மாதம்: ஜூலை 2017

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 61

60. நிழலியல்கை

flower“சூதாடுவது வெறும் ஆடலல்ல, அது தெய்வங்களை அறைகூவுதல்” என்றார் ஆபர். “தற்செயல்களுடன் மானுடன் விளையாடலாகாது. தற்செயலென்னும் வடிவில் எழுந்தருள்வதே தெய்வம்.” குங்கன் தாடியைத் தடவியபடி பெருமூச்செறிந்தான். விராடர் “ஆனால் தொன்றுதொட்டே இது ஆடப்படுகிறது, ஷத்ரியர்களுக்குரிய கலைகளில் ஒன்றாகக் கற்பிக்கப்படுகிறது” என்றார்.

“ஆம், கையருகே பேருருவம் கொண்டு நின்றிருக்கும் ஒன்றைத் தவிர்ப்பது அவ்வளவு எளிதல்ல” என்றார் ஆபர். “அத்துடன் ஊழ்வடிவமான தெய்வத்துடன் களமாடுவது ஷத்ரியனின் குலஅறமேயாகும். துணிவதும், துயர்களை எதிர்கொண்டு மீள்வதும் வேண்டியிருந்தால் தணியாமல் தன்னைக் கொடுப்பதும் அவன் கற்றுக்கொண்டாக வேண்டியவை. ஒவ்வொன்றும் ஒரு நூறாயிரத்துடன் பிணைந்துள்ளமையால் வைசியன் ஆடும் களமும் தெய்வங்களுக்குரியதே. ஆகவே ஷத்ரியனுக்கும் வைசியனுக்கும் மட்டும் சூது ஒப்பப்பட்டுள்ளது. அது மருந்து என, ஆசிரியர் அளித்த அளவுக்குள் மட்டும். துணிவைக் கற்றுக்கொள்ள துணியும் உளநிலையை நிலைநிறுத்த மட்டுமே சூது பயில்க என்கின்றன நூல்கள்.”

“தன்னைக் கடந்து சூதாடுபவனை நாற்களம் தன்னில் ஒரு காய் என அமர்த்திவிடுகிறது. அவன் ஆடுவதில்லை, ஆடப்படுகிறான் என அவன் அறிவதே இல்லை. புவியின் இருள்நிழல் ஊடாட்டங்களனைத்தையும் பரப்பிக் காட்டும் வல்லமை கொண்டிருப்பதனால் ஒருவன் வாழ்நாள் முழுமையையும் இக்களத்தை நோக்கிக் குனிந்தே கழித்துவிடமுடியும். அரசே, சூதில் மறந்து மீண்டெழுந்தவர் அரிதிலும் அரிது.”

“ஏனென்றால் சூது வெளியே நிகழ்வது மட்டும் அல்ல. விரிக்கப்பட்டிருக்கும் இக்களம் ஆடுபவனின் அகம். அகத்தை இப்படி ஏதேனும் புறப்பொருளில் ஏற்றிக்கொள்ளாமல் நம்மால் பார்க்க முடியாது. அந்தணரின் வேள்விச்சாலையும், நிமித்திகர்களின் பன்னிருகளமும் வணிகர்களின் துலாக்கோலும் உழவர்களின் வயலும் உள்ளமே என்றறிக! நாற்களமென இருண்டும் ஒளிர்ந்தும் முடிவிலியை மடித்துச் சுருட்டிவைத்து இதோ பரவியிருப்பது உங்கள் இருவரின் உள்ளம். இக்காய்களை நகர்த்தி நகர்த்தி நீங்கள் கண்டுபிடிப்பது உங்களையேதான்.”

“வாழ்க்கையின் நிகழ்வுகளை அறிய உள்ளத்தை நோக்குக! உள்ளே அறிந்ததைக்கொண்டு வெளியே வென்றடைக! உள்ளத்தை மட்டுமென உலகியலான் நோக்கலாகாது. அறியுந்தோறும் ஆழம் மிகும் அந்தக் கருஞ்சுனையில் இறங்க அறிதலையே வாழ்வெனக் கொண்டவர்களுக்கன்றி பிறருக்கு முன்னோர் ஒப்புதல் அளிக்கவில்லை” என்றார் ஆபர்.

“அக்களத்தின் முன் அமர்ந்த நளன் ஆடியது எதைக் கொண்டு? அரசே, ஒன்றறிக! சூதுக்களத்தில் எதுவும் திசைகளுக்கு அப்பாலிருந்து வருவதில்லை. கைவிரல்களென வந்தமைவது ஆடுபவனின் ஆழமே. அனைத்தும் அங்கிருந்தே எழுகின்றன. விழையப்படாத தோல்வியை எவரும் அடைவதில்லை” என்றார் ஆபர். “அவன் விழைந்தானா அரசை இழக்க? அரிய துணைவியுடன் இழிவுபட்டு கானேக?” என்றார் விராடர் சினத்துடன். “ஆம்” என்று ஆபர் சொன்னார். “ஏனென்று அறிய நளதமயந்தியின் கதையை மீண்டும் கேட்கவேண்டும்.”

விராடர் கொந்தளிப்புடன் “வீணுரை. நீங்கள் அந்தணர் என்பதனால் நான் இதை பணிந்து கேட்டாகவேண்டும். ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை” என்றார். இகழ்ச்சியுடன் “அந்தணருக்கு இருக்கும் உளச்சிக்கல் இது. அவர்கள் வாழ்வதில்லை. பெருக்கு நோக்கி கரையிலமர்ந்திருப்பவர்கள். நீந்துபவர்களின் கையசைவை கால்விசையைக் கண்டு கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்” என்று தொடர்ந்தார்.

ஆபர் புன்னகையுடன் “ஆம், அவர்களால்தான் கருத்துக்களை உருவாக்கிக்கொள்ள முடியும். ஏனென்றால் மூழ்கிச் சாவோம் என்னும் அச்சம் அவர்களுக்கில்லை. தன் நீச்சலை மட்டுமே கொண்டு அனைத்தையும் கணிக்கும் எல்லையும் கட்டுப்படுத்துவதில்லை” என்றார். விராடர் திரும்பி “குங்கரே, நீங்கள் சொல்லுங்கள். உங்கள் சொற்களை நான் நம்புகிறேன். சூதில் தான் தோற்கவேண்டுமென நளன் விரும்பினானா?” என்றார்.

குங்கன் தாடியைத் தடவியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “ஆம், அவரால் சொல்லமுடியும்” என்றார் ஆபர். குங்கன் நிமிர்ந்து ஆபரை நோக்கினான். இருவர் விழிகளும் சந்தித்தன. சில கணங்களுக்குப்பின் குங்கன் மீண்டும் பெருமூச்சுவிட்டான். “சொல்லுங்கள் குங்கரே, அவர் சொல்வது உண்மையா?” என்றார் விராடர். குங்கன் “ஆம்” என்றான்.

flowerஉச்சி உணவு உண்டு சுதேஷ்ணை துயில்கொண்டபின் திரௌபதி மெல்ல வெளியே வந்தாள். அரண்மனை அறைகளுக்குள் இருப்பது அவளுக்கு சலிப்பூட்டியது. வெளியே சென்றுவரவேண்டும் என்ற எண்ணம் எழுந்தபின்னர்தான் எப்போதும் அவள் அரசியல்ல, சேடி என்னும் தன்னுணர்வை அடைந்தாள். நீள்மூச்சுடன் இடைநாழியில் நடந்தாள். காவலர்கள் அவளைக் கண்டு நட்புடன் புன்னகைத்தனர். அரண்மனைத்தோட்டத்தில் நிழல் செறிந்து கிடந்தது. மரக்கூட்டங்களுக்குமேல் கதிர்வெளி பெருகியிருப்பதை கீழே நின்றிருக்கும் எவரும் உணரமுடியாது.

அவள் சோலைக்குள் சென்றாள். உதிர்ந்து கிடந்த மலர்களை மிதிக்காமல் நடப்பதற்காகப் போடப்பட்டிருந்த கற்களில் கால்வைத்து உள்ளே சென்றாள். மலர்கள் வெயிலில் வாடிய மணம் நிறைந்திருந்தது. காலையில் மலர்மணத்திலிருக்கும் புத்துணர்வுக்கு மாற்றாக இனிய சோர்வொன்றை அளித்தது அந்த மணம். பறவைகள் கிளைநிழல் செறிவுகளுக்குள் புகுந்து சிறகோய்ந்து அமர்ந்திருந்தன. அவற்றில் சில பறவைகள் எழுந்து அமர்ந்து கலைந்து ஓசையிட்டன. மிகத் தாழ்வாக வந்து வளைந்து மேலேறியது ஒரு சிறிய குருவி.

அவள் அங்கிருந்த ஒரு கற்பீடத்தில் அமர்ந்தாள். கைகளை மார்பில் கட்டியபடி மரக்கிளைகளை அண்ணாந்து நோக்கிக்கொண்டு வெறுமனே உள்ளத்தை ஓடவிட்டாள். தொலைவில் முதுவிறலியான சாலினி கூன்கொண்ட உடலுடன் முலைகள் தொங்க, இரு கைகளையும் நிலம் நோக்கி வீசி, நான்குகால் விலங்கென அங்கிருந்தே புன்னகைத்தபடி வருவது தெரிந்தது. அவள் தன்னை தேடித்தான் வருகிறாள் என்று தெரிந்ததும் அவள் சலிப்புடன் கால்களை நீட்டிக்கொண்டாள்.

சாலினி அருகே வந்து “நலமாக இருக்கிறீர்களா, தேவி?” என்றாள். திரௌபதி “ஆம், சேடியருக்குரிய நலம்” என்றாள். சாலினி அவளருகே நிலத்தில் அமர்ந்து அங்கிருந்த சிறிய பாறை ஒன்றில் சாய்ந்து முதுகை நிமிர்த்திக்கொண்டாள். “அன்னையே, தேவீ” என அலுப்பொலி எழுப்பியபின் “சேடியருக்கென்ன? மேலோர் அளி இருந்தால் அரண்மனை வானுலகு” என்றாள். அவள் ஏன் வந்திருக்கிறாள் என்று திரௌபதி புரிந்துகொண்டாள். சாலினி “நான் அகத்தளத்திற்குச் சென்றேன். அங்கே அந்தச் சிறுமிக்கு மீண்டும் ஒரு சிறு தேவாட்டு பூசை நிகழ்த்தினேன்” என்றாள்.

“எப்படி இருக்கிறாள்?” என்றாள் திரௌபதி. சாலினி “நான் அப்போதே சொன்னேன், ஒன்றுமில்லை என்று. கன்னியர் இவ்வாறு கந்தர்வர்களால் கொள்ளப்படுவது எப்போதும் நிகழ்வதுதான். நான் என் நீண்ட வாழ்நாளில் எவ்வளவோ பெண்களை பார்த்துவிட்டேன்” என்றாள். “அவள் உள்ளம் நிலையழிந்திருப்பதுபோலத் தோன்றியது” என்றாள் திரௌபதி. “நான் ஒருமுறை நோக்கும்போது அழுதுகொண்டிருந்தாள். ஒருமுறை இருளில் உடலை ஒடுக்கி சுருண்டுகிடந்தாள். ஒருநாள் மாலையில் அணியும் ஆடையும் புனைந்து விழிபொங்கி நகைகொண்டிருந்தாள். அவள் பேசுவன எதுவும் இங்குள்ள சூழலுடன் பொருந்தவில்லை. இங்கில்லாத எவரையோ நோக்குபவள்போல விழிகொண்டிருக்கிறாள்.”

சாலினி கிளுகிளுப்புடன் நகைத்து “அனைத்தும் கந்தர்வர்களால் கொள்ளப்படுவதன் இலக்கணங்கள்” என்றாள். “தேவி, கந்தர்வர்களைக் கண்டதும் கூடியதும் அல்ல பெண்களை நிலையழியச் செய்வது. கந்தர்வர்கள் அப்பெண்ணின் உள்ளே விதைவடிவில் உறையும் கந்தர்வக் கன்னியை வெளியே எடுத்து அதனுடன்தான் கூடிக்களிக்கிறார்கள். தன்னை தானல்லாத ஒன்றென காணும் அதிர்ச்சியே பெண்களை உளம்சிதறச் செய்துவிடுகிறது. பெரும்பிழை இழைத்துவிட்டதாகவும், உடலும் உள்ளமும் கறை கொண்டுவிட்டதாகவும் உணர்கிறார்கள். இழிவுணர்வும் குற்றவுணர்வும் கொண்டு துவள்கிறார்கள். பின்னர் அக்கேளியை நினைவுகூர்ந்து மலர்ந்தெழுகிறார்கள்.”

குறுஞ்சிரிப்புடன் சாலினி தொடர்ந்தாள் “மெல்ல அவர்கள் உணர்வார்கள் அது பிறிதொருத்தி என. அப்பிறிதை ஒடுக்கி உள்ளே ஒளிக்கக் கற்றுக்கொள்வார்கள். தேவி, முற்றிலும் சீரானவர்கள் பிழையின்றி இரண்டாகப் பிரிந்தவர்கள்.” திரௌபதி அவளை நோக்கியபின் “நான் சுபாஷிணியை நன்கறிந்திருப்பதாக எண்ணியிருந்தேன்” என்றாள். “என்ன அறிந்திருந்தீர்கள்?” என்றாள் சாலினி. “எளிய பெண். இனியவள். கனவுகள் கொண்ட அகவையள். இன்னும் குழந்தைமை மாறாதவள்” என்றாள்.

“ஆம், ஆனால் அவள் விழிகளை நோக்கியிருந்தீர்கள் என்றால் அவை எப்போதும் பிறிதொன்றையும் நோக்கிக்கொண்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். நம்முடன் உரையாடுகையில் அவள் தன்னுடனும் உரையாடிக்கொண்டிருந்தாள், நம்மை நோக்குகையில் நம்மைக் கடந்தும் பார்வைகொண்டிருந்தாள். தேவி, அவள் ஏன் எளிதில் புண்படுபவளாக இருந்தாள்?” திரௌபதி சொல் என்பதுபோல நோக்கினாள்.

“அவள் மிகுந்த தன்முனைப்பு கொண்டிருந்தாள். இப்புவியையே தன்னை மையமாக்கி அறிந்தாள். அவளுக்குள் புவியாளும் சக்ரவர்த்தினிகளை விடவும் மேலான பீடத்தில் அவளே அமர்ந்திருந்தாள்.” சாலினி கண்களைச் சுருக்கி “அத்தகையோரே கந்தர்வர்களுக்கு விருப்பமானவர்கள். தேவி, குரங்குகள் தேடித்தேர்ந்த இளநீரை அவற்றை துரத்திவிட்டு பறித்துக்கொண்டுவருவார்கள். அவை சுவை மிக்கவையாக இருக்கும். கந்தர்வர்களால் சுவைக்கப்பட்ட பெண்ணே மானுடருக்கு மிகமிக இனியவள்” என்றாள்.

திரௌபதி புன்னகைத்தாள். “ஆம், தேவி. ஆணுக்கு ஒருபோதும் சலிக்காத பெண் எவள்? குன்றாத காமம் கொண்டவள். பெண்காமம் உடலில் மிக எளிதில் வற்றிக்கொண்டிருப்பது. குருதிவிலக்கின் சுழற்சிக்கு ஏற்ப. உடற்களைப்புக்கு ஏற்ப. சூழலின் உணர்வுநிலைகளுக்கு ஏற்ப. அத்துடன் அது தன்னைத்தானே பற்றவைத்துக்கொள்ள இயலாதது. கந்தர்வர்களுக்குரிய பெண்கள் தங்கள் குன்றாக் கற்பனையால் காமத்தை அணையாது காத்துக்கொள்பவர்கள். எரி என தான் தொட்ட ஆணை சூழ்ந்து அணைத்து உள்ளே அமைத்துக்கொள்ள அவர்களால் இயலும்.”

திரௌபதி “அத்தகைய பெண்களுக்கு ஏதேனும் உடற்கூறு சொல்லப்பட்டிருக்கிறதா உன் நூல்களில்?” என்றாள். “ஆம், அவர்களின் உதடுகள் எப்போதும் ஈரம் கொண்டிருக்கும். கண்களில் உலகை ஏளனம் செய்வதுபோன்ற நகைப்பிருக்கும்” என்றாள் சாலினி. “நகைக்கவும் நகையூட்டவும் தெரிந்தவர்கள் என்பதனால் தோழியர் சூழவே இருப்பார்கள். ஆனால் பிறர்குறித்த மன்றுபேசுதலில் ஆர்வம் கொள்ளமாட்டார்கள். காவியமும் இசையும் கற்றுத்தேரும் திறன்கொண்டிருப்பார்கள். ஆனால் மிக எளிதில் இவற்றிலிருந்து அகன்று வேறெங்கோ சென்று நின்றிருப்பதும் அவர்களின் இயல்பாக இருக்கும். சுவை நுண்மை கொண்டிருப்பர். அணிகொள்ள விழைவர். ஆனால் சுவையாலோ அணியாலோ ஆட்டுவிக்கப்படாதவர்களாக இருப்பர்.”

சாலினி தனக்கே என தலையசைத்து “சுருங்கச்சொல்லின் இங்குள்ள சிறந்ததை எய்த விழைவர். ஆனால் இங்குள்ள எதையும் இலக்கெனக் கொள்ளமாட்டார்கள்” என்றாள். திரௌபதி கைகளை மார்பில் கட்டியபடி விழிகள் தொலைவில் தெரிந்த கொடிமுல்லையில் நிலைக்க அசைவிலாது அமர்ந்திருந்தாள். “நான் சொல்வது அவளைப்பற்றி மட்டும் அல்ல என்று அறிந்திருப்பீர்கள், தேவி” என்றாள் சாலினி. திரௌபதி “ஆம்” என்றாள். “அவளை மூன்று கந்தர்வர்கள் ஆண்டனர். ஐந்து கந்தர்வர்களை ஆள்பவர் நீங்கள்” என்றாள் சாலினி. “உச்சிக்கிளையில் பழுத்த கனி, அது வீரர்களுக்கு மட்டுமே உரியது.”

திரௌபதி “நீ கருதி வந்ததைச் சொல்” என்றாள். “என்னை கீசகர் அழைத்தார். மலைபோல் மேனியுடன் நான் கண்டிருந்த மாவீரர். கண் களைத்து தோள் சடைத்து சோர்வுற்றிருந்தார். அவளிடம் சொல், நான் உருகி அழிந்துகொண்டிருக்கிறேன் என என்று என்னிடம் சொல்லும்போது குரல் உடைந்து அழுதார். என்னிடம் அவள் வேண்டுவதென்ன என்று கேள் என்றார்.”

“நான் வேண்டுவதொன்றும் இல்லை, நான் என் வாழ்க்கையை கந்தர்வர்களுக்கு அளித்துவிட்டவள்” என்றாள் திரௌபதி. “ஆம், அதை நான் அவரிடம் சொன்னேன். அது மறு உலகம். அங்கே அவர் வரமுடியாது. அவர் அவ்வாறு பிறிதொரு கந்தர்வக் கன்னியை கண்டிருக்கிறார். அந்த உலகம் வேறு என அவர் உணர்ந்துமிருக்கிறார்” என்றாள் சாலினி. ”தேவி, அவர் அங்கு கண்ட அக்கந்தர்வப் பெண்ணும் உங்களைப்போலவே பெருந்தோள் கொண்டவள்.”

“அவருக்கு என்ன வேண்டும்? மற்போருக்கான மறுதரப்பா?” என்று திரௌபதி எரிச்சலுடன் கேட்டாள். “தேவி, நேரடியாகச் சொல்வதில் எத்தயக்கமும் இல்லை. ஆணையும் பெண்ணையும் இணைப்பது முதன்மையாக உடலே. வேறெந்த இயல்புகளையும் உணர்வுகளையும்விட உடற்பொருத்தமே மெய்க்காதலை உருவாக்கி நிலைநிறுத்துகிறது. உங்களை தன் மறுபாதி என்று உணர்ந்து தவிப்பது கீசகர் அல்ல, அவரது உடல். உள்ளம் மொழிகொண்டது, கல்வியறிவது, நெறிகேட்பது. உடல் நாம் ஒருபோதும் அறியமுடியாத ஊர்தி. அது நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால்தான் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. நாம் அதை அறிவது அதை நாம் கட்டுப்படுத்த முயன்று தோற்கும்போது மட்டுமே.”

“நான் அவரை ஏற்கமுடியாது. எந்நிலையிலும்” என்றாள் திரௌபதி. “நீ பெண் என்பதனால் அது ஏன் என்று கேட்கமாட்டாய் என நினைக்கிறேன். ஆண் உடலைவிட நுண்மைகொண்டது பெண் உடல். ஒருவரைக் கண்டதுமே ஒவ்வாதென நம் உடல் சொல்லிவிடுகிறது. அதற்குமேல் அதனிடம் நாம் எதையும் உசாவ முடியாது.” சில கணங்கள் சாலினி அசைவிலாது அமர்ந்திருந்தாள். பின்னர் எழுந்துகொண்டு “ஆம், இதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை” என்றாள். முதுகை நிமிர்த்தி “அன்னையே…” என முனகியபின் “ஆனால் தேவி, புறக்கணிக்கப்பட்ட காமமே புவியில் பெரும் நஞ்சு. எச்சரிக்கையுடன் இருங்கள்” என்றாள். திரௌபதி புன்னகைத்து “நான் கந்தர்வர்களால் காக்கப்படுகிறேன்” என்றாள்.

flowerஅடுமனைப் பணிகள் முடிந்து அனைத்தும் ஒழுங்கமைந்தபின் சம்பவன் ஈரக்கையுடன் சுற்றிலும் நோக்கினான். கலங்கள் அனைத்தும் ஈரம் வழிந்துலர சாய்ந்தும் சரிந்தும் வாய்திறந்து நின்றுகொண்டிருந்தன. அடுமனைத் தரையை நன்றாக கழுவித்துடைத்து பூச்சிகள் படியாமலிருக்க புல்தைலமிட்டிருந்தனர். அவன் புன்னகையுடன் நோக்கியபடி அடுமனையின் கூடத்தை சுற்றிவந்தான். அஸ்வகன் “நாம் படுத்துக்கொள்ளலாமா? இப்போதே பொழுது கடந்துவிட்டது. காலையில் எழுந்து தொடங்கிய பணி. தசைகள் உடைந்துவிடப்போகின்றவைபோல் வலிகொண்டிருக்கின்றன” என்றான்.

“அடுதொழிலுக்கு இணையான உவகை அளிப்பது கழுவி நாள் களைந்து நாளைக்கென ஒருங்கியிருக்கும் அடுமனை” என்றான் சம்பவன். “கலங்களும் இரவுறங்கவேண்டும் என்று சொல்கிறது நூல். ஆகவே அடுமனை மிச்சிலுடன் எந்தக் கலத்தையும் இரவில் விட்டுவைக்கலாகாது. நாளின் எச்சம் இருக்கையில் அவை விழித்திருக்கும். துயில் நிறைந்து மறுநாள் விழித்தெழும் கலம் புன்னகைக்கும். அதில் சமைக்கையில்தான் அது உளம் நிறைந்து அமுது விளைவிக்கும்.”

அஸ்வகன் “நிசி கடந்தபின் தத்துவம் பேசுவது நல்லதல்ல. பேய்கள் வந்து அவற்றை கேட்கத்தொடங்கினால் அவை தத்துவத்திற்குள் புகுந்துவிடும்” என்றபின் “ஏற்கெனவே வேண்டிய பேய்கள் அங்கே உள்ளன” என்றான். அவர்கள் அடுமனைக் கதவை இழுத்துப் பூட்டியபின் வெளியே சென்றனர். விண்மீன்கள் செறிந்த வானத்தின் கீழே காற்றில் சருகுகள் அசைந்துகொண்டிருந்தன. குளிர்பட்டு பிடரி சிலிர்த்தது. “நல்ல குளிர்” என்றான் அஸ்வகன். “நான் இங்கேயே படுத்துக்கொள்கிறேன். அடுமனை வெப்பத்தை இக்குளிர் நிகர்செய்யும்” என்றான்.

“அதோ” என்றான் அஸ்வகன். அப்பால் ஒரு ஈச்சம்பாயை எடுத்து திண்ணையில் விரித்து வலவன் துயின்றுகொண்டிருந்தான். “மூச்சொலி இல்லை என்பதனால் அவர் துயிலுமிடமே தெரிவதில்லை” என்றான் சம்பவன். “அருகிலேயே நானும் படுத்துக்கொள்கிறேன். அவர் அருகே படுப்பதைப்போல நான் மகிழ்வுகொள்ளும் தருணம் பிறிதில்லை.” அஸ்வகன் “தந்தையருகே படுக்க மைந்தர் விழைவதுண்டு” என்றான். “தந்தை நம்மை ஒரு பொழுதில் இறக்கி விட்டுவிடுகிறார். நாம் தந்தையிடமிருந்து அகன்றும் விடுகிறோம்” என்றான் சம்பவன்.

ஈச்சம்பாய் ஒன்றை விரித்து அவன் படுத்துக்கொண்டான். “நான் உள்ளே சென்று படுக்கிறேன்” என்று அஸ்வகன் சென்றான். திண்ணையில் மென்முருக்கு மரத்தாலான தலையணை இருந்தது. அதை எடுத்து வைத்துக்கொண்டு மல்லாந்து படுத்து நிலவை நோக்கியபடி மெல்ல விழிசொக்கினான். நிலவெழுந்த காடு திறந்துகொண்டது. மரங்களுக்குள் தேங்கிய நிலவொளி ஒரு பெண்ணென உருக்கொண்டு எழுந்து வந்தது. பாம்பென சீறிய மூச்சு. விழி மின்னொளி. அவன் அவளிடம் “எங்கு சென்றிருந்தாய்?” என்றான். அவள் “நான் வேறு என்கிறார்கள்” என்றாள். “யார்?” என்றான். “முதுமகள், என்னைப் பிளந்து இரண்டாக ஆகிவிடும்படி ஆணையிடுகிறாள்.”

மெல்லிய முழவோசை கேட்டு அவன் எழுந்தபோது முன்னரே வலவன் எழுந்து நின்றிருந்தான். இருளில் அடுமனை முற்றத்திற்கு அப்பால் நிழலுருவென சூதர் ஒருவர் நின்றிருந்தார். சடைத்தலையின் மயிர் மூன்றாம்பிறை ஒளியில் மெல்லப்பிசிறி பரவியிருந்தது. மரவுரி அணிந்த நீண்ட மேனி. தாடி நிழல் மார்பில் விழுந்திருந்தது. “நெடுந்தொலைவிலிருந்து வருகிறேன். இப்பின்னிரவில் இல்லங்களின் கதவைத் தட்டத் தோன்றவில்லை. அன்னசாலை என உசாவியபோது ஒருவன் இதை சுட்டிக்காட்டினான்.”

“வருக, உத்தமரே!” என்றான் வலவன். “உரிய இடத்திற்குத்தான் வந்துள்ளீர்.” “நான் மாகத சூதன், திரயம்பகன். பாடியலைபவன். நேற்று முன்னாள் உண்டேன். இந்நகரை தெற்கு மயானவாயில் வழியாக வந்தடைந்தேன்” என்றார். “எனக்கு உணவில் நெறியென ஏதுமில்லை. எவ்வுணவும் ஏற்பேன். கலத்தைச் சுரண்டிய வண்டலோ மிச்சிலோகூட உகந்ததே.” வலவன் “ஆனால் வந்து அமர்ந்தவருக்கு அளிக்கும் உணவு அமுதென்றிருக்கவேண்டும் என்பது எங்கள் கொள்கை” என்றான்.

சம்பவன் “நான் கலம்கழுவி வைத்துவிட்டேன், ஆசிரியரே” என்றான். “நன்று. இவருக்கு மிகச் சிறிதளவு உணவே போதும். நான் சமைக்கிறேன்” என்றான் வலவன். சம்பவன் “இல்லை, நீங்கள் அமருங்கள். நான் விரைவிலேயே சமைத்துவிடுவேன்” என்றான். வலவன் அவன் தோளை அழுத்தி புன்னகைத்தபின் உள்ளே சென்றான். “நான் கைகால்களை கழுவிக்கொள்கிறேன்” என்றார் திரயம்பகர்.

அவர் அமர்ந்துகொண்டு கண்களை மூடி சீராக மூச்செறிந்து துயில்பவர்போல அமைந்தார். தாலத்தில் மூன்றுவகையான உணவுடன் வலவன் வெளியே வந்தான். “உத்தமரே, அருந்துக!” என்றான். “நான் சுவையறிந்து உண்ணலாகாதென்ற நெறிகொண்டவன். இது எதற்கு?” என்றார் திரயம்பகர். “நான் சுவையை உருவாக்கியாகவேண்டும் என்னும் நெறிகொண்டவன்” என்றான். அவர் உணவை சீரான அசைவுகளுடன் உண்டார்.

கைகழுவி அவர் அமர்ந்ததும் வலவன் “துயில்கொள்க, உத்தமரே!” என்றான். அவர் “அடுமனையாளனின் அறம் உன்னில் வாழ்கிறது, பேருடலனே” என்றார். “உன் தோள்களைக் கண்டால் நீ அஸ்தினபுரியின் பீமனுக்கும் விராடபுரியின் கீசகனுக்கும் நிகரானவன் என்று தோன்றுகிறது.” வலவன் “நான் விரும்பி உண்பவன், உத்தமரே” என்றான். அவர் அவனை நோக்கிக்கொண்டிருந்தார். வலவன் அவருக்கும் பாய் ஒன்றை விரித்துவிட்டு தான் படுத்துக்கொண்டான்.

அவர் தன் கையிலிருந்த முழவை மீட்டிக்கொண்டு கீற்றுநிலவை நோக்கிக்கொண்டிருந்தார். “எதை எண்ணிக்கொண்டிருக்கிறீர், சூதரே?” என்றான் வலவன். “பகை தேடிவரும் தோள்கள்” என்றார் சூதர். “இம்முறை அருகிலுள்ளது பகை. பெரும்பகை, ஆனால் மிக எளியது.” வலவன் “கீசகரை சொல்கிறீர்களா?” என்றான். “ஆம்” என்றார் சூதர்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 60

59. அரங்கொழிதல்

flowerதமயந்தியின் அறைக்கதவை மெல்ல தட்டி சேடி “அரசி” என்றாள். அவள் கதவைத் திறந்ததும் “முரசுகள் ஒலிக்கின்றன. அவர்கள் அணுகிவிட்டார்கள்” என்றாள் சேடி. தமயந்தி “கருணாகரர் எங்கிருக்கிறார்?” என்றாள். “அவரும் சிற்றமைச்சர்களும் சிம்மவக்த்ரரும் படைத்தலைவர்களும் அனைவருமே கோட்டைவாயிலுக்கு சென்றுவிட்டார்கள்” என்றாள். தமயந்தி திரும்பி ஆடியில் தன்னை நோக்கியபின் “நான் முகம் கழுவிக்கொள்ளவேண்டும்” என்றாள். அவள் மிக எளிய ஆடையையே அணிந்திருந்தாள். அணிகொள்ளவேண்டுமல்லவா என்று நாவிலெழுந்த சொற்களை சேடி விழுங்கிக்கொண்டாள்.

சேடியுடன் சென்று முகம் கழுவி குழல் திருத்தியபின் தமயந்தி தலைமைச்சேடி சுபத்ரையிடம் “இந்திரசேனையை இங்கே வரச்சொல். இளவரசன் அமைச்சருடன் நிற்கவேண்டும் என்று சொல்லிவிடு” என்றாள். சுபத்ரையின் கண்கள் சிவந்திருந்தன. அவள் விழிகொடுக்காமல் “ஆணை” என்றாள். காவல்மாடத்தின் முரசுகள் ஒலிக்கத் தொடங்கின. அந்த ஓசை அணுகி வருவது போலிருந்தது. தமயந்தி சாளரத்தருகே சென்று வெளியே நோக்கியபடி நின்றாள். முதற்காலை ஒளியில் அரண்மனைமுற்றம் கண்கூசும்படி மின்னியது. கூரைச்சரிவுகள் நீர்ப்படலம்போல ஒளியடித்தன. அவள் பொருளில்லாமல் நோக்கியபடி நின்றாள்.

அகத்தளத்தில் சேடியர் விரைவுகொள்ளும் ஓசைகள் எழுந்தன. அழைப்புகள், ஆணைகள், மந்தணப்பேச்சுக்கள், காலடிகள், வளையொலிகள், உடைச்சரசரப்புகள். எவரோ “வந்துவிட்டார்களடி” என்றனர். “பேசாதே… அரசி” என்றது இன்னொரு குரல். அவர்கள் எவரும் துயருறுவதாகத் தெரியவில்லை. துயரை வெளிக்காட்ட வேண்டுமென்ற கட்டாயம்கூட முதுசேடியருக்கே இருந்தது. இளையோர் ஓசையை தாழ்த்திக்கொண்டாலும் கண்களில் ஆவலும் குறுகுறுப்பும்தான் தெரிந்தன. அவர்கள் எதையோ அடக்கிக்கொண்டதுபோல தோள்கள் இறுகி உடல் குறுகியிருக்க சிற்றடி வைத்து நடந்தார்கள்.

அவர்கள் எதிர்பாராத ஒரு நிகழ்வு, அது அளிக்கும் பரபரப்பின் உவகை என்றுதான் முதலில் தோன்றியது. மாறாதது என அவர்கள் எண்ணும் ஒன்று தலைகீழாக மாறுவது அவர்களுக்குள் எப்போதுமிருக்கும் ஆழத்துக் கனவுகளை தூண்டிவிடுகிறதோ? சுபத்ரையிடம் மெல்லிய சிரிப்புடன் அதைப்பற்றி கேட்டாள். “அவர்களுக்குள் வாழும் கீழ்மை வெளிப்படும் தருணம் இது, அரசி” என்றாள் அவள். சிரித்தபடி “அனைவரிடமும்தான் அது உள்ளது” என்றாள் தமயந்தி.

சுபத்ரை சீற்றத்துடன் “கீழ்மைக்கும் எல்லையுண்டு. அவர்கள் உண்பது தாங்கள் அளித்த அன்னம். இங்கே உங்கள் முன் கண்கள் நீரோட நன்றி சொல்லி விதும்பாத எவருள்ளனர் இந்த அகத்தளத்தில்? உங்களை கண்முன் எழுந்த கொற்றவை என ஒருமுறையேனும் சொல்லி வணங்காதவர் உண்டா என்ன?” என்றாள். “ஆனால் இன்று மறுநிலை கொண்டுவிட்டனர். அவர்கள் குளக்கரையில் பேசுவதை நான் கேட்டேன். தூண்மறைவில் நான் நின்றமையால் என்னை அவர்கள் காணவில்லை. அனைவரும் இளம்சேடிகள்.”

“பேரரசி ஐந்தாம்வர்ணத்தவள் ஆனால் என்ன வேலை பார்ப்பாள் என்று ஒருத்தி கேட்டாள். கன்றுத்தொழு கூட்டலாம். சாணிபொறுக்கி உலரவைத்து எரிவட்டு செய்யலாம் என்றாள் இன்னொருத்தி. அதைவிட தோலுரித்து பதப்படுத்தலாமே என்றாள் அப்பால் ஒருத்தி. அரசிக்கு அதெல்லாம் தெரியுமா என இளையவள் ஒருத்தி கேட்டாள். என்னடி சொல்கிறாய், அவர்கள் யார்? சத்ராஜித் அல்லவா? அவர்களுக்குத் தெரியாத ஒன்று உண்டா என்றாள் இன்னொருத்தி. அனைவரும் சேர்ந்து நகைத்தனர். ஏன் நகைக்கிறார்கள் என்று பிறர் கேட்டுக் கேட்டு அவர்களும் நகைத்தனர்.”

“அங்கே நின்றிருந்த என் உடல் பற்றி எரிந்தது. என்னை அவர்கள் காணவில்லை. அப்படியே திரும்பி வந்துவிட்டேன். இந்த அரண்மனையில் பெண்டிரின் உணர்வுகள் இவைதான், அரசி” என்றாள் சுபத்திரை. “தாங்கள் சத்ராஜித் ஆனதற்காக எவரெல்லாம் பொறாமை கொண்டிருக்கக்கூடும் என எண்ணுகிறீர்கள்? மகதனும் அங்கனும் வங்கனும் மாளவனும் மட்டுமா? அல்ல அரசி, அதற்கிணையாகவே இங்கே அடுமனையில் கலம் கழுவும் சூதப்பெண்ணும் பொறாமை கொண்டிருக்கிறாள். மானுட உள்ளத்தை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.”

தமயந்தி “உள்ளூர எவர் எங்கிருக்கிறார் என நாம் எப்படி அறிவோம்?” என்று புன்னகை செய்தாள். “நான் தங்கள் முடிவை உசாவும் தகுதிகொண்டவள் அல்ல, அரசி. ஆனால் இவர்கள்முன் இப்படி இழிவுகொள்ளத்தான் வேண்டுமா என்றே என் உள்ளம் சொல்கிறது. விதர்ப்பத்தின் இளவரசியென நீங்கள் தலைநிமிர்ந்து தேரேறிச் சென்றிருந்தீர்கள் என்றால் நான் என் தெய்வங்கள் முன் சென்று விழுந்து தலையறைந்து நன்றி சொல்லியிருப்பேன்.”

தமயந்தி “இவை ஊழ் என்றால் அதனுடன் போரிடாமலிருப்பதே மேல்” என்றாள். “இவர்களுக்கும் ஒரு தருணத்தை அளிக்கவேண்டுமென்று தெய்வங்கள் எண்ணியிருந்தால் அவ்வாறே ஆகுக” என்றாள். சுபத்ரை பெருமூச்சுவிட்டு “தங்கள் நிலையை ஏன் என் மடிவளர்ந்த இளையோர் அடையவேண்டும்? அவர்கள் செய்த பிழை என்ன?” என்றாள். “தந்தையின் செல்வத்திற்கு உரிமையுள்ள மைந்தர்கள் பழிக்கும் பொறுப்பேற்றாக வேண்டும்” என்றாள் தமயந்தி.

சுபத்ரை திரும்ப வந்தபோது இந்திரசேனை அவளுடனிருந்தாள். அவள் புத்தாடை அணிந்து அணிபுனைந்திருந்தாள். தமயந்தி விழிதூக்க சுபத்ரை “ஆம், நானேதான் அணிபுனையச் செய்தேன். அங்கே குடிகள் முன் என் இளவரசி எளிய பெண்ணாகச் சென்று நிற்கவேண்டியதில்லை. தெய்வங்கள் அவ்வாறு எண்ணுமென்றால் அவ்விழிமகன் என் இளவரசியின் அணிகளை களையட்டும்” என்றாள்.

தமயந்தி மகளின் தலையைத் தொட்டு அருகழைத்து அணைத்துக்கொண்டாள். “இன்று என்ன நிகழவிருக்கிறது என்று அறிவாயா?” என்றாள். “ஆம்” என்று அவள் சொன்னாள். “அதில் உனக்கு துயர் உள்ளதா?” என்றாள். “ஆம், எனக்காக அல்ல. தந்தையின்பொருட்டு” என்று அவள் சொன்னாள். “இது அவர் ஆடிய ஆட்டத்தின் விளைவால் அல்லவா?” என்றாள் தமயந்தி. “அன்னையே, இதையே ஒரு சேடியும் என்னிடம் சொன்னாள். இந்த அரசும் அரண்மனையும்கூட அவர் ஆடிய ஆட்டத்தின் பெறுபயன்களே என்று நான் சொன்னேன்.” தமயந்தி முகம் மலர்ந்து “நன்று” என்றாள். சுபத்ரை “அவர்கள் சத்ராஜித் என அவையமர்ந்த அரசி தமயந்தியின் குருதி, பேரரசி. அதற்குரிய எண்ணமும் சொல்லுமே எழும்” என்றாள்.

flowerமுரசுகள் அரண்மனை வாயிலில் ஒலித்தன. தமயந்தி வெளியே எட்டிப்பார்த்தாள். காகக்கொடி பறக்க ஒரு தேர் முதலில் வந்தது. அதைத் தொடர்ந்து அணிச்சேடியர் ஏறிய திறந்த தேர் வந்தது. தொடர்ந்து மங்கல இசை எழுப்பியபடி சூதர் செறிந்த தேர். கவச உடையணிந்த வீரர்கள் ஏறிய காவல்புரவிகளின் நிரைக்குப்பின் புஷ்கரனின் அரசத்தேர் வந்தது. வாழ்த்தொலிகள் ஏதும் எழவில்லை. முரசொலி அடங்கியதும் சகட ஓசையும் குளம்போசைகளும் மட்டும் கேட்டன.

புஷ்கரனின் தேர் நின்றதும் காவலர் ஓடிச்சென்று படியை எடுத்து கீழே வைத்தார்கள். அவன் இறங்கியபோது அவனுடன் வந்த வீரர்கள் மட்டும் வாழ்த்தொலி எழுப்பினர். அரண்மனை முற்றத்தைச் சூழ்ந்து நின்றிருந்த இந்திரபுரியின் காவலர்கள் விழிகள் திறந்திருக்க அசையாமல் நின்றனர்.

“எவரும் வாழ்த்தொலிக்கவில்லை” என்றாள் சுபத்ரை. தமயந்தி புன்னகைத்து “விஜயபுரியில் சூதில் பேரரசர் தோற்றுக்கொண்டிருந்தபோது வெளியே ஒவ்வொரு காய்நகர்த்தலுக்கும் நகர்மக்கள் உவகைக்கூச்சலிட்டு நடனமிட்டனர். அவர் முற்றிலும் தோற்றபோது அந்நகரமே கொந்தளித்துக்கொண்டிருந்தது. இன்றும் அவர்கள் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றாள். சுபத்ரை “ஆனால்…” என்று சொல்ல அவள் மேலும் புன்னகைத்து “அவர்களே இங்குள்ள குடிகளும்” என்றாள்.

புஷ்கரன் இடையில் கைவைத்து நின்று சுற்றிலும் நோக்கியபின் கையசைத்தான். அவனைத் தொடர்ந்து வந்த மூடுதிரையிட்ட தேர் முற்றத்தில் ஏறி நின்றது. அதிலிருந்து நளன் இறங்கினான். எளிய வெண்ணிற ஒற்றையாடை மட்டும் அணிந்திருந்தான். கண்கள் ஒளிக்குக் கூச சற்றே தலைகுனிந்து நின்றான். கூடிநின்ற வீரர்களிடமிருந்து எழுந்த மெல்லிய பேச்சொலியின் கார்வை தவிர வேறெந்த குரலும் எழவில்லை. தொடர்ந்து வந்த தேர்களில் இருந்து கருணாகரரும் பிறரும் இறங்கி நின்றார்கள்.

தமயந்தி “அவன் அரண்மனை முற்றத்தை அரங்கென்று ஆக்க விழைகிறான்” என்றாள். சுபத்ரை அவளை திகைப்புடன் நோக்கினாள். மூடுதிரைத் தேர் ஒன்று வந்து சற்று வளைந்து அப்பால் நின்றது. அதை நோக்கி இரு வீரர் ஓடி படியமைக்க உள்ளிருந்து திரைவிலக்கி வெளியே வந்த மாலினிதேவி அவளை வாழ்த்தி குரல்கள் எழுப்பப்படும் என எண்ணியவள்போல சூழ நோக்கினாள். அங்கிருந்த அமைதியை அப்போதுதான் முழுதுணர்ந்து கைகளைக் கட்டியபடி விலகி நின்றாள். புஷ்கரனின் சிற்றமைச்சர் ஒருவர் பணிந்து ஏதோ சொல்ல கையசைத்து அவர் விலகிச்செல்ல ஆணையிட்டாள்.

தொடர்ந்து தேர்கள் வந்துகொண்டிருந்தன. சுநீதரும் ரிஷபனும் தேர்களில் இருந்து இறங்கி புஷ்கரன் அருகே வந்து சற்று விலகி நின்றனர். அவை ஒருங்குவதை தமயந்தி நோக்கி நின்றாள். அந்த இடத்தில் அது நிகழவேண்டுமென்ற திட்டம் எவருடையது? புன்னகையுடன் கைகட்டி நின்றிருக்கும் மாலினியிடமே முதல் விழி சென்றது. ஆனால் புஷ்கரனின் அருகே சற்று உடல் வளைத்து நின்றிருக்கும் ரிஷபனே அனைத்துக்கும் அடிப்படை என அரசுசூழ்தலறிந்தவர் உய்த்துவிட முடியும். அவன் நின்றிருப்பதிலேயே ஒரு பிழை இருந்தது. ஒரு கோணல். அவன் கால்கள் ஒன்றைவிட ஒன்று சிறிதாக இருக்கக்கூடும். அவன் உடலின் ஒரு பக்கம் இன்னொன்றைவிட சிறிதாக இருக்கலாம். அவன் உள்ளத்தின் இயல்பே உடலில் வெளிப்படக்கூடும்.

ஸ்ரீதரர் மேலேறிவந்து இடைநாழியின் மறுமுனையில் நின்று தலைவணங்கினார். அவள் ஏறிட்டு நோக்க “அரசி, தங்களை அரசர் அழைத்துவரும்படி ஆணையிட்டார்” என்றாள். அவள் எழுந்து இந்திரசேனையின் தலையைத் தொட்டு விழிகளால் வரும்படி சொல்லிவிட்டு முன்னால் சென்றாள். படிகளில் இறங்கி கூடத்தைக் கடந்தபோது அங்கே அரண்மனை ஊழியர்கள் தோள்முட்டிச் செறிந்திருப்பதை கண்டாள். அவர்கள் அமைதியாகப் பிரிந்து வழிவிட்டார்கள். அவள் அதனூடாக கடந்து சென்றபோது மெல்லிய பேச்சொலிகளின் முழக்கம் எழுந்தது.

முற்றத்தில் கண்கூசும் வெயில். அவள் முகத்தைச் சுளித்தபடி படிகளில் இறங்கியபோது அங்கே எழுந்த கலைவோசை முற்றத்தில் நின்று ஆடை சீரமைத்தபோது அவிந்தது. அமைதி எழுந்து சூழ அவள் விழிதூக்கி புஷ்கரனையும் அருகே நின்றிருந்த ரிஷபனையும் பார்த்தாள். புஷ்கரன் அவள் நோக்கை விலக்க ரிஷபன் எந்த உணர்வுமில்லாமல் வெறும் நோக்கை நிறுத்தினான். சுநீதர் கரவுப் புன்னகையுடன் புஷ்கரனிடம் ஏதோ சொன்னார். அவள் நளனை நோக்கினாள். அவன் ஒருகணம் விழிதொட்டபின் தலைகுனிந்தான். அமைச்சர்கள் கைகூப்பியபடி நின்றிருந்தனர். இந்திரசேனனை ஒரு காவலர்தலைவன் அழைத்துவந்து அருகே நிறுத்தியிருந்தான்.

இந்திரசேனை தமயந்தியின் மேலாடையைப் பற்றியபடி அவள் உடலில் பாதி மறைந்து நின்றாள். காலைவெயிலில் அனைவருமே வியர்வை வழிய முகம் சுளிக்க நின்றிருந்தனர். அந்த முகச்சுளிப்பே உள்ளத்தையும் சுளிக்க வைத்து அனைவரையும் எரிச்சல்கொண்டவர்களாக ஆக்கியது. சில சிற்றமைச்சர்களும் ஏவலர்களும் கண்ணீர் வழிய நின்றிருந்தார்கள். அமைதியில் எங்கோ ஒரு கலம் உருளும் ஓசை. ஆடை உரசும் ஒலியுடன் எவரோ அப்பால் நடந்தார்கள்.

“ரிஷபரே, சொல்லும்” என்றான் புஷ்கரன். ரிஷபன் “விதர்ப்ப அரசி, தாங்கள் அறிந்திருப்பீர்கள்” என்றான். தமயந்தி கைநீட்டி இடைமறித்து “நான் அறிந்தது இருக்கட்டும். நீ சொல்லவேண்டியதை முழுமையாக சொல்” என்றாள். அவன் “அவ்வண்ணமே” என எந்த உணர்வுமின்றி சொல்லி “நிஷதகுலத்தின் அரசராக சபரகுடிப் பிறந்த நளன் அமைந்து நாடாண்டது குடித்தலைவர்களின் கோலாணையின்படியே. குடித்தலைவர்கள் சபரனாகிய நளன் மீது மூன்று குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள். நிஷாதர்களின் குலதெய்வமாகிய கலியை இடநீக்கம் செய்து அங்கே அயல்தெய்வமாகிய இந்திரனுக்கு ஆலயம் அமைத்தது முதற்பிழை.”

“அப்பிழை நிகழ்ந்த பின்னர் பதினெட்டுமுறை அக்குடித்தலைவர்கள் பேரரசர் முன் கோல்தாழ்த்தியிருக்கிறார்கள்” என்றாள் தமயந்தி. “நான் சொல்லாடவில்லை, அரசி. நான் எளிய ஊழியன். எனக்கிடப்பட்ட ஆணைப்படி குடித்தலைவர் சொற்களை சொல்லவிருக்கிறேன்” என்றான் ரிஷபன். “நிஷதகுடியின் தலைவராக நளனையே குடித்தலைவர் தேர்ந்தெடுத்தார்கள். அவர் ஷத்ரிய இளவரசியாகிய உங்களை பரிவேள்வி செய்ய வைத்ததும் நீங்கள் நிஷாதநகரியில் சத்ராஜித் என அமைவதும் இரண்டாவது பிழை.”

தமயந்தி “அதை படைமுகத்தில் மட்டுமே சொல்லியிருக்கவேண்டும். புரவியை கடந்துபோக விட்டது அவர்களின் பிழை” என்றாள். அவளை கேட்காதவன்போல ரிஷபன் “மூன்றாவது பெரும்பிழை, காளகக் குடித்தலைவராகிய சீர்ஷரை உணவுக்கூடத்தில் வெட்டி வீழ்த்தியது. அதன்பொருட்டு காளகக்குடி நளன் மீது வஞ்சம் கொண்டுள்ளது” என்றான். தமயந்தி அவனை நோக்கியபடி நின்றாள். “இப்பிழைகளின்பொருட்டு நளன் குடித்தலைவர்களால் தொல்முறைப்படி முடிநீக்க்கம் செய்யப்பட்டார். அவர்கள் கோலேந்தி அவை அமர்ந்து இளையவராகிய புஷ்கரரை அரசர் என தெரிவுசெய்தனர்.”

“ஆகவே இனி காளகக்குடித் தோன்றலும் வீரசேனரின் மைந்தருமாகிய புஷ்கரன்தான் நெறிகளின்படி நிஷாதர்களின் அரசர். அதை முறைப்படி சபரகுலத்து நளனுக்கு தெரிவித்தோம். அதை அவர் ஏற்காமல் முடிதுறக்க மறுத்தமையால் அவரை நிஷத அரசர் புஷ்கரன் போருக்கு அறைகூவினார். குடிப்போரைத் தவிர்க்கவேண்டும் என்று குலமூத்தார் விழைந்தமையால் அது நிகரிப்போராக நடக்கட்டும் என முடிவெடுக்கப்பட்டது. சென்ற சனிக்கிழமை விஜயபுரிநகரில் குலத்தலைவர்களும் குடிகளும் முன்னிலையாக, அனல் சான்றாக நடந்த நாற்களப் போரில் நளன் முழுத்தோல்வி அடைந்தார். தன் முடியுரிமையுடன் குடியுரிமையையும் வைத்து ஆடி இழந்தார்.”

அவன் சொல்லி முடித்ததை இரு நிமித்திகர்கள் ஏற்று கூவினர். அது எதிரொலி என மேலும் மேலும் நிமித்திகர்களால் சொல்லப்பட்டு பரவிச்சென்றது. நகரெங்கும் அச்செய்தி பரவ குடிகள் எழுப்பிய ஓசை முழங்கியது. முரசொலி எழுந்தபோது மீண்டும் அமைதி உருவானது. “முடியுரிமையை இழந்த நளனின் அரசு, அரியணையுரிமைகள், கருவூலம் அனைத்தும் ஒரு பிடி மண்ணோ, ஒரு மணி அரிசியோ, ஒரு கந்தலாடையோ எஞ்சாமல் அரசர் புஷ்கரருக்கு உரிமையானவை என்று அறிக!” என்றான் ரிஷபன்.

உணர்ச்சியற்ற குரலில் அவன் தொடர்ந்தான் “குடியுரிமையை இழந்த நளன் நால்வர்ணத்திற்கும் வெளியே வர்ணமற்றவராக இனி கருதப்படுவார். அவர் மணந்த தேவியும் மைந்தரும் அவரைப்போன்றே வர்ணமற்றவராக ஆவார்கள். அரசர் அரண்மனை புகுந்து நிஷத அரியணையில் அமர்வதற்கு முன் அவர்கள் தங்கள் உரிமைகளை ஒழித்து நீங்கவேண்டும் என்று இதனால் ஆணையிடப்படுகிறது.” தலைவணங்கி அவன் கைகூப்பினான்.

தமயந்தி அங்கே கூடி நின்றவர்களை பார்த்தாள். அனைவரும் உடலில் வலிகொண்டவர்களைப்போன்ற முகத்துடன் மெல்ல அசைந்தனர். சிலர் கைகளையோ மேலாடையையோ கூர்நோக்கி எதையோ சீரமைத்தனர். தமயந்தி “எங்கள் அரசர் அனல் தொட்டு அளித்த ஆணைக்கு முழுக்க கட்டுப்படுகிறோம். கிளம்புகிறோம்” என்றாள். மாலினி அங்கிருந்தே உரக்க “அவ்வண்ணமே கிளம்ப முடியாது, கீழ்மகளே. நீ அணிந்திருக்கும் அணிகள் இவ்வரசுக்குரியவை. அவற்றை கழற்றிவிட்டுச் செல்…” என்றாள். அவள் தன் வஞ்சத்தையும் எக்களிப்பையும் மறைக்கவில்லை.

தமயந்தி “அவ்வாறே, அரசி” என தலைவணங்கினாள். பற்கள் தெரிய நகைத்தபடி “இங்கிருந்து நீ ஆடையெதையும் கொண்டுசெல்லக்கூடாது. அடிமைக்கு நல்லாடையணிய உரிமையில்லை. உனக்கும் மகளுக்கும் மரவுரி அளிக்க ஆணையிடுகிறேன். பத்மை…” என்றாள். மாலினியுடன் வந்த சேடி பத்மை “அரசி” என தலைவணங்க “அவளுக்கு பழைய மரவுரிஆடை ஒன்றை அளி. அவளுடன் சென்று அவளும் அவள் மகளும் இடையிலோ உடற்கரவிலோ எதையேனும் ஒளித்துக்கொண்டு செல்கிறார்களா என்று தேடிப்பார்” என்றாள். பத்மை “ஆணை” என்றாள்.

புஷ்கரன் கைநீட்டி அவளைத் தடுத்து “நளனின் மைந்தனையும் மகளையும் நான் இந்த விலக்கிலிருந்து தவிர்க்கிறேன். இது அரசாணை” என்றான். மாலினி திகைத்து பின் சினம் பற்றிக்கொள்ள “என்ன சொல்கிறீர்கள்?” என்று கைநீட்டிக் கூச்சலிட்டபடி முன்னால் வந்தாள், அவள் இளவரசி என்பதையே மறந்துவிட்டவள்போல. அருகே நின்றிருந்த சேடிப்பெண் “அரசி, இது முற்றம்” என்றதும் அவளை நோக்கித் திரும்பி “போடி” என சீறியபின் “எப்படி அவர்களை நீங்கள் விலக்க முடியும்? எந்த நெறிகளின்படி?” என்றாள்.

கருணாகரர் “அவர்கள் இருவரும் வர்ணமில்லாதவர்கள் ஆவதை எவரும் தடுக்கமுடியாது. ஆனால் அவர்களை அரசர் அடிமைகளாகக் கொள்ளமுடியும். அடிமைகளுக்கு விடுதலை அளிக்கவும் குடியுரிமை கொடுக்கவும் அரசருக்கு உரிமை உண்டு” என்றார். புஷ்கரன் “ஆம், இரு குழந்தைகளையும் நான் அடிமைகளெனக் கொண்டு விடுதலை அளித்துள்ளேன். அவர்களை இங்குள்ள விதர்ப்பநாட்டார் விதர்ப்பத்துக்கு அழைத்துச் செல்லட்டும். இங்கிருந்தே…” என்றான்.

சிம்மவக்த்ரன் தலைவணங்கி “அவ்வாறே” என்றான். “இல்லை, நான் ஒப்பமாட்டேன். அவர்கள் இங்கிருக்கவேண்டும். நம் அடிமைகளாக இருக்கவேண்டும்” என்றாள் மாலினிதேவி. “நாவடக்கு. இல்லையேல் உன் தலையை உருட்டுவேன்” என்றான் புஷ்கரன். அவள் திகைத்துப்போய் ரிஷபனை நோக்க அவன் விழிகளால் ஆணையிட்டான். அவள் பற்களைக் கடித்துக்கொண்டு பின்னடைந்தாள். பின் தரையில் காறித் துப்பினாள்.

புஷ்கரன் “விதர்ப்பநாட்டு அமைச்சர்களும் அரசுப்பணியாளரும் அனைத்துப் படைகளும் குடிகளனைவரும் இப்போதே கிளம்பி நகரிலிருந்து அகல வேண்டும். நாளைமாலை இந்நகருக்குள் இருக்கும் விதர்ப்பர் எவராக இருப்பினும் கொல்லப்படுவார்கள்” என்றான். சிம்மவக்த்ரன் ஒன்றும் சொல்லாமல் வந்து நளனின் அருகே நின்றிருந்த இந்திரசேனனிடம் “விதர்ப்ப இளவரசே, வருக. நம் நாட்டுக்குச் செல்வோம்” என்றான். அவன் திகைத்த விழிகளுடன் நின்றான்.

தமயந்தி “செல்க. அங்கே நற்பொழுதொன்றில் காண்போம்” என்றாள். பின் இந்திரசேனையிடம் “செல்க!” என்று சொல்லி தலையை வருடினாள். சுபத்ரை கண்ணீர் வழிய “சென்றுவருகிறோம், அரசி” என்றாள். “மைந்தரை உன்னிடம் அளிக்கிறேன், சுபத்ரை” என்றாள் தமயந்தி. சுபத்ரை கண்ணீரை வலக்கையால் மறைத்துக்கொண்டு இடக்கையால் இந்திரசேனையை அணைத்து முன்னால் நடந்தாள். சிம்மவக்த்ரன் “வருக, இளவரசே!” என்றபடி இளவரசனின் தோளில் கைவைத்தான். அவன் ஓடிவந்து குனிந்து தமயந்தியின் கால்களைத் தொட்டு வணங்கினான். “நலம் சூழ்க!” என அவள் வாழ்த்தினாள்.

இந்திரசேனன் சிம்மவக்த்ரனுடன் பாதிவழி நடந்து பின் நின்று திரும்பி நளனை நோக்கி ஓடினான். அவன் நளனின் கால்களை நோக்கி குனிய அவன் மைந்தனை கைவிரித்து வாரி எடுத்து நெஞ்சோடு சேர்த்துக்கொண்டான். முகத்தை தந்தையின் மார்பில் புதைத்து இந்திரசேனன் மெல்ல விசும்பினான். “ஆண்மகன் என்றிரு. எதுவும் முடியவில்லை” என்றான் நளன். அவன் விடுவித்துக்கொண்டு குனிந்து நளனின் கால்களைத் தொட்டு வணங்கியபின் சிம்மவக்த்ரனுடன் சென்றுசேர்ந்துகொண்டான். அவர்களுடன் விதர்ப்ப வீரர்கள் அனைவரும் வாள்களையும் வேல்களையும் தாழ்த்தியவர்களாக சேர்ந்துகொண்டார்கள்.

தமயந்தி அவர்கள் செல்வதை மாற்றமில்லாத முகத்துடன் நோக்கி நின்றாள். பத்மை “வா” என்று அவள் தோளைத் தொட்டாள். அவள் திரும்பி பத்மையுடன் உள்ளே சென்றாள். புஷ்கரன் நளனிடம் “நீ அணிந்திருக்கும் ஆடையும் இவ்வரசுக்குரியது. இங்குள்ள எவரிடமேனும் ஒரு மரவுரியை இரந்து பெற்று அணியலாம்” என்றான். நளன் தலைவணங்கியபின் இரு கைகளையும் விரித்து நீட்டி நின்றான். கருணாகரர் அருகே நின்ற ஒருவனிடமிருந்து மரவுரியை வாங்கியபடி ஓடி அவனருகே சென்றார். பின்னர் தயங்கி சுற்றுமுற்றும் நோக்கி அங்கே நின்ற ஒரு படைவீரனிடம் அளித்து “அவரிடம் கொடு” என்றார்.

அவன் திகைத்து “நானா?” என்றான். “ஆம், அளி” என்றார் கருணாகரர். அவன் இடம்பொருள் புரியாமல் இளித்தபடி “இதோ” என அதை வாங்கி நளனிடம் அளித்தான். நளன் அதை அங்கே நின்றபடியே உடுத்துக்கொண்டான். தன் வெண்ணிற ஆடையைக் கழற்றி மடித்து நிலத்தில் வைத்தான். “பொன்னோ நாணயமோ உன்னிடம் இல்லை அல்லவா?” என்றான் புஷ்கரன். “இல்லை, அரசே” என்றான் நளன். ஒற்றை மரவுரி ஆடை அணிந்து தமயந்தி வெளியே வந்தாள். அவளுக்கு அவ்வாடை பழக்கமில்லாததனால் அதை மார்புடன் இரு கைகளாலும் அள்ளிப் பற்றியிருந்தாள். அவளுடைய குதிகால்கள் வரைதான் அந்த ஆடை இருந்தது.

புஷ்கரன் நளனிடம் “நீங்கள் இருவரும் கிளம்பலாம்… இந்த அரண்மனை வளாகத்திலிருந்து நீ செல்ல நான் ஒப்புகிறேன். அதன்பின் ஆற்றலுள்ள எவரும் உன்னை அடிமைகொள்ளலாம்” என்றான். நளன் தமயந்தியை நோக்க அவள் அவனருகே வந்து நின்றாள். அவன் அவளிடம் தலையசைத்துவிட்டு தலைகுனிந்து நடந்தான். கருணாகரர் கண்ணீருடன் அவர்களைத் தொடர்ந்து சென்றார். அவருக்குப் பின்னால் ஸ்ரீதரரும் நாகசேனரும் சென்றனர். நளன் “அந்தணரே, உங்கள் கடமை அரசுடனோ அரசனிடமோ அல்ல. குடிகளிடமும் அறத்திடமும் வேதத்திடமும்தான். அது இங்கு தொடரட்டும்” என்றான். “ஆம்” என்றார் கருணாகரர். அவர்கள் கைகூப்பியபடி நின்றுவிட்டனர்.

நளன் அரண்மனை முற்றத்தை நடந்து கடப்பதை அனைவரும் ஓசையில்லாமல் நோக்கி நின்றனர். அவர்களின் காலடியோசை மட்டும் ஒலித்தது. மூச்சொலிகள், ஓரிரு தும்மல்கள். புரவி ஒன்று குளம்பு மாற்றியது. ஒருவர் இருமினார். இரு வாள்கள் முட்டிக்கொண்டன. அரண்மனைக்குள் ஒரு கலம் விழுந்து உருண்டது. காலைவெயில் வெம்மைகொண்டிருந்தமையால் அனைவரும் வியர்த்திருந்தனர். சிறுகாற்று வந்து சுழன்றபோது வியர்வை வாடையும் குதிரைச் சிறுநீர் வாடையும் கலந்து வீசியது.

அவர்கள் அரண்மனையின் கோட்டைவாயிலைக் கடந்ததும் பின்னாலிருந்த திரளில் ஒருவன் “சத்ராஜித் வெல்க!” என்று கூவினான். அந்த ஓசையிலிருந்த கேலி அனைவரையும் நகைக்கச் செய்தது. அக்கணம்வரை இருந்த இறுக்கம் அச்சிரிப்பால் அவிழ கூட்டம் உரக்க பேசிச் சிரிக்கத்தொடங்கியது. “அந்த வேள்விப்பரியையும் கூடவே அனுப்புங்கள்” என்று ஒருவன் கூவினான். “விரும்பினால் இந்திரன் சிலையையும் கொண்டுபோகட்டும்” என்றது ஒரு குரல். கூச்சலும் சிரிப்புகளும் எல்லா திசைகளிலிருந்தும் எழுந்தன.

உப்பரிகைகளில் நின்றிருந்த பெண்களில் ஒருத்தி “தொழுவப் பணிக்கு எனக்கு ஒரு விதர்ப்ப அடிமை தேவை” என்றாள். அங்கிருந்த பெண்கள் கூவிச்சிரித்தனர். ஒருத்தி தன் தலையிலிருந்த வாடிய மலர்மாலையை எடுத்து மலர்களை உருவி அவர்கள் மேல் வீசி “அரசி ஊர்வலம்!” என்று சொன்னாள். மற்ற பெண்களும் அதையே செய்யத் தொடங்கினர். பின்னர் கூடிநின்றவர்கள் கையில் அகப்பட்டவற்றை எல்லாம் எடுத்து அவர்கள்மேல் வீசினர். பழைய துணிகள், இலைச்சருகுகள், தோரணங்கள் என அவர்கள்மேல் வந்து விழுந்தபடியே இருந்தன.

நளன் உடல்குவித்து குனிந்து நிலத்தை நோக்கியபடி நடந்தான். தமயந்தி தலைநிமிர்ந்து தன்னைப் பார்த்து இளிநகை புரிந்த கூட்டத்தினரை நேருக்குநேர் நோக்கியபடி உறுதியான காலடிகளுடன் சென்றாள். கூவிச்சிரித்தபடி எதையாவது அவள்மேல் வீச வந்தவர்களில் அவள் விழிகளை சந்தித்தவர்கள் திகைத்து கைதளர பின்வாங்கினர்.

அவர்கள் கோட்டைவாயிலை அடைவதற்குள் நகர்மக்களில் பெரும்பகுதியினர் சாலைமருங்குகளில் கூடிவிட்டனர். கூச்சலும் பழிப்பும் கலந்த முழக்கமாக நகரம் அறைந்துகொண்டிருந்தது. அவர்களுக்குப் பின்னால் “சக்ரவர்த்தி, நில்லுங்கள்”, “ஐந்தாம்வர்ண சத்ராஜித் இதோ” என்று கூவியபடி வீணர்கூட்டம் ஒன்று வந்தது. ஒருவன் “தொழுப்பணிக்கு வாடி” என்றான். இன்னொருவன் “தொழுவத்தில் இரவில் குளிருமே” என்றான். “இரவு என் படுக்கையறையில் படுத்துக்கொள்” என்றான் அவன். அவர்கள் கைகளை அறைந்து துள்ளிக்குதித்து சிரித்தனர்.

அங்காடிமுகப்பை அடைந்தபோது ஒருவன் கள்மொந்தை ஒன்றை வாங்கிக்கொண்டு ஓடிவந்து அதை அவர்கள்மேல் வீசினான். “இனிய கள்! கள்ளில் ஊறிய காட்டாளர்கள்”! என்று கூவினான். மேலும் சிலர் கள்ளை வாங்கிக் குடித்தபடியே வந்து எஞ்சியதை அவர்கள்மேல் வீசினர். நளன் கால்தடுக்கி பலமுறை விழப்போனான். அவன் தோளை தமயந்தி தன் கைகளால் வலுவாகப் பற்றியிருந்தாள். தெருநாய்க் கூட்டம் எல்லையில் நிற்பதுபோல அவர்கள் அனைவரும் கோட்டைவாயிலில் நின்றுவிட்டனர். ஊளைகள் சிரிப்புகள் பின்னால் ஒலித்தன.

கோட்டைவாயிலைக் கடந்தபோது நளன் கால்தளர்ந்து அமரப்போனான். அவன் தோளை தமயந்தி பற்றிக்கொண்டாள். “செல்வோம், அமரக்கூடாது” என்றாள். “என்னால் நடக்கமுடியவில்லை” என்று அவன் சொன்னான். அவள் அவனை மெல்ல தாங்கிச் சென்றபடி “அருகேதான் காடு… அதற்குள் நுழைந்துவிடுவோம்” என்றாள். அவன் தழைந்த குரலில் “நான் உணவருந்தி மூன்று நாட்களாகின்றன” என்றான். “விடாய் என்னைக் கொல்கிறது” என்றபோது குரல் மேலும் தளர்ந்து அழுகையென்றே ஒலித்தது.

“காட்டுக்குள் உணவும் நீரும் உண்டு” என்று அவள் சொன்னாள். நிஷதபுரியின் அரசர் அரண்மனை புகுவதை அறிவிக்க கோட்டையின்மேல் காவல்மாடங்களில் பெருமுரசுகள் முழங்கத் தொடங்கின. நகர்மக்கள் எழுப்பிய வாழ்த்தொலி அவ்வோசையை மூழ்கடித்தபடி பெருகியெழுந்தது.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 59

58. நிலைபேறு

flowerசூதரங்கு மிக எளிமையாக அமைக்கப்பட்டிருந்தது. அரண்மனையிலிருந்த நீள்வட்டமான உணவுக்கூடத்தின் நடுவே சிறிய மரமேடை போடப்பட்டு அதில் சூதுக்களம் ஒருக்கப்பட்டிருந்தது. இரு பக்கமும் தாழ்வான இருக்கைகள். சூதுக்காய்களை வைப்பதற்கான பீடங்கள் வலக்கை அருகே. இடக்கையருகே ஆட்டத்துணைவனுக்கான பீடம். அதை நோக்குபவர்கள் அமர்வதற்காக வட்டமாக பீடங்கள் போடப்பட்டிருந்தன. நான்கு வாயில்களிலும் காவலர் நின்றனர்.

காலையிலேயே ஆட்டம் குறிக்கப்பட்டிருந்தது. அரண்மனைக்கு வெளியே களமுற்றத்தில் மிகப் பெரிய ஆட்டக்களம் ஒன்று உள்ளிருப்பதன் அதே வடிவில் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் யானை, குதிரை, தேர், காலாள் கருக்களைப்போல முகமூடி அணிந்த வீரர்கள் நிறுத்தப்பட்டனர். அக்களமுற்றத்திற்கு நேர் மேலே உயர்ந்த மேடையில் முரசுடன் நிமித்திகன் ஒருவன் அமர்ந்திருந்தான். உள்ளே சூதுக்களத்தை நன்கு நோக்கியபடி நிரைகளின் பின்னாலிருந்த மரமேடையில் அமர்ந்திருந்த நிமித்திகன் ஆட்டத்திற்கு ஏற்ப தன் குறுமுரசை முழக்கினான்.

அவ்வொலியைக் கேட்டு காய்நகர்வை புரிந்துகொண்டு வெளியே மேடையில் இருந்த நிமித்திகன் தன் முரசை முழக்கினான். அதைக் கேட்டு நாற்களக் காய்கள் என நின்றிருந்த வீரர்கள் களங்களில் நகர்ந்தனர். உள்ளே நிகழும் ஆட்டம் வெளியே பேருருவில் தெரிந்தது. அதை நோக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து சூழ்ந்திருந்தார்கள். அரண்மனை உப்பரிகைகளிலும் இடைநாழிமுகப்புகளிலும் பெண்கள் செறிந்து நின்று அந்த ஆட்டத்தை நோக்கினர். கோட்டையின் காவல்மாடங்களிலும் நடைபாதைகளிலும் நெருக்கி நின்று படைவீரர்கள் அந்த ஆடலைக் கண்டார்கள். அயல்நாட்டு வணிகரும் சூதர்களும் அக்களத்தை முகங்களால் வேலியிட்டு வளைத்திருந்தனர்.

நகரெங்கும் அவ்வாடல் ஒலியென சென்று சேர்ந்துகொண்டிருந்தது. திண்ணைகளில் கூடியிருந்த முதியவர்கள் தங்கள் முன் சுண்ணத்தாலும் கரியாலும் வரையப்பட்டிருந்த சிறிய நாற்களக் கட்டங்களில் கற்களையும் விதைகளையும் சோழிகளையும் பரப்பி வைத்து ஓசைக்கேற்ப காய்நகர்த்தி அந்த ஆடலை நிகழ்த்தினர். அடுமனைத்திண்ணைகளில், கொல்லைப்பக்க கொட்டில்களில், அகத்தளங்களில் பெண்கள் கூடியமர்ந்து அந்த ஆடலை தாங்கள் நிகழ்த்தினர். ஓசைகேட்டு தங்கள் உள்ளங்களை ஆடுகளமாக ஆக்கிக்கொண்டனர் பல்லாயிரவர்.

விஜயபுரி நகரமே தெரிவதும் தெரியாததுமான ஆடுகளங்களின் பெருந்தொகையாக ஆகியது. சுழியின் மையமென அச்சூதுகளத்தின் நடுவே மென்மரப்பட்டையில் பட்டுத்துணியை ஒட்டி அமைத்த அந்தச் சிறிய ஆடுகளம் அமைந்திருந்தது. அதைச் சூழ்ந்து இரவெல்லாம் காவலர் நின்றிருந்தனர். அதை அமைக்கும் சிற்பிகளின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. புலரியில்தான் பணி முடிந்தது.

முந்தைய இரவிலேயே நாற்களத்தில் நிகரிப்போர் நிகழ்த்த புஷ்கரன் ஒப்புக்கொண்ட செய்தியை குடித்தலைவர்கள் வந்து சொன்னார்கள். இகடர் அதைச் சொல்லும்போதே அழுதுவிட்டார். “இது நிகழுமென நான் எண்ணவில்லை. என் குடிகள் போரிட்டு அழியாமல் காத்தேன் என்று நான் என் மைந்தரிடம் சொல்லமுடியும். இனி என் குடிமூத்தாருக்கு அஞ்சாமல் கூசாமல் பலியளித்து வழிபடமுடியும்.” பணிதர் “உங்கள் இருவரில் எவர் வென்றாலும் நன்றே. இன்றைய பூசல் இப்போதே தீரும். பூசல் தீர்ந்த பின்னர் அனைத்தையும் அமர்ந்து பேசிக்கொள்ளமுடியும்” என்றார்.

மெல்ல மெல்ல நளன் முகம் தெளிந்தான். புன்னகையுடன் “ஆம், அவன் தேடுவது ஒரு களப்போரை என்றால் அது நிகழ்க!” என்றான். “நம் குடிகளுக்கும் போர் ஒன்று தேவையாகிறது. துலா இப்போதே ஆடி நிலைகொள்ளுமென்றால் நன்று.” நாகசேனர் மட்டும் ஐயமும் குழப்பமும் கொண்டவராக இருந்தார். குடித்தலைவர்கள் சென்றபின் நளன் “நீங்கள் அச்சம் கொள்கிறீர்கள், அல்லவா?” என்று நாகசேனரிடம் கேட்டான்.

“ஆம், அரசே. என் உள்ளம் நிலைகொள்ளவில்லை” என்றார் நாகசேனர். “எண்ணி நோக்கினால் போர் என்பது நேரடியானது. அதில் கரவு என ஏதுமில்லை. இப்புவியில் உள்ள அனைத்து உயிர்களும் போரிடுகின்றன. ஆகவே அது தெய்வங்கள் அமைத்தது. சூது அப்படி அல்ல. அது இப்புடவியை நோக்கி மானுடன் அமைத்தது. புடவியின் சிறு போலி அது. புடவிச்செயலின் முடிவிலாத தற்செயல்பெருக்கை இக்களத்திலும் நிகழ்த்தி அதனுடன் ஆடுகிறான் மானுடன். போரில் மானுடன் தன் எதிரியை அறைகூவுகிறான். சூதில் தெய்வங்களை அறைகூவுகிறான்.”

நளன் “இப்படி எண்ணியபடியே செல்லமுடியும். ஆனால் உடன்பிறந்தார் குருதி பிழைத்தது என்பதைப்போல ஆறுதல் அளிப்பது பிறிதேதுமில்லை” என்றான். “ஆம், நான் அதையே எண்ணினேன். ஆனால் பராசரரின் புராணமாலிகையை, பலநூறு குடிக்கதைகளை இங்கே அமர்ந்து எண்ணிக்கொண்டேன். எந்தப் பூசலாவது சூதில் முழுமையாக தீர்வு காணப்பட்டுள்ளதா? இல்லை, அரசே. சூது எப்போதுமே பூசலை ஒத்திப்போடுகிறது. சூதில் நிகழ்ந்தவை அப்பூசலை பெருக்குகின்றன. சூது நிகழ்ந்த பூசல்கள் அனைத்துமே மேலும் பெரிய போரில்தான் முடிந்துள்ளன. ஒருமுறைகூட விலக்கில்லை. ஆகவே இது ஒரு மாறா நெறியென்றே தோன்றுகிறது.”

நளன் புன்னகையுடன் “எதுவானாலும் இனிமேல் எண்ணிப் பயனில்லை. அனைத்தும் முடிவாகிவிட்டன. நாளை காலை கதிரெழுந்த இரண்டாம் ஜாமத்தில் ஆட்டம் நிகழ்கிறது. ஏழு களம் என முடிவாகியிருக்கிறது” என்றான். “இனி ஒன்றும் செய்யமுடியாதென்றில்லை. நான் இதை முறிக்கிறேன்… சிறுமை செய்யப்பட்டதாக சினம்கொண்டு வஞ்சினம் உரைத்து கிளம்பிச்செல்லுங்கள். ஒரு நேரடிப் போரே நிகழட்டும்.”

“ஆம், சில ஆயிரம்பேர் இறப்பார்கள்” என்று நாகசேனர் தொடர்ந்தார். “அதில் பழுதில்லை. போர்களில் பல்லாயிரம் நிஷாதர் முன்னரும் இறந்துள்ளனர். போரில் வீரர் இறப்பது நன்று, வீரருக்குரிய விண்ணுலகை அவர்கள் அடைகிறார்கள். நேரடியான குருதிப்போரே நேர்மையானது. அப்போருடன் அனைத்தும் முற்றாக முடிவுக்கு வந்துவிடும்… அத்தனை போர்களும் அதைவிட பெரிய போர் நிகழாமல் தடுப்பவைதான்.”

நளன் “இல்லை, இப்போது களம்முறித்து நான் சென்றால் என் உடன்பிறந்தானை நான் வேண்டுமென்றே கொன்றேன், என் குடியை அழித்தேன் என்னும் பழியே எஞ்சும். இக்களமாடலில் நானே வெல்வேன். ஐயமே வேண்டியதில்லை, நாகசேனரே. இது நமக்கு சற்று பொழுதிடை அளிக்கும். இந்திரபுரியின் வேள்விநிறைவும் முடிசூட்டும் நன்முறையில் நிறைவுறும். அதன்பின் நாம் புஷ்கரனை அழைத்து பேசுவோம். தோற்று நிற்பவனுக்கு விஜயபுரியை அளித்து இங்கு தனிமுடிசூடச் செய்வோம்” என்றான்.

நாகசேனர் “போரில் கொடைபோல முழுமடம் பிறிதில்லை. நல்லியல்பென்பது வெற்றிக்குமேல் நின்றிருக்காவிட்டால் சிறுமைபடுத்தப்படும். நேர்ப்போர், மாற்றில்லாத வெற்றி. வேறேதும் இங்கே பொருளுள்ளவை அல்ல” என்றார். நளன் “நான் முடிவுசெய்துவிட்டேன், நாகசேனரே” என்றபின் எழுந்து “பிந்திவிட்டது. துயில்கொள்ளவேண்டும். நாளை புதிதென கண் துலங்கவேண்டும்” என்றான். நாகசேனர் “நன்று நிகழ்க!” என்றார்.

அன்றிரவு நாகசேனர் துயிலவில்லை. நிகழ்வன குறித்து கருணாகரருக்கு நீண்ட ஓலைகள் இரண்டை அனுப்பிவிட்டு இரவெல்லாம் நிலையழிந்தவராக உலவிக்கொண்டிருந்தார். சூது அறிவிப்பை முழங்கிச்சொல்லும் முரசொலிகள் கேட்டன. நகர்மக்களின் ஒட்டுமொத்தமான பேச்சொலி எழுந்து கார்வையாக இருண்ட வானில் நெடுநேரம் நின்றது. பின்னிரவில் நகர் அமைதிகொண்டது. கூகைகளின் குழறல்கள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. நாழிகை மணிகளின் ஓசை. காவல்மாற்றத்தின் ஆணைகள். பின்னர் புலரிமுரசு. அவர் அவ்வோசையைக் கேட்டு திடுக்கிட்டார்.

எழுந்து சென்று விடிவெள்ளியை நோக்கவேண்டும் என விழைந்தார். ஆனால் சற்றுநேரம் அவ்வெண்ணங்களுடன் அமர்ந்திருந்துவிட்டு எழுந்து சென்று விடிவெள்ளியை நோக்கினார். கூரிய வேல்முனைபோல் அது மின்னிக்கொண்டிருந்தது. நகரம் உயிர்பெறத் தொடங்கி சற்று நேரத்திலேயே ஓசைகள் நிறைந்து அலைசூழ்ந்தன. அவர் பெருமூச்சுடன் விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தார். அவை எண்ணற்கரிய மாபெரும் சூதுக்களமொன்றின் காய்கள் என்ற பராசரரின் வரி நினைவிலெழுந்தது.

அக்கணமே அடுத்த வரி நினைவிலெழ அவர் துருவனை தேடிச்சென்று விழிதொட்டார், “நிலைபெயராமையே அந்தண அறம் எனப்படுகிறது. பிற எதன்பொருட்டும். தன்பொருட்டும். தன் மூதாதையர், தெய்வங்கள் பொருட்டும். நிலைக்கோளென அவனுடன் இருக்கவேண்டியவை வேதநெறிகள் மட்டுமே.” பன்னிரு அகவையில் அவர் வேதக்கல்வி முடித்து குருநிலையிலிருந்து கிளம்பும்போது ஆசிரியர் புராணமாலிகாவின் அந்த வரியை அவரிடம் சொன்னார்.

துருவனின் மின்னொளி மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்வது போலிருந்தது. மொத்த வானமும் விண்மீன் பெருக்கும் அதை உந்தித்தள்ள அது அசைவில்லாமல் அமைந்திருந்தது. அனைத்து நுண்சொற்களுடனும் இயல்பாக சென்று இணையும் ஓங்காரம் அது. நோக்கிக்கொண்டிருக்கையில் மெல்ல உள்ளம் தெளிவுகொண்டது. நீள்மூச்சுடன் திரும்பி ஏவலனிடம் “அரசரை எழுப்புக!” என்றார்.

நளன் அணிகொண்டு ஒருங்கி வந்தபோது அவர் தலைவணங்கி “அழைப்பு வரும் என்றார்கள், அரசே. காத்திருப்போம்” என்றார். நளனின் முகம் தெளிவுகொண்டிருந்தது. “அனைத்தும் நன்றெனவே முடியும், அமைச்சரே” என்றான். “இக்காலை எனக்கு அதை தெளிவுறக் காட்டுகிறது.” நாகசேனர் “அனைத்தும் முடிவில் நன்றே” என்றார்.

அவர்களை அழைத்துச்செல்ல அவைச்செயலர் பிரவீரர் வந்தார். அவர் முகமனுரைத்ததும் வணங்கியதும் மிகையாக ஒத்திகைநோக்கப்பட்ட நாடகம்போல் இருந்தன. நளன் நாகசேனர் உடன்வர நடந்து இடைநாழிகளினூடாக சூதரங்கு நோக்கி சென்றான். திரும்பி நாகசேனரிடம் “முகத்தை அப்படி வைத்துக்கொள்ளவேண்டாம், அமைச்சரே. நாம் அஞ்சுகிறோம் என எண்ணுவார்கள்” என்றான். நாகசேனர் புன்னகை செய்தார்.

ஆனால் சூதரங்கின் வாயில் கண்ணுக்குப்பட்டதும் நளனின் உள்ளம் திடுக்கிட்டது. படபடப்பை மறைத்துக்கொள்ள முகத்தை அங்குமிங்கும் திருப்பி அச்சூழலை நோக்கினான். ஏன் அந்தப் பதற்றம் என அவனுக்கு புரியவில்லை. அங்கிருந்தவர்கள் அனைவருமே அவனைத்தான் நோக்கிக்கொண்டிருந்தனர். ஆனால் விழிகளை திருப்பிக்கொண்டு வேறு பேச்சுகளை நடித்தனர்.

அவனை எதிர்கொண்டழைத்த அமைச்சர் பத்ரர் தலைவணங்கி முகமன் உரைத்தார். “இந்திரபுரியின் அரசருக்கு விஜயபுரியின் சூதரங்குக்கு நல்வரவு” என நிமித்திகன் அவைமேடையில் அறிவித்ததும் மெல்லிய வாழ்த்தொலி முழக்கம் எழுந்தது. அவனை அழைத்துச்சென்று ஒரு பீடத்தில் அமரச்செய்தார் அமைச்சர். நளனருகே அமர்ந்த நாகசேனர் “இங்கே ஆட்டத்துணைவருக்கு என ஒரு பீடம் போடப்பட்டுள்ளது” என்றார். “ஆம்” என்றான் நளன். “நம் காவலர்தலைவனை அழைத்துவரும்படி சொல்கிறேன். நான் அந்தணன், சூதாடக் கூடாது.” நளன் தலையசைத்தான். அவர் எழுந்து சென்றார்.

அவன் ஏற்பாடுகளை ஒவ்வொன்றாக நெஞ்சிடிப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். களத்தை சீரமைத்தனர். காய்களை கொண்டுவந்து வைத்தனர். இருக்கைகளில் புலித்தோல் விரித்தனர். அவை முன்னரே நிறைந்திருந்தது. அனைவரும் ஒருவரோடொருவர் பேசியபடியும் மெல்ல சிரித்தபடியும் இருந்தனர். அவர்கள் அனைவருமே போர் தவிர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி கொண்டிருந்தனர். ஆகவே சூதில் மேலும் ஆர்வம் கொண்டவர்களாக தெரிந்தனர். ஏவலர் அவர்களுக்குரிய இன்கடுநீரும் வாய்மணங்கள் நிறைந்த தாலங்களுமாக நடுவே உலவினர்.

வெளியே மங்கல இசை ஒலித்தது. நிமித்திகன் அவைக்குள் நுழைந்து புஷ்கரன் அவை நுழைவதை அறிவித்தான். தொடர்ந்து காகக்கொடியுடன் கொடிவீரன் உள்ளே வந்தான். இசைச்சூதரும் தாலமேந்திய சேடியரும் நுழைய புஷ்கரன் அருகே ரிஷபன் தொடர அரசணிக்கோலத்தில் நடந்துவந்தான். புன்னகையுடன் அவையை வணங்கியபடி நுழைந்து தனக்கான பீடத்தில் அமர்ந்தான். நளனை நோக்கவோ வணங்கவோ இல்லை. நாகசேனர் காவலர்தலைவனை அழைத்துவந்தார். அவன் நளன் அருகே அமர்ந்தான். நாகசேனரின் முகம் தெளிவுகொண்டிருப்பதை நளன் கண்டான். அவர் எதை உணர்ந்தார் என வியந்துகொண்டான்.

நிமித்திகன் அவைமேடையேறி தன் சிறிய கொம்பை முழக்கினான். முகமனுரைகளும் வாழ்த்துக்களும் கூறியபின் அறிவிப்பை கூவினான். “விஜயபுரியின் தலைவரும் காளகக்குடித் தோன்றலுமாகிய இளவரசர் புஷ்கரருக்கும் அவருடைய தமையனும் இந்திரபுரியின் அரசரும் சபரகுடிவழி வந்தவருமாகிய அரசர் நளனுக்குமிடையே குடிப்பூசல் எழுந்துள்ளது. முறைப்படி குடிமூத்தாரால் ஏற்கப்பட்ட தனக்கே நிஷதமண்ணின் ஆட்சியும் கொடியும் முடியும் உரிமைப்பட்டது என்றும் மூத்தவராகிய நளன் அரியணை ஒழியவேண்டும் என்றும் இளவரசர் புஷ்கரர் கோருகிறார். அதை மூத்தவர் எதிர்ப்பதனால் போர் அறைகூவப்பட்டது.”

“குடிப்பூசலில் உடன்பிறந்தோர் குருதி சிந்தலாகாதென்று எண்ணிய குலமூத்தார் எடுத்த முடிவை ஏற்று இப்பூசலை நிகரிப்போர் வழியாக தீர்த்துக்கொள்ள இரு சாராரும் ஒப்புதல்கொண்டுள்ளனர். நிகரிப்போருக்குரியது நாற்களம் என்பதனால் இன்று இந்த அவையில் இளவரசரும் மூத்தவரும் நேருக்கு நேர் களமாடி வெற்றிதோல்வியை எதிர்கொள்ளவிருக்கிறார்கள். இந்த அவை அதை ஏற்றருள வேண்டுமென்று அரசர் சார்பில் கோருகிறேன்.” அவை கோல்களைத் தூக்கி ஒப்புதல் ஒலி எழுப்பியது. “இளவரசரையும் மூத்தவரையும் ஆடுகளத்தில் அமரவேண்டுமென்று அழைக்கிறோம்” என்றான் நிமித்திகன்.

புஷ்கரன் வணங்கியபடி சென்று பீடத்தில் அமர்ந்தான். அமைச்சர் தலைவணங்கி அழைக்க நளன் எழுந்து அவையை வணங்கியபடி சென்று களத்தருகே இடப்பட்ட பீடத்தில் அமர்ந்தான். “ஆட்டத்துணைவர்கள் அமர்க!” என்றான் நிமித்திகன். புஷ்கரன் அருகே ரிஷபன் வந்து அமர்ந்தான். அவனை நோக்கிய முதற்கணம் நளன் நெஞ்சதிர்ந்து நோக்கை விலக்கிக்கொண்டான். அவனருகே காவலர்தலைவன் வந்து அமர்ந்தான். “தொல்நெறிகளின்படி இந்தக் களமாடல் நிகழும். இதில் வெல்பவர் போரில் வென்றதாக தோற்றவர் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதை இங்கு இருவரும் அனல்தொட்டு ஆணையுரைக்கட்டும்” என்றான் நிமித்திகன்.

இருவரிடமும் எரியும் அகல்விளக்கு கொண்டுவரப்பட்டது. தழல்மேல் கைநீட்டி “ஆம், நான் முழுதேற்கிறேன். ஆணை ஆணை ஆணை” என்றான் புஷ்கரன். நளனும் அவ்வாறே ஆணை ஏற்றான். “ஆட்டம் தொடங்கட்டும். ஆடல் காண வந்துள்ள தெய்வங்களும் மூதாதையரும் மகிழ்வு கொள்க!” என்றான் நிமித்திகன். ஆட்டம் தொடங்குவதை அறிவிக்கும் முகமாக நிமித்திகன் தன் இடையிலிருந்த கொம்பை மும்முறை முழங்கினான். முரசு முழங்க அதை ஏற்று வெளியே பெருமுரசுகள் ஒலித்தன.

“நீங்கள் முதலில், மூத்தவரே” என்றான் புஷ்கரன். தன் முதற்கருமேல் கை வைத்த நளன் திரும்பி ரிஷபனை பார்த்தான். முதற்கணத்தில் தலையில் இரு கொம்புகளுடன் எருதுமுகம் கொண்டு அவன் அமர்ந்திருப்பதாகத் தோன்றி மெய்ப்பு கொண்டான். அக்கணமே புஷ்கரனும் ரிஷபனை திரும்பி நோக்கினான். “காய் நகர்த்துக, அரசே” என்று ரிஷபன் சொன்னான்.

flowerதமயந்தியின் அணியறைக்குள் சேடி வந்து வணங்கி “பேரமைச்சர் கருணாகரர்” என்றாள். தமயந்தி வியப்புடன் “இங்கா? நான் வேள்விச்சாலைக்கு சென்றுகொண்டிருக்கிறேன் என்று சொல்” என்றாள். அவள் “அவர் பதற்றத்துடனிருக்கிறார்” என்றாள். தமயந்தி புருவம் சுளித்து எண்ணிநோக்கியபின் “சரி, அவரை வரச்சொல். ஸ்ரீதரரிடம் சென்று நான் அவையேக சற்று பிந்தும், அதுவரை வேறேதேனும் சடங்குகள் நிகழவேண்டும் என்று சொல்” என்றாள். சேடி சென்றதும் பிற அணிச்சேடியர் செல்லலாம் என கையசைத்தாள்.

கருணாகரர் உள்ளே வந்து வணங்கியதுமே அவளுக்கு தீயசெய்தி என்று தெரிந்துவிட்டது. அமர்க என்று அவள் கைகாட்ட அவர் அமர்ந்தார். “வேள்விநிகழ்வு முடிய இன்னும் பொழுதிருக்கிறது அல்லவா?” என்றாள். “ஆம், அரசி. உச்சிப்பொழுதுக்குள் முடிந்துவிடும். நீங்கள் சென்று அமர்ந்து முடித்துவைக்கவேண்டும். அந்தணர்கொடைகளை உங்கள் கைகளால் நிகழ்த்தவேண்டும். அதன்பின்னர் அவைநிகழ்வுகள்.” அவள் அவர் முகத்தை கூர்ந்து நோக்கிவிட்டு “அரசர் இன்னும் வந்துசேரவில்லை அல்லவா?” என்றாள்.

“நீங்கள் ஒற்றர்கள் வழியாக அறிந்திருப்பீர்கள், அரசி. அரசர் விஜயபுரிக்குத்தான் சென்றார்.” தமயந்தி “ஆம்” என்றாள். “சற்றுமுன் பறவைச்செய்தி வந்தது. அரசரும் இளவரசரும் பிறரும் வந்துகொண்டிருக்கிறார்கள்.” அவள் அவர் முகத்தை கூர்ந்து நோக்கி “நல்ல செய்தி அல்லவா?” என்றாள். “இல்லை, அரசி” என்றார் கருணாகரர். பின்னர் சொல்தேடித் தொகுத்து “ஊழின் ஆடலென்றே கொள்க! பிறிதொன்றும் சொல்வதற்கில்லை” என்றார். “சொல்க!” என்றாள்.

“நிகரிப்போர் என்று ஒரு சூதாட்டம் நிகழ்ந்தது. அரசரும் இளவரசரும் ஆடினர்” என்றார் கருணாகரர். “அதில் அரசர் தோற்றார்.” தமயந்தி சில கணங்கள் உறைந்தவளாக அமர்ந்திருந்தாள். பின் மெல்ல கலைந்து “அவ்வளவுதானே? அரசு இளவரசருக்கு. நான் முடிசூட முடியாது. வேறென்ன?” என்றாள். “இல்லை, அரசி. அரசர் முற்றாகவே தோற்றிருக்கிறார்” என்றார் கருணாகரர். அவள் “முற்றாக என்றால்?” என்றாள். “முழுமுற்றாக. அரசரென்றும் நிஷதக்குடிமகன் என்றும் அவர் கொண்டுள்ள அனைத்தையும் துறந்திருக்கிறார்” என்றார் கருணாகரர்.

தமயந்தி அதை முழுக்க புரிந்துகொள்ளாததுபோலத் தோன்றியது. அவள் விழிகள் வெறுமையாக இருந்தன. கருணாகரர் “அரசி, இந்த ஆட்டத்தை முழுமையாகவே ரிஷபன் வழிநடத்தியிருக்கிறான். முதலில் நிஷதகுடியின் முடியுரிமையை வைத்து ஆடுவதாகவே இருந்தது. நாற்களம் முன் அமர்ந்த பின்னர் ரிஷபன் புஷ்கரர் தன் முடியுரிமையுடன் குடியுரிமையையும் வைத்து ஆடுவதாக அறிவித்தான். அரசர் என்ன எண்ணினாரென்று தெரியவில்லை. அவரும் அதை ஏற்றுக்கொண்டார்” என்றார். தமயந்தி அதே நோக்குடன் இருந்தாள். “அவருக்கும் வேறுவழியில்லை. அனைத்தும் முன்னரே திட்டமிடப்பட்டிருந்தன போலும். அவையில் அமர்வது வரைதான் அவர் முடிவெடுக்க முடியும்” என்றார் கருணாகரர்.

“முழுக்கத் தோற்பது என்றால்?” என்றாள் தமயந்தி. அதுவரை சொல்லப்பட்டவை அவள் உள்ளத்திற்குள் செல்லவில்லை என்று தோன்றியது. “அவருடைய அனைத்து உடைமைகளும் உரிமைகளும் இல்லாமலாகும்” என்றார் கருணாகரர். “அவருக்கு நிஷதகுடியின் ஆதரவோ அரசுகளின் காப்போ இனி இல்லை.” தமயந்தி பொருளில்லாமல் தலையசைத்தாள். அவள் தான் சொல்வதை புரிந்துகொண்டிருக்கிறாளா என்று ஐயம்கொண்ட கருணாகரர் “அரசி, நிஷதபுரியில் உங்களை அரசி என நிலைநிறுத்தியது பேரரசர் நளன் கொண்ட உரிமைகளே. அவையனைத்தும் இல்லாமலாகிவிட்டன” என்றார்.

அவள் தொடப்பட்ட நீர்ப்பாவை என அலைவுகொண்டு விழித்து “இனி நான் அரசி அல்ல, அல்லவா?” என்றாள். “ஆம்” என்றார் கருணாகரர். “பேரரசர் அரசிழக்கையிலேயே நீங்களும் அதை இழந்துவிடுகிறீர்கள். அவர் நிஷதர் என்னும் நிலையை இழக்கிறார். குடியிழந்தவர்கள் நான்கு வர்ணங்களிலிருந்தும் விலகி ஐந்தாவது நிலைக்கு சென்று சேர்கிறார்கள்.” அவள் அப்போதுதான் சினம்கொண்டாள். முகம் சிவக்க மூச்சு ஒலிக்க “இது எந்த நூல்நெறி?” என்றாள். “குடியுரிமையை எவரும் வைத்தாடுவதில்லை, அரசி” என்றார் கருணாகரர்.

“ஆனால் உங்கள் குடியுரிமையை நீங்கள் மீட்டுக்கொள்ளலாம்” என்று கருணாகரர் சொன்னார். “நளமன்னருக்குத் துணைவியாக நீங்கள் இருக்கும்வரை நீங்களும் உங்கள் மைந்தரும் ஐந்தாம் வர்ணத்தவரே. அந்த உறவை நீங்கள் வெட்டிக்கொள்ளலாம். மங்கலநாணையும் கணையாழியையும் கழற்றிவிட்டு அனல் சான்றாக்கி சான்றோர் எழுவர் முன் அந்தணர் வேதம் சொல்ல ஒழிந்தது உறவு என்றீர்கள் என்றால் நீங்கள் விதர்ப்ப அரசரின் மகளாக மீண்டுசெல்ல முடியும். இளவரசியென்றாக முடியும். ஷத்ரிய குடியினருக்கு மணவிலக்கும் மறுமணமும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்று அறிவீர்கள்.”

“அம்முடிவை நான் எடுப்பேன் என நினைக்கிறீர்களா?” என்றாள் தமயந்தி. “அரசி, அம்முடிவை நீங்கள் எடுக்காவிட்டால் அனைத்து இழிவுகளுக்கும் ஆளாக நேரிடும். வர்ணமற்றவர் விலங்குகளைப்போல. ஆற்றலுள்ளோர் எவரும் அடிமைகொள்ளலாம். உடைமையென வைத்திருக்கலாம், விலைகூறி விற்கலாம். எவ்வகையிலும் தண்டிக்கலாம், கொல்லலாம். அவர்களுக்கு எவ்வகையான குடியுரிமைகளும் இல்லை. உடைமையுரிமையும் வாழ்வுரிமையும்கூட இல்லை.” தமயந்தி ஆம் என்று தலையசைத்தாள்.

“வேண்டுமென்றே உங்களை சிறுமை செய்ய புஷ்கரர் தயங்கமாட்டார். அவர் ஒழிந்தாலும் நம் பகையரசர்களும் அவர்களின் ஒற்றர்களும் உறுதியாக அதற்கு முன்வருவார்கள். அறிந்தே நம்மை நாம் இழிநரகத்திற்கு இட்டெறிவது அது. வேண்டியதில்லை… இது ஓர் அரசியல்சூழ்ச்சி என்றே இருக்கட்டும். இன்று இது அறப்பிழையெனப் படலாம். அலர் சில எழலாம். நாம் ஒருநாள் வெல்வோம். அதன்பின் இதற்குரிய நெறிநிலைகளை சொல்லி நிறுத்துவோம்” என்றார் கருணாகரர்.

அவர் முகம் மலர்ந்தது, குரல் வலுக்கொண்டது. “இங்கு வருகையிலேயே இதைத்தான் எண்ணிக்கொண்டு வந்தேன். ஒன்றும் தட்டுப்படவில்லை. பேசிவந்தபோது அறியாது இந்த வழி திறந்துகொண்டது. இவ்வெண்ணம் தோன்றியது தெய்வச்செயலே.” அவர் மேலும் ஊக்கம் கொண்டு “ஒன்று செய்யலாம். அரசரை நீங்கள் மணவிலக்கு செய்த மறுகணமே நீங்கள் விதர்ப்ப இளவரசி ஆகிறீர்கள். இங்குள்ள விதர்ப்ப வீரர்கள் உங்கள் கணையாழிக்கு கட்டுப்பட்டாகவேண்டும். அவர்களிடம் அரசரை அடிமையென பிடிக்கச் சொல்லுங்கள். உங்கள் அரசுக்குறி ஒன்றை அவர் கழுத்தில் அணிவியுங்கள். அக்கணமே அவர் உங்களுக்கு அடிமைப்பொருளென்றாவார். அதன்பின் பிறர் அவரை அடிமைகொள்ள வேண்டுமென்றால் உங்களிடம் பொருதியாகவேண்டும். அரசருக்கும் அதுவே காப்பு” என்றார்.

அவர் மேலும் உளவிரைவு கொண்டு எழுந்து கைகளை விரித்து “வர்ணமில்லாதவர்களை நான்காம் வர்ணத்தவர் பெண்கொடுத்தோ உடன்பிறப்பென குருதிச்சடங்கு ஆற்றியோ தங்கள் குடிக்குள் எடுத்துக்கொள்ளலாம். அவரை விதர்ப்பத்துக்கு கொண்டுசென்று அங்குள்ள குடிகள் ஒன்றில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர் அங்கே படைத்தலைமை கொள்ளமுடியும். ஒருநாள் படையுடன் வந்து இந்திரபுரியை வென்று மீண்டும் முடிசூடிக்கொள்ளவும் முடியும்… ஆம் அரசி, இது ஒன்றே வழி” என்று கூவினார்.

தமயந்தி “கருணாகரரே, அமைச்சர்கள் அரசனுக்கு நல்லாசிரியர்களும் வைதிகர்களும் ஆவர் என்பது தொல்நெறி. ஆசிரியராக நான் உங்களிடம் கேட்பது இது. ஒரு மனைவி எதன்பொருட்டு கணவனை உதறிச்செல்லலாம்?” என்றாள். கருணாகரர் “நான்…” என்று குரல் தடுமாறினார். “நான் அரசியலுரைக்கும் ஸ்மிருதிகளை கேட்கவில்லை, அதை நானே கற்றுள்ளேன். வேதம்திகழும் நா கொண்ட அந்தணர் உரைக்கவேண்டியது அழியா ஸ்ருதிகளின் சொல்லை” என்றாள் தமயந்தி.

கருணாகரர் விழிமூடி சற்றுநேரம் அமர்ந்திருந்தார். நெற்றியில் நரம்புகள் புடைத்து அசைந்தன. விழிதிறவாமலேயே எவருடனோ என மெல்லிய குரலில் சொன்னார் “தொல்நெறிகளின்படி வேதம்பழித்தல், மைந்தர்க்கு ஊறுசெய்தல், நீத்தாரைக் கைவிடுதல், மூத்தார் சொல்மீறல், குடிப்பழி கொள்ளுதல், அரசவஞ்சம் இழைத்தல், தன் கற்பை சான்றோரவையில் இகழ்தல் என்னும் ஏழு செயல்களின்பொருட்டு துணைவி கணவனை கைவிடலாம். அவற்றின் முதன்மை வரிசையும் அவ்வாறே. அவ்வாறு கைவிட்ட மனைவி இல்லப்பழி கொண்டவள் ஆகமாட்டாள். அவள் அவனில் பெற்ற மைந்தர் இயல்பாக அவனுக்கு நீர்க்கடன் கொண்டவர்கள். அவள் விழைந்தால் அதையும் மறுக்கலாம்” என்றார்.

“ஆனால் எதன்பொருட்டும் கணவனை கைவிடாதவளே கற்பரசி எனப்படுவாள்” என்றார் கருணாகரர். “தெய்வங்களே அஞ்சும் பெரும்பழி சூடியவன் ஆயினும் கணவனுடன் இருந்து அவனைக் காப்பதன்பொருட்டு அப்பெண் அத்தெய்வங்களாலேயே தூயோள் என வணங்கப்படுவாள். அவளுக்கு எப்பழியும் சூழாது. அவள் அவனுக்கு அன்னையென்றே அமையக் கடன்கொண்டவள். அன்னை மைந்தனை கைவிடும் தருணம் ஒன்றை தெய்வங்கள் படைக்கவில்லை.”

“அறிக, தெய்வமெழுந்து வந்து பலிகொண்ட அரக்கர்களும் அசுரர்களும் இறுதிக் கணம்வரை உடனிருந்த மனையாட்டியரையே கொண்டிருந்தனர். மண்டோதரி சீதைக்கு நிகரானவள் என்கின்றன தொல்கதைகள்… பெரும்பழிகொண்ட கணவர்களைக் கொன்ற தெய்வங்கள் அவர்களை வணங்கி விண்ணேற்றிக்கொண்டன” என்றார் கருணாகரர்.

“ஏனென்றால் மண்ணில் எந்த மானுடனும் முற்றிலும் துணையற்றவனாக ஆகிவிடக்கூடாது என்று எண்ணினர் மூதாதையர். பெண்ணுக்கு அவள் கருவிலெழும் மைந்தரின் துணை என்றும் உண்டு. தான் அளித்த முலைப்பாலாலேயே அவள் மண்ணில் வேர்கொள்வாள். நீத்தபின் விண்ணில் இடம் பெறுவாள். ஆணுக்கு பெண் இல்லையேல் இப்புவியில் ஏதுமில்லை, விண்ணேறும் வழிகளுமில்லை.”

கருணாகரர் கைகூப்பியபடி கண்விழித்தார். “அறம் இது. நாமறியாத வழிகொண்டது அது. அறிந்த முன்னோரின் சொற்களைப் பணிந்து ஒழுகினாலொழிய நாம் அறியவும் இயலாதது. முற்றறிய முழுதும் துறந்தவர்க்கே இயலும்” என்றார். “பெரும்பாவிகளிடமும் கருணைகொண்டு நெறிகளை அமைத்தவர்களின் உளவிரிவை எண்ணும்போது தந்தையரே, தெய்வங்களே, இப்புவியில்தான் நீங்கள் பிறந்தீர்களா, இங்குதான் எளியேனும் வாழ்கிறேனா என நான் விழிநீர் உகுத்ததுண்டு. சென்றவர்களின் அடிகளை இத்தருணத்தில் சென்னி சூடுகிறேன்.”

தமயந்தி “நான் செய்யவேண்டியதென்ன என்று சொல்லிவிட்டீர், கருணாகரரே” என்றாள். “வேள்விச்சாலைக்குச் சென்று செய்தியைச் சொல்லி வேள்வி நிறுத்தத்தை அறிவியுங்கள். அவை கூட்டி அனைத்தையும் விளக்குங்கள். அரசர் எப்போது இங்கு வருகிறார்?” கருணாகரர் விழிகளைத் தாழ்த்தி “கிளம்பிவிட்டனர். நாளைமறுநாள் புலர்காலையில்” என்றார். தமயந்தி தலையசைத்தபின் எழுந்து கொண்டாள். இயல்பாக தன் ஆடையை அள்ளி சீரமைத்து குழல்நீவி அமைத்தபின் உள்ளறை நோக்கிசென்றாள்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 58

57. குருதி நாற்களம்

flowerஅவைக்கு தன்னை கூட்டிச்செல்ல சுநீதர் வருவார் என்று நளன் எண்ணினான். மாலையிலேயே நீராடி ஆடையணிந்து காத்திருந்தான். சாளரம் வழியாக நோக்கிக்கொண்டிருந்த நாகசேனர் “அவை கூடிக்கொண்டிருக்கிறது, அரசே. குடித்தலைவர்கள் ஒவ்வொருவராக வந்து அவைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றார்.

நளன் “பார்ப்போம், முறைமைப்படி குடித்தலைவர் வருவார்” என்றான். “முறைமைப்படி குடித்தலைவர்கள் அனைவரும் வந்தாகவேண்டும். கோல்தாழ்த்தி அழைத்து அவைக்கு கொண்டுசெல்லவேண்டும். செல்லும் வழியில் படைத்தலைவர்கள் அனைவரும் நின்றிருக்கவேண்டும். அப்படைத்தலைவர்களில் ஒருவராக இளவரசர் வாள்தாழ்த்தி நிற்கவேண்டும்” என்றார்.

நளன் ஒன்றும் சொல்லவில்லை. “அரசே, அந்தணனாக நான் இதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்றார் நாகசேனர். “அன்னசாலையில் நீங்கள் வாளெடுத்தது அத்துமீறல். அது முதற்பிழை. அந்தக் குற்றவுணர்ச்சியால் இப்போது உங்கள் நிலைமீறி தணிகிறீர்கள். இது அதைவிடப் பெரும்பிழை. அரசர்கள் மீறல் செய்யலாகாது. செய்தால் அதற்கான பொறுப்பை ஏற்று தன் தெய்வத்தின் முன்பும் குலமூத்தார் முன்பும் பிழையீடு செய்யவேண்டும். ஒருபோதும் குடிகள் முன்பும் ஊழியர் முன்பும் எதிரிகள் முன்பும் ஆற்றலின்மையாக அதை வெளிப்படுத்தலாகாது.”

நளன் “ஆம், ஆனால் நான் அவ்வாறு உணரவில்லை. இது என் கடமை. இத்தருணத்தில் சற்று பொறுமைகொள்ளலாம் என்று எண்ணுகிறேன்” என்றான். “இது பொறுமை அல்ல. நாம் இவர்களின் வலையில் வந்து சிக்கிக்கொண்டிருக்கிறோம். அரசுசூழ்தலில் செயல்களுக்கு இரு பொருள்கள் உண்டு. நேர்ப்பொருள் ஒளி என்றால் குறிப்பொருள் நிழல். நிழலே பெரிது. நாம் இன்று இங்கு செய்வதன் குறிப்பொருள் நாம் தோற்கிறோம் என்பதே” என்றார். “இதுவரை வந்துவிட்டோம். இந்த மாலையை கடந்துவிடுவோம். நாளை ஆவன எண்ணுவோம்” என்றான் நளன்.

அந்தி மயங்கியபோது அவனே பொறுமையிழந்தான். கூடத்தில் நிலையழிந்து உலவியவன் நின்று ஏவலனை அழைத்து “நீ சென்று அங்கு என்ன செய்கிறார்கள் என்று பார்த்து வா” என்றான். “வேண்டாம்” என்றார் நாகசேனர். “செல்லலாகாது. பொறுப்போம்.” நளன் அவரை நோக்க “அரசே, அங்கே அவை கூடிவிட்டது. சொல்லுசாவல் நிகழ்கிறது” என்றார். நளன் “எப்படி தெரியும்?” என்றான். “அவைக்குச் செல்லும் ஏவலரின் உடல்மொழியைக் கொண்டு உணர்கிறேன்.” நளன் “நான் செல்லாமல் எப்படி அவை கூடலாம்?” என்றான். “அவைக்கு நீங்கள் விருந்தினர்தான் என்றால் கூடலாம். அவையின் தலைவர்களில் ஒருவர் என்றால் கூடமுடியாது” என்றார் நாகசேனர். நளன் பெருமூச்சுடன் மீண்டும் வந்து பீடத்தில் அமர்ந்தான்.

அவனை அழைத்துச்செல்ல அவைச்செயலர் பிரவீரர் இரு ஏவலருடன் வந்தார். அவர் வருவதை சாளரத்தினூடாகக் கண்டதுமே நாகசேனர் “அவைச்செயலர் வருகிறார். அவர் அந்தணர்கூட அல்ல” என்றார். நளன் “இனி ஒன்றும் செய்வதற்கில்லை, கிளம்புவோம்” என்றான். “இப்போதுகூட நீங்கள் மறுத்துவிடலாம், அரசே. உங்களுக்கு உடல்நலமில்லை என்று சொல்லிவிடுகிறேன். இந்த அவைமுறைமையை ஏற்று நான் செல்கிறேன். அங்கே சொல்லவேண்டியதை சொல்கிறேன்.”

நளன் “வேண்டாம். அது மோதலென்று பொருள்படும். இப்போது நான் வந்தது அமைதிக்காக” என்றான். “அது நிகழுமென நினைக்கிறீர்களா?” என்றார் நாகசேனர். “ஆம், நான் அவனை நேருக்குநேர் பார்த்தால் போதும். இளையோனே, உன்னிடம் நேரில் பேசவேண்டும். அவை கலையும்போது நாம் சேர்ந்து உணவருந்துவோம் என்று சொல்வேன். அதை அவன் மறுக்கவியலாது.” நாகசேனர் “தாய்மடம் என்று ஒன்றுண்டு. தந்தைமடம் அதைவிடப் பெரிது” என்றார்.

ஏவலன் பிரவீரர் வருகையை அறிவித்தான். மூன்று பணிப்பெண்கள் மங்கலத் தாலங்களுடன் வந்தனர். தொடர்ந்து மூன்று சூதர்கள் முழவும் கொம்பும் சங்குமாக வந்தனர். மங்கல இசை முழங்கி அமைந்தது. பிரவீரர் முறைப்படி வணங்கி “இந்திரபுரியின் அரசரை விஜயபுரியின் காவலர், கலியின் அடியவர், நிஷதகுடிகளின் தலைவர், புஷ்கரர் வரவேற்கிறார். அவரது அவைக்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று பணிந்து கோருகிறார்” என்றார். நளன் கண்கள் சினத்தால் எரிந்து அணைந்தன. மீசையை நீவியபடி “நன்று” என்றான்.

நாகசேனர் “விஜயபுரியின் படைத்தலைவரை சந்திக்க நிஷாதர்களின் பேரரசர் உளம் கனிகிறார்” என்றார். நளன் செல்வோம் என கைகாட்டி மேலாடையை எடுத்து அணிந்தபடி எழுந்தான். இசைச்சூதர் மங்கலம் முழங்கி முன்செல்ல நளன் நடந்தான். அவனுடன் நாகசேனர் நடந்தார். பிரவீரர் “இவ்வழி, அரசே” என்றார். இடைநாழிகளில் எவருமே இல்லை. வீரர்களை நிறுத்தியிருந்தால் அவர்கள் வாழ்த்துக்கூவவேண்டியிருக்கும் என்று எண்ணி தவிர்க்கப்பட்டார்கள் என தெரிந்தது. அவைமுகப்பில் ஒற்றைக் காவலன் நின்றிருந்தான். பிரவீரர் “இந்திரபுரியின் அரசர் வருகை” என்றார். அவன் தலைவணங்கி உள்ளே அவையறிவிப்பு செய்தபின் வெளியே வந்து “அவைநுழைவொப்புதல்” என்றான்.

கதவு திறக்க நளன் உள்ளே சென்றான். அவையிலிருந்த காவலர்கள் மட்டும் வாள்தாழ்த்தி அவனை வணங்க அவைச்சூதரின் இசை முழங்கியது. அவையிலிருந்த எவரும் எழவில்லை. அரசமேடையில் அரியணையில் அமர்ந்திருந்த புஷ்கரன் அவனை நோக்காததுபோல அமர்ந்திருந்தான். அமைச்சர் பத்ரர் புஷ்கரனிடம் சென்று “இந்திரபுரியின் அரசர் நளன் அவை வருகை” என்றார். புஷ்கரன் திரும்பி நோக்கி மிகச் சிறிதாக தலைவணங்கி பீடத்தில் அமரும்படி கைகாட்டினான். நளன் அவையை ஒருமுறை நோக்கிவிட்டு சென்று தனக்கான பீடத்தில் அமர்ந்தான்.

அவனுக்கான இருக்கை அயல்நாட்டு வருகையாளர்களுக்கான நிரையில் போடப்பட்டிருந்தது. இந்திரபுரியின் மின்கதிர்க்கொடி அதற்குப் பின்னால் பறந்தாலும் எளிய மரப்பீடம் அது. தங்கள் இறகுத்தலையணிகளும் தோல்போர்வைகளும் குடிக்கோல்களுமாக அமர்ந்திருந்த குலத்தலைவர்கள் அனைவரும் அவனை நோக்காமல் இறுக்கமாக அமர்ந்திருந்தனர். சுநீதர் எழுந்துசென்று ரிஷபனிடம் ஏதோ சொன்னார். புஷ்கரன் தன்னருகே அமர்ந்திருந்த மாலினியிடம் சற்று சரிந்து மெல்ல பேசினான். அவை முழுக்க பேச்சொலிகள் இணைந்த மெல்லிய ரீங்காரம் பரவியிருந்தது.

அமைச்சர் கைகாட்ட நிமித்திகர் எழுந்து சென்று அறிவிப்புமேடையில் நின்று “அவையீரே, இன்று இந்த அவையில் நம்மை சிறப்புறுத்தவும் நம் குடிகளை வாழ்த்தவும் நம் முடிகொண்ட தலைவர் புஷ்கரரின் மூத்தவரும், இந்திரபுரியின் அரசருமான நளன் வந்துள்ளார். அவரை இந்த அவை தலைவணங்கி வரவேற்கிறது” என்றார். அவையினர் கோல்களைத் தூக்கி ஒப்புகை ஒலியெழுப்பினர். “இந்த அவைக்கு அவர் உரைக்கும் நற்செய்திக்காக அரசரும் குலத்தலைவர்களும் பிறரும் காத்திருக்கிறார்கள். நன்று சூழ்க!” என்றபின் அவர் வணங்கி இறங்கினார்.

நளன் சில கணங்கள் அவையை நோக்கியபின் “விஜயபுரியின் படைத்தலைவருக்கும் குடிகளுக்கும் என் வணக்கம். நலம் சூழ்க!” என்றான். “இங்கே அவையறிவிப்பில் விஜயபுரியின் படைத்தலைவன் என்று என் இளையோனை கூறினர். இனி அவனை விஜயபுரியின் அரசன் என்று சொல்லவேண்டுமென்ற அறிவிப்பை இந்த அவையில் வெளியிடுகிறேன். என் வருகையின் முதல் நோக்கம் அதுவே” என்றான். அவை எந்த ஓசையையும் வெளிக்காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தது.

நளன் அதை எதிர்பாராததனால் சற்று திகைத்தான். “என் இளையோன் முடிசூடி அமரும் இந்நிலம் கிழக்கே காஞ்சிவரை பெருகும். அதற்கு என் படைவல்லமை உடனிருக்கும். இது இந்திரபுரிக்கு நட்புநாடாகவும் உறவுநிலமாகவும் என்றும் நீடிக்கும்” என்றான். அவையின் அமைதி அவனை படபடப்பு கொள்ளச்செய்தது. “இந்திரபுரியின் அஸ்வமேதநிறைவு விழவுக்கு என் இளவலாகவும் விஜயபுரியின் தனியரசனாகவும் புஷ்கரன் வரவேண்டும் என்று அழைக்கவும்தான் நான் வந்தேன்” என்றான். அவையில் மெல்லிய குரல்கள்தான் ஒலித்துக்கொண்டிருந்தன.

நளன் சினம் கொள்வது தெரிந்தது. நாகசேனர் அதை உணர்ந்ததும் எழுந்து “மாமன்னர் நளன் தன்னால் கைப்பற்றப்பட்டதும் தன் ஆட்சிக்குரியதுமான இந்நிலத்தை தன் இளவலுக்கு அளிக்கும் விழவையும் அஸ்வமேதநிறைவு நாளிலேயே நடத்தலாமென்று எண்ணுகிறார். அதற்கு இந்த அவையொப்புதலை எதிர்பார்க்கிறார்” என்றார். அவை புஷ்கரனை நோக்கியது. அவன் ரிஷபனை நோக்க அவன் தன் மேலாடையின் பொன்னூல் முடிச்சு ஒன்றை இழுத்து சீரமைத்துக்கொண்டிருந்தான்.

அவையின் அமைதியில் நளன் நிலையழிந்தான். உரத்த குரலில் “அவையோரே” என்றபடி எழுந்தான். ஆனால் அவர்களை திரும்பி நோக்கியதுமே அவன் குரல் தழைந்தது. “என் குடியினர் நீங்கள். என் குருதி. நான் உங்களிடம் அரசனாக வரவில்லை, உங்கள் குடியைச் சேர்ந்தவனாக மட்டுமே வந்துள்ளேன். ஆம், பெரும்பிழை ஒன்றை செய்துவிட்டேன்…” அவன் குரல் இடறியது. கைகூப்பி “என்னை இந்தக் குலப்பேரவை பொறுத்தருளவேண்டும். நான் இயற்றவேண்டிய பிழைநிகர் என்னவென்று உரைக்கவேண்டும். நான் சித்தமாக உள்ளேன்” என்றான்.

அவையில் ஒரு ததும்பல் உருவாவதை காணமுடிந்தது. அது ஒரு சொல்லென துளிக்கும் முன்னர் ரிஷபன் எழுந்தான். “சீர்ஷரின் இறப்புக்கு நிகர் என்ன என்பதை குடியவை முடிவுசெய்யட்டும். அதற்குமுன் முடிசூடுவது குறித்த செய்திக்கு அரசர் மறுமொழி சொல்வார்” என்றான். புஷ்கரன் பேசுவதற்குள் மாலினிதேவி உரத்த குரலில் “விஜயபுரி இப்போது உங்களிடம் இல்லை, இந்திரபுரிக்கரசே. இந்திரபுரி உங்களிடம் இருக்குமா இல்லையா என்பதைப்பற்றித்தான் நாம் பேசவேண்டியுள்ளது” என்றாள்.

அந்த நேரடியான சிறுமைச்செயல் நளனை சொல்லிழக்கச் செய்தது. அவன் அறியாமல் நாகசேனரை நோக்க அவர் அமைதியாக “அரசி, விஜயபுரியை பேரரசர் நளன் படைகொண்டு வென்று சதகர்ணிகளிடமிருந்து கைப்பற்றி நெடுநாட்களாகின்றன. அப்போது தாங்கள் சிறுமியாக இருந்திருப்பீர்கள். விஜயபுரியை வென்றபின் மூன்றாண்டுகளுக்குப் பின்னர்தான் பேரரசர் கலிங்கத்தை வென்றார். தங்கள் தந்தை இந்திரபுரிக்கு வந்து பணிந்து கப்பம் அளித்தமையால் தண்டபுரம் அவருக்கு அளிக்கப்பட்டது. அதை நீங்கள் நினைவுறுவீர்கள் என நினைக்கிறேன்” என்றார். “இப்போது பரிவேள்வி முழுமையடைந்துள்ளது. பாரதவர்ஷத்தில் நளமாமன்னரின் புரவிப்படையால் வெல்லப்படாத அரசுகள் சிலவே.”

மாலினிதேவி முகம் சிவந்து திரும்பி பல்லைக் கடித்தபடி புஷ்கரனிடம் ஏதோ சொன்னாள். அவள் கண்கள் இடுங்கி பற்கள் வெளித்தெரிய முகம் சீறும் ஓநாயின் தோற்றம் கொண்டது. புஷ்கரன் ஒருமுறை கனைத்தபின் “நான் அரசுசூழ்தல் அறியாதவன். நேரடியாகவே சொல்கிறேன். விஜயபுரியில் இன்றிருக்கும் படைகளும் குலங்களும் என்னை அரசனாக ஏற்கின்றன. நான் இங்கே இன்னும் சில நாட்களில் முடிசூட்டிக்கொள்வதாக இருக்கிறேன். எவ்வகையிலும் விதர்ப்பினியின் செங்கோலை நிஷாதர்களாகிய நாங்கள் எங்கள்மேல் ஏற்றுக்கொள்ள முடியாது. அவள் எங்கள் அரசியாக பரிவேள்வி நிறைவுசெய்வதையும் ஒப்பமாட்டோம். அந்நிகழ்வு நடக்குமென்றால் படைகொண்டுவந்து இந்திரபுரியை தாக்குவோம்…” என்றான்.

நளன் “உன் சினம் புரிகிறது, இளையோனே. நாம் அதைப்பற்றி பேசுவோம். நான் உன்னுடன் சிறிது தனித்தமரவேண்டும். நீ விழைவதை சொல்” என்றான். “நாம் தனித்துப்பேச ஏதுமில்லை. நீங்கள் இங்கே என் பகையரசராகவே வந்திருக்கிறீர்கள். தூதராக வந்தமையால் அவ்வண்ணமே ஏற்று உங்களிடம் இதை சொல்கிறேன். அரசி தமயந்தி பதவி துறக்கவேண்டும். நிஷதகுடிகளின் அரசனாக நான் முடிசூடி அரியணை அமர்வேன். இது நிஷதகுடித்தலைவர்கள் குலதெய்வம் கலிமேல் தொட்டு எனக்கிட்ட ஆணை” என்றான்.

“நான் சொல்வதை கேள்” என்றான் நளன். “நீங்கள் மூத்தவராக பேசவேண்டியதில்லை. உங்களை நிஷதகுடியினரென்று இனிமேல் கருதுவதில்லை என மூத்தோர் முடிவெடுத்திருக்கிறார்கள். நீங்கள் எனக்கு அயலவர். அரசுமுறையாக ஏதேனும் சொல்வதற்கிருந்தால் சொல்க!” நாகசேனர் “அவ்வாறு முடிவெடுக்க எவர் இவர்களுக்கு உரிமை அளித்தது? அங்குமிருக்கிறார்கள் நிஷதகுடித்தலைவர்கள்” என்றார். “ஆம், அங்கிருக்கும் குலக்கேடர்களுக்கு நெறி கற்பிப்போம்” என்றார் சுநீதர். “சபரர்களுக்கு நிலம் தேவை என்றால் அவர்கள் அதை விதர்ப்பத்தின் அருகே எங்காவது அமைத்துக்கொள்ளட்டும். சபரர்களில் ஏழு குடிகள் எங்களுடன் உள்ளன, எஞ்சியவர்கள் இனி நிஷாதர்கள் அல்ல.”

“நீங்கள் குடிப்போர் ஒன்றுக்கு களமொருக்குகிறீர்கள். போர் நிகழுமென்றால் நம் குடியே அழியும். நம்மை சூழ்ந்திருக்கின்றன குருதிப்பசி கொண்ட நாடுகள். நம்மால் வேட்டையாடப்பட்டு அடிமைகொள்ளப்பட்டவை அவை” என்றார் நாகசேனர். “இது குடிப்போரேதான். ஆனால் உறுதியாக நாங்கள் வெல்வோம். நிஷதகுடிகளில் ஆற்றல்மிக்கது காளகக்குடி. எங்கள்மேல் ஏறி சபரர்கள் அடைந்த வெற்றிகளை இதுகாறும் குடிப்பூசல் வேண்டாமென்று எண்ணியே தாங்கிவந்தோம். இனி அது நடக்காது. போர் நிகழட்டும். காளகர்களை எவர் வெல்வார் என்று பார்க்கிறோம்” என்றார் சுநீதர். காளகக்குடியினர் எழுந்து கோல்களைத் தூக்கி உரக்க உறுமலோசை எழுப்பினர்.

நாகசேனர் ஏதோ சொல்ல வாயெடுக்க அவரை கையமர்த்திவிட்டு நளன் உரத்தகுரலில் சொன்னான் “உங்களுக்கு நம்பிக்கையளிப்பது எதுவென்று அறிவேன். பகைநாட்டரசரின் உதவிகளை நம்பியிருக்கிறீர்கள். அவர்கள் நம் குலத்தை பிளக்கிறார்கள். பிளந்தபின் அவர்கள் நம்மை முற்றழிப்பார்கள். நாம் அவர்களிடம் சென்ற காலங்களில் இரக்கம் காட்டவில்லை என்று உணர்க! இந்த எளிய சூழ்ச்சியைக்கூட உணரமுடியாமல் உங்களைத் தவிர்ப்பது எது?” என்றான். ரிஷபன் “நட்பும் பகையும் அரசியலில் மாறுபடும். இப்போது நாங்கள் அவர்களுக்கும் அவர்கள் எங்களுக்கும் தேவைப்படுகிறார்கள்” என்றான்.

மாலினிதேவி “குலப்பூசலைத் தவிர்க்க எளியவழி உள்ளது, இந்திரபுரியின் அரசே. நீங்களும் உங்கள் விதர்ப்ப அரசியும் முடிதுறக்கலாம். நிஷத குடிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இளையவரை அரசராக்கலாம். வாளேந்தி அவருக்கு படைத்துணை நிற்கலாம்” என்றாள். நளன் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்து “வாயைமூடு, இழிமகளே! இவையனைத்தும் உன் சூழ்ச்சி. உன் களவுத்துணைவனாகிய இவனுடைய திட்டம். இன்று நீ செய்வதற்காக உன்னை ஒருநாள் கழுவேற்றுவேன்” என்றான்.

அவள் சினவெறியுடன் நகைத்து “இதைத்தான் வெறுக்கிறது நிஷதகுடி. நீங்கள் தலைவெட்டி வீழ்த்திய சீர்ஷரின் குருதி இங்கே மணக்கிறது. இதோ இங்கே இருக்கிறது மூத்தவரின் மீளா உயிர். இந்திரபுரியை வென்று அங்கிருக்கும் இந்திரன் ஆலயத்தை இடித்து அங்கே கலிதேவனை மீட்டமரச் செய்த பின்னரே அவர் விண்ணேகுவார்… அவரே வெறியாட்டனில் எழுந்து சொன்னது இது…” என்றாள். எழுந்து அவை நோக்கி “சொல்லுங்கள்… உங்கள் குருதிப்பழி இது. இனி எந்த பேச்சுக்கும் இடமில்லை என்று சொல்லுங்கள். குருதியை நீரால் கழுவ முடியாதென்று இவர் அறியட்டும்” என்றாள்.

அவை முழுமையாக எழுந்து கைகளையும் கோல்களையும் நீட்டி கூச்சலிட்டது. முழக்கத்திற்குள் வசைச்சொற்களும் இருப்பதை நளன் கேட்டான். நாகசேனர் “கிளம்புவோம், அரசே” என்றார். சுநீதர் “நீ யாரென்று எண்ணினாய்? குடிமூத்தாரை தலைவெட்டி வீழ்த்திய உன் குருதியால் எங்கள் கலிதேவனின் பீடத்தை கழுவுவோம்…” என்று கூச்சலிட்டார். வெறிகொண்ட நீர்விழிகள். இளித்த பற்கள். புடைத்த தொண்டைநரம்புகள். நளன் வெறித்த விழிகளுடன் நோக்கி நின்றான்.

பின்னர் மீண்டு புஷ்கரனை நோக்கி “இளையோனே…” என்று கைநீட்டினான். புஷ்கரன் “இதோ அறிவிக்கிறேன், நாளையே படைகள் எழுக! சதகர்ணிகளும் கலிங்கர்களும் நம்முடன் வருவார்கள். நாம் இந்திரபுரியை தாக்கும் அதேநாள் வடக்கிலிருந்து மகதமும் வங்கமும் சேதியும் இணைந்து தாக்கும். மேற்கே அவந்தியும் மாளவமும் தாக்கும். விதர்ப்பினியின் ஆணவத்தை அழிப்போம். அவள் கட்டிய அந்த வேள்விப்பந்தலை எரியூட்டுவோம். அவள் வேள்விப்பரியை கொன்று சமைத்து உண்டாட்டு நடத்துவோம். இது அரசாணை” என்றான்.

அவை வெறிக்கூச்சலிட்டது. சூழ்ந்திருந்த அத்தனை வீரர்களும் கூவி ஆர்ப்பரித்தனர். சிலர் ஏளனச் சிரிப்புடன் நளனை நோக்கி வந்தனர். நாகசேனர் “செல்வோம், அரசே” என்று கூவி அவரே முதலில் வெளியே நடந்தார். நளன் அவருக்குப் பின்னால் செல்ல ஊளைகளும் ஏளனக் கூச்சல்களும் வசைகளும் பின்னால் முழங்கின.

flowerதன் அறைக்குள் நுழைந்ததுமே நளன் “ஆடைகளை எடுத்துக்கொள்ளுங்கள். புரவிகள் ஒருங்கட்டும்” என ஆணையிட்டான். “நாம் தெற்குவாயிலினூடாகச் செல்வோம். மையச்சாலையில் நகர்மக்கள் நடுவே சென்றால் நாம் இழிவுபடுத்தப்படுவோம்” என்று காவலர்தலைவன் சொன்னான். “அவைச்செய்திகள் நகரில் பரவிவிட்டன. தெருக்களெங்கும் மக்கள் கொந்தளிக்கிறார்கள். நள்ளிரவிலும் நகர் ஓயவில்லை.” நாகசேனர் “படைமுரசு கொட்டத் தொடங்கிவிட்டது, அரசே” என்றார். “உண்மையாகவே படையெழுச்சிக்கு ஆணையிட்டிருக்கிறார் இளவரசர்.”

நளன் காலோய்ந்து பீடத்தில் அமர்ந்தான். காவலர்தலைவன் “நாம் தெற்குவாயிலினூடாகச் செல்வோம் என்பதையும் வீரர் சிலர் உய்த்தறிந்துவிடக்கூடும். தெற்குவாயில் இருட்டாக இருக்கவும் வாய்ப்பில்லை. மூடுதேர் ஒன்றை கொண்டுவரச் சொல்கிறேன். அதை ஓட்டியபடி நான் மையச்சாலை வழியாக செல்கிறேன். அதை அவர்கள் சிறுமை செய்யட்டும். அப்பொழுதில் தாங்கள் தெற்குவாயில் வழியாக செல்லலாம்” என்றான். நாகசேனர் “இந்திரபுரியின் அரசர் அப்படி ஒளிந்து ஓடலாகாது. மையச்சாலை வழியாகவே செல்வோம். எத்தனையோ முறை குடிகளின் வாயால் வாழ்த்தும் அரிமலரும் பெற்றிருக்கிறார் அரசர். இதுவும் அவர்களின் கொடையே. இதையும் அவர் அறியட்டும்” என்றார்.

ஏவலன் வந்து வணங்கி “குடித்தலைவர்கள்” என்றான். நளன் வியப்புடன் நாகசேனரை நோக்க “வரச்சொல்” என்றார் அவர். நளனிடம் “ஏதேனும் மாற்றுவழி கண்டிருப்பார்கள். குடிப்பூசலை தவிர்ப்போம் என கலிதேவனின் முன் குருதிதொட்டு ஆணையிட்டுத்தான் அவர்கள் கோலெடுக்கிறார்கள்” என்றார். நளன் பெருமூச்சுவிட்டான். குடித்தலைவர்கள் எழுவர் தங்கள் அவைக்கோலத்திலேயே வந்திருந்தார்கள். முறைப்படி நளனை வணங்கி முகமன் உரைத்தனர்.

“நாங்கள் அவையில் நிலைமீறியது உண்மை. சீர்ஷரின் பெயர் அவ்வாறு எங்களை கொந்தளிக்கச் செய்தது” என்றார் சீரகுலத்தலைவராகிய பணிதர். “ஆனால் அவை முடிந்து வெளியே சென்றதுமே போர்முரசுக்கான ஆணைகளை படைத்தலைவர்கள் கொண்டுசெல்வதை கண்டோம். எங்கள் உள்ளம் அஞ்சிவிட்டது. பல நூறாண்டுகள் நிஷாதர்களாகிய நாம் ஒருவரோடொருவர் போரிட்டு அழிந்தோம். நம்மை அயவலர் அடிமைகளாக பிடித்துக்கொண்டுசென்று சந்தைகளில் விற்றனர். வயல்களில் நுகங்களில் கட்டி உழுதனர். துறைநகர்களில் சுமை எடுத்தோம். கலங்களில் துடுப்பு வலித்தோம். நம் குடியில் மகாகீசகர் தோன்றியமையால் நாம் எழுந்தோம். அது நம் குடித்தெய்வங்களின் அருள். அடிமைகளாக அழிந்த  நம் மூதாதையரின் தவம்…”

நளன் “ஆம், அதை எண்ணியே நான் அஞ்சுகிறேன்” என்றான். “போர்முகத்தில் நான் கொன்றழிக்க வேண்டியவர்கள் என் குருதியினர், என் இளையோர், மூத்தோர்.” சூரர்குடித்தலைவரான இகடர் “அதை தவிர்த்தாகவேண்டும் என்று பேசிக்கொண்டோம். இளவரசரிடம் நேரில் சென்று போரைத் தவிர்ப்பதைப்பற்றி பேசலாமென முடிவெடுத்தோம். அவர் உணவருந்திக்கொண்டிருந்தபோது நேரில் சென்று கண்டோம். நாங்கள் பேசவே அவர் ஒப்பவில்லை. போருக்கு முடிவெடுத்துவிட்டதாக சொன்னார்” என்று பணிதர் தொடர்ந்தார்.

“அருகே அமர்ந்திருந்த மாலினிதேவி போர்முரசு கொட்டியபின் தயங்குவது அச்சமென்று பொருள்படும் என்றார். அரசர் வெறியுடன் உரக்க நகைத்தபடி எழுந்து போர் தொடங்கிவிட்டது. இனி பின்வாங்குதலே இல்லை என்றார். அவையில் வஞ்சினம் உரைத்தபின் போரை எண்ணித்தயங்க அவர் சித்தமாக இல்லை என்றும் சீர்ஷரின் குருதிதொட்டு உரைத்த அந்த வஞ்சினம் தெய்வங்கள் மேலிட்ட ஆணை என்றும் சொன்னார். எங்கள் சொல் செவியேறவேயில்லை.”

நாகசேனர் “போர் வருமென்றால் ஒழியவேண்டியதில்லை. இருபதாண்டுகள் போரை நடத்தும் ஆற்றல் நிஷதபுரிக்கு உண்டு. மொத்த பாரதவர்ஷத்தையும் வெல்ல எங்கள் அரசரால் இயலும்” என்றார். “நிஷதர்களின் குருதி நிலத்தில் விழவேண்டுமென்பது ஊழ் என்றால் அவ்வாறே நிகழ்க!” நளன் “ஆம், அஞ்சவேண்டிய இடத்தில் நானோ என் படைகளோ இல்லை. இவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதே அஞ்சுகிறார்கள் என்பதற்கான சான்று” என்றான்.

“இல்லை அரசே, ஒரு வழி திறந்துள்ளது” என்றார் பிருங்க குலத்தவராகிய சுருதர். “நாங்கள் சோர்ந்து திரும்பிவந்தோம். குலப்பேரழிவை கண்களால் பார்க்கவிருக்கிறோம் என்று உறுதிகொண்டோம். அப்போதுதான் அமைச்சர் பத்ரர் எங்களை நோக்கி வந்தார். என்ன நிகழ்ந்தது, என்ன சொன்னார் அரசர் என்று கேட்டார். போர் நிகழ்ந்தே ஆகவேண்டும் என்று அரசர் வெறிகொண்டிருக்கிறார் என்று நான் சொன்னேன். அவ்வாறென்றால் போர் நிகழட்டும், ஆனால் குருதிப்பொழிவு வேண்டாம் என்றார் பத்ரர்.”

நளன் புருவத்தை சுருக்க இகடர் “இத்தகைய சூழல்களுக்காக மூதாதையர் ஏதேனும் ஒரு வழி வைத்திருப்பார்களே என்று நூல்களில் தேடினேன், ஒரு வழி உள்ளது என்றார். நாங்கள் நம்பிக்கையுடன் நோக்க, நாற்கள ஆட்டம் என்றார்” என்றார். நளன் “சூதா?” என்றான். “ஆம், நாற்களம் என்பது நிகரிப்போர். நால்வகைப் படைகளும் எதிர்நின்றாடும் களம். குருதிப்போரைத் தவிர்க்க நிகரிப்போரை இரு சாராரும் ஏற்றுக்கொண்டால் நிகழ்த்தலாம் என்று பத்ரர் சொன்னார்.”

நளன் நாகசேனரை நோக்க அவர் “நிகரிப்போர் என்றால்…” என்று தொடங்க பணிதர் உரக்க “பாரதவர்ஷத்தில் குலப்போரும் குடிப்பூசலும் நிகழாத காலம் இல்லை. ஒருதாய்மைந்தரிடையே வஞ்சினம் உரைக்கப்பட்டால் நிகரிப்போரே தெய்வங்கள் விரும்பும் வழி என்று நூலுரை இருப்பதை பத்ரர் சொன்னார்” என்றார். இகடர் “இது ஒன்றே நாங்கள் காணும் வழி. நீங்கள் உங்கள் இளையோனுடன் அவைநடுவே நாற்களம் ஆடுங்கள். வென்றவர் முடிசூடட்டும்” என்றார். நளன் திகைத்தவன்போல அமர்ந்திருந்தான்.

நாகசேனர் “சூது பழிக்குரியது என்று சொல்லப்பட்டுள்ளது” என்றார். “ஆம், உடன்பிறந்தகுருதியை வீழ்த்துவது அதைவிடப் பெரும்பழிக்குரியது. வானிலுள்ளனர் முலையூட்டிய அன்னையர். நாம் மண் நீத்தால் சென்று அவர்கள் முன் நின்றாகவேண்டும். அதை மறக்கவேண்டியதில்லை” என்று இகடர் சொன்னார். “அவன் என்ன சொன்னான்?” என்று நளன் கேட்டான். “அவரிடம் பேசி ஒப்புதல்கொள்ள வைக்கமுடியும். ஏனென்றால் அனைத்துக் குலத்தலைவர்களும் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். போருக்கு நாங்கள் ஒப்பினால் மட்டுமே அவர் படையெழுச்சி கொள்ளமுடியும்” என்றார் பணிதர். “நம் குருதியினர்தான் மறுநிரையிலும் இருப்பார்கள் என்பதை சற்று பொழுது செல்லும்தோறும் நம் படைவீரர் உணர்ந்துகொள்வார்கள்… அவர்கள் எதிர்ச்சொல் முழக்கத் தொடங்கினால் அது இளவரசருக்கே இழிவு. அதற்குள் நிகரிப்போரை அறிவித்துவிடலாம்.”

நளன் “அவன் ஒப்புக்கொண்டால் நான் சித்தமே” என்றான். இகடர் முகம் மலர்ந்து “போதும், எஞ்சியதை நான் பார்த்துக்கொள்கிறேன். இதோ இங்கிருந்தே அரசரை சந்திக்கச் செல்கிறோம். உடன் எங்கள் குடியின் படைத்தலைவர்களும் வருவார்கள். முடிவுசெய்துவிட்டோம். நிகரிப்போர்தான், குலப்போர் அல்ல” என்றார். பணிதர் “நாளையே நேரம் குறிப்போம்” என்றார். “அவன் தயங்கக்கூடும், அவன் சூதில் வல்லவன் அல்ல” என்றான் நளன். “அவருக்கு வேறுவழியில்லை. எங்கள் மைந்தரின் குருதிமேல் நடந்து அவர் முடிசூடமுடியாது” என்றபின் இகடர் எழுந்து “விடைகொள்கிறோம்” என்றார்.

அவர்கள் செல்வதை நளன் வெறித்து நோக்கி சற்றுநேரம் அமர்ந்திருந்தான். நாகசேனர் “வேறுவழியில்லை என்பது சித்தத்துக்கு உறைக்கிறது. ஆனால் உள்ளம் பதறிக்கொண்டே இருக்கிறது, அரசே” என்றார். “அவனால் சூதில் வெல்லமுடியாது. அவன் எப்படி ஒப்புவான்?” என்றான் நளன். “அவருக்கு வேறுவழியில்லை. இப்போது பார்த்தால் நாளை மாலையே எல்லாம் இனிது முடியவேண்டும். ஆனால் நான் அஞ்சுவது அவனை” என்றார். யாரை என நளன் உணர்ந்திருந்தான். “அவன் கலிவடிவன்” என்றார் நாகசேனர்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 57

56. முள்விளையாடல்

flowerஅன்று காலையிலேயே அது அந்த நாள் என புஷ்கரனின் உள்ளாழம் அறிந்திருந்தது. அறியா பதற்றமொன்று அவனுடன் புலரியிலேயே இருந்தது. வழக்கத்துக்கு மாறாக அவன் கருக்கிருட்டிலேயே விழித்துக்கொண்டான். மஞ்சத்தில் படுத்திருக்கையில் ஏன் விழித்தோமென எண்ணி அக்கனவை சென்றடைந்தான். அவன் கண்டது ஒரு காளையை. அதன்மேல் கரிய காகம் அமர்ந்திருந்தது. காளை வாய் திறந்து கா கா என ஓசையிட்டது. காகத்தின் கண்கள் சிவந்திருந்தன. அவன் கையில் ஒரு வாள் இருந்தது. கல்லால் ஆன வாள். அதில் குருதி வழிந்தது. “இதை தூக்கமுடியவில்லை” என்று அவன் சொன்னான். “மிகுந்த எடை… தூக்கமுடியவில்லை.”

அவன் அக்கனவைப்பற்றி எண்ணிக்கொண்டே நெடுநேரம் படுத்திருந்தான். பின்னர் எழுந்து ஏவலனை அழைத்து நீராட்டறைக்குச் செல்லவேண்டும் என்றான். அவன் விழிகளில் வியப்பு தெரிந்தது. நீராட்டறை ஏவலரும் குழப்பம் கொண்டிருந்தனர். ஆடையணிந்துகொண்டு அவைக்குச் செல்லவேண்டுமா என எண்ணி அவன் பீடத்தில் அமர்ந்திருக்கையில் சுநீதர் வந்து வணங்கினார். அவன் சித்தமாகியிருப்பதைக் கண்டு அவர் விழிகளிலும் வியப்பு தெரிந்தது. அவரைக் கண்டதுமே அவன் உள்ளம் படபடக்கத் தொடங்கியது. அவன் அப்போது அத்தருணத்தை அப்படியே தவிர்த்து பின்னகர்ந்து மீண்டும் பழைய செயலின்மைக்கு சென்றுவிட விரும்பினான்.

“சதகர்ணிகளின் அமைச்சர் சுமத்ரரின் தூதன் வந்துள்ளான், இளவரசே” என்றார் சுநீதர். “நம்முடன் முழுமையான படைக்கூட்டுக்கு அவர்கள் ஒப்புகிறார்கள். சுகர்ணரின் சொல்லை ஓலையில் பொறித்து அனுப்பியிருக்கிறார்கள். நம் சொல்லை இன்றே அனுப்பிவிட்டால் ஐநூறாண்டுகளாக நிகழ்ந்துவரும் போர் முடிவுக்கு வருகிறது.” அவன் நடுங்கிக்கொண்டிருந்தான். “இதுவே தருணம். கலிங்கர் முன்னரே மகதரிடமும் வங்கரிடமும் மாளவரிடமும் பேசிவிட்டார். அவர்களும் நம் பக்கமே. வரலாற்றுமுனை நம்மை எதிர்கொள்கிறது.”

“என்ன செய்யவேண்டும் நான்?” என்று அவன் கேட்டான். “நிஷதகுடியின் மணிமுடிக்குரியவன் நீங்களே என்று அறிவியுங்கள். ஷத்ரியகுலத்தவளாகிய தமயந்தி சத்ராஜித்தாக நிஷதபுரியின் அரியணையில் அமர்வதை நிஷதகுடித்தலைவர்களின் துணையுடன் நீங்கள் எதிர்ப்பதாக ஓலை அனுப்புங்கள்.” அவன் நெஞ்சு விம்ம தொண்டைமுழை அசைய பேசாமல் அமர்ந்திருந்தான்.

“உங்கள் தமையனை போருக்கழைப்பது அது. குடிப்போர். ஆனால் வேறுவழியில்லை. நம் குலத்தைப் பிடித்த அப்பீடையை ஒழிப்போம். படைபெருகிச்சென்று நம் தலைநகரை கைப்பற்றுவோம். அதன் உச்சியில் அமைந்துள்ள இந்திரனின் ஆலயத்தை இடித்து நம் குடித்தெய்வமாகிய கலியை அங்கே நிறுவுவோம்” என்று சுநீதர் சொன்னார். “இவ்வறிவிப்புகளை நாம் அவர்களுக்கு அனுப்பும்போதே நம் குடித்தலைவர்கள் அனைவருக்கும் தெரிவிப்போம். நம் ஓலை அங்கு செல்வதற்குள் நம் குடிகள் அனைவரும் எரி பற்றிக்கொள்வார்கள்.”

அவன் பெருமூச்சுடன் மெல்ல தளர்ந்து “ஆம், செய்யவேண்டியது அதுவே” என்றான். “நளனின் படைகள் நம் மீது எழுமென்றால் சதகர்ணிகளும் வாகடர்களும் பல்லவர்களும் நம்மை துணைப்பார்கள். அவர்களுக்கு அமராவதியையும் ராஜமகேந்திரபுரியையும் அளிக்கவேண்டும். கலிங்கத்துக்கு தண்டபுரத்தையும் தாம்ரலிப்தியையும் அளிக்கவேண்டும். வடக்கே மகதமும் அவந்தியும் மாளவமும் வங்கமும் இணைந்து எல்லைகளை தாக்குவார்கள். அவர்களுக்கு நாம் தன்னுரிமையை அளிக்கவேண்டும்.”

புஷ்கரன் “இறுதியில் நமக்கு எஞ்சுவது மூத்தவர் படைத்தலைமை கொள்வதற்கு முன்பு இருந்த எளிய நிஷதநாடு மட்டும்தான், இல்லையா?” என்றான். சுநீதர் சற்று குன்றி பின் மீண்டு “மெய். ஆனால் நம் தலைநகர் நம் கைகளுக்கு வருகிறது. நம் குலங்களனைத்தும் ஒன்றென நம்முடன் அணிவகுக்கின்றன. நம் குடி நிஷதர்களின் தலைமைக் குடியென்றாகிறது. இது இனியொருபோதும் நிகழக்கூடும் என நான் எண்ணவில்லை” என்றார். “ஆம், இழப்புகள் உண்டு. ஆனால் அதை நாம் மீண்டும் வெல்லலாம். பாரதத்தை வென்ற நிஷதகுடிகளின் வீரம் நம்முடன்தான் இருக்கிறது. நாளை நம் கொடிவழிகள் வெல்லலாம்…”

புஷ்கரன் புன்னகைத்து “எப்படி வேண்டுமென்றாலும் விளக்கிக்கொள்ளலாம், மூத்தவரே. இதைவிடக் கடந்தும் நான் எண்ணி நோக்கிவிட்டேன்” என்றான். “அனைத்தும் முடிவுசெய்யப்பட்டுவிட்டன. தங்கள் ஒப்புதலுக்காக இளவரசி காத்திருக்கிறார். தாங்கள் தலையசைத்தால் சதகர்ணிகளுக்கும் காங்கேயத்து அரசர்களுக்கும் ஓலைகள் செல்லும். அவை சென்றுசேர்ந்து அவர்களின் ஒப்புதல் செய்தி வந்ததுமே நாம் போர்முரசு கொட்டுவோம்.” புஷ்கரன் “நடக்கட்டும்” என்றபடி எழுந்துகொண்டான்.

“நீங்கள் சோர்வுற்றிருக்கிறீர்கள். இளவரசே, எண்ணிப்பாருங்கள். மகாநதி முதல் கோதை வரையிலான நிலம் நம் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. கலிங்கம் நம் உறவுநாடு. பத்தாண்டுகாலம் சதகர்ணிகளுடன் நாம் போரை தவிர்த்தோமென்றால் நம் கருவூலம் நிறைந்து வழியும்.” புஷ்கரன் “ஆம், அதையும் நான் முன்னரே எண்ணிக்கொண்டேன்” என்றான்.

“நீங்கள் கொள்ளும் சோர்வு எனக்கு புரிகிறது. ஆம், இது மூத்தவருக்கு எதிரான போர். ஆகவே குருதிப்பழி. ஆனால் குருதிப்பழி இல்லாத அரசென ஏதும் உண்டா? பாரதவர்ஷத்தில் எத்தனைமுறை உடன்பிறந்தார் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்று நான் சொல்லவா?” புஷ்கரன் புன்னகையுடன் “வேண்டாம், அப்பட்டியலும் என்னிடம் உள்ளது” என்றான்.

“நான் எவரையும் வற்புறுத்தவில்லை. என் குடிக்கு நன்மை எதுவோ அதையே நான் செய்கிறேன்” என்று சுநீதர் சொன்னார். “இது உங்களுக்கான ஆறுதல்… நன்று” என்று சொன்ன புஷ்கரன் “ஆணைகள் செல்லட்டும்” என்று சொல்லி புன்னகை பூத்தான். அப்புன்னகையிலிருந்த கசப்பை அவர் செல்லும் வழியெல்லாம் எண்ணிக்கொண்டார். எவர் மீதான கசப்பு? ஒருகணம் அவர் எதையோ எண்ணி திடுக்கிட்டு நின்றார். அந்தக் கசப்பை அவர் முன்னர் எங்கோ கண்டிருந்தார். எங்கே எங்கே என தன் நினைவுக்குள் துழாவிக்கொண்டு நடந்தார்.

flowerஅன்று மாலை புஷ்கரனைத் தேடிவந்த மாலினி “உங்கள் மூத்தவர் நளன் நம்மிடம் போருக்கு வரமாட்டார் என்றே எண்ணுகிறேன்” என்றாள். “ஏனென்றால் நம் படைவல்லமை மிகப் பெரிதென அவர் அறிவார். சதகர்ணிகளுக்கும் வடக்கரசர்களுக்கும் நமக்குமிடையே நடந்த கைச்சாத்துக்களை நாமே அவருக்கு தெரிவிப்போம். இப்போரில் அவர் வெல்லாவிடில் அது பேரிழிவு. ஆகவே அவர் நம்மிடம் சொல்சூழ்வதற்கே வருவார்” என்றாள். “ஆனால் அதை அவர் அவளிடம் கலந்துகொள்ளமாட்டார். இது உங்கள் குருதிப்பூசல். குடிப்போர். அவள் மீது நீங்கள் கொண்ட கசப்பையும் அவர் அறிவார். ஆகவே அவளை வெளியே நிறுத்துவார். அது மிக நன்று.”

அவன் அவளிடம் “அனைத்தையும் எண்ணிச்சூழ்ந்திருப்பீர்கள் என அறிவேன்” என்றான். அவனிடம் கூடியிருந்த அந்தக் கசப்புச் சிரிப்பை அவள் விந்தையென நோக்கினாள். ஒருபோதும் அவனிடம் அதை அவள் கண்டதில்லை. அவனிடம் எப்போதுமிருந்த தயக்கத்தையும் அறியாமையையும் அகற்றி ஆழமும் கூர்மையும் கொண்டவனாக ஆக்கியது அக்கசப்பு. அவள் அதை முன்னரே கண்டிருந்தாள். நன்கறிந்திருந்தாள். எங்கே எங்கே என அவள் தன் உள்ளத்துள் துழாவினாள். ஆகவே விழிகள் மங்கலடைய “ஆம், நோக்கித்தானே துணியவேண்டும்?” என்று பொதுவாக சொன்னாள். “சொல், மேலும் என்ன திட்டங்கள்?” என்றான்.

அவள் “அவர் உங்களிடம் நேருக்குநேர் பேசினால் அனைத்தும் சீரடைந்துவிடும் என நம்புவார். இங்கு வந்து உங்களிடம் பேசவேண்டுமென தூதனுப்புவார்” என்றாள். “அவ்வலையில் வீழாமலிருப்பது உங்கள் கையில் இருக்கிறது. மூத்தவரென உங்களுக்கு அவர் ஆணையிடலாம். வளர்த்தவர் என நயந்து பேசலாம். உடனாடியவர் என கனிவு கோரலாம். குலநன்மையையும் குடியொருமையையும் சொல்லி சொல்லடுக்கலாம். எதற்கும் வளையாமலிருக்கையிலேயே நீங்கள் உங்கள் குருதியில் எழவிருக்கும் மைந்தருக்கு நலன் செய்கிறீர்கள். உங்கள் குடிமூதாதையரை மகிழ்விக்கிறீர்கள்.”

புஷ்கரன் “நான் வளையமாட்டேன் என இப்போது சொல்கிறேன். ஆனால் தருணங்களை தெய்வங்கள் வடிவமைக்கின்றன” என்றான். “ஆம், அதை ரிஷபர் சொன்னார்.” அவன் எரிச்சலுடன் “என்ன சொன்னான்?” என்றான். “உங்களால் உறுதிகொள்ள முடியாது என. ஆகவே முடிந்தவரை உங்களையும் அவரையும் சந்திக்கவிடலாகாது என. அதுவே நன்று என நானும் எண்ணுகிறேன்.” சில கணங்களுக்குப்பின் அவன் “என்னைப்பற்றி என்னைவிட நன்றாக அவன் அறிந்திருக்கிறான்” என்றான்.

அச்சொல்லில் இருந்த நஞ்சை உணர்ந்தாலும் அவள் அதை புறந்தள்ளி “நாம் அவரை பேச அழைப்போம். ஆனால் அதற்கு முன் நாம் விழைவதை சொல்லிவிடுவோம். நிஷதகுலத்திற்கு அந்த ஷத்ரியப்பெண் சத்ராஜித் என அமரக்கூடாது. காளகக்குடி முடிசூடவேண்டும். இந்திரபுரி தலைநகராக உங்களுக்கு அளிக்கப்படவேண்டும். மூத்தவர் நளனுக்கு வேண்டுமென்றால் வடக்கே உள்ள சோமகிரியையும் சூழ்ந்துள்ள ஊர்களையும் அளிப்போம். அவர் நிஷதர்களின் பேரரசுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசாக அங்கே ஆளட்டும்” என்றாள்.

புஷ்கரன் புன்னகையுடன் “அவர் அதற்கு ஒப்புக்கொள்வாரா?” என்றான். “மாட்டார். ஆனால் அவருக்கு வேறுவழியில்லை… போர் நிகழுமென்றால் நிஷதகுடிகள் ஒன்றுடனொன்று போரிட்டு அழியும். அவர்களை பிற அரசர் முற்றழிப்பார்கள்.” புஷ்கரன் “நான் அதை செய்யவேண்டுமா என்ன?” என்றான். “அது நிகழாது. நிஷதகுடிகளின் அழிவை ஒருபோதும் நளன் ஒப்புக்கொள்ளமாட்டார். அதன்பொருட்டு தான் சிறுமைகொள்ளவும் தயங்கமாட்டார்.” புஷ்கரன் “ஆம்” என்று பெருமூச்சுவிட்டான். “தான் முடிசூடி ஆள்வதற்காக குலத்தை அழிப்பதா என அவரை எண்ணச்செய்தால் மட்டும் போதும்” என்றாள் மாலினி. “அவர் அவ்வாறு மட்டுமே எண்ணுவார்” என்றான் புஷ்கரன்.

“அத்துடன் அவர் சின்னாட்களாகவே அரசு, நகர் எதிலும் ஆர்வமிழந்தவராக இருக்கிறார். வெறியுடன் படைகொண்டு தென்னகத்தையும் காங்கேயத்தையும் வென்ற பழைய நளன் இன்றில்லை” என்றாள் மாலினி. “நிகழ்க!” என்று சொல்லி அவன் தன் சால்வையை எடுத்தான். அவள் காமம் நிறைந்த சிரிப்புடன் அவன் கையைப்பற்றி “இது நன்னாள். இப்போதுகூட நாம் இனிதிருக்கலாகாதா?” என்றாள். நடிக்கப்படும் காமம்போல முகத்தை அழகிலாமலாக்குவது பிறிதில்லை. அவன் உள்ளம் குமட்டல்கொண்டது. “எனக்கு உடல்நிலை நன்றாக இல்லை” என்றான்.

“ஏன்?” என அவள் கொஞ்சினாள். “என்ன செய்கிறது என் அரசருக்கு?” அவன் அவளை நோக்கி “குமட்டல்” என்றான். அவள் முகம் மாறி மீண்டும் சீரமைந்தது. உரக்க நகைத்து “சேடியை அனுப்புகிறேன். இஞ்சிநீர் அருந்துக!” என்றாள். அவன் தலையசைத்தபின் வெளியே சென்றான். அவள் அவனிடமிருந்த அக்கசப்பை மீண்டும் எண்ணிக்கொண்டாள். அது ரிஷபனிடமிருக்கும் கசப்புச் சிரிப்பு என திடுக்கிடலுடன் எண்ணிக்கொண்டாள். அதற்கு முன்னரும் அவள் அதை கண்டிருந்தாள் என வெளியே செல்லும்போது எண்ணிக்கொண்டாள். கலிங்கத்தின் சிறைக்கொட்டடியின் கொலைத்தொழிலரிடம் எப்போதும் அச்சிரிப்பு இருந்தது.

flowerகருணாகரர் ஒற்றர்களின் ஓலைகளுடன் வந்து நளன் அறைக்குமுன் நின்றார். அறிவிப்பதற்கு முன் ஒருமுறை தயங்கினார். ஏவலன் அவரை நோக்கிக்கொண்டு நின்றான். அறிவிக்கும்படி அவர் தலையசைக்க அவன் உள்ளே சென்று ஒப்புதல் பெற்று வெளியே வந்தான். அவர் தன்னைத் திரட்டியபடி உள்ளே சென்று தலைவணங்கினார். நளன் “செய்தி வந்துவிட்டதா?” என்றான். “ஆம், ஒற்றர்கள் முன்னரே சொன்னார்கள். முறைப்படி இளவரசரின் ஓலையே வரட்டும் என்று காத்திருந்தேன். வந்துவிட்டது.” நளன் என்ன செய்தி என்று கேட்காமல் காத்திருந்தான்.

“அனைத்தும் அவருக்கு வேண்டும். நமக்கு ஓரிரு ஊர்களை ஒதுக்குவார்கள்” என்றபின் ஓலையை நீட்டினார் கருணாகரர். அவன் அதை வாங்கி ஒரே விழியோட்டலில் படித்துவிட்டு அருகே இருந்த பீடத்தில் வைத்தான். “நாம் எவ்வகையிலும் ஒத்துப்போகலாகாது என நினைக்கிறார்கள்” என்றார் கருணாகரர். “ஆம், அவர்களுக்குரிய தருணம் இது” என்று நளன் சொன்னான். “சதகர்ணிகளின் ஆட்டம் இதற்குப் பின்னால் உள்ளது. சுமத்ரர் நாம் எதிர்கொள்பவர்களிலேயே மிகப் பெரிய எதிரி.” நளன் “எதிரிகளல்ல, எதிர்ச்சூழல்களே அஞ்சத்தக்கவை” என்றான். கைகளை மார்பில் கட்டியபடி தலைகுனிந்து எண்ணத்திலாழ்ந்தான்.

“என் கருத்து இதுவே. இத்தருணத்தில் நாம் என்ன செய்தாலும் முதலில் பேரரசியின் வேள்விநிறைவும் முக்குடைசூடலும் நின்றுவிடும். அவர்கள் விழைவதும் அதுவே. நாம் இவர்களை ஒருபொருட்டென்றே எண்ணக்கூடாது” என்றார் கருணாகரர். “உண்மையில் அது நல்ல போர்ச்சூழ்ச்சியும்கூட. நாம் என்ன எண்ணுகிறோம் என எண்ணி அவர்கள் குழப்பம் கொள்ளவேண்டும். அவர்கள் அறியாத படையாற்றலோ சூழ்ச்சியோ நம்மிடமிருக்கிறதா என்று தயங்கவேண்டும். அதற்குள் பேரரசி சத்ராஜித் என்று அமர்ந்துவிடுவார். அந்நிகழ்வுக்குப்பின் நம் குடிகள் நமக்கெதிராக திரும்பமாட்டார்கள். அது நிகழக்கூடாதென்று அஞ்சியே இவர்கள் இத்தருணத்தில் இச்சூழ்ச்சியை செய்கிறார்கள்.”

“அது ஒரு நல்ல முறை என்பதில் ஐயமில்லை” என்று நளன் சொன்னான். “ஆனால் அவர்களின் ஆற்றலை நாமும் அறியோம். என் இளையவனின் முதிர்ச்சியின்மையை நான் நன்கறிவேன். தன் படைவல்லமையை நம்பி அவன் போர்தொடுப்பான் என்றால் உடன்பிறந்தோர் படைமுகம்கொண்டு குருதி சிந்துவோம். நம் குடி உட்போரிட்டு அழியும். அதை நான் ஒப்ப முடியாது.” கருணாகரர் அதற்கு மறுமொழி சொல்ல முடியாமல் நோக்கி நின்றார். “உங்களுக்கே தெரியும் புஷ்கரனை” என்றான் நளன். “மெய்தான்” என்றார் கருணாகரர்.

“ஒன்றே செய்வதற்குள்ளது. சென்று பேசுவோம்” என்றான் நளன். “நானே செல்கிறேன்” என்று கருணாகரர் சொன்னார். “நீங்கள் செல்வதனால் பயனில்லை. நான் செல்கிறேன். நான் செல்வதென்பது என் பிழைக்குப் பொறுப்பேற்று ஈடுசெய்ய தலைகுனிவதாகவும் பொருள்படும். என்னை வரவழைத்ததையே வெற்றி என அவர்கள் எண்ணக்கூடும்.” கருணாகரர் “அவர்கள் எளிதில் ஒப்பமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். ஏனென்றால் இது இளவரசரின் எண்ணம் அல்ல. இதற்குப் பின் சதகர்ணிகள் இருக்கிறார்கள். வடவர் இருக்கிறார்கள். அனைத்துக்கும் மேலாக இம்முடிவுகளை எடுப்பவர்கள் கலிங்க அரசியும் அவள் அணுக்கனாகிய ரிஷபனும்தான். நாம் செய்யக்கூடுவது பொழுதை ஈட்டுவதே. அதற்கு நான் முதலில் செல்வதே நன்று” என்றார்.

“வேள்விநிறைவுநாள் வரை அவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். நான் சென்று பேசுகிறேன். அவன் விழைவதை அளிக்கிறேன். கூடவே அவனை எப்படி அவர்கள் கைப்பாவை என வைத்திருக்கிறார்கள் என விளக்குகிறேன். மெய்யான ஆற்றலின் மேல் ஏறியே அரசமரவேண்டும், மாற்றரசர் தோள்மேல் ஏறி அமர்ந்தால் அவர்களின் கைப்பாவை என்றே ஆக நேரிடும் என அவனுக்கு விளக்குகிறேன். என்ன இருந்தாலும் அவன் என் தோளில் வளர்ந்தவன். என்னை தந்தையென எண்ணுபவன்.” கருணாகரர் ஏதோ சொல்ல எண்ணியபின் தலையசைத்தார்.

“நேரில் நானே பேச வருகிறேன் என அவனிடம் சொல்லியனுப்புங்கள். நான் அவனிடம் தனியாகப் பேசினாலே அனைத்தும் சீரமைந்துவிடும்.” கருணாகரர் “அவர்களிடம் தெரிவிக்கிறேன்” என்றார். “இச்செய்தி இங்கே எவருக்கும் தெரியவேண்டியதில்லை. அரசியின் ஒற்றர்களும் அறியாமல் நான் கிளம்பவேண்டும். இங்கு வேள்வியும் விழாக்களியாட்டும் தொடர்ந்து நிகழட்டும்” என்றான்.

“ஆனால் தாங்கள் கிளம்புவது…” என கருணாகரர் சொல்ல அவன் கையமர்த்தி “சில பயிலாப் புரவிகளுடன் காட்டுக்குச் செல்கிறேன். அதை எவரும் ஐயப்பட மாட்டார்கள்” என்றான். கருணாகரர் “நன்று” என நீள்மூச்செறிந்தார். “நாகசேனர் என்னுடன் வரட்டும். நீங்கள் இங்கே இருந்து பணிகளை நோக்குங்கள்” என்றான் நளன். “ஒருவேளை…” என்ற கருணாகரர் நிறுத்திக்கொண்டார். “என்னை அவன் சிறைபிடிப்பானா என்று எண்ணினீர்கள் அல்லவா? அவன் நிஷதகுடியினரின் சில நெறிகளை எந்நிலையிலும் மீறமுடியாது” என்றான் நளன்.

flowerவிஜயபுரிக்கு நளன் வந்த செய்தியை நகர்மக்கள் எவரும் அறியவில்லை. கருக்கிருட்டுக்குள் நளனும் நாகசேனரும் எட்டு காவல்படையினரும் கோட்டைக்குள் நுழைந்தார்கள். நளனை வரவேற்க கோட்டையில் கொடியேறவில்லை, வாழ்த்துமுரசும் எழவில்லை. அவனை எதிர்கொண்டழைத்த ரிஷபன் தலைவணங்கி வாழ்த்தும் முகமனும் உரைத்து “தாங்கள் அரண்மனையில் ஓய்வெடுக்கலாம், அரசே. காலையில் தங்களை இளவரசர் வந்து சந்திப்பார்” என்றான். நளன் அவனை கூர்ந்து நோக்கியபடி தலையசைத்தான்.

அவன் சற்று ஓய்வெடுத்து விழித்தபோது உள்ளம் மிகவும் அமைதியிழந்திருந்தது. கிளம்பும்போது மெல்லிய ஐயம் இருந்தது, அது கருணாகரரின் விழிகளில் இருந்து தொற்றிக்கொண்டது. பயணம் நீளநீள ஐயம் விலகி நம்பிக்கை உருவானது. புஷ்கரனுடன் அண்மையில் ஒரு நேருக்குநேர் உரையாடலே நிகழ்ந்ததில்லை என்று அவன் நினைவுகூர்ந்தான். அவனிடம் சொல்லவேண்டியவற்றை கோத்துக்கொண்டான். சொல்லவேண்டியதே இல்லை, என்றுமே அவனுடைய தொடுகையே புஷ்கரனை நெகிழச் செய்திருக்கிறது. தோளில் மெல்ல தட்டினால், தலையை வருடினால் கண்கலங்கி தலைகுனிபவன் அவன். ஒருவேளை இந்தச் சிக்கல்கள் அனைத்துமே அவர்கள் ஒருவரை ஒருவர் அணுகியறியவேண்டும் என்பதற்காக இருக்கலாம்.

அவன் ஆணவம் சீண்டப்பட்டிருக்கலாம். அவன் குடி தன் விழைவை அவன்மேல் ஏற்றியிருக்கலாம். அவனுக்குத் தேவை ஓர் அரசு என்றால் விஜயபுரியை தலைமையாக்கி இரண்டாவது நிஷதப்பேரரசை அவனுக்காக அமைக்கலாம். தெற்கே காஞ்சி வரை அவன் நிலம் விரியமுடியும். அவன் கொடிவழியினர் முடிசூடி ஆளமுடியும். அதைச் சொன்னாலே போதும், அனைத்தும் முடிந்துவிடும். அந்நாட்டை காளகநாடு என்றே அழைக்கலாம். அதை அவையில் அறிவித்தால் காளகர் எழுந்து நின்று கோல்தூக்கி வாழ்த்தொலி எழுப்புவார்கள்.

உறுதியான நம்பிக்கையுடன், புன்னகை நிறைந்த முகத்துடன் அவன் நகர்புகுந்தான். படுக்கையில் உடல்நீட்டும்வரை அந்த நம்பிக்கை நீடித்தது. துயிலில் ஆழ்கையில் ஏதோ ஒன்று உள்ளே தைத்தது. எது என எண்ணியபடியே துயின்றான். விழித்தபோது ஆழம் அந்த முள்ளை நன்கறிந்திருந்தது. அதை சொல்லென்றாக்கத் தவிர்த்து வேறெங்கோ அலைந்தது உள்ளம். எழுந்து நீராடி அணிகொண்டான். தான் சித்தமாக இருப்பதை புஷ்கரனிடம் அறிவிக்கும்படி ஏவலனிடம் சொன்னான். அதன்பின் அவன் வருகையை அறிவிக்கும் ஓசைகளுக்காக காத்திருந்தான்.

பின்காலை வரை புஷ்கரன் வரவில்லை என்று கண்டதும் ஏவலனை அழைத்து “என்ன நிகழ்கிறது? ஏதேனும் சிற்றமைச்சரை அழைத்து வா” என்றான். சிற்றமைச்சர் சம்புகர் வந்து பணிந்து “இளவரசர் அவையிலிருக்கிறார். தவிர்க்கமுடியாத சில பணிகள்… சந்திப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன” என்றார். அவன் சினம்கொண்டு சொல்லெடுக்க வாயசைத்தபின் அடக்கிக்கொண்டு “நான் காத்திருக்கிறேன் என்று சொல்க” என்றான்.

உச்சிப்பொழுதில்தான் ரிஷபன் அவனைப் பார்க்க வந்தான். பணிவுடன் முகமனுரைத்து “இளவரசர் தங்களை மாலையில் அவையில் சந்திப்பதாக சொன்னார், அரசே” என்றான். “அரசவையிலா? நான் அவனை நேரில் பார்க்க வந்தேன்” என்றான் நளன். “ஆம், ஆனால் தாங்கள் அரசமுறைப்படி வந்திருக்கிறீர்கள். அவையில் சந்திப்பதே முறை என்றார்கள் குடிமூத்தார்” என்றான் ரிஷபன். “இது எனக்கும் என் இளையோனுக்கும் இடையேயான சந்திப்பு. இதில் குடிமூத்தார் ஏன் உட்புகவேண்டும்?” என்றான் நளன்.

“நான் அறியேன். ஒருவேளை நேரில் தங்களை சந்திப்பது குடிமூத்தாரிடம் ஐயத்தை உருவாக்குமென அவர் எண்ணியிருக்கலாம்” என்றான் ரிஷபன். “ஐயமா? என்ன ஐயம்?” என்று நளன் கேட்டான். “நான் அணுக்கன். எதையும் நான் சொல்ல முடியாது. அரசவையில் சந்திப்பு நிகழுமென்று சொல்லப்பட்டது. அறிவிக்கவே வந்தேன்” என்று ரிஷபன் சொன்னான்.

நளன் அவனை கூர்ந்து பார்த்தான். அவனை முதலில் சந்தித்தபோதுதான் அந்த அமைதியின்மை உள்ளத்தில் குடியேறியது என நினைத்தான். அழகிய இளைஞன். ஆனால் ஏதோ ஒன்று அவனை அழகற்றவனாக ஆக்கியது. அவன் விழிகளின் கரவுநோக்கு. ஆம், அது காகக்கண். நளன் “நான் அரச உடையில் அவைபுகவேண்டுமா? நான் அணிகளை கொண்டுவரவில்லை. மேலும் முகப்புக் கொடியோ மங்கலச் சூதரோ அணிச் சேடியரோ இல்லாமல் நகர்புகுந்திருக்கிறேன்” என்றான்.

“தங்கள் விருப்பப்படி அவைநுழையலாம், அரசே” என ரிஷபன் வணங்கினான். இவன் காகம் என நளன் எண்ணிக்கொண்டான். ஒன்றை நோக்குவதாக விழிகாட்டுகையில் ஓராயிரத்தை நோக்கும் விழிகொண்டது காகம். பெருமூச்சுடன் “நன்று, நான் அவனை அவையில் சந்திக்கிறேன்” என்றான் நளன். “அவையில் அனைத்துக் குடித்தலைவர்களும் இருப்பார்கள் அல்லவா?” என்று அவன் கேட்க ரிஷபன் தலைவணங்கி “ஆம்” என்றான்.

தன் உடல்முழுக்க இருந்த சினத்தை நளன் உணர்ந்தான். நிலையழிந்து அறைக்குள் சுற்றிவந்தான். “அரசே, நாம் வந்ததே பிழை என எனக்குப் படுகிறது. நம்மை தனியாக சந்திக்க விழையவில்லை என்று இளவரசர் அறிவித்திருக்கிறார் என்பதே இதன்பொருள். இங்கு நிகழ்வன எவையும் இயல்பானவை அல்ல. நன்கு திட்டமிடப்பட்டவை” என்றார் நாகசேனர். “தாங்கள் இந்நிலத்தின் பேரரசர். முறைப்படி தாங்கள் விஜயபுரிக்கு வந்திருந்தால் புஷ்கரர் கோட்டைமுகப்புக்கு வந்திருக்கவேண்டும், குடித்தலைவர்கள் கோல்தாழ்த்தி வணங்கி வரவேற்றிருக்கவேண்டும். நகர் விழாக்கோலம் பூண்டிருக்கவேண்டும். மக்கள் இரு மருங்கும் நின்று மலர்சொரிந்து வாழ்த்தியிருக்கவேண்டும். இப்போது எவராலும் வரவேற்கப்படாதவராக நகர்நுழைந்திருக்கிறீர்கள். ஓர் அயல்நகரியில் நீங்கள் நுழைந்தால் அளிக்கப்படும் வரவேற்புகூட இங்கில்லை. இதோ, அரசத்தோற்றம்கூட இல்லாமல் உங்களை அவைக்கு அழைக்கிறார்கள்… நாளை இவர்களின் சூதர்கள் பாடப்போவது என்ன?”

“நன்று, நிகழ்வதென்ன என்று பார்ப்போம்” என்று நளன் சொன்னான். “என்ன நிகழும்? அவையில் இளவரசர் எங்கு அமர்வார்? அரியணையிலா? நீங்கள் அவைப்பீடங்களில் ஒன்றிலா? அவருக்கு இந்நிலம் மேல் என்ன உரிமை? இந்நகருக்கு அரசரென எவர் அவருக்கு முடிசூட்டியது? தாங்கள் அவைபுகுந்தால் இவர்கள் செய்தவை அனைத்தையும் ஏற்றது போலாகும்” என்ற நாகசேனர் அணுகிவந்து “அரசே, நாம் செய்யவேண்டியது ஒன்றே. வந்ததுபோலவே இப்போதே நகர்நீங்கிவிடுவோம். நாம் வரவே இல்லை என ஆகட்டும். நமக்காக எதிர்பார்த்து அவர்கள் காத்திருப்பதனால் நாம் செல்வதை எதிர்பார்க்கமாட்டார்கள். நாம் இங்கு வந்தது இவர்கள் உருவாக்கிய பொய்க்கதை என்று சூதர்களைக்கொண்டு சொல்ல வைப்போம்” என்றார்.

“நாம் செய்யவேண்டியது அதுதான், ஐயமில்லை” என்று நளன் சொன்னான். “அவர்களின் நோக்கமும் புரிகிறது. ஓர் அயல்நாட்டிற்கு அவர்களின் அருள்கோரி வந்தவனாக என்னை ஆக்கிவிட்டார்கள். ஆனால் இதெல்லாம் புஷ்கரனின் சூழ்ச்சிகளல்ல. இது மாலினிதேவியின் திட்டம். அவளை ஆட்டுவிப்பவன் ரிஷபன்.” நாகசேனர் “தாங்கள் அவைக்குச் செல்வதாகவே முடிவெடுத்துவிட்டீர்களா?” என்றான். “ஆம், நான் வந்தது என் இளையவனை விழியொடு விழி நோக்கிப் பேச. அவையில் பேசுவதென்றால் அவ்வாறே ஆகட்டும்.”

“அங்கே அமர்ந்திருப்பவர்களும் நேற்று என் குடியினராக அமைந்திருந்தவர்களே. அவர்களிடமும் நேருக்குநேர் பேசுகிறேன். அவர்களுக்கு உளப்புண் என்ன? சீர்ஷரின் இறப்புதானே? அதன்பொருட்டு பிழைநிகர் செய்வதாக அறிவிக்கிறேன். குருதிப்பிழை செய்வதாக இருந்தாலும் ஒப்புகிறேன்” என்று நளன் சொன்னான். நாகசேனர் “நாம் அஞ்சி வந்திருப்பதாக அவர்கள் எண்ணினால் இப்படி இறங்கிச்செல்வது அவர்களை மேலும் தருக்கி எழவே செய்யும்” என்றார்.

“இல்லை, என் ஆற்றலென்ன என்று அவர்கள் உள்ளூர அறிவார்கள். போரை அவர்களும் விரும்பமாட்டார்கள். எங்கோ ஓரிடத்தில் ஒப்புநிலை செய்துகொள்ளவேண்டுமென்றே எதிர்பார்ப்பார்கள்” என்றான் நளன். “இன்றே அவையில் அது முடிவாகட்டும். பேரரசி வேள்விநிறைவுசெய்து மும்முடி சூடுவதற்கு இவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டும் போதும். பிறவற்றை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்” என்றான். நாகசேனர் பெருமூச்சுடன் “நன்று நிகழ்க!” என்றார். “நாம் நம்மால் இயன்றதைச் செய்வோம், நாகசேனரே. நம் குடி வாழவேண்டும். நம் ஆணவம் அதற்கு தடையென்றாகக்கூடாது. அதுவே என் எண்ணம்” என்றான் நளன்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 56

55. ஆடியுடன் ஆடுதல்

flowerதமயந்தியின் புரவி தடையேதுமில்லாமல் தண்டபுரத்தைக் கடந்து ராஜமகேந்திரபுரியை அடைந்தது. தான்யகடகத்தையும் இந்திரகீலத்தையும் வென்றது. அஸ்மாகர்களும் வாகடர்களும் பல்லவர்களும் அதை வணங்கி வாள்தாழ்த்தினர். திருமலாபுரத்தை வென்றபின் அமராவதியை அது அடைந்தபோது சதகர்ணிகள் ரேணுநாட்டையும் கடந்து தென்காவேரிக் கரைகளுக்கு பின்வாங்கிச் சென்றனர். கிருஷ்ணையை அடைந்தபின் அது வடக்கே திரும்பியது.

“அதை இப்போது நாம் ஒன்றும் செய்யமுடியாது, அரசே” என்றார் சுமத்ரர். “புரவி கிளம்பும்போது விதர்ப்பினி ஐயத்துடன் இருப்பாள். நம்மை வென்று கடப்பதுவரை அவள் முழு விசையும் படைகளுடன் இருக்கும். தென்னகத்தை வென்றதுமே நம்மை முழுதும் அடக்கிவிட்டதாக எண்ணுவாள்.” சுகர்ணன் “அவளை அத்தனை எளிதாக எண்ணவேண்டாம்” என்றான். “ஆம், பாரதவர்ஷத்தின் மாபெரும் அரசியல்சூழ்ச்சியாளர் அவள். சுக்ரரின் மகள் தேவயானியின் மறுபிறப்பு என்கிறார்கள். ஆனால் ஆணவம் எவரையும் மழுங்கச்செய்யும். நம்மை எளிதில் வென்றமையாலேயே மீண்டும் எளிதில் வென்றுவிடலாம் என்னும் உளப்பதிவிலிருந்து தப்ப அவளால் இயலாது” என்றார் சுமத்ரர்.

“அவளுடைய வேள்விக்குதிரை வடக்கே மச்சர்களையும் கிராதர்களையும் வென்று மேலெழட்டும். அவந்தியையும் மாளவத்தையும் வெல்லட்டும். அதன்பின்னர்தான் நாம் தொடங்கவேண்டும்” என்று அவர் சொன்னபோது சதகர்ணியாகிய சுகர்ணன் “அப்போது அவள் பாரதத்தை பெருமளவு வென்றிருப்பாள்” என்றான். “ஆம், அவள் வெல்ல வெல்லத்தான் புஷ்கரனின் ஐயமும் வஞ்சமும் பெருகும்… அவள் சத்ராஜித் என அமர்ந்துவிடுவாள் என்றாகும்போது அவன் எரிகொள்வான்.”

சுகர்ணன் அவரை நோக்கியபடி மீசையை நீவிக்கொண்டு அமர்ந்திருந்தான். “ஐயம் கொள்கிறீர்கள், அரசே” என்றார் சுமத்ரர். “ஆம், இவையெல்லாம் உங்கள் விழைவுக்கற்பனைகளோ என்ற எண்ணம் எழுகிறது.” சுமத்ரர் சிரித்து “எட்டுபுறமும் எண்ணியே அனைத்தையும் சூழ்கிறேன். அரசே, தண்டபுரத்தின் கலிங்க அரசன் பானுதேவனிடமும் புஷ்கரனின் அணுக்கன் ரிஷபனிடமும் ஒவ்வொரு நாளும் தொடர்பிலிருக்கிறேன்.”

சுகர்ணன் “ரிஷபனைப்பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். அவன் கலிங்க ஒற்றன், அப்பால் என்ன?” என்றான். “நானும் முதலில் அவ்வண்ணமே எண்ணினேன். ஆனால் அவனைப்பற்றி ஒற்றர்கள் சொன்ன செய்திகள் ஐயமூட்டின. அவன் கலிங்க அரசி மாலினிதேவிக்கே அணுக்கன்” என்றார். மீசையை நீவிக்கொண்டிருந்ததை நிறுத்தி கூர்ந்து நோக்கியபின் “அதுவும் அரண்மனைகளில் புதிதல்ல” என்றான். “ஆம், ஆனால் பெரும்பாலும் அவர்கள் ஏவலர்களாகவே இருப்பார்கள். ரிஷபன் அரசகுடியினன்” என்றார்.

விழிசுருங்க “எக்குடி?” என்றான் சுகர்ணன். “அவன் கலிங்க மன்னர் சூரியதேவருக்கு அவருடைய முதிய அகவையில் நாகர்குலத்து இளவரசி ஒருத்தியில் பிறந்த மைந்தன்” என்றார் சுமத்ரர். அவையிலிருந்த படைத்தலைவன் மகாபாகு “என்ன இது? அவர்களிடையே உறவு…” என சொல்ல முற்பட “அதுவும் அரண்மனையில் வழக்கமே” என்றான் சுகர்ணன். சற்றுநேரம் அமைதி நிலவியது. மகாபாகு மெல்ல அசைந்து பெருமூச்சுவிட்டதும் அது கலைந்தது. “அவன் வழிநடத்துகிறான் அனைத்தையும். அவனுடன் இணைந்தே நான் இவற்றை வகுத்துள்ளேன்” என்றார்.

சில நாட்களிலேயே தெற்கு நோக்கிச்சென்ற வஜ்ரகீர்த்தியின் படையை கிருஷ்ணை நதிக்கரையின் நாகர்குடிகள் எதிர்கொண்டு தோற்கடித்தார்கள் என்ற செய்தி வந்தது. வஜ்ரகீர்த்தியைக் கொன்று ஒரு மூங்கில் தெப்பத்தில் கட்டி அவர்கள் கிருஷ்ணையில் ஒழுக்கினார்கள். ஓரிரு நாட்களுக்குப்பின் வடக்கு நோக்கிச்சென்ற பகுஹஸ்தன் கிராதர்களால் கொல்லப்பட்டான் என்றும் அவனை நூறு துண்டுகளாக வெட்டி கழுகுகளுக்கு உணவாக்கினார்கள் என்றும் அவன் குருதியை தங்கள் குடித்தெய்வமான கூளிக்கு முழுக்காட்டி தாங்கள் நெற்றியில் பூசிக்கொண்டார்கள் என்றும் செய்தி வந்தது.

“தோல்விக்கு திட்டமிடுவதிலும் அரசியின் நுட்பம் வியக்கச் செய்கிறது!” என்றார் சுமத்ரர். “அரசர்களிடம் போரில் வேண்டுமென்றே தோற்றால்கூட அது இழிவு. அவர்கள் அதை கதைகளாக சூதர்நாவில் நிறுத்துவார்கள். அவர்களின் படைகள் நிஷதப்படைகள் வெல்லப்படக்கூடியவையே என்னும் உணர்வை அடைந்து அச்சமழியவும் வாய்ப்பாகும். ஆகவேதான் தொல்குடிகளிடம் தோற்க வைக்கிறாள். அவர்களுக்கு சொல்லில் வரலாற்றை நிறுத்தத் தெரியாது.” சுகர்ணன் “அதைவிட அவர்களை வேருடன் அழிக்க அவளுக்கு ஒரு அடிப்படை கிடைக்கிறது” என்றான்.

நிஷதபுரியின் படைகள் கிளம்பிச்சென்று நாகர்களையும் கிராதர்களையும் தோற்கடித்து அவர்களின் குலங்களை ஆண்வேர் இல்லாமல் அழித்து அவர்களின் ஊர்களை எரித்தன. அவர்களை மேலும் மேலும் காடுகளுக்குள் துரத்திவிட்டு மீண்ட அப்படைகளை இந்திரபுரியின் மக்கள் நாட்டின் எல்லையிலேயே வந்து எதிர்கொண்டு சூழ்ந்து நடனமிட்டு வெற்றிக்களிப்புடன் நகருக்கு கொண்டுசென்றனர்.

ஏழு நாட்கள் நகரெங்கும் வெற்றிக்கொண்டாட்டம் நிகழ்ந்தது. நூற்றெட்டு எருமைகளை கலிதேவனுக்கு வெட்டி குருதியாட்டு நிகழ்த்தினர். நூற்றெட்டு அருமலர்களால் இந்திரனுக்கு பூசெய்கை நிகழ்ந்தது. நகர் மக்கள் கடந்தவை அனைத்தையும் மறந்தனர். ஒவ்வொருவரும் அவ்வெற்றிக்கு தாங்களும் உரியவர்களென எண்ணினர். காமமும் கள்ளும் நகரில் இரவுபகல் ஒழியாமல் கொப்பளித்தன. சூதர்கள் கதைகளைச் சுமந்தபடி நிஷாதர்களின் சிற்றூர்களெங்கும் சென்றனர்.

“அவள் ஒவ்வொன்றையும் எண்ணியிருப்பதிலுள்ள கூர் என்னை அச்சுறுத்துகிறது, அமைச்சரே” என்றான் சுகர்ணன். “அவள் ஏன் கிராதர்களையும் நாகர்களையும் தேர்ந்தெடுத்தாள்? அவர்களை குருதியும் தீயும் கொண்டு அழித்தாள். அதை ஷத்ரியர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நாளை அந்த வாள் உங்களுக்கும் வரும் என எச்சரிக்கிறாள். அதே சமயம் ஷத்ரியர்களிலோ பிற அரசர்களிலோ எவருக்கேனும் அவ்வண்ணம் அவள் செய்திருந்தால் அதுவே அவர்களை ஒருங்கிணைய வழிவகுத்திருக்கும். அதை தவிர்த்துவிட்டாள். இவளை வெல்லுதல் எளிதல்ல.”

சுமத்ரர் “ஆம், ஆனால் அவள் நகரில் எழும் அக்களிவெறியே அவளுக்கு எதிரானது…” என்றார். “அது எங்கே எல்லை மீறுமென சொல்லமுடியாது. உட்பூசல்கள் கொண்ட ஒரு குலம் கட்டற்ற விழவை பன்னிரு நாட்கள் நீட்டிக்கக்கூடாது.” ஆனால் ஒவ்வொருநாளும் நிஷாதர்களின் கொண்டாட்டம் மிகுந்துகொண்டிருப்பதையே செய்திகள் சொல்லின. களியாட்டு சிற்றூர்களுக்கும் சென்று சேர்ந்தது. எங்கும் உண்டாட்டும் விழவுக்கூடலும் மூத்தோரூட்டும் தெய்வமாட்டும் நிகழ்ந்தன.

“மக்கள் வெற்றியை விழைகிறார்கள். ஏனென்றால் வெற்றி என தன் வாழ்க்கையிலிருந்து ஒன்றைச் சொல்ல அவர்களிடம் ஏதுமில்லை” என்றார் சுமத்ரர். “நான் என சொல்லத்தெரியாதவர்கள், நாம் என்று சொல்லி கொந்தளிக்கிறார்கள். ஆனால் ஒருபோதும் மறுக்கமுடியாத அரசக் குருதியால் அன்றி குடிகளை ஒருங்கிணைக்க முடியாது. சென்ற காலங்களில் நிஷதநாடுபோல் எழுந்துவந்த எத்தனை அரசுகள் இருந்திருக்கின்றன! அவையனைத்தும் மறைந்தன. அஸ்தினபுரியும் மகதமும் பாஞ்சாலமும் வங்கமும் கலிங்கமும் எத்தனை வீழ்ச்சிக்குப் பின்னரும் நீடிக்கின்றன. ஏனென்றால் அவர்களின் அரசகுடி தெய்வ ஆணை பெற்றது. மாற்றற்றது. அது கருவறைத்தெய்வம், அது இருக்கும் இடமே ஆலயமென்றாகும்.”

flowerஒவ்வொருநாளுமென வெற்றிச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. பின்னர் களியாட்டே நிஷாதர்களின் அன்றாட வாழ்க்கை என்றாயிற்று. வேள்விப்பரியாகிய கிரிஷை மகதத்திற்குள் நுழைந்து கங்கையை அடைந்தது. அதை கங்கைநீரில் நீராட்டினர். அதன் திசைச்செலவு நிறைவடைந்ததை அறிவிக்கும்பொருட்டு வைதிகர் பதினெட்டு பொற்கலங்களில் கொண்டுவந்திருந்த கிருஷ்ணை நதியின் நீரை கங்கைநீர்ப்பெருக்கில் கரைத்தனர்.

நிமித்திகன் வலம்புரிச்சங்கை ஊத முரசுகளும் கொம்புகளும் மணிகளும் பெருகி உடனெழுந்து வானை அறைந்தன. “பேரரசி தமயந்தி வாழ்க! நிஷதகுலத்தரசி வாழ்க! சத்ராஜித் என அமரும் விதர்ப்பினி வெல்க!” என வாழ்த்தொலிகள் எழுப்பினர் கங்கைக்கரையை நிறைத்தபடி சூழ்ந்திருந்த நிஷதப்படைவீரர். கங்கைநீரை பதினெட்டு பொற்குடங்களில் அள்ளிக்கொண்டு வைதிகர்கள் கரையேறினர். மலரிட்ட பாதையில் நடந்து அவர்கள் முன்னே செல்ல வேள்விக்குதிரை அவர்களைத் தொடர்ந்து சென்றது.

புரவி திரும்பிவருவதை அறிந்ததும் தமயந்தி வேள்விநிறைவுக்கு ஆணையிட்டாள். ஆயிரத்தெட்டு வைதிகர்கள் கூடி வேள்விக்கு நாள்குறித்தனர். வேள்விக்குரிய பொருட்களை சேர்த்தனர். அரண்மனைமுகப்பில் பன்னிரு நிலைகொண்ட வேள்விப்பந்தல் அமைந்தது. சாரஸ்வதம், காங்கேயம், சைந்தவம், பஞ்சதட்சிணம், மேருதீர்த்தம் என்னும் ஐந்து நாடுகளிலும் இருந்து வந்துசேர்ந்த வைதிகர்கள் நகரில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட குடில்களில் நிறைந்தார்கள். எரிகுளங்கள் அமைக்கப்பட்டன. புரவி மகத எல்லையைக் கடந்ததும் வேள்வி தொடங்கியது. நாற்பத்தொன்றாம் நாள் அது நகருள் நுழைந்து வேள்விப்பந்தலை அடையும் என்று கணித்தனர்.

வேள்வி முழுமைக்குப்பின் தமயந்தி சத்ராஜித் என முடிசூட்டிக்கொள்ளவிருந்தாள். அவளுக்காக கலிங்கப் பொற்சிற்பியான ஜயந்தன் அமைத்த ஏழு அடுக்குகொண்ட பசுந்தளிர் மணிமுடி அரண்மனையில் குடித்தெய்வங்களான ஏழு மூதன்னையர் அமர்ந்த நிலவறைக்குள் பூசெய்கைக்கு வைக்கப்பட்டது. ஆயிரத்தெட்டு மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட அந்த முடி காலைக்கதிர்பட்ட தளிர்க்குலை என சுடர்விட்டது. நிஷதகுடியின் முதல் மாமன்னர் மகாகீசகர் சூடியிருந்த பச்சைக்கற்கள் பதிக்கப்பட்ட பிடி கொண்ட உடைவாளும் அன்னையர்முன் வைக்கப்பட்டது. ஒவ்வொருநாளும் குருதிபலி கொடுத்து அதிலுறைந்த கொலைத்தெய்வங்கள் விடாய்நிறைவு செய்யப்பட்டன.

ஜயந்தனும் எட்டு உதவியாளர்களும் அரண்மனையை ஒட்டியிருந்த சப்தமாளிகையில் தங்கி எவருமறியாமல் ஹரிதமாயூரம் என்னும் அரியணை ஒன்றை வடித்துக்கொண்டிருந்தார்கள். பீதர்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆயிரம் தூய மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட அது மயில்கால்களும் தோகைவிரித்த சாய்விடமும் இருபுறமும் எழுந்த இறகுகளும் கொண்டிருந்தது. வேள்விநிறைவன்று அரசமண்டபத்தில் அரசி சத்ராஜித் என முடிசூடுவாள். அவளுக்கு மூன்றடுக்குள்ள வெண்குடை பிடிக்கப்படும். அது பாரதவர்ஷத்தில் அவளுக்கு மட்டுமே உரிய அடையாளமாகும்.

பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு ஷத்ரிய அரசர்களுக்கும் நூற்றெட்டு பிற அரசர்களுக்கும் முறைப்படி அழைப்புகள் அனுப்பப்பட்டன. முதன்மை அரசர்களை அமைச்சர்கள் நேரில் சென்று அழைத்தனர். பிறருக்கு தூதர்களும் சூதர்களும் செய்தி கொண்டுசென்றார்கள். அரசர்கள் வந்தால் தங்குவதற்காக இருநூறு புதிய மாளிகைகள் நகரைச்சுற்றிய சோலைகளுக்குள் எழுப்பப்பட்டன. அரசர்களுடன் வரும் அகம்படியினரும் ஏவலரும் காவல்படைகளும் தங்குவதற்காக மரத்தாலான ஈராயிரம் பாடிவீடுகள் இந்திரக்குன்றுக்கு கிழக்குச்சரிவில் காடு திருத்திய வெளியில் கட்டப்பட்டன.

நகரின் அனைத்துக் கட்டடங்களும் பழுதுநோக்கி புதுப்பிக்கப்பட்டன. தாழ்வாரங்களில் வண்ணக்கொடிகள் கட்டப்பட்டன. குவையுச்சிகளில் கொடிகள் அசைந்தன. சூழ்ந்திருப்பவற்றை செம்மை செய்கையில் உள்ளம் செம்மைகொள்வதை உணர்ந்த பெண்கள் மேலும் மேலும் வெறிகொண்டு பணியாற்றினர். கலங்களெல்லாம் தேய்க்கப்பட்டு பொன்னும் அனலும் வெள்ளியும் மின்னின. கலவறையில் மறந்திட்டவற்றைக்கூட எடுத்து துலக்கி அடுக்கினர். காவல்நிலைகளும் கோட்டைகளும் வெள்ளையும் அரக்கும் பூசப்பட்டு அன்று கட்டப்பட்டவை என எழுந்தன. நகரம் ஒவ்வொருநாளும் உருமாறிக்கொண்டே இருந்தது. எவ்வளவு செய்த பின்னரும் பணிகள் எஞ்சியிருந்தன.

“வசந்தமெழுந்த ஆலமரம் இந்நகரம். இலையெல்லாம் தளிராக தளிரெல்லாம் மலராக பொலிந்தெழுகிறது” என்றான் நகர்மன்றில் பாடிய சூதன் ஒருவன். “மணநாளுக்கு முந்தைய இரவின் மணப்பெண் இந்நகரம். நாணிச் சிவக்கிறது. உடல்பொலிந்து ஒளிகொள்கிறது” என்றான் அவனருகே நின்ற சூதன். கூடிநின்ற நகர்மக்கள் கூவிச்சிரித்து வெள்ளி நாணயங்களை அவனுக்கு அளித்தனர். “பலிகொண்டு நிறைந்த தெய்வத்தின் அமைதி இந்நகர்மேல் பரவுகிறது. நிறைந்த பெருங்குளத்தின் மெல்லிய அலையோசை மட்டும் எழுந்துகொண்டிருக்கிறது.”

ஒவ்வொன்றும் முன்னரே திட்டமிட்டு வகுக்கப்பட்டன. கருணாகரரும் நாகசேனரும் இரவும்பகலும் துயில்நீத்து அப்பணிகளை ஒருங்கிணைத்தார்கள். கலியின் ஆலயத்திலும் இந்திரனின் கோட்டத்திலும் வழிபட்டு வேள்விமாடத்திற்கு வந்தமர்வாள் பேரரசி. அங்கே வந்துசேர்ந்திருக்கும் வேள்விப்புரவிக்கு பூசனைகள் செய்வாள். கோல்கொண்டு அரியணை அமர்ந்து வேள்விக்காவல் செய்வாள். சடங்குகள் அனைத்தும் முடிந்தபின் வேள்வியிலமர்ந்த அந்தணர்களுக்கு அடிவணக்கம் புரிந்து காணிக்கையளித்து வாழ்த்து பெறுவாள். குடிவாழ்த்து பெற்றபின் வாழ்த்தொலிகள் சூழ கிளம்புவாள்.

வேள்விப்பந்தலில் இருந்து பேரரசியை குடிமூத்தார் எழுவர் வழிநடத்தி அரண்மனைக்குள் அரசமண்டபத்திற்கு கொண்டுசெல்வார்கள். அங்கே வேள்வித்தலைவராகிய சுப்ரப கஸ்யபரும் ஐந்து நிலங்களைச்சேர்ந்த தலைமை வைதிகர்களான கௌதம பிரீதரும், சாண்டில்ய சப்தமரும், வசிஷ்ட சம்விரதரும், விஸ்வாமித்ர உபகுப்தரும், பார்க்கவ சுப்ரரும் சேர்ந்து அவளை எதிர்கொண்டழைத்து அரசமேடைக்கு கொண்டுசெல்வார்கள். கங்கைநீர் தெளித்து வேதம் சொல்லி தூய்மைசெய்யப்பட்ட அரியணையில் அவளை அமரச்செய்வார்கள். அரசநிரை சான்றாக, குடிப்பெருக்கு சூழ்ந்து வாழ்த்த அவள் முடிசூடிக்கொள்வாள்.

ஒன்றுமட்டும் அவர்களுக்கு ஐயத்தை அளித்துக்கொண்டே இருந்தது. புஷ்கரனும் காளகக்குடியினரும் பிற குலங்களில் புஷ்கரனை ஆதரிக்கும் குடித்தலைவர்களும் எவ்விழவிலும் கலந்துகொள்ளவில்லை. வேள்விப்புரவி விஜயபுரியை கடந்துசென்றபோது புஷ்கரன் தன் படைத்தலைவன் ஜம்புகன் தலைமையில் ஒரு படையை உடன் அனுப்பினான். வெற்றிகள் அனைத்துக்கும் விஜயபுரியிலிருந்து வாழ்த்துச்செய்தி வந்தது. ஆனால் வெற்றிக்குரிய செந்நிறக்கொடி விஜயபுரியில் பறக்கவிடப்படவில்லை.

புஷ்கரன் முடிச்சூட்டுவிழாவிற்கு வந்தாகவேண்டும் என்று தமயந்தி சொன்னாள். நாகசேனர் முதலில் சென்றழைத்தபோது உடனே வருவதாக புஷ்கரன் சொன்னான். அவன் வராதபோது கருணாகரர் நேரில் சென்றழைத்தார். “வேள்விதொடங்கும் நாளில் இளவரசர் அங்கிருப்பார். அவருக்கு இப்போது உடல்நிலை நன்றல்ல. ஓய்விலிருக்கிறார்” என்றான் ரிஷபன். வேள்விதொடங்கிய அன்று “இளவரசர் மேலும் சில நாட்களில் அங்கே இருப்பார். விழாவன்று வாளேந்தி உடனிருப்பார்” என்று செய்தி வந்தது. ஒவ்வொருநாளும் என நிஷதபுரி புஷ்கரனுக்காக காத்திருந்தது.

flowerபுஷ்கரன் தனிமையில் தன் அறையில் இருந்தான். நெடுநாட்களாகவே அவன் தனிமையிலிருப்பதை பழகிவிட்டிருந்தான். உடனிருப்பவர் எவராக இருந்தாலும் சற்றுநேரத்திலேயே எரிச்சலூட்டி தாங்கமுடியாதவர்களாக ஆனார்கள். அவன் எப்போதும் சினமும் எரிச்சலுமாக பேசுவதை உணர்ந்து அமைச்சர்கள் உட்பட அனைவருமே அவனிடமிருந்து விலகிக்கொண்டார்கள். ஆனால் அணுக்கர்களிடமும் சேடிகளிடமும் அவன் சினம்கொண்டான். அவர்கள்மேல் எச்சில் துப்பினான். வசைபாடினான். சில தருணங்களில் அடிக்கப் பாய்ந்தான்.

மெல்ல தன் தனியறைக்குள்ளேயே பெரும்பாலும் அவன் நாளை கழித்தான். புலரியில் எழுந்து உடற்பயிற்சிக்காக களமுற்றத்திற்குச் சென்று, அங்கிருந்து நீராட்டு முடித்து கலிதேவனின் ஆலயத்திற்கும் சென்று, முதற்கதிரொளிக்கு முன்னரே அவன் தன் அறைக்குள் மீண்டான். பின்னர் அந்திசாய்ந்தபின் இருளில் தோட்டத்தில் தன்னந்தனிமையில் உலவிவந்தான். விண்மீன்களை நோக்கியபடி அங்குள்ள இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தான். பகல் முழுக்க அறைக்குள் நூல்களை படித்துக்கொண்டிருந்தான்.

அவை அரசுசூழ்தலின் நெறிகளைக் குறித்த எளிய நூல்கள். அவற்றை அவன் உள்ளம் வாங்கிக்கொள்ளவில்லை. எனவே மீண்டும் மீண்டும் அவற்றை வாசித்தான். சொற்கள்மேல் அவன் உள்ளம் தொடாமல் ஒழுகிச்சென்றுகொண்டிருக்க நெடுநேரம் அமர்ந்திருப்பான். அப்படியே துயில்கொண்டு மஞ்சத்தில் சரிவான். அவன் உணவருந்துவது மிகமிகக் குறைந்தது. மதுவருந்துவது மிகுந்து வந்தது. அரசியை அவன் எப்போதேனும் அவளே அவனைத் தேடிவந்தால் மட்டும் சந்தித்தான். அவள் பேசப்பேச அதை செவிகொள்ளாமல் அலையும் விழிகளுடன் அமர்ந்திருந்தான். அவள் அவனிடம் அரசுசூழ்தலின் புதிய திட்டங்களை சொன்னாள். தமயந்தியை இறுதியாக தளைப்பதற்குரிய வழிகளை ஒவ்வொருநாளும் புதிதாக சமைத்துக்கொண்டிருந்தாள்.

பல நாட்களில் சில கணங்களிலேயே அவள் சலிப்புற்று குரலெழுப்பத் தொடங்கினாள். “என் விழிகளைப் பார்த்து பேசுங்கள். நான் என்ன சொல்கிறேன் என்று தெரிகிறதா?” என்று கூவினாள். “ஆம், கேட்கிறேன். சொல்” என அவன் முனகினான். “சதகர்ணிகளிடம் இருக்கிறது இறுதிச்சொல்… அவர்கள் ஓர் உறுதி அளித்தால் நாம் வென்றோம்.” அவன் அச்சொற்களை விழிகளால் நோக்கி அமர்ந்திருந்தான். “என்ன நினைக்கிறீர்கள்?” அவள் அதை பலமுறை கேட்டபின் அவன் விழித்துக்கொண்டு அவன் “யார் நானா?” என்றான். “இல்லை, இந்தத் தூண்” என்று அவள் பல்லைக் கடித்தபடி சொன்னாள். அவள் எழுந்துசெல்வதுவரை பதறும் உடலும் நடுங்கும் விரல்களுமாக அமர்ந்திருந்தான். பின் உடல்தளர்ந்து பெருமூச்சுவிட்டான்.

அவர்கள் சந்திப்பதே அரிதாயிற்று. ஒவ்வொருமுறையும் சலிப்புற்று அவள் எழுந்து விலகிச்சென்றாள். எப்போதேனும் அவள் அவனருகே அணுகி அவன் குழலை கைவிரல்களால் அளைந்து தலையை தன் முலைகளுடன் சேர்த்துக்கொண்டு “என்ன ஆயிற்று உங்களுக்கு? என்னை வெறுக்கிறீர்களா?” என்றாள். “இல்லை” என்று அவன் சொன்னான். “பின் என்ன?” அவன் பெருமூச்சுவிட்டு “ஒன்றுமில்லை, நான் நலமாக இருக்கிறேன்” என்றான். “இல்லை, நீங்கள் இயல்பாக இல்லை. இந்த அறையிலேயே இருக்கிறீர்கள். அவைநுழைவதே இல்லை. வெளியே செல்வதில்லை.”

அவன் “நான் அவையை வெறுக்கிறேன். அங்கே மீண்டும் மீண்டும் ஒரே சொற்கள். சலிப்பூட்டும் சடங்குகள்” என்றான். “மனிதர்களை வெறுக்கிறீர்கள். எவரையும் விழிநோக்கிப் பேசுவதில்லை. விழிகள் தொட்டுக்கொண்டாலே சினம்கொண்டு கூச்சலிடத் தொடங்குகிறீர்கள் என்றார்கள்.” அவன் “எவர் சொன்னது இதையெல்லாம்? சுநீதரா? ரிஷபனா?” என்றான். “எவர் சொன்னால் என்ன? நீங்கள் இருக்கும் நிலை இயல்பல்ல. அரசர்கள் இப்படி அறைக்குள் முடங்கக்கூடாது.” அவன் “நான் இங்கே நூல் நவில்கிறேன்” என்றான். “என்ன நூல்கள்? ஆறு மாதங்களுக்கும் மேலாக இரண்டே நூல்கள்…” என்றாள். அவன் மெல்ல முனகினான்.

“எப்படி இருக்கிறீர்கள் தெரியுமா? நேற்று முன்னாள் அமைச்சர் ஓர் ஓலையை கொண்டுவந்தார். அதில் நீங்கள் கைச்சாத்திடவேண்டும். ஒவ்வொருநாளும் மும்முறை வந்து மன்றாடினார். கைச்சாத்திடுகிறேன் என்று சொன்னீர்கள். கண்ணெதிரே ஓலை இருந்தது. ஆனால் செய்யவே இல்லை. இறுதியில் அவர் உங்கள் கையில் ஓலையை எடுத்துக்கொடுத்து கணையாழியையும் அளித்தார். அதன்பின்னரே கைச்சாத்திட்டீர்கள்.” அவள் அவன் முகத்தை குனிந்து நோக்கி “நீங்கள் கைச்சாத்திட மறுத்திருந்தால் அது வேறு. உங்களால் அச்சிறிய செயலைச்செய்ய உளம்குவிக்க முடியவில்லை. அதுதான் சிக்கல்” என்றாள்.

அவன் “விடு என்னை” என்றபடி எழுந்தான். அவள் “நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ஒரு சொல்லும் உங்களுக்குள் நுழையவில்லை” என்றாள். “நீயே சொல்லிக்கொண்டிருக்கிறாய். நீ என்னை பித்தன் என்றும் பயனற்றவன் என்றும் நிறுவ விழைகிறாய். நீ திட்டமிட்டு உருவாக்குவது இந்த சித்திரம்.” அவள் “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “போ இங்கிருந்து, நான் நூல் பயிலவேண்டும்.” அவள் சீற்றத்துடன் “நான் கேட்பதற்கு மறுமொழி சொல்லுங்கள்” என்றாள். “என்னை எரிச்சலூட்டாதே. செல்!” அவள் “நான் கேட்டதற்கு மறுமொழி சொல்லுங்கள்” என்றாள்.

அவன் அந்த நெருக்குதலால் சீற்றமுற்றுத் திரும்பி “உனக்கு என்ன வேண்டும்? நான் சாகவேண்டும், அவ்வளவுதானே? என்னைக் கொல்லத்தானே வந்தாய்? நான் சோர்ந்திருக்கிறேன் என்றால் நீதான் ஏதாவது செய்திருப்பாய். என் உணவை மருத்துவர்களிடம் காட்டவேண்டும். மென்நச்சு அதில் கலந்திருக்கும்… நீதான் அதை கலந்தாய்… ஆம், நீதான்” என்று கூச்சலிட்டான் அந்தக் கூச்சல் அவனுக்கு ஆற்றலையும் இலக்கையும் அளித்தது. “நான் என்னை பாதுகாத்துக்கொண்டிருக்கிறேன். இந்த அறைக்குள் என் உயிருக்கு அஞ்சி ஒளிந்திருக்கிறேன். நீ என்னை கொல்லமுடியாது.”

அவள் சினத்துடன் “வாயை மூடுங்கள்…” என்று கூவினாள். அவன் கைநீட்டி அருகணைந்து “நீ எவரிடம் பேசுகிறாய் என்று தெரிகிறதா? நிஷத இளவரசனிடம், உன் அணுக்கனிடம் அல்ல. வாளை உருவினால் உன் தலை விழும்” என்றான். “எங்கே உருவுங்கள் பார்ப்போம்… உருவுங்கள்” என அவள் அவனை நோக்கி வந்தாள். வெறுப்பில் அவள் முகம் இழுபட்டு வஞ்சமும் கீழ்மையும் கொண்டதாக ஆகியது. வாய்க்குள் இருந்து பற்கள் வெளிவந்து ஓநாய்களின் சீறல் தோன்றியது. “கோழை… நீ ஆண் என்றால் எடு அந்த வாளை… வாள் உன் கையில் நிற்கிறதா என்று பார்க்கிறேன். எடு வாளை!”

அவன் கைகால்கள் வலிப்பு வந்ததுபோல உதறிக்கொள்ள “போ போ… போய்விடு” என்று கூச்சலிட்டான். எழுந்து அறையின் மறு எல்லைக்குச் சென்று “கொன்றுவிடுவேன்… செல்… சென்றுவிடு” என்று உடைந்த குரலில் வீரிட்டான். அணுக்கன் உள்ளே வந்து “அரசி” என்றான். அவள் இளிப்பதுபோல வாயை நீட்டி “இழிமகன்” என்றபின் குழலை அள்ளி பின்னாலிட்டு ஆடையை இழுத்து தோளில் அமைத்து திரும்பிச்சென்றாள். கால் தளர்ந்தவனாக அவன் மஞ்சத்தில் விழுந்தான்.

அவ்வறையை அவ்வாறு சொன்னது வாய்நிகழ்வுதான் என்றாலும் அது அவனுக்கு மெல்ல மெல்ல காப்பென்றும் கவசமென்றும் ஆகியது. அறைக்குள் கதவை உள்ளே தாழிட்டுக்கொண்டான். காற்றுக்காக சாளரத்தை திறந்து வைத்தாலும் அதனருகே செல்வதையே தவிர்த்தான். ஒருமுறை தன் ஆடிப்பாவையைக் கண்டு திகைத்தபின் ஆடிகள் அனைத்தையும் அகற்ற ஆணையிட்டான். பின்னர் பாவை தெரியும் உலோகக் கலங்களைக்கூட அறைக்குள் கொண்டுவரலாகாதென்று ஆணையிட்டான்.

ஆனால் அறைக்குள் உடனிருந்த அவன் நிழல் அவனுக்கு உவகையூட்டியது. அகல்விளக்கின் முன் நின்று தன் நிழல் எதிர்ச்சுவரில் பெருந்தோற்றமாக எழுவதை நோக்கிக்கொண்டிருந்தான். கைகால்களை வீசி அதன்முன் நடித்தான். அதனுடன் போரிட்டு நகைத்தான். விரல்களால் புலியையும் நரியையும் காகத்தையும் நிழலுருவெனக் காட்டி விளையாடினான். பெரும்பாலான தருணங்களில் மஞ்சத்தில் படுத்தபடி சுவரிலும் கூரையிலும் உள்ள வெடிப்புகளையும் கறைவடிவங்களையும் நோக்கிக்கொண்டிருந்தான். அவை புலியென்றும் பன்றியென்றும் பறவைகளென்றும் உருக்கொண்டன. ஒவ்வொரு தடமும் நன்கறிந்தவையென்றாயின. ஒவ்வொன்றுக்கும் அவன் பெயரும் இயல்பும் அளித்தான். அவற்றுடன் உரையாடினான்.

எப்போதேனும் அமைச்சர் அல்லது குடித்தலைவர் சுநீதர் அவனைப் பார்க்க வந்தனர். நாளில் மும்முறை ஏவலர் வந்தனர். கதவு தட்டப்படும்போது அவன் விழித்துக்கொண்டான். கதவையே நோக்கிக்கொண்டு படுத்திருந்தான். எழுந்துசென்று கதவை திறக்கவேண்டுமென எண்ணினாலும் எழும்செயலென தன்னை ஆக்கிக்கொள்ளமுடியவில்லை. ஒருநாள் பலமுறை தட்டி பகலெல்லாம் காத்து பின்னர் அச்சம்கொண்டு கதவை உடைத்து உள்ளே வந்த சுநீதர் அதற்குப்பின் கதவுக்கு புதுத்தாழ் ஒன்றை அமைத்தார். அதை அவன் போட்டுக்கொள்ள முடியும். ஆனால் அதை வெளியே இருந்தும் திறக்கமுடியும்.

கதவை உடைத்து அவர்கள் உள்ளே சென்றபோது அவன் மஞ்சத்தில் வெறித்த விழிகளுடன் கிடந்தான். ஓசையில் அவன் உடல் விதிர்த்து நடுங்கிக்கொண்டிருந்தது. அவனை நோக்கிய மருத்துவர் அவனுக்கு நோய் என ஏதுமில்லை என்றனர். நிமித்திகர் அவனிடம் மூதேவி கூடியிருக்கலாம் என்றனர். “அக்கை நம்மை எப்போதும் நிழலுருவாகத் தொடர்பவள். நின்று சோர்ந்தால் நம்மை வந்து பற்றிக்கொள்பவள். கடமை, கல்வி, கலை, கனவு, காமம் என்னும் ஐந்தும் அவளிடமிருந்து நம்மைக் காக்கும் அமுதுகள். வஞ்சம், சினம் என்னும் இரண்டும் அவளிடமிருந்து நம்மை அகற்றும் நஞ்சுகள். ஏழுமில்லாத நிலை ஒருகணம் அமைந்தாலும் அவளுக்கு அடிமையாகிவிடுவோம்.”

அவன் மென்மையான இனிய புதைசேற்றில் மூழ்கிக்கொண்டிருப்பதை அவனே அறிந்திருந்தான். எப்போதேனும் அத்தன்னுணர்வு வலுவாக எழும்போது உளம்பதறி எழுந்து நிற்பான். கதவைத்திறந்து வெளியே ஓடவேண்டும் என துடிப்பான். ஏவலரை அழைத்து புதிய ஆடைகள் கொண்டுவர ஆணையிடுவான். சமையப்பெண்டிரிடம் அணிசெய்ய பணிப்பான். முழுதணிக்கோலத்தில் எவரும் எதிர்பாராதபடி அவைக்கு வருவான். அரியணையில் அமர்ந்து அத்தனை செய்திகளும் உடனே தன் முன் வந்தாகவேண்டும் என கூச்சலிடுவான்.

அமைச்சர்களும் படைத்தலைவர்களும் வெந்நீர் விழுந்த எறும்புப்புற்று என தவித்து அங்குமிங்கும் ஓடுவார்கள். ஓலைகளும் தோற்சுருள்களும் வந்து அவன்முன் நிறையும். ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ஆணைகள் பிறப்பிக்கப்படும். மன்றாட்டுடன் அன்று வந்தவர்கள் அனைவரும் உசாவப்படுவார்கள். அன்று மாலை அறைமீள்கையில் உள்ளம் நிறைந்து உடல்தளர்ந்திருக்கும். “ஆம், மீண்டுவிட்டேன். மீட்சிதான் இது. மீள்வது இத்தனை எளிதுதான்” என்று சொல்லிக்கொள்வான்.

ஆனால் மறுநாள் காலையில் கைகால்கள் இனிய குடைச்சலுடன் சோர்ந்துகிடக்கும். கண்கள் ஒளியை நோக்க உளைச்சல்கொள்ளும். உள்ளம் மிகப் பெரிய புழு என தன்னுடலுக்குள் தானே அசைந்தபடி அங்கேயே கிடக்கும். உச்சிப்பொழுதுக்குப் பின்னரே எழுந்து உணவுண்பான். மேலும் வெறியுடன் தமக்கை அவனை வந்து அணைத்து தன் இருண்ட குழிக்குள் கொண்டுசென்றிருப்பாள்.

ஆனால் அது அப்படி முடியாது என்றும் ஏதோ ஒன்று நிகழும் என்றும் அவன் எதிர்பார்த்திருந்தான். “ஒருவேளை அவர் தன் ஆழம் தயங்கும் எதையோ செய்யவிருக்கலாம். அத்திசை நோக்கி அவர் செல்வதை அவருள் வாழும் தெய்வங்கள் பின்னிழுக்கின்றன. ஆகவேதான் இந்தச் செயலின்மை” என்றார் நிமித்திகர். “என்ன ஆகும்?” என்று சுநீதர் கேட்டார். “தயங்கப்பட்ட நன்மை செய்யப்படுவதில்லை. தயங்கப்பட்ட தீமை தவிர்க்கப்பட்டதே இல்லை” என்று நிமித்திகர் சொன்னார்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 55

54. பரிஎழுகை

flowerசதகர்ணிகளின் அமைச்சர் சுமத்ரர் எண்ணியதுபோலவே அனைத்தும் முன்சென்றன. ஓரிரு நாட்களுக்குள்ளாகவே பேரரசி தமயந்தி அஸ்வமேதம் நிகழ்த்தவிருப்பதாக உளவுச் செய்தி வந்தது. நிஷதபுரியின் அவையில் அதைப்பற்றி அவள் பேசியபோது கருணாகரர் மட்டும் தயக்கத்துடன் “இன்றைய சூழலில் பிற அரசர்கள் அதற்கு ஒத்துழைப்பார்களா என்று தெரியவில்லை. அவர்கள் மோதவேண்டுமென எண்ணினால் நாம் எதிர்கொள்ளும் ஆற்றலுடன் இல்லை. நம் குலங்கள் பிரிந்துள்ளன. இளையவர் உள்ளமாறுபாடு கொண்டிருக்கிறார்” என்றார்.

தமயந்தி உறுதியுடன் “ஆம், அதை நான் எண்ணினேன். ஆனால் இப்போது நம்முன் உள்ளது இவ்வழி ஒன்றே” என்றாள். “நம் குலங்கள் உள்ளமாறுபாடு கொண்டுள்ளன. அவ்வண்ணம் திரிபு தொடங்கும்போதே மும்மடங்கு ஒற்றுமையை வெளிக்காட்டியாக வேண்டியதுதான் அரசியல் சூழ்ச்சி. நம் பிளவுகள் பிறருக்கு தெரியலாகாது, அதை நம் எதிரிகள் வளர்க்கலாகாது” என்றாள். “அஸ்வமேதம் தொடங்கும் செய்தியே நம் குடிகளை கிளர்ந்தெழச் செய்யும். நாம் நிஷாதர் என்னும் உணர்வை உருவாக்கும்.”

நாகசேனர் “உண்மை அரசி, துயர்கவ்வும்போது உவகைகொண்டவர்களாக நடிப்பது மெய்யாகவே உவகையை கொண்டுவரும். நாம் நாம் என இம்மக்கள் பேசத்தொடங்கிவிட்டாலே நாம் வென்றோம்” என்றார். முகம் மலர்ந்த தமயந்தி “அத்துடன் ஒரு சில போர்கள் நிகழ்வதும் நல்லது. முதலில் சில சிறுதோல்விகள். நம் படைகள் தோற்கிறார்கள் என்ற செய்தி வரும்போது இங்குள்ளவர்கள் பதற்றம் கொள்வார்கள். மேலும் சில தோல்விச் செய்திகள் வருமென்றால் அது வெறியென்றாகும். பொதுவெளியில் சில அயல்நாட்டு ஒற்றர்களை கழுவேற்றுவோம். போர்முரசும் கொலைக்காட்சிகளும் மக்களின் உள்ளங்களை மடைமாற்றும்” என்றாள்.

கருணாகரரிடம் “அமைச்சரே, மக்கள் மாறா சலிப்பில் வாழ்பவர்கள். சலிப்பை வெல்லும்பொருட்டே அவர்கள் தங்களை குலமென்றும் குடியென்றும் பிரித்துக்கொள்கிறார்கள். வஞ்சமும் காழ்ப்பும் வளர்த்துக்கொண்டு பூசலிடுகிறார்கள். விழவும் களியாட்டும் அவர்களின் சலிப்பை சில நாட்களுக்கே அகற்றுகின்றன. வெறுப்பும் வெறியும் கலையாமல் நீடிப்பவை, கணம்தோறும் வளர்பவை. நம் எதிரிகள் திரண்டு இருண்டு நம்மை சூழட்டும். நிஷதகுடிகள் அச்சத்தாலும் வெறுப்பாலும் ஒருங்கிணைவார்கள். ஒரு கட்டத்தில் அரசவஞ்சம் செய்தவர்கள் என சிலரை கழுவேற்றுவோம். மக்கள் திரண்டு அவர்களைச் சூழ்ந்து கூடி கற்களை விட்டெறிந்து ஆர்ப்பரிப்பதை காண்பீர்கள்” என்றாள் தமயந்தி.

“அதன்பின் முதல் வெற்றி. அது அவர்களை களிவெறி கொள்ளச்செய்யும். ஆனால் அடுத்த வெற்றிக்காக ஐயத்துடன் காத்திருப்பார்கள். மேலும் சில வெற்றிகள். மக்கள் நிலைமறந்து பித்தெடுத்து துள்ளுவதை காண்பீர்கள். அவ்விசையில் அஸ்வமேத வேள்வி முடிந்து ராஜசூயத்தை அறிவிப்போம். சத்ராஜித் என நான் அமர்ந்திருப்பதை அவர்கள் தங்கள் குலங்களின் வெற்றி என்றே எண்ணுவார்கள். தாங்கள் ஒவ்வொருவரும் நிலையுயர்ந்துவிட்டதாக பொங்குவார்கள்.”

கருணாகரர் அவள் முகத்தின் தன்னம்பிக்கையை சற்று திகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தார். “இன்றிருக்கும் உளப்பிளவை எளிதில் சீரமைக்கமுடியும். கலிதேவனுக்கு மாபெரும் குருதியாட்டு ஒன்றை நிகழ்த்திவிட்டு நம் படைகள் கிளம்பட்டும். கலிதேவனுக்கு இங்கே கோதையின் மறுகரையில் ஒரு பேராலயம் எழுப்புவோம். நான் சத்ராஜித் என அமர்கையில் அவ்வாலயமும் நடைதிறக்கட்டும்” என்றாள்.

கருணாகரர் தாழ்ந்த குரலில் “நாம் அரசரை சத்ராஜித் என்று அமரச்செய்வது நம் குலங்களை ஒருவேளை மேலும் மகிழ்விக்கக்கூடும்” என்றார். தமயந்தியின் விழிகள் ஒருகணம் சுருங்கி மீண்டன. “ஆம், அதுவே வைதிக முறைமை. ஆனால் அப்படி நளமாமன்னர் சக்ரவர்த்தியானால் அதைச் சொல்லியே ஷத்ரியர்கள் வடக்கிலுள்ள அத்தனை தொல்குடி ஷத்ரியர்களையும் ஒருங்குதிரட்டிவிடமுடியும்… அந்தப் படைப்பெருக்கை எதிர்கொள்ளும் ஆற்றல் நமக்கில்லை” என்றாள். நாகசேனர் “ஆம், அத்துடன் நம் படைகளில் இன்றுள்ள முதன்மைத் தலைவர்கள் அனைவருமே விதர்ப்பர்கள். அவர்களுக்கும் அது ஏற்புடையதாகாது” என்றார்.

தலையசைத்து அவரை ஆதரித்தபின் “அமைச்சரே, நான் சத்ராஜித்தாக முடிசூடியதுமே அத்தனை ஷத்ரிய அரசர்களுக்கும் இது ஒரு எளிய வைதிகச் சடங்குதான் என்று சொல்லி தூதனுப்புவேன். என் மைந்தன் இந்திரசேனன் எனக்குப்பின் இங்கே சக்ரவர்த்தியாக அமர்வான் என்ற செய்தியை அதில் கூறுவேன். அதன்பொருள் அவனுக்கு அவர்கள் தங்கள் மகளிரை பட்டத்தரசியாக அளிக்கமுடியும் என்பதே. அவ்வழியாக நாளை நிஷாதர்களின் நாட்டுக்கும் அவர்களின் குருதியே அரசகுடியென்றாக முடியும் என அவர்கள் எண்ணுவார்கள். அந்த எதிர்பார்ப்பே அவர்களை அமைதிகொள்ளச்செய்துவிடும்” என்றாள் தமயந்தி.

கருணாகரர் “அரசி, அது சிறந்த சூழ்ச்சி என்பதில் ஐயமில்லை. ஆனால் பரசுராமரால் ஷத்ரியர்கள் என்றும் அந்தணர் என்றும் அனல் அளிக்கப்பட்ட எவரும் இன்றுவரை சத்ரபதி என்றானதில்லை. அவர்களில் ஒருவர் அவ்வண்ணம் வெண்குடையும் கோலும் கொள்வாரென்றால் அவர்கள் அனைவரின் படைத்துணையையும் கோரலாமே?” என்றார்.

“ஆம், அதையும் எண்ணினேன். ஆனால் அனல்குடி ஷத்ரியர்களின் மாபெரும் கூட்டமைப்பு ஒன்று உருவாகிறது என்ற எண்ணத்தை ஷத்ரியர் அடைவதற்கே அது வழிவகுக்கும். ஷத்ரியர்களைப்பற்றி நான் நன்கு அறிவேன், அமைச்சரே. அவர்கள் முதலைகளைப்போல, தங்கள் ஆணவம் என்னும் குட்டையிலிருந்து வெளியே வர இயலாதவர்கள். எவர் தலைமைகொள்வது என்ற பூசலினாலேயே அவர்கள் படையென இணைய முடிவதில்லை. ஆனால் அவர்களை இணைக்கும் அச்சம் ஒன்று உருவாகுமென்றால் எவரேனும் அவ்விணைப்பை நிகழ்த்திவிடக்கூடும். அது நிகழ நாம் இடமளித்துவிடக்கூடாது.”

கருணாகரர் தலையை அசைத்தார். அவர் முகத்தை நோக்கி புன்னகைத்து “சத்ரபதியென்று அமர்ந்து அரியணை நிலைகொண்டபின் நாம் ஷத்ரியர்களையும் முழுதாக வெல்வோம். அதன்பின் பிறிதொரு அஸ்வமேதமும் ராஜசூயமும் நிகழ்த்தி அரசரை அதில் அமரச் செய்வோம்” என்றாள். கருணாகரர் அந்த எளிய ஆறுதலை தனக்காக அவள் சொன்னதன்பொருட்டு உளச்சிறுமைகொண்டார். முகம் சிவக்க விழிதிருப்பி “நன்று, அவ்வாறே நிகழட்டும்” என்றார்.

அஸ்வமேதத்தின் நெறிகளின்படி பாரதவர்ஷத்தின் நீர்வழிப் பிரிவுகளால் ஆன சாரஸ்வதம், காங்கேயம், சைந்தவம், பஞ்சதட்சிணம், மேருதீர்த்தம் என்னும் என்னும் ஐந்து நாடுகளில் மூன்றை வென்று புரவி கடந்தாகவேண்டும். அல்லது நிலம்சார் நாடுகளான ஹிமவம், கோவர்தனம், கௌடம், காமரூபம், வேசரம், நாகரம், திராவிடம் என்னும் ஏழில் நான்கை அது கடக்கவேண்டும். மகாநதி, கோதாவரி, கிருஷ்ணை, துங்கபத்ரை, காவேரி என்னும் ஐந்து பேராறுகள் ஓடும் பஞ்சதட்சிணம் முன்னரே தமயந்தியின் ஆட்சியின்கீழ் இருந்தது. வேசரமும் நாகரமும் திராவிடமும் அதில் அடங்கின. வங்கனை வென்று கௌடத்தையும் மாளவனை வென்று கோவர்த்தனத்தையும் கடக்கமுடிந்தால் சத்ராஜித் என முடிசூட்டிக்கொள்ள முடியும்.

கருணாகரரும் நாகசேனரும் இரு தூதுக்குழுக்களாக கிளம்பிச்சென்றனர். கருணாகரர் வங்கனையும் பௌண்டரனையும் அங்கனையும் சந்தித்து புரவி கடந்துசெல்ல அவர்களின் ஒப்புதலை பெற்றார். மாளவத்திற்கும் அவந்திக்கும் சேதிக்கும் சென்ற நாகசேனர் அவர்களிடமிருந்தும் ஒப்புதல் பெற்றார். சிம்மவக்த்ரன் நிஷதத்தின் அடிதொழு நாடுகள் என்றிருந்த கலிங்கத்திற்கும் மகதத்திற்கும் சென்று அவர்கள் நாடுகளின் வழியாக புரவி செல்லும் பாதையை வகுத்தளித்தான். நிஷதத்தின் படைப்பெருக்கை அஞ்சிக்கொண்டிருந்த ஒவ்வொருவரும் மாற்றுச்சொல் உரைக்காமல் தலைவணங்கினர்.

அஸ்வமேதப் புரவியை வரவேற்கும் முறைகள் இரண்டு உண்டு என்றன நூல்கள். வாள்தாழ்த்தி முடிவளைத்து அதை வணங்கி அரண்மனைக்கு கொண்டுசெல்வது அடிபணிபவரின் வழி. மங்கல இசையுடன் வந்து எதிர்கொண்டு சென்று வேள்விச்சாலையில் நிறுத்தி அவிமிச்சம் ஊட்டி அந்தணர்களுடன் எல்லைவரை சென்று கடந்துபோகச் செய்வது நட்புளோரின் வழி. தங்களுக்கு நட்புநாடுகளின் இடம் அளிக்கப்பட்டதையே வெற்றி என வங்கனும் பௌண்டரனும் அங்கனும் மகதனும் எண்ணிக்கொண்டார்கள்.

flowerநிஷதபுரியின் கொட்டிலில் பிறந்த இரண்டு வயதான வெண்ணிறப் பெண்புரவி கிரிஷையை பரிவேள்விக்காக நளமன்னரும் நிமித்திகர்களும் இணைந்து தேர்ந்தெடுத்தனர். ஐந்து நற்சுழிகளும் பதினாறு இலக்கணங்களும் முற்றமைந்த அப்புரவி செந்நிற மயிரடர்ந்த இமைகளும் நீலவிழிகளும் செந்நிற மூக்கும் பூமயிர் செறிந்த சிறிய இதழ்ச்செவிகளும் வாழைப்பூநிற நாக்கும் கொண்டிருந்தது. நீண்ட முகத்தில் மூக்குத்துளைகள் அகன்று திறந்திருக்க முள்மயிர்க்கீழ்த்தாடை சற்றே திறந்து வெண்கூழாங்கற்களின் நிரை என பற்களைக் காட்டி அது கனைத்தபோது அவ்வொலி கூரிய அகவலோசை கொண்டிருந்தது.

“புரவியுருக்கொண்ட வெண்நாகம்” என்று அதை சூதர்கள் பாடினர். வெண்ணிறக் குஞ்சிமயிர்க்கற்றைகள் சரிந்துகிடந்தன. நீள்கழுத்தைவிட உடல் இருமடங்கு மட்டுமே பெருத்திருந்தது. நரம்புகள் தெரியாத மென்மயிர் விலாவிலும் வயிற்றிலும் நூறுமுறை சுற்றிவந்த பின்னரே வியர்வை துளித்தது. இளஞ்செந்நிற அடிவயிறு ஓசைகளுக்கெல்லாம் சிலிர்க்க ஈச்சங்குலையென வாலைக் குலைத்தபடி அது எப்போதும் எச்சரிக்கையுடனிருந்தது. மெல்லிய வெள்ளிக்கழிபோன்ற கால்களில் வெண்கல் போன்ற குளம்புகளின் இரு பிளவுகளும் ஒற்றைக்கூம்பென குவிந்திருந்தன. “பிழையற்றது, பிறிதொன்றில்லாதது” என்று நளன் அதை சுற்றிவந்து சொன்னான். அவனை திரும்பி நோக்கி நாக்கை நீட்டிய புரவியின் முதுகைத் தட்டியபடி “அச்சமே புரவிக்கு அழகு” என்றான்.

இலக்கணம் திகைந்த பெண்புரவிகளை சேணமிட்டுப் பழக்காமல், மானுடர் எவரும் மேலேறாமல் வளர்த்து மகவீனச் செய்வது வழக்கம் என்பதனால் கிரிஷை கடிவாளத்தையோ சவுக்கையோ அறியாமல் வளர்ந்திருந்தது. நற்பொழுதில் கொட்டில்பூசனையிட்டு அதை அழைத்துச்சென்றனர். ஐந்துமங்கலங்கள் கொண்ட தாலமேந்திய சேடியர் ஐவர் முன்னால் வர மங்கல இசையெழுப்பி சூதர் தொடர அன்று மலர்ந்த அல்லி என ஒளிகொண்ட கிரிஷையை பார்க்க அரண்மனை மகளிரும் வீரரும் இருமருங்கும் கூடியிருந்தனர். அதன் கழுத்திலணிவிக்கப்பட்டிருந்த செந்தாமரை மாலை உலைந்தது. குளம்புகள் மண்ணைத் தொட்டு எழுவது நான்கு புறாக்கள் விளையாடுவதுபோலத் தோன்றியது.

கூடியிருந்தவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். பெண்டிர் குரவையிட்டனர். புதிய மணங்களுக்கு மிரண்ட கிரிஷை விழிகளை உருட்டி “ர்ர்ர்” என்றது. நளன் “ஒன்றுமில்லையடி, கண்ணே” என்றான். அரண்மனையின் முற்றத்தில் எழுந்த ஏழு மாட வேள்விப்பந்தலின் முன்னால் வைதிகர் நின்றிருந்தனர். அவர்கள் கங்கைநீர் தெளித்து வேதமோதி வாழ்த்த கிரிஷை நீருக்கு பிடரி சிலிர்த்து தலையை உதறியபடி வேள்விச்சாலையை பார்த்தது. மெல்ல தும்மியபின் இருமுறை பொய்யடி வைத்து மெல்ல உடலூசலாட்டியது. பின் உள்ளே நுழைந்து அனல் குளங்களை சுற்றிக்கடந்து அரியணை அருகே சென்று நின்றது. அனைவரும் உவகைக்குரலெழுப்பினர். வாழ்த்தொலிகள் பெருகிச்சூழ்ந்தன.

விதர்ப்பத்திலிருந்து தமயந்தியின் தந்தை பீமகர் பட்டத்து இளவரசன் தமனுடனும் இளையவர்களான தண்டனுடனும் தமனனுடனும் வந்திருந்தார். விதர்ப்ப மணிமுடி சூடி அவர் வேள்விப்பந்தலில் அமர்ந்திருக்க இரு பக்கமும் மைந்தர் நின்றனர். நளன் அரசனுக்குரிய பீடத்தில் அமர்ந்திருக்க பட்டத்து இளவரசன் இந்திரசேனன் அருகே வாளேந்தி நின்றான். மறுபக்கம் படைத்தலைவன் சிம்மவக்த்ரன் கவச உடையுடன் வாள்சூடி நின்றான். அமைச்சர் கருணாகரர் வெண்ணிற ஆடையில் தன் இருக்கையில் அமர்ந்திருந்தார். வேள்வியை அமைப்பவரான நாகசேனர் மூச்சிரைக்க ஓடி ஆணைகளை இட்டும் திரும்பிவந்து கருணாகரரிடம் குனிந்து ஆணைபெற்றும் எங்கும் தெரிந்தார்.

நிமித்திகன் வெள்ளிக்கோல் சுழற்றி வந்து பேரரசி தமயந்தி வேள்விச்சாலைக்கு வருவதை அறிவித்தான். விதர்ப்பத்தின் கொடியுடன் முகப்புவீரன் வர தாலப்பெண்டிரும் இசைச்சூதரும் தொடர முழுதணிக்கோலத்தில் தமயந்தி நடந்துவந்தாள். செந்நிறப்பட்டு அணிந்து, செவ்வைரங்கள் பதித்த அணிகள் பூண்டு அனலென அவள் வந்தபோது எழுந்த வாழ்த்தொலிகளும் குரவையோசையும் காற்றென அவளைச் சூழ்ந்து கனல வைத்தன என்று தோன்றியது. அவளுக்குப் பின்னால் அரசணித்தோற்றத்தில் இளவரசி இந்திரசேனை வந்தாள். அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அவளை எதிர்கொண்டு அழைத்துச்சென்றனர்.

அந்தணர் வேதமோதி கங்கைநீர் தெளித்து தூய்மை செய்த அரியணையில் குடிமூத்தார் எழுவர் அவளை வழிகாட்டி கொண்டுசென்று அமர்த்தினர். ஏவலர் கொண்டுவந்து அளித்த மணிமுடியை மூதன்னை ஒருத்தி அவளுக்கு சூட்டினாள். மூத்தவர் ஒருவர் செங்கோல் எடுத்துக்கொடுத்தார். நிமித்திகன் கோல்சுழற்றியதும் வாழ்த்தொலிகள் அடங்க அவன் பரிவேள்வி தொடங்குவதை அறிவித்தான். நிஷதகுடிகளின் முழுவெற்றியை வான்வாழும் மூத்தோருக்கு அறிவிக்கும்பொருட்டே அந்த வேள்வி என்று அவன் கூறினான். விண்முகில்களை ஆளும் இந்திரனின் அருளாலும் இருண்டகாடுகளை ஆளும் கலியின் கொடையாலும் அவ்வேள்வி முழுமைபெறவேண்டும் என அவன் சொன்னபோது நிஷதகுடிகள் வாழ்த்தொலி எழுப்பினர்.

வேள்வி தொடங்கியது. அதர்வணவேதம் தாமிரமணியோசைபோல, குறுமுழவோசைபோல, குட்டியானைப்பிளிறல்போல, குதிரைக்கனைப்போசைபோல, புலிமுரலல்போல எழுந்து அப்பந்தலை நிறைத்தது. வைதிகர் கிரிஷையை வேள்விப்புகை காட்டி தூய்மைப்படுத்தினர். அவிமிச்சத்தை முதலில் அரசிக்கு அளிக்க அவள் அதை இரண்டாகப் பகுத்து ஒரு பகுதியை கிரிஷைக்கு அளித்து எஞ்சியதை தான் உண்டாள். வாழ்த்தொலிகளுடன் குடிகள் வந்து கிரிஷையை தொட்டு வணங்கிச்சென்றனர். வெறியாட்டெழுந்த பூசகனின் நோக்கு அதன் விழிகளில் வந்துவிட்டிருந்தது. வேறெங்கிருந்தோ அறியாக் குரலாணை ஒன்றை பெறுவதுபோல செவிகூர்த்து ஒற்றைக்குளம்பு சற்றே தூக்கி உடல்சிலிர்த்து வால்சுழற்றியபடி அது நின்றது.

நாளில் நான்குமுறை அதை பயிற்சிக்கு கொண்டுசென்றனர். தசைகளை ஏழுமுறை உருவிவிட்டனர். அளவிட்ட உணவு அளிக்கப்பட்டது. நகர்க்குடிகள் அனைவரும் வந்து அதை வணங்கி அருள்பெற்றனர். ஒவ்வொருநாளும் காலையில் மலைமேலிருந்த இந்திரனின் ஆலயத்திலும் மாலையில் கலியின் ஆலயத்திலும் அரசனும் அரசியும் தலைமைகொள்ள பரியின் நாளும் பெயரும் சொல்லி பூசனை நிகழ்த்தப்பட்டது. அந்த மலரும் நீரும் கொண்டுவந்து அதற்கு படைக்கப்பட்டன. வணங்கும்தோறும் அது தெய்வமாகியது. எக்கணமும் எழுந்து விண்ணில் பாய்ந்தேறி வான்புகுந்துவிடும் என உளம்மயங்கச் செய்தது.

விஜயபுரியிலிருந்து புஷ்கரனும் காளகக்குடித் தலைவர்களும் முதல்நாள் பரிதேர்வின்போதே வந்து வேள்வியில் அமர்வார்கள் என்று நகரில் பேச்சிருந்தது. பின்னர் ஒவ்வொருநாளும் அவர்கள் வந்துவிட்டார்களா என்பதே அனைவரும் கேட்டுக்கொள்வதாக அமைந்தது. “அவர் சிறுமைசெய்யப்பட்டார். உளம்திரிந்திருக்கிறார்” என்றார்கள். “ஆயினும் தமையனின் செயல். இத்தருணத்தில் அனைத்தையும் மறப்பதே பெரும்போக்கு” என்றனர் சிலர். “ஆம், ஆனால் குருதியை எவரும் கழுவிவிட இயலாது. சீர்ஷரின் சொல் புஷ்கரனை ஆள்கிறது” என்றார் காளகக்குடியினர் ஒருவர்.

பரிஎழுகை நாளன்று புஷ்கரனும் காளகக்குடித் தலைவர்களும் வருவார்கள் என்றனர் மூத்தோர். வரமாட்டார்கள் என்று அரசி அறிந்திருந்தாள். “பரிவேள்விக்கான அறிவிப்பையே தங்களுக்கு எதிரான அறைகூவல் என்று அவர்கள் எண்ணுகிறார்கள், அரசி” என்றார் கருணாகரர். “நிஷாதர்களுக்குமேல் ஷத்ரியர்களின் சவுக்கோசை அது என்று சூதனொருவன் பாடுவதை ஒற்றன் கேட்டான். அவ்வாறு பலநூறு சூதர்கள் நாடெங்கும் பரவிக்கொண்டிருக்கிறார்கள்.”

தமயந்தி “அதுவும் நன்றே… நாம் மேலெழுந்தோறும் மக்கள் இப்பெருநிகழ்வில் சிறுமையைச் சேர்க்கும் புஷ்கரன்மேல் கசப்பு கொள்வார்கள். மக்களின் களிப்பும் காழ்ப்பும் நம்முடன் இணைந்துள்ளதா என்று மட்டுமே நாம் பார்க்கவேண்டும். அவர்கள் நம்முடனிருந்தால் புஷ்கரனுக்கு வேறுவழியில்லை” என்றாள்.

பரிஎழுகையின்போதும் புஷ்கரன் வரப்போவதில்லை என்று செய்தி வந்தது. அவன் விஜயபுரியை புரவி சென்றடையும்போது படையுடன் வந்து உடன்சேர்ந்துகொள்வான் என்று கருணாகரர் நகரில் செய்தி பரப்பினார். ஆனால் மக்களின் ஐயம் வளர்ந்துகொண்டே இருந்தது. நாகங்களுக்கு உகந்த ஆவணி மாதம் ஆயில்யம் நாளில் பரிஎழுகை நிகழ்ந்தது. இந்திரபுரியின் குடிகளனைவரும் வேள்விச்சாலைமுதல் கோட்டைமுகப்புவரை இரு மருங்கும் மானுடமணல்கரை என பெருகிச்செறிந்திருந்தனர். புலரியிலேயே வேள்விப்புகை பந்தலுக்குமேல் எழுந்து நின்றது. வேதச்சொல் ஒலித்துக்கொண்டிருந்தது.

வேள்வி முடிந்ததும் அவிமிச்சத்தை தமயந்தி புரவிக்கு ஊட்டினாள். புரவி அரண்மனை முற்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதன் குளம்புகளில் இரும்பு லாடங்களுக்குமேல் பொற்கவசம் அணிவிக்கப்பட்டது. முழங்கால்களில் பொற்பூண்கள். விலாவில் பொன்னூல்பின்னல் செய்த பட்டுப்படாம். கழுத்தில் அருஞ்செம்மணி பதிக்கப்பட்ட பதக்கம் தொங்கிய ஆரம். அலைநெளிவு மாலைக்குள் இலையடுக்கு மாலை. அதன் நடுவே சுழலடுக்கு மாலை. காதுகளில் நீர்மணிவைரங்கள் சுடர்ந்த மலரணிகள். நெற்றிச்சுட்டியில் அனலென சுடர்ந்தது விதர்ப்பநாட்டின் தொன்மையான அரசவைரமான அருணம்.

அந்த அணிகளனைத்தையும் அது அறிந்திருந்ததென்று தோன்றியது. கனவிலென அது நடந்தது. வழியில் தடை கண்டால் மூச்சால் ஊதிப்பறக்கவிடுவதுபோல உயிர்த்தது. கொம்புகளும் முழவுகளும் ஒலித்து அவிந்த அமைதியில் நிமித்திகன் வெள்ளிக்கோலுடன் அறிவிப்புமேடையில் எழுந்து நாளும் பொழுதும் சுட்டி புரவிஎழுகையை அறிவித்தான். அப்பரிவேள்வியின் நெறிகளை இன்னொரு நிமித்திகன் விளக்கினான்.

நளன் துணைவர அமைச்சர்களால் அழைத்துவரப்பட்ட தமயந்தி புரவியை அணுகி அதன் காதில் வைதிகர் உரைத்த சொற்களை ஏற்று சொன்னாள். “எழுக, என் புரவியே! என் வாள் நீ. என் குலத்தின் விழைவு நீ. என் மூதாதையரின் சொல் நீ. என் தெய்வங்களின் அருள் நீ. செல்க! விரிநிலத்தை வென்று மீள்க! உன்னைத் தடுப்பவர் எவராயினும் என் வாளுக்கு எதிரிகள். என் குலத்திற்கு எதிரிகள். என் கொடிவழியினரின் பழிகொள்பவர்கள். நீ கால்தொடும் நாடெல்லாம் என்னுடையதாகுக! என்னுடையவை எல்லாம் என் குலம்கொள் செல்வமாகுக! என் மூதாதையருக்கு படையலாகுக! என் தெய்வங்களுக்கு பலியென்றே ஆகுக! ஆம், அவ்வாறே ஆகுக!”

அந்தணப்பூசகர் இந்திரன் ஆலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மஞ்சள் களபத்தை புரவியின் நெற்றியில் மாவிலையால் தொட்டு வெற்றிக்குறியிட்டார். கலியின் ஆலயத்தில் மோட்டெருமையை வெட்டி பலியளித்த குருதிச்சாந்தை குடிப்பூசகர் தன் கட்டைவிரலால் தொட்டு அதன் நெற்றியில் அணிவித்தார். சிம்மவக்த்ரன் முன்னால் வந்து பணிந்து அரசியிடமிருந்து அவள் உடைவாளை பெற்றுக்கொண்டான்.

“செல்க!” என அரசி அறிவித்ததும் புரவி நின்ற இடத்திலேயே ததும்பியது. நளன் அதன் பிடரியைத் தொட்டு மெல்ல பேசியதும் நடனமேடையேறும் விறலி என காலெடுத்துவைத்து முன்னால் சென்றது. இந்திரபுரியின் மக்கள் களிவெறிகொண்டு ஆடைகளையும் தலைப்பாகைகளையும் வானில் வீசி கைவிரித்து துள்ளிக்குதித்து வாழ்த்தொலி எழுப்பினர்.

கிரிஷை கோட்டைமுகப்புக்குச் சென்றபோது அங்கே முன்னரே கொண்டுவந்து தளையில் கட்டி வைக்கப்பட்டிருந்த சிறைப்பட்ட குற்றவாளர் எழுவரை கொலைதொழிலர் வெட்டி தலையுருட்டினர். பீரிட்ட குருதி செம்மண்புழுதியில் ஊறி சேறாகியது. கைகள் கட்டப்பட்ட உடல்கள் கால்களை உதைத்தபடி எழுந்தெழுந்து துள்ளிவிழுந்தன. தலைகள் விழித்த நோக்குடன் பற்கள் தெரிய புரண்டு கிடந்தன. புரவி அக்குருதியில் கால்வைத்து அப்பால் சென்றபோது கோட்டைமேல் எரியம்புகள் எழுந்து வெடித்தன. அக்குளம்புத் தடங்களைத் தொட்டு குருதியை தங்கள் வாள்களிலும் வேல்களிலும் தேய்த்துக்கொண்டு கூச்சலிட்டு வெறிநடனமிட்டனர் வீரர்கள்.

ஒரு வீரன் கைவிரித்து ஆர்ப்பரித்தபடி முன்னால் ஓடிவந்து ஒரு கையால் தன் நீள்முடியை தான்பற்றி இழுத்து மறுகையின் உடைவாளால் தன் கழுத்தை அரிந்து சுழன்று விழுந்து துடித்தான். அவனை ஒருபொருட்டென்றே கருதாமல் அப்பால் காலெடுத்துவைத்துச் சென்றது புரவி. வீரர்கள் ஓடிவந்து தற்பலியானவனின் செங்குருதியைத் தொட்டு தங்கள் நெற்றியில் குறியணிந்தனர். குருதிதோய்ந்த வாள்களை உருவி வானில் ஆட்டி “வெற்றிவேல்! வீரவேல்! வெல்க இந்திரபுரி! வெல்க நிஷதகுடி! வெல்க பேரரசி” என்று முழக்கமிட்டனர்.

நிஷதர்களின் பதினெட்டு புரவிப்படைகள் கோட்டைக்கு வெளியே குறுங்காடுகளில் காத்து நின்றிருந்தன. முன்னால் நிஷதர்களின் மின்படைக்கொடியுடன் ஒரு வீரன் புரவியில் சென்றான். தொடர்ந்து காகக்கொடி ஏந்திய வீரன் சென்றான். முழங்கும் போர்முரசுகளுடன் தட்டுத்தேர் ஒன்று அதைத் தொடர்ந்து சென்றது. கொம்புகள் முழக்கியபடி நிமித்திகர்களின் தேர் அதன்பின் சென்றது. உருவிய வாள்களும் ஏந்திய வேல்களுமாக நூறு படைவீரர்கள் சீர்நடையிட்டுச் செல்ல தொடர்ந்து அரசியின் வாளேந்தி சிம்மவக்த்ரன் சென்றான். அவனுக்குப் பின்னால் வேள்விப்பரி சென்றது. புரவிக்குப் பின்னால் நிஷதர்களின் புரவிப்படை சென்றது.

அன்றே சிற்றமைச்சர் ஸ்ரீதரர் வழிகாட்ட நாலாயிரத்தலைவன் வஜ்ரகீர்த்தியின் தலைமையில் ஒரு நிஷதப்படை ராஜமகேந்திரபுரி நோக்கி சென்றது. அப்போரில் அப்படை தோற்று பின்வாங்கவேண்டும் என்றும் அதில் வஜ்ரகீர்த்தி களப்பலியாகவேண்டும் என்றும் ஸ்ரீதரருக்கு அரசி ஆணையிட்டிருந்தாள். வஜ்ரகீர்த்தியின் முதல் படைத்தலைமை அது. ஸ்ரீதரருக்கு இடப்பட்ட ஆணையை அவன் அறிந்திருக்கவில்லை. அப்போரில் வென்று அவைநின்று பரிசுகொள்வதைப்பற்றியும் பன்னிரண்டாயிரத்தலைவனாக ஆகி நகரில் மாளிகையும் அவையில் முதல்பீடமும் பெற்று அமைவதைப்பற்றியும் அவன் எண்ணி மகிழ்ந்துகொண்டிருந்தான்.

பிறிதொரு நாலாயிரத்தவர் படை சிற்றமைச்சர் சூக்தர் வழிகாட்ட படைத்தலைவன் பகுஹஸ்தன் தலைமையில் வடக்கே கிராதர்நிலம் நோக்கி சென்றது. அதுவும் தோல்விச்செய்தியுடன் மீளவேண்டுமென ஆணையிடப்பட்டிருந்தது. சூக்தர் அவ்வாணையால் சோர்வுற்றிருந்தார். உள்ளம் கொப்பளிக்க பகுஹஸ்தன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒற்றைச் சொல்லில் அவர் மறுமொழி இறுத்தார். “தாங்கள் ஐயுறுகிறீர்களா, அமைச்சரே? நாம் வெல்வோம்!” என்று பகுஹஸ்தன் சொன்னான். “ஆம், வெல்வோம்” என்றார் சூக்தர். “ஏன் சோர்வுற்றிருக்கிறீர்கள்?” என்றான் அவன். “பகடையாடுபவர்கள் தாங்களும் பகடைக்காய்கள் என அறிந்திருப்பதில்லை” என்றார் சூக்தர். “என்ன சொல்கிறீர்கள்?” என்று அவன் கேட்டான். “எல்லா போர்களும் பகடையாட்டம் அல்லவா?” என்றார். அவர் சொல்வதை புரிந்துகொள்ளாமல் பகுஹஸ்தன் “ஆம், போர் என்றே பகடைக்களம் அமைக்கப்பட்டுள்ளது” என்றான்.

அன்று பகலுக்குள் பகுஹஸ்தன் நிகழவிருப்பதை புரிந்துகொண்டான். புரவியில் எண்ணங்கள் அலைபாய சென்றுகொண்டே இருக்கையில் அத்தனை கதவுகளையும் திறக்கும் சுழற்காற்றென அனைத்தையும் புரியவைத்ததபடி அவ்வுண்மை உள்நுழைந்தது. “ஆம்” என உடல்நடுங்க சொன்னபடி அவன் விழிப்புகொண்டான். அவன் உடலில் அந்த அறைதலின் விசை நடுக்கமாக எஞ்சியிருந்தது. “ஆம் ஆம் ஆம்” என்றது உள்ளம். புரவியிலிருந்து விழுந்துவிடுவோம் என அஞ்சி சேணத்தை காலால் கவ்விக்கொண்டான். நெடுநேரம் சொல்லற்ற ஒரு உளவிரிவாக அவ்வறிதல் அவனுடனிருந்தது.

கிராதர்களை முற்றழிக்க நாலாயிரம்பேர் போதாது. அவர்கள்மேல் போர்தொடுத்து வென்று கப்பச்சாத்து இடுவதில் பொருளில்லை. அத்தகைய நெறிகளெவையும் அவர்களை கட்டுப்படுத்துவதில்லை. அவர்களிடம் தோல்வியுறுவதென்பது அவர்களை மிகைநம்பிக்கை கொண்டவர்களாக ஆக்கும். அவர்களின் குலவழக்கப்படி வெல்லப்பட்டவர்களை முழுமையாகக் கொன்று அழிப்பார்கள். வெட்டித் துண்டுகளாக்கி காடுகளில் விலங்குகளுக்கு வீசுவார்கள். குருதியை கலங்களில் பிடித்து சேர்த்துக்கொண்டுசென்று தலையில் ஊற்றி நீராடுவார்கள். கலங்களில் ஏந்தி குடிப்பார்கள். எதிரித்தலைவனின் ஊனை சமைத்து உண்டு களியாடுவார்கள்.

அச்செயல்கள் செய்தியாக நிஷதபுரியை சென்றடையும். நிஷாதர் வெறிகொள்வார்கள். கிராதர்களை முற்றழிக்க, அவர்களின் ஊர்களை எரியூட்ட, அவர்களின் மைந்தர்களை அடிமைகளாக தளைத்துக்கொண்டுசென்று மரக்கலக்காரர்களுக்கு விற்க, அவர்களின் நிலங்களில் உப்பும் சுண்ணமும் பரப்ப அதுவே போதிய தூண்டுதலாக ஆகும். பன்னிரு ஆண்டுகளாக எல்லைகளை மீளமீளத் தாக்கி ஊர்களைச் சூறையாடி குடிகளைக் கொன்று ஆநிரைகளைக் கவர்ந்துவந்த கிராதர்களை அழிக்க அரசி உளம்கொண்டுவிட்டாள்.

பெரும்போர்களுக்கு முன்னால் வேண்டுமென்றே சிறு தோல்விகளை நிகழ்த்துவதுண்டு என அவன் அறிந்திருந்தான். அது வீரர்களின் ஆணவத்தைச் சீண்டி பழிவெறி கொள்ளச்செய்யும். அத்தோல்வி கடுமையாக இருக்கும்தோறும் வெறிபெருகும். வேள்விப்பரி எழுந்தபோது கோட்டைமுகப்பில் எதிரே ஓடிவந்து தன் தலையை வெட்டிவிழுந்த தற்பலியனின் முகம் அவன் நினைவுக்கு வந்தது. அந்த விழிகளிலிருந்த வெறியை மிக அருகிலெனக் கண்டான். “ஆம்” என்ற சொல்லுடன் நிலைமீண்டான். புன்னகை செய்து “ஆம்” என்று தலையசைத்தான்.

வேள்விப்பரி நிஷதநாட்டின் தேர்ச்சாலை வழியாக தெற்கு நோக்கி சென்றது. காடுகளிலிருந்து படைப்பிரிவுகள் கிளம்பி வந்து சேர்ந்துகொண்டே இருக்க நிஷதபுரியின் எல்லையைக் கடக்கும்போது அது மறுமுனை தெரியாத பெருக்காக மாறிவிட்டிருந்தது. வழியெங்கும் சிற்றூர் மக்கள் மரங்களின்மேல் ஏறிச் செறிந்தமர்ந்து அவ்வொழுக்கை நோக்கினர்.

புலர்காலையில் தொலைவில் மின்கதிர்க்கொடி தெரிந்தபோது அவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். புரவி கடந்துசென்ற பின்னர் அன்று பகலிலும் இரவிலும் மறுநாள் புலரியிலும்கூட படை சென்றுகொண்டே இருந்தது. இறுதியாக குதிரைத் தீவனமும் அடுமனைப் பொருட்களும் ஏந்திய வண்டிகள் சென்று முடிந்தபோது அன்று மாலை ஆகியது. படைசென்ற பாதையில் உறுதியான மண் மென்புழுதியாக மாறியிருந்தது.