மாதம்: மே 2017

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 7

6. முதல்மலர்

flowerநிஷத நாட்டு இளவரசனாகிய நளன் தன் பதின்மூன்றாவது வயதில் கோதாவரிக் கரையில் தாழைப்புதருக்குள் ஆடையின்றி நீராடிக்கொண்டிருந்த பெண் உடலொன்றின் காட்சியால் தன்னை ஆண் என உணர்ந்தான். அன்றுவரை அவன் அன்னையர் சூழ்ந்த அகத்தளத்தில் முதிரா மைந்தனாக விளையாடி வந்தான். அன்று தன் உடலை அச்சத்துடனும் அருவருப்புடனும் அறிந்து அங்கிருந்து விலகி ஓடி அப்பாலிருந்த நாணல் புதர்களுக்குள் ஒளிந்துகொண்டான். அந்த இழிச்சுமையிலிருந்து தன்னுள் உறையும் ஆத்மாவை பிரித்தெடுத்துவிடவேண்டும் என்று விழைந்தவன்போல அங்கு தவித்து எண்ணங்களில் உழன்று வெளிவர முடியாது பகல் முழுக்க அமர்ந்திருந்தான்.

அந்தி இருட்டியபின் எழுந்த காட்டின் ஒலியால் அஞ்சி சிறு பூச்சிகளின் கடியால் துன்புற்று எழுந்து நகர் நோக்கி சென்றான். சில கணங்களே நோக்கிய அக்காட்சி கண்முன் கற்சிலையென நிறுத்தப்பட்டதுபோல விலக்க முடியாததாக, எட்டி தொட்டுவிட முடிவதாக எப்படி நிலைகொள்கிறதென்று அவனுக்கு புரியவில்லை. எத்திசையில் திரும்பி ஓடினாலும் தன்னுள் இருந்து எழுந்து அது முன்நிற்கும் என்று உணர்ந்தபோது தலையை கையால் அறைந்துகொண்டு அழவேண்டுமென்று தோன்றியது.

அந்தி விளக்குகள் ஒளிரத் தொடங்கியிருந்த நகரத்திற்குள் நுழைந்து கையில் பூக்குடலைகளுடனும் நெய்க்கிண்ணங்களுடனும் ஆலயங்களுக்குள் சென்றுகொண்டிருந்த பெண்களை பார்த்தான். ஒவ்வொருவரும் ஆடையின்றி திரிவதுபோல் தோன்ற விதிர்த்து தலைகுனிந்து விழிகள் நிலம் நோக்க நடந்தான். ஒவ்வொரு அடிக்கும் அவன் உடல் வாள் புண் பட்ட புரவியென சிலிர்த்து குளிர்ந்துகொண்டிருந்தது. ஆனால் பெண்களின் ஒவ்வொரு சிறு ஒலியையும் அவன் செவிகள் கேட்டன. காலடிகள் ஆடைஒலிகள் அணியொலிகள் மட்டுமல்லாது கைகள் தொடையில் உரசிக்கொள்வதும் தொடைகள் தொட்டுக்கொள்வதும்கூட. அனைத்து ஒலிகளும் காட்சிகளாக மாறின.

விழிகளை நோக்காமல் அரண்மனைக்குள் நுழைந்து ஓசையின்றி தன் தனியறைக்குள் புகுந்து மஞ்சத்தில் படுத்து மரவுரியால் உடலை போர்த்திக்கொண்டான். துயில் ஒன்றே அவன் விழைந்தது. தவிப்புடன் அதை நோக்கி செல்ல முயலும்தோறும் மேலும் விழிப்பு கொண்டான். எழுந்து கதவைத் திறந்து வெளியே ஓடி மீண்டும் இருள் செறிந்த காடுகளுக்குள் நுழைந்து புதைந்துவிட வேண்டுமென்று ஒருகணம் வெறிகொண்டான். பெருமூச்சுவிட்டுக்கொண்டு படுக்கையில் புரண்டான்.

அவன் திரும்பி வந்ததை அகத்தளத்தில் எவரும் அறியவில்லை. முன்னிரவில் அவனைத் தேடி வந்த அவன் அன்னை அறைக்கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது மரவுரிக்குள் இருந்து வெளியே நீண்ட, தூக்கில் தொங்குபவனின் காற்றில் தவிக்கும் கால்களைப்போல நெளிந்துகொண்டிருந்த அவன் பாதங்களை பார்த்தாள். உள்ளே வந்து முகத்தை மூடியிருந்த அம்மரவுரியை பிடித்திழுத்து “தனியாக வந்து படுத்து என்ன செய்கிறாய்? எழு, உணவருந்த வேண்டாமா?” என்று அவன் தோளை தட்டினாள்.

திடுக்கிட்டு எழுந்து அவளைப் பார்த்த அக்கணமே மறுபுறம் சுருண்டு முழங்காலில் முகம் புதைத்துக்கொண்டான் நளன். அன்னை அவனைப் பற்றிப் புரட்டி “சொல், என்ன ஆயிற்று உனக்கு? உடல் நலமில்லையா?” என்றாள். “ஆம்” என்றபின் மீண்டும் சுருண்டுகொண்டான். அவள் அவன் நெற்றியில் கைவைத்தபின் “ஆம், அனல் தெரிகிறது. நான் சென்று மருத்துவரை வரச்சொல்கிறேன்” என்று கதவைத் திறந்து வெளியேறினாள்.

அக்கணமே அவன் தன் மேலாடையை எடுத்து அணிந்துகொண்டு கதவைத் திறந்து வெளியே இறங்கி படிகளினூடாக ஓசையின்றி காலெடுத்து வைத்து முற்றத்தை வந்தடைந்தான். விண்மீன்கள் மண்டிய வானை நிமிர்ந்து பார்த்தான். அப்போது உணர்ந்த விடுதலை எரியும் தோல்மீது குளிர்தைலம் பட்டதுபோல் இருந்தது. நகரத்தெருக்களினூடாக இருளின் பகுதிகளில் மட்டும் ஒதுங்கி நடந்து வெளியேறி மீண்டும் காட்டை அடைந்தான்.

அவன் கண்ட காடு முன்பொருபோதும் அறிந்திராததாக இருந்தது. நிழல்கள் வெவ்வேறு அழுத்தங்களில் ஒன்றின்மேல் ஒன்றென பதிந்து உருவான பெருவெளி. மரங்கள் அவ்விருளுக்குள் புதைந்து நின்றிருந்தன. கரிய மைக்குள் கரிய வண்டுகளென விலங்குகள் ஊர்ந்தன. சற்று விழி தெளிந்தபோது அவன் விலங்குகளின் விழிஒளிகளை கண்டான். அவற்றினூடாகப் பறந்த மின்மினிகளை. நீர்த்துளிகளின் வானொளியை. அவை செலுத்திய அறியா நோக்கை.

மின்னும் விழிகளினாலான காட்டை நோக்கியபடி ஆலமரத்தினடியில் குளிருக்கு உடம்பை ஒடுக்கி இரவெலாம் அமர்ந்திருந்தான். காலையில் முதல்கதிர் அவனைத் தொட்டபோதுதான் அங்கு துயின்றுவிட்டிருப்பதை உணர்ந்தான். பனி விழுந்து அவன் உடல் நனைந்து நடுங்கிக்கொண்டிருந்தது. காய்ச்சல் எழுந்து உதடுகள் உலர்ந்து கண்கள் கனன்றன. எழுந்து நின்றபோது கால்கள் தள்ளாடி மீண்டும் அவ்வேர் மீதே விழுந்தான். அங்கிருந்து திரும்பி நகருக்குள் செல்ல தன்னால் முடியாது போகலாம் என்ற எண்ணம் இறப்பு அணுகி வருகிறதோ என்ற ஐயமாக மாறியது. அவ்வெண்ணம் அச்சத்தை அளிக்கவில்லை. இவையனைத்திலுமிருந்து விடுதலை என்னும் ஆறுதலே தோன்றியது.

இவை அனைத்தையும் இழந்து அறியாது எங்கோ செல்வது. முற்றிலும் இன்மையென்றாவது. இன்மையென்றால் வானம். கற்பூரத்தையும் நீரையும் உலரவைத்து உறிஞ்சிக்கொள்வது. ஒவ்வொன்றையும் வெறுமையென்றாக்கி தன்னுள் வைத்துக் கொள்வது. வானம் என்று எண்ண அவன் உடல் அச்சம்கொண்டு நடுங்கலாயிற்று. பின் அவன் அழத்தொடங்கினான். தனக்குத்தானே என விசும்பி அழுதபடி அங்கு கிடந்தான்.

மீண்டும் விழித்துக்கொண்டபோது உச்சிப்பொழுது கடந்துவிட்டிருந்தது. உணவும் நீருமிலாது நலிந்த உடலுக்குள் அனல் ஒன்று கொதித்தபடி குருதிக் குழாய்களினூடாக ஓடியது. உதடுகளை நாவால் தொட்டபோது மரக்கட்டையை தொடும் உணர்வு ஏற்பட்டது. கையூன்றி எழுந்து நிற்க முயன்று கால்தளர்ந்து மீண்டும் விழுந்தான். ஆம். இதுதான் இறப்பு. இன்றிரவுக்குள் என்னை விலங்குகள் தின்றுவிட்டிருக்கக்கூடும். தேடி வருபவர்கள் என் வெள்ளெலும்புகளை இங்கு கண்டெடுப்பார்கள். எஞ்சுவது ஏதுமில்லை. எஞ்சாமல் ஆதலென்பது வானில் மறைதல். இருந்ததோ என்று ஐயுற வைக்கும் நீர்த்தடம். இருந்ததேயில்லை என்று ஆகும் கற்பூரத்தின் வெண்மை.

மீண்டும் கையூன்றி எழத்தொடங்கி நிலைகுலைந்து கீழே விழுந்தான். மீண்டும் மயங்கித் துயின்று பின்னர் விழித்தபோது அவன் முன் வெண்தாடிச் சுருள்கள் நெஞ்சில் படர வெண்குழல் கற்றைகளைச் சுருட்டி நெற்றியில் முடிச்சிட்டிருந்த முதியவர் ஒருவர் கனிந்த விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தார். கைகளைத் தூக்கி ‘வணங்குகிறேன், உத்தமரே’ என்றுரைக்க அவன் விரும்பினான். உதடுகள் ஒன்றுடனொன்று ஒட்டியிருந்தமையால் மெல்லிய அசைவு மட்டுமே எழுந்தது. விரல்கள் விதிர்த்து பின் அடங்கின.

அவர் தன் கையில் இருந்த நீரை அவன் முகத்தில் மீண்டும் மீண்டும் அறைந்து விழிகளை துடைத்தார். தலையை சற்றே ஏந்தி சுரைக்குடுவையில் இருந்து குளிர்நீரை மெல்ல ஊட்டினார். நீரை நோக்கி இழுக்கப்பட்டதுபோல் சென்றது அவன் வாய். அவன் உடலின் அனைத்துத் தசைகளும் நீருக்காக தங்களை ஏந்திக்கொண்டன. குளிர்நீர் வாயிலிறங்கி தொண்டைக்குள் இறங்குவதை உணர்ந்தான். நூற்றுக்கணக்கான உலை முனைகளில் அனல் அவிந்தது. உடல் குளிர்ந்ததும் மெல்ல நடுக்குற்றது. அவர் தன் தோற்பையிலிருந்து கனிந்த மாங்கனி ஒன்றை எடுத்து அவனுக்களித்து “உண்ணுக!” என்றார்.

NEERKOLAM_EPI_07

அவன் அதை வாங்கி இரு கைகளாலும் பிடித்து குரங்குகளைப்போல கடித்து மென்று உண்டான். தான் உண்ணும் ஒலியை ஈரச்சேற்றில் நீர்த்துளி விழும் ஒலிபோல கேட்டுக்கொண்டிருந்தான். நூற்றுக்கணக்கான சர்ப்பங்கள் நெளிந்து பின்னி முட்டி மோதி அதை கவ்வி விழுங்குவதுபோல உடற்தசைகள் அக்கனியை வாங்கி உண்டன. உண்டு முடித்ததும் அவர் மீண்டும் நீரருந்தச் சொன்னார். “எழுந்தமர்க! சுட்ட கிழங்கொன்று வைத்திருக்கிறேன். குடல் உணவுக்குப் பழகியபின் அதை உண்ணலாம்” என்றார்.

அவன் எழுந்தமர்ந்தபோது விழிகளில் ஒளி வந்திருந்தது. நாவில் ஈரமும் தசைகளில் நெகிழ்வும். எண்ணங்கள் மீது சித்தம் கட்டுப்பாட்டை அடைந்திருந்தது. “என் பெயர் அசனன். இக்காட்டில் வாழ்பவன். இருபத்தெட்டாண்டுகளாக ஏழ்புரவியில் விண்ணளப்போனை எண்ணி தவம் செய்பவன்” என்றார் முனிவர். அவன் அவர் கால்களைத் தொட்டு தலை அணிந்து “என் பெயர் நளன். கிரிப்பிரஸ்தத்தின் இளவரசன்” என்று சொன்னான். “ஆம். தாங்கள் யாரென்பதை கைகளில் அணிந்திருக்கும் முத்திரைக் கணையாழிகளிலிருந்து கண்டுகொண்டேன்” என்று அசனர் சொன்னார். “ஏன் இங்கு வந்தீர்? வழி தவறிவிட்டீரா?”

“இல்லை. நான் என் உடலை தொலைக்க விழைந்தேன். எங்கேனும் முற்றாக இதை மறைத்துவிட்டு மீள முயன்றேன்” என்றான் நளன். “உடலை உதிர்ப்பதா? உடலைக் கட்டியிருப்பது உயிரல்ல, ஊழ். அது விடுபடவேண்டுமென்றால் அம்முடிச்சுகள் அவிழவேண்டாமா?” என்று அவர் புன்னகையுடன் சொன்னார். அவன் கண்களை மூடிக்கொண்டு அதுவரையிலான தனது எண்ணங்களை தொகுத்துக்கொள்ள முயன்றான்.

மீண்டும் நீரருந்தக் கொடுத்தபின் சுட்ட கிழங்கை அவன் உண்ணும்படி அளித்தார் முனிவர். கிழங்கை உண்டு மீண்டும் நீரருந்தி சற்று முகங்கழுவியதும் உடலில் ஆற்றல் ஊறிவிட்டிருப்பதை உணர்ந்தான். வேர் ஒன்றைப் பற்றியபடி மெல்ல எழுந்து நிற்க முடிந்தது. “வருக!” என்று அவன் தோளைப்பற்றி அவர் அழைத்துச்சென்றார். “இங்கு கோதையின் கரையில் நாணற்காட்டிற்குள் எனது சிறுகுடில் அமைந்துள்ளது. என்னுடன் எவருமில்லை. இன்று பகல் உடன் தங்குக! மாலை நானே உம்மை அரண்மனைக்கு கொண்டு சேர்ப்பேன்” என்றார்.

அசன முனிவருடன் சென்று அவரது குளிர்ந்த சிறுநாணல் குடிலுக்குள் மண் தரையில் விரிக்கப்பட்ட நாணல் பாயில் படுத்துக்கொண்டான் நளன். “சொல்க, சொல்வதற்குரியவை என்று உமக்குத் தோன்றினால்” என்றார் அசனர். அவன் கண்களை மூடி பேசாமலிருந்தான். “நன்று, சொல்லத் தோன்றுகையில் தொடங்குக! அதுவரை எனது தனிமையில் நானிருக்கிறேன்” என்றபடி அவர் எழுந்து சென்றார். வெளியே அவர் நாணல்களை வெட்டிக்கொண்டு வருவதை, அவற்றை சீராக நறுக்கி நிழலில் காய வைப்பதை வாயிலினூடாக நோக்கியபடி அவன் படுத்திருந்தான்.

எவரிடமேனும் இதை சொல்லவேண்டுமா என்றெண்ணினான். எப்போதேனும் சொல்லத்தான் போகிறோம் என்று தோன்றியது. அப்படியெனில் இவரிடமன்றி பிறிதெவரிடம் சொல்லக்கூடும் என்ற மறுஎண்ணம் வந்தது. இந்தக் காட்டில் இவரை நான் சந்திக்க வேண்டுமென்பதே ஊழ் போலும். இவரிடம் இதை சொல்ல வேண்டுமென்பதே ஆணை. அவன் சுவர் பற்றி எழுந்து வெளியே வந்து குடில் முகப்பிலிடப்பட்ட மரத்தண்டின்மேல் அமர்ந்துகொண்டு “நான் கூற விழைகிறேன், முனிவரே” என்றான்.

“கூறுக, உரிய சொல்லாக்குவது மட்டுமே உணர்வுகளை வென்று செல்வதற்கான வழி. புரிந்துகொள்ளப்படாமலிருக்கையிலேயே அவை உணர்வுகள். புரிந்துகொள்ளப்பட்டவுடன் அவை கருத்துக்கள். உணர்வுகளுக்கு மாற்றும் விளக்கமும் இல்லை. கருத்துகளுக்கு அவை உண்டு” என்று அசன முனிவர் சொன்னார். அத்தகைய சொற்களை அவன் கல்விச்சாலையில் வெறும் பாடங்களென கேட்டிருந்தான். அன்று அவை வாழ்க்கை எனத் திரண்டு நேர்முன் நின்றிருப்பதுபோல் தோன்றின.

“இப்புவியெங்கும் நாமுணர்ந்து இருப்புகொண்டிருக்கும் அனைத்துப் பொருட்களும் கருத்துகளே. கருத்துகளாக மாறி மட்டுமே பொருட்கள் நம்மை வந்தடைய முடியும். அப்பால் அவை கொள்ளும் மெய்ப்பொருண்மை என்ன என்று ஒருபோதும் நாம் அறியக்கூடுவதில்லை. பொருட்களை கலந்தும் விரித்தும் நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் கருத்துகளின் தொகை அலைபெருகிச்செல்லும் ஒழுக்கையே வாழ்வென்கிறோம். அவ்வாழ்வின் நினைவுப்பதிவையே எஞ்சுவதெனக் கொள்கிறோம். நீர் சொல்லத்தொடங்குவது அதில் ஒரு சிறு குமிழி மட்டுமே என்றுணர்க” என்றார் அசனர்.

ஒருகணம் உளமெழுந்து அக்கருத்தைத் தொட்டதுமே அதுவரை கொண்டிருந்த உணர்வுகளனைத்தும் பொருளற்று சிறுத்து விழிக்கெட்டாதபடி மறைவதைக் கண்டு வியந்தான். சொல்லவேண்டியதில்லை என்றுகூட தோன்றியது. பெருமூச்சுடன் “ஆம்” என்றான். பின்னர் புன்னகைத்தபின் “வெற்றாணவம். வேறொன்றுமில்லை. அதனாலேயே அதை இத்தனை பெருக்கிக்கொண்டேன்” என்றான். “சொல்க, இனி சொல்வது எளிதாகும்” என்றார் அசனர். அவன் முதலிரு சொற்களுக்குள்ளேயே அதை வெறும் வேடிக்கை என்றுணர்ந்தான். நகையாட்டும் தற்களியாட்டுமாக அவ்வுணர்வுகளை சொல்லி முடித்தான்.

உரக்க சிரித்து முனிவர் சொன்னார் “நன்று, காமத்தைப்பற்றி பேச உகந்த வழி என்பது அதை இளிவரலாக மாற்றி முன்வைப்பதே.” அவன் “ஆம், ஒரு புன்னகைக்கு அப்பால் அதில் பொருளேதுமில்லை” என்றான். அவர் “என்னிடம் கேட்க வினாவேதும் உள்ளதா? நான் விளக்க புதிர் எஞ்சியுள்ளதா?” என்றார். “இல்லை, எடுத்து வகுத்துச் சொன்னதுமே நானே அனைத்தையும் உணர்ந்துவிட்டேன்” என்றான் நளன். “திரும்பிச் செல்க! இனி உமக்கு இவ்வண்ணம் அரண்மனை துறந்து காடேகல் நிகழ்வது மிகவும் பிந்தியே. அன்று பிற வினாவொன்று உடனிருக்கும். வேறுவகை துயர் சூழ்ந்து வரும். அன்றும் இச்சொல்லையே எண்ணிக் கொள்க!” என்றார் முனிவர்.

“தங்கள் நற்சொற்கொடை என்றே இதை கொள்கிறேன்” என்றான் நளன். “இளைஞரே, ஒன்றுணர்க! உமது உடலில் முளைத்துள்ள காமம் என்பது இங்குள்ள ஒவ்வொரு புல்லிலும் புழுவிலும் பூச்சியிலும் விலங்கிலும் எழும் உயிரின் முகிழ்வு. முளைத்தெழ, பெருக, திகழ விரும்பும் அதன் இறையாணை. கட்டற்று அது பெருகுவதே இயல்பு. ஈரமுள்ள இடத்திலெல்லாம் புல்விதைகள் முளைக்கின்றன. ஆனால் மானுட சித்தம் அதன்மேல் ஒரு ஆணையை விடுத்தாக வேண்டும். உம் ஆணை இது எனக் கொள்க!” அசனர் சொன்னார்.

“நீர் அடையவிருக்கும் பெண் எங்கோ பிறந்து முழுமை நோக்கி வந்துகொண்டிருக்கிறாள். அவளுக்காக உமது உயிர்விசை இங்கு காத்திருக்கிறது. தனக்குரிய பெண்ணை கண்டடைகையில் அவளே முதல் பெண்ணென ஒருவன் உணர்வான் என்றால் நல்லூழ் கொண்டவன். அவளுக்கு முன் தூயவனென்றும் தகுதியானவனென்றும் உணரமுடிவதுபோல் பேரின்பம் எதுவுமில்லை. உடல் கொண்ட காமம் மிகச் சிறிதென்றுணர்க! உளம் நிறையும் காமம் தெய்வம் இறங்கி வந்தாடும் களியாட்டு. உம்மில் அது திகழ்க!”

flowerஅன்று மாலை அரண்மனைக்குத் திரும்பியபோது நளன் பிறிதொருவனாக இருந்தான். இளங்காளை என நடையில் தோள்நிமிர்வில் நோக்கில் ஆண்மை திகழ்ந்தது. சொல்லில் அறிந்தவனின் உள்அமைதி பொருந்தியிருந்தது. அவனைக் கண்டதுமே அன்னை அவன் பிறிதொருவனாகிவிட்டான் என்று எண்ணினாள். முதல் முறையாக அவன் முன் விழிதாழ்த்தி “எங்கு சென்றிருந்தாய்?” என்று தாழ்ந்த குரலில் கேட்டாள். அவள் குரலில் எழுந்த பெண்மையை உணர்ந்து கனிந்த தொனியில் “காட்டிற்கு” என்றபின் “எனக்கொன்றும் ஆகவில்லை, அன்னையே. நான் நீராட விரும்புகிறேன்” என்றான்.

“நன்று” என்றபின் அவள் விலகிச் சென்றாள். தன் அணுக்கச்சேடியும் மைந்தனின் செவிலியுமான பிரபையிடம் “அவன் முற்றிலும் மாறிவிட்டிருக்கிறான். நேற்றிரவு என்ன நிகழ்ந்ததென்று அறிய விரும்புகிறேன்” என்றாள். “என்ன நிகழ்ந்தது என்று எண்ணுகிறீர்கள்?” என்றாள் பிரபை. “அவன் பெண்ணை அறிந்திருக்கக்கூடும்” என்றாள் அவள். “அது நன்றல்லவா?” என்றாள் சேடி. “பெண்ணை முதலில் அறிபவன் தகுதியான ஒருத்தியிடம் அதை அறியவேண்டும். ஏனென்றால் முதல் அறிதலிலிருந்து ஆண்களால் மீள முடிவதில்லை” என்றாள் அரசி.

“ஆண்களுக்கு காமத்தில் தேடலென்பதே இல்லை. கடந்து போதல் மட்டுமே அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அகன்ற ஒவ்வொன்றும் பெரிதாகும் என்பது நினைவின் நெறி. எனவே அவன் உள்ளத்தில் இந்த முதல் அறிதலே பேருருக்கொண்டு நிற்கும். நாள் செல்ல வளரும். இனி வரும் உறவனைத்தையும் இந்த முதல் அறிதலைக் கொண்டே அவன் மதிப்பிடுவான். இது நன்றன்று எனில் அவன் காமங்கள் அனைத்தும் நன்றென்று ஆகாது. இது சிறுமையுடையது என்றால் இப்பிறவியில் சிறு காமமே அவனுக்கு உரித்தாகும்” என்றாள் அன்னை.

தாழ்ந்த விழிகளுடன் தன்னுடன் என அவள் சொன்னாள் “பெண்கள் நற்காமத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே காமத்துடன் அவர்கள் வளர்கிறார்கள். முதற்காமம் அவர்களுக்குள் சுருங்கி உடைந்த கைவளையென, உடுத்து மறந்த சிற்றாடையென எங்கோ நினைவுக்குள் கிடக்கும். தனக்குரியவனை சென்றடைந்தவள் ஒருபோதும் நினைவுகளை நோக்கி திரும்பமாட்டாள். தன்னை அதற்கு முற்றும் ஒப்படைப்பாள். பிறிதொன்றிலாதிருப்பாள். நிறைந்து குறையாமல் ததும்பாமல் திகழ்வாள்.”

“பெண்களைப்பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. அறிவதும் ஆய்வதுமாகச் செல்லும் அவர்களால் தம்மை மீட்கவும் திருத்தவும் இயலும். ஆண்களைக் குறித்தே பெற்றோர் எச்சரிக்கை கொள்ளவேண்டும். ஆனால் அரச குடியிலோ பிற குலங்களிலோ எவரும் அதைப்பற்றி கவலை கொள்வதில்லை. எதிர்பாரா நிகழ்வுகளின் ஆடல்வெளிக்கு மைந்தரை எதுவும் கற்பிக்காமல் திறந்துவிடுகிறார்கள். நானும் அதையே செய்துவிட்டேன் என்று அஞ்சுகிறேன்” என்றாள் அரசி.

“முன்னர் நூறுமுறை அதை எண்ணியதுண்டென்றாலும் என் மைந்தனை இளஞ்சிறுவனென்று எண்ணும் அன்னையின் அறியாமையைக் கடந்து என்னால் செல்ல முடியவில்லை. நேற்று முன்தினம் அவன் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்து பார்த்தபோதே மைந்தன் இளைஞனாகிவிட்டிருந்ததை உணர்ந்தேன். அதை அத்தருணத்திலும் ஒத்திப்போட விழைந்ததனால் எதைச் சொல்வது என்றறியாமல் பொருளற்ற பேச்சை உதிர்த்துவிட்டு மீண்டு வந்தேன். வரும்போதே என் உள்ளத்தின் ஆழம் சொல்லிவிட்டது, அவன் ஆண் என்று. ஆகவேதான் உன்னை அழைத்து அவனிடம் பேசச் சொன்னேன். அதற்குள் அவன் கிளம்பிச் சென்றுவிட்டான்.”

“செவிலியே, சென்றவனல்ல மீண்டு வந்திருப்பவன். அவன் அடைந்த பெண் யார் என்பதை மட்டும் அறிந்து வருக!” என்றாள் அரசி. பிரபை சிரித்து “ஒருநாளில் ஒருவனை முற்றாக மாற்றி அனுப்புவது மானுடப் பெண்ணால் இயல்வதா என்ன? அது கானக அணங்காகவே இருக்கக்கூடும்” என்றாள். “நகையாடாதே! நான் அவனை எண்ணி துயர் கொள்கிறேன். சென்று அவனிடம் சொல்லாடிவிட்டு வா” என்றாள் அன்னை.

செவிலி அவன் அறைக்கு வந்தபோது அவன் நீராடி உடைமாற்றி அணிகள் சூடிக்கொண்டிருந்தான். தொலைவிலேயே அவனைக் கண்டதும் செவிலியின் நடை தளர்ந்தது. முலைகளுக்குமேல் மென்மலர்போல் அவள் எடுத்துச் சூடிய சிறுமைந்தனல்ல அவன் என்றுணர்ந்தாள். எனவே மிகையான இயல்பு நடையுடன் அருகே வந்து உரக்க நகைத்து “எங்கு சென்றிருந்தாய், மைந்தா? அன்னை உன்னை எண்ணி நேற்றும் முன்தினமும் துயருற்றிருந்தார்” என்றாள். அவன் அவள் விழிகளை நோக்கி “காட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு அசனமுனிவரைப் பார்த்தேன்” என்றான்.

“அவரா? முன்பு இங்கு நிமித்திகராக இருந்தார். பித்தரென்றும் தனியரென்றும் இங்குளோர் அவரை நகையாடினர். ஒருநாள் நிமித்த நூல்கள் அனைத்தையும் எரித்து அதில் ஒரு கிள்ளு நீறெடுத்து நெற்றியிலிட்டு கிளம்பிச்சென்றார் என்றார்கள்” என்றாள் பிரபை. பின்னர் “காட்டில் பிற எவரை சந்தித்தாய்?” என்றாள். அவ்வினாவை உடனே உணர்ந்து திரும்பி “பெண்கள் எவரையும் அல்ல” என்றான். நெஞ்சில் நிறைந்த விடுதலை உணர்வுடன் “நான் அதை கேட்கவில்லை” என்றாள் செவிலி.

சிரித்து “அதை கேட்க எண்ணினீர்கள்” என்றான் நளன். “சரி, கேட்டுவிட்டேன்” என்றாள் பிரபை. “அதற்கே மறுமொழியுரைத்தேன். பெண்கள் எவரையும் அணுகவில்லை” என்றான். “ஆனால் பெண்களைக் குறித்து ஒரு வரியை அடைந்திருக்கிறாய். அது என்ன?” என்று செவிலி கேட்டாள். “காமம் ஓர் அருமணி. அதை சூடத் தகுதி கொண்டவர்களுக்கே அளிக்கவேண்டும். அதுவரை அதை காத்து வைத்திருக்க வேண்டும். கருவூலத்தில் நிகரற்ற மணி ஒன்றுள்ளது என்ற தன்னுணர்வே பெருஞ்செல்வம். கரந்திருக்கும் அச்செல்வத்தை பணமென்றாக்கி நூறு நகரங்களில் புழங்க முடியும். அதைத்தான் உணர்ந்தேன்” என்றான் நளன்.

“அதை அவர் சொன்னாரா?” என்றாள் செவிலி. “அவர் சொல்லவில்லை. இவை என் சொற்கள்” என்றபின் அவள் இரு தோள்களிலும் கைவைத்து கண்களுக்குள் நோக்கி “பிறகென்ன அறிய வேண்டும், அன்னையே?” என்றான். அவள் விழிகள் தாழ்த்தி புன்னகைத்து “ஏதுமில்லை” என்றாள். முதல் முறையாக இத்தொடுகையை தன் உள்ளம் ஏன் இத்தனை உவகையுடன் எதிர்கொள்கிறது? முதல் முறையாக அவன் முன் ஏன் நடை துவள்கிறது? ஏன் குரலில் ஒரு மென்மை கூடுகிறது?

“அரசவைக்குச் செல்கிறாயா?” என்று கேட்டாள். “ஆம், நெடுநாளாயிற்று சென்று” என்றபின் அவன் “வருகிறேன், அன்னையே” என்று சொல்லி காத்து நின்ற பாங்கனுடன் சேர்ந்துகொண்டான். அவன் செல்வதை நோக்கி தோற்றம் மறைவது வரை விழியிமைக்காது நின்றபின் சிலம்புகள் ஒலிக்க இடைநாழியில் துள்ளி ஓடி மூச்சிரைக்க அரசியிடம் சென்ற செவிலி “அவன் பெண்ணென்று எவரையும் அறியவில்லை. தன்னையே அறிந்திருக்கிறான், அரசி” என்றாள்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 6

5. கரியெழில்

flowerவிதர்ப்பத்தை நோக்கி செல்லும் பாதையில் நடக்கையில் தருமன் சொன்னார் “நாங்கள் இன்பத்துறப்பு நோன்பு கொண்டவர்கள், சூதரே. இன்னுணவு உண்பதில்லை. மலர்சூடுவதில்லை. எனவே செவ்வழியே செல்வதும் எங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. செல்வர் முகம் காண்பதும் நெறிப்பிழைவு என்றே கொள்ளப்படும்.” பிங்கலன் புன்னகைத்தபடி “நல்ல நோன்பு, முனிவரே. ஆனால் செல்வர் முகம் காண மறுப்பது துன்பத்துறப்பு அல்லவா?” என்றான். தருமன் புன்னகைத்து “கதையை தொடர்க!” என்றார்.

அவர்கள் பெரும்பாதையிலிருந்து கிளைபிரிந்து குறுங்காடு வழியாகச் சென்ற ஒற்றையடிப்பாதையில் நடந்தனர். ஒருவர் பின் ஒருவரென்றே அங்கே நடக்கமுடிந்தது. வில்லுடன் அர்ஜுனன் முன்னால் செல்ல பிங்கலனின் மைந்தர் தொடர்ந்தனர். தருமனுக்குப் பின்னால் திரௌபதி நடந்தாள். அவர்களுக்குப் பின்னால் பிங்கலன் கதை சொன்னபடி செல்ல நகுலனும் சகதேவனும் பிங்கலனின் குடிமகளிரும் நடந்தனர். இறுதியாக பீமன் சூதர்களின் குழந்தைகளை தோளிலேற்றியபடி வந்தான்.

பிங்கலன் கதையை தொடர்ந்தான். விந்தியமலைகளுக்கு அப்பால் குடியேறிய நிஷாதர்கள் காகங்களை குடித்தெய்வமென கொண்டிருந்தார்கள். அன்னையரும் மூதாதையரும் மின்கதிர்தேவனும் காற்றின் தெய்வங்களும் நிரையமர்ந்த அவர்களின் கோயில்களில் இடது வாயிலின் எல்லையில் காகத்தின் மீதமர்ந்த கலிதேவனின் சிலை கண்கள் மூடிக்கட்டிய வடிவில் அமர்ந்திருந்தது. கலியே அவர்களின் முதன்மைத்தெய்வம். அத்தனை பலிகளும் கொடைகளும் கலிதேவனுக்கே முதலில் அளிக்கப்பட்டன. கலியின் சொல்பெற்றே அவர்கள் விதைத்து அறுத்தனர். மணந்து ஈன்றனர். இறந்து நினைக்கப்பட்டனர்.

ஆண்டுக்கொருமுறை கலிதேவனுக்குரிய ஆடிமாதம் கருநிலவுநாளில் அவன் கண்களின் கட்டை பூசகர் அவிழ்ப்பார். அந்நாள் காகதிருஷ்டிநாள் என்று அவர்களால் கொண்டாடப்பட்டது. அன்று காலைமுதல் கலிதேவனுக்கு வழிபாடுகள் தொடங்கும். கள் படைத்து கரும்பன்றி பலியிட்டு கருநீல மலர்களால் பூசெய்கை நிகழ்த்துவார்கள். இருள்விழித் தேவனின் முன் பூசகர் வெறியாட்டுகொண்டு நிற்க அவர்களின் காலடியில் விழுந்து துயர்சொல்லி கொடைகோருவார்கள் குடிகள். அந்தி இருண்டதும் அனைவரும் தங்கள் இல்லங்களுக்குள் சென்று கதவுகளை மூடிக்கொள்வார்கள். பூசகர் பின்னின்று கலியின் கண்கட்டை அவிழ்த்தபின் பந்தங்களைப் பற்றியபடி ஓடிச்சென்று தன் சிறுகுடிலுக்குள் புகுந்துகொள்வார். பின்னர் முதல்நிலவுக்கீற்று எழுவதுவரை எவரும் வெளியே நடமாடுவதில்லை. கலி தன் விழி முதலில் எவரைத் தொடுகிறதோ அவர்களை பற்றிக்கொள்வான் என்பது வழிச்சொல்.

எவரும் இல்லத்திலிருந்து வெளியே வரப்போவதில்லை என்றே எண்ணியிருப்பார்கள். ஆனால் ஆண்டுதோறும் ஒருவர் வெளிவந்து கலியின் நோக்கு தொட்டு இருள் சூடி அழிவது தவறாமல் நிகழ்ந்தது. கலி வந்து நின்ற நாள்முதல் ஒருமுறையும் தவறியதில்லை. கலிநிகழ்வின் கதைகளை மட்டும் சேர்த்து பூசகர் பாடிய குலப்பாடல் ஆண்டுதோறும் நீண்டது. அவ்வரிசையில் அரசகுடிப் பிறந்தவர்கள் எழுவர் இருந்தனர். அவர்கள் கலியடியார் என்றழைக்கப்பட்டனர். “கலி தன்னை விரும்பி அணுகுபவர்களை மட்டுமே ஆட்கொள்ளமுடியும் என்ற சொல்பெற்றவன்” என்றனர் மூத்தோர். “விழைந்து கலிமுன் தோன்றுபவர் எவர்?” என்றனர் இளையோர்.

“மைந்தரே, ஆக்கத்தையும் அழகையும் இனிமையையும் விழைவது போலவே மானுடர் அழிவையும் இழிவையும் கசப்பையும் தேடுவதுண்டு என்று அறிக! சுவைகளில் மானுடர் மிகவிழைவது இனிப்பை அல்ல, கசப்பையே. சற்று இனிப்போ புளிப்போ உப்போ கலந்து ஒவ்வொரு நாளும் மானுடர் கசப்பை உண்கிறார்கள். நாதிருந்தும் சிற்றிளமை வரைதான் இனிப்பின் மேல் விழைவு. பின் வாழ்நாளெல்லாம் கசப்பே சுவையென்று உறைக்கிறது” என்று மறுமொழி இறுத்தார் மூத்த நிமித்திகர் ஒருவர். ஊழ்வினை செலுத்திய தற்செயலால், அடக்கியும் மீறும் ஆர்வத்தால், எதையேனும் செய்துபார்க்கவேண்டுமென்ற இளமைத்துடிப்பால், எனையென்ன செய்ய இயலும் என்னும் ஆணவத்தால், பிறர்மேல் கொண்ட வஞ்சத்தால், அறியமுடியாத சினங்களால் அக்குடிகளில் எவரேனும் கலியின் கண்ணெதிரே சென்றனர். அனைத்தையும்விட தன்னை அழித்துக்கொள்ளவேண்டும் என்று உள்ளிருந்து உந்தும் விசை ஒன்றால்தான் பெரும்பாலானவர்கள் அவன் விழி எதிர் நின்றனர்.

கலி விழியைக் கண்டவன் அஞ்சி அலறி ஓடிவந்து இல்லம்புகும் ஓசை கேட்கையில் பிறர் ஆறுதல் கொண்டனர். “எந்தையே, இம்முறையும் பலி கொண்டீரா?” என்று திகைத்தனர். கலி கொண்டவன் ஒவ்வொருநாளும் நிகழ்வதை எதிர்நோக்கி சிலநாட்கள் இருந்தான். சூழ இருந்தவர் நோக்காததுபோல் நோக்கி காத்திருந்தனர். ஒன்றும் நிகழாமை கண்டு ஒன்றுமில்லை என்று அவர்கள் உணரும்போது ஒன்று நிகழ்ந்தது. அவன் அழிந்த பின்னர் அவர்கள் எண்ணிச்சூழ்ந்தபோது அவன் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் விளைவாகவும் உகந்த முடிவாகவுமே அது இருப்பதை கண்டார்கள். “கலி பழி சுமப்பதில்லை” என்றனர் பூசகர். “கலி கண் பெறுபவன் அத்தருணம் நோக்கியே அத்தனை செயல்களாலும் வந்துகொண்டிருந்தான்.”

flowerவீரசேனனுக்கு மைந்தனில்லாமையால் நிஷாத குலமுறைப்படி சினந்த நாகங்களுக்கும் மைந்தர்பிறப்பைத் தடுக்கும் கானுறை தெய்வங்களுக்கும் பூசனை செய்து கனிவு தேடினான். மூதன்னையருக்கும் மூத்தாருக்கும் பலிகள் கொடுத்தான். எட்டாண்டுகள் நோன்பு நோற்றும் குழவி திகழாமை கண்டு சோர்ந்திருந்தான். ஒருமுறை தன் குலத்தின் ஆலயத்திற்குச் சென்று பூசனைமுறைகள் முடித்து திரும்பும்போது இடப்பக்கம் வீற்றிருந்த கலியின் சிலையை பார்த்தான். சிலகணங்கள் நோக்கி நின்றபின் “நான் நம் தெய்வங்களில் முதன்மையானவராகிய கலியிடம் மட்டும் ஏன் கோரவே இல்லை, அமைச்சரே?” என்றான்.

அமைச்சராகிய பரமர் பணிவுடன் “கலியிடம் எவரும் எதையும் கோருவதில்லை, அரசே” என்றார். “ஏன்?” என்றான் வீரசேனன். “கோருவன அனைத்தையும் அளிக்கும் தெய்வம் அது. ஆனால் முழுமுதல் தெய்வம் அல்ல. பெருவெளியின் வெறுமையை நிறைத்துள்ளது சொல்லப்படாத சொல். அச்சொல்லில் ஒரு துளியை அள்ளி பொருளும் உயிருமாக்கி அளிக்கின்றனர் பிரம்மனும் விண்ணோனும் சிவனும் அன்னையும். கலியால் அவ்வண்ணம் சொல்லள்ள இயலாது. இங்குள்ள ஒன்றை எடுத்து உருமாற்றி நமக்களிக்கவே இயலும். துலாவின் மறுதட்டிலும் நம்முடையதே வைக்கப்படும்” என்றார் பரமர்.

“ஆயினும் கோருவது வந்தமையும் அல்லவா?” என்றான் வீரசேனன். “ஆம் அரசே, ஐயமே வேண்டியதில்லை. பெருந்தெய்வங்கள் அருந்தவம் பொலிந்த பின்னரே கனிபவை. அத்துடன் நம் ஊழும் அங்கு வந்து கூர்கொண்டிருக்கவேண்டும். கலியை கைகூப்பி கோரினாலே போதும்” என்றார் பரமர். ஒருகணம் கலி முன் தயங்கி நின்றபின் அரசன் “கருமையின் இறையே, எனக்கு அருள்க! என் குலம் பொலிய ஒரு மைந்தனை தருக!” என்று வேண்டினான். பெருமூச்சுடன் மூன்றுமுறை நிலம்தொட்டு வணங்கிவிட்டு இல்லம் மீண்டான். அன்றிரவு அவன் கனவில் எட்டு கைகளிலும் பாசமும் அங்குசமும் உழலைத்தடியும் வில்லும் நீலமலரும் காகக்கொடியும் அஞ்சலும் அருளலுமாகத் தோன்றிய கலி “நீ கோரியதைப் பெறுக!” என்றான்.

விழிகசியும்படி மகிழ்ந்து “அடிபணிகிறேன், தேவே” என்றான் வீரசேனன். “உனக்கு ஒரு மைந்தனை அருள்வேன். அக்கணத்தில் எங்கேனும் இறக்கும் ஒருவனின் மறுபிறப்பென்றே அது அமையும்” என்றான் கலி. “அவ்வாறே, கரியனே” என்றான் வீரசேனன். “அவன் என் அடியவன். எந்நிலையிலும் அவன் அவ்வாறே ஆகவேண்டும். என்னை மீறுகையில் அவனை நான் கொள்வேன்” என்றபின் கலி கண்ணாழத்துக் காரிருளுக்குள் மறைந்தான். விழித்தெழுந்த வீரசேனன் தன் அருகே படுத்திருந்த அரசியை நோக்கினான். அவள்மேல் நிழல் ஒன்று விழுந்திருந்தது. அது எதன் நிழல் என்று அறிய அறையை விழிசூழ்ந்தபின் நோக்கியபோது அந்நிழல் இல்லை. அவள் முகம் நீலம் கொண்டிருந்தது. அறியா அச்சத்துடன் அவன் அன்றிரவெல்லாம் அவளை நோக்கிக்கொண்டிருந்தான்.

மறுநாள் கண்விழித்த அவன் மனைவி உவகைப்பெருக்குடன் அவன் கைகளை பற்றிக்கொண்டு “அரசே, நான் ஒரு கனவு கண்டேன். எனக்கு மைந்தன் பிறக்கவிருக்கிறான்” என்றாள். “என்ன கனவு?” என்றான் வீரசேனன். “எவரோ எனக்கு உணவு பரிமாறுகிறார்கள். அறுசுவையும் தன் முழுமையில் அமைந்து ஒன்றை பிறிதொன்று நிகர்செய்த சுவை. அள்ளி அள்ளி உண்டுகொண்டே இருந்தேன். வயிறு புடைத்து வீங்கி பெரிதாகியது. கை ஊன்றி எழுந்தபோது தெரிந்தது நான் கருவுற்றிருக்கிறேன் என்று. எவரோ என்னை அழைத்தார்கள். நான் வெளியே வந்து பார்த்தேன். கரிய புரவி ஒன்று வெளியே நின்றிருந்தது. அதன் மேல் ஏறிக்கொண்டு விரைந்தேன். ஒளிமட்டுமே ஆன சூரியன் திகழ்ந்த வானில் குளிர்காற்று என் குழலை அலைக்க சென்றுகொண்டே இருந்தேன்.”

நிமித்திகர் அதைக் கேட்டதுமே சொல்லிவிட்டனர் “அரசாளும் மைந்தன். கரிய தோற்றம் கொண்டவன்.” பத்துமாதம் கடந்து அவள் அவ்வண்ணமே அழகிய மைந்தனை பெற்றாள். அந்நாளும் தருணமும் கணித்த கணியர் “இறுதிவரை அரசாள்வார். பெரும்புகழ்பெற்ற அரசியை அடைந்து நன்மக்களைப் பெற்று கொடிவழியை மலரச்செய்வார்” என்றனர். குழவிக்கு ஓராண்டு நிறைகையில் அரண்மனைக்கு வந்த தப்தக முனிவர் “அரசே, இவன் கருக்கொண்ட கணத்தில் இறந்தவன் உஜ்ஜயினியில் வாழ்ந்த முதுசூதனாகிய பாகுகன். அவனுடைய வாழ்வின் எச்சங்கள் இவனில் இருக்கலாம். திறன் கொண்டிருப்பான், இறுதியில் வெல்வான்” என்றார்.

மைந்தனுக்கு தன் மூதாதை பெயர்களில் ஒன்றை வைக்க வீரசேனன் விழைந்தான். ஆனால் கலிதேவனின் முன் மைந்தனைக் கிடத்தியபோது பூசகன்மேல் வெறியாட்டிலெழுந்த கலிதேவன் “இவன் இங்கு நான் முளைத்தெழுந்த தளிர். என் முளை என்பதனால் இவனை நளன் என்றழையுங்கள்” என்று ஆணையிட்டான். ஆகவே மைந்தனுக்கு நளன் என்று பெயரிட்டார்கள். மலையிறங்கும் அருவியில் ஆயிரம் காதம் உருண்டுவந்த கரிய கல் என மென்மையின் ஒளிகொண்டிருந்தான் மைந்தன். இரண்டு வயதில் சேடியருடன் அடுமனைக்குச் சென்றபோது அடம்பிடித்து இறங்கி சட்டுவத்தை கையில் எடுத்து கொதிக்கும் குழம்பிலிட்டு சுழற்றி முகம் மலர்ந்து நகைத்தான். மூன்று வயதில் புரவியில் ஏறவேண்டும் என அழுதவனை மடியிலமர்த்தி தந்தை முற்றத்தை சுற்றிவந்தார். சிறுவயதிலேயே தெரிந்துவிட்டது அவன் அடுதொழிலன், புரவியறிந்தவன் என்று.

flowerவளர்ந்து எழுந்தபோது பாரதவர்ஷத்தில் நிகரென எவரும் இல்லாத அடுகலைஞனாகவும் புரவியின் உள்ளறிந்தவனாகவும் அவன் அறியப்படலானான். நிஷாதருக்கு கைபடாதவை அவ்விரு கலைகளும். காட்டில் சேர்த்தவற்றை அவ்வண்ணமே சுட்டும் அவித்தும் தின்று பழகியவர்கள் அவர்கள். சுவை என்பது பசியின் ஒரு தருணம் மட்டுமே என்றுதான் அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களுக்கு உண்பதென்பது தன் உடலை நாவில் குவித்தல் என்று அவன் கற்பித்தான். உடலுக்குள் உறைவது, இப்புவியை அறிவதில் முதன்மையானது சுவைத்தலே என்று தெரியச்செய்தான். அன்னை முலையை சுவைத்ததுபோல் புவியிலுள்ள அனைத்தையும் அறிக என்று அறிவுறுத்தினான்.

உண்ணுதலின் நிறைவை நிஷதகுடிகள் உணர்ந்தனர். ஒவ்வொரு சுதியையும் தனித்தனியாகக் கேட்டு ஓசையிலுள்ள இசையை உணர்வதுபோல அறுசுவை கொண்ட கனிகளையும் காய்களையும் மணிகளையும் உப்புகளையும் அறிந்தபின் சுதி கலந்து பண்ணென்றாவதன் முடிவற்ற மாயத்தை அறிந்து அதில் திளைத்து ஆழ்ந்தனர். சுவை என்பது பருப்பொருள் மானுட ஞானமாக கனிவதே. சுவை என்பது இரு முழுமைகள் என தங்களை அமைத்துக்கொண்டு இங்கிருக்கும் பொருட்கள் ஒன்றையொன்று அறியும் தருணம். சுவையால் அவை இணைக்கப்படுகின்றன. எனவே சுவைவெளியே அவை ஒன்றென இருக்கும் பெருநிலை. பொருள்கள் புடைத்தெழுந்து கடுவெளி புடவியென்றாகிறது. கடுவெளியில் பொருளின் முதலியல்பென தோன்றுவது சுவை. இன்மை இருப்பாகும் அத்தருணமே சுவை. சுவையே பொருளென்றாகியது. பொருளை சுவையென்றாக்குபவன் புடவியை பிரம்மம் என்று அறிபவன்.

நளன் கைபட்ட பொருளனைத்தும் தங்கள் சுவையின் உச்சத்தை சூடி நின்றன. அவன் சமைப்பவற்றின் சுவையை அடுமனை மணத்திலேயே உணர்ந்தனர் நிஷதத்தின் குடிகள். பின்னர் அடுமனையின் ஒலிகளிலேயே அச்சுவையை உணர்ந்தனர். அவனை நோக்குவதே நாவில் சுவையை எழுப்புவதை அறிந்து தாங்களே வியந்துகொண்டனர். அவன் பெயர் சொன்னாலே இளமைந்தர் கடைவாயில் சுவைநீர் ஊறி வழிந்தது. அவன் சமைத்தவற்றை உண்டு நகர்மக்களின் சுவைக்கொழுந்துகள் கூர்கொண்டன. எங்கும் அவர்கள் சுவை தேடினர். ஆகவே சமைப்பவர்கள் எல்லாருமே சுவைதேர்பவர்களென்றாயினர்.

நிஷதத்தின் உணவுச்சுவை வணிகர்களின் வழியாக எங்கும் பரவியது. அங்கு அடுதொழில் கற்க படகிலேறி வந்தனர் அயல்குடிகள். அடுமனைகளில் தங்கி பொருளுடன் பொருள் கலந்து பொருளுக்குள் உறைபவை வெளிவரும் மாயமென்ன என்று கற்றனர். அது கற்பதல்ல, கையில் அமரும் உள்ளம் மட்டுமே அறியும் ஒரு நுண்மை என்று அறிந்து அதை எய்தி மீண்டனர். நாச்சுவை தேர்ந்தமையால் நிஷதரின் செவிச்சுவையும் கூர்ந்தது. சொற்சுவை விரிந்தது. அங்கே சூதரும் பாணரும் புலவரும் நாள்தோறும் வந்திறங்கினர். முழவும் யாழும் தெருக்களெங்கும் ஒலித்தன. நிஷதகுடிகள் குன்றேறி நின்று திசைமுழுக்க நோக்குபவர்கள் போல ஆனார்கள். தொலைவுகள் அவர்களை அணுகி வந்தன. அவர்களின் சொற்களிலெல்லாம் பொருட்கள் செறிந்தன.

விழிச்சுவை நுண்மைகொள்ள விழியென்றாகும் சித்தம் பெருக அவர்களின் கைகளில் இருந்து கலை பிறந்தது. எப்பொருளும் அதன் உச்சநிலையில் கலைப்பொருளே. நிஷதத்தின் கத்திகள் மும்மடங்கு கூரும் நிகர்வும் கொண்டவை. அவர்களின் கலங்கள் காற்றுபுகாதபடி மூடுபவை. அவர்களின் ஆடைகள் என்றும் புதியவை. அவர்களின் பொருட்கள் கலிங்க வணிகர்களின் வழியாக தென்னகமெங்கும் சென்று செல்வமென மீண்டு வந்து கிரிப்பிரஸ்தத்தை ஒளிரச்செய்தன. தென்னகத்தின் கருவூலம் என்று அந்நகரை பாடலாயினர் சூதர்.

நிஷதமண்ணுக்கு புரவி வந்தது எட்டு தலைமுறைகளுக்கு முன்னர் கலிங்க வணிகர்களின் வழியாகத்தான். கிரிசிருங்கம் பெருநகரென்று உருவானபோது படைவல்லமைக்கும் காவலுக்கும் புரவிகளின் தேவை உணரப்பட்டபோது அவற்றை பெரும்பொருள் கொடுத்து வாங்கினர். உருளைக் கூழாங்கற்கள் நிறைந்த அந்த மண்ணில் அவை கால்வைக்கவே கூசின. படகுகளில் நின்று அஞ்சி உடல்சிலிர்த்து குளம்பு பெயர்க்காமலேயே பின்னடைந்தன. அவற்றை புட்டத்தில் தட்டி ஊக்கி முன்செலுத்தினர். கயிற்றை இழுத்து இறக்கி விட்டபோது கால்களை உதறியபடி மூச்சு சீறி தரைமுகர்ந்தன. அவற்றைத் தட்டி ஊக்கி கொட்டகைகளுக்கு கொண்டுசென்றனர்.

அவை அந்நிலத்தை ஒருபோதும் இயல்பென உணரவில்லை. எத்தனை பழகிய பின்னரும் அவை அஞ்சியும் தயங்கியும்தான் வெளியே காலெடுத்து வைத்தன. ஆணையிட்டு, தட்டி, குதிமுள்ளால் குத்தி அவற்றை ஓட்டியபோது பிடரி சிலிர்த்து விழியுருட்டி கனைத்தபின் கண்மூடி விரைவெடுத்தன. கற்களில் குளம்பு சிக்கி சரிந்து காலொடிந்து புரவிகள் விழுவது நாளும் நிகழ்ந்தது. அதன் மேல் அமர்ந்து ஓட்டுபவன் கழுத்தொடிந்து மாய்வதும் அடிக்கடி அமைந்தது. எனவே புரவியில் ஏறுபவர்கள் அஞ்சியும் தயங்கியுமே ஏறினர். அவர்களின் உளநடுக்கை புரவிகளின் நடுக்கம் அறிந்துகொண்டது. புரவிகளும் ஊர்பவரும் இறக்கும்தோறும் நிஷதபுரியில் புரவியூர்பவர்கள் குறைந்தனர். புரவியில்லாமலேயே செய்திகள் செல்லவும் காவல் திகழவும் அங்கே அமைப்புகள் உருவாயின. பின்னர் புரவிகள் நகரச்சாலைகளில் அணிநடை செல்வதற்குரியவை மட்டுமே என்னும் நிலை அமைந்தது.

நளன் எட்டு வயதில் ஒரு புரவியில் தனித்து ஏறினான். கொட்டகையில் தனியாக கட்டப்பட்டிருந்த கரிய புரவியின் அருகே அவன் நின்றிருந்தான். சூதன் அப்பால் சென்றதும் அவன் அதை அணுகி முதுகை தொட்டான். அச்சமும் அதிலிருந்து எழும் சினமும், கட்டற்ற வெறியும் கொண்டிருந்த காளகன் என்னும் அப்புரவியை கட்டுகளில் இருந்து அவிழ்த்து சிறுநடை கொண்டுசெல்வதற்குக்கூட அங்கே எவருமிருக்கவில்லை. தசைப்பயிற்சிக்காக அதன்மேல் மணல்மூட்டைகளைக் கட்டி சோலையில் அவிழ்த்துவிட்டு முரசறைந்து அச்சுறுத்துவார்கள். வெருண்டு வால்சுழற்றி அது ஓடிச் சலித்து நிற்கும். அதுவே பசித்து வந்துசேரும்போது பிடித்துக்கட்டி தசையுருவிவிட்டு உணவளிப்பார்கள்.

சிறுவனாகிய நளன் அதன் கட்டுகளை அவிழ்த்து வெளியே கொண்டுசெல்வதை எவரும் காணவில்லை. அவன் அதன்மேல் சேணம் அணிவித்துக் கொண்டிருந்தபோதுதான் சூதன் அதை கண்டான். “இளவரசே…” என்று கூவியபடி அவன் பாய்ந்தோடி வந்தான். அதற்குள் நளன் புரவிமேல் ஏறிக்கொண்டு அதை கிளப்பிவிட்டான். அஞ்சி தயங்கி நின்ற காளகன் பின்னர் கனைத்தபடி பாய்ந்து வெளியே ஓடியது. நெடுந்தொலைவு சென்றபின்னர்தான் தன்மேல் எவரோ இருக்கும் உணர்வை அடைந்து சினம்கொண்டு பின்னங்கால்களை உதைத்து துள்ளித்திமிறி அவனை கீழே வீழ்த்த முயன்றது. கனைத்தபடி தன்னைத்தானே சுழற்றிக்கொண்டது.

நளன் அதற்கு முன் புரவியில் ஏறியதில்லை. ஆனால் புரவியேறுபவர்களை கூர்ந்து நோக்கியிருந்தான். புரவியேற்றம் பயில்பவர்களை சென்று நோக்கி நின்றிருப்பது அவன் வழக்கம். சேணத்தை அவன் சரியாக கட்டியிருந்தான். கடிவாளத்தை இறுகப்பற்றி கால்வளைகளில் பாதம்நுழைத்து விலாவை அணைத்துக்கொண்டு அதன் கழுத்தின்மேல் உடலை ஒட்டிக்கொண்டான். துள்ளிக் கனைத்து காட்டுக்குள் ஓடிய புரவி மூச்சிரைக்க மெல்ல அமைதியடைந்தது. மரக்கிளைகளால் நளன் உடல் கிழிபட்டு குருதி வழிந்தது. ஆனால் அவனால் அப்புரவியுடன் உளச்சரடால் தொடர்பாட முடிந்தது. அதை அவன் முன்னரே அறிந்திருந்தான்.

“நான் உன்னை ஆளவில்லை. இனியவனே, நான் உன்னுடன் இணைகிறேன். நாம் முன்னரே அறிவோம். நீ என் பாதி. என் உடல் நீ. உன் உயிர் நான். நீ புல்லை உண்ணும்போது நான் சுவையை அறிகிறேன். உன் கால்களில் நான் அறிவதே மண். உன் பிடரிமயிரின் அலைவில் என் விரைவு. நீ என் பருவடிவம். நம் உள்ளங்கள் ஆரத்தழுவிக்கொண்டவை. இனியவனே, என்னை புரவி என்றுணர்க! உன்னை நான் நளன் என்று அறிவதைப்போல” புரவி விழியுருட்டிக்கொண்டே இருந்தது. நீள்மூச்செறிந்து கால்களால் நிலத்தை தட்டியது. அவன் அதன் கழுத்தைத் தட்டி “செல்க!” என்றான்.

அது அஞ்சுவது கூழாங்கற்களையும் பாறையிடுக்குகளையும்தான் என அவன் அறிந்தான். அதன் கால்கள் கூசுவதை அவன் உள்ளம் அறிந்தது. சிலகணங்களுக்குப்பின் அவன் கூழாங்கற்களை தான் உணரத்தொடங்கினான். இடுக்குகளை அவன் உள்ளம் இயல்பாக தவிர்த்தது. அதை புரவியும் அறிந்தது. அதன் பறதி அகன்றது. அவர்கள் மலைச்சரிவுகளில் பாய்ந்தனர். புல்வெளிகளை கடந்தனர். கோதையின் பெருக்கில் நீராடியபின் மீண்டும் ஓடிக்களித்தனர். புரவியாக இருப்பதன் இன்பத்தை காளகன் உணர்ந்தது.

NEERKOLAM_EPI_06
திரும்பி அரண்மனை முற்றத்திற்கு வருகையில் அவனை எதிர்பார்த்து அன்னையும் தந்தையும் அமைச்சரும் காவலரும் பதைப்புடன் காத்திருந்தனர். அவனைக் கண்டதும் அன்னை அழுதபடி கைவிரித்து பாய்ந்துவந்தாள். அவன் புரவியிலிருந்து இறங்கியபோதே தெரிந்துவிட்டது, அவன் புரவியை வென்றுவிட்டான் என்று. வீரர்கள் பெருங்குரலில் வாழ்த்தினர். எங்கும் வெற்றிக்கூச்சல்கள் எழுந்தன. அவன் புரவியை வென்ற கதை அன்று மாலைக்குள் அந்நகரெங்கும் பேசப்பட்டது. மாலையில் அவன் காளகன் மேல் ஏறி நகரில் உலா சென்றபோது குடிகள் இருமருங்கும் பெருகிநின்று அவனை நோக்கி வியந்து சொல்லிழந்தனர். எழுந்து வாழ்த்தொலி கூவினர்.

காளகனிடமிருந்து அவன் புரவியின் உடலை கற்றான். புரவியின் மொழி அதன் தசைகளில் திகழ்வதே என்றறிந்தான். அத்தனை புரவிகளுடனும் அவன் உரையாடத் தொடங்கினான். அவை அவனூடாக மானுடரை அறியலாயின. மிக விரைவிலேயே கிரிப்பிரஸ்தத்தில் புரவித்திறனாளர் உருவாகி வந்தனர். உருளைக்கற்களை புரவிக்குளம்புகள் பழகிக்கொண்டன. எந்தக் கல்லில் காலூன்றுவது எந்த இடைவெளியில் குளம்பமைப்பது என்பதை குளம்புகளை ஆளும் காற்றின் மைந்தர்களாகிய நான்கு மாருதர்களும் புரிந்துகொண்டனர்.

கிரிப்பிரஸ்தத்தின் புரவிப்படை பெருகியதும் அது செல்வமும் காவலும் கொண்ட மாநகர் என்றாயிற்று. செல்வம் பெருகும்போது மேலும் செல்வம் அங்கு வந்துசேர்கிறது. காவல் கொண்ட நகர் கரை இறுகிய ஏரி. தென்னகத்தில் இருந்த மதுரை, காஞ்சி, விஜயபுரி போன்ற நகர்களை விடவும் பொலிவுடையது கிரிப்பிரஸ்தம் என்றனர் கவிஞர். நிஷாதகுலத்தில் நளனைப்போல் அரசன் ஒருவன் அமைந்ததில்லை என்று குலப்பாடகர் பாடினர். அவன் கரிய எழிலையும் கைதிகழ்ந்த கலையையும் விண்ணில் விரையும் பரித்திறனையும் பற்றி எழுதப்பட்ட பாடல்கள் சூதர் சொல்லில் ஏறி பாரதவர்ஷமெங்கும் சென்றன.

கலியருளால் பிறந்த மைந்தன் அவன் என்று அன்னையும் தந்தையும் நளனுக்கு அறிவுறுத்திக்கொண்டே இருந்தனர். நாள்தோறும் முதற்கருக்கலில் அவன் நீராடி கரிய ஆடை அணிந்து நீலமலர்களுடன் சென்று கலிதேவனை வணங்கி மீண்டான். வெல்வதெல்லாம் கலியின் கொடை என்றும் இயற்றுவதெல்லாம் அவன் இயல்வதால் என்றும் எண்ணியிருந்தான். ஒவ்வொரு முறை உணவுண்ணும்போதும் முதற்கவளத்தை அருகே வந்தமரும் காகத்திற்கு வழங்கினான். ஒவ்வொரு இரவும் கலியின் கால்களை எண்ணியபடியே கண்மூடித் துயின்றான்.

“எண்ணியது நிகழும் என்ற பெருமை கதைகளுக்கு உண்டு” என்றான் பிங்கலன். “ஆகவே அஞ்சுவது அணுகாமல் கதைகள் முடிவதில்லை. ஒரு பிழைக்காக காத்திருந்தான் கலிதேவன். ஒற்றை ஒரு பிழை. முனிவரே, பிழையற்ற மானுடர் இல்லை என்பதனால்தான் தெய்வங்கள் மண்ணிலிறங்க முடிகிறது. பிழைகள் அவை புகுந்து களம் வந்து நின்றாடச்செய்யும் வாயில்கள்.” தருமன் “ஆம்” என்றார். சகதேவன் “நளன் செய்த பிழை என்ன?” என்றான்.

“பொன், மண், பெண் என மூன்றே பிழைக்கு முதற்பொருட்கள். ஆனால் அவற்றை பிழைமுதல் என்றாக்குவது ஆணவம்தான்” என்றான் பிங்கலன். “வேனனை வென்றது. விருத்திரனை, ஹிரண்யனை, மாபலியை, நரகனை அழித்தது. ஆணவமே மண்ணில் பெருந்தெய்வம் போலும்” என்ற பிங்கலன் கைமுழவை முழக்கி “ஆம்! ஆம்! ஆம்!” என்றான்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 5

4. கலிமுகம்

flowerவிடைபெறுவதற்காக முதற்புலரியில் பாண்டவர்களும் திரௌபதியும் தமனரின் குடிலுக்குள் சென்றார்கள். அவர் அப்போதுதான் துயிலெழுந்து முகம் கழுவிக்கொண்டிருந்தார். அவர்களைக் கண்டதும் “இப்பொழுதிலேயா? நீராடி உணவருந்தி கிளம்பலாமே?” என்றார். “நாங்கள் நடந்து செல்லவிருக்கிறோம். பெருங்கோடை. சூரியன் சினப்பதற்குள் பாதி தொலைவைக் கடந்து சோலை ஒன்றை கண்டடைந்துவிடவேண்டும்” என்றார் தருமன். “ஆம், அதுவும் மெய்யே. நான் நடந்து நெடுநாட்களாகின்றது” என்றார் அவர்.

வணங்கி முறைமைச்சொற்கள் உரைத்து எழுகையில் நகுலன் “நிஷத நாட்டுக்கும் விதர்ப்பத்திற்கும் இடையே பிறிதொரு பூசல்முனை உள்ளது என்றீர்களே? அதைப்பற்றி பேசக் கூடவில்லை. நேற்று பின்னிரவில்தான் அதைப்பற்றி எண்ணினேன்” என்றான். “அது அனைவரும் அறிந்த கதைதான். ஸ்ரீசக்ரரின் நளோபாக்யானம் என்னும் காவியம் சூதர்களால் பாடப்படுகிறது, கேட்டிருப்பீர்கள்” என்றார் தமனர். “ஆம், அரிய சில ஒப்புமைகள் கொண்ட காவியம்” என்றார் தருமன். “நிஷத மன்னனாகிய நளன் விதர்ப்ப நாட்டு இளவரசியாகிய தமயந்தியை மணந்து இன்னல்கள் அடைந்து மீண்ட கதை அது. அதற்கு இரு நாடுகளிலும் வெவ்வேறு சொல்வடிவங்கள் உள்ளன” என்றார் தமனர்.

தருமன் “ஆம், நானே இரு வடிவங்களை கேட்டுள்ளேன்” என்றார். “அதை வைத்து நான் சொல்வதற்கும் ஒன்றுள்ளது. சொல்லப்படாத ஏதோ எஞ்சுகிறதென்று நானும் உணர்ந்துகொண்டிருந்தேன். அக்கதையை ஏதேனும் வடிவில் கேளாமல் நீங்கள் விதர்ப்பத்தை கடக்கவியலாது. அக்கதையுடன் நான் சொல்லும் சொற்களையும் இணைத்துக்கொள்ளுங்கள். உருவென்பது ஓர் ஆடையே. உருவமைந்து அறிவதன் எல்லையை மாற்றுருவெடுத்து கடக்கலாம். பிறிதொன்றென ஆகாமல் எவரும் பிறிதெதையும் அடையவியலாது” என்றார் தமனர்.

அவர்கள் அவரை தாள்தொட்டு சென்னிசூடி நற்சொல் பெற்று கிளம்பினர். குருநிலையிலிருந்து கிளம்பி நெடுந்தொலைவுவரை தருமன் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. முதல் இளைப்பாறலின்போது பீமன் அவர்களுக்கு குடிக்க நீர் அளித்தபின் அருகே ஊற்றிருப்பதை குரங்குகளிடம் கேட்டறிந்து நீர்ப்பையுடன் கிளம்பிச்சென்றான். நகுலன் “ஆடைதான் என்றால் எதை அணிந்தால் என்ன?” என்றான். அவன் எண்ணங்கள் சென்ற திசையிலேயே பிறரும் இருந்தமையால் அச்சொற்கள் அவர்களுக்கு புரிந்தன. “ஆடைகளை உடலும் நடிக்கிறது” என்று தருமன் சொன்னார்.

“நாம் நிஷாதர்களின் விராடபுரிக்கு செல்லத்தான் போகிறோமா?” என்றான் சகதேவன். “வேறு வழியில்லை. எண்ணிநோக்கி பிறிதொரு இடம் தேர இயலவில்லை” என்றார் தருமன். “நாம் இடர்மிக்க பயணத்தில் உள்ளோம். இதை மேலும் நீட்டிக்கவியலாது. விதர்ப்பத்திலோ மற்ற இடங்களிலோ நம்மை எவரேனும் கண்டுகொள்வதற்கான வாய்ப்புகள் ஏராளம். உண்மையில் காசியில் என்னை ஒற்றர் சிலர் கண்டுகொண்டனர் என்றே ஐயுறுகிறேன்.” சகதேவன் மேலே நோக்கி “அதற்குள் உச்சி என வெயிலெழுந்துவிட்டது. பறவைகள் நிழலணையத் தொடங்கிவிட்டன” என்றான். “மண்ணுக்குள் நீர் இருந்தால் கதிர்வெம்மை கடுமையாக இருக்காது. ஆழ்நீர் இறங்கிமறைகையிலேயே இந்த வெம்மை” என்றான் நகுலன்.

மணியோசை கேட்க அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். சூதர்குடி ஒன்று வண்ண ஆடைகளுடன் பொதிகளையும் இசைக்கலன்களையும் சுமந்தபடி நடந்து வந்தது. ஆண்கள் மூவர், இரு பெண்களும் இரு சிறுவரும். ஒருத்தி கையில் நடைதிகழா மைந்தன். அவர்களில் ஒருவனின் தோளில் ஒரு குட்டிக்குரங்கு இருந்தது. ஆண்களில் இருவர் மூங்கில்கூடைகளில் கலங்களையும் பிற குடிப்பொருட்களையும் அடுக்கி தலையில் ஏற்றியிருந்தனர். “சூதரா, குறவரா?” என்றான் சகதேவன். “சூதர்களே. குறவர்களுக்கு துணியில் தலைப்பாகை அணிய உரிமை இல்லை” என்றார் தருமன்.

அவர்கள் தொலைவிலேயே பாண்டவர்களை பார்த்துவிட்டிருந்தனர். அருகே வந்ததும் அவர்களின் தலைவன் முகமன் சொல்லி வணங்கினான். அவர்கள் தருமனை முனிவர் என்றும் பிறரை மாணவர்கள் என்றும் எண்ணினர். திரௌபதியை முனிவர்துணைவி என்று எண்ணி முதல் முகமன் அவளுக்குரைத்த சூதன் “நாங்கள் கலிங்கச்சூதர். விதர்ப்பத்திற்கு செல்கிறோம். தேன் நிறை மலர்களென நற்சொல் ஏந்திய முகங்களைக் காணும் பேறுபெற்றோம்” என்று முறைமைச்சொல் உரைத்தான். தருமன் அவர்களை “நலம் சூழ்க!” என வாழ்த்தினார்.

“என் பெயர் பிங்கலன். இது என் குடி. என் மைந்தர் இருவர். அளகன், அனகன். மைந்தர்துணைவியர் இருவர். சுரை, சௌபை. கதை பாடி சொல் விதைத்து அன்னம் விளைவிப்பவர்” என்றான். சகதேவன் “குரங்குகளை சூதர்கள் வைத்திருப்பதில்லை” என்றான். “ஆம், ஆனால் விதர்ப்பத்தைக் கடந்தால் நாங்கள் செல்லவேண்டியவை நிஷாதர்களின் ஊர்கள். மீன்பிடிக்கும் மச்சர்கள். வேட்டையாடும் காளகர்கள். அவர்களில் பலருக்கு எங்கள் மொழியே புரியாது. பாடிப்பிழைக்க வழியில்லாத இடங்களில் இக்குரங்கு எங்களுக்கு அன்னமீட்டித் தரும்” என்றான் முதுசூதன் பிங்கலன்.

“நாங்கள் விதர்ப்பத்தைக் கடந்து நிஷதத்திற்குள் செல்லவிருக்கிறோம்” என்றார் தருமன். “நீங்கள் ஷத்ரியர் அல்லவென்றால் அங்கு செல்வதில் இடரில்லை. ஷத்ரியரும் அவர் புகழ்பாடும் சூதரும் அவ்வெல்லைக்குள் நுழைந்தால் அப்போதே கொல்லப்படுவார்கள்” என்றான் அளகன். “நாங்கள் அந்தணர்” என்று தருமன் சொன்னார். “இவர் கைகளின் வடுக்கள் அவ்வாறு காட்டவில்லையே” என்றான் அனகன். “போர்த்தொழில் அந்தணர் நாங்கள். நியோகவேதியர் என எங்கள் குடிமரபை சொல்வதுண்டு” என்று சகதேவன் சொன்னான்.

அவர்களை ஒருமுறை நோக்கியபின் விழிவிலக்கி “மாற்றுருக்கொண்டு நுழையாமலிருப்பதே நன்று. ஏனென்றால் மாற்றுருக்கொண்டு நிஷதத்திற்குள் நுழையும் ஷத்ரிய ஒற்றரை அவர்கள் பன்னிரு தலைமுறைகளாக கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் படையினர் அனைவருக்குமே மாற்றுரு கண்டடையும் நுண்திறன் உண்டு” என்றான் பிங்கலன். “நிஷதத்தின் படைத்தலைவன் அரசியின் தம்பியாகிய கீசகன். தோள்வல்லமையில் பீமனுக்கு நிகரானவன் அவன் என்கிறார்கள். கடுந்தொழில் மறவன். தன்னைப்போலவே தன் படையினரையும் பயிற்றுவித்திருக்கிறான். அஞ்சுவதஞ்சுவர் அவனை ஒழிவது நன்று” என்றாள் சுரை. “ஆம், அறிந்துள்ளோம்” என்று தருமன் சொன்னார்.

“பசி கொண்டிருக்கிறீர்கள் என்றால் எங்களிடமுள்ள அன்னத்தில் சிறிது உண்ணலாம். அந்தணர் என்பதனால் எங்கள் கை அட்ட உணவை ஏற்பீர்களோ என ஐயுறுகிறோம்” என்றான் பிங்கலன். “போர்த்தொழில் அந்தணர் ஊனுணவும் உண்பதுண்டு” என்றார் தருமன். “நன்று, இதை நல்வாழ்த்தென்றே கொள்வேன்” என்றபின் பிங்கலன் விரியிலைகளை பறித்துவந்தான். சுரை மூங்கில் கூடையில் இருந்த மரக்குடைவுக்கலத்தில் இருந்து அன்ன உருளைகளை எடுத்து அவற்றில் வைத்து அவர்களுக்கு அளித்தாள். வறுத்த தினையை உலர்த்திய ஊனுடன் உப்புசேர்த்து இடித்து உருட்டிய உலரன்னம் சுவையாக இருந்தது. “நீர் அருந்தினால் வயிற்றில் வளர்வது இவ்வுணவு” என்றான் பிங்கலன். “அத்துடன் உண்டபின் கைகழுவ நீரை வீணடிக்கவேண்டியதில்லை என்னும் நல்வாய்ப்பும் உண்டு.”

சாப்பிட்டபின் தருமன் “கதை என எதையேனும் சொல்லக்கூடுமோ, சூதரே?” என்றார். “பாடவேண்டாம். செல்லும் வழியில் சொல்லிவந்தால் போதும்.” பிங்கலன் முகம் மலர்ந்து “கதை பாடாமல் தொண்டை சிக்கியிருக்கிறது. வழிநடைவிலங்குகளிடம் சொல்லத்தொடங்கலாமா என்று எண்ணிக்கொண்டிருந்தேன். எந்தக் கதை?” என்றான். “விதர்ப்பினியாகிய தமயந்தியின் கதை” என்றார் தருமன். “ஆம், விதர்ப்பத்திற்குள் நுழைகையில் சொல்லவேண்டியதுதான்… நன்று” என்றபின் திரும்பி தோளிலிட்டிருந்த குறுமுழவை எடுத்து அதன் தோல்வட்டத்தில் கையோட்டி மெல்ல தட்டிவிட்டு “சாரஸ்வத நாட்டின் பேரரசன் வேனனின் கதையை பாடுக, நாவே!” என்றான்.

flowerநால்வகை நிலமும் மூவகை அறங்களால் பேணப்பட்ட அந்நாட்டை அவன் தன் தந்தையிடமிருந்து பெற்றான். சரஸ்வதி நதிக்கரையில் நாணல்புதர் ஒன்றுக்குள் ஊணும் துயிலும் ஒழித்து அருந்தவம் செய்து பிரம்மனை தன் முன் அழைத்தான் வேனன். அவன் முன் தோன்றிய படைப்பிறைவன் “உன் தவம் முதிர்ந்தது. அரசனே, விழைவதென்ன சொல்” என்று வேண்டினான். “தொட்டவை பொன்னென்றாகும் பெற்றி, சுட்டியவற்றை ஈட்டும் ஆற்றல், எண்ணியவை எய்தும் வாழ்வு. இம்மூன்றும் வேண்டும், இறைவா” என்றான் வேனன்.

பிரம்மன் நகைத்து “அரசே, தெய்வங்களாயினும் அவ்வண்ணம் எதையும் அருளவியலாது. இப்பெருவெளியில் ஒவ்வொன்றும் பிறிதொன்றால் நிகர்செய்யப்பட்டுள்ளது என்று அறிக! உனக்களிப்பதை அவர்கள் பிறிதெங்கோ வைக்கவேண்டும்” என்றான். “அதை நான் அறியவேண்டியதில்லை. நான் விழைவது இந்நற்சொல். அதை அருள்க தெய்வங்கள்” என்றான் வேனன். “உன் முற்பிறவியில் ஈட்டியிருக்கவேண்டும். அல்லது வருபிறவியில் நிகர்வைக்கவேண்டும். வெட்டவெளியில் விளையும் கனியொன்றில்லை, உணர்க!” என்றான் பிரம்மன். “நான் பிறிதொன்றும் வேண்டவில்லை. என் தவம் வீண் என்று சொல்லி செல்க!” என்றான் வேனன். “செய்யப்பட்டுவிட்ட தவம் உருக்கொண்ட பொருளுக்கிணையானது. எதன்பொருட்டும் அது இல்லை என்றாவதில்லை” என்றான் பிரம்மன்.

“நான் விழைவன பிறிதெவையும் அல்ல” என்று சொல்லி வேனன் விழிமூடி அமர்ந்தான். “நீ விழைவன அனைத்தையும் அளிப்பவன் ஒரு தெய்வம் மட்டுமே. அவன் பெயர் கலி. காகக்கொடி கொண்டவன். கழுதை ஊர்பவன். கரியன். எண்ணியதை எல்லாம் அளிக்கும் திறன் கொண்டவன். அவனை எற்கிறாயா?” என்றான் பிரம்மன். “ஆம், ஏற்கிறேன்” என்றான் வேனன். “அவ்வண்ணம் ஒரு தெய்வமிருக்கிறது என்றால் இதுவரை முனிவரும் அரசரும் அவனை எண்ணி ஏன் தவமிருக்கவில்லை? அவன் அருளால் ஏன் மானுடர் மண்ணுலகை முழுதும் வெல்லவில்லை? அதை எண்ணி நோக்கமாட்டாயா?” என்றான் பிரம்மன்.

“அவர்கள் என்னைப்போல் கடுந்தவம் செய்திருக்கமாட்டார்கள். எனக்கிணையான பெருவிழைவு கொண்டிருக்கமாட்டார்கள். அத்தெய்வத்தின் அருளால் உலகாளப்போகும் முதல் மானுடன் நான் என்பதே ஊழ்” என்றான் வேனன். புன்னகைத்து “நன்று, அவ்வண்ணமே ஆகுக!” என்று சொல்லி பிரம்மன் உருமறைந்தான்.

பிரம்மனின் இடக்கால் கட்டைவிரல் பெருகி எழுந்து கரிய உருக்கொண்ட தெய்வமென வேனனின் முன் நின்றது. அக்கொடிய உரு கண்டு அஞ்சி அவன் கைகூப்பினான். “என்னை விழைந்தவர் எவருமிலர். உன் ஒப்புதலால் மகிழ்ந்தேன். உன் விருப்பங்கள் என்ன?” என்றான் கலி. பன்னிரு கைகளிலும் படைக்கலங்களுடன் எரியென சிவந்த விழிகளுடன் நிழலில்லா பேருருக்கொண்டு எழுந்து நின்றிருந்த கலியனின் முன் தலைவணங்கிய வேனன் தன் விழைவுகளை சொன்னான். “அளித்தேன்” என்றான் கலி.

“ஆனால் என் நெறி ஒன்றுண்டு. நீ கொள்வனவெல்லாம் உன்னுடையவை அல்ல என்று உன் உள்ளம் எண்ணவேண்டும். நீ கொடுப்பவை எல்லாம் என்னுடையவை என்ற எண்ணம் இருக்கவேண்டும். கொடுத்த கையை நீரூற்றி மும்முறை முழுதுறக் கழுவி கொடையிலிருந்து நீ விலகிக்கொள்ளவேண்டும். ஒருமுறை ஒருகணம் உன் எண்ணம் பிழைக்குமென்றால் உன்னை நான் பற்றிக்கொள்வேன். நான் அளித்தவற்றை எல்லாம் ஐந்துமடங்கென திரும்பப்பெறுவேன். அழியா இருள்கொண்ட ஆழுலகுக்கு உன்னை என்னுடன் அழைத்துச்செல்வேன். ஆயிரம் யுகங்கள் அங்கு நீ என் அடிமையென இருந்தாகவேண்டும்.” வேனன் “அவ்வாறே இறையே. இது என் ஆணை!” என்றான்.

அரண்மனை மீண்ட வேனன் அரியணை அமர்ந்து செங்கோல் தாழாது ஆண்டான். எதிரிகளனைவரையும் கொடுங்காற்று சருகுகளை என வென்று ஒதுக்கினான். மண்ணில் புதைந்துள்ள பொன்னெல்லாம் அவன் கருவூலத்திற்கு வந்தன. மானுடர் எண்ணும் நலன்கள் எல்லாம் அவன் கைநீட்ட அருகமைந்தன. நல்லாட்சியால் பெரும்புகழ் கொண்டான். புகழ் சொல்லில் பற்றி எரிந்தேறும் நெருப்பு. நாள்தோறும் அவன் புகழ் அவனை வந்தடைந்துகொண்டிருந்தது. அவன் கொடைத்திறனும் வில்திறனும் நகர்ப்பெருமையும் குடிப்பெருமையும் அவன் செவிகளில் அறுபடாது ஒலித்து அவையே அவன் எண்ணப்பெருக்கென்றாயின. பிறிதொன்றை எண்ணாது அதிலமர்ந்தான்.

அந்த ஆணவத்தால் அவன் அறிவிழந்தான். வெல்பவன் வெற்றிக்கு நிகராக தெய்வங்களின் மறுதட்டில் வைப்பது அடக்கத்தை. முனிவர்களே, வெற்றியின் நிழல் ஆணவம். வெற்றி நாள் என சுருங்கும், ஆணவம் கணமெனப் பெருகும். கொள்பவை எல்லாம் தன் திறனாலேயே என்று வேனன் எண்ணலாலான். கொடுப்பவை தன் கருணையால் என்று மயங்கினான்.

அவன் அரண்மனைக்கு வெளியே வாயிலின் இடப்பக்கம் கலியின் சிலை நிறுவப்பட்டிருந்தது. அக்கற்சிலையில் கண்கள் மூடியிருக்கும்படி செதுக்கப்பட்டிருந்தன. நாள்தோறும் அச்சிலைக்கு நீராட்டும் மலராட்டும் சுடராட்டும் காட்டி படையலிட்டு வணங்குவது அரசனின் வழக்கம். அன்றொருநாள் வறியவன் ஒருவனுக்கு பொற்கொடை அளித்தபின் கைகழுவுகையில் அவன் விரல்முனை நனையவில்லை. நாள்தொறும் அவ்வாறு கைநனைத்துக் கொண்டிருந்தமையால் அவன் அதை பொருட்படுத்தவில்லை.

கற்சிலையின் பூசகர் மலர்மாலையுடன் திரும்பி நோக்கியபோது சிலையின் விழிகள் திறந்திருப்பதைக் கண்டு அஞ்சி அலறினார். நீரூற்றிய ஏவலன் அப்பால் செல்ல திரும்பி நோக்கிய அமைச்சர் கருநிழலொன்று அரசனின் கைவிரல் நுனியைத் தொட்டு படர்ந்தேறுவதைக் கண்டார். “அரசே!” என அவர் அஞ்சி அழைத்தபோது “என்ன?” எனத் திரும்பிய அரசனின் விழிகள் மாறியிருந்தன. அவன் உடலசைவும் சிரிப்பும் பிறிதொருவர் என காட்டின. அப்போது நகருக்குள் பசுக்கள் அஞ்சி அலறல் குரலெழுப்பின. காகக்கூட்டங்கள் முகில்களைப்போல வந்து நகரை மூடி இருளாக்கின. நரித்திரள்கள் நகருக்கு வெளியே ஊளையிட்டன. வானில் ஓர் எரிவிண்மீன் கீறிச்சென்றதைக் கண்டனர் குடிகள்.

கொடிய தொற்றுநோய் என குடியிருப்பதை உண்பதே கலியின் வழி. வேனன் ஆணவமும் கொடும்போக்கும் கொண்டவன் ஆனான். அந்தணரை தண்டித்தான், குடிகளை கொள்ளையிட்டான். எதிரிகளை சிறுமை செய்தான். மூதாதையரை மறந்தான். தெய்வங்களை புறக்கணித்தான். நாள்தோறும் அவன் தீமை பெருகியது. நச்சுவிழுந்த காடென்று கருகியழிந்தது சாரஸ்வதம். அங்கு வாழ்ந்த மலைத்தெய்வங்களும் கானுறைத்தெய்வங்களும் அகன்றபோது நீரோடைகள் வறண்டன. தவளைகள் மறைந்தபோது மழைமுகில்கள் செவிடாகி கடந்து சென்றன. வான்நீர் பெய்யாத நிலத்தில் அனல் எழுந்து சூழ்ந்தது.

அந்தணரும் முனிவரும் சென்று அவனுக்கு அறிவுரை சொன்னார்கள். நற்சொல் உரைத்த முனிவரை கழுவிலேற்றி அரண்மனைக்கு முன் அமரச்செய்தான். அந்தணரை பூட்டிவைத்து உணவின்றி சாகவைத்தான். சினம்கொண்டு எழுந்த மக்கள் அந்தணரை அணுகி அறம் கோரினர். அவர்களை ஆற்றுப்படுத்தியபின் அந்தணர் ஆவதென்ன என்று தங்கள் குலத்து முதியவரான சாந்தரிடம் வினவினர். நூற்றிருபது அகவை எய்தி நெற்றுபோல உலர்ந்து இல்லத்தின் திண்ணையில் அமர்ந்திருந்த சாந்தர் சீவிடுபோல ஒலித்த சிறுகுரலில் “அரசன் கோல் இவ்வாழியின் அச்சு. சினம்கொண்டு அச்சை முறித்தால் சுழல்விசையாலேயே சிதறிப்போகும் அனைத்தும். தீய அரசன் அமைந்தது நம் தீவினையால் என்றே கொள்வோம். தெய்வம் முனிந்தால் பணிந்து மன்றாடுவதன்றி வேறேது வழி?” என்றார்.

குழம்பி ஒருவரை ஒருவர் நோக்கிய அந்தணரிடம் “கொடியோன் என்றாலும் அவன் நம் குடி அரசன். அவனை அழித்தால் பிற குடியரசனை நாம் தலைமேல் சூடுவோம். மான்கணம் சிம்மத்தை அரசனாக்குவதற்கு நிகர் அது” என்றார் சாந்தர். “ஆம் மூத்தவரே, ஆணை” என்றனர் இளையோர். அச்சொல்லை அவர்கள் குடிகளிடம் கொண்டுசென்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு குடிக்குழு சென்று வேனனிடம் முறையிடுவதென்று முடிவெடுத்தனர். அவன் காலை துயிலெழுகையில் அரசமுற்றத்தில் நின்று தங்கள் துயர்சொல்லி கூச்சலிட்டனர். அவர்களை குதிரைகளை அனுப்பி மிதிக்கவைத்தான். கொதிக்கும் எண்ணையை அவர்கள்மேல் ஊற்றினான். சிறையிலிட்டான். சாட்டையால் அடித்தான். கொன்று தொங்கவிட்டான்.

விழிநீர் சொட்டச்சொட்ட வேனனால் ஆளப்பட்ட புவி வெம்மைகொண்டது. அனைத்து மரங்களையும் அது உள்ளிழுத்துக்கொண்டது. திருப்பப்பட்ட மான்தோல் என நிறம் வெளுத்து வெறுமையாயிற்று. புவிமகள் பாதாளத்தில் சென்று ஒளிந்துவிட்டாள் என்றனர் நிமித்திகர். அறம் மீள்வதறிந்தே அவள் இனி எழுவாள் என்றார்கள். புவியன்னை ஒரு கரிய பசுவென்றாகி இருளில் உலவுவதை விழியொளியால் கண்டனர் கவிஞர்.

ஒருநாள் பட்டினியால் உடல்மெலிந்த அன்னை ஒருத்தி பாலின்றி இறந்த பைங்குழவி ஒன்றை எடுத்துக்கொண்டு அவன் அரண்மனை முற்றத்தில் வந்து நின்றாள். “கொடியவனே, கீழ்மகனே, வெளியே வா! குழவி மண்ணுக்கு வருவது அன்னையை நம்பி. அன்னை வாழ்வது குடியை நம்பி. குடி கோலை நம்பி. குழவிக்கு உணவுதேடி உண்ணும் கையையும் காலையும் அருளாத தெய்வங்கள் மானுடம் மீது இட்ட ஆணை என்ன என்று அறிவாயா? பசித்து ஒரு குழந்தை இறக்கும் என்றால் அக்குடியின் இறுதி அறமும் முன்னரே வெளியேறிவிட்டதென்று பொருள். அக்குடி மண்மீது வாழும் தகுதியை இழந்துவிட்டது. அக்குடியில் பிறந்த நானும் இனி உயிர்வாழலாகாது. எரிக அனல்…” என்று கூவி தன் கையிலிருந்த கத்தியால் ஒரு முலையை அறுத்து அரண்மனை முன் வீசினாள். குருதி பெருக்கியபடி அங்கே விழுந்து இறந்தாள்.

அது நிகழ்ந்த அக்கணம் திண்ணையில் சாந்தர் முனகுவதை கேட்டார்கள் அந்தணர். ஓடி அவர் அருகே சென்று என்ன என்று வினவினர். “எழுக குடி. ஆணும் பெண்ணும் படைக்கலம் கொள்க! குருதியாடாத எவரையும் இனி குடியெனக் கொள்ளாதொழிக! நகரை நிறையுங்கள். பெருகிச்சென்று அரண்மனை புகுந்து அரசனையும் அவனை ஏற்பவர்களையும் கொன்றுகுவியுங்கள். அவர்களின் குருதியால் நகர்க்காவல் தெய்வங்களை மும்முறை கழுவுங்கள். வேனனைக் கொன்று அவன் வலக்கால்தொடைத்தசையை எடுத்து அதை மட்டும் அரசனுக்குரிய முறையில் எரியூட்டுங்கள். எஞ்சிய உடலை துண்டுகளாக ஆக்கி காட்டுக்குள் கூவியலையும் காகங்களுக்கும் நரிகளுக்கும் உணவாக்குங்கள். அரசனின் முதல் மைந்தனை அரசனாக்குங்கள். அவன் தன் தந்தைக்கு எரியூட்டட்டும். அவனே சென்று பாதாளத்தில் அலையும் புவிமகளை மீட்டு வரட்டும்” என்றார். மூச்சிரைக்க மெல்ல தளர்ந்து கைதூக்கி வாழ்த்தி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

அச்சொல் அரைநாழிகைக்குள் நகருக்குள் பரவியது. கடலலை போன்று ஓசைகேட்டபோது வேனன் திகைத்து சாளரம் வழியாக வெளியே நோக்கினான். நகரம் எரிபுகையால் நிறைந்திருப்பதைக் கண்டு வெளியே ஓடி தன் மெய்க்காவலரிடம் எழுபவர்களை கொன்றழிக்க ஆணையிட்டான். அந்தப் போர் ஏழு நாழிகை நேரம் நிகழ்ந்தது. கணந்தோறும் பெருகிய குடிபடைகளுக்கு முன் அரசப்படைகள் அழிந்தன. அவர்களின் குருதியை அள்ளி அரண்மனையெங்கும் வீசி கழுவினர். வேனன் தன் வாளுடன் ஆட்சியறை விட்டு வெளியே ஓடிவர அவன் குடிகளில் இளையோர் எழுவர் அவனைச் சூழ்ந்து வெட்டி வீழ்த்தினர். அவன் தொடைத்தசையை வெட்டியபின் துண்டுகளாக்கி காட்டில் வீசினர். அவன் உடலை உண்ட நரிகள் ஊளையிட்டபடி காட்டின் ஆழத்திற்குள் ஓடி மறைந்தன. காகங்கள் வானில் சுழன்று கூச்சலிட்டபின் மறைந்தன.

NEERKOLAM_EPI_05

வேனனின் பெயர்மைந்தன் பிருதுவை அந்தணர் அரசனாக்கினார்கள். தாதையின் தொடையை எரியூட்டியபின் அவன் வாளுடன் சென்று புவியன்னையை மீட்டுவந்தான். அறம்திகழ தெய்வங்கள் மீள வேள்வி பெருகியது. வறுநிலத்தில் பசுமை எழுந்து செறிந்தது. ஒழியா அன்னக்கலம் என அன்னையின் அகிடு சுரந்தது. பிருதுவின் மகளென வந்து வேள்விச்சாலையில் புகுந்து அவன் வலத்தொடைமேல் அமர்ந்தாள் புவி. ஆகவே கவிஞரால் அவள் பிருத்வி என அழைக்கப்பட்டாள். அவள் வாழ்க!

பிங்கலன் சொன்னான் “முனிவரே, மாணவரே, இனிய விழிகள்கொண்ட தேவியே, கேளுங்கள். வேனனின் உடலில் இருந்து கலி அந்த நரிகளின் நெஞ்சிலும் காகங்களின் வயிற்றிலும் பரவியது. அவை அலறியபடி காடுகளுக்குள் சென்றன. காட்டுப்புதர்களுக்குள் பதுங்கியிருந்த நரிகள் புல்கொய்யவும் கிழங்கும் கனியும் தேரவும் வந்த கான்குடிப் பெண்களை விழிதொட்டு உளம் மயக்கி வென்று புணர்ந்தன. அவர்களின் கருக்களில் இருந்து நரிகளைப்போல் வெள்விழி கொண்ட, நரிகளின் பெரும்பசி கொண்ட மைந்தர்கள் பிறந்தனர். அவர்கள் மிலேச்சர்கள் என்றழைக்கப்பட்டனர்.”

“வேனனின் ஊன் உண்ட காகங்கள் பறந்து காடுகளுக்குள் புகுந்தன. அங்கே தொல்குடிகள் தங்கள் நுண்சொல் ஓதி தெய்வங்களைத் தொழுகையில் அருகே கிளைகளில் அமர்ந்திருந்து தங்கள் குரலை ஓயாமல் எழுப்பின. கனவுகளில் அந்நுண்சொற்களில் காகங்களின் ஒலியும் இணைந்தன. அவர்களின் தெய்வங்களுடன் காகங்களும் சென்றமைந்தன. காகங்களை வழிபடுபவர்கள் நிஷாதர் என்றழைக்கப்பட்டனர். நிஷாதர்களின் தெய்வநிரையில் முதல்தெய்வம் கலியே. ஆகவே அவர்கள் கலியர் என்றழைக்கப்பட்டனர். நிஷாதகுலத்தின் தென்னகக்கிளையே நிஷத நாடென்கின்றனர் நூலோர்.”

“இது விதர்ப்பத்தினர் விரும்பும் கதை அல்லவா?” என்று சகதேவன் கேட்டான். “ஆம், இதையே இங்கே பாடுகிறோம்” என்றான் பிங்கலன். தருமன் சிரித்து “மறுபக்க கதையை சொல்க! நிஷதரின் சொற்களால்” என்றார். “மறுபக்கத்தை கேட்கப் புகுந்தால் அனைத்துக் கதைகளும் அசைவிழந்துவிடும், முனிவரே” என்றான் பிங்கலன். உடலெங்கும் நீர்வழிய தோல்பையைச் சுமந்தபடி பீமன் அப்பால் வருவதைக் கண்டு “ஆ, அவர் மிலேச்சர்” என்றான். “அவன் என் மாணவன். பால்ஹிக நாட்டவன்” என்றார் தருமன். “அவர்கள் பெருந்தோளர்கள், அறிந்திருப்பீர்.” பிங்கலன் “இத்தகைய பேருடல் கீசகருக்கு மட்டுமே உரியதென்று எண்ணியிருந்தோம்” என்றான். அவன் மைந்தர்களும் பீமனையை கூர்ந்து நோக்கினர்.

“நெடுநேரமாயிற்று, செல்வோம்” என்றார் தருமன். “சூதர் நிஷதநாட்டின் கதையை சொல்லிக்கொண்டிருந்தார்.” பீமன் “நன்று” என்றான். “சொல்லிக்கொண்டே செல்லலாம். கதை இருக்கும்வரை வழித்துணைக்கு தெய்வங்கள் தேவையில்லை என்பார்கள்” என்றார் தருமன்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 4

3. மெய்மைக்கொடி

flower“நிஷதமும் விதர்ப்பமும் ஒருவரை ஒருவர் வெறுத்தும் ஒருவரின்றி ஒருவர் அமையமுடியாத இரு நாடுகள்” என்றார் தமனர். “விந்தியமலையடுக்குகளால் அவை ஆரியவர்த்தத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. மகாநதியாலும் தண்டகப்பெருங்காடுகளாலும் தென்னகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. நீண்ட பொது எல்லை. தவிர்க்கவே முடியாத வணிகப்புழக்கம். நிஷதத்தின் காடுகள் பாரதவர்ஷத்தின் எந்த நாட்டையும்விட பன்னிரு மடங்கு மிகையானவை. அவர்களோ காட்டாளரின் வழிவந்தவர்கள். வடக்கே சர்மாவதியின் கரைகளில் இருந்து தெற்கே சென்ற நிஷாதர்களின் முதற்குலம் அவர்கள் என சொல்லொன்று உண்டு. வணிகப்பொருட்களை அளித்து மலைப்பொருட்களை வாங்கிவரும் வணிகர்களால்தான் விதர்ப்பம் வாழ்கிறது.”

“விதர்ப்பம் ஷத்ரிய குருதிமரபு கொண்டது. யாதவர்களின் குருதிவழியான போஜர்களுக்கும் அவர்களுடன் ஓர் உறவுண்டு என்பார்கள். அவர்கள் கடக்க விரும்பும் அடையாளம் அது” என்று தமனர் தொடர்ந்தார். “விதர்ப்ப மன்னர் பீஷ்மகரின் மகள் ருக்மிணி இன்று இளைய யாதவரின் அரசி.” தருமன் “ஆம், தங்கையைக் கவர்ந்தவர் என்பதனால் இளைய யாதவர்மேல் பெருஞ்சினம் கொண்டிருக்கிறான் பட்டத்து இளவரசன் ருக்மி. அச்சினத்தாலேயே அவன் துரியோதனனுடன் இணைந்திருக்கிறான்” என்றார். “அவன் மகதத்தின் ஜராசந்தனுக்கும் சேதிநாட்டின் சிசுபாலனுக்கும் அணுக்கனாக இருந்தான்” என்றான் பீமன்.

“ஆம், அதையெல்லாம்விட பெரியது ஒன்றுண்டு. விதர்ப்பத்தின் குருதியில் உள்ள குறையைக் களைந்து தங்களை மேலும் தூய ஷத்ரியர்களாக ஆக்கிக்கொள்ள அவர்கள் எண்ணியிருந்தனர். இப்பகுதியில் நிஷத நாட்டவருடன் அவர்கள் தீர்க்கவேண்டிய கடன்களும் சில இருந்தன. ருக்மிணி பேரழகி என்றும், நூல்நவின்றவள் என்றும் பாரதவர்ஷம் அறிந்திருந்தது. முதன்மை ஷத்ரிய அரசர்கள் எவரேனும் அவளை மணம்கொள்வார்கள் என்றும் அதனூடாக விதர்ப்பம் தன் குறையை சூதர் நாவிலிருந்தும் அரசவை இளிவரல்களிலிருந்தும் அழிக்கலாம் என்றும் அவர்கள் கனவுகண்டனர். அது நிகழவில்லை. இளைய யாதவர் அவளை கவர்ந்து சென்றார். ஷத்ரியப் பெருமையில்லாத யாதவர். முன்னரே யாதவக்குருதி என இருந்த இழிவு மேலும் மிகுந்தது. ருக்மியின் சினம் இளைய யாதவருடன் அல்ல, அவனறியாத பலவற்றுடன். அவை முகமற்றவை. எட்டமுடியாதவை. முகம்கொண்டு கையெட்டும் தொலைவிலிருப்பவர் யாதவர். ஆகவே அனைத்துக் காழ்ப்பையும் அத்திசைநோக்கி திருப்பிக்கொண்டிருக்கிறான்” என்றார் தமனர்.

“விதர்ப்பம் அழகிய நாடு. பெருநீர் ஒழுகும் வரதாவால் அணைத்து முலையூட்டப்படுவது. வடக்கே முகில்சூடி எழுந்த மலைகளும் காடுசெறிந்த பெருநிலவிரிவுகளும் கொண்டது. அரசென்பதையே அறியாமல் தங்கள் சிற்றூர்களில் குலநெறியும் இறைமரபும் பேணி நிலைகொண்ட மக்கள் வாழ்வது. மலைத்தொல்குடிகளிலிருந்து திரண்டுவந்த குலங்கள் இவை. ஆரியவர்த்தம் கண்ட போர்களும் பூசல்களும் இங்கு நிகழ்ந்ததில்லை. இங்கு ஒவ்வொருவருக்கும் தேவைக்குமேல் நிலம் உள்ளது. எனவே காற்றுபோல் ஒளியைப்போல் நீரைப்போல் நிலத்தையும் இவர்கள் அளவிட்டதோ எல்லைவகுத்துக்கொண்டதோ இல்லை. இவர்களுக்கு தெய்வம் அள்ளிக்கொடுத்திருப்பதனால் இவர்களும் தெய்வங்களுக்கும் பிற மானுடருக்கும் அள்ளிக்கொடுத்தார்கள்” என்றார் தமனர்.

“அத்துடன் ஒரு பெரும் வேறுபாடும் இங்குள்ளது” என்றார் தமனர். “ஆரியவர்த்தம் படைகொண்டு நிலம்வென்ற அரசர்களால் வென்று எல்லையமைக்கப்பட்டது. அவர்களின் ஆணைப்படி குடியேறிய மக்களால் சீர் கொண்டது. இது ஆரியவர்த்தத்தின் அணையாத பூசல்களைக் கண்டு கசந்து விலகி தெற்கே செல்லத்துணிந்த முனிவர்களால் உருவாக்கப்பட்டது. வெல்வதற்கு நிகராக கொடுப்பதற்கும் பேணும் அனைத்தையும் கணப்பொழுதில் விட்டொழிவதற்கும் அவர்கள் மக்களை பயிற்றுவித்தார்கள்.”

“ஆனால் அத்தனை ஓடைகளும் நதியை நோக்கியே செல்கின்றன” என்று தமனர் தொடர்ந்தார். “குடித்தலைமை அரசென்றாகிறது. அரசுகள் பிற அரசை நோக்கி செல்கின்றன. வெல்லவும் இணையவும். பின்பு நிகழ்வது எப்போதும் ஒன்றே.”

தருமன் “ஆம், இப்போது விதர்ப்பம் நன்கு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை எல்லை கடந்ததுமே உணர்ந்தேன். எல்லைகள் நன்கு வகுத்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வணிகச்சாலைகள் காவல்படைகளால் முழுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாலங்களும் சாவடிகளும் உரிய இடங்களிலெல்லாம் அமைந்துள்ளன. அனைத்து இடங்களிலும் விதர்ப்பத்தின் கொடி பறக்கிறது” என்றார்.

பீமன் “இங்கே விளைநிகுதி உண்டா?” என்றான். “விரிந்துப்பரந்த நாடுகள் எதிலும் விளைநிகுதி கொள்ளப்படுவதில்லை. அந்நிகுதியை கொள்ளவோ திரட்டவோ கொண்டுவந்துசேர்க்கவோ பெரிய அரசாளுகைவலை தேவை. சிறிய நாடுகளில் அவற்றை உருவாக்கிக்கொள்ளலாம். மகதம் போன்ற தொன்மையான நாடுகளில் அவை காலப்போக்கில் தானாகவே உருவாகி வந்திருக்கும். விதர்ப்பத்தின் பெரும்பகுதி நிலத்திற்கு சாலைகளோ நீர்வழிகளோ இல்லை. இங்கு பேசப்படும் மொழிகள் பன்னிரண்டுக்கும் மேல். தொல்குடிகள் எழுபத்தாறு. இதன் எல்லைகள் இயற்கையாக அமைந்தவை.”

“எனவே ஆட்சி என்பது அதன் குடிகளுக்கு பெரும்பாலும் தெரியாமலேயே நிகழ்ந்தது. வணிகப்பாதைகளிலும் அங்காடிகளிலும் சுங்கநிகுதி மட்டுமே கொள்ளப்பட்டது. அதுவே அரசுதிகழ்வதற்கு போதுமானதாக இருந்தது” என்றார் தமனர். “ஆனால் இன்று ருக்மி இந்நாட்டை ஒரு பெரிய கைவிடுபடைப்பொறி என ஆக்கிவிட்டிருக்கிறான். கௌண்டின்யபுரி இன்று இரண்டாம் தலைநகர். ஏழு பெருங்கோட்டைகளால் சூழப்பட்ட போஜகடம் என்னும் நகர் ருக்மியால் அமைக்கப்பட்டு தலைநகராக்கப்பட்டது. வரதாவின் கரையில் அமைந்திருப்பதனாலேயே பெருங்கோட்டைகளை கௌண்டின்யபுரியில் சேற்றுப்பரப்பில் அமைக்கமுடியாதென்று கலிங்கச் சிற்பிகள் சொன்னார்கள்.”

தமனர் தொடர்ந்தார் “இளைய யாதவரிடம் தோற்று மீசையை இழந்து சிறுமைகொண்டபின் பல ஆண்டுகாலம் அவன் எங்கிருக்கிறான் என்றே தெரியவில்லை. சிவநெறியனாக ஆகி தென்னகத்திற்குச் சென்றான் என்கின்றனர். இமயமலைகளில் தவம் செய்தான் என்றும் சொல்லப்படுகிறது. அவன் மீண்டபோது யோகி போலவே தெரிந்தான். முகத்தில் செந்தழல் என நீண்ட தாடி. கண்களில் ஒளிக்கூர். சொற்கள் நதியடிப்பரப்பின் குளிர்ந்த கற்கள். இளைய யாதவரின் குருதியில் கைநனைத்தபின் திரும்பி கௌண்டின்யபுரிக்குள் நுழைந்து அங்கு மூதன்னையர் முன் முடிகளைந்து பூசனைசெய்யவிருப்பதாக அவன் வஞ்சினம் உரைத்திருக்கிறான்.”

“இங்கிருந்த ஒவ்வொன்றையும் அவன் மாற்றியமைத்தான். என்ன செய்யவேண்டும் என நன்கறிந்திருந்தான். முதலில் ஆயிரக்கணக்காக சூதர்கள் கொண்டுவரப்பட்டனர். இன்றுள்ள விதர்ப்பம் என்னும் நாடு அவர்களின் சொற்களால் உருவாக்கப்பட்டது. அதன் எல்லைகள் வரையறை செய்யப்பட்டன. அதன் அழகும் தொன்மையும் தனிப்பெருமையும் வகுக்கப்பட்டன. ஒவ்வொரு நாளுமென தங்கள் நாடு வளர்ந்து விரிவதை மக்கள் கண்டனர். தாங்கள் கண்டறியாத நிலங்களெல்லாம் தங்களுக்குரியவையே என்னும் பெருமிதம் அவர்களை உளம்விம்மச்செய்தது.”

“கண்டறிந்த நிலமும் நீர்களும் மலைகளும் பயன்பாட்டால் மறைக்கப்பட்ட அழகுகொண்டவை. காணாத நிலமும் நீர்களும் மலைகளும் அழகும் பெருமையும் மட்டுமே கொண்டவை. எனவே தெய்வத்திருவுக்கள் அவை. அறிந்த மண்ணில் வேட்டையும் வேளாண்மையும் திகழவேண்டும் என்று வேண்டித் தொழுத குடிகள் அறியாத மண் என்றும் அவ்வாறே பொலியவேண்டுமென்று தொழுது கண்ணீர் மல்குவதை ஒருமுறை சுத்கலக் குடிகளின் படையல்நிகழ்வொன்றில் கண்டேன். புன்னகையுடன் வாழ்த்தி அங்கிருந்து மீண்டேன்” என்றார் தமனர். “காமத்தை விட, அச்சங்களை விட, கனவிலெழும் திறன் மிகுந்தது நிலமே. கனவுநிலம் மாபெரும் அழைப்பு. என்றுமிருக்கும் சொல்லுறுதி. தெய்வங்களும் மூதாதையரும் வாழ்வது. அதன்பொருட்டு மானுடர் எதையும் இழப்பார்கள். கொல்வார்கள், போரிட்டு இறப்பார்கள். மனிதர்களுக்கு கனவுநிலமொன்றை அளிப்பவனே நாடுகளை படைக்கிறான்.”

“ஆனால் நிலம் ஒன்றென்று ஆக அதன் நுண்வடிவென வாழும் அனைத்தையும் இணைத்தாகவேண்டும். ருக்மியின் சூதர் அதை செய்தனர். விதர்ப்பநிலத்தின் தெய்வங்களும் மூதாதையரும் தொல்லன்னையரும் மாவீரரும் ஒவ்வொரு குடிச்சொல்மரபில் இருந்தும் கண்டெடுக்கப்பட்டு பெருங்கதைகளாக மீள்மொழியப்பட்டனர். மாபெரும் கம்பளம்போல கதைகள் ஒன்றுடன் ஒன்று பின்னி முடையப்பட்டு ஒற்றைப்படலமென்றாயின. கன்றுகளுக்குப் பின்னால் பசுக்கள் செல்வதுபோல கதைகளுக்குப் பின்னால் சென்றது நிலம். கன்றுகளைக் கட்டியபோது காணாச்சரடால் தானும் கட்டுண்டது.”

“சபரகுடிகளின் தெய்வமாகிய மாகன் துந்துபகுடிகளின் தெய்வமாகிய தாபையை மணந்தார். சிபிரகுடிகளின் யானைத் தெய்வமான காளகேது அஸ்வககுடிகளின் மூதாதையான தாமஸரின் ஊர்தியாகியது. ஒவ்வொரு நாளும் அக்கதைகள் புதுவடிவு கொள்வதன் விந்தையை எண்ணி எண்ணி மலைத்திருக்கிறோம். ஒரு கதையின் வளர்ச்சியைக் கண்டு திகைத்து அதைப்பற்றி பேசியபடி இன்னொரு ஊருக்குச் சென்றால் ஐந்தே நாளில் அக்கதை மேலுமொரு வடிவு கொண்டிருக்கும்” என்றார் தமனர். “கதைகள் ஒன்றிணைந்தபோது தெய்வங்கள் இணைந்தன. குலவரலாறுகள் இணைந்தன. குருதிமுறைகள் ஒன்றாயின. மக்கள் ஒற்றைத்திரளென்றானபோது நிலம் ஒன்றானது.”

“நிலம் குறித்த பெருமை ஒவ்வொருவர் நாவிலும் குடியேறியபோது அதை வெல்ல நான்கு திசைகளிலும் எதிரிகள் சூழ்ந்திருப்பதாக அச்சம் எழுந்தது. பின்னர் எதிரிகள் பேருருக்கொள்ளத் தொடங்கினர். இரக்கமற்றவர்களாக, எங்கும் ஊடுருவும் வஞ்சம் கொண்டவர்களாக, இமைக்கணச் சோர்விருந்தாலும் வென்றுமேற்செல்லும் மாயம் கொண்டவர்களாக அவர்கள் உருமாறினர். எதிரிகள் மீதான வெறுப்பும் அச்சமும் அத்தனை குடிகளையும் ஒன்றெனக் கட்டி ஒரு படையென தொகுத்தது. எங்கும் எதிலும் மாற்றுக்கருத்தில்லாத ஒற்றுமை உருவாகி வந்தது. ஆணையென ஏது எழுந்தாலும் அடிபணியும் தன்மையென அது விளைந்தது.”

“நாடே ஒரு படையென்றாகியமை அரசனை மேலும் மேலும் ஆற்றல்கொண்டவனாக ஆக்கியது. செங்கோலை சற்றேனும் ஐயுறுபவர்கள் அக்கணமே எதிரியின் உளவுநோக்கிகள் என குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களைப் பழித்து வதைத்து கொன்று கொண்டாடினர் அவர்களின் குருதியினரும் குடியினரும். அவையெல்லாம் எதிரிகள்மேல் கொள்ளும் வெற்றிகள் என உவகையளித்தன. முதற்பாண்டவரே, எதிரிகளை அறிந்தவர்கள் பின் அவர்களில்லாமல் வாழ முடிவதில்லை. ஒவ்வொரு கணமும் சிதறிப்பரவும் நம்மை எதிரி எல்லைகளில் அழுத்தி ஒன்றாக்குகிறான். நம் ஆற்றல்களை முனைகொள்ளச் செய்கிறான். நம் எண்ணங்கள் அவனை மையமாக்கி நிலைகொள்கின்றன. எளியோருக்கு தெய்வம் எதிரிவடிவிலேயே எழமுடியும். அவர்களின் ஊழ்கம் வெறுப்பின் முழுமையென்றே நிகழமுடியும்” என்றார் தமனர்.

“பெரும்படையை இன்று ருக்மி திரட்டியிருக்கிறான். அப்பெரும்படைக்குத் தேவையான செல்வத்தை ஈட்டும்பொருட்டு விரிவான வரிக்கோள் முறைமையை உருவாக்கியிருக்கிறான்” என்று தமனர் சொன்னார். “ஐவகை வரிகள் இன்று அரசனால் கொள்ளப்படுகின்றன. சுங்கவரி முன்பே இருந்தது. ஆறுகளிலும் ஏரிகளிலும் இருந்து நீர்திருப்பிக் கொண்டுசெல்லும் ஊர்களுக்கு நீர்வரி. விளைவதில் ஏழில் ஒரு பங்கு நிலவரி. மணவிழவோ ஆலயவிழவோ ஊர்விழவோ கொண்டாடப்படுமென்றால் பத்தில் ஒரு பங்கு விழாவரி. எல்லைகடந்துசென்று கொள்ளையடித்து வருபவர்களுக்கு கொள்வதில் பாதி எல்லைவரி.”

“விந்தை!” என்றார் தருமன். “அவ்வரி தென்னகத்தில் பல மலைக்குடிகளின் அரசுகளில் உள்ளதே” என்றார் தமனர். “பல குடிகளின் செல்வமே மலைக்குடிகளை கொள்ளையடித்து ஈட்டுவதுதான்.” பீமன் “அது அரசனே கொள்ளையடிப்பதற்கு நிகர்” என்றான். “ஆம், கொள்ளையடித்து தன் எல்லைக்குள் மீள்பவர்களுக்கு காப்பளிக்கிறார்கள் அல்லவா?” என்றான் நகுலன். “விதர்ப்பம் கொள்ளையடிப்பது இரண்டு நாடுகளின் நிலங்களுக்குள் புகுந்தே. தெற்கே நிஷதநாட்டின் எல்லைகள் விரிந்தவை. பல மலைகளில் அரசப்பாதுகாப்பென்பதே இல்லை. கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் சிறுகுடிகளாகவும் சிற்றூர்களாகவும் சிதறிப்பரந்தவர்கள். கிழக்கே சியாமபுரியும் அரசமையம் கொள்ளாத நாடுதான்.”

“விதர்ப்பத்தின் வஞ்சம் இளைய யாதவருடன். எனவே நமக்கு எதிர்நிலைகொள்வதே ருக்மியின் அரசநிலை. ஆகவே நிஷதத்திற்குச் சென்று அவர்களின் நட்பை வென்றெடுப்பதே நமக்கு நலம்பயக்கும்” என்றான் சகதேவன். “ஆம், அவர்கள் ஷத்ரியர்களை அஞ்சுகிறார்கள். இன்று ஷத்ரியர்கள் என்றே உங்களையும் எண்ணுவார்கள். நீங்கள் ஷத்ரியர்களால் எதிர்க்கப்படுபவர்கள், இளைய யாதவரின் சொல்லுக்காக களம் நிற்பவர்கள் என்பதை அவர்களுக்கு தெரிவிக்கவேண்டும். அவர்களுடன் ஒரு குருதியுறவு உருவாகுமென்றால் அது மிக நன்று” என்றார் தமனர். தருமன் “ஆம், அதையே எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

“நான் அதைக் கூறுவது ஏனென்றால் நிஷாதர்கள் தென்காடுகளெங்கும் விரவிக்கிடக்கும் பெருங்குலங்களின் தொகை. அவர்களில் அரசென அமைந்து கோல்சூடியவை நான்கு. வடக்கே நிஷாதர்களின் அரசாக ஹிரண்யபுரி வலுப்பெற்றுள்ளது. நிஷாத மன்னன் ஹிரண்யதனுஸின் மைந்தன் ஏகலவ்யன் மகதத்தில் எஞ்சிய படைகளை தன்னுடன் சேர்த்துக்கொண்டு ஆற்றல் மிக்கவனாக ஆகியிருக்கிறான். மைந்தனை இழந்த சேதிநாட்டு தமகோஷனின் ஆதரவை அடைந்துவிட்டிருக்கிறான். விதர்ப்பத்திற்கு அவன் இன்னும் சில நாட்களில் அரசவிருந்தினனாக வரவிருக்கிறான். விதர்ப்பமும் ஹிரண்யபுரியும் அரசஒப்பந்தம் ஒன்றில் புகவிருப்பதாக செய்தி வந்துள்ளது” என்றார் தமனர்.

“தென்னகத்தில் ஆற்றல்மிக்க நிஷாதகுலத்தவரின் அரசு நிஷதமே. முன்பு கிரிப்பிரஸ்தம் என்று அழைக்கப்பட்டது அவர்களின் பெருநகராகிய விராடபுரி. நிஷாதர்களின் எழுபத்தெட்டு தொல்குலங்களில் பெரியது சபரர் குலம். அவர்கள் அஸனிகிரி என்றழைக்கப்பட்ட சிறிய மலையைச் சுற்றியிருந்த காடுகளில் வாழ்ந்தனர். கோதைவரி மலையிறங்கி நிலம்விரியும் இடம் அது. நாணலும் கோரையும் விரிந்த பெருஞ்சதுப்பு நிலத்தில் மீன்பிடித்தும் முதலைகளை வேட்டையாடியும் அவர்கள் வாழ்ந்தனர். தண்டபுரத்திலிருந்து படகுவழியாக வந்து அவர்களிடம் உலர்மீனும் முதலைத்தோலும் வாங்கிச்சென்ற வணிகர்களால் அவர்கள் மச்சர்கள் என்றழைக்கப்பட்டனர்.”

“கடல்வணிகம் அவர்களை செல்வந்தர்களாக்கியது. வணிகர்களிடமிருந்து அவர்கள் செம்மொழியை கற்றனர். பெருமொழியின் கலப்பால் அவர்களின் மொழி விரிந்தது. மொழி விரிய அதனூடாக அவர்கள் அறிந்த உலகும் பெருகியது. மலைவணிகர்களிடமிருந்து அவர்கள் புதிய படைக்கலங்களை பெற்றனர். அவற்றைக்கொண்டு பிற நிஷாதர்களை வென்று அரசமைத்தனர். அந்நாளில்தான் பதினெட்டாவது பரசுராமர் தென்னகப் பயணம் வருவதை அறிந்து மகாகீசகர் அவரை தேடிச்சென்றார், சப்தபதம் என்னும் மலைச்சரிவிலிருந்த அவரைக் கண்டு அடிபணிந்தார். அவர் கோரிய சொல்லுறுதிகளை அளித்து நீர்தொட்டு ஆணையிட்டார். அவர் மகாகீசகரை நிஷாதர்களின் அரசனாக அமைத்து அனல்சான்றாக்கி முடிசூட்டினார். அவர் அக்னிகுல ஷத்ரியராக அரியணை அமர்ந்து முடிசூட்டிக்கொண்டார்.”

“பரசுராமர் கோரிய சொல்லுறுதிகள் இன்றும் அக்குடிகளை கட்டுப்படுத்தும். ஒரு தருணத்திலும் அந்தணர்களுக்கு எதிராக படைக்கலம் ஏந்தலாகாது, அந்தணர்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராக அச்செய்தி கேள்விப்பட்டதுமே படைகொண்டு எழவேண்டும், ஷத்ரியர்களுக்கு கப்பம் கட்டி அடிமைப்படலாகாது, போரில் எக்குடியையும் முற்றழிக்கலாகாது, ஒரு போரிலும் பெண்களும் குழந்தைகளும் பசுக்களும் கொல்லப்படக்கூடாது, நீர்நிலைகளை அழிப்பதோ எரிபரந்தெடுத்தலோ கூடாது” என்றார் தமனர். “பரசுராமர் அளித்த இந்திரனின் சிலையுடன் மகாகீசகர் அஸனிமலைக்கு மீண்டார்.”

“அஸனிமலையின் உச்சியில் ஆலயம் அமைத்து சபரர்கள் வழிபட்டுவந்த அஸனிதேவன் என்னும் மலைத்தெய்வத்தின் அதே வடிவில் மின்படையை ஏந்தியிருந்தமையால் இந்திரனை அவர்களால் எளிதில் ஏற்கமுடிந்தது. அஸனிகிரியின் மேல் இருந்த குடித்தெய்வங்களில் முதன்மையாக இந்திரன் நிறுவப்பட்டான். அஸனிமலையில் ஏழு பெருவேள்விகளை மகாகீசகர் நிகழ்த்தினார். நாடெங்குமிருந்து அனல்குலத்து அந்தணர் திரண்டுவந்து அவ்வேள்விகளில் அமர்ந்தனர். நூற்றெட்டு நாட்கள் அஸனிமலைமேல் வேள்விப்புகை வெண்முகில் என குடை விரித்து நின்றிருந்தது என்கின்றன கதைகள்.”

“அதன் பின் நிஷதகுலத்து வேந்தர்கள் ஆண்டுதோறும் வேள்விகளை நிகழ்த்தும் வழக்கம் உருவாகியது. நாடெங்கிலுமிருந்து அந்தணர் அந்த மலைநோக்கி வரலாயினர். அஸனிகிரி கிரிப்பிரஸ்தம் என்று பெயர்பெற்றது” என்று தமனர் சொன்னார். “மெல்ல அனைத்துக் குலங்களையும் சபரர் வென்றடக்கினர். குலத்தொகுப்பாளராகிய சபரர்களின் தலைவனை விராடன் என்று அழைத்தனர். கிரிப்பிரஸ்தத்தின் அருகே கோதையின் கரையில் விராடபுரி என்னும் நகரம் உருவாகி வந்தது. இன்றும் அது மச்சர்களின் ஊரே. மீன்மணமில்லாத மலர்களும் அங்கில்லை என்றுதான் கவிஞர்கள் பாடுகிறார்கள்.”

“ஆம், அங்கு செல்வதே எங்கள் முடிவு. நாங்கள் நாளைப்புலரியில் கிளம்புகிறோம்” என்றார் தருமன். அவர்கள் சௌபர்ணிகையின் மணல்கரையில் அமர்ந்திருந்தார்கள். தமனருடன் அவருடைய மாணவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். இருவர் உணவு சமைத்துக்கொண்டிருந்தனர். சௌபர்ணிகையின் சிறிய பள்ளங்களில் தேங்கிய நீர் பின்அந்தியின் வான்வெளிச்சத்தில் கருநீலத்தில் கண்ணொளி என மின்னியது நீலக்கல் அட்டிகை ஒன்று வளைந்து கிடப்பது போலிருந்தது. நீர் சுழித்த கயம் அதன் சுட்டி. திரௌபதி அதை நோக்கியபடி அமர்ந்திருந்தாள். அவள் எதையாவது கேட்டாளா என்பது ஐயமாக இருந்தது.

NEERKOLAM_EPI_04

“செல்வோம், இன்னும் சற்றுநேரத்தில் வழிமறையும்படி இருட்டிவிடும்” என்று தமனர் எழுந்தார். தருமனும் உடன் எழ பீமன் மட்டும் கைகளை முழங்கால்மேல் கட்டியபடி அமர்ந்திருந்தான். அர்ஜுனனும் உடன் நடக்க நகுலனும் சகதேவனும் பின்னால் சென்றார்கள். தருமன் “மந்தா, வருக!” என்றார். பீமன் எழுந்துகொண்ட பின்னர் திரௌபதியை தோளில் தட்டி “வா” என்றான். அவள் சூரியன் மறைந்தபின்னர் கரியநீருக்குள் வாள்முனைபோல் தெரிந்த தொடுவானை நோக்கியபடி மேலும் சிலகணங்கள் அமர்ந்திருந்தபின் நீள்மூச்சுடன் எழுந்தாள்.

flowerஅவர்கள் நடக்கையில் பீமன் “முனிவரே, தங்கள் அரசுசூழ்தல் வியப்பளிக்கிறது” என்றான். தருமன் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்து “மந்தா” என்றார். “ஆம், என் அரசியல் தெளிவானது. நான் எந்நாட்டுக்கும் குடியல்ல. ஆனால் இளைய யாதவர் போரில் வெல்லவேண்டுமென்று விழைகிறேன்” என்றார். “ஏன்?” என்று பீமன் கேட்டான். “ஒரு போர் வரவிருக்கிறது. அதை தவிர்க்கமுடியாது. அதில் எது வெல்லும் என்பதே இன்றுள்ள முழுமுதல் வினா. வேதமுடிபுக்கொள்கை வெல்லவேண்டும். அதன் உருவம் இளைய யாதவர். அவரது படைக்கலங்கள் நீங்கள்.”

அவர்கள் மணல்மேல் நடக்கையில் தமனர் சொன்னார் “நான் சாந்தீபனி குருநிலையில் கற்றவன் என அறிந்திருப்பீர்கள். வேதக்கனியே என் மெய்மை. அந்த மரம் மூத்து அடிவேர் பட்டுவிட்டதென்றால் அக்கனியிலிருந்து அது புதுப்பிறப்பு கொண்டு எழட்டும். இனி இப்பெருநிலத்தை வேதமுடிபே ஆளட்டும்.” தருமன் “ஒவ்வொருவரும் தங்கள் கொள்கையை அவ்வாறு சொல்லக்கூடுமல்லவா?” என்றார். “ஆம், அது இயல்பே. வேதமுடிபுக்கொள்கையே பாரதவர்ஷமெனும் பெருவிரிவுக்கு உகந்தது என நான் எண்ணுவது ஒன்றின்பொருட்டே” என்றார் தமனர்.

நின்று திரும்பி சௌபர்ணிகையை சுட்டிக்காட்டி “அதோ அச்சிற்றொழுக்கு போன்றது அது என சற்று முன் எண்ணினேன். ஒரு குழியை நிறைக்கிறது. பின் பெருகி வழிந்து பிறிதொரு குழிநோக்கி செல்கிறது. பாரதவர்ஷம் பல குடிகளால் ஆனது. அவர்கள் வாழ்ந்து அடைந்த பற்பல கொள்கைகள். அக்கொள்கைகளின் உருவங்களான ஏராளமான தெய்வங்கள். அனைத்தையும் அணைத்து அனைத்தையும் வளர்த்து அனைத்தும் தானென்றாகி நின்றிருக்கும் ஒரு கொள்கையே இங்கு அறமென நிலைகொள்ளமுடியும். பரசுராமர் அனல்கொண்டு முயன்றது அதற்காகவே. இளையவர் சொல்கொண்டு அதை முன்னெடுக்கிறார்.”

“வேலின் கூரும் நேரும் அல்ல கட்டும் கொடியின் நெகிழ்வும் உறுதியுமே இன்று பாரதவர்ஷத்தை ஆளும் கொள்கையின் இயல்பாக இருக்கமுடியும்” என்றார் தமனர். “நிஷாதர்களும் அரக்கர்களும் அசுரர்களும் தங்களுடைய அனைத்தையும் கொண்டுசென்று படைத்து வணங்கும் ஓர் ஆயிரம் முகமுள்ள தெய்வம். அனைத்தையும் அணைத்து ஏந்திச்செல்லும் கங்கை. அது வேதமுடிபே. அது வேதங்கள் அனைத்திலும் இருந்து எழுந்த வேதம். வேதப்பசுவின் நெய் என்கின்றனர் கவிஞர்.”

“சில தருணங்கள் இப்படி அமைவதுண்டு” என்று தனக்குத்தானே என தமனர் சொன்னார். “நானும் நிலையா சித்தத்துடன் துயருற்று அலைந்தேன். பெரும்போர் ஒன்றின் வழியாகத்தான் அக்கொள்கை நிலைகொண்டாகவேண்டுமா என்று. இத்தெய்வம் அத்தகைய பெரும்பலியை கோருவதா என்று. அது ஒன்றே நிலைகொள்ளவேண்டும் என்றால், பிறிதொரு வழியே இல்லை என்றால் அதை ஊழென்று கொள்வதே உகந்தது என்று தெளிந்தேன்.”

“அது தோற்றால் இங்கு எஞ்சுவது நால்வேத நெறி மட்டுமே. இங்கு முன்னரிடப்பட்ட வேலி அது. மரம் வளர்ந்து காடென்றாகிவிட்டபின் அது வெறும் தளை. இன்று தொல்பெருமையின் மத்தகம்மேல் ஏறி ஒருகணுவும் குனியாமல் செல்லவிரும்பும் ஷத்ரியர் கையிலேந்தியிருக்கும் படைக்கலம் அது. அது வெல்லப்பட்டாகவேண்டும். இல்லையேல் இனிவரும் பல்லாயிரமாண்டுகாலம் இந்நிலத்தை உலராக்குருதியால் நனைத்துக்கொண்டிருக்கும். இப்போர் பெருங்குருதியால் தொடர்குருதியை நிறுத்தும் என்றால் அவ்வாறே ஆகுக!”

இருளுக்குள் அவர் குரல் தெய்வச்சொல் என ஒலித்தது. “சுனையிலெழும் இன்னீர் என எழுகின்றன எண்ணங்கள். ஒழுகுகையில் உயிர்கொள்கின்றன. துணைசேர்ந்து வலுவடைகின்றன. பெருவெள்ளமெனப் பாய்ந்து செல்கையில் அவை புரங்களை சிதறடிக்கவும் கூடும். அதன் நெறி அது. பாண்டவர்களே, வேதமுடிபுக் கொள்கை அனைத்துக் களங்களிலும் வென்றுவிட்டது. இனி வெல்ல குருதிக்களம் ஒன்றே எஞ்சியிருக்கிறது.”

நீள்மூச்சுடன் அவர் தணிந்தார். “இன்று நான் முயல்வதுகூட அக்களம் நிகழாமல் அதை வெல்லக்கூடுமா என்றே. இளைய யாதவரின் கொடிக்கீழ் ஷத்ரியர் அல்லாத பிறர் அனைவரும் கூடுவார்கள் என்றால், அவரது ஆற்றல் அச்சுறுத்துமளவுக்கு பெருகும் என்றால் அப்போர் நிகழாதொழியக்கூடும். ஆனால்…” என்றபின் கைகளை விரித்து “அறியேன்” என்றார். அவர் நடக்க பாண்டவர்கள் இருளில் காலடியோசைகள் மட்டும் சூழ்ந்து ஒலிக்க தொடர்ந்து சென்றனர்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 3

2. பிறிதோன்

flowerதமனரின் குருநிலையில் நூலாய்வுக்கும் கல்விக்குமென தனிப்பொழுதுகள் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. அவருடைய நான்கு மாணவர்களும் எப்போதும் அவருடன்தான் இருந்தனர். விழித்திருக்கும் பொழுதெல்லாம் அவர் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவர் கற்பிப்பதுபோல தோன்றவில்லை. சிலசமயம் நகையாடுவதுபோல, சிலசமயம் கதைகள் சொல்வதுபோல, அவ்வப்போது தனக்குள் என பேசிக்கொள்வதுபோலவே இருந்தது. இரவில் அவர்கள் அவருடைய குடிலிலேயே படுத்துக்கொண்டனர். ஒருவன் விழித்திருக்க பிறர் அவருக்கு பணிவிடை செய்தபின் அவர் துயின்றதும் தாங்களும் துயின்றனர்.

வேதமுடிபுக் கொள்கை சார்ந்த குருநிலை என்பதனால் வேள்விச்சடங்குகளோ நோன்புகளோ திருவுருப் பூசனை முறைமைகளோ அங்கு இருக்கவில்லை. “வழிபடுவது தவறில்லை. ஒன்றை வழிபட பிறிதை அகற்ற நேரும். மலர்கொய்து சிலையிலிடுபவன் மலரை சிலையைவிட சிறியதாக்குகிறான்” என்றார் தமனர். “தூய்மை பிழையல்ல. தூய்மையின்பொருட்டு அழுக்கென்று சிலவற்றை விலக்குதலே பிழை.” குருநிலைக்குள் குடில்கள் மட்டுமே இருந்தன. “இங்கிருத்தல், இக்கணத்தில் நிறைதல், இதற்கப்பால் யோகமென்று பிறிதொன்றில்லை” என்றார் தமனர்.

முதற்புலரியில் எழுந்து சௌபர்ணிகையின் கயத்தில் நீராடி அருகிருந்த வெண்மணல் மேட்டின்மீது ஏறிச்சென்று கதிரெழுவதை நோக்கி விழிதிறந்து கைகள் கட்டி அமர்ந்திருப்பதன்றி ஊழ்கமென்று எதுவும் அவர் இயற்றவும் இல்லை. “கற்பவை ஊழ்கத்தில்தானே நம் எண்ணங்கள் என்றாகின்றன? ஊழ்கமில்லாத கல்வி பொருளற்றது என்றல்லவா நூல்கள் சொல்கின்றன?” என்று தருமன் கேட்டார்.

“ஆம். அறிவது அறிவாவது ஊழ்கத்திலேயே. ஆனால் ஊழ்கமென்பது அதற்கென்று விழிமூடி சொல்குவித்து சித்தம் திரட்டி அமர்ந்திருக்கையில் மட்டும் அமைவதல்ல. சொல்லப்போனால் அம்முயற்சிகளே ஊழ்கம் அமைவதை தடுத்துவிடுகின்றன. நாம் நோக்குகையில் நம் நோக்கறிந்து அப்பறவை எச்சரிக்கை கொள்கிறது. இந்த மரத்தைப்போல காற்றிலும் ஒளியிலும் கிளைவிரித்து நம் இயல்பில் நின்றிருப்போமென்றால் அச்சமின்றி அது வந்து நம்மில் அமரும். நூல் நவில்க! அன்றாடப் பணிகளில் மூழ்குக! உண்க! உறங்குக! சூழ்ந்திருக்கும் இக்காட்டின் இளங்காற்றையும் பறவை ஒலிகளையும் பசுமை ஒளியையும் உள்நிறைத்து அதிலாடுக! இயல்பாக அமையும் ஊழ்கத்தருணங்களில் நம் சொற்கள் பொருளென்று மாறும். வாழ்வதென்பது ஊழ்கம் வந்தமைவதற்கான பெரும் காத்திருப்பாக ஆகட்டும். அதுவே என் வழி” என்றார் தமனர்.

மிகச் சிறியது அக்குருநிலை. தமனரும் மாணவர்களும் தங்குவதற்கான குடிலுக்கு வலப்பக்கமாக விருந்தினருக்கான இரு குடில்கள் இருந்தன. நெடுங்காலமாக அங்கு எவரும் வராததனால் அணுகி வரும் மழைக்காலத்தை எண்ணி விறகுகளைச் சேர்த்து உள்ளே அடுக்கி வைத்திருந்தனர். பாண்டவர்கள் நீராடி வருவதற்குள் மூன்று மாணவர்கள் அவ்விறகுகளை வெளியே கொண்டு வந்து அடுக்கி குடில்களை தூய்மை செய்தனர். நீர் தெளித்து அமையச் செய்திருந்தபோதிலும்கூட உள்ளே புழுதியின் மணம் எஞ்சியிருந்தது. கொடிகளில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த ஈச்சம் பாய்களை எடுத்து உதறி விரித்தனர். மரவுரிகளையும் தலையணைகளையும் பரப்பினர்.

தமனரின் முதல் மாணவனாகிய சுபகன் உணவு சமைத்துக்கொண்டிருந்தான். அருகே நின்று தமனர் அவனுக்கு உதவினார். நீராடி வந்த திரௌபதி அவர்கள் சமைத்துக்கொண்டிருந்த கலத்தைப் பார்த்து “இவ்வுணவு போதாது” என்றாள். தமனர் திரும்பி நோக்கி “இளைய பாண்டவரைப்பற்றி அறிந்திருந்தேன். ஆகவேதான் ஐந்து மடங்கு உணவு சமைக்க வேண்டுமென்று எண்ணினேன்” என்றார். திரௌபதி “பத்து மடங்கு” என்று சொல்லி புன்னகைத்துவிட்டு ஆடைமாற்றும் பொருட்டு குடிலுக்குள் சென்றாள். பீமன் தன் நீண்ட குழலுக்குள் கைகளைச் செலுத்தி உதறி தோளில் விரித்திட்ட பின் “விலகுங்கள் முனிவரே, நானே சமைத்துக் கொள்கிறேன். இது எனக்கு இனிய பணி. எளியதும் கூட” என்றான்.

“எனது மாணவன் உடனிருக்கட்டும். சமையற்கலையை அவன் சற்று கற்றுக்கொண்டால் உண்ணும்பொழுதும் எனக்கு ஊழ்கம் கைகூடலாம்” என்றார் தமனர் சிரித்தபடி. “உண்பது ஒரு யோகம்” என்றான் பீமன். “ஆம், நல்லுணவைப்போல சூழ்ந்திருக்கும் புவியுடன் நல்லுறவை உருவாக்குவது பிறிதில்லை என நான் எப்போதும் இவர்களிடம் சொல்வதுண்டு” என்றார் தமனர். பீமன் அடுதொழிலை தான் ஏற்றுக்கொண்டான். அரிசியும் உலர்ந்த கிழங்குகளும் இட்டு அன்னம் சமைத்தான். பருப்பும் கீரையும் சேர்த்த குழம்பு தனியாக கலத்தில் கொதித்தது. ஒருமுறைகூட அவன் விறகை வைத்து திருப்பி எரியூட்டவில்லை. வைக்கையிலேயே எரி வந்து அதற்காக காத்திருப்பதுபோலத் தெரிந்தது. “எரியடுப்பில் இப்படி விறகடுக்கும் ஒருவரை பார்த்ததில்லை” என்றான் சுபகன். “அனல் அங்கே வாய்திறந்திருக்கிறது. அதில் விறகை ஊட்டினேன்” என்றான் பீமன்.

அவர்கள் அனைவரும் அமர பீமன் பரிமாறினான். அவர்கள் உண்டபின் பீமன் உண்ணுவதை தமனரின் மாணவர்கள் சூழ்ந்து நின்று வியப்புடனும் உவகைச் சொற்களுடனும் நோக்கினர். பெரிய கவளங்களாக எடுத்து வாயிலிட்டு மென்று உடல் நிறைத்துக்கொண்டிருந்தான். அப்பால் குடில் திண்ணையில் அமர்ந்திருந்த தமனர் தன்னருகே அமர்ந்திருந்த தருமனிடம் “பெருந்தீனிக்காரர்கள் உணவுண்கையில் நம்மால் நோக்கி நிற்க முடியாது. அது ஒரு போர் என்று தோன்றும். உயிர் வாழ்வதற்கான இறுதித் துடிப்பு போலிருக்கும். இது அனலெழுவதுபோல, இனிய நடனம்போல இருக்கிறது. ஒவ்வொரு அசைவும் தன் முழுமையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றார். தருமன் “ஆம். இளையோன் எதையும் செம்மையாக மட்டுமே செய்பவன்” என்றார். மெல்ல புன்னகைத்து “கதையுடன் களம் புகும்போதும் அழகிய நடனமொன்றில் அவன் இருப்பது போலவே தோன்றும்” என்றார்.

flowerஉணவுக்குப்பின் அவர்கள் நிலவின் ஒளியில் சௌபர்ணிகையின் கரையில் இருந்த மணல் அலைகளின்மேல் சென்று அமர்ந்தனர். எட்டாம் நிலவு அகன்ற சீன உளி போல தெரிந்தது. நன்கு தீட்டப்பட்டது. முகில்களை கிழித்துக்கொண்டு மெல்ல அது இறங்கிச்சென்றது. முகிலுக்குள் மறைந்தபோது மணற்பரப்புகள் ஒளியழிந்து வெண்நிழல்போலத் தோன்றின. முகில் கடந்து நிலவெழுந்து வந்தபோது அலைகளாகப் பெருகி சூழ்ந்தன.

“இனி எங்கு செல்வதாக எண்ணம்?” என்று தமனர் கேட்டார். அவ்வினா ஒவ்வொருவரையும் தனித்தனியாக வந்து தொட்டதுபோல அவர்கள் திரும்பிப்பார்த்தனர். திரௌபதி தன் சுட்டுவிரலால் மென்மணலில் எதையோ எழுதியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். தருமன் அவளை சில கணங்கள் பொருளில்லாது நோக்கிவிட்டு திரும்பி “இப்போதைக்கு இலக்கென்று ஏதுமில்லை. எங்கள் கானேகலின் பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஓராண்டு எவர் விழியும் அறியாது இருந்தாகவேண்டுமென்பது எங்கள் நோன்பு” என்றார்.

“ஆம், நிமித்த நூலின்படி அது வியாழவட்டத்தின் முழுமைஎச்சம். ஹோரை பன்னிரண்டில் ஒன்று” என்றார் தமனர். “பூசக முறைப்படி உங்களுடன் இணைந்துள்ள காட்டுத்தெய்வங்களை அகற்றுவதற்காக! உருமாறிக் கரந்த உங்களை அவை ஓராண்டுகாலம் தேடியலையும். உங்கள் ஆண்டு அவற்றுக்கு நாள்.” தருமர் சற்று சிரித்து “இப்பன்னிரு ஆண்டுகளில் நாங்கள் அடைந்தவையும் அறிந்தவையும் எழுபிறவிக்கு நிகர். அணுகியுற்ற தெய்வங்கள் பல. அவை எங்களை விட்டாலும் நாங்கள் விடுவோமென எண்ணவில்லை” என்றார்.

“அஸ்தினபுரியின் அரசரின் எண்ணம் பிறிதொன்று என எண்ணுகிறேன்” என்றார் தமனர். “நீங்கள் காட்டிலிருந்தபோதும்கூட ஒவ்வொருநாளும் மக்கள் உள்ளத்தில் வாழ்ந்தீர்கள். அங்கு நீங்கள் கண்ட முனிவரைப்பற்றியும் வென்ற களங்களைப்பற்றியும் ஒவ்வொருநாளும் இங்கு கதைகள் வந்துகொண்டிருந்தன. அனைவரிடமிருந்தும் மறைந்தீர்கள் என்றால் இறந்தீர்கள் என்றே சொல்லிப்பரப்ப முடியும். அவ்வண்ணம் பேச்சு அவிந்ததே அதற்குச் சான்றாகும்.”

“ஆம், எவருமறியாமல் தங்கும்போது எங்களால் படைதிரட்ட முடியாது, துணைசேர்க்க இயலாது. குழிக்குள் நச்சுப்புகையிட்டு எலிகளைக் கொல்வதுபோல கொன்றுவிட்டால் அனைத்தும் முடிந்துவிடும்” என்றான் பீமன். “கொல்வதும் புதைப்பதும் வெவ்வேறாகச் செய்யவேண்டியதில்லை அல்லவா?” தமனர் ஏதோ சொல்ல நாவெடுக்க தருமன் “அவன் எப்போதும் ஐயுறுபவன், முனிவரே” என்றார். “அவரது ஐயம் பிழையும் அல்ல” என்றார் தமனர்.

“பாரதவர்ஷத்தில் பிறர் அறியாமல் நாங்கள் இருக்கும் இடம் ஏதென்று கண்டடைய முடியவில்லை. பிறந்த முதற்கணம் முதல் சூதர் சொல்லில் வாழத்தொடங்கிவிட்டோம். எங்கள் கதைகளை நாங்களே கேட்டு வளர்ந்தோம். செல்லுமிடமெங்கும் நாங்களே நிறைந்திருப்பதையே காண்கிறோம்” என்றான் நகுலன். தமனர் புன்னகையுடன் தன் தாடியை நீவியபடி “உண்மை. நெடுங்காலத்துக்கு முன் நான் தமிழ்நிலத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு வழியம்பலம் ஒன்றில் இரவு தங்குகையில் தென்புலத்துப் பாணன் ஒருவன் தென்மொழியில் கிருஷ்ண துவைபாயன வியாசரின் பாடல்களைப் பாடுவதை கேட்டேன். உங்கள் புகழ் இலாத இடமென்று பாரதவர்ஷத்தில் ஏதுமில்லை” என்றார்.

தருமன் கசப்புடன் “ஆம். ஆகவேதான் காடுகளை தேடிச் செல்கிறோம். மனிதர்களே இல்லாத இடத்தில் மொழி திகழாத நிலத்தில் வாழ விழைகிறோம்” என்றார். “எந்தக் காட்டில் வாழ்ந்தாலும் தனித்து தெரிவீர்கள். அஸ்தினபுரியின் அரசர் தன் ஒற்றர்களை அனுப்பி மிக எளிதில் உங்களை கண்டடைய முடியும்” என்று தமனர் சொன்னார். “ஆம். நானும் அதையே எண்ணினேன்” என்றான் சகதேவன். “மனிதர்கள் மறைந்துகொள்ள மிக உகந்த இடம் மனிதச் செறிவே” என்றார் தமனர். “உங்கள் முகம் மட்டும் இருக்கும் இடங்கள் உகந்தவை அல்ல. உங்கள் முகம் எவருக்கும் ஒரு பொருட்டாகத் தோன்றாத இடங்களுக்கு செல்லுங்கள்.”

“அங்கு முன்னரே எங்கள் கதைகள் சென்றிருக்கும் அல்லவா?” என்றார் தருமன். “செல்லாத இடங்களும் உள்ளன. காட்டாக, நிஷத நாட்டை குறிப்பிடுவேன்” என்று தமனர் சொன்னார். “நிஷதர்கள் வேதத்தால் நிறுவப்பட்ட ஷத்ரியகுடியினர் அல்ல. விதர்ப்பத்திற்கு அப்பால் தண்டகாரண்யப் பெருங்காட்டில் பிற தொல்குடிகளை வென்று முடிகொண்ட பெருங்குடி அவர்கள். பதினெட்டாவது பரசுராமர் அவர்களின் மூதாதையாகிய மகாகீசகனுக்கு அனல்சான்றாக்கி முடிசூட்டி அரசனாக்கினார். அவன் அனல்குலத்து ஷத்ரியனாகி ஏழுமுறை படைகொண்டுசென்று பன்னிரு ஷத்ரியகுடிகளை அழித்தான். அவன் கொடிவழியில் வந்த விராடனாகிய உத்புதன்   இன்று அந்நாட்டை ஆள்கிறான்.”

“நிஷதத்தின் அரசர்கள் தங்கள் நாட்டிற்குள் பிற ஷத்ரியர்களின் புகழ் பாடும் சூதர்கள் எவரையும் விட்டதில்லை. எனவே உங்கள் கதைகள் எதுவும் அங்கு சென்று சேர்ந்ததுமில்லை. நிஷத அரசனின் மைத்துனன் கீசகன் தன்னை பாரதவர்ஷத்தின் நிகரற்ற தோள்வீரன் என்று எண்ணுகிறான். அவன் குடிகள் அவ்வாறே நம்ப வேண்டுமென்று விழைகிறான். எனவே உங்களைக் குறித்த சொற்கள் எதுவுமே அவ்வெல்லைக்குள் நுழைய அவன் ஒப்பியதில்லை. மாற்றுருக்கொண்டு நீங்களே நுழையும்போது அவனால் உங்களை அறியவும் முடியாது.”

“அவன் எங்களை அறிந்திருப்பான் அல்லவா?” என்று தருமன் கேட்டார். “ஆம். நன்கறிந்திருப்பான். இளமை முதலே உங்கள் ஐவரையும், குறிப்பாக பெருந்தோள் பீமனை பற்றிய செய்திகளையே அவன் எண்ணி எடுத்து சேர்த்துக் கொண்டிருக்கிறான். அவன் உள்ளத்தில் ஒவ்வொரு கணமும் நீங்களே வாழ்கிறீர்கள். ஆனால் நேரில் நீங்கள் சென்றால் அவனால் உங்களை அடையாளம் காண முடியாது. ஏனெனில் அவனறிந்தது அச்சத்தால், தாழ்வுணர்ச்சியால் பெருக்கப்பட்ட வடிவத்தை. மெய்யுருவுடன் நீங்கள் செல்கையில் இத்தனைநாள் அவன் உள்ளத்தில் நுரைத்துப் பெருகிய அவ்வுருவங்களுடன் அவனால் உங்களை இணைத்துப்பார்க்க இயலாது. அரசே, நெடுநாள் எதிர்பார்த்திருந்த எவரையும் நாம் நேரில் அடையாளம் காண்பதில்லை” என்றார் தமனர்.

தருமன் “ஆம், அவ்வாறு நிகழ வாய்ப்புள்ளது” என்றார். “மாற்றுரு கொள்வதென்பது ஒரு நல்வாய்ப்பு” என்றார் தமனர். “பிறந்த நாள் முதல் நீங்கள் குலமுறைமைகளால் கல்வியால் கூர்தீட்டப்பட்டீர்கள். காட்டுக்குள் அக்கூர்மையைக் கொண்டு வென்று நிலைகொண்டீர்கள். இன்று பன்னிருநாட்கள் உருகி பன்னிரு நாட்கள் கரியுடன் இறுகி இருபத்துநான்கு நாட்கள் குளிர்ந்துறைந்த வெட்டிரும்பு என உறுதி கொண்டிருக்கிறீர்கள். உங்களை நீங்களே முற்றிலும் துறப்பதற்குரியது இந்த வாழ்வு. நீங்கள் என நீங்கள் கொண்ட அனைத்தையும் விலக்கியபின் எஞ்சுவதென்ன என்று அறிவதற்கான தவம்.”

“மாற்றுரு கொள்வது எளிதல்ல” என்றார் தமனர். “உடல்தோற்றத்தை மாற்றிக்கொள்ளலாம். உள்ளத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால் விழிகள் மாறாது. உடலில் அசைவுகளென வெளிப்படும் எண்ணங்கள் மாறாது. உள்ளே மாறாது வெளியே மாறியவனை தொலைவிலிருந்து நோக்கினால் மற்போரில் உடல்பிணைத்து திமிறிநிற்கும் இருவரை பார்த்ததுபோலத் தோன்றும்.” தருமன் “நாம் நமக்குரிய மாற்றுருவை கண்டுபிடிக்கவேண்டும், இளையோனே” என்று சகதேவனிடம் சொன்னார்.

“மாற்றுருவை வெளியே இருந்து கொண்டுவந்து அணியமுடியாது” என்றார் தமனர். “அவ்வுரு உங்கள் உள்ளே முன்னரும் இருந்துகொண்டிருக்கவேண்டும். உங்கள் விழியிலும் உடலசைவிலும் அதுவும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கவேண்டும். அரசே, மானுட உடலில் ஓர் ஆளுமை மட்டுமே குடியிருப்பதில்லை. ஒரு மரத்தில் பல தெய்வங்கள் என நம்முள் பலர் உள்ளனர். ஒருவரை நாம் நம்பி மேலெழுப்பி பிறர்மேல் அமரச்செய்கிறோம். அவருக்கு பிறரை படையும் ஏவலும் ஆக்குகிறோம். அவ்வாறு நம்முள் உள்ள ஒருவரை மேலெழுப்புவதே மிகச் சிறந்த மாற்றுருக்கொள்ளல்.”

“அவரும் நம்முருவே என்பதனால் நாம் எதையும் பயிலவேண்டியதில்லை. அடக்கப்பட்டு ஒடுங்கியிருந்தவராதலால் அவர் வெளிப்படுகையில் முழுவிசையுடன் பேருருக்கொண்டே எழுவார். அவரை எழுப்பியபின் அவருக்கு நம் பிறவுருக்களை ஒப்புக்கொடுத்தால் மட்டும் போதுமானது.” தமனர் தொடர்ந்தார் “அவர் நமக்கு ஒவ்வாதவராக முதல்நோக்கில் தோன்றலாம். ஏனென்றால் அவ்வெறுப்பையும் இளிவரலையும் உருவாக்கி அதை கருவியெனக் கொண்டே நாம் அவரை வென்று ஆள்கிறோம். அவரைச் சூடுவதென்பது முதற்கணத்தில் பெருந்துன்பம். சிறு இறப்பு அது. ஆனால் சூடியபின் அடையப்பெறும் விடுதலை பேருவகை அளிக்கக்கூடியது. ஒருமுறை அவ்வுருவைச் சூடியவர் பின்னர் அதற்கு திரும்பிச்சென்றுகொண்டேதான் இருப்பார்.”

அவர்களின் விழிகள் மாறின. “அவை எது என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளவேண்டியதில்லை. ஏனென்றால் நீங்கள் வென்று கடந்தது அது. வெறுத்து ஒதுக்கியது. உங்களுக்கு அணுக்கமானவர்கள் அதை அறிந்திருப்பார்கள். அதை அவர்களும் விலக்கிக்கொண்டேதான் இருப்பார்கள். அதை விலக்காமல் நீங்கள் அளிக்கும் உங்கள் உருவை அவர்கள் முழுதேற்க முடியாது. அதை முழுதேற்காமல் உங்களுடன் நல்லுறவும் அமையாது. ஆனால் எவருக்கும் எந்த மானுடருடனும் முழுமையான நல்லுறவு அமைவதில்லை. ஏனென்றால் எவரும் பிறர் தனக்களிக்கும் அவர் உருவை முழுமையாக நம்பி ஏற்பதில்லை” என்று தமனர் சொன்னார்.

“அவர்கள் உங்களை வெறுக்கும்போது, கடுஞ்சினம் கொண்டு எழும்போது நீங்கள் அளித்த உருவை மறுத்து பிறிதொன்றை உங்கள்மேல் சூட்டுவார்கள். அது உங்களை சினமூட்டும் என்பதனால் அதை ஒரு படைக்கருவியென்றே கைக்கொள்வார்கள். உங்களை சிறுமைசெய்யும் என்பதனால் உங்களை வென்று மேல்செல்வார்கள். அது என்ன என்று அவர்களிடம் கேளுங்கள். அதுவே உங்கள் மாற்றுரு” என்றார் தமனர். “அல்லது அவர்களின் கனவில் நீங்கள் எவ்வண்ணம் எழுகிறீர்கள் என்று கேளுங்கள்.” அவர்கள் அமைதியின்மை அகத்தே எழ மெல்ல அசைந்தனர். தருமன் “ஆனால்…” என்று ஏதோ சொல்லத் தொடங்கினார்.

“இது நோன்பு. நோன்பென்பது துயரைச் சுவைத்தல்” என்றார் தமனர். “அவர்கள் சூட்டும் அவ்வடிவை மாற்றுருவென்று சூடினால் அவ்வுருவில் முழுதமைவீர்கள். எவரும் ஐயுறாது எங்கும் மறைய முடியும். பன்னிரு ஆண்டுகள் ஆற்றிய தவத்தின் முழுமை இது. இது கலைந்தால் மீண்டும் அடிமரம் தொற்றி ஏறவேண்டியிருக்கும்.” தருமன் “ஆனால் வேண்டும் என்றே நம் மீது பொய்யான உருவம் ஒன்றை சுமத்துவார்களென்றால் என்ன செய்வது?” என்றார். “அவர்கள் சொல்லும்போதே நாம் அறிவோம் அது மெய்யென்று” என்றார் தமனர். “சினம்கொண்டு வாளை உருவினோமென்றால் அதுவே நாம்.” சிரித்து “அணுக்கமானவர்கள் அவ்வாறு பொருந்தா உருவை நமக்களிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களால் நம்மை அவ்வாறு உருக்காணவே இயலாது.”

தருமன் பெருமூச்சுவிட்டுக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தார். “உங்கள் உருவை தெரிவுசெய்க! அதன்பின்னர் நிஷதத்திற்குச் செல்லும் வழியென்ன என்று நான் சொல்கிறேன்” என்றபின் தமனர் எழுந்து தன் மாணவர்களுக்கு தலையாட்டிவிட்டு நடந்தார்.

flowerநிலவொளியில் அறுவரும் ஒருவரை ஒருவர் நோக்காமல் அமர்ந்திருந்தார்கள். “அறுவரும் இன்று காய்ந்து கருமைகொண்டு மாற்றுருதான் சூடிக்கொண்டிருக்கிறோம்” என்றார் தருமன். பீமன் “அது இக்காட்டில். நிஷதத்திற்குள் நுழைந்தால் மீண்டும் நாம் நகரியர் ஆகிவிடுவோம். பதினைந்து நாட்களில் நம் அரசத்தோற்றம் மீளும். குரலும் உடலசைவும் அவ்வண்ணமே ஆகும். எவை மாறவில்லை என்றாலும் ஒரேநாளில் விழிகள் மாறிவிடும்” என்றான். “ஏன் நாம் அரண்மனைக்கு செல்லவேண்டும்?” என்றார் தருமன் எரிச்சலுடன். “மூத்தவரே, வேறெங்கும் நம் தோற்றம் தனித்தே தெரியும்” என்றான் நகுலன்.

“சரி, அப்படியென்றால் அவர் சொன்னதுபோலவே மாற்றுரு கொள்ளப்போகிறோமா என்ன?” என்றார் தருமன். “ஆம், அது ஒன்றே வழி என எனக்குப்படுகிறது. அஸ்தினபுரி நம்மை அப்படி தப்பவிடாது. இயன்றதில் முழுமையை அடைந்தாகவேண்டும். இல்லையேல் மீண்டும் பன்னிரு ஆண்டுகள்” என்றான் சகதேவன். “என்ன சொல்கிறாய்? நாம் சூடவேண்டிய மாற்றுருவை பிறர் சொல்லவேண்டுமா?” என்று தருமன் கேட்டார். “நமக்குள் என்ன மந்தணம்? நாம் நம்மை நன்கறிவதற்கான தருணம் இது என்று கொள்ளலாமே” என்றான் பீமன். சகதேவன் புன்னகைத்து “எளியவர்களின் மாற்றுருக்கள் அவர்களின் முதன்மையுருவிலிருந்து பெரிதும் வேறுபடாதென்று எண்ணுகிறேன். மாமனிதர்களின் பெருந்தோற்றத்தின் அளவு அவர்களின் முதலுருவுக்கும் இறுதியுருவுக்குமான இடைவெளிதான் போலும்” என்றான்.

“சொல் தேவி, நம் இளையோன் சூடவேண்டிய தோற்றம் என்ன?” என்றான் பீமன். திரௌபதி ஏறிட்டு சகதேவனை நோக்கியபின் தலையசைத்தாள். “சொல்!” என்றான் பீமன் மீண்டும். “இவர் யார்? எளிய கணியன். நயந்துரைத்து பரிசில் பெற்று மகிழ்ந்திருக்கும் சிறியோன். பிறிதொன்றுமல்ல” என்றாள் திரௌபதி. சகதேவன் “ஆனால்…” என நாவெடுத்தபின் “ஆம்” என்றான். “சொல்க, அவர் எவர்?” என்று திரௌபதி பீமனிடம் கேட்டாள். “அவன் சூதன். குதிரைச்சாணி மணம் விலகா உடல்கொண்டவன். சவுக்கடி முதுகில் விழும்போது உடல்குறுக்க மட்டுமே தெரிந்தவன்” என்றான் பீமன். “மூத்தவரே…” என்று நகுலன் வலிமிகுந்த குரலில் அழைத்தான். “சொல், நீ பிறிதென்ன? பாண்டவன் என்றும் இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசன் என்றும் நீ நடிக்கிறாய் அல்லவா?” என்றான் பீமன்.

நகுலன் சினத்துடன் “அவ்வண்ணமென்றால் நீங்கள் யார்? சொல்க, நீங்கள் யார்? நான் சொல்கிறேன். அடுமடையன். அடிதாங்கி தலைக்கொள்ளும் அடிமை. அரண்மனைப் பெண்டிருக்கு முன் வெற்றுடல் காட்டி நடமிடும் கீழ்க்களிமகன்” என்றான். பீமனின் உடல் நடுங்கியது. கைகள் பதறியபடி மணலில் உலவி ஒரு கை மணலை அள்ளி மெல்ல உதிர்த்தன. “சொல்க, மூத்தவரே நான் யார்?” என்று அர்ஜுனன் கேட்டான். பீமன் திடுக்கிட்டு நோக்கி “மூத்தவர் சொல்லட்டும்” என்றான். “இங்கு நாம் ஒருவர் குருதியை ஒருவர் அருந்தவிருக்கிறோமா?” என்றார் தருமன். “சொல்லுங்கள், மூத்தவரே” என்றான் பீமன்.

“இல்லை” என்று தருமன் தலையசைத்தார். மெல்லிய குரலில் திரௌபதி “நான் சொல்கிறேன்” என்றாள். அனைவரும் அவளை நோக்கி திரும்பினர். “பேடி. பெண்டிருக்கு நடனம் கற்பிக்கும் ஆட்டன். ஆணுடலில் எழுந்த பெண்.” அர்ஜுனன் உரக்க நகைத்து “அதை நான் அறிவேன். அது நான் அணிந்த உருவமும்கூட” என்றான். தருமன் தளர்ந்து “போதும்” என்றார். “சொல்லுங்கள் மூத்தவரே, திரௌபதி யார்?” என்றான் அர்ஜுனன். தருமன் “வேண்டாம்” என்றார். “சொல்க, தேவி யார்?” என்றான் பீமன். மெல்லிய குரலில் “சேடி” என்றார் தருமன். “சமையப்பெண்டு. நகம் வெட்டி காலின் தோல் உரசி நீராட்டி விடுபவள். தாலமேந்துபவள்.”

பெருமூச்சுடன் பாண்டவர் அனைவரும் உடல் அமைந்தனர். திரௌபதி “நன்று” என மணலை நோக்கியபடி சொன்னாள். ஆனால் அவள் உடல் குறுகி இறுக்கமாக இருப்பதை காணமுடிந்தது. பின்னர் அவள் மணலை வீசிவிட்டு செல்வதற்காக எழுந்தாள். “அமர்க தேவி, மூத்தவரின் உரு என்ன என்பதை அறிந்துவிட்டு செல்வோம்” என்றான் அர்ஜுனன். “அதை நாம் செய்யவேண்டாம்” என்றான் நகுலன். “ஆம்” என்றான் சகதேவன். பீமன் “இல்லை, அதுவும் வெளிப்பட்டால்தான் இந்த ஆடல் முழுமையடையும்” என்றான். “சொல்க, தேவி!” என்றான் அர்ஜுனன்.

“சொல்கிறேன், நான் சொல்வதில் நால்வரில் எவருக்கு மாற்றுக்கருத்து இருந்தாலும் இதை பிழையென்றே கொள்வோம்” என்றாள் திரௌபதி. “சொல்க!” என்றான் அர்ஜுனன். நால்வரும் அவளை நோக்கினர். பதைப்புடன் மணலை அள்ளியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார் தருமன். “சகுனி” என்றாள் திரௌபதி. “நாற்களத் திறவோன். தீயுரை அளிப்போன். அரசனின் ஆழத்திலுறையும் ஆணவத்தையும் கீழ்மையையும் கருக்களாக்கி ஆடுவோன்.”

 NEERKOLAM_EPI_03

“இல்லை” என்றபடி தருமன் பாய்ந்தெழுந்தார். “இது வஞ்சம். என் மேல் உமிழப்படும் நஞ்சு இது.” ஆனால் அவர் தம்பியர் நால்வரும் அமைதியாக இருந்தனர். “சொல்… இதுவா உண்மை?” என்று தருமன் கூவினார். ஐவரும் சொல்லில்லாமல் நோக்கி அமர்ந்திருக்க “இல்லை! இல்லை!” என்றார். பின்னர் தளர்ந்து மணலில் விழுந்து “தெய்வங்களே” என்றார்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 2

1. குருதிச்சாயல்

flowerபுலர்காலையில் காலடிச் சாலையின் ஓரமாக கட்டப்பட்டிருந்த வழிவிடுதி ஒன்றிலிருந்து பாண்டவர்களும் திரௌபதியும் கிளம்பினார்கள். முந்தையநாள் இரவு எழுந்தபோதுதான் அங்கே வந்துசேர்ந்திருந்தனர். அது அரசமரத்தின் அடியில் கட்டப்பட்டிருந்த சிறிய மரப்பட்டைக்கூரையிடப்பட்ட மண் கட்டடம். வழியருகே அது விதர்ப்ப அரசன் அமைத்த விடுதி என்பதைச் சுட்டும் அறிவிப்புப்பலகை அரசமுத்திரையுடன் அமைந்திருந்தது. செம்மொழியிலும் விதர்ப்பத்தின் கிளைமொழியிலும் எழுதப்பட்டிருந்த அறிவிப்புக்குக் கீழே மொழியறியா வணிகர்களுக்காக குறிவடிவிலும் அச்செய்தி அமைந்திருந்தது.

அது ஆளில்லா விடுதி. உயரமற்ற சோர்ந்த மரங்களும் முட்புதர்களும் மண்டிய காட்டை வகுந்து சென்ற வண்டிப்பாதையில் ஒருபொழுதுக்குள் அணையும்படி அரசன் அமைத்த பெருவிடுதிகள் இருந்தன. அங்கே நூறுபேர் வரை படுக்கும்படி பெரிய கொட்டகைகளும் காளைகளையும் குதிரைகளையும் இளைபாற்றி நீர்காட்டும் தொட்டிகளும் அவற்றை கட்ட நிழல்பந்தலும் அமைக்கப்பட்டிருந்தன. சில விடுதிகளில் பத்து அடுமனையாளர்கள்வரை இருந்தனர். எப்போதும் உணவுப்புகை கூரைமேலெழுந்து விடுதியின் கொடி என நின்றிருந்தது. பறவைகள் கூடணைந்த மரம்போல அவ்விடுதிகள் ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன. பிரிந்து விலகிய சிறிய கிளைப்பாதைளில்தான் பேணுநர் இல்லாமல் விடுதிகள் மட்டுமே அமைந்திருந்தன. அப்பாதைகளில் பலநாட்களுக்கு ஒருமுறையே எவரேனும் சென்றனர்.

பாண்டவர்கள் பெரும்பாலும் பெருஞ்சாலைகளை தவிர்த்து கிளைப்பாதைகளிலேயே நடந்தார்கள். தொலைவிலேயே உயர்மரம் ஏறி நோக்கி பெருஞ்சாலையில் எவருமில்லை என்பதை பீமன் உறுதிசெய்த பின்னரே அவற்றில் நடக்கத் தலைப்பட்டனர். கிளைச்சாலைகளிலும் காலடிகளை தேர்ந்து வழிச்செலவினர் இருக்கிறார்களா என்பதை பீமன் அறிந்தான். எவரையும் சந்திப்பதை அவர்கள் தவிர்த்தனர். அவர்களை சொல்லினூடாக அறிந்தவர்களே ஆரியவர்த்தமெங்கும் இருந்தனர். அனைவரிடமிருந்தும் விலகிவிடவேண்டுமென்று தருமன் ஆணையிட்டிருந்தார். “நானிலம் போற்றும் புகழ் என்று சூதர் சொல்லலாம். தெய்வங்களின் புகழைவிடவும் பெரியது இப்புவி. நாம் எவரென்றே அறியாத மானுடர் வாழும் நிலங்களை அடைவோம். எளியவர்களாக அங்கிருப்போம். அது மீண்டுமொரு பிறப்பு என்றே நமக்கு அறிவை அளிப்பதாகட்டும்.”

இமயமலைச்சாரலில் இருந்து அவர்கள் கிளம்பி ஆறு மாதங்கள் கடந்துவிட்டிருந்தன. மலையிலிருந்து திரிகர்த்த நாட்டின் நிகர்நிலத்துக்கு இறங்கினர். திரிகர்த்த நாட்டின் பெரும்பகுதி கால்தொடாக் காடுகளாகவே இருந்தமையால் அவர்கள் விழிமுன் நிற்காமல் அதைக் கடந்து உத்தர குருநாட்டுக்குள் வரமுடிந்தது. அங்கே விரிந்த மேய்ச்சல் நிலங்களில் கன்றுகள் பகலெல்லாம் கழுத்துமணி ஒலிக்க மேய்ந்தன. ஆயர்களின் குழலோசை காட்டின் சீவிடுகளின் ஒலியுடன் இணைந்து கேட்டுக்கொண்டிருந்தது. மணியோசைகள் பெருகி ஒழுகத்தொடங்குகையில் கன்றுகள் குடிதிரும்புகின்றன என்று உணர்ந்து அதன் பின்னர் நடக்கத் தொடங்கினர்.

இருளுக்குள் சிற்றூர்களை கடந்து சென்றனர். பீமன் மட்டும் கரிய கம்பளி ஆடையால் உடலைமூடி மரவுரியை தலையில் சுற்றிக்கட்டி ஊர்களுக்குள் நுழைந்து “சுடலைச் சிவநெறியன். மானுட முகம் நோக்கா நோன்புள்ளவன். என்னுடன் வந்த ஐவர் ஊரெல்லைக்கு வெளியே நின்றுள்ளனர். கொடை அளித்து எங்கள் வாழ்த்துக்களை பெறுக! இவ்வூரைச் சூழ்ந்த கலி அகல்க! களஞ்சியங்களும் கருவயிறுகளும் கன்றுகளும் பொலிக! சிவமேயாம்! ஆம், சிவமேயாம்!” என்று கூவினான். அவன் இரண்டாவது சுற்று வரும்போது வீடுகளுக்கு முன்னால் அரிசியும் பருப்பும் வெல்லமும் வைக்கப்பட்டிருந்தன. அவன் அவற்றை தன் மூங்கில்கூடையில் கொட்டி எடுத்துக்கொண்டு திரும்பிவந்தான்.

இரவில் காட்டுக்குள் அனல்மூட்டி அவற்றை சமைத்து உண்டு சுனைநீர் அருந்தினர். பகல் முழுவதும் சோலைப்புதர்களுக்குள் ஓய்வெடுத்தனர். இரவுவிலங்குகள் அனைத்தையும் விழியொடு விழி நோக்க பழகினர். பகலொளி விழிகூசலாயிற்று. அயோத்தியை அடைந்தபோது அவர்களின் தோற்றமும் கடுநோன்பு கொள்ளும் சிவநெறியர்களைப்போலவே ஆகிவிட்டிருந்தது. சிவநெறியர்களுடன் சேர்வது பின்னர் எளிதாயிற்று. எவரென்று எவரையும் உசாவாது தானொன்றே ஆகி தன்னை கொண்டுசெல்லும் தகைமை கொண்டிருந்த சிவநெறியர்களுடன் எவராலும் நோக்கப்படாமல் செல்ல அவர்களால் இயன்றது. கங்கைக் கரையோரமாக காசியை அடைந்தனர். கங்கைக்கரைக் காடுகளில் சிவநெறியினரின் சிறுகுடில்களில் தங்கி மேலும் சென்றனர்.

கங்கையைக் கடந்து சேதிநாட்டை அடைந்தபோது மற்றொரு உரு கொண்டனர். சடைகொண்ட குழலும் தாடியும் கொண்டு மரவுரியாடை அணிந்து கோலும் வில்லும் தோல்பையும் கொண்டு நடக்கும் அவர்களை எவரும் அறிந்திருக்கவில்லை. மேகலகிரி அருகே மலைப்பாதையைக் கடந்து விந்தியமலைச்சாரலை அடைந்தபோது மீண்டும் மானுடரில்லா காட்டுக்குள் நுழைந்தனர். விந்தியமலையின் பன்னிரு மடிப்புகளை ஏறி இறங்கி மீண்டும் ஏறிக் கடந்து குண்டினபுரிக்குச் செல்லும் வணிகப்பாதையில் ஒரு மானுடரைக்கூட முகம் கொள்ளாமல் அவர்களால் செல்லமுடிந்தது.

கோடைக்காலமாதலால் விந்தியமலைகளின் காடுகள் கிளைசோர்ந்து இலையுதிர்த்து நின்றன. காற்றில் புழுதி நிறைந்திருந்தது. குரங்குகளின் ஒலியைக்கொண்டே நீரூற்றுகள் இருக்குமிடத்தை உய்த்தறிய முடிந்தது. கனிகளும் கிழங்குகளும் அரிதாகவே கிடைத்தன. எதிர்ப்படும் விலங்குகளெல்லாம் விலாவெலும்பு தெரிய மெலிந்து பழுத்த கண்களும் உலர்ந்த வாயுமாக பெருஞ்சீற்றம் கொண்டிருந்தன. பன்றிகள் கிளறியிட்ட மண்ணை முயல்கள் மேலும் கிளறிக்கொண்டிருந்தன. யானைகளின் விலாவெலும்புகளை அப்போதுதான் தருமன் பார்த்தார். “நீரின்றியமையாது அறம்” என்று தனக்குள் என முணுமுணுத்துக்கொண்டார்.

விடுதியின் முகப்பில் சுவரில் எழுதப்பட்டிருந்த சொற்களைக் கொண்டு தாழ்க்கோல் இருக்கும் கூரைமடிப்பை அறிந்து அதை எடுத்து பீமன் கதவை திறந்தான். நெடுநாட்களாக பூட்டிக்கிடந்தமையால் உள்ளிருந்த காற்று இறந்து மட்கிக்கொண்டிருந்தது. பின்கதவையும் சாளரங்களையும் திறந்தபோது புதுக்காற்று உள்ளே வர குடில் நீள்மூச்சுவிட்டு உயிர்ப்படைந்தது. அருகே கிணறு இருப்பதைக் கண்ட பீமன் வெளியே சென்று அதற்குள் எட்டிப்பார்த்தான். ரிப் ரிப் என ஒலிகேட்க மரங்களில் குரங்குகள் அமர்ந்திருப்பதை கண்டான். அன்னைக்குரங்கு அவன் கண்களைக் கண்டதும் “நல்ல நீர்தான்…” என்றது. “ஆம்” என்றான் பீமன். “நீ எங்களவனா?” என்றாள் அன்னை. “ஆம், அன்னையே” என்றான் பீமன்.

அப்பால் நின்றிருந்த ஈச்சைமரத்திலிருந்து ஓலைவெட்டி இறுக்கிப்பின்னி தோண்டி செய்தான். ஈச்சைநாராலான கயிற்றில் அதைக் கட்டி இறக்கி நீரை அள்ளினான். குரங்குகள் குட்டிகளுடன் அவனருகே வந்து குழுமின. “நான்… நான் நீர் அருந்துவேன்” என்றபடி ஒரு குட்டி பிசிறிநின்ற தலையுடன் பாய்ந்துவர இன்னொன்று அதன் வாலைப்பற்றி இழுத்தது. அதனிடம் “அப்பால் போ!” என்றது தாட்டான் குரங்கு. “நீ எப்படி இப்படி பெரியவனாக ஆனாய்?” என்று பீமனிடம் கேட்டது. பீமன் புன்னகையுடன் நீரை அதற்கு ஊற்ற அது “குழந்தைகளுக்குக் கொடு!” என்றது.

பீமன் இலைத்தொன்னைகள் செய்து அதில் நீரூற்றி வைத்தான். குட்டிகள் முட்டிமோதி அதை அருந்தின. அன்னையரும் அருகே வந்து நீர் அருந்தத் தொடங்கின. அப்பால் இலந்தை மரத்தடியில் அமர்ந்திருந்த ஐவரும் அதை நோக்கிக்கொண்டிருந்தார்கள். பீமன் நீரை தொன்னையில் கொண்டுசென்று தருமனுக்கு அளித்தான். “பெருங்குரங்கு இன்னமும் அருந்தவில்லை” என்றார் தருமன். “குடி அருந்திய பின்னரே அது அருந்தும்” என்றான் பீமன். “அவன் அருந்தட்டும். இக்காட்டின் அரசன் அவன். அவன் மண்ணுக்கு நாம் விருந்தினர். முறைமைகள் மீறப்படவேண்டியதில்லை” என்றார் தருமன்.

தாட்டான் குரங்கும் நீர் அருந்திய பின்னரே தருமன் நீரை கையில் வாங்கினார். மும்முறை நீர்தொட்டு சொட்டி “முந்தையோரே, உங்களுக்கு” என்றபின் அருந்தினார். ஒரு மிடறு குடித்தபின் திரௌபதிக்கு கொடுத்தார். அவள் அதை வாங்கி ஆவலுடன் குடிக்கத் தொடங்கினாள். பாண்டவர்கள் நால்வரும் நீர் அருந்திய பின்னர் பீமன் நீரை அள்ளி நேரடியாகவே வாய்க்குள் விட்டுக்கொண்டான். கடக் கடக் என்னும் ஒலியை குரங்குகள் ஆவலுடன் நோக்கின. “இன்னொருமுறை காட்டுங்கள்” என குட்டி ஒன்று ஆர்வத்துடன் அருகே வந்து கோரியது. பீமன் அதன்மேல் நீரைச் சொட்டி புன்னகை செய்தான்.

நீரை அள்ளித்தெளித்ததும் குடில் புத்துணர்ச்சி கொண்டது. பின்னறைக்குள் உறிகளில் அரிசியும் பருப்பும் உப்பும் உலர்காய்களும் இருந்தன. கலங்களை எடுத்து வைத்து நீர்கொண்டுவந்து ஊற்றினான் பீமன். மூங்கில் பெட்டிகளில் மரவுரிகளும் ஈச்சைப்பாய்களும் இருந்தன. அவற்றைக் கொண்டுவந்து விரித்ததும் தருமன் அமர்ந்தார். நகுலனும் சகதேவனும் மல்லாந்து படுக்க வாயிலருகே சுவர்சாய்ந்து அமர்ந்த அர்ஜுனன் மடியில் வில்லை வைத்துக்கொண்டான்.

வெளியே ஓசையெழுந்தது. பீமன் அங்கே நான்கு யானைகள் வந்து நின்றிருப்பதை கண்டான். “நீர் போதுமான அளவுக்கு உள்ளதா, மந்தா?” என்றார் தருமன். “அருந்துவதற்கு போதும்” என்றான் பீமன். “அருந்தும் நீரில் குளிக்கலாகாது” என்று சொன்னபின் தருமன் விழிகளை மூடிக்கொண்டார். திரௌபதி உரைகல்லை உரசி அனலெழுப்பி அடுப்பை பற்றவைத்தாள். பானையில் நீரூற்றி உலையிட்டாள். அடுமனைப்புகை அதை இல்லமென்றே ஆக்கும் விந்தையை பீமன் எண்ணிக்கொண்டான். நெடுநாட்களாக அவர்கள் அங்கே தங்கியிருப்பதைப்போல உளமயக்கெழுந்தது.

வெளியே சென்று நிலத்திலிருந்த பள்ளமான பகுதியை தெரிந்து அங்கே குழி ஒன்றை எடுத்தான். அதன்மேல் இலைகளையும் பாளைகளையும் நெருக்கமாகப் பரப்பி அது அழுந்திப்படியும்பொருட்டு கற்களைப்பரப்பி மண்ணிட்டு மூடியபின் அதன்மேல் கிணற்றுநீரை அள்ளி நிறைத்தான். யானைகள் துதிக்கையால் நீரை அள்ளி வாய்க்குள் சீறல் ஒலியுடன் செலுத்தி நீள்மூச்சுவிட்டு அருந்தின. நீர்ச்சுவையில் அவற்றின் காதுகள் நிலைத்து நிலைத்து வீசின. அடுமனையிலிருந்து திரௌபதி எட்டிப்பார்த்து “உணவு, இளையவரே” என்று சொல்லும்வரை அவன் நீர் இறைத்துக்கொண்டிருந்தான்.

பாண்டவர்கள் உள்ளே உணவுண்டுகொண்டிருந்தனர். அவனுக்கு அடுமனையிலேயே தனியாக இலைகளைப் பரப்பி உணவை குவித்திருந்தாள். அவன் அமர்ந்ததுமே குரங்குகள் வந்து சூழ்ந்துகொண்டன. “குழந்தைகளுக்கு மட்டும் போதும்” என்று தாட்டான் ஆணையிட்டது. குட்டிகள் வந்து பீமனைச் சூழ்ந்து அமர்ந்து சோற்றில் கைவைக்க முயன்று வெப்பத்தை உணர்ந்து முகம் சுளித்தன. ஒன்று சினத்துடன் பீமனின் காலை கடித்தது. ஒரு பெண்குட்டி பீமனின் மடியில் ஏறி சாதுவாக அமர்ந்துகொண்டிருந்தது. அதன் காதுகள் மலரிதழ்கள்போல ஒளி ஊடுருவும்படி சிவப்பாக இருந்தன. மென்மயிர் உடலும் மலர்ப்புல்லி போலவே தோன்றியது.

முதல்பிடி சோற்றை அள்ளி உள்ளங்கையில் வைத்து ஊதி ஆற்றியபின் அதன் வாயில் ஊட்டினான் பீமன். அது வாய்க்குள் இருந்து சோற்றை திரும்ப எடுத்து உற்று நோக்கி ஆராய்ந்தபின் அன்னையிடம் “சுவை” என்றது. அன்னை பற்களைக் காட்டி “உண்” என்றது. “தந்தையே தந்தையே” என்று அழைத்த குட்டிக்குரங்கு ஒன்று அவன் தாடையைப் பிடித்து திருப்பி “நான் மரங்களில் ஏறும்போது… ஏறும்போது…” என்றது. இன்னொரு குட்டி “இவன் கீழே விழுந்தான்” என்றது. “போடா” என்று முதல்குட்டி அவனை கடிக்கப்போக இருவரும் வாலை விடைத்தபடி பாய்ந்து குடிலின் கூரைமேல் தொற்றி ஏறிக்கொண்டார்கள்.

“நீங்கள் குறைவாகவே உண்கிறீர்கள், இளையவரே” என்றாள் திரௌபதி. “எனக்கு இது போதும்… நான் நாளை ஏதேனும் ஊனுணவை உண்டு நிகர்செய்கிறேன். சுற்றத்துடன் உண்ட நாள் அமைந்து நெடுங்காலமாகிறது” என்றான் பீமன். திரௌபதி சிரித்து “அன்னையருக்கும் பசி இருக்கிறது. நீங்கள் வற்புத்தவேண்டுமென விழைகிறார்கள்” என்றாள். பீமன் நகைத்து “பெரும்பசி கொண்டவன் தாட்டான்தான். தனக்கு பசியையே தெரியாது என்று நடிக்கிறான்” என்றான். இருட்டு வந்து சூழ்ந்துகொண்டது. காட்டின் சீவிடு ஒலி செவிகளை நிறைத்தது.

குரங்குகள் அவர்களின் குடிலைச் சுற்றியே அமர்ந்துகொண்டன. பீமன் திண்ணையிலேயே வெறும்தரையில் படுத்து துயில்கொண்டான். அவனருகே இரு குட்டிக்குரங்குகள் படுத்தன. “நான் நான்” என்று நாலைந்து குட்டிகள் அதற்காக சண்டையிட்டன. “சரி, எல்லாரும்” என்றான் பீமன். அவன் மார்பின்மேல் அந்தப் பெண்குட்டி குப்புற படுத்துக்கொண்டது. அதைக் கண்டு மேலுமிரு குரங்குகள் அதனருகே தொற்றி ஏற அது பெருஞ்சினத்துடன் எழுந்து பற்களைக் காட்டி சீறியது. ஏறியவை இறங்கிக்கொண்டன. நகுலன் நகைத்து “எல்லா குடிகளிலும் தேவயானிகள் பிறக்கிறார்கள்” என்றான்.

அப்பால் அதை நோக்கிக்கொண்டிருந்த தருமன் “நம் மைந்தர் நலமுடன் இருக்கிறார்களா, நகுலா?” என்றார். “ஆம், மூத்தவரே. திரிகர்த்த நாட்டில்தான் இறுதியாக செய்தி வந்தது” என்றான். சகதேவன் “அபிமன்யூ வில்லுடன் வங்கம் கடந்து சென்றிருக்கிறான். உடன் சதானீகனும் சுதசோமனும் சென்றிருக்கிறார்கள். பிரதிவிந்தியன் நூல்நவில்வதற்காக துரோணரின் குருநிலையில் இருக்கிறான். சுருதகீர்த்தியும் சுருதகர்மனும் அவனுடன் உள்ளனர்” என்றான். தருமன் பெருமூச்சுவிட்டபடி “நலம் திகழ்க!” என வாழ்த்தினார்.

அவர்கள் துயிலத்தொடங்கினர். இருளுக்குள் தருமனின் நீள்மூச்சு ஒலித்தது. பின்னர் நகுலனும் சகதேவனும் நீள்மூச்செறிந்தனர். இருளுக்குள் மூச்செறிந்து மார்பில் கிடந்து துயில்கொண்டிருந்த பைதலை மெல்ல அணைத்தபடி ஒருக்களித்த பீமன் மீண்டும் அவர்களின் நீள்மூச்சுகளை கேட்டான். அவர்கள் மூச்செறிந்தபடி புரண்டுபுரண்டு படுத்துக்கொண்டிருந்தார்கள். பீமன் அர்ஜுனனின் பெருமூச்சு கேட்கிறதா என்று செவிகூர்ந்தான். நெடுநேரம். அர்ஜுனன் இருளுக்குள் மறைந்துவிட்டவன் போலிருந்தான். அவன் எங்கிருக்கிறான்? உடல் உதிர்த்து எழுந்து சென்றுவிட்டிருக்கிறானா? பின்னர் அவன் அர்ஜுனனின் நீள்மூச்சை கேட்டான். அது அவனை எளிதாக்கியது. பிறிதொரு நீள்மூச்சுடன் அவன் புரண்டுபடுத்தான். துயிலுக்குள் ஆழ்ந்துசெல்லும்போதுதான் திரௌபதியின் நீள்மூச்சை கேட்கவேயில்லை என நினைவுகூர்ந்தான்.

flowerவெயில் வெண்ணொளி கொண்டு மண்ணை எரிக்கத் தொடங்குவதற்கு முன்பே பாதித்தொலைவை கடந்துவிடலாமென்று எண்ணியிருந்தனர். ஆனால் மிக விரைவிலேயே சூரியன் தழலென மாறிவிட்டிருந்தான். கூழாங்கற்கள் அனல்துண்டுகளென்றாயின. மணல்பரப்புகள் வறுபட்டவை என கொதித்தன. புல்தகிடிகளை தேடித்தேடி காலடி வைத்து செல்லவேண்டியிருந்தது. அவர்களின் கால்கள் பன்னிரு ஆண்டுகாலம் கற்களிலும் முட்களிலும் பட்டு தேய்ந்து மரப்பட்டைகளென ஆகிவிட்டிருந்தன. ஆயினும்கூட அங்கிருந்த வெம்மை அவர்களை கால்பொத்திக்கொண்டு விரைந்து நிழல்தேடச் செய்தது.

கானேகிய முதனாட்களில் ஒருமுறை பீமன் மரப்பட்டையால் மிதியடிகள் செய்து திரௌபதிக்கு அளித்தான். கூர்கற்களில் கால்பட்டு கண்ணீர் மல்கி நின்றிருக்கும் திரௌபதியைக் கண்டு அவன் அவளை பல இடங்களில் சுமந்துகொண்டு வந்திருந்தான். கொல்லைப்பக்கம் கலம் கழுவிக்கொண்டிருந்த அவள் முகம் மலர்ந்து அதை வாங்கி “நன்று… இவ்வெண்ணம் எனக்கு தோன்றவேயில்லை” என்றாள். அப்பால் விறகுகளை வெட்டிக்கொண்டிருந்த நகுலன் கோடரியைத் தாழ்த்தி புன்னகை செய்தான். குடில்திண்ணையில் அமர்ந்திருந்த தருமன் நோக்கை விலக்கி மெல்லிய குரலில் “காடேகலென்பது தவம். நாம் அறத்தால் கண்காணிக்கப்படுகிறோம்” என்றார். திரௌபதி விழிதாழ்த்தி கையால் மிதியடியை விலக்கிவிட்டு குடிலுக்குள் திரும்பிச்சென்றாள். பீமன் கசப்புடன் அதை நோக்கிவிட்டு வெளியே சென்று காட்டுக்குள் வீசினான்.

வழிநடையின் வெம்மையும் புழுதியும் கொண்டு அவர்கள் விரைவிலேயே களைப்படைந்தார்கள். புழுதிநிறைந்த காற்று மலைச்சரிவில் சருகுத்துகள்களுடன் வந்து சுழன்று வீசிக்கொண்டிருந்தது. அவர்களின் குழல்கள் புழுதிபரவி வறண்டு நார் போலிருந்தன. வியர்வை வழிந்த உடல்களுடன் களைப்பால் நீள்மூச்சுவிட்டு அவ்வப்போது நிழல்தேடி நின்றும் பொழுதடைவதைக் கண்டு எச்சரிக்கை கொண்டு மீண்டும் தொடங்கியும் அவர்கள் சென்றனர்.

திரௌபதி தன் மரவுரியாடையின் நுனியை எடுத்து தலைக்குமேல் போட்டு முகத்தை மூடி புழுதிக்காற்றை தவிர்த்தாள். சூழ்ந்திருந்த காடும் அப்பால் தெரிந்த மலைகளும் நோக்கிலிருந்து மறைந்து கால்கீழே நிலத்தில் ஒரு வாள்பட்டு காய்ந்த நீள் வடு எனத் தெரிந்த மண்சாலையை மட்டுமே அவளால் பார்க்கமுடிந்தது. அதில் விழுந்து எழுந்து விழுந்து சென்ற பீமனின் காலடிகள் மட்டுமே அசைவெனத் தெரிந்தன. ஓயாது பேசும் வாய் ஒன்றின் நா என அவ்வசைவு. வருக வருக என அழைக்கும் கைபோல. நினைத்து நினைத்து நெடுங்காலமாகி நினைப்பொழிந்த உள்ளம் எளிதில் வாய்த்தது அவளுக்கு.

நெடுவழி நடக்கும்போது ஒரு சொல்லும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. நிழலை அடைந்ததும் திரௌபதி தோல்பையிலிருந்த நீரை வாய்பொருத்தி அருந்திவிட்டு வெறும்தரையிலேயே உடல்சாய்த்து படுத்துக்கொண்டாள். நடக்கையில் வியர்வை புழுதியைக் கரைத்தபடி முதுகில் வழிந்தது. புருவங்களில் தேங்கி பின் துளித்துச் சொட்டி வாயை அடைந்து உப்புக் கரித்தது. நிழலில் அமர்ந்தாலும் நெடுநேரம் உடல்வெம்மை தணியவில்லை. இளங்காற்றும் வெப்பம் கொண்டிருந்தது. அமர்ந்தபின் மேலும் வியர்வை எழுவதாகத் தோன்றியது. பின்னர் உடல்குளிர்ந்தபோது கண்கள் மெல்ல சொக்கி துயிலில் ஆழ்ந்தன. எழுந்தபோது புழுதியும் வியர்வையின் உப்புமாக உடலில் ஒட்டியது.

அவளைச் சூழ்ந்து பாண்டவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் நோக்காமல் அமர்ந்திருந்தனர். நீரை அருந்துகையில் மட்டும் விழிகள் தொட்டன. அவ்வப்போது எவரேனும் அசைகையில் பிறர் திரும்பிப் பார்த்தார்கள். பிறர் முகங்கள் தோல்கருகி உதடுகள் உலர்ந்து புல்லின் வேர்த்தொகைபோல தாடியும் மீசையும் சலிப்புற்ற கண்களுமாக தெரிவதைக் கண்டு தங்கள் உருவத்தை உணர்ந்துகொண்டார்கள்.

கிளம்பும் முடிவை எப்போதும் தருமன்தான் எடுத்தார். அவர் எழுந்ததும் பீமன் தன் கைகளை விரித்து சோம்பல் முறித்தபின் நீர்நிறைந்த தோல்பையையும் உணவும் ஆடைகளும் கொண்ட பையையும் தோளிலேற்றிக்கொண்டான். அர்ஜுனன் நோக்கு மட்டுமாக மாறிவிட்டிருந்தான். நகுலனும் சகதேவனும் தங்களுக்குள் விழிகளாலும் தொடுகையாலும் ஓரிரு சொற்களாலும் உரையாடிக்கொண்டு பின்னால் வந்தார்கள்.

மீண்டுமொரு நிழலில் அவர்கள் அமர்ந்தபோது பீமன் திரௌபதியின் கால்களை பார்த்தான். குதிகால்வளைவு நெருக்கமாக வெடித்து உலர்களிமண்ணால் ஆனதுபோலத் தெரிந்தது. விரல்களின் முனைகளும் முன்கால் முண்டுகளும் காய்த்து விளாங்காய் ஓடுபோலிருந்தன. அவன் கைநீட்டி அவள் கால்களை தொட்டான். மரவுரியை முகத்தின்மேல் போட்டு துயின்றுகொண்டிருந்த திரௌபதி கனவுகண்டவள்போல புன்னகைத்தாள். அவன் அவள் கால்களை தன் கைகளால் அழுத்தி நீவினான். பின்னர் எழுந்துசென்று பசைகொண்ட பச்சிலைகளை எடுத்துவந்து சாறுபிழிந்து அவள் கால்களில் பூசி விரல்களால் நீவத் தொடங்கினான். புழுதி விலகியதும் இலைகளால் அழுந்த துடைத்தான். காய்த்த காலின் தோலில் முட்கள் குத்தியிறங்கி முனையொடிந்திருந்தன. அவன் நீண்ட முள் ஒன்றை எடுத்துவந்து முட்களை அகழ்ந்து எடுக்கத் தொடங்கினான். ஒவ்வொரு முள்ளையாக எடுத்து சுட்டுவிரல்முனையில் வைத்து நோக்கி வியந்தபின் வீசினான். முட்களை எடுக்கும்தோறும் முட்கள் விரல்முனைக்கு தட்டுப்பட்டுக்கொண்டே இருந்தன.

அவனை பாண்டவர் நால்வரும் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார்கள். அர்ஜுனனின் விழிகள் சுருங்கி உள்ளே நோக்கு கூர்முனை என ஒளிகொண்டிருப்பதை பீமன் கண்டான். பெரிய முட்களை உருவி எடுத்த இடங்களில் இருந்து குருதி கசியத் தொடங்கியது. சற்றுநேரத்தில் அவள் உள்ளங்கால் குருதியால் சிவந்து தெரிந்தது. பீமன் பச்சிலைச்சாற்றை ஊற்றி கைகளால் வருடிக்கொண்டிருந்தான். குருதி நின்றபின் அவன் பெருமூச்சுவிட்டு கால்மடித்து அமர்ந்தான். நகுலனும் சகதேவனும் பெருமூச்சுவிட்டனர். அர்ஜுனன் முனகுவதுபோல ஏதோ ஒலியெழுப்பி வில்லுடன் எழுந்து சென்றான். பீமன் தருமனின் பெருமூச்சை எதிர்பார்த்தான். நீண்டநேரத்திற்குப்பின் “எந்தையரே…” என்றார் தருமன்.

flowerவிதர்ப்ப நாட்டில் சௌபர்ணிகை என்னும் சிற்றாற்றின் கரையில் மூங்கில்புதர் சூழ்ந்த சோலைக்குள் அமைந்திருந்த தமனரின் தவக்குடிலுக்கு பின்மாலைப்பொழுதில் பாண்டவர்களும் திரௌபதியும் வந்து சேர்ந்தார்கள். திரௌபதியை பீமன் ஒரு நார்த்தொட்டில் அமைத்து தன் முதுகில் அமரச்செய்து தூக்கிக்கொண்டு வந்தான். தொலைவிலேயே குருநிலையின் காவிக்கொடியை அர்ஜுனன் கண்டு சுட்டிக்காட்டினான்.

அங்கு செல்வதற்கான பாதை பொன்மூங்கில்காடுகளுக்கு நடுவே வளைந்து சென்றது. மூங்கில்புதர்களுக்குள் யானைக்கூட்டங்கள் நின்றிருந்தன. அவை பீமனை ஆழ்ந்த ஒலியால் யார் என வினவின. பீமன் அதே ஒலியில் தன்னை அறிவித்தான். அன்னை யானை “நன்று, செல்க!” என வாழ்த்தியது. காலடியில் ஒரு நாகம் வளைந்து சென்றது. சௌபர்ணிகையில் மிகக் குறைவாகவே நீர் ஓடியது. சிறிய பள்ளங்களில் ஒளியுடன் தேங்கிய நீர் ஒரு விளிம்பில் மட்டும் வழிந்தெழுந்து வளைந்து சென்று இன்னொரு சிறுபள்ளத்தை அணுகியது. ஆற்றுக்குள் மான்கணங்கள் நீர் அருந்திக்கொண்டிருந்தன. காலடியோசை கேட்டு அவை திடுக்கிட்டு தலைதூக்கி செவிகோட்டி விழித்து நோக்கி உடலதிர்ந்தன.

தமனரின் குடிலில் அவரும் நான்கு மாணவர்களும் மட்டுமே இருந்தனர். அவர்கள் சென்ற பொழுதில் தமனர் மாணவர்களுடன் மரநிழலில் அமர்ந்து இன்சொல்லாடிக்கொண்டிருந்தார். கைகூப்பி அருகணைந்த தருமனைக் கண்டதுமே தமனர் கைகூப்பியபடி எழுந்து அருகே வந்தார். “பாண்டவர்களுக்கும் தேவிக்கும் என் சிறுகுடிலுக்கு நல்வரவு” என்றார். தருமன் முகமன் சொல்லி அவரை வணங்கினார். பீமனின் தோளிலிருந்து இறங்கி நின்ற திரௌபதி நிலையழிந்து அவன் தோளை பற்றிக்கொண்டாள்.

“இங்கு நான் எந்த நல்லமைவையும் தங்களுக்கு அளிக்கவியலாது. கடுநோன்புக்கென்றே இக்காட்டுக்கு வந்தேன்” என்றார் தமனர். “ஆனால் குளிக்க சௌபர்ணிகையில் நீர் உள்ளது. போதிய உணவும் அளிக்கமுடியும்.” தருமன் சிரித்து “அவ்விரண்டும் மட்டுமே இப்புவியில் நாங்கள் விழையும் பேரின்பங்கள்” என்றார். “வருக!” என தமனர் அவர்களை அழைத்துச்சென்றார். அவர் அளித்த குளிர்நீரையும் கனிகளையும் அவர்கள் மரநிழலில் அமர்ந்து உண்டனர்.

திரௌபதி எழுந்து தமனரின் குடிலருகே சௌபர்ணிகையில் இருந்த ஆழ்ந்த கயத்தை பார்த்தாள். “இயல்பாக உருவான மணற்குழி அது. யானைமூழ்கும்படி நீர் உள்ளது அதில். நல்ல ஊற்றுமிருப்பதனால் நீர் ஒழிவதே இல்லை” என்றார். திரௌபதி “நான் நீராடி நெடுநாட்களாகின்றன” என்றாள். “நீராடி வருக, அரசி!” என்றார் தமனர். “அதற்குள் இங்கே தங்களுக்கு நல்லுணவு சித்தமாக இருக்கும்.” திரௌபதி “நீராடுவதையே மறந்துவிட்டேன் என்று தோன்றுகிறது” என்றாள். பீமன் “வருக!” என அவள் கையை பிடித்தான். “இன்று நான் உன் நீராட்டறை ஏவலன்.” அவள் மெல்லிய உதட்டுவளைவால் புன்னகைத்து முன்னால் நடக்க மரவுரிகளை வாங்கிக்கொண்டு பீமன் பின்னால் சென்றான்.

செல்லும் வழியிலேயே சௌபர்ணிகை நோக்கி ஓடியிறங்கிய சிற்றோடைகளின் கரையிலிருந்து தாளியிலைகளைக் கொய்து தன் கையிலிருந்த மூங்கில்குடலையில் நிறைத்துக்கொண்டே சென்றான். மணல் சரிந்து ஆற்றை நோக்கி இறங்கிய பாதையில் கால்வைத்ததும் திரௌபதி “பஞ்சுச் சேக்கைபோல” என்றாள். பீமன் புன்னகை செய்தான். வெண்மணலில் பகல் முழுக்க விழுந்த வெயிலின் வெம்மை எஞ்சியிருந்தது. ஆனால் அதுவும் கால்களுக்கு இனிதாகவே தெரிந்தது.

கயத்தின் கரையில் மான்கூட்டங்களும் நான்கு காட்டெருமைகளும் நீர் அருந்திக்கொண்டிருந்தன. பீமன் புலிபோல ஓசையெழுப்பியதும் அவை அஞ்சி செவிகூர்ந்தன. உடல்விதிர்க்க நின்று நோக்கியபின் அவன் அணுகியதும் சிதறிப் பரந்தோடின. “அரசியின் குளியல். அது தனிமையிலேயே நிகழவேண்டும்” என்றான் பீமன் சிரித்தபடி. “புலியல்ல குரங்கு என்று கண்டதும் அவை மீண்டு வரப்போகின்றன” என்றாள் திரௌபதி தானும் சிரித்துக்கொண்டு.

கயத்தின் நீர் மெல்ல சுழன்றுகொண்டிருந்தது. ஒளியவிந்த வானின் இருள்நீலம் அதை இருளச்செய்திருந்தது. “இச்சுனைக்கு மகிழநயனம் என்று பெயரிட்டிருக்கிறார்கள்” என்றான் பீமன். அவள் “ஆம், பொருத்தமானது” என்றாள். மேலாடையை கழற்றிவிட்டு இடையில் அணிந்த மரவுரியுடன் நீரில் இறங்கினாள். “ஆ… ஆ…” என ஓசையிட்டாள். “என்ன?” என்றான் பீமன். “எரிகிறது” என்றாள். “உடலெங்கும் நுண்ணிய விரிசல்களும் புண்களும் இருக்கும். கோடையால் அமைந்தவை. நீர் அவற்றுக்கு நன்மருந்து” என்றான் பீமன்.

அவள் நீரில் திளைத்துக்கொண்டிருந்ததை நோக்கியபடி பீமன் தாளியிலைகளுக்குள் கற்களைப் போட்டு கைகளால் பிசைந்து கூழாக்கினான். அவள் குழல் நீரில் அலையடித்து நீண்டது. சிறுமியைப்போல சிரித்தபடி கைநீட்டி நீரில் துள்ளி விழுந்தாள். நீர்ப்பரப்பின்மேல் கால் உந்தி எழுந்து அமைந்து வாயில் நீர் அள்ளி நீட்டி கொப்பளித்தாள். சிரித்தபடி “இன்குளிர்நீர்… மண்ணில் பேரின்பம் பிறிதில்லை என்று உணர்கிறேன்” என்றாள். “வா, தாளிப்பசை பூசிக்கொள். குழலில் அழுக்கும் புழுதியும் விலகட்டும்” என்றான் பீமன்.

NEERKOLAM_EPI_02_UPDATED

அவள் நுங்கின் வளைந்த மென்பரப்பென ஒளிர்ந்த எழுமுலைகளிலிருந்து நீர் வழிய எழுந்து அருகே வந்தாள். அவன் “அமர்க!” என்றான். அவள் அவன் முன் குழல்காட்டி அமர அவன் அவள் குழல்பெருக்கை கைகளால் அள்ளி ஐந்தாக பகுத்தான். ஐம்புரிச்சாயல் நீரில் நனைந்து கரிய விழுதுகளாக சொட்டிக்கொண்டிருந்தது. தாளியிலை விழுதை அள்ளி அதில் பூசினான்.

அவள் “என்ன மணம்?” என்று திரும்பிப்பார்த்தபின் அவன் கைகளை பற்றினாள். அவனுடைய வலக்கை வாளால் என வெட்டுபட்டு குருதி வழிந்துகொண்டிருந்தது. “என்ன ஆயிற்று?” என்றாள். “தாளியை கூழாங்கற்களை இட்டு பிசைந்தேன். அதில் ஒன்று கூரியது” என்றான் பீமன். பின்னர் சிரித்தபடி “குழலுக்கு குருதி நன்று” என்றான்.

நூல் பதினான்கு – நீர்க்கோலம் – 1

பாயிரம்

 

ஆட்டன்

 

கதிரவனே, விண்ணின் ஒளியே

நெடுங்காலம் முன்பு

உன் குடிவழியில் வந்த

பிருகத்பலத்வஜன்  என்னும் அரசன்

பன்னிரு மனைவியரையும் நூறு மைந்தரையும்

காவல்செறிந்த அரண்மனையையும்

எல்லை வளரும் நாட்டையும்

தன் மூதாதையரின் நீர்க்கடன்களையும்

தன் பெயரையும்

துறந்து காடேகி

முனிவர் செறிந்த தவக்குடில்களில் வாழ்ந்து

உன்னை தவம்செய்தான்.

 

ஒளி என்னும் உன் இயல்பை மட்டுமே தன் சொல்லென்றாக்கி

பிறசொற்களனைத்தையும் அவன் நீத்தான்.

அச்சொல்லில் நீ எழுந்தாய்.

 

அவன் புலரிநீராடி நீரள்ளி தொழுது கரைஎழுந்தபோது

நீர்ப்பரப்பு ஒளிவிட நீ அதில் தோன்றினாய்.

‘மைந்தா வேண்டியதை கேள்!’ என்றாய்.

 

‘நான் நீயென ஒளிவிடவேண்டும்’ என்றான் அரசன்.

புன்னகைத்து அவன் தோளைத் தொட்டு

‘ஒளியென்பதும் சுமையே என்றறிக!’ என்றாய்.

அவன் விழிகளை நோக்கி குனிந்து

‘ஒளிகொண்டவன் தன் ஒளியால் மறையவேண்டியவன்

ஒளியன்றி பிறிதொன்றை கேள்!’ என்றாய்.

 

‘ஒளியன்றி ஏதும் அடைவதற்கில்லை’ என்றான்.

அருகே நீரருந்திய யானை ஒன்றைச் சுட்டி நீ சொன்னாய்

‘அந்த யானை விழிகளுக்கு அப்பாற்பட்ட

வெண்வடிவொன்றின் கருநிழல்

இந்த வெண்கொக்கின் மெய்வடிவும் கரியது.

ஒவ்வொன்றும் பிறிதொன்றே என்றறிக!

என் வடிவே இருள்

பகலின் மறுபக்கமாகிய இரவும் எனதே’

 

திகைத்து நின்ற அரசனின் கைகளைப்பற்றி

’உன் மறுவடிவை காட்டுகிறேன் வருக’

என அழைத்துச் சென்றாய்.

சுனையின் நீர்ப்பரப்பில் தன் பாவை ஒன்றை கண்டான்.

அலறிப்புடைத்து கரையேறி ஓடி

நின்று நடுங்கி ‘எந்தையே, இது என்ன?” என்று கூவினான்.

 

‘அவனே நீ, நீ அவன் நிழல்’ என்றாய்.

அவ்வுருவம் உடலுருகி வழிந்துகொண்டிருந்தது.

உடைந்த மூக்குடன் சிதைந்த செவிகளுடன் பாசிபிடித்து

நீரடியில் கிடக்கும் கைவிடப்பட்ட கற்சிலை என.

 

‘என் இறையே, ஏன் நான் அவ்வண்ணமிருக்கிறேன்?”

என்று அரசன்  கூவினான்.

‘இங்கு நீ செய்தவற்றால் அவ்வண்ணம் அங்கு.

அங்கு அவன் செய்தவற்றால் இவ்வண்ணம் இங்கு.

பொலியும் உடல் அவனுக்குரியது.

கருகும் அவன் உடலே நீ ஈட்டியது’ என்றாய்.

 

‘எங்கிருக்கிறான் அவன்? எங்கிருக்கிறேன் நான்?’ என்று

நெஞ்சு கலுழ கூவினான் அரசன்.

‘இங்குள்ள நீ மைந்தருக்குத் தந்தை

அங்குள்ள நீ தந்தையரின் மைந்தன்’ என்றாய்.

 

கண்ணீருடன் கைநீட்டி அரசன் கோரினான்

‘மைந்தர் தந்தையின் பொருட்டு துயர்கொள்ள

அது பழியன்று, ஊழ்.

மைந்தரால் தந்தையர் துயர்கொண்டால்

பழியென்பது பிறிதொன்றில்லை.’

 

புன்னகைத்து நீ சொன்னாய்

‘நீ அவ்வுருவை சூடுக, அவனுக்கு உன் உரு அமையும்.’

‘அவ்வாறே, ஆம் அவ்வாறே’ என்றான் அரசன்.

ஆம் ஆம் ஆம் என்றது தொலைவான் பறவை ஒன்று.

 

நீர் இருள சுனை அணைந்தது.

குளிர்காற்றொன்று வந்து சூழ்ந்து செல்ல

மீண்டு தன்னை உணர்ந்த அவன்  தொழுநோயுற்றவனானான்.

விரல்கள் மடிந்திருந்தன.

செவிகளும் மூக்கும் உதிர்ந்துவிட்டிருந்தன.

தடித்த உதடுகளிலிருந்து சொல்லெழவில்லை.

விரல் மறைந்த கால்களைத் தூக்கி வைத்து

மெல்ல நடந்து தன் குடிலை அடைந்தான்.

 

வேள்விச்சாலையிலும் நூலோர் அவையிலும்

அவனை புறந்தள்ளினர்.

அருந்தவத்தோரும் அவனைக்கண்டு முகம் சிறுத்தனர்.

அவன் முன் நின்று விழிநோக்கக் கூசினர் மானுடர்.

இல்லறத்தோர் அவனுக்காக ஈயவில்லை.

எந்த ஊரிலும் அவன் காலடிபடக்கூடவில்லை.

 

உருகியுதிரும் உடலுக்குள்

அவன் முற்றிலும் தனித்தமைந்தான்.

ஈட்டுவதும் இன்புறுவதும்

இன்றென்றும் இங்கென்றும் உணர்ந்து ஆடுவதும்

உடலே என்று அறிந்தான்.

உடலென்று தன்னை உணர்வதில்லை அகம்

என்று அன்று தெளிந்தான்.

 

நாளும் அந்த நீர்நிலைக்குச் சென்று குனிந்து

தன் ஒளி முகத்தை அதில் நோக்கி உவகை கொண்டான்.

பின்பு ஒவ்வொரு நீர்ப்பரப்பிலும்

தன் முகமும் அம்முகமும் கொள்ளும் ஆடலை

அமர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான்.

தன் முகம் முழுத்து அதுவென்றாக

அம்முகம் உருகி தானென்றாக

எது எம்முகமென்று மயங்கி நெளிய

முகமென்றாவது தருணமே என்றறிந்தான்.

 

சுடர்முகத்தோனே

ஒருநாள் புலரியில் விண்ணுலாவ எழுந்த நீ

உன் தேவியரை துணைக்கழைத்தாய்.

இளிவரலுடன் விலகினர் அரசியர்.

‘துயரன்றி அங்கு ஏதுள்ளது?’ என்றாள் பிரபை.

‘தனியரன்றி பிறரை கண்டதில்லையே’ என்றாள் சரண்யை.

‘அந்தியில் குருதிவழிய மீள்வதே உங்கள் நாள்

என்று அறியாதவளா நான்?’ என்றாள் சங்க்யை.

‘இருளில் ஒளிகையில் நானல்லவா துணை?’  என்றாள் சாயை.

 

மறுத்துரைக்க சொல்லின்றி

உருகி எழும் ஒளியுடலுடன்

எழுபுரவித் தேரேறி நீ விண்ணில் எழுந்தாய்.

என்றும்போல் சுமைகொண்ட துயருற்ற

தனித்த தவித்தமைந்த முகங்களையே

தொட்டுத்தொட்டுச் சென்றபோது

மாறா புன்னகை கொண்ட முகமொன்றைக் கண்டாய்.

உடல்கரையும் தொழுநோயாளனின் உடலில்.

 

வியந்து மண்ணிறங்கி அருகணைந்தாய்.

‘இருநிலையை அறிந்த அரசனல்லவா நீ?

சொல்க, எங்கனம் கடந்தாய் துயரை?’ என்றாய்.

 

‘விண்ணொளியே, வாழ்க!’ என்று அரசன் வணங்கினான்.

‘வருக!’ என அருகிருந்த சுனைக்கு அழைத்துச் சென்றான்.

நீர்ப்பரப்பை நோக்கி குனிந்து

அலைகளில் எழுந்த தன் முகங்களை

கழற்சிக்காய்களென்று இரு கைகளில் எடுத்து

வீசிப் பிடித்து எறிந்து பற்றி ஆடலானான்.

சுழன்று பறக்கும் முகங்களுக்கு நடுவே

கணமொரு முகம் கொண்டு நின்றிருந்தான்.

 

அவனை வணங்கி நீ சொன்னாய்

‘அரசமுனிவனே, என்னுடன் எழுக!

நான் அன்றாடம் சென்றடையும் அந்திச்செம்முனையில்

மங்காப்பொன் என உடல்கொண்டு அமைக!

நாளும் துயர்கண்டு நான் வந்தணையும்போது

இறுதியில் தோன்றும்

தோற்றம் உமதென்றாகுக!’

 

உடல் சுடர்ந்தபடி பிருகத்பலத்வஜன் விண்ணிலேறி அமர்ந்தான்.

அந்திச் செவ்வொளியில் முகில்களில் உருமாறுபவன்

நீர்களில் கோலமாகின்றவன்

பறவைகளால் வாழ்த்தப்படுபவன்

முதல் அகல்சுடரால் வணங்கப்படுபவன்

அவன் வாழ்க!

NEERKOLAM_EPI_01

 

கதிரவனே, அழிவற்ற பேரொளியே,

நீரிலாடும் கோலங்கள் நீ.

விண்ணிலாடுவதும் மண்ணிலாடுவதும்

சொல்லிலாடுவதும் பொருளில் நின்றாடுவதும்

பிறிதொன்றல்ல.

உன்னை வணங்குகிறேன்.

இச்சிறு பனித்துளியில் வந்தமர்க!

இந்தச் சிறுபூச்சியின் சிறகில் சுடர்க!

இப்பெருங்கடலை ஒளியாக்குக!

அவ்வான்பெருக்கை சுடராக்குக!

 

ஆம், அவ்வாறே ஆகுக!