மாதம்: ஜூன் 2017

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 37

36. புற்றமை நாகம்

flowerஅணிச்சேடியர் இருவரும் சற்று விலகி தலைவணங்கி முடிந்துவிட்டதென்று அறிவிக்க சுதேஷ்ணை மீண்டும் ஒரு முறை ஆடியில் தன்னை பார்த்துவிட்டு எழுந்தாள். அவளுக்கு வலப்பக்கமாக நின்றிருந்த திரௌபதி “சற்று பொறுங்கள்!” என்று அவள் ஆடையின் மடிப்பொன்றை சீரமைக்கும்பொருட்டு சற்றே குனிந்து கையெடுத்தாள். “வேண்டாம்” என்று அவளை விலக்கிய சுதேஷ்ணை சுட்டுவிரலைக்காட்டி அணிச்சேடியிடம் அந்த மடிப்பை சீரமைக்க ஆணையிட்டாள். அவள் வந்து மண்டியிட்டு அந்தப் பனையோலைக்குருத்துபோன்ற மடிப்பை அடுக்கி அதில் சிறிய ஊசியொன்றை குத்தினாள்.

அணிச்சேடியர் செல்லலாம் என்று கையசைத்து ஆணையிட்டு அவர்கள் சென்று கதவு மூடுவதற்காக காத்து பின் திரும்பி திரௌபதியிடம் “நீ இத்தொழில்களை செய்யலாகாது. எனக்கு அணுக்கத் தோழியென்றும் காவற்பெண்டு என்றும் மட்டும் திகழ்ந்தால் போதும். இவர்கள் எவரும் தங்களுக்கு நிகரானவள் என்று உன்னை ஒருபோதும் எண்ணிவிடலாகாது” என்றாள் சுதேஷ்ணை. திரௌபதி புன்னகைத்து “ஆம், ஆனால் ஒரு குறைகாணுமிடத்து கை நீளாமல் இருப்பதில்லை. பிறிதொருவர் அணிபூணுகையில் நோக்கி நிற்கும் நாம் நம்மை சேடியர் என்றோ ஏவற்பெண்டென்றோ உணர்வதில்லை. ஓவியமொன்றை வரைந்து குறைதீர்க்கும் உணர்வுதான் ஏற்படுகிறது” என்றாள்.

சுதேஷ்ணை அவள் சொன்னதை புரிந்துகொள்ளாமல் ஆமென்பதுபோல் தலையசைத்து பிறிதெங்கோ சென்ற தன் எண்ணங்களை சற்றுநேரம் தொடர்ந்தபின் “உண்மையில் இன்று அவை நுழையவே எனக்கு உளம் கூடவில்லை. இந்த அவையமர்தல் சொல்லுசாவுதலெல்லாம் வெறும் அவல நடிப்புகளன்றி பிறிதொன்றுமில்லை. இங்கு என்ன நிகழ்கிறது என்று இதற்குள் நீயே உய்த்துணர்ந்திருப்பாய்” என்றாள். திரௌபதி ஆமென்றோ இல்லையென்றோ சொல்லவில்லை.

“நீ என்ன அறிந்தாய் என்று தெரியவில்லை. நானே கூறிவிடுகிறேன். நான் கேகயத்து இளவரசி. தொல்குடி ஷத்ரியப்பெண். கீசகன் என் உடன்பிறந்தான் ஆயினும் ஷத்ரியனோ கேகயத்தானோ அல்ல. அவன் சர்மாவதிக்கரையில் அமைந்த மச்சர்நாட்டில் ஓர் அன்னைக்கு பிறந்தவன். உண்மையில் அவன் அன்னை எந்த குலத்தைச் சார்ந்தவள் என்பதே உறுதியற்றுதான் இருக்கிறது. அவள் நிஷாதர்களுடன் தொடர்புடைய மச்சர்குலத்தைச் சார்ந்தவளென்றும் இந்த விராட நிஷாத கூட்டமைப்பின் முதற்குடி அவர்களே என்றும் அவைச்சூதர்களும் குடிமுறை நூல்களை ஏற்று புலவர்களும் சொல்லிச் சொல்லி நிறுவிவிட்டிருக்கின்றனர். பிறிதொன்றை இனி சொல்லவோ நூல்பொறிக்கவோ எவராலும் இயலாது.”

“எந்தைக்கு மைந்தர் இல்லாதிருந்த காலம் அது. நீர்முதலைகளை வேட்டையாடும்பொருட்டு கங்கை வழியாக சர்மாவதிக்குச் சென்றபோது மச்சர்களின் சிற்றூரொன்றில் அவர் தங்கினார் என்றும் அங்கு கீசகனின் அன்னையை மணந்துகொண்டாரென்றும் சொல்லப்படுகிறது. பின்னர்தான் அவர் காசிநாட்டு இளவரசி கிருஷையை மணந்து என் அடுத்த இளையவனை பெற்றார். இன்று கேகய நாட்டை ஆள்பவன் அவனே” என்றாள்.

“பிறந்தபோது அவனுக்கு சுப்ரதன் என்று பெயர். திருஷ்டகேது என்ற பெயருடன் இன்று அவன் கேகயத்தை ஆட்சி செய்கிறான். அவனுக்கும் அரசி சுருதகீர்த்திக்கும் மகளாகப் பிறந்தவளே இளைய யாதவனால் மணம் கொள்ளப்பட்ட பத்ரை. கைகேயி என்ற பெயரில் இன்று அவள் துவாரகையில் அவை வீற்றிருக்கிறாள்”என்றாள் சுதேஷ்ணை.

அப்போதே கேகய மணிமுடிக்காக கீசகனின் தரப்பில் பேச மச்சகுடி மூத்தார் எந்தையை சந்தித்தனர். மச்சர்குலத்து அரசரின் மகள் அவன் அன்னை என்றும், கேகய முடி அவனுக்களிக்கப்படுமென்றால் நிஷதகுடிகளின் ஒருமித்த ஆதரவு கேகயத்துக்கு இருக்குமென்றும் கோசலமும் மகதமும் பாஞ்சாலமும் அளிக்கும் அனைத்து அச்சுறுத்தல்களையும் வென்று கேகயம் பெருநாடென எழமுடியுமென்றும் சொன்னார்கள்.

எந்தை சற்றே ஏளனத்துடன் பேசி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டார். அவையில் அன்று நான் இருந்தேன். மச்சர்களின் குலத்தலைவர்கள் பேசி முடித்ததும் எந்தை பெருந்துயர் கொண்டவர்போல கைகளைக்கூப்பி வேதம் எழுந்த முன்னாளில் நுண்சொல் தொல்முனிவர் ஆரியவர்த்தத்தை பதினாறு ஜனபதங்களாக பிரித்ததைப்பற்றி சொல்லத் தொடங்கினார். “அப்பதினாறில் ஒன்றென இருப்பதின் துயரென்ன என்றால் நூறு கட்டுத்தறிகளில் நான்கு பக்கமும் இழுத்துக்கட்டப்பட்ட களிறு போன்றமைதல். நூல்நெறிகளும் குலநெறிகளும் குடிமுறைமைகளும் அவர்களது ஒவ்வொரு சொல்லையும் செயலையும் கட்டுப்படுத்துகின்றன. மச்சர்களோ பறவைகளைப்போல் விட்டு விடுதலையானவர்கள். அவர்கள் எக்கிளையிலும் அமரலாம், எவ்வுணவையும் உண்ணலாம், எதுவும் தீட்டு அல்ல, எதனாலும் அவர்கள் தூய்மை கெடுவதில்லை” என்றார்.

“அவர் தங்களை ஏளனம் செய்கிறார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தங்கள் நாடுகளுக்குத் திரும்பி அச்சொற்களை எண்ணத்தில் மீட்டுகையிலே அதிலிருந்த ஆணவத்தையும் நஞ்சையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியும்” கசப்புடன் கையசைத்து சுதேஷ்ணை சொன்னாள். “அன்று அவர் சொன்னதில் ஓர் உண்மை உள்ளது. பதினாறு தொல்குலங்களில் ஒன்றாக பூர்வஷத்ரியராக இருப்பதென்பது பெரிய சிறை. மீள மீளச் சொல்லப்படும் சொற்கள் பொருளிழந்து குருட்டுவிசை கொண்டு அவர்களிடையே வாழ்ந்தன, நாள்பட்ட அனைத்தும் நஞ்சே என்று மருத்துவர் சொல்வதுபோல.”

எங்கள் அவையில் அமர்ந்து அங்கு நிகழும் சொல்லாடல்களை செவி கூர்ந்திருக்கிறேன். சொல்லிச் சொல்லி தீட்டப்பட்ட முறைமைக் கூற்றுக்கள். முள்முனையை முள்முனையால் தொடும் நுண்மைகள். பூமுள்ளெனப் பதிந்து நஞ்சு ஊறச்செய்யும் வஞ்சங்கள். இன்று எண்ணுகையில் அங்கு அமர்ந்து நான் மகிழ்ந்த ஒவ்வொன்றுக்காகவும் நாணுகிறேன்.

எந்தை நன்கறிந்திருந்தார், அந்த ஏளனம் தங்கள் அரசுக்கு எதிராக திரும்புமென்று. மச்சர்கள் தன் நாட்டை தாக்கினால் உடனெழுந்த ஜனபதங்களில் எந்த அரசரும் தனக்கென ஒரு வாள்முனையைக்கூட தூக்கமாட்டாரென்று. ஆயிரம் ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் முற்றழிப்பதைப்பற்றி எண்ணி கனவுகண்டு வாழ்பவர்கள் அவர்கள். அவ்வாறே நிகழ்ந்தது. கோசலத்தின் எல்லைகளை மச்சர்கள் தாக்கத்தொடங்கினர். கோசலத்தின் படகுகள் எதுவும் கங்கையில் செல்ல முடியாதாயிற்று. வணிகர்கள் வரவு நின்றது. ஒவ்வொரு நாளுமென நாட்டின் செல்வம் மறைந்துகொண்டிருந்தது.

ஆயினும் பதினாறில் ஒரு குடி. நாள்தோறுமென நாடெங்கும் நிகழும் வேள்விகள் எதிலும் ஒரு கிண்ணம் நெய்யைக்கூட எங்களால் குறைக்க முடியவில்லை. அரச விருந்துகளில் பொற்கோப்பைகளில் யவன மது ஒழியாதிருக்க வேண்டும். எத்தனை எளியதென்றாலும் எத்தனை நூறுமுறை சொல்லப்பட்டதென்றாலும் பொய்ப் புகழ்மொழியொன்றைச் சொல்லி அவையிலெழுந்து நிற்கும் புலவருக்கு பத்து விரலும் பட பொன்னள்ளிக் கொடுத்தாகவேண்டும். கண்ணெதிரிலேயே ஓட்டைக் கலத்தில் நீர் என என் நகர் ஒழிவதைக் கண்டேன்.

அப்போதுதான் இங்கு விராடபுரியிலிருந்து இளவரசர் தீர்க்கபாகுவுக்காக மணத்தூது வந்தது. அவர் விராடநிஷதசம்யோகத்தின் அடுத்த மகாவிராடராக பட்டம் கட்டப்பட்டிருந்தார். இவர்களின் தூதன் கலிங்கத்திற்கும் வங்கத்திற்கும் சேதிக்கும் அங்கத்திற்குமெல்லாம் சென்றிருக்கிறான். செல்லுமிடங்களிலெல்லாம் ஏளனமும் சிறுமையுமே இவர்களுக்கு அளிக்கப்பட்டது. அச்செய்தி ஒவ்வொருநாளும் சூதர் நாவுக்கு மகற்கொடை மறுத்த மன்னர்களாலேயே அளிக்கப்பட்டது. அவர்கள் மகற்கொடை மறுப்பதன் வழியாகவே தங்கள் குலமேன்மையை நிலைநிறுத்துபவர்கள். விராட மன்னர் சுபாகுவோ சலிக்காது மணத்தூது அனுப்பிக்கொண்டிருந்தார்.

நிஷாதர்களுக்குத் தெரியும் ஷத்ரியர் என்று இக்கங்கைவெளி முழுக்க வென்றிருக்கும் அரசர்களில் பலர் வெளியேற வழியின்றி கல்லிடுக்குகளில் மாட்டிக்கொண்ட தேரை போன்று வாழ்பவர்கள் என்று. பல அரண்மனைகளில் ஒரு மாதம் மழை நின்றுபெய்தால் இடும்பை வந்து அமையும் என்று. ஒருவர் துணிந்தால்கூட விராடபுரி தேடிக்கொண்டிருக்கும் ஷத்ரியக்குருதி கிடைக்கும் என்றும் அது உறுதியாக நிகழும் என்றும் தெளிந்திருந்தனர்.

எங்கள் அரசவைக்கு நிஷதமன்னர் தீர்க்கபாகுவின் மணச்செய்தி வந்திருப்பதை முதல்நாள்தான் நான் அறிந்தேன். மறுநாள் அவையில் அத்தூதை அறிவிக்கும்படி எந்தை விராடரின் தூதரிடம் சொல்லியிருந்தார். ஏனெனில் அவையில் அதை உரிய ஏளனத்துடன் மறுக்க அவர் விழைந்தார். அதற்குரிய நுண்ணிய நஞ்சு நிரம்பிய சொற்களை அவர் கவிஞர்களோடு அமர்ந்து யாத்து உளம் கொண்டிருந்தார். ஆனால் நான் முடிவு செய்திருந்தேன். அவையில் மணத்தூதை முதலமைச்சர் ஆபர் உரைத்து கைகூப்பி அமர்ந்ததுமே நான் எழுந்து விராட இளவரசரை நான் முன்னரே என் கணவரென உளம் கொண்டிருக்கிறேன் என்றேன். எனது வேண்டுதலை காற்றுகளை ஆளும் பன்னிரு மாருதர்களுக்கும் நான் உரைத்ததனால் அது சென்று விராட இளவரசரின் செவியில் விழுந்தது என்றேன். அதனாலே இந்த மணத்தூது அமைந்தது என்றும் கேகயத்தின் நல்லூழ் அது என்றும் சொன்னேன்.

எந்தை அரியணையில் கைதளர்ந்து அமர்ந்துவிட்டார். கேகயத்தின் பேரவை சொல் திகைத்து வெறும் விழிகளென மாறி என்னைச் சூழ்ந்திருந்தது. முகம் மலர்ந்த ஆபர் எழுந்து கைகூப்பி “விராடநகரியின் பேரரசியாக தாங்கள் அமைவது எங்கள் நல்லூழ். இது இவ்வாறே நிகழவேண்டுமென்று தெய்வங்கள் வகுத்திருக்கின்றன போலும்” என்றார். எந்தை மணத்தூதை மறுக்க அப்போதும் ஒரு வாய்ப்பிருந்தது. கன்யாசுல்கம் கேட்டு பெற்றுக்கொள்வது அவருடைய உரிமை. கொடுக்கவே முடியாத கன்யாசுல்கமொன்றை கேட்கலாம். அதைச் சொல்ல எங்கள் அமைச்சர் ஸ்மிதர் எழுந்து எந்தையை நோக்கி வருவதை ஆபர் கண்டார். எந்தையோ அவையோ மறுசொல் எடுப்பதற்குள் முன்னால் எட்டுவைத்து அங்கிருந்த மங்கலத் தாலத்தில் இருந்த மஞ்சளரிசியை எடுத்து மணமகளை வாழ்த்துவதற்குரிய வேதச்சொல்லை உரைத்தபடி என் தலையில் இட்டார்.

“நிஷாதகுலத்து சபரகுடிப்பிறந்த சுபாகுவின் மைந்தர் தீர்க்கபாகுவின் மணமகளே, அவளைச் சூழ்ந்திருக்கும் கந்தர்வர்களே, தேவர்களே, உங்களை வாழ்த்துகிறேன்! இக்குலமகள் அவள் கணவனின் கருவைத் தாங்கி மாவீரர்களைப் பெறுக! மாதரசியரை அடைக! அவர்கள் பேரரசர்களாகவும் அரசியராகவும் அரியணை அமர்க! அவர்களின் கொடிவழி நீள்க! ஆம், அவ்வாறே ஆகுக! வேதம்திகழும் அந்தணனின் இச்சொல் என்றும் அழியாது திகழ்க!” என எங்கள் இருவரையும் வாழ்த்தினார். பாரதவர்ஷத்தில் எங்கும் அந்தணர்சொல் பொய்யென்றாகக் கூடாதென்பது தொல்நெறி. ஸ்மிதர் மஞ்சளரிசி எடுத்து என் மேல் வீசி இரு கைகளையும் தூக்கி “பொய்யாமொழி அந்தணர்சொல் திகழ்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

எந்தைக்கு அதன்பின் வேறு வழி ஏதுமில்லை. உதடுகளை இழுத்து நீட்டி முகத்தை மலரச்செய்து எழுந்து கைகூப்பி “ஆம், இது எங்கள் குலதெய்வத்தின் ஆணை என்றே கொள்கிறோம். இந்த மணஉறவால் இரு நாடுகளும் பகை கடந்து வளம் கொழிக்கட்டும். இருகுடிக் குருதிகளின் கலப்பால் மைந்தர் பிறந்து கொடிவழிகள் பெருகட்டும்” என்றார். அவை எழுந்து கைகளைத் தூக்கி வாழ்த்துரைத்தது. அத்தனை பேரும் உளமின்றி ஒற்றை நடிப்பை வழங்குவதைக் கண்டு என்னுள் கசப்புடன் புன்னகைத்துக்கொண்டேன். உண்மையில் முதற்கணத்தில் எழுந்த திகைப்புக்குப்பின் ஒவ்வொருவரும் உள்ளூர ஆறுதல் கொள்வதையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். இனி மச்சர்களை வெல்ல முடியும். கேகயத்தின் களஞ்சியங்களில் நெல்லும் கருவூலங்களில் பொன்னும் வரத்தொடங்கும்.

அவர்கள் ஒவ்வொருவரும் கையொழியாது வாழக் கற்றவர்கள். தொல்பெருமை சொல்லி சோம்பி அமர மட்டுமே அறிந்தவர்கள். இல்லையென்று சென்று நிற்பதை தங்கள் மூதாதையருக்கான இழிவென்று எண்ணுபவர்கள். கேகயத்து அந்தணர் பாரதவர்ஷத்தின் மூத்த குருமரபினர். முதல் குருமரபினர் என்று அவர்கள் சொல்லிக்கொண்டனர். தொல்வேதம் மூன்றையும் தாங்களே அமர்ந்தெழுதியவர்கள்போல் தோற்றமளிப்பவர்கள். பதி பெயர்ந்து கிளம்பிச் செல்வார்கள் என்றால் பிற நாடுகளில் அங்குள்ள அந்தணர்களுக்கு இரண்டாமிடத்தில் சென்று அமைய வேண்டியிருக்கும். முதற்பெருமை மீளாது.

அந்தணர் தங்கள் உவகையை வெளிக்காட்டாமல் இறுகிய நெஞ்சுடன் அவ்வாழ்த்தை ஏற்றுரைப்பதுபோல் நடித்தனர். ஆனால் அவர்களின் உடலில் இருந்தே அவ்வுவகையை உணர்ந்த மற்ற குடிகள் நிறைவுகொண்டு தாங்களும் எழுந்து எங்களை வாழ்த்தின. அவை முறைமைகள் ஒவ்வொன்றாக முடிந்து ஓசையில்லாத நடையுடன் கலைந்து செல்கையில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டபோது அவ்விழிகளில் தெரிந்த மெய்யான களிப்பை தொலைவிலிருந்து நிறைவுடனும் அறியாச் சிறு கசப்புடனும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

flowerவிராடபுரியின் அரசியாக வந்து அமர்வதுவரை இங்குள்ள அரசியல் என்னவென்றே எனக்கு தெரிந்திருக்கவில்லை. மாமன்னர் நளனுக்குப்பின் சிதறிப்போன நிஷதகுடிகளின் பெருங்கூட்டே இது. இரண்டாம் கீசகரால் இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த விராடநிஷாதசம்யோகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரே அரசர் எனப்படுகிறார். கோல் கைக்கொண்டு முடிசூடி அரியணை அமர்ந்துகொள்ள அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அவரது ஆணைகளை பிறர் ஏற்க வேண்டுமென்ற எந்த மாறாநெறியும் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான ஆணைகள் ஏற்கப்படுவதில்லை. ஆங்காங்கே அக்குடிகளின் தலைவராலும் அவர்களை ஆளும் மூத்தோரவையாலும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

முதலாம் மகாகீசகர் நிஷதகுடிகளை ஒற்றைப் படையென திரட்டுவதற்குரிய நெறிமுறைகளை வகுத்திருந்தார். அதில் ஒவ்வொருவருக்கும் என்னென்ன பணி என்றும் உரிமை என்றும் நிறுவப்பட்டிருந்தது. அதை அக்குடிகளின் தெய்வங்களே வெறியாட்டென பூசகரில் எழுந்து ஆணையிட்டிருந்தன. எதன்பொருட்டும் அஞ்சும் வழக்கமில்லாத தொல்குடிகள் இவர்கள். இவர்களின் புரவித்தேர்ச்சி நிகரற்றது. ஆகவே நிஷதர்கள் போர்முனைகளில் எப்போதும் வெற்றிகொள்பவராக இருந்தார்கள். சூழ்ந்திருந்த ஷத்ரிய அரசர்கள் அனைவரும் இவர்களை அஞ்சுகின்றனர். ஆனால் வெளியே இருந்து நோக்குபவர்கள் காணும் ஒற்றைப் பெரும்கோட்டை அல்ல இந்நகரென்று உள்ளே நுழைந்த சில நாட்களிலேயே எவரும் அறியலாம்.

அரசர் சுபாகு நோயுற்று படுக்கையில் இருந்தமையால் என்னை மணந்த அன்றே தீர்க்கபாகு விராடபுரியின் அரசர் என முடி சூடினார். மூதரசர் சில நாட்களிலேயே இறந்தார். அரசியென்று அரியணையில் அமர்ந்து நான் ஓர் ஆணையிட்டால் மறுநாள் பிறிதொரு எளிய குடித்தலைவி இடும் ஆணை அதை மறுக்கமுடியும் என அறிந்தேன். நானும் ஓர் எளிய நிஷத குலத்தலைவி மட்டுமே என்று புரிந்துகொண்டேன். விராடநிஷதக் கூட்டின் பெரிய குலம் சபரர்கள். ஆகவே தீர்க்கபாகு அரசரானார். குடிக்கூட்டம் நினைத்தால் எப்போது வேண்டுமென்றாலும் அவரை விலக்கி பிறிதொருவரை அரசர் என்றாக்க முடியும். அன்று நான் உத்தரனை கருவுற்றிருந்தேன். ஆனால் என் வயிற்றில் பிறக்கும் அம்மைந்தன் அரசனாவான் என்பதற்கு எந்த உறுதியுமில்லை. அதை எண்ணி நான் சில அரசியல்சூழ்ச்சிகளை வகுக்கலானேன்.

அந்நாளில் என் இளையோனாகிய கீசகன் அவன் பிறந்த மச்சர்குடியை ஒரு சிறு தனிநாடு என நிலம்வளைத்து நகர் அமைத்து உருவாக்கிக்கொண்டிருந்தான். மச்சர் குடிகள் எழுவர் அவன் தலைமையில் ஒன்றாயினர். கங்கையில் செல்லும் கலங்களை மறித்து சுங்கம் கொள்ளத்தொடங்கினர். உண்மையில் நீர்க்கொள்ளையர்களாகவே அவர்கள் அங்கு இருந்தனர். மகதமோ காசியோ அஸ்தினபுரியோ அவனை தனித்து அறிந்து முற்றொழிக்க வேண்டுமென்று எண்ணும் தருணம் வரைதான் அவன் அங்கு திகழ முடியும் என்று கீசகன் அறிந்திருந்தான். மகதப்பேரரசர் ஜராசந்தரின் ஒரு படகுப்படை போதும் மச்சர் குலத்தையே அழித்து அவன் தலையை வெட்டிக்கொண்டு செல்வதற்கு.

அவர்களின் படை எழுவதற்கு முன்னரே போதிய செல்வம் சேர்த்து நகரொன்றை அமைத்து சூழ்ந்து கோட்டையையும் கட்டிவிடவேண்டுமென்று அவன் எண்ணினான். அதை வெல்ல படையிழப்பு தேவைப்படும் என்றால் ஷத்ரிய மன்னர்கள் தயங்குவார்கள். மகதத்திற்கோ காசிக்கோ கப்பம் கொடுத்து தனிக்கோலையும் முடியையும் பெற்றுவிட்டால் பிற மச்சநாடுகளை வென்று மச்சர்கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க முடியும். அவன் உள்ளத்திலிருந்தவர் விராடநிஷதக் கூட்டமைப்பை உருவாக்கிய இரண்டாவது மகாகீசகர். ஆனால் அதற்கு அவன் கொள்ளையடித்தாக வேண்டியிருந்தது. கொள்ளையடிக்குந்தோறும் மகதத்தின் வாள் அவனை கண்ணுக்குத் தெரியாமல் அணுகியது.

அந்த இக்கட்டுநிலையில் நான் அவனை அழைத்துக்கொண்டால் அவனுக்கு வேறுவழியில்லை என கணித்தேன். அவன் எனக்கு படைக்கலமாக இருப்பானென்று எண்ணினேன். என் தூதர்களை அனுப்பி அவனை வரச்சொல்லி இந்நகருக்கு வெளியே சோலையொன்றில் நிஷதகுடிகள் எவரும் அறியாமல் சந்தித்தேன். தன்னை விராட நாட்டின் முதற்படைத்தலைவனாக ஆக்கவேண்டும் என்று அவன் கோரினான். எந்நிலையிலும் எனக்கோ மைந்தருக்கோ மாறுகொள்வதில்லை என்று வாள்தொட்டு ஆணையிட்டான்.

சில நாட்களுக்குப் பின் எனக்கு உத்தரன் பிறந்தான். கேகயத்தில் இருந்து என் இளையோன் சத்ருக்னன் பரிசில்களுடன் அணியூர்வலமாக விராடபுரிக்கு வந்து என்னை வாழ்த்தினான். அதை வெல்லும் வரிசைகளும் பரிசில்களுமாக கீசகன் இந்நகருக்கு வந்தான். விராடருக்கு அவன் அளித்த பரிசில்களும் அவர் முன் வாள்தாழ்த்தி பணிந்து நின்றதும் அவரை மகிழ வைத்தது. அவனுடைய பெருந்தோள்களைக் கண்டு நிஷாதர்கள் விழிகளுக்கு அப்பால் அஞ்சுவதை நான் கண்டேன். அவனை என் இளையோனாக இங்கேயே சில நாட்கள் தங்க வைத்தேன்.

அப்போது தெற்கே வாகட குலம் எங்களுக்கு எதிராக கிளர்ந்திருந்தது. ஒரு படைநீக்கம் நிகழவிருந்தது. அதற்கு உதவும்படி ஆணையிட்டேன். நிஷாதர்களுக்குரிய படைக்கலங்களை கலிங்கத்திலிருந்து கொண்டுவரும் பணியை அவனிடம் அளித்தேன். நிஷாதர்களுக்கு பொருட்களை வாங்கவோ விலைபேசவோ தெரியாதென்பதனால் மூன்றில் ஒன்றே தேறும் என்ற நிலையே இங்கிருந்தது. கீசகன் அதை மிகத் திறமையாக செய்தான். அவன் தெரிவுசெய்த படைக்கலங்களில் ஒன்றுகூட பழுதென்றிருக்கவில்லை. அவன் அளித்த பணத்திற்கு நிஷாதர்கள் எவரும் அவற்றை பெற்றிருக்க முடியாது.

சதகர்ணிகளின் உடல் சிதைந்த உதிரி அரசுகளாகத் திகழ்ந்த வாகடர்களும் பல்லவர்களும் இணைந்து படைதிரட்டினர். அவர்களுக்கு அமைந்த ராஜமகேந்திரபுரித் துறைநகரமே அவர்களை ஆற்றல்கொண்டவர்களாக ஆக்கியது. அங்கிருந்து பீதர்நாட்டுப் படைக்கலங்களை பெற்றுக்கொண்டார்கள். திருவிடத்திலிருந்து வில்லவர்களைத் திரட்டி ஒரு படையை அமைத்தனர். தெற்குப்புயல்கள் என அவர்களை நம் அமைச்சர்கள் அழைத்தனர். அவர்கள் நமது தென்னெல்லைகளை தாக்கினார்கள். அவர்களின் இலக்கு கிருஷ்ணையை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. அதை எய்திவிட்டார்கள் என்றால் ஒரு தலைமுறைக்குள்ளாகவே வெல்லமுடியாதவர்களாக ஆகிவிடுவார்கள் என நாங்கள் அறிந்திருந்தோம்.

எங்கள் குடித்தலைவர்கள் படைஎழுச்சிக்கு நாள் குறித்த அன்று அடுத்த செய்தி வந்தது. மகாகீசகரால் சிதறடிக்கப்பட்டு தெற்கே கிஷ்கிந்தைக்கும் ரேணுநகரிக்கும் பின்வாங்கிச் சென்றிருந்த சதகர்ணிகள் படைதிரட்டிக்கொண்டு வந்து திருமலைத்துவாரத்தை கைப்பற்றி அதை மையமென வலுவாக்கிக் கொண்டனர். நல்லமலையும் பல்கொண்டா மலையும் கோட்டைச்சுவர்கள் என காக்கும் அந்நகரை படைகொண்டு வெல்வது அரிது. சதகர்ணிகளுக்கும் பல்லவர்களுக்கும் வாகடர்களுக்கும் இடையே படைக்கூட்டு ஒன்று கைச்சாத்தாகியது.

அத்தனை பெரிய படைக்கூட்டை எதிர்கொள்ளும் ஆற்றல் அன்று விராட அரசுக்கு இருக்கவில்லை என அனைவரும் அறிந்திருந்தனர். வடக்கே ஷத்ரியர்களின் வஞ்சமிருந்தது. அன்று மகதத்திற்கும் அஸ்தினபுரிக்குமிடையே போரென விளைய வாய்ப்புள்ள பூசல் நடந்து கொண்டிருந்ததால் மட்டுமே நாங்கள் ஆறுதல் கொண்டு ஒதுங்கியிருந்தோம். தெற்கில் எங்கள் படைமுனைகள் சற்று ஆற்றல் இழந்தாலும்கூட வடக்கிலிருந்து கலிங்கனும் வங்கனும் சேதிநாட்டானும் படைகொண்டு வரக்கூடுமென அறிந்திருந்தோம். ஆனால் வேறுவழியில்லை, அஞ்சி வாளாவிருந்தால் அதுவே அழைப்பென்றாகிவிடும். தென்னக முக்கூட்டு எங்கள்மேல் நேரடியாக படைகொண்டுவந்தால் நாங்கள் அழிவோம்.

யார் போர்முகம் நிற்பது என்ற கேள்வி எழுந்தபோது ஒவ்வொரு போருக்கும் நான் நான் என்று முந்தி வந்து நிற்கும் குலத்தலைவர்கள் அனைவரும் தயங்கி பின்வாங்கினார்கள். அப்போர் தோல்வியில்தான் முடியும் என்றும் அதன் பழியை தங்கள் குலங்கள் சுமக்க வேண்டியிருக்கும் என்றும் நிஷதகுடியின் அழிவுக்கான தொடக்கமாக அது அமையுமென்றும் ஒவ்வொருவரும் எண்ணினர். “எவர் படைகொண்டு எழுவது?” என்றார் விராடர். அவர் அன்றே படைத்திறனில்லாதவர் என்றும் மதுக்களியில் அரண்மனையில் அமைவதற்கு மட்டுமே அறிந்தவர் என்றும் அறியப்பட்டிருந்தார். அந்தப் போரையே பிறருடைய பணி என்று அவர் எண்ணினார். அப்பொறுப்பை எவரிடமேனும் அளித்து அவையை முடித்துவிட்டு அகத்தளத்திற்கு செல்வதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தார்.

“எவர் படைமுகம்கொள்வது? கூறுக!” என்று நான் அவையிடம் கேட்டேன். அவை அவ்வினாவின் முன் பாவைநிரை என அமைதியாக இருந்தது. நான் “குடிமூத்தார் ஒப்புக்கொண்டால் என் இளையோன் கீசகன் படைநடத்துவான்” என்றேன். திகைப்புடன் அனைவரும் கீசகனை நோக்கி திரும்ப அவன் எழுந்து கைகூப்பி “குடிப்பெரியோரின் நல்வாழ்த்து அமையும் என்றால் வாகடர்களையும் பல்லவர்களையும் கொன்று தலைகொண்டு மீள்வேன்” என்றான். “சதகர்ணிகளை மீண்டும் ரேணுநகரிக்கே துரத்திவிட்டுத்தான் இந்நகர் புகுவேன், ஆணை!” என்று வாளைத் தூக்கி வஞ்சினம் உரைத்தான்.

அவை அப்போதும் அமைதியாக இருந்தது. என்ன முடிவெடுப்பதென்று அவர்கள் அறியவில்லை. ஆனால் அவர்களுக்குள் ஆறுதல் எழுவது தோள்கள் தளர்வதில் தெரிந்தது. “என்னுடன் பன்னிரண்டு மச்சர்குலங்களின் படைகள் உள்ளன. நிஷதர்களுக்காக படைஎதிர்கொண்டு நிற்பதில் பெருமை கொள்பவர்கள் அவர்கள்” என்றான் கீசகன். மூத்த குடித்தலைவரான பீடகர் எழுந்து “இத்தருணத்தில் மகாகீசகரின் பெயர்கொண்ட ஒருவர் இந்த அவையில் இருப்பதும், இப்பொறுப்பை ஏற்பதும் நம் தெய்வங்களின் ஆணை போலும். அவ்வாறே ஆகுக!” என்றார். அவை உயிர்கொண்டு “ஆம், அவ்வாறே ஆகுக!” என குரலெழுப்பியது.

தலைமை அமைச்சர் ஆபர் எழுந்து “இந்த அவை மாற்று ஒன்றும் சொல்லாதபோது அதை ஒப்புகிறது என்றே கொள்ளலாம்” என்றார். விராடர் அவையில் என்ன ஒலிக்கிறதோ அந்த திசை நோக்கி தலையாட்டுவதையே ஆட்சி என்று நெடுங்காலமாக எண்ணி வருபவர். “ஆம், அரசாணையென அதை வெளியிடுக!” என்றார். கீசகன் என்னை ஒருகணம் நோக்கிவிட்டு “அவ்வாணையை தலைசூடுகிறேன்” என்றான். அவையினர் எழுந்து கீசகனை வாழ்த்தி குரலெழுப்பினர்.

குடித்தலைவர்கள் எழுவர் எழுந்து சென்று தனியறையில் சொல் சூழ்ந்தபின் திரும்பி வந்து கீசகனை விராடநிஷதக்கூட்டமைப்பின் முழுமுதல்படைத்தலைவனாக அமர்த்துவதாக அறிவித்தனர். பல போர்க்களங்களில் மகாகீசகர் ஏந்தி படைமுகம் நின்ற அவருடைய பெரிய உடைவாளை கொண்டுவந்து அவையிலேயே கீசகனிடம் அளித்தனர். அவன் மண்டியிட்டு அமர்ந்து அதை பெற்றுக்கொண்டு அவைக்குமுன் நின்று தலைக்குமேல் தூக்கி மும்முறை ஆட்டி “வென்றுவருவேன்! உயிர் வைத்தாடுவேன்! ஒருபோதும் பணியேன்!” என வஞ்சினம் உரைத்தான். அதுவரை இருந்த தயக்கங்கள் விலக நிஷாதர்களின் பேரவை எழுந்து கைகளை விரித்து அவனை வாழ்த்தி பெருமுழக்கமிட்டது.

“நான் விரும்பியதே நிகழ்ந்தது. கீசகன் அப்போரில் வெல்வது எளிதல்ல என்றாலும் எவரேனும் வெல்லக்கூடுமென்றால் அவனே என அறிந்திருந்தேன். ஆனால் உள்ளிருந்து முட்டை ஓடை குத்தி உடைக்கும் சிறகுகொண்ட குஞ்சு என என் உள்ளத்தில் அறியாத அச்சம் ஒன்று சிறகடித்துக்கொண்டே இருந்தது” என்றாள் சுதேஷ்ணை. “நான் அன்று அஞ்சியது என்ன என்பதை நெடுங்காலம் கழித்தே புரிந்துகொண்டேன், அவனுடைய பெயரை. கீசகன் என்னும் பெயரை அவனுக்கு இட்ட அந்த அன்னையின் விழைவை நான் அப்போது கணிக்கத் தவறிவிட்டேன்.”

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 36

35. வேழமருப்பு

flowerசூதர்குழுவுடன் திரௌபதி விராடபுரியின் பெருங்கோட்டை வாயிலை அடைந்தபோது அந்தி கவியத் தொடங்கியிருந்தது. தொலைவிலேயே சூதர்குழுவின் தலைவர் விகிர்தர் “விரைந்து சென்றால் பெருவாயில் மூடுவதற்குள் நாம் நகருக்குள் நுழைந்துவிட முடியும். அந்திக்குப் பின் அயலவர்களை நகர்நுழைய ஒப்புவதில்லை. நாம் திறந்த வெளியில் தங்க வேண்டியிருக்கும்” என்றார். “நோக்குக, தென்மேற்கில் மின்னுகிறது. இப்பகுதிகளில் தென்மேற்கு முகிலூறினால் மழை உறுதி என்றே பொருள். திறந்த வெளியில் குழந்தைகளுடன் தங்குவதென்பது கடினம்.”

திரௌபதி “கோட்டைமுகப்பில் தங்கும் இடங்கள் இல்லையா?” என்றாள். “உண்டு. பெருவணிகர்களுக்கு நீள்விடுதிகள் அமைந்துள்ளன தொகைக்கொட்டகைளும் உண்டு. இப்பொழுதிற்குள் அங்கே பலர் சென்று இடம் பற்றியிருப்பார்கள். சூதர்களுக்கு தனியாக தங்குமிடங்கள் உண்டு. பலர் கூடாரங்கள் கட்டி தங்குவார்கள்” என்றார் விகிர்தர். “ஆனால் இது வைகாசி மாதம். தொகைச்சந்தை ஒன்று நாளை மறுநாள் கூடவிருக்கிறது. பன்னிரு நாட்கள் அச்சந்தை நீடிக்கும். நகருக்குள் பெருங்கூட்டம் நுழையும். அனைவருக்கும் கூரைகளில் இடமிருக்காது.” முதியவரான சுந்தரர் “அத்துடன் எங்கும் அடுமனைச்சூதர் ஒரு படி தாழ்ந்தவர்கள்தான். மாமன்னர் நளன் கோல்கொண்டு ஆண்ட தொல்நகரியான இந்திரபுரியிலும் அவ்வாறே இருந்திருக்கும்” என்றார். விகிர்தர் “விரைந்து செல்வோம்” என்றார்.

“இன்னும் சற்று விரைவு” என்று அஸ்வகன் கூவினான். வண்டியோட்டி சினத்துடன் திரும்பி நோக்கி “தரையை பார்த்தீர்களல்லவா? புழுதியில் ஆழ்கிறது சகடம். ஒற்றைக்காளை இதுவரை இழுத்து வந்ததே நமது நல்லூழ். இனிமேலும் அதை துரத்தினால் கால் மடித்து விழுந்துவிடக்கூடும் அதன் பின் இந்த சாலையோரத்து மரத்தடியில் இரவை கழிக்க வேண்டியிருக்கும், மழைக்கு வந்து ஒதுங்கும் காட்டு விலங்குகளுடன் சேர்ந்து” என்றான். விகிர்தர் “பூசல் வேண்டாம். முடிந்தவரை விரைந்து செல்வோம்” என்றார்.

ஆனால் அவர்கள் அனைவருமே களைத்திருந்தனர். விரைந்து நடக்க முனைந்தோர் எஞ்சியிருந்த தொலைவை கணக்கிட்டு உள்ளம் சோர்ந்தனர். முதிய பெண்டிர் இடையில் கைவைத்து அவ்வப்போது வானை நோக்கி “தெய்வங்களே” என்று ஏங்கினர். “எவராவது இருவர் விரைந்து முன்னால் சென்று கோட்டைக்கு வெளியே தங்குமிடம் ஒன்றை பிடித்து வைத்துக்கொண்டால் என்ன?” என்று திரௌபதி கேட்டாள். “பிடித்து வைத்துக்கொண்டால் கூட அதை அவர்கள் நமக்கு அளிக்க வேண்டுமென்பதில்லை. படைக்கலமேந்தியவர்களோ இசைக்கலம் ஏந்தியவர்களோ அல்ல நாம். எளியவர். அடுமனைக் கலங்கள் மட்டுமே அறிந்தவர்கள். மானுடரின் பசி தீர்க்கும்போது மட்டுமே நினைவுகூரப்படுபவர்கள்” என்றார் சுந்தரர்.

செல்லச் செல்ல அவர்களின் விரைவு குறைந்து வந்தது. எடை சுமந்த பெண்கள் நின்று “எங்களால் முடியவில்லை. இத்துயருக்கு நாங்கள் மழையிலேயே நின்றுகொள்வோம்” என்றனர். “மழைக்கு நம்மிடம் கூரையென ஏதுமில்லையா?” என்றாள் திரௌபதி. விகிர்தர் அவளை நோக்கி புன்னகைத்து “நாங்கள் நாடோடிகளாக வாழ்பவர்களல்ல. நல்ல அடுமனை ஒன்றை அடைந்தால் அங்கிருந்து தெய்வங்களால் மட்டுமே எங்களை கிளப்ப முடியும். அங்கு மச்சர் நாட்டில் அடுமனைப் பணியாளர்கள் தேவைக்குமேல் மிகுந்துவிட்டனர். வாய் வளரும் குழந்தைகளுடன் அங்கு வாழ முடியாததனால்தான் கிளம்பினோம். அது தோற்ற நாடு. இது வென்ற நாடு. இங்கு நாள்தோறும் மனிதர்கள் பெருகுகிறார்கள். கருவூலம் பெருகுகிறது. அடுமனை கொழிக்கிறது” என்றார்.

சூரியன் கோட்டைச்சுவருக்கு அப்பால் முழுதடங்குவதை தொலைவிலேயே அவர்கள் கண்டனர். “அவ்வட்டம் விளிம்புக்கு கீழே இறங்குவதுதான் கணக்கு. அந்தி முரசொலிக்கத் தொடங்கிவிட்டால் காவல் யானைகள் சகடங்களை இழுக்கத் தொடங்கிவிடும்” என்று விகிர்தர் சொன்னார். “இங்குள்ள அடுமனையை நோக்கி உறுதி செய்வதற்காக சென்றமுறை நான் வந்தேன். அது ஆடி மாதம். தொலைவிலேயே அந்திக்கதிர் இறங்குவதை கண்டேன். முழுஇரவும் மெல்லிய மழையில் நனைந்தபடி மரவுரியை தலையிலிட்டு உடல் குறுக்கி கோட்டை முகமுற்றத்தில் அமர்ந்திருந்தேன். மறுநாள் காலையில் காய்ச்சலில் என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. கண்களிலும் வாயிலும் அனல் எழுந்தது. தள்ளாடி நடந்து கோட்டையை அடைந்தால் நோயுடன் உள்ளே செல்ல ஒப்புதல் இல்லை என்றார் காவலர்.”

“கண்ணீருடன் கால்களைத் தொட்டு சென்னிசூடி நான் எளிய அடுமனையாளன் என்று மன்றாடினேன். நோய்கொண்டு நகருக்குள் நுழைய முடியாது என்றனர். நேற்றிரவு இந்த மழையில் அமர்ந்திருந்த நோயென்று சொல்லியும் கேட்கவில்லை. மீண்டும் வந்து முற்றத்திலேயே அமர்ந்திருந்தேன். கோட்டைக்குமேல் கதிரெழுந்தபோது வெயில் என்னுடலை உயிர்கொள்ளச் செய்தது. அருகநெறியைச் சேர்ந்த பெருவணிகர் ஒருவர் கோட்டை முன் அமர்ந்திருப்பவர்களுக்காக ஏழு இடங்களில் அன்னநிலைகளை அமர்த்தியிருந்தார். அங்கு சென்று இன்கூழ் வாங்கி அருந்தினேன். அதன் பின்னரே உடல் எழமுடிந்தது.”

“மீண்டும் சென்று கோட்டை வாயிலை அடைந்தபோது பெருந்திரளாக மக்கள் உள்ளே சென்றுகொண்டிருந்தார்கள். எவரையும் கூர்ந்து நோக்க காவலர்களுக்கு பொழுதிடை அமையவில்லை. அவ்வெள்ளத்தால் அள்ளி உள்ளே கொண்டுசெல்லப்பட்டேன்” என்று விகிர்தர் சொன்னார். “இந்நகரம் பெரிது. சிறியவர் எவரையும் பிறர் கூர்ந்து நோக்குவதில்லை. எவரும் நமக்கு இரக்கம் காட்டுவதில்லை. ஆனால் எவரும் நம்மை தேடிவந்து அழிப்பதும் இல்லை. பிறர் அறியாமல் வாழ ஓர் இடம் கிடைத்தால் அதுவே நமது இன்னுலகம்.” சுந்தரர் உரக்க நகைத்தபடி “ஆம், நாமெல்லாம் அடுமனைப் பாத்திரங்களின் மடிப்புக்குள் பற்றியிருக்கும் ஈரப்பாசிபோல. எவரும் பார்க்காதவரை மட்டுமே தழைத்து வளரமுடியும்” என்றார்.

கோட்டைக்குப்பின் சூரியன் இறங்கி மறைந்ததும் அவர்கள் அனைவருமே விரைவழிந்து நின்றுவிட்டனர். “இனி விரைந்து பயனில்லை. காளை சற்று ஓய்வெடுக்கட்டும்” என்றார் மூத்த சூதரான தப்தர். வாயில் இருந்து நுரைக்குழாய் இறங்கி மண்ணில் துளியாகிச் சொட்ட, மூச்சு சீறியபடி தலையை நன்கு தாழ்த்தி, கால்களை அகற்றி வைத்து நின்றது ஒற்றைக்காளை. வண்டிக்குள் இருந்த சிம்ஹி தலையை நீட்டி “காளையை பார்க்கையில் உளம்தாங்க முடியவில்லை. நாங்கள் நடந்தே வருகிறோம். இன்னும் சற்று தொலைவுதானே” என்றாள். “வேண்டியதில்லை. சற்று ஓய்வெடுத்தபின் அது மீண்டும் கிளம்பும்” என்றார் விகிர்தர்.

“இனிமேலும் இவ்வெளிய உயிர்மேல் ஊர எங்களால் இயலாது” என்று சொல்லி அவள் கையூன்றி மெல்ல இறங்கினாள். “அது என்னை இழுத்துச் செல்லும்போது வயிற்றுக்குள் என் குழவியை நான் இழுத்துச் செல்வதுபோல தோன்றியது. சுமை இழுப்பதென்றால் என்னவென்று அதைப்போலவே நானும் அறிவேன்” என்றாள். “நாம் எளிய அடுமனையாளர்கள், அயல்நாட்டவரல்ல என்று சொல்லிப்பார்த்தால் என்ன?” என்று அஸ்வகன் கேட்டான். “நம்மை பார்த்தாலே தெரியும்” என்றார் குடித்தலைவர். “நம்மிடம் எந்த அயல்நாட்டு அடையாளங்களும் இல்லை” என்றான் அவன். “எந்த நாட்டு அடையாளமும் நம்மிடமில்லை. செல்லும் ஊரே நமது ஊர்” என்று சுந்தரர் சொன்னார். “ஆனால் நம்மைப் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஓவ்வாத ஊரைச் சேர்ந்தவர்களாகவே நம்மை அடையாளப்படுத்துவார்கள். ஏனெனில் நாம் அவர்களுக்கு எதுவும் அளிக்க முடியாத ஏழைகள்.”

“சென்று பார்ப்போம். அங்கிருக்கும் காவலர்களில் எளியோரைப்பார்த்து உளமழியும் ஒருவராவது இருக்கலாம். கருவுற்ற பெண்களையும் குழவிகளையும் முன்னிறுத்துவோம். வெளியே எங்களுக்கு தங்குமிடமில்லை. நகர்நுழைந்தால் அடுமனையை அடைந்து அதன் விளிம்புகளில் எங்காவது அமர்ந்து மழையை தவிர்ப்போம். நாளை எங்கள் கைகளால் அவர்களுக்கு உணவளித்து கடன் தீர்ப்போமென சொல்வோம்” என்றான் அஸ்வகன். “வீண் முயற்சி அது. நமக்காக எந்த நெறிகளும் தடம் பிறழ்வதில்லை” என்றார் விகிர்தர். சுந்தரர் நகைத்து “அது இளமையின் விழைவு. சில இடங்களில் இழிவுபடுத்தப்பட்டு ஓரிரு இடங்களில் தாக்கப்படும்போது எங்கிருக்கிறோம் எந்த அளவு இருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். அப்படி புரிந்துகொள்ள வாய்ப்பு கொடுப்போமே” என்றார்.

அவர்கள் மீண்டும் கிளம்பி கோட்டைமுகப்பை அடைந்தபோது காவல்மாடங்கள் அனைத்திலும் மீன்நெய்ப்பந்தங்கள் தழலாடத் தொடங்கிவிட்டிருந்தன. அதன் அருகே நின்றவர்களின் கையிலிருந்த படைக்கலங்கள் தழல்துளிகளை சூடியிருந்தன. எண்ணியது போலவே கோட்டைமுகப்பில் அனைத்து விடுதிகளும் பெருவணிகர்களாலும் அவர்களின் சுமைதூக்கிகளாலும் காவலர்களாலும் நிறைந்திருந்தன. பொதி சுமந்த அத்திரிகளும் கழுதைகளும் வண்டிக்காளைகளும் கட்டுத்தறிகளில் கட்டப்பட்டு கழுத்து மணி ஓசையுடன் கால்மாற்றி நின்று மூச்சு சீறி உலர்புல் மென்றுகொண்டிருந்தன. புரவிகளுக்குமேல் தேன்மெழுகு பூசப்பட்ட ஈச்சம்பாய்களை வயிற்றில் சரடு இழுத்துக் கட்டியிருந்தனர்.

சூதர்குழுத் தலைவர் விகிர்தர் திரௌபதியிடம் “மழை வருமென்று நன்கு அறிந்திருக்கிறார்கள். புரவிகள் நனையாமலிருக்கும்” என்றார். திரௌபதி அதை பார்த்தபின் “இப்படி ஒன்றை இதற்குமுன் பார்த்ததில்லை. வேண்டுமென்றால் இரவில் சென்று ஒன்றிரண்டை எடுத்துவந்து குழந்தைகளையும் பெண்களையும் மட்டும் மழையிலிருந்து காத்துக்கொள்ளலாம்” என்றாள். விகிர்தர் “புரவிகளை நெருங்கவே நம்மால் முடியாது. படைக்கலத்துடன் ஒரு காவல்வீரனாவது விழித்திருப்பான். வேல் நுனியால் முதுகு கிழிபட்டு குருதி வழிந்து இங்கு கிடப்போம்” என்றார். திரௌபதி “எங்கும் எதிலும் அச்சத்தையே காண்கிறீர்கள்” என்றாள். அவர் கோணலான புன்னகையுடன் “என் தந்தை அஞ்சுவதெப்படி என்று எனக்கு கற்பித்தார். அஞ்சத்தெரிந்ததனால்தான் இதுநாள் வரை வாழ்ந்தேன். அச்சத்தை கற்பித்ததனால்தான் என் குடியை இன்று வரை காத்தேன்” என்றார்.

அவர்கள் முற்றத்தில் நின்றிருக்க இளைஞர்கள் இரு திசைக்கும் சென்றபின் திரும்பி வந்து “எங்கும் இடமில்லை, மூத்தவரே. குழந்தைகளும் கருவுற்ற பெண்டிரும் இருக்கிறார்கள் என்றேன். எவரும் எங்கள் சொற்களை செவிகொள்ளவில்லை. ஷத்ரியர் விடுதிகளில் காவலர் குதிரைச்சவுக்குடன் எழுந்து தாக்க வருகிறார்கள். சூதர்கொட்டகைகளில் ஒருவர் இங்கு திறந்தவெளியில் தங்கியிருப்பவர் அனைவருமே உங்களைப் போன்றவர்கள்தான். ஒருநாள் மழை தாங்கமுடியவில்லை என்றால் நீங்கள் எதைத்தான் தாங்குவீர்கள் என்றார்” என்றான் அஸ்வகன்.

சம்பவன் “ஒரு ஷத்ரியர் பதினைந்து நாட்கள் பெருமழையில் திறந்த வெளியில் தங்கி திருவிடத்தில் தாங்கள் போரிட்டதாக சொன்னார். நாம் அத்தகைய இடர்களையோ இறப்பையோ எதிர்கொள்ளவில்லை அல்லவா?” என்றான். சுந்தரர் “என்றோ ஒருநாள் எதிர்கொள்ளப்போகும் இறப்பின் பொருட்டு முந்தைய வாழ்நாள் முழுக்க பிறரது குருதியை உண்டு வாழ தங்களுக்கு உரிமையுண்டென்று நம்புகிறவர்கள் ஷத்ரியர்” என்றார்.

“நாம் சென்று காவலரிடம் கேட்டுப் பார்ப்போம்” என்றான் அஸ்வகன். “காவலனிடமா? நான் வரப்போவதில்லை. வேண்டிய இழிசொற்களையும் சவுக்கடிகளையும் வேல்முனைக்கீறல்களையும் இளமையிலேயே பெற்றுவிட்டேன்” என்றார் விகிர்தர். “நாங்கள் சென்று கேட்கிறோம். நீங்கள் நோயுற்றவர்போல் வண்டிக்குப்பின் நின்றால் போதும்” என்றான் சம்பவன். மிருகி “வேண்டாம். காவலர்கள் எந்த உளநிலையிலிருப்பார்கள் என்று நமக்குத் தெரியாது” என்றாள். “தாழ்வில்லை. ஒருமுறை கேட்டுப் பார்ப்போம்” என்று சொல்லி சம்பவனும் அஸ்வகனும் வண்டியோட்டியிடம் “வருக!” என்றனர்.

அவர்கள் கோட்டைமுகப்பை நோக்கி செல்வதை ஆங்காங்கே வெட்டவெளியில் வண்டிகளை அவிழ்த்துவிட்டு பொதிகளை இறக்கி அமர்ந்தும் படுத்தும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தவர்கள் விந்தையாக நோக்கினார்கள். கோட்டையின் முகப்பில் பெருவாயில் மூடியிருக்க திட்டிவாயிலினூடாக காவல்புரவிகள் மட்டும் உள்ளே சென்றன. புரவிவீரர்கள் நன்றாகக் குனிந்து எறும்பு புற்றுக்குள் நுழைவதுபோல் அதை கடந்தனர். அவர்களின் வண்டி காவல்முகப்பில் வந்து நிற்க கோட்டத்திலிருந்து கையில் வேலுடன் வெளியே வந்த காவலன் சினத்தால் சுளித்த முகத்துடன் “யாரது? ஏய் அறிவிலி, கோட்டை மூடியிருப்பது உன் விழிகளுக்கு தெரியவில்லையா? உன் வண்டியுடன் திட்டிவாயிலுக்குள் நுழையப்போகிறாயா, கீழ்பிறப்பே?” என்றான்.

“நாங்கள் அயலூர் சூதர். அடுமனையாளர்” என்றபடி சம்பவன் கைகூப்பி முன்னால் சென்றான். “இங்கு எங்கள் குழந்தைகளுடன் திறந்தவெளியில் தங்கமுடியாது. மழை பெய்யுமென்றால் அவர்கள் நனைந்துவிடுவார்கள். நீர்காக்கும் பாய்கூட எங்களிடமில்லை” என்றான் அஸ்வகன். “எவரையும் அந்திக்குப்பின் உள்ளே விடமுடியாது” என்றபின் காவலன் திரும்பியபோது இயல்பாக விழி சென்றுதொட முகம் உயிர்கொண்டு திரௌபதியை நோக்கி “அவர்கள் யார்?” என்றான். அஸ்வகன் திரும்பி அவளை பார்த்தபின் “அவர்தான் எங்கள் குழுத்தலைவி. அரசஅழைப்பின் பேரில் அரண்மனைக்குச் செல்கிறார். எங்களையும் அழைத்துச்செல்கிறார்” என்றான்.

“அவர்கள் பெயரென்ன?” என்று காவலன் கேட்டான். அஸ்வகன் தயங்காமல் “கிருஷ்ணை…” என்றான். திரௌபதி அவர்களின் உரையாடலை மிக மழுங்கிய சொற்களாகவே கேட்டாள். விழிகூர்ந்து அவர்களின் உதட்டசைவிலிருந்து அவர்கள் பேச்சை ஊகித்தறிய முயன்றாள். அதை உணர்ந்த அஸ்வகன் உதடுகளை சரியாக அசைக்காமலேயே பேசினான். “அவர்கள் வங்க அரசகுடியை சேர்ந்தவர்கள். விராட அரசகுடியின் தனியழைப்பை ஏற்று வந்திருக்கிறார்கள். நாங்கள் நேராக அரண்மனைக்குத்தான் செல்கிறோம். கீசகரை நேரில் சந்திக்கும்படி ஆணை” என்றான்.

காவலன் குழப்பத்துடன் அவளை நோக்கிவிட்டு காவலர்தலைவன் இருந்த சிற்றறையை நோக்கினான். பின்னர் “அவர்களிடம் அரச இலச்சினை ஏதாவது இருக்கிறதா?” என்று உள்ளிருந்து வந்த பிறிதொரு காவலன் கேட்டான். “இல்லை. அவர்களைப் பார்த்தாலே தெரிகிறதல்லவா? சூதர் வடிவிலேயே எங்களுடன் நடந்து வந்திருக்கிறார். பிறர் அறியாமல் நகருக்குள் நுழைந்து அரசரைக் காணும்படி அவருக்கு ஆணை. இதை நான் சொல்வதுகூட அவர்களுக்குத் தெரியாமல்தான்” என்றான் அஸ்வகன்.

முதுகாவலன் ஒருவன் வெளியே வந்து திரௌபதியைப் பார்த்தபின் “கணவனை இழந்தவரா?” என்றான். “கூந்தல் அவிழ்த்திட்டிருக்கிறார்களே?” “ஆம், உடன்கட்டை ஏற மறுத்து நிலம்நீங்கியவர்” என்றான் அஸ்வகன். உள்ளிருந்து ஓர் இளம்காவலன் “கீசகர் அவருக்கு உகந்த பெண்ணை கண்டுவிட்டார்போல. அவர் தோள்களை பாருங்கள். களம் நின்று மற்போரிடவும் அவரால் இயலும்” என்றான். முதுகாவலன் அவனை நோக்கி சீற்றத்துடன் “எவராயினும் அரசகுடியினரைப்பற்றி சொல்லெடுக்கையில் ஒவ்வொரு சொல்லையும் உன் சித்தம் மும்முறை தொட்டுப்பார்த்திருக்க வேண்டும். ஒரு சொல்லின் பொருட்டு கழுவேறியவர்கள் பல்லாயிரம் பேர் இந்நகரில் அலைகிறார்கள்” என்றான். அவன் திகைத்து “நான் நமக்குள் வேடிக்கையாக சொன்னேன்” என்றான்.

அஸ்வகன் சினத்துடன் “ஆம். இச்சொல் எங்கள் தலைவியை இழிவுபடுத்துவது. இதை அவர்களிடம் சொல்லாமலிருப்பது எனக்கு கடமைமீறல்” என்றான். முதுகாவலன் கைநீட்டி “பொறுங்கள், சூதரே! இதை அவர்களிடம் ஏன் சொல்லவேண்டும்? புரிந்துகொள்ளுங்கள், இந்தக் காவல்பணி என்பது திரும்பத் திரும்ப ஒன்றையே செய்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது. நாவால் துழைந்துதான் இச்சலிப்பை போக்க வேண்டியிருக்கிறது. பொறுத்தருள்க!” என்றான். “அரசகுடியினரைப்பற்றி இழிசொல்லை எப்படி அவர் சொல்லலாம்? மேலும் அச்சொல் கீசகர் மீதும் இழிவு சுமத்தியது” என்றான் அஸ்வகன்.

“பொறுத்தருள்க! இதை உங்கள் தலைவி அறியவேண்டியதில்லை. இங்கு எதுவும் நிகழவில்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உள்ளே செல்லலாம். கோட்டைவாயிலை சற்று திறந்து வண்டியை உள்ளே விடச்சொல்கிறேன்” என்றபின் முதுகாவலன் எழுந்து உள்ளே சென்று சிறு கயிறொன்றை இழுத்தான். அப்பால் எங்கோ மணியோசை ஒலிக்க சகடங்கள் முனகி எழுந்து பின் அலற கோட்டைவாயில் மெல்ல விலகி திறந்துத் வழிவிட்டது.

அஸ்வகன் ஓடிச்சென்று விகிர்தரிடம் “உள்ளே செல்ல ஒப்புதல் அளித்துவிட்டார்கள். கதவு அகல்கிறது” என்றான். “மெய்யாகவா? இதில் சூழ்ச்சி ஏதும் இல்லையே? இதன் பொருட்டு உள்ளே சென்று நாம் தலைகொடுக்க வேண்டியதில்லை அல்லவா?” என்றார் விகிர்தர். “இல்லை, வாருங்கள் உள்ளே செல்வோம்” என்று அஸ்வகன் சொன்னான்.

திறந்த வாயிலினூடாக அவர்கள் உள்ளே செல்லும்போது திரௌபதி திரும்பி காவல்மாடத்தை பார்த்தாள். காவலர்கள் அனைவரும் தலைவணங்கினார்கள். அவள் திரும்பி அஸ்வகனை பார்த்தாள். தாழ்ந்த குரலில் “அவர்களிடம் என்ன சொன்னீர்?” என்றாள். “நான் எதுவும் சொல்லவில்லை” என்றான். “சொல்க! என்ன சொன்னீர்?” என்றாள். அவன் தயங்கி “அவர்கள்தான் கேட்டார்கள், தாங்கள் அரசகுடியா என்று. ஆம் என்றேன்” என்றான். திரௌபதி “அரசகுடியினள் என்றா?” என்றாள். “ஆம். அவர்கள் கேட்டபோது நானும் திரும்பிப்பார்த்தேன். அந்தத் தொலைவில் நிழலுருவில் பேரரசுகளை ஆளும் சக்ரவர்த்தினிகளுக்குரிய நிமிர்வுடன் தோற்றமளித்தீர்கள். நீங்கள் அரசகுடியேதான். அதை எங்கும் உங்களால் மறைக்க முடியாது” என்றான் அஸ்வகன். “வெறுமனே நடக்கையிலும் வேழமருப்பில் அமர்ந்த அசைவுகள் உங்களில் உள்ளன.”

சம்பவன் “நீங்கள் யாரென்று நான் கேட்கவில்லை. அந்த இடத்தில் நாங்கள் இல்லை” என்றான். திரௌபதி பெருமூச்சுவிட்டாள். “கீசகரைப் பார்க்க நீங்கள் செல்வதாக சொன்னேன்” என்றான் அஸ்வகன். அவர்களுக்குப் பின்னால் கோட்டைவாயில் திரும்ப மூடிக்கொண்டது. “அடுமனைக்கு செல்லும் வழி உசாவுக!” என்று சுந்தரர் சொன்னார். அவர்கள் உள்முற்றத்திலிருந்து பிரிந்த அரசத் தெருவை விலக்கி அங்காடித் தெருக்களில் ஒன்றில் நுழைந்தார்கள்.

flowerவிராடபுரியின் தெருக்களில் ஒளியொடு ஒளி சென்று தொடும் தொலைவில் நிரையாக கல் விளக்குத்தூண்கள் நடப்பட்டு அவற்றின்மேல் பன்னிரு சுடர்கள் எரியும் மீன்நெய் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. இருபுறமும் நிரைவகுத்த மாளிகைகளின் முகப்புகளிலெல்லாம் வேங்கைமலர்க்கொத்துபோல தொகைச்சுடர் நெய்விளக்குகள் எரிய அவற்றுக்குப் பின்னால் ஒளியை குவித்துப்பரப்பும் சிப்பி வளைவுகளும் பளிங்கு வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. பகல் முழுக்க கடும் வெயில் எரிந்தமையால் இல்லங்களுக்குள் முடங்கியிருந்த மக்கள் வெயில் தாழ்ந்த பின்னர் வெளியே இறங்கி அங்காடித் தெருக்களிலும் ஆலய வீதிகளிலும் நிறைந்து தோளொடு தோள் முட்டி உவகைக் குரல்களுடன் ததும்பிக்கொண்டிருந்தனர்.

வண்டியை செலுத்திய சூதர் இடக்கையில் மணி எடுத்து குலுக்கி ஓசையெழுப்பி சிறிது சிறிதாக வழி கண்டுபிடித்து கூலவாணிகத் தெருவிலிருந்து நறுஞ்சுண்ணத் தெருவில் நுழைந்து மையச்சாலையில் ஏறினார். வண்டி செல்லும் இடைவெளியில் அதைத் தொடர்ந்து சூதர் குழு சென்றது. அந்தி மயங்கியபின் நகருக்குள் வண்டிகள் நுழைவதில்லை என்பதால் அதை வியப்புடன் திரும்பிப்பார்த்த மக்கள் அனைவருமே திரௌபதியை திகைப்புடன் நோக்குவதையும் ஒருவரோடொருவர் அவள் எவளென்று பேசிக்கொள்வதையும் அஸ்வகன் கண்டான். பின்னர் அவர்கள் அனைவருமே அவளையன்றி வேறெதையும் நோக்காதவர்களானார்கள்.

அந்நோக்குகளால் எச்சரிக்கையுற்ற அவள் தன் நீண்ட குழலை உடலை சுற்றிக்கட்டிய ஒற்றையாடையால் மறைத்து முகத்தையும் பாதி மூடிக்கொண்டு தலை குனிந்து நடந்தாள். ஆயினும் அவள் உயரமும் தோள் விரிவும் அவளை தனித்துக் காட்டின. விளக்குத்தூண்களை கடந்து செல்கையில் சுடரொளியில் எழுந்து அருகிலிருந்த சுவர்களில் விழுந்த அவள் நிழலுருவம் பேருருக்கொண்ட கொற்றவைச் சிலையென தோற்றமளித்தது.

அவளை திரும்பித் திரும்பி நோக்கிய சம்பவனிடம் விகிர்தர் “நகர்மக்கள் அனைவரும் அவளையேதான் நோக்குகிறார்கள். நீயும் நோக்கி காலிடற வேண்டியதில்லை” என்றார். “பொறுத்தருள்க!” என்றபடி அவன் முன்னால் சென்றான். வழிகேட்டு சென்ற அஸ்வகன் திரும்பி வந்து “வலப்பக்கமாக செல்லும் சிறிய பாதை பொதுமக்களுக்கான அடுமனைகளை அடைகிறது. நாம் செல்ல வேண்டியது அங்குதான்” என்றான்.

திரௌபதி தாழ்ந்த குரலில் “நான் விடைகொள்கிறேன்” என்றாள். விகிர்தர் “எங்கு?” என்றார். “அரண்மனைக்கு. வேறெங்கும் நான் வாழவியலாது” என்றாள். விகிர்தர் ஒருகணம் நோக்கிவிட்டு “ஆம்” என்றார். அஸ்வகனிடம் “நீயும் உடன் செல்க!” என்றார். “வேண்டியதில்லை” என்றாள் திரௌபதி. “தங்களை தனியாக அனுப்ப முடியாது. நீங்கள் சென்று அரண்மனையை அடைந்தபின் அவன் திரும்பி வந்து என்னிடம் செய்தி சொல்லவேண்டும்” என்றார் விகிர்தர். அவள் அவரை பார்க்காமலே “அவ்வண்ணமே” என்றபின் அஸ்வகனிடம் “செல்வோம்” என்றாள்.

அஸ்வகன் அவள் அருகே வந்து “நான் தங்களுக்காக எந்தப் பணியும் ஆற்ற சித்தமாக இருக்கிறேன்” என்றான். “வேண்டியதில்லை. என் உடன் வந்தாலே போதும்” என்றாள் திரௌபதி. “உயிர் கொடுப்பதென்றாலும் கூட” என்றான் அஸ்வகன். திரௌபதி புன்னகைத்தாள். அரண்மனையை அணுக அணுக மக்கள் திரள் குறையத்தொடங்கியது. படைத்தலைவர்களின் இல்லங்களும் அமைச்சர்களின் இல்லங்களும் இரு மருங்கிலும் தழலாடும் பெரிய விளக்குத்தூண்கள் சூழப்பரப்பிய செவ்வொளியில் செம்பட்டுத் திரைச்சீலையில் வரைந்த ஓவியங்கள்போல மெல்ல நெளிந்துகொண்டிருந்தன. குருதி சிந்தியதுபோல் ஒளி விழுந்துகிடந்த பாதையில் தேர்ச்சகடங்களும் குளம்புகளும் சென்ற தடங்கள் தசை வடுக்கள்போல் பதிந்திருந்தன.

அவர்களை நோக்கி வந்த காவலன் ஒருவன் “யார் நீங்கள்? எங்கு செல்கிறீர்கள்?” என்றான். திரௌபதி அவனிடம் “அரண்மனைக்கு வழி இதுதானே?” என்றாள். அவன் அவள் கண்களை பார்த்தபின் தலைவணங்கி “அரச ஆணை உள்ளதா?” என்றான். “ஆம்” என்றாள் அவள். “அவ்வழி” என்று அவன் பணிந்து கைகாட்டினான். மாளிகை உப்பரிகையில் இருந்து எட்டிப்பார்த்த இருவர் அவளை கைசுட்டி ஏதோ கேட்க ஓர் ஏவல்பெண்டு அருகே வந்து “தாங்கள் யாரென்று அறியலாமா?” என்றாள். திரௌபதி “பேரரசியைப் பார்க்க சென்றுகொண்டிருக்கிறேன்” என்றாள். பிறிதொருத்தி மேலும் அருகே வந்து “அரசி இப்போது கொற்றவை ஆலயத்தின் பூசனை முடித்து அரண்மனைக்கு திரும்பியிருக்கிறார்கள். அரண்மனைக்குச் சென்று அவர்களை பார்க்கவேண்டும் என்றால் இவளைத் தொடர்ந்து செல்க” என்றாள்.

திரௌபதி அச்சேடியைத் தொடர்ந்து நடந்தபோது இருபுறமும் இருந்த அனைத்து இல்லங்களிலும் உப்பரிகைகளிலும் திண்ணைகளிலும் ஆண்களும் பெண்களும் வந்து குழுமி அவளை பார்த்தனர். அஸ்வகன் அவள் அருகே வந்து தணிகுரலில் “தாங்கள் எங்கும் மறைந்துகொள்ள முடியாது. அனலை உமியால் மூடமுடியாது என்பது அடுமனைச்சூதர் சொல்” என்றான். அவள் புன்னகை புரிந்தாள். “உண்மையில் இந்த அழுக்கு ஒற்றையாடையே தங்களை அரசியென காட்டுகிறது” என்று அஸ்வகன் சொன்னான். திரௌபதி திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.

ஏழு அடுக்குகளாக எழுந்து நூற்றுக்கணக்கான சாளரங்களும் வாயில்களும் நெய்விளக்கொளியில் செவ்வந்தித் துண்டுகள் என இருள்வானில் தெரிந்த அரண்மனைத்தொகையின் முதற்கோட்டை வாயிலில் அவள் சென்று நின்றபோது காவலர் எழுந்துவந்து தலைவணங்கி தாழ்குரலில் அஸ்வகனிடம் உசாவினர். “அரசபணியின் பொருட்டு பேரரசியைப் பார்க்க செல்கிறார்கள்” என்று அவன் சொன்னான். பிறிதொரு வினாவும் இன்றி காவலர்தலைவர் ஒரு காவலனை அழைத்து அவளை பேரரசியிடம் அழைத்துச் செல்லும்படி கேளாச் சொற்களால் ஆணையிட்டார்.

அரண்மனை முற்றத்தில் அந்தணர்களின் மஞ்சல்களும், அரசகுடியினரின் வளைமூங்கில் பல்லக்குகளும், வணிகர்களின் தொங்குபல்லக்குகளும் ஒருபுறம் நின்றன. நடுவே அரசரின் வெள்ளிப்பல்லக்கு சுடரொளிகள் அணிந்து எரிவதுபோல நின்றது. புரவிகள் அவிழ்க்கப்பட்ட தேர்கள் மறுபுறம் நிரைகொண்டிருந்தன. கட்டுத்தறிகளில் வரிசையாகக் கட்டப்பட்ட புரவிகள் வாயில் கட்டப்பட்ட பைகளிலிருந்து கொள்ளு மென்றபடி தலைசிலுப்பி வால் சுழற்றிக்கொண்டிருந்தன. வால் நிழல்கள் தரையில் அலையடித்தன. அரண்மனைக்குள் ஏதோ ஆடல் நிகழ்கிறது என்பது அங்கிருந்து சிந்திவந்த சிற்றிசையிலிருந்து தெரிந்தது.

அரண்மனை முற்றத்தின் வலப்பக்கமாகச் சென்று கூரையிடப்பட்ட இடைநாழி ஒன்றில் நுழைந்து அவர்கள் நடந்தனர். எதிர்கொண்ட சேடிப்பெண்களும் காவலரும் திரௌபதியை நோக்கி வழிவிட்டு விழிதாழ்த்தி நின்றனர். அவள் தலைநிமிர்ந்து விழிதொடாமல் கடந்து சென்றாள். மகளிர் மாளிகையின் முற்றத்தை அடைந்ததும் காவலன் “அரசி மேலே இசைக்கூடத்தில் இருக்கிறார். விறலியரின் இசை நிகழ்கிறது. தாங்கள் எவரென்று தெரிவித்தால் தங்கள் வருகையை நான் அறிவிப்பேன்” என்றான். “வடக்கிலிருந்து சைரந்திரி ஒருத்தி வந்துள்ளேன் என்று சொல்லும்” என்றாள். அவன் ஒருகணம் தயங்கியபின் “அவ்வாறே” என்று சொல்லி உள்ளே நுழைந்தான்.

மகளிர் மாளிகையின் முற்றத்தில் மூன்று களிறுகள் நின்றிருந்தன. நடுவே வெண்படகுகள் போன்ற பெரிய தந்தங்களும் பூத்த கொன்றை மரமென துதிக்கையில் எழுந்து செவிகளில் பரவிய செம்மலர்த் தேமலும் கொண்ட பட்டத்து யானை, மணிகள் அசைவில் ஒலிக்க, இருளுக்குள் இருளசைவென உடல் உலைய நின்றிருந்தது. அதன் துதிக்கை எழுந்து வளைந்து திரௌபதியை மோப்பம் பிடித்து மூச்சு சீறி இருமுறை நெளிந்து மீண்டது. மீண்டும் நீட்டி சுருட்டிய துதிக்கையை தந்தங்களில் இழிந்திறங்க விட்டு வயிறுக்குள் பெருங்கலத்தை இழுத்ததுபோல் ஓர் ஓசையை எழுப்பியது. அது செவி நிலைத்ததும் உப்பரிகையில் இரு சேடியருடன் தோன்றிய கேகயத்து அரசி சுதேஷ்ணை குனிந்து அவளைப் பார்த்து “யாரது?” என்றாள்.

“வடக்கிலிருந்து வருகிறேன். கேகயத்து அரசி சுதேஷ்ணையை பார்க்க” என்றாள் திரௌபதி. தன் பெயரை அவள் நாத்தயங்காமல் சொன்னதைக் கேட்டு அரசி முகம் சுளித்து “எதன் பொருட்டு?” என்றாள். “நான் காவல்பெண்டாகவும் அவைத்தோழியாகவும் அணிசெய்பவளாகவும் பணியாற்றும் சைரந்திரி. கேகயத்தில் தங்களைப்பற்றி கேட்டேன். தங்களைப் பார்க்கும் பொருட்டு இங்கு வந்தேன்” என்றாள்.

சலிப்புடன் கைவீசி “இங்கு உன்னைப்போல் பலர் இருக்கிறார்கள்” என்றாள் சுதேஷ்ணை. திரௌபதி “அரசி, என்னைப்போன்ற பிறிதொருத்தியை நீங்கள் பார்க்கப்போவதில்லை. நான் அரசகுடிப் பிறந்தவள். ஐந்து கந்தர்வர்களை கணவர்களாகப் பெற்றவள். இப்புவியில் நான் ஆற்ற முடியாததென்று எதுவுமில்லை. கண்ணுக்குத் தெரியாத ஆற்றல்களாக என்னைச் சூழ்ந்து அவர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

“என்ன சொல்கிறாய்?” என்றாள் சுதேஷ்ணை. “நோக்குக!” என்றபின் அவள் திரும்பி பட்டத்துயானையை நோக்கி கை நீட்டினாள். அது துதிக்கையைச் சுழற்றி தலைமேல் வைத்து உரக்க சின்னம் விளித்தது. பின்பு கால்களை மடித்து தரையில் படுத்தது. பிற யானைகளையும் நோக்கி அவள் கைநீட்ட அவையும் அவ்வாறே தரையில் படுத்தன. சுதேஷ்ணை திகைப்புடன் “மதங்க நூல் அறிவாயா?” என்றாள். “நான் அறியாத நூலென ஏதுமில்லை” என்றாள் திரௌபதி. பட்டத்துயானையின் கால்மடிப்பில் கால்வைத்து ஏறி அதன் மத்தகத்தில் அமர்ந்தாள். அது அவளுடன் எழ அவள் அதன் மருப்புமுழையில் வலக்கால் எடுத்து வைத்து நின்றாள்.

திரௌபதி விழிகாட்ட அஸ்வகன் யானையின் கால்களை கட்டியிருந்த சங்கிலியை அவிழ்த்தான். அது உப்பரிகை நோக்கி சென்றது. சுதேஷ்ணைக்கு நிகராக தலை எழுந்து தோன்ற சரிந்த ஒற்றைஆடை முனையின் உள்ளிருந்து குழல்கற்றைகள் பொழிந்து புறம் நிறைக்க நின்றாள். சுதேஷ்ணை தன் இருபக்கமும் நின்ற காவல்பெண்டுகளை நோக்கி ஏதோ சொல்ல வாயசைத்தபின் அடைத்த தொண்டையை அசைத்து ஒலி கூட்டி “உள்ளே வருக, தேவி!” என்றாள்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 35

34. பெருங்கைவேழம்

flowerநிஷத நாட்டு எல்லைக்குள் நுழையும் பாதையின் தொடக்கத்திலேயே திரௌபதி தருமனிடமிருந்து சிறுதலையசைவால் விடைபெற்றுக்கொண்டாள். “சென்று வருகிறேன்” என்று சொல்ல அவள் நெஞ்செழுந்தும்கூட உதடுகளில் நிகழவில்லை. தருமன் திரும்ப தலையசைத்தார். அவள் சிறு பாதையில் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றென விழுந்த தன் காலடிகளை நோக்கியபடி நடந்தாள். ஒருபோதும் அவ்வாறு தன் காலடிகளை தான் நோக்கியதில்லை என்பதை இரு நாட்களுக்கு முன்னரே அறிந்தாள். கிளம்பிச்செல்லவிருந்த பீமனை “நீங்கள் அடுமனையிலும் புழக்கடைகளிலும் புழங்கியிருக்கிறீர்கள், இளையவரே. நான் எதையும் நோக்கியதில்லை. ஏவற்பெண்டுகளின் இயல்புகளில் முதன்மையானதென்ன?” என்றாள். “தலைகுனிந்து நிலம் நோக்கி நடப்பது” என்று பீமன் சொன்னான்.

அக்கணமே அவள் தானறிந்த ஏவற்பெண்டுகளின் நடைகள் அனைத்தையும் சித்தத்திற்குள் ஒழுங்குபடுத்தி நோக்கிவிட்டாள். “ஆம், அவர்கள் அனைவரும் அவ்வாறுதான் நடக்கிறார்கள்” என்று சொன்னாள். பின்னர் “ஏன்?” என்று பீமனிடம் கேட்டாள். பீமன் நகைத்து “அவர்கள் செல்லும் வழியெல்லாம் படுகுழிகள் காத்திருக்கின்றனவோ என்னவோ?” என்றான். “விளையாடாதீர்கள்” என்றாள். “விழி தணிவதை பணிவென்று மானுடர் கொள்கிறார்கள். விழியோடு விழி நோக்குவது நிகரென்று அறிவித்தல். நிகரென்று கூறுதல் எப்போதுமே அறைகூவல். குரங்குகளும் நாய்களும்கூட அவ்வாறே கொள்கின்றன” என்று பீமன் சொன்னான். “ஏவற்பெண்டு இவ்வுலகில் உள்ள அனைவரிடமும் விழிதணிந்தவள். ஏவலர் ஏவற்பெண்டுகள் முன் விழிதூக்குபவர்.”

“விழிதணித்துச் சென்றால் எங்கிருக்கிறோம் என்றும் எப்படி செல்கிறோம் என்றும் எப்படி தெரியும்?” என்று திரௌபதி கேட்டாள். பீமன் “ஏவற்பெண்டு அதை அறியவேண்டியதில்லை. அவள் இருக்குமிடம் பிறரால் அளிக்கப்படுகிறது. செல்லும் வழி முன்னரே வகுக்கப்பட்டிருக்கிறது. பின் தொடர்வதற்கு விழி தேவையில்லை. செவி ஒன்றே போதும்” என்றான். அவள் பெருமூச்சுடன் “நான் அதை பயில வேண்டும்” என்றாள். “பயில்வதல்ல, அதில் அமையவேண்டும். உனது தோள்களும் விழியும் ஒடுங்க வேண்டும்.” அவள் நிமிர்ந்து அவன் விழிகளை சிலகணங்கள் நோக்கிவிட்டு “என்னால் அது இயலும் என்று எண்ணுகிறீர்களா?” என்றாள். அவன் “உண்மையை சொல்வதென்றால் ஒருகணமும் உன்னால் அது இயலாதென்றே தோன்றுகிறது” என்றான்.

“சைரந்திரியாக நான் எப்படி அவ்வரண்மனையில் இருப்பேன்? என்னால் எண்ணவே கூடவில்லை” என்று விழிதிருப்பி அப்பால் இருந்த காட்டை நோக்கியபடி திரௌபதி சொன்னாள். “ஆனால் அது நிகழ்ந்துவிடுமென்றும் தோன்றுகிறது” என்றான் பீமன். அவள் அவனை ஐயத்துடன் நோக்கி “எவ்வாறு?” என்றாள். “உன்னில் எழவிருக்கும் சைரந்திரி யார் என்று நமக்குத் தெரியாது. இச்சிக்கல்கள் அனைத்தையுமே புரிந்துகொண்டு தன்னை உருமாற்றி நேற்றிலாத ஒருத்தியென எழக்கூடும் அவள்” என்றான் பீமன். புரியாமல் “ஆனால்…” என்றபின் புரிந்துகொண்டு “அவ்வாறே நிகழ்க” என்று தலையசைத்து திரௌபதி பேசாமலிருந்தாள்.

மறுநாள் காலை விழித்தெழுகையில் குடிலில் பீமன் இருக்கவில்லை. அத்திடுக்கிடல் படபடப்பென உடலில் நெடுநேரம் நீடித்தது. பின்னர் எழுந்து சென்று நோக்கினாள். நீராடி வந்து ஈரக்குழலைத் தோளில் பரப்பி மடியில் கைவைத்து கிழக்கு நோக்கி ஊழ்கத்தில் அமர்ந்திருந்த தருமனின் அருகே சென்று “கிளம்பிவிட்டார்” என்றாள். “ஆம்” என்று அவர் சொன்னார். மீண்டும் மெழுகு உறைவதுபோல் அவரில் ஊழ்கம் நிகழ திரும்பி வந்து பீமன் படுத்திருந்த இடத்தை பார்த்தாள். பீமன் எடுத்துக்கொண்டிருந்த இடம் என்னவென்பது அப்போதுதான் தெரிந்தது. நிலையழிந்தவளாக குடிலுக்கு வெளியே வந்து சூழ்ந்திருந்த வறண்ட குறுங்காட்டில் சுற்றிவந்தாள்.

விடிந்த பின்னரே அவளால் காட்டுக்குள் செல்ல முடிந்தது. சுனைக்குச் சென்று நீராடி மீள்கையில் தன்னுள் இருந்துகொண்டே இருந்த அச்சத்தையும் பதற்றத்தையும் உணர்ந்தபோது ஓர் எண்ணம் எழுந்தது. பீமன் இல்லாதபோது தான் அரசி அல்ல. இக்காடுகளை, விலங்குகளை, மானுடரை, விண்ணோரை, ஒருகணமும் அஞ்சியதில்லை. அடுத்த பொழுது உணவென்ன என்று எண்ணியதில்லை. விரும்பிய ஒன்று கைப்படாதிருக்கக்கூடுமென்று ஐயம் கொண்டதே இல்லை. அங்கு இந்திரப்பிரஸ்தம் என்றும் அஸ்தினபுரியென்றும் காம்பில்யமென்றும் எழுந்துள்ள பெருநகரங்களல்ல. அறமுணர்ந்தவனோ வில்லெடுத்தவனோ இணைத்தம்பியரோ அல்ல. தந்தையோ உடன் பிறந்தவனோ அல்ல. பீமன் ஒருவனால் மட்டுமே பேரரசியென்று இப்புவியில் நிலை நிறுத்தப்பட்டேன்.

அவ்வெண்ணம் எழுந்ததும் கால் தளர சிறிய ஒரு பாறை மேல் அமர்ந்து உளம் உருகி கண்ணீர்விட்டாள். விழிநீர் வழிய தனித்து அமர்ந்திருக்க தன்னால் இயல்வதை விட்டு எழுந்தபோதுதான் உணர்ந்தாள். அது அவளுக்கு அறியா இனிமை ஒன்றை அளித்தது. ஒரு பெண்ணென முற்றுணர்வது ஆண் ஒருவனுக்காக தனித்திருந்து விழிநனைகையில்தான் போலும். அவன் ஒருவனுக்காக அன்றி தன் உள்ளம் நீர்மை கொள்ளப்போவதில்லை. அவள் தன் பொதிக்குள் இருந்த சிறு மரச்சிமிழில் இறுக மூடப்பட்டிருந்த கல்யாணசௌகந்திக மலரை நினைவுகூர்ந்தாள். புன்னகைத்துக்கொண்டபின் அதை எவரேனும் பார்க்கிறார்களா என்று சுற்றும் நோக்கினாள்.

NEERKOLAM_EPI_35_UPDATED

உலர்ந்த விழி நீர்த்தடத்தை கைகளால் துடைத்தபின் புன்னகை எஞ்சிய உதடுகளை இழுத்துக்குவித்து அவள் திரும்பிவந்தாள். சைரந்திரி என நடிப்பது இனி மிக எளிது. முடியுடன் குடியும் குலமும் அகன்று சென்றுவிட்டது. எஞ்சியிருப்பது கைகளும் கால்களும் மட்டுமே. இப்புவியில் வாழ மானுடர் கற்று அடைந்திருக்கும் திறன்கள் எதுவும் இல்லாதவை அவை. அன்று முழுக்க அத்தன்னுணர்விலேயே அலைந்தாள். இங்கிருந்து தருமனும் கிளம்பிச்சென்றுவிட்டால் இக்காட்டில் எதை உண்டு வாழ்வேன்? எப்படி என்னை காத்துக்கொள்வேன்? அவ்வெண்ணமே அவளை உருமாற்றியது. அவள் நடையும் நோக்கும் மாறிக்கொண்டிருந்தன.

அன்றிரவு துயில்கையில் வாழ்வில் முதல் முறையாக ஒவ்வொரு சிறு ஒலிக்கும் அஞ்சி உடல் விதிர்த்தாள். வெளியே தொலைவில் காட்டு யானைக்கூட்டம் ஒன்று கிளையொடியும் ஒலியுடன் கடந்து சென்றதைக்கேட்டு எழுந்தமர்ந்து நெஞ்சில் கைவைத்து சூழ்ந்திருந்த இருளை நோக்கி நெட்டுயிர்த்தாள். துயிலின் அடுக்குகளுக்குள் அணிப்பெண்டு என்றும் காவல்மகள் என்றும் அடுமனையாள் என்றும் ஆகி விழித்து புரண்டு படுத்தாள். புலர்ந்தபோது சைரந்திரி என உருமாறியிருப்பதை உணர்ந்தாள். அடிமேல் விழி வைத்து நடப்பதென்பது எம்முயற்சியுமின்றி அவளுக்கு வந்தது. அதுவே காப்பென்று தோன்றியது.

பெருஞ்சாலையை அடைந்தபோது தன் உடலைத் தொட்டு வருடிச்செல்லும் விழிகளை ஒவ்வொரு கணமும் உணர்ந்துகொண்டிருந்தாள். பிறந்த நாள்முதல் விழிகளை உணர்ந்திருந்தாள். ஆனால் அவையனைத்தும் அவள் காலடி நோக்கி தலை தாழ்த்தப்படும் வேல்முனைகளின் கூர்கொண்டவை. இவ்விழிகள் வில்லில் இறுகி குறிநோக்கும் வேடனின் அம்புமுனைகள். இவ்விழிகளை புறக்கணித்து செல்வதற்குரிய ஒரே வழி தன் உடலை ஒரு கவசமென்றாக்கி உள்ளே ஒடுங்கி ஒளிந்துகொள்வது. அந்நோக்குகளெதையும் நோக்காமல் விழிகளை நிலம் நோக்கி வைத்துக்கொள்வது.

எல்லைகளை குறுக்கும்தோறும் இருப்பு எளிதாகிறது. இந்தக் காலடிகளில் பட்டுச் செல்லும் மண், இவ்வுடல் அமரும் இடம், இவ்வுள்ளம் சென்று திரும்பும் எல்லை அனைத்தும் குறுகியவை. ஆணையிடப்படும் செயல்களன்றி பிறிதொரு உலகு இனி எனக்கில்லை. ஆழத்திலெங்கோ மெல்லிய புன்னகை ஒன்று எழுந்தது. உலகை வெல்ல எழுந்தவளென்று பிறந்த குழவியை கையிலேந்தி உள்ளங்காலில் விரிந்த ஆழியையும் சங்கையும் நோக்கி வருகுறி உரைத்த நிமித்திகர் இத்தருணத்தை எங்கேனும் உணர்ந்திருப்பாரா என்ன?

flowerநிஷதபுரிக்குச் சென்ற நெடுஞ்சாலையில் வண்டிகளின் சகட ஒலிப்பெருக்கை காட்டுக்கு அப்பால் அவள் கேட்டாள். அனைத்து காலடிப்பாதைகளும் சிறு சாலைகளாக மாறி அப்பெருஞ்சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தன. இளைப்பாறும் பொருட்டு சற்று அமர்ந்த சாலமரத்தடியில்  பறவைகள் எழுந்து சென்ற ஒலி கேட்டு நோக்கியபோது ஒற்றை மாட்டுவண்டி ஒன்றை தொடர்ந்து சென்ற சூதர் குழு ஒன்றை அவள் கண்டாள். வண்டிக்குள் கருவுற்ற பெண்கள் இருவரும் நான்கு குழந்தைகளும் இருந்தனர். ஓரிரு மூங்கில் பெட்டிகளும் இருந்தன. வண்டிக்கு இருபுறமும் குத்துக்கட்டைகளில் பொதிகளும் பைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன. வண்டியோட்டி நுகத்தில் அமராமல் கயிறுகளைப் பற்றியபடி வண்டியுடன் நடந்துகொண்டிருந்தான்.

வண்டிக்குப் பின்னால் அதன் பின்கட்டையைப் பற்றியபடி எட்டு சிறுவர்கள் ஒருவரோடொருவர் பேசி பூசலிட்டவாறு நடக்க தலையில் பொதிகளும் கலங்களும் பெட்டிகளுமாக சூதர் பெண்களும் அவர்களைச் சூழ்ந்து இளைஞர்களும் நடந்தனர். முதியவர்கள் தோளில் பைகளுடன், வெற்றிலை மென்ற வாயுடன் மூச்சிரைக்க நடந்தனர். அவர்கள் வளம்நோக்கி இடம்பெயர்பவர்கள் என்பது தெரிந்தது. வண்டியின் சகட ஒலியும் கலங்கள் முட்டும் ஒலியும் காளையின் கழுத்துமணியொலியும் இணைந்து ஒலித்தன.

அவர்கள் அருகே வந்தபோது திரௌபதி எழுந்து நின்றாள். கையில் தோளுக்குமேல் உயர்ந்த குடிக்கோல் ஏந்தியிருந்த அவர்களின் தலைவர் அவளை கூர்ந்து நோக்கியபின் “எக்குலம்?” என்றார். திரௌபதி “விறலி” என்றாள். “பெயர் சைரந்திரி. அரசியருக்கு அணுக்கப்பணிகள் செய்வேன்.” அவர் கூர்ந்து நோக்கிவிட்டு “நகருக்கா செல்கிறாய்?” என்றார். “ஆம்” என்றாள். “தனித்தா…?” என்று ஒரு பெண் கேட்டாள். “ஆம், நான் தனியள்” என்றாள் திரௌபதி. “வருக!” என்று இன்னொரு முதிய பெண் அவளை நோக்கி கைநீட்டினாள். அவள் சென்று உடன் இணைந்துகொண்டதும் “ஒரு நோக்கில் எவரும் சூதப்பெண் என உன்னை உரைத்துவிடமாட்டார்கள். அரசிக்குரிய நிமிர்வும் நோக்கும் கொண்டிருக்கிறாய்” என்றாள். “நான் பாஞ்சாலத்தை சேர்ந்தவள். எங்கள் அரசியும் நெடுந்தோற்றம் கொண்டவர்” என்றாள் திரௌபதி.

முதியவள் அவள் தோளில் கைவைத்து “எனக்கு உன்னைப்போல் மகள் ஒருத்தி இருந்தாள். முதற்பேற்றிலேயே மண்மறைந்தாள். வண்டிக்குள் துயில்வது அவள் மகன்தான்” என்றாள். திரௌபதி புன்னகைத்து வண்டிக்குள் எட்டிப்பார்த்து இரு வெண்ணிற பாதங்களைக்கண்டு “அந்தப் பாதங்கள்தானே?” என்றாள். “எப்படி தெரிந்துகொண்டாய்?” என்று அவள் மீண்டும் திரௌபதியின் கைகளைப் பற்றியபடி கேட்டாள். “தாங்கள் இதை சொன்ன கணத்திலேயே அன்னையென்றானேன். மைந்தனை கண்டுகொண்டேன்” என்றாள். உள்ளிருந்து பிறிதொரு குழந்தை உரக்க கை நீட்டி “உயரமான அத்தையை நான்தான் முதலில் பார்த்தேன்” என்றான். இன்னொரு குழந்தை அவனை உந்தியபடி எட்டிப் பார்த்து “உயரமான அத்தை! உன்னை நான்தான் முதலில் பார்த்தேன்” என்றாள். “போடி” என்று அவன் சொல்ல மாறி மாறி பூசலிட்டு இரு குழந்தைகளும் முடியை பற்றிக்கொண்டன.

“என்ன அங்கே சத்தம்? கையை எடு… நீலிமை, கையை எடு என்று சொன்னேன்” என்றாள் அவர்களின் அன்னை. “இவன்தான் என் முடியை பற்றினான்” என்றாள் நீலிமை. “இவள்தான்! இவள்தான்!” என்று சிறுவன் கூவினான். “நான் உயரமான அத்தையை மரத்தடியிலேயே பார்த்தேன்” என்று நீலிமை அழுகையுடன் சொன்னாள். “மரத்தடியிலே நான் பார்த்தேன்” என்று சிறுவன் கூவினான். அன்னை திரௌபதியிடம் “எப்போதும் பூசல்… ஒரு நாழிகை இவர்களுடன் இருந்தால் பித்து பெருகிவிடும்” என்றாள்.

“இரட்டையரா?” என்றாள் திரௌபதி. “இல்லை. ஓராண்டு வேறுபாடு. ஆனால் மூத்தவள் பிறந்தபோது எங்களூரில் கடுமையான வறுதி. அன்னைப்பாலுக்காகவே நான் வீடு வீடாக அலைந்த காலம். இளையவன் பிறந்தபோது ஊரைவிட்டு கிளம்பிவிட்டோம். பிறிதொரு ஊர். அங்கு அவ்வப்போது ஊன் வேட்டையாடி கொண்டுவர இயன்றது. இருவர் வளர்ச்சியும் அவ்வாறுதான் இணையாக ஆயிற்று” என்றாள். “என் பெயர் கோகிலம். நான் அடுமனைப்பெண்.” திரௌபதி “என் பெயர் சைரந்திரி” என்றாள். “ஊரைச் சொல்ல விரும்பவில்லை என்றால் நான் கேட்கவில்லை” என்றாள் கோகிலம். அவளுக்குப் பின்னால் நின்றிருந்த இளம்பெண்ணொருத்தி “ஊர் துறந்து வருபவர்கள்தான் தனியாக கிளம்பியிருப்பார்கள்” என்றாள். பிறிதொருத்தி “ஊரென்றால் பெண்களுக்கு ஆண்கள்தான். ஆணிலாதவள் ஊரிழந்தவளே” என்றாள்.

அவர்களே தனக்குரிய வரலாறொன்றை ஓரிரு கணங்களுக்குள் சமைத்துவிட்டதை திரௌபதி உணர்ந்தாள். அவ்வாறு உடனடியாகத் தோன்றுவதனாலேயே அதுவே இயல்பானதென்று தோன்றியது. “ஆம், இந்த ஆலமரத்தடியில் அமர்ந்திருந்த கணத்திற்கு முன்னால் எனக்கு வாழ்க்கையென்று ஏதுமில்லை” என்றாள். “நன்று, அவ்வண்ணமே இரு. பெண்கள் விழைந்ததுபோல் வாழ்க்கை அமைவது மிக அரிது. விரும்பாத வாழ்க்கையை எண்ணத்திலிருந்து முற்றிலும் வெட்டி விலக்கிக்கொள்ளும் பெண்ணே மகிழ்ச்சியுடன் வாழலாகும். அக்கணத்துக்கு முன்னால் உனக்கு என்ன நிகழ்ந்திருந்தாலும் அவையனைத்தும் இப்போது இல்லை. இனி நிகழ்வனவே உன் வாழ்க்கை. அது இனிதென்றாகுக!” என்று கோகிலம் சொன்னாள்.

“என் பெயர் மலையஜை” என்று சொன்ன இளையவள் “நீ உணவருந்தியிருக்க வாய்ப்பில்லை” என்றாள். “ஆம்” என்றாள் திரௌபதி. “உணவுக்காக இன்னும் சற்று நேரத்தில் வண்டிகளை நிறுத்துவோம். அங்கு நீ எங்களுடன் உணவருந்தலாம். நிஷதத்தின் எல்லைக்குள் நுழைந்ததுமுதல் உணவுக்கு எக்குறையுமில்லாதிருக்கிறது. பேரரசி தமயந்தியின் ஆட்சிக்காலத்தில் அவர்கள் அமைத்த மூவாயிரம் அன்னநிலைகள் இப்பகுதியெங்கும் உள்ளன. இடையில் இங்கு அரசின்மை நிலவியபோதுகூட அருகநெறியினர் அவற்றை குறைவிலாது ஓம்பினர். ஓர் அன்னநிலையில் பெற்ற உணவை உண்டு பசியெழுவதற்குள் அடுத்த அன்னநிலைக்கு சென்றுவிடலாம்” என்றாள் மலையஜை.

திரௌபதி “இன்னும் எத்தனை தொலைவு நிஷதபுரிக்கு?” என்றாள் “விராடநகரி இங்கிருந்து எட்டு அன்ன சத்திரங்களின் தொலைவில் உள்ளது. களிற்றுயானை நிரைபோல கரிய கோட்டை கொண்டது. கவந்தனின் வாய்போல அருகணைபவரெல்லாம் அதன் வாயிலினூடாக உள்ளே சென்று மறைகிறார்கள். எத்தனை நீர் பெய்தாலும் நிறையாத கலம்போல ஒவ்வொரு நாளும் உள்ளே நுழைந்துகொண்டிருக்கும் எங்களைப் போன்ற அயலவருக்கு அங்கு இடமிருக்கிறது. அடுமனைகளிலும் அகத்தளங்களிலும் இன்னும் பலமடங்கு சூதர்கள் சென்று அமையமுடியுமென்றார்கள்” என்றார் குடித்தலைவர். “என் பெயர் விகிர்தன். நான் அங்கு சென்று நோக்கிய பின்னரே என் குடியை அழைத்துச்செல்ல முடிவெடுத்தேன்.”

“நீ படைக்கலப்பயிற்சி பெற்றிருக்கிறாயா?” என்று ஒரு குள்ளமான முதியவள் திரௌபதியின் கைகளை தொட்டுப்பார்த்தபின் விழிகளைச் சுருக்கியபடி கேட்டாள். அக்குழுவில் இணைந்த தருணம் முதல் அவள் தன்னை கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பதை திரௌபதி உணர்ந்திருந்தாள். திரும்பிப் பார்த்து “ஆம். எங்களூரில் புரவிப்பயிற்சியும் படைக்கலப்பயிற்சியும் பெண்களுக்கு அளிப்பதுண்டு. நாங்கள் புரவிச் சூதர்களின் குலம்” என்றாள். மலையஜை “அவள் பெயர் மிருகி. எப்போதும் ஐயம் கொண்டவள்” என திரௌபதியிடம் சொல்லிவிட்டு “புரவிச் சூதர்களுக்கு படைக்கலப்பயிற்சி அளிக்கும் பழக்கம் மகதத்திலும் அயோத்தியிலும் உண்டு என்பதை அறியமாட்டாயா?” என்றாள். “ஆம். தேவையென்றால் அவர்கள் போர்களில் ஈடுபடவும் வேண்டும். ஆனால் பெண்களுக்கு அப்பயிற்சிகள் அளிக்கப்படுவதை இப்போதுதான் அறிகிறேன்” என்றார் விகிர்தர். “அத்தனை பெண்களுக்கும் அளிக்கப்படுவதில்லை. இளவயதிலேயே எனது தோள்கள் போருக்குரியவை என்று என் தந்தை கருதினார். ஆகவே அப்பயிற்சியை எனக்களித்தார்” என்று திரௌபதி சொன்னாள்.

மிருகியின் விழிகளில் ஐயம் எஞ்சியிருந்தது. ஆனால் “ஆம், உனது உடல் உனக்கு என்றும் பெரிய இடரே. எவ்விழியும் வந்து இறுதியாக நிலைக்கும் தோற்றம் உனக்கு அமைந்துள்ளது. அரசகுடியினர் உன்னை விரும்புவர். அவர்கள் விரும்புவதனாலேயே இடர்களுக்குள்ளாவாய். தோள்களை குறுக்கிக்கொள். குரலெழாது பேசு. ஒருபோதும் அரசகுலத்து ஆண்கள் சொல்லும் சொற்களை நம்பாதே” என்றாள். திரௌபதி “இனி நம்புவதில்லை” என்றாள். மிருகி விழிகளில் ஐயம் அகல நகைத்தபடி “ஆம், நீ சொல்லவருவது எனக்கு புரிகிறது. இனி அனைத்தும் நன்றாகவே நடக்கட்டும்” என்றாள்.

flowerஅவர்கள் தழைத்து கிளைவிரித்து நின்றிருந்த அரசமரத்தடி ஒன்றை அணுகினர். சூதர்கள் இருவரும் முன்னால் சென்று அந்த இடத்தை நன்கு நோக்கிவிட்டு கைகாட்ட வண்டியை ஓட்டியவர் கயிற்றை இழுத்து அதை நிறுத்தினார். கட்டைகள் உரச சகடங்கள் நிலைத்து வண்டி நின்றதும் சூதப்பெண்கள் உள்ளிருந்து குழந்தைகளைத் தூக்கி கீழே விட்டனர். அவை குதித்துக் கூச்சலிட்டபடி அரசமரத்தை நோக்கி ஓடின. கருவுற்றிருந்த பெண்களை கைபற்றி மெல்ல கீழே இறக்கினர். அவர்களில் ஒருத்தி குருதி இல்லாமல் வெளுத்திருந்த உதடுகளுடன் அவளை நோக்கி புன்னகைத்து “இக்குழுவில் ஆண்களின் தலைக்கு மேல் எழுந்து தெரிகிறது உங்கள் தலை” என்றாள். “ஆம், அதை மட்டும் நான் ஒன்றும் செய்வதற்கில்லை” என்று திரௌபதி சொன்னாள். “ஏன் தலைதணிக்க வேண்டும்? நிமிர்ந்து நடவுங்கள். சூதர்களில் ஒருவர் தலைநிமிர்ந்து நடந்தாரென்று நாங்கள் எண்ணிக்கொள்கிறோம்” என்றாள் அவள்.

அவள் கைகளை பற்றிக்கொண்டு “எத்தனை மாதம்?” என்று திரௌபதி கேட்டாள். “ஏழு” என்றபின் கையை இடையில் வைத்து மெல்ல நெளித்து “இந்த வண்டியில் அமர்ந்து வருவதற்கு நடந்தே செல்லலாம். நடனமிட்டபடி செல்வதுபோல் உள்ளது” என்றாள். “என் பெயர் சிம்ஹி. அதோ, அவர்தான் என் கணவர்.” அவள் சுட்டிக்காட்டிய இளைஞன் பெரிய பற்களைக் காட்டி புன்னகைத்தான். “அவர் பெயர் அஸ்வகர். நளமன்னர் இயற்றிய அடுதொழில் நூலை உளப்பாடமாக கற்றவர் எங்களுள் அவர் ஒருவரே.”

சிம்ஹிக்குப் பின்னால் இறங்கிய கருவுற்ற பெண் பதினெட்டு வயதுகூட அடையாதவள். சிறுமியருக்குரிய கண்களும் சிறிய பருக்கள் பரவிய கன்னங்களும் கொண்டிருந்தாள். அவளும் உதடுகள் வெளுத்து கண்கள் வறண்டு தோல் பசலைபடர்ந்து வண்ணமிழந்த பழைய துணிபோலிருந்தாள். “உனக்கு எத்தனை மாதம்?” என்று திரௌபதி கேட்டாள். “ஆறு” என்று அவள் சொன்னாள். பின்னர் விழிகளைத் திருப்பி வேறெங்கோ நோக்கினாள். சிம்ஹி “அவள் பெயர் சவிதை. அவளிடம் பேசவே முடியாது” என்றாள். “ஏன்?” என்று திரௌபதி கேட்டாள். “இப்புவியே அவளுக்கு தீங்கிழைக்கிறது என்று எண்ணிக்கொண்டிருக்கிறாள். அவள் கணவன் அவளைக் கொல்லும் நஞ்சொன்றையே கருவாக அவள் உடலில் செலுத்தியிருப்பதாக நேற்று சொன்னாள். அக்கரு வளர்ந்து தன்னை கிழித்துக்கொண்டுதான் வெளியே வரும் என்று ஒவ்வொரு நாளும் கனவில் காண்கிறாள்.” திரௌபதி சவிதையின் கைகளை பற்றிக்கொண்டு “என்ன கனவு அது?” என்றாள்.

அவள் கைகள் குளிர்ந்து இறந்த மீன்கள் போலிருந்தன. கையை உருவ முயன்றபடி “ஒன்றுமில்லை” என்று சொன்னாள். “அத்தகைய கனவுகள் வராத கருவுற்ற பெண்கள் எவருமில்லை” என்றாள் திரௌபதி. “ஆம், எனக்குத் தெரியும்” என்றாள் அவள். “சரி, நான் சொல்கிறேன். நீ இக்கருவால் உயிர் துறக்கப்போவதில்லை. அறுபதாண்டு வாழ்ந்து உன் மூன்றாம் கொடிவழியினரைக் கண்ட பின்னரே இங்கிருந்து செல்வாய். போதுமா?” என்றாள் திரௌபதி. அவள் விழிகளையும் சொல்லுறுதியையும் கண்ட கோகிலம் “தெய்வச்சொல் கேட்டதுபோல் உள்ளது, அம்மா” என்றாள்.

சவிதை சினத்துடன் “அதைச் சொல்ல நீங்கள் யார்?” என்று கேட்டாள். சுளித்த உதடுகளுக்குள் அவள் பற்கள் தெரிந்தன. “சொல்வதற்கு எனக்கு ஆற்றலுண்டு என்றே கொள்” என்றாள் திரௌபதி. சவிதை முகம் திருப்பிக்கொண்டாள். அரசமரத்தடியில் பெண்கள் ஒவ்வொருவராக அமர்ந்துகொண்டனர். ஆண்கள் வண்டியிலிருந்து பொதிகளையும் பெட்டிகளையும் கலங்களையும் இறக்கி வைத்தனர். பொதி சுமந்துவந்த பெண்கள் முதுகை நிலம்பதிய வைத்து மல்லாந்து படுத்தனர். கலங்களில் இருந்து இன்கடுங்கள்ளை மூங்கில் குவளைகளில் ஊற்றி ஆண்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர். பெண்கள் துணிப்பொதிகளை அவிழ்த்து உள்ளே வாழையிலையில் பொதிந்து தீயில் சுட்டெடுத்த அரிசி அப்பங்களை எடுத்து குழந்தைகளுக்கு அளித்தனர். ஒருவரோடொருவர் பூசலிட்டு கூவிச்சிரித்தபடி குழந்தைகள் அவற்றை வாங்கிக்கொண்டனர்.

தேங்காய் சேர்த்து பிசைந்து சுடப்பட்ட பச்சரிசி அப்பம் அந்த வழிநடைப் பசிக்கு மிக சுவையாக இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. மிருகி “நான் ஊனுணவு மிகுதியாக உண்ணவேண்டும் என்கிறார்கள். நான்கு மாதம் எதை உண்டாலும் வெளியே வந்துகொண்டிருந்தது. உண்மையில் இப்போது ஓரிரு மாதங்களாகத்தான் வயிறு நிறைய உண்கிறேன். ஆயினும் முன்பு வாயுமிழ்ந்த நினைவு எழும்போது மேற்கொண்டு உண்ண முடியவில்லை” என்றாள். “அதற்கு எளிய வழி உன் வயிறு ஒரு சிறு குருவிக்கூடு, அதிலுள்ள குஞ்சு ஒன்று சிவந்த அலகைப் பிளந்து சிறு சிறகுகளை அடித்தபடி எம்பி எம்பி இந்த உணவுக்காக குதிக்கிறது என்று எண்ணிக்கொள்வதே. ஒரு துண்டுகூட வீணாகாமல் உண்பாய்” என்றாள் திரௌபதி. அவள் முகம் மலர்ந்து “ஆம், அதை கேட்கையிலேயே மெய் விதிர்ப்பு கொள்கிறது” என்றபடி திரௌபதியின் கைகளை தொட்டாள்.

கோகிலம் “நன்றாக பேசுகிறாய். கதை சொல்வாயா?” என்றாள். “நிறைய கதை கேட்டிருக்கிறேன் எதையும் இதுவரை சொன்னதில்லை” என்றாள் திரௌபதி. “நீ எதில் தேர்ந்தவள்?” என்றாள் மிருகி. “அணிச்சேடி வேலையை செய்ய முடியுமென்று எண்ணுகின்றேன். காவல்பெண்டாகவும் அமைவேன்” என்றாள் திரௌபதி. “அதை அடுமனைகளில் செய்ய முடியுமா என்ன? அதற்கு அரண்மனைப்பழக்கம் இருக்க வேண்டுமே?” என்றாள் கோகிலம். “அவளை பார்த்தாலே தெரியவில்லையா அவள் அடுமனைப்பெண் அல்ல என்று? அரண்மனைகளில் வளர்ந்தவள் அவள்” என்றாள் மிருகி. திரௌபதி “எப்படி தெரியும்?” என்றாள். “உன் கால்களைப் பார் அவை நெடுந்தூரம் வழி நடந்தவை ஆயினும் எங்களைப்போல இளமையிலிருந்தே மண்ணை அறிந்தவையல்ல. கடுநடையில் வளர்ந்த கால்களில் விரல்கள் விலகியிருக்கும். பாதங்கள் இணையாக நிலம் பதியாது.”

திரௌபதி புன்னகையுடன் “மெய்தான். நான் அரண்மனையில் வளர்ந்தேன்” என்றாள். “நீ சொல்ல மறுக்கும் அனைத்தும் அரண்மனைகளில் நிகழ்ந்தவை” என்றாள் மிருகி. அவளை கூர்ந்து நோக்கியபடி “அழகிய சூதப்பெண்கள் அனைவருக்கும் ஒரு பெருங்கலத்தை நிறைக்கும் அளவுக்கு நஞ்சும் கசப்பும் நெஞ்சில் இருக்கும்” என்றாள். திரௌபதி “கடுங்கசப்பு” என்றாள். கோகிலம் “ஆம், உன் புன்னகை அனைத்திலும் அது உள்ளது. நீ சிறுமை செய்யப்பட்டாயா?” என்றாள். “ஆம்” என்றாள் திரௌபதி. “எங்கு?” என்றாள் சிம்ஹி. “அவை முன்பு” என்றாள் திரௌபதி. “அவை முன்பா?” என்றபடி இரு பெண்கள் எழுந்து அருகே வந்தனர். “அவையிலா?” என்றனர். “ஆம்” என்று குனிந்து அப்பத்தை தின்றபடி திரௌபதி சொன்னாள்.

கோகிலம் “பெண்களுக்கு சிறுமையெல்லாம் தனியறையில்தான். அவை முன்பிலென்றால்…?” என்றாள். மிருகி சீற்றத்துடன் “சிறுமையில் பெரிதென்ன சிறிதென்ன? தன்மேல் மதிப்பில்லாத ஆண் ஒருவனால் வெறும் உடலென கைப்பற்றி புணரப்படும் சிறுமைக்கு அப்பால் எவரும் பெண்ணுக்கு எச்சிறுமையையும் அளித்துவிட முடியாது” என்றாள். மூச்சு சீற “புணர்ச்சிச் செயலே அவ்வாறுதான் அமைந்துள்ளது. பற்றி ஆட்கொண்டு கசக்கி முகர்ந்து துய்த்து துறந்து செல்லுதல். எச்சில் இலையென பெண்ணை உணரச்செய்தல்” என்றாள். கோகிலம் “நாம் அதை ஏன் பேசவேண்டும்?” என்றாள். மிருகி “நீ அரண்மனைகளில் பணியாற்றியதில்லை” என்றாள். கோகிலம் “ஆம், அது என் நல்லூழ்” என்றாள். சிம்ஹி “உணவின்போது கசப்புகளை பேசவேண்டியதில்லை” என்றாள்.

“ஆயினும் அவை நடுவே என்றால்…” என்றாள் கோகிலம். “எண்ணவே முடியவில்லை.” மிருகி “கேளடி, இருண்ட அறையில் எவருமே இல்லாமல் கீழ்மைப்பட்டு தன்னுடலை அளிக்கும் ஒரு சூதப்பெண்கூட பல்லாயிரம் பேர் நோக்கும் அவை முன்புதான் அதற்கு ஆளாகிக் கொண்டிருக்கிறாள். இல்லையென்று சொல் பார்க்கலாம்” என்றாள். கோகிலம் “எனக்குத் தெரியவில்லை” என்றாள். “அப்போதும் பிறந்திருக்காத தலைமுறையினரும் அதை பார்க்கிறார்கள், அறிக!” என்றாள் மிருகி. சிம்ஹி பதற்றத்துடன் “நாம் இந்தப் பேச்சையே விட்டுவிடுவோமே…” என்றாள். கோகிலம் “ஆம், நாமிதை பேச வேண்டியதில்லை” என்றாள். மிருகி “பெண்ணுக்கு இழைக்கப்பட்ட சிறுமைக்கு குருதியை மட்டுமே நிகர் வைக்கமுடியும். அப்பெண்ணின் மைந்தன் அதை செய்யவேண்டும்… அக்குருதியை அவன் முலைப்பால் என அள்ளிக் குடிக்கவேண்டும்” என்றாள். “போதும்” என்றாள் சிம்ஹி.

விகிர்தர் அரைத்துயில் மயங்க அஸ்வகனும் இரு இளஞ்சூதர்களும் வெல்லமிட்ட கொதிக்கும் அன்னநீரை ஒரு கலத்தில் கொண்டுவந்தனர். மூங்கில் குவளைகளில் விட்டு அவர்களுக்கு அளித்தனர். அஸ்வகன் திரௌபதியிடம் நீட்டியபடி புன்னகையுடன் “இது கள்ளல்ல” என்றான். “நான் கள்ளருந்துபவள் என்று தோன்றுகிறதா?” என்றாள் அவள். “இல்லை. ஆனால் உங்கள் விழிகள் கள்ளிலூறியவை என்று தோன்றுகின்றன” என்று அவன் சிரித்தான். “எங்கள் குடியில் அடுமனைத்தொழிலில் முதன்மைத் திறனோன் இவன். நாங்கள் சிறுகுடி அடுமனையாளர். எளியோருக்கான உணவைச் சமைப்பவர். இவன் அரண்மனைச் சமையலை அறிந்தவன். சம்பவன் என்று பெயர்” என்றாள் கோகிலத்தின் இளையோள். “இவனுக்கு மூத்தவர் இருவர் முன்பே மறைந்துவிட்டனர். எனக்கென்று எஞ்சும் உடன்பிறந்தான் இவனே.”

சம்பவன் “அடுமனைத்திறன் அரண்மனையை கோருகிறது. நிஷதபுரியின் அரண்மனை இன்று நல்ல திறனுள்ள அடுமனையாளர்களுக்கான இடமென்றார்கள்” என்றான். திரௌபதி “அடுமனையாளர் எவரிடமாவது பயின்றிருக்கிறீர்களா?” என்றாள். “எந்தையிடம் அன்றி எவரிடமும் பயின்றதில்லை. அஸ்தினபுரியின் பீமசேனர் எனது ஆசிரியர். அவருக்கு மாணவனாக வேண்டும் என்பதற்காகவே நான் நளபாகத்தை பயில மறுத்தேன்” என்றான். திரௌபதி “அவரை பார்த்திருக்கிறீரா?” என்று கேட்டாள். சம்பவன் “பார்த்ததில்லை. ஆனால்…” என்றபின் தன் கச்சையை நெகிழ்த்து அதிலிருந்து சிறிய பட்டுத்துணி ஒன்றை எடுத்துக் காட்டினான். அதில் பீமனின் உருவம் வண்ண நூல்களால் வரையப்பட்டிருந்தது.

“இந்த ஓவியத்தை பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திசைச்சூதரிடமிருந்து எட்டு பணம் கொடுத்து வாங்கினேன். என் கையில் தந்தை அணிவித்திருந்த பொற்கங்கணத்தை விற்று அப்பணத்தை ஈட்டினேன். ஒவ்வொரு நாளும் இது என்னுடன் இருக்கிறது. என் ஆசிரியர், என் இறைவடிவம். அவர் எங்கிருந்தோ என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறார். நான் கற்ற அடுமனைத்தொழிலனைத்தும் என் உள்ளத்தில் அறியாத குரலென ஒலித்து இவர் கற்பித்ததே” என்றான். குரல்நெகிழ “சொல்லுங்கள் அக்கா, ஆசிரியரின் அணுக்கம் இருந்தால்தான் கற்க முடியுமா?” என்று கேட்டான்.

திரௌபதி “இல்லை. தந்தை, ஆசிரியன், காதலன் என்னும் மூன்றும் உளஉருவகங்கள் மட்டுமே. ஆனால் மெய்யன்பு என்றால், முழுப்பணிவு என்றால் காதலனும் ஆசிரியனும் தந்தையும் ஏதேனும் ஒரு தருணத்தில் அத்தவத்தை அறிந்து நம்மைத் தேடி வருவார்கள். யார் கண்டது, நீர் இப்போது சென்றுகொண்டிருப்பதே உமது ஆசிரியரின் காலடிகளை தேடித்தானோ என்னவோ?” என்றாள்.

சம்பவன் உள எழுச்சியுடன் அவள் அருகே வந்து மண்டியிட்டமர்ந்து அவள் கால்களைத் தொட்டு “இச்சொற்களுக்காகவே நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன், அக்கா. இச்சொற்கள் போதும் எனக்கு. என்றேனும் ஒரு நாள் அவரை நான் காண்பேன். இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசரின் இளையவர் அவர். எதிரிகள் எண்ணியே அஞ்சும் பெருவீரர். என்றேனும் ஒரு நாள் நேரில் கண்டால்கூட நெடுந்தொலைவில் நின்றபடிதான் கைகூப்புவேன். அவரது கால்தடங்கள் படிந்த மண்ணை எடுத்து என் தலையில் அணிந்துகொள்வேன். அந்த பிடிமண்ணைச் சூடும் வாய்ப்பு என் சென்னிக்கு கிடைக்குமென்றால்கூட என் மூதாதையர் என்மேல் பெருங்கருணை கொண்டிருக்கிறார்கள் என்றே கொள்வேன்” என்றான்.

திரௌபதி “ஆசிரியரின் பெருங்கருணைக்கு இணை நிற்பது தெய்வங்களின் கருணை மட்டுமே. நம் எளிமையை எண்ணி நாம் அஞ்ச வேண்டியதில்லை. நம்மில் ஆணவமும் சிறுமையும் மட்டும் இல்லாதிருக்கும்படி பார்த்துக்கொண்டால் போதும். சிறு கோழிக்குஞ்சை செம்பருந்து பற்றிச்செல்வதுபோல நம்மை இப்புவியிலிருந்து தேடி வந்து பற்றிச் சென்று மலைமுடியில் அமர்த்துவார்கள். அன்னைமடியில் என அவர் அருகே நாம் அமரலாம்” என்றாள். சம்பவன் கன்னங்களில் நீர்ச்சால்கள் வழிய விம்மி அழுதபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். கோகிலம் “நற்சொற்கள் சொன்னாய், சைரந்திரி. உனது நா நிகழட்டும்” என்றாள். “நான் சொன்ன சொற்கள் எதுவும் நிகழாதிருந்ததில்லை” என்றாள் திரௌபதி.

பின்னாலிருந்து அவள் கையைத் தொட்ட சவிதை “அவ்வாறென்றால் நானும் பெற்றுப் பிழைப்பேனா, அக்கா?” என்றாள். “நீ பெருந்தோள் கொண்ட மாவீரனை பெறுவாய்” என்றாள் திரௌபதி. அவள் மெய்ப்புகொள்வது கழுத்தில் தெரிந்தது. “எப்படி?” என்று மூச்சொலியுடன் கேட்டாள். திரௌபதி “அடுமனைக்குச் செல். அங்கு உன்னைக் கண்டதுமே உனக்கு அருள்பவர் ஒருவர் வருவார். இப்புவி கண்டவற்றிலேயே பெருந்தோள் கொண்டவர். இளையவளே, யானை துதிக்கையை எண்ணுக! கருங்கால்வேங்கைப் பெருமரம் பறித்தெடுக்கும் ஆற்றல் கொண்டது அது. இதழ் கசங்காது மலர்கொய்யவும் அறிந்தது. உன்மேல் அக்கருணை பொழியும். ஆலமரத்தடியில் என அவர் காலடியில் அமைக! உன்னில் எழுவதும் பிறிதொரு பெருந்தோளனாகவே இருப்பான்” என்றாள். அவள் தலையில் கைவைத்து “தெய்வமெழும் சொல் இது, இளையவளே. நெடுந்தொலைவில் அவரைக் கண்டதுமே நீ அறிவாய், இப்புவியில் இனி அஞ்சவேண்டியதென்று எதுவுமே இல்லை என” என்றாள்.

துணி கிழிபடும் ஒலியில் விசும்பியபடி சவிதை தன் முட்டில் முகம் புதைத்து அழத்தொடங்கினாள். அவ்வொலியைக் கேட்டபடி விழிநீர் வழிய அப்பெண்கள் அமர்ந்திருந்தனர்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 34

33. குருதிச்சோறு

flowerமுழங்கும் பெருமுரசின் அருகே நின்றிருப்பதுபோல் பேரோசை வந்து செவிகளை அறைந்து மூடி சித்தத்தின் சொற்களனைத்தையும் அழித்தது. கண்களுக்குள்ளேயே அவ்வோசையை அலைகளென காணமுடிந்தது. நளன் கருணாகரரிடம் “என்ன ஓசை அது?” என்றான். “இளவரசர் நகர்புகுகிறார்” என்றார் கருணாகரர். புன்னகையுடன் “இத்தனை பெரிய வரவேற்பா அவனுக்கு?” என்றான். “எங்கெங்கோ தேங்கி நின்றிருந்த பல விசைகள் அங்கு சென்று சேர்கின்றன, அரசே” என்றார் கருணாகரர்.

அம்முகத்திலிருந்த கவலையை திரும்பிப்பார்த்து “அதற்கென்ன? ஒரு நாட்டின் படைத்தலைவன் மக்களால் வாழ்த்தப்படுவதென்பது வெற்றிக்கு இன்றியமையாததுதான் அல்லவா?” என்றான் நளன். “அதுவல்ல. நீங்கள் எதையுமே கூர்ந்து நோக்காமலாகி நெடுங்காலமாகிறது, அரசே” என்று கருணாகரர் சொன்னார். “இங்கு இந்திரனின் சிலை நிறுவப்பட்ட நாள்முதலே அடக்கப்பட்ட கசப்பொன்று நமது குடிகளுக்கிடையே இருந்தது. ஷத்ரிய அரசி வந்து நமது அரியணையில் அமர்ந்தது பிறிதொரு கசப்பென வளர்ந்தது. நமது படைகள் அனைத்திற்கும் படைத்தலைவர்களாக விதர்ப்ப நாட்டவர் இருப்பது ஒவ்வொரு நாளும் அதை வளர்க்கிறது. இன்று இளவரசர் காகக்கொடியுடன் நகர்புகும்போது இத்தனை எழுச்சியுடன் நமது மக்கள் எதிர்கொள்கிறார்களென்றால் அவர்கள் தங்களிடமிருந்தும் பேரரசியிடமிருந்தும் பெரிதும் விலகிச்சென்றிருக்கிறார்கள் என்றுதான் பொருள். அது நமக்கு நற்செய்தி அல்ல.”

நளன் “எண்ணி அஞ்சி ஒடுங்கியிருக்கும் காலத்தை நான் கடந்துவிட்டேன், அமைச்சரே. இன்னும் என் இளையோனாகவே அவன் இருப்பான். இக்கணம்வரை பிறிதொன்று நிகழும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் நான் காணவில்லை. அவனுக்கு நான் அடைந்த வெற்றிகளும் புகழும் சிறிய உளக்குறையை அளித்திருக்கின்றன என்று எனக்கு தெரியும். இன்று நமது மக்கள் அளிக்கும் இப்பெரிய வரவேற்பும் கொண்டாட்டமும் அதையும் இல்லாமலாக்கும்” என்றான். “மேலும் அவனுக்கென்று தனியாக அரசொன்றை அளிக்கவே தமயந்தி எண்ணியிருக்கிறாள். நேற்று முன்தினம் என்னிடம் அதைப்பற்றி பேசினாள். விஜயபுரியை தலைநகராகக்கொண்டு அவன் ஒரு அரசை நிறுவி தென்னகத்தில் விரிந்து செல்வானென்றால் நிஷத குடிகள் அதன்பொருட்டு பெருமைப்படலாம்.”

கருணாகரர் மேற்கொண்டு சொல்லெடுக்கத் தயங்கி அவனுடன் சென்றார். குடிப்பேரவை கூடி அரசனின் வருகைக்காக காத்திருந்ததை வெளியே பறந்த கொடிகள் காட்டின. அரசவையை ஒட்டிய சிறிய துணை அறையில் முழுதணிக்கோலத்தில் தமயந்தி காத்திருந்தாள். நளன் உள்ளே நுழைந்ததும் எழுந்து தலைவணங்கி “அரசருக்கு நல்வரவு” என்றாள்.

பத்து கால்விரல்களிலும் அருமணிகள் பதித்த மெட்டிகள். அனல் வளையம்போல் செம்மணிகள் சுடர்விட்ட சிலம்புகள். பொன்னலைகளென உலைந்த தொடைச்செறியும் கொன்றை மலர்க்கதிரென மேகலையும். பொன்னருவிகளென மணியாரங்களும் மாலைகளும் சரங்களும் பரவிய யானைமருப்பு மார்பு. பொற்பறவையின் இரு இறகுகளெழுந்த தோள்மலரும் சுற்றிய நாகமென தோள்வளையும். முழங்கை வரை செறிந்திருந்தன சிறுவளைகளும் மணிவளைகளும் செதுக்குவளையலும் நெளிவளைகளும். பத்து விரல்களிலும் கல்மணி கணையாழிகளும் கன்னங்களில் அனற்செம்மையைப் பாய்ச்சிய செம்மணிக்குழைகளும் நெற்றியில் துளித்துதிரா பனி என நின்ற நீலமணிச் சுட்டியும். கூந்தல் முழுக்க பொன்வரிகளாகப்பரவிய குழற்சரங்கள். நீண்ட பின்னலை அணிசெய்தன செவிமலர்கள்.

அணிகள் அவளை மண்ணிலிருந்து அகற்றி கண்ணுக்குத் தெரியா திரையொன்றில் வரையப்பட்ட ஓவியமென மாற்றின. ஒருகணம் அவளை முன்பொருபோதும் கண்டதில்லையென்ற உளமயக்கை நளன் அடைந்தான். பின்னர் புன்னகையுடன் “ஓவியம் போல…” என்றான். அவளும் சிரித்து “ஆம், ஆடியில் நோக்கியபோது தொன்மையானதோர் சிற்பத்திற்குள் நுழைந்து அதை தூக்கிக்கொண்டு நின்றிருப்பதுபோல் தோன்றியது” என்றாள். “நன்று. அவை நிறைந்திருக்கும் விழிகளுக்கு முன்னால் நாம் உரைக்கும் ஒவ்வொரு சொல்லையும் இந்த அணிகளும் முடியும் செங்கோலுமே ஆணைகளென்றாக்குகின்றன” என்றான் நளன்.

கருணாகரர் அவைக்குச் சென்று நோக்கிவிட்டு திரும்பி வந்து “அனைத்தும் சித்தமாக உள்ளன, அரசி” என்றார். தமயந்தி தன்னருகே நின்ற சேடியிடம் விழி காட்ட அவள் தமயந்தியின் ஆடையின் சற்று கலைந்திருந்த மடிப்புகளை சீரமைத்தாள். கருணாகரர் வெளியே மெல்லிய குரலில் ஆணையிட மங்கல இசைக்கலங்கள் பெருகியொலித்தன. நகரெங்கும் ஒலித்துக்கொண்டிருந்த வாழ்த்தொலிகளுக்குள் அவ்விசை நதிநீர்ப்பெருக்கில் விழுந்த சிறு செந்தூரத்துளிபோல கரைந்து உருவழிந்தது.

நளனும் தமயந்தியும் இணைத்தோள் கொண்டு நடந்து இடைநாழியினூடாக அரசப்பேரவைக்குள் நுழைந்தனர். நீள்வட்ட வடிவமான அந்த அவையில் இருக்கைகள் அனைத்தையும் நிறைத்திருந்த வேதியரும் சான்றோரும் வணிகரும் குடித்தலைவர்களும் அயல்வருகையாளரும் எழுந்து உரத்த குரலில் “பேரரசர் வாழ்க! இடம் அமர்ந்த அரசி வாழ்க! இந்திரபுரி வெல்க! எழுக மின்கதிர்க்கொடி!” என்று வாழ்த்துரைத்தனர். இரு கைகளையும் கூப்பி மலர்ந்த புன்னகையுடன் நளனும் தமயந்தியும் சென்று அரியணையை அணுகி அதை தொட்டு சென்னி சூடியபின் அகம்படியர் ஆடை ஒதுக்க அமர்ந்தனர். அவர்கள் அமர்ந்தபின் குடிகள் வாழ்த்தொலி எழுப்பி கைகூப்பியபடி தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.

ஏழு வைதிகர்கள் அரசமேடைமேல் ஏறி கங்கை நீர் தெளித்து அவர்களை முடித்தூய்மை செய்து வேதச்சொல் உரைத்து வாழ்த்தி மீண்டனர். குடிமூத்தார் மூவர் பொற்தாலத்தில் நிஷத அரசின் மணிமுடியைக்கொண்டு வந்து நீட்ட சபர குடித்தலைவர் அம்மணிமுடியை எடுத்து நளன் தலையில் வைத்தார். காளகக்குடி மூத்தவர் ஒருவர் இரு ஏவலர்கள் கொண்டு வந்த செங்கோலை அவனிடம் அளித்தார். மூதன்னையர் மூவர் கொண்டு வந்த மணிமுடியை மூதாட்டி ஒருத்தி எடுத்து தமயந்தியின் தலையில் அணிவித்தாள். அவர்களுக்குப் பின்னால் மூன்று வீரர்கள் பெரிய வெண்குடை ஏந்தி அதன் விளிம்புகளில் தொங்கிய முத்துச் சரங்கள் மெல்ல பறக்கும்படி சுழற்றினர்.

மங்கல இசையும் அணிச்சேடியரின் குரவையொலியும் உரக்க ஒலித்தன. நளன் கையசைத்து நிமித்திகரை அழைத்து “அவை நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன்பு இளையவனுக்கும் இந்த அவை வாழ்த்து தெரிவிக்கட்டும்” என்றான். விழிகள் விரிந்து பின் அணைய பணிந்து “அது முறையல்ல” என்றார் நிமித்திகர். “நிகழ்க!” என்றான் நளன். அவர் தலையசைத்தபின் அறிவிப்பு மேடைமேல் ஏறி தன் வெள்ளிக்கோலை மும்முறை சுழற்ற அவை செவிகூர்ந்தது ஆனால் அவர் கூவியறிவித்ததை அவையினர் கேட்கவில்லை. மும்முறை நிஷத இளவரசருக்கு வாழ்த்துரைத்த நிமித்திகர் தன் குரல் கரைந்து மறைந்ததைக்கண்டு திரும்பி நளனை பார்த்தார். நளன் சிரித்தபடி “இன்று இந்த அவையில் ஒன்றும் நிகழ முடியாது. இளையோன் வரட்டும். நாம் காத்திருப்போம்” என்றான்.

தமயந்தி நளன் அருகே குனிந்து “இளையவர் காகக்கொடியுடன் நகர் நுழைகிறார்” என்றாள். “அறிவேன்” என்று அவன் சொன்னான். தமயந்தி “அது ஓர் அறைகூவல்” என்றாள். “நான் அவ்வாறு எண்ணவில்லை. தனக்கென தனி அடையாளம் கொள்ளும் எளிய முயற்சி அது. முதிரா அகவையில் அனைவருக்கும் அத்தகைய விழைவுகள் உண்டு.” தமயந்தி சிலகணங்களுக்குப்பின் “கலிங்க இளவரசியைப்பற்றி உசாவினேன். அவள் இயல்பு குறித்து நல்ல செய்தி எதுவும் என் செவிக்கு எட்டவில்லை” என்றாள். நளன் புன்னகைத்து “பிறிதொரு வழியில் அமைய வாய்ப்பில்லை” என்றான். புருவம் சுருங்க “என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள் தமயந்தி. “அவள் நிஷத குடியில் உனக்கு இணையாக அல்லவா வருகிறாள்?” என்றான். தமயந்தி “நன்று” என்றபின் இயல்பாக முகம் திருப்பிக்கொண்டாள்.

நளன் சிரித்து “சினம் கொள்ளவேண்டாம். உன்னை சீண்டுவதற்காக சொன்னேன்” என்றான். “எனக்குள் எழும் உள்ளுணர்வுகள் எவையும் நன்று அல்ல” என்றாள் தமயந்தி. நளன் “அவ்வுள்ளுணர்வுகள் ஏன் எழுகின்றன என்று எண்ணிப் பார்” என்றான். தமயந்தி “ஏன்?” என்றாள். நளன் “நமது அரசு விரிந்துகொண்டு செல்கிறது. வடக்கே நாம் வெல்ல இனி சில நாடுகளே எஞ்சியுள்ளன. அவ்வாறு விரிவடைகையில் இரு உணர்வுகள் எழும். தெய்வங்களுக்கு அறைகூவல் விடுக்கிறோம் எனும் ஆணவம். தெய்வங்களின் வாயில் சென்று முட்டுகிறோமோ என்னும் தயக்கம். உனக்கிருப்பது இரண்டாவது உணர்வு. அது நன்று. முதல் உணர்வு எழுமென்றால் தெய்வங்களால் வீழ்த்தப்படுவோம். அசுரர்களென்று ஆவோம்” என்றான். தமயந்தி புன்னகைத்து தலையை மட்டும் அசைத்தாள்.

அவைக்குள் நுழைந்த மூன்று நிமித்திகர்கள் தலைவணங்கி சொல்காத்தனர். நளன் கையசைக்க அவர்களில் ஒருவன் நளனுக்கும் அவைக்குமாக உரத்த குரலில் “நிஷத இளவரசர், காளகக்குடித் தோன்றல், கலியருள் கொண்ட மைந்தர் புஷ்கரர் அவை நுழைகிறார்” என்றான். நளன் “நன்று. இந்த அவை இளவரசரை உவகையுடன் வரவுகொள்கிறது” என்றான். கையில் தன் குடிக்கோலை ஏந்தி, காளகக்குடிக்குரிய காகச்சிறகு சூடிய கரும்பட்டுத் தலையணியுடன் இரு மூத்தகுடியினர் சூழ சீர்ஷர் அவைக்குள் நுழைந்தார். நளனையும் தமயந்தியையும் வெறுமனே வணங்கிவிட்டு அவையை நோக்கி இடைவளைத்து வணங்கினார். அவருக்கான இருக்கையில் சென்று அமர்ந்து செருக்குடன் தலை நிமிர்ந்து ஏளனமோ என தோன்றிய புன்னகையுடன் அவையை ஏறிட்டார்.

வெளியே மங்கல ஓசைகள் எழுந்தன. வலம்புரிச் சங்கை முழக்கியபடி இசைச்சூதர் ஒருவர் அவைக்குள் நுழைந்தார். தொடர்ந்து காகக்கொடியை ஏந்தியபடி கவச உடையுடன் நிஷத வீரனொருவன் நுழைந்து அக்கொடியுடன் அரச மேடைக்கருகே வந்து நின்றான். அதைத் தொடர்ந்து மங்கல இசைக்கலங்களுடன் சூதர்கள் பன்னிருவர் வந்து இசைத்தபடியே சென்று முன்னரே அவையில் இடதுமூலையில் நின்றிருந்த இசைச்சூதர்களுடன் சேர்ந்துகொண்டனர். பொலிதாலங்களுடன் தொடர்ந்து வந்த அணிப்பரத்தையர் பன்னிருவர் அவைக்கு வந்து மங்கலம் காட்டி நின்று தலைவணங்கி பின் நகர்ந்து அங்கு முன்னரே நின்றிருந்த பரத்தையருடன் இணைந்துகொண்டனர்.

அமைச்சர் கருணாகரரால் வழி நடத்தப்பட்டு புஷ்கரன் அவைக்குள் நுழைந்தான். காளகக்குடிகளுக்குரிய காகஇறகு சூடிய பட்டுத்தலையணியை அணிந்திருந்தான். அதில் அருமணிகள் கோத்த மாலைகள் சுற்றப்பட்டிருந்தன. அவன் அணிந்திருந்த ஆடை நளன் அணிந்திருந்தது போலவே உருவாக்கப்பட்டிருந்தது. கங்கணங்களும், தோள்சிறகும், பொற்கச்சையும், அதில் அணிந்த குத்துவாளின் நுண்தொழிற் செதுக்குகள் கொண்ட கைப்பிடியும், கழுத்திலணிந்திருந்த ஆரங்களும், மகரகுண்டலங்களும் முழுக்க நிஷத அரசகுடித் தலைவருக்குரியவையாக இருந்தன. அரசவையினர் எழுந்து நின்று அவனுக்கு வாழ்த்துரைத்தனர். கைகளை தலைக்குமேல் தூக்கி அவ்வாழ்த்தை அவன் ஏற்றுக்கொண்டான்.

கருணாகரர் அவன் காதருகே குனிந்து “இரு கைகளையும் கூப்பி தலைகுனிந்து அவ்வாழ்த்தை ஏற்கவேண்டும், இளவரசே” என்றார். உதடசைவிலிருந்து அவர் சொல்வதென்ன என்பதை புரிந்துகொண்ட நளன் இடக்கையால் மீசையை நீவியபடி புன்னகைத்தான். புஷ்கரன் அக்கூற்றை புறக்கணித்து மூன்றடி எடுத்து வைத்து நளனின் முன் வந்து நின்று சற்றே தலைவணங்கி “மூத்தவருக்கு தலைவணங்குகிறேன். நான் கலிங்க இளவரசியை மணம்கொள்ளும் சூழலொன்று உருவாகியுள்ளது. இளவரசி என்னை விரும்புகிறாள் என்று செய்தி அனுப்பப்பட்டது. வீரர்களுக்குரிய முறையில் அதை நானும் ஏற்றுக்கொண்டேன். எனது ஓவியத்திற்கு மாலையிட்டு உளம்கொண்ட அவளை உடைவாள் அனுப்பி நானும் உளம்கொண்டேன்” என்றான். அவன் அச்சொல் அவைக்கு முழுக்க கேட்கவேண்டுமென எண்ணியது தெரிந்தது.

கருணாகரரை நோக்கியபின் “நமது தூதர்களின் நாப் பிழையால் கலிங்கர் நமது மணத்தூதை ஏற்கவில்லை. இளவரசி பிறரை ஏற்க இயலாதென்றும் நான் சென்று அவளை கொள்ளவில்லையென்றால் வாளில் குதித்து உயிர் துறப்பதாகவும் எனக்கு செய்தி அனுப்பினாள். ஆகவே நானே சென்று அவளை கவர்ந்து விஜயபுரிக்கு கொண்டு சென்றேன். நமது குலமுறைப்படி அவளை மணக்க விரும்புகிறேன். அதற்கு தங்கள் ஒப்புதலை கோருகிறேன்” என்றான். நளன் நகைத்தபடி எழுந்து அவன் தோளில் கைவைத்து “நன்று. நிஷதபுரிக்கு பெருமை சேர்ப்பதே உன் செயல்” என்றான். புஷ்கரன் “நம் குடிவீரத்தை ஒருபோதும் நாம் இழப்பதில்லை, மூத்தவரே” என்றான்.

தமயந்தியை அவன் வணங்கி முறைமைச்சொல் சொல்லவேண்டுமென அவர்கள் காத்திருக்க புஷ்கரன் அவை நோக்கி திரும்பி “இந்த அவைக்கும் செய்தியை அறிவிக்கிறேன். நற்சொல் நாடுகிறேன்” என்றான். தமயந்தி முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் எழுந்து “நிஷதகுடி மகிழ்வு கொள்ளும் மணஉறவு இது, இளையவரே. ஆகவேதான் இந்திரபுரி இதுவரை அறிந்தவற்றில் மிகப் பெரிய விழவென இதை நிகழ்த்தவேண்டுமென்று நான் ஆணையிட்டேன்” என்றாள். அவளை நோக்கி விழிதிருப்பாமல், மறுமொழி உரைக்காமல் புஷ்கரன் பொதுவாக தலைவணங்கினான்.

சீர்ஷர் எழுந்து “இந்த மணவிழவு காளகக்குடியின் மூத்தோரால் விஜயபுரியில் நிகழ்த்தப்படவிருந்தது. பேரரசி கேட்டுக்கொண்டதற்கேற்ப நாங்கள் இங்கு வந்தோம்” என்றார். அவைமுறைமை அனைத்தையும் மீறி அவர் எழுந்ததும் பொருந்தாக் குரலில் உரக்க பேசியதும் அவையெங்கும் ஒவ்வாமை நிறைந்த அசைவுகளை உருவாக்கியது. கருணாகரர் அவரை நோக்கி மெல்லிய குரலில் “நன்று மூத்தவரே! அமர்க! நிகழ்வுகள் தொடங்கட்டும்” என்றார். “ஆம், இங்கு அவை நிகழ்வுகள் நடக்கட்டும்” என்றார் சீர்ஷர், ஒப்புதல் அளிக்கும் அரசரின் கையசைவுகளுடன். நளன் அவையினரை நோக்கி “நிஷதகுடியின் அவையினரே, எனது இளையோன் கலிங்க இளவரசியை மணப்பது இந்த அவைக்கு முற்றொப்புதல் என்று எண்ணுகிறேன்” என்றான். அவையினர் எழுந்து தங்கள் குலக்குறி பொறித்த கோல்களைத் தூக்கி “ஆம், ஒப்புதலே” என்று குரல் எழுப்பினர்.

தலைவணங்கிய நளன் “குலமுறைப்படி நான் எனது அமைச்சரையும் குடிமூத்தாரையும் அனுப்பி நகருக்கு வெளியே தங்கியிருக்கும் கலிங்கத்து இளவரசியை அழைத்து வர ஆணையிடுகிறேன். இளவரசிக்கும் என் இளையோனுக்குமான மணவிழா நம் குடிகள் நிறைந்து அமர்ந்திருக்கும் செண்டு வெளிப்பந்தலில் இன்று இரவு நிகழும்” என்றான். அவை “இளைய நிஷாதர் வாழ்க! காளகர் புஷ்கரர் வாழ்க! விஜயபுரிக்காவலர் வாழ்க!” என்று வாழ்த்தொலி எழுப்பியது. நளன் “இந்த மணநிகழ்வுக்குரிய அரசு அறிவிப்புகள் அனைத்தையும் அமைச்சர் அவையில் அறிவிப்பார்” என்றபின் கைகூப்பி மீண்டும் அரியணையில் அமர்ந்தான்.

கருணாகரர் தலைவணங்கி புஷ்கரனை அழைத்துச்சென்று அவனுடைய பீடத்தில் அமரவைத்தபின் மேடைக்கு வந்து முகமனுரைத்துவிட்டு “அவையீரே, இம்மண நிகழ்வை ஒட்டி பன்னிரு அறிவிப்புகள் உள்ளன” என தொடங்கினார். “கலிங்க அரசரிடம் அவருடைய மகளை எல்லை மீறிச்சென்று கவர்ந்து வந்ததற்காக பொறுத்தருளக்கோரி மாமன்னர் நளன் விடுக்கும் வணக்க அறிவிப்பு முதன்மையானது. இவ்விழவு முடிந்தபின் கலிங்க அரசர் விரும்பினால் குருதியுறவுகொண்ட அரசென்ற முறையில் அவர்கள் கட்ட வேண்டிய கப்பத்தை முழுமையாகவே நிறுத்துவதற்கும், இந்நகர் புகுந்து நளமாமன்னருக்கு இணையாக அமர்ந்து அவை முறைமைகளை ஏற்பதற்கும் அவர்களுக்கு விடுக்கும் அழைப்பு இரண்டாவது.”

“மாமன்னர் நளனின் இளையோனாகிய புஷ்கரரை விஜயபுரியின் அரசரென முடியணிவிக்கும் அறிவிப்பு மூன்றாவதாகும்” என்றார் கருணாகரர். அவையிலிருந்த காளகக்குடிகள் அனைவரும் எழுந்து தங்கள் கோல்களைத் தூக்கி வாழ்த்தொலி எழுப்பினர். அவ்வொலி அடங்குவதற்காக காத்திருந்த கருணாகரர் மீண்டும் “விஜயபுரியின் அரசர் இந்திரபுரிக்கு இணையரசராகவும் அரசுமுறை உறவுகள் அனைத்தையும் பேணுபவராகவும் திகழ்வார். இரு நாடுகளுக்கும் ஒரே கொடியும் ஒரே அரச அடையாளமும் திகழும்” என்றார். அவை கலைவோசையுடன் அமைதியடைந்தது. கருணாகரர் “விஜயபுரியின் படைத்தலைவராக சிம்மவக்த்ரரை பேரரசி தமயந்தி அறிவிக்கிறார். விஜயபுரியை சூழ்ந்துள்ள சதகர்ணிகள், திருவிடத்தவர் அனைவரையும் எதிர்கொண்டு காக்க அவரால் இயலும்” என்றார். அவையில் ஆழ்ந்த அமைதி நிலவியது. எவரோ இருமும் ஒலி உரக்கக் கேட்டது.

“விஜயபுரியின் அரசர் என முடிசூட்டிக்கொண்ட புஷ்கரர் கலிங்க இளவரசியை முறைப்படி மணம்கொள்வதற்கான ஆணை இத்துடன் அமைகிறது. காளகக்குடிகளுக்கு அளிக்கப்படும் சிறப்பும் விருதுகளும் குறித்த அறிவிப்புகள் தொடரும். அதற்குப்பின்…” என்று கருணாகரர் தொடர சீர்ஷர் எழுந்து தன் கோலைத் தூக்கி “காளகக்குடிகளுக்கு எவரும் கொடையளிக்க வேண்டியதில்லை. நாங்கள் ஆளும் மண்ணை எங்கள் உடமையென கொள்ளவும் காக்கவும் எங்களால் இயலும்” என்றார். அவர் அருகே சென்று “அமர்க! அறிவிப்புகள் முடியட்டும்” என்று நாகசேனர் சொன்னார். “நீ துணையமைச்சன். உன் சொல்கேட்டு நான் அமரவேண்டியதில்லை” என்றார் சீர்ஷர்.

பொறுமையுடன் “அமர்க, குடித்தலைவரே!” என்றார் நாகசேனர். சீர்ஷர் “நீ அந்தணன் என்பதனால்…” என்றபின் அமர்ந்து உரக்க “இங்கு நிகழும் சூழ்ச்சியென்ன என்று எங்களுக்கு புரியாமல் இல்லை” என்றார். கருணாகரர் அவரை நோக்காமல் “நமது எல்லைகள் மிகுந்துள்ளன. இந்த மணம்கொள்ளலை கலிங்கர் விரும்பவில்லையென்றால் அவர் மகதனுடனும் மாளவனுடனும் கூர்ஜரனுடனும் கூட்டுச் சூழ்ச்சியில் ஈடுபடக்கூடும். ஒருவேளை எல்லைகளில் படைநகர்வு நடக்கலாம். அதை எதிர்கொள்ளும்பொருட்டு நமது எல்லைகள் அனைத்திலும் படைகளை நிறுத்த வேண்டியுள்ளது. அப்படைநகர்வுக்கான ஆணைகள் இங்கு இவ்வவையில் பிறப்பிக்கப்படும்” என்றார்.

மீண்டும் கைதூக்கி எழுந்த சீர்ஷர் “அந்த ஆணையின் உள்ளடக்கமென்ன என்று இப்போது என்னால் சொல்ல முடியும். காளகக்குடிகளை பல குழுக்களாகப் பிரித்து எல்லைகளுக்கு அனுப்பப்போகிறீர்கள். விஜயபுரியின் அரசருக்கு விதர்ப்பப் படைத்தலைவன் சிம்மவக்த்ரன் காவலனா? அன்றி சிறைக்காப்பாளனா?” என்றார். நளன் ஏதோ சொல்வதற்குள் நாகசேனர்  “இந்த அவை மங்கல அவை. அரசுசூழ்தலை நாம் தனியவையில் பேசலாம்” என்றார். “இந்த அவையில்தான் இவ்வறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன” என்றார் சீர்ஷர். “ஆம், அறிவிப்புகளில் உடன்பாடு இல்லையென்றால் மறுபரிசீலனை செய்ய முடியும். இந்த அவையில் அயல்நாட்டு வருகையாளர் பலர் உள்ளனர்” என்றார் நாகசேனர்.

நளன் எழுந்து “பொறுத்தருள்க, மூத்தவரே. இவ்வறிவிப்புகளில் பலவற்றை நானே இப்போதுதான் கேட்கிறேன். தங்களுக்கு உடன்பாடில்லாத அனைத்தையுமே குறித்துக்கொள்ளுங்கள். தனியவையில் நாம் அவற்றை பேசுவோம். உங்கள் ஒப்புதல் இல்லாமல் எந்த ஆணையும் இங்கு நிறைவேற்றப்படாது. இதை நான் உறுதியளிக்கிறேன்” என்றான். சீர்ஷர் “எவரும் எங்களுக்கு கொடையளிக்க வேண்டியதில்லை. இந்நகரே இன்று அரசனென ஒருவனை ஏற்றுக்கொண்டுள்ளது. பிறிதெவரையும் அது ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையை உணர்வதற்கு அறிவுகூடத் தேவையில்லை, விழிகூர்ந்தால் போதும். ஏன், இங்கமர்ந்து செவிகூர்ந்தாலே போதும்” என்றார். “நன்று, நாம் அனைத்தையும் பிறகு பேசுவோம். அவை நிறைவுகொள்ளட்டும்” என்று நளன் சொன்னான்.

அவைமங்கலத்தை நிமித்திகர் அறிவித்து தலைவணங்கியதும் இசை முழங்கியது. நளன் எழுந்து அவையை மும்முறை வணங்கினான். அவன் முடியையும் கோலையும் ஏவலர் பெற்றுக்கொண்டனர். வலப்பக்கம் திரும்பி வெளியேறும் வழியில் சீரடி வைத்து நடந்தான். முடியை அளித்தபின் தமயந்தியும் எழுந்து அவனை தொடர்ந்தாள். அவள் ஆடைதாங்கிய சேடிகள் பின்னால் சென்றனர். அவர்களின் அருகே வந்த கருணாகரர் தாழ்ந்த குரலில் “முதலில் இந்த மணநிகழ்வு நிறைவடையட்டும், அரசே. பிற ஆணைகள் அனைத்தையுமே ஒரு மாதம் கடந்தபின் நாம் கூடி முடிவெடுப்போம்” என்றார். தமயந்தி “ஆணைகளை மாற்றிக்கொள்ளும் வழக்கம் எனக்கில்லை, அமைச்சரே” என்றாள்.

கருணாகரர் “ஆம், அதை நான் அறிவேன். ஆனால் சீர்ஷர் உளநிலை பெரிதும் திரிபடைந்திருக்கிறது. நகர்மக்கள் புஷ்கரருக்கு அளித்த வரவேற்பு அவரது ஆணவத்தை தூண்டிவிட்டிருக்கிறது” என்றார். தமயந்தி “வெறும் ஆணவங்களாலோ கனவுகளாலோ அரசுகள் கைப்பற்றப்படுவதில்லை, ஆளப்படுவதுமில்லை. படைவல்லமையே இறுதி” என்றாள். “அதைக் கண்டபின்னரே அவர்களுக்குப் புரியும் என்றால் அதன் முதற்குறிப்பை அவர்களுக்குக் காட்டவும் நான் சித்தமாக இருக்கிறேன்.” நளன் எரிச்சலுடன் “இது என்ன பேச்சு? அவன் என் இளையோன். எதையும் அவனிடம் நேரடியாக சொல்லுமிடத்தில்தான் என்றும் நான் இருக்கிறேன்” என்றான்.

கருணாகரரிடம் “அமைச்சரே, அவனை உணவுக்கூடத்துக்கு வரச்சொல்லுங்கள். அங்கு அனைவரும் அமர்ந்து உண்போம். அமுதின் முன் உள்ளங்கள் கனியும். எளிய ஆணவங்களும் காழ்ப்புகளும் கரைந்து மறையும். அங்கு பேசுவோம்” என்றான். “ஆம், அது நன்று” என்றார் கருணாகரர். தமயந்தி “எனக்கு சற்று தலைநோவு உள்ளது. என் அறைக்குச் சென்று ஓய்வெடுத்துவிட்டு குடியவைக்கு வருகிறேன்” என்றாள். “இல்லை. இன்று என் சமையல். வெளியே குடிகளுக்கும் அதுவே. நாம் சேர்ந்தமர்ந்துண்ணவேண்டும்” என்று நளன் சொன்னான். தமயந்தி சிலகணங்கள் எண்ணம் கூர்ந்தபின் “அவ்வாறே” என்றாள்.

flowerகுடியினருக்கான உணவுக்கூடங்களை ஒட்டியே அரசகுடிகளுக்கான உணவுக்கூடம் இருந்தது. நளனும் தமயந்தியும் அவைக்கோலம் களைந்து கைகால் தூய்மை செய்து அங்கு சென்றபோது முன்னரே கால்குறைந்த நூற்றெட்டு ஊண்பீடங்கள் போடப்பட்டு அவற்றில் தளிர்வாழை இலைகள் விரிக்கப்பட்டிருந்தன. ஊண்கூடத்தின் செயலகர் வந்து வணங்கி “அமர்ந்தருள்க, அரசே!” என்றார். நளன் தமயந்தியிடம் “முதலில் நீ சென்று அமர்ந்துகொள்” என்றான். தமயந்தி “அரசர் முதலில் அமரவேண்டுமென்பது நெறி” என்றாள். “இல்லை, இங்கு நான் உணவை பரிமாற நிற்கிறேன்” என்றான். தமயந்தி முகம் சுளித்து “விளையாடுகிறீர்களா?” என்றாள். நளன் சிரித்து “முடி கழற்றிவிட்டேன். வேண்டுமென்றால் இந்த அணிகளையும் கழற்றிவிடுகிறேன். அடுமனையாளனாக நிற்கும்போது நான் அடையும் உவகை எப்போதும் பெற்றதில்லை” என்றான்.

தமயந்தி ஏதோ சொல்ல வாயெடுத்தபின் “சரி” என்றாள். அரசிக்குரிய உலையா நடையில் சென்று தந்தத்தால் குறுங்கால்கள் அமைக்கப்பட்ட பீடத்தின் மேல் அமர்ந்தாள். அவளைத் தொடர்ந்து இந்திரசேனையும் இந்திரசேனனும் அமர்ந்தனர். நளன் “குடித்தலைவர்கள் வருக!” என்றான். தங்கள் கோல்களை வைத்துவிட்டு உள்ளே வந்த குடித்தலைவர்கள் ஒவ்வொருவரையாக அவனே அழைத்து வந்து மணைகளில் அமரவைத்தான்.

காளகக்குடி மூத்தவர்கள் அவரிடம் வந்ததும் முகம் மலர்ந்து “இனிய உணவு, அரசே. அந்த மணமே அது என்ன என்பதை காட்டுகிறது. நீண்ட நாள் ஆயிற்று, தங்கள் கையால் உணவுண்டு” என்றனர். “இன்று இரவும் நானே அடுமனை புகலாம் என்று நினைக்கிறேன்” என்றான் நளன். கருணாகரர் “இரவு தாங்கள் குடியவையில் அமரவேண்டும்” என்றார். “ஆம். என்ன செய்ய வேண்டுமென்று ஆணைகளை கொடுத்துவிட்டு வருகிறேன். இரவு உணவுக்கும் இந்நகரத்தவர் எனது சமையலையே உண்ணவேண்டும்” என்றான் நளன். கருணாகரர் “நான் சென்று இளவரசரையும் பிறரையும் அழைத்து வருகிறேன்” என்றார். நளன் அடுமனையாளர்களுக்கு ஆணைகளை இட்டு உணவுக்கலங்களை கொண்டுவரச் செய்தான்.

ஊண்கூடம் நிறைந்துகொண்டிருந்தது. கருணாகரர் புஷ்கரனுடன் வந்தார். புஷ்கரன் நளன் அருகே வந்து “நான் புலரியில் எழுந்ததனால் சற்று தலைசுற்றலாக இருக்கிறது. நல்லுணவுகூட எனக்கு சுவைக்குமென்று தோன்றவில்லை” என்றான். நளன் சிரித்து “எந்நிலையிலும் எவருக்கும் சுவைக்கும் உணவு இது, இளையோனே. அமர்க!” என்று அவன் தோளைத் தழுவி அழைத்துச்சென்று அவனுக்கான பீடத்தில் அமரவைத்தான். அடுமனை உதவியாளன் ஒருவன் ஓடிவந்து நளனிடம் “கன்னல் சுவையுணவு ஒன்று உள்ளது, அரசே. அது தொடக்கவுணவா, நிறைவுணவா?” என்றான். “தேன் கலந்ததா?” என்றான் நளன்.

இரு குலத்தலைவர்களுடன் நடந்து வந்த சீர்ஷர் நளன் தன்னை வரவேற்பதற்காக காத்து நின்றார். நளன் “இரு, நானே காட்டுகிறேன். அது மகதநாட்டு உணவு” என்றபடி .உள்ளே சென்றான். மேலும் சற்று நோக்கிவிட்டு சீர்ஷர் உள்ளே சென்றபோது அவருக்கான இருக்கை மட்டும் ஒழிந்துகிடந்தது. அதை நோக்கி ஓர் எட்டு வைத்தபின் அவர் நின்று “காளகக்குடிகளுக்கு முதன்மை இடம் இங்கு இல்லையா?” என்றார். கருணாகரர் “அமர்க காளகரே… அனைத்தும் முறைப்படியே நிகழ்கிறது” என்றார். அவர் அமர்ந்துகொண்டு தலையை நிமிர்த்தி சுற்றி நோக்கினார். இலைகளில் சிறிய தொடுகறிகள் முன்னரே விளம்பப்பட்டிருந்தன. அடுமனையாளர்கள் தேனமுதையும் தோயமுதையும் புட்டமுதையும் கனியமுதையும் பாலமுதையும் சீராக விளம்பிவந்தனர். ஐந்தமுதுக்குப் பின் அன்னமும் அப்பமும் பரிமாறப்பட்டன.

இடைவலி கொண்டவர்போல நெளிந்தும் திரும்பியும் அமர்ந்திருந்த சீர்ஷர் உரத்த குரலில் “இந்த உணவு இந்திரனுக்கு படைக்கப்பட்டதா?” என்றார். உள்ளிருந்து வணங்கியபடி விரைந்து வந்த நளன் “ஆம், இங்கு அடுமனைகளில் சமைக்கப்படும் அனைத்து உணவுகளும் முதலில் நகராளும் விண்தேவனுக்கு படைக்கப்படுகின்றன. அதுவே நெடுநாள் முறைமை” என்றான். சீர்ஷர் “அப்படியென்றால் இந்திரன் உண்ட மிச்சிலா இங்கு கலியின் குடிகளுக்கு அளிக்கப்படுகிறது? காளகர் அமர்ந்து நக்கி உண்ணப்போவது அதையா?” என்றார். காளகக்குடியினர் திகைப்புடன் நோக்க “கலியின் குடிகளே, நீங்கள் உண்பது எதை?” என்று அவர் கைவிரித்து கூச்சலிட்டார்.

நளன் முகம் சுருங்க “உணவு எப்போதுமே தேவர்களின் மிச்சில்தான், மூத்தவரே. தேனீக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் வண்டுகளும் என அவர்கள் வந்து உண்ட மிச்சத்தை மட்டுமே உயிர்க்குலங்கள் உண்ணமுடியும்” என்றான். சீர்ஷர் வெறுப்பில் சுளித்த முகத்துடன் “நான் இங்கு நெறிநூல் பேச வரவில்லை. நாங்கள் கலியின் குடிகள். எங்கள் தெய்வத்தை இழித்து தென்னகக்காட்டுக்குத் துரத்திய பிற தெய்வம் அதோ அக்குன்றின் மேல் எழுந்து நிற்கிறது. அதற்கு படைக்கப்பட்ட மிச்சிலை உண்ணும் நிலை உங்களுக்கு இருக்கலாம், காளகருக்கு இல்லை” என்றார்.

காளகக் குடித்தலைவர்கள் இருவர் அவர் தோளைத்தொட்டு ஏதோ சொல்ல அதைத் தட்டி விலக்கியபடி அவர் பாய்ந்து எழுந்தார். “ஆண்மையற்று சோற்றுக்காக வந்தமர்ந்து காளகக்குடியையே இழிவுபடுத்துகிறீர்கள், மூடர்களே…” என்றார். “எழுக… இந்த உணவு நமக்குத் தேவையில்லை.” நளன் குரல் சற்றே மாற அழுத்தமாக “உண்ணுங்கள், மூத்தவரே” என்றான். “எனக்கு ஆணையிடுகிறாயா?” என்றபடி சீர்ஷர் அவனை நோக்கி கை நீட்டினார். “நான் காளகப்பெருங்குடியின் தலைவன். அதை மறக்காதே!” நளன். “ஆம், நான் உங்களுக்காக சமைத்த உணவு இது, மூத்தவரே” என குரல் தழைய சொன்னான். “சீ” என்று சீறிய சீர்ஷர் தன் இடதுகாலால் ஊண்பீடத்தில் இலையில் பரிமாறப்பட்டிருந்த உணவை மிதித்து எறிந்தார். அன்னம் கூடம்முழுக்க சிதறியது. சிலம்பிய குரலில் “இது எனக்கு நாய் வாய்வைத்த இழிவுணவு… கீழ்மகன் கைபட்ட நஞ்சு!” என்றார். நளன் உடல் பதற “மூத்தவரே…” என்றான். “எழுங்கள், மூடர்களே!” என்ற சீர்ஷர் மீண்டும் ஒருமுறை அன்னத்தை காலால் எற்றினார். “இந்த மிச்சிலை உதைத்தெறிந்துவிட்டு கிளம்புங்கள்! நாம் யாரென்று காட்டுங்கள்!” காளகக்குடி மூத்தவர் அனைவரும் எழுந்தனர்.

சிறியதொரு சிட்டின் குரலென நளனின் உடைவாள் உறையிலிருந்து வெளிக்கிளம்பும் ஒலி எழுந்தது. மின்னலொன்று அறைக்குள் வெட்டி ஒடுங்கியதுபோல வாள் சுழன்றமைந்தது. சீர்ஷரின் தலை குருதி சுழன்று சிதறி மாலையென நீர்க்கலம் விழும் ஒலியுடன் நிலத்தில் விழுந்து உருண்டு தமயந்தியின் காலடியில் சென்று அமைந்தது. கொதிக்கும் கலமென சிறுகொப்புளங்கள் ஓசையுடன் வெடிக்க சீர்ஷரின் உடல் பின்னால் சரிந்து சுவரில் மோதி நின்று கைகால்கள் உதறிக்கொள்ள அனல்பட்டதென சிலமுறை துடித்து விதிர்த்து மெல்ல சரிந்து விழுந்தது.

NEERKOLAM_EPI_34

குருதி வழியும் வாளை ஆட்டி தாழ்ந்த குரலில் நளன் சொன்னான் “அமுதைப் புறக்கணித்து இந்த அவையிலிருந்து எழும் எவரும் தலையுடன் வெளிச்செல்ல ஒப்பமாட்டேன்… உண்ணுங்கள்!” காளகக்குடியினர் தங்கள் இலைகளில் அமர்ந்தனர். அவர்களின் உடல்கள் உருளைக்கல் தேரில் அமர்ந்திருப்பவர்கள்போல நடுங்கித் துள்ளின. உணவை அள்ள முடியாமல் கைகள் ஆடின. புஷ்கரன் இரு கைகளாலும் தலையை பற்றிக்கொண்டு உடல் பதற குனிந்தமர்ந்திருந்தான். “உண்ணுங்கள்!” என்று நளன் ஆணையிட்டான். அனைவரும் திடுக்கிட்டு பதறிய கைகளால் அன்னத்தை அள்ளி உண்ணத் தொடங்கினர்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 33

32. மின்னலும் காகமும்

flowerகாகக்கொடியை அதுவரை புஷ்கரன் தேர்முனையில் சூடியிருக்கவில்லை. இந்திரபுரியின் மின்கதிர்கொடியே அவன் தேரிலும் முகப்பு வீரனின் கையிலிருந்த வெள்ளிக்கோலிலும் பறந்தது. விஜயபுரியிலிருந்து கிளம்பும்போது அவனுடன் குடித்தலைவர் சீர்ஷரும் மூத்தோர் எழுபதுபேரும் அகம்படியினரும் அணிப்படையினரும் வந்தனர். கிளம்பும்போதே எவரெவர் வரவேண்டும் என்று அங்கே சிறிய பூசல்கள் நிகழ்ந்தன. “இது ஒரு அரசச் சடங்கு. இதை நாம் மறுக்க இயலாது. ஆனால் இதை நாம் பெரிதாக எண்ணவில்லை என்றும் அவர்களுக்கு தெரிந்தாகவேண்டும். எண்ணி அழைக்கப்பட்ட எழுவர் மட்டிலும் பங்கெடுத்தால் போதும்” என்றார் சீர்ஷர்.

“ஆம்” என்று சொன்னாலும் குடிமூத்தார் அனைவருமே வரவிழைந்தார்கள். எவரை விடுவது என்று புஷ்கரனால் முடிவெடுக்க இயலவில்லை. அதை அவன் சீர்ஷரிடமே விட்டான். அவர் தன் குடும்பத்தினரிலேயே அறுவரை தெரிவுசெய்து உடன் சேர்த்துக்கொண்டார். அதை குடிமூத்தாராகிய சம்புகர் வந்து புஷ்கரனிடம் சொல்லி “அரசநிகழ்ச்சியை மட்டுமல்ல அதன்பின் இங்கு நிகழவிருக்கும் மணநிகழ்வையே நாங்கள் புறக்கணிக்கவிருக்கிறோம்” என்றார். பதறிப்போய் அவர் விரும்பும் அனைவரையும் சேர்த்துக்கொள்ள அவன் ஒப்புதலளித்தார். அன்றுமாலைக்குள் பன்னிரு மூத்தார் வந்து அவனெ சந்தித்தனர். இரவுக்குள் நாற்பதுபேர் கிளம்புவதாக ஒருங்கு செய்யப்பட்டது. புலரியில் எழுபதுபேர் வந்து முற்றத்தில் நின்றிருந்தனர்.

புலித்தோலும் கரடித்தோலும் போர்த்தி, தலையில் குடிக்குறியான இறகுகளுடன், குடிமுத்திரை கொண்ட கோல்களை வலக்கையில் ஏந்தியபடி நின்றிருந்த காளகர்களை அவன் திகைப்புடன் நோக்கினான். இவர்களைக்கொண்டு ஓரு தென்னிலத்துப் பேரரசை உருவாக்க கனவு காண்பதன் பொருளின்மை அவனை வந்தறைய சோர்வு கொண்டான். அவனுடைய சோர்வை உணராத சீர்ஷர் “நல்ல திரள்… நாம் சென்றுசேரும்போது இன்னமும் பெருகும். அவர்கள் அஞ்சவேண்டும்” என்றார். அவர்தான் திரள்தேவையில்லை என்று சொல்லியிருந்தார் என்பதையே மறந்துவிட்டிருந்தார்.

புரவியில் சென்ற கொடிவீரனையும் அறிவிப்பு முரசுமேடை அமைந்த தேரையும் தொடர்ந்து இசைச்சூதரும் அணிப்பரத்தையரும் சென்றனர். அதைத் தொடர்ந்து குடிமூத்தார் தேர்களிலும் வண்டிகளிலும் செல்ல அவனுடைய தேர் தொடர்ந்தது. அவனுடன் ஏறிக்கொண்ட சீர்ஷர் “நாம் விஜயபுரியை வென்றதும் முதலில் வெள்ளிக் காப்பிடப்பட்ட தேர் ஒன்றை செய்தாகவேண்டும். இந்தத் தேர் அரசர்களுக்குரியதல்ல. நம் குருதியை கையாளும் அந்த ஷத்ரியப்பெண் வெள்ளித் தேரில் செல்கையில் நாம் இப்படி செல்வதே இழிவு” என்றார். அவர் சற்றுநேரம் பேசாமல் வந்தால் நன்று என்று புஷ்கரன் எண்ணினான்.

ஆனால் அனைத்தையும் தானே நிகழ்த்துவதாக சீர்ஷர் எண்ணிக்கொண்டிருந்தார். தேரை அவ்வப்போது நிறுத்தி வீரர்களுக்கு ஆணைகளை பிறப்பித்தார். திரும்பி அவனிடம் “நான் எப்போதும் கூர்நோக்குடன் இருப்பவன். இப்போது விஜயபுரியில் நாம் இல்லை. எதிரிகள் படைகொண்டுவந்தால் என்ன செய்வது?” என்றார். புஷ்கரன் எரிச்சலுடன் “இருந்தால் மட்டும் என்ன? நானாவது போர்க்களம் புகுந்திருக்கிறேன். நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்றான். அவர் வாய்திறந்து சிலகணங்கள் நோக்கிவிட்டு “இல்லை… ஆனால் அரசுசூழ்தல்… அல்ல, படைக்கள வரைவு…” என்றார்.

புஷ்கரன் ஏளனத்துடன் “நமக்கு எதுவும் தெரியாது. என்னால் எந்தக் களத்திலும் நிற்க முடிந்ததில்லை. இந்த நகரம் மூத்தவரால் பயிற்றுவிக்கப்பட்ட புரவிப்படையாலும் அவற்றை நடத்தும் விதர்ப்ப நாட்டு படைத்தலைவர்களாலும் கைப்பற்றப்பட்டது. அவர்களால் ஆளப்படுகிறது இந்நிலம்” என்றான். அவர் திகைத்து வாயை சிலமுறை அசைத்தார். பின்னர் நடுநடுங்கியபடி “என்ன சொல்கிறாய்? நீ எவரென நினைத்தாய்? நான் உன் தாதனையே பார்த்தவன். அவர் காட்டில் அரக்கு தேடிச்சேர்த்து தலையில் எடுத்துக்கொண்டு சென்று சந்தையில் விற்கையில் கண்களால் கண்டு அருகே நின்றவன். இப்போது நீ இளவரசனாகிவிடுவாயா?” என்று கூவினார்.

அனைத்து தோற்றங்களையும் களைந்து வெறும் கானகனாக மாறி நெஞ்சில் ஓங்கி அறைந்து கூச்சலிட்டார். “மூடா. நான் உன்னை இளவரசன் என்று எண்ணுவது ஒரு சடங்காகத்தான். நீ என்னை சிறுமைசெய்து பேசினால் கைகட்டி நிற்பேன் என எண்ணினாயா?” அவருடைய வாயோரம் எச்சில் நுரைத்தது. “உன் தந்தையின் ஆண்குறி சிறிதாக இருக்கையிலேயே பார்த்தவன் நான். என்னிடம் பேசும்போது சொல்லெண்ணிப் பேசு… ஆமாம்… என்னிடம் எண்ணிப் பேசவேண்டும் நீ.”

புஷ்கரன் “அவருடைய குறியை பார்க்கையில் நீங்களும் அதேபோலத்தான் சிறிய குறி கொண்டிருந்தீர்கள்” என்றான். அவர் விம்மலுடன் ஏதோ சொல்லவந்து சொல்லெழாமல் தவித்து “நிறுத்து! தேரை நிறுத்து! நான் செல்கிறேன்” என்றார். அவன் பேசாமல் நிற்க “நான் இல்லாமல் நீ இந்நகரத்தை ஆள்வாயா? அதையும் பார்க்கிறேன். கீழ்மகனே, நீ யார்? காட்டில் கல்பொறுக்கி அலையவேண்டிய சிறுவன். ஒரு ஷத்ரியப்பெண் உன்னை மணந்தால் நீ ஷத்ரியனாகிவிடுவாயா? அவள் யார்? அவள் உண்மையான ஷத்ரியப்பெண் அல்ல. உண்மையான ஷத்ரியப்பெண் காட்டுக்குலத்தானை மணப்பாளா? அவள் அன்னை சூதப்பெண். அவள் குருதி சூதக்குருதி. அவளுடன் சேர்ந்து நீயும் குதிரைச்சாணி அள்ளிக்கொட்டு. போ!” என்று உடைந்த குரலில் இரைந்தார்.

புஷ்கரன் “இறங்குவதாக இருந்தால் இறங்குங்கள்” என்றான். அவர் இறங்கி கையிலிருந்த கோலை தூக்கி சூழவந்த காளகக்குடிகளை நோக்கி கூச்சலிட்டார். “என்னை சிறுமை செய்தான். காளகக்குடிகளை இழிவுறப் பேசினான். ஒரு ஷத்ரியப்பெண் வந்ததும் குருதியை மறந்துவிட்டான். மூடன்… அடேய், அந்த ஷத்ரியப்பெண் ஒருபோதும் உன் குழவியரை பெறமாட்டாள். அவளுக்கு வெண்குருதி அளிக்க அவள் குலத்தான் இருளில் வருவான்… தூ!”

மூத்தவர் இருவர் அவரை வந்து அழைத்துச்சென்றனர். “விடுங்கள் என்னை. நான் இவனுக்கு படைத்துணையாக வந்தவன். இந்தக் கீழ்மகனின் அன்னத்தை உண்டுவாழவேண்டிய தேவையில்லை எனக்கு” என்று அவர் திமிறினார். “மறந்துவிடுங்கள், மூத்தவரே. இது என்ன சிறிய பூசல்… வாருங்கள்” என்றார் ஒருவர். “இன்கள் இருக்கிறது” என அவர் செவியில் சொன்னார். அவர் விழிகள் மாறின. “காட்டுப்பன்றி ஊனும்” என்றார். அவர் “என்னால் இதை தாங்கிக்கொள்ள முடியாது. என்ன என்று நினைத்தான் என்னை? நான் காளகக்குடிகளின் முதற்தலைவன். இன்னமும் இந்தக் கோல் என் கைகளில்தான் உள்ளது” என்றார்.

NEERKOLAM_EPI_33

“வருக… நாம் நாளை பேசுவோம்” என்று அவர்கள் இழுத்துச்சென்றார்கள். அவர் “இவனை என் மைந்தனைப்போல வளர்த்தேன். கோழை. இவன் செய்த அருஞ்செயல் என்ன, போருக்குப் போனபோதெல்லாம் புண்பட்டு விழுந்ததல்லாமல்? இவன் தொடையில் பாய்ந்தது எவருடைய வேல்? அறிவீரா? இவனே வைத்திருந்த வேல் அது. அதன் முனைமேல் தவறி விழுந்தான். சிறுமதியோன்” என்றார். அவர்கள் “போதும். அதை பிறகு பேசுவோம்” என அவரை பொத்தி அப்பால் அழைத்துச்சென்றார்கள்.

புஷ்கரன் தன் முகத்தில் ஒரு புன்னகை இருப்பதை அதன் பின்னரே உணர்ந்தான். அவரை புண்படுத்தி எதை அடைந்தேன்? அவரை சிறுமை செய்வதனூடாக எதையோ நிகர்செய்கிறேன். அவ்வெண்ணம் மீண்டும் எரிச்சலை கிளப்ப அவன் முகம் மாறுபட்டது. என்னவென்றறியாத அந்த எரிச்சலுடனும் கசப்புடனும்தான் அப்பகலை கடந்தான். விஜயபுரியில் இருந்து இந்திரபுரிக்கு தேர்ச்சாலை போடப்பட்டிருந்தது. பல இடங்களில் சிற்றோடைகளுக்குமேல் மரப்பாலங்கள் இருந்தன. இரு இடங்களில் பெருநதிகளுக்குமேல் மிதக்கும்பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நிஷதர்களின் புரவிகள் மட்டுமே அந்த அலைபாயும் பாலங்களில் நடக்க பயின்றிருந்தன.

அவர்கள் இரவில் தங்கிய வழிமாளிகைக்கு அப்பால் படையினர் அமைத்த பாடிவீட்டில் கலிங்க இளவரசி மாலினிதேவியும் அவளுடன் வந்த நிஷதநாட்டுப் பெண்களும் தங்கியிருந்தனர். மாளிகையின் உப்பரிகையில் நின்றபடி அந்தக் கட்டடத்தை அவனால் பார்க்க முடிந்தது. அதைச் சூழ்ந்து நிஷதப்படைவீரர்கள் காவல் நின்றனர். அதன் முற்றத்தில் கலிங்க இளவரசியின் பட்டுத்திரைகொண்ட தேரும் அவள் தோழிகளின் தேர்களும் நின்றன. கலிங்கத்தின் சிம்மக்கொடி பறந்துகொண்டிருந்தது.

அவன் தன்னுள் உள்ள எரிச்சல் ஏன் என்று அப்போதுதான் உணர்ந்தான். அவள் ஓலையை ஏற்று கலிங்கத்திற்கு மாற்றுரு கொண்டு சென்று இரவில் கோட்டைக்குள் நுழைந்து அணித்தோட்டத்தின் கொடிமண்டபத்தில் அவளை கண்டபோதெல்லாம் அவன் நெஞ்சு எகிறி துடித்துக்கொண்டிருந்தது. சூதர்கள் பாடப்போகும் ஒரு பெருநிகழ்வு. வாள்கொண்டு போரிட நேரிடலாம். குருதி வீழலாம். அவளை சிறைகொண்டு தேரில் மேலாடை பறக்க விரையலாம். அவர்கள் வேல்கள் ஏந்தி துரத்தி வரலாம். அம்புகள் அவர்களை கடந்து செல்லலாம்.

அவளை நேரில் கண்டதும் அவனுடைய பரபரப்பு அணைந்தது. அத்தனை எதிர்பார்த்திருந்தமையால், அவ்வெதிர்பார்ப்பு ஏமாற்றமும் நம்பிக்கையும் ஐயமும் அச்சமும் விழைவும் ஏக்கமும் என நாளுக்குநாள் உச்ச உணர்வுகள் கொண்டு வளர்ந்தமையால் அவளும் வளர்ந்து பெரிதாகிவிட்டிருந்தாள். காவியங்களின் தலைவியருக்குரிய அழகும் நிமிர்வும் கொண்டவள். எண்ணி எடுத்து ஏட்டில் பொறிக்கும்படி பேசுபவள். எதிர்வரும் எவரும் தலைவணங்கும் நடையினள்.

ஆனால் அவள் மிக எளிய தோற்றம் கொண்டிருந்தாள். சற்று ஒடுங்கி முன்வளைந்த தோள்களும், புடைத்த கழுத்தெலும்புகளும், முட்டுகளில் எலும்பு புடைத்த மெலிந்த கைகளும் கொண்ட உலர்ந்த மாநிற உடல். நீள்வட்ட முகத்தில் சிறிய விழிகள் நிலையற்று அலைந்தன. அனைத்தையும் ஐயத்துடன் நோக்குபவள் போலிருந்தாள். அடுத்த கணம் கசப்புடன் எதையோ சொல்லப்போகிறவள் என தோன்றினாள். அவள் கன்னத்திலிருந்த கரிய மருவில் அவளுடைய முகநிகழ்வுகள் அனைத்தும் மையம்கொண்டன. பிற எதையும் நோக்கமுடியவில்லை.

அவள் தாழ்ந்த குரலில் “நான்தான்… இங்கே உங்களுக்காக காத்திருந்தேன். என் காவலர்கள்தான் உங்களை அழைத்துவந்தவர்கள்” என்றாள். அவன் அக்குரலின் தாழ்ந்த ஓசையை வெறுத்தான். இரவின் இருளில் அவ்வாறுதான் பேசக்கூடும் என தோன்றினாலும் அக்குரல் அவனை சிறுமை செய்வதாகத் தோன்றியது. அவன் “நான் எவருமறியாமல் வந்தேன்” என்றான். என்ன சொல்லவேண்டும்? காவியங்களில் என்ன சொல்லிக்கொள்வார்கள்? “நீங்கள் எதையும் அஞ்சவேண்டியதில்லை. இங்கிருப்பவர்கள் அனைவரும் என் வீரர்கள்.” அவன் உளம் சுருங்கினான். “அஞ்சுவதா? நானா?” ஆனால் அச்சொற்களை அவன் சொல்லவில்லை. அவள் முகத்திலிருந்த சூழ்ச்சியை எச்சரிக்கையை விளக்கமுடியாத சிறுமை ஒன்றை மட்டுமே உணர்ந்துகொண்டிருந்தான்.

“நாம் கிளம்புவோம். எந்தையின் ஒற்றர்கள் எக்கணத்திலும் உங்களை கண்டுகொள்ளக்கூடும்” என்றாள். “உடனேயா?” என்றான். “அஞ்சவேண்டியதில்லை. நானே அனைத்தையும் ஒருங்கு செய்துள்ளேன். நமக்காக விரைவுத்தேர் ஒன்று வெளியே காத்து நிற்கிறது. எனக்கு உடல்நிலை சரியில்லை என்றே என் தோழி அன்னையிடம் சொல்வாள். நாம் எல்லையை கடந்த பின்னரே கலிங்கம் நான் கிளம்பிச்சென்றதை அறியும்.” அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உண்மையில் அப்போது அவையனைத்தும் கனவென்றாகி மீண்டும் இந்திரபுரியில் விழித்தெழ விழைந்தான்.

“நேராக விஜயபுரிக்கே செல்வோம். நம்மை இணையவிடாது தடுக்க விழைபவர் கலிங்கத்திலும் இந்திரபுரியிலும் உள்ளனர். அவர்களை வெல்வோம்” என்றாள். “நன்று” என்று அவன் சொன்னான். அவள் “ரிஷபரே” என்று அழைக்க அருகே புதருக்குள் இருந்து இளைய கலிங்க வீரன் ஒருவன் வந்து தலைவணங்கினான். “கிளம்புவோம். அனைத்தும் சித்தமாக உள்ளன அல்லவா?” அவன் தலைவணங்கி “ஆணைப்படியே, இளவரசி” என்றான். “ரிஷபர் என் ஆணையை தலைசூடிய ஒற்றர்” என்றாள். அவன்தான் அவர்களை கோட்டைக்கு வெளியே வந்து எதிர்கொண்டவன். சுருள்முடி தோள்கள் மேல் சரிந்த கூர்மீசை கொண்ட இளைஞன். சற்று ஓரக்கண் கோணல் கொண்டிருந்தமையால் அவனுடைய கரிய முகம் அதன் அமைப்பின் அழகனைத்தையும் இழந்திருந்தது.

அவன் சென்றதும் “இங்கே அருகிலேயே நின்றிருந்தானா இவன்?” என்றான். “ஆம். ரிஷபர் எப்போதும் மிகமிக எச்சரிக்கையானவர்” என்றாள். அவன் மேலும் ஏதோ சொல்ல எண்ணி நிறுத்திக்கொண்டான். அவர்களை ரிஷபன் புதர்களினூடாக அழைத்துச்சென்றான். தெற்குச் சிறுவாயில் வழியாக மயானங்களுக்குள் சென்று அப்பாலிருந்த குறுங்காட்டுக்குள் நுழைந்தனர். உள்ளே அவர்களுக்கான விரைவுத்தேரும் புரவிகளும் நின்றிருந்தன. அவன் அவளுடன் தேரில் ஏறிக்கொண்டதும் அவனுடன் வந்தவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டனர். “பெருநடை போதும். குளம்போசை எழலாகாது” என்றான் ரிஷபன்.

அவர்களை அவனே வழிநடத்தி அழைத்துச்சென்றான். இருளிலேயே அவர்கள் மையச்சாலையை அடைந்தனர். வழியில் எதிர்கொண்ட வணிகக்குழுக்கள் எதிரீடு தவிர்த்து அவர்களுக்கு இடைவிட்டன. விடிகையில் அவர்கள் ஒரு குறுங்காட்டுக்குள் நுழைந்து ஓய்வுகொண்டார்கள். பின்னர் காடுவழியாகவே சென்று மாலையில் பிறிதொரு காட்டில் தங்கினர். மறுநாள் காலையில் கலிங்க எல்லையைக் கடந்து விஜயபுரியின் எல்லைக்குள் நுழைந்தனர். பெரும்பாலான பொழுதுகளில் மாலினி அவனிடம் ஏதும் பேசாமல் பாதையை பார்த்துக்கொண்டிருந்தாள். ரிஷபனை அழைத்துச்சென்று தனியாக நின்று ஆணைகளை பிறப்பித்தாள். அவளிடம் அச்சமில்லை என்பதை அவன் கண்டான். அவர்கள் துரத்திவரமாட்டார்கள் என அறிந்திருக்கிறாளா?

அவளிடம் அதைப்பற்றி கேட்கமுடியாது என்று தோன்றியது. அவள் பேசும்போது அவன் மறுசொல் எடுக்கக்கூடும் என்று எதிர்பாராதவளாக தோன்றினாள். அவள் உள்ளம் முழுக்க தமயந்தியே இருந்தாள். “அவள் அன்னைச்சிலந்தி. நச்சுக் கொடுக்கினள். அங்கிருந்து இழைநீட்டி பின்னிக்கொண்டிருக்கிறாள். நிஷதநாடு என்பது அவள் பின்னும் வலையால் மூடப்பட்டுள்ளது” என்றாள். “அவளை ஒருமுறை ஏமாற்றினோம் என்றால் அறைகூவல் ஒன்றை விடுக்கிறோம் என்றே பொருள். அவள் வாளாவிருக்கமாட்டாள்.”

நிஷதநாடென்பதே தமயந்தியால் உருவாக்கப்பட்டது என அவள் எண்ணுவதுபோல் தோன்றியது. மேலும் உற்றுநோக்கியபோது ஷத்ரியர்களால் நிஷதர்களைக்கொண்டு அமைக்கப்பட்டது இந்திரபுரி என அவள் கருதுவது உறுதியாகத் தெரிந்தது. அதை மறுக்கவேண்டும் என விழைந்தான். தமயந்தி வருவதற்கு முன்னரே தென்னகத்தில் பெருநிலப்பரப்பை நளனின் படைகள் வென்றுவிட்டன என்றும் அவள் அடைந்த அனைத்து வெற்றிகளும் நளன் பயிற்றுவித்த புரவிப்படைகளால்தான் என்றும் அவன் தனக்குள்ளேயே சொல்லாடிக்கொண்டான்.

அவள் ஒர் உரையாடலுக்கு வருவாள் என்றால் அவற்றை சொல்லமுடியும். ஆனால் அவள் செவிகொண்டவளாகத் தெரியவில்லை. அவனுக்கும் சேர்த்து முடிவுகளை எடுத்தாள். ஆற்றவேண்டியவற்றை ஆணைகளாக முன்வைத்தாள். “நாம் இன்றிரவே இந்திரபுரிக்கு முறைப்படி செய்தியை அறிவித்துவிடுவோம். அவர்களை நாம் சிறுமை செய்தோமென அவர்கள் சொல்ல வாய்ப்பளிக்கலாகாது. ஆனால் உங்கள் குடிகள் அவர்கள் உங்களை சிறுமை செய்தார்கள் என்பதை அறியவேண்டும். தொல்குடிகள் அவர்களுக்கு உரிய மதிப்பு கிடைக்கிறதா என்பதையே எப்போதும் கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். மதிப்பு மறுக்கப்பட்டதென்பதை பெருஞ்சினத்துடன் எதிர்கொள்வார்கள். அவர்களின் நிலையா உணர்வுகளை நாம் கூர்ந்து கையாளவேண்டும்” என்றாள்.

சற்றே கோடிய புன்னகையுடன் “தொல்குடிகள் நுரைபோன்றவர்கள் என்பார்கள். அவர்களை எண்ணி ஒரு படையை அமைக்கவியலாது என்றும் போர்க்களத்தில் அவர்களை சிறுசிறு குழுக்களாக்கி ஒருவரோடொருவர் காணாதபடி நிறுத்தவேண்டும் என்றும் நெறிநூல்கள் சொல்கின்றன” என்றவள் சிரித்து “அவர்களில் ஒருவர் அஞ்சி ஓடினால் ஏரி கரை உடைவதுபோல மொத்தப் படையினரும் உடன் ஓடத்தொடங்குவார்கள்” என்றாள். அச்சிரிப்பு அவனை எரியச் செய்தது. “ஆனால் அவர்களை உரிய முறையில் கையாளும் அரசுகள் ஆற்றல்கொண்டவையாக நீடிக்கின்றன. உண்மையில் அங்கமும் வங்கமும்கூட தொன்மையான கானகக்குடிகளே.”

அவன் “அதே வரலாறுதானே உங்களுக்கும்? தீர்க்கதமஸின் குருதி கலந்த பழங்குடிகளில் முளைத்தெழுந்தவைதானே உங்கள் அரசுகள் அனைத்தும்?” என்றான். அவள் முகம் சிறுத்தது. கண்களில் வந்த வெறுப்பு அவனை அஞ்சவைத்தது. “எவர் கற்பித்த பாடம் அது?” என்றாள். பேசியபோது சீறும் நாயென பற்கள் தெரிந்தன. “கலிங்கம் சூரியனின் கால்கள் முதலில் படும் நிலம். இருண்டிருந்த பாரதவர்ஷத்தில் முதலில் ஒளிகொண்ட பரப்பு.” அவன் “நான் சொன்னது பராசரரின் புராணமாலிகையில் உள்ள கதை. தீர்க்கதமஸ்…” என்று தொடங்க “அந்தக் கதை பொய்யானது. தீர்க்கதமஸின் குருதியிலெழுந்தவை அங்கம் வங்கம் பௌண்டரம் சேதி என்னும் நான்கு நாடுகள் மட்டுமே” என்றாள்.

அவன் அவளிடம் பேசமுடியாது என கற்றுக்கொண்டான். அவள் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பி “உங்களை வருத்த எண்ணவில்லை. தொல்குடியினர் உரிய தலைமை இருந்தால் வெல்லமுடியும் என்பதற்குச் சான்றே இந்திரபுரி அல்லவா?” என்றாள். அவன் “ஆம்” என்றான். “அவளுக்குத் தெரியும் உங்கள் குடியின் உணர்வுநிலைகள் அனைத்தும். அந்த நாற்களத்தில் மறுபக்கம் நான் அமர்ந்து ஆடவேண்டும். அதைப்பற்றித்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.”

அவன் சோர்வுடன் தேர்த்தட்டில் சாய்ந்தான். கண்களை மூடிக்கொண்டு நீள்மூச்செறிந்தான். “ஆம், உங்கள் சோர்வை அறிகிறேன். உங்கள் உள்ளம் எளிதில் சோர்வுறுவது. அரசுசூழ்வதென்பது உண்மையில் உள்ளத்தின் ஆற்றலுக்கான தேர்வு மட்டுமே. அதை நான் பார்த்துக்கொள்கிறேன்.” அவன் தன் உளச்சோர்வு எதனால் என அறிந்தான். அவளை அவன் தமயந்தியைப்போன்ற ஒருபெண் என எண்ணிக்கொண்டான். அவையில் அவன் அவளைப்பற்றி தமயந்தியிடம் சொல்லும்போதுகூட அதைத்தான் சொன்னான். அவன் சலிப்புடன் தலையை அசைத்தான்.

அவள் அவனை நோக்கவில்லை. சாலையின் இரு மருங்கையும் நோக்கியபடியே வந்தாள். விஜயபுரியை அடைந்ததும் அதன் கோட்டையை ஏறிட்டு நோக்கியபடி “மிகச் சிறிய கோட்டை. எதிரிகளின் தாக்குதலை ஒரு வாரம்கூட தாங்கி நிற்காது” என்றாள். பெரிய போர்த்திறனர் என தன்னைக் காட்டுகிறாள் என்று அவன் கசப்புடன் எண்ணிக்கொண்டான். “உன் நகரம் எதிர்கொண்ட போர்கள் என்னென்ன? உன் தந்தை எந்தப் போரில் வாளேந்தினார்?” என்று கேட்க எண்ணி நாவசையாமல் நின்றான். “ஆம், நாம் இந்நகர் வரை எதிரிகளை வரவிடப்போவதில்லை. ஆயினும் அனைத்துக்கும் சித்தமாக இருக்கவேண்டும் அல்லவா? சரி, இதை எடுத்துக் கட்டிவிடுவோம்” என்றாள்.

நகருக்குள் நுழைந்ததும் அவர்களை காளகக்குடிகள் மலரள்ளி வீசியும் வாழ்த்துக்கூச்சலெழுப்பியும் வரவேற்றனர். தலைப்பாகைகளை அவிழ்த்து வானில் சுழற்றி வீசினர். வீரர்கள் தேரின் பின்னால் கூவியபடி ஓடிவந்தனர். “வாழ்த்துரைப்பது நன்று. ஆனால் அது கட்டற்றதாக இருக்கக்கூடாது. வாழ்த்தொலிகளை முன்னரே நாம் அளிக்கவேண்டும். அதைமட்டுமே அவர்கள் கூவவேண்டும்… இன்னும் இவர்களை பயிற்றுவிக்க வேண்டியிருக்கிறது” என்றாள்.

அவள் அரண்மனையைப்பற்றி என்ன சொல்வாள் என அவன் எண்ணினாரோ அதையே சொன்னாள். “இதுவா அரண்மனை? காவலர்கோட்டம்போல் இருக்கிறதே?” அவன் புன்னகையுடன் “காவலர்கோட்டமேதான்” என்றான். அவளுக்கு அவன் புன்னகை புரியவில்லை. முதல்முறையாக அவள் அதை பார்ப்பதனால் குழப்பம் கொண்டு விழிவிலக்கிக்கொண்டாள். “இடித்துக் கட்டுவோம்” என்றான். அவன் தன்னை ஏளனம் செய்கிறானா என அவள் ஓரவிழிகளால் நோக்கினாள்.

 flowerகாலையில் கிளம்பும்போது சீர்ஷர் வந்து அவனிடம் முந்தையநாள் நடந்த எதையுமே நினையாதவர்போல பேசலானார். “இளவரசி கலிங்கக் கொடியை ஏந்தி முன்செல்ல ஒரு கரும்புரவியை கோரினாள். கலிங்க வீரன் ஒருவன் அக்கொடியுடன் முன்னால் செல்வான் என்றாள்.” அவன் “யார்? ரிஷபனா?” என்றான். அவர் விழிகளுள் ஒரு ஒளி அசைந்து மறைந்தது. “அல்ல, அவன் இளவரசியின் படைத்தலைவன் அல்லவா? ஷத்ரியக்குருதி கொண்டவர்கள் கொடியேந்திச் செல்லமாட்டார்கள். அதற்கு கலிங்க வீரன் ஒருவனை தெரிவுசெய்திருக்கிறாள்” என்றார். “உயரமானவன். அத்தனை உயரமானவர்கள் நம் குடியில் இல்லை.”

“அதனாலென்ன?” என்று அவன் கேட்டான். “தெரியாமல் பேசுகிறீர்கள், இளவரசே. நான் பார்த்துக்கொள்கிறேன். என்னிடம் விடுங்கள்” என்றார் அவர். புஷ்கரன் மேலும் ஏதோ பேசத்தொடங்க “நானே இதை கையாள்கிறேன். இது மிகவும் நுட்பமானது” என்றார். மேலும் பேச அஞ்சி தலைதிருப்பிக்கொண்டான் புஷ்கரன். அவர் கண்களில் தெரிந்த அந்த ஒளி அவனை அச்சுறுத்தியது. அறிவற்ற முதியவர் என்று தோன்றினாலும் சிலவற்றை அந்த அறிவின்மையின் கூர்மையாலேயே உணர்ந்துகொள்கிறார், அவர் உள்ளே நுழைந்து தீண்டும் நாகம் எது என்று. அவர் முந்தையநாள் சொன்ன சொற்றொடர் ஒன்றை சென்றடைந்து அஞ்சி பின்னடைந்தது அவன் நினைவு.

அவர்கள் அன்றுமாலை சுகிர்தபாகம் என்னும் காவலூரை சென்றடைந்தனர். அங்கே அவர்களை எதிர்பார்த்து காளகக்குடிகள் தங்கள் குடிமுத்திரை கொண்ட தோல்பட்டங்களை ஏந்தி வந்து தங்கியிருந்தார்கள். காவலர்தலைவன் அவர்களை எதிர்கொண்டழைத்துச் சென்று அவனுடைய மாளிகையில் தங்கச்செய்தான். காளகக்குடிகள் அவனுக்கு பரிசில்கள் அளித்து உவகை கொண்டாடினர். “நாம் முடிசூடும் நாள் அணுகுகிறது என்கின்றன தெய்வங்கள். நேற்றுகூட எங்கள் பூசகரில் காகதேவர் எழுந்தருளி நற்சொல் உரைத்தார்” என்றாள் விழுதுகளாக சடைதொங்கிய மூதாட்டி ஒருத்தி. “நம் குலம் பெருகி இம்மண்ணை ஆளும். ஐயமே இல்லை. அது தெய்வச்சொல்” என்றார் மூத்தார் ஒருவர்.

வணிகர்தலைவரின் பெரிய இல்லத்தில் மாலினிதேவி தங்கினாள். அங்கே அவளுக்கு மஞ்சமும் நீராட்டறையும் உகந்ததாக இல்லை என்று காவலன் வந்து சொன்னான். வணிகர்தலைவரின் மனைவியை அதன்பொருட்டு அவள் கடுஞ்சொல் சொன்னாள் என்றான் காவலன். அருகே நின்றிருந்த சீர்ஷர் “அவள் இளவரசி அல்ல. இளவரசியர் இத்தனை சிறுமை கொள்வதில்லை” என்றார். புஷ்கரன் அவரை திரும்பியே பார்க்கவில்லை. அவன் கேட்கவேண்டும் என்று “அவளை இப்போதே நாம் உரிய இடத்தில் வைத்தாகவேண்டும். காளகக்குடியின் நெறிகளை அவள் அறியவேண்டும். காளகக்குடி இப்புவியின் முதல்குடி. நாளை உலகாளவிருப்பது. அதை அறியாமல் எங்கள் குடியின் முத்திரை கொண்ட தாலியை அவள் அணியக்கூடாது” என்றார் சீர்ஷர்.

“என்ன நடந்தது?” என அவன் எரிச்சலுடன் கேட்டான். “அவள் என் அரசி அல்ல. அவள் ஆணையை ஏற்குமிடத்திலும் நான் இல்லை” என்றார் சீர்ஷர். “அவள் உங்களிடம் ஆணையிட்டாளா?” என்றான். “ஆணையிட்டால் அவள் நாவை பிழுதெடுப்பேன். என் ஆணையை அவள் மதிக்கவில்லை. மதிக்கவேண்டும் என அவளிடம் சொல்.” புஷ்கரன் “நான் இப்போது எச்சொல்லும் உரைக்கும் நிலையில் இல்லை” என்றான். “அதுதான் இடர். நீ அவளுக்கு அடிமையாகிவிட்டாய். அவள் காலடியை தலைசூடுகிறாய். அவள் காளகக்குடியின் தலைமேல் கால்வைத்து அமர விரும்புகிறாள்” என்றார் சீர்ஷர்.

மறுநாள் அவர்கள் கிளம்பும்போது காளகக்குடிகளின் பல குழுக்கள் வந்து அவர்களுடன் இணைந்துகொண்டன. செல்லச் செல்ல அப்பெருக்கு வளர்ந்தபடியே சென்றது. அவர்கள் இந்திரபுரியின் எல்லையை அடைந்தபோது இரு முனைகளும் ஒன்றையொன்று பார்க்கமுடியாதபடி அது நீண்டு கிடந்தது. தேர்த்தட்டில் நின்று அவன் நோக்கியபோது அதுவரை இருந்த சோர்வு அகன்று உள்ளம் உவகையில் எழுந்தது. அருகே நின்றிருந்த சீர்ஷர் “ஆம், நம் குடி. நாளை உலகாளப்போகும் கூட்டம்” என்றார். அவன் புன்னகையுடன் “அதை மீளமீள கூவிச் சொல்லவேண்டியதில்லை” என்றான்.

“அதை தெய்வங்கள் சொல்லிவிட்டன. தெரியுமல்லவா?” என்றார் சீர்ஷர். “நாளை நாம் நகர்நுழையும்போது பார்ப்பீர்கள், இளவரசே. காளகக்குடி மட்டுமல்ல சபரர்களும் மூஷிகர்களும் சுவனர்களும் பாரவர்களும் பரிதர்களும் என நிஷாதகுடிகள் அனைத்தும் திரண்டு வந்து அவர்களின் மெய்யான அரசர் எவர் என அறைகூவுவதை கேட்பீர்கள். நாளை அனைத்தும் முடிவாகிவிடும்.” அவன் இனிய சலிப்புடன் “பேசாமலிருங்கள், மூத்தவரே” என்றான். “நாம் இன்று வெளியே தங்கும்படி ஒழுங்கு செய்திருக்கிறார்கள். நாளை முதற்புலரியில் நகர்நுழைகிறோம். அதுவும் நன்றே. பயணக்களைப்புடன் நுழையக்கூடாது. எழுகதிர்போல நகர்மேல் தோன்றவேண்டும்” என்றார். “இன்றிரவு எனக்கு துயில் இல்லை. ஆகவேண்டிய பணிகள் பல உள்ளன.”

அன்றிரவு முழுக்க அவன் பாடிவீட்டுக்கு வெளியே பெருமழை சூழ்ந்ததுபோல காளகக்குடிகளின் ஓசையை கேட்டுக்கொண்டிருந்தான். நெடுநேரம் துயில் மறந்து புரண்டுப்புரண்டு படுத்தபின் விழிமயங்கினான். அக்கனவில் அவனருகே காளைமுகத்துடன் பேருருவம் ஒன்று அமர்ந்திருந்தது. காளைவிழிகள் அவனை நோக்கின. அவ்விழிகளிலேயே அது சொல்வதை அவன் கேட்டான். அவன் “ஆம் ஆம் ஆம்” என்றான். விழித்துக்கொண்டபோது வெளியே ஓசை அதேபோல ஒலித்துக்கொண்டிருந்தது. ஆகவே துயிலவே இல்லை என எண்ணிக்கொண்டான். ஆனால் அவன் உடலசைவைக் கண்ட காவலன் வந்து தலைவணங்கி “விடிவெள்ளி தோன்றிவிட்டது, இளவரசே” என்றான்.

அவன் எழுந்து அமர்ந்தபோது நெஞ்சு அச்சம் கொண்டதுபோல அடித்துக்கொண்டிருந்ததை உணர்ந்தான். அந்த அறைக்குள் பிற இருப்பு ஒன்று திகழ்வதுபோல. அறைமூலைகளின் இருட்டை நோக்கும் உளத்துணிவு அவனுக்கு எழவில்லை. வெளியே சீர்ஷரின் குரல் ஒலித்தது. அவர் உரக்க கூவியபடி அறைக்குள் வந்தார். “கிளம்புவோம். எழுக! அணிகொள்க!” அவன் “ஏன் கூச்சலிடுகிறீர்கள்?” என்றான். சீர்ஷர் “இது உவகைக்குரல், இளையோனே. அங்கே நகருக்குள் மக்கள் கொப்பளித்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் உள்ளே நுழைந்ததும் நகரம் அதிரப்போகிறது. நான் சில ஏற்பாடுகளை செய்துள்ளேன்” என்றார்.

“என்ன?” என்றான். “அவள் மிகப்பெரிய சிம்மக் கொடியை கொண்டுவந்திருக்கும் செய்தியை நள்ளிரவில்தான் அறிந்தேன். பட்டுத்துணியாலான கொடி. ஒருவர் படுத்துறங்குமளவுக்கு பெரியது. ஆகவே நான் உடனடியாக நமக்கு ஒரு கொடியை உருவாக்கினேன். நம் குடியின் கொடி. காக முத்திரை கொண்டது.” அவன் “என்ன சொல்கிறீர்கள்? நான் இந்திரபுரியின் படைத்தலைவன். என் கொடி” என தொடங்க “அதெல்லாம் முன்பு. இப்போது நாம் நகரை வெல்லப்போகும் தொல்குடி. நம் தொல்குடியின் அடையாளம் காகம். நாம் வணங்கும் கலிதேவனின் முத்திரை அது.. அக்கொடியுடன் நாம் உள்ளே நுழைவோம். நம்மைக் கண்டதுமே நகரம் புயல்பட்ட கடல் என்றாவதை காண்பீர்கள்” என்றார் சீர்ஷர்.

“வேண்டாம்… இப்போது இதை செய்யக்கூடாது” என்றான் புஷ்கரன். “நான் நம் குடியினர் அனைவரிடமும் காட்டிவிட்டேன். கொடியை நாற்பதடி உயரமான மூங்கிலில் கட்டிவிட்டோம். அந்த மூங்கிலை ஒரு தேரில் நட்டு அதை நாற்புறமும் கயிறுகட்டி இழுத்து நிற்கச்செய்தபடி நகர்புகவிருக்கிறோம். அனைவரும் அங்கே திரண்டிருக்கிறார்கள்” என்றார் சீர்ஷர். “கிளம்புங்கள், இளவரசே. வரலாறு வந்து வாயிலில் முட்டி அழைக்கிறது. ஆண்மை இருந்தால் அதை எதிர்கொள்க! அறிக, மாமன்னர்கள் இவ்வாறு தங்களை வந்து ஏற்றிக்கொண்ட பேரலைகளின்மேல் துணிந்து அமர்ந்திருந்தவர்கள் மட்டும்தான்!”

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 32

31. நிழற்கொடி

flowerபறவைத்தூது வழியாக கலிங்கத்தில் நிகழ்ந்ததென்ன என்று அன்றே தமயந்தி அறிந்தாள். என்ன சூழ்ச்சி என்று அவளால் கணிக்கக் கூடவில்லை. பேரரசி என்றாலும் அவள் சூழ்ச்சியறியாதவளாக இருந்தாள். களம்நின்று எதிர்கொள்ள எவராலும் இயலாத நிஷதப்புரவிப்படைகளால் வென்றவள். எவரையும் விழிநோக்கிப் பேசுபவள். பானுதேவரை மூன்று முறை மட்டுமே அவள் பார்த்திருந்தாள். அவருக்கு கீழ்க்கலிங்கத்தில் முடிசூட்டி வைத்ததே அவள் கைகளால்தான். அன்று தன்முன் நன்றியும் பணிவுமாக கைகட்டி நின்றவனின் முகமே அவள் நெஞ்சில் இருந்தது. ஆகவே அச்சூழ்ச்சி பானுதேவருக்கு எட்டாமல் பிறிதெவராலோ நிகழ்த்தப்படுகிறதென்று அவள் எண்ணினாள்.

அவள் இயல்புப்படி செய்வதற்கொன்றே இருந்தது. அனைத்தையும் உடைத்துச்சொல்லி அடுத்தது சூழ்வது. ஆகவே புஷ்கரனை தன் தனியறைக்கு அழைத்து நிகழ்ந்த அனைத்தையும் கருணாகரர் அனுப்பிய ஓலையைக் காட்டி விளக்கினாள். அந்தத் தனி அவையில் நாகசேனரும் சிம்மவக்த்ரனும் உடனிருந்தனர். செய்தி கேட்டதும் முதலில் அதிர்ந்து சொல்லிழந்து நோக்கி நின்ற புஷ்கரன் பின்னர் உடல் தளர்ந்து பின்னிருந்த பீடத்தில் அமர்ந்துகொண்டான். அவன் கைகள் நடுங்கிக்கொண்டிருக்க விரல்களைக் கோத்து நெஞ்சோடு சேர்த்தான். விழிதாழ்த்தி நிலம்நோக்கி இருந்தான்.

“புரிந்துகொள்ளுங்கள் இளவரசே, நிஷதகுடி இன்று பாரதவர்ஷத்தை ஆள்கிறது. இரு தலைமுறைகளுக்கு முன்பு கூட இழிசினர் என்று கருதப்பட்டது இக்குலம். இன்று இதன் கொடியை மகதம் முதல் திருவிடம் வரை பறக்க வைத்திருக்கிறோம். இதற்கெதிராக ஆயிரம் குரல்கள் ஒவ்வொரு கணமும் எங்கெங்கோ குமுறிக்கொண்டிருக்கின்றன. பல்லாயிரம் உள்ளங்களில் சினம் நொதிக்கிறது. பலநூறு கரவறைகளில் சூழ்ச்சிகள் இயற்றப்படுகின்றன. தொல்குடிகளுக்குரிய உளஎல்லையை நமது பேரரசரின் சுவைத்திறனால், புரவி நுட்பத்தால் வென்று கடந்தோம். படைதிரட்டி ஷத்ரிய குடிகளை அடக்கினோம். இவர்களின் சூழ்ச்சியை வெல்ல வேண்டியது மூன்றாவது படி. இதிலும் ஏறிவிட்டால் மட்டுமே நமது கொடிவழிகள் இங்கு வாழும்” என்றாள்.

புஷ்கரன் மின்னும் விழிகளுடன் அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். “இச்சூழ்ச்சி உங்களையும் பேரரசரையும் பிரிக்கும் நோக்கம் கொண்டது. இதை அரசர்களே ஆற்றமுடியும். அருமணிகள் பெருங்கருவூலத்திற்குரியவை. உறுதியாக இதில் மகதனின் கை உள்ளது” என்றார் நாகசேனர். புஷ்கரன் எவர் விழிகளையும் நோக்காமல் மெல்லிய குரலில் “அவள் மறுத்தாளா? அவைக்கு வந்து சொல்லிறுத்தாளா?” என்றான். “ஆம், கருணாகரரின் சொற்களில் நாம் ஐயங்கொள்வதற்கு ஏதுமில்லை. நாளையோ மறுநாளோ அவர் இங்கு வந்துவிடுவார். முழுமையாக அனைத்தையுமே அவரிடம் கேட்டு தெரிந்துகொள்வோம். இச்சூழ்ச்சி ஏன் இயற்றப்பட்டது, இதன் விரிவுகளென்ன என்பதை பார்ப்போம்” என்றாள் தமயந்தி.

புஷ்கரன் பெருமூச்சுவிட்டுக்கொண்டு பேசாமலிருந்தான். “அவளை நாம் வென்று கைபற்றுவோம். அது மிக எளிது. ஆனால் நம் இலக்கு அதுவல்ல. நாம் கொள்ளவேண்டியது வடக்கே விரிவடையும் நிலம் கொண்ட அரசொன்றின் இளவரசியை. மகதமோ கூர்ஜரமோ அயோத்தியோ கோசலமோ. நாம் தெற்கே இனி செல்வதற்கு தொலைவில்லை. கிருஷ்ணையை இன்னும் சின்னாட்களில் சென்றடைவோம். அதன்பின் நம் படைகள் விரியவேண்டிய திசை இமயம் நோக்கியே” என்றாள் தமயந்தி. “நாம் முதன்மை ஷத்ரியகுடியின் இளவரசி ஒருத்தியை கொள்வோம். அதன்பின் இந்த கலிங்கச் சிறுநாட்டின் இளவரசியை அடைவோம். அவள் முடியிலா அரசியாக இருக்கட்டும்” என்றார் நாகசேனர்.

சினத்துடன் எழுந்த புஷ்கரன் “நான் மாலினியை மட்டுமே மணம்செய்வதாக இருக்கிறேன். அவளுக்கு என் குறுவாளை அனுப்பியிருக்கிறேன்” என்றான். “இளவரசே, அது சூழ்ச்சி. அக்குறுவாளை அவள் கண்டிருக்கவே வாய்ப்பில்லை” என்றாள் தமயந்தி. “இல்லை, சூழ்ச்சிகள் தெளிவாகி வரட்டும். நான் இன்னும்கூட அவள் சொல்லை நம்புகிறேன்” என்றான் புஷ்கரன். “இளவரசே…” என சிம்மவக்த்ரன் சொல்லத் தொடங்க “போதும்” என்று கைகாட்டியபின் அவன் எழுந்து வெளியே சென்றான். அவனது சீற்றம் மிக்க காலடியோசை இடைநாழியின் மரத்தரையில் நெடுநேரம் ஒலித்துக்கொண்டிருந்தது.

நீள்மூச்சுடன் “அவர் புரிந்துகொள்வார் என எண்ணுகிறேன். ஏனென்றால் இந்நாட்டின் வாழ்வு அவர் வாழ்வேயாகும்” என்றாள் தமயந்தி. நாகசேனர் “அவ்வாறு எண்ணவேண்டியதில்லை, பேரரசி. இதுவரை உலகில் நிகழ்ந்த பேரழிவுகள் பலவும் மானுட இனங்கள் ஐயத்தால், சிறுமையால், பிரிவுப்போக்கால், தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டமையால் எழுந்தவையே” என்றார். அரசி திடுக்கிட்டதுபோல அவரை நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் “நான் மீண்டும் அவரிடம் பேசுகிறேன்” என்றாள். “ஆம், அது ஒன்றே நாம் செய்யவேண்டியது” என்றார் நாகசேனர்.

flowerஓருநாள் கடந்து கருணாகரர் இந்திரபுரியை வந்தடைந்தார். அவரை தனியவையில் தமயந்தி சந்தித்தாள். முறைமைச் சொல்லுக்குப்பின் “பேரரசி, நிகழ்வது ஒர் அரசியல்சூழ்ச்சி. அது கலிங்கன் மட்டும் நிகழ்த்துவதல்ல. அவன் அதில் ஒரு தரப்பு மட்டுமே. நோக்கம் இளவரசரை நம்மிடமிருந்து பிரிப்பது” என்றார். “ஆனால் இப்போது அனைத்தும் தெளிவாகிவிட்டனவே? கலிங்க இளவரசி புஷ்கரரை விரும்பவில்லை என அவையெழுந்து சொல்லிவிட்டாள். அவர் கலிங்கன்மேல் கடுஞ்சினம் கொண்டிருக்கிறார்…” என்றார் நாகசேனர். “எனக்கும் என்ன இது என புரியவில்லை. ஆனால் இதை இவ்வண்ணமே விட்டு நாம் காத்திருப்பது சரியல்ல என உள்ளுணர்வு சொல்கிறது” என்றார் கருணாகரர்.

“என்ன செய்யலாம்?” என்றாள் தமயந்தி. கருணாகரர் “அரசி, இளவரசர் ஒரு போருக்கு செல்லட்டும்” என்றார். “போருக்கா? எவருடன்?” என்றாள் தமயந்தி. “சதகர்ணிகளிடம்… விஜயபுரிக்கு அப்பால் ரேணுநாடுக்கு அவர்கள் பின்வாங்கியிருக்கிறார்கள். தென்னகக் காடுகளில் அவர்களின் குருதியுறவுகொண்டுள்ள தொல்குடிகள் உள்ளனர். அவர்களை திரட்டிக்கொண்டிருக்கிறார்கள்” என்று கருணாகரர் சொன்னார். “ஆம், எப்படியும் அவர்களை எதிர்கொண்டே ஆகவேண்டும். அப்போர் இப்போது நிகழ்க!” தமயந்தி “ஆனால்…” என சொல்லெடுக்க கருணாகரர் புரிந்துகொண்டு “சதகர்ணிகளாக நம் படைகளே கிளர்ந்தெழுந்து விஜயபுரியை தாக்கும். மாமன்னர் நளன் வடக்கே இருக்கிறார். விஜயபுரியின் காவலர் புஷ்கரரே. ஆகவே அவர் களமிறங்கியாகவேண்டும்” என்றார்.

“அவர் தயங்க முடியாது. களம்நிற்கையில் பிற உணர்வுகளனைத்தும் விலகி உள்ளம் கூர்கொள்ளும். அவர் சதகர்ணிகளை வென்றுவந்தால் அவரது ஆணவம் நிறைவடையும். அவருக்கே விஜயபுரியை அளிப்போம்” என்றார் நாகசேனர். “அவ்வெண்ணம் முன்னரே என்னிடமிருந்தது” என்றாள் தமயந்தி. “ஆனால் அவருக்கு தனிநிலம் என்பது காளகக்குடிகளை நம்மிடமிருந்து பிரிக்கும். அவர்கள் மெல்லமெல்ல அந்நிலம் நோக்கிச் சென்று அங்கே குவிவார்கள். அவர்களுக்கு ஒரு நாடு உருவாவது நம்முடனுள்ள பிறகுடிகளை காலப்போக்கில் நம்மிடமிருந்து அகற்றும் ஆசைகாட்டலாக ஆகக்கூடும்.” சிலகணங்களுக்குப்பின் “இப்போது இதை நாம் வெல்வோம். பின்னர் நிகழ்வதை அப்போது பார்ப்போம்” என்றாள்.

அன்று மாலையே ஒற்றனிடமிருந்து புஷ்கரன் நகரிலிருந்து கிளம்பிச்சென்றுவிட்டதாக செய்தி வந்தது. தன் அறையில் ஒற்றனை சந்தித்த தமயந்தி திகைப்புடன் “எங்கே?” என்றாள். “அதை அறிந்துவர ஒற்றர்களை அனுப்பியிருக்கிறோம், பேரரசி. உச்சிப்பொழுதில் வழக்கமாக துயில்கொள்ளும் கொட்டகைக்கு சென்றிருக்கிறார். கொட்டகைக்கு வெளியே விசிறியாட்டும் ஏவலனாக அமர்ந்திருந்த ஒற்றன் அவர் பின்பக்கம் அமைக்கப்பட்ட புதிய வாயிலினூடாக வெளியேறியதை பார்க்கவில்லை. அவர் கோட்டைவாயில் வழியாக வெளியே செல்லவில்லை. தெற்குச் சிறுவாயில் வழியாக மயானங்களுக்குச் சென்று அங்கிருந்து காட்டுப்பாதையில் நுழைந்திருக்கிறார்.”

“தனியாகவா?” என்றாள் தமயந்தி. “இல்லை, உடன் பத்து தேர்ந்த வீரர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் காட்டிலிருந்து பெருவழிக்கு வந்தபோது வணிகனாக சாலையில் சென்ற நம் ஒற்றனால் பார்க்கப்பட்டனர். புஷ்கரர்  உருமாற்றம் கொண்டிருந்தாலும் அவன் அடையாளம் பெற்றான்” என்றான் ஒற்றன். “அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை எனக்கு சொல்லுங்கள். அவர்கள் பெரும்பாலும் விஜயபுரிக்கே செல்லக்கூடும்” என்றாள் தமயந்தி. விஜயபுரிக்கான பாதையில் முழுக்காவலையும் முடுக்குவதாகச் சொல்லி ஒற்றன் சென்றான்.

“ஆனால் அவர்கள் கலிங்கத்திற்கு செல்லக்கூடும்” என்றார் கருணாகரர். “அவர் நாம் சொல்வதை நம்பவில்லை. இளவரசியை நேரில் கண்டு கேட்க சென்றிருக்கிறார். அவரைப்போன்ற முதிரா இளைஞரின் உள்ளம் அப்படித்தான் இயங்கும்.” தமயந்தி “அதுவும் நன்றே. அங்கு சென்று உண்மையை உணரட்டும்” என்றாள். ஆனால் கலிங்கம் செல்லும் பாதைகள் எதிலும் புஷ்கரன் தென்படவில்லை. அவன் எங்கு சென்றான் என்பதை ஒவ்வொரு நாழிகைக்கும் வந்தபடி இருந்த ஒற்றுச்செய்திகள் வழியாக அவள் உய்த்தறிய முயன்றபடியே இருந்தாள். இரண்டு நாட்கள் எச்செய்தியும் வரவில்லை. “அவர் கலிங்கத்திற்கு செல்லவில்லை. கலிங்கத்தின் நமது ஒற்றர்கள் அவரை பார்க்கவில்லை” என்றார் ஒற்றர்தலைவர் சமரர்.

புஷ்கரன் விஜயபுரியை சென்றடைந்துவிட்டான் என்ற செய்தியுடன் தமயந்தியை புலரியில் நாகசேனர் எழுப்பினார். “விஜயபுரியிலா இருக்கிறார்?” என்றபோது தமயந்தி ஆறுதல்கொண்டாள். “ஆம், அரசி. ஆனால் அவருடன் கலிங்க இளவரசி மாலினியும் இருக்கிறாள்” என்றார் நாகசேனர். தமயந்தி “அவளை சிறையெடுத்து வந்துவிட்டாரா?” என்றாள். பின்னர் புன்னகைத்து “அவ்வண்ணம் நிகழ்ந்தாலும் நன்றே” என்றாள். “இல்லை, பேரரசி. அவருக்கு கலிங்க இளவரசி அனுப்பிய தூதுச்செய்தி அவர் இங்கிருக்கையிலேயே வந்திருக்கிறது. அவள் அவர்மேல் கொண்ட காதல் மெய் என்றும் அவருடன் கலிங்கத்தை விட்டு வர ஒப்புதலே என்றும் சொல்லியிருந்தாளாம். அவள் அழைப்பின்பொருட்டே இங்கிருந்து சென்றிருக்கிறார்.”

தமயந்தி ஒன்றும் புரியாமல் நோக்கி நிற்க கருணாகரர் “அவர் அங்கே சென்றதும் கலிங்கத்தின் ஒற்றர்கள் அவரை எதிர்கொண்டிருக்கிறார்கள். இளவரசியை அரண்மனையை அடுத்த மலர்த்தோட்டத்தில் சந்தித்திருக்கிறார். அவருடன் வர இளவரசி ஒப்பினாள். அவளை அங்கிருந்தே அழைத்துக்கொண்டு விஜயபுரிக்கு சென்றுவிட்டார்” என்றார். “விஜயபுரியில் காளகக்குடிகள் இப்போது பெரும்கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இளவரசரின் மணநிகழ்வை எட்டுநாள் விழாவாக அங்கே எடுக்கவிருப்பதாகவும் இரவலருக்கும் சூதருக்கும் கவிஞருக்கும் வைதிகருக்கும் இல்லை எனாது வழங்கவிருப்பதாகவும் முரசறைவிக்கப்பட்டிருக்கிறது.”

flowerஅமைச்சு அவையைக் கூட்டி வந்து அமரும்போதே முழுச்செய்தியும் வந்துசேர்ந்துவிட்டதென தமயந்திக்கு புரிந்தது. நிகழ்ந்ததை கருணாகரர் தெளிவாக சுருக்கி சொன்னார். “அரசி, சூழ்ச்சியின் முழுவடிவும் இப்போது தெளிவாகிவிட்டது. நான் அங்கிருக்கையிலேயே கலிங்கனின் தூதன் இங்கு வந்துவிட்டான். இளவரசரிடம் அவன் சொன்னதென்ன என்று நம் தூதரிடம் இளவரசரே தன் வாயால் சொல்லி அனுப்பியிருக்கிறார்” என்றார். தமயந்தி தலையசைத்தாள். “இளவரசர் சொன்னதை அப்படியே சொல்கிறேன். கலிங்க இளவரசி புஷ்கரருக்கு அனுப்பிய தூது முற்றிலும் மெய். அவள் அவரை உளமணம் புரிந்து கன்யாசுல்கத்துடன் அவர் வருவதற்காக காத்திருந்தாள். அவருடைய குறுவாளும் செய்தியும் அவளுக்கு கிடைத்தது. அதை நெஞ்சோடணைத்தபடி அவள் அவருக்காக காத்திருந்தாள். ஆனால் அந்த மணஉறவு நிகழலாகாதென்று நீங்கள் விரும்பினீர்கள். ஆகவே என்னை தூதனுப்பினீர்கள்.”

தமயந்தி அனைத்தையும் புரிந்துகொண்டு சலிப்புடன் பீடத்தில் சாய்ந்தமர்ந்தாள். கருணாகரர் தொடர்ந்தார் “நான் அங்கு சென்று சொன்னதாக நீங்கள் புஷ்கரரிடம் சொன்னவை முற்றிலும் பொய். நான் அங்கே சென்று கலிங்க இளவரசியை மணக்க புஷ்கரருக்கு விருப்பமில்லை என்றும் நிஷதத்தின் காலடியில் கிடக்கும் கலிங்கம் எப்படி அந்த மணவுறவை விரும்பலாம் என்றும்தான் கேட்டேன். அவையிலிருந்த இளவரசி எழுந்து புஷ்கரரை அவள் முன்னரே உளமணம் புரிந்துவிட்டாள் என்று சொன்னபோது அவள் விரும்பினால் இளவரசருக்கு உரிமைப்பெண்ணாக திகழலாம் என்று நான் சொன்னேன். அவள் சீற்றத்துடன் புஷ்கரன் அவளுக்கு அளித்த குறுவாளைக் காட்டியபோது அந்த வாள் அவளை புஷ்கரன் அரண்மனை மகளிரில் ஒருவராக ஏற்கவே உறுதியளிக்கிறது என்று நான் சொன்னேன்.”

“என்ன இது?” என்று தமயந்தி கூவினாள். உடல் பதற எழுந்து “அரசுசூழ்தலில் இத்தனை கீழ்மை உண்டா என்ன? அங்கே அவைப்பெரியவர்கள் இல்லையா? அந்தணர் எவருமில்லையா?” என்றாள். “அவையிலிருந்த அந்தணர் ஸ்ரீகரரை காசிக்கு அனுப்பிவிட்டனர். பிறர் வாய்திறக்கப்போவதில்லை” என்றார் கருணாகரர். “இப்படி அவைநிகழ்வை மாற்றி சொல்லமுடியுமா? ஒரு சான்றுக்கூற்று கூடவா எழாது?” என்றாள் தமயந்தி. “பேரரசி, அந்த அவையே திட்டமிட்டுக் கூட்டப்பட்டது. அதில் அந்தணர் ஒருவர் இருந்தால் மட்டுமே நான் நம்புவேன் என்பதற்காக ஸ்ரீகரர் மட்டும் அங்கு நிறுத்தப்பட்டார்” என்றார் கருணாகரர்.

“புஷ்கரர் இவையனைத்தையும் நம்புகிறாரா?” என்றாள் தமயந்தி ஏமாற்றத்துடன். “ஆம், அவர் நம்ப விழைவது இது” என்றார் கருணாகரர். “அத்துடன் இச்சூழ்ச்சியின் கண்சுழியாக விளங்கியவரே இப்போது அவருடைய துணைவியென்றிருக்கிறார். அவர் எண்ண விழைவதை இனி கலிங்க இளவரசியே முடிவுசெய்வார்.” தமயந்தி நெடுநேரம் ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் “ஆக, இப்போது நான் இளவரசருக்கு ஒரு ஷத்ரிய மனைவி அமைவதை தடுத்தவள். அவர் குலமேன்மை கொள்வதை அஞ்சுபவள்” என்றாள். அவை மறுமொழி சொல்லவில்லை. “அவர் ஐயம்கொள்ள விழைகிறார். வெறுக்க முயல்கிறார். இனி அவர் நாடுவதே விழிகளில் விழும். பிறிதொன்றை நோக்கி அவர் திரும்பவேண்டும் என்றால் அவர் வாழும் முழு உலகே உடைந்து சிதறவேண்டும்… அது எப்போதும் அனைத்தும் கைவிட்டுப்போன பின்னரே நிகழ்கிறது.”

சிம்மவக்த்ரன் “இனி ஒன்றும் செய்வதற்கில்லை. நாம் மீண்டும் உடன்பட்டே ஆகவேண்டும்” என்றான். “கலிங்க இளவரசிக்கும் புஷ்கரருக்குமான மணநிகழ்வை இங்கேயே சிறப்புற நிகழ்த்துவோம். அதில் தாங்களும் பேரரசரும் கலந்துகொண்டு வாழ்த்துங்கள். குடிகளிடையே பரவிக்கொண்டிருக்கும் ஐயமும் சினமும் ஓர் அறிவிப்பிலேயே விலகும்” என்றான். நாகசேனர் “கூடவே புஷ்கரரை விஜயபுரியின் அரசர் என அறிவிப்போம். காளகக்குடிகளின் எதிர்ப்பு அடங்கிவிடும்” என்றார்.

தமயந்தி “இல்லை, அமைச்சரே. அது நிகழலாகாது” என்றாள். “என் கொடையாக புஷ்கரர் விஜயபுரியின் முடியைப் பெற்று நான் அளித்த கோலை ஏந்தி அமர்வது வேறு. இப்போது வஞ்சத்தால் அவரை வீழ்த்த எண்ணிய என்னை வென்று அதை அவர் அடைந்ததாகவே அவரது குலம் எண்ணும். இன்று அவர்களிடமிருக்கும் ஐயமும் வஞ்சமும் எஞ்சும் வரை அவர்கள் ஒருங்கிணையவும் நிலைகொள்ளவும் நான் வாய்ப்பளிக்கப் போவதில்லை.” நாகசேனர் “ஆனால்…” என்று சொல்ல நாவெடுக்க அவரை அடக்கி “நான் முடிவுகளை எடுத்துவிட்டேன்” என்றாள் தமயந்தி.

தாழ்ந்த உறுதியான குரலில் “புஷ்கரரின் மணநிகழ்வு இங்கே அமையும். அது அரசப்பெருவிழவென்றே ஒருங்கிணைக்கப்படும். அவள் கையைப்பற்றி அவர் கைகளில் என் கொழுநரே கொடுப்பார். விஜயபுரியின் மணிமுடியை அவ்விழவிலேயே அவர் தலையில் நான் சூட்டுவேன். ஆனால் விஜயபுரியின் படையினர் அனைவருமே விதர்ப்ப நாட்டவராகவே இருப்பார்கள். என் ஆணைகொள்ளும் சிம்மவக்த்ரரே அங்கிருந்து அனைத்தையும் இயற்றுவார்” என்றாள் தமயந்தி. “ஒருபோதும் அவர் படைகுவிக்க ஒப்பேன். காளகக்குடிகள் இனி ஒருதலைமுறைக்காலம் ஓரிடத்தில் ஒருங்கிணைய முடியாமல் செய்வேன்.”

“ஆணை, அரசி” என்றார் கருணாகரர். பிறர் தலைவணங்கி “ஆம்” என்றனர். “அரசருக்கு செய்தி செல்லட்டும். விழவுக்கான நாளை நிமித்திகருடன் சூழ்ந்து அறிவியுங்கள்” என்றாள் தமயந்தி. “தலைமையமைச்சரே நேரில் சென்று இங்கு இளவரசரின் மணவிழவை அவரது தமையன் நின்று நடத்திவைக்க விழைவதாகச் சொல்லி அழைத்துவாருங்கள். அவர் வருவார். அவ்விழவை எனக்கெதிரான ஒரு வெற்றிக் களியாட்டாக மாற்றிக்காட்டமுடியும் என எண்ணுவார். அதற்கு நாமும் அவருக்கு ஒரு வாய்ப்பு அளிப்போம்.”

flowerநளன் இந்திரபுரிக்குத் திரும்பியபோது அவனிடம் அனைத்தையும் கருணாகரர் சொன்னார். ஆனால் சொல்லத்தொடங்கிய சற்றுநேரத்திலேயே நளனின் சித்தம் அதிலிருந்து விலகிவிட்டதை அவர் உணர்ந்தார். இறுதியில் மணவிழவு குறித்த செய்தியைச் சொன்னதும் அவன் முகம் மலர்ந்தது. “பெரிய விருந்தொன்றை நிகழ்த்தவேண்டுமென நானும் எண்ணியிருந்தேன். வடபுலத்தில் முற்றிலும் புதிய உணவுகள் சிலவற்றை கற்றேன். பலவற்றை நானே வடிவமைத்தேன். என் மாணவர்கள் என பதினெண்மர் உடனிருக்கிறார்கள். இவ்விழவின் அடுதொழிலை நானே முன்னின்று நடத்துகிறேன்” என்றான். கருணாகரர் பெருமூச்சுடன் “ஆம், அது ஒரு நற்பேறு” என்றார்.

தமயந்தி அதை கேட்டதும் புன்னகைத்து “ஆம், அவரது சித்தம் இப்போது அடுதொழிலில் மட்டுமே அமைந்துள்ளது. அதுவும் நன்றே. இச்சிறுமைகளை அவர் அறியவேண்டியதில்லை” என்றாள். கருணாகரர் குழப்பத்துடன் “இல்லை, பேரரசி. அவர் ஆர்வம் கொள்ளவில்லை. ஆனால் ஒரு தருணத்தில் அனைத்தையும் உணர்ந்தார் என்றால் அதிர்ச்சி அடைவார். நிலைபிறழக்கூடும்” என்றார். “அதை நாம் பின்னர் நோக்குவோம். பிற அனைத்தையும் நீங்களே ஒருங்கிணையுங்கள். பேரரசர் அடுமனையில் ஈடுபட்டிருக்கட்டும். அரியணையமர்வதற்கு மட்டும் அவர் வந்தால் போதும்” என்றாள் தமயந்தி. கருணாகரர் தலை வணங்கினார்.

இந்திரபுரியின் மிகப் பெரிய விழவுகளில் ஒன்றாக இருந்தது புஷ்கரனின் மணப்பேறு. நகரம் பன்னிரு நாட்களுக்கு முன்னரே அணிகொண்டது. கோட்டைமுகப்பிலிருந்து நிஷதபுரியின் எல்லைவரை சாலையை தோரணவளைவுகளால் அழகுசெய்தனர். கோட்டைமுகப்பிலிருந்து அரண்மனைவரை மலர்விரிக்கப்பட்ட சாலை அமைக்கப்பட்டது. நகர்மக்கள் அனைவரும் வந்தமரும் அளவுக்கு பெரிய ஏழுநிலை அணிப்பந்தல் செண்டுமுற்றத்தில் கட்டப்பட்டது. அதன் மேலெழுந்த கொடி அரண்மனை மாடத்துக் கொடிக்கு நிகராகப் பறந்தது. மணமேடையை அரியணைகள் அமையும்படி கட்டியிருந்தனர். அவையில் புஷ்கரன் விஜயபுரியின் மணிமுடியை சூடுவான் என்ற செய்தியை காளகக்குடிகளிடமிருந்து பிறர் அறிந்திருந்தனர். அது இயல்பாக நிகழவேண்டியது என்பதே அனைவரும் எண்ணுவதாக இருந்தது.

நளன் முழுநேரமும் அடுமனையிலும் கலவறையிலும் இருந்தான். அடுமனையாளர்கள் அவனால் எண்ணி எண்ணி சேர்க்கப்பட்டனர். ஒவ்வொருவருக்குமான ஆணைகள் அவனாலேயே முகச்சொல்லாக அளிக்கப்பட்டன. சமையலுக்கான பொருட்கள் ஒவ்வொன்றும் நளனால் நோக்கி தெரிந்து உறுதிசெய்யப்பட்டன. செம்புத் துருவலென அரிசியும் பொன்மணிகளென கோதுமையும் வெள்ளித்தூள் என வஜ்ரதானியமும் வந்து நிறைந்தன. கனிகளும் காய்களும் அவற்றின் மிகச் சிறந்த தோற்றத்தில் இருந்தன. முத்தெனச் சொட்டியது தேன். பொன்விழுதென அமைந்திருந்தது நெய். கலவறை நிறைந்திருப்பதை நோக்கியபடி நின்றிருந்த நளன் திரும்பி தன்னருகே நின்றிருந்த அடுமனைத்தலைவர் கீரரிடம் “கலவறைப் பொருட்களில் திருமகள் அமைந்தால் போதும். பந்தியில் கலைமகள் சுவையென எழுவாள்” என்றான்.

அன்றைய சமையலை இந்திரபுரியில் நிகழ்ந்தவற்றில் பெரிய வேள்வி என்றனர் கவிஞர். நூறு உருவம் கொண்டு எங்கும் நிறைந்திருந்தான் நளன். அவனது ஆணைகள் ஒவ்வொருவர் காதிலும் தனித்தனியாக ஒலித்தன. பலநூறு கைகளால் கண்களால் அவனே அங்கு நிறைந்திருந்து அச்சமையலை நிகழ்த்தினான். ஒவ்வொன்றும் பிறிதொன்றாக உருமாறின. வேறொரு உலகில் அவை ஒன்றென இருந்தன என ஒன்றை ஒன்று கண்டடைந்தன. உப்பில் நிறைவுற்றது புளிக்காய். புளியில் கரைந்தது இஞ்சி. ஒவ்வொரு பொருளிலும் எழுந்து முரண்கொண்டு நின்றது ஒரு சுவை. அது தன் எதிர்ச்சுவையைக் கண்டு தழுவிக்கொண்டதும் நிறைவடைந்தது. அறியா விரல்களால் பின்னிப்பின்னி நெய்யப்படும் கம்பளம்போல சுவைகளை முடைந்து முடைந்து சென்றது ஒரு விசை. விரிந்தெழுந்தது சுவை என்னும் ஒற்றைப்பரப்பு.

திருமகள் கலைமகளாகிய கணம் எழுந்தது. அடுமனைக்குமேல் நறுமணப்புகையின் அன்னக்கொடி ஏறியது. ஊண்முரசு ஒலிக்கத் தொடங்கியதும் மக்கள் ஆர்ப்பொலியும் சிரிப்பொலியுமாக அன்னநிலை நோக்கி வந்து குழுமினர். பேரரசரின் கையால் உண்பதென்பது அவர்கள் நாள் எண்ணிக் காத்திருப்பது. அவன் படைகொண்டு அயல்நாடுகளில் சென்றமையத் தொடங்கியபின் அது பல்லாண்டுகளுக்கொருமுறை நிகழ்வதென்றாகியது. ஒவ்வொரு மூத்தவரும் அறிந்த சுவைகளை சொல்லிச் சொல்லி இளையோர் உள்ளத்தில் அதை பெருக்கினர். சுவையை மானுடரால் நினைவுகூர இயலாதென்பதனாலேயே அதற்கு நிகரென்று பிறிதொன்றை சொன்னார்கள். பிறிதொன்றுக்கு நிகரெனச் சொல்லப்படுவது அதை எட்டும்பொருட்டு எழுந்து எழுந்து வளர்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் எண்ணியிருந்த விருந்து விண்ணவர் அமுதுக்கு நிகரானது. ஆனால் முன்பு அவ்வாறு எதிர்பார்த்துச் சென்றபோதெல்லாம் அதைக் கடந்து நின்றது அவன் கை அளித்த சுவை.

ஊட்டு மண்டபத்தில் எடுத்து வைக்கப்பட்ட உணவுநிரைகளை நோக்கி நின்றிருந்த நளனை அணுகிய கருணாகரர் “அரசே, மணநிகழ்வுக்கு அவை ஒருங்குகிறது. தாங்கள் அணிகொண்டு எழுந்தருள வேண்டும்” என்றார். “ஆம், இதோ” என்றான் நளன். மீண்டும் ஆணைகளை இட்டபடி சுற்றிவந்தான். அந்த உணவுக்குவைமுன் இருந்து அகல அவன் உள்ளம் கூடவில்லை என உணர்ந்த கருணாகரர் “இளவரசர் நகர்புகுந்துவிட்டார், அரசே. அவர் அரண்மனைக்குள் நுழைவதற்கு முன் தாங்கள் அணிகொண்டாகவேண்டும்” என்றார். “இதோ” என்று நளன் சொன்னான். நினைத்துக்கொண்டு “பழத்துண்டுகள்… இவ்வன்னத்துடன் விரல்நீளத்தில் வெட்டப்பட்ட பழத்துண்டுகள் அளிக்கப்படவேண்டும் என்றேனே?” என்றான். “அவை இதோ உள்ளன, அரசே” என்றார் அடுமனையாளர் ஒருவர்.

கருணாகரர் மீண்டும் “அரசே…” என்றார். “இதோ” என்றான் நளன். கருணாகரர் “இளவரசரை எதிர்கொள்ளவேண்டிய புரவிகள் ஒருங்கியுள்ளன. தாங்கள் வந்து உரியனவற்றை தெரிவுசெய்யவேண்டும்” என்றார். “ஆம், நான் சிம்மவக்த்ரனிடம் சொல்லியிருந்தேன்… இதோ…” என மேலும் சில ஆணைகளை இட்டுவிட்டு அவருடன் சென்றான். ஏழு வெண்புரவிகள் அரண்மனை முற்றத்தில் ஒருங்கி நின்றிருந்தன. அவை நளனின் மணத்தை நெடுந்தொலைவிலேயே உணர்ந்து கால்களால் கல்தரையை உதைத்தும் தலைகுனித்து பிடரி உலைய சீறியும் மெல்ல கனைத்தும் வரவேற்றன. அவற்றை அணுகி ஒவ்வொன்றாக கழுத்திலும் தலையிலும் தொட்டு சீராட்டி சிறுசொல் உசாவினான். “ஆம், இவைதான். நான் உரைத்தவாறே அமைந்துள்ளன” என்றான்.

NEERKOLAM_EPI_32

“அரசே, கிளம்புக! அணிகொள்ள நேரமில்லை” என்றார் கருணாகரர். “ஆம், இதோ” என மீண்டும் புரவிகளை கொஞ்சிவிட்டு அவருடன் சென்றான். வெந்நீர் ஏனத்திற்குள் படுத்துக்கொண்டே ஏவலரை அழைத்து அடுமனைக்கான ஆணைகளை விடுத்துக்கொண்டிருந்தான். முந்தையநாள் அந்தியிலேயே புஷ்கரனும் காளகக்குடியின் மூத்தவர்களும் வந்து இந்திரபுரிக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பாடிவீட்டில் தங்கியிருந்தனர். பிறிதொரு அணியாக காளகக்குடிப் பெண்டிருடன் கலிங்க இளவரசி வந்து சோலைக்குடிலில் தங்கியிருந்தாள். அவர்கள் நகர் நுழைவதற்காக நிமித்திகர் வகுத்த பொழுது அணுகிக்கொண்டிருந்தது. நகர்மக்கள் சாலைகளின் இரு பக்கமும் உப்பரிகைகளின் மீது செறிந்து கைகளில் மஞ்சள்பொடியும் மங்கல அரிசியும் மலரிதழ்களும் நிறைந்த தாலங்களுடன் காத்திருந்தார்கள்.

அணியறைக்குள் ஓடிவந்த கருணாகரர் “அரசே, அரசி கிளம்பி அவைக்கு சென்றுவிட்டார்கள். தாங்கள் கிளம்பும்பொழுதைக் கேட்டு ஏவலன் வந்துள்ளான்” என்றார். “உடனே கிளம்புகிறேன். அங்கே கோட்டைவாயிலில் எதிர்கொள்பவர் எவர்?” என்றான். “நாகசேனரும் சிம்மவக்த்ரரும் சென்றுள்ளனர். அவர்கள் அரண்மனை முற்றத்திற்கு வருகையில் நான் இளவரசர் இந்திரசேனருடன் அவர்களை எதிர்கொண்டழைத்து அவைக்கு கொண்டுவந்து சேர்ப்பேன். அவையில் அவருடைய மணநிகழ்வை அரசி முறைப்படி அறிவித்த பின்னர் மங்கல இசைஞரும் அணிச்சேடியரும் சூழ நிஷதர்களின் கொடியுடன் அவர் மணவறைக்குள் செல்வார்.”

நளன் எழுந்தபோது அணிஏவலன் அவன் கால்களின் கழலை திருத்தியமைத்தான். “அடுமனைப்பணி முடித்து பரிமாறும்போது உப்பு குறித்த ஐயம் எழாத அடுமனையாளனே இல்லை” என்றான் நளன் சிரித்தபடி. “இவர்களும் பிறிதொரு நெறியில் இல்லை.” கருணாகரர் புன்னகைத்து “கலைஞர்கள்” என்றார். நளன் சால்வையை எடுத்து அணிந்தபடி கிளம்பினான். கருணாகரர் உடன் வந்தபடி மெல்லிய குரலில் “ஒரு செய்தியை நான் தங்களிடம் சொல்லியாகவேண்டும். அதை இன்னமும் அரசியிடம் சொல்லவில்லை” என்றார். “சொல்க!” என்றான் நளன். “இளவரசர் காகக்கொடியுடன் வந்துகொண்டிருக்கிறார்.”

நளன் புருவங்கள் சுருங்க நின்றான். “நிஷதகுலங்களின் கொடி. அதை நாம் கலிதேவனுக்கான விழவுகளில் அன்றி ஏற்றுவதில்லை இப்போது” என்றார் கருணாகரர். நளனில் எந்த உணர்வும் நிகழாமை கண்டு மேலும் அழுத்தி “இந்திரனின் மின்கதிர்கொடியே நம் அடையாளமென்றாகி நெடுங்காலமாகிறது” என்றார். நளன் அவரையே ஏதும் புரியாதவன்போல நோக்கியபின் புன்னகைத்து “சரி, அதிலென்ன? மூத்தவன் இந்திரனின் அடியவன். இளையவன் கலியின் பணியன். இரு தெய்வங்களாலும் புரக்கப்படுக நம் நகர்” என்றான்.

“இல்லை…” என கருணாகரர் மேலும் சொல்ல “இதையெல்லாம் எண்ணி நம் உள்ளத்தை ஏன் இருள்கொள்ளச் செய்யவேண்டும்? நிகரற்ற விருந்தை இன்று சமைத்துள்ளேன். நானே அதை அவனுக்கு விளம்புகிறேன். சுவையிலாடி தேவர்களைப்போன்று ஆன நம் குடியினர் நம்மை சூழ்ந்திருப்பார்கள். நம்புக அமைச்சரே, இன்று இனியவை அன்றி பிறிது நிகழ வாய்ப்பே இல்லை. இன்றுடன் அத்தனை கசப்புகளும் கரைந்து மறையும். மலர்ந்தும் கனிந்தும் விளைந்தும் கலம்நிறைந்துள்ளது அமுது. அமுதுக்கு மானுடரை தேவர்களாக்கும் ஆற்றலுண்டு” என்றான். கருணாகரர் இதழ்கோட புன்னகை செய்தார். “வருக!” என அவரை அழைத்தபடி நளன் அவைநோக்கி சென்றான்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 31

30. முதற்களம்

flower“தாங்கள் அறிந்திருப்பீர்கள், நெடுநாட்களுக்கு முன் இங்கு நளமாமன்னருக்கும் அவரது தம்பிக்குமான பூசல் ஓர் உணவுக்களத்தில்தான் வெடித்தது. எந்தப் பூசலும் பின்திரும்ப முடியாத ஒரு புள்ளியில் உச்சம்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்லும். அப்புள்ளி ஒரு சொல்லாக, ஒரு செயலாக இருக்கலாம். ஆனால் ஒரு துளிக் குருதி முற்றிலும் வேறானது. குருதி ஒருபோதும் நினைவிலிருந்து அகல்வதில்லை” என்றார் பூர்ணர்.

“குருதியிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று மூத்தவர் சொல்வது அதனால்தான். அது நம் உடலில் ஓடலாம். ஆனால் அது நம்முடையது அல்ல. அது தெய்வங்களால் நேரடியாக கையாளப்படுவது. ஆகவேதான் குருதி தெய்வங்களுக்குரிய பலியுணவு எனப்படுகிறது. சமையலில் முற்றிலும் குருதிநீக்கம் செய்யப்பட்டு நன்கு கழுவிய உணவையே சமைக்கவேண்டும் என நளபாகநூல் சொல்கிறது. குருதியை பொரித்து உண்ணும் வழக்கம் முன்பு நிஷாதர்களிடமிருந்தது. அதை நளமாமன்னர் முற்றிலும் தடைசெய்தார். குருதியை உண்பவன் அவ்விலங்கின் ஆன்மாவில் குடிகொள்ளும் தெய்வங்களை அறைகூவுகிறான் என்பது அவரது சொல்” என்றார் சங்கதர்.

“அன்று என்ன நிகழ்ந்தது என்பது வரலாறு. ஆகவே அது முழுதுணரமுடியாதபடி மிகுதியாக சொல்லப்பட்டுவிட்டது. அத்தருணத்தை வெவ்வேறு வகையில் எழுதியிருக்கிறார்கள் கவிஞர்கள். சூதர்கள் பாடியிருக்கிறார்கள். தங்கள் குலச்சார்பின்படி மூத்தோர் விளக்கியிருக்கிறார்கள்” என்றார் பூர்ணர். பீமன் “கதைகளென சில கேட்டிருக்கிறேன்” என்றான். பூர்ணர் “நிகழ்ந்தவற்றை இன்று நம்மைக்கொண்டு நாம் உணரலாம். நமக்காக நாம் புனைந்துகொள்ளலாம்” என்று தொடர்ந்தார்.

மூத்தவனுக்கும் இளையவனுக்கும் இடையே முன்னரே மோதலும் பிளவும் இருந்து வந்தது. இளையவன் நிஷாதரின் குலதெய்வமான கலியை முதன்மை தெய்வமாக முன்னெடுக்கலானான். மூத்தவன் இந்திரனை தெய்வமென நாட்டியவன். அவன் துணைவி இந்திர வழிபாட்டை தலைமுறைமரபெனக் கொண்ட ஷத்ரியகுடிப்பெண். ஒருகுடை நாட்டி பாரதத்தை ஆள அமர்ந்த சக்ரவர்த்தினி அவள். நிஷதகுடிகளில் பெரும்பாலானவர்கள் தங்கள் குடி வாழ வந்த மூதாதை வடிவமென நளனை எண்ணியவர்களே. அவன் விண்ணுலகு சென்று வென்று வந்த திருமகளென்று தமயந்தியை வழிபட்டவர்களும்கூட. ஆனால் அவர்கள் உள்ளத்தின் ஆழத்தில் கலி முதல் தெய்வமென வாழ்ந்தது. அவர்களின் தொல்குடி மூதாதை வேனனிடமிருந்து அந்த நம்பிக்கை தொடங்குகிறது.

கலி வழிபாட்டை முன்னெடுத்ததுமே குடிகளில் பெரும்பாலானவர்கள் இளவரசன் புஷ்கரனின் ஆதரவாளராக மாறிவிட்டிருந்தனர். தமயந்தி கலி வழிபாட்டுக்கு வந்தது அவர்களின் உள்ளங்களை சற்றே குளிரச்செய்தது. ஆனால் படைகொண்டுசென்றபின் நகர் மீண்ட நளன் கலி வழிபாட்டுக்கு ஆலயத்திற்கு வரவில்லை. அச்செய்தியை புஷ்கரனின் அணுக்கர் குடிகள் நடுவே வாய்ச்செவி வழக்கென பரப்பினர். நளனையும் தமயந்தியையும் வணங்கிய மக்களின் உள்ளம் எளிதில் மாறவில்லை. ஆனால் அவர்கள் அதை உள்ளொதுக்கியமையாலேயே உள்ளிருளில் வாழ்ந்த தெய்வங்கள் அவற்றை பற்றிக்கொண்டன. அவ்வெண்ணங்களை அவியென உண்டு அவை அங்கே வளர்ந்து பேருரு கொண்டன.

நாள்தோறும் ஐயமும் கசப்பும் வளர்ந்தாலும் அவர்கள் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. உண்மையில் தங்களுக்கேகூட தங்கள் உள்ளம் மாறிவிட்டதை அவர்கள் காட்டவில்லை. பகலில் அரசிக்கு அணுக்கமும் பணிவும் கொண்டவர்களாக மெய்யாகவே திகழ்ந்தனர். இரவின் இருண்ட தனிமையில் கலியின் குடிகளென மாறினர். புஷ்கரன் கலிதேவனுக்கென நாள்பூசனைகளை தொடங்கினான். நிஷத குடிகள் ஒவ்வொன்றிலுமிருந்தும் பூசகர்களை கொண்டுவந்து அங்கு புலரி முதல் நள்ளிரவு வரை பூசனைகளுக்கு ஒருங்கு செய்தான். நள்ளிரவுக்குப்பின் கருக்கிருட்டு வரை அபிசாரபூசனைகள் அங்கே நிகழ்ந்தன. கூகைக்குழறல் என அங்கே கைமுழவு ஒலிப்பதை பந்தவெளிச்சம் நீண்டு சுழல்வதை நகர்மக்கள் அறிந்தனர்.

முன்பெல்லாம் பிறர் அறியாமல் கலியின் ஆலயத்திற்கு சென்று வருவதே கிரிப்பிரஸ்த குடிகளின் வழக்கமாக இருந்தது. அஞ்சியவர்கள் அனைவரும் தங்கள் எண்ணிக்கை மிகுந்ததும் முகம் தெரிய செல்லலானார்கள். பின்னர் அது ஒரு மீறலாக, ஆண்மையாக மாறியது. இறுதியிலொரு களியாட்டாக நிலைகொண்டது. முப்பொழுதும் கலியின் ஆலயம் தேன்கூடுபோல நிஷாதர்களால் மொய்க்கப்பட்டிருந்தது. இந்திரன் ஆலயத்திற்கு செல்பவர் முன்னரே மிகச் சிலர்தான். செல்பவரை பிறர் களியாடத் தொடங்கியதும் அவர்களும் குறைந்தனர். அரச காவலரும் அரண்மனை மகளிரும் அன்றி மலையேறி எவரும் அங்கு செல்லாமலாயினர். விதர்ப்பத்திலிருந்து வந்த ஷத்ரியர்கள் மட்டும் அங்கு சென்று வணங்கலாயினர்.

படைகளில் இருந்த விதர்ப்ப வீரர்களின் எண்ணிக்கை ஒப்புநோக்க சிறிது. அவர்களுக்கே படைநடத்தும் பயிற்சி இருந்தது. அவர்களால் படையென நடத்தப்படுவது நிஷாதர்களுக்கு மேலும் உளவிலக்கை அளித்தது. ஓரிரு மாதங்களுக்குள் நிஷாதர்கள் இந்திரனை வெறுக்கலானார்கள். இல்லங்கள் அனைத்திலுமிருந்து இந்திர வழிபாட்டின் அடையாளங்களான மஞ்சள்பட்டு சுற்றிய வெண்கலச்செம்பும் மயில்தோகையும் அகன்றன. பிளவுகள் உருவாகி வளர்வதுபோல இப்புவியில் வியப்பூட்டுவது பிறிதொன்றில்லை.

அந்நாளில் இளவரசன் புஷ்கரனின் திருமணப் பேச்சுக்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. அவனுக்கு பாரதவர்ஷத்தின் முதன்மை ஷத்ரிய குலங்களில் எதிலிருந்தாவது இளவரசியை கொள்ளவேண்டுமென்று பேரரசி தமயந்தி விரும்பினாள். ஆரியவர்த்தத்தின் அரசகுடிகள் அனைத்திற்கும் தூதர்கள் ஓலைகளுடன் சென்றனர். பல ஷத்ரிய குடிகளுக்கும் பேரரசியின் உறவில் மணம்கொள்ள உள்விழைவு இருந்தது. இந்திரபுரியுடனான மணத்தொடர்பு அவர்களை பிற இணைமன்னர்களுக்குமேல் வல்லமை கொண்டவர்களாக ஆக்கும் என்று அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் ஒருவர் அவ்வாறு மணம்கொள்ள முன்வந்தால் பிறர் அவர்களை இழிவுசெய்து ஒதுக்கி தங்கள் சினத்தை காட்டுவார்கள் என்று அனைவரும் அறிந்திருந்தனர்.

உண்மையில் அவ்வாறு மணம்கொண்டு படையாற்றல் பெற்ற ஓர் அரசரை எதிர்கொள்ளும் சிறந்த வழியென்பது அவரை இழிசினன் என அறிவித்து அதனடிப்படையில் பிற அரசர்கள் ஒருங்குதிரள்வதே ஆகும். ஷத்ரியர் எப்போதும் அம்முறையையே கைக்கொள்கிறார்கள். ஷத்ரிய அரசர்களில் எவரேனும் ஒருவர் அம்மணத்தூதை ஒப்புக்கொண்டு அடுத்த கட்ட பேச்சுக்கு முன்வருவாரென்றால் உலுக்கப்பட்ட கிளையிலிருந்து கனிகள் உதிர்வதுபோல பிற அனைவருமே தூதுஏற்பு செய்துவிடுவார்கள் என்று தமயந்தி அறிந்திருந்தாள். ஆகவே அந்த முதல் நகர்வுக்காக அவள் காத்திருந்தாள். துலாவின் இரு தட்டுகளும் அசைவற்று காலமில்லாது நின்றிருந்தன.

அந்நாளில் நிஷாதகுலத்தின் ஒற்றன் ஒருவன் கலிங்கத்திலிருந்து வந்து புஷ்கரனை சந்தித்தான். கலிங்க அரசர் பானுதேவரின் மகள் மாலினிதேவி புஷ்கரனை தன் உளத்துணைவனாக எண்ணி அவன் ஓவியத்திற்கு மாலையிட்டிருப்பதாக அவன் சொன்னான். இளவரசி கொடுத்தனுப்பிய கணையாழியையும் திருமுகத்தையும் அளித்தான். பானுதேவர் தாம்ரலிப்தியை ஆண்ட அர்க்கதேவரின் இளையவர். அர்க்கதேவரை வென்றபின் கலிங்கத்தை நளன் இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை பானுதேவருக்கு அளித்திருந்தான். தண்டபுரத்தை தலைநகராகக்கொண்டு அவர் ஆண்டுவந்தார்.

உண்மையில் அது ஓர் அரசியல் சூழ்ச்சி. மாலினிதேவி அச்செய்தியை அனுப்பவில்லை. மகதனும் மாளவனும் கூர்ஜரனும் சேர்ந்து இயற்றியது அது. பிறிதொரு தருணத்தில் என்றால் ஷத்ரிய இளவரசி ஒருத்தி தன்னை அவ்வாறு தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்னும் செய்தியை புஷ்கரன் நம்பியிருக்கமாட்டான். ஆனால் அப்போது அவன் நளனுக்கு எதிராக எழுந்து நின்றிருந்தான். எண்ணி எண்ணி தன்னை பெருக்கிக்கொண்டு மெல்ல அவ்வெண்ணத்தை தானே நம்பத் தொடங்கியிருந்தான். அவ்வண்ணமொரு வாய்ப்பு வராதா என்ற ஏக்கம் அவனுக்குள் எங்கோ இருந்தது. விழைந்த ஒன்று எதிர்வரும்போது அதன்மேல் ஐயம் கொள்ள மானுடரால் இயல்வதில்லை.

மேலும் கலிங்கம் நிஷத நாட்டுக்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்தது. அதன் வணிகம் முழுக்க நிஷாதர்களின் நிலங்களில் இருந்து கோதாவரியினூடாக வரும் பொருட்களால் ஆனது. கீழ்நிலங்கள் புஷ்கரனின் ஆளுகையில் இருந்தன. எனவே அவ்வுறவு எவ்வகையிலும் கலிங்கத்துக்கு நன்றே என்று அரசியல் அறிந்த எவரும் உரைக்கும் நிலை. விரைவில் அவளை மணம்கொள்ள வருவதாக மாலினிதேவிக்கு செய்தி அனுப்பினான் புஷ்கரன். உடன் தன் குறுவாள் ஒன்றையும் கன்யாசுல்கமென கொடுத்தனுப்பினான்.

செய்தி வந்ததை அவன் தன் குடியின் மூத்தாரிடம் மட்டும்தான் சொன்னான். அவர்கள் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். எவரும் ஐயம் கொள்ளவில்லை. ஒவ்வொரு நாளும் காளகக்குடியின் ஆற்றல் பெருகுவதாக அவர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர். கலியின் பூசகர்கள் அது கலியின் ஆணை என நாளும் நற்சொல் உரைத்துக்கொண்டிருந்தார்கள். அந்நம்பிக்கையை அச்செய்தி உறுதி செய்தது. அத்தகைய முதன்மை அரசமுடிவை அரசியிடம் கேளாது, அவைமுன் வைக்காது புஷ்கரன் எடுத்திருக்கக் கூடாது. அதை அவனோ அவன் குடியோ உணரவில்லை. அவர்களின் உள்ளம் எதிர்நிலையால் திரிபுகொண்டிருந்தது.

மறுதூதனுப்பி அதற்கு மாலினிதேவி அனுப்பிய மாற்றோலையையும் அவளுடைய காதணியின் ஒரு மணியையும் பெற்ற பின்னரே  அச்செய்தியை அவனே இந்திரபுரியின் பேரவையில் எழுந்து தமயந்தியிடம் சொன்னான். உண்மையில் அவன் அரசியையோ தன் மூத்தவனையோ தனியறையில் கண்டு அதை சொல்லியிருக்கவேண்டும். அல்லது அமைச்சர் கருணாகரரைக் கண்டு உரைத்திருக்கலாம். பேரவையில் சபரர்களும் காளகர்களும் பிற குடித்தலைவர்களும் பெருவணிகர்களும் அந்தணர்களும் நிறைந்திருந்தனர். மாமன்னன் நளன் காட்டுப்புரவிக்குட்டிகளை பிடிக்கும்பொருட்டு சென்றிருந்தான். அவை நிகழ்வுகள் முடிந்து தமயந்தி எழுந்து செல்லவிருந்த தருணம் அது. கைதூக்கி எழுந்த புஷ்கரன் “அவைக்கும் அரசிக்கும் ஒரு நற்செய்தி!” என்றான்.

அவ்வாறு எழுந்தமையே முறைமீறல். அதிலிருந்த ஆணவம் உறுத்துவது. தமயந்தியின் இடதுவிழி சற்று சுருங்கியது. ஆனால் புன்னகையுடன் “நற்செய்தி கேட்க விழைவுடன் உள்ளேன், இளவரசே” என்றாள். காளகக்குடிகளின் தலைவரான சீர்ஷர் “நம் குடிக்கு புதிய அரசி ஒருவர் வரவிருக்கிறார்” என்றார். தமயந்தியின் விழிகள் சென்று கருணாகரரைத் தொட்டு மீண்டன. “சொல்க!” என்றாள். புஷ்கரன் நிகழ்ந்ததை மிகமிகச் செயற்கையான அணிச்சொற்களால் சுழற்றிச் சுழற்றிச் சொல்லி முடிக்க நெடுநேரமாயிற்று. அதற்குள் காளகக்குடிகள் எழுந்து கைக்கோல்களைத் தூக்கி வாழ்த்தொலி எழுப்பலாயினர். பிறர் என்ன என்றறியாமல் நோக்கி அமர்ந்திருந்தனர்.

அதைக் கேட்டதுமே அது ஓர் அரசியல் சூழ்ச்சி என்று தமயந்தி அறிந்துகொண்டாள். ஒற்றர் மூலம் ஓரிரு நாட்களிலேயே அதை அவளால் உறுதி செய்துகொள்ள முடியும் என்றும் உணர்ந்திருந்தாள். ஆனால் அந்த அவையில் அதைச் சொல்வது புஷ்கரனை இழிவுபடுத்துவதாகும் என்று தோன்றியது அவளுக்கு. கலிங்கத்து இளவரசி ஒருத்தி அவனை விரும்புவது நிகழ வாய்ப்பில்லை என்பதுபோல அது பொருள்கொள்ளப்படலாம். அவனுக்கு அத்தகுதியில்லை என்று அவன் குடியில் சிலரால் திரிபொருள் கொள்ளப்படவும்கூடும். அவள் அதை அவையிலிருந்து எவ்வகையிலேனும் வெளியே கொண்டுசெல்ல விழைந்தாள். அப்போது அதை சிடுக்கில்லாது முடித்துவைக்க வேண்டுமென்று வழிதேடினாள். ஆனால் புஷ்கரன் பேசிக்கொண்டே சென்றான்.

புஷ்கரன் உரைத்த சொற்களிலேயே பல உள்மடிப்புகள் இருந்தன. அரசியை வணங்கி பலவகையிலும் முகமன் கூறிய பின்னர் “பேரரசிக்கு வணக்கம். பேரரசி அறிந்த கதை ஒன்றை நினைவுறுத்த விரும்புகிறேன். நெடுங்காலத்துக்கு முன் விதர்ப்ப நாட்டின் ஷத்ரிய இளவரசி பெருந்திறல் வீரனாகிய நிஷத அரசனை விரும்பினார். அவர் புரவித்திறனையும் மேனியழகையும் கண்டு தன்னை இழந்தார். அன்னப்பறவை ஒன்றை தன் தூதென்றனுப்பி தன்னை ஏற்குமாறு கோரினார். இன்று காவியம் கற்ற அனைவரும் அறிந்த கதை அது. நிஷதஅரசனின் இளையோனுக்கும் அதுவே நிகழ்கிறது” என்றான். அதற்குள் காளகர்கள் கூவி ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். சீர்ஷர் எழுந்து நின்று கைகளைத் தூக்கி மெல்ல நடனமிட்டபடி “காளகக்குடியின் வெற்றி! நிஷதர்களின் வெற்றி!” என்று கூவினார்.

அவர்களை முகமலர்ச்சியுடன் கைகாட்டி அமர்த்திவிட்டு “இம்முறை கலிங்கத்திலிருந்து அச்செய்தி வந்துள்ளது. இரு கால்கள் எழுந்து நடக்கும் அந்த அன்னத்தின் பெயர் சலஃபன். கலிங்கத்தில் இருக்கும் நமது தலைமைஒற்றன்” என்றார். காளகக்குடியினர் சிரித்து உவகையொலி எழுப்பி புஷ்கரனை வாழ்த்தினர். “என் ஓவியத்திற்கு மாலையிட்டிருக்கிறாள் கலிங்கத்தின் இளவரசி. அவளுக்கு நிஷதகுடிகளில் மூத்ததான காளகக்குடியின் மரபுப்படி தாமரை மாலையை அணிவிக்கவேண்டியது என் கடன். அதை அறிவித்து என் குறுவாளை அனுப்பியிருக்கிறேன்” என்றான். அவையின் பிற குடிகளும் எழுந்து கோல்களைத் தூக்கி வாழ்த்து முழக்கமிட்டனர்.

காளகக்குடித்தலைவர் சீர்ஷர் கைகளைத் தூக்கி “எங்களுக்கு எவர் ஒப்புதலும் தேவையில்லை. கலிங்கத்தின் இளவரசி எங்கள் இளவரசரை விரும்பினால் அவர்களை சேர்க்கும்பொருட்டு ஆயிரம் தலைகளை மண்ணிலிட நாங்கள் சித்தமாக உள்ளோம்” என்று கூவினார். “அதற்கு இங்கு என்ன நடந்தது? எவர் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்?” என்றார் கருணாகரர். “எதிர்ப்பு தெரிவியுங்கள் பார்ப்போம். இனி எந்த எதிர்ப்பையும் நாங்கள் அஞ்சப்போவதில்லை” என்றார் சீர்ஷர். “சொல்லமையுங்கள், சீர்ஷரே. அரசி இன்னும் தன் சொல்லை முன்வைக்கவில்லை” என்றார் நாகசேனர்.

தமயந்தி பெருநகையை முகத்தில் காட்டி “நன்று! நாம் எதிர்பார்த்திருந்த செய்தி இது. மிக நன்று. இனி பிறிதொன்றும் எண்ணுவதற்கில்லை. நமது அமைச்சரும் பிறரும் சென்று பானுதேவரிடம் நிஷதகுடியின்பொருட்டு இளவரசியின் வளைக்கையை கோரட்டும். கலிங்க இளவரசி வந்து இங்கு இளைய அரசியென அமர்வது நம் மூதன்னையரை மகிழ்விக்கும். குலமூத்தோரை பெருமிதம் கொள்ள வைக்கும். நம் அரசு ஆற்றல் கொண்டு சிறக்கும்” என்றாள். புஷ்கரரை வாழ்த்தி அனைத்து குடிகளும் முரசென குரல் எழுப்பினர். பலமுறை கையமர்த்தி குரலெழ இடைவெளி தேடவேண்டியிருந்தது. “நாளையே தலைமை அமைச்சர் கிளம்பிச்செல்லட்டும். இதுவரை பாரதவர்ஷத்தில் எந்த மணக்கோரிக்கையுடனும் செல்லாத அளவுக்கு பரிசில்கள் அவரை தொடரட்டும்” என்று தமயந்தி ஆணையிட்டாள்.

flowerகருணாகரர் நான்கு துணையமைச்சர்களுடன் பன்னிரு வண்டிகளில் பட்டும் பொன்னும் அருமணிகளும் அரிய கலைப்பரிசில்களுமாக கீழ்க்கலிங்கத்திற்கு சென்றார். அவர் செல்லும் செய்தியை முன்னரே தூதர்கள் வழியாக தண்டபுரத்திற்கு அறிவித்திருந்தார். அவர்களை நகரின் கோட்டை முகப்பிற்கே வந்து பேரரசி வழியனுப்பி வைத்தாள். அச்செய்தி நகரெங்கும் பரவியது. காளகக்குடிகளில் ஒவ்வொரு நாளும் களிவெறி மிகுந்து வந்தது. அவர்கள் எண்ணுவதன் எல்லையைக்கடந்து எண்ணினர். நளனுக்குப்பின் நிஷதப்பேரரசின் பெருமன்னரென புஷ்கரன் அமைவதைப்பற்றி புஷ்கரனினூடாக காளகக்குடி பாரதவர்ஷத்தின் தலைமை கொள்வதைப்பற்றி விழைவுகள் கணமெனப் பெருகி நிறைந்தன.

கருணாகரர் கலிங்கத்திற்கு சென்றுசேர்ந்த செய்தி தமயந்தியை வந்தடைந்தது. பதற்றத்துடன் என்ன நிகழ்கிறதென்று அவள் பறவைச்செய்திகளை பார்த்திருந்தாள். கலிங்க இளவரசி புஷ்கரனுக்கு அளித்த செய்தியைக் கேட்டு அவள் சினங்கொண்டு மறுப்பாள் என்று அச்சூழ்ச்சியை செய்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அவள் நினைத்தாள். ஏனெனில் அவள் மகதனோ மாளவனோ கூர்ஜரனோ புஷ்கரனுக்கு மகள்கொடை அளிக்கவேண்டுமென்று எதிர்பார்த்திருந்தாள். கீழ்க்கலிங்கம் மிகச் சிறிய அரசு. அவர்கள் அளிக்கும் படைத்துணையென பெரிதாக ஏதுமில்லை. அவர்களின் துறைநகருக்கு பொருள்கொண்டு அளிக்கும் பேரியாற்றை முழுமையாக ஆளும் நிஷதத்தை ஒரு நிலையிலும் அவர்களால் மீறிச்செல்ல முடியாது. கலிங்கத் தூதை அவள் மறுக்கையில் புஷ்கரனுக்கும் அவளுக்குமான பூசல் முதிருமென்று அவர்கள் கருதுகிறார்கள் என்று கணித்தாள். ஆகவேதான் அதை ஒப்புக்கொண்டு அவர்கள் மறுஎண்ணம் எடுப்பதற்குள் பெரும்பரிசில்களுடன் அமைச்சரையே அனுப்பினாள்.

அத்திருமணம் நிகழ்ந்து புஷ்கரன் உளம் குளிர்ந்தால் சிறிது காலத்திற்கேனும் அவனுள் எழுந்த ஐயமும் விலக்கமும் அகலும் என்று எண்ணினாள். காளகக்குடிகள் தாங்களும் ஒரு வெற்றியை பெற்றுவிட்டோம் என்று எண்ணக்கூடும். அவர்களின் தாழ்வுணர்ச்சியை கடக்க அது வழியமைக்கலாம். தென் எல்லையில் தான் வென்ற விஜயபுரியை புஷ்கரனுக்கு அளித்து அவனை தனியரசென்றாக்கி நளனுக்கு இளையோனாகவோ தொடர்பு மட்டும் உள்ள இணைநாடாகவோ அமைத்தால் காளகக்குடிகளிலிருந்து எழுந்த அந்த அரசுமறுப்பை கடந்துவிடலாமென்று அவள் கருதியிருந்தாள்.

ஆனால் நிகழ்ந்தது மற்றொன்று. கருணாகரரை வரவேற்று உரிய முறைமைகளுடன் அவையமரச் செய்தார் பானுதேவர். அங்கு குலத்தாரும் குடிமூத்தாரும் அந்தணரும் கூடிய அவையில் அவர் எழுந்து தன் தூதுச்செய்தியை சொல்ல வைத்தார். முறைமைகளும் வரிசையுரைகளும் முடிந்தபின் கருணாகரர் கலிங்கத்து இளவரசி புஷ்கரனுக்கு அனுப்பிய ஓலையையும் கணையாழியையும் காட்டி அந்த விழைவை பேரரசி தமயந்தி ஏற்றுக்கொள்வதாகவும் அதன்பொருட்டு மணஉறுதி அளிக்க தூதென வந்திருப்பதாகவும் சொன்னார். அவை எந்த விதமான எதிர்வினையுமில்லாமல் அமர்ந்திருந்தது. வாழ்த்தொலிகள் எழாதது கண்டு கருணாகரர் அரசரை நோக்கினார். பானுதேவர் தன் நரையோடிய தாடியைத் தடவியபடி ஏளனமும் கசப்பும் நிறைந்த கண்களுடன் அவரை நோக்கிக்கொண்டிருந்தார்.

கருணாகரர் அந்தத் தூது கலிங்க இளவரசியின் விழைவை ஒட்டியே என அழுத்த விரும்பினார். “எங்கள் அரசி முன்பு தன் கொழுநர் நளமாமன்னருக்கு அனுப்பிய அன்னத்தூது இன்று காவியமென பாடப்படுகிறது. அதற்கு நிகரான காவியமாக கலிங்கத்து இளவரசி மாலினிதேவி அளித்த இக்கணையாழித்தூதும் அமையுமென எண்ணுகிறோம். தன்னுள்ளத்தைப் போலவே இளவரசியின் உள்ளத்தையும் உணர்ந்தமையால் நிகரற்ற பரிசுகளுடன் என்னை அனுப்பியிருக்கிறார் பேரரசி” என்றார்.

தான் உன்னுவதை எல்லாம் ஊன்றிவிட சொல்லெடுத்து “கலிங்கம் நிஷதப்பேரரசின் ஒரு பகுதியே என்றாலும் இம்மணம்கோள் நிகழ்வு இரு நாடுகளுக்கிடையே குருதித் தழுவலாக ஆகும். தென்திசையின் இரு தொல்குடிகளின் இணைவால் ஆயிரமாண்டுகளுக்கு வெல்ல முடியாத அரசென்று எழும். மலைமுடிபோல் இப்பெருநிலத்தை நோக்கியபடி காலம் கடந்து நின்றிருக்கும் அது” என்றார் கருணாகரர். தன் சொற்கள் அமைதியான அவையில் அறுந்த மணிமாலையின் மணிகள் என ஒவ்வொன்றாக ஓசையுடன் உதிர்ந்து பரவுவதை உணர்ந்தார்.

பானுதேவர் தன் அமைச்சர் ஸ்ரீகரரை நோக்கி “இவ்வண்ணம் ஒரு செய்தியை நான் எதிர்பார்க்கவில்லை. நமது இளவரசி புஷ்கரருக்கு கணையாழியும் திருமுகமும் அனுப்பியிருப்பதாக சொல்கிறார்கள். தாங்கள் நோக்கி இதை மதிப்புறுத்த வேண்டும், அமைச்சரே” என்றார். அமைச்சர் ஸ்ரீகரர் எழுந்து வணங்கி “நிஷதப்பேரரசின் அமைச்சர் வந்து அளித்த இச்செய்தியால் இந்த அவை பெருமைகொள்கிறது. அந்தக் கணையாழியையும் ஓலையையும் இந்த அவையின் பொருட்டு நான் பார்க்க விழைகிறேன். அது எங்கள் இளவரசியின் செய்தி என்றால் அதைப்போல் இனியதொரு நோக்கு எனக்கு இனிமேல் அமையப்போவதில்லை” என்றார்.

கருணாகரர் கைகாட்ட துணையமைச்சர் அந்தத் திருமுகமும் கணையாழியும் அமைந்த பொற்பேழையை ஸ்ரீகரரிடம் அளித்தார். அதை வாங்கித் திறந்து கணையாழியை எடுத்து கூர்ந்து நோக்கியதுமே அவர் முகம் மாறியது. ஐயத்துடன் ஓலையை இருமுறை படித்தபின் அரசரிடம் தலைவணங்கி “சினம் கொள்ளலாகாது, அரசே. இது எவரோ இழைத்த சூழ்ச்சி. இது நம் இளவரசியின் கணையாழி அல்ல. இந்தத் திருமுகமும் பொய்யானது” என்றார். பானுதேவர் சினந்து அரியணைக்கையை அறைந்தபடி எழுந்து “என்ன சொல்கிறீர்?” என்றார்.

“ஆம் அரசே, இவை பொய்யானவை” என்றார் ஸ்ரீகரர். “அரசகுடிக்குரிய கணையாழிகளின் எந்த அமைப்பும் இதில் இல்லை. இதிலுள்ள அருமணிகள் மெய்யானவை. அவை அமைந்திருக்கும் முறை பிழையானது. இவ்வோலையின் முத்திரை உண்மையானது, ஆனால் கணையாழி பொய்யென்பதால் இதன் சொற்களையும் ஐயுற வேண்டியிருக்கிறது.” பானுதேவர் உரக்க “எவருடைய சூழ்ச்சி இது?” என்றார். கருணாகரர் “சூழ்ச்சி இங்குதான் அரங்கேறுகிறது. கலிங்க அரசமுத்திரை எவரிடம் இருக்கமுடியும்?” என்றார்.

ஸ்ரீகரர் “சினம்கொள்ள வேண்டாம், அமைச்சரே. தங்களுக்கு ஐயம் இருப்பின் இளவரசியை இந்த அவைக்கு கொண்டு வருவோம். இந்த ஓலையும் கணையாழியும் அவர் அளித்ததென்று அவர் சொல்வாரேயானால் அனைத்தும் சீரமைகின்றன. அல்ல என்றால் இது சூழ்ச்சி என்று கொள்வோம்” என்றார். பானுதேவர் “ஆம், அதை செய்வோம். பிறகென்ன?” என்றபின் திரும்பி ஏவலனிடம் “இளவரசியை அழைத்துவருக!” என்று ஆணையிட்டார்.

கருணாகரருக்கு அனைத்தும் தெளிவாகிவிட்டது. அவர் அரசரின் முகத்தை சிலகணங்கள் கூர்ந்து நோக்கியபின் உடல் தளர்ந்து தன் பீடத்தில் அமர்ந்தார். ஸ்ரீகரர் நிலையழிந்த உடலுடன் இருவரையும் பார்த்தபடி அவையில் நின்றார். அச்சூழ்ச்சியை அவரும் அறிந்திருக்கவில்லை என்பதை கருணாகரர் உணர்ந்தார். இளவரசி அவை புகுந்தபோது திரும்பி அவர் முகத்தை பார்த்ததும் சூழ்ச்சியை இளவரசியும் அறிந்திருக்கவில்லை என்று தெளிவுற்றார். அவை மேடை வந்துநின்ற இளவரசியை நோக்கி பானுதேவர் “மாலினிதேவி, கீழ்க்கலிங்கத்தின் இளவரசியாகிய நீ இந்த அவையில் ஒரு சான்று கூற அழைக்கப்பட்டிருக்கிறாய். உன் பெயரில் ஒரு திருமுகமும் கணையாழியும் நிஷத இளவரசராகிய புஷ்கரருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர் ஓவியத்திற்கு நீ மாலையிட்டு கணவனாக ஏற்றுக்கொண்டதாக அத்தூது சொல்கிறது. அது நீ அனுப்பியதா?” என்றார்.

அவர் முதலில் அச்சொற்களை செவிகொள்ளவே இல்லை. ஆனால் ஏதோ ஒன்று புரிய திகைத்து கருணாகரரையும் அமைச்சரையும் பார்த்தபின் வாயை மட்டும் திறந்தார். அரசி மீண்டும் அவ்வினாவை கேட்டார். “தூதா? நானா?” என்றார். பின்பு உரக்க “இல்லை, நான் எவருக்கும் தூதனுப்பவில்லை. இளவரசர் புஷ்கரரின் பெயரையே இப்போதுதான் அறிகிறேன்” என்றார். “பிறகென்ன தேவை, கருணாகரரே?” என்று பானுதேவர் கேட்டார். கருணாகரர் எழுந்து வணங்கி “இளவரசி என்னை பொறுத்தருள வேண்டும். நிஷதப் பேரரசி தமயந்தியின் பெயரால் இந்த விண்ணப்பத்தை வைக்கிறேன். இந்நிகழ்வை மறந்துவிடுக! சூழ்ச்சியொன்றை மெய்யென்று நம்பி இங்கு வந்தோம்” என்றார்.

ஸ்ரீகரர் நடுவே புகுந்து “சூழ்ச்சியே ஆனாலும் நன்று ஒன்று நடந்துள்ளது. விதர்ப்பப் பேரரசியின் மணத்தூது இங்கு வந்தது ஒரு நல்லூழே. நிஷத இளவரசருக்கு நிகரான மணமகன் இளவரசிக்கு அமைவது அரிது. இந்த மணத்தூதை நமது அரசர் ஏற்பதே நன்றென்பது என் எண்ணம்” என்றார். சினத்துடன் எழுந்த பானுதேவர் “ஆம் ஏற்றிருக்கலாம், உரிய முறையில் இத்தூது வந்திருந்தால். இச்சூழ்ச்சி எவருடையதென்று உங்களுக்குத் தெரியவில்லையா? என் மகளைக் கோரி தூதனுப்பும்போது தான் ஒரு படி கீழிறங்குவதாக நிஷதப் பேரரசி எண்ணுகிறார். ஆகவேதான் பொய்யாக ஓர் ஓலையும் கணையாழியும் சமைத்து என் மகளே அவ்விளவரசனை களவுமணம் கோரியதாக ஒரு கதையை சமைக்கிறார். நாளை இது சூதர்நாவில் வளர வேண்டுமென்று விழைகிறார்” என்றார்.

அவர் மேற்கொண்டு சொல்லெடுப்பதற்குள் கருணாகரர் “தங்கள் சொற்களை எண்ணிச்சூழ்வது நன்று, அரசே” என்றார். பானுதேவர் உரக்க “ஆம், எண்ணிச் சொல்கிறேன். இது கலிங்கத்தை கால்கீழிட்டு மிதித்து மணம்கோர நிஷதர் செய்யும் சூழ்ச்சி. அருமணி பொறிக்கப்பட்ட கணையாழிகளை பேரரசுகள் மட்டுமே உருவாக்க முடியும். இதிலுள்ள அருமணிகள் பேரரசர்களின் கருவூலங்களுக்குரியவை. அவை மெய்யான அருமணிகள் என்பதனால்தான் நானும் ஒரு கணம் நம்பினேன். இது தமயந்தியின் சூழ்ச்சியேதான். ஒருவேளை அமைச்சருக்கு இது தெரியாமல் இருக்கலாம்” என்றார்.

தன் நிலையை குவித்து தொகுத்து சீரான குரலில் கருணாகரர் சொன்னார் “அத்தகைய எளிய சூழ்ச்சிகளினூடாக உங்கள் மகளைக் கொள்ளும் இடத்தில் பேரரசி இல்லை என்று அறிக!” பானுதேவர் சினத்தால் உடைந்த குரலுடன் “நிஷத இளைஞனுக்கு தூதனுப்பும் இடத்தில் தொல்குடி ஷத்ரியப் பெண்ணாகிய என் மகளும் இல்லை” என்றார். கருணாகரர் “சொல்தடிக்க வேண்டியதில்லை. நா காக்க. இல்லையேல் கோல் காக்க இயலாது போகும்” என்றார்.

அவை மறந்து கொதிப்பு கொண்ட பானுதேவர் கைநீட்டி “இனியென்ன காப்பதற்கு? இந்த அவையில் என் மகளை இழிவுபடுத்திவிட்டார்கள். இந்த மணத்தை நான் ஏற்றால் அதன் பொருளென்ன? இவர்கள் இப்படி மணத்தூதுடன் வரவேண்டுமென்பதற்காக இவ்வோலையையும் கணையாழியையும் நான் சமைத்தளித்திருப்பதாகத்தானே உலகோர் எண்ணுவர்? எனக்கு இழிவு. ஓர் இழிவு போதும், பிறிதொன்றையும் சூட நான் சித்தமாக இல்லை” என்றார். “போதும்! வெளியேறுங்கள்! எனக்கு இழிவு நிகழ்த்தப்பட்டமைக்கு நிகர் இழிவை அந்தணராகிய உம் மேல் சுமத்த நான் விரும்பவில்லை.”

அத்தருணத்தில் ஸ்ரீகரரும் அனைத்தையும் உணர்ந்துகொண்டார். அது அவரறியாத பெருஞ்சூழ்ச்சி வலையென்று. கருணாகரர் “நன்று! இனியொன்றே எஞ்சியுள்ளது. நான் சென்று அரசியிடம் சொல்லவேண்டிய சொற்களெவை? அதை சொல்க!” என்றார். “இருங்கள், அமைச்சரே. இந்த அவையில் நாம் எதையும் இறுதி முடிவென எடுக்கவேண்டாம். நாளை இன்னொரு சிற்றவையில் அனைத்தையும் பேசுவோம்” என்றார் ஸ்ரீகரர். “இனியொரு அவையில் நான் இதை பேச விரும்பவில்லை. என் சொற்களை இதோ சொல்கிறேன்” என்றார் பானுதேவர். “அரசே, அரசியல் சொற்களை எழுத்தில் அளிப்பதே மரபு” என்றார் ஸ்ரீகரர். “இது அரசச்சொல் அல்ல. என் நெஞ்சின் சொல்” என்றார் பானுதேவர்.

சிவந்த முகமும் இரைக்கும் மூச்சுமாக “இவ்வாறு சொல்லுங்கள், அமைச்சரே. இச்சொற்களையே சொல்லுங்கள்” என பானுதேவர் கூவினார். “நிஷதப் பேரரசி நானும் ஒரு அரசனென்று எண்ணி என்னை நிகரென்றோ மேலென்றோ கருதி இம்மணத்தூதை அனுப்பியிருந்தால் ஒருவேளை ஏற்றிருப்பேன். எவரோ வகுத்தளித்த இழிந்த சூழ்ச்சியொன்றால் எனது மகளை சிறுமை செய்தார். அதற்கு அடிபணிவேன் என்று எதிர்பார்த்ததனால் என்னை சிறுமை செய்கிறார். ஆகவே இந்த மணத்தூதை நான் புறக்கணிக்கிறேன். நிஷத அரசுக்கு முறைப்படி மகள்கொடை மறுக்கிறேன்.”

“போரில் தோற்றமையால் கலிங்கம் நிஷதத்திற்கு கப்பம் கட்டலாம். ஆனால் நிஷதகுடிகள் சமைத்துண்ணத் தொடங்குவதற்கு முன்னரே சூரியனின் முதற்கதிர் இறங்கும் மண்ணென கலிங்கம் பொலிந்திருக்கிறது. நூற்றெட்டு அரச குடிகள் இங்கு ஆண்டு அறம் வாழச்செய்திருக்கிறார்கள். என் கடன் என் மூதாதையரிடம் மட்டுமே. என் செயல்களினூடாக என் கொடிவழியினருக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். இன்று சிறுத்து மண்ணில் படிந்திருக்கலாம் எனது குடி. நாளை அது எழும். அந்த வாய்ப்பைப் பேணுவது மட்டுமே இத்தருணத்தில் நான் செய்யக்கூடுவது” என்றார் பானுதேவர். பின்னர் மூச்சுவாங்க அரியணையில் அமர்ந்தார்.

“நன்று! இச்சொற்களையே அரசியிடம் உரைக்கிறேன்” என்று சொல்லி தலைவணங்கிய கருணாகரர் “இச்சொற்களை இளவரசி ஏற்கிறாரா என்று மட்டும் கேட்க விழைகிறேன்” என்றார். மாலினிதேவி “ஆம், அவை என் சொற்கள்” என்றார். “நன்று, உங்கள் அவைக்கும் கோலுக்கும் நிஷத அரசின் வாழ்த்துக்கள்! நன்றே தொடர்க!” என வணங்கி கருணாகரர் அவை நீங்கினார்.