலம்பன் “எண்பது இளவரசர்கள்!” என்று சிரித்தான். “எண்பதுபேரின் மைந்தர்கள் நூற்றிஎட்டுபேர் இருக்கிறார்கள்… மூத்தவர் அநிருத்தர்” என்றான் அபிமன்யூ. “அமைச்சரே, இளவரசர்களின் பட்டியலை நம் தலைமைஒற்றரிடம் சொல்லும்” என்றான். சிற்றமைச்சர் திகைத்து பிரலம்பனை பார்த்துவிட்டு “ஆம்” என ஏதோ சொல்ல முயன்றார். “இவர் அவர்களை உளவறிய வேண்டியிருக்கிறது” என்றான் அபிமன்யூ. அவர் தலையசைத்துவிட்டு “இடப்பக்கம் இணைநிலை என அமைந்த எட்டுத்துணைவியரும் எந்தையை மணந்து பத்து மைந்தர் என ஈன்றனர். அவர்கள் விண்ணுலகில் ஆழிவெண்சங்குடன் அமர்ந்தவனின் அவையமர்ந்த தெய்வங்களின் மண்வடிவங்கள்” என்றார்.

“இவர்கள் அனைவருக்குமே இந்தப் பாடல் தெரியும். நினைவில் வைத்திருக்கவேண்டும் அல்லவா?” என்றான் அபிமன்யூ தாழ்ந்த குரலில். “சொல்லப்போனால் இங்கே சிற்றமைச்சராக இருக்க வேண்டிய தகுதியே இப்பெயர்களையும் முறைகளையும் நினைவில் வைத்திருந்து ஒப்பிப்பதுதான். எண்பதில் ஒருவரை அடையாளம் கண்டு முறைமைசெய்ய மறந்தாலும் தலை போய்விடும்” என்றபின் தயங்கியபடி நோக்கிய அமைச்சரிடம் “பாடுக, அமைச்சரே!” என்றான்.

சிற்றமைச்சர் “முதன்மை அரசி ருக்மிணியின் மைந்தர்களாக பிரத்யும்னன், சாருதேஷ்ணன், சுதேஷ்ணன், சாருதேஹன், சீசாரு, சாரகுப்தன், பரதசாரு, சாருசந்திரன், விசாரு, சாரு ஆகியோர் பிறந்தனர். அவர்கள் நிகரற்ற வில்லவர்கள். அரசுசூழ்தலில் முதல்வர்கள். மண்ணாளப் பிறந்தவர்கள். அன்னை சத்யபாமை பானு, சுபானு, ஸ்வரபானு, பிரபானு, பானுமான், சந்திரபானு, பிரகத்பானு, அதிபானு, ஸ்ரீபானு, பிரதிபானு ஆகியோரை ஈன்றார். அவர்களே தொல்புகழ் யாதவப்பெருங்குலத்தை இம்மண்ணில் அழியாது நிலைநிறுத்தும் நல்லூழ் கொண்டவர்கள்.”

“இளைய அரசி ஜாம்பவதி சாம்பன், சுமித்ரன், புருஜித், சதாஜித், சகஸ்ரஜித், விஜயன், சித்ரகேது, வசுமான், திராவிடன், கிராது ஆகியோரை ஈன்றார். ஜாம்பவானின் அழியாப்புகழை இப்புவிக்கு அறிவிப்பவர்கள் அவர்கள். ராகவராமன் முதல் இளைய யாதவர் வரை நீளும் தொல்மரபல்லவா அது?” என்றார் சிற்றமைச்சர். “நக்னஜித்தி என்னும் சத்யை அரசியரில் வீரம் மிக்கவர். அவர் வீரா, சந்திரா, அஸ்வசேனன், சித்ராகு, வேகவான், விருஷன், அமன், சங்கு, வாசு, குந்திகன் ஆகியோரை ஈன்றார். அவர்கள் இன்று யாதவப்பெரும்படையை போர்முதல்வர்கள் என நின்று காக்கிறார்கள்.”

“இளையவரை தெய்வமென தன் நெஞ்சில் சூடிய அரசி காளிந்தி வயிறு கனிந்து சுருதன், கவி, விருஷன், களிந்தவீரன், சுபாகு, பத்ரன், சாந்தன், தர்ஷன், பூர்ணநமாம்ஷு, சோமகன் ஆகிய மைந்தர்களை இளையவருக்கு அளித்தார். அவர்கள் அவருடைய அடியை சென்னிசூடும் மைந்தர்கள். இக்கோட்டையின் காவலர்கள். லக்‌ஷ்மணை தன் பரிசாக அவருக்கு பிரகோஷன், காத்ரவான், சிம்மன், பலன், பிரபலன், ஊர்த்துவாகன், மகாசக்தன், சகன், ஓஜஸ், அபரஜித் என்னும் மைந்தர்களை அளித்தார். அவர்களை இந்நகர் காவல்தெய்வங்கள் என வழிபடுகிறது.”

“அரசியாகிய மித்ரவிந்தை விருகன், கர்ஹன், அனிலன், கிருதரன், வர்தனன், ஆனந்தன், மகாம்சன், பவனன், வஹ்னி, சூதி என்னும் மைந்தர்களை பெற்றார். இளையஅரசியாகிய பத்ரை சங்க்ரமஜித், பிருகத்சேனன், சூரன், பிரகரணன், அரிஜித், ஜயன், சுபத்ரன், வாமன், ஆயு, சத்யகன் ஆகியோரை ஈன்றார். அவர்களால் பொலிகிறது அரசரின் அழியாப் பெருங்குருதி மரபு. அதை வானுறையும் மூதாதையர் காக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் அமைச்சர்.

“நன்று. ஆனால் நீர் முழுமையாக பாடவில்லை” என்றான் அபிமன்யூ. அவர் திகைத்து திரும்பிப்பார்க்க “பதினாறாயிரத்தெட்டு மனைவியரையும் அவர் மைந்தரையும் சொல்க!” என்றான். அவர் வாய்திறந்து அசைவற்ற விழிகளுடன் நோக்க பிரலம்பன் “அவர்களின் பெயரர்களையும் சொன்னால் நினைவில்கொள்ள இயலுமே” என்றான். அமைச்சர் அதன் பின்னரே புன்னகைத்து “அது கடற்கரை மணல்களைப்போல எண்ணற்கரியது. கடல் அலைகளைப்போல நிகழ்ந்துகொண்டே இருப்பது” என்றார்.

“ஆம், இதோ இக்கணம் எங்கோ அவருக்கு ஒரு மைந்தன் பிறக்கிறான். நான் அதை உணர்கிறேன்” என்றான் அபிமன்யூ. “அதற்கு சற்றுமுன் ஒரு மகள் பிறந்தாளே, நீங்கள் அறியவில்லையா?” என்றான் பிரலம்பன். அமைச்சர் புன்னகை செய்தார். “வருக, இளவரசே… இதுவே இளையோர் அரண்மனை… பேரரசி சத்யபாமை இங்கிருந்து இந்நகரை ஆள்கிறார்” என்றார். “நகரையா?” என்றான் அபிமன்யூ. “ஆம், நகரை முழுமையாகத்தான் ஆள்கிறார்கள்” என்றார் அமைச்சர். “எஞ்சியவர்கள்?” என்றான் பிரலம்பன். “அவர்களும் நகரை முழுமையாக ஆள்கிறார்கள்” என்றார் அமைச்சர்.

திகைப்புடன் “அதெப்படி?” என்றான் பிரலம்பன். “காற்று ஆளும் இடத்தை ஒளியும் மணமும் ஆள்கிறதல்லவா?” என்றார் அமைச்சர். “ஆகா!” என்றான் பிரலம்பன். “இளவரசே, அந்தணர் அந்தணர்தான்…” அபிமன்யூ “ஆம், அவர்கள் சொலல்வல்லர், அதில் மட்டும் சோர்விலர்” என்றான்.

fire-iconஅறைவாயிலில் சிற்றமைச்சர் சந்திரசூடர் சற்று நின்று அபிமன்யூவிடம் “இங்கு காத்திருங்கள்” என்றபின் கதவைத் திறந்து உள்ளே சென்றார். அபிமன்யூ பிரலம்பனிடம் “இன்னமும் எவரும் இங்கு பட்டத்தரசராக அறிவிக்கப்படவில்லை. ஆகவே எட்டு மனைவியரின் எண்பது மைந்தருக்கும் முடிசூடும் விழைவு இருப்பதுபோல் தெரிகிறது” என்றான். அவன் அதை இயல்பான குரலில் சொன்னமையால் பிரலம்பன் திடுக்கிட்டு நாற்புறமும் பார்த்தபின் “மெதுவாக பேசுங்கள், இளவரசே” என்றான். “நான் இங்கே அஞ்சவேண்டியது ஏதுமில்லை. இங்குள்ள அனைவருக்கும் என்னை தெரியும்” என்றான் அபிமன்யூ.

பிரலம்பன் “நான் இங்கு நின்றுகொள்கிறேன்” என்றான். “இங்கு முறைமையென ஏதுமில்லை. இது அரச அவையும் அல்ல. அவர்கள் என் முறைக்குருதியர்.. இளையோனாக அவர்களுடன் இந்நகரின் தெருக்களில் ஆடிவிளையாடியிருக்கிறேன். மூத்தவர் பானு என்னை தோளில் சுமந்து சென்ற நினைவு உள்ளது” என்றான். பிரலம்பன் ஏதோ சொல்ல வாயசைப்பதற்குள் கதவு திறந்து வெளியே வந்த சிற்றமைச்சர் “உபப்பிலாவ்யத்தின் இளவரசர் அபிமன்யூவிற்கு துவாரகையின் மூத்த இளவரசர் பானு திருமுகம் அளிக்க ஒப்புதல் கொண்டுள்ளார்” என்றார்.

“இவர் என் அணுக்கன்” என்று அபிமன்யூ சொல்ல “தனியறைக்குள் பிறருக்கு நுழைவொப்புதல் அளிப்பதில்லை” என்றார் சிற்றமைச்சர். பிரலம்பனை ஒருகணம் திரும்பி நோக்கியபின் அபிமன்யூ உள்ளே சென்றான். பிரலம்பன் ஆறுதலுடன் நிமிர்ந்து ஆடையை இழுத்துவிட்டுக்கொண்டான். எடைமிக்கதாயினும் பித்தளைக் குடுமிகளில் ஓசையின்றி சுழன்ற கதவு அவனுக்குப் பின்னால் பட்டுத்திரைபோல மூடிக்கொண்டது. அபிமன்யூ இயல்பான நடையுடன் சிரித்தபடி உள்ளே சென்றான்.

அறைக்குள் பானுவும் பிரபானுவும் சுபானுவும் பீடங்களில் அமர்ந்திருக்க பிற உடன் பிறந்தார் மூவர் சாளரத்தருகே நின்றிருந்தனர். அபிமன்யூ உள்ளே நுழைந்து உரக்க “வணங்குகிறேன், மூத்தவரே. சற்று பருத்துவிட்டீர்கள்” என்றான். பானு அச்சொற்களை கேட்காதவன்போல அவன் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். பிற இருவரும் சற்றே அசைந்தனர். சிற்றமைச்சர் ஏதோ சொல்ல வாயெடுக்க அவரை விழிகளால் விலக்கிய பிரபானு அபிமன்யூவிடம் ஏதோ சொல்ல எண்ணும் முகம் கொண்டிருந்தான்.

அபிமன்யூ அதே சிரிப்புடன் பிரபானுவைப் பார்த்து “இங்கு வந்து நெடுநாட்களாகின்றன. நான் கண்ட நகர் முற்றிலும் மாறிவிட்டிருக்குமென்று எண்ணினேன். நன்று, என் கனவுகளில் வரும் நகராகவே எஞ்சுகிறது. எப்படியிருக்கிறீர்கள்? சிறு படகுகளில் அலைமேல் செல்லும் விளையாட்டு இங்கு இப்போதும் நிகழ்கிறதா? சற்று இளைப்பாறிய பின் நல்ல கரும்புரவி ஒன்றை எடுத்துக்கொண்டு துறைமேடை நோக்கிச் செல்லும் பாதையில் முழுவிரைவில் பாய்ந்திறங்க வேண்டுமென்று விழைகிறேன்” என்றான்.

அவர்கள் முகங்கள் அனைத்தும் அவனை விலக்கும் ஒவ்வாநோக்கு கொண்டிருந்தன. பானு சிலைபோலிருக்க மூத்தவனை ஒருகணம் நோக்கிய சுபானு அபிமன்யூவிடம் “துவாரகையின் இளவரசரின் முன் நீங்கள் இன்னும் முறைமைச்சொல் உரைக்கவில்லை, இளவரசே” என்றான். “இல்லையே, வந்ததும் அவரை வணங்கினேனே?” என்றபின் சிரித்து “விளையாடுகிறீர்களா? நான் அரச முறையாக இங்கு வரவில்லை. மேலும் நான் எந்த நிலத்தை ஆள்கிறேன் என்றே எனக்கு இன்னும் உறுதியாகவில்லை. நான் உபப்பிலாவ்யத்திலிருந்து வருகிறேன். என் மாதுலரின் நகருக்கு, அவரது மைந்தராக” என்றான்.

“அரசகுடியினர் எப்போதும் அரசப்பொறுப்பிலேயே இருக்கிறார்கள். அவர்கள் அரசமுறைமைகள் அனைத்தையும் கடைப்பிடிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள்” என்று பிரபானு சொன்னான். அபிமன்யூ “இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? முறைமைச்சொற்கள் உரைத்து தலைவணங்க வேண்டுமா?” என்றான். “ஆம்” என்றான் சுபானு. “பொறுங்கள்” என்றபின் திரும்பிச்சென்று கதவைத் திறந்து “பிரலம்பரே, உள்ளே வாரும்” என்றான்.

பிரலம்பன் உள்ளே வந்து அனைவர் முகங்களையும் ஒருகணத்தில் விழிதொட்டுச்சென்று அபிமன்யூவை நோக்கினான். அபிமன்யூ “என்னை இங்கு அறிவியும்” என்றான். அக்கணமே அனைத்தையும் புரிந்துகொண்டு கூத்து நடிகனைப்போல காலெடுத்து வைத்து தலையுயர்த்தி நின்று உரத்த பெருங்குரலில் “அஸ்தினபுரியின் மாமன்னர் பாண்டுவின் பெயர்மைந்தரும் மும்முடி சூடி சத்ராஜித் என அரியணைஅமர்ந்த பேரரசி திரௌபதியின் அறமைந்தரும் அறச்செலவர் யுதிஷ்டிரரின் வழித்தோன்றலும் குருகுலத்தோன்றல் இளையபாண்டவர் அர்ஜுனரின் குருதிமைந்தருமான இளவரசர் அபிமன்யூ வருகை தந்துள்ளார். அவரை இந்திரப்பிரஸ்த நகரியின் பட்டத்து இளவரசராக உபப்பிலாவ்யத்தில் கூடிய அரசப்பேரவையில் முறைப்படி அறிவித்திருக்கிறார்கள். படைத்துணையாகிய விராடப்பேரரசின் இளவரசியை மணந்து புவிவெல்லும் கோல்சூடியுள்ளார். பிற நாடுகளில் முறையாக பட்டத்து அரசராக அறிவிக்கப்பட்டவர் எவரோ அவர் மட்டும் இளவரசரின் நிகர் நின்று முறைமைச்சொல் உரைக்கலாம். பிறர் அகன்று நின்று தங்கள் பணிந்த வாழ்த்துக்களை தெரிவிக்கும்படி இந்திரப்பிரஸ்தத்தின் செங்கோல் கோருகிறது” என்றான்.

பானு திகைத்து இரு கைகளாலும் பீடத்தின் விளிம்பை பற்றிக்கொண்டான். அபிமன்யூ மேலும் நாடகத்தன்மை தோன்ற காலெடுத்து வைத்து “இந்திரப்பிரஸ்தத்தின் பட்டத்து இளவரசராக நகர் நுழைந்திருக்கிறேன். எனது கொடி அரண்மனை முகப்பில் எழட்டும். வரவேற்பு முரசுகள் முழங்கட்டும். இங்கு பட்டத்து இளவரசரின் உடனிளையோர் எவரோ அவர் என்னை வாயிலில் வந்து வரவேற்றிருக்க வேண்டும். நன்று, இனிமேல்கூட அவர் தன் பிழையை நிகர் செய்யலாம்” என்றான்.

பானு சினத்துடன் “இங்கு பட்டத்து இளவரசன் நான். அதை அனைவரும் அறிவர்” என்றான். “துவாரகையின் அரசர் இளைய யாதவர் அதை அறிவாரா?” என்று அபிமன்யூ கேட்டான். அதிலிருந்த எள்ளலைப் புரிந்துகொண்டு பானு எழுந்து நின்று “எவர் முன் நின்று சொல்லெடுக்கிறாய் தெரிகிறதா?” என்று கூச்சலிட்டான். “இளவரசே, துவாரகையின் அரசருக்கு எட்டு மனைவியரில் எண்பது மைந்தர். மேலும் பதினாறாயிரத்துஎட்டு பெண்களுக்கு அவர் உளத்துணைவர் என்றும் அவர்கள் ஈன்ற மைந்தர்களுக்கு அவரே அறத்தந்தை என்றும் சொல்லப்படுகிறது. அத்தனை மைந்தருக்கும் நான் அவைமுறைமை செய்தால் என்னை மருத்துவ நிலையத்தில் ஓராண்டுகாலம் முதுகுக்கு ஒத்தடமும் வேதனமும் செய்து சீர்படுத்தி எடுக்க வேண்டியிருக்கும். பொறுத்தருள்க! எவர் பட்டத்து இளவரசர் என்று துவாரகையின் அரசர் அறிவிக்க வேண்டும். பதினாறாயிரத்தெட்டு மனைவியரின் அத்தனை மைந்தருக்கும் அவர்களே பட்டத்தரசர் என்று எண்ணமிருக்கலாம். அவர்களின் குருதியுடன்பிறப்புகள் அதை நம்பவும் கூடும்” என்றான்.

பானு பற்கள் தெரிய “சிறுமை செய்யும் சொல்” என்றான். “இங்கு நான் என் மாதுலரின் மைந்தனாக வந்தேன். அரச முறைமையை நினைவுறுத்தியவர் தாங்கள்தான். ஆகவே நான் கோருவதும் அரச முறைமையைத்தான்” என்றான். சுபானு “மூத்த அரசியின் மைந்தர் அவரே. அவர் பட்டத்தரசராவதில் இங்கெவருக்கும் மறு கருத்தில்லை” என்றான். “மறு கருத்து எஞ்சிய அத்தனை இளவரசர்களுக்கும் இருக்கும்” என்று அபிமன்யூ சொன்னான். “துவாரகையின் இப்பகுதியின் பட்டத்தரசர் என்று நீங்கள் உங்களை சொன்னால் ஓரிரு நாழிகைப்பொழுதுக்கு அதை என்னால் ஏற்க முடியும்.”

“ஆனால் அவ்வாறு உங்களை துவாரகையின் அரசர் அமைத்துப்போன ஓர் ஓலையையோ அமைச்சருக்கு அளித்த ஆணையையோ சுட்டிக்காட்டும்படி என் அணுக்கனாகிய இவர் கேட்பார். இவர் பெயர் பிரலம்பன். என் ஒற்றரும்கூட. மிக ஆணவம் மிக்கவர். ஷத்ரிய குடிப்பிறந்தாலும் சூதர்களுக்குரிய எள்ளலும் கசப்பும் கொண்டவர். பாரதவர்ஷத்தின் அத்தனை அரசுகளுக்கும் பட்டத்து இளவரசராக துவாரகையின் ஒவ்வொரு இளவரசரை அனுப்பினாலும் எஞ்சியவர்கள் ஒரு நல்ல படையெனத் திரள்வார்கள் என்று இவர் சொன்னாலும் சொல்லக்கூடும்” என்றான் அபிமன்யூ.

“மேலும் முறைமைகளைப்பற்றி என்னைவிடவும் கவலை கொள்பவர் இவர். என்னிடமே முறைப்படிதான் பேசுவார். இவரிடம் நான் சொல்லவேண்டிய அரசச் செய்திகளை பறவைச்செய்தி வழியாக உபப்பிலாவ்யத்திற்கு அனுப்பி அதை அமைச்சர் சுரேசர் ஓலைச்செய்தி வழியாக இவருக்கு அனுப்புகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவர் என்ன கேட்பார்? சத்யபாமை அத்தை யாதவகுலம். ருக்மிணி அத்தை ஷத்ரிய குலத்தில் பிறந்தவர். எக்குடிப்பிறந்தவராயினும் அரசர் மணக்கும் ஷத்ரியப்பெண்ணின் மைந்தரே பட்டத்தரசராக வேண்டுமென்பது பாரதவர்ஷத்தின் மாறா நெறிகளில் ஒன்று என்பார். நான் தட்டிக்கேட்கவே முடியாது. தீய உள்ளம் கொண்ட ஷத்ரியர்.” பிரலம்பன் மீசையை நீவி ஆம் என தலையசைத்தான்.

“பிரத்யும்னர் முறையாக அறிவிக்கப்படாத பட்டத்து அரசரென்று ஐம்பத்தாறு பாரதநாட்டு ஷத்ரிய அரசர்களாலும் முன்னரே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர் மைந்தர் அநிருத்தரே வழித்தோன்றலென்றும் சூதர்கள் பாடுகிறார்கள்” என்று அபிமன்யூ தொடர்ந்தான். “எவர் சொன்னது? சொன்னவர்களை என் முன் வரச்சொல்” என்றான் பானு. அபிமன்யூ “ஒற்றரே, அரண்மனைக்கோட்டையில் இருந்து அத்தனை சூதர்களையும் அரண்மனைக்கு வரச்சொல்லி முரசறைய ஆணையிடுங்கள்” என்றான். “ஆணை!” என பிரலம்பன் திரும்ப பானு “அறிவிலி, அத்துமீறி சொல்லெடுக்கிறாய்” என்று கூவியபடி அபிமன்யூவின் கையை பற்றினான்.

“நயத்தக்க நற்பண்பு கற்றிருக்கிறீர்கள், இளவரசே. அவையில் இளையோன் என எண்ணி என் கையை பற்றுகிறீர்கள். இதையே ஏதேனும் களத்தில் செய்ய வந்திருந்தால் தலையல்லவா அறுந்து கீழே விழுந்திருக்கும்?” என்று அபிமன்யூ சொன்னான். பானு திடுக்கிட்டு கையை விலக்கிக்கொண்டான். பிரலம்பன் “அவர் தங்களை ஆரத்தழுவ விரும்பலாம், இளவரசே” என்றான். பானு “செல் வெளியே… நான் உன்னிடம் ஒரு சொல்லும் உரைக்க விரும்பவில்லை” என்றான்.

அபிமன்யூ தலைவணங்கி “தங்களை நான் முதலில் சந்திக்க வந்தது முன்பொருநாள் இந்தத் தோள்களில் அமர்ந்து இந்நகரைச் சுற்றிவந்தேன் என்று எண்ணியதனால்தான். உள்ளே நுழைகையிலேயே ஒவ்வாதன சில என் விழிகளுக்கு பட்டன. இங்கு அவற்றை உறுதி செய்துகொண்டேன். எழுந்து விண்தொடும் பெருமையின் காலடியில் என்றும் சிறுமைகளையே பரப்பி வைக்கின்றது விண்ணாளும் ஊழ். இந்நகர், இக்குலம் என்னவாகப் போகிறதென்று இன்று அறிந்தேன். அது அவர் கண்ணெதிரில் நிகழுமென்றும் தெளிந்தேன்” என்றான்.

அவன் குரல் மாறியதை உணர்ந்த பானுவின் நீட்டிய கை தளர்ந்தது. “ஆம், அது அவ்வாறே ஆகும். மானுடன் மண்ணில் நின்றிருக்க வேண்டியவன். தெய்வங்களின் பீடத்தில் அவன் அமர்ந்தால் மானுடனென அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்தும் அகன்று செல்லும். குலமும் குடியும் குருதியும் கொடிவழியும்” என்றபின் திரும்பி “பிரலம்பரே” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசர் அவை நீங்குகிறார். முறைப்படி முடியளிக்கப்படாத அனைவரும் தலைவணங்குக!” என்றான்.

பானு இரு கைகளையும் விரல் சுருட்டி இறுக்கி பற்களைக் கடித்தபடி ஈரம் படர்ந்த விழிகளுடன் நோக்கி நிற்க பிறர் அவன் ஆடிப்பாவைகளென தோன்றினர். அபிமன்யூ திரும்பி நடக்க கூத்துமேடைத்தனம் மேலும் மிகையெனத்தோன்ற காலடி வைத்து பிரலம்பன் அவனுக்குப் பின் சென்றான்.

fire-iconகதவுக்கு அப்பால் காலடியோசை கேட்டது. “நுழையலாமா?” என்று அமைச்சர் சுதமர் அறைவாயிலை சற்றே திறந்து கேட்டார். “வருக மூத்தவரே, இப்பொழுதின் இறுக்கத்தை உங்கள் முகத்தின் சிறுகீற்றே விலக்கிவிட்டது” என்று புன்னகையுடன் கூறியபடி அபிமன்யூ இரு கைகளையும் விரித்து அணுகினான். உள்ளே வந்த சுதமர் “இளைத்திருக்கிறீர்கள், இளவரசே” என்றார். “போர்… மெய்யாகவே போர். விழுப்புண்களை பார்க்கிறீர்களா?” என்று தோளை காட்டினான். அவர் சிரித்து “கேள்விப்பட்டேன்” என்றார்.

“நெடும்பயணங்கள், கூடவே துயில்நீப்பு” என்றான் அபிமன்யூ. “விழாவென்றால் துயில் நீக்காது அமையாது” என்றபடி சுதமர் அமர்ந்தார். அறைக்குள் அபிமன்யூவின் மரவுரிகளை எடுத்து விரித்துக்கொண்டிருந்த பிரலம்பனைப் பார்த்து “இவர்தானா அது? இதற்குள் அரண்மனை முழுக்க இவரைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார். அபிமன்யூ “என் அணுக்கர். நான் உரைப்பவற்றை ஒருநாள் கழித்து புரிந்துகொள்வார். உரைக்காதவற்றை உடனே புரிந்துகொள்வார்” என்றான். பிரலம்பன் “எஞ்சியவற்றை நான் உரைப்பேன்” என்றான்.

சுதமர் நகைத்து “அணுகியவர்களை தன்னைப்போலாக்கும் திறன்கொண்டவர் என்று இளைய யாதவரை அறிந்திருக்கிறேன். மாதுலருக்கு உகந்த மைந்தன் நீங்கள்” என்றபின் சற்றே விழிமாறி “அவ்வகையில் நல்லூழ் கொண்டவர் இளைய யாதவர். தன் குருதி தான் என முளைப்பதைப் பார்க்கும் வாய்ப்பு எந்த தந்தைக்கும் அமைந்தாக வேண்டும். மண்ணில் மானுடருக்கு தெய்வங்கள் அளித்த நற்கொடைகளில் ஒன்று அது. இங்கு நுரைக்குமிழிகளென மைந்தர் பெருகிச் சூழ்ந்திருக்கிறார் அவர். ஒவ்வொன்றும் அவர் முகமே. ஆனால் ஒருமுகமும் அவரல்ல. தேவியர் வயிற்றில் எழாதது தங்கையின் வயிற்றில் எழுந்தது எனில் எண்மரையும் ஈரெண்ணாயிரத்தவரையும் கடந்து அவர் அருகே நின்றிருப்பவள் அவளே” என்றார்.

அபிமன்யூ அவர் அருகே அமர்ந்தபடி “இங்கென்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது, மூத்தவரே?” என்றான். “நீங்கள் மூத்த இளவரசரிடம் சொன்னதுதான். எண்பது மைந்தருக்கும் முடிசூடும் விழைவு” என்றார் சுதமர். அபிமன்யூ “எட்டு மூத்தவர்கள். அவர்களில் எவர் அகவையில் மூத்தவர்?” என்றான். “அவருக்குப் பிறந்த முதல் மைந்தர் பானு. அந்தகக் குடியின் அத்தனை யாதவ இயல்புகளும் அவரில் கூடியுள்ளன. அவற்றில் பெரும்பகுதி அறிவின்மை என்பதை சொல்லவேண்டியதில்லை” என்றார் சுதமர். “ஆனால் அவருக்கு நான்குநாழிகை கடந்து அதே நாளில் பிறந்தவர் இரண்டாவது மைந்தர் சாம்பன். களம் நின்று போர் தொடுக்கவும் அஞ்சாது சென்று வென்று மீளவும் இக்குடியில் அவரே முதல்வர்.” அபிமன்யூ “ஆம், இக்குடியில் அவர் ஒருவரின் அம்புகளே இலக்கை அடைகின்றன” என்றபின் பிரலம்பனிடம் “என்னிடம் நூறுக்கு ஓர் அம்பென எதிர்நிற்பார் அன்றெல்லாம்” என்றான்.

சுதமர் புன்னகையுடன் “மூன்றாமவர் பிரத்யும்னர். அரசரென அமர்வதற்கு அனைத்து தகுதிகளும் அவருக்கே. ஷத்ரியக் குடிமுறைகளும் அதையே உறுதி செய்கின்றன” என்றார். “ஆனால் இப்போதுவரை பட்டத்து இளவரசர் எவரென்பதை இளைய யாதவரால் அறிவிக்கமுடியவில்லை. பலமுறை பிரத்யும்னரை அறிவிக்க முற்பட்டார். ஆனால் மூத்த யாதவர் அதை விரும்பவில்லை. யாதவக்குருதிக்கு ஷத்ரிய அரசரா என்றார். அவர் துணைவியார் ரேவதிதேவி சத்யபாமையை விரும்பாதவர். ஆகவே பானுவுக்கு முடிசூட்டுவதையும் அவர் விரும்பவில்லை. எஞ்சியவர் சாம்பன். அவருக்கு முடிசூட்ட யாதவர்கள் ஒப்பவில்லை. அவர் வேடர்குருதி. காளிந்தியின் மைந்தர் அரசராவதைப்பற்றி எண்ணவே வேண்டியதில்லை.”

“ஒருவேளை இளையோர் சிறுவராக இருந்தபோதே அறிவித்திருந்தால் எழும் குடிப்பூசல்களை வென்று நிலைகொள்ள அவருக்கு பொழுதமைந்திருக்கும். இன்று ஒருபுறம் குடிப்பூசல்கள் மறுபுறம் முடிப்பூசல்கள்” என்றார் சுதமர். “அறிந்திருப்பீர்கள், ஒவ்வொரு நாளும் இந்நகரிலிருந்து யாதவர்கள் அகன்று செல்கிறார்கள். ஐங்குடி யாதவர்களும் துவாரகைக்கு வெளியே ஒருங்குகூடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மூத்த யாதவரும் கிருதவர்மரும் தலைமைகொள்ளவிருக்கிறார்கள்” என்றார் சுதமர். “ஆம், வாயிற்காவலர்களிலிருந்தே யவனர்களைத்தான் பார்த்துக்கொண்டு வந்தேன்” என்றான் அபிமன்யூ.

“ஒவ்வொரு நாளும் இங்கே அமைச்சனின் பீடம் வெம்மைகொண்டு வருகிறது. அவர் வருவதை எண்ணிக்காத்திருக்கிறேன்” என்றார் சுதமர். “நான் வந்தது அவர் எப்போது நகர்புகுவார் என அறியவே.” அபிமன்யூ “நான் அறியேன். இங்கு அவர் இருப்பார் என எண்ணித்தான் நான் வந்தேன்” என்றான். சுதமர் பெருமூச்சுவிட்டு “என் கனவெல்லாம் இதையெல்லாம் அவரிடம் அளித்துவிட்டு மீண்டும் கோகுலத்திற்கே மீளமுடியுமா என்பதே” என்றார். “பதினான்காண்டுகள்… இங்கே முதன்மைப் பிரிவுத்துயரை அடைந்தவர்கள் அவருடைய இளமைத்தோழர்களாகிய நாங்களே.”

“ஸ்ரீதமரும் வசுதமரும் இங்குதான் இருக்கிறார்கள் அல்லவா?” என்றான் அபிமன்யூ. “ஆம், நாங்களே இந்நகரை அன்றாடம் நடத்திவருகிறோம். எட்டு மைந்தர்குழுக்களுக்கிடையே பந்தென உதைபடுகிறோம்” என்றார் சுதமர். “ஸ்தோக கிருஷ்ணனும் விலாசியும் அம்சுவும் பத்ரசேனரும் புண்டரிகரும் விடங்கரும் காலவிங்கரும் கண்ட இளைய யாதவர் அங்கே அவர்களுடன் பிரியாது விளையாடிக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு காலத்துயரென்பதில்லை.” அபிமன்யூ “மூத்தவரே, இளைய யாதவர் வேதமையம் என ஒரு முழுமெய்யை முன்வைக்கிறார் என்று அறிவீர்களா? அந்தக் கொள்கையை கற்றிருக்கிறீர்களா?” என்றான்.

“ஒரு சொல்லும் அறியேன். என் தோழரும் அறியார்” என்று சுதமர் மலர்ந்த முகத்துடன் சொன்னார். “ஒருமுறைகூட அவர் எங்களிடம் அதைப்பற்றி பேசியதில்லை. அறிய விழைவும் இல்லை. இப்பிறவியில் எங்கள் கடன் அவர் உள்ளத்தை நடத்துவதும் அவருக்கு உகந்தவராக உடனிருப்பதும் மட்டுமே.” அபிமன்யூ “அவர் உள்ளத்தை எப்படி அறிவீர்கள்?” என்றான். அவர் திகைத்து “எப்படி என்றால்…” என்றபின் மேலும் குழம்பி “மெய்தான்… அவர் சொன்னதே இல்லை. ஆணையென ஒன்றும் உரைத்ததில்லை” என்றார். பின்னர் “இளையோனே, எவ்வாறோ அவர் உள்ளத்தை நாங்கள் தெளிவாக காண்கிறோம். ஒருமுறைகூட அவர் என்ன எண்ணுவார் என எண்ணியதே இல்லை. அவர் பிறிதொன்று கருதியதும் இல்லை” என்றார்.

“ஏனென்றால் உங்களுக்கு என உள்ளம் இல்லை” என்றான் அபிமன்யூ. அவர் முகம் மலர்ந்து “ஆம், நாங்கள் அறியாதுகூட பிறிதொன்றை இயற்றவியலாது. ஏனென்றால் நாங்கள் பிறிதல்ல” என்றார். “பெரும்பேறு பெற்றவர் நீங்கள், மூத்தவரே” என்று அபிமன்யூ சொன்னான். “பெருங்காதல் பெண்டிருக்கு மட்டுமல்ல தோழருக்கும் உரியது என நூல்கள் சொல்கின்றன. இன்று அதை கண்டேன்.” குனிந்து அவர் கால்களைத் தொட்டு “என்னை வாழ்த்துக!” என்றான். அவர் முகம் நெகிழ அவன் தலைதொட்டு “நிறைவுகொள்க!” என வாழ்த்தினார்.

நூல் பதினைந்து – எழுதழல் – 43

ஆறு : காற்றின் சுடர் – 4

fire-icon“நகரின் ஒவ்வொரு முகமும் சோர்ந்து தனிமை கொண்டிருக்கிறது. அரண்மனையில் எட்டு அரசியரும் ஒருவரோடொருவர் உறவே இன்றி தங்கள் மைந்தர்களுடன் தனித்து வாழ்கிறார்கள். இளைய யாதவர் எழுந்துவிட்டார் என்றும், களமெழுந்து அசுரமன்னர் பாணரை வென்றார் என்றும் இங்கு செய்தி வந்தது. எக்கணமும் அவர் துவாரகையில் நுழையக்கூடுமென்றார்கள். அவர் வருகையை எண்ணி நகரை அணி செய்யத்தொடங்கினார்கள். அப்போது நான் அங்கிருந்தேன். துவாரகை களிவெறி கொண்டு அனைத்து கட்டுகளையும் மீறும் என்று நான் எதிர்பார்த்தேன்” என்று சுபாலர் சொன்னார்.

அன்று காலை அரண்மனையிலும் கோட்டை முகப்பிலும் முரசுகள் முழங்கி படை வெற்றியை அறிவித்தன. முதலில் யாரை துவாரகை வென்றது என்று எவருக்கும் தெரியவில்லை. வெற்றி முரசு நகரில் ஒரு கார்வை முழக்கத்தையே உருவாக்கியது வெற்றிக்குரல்களும் களிப்போசைகளும் நிகழவில்லை. நான் சிற்றங்காடிக்குள் இருந்தேன். முரசொலி கேட்டதுமே போர்முரசா என்று கேட்டபடி வெளியே வந்தேன். பின்னர் மையத்தெருவிற்கு வந்து பார்த்தபோது படைவீரர்களும் துவாரகையின் குடிமக்களும் ஆங்காங்கே கூடிநின்றிருப்பதையே கண்டேன்.

நகரம் முழங்கிக்கொண்டிருந்ததென்றாலும் அதில் உவகையோ ஊக்கமோ இல்லை என்பதை நான் சற்று பிந்தியே அறிந்தேன். ஏனெனில் போர் வெற்றி முழங்கும் ஒரு நகரில் முன்பு நான் இருந்ததில்லை. கூடி நின்றிருந்த ஒவ்வொருவரும் தங்களுக்குள்தான் பேசிக்கொள்கிறார்கள் என்று உணர்ந்தபின்னர் இயல்பாக நடப்பவன்போல் ஒரு குழுவை கடந்துசென்றேன். எவர் மீது வெற்றி என்று அவர்கள் ஐயங்கொண்டிருந்தது புரிந்தது. மூன்று குழுக்களைக் கடந்து சென்றபோது இளைய யாதவர் வேறு யாதவ குலங்களில் எதையோ வென்றிருக்கிறாரோ என்று அவர்கள் ஐயங்கொண்டிருந்ததை உணர்ந்தேன்.

ஒரு சிலர் அவரது படைகள் கிருதவர்மனை வென்றிருக்கக்கூடும் என்று எண்ணினார்கள். இரு இடங்களில் பிரிந்துசென்ற போஜர்களையும் அந்தகர்களையும் விருஷ்ணிகளின் படைகள் வென்றதுதான் அவ்வறிவிப்பென்று பேசிக்கொண்டார்கள். பின்னர் நகர் முகப்பில் முகபடாமணிந்த ஏழு யானைகளின்மேல் எழுந்த நிமித்திகன் முரசுகளை அறைந்து பாணர்மேல் இளைய யாதவர் கொண்ட பெருவெற்றியை அறிவித்தான். ஆனால் அச்செய்தி நாவிலிருந்து செவிக்கென பரவிச்சென்ற ஓசை எழுந்ததே அன்றி உவகை பொங்கவில்லை. படைவீரர்கள் கூவியபடி புரவிகளில் சுழன்றுவந்தனர். அவர்கள் நனைந்த முரசை முழக்க முயல்வதுபோல் தெரிந்தனர்.

அங்கிருந்த மதுச்சாலை ஒன்றுக்குள் சென்று அருந்திக்கொண்டிருப்பவர்களின் ஊடே நானும் அமர்ந்தேன். மூன்று செப்புக்காசுகளுக்கு சிறுகுடம் கள்ளை வாங்கிக்கொண்டேன். அனைவருமே படைவீரர்கள். அயலவன் ஒருவன் வந்து அமர்ந்ததைக்கண்டு அவர்கள் பேச்சை தணித்தனர். ஆனால் உள்ளே எழுந்த எண்ணத்தை அடக்க முடியாமல் சொல்லெண்ணிப் பேசுவதாகக்கருதி பேசலாயினர். பின்னர் சூழ் மறந்து மாறிமாறிக் கூவினர். அந்த வெற்றியை அவர்கள் கொண்டாடவில்லை என்பதுதான் முதலில் எனக்கு புரிந்தது. அவ்வெற்றியினூடாக இளைய யாதவர் மீண்டும் தான் ஆற்றல் மிக்கவர் என்று நிறுவிக்கொண்டுவிட்டார் என்று அவர்கள் எண்ணினர். ஆகவே தன் மூத்தவருக்கும் தந்தைக்கும் எதிராக நின்றிருப்பார் என்றனர்.

“யாதவ ஒற்றுமைக்கு இது ஒரு பெருந்தீங்கு. இதுவரை துவாரகையின் அரசர் செய்த பிழைகள் அனைத்தும் தான் வெல்லப்பட முடியாதவர் என்று அவர் எண்ணியதால்தான். சூதர்களின் பாடல்களை மெய்யென்று நம்பும் அரசர்களின் வீழ்ச்சி அவரைக் காத்திருக்கிறது. ஐங்குலத்து யாதவர்களும் மதுராவின் அரசர்களும் மீள மீளச் சொல்லியும் அவர் செவிகொள்ளவில்லை. இவ்வெற்றி அவரை மேலும் பொய் நம்பிக்கை கொண்டவராக்கும்” என்றார் முதிய வீரர் ஒருவர். “மீறி விரிவது விரிசலிட்டுச் சரியுமென்பது நெறி” என்றார் ஒருவர்.

“துவாரகை முற்றழிய வேண்டுமென்று தெய்வங்கள் எண்ணுகின்றன என்றால் நாம் ஒன்றும் செய்ய இயலாது. நம்மைச் சூழ்ந்து நாமறியாது புன்னகைக்கும் தெய்வங்களே அவரை அப்போரில் வெற்றி கொள்ளச் செய்தன” என்றார் ஒருவர். “பாணன் நம் இளவரசர் அநிருத்தரை கவர்ந்து சென்றான். தன் மகளுக்கு அவரை மணமுடிப்பதாக வஞ்சினம் உரைத்தான். அவனைக் கொன்று அப்பெண்ணைச் சிறையெடுத்து மீள்வதே அவர் செய்திருக்க வேண்டியது. ஆனால் வந்த செய்திகள் பிறிதொன்றை காட்டுகின்றன. பாணனின் மகளை துவாரகையின் இளவரசருக்குத் துணைவியாக்கி அழைத்துவரப்போகிறார் என்கிறார்கள்” என்றது ஒரு குரல்.

அவ்வாறு சொன்ன யாதவ வீரனைச் சுற்றி அனைவரும் கைகளில் மதுக்குவளைகளுடன் எழுந்து கூடினர். “மெய்யாகவா? பாணனின் மகளையா?” என்றனர். அவன் “ஆம், அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தன் துவாரகையை ஆள்வான் என்று சொல்லளிக்கப்பட்டுள்ளது” என்றான். “இங்கு எண்பது இளவரசர்கள் உள்ளனர். அவர்களில் மூவர் பிரத்யும்னரை விட மூத்தவர்கள். பிரத்யும்னரே இன்னமும் பட்டத்து இளவரசர் என முடிசூட்டப்படவில்லை” என்று ஒருவன் சொன்னான். “இது இளையவர் உருவாக்கிய அரசு. அதை எவருக்கு அளிக்கவேண்டுமென்று அவரே முடிவெடுக்க முடியும்” என்றான் இன்னொருவன். “ஆம், ஆனால் நாம் எவருக்கும் உடைமைகள் அல்ல. நம் குடித்தெய்வங்களுக்கே ஏவல்செய்பவர்கள்” என்றார் ஒருவர்.

“கேள்விப்படும் ஒவ்வொன்றும் நம்பிக்கை இழக்க வைக்கின்றன. இனி துவாரகை வளராது, நீணாள் வாழாது. இது வெறும் நுரை” என்றபடி முதிய வீரன் ஒருவன் கோப்பையை வீசிவிட்டு வெளியே சென்றான். நான் அவனுடன் நடந்து தெருவை அடைந்தேன். அங்கிருக்கும் ஒவ்வொருவரின் உள்ளமும் தெள்ளிதின் தெரியத்தொடங்கியது. அவர்கள் இளைய யாதவரை அஞ்சுகிறார்கள். அவர் ஒரு தோல்வியினூடாக தருக்கழிந்து தங்கள் அளவுக்கு சிறிதாகவேண்டுமென்று விரும்புகிறார்கள். அவர் எழுந்தோறும் போற்றி புகழ் சொல்லி பிள்ளைகளை வளர்த்த மக்கள் அவர்கள். மானுட உள்ளம் எங்கு அவ்வாறு எதிர் திரும்புகிறது? எங்கோ ஓரிடத்தில் தான் மிகச் சிறிதாகிவிட்டதாக ஒவ்வொருவரும் உணர்கின்றனர் போலும். உள்ளம் கொள்ளும் சிறுமைக்கு ஓர் அளவில்லை. வாழும் காலத்திற்குமேல் தலையெழுந்து நிற்பவர்களை எவரும் புரிந்துகொள்வதில்லை. எனில் அவர்கள் எவருக்கென வருகிறார்கள்?

நிலையழிந்தவனாக நான் இந்நகரத்தை சுற்றி வந்தேன். மேலும் மேலும் செய்திகள் வந்துகொண்டிருந்தன. பாணனின் நகரத்தில் பெருவிருந்தொன்று நிகழ்வதாகவும் அங்கு அசுரருடன் இணைந்து இளைய யாதவரும் அவரது படைகளும் ஊனும் மதுவும் உண்டு உண்டாட்டு கொள்வதாகவும் சொன்னார்கள். “அசுரக் குருதி கலந்து மாசுற்றது யாதவ குலம். அக்குருதி கலக்காத மைந்தரிலிருந்து இந்நகரின் முடிவேந்தர் எழவேண்டுமென்றுதான் கோருகிறது” என்று முச்சந்தியில் ஒரு முதியவன் கோல்தூக்கி கூவக் கேட்டேன். “ஆனால் அங்கோ அசுர மகளுக்கு இந்நகரை சொல்லளித்துவிட்டு வருகிறார் இளைய யாதவர்.” கூடிநின்றவர்களில் எவரோ “ஊருணியில் கலக்கும் நஞ்சு அது” என்றனர். சினம்கொண்ட உறுமல்களும் கூச்சல்களும் எழுந்தன. கேலிச்சிரிப்பாகவும் ஏளனச்சொல்லாகவும் சூழ்ந்தது அவர்களின் கசப்பு.

மறுநாள் அரண்மனையிலிருந்து ஆணை வந்தது, நகர் அணிகொள்ளும்படி. இளைய யாதவர் ஓரிரு நாட்களுக்குள் நகர் நுழைவார் என்று அறிவிக்கப்பட்டது. பதின்மூன்றாண்டுகளாக இங்கு சுவரில் சுண்ணம் பூசப்படவில்லை. தூண்களும் சட்டங்களும் வண்ணமிழந்தன. படிகள் உடைந்தும் பாதைகள் கல் சரிந்தும் மட்கின. உப்பரித்த சுவர்கள் தூய்மைப்படுத்தப்படாமல் இந்நகரம் ஒளியிழந்திருந்தது. ஆணைவந்த அன்றே செப்பனிடும் பணிகள் தொடங்கின. பலநூறு பணியாளர்கள் நகரெங்கும் பரவினர். கண்ணெதிரில் மங்கிய பழைய ஓவியம் வண்ணம் கொள்வதுபோல் நகர் புதியதாகி எழுந்துவந்தது. ஒவ்வொரு மாளிகையையும் முன்பிருந்த வடிவில் கண்டபோதுதான் அவ்வடிவில் நினைவிலிருந்ததையே நான் அறிந்தேன்.

மீளுருக்கொண்ட நகரினூடாக சுற்றிவருகையில் மக்கள் உவகையில் பங்கெடுக்கவில்லை என்பதை கண்டேன். அவர்கள் புத்தாடை அணிந்துகொண்டார்கள். இல்லங்களுக்கு முன் தோரணங்களும் அணித்தூண்களும் அமைத்தனர். கொடிகள் அனைத்தும் புதிதாக எழுந்து பறந்தன. ஆனால் இளைய யாதவர் வருகையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்று தோன்றியது. நாள் என நாள் என அவர் வரவில்லை எனும் செய்தி வருந்தோறும் அவர்கள் ஆறுதல் கொள்கிறார்களோ என்று ஐயம் கொண்டேன்.

சென்ற இரண்டு மாதங்களாக அந்நகரம் அவ்வாறே இருக்கிறதென்றுதான் நான் அறிந்தேன். இப்போது நாம் செல்கையில் நகர் புதிதென மிளிரும். ஏனெனில் அதை ஒருக்கும் கலிங்கச் சிற்பிகள் முதுமகளை கன்னியாக்கும்படி தொழிலறிந்தவர்கள். தெருக்களில் சென்றால் முதல் நோக்கில் ஒவ்வொன்றும் சரியாக இருப்பதைப்போலத்தான் இருக்கும். ஒரு பிழையை கண்டுவிட்டால் ஒவ்வொன்றும் பிழையென தெரியத்தொடங்கும். இளைய ஷத்ரியர்களே, விட்டுச்சென்ற இடத்திற்கு இளைய யாதவர் திரும்பி வரப்போவதில்லை.

“பாண்டவர்கள் விராட இளவரசியின் மைந்தனை அரசனாக்குவதாக சொல்லளித்திருப்பதை இன்று கேள்விப்பட்டேன். துவாரகையைச் சோர்வுறச் செய்யும் செய்திகளில் ஒன்று அது. இங்கு அசுரன் மகள். அங்கு நிஷாதன் மகள். குலமென்பது பொருளிழந்து வருகிறதா என்று யாதவ மூத்தார் ஒருவர் சிறுமன்றொன்றில் கேட்டார். கூடியிருந்த எவரும் மறுமொழி சொல்லவில்லை. ஒருவர் மட்டும் நெடுநேரத்திற்குப் பிறகு மெல்லிய முனகலாக ஊழ் அதுவென்றால் நாம் செய்ய என்ன உள்ளது என்றார். ஆகவே தான் கேட்டேன் அங்கு அக்கடிமணம் நிகழ்ந்ததா என்று” என்றார் சுபாலர்.

பிரலம்பன் “ஊழ் உறுதியான காலடிகளுடன் முன்செல்கிறது. நாம் அதன்மேல் அமர்ந்திருக்கிறோம். அக்காலடிகளை நம்புவோம்” என்றான்.

fire-iconதொலைவிலேயே துவாரகையின் மாபெரும் தோரணவாயிலின் அணிமுகடு தெரிந்தது. பிரலம்பன் உள எழுச்சியுடன் “மலை மேல் கட்டப்பட்டிருக்கிறது” என்று கை நீட்டி கூவினான். அபிமன்யூ “இல்லை மணற்தரையில்தான்” என்றான். “மணல் மேலா?” என்று மேலும் வியப்புடன் பிரலம்பன் கூவ சுபாலர் புன்னகைத்து “இயற்கையான பாறையைக் கண்டடைந்து அதன் மேல் அடித்தளமிடப்பட்டுள்ளது அவ்வாயில். அதன் அந்தராளத்தின் சிற்பங்கள் அளவுக்கே நாம் இருப்போம். இன்னும் சற்று நேரத்திலேயே அது நம் நோக்கிலிருந்து மறைந்துவிடும்” என்றார்.

வெவ்வேறு சிறு பாதைகளிலிருந்து வண்டிகளும் அத்திரிகளும் ஒட்டகைகளும் புரவி நிரைகளும் கொண்ட வணிகர் குழுக்கள் வந்து மையப்பாதையில் இணைந்து அவ்வொழுக்கு பெருகிக்கொண்டே இருந்தது. எதிரில் தோரணவாயிலைக் கண்டதுமே அனைவரும் உரக்க கூச்சலிட்டனர். பின்னர் கலைந்த பேச்சொலி முழங்கியது. அணுகுந்தோறும் அமைதி எழுந்தது. அண்ணாந்து பார்த்தபடி கனவிலென அனைவரும் சென்றனர். சாலையிலிருந்து கல் அலைத்து ஒழுகும் காட்டாற்றின் ஓசை மட்டும் எழுந்துகொண்டிருந்தது.

பிரலம்பன் தோரணவாயிலின் முகப்பிலிருந்த கருடனின் சிலை வானிலிருந்து கீழ்நோக்கி பாய முயலும் கணத்தில் உறைந்திருப்பதை கண்டான். இருபுறமும் இருந்த ஆழியும் சங்கும். சிலைகளின் விழித்த நோக்கு. அவற்றின் உதடுகளில் சொல்லி நின்ற அழியாச்சொல். மீண்டும் பார்த்தபோது கருடன் சிறகு விரித்து வான் நோக்கி எழும் கணத்தில் அமைந்திருந்தது. வலப்பக்க அடித்தளத்தின் பெருஞ்சிலை ஒன்று அவனையே நோக்கிக்கொண்டிருந்தது. பின்னர் வெறும் கற்பரப்பாக அது ஆயிற்று. அவன் திடுக்கிட்டு அண்ணாந்து பார்த்தபோது வானில் கல்லாலான மழைவில்லென மிக அப்பால் தெரிந்தது தோரணவாயில்.

துவாரகையின் சாலைகள் ஒன்றுடன் ஒன்று பிசிறின்றி பொருத்தப்பட்ட கற்பாளங்களால் ஆனவை. நெடுங்காலம் வண்டிச்சகடங்களும் குளம்புகளும் பதிந்து வழுவழுப்பாக்கப்பட்டு முதற்காலையின் ஒளியின் நீர் மெழுகியதுபோல் அவை மின்னின. அவற்றின்மேல் நீரில் ஒழுகிச்செல்வதுபோல் எளிதாகச்சென்றன எடை நிறைந்த வணிக வண்டிகள். கூரிய தாளம் கொண்டன புரவிக்குளம்புகள். அந்த சீரொழுக்கால் இருபுறமும் அமைந்த மாளிகைகள் பெருங்கலங்கள்போல மிதந்து பின்னகர்வதாகத் தோன்றியது.

இருமருங்கும் இருந்த உயர்ந்த ஏழடுக்குக் காவல்மாடங்களின் உப்பரிகையில் அமர்ந்து அவர்களை நோக்கிக்கொண்டிருந்தனர் யவனக் காவல்வீரர்கள். எவரும் வண்டிகளை நிறுத்தவோ ஐயம் ஏதும் உசாவவோ செய்யவில்லை. வண்டிகளின் அமைப்பையும் வணிகர்களின் முகங்களையும் கொண்டே கணித்துக்கொண்டிருந்தனர் என்று பிரலம்பன் கண்டான். ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருக்கும் வணிகப்பெருக்கை நோக்கி நோக்கி அவர்கள் முற்றாக அடையாளம் கண்டு அணி பிரித்து வகுத்து அமைத்துக்கொண்டிருந்தனர் போலும்.

இருபுறமும் குவைமாடங்கள் கொண்ட புறக்கோட்டை மாளிகைகள் வரத்தொடங்கின. மாபெரும் வெண்மாவுக் குமிழிகள் என்று அவனுக்குத் தோன்றியது. விண்ணிலிருந்து விழுந்து குமிழிகளாகப் படிந்த வெண்பட்டு. பீதர் நாட்டு வெண்களிமண் ஓடுபோட்ட மாளிகைகள். பளிங்குப் படிக்கட்டுகளில் ஆடிகளில் என சாலையின் வணிக ஒழுக்கு நெளிந்து வண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும் விந்தையை அவன் பார்த்து திரும்பி அபிமன்யூவை நோக்கினான். கனவெழுந்த விழிகள் சூடி இளமைந்தன்போல தோள் தொய்ந்து கை ஓய்ந்து அவன் அத்திரிமேல் அமர்ந்திருந்தான்.

கோட்டையை அணுகியபோது அதன் காவல்மாடங்கள் விண்ணில் மிதந்தவைபோல் தலைக்குமேல் மிக உயரத்தில் எழுந்து நிற்பதை பிரலம்பன் கண்டான். வழியெங்குமிருந்த காவல்மாடங்கள் அனைத்திலும் செந்துகில் உறைமூடிய பெருமுரசுகளும் இரவில் எரிந்து அணைக்கப்பட்ட மீனெண்ணைப் பந்தங்கள் பொருத்தப்பட்ட பித்தளை தாங்கிக்கொத்துகளும் இருந்தன. ஒவ்வொரு காவல்மாடத்திற்குக் கீழும் பத்து புரவிகளுக்கு அருகே தொடுத்த வில்லுடன் காவல் வீரர்கள் காத்திருந்தனர். மிகையான காவல் முற்றிலும் ஒருங்கமைக்கப்பட்டிருந்தமையால் அவர்கள் வெறுமனே விழிகளாலேயே பணி முடித்தனர்.

கோட்டையின் கீழ் சென்று நின்றபோது அதன் காவல்மாடங்களில் எழுந்து நின்ற கைவிடுபடைகளின் தொடுக்கப்பட்ட நாணில் இறுகி நின்றிருந்த பல்லாயிரம் அம்பு முனைகளின் கூர்களை தனது உடலெங்கும் பிரலம்பன் உணர்ந்தான். கண்ணுக்குத் தெரியாத வலை என அவனைக் கவ்வி காற்றில் நிறுத்தின அவை. நிமிர்ந்து நோக்கியபோது அத்தனை கூர்களும் தன்னையே நோக்குவதைக் கண்டு திடுக்கிட்டு விழிதாழ்த்திக்கொண்டான்.

சுங்க நிலைகளை நோக்கி வணிக அணிகள் பல திரிகளாக பிரிந்து சென்றன. அபிமன்யூ அவனுடன் வந்த குழுவின் பெருவணிகன் அருகே சென்று தலைவணங்கி “இனி நாங்கள் பிரிந்து செல்கிறோம், வணிகரே. தங்கள் கனிவிற்கு நன்றி” என்றான். அவர் மறுமொழி சொல்லாமல் தலைவணங்கினார். பிரலம்பனும் அபிமன்யூவும் வணிகநிரையிலிருந்து பிரிந்து உள்ளே செல்லும் குடிநிரையில் இணைந்துகொண்டபோது சுபாலரும் உடன் வந்தார். “நீங்கள் அக்குழுவைச் சேர்ந்தவரல்லவா?” என்றான் பிரலம்பன். “இல்லை. நான் ஈபோல, எங்கு வேண்டுமானாலும் சுற்றிப்பறந்து அமரலாம். அனைத்தும் உணவே” என்றார்.

கையை விரித்து “ஆனால் இப்போது உங்களுடன் வரவிரும்புகிறேன். நீங்கள் எவரென்று தெரியவில்லை. ஆனால் உங்களுடன் வந்தால் மறுமுறை இந்நகருக்குள் நுழையும்போது நான் சொல்வதற்குரிய கதைகள் சில இருக்கும் என்று தோன்றுகிறது” என்றார். பிரலம்பன் “மறுமுறை இந்நகருக்குள் நுழைய வாய்ப்பின்றியும் போகலாம், வணிகரே” என்றான். சுபாலர் “ஆம், அதுவும் நிகழக்கூடும். நெடுநாட்களாகவே இறப்பின் விளிம்புகளில்தான் அலைந்துகொண்டிருக்கிறேன். எத்தனையோ வழிப்பயணிகளுக்கு என் கண்ணெதிரில் மிருத்யூ தேவி கனிந்திருக்கிறாள். என்னை அவள் கடைக்கண் பார்க்கவே இல்லை” என்றார் சுபாலர்.

துவாரகையின் தெருக்களினூடாக அவர்கள் சென்றனர். அத்தனை மாளிகைகளும் அன்று கட்டப்பட்டவையென வண்ணம் மீண்டிருப்பதை பிரலம்பன் கண்டான். பட்டுத் தோரணங்கள், ஓவிய அணித்தூண்கள், காற்றில் சிறகடித்த பாவட்டாக்கள், செயற்கை மலர்களாலான மாலைநிரைகள். வண்ணம் பொலிய வசந்தம் எழுந்த காடென சாலைகள் மாறிவிட்டிருந்தன. “புத்தாடை அணியாத ஒருவர்கூட இந்நகரில் இல்லையா?” என்று பிரலம்பன் கேட்டான். “இங்கு ஒவ்வொரு கப்பலிலும் ஆடைகள் வந்திறங்கிக் கொண்டிருக்கின்றன. இங்கிருந்து பழைய ஆடைகளை வாங்கி சீரமைத்து கொண்டுசென்று விற்பதற்காகவே நூறு வணிகர் குழுக்களுக்குமேல் உள்ளன” என்றார் சுபாலர்.

“ஒவ்வொன்றும் அவற்றின் எழில்நிலையிலுள்ள நகரம் என்று கேட்டிருக்கிறேன். காலணிகளிலும் குதிரைச்சேணங்களிலும்கூட அதை பார்க்க முடியுமென்று எண்ணியதில்லை” என்றான் பிரலம்பன். வணிகக் கூச்சல்களும், கெடுமணங்களும், பலநாட்டு இசையும் நறுமணங்களும் கலந்த காற்று அலையடித்த அங்காடித்தெருவில் கூலவகைகளும் உணவுகளும் அணிப்பொருட்களும் ஆடைகளும் படைக்கலங்களும் நோக்குதிசை எங்கும் குவிந்திருந்தன. பொருள்கொள்ளும் வண்ணங்கள் அனைத்தும் ஒருங்கு திரண்டு விழிகளை முற்றிலும் நிறைத்த தெருவினூடாக விழிமலைத்துச் சென்றனர்.

“ஒவ்வொன்றும் சித்தம் திகட்டும் மிகை. ஆளுயரத்திற்கு குங்குமத்தை குவித்து வைப்பார்கள் என்று சூதரும் சொன்னதில்லை” என்று பிரலம்பன் சொன்னான். ஒருவரோடொருவர் தோள் முட்டி உடல்கள் ததும்ப பொதிகளுடனும் பைகளுடனும் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக சென்றனர். ஒருநோக்கில் அங்கிருந்த அனைவருமே வளைவுக்குள் வந்தடிக்கும் கடலலையின் நுரையென நின்ற இடத்திலேயே சுழித்து ததும்புவதாகத் தோன்றியது. வண்ணத் தலைப்பாகைகளின், மின்னும் மேலாடைகளின், பறக்கும் ஆடைகளின் நுரைத்தெறிப்புகள்.

அங்குள்ள விலங்குகளும் நெரிக்கும் மக்களிடையே செல்வதற்கு பழகிவிட்டிருந்தன. புரவிகளும் அத்திரிகளும் மெல்ல செருக்கடித்தும், மூச்சு சீறியும், மக்களை விலக்கி எவரையும் மிதிக்காமல் காலெடுத்து வைத்து கூட்டத்தைக்கீறி வகுந்து அலைமேல் அசைவிலாத அன்னங்கள் என ஒழுகிச் சென்றன. எண்ணியிராக் கணம் ஒன்றில் பிரலம்பன் அரைவிழியால் வலப்பக்கம் ஆழத்தில் தெரிந்த மாபெரும் துறைமேடைகளை பார்த்தான். “ஆ!” என்று அலறியபடி கடிவாளத்தை விட்டுவிட்டு பின்னால் சரிந்தான். தொடர்ந்து வந்த சுபாலர் அவன் தோளைப்பற்றி நிறுத்தியதனால் அவன் புரவியிலிருந்து விழாமல் கடிவாளத்தைப் பற்றியபடி கைசுட்டி துறைமேடைகளைக் காட்டி வாயை அசைத்தான்.

சுபாலர் புன்னகையுடன் “ஆம், பாரதவர்ஷத்தின் மாபெரும் துறைமுகம் இதுவே. இப்பாரதப் பெருநிலத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களையும் ஒன்றாக சேர்த்தால் இதனளவிற்கு அமையாது” என்றார். பன்னிரு துறைமேடைகளில் எடைத்துலாக்கள் சுழன்று பொதிகளை இறக்கி வைத்துக்கொண்டிருந்தன. கொடுக்கு அசைக்கும் நண்டுக்கூட்டம்போல என்று பிரலம்பன் எண்ணினான். துலாக்கோல் சூடிய பெருங்கலங்கள் முள்கொம்பசைக்கும் நத்தைகள். அதை எண்ணியது தன்னுள் வாழும் இளமைந்தன் என்று உணர்ந்தபோது புன்னகைத்தான்.

துறைமேடை அருகே நின்றிருந்தது மாபெரும் பீதர் கலம். அத்தனை உயரத்திலிருப்பதை நோக்கியபோது விழிநிறைக்கும் பேருருக் கொண்டிருந்தது. கீழிருந்து நோக்கு தொட்டு அவன் எண்ணியபோது பதினெட்டு அடுக்குகளாக அதன் சாளரநிரையின் கோடுகள் தெரிந்தன. அதன் கொடிமரம் உயர்ந்து எரியுமிழும் முதலைப்பாம்பின் உருவத்துடன் காற்றில் படபடத்தது. கீழே சிம்மநாகமும் முதலைநாகமும் ஆளிநாகமும் பொறிக்கப்பட்ட நூற்றெட்டு கொடிகள் பறந்தன. அதன் அருகே நின்ற பிறகலங்கள் யானையைச் சூழ்ந்து பன்றிகள் நிற்பதுபோல் மெல்ல அலைகளில் அசைந்துகொண்டிருந்தன.

துறைமேடைகளிலிருந்து வண்ண எறும்புநிரைகள்போல கிளம்பிய பொதிவண்டிகளின் பன்னிரு திரிகள் இரு திசைகளிலாக ஒழுகிச் சென்றுகொண்டிருந்தன. அந்நகரம் மாபெரும் திகிரியென மெல்ல திரும்பிக்கொண்டிருப்பதாக அவன் விழிமயக்கம் கொண்டான். “இங்கிருந்து துறைமேடை வரை செல்லும் சாலைகள் புரவிகள் விரைந்திறங்குவதற்கு உகந்தவை. ஆளொழிந்த பின்னிரவுகளில் வீரர்கள் அவற்றை பயில்வதுண்டு” என்றார் சுபாலர். முகம் மலர்ந்து நோக்கியபடி “விண்ணிலிருந்து இறகென சுழன்றிறங்குவது போலிருக்கும்” என்றான் பிரலம்பன்.

“இந்நகரமே ஒரு பெரும்சுழல்திகிரி. அனைத்துச் சாலைகளும் சுழன்று நகர் உச்சியில் அமைந்துள்ள மைய மாளிகை நோக்கி செல்கின்றன” என்று சுபாலர் சொன்னார். “அது இளைய யாதவரின் மாளிகை. இப்போது அங்கு எவருமில்லை.” திகைப்புடன் “ஏன்?” என்று பிரலம்பன் கேட்டான். “எட்டு அரசியரும் தங்கள் தனிமாளிகையில் விலகிச் சென்று தங்கியுள்ளனர். இந்நகரம் விழிக்கு ஒற்றைத்திகிரியெனத் தோன்றுகிறது. உண்மையில் இது எட்டாக பகுக்கப்பட்டுள்ளது. அறிந்திருப்பீர்கள், இளைய யாதவருக்கு எட்டு துணைவியரிலாக எண்பது முதன்மை மைந்தர். அவர்கள் இந்நகரை பிரித்து ஆள்கிறார்கள்” என்றார் சுபாலர்.

“நகரின் மையப்பகுதி சத்யபாமையாலும் ருக்மிணியாலும் இணையாக பகுக்கப்பட்டுள்ளது. அவர்களின் மைந்தர்கள் அங்கே ஆட்சி செலுத்துகிறார்கள். துறைமேடைகளை ஜாம்பவதியின் மைந்தர்களும் மித்ரவிந்தையின் மைந்தர்களும் ஆள்கிறார்கள். வணிகர் பகுதிகளை லக்ஷ்மணையின் மைந்தர்கள் ஆள்கிறார்கள். பத்ரையும் நக்னஜித்தியும் அங்காடிகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். காளிந்தியின் மைந்தர்கள் எல்லைப்புறக் காடுகளில் இருக்கிறார்கள்.”

“அவர்கள் ஒன்றுகூடுவதே இல்லையா?” என்று பிரலம்பன் கேட்டான். “இளைய மைந்தரினூடாக ஒருவருக்கொருவர் செய்திகள் பரிமாறிக்கொள்கிறார்கள் என்று கேட்டேன். பதின்மூன்று ஆண்டுகளாக எட்டு அரசியரும் ஓரிடத்தில் கூடி விழிபரிமாறி சொல்லாடியதாக எவரும் சொல்லிக் கேட்டதில்லை.” பிரலம்பன் “எப்படி ஒருங்கிணைக்கப்படுகிறது இந்நகரம்?” என்று வியந்தான். “அமைச்சர்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள். இளைய யாதவரின் கோகுலத்துத் தோழர்கள் இன்றும் பிளவுபடாத உள்ளத்துடன் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.”

பிரலம்பன் சில கணங்களுக்குப்பின் “ஆம், இப்போது இந்நகரம் தனிப்பிரிவுகளாக தெரியத்தொடங்கிவிட்டது. அங்கே துறைமேடை இரண்டு பகுதிகளாக வெவ்வேறு வண்ணக்கொடிகளுடன் உள்ளது. துறைமேடையின் வலப்பக்கம் நன்கு ஆளப்படுகிறது. அங்கு வண்டிகள் முட்டிச் சரிந்து நிற்பதில்லை. இச்சிறுபொழுதிற்குள்ளாகவே இடப்பக்க ஒழுக்கு மூன்றுமூறை தயங்கி நிற்பதை காண்கிறேன்” என்றான். சுபாலர் நகைத்து “இனிமேல் இந்நகரில் வேறுபாடுகளை மட்டுமே உங்களால் பார்க்க முடியும்” என்றார்.

சுழன்று செல்லும் பாதையின் இருபுறமும் அமைந்த ஏழடுக்கு பெருமாளிகைகளின் முகப்பில் இருபுறமும் கொடிகள் பறந்தன. ஒவ்வொரு மாளிகையின் முன்பும் செம்பட்டுத் திரைசீலை நெளிந்த தேர்களும் பல்லக்குகளும் நின்றிருந்தன. “யவன பல்லக்குகள், பீதர் நாட்டு சகடங்கள் கொண்ட தேர்கள், கலிங்கத்து பட்டுத் திரைச்சீலைகள், திருவிடத்து பொலனணிச் செதுக்குகள். ஒவ்வொரு நிலத்திலிருந்தும் அவர்களின் மிகச் சிறந்த ஒன்று இங்கு வந்து சேர்ந்துள்ளது” என்று சுபாலர் சொன்னார்.

விழிகளை பறந்தலையவிட்டு முற்றிலும் உடலிலாதவனாக அச்சாலையினூடாகச் சென்ற பிரலம்பன் நெடும்பொழுதுக்குப்பின் தன்னுணர்வு கொண்டு “அத்தனை மக்களிடமும் ஓர் அயன்மை தெரிகிறது. தன்னை மறந்த உளப்பெருக்கு எவரிடமும் இல்லை” என்றான். “இளைய யாதவர் நகர்புகவிருக்கிறார் என்று அறிந்து எக்கணமும் காத்திருப்பவர்கள்போல் இல்லை. எதையோ உளம் கரந்திருக்கிறார்கள். பிறிதெதற்கோ காத்திருக்கிறார்கள்.”

முதன்முறையாக அபிமன்யூ திரும்பி அவனைப் பார்த்து “அயன்மை கொண்டவர்கள் ஆண்கள் மட்டும்தான், பிரலம்பரே. பெண்களை பாருங்கள். அவர்கள் அனைவரும் காத்திருக்கும் விரகோத்கண்டிதைகளாக இருக்கிறார்கள். இந்நகரம் மாபெரும் முல்லை நிலம் போலிருக்கிறது” என்றான். சுபாலர் உரக்க நகைத்து “ஆம், முல்லை மலர்ந்துள்ளது” என்றார். அவர் சுட்டிய இல்ல முகப்பில் சரமுல்லை பூத்து வெண்முத்துகளாகச் சூடியிருந்தது. பிரலம்பன் தலைதூக்கி மாளிகையின் கூரைவரை சென்ற அக்கொடிப்பெருக்கை பார்த்தான். உவகையுடன் “ ஆம், அவர்கள் அனைவரும் பிறிதொரு உலகில் வாழ்கிறார்கள்” என்றான்.

“அவ்வுலகுக்குள் நுழையும் ஆணென எவரும் இங்கில்லை. அங்கே ஆண் என ஒருவனன்றி பிறர் இல்லை. அவ்வுலகில் குழலோசையன்றி எதுவும் ஒலிப்பதில்லை” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் ஒவ்வொரு முகத்தையாக தொட்டுத் தொட்டு நோக்கிச் சென்றான். அக இனிமையில் மயங்கிய முகங்கள். பாதி சரிந்த விழிகள். உள்ளனலே ஈரம் என்றாக செவ்வண்ணம் பெற்ற உதடுகள். உளம் அறிந்த ஏதோ சொல்லை ஒவ்வொன்றும் சொல்லிக்கொண்டிருப்பதுபோல. நிற்பவர்களும் நடப்பவர்களும்கூட உடலில் சிறு துள்ளல் கொண்டிருந்தனர். முகம் சுருங்கி விழிகுழிந்த முதுமகள்கள்கூட கன்னியரின் அசைவுகளை வெளிக்காட்டினர்.

“இது கோபியரின் நகரம். பிற அனைவரும் விருந்தினரே” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் புரவி திரும்ப விழிவளைத்தபோது நகருக்கு நிகராக எழுந்து நின்ற மாபெரும் வாயிலை பார்த்தான். அதன் சங்கு சக்கரங்களுக்கு நடுவே எழுந்த கருடன் அனல்விழி நோக்கு கொண்டிருந்தது. அவ்வாயிற் சதுரத்தினூடாக முகில் ஒளிர்ந்த வானம் தெரிந்தது.

நூல் பதினைந்து – எழுதழல் – 42

ஆறு : காற்றின் சுடர் – 3

fire-iconஉபப்பிலாவ்யத்திலிருந்து அபிமன்யூவும் பிரலம்பனும் கிளம்பி ஏழு நாட்களில் மாளவத்தை அடைந்தனர். முதற்பன்னிரு நாட்களில் அவந்தியை கடந்தனர். அதன் பின்னர் அரைப்பாலை நிலத்தை வகுந்துசென்ற பூழி மண்பாதை இருபத்துமூன்று நாட்கள் கழித்து துவாரகை சென்றடையும் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டது. அவர்களுடன் வந்த பன்னிரு காவல் படையினரும் அவந்தியிலேயே நின்றுவிட அங்கிருந்து கிளம்பிய பாலைநிலத்து வணிகர் குழுவுடன் எளிய ஷத்ரியர்களாக பெயர்சூடி கிளம்பினர்.

அத்திரிகளும் ஒட்டகைகளும் கழுதைகளும் கொண்ட அவ்வணிகர் குழுவில் நூற்றுப்பதினெட்டு பேர் இருந்தனர். பெருவணிகர்கள் பதினெண்மர் தங்கள் துணைவியருடன் வந்தனர். பிறர் அவர்களின் துணைவணிகரும் ஏவலரும். செல்லும் வழியில் உண்பதற்கு உலர்த்தப்பட்ட ஊனும் காய்கறிகளும் மாவுப்பொடியும், கூடாரம் கட்டுவதற்குரிய யானைத்தோல்களும், தோலில் செய்த நீர்க்கலங்களும், வணிகத்திற்குரிய பொருட்களுடன் ஒட்டகைகளால் சுமக்கப்பட்டன. அத்திரிகளில் வணிகர்கள் ஏறிக்கொள்ள கழுதைகளில் பெண்கள் வந்தனர். ஏவலரும் காவலரும் நடந்தனர்.

அவந்தியின் தலைநகர் உஜ்ஜயினியில் பணிப்பணத்தை முன்னரே பெற்று உப்பு தொட்டு சொல்லுறுதி அளித்து அவர்களுக்குக் காவலென வந்த வில்லவர்கள் நாண் இழுத்த வில்லில் தொடுத்த அம்புகளுடனும் அலையும் விழிகளுடனும் முன்னும் பின்னும் காவல் சென்றனர். முள் சிலிர்த்த சிற்றிலைக் குறும்புதர்களும், ஆங்காங்கே கழுகுக்கால்போல தோல்வறண்ட அடிகொண்ட சாமி மரங்களும், அரிதாக சரிந்திறங்கி யானம் போன்று குழிந்திருந்த ஊற்றை அடைந்த நிலத்தில் மட்டும் வேருக்கு நீரெட்டும் தொலைவில் நின்றிருந்த தழைமரங்களுமாக வெறுமை கொண்டிருந்தது அந்நிலம்.

காலையில் வெயில் சுடுவதுவரை அவர்கள் பயணம் செய்தனர். பின்னர் முள்மரங்களுக்கிடையே கூடாரங்களை இழுத்துக்கட்டி அந்நிழலில் உடலுடன் உடல் தொட படுத்து துயின்றனர். தோற்பரப்புக்கு மேல் மணல்மழை பொழியும் ஓசையைக் கேட்டபடி அபிமன்யூ படுத்திருந்தான். பிரலம்பன் “வன்பாலை நிலமொன்றை இப்போதுதான் பார்க்கிறேன், இளவரசே” என்றான். “நானும் இதற்கு முன் வந்ததில்லை. துவாரகைக்கு பலமுறை சென்றதுண்டு. சிந்துவினூடாகச் சென்று கடலை அடைந்து வளைந்து வரும் வழி விரைவு மிக்கது, எளிது” என்றான் அபிமன்யூ.

“பிறகு ஏன் இப்பாலை நிலத்தினூடாகச் செல்கிறார்கள்?” என்று பிரலம்பன் கேட்டான். “இவர்களுக்குப் பிறிதொரு வழி தெரியாதென்பதனால் இருக்கலாம். இந்நிலம் உருவான காலம் முதலே இவர்கள் இவ்வழியே பயணம் செய்து பழகியிருப்பார்கள். சிந்துவினூடாக செல்வதாக இருந்தால் எத்தனை நாடுகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும்! அப்படி சில நாடுகள் அங்கிருப்பதையே இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்று அபிமன்யூ சொன்னான். பிரலம்பன் அலைநிலத்தை எண்ணத்தில் மீண்டும் விரித்து நீள்மூச்செறிந்தான். அவந்தியின் எல்லையைக் கடந்து செம்புலத்தை நோக்கிய முதல்தருணம் முதல் அவன் உளம் ஏங்கி விழிநீர் வடித்துக்கொண்டிருந்தான். பின்னர் வெம்மை விழிகளையும் உள்ளத்தையும் வறளச்செய்தது. “வெறுமை நிலம் உள்ளத்தில் பொருளின்மையை நிரப்புகிறது. ஆலயங்களிலோ நோன்புகளிலோகூட இத்தகைய அகத்தனிமையை நான் அடைந்ததில்லை” என்றான் பிரலம்பன்.

அபிமன்யூ முகத்தை மென்துகிலால் மூடியிருந்தான். “ஆம், வழக்கமாக இவ்வழி செல்பவர்களைக்கூட அது மொழியற்றவர்களாக்கிவிடுகிறது. பாலைவனம் உடலின் நீரையும் உள்ளத்தின் மொழியையும் உறிஞ்சிவிடும் என்றொரு சொல் அவந்தியில் என் காதில் விழுந்தது” என்றான். “இத்தனை தொலைவில் ஒரு நகரை அமைக்க எப்படி தோன்றியது அவருக்கு?” என்றான் பிரலம்பன். அபிமன்யூ “பிற எவருக்கும் அப்படி ஒரு எண்ணம் தோன்றாது. அவருக்குத் தோன்றும் என்பதனால்தான் மலைமுடிகளைப்போல் அத்தனை உயரத்தில் அவ்வளவு தனிமையில் நின்றிருக்கிறார்” என்றான்.

காற்று நூற்றுக்கணக்கான ஊளைகளின் தொகுப்புபோல ஓசையிட்டு சுழன்று தோல்கூரையை அலையடிக்கச்செய்து அடங்கியது. பிரலம்பன் “அவரில்லையென்றால் யாதவர் குலம் இன்றிருக்கும் நிலையை அடைந்திருக்கும் என்று எண்ணுகிறீர்களா?” என்றான். “அதை யாதவர்களே அறிவர். அவர்கள் அவரை பின்தொடர்ந்து நெடுந்தொலைவு வந்துவிட்டிருக்கிறார்கள். அவ்வாறு வந்த தொலைவுதான் இன்று அவர்களுக்கு அச்சமூட்டுகிறது” என்றான் அபிமன்யூ. “அவர்களின் இயல்புக்கு மீறி அவர்களை இட்டுச்சென்றுவிட்டார் மாதுலர்.”

“துவாரகையைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் பிரலம்பன். “பாரதவர்ஷத்தின் எந்நகரும் அதற்கிணையில்லையென்று சொல்வார்கள். அதன் கருவூலங்கள் பொன்னாலும் மணியாலும் நிறைந்துள்ளன என்றும்.” அபிமன்யூ “நீர் கேள்விப்பட்டதனைத்தும் மெய்யே. சூதர் கதையில் அந்நகரைப்பற்றி அறிந்து அம்மிகையை நேரில் காண்பது எண்ணியதை குறைக்குமென்று கணித்து அங்கு வருபவர்கள் அனைவரும் சூதர் சொல்தகையா எளிய மாந்தர் என்றே எண்ணுவார்கள். அவர்கள் சொன்னதற்கும் அப்பால் பெருகிப் பொலிந்துள்ளது அம்மாநகர்” என்றான்.

பிரலம்பன் விழிகளை மூடி தன்னுள் உதிரிக்காட்சிகளென நிறைந்திருந்த துவாரகையை ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பரப்பி எழுப்பி நிறைத்துக்கொண்டிருந்தான். காற்றின் ஓசையை கேட்டுக்கொண்டிருந்த அபிமன்யூ மெல்ல சிந்தை அடங்கி துயிலில் ஆழ்ந்தான்.

விழித்துக்கொண்டபோது முதல் எண்ணம் வெளியே அவனுக்காக இளைய யாதவர் தன் புரவியுடனும் அணுக்கருடனும் காத்து நின்றிருக்கிறார் என்பதுதான். திடுக்கிட்டு அமர்ந்த பின்னர்தான் அவர் முன்னரே சென்றுவிட்டிருந்ததை நினைவு கூர்ந்தான். “துவாரகைக்கு கிளம்புக!” என்று இளைய யாதவர் அவனுக்கு ஆணையிட்டபோது அவருடன் செல்வதாகவே அவன் எண்ணியிருந்தான். காலை எழுந்து பயணத்திற்கான பொதிகளை கட்டிக்கொண்டிருக்கையில் ஏவலன் வந்து முந்தைய நாளே இளைய யாதவரும் பிரத்யும்னனும் சாம்பனும் சாத்யகியும் கிளம்பிச் சென்றுவிட்டிருந்ததை அறிவித்தான்.

“கிளம்பிவிட்டார்களா? ஏன்?” என்று அபிமன்யூ கேட்டான். “எவருக்கும் தெரியவில்லை” என்றான் ஏவலன். “துவாரகைக்கா சென்றார்கள்?” என்றான். “அதுவும் தெரியவில்லை. கிளம்புவதற்கு அரைநாழிகைக்கு முன்தான் சௌனகருக்கு செய்தி சென்றிருக்கிறது. கிளம்பிக்கொண்டிருக்கிறார் என்று அறிந்ததுமே அவரும் தௌம்யரும் யாதவ மாளிகை நோக்கி சென்றிருக்கிறார்கள். அப்போது இளைய யாதவரே புரவி மேல் ஏறிவிட்டார். சௌனகரிடம் சென்றுவருகிறேன், அமைச்சரே. அபிமன்யூவை துவாரகைக்கு வரச்சொல்லுங்கள் என்று சொன்னார்” என்றான்.

“என்ன நிகழ்ந்தது? உடன் எந்தை இருந்தாரா?” என்று அபிமன்யூ கேட்டான். “ஆம், கிளம்புவதற்குமுன் விடையென்றோ எச்சமென்றோ ஒரு சொல்லும் உரைக்காமல் இளைய பாண்டவரை நோக்கி தலையசைத்து புரவியை தட்டினார் இளைய யாதவர்” என்றான். “பிற தந்தையர்?” என்றான் அபிமன்யூ. “இரண்டாமவர் அடுமனையிலிருந்தார். இருவரும் தங்கள் அறையில் இருந்தனர். அரசர் ஒற்றர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தார். இளைய யாதவர் கிளம்பிச்சென்ற பிறகுதான் அவர்களுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வியப்படையவில்லை” என்றான் ஏவலன். அபிமன்யூ சில கணங்களுக்குப்பின் “நான் தனியாகச் செல்லவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறார் என்றே கொள்கிறேன். எனக்குரிய பயண ஒருக்கங்கள் நிகழட்டும்” என்றான்.

ஆடையும் காலணியும் பூண்டு அவன் வெளிவருகையில் பயணத்திற்குச் சித்தமாக பிரலம்பன் நின்றிருந்தான். அபிமன்யூ அவன் அருகே சென்று “நாம் துவாரகைக்கு கிளம்புகிறோம். ஏவலன் சொல்லியிருப்பானே?” என்றான். “எங்கு செல்கிறோம் என்று அவனிடம் நான் கேட்கவில்லை” என்றான் பிரலம்பன். “ஏன்?” என்று அபிமன்யூ கேட்டான். “எங்கு சென்றாலென்ன? எப்படியாயினும் நான் சமீபத்தில் எங்கும் அஸ்தினபுரிக்கு திரும்பிச்செல்லப் போவதில்லை. எல்லா ஊரும் ஒன்றே” என்றான் பிரலம்பன். “பிற இடங்களில் நாம் அம்பு பட்டோ அரவு தீண்டியோ உயிரிழப்பதற்கு வாய்ப்பு மிகுதி. பாலைவனத்தில் அத்துடன் விடாய் எரிந்து உலர்ந்து சாவதற்கும் வாய்ப்பிருக்கிறது” என்றான் அபிமன்யூ.

பிரலம்பன் “எப்படியாயினும் பெரிய வேறுபாடு எதுவும் இருக்கப்போவதில்லை. பாலைவனமாயின் நாம் இறுதிச் சொற்களை எவரிடமேனும் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை அல்லவா?” என்றான். அபிமன்யூ உரக்க நகைத்து “ஆம், பாலைநிலத்தில் நம் ஊன் மண்ணிலோ நெருப்பிலோ வீணாவதில்லை. உணவென்றாவதனால் நம் பிழைகளை தெய்வங்கள் பொறுத்துக்கொள்ளும் என்கிறார்கள்” என்றான்.

அபிமன்யூ அரசரின் அறைக்குச் சென்றபோது அவருடன் ஒற்றர்களும் சிற்றமைச்சர்களும் இருந்தனர். ஏவலன் அவனை அறிவித்து கதவு திறந்து உள்ளே அழைத்தான். தலைவணங்கி முகமன் உரைத்து அவன் “நான் துவாரகைக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறேன்” என்றான். யுதிஷ்டிரர் நிமிர்ந்து பார்த்து “அங்கு என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்றே தெரியவில்லை. அங்கிருந்து ஒவ்வொரு நாளும் பத்து ஓலைகள் இங்கு வருகின்றன. பத்து செய்திகளையும் தொகுத்து ஒற்றைச் செய்தியாக்கி ஒரு போக்கை கணிப்பதென்பது சூது விளையாடுவதுபோல. சூது நாம் விழைவதையே நமக்கு காட்டுவதனால்தான் நம்மை ஆட்டுவிக்கிறது” என்றார். “அத்தனை கணிப்புகளுக்கும் அப்பால் பிறிதொன்று நின்று கொண்டிருக்கிறது. அதுவே மெய். அங்கு சென்ற பின் உனது உளப்பதிவை எனக்கு ஓலையில் பொறித்தனுப்பு.”

வெயில் சாய்ந்து காற்றில் வெம்மை அடங்கத்தொடங்கிய பின்னரே பாலைவன வணிகர்கள் துயிலெழுந்து தாழ்ந்த குடில்களிலிருந்து கையூன்றி தவழ்ந்து வெளியே வந்தனர். அவர்களைச் சூழ்ந்து காற்று ஒழிந்த மென்மணல் திரை அலையலையாக மூடிக்கிடந்தது. அத்திரிகளும் ஒட்டகைகளும் கழுதைகளும் உடலை உதறி மணலை பொழித்துக்கொண்டிருந்தன. சிறிய நார்த் தூரிகையால் அவற்றின் உடலில் படிந்த மணலைத் தட்டி தூய்மைப்படுத்தி, நீர்ப்பைகளை அவற்றின் வாயிலேயே கட்டி நீரூட்டி சேணங்களைப்பூட்டி கிளம்புகையில் நிழல் நீண்டு மணல் அலைகளின் மீது நெளிந்து கிடந்தது.

இரவு முழுக்க அவர்கள் பயணம் செய்தனர். ஆங்காங்கே சிறு சோலைகளில் தங்கி விலங்குகளுக்கு நீர் காட்டி, பைகளை நிரப்பிக்கொண்டனர். அவந்தியிலிருந்து கிளம்பும்போது ஆணைகளும் எச்சரிக்கைகளும் வசைகளும் ஒலித்தன. ஒருவரோடொருவர் மெல்லிய குரலில் பேசிக்கொண்டோ, அரிதாக சிறு பூசலிட்டபடியோ சென்றனர். ஓரிரு நாட்களுக்குள் சொற்கள் முற்றிலும் அவிந்தன. இரவில் வானொளி பரவிய பாலைவனத்து மணல் அலைகளின் மீது குளம்புகளும் கால்களும் விழும் ஓசை மட்டுமே என சென்றுகொண்டிருந்தனர். ஒட்டகைகளின் சுண்டுகளின் அதிர்வுகள், கழுதைகள் காதுகளை அடித்துக்கொள்ளும் ஓசைகள்.

விலங்குகள் பிறிதொரு மொழியில் தங்களுக்குள் பேசிக்கொண்டிருப்பதை அபிமன்யூ கேட்டான். அவற்றை தங்கள் பணிக்கு ஆற்றுப்படுத்துவதாக வணிகர்கள் எண்ணுகிறார்கள். அப்பணி என்ன என்று அறிந்திராதபோது அவற்றுக்கு அது ஒரு பொருட்டே அல்ல. பிறிதொரு வாழ்வை அவை தலைமுறைகள்தோறும் வளர்த்து தங்களுக்கென அமைத்துக்கொண்டிருக்கக்கூடும். தங்கள் மேல் ஊர்ந்தும் உடன்நடந்தும் வரும் வணிகர்களை பொருளற்ற நிழல்கள் என்றே அவை உணரக்கூடும்.

உரையாடலற்றுப் போகும்போது உள்ளம் எண்ணங்களின் தொடர்பமைவை இழந்துவிடுவதை அவன் கண்டான். ஒன்றுடன் ஒன்று பொருந்தாத விந்தைச் சொற்றொடர்கள். பொருளெனத் திரளாத சிதறும் சொற்கள். பேசுவதினூடாகவே எண்ணத்தை ஒருங்கமைத்துக் கொள்கிறானா மனிதன்? வாயால் பேசி அப்பேச்சை உளம் நடிக்கும்படி செய்கிறான். உள்ளத்தின் பேச்சு பிறிதொன்று. அது சொற்கள்தானா? வெறும் ஓவியங்களா? இந்த மருவுநிலம் என்னை தன்னைப்போல் மாற்றிக்கொண்டிருக்கிறது. எல்லையற்று விரிந்ததாக, பொருளற்றதாக, அனைத்தையும் ஏந்தி அப்பால் இருப்பதாக.

இரு நாட்களுக்கு மேலாயிற்று பிரலம்பனிடம் ஏதேனும் சொல்லி என்று அவன் ஒருமுறை உணர்ந்தான். பிரலம்பன் அவன் திரும்பிப்பார்த்ததை நோக்கி அருகே வந்து தலைவணங்கினான். “நாம் பேசிக்கொள்ளவேயில்லை என்று எண்ணிக்கொண்டேன்” என்றான். அப்போதுதான் அதை உணர்ந்த பிரலம்பன் “ஆம், விந்தைதான்” என்றான். “ஏன்?” என்றான் அபிமன்யூ. “நாம் சந்தித்த நாள்முதல் நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம்” என்று பிரலம்பன் சொன்னான். “பேச்சு நின்றுவிடும்போதெல்லாம் உள்ளம் கூச்சலிடத் தொடங்கிவிடுகிறது. இந்த வன்பாலை நிலத்தில் மட்டுமே சொல்லின்றி உங்களுடன் வந்தேன்.”

அபிமன்யூ “இவர்கள் யாதவபுரியைப்பற்றி என்ன சொல்கிறார்கள்?” என்றான். “விந்தை. வணிகர்களுக்கே அரசியல் தெரியும் என்பார்கள். இவர்களுக்கு யாதவ அரசியல் பற்றி எதுவுமே தெரியவில்லை. அவந்தியிலிருந்து துவாரகை வரைக்குமான பாதையில் அத்தனை ஊற்றுக்களையும் அங்கிருக்கும் நீரளவுகளையும் அறிந்திருக்கிறார்கள். இவ்வழி சென்று மீளும் அனைத்து வணிகக்குழுக்களும் எங்கிருக்கின்றன என்றும் எத்தகைய பொருட்களுடன் சென்றிருக்கின்றன என்றும் ஒவ்வொருவருக்கும் தெரியும். துவாரகையை யாதவர்கள் ஒழிந்து செல்கிறார்கள் என்றுகூட அறியாதிருக்கிறார்கள்” என்றான்.

அபிமன்யூ புன்னகைத்து “இவர்கள் பாலையோடிகள். வணிகம் பழகியவர்கள் அல்ல” என்றான். “அது ஒரு புறநடிப்பா என்று நானும் ஐயுற்றேன். நாட்கள் செல்லச் செல்ல மெய்யாகவே இவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று தெளிவாகியது” என்றான் பிரலம்பன். “தேவையற்றதை தெரிந்துகொள்ளாமல் இருப்பது ஒரு நல்ல தற்காப்பு” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “நான் என் வாழ்நாளில் தேவையற்ற ஒன்றே ஒன்றைத்தான் தெரிந்துகொண்டேன். அன்று தொடங்கி இக்கணம் வரை என் துயர் நீள்கிறது” என்றான்.

அபிமன்யூ “அஞ்ச வேண்டியதில்லை, பிரலம்பரே. அத்துயருக்கு ஓர் எல்லை நெருங்குகிறது” என்றான். “பாலையிலா?” என்றான் பிரலம்பன். “நான் ஒன்று உமக்கு உரைக்கவா? உமது இறப்பு எதிரியின் வாளால்தான். வீரர்களுக்குரிய இறப்பு. அஸ்தினபுரியின் தென்மேற்குக் காட்டில் உமக்கொரு நடுகல் உண்டு. ஏழு தலைமுறைக்காலம் புளித்த கள்ளும் காந்தள் மலரும் உப்பில்லாத அப்பமும் பெறுவீர்” என்றான். பிரலம்பன் “நற்சொல்! பெரும்பேறு பெற்றேன்” என்றான்.

fire-iconயாதவ நிலத்தின் தொடக்கத்தை அறிவிக்கும் கருடக்கொடி மணல் அலைகளுக்கு அப்பால் மெல்ல எழுவதைக் கண்டதும் வணிகர் குழுவில் உவகையொலிகள் எழுந்தன. பலருடைய தொண்டைகள் நெடுநாட்களுக்குப்பின் ஓசை கொள்கின்றன என்பதை அபிமன்யூ அறிந்தான். வணிகர் குழுவின் தலைவர் “இனி இரண்டு நாட்கள்” என்றார். “யாதவ நிலத்தில் வணிகர் எவரும் இறப்பதில்லை” என்றார் பிறிதொருவர். பிரலம்பன் அவரிடம் “ஏன்?” என்றான். “எங்கு விடாய்மிகுந்து நீர் தீர்கிறதோ அங்கு இனிய ஊற்றுடன் ஒரு சாவடி அமைந்திருக்கும். எங்கு நோயுறுவோமோ அதன் அருகிலேயே மருத்துவர் இருப்பார். யாதவ நிலத்தில் எதிரியின் படைக்கலம் என எதுவும் எழுவதில்லை. பாலைவனப் பாம்புகள்கூட நச்சிழந்து வெறும் நெளிவுகள் என்றாகிவிட்டிருக்கின்றன என்கிறார்கள் சூதர்கள்” என்று அவர் சொன்னார்.

அணுகும்தோறும் கருடக்கொடி பறந்த உயர்ந்த அசோக மரத்தூணும் அதன் அருகே அமைந்திருந்த வணிகர் விடுதியும் தெரியத்தொடங்கியது. பன்னிரு கொட்டகை இணைப்புகளும் நடுவே புகையெழுந்த பெரிய அடுமனையும் கொண்டிருந்தது அவ்விடுதி. அதைச் சூழ்ந்திருந்த மணல்முற்றத்தில் விலங்குகளைக் கட்டுவதற்கான சிறு கொட்டகைகள் இருந்தன. அவர்கள் சென்றபோது அங்கே நூற்றுக்கணக்கான ஒட்டகைகளும் அத்திரிகளும் கழுதைகளும் முன்னரே கட்டப்பட்டிருந்தன. மையப்பாதையில் வந்த வண்டிகளும் அவற்றை இழுத்த காளைகளும் பிறிதொரு பகுதியில் நின்றிருந்தன.

மரப்பீப்பாய்களில் விலங்குகளுக்கு நீர் வைக்கப்பட்டிருந்தது. அத்திரிகளும் அவற்றில் முகம் முங்க அழுந்தி செவிகளை நனைத்து அசைத்து தங்கள் மேல் நீர் தெளித்து குளிரவைத்துக்கொண்டன. மூச்சு சீற, நீர்த்துளிகள் தெறிக்க, தலைதூக்கி உடல் விதிர்த்து குளிர்நீர் அருந்தியதன் இன்பத்தில் திளைத்தன. குளம்படிகளும் காலடிகளும் இடைவெளியின்றி பரவிய முற்றத்தில் விலங்குகளிலிருந்து இறக்கி வைக்கப்பட்ட வணிகப்பொதிகள் பலநூறு சிறு கூட்டங்களாக பரந்திருந்தன. ஒவ்வொன்றின் மீதும் அவ்வணிகக்குழுவின் அடையாளம் பொறிக்கப்பட்ட சிறிய கொடி நடப்பட்டிருந்தது. சில பொதிக்குவைகளுக்கருகே அதற்குரிய காவலர் அமர்ந்திருந்தனர்.

கொட்டகைகளில் வணிகர்களின் பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும் நடுநடுவே உரத்த கூச்சல்களும் கேட்டன. விடுதியிலிருந்து காவலர்களில் ஒருவன் வெளிவந்து வணிகக்குழுவை வரவேற்று “விலங்குகளை தென்கிழக்கு மூலையில் கட்டலாம், வணிகரே. அங்கு இடமுள்ளது. மெய்கால் கழுவி வருக! உணவு ஒருங்கியுள்ளது” என்றான். “உணவு ஒருங்கியிருக்குமென்பதை நீர் சொல்லவேண்டியதில்லை. முப்பதாண்டுகளுக்கு முன்னர் அங்காரகர் எழுதிய அவந்தி நடைப்பயணம் என்னும் நூலிலேயே சொல்லிவிட்டிருக்கிறார்கள்” என்றார் ஒரு வணிகர். காவலன் சிரித்து “ஆம், வருக!” என்றபடி உள்ளே சென்றான்.

விற்காவலர் அங்கங்கே அமர்ந்துகொள்ள ஏவலர்கள் விலங்குகளை நீர் காட்டி தறிகளில் கட்டினர். அபிமன்யூவும் பிரலம்பனும் கைகளையும் முகத்தையும் கழுவிக்கொண்டு சிறுகொட்டகைக்குள் நுழைந்தனர். அங்கு வணிகர்கள் சிறு சிறு குழுக்களாகத் திரண்டு அமர்ந்து தரையில் வரையப்பட்ட களங்களில் ஆடுபுலி விளையாடிக்கொண்டிருந்தனர். கூச்சல்களும் சிரிப்புகளும் எழ ஒரு குழுவிலிருந்து ஒருவன் எழுந்து ஓடினான். “பிடி! அவனை பிடி!” என்று பிறர் கூவ இருவர் ஓடிச்சென்று அவனைப் பிடித்து தரையில் இழுத்துவந்தனர். சிரித்தபடியே “நான் கொடுக்கப்போவதில்லை. நான் முன்னரே கொடுத்துவிட்டேன்” என்று அவன் கூவ பிரலம்பன் “இவர்கள் விளையாடுவதும் வணிகம்தான். பல விளையாட்டுகளில் வெள்ளியும் பொன்னும் பந்தயப்பொருளென வைத்திருப்பதை காண்கிறேன்” என்றான்.

தரையில் விரிக்கப்பட்ட ஈச்சம்பாய்களில் அவர்கள் இருவரும் படுத்துக்கொள்ள அப்பாலிருந்து புழுதி படிந்த தாடியுடன் அழுக்கான தலைப்பாகை அணிந்த முதிய வணிகர் எழுந்து அருகே வந்தார். “வணங்குகிறேன், இளம் வணிகர்களே. நீங்கள் அவந்தியிலிருந்து வருகிறீர்கள் போலும்?” என்றார். பிரலம்பன் “அதை கண்டுபிடிப்பது அவ்வளவொன்றும் கடினமல்ல” என்றான். “ஆம், ஆனால் நான் பொதுவாக மிக எளியவற்றையே கண்டுபிடிக்கிறேன். கடினமானவற்றை நேரடியாக கேட்டுத் தெரிந்துகொள்வது என் வழக்கம்” என்றபடி அவர் அமர்ந்தார்.

கால்களை நீட்டி விரல்களால் நீவியபடி “நீங்கள் அவந்தி நாட்டினர் அல்ல என்று எண்ணுகின்றேன். இவர் அணிந்திருக்கும் இந்தக் கங்கணம் விராடபுரிக்குரியது” என்றார். பிரலம்பன் “கடினமானவற்றையும் தெரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டிருக்கிறீர்கள்” என்றான். “ஆம், என்னால் பாம்பையும் புழுவையும் குரங்கின் வாலையும் முதல் பார்வையிலேயே பிரித்தறிந்துவிட முடியும்” என்று சொன்ன முதியவர் “என் பெயர் சுபாலன், வணிகன்” என்றார். பிரலம்பன் “எந்தக் குழுவை சேர்ந்தவர்?” என்றான். “அவந்தியிலிருந்துதான் நானும் வருகிறேன். எங்கள் குழு சற்று முன்னால் கிளம்பி நடைபிந்தியது. உடன்வந்த ஒருவர் நோயுற்று இறந்தார். நாங்கள் கிளம்பி நான்கு நாட்களுக்குப்பின் நீங்கள் கிளம்பியிருக்கிறீர்கள்” என்றபின் “விராடபுரியின் செய்திகள் ஏதேனும் உண்டா?” என்றார்.

ஐயத்துடன் “என்ன செய்திகள்?” என்றான் பிரலம்பன். “பாண்டவ இளவரசர் அபிமன்யூ விராடபுரியின் இளவரசி உத்தரையை மணக்கவிருப்பதாக செய்திகள் வந்தன” என்றார். “அந்த மணம் நிகழ்ந்து பல நாட்களாயிற்று” என்று பிரலம்பன் சொன்னான். “அதற்காகத்தான் இளைய யாதவர் விராடபுரிக்குச் சென்றார். அவர் இன்னமும் துவாரகை மீளவில்லை” என்றார் சுபாலர். அபிமன்யூ “அதை எப்படி அறிவீர்கள்?” என்றான். “துவாரகையே அவருக்காக காத்திருக்கிறது. தாங்கள் அறிந்திருப்பீர்கள், துவாரகையிலிருந்து அவர் கிளம்பி பதின்மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. ஒரு சிறு காவல் நகரில் தன்னந்தனிமையில் ஊழ்கத்திலிருந்தார் என்கிறார்கள்.”

“ஆம்” என்றான் பிரலம்பன். “நோயுற்றிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அதை நாம் கண்டுபிடிக்கவே முடியாது. அல்லது நோயை அவர் ஊழ்கமென்றோ ஊழ்கத்தை நோயென்றோ கொள்ளவேண்டியதுதான்” என்றார் சுபாலர். பிரலம்பன் புன்னகையுடன் “சூதர்களுடன் நல்ல பழக்கம் போன்றிருக்கிறது” என்றான். “ஆம், நான் செய்த வணிகம் இழப்பில் முடிந்தபிறகு பிற வணிகர்களுக்கு வழிகாட்டியாகவும் நல்லுரை அளிப்பவனாகவும் பணியாற்றி வருகிறேன். அவந்தியிலிருந்து துவாரகைக்கும் திரும்பவும் அழைத்துச் செல்வது என் வழக்கம். நான் அறிந்தவற்றை சொன்னால் போதுமான அளவுக்கு அறிதலற்றவன் என்று இவர்கள் என்னை எண்ணுவார்கள். ஆகவே அறியாதனவற்றையும் சேர்த்தே சொல்வேன்.”

“கதைகளும் நூல் உரைகளும் செவிச்செய்திகளும் அனைத்தும் தேவைப்படுகின்றன வணிகர்களுக்கு” என்றார் சுபாலர். “செய்திகளை பொழுதுபோக்கிற்காக செவிகொள்ளத் தொடங்கினால் எல்லாம் செய்தியே. எதுவும் பொருள்கொண்டதும் அல்ல.” பிரலம்பன் “சரி, எங்களுக்கு செய்தி சொல்க! துவாரகையில் என்ன நிகழ்கிறது?” என்றான். “என்ன நிகழும்? இளையவர் சென்ற பிறகு மெல்ல அது பொலிவிழக்கத் தொடங்கியது. முன்பு ஒவ்வொரு நாளும் ஒரு விழா அங்கு நிகழும் என்பார்கள். துவாரகையின் அடுமனையில் பண்டிகைச் சமையல் மட்டுமே நிகழும் என்றும் அன்றாடச் சமையலை அங்குள்ளோர் அறிய மாட்டார்கள் என்றும் கேட்டுள்ளேன். பதின்மூன்றாண்டுகளாக அங்கு மூத்தவள் ஆட்சி செய்கிறாள்.” அபிமன்யூ “ஆம், நான் அவ்வாறே கேள்விப்பட்டேன்” என்றான்.

நூல் பதினைந்து – எழுதழல் – 41

ஆறு : காற்றின் சுடர் – 2

fire-iconஅபிமன்யூ இளைய யாதவரின் அறைவாயிலை அடைந்து ஒன்றும் சொல்லாமல் தலைகுனிந்து நின்றான். வாயிற்காவலன் உள்ளே சென்று மீண்டு அவன் உள்ளே செல்லலாம் என்று கைகாட்டினான். அறைக்குள் நுழைந்ததும் அவனுக்குப் பின்னால் கதவு மெல்ல மூடிக்கொண்டது. அவ்வசைவு தன்னை பலவற்றிலிருந்து அறுத்து விடுவிப்பதை அவன் உணர்ந்தான். அச்சிறிய அறைக்குள் அவரும் அவனும் மட்டுமே இருந்தார்கள். அவர் தாழ்வான மஞ்சத்தில் கால் நீட்டி அமர்ந்து வலப்பக்கமிருந்த சுவடிகளை எடுத்துப் படித்து இடப்பக்கம் வைத்துக்கொண்டிருந்தார். அவனை நோக்கி விழிதூக்கி புன்னகைத்து அருகே வந்தமரும்படி கைகாட்டினார்.

அவன் அவர் அருகே சென்று கால்களைத் தொட்டு தலைசூடி காலடியிலிருந்த சிறுபீடத்தில் அமர்ந்தான். அவனுக்கான புன்னகை அப்படியே முகத்தில் எஞ்சியிருக்க அவர் அச்சுவடிகள் ஒவ்வொன்றையாக படித்துக்கொண்டிருந்தார். எதற்கும் அவர் முகத்திலிருந்த புன்னகையோ விழியுணர்வோ மாறவில்லை என்பதை அவன் கண்டான். எளிய அன்றாடக் கணக்குகளை, சிறிய நற்செய்திகளை மட்டுமே வாசிப்பவர்போல தோன்றினார். ஆனால் அவருக்கு வரும் ஓலைகள் அவ்வாறிருக்க வாய்ப்பில்லை என்பதை அவன் அறிந்திருந்தான். சல்யர் கௌரவருடன் சேர்ந்துகொண்ட செய்தி முன்னரே வந்து சேர்ந்திருந்தது. ஷத்ரிய அரசர்கள் ஒவ்வொருவராக கௌரவர் தரப்புக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் எவர் அத்தரப்புக்குச் செல்கிறார்கள் என்பதை ஓலைகள் சொல்லிக்கொண்டிருந்தன.

யாதவர் தரப்பில் இருந்து மேலும் கவலையுறச் செய்யும் செய்திகள் வந்தன. உபப்பிலாவ்யத்திலிருந்து கிளம்பிய வசுதேவரும் பலராமரும் அக்ரூரரும் நேராக மதுராவுக்குச் சென்று சேர்ந்தனர். யாதவ குடித்தலைவர்கள் அனைவருக்கும் ஓலைகள் அனுப்பப்பட்டன. மதுராவில் நிகழவிருக்கும் பெருங்குடியவை ஒன்றில் யாதவர்கள் எடுக்க வேண்டிய இறுதிமுடிவைப்பற்றி அவர்களின் கருத்துக்களை தெரிந்துகொண்டு நிலைபாடு கொள்ளப்போவதாக செய்திகள் வந்தன. அந்நிலைபாடு என்ன என்று அனைவரும் முன்னரே அறிந்திருந்தனர்.

அஸ்வத்தாமன் உதவியுடன் வடக்கே யாதவச் சிற்றரசொன்றை அமைத்திருந்த கிருதவர்மனை தன்னுடன் சேர்ந்துகொள்ளும்படி பலராமர் அழைத்த செய்திதான் அன்று காலை உபப்பிலாவ்யத்தை வந்தடைந்தது. கிருதவர்மன் இளைய யாதவரின்மேல் வஞ்சம் கொண்டிருந்தான். அவர் குருதியைக் கண்ட பின்னரே தன் இடக்கையில் கட்டப்பட்டிருந்த கரிய கங்கணத்தை அவிழ்ப்பேன் என்று சூளுரைத்திருந்தான் என்பது சூதர்கதைகளென யாதவ நிலமெங்கும் பாடப்பட்டது என்பதனால் அச்செய்தி அனைவரையும் கொதிக்கச் செய்தது.

ஒற்றனின் ஓலையை சௌனகர் படித்ததும் யுதிஷ்டிரரே தன்னிலை அழிந்து பீடத்திலிருந்து எழுந்து “என்ன செய்கிறார் மூத்தவர்? கிருதவர்மன் யாதவர்களால் முற்றிலும் வெறுக்கப்பட்டவன்” என்றார். பீமன் “அது ஓர் அறைகூவல், மூத்தவரே. இளைய யாதவருக்கு அவர்கள் ஒரு செய்தியை சொல்கிறார்கள்” என்றான். யுதிஷ்டிரர் “குலப்போர் எங்கும் நிகழ்ந்துகொண்டிருப்பதே. சொல்லப்போனால் குலங்கள் அனைத்துமே ஒவ்வொரு கணமும் முந்தைய கணம் நிகழும் ஒரு நிகர்நிலையால் நிலை கொள்கின்றன. அடுத்த கணம் எழப்போகும் நிகர்குலைவை எதிர்நோக்கியுமுள்ளன. குலங்களின் எண்ணிக்கை பெருகுந்தோறும் முரண்பாடு தவிர்க்கமுடியாததாகிறது. குலம் வென்று செல்வமும் அரசும் கொள்ளும்தோறும் பூசலின் ஆழம் பெருகுகிறது” என்றார்.

“ஆனால் இங்கு நிகழ்ந்திருப்பது அதுமட்டுமல்ல. தன் இளையோனைக் கொல்ல வஞ்சினக்கங்கணம் கட்டிய ஒருவனை அழைத்து உடனமர்த்தி அவைகூடவிருக்கிறார் பலராமர். என்ன செய்யப்போகிறார்? இளையவனைக் கொன்று தலைகொய்து மதுராவின் கோட்டை முகப்பில் வைத்துவிட்டு நாடாளவிருக்கிறாரா?” என்றார் யுதிஷ்டிரர். பீமன் “அவரது எண்ணம் அதுவல்ல. யாதவகுலம் முழுமையாக அவரைத் துறந்துவிட்டதென்று இளைய யாதவரிடம் சொல்வதே. தனிமைப்படுத்தப்பட்டால் இளைய யாதவர் பணிவார் என்று எதிர்பார்க்கிறார்” என்றான். நகுலன் “அவருக்கு இளையவரை தெரியாதா என்ன?” என்றான். பீமன் நகைத்து “அவரது உற்றாரும் அணுக்கரும்தான் அவரை முற்றிலும் அறியாதிருக்கிறார்கள். பெற்ற மைந்தர் எவரென்று வசுதேவர் அறிந்திருக்கவில்லை. பலராமர் தன் இளையோன் என்றன்றி பிறிதெவ்வகையிலும் இளைய யாதவரை அறிந்தவரல்ல. அறிதலுக்கு ஓர் அகல்வு தேவைப்படுகிறது. மலைகளைத் தொட்டறிந்து முழுதறிய முடியாது” என்றான்.

யுதிஷ்டிரர் சோர்வுடன் பீடத்தில் சரிந்து இருபுறமும் நோக்கியபின் “இளையவன் எங்கே?” என்றார். “அவர் எப்போதும் தோழருடனே இருக்கிறார். இங்கு வந்ததிலிருந்து அவரிடமன்றி பிற எவரிடமும் அவர் எதையும் பேசுவதில்லை” என்றான் நகுலன். பீமன் “ஆம், இளையவனின் அமைதி வியப்பளிக்கிறது. அரசவையிலும் மன்றுசூழ்கையிலும் எதையும் செவிகொள்வதில்லை. ஒரு சொல்லும் உரைப்பதில்லை. இளைய யாதவரின் காலடியில் சிறிய பீடத்தில் அமர்ந்துகொள்கிறான். இரு கைகளையும் மடியில் கோத்தபடி அவர் கால்களையே பார்த்துக்கொண்டிருக்கிறான். அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நானும் எண்ணினேன். இருமுறை அவர்கள் அறைக்குள் செல்லும்போது அவர்களின் சொல்லின்மையைக்கண்டு என்னைக் கண்டதும் பேச்சை நிறுத்திவிட்டார்கள் என்று எண்ணினேன். பிறகு அறிந்தேன் அவர்கள் பேசிக்கொள்ளவேயில்லை என” என்றான்.

யுதிஷ்டிரர் “ஒரு சொல்லுமா?” என்றார். “ஆம், மூத்தவரே. ஒருசொல்கூட. பெரும்பாலும் அருகமைகிறார்கள். அவ்வளவே.” சகதேவன் “அருகமைதல் மெய்யின் வழி” என்றான். அவர்கள் அவனை நோக்க “வேதமுடிவை விளக்கும் நூல்கள் அனைத்துமே அருகமைவுகள் என்றுதானே அழைக்கப்படுகின்றன, மூத்தவரே?” என்றான். ஒருகணத்தில் அனைவரும் அவன் சொன்னதையும் அர்ஜுனனின் அந்நிலையையும் உணர்ந்துகொள்ள அவை அமைதிகொண்டது. யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டு “ஆம், இத்தருணத்தில்தான் மெய்மையின் சொல்லெழக்கூடும் போலும். மலை உச்சியை நெருங்க நிலம் கூர்மை கொள்வதுபோல. விண் அங்குதான் இறங்கிவந்து உருகிப் படிகிறது” என்றார்.

இளைய யாதவர் இறுதி ஓலையையும் படித்துவிட்டு ஓலைகளை நன்றாக அடுக்கி பட்டுநூலால் கட்டி சிறிய பேழைக்குள் வைத்தபின் எழுந்து சென்று மரக்குடைவுக் கலத்திலிருந்த நீரை அகன்ற மரயானத்தில் விட்டு கைகளை கழுவிக்கொண்டார். மரவுரியால் துடைத்தபின் மீண்டும் வந்து அமர்ந்து “இரண்டு நாட்களாக உன்னை தேடிக்கொண்டிருந்தார்கள்” என்றார். அபிமன்யூ “காட்டிலிருந்தேன்” என்றான். “என்ன செய்தாய்?” என்று இளைய யாதவர் கேட்டார். “வில் பயின்றேன்” என்று அபிமன்யூ சொன்னான்.

இளைய யாதவர் புன்னகைத்து “அத்தனை இலக்குகளையும் வென்றுவிட முடியுமென்னும் மாயையிலிருந்து விடுபட்டாய் என்றால் வில்லையும் கடந்தவனாவாய்” என்றார். அபிமன்யூ விழிதூக்கி “வில் எப்போதும் என்னுடன் இருக்கிறது” என்றான். “ஆனால் கருவறையில் இருந்து நீ அதை கொண்டு வரவில்லை. அங்கிருந்து வராத எதுவும் இறுதி வரை உடன்வர முடியாது. வருவது நன்றும் அல்ல” என்றார் இளைய யாதவர். அபிமன்யூ தலைகுனிந்து “இது ஒன்றே எனக்கு பற்றுக்கோடு” என்றான். “பிறிதொன்றை பற்றிக்கொள்பவன் தன்னை அதற்கு அடிமைப்படுத்துகிறான். விடுதலை என்பது ஒவ்வொன்றாக உடைத்துச் செல்வதே” என்றார் இளைய யாதவர்.

அபிமன்யூ “விடுதலை அச்சுறுத்துகிறது” என்றான். “ஏன்?” என்றார் இளைய யாதவர். “கட்டுப்படுத்துபவை அனைத்தும் நம்மால் நம் ஆறுதலுக்காக உருவாக்கப்பட்டவை. அன்னையின் கைகள்போல, இல்லத்தின் சுவர்களைப்போல, கோட்டை வளைப்பைப்போல, இருட்டைப்போல பாதுகாப்பானவை. விடுதலை என்பது வெறுமை கொள்வது. பிறிதொன்றும் நாமும் மட்டுமே முகத்தோடு முகம் நோக்கி நிற்றல். அச்சத்தை நிறைக்கிறது அது” என்றான்.

இளைய யாதவர் “ஆம், முதலில் எழும் பேருணர்வு அச்சமே. பின்னர் அதன் பேருருவால் அதை உணரும் நம் தன்னுணர்வும் வளரத்தொடங்குகிறது. புயற்காற்றில் இறகென்றிருப்போம். மலையென்றுணர்கையில் விடுதலை கொள்வோம்” என்றார். “என்னால் அது இயலும் என்று தோன்றவில்லை, மாதுலரே” என்றபின் அபிமன்யூ எழுந்து “நான் செல்கிறேன்” என்றான். “அமர்க!” என்று அவன் தோளைப் பற்றினார் இளைய யாதவர். “உன்னிடம் நான் பேசவெண்டுமென்று உன் தந்தை விரும்பினார். பிற எவரும் உன்னை அணுக முடியாதென்றார். நானும் முற்றிலும் அணுக முடியாதென்று அவரிடம் சொன்னேன்” என்றார்.

அபிமன்யூ விழிகளில் நீருடன் நிமிர்ந்து நோக்கி “தாங்கள் அறிய முடியாத ஒரு துளியும் என்னிடமில்லை, மாதுலரே. நான் சொல்லித்தான் அவற்றை அறிய வேண்டுமென்றில்லை” என்றான். கைநீட்டி அவர் கால்களை மீண்டும் தொட்டு விழிதாழ்த்தியபோது அவன் குரல் இடறியது. “இப்புவியில் தாங்கள் அறியாத ஏதேனும் உண்டா?” சிலகணங்கள் அமைதியில் இருந்தபின் இளைய யாதவர் “இல்லை” என்றார். திடுக்கிட்டு விழிதூக்கி அவர் முகத்தை பார்த்த அபிமன்யூ மெய்ப்பு கொண்டான். அவர் காலைத் தொட்டிருந்த அவன் கைகள் நடுங்கத்தொடங்கின.

“இருப்பினும் எப்படி மானுடராக இயல்கிறீர்கள், மாதுலரே? எந்த பீடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்?” என்றான். அவனுக்குள் ஆழம் நடுங்கிக்கொண்டிருந்தது. என்ன கண்டேன்? விழிதொட்ட முதற்கணத்தின் முதற்துளியில் நான் கண்டதென்ன? தெய்வங்களே, மூதாதையரே, இங்கு நான் கண்டதென்ன? இளைய யாதவர் அவன் தலைமேல் கைவைத்து “அப்பீடத்தை யோகம் என்பார்கள்” என்றார். அவன் மீண்டும் மெய்ப்பு கொண்டான். குளிர்ந்த அருவி ஒன்று அவன்மேல் பெய்து கொண்டிருப்பதைப்போல. “யோகம் என்பது யுஜ் என்னும் முதற்சொல்லின் விரிவு. அமைதல். இணைதலே அமைதலின் வழி. ஒன்று பிறிதென, பிற அனைத்துடன், அனைத்தும் ஒன்றென, பிறிது இல்லையென.”

“இப்புவியில் முற்றிணைய இயலாத எவையும் இல்லை என்றறிவதே ஞானம். இணைக்கும் வழியறிவதே ஊழ்கம். இணைந்தமைவது யோகம்” என்றார் இளைய யாதவர். அபிமன்யூ நீள்மூச்சு இழுத்து “நெடுந்தொலைவிலிருக்கிறேன், மாதுலரே. இருந்தும் என்னால் உணர முடிகிறது. இதை நான் கருவிலேயே உணர்ந்திருக்கிறேன் என்று தோன்றுகிறது” என்றான். இளைய யாதவர் “கருவில் சற்றேனும் அறியாத ஒன்றை மண் பிறந்தபின் எவரும் அறிய முடியாது” என்றார். அபிமன்யூ பெருமூச்சுவிட்டான்.

“இங்கு நிகழ்வனவற்றை ஓர் எல்லைக்கு மேல் புரிந்துகொள்ள முயலாதே. நீ எய்துவது பிறிதொன்றுள்ளது. இங்கு உனக்கு கடன்களேதுமில்லை. மறந்து கொண்டுசென்றுவிட்ட ஒன்றை திரும்ப அளித்துவிட்டு செல்லும் சிறுபயணமே உன்னுடையது. உன் கையிலிருப்பது மிக அரியதென்பதனால்தான் அதை அளிக்க உளம் தயங்கி கையோடு கொண்டு சென்றாய். அளித்துவிட்டால் மீள்வாய். உன்னை இங்கு கட்டியிருப்பது அதுவே…”

அபிமன்யூ தலைகுனிந்து அசைவிலாது அமர்ந்திருந்தான். “அரசு சூழ்தலின் கணக்குகளை நான் சொல்ல வேண்டியதில்லை. பாஞ்சாலத்து அரசிக்கு அளிக்கப்பட்ட சொல்லுக்கு நிகரான ஒன்று விராடருக்கு அளிக்கப்படவேண்டுமென்ற நிலை வந்தது” என்றார். “ஏன் நான்?” என்றான் அபிமன்யூ. “ஏனெனில் அவர் நீ” என்றார் இளைய யாதவர். அபிமன்யூ பெருமூச்சுடன் “என் முதற்தளை” என்றான். இளைய யாதவர் மெல்ல நகைத்து “இறுதித் தளை நீ அவர் என்பது” என்றார். அபிமன்யூ விழிதூக்கி அவர் புன்னகையைப் பார்த்து அறியாது தானும் புன்னகைத்து “ஆம், அதை உணரமுடிகிறது” என்றான்.

“யாதவபுரியில் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்று அறிவாயல்லவா?” என்றார். “ஆம், இரு நாட்களுக்கு முன் அவையில் பேசப்பட்டவற்றை உடனிருந்து கேட்டேன்” என்றான். “ஒவ்வொன்றும் அகல்கின்றன” என்று இளைய யாதவர் சொல்ல அபிமன்யூ “மாதுலரே, ஒன்று மட்டும்தான் என்னுள்ளில் நெருடிக்கொண்டிருக்கும் வினா. எண்மரில் எவரேனும் அதில் உள்ளனரா?” என்றான். இளைய யாதவர் நகைத்து “இல்லை, அவர்கள் எப்போதும் பிரிந்ததே இல்லை. இணைவதற்கு முன்பேகூட பிரிவின்றி இருந்தவர்கள்” என்றார்.

அபிமன்யூ “அதெப்படி?” என்றான். “அதன் பெயர் பெண்மை. அதை பிரேமை என்கிறார்கள். பித்தர்களை, பேயர்களை, பெரும்பழி கொண்டவர்களைக்கூட காதல்பெண்டிர் கைவிட்டதில்லை. பேரறிவால் அறியமுடியாதவற்றை பிரேமையால் அடையும் வாழ்த்துபெற்று இங்கு வந்தவர்கள் அவர்கள். தவம் செய்து ஈட்டுவனவற்றை தாயென்றாகி எளிதில் கொள்ளும் வாய்ப்புள்ளவர்கள். மைந்தா, பெண்ணென்றாகாது எவருக்கும் பிரேமை அமைவதில்லை. பித்துகொளாது இங்கு எவரும் பேரறிவை சென்று தொடுவதுமில்லை” என்றார் இளைய யாதவர்.

அவர் முகம் அரிதாகக்கூடும் கற்சிலைத்தன்மையை அடைந்தது. காலம் கடந்து எழுந்து பெருகும் மானுட அலைப்பெருக்குகளை நோக்கி சொல்லெடுப்பவர்போல “மெய்மையின்பொருட்டு பெண்மை கொள்பவரின் பெருநிரை ஒன்று எழும். அவர்கள் அறிவார்கள். போரிடுவதனூடாக அல்ல, முற்றாக அடிபணிவதனூடாகவே வெல்ல முடியுமென்று. என்னுடன் பெண்களே எஞ்சுவார்கள். அவர்களுக்கு நான் அளித்த அமுதை பிற எவருக்கும் அளித்ததில்லை” என்றார்.

அபிமன்யூ மீண்டும் மெய்ப்பு கொண்டு விழிநனைந்தான். எங்கிருக்கிறேன் நான்? அக்கணத்துளியில் நான் கண்டதென்ன? இது கனவில் ஒரு பகுதியா என்ன? இளைய யாதவர் அவன் தலைமேல் கைவைத்து மெல்ல வருடி காதைப்பற்றி “பார்த்தனென்னும் அம்பின் கூர்முனை நீ. அவனுக்குக் கூறப்பட்ட அனைத்தையும் உனக்கு உணர்த்த முடியுமென்று அறிவேன்” என்றார். “எப்போது?” என்று அபிமன்யூ கேட்டான். “உணர்த்திவிட்டேன் மைந்தா, அது உன் முற்றத்தில் கிடக்கிறது. வாயில் திறந்து வந்து நீ அதை அள்ளி எடுத்துக்கொள்ளும் ஒரு காலைப்பொழுது அமையும்” என்றார்.

“அருள்க!” என்று அபிமன்யூ சொன்னான். “ஆசிரியன் என்று புவியில் பிற எவருமில்லை.” இளைய யாதவர் “மாணவர்கள் பலர் எனக்கு. விடாய் கொண்டு முலைக்கண் தேடி வந்த குழவி உன் தந்தை. நீயோ குருதி மணம் பெற்று நான் தேடி வந்த இரை. உன்னை நான் கவ்விச் செல்கிறேன். என்னிடமிருந்து நீ தப்ப இயலாது” என்றார். அபிமன்யூ எழுந்து அவர் கால்களில் தன் தலையை வைத்து “ஆம்” என்றான். அவன் தலைமேல் கைவைத்து “நிறைக!” என்றார் இளைய யாதவர்.

அபிமன்யூ வருவதைக் கண்டதும் உத்தரையின் அருகிருந்த இரு சேடியரும் எழுந்து ஆடை திருத்தி அப்பால் நடந்து மறைந்தனர். அணித்தோட்டத்தின் தெற்கு எல்லையிலிருந்த மரமல்லி மரத்தினருகே மரப்பீடத்தில் அமர்ந்திருந்த உத்தரை தன் மேலாடையை இழுத்து முகத்தை முற்றிலுமாக மறைத்துக்கொண்டாள். அபிமன்யூ அருகே வந்து “விராட இளவரசியை வணங்குகிறேன்” என்றான். அவள் எழவோ மறுமுகமன் உரைக்கவோ செய்யவில்லை. அபிமன்யூ “இளைய யாதவர் நாளை காலை துவாரகைக்கு கிளம்புகிறார். அவருடன் நானும் செல்லவிருக்கிறேன். விடைபெறுமுகமாக இங்கு வந்தேன்” என்றான்.

அவள் “வெற்றி சூழ்க!” என்றாள். அவன் அருகிருந்த பிறிதொரு பீடத்தில் அமர்ந்தபடி “ஆம், வெற்றியை விழைந்து செல்கிறேன். ஆனால் வெற்றியென்று நான் எண்ணுவது பிறிதொன்று. அவரிடமிருந்து எதையேனும் நான் கற்றுக்கொள்ள முடியுமென்றால் அது இப்போதுதான். ஒவ்வொன்றும் அவரை விட்டுச் செல்கின்றன. ஒருவேளை அவர் துவாரகையை இழக்கக்கூடும். முன்புலரியில் அணியும் ஆடையுமிலாது கருவறையில் கரிய பெருமேனியுடன் எழுந்து நின்றிருக்கும் ஆழிவண்ணப் பெருமாளைப் பார்க்கும் தருணம் எனக்கும் அமையக்கூடும்” என்றான்.

உத்தரை “அவர் மெய்யாகவே சூடிய எதுவும் அவரிலிருந்து உதிர்வதில்லை” என்றாள். “எண்துணைவியரை சொல்கிறாயா? என்றான். “ஆம், அவர்கள் ஒருகணமேனும் அவரை விட்டு விலகமாட்டார்கள். அவர்கள் உள்ளங்களில் தன்னுரு கரந்து நிறைந்துள்ள பிரேமை மட்டுமேயான ஒருத்தி முன்பு அங்கு கோகுலத்தில் இருந்தாள். அவள் பெயர் ராதை என்கிறார்கள். அவளிடமிருந்து அவர் ஒன்றை கற்றுக்கொண்டார்” என்றாள். அபிமன்யூ “அவரா? அங்கிருந்து கற்றுக்கொண்டாரா?” என்றான். “என்ன ஐயம்? இப்புவிக்கு அவர் கற்பிப்பவை முழுக்க அவர் அங்கிருந்து கற்றுக்கொண்டவை மட்டும்தான்” என்றாள்.

“அவளிடமிருந்தா?” என்று மீண்டும் அபிமன்யூ கேட்டான். “ஆம். நான் நூறுமுறை பயின்றநூல் ஒன்று உண்டு. பெயரறியாத யாதவக் குலப்பாடகன் எழுதிய கோபிகாவிலாசம் என்னும் குறுங்காவியம். அவர் கால்களை முதலில் சென்னிசூடியவள் அவள். அப்பெயரை அவருக்கிட்டவள். அவர் ஏந்தும் இசைக்குழலையும் சூடும் பீலியையும் அளித்தவள். அவள் சுட்டிக்காட்டிய மண்ணும் விண்ணுமே அவர் அறிந்தது. இந்த பாரதவர்ஷம் இன்றுவரை அறியாத ஒன்றை அவள் அவரிடம் சொன்னாள். இது பெற்றுப் பெருகும் பேரன்னையரால் நிறைந்த மண். அவர்கள் வயிற்றிலிருந்து எழுந்து சொல்லும் வாளும் ஏந்தி திசையெங்கும் விரிந்த ஞானியரும் வீரர்களும் வாழும் நிலம். அசுரவேதம் அன்னையரை அறிந்தது. மானுடவேதம் அறிந்தது ஞானியரையும் வீரரையும்.”

“ஆனால் பித்தெடுத்த பிச்சியரின் நிலை இரு வேதங்களுக்கும் தெரியாது. பெற்றுநிறைந்தோ தேடிச்சென்றோ கண்டடைய முடியாத ஒன்றை கனவு கனிந்து சென்று தொட்டுவிட முடியுமென்று அவள் அவருக்கு காட்டினாள். பாரதவர்ஷத்திற்கு அவர் கற்பிக்க இருப்பது அதுவே” என்றாள் உத்தரை. அவள் தன் முகத்தை ஆடையால் மூடியிருந்தமையால் அச்சொற்கள் அவள் வாயிலிருந்து எழுவனபோல் தோன்றவில்லை. வேறெங்கிருந்தோ அவள்மேல் பட்டு எதிரொலித்தவை போலிருந்தன.

அபிமன்யூ உடலெங்கும் ஒரு இறுக்கத்தை உணர்ந்தான். அங்கிருந்து எழுந்து விரைந்து அகன்றுவிட வேண்டுமென்று தோன்றியது. அத்தருணம் விசைமிக்க ஒன்றால் முறுக்கப்பட்டு மேலும் மேலுமென முறுகி முறுகிச் சென்றது. ஒடிந்துவிடும் என்பதுபோல். ஒடியுமென்றால் அக்கணம் அனைத்தும் பிளந்து இற்றுவிடும் என்பதுபோல். உள்ளங்கால்களின் தவிப்பை உணர்ந்து இரு கால்களையும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டான்.

“சென்று வாருங்கள்! நீங்கள் அறிந்தவற்றைக் கடந்து பிற சிலவற்றை அறியக்கூடும்” என்றாள். “நீ என்ன சொல்கிறாய்?” என்றான். அவள் மேலும் முகம் குனித்து முகத்திரையை இழுத்து மார்பு வரை சரித்து அமர்ந்தாள். “அறமும் நெறிகளும் முறைகளும் கடுகென்று சிறுத்து காலடியில் மறைய எழுந்து நிற்கும் பித்துக்கணமொன்று உண்டு. பிறிதொருவர் இல்லாத பாதையில் ஒவ்வொருவரும் சென்று அமரும் இடமொன்று உண்டு. இப்புவிக்கு அவர் சொல்ல வந்தது அவ்விரண்டைப்பற்றி மட்டும்தான். விண்ணிலிருந்து முனிவர் தொட்டு இறக்கிய வேதங்களிலோ மண்ணில் பரவி தொல்மூதாதையர் வார்த்தெடுத்த அசுர வேதங்களிலோ இல்லாதது அந்த மெய்மை ஒன்றுதான்” என்றாள்.

“இங்கு ஒவ்வொருவரும் ஐந்தாவது வேதம் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாராயண வேதம். அது தனிமையின் கனவின் வேதம். விழைதலின், எய்துதலின், ஆதலின், அமைதலின் சொல்.” அவள் வடிவில் அங்கே அணங்கு ஒன்று வந்து அமைந்துள்ளதா? இளவரசி ஒருத்தி சொல்லும் மொழிதானா அது? இவற்றை நான் என் உள்ளிருந்து எடுத்து செவிநிறைத்துக்கொள்கிறேனா? “எனக்கு அவர் அதை சொல்லவில்லை” என்றான்.

“அவர் எனக்கு அதை சொல்லவேண்டியதே இல்லை. காதல்கொண்ட கன்னியர் எவரிடமும் அதை சொல்லவேண்டியதில்லை” என்றாள் உத்தரை. அபிமன்யூ எழுந்து “நான் கிளம்புகிறேன்” என்றான். “அன்னையும் ஆகி நின்று இத்தருணத்தில் அறிந்து எழுக என வாழ்த்துகிறேன்” என்றாள் உத்தரை. “ஆம்” என்று சொல்லி தலைவணங்கி அவன் திரும்பி நடந்தான்.