மாதம்: ஓகஸ்ட் 2017

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 97

96. கைச்சிறுகோல்

flowerஉபப்பிலாவ்யத்தின் கோட்டையை பாண்டவர்களின் தேர் சென்றடைந்தபோது கோட்டை முகப்பிலேயே அதன் தலைவன் சார்த்தூலன் அவர்களுக்காக காத்து நின்றிருந்தான். அவனுடன் கங்கைநீருடன் அந்தணர் எழுவரும் அங்கிருந்த எண்வகைக் குடிகளின் தலைவர்களும் நின்றனர். உபப்பிலாவ்ய நகரியின் குருவிக்கொடியும் விராடநகரியின் காகக்கொடியும் இரு பக்கமும் பறக்க நடுவே இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்க்கொடி ஏற்றப்பட்டிருந்தது.

தொலைவில் பாண்டவர்களின் மின்கதிர்க்கொடி எழுந்ததுமே கோட்டைமேல் முரசுகள் முழங்கத் தொடங்கின. நகரம் வாழ்த்தொலிகளால் முழங்கியது. முதலில் விராடபுரியின் கவசக் காவலர் பன்னிருவர் புரவிகளில் வந்தனர். தொடர்ந்து நகுலனும் சகதேவனும் ஊர்ந்த சரபமும் அன்னமும் பொறித்த கொடி பறக்கும் தேர் அணுகியது. அர்ஜுனனும் பீமனும் வந்த தேரில் குரங்கும் சிம்மமும் தெரிந்தன. உத்தரையின் தேரில் காகம் பறந்தது.

ஒவ்வொரு கொடி தெரிகையிலும் முரசொலி அவர்களின் வருகையை அறிவிக்க அவர்களின் கொடி கோட்டைமேல் ஏறியது. தருமனின் நந்தமும் உபநந்தமும் பொறிக்கப்பட்ட கொடி தோன்றியதும் முரசுகள் உச்சமடைந்தன. அதில் திரௌபதியின் விற்கொடியும் பறந்தது. வாழ்த்தொலிகள் சூழ அவர்களின் தேர்கள் கோட்டை முகப்பில் வந்து நின்றன. அங்கே தாலப்பொலி ஏந்திய சேடியர் அவர்களை எதிர்கொண்டு அழைத்தனர். அவர்கள் மண்ணிலிறங்கி நின்றதும் வேதியர் நீர்தெளித்து அழியாமொழி சொல்லி வாழ்த்தினர்.

கோட்டைத்தலைவன் தலைவணங்கி “இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசருக்கும் அரசிக்கும் இளையோருக்கும் முன் இந்த நகர் அடிபணிகிறது. இங்கு தங்கள் வருகை நிகழ்ந்தமையாலேயே இந்நகர் என்றும் பேசப்படும். இதன் மூத்தோரும் நீத்தோரும் மகிழும் நாள் இன்று. எங்கள் குலதெய்வங்களின் அருள் உங்கள்மேல் பொழிவதாக!” என முகமனுரைத்தான். தன் கோலை தருமனின் காலடியில் தாழ்த்தினான். அவன் படைத்தலைவர் மூவர் வாள்களை தருமன் காலடியில் தாழ்த்தி வணங்கினர்.

நகருக்குள் நுழைகையில் வாழ்த்தொலிகள் எழுந்து அரிமலர்மழையுடன் இணைந்து அவர்கள்மேல் பெய்தன. இரு நிரையாக நின்ற மக்களின் மலர்ந்த முகங்களை நோக்கிக்கொண்டுவந்த திரௌபதியின் விழிகளிலிருந்து நீர்வழிந்து கரிய கன்னவளைவுகளில் நின்று தயங்கி சொட்டியது. தருமன் அவள் தோளில் கைவைத்து “என்ன?” என்றார். “இல்லை” என அவள் தலையசைத்தாள். பெருமூச்சில் முலைகள் ஏறியிறங்க கண்களை மூடிக்கொண்டாள்.

அவள் முகம் மலர்ந்திருந்தது. தருமன் “வாழ்த்தொலி என ஒன்று செவியில் கேட்டு நெடுங்காலமாகிறது அல்லவா?” என்றார். அவள் “ஆம், முன்பு இவ்வொலி என் ஆணவத்தை நோக்கி ஒலித்தது. இன்று என் துயர்களையும் அதைக் கடக்கும் உறுதியையும் நான் என் நல்லியல்புமேல் கொண்டுள்ள நம்பிக்கையையும் நோக்கி ஒலிக்கிறது” என்றாள். தருமன் சிரித்து “மீண்டும் அரசிக்குரிய சொற்களை அடைந்துவிட்டாய்” என்றார்.

உபப்பிலாவ்ய நகரி பன்னிரு சுற்றுத்தெருக்களும் நடுவே வட்டமான முற்றமும் கொண்ட சிறிய நகரம். முற்றத்தை நோக்கியவாறு இரண்டு அடுக்குள்ள தாழ்வான அரண்மனை நின்றிருந்தது. அவர்களின் வருகைக்காக அது செப்பனிடப்பட்டு வண்ணம் பூசப்பட்டிருந்தது. கொடிகளும் தோரணங்களும் காற்றில் பறந்தன. அரண்மனைப்பெண்டிர் முற்றத்தில் அணிச்சேடியருடன் காத்து நின்றிருந்தனர். அவர்கள் இறங்கியதும் மங்கல இசையும் குரவையுமாக எதிர்கொண்டு அழைத்துச் சென்றனர்.

“அவை முறைமைகள் சில உள்ளன, அரசே…” என்று சார்த்தூலன் சொன்னான். “தாங்கள் இங்கிருப்பதுவரை இந்நகரியின் அரியணையும் கோலும் தங்களுக்குரியது… தங்கள் பெயரில் முதல் அரசாணையும் இன்று பிறப்பிக்கப்படவேண்டும்.” தருமன் புன்னகையுடன் “நன்று, கோலேந்தி அமர்வதென்பதையே மறந்து நெடுநாட்களாகின்றன” என்றார். சார்த்தூலனும் ஏவலரும் அவர்களை அவைக்கு அழைத்துக்கொண்டு சென்றனர்.

ஐம்பதுபேர் அமர்வதற்குரிய பீடங்கள் இடப்பட்ட குறுகிய அவைக்கூடத்தின் மேற்கே கிழக்கு நோக்கி மேடை அமைந்திருந்தது. அதில் ஒரு பீடத்திற்கே இடமிருந்தது. சார்த்தூலன் தருமனை அழைத்துச்சென்று அந்தப் பீடத்தில் அமரச்செய்தான். அவர் இடப்பக்கம் திரௌபதியும் வலப்பக்கம் பீமனும் நிற்க அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் பின்னால் நின்றனர். திரௌபதிக்குப் பின்னால் உத்தரை நின்றாள்.

குடிமூத்தவர் மூவர் தாலத்தில் வைக்கப்பட்ட பட்டுத் தலைப்பாகையை கொண்டுவந்து நீட்ட அதை வேதியர் மூவர் தொட்டு எடுத்து தருமனுக்கு சூட்டினர். பொன்னாலான சிறிய முத்திரை பொறிக்கப்பட்ட தலைப்பாகைக்குமேல் செம்பருந்தின் இறகு சூட்டப்பட்டிருந்தது. குடித்தலைவர் ஒருவர் வெள்ளிக்கோலை எடுத்து அவருக்களித்தார். பிறிதொருவர் உடைவாளை அளித்தார். அவர் அவற்றை அணிந்து அமர்ந்ததும், வேதியர் நீர் தெளித்து வேதமுரைத்து அவரை வாழ்த்தினர்.

அந்தணர் எழுவருக்கு பசுக்களையும் பொன்னையும் தருமன் அளித்தார். மணிவண்ணன் ஆலயத்திலிருந்து வழிப்போக்கருக்கு அன்னம் அளிப்பதற்கான ஆணையோலையை தன் முத்திரையிட்டு வெளியிட்டார். அவையின் பீடங்கள் அனைத்திலும் நகர்மூத்தோரும் வணிகரும் அமர்ந்திருந்தனர். சுவரோரமாக படைவீரர் நின்றிருந்தனர். அவை வாழ்த்து கூறி முழக்கமிட ஒவ்வொருவராக வந்து தருமனை வணங்கி வாழ்த்துரைத்தனர். அவர்கள் அளித்த பரிசில்களை அவர் பெற்றுக்கொண்டார்.

மிக விரைவிலேயே சடங்குகள் முடிந்தன. உபப்பிலாவ்யன் “தாங்கள் ஓய்வெடுக்கலாம், அரசே” என்றான். “இங்கே அரண்மனை ஏதுமில்லை. சிறிய இல்லங்கள்தான்… பெண்டிர் மாளிகை தனியாக உள்ளது.” தருமன் அவன் தோளில் கைவைத்து “நரிக் குகைக்குள் துயின்றிருக்கிறீரா?” என்றார். “இல்லை, அரசே” என்றான் உபப்பிலாவ்யன். “நாங்கள் துயின்றிருக்கிறோம்” என்றபின் புன்னகைத்து “செல்வோம்” என்றார். அவன் தோளை அணைத்தபடி நடக்கையில் “ஓரிரு நாட்களுக்குள் நான் தமனரின் தவக்குடிலுக்குச் செல்லவேண்டும். சௌபர்ணிகையில் மீண்டும் ஒருமுறை நீராடினால் இந்தக் காலகட்டம் நிறைவுறுகிறது” என்றார். “ஆணை, அரசே” என்றான் உபப்பிலாவ்யன்.

அவர்கள் அறைக்குள் செல்வதற்காக பிரியுமிடத்தில் பீமன் பின்னால் வந்து “ஆணைகளென ஏதேனும் உண்டா?” என்றான். “ஐந்து ஓலைகள் அனுப்பவேண்டும்” என்றார் தருமன். “முதல் ஓலை இளைய யாதவருக்கு, அவர் எங்கிருந்தாலும். இன்னொன்று விதுரருக்கு. பிறிதொன்று அன்னைக்கு. மற்றொன்று துருபதருக்கு. இறுதி ஓலை துரியோதனனுக்கு. எழுதவேண்டியது ஒன்றே, கான்வாழ்வும் மறைவாழ்வும் முடிந்துவிட்டன. எங்கள் நாடும் கொடியும் திரும்ப அளிக்கப்படவேண்டும். சிறியவனே…” சகதேவன் “அரசே” என்றான். “ஒவ்வொருவருக்கும் அவரவர்க்குரிய மொழியில் எழுதவேண்டும். எழுதுக!” சகதேவன் “ஆணை” என்றான். நகுலனும் சகதேவனும் விடைபெற்றனர்.

“நாங்கள் ஓய்வெடுக்கிறோம், மூத்தவரே. ஓலைகளை எழுதவேண்டும்” என்றான் சகதேவன். அர்ஜுனன் விடைகொடுத்தான். பீமன் “நானும் அடுமனைவரை செல்கிறேன். இவர்களுக்கு சமைக்கத் தெரியும் எனத் தோன்றவில்லை” என்றான். அர்ஜுனன் “மூத்தவரே” என்று அழைத்தான். பீமன் நின்று “நம் பிற வாழ்வு முடிவுறுகிறது” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “அது தங்களுக்கு எவ்வுணர்வை உருவாக்குகிறது?” பீமன் “ஏதுமில்லை. இந்தப் பதின்மூன்றாண்டுகளும் ஓர் இடத்திலிருந்து பிறிதொன்றுக்கு இடம்பெயர்ந்துகொண்டே இருந்தோம். இதுவும் அப்படித்தான் தோன்றுகிறது” என்றான்.

அர்ஜுனன் “நம் நிலத்துக்கான பூசல் தொடங்குகிறது” என்றான். பீமன் “ஆம், ஆனால் அதுவும் எல்லாப் பூசல்களையும்போல ஒன்றே. நான் எவ்வேறுபாட்டையும் உணரவில்லை” என்றான். “நன்கு பசிக்கிறது… நீ ஊனுணவில் எதை விரும்புகிறாய்?” அர்ஜுனன் “எனக்கும் எந்த உணர்வுமாற்றமும் நிகழவில்லை. மூத்தவரிடமும் ஏதும் தெரியவில்லை. இளையோரை நோக்கினேன். அவர்களுக்கு நம் கடும்வாழ்க்கை முடிந்துவிட்டதென்ற செய்தியே தெரியவில்லை என்று தோன்றுகிறது. ஆகவேதான் உங்களிடம் கேட்டேன்” என்றான்.

“அரசியிடம் கேட்டுப்பார்… அவள் உரு மாறிவிட்டாள்” என்றான் பீமன். “ஆம்” என அர்ஜுனன் புன்னகைத்தான். “அவள் இங்குள்ள பெண்டிரை அழைத்துக்கொண்டு அவைகூடச் சென்றுவிட்டாள். அந்திக்குள் எப்படியும் ஐம்பது அரசாணைகள் வெளிவந்துவிடும்” என்றபின் “என்ன உண்கிறாய், சொல்?” என்றான் பீமன். “பன்றி… நல்ல பன்றியை நா மறந்துவிட்டது” என்றான் அர்ஜுனன். “நன்று, இன்று உண்பதை மறக்கமாட்டாய்” என்றபின் பீமன் சென்றான்.

அர்ஜுனன் நடக்கையில் சிற்றறை ஒன்றின் வாயிலில் ஒரு சிறுமி காவல் என நிற்பதைக்கண்டு தயங்கி “யார் உள்ளே?” என்றான். “விராட இளவரசி” என்று அவள் சொன்னாள். அவன் “என் வரவை அறிவி” என்றான். அவள் நாணத்துடன் நெளிந்தபின் உள்ளே சென்றுவிட்டு வந்து “வரச்சொன்னார்கள்” என்றாள். அவன் உள்ளே நுழைந்தான்.

உத்தரை எளிய சிறுபீடத்தில் அமர்ந்து சாளரம் வழியாக வெளியே நோக்கிக்கொண்டிருந்தாள். “வணங்குகிறேன், தேவி” என்றான் அர்ஜுனன். அவள் திரும்பவில்லை. “இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்திரப்பிரஸ்தம் நம் கைக்கு வந்துவிடும். அங்கே அபிமன்யூவுக்கும் தங்களுக்குமான மணநிகழ்வை பெருவிழவாக கொண்டாடவேண்டும் என்று அரசர் எண்ணுகிறார்” என்றான். அவள் உடலில் அசைவே எழவில்லை. “அபிமன்யூவுக்கும் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அவன் பெருமகிழ்வை அறிவித்துள்ளான்.”

அவள் உடலின் அசைவின்மை அவனை நிலையழியச் செய்தது. பின்னர் “அவனை நீங்கள் பார்க்கையில் உணர்வீர்கள்” என்றான். மெல்ல நகைத்து “தெய்வங்கள் வனைந்து வனைந்து மேம்படுத்திக்கொள்கின்றன என்பார்கள். அவன் பணிக்குறை தீர்ந்த பழுதற்ற அர்ஜுனன். இளையவன், நானே அஞ்சும் வில்திறலோன்” என்றான். அவள் தலைதூக்கி நிமிர்ந்து அவனை நோக்கினாள். அவன் நோக்கை விலக்கிக்கொண்டபின் “அனைத்தும் நன்மைக்கே. நம் குடி பெருகும்… இப்பெருநிலம் நம் கொடிவழியினரால் ஆளப்படும்” என்றான்.

அவன் மீண்டும் அவளை நோக்கியபோது அவள் விழி தன்மேல் ஊன்றியிருந்ததை கண்டான். விழிவிலக்கிக்கொண்டு “நன்று… எத்தேவை இருப்பினும் அறிவியுங்கள்… சில நாட்களுக்கே இச்சிறுநகரின் இடர்கள்” என்றபின் வெளியே சென்றான். வெளிக்காற்றுக்கு வந்தபின் உடல் தளர்ந்து நீள்மூச்சுவிட்டான்.

[நீர்க்கோலம் நிறைவு]

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 96

95. நிலவொளிர்காடு

flowerசுதீரனின் தோள்பற்றி புஷ்கரன் ஆலயமுகப்புக்கு வந்தபோது காரகன் நின்றிருந்த மேடையை தூக்கிவந்து போட்டு அதில் மரவுரி விரித்து நாற்களப் பலகையை விரித்திருந்தனர். அதனருகே காவலர் வேல்களுடன் நின்றனர். சிற்றமைச்சர்கள் நாற்களக் காய்களை பரப்பினர். கலியின் ஆலயச் சுவர்களின் மேலும் மரங்களின் கிளைகளிலும் எல்லாம் மக்கள் செறிந்திருந்தனர். அந்த மேடையைச் சுற்றி திரளுடல் கோட்டையென்றாகியிருந்தது.

அப்பால் நளன் கைகட்டி நின்றிருக்க அவனைச் சூழ்ந்து முதுபெண்கள் நின்று மூச்சிளைக்க கைகளை வீசி தலையை ஆட்டி அழுதும் கூச்சலிட்டும் பேசிக்கொண்டிருந்தனர். சிலர் நெஞ்சிலும் வயிற்றிலும் ஓங்கி அறைந்தபடி அலறி அழுதனர். சிலர் கால்தளர்ந்து நிலத்தில் அமர்ந்து தலையில் கைவைத்து கதறினர். சிலர் மண்ணில் முகம்புதைத்து ஓய்ந்து விழுந்து கிடந்தனர்.

புஷ்கரன் வருவதைக் கண்டதும் ஒரு முதுமகள் கைநீட்டி “பழிகாரா! இழிமகனே! கீழ்பிறப்பே!” என்று கூவினாள். அத்தனை பெண்களும் அவனை நோக்கி கைநீட்டி கூச்சலிட்டனர். காறித் துப்பினர். மண்ணை அள்ளி வீசினர். அவர்களை நோக்கியபடி தானறியாத ஏதோ என புஷ்கரன் நின்றான். நளன் அவர்களை கைநீட்டி தடுத்தான். அவன் வீரர்கள் அவர்களை வேலால் தடுத்து பின்னால் தள்ளினர்.

கலியின் ஆலயப்பூசகர் மூவர் வந்து நாற்கள மேடை அருகே நின்று கைதூக்கி “அமைக… ஒலியமைக!” என்று கூவினர். முரசுகள் முழங்கி ஓய கூட்டம் அமைதியடைந்தது. முதன்மைப் பூசகர் கைகளைத் தூக்கி “ஆன்றோர் மூத்தோர் அறிக! விண்ணுறை நீத்தோரும் தெய்வங்களும் அறிக!” என்று உரத்த குரலில் கூவினார். “இங்கே நிஷதகுடியின் மூத்த இளவரசர் நளனுக்கும் அவர் இளவலும் அரசருமாகிய புஷ்கரனுக்கும் நாற்களமாடல் நிகழவிருக்கிறது. இது களமுற்றாடல் முறை. இதன் நெறிகள் தொன்றுதொட்டு வருபவை.”

“முதன்மையானவை இவை. ஆட்டம் இடைநிற்கலாகாது. நோயாலோ இறப்பாலோ வேறெந்த ஏதுவாலோ ஆட்டம் நின்றால் நிறுத்தியவரே தோற்றவர் எனக் கருதப்படுவார். நோயுற்றால் ஆடுபவர் தன்பொருட்டு ஆட்டத்துணைவரை அமர்த்தலாம். அவர் எவரென முன்னரே அறிவிக்கவேண்டும். பிறிதெவர் சொல்லும் கையும் ஆட்டத்தில் நுழைவது மீறல்பிழையென்றே கருதப்படும். ஆட்டத்தில் எந்த நெறிப்பிழை நிகழுமென்றாலும் அவர் தோற்றவர் எனக் கருதப்படுவார். வென்றவருக்கே ஆட்டத்தை முடிக்கும் உரிமை உண்டு. இவற்றை ஒப்புக்கொண்டால் இருவரும் தங்கள் படைக்கலம் மீது கைவைத்து கலியின்மேல் ஆணையிடுக!” முதலில் புஷ்கரன்தான் கைதூக்கி “ஆணை! ஆணை! ஆணை!” என்றான்.

புஷ்கரனின் பதற்றமில்லாமை சூழ்ந்திருந்த மக்களை திகைக்கச் செய்தது. மெல்லிய முணுமுணுப்புகள் பரவி முழக்கமாயின. ஒரு முதுமகள் “இந்த இழிந்தோன் மாயத்தெய்வங்களை துணைக்கொண்டு வென்றான். இம்முறையும் அத்தெய்வங்கள் இங்கே அவனுக்கு துணைநிற்கக்கூடும். கலிதெய்வத்தின் குருதியமுது கொண்டுவரப்பட்டு அதன்மேல் கைவைத்து இருவரும் ஆணையிடவேண்டும், எந்த இருட்தேவும் விழிமாயமும் இங்கு இல்லை என்று” என்றாள். “ஆம், ஆணையிடவேண்டும்… ஆணையிட்டே தீரவேண்டும்” என்று கூச்சல்கள் எழுந்தன.

பூசகர் “ஆம், அவைவிழைவு அதுவென்றால் அவ்வாறே” என்றார். கலியின் குருதிக்குழம்பு ஒரு மரச்சிமிழில் கொண்டுவரப்பட்டது. முதலில் அதன்மேல் கைவைத்து “ஆணை! ஆணை! ஆணை!” என்று புஷ்கரன் சொன்னான். கூட்டம் ஏமாற்றத்துடன் கலைவோசை எழுப்பியது. பின்னர் அதன் நிறைவின்மை முழக்கமாகச் சூழ்ந்தது. சிறிய குச்சியை நட்டு நிழல்நோக்கி பொழுது கணித்த கணியர் “நற்பொழுது” என்றார். பூசகர் “தொடங்கலாம்” என ஆணையிட்டார். புஷ்கரன் சுதீரனை சுட்டிக்காட்டி “இவர் என் ஆட்டத்துணைவர்” என்றான். நளன் தன்னருகே நின்றிருந்த பீமபாகுவை சுட்டிக்காட்டி “இவர் என் துணைவர்” என்றான்.

இருவரும் எதிரெதிரே அமர்ந்துகொண்டார்கள். துணைவர் இடக்கைப்பக்கம் அமர்ந்தனர். அவர்களுக்கு கலியின் காகச்சிறகுகள் அளிக்கப்பட அவற்றை தலையில் சூடிக்கொண்டனர். புஷ்கரனின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. அவன் வலது விழிக்கீழ் தசைகள் திரைச்சீலை சுருக்கங்கள்போல மூன்று அலைவளையங்களாக இறங்கி கன்னத்தசை ஆழ்ந்த மடிப்புடன் மிகக் கீழிறங்கி முகம் அனல்வெம்மையால் உருகிவழியும் மெழுகுப்பாவைபோலத் தோன்றியது. அவனருகே அமர்ந்திருக்கையில் காற்றினூடாகவே அந்த நடுக்கத்தை சுதீரனால் உணரமுடிந்தது.

பூசகர் நளனிடம் “அரசே, அறைகூவியவர் நீங்கள். முதல் நகர்வு உங்களுக்கு” என்றார். நளனின் படைவீரன் கொடியுடன் முதல் நகர்வை நிகழ்த்தினான். சுதீரன் பெருமூச்சுடன் உடலை எளிதாக்கிக்கொண்டான். என்ன நிகழுமென்று தெளிவாகிவிட்டது. புஷ்கரன் அதை உணர்ந்ததுபோல திரும்பி அரைக்கணம் சுதீரனை பார்த்தான். ஒன்றையொன்று நோக்கி நின்ற படையும் தலைமைகளும் சுதீரனுக்கு அச்சமூட்டின. நாற்களச் சூழ்கையை நோக்குவது ஊழை விழிமுன் பெறுவதுபோல என எங்கோ படித்ததை நினைவுகொண்டான்.

ஆட்டம் தொடங்கிய கணம் முதலே நளனின் நகர்வுகள் முன்பு ஆடி வென்ற ஆட்டமொன்றின் மறுநிகழ்வுபோல கூர்மையும் முழுமுடிவும் கொண்டிருந்தன. புஷ்கரன் ஒவ்வொன்றாக இழந்துகொண்டிருந்தான். முதலில் புஷ்கரன் ஏதோ செய்யப்போகிறான் என்று திரள் எண்ணியது. அவன் தோற்று பின்னகர்ந்தபடியே இருக்கையிலும்கூட அவர்கள் அவன் கண்களையும் கைகளையும் ஐயத்துடனும் அச்சத்துடனும் நோக்கிக்கொண்டிருந்தார்கள். பின்னர் மெல்ல எளிதானார்கள். சிரிப்பொலிகளும் கேலிச்சொற்களும் எழத்தொடங்கின.

புஷ்கரனின் கைகள் காய்களை நகர்த்தமுடியாதபடி நடுங்கின. அவன் கை களம் மீது காயுடன் அலைபாய்ந்தது. ஆகவே அவன் என்ன செய்யப்போகிறான் என்பது பதற்றத்தை உருவாக்கியது. பின் ஒவ்வொருமுறையும் அவன் தோற்கடிக்கப்பட்டபோது அதுவே ஏளனத்திற்குரியதாகியது. அவன் காயை எடுத்ததுமே “அதோ அதோ… பருந்து சுற்றிப்பறக்கிறது… அதோ நிலம்பாய்கிறது” என்று கூச்சல்கள் எழுந்தன.

இறுதியாக அரசன் எஞ்ச நளனின் படை வலையென விரிந்து சூழ்ந்தது. அரசனை மேலும் பின்னகர்த்திய புஷ்கரன் மீண்டும் நகர்த்த கையெழாமல் தவித்தான். தேர் கடந்த நாகம் மரமேறத் தவிப்பதுபோல அவன் கை புளைந்தது. சுதீரன் “துணைவனாக நான் ஆடுகிறேன், அரசே” என்றான். “இன்னும் ஒரே நகர்வுதான் எஞ்சியிருக்கிறது” என்றார் பூசகர். “ஆம்” என்றான் சுதீரன். “ஆடுக!” என்று நளன் கைகாட்டினான்.

அரசன் மேல் கைவைத்த சுதீரன் நளன் விழிகளை நோக்கி “அரசே, நான் அந்தணன். சூதுக்காயை தொடுவதே குல இழுக்கு. ஆயினும் களவும் கற்றுமறந்தவன். இக்கணத்தில் தொடங்கி என்னால் உங்களை வெல்லக்கூடும் என்கிறேன். அதை மறுக்கிறீரா?” என்றான். அவன் விழிகளை நோக்கிய நளன் “இல்லை. நீர் நானறியா ஏதோ காய்சூழ்கையை எண்ணியிருக்கிறீர்” என்றான். “ஆம்” என்றான் சுதீரன். “அதை ஆடினால் எனக்கு பிறிதொரு எரிநரகம் ஒருங்கும்” என்றபின் “நான் அதை ஆடாதொழிவேன், நீங்கள் மூன்று சொல்லுறுதிகளை அளித்தால்” என்றான்.

அவன் என்ன பேசுகிறான் என்று அறியாமல் மக்கள்பெருக்கு கொந்தளித்தது. முரசு முழங்கி அமைதி அமைதி என ஆணையிட்டது. நளன் இருவரையும் மாறிமாறி நோக்கியபின் “அளிக்கிறேன்” என்றான். “என் அரசனின் உயிர் அளிக்கப்படவேண்டும். முதற்சொல் இது” என்றான் சுதீரன். நளன் பெருமூச்சுடன் “ஆம், அளித்தேன்” என்றான். “அவர் உங்கள் குடியென காக்கப்படவேண்டும். உங்கள் நகரில் அவர் நுழையமாட்டார். கானிலிருப்பார். அங்கு உங்கள் கோல் அவருக்கு துணைநிற்கவேண்டும்.” நளன் “ஆம், அது என் கடமை” என்றான். சுதீரன் “உங்கள் நெஞ்சிலும் உங்கள் மைந்தர் நெஞ்சிலும் துளியேனும் வஞ்சமோ விலக்கோ இருக்குமென்றால் அவை இக்கணமே முற்றாக களையப்படவேண்டும். உங்களுக்குள் முன்பிருந்த இளையோன் என அவர் ஆகவேண்டும். அவர் மனைவியரும் மைந்தரும் அவ்வண்ணமே இங்கு திகழவேண்டும்” என்றான்.

நளன் உதடுகளை அழுத்தி தொண்டை ஏறியிறங்க சில கணங்கள் அமர்ந்திருந்தான். பின்னர் “மூன்றாவது சொல் அவனுக்கானது அல்ல அந்தணரே, என் மீட்புக்கானது” என்றான். “அளித்தேன்…” என்று கைகூப்பினான். சுதீரன் அரசனிலிருந்து கையை எடுக்காமல் “என் விழிகளை நோக்குக… அவை தொட்டுச்செல்லும் காய்களை எண்ணுக! நான் கருதிய சூழ்கை எதுவெனப் புரியும். அரசன் அதை அறிந்திருக்கவேண்டும். அவன் முன் எந்தப் படைக்கலமும் கரந்துறையலாகாது” என்றான். நளன் அவன் விழிகளையே நோக்கினான். பின்னர் “ஆம்” என்றான். பெருமூச்சுடன் கைகளை களத்திலிருந்து விலக்கிக்கொண்டான்.

கைகூப்பி வணங்கிய சுதீரன் புஷ்கரனிடம் “மூத்தவரை வணங்கி நற்சொல் பெறுக, அரசே” என்றான். அதற்குள் அச்செய்தி பரவ கூட்டம் கொந்தளிக்கத் தொடங்கியது. “கொல்லவேண்டும் அந்தக் கீழ்மகனை… அவன் குருதி வீழவேண்டும்” என ஒரு முதியவர் கூவினார். “கொல்க… கொல்க!” என கூட்டம் கூச்சலிட்டது. நளன் எழுந்து சினந்த விழிகளுடன் “மறுசொல் எடுப்போர் எவராயினும் அரசாணையை மீறுகிறார்கள்” என்றான். அச்சொல்லை முரசு தாளம்பெருக உரைத்ததும் கூட்டம் அமைதிகொண்டது. அதன் முனகல்களும் ஓய்ந்தன.

புஷ்கரன் சுதீரனின் தோள்களை பற்றிக்கொண்டு எழுந்தான். அவன் கை துள்ளிக்கொண்டிருக்க வலக்கால் மரக்கட்டைபோல நீண்டு விரைத்திருந்தது. அதை இழுத்தபடி சென்று குனிந்து நளனின் கால்களைத் தொட்டான். நளன் அவனை தோள்சுற்றி இழுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். “இளையோனே, என்றும் நீ என் நெஞ்சின் மைந்தனே… என்னுடன் இரு. நீ விழைந்த நிலத்தை எடுத்துக்கொள்…” என்றான். புஷ்கரனின் கண்களில் எந்த உணர்வும் இருக்கவில்லை. “என்னுடன் இரு, இளையோனே” என்று நளன் உடைந்த குரலில் சொன்னான். “அவர் துறந்துவிட்டார், அரசே” என்றான் சுதீரன்.

புஷ்கரன் சுதீரனை நோக்க “ஆடை களைக… அணிகளும் மிதியடியும் எதுவும் எஞ்சலாகாது…” என்ற சுதீரன் புஷ்கரனின் கையிலிருந்த கங்கணங்களையும் அணிவளைகளையும் உருவினான். அருகே நின்றிருந்த வீரனிடம் புஷ்கரனின் கால்களில் இருந்து கழல்களை கழற்ற ஆணையிட்டான். காதுகளில் இருந்து குண்டலங்களையும் கழற்றி மேடையிலிருந்த நாற்களம் மீது வைத்தான். அவன் இறுதிச் சிற்றாடையுடன் நிற்க சுதீரன் பின்னர் திரும்பி அப்பால் நின்றிருந்த ஒரு முதியவரிடம் “மூத்தவரே, அந்த மரவுரியை இந்த இரவலனுக்கு அளியுங்கள்” என்றான். மரவுரியை தோளிலிட்டிருந்த அவர் “நானா?” என்றார். அவர் கைகால்கள் நடுங்கத் தொடங்கின. “ஆம், அந்த மரவுரி… முதல் நோக்கில் அதுவே விழியில் பட்டது. இல்லத்திலிருந்து கிளம்பி அது இதன்பொருட்டே இங்கு வந்துள்ளது” என்றான் சுதீரன்.

அவர் அளித்த மரவுரியை இடைசுற்றி நின்ற புஷ்கரனை நோக்கி “உங்கள் குடியை இறுதியாக வணங்கி விடைகொள்க, அரசே… இனி இவர் எவருமல்ல உங்களுக்கு” என்றான். அவன் மரவுரி அணியக் கண்டதும் சூழ்ந்திருந்த நிஷாதர்கள் முற்றமைதிகொண்டிருந்தனர். நளன் கண்களில் நீர்வழிய கைகூப்பி நின்றான். புஷ்கரன் தடுமாறும் கால்களுடன் மூன்றடி எடுத்து வைத்து கைகூப்பியபோது முன்னால் நின்றவர்களின் கண்களிலிருந்து நீர்வழியத் தொடங்கியது. சுதீரன் “மண்டியிட்டு சென்னி நிலம்தொட மும்முறை” என்றான்.

புஷ்கரன் இடக்கையை ஊன்றி இடக்காலை மடித்து மண்ணில் மண்டியிட்டான். அவன் வலக்கால் நீட்டி நின்று அதிர்ந்தது. மும்முறை அவன் நெற்றி நிலம்தொட வணங்கினான். நிஷாதர்களிலிருந்து விசும்பல்களும் விம்மல்களும் ஒலித்தன. சுதீரன் அவன் கையைப்பற்றி தூக்கினான். அவன் சுதீரன் தோளைப்பற்றியபடி நின்றான். பார்வையற்றவன் போலிருந்தன அவன் விழிகள். கூட்டத்திலிருந்து எவரோ “இளவரசே, செல்லவேண்டாம்” என்று கூவினர். காத்திருந்ததுபோல கூட்டம் “இளவரசே, வேண்டாம் இளவரசே” என்று கூச்சலிட்டது. அவ்வொலி திரண்டு முழக்கமெனச் சூழ்ந்தது.

சுதீரன் தன் தலைப்பாகையையும் குண்டலங்களையும் கச்சையையும் மேலாடையையும் கழற்றி மேடைமேல் வைத்தான். கணையாழிகளைக் கழற்றி வைத்துவிட்டு நிமிர்ந்து நளனிடம் புன்னகையுடன் “விடை கொடுங்கள், அரசே” என்றான். “நீங்கள்?” என்றான் நளன். “அவருடன் இறுதிவரை இருப்பேன் என்பது என் சொல்” என்றான் சுதீரன். “அந்தணரே, கைவிடப்பட்டோரிடம் காட்டும் கருணையின் வழியாகவே தெய்வம் தன் இருப்பை அறிவிக்கிறது” என்றான் நளன். சொல்திணற தயங்கி பின் “நன்று, முற்றிழந்து கைவிரிப்பவனே அக்கொடையை பெறமுடியும் போலும்” என்றான்.

சுதீரன் புன்னகையுடன் மும்முறை வணங்கி “அரசே, என் தந்தையர் சொல்லால் வாழ்த்துகிறேன். உங்கள் கோல் சிறக்கட்டும். குடி பெருகட்டும். நாடு செழிக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபின் “வருக, துறந்தோரே” என புஷ்கரனின் தோளைப் பற்றினான். அவர்கள் நடக்க நீர்ப்பரப்பு கிழிபடுவதுபோல கூட்டம் பிளந்து வழிவிட்டது. அவர்கள் மெல்ல நடந்து குன்றிறங்க சூழ்ந்திருந்தோர் கைகூப்பி விழிநீருடன் நின்றனர். பின்னர் எங்கிருந்தோ “நிஷதகுலத்தரசர் புஷ்கரர் வாழ்க! தவத்தோர் வாழ்க!” என்னும் வாழ்த்தொலி எழுந்தது. பல்லாயிரம் முரசுகள் என அப்பெருந்திரள் அதை ஏற்று முழங்கியது.

flowerஅவர்கள் கலிதேவனின் ஆலயத்திலிருந்து நடந்தபோது வானில் ஓர் ஊளையோசை கேட்டது. மரக்கிளைகளில் இருந்து அத்தனை காகங்களும் கலைந்து பறந்தெழுந்து வானில் சுழன்றன. காட்டின் விளிம்பை அவர்கள் அடைந்தபோது எதிரே காட்டுக்குள் இருந்து கரிய காளை ஒன்று தோன்றியது. புஷ்கரன் அதைக் கண்டு கைகூப்பியபடி நின்றார். அது உறுமியபடி அருகணைந்தது. அதன் எடைமிக்க உடல் நடையில் ததும்ப புள்ளிருக்கை அதிர்ந்தது. வளைந்த கொம்புகளைத் தாழ்த்தி மதத்தில் புதைந்த விழிகளால் அவர்களை நோக்கி சுரைமாந்தி நின்றது.

சுதீரர் “புஷ்கரரே, இதை நீர் முன்னரே அறிவீரா?” என்றார். “ஆம், என்னை ஆளும் தெய்வம் இது” என்றார் புஷ்கரர். “அடிபணியுங்கள். அது கோருவது எதையோ அதை கொடுங்கள்” என்றார் சுதீரர். புஷ்கரர் தலையை மண்ணில் சாய்த்து உடல் படிந்துவிழுந்தார். அவர் அருகே வந்து உறுமியபடி நின்றது எருது. அதன் மீசைமுட்கள் சிலிர்த்தன. பிடரியும் புட்டமும் விதிர்த்தன. பின்னர் அது பின்னடி வைத்து காட்டுக்குள் மறைந்தது.

புஷ்கரர் எழுந்து பெருமூச்சுவிட்டு “செல்வோம்” என்றார். அவர்கள் காட்டுக்குள் சென்றதும் “புஷ்கரரே, அது உரையாடியது என்ன?” என்று சுதீரர் கேட்டார். புஷ்கரர் “உனக்கு என்ன கொடை வேண்டும் என்றது. நான் எதையும் விழையவில்லை என்றேன். நீ இழந்த அனைத்தையும் மீட்டளிக்கிறேன், இது என் ஆணை என்றது. மீள்வதற்கேதும் இல்லை எனக்கு என்றேன். உன் உளம்நோக்கி மீண்டும் ஒருமுறை சொல், நீ விழைவதற்கு ஏதேனும் எஞ்சியிருக்கிறதா? இவ்வாய்ப்பு பிறிதொருமுறை அமையாது என்றது. நான் என் உள்ளத்தைத் துழாவி இல்லை தேவே, ஏதுமில்லேன் என்றேன்” என்றார்.

சுதீரர் புன்னகைத்தார். புஷ்கரர் தொடர்ந்தார் “நீ இனிமேல் விழைவது எது? ஓர் அழகிய குடில்? அருகே ஒரு ஆறு? நீ விழைந்தால் உன்னை தவத்தோன் என ஆக்குகிறேன். உன் குலமும் குடியும் குருதிவழியினரும் வந்து உன் அடிபணிவர். அவர்களின் ஆலயங்களில் நீ தெய்வமென அமர்ந்திருப்பாய் என்றது. மெய்யாகவே அப்படி எவ்விழைவும் என்னில் இல்லை என்றேன். உன்னுள் எழும் வினாக்களுக்கு விடை சொல்கிறேன். இவையெல்லாம் ஏன் என்று விளக்குகிறேன் என்றது. நீ தேடும் மெய்மையை நான் அளிக்கிறேன் என்று கூறியது. தேவே, என்னுள் எவ்வினாவும் இல்லை. நான் எதையும் தேடவில்லை. இக்கணத்திலிருந்து முன்னும்பின்னும் நான் செல்ல ஓர் அடியும் இல்லை என்றேன்.”

“பிறகு ஏன் இங்கே செல்கிறாய் என்று கேட்டது. வெறுமனே இருப்பதற்கு மட்டுமே என்றேன். விழியும் குரலும் கனிந்து நீ எனக்கு இனியவன். நான் வைத்த தேர்வைக் கடந்தவன். இரண்டின்மை என்றும் வீடுபேறு என்றும் சொல்லப்படுவதொன்றுண்டு. அடைதலும் ஆதலும் ஆன ஒன்று. அதை உனக்குப் பரிசளிப்பேன் என்றது. நான் சொன்ன சொல்லே என்னுள் எழுந்தது, இறைவடிவே. நான் விழைவதற்கொன்றும் இல்லை என்றேன். விலகி உருமாறி விலங்கென்றாகி மறைந்தது” என்றார் புஷ்கரர். சுதீரர் “அமருமிடம் தவச்சாலையென்றாகும் தகைமைகொண்டுவிட்டீர்” என்றார்.

flower“நிஷதநகரியை நளனும் தமயந்தியும் நெடுநாட்கள் ஆண்டனர். மீண்டும் இந்திரகிரியின் உச்சியில் இந்திரனுக்கு ஆலயம் அமைந்தது. ஆனால் கலிதேவன் அங்கிருந்து விலக்கப்படவில்லை. இந்திரன் ஆலயத்திற்குள்ளேயே வடகிழக்கு மூலையில் தனி ஆலயத்தில் கலிதேவன் நிலையமைக்கப்பட்டான். இன்றும் முதற்பூசனை கலிக்குரியது. அங்கே வணங்கிய பின்னரே நிஷதமன்னர்கள் இந்திரனை வணங்குவது வழக்கம்” என்றார் முதிய காவலராகிய கிரணர்.

கஜன் மார்பில் கைகளை கட்டிக்கொண்டு கரவுக்காட்டை நோக்கிக்கொண்டிருந்தான். மாலை வெயில் நிறம் மாறிக்கொண்டிருந்தது. “நளன் எதிரி நாடுகளையெல்லாம் இரண்டு ஆண்டுகளில் வென்றார் என்கிறார்கள். அது இயல்வதே. புஷ்கரனின் ஆட்சியில் நிஷதர்கள் இறப்பின் மீதான அச்சத்தை கடந்திருந்தனர். தன்னலமும் வஞ்சமும் எல்லை கண்டு மீண்டிருந்தனர். ஆகவே அவர்கள் ஓநாய்க் கூட்டம்போல ஒற்றையுடல்கொண்ட திரளாக இருந்தனர். மீண்டும் முடிசூடியபின் ஏழாவது ஆண்டில் தமயந்தி மீண்டும் பரிவேள்வியையும் அரசக்கொடைவேள்வியையும் நடத்தி சத்ராஜித் என அமர்ந்தார்” கிரணர் சொன்னார்.

“கணவனாலும் தம்பியராலும் மைந்தராலும் சூழப்பட்ட அவர் பேரன்னை எனத் திகழ்ந்தார். அறத்தின் வெம்மின்னலை ஒருகையிலும் அளியின் தண்மலரை மறுகையிலும் ஏந்தி அரசாண்ட அவரை இந்திரனின் பெண்வடிவம் என்று குடிகள் வணங்கினர். இன்று விராடபுரியின் தென்மேற்கு மூலையில் மூதன்னை வடிவில் அவரை நிறுவி வழிபடுகிறார்கள். இந்திரை என்றும் இந்திராணி என்றும் அவரை அழைக்கிறார்கள். பெண்குழந்தை பிறந்தால் நாற்பத்தொன்றாம்நாள் அங்கே கொண்டுசென்று நாவில் தேனும் வேம்பும் கலந்த துளியை தொட்டுவைத்து அவர் காலடியில் இட்டு வணங்கி எடுத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளது. ஓராண்டு நிறைவில் முதல் முடி களைதலையும் அங்குதான் இயற்றுவார்கள். படைக்கலப்பயிற்சி பெறும் ஷத்ரியப்பெண்கள் இரும்புதொட்டு எடுக்கும் நாளை அங்கு கொண்டாடுகிறார்கள்.”

காவலர்தலைவனாகிய நிகும்பன் “அன்னையின் சிலையை நீ பார்க்கவேண்டும். நூறு முதிர்ந்த முதுமகள். கன்னங்கள் வழிந்து, பல்லில்லா வாய் உள்ளொடுங்கி, மூக்கு வளைந்து கூனுடல் கொண்டு அமர்ந்திருக்கிறார். ஆனால் இரு நீல வைரங்கள் பதிக்கப்பட்ட விழிகள் முலையூட்டும் அன்னையுடையவை எனக் கனிந்தவை. நான்கு கைகளில் மலரும் மின்னலும் அஞ்சலும் அருளலும்” என்றான். தீர்க்கன் “ஆம், நாகர்களின் கதையில் அவர் சூக்திமதியில் நூறாண்டு கண்ட முதுமகளாக இருந்தார் என்று கேட்டேன்” என்றான். கிரணர் “அது எண்ணியது காட்டும் ஆடி. அவர் என்றும் அவ்வாறே இருந்தார்” என்றார். தீர்க்கன் “ஆனால் நளமாமன்னர் அனைத்து ஆலயங்களிலும் முதிரா இளைஞனாகவே புரவியுடன் நின்றிருக்கிறார்” என்றான்.

கஜன் “புஷ்கரரைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தீர்கள்” என்றான். “ஆம், தடம் மாறிவிட்டேன். இந்தக் கரவுக்காட்டைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். புஷ்கரரும் சுதீரரும் வந்து சேர்ந்த இடமே இந்தக் கரவுக்காடு. அன்று இது தப்தைக்கும் ஊர்ணைக்கும் நடுவே இருந்த வெறும் புதர்க்காடு. இங்கு அரவுகள் மிகுதி என்பதனால் வேட்டைக்காரர்களும் மூலிகைநாடிகளும்கூட வருவதில்லை. இங்கே ஓர் ஆலமரத்தடியில் நாணலால் ஒரு குடில் கட்டி அதில் புஷ்கரரும் சுதீரரும் குடியேறினர். அவர்கள் இங்கே நாற்பத்தோராண்டு தவம் செய்ததாக சொல்கிறார்கள்” என்றார் கிரணர்.

“ஆண்டுக்கு ஒருமுறை அரசரும் அரசியும் மைந்தரும் வந்து அவர்களைப் பணிந்து படையலிட்டு மீள்வார்கள். மானுடர் எவரென்றே அறியாதபடி அவர்கள் இருவரும் அப்பாலெங்கோ விழிகொண்டிருந்தனர். அவர்கள் குடியிருந்த குடில்மேல் சரிந்த விழுதுகளே குடிலென்றாகிவிட்டிருந்தன. அதற்குள் சடைத்திரிகள் குழலென்றும் தாடியென்றுமாகி வழிந்து நிலம்தொட மெலிந்த உடலில் செதில்களென தோல் பரவியிருக்க அமர்ந்திருந்தனர். ஆடை மட்கி உதிர்ந்தபின் எவ்வண்ணமோ அவ்வண்ணம் எஞ்சினர்.”

“நாற்பத்தோராம் ஆண்டு அரசனும் அரசியும் வந்து நோக்கியபோது அவர்கள் அங்கில்லை. அவர்களை தேடிச்சென்றவர்கள் காட்டின் அடர்புதர்களில் வழிதவறி மீண்டனர். நிமித்திகர் கணித்து அவர்களிருவரும் சித்திரை முழுநிலவில் விண்ணெழுந்துவிட்டார்கள் என்றனர். அவர்களுக்கு குருபூசனை நிகழ்த்தவோ கோயிலமைக்கவோ உடலென எச்சமென ஏதும் கிடைக்கவில்லை. ஆகவே இக்காட்டையே அவர்களின் ஆலயமென்றாக்கினர். தப்தைக்கும் ஊர்ணைக்கும் நடுவே ஓடைகளை வெட்டி இணைத்து நீர் வலை ஒன்றை நெய்தார் நளன். அதன்பின் காடு நுரையெனப் பெருகி வானிலெழுந்தது” கிரணர் சொன்னார்.

“இது தவத்தின் காடு என்றனர் நூலோர். எளியோர் இங்கு நுழையலாகாதென்பதனால் இதை கரவுக்காடு என வகுத்தனர். கரந்த இடங்களில் பெய்து நிறையும் தெய்வங்கள் இங்கு நிறைந்தன. இது கந்தர்வக் காடென்றும் யக்‌ஷ வனமென்றும் சொல்கொண்டது” என்று கிரணர் சொன்னார். “பேரரசி தமயந்தி நூறாண்டு அகவை நிறைந்ததும் தன் மைந்தன் இந்திரசேனனுக்கு முடியளித்துவிட்டு நளனுடன் இக்காட்டுக்குள் புகுந்து மறைந்தார். தப்தையின் அருகே தமயந்தியும் ஊர்ணையின் அருகே நளனும் இறுதி நிறைவை அடைந்தனர். அவர்களுக்கு அங்குதான் அறைக்கல்லும் நடுகல்லும் நிறுவப்பட்டுள்ளன.”

“ஆண்டு பலிக்காகவும் பொதுமக்கள் வணங்குவதற்காகவும் நகருக்குள் வேறு ஆலயங்கள் அமைக்கப்பட்டன. இங்கே அரசகுடியினர் மட்டும் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து முதிர்ந்தமைந்த பேரன்னைக்கும் மூவா இளமைகொண்ட தாதைக்கும் பலிகொடுத்து வணங்கி மீள்வதுண்டு” என்றார் கிரணர். “ஆனால் அம்முறைமைகள் எல்லாம் நிஷதகுலத்தின் வீழ்ச்சியுடன் நின்றுவிட்டன. இப்போது உத்தரர் அவற்றை மீண்டும் தொடங்கியிருக்கிறார்.”

அந்திச் செம்மை பரவத் தொடங்கியது. தீர்க்கன் எழுந்துகொண்டு “கிரணரே, தாங்கள் ஓய்வெடுக்க வேண்டுமென்றால் வருக! நகரிலிருந்து சிறந்த பாக்கு கொண்டுவந்துள்ளேன்” என்றான். கிரணர் எழுந்துகொண்டு “ஆம், பகல் கடுமையானது” என்றார். நிகும்பன் “அந்தியில் அரசர் வருவார் என்றனர். ஆனால் அதற்குரிய எந்த ஏற்பாடுகளையும் காணமுடியவில்லை” என்று ஆடை திருத்தியபடி எழுந்தான். “இன்று முழுநிலவு. வானம் ஒளிகொண்ட பின்னர் வருவார்கள் போலும்” என்றார் கிரணர். “நாம் செய்யவேண்டியதொன்றும் இல்லை. நாம் இதன் எல்லைக் காவலர்கள் மட்டுமே” என்று தீர்க்கன் சொன்னான். “ஓய்வெடுக்க பொழுதிருக்கிறது.”

பேசியபடியே அவர்கள் இறங்கிச்சென்றனர். கஜன் காவல்மாடத்தின்மேல் தனித்தமர்ந்திருந்தான். காற்றில் காடு மெல்ல ஆடியது. மரக்கலம்போல. பெருந்திரைச்சீலைபோல. அவன் கால்களை நீட்டி வேலை மடியில் வைத்துக்கொண்டான். அவன் புண் ஆறிவிட்டிருந்தாலும் அசைவுகளில் இருப்புணர்த்தியது. அதை மெல்ல தொட்டபோது இனிய குறுகுறுப்புணர்வு ஏற்பட்டது. அதை அழுத்தி நோக்குவது ஓர் இசைக்கருவியை மீட்டுவதுபோல என்று எண்ணிக்கொண்டு அவனே புன்னகை செய்துகொண்டான்.

கீழே கொம்பு ஒலித்தது. அதைக் கேட்டதும் காவல் மாடங்களின் முரசுகள் முழங்கத் தொடங்கின. கஜன் எழுந்து நின்று கீழே நோக்கினான். காவலர்தலைவன் நிகும்பனும் கிரணரும் பிற காவலரும் ஓடிச்சென்று நிரைகொண்டு காத்துநின்றனர். அத்தனை விரைவில் எளிமையாக அரசவருகை நிகழுமென அவர்கள் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிந்தது. கிரணர் நின்றுகொண்டே தன் தலைப்பாகையை சுற்றினார். தீர்க்கன் இடைக்கச்சையை கட்டினான்.

கொடிவீரன் ஒருவன் புரவியில் முன்னால் வர அவனுக்குப் பின்னால் காரகன்மேல் ஏறி உத்தரன் வந்துகொண்டிருந்தான். கடிவாளத்தை தளர்வாகப் பற்றி தன்னுள் ஆழ்ந்து விழி தாழ்த்தியிருந்தான். அவன் உள்ளத்தால் இயக்கப்பட்டதாக காரகன் வந்து முற்றத்தில் நின்றது. அவன் இறங்கி அதன் கழுத்தில் தட்டிவிட்டு நிகும்பனிடம் ஓரிரு சொற்கள் உரைத்தபின் கைகளை நீட்டி சோம்பல் முறித்தான். பின்னர் தனியாக கரவுக்காட்டுக்குள் புகுந்து மறைந்தான்.

காவலர் முகப்பு முற்றத்தில் காத்து நின்றிருந்தனர். காரகன் தலைதாழ்த்தி சிலைபோல அசையாமல் நின்றது. முகில்கள் ஒன்றிலிருந்து ஒன்றென ஒளிகொண்டன. அவன் அசையாமல் நின்று எழுநிலவை நோக்கிக்கொண்டிருந்தான். நிலவொளி அருவியெனப் பெய்ய அதில் நீராடுபவன்போல கைகளை விரித்து முகம் தூக்கி நின்றான். அவன் வழியாகப் பொழிந்து பெருகிப்பரவி வெண்நுரை எழுந்து கரவுக்காட்டை மூடியது. அவன் உடல் சிலிர்த்துக்கொண்டே இருந்தது.

உடல் குளிர்ந்து நடுக்கத்தை உணர்ந்தபோது அவன் தன்னிலை கொண்டான். நிலவு நன்கு மேலேறியிருந்தது. இலைகள் சுடர்களென ஒளிர நின்ற மரம் ஒன்று அவனருகே காற்றில் குலுங்கியது. அவனைத் தவிர எவரும் விழித்திருப்பதாகத் தோன்றவில்லை. அவன் சரடேணி வழியாக கீழிறங்கி நிலத்தில் நின்றான். காவல் மாடத்தின் ஆட்டத்தை வாங்கிக்கொண்டிருந்த உடல் அலைபாய்ந்து அவனை ஒரு பக்கமாகத் தள்ளியது. சிறிய மரம் ஒன்றைப் பற்றியபடி நின்று நிலைமீண்டான்.

அவன் முற்றத்தை அடைந்தபோது காட்டுக்குள் இருந்து உத்தரன் தனியாக நடந்துவருவதை கண்டான். தன்னுள் ஆழ்ந்த நடை. ஆனால் கால்கள் நிலத்தையும் உடல் சூழலையும் நன்கறிந்திருந்தது. அவன் மணம் கிடைத்ததும் தலையசைத்து பிடரி குலைத்து காரகன் உறுமியது. அதனருகே நின்றிருந்த நிகும்பனும் தீர்க்கனும் இரு காவலர்களும் தலைவணங்கினர்.

உத்தரன் நிகும்பனிடம் ஒரு சொல் உரைத்துவிட்டு புரவிமேல் சிறுகுருவிபோல் தொற்றி ஏறிக்கொண்டான். கொடிக்காரனும் அகம்படி வந்த இரு காவல்வீரர்களும் தங்கள் புரவிகளில் ஏறிக்கொண்டார்கள். உத்தரன் காரகனின் கழுத்தைத் தட்டி அதை செலுத்தினான். வால் சுழல பெரிய குளம்புகள் மண்ணை அதிரச்செய்ய அது பாய்ந்தோடி புதர்களுக்கு அப்பால் மறைந்தது. அப்புரவிகளின் ஓசை காட்டுக்குள் துடித்து அடங்கியது. அவற்றால் எழுப்பப்பட்ட பறவைகளும் மெல்ல அமரத் தொடங்கின.

மெல்லிய குரலில் பேசியபடி நிகும்பனும் தீர்க்கனும் செல்ல காவலர் வேல்களை தோளில் வைத்தபடி சலிப்புடன் நடந்துசென்றனர். அவன் மரத்திற்குப் பின்னால் மறைந்துகொண்டான். அவர்கள் கடந்துசென்ற பின்னர் வேலியிலிருந்த சிறிய இடைவெளியினூடாக கரவுக்காட்டுக்குள் புகுந்தான். இருமுறை பெருமூச்சுவிட்டு தன் உள்ளத்தை எளிதாக்கிக் கொண்டான். வெளியுலகை விலக்கிக்கொள்ளும் பொருட்டு அடிகளை எண்ணியபடி நடந்தான். மரங்களை எண்ணி மேலும் சற்று நடந்தான்.

நிலவொளியும் நிழல்களும் கலந்து காடு அலைததும்பிக் கொண்டிருந்தது. நிழலென்றும் ஒளியென்றும் உருமாறி உருகி வழிந்து பரவி அவன் அதற்குள் சென்றுகொண்டிருந்தான். தரையில் குரங்குகள் விழுந்து கிடந்தன. பொன்னிற நாகங்கள் மிக மெல்ல வழிந்து சென்றன. தொலைவில் ஓடையின் ஓசை. தலைக்குமேல் காற்றோசை. அடிமரங்கள் மெல்லிய ஒளிமினுப்பு கொண்டன. ஒரு மரத்தைச் சூழ்ந்து குரங்குகள் உதிர்ந்த பலாப்பழங்கள் என கிடந்தன. அவன் அந்த அடிமரத்தில் கையை உரசினான். விரித்து நோக்கியபோது வெள்ளித்தூள் படிந்தது போலிருந்தது கை. அதை மூக்கில் வைத்து உறிஞ்சினான். மென்தசை அதிர்ந்தது. கண்களில் நீர் கோத்தது.

காற்றில் மிதந்து அவன் செல்ல அவன் உடல் உருகி நீண்டு இழுபட்டு எஞ்சிய பகுதிகள் நின்றிருந்த இடங்களில் எல்லாம் படிந்திருந்தன. சருகுகளில் கூழாங்கற்களில் வேர்களில் அவன் பரவியிருந்தான். அவன் உடலைத் தொட்ட இலைகளெல்லாம் அவன் துளித்துச் சொட்ட அசைந்தன. காற்றில் அவன் உடல் புகையென ஆடியது. மரங்களினூடாக மிதந்த நீண்ட செந்நிறப் புகைத்திரிகள் போன்ற கந்தர்வர்களை அவன் கண்டான். பிரிந்தும் கலந்தும் முகம்கொண்டு நகைத்தும் அவர்கள் சென்றனர். ஒளிரும் சிறகுகளுடன் யட்சர்கள் மலர்கள்மேல் அமர்ந்து ஆடினர்.

அவன் உடலே விழியென்றாகியது. மரங்கள் கைகள் கொண்டு நடமிட்டன. அருவியெனப் பெய்து எழுந்த வெள்ளியுடல் கந்தர்வன் ஒருவன் கைவிரித்துப் பெருகி ஐந்து கன்னியர் என்றும் ஆனான். அவர்களைத் தழுவியபடி மரங்களில் ஊடுருவிச் சென்றான். ஒளியெனப் பெருகிச்சென்ற தப்தையின் கரையில் அவன் ஒருவனை கண்டான். நடை அவன் அறிந்திருந்தது என்பதனால் விழிகூர்ந்தான். அவன் இளஞ்செந்நிற ஒளி கொண்டிருந்தான்.

கஜன் அவன் பெயர் முக்தன் என நினைவுகூர்ந்தான். அல்லது வேறேதுமா? அந்த நடை பிருகந்நளைக்குரியதல்லவா? அதைத்தானே சற்றுமுன் உத்தரனிடம் கண்டேன்? முக்தனுடன் சென்ற பெண்ணை அவன் இலைகள் மறைய மறைய தெளிவற்று கண்டான். நிழலென்றும் ஒளியென்றும் உருக்கொண்டு மாறிக்கொண்டே சென்றாள். அவள் சுபாஷிணி என்று ஒரு நிலவுக்கீற்று காட்டியது. அல்ல என்றது இருள்கீற்று.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 95

94. வீழ்நிலம்

flowerதொலைவிலிருந்தே கையைத் தூக்கி மந்தண விரல்குறியைக் காட்டியபடி புஷ்கரனின் படுக்கையறையை நோக்கி சுதீரன் சென்றான். வாயிலில் நின்றிருந்த யவனக்காவலர் இருவர் அவனை அடையாளம் கண்டு தலைவணங்கினர். காப்பிரிக்காவலர் இருவர் தரையில் மடியில் வாளை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். சுருண்ட நுரைமுடியும் சோழிகள் போன்ற விழிகளும் பெரிய உதடுகளும் கொண்டவர்கள். யவனர்களில் செங்கல்நிறம் கொண்டவர்களும் சுண்ணக்கல் நிறம்கொண்டவர்களும் இருந்தனர்.

சுதீரன் மெல்லிய குரலில் மந்தணக்குறிமொழியில் அரசனை அழைத்துச்செல்ல வந்திருப்பதாக சொன்னான். காவலர் வாயிலில் இருந்த சிறிய துளை வழியாக உள்ளே சென்ற நூலை இழுத்து அசைத்தனர். உள்ளிருந்து ஒரு காவலன் துளைப்பொருத்தில் செவிசேர்க்க அவனிடம் மந்தண மொழியில் செய்தி உரைத்தனர். உள்ளே இருப்பவர்கள் பீதரும் சோனகரும் என்பதனால் அவர்களுக்கிடையே ஒற்றைச் சொற்களாலேயே உரையாடமுடியும். அவர்கள் பணிக்குச் சேரும்போது அந்த மொழி கற்பிக்கப்படும். அடுத்த அணிக்கு முற்றிலும் புதிய மந்தணமொழி உருவாக்கப்படும்.

சுதீரன் கைகளைக் கட்டியபடி காத்து நின்றான். உள்ளே எந்த ஓசையும் கேட்கவில்லை. புஷ்கரன் வழக்கமாக துயிலெழ மிகவும் பிந்தும். அவன் இரவு செறிவதற்குள்ளாகவே துயிலறைக்குச் சென்றுவிடுவான். அவன் துயில்வதற்கு இருபதுக்கும் மேற்பட்ட துயிலறைகள் கட்டப்பட்டிருந்தன. எங்கே அன்றைய துயில் என்பதை அவனே துயில்வதற்கு சற்று முன்னர் முடிவெடுப்பான். ஒவ்வொருநாளும் வெவ்வேறு காவலர் அவன் அறைக்கு வெளியேயும் உள்ளேயும் காவல் காத்தனர். பீதர், யவனர், சோனகர், காப்பிரியர் என அயலவர் மட்டுமே காவல்பணிக்கு அமர்த்தப்பட்டனர். அவர்களும் ஆறு மாதங்களுக்கொருமுறை முழுமையாக மாற்றப்பட்டனர்.

சிவமூலி இழுத்து மயங்கித் துயிலும் வழக்கம் முன்பு புஷ்கரனுக்கு இருந்தது. ஒவ்வொருநாளும் கால்தளர்ந்து தள்ளாடியபடியே அவன் படுக்கையறைக்குச் சென்றான். பின்னர் நரம்புகள் தளரத்தொடங்கியதும் எங்கும் எப்போதும் அமர்ந்த சற்றுநேரத்திலேயே ஆழ்ந்து துயிலத்தொடங்கினான். நரம்புத்தளர்வுக்கு மயக்குகள் ஒவ்வா என்று மருத்துவர் விலக்கிவிட்டமையால் மதுவும் சிவமூலியும் அகிஃபீனாவும் அவன் கொள்வதில்லை. அவன் படுக்கையில் படுத்ததும் அருகே நின்றிருக்கும் காவலர் சீரான தாளத்தில் மெல்ல பீடத்தை தட்டுவார்கள். அதைக் கேட்டபடி கண்தளர்வான். வெயிலெழுந்த பின்னரே விழிப்பான். நடுவே மஞ்சத்திலேயே சிறுநீர் கழிப்பான். இருமலிருந்தால் மலமும் செல்வதுண்டு. விழித்திருக்கையிலும் அவனால் சிறுநீரை அடக்கமுடியாதென்பதனால் அவனுடன் சிறுநீர்க்கலம் ஏந்திய ஏவலன் ஒருவன் எப்போதும் இருந்துகொண்டிருப்பான். பீதர்கள் உள்ளிருந்து செய்தி சொன்னதும் “விழித்துக்கொண்டார்” என்று யவனக்காவலன் சொன்னான்.

மீண்டும் நெடுநேரம் கடந்து கதவு திறந்தது. சுதீரன் தலைவணங்கி “பேரரசருக்கு தெய்வங்களின் அருள் நிறைக!” என வாழ்த்தினான். மெல்ல இருமிய புஷ்கரன் “மருத்துவர் எங்கே?” என்றான். புரவியிலிருந்து விழுந்ததன் வலி இருக்கிறதென உய்த்தறிந்த சுதீரன் “சித்தமாக இருக்கிறார். நாம் செல்ல காத்திருக்கிறார்” என்றான். புஷ்கரன் அவனை திரும்பி நோக்காமல் நடந்தான். திறந்த கதவு வழியாக கழிப்பறையின் கெடுமணம் எழுந்தது. ஏவலர் படுக்கையை சீரமைக்க உள்ளே நுழைந்தனர்.

சுதீரன் தொலைவில் அவனை நோக்கியபடி நின்ற சிற்றமைச்சன் சிபிரனிடம் கையசைவால் மருத்துவர் என ஆணையிட அவன் ஓசையின்றி பாய்ந்தோடினான். “நாம் இன்று காலை கலிதேவன் ஆலயத்திற்கு செல்கிறோம். அங்கே தங்கள் திருக்காட்சிக்காக குடிகள் புலரிக்கு முன்னரே பெருகிச் சூழ்ந்திருக்கிறார்கள்” என்றான். புஷ்கரன் பேசாமல் நடந்தான். நின்று இருமுறை இருமிவிட்டு மேலும் சென்றான்.

மருத்துவநிலையின் வாயிலில் மருத்துவர் சுவினீதரும் மாணவர்களும் அவர்களுக்காக காத்து நின்றிருந்தனர். சுவினீதர் தலைவணங்கி முகமன் உரைத்தார். புஷ்கரன் “படைத்தலைவன் எங்கே?” என்றான். “அவர் கலி ஆலயத்தில் இருக்கிறார். அவர் தலைமையில்தான் திரள் ஒழுங்கமைகிறது” என்றான் சுதீரன். “நான் முற்றத்திற்கு வருகிறேன்” என்றான் புஷ்கரன். “பட்டத்துயானை ஒருங்கி நிற்கிறது, அரசே” என்றான் சுதீரன். திரும்பி நோக்காமல் புஷ்கரன் உள்ளே சென்றான்.

சுதீரன் வாயிலுக்கு ஓடிவந்தபோது அங்கே பட்டத்துயானையுடன் முழுக் காவல்படையினரும் அகம்படியினரும் மங்கலநிரையினரும் காத்திருந்தனர். அவன் வந்தது குளத்தில் கல் விழுந்ததுபோல ஓசையற்ற அலையசைவாக இறுதிவரை பரவிச்சென்றது. காத்திருக்கும்படி கையசைத்துவிட்டு அவன் முகப்பில் கைகட்டி நின்றான். அவனை நோக்கியபடி முற்றம் அசைவிழந்து விழிகளாக சூழ்ந்திருந்தது. புரவிகளின் மூச்சொலிகள், குளம்பு மிதிபடும் ஓசைகள், யானை அசைந்துகொண்டே இருக்கும் ஓசை. அவர்களுக்குப் பின்னால் ஓசையே இல்லாமல் குன்றுபோல நின்றிருந்தது அரண்மனை, உள்ளே நுழையமுடியாமல் திணிவுகொண்ட பெரும்குவை அன்றி வேறில்லை என.

விடிந்தபடியே வந்தது. ஒவ்வொன்றும் துலங்க பந்தங்கள் மட்டும் ஒளியிழந்தன. பந்தங்களை அணைத்து அப்பால் கொண்டுசென்றனர். அணைந்த பந்தங்களிலிருந்து எண்ணைக்கருகல் மணம் எழுந்து காற்றில் சுழன்று அப்பால் விலகியது. வண்ணங்களனைத்தும் கூர்கொண்டன. தொலைவில் நின்றிருந்த மரத்தின் ஒவ்வொரு இலையும் தெளிந்தெழுந்தது. அந்நகரில் ஒரு விழா நிகழ்கிறதென்று அயலவர் நம்பமுடியாது. மிக மெல்லிய கார்வைபோல மக்கள்திரளின் முழக்கம் கேட்டுக்கொண்டிருந்தது, செவியருகே ஒரு கலத்தை வைத்ததுபோல.

ஏவலன் அப்பால் வந்து நின்று வணங்கினான். அருகே வர அவன் கைகாட்ட நெருங்கிவந்து காதில் செய்திகளை சுருக்கமாக சொன்னான். கலி ஆலயத்தின்முன் மக்கள் நிரை பெருகி அலையடிக்கிறது. பூசனைகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. அரசர் வந்தபின்னரே முடிக்கவேண்டும் என்பதற்காக சிலவற்றை மீண்டும் மீண்டும் செய்து பொழுது நீட்டிக்கிறார்கள். வந்துகொண்டிருக்கிறார் என்று சொல்லும்படி ஆணையிட்டு அனுப்பினான்.

கோட்டைமுகப்புக் காவல்மாடத்தின் நிழல் நீண்டு மாளிகைப்படிகளில் விழுந்தது. செவ்வொளிக் கற்றைகள் கட்டடங்களின் இடையே பீறிட்டு எழுந்து சரிந்தன. மேலே தோன்றிய ஏவலன் கைகாட்டினான். சுதீரன் முன்னால் சென்று படிகளின் அருகே காத்து நின்றான். புஷ்கரன் இறங்கிவரக் கண்டதும் அவன் கையசைக்க மங்கல இசை மட்டும் எழுந்தது. புஷ்கரன் தோன்றியதும் வாழ்த்தொலிகள் எழுந்தன.

புஷ்கரன் எவரையும் நோக்காமல் நேராகச் சென்று மரப்படிகளில் ஏறி யானை மேலிருந்த அம்பாரி மீது அமர்ந்தான். கைகளை கட்டிக்கொண்டு பீடத்தில் சாய்ந்தான். பாகன் யானையை மெல்ல தட்ட பொன்னுரை உருகி வழிந்ததுபோன்ற முகபடாத்துடன் அது ஆடியபடி திரும்பியது. அதன்மேல் போடப்பட்டிருந்த பட்டுக்கம்பளம் உலைந்தாடியது. சங்கிலிகள் ஒலிக்க அது நடக்க கவசமணிந்த கொடிவீரர் எழுவர் காகக்கொடியுடன் முன்னால் சென்றனர். மங்கல இசையுடன் சூதர்நிரை தொடர அவர்களுக்குப்பின் நூற்றெட்டு அணிச்சேடியர் பொலிதாலங்களுடன் சென்றனர்.

யானைக்கு இணையாக புரவியில் சுதீரன் சென்றான். நகர்த்தெருக்கள் தோரணங்களாலும் மலர்வளைவுகளாலும் பட்டுத்துணிகளாலும் அணிசெய்யப்பட்டிருந்தன. தெருக்களின் இருமருங்கிலும் கூடியிருந்த நிஷதகுடியின் பெண்களும் இளையோரும் மலர்தூவி அரசனை வாழ்த்தி குரலெழுப்பினர். அவன் ஒவ்வொரு முகமாக நோக்கிக்கொண்டு சென்றான். அத்தனை முகங்களும் ஒன்றுபோலிருந்தன. அத்தனை செயல்களும் நன்கு பயின்றவைபோல. புன்னகைகள், கைவீசல்கள்.

அரசப்பெருவீதியில் இருந்து பிரிந்தபோது கலியின் குன்று தோன்றியது. அது வெண்சிதல் மூடிய நெற்று என தெரிந்தது. அதன் பரப்பு முழுக்க இடைவெளியில்லாமல் மானுடத் தலைகள். மேலே செல்லும் பாதை மட்டும் அதில் சுற்றப்பட்ட மேலாடைபோல சுழன்று சரிந்திறங்கியது. குன்றின்மேல் ஏறத்தொடங்கியபோது சுதீரன் திரும்பி கீழே விரிந்திருந்த நகரை நோக்கினான். அங்கே அனைத்தும் வழக்கம்போலிருப்பதாகத் தோன்றியது. எறும்புப்புற்றை நோக்குவதுபோல. அனைத்து எறும்புக்கூடுகளும் ஒன்றைப்போல் பிறிதொன்று என உயிரியக்கம் கொண்டு கொப்பளிக்கின்றன.

flowerகுன்றின்மேல் கலியின் ஆலயத்தை அவர்கள் அடைந்தபோது பெருமுரசங்கள் முழங்கத் தொடங்கின. கூட்டம் அரசனை வாழ்த்திக் கூவியது. மங்கல இசையும் குரவையொலியும் இணைந்துகொண்டன. யானை செல்ல வழிவிட்டு இரு பக்கமும் எவரும் ஒதுக்காமலேயே உடல்களின் எல்லை ஒன்று உருவாகியது. பின்னாலிருந்தவர்களின் உந்துவிசையால் அது  அலைவிளிம்பென நெளிந்தது.

கலியின் ஆலயத்தின் முன் யானை வந்து நின்றதும் கைகளால் ஆணைகளைப் பிறப்பித்தபடி நின்ற படைத்தலைவன் ரணசூரன் முழுக்கவச உடையுடன் வந்து வணங்கினான். ஏவலர் இருவர் மெல்லிய மூங்கில் படிக்கட்டை கொண்டுவந்து யானை அருகே வைத்தனர். புஷ்கரன் கைகளைக் கூப்பியபடி அதனூடாக இறங்கி வந்தான். ரணசூரன் வாழ்த்துரைத்து தலைவணங்கி “அனைத்தும் முறையாக நிகழ்கின்றன, அரசே” என்றான். அவனை நோக்கி புன்னகைத்து “நன்று” என்றபின் முன்னால் சென்றான் புஷ்கரன். ரணசூரன் குழப்பத்துடன் சுதீரனை நோக்கினான்.

தலைமைப்பூசகர் மச்சர் கலிக்கு அணிவிக்கப்பட்ட கரிய பட்டாடையை அரசனின் தோளில் அணிவித்தார். காகஇறகு சூடிய குலக்கோலை காளகக் குடித்தலைவர் மூர்த்தர் அளித்தார். புஷ்கரன் அவர்களின் முறைமைகளை ஏற்று முன்னால் சென்றான். யானையை பாகன் மெல்ல தட்ட அது காலெடுத்து வைத்து விலகிச்சென்றது. அதே கணம் அப்பால் எரியம்பு ஒன்று எழ ஓர் யானை பிளிறியது. அதனருகே நின்றவர்கள் பாறைவிழுந்த நீர்ப்பரப்பென அதிர்ந்து அலைவட்டமெனப் பரவினர். அவ்விசையால் கூட்டத்தின் உடல்வேலி உடைந்து அங்கிருந்த சிலர் நிலைதடுமாறி விழுந்தனர். முதுமகள் ஒருத்தி கையிலிருந்த குழந்தையுடன் யானையின் காலடியில் விழ யானை திகைத்து பின்னால் காலடி வைத்தது. பின்னாலிருந்த புரவிமேல் முட்டிக்கொண்டு விதிர்த்து முன்னால் நடந்தது. அதன் இரு கால்களுக்கு நடுவே முதுமகளும் மைந்தனும் நசுங்கி உடல் உடைந்தனர்.

ஓலமும் கலைவும் கேட்டு புஷ்கரன் திரும்பி நோக்கினான். சினத்துடன் “என்ன? என்ன?” என்றான். ரணசூரன் பதற்றத்துடன் ஓடிவந்து “அரசே, நிலைதடுமாறி… ஏதோ குழப்பம்” என்று குழற புஷ்கரன் முகம் சிவக்க, கழுத்துத் தசைகள் இழுபட்டு அசைய அவன் கன்னத்தில் ஓங்கியறைந்தான். மேலாடையைச் சுழற்றியபடி யானைக் காலடியில் கிடந்து துடித்த முதுமகளைத் தூக்கிய ஏவலரை அகற்றி குனிந்து அவள் தலையை தொட்டான். அவள் உடல் ஒரு பக்கமாக இழுபட்டிருந்தது. இடைக்குக் கீழே குருதிக்குழம்பு பரவியிருந்தது. இன்னொரு ஏவலன் குழந்தையை தூக்கினான். அதன் தலை நெஞ்சின்மேல் சரிந்திருந்தது.

புஷ்கரன் திரும்பி ரணசூரனை நோக்கி “மூடன்” என்றான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதை சுதீரன் நோக்கினான். யானை முன்னால் சென்று அங்கிருந்த திரளைக் கண்டு பிளிறியதும் அவன் உடல் அதிர்ந்து துள்ளியது. அவன் வலக்கை அடிபட்ட நாகமெனத் துவள்வதை, நாக்கு வாயின் வலப்பக்கம் ஒட்டியிருப்பதை சுதீரன் கண்டான். புஷ்கரனின் வேளக்காரர்கள் அவன் ஆணைக்காகக் காத்திருந்தனர். சூழ்ந்திருந்த குடிகளும் ஓசையடங்கி தருண முனையில் நின்றிருந்தனர்.

ரணசூரன் புஷ்கரன் முன் முழந்தாளிட்டு கைகூப்பி “அரசே” என்று கூவினான். “அரசே, பொறுத்தருள்க! என் பிழையல்ல… என் பிழையல்ல, அரசே” என்றான். சுதீரன் தோள்தளர பெருமூச்சுடன் நோக்கை விலக்கிக்கொண்டான். புஷ்கரனின் முகம் சிவந்து வாய் இறுகியது. காவலர்தலைவனை நோக்கி கைகாட்டியபின் சுதீரனை நோக்கி திரும்பினான்.

காவலர்கள் ரணசூரனை சூழ்ந்துகொண்டனர். ஒருவன் ரணசூரனின் முதுகை ஓங்கி மிதிக்க அவன் உடல் மண்நோக்கி குனிந்த கணம் காவலர்தலைவனின் வாள் ஏறி இறங்கியது. ரணசூரன் தலை வெட்டுண்டு மெல்லிய ஓசையுடன் கீழே விழுந்தது. அதன் மேலேயே அவன் உடலும் விழுந்தது. உடைந்த கலத்திலிருந்தென வெங்குருதி பீறிட்டு மண்ணில் வழிந்தது. சூழ்ந்திருந்தவர்களிடமிருந்து ஓசையே எழவில்லை.

புஷ்கரன் சுதீரனை நோக்கி செல்வோம் என கைகாட்டிவிட்டு ரணசூரனின் உடலை சுற்றிக்கொண்டு ஆலயத்திற்குள் நுழைந்தான். சூழ்ந்து நின்றிருந்தவர்கள் ஓசையே இல்லாமலிருப்பதைக் கண்டு சுதீரன் ஏறிட்டுப் பார்த்தான். அந்தப் பெருந்திரள் பாறையடுக்குகள் என அசைவும் ஒலியும் அற்று செறிந்திருந்தது. “மூடன், தன் தண்டனையை தானே வரவழைத்துக்கொண்டான்” என்றான் அருகே நின்றிருந்த சிற்றமைச்சன். அவனை திரும்பி நோக்கியபின் சுதீரன் உள்ளே செல்ல முயல அவனுக்குக் குறுக்காக ரணசூரனின் உடல் கிடந்தது.

ரணசூரனின் கால்கள் இழுத்துக்கொண்டிருக்க இருவர் அவனை கைபற்றி இழுத்து அப்பால் கொண்டுசென்றனர். கூட்டத்தில் எவரோ ஏதோ சொல்ல சிரிப்போசை எழுந்தது. சுதீரன் திரும்பி கூட்டத்தை நோக்கியபோது ஒருவன் ஏதோ இழிசெய்கை காட்டினான். அவன் முகம் தெளிவதற்குள் திரளில் புதைந்தான். அவன் திரும்பியபோது பின்னால் கூட்டத்தின் சிரிப்பொலி முழங்கியது. குருதிச்சேற்றை மிதிக்காமல் தாண்டிக்குதித்து சுதீரன் ஆலயத்திற்குள் நுழைந்தான்.

கருவறைக்குள் புஷ்கரன் கலிதேவனின் சிலை முன்னால் நின்றிருந்தான். அவனுடைய மெய்க்காவலர் இருபுறமும் நிற்க அவன் திரும்பி சுதீரனை நோக்கி அருகே வரும்படி கைகாட்டினான். சுதீரன் அருகே சென்று கைகூப்பியபடி நின்றான். வெண்பட்டால் கண்கள் மூடிக் கட்டப்பட்ட கலியின் முகம் அத்தனை கூரிய நோக்கு கொண்டிருப்பதை உணர்ந்து விழிதிருப்பிக்கொண்டான். அவ்வுணர்வு உடலில் நீடித்தது.

பூசெய்கையும் பலிக்கொடையும் படையலும் குலமுறைமைகளுடன் நிகழ்ந்தன. பூசகர்கள் மெல்லிய குரலில் சொன்னவற்றை புஷ்கரன் பாவை என செய்தான். சுதீரன் சூழ்ந்திருந்தவர்களின் முகங்களையே நோக்கிக்கொண்டிருந்தான். அத்தனை முகங்களும் விழவுக்கான கிளர்ச்சியும் திரளென்றானதன் தன்னை மறந்த மிதப்பும் கொண்டு ஒன்றுபோலிருந்தன. தலைமைப்பூசகர் குருதிக்குழம்பு தொட்டு புஷ்கரனின் நெற்றியில் நீள்குறியிட்டு “கலியருள் சூழ்க! வெற்றியும் புகழும் நீள்க! என்றும் சொல் நின்றாள்க!” என வாழ்த்தினார்.

புஷ்கரன் திரும்பி நோக்க அருகே நின்ற ஏவலர் நீட்டிய தட்டிலிருந்து கரிய பட்டையும் பொன்னணியையும் எடுத்து முதுபூசகருக்கு அளித்தான். பிற பூசகர்களும் வந்து பரிசில் பெற்றுக்கொண்டனர். பரிசில் முடிந்ததும் புஷ்கரன் திரும்பி சுதீரனை நோக்கிவிட்டு மறுவாயிலினூடாக வெளியே சென்றான். முதலில் சென்ற மெய்க்காவலர் வேல் விரித்து வழி செய்ய புஷ்கரன் அவ்வாயிலில் தோன்றியதும் வாழ்த்தொலிகளும் குரவையும் மங்கல இசையும் முழங்கின. சூழ்ந்திருந்த காவல்மாடங்களில் இருந்து முரசொலி எழுந்தது.

புஷ்கரன் அப்பால் பலகையாலான பீடத்தில் காரகன் நிற்பதை கண்டான். வலது முன்னங்காலை சற்று தூக்கி தலைநிமிர்ந்து பிடரிமயிர்கள் காற்றில் உலைய ஓசைக்கேற்ப உடல் விதிர்த்தபடி நின்றிருந்தது. அதன் கடிவாளத்தை இரு பக்கமும் இரு பாகன்கள் பற்றியிருந்தனர். ஏவலனொருவன் வந்து பணிந்து “புரவி சித்தமாக உள்ளது, அரசே” என்றான். சுதீரன் தொலைவில் கட்டப்பட்டிருந்த சிறிய களிறை நோக்கினான். அதன்மேல் அமர்ந்திருந்த பாகன் அவன் கையசைவுக்காக காத்திருந்தான். புஷ்கரன் சுதீரனை நோக்கிவிட்டு நடக்கத் தொடங்க சுதீரன் திரும்பி பாகனை நோக்கினான். செய்கை காட்டத் தூக்கிய கையால் தலைப்பாகையை சீரமைத்தபடி மெல்ல பின்னடி எடுத்துவைத்து ஆலய வாயிலிலேயே நின்றான்.

முன்னோக்கி நடந்த புஷ்கரன் திரும்பிப் பார்த்தான். அவன் நோக்கை சந்தித்த சுதீரனின் விழிகள் விலகவில்லை. திடுக்கிட்டவன்போல புஷ்கரன் நின்றுவிட்டான். அவனுடன் சென்ற வேளக்காரப் படையினரும் நிற்பதை உணர்ந்து மேலும் நடந்தான். அவன் காலடிகள் தளர்ந்தன. ஒருமுறை நிற்கப்போகிறவன்போலத் தோன்றினான். காரகனை அவன் அணுகியதும் பரிவலர் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். புஷ்கரன் திரும்பி சுதீரனை விழிதொட்டு நோக்கினான். எவ்வுணர்வும் இல்லாமல் சுதீரன் நோக்கி நின்றான்.

மிக மெல்லிய புன்னகை ஒன்று புஷ்கரன் விழிகளில் தோன்றியது. கடிவாளத்தைத் தரும்படி பரிவலரிடம் சொன்னான். அவர்களில் ஒருவன் குனிந்து கால்வளையத்தை எடுத்துக் காட்ட அதில் கால்வைத்து எழுந்து புரவிமேல் ஏறிக்கொண்டான். செவி பின்கோட்டி விழியுருட்டி அது காற்றுபடும் சுனை என சிலிர்த்தபடி நின்றது. அவன் ஏறி அமர்ந்ததும் அதன் செவிகள் ஒன்றையொன்று தொடுவதுபோல கூர்கொண்டன. கனைத்தபடி நின்ற இடத்திலேயே முன்னங்கால் தூக்கி மேலே பாய்ந்து பின்னங்காலை உதறி மீண்டும் மேடையில் முன்னங்கால் ஊன்றி முன்புபோலவே நின்றது. கணநேரத்தில் நெய்விட்ட அனல் எழுந்து பின் அணைவது போலிருந்தது.

புஷ்கரன் தெறித்து காவலர் நடுவே விழுந்தான். அவர்கள் அறியாமல் விலகிக்கொள்ள மண்ணில் குப்புற உடலறைந்து பதிந்ததுபோல அசையாமல் கிடந்தான். சூழ்ந்திருந்தவர்கள் அனைவரும் அவனை நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் கையை ஊன்றி புரண்டு எழுந்து மெல்ல துப்பியபடி அமர்ந்தான். அவன் அணிந்திருந்த பட்டுமணிமுடி அப்பால் கிடந்தது. முகத்தை கையால் துடைத்தபடி அவன் தன்னைச் சூழ்ந்திருந்தவர்களின் பார்வைகளை நோக்கினான். அப்பெருந்திரள் அவனை விழிகளாகச் சூழ்ந்திருந்தது.

புஷ்கரன் சினம் எரிந்தேற எழமுற்பட்டபோது ஆலயமுகப்பில் நின்றிருந்த பட்டத்துயானைமேல் இரு கைகளையும் விரித்து உரக்க “நிஷதகுடி வெல்க!” என்று கூவியபடி நளன் எழுந்தான். அவன் கைகளை விரித்ததும் அங்கிருந்த மொத்தக் கூட்டமும் வெடித்தெழுந்த பெருமுழக்கமாக “பேரரசர் நளன் வாழ்க! நிஷதத் தலைவர் வாழ்க!” என்று கூவியது.

புஷ்கரன் எழுந்து தன் ஆடையை இழுத்தபடி அருகே நின்ற வீரனிடம் மணிமுடியை எடுக்கும்படி சைகை காட்டினான். அவன் அறியாமல் குனிய கூட்டத்தில் நின்ற ஒரு முதுமகள் “தொடாதே அதை… தொட்டால் உன் குலத்தை வேருடன் அறுப்போம்” என்று கூவினாள். நூற்றுக்கணக்கான பெண்குரல்கள் “தொடாதே… கீழ்மகனே, விலகு!” என்று கூவின. புஷ்கரன் பதறித்துடித்த வலக்காலுடன் நிற்கமுடியாமல் தள்ளாடினான். யானைமேல் நின்றிருந்த நளனை நோக்கியபடி காலடி வைக்க அவிழ்ந்து கிடந்த தன் ஆடையில் கால்சிக்க தடுமாறி விழுந்தான்.

அவன் வலக்கை இழுத்துக்கொண்டது. வலது கால் நீண்டு துடித்தது. வாய் கோணலாகி முகம் வலிப்பில் அசைந்தது. அவன் இடக்கையை ஊன்றி எழமுயல அவனை நோக்கி கைநீட்டி வசைபாடிய திரளில் இருந்து பழுத்த கிழவி ஒருத்தி கூன்விழுந்த முதுகுடன் வந்து அவன் முகத்தில் எட்டி உதைத்தாள். அவள் நரைகூந்தல் அவிழ்ந்து விழுந்தது. தடுமாறி நிலைகொண்டு அவன் முகத்தில் காறி உமிழ்ந்து “இழிமகனே… உன்னைப் பெற்ற வயிற்றுக்கும் கீழுலகே… சிறுமதியனே… புழுவே” என்று கூவினாள். அதற்குள் இன்னொரு முதுமகள் வந்து அவன் முகத்தில் உதைத்தாள். அவன் மல்லாந்து விழ வெறிகொண்டவள்போல அவனை உதைத்துக்கொண்டிருந்தாள். சூழ்ந்திருந்த பெண்கள் அனைவரும் வசைகூவ விழித்த கண்களுடன் படைக்கலமேந்திய வீரர்கள் நோக்கி நின்றனர்.

அச்செய்தி பரவ அப்பெருந்திரளிலிருந்த பெண்களனைவரும் வெறிக்கூச்சலிட்டபடி முட்டி அலைததும்பி அவனை நோக்கி வரத்தொடங்கினர். அவர்கள் வேலும் வாளுமேந்திய வீரர்களை அடித்தும் உதைத்தும் தள்ளினர். வீரர்கள் மெல்ல பின்வாங்கி ஒற்றைத்திரளாகி அகன்று செல்ல பெண்களின் பெருக்கு நடுவே சுழிமையமென புஷ்கரன் கிடந்தான். யானைமேலிருந்த நளன் “நிறுத்துங்கள். நிறுத்துங்கள்… இது அரசாணை!” என்றான். “அரசாணை!” என்று படைவீரன் ஒருவன் உரக்கக் கூவினான். அக்குரல் படைவீரர்களுக்கு அவர்கள் செய்யவேண்டுவதென்ன என்ற தெளிவை அளிக்க அவர்கள் “அரசாணை… நிறுத்துக!” என மீண்டும் மீண்டும் கூவினர். முன்னால் நின்றவர்கள் தயங்க பின்னால் நின்றவர்கள் உந்த கூட்டம் ததும்பி பக்கவாட்டில் விரிந்தது.

திரள் ததும்பியபடி வெறியுடன் கூச்சலிட்டுச் சூந்திருக்க வலக்கை நடுங்கித்துள்ள வலக்கால் செயலற்று இழுத்து நீண்டிருக்க மூக்கிலும் கடைவாயிலும் நீர் வழிய புஷ்கரன் அமர்ந்திருந்தான். யானைமேலிருந்து இறங்கிய நளன் அவன் அருகே வந்து “இளையவனே, உன்னிடமிருந்து எதையும் பறிக்க விரும்பவில்லை. நீ வென்றதை அவ்வண்ணமே மீட்க எண்ணுகிறேன். நாம் சூதாடுவோம்… சென்றமுறை ஆடிய அதே முறைப்படி, அதே நெறிகளின்படி” என்றான். புஷ்கரன் பேசமுற்பட்டாலும் அவனால் குரலெழுப்ப முடியவில்லை. அவன் சுதீரனை நோக்கினான்.

சுதீரன் அருகே வந்து வணங்கி “நான் அவரது அமைச்சன், என் பெயர் சுதீரன்” என்றான். “அவர் உங்களுடன் சூதாடுவார்… எங்கே எப்போது என்று சொல்லுங்கள்” என்றான். நளன் வாயெடுப்பதற்குள் முதுமகள் ஒருத்தி தொண்டை புடைத்துத்தெரிய பற்கள் நெரிபட “இப்போதே… இக்களமுற்றத்திலேயே நிகழட்டும்… இவன் நச்சுப்பல் நாகம். அது பதுங்கி எழ வாய்ப்பளிக்க மாட்டோம்” என்று கூவினாள். “ஆம், இங்கேயே… இங்கேயே ஆடவேண்டும்” என்று பெண்கள் கூச்சலிட்டனர். மீண்டும் திரள் எல்லை உடைய “ஆம், இங்கேயே. விலகுக!” என்று நளன் கூவினான். அவன் ஆணையை வீரர்கள் மீண்டும் கூவினர்.

நளன் சுதீரனிடம் “இவன் ஆடைமாற்றி நீர் அருந்தி வரட்டும்… இந்த ஆலயமுற்றத்திலேயே களம் அமையட்டும்” என்றான். சுதீரன் “ஆம், அரசே” என்றபின் புஷ்கரனின் இடக்கையைப்பற்றித் தூக்கினான். புஷ்கரனின் எடையை அவனால் தாங்கமுடியாமல் தள்ளாடினான். சூழ்ந்திருந்த எந்த வீரனும் உதவ முன்வரவில்லை. சுதீரன் வலக்கையை பற்றிக்கொண்டு இழுத்தான். அது பாய்மரக் கயிறென அதிர்ந்தது. இடக்கையை ஊன்றி புஷ்கரன் எழுந்தான். சுதீரன் அவனை தோள்சுற்றிப்பற்றி தாங்கிக்கொண்டான்.

“வருக அரசே… ஆலயச் சிற்றறையில் ஓய்வெடுக்கலாம்” என்றான் சுதீரன். புஷ்கரன் “நீர்… விடாய்நீர்” என்றான். அவன் உதடுகள் வீங்கியிருந்தன. நாக்கு வந்து வளைநாகம்போல் தலைகாட்டி மீண்டது. ஆலயச் சிற்றறையின் வாயிலில் நின்றிருந்த பூசகர் “பூசனைப்பொருள் வைப்பதற்குரிய அறை இது. இதற்குள் செல்லமுடியாது” என்றார். “ஒரு குறுபீடத்தை மட்டும் போடுங்கள்… அரசர் இளைப்பாறட்டும்” என்றான் சுதீரன். பூசகர் “இது இளைப்பாறுதற்குரிய இடமல்ல” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டார்.

“அமர்க, அரசே” என சுதீரன் அவனை படிகளில் அமரச்செய்தான். “நீர்… நீர்க்குடுவை” என்றான். வீரர்கள் வாள்களும் வேல்களுமாக எவரோ என நோக்கி நின்றனர். வீரர்களாலும் பெண்களாலும் சூழப்பட்டு நின்ற நளனை நோக்கி “அரசே, விடாய்நீர் கொடுக்க ஆணையிடுக!” என்றான் சுதீரன். நளன் “நீர் கொடுங்கள்” என்று சினத்துடன் சொல்லி அவனே வரப்போனான். “இருங்கள், அரசே” என ஒரு வீரன் இடையிலிருந்த நீர்க்குடுவையுடன் வந்து அதை சுதீரனிடம் தந்தான்.

வீங்கிய உதடுகளிலிருந்து வழிந்து நீர் மார்பெங்கும் நனைய தொண்டைமுழை ஏறி இறங்க மூச்சுவிட இடைவெளிவிட்டு புஷ்கரன் நீரை அருந்தி குடுவையை வைத்துவிட்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தான். சுதீரன் தன் மேலாடையை எடுத்து அவனிடம் அளித்து “துடைத்துக் கொள்ளுங்கள்” என்றான். அவன் முகத்தைத் துடைத்ததும் அதை வாங்கி அவன் முதுகையும் தோளையும் துடைத்தான். புஷ்கரன் தலைதூக்கி “அவர் வந்தது எப்போது உமக்குத் தெரியும்?” என்றான். “நேற்றுமுன்னாள்…” என்றான் சுதீரன். “இரு நாட்களாக இந்நகரில் சுற்றிக்கொண்டிருந்தார் என்றனர் என் ஒற்றர்.”

புஷ்கரன் வெறுமனே நோக்கினான். “இக்குடிகள்மேல் நம்பிக்கை கொள்ளாமலிருந்தார். திரும்பிச் சென்றுவிடுவதை குறித்துக்கூட எண்ணினார். ஆகவேதான் காரகனிலிருந்து உங்களை விழச்செய்தேன்” என்றான் சுதீரன். “அவர் புரவியை அறிந்தவர். கரிய வைரம் என அதை அழைக்கின்றனர் பரிவலர். அப்புரவி உங்களை ஏற்கவில்லை என்பது போதும் அவர் நம்பிக்கை கொள்ள..” புஷ்கரன் “இன்று குடிகள் நடுவே விழச்செய்து அவர்களுக்கும் அவர்களின் எண்ணத்தை காட்டிவிட்டீர்” என்றவன் புன்னகையுடன் இதழ்வளைய “நன்று, அந்தணரை வெல்லமுடியாதென்பது எந்தை கூற்று. அது பொருள்கொண்டது” என்றான். “என் கடன் இது” என்றான் சுதீரன்.

“நீர் என்ன நினைக்கிறீர்? நான் உயிர்வாழ்வதில் பொருளுண்டா?” சுதீரன் “ஆம், இப்போது இவ்வண்ணமே இறந்தால் ஏழுக்கு ஏழு பிறவி எடுத்துக் கழுவவேண்டியிருக்கும். கழுவினாலும் தீராமலும் ஆகும்” என்றான். புஷ்கரன் பெருமூச்சுவிட்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தான். பின்னர் சிவந்த விழிகளுடன் நிமிர்ந்து “அந்தணரே, இது அடிபணிந்து ஆசிரியனிடம் மாணாக்கன் கேட்பது. நான் செய்வதற்கேது உள்ளது?” என்றான்.

“அரசே, நீங்கள் இதுவரை ஈட்டியதில் நன்று ஒன்று உண்டு” என்றான் சுதீரன். “நீங்கள் ஆடியதில் எல்லை கண்டுவிட்டீர். இங்கினி ஏதுமில்லை. எனவே எச்சுமையும் இல்லாமல் பறந்து முழு விசையாலும் மறு எல்லைக்கு செல்லமுடியும். வான்மீகியும் விஸ்வாமித்திரரும் சென்ற தொலைவுக்கே.” புஷ்கரன் அவனை கூர்ந்து நோக்கினான். இருமுறை உதடுகள் அசைந்தன. “நன்றோ தீதோ எல்லைக்குள் நிற்பவர்கள் எந்த முழுமையையும் அடைவதில்லை. ஆடுகளங்களுக்கு அப்பாலுள்ளதே மெய்மை. மீறிச்செல்வதே தவமெனப்படுவது. முற்றிலும் கடப்பதே வீடுபேறு” என்றான் சுதீரன். “என்னுடன் இரும், அந்தணரே” என்றான் புஷ்கரன். “ஆம், அது நான் அளித்த சொல்” என்றான் சுதீரன்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 94

93. கருந்துளி

flowerபுஷ்கரன் அணியறையிலிருந்து கிளம்புவதை கையசைவு வழியாகவே வீரர்கள் அறிவிக்க முற்றத்தில் நின்றிருந்த சிற்றமைச்சன் சுதீரன் பதற்றமடைந்து கையசைவுகளாலேயே ஆணைகளை பிறப்பித்தான். அவனுடைய கைகளுக்காக விழிகாத்திருந்த ஏவலர் விசைகொண்டனர். ஓசையில்லாமல் அவர்கள் கைகளால் பேசிக்கொண்டபடி அங்குமிங்கும் விரைந்தனர். அரசன் செல்வதற்காக ஏழு புரவிகள் வாயிலில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. காவலர்கள் ஓசையில்லாமல் வேல்களை ஏந்தி விரைப்புகொண்டு நின்றனர்.

தலைமைப் படைத்தலைவன் ரணசூரனிடம் விழிகாட்டிவிட்டு சுதீரன் கிளைகளில் தாவும் குருவிபோல ஓசையிலாமல் படிகளில் தொற்றித்தொற்றி மேலே சென்றான். மூச்சிரைக்க, வாய்குவித்து காற்றை ஊதி அதை அடக்கியபடி காத்து நின்றான். புஷ்கரன் வெளிவந்ததும் அவனுக்காகக் காத்து நின்றிருந்த ஏவலர்கள் தலைவணங்கினர். அவன் சுதீரனிடம் “ம்?” என்றான். அவன் வாய்பொத்தி தலைதாழ்த்தி மிகத் தாழ்ந்த குரலில் “புரவிகள் சித்தமாக உள்ளன, அரசே. அமைச்சரும் படைத்தலைவரும் காத்திருக்கிறார்கள்” என்றான்.

அதை கேட்டதாகவே காட்டாமல் அவன் மெல்ல நடந்தான். அவனைச் சூழ்ந்து நடந்த வேளக்காரர்கள் மிகமெல்ல காலடிவைத்து ஓசையில்லாமல் நிழல்களைப்போல சென்றனர். படிகளில் அவர்கள் இறங்கியபோது எழுந்த நீர்வழிவதுபோன்ற மிகமெல்லிய ஒலியே அரண்மனை முழுக்க கேட்டது. அரண்மனை அச்சத்துடன் முணுமுணுப்பதுபோல அது ஒலித்தது.

புஷ்கரன் முற்றத்திற்குச் சென்றதும் அமைச்சரும் படைத்தலைவனும் தலைவணங்கினர். வேல்கள் ஒளியுடன் அலையசைவு என வளைந்து தாழ வீரர்கள் தலைவணங்கினர். அவர்களின் கவசங்களில் பந்தங்களின் ஒளிப்பாவை ஓசையின்றித் தழன்றது. புரவி ஒன்று சீறிய மெல்லிய ஒலி மட்டும் உரக்க கேட்டது. புஷ்கரன் இயல்பாக அத்திசை நோக்கித் திரும்ப பாகன் நடுங்கி அதன் விலாவைத் தட்டி ஆறுதல்படுத்தினான். அவன் சுதீரனை நோக்கி “கொட்டில் ஒருக்கமா?” என்றான். சுதீரன் “ஆம், அரசே” என்றபின் புரவிகளை அருகே கொண்டுவரும்படி கைகாட்டினான்.

புஷ்கரன் களைத்து தசைவளையங்கள் விழுந்த பழுத்த விழிகளும், வெளிறிய உடலும் கொண்டிருந்தான். வாயைச் சுற்றி விழுந்திருந்த அழுத்தமான கோடுகளால் அவன் துயர் கொண்டவன்போல, எதையோ எண்ணிக்கொண்டு தன்னை இழந்தவன்போலத் தோன்றினான். சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வலுத்துவந்த நரம்புநோய் ஒன்றினால் அவன் கைகளும் தலையும் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தன. முகத்தின் வலப்பகுதி சற்று இறங்கி வாய் இழுபட்டுக் கோணியிருந்தது. கன்னத்தசை நீண்டு வலக்கண் தாழ்ந்து அகவைக்கு மிஞ்சிய முதுமையை காட்டியது.

அவன் உதடுகளை நோக்கியபடி அனைவரும் காத்து நின்றிருந்தனர். புஷ்கரன் குரல் தாழ்ந்து செல்லத்தொடங்கி நெடுநாட்களாகிவிட்டிருந்தன. நாளுக்குநாள் அவன் குரல் தணிந்து பல தருணங்களில் உதடசைவினூடாகவே அவன் சொற்களை பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அவனைச் சூழ்ந்திருந்த ஒவ்வொருவரும் அவன் உதடுகளிலேயே விழிகளையும் செவிகளையும் சித்தத்தையும் நிறுத்தியிருந்தமையால் மட்டுமே அவை பொருள்கொண்டன. சினம்கொள்கையில் அவன் முற்றிலும் சொல்லடங்கினான். விழியிலும் இழுபட்டு அசையும் முகத்தசைகளிலும் மட்டுமே அது வெளிப்பட்டது.

குரல் தாழத் தொடங்கியபோது அவன் சூழொலிகளுக்கு ஒவ்வாமை கொண்டான். பேச்சுகள், கலக் குலுங்கல்கள், காலடிகள் அனைத்தும் அவனை அதிரச் செய்தன. கைதவறி ஏதேனும் விழுந்தால் உடல் விதிர்த்துத் துள்ள வாய் கோணலாக கழுத்துத்தசைகள் துடிக்க அவன் நிலையழிந்தான். அவ்வோசையை எழுப்பியவரை அக்கணமே காவலர் பிடித்துக் கொண்டுசென்று கொலைக்கூடத்திற்கு அனுப்பினர். ஓலைக்கட்டு ஒன்று அவன் கையிலிருந்து விழுந்த ஓசைக்கே இடக்கை இழுத்துக்கொள்ள வலிப்பு வந்து இறுகி பின் தளர்ந்தான்.

அவையில் அவன் உடலில் அவ்வலிப்பெழும்போது அவ்வண்ணம் ஒன்று நிகழாததுபோல் விழிசூடி நிற்க சூழ்ந்தோர் பயின்றிருந்தனர். விழிகளில் ஒரு சிறுமின்னலென ஏளனமோ ஆர்வமோ வந்து சென்றால்கூட அவன் அதை அறிந்தான். ஓரிரு நாட்களுக்குள் அவர்கள் கழுவிலேற்றப்பட்டனர். விழிகளில் இரக்கமோ பரிவோ வருமென்றால் அக்கணமே சீறிச் சினந்தெழுந்து ஏதேனும் பழிகூறி அவரை அங்கேயே வெட்டிவீழ்த்த ஆணையிட்டான்.

மாதத்திற்கு ஒருவராவது அவ்வண்ணம் அவன் அவையிலிருந்து காம்பிற்று இருளுக்குள் உதிர்ந்துகொண்டிருந்தனர். ஆயினும் அங்கு வந்துசேர கடுமையான போட்டி இருந்தது. ஏனென்றால் அங்கு வந்தவர்கள் நகர்மக்கள்மேல் தடையற்ற ஆதிக்கத்தை அடைந்தனர். நிஷதபுரியின் வரலாற்றில் அவ்வண்ணம் ஓர் ஆதிக்கத்தை எவரும் பெற்றிருந்ததில்லை. விழியசைவால் அவர்கள் எவரையும் கொலைமரத்திற்கு கொண்டுசெல்ல முடிந்தது. விரும்பிய செல்வத்தையும் பெண்ணையும் அடைய முடிந்தது. அனைத்துக்கும் அப்பால் பிறரை இழிவுசெய்வதன் பேருவகையில் இடைவிடாது திளைக்க முடிந்தது.

மேலிருப்பவர்களின் கோன்மை வலுப்பெற்றபடியே செல்ல கீழிருப்பவர்கள் புழுக்களென பாதங்களின் அளியால் உயிர் நெளிந்தனர். ஆகவே அங்கிருப்போர் ஒவ்வொருவரும் மேலேறத் தவித்தனர். பிறர்மேல் ஏறியே அங்கு செல்லமுடியும் என்பதனால் அவர்கள் அனைவரும் பிறரை கண்காணித்தனர், ஒடுக்கினர், அழித்து தங்களை மேலெடுத்துக்கொண்டனர். மேலும் மேலுமென பொருத்துக்களில் பற்றி விரிசல்களில் காலூன்றி ஏறிக்கொண்டே இருந்தனர். ஏறிக்கொண்டிருக்காதவர்கள் அழிக்கப்பட்டனர்.

அரண்மனையில் மரத்தரைகளெங்கும் மெத்தைவிரிப்பு போடப்பட்டது. கதவுக்குடுமிகள் வெண்கலமாக்கப்பட்டன. ஒவ்வொருநாளும் அவற்றில் ஆமணக்கு உயவு ஊற்றப்பட்டது. அத்தனை கலங்களும் மரவுரிகளால் உறையிடப்பட்டன. மென்தோல் காலணிகளை ஏவலரும் அணிந்தனர். வாள்களும் வேல்களும் ஒன்றுடனொன்று முட்டாமல் எப்போதும் கைகளால் பற்றப்பட்டிருந்தன. பேச்சுக்கள் ஒலியடங்கின. அவ்வாறு உருவான அமைதி ஒவ்வொரு குரலையும் பெருக்கிக் காட்டியமையால் அவர்கள் மேலும் ஒலியவிந்தனர். பின்னர் மூச்சொலிகளும் எழாமல் முற்றமைதியில் அரண்மனை புதைந்தது.

நாளடைவில் சூழலின் அமைதி ஒவ்வொருவர் உள்ளத்திற்குள்ளும் நுழைந்தமையால் இயல்பாகவே எவரும் பேசாமலானார்கள். தங்கள் தனியறைகளிலும் தோட்டங்களிலும்கூட அரண்மனை ஏவலரும் வீரரும் சொல்லின்மையில் மரங்களும் செடிகளும்போல அமர்ந்திருந்தனர். கிளையசைவால் இலையுலைவால் பேசிக்கொண்டனர். எப்போதேனும் பேசநேர்கையில்கூட நெஞ்சுக்குள் இருந்து சொற்களை நாக்கில் கொண்டுவருவதற்கு சித்தத்தால் உந்தவேண்டியிருந்தது. அவை உதிரிச் சொற்களாகவே எழுந்தன. சொற்கூட்டிப் பேசுவதையே பலர் முற்றிலும் மறந்துவிட்டனர்.

புஷ்கரன் மிக மெல்லிய குரலில் “அந்த வெண்புரவி” என்றான். சுதீரன் கைகாட்ட பாகன் அந்த வெண்புரவியை கொண்டுவந்து நிறுத்தினான். அதன் சேணத்தில் கால்வைத்து எழுந்து அமர்ந்து கடிவாளத்தைப் பற்றியபடி அவன் வானை நோக்கினான். “அங்கு செல்வதற்குள் விடிவெள்ளி எழுந்துவிடும், அரசே” என்றான் சுதீரன். அவன் அதை கேட்டதாக காட்டவில்லை. அவனிடம் பேசப்படும் சொற்களுக்கு அவன் எந்த எதிர்வினையையும் காட்டுவதில்லை. அது அவனுக்கு விளங்கிக் கொள்ளமுடியாத ஒரு அழுத்ததை அளித்தது. தெய்வங்களைப்போல.

அவர்கள் அவனுடைய அசைவுகளுக்காக விழியூன்றி காத்திருந்தனர். அவனிடம் அவ்வப்போது சிலைத்தன்மை ஒன்று கூடிவிடும். இமைகள்கூட அசையாமல் இருக்கும் அவனை நோக்குகையில் அவன் இப்புவியிலிருப்பவன் அல்ல, இங்கு வந்த ஏதோ அறியாத தெய்வம் என்ற உணர்வு மீண்டும் மீண்டும் வலிமைகொண்டது. இத்தனை குருதியை மானுடர் கோரமுடியாது. அன்னைமுலை உண்டவர் இத்தனை துயரங்களுக்குமேல் ஏதுமறியாமல் அமர்ந்திருக்க முடியாது.

அவன் புரவி கிளம்பியபோது பிற புரவிகளும் உடன்சென்றன. அவன் குரல் கேட்கும் தொலைவில் ஆனால் அவனுக்கு இணையென்றாகாத அகலத்தில் அவை சீர்நடையிட்டுச் சென்றன. கவசக்காவலர்களும் அகம்படியினரும் சூழ்ந்துவர முழுமையான தனிமையில் புஷ்கரன் சென்றான். புலரியின் குளிர்ந்த காற்று அவர்களைச் சூழ்ந்து வீசி சுழன்று சென்றது. அவனைச் சூழ்ந்து எப்போதும் கடுங்குளிரே இருக்கிறது என சுதீரன் எண்ணிக்கொண்டான்.

நளன் கானேகியபோது முதன்மையமைச்சர் கருணாகரர் அவனுடைய தந்தை நாகசேனரை அமைச்சராக்கிவிட்டு கான்தவம் புகுந்து நாற்பத்தோராம் நாள் உயிர்துறந்தார். நாகசேனர் மூன்றாண்டுகள் அமைச்சராக இருந்தார். ஒருநாள் அவரை நெற்றியிலும் தோள்களிலும் இழிமங்கலக் குறிகள் பொறித்து நாடுகடத்த புஷ்கரன் ஆணையிட்டான். விழிநீருடன் தந்தையைத் தொடர்ந்த சுதீரனின் தோளில் கையை வைத்து நாகசேனர் “குலமுறைப்படி நீயே இங்கு அமைச்சன். அது நம் முன்னோர் நமக்களித்த கொடை. தவத்தின்பொருட்டு உலகு துறக்கையில் அன்றி வேறெவ்வகையிலும் அதை விலக்க நமக்கு உரிமையில்லை” என்றார்.

“ஆனால் இவ்விழிமகன்…” என அவன் சொல்லத்தொடங்க “இன்றும் அவர் உன் அரசர். நீ இந்நகரை இன்னமும் துறக்கவில்லை” என கூரிய சொற்களால் அவனை நிறுத்தினார் நாகசேனர். “உன் பணியை செய்! இது சுட்டுப்பழுத்த கலம். இதில் நீர் விட்டுக்கொண்டே இருப்பதே உன் அறம் என்றாகுக!” சுதீரன் “எத்தனை நாள், தந்தையே?” என்றான். “நெடுங்காலம் அல்ல. அறமன்றி ஏதும் மண்ணில் நிலைத்து வாழாது. ஏனென்றால் அது தெய்வங்களுக்கு உகந்தது அல்ல. அன்னையரால் ஏற்கப்படுவது அல்ல. வேதத்துடன் ஒப்புவது அல்ல” என்றார் நாகசேனர்.

பின்னர் சற்று உதடுகோடிய புன்னகையுடன் “அத்தனைக்கும் மேலாக அது உலகியல் நலனுக்கே உகந்ததும் அல்ல” என்றார். அவன் “மக்களை நான் நம்பவில்லை, தந்தையே… இன்றுவரை அவர்களின் அச்சமும் மிடிமையும் சிறுமதியும் மட்டுமே வெளிப்பட்டுள்ளது” என்றான். “நம்பியாகவேண்டும். மானுடம் அறத்தில் அமைந்தது. இல்லையேல் இவர்களின் மொழியில் வேதம் எழுந்திருக்காது” என்றார் நாகசேனர். “ஒரு துளியென அறம் எஞ்சியிருக்கும். எங்கோ அதை நாம் அறியும் தருணம் அமையும். மைந்தா, அது விதையெனும் துளி. அச்சூழலின் அழுத்தத்தால் செறிவுகொண்டு வைரம் என்றானது. அதைக் கண்டடைக.” அவன் தலைமேல் கைவைத்து “வைரம் என்பது என்ன? தெய்வங்களின் ஒளியும் கூர்மையும் நஞ்சும் கொண்டெழுந்த கூழாங்கல்” என்றார்.

கசப்புடன் “இந்த நெறியின்மைகளுக்கு நான் துணைநின்றாக வேண்டுமா என்ன?” என்றான் சுதீரன். “ஆம், வந்து பிறக்கும் சூழலுக்கு நாம் எவ்வகையிலும் பொறுப்பல்ல. அது முன்வினை. அதை வெல்க, நிகழ்வினையை கடந்து நல்வினையை ஈட்டுவதொன்றே நாம் செய்யக்கூடுவது. இன்று விழித்துக் காத்திருப்பதே உன் கடன். தாக்குப்பிடித்து அங்கிரு. முடிந்தவரை உயிர்களைக் காப்பதே உன் நாள்பணி என்று கொள். அதன்பொருட்டு எதையும் செய்… தெய்வங்களும் மூதாதையரும் உடனிருக்கட்டும். வேதச்சொல் துணையாகட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!” என அவன் தலையில் கைவைத்து வாழ்த்திவிட்டு நடந்தகன்றார்.

அவன் மீண்டு வந்து தன் சிறிய இல்லத்தின் திண்ணையில் தோள்தளர்ந்து தலைகுனிந்து அமர்ந்திருந்தான். எதிர்த்திண்ணையில் நூற்றகவை முகிழ்ந்த முதியவரான சாந்தர் அமர்ந்திருந்தார். வெண்கூழாங்கல் விழிகளால் வெறும் நிழலாட்டமெனத் தெரிந்த தெருவை நோக்கிக் கொண்டிருந்தார். ஒரு காகம் வந்தமர்ந்து ஐயத்துடன் அவரை நோக்கியபின் எழுந்தகன்றபோது முகம் மலர்ந்து தலையாட்டி நகைத்தார். அது மீண்டும் அருகணைந்தபோது கைவீசி “வா! வா!” என்றார்.

சுதீரன் எழுந்து தந்தையின் தூக்குபீடத்திற்கு அடியில் இருந்த சிறுபேழையில் இருந்து பனங்கற்கண்டுத் துண்டுகளை எடுத்துக்கொண்டு தெருவைக் கடந்து அவரை அடைந்தான். அவர் அவன் கையைத்தான் நோக்கினார். கற்கண்டுகளை அளித்ததும் இரு கைகளாலும் வாங்கி இரு கன்னங்களிலும் அதக்கிக்கொண்டு கண்களை மூடி அச்சுவையில் மெய்மறந்தார். அவர் கண்முனைகளில் இருந்த பீளையையும் வாய்விளிம்புகளில் இருந்த நுரைக்கோழையையும் அவன் துடைத்தான். பல்லில்லாத வாய் சுருங்கி விரிந்தது.

“தந்தையே, அந்தணன் தன் குலநெறியின்பொருட்டு மறத்திற்குத் துணை நின்றால் பழி சேருமா?” என்றான் சுதீரன். அவர் “ஏன்?” என்றார். அவன் நாலைந்துமுறை கேட்டபின்னர்தான் அவர் உள்ளம் அக்கேள்வியை உணர்ந்தது. கல்கண்டுகளை வாயில் இருந்து எடுத்து மேலாடையால் துடைத்து மடியில் வைத்துவிட்டு “ஆம், வேள்வியின் பொருட்டென்றாலும் தெய்வங்களின் ஆணைக்கிணங்க என்றாலும் அறமிலாதது பழி சேர்ப்பதே” என்றார்.

சுதீரன் பெருமூச்சுவிட்டு தன்னை எளிதாக்கிக் கொண்டான். மீண்டும் எதையாவது கேட்பதா என்று தயங்கியபின் “ஓர் உயிரைக் கொன்ற பழியை எத்தனை உயிரைக் காத்தால் நிகர்செய்ய முடியும்?” என்றான். அவர் “கற்கண்டு?” என்றார். அவன் அவர் மடியிலிருந்தே எடுத்து நீட்ட அவர் முகம் மலர்ந்து அதை பிடுங்குவதுபோல வாங்கி வாயிலிட்டு மென்றார். கண்கள் சொக்கின. அவன் அவர் தொடையைப் பிடித்து உலுக்கி “சொல்லுங்கள்” என மீண்டும் கேட்டான். அவர் “ஆயிரம்கோடி உயிர்களைக் காத்தாலும் நிகர்செய்ய முடியாது. பசித்த ஒருவனின் அன்னத்தை தட்டிவிட்டவன் நூறுபிறவியில் அன்னக்கொடை செய்தாலும் நிகர்செய்தவனாக மாட்டான்” என்றார்.

அவன் எழப்போனான். அவர் கற்கண்டை எடுத்து கூர்ந்து நோக்கி பின்னர் வாய்க்குள்போட்டு “ஆற்றாது சொட்டிய ஒரு துளி விழிநீருக்கு மூன்று தெய்வங்களும் பொறுப்பேற்க வேண்டும்” என்றார். அவர் ஒரு ஓவியத் திரைச்சீலைபோலவும் அப்பாலிருந்து வேறெவரோ பேசுவதுபோலவும் தோன்றியது. நெடுநேரம் தயங்கியபின் “தந்தையே, எதன்பொருட்டு ஒருவன் தந்தையின் ஆணையை மீறலாம்?” என்றான். அவர் “எதன்பொருட்டும் அல்ல” என்றார்.

அவன் நெஞ்சு திடுக்கிட்டு பின் ஓசையுடன் உருண்டு சென்றது. மூச்சைத் திரட்டி “அதனால் பழி சேர்ந்தால்?” என்றான். “அது ஊழ். அப்பழியை தானே முழுதேற்றுக்கொள்ளவேண்டும். துறந்து கானேகி தவம்செய்து அதை வெல்லவேண்டும். அல்லது பிறந்து பிறந்து கரைக்கவேண்டும்” என்றபின் “கற்கண்டு?” என்றார். அவன் இன்னொரு கற்கண்டை அவர் மடியிலிருந்தே எடுத்து நீட்டியபின் எழுந்துகொண்டான். அவர் அதை வாங்கி கண்ணெதிரே கொண்டுசென்று கூர்ந்து நோக்கி தலையசைத்து புன்னகைத்தார். வாய்க்குள் போட்டுக்கொண்டு கண்களை மூடி மோனத்திலாழ்ந்தார். அவன் நெடுந்தொலைவென தெருவைக் கடந்து தன் திண்ணையை அடைந்தான்.

தலைப்பாகையுடன் மறுநாள் அவன் புஷ்கரன் முன் நின்றபோது தனியறையில் உணவருந்திக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து “தந்தையின் ஆணைப்படி வந்தீரா?” என்றான். “ஆம் அரசே, இது குலநெறி” என்றான் சுதீரன். அவனை சிலகணங்கள் நோக்கி நின்றபின் “நீர் என்னை அழிப்பீர். இக்கணம் அதை நன்குணர்கிறேன். அந்தணன் எடுத்த வஞ்சினத்துடன் போரிட்டு வென்ற அரசர்கள் இல்லை” என்றான். சுதீரன் பேசாமல் நின்றான். “வேதத்தின்மேல் ஆணையாக சொல்லும்… நான் எண்ணுவது மெய் அல்லவா?” சுதீரன் “ஆம் அரசே, அறத்தின்பொருட்டு உங்களை அழிப்பேன்” என்றான்.

புஷ்கரன் குருவியின் ஓசையுடன் மிகமெல்ல நகைத்து “நன்று… எனக்கு அனைத்தும் சலித்துவிட்டது. நச்சு பூசிய அம்பையும் அரசநாகத்தையும் அருகே போட்டு துயில்வதைக்கூட செய்து பார்த்துவிட்டேன். நீர் என் அமைச்சராக இரும். உம்மை வென்றால் அதன்பின் நான் விண்ணளந்தோனை மட்டுமே அறைகூவவேண்டும்” என்றான். “ஆம் அரசே, இது ஓர் ஆடலென அமைக! ஒன்றுமட்டும் நான் உறுதி அளிக்கிறேன். வென்று வாழமாட்டேன், உங்களுடன் நானும் அழிவேன்” என்றான் சுதீரன். புஷ்கரன் திடுக்கிட்டவன்போல விழிதூக்கி நோக்கினான். முற்றிலும் அயலான ஒன்றை நோக்குவதுபோல விழிநிலைத்தான். பின்னர் கலைந்து பெருமூச்சுடன் உண்ணத்தொடங்கினான்.

அரண்மனைமுகப்பில் முந்தையநாள் கழுவேற்றப்பட்ட எழுவர் முகவாய் மார்பில் படிந்திருக்க முடி விழுந்து முகம் மறைக்க அமர்ந்திருந்தனர். வேலுடன் காவல் நின்றவர்கள் தலைவணங்கினர். கழுவர்களின் கால்களை மட்டும் சுதீரன் நோக்கினான். அவை தொங்குபவைபோல இழுபட்டு நீண்டு விரைத்திருந்தன. புஷ்கரன் அவர்களை அறிந்ததாகவே காட்டவில்லை. சாலையை அடைந்ததும் குளிர்காற்று சுழன்றடித்து ஆடையை பறக்கச் செய்தது. புழுதிமணம் நிறைந்திருந்த காற்றுக்கு மேலாடையால் முகத்தை மூடிக்கொண்டான் சுதீரன்.

சாலைகளின் ஓரங்களில் நடப்பட்ட மூங்கில் தூண்களில் தூக்கிலிடப்பட்டவர்கள் கைகள் பிணைக்கப்பட்டு தொங்கி நின்றனர். தரையிலிருந்து அரையடி உயரத்தில் அவர்களின் கால்கள் நின்றிருக்கவேண்டும் என்பது புஷ்கரனின் ஆணை. சற்று அப்பாலிருந்து நோக்கினால் அங்கே ஒருவர் தலைகுனிந்து நிற்பதாகவே தோன்றும். வழிப்போக்கர் தோள்முட்டிக்கொள்ளவும் நேரும். திடுக்கிட்டு நோக்கினால் குனிந்து தங்களை நோக்கும் அசைவற்ற விழிகளையும் வலித்துச் சிரிக்கும் வாயின் பற்களையும் காண்பார்கள்.

தூக்கிலிடப்பட்டவர்களை கடந்து சென்றுகொண்டே இருந்தனர். அவர்கள் அனைவருமே தலைகுனிந்து நின்றனர், பெரும்பிழை ஒன்றைச் செய்தவர்கள்போல. பிழைசெய்யாத எவரேனும் இந்நகரில் இன்று உள்ளனரா என சுதீரன் எண்ணிக்கொண்டான். ஒவ்வொரு கழுவேற்றத்தின்போதும் தூக்கின்போதும் அந்த எண்ணம் எழுந்து வந்தது. ஒவ்வொருவரும் பிறரை காட்டிக்கொடுத்திருந்தனர், கழுவேற்றியிருந்தனர், வஞ்சமும் சூழ்ச்சியும் கொண்ட முகத்துடன் தன் இறப்பை மட்டுமே அஞ்சி இறுதிக் கணத்தில் நின்றிருந்தனர். இந்நகரில் கொலையாளிகளை கொலையாளிகள் கொல்கிறார்கள். கொலையாளிகள் நாளும் பெருகிக்கொண்டிருக்கிறார்கள்.

flowerகொட்டில்முன் வந்து நின்றதும் ஏவலர் அருகே வருவதற்காக புஷ்கரன் காத்திருந்தான். ஒருவன் வந்து முதுகைக் காட்டியதும் அதை மிதித்து கீழிறங்கி திரும்பிப்பார்க்க சுதீரன் அருகே வந்து “ஒருங்கிவிட்டது என்று சொன்னார்கள், அரசே” என்றான். புஷ்கரன் கைநீட்ட பரிவலன் அருகே வந்து சவுக்கை நீட்டினான். அவன் குறுபீடத்தில் அமர்ந்ததும் இருவர் காலணிகளை அணிவித்தனர். எழுந்து கைவிரிக்க இடைப்பட்டையை இறுக்கினர். அவன் களமுற்றத்தில் சென்று நின்றான்.

மறுமுனையிலிருந்து காரகனை இருவர் கடிவாளம் பற்றி அழைத்துவந்தனர். பரிவலரை சிறுவர்களென தோன்றச்செய்யுமளவுக்கு உயரம் கொண்டிருந்த கரிய புரவி இருளில் மென்முழுப்பாகவே உருத்தெரிந்தது. தலைதூக்கி பெரிய மூக்குத்துளைகள் நெளிய விழிகளை உருட்டியபடி தயங்கிய கால்களை எடுத்துவைத்து வந்தது. “இன்று எந்த உளநிலையில் இருக்கிறான்?” என்று புஷ்கரன் கேட்டான். பரிவலன் அதை கேட்கவில்லை. சுதீரன் “நேற்று மாலையில் மூவர் பயிற்சி அளித்திருக்கிறார்கள். பரிவலர் பதினெண்மர் மேலேறி சுற்றி வந்திருக்கிறார்கள். ஒவ்வொருமுறை சுற்றி வந்ததும் இன்னுணவு தரப்பட்டமையால் மகிழ்ந்து பிறர் ஏறும்பொருட்டு குரல் கொடுக்கிறது” என்றான்.

புஷ்கரன் முகத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை. ரணசூரன் அருகே வந்து “நானே நேற்று மூன்றுமுறை சுற்றிவந்தேன், அரசே. அது மிக எளிதாகிவிட்டது” என்றான். பரிவலன் கார்த்தன் “என் மைந்தர் மூவரும் நேற்று இதன்மேல் சுற்றிவந்தனர். இளையவன் பரிப்பயிற்சி பெற்றவன்கூட அல்ல” என்றான். கொண்டுவரும்படி புஷ்கரன் கைகாட்டினான். காரகனை அவர்கள் அவனருகே கொண்டுவந்து நிறுத்தினர். அதன் பெரிய குளம்புகள் மண்ணில் விழும் ஓசை நின்றவர்களின் கால்களில் அதிர்வாகத் தெரிந்தது.

காரகனின் சேணமணிந்த முதுகு பரிவலனின் தலைக்குமேல் மேலும் இரண்டடி உயரத்திலிருந்தது. மேலும் மூன்றடி உயரத்தில் அதன் தலை நிமிர்ந்து வானில் எனத் தெரிந்தது. தாடையிலிருந்து வளைந்து தொங்கிய கடிவாளம் விழுது போலிருந்தது. அதன் விலாவும் புட்டமும் சிலிர்த்துக்கொண்டிருந்தன. மூக்குவிரித்து புஷ்கரனின் மணத்தை அறிந்ததும் தலையைச் சிலுப்பி அசைத்து மெல்லிய குரலில் உறுமியது. பரிவலன் “தாங்கள் ஏறலாம், அரசே” என்றான்.

புஷ்கரன் அதை ஐயத்துடன் நோக்கியபடி சிலகணங்கள் நின்றான். பின்னர் சேணத்திலிருந்து தொங்கிய தோல்பட்டையை பிடித்துக்கொண்டு கால்வளையத்தில் மிதித்து மேலேற முயன்றான். காரகன் உறுமியபடி இரும்புக்கூடம்போன்ற குளம்புகளை எடுத்துவைத்து அவனை விலக்க முயன்றது. கடிவாளத்தை இருபுறமும் பற்றியிருந்த பரிவலர் அதை அசையாமல் நிறுத்தினர். அதன் விழிகள் உருண்டன. மூக்கு சுருங்கி விரிந்தது. குளம்புகளை பொறுமையிழந்து எடுத்து வைத்தது.
சேணத்தின்மேல் புஷ்கரன் அமர்ந்துகொண்டதும் கடிவாளத்தை அவனிடம் வீசினர். அவன் அதை பிடித்துக்கொண்டு புரவியின் கழுத்தை மெல்ல தொட்டான். அவன் தொட்ட இடங்கள் சிலிர்த்துக்கொண்டன. அதன் விழிகள் உருள்வதைக்கண்ட ரணசூரன் மெல்ல அசைந்தான்.

சுதீரன் திரும்பியதும் நோக்கை நிலைக்கச்செய்து உறைந்தான். பரிவலர் பிடி விட்டதும் காரகன் உரக்கக் கனைத்தபடி துள்ளிச் சுழலத் தொடங்கியது. சவுக்கால் அதை அறைந்தபடி புஷ்கரன் ஓசையிட்டான். முன்னங்கால்களைத் தூக்கி காற்றில்வீசி மண்ணில் அறைய ஊன்றி பின்னங்கால்களை உதறிக்கொண்டது. புஷ்கரன் தூக்கி வீசப்பட்டவனாக காற்றில் எழுந்து மண்ணில் மல்லாந்து விழுந்தான். அவனை நோக்கி சீறியபடித் திரும்பிய காரகனை இரு பரிவலரும் தாவிப் பற்றிக்கொண்டார்கள். அவர்களைத் தூக்கியபடி அது சுழல அவர்கள் கால்கள் காற்றில் வீச சுற்றிவந்தனர். ரணசூரன் புஷ்கரனைப்பற்றி இழுத்து அப்பால் கொண்டுசென்றான். காவலர்கள் வேல்களுடன் புரவியை சூழ்ந்துகொண்டனர்.

காரகன் சிம்மம்போல முழங்கியபடி பரிவலரை தூக்கிச் சுழற்றியது. மேலும் மேலுமென பரிவலர் வந்து அதன் கடிவாளத்தையும் சேணத்தையும் பற்றிக்கொண்டனர். “பரிஅரசே, அடங்குக! பொறுத்தருள்க தேவே… பிழைபொறுத்தருள்க…” என பரிவலர் கூவினர். மெல்ல அது அடங்கி தலை தாழ்த்தியது. மூச்சு சீற கண்களை உருட்டியபடி உடல் விதிர்த்து நின்றது. அதன் கால்கள் மிதிபட்ட மண் பன்றிகிளறியிட்டதுபோலக் கிடந்தது.

புஷ்கரன் இரு வீரர்கள் பற்ற எழுந்துகொண்டு கைகளை நீட்டியபடி “கொல்லுங்கள் அதை… அதை வெட்டித் துண்டுகளாக்குங்கள்… அதன் ஊனைப் பொரித்து எனக்கு இன்று உணவென கொண்டுவாருங்கள்” என்று மூச்சொலியுடன் சொன்னான். இறுதிச் சொற்கள் வெறும் இளைப்பாகவே எழுந்தன. கோணல் முகமும் உடலும் துள்ளித்துடித்தன. வீரர்கள் வேல்களுடன் காரகனை நோக்கி பாய சுதீரன் புஷ்கரன் அருகே சென்று “அரசே, வேண்டாம். அதைக் கொல்வது நாமே ஒப்புக்கொள்வது” என்றான். புஷ்கரன் வீரர்களிடம் நிற்கும்படி கைகாட்டி புருவத்தால் ஏன் என்றான். “அரசே, யவனர்களிடமிருந்து இப்புரவியை நாம் வாங்கியதை ஷத்ரிய அரசர்கள்கூட இன்று அறிவார்கள். இதை நாம் கொன்றால் இதை வெல்லமுடியவில்லை என்று நாமே அறிவிப்பதுபோல” என்றான் சுதீரன்.

புஷ்கரன் சில கணங்களுக்குப்பின் கையசைக்க புரவியை பரிவலர் கொண்டுசென்றார்கள். “இது நீங்கள் விழைந்து வாங்கியது. மூன்று ஆண்டுகளாக இங்கே வளர்கிறது. இன்னமும் இது தங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது நாம் வெளியே தெரிவிக்கவேண்டிய செய்தி அல்ல” என்றான் சுதீரன். புஷ்கரன் தன் புரவியை கொண்டுவரும்படி கையசைத்தான். “இது இங்கிருக்கட்டும். இப்புரவிமேல் தாங்கள் செல்வதைப்பற்றிய பாடல்களை சூதர்கள் புனையட்டும். ஓவியர்கள் தாங்கள் இதன்மேல் இருப்பதைப்போல வரையட்டும்” என்றான் சுதீரன்.

“ஆனால் நாளை கலிபூசனை நிகழ்வு. நம் நகரின் முதன்மை அரசப்பெருவிழவு அது. குடிகள் முன் இப்புரவியில் தோன்றுவதைத்தான் திட்டமிட்டேன்” என்றான் புஷ்கரன். “ஆம், அது மிக எளிது. நீங்கள் யானைமேல் ஆலயத்திற்குச் செல்லுங்கள். புரவி அங்கே வரட்டும். நீங்கள் அதில் நகருலா செல்லக்கூடுமென அனைவரும் எண்ணட்டும்.” புஷ்கரன் அவனை நோக்க “நகருலா செல்லமுடியாதபடி ஏதேனும் நிகழட்டும்” என்ற சுதீரன் “பின்னர் கலிபூசனை நிகழ்வை கவிதையாக்குபவர்கள் நீங்கள் அப்புரவியில் அரண்மனைக்கு மீண்டதாகவோ நகரில் ஓடி படைகளை நடத்தியதாகவோ எழுதட்டும்” என்றான்.

புஷ்கரன் விழிகளில் மிக மெல்லிய அசைவு ஒன்று வந்தது. அதை சுதீரன் புரிந்துகொண்டான். தன் புரவியில் புஷ்கரன் ஏறிக்கொள்ள அருகே வந்த ரணசூரன் மெல்லிய பதற்றத்துடன் சுதீரனை நோக்கினான். சுதீரன் புன்னகையுடன் தலைவணங்க புஷ்கரன் நோக்கை விலக்கிக்கொண்டான்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 93

92. பொற்புடம்

flowerகேசினி சிறிய கிண்ணத்தை எடுத்து தமயந்தியின் முன்னால் வைத்து “அடுமனையிலிருந்து எடுத்துவந்தேன், அரசி. இது பாகுகரால் சமைக்கப்பட்ட ஊனுணவு” என்றாள். தமயந்தி அதை எடுத்தபோதே முகம் மலர்ந்து “கனிச்சாறிட்டு சமைக்கப்பட்டது. இது நிஷத அரசரின் கைமணமேதான்” என்றாள். கேசினி “அவர் சொன்ன மறுமொழிகளை சொல்கிறேன்” என்றாள். மரக்கரண்டியால் அவ்வூனுணவை அள்ளி உண்ணப்போனபின் தாழ்த்திய தமயந்தி “சொல்” என்றாள். அவள் சொன்னதும் ஒருகணம் உளம் விம்மி விழிநீர் துளித்து முகம் தாழ்த்தினாள்.

பின்னர் எழுந்துகொண்டு “இதை நான் அவர்களிடம்தான் முதலில் அளிக்கவேண்டும்” என எழுந்தாள். கண்ணீரை துடைத்துக்கொண்டு வெளியே சென்றாள். சேடியிடம் “இளவரசர் எங்கே?” என்றாள். “ஆசிரியர் வந்துள்ளார். வகுப்பு நடந்துகொண்டிருக்கிறது” என்றாள் சேடி. தமயந்தி வகுப்பு நிகழ்ந்த சிற்றறைக்கு வெளியே நின்று “வணங்குகிறேன், அந்தணரே” என்றாள். அவள் எண்ணத்தை உணர்ந்த ஆசிரியர் “சென்று வருக!” என்று கைகாட்டினார். இந்திரசேனனும் இந்திரசேனையும் எழுந்து வந்தனர்.

பூமீசையும் குரல்வளைமுழையும் திரண்டதோள்களுமாக இருந்த இந்திரசேனன் விழிகளில் வினாவுடன் தலைவணங்கினான். இந்திரசேனை அவனுக்குப் பின்னால் வந்து பாதி மறைந்து ஒரு விழி காட்டி நின்றாள். தோள்கள் திரண்டு முலை முகிழ்த்து கன்னங்களில் சிறுபருக்களுடன் பெண்ணென்று உருக்கொள்ளத் தொடங்கியிருந்தாள். நளனால் அவர்களை அடையாளம் காணமுடியுமா என்ற ஐயம்தான் முதலில் அவளுக்கு ஏற்பட்டது. கையிலிருந்த கிண்ணத்தை நீட்டி “இவ்வுணவின் சுவை எதை நினைவூட்டுகிறது?” என்றாள்.

அவன் அதை வாங்கியதும் முகம் மாறினான். கைகள் நடுங்க அறியாது திரும்ப நீட்டினான். அதை இந்திரசேனை பற்றிக்கொண்டாள். “தந்தை” என்றான். “எங்கிருக்கிறார்? இங்கு வந்துவிட்டாரா?” என்று உரக்க கேட்டபடி அவள் தோள்களை பிடித்தான். “சொல்கிறேன்” என்றாள் தமயந்தி. “அகத்தளத்திற்கு வா!” இந்திரசேனை விம்மியழத் தொடங்கிவிட்டிருந்தாள். இருவருமே அந்த ஊனுணவை வாயிலிடவில்லை. அவள் நடந்தபோது உடன் சிலம்பொலிக்க இந்திரசேனை ஓடிவந்தாள். அவள் தோளைப்பற்றி நிறுத்திய இந்திரசேனன் “எங்கிருக்கிறார் தந்தை? நலமாக இருக்கிறாரா? அதைமட்டும் சொல்லுங்கள்” என்றான். “நலமாக இருக்கிறார் என்றே எண்ணுகிறேன்” என்றாள் தமயந்தி. “எங்கே இருக்கிறார்?” என்று அவன் தொண்டை உடைந்த இளங்குரலில் கூவினான்.

“அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. நேற்று நம் அடுமனைக்கு புதிய சூதன் ஒருவன் வந்தான். பாகுகன் என்பது அவன் பெயர். அவன் சமைத்த ஊனுணவு இது…” இந்திரசேனன் அவள் கைகளை பற்றிக்கொண்டு “அவர்தான் நம் தந்தை… அவர் மாற்றுரு கொண்டிருக்கிறார். ஐயமே இல்லை” என்றான். “ஆனால் நம் அரசர் அல்ல என்றே தோன்றுகிறது” என்று தமயந்தி சொன்னாள். “அவன் நம் அரசரை நன்கறிந்தவன். அவர் கைமணத்தை தான் கற்று அறிந்தவன். அவனுக்கு நம் அரசர் எங்கிருக்கிறார் என்று தெரியும் என்பது உறுதி.”

“ஆம், இப்போதே அவனை சென்று பார்க்கிறேன். அவனிடம் கேட்கிறேன்” என்று இந்திரசேனன் கிளம்பினான். தமயந்தி “நீயும் செல்! அவன் ஒருவேளை சினம் கொள்ளக்கூடும். நாம் அவ்வடுமனையாளனை கெஞ்சியோ மிஞ்சியோ அரசர் இருக்குமிடத்தை அறிந்தாகவேண்டும்…” என்றாள். முன்னால் சென்றுவிட்டிருந்த இந்திரசேனன் திரும்பி “விரைந்து வா… அன்னம்போல் நடக்கும் பொழுதா இது?” என்று தங்கையை அதட்டிவிட்டு படியிறங்கிச் சென்றான்.

தமயந்தி பெருமூச்சுடன் சற்று அப்பால் வந்து நின்றிருந்த கேசினியிடம் “என் மேலாடையை எடு” என்றாள். “என்ன இது, அரசி? எனக்குப் புரியவில்லை” என்றாள் கேசினி. “மனைவியிடமிருக்கும் இறுதிப்படைக்கலம்” என்றாள் தமயந்தி. அவளும் படியிறங்கி மைந்தர் சென்ற பாதையில் நடந்தாள். பின் நின்று தன் சிலம்புகளையும் வளையல்களையும் கழற்றி கேசினியிடம் அளித்துவிட்டு மேலாடையை நன்கு செருகிக்கொண்டு ஓசையின்றி நடந்துசென்றாள்.

இரு இளையோரும் செல்லும்தோறும் விரைவு மிகுந்து ஓடலானார்கள். அவர்கள் அடுமனைக்குள் நுழைந்ததும் இந்திரசேனன் “பாகுகர் எங்கே? நேற்று வந்த புதிய அடுமனையாளர்?” என்றான். முதிய குரல் “அவன் இன்று கிளம்பிச் செல்கிறானே? மூட்டைகளை கட்டிக்கொண்டிருந்தான். கிளம்பியிருப்பான் என எண்ணுகிறேன்” என்றது. தமயந்தி உளம் திடுக்கிட நெஞ்சில் கைவைத்தாள். இந்திரசேனன் “அவரது அறை எங்கே?” என்றபின் உள்ளே ஓடினான். இந்திரசேனை உடன் ஓடும் ஒலி கேட்டது.

தமயந்தி அவர்களை ஒலியினூடாகவே தொடர்ந்தாள். சிற்றறைக்கு முன் அவர்கள் தயங்குவதைக் கண்டதுமே நெஞ்சு நிலைகொள்ள பெருமூச்சுடன் சுவர் மறைவில் நின்றாள். அவர்கள் உள்ளே இருந்த பாகுகனைக் கண்டதும் திகைத்து சொல்லிழந்தனர். “பாகுகன் என்பவர்?” என்று இந்திரசேனன் கேட்டான். உள்ளிருந்த குரல் “நான்தான்… தாங்கள் யார்?” என்றது. அதிலிருந்த நடுக்கமே அவர்களை அவன் அறிந்துவிட்டான் என்பதை காட்டியது. “நாங்கள் எம் தந்தையை தேடிவந்தோம்” என்றாள் இந்திரசேனை. இந்திரசேனன் அவளை திருத்தும் முகமாக “அவரைப்போலவே சமைக்கும் ஒருவர் இங்கிருப்பதை உணர்ந்தோம். நீங்கள் சமைத்தது என்பதை அறிந்தோம். ஆகவே நீங்கள் எந்தை இருக்குமிடத்தை அறிந்திருக்கக்கூடுமென எண்ணினோம்” என்றான்.

“ஆம், அறிவேன்” என்றான் பாகுகன். “அறிவீர்களா? எங்கே?” என்றான் இந்திரசேனன். “எங்கு இருள் கலையாமல் தேங்கியிருக்கிறதோ அங்கே. சில மீன்கள் ஒருபோதும் ஒளியை அறியாமல் ஏரிகளின் ஆழத்தில் சேற்றுக்குள் வாழ்கின்றன. அவற்றைப்போல” என்று பாகுகன் சொன்னான். “விலகாத இருளென்பது ஒருவன் தன்னுள் இருந்து எடுத்துக்கொள்வதே. நான் உங்கள் தந்தையைக் கண்டபோது அவர்மேல் இருள் கவிந்துகொண்டிருந்தது. நான்கு திசைகளிலிருந்தும் இருளை எடுத்து தன்னை மூடிக்கொள்ளத் தொடங்கியிருந்தார். பின்னர் இருள் முழுமையாக அவரை மூடியது.” எரிச்சலுடன் இந்திரசேனன் “அவர் எங்கிருக்கிறார் என்று தெளிவாகச் சொல்லமுடியுமா?” என்றான்.

“அதை அறிந்து என்ன செய்யப்போகிறீர்கள்? செல்வம் திகழ்ந்த அரசை வைத்து சூதாடியவன். திருமகளும் கொற்றவையும் இணைந்தவள்போலிருந்த துணைவியை நடுக்காட்டில் விட்டுச்சென்றவன். மைந்தரை ஏதிலிகளாக்கியவன். தன்னைத் தானே ஒளித்துக்கொண்ட கோழை. அவனை மீட்டுக்கொண்டுவந்து என்ன செய்யவிருக்கிறீர்கள்?” இந்திரசேனன் தன் இடையிலிருந்த குறுவாளை உருவி நீட்டி “இழிமகனே, ஒரு சொல் எழுந்தால் அக்கணமே உன் கழுத்தை வெட்டுவேன். அரசர் பெருமையை அடுமடையரா அறிவர்?” என்றான். “என்னை வெட்டலாம். ஆனால் நான் ஒரு நா அல்ல. அவ்வினா எழுந்தபடியே இருக்கும் என்றும்” என்றான் பாகுகன்.

சினத்துடன் பற்களைக் கடித்தபடி இந்திரசேனன் சொன்னான் “மூடா, எளியோர் எதிர்கொள்ளும் இடர்களும் தடைகளும் எளியவை. பெரியோர் நூறென ஆயிரமென அவற்றை அடைகிறார்கள். அவற்றைக் கடப்பதினூடாகவே அவர்கள் மாமனிதர்களென தெய்வங்களுக்கு முன் நிற்கிறார்கள். தந்தை என்ன செய்தார் என்று உசாவுதல் மைந்தனின் பணி அல்ல. தன் செவிமுன் தந்தையைப் பழிப்பதை கேட்டிருப்பது அவன் நெறியும் அல்ல. அவர் அடைந்ததில் எஞ்சுவதை மட்டும் முன்னோர்கொடையெனக் கொள்வதே மைந்தரின் வழி. செல்வமும் புகழும் அறிவும் அவ்வாறே வந்தடையவேண்டும். கடனும் பழியும் இழிவும்கூட தந்தைக்கொடையென்றால் தலைவணங்கி ஏற்றாகவேண்டும்.”

“எந்தையை நான் அறிவேன். தன் எல்லைகள்மேல் தலையால் மோதிக்கொண்டிருந்தவர். நிஷாதர்களை பேரரசென்றாக்கியது அவ்விசையே. அதுவே இன்று அவரை அலைக்கழிய வைக்கிறது. வென்று மீளலாம். மீளாது இருளில் மறையவும்கூடும். போரில் வெல்வதும் வீழ்வதும் ஷத்ரியர்களை விண்ணுலகுக்கே கொண்டுசெல்கிறது. தன்னுடன் போரிடுவதே வீரனின் முதன்மைப் பெருங்களம்” என்று இந்திரசேனன் சொன்னான். இந்திரசேனை கைகூப்பியபடி “பாகுகரே, தந்தையைப் பழிக்கக்கேட்டு மைந்தன் கொண்ட சினம் அது எனக்கொள்க! அருள்கூர்ந்து எங்கள் தந்தையின் இருப்பிடமேதென்று தெரிந்திருந்தால் சொல்க!” என்றாள். குரல் உடைய விம்மியழுதபடி “ஒருநாளும் அவரை எண்ணாமல் நான் துயில்கொண்டதில்லை. ஒருமுறையும் சுவையறிந்து உண்டதில்லை. அவரில்லாது புவியிலெனக்கு ஏதுமில்லை” என்றாள்.

பாகுகன் விம்மியழுதபடி இரு கைகளையும் விரித்தான். “தன் இடம் ஏதென்று தேடியவன் இப்போது கண்டடைந்தான்… தந்தையரின் நீங்கா உறைவிடம் மைந்தர் நெஞ்சமே” என்றான். நெஞ்சு வெடித்தெழுந்த குரலில் “என் குழந்தைகளே, பாகுகனாகிய நானே நளன். நாகநஞ்சால் உருத் திரிந்தேன்” என்றான். இந்திரசேனன் “உங்கள் உணர்வுகள் மெய்யானவை. ஆனால்…” என்றான். “என் செல்வமே வா!” என்றபடி பாகுகன் எழுந்து இந்திரசேனையின் கைகளை பற்றவந்தான். அவள் அறியாது பின்னடைந்தாள்.

ஆனால் அவன் அவள் கையை பற்றியதும் “தந்தையே!” என்று வீரிட்டாள். பாய்ந்து அவனை அணைத்துக்கொண்டு “தந்தையே தந்தையே” என்று அழுதாள். அவன் தலையை தன் நெஞ்சுடன் சேர்த்துக்கொண்டு “எங்கிருந்தீர் தந்தையே… எத்தனை துயரடைந்தீர்?” என்று விம்மினாள். அவன் அவள் மார்பில் முகம் சேர்த்து கண்ணீர்விட்டு விசும்பினான். அருகணைந்து அவன் தோள்களைத் தொட்ட இந்திரசேனன் “இனி துயரில்லை, தந்தையே. எங்களுடன் இருங்கள்… இனி எங்களைப் பிரியாதீர்கள்” என்றான்.

சுவரோடு முகம் சேர்த்தபடி தமயந்தி விம்மி அழுதுகொண்டிருந்தாள். கேசினி அவள் தோளைத் தொட்டு “செல்க, அரசி! அவர் மீண்டு வந்துவிட்டார்” என்றாள். “இல்லை, அங்கு எனக்கும் இடமில்லை” என்றாள் தமயந்தி. கண்ணீருடன் சிரித்தபடி முகத்தைத் துடைத்து “அவர்களுக்குரிய பொழுது அது…” என்றாள். கேசினி அவள் குழலை மெல்ல நீவி “ஆம் அரசி, தொலைத்துக் கண்டடைந்தவர்கள் நற்பேறுடையோர். அவர்கள் பல மடங்காகப் பெறுகிறார்கள் என்று சூதர் சொல் உண்டு” என்றாள்.

flowerநளன் குறுபீடத்தில் அமர்ந்திருக்க அவனை ஏவலர் அணிசெய்துகொண்டிருந்தனர். அவன் ஆடியையே நோக்கிக்கொண்டிருந்தான். வார்ஷ்ணேயன் அவனருகே நின்று ஆடியை நோக்கி “ஒரு திரையை உங்கள் மேலிருந்து தூக்கியதுபோல உள்ளது, அரசே. இத்தனை விரைவாக உடல்மீள்வீர்கள் என எண்ணவே இல்லை” என்றான். நளன் “நாற்பத்தொரு நாட்களுக்கு ஒருமுறை அனைத்து மானுடரும் முற்றாக இறந்து மீண்டும் பிறந்துவிடுகிறார்கள் என்பது உயிர்வேதத்தின் கூற்று. ஆகவேதான் அதை ஒரு மண்டலம் என்கிறார்கள்” என்றான்.

அவன் மீண்டு வந்துவிட்டதை குண்டினபுரிக்கு முறைப்படி அறிவித்திருந்தாலும் எந்த அவையிலும் அவன் தோன்றவில்லை. அவன் முழுமையாக உருமீண்டபின் எழுவதே மேல் என்றனர் அமைச்சர். “அரசனை தன்னைவிட மேலானவன் என்று நம்ப விழைபவர் மக்கள். ஆகவே அரசன் என்பவன் முதன்மையாக புகழாலும் இரண்டாவதாக ஆற்றலாலும் மூன்றாவதாக தோற்றத்தாலும் முந்தியிருத்தல்வேண்டும்.” மருத்துவர் சூழ வரதையின் கரையிலமைந்திருந்த தனித்த சோலைக்கு கொண்டுசெல்லப்பட்டான். நச்சு நீக்க மருத்துவரான முதுநாகர் சர்ப்பர் தன் பதினெட்டு துணைமருத்துவர்களுடன் குண்டினபுரிக்கு வந்தார். அவரது குழு அவன் உடலை மீட்கும் பணியை தொடங்கியது.

அவன் அளித்த சிமிழில் இருந்த மருந்தை மருத்துவர்கள் ஆராய்ந்தனர். “அரசே, இது அண்டபாஷாணம் எனப்படுகிறது. கருமுட்டையென இருக்கும் நஞ்சு. இதை உங்கள் உடலிலேயே அடைகாத்து வளர்த்தெடுக்கவேண்டும். பின்னர் இது சிறகுவிரித்து உங்கள் உடலில் இருந்து பறந்தெழுந்து அகலவேண்டும். இது உங்கள் உடற்கூட்டில் இங்கிருக்கையில் தன் ஆறாப் பெரும்பசிக்கு உங்கள் உடலையே உண்ணும். உடலில் முந்தி நிற்பது நஞ்சென்பதனால் அதை முதலில் இரையாக்கும். உடலையும் சற்று அழிக்கும். நஞ்சு நீங்கி இம்மறுநஞ்சும் அகன்றால் உடல் மீளும். தான் மீள்வதை உடல் தானே அறிந்தால் மழைக்கால அருவியென கணந்தோறும் பெருகும். முன்னைவிட ஆற்றலும் அழகும் பெறுவீர்கள்” என்றார் சர்ப்பர்.

கோசஸ்புடம் என்னும் மருத்துவமுறைப்படி அவன் உடலில் ஒன்பது துளைகளினூடாகவும் நச்சுநீக்கு மருந்துகள் உட்செலுத்தப்பட்டன. பகல் முழுக்க மருந்து கலந்த களிமண்ணால் அவன் உடல் மூடப்பட்டது. இரவில் அதை அகற்றி எண்ணையில் ஊறிய துணியால் சுற்றிக்கட்டப்பட்டது. ஒருதுளி ஒளிகூட நுழையாத சிறுகுடிலில் இருளில் அவன் நாற்பத்தொரு நாட்கள் வாழ்ந்தான். அவன் உடலின் அத்தனை அணுவறைக்குள்ளும் கரையான்புற்றில் நாகம் என நஞ்சு நுழைந்தது. அவன் உடலெங்கும் அனல்பற்றி எரிந்ததுபோல் துடித்தான். இரவும் பகலும் நினைவழியாது அரற்றிக்கொண்டிருந்தான். அவன் உடல் சிவந்து பழுத்து வீங்கியது. இமைகள் மடிப்பற்ற குமிழிகளாயின. முகம் பெரிய உருளையென்றாக குழவியுடல்போல சீர்த்தது.

நஞ்சு முழுமையாக அணுவறைகளில் நிறைந்ததும் தேன்நிறைந்த தட்டு என அவன் தசைகள் எடைகொண்டன. வலி அணைந்து உடலில் பெருப்புணர்வு மட்டும் எஞ்சியது. தன் உடலின் எப்பகுதியையும் அசைக்கமுடியாதவனாக அவன் விழிமலைத்து சித்தம் நிலைத்து இரவுபகல் நாள்பொழுதென்றில்லாமல் கிடந்தான். அவன் முடி முழுமையாக உதிர்ந்து முளைத்தது. நகங்களும் உதிர்ந்து மீண்டும் முளைத்தெழுந்தன. நாற்பத்தோராம் நாள்முதல் பதினெட்டு நாட்கள் காலையிலும் மாலையிலும் இளவெயிலில் அவன் உடல் காட்டப்பட்டது. மரப்பட்டைபோல பழைய தோல் உரிந்து அகல தளிர்த்தோல் வந்தது. தசைகள் இளகி பருத்துருண்டன.

அதுவரை அவன் தேனிலூறிய நெல்லிக்காயை மட்டுமே உண்டுகொண்டிருந்தான். பின்னர் பசியனல் எழ விழித்திருக்கும்போதெல்லாம் உண்டான். அறுபதாவது நாள் அவன் அரண்மனைக்கு மீண்டபோது தொலைவில் அவனைக் கண்ட தமயந்தி கூவியபடி எழுந்து பின் கால்தளர்ந்து அமர்ந்து கைகளில் முகம் புதைத்து தோள்குலுங்க விம்மினாள். மைந்தர் அவனை நோக்கி ஓடிவந்து கைகளை பற்றிக்கொண்டு கண்ணீருடன் சிரித்தனர். “மீண்டும் முளைத்தெழுந்துவிட்டார், அரசி. இனி அகவை அறுபது எஞ்சியிருக்கிறது” என்றார் மருத்துவர்.

பீமகர் “நிஷதர் அவைபுகும் நாள் நோக்கி சொல்ல நிமித்திகரை அழைத்து வருக!” என ஆணையிட்டார். “நம் குடியவை தங்களை காணும்பொருட்டு ஒவ்வொரு நாளுமென காத்திருக்கிறது, நிஷாதரே” என்றார். நளன் பீமபலனை நோக்கி புன்னகைத்து “செல்வதும் மீள்வதும் எளியவையே என தெளிந்துவிட்டேன். இனி அஞ்ச ஏதுமில்லை” என்றான். பீமபலன் “மருத்துவரே, மானுட ஆளுமை என நாம் எண்ணுவது வெறும் தசைகளைத்தானா? அரசரின் நடையும் அசைவும் நகைப்பும் நோக்கும் முற்றிலும் மாறிவிட்டனவே?” என்றான். மருத்துவர் “அரசே, அருவனைத்தும் பருவிலேயே உருக்கொண்டாகவேண்டும் என்பது மருத்துவநூலின் முதல் சொல்” என்றார்.

குண்டினபுரியிலிருந்து மீள்கையில் ரிதுபர்ணன் நிகழ்ந்தவற்றை அறிந்து மகிழ்வுகொண்டிருந்தாலும் சிறிய உளச்சோர்வையும் கரந்திருந்தான். அவன் முன் பணிந்து நளன் சொன்னான் “உங்கள் உள்ளம் என்ன என்பதை தோழனாக நான் அறிவேன், அயோத்தியின் அரசே. நீங்கள் இழந்தவற்றுக்கு நிகராக ஒன்றை நான் அளிப்பேன். வார்ஷ்ணேயன் இங்கிருக்கட்டும். அவனுக்கு பரிநூலை முழுமையாகக் கற்பித்து அனுப்புவேன். நிஷதத்திற்கு இணையாக அந்த மெய்யறிவு அயோத்தியிலும் திகழட்டும். அது உங்களிடம் வாழும்வரை எவரும் உங்களை வெல்லமுடியாது.” ரிதுபர்ணன் முகம் மலர்ந்து அவன் தோளை தழுவிக்கொண்டான். “அது போதும். நாளை ஷத்ரியர் அவையில் என்னை எவரேனும் ஏளனம் செய்தால் பரிநூல் பெறும்பொருட்டு நான் ஆடியதே இவையனைத்தும் என்று சொல்வேன்” என்று சிரித்தான். “இது இளிவரல் அல்ல. தொல்குடி ஷத்ரியரின் ஒரே இடர் என்பது பிற ஷத்ரியர்களின் ஏளனமே. அதை அஞ்சியே ஒவ்வொரு கணமும் வாழவேண்டியிருக்கிறது.”

வார்ஷ்ணேயன் “கண்களுக்குக் கீழே சுருக்கங்கள் எஞ்சியிருக்கின்றன, மருத்துவரே” என்றான். “நாங்கள் மூப்புக்கும் இறப்புக்கும் மருத்துவம் செய்வதில்லை” என்றார் அவர். நளன் நகைத்தபடி எழுந்துகொண்டு “செல்வோம்” என்றான். “அவைநுழைகையில் நான் எதற்கு துணைவனாக?” என வார்ஷ்ணேயன் சற்று தயங்கினான். “ஏன்?” என்று நளன் திரும்பிப்பார்த்தான். “நான் சூதன்” என்றான் வார்ஷ்ணேயன். “நிஷதனுக்கு சூதன் நற்துணையே” என்றான் நளன். வார்ஷ்ணேயன் தயக்கம் விலகாமல் புன்னகைத்து “அவை என்னை அச்சுறுத்துகிறது” என்றான்.

நளன் நகைத்து “அனைத்தையும் அறிவால் கடக்கலாம். பரிநூலில் தேர்ந்தபின் இதே அவையை எளிய மாணவர்திரள் என நோக்கமுடியும்” என்றான். “நான் இங்கு இன்னும் கற்கத் தொடங்கவில்லை” என்றான் வார்ஷ்ணேயன். “மெய்யான கல்வி என்பது ஆசிரியருடன் இருத்தலே…” என்றபடி நளன் திரும்பி “அணிகள் முழுமையடைந்தனவா?” என்றான். “ஆம், அரசே” என்றார் அணிச்சமையர். அவன் வார்ஷ்ணேயனிடம் “அந்தச் சிறுபேழையை எடும்!” என்றான்.

“இப்பேழையைத்தான் என்றும் உடன் வைத்திருந்தீர்கள். இதற்குள் என்ன இருக்கிறது என்று பேசிக்கொள்வோம். சில நாட்கள் நள்ளிரவில் நீங்கள் இதை திறந்து நோக்குவதை கண்டிருக்கிறோம்” என்றான் வார்ஷ்ணேயன். அதைத் திறந்து உள்ளிருந்து வெண்ணிற பீதர்பட்டாடையை வெளியே எடுத்தான் நளன். “இது பீதர்பட்டாடை… பொன்னூல்பின்னல் கொண்டது.” நளன் “ஆம், பேரரசர்களுக்குரியது” என்றான்.

வெளியே ஏவலன் வந்து நின்று தலைவணங்கினான். அவனிடம் தலையசைத்தபடி நளன் நடக்க வார்ஷ்ணேயன் உடன் சென்றான். அவர்கள் படியிறங்கி முகப்புக்கூடத்தை அடைந்தபோது அங்கு திரண்டு நின்றிருந்த கவச உடையணிந்த அகம்படிக் காவலரும் ஏவலர்களும் வாழ்த்தொலி எழுப்பினர். அணிச்சேடியர் குரவையிட்டனர். அவனுக்காக பீமபலனும் பீமபாகுவும் காத்திருந்தார்கள். அவனைக் கண்டதும் முகம் மலர்ந்து வந்து கைகளை பற்றிக்கொண்ட பீமபலன் “தாங்கள் உடல்தேறிவிட்டீர்கள் என்று அறிந்தேன். இத்தனை ஒளிகொண்டிருப்பீர்கள் என எண்ணவே இல்லை” என்றான். பீமபாகு அவன் தோளைத்தொட்டு “மல்லர்போல் ஆகிவிட்டீர்கள், அரசே” என்றான்.

பீமபலன் நளன் கைகளைப் பற்றியபடி “அவைபுகுவதற்கு முன்பு சில சொற்களை நான் உங்களிடம் பேசவேண்டியிருக்கிறது” என்று அப்பால் அழைத்துச்சென்றான். அனைவரும் விலக இரு இளவரசர்களும் நளனின் இரு பக்கங்களிலும் அமர்ந்தனர். பீமபலன் “இனி நாம் காத்திருக்க வேண்டியதில்லை, அரசே. நம் படைகள் வில்நாணில் அம்பென ஒருங்கியிருக்கின்றன. இப்போதே அவையில் நிஷதபுரியின்மேல் படைஎழுச்சியை அறிவிப்போம்” என்றான்.

பீமபாகு “உண்மையில் இன்று நம் அவையினர் எதிர்பார்த்திருக்கும் செய்தியே அதுதான். நகரெங்கும் நாலைந்து நாட்களாக இதுவே பேச்சென புழங்குகிறது. நாளை காலையிலேயேகூட படைப்புறப்பாடு இருக்குமென எண்ணுகிறார்கள்” என்றான். நளன் “ஆம், நிஷதபுரியை நான் கைப்பற்றியாகவேண்டும், அதற்குப் பிந்துவதில் பொருளில்லை” என்றான். “உங்களுக்காக கணம்தோறும் காத்திருப்பவர்கள் நிஷதர்களே. சென்ற சில ஆண்டுகளாக அங்கு நிகழ்வதென்ன என்று அறிந்திருப்பீர்கள்” என்றான் பீமபலன். நளன் தலையசைத்தான்.

“குருதியுண்ணும் பேய்த்தெய்வமென ஆகிவிட்டிருக்கிறான் உங்கள் இளவல். குலத்தலைவர்கள் அனைவரையும் கொன்றழித்துவிட்டான். கொன்றவனை அடுத்த குலத்தலைவன் என அறிவிக்கிறான் என்பதனால் குலத்தலைவர்களை அவர்களின் இளையோரே கொன்றுவிடுகிறார்கள். அரசருக்கு எதிராக செயல்பட்டார் என குற்றம்சாட்டி எவரும் எவரையும் கொல்லலாம் என்பது இன்று அங்குள்ள வழக்கம். ஆகவே கற்றோரை கல்லாதோர் கொல்கிறார்கள். மூத்தோரை இளையோர் கொல்கிறார்கள். அங்குள்ள குலத்தலைவர்களில் மூத்தவனுக்கே வெறும் முப்பது அகவைதான்” என்றான் பீமபலன். “வழிதோறும் வெட்டிவைக்கப்பட்ட தலைகளே இன்று நிஷதபுரியின் அடையாளம் என்கிறார்கள்.”

நளன் பெருமூச்சுடன் “கொல்வது பிழையல்ல என ஓர் அரசு அறிவித்தால் போதும், எந்தக் குமுகமும் தன்னைத்தானே கொன்றழித்துவிடும்” என்றான். “அங்கு நிகழ்வது அதுதான். எளிய மக்களுக்கு பொதுவாக அன்றாடப் பகையும் பூசலுமன்றி தனிப்பட்ட எதிரிகள் இருப்பதில்லை. ஆகவேதான் அவர்கள் அரசரைப்பற்றி வம்புரைக்கிறார்கள். அரண்மனைப்பூசல்களில் தாங்களும் ஈடுபடுகிறார்கள். ஆனால் இன்று நிஷதபுரியில் ஒவ்வொருவருக்கும் நூறு எதிரிகள். சற்று அடிபிறழ்ந்தால் தலையுருளும். ஆகவே ஒவ்வொரு கணமும் கூர்முனையில் நின்றிருக்கிறார்கள். ஒவ்வொரு முகமும் வலியில் அச்சத்தில் ஐயத்தில் வஞ்சத்தில் உச்சம்கொண்டு பாதாள தெய்வங்களைப்போல தோற்றமளிக்கின்றது என்கிறார்கள் ஒற்றர்கள். இளஞ்சிறார் கண்கள்கூட ஓநாய்களைப்போல் தோன்றுகின்றன என்கிறார்கள்” என்று பீமபலன் சொன்னான்.

“மக்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ள விட்டுவிட்டு அரண்மனையில் அவன் கீழ்க்கேளிக்கைகளில் திளைக்கிறான்” என்று பீமபாகு சொன்னான். “ஒருநாள் தன் அவையை நோக்கிவிட்டு அவன் சொன்னானாம் அது வாழும்காடு என்று. காடு என்றும் இளமையானது, ஏனென்றால் அங்கே முதுமையும் நோயும் இளமையாலும் பசியாலும் அழிக்கப்படுகின்றன என்று அவன் சொன்னபோது அந்த அவை மகிழ்ந்து கூத்தாடியதாம்.” வெறுப்புடன் உதட்டைச் சுழித்து “நிஷதர்கள் அப்படியே அழுகி அழியட்டும் என விட்டு சதகர்ணிகளும் பிறரும் காத்திருக்கிறார்கள். ஆனால் தாங்கள் இருப்பது அறிந்தால் நிஷதபுரியை கைப்பற்றிவிடுவார்கள். ஆகவே நாம் இன்னமும் பிந்துவது அறிவுடைமை அல்ல” என்றான்.

சிற்றமைச்சர் சாரதர் வந்து அவர்கள் அவைபுகலாமென்று அறிவித்தார். நளன் எழுந்துகொண்டு “செல்வோம்” என்றான். “சொல்க அரசே, இன்று படையறிவிப்பு உண்டா?” என்றான் பீமபலன். “நெறிகளின்படி எவருடைய படை நிலத்தை வெல்கிறதோ அவர்களுக்குரியது அந்நிலம். விதர்ப்பத்தின் படை நிஷதத்தை வெல்ல நிஷதனாகிய நானே அழைத்துச்செல்வது முறையல்ல. இன்று நான் வெல்லலாம், ஆனால் அது நிஷதகுலங்களின் உள்ளத்தில் வடுவென்று எஞ்சும். என்றாவது வஞ்சமென்று எழவும்கூடும்” என்றான் நளன்.

பீமபலன் ஏதோ சொல்லவர “அதை கொடையெனப் பெறுவது எனக்கு இழுக்கு. அதை என் மைந்தருக்கு அளிக்கும் உரிமையையும் இழந்தவனாவேன்” என்றான் நளன். “எவ்வகையில் இழந்தேனோ அவ்வகையிலேயே அதை மீட்கிறேன். அதுவே முறை.” அவன் நடக்க அவர்கள் உடன் சென்றனர். நிஷதபுரியின் காகக்கொடியுடன் வீரன் முன்னால் செல்ல அணிச்சேடியர் மங்கலத்தாலங்களுடன் தொடர்ந்தனர். இசைச்சூதர் முழங்கியபடி அவர்களுக்குப் பின்னால் அணியமைத்தனர்.

நளன் கைகளைக் கூப்பியபடி அவைபுகுந்தபோது பெருங்குரலுடன் அவை எழுந்து வாழ்த்திக் கூச்சலிட்டது. குரவையொலிகளும் இசையும் முயங்கிய முழக்கம் அவையை நிறைத்திருந்தது. அரிமலர் மழையில் நடந்து அவன் அவை நடுவே வந்து நின்றான்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 92

91.எஞ்சும் நஞ்சு

flowerதமயந்தி விழித்துக்கொண்டபோது தன்னருகே வலுவான இருப்புணர்வை அடைந்தாள். அறைக்குள் நோக்கியபோது சாளரம் வழியாக வந்த மெல்லிய வான்வெளிச்சமும் அது உருவாக்கிய நிழல்களும் மட்டுமே தெரிந்தன. மீண்டும் விழிமூடிக்கொண்டு படுத்தாள். மெல்லிய அசைவொலி கேட்டது. வழிதலின் ஒலி. நெளிதலின் ஒலி. தன்னருகே அவள் அவனை கண்டாள். அவன் இடைக்குக் கீழே நாகமென நெளிந்து அறைச்சுவர்களை ஒட்டி வளைந்து நுனி அசைந்துகொண்டிருந்தது. ஊன்றிய கரியபெருந்தோள்கள் அவள் கண்முன் தெரிந்தன. அவன் விழிகளின் இமையா ஒளியை அவள் மிக அருகே கண்டாள். அவன் மூச்சுச்சீறல் அவள் முகத்தில் மயிற்பீலியென வருடிச்சென்றது.

அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவளும் ஏதும் கேட்கவில்லை. அவளையே அவன் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உடலின் நெளிவே ஒரு மொழியென ஏதோ சொல்லிக்கொண்டிருந்தது. அவள் பெருமூச்சுடன் உடல் எளிதானாள். “அவன் நகருக்குள் நுழைந்துவிட்டான், இன்றுகாலை” என்றான். “ஆம்” என்றாள் அவள். “நேற்றே ஒற்றர் சொன்னார்கள்.” அவன் புன்னகைத்தபோது பிளவுண்ட நா எழுந்து பறந்து அமைந்தது. “அவன் எவ்வுருவில் இருக்கிறான் என்று அறிவாயா?” அவள் விழிதாழ்த்தினாள். “உன்னுள் அவன் இருந்த உருவில்.” அவள் சீற்றத்துடன் இமைதூக்க “பின் எப்படி நீ உடனே அவனே என்றாய்?” என்றான்.

அவள் புன்னகைத்து “நான் உன் வழிப்படுவதாக இல்லை. உன் சொற்கள் எனக்கு ஒரு பொருட்டல்ல” என்றாள். “நான் பொய் சொல்வதில்லை.” அவள் ஏளனத்தால் வளைந்த இதழ்களுடன் “ஆம், ஆனால் அவை உண்மைகளும் அல்ல” என்றாள். “அவன் நடித்து முடித்துவிட்டான்.” அவள் அவனை நோக்கி “ஆம், நானும்” என்றாள். “இன்று உன்னை அவன் கண்டால் அவனுள் இருந்த தோற்றத்தில் இருப்பாய்.” அவள் “நீ சொல்லவேண்டியதை சொல்லிவிட்டுச் செல்லலாம்” என்றாள். “அவனிடம் எதை கண்டாய்?” என்று அவன் கேட்டான். “அறியேன். ஆனால் அவரில்லையென்றால் வாழ்வில்லை என உணர்கிறேன்.” அவன் நகைத்து “அத்தனை பத்தினியரும் சொல்வது. வெறும் பழக்கமா? முன்னோர் மரபா? சூழ்விழிகளின் அழுத்தமா?” என்றான்.

அவள் “அதை ஆராயவேண்டுமென்றால் இந்தப் பிடியை விட்டுவிடவேண்டும்” என்றாள். “என்றாவது விடுவேன் என்றால் அப்போது அவ்வினாவை எழுப்பிக்கொள்கிறேன்.” அவன் வஞ்சம் தெரியும் விழிகளுடன் புன்னகைத்து “பத்தினியர் ஒருபோதும் விடுவதில்லை” என்றான். அவள் உடல்மேல் அவன் எடை அழுந்தத் தொடங்கியது. “அது வினாவற்ற பற்று. பிறிதொன்றிலாதது” என்று அவள் காதில் மூச்சொலியுடன் சொன்னான். “நான் விலக விழையவில்லை. நீ என்னை உன் கருகமணியாக சூடிக்கொள்ளலாம். உன்னை சிவை என்பார்கள்.” அவள் “விலகிச்செல்…” என்றாள். “கொற்றவை என்றாகலாம். நாகக்குழையென்றாவேன்.” அவள் தலையை அசைத்தாள். “நாகபடம் அணிந்த சாமுண்டி? நாகம் கச்சையாக்கிய பைரவி? நாகக் கணையாழிகொண்ட பிராமி?” அவள் “செல்க!” என்றாள். “உன் காலில் சிலம்பாவேன். உன் கால்விரலில் மெட்டியென்றாவேன்.” அவள் “செல்…” என்றாள். “எங்கும் நான் இல்லாத பத்தினி என எவருமில்லை.” அவள் “நான் உன்மேல் தீச்சொல்லிடுவதற்குள் விலகு!” என்றாள்.

அவன் தோள்கள் ஒடுங்கின. முகம் கூம்பி நாகபடமென்றாயிற்று. அவள் உதடுகளில் நாகம் முத்தமிட்டது. முலைக்கண்களை உந்திக்குழியை அல்குலை முத்தமிட்டுச்சென்றது. அதன் உடல் பொன்னிறம்கொண்டபடியே சென்றது. அவள் கால் கட்டைவிரலைக் கவ்வியபடி அது காற்றில் பறக்கும் கொடியென உடல் நெளிந்தது. அவள் திடுக்கிட்டு எழுந்து நோக்கியபோது காலைக் கவ்வியிருந்த நாகத்தை பார்த்தாள். அறியாமல் காலை உதற அது அப்பால் ஈரத்துணிமுறுக்கு என விழுந்து நெளிந்தோடி சுவர்மடிப்பினூடாக வழிந்து சாளரத்தில் தொற்றி ஏறி அப்பால் சென்றது. அவள் குனிந்து தன் காலை பார்த்தாள். கட்டைவிரல் நகம் கருமையாக இருந்தது. அதை கையால் தொட்டு வருடினாள். உலோகத்துண்டுபோல கருமையொளி கொண்டிருந்ததது.

flower“நாகநஞ்சு அரசியை முதுமகளென்றாக்கியது. இங்கிருந்து அமைச்சர்களும் மருத்துவர்களும் சூக்திமதிக்குச் சென்றபோது அங்கே அவர்கள் கண்டது உளம்கனிந்து தன் உடலன்றி பிறிதொன்றுமறியாது தூய குழந்தைமையில் திளைத்துக்கொண்டிருந்தவரை” என்றார் சுநாகர். “சூக்திமதியில் எவருக்கும் அவர் எவரென்று தெரியவில்லை. பதினேழுமுறை குண்டினபுரியின் ஒற்றரும் தூதரும் அவரை கண்டிருந்தனர். எவரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அந்தணராகிய சுதேவர் பெண்முகம்நோக்கா நோன்புகொண்டவர். அவர் அரசியின் கால்களை மட்டுமே கண்டிருந்தார். கால்களினூடகவே அவரை தேடிச்சென்றுகொண்டிருந்தார்.”

சூக்திமதியின் இளவரசி சுனந்தையுடன் வந்த சேடியரின் கால்களை நோக்கிய சுதேவர் ஒரு கட்டைவிரலை நோக்கியதுமே அவள் தமயந்தி என அறிந்துகொண்டார். மற்ற விரல்கள் அனைத்தும் கருமைகொண்டு நகம் சுருண்டு உருவழிந்திருந்தன. அக்கட்டைவிரல் நகம் மட்டும் புலியின் விழிமணிபோல பளிங்கொளி கொண்டிருந்தது. அம்முதுமகளை ஏறிட்டு நோக்கியபோது அவள் தமயந்தி அல்ல என்று அவர் விழி சொன்னது. குனிந்து கால்நகத்தை நோக்கியபோது பிறிதொருவர் அல்ல என்றது சித்தம். குழம்பியபடி தன் படுக்கையில் படுத்துக்கொண்டு அரைதுயிலில் ஆழ்ந்து ஒரு கனவிலெழுந்தார். அங்கே அவர் சிலம்புகள் ஒலிக்க படியிறங்கிவரும் அரசியின் காலடிகளைக் கண்டார். அந்நகத்தை மட்டும் நோக்கி “அரசி, தாங்களா?” என்று கூறியபடி விழித்துக்கொண்டார்.

சுதேவர் வந்து சொன்னதைக் கேட்டு அரசர் நடுங்கிவிட்டார். இளவரசர்கள் “அம்முதுமகளை எம் தமக்கையென எவ்வண்ணம் நம்புவது? அவளே தானென்று உணராத நிலையில் அந்தணரின் சொல்லை மட்டும் நம்பி அவளை எப்படி ஏற்பது?” என்றார்கள். முதிய அமைச்சர் விஸ்ருதர் “அரசே, இங்கிருந்து அமைச்சர் குழு ஒன்று நிமித்திகர்களையும் மருத்துவர்களையும் அழைத்துக்கொண்டு சூக்திமதிக்கு செல்லட்டும். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் முறைமைப்படி அவள் யார் என்று சொல்லட்டும்” என்றார். “அமைச்சர் குழுவை நானே வழிநடத்தி அழைத்துச்செல்கிறேன்.”

அமைச்சர் தலைமையில் சென்ற குழுவினர் முதலில் அவளைக் கண்டதும் அஞ்சிக் குழம்பினர். கரிய நீரோடையில் விழுந்துகிடக்கும் பொன்நாணயம்போல அவள் உடலில் ஒரு நகம் மட்டும் ஒளிகொண்டிருந்தது. நிமித்திகர்கள் அவள் தலைமுடியொன்றை எடுத்துவந்து நிமித்தநூல்படி ஆராய்ந்து அவள் தமயந்திதான் என உறுதிசெய்தனர். அந்த முடியை வைத்து களன் கணித்து அவள் அரவுச்சூழ்கை கொண்டிருப்பதை அறிந்தனர். அவள் உடலை முக்குறை தேர்ந்து முறைமைப்படி நோக்கிய மருத்துவர் அவள் உடலில் நாகநஞ்சு ஊறியிருப்பதை கண்டனர். ஏழுநிலை மருத்துவம் வழியாக அவளை மீட்டெடுக்க முடியும் என்றனர். ஆனால் மூதமைச்சர் விஸ்ருதர் “இந்நிலையில் இருந்து மீட்டு அவரை எங்கே கொண்டுசெல்கிறோம்? மீண்டும் துயரங்களுக்குத்தானே?” என்று ஐயுற்றார்.

அவருடன் சென்ற முதுநிமித்திகரான சௌகந்திகர் “அரசி அறியவேண்டியவையும் கடக்கவேண்டியவையும் இன்னும் உள்ளன. அவற்றைத் தொடாது தாண்டிச்செல்வது பிறவியெச்சமென்று நீடிக்கும். வாழ்வென்பது ஒன்றே. அதை தனி நிகழ்வுகளாக்குவதும் இன்பதுன்பமெனப் பிரிப்பதும் தன்னில் நின்று நோக்கும் அறியாமையும் தானே என்னும் ஆணவமும்தான். இன்பமென்று இன்றிருப்பது நாளை துன்பமென்றாகலாம். துன்பமென்று இன்று சூழ்வது எண்ணுகையில் இனிப்பதாகலாம். நாம் அதை முடிவுசெய்யலாகாது” என்றார்.

மருத்துவர் அளித்த நச்சுமுறிகள் அவள் உடலில் இருந்த நஞ்சை மெல்ல வெளியேற்றின. பின் அந்நச்சுமுறிகளை வேறு மருந்துகள் கொண்டு வெளியேற்றினர். இறுதித்துளி நஞ்சு மட்டும் அவள் கால் நகத்தில் எஞ்சியது. கருங்குருவியின் அலகுபோல அவள் நகம் மின்னியது. “அதையும் தெளிவாக்க இயலாதா?” என்று அமைச்சர் விஸ்ருதர் கேட்டார். “கருவறையிலிருந்து வந்த பின்னரும் தொப்புள் எஞ்சுவதை கண்டிருப்பீர்கள், அமைச்சரே. எதுவும் எச்சமின்றி விலகுவதில்லை” என்றார் மருத்துவர்.

ஒவ்வொரு நாளாக அவள் இளமை மீண்டாள். இளமை மீளும்தோறும் நினைவுகள் கொண்டாள். தன் இழந்த அரசை, பிறந்த நகரை, பிரிந்த மைந்தரை எண்ணி விழிநீர் உகுத்தாள். தன் கணவனை அன்றி பிற எண்ணம் அற்றவளாக ஆனாள். விழிநீர் உகுத்துக்கொண்டிருந்த அவளைத்தான் குண்டினபுரியிலிருந்து சென்ற ஏழு இளவரசர்கள் கண்டனர். அவர்களைக் கண்டதும் அழுதபடி எழுந்தோடி வந்து அவள் “நிஷதரைப்பற்றிய செய்தியுடன் வந்தீர்களா?’’ என்றுதான் கேட்டாள். அவர்கள் “உங்களைப்பற்றிய செய்தி அறிந்துவந்தோம், மூத்தவளே” என்றனர். “நான் இருப்பது அவர் வாழ்வதைச் சார்ந்தே” என்று அவள் மறுமொழி சொன்னாள்.

சுநாகர் சொல்லி நிறுத்தி ஒரு பாக்கை போட்டுக்கொண்டதும் கதை கேட்டு அமர்ந்திருந்த அயலவர்களில் ஒருவர் “நிஷதர் எங்கே என்று இன்னும் தெரியவில்லையா என்ன?” என்றார். “அவரை ஏழு நிலங்களிலும் ஏழு கடல்களிலும் தேடிவிட்டனர். அதன் பின்னரே நிமித்திக அவை கூடியது. பன்னிரு களம் பரப்பி அவர் இன்றில்லை என்று அவர்கள் உறுதி செய்தனர். நாற்பத்தொருநாள் அரசி துயர் காத்தார். அதன் பின்னர் அவரிடம் மறுமணத்தைக் குறித்து அவர் அன்னை பேசினார். துயர்மீண்ட அரசி அதற்கு முதலில் ஒப்பவில்லை. அரசரும் உடன்பிறந்தாரும் அமைச்சரும் அவரிடம் பேசினர். அவர் அச்சொற்களைக் கேட்டு செவிபொத்திக்கொண்டு கண்ணீர்விட்டார்” என்றார் சுநாகர்.

“இறுதியாக அவரை அரசருக்கு ஆசிரியராகிய தமனரின் தவக்குடிலுக்கு அழைத்துச்சென்றனர். சொற்களிலிருந்து உள்ளத்தின் விடையை தேரமுடியாது அரசி. உன் கனவுகளிலிருந்து அதை தேடி எடு. சொல்லின்றி சிலநாள் இங்கே இரு என்றார் தமனர். அவர் சொன்னதன்படி அங்கே தன்னந்தனிமையில் ஏழு நாட்கள் அரசி தங்கியிருந்தார். ஏழாம்நாள் அவர் ஒரு கனவு கண்டார். அக்கனவில் அவர் கால்கட்டைவிரலை ஒரு நாகம் கவ்வி நெளிந்தது. அவர் விழித்துக்கொண்டு மறுமணம் புரிந்துகொள்ள ஒப்புவதாக சொன்னார்.”

அடுமனையாளர்கள் பின்நிரையில் ஈச்சையோலைப் பாயில் படுத்தும் அமர்ந்தும் சுநாகரின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களின் நடுவே சுவர்சாய்ந்து வேறெங்கோ நோக்கியதுபோலிருந்த பாகுகன் “அயோத்தியின் அரசரை வரச்சொன்னது அரசியேதானா?” என்றான். அனைவரும் அவனை நோக்கி திரும்பினர். “அடுமனையாளர்களுக்குத் தெரியாத அரசுமந்தணம் இல்லை என்பார்கள். நீ இப்படி கேட்கிறாய்?” என்றார் சுநாகர். “அவன் அயலூர் அடுமனையாளன். சற்றுமுன்னர்தான் நகர் நுழைந்தான். உண்டு இளைப்பாற இங்கு வந்தான்” என்றான் இளைய அடுதொழிலன் ஒருவன்.

“குள்ளரே, அரசி அனுப்பிய வினாக்களுக்கு அயோத்தியின் அரசர் மட்டுமே சரியான மறுமொழியை சொன்னதாகச் சொல்கிறார்கள். அச்செய்தியை அறிந்ததும் பிற அரசர்கள் சினம்கொண்டுள்ளனர். அவர்கள் பெண்கோள்பூசலுக்கு படைகொண்டு வரக்கூடும் என அஞ்சுகிறார் அரசர். எனவே மகதமோ கலிங்கமோ கூர்ஜரமோ படைஎழுவதற்குள் மணம் முடிந்துவிடவேண்டும் என திட்டமிட்டுத்தான் அயோத்தியின் அரசரை உடனே வரும்படி சொல்லியிருக்கிறார்கள். செய்தி கிடைத்த அக்கணமே கிளம்பி ஒருநாளுக்குள் இங்கே வந்துசேர்ந்துவிட்டார் அயோத்தியின் அரசர்” என்றார் சுநாகர். அடுமனையாளன் ஒருவன் படுத்தபடி “அவருடைய தேர்வலனைப் பற்றி பேசிக்கொள்கிறார்கள். பேருடலன். ஒற்றைக்கையால் நான்கு புரவிகளைப் பிடித்து நிறுத்தும் ஆற்றல்கொண்டவன்” என்றான்.

“நாகமறியாத ஏதும் நிகழ்வதில்லை மண்ணில்…” என சுநாகர் மீண்டும் தொடங்கினார். “விண்ணாளும் சூரியனையும் சந்திரனையும் கவ்வி இருளச்செய்யும் ஆற்றல்கொண்டது நாகம். ஒவ்வொருவர் காலடியிலும் அவர்களுக்கான நாகம் வாழ்கிறது என்கின்றன நூல்கள்” என்றபின் பாகுகனிடம் “உமது பெயர் என்ன, குள்ளரே?” என்றார். “பாகுகன்” என்று அவன் சொன்னான். “அரிய பெயர். உமது பெயரின் கதையை சொல்கிறேன்” என சுநாகர் தொடங்கினார்.

“முற்காலத்தில் இப்புவி நாகங்களால் மட்டுமே நிறைந்திருந்தது. அன்றொருநாள் ஸ்தூனன் உபஸ்தூனன் என்னும் இரு நாகங்கள் பிரம்மனை அணுகி நாங்கள் இணைந்து செயல்பட எண்ணியிருக்கிறோம். தனித்துச் செயல்படுவதைவிட எங்களால் இணைந்து விரைவும் ஆற்றலும் கொள்ளமுடிகிறது என்றனர். அவ்வாறே ஆகுக என்றார் பிரம்மன். பின்னர் ஸ்தூனர்கள் பாகுகன் உபபாகுகன் என்னும் வேறு இரு நாகங்களுடன் வந்தனர். நாங்கள் நால்வரும் இணைந்தால் மேலும் ஆற்றல்கொள்கின்றோம். எங்களுக்கு அதற்குரிய உருவை அளிக்கவேண்டும் என்றனர். அவ்வாறே ஆகுக என்றார் பிரம்மன். கால்களும் கைகளுமென எழுந்த நான்கு நாகங்களின் தொகையே மானுடனாக மண்ணில் பிறந்தது.”

“இது என்ன புதிய கதை?” என அயல்வணிகர் ஒருவர் நகைத்தார். “இது குடிநாகர்களின் தொல்கதை. அறிந்திருப்பீர், நான் உரககுடியினன். நாகசூதர்களென நாடுகள்தோறும் அலைபவர்கள் நாங்கள். இமையா விழிகளால் இவ்வுலகை நோக்குபவர்கள். பிளவுண்ட நாவால் இருபால்முரண் கொண்ட கதைகளை சொல்பவர்கள்” என்றார் சுநாகர். “முன்பொரு காலத்தில் இந்தப் பெருநிலம் நாகர்களால் நிறைந்திருந்தது. அவர்களை வென்றும் கொன்றும் நிலம் கொண்டார்கள் மன்னர்கள். அவர்களின் கதைகளை வெல்ல அவர்களால் இயலவில்லை. இந்நிலத்தை சிலந்திவலையென மூடியிருக்கின்றன எங்கள் கதைகள். மண்ணுக்கடியில் வேர்கள் வந்து தொட்டு உறிஞ்சுவதெல்லாம் எங்கள் சொற்களே என்றுணர்க!”

flowerமுதற்புலரியில் அடுமனைக்குள் நுழைந்த பாகுகன் தயங்கி நின்றபின் “அனைவரையும் வணங்குகிறேன்” என்றான். அடுமனையாளர்கள் அப்போதுதான் கலங்களை உருட்டி உள்ளே கொண்டுவந்துகொண்டிருந்தனர். அனல் மூட்டப்பட்ட அடுப்பில் தழல் தயங்கிக்கொண்டிருந்தது. முதிய அடுதொழிலர் உத்ஃபுதர் திரும்பிப்பார்த்து “யார் நீ?” என்றார். “நான் அயோத்தியிலிருந்து நேற்று இரவு வந்தவன். என் பெயர் பாகுகன். சூதன். பரிவலன், அடுதொழிலன்” என்றான். உத்ஃபுதர் அவனை கூர்ந்து நோக்கியபின் “உன் அகவை என்ன?” என்றார். “நாற்பது” என்றான் பாகுகன். “ஆம், எண்ணினேன். ஆனால் அசைவுகளில் சிறுவன்போலிருக்கிறாய். இது அரசர்களுக்குரிய அடுமனை. உனக்கு அடுதொழில் தெரியுமென்பதற்கு என்ன சான்று?” என்றார்.

பாகுகன் அருகிருந்த சட்டுவத்தின் முனையால் அங்கிருந்த அரிமாவில் சற்று எடுத்து அடுப்புத்தழலுக்குள் காட்டி வெளியே எடுத்து அவரிடம் நீட்டினான். உத்ஃபுதர் முகர்ந்து புன்னகைத்து “ஆம்” என்றார். “நீர் நிஷாத அடுதொழில் மரபைச் சேர்ந்தவர். நளமாமன்னரை கண்டிருக்கிறீரா?” பாகுகன் புன்னகைத்து “அறிவேன்” என்றான். உத்ஃபுதர் அந்த அரிசிமாவை அருகிருந்தவரிடம் காட்டி “ஒருகணம் பிந்தியிருந்தால் கரிந்திருக்கும். முந்தியிருந்தால் மாவு. இப்போது வறுமணம் எழும் பொன்பொரிவு” என்றார். “அறிக, அடுதொழில் என்பது அனலை வழிபடுவதே. இது எரி எழுந்த ஆலயம் என்கின்றன நூல்கள்.” திரும்பி பாகுகனிடம் “வருக, தங்கள் கைபடுமென்றால் இங்கு தண்ணீரும் சுவை கொள்ளும்” என்றார்.

இளைய அடுதொழிலர் பாகுகனை சூழ்ந்துகொண்டார்கள். அவன் “நாம் என்ன சமைக்கவிருக்கிறோம்?” என்றான். “இன்று ஒரு உண்டாட்டு உண்டு என்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. நம் அரசி தன் கொழுநனை அடையும் நாள் இது என்றார்கள். பெருமணநிகழ்வு பின்னர் வரலாம்” என்றார் அடுதொழிலர் ஒருவர். “ஆம், அதற்கென சமைப்போம்” என்று பாகுகன் சொன்னான். சில கணங்களுக்குள் அங்குள்ளவர்கள் அவன் கைகளும் உள்ளமும் ஆனார்கள். “ஒற்றைத்துளி உப்பை ஊசிமுனையால் தொட்டு நாவிலிட்டால் சுவைதிகழ்கிறது. அது துளிச்சுவை. மொழிகளெல்லாம் ஒலித்துளிகளின் தொகுப்பே. இளையோரே, சுவைத்துளிகளை கோக்கத்தெரிந்தவனே அடுமனையாளன். ஒன்றில் கணக்கு நிற்கட்டும். ஒன்றுநூறென்று ஆயிரமென்று பெருகட்டும்…”

மணமும் சுவையுமாக உணவு எழுந்து அடுகலங்களை நிறைத்தது. “புதுச்சமையலின் மணம். உண்பவர் அரசரேனும் ஆகுக! இந்த மணம் அடுமனையாளனுக்கு மட்டுமே உரியது” என்றார் உத்ஃபுதர். பாகுகன் மணையில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டு வெளியே இருந்து வந்த காற்றை உடலில் வாங்கி கண்களை மூடிக்கொண்டான். உத்ஃபுதர் பாக்குத்துண்டு ஒன்றை வாயிலிட்டு கண்களை மூடினார். வாயிலில் நிழலாடியது. பாகுகன் நிமிர்ந்து நோக்க “நான் அயோத்தியின் தேர்வலரை பார்க்க வந்துள்ளேன். அரசியின் அணுக்கி. என் பெயர் கேசினி” என்றாள். பாகுகன் “வணங்குகிறேன், தேவி. நான் பாகுகன்” என்றான்.

அவன் எழுந்து அருகிருந்த அறைக்குச் செல்ல கேசினி உடன்வந்தாள். “உங்கள் அரசரை ஒருநாளில் இத்தொலைவு கூட்டிவந்தீர்கள் என்று அரசி அறிந்தார். என்னை அனுப்பி அதன்பொருட்டு உங்களுக்கு நன்றி தெரிவிக்கும்படி சொன்னார்” என்றாள். பாகுகன் “அது என் கடமை” என்றான். “அரசி அயோத்தியின் அரசரை மணக்க விழைவுகொண்டிருக்கிறார். அது உங்களாலேயே நிறைவேறியது என்று உவகை சொன்னார்” என்ற கேசினி “உங்கள் அரசரிடம் அவர் கேட்ட மூன்று வினாக்களை அறிந்திருப்பீர். நீங்கள் அவருக்குத் தகுதியான தேர்வலரா என்றறிய உங்களிடம் மூன்று வினாக்களை கேட்டுவரச் சொன்னார்” என்றாள். பாகுகன் “கேளுங்கள், தேவி” என்றான். “முதுமையே அணுகாமல் வாழ்பவர் யார்? இறப்பேயற்ற அன்னையை கொண்டவர் யார்? ஆடைகளில் மிகப் பெரியது எது?” என்றாள் கேசினி. “இப்புதிர்களுக்கு நீங்கள் மறுமொழி சொன்னால் உங்களுக்கு அரசி ஓர் அருமணியை பரிசளிப்பார்.”

பாகுகன் அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். “சொல்க!” என்று அவள் சிரித்தாள். பாகுகன் “உள்ளத்தால் முதுமைகொண்டவர் முதுமைகொள்வதே இல்லை” என்றான். “உள்ளத்தால் இளமையிலிருப்பவரின் அன்னை மறைவதே இல்லை.” அவள் “இது சரியான மறுமொழியா என்று அறியேன். சரி, மூன்றாவது மறுமொழி என்ன?” என்றாள். “மிகப் பெரிய ஆடை இருளே” என்றான் பாகுகன். அவள் நகைத்து “நன்று அரசியிடம் சொல்கிறேன்” என்றபின் “இன்றிரவே அயோத்தியின் அரசருக்கு அவைவரவேற்பு அளிக்கப்படும். அதில் மணக்கொடையை அரசரே அறிவிப்பார். நீங்களும் அவைநிற்கவேண்டும் என்று அரசி விழைகிறார்” என்றாள்.

பாகுகன் “எங்கள் அகம்படியினர் இன்று மாலைக்குள் வந்தணைந்துவிடுவார்கள். அமைச்சரும் படைத்தலைவரும். அவர்கள் அரசருக்கு அவைத்துணையாவர். நான் எளிய சூதன்” என்றான். “அரசியின் ஆணை இது” என்றபின் கேசினி தலைவணங்கி கிளம்பிச்சென்றாள். அவள் செல்வதை அவன் நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவள் விழிமறைந்ததும் சென்றுகொண்டே இருந்த தேரிலிருந்து விழுந்து மண்ணிலறைபட்டவனாக அதிர்ந்து விழித்துக்கொண்டான். எழுந்து வெளியே அடுமனையாளர்களுடன் சென்று சேர்ந்துகொள்ளவேண்டும் என எண்ணினான். ஆனால் தன் உடலை அவனால் தூக்கமுடியவில்லை.

அருகே கிடந்த நீண்டபிடிகொண்ட அகப்பையை எடுத்து அதைக் கொண்டு அறைக்கதவை மூடினான். ஒரு கலத்தை உருட்டி கதவை அணைகொடுத்து நிறுத்தினான். இருட்டு அறைக்குள் நிறைந்து மூடிக்கொண்டது. கண்களை மூடிக்கொண்டு அசைவில்லாமல் அமர்ந்திருந்தான். பின்னர் தன் முன்னால் அவனை உளவுருவாக சமைத்துக்கொண்டான். மீண்டும் மீண்டும் வெட்டவெளியில் அவ்வுருவை அவன் உள்ளம் வனைந்தது. “நீயா?” என்றான். மறுமொழி இல்லை என விழிதிறந்தபோது வெற்றிடத்தைக் கண்டு சலிப்புடன் மீண்டும் விழிமூடிக்கொண்டான். மூன்றுமுறை விழிதிறந்தபின் அந்த உளவிளையாட்டு சலித்துப்போய் கண்களை மூடிக்கொண்டு துயில முயன்றான். ஆனால் எச்சரிக்கையுணர்வு அவனை தூங்கவும் விடவில்லை. பெருமூச்சுடன் புரண்டு படுத்தான். வெளியே “பாகுகர் எங்கே?” என்ற குரல் கேட்டது.

பாகுகன் எழப்போனபோது மிக அருகே அவனை உணர்ந்தான். “அவள் உணர்ந்துவிட்டாள்” என்று அவன் சொன்னான். “ஆம்” என்றான் பாகுகன். “நீ என அவளுக்குத் தெரியும். நீ எதை உணர்கிறாய் என அறிய விழைகிறாள்.” பாகுகன் பெருமூச்சுவிட்டான். “நீ ஏன் எழுந்து ஓடி அவள் அரண்மனை வாயிலில் சென்று நிற்கவில்லை? ஏன் அவளை ஒருகணமும் மறந்ததில்லை என்று சொல்லவில்லை?” பாகுகன் சில கணங்கள் தலைகுனிந்து அமர்ந்தபின் “அவள் ஏன் இங்கே வரவில்லை? என் முன் வந்து நின்று கண்ணீர்விடவில்லை?” என்றான். “அவள் உன்னைப்போலவே எண்ணுவதனால்” என்றான்.

கசப்புடன் புன்னகைத்தபின் பாகுகன் எழப்போனான். அவன் “ஒருகணம் பொறு. நீ எளிதில் விடுபடமுடியும்” என்றான். “உன்னிடமே முறிமருந்து உள்ளது.” பாகுகன் பேசாமலிருந்தான். “நீ விழையவில்லையா?” பாகுகன் மறுமொழி சொல்லாதது கண்டு “சொல், நீ மீளவும் சேரவும் எண்ணவில்லையா?” என்றான். பாகுகன் “அவள் அரசி” என்றான். “நீயும் அரசனாக முடியும்.” பாகுகன் பெருமூச்சுவிட்டு “செல்க… என்னை அழைக்கிறார்கள்” என்றான். “நீ ஏன் தயங்குகிறாய்? அவள் முன் தணியக்கூடாது என்றா? அவள் உன்னைத் தேடிவந்து காலடியில் விழவேண்டுமென்றா?” பாகுகன் “நான் செல்லவேண்டும்” என்று எழுந்துகொண்டான்.

அவன் எழுந்து பாகுகனுக்குப் பின்னால் வந்தபடி “உதறிச்சென்றவன் நீ. திரும்பிச்செல்லவேண்டிய பொறுப்பு உனக்கே” என்றான். “நான் இதைப்பற்றி பேசவிரும்பவில்லை” என்றான் பாகுகன். “இத்தனை தொலைவு அலைந்து மீண்டுவிட்டு இந்த ஒருகணத்திற்கு இருபுறமும் நின்றிருப்பீர்களா என்ன?” பாகுகன் கதவைத் திறந்தான். வெளியே இருந்து ஒளி முகத்தில் பொழிய கண்கூசி விழிநிறைந்தான். “இங்கிருக்கிறீர்களா, பாகுகரே? உங்களை தேடிக்கொண்டிருந்தோம்” என்றான் அடுமனையாளன். பாகுகன் ஒன்றும் சொல்லாமல் முன்னால் நடந்தான்.

அடுமனையாளன் அறைக்குள் சென்று கமுகுப்பாளைத் தொன்னைகளின் கட்டை எடுத்துக்கொண்டு “நான் தொன்னையை எடுக்கத்தான் வந்தேன். எவர் பூட்டியது இவ்வறையை என வியந்தேன்” என்றான். பாகுகன் பெருமூச்சுவிட்டு “நான் உடனே கிளம்பவேண்டும்” என்றான். “கிளம்புகிறீர்களா? என்ன சொல்கிறீர்கள்?” என்றான் அடுமனையாளன். “அரசரின் ஆணை. நான் உடனே அயோத்திக்குச் செல்லவேண்டும்… பெரியவரிடம் நான் சென்றுவிட்டதாகச் சொல்லிவிடு” என்று பாகுகன் சொன்னான். “ஒருநாள்கூட நீங்கள் இங்கே தங்கவில்லை. நீங்கள் சமைத்ததை எம்மனோர் உண்பதை பார்க்கவுமில்லை.” பாகுகன் புன்னகையுடன் “பிறிதொருமுறை வருகிறேன்” என்றான்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 91

90. அலைசூடிய மணி

flowerசுபாஷிணி அறைக்குள் நுழைந்தபோது வெளியே பந்தலில் விறலி பாடத்தொடங்கியிருந்தாள். அந்தியாவதற்குள்ளாகவே அனைவரும் உணவருந்தி முடித்திருந்தனர். வாய்மணமும் பாக்கும் நிறைத்த தாலங்கள் வைக்கப்பட்டிருந்த ஈச்சையோலைப் பந்தலில் தரையில் ஈச்சம்பாய்கள் பரப்பப்பட்டிருந்தன. சிலர் முருக்குமரத் தலையணைகளையும் கையோடு எடுத்துக்கொண்டு செல்வதை கண்டாள். சிம்ஹி அவளிடம் “அவர்கள் கதை கேட்கையில் துயில்வார்கள். பலமுறை கேட்ட கதைகள் என்பதனால் துயிலுக்குள்ளும் விறலி சொல்லிக்கொண்டிருப்பாள்” என்றாள்.

சிம்ஹியும் கோகிலமும் அவளை அறைநோக்கி இட்டுச்சென்றனர். பிற பெண்கள் கதை கேட்கச் சென்றனர். சவிதை “நான் எங்கே செல்ல? நாழிகைக்கு ஒருமுறை இவனுக்கு உணவூட்டவேண்டுமே? பந்தலுக்குப் பின்னால் அடுமனை ஓரமாக நின்றுதான் கதை கேட்கவேண்டும்” என்றாள். சிம்ஹி “சம்பவரை நீங்கள்தான் முன்னர் பலமுறை பார்த்திருக்கிறீர்களே, பிறகென்ன?” என்றாள். “பலமுறை பார்த்ததில்லை” என்று சுபாஷிணி சொன்னாள். அவர்கள் அவளை உள்ளே செல்லும்படி சொன்னார்கள்.

தரையில் இரண்டுஅடுக்குள்ள ஈச்சம்பாய் விரிக்கப்பட்டு மரவுரித் தலையணைகள் இரண்டு போடப்பட்டிருந்தன. சிறிய எரிகலத்தில் மட்டிப்பால் தூபம் புகைந்து அறைக்குள் மெல்லிய முகில்திரையை பரப்பியிருந்தது. “பாயில் அமர்ந்துகொள்” என்றபடி அவர்கள் கதவை மூடினார்கள். அவள் அப்போதுதான் தண்ணுமையின் ஒலியை கேட்டாள். பின்னர் முழவும் குழலும் இணைந்துகொண்டன. விறலி நாவிறைவியின் புகழை பாடலானாள்.

கதவு மெல்ல திறந்து சம்பவன் உள்ளே வந்தான். மூச்சுத்திணறுபவன்போல நின்றான். அவள் எழுந்து சுவரில் சாய்ந்து நின்றாள். அவன் பெருமூச்சுவிட்டபின் புன்னகைத்து “கடுமையான பணி… அடுமனைப்பணி ஓய்வதே இல்லை” என்றான். “ஆம், அறிந்திருக்கிறேன்” என்றாள். அவன் அவள் குரலையும் புன்னகையையும் கண்டதும் எளிதாகி அருகே வந்தான். “இங்கே ஆசிரியர் இருந்தபோது அவரது கைகளால் உண்டு பழகியவர்கள். அவர் இல்லாத முதல் விருந்து இது. ஆகவே நானே செய்யவேண்டும் என்றார் விகிர்தர். என் கைச்சமையலை துப்பிவிட்டுப் போய்விடுவார்கள் என அஞ்சினேன். நல்லவேளை, அனைவருக்கும் பிடித்திருந்தது.” சுபாஷிணி “நீங்கள் அவரேதான்” என்றாள். அவன் மகிழ்ந்து “ஆம், அவரேதான். அவருடைய ஒரு துளி. ஒரு தொலைதூரப் பாவை. ஆனால் அவரேதான்” என்றான்.

பாயில் அமர்ந்துகொண்டு அவளிடம் “அமர்க!” என்றான். அவள் சற்று அப்பால் பாயின் ஓரமாக அமர்ந்தாள். “உண்மையை சொல்லப்போனால் உன் முகமே நினைவில் இல்லை. நீ என்னை விரும்புவதாக அந்தக் காவலர் சொன்னபோது எனக்கு அனல்தொட்டது போலிருந்தது. உன்னை அறிந்திருக்கிறேன் என்றும் தோன்றியது. எண்ணி எண்ணி நோக்கியும் முகம் தெளியவில்லை. ஆனால் உன் நீண்டகுழலை எங்கேயோ பார்த்திருந்தேன்.” சிரித்து “எங்கே என்று சொல்லவா? கனவில்” என்றான். அவள் புன்னகை செய்தாள்.

“நான் ஆசிரியரிடம்தான் சொன்னேன். அவர் நீ அவளை கரவுக்காட்டில் கண்டிருப்பாய். அவள் உன்னை விரும்புகிறாள் என்றால் சென்று அவளை பெண் கேள் என்றார். நான் எளிய அடுமனையாளன் என்றேன். அவளை இங்கே புகையிலும் கரியிலும் கொண்டுவந்து வாழவைப்பது முறையல்ல என்றபோது அவர் மூடா அவள் அன்னமிடும் தொழிலை விழைந்தே இங்கே வரவிருக்கிறாள் என்றார். என்னால் அதை நம்ப முடியவில்லை. அவரது ஆணைப்படியே என்னுடன் விகிர்தரும் சுந்தரரும் வர ஒப்புக்கொண்டார்கள்.”

சுபாஷிணி “சரியாகவே சொல்லியிருக்கிறார். என் வாழ்க்கையை அன்னமிட்டே நிறைக்க விரும்புகிறேன்” என்றாள். “உண்டு செல்பவர்களின் முகம் நிறைவதை காண்பதைப்போல இனிது பிறிதில்லை.” சம்பவன் “அது என் கைச்சமையல்… விண்ணுலகை நாவில் காட்டிவிடுவேனே” என்றான். அவள் சிரித்து “தன்னம்பிக்கை நன்று” என்றாள். அவன் அவள் கையை தன் கைகளில் எடுத்துக்கொண்டு “நீ என்னை விரும்புகிறாய் என்று அறிந்த அன்றுதான் நான் என்னைப்பற்றி பெருமிதமாக உணர்ந்தேன். இனி வாழ்வில் நான் அடையும் வெற்றி என ஏதுமில்லை என்று தோன்றியது” என்றான். அவள் அருகே வந்து தோள்சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.

“உண்மையில் நீ இன்று என்னுடன் இருப்பதனால்தான் நான் இந்த வெறுமையை கடந்துசெல்கிறேன். என் ஆசிரியர் நேற்று பிரிந்துசென்றார். அவரைப் பிரிவேன் என்று அறிந்திருந்தேன். ஆனால் அதற்கு என் உள்ளம் சித்தமாக இருக்கவில்லை. அவர் ஒவ்வொருவரிடமாக விடைபெற்றுக் கிளம்பினார். குண்டனை எடுத்து வானில் வீசிப்பிடித்து இவனும் காற்றின் மைந்தனே என்றார். இறுதியாக என்னிடம் வந்தார். நான் கால்தொட்டு சென்னிசூடினேன். அழுகையை அடக்கமுடியாமல் காலடியிலேயே விழுந்துவிட்டேன்” என்றான் சம்பவன்.

“அவர் என்னைத் தூக்கி நெஞ்சோடணைத்து உனக்கு நான் அடையாதவையும் கிடைக்கும் மைந்தா என்றார். உன் வடிவில் நானும் அதை அடைவேன் என்று சொல்லி என்னை உச்சியில் முத்தமிட்டார். ஆம், மெய்யாகவே. என்னை என் தந்தை முத்தமிட்டு அறியேன். என்னை எவருமே முத்தமிட்டதில்லை. என் ஆசிரியர் என்னை முத்தமிட்டார். என் உள்ளங்காலில் குளிர் ஏறியது. அந்தக் கணம் அப்படியே குளிர்ந்து நின்றுவிட்டது” என்று சம்பவன் தொடர்ந்தான்.

“என் செவியில் கொல்லாதே என்று மென்மையாக சொன்னார். சமைத்தூட்டுபவன் பெறுவதெல்லாம் கொல்பவனால் இழக்கப்படுகிறது மைந்தா. அரிசிப்புழுவும் காய்வண்டும்கூட உன்னால் காக்கப்படுக! விண்ணுலகிலிருந்து கைநீட்டி என்னை மேலேற்றிக்கொள்க என்றார். என்ன சொல்கிறார் என்றே எனக்குப் புரியவில்லை. நான் விசும்பி அழுதுகொண்டிருந்தேன். அவர் என்னை நிறுத்தி நாம் மீண்டும் பார்க்கமாட்டோம், என்றும் உன்னுடன் நான் இருப்பேன் என்று கொள் என்றபின் திரும்பி நடந்தார். மண்ணை மிதித்துச்செல்லும் சிறிய கால்களைப் பார்த்தபடி நான் தரையில் அமர்ந்தேன். பின் மண்ணுடன் முகம் சேர்த்து படுத்துக்கொண்டேன். அவர் காலடி பட்ட மண்ணை நோக்கிக்கொண்டிருந்தேன்.”

“விடியும்போதுதான் சுந்தரர் வந்து உன்னை பெண்கேட்கச் செல்லவேண்டுமென்பது வலவரின் ஆணை என்றார். அதன் பின்னரே நான் எழுந்து நீராடச் சென்றேன்.” சுபாஷிணி புன்னகைத்து “அவர் சொன்னவை நினைவிலிருக்கட்டும். பிறிதொன்றும் நீங்கள் பெறுவதற்கில்லை” என்றாள். “ஆம்” என அவளை அவன் அணைத்துக்கொண்டான். அவளை நோக்கி குனிந்தான். அவள் அவன் விழிகளை கண்டாள். அதிலிருந்த நெகிழ்வை நோக்கியதும் மெய்ப்புகொண்டு விழிமூடிக்கொண்டாள். அவன் தோள்கள் அவளைச் சூழ்ந்தன, மலையாற்றின் வன்னீர்ச்சுழல்போல.

“ம்ம்” என்றாள். அவன் அவள் செவியில் “என்ன?” என்றான். “மரம்போலிருக்கின்றன கைகள்.” அவன் நகைத்து “அடுமனையாளனின் கைகள்” என்றான். அவள் அவன் தோளில் கையோட்டி “எத்தனை உறுதி!” என்றாள். புயங்களில் புடைத்திருந்த நரம்புகள் வழியாக விரலை ஓட்டி “யாழ்” என்றாள். “மீட்டு” என்று அவன் சொன்னான். அவள் அவன் காதுக்குள் மெல்ல சிரித்தாள்.

வெளியே விறலியின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. “என்ன பாடுகிறாள்?” என்று அவள் அவன் செவியில் கேட்டாள். “கேட்டதில்லையா? விதர்ப்பினியாகிய தமயந்தியின் கதை அது.” அவள் “அதை ஏன் இங்கே பாடுகிறார்கள்?” என்றாள். “சமாகம பாதம் அக்காவியத்தின் இறுதிப்பகுதி. அதை மணநிகழ்வுகளின்போது சொல்லவைப்பது வழக்கம்” என்றான் சம்பவன். அவள் “நான் கேட்டிருக்கிறேன்” என்றாள். “அதை தேவி கேட்க விரும்புவாள். எப்போதும் விறலியிடம் அதைத்தான் பாடும்படி சொல்வாள்.” அவன் “அவர்கள் இப்போது நம் நாட்டு எல்லையை கடந்திருப்பார்கள்” என்றான்.

flowerசுபாஷிணி மீண்டும் விறலியின் குரலைக் கேட்டபோது அவள் தமயந்தியின் நகருலாவை பாடிக்கொண்டிருந்தாள். மரத்திலிருந்து நீரில் உதிரும் சருகு ஆழத்திலிருந்து எழுந்து வருவதுபோல அருகே வந்து சொல் துலங்கியது அவள் பாடல். அணியானை மேல் முகிலில் எழுந்த இளங்கதிரவன் என அமர்ந்து தமயந்தி குண்டினபுரியின் அரசப்பெருவீதியில் சென்றாள். அவளை வாழ்த்தியபடி அவள் குடிகள் சாலையின் இரு பக்கங்களிலும் திரண்டிருந்தனர். அந்தணர்வீதியை அவள் கடக்கையில் உப்பரிகையில் தூண்மறைவில் நின்று அவளை நோக்கிய முதிய கைம்பெண் ஒருத்தியின் சொல் அவள் காதில் விழுந்தது. “யார்பொருட்டு அக்குங்குமம்? எவருடையது அந்தக் கருமணிமாலை?”

யானைமேல் அமர்ந்து அவள் நடுங்கினாள். அதன்பின் அவளால் சூழ்ந்திருந்த மக்களின் வாழ்த்தொலியை, மங்கல இசையை, மலர்மழையை உவக்க இயலவில்லை. அரண்மனை நோக்கிச் செல்லும் பாதையில் யானையின் ஒவ்வொரு காலடியும் வில்லில்லா தேரின் சகட அதிர்வென அவள் தலையில் விழுந்தது. அரண்மனையில் இறங்கி அகத்தளம் நோக்கி ஓடிச்சென்று தன் அன்னை மடியில் விழுந்தாள். “என் மங்கலங்கள் பொருளற்றவை என்னும் சொல்லை இன்று கேட்டேன். இன்றே நான் அறியவேண்டும் இவற்றின் பொருளென்ன என்று. நிமித்திகரும் வேதியரும் வருக!”

வேதியர் மூவர் அகத்தளம் வந்தனர். தென்னெரி எழுப்பி வேதமோதி அவியிட்டனர். “அரசி, உங்கள் கையால் ஒரு மலரிதழை எடுத்து இவ்வெரியில் இடுக!” என்றார் வைதிகர். அரசி எரியிலிட்ட தாமரை மலரிதழ் வாடாமல் பளிங்குச் சிமிழென ஒளியுடன் எரிக்குள் கிடந்தது. “அரசர் உயிருடனிருக்கிறார், அரசி. உங்கள் மங்கலங்கள் பொருளுள்ளவையே” என்றார் வைதிகர். பன்னிரு களம் வரைந்து நோக்கிய நிமித்திகர் “நலமுடனிருக்கிறார். ஆனால் நாகக்குறை கொண்டிருக்கிறார்” என்றனர். “எங்கிருந்தாலும் தேடி கொண்டுவருக அவரை!” என்று பீமகர் ஆணையிட ஒற்றர்கள் நாடெங்கும் சென்றார்கள்.

பின்னொருநாள் கொற்றவை ஆலயத்திற்கு பூசெய்கைக்காகச் சென்று மீள்கையில் பல்லக்கினருகே நடந்துசென்ற பெண்களின் குரல்களில் ஒன்று “துறந்த கணவன் இறந்தவனே” என்று சொல்லிச் சென்றது. அவள் நெஞ்சைப் பற்றிக்கொண்டு உடலதிர அமர்ந்திருந்தாள். அரண்மனையை அடைந்ததும் ஓடிச்சென்று அன்னைமடியில் விழுந்து கதறி அழுதாள். “என் கொழுநனை கண்டுபிடித்து கொண்டுவருக! நூறு நாட்களுக்குள் அவரை என் முன் கொண்டுவரவில்லை என்றால் இந்த மங்கலங்களுடன் எரிபுகுவேன்” என்று சூளுரைத்தாள்.

பீமகர் அமைச்சர்களிடம் விழிநோக்கி உளமொழி கேட்கும் திறன்கொண்ட நூறு அதர்வவேத அந்தணர்களை அழைத்துவரச் சொன்னார். அவர்களுக்கு ஆளுக்கு நூறு பொன் கொடையளித்து நாடெங்கும் சென்று நளனைத் தேடிவரும்படி ஆணையிட்டார். அந்தணர்கள் கிளம்பும்பொருட்டு கூடி வேள்விநிகழ்த்தி எழுந்தபோது அவர்கள் நடுவே தோன்றிய தமயந்தி கைகூப்பியபடி “அந்தணர்களே, நீங்கள் செல்லும் நாடுகளில் அங்கிருக்கலாம் என் கணவர் என்று ஐயம் தோன்றுமிடங்களில் எல்லாம் இவ்வினாக்களை கேளுங்கள். அவற்றுக்கு அளிக்கப்பட்ட மறுமொழிகளை வந்து என்னிடம் சொல்லுங்கள்” என்றாள்.

அவள் சொன்ன மூன்று வினாக்கள் இவை. “மரம் உதிர்க்கவே முடியாத கனி எது? ஆற்றுப்பெருக்கு அடித்துச்செல்ல முடியாத கலம் எது? புரவித்திரள் சூடிய ஒரு மணி எது?” அவர்கள் அந்த வினாக்களுடன் கிளம்பி பாரதவர்ஷமெங்கும் சென்றனர். கிழக்கே காமரூபத்தைக் கடந்து மணிபூரகம் வரை சென்றது ஒரு குழு. மேற்கே காந்தாரத்தைக் கடந்து சென்றனர். வடமேற்கே உசிநாரத்தையும் வடக்கே திரிகர்த்தத்தையும் அடைந்தனர். தெற்கே திரிசாகரம் வரை சென்றனர். ஒவ்வொருவராக பறவைச்செய்திகளினூடாக தாங்கள் பெற்ற விடைகளை அனுப்பிக்கொண்டிருந்தனர். நாட்கள் குறைந்து வர தமயந்தி மேலும் மேலும் சொல்லிழந்து முகம் இறுகி மண்ணில் மெல்ல மூழ்கும் கற்சிலைபோல ஆனாள்.

அயோத்திக்குச் சென்று மீண்ட பர்ணாதர் என்னும் அந்தணர் அவளிடம் “நான் அயோத்தி அரசன் ரிதுபர்ணனின் அவைக்குச் சென்றேன், அரசி. அங்கு ஒருமுறை சென்று ஏதும் உணராமல் கடந்துசென்றேன். வடக்கே சௌவீரம் நோக்கிச் செல்லும்போது எதிரே வந்த வணிகனொருவன் புரவிகள் வாங்க அயோத்திக்குச் செல்வதாக சொன்னான். நான் என்ன விந்தை இது, காந்தாரமும் சௌவீரமும் புரவிக்குப் புகழ்மிக்கவை அல்லவா என்றேன். ஆம், எங்கள் புரவிக்குட்டிகளையே அயோத்தியினர் வாங்குகின்றனர். ஆனால் அவர்கள் பயிற்சியளித்த புரவிகள் எங்கள் புரவிகளைவிட ஏழுமடங்கு திறன்கொண்டவை. ஆகவே அவற்றை நாங்கள் திரும்ப வாங்குகிறோம் என்றான். அங்கே எனக்கு ஐயம் எழுந்தது” என்றார்.

“நான் மீண்டும் அயோத்திக்கு சென்றேன். அங்கே நகரில் உலவிய புரவிகளை தனி விழிகளுடன் நோக்கினேன். அரசி, அங்கே புரவிக்கு ஆணையிடும் குரலே ஒலிக்கவில்லை. புரவிக்காரர் கைகளில் சவுக்குகளே இல்லை. புரவிகள் அவர்களின் உள்ளமறிந்து இயங்கின.” தமயந்தி உள எழுச்சியுடன் “ஆம், நிஷதபுரியின் புரவிகள் ஊர்பவரின் உள்ளத்தை பகிர்ந்துகொள்பவை” என்றாள். “ஆகவே மீண்டும் ரிதுபர்ணன் அவைக்குச் சென்றேன். அங்கே இம்மூன்று வினாக்களையும் சொன்னேன். ரிதுபர்ணன் அவற்றுக்கு மறுமொழி சொன்னார். அம்மறுமொழி ஒன்றே நான் கேட்டவற்றில் பொருத்தமானது. அம்மொழியில் அரசிக்கு ஏதேனும் விடை கிடைக்கக்கூடும் என்பதனால் நேராக இங்கே வந்தேன்.”

பர்ணாதர் அந்த மறுமொழியை சொன்னார். “அரசி, ரிதுபர்ணன் சொன்ன மறுமொழிகள் இவை. மரம் உதிர்க்கமுடியாத கனி நிலவு. ஆற்றுப்பெருக்கு அடித்துச் செல்லமுடியாத கலமும் நிலவே. புரவிகள் எனும் கடல்அலைகள் சூடியிருக்கும் ஒரு மணி முழுநிலவேதான்.” தமயந்தி வேறெங்கோ நோக்கியபடி “நல்ல மறுமொழி” என்றாள். “பிறர் சொன்ன மறுமொழிகள் எவையும் ஒன்றுடன் ஒன்று பொருந்தவில்லை, அரசி. நிலவை கனவு என்று சொல்லி ரிதுபர்ணன் உரைத்த மறுமொழியே அழகியது.”

தமயந்தி ஆர்வமிழந்து பெருமூச்சுடன் ஆடையை கையால் முறுக்கிக் கொண்டிருந்தாள். “அப்போது மெல்லிய விசும்பலோசையை கேட்டேன், அரசி. அரசனின் அருகே நின்றிருந்த கரிய குள்ளன் ஒருவன் கண்ணீர்விட்டவாறு திரும்பிக்கொண்டான். அவன் அழுவதை தோள்கள் காட்டின. உவகை நிறைந்திருந்த அவையில் அவன் ஏன் அழுகிறான் என்று தெரியாமல் நான் சற்று குழம்பினேன்…” என பர்ணாதர் சொல்ல தமயந்தி உளவிசையுடன் கையூன்றி சற்றே எழுந்து “அழுதவன் யார்?” என்றாள்.

“அவன் பெயர் பாகுகன். குள்ளன், ஆனால் பெருங்கையன். சூதன். அவன் அங்கே புரவிபேணுதலும் அடுமனைத்தொழிலும் இயற்றுவதாகச் சொன்னார்கள். அயோத்தியின் புரவிகளை அவனே நுண்திறன்கொண்டவையாக ஆக்குகிறான் என அறிந்தேன்” என்றார் பர்ணாதர். தமயந்தி நீள்மூச்சுடன் மெல்ல உடல் தளர்ந்து பீடத்தில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். தனக்கே என “அவர்தான்” என்றாள்.

“அரசி, அவனை நான் நன்கு நோக்கினேன். குற்றுடல் கொண்ட கரியவன். உடலெங்கும் முதுமைச் சுருக்கங்கள். அவன் அரசர் அல்ல, நான் அவரை ஏழுமுறை நேரில் கண்டவன். என் விழிகள் பொய்க்கா” என்றார் பர்ணாதர். தமயந்தி “விழிகளுக்கு அப்பால் உறைவதெப்படி என்பதை நான் நன்கறிவேன். அவர் இங்கே வரவேண்டும்” என்றாள். “அவரை நேரில்கண்டு சொல்கிறேன்” என்றார் பர்ணாதர். “இல்லை, அவர் வரமாட்டார். நாம் அவரை அறிந்துளோம் என அவர் அறியக்கூடாது” என்று தமயந்தி சொன்னாள்.

அன்று மாலை தன் தந்தையுடனும் உடன்பிறந்தாருடனும் அமர்ந்து சொல்சூழ்ந்தாள். “தந்தையே, எனக்கு மறுமணத் தூதுக்கள் வந்துள்ளன என்று அன்னையிடம் சொன்னீர்கள் அல்லவா?” என்றாள். பீமகர் முகம் மலர்ந்து எழுந்தார். “ஆம், பாரதவர்ஷத்தின் தொல்குடி ஷத்ரியர் பன்னிருவர் தூதனுப்பியிருக்கிறார்கள்” என்றார். பீமபலன் உவகையுடன் “அக்கையே, நீங்கள் அம்முடிவை எடுப்பீர்கள் என்றால் அதுவே சிறந்தது. காங்கேய நிலத்து ஷத்ரிய நாடுகள் அனைத்துமே விதர்ப்பத்தை விழைகின்றன. தென்னிலத்திற்குள் நுழையவும் தாம்ரலிப்தியையும் தண்டபுரத்தையும் நோக்கி வணிகவழிகள் திறக்கவும் விதர்ப்பமே மிகச் சிறந்த வழி என அவை அறிந்துள்ளன” என்றான்.

பீமபாகு “நமக்கு காங்கேயத்தின் ஷத்ரிய நாடுகளில் ஒன்றுடன் மணஉறவு பெரும்நன்மை பயக்கும். வடக்கே அசுரர் தலைவன் விரோசனன் ஆற்றல் பெற்றுவருகிறான். மச்சர்களும் நிஷாதர்களும் அவன் கொடிக்கீழ் ஒருங்கிணையக்கூடும். நாம் நிஷதநாட்டின்மேல் படைகொண்டு சென்றால் பெரும்எதிர்ப்பை சந்திப்போம். ஷத்ரியர்களின் கூட்டு நம்முடன் இருப்பின் நாம் வெல்லலாம்” என்றான். “அக்கையே, நிஷதநாட்டு அரியணை நம் இளவல் இந்திரசேனனுக்குரியது. எக்குருதிப்பெருக்கு எழுந்தாலும் அதை வென்று அவனுக்களிப்பது நம் கடமை” என்றான்.

தமயந்தி “இல்லை இளையோரே, நிஷதமன்னர் உயிருடன் இருக்கிறார். அவர் துறவுகொள்ளவுமில்லை” என்றாள். “அவரை இங்கு வரவழைக்க எண்ணுகிறேன். இங்கு விதர்ப்பத்தில் எனக்கு மறுமணத்தின்பொருட்டு மணத்தன்னேற்பு நிகழ்வதாக ஒரு செய்தியை அயோத்திக்கு அனுப்பவேண்டும்.” அவர்கள் விழிகள் மங்க மெல்ல அமர்ந்துகொள்ள பீமகர் “அயோத்திக்கு மட்டுமா?” என்றார். “ஆம், அங்கே செய்தி சென்று சேர்ந்த மறுநாள் அந்தியில் இங்கே மணத்தன்னேற்பு என்று சொல்லப்படவேண்டும்.” அவர்கள் உய்த்தறிந்துவிட்டிருந்தனர். பீமகர் “ஆம், அவர் தேரோட்டினால் மட்டுமே இங்கே ஒரே நாளில் வந்துசேரமுடியும்” என்றார்.

“சுதேவரையே அனுப்புவோம். அவர் சென்று பேச்சுவாக்கில் இங்கே மணத்தன்னேற்பு நிகழ்வதை சொல்லட்டும். ரிதுபர்ணன் வருவதை நான் எதிர்நோக்குவதாகவும் அதை நீங்கள் விரும்பாததனால்தான் அவருக்கு முறையான செய்தி அனுப்பப்படவில்லை என்றும் அவர் சொல்லவேண்டும்” என்றாள் தமயந்தி. பீமகர் பெருமூச்சுவிட்டு “அவ்வாறே ஆகுக!” என்றார்.

flowerபரிப்புரையில் வைக்கோல் மெத்தையில் விழிமூடிப் படுத்திருந்த பாகுகன் அருகே வந்த வார்ஷ்ணேயன் “உங்களை உடனே அழைத்துவரச் சொன்னர் அரசர்” என்றான். பாகுகன் எழுந்து அமர்ந்து “சற்றுமுன்புதானே சென்றார்?” என்றான். “அவர் அவைக்கு தென்புலத்து அந்தணர் ஒருவர் வந்திருக்கிறார். அவைச்சொல் நடுவே அவர் சொன்ன ஏதோ செய்தியால் அரசர் கிளர்ந்தெழுந்துவிட்டார். பாகுகனை அழைத்துவா என்று கூவினார். நான்கு ஏவலர் என்னை நோக்கி ஓடிவந்தனர். வரும் விரைவில் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சினேன்.”

பாகுகன் எழுந்து தன் மேலாடையை எடுத்து அணிந்துகொண்டான். அவன் முற்றிலுமாக மாறிவிட்டதை வார்ஷ்ணேயன் உணர்ந்திருந்தான். அவனுக்குள் இருந்த சிறுவன் அகன்று நாழிகைக்கொரு ஆண்டு என முதிர்ந்துவிட்டிருந்தான். “நான் உடன் வரவா?” என்றான். பாகுகன் வேண்டாம் என தலையசைத்து நடந்தான். வார்ஷ்ணேயன் நோக்கி நிற்க அருகே வந்த ஜீவலன் “அவன் முதிர்ந்துவிட்டான்” என்றான். “ஆம்” என்றான் வார்ஷ்ணேயன். “துயரற்றிருந்தான். துயரத்தால் முதிர்ந்துவிட்டான்” என்ற ஜீவலன் “துயரத்தைத்தான் வாழ்வென்றும் காலமென்றும் சொல்லிக்கொள்கிறோமா?” என்றான்.

அவர்கள் பேசுவதை அவன் கேட்டான். அச்சொற்றொடர்கள் அவனுடனேயே வந்தன, ரீங்கரித்துச் சூழும் கொசுக்களைப்போல. அவன் அரண்மனை வாயிலை அடைவதற்குள்ளாகவே ரிதுபர்ணன் அவனை நோக்கி ஓடிவந்தான். உடல் குலுங்க மூச்சிரைக்க அவனருகே வந்து “எடு தேரை… தேரைப் பூட்டு! நாம் இக்கணமே இங்கிருந்தே கிளம்புகிறோம்” என்றான். அவனுடன் வந்த காவல்வீரர்கள் அப்பால் நின்று மூச்சுவாங்கினர். “நல்லவேளையாக அந்தணர் இங்கே வந்தார். பாடல் சொல்லிக்கொண்டிருந்தவர் பேச்சுவாக்கில் விதர்ப்பத்தில் நிகழ்வதென்ன என்று சொன்னார். அங்கே தமயந்திக்கு மணத்தன்னேற்பு நிகழவிருக்கிறது.”

பாகுகன் வெறுமனே நோக்கினான். “என்ன பார்க்கிறாய்? நாளைக்கே. நாளை அந்தியில். நாம் இப்போது கிளம்பினால் சென்றுவிடமுடியுமா?” பாகுகன் “தங்களுக்கு அழைப்பில்லையா?” என்றான். “இல்லை. அவள் தனக்குகந்த ஆண்மகனை தேடித்தான் அந்தணர்களை அனுப்பியிருக்கிறாள். முன்பு இங்கு வந்த அந்தணராகிய பர்ணாதரை நினைவிருக்கிறதா? அவர் கேட்ட வினாக்களுக்கு நான் சொன்னதே உரிய விடை. அவ்வினாக்களில் இருந்தது ஓர் இளம்பெண்ணின் காதல். அதை நான் மட்டுமே தொட்டேன். அதைக் கேட்டதுமே என்னை உளமேற்றுக்கொண்டாளாம்.”

“ஆனால் அவள் தந்தை மகதனோ கூர்ஜரனோ தன் மகளை மணக்கவேண்டுமென விழைகிறார். அதை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. பூசலுக்குப்பின் இறுதியில் மணத்தன்னேற்பு நிகழ்த்துவதாக அவரும் உடன்பிறந்தாரும் ஒப்புக்கொண்டார்கள். ஆனால் எனக்கு மட்டும் ஓலையனுப்பாமல் விட்டுவிட்டார்கள். எனக்கு ஓலை அனுப்பப்பட்டுவிட்டதாகவே தமயந்தி எண்ணுகிறாள். நாளை மணத்தன்னேற்பு அவைக்குள் வந்து நிற்பதுவரை அவள் நான் அங்கே நிற்பேன் என்றே எண்ணியிருப்பாள். நான் இல்லாதபோது திகைப்பாள். நான் அவளை மணம்கொள்ள விழையவில்லை என்று அவளிடம் சொல்லிவிடுவார்கள். அதன்பின் அவளுக்கு வேறுவழியில்லை. மணமாலையை கையிலேந்தினால் அதை எவருக்கேனும் அணிவித்தாகவேண்டும் என்பது நெறி.”

ரிதுபர்ணன் மூச்சிரைத்து “நான் விடப்போவதில்லை. பறந்தேனும் செல்வேன். அவள் முன் மணமகனாக நிற்பேன்… சொல், உன்னால் ஒருநாளில் செல்லமுடியுமா?” என்றான். பாகுகன் “பார்ப்போம்” என்றான். “முடிந்தாகவேண்டும்… வெறும்புரவியே அவ்வளவு விரைவாகச் செல்லாது என்கிறார்கள் அமைச்சர்கள். நான் உன்னை நம்புகிறேன். நீ புரவித்தொழிலறிந்தவன்… நீ செல்வாய்… சென்றாகவேண்டும்.” பாகுகன் “செல்வோம்” என்றான். “நன்று! நமக்கு வேறுவழியில்லை… அமைச்சர்களையும் பிறரையும் வரிசையும் பரிசில்களுமாக தொடர்ந்து வரச்சொல்லியிருக்கிறேன். நீ சென்று தேரைப் பூட்டி அழைத்து வா…” பாகுகன் “தாங்கள் அணிசெய்யவேண்டுமே?” என்றான். “அணிசெய்யவேண்டிய ஆடைகளை எடுத்துக்கொண்டேன்… தேர் வரட்டும். இங்கிருந்தே கிளம்புவேன்” என்றான் ரிதுபர்ணன்.

பாகுகன் ஓடி கொட்டிலுக்குச் செல்லும் வழியிலேயே கூவினான் “சுமையும் குசுமையும் சுபையும் சுதமையும் சுஷமையும் தேரில் பூட்டப்படட்டும். கருடத்தேர்.” வார்ஷ்ணேயன் “அவை…” என சொல்லத்தொடங்க “புரவிக்கொருவர் செல்க… அரசாணை” என்றான் பாகுகன். அவன் தேர்ப்பட்டைகளை எடுத்துக்கொண்டு வெளிவந்தபோது தேர் வெளியே வந்து நின்றிருந்தது. புரவிகளை கட்டிக்கொண்டிருந்தார்கள். அவன் அச்சாணிகளை சீர்நோக்கினான். சகடங்களின் இரும்புப்பட்டைகளை கையால் வருடிநோக்கியபின் தேர்ப்பீடத்தில் ஏறிக்கொண்டான்.

புரவிகள் நுகங்களில் பூட்டப்பட்டதும் பொறுமையிழந்து காலடிவைத்து தலைநிமிர்ந்து பிடரிகுலைத்தன. அவன் சவுக்கை காற்றில் வீசியதும் அவை ஓடத்தொடங்கின. ரிதுபர்ணன் ஓடிவந்து படிகளில் ஏறி உள்ளே அமர்ந்து “தெற்குவாயில் வழியாக செல்… சரயுவின் கரையினூடாகச் செல்வோம்… இவ்வேளையில் அங்கே எவருமிருக்கமாட்டார்கள்” என்றான். “இல்லை… அங்கே கன்றுகள் இல்லம்திரும்பத் தொடங்கும். அவை வழியறியாதவை. நகரினூடாகச் செல்வோம். முரசுமுழக்கம் வழியாக மையச்சாலையில் வந்துகொண்டிருப்பவர்களிடம் வலம்விட்டு வழியொதுங்கும்படி ஆணையிடுங்கள்… நாம் செல்லும் வழியில் எங்கும் வலப்பாதையில் எவருமிருக்கலாகாது” என்றான் பாகுகன். “இதோ, அந்தக் காவல்மாடத்தில் ஆணையை சொல்கிறேன்” என்றான் ரிதுபர்ணன்.

தேர் அரண்மனை வளைவைக் கடந்து மையச்சாலையில் ஏறி இரு பக்கமும் காற்று கிழிந்து பின்பறக்க பக்கக் காட்சிகள் நிறக்கலவையென உருகியிணைந்தொழுக பாய்ந்தோடியது. “ஒவ்வொரு எட்டு நாழிகையிலும் சாவடிகளில் மாற்றுப் புரவிகள் ஒருங்கி நிற்கவேண்டும். புரவிகளின் இலக்கணங்களை வார்ஷ்ணேயனிடம் கேட்டறியச் சொல்லுங்கள்…” ரிதுபர்ணன் காவல்கோட்டத்தை அடைவதற்கு முன்னரே கையசைக்க காவலர் புரவியில் தேருடன் விரைந்து வந்தனர். அவன் தேர்விரைவு குறையாமல் உடன்வந்த புரவிவீரர்களிடம் ஆணைகளை கூவினான்.

அவர்கள் கோட்டையை கடந்தபோது ஆணை முரசொலியாக முழங்கிக்கொண்டிருந்தது. “புறாக்கள் கிளம்பியிருக்கும்… செல்லும் வழியெங்கும் புரவிகள் ஒருங்கியிருக்கும்” என்றான் ரிதுபர்ணன். அவன் மேலாடை எழுந்து பறந்து விலகியது. அவன் திரும்பி நோக்கியபோது அது நோக்கிலிருந்து மறைந்தது. சாரைப்பாம்பென சாலை சென்று தொலைவில் நெளிந்து மறைந்தது. எதிரே அருவி என தேர் நோக்கிப் பெய்து அணுகிக்கொண்டிருந்தது.

மெல்ல விரைவுக்கு உளம் பழகியது. அவன் பீடத்தில் சாய்ந்தமர்ந்தான். அவன் உடல் தேர்விசையில் துள்ளிக்கொண்டிருந்தது. “அரசி என்னிடம் கேட்டனுப்பிய வினாக்களை நினைவுறுகிறாயா?” என்றான். “ஆம்” என்றான் பாகுகன். “அவற்றுக்கு நான் உரைத்த மறுமொழி பொருத்தம் அல்லவா?” பாகுகன் “ஆம், அரசே” என்றான். “அன்று நீ அழுதாய்… ஏன்?” என்றான். “நான் அவற்றுக்கு வேறு பொருள்கொண்டேன்” என்றான் பாகுகன். “என்ன பொருள்?” என்றான் ரிதுபர்ணன்.

“அரசே, மரம் உதிர்க்கமுடியாத கனி இனிமையும் மணமுமாக அதன் வேர்முதல் தளிர்வரை ஓடிக்கொண்டிருக்கும் சாறுதான்.” ரிதுபர்ணன் சற்று சோர்வுடன் “ஆம், உதிரும்கனி என்பது மரம்கொண்ட சுவையின் ஒரு துளியே” என்றான். “ஆற்றுப்பெருக்கு அடித்துச்செல்லாத கலம் என்பது அதிலெழும் சுழி” என்றான் பாகுகன். “ஆம்” என்றான் ரிதுபர்ணன். “புகை எனும் புரவிப்பெருந்திரள் சூடிய அருமணி அனல்” என்றான். நீண்ட இடைவேளைக்குப்பின் “ஆம், அதன் பொருளும் புரிகிறது” என்றான் ரிதுபர்ணன். “ஆனால் அதன்பொருட்டு நீ ஏன் அழுதாய்?”

பாகுகன் அதற்கு மறுமொழி என ஏதும் சொல்லவில்லை. அவன் ஏதோ சொல்லப்போகிறான் என்று காத்திருந்த ரிதுபர்ணன் அவன் எதையும் சொல்லப்போவதில்லை என்று உணர்ந்தான்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 90

89. அடுமனைசேர்தல்

flowerசுபாஷிணி தன் பெயரைச் சொல்லி அழைக்கும் பல்வேறு குரல்களை கேட்டுக்கொண்டிருந்தாள். பலமுறை எழுந்து மறுமொழி கூறியதாகவே உணர்ந்தாலும் அவள் உடல் உடைந்த பொருட்களைப் போட்டுவைக்கும் இருண்ட சிற்றறைக்குள் மூலையில் போடப்பட்ட ஒரு கால் உடைந்த நிலைப்பீடத்தின் அடியில் முதுகு வளைத்து முகம் முழங்கால்களுடன் சேர்த்து ஒடுங்கியிருந்தது. அங்கிருந்தபோது அவ்வரண்மனை முழுக்க அலைந்த காலடிகளை மெல்லிய துடிப்புகளாக கேட்கமுடிந்தது. பெருவிலங்கொன்றின் கருவறைக்குள் இருப்பதுபோல உணர்ந்தாள். நோவெடுத்து தலை தாழ்த்துகிறது. நீள்மூச்சு விடுகிறது. குளம்பு மாற்றிக்கொள்கிறது. குருதித் துடிப்புகளின் ஒலி கேட்கிறது. எக்கணமும் அது தன்னை வெளியே உமிழ்ந்துவிடக்கூடும்.

அவள் மேல்மூச்சுடன் மீண்டும் உடலை ஒடுக்கிக்கொண்டாள். ஒலிகள் ஓய்ந்தன. மிக அருகே இறுதியாக அவள் பெயரை அழைத்துக்கொண்டு கடந்து சென்ற முதுசெவிலியின் காலடி தேய்ந்து மறைந்தபோது அவள் மெல்ல உடலை தளர்த்தினாள். கால்களை நீட்டி முகத்தில் படிந்த ஒட்டடைகளை அகற்றியபின் கைகளை மார்பில் கட்டிக்கொண்டாள். எங்கோ எவரோ ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். மொழி முற்றிலும் புரியாததாக இருந்தது. மொழி புரிவது அணுக்கத்தால்தான். அகலங்களில் பொருளிழக்கிறது அது. மொழி முற்றிலுமாகப் புரிவதற்கு எத்தனை அணுக்கம் தேவை? உடலோடு உடல் ஒட்ட வேண்டும். உடலுக்குள் புகுந்துவிட வேண்டும். உள்ளத்துக்குள் இணைய வேண்டும்.

அவள் மீண்டும் பெருமூச்சுவிட்டாள். அழவேண்டும்போல் இருந்தது. ஆனால் எத்தனை முயன்றும் உள்ளே செறிந்திருந்ததை அழுகையாக ஆக்க முடியவில்லை. இடைநாழியில் முதுசேடி நடந்துசென்றாள். “முற்றத்தில் அனைவரும் சென்று நிற்க வேண்டியதில்லை. சிலர் இங்கே அறைகளுக்குள்ளும் இருக்கவேண்டும். எந்நிலையிலும் அரண்மனையை முற்றொழிந்து சென்றுவிடக்கூடாது. முற்றொழிந்த அறைகளில் மூத்தவள் குடியேறுகிறாள்” என்றாள். யாரோ “விளக்குகளை கொண்டுசென்றுவிட்டீர்களா?” என்றார்கள். தன் கைகளைத் தாழ்த்திய பின்னர்தான் வளையலோசையைக் குறித்து சுபாஷிணி எண்ணினாள். “என்ன ஓசை அது?” என்றாள் முதுசெவிலி. எவரோ “எங்கே?” என்று கேட்டார்கள். “இங்கே இந்த சிற்றறைக்குள்” என்றபடி முதுசேடி அருகே வந்தாள். “ஓர் அகல்விளக்கைக் கொடு” என்றாள்.

சுபாஷிணிக்கு நெஞ்சு படபடத்தது. அங்கு ஒளிந்திருந்ததை தெரியப்படுத்துவதற்கு தன்னுள் வாழ்ந்த பிறிதொன்று விழைந்திருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது. கதவு மெல்ல திறந்து கைவிளக்குடன் சிவந்து எரிந்த முதுசெவிலியின் முகம் தோன்றியது. அவள் நிழல் பெருகி எழுந்து கூரைமேல் படிந்து வளைந்து அவர்கள் இருவரையும் பார்த்தது. “இங்கிருக்கிறாயா?” என்றாள். சுபாஷிணி ஒன்றும் சொல்லவில்லை. “எழு! உன்னை பார்க்கவேண்டும் என்று பேரரசி கேட்டார்கள்.”

சுபாஷிணி “இல்லை நான்…” என்று சொல்ல. “என்ன இல்லை? இப்போது அவர்கள் இங்கு சைரந்திரி அல்ல. நம் அரசிக்கே ஆணையிடும் பேரரசி. பாரதவர்ஷத்தின் தெய்வங்கள்கூட அவர்களை மறுத்துப்பேச முடியாது என்கிறார்கள். எழு!” என்றாள் முதுசெவிலி. சுபாஷிணி கையை ஊன்றி எழுந்து நின்றாள். முழங்கால்கள் வலித்தன. “அவர்கள் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். உன்னை தோட்டத்தில் தேடுவதற்கு சேடியரை அனுப்பியிருக்கிறேன். நீ இங்கு அமர்ந்திருக்கிறாய்” என்றபின் “நீ எங்கோ ஒளிந்திருக்கிறாய் என்று எனக்குத் தோன்றியது. நான் ஒளிந்திருக்க வாய்ப்புள்ள இடங்களை தேடியிருக்கலாம்… முதலில் இங்கு வந்திருப்பேன். உன் அகவையிலிருந்து உள்ளமும் விலகிவிட்டது. வா!” என்று அவள் தோளைப் பிடித்து வெளியே கொண்டுசென்றாள்.

“நாசிகை… வா இங்கே!” என்று அப்பால் கைவிளக்கோடு சென்ற இன்னொரு சேடியை அழைத்தாள். அவள் நின்று நோக்க “இவளை நீராட்டி நல்லாடை அணிவித்து முற்றத்திற்கு கூட்டி வா! பேரரசி கிளம்பிக்கொண்டிருக்கிறார். அதற்குள் வந்தாகவேண்டும்” என்றாள். நாசிகை “என்ன நல்லாடை? இளவரசி என்று அணி செய்யலாமா?” என்றாள். முதுசெவிலி நகைத்து “இவளும் ஏதேனும் நாட்டு இளவரசியோ என்னவோ? யார் கண்டது? இத்தனை நாள் நம்முடன் இருந்தவள் பேரரசி என்று நாம் அறிந்தோமா என்ன?” என்றபின் திரும்பிச் சென்றாள். நாசிகை அவளிடம் “விரைந்து நீராடு. பேரரசி முதற்புலரிக்குள் கிளம்பிவிடுவார்” என்றாள்.

சுபாஷிணி மறுமொழி ஏதும் சொல்லாமல் அவளுடன் சென்றாள். அகத்தளத்தின் சிறிய குளத்தில் ஏற்கெனவே ஏழெட்டு பெண்கள் நீராடிக்கொண்டிருந்தனர். அவள் படிகளில் இறங்கியபோது ஒருத்தி “இன்னமும் ஒருத்தி நீராடாமல் இருக்கிறாளா? பேரரசி கிளம்புகையில் அணிபுனையாமல் எவரும் இருக்கக்கூடாதென்று ஆணை. எங்கள் வேலை முடிவதற்கு இவ்வளவு பொழுதாகிவிட்டது” என்றாள். அவர்களின் முகங்களைப் பார்க்காமல் சுபாஷிணி அணிந்திருந்த ஆடைகளுடன் நீரிலிறங்கினாள். “யாரிவள்? ஆடை மாற்றாமல் நீராடுகிறாள்?” என்று ஒருத்தி கேட்டாள். இன்னொருத்தி தாழ்ந்த குரலில் ஏதோ சொன்னாள்.

நீரில் மூழ்கி எழுந்து கூந்தலை பின்னால் அள்ளிச் சரித்தபோது அவள் என்ன சொன்னாள் என்பதை அவள் மனம் எடுத்து வைத்திருந்தது. அடுமனையின் பிச்சி. அவள் புன்னகைத்தாள். குளிர்ந்த நீரில் மூழ்கி எழுந்தபோது அதுவரை இருந்த உள்ளச்சுமை அகன்றுவிட்டிருந்தது. நீந்திக் கரையேறி ஆடைகள் உடலில் ஒட்டிக்கொள்ள காலடியில் நீர் சொட்ட நின்றபோது தான் புன்னகைத்துக்கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். இருளுக்குள் அவர்கள் எவரும் அறியாமல் ஒளிந்திருக்கும் உவகை. அவர்கள் அத்தனை பேரும் தன் முகத்தை நோக்கிக்கொண்டிருக்கையில்கூட ஒளிந்துதான் இருக்கிறோம் என எண்ணினாள்.

படிகளில் ஏறி உடை மாற்றும் இடத்திற்குச் சென்றாள். நாசிகை வெண்ணிற கீழாடையையும் இளஞ்செந்நிறப் பட்டு மேலாடையையும் அவளிடம் கொடுத்தாள். “இதை அணிந்து வரும்படி பேரரசியின் ஆணை. உனக்கென எடுத்து வைத்திருந்திருக்கிறார்” என்றாள். அவள் அந்தப் பட்டாடையைத் தொட்டு “இதையா?” என்றாள். நாசிகை “அணியுங்கள், இளவரசி” என்றாள். சுபாஷிணி சில கணங்கள் அதை நோக்கிக்கொண்டு நின்றபின் தலையசைத்தாள். ஆடை மாற்றி நுனி சொட்டிய கூந்தலை கைகளால் பற்றி நன்கு உதறி தோளுக்குப்பின் விரித்திட்டபடி அவள் இடைநாழிக்கு வந்தாள்.

அகத்தளத்தின் இடைநாழிகளும் அறைகளும் ஒழிந்துகிடந்தன. மிக அப்பால் ஓர் அறையிலிருந்து முதிய சேடி ஒருத்தி கைவிளக்குடன் அகன்று செல்ல அவள் நிழல் தூண்களை நெளிந்தாடச் செய்து தானும் உடன் ஆடியபடி மறைந்தது. சிலம்பு ஒலிக்க அவள் படிகளில் இறங்கினாள். தன் சிலம்பொலியைக் கேட்டு திடுக்கிட்டவள்போல திரும்பி படிகளைப் பார்த்தாள். முகப்புக் கூடத்தில் எவரும் இல்லை. முற்றத்தின் ஒளிப்பெருக்கு சாளரங்களின் ஊடாக வந்து செந்நிறக் கம்பளங்களென விழுந்து கிடந்தது. அவ்வொளியில் தூண்களின் வளைவுகள் மிளிர்வு கொண்டிருந்தன. படிகளின் அருகே அவள் தயங்கி நின்று மீண்டும் திரும்பிவிடலாமா என்ற எண்ணம் கொண்டபோது அப்பால் பிறிதொரு அறையிலிருந்து கைவிளக்குடன் வெளிப்பட்ட முதுசேடி “இங்கென்ன செய்கிறாய்? முற்றத்திற்குப் போ! உன்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

தலையசைப்பால் ஆம் என்றபடி அவள் மெல்ல முற்றத்திற்குச் சென்றாள். படிகளில் இறங்கி பெருந்தூண் ஒன்றின் அருகே சென்று அதைப் பற்றியபடி தலையைமட்டும் நீட்டி பார்த்தாள். சுதேஷ்ணையும் உத்தரையும் அரசணிக்கோலத்தில் அகம்படியினரும் அணிச்சேடியரும் சூழ நின்றுகொண்டிருந்தனர். சைரந்திரி வெண்பட்டாடை அணிந்து அணிகளேதும் இன்றி குழலை விரித்து இடைவரை அலைசரிய விட்டிருந்தாள். அங்கிருந்த அனைவருக்கும்மேல் அவள் தலையும் தோளும் தெரிந்தன. நெய்ப்பந்தங்கள் எரிந்தாடிக்கொண்டிருந்த ஒளியில் முற்றம் ஓவியச்சீலையென அலைபாய்ந்தது. சுபாஷிணியின் அருகே வந்து நின்ற முதுசேடி “விராடபுரியின் இளவரசி இத்தனை எளிதாக நாடு நீங்குகிறார். ஊழ் ஒன்று வகுத்தால் ஓராயிரம் கைகளினூடாக அங்கே கொண்டுசென்று சேர்த்துவிடுகிறது” என்றாள்.

இன்னொரு சேடி “மணச்சடங்குகளேதும் பெரிதாகச் செய்ய வேண்டியதில்லையென்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் இன்னும்கூட முடியும் நகருமில்லாத ஊரோடிகளாகவே இருக்கிறார்கள். இளவரசியை இங்கு விட்டுவிட்டுச் செல்லலாம் என்றுகூட பேரரசர் யுதிஷ்டிரர் சொன்னார். இல்லை அவர்களுடன் கிளம்பியே தீருவேன் என்று இளவரசி சொல்லிவிட்டார். ஆகவே இருளிலேயே கட்டுச்சோறு கொடுத்தனுப்புவதுபோல இளவரசியை கையளிக்கிறார்கள்” என்றாள். சுபாஷிணி அச்சேடியை பார்த்தாள். அந்த முகத்தை பலமுறை பார்த்திருந்தும்கூட அவள் பெயரோ அவள் இயல்போ தெரிந்திருக்கவில்லை.

“ஒவ்வொருவருக்கும் அவரவர் பாதை வகுக்கப்பட்டுள்ளது. நாம் என்ன சொல்ல முடியும், இல்லையா?” என்றாள் மற்றொரு சேடி. சுபாஷிணி தலையசைத்தாள். முன்னரே சடங்குகள் அனைத்தும் நடந்துவிட்டிருந்தன எனத் தெரிந்தது. உத்தரை சுதேஷ்ணையின் கால்களைத் தொட்டு சென்னிசூடியபின் சூழ்ந்திருந்த செவிலியரிடமும் சேடியரிடமும் நன்மொழி சொன்னாள். சைரந்திரி புன்னகையுடன் ஒவ்வொரு சேடியாகப் பார்த்து இன்மொழி உரைத்து சிலர் தோள்களைத் தட்டி சிலர் கைகளைப்பற்றி விடை கொண்டாள். சிலர் கண் கலங்கினர். சிலர் அவள் கால்களை தொடப்போனபோது அதைத் தடுத்து தழுவிக்கொண்டாள்.

அவள் தன்னை பார்க்கிறாளா என்று சுபாஷிணி நெஞ்சிடிப்புடன் காத்து நின்றாள். அவள் தன்னை பார்க்கலாகாதென்று ஓருள்ளமும் பார்க்கமாட்டாளா என்று பிறிதொரு உள்ளமும் தவித்தன. அவள் விழி தன்மேல் பட்டதும் அவள் பார்வை தவறாதென்று தான் நன்கறிந்திருந்ததை உணர்ந்தாள். அருகே வரும்படி சுபாஷிணியை நோக்கி சைரந்திரி கையசைத்தாள். அவள் தயங்கி காலெடுத்து வைத்து தலைகுனிந்து நிலத்தை நோக்கியபடி மெல்ல நடந்து சென்றாள். தன்னை அங்கிருந்த அத்தனை விழிகளும் நோக்குவதை உணர்ந்தாள்.

சுபாஷிணி அருகணைந்ததும் சைரந்திரி அவள் தோளைப்பற்றி தன்னுடன் சேர்த்துக்கொண்டாள். அவள் காதில் “உன் அடுமனையாளனுடன் ஒருநாள் நீ இந்திரப்பிரஸ்தத்துக்கு வரவேண்டும். அங்கு என்னுடன் இருப்பாய்” என்றாள். கண்ணீர் பெருக கால்கட்டைவிரலால் நிலத்தை அழுத்தியபடி தலைகுனிந்து தோள் குறுக்கி அவள் நின்றாள். சைரந்திரி “நன்மங்கலம் கொள்க! நிறை மைந்தர் பெருக, இல்லறம் செழிக்க வாழ்க!” என்று அவள் தலைமேல் கைவைத்து வாழ்த்தினாள்.

சுதேஷ்ணை “எதுவும் பேரரசி அறியாததல்ல. என் மகள்…” எனத் தொடங்க அவள் கைகளைப்பற்றி “அறிவேன். தங்கள் மகள் பெறும் மைந்தன் பாண்டவர்களின் கொடிவழியில் முடிசூடுவான் என்று இளையவர் உரைத்த சொல் ஒருபோதும் பிழையாகாது” என்றபின் மீண்டும் ஒருமுறை வணங்கி நடந்து சென்றாள். உத்தரை அப்பால் அவளுக்காக காத்திருந்தாள். அவள் தோளைத்தட்டி தேரிலேறும்படி சொல்லி சைரந்திரி தானும் ஏறிக்கொண்டாள். புரவி தலையைச் சிலுப்பி மூச்சு சீறியது. பாகன் அதை மெல்ல தட்டியதும் சகடங்கள் உயிர்கொண்டன. மெல்ல குலுங்கியபடி அது சாலையில் ஏறி சிறுகோட்டைமுகப்பில் எரிந்த மீன் நெய் விளக்குகளின் ஒளியில் சுடர்கொண்டு அப்பால் இருந்த சாலைக்குள் நுழைந்து இருளில் புதைந்து மறைந்தது. இரு கைகளாலும் நெஞ்சை அழுத்தியபடி சுபாஷிணி நோக்கி நின்றாள்.

சுதேஷ்ணை அவளை நோக்கித் திரும்பி “உனக்காக மணமங்கலப் பரிசுகளை அளித்துச் சென்றிருக்கிறார் பேரரசி. உன் மணமகன் எவரென்று நீயே சொல்வாய் என்று ஆணையிட்டிருக்கிறார்” என்றாள். சுபாஷிணி பேசாமல் நின்றாள். “யாரவன்? பெயரை சொல்! அரண்மனை ஏவல்தலைவனை அனுப்பி அவனை வரச்சொல்கிறேன்” என்றாள் அரசி. அவள் தொண்டையில் இருந்து குரல் எழவில்லை. “உன் பெயரென்னடி?” என்றாள் அரசி. சூழ்ந்திருந்த பெண்களின் கண்கள் தொடுவதை உணர்ந்து உடல் மெய்ப்புகொள்ள தலைகுனிந்து நின்றாள். “சுபாஷிணி” என்று நிலம்நோக்கி சொன்னாள். “அவன் பெயரென்ன?” என்றாள் அரசி. அவள் நிமிர்ந்து “நான் அவர் பெயரை சொல்லலாகாது. முதலில் என் பெயரை அவர் சொல்லவேண்டும்” என்றாள்.

சுதேஷ்ணை “ஏன்?” என்றாள். முதுசேடி “அரசி, அதுதான் முறை. பெண் கோரி ஆண் மறுக்கக்கூடாது என்பது நூல்கூற்று. அது அவளில் கருக்கொண்ட குழந்தைகளுக்கு உலகுமறுத்தலாக பொருள்படும்” என்றாள். சுதேஷ்ணை புரியாமல் நோக்கியபின் “சரி. அவனை வந்து முறைப்படி உன்னை பெண் கேட்கச் சொல்” என்றபின் திரும்பினாள். நிமித்திகன் சங்கு ஊதி அவள் அகல்வதை அறிவித்தான். கொடிவீரனுக்குப் பின்னால் தளர்ந்த காலடிகளுடன் செல்லும் பேரரசியை சுபாஷிணி நோக்கி நின்றாள். பின்னர் படிகளில் ஓடி ஏறி இடைநாழியை அடைந்தாள். மீண்டும் தன் இருண்ட அறைக்குள் சென்று ஒடுங்கிவிட வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் இடைநாழியில் நின்றபோது அங்கு செல்லத் தோன்றவில்லை. அவள் விழிகள் ஒளியை நாடின. வெளியே செறிந்திருந்த இருள்வானை, விண்மீன்களை நோக்கியபடி சாளரத்தருகே நின்றாள்.

flowerசாளரத்தினூடாக சைரந்திரி ஏறிய தேர் நீங்கிய இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் சுபாஷிணி. புலரிக்கு இன்னும் நெடுநேரம் இருக்கிறது என்று தோன்றினாலும்கூட அவளால் அந்த இடத்திலிருந்து விழிவிலக்க முடியவில்லை. ஒவ்வொரு நிகழ்வாக சைரந்திரியுடன் அங்கு வாழ்ந்த ஓராண்டையும் அவள் எண்ணிக்கொண்டிருந்தாள். ஒவ்வொன்றிலும் வாழ்வதாகவும் ஒவ்வொன்றையும் அருகிருந்து நோக்குவதாகவும் ஒவ்வொன்றையும் நெடுங்காலத்திற்கப்பாலென நினைவுகூர்வதாகவும் உள்ளம் பிரிந்து நடித்தது. சைரந்திரியின் அந்தத் தருணங்களின் உணர்வுமுகங்களும் உடலசைவுகளும் சிறுவிழியசைவுகளும்கூட அத்தனை தெளிவாக தன்னுள் பதிந்திருப்பதை உணர்ந்தாள். வானிலிருந்து உதிரும் அருமணிகளை அள்ளிப்பொறுக்கிச் சேர்ப்பதுபோல் அவளுடன் இருந்த ஒவ்வொரு கணத்தையும் பெற்றுக்கொண்டிருந்திருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டாள்.

மாடிப்படிகளில் கால்கள் மெத்திட்டு ஏறிச்செல்லும் சைரந்திரியை கண்டாள். காலடியின் தசை வாழைப்பூ நிறத்திலிருந்தது. மரப்படிகளில் அது அழுந்தி எழுந்து செல்லும்போது கணுக்கால்களின் நரம்பொன்று மெல்ல அசைந்தது. இளம் சிப்பிகள் போன்ற நகங்கள். நின்றிருக்கையில் புன்னகையெனக் குவிபவை. நடக்கையில் நாகச்சுழல் ஆடுகளத்தின் சோழிகளென விரிந்து குவிபவை. அவள் சாளரத்தில் தலைசாய்த்து கண்ணீர் விடத்தொடங்கினாள். மெல்ல உடல்தளர துயின்று மீண்டும் விழித்துக்கொண்டாள். சற்று நிலைமாறி நின்று மீண்டும் சைரந்திரியையே சென்றடைந்தாள்.

அத்தனை உருண்ட முழங்கையை, அத்தனை இறுகிய மணிக்கட்டை அவள் கண்டதில்லை. விரல்கள் ஒவ்வொன்றும் கடையப்பட்டவைபோல முழுமையானவை. அவள் சுட்டுவிரலைப் பற்றியபடி “தேவி, நீங்கள் வில்லேந்துவீர்களா?” என்றாள். “என் கந்தர்வர்களில் ஒருவன் வில்லவன். அவனிடமிருந்து கற்றுக்கொண்டேன்” என்றாள். “மற்போர்?” அவள் சுபாஷிணியின் தலையை பற்றிச்சுழற்றி “சொன்னேனே, பிறிதொருவன் மல்லன்” என்றாள். சிரிக்கையில் உதடுகள் இழுபட கன்னம் இருபுறமும் ஒதுங்கும்போது விழிகளில் ஒளிநிறைந்தது. “நீங்கள் அறியாதது ஏதேனுமுண்டா, தேவி?” என்றாள். அவள் சிரித்து “எல்லையற்றது இப்புவியின் வஞ்சம். அதை தெய்வங்களும் அறியமுடியாது” என்றாள்.

ஒவ்வொரு கணமும் உடன் இருந்திருக்கிறோம் என்ற உணர்வெழுந்ததுமே இனி இல்லை என்ற எண்ணம் எழுந்தது. அவள் சென்ற வழியைப் பார்த்து உடல் விம்மினாள். படியில் இறங்கி ஓடி முற்றத்தைக் கடந்து சாலையினூடாக தேரை பின்தொடர்ந்து ஓடவேண்டும் என்ற வெறி எழுந்தது. அவ்வாறு பிச்சியென கைவீசிக் கூச்சலிட்டபடி ஓடும் அவளை அவளே பார்த்து உடல் விதிர்த்து நின்றுகொண்டிருந்தாள். பிறிதொருவரை எண்ணியதே இல்லை. இப்புவியில் பிறிதெவரும் என்னுள்ளம் நுழைந்ததில்லை, பேரரசி. கதிரவனேதான் என நடிக்கும் நீர்த்துளி போன்றவள் நான். மீண்டும் இடைதளர தோள்களை சாளரத்தில் சாய்த்துக்கொண்டு கைகளால் தலையைத் தாங்கி நெய்ப்பந்தம் அசைந்த கோட்டைமுகப்பை பார்த்தபடி நின்றாள்.

பிறிதொரு முறையும் தேவியைப் பார்க்க வாய்க்காதென்ற எண்ணம் எழுந்தது. ஒருவேளை பார்த்தால் தானறிந்த தேவி அல்லாமல் இருக்கலாம் அவள். ஆனால் இப்போது தன்னுள் நிறைந்திருப்பவள் எப்போதும் இருப்பாள். மீண்டும் அவள் துயில்கொண்டாள். மீண்டும் சைரந்திரியுடன் இருந்தாள். அவள் குழலை அள்ளி தன் மடியிலிட்டு விரல்களால் நீவியபடி “நீண்ட குழல் நல்லூழ் அளிப்பதில்லை என்கிறார்களே, தேவி?” என்றாள் சுபாஷிணி. “யார் சொன்னது?” என்றாள் சைரந்திரி. “என் குழலைத் தொட்டுச் சீவும்போதெல்லாம் பிற சேடிகள் சொல்கிறார்கள்” என்றாள். சில கணங்களுக்குப்பின் சைரந்திரி “அரிதென்றும் மேலென்றும் நாம் கொண்டிருக்கும் எதுவும் நல்லூழை கொண்டுவருவதில்லை, சிறியவளே” என்றாள். “நல்லூழ் கொண்டவர்கள் முற்றிலும் வெளிப்படாது இங்கு வாழ்ந்துமுடிப்பவர்கள்.”

“நல்லூழ் என்றால் எது?” என்றாள் சுபாஷிணி. சைரந்திரி நகைத்து “சொன்னதுமே அதைத்தான் நானும் எண்ணிக்கொண்டேன்” என்றாள். “எஞ்சுவதென ஏதுமின்றி செல்வோமென்றால் இருப்பதற்கு ஏது பொருள்? பொருளின்மையை உணர்ந்தபின் நிறைவென்று ஒன்று உண்டா? நிறைவளிக்காதது உவகை என்றாகுமா என்ன?” அவள் பேசியது சுபாஷிணிக்கு புரியவில்லை. “என் குழலை எண்ணி எனக்கும் அவ்வப்போது அச்சம் எழுவதுண்டு, தேவி” என்றாள். சைரந்திரி அவள் கையைப்பற்றி “உனக்கு நல்லூழ்தான். ஏனென்றால் நீ வெளியே நிகழ்வதேயில்லை. உனக்குள் பிறிதொருத்தியாகி உலகறியாது வாழ்ந்து நிறைவாய்” என்றாள். அவள் “ஆம்” என்று சொல்லி மெல்ல சிரித்தாள்.

“அது நன்று. பெண்கள் தங்கள் உடலை அதன் அருமை அறிந்து காக்கும் ஒருவனிடம் அளித்துவிட்டு உள்ளத்தை தங்களுக்கென வைத்துக்கொள்ள வேண்டும்” என்றாள் சைரந்திரி. “என்ன?” என்று அவள் கேட்டாள். பின்னர் சிரிக்கலானாள். அச்சிரிப்பொலியைக் கேட்டு சைரந்திரி திரும்பிப்பார்த்தாள். “தாங்கள் சொல்வதை நான் வேறு யாரிடமாவது சொன்னால் என்னைப்போலவே தாங்களும் பிச்சி என்று சொல்லிவிடுவார்கள்” என்றாள். சைரந்திரி உரக்க நகைத்து “என்னை பலர் பிச்சி என்று சொல்லியிருக்கிறார்கள்” என்றாள்.

தலை அசைந்து சரிய விழித்துக்கொண்டு வெளியே பார்த்தபோது புலரியின் மணிவெளிச்சம் நிறைந்திருப்பதை சுபாஷிணி உணர்ந்தாள். ஆடையை சீர்படுத்தி பெருமூச்சுடன் செல்வதற்காகத் திரும்பியபோது கோட்டைமுகப்பில் சம்பவன் வந்து தொழுத கையுடன் நிற்பதைக் கண்டாள். அவனுக்குப் பின்னால் அவன் குலத்தவர் மூவர் கையில் மங்கலப்பொருட்கள் பரப்பிய தாலங்களுடன் நின்றிருந்தனர். அவள் பெருமூச்சுவிட்டாள். உவகையோ பதற்றமோ ஏற்படவில்லை. உள்ளமென்ற ஒன்றே உள்ளே இல்லை என்றுதான் தோன்றியது.

flowerசுபாஷிணி அமர்ந்திருந்த சிற்றறையின் சாளரத்தினூடாக வெளியே இருந்த ஊண்கூடத்திலிருந்து இரு நிரைகளாக உணவருந்தி கைகழுவி வந்துகொண்டிருந்த முகங்களை பார்க்க முடிந்தது. ஊழ்கமாலையின் மணிகளென ஒவ்வொரு முகமாக அவள் முன் தோன்றி அப்பால் கடந்து சென்றது. அவர்களுக்கு முன்னால் பின்உச்சிப்பொழுதின் வெயில் இறங்கிய பசும்தோட்டத்திலிருந்து வந்த மெல்லொளி முகங்களை ஒளிபெறச் செய்தது. விண்ணளந்தோன் ஆலயத்தில் அவனைச் சூழ்ந்திருக்கும் அடியவரும் முனிவர்களும் தெய்வங்களும் கொண்டிருக்கும் முகவுணர்வு அது என்று அவளுக்குத் தோன்றியது.

அவள் தலை சரித்து நோக்கெல்லை வரை தெரிந்த முகங்கள் அனைத்தையும் நோக்கினாள். ஒருகணம் உளம் பொங்கி விழி நிறைந்தாள். எத்தனை எளியவர்கள்! வஞ்சமும் விழைவும் கரவுகளும் சினமும் இவர்கள்மேல் விழுந்து மறைந்து செல்லும் நிழல்கள் மட்டுமே. அத்தனை பேரையும் அன்னையர் பெற்றிருப்பார்கள். மடியிலிட்டு அமுதூட்டியிருப்பார்கள். தன் உடல் மெய்ப்பு கொள்வதை முலைகள் இறுகி காம்புகள் கூச்சம் கொண்டு விரைப்பதை உணர்ந்தாள்.

கதவு திறக்கும் ஓசை கேட்டு திடுக்கிட்டு நோக்கியபோது சவிதை அறைக்குள் வந்தாள். “என்ன செய்கிறாய் அங்கே? நீ ஆடை மாற்றிக்கொள்ள வேண்டும். சற்று நேரத்தில் அத்தனை பேரும் பந்தலில் அமர்வார்கள்” என்றாள். வியர்த்த முகத்தை முந்தானையால் துடைத்தபடி “எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதற்றத்தில் உப்பை இனிப்பில் கலந்து தொலைக்கப்போகிறேன்” என்றவள் “இனி என்ன சடங்குகள்?” என்றாள். “இனிமேல்தான் சடங்கே. அக்காலத்தில் சடங்கு என இருந்தது இது மட்டுமே. மீதியெல்லாம் பிறகு வந்தவை” என்றாள். அவள் சொல்வதை புரிந்துகொண்டு சுபாஷிணி புன்னகைத்தாள். “நீ என்ன நாணமெல்லாம் அடைவதே இல்லையா? பூவாடை கொடுத்தபோதும் மலர்மாற்றிக்கொண்டபோதும்கூட உன்னிடம் நாணமே தெரியவில்லை. தாலிகட்டியபோது உன் தலையை நான்தான் பிடித்து குனித்துவைத்தேன்” என்றாள் சவிதை. “தெரியவில்லை, அக்கா” என்றாள் சுபாஷிணி.

“அடுமனைச்சூதரின் குலதெய்வங்கள் நூற்றுக்கும்மேல் உள்ளனர். அனைவரையும் சிறு கூழாங்கற்களாக செம்பட்டுக்கிழியில் பொதித்து எடுத்துக்கொண்டு செல்வோம். அனைவருக்கும் பலியும் கொடையும் உண்டு. இன்றிரவெல்லாம் சடங்குகள் இருக்கும்” என்றாள் சவிதை. சுபாஷிணி “உணவுண்டு செல்பவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன்” என்றாள். சவிதை வந்து அவள் அருகே நின்று வெளியே பார்த்து “ஆம், உண்டு செல்பவர்களை பார்ப்பதென்பது அடுமனையாளர்களுக்கு பேருவகை அளிப்பது. இப்புவியில் வாழ்வதற்கான பொருள் என்னவென்று தெரியும்” என்றாள்.

சுபாஷிணி “அடுமனையாளர் அவ்வாறு நோக்குவார்களா?” என்றாள். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “இல்லை நான் வெளியே இருப்பவள் என்பதனால் அடைந்த மெல்லுணர்வு இது என்று எண்ணினேன். அடுமனையாளருக்கு அது நாள்தொழில் என பழகியிருக்கும் அல்லவா?” என்றாள். சவிதை “இவ்வுள எழுச்சியை அடையாத அடுமனையாளர்களே கிடையாது” என்றாள். “போர்வீரர்கள் போருக்குப்பின் பெருங்கசப்பை அடைகிறார்கள். சிற்பிகள் தாங்கள் வடித்த சிற்பத்தின் குறைகளை மட்டுமே பார்க்கிறார்கள்” என்றாள் சுபாஷிணி.

சவிதை “ஆனால் சூதர்களிடம் கேட்டுப்பார். பாடி முடித்தபின் அவர்கள் குறையை உணர்வதுண்டா என்று” என்றாள். சுபாஷிணி “கேட்டிருக்கிறேன்” என்றாள். “அவர்கள் பாடி முடித்ததும் பாடலில் இருந்து மிகவும் கீழிறங்கி வந்துவிட்டதாக உணர்வார்கள்.” சவிதை “ஆம், பாடும்போது அவர்கள் நெடுந்தொலைவு சென்றுவிடுகிறார்கள்” என்றாள். பின்னர் சிரித்தபடி “அப்படியென்றால் அடுமனைத்தொழில் ஒன்றே ஆற்றிமுடித்த பின்னரும் நிறைவு தருவது” என்றாள் அவள். “விளையாட்டில்லை, மெய்யாகவே அதை உணர்கிறேன். அடுமனையாட்டி என்று வாழ்வதொன்றே முழு நிறைவு தருவது.” சவிதை “அய்யய்யோ! சொல்லிப் பரப்பிவிடாதே. தவம் மேற்கொள்ளச் செல்லும் முனிவர்களெல்லாம் இங்கு வந்துவிடப் போகிறார்கள்” என்றாள்.

வெளியே குழந்தையின் வீறிடல் கேட்டது. கோகிலமும் சிம்ஹியும் உள்ளே வந்தனர். சிம்ஹியின் இடையில் மென்தசைமடிப்புகள் கொண்ட தொடைகளும் புயங்களிலும் அக்குள்களிலும் தசைமடிந்த கைகளும் செல்லத்தொந்தியும் கொண்டிருந்த ஆண்குழவி இருந்தது. அது கைகளை விரித்து கால்களை உதைத்து எம்பி சினத்துடன் கூச்சலிட்டுக்கொண்டிருந்தது. முகம் சிவந்து சுருங்கி கண்கள் இடுங்கியிருந்தன. “என்ன சொல்கிறான்?” என்றாள் சுபாஷிணி சவிதை “இப்போதுதான் வயிறு நிறைய ஊட்டி இவளிடம் கொடுத்துவிட்டு சற்று விலகினேன். அதற்குள் நினைவு வந்துவிட்டது” என்றாள்.

அவள் குரல் கேட்டு குழவி இரு கைகளையும் நீட்டி கால்களை உதைத்து அன்னையை நோக்கி எம்பியது. “என் அரசனல்லவா? என் தெய்வமல்லவா? என்ன அழுகை? அம்மா வருவேன் அல்லவா?” என்று சொன்னபடி சவிதை அக்குழந்தையை இரு கைகளாலும் வாங்கினாள். அவள் இரு கைகளும் குழவியின் எடையால் கீழிறங்க கழுத்து இழுபட்டு இறுகியது. உடலை உந்தி அதை சுழற்றித் தூக்கி தன் இடையில் வைத்துக்கொண்டாள். இரு கைகளாலும் அது அவள் மேலாடையை விலக்கி முலைகளை பற்றிக்கொண்டது. “எப்படித்தான் இவனைச் சுமந்து அலைகிறாளோ? இடைநாழியிலிருந்து இங்கு கொண்டுவருவதற்குள் என் இடை இற்றுவிட்டது” என்றாள் சிம்ஹி.

சவிதை சுபாஷிணியிடம் “இவனுக்காகவே உடல் வளர்த்தேன்” என்று சொன்னாள். “கருவிலிருக்கையில் என்னைப் பார்த்த ஒவ்வொருவரும் அஞ்சினார்கள். வயிற்றுக்குள் இரண்டு மூன்று குழந்தைகள் இருக்கும் என்றார்கள். எனக்குத் தெரியும் என் வயிற்றுக்குள் வாழ்பவன் பெருமல்லன் என்று. நான் இங்கு வந்த முதல்நாளே அதை வலவர் என்னிடம் சொன்னார். அன்றிரவே கனவில் நான் இவனை கண்டுவிட்டேன். இவ்வடிவில் அல்ல, பேருடலுடன் புடைத்தெழுந்த தசைகளுடன் மல்லனென களம் நின்று தொடை தட்டி கைகளை உயர்த்தி கூச்சலிடுகிறான். உடலெங்கும் தசைகள் அலைகளென எழுகின்றன. அன்றிரவு விழித்துக்கொண்டு நெஞ்சைப்பற்றியபடி விம்மி அழுதேன். உண்மையில் அன்றிரவு அடைந்த பேருவகையை இவன் பிறந்தபோதுகூட அடையவில்லை.”

“ஆம், கருவுற்றிருக்கையில் வலவர் ஒவ்வொரு நாளும் இவளுக்கு மடியில் அமர்த்தி உணவூட்டினார்” என்றாள் சிம்ஹி. “நான் இங்கு வந்தபோது பழுத்த இலை போலிருந்தேன். பத்து நாட்களுக்குள் உடல் முழுக்க பொன் மின்னத்தொடங்கிவிட்டது. வலவருடன் சேர்ந்து பெருங்கலங்களை தூக்கிக்கொண்டு வருபவளாக மாறிவிட்டேன். இவன் பிறந்தபோது மூன்று மடங்கு எடையிருந்தான். வயிற்றிலிருந்து இவனை வெளியே எடுத்த வயற்றாட்டி அஞ்சி கூச்சலிட்டாள். அவளால் இரு கைகளாலும் தூக்கி மேலெடுக்க முடியவில்லை. இவன் அழுத குரல் கேட்டு வெளியே இருந்து வந்த பெண்கள் திகைத்துவிட்டனர். பிறந்த குழந்தை இத்தனை பெருங்குரலெடுத்து அழுமென்று அவர்கள் எண்ணியதே இல்லை.”

“என்னிடம் ஆண் குழந்தை என்றாள் வயற்றாட்டி. பொதுவாக குழந்தை வாய் வைத்து உறிஞ்சுகையில்தான் முலை சுரக்கும் என்பார்கள். நான் இவன் முகத்தை பார்த்த உடனேயே சுரக்கத் தொடங்கினேன். என் முலையாடைகளை விலக்கி இவன் வாயை கொண்டுவருவதற்குள் இரு காம்புகளிலிருந்தும் பால்சரடுகள் பீறிட்டு இவனை முழுமையாக நனைத்துவிட்டன. ஒரு முலையில் இவன் அருந்தும்போது பிறிதொரு முலை ஊறிப் பாய்ந்து இவனை முழுக்காட்டும். ஆகவே அதை ஒரு கிண்ணத்தில் பிடித்து மீண்டும் ஊட்டுவேன். ஆனால் அதெல்லாம் ஒரு பதினைந்து நாட்கள்தான். அதற்குள் இரு முலைகளையும் ஒட்ட உறிஞ்சி உண்டுவிட்டு மேலும் பாலுக்கு அழத்தொடங்கிவிட்டான்” என்றாள் சவிதை.

“எத்தனை மாதமாகிறது?” என்றாள் சுபாஷிணி குழவியின் தண்டை அணிந்த சிறுகால்களைத் தொட்டு ஆட்டியபடி. “எட்டு மாதம்” என்றாள் சவிதை. ஏவற்பெண்டு “அதற்குள் ஊனுணவு உண்ணுகிறான், நம்ப மாட்டாய்” என்றாள். “ஊனா?” என்றாள் சுபாஷிணி திகைப்புடன். சவிதை “அவன் உண்பதே அன்னையின் முலையைத்தானே? பால் போதாமல் ஆகும்போது ஒருநாள் இதை கடித்துத் தின்றுவிடப்போகிறான் என்று தோன்றும்” என்றாள். “அன்றெல்லாம் ஊனை முதலில் சற்று மசியவைத்து ஊட்டுவேன். இப்போது அப்படி அல்ல, நேரடியாகவே கொடுத்துவிடலாம். அவனே ஈறுகளால் மென்று விழுங்கிவிடுவான்.”

கோகிலம் “வயிற்றுக்குள் அனல் உறங்குகிறது. இன்று வரை எதுவும் செரிக்காமல் இருந்தது இல்லை” என்றாள். ஒரு முலையை உண்டு முடித்ததும் குழந்தை “ஆ!” என்று ஒலி எழுப்பி ஆணையிட்டது. “இதோ. இதோ, என் அரசே” என்றபின் இன்னொரு முலையை அதன் வாயில் வைத்தாள் சவிதை. அதன் தலையை வருடியபடி “உடலிலுள்ள கடைசி சொட்டு குருதியையும் உருக்கி அளித்துவிட வேண்டுமென்று தோன்றுகிறதடி. முலை உண்டு முடிக்கையில் எப்போதும் ஏமாற்றம்தான், அடுத்து மீண்டும் ஊட்ட இன்னும் எத்தனை பொழுதாகுமோ என. ஊறி நிறையவேண்டும் என்று வேண்டிக்கொள்வேன். விழித்திருக்கும் நேரமெல்லாம் இவனுக்கு ஊட்டிக்கொண்டிருக்கிறேன். கனவுகளில் இவனைத்தான் காண்கிறேன்” என்றாள்.

குழந்தையின் இரு கால்களும் சுவைநாவென நெளிந்துகொண்டிருந்தன. அடிக்கால் மென்மையில் முத்தமிட்ட சுபாஷிணி “இவன் பெயரென்ன?” என்றாள். “மாருதன்” என்றாள் சவிதை. “குழந்தை பிறப்பதற்கு முன்னரே பெயரை வலவரே இட்டுவிட்டார்.” கோகிலம் “இங்கு ஒவ்வொருவரும் அவர் நினைவைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில காலத்தில் ஆளுக்கு நூறு கதைகள் சொல்வதற்கு இருக்கும்” என்றாள்.

முதியவளான மிருகி உள்ளே வந்து “என்ன இங்கு நின்று பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? அணி செய்யவில்லையா? அங்கு குலமுதியோர் திரளத் தொடங்கிவிட்டனர்” என்றாள். “மூத்தவளாகிய அன்னை சினம்கொண்டுவிட்டாள்” என்று கோகிலம் சொன்னாள். “சீ, வாயை மூடு! நீ கிளம்புகிறாயா இல்லையா?” என்றாள் மிருகி. “இதோ” என்று சுபாஷிணி எழுந்தாள். சவிதை “நீ சென்று ஆடையணிந்துகொள். நான் இவனை சற்று வெந்நீராட்டி கொண்டுவருகிறேன்” என்றாள். “வெந்நீராட்டுவதற்குள் இன்னொருவர் உணவை ஒருக்கியிருக்க வேண்டும். நீராடுவதற்குமுன் என்ன உண்டிருந்தாலும் நீராடியபின் உடனடியாக அழத்தொடங்கிவிடுவான்.”

மீண்டும் ஒருமுறை குழவியின் இரு கால்களிலும் முத்தமிட்டுவிட்டு சுபாஷிணி அடுத்த அறைக்குள் சென்றாள். ஆடையை அங்கு சிறிய மூங்கில் பெட்டிகளில் வைத்திருந்தனர். சிறிய ஆடி அவள் உடலின் துளியையே காட்டியது. அவளுடன் வந்த சிம்ஹி “அரண்மனையில் பெரிய ஆடிகளில் முழு உடலை பார்த்திருப்பீர்கள். இங்கே கையளவு ஆடிதான். எனக்கு பெரிய விழைவு முழுதாக என்னை பார்க்கவேண்டும் என்று” என்றாள். சுபாஷிணி அந்த ஆடியை கையிலெடுத்தபடி “எதற்கு முழுதாகப் பார்க்கவேண்டும்? தேவையான அளவு மட்டும் பார்த்தால் போதாதா?” என்றாள்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 89

88. அரியணையமைதல்

flowerஉத்தரன் அரண்மனைக்குள் நுழைந்து தன் அறைக்குச் சென்றதுமே “நான் சற்று இளைப்பாறவேண்டும்” என்றான். அவனுடன் வந்த படைத்தலைவன் சங்காரகன் “இளவரசே, நமக்கு பொழுதில்லை. குடியவை கூடிவிட்டிருக்கிறது. சாளரங்கள் வழியாக நம் மக்கள் கொந்தளிக்கும் ஓசை கேட்கிறது. இன்னும் சற்றுநேரத்தில் நீங்கள் அணியாடை புனைந்து அரசவைக்கு வந்தாகவேண்டும்” என்றான். “வெறும் அவைநிகழ்வுதானே? சற்று ஓய்வெடுத்தபின் வருகிறேன். என் புண்ணை அவிழ்த்துக் கட்டவேண்டும்” என்றான் உத்தரன். “இது வெறும் அவையல்ல. அரசர் தங்களுக்கு மகாகீசகரின் உடைவாளை அளிக்கவிருக்கிறார்” என்றான் சங்காரகன். உத்தரன் “அது எதற்கு?” என்றான் சலிப்புடன்.

சங்காரகன் சற்று வியந்து அதை மறைத்தபின் “மகாகீசகரின் உடைவாளை இரண்டு தலைமுறையாக எவரும் ஏந்தியதில்லை, இளவரசே. களம்வென்று அவையமரும் அரசகுடியினருக்குரிய சடங்கு, அதை உருவி மூதாதையர் முன் தாழ்த்தி உறுதிமொழி உரைப்பது. சதகர்ணிகளை வென்று மீண்டபோது கீசகர் அதை இடையணிய விரும்பினார். குலநெறி ஒப்பவில்லை. அவர் கொண்டிருந்த பெருங்கனவே அதுதான்” என்றான். உத்தரன் “ஆம், அறிவேன். ஆனால் இச்சடங்குகள் எதற்கும் ஆழ்பொருளெதையும் நான் காணவில்லை” என்றான். பின்னர் “நன்று, நான் வந்துவிடுகிறேன்” என்றான். சங்காரகன் வணங்கி விடைபெற்றான்.

ஏவலன் அவன் ஆடைகளை கழற்றினான். புண்ணைக் கட்டியிருந்த துணியின்மேல் குருதி ஊறிக் கசிந்துகொண்டிருந்தது. “புண்வாய் திறந்துவிட்டிருக்கிறது. நெடும்பயணம்” என்றார் முதிய ஏவலர் சாரதர். “கோட்டைக்குப்பின் அரசப்பெருவீதியைக் கடப்பதே கடினமாக இருந்தது. அதன் பின் அரண்மனை வாயிலில் வரவேற்புச் சடங்குகள்… ஒவ்வொருவரையாக குனிந்து வணங்கி முறைமைச்சொல் உரைத்தேன். உள்ளே கசியும் புண்ணுடன் முகம் மலர்ந்திருப்பது எப்படி என்று கண்டுகொண்டேன்…” சாரதர் சிரித்து “அரசப் பொறுப்பு என்பது முடிவிலாத ஒரு கூத்தில் நடிப்பதே என்பார்கள்” என்றார்.

அவன் மஞ்சத்தில் படுத்துக்கொண்டான். கால்களை நன்றாக நீட்டவேண்டும் என எண்ணிக்கொண்டிருக்கையிலேயே துயிலில் ஆழ்ந்தான். கரவுக்காட்டில் நிலவொளி அலையடித்த சிற்றாற்றின் கரையினூடாக நடந்துகொண்டிருந்தான். ஆற்றின் மறுகரையில் நீள்குழல் அலையலையாக சரிந்த பெண் ஒருத்தியை கண்டான். திரண்ட பெருந்தோள்கள். கரிய கற்சிலைமுகம். நீள்விழிகள். பிழையற்ற வளைவுகொண்ட மூக்கும் முகிழிதழ்களும். அவள் அவனை நோக்கவில்லை. அவன் நீர்வெளியில் அவள் நிழலையே நோக்கிக்கொண்டிருந்தான். ஆறு பெருகி ஓடிக்கொண்டே இருக்க அவள் அங்கே நின்றுகொண்டிருந்தாள். ஏதோ தோன்ற விழிதூக்கி நோக்கினான். அவள் அங்கே இல்லை. அவளுடைய நீர்ப்பாவை மட்டும் அங்கேயே இருந்தது.

கலம் ஒலித்த ஓசையை மணியொலியென கேட்டு விழித்துக்கொண்டான். குறுகிய துயிலில் அவன் உள்ளம் நீராடி எழுந்ததுபோல் புத்துணர்வு கொண்டிருந்தது. வெண்கலக் கிண்ணத்தை பீடத்தில் வைத்த மருத்துவர் நாசிகர் “கட்டு அவிழ்த்துக் கட்டவேண்டும், இளவரசே” என்றார். “சிவமூலி கொண்டுவந்துள்ளோம்… ஆனால் உடனே அவைநிகழ்வுகள் உள்ளன என்றனர். சற்று குறைவாக…” என்றார். “தேவையில்லை” என்றான் உத்தரன். “சற்று வலி இருக்கட்டும். தேடி அடைந்த நகை போன்றது இந்தப் புண். அதை முழுமையாக அறியவேண்டும் அல்லவா?”

நாசிகர் அவனை திகைப்புடன் நோக்கிவிட்டு தன் உதவியாளனை பார்த்தார். அவனும் திகைப்பு கொண்டிருந்தான். நாசிகர் உத்தரனின் கட்டை சிறிய கத்தியால் வெட்டி விலக்கினார். குருதியுடன் சேர்ந்து ஒட்டி சேறு உலர்ந்ததுபோலிருந்தது. அவர் அதை பிடித்துக்கொண்டு அவன் விழிகளை நோக்க அவன் புன்னகைத்தான். அவர் அதை விரைந்து இழுத்து கிழித்தெடுத்தார். அவன் பற்களைக் கடித்து கழுத்தை இறுக்கினான். ஆனால் புன்னகை அவ்வாறே இருந்தது. புண்ணிலிருந்து பஞ்சு கருஞ்செம்மை நிறப் பொருக்கென விலகியது. குருதி வழிய அதன்மேல் பஞ்சை வைத்து அழுத்தித் துடைத்தார் நாசிகர்.

அவர் கட்டு போட்டு எழுவதுவரை அவன் ஓசையேதுமின்றி அமர்ந்திருந்தான். அவர் கைகளை நீரில் கழுவியபோது “முடிந்ததா?” என்றான். அவன் விழிகள் சிவந்திருந்தன. “ஆம்” என்றார் நாசிகர். அவன் எழுந்துகொண்டான். “நீராடலாகாது. உடலை மென்பஞ்சு நீரால் துடைக்கலாம். என் உதவியாளர்களே செய்வார்கள்” என்றார் நாசிகர். உத்தரன் தலையசைத்தான். அவர் வணங்கி விலகிச்செல்ல அவருடைய உதவியாளன் “சற்றுநேரம் ஓய்வெடுத்தபின்…” என்றான். “தேவையில்லை” என்றான் உத்தரன்.

அவன் நீராட்டறைக்குச் சென்று நறுநீர்ப் பஞ்சால் உடலைத் துடைத்துவிட்டு மீண்டான். அணியர் அவனுக்கு அரச ஆடையும் அணிகளும் சூட்டினர். ஆடியிலெழுந்த தன் உருவை நோக்கிக்கொண்டிருந்தான். அவனறியாத அயலான். அணியன் அஞ்சியபடி “முடிந்துவிட்டது, இளவரசே” என்றான். “நன்று” என அவன் திரும்பிக்கொண்டான். “பிழையேதும் இருந்தால்…” என அவன் சொல்ல விலகும்படி கைகாட்டிவிட்டு அவன் நடந்தான். அணியன் பின்னால் வந்து அவன் இடையாடையின் ஊசி ஒன்றை சீரமைக்க முயல “விடு” என்று அவனை விலக்கினான்.

அவனுக்காக ஏவலரும் அகம்படியினரும் காவல்வீரர்களும் காத்து நின்றிருந்தனர். அவன் படிக்கட்டின்மேல் தோன்றியதும் மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் எழுந்தன. பெண்டிர் குரவையிட்டனர். அவன் படிகளில் இறங்கி வந்து அங்கே நின்றிருந்த சிற்றமைச்சரிடம் “அரசர் அவைபுகுந்துவிட்டாரா?” என்றான். “இல்லை இளவரசே, படைத்தலைவர் சங்காரகர் போர் நிகழ்ந்ததை விரித்துரைக்கிறார். அரசர் தங்களுக்காக சிற்றறையில் காத்திருக்கிறார்…”

சிற்றமைச்சர் குரல் தாழ்த்தி “நெடுநேரமாகிறது. தங்களுக்காகக் காத்திருப்பதாகச் சொல்லவில்லை. ஆனால் அதற்காகவே என அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. வாயிலை எட்டிப்பார்த்துக்கொண்டும் எரிச்சலுற்று அனைவரையும் கடிந்துகொண்டும் இருக்கிறார்” என்றார். உத்தரன் புன்னகைத்து நடக்கையில் சாளரம் வழியாக எரியம்புகள் வானிலெழுவதை நோக்கினான். “என்ன அது?” என்றபடி நின்றான். “நாடெங்கும் பன்னிருநாள் போர்க்களியாட்டுக்கும் உண்டாட்டுக்கும் அரசர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார் சிற்றமைச்சர்.

உத்தரன் எரிச்சலுடன் “போர் என்பது களியாட்டல்ல. நேற்றுவரை நம்முடன் இருந்த எண்ணூற்றிப்பதினேழு வீரர்கள் இன்றில்லை” என்றான். சிற்றமைச்சர் “போர்ப்பலி என்பது உயிர்வேள்வி. அவர்களின் நினைவைப் போற்றவும்…” என்று சொல்லத்தொடங்க உத்தரன் கைகாட்டி அமர்த்தி “எல்லா இறப்பும் இறப்பு மட்டுமே. அப்பாலுள்ள அனைத்தும் சூதர்பாடல்களின் அளவுக்கே பொருள்கொண்டவை” என்றான். “இக்களியாட்டுக்கள் அவர்களை நினைவுகூர்வதற்காக அல்ல, மறந்துவிடுவதற்காகவே. சென்று கேட்டுப்பாருங்கள், அங்கே கள்ளுண்டு கூத்தாடுபவர்களில் எவருக்காவது எத்தனைபேர் பலியாயினர் எனத்தெரியுமா என்று?”

அவன் கசப்புடன் இதழ்வளையப் புன்னகைத்து முன் நடக்க சிற்றமைச்சர் பின்னால் வந்தார். “அவர்கள் இல்லை, நாங்கள் இருக்கிறோம். இதோ, எழும் களிக்கூச்சலின் பொருள் அது ஒன்றே” என்றான் உத்தரன். சிற்றமைச்சர் ஒன்றும் சொல்லவில்லை. இடைநாழிகளினூடாக வாழ்த்தொலிகள் சூழ உத்தரன் நடந்தான். எதிர்ப்படும் ஒவ்வொரு விழியும் பிறிதொன்றாக இருந்தது. ஒவ்வொரு உடல்மொழியிலும் தெரிந்த மாறுதல் அவர்கள் நோக்குவது தன்னையல்ல என அவனை எண்ணச்செய்தது.

நிமித்திகன் வரவறிவித்து முன்செல்ல கொடிக்காரனைத் தொடர்ந்து அணிச்சேடியரும் மங்கலச்சூதரும் நிரைவகுக்க அவன் நடந்தான். அகம்படியினர் பின்னால் வந்தனர். சிற்றறை வாயிலில் அரசரின் கொடியினனும் சேடியரும் அகம்படியினரும் நின்றிருந்தனர். அவன் அன்னையும் உத்தரையும் அவன் மீண்டுவந்தபோது அரண்மனை முற்றத்திற்கு வந்து வரவேற்றார்கள். நெறிகளின்படி அரசரை அவன் அவையில்தான் சந்திக்கவேண்டும். அவன் அவரிடம் சொல்லும் சொற்கள் சூதர்களிடம் பாடலாகும். நூலாகும். கொடிவழியினர் கதையென கேட்பார்கள். அவன் சொல்வதற்கும் அதற்கும் ஒருவேளை எந்தத் தொடர்பும் இருக்காது. ஆனால் அவன் அதை தொடங்கிவைக்கவேண்டும்.

அவன் வரவை அறிவித்த ஏவலன் தலைவணங்க ஒருகணம் தயங்கிவிட்டு உள்ளே நுழைந்தான். விராடர் புலிக்கால் பீடத்தில் நிமிர்ந்து அமர்ந்திருந்தார். அவன் வருவதை அறியாதவர்போல மறுபக்கமாக முகம் திருப்பி அங்கே நின்றிருந்த சேடியிடம் வாய்மணம் கொண்டுவரும்படி விரல்சுட்டி ஆணையிட்டார். அவள் தாலத்தைக் கொண்டுவந்து நீட்ட அதில் ஒரு நறும்பாக்குத் துண்டை எடுத்து வாயிலிட்டு மென்றபடி அவனைப் பார்த்தார். அவன் தலைவணங்கி “தங்கள் பெயருக்கு பெருமைசேர்த்துவிட்டேன், தந்தையே” என்றான். விராடர் அவன் விழிகளை சந்திக்காமல் வெறுமனே தலையசைத்தபின் “அவையில் என்ன பேசவேண்டும் என்பதை ஆபர் எழுதி அளிப்பார். அதை இருமுறை படித்துவிடு. வாயில் வந்ததை உளறி அங்கே நகைப்புக்கிடமாக வேண்டாம்” என்றார். உத்தரன் “ஆணை” என்றான்.

விராடர் மிகையான சலிப்புடன் “உன் அன்னை ஏதோ காட்டுக்கலி ஆலயத்திற்குச் சென்று பூசெய்கை நிகழ்த்தவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். என்னால் அங்கெல்லாம் வரமுடியாது. இங்கு பல நிகழ்வுகள் உள்ளன” என்றார். உத்தரன் “நானே சென்றுவருகிறேன்” என்றான். வெளியே கொம்புகளும் முரசுகளும் முழங்கின. “உன் அன்னையும் உத்தரையும் அவைபுகுகிறார்கள்போலும்… இந்த முறைமைகள் எதையும் விடமாட்டார்கள்” என்றார் விராடர். சலிப்பு நிலைகொண்ட முகத்துடன் எழுந்துகொண்டு “அந்த மூடன் அவன் போர்முகத்தில் ஆற்றியதைப்பற்றிய பொய்களை எல்லாம் முடித்துவிட்டான் என்றால் நாம் அவைபுகலாம்” என்றார். உத்தரன் அருகே நின்ற சேடியின் விழிகளை நோக்கியபின் திரும்பிக்கொண்டான்.

சிற்றமைச்சர் உள்ளே வந்து வணங்கி “கிளம்பலாம், அரசே” என்றார். உத்தரன் “குங்கர் எங்கே?” என்றான். “இங்குதானிருந்தார்… எங்கே அவர்?” என்றார் விராடர். “இடைநாழியில் நிற்கிறார்” என்றாள் சேடி. விராடர் மெல்லிய ஏப்பம்விட்டு “விரைவில் அவையை முடிக்கவேண்டும். என்னால் நெடுநேரம் அமர்ந்திருக்க இயலாது. உன் பெருமைகளை கொஞ்சம் குறைத்தே சொல்லச்சொல் சூதரிடம். வாய்ப்பு கிடைத்தால் காவியங்களை பாடத் தொடங்கிவிடுவார்கள்” என்றார். “சொல்கிறேன்” என்றான் உத்தரன்.

விராடர் ஏவலர் ஆடைதிருத்துவதற்காக நின்றார். அவருடைய ஆடையின் சுருக்கங்களை அவர்கள் நீவிச் சீரமைத்து ஊசிகளை மீண்டும் குத்தினர். “போர்வெற்றி என்பது பெரும்பாலும் தற்செயல். ஒரு வெற்றி வந்ததும் நானே பரசுராமன் என எண்ணிக்கொள்வது மடமை” என்றார் விராடர். “இவ்வெற்றி நம் கையில் ஒரு வீசப்படாத வேலாக இருக்கவேண்டும்.” சிற்றமைச்சர் தலைவணங்க விராடர் வெளியே சென்றார். அங்கே வாழ்த்தொலிகள் பெருகி எழுந்தன. இசையும் குரவையும் சூழ்ந்தன.

விராடர் “ஆபர் எங்கே?” என்றார். சிற்றமைச்சர் தயங்கி “அவர் அவையிலிருக்கிறார்” என்றார். “ஏன்?” என்றார் விராடர். அவர் பேசாமல் நின்றார். உத்தரன் கிளம்பும்பொருட்டு தன் அகம்படியினரை நோக்கி விழிதிருப்பும்போது தூணருகே நின்ற குங்கனை தன்னியல்பாக விழிதொட்டான். முகம் மலர்ந்து அருகே சென்று தலைவணங்கி “அருள்க, குங்கரே! களம்வென்று மீண்டுள்ளேன்” என்றான். குங்கன் “வெற்றிமகள் வலமுறைக! திருமகள் இடமுறைக!” என்று வாழ்த்தினான். உத்தரன் அவன் முகத்தை கண்கள் சுருங்க நோக்கி “என்ன புண்?” என்றான். குங்கன் “விசிறி பட்டுவிட்டது… பெரிதாக ஒன்றுமில்லை” என்றான். “எப்படி பட்டது? இருட்டில் நடந்தீர்களா?” என்றான் உத்தரன். குங்கன் விராடர் அப்பால் அவைநுழைவதை நோக்கிவிட்டு “அரசர் அவை நுழைந்துவிட்டார், இளவரசே” என்றபின் தன் மேலாடையை அள்ளி சுற்றிக்கொண்டு முன்னால் சென்றார்.

உத்தரன் “செல்வோம்” என்றபடி தன் அகம்படியினரை நோக்கித் திரும்பியபோது சிற்றமைச்சரின் விழிகளை ஒருகணம் பார்த்தான். விரைந்த நோக்கு மட்டுமே தொட்டெடுக்கும் ஒன்றை அறிந்து அவன் உள்ளம் கூர்கொண்டது. “என்ன நிகழ்ந்தது?” என்றான். அவன் குரலிலிருந்த மாறுபாட்டை உணர்ந்ததும் அவர் அச்சத்துடன் பின்னடைந்து “எங்கே இளவரசே?” என்றார். “அவர் முகத்தில் என்ன புண்?” சிற்றமைச்சர் “ஒன்றுமில்லை, இளவரசே” என்று சொல்லி மேலும் ஓர் அடி பின்னால் எடுத்துவைத்தார்.

உத்தரன் தாழ்ந்த குரலில் “இது என் ஆணை!” என்றான். அமைச்சர் தயங்கிய குரலில் “அரசர்தான்” என்றார். “என்ன நிகழ்ந்தது?” என்றான் உத்தரன் மேலும் தாழ்ந்த குரலில். “நான் அப்போது அரசரின் அறைக்குள் இல்லை. நான் அறிந்ததுதான். தாங்கள் அடைந்த வெற்றியை எண்ணி அரசர் விழிநீர் உகுத்தார். உவகை கொண்டாடினார்.” உத்தரன் “சொல்க!” என்றான். “அவரிடம் குங்கர் அவ்வெற்றி பிருகந்நளையால்தான் என்று சொன்னாராம். அரசர் உளம்பொறாமல் சினம்மீதூற விசிறியால்…” உத்தரன் இடையில் கைவைத்து சில கணங்கள் நின்றான். பின்னர் நடக்கலானான். நிமித்திகன் சங்கூதி முன் செல்ல கொடிக்காரனும் அணிச்சேடியரும் சூதரும் தொடர்ந்தனர்.

“இளவரசே, இவை பிழையாக இருக்கலாம். அமைச்சு அவையில் பேசப்பட்ட சொற்கள். நான் என் சொற்களென ஏதும் சொல்லவில்லை” என்றபடி அவன் பின்னால் வந்தார் சிற்றமைச்சர். உத்தரன் அவர் அஞ்சவேண்டியதில்லை என கை காட்டியபின் அவைக்குள் நுழைந்தான்.

flowerநிறைந்து விளிம்புகளில் நுரையலை எழும் ஏரிபோலிருந்த குடியவைக்குள் உத்தரன் நுழைந்ததும் வாழ்த்தொலி எழுந்து அவன் மேல் அறைந்தது. குடிமுதல்வர்களும் படைத்தலைவர்களும் பெருவணிகரும் அமைச்சர்களும் எழுந்து கைகளைத் தூக்கி அவன்மேல் அரிமலர் தூவி வாழ்த்தினர். கைகளைக் கூப்பி அவையை வணங்கியபின் அவன் சென்று அவையிலமர்ந்திருந்த குங்கனை தாள்தொட்டு வணங்கினான். “பேரரசர்கள் தந்தையென்றும் தெய்வமென்றும் நிலைகொள்பவர்கள். தங்கள் நல்வாழ்த்துக்களை என்றும் கோருகிறேன்” என்றான்.

விராடர் திடுக்கிட்டு எழுந்துவிட்டார். கைநீட்டி ஏதோ சொல்லவந்தாலும் அவரால் உளம்கூட்ட முடியவில்லை. ஆபர் எழுந்து கைகூப்பியபடி நிற்க உத்தரன் “அமைச்சரே, பேரரசரை நம் அரியணையில் அமரச்செய்க!” என்றான். விராடர் “என்ன சொல்கிறாய்? ஒரு சூதனை…” என்று சொல்லத்தொடங்க ஆபர் “அரசே, அவர் பெயர் யுதிஷ்டிரர். பாரதவர்ஷத்தின் தலைவர்” என்றார். “யார்?” என்றார் விராடர். அவர் கைகள் நடுங்கத்தொடங்கின. “அவர்தான்… ஓராண்டு இங்கே நம்முடன் மாற்றுருக்காலத்தை கழித்தனர். நேற்றுடன் அது முடிந்தது. இன்று அவர் குங்கன் அல்ல, தருமராகிய யுதிஷ்டிரர்.”

விராடர் தள்ளாடும் காலடி எடுத்து வைத்து குங்கரை நோக்கி வந்து “பேரரசே” என்றார். கைகூப்பி “எளியவன்… என் ஆணவத்தால்…” என்று திணறினார். குங்கர் அவர் அருகே வந்து தோளில் கைசுற்றி மெல்லத் தழுவி “ஓராண்டில் மிக அணுக்கமான பல தருணங்கள் நம்மிடையே அமைந்துள்ளன. பிறந்ததுமுதல் கண்காணா மணிமுடி ஒன்றைச் சூடியிருந்தமையால் நட்பென்று எதையும் நான் அறிந்ததில்லை. இங்கே என் குடியும் அரசும் இன்றி வெறும் மனிதனாக இருந்தேன். அவ்வண்ணம் பெற்ற நட்பு உங்களுடையது. இதுவே உண்மையில் நான் ஈட்டியது” என்றார்.

விராடர் தலைகுனிந்து கண்ணீர்விட்டார். “விராடரே, என்றும் என் முதன்மைத்தோழர் நீங்களே. உங்களுக்கு மட்டும் என்றும் குங்கன் என்றே அமைய விழைகிறேன். இன்றுவரை எவ்வண்ணம் என்னிடமிருந்தீர்களோ அப்படியே இருக்கவேண்டுமென கோருகிறேன்” என்றார் குங்கர். விராடர் ஓசையில்லாது விம்மிக்கொண்டிருந்தார். குங்கர் அவர் கைகளைப் பற்றி “நாம் ஆடும் களங்கள் பல இன்னுமுள்ளன, விராடரே” என்றார். அவையினர் அப்போதுதான் என்ன நிகழ்கிறதென்பதை புரிந்துகொண்டனர். கலைந்த ஒலியென அவையின் உணர்வு எழுந்து கார்வைகொண்டு சூழ்ந்தது.

குங்கர் திரும்பி அவையை நோக்கி “இளையோரே” என்று அழைத்தார். ஏவலர்நிரையில் இருந்து வலவனும் கிரந்திகனும் எழுந்து வந்தனர். சேடியர் அருகிலிருந்து பிருகந்நளை எழுந்து வந்தாள். “எங்கே இளையவன்?” என்றார் குங்கர். “அவன் வரவில்லை. தவச்சோலைவிட்டு நீங்க உளமெழாதிருக்கிறான்” என்றான் அருகணைந்த கிரந்திகன். “அவனை நானே சென்று அழைக்கிறேன்” என்றார் குங்கர். “அழைப்பதா? அப்படியே தூக்கிக்கொண்டு செல்லவேண்டியதுதான். இங்கிருந்து விண்ணுக்குச் செல்லமுடியுமா என்று பார்க்கிறான் மூடன்” என்றான் வலவன்.

“இளையோரே, இவர் என் தோழர். இனி என் இடத்தில் என்றும் இருக்கப்போகிறவர்” என்றார் குங்கர். வலவன் வந்து விராடரின் கால்களைப் பணிந்து “வாழ்த்துக, மூத்தவரே!” என்றான். விராடர் நடுங்கும் கைகளால் அவன் தலையைத் தொட்டு “வெற்றியும் புகழும் சேர்க!” என்றார். பிருகந்நளையும் கிரந்திகனும் அவர் கால்களைத் தொட்டு வணங்கினர். குங்கர் “இங்கே சைரந்திரியாக இருந்தவள் என் அரசி திரௌபதி” என்றார். சுதேஷ்ணையின் அருகே நின்றிருந்த சைரந்திரி தலைவணங்கினாள்.

சுதேஷ்ணை உரத்த குரலில் “ஆம், நான் எண்ணினேன். இவ்வாறு நான் பலமுறை எண்ணினேன்… வடபுலத்துச் சூதர் அமூர்த்தர் அஸ்தினபுரியின் அரசி குழலவிழ்த்திட்டு கானகம் சென்ற கதையைச் சொன்னபோது இவர்கள்தானோ என்று என் சேடியிடம் கேட்டேன். கேட்டுப்பாருங்கள்” என்றாள். சைரந்திரியின் கையை பற்றிக்கொண்டு “என் அரண்மனையில் இருந்திருக்கிறீர்கள், பேரரசி. எங்களால் பேணப்பட்டிருக்கிறீர்கள். இனி தலைமுறைதோறும் இது இங்கே கவிஞர்களால் பாடப்படும்… நற்பேறுகொண்டவர்களானோம்…” என்றாள். திரும்பி உத்தரையிடம் “வணங்குக… பேரரசியின் வாழ்த்தைப்போல உன்னை வாழச்செய்வது பிறிதில்லை” என்றாள்.

உத்தரை சைரந்திரியின் கால்களைத் தொட்டு வணங்க அவள் தலைமேல் கைவைத்து “இல்லம் நிறைக! கொடிவழிகள் பெருகுக!” என சைரந்திரி வாழ்த்தினாள். அவள் தோளை மெல்ல அணைத்துக்கொண்டு “நீ அறிவாய் என எனக்குத் தெரியும்” என்றாள். “முக்தன் என்னும் வீரர் சொன்னார்” என்றாள் உத்தரை. அவள் முகம் துயர்கொண்டதுபோலிருந்தது. சுதேஷ்ணை “என்ன முகத்தை அப்படி வைத்திருக்கிறாய்? நீ பாரதவர்ஷமே கொண்டாடும் மாவீரரிடம் பயின்றிருக்கிறாய்… எத்தனை கதைகளில் கேட்டிருக்கிறோம். கதைகளெல்லாம் இப்படித்தான் நிகழ்கின்றன போலும்” என்றாள்.

உத்தரை மேலும் துயர்கொண்டு தலைதழைத்தாள். விழிப்பீலிகளில் நீர்ப்பிசிறுகள் தெரிந்தன. சுதேஷ்ணை “ஏன் அழுகிறாய்?” என்றபின் சைரந்திரியிடம் “உவகைக்கண்ணீர். அவளுக்கு இதெல்லாம் உள்ளம்தாங்காதபடி பெரியவை” என்றாள். “ஆம்” என்றாள் சைரந்திரி. “வருக!” என உத்தரையின் தோளைப்பற்ற அவளிடம் மெல்லிய திமிறல் ஒன்று வெளிப்பட்டது. உடலில் நிகழாது உள்ளத்தின் அசைவாகவே கைகளுக்கு அது வந்துசேர்ந்தது என்று தோன்ற அவள் உத்தரையின் விழிகளை பார்த்தாள். உத்தரை அவள் நோக்கை சந்திக்காமல் தன் மேலாடையை ஒரு கையால் பற்றிக்கொண்டு தலைநிமிர்ந்து அரியணையை நோக்கினாள். சைரந்திரி புன்னகையுடன் அவள் தோளில் அழுத்தமாகக் கையை வைத்து “வருக!” என்று மீண்டும் சொன்னாள்.

விராடர் கைகூப்பியபடி அவையிடம் “இன்று விராடபுரி பேரரசாகியது. இனி என்றும் அது இந்திரப்பிரஸ்தத்தின் பகுதியென்றே இருக்கும். நானும் என் கொடிவழியினரும் அம்மணிமுடியால் ஆளப்படுவோம். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார். அவையினர் எழுந்து நின்று வாழ்த்தொலி எழுப்பினர். “தொல்புகழ்கொண்ட விராட அரியணையையும் மணிமுடியையும் இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசருக்கு அளிக்கிறோம். அவர் இதை தனது என்று கொண்டு நம்மை வாழ்த்துக!” என்றார் விராடர். அவையினர் வாழ்த்தொலி எழுப்ப அவைக்கு வெளியே அச்செய்தி பரவி அங்கிருந்தும் முழக்கமாக வாழ்த்தொலி மேலெழுந்தது.

விராடரும் உத்தரனும் இரு பக்கங்களிலாக நின்று குங்கரை அரியணைக்கு அழைத்துச்சென்றார்கள். ஆபர் அரியணையில் அமரும்படி முறைச்சொல் உரைத்து அழைக்க குங்கர் அதில் அமர்ந்தார். மங்கல இசையும் குரவையொலிகளும் பெருகின. சுதேஷ்ணை சைரந்திரியை கைபற்றி அழைத்துச்சென்று குங்கரின் அருகே அரியணையில் அமரச்செய்தாள். ஆபர் ஆணையிட நிஷதகுலத் தலைவர்கள் எழுவர் விராடபுரியின் மணிமுடியை கொண்டுவந்து அளிக்க அதை விராடரும் உத்தரனும் எடுத்து குங்கருக்கு அணிவித்தனர். செங்கோலை ஆபரிடமிருந்து குங்கர் பெற்றுக்கொண்டார்.

வேதியர் பதினெண்மர் மேடையேறி தொல்மொழி ஓதி நீர் தெளித்து வாழ்த்தினர். நிஷதகுலத் தலைவர்கள் நிரையாக வந்து அரிமலரிட்டு வணங்கினர். செங்கோலும் முடியுமாக அமர்ந்த குங்கரின் இரு பக்கங்களிலும் விராடரும் உத்தரனும் நிற்க சைரந்திரிக்குப் பின்னால் சுதேஷ்ணையும் உத்தரையும் நின்றனர். வாழ்த்துச் சடங்குகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்து முடிந்ததும் நிமித்திகன் அவைமேடை ஏறி இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசரின் சிறப்புக்காக பன்னிரு நாட்கள் விழவும் உண்டாட்டும் நிகழும் என அரசாணையை அறிவித்தான். அதை ஏற்று முரசுகள் முழங்கின.

சடங்குகளினூடாக விராடர் நிலைமீண்டு முகம் மலர்ந்திருந்தார். நிமித்திகனை விலகும்படி கைகாட்டிவிட்டு அவரே அறிவிப்புமேடையில் ஏறி “அவையோரே, குடிகளே, நாளைப் புலரியிலேயே இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசரும் பேரரசியும் இளவரசர்களும் விராடபுரியிலிருந்து கிளம்புகிறார்கள். அவர்கள் இங்கிருந்த பெருமை என்றும் நம்முடன் இருக்கும். நமது வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் அவர்கள் உடன்கொண்டு செல்லட்டும்” என்றார். அவை கைதூக்கி ஆரவாரம் செய்தது. “விராடபுரியின் கருவூலமே அவர்களுடையது. அவர்கள் விழைகையில் இதன் இறுதிச்செல்வம் வரை அவர்களின் காலடியில் வைக்கப்படும். ஆயினும் இங்கிருந்து அவர்கள் தங்கள் நகர்மீள்கையில் நாம் என்றும் குறையாச் செல்வமொன்றை பரிசாக அளிக்கவேண்டும்.”

அவர் சொல்லப்போவதைக் காத்து அவை அமைதிகொள்ள சிலர் புன்னகைத்தனர். “நாம் அனைவரும் எவ்வாறோ சற்று அறிந்த ஒன்று. அதை அவையிலறிவிக்கிறேன். இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசரும் மாமன்னர் பாண்டுவின் மைந்தரும் வில்யோகியுமான அர்ஜுனர் என் மகள் உத்தரைக்கு ஆசிரியராக அமைந்து இங்கே ஓராண்டு உடனுறைந்தார். அவர் தானறிந்தவற்றை எல்லாம் அவளுக்கு மேலும் கற்பிக்கட்டும்.” அவை சிரிக்கத் தொடங்கியது. “நம் இளவரசியை பாண்டவரின் குலமகளாக ஏற்றருளவேண்டும் என நான் அர்ஜுனரையும் அவர் தந்தைவடிவமாக அமைந்த பேரரசரையும் வேண்டிக்கொள்கிறேன்” என்று விராடர் வணங்கினார்.

அவை எழுந்து நின்று உவகைக் கூச்சலிட்டது. அச்செய்தி வெளியே பரவ விராடபுரியின் தெருக்களிலும் இல்ல முகப்புகளிலும் கூடிநின்றவர்கள் அனைவரும் வாழ்த்துக் கூச்சலிட்டனர். நகரம் அமைந்தும் எழுந்தும் முழங்கிக்கொண்டே இருந்தது. விராடர் கையமர்த்தி அவையை அமரச்செய்ததும் எங்கிருந்தோ மீண்டும் வாழ்த்தொலி எழுந்தது. உத்தரை தன் குழலாடையால் முகம் மறைத்து மெல்ல விம்மிக்கொண்டிருந்தாள். அவள் தோளை சுதேஷ்ணை பற்றியிருந்தாள்.

கைகூப்பியபடி அர்ஜுனன் எழுந்ததும் அவை அமைதியடைந்தது. ஆனால் நகரிலிருந்து எழுந்த முழக்கம் அவர்களை செவியும் நாவுமில்லாதவர்களாக ஆக்கியது. வெளியே முரசுகள் முழங்கின. கலைந்து சிதறிய பசுக்களை வேட்டைநாய்கள் என முரசொலி அவ்வோசையை ஒன்றுசேர்த்து அமைதியடையச் செய்தது. பின் செவிகள் முழங்கும் அமைதி எழுந்தது.

அர்ஜுனன் அவையை வணங்கியபின் விராடரிடம் “அரசே, தங்கள் மகளுக்கு நான் ஆசிரியனாகவே இருந்தேன். பிறிதொன்றுமாக அல்ல” என்றான். விராடர் திகைப்புடன் உத்தரையை நோக்கினார். “இந்தக் கான்வாழ்வில் எந்தையின் நகர்வரை சென்று இன்பங்களில் மானுடன் அறியக்கூடுவதனைத்தையும் அறிந்து மீண்டிருக்கிறேன். அரசே, மண்ணில் மானுடன் அடையும் இன்பங்கள் அனைத்தும் அறியுமின்பங்களே. அறிவதற்கேதுமில்லாதவற்றில் இன்பம் என ஏதுமில்லை. இனி இங்கு நான் அடைவதற்கேதுமில்லை” என்றான்.

“நான் அறியவேண்டியவை இனி என்னை உரித்திட்டுக் கடந்துசென்று அறியவேண்டியவை. அனலாடி உருமாறிச் செல்லவேண்டிய பாதைகள் அவை. அது நிகழக்கூடும்” என்றான் அர்ஜுனன். விராடர் மறுமொழி சொல்வதற்குள் “ஆனால் அவையிலெழுந்து நீங்கள் சொன்ன சொல் நிலைகொள்ளவேண்டும். உங்கள் மகள் பாண்டவரின் குலக்கொடியாவாள். அவளை நான் ஏற்றுக்கொள்கிறேன், என் மகன் அபிமன்யூவுக்குத் துணைவியாக” என்றான்.

விராடர் முகம் மலர்ந்து “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபின் நிமித்திகனை நோக்கி கை தூக்கினார். அவன் அறிவிப்பு மேடையில் ஏறி “அவை அறிக! நுண்வடிவில் வந்த மூதாதையர் அறிக! என்றும் சூழ்ந்திருக்கும் தெய்வங்கள் அறிக! விராட இளவரசி உத்தரையை பாண்டவர்குலத்து இளவல் அபிமன்யூவுக்கு அறத்துணைவியென அளிக்க விராடபுரியின் அரியணையமர்ந்த அரசர் தீர்க்கபாகு ஒப்புதல் அளிக்கிறார்” என்று கூவினான். அவை எழுந்து வாழ்த்துக்கூவ மீண்டும் நகரம் ஒலிவடிவென்று எழுந்து வானை அறைந்தது.

உத்தரன் உத்தரையை நோக்கினான். முகத்தை மூடிய ஆடைக்குள் அவள் உணர்வுகள் ஏதும் தெரியவில்லை. ஆனால் தோள்கள் இறுகி முன்குறுகியிருந்தன. சுதேஷ்ணை கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். அவன் சைரந்திரியின் விழிகளை நோக்கியபின் திரும்பிக்கொண்டான். தன் முன் அலையடித்துக்கொண்டிருந்த பேரவையை முற்றிலும் புரிந்துகொள்ளமுடியாத ஒன்றை என நோக்கினான். வானம்போல மலைகளைப்போல கடலைப்போல கண்முன் எழுந்து நின்றிருக்கும் பேருரு. அறிந்த வரை இது என்று ஒரு பெயரும் அடையாளமும் இட்டு உள்ளத்தில் வைத்துக்கொள்ளலாம். கைக்குச் சிக்கியது வரை பயன்படுத்தி ஆளலாம். அப்பால் அது பிறிதொன்று. அறியப்படவே இயலாதது.

விராடர் கண்ணீருடன் ஆபரின் கைகளை பற்றிக்கொண்டார். பின்னர் குங்கரின் அருகே வந்து கைகூப்பினார். குங்கர் அவரிடம் ஏதோ சொல்ல விழிநீருடன் சிரித்தார். ஒவ்வொன்றும் நிகழ அவன் வேறெங்கிருந்தோ நோக்கிக்கொண்டிருந்தான். அந்த விலக்கத்தை போர்க்களத்திலும் உணர்ந்ததை நினைவுகூர்ந்தான்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 88

87. கோட்டை நுழைவு

flowerபீடத்தை ஓங்கித் தட்டிய விராடர் “மூடர்களே… இழிமக்களே…” என்று கூவினார். ஏவலர் உள்ளே வந்து வணங்க “எங்கே? தூதுச்செய்திகள் என்னென்ன? எங்கே ஒற்றர்கள்?” என்றார். “அரசே, சற்றுமுன்னர் வந்த செய்திதான் இறுதியானது…” என்றான் காவலன். “அது வந்து இரண்டு நாழிகை கடந்துவிட்டது. கீழ்மக்களே… ஒற்றர்கள் என்ன செய்கிறார்கள்? இப்போதே எனக்கு அடுத்தகட்டச் செய்தி வந்தாகவேண்டும். இக்கணமே…” என்று கூவினார். காவலன் “அமைச்சரிடம் அறிவிக்கிறேன், அரசே” என்று தலைவணங்கி வெளியே சென்றான்.

குங்கன் புன்னகையுடன் “அஞ்சவேண்டியதில்லை அரசே, நல்லசெய்தி வரும்” என்றான். “எதை நம்பி இருப்பது இங்கே? அந்த மூடன் ஒளிந்துகொண்டிருக்கிறான். அவனை கொல்வதாக மிரட்டி இழுத்துச்சென்றிருக்கிறாள் ஆணிலி. இரு ஆணிலிகளும்…” கையை வீசி “பிழைசெய்துவிட்டேன். நான் சென்றிருக்கவேண்டும். நான் அங்கே இறந்திருந்தால்கூட பெருமைதான் அதில்” என்றார் விராடர். குங்கன் “நாம் இனி செய்வதற்கொன்றுமில்லை, பொறுத்திருப்பதைத் தவிர” என்றான்.

காவலன் உள்ளே வந்து வணங்க “என்ன செய்தி? எங்கே ஓலை?” என்றார் விராடர். “அரசியும் சைரந்திரியும்” என்றான் காவலன். “அவர்களை யார் இங்கே அழைத்தது?” என்று விராடர் சீற “தாங்கள் விடுத்த ஆணைப்படிதான்…” என்றான் காவலன். “வரச்சொல்” என்றபடி அவர் சென்று பீடத்தில் அமர்தார். சுதேஷ்ணை உள்ளே வந்து “என்ன செய்தி?” என்றாள். “உன் மைந்தன் கௌரவர் படையை ஓடஓட துரத்தி வெற்றிசூடி வருகிறான். போதுமா?” சுதேஷ்ணை முகம் மலர்ந்து “மெய்யாகவா?” என்றாள். “அறிவிலி… அறிவிலிகளில் முதல்வி” என்றார் விராடர்.

முகம் சிவக்க “அவன் வெல்வான், நான் அறிவேன்” என்றாள் சுதேஷ்ணை. “வாயை மூடு… உன்னை இங்கே அழைத்தது யார்?” என்று விராடர் கூவியபடி எழுந்தார். “நீங்கள்தான்… அழைக்காமல் வர நான் ஒன்றும் முறைமை தெரியாத காட்டினம் அல்ல. தொல்குடி ஷத்ரியர்கள் முறைமையில் வாழ்பவர்கள்.” விராடர் “உன் மகன் அங்கே முறைமைப்படி போரிட்டுக்கொண்டிருக்கிறான்… நீயும் செல்! அவனுக்கு முறைமைப்படி வாய்க்கரிசி போடு” என்றார். அவர் முகம் சுளித்து பற்கள் தெரிந்தது சிரிப்பதுபோல காட்டியது. “எண்ணிப் பேசவேண்டும்… அரசன் முறைமீறிப் பேசினால் மாற்றுச்சொல்லும் அதேபோல எழும்” என்றாள் சுதேஷ்ணை. “எங்கே பேசு பார்ப்போம்” என்று விராடர் கையை ஓங்கினார்.

சைரந்திரி தாழ்ந்த குரலில் “அரசி, வேண்டாம்” என்றாள். விராடர் “நீ எப்படி உள்ளே வந்தாய்? சேடியர் எப்படி அவைக்குள் நுழையமுடியும்? போ வெளியே!” என்றார். சைரந்திரி “சென்று பீடத்திலமர்க!” என்றாள். விராடர் “என்ன?” என்று சொல்ல “படைகண்டு நடுங்கி அமர்ந்தது உத்தரர் மட்டுமல்ல” என்றாள். விராடர் படபடப்புடன் ஏதோ சொல்ல வாயெடுத்தார். “படைமுகம் கண்டதும் உத்தரர் நிமிர்ந்து எழுந்தார். இன்று அவர் உரைத்த சொற்களைத்தான் நகர் பேசிக்கொண்டிருக்கிறது” என்றாள் சைரந்திரி. “அவை அரசர் பேசியிருக்கவேண்டியவை.”

அவர் இருமுறை கையை அசைத்தபின் சென்று பீடத்திலமர்ந்தார். “தன்னை எண்ணி நாணுபவர்களின் மிகைச்சினம். அதை பிறர் எளிதில் உணரவும் முடியும்” என்றாள். விராடர் வலிகொண்டவர்போல தலையை அசைத்தார். ஏதோ சொல்லவந்தபின் கண்களை மூடிக்கொண்டு பெருமூச்சுவிட்டார். சைரந்திரி சுவர் சாய்ந்து நிற்க குங்கன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். பெருமூச்சுடன் அசைந்த விராடர் “என்ன செய்தி என்றே தெரியவில்லை” என்றார்.

சுதேஷ்ணை “செய்தி இன்னும் சற்றுநேரத்தில் வரும்” என பீடத்தில் அமர்ந்தாள். துடித்து எழுந்து “நீ ஏன் இங்கிருக்கிறாய்? போ” என்று விராடர் உரக்க கூவினார். “என் மைந்தனின் வெற்றிச்செய்தியை இங்கே அமர்ந்து நான் கேட்கவேண்டும். உங்கள் விழிகளை நோக்கிவிட்டுச் செல்லவேண்டும்… அதற்காகவே வந்தேன்” என்றாள் சுதேஷ்ணை. “செல்… வெட்டி வீழ்த்திவிடுவேன்… விலகிச்செல்!” என்று விராடர் கூச்சலிட்டார். “வெட்டுங்கள் பார்ப்போம்” என்றாள் சுதேஷ்ணை. “இப்போது நான் விழிகாட்டினால் இவள் உங்களை கைகள் பிணைத்து இழுத்துச்செல்வாள்… வாளேந்தத் தெரிந்த கைகள் இவை” என்றாள்.

விராடர் சைரந்திரியை நோக்கிவிட்டு “என்னை அச்சுறுத்துகிறீர்களா?” என்றார். குங்கன் “அரசே, இதெல்லாம் வீணாக முட்களால் குத்திக்கொண்டு நாம் ஆடுவது. நாம் செய்வதற்கொன்றுமில்லை. செய்திக்காக காத்திருப்போம்” என்றான். “ஆம்” என்றார் விராடர். தன் கைகளைக் கோத்தபடி பீடத்தில் உடல்குறுக்கி அமர்ந்தார். அறைக்குள் அமைதி நிலவியது. அரண்மனைச் சாளரங்கள் காற்றில் இறுகிநெகிழ்ந்து ஒலிக்கும் ஓசைமட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

விராடர் எழுந்து “வீண்பொழுது… என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாம் சற்று ஆடுவோம்” என்றார். குங்கன் அசையாமல் அமர்ந்திருந்தான். “குங்கரே, உம்மிடம் நான் ஆணையிட்டேன். சூதுப்பலகையை எடும்” என்றார் விராடர். குங்கன் “இல்லை, நான் இனி சூதாடப்போவதில்லை” என்றான். “ஏன்?” என்றார் விராடர். “இதோ, சற்றுமுன் புலரியின் நான்காம் நாழிகையுடன் ஒரு காலகட்டம் முடிந்தது” என்றான் குங்கன். “என்ன சொல்கிறீர்? என்று விராடர் உரக்க கேட்டார். “இனி கையால் சூதுக்காய்களை தொடுவதில்லை என்று சூளுரைத்திருந்தேன். ஆழத்திலுறைந்த பிறிதொருவன் அவ்விழைவை மிச்சம் வைத்திருந்தான். இன்று அவனும் ஆடி நிறைந்துவிட்டான்.” விராடர் “என்ன உளறிக்கொண்டிருக்கிறீர்? இது என் ஆணை. எடும் சூதுப்பலகையை!” என்றார்.

“உயிரிழந்தாலும் அதைத் தொடுவதில்லை” என்றான் குங்கன். விராடர் “ஏய்… அமைச்சரை அழைத்து வா… இப்போதே…” என்றார். சைரந்திரி “இனி எந்த ஆணையையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை” என்றாள். “அவர் சொன்ன அதே பொழுதுநிறைவு எனக்கும்தான்.” விராடர் “உங்களுக்கென்ன பித்துப் பிடித்திருக்கிறதா? என்னிடம் விளையாடுகிறீர்களா?” என்றார். “உங்கள் இருவரையும் கழுவிலேற்றுகிறேன். இந்நகரை ஆள்பவன் எவன் என்று காட்டுகிறேன்… இழிமக்களே…” அரசியை நோக்கி “நீ அளித்த இடம் இது… என்னை இழிவு செய்வதற்காகவே இவளை பேணுகிறாய்” என்று இரைந்தார்.

அவர் கதவில் கைவைக்க அது திறந்து அங்கே காவலன் நின்றிருந்தான். தலைவணங்கி “பேரமைச்சர் ஆபர்” என்றான். அதற்குள் ஆபர் உரத்த குரலில் “செய்தி வந்துள்ளது, அரசே. நம் இளவரசர் வென்றிருக்கிறார். கௌரவர்களை ஓட ஓட துரத்திவிட்டார். மச்சர்களின் குருதி தோய்ந்த வாளுடன் வந்துகொண்டிருக்கிறார்” என்று கூவினார். சுதேஷ்ணை பாய்ந்தெழுந்து “ஆம். நான் அதை நன்கறிவேன். நான் அவன் வருவதையே என் உள்ளத்தால் கண்டுவிட்டிருந்தேன். அவன் என் மகன். தொல்குடி ஷத்ரியரின் குருதியிலெழுந்தவன் அவன். தெய்வங்களே… மூதாதையரே…” என்று கண்ணீர் வழிய நெஞ்சை அழுத்தியபடி கூவினாள்.

விராடர் தயங்கிய குரலில் “அது உறுதிப்படுத்தப்பட்ட செய்திதானா? எவராவது…” என முனகினார். ஆபர் “ஏழு செய்திகள் வந்துள்ளன. எப்படி போர் நிகழ்ந்ததென்றே விரிவாக எழுதியிருக்கிறான் ஓர் ஒற்றன். அனலை துணைகொண்டு வென்றிருக்கிறார்கள். நம் இளவரசர் களத்தில் பொருபுலி என நின்றிருக்கிறார்…” என்றார். விராடர் சில கணங்கள் விழிமலைக்க நோக்கி நின்றார். பின்னர் கையை நீட்டி தன் அரசியின் தோளை பற்றிக்கொண்டார். அவள் அவர் கைகளைப் பற்றியபடி “நம் மைந்தன்… அரசே, நமது மைந்தன் அவன்” என்றாள். “ஆம், நான் அவனைப்பற்றி பிழையாக எண்ணிவிட்டேன். கசந்தும் எள்ளியும் கடுஞ்சொல்லாடிவிட்டேன்.” அவர் நிற்கமுடியாமல் தள்ளாட அரசி அவரைப்பற்றி பீடத்தில் அமரச்செய்தாள்.

“சூசீமுக மலைக்குமேல் படையுடன் சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து மலையிறங்கும் சுழல்காற்றுபோல மச்சர்கள்மேல் பாய்ந்திருக்கிறார்கள். தலைநின்று தேரில்சென்று வில்லேந்தி களம் நிறைத்திருக்கிறார் உத்தரர்…” காவலன் வந்து தலைவணங்கினான். அவன் அளித்த ஓலைகளை வாங்கிய ஆபர் “அனைத்தும் ஒரே செய்திகளையே அளிக்கின்றன. நம் இளவரசர் வென்று வருகிறார்!” என்றார்.

விராடர் “நான் அவனை இழித்துரைத்தேன்… எத்தனை சொற்கள்!” என்றார். அவர் தொண்டை ஏறியிறங்கியது. குரல் அடைத்தது. “அவனை பழிக்காத ஒருநாளை கடந்ததில்லை நான்” என்றார். சுதேஷ்ணை “தாழ்வில்லை, நீங்கள் அவன் தந்தை அல்லவா?” என்றாள். “தந்தையரால் பழிக்கப்படாத மைந்தர் எங்குள்ளனர்?” குங்கன் “அரசே, தந்தையர் மைந்தரை பழித்துரைப்பதெல்லாம் மானுடரோ தெய்வங்களோ சினந்து அதற்கு எதிர்மொழி ஒன்றை சொல்லிவிடமாட்டார்களா என்ற ஆவலினால்தான்” என்றான்.

ஆபர் “இனி இந்நாட்டின் வெற்றியையும் வாழ்வையும் பற்றிய கவலையே தேவையில்லை, அரசே” என்றார். “நாடு எப்படிப் போனால் என்ன, என் மைந்தன் வாழ்வான். என் மைந்தன் வெல்வான்” என்றார் விராடர். “இக்கணம் இங்கிருந்தே கானேகவும் நான் ஒருக்கமே. இனி இப்புவியில் நான் அடைய ஏதுமில்லை… நிறைவுற்றேன். மூதாதையர் முன் சென்று நின்று முகம் நோக்குவேன்.” சுதேஷ்ணையின் தோளை வளைத்துப்பிடித்து “ஆம், நான் எளியவனே. ஒருகளம்கூட வெல்லாதவனே. என்னை வென்றுகடந்திருக்கிறான் என் மைந்தன். கௌரவப் படை கடந்தவன். நாளை இப்பாரதவர்ஷத்தின் மாமன்னன் என அறியப்படுவான். அவன் தந்தை என்று என் பெயரும் இலங்கும்…” என்றார்.

சுதேஷ்ணை “செய்திகளை விரிவாகப் படியுங்கள், அமைச்சரே” என்றாள். அவள் கண்களிலிருந்து நீர் வழிந்தது. முகம் சிரிப்பில் விரிந்திருந்தது. ஆபர் “இங்கே கோட்டைமுகப்பில் வஞ்சினம் உரைத்துவிட்டு தேரேறிச் சென்றதுமுதல் இளவரசர் ஒவ்வொரு கணமும் படைகளை வழிநடத்திக்கொண்டிருந்தார். ‘நாம் வெல்வோம், ஐயமே வேண்டாம்’ என்று அவர் சொன்னார். தன் வெற்றியை நன்கறிந்திருந்தார். ஆனால் சூசீமுக முனையைச் சென்றடைந்ததும்தான் நம் வீரர்களுக்கு அவர் என்ன சொல்கிறார் என்று புரிந்தது” என்றார்.

குங்கனை நோக்கி திரும்பிய விராடர் “குங்கரே, உங்களுக்கு எப்படி தெரிந்தது என் மைந்தன் வெல்வான் என?” என்றார். “அவருடன் பிருகந்நளை சென்றதனால்” என்றான் குங்கன். “அவளா? அந்த ஆணிலி என்ன செய்திருப்பாள்?” என்று விராடர் கேட்டார். “தேர் தெளித்து உத்தரரை வெற்றிக்கு அவள் கொண்டுசெல்வாள் என அறிந்திருந்தேன்.” விராடர் சினத்துடன் “என்ன சொல்கிறீர்? என் மைந்தன் திறனற்றவன், அவன் வெற்றி அந்த ஆணிலியால்தான் என்கிறீரா?” என்றார். “அரசே, நான் சொல்வது…” என்று குங்கன் சொல்லெடுப்பதற்குள் சுதேஷ்ணை “என் மைந்தன் வென்று மீள்கிறான். அப்புகழை ஊரறியா பேடிக்கு அளிக்க எண்ணுகிறீரா?” என்றாள்.

“அரசி, சிக்கிமுக்கிக் கற்களில் கனலுள்ளது. எழுப்புவதற்கு கைகள் வேண்டும்” என்றான் குங்கன். விராடர் “இழிமகனே, உன் சிறுமதியை காட்டிவிட்டாய். என்ன சொல்கிறாய்? விராடகுலத்துப் பிறந்த இளவரசன் செயலற்றவன் என்றா? அவனை இயக்கியவள் அந்தக் கீழ்பிறப்பு என்றா?” என்று கூவியபடி எழுந்தார். “உண்மை அது” என்று குங்கன் சொல்வதற்குள் விராடர் “சூதப்பிறப்பே” என கூச்சலிட்டபடி நடுவே குறும்பீடத்திலிருந்த பனையோலை விசிறியை எடுத்து குங்கனை அடிக்கத்தொடங்கினார். தோளிலும் முகத்திலும் அடிகள் விழ குங்கன் தலையை குனித்துக்கொண்டான். ஆனால் கையெடுத்து தடுக்கவில்லை.

ஆபர் எழுந்து வந்து “அரசே, நிறுத்துங்கள்! நிறுத்துங்கள், அரசே!” என்று கூவினார். விராடர் வெறிகொண்டிருந்தமையால் ஆபரை ஒரு கையால் விலக்கி மறுகையால் குங்கனை மீண்டும் மீண்டும் அடித்தார். ஆபர் உரக்க “அரசே, நிறுத்துக! இது அந்தணன் ஆணை!” என்றார். விராடர் கையில் விசிறியுடன் திகைத்து மூச்சிரைக்க “இவர் இவர் என் மைந்தனை…” என்றபின் விசிறியை வீசிவிட்டு அழத்தொடங்கினார். “அவன் மீண்டெழுந்தாலும் இவர்கள் விடமாட்டார்கள். அவனை சொல்லிச்சொல்லியே வீணனாக்கிவிடுவார்கள். தெய்வங்களின் கொடையைக்கூட கைநீட்டி புகுந்து தடுக்கிறார்கள்” என்றார். தலையில் அறைந்தபடி “என் மைந்தன் வென்றான். அவன் கௌரவர்களை வென்றான்” என்று கூவினார்.

ஆபர் ஏதோ சொல்ல முன்னெடுக்க குங்கன் கைகூப்பி விழியசைத்து வேண்டாம் என்றான். அரசரை நோக்கி திரும்பி “இல்லை அரசே, உத்தரரே வென்றார். எளியோன் சொல்லை பொறுத்தருள்க. வென்றவர் இளவரசர் உத்தரர். அவர் புகழ் என்றும் வாழும்” என்றான். அச்சொற்களைக் கேட்காதவர்போல விராடர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். பின்னர் மெல்ல விம்மினார். சைரந்திரி நிலைத்த விழிகளால் குங்கனை நோக்கிக்கொண்டிருந்தாள். ஆபர் “முகம் கிழிந்துள்ளது, குங்கரே… குருதி வருகிறது” என்றார். கையால் தன் கன்னத்தை தொட்டபின் “சிறிய புண்தான்” என்றான் குங்கன்.

flowerஉத்தரனின் தேர் நகரெல்லைக்குள் நுழைவதற்குள்ளாகவே விராடபுரி வாழ்த்துக் கூச்சல்களால் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டிருந்தது. அரசநெடுஞ்சாலையில் விராடப்படையின் வேளக்காரர்கள் சூழ அவனுடைய தேர் நுழைந்ததும் முதல் காவல்மாடம் முரசொலி எழுப்பியது. அதைக் கேட்டு தலையானை ஒலிகேட்ட யானைக்கூட்டமென அத்தனை மாடங்களும் முழங்கின. கோட்டைமுகப்பில் உத்தரனின் காகக்கொடி மேலெழுந்தது. நகர்மக்கள் அனைவரும் சாலையின் இரு பக்கங்களிலும் செறிந்தனர். உப்பரிகைகளிலும் இல்லத்திண்ணைகளிலும் பெண்முகங்கள் அடர்ந்தன.

நகர்க்காவல் வீரர்களில் ஒரு திரள் வாழ்த்தொலி எழுப்பியபடி புரவிகளில் அவனை எதிரேற்கச் சென்றது. செல்லச்செல்ல அது பெருகி ஒரு படையென்றே ஆகியது. படைக்கலங்களையும் தலைப்பாகையையும் எறிந்து பிடித்துக்கொண்டு புரவிமேல் எம்பி எம்பி வெறிக்கூச்சலிட்டபடி அவர்கள் சென்றனர். தொடர்ந்து காலாள்படையினர் கூவி ஆர்த்தபடி ஓடினர். “விராடபுரிக்கு வெற்றி! மாவீரர் உத்தரருக்கு வெற்றி! காகக்கொடிக்கு வெற்றி!” என்று அவர்கள் கூவினர். சிலர் நெஞ்சில் அறைந்துகொண்டு அழுதனர்.

ஓசைகேட்டு தேர்த்தட்டில் அரைமயக்கத்திலிருந்த உத்தரன் எழுந்து கையூன்றி அமர்ந்தான். தேரை ஓட்டிக்கொண்டிருந்த பிருகந்நளையைக் கண்ட பின்னரே அவன் நிகழ்வதென்ன என்று உணர்ந்து “எங்கு வந்துள்ளோம்? என்ன ஓசை அது?” என்றான். “விராடபுரி அணுகிவிட்டது” என்றாள் பிருகந்நளை. “மக்கள் வாழ்த்தொலி எழுப்புகிறார்கள்.” உத்தரன் “வாழ்த்தொலியா?” என்றான். “ஏன்?” என்றாள் பிருகந்நளை. “நான் கனவில் போர்க்கூச்சலென எண்ணினேன்.” பிருகந்நளை புன்னகை புரிந்தாள். “போர் என எண்ணி என் உள்ளம் பொங்கியது என்றால் ஐயுறமாட்டீர்கள் என எண்ணுகிறேன். வாழ்த்துக்கூச்சல் என்று அறிந்தபோது சிறு ஏமாற்றமே எழுந்தது.”

“வாழ்த்துக் கூச்சல்கள் சலிப்பூட்டுபவை” என்றாள் பிருகந்நளை. “ஆம், நீங்கள் அறியாததா?” என்றான் உத்தரன். பிருகந்நளை மறுமொழி சொல்லவில்லை. “நான் எப்படி போரிலிறங்கினேன்? என்னுள் இருந்த வேறு எவரோ எழுந்து வந்து போராடியதுபோல. நானே அகன்று நின்று அவனைக் கண்டு வியப்பதுபோல… இப்போது எண்ணினால் கனவென்றே தோன்றுகிறது” என்றான் உத்தரன். கைதூக்கி சோம்பல்முறித்தபோது வலியை உணர்ந்தான். திரும்பாமலேயே அதை உணர்ந்து “பெரிய புண் அல்ல” என்றாள் பிருகந்நளை. “ஆனால் ஆறுவதற்கு சில நாட்களாகும்.”

“என் கனவில் எத்தனைமுறை கண்டது இது! விழுப்புண் பெற்று மீளுதல். குடியினரால் வாழ்த்துரைக்கப்படுதல். மலர்மழை நடுவே நகருலா… இன்று அனைத்தும் மிகச் சிறியவை எனத் தோன்றுகிறது” என்றான் உத்தரன். “இப்புவியில் முதன்மையான இன்பம் என்பது தன்னையறிதலே. தன் ஆற்றலை மட்டும் அல்ல எல்லைகளை அறிதலும் இனியதே.” பிருகந்நளை “போரும் தவமும்தான் தன்னையறிவதற்கான இரு வழிகள் என்பார்கள்” என்றாள். “ஆம், என்றாவது ஒருநாள் தவமும் செய்யவேண்டும்” என்றான் உத்தரன்.

திரும்பி நோக்கி புன்னகையுடன் “எப்போது நீங்கள் உங்களை அறியத்தொடங்கினீர்கள் என்று நான் கூறவா?” என்றாள் பிருகந்நளை. “படைநிரைகள் முன் தேரில் வந்து நின்றபோது.” உத்தரன் சிரித்து “ஆம், முதற்கணம் என்மேல் ஓர் எடைமிக்க பொருள் வீசப்பட்டது போலிருந்தது. கால்கள் நடுங்கலாயின. எண்ணங்களில்லாமல் நெஞ்சு நிலைத்திருந்தது. பின்னர் நிலம் வில்லென்றாகி என்னை வானோக்கி எய்தது” என்றான். “நான் அணிவகுத்து படைக்கலம் ஏந்தி நின்றிருக்கும் போர்ப்படைத்திரளை அதுவரைக்கும் கண்டதில்லை… அது வெறும் காட்சி அல்ல… எப்படி சொல்வேன்? நான் அறியவேண்டிய ஒரு முதல் நூலின் பக்கங்கள் முழுமையாகத் திறந்துகிடப்பதுபோல. ஒரே கணத்தில் நான் அதை வாசித்துவிட்டதுபோல.”

அவனுக்கு மூச்சிரைத்தது. சொல்ல வந்ததை சொல்ல முடியவில்லை என உணர்ந்தவன்போல “எப்படி சொல்வதென்று தெரியவில்லை… நாகத்தைக் கண்டால் புரவி சிலிர்க்குமே அதைப்போல ஒரு பதற்றம்… அப்போது விதையிலிருந்து கீறி எழுந்து ஒரே கணத்தில் மரமாக ஆனேன்” என்றவன் புன்னகைத்து “இந்த ஒப்புமையைக்கூட எங்கிருந்தோ எடுத்துக்கொண்டிருக்கிறேன். என்னிடம் சொற்கள் இல்லை” என்றான். பிருகந்நளை “உங்கள் குருதி அறிந்திருக்கிறது” என்றாள்.

“ஆம், என் மூதாதையரின் குருதி இது. மாமன்னர் நளன் என என்னை நான் உணர்ந்தேன் களத்தில்” என்றான் உத்தரன். “என் கைகள் வில்லம்பை முன்னரே அறிந்திருந்தன என்று தோன்றியது. எனக்குத் தெரியாததை என் கைகள் அறிந்திருந்தன. இன்னும் சற்று பயின்றால் நீங்கள் இல்லாமலேயே என்னால் கர்ணனை எதிர்கொண்டிருக்க முடியும்.” பிருகந்நளை “உங்கள் விழிகளை நோக்கியிருக்கிறேன். அவை படைக்கலப் பயிற்சியை ஒருகணமும் தவறவிட்டதில்லை. உள்ளிருந்து பிறிதொருவர் அதை நோக்கி பயின்றுகொண்டிருந்திருக்கிறார்” என்றாள்.

“இப்போது உங்களுக்கு பிழைத்த அம்புகளைவிட தொட்ட அம்புகள் மிகை. ஆனால் பயிற்சிக்களத்தில் நின்று அம்பெய்யத் தொடங்கும்போது மேலும் இலக்குகள் பிழைப்பதை உணர்வீர்கள்” என்றாள். “ஏன்?” என்றான் உத்தரன். “இளவரசே, களத்தில் நின்றிருப்பது மற்றொன்று. உள்ளமும் கைகளும் விழிகளும் புலன் ஒன்றென்று ஆகி அக்கணத்தில் மட்டுமென நிலைகொள்வது அது. அது உங்களுக்கு இயல்பாகவே கைவருகிறது. முதல் அம்பை விட்டதுமே அங்கு சென்று நின்றுவிட்டீர்கள். சிம்மம் குருதி வாடையை தன் குருதியால் அறிகிறது” என்றாள் பிருகந்நளை. “ஆனால் விற்பயிற்சி என்பது முற்றிலும் வேறு. சினமின்றியும் போர்முனையின் உச்சநிலை இன்றியும் அம்பும் அகமும் ஒன்றென்றாவது அது. அதை பயில்க!”

“ஆம்” என்றான் உத்தரன். “இன்னமும் ஓராண்டு. மிகையென்றால் ஈராண்டு. வில்லுடன் உங்கள் முன் வந்து நிற்பேன்.” பிருகந்நளை புன்னகைத்தாள். “இது முதல் போர். இங்கே அத்தருணத்தின் தெய்வமெழுதல் உங்களை நிற்கச்செய்தது. அடுத்த போர் இப்போரின் நினைவுகளால் ஆனது. அந்நினைவே உங்களை தன்னை மறக்கவிடாது. எனவே தெய்வம் எழாது. இவ்வெற்றி ஆணவமாகச் சமைந்தது என்றால் தெய்வங்கள் எதிரணியில் சென்று சேரவும்கூடும். இனி உங்கள் போர்களை வெல்லப்போவது நீங்கள் மட்டுமே. அதற்கு பயிற்சி ஒன்றே கைகொடுக்கும். போரில் முற்றிலும் விலகி நின்று வெறும் பயிற்சியொன்றாலேயே ஈடுபடுகையிலேயே எப்போதும் எங்கும் வெல்லும் வீரர் என்றாகிறீர்கள்” என்றாள்.

“இனி போர்களை உங்கள் கைகளே நிகழ்த்தட்டும். உள்ளம் போரை முழுமையாகக் காணும் தொலைவொன்றில் ஊழ்கத்தில் அமையட்டும்.” உத்தரன் சில கணங்களுக்குப்பின் “நீங்கள் நான் எண்ணுபவர்தானா?” என்றான். பிருகந்நளை ஒன்றும் சொல்லாமல் புரவியை சவுக்கால் தட்டினாள். “பிறிதொருவராக இருக்க முடியாது” என்றான் உத்தரன். “உள்ளத்தில் இசையோகிக்கு எப்பொருளும் இசைக்கலமே என்பார்கள். நான் உங்கள் கைகளில் வெறும் கிளிஞ்சல்.” பிருகந்நளை புன்னகைத்து திரும்பிக்கொண்டாள். அவள் மறுமொழி சொல்லப்போவதில்லை என்றுணர்ந்து உத்தரன் மீண்டும் அமைதியடைந்தான்.

புயல் பெருகிவந்து சூழ்ந்துகொள்வதுபோல விராடபுரியின் மக்கள்திரள் அவன் தேரை தன்மேல் எடுத்துக்கொண்டது. அவன் அந்த முகங்களை பார்த்தான். அந்த மெய்ப்பாடுகளை களிவெறி என்றும் கொலைவெறி என்றும் கடுந்துயர் என்றும் தாளாவலி என்றும் தெய்வமெழுந்ததென்றும் பேயுருக்களென்றும் எப்படி வேண்டுமென்றாலும் சொல்லலாம் என்று தோன்றியது. இதோ இக்கிழவன் சிரிக்கிறானா அழுகிறானா? இவன் என்னை வாழ்த்துகிறானா நெஞ்சிலறைந்து தீச்சொல்லிடுகிறானா? இவன் என்மேல் மலர் வீசுகிறானா வாள் எறிகிறானா? உச்சங்களனைத்தும் ஒன்றேதானா? உச்சங்களைத்தான் தெய்வம் என்றார்களா? அங்கு செல்ல அஞ்சித்தான் மானுடர் இங்கு எளிதென வாழ்கிறார்களா?

அவர்கள் அத்தனைபேரும் தன்னை ஏளனம் செய்தவர்கள் என்பதை அவன் அப்போது உணர்ந்தான். அவன் நோக்காதொழிந்த அத்தனை விழிகளையும் நோக்கி கணக்கு வைத்திருந்த ஒருவன் அவனுள் இருந்து எழுந்தான். அவர்களின் ஏளனத்தை வெல்லும்பொருட்டே அறிவின்மையொன்றை அணிந்துகொண்டிருந்தேன். கொடிய தந்தையின் உள்ளத்தைக் கவர ஆடைதுறந்து வந்து நிற்கும் இளமைந்தன் போலிருந்தேன். என்னை ஏளனம் செய்ய வைப்பதனூடாக அவர்கள் என்னை வெறுக்காமல் பார்த்துக்கொண்டேன். அவர்கள் உள்ளத்தின் ஆழத்தில் அறியாச் சிறுவனாக வாழ்ந்தேன்.

சூழ்ந்து அலையடித்த வாழ்த்தொலிகளுக்கு நடுவே இடையறாது பெய்த மலர்மழையில் கைகூப்பி நின்றபடி அவன் கணம்கணமாக வாழ்ந்து வந்துகொண்டிருந்தான். பெண்கள் சூழ இருந்த தருணங்களை கண் முன் என நோக்கினான். அவர்களுக்குள் உறையும் அன்னையரையே எனக்குச் சூழ அமர்த்திக்கொண்டிருந்தேன். அவர்கள் மடியில் தவழும் மகவென்றிருந்தேன். என்னை இகழ்கையில் இவர்கள் குற்றவுணர்வு கொண்டிருந்தார்களா? தங்கள் எண்ணங்கள் தோற்கடிக்கப்படுவதை இவர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்?

குளிர்காற்றுபோல வந்து அறைந்த நடுக்கம் ஒன்றால் அவன் விழப்போனான். தூணைப் பற்றியபடி நிலைப்படுத்திக்கொண்டு அவர்களை நோக்கினான். இவர்கள் எல்லா எதிர்பாராமைகளையும் கொண்டாடுவார்கள். இன்று இவர்கள் அறிந்தவை அனைத்தும் பொய்யென்று நாளை சொல்லப்பட்டால் அதனுடன் சென்று சேர்ந்துகொள்வார்கள். அங்கு நின்று கூத்தாடுவார்கள். அத்தருணத்தில் வாளை உருவிக்கொண்டு அக்கூட்டத்தின் நடுவே பாய்ந்து முகம் விழிநோக்காது வெட்டி வீழ்த்தவேண்டும் என்னும் வெறியே மீறியெழுந்தது. அவர்களின் குருதியிலாடவேண்டும். அள்ளிப்பருகவேண்டும். காய்ச்சல்கண்டவன்போல நடுங்கியபடி அவன் நின்றிருந்தான். விழிநோக்கு மறைந்து வெறும் வண்ணக்கொப்பளிப்புகளே எஞ்சின.

நெடுநேரம் கடந்து வியர்வை குளிர விடாய் எழ அவன் சூழ்விழிப்பு கொண்டபோது எண்ணங்கள் அடங்கிவிட்டிருந்தன. நீள்மூச்சுக்கள் எழுந்துகொண்டே இருந்தன. புன்னகையுடன் “அரண்மனை வந்துவிட்டதா?” என்றான். பிருகந்நளை “ஆம், முகப்பு தெரிகிறது” என்றாள். “அங்கே அரசவரவேற்பு இருக்கும்… கவிஞர்கள் பாடலியற்றத் தொடங்கிவிட்டிருப்பார்கள்” என்றான். “ஆம், நாளைமுதல் நீங்கள் யார் என்பதை சூதர்கள் முடிவுசெய்வார்கள்” என்றாள் பிருகந்நளை.