மாதம்: ஏப்ரல் 2017

நூல் பதின்மூன்று – மாமலர் – 82

82. மலைநிலம்

அசோகவனியிலிருந்து ஹிரண்யபுரிக்குச் சென்று சுக்ரரைப் பார்த்து வருவதாகத்தான் தேவயானியின் முதல் திட்டம் அமைந்திருந்தது. அது மாற்றப்பட்டுவிட்டதை சாயை கிளம்புவதற்கு முந்தையநாள் கிருபரின் நாவிலிருந்துதான் அறிந்தாள். பயணத்துக்கான தேர்கள் ஒருங்கிவிட்டனவா என்று பார்ப்பதற்காக கொட்டிலுக்குச் சென்றிருந்த அவள் மலைப்பாதைகளில் ஊர்வதற்குரிய அகன்ற பட்டைகொண்ட ஆறு பெரிய சகடங்களில் அமைந்த தேர் அரசிக்கென ஒருக்கப்பட்டிருப்பதை கண்டாள். இரண்டு புரவிகளுடன் விரைவிலாது செல்லும் அது நெடும்பயணத்திற்கு உகந்ததல்ல. சினத்துடன் திரும்பி தன்னருகே நின்றிருந்த கிருபரிடம் “இத்தேரை ஒருக்கும்படி ஆணையிட்டது யார்?” என்றாள்.

“மலைப்பாதைப் பயணம் அல்லவா? தேவி, பல இடங்களில் வெறும் பாறைப்பரப்பிலும் சரளைக்கல் சரிவிலும் இறங்கிச் செல்கிறது. இரட்டைச்சகடங்கள் கொண்ட விரைவுத்தேரில் பயணம் செய்வது இயலாது” என்றார் கிருபர். “இங்கிருந்து ஹிரண்யபுரி வரை சீரான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதை நான் உமக்கு சொல்ல வேண்டியதில்லை” என்றாள் சாயை. குழப்பத்துடன் கிருபர் வணங்கி “ஆனால் என்னிடம் அரசி ஹிரண்யபுரிக்குச் செல்வதாக சொல்லவில்லையே?” என்றார். அப்போதும் தானறியாத ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று சாயை ஐயம் கொள்ளவில்லை. மேலும் சினத்துடன் “அத்தகைய ஆணைகளை பிறப்பிக்க வேண்டியவள் நான். இங்கிருந்து பேரரசியும் அணுக்கப்படையினரும் மட்டும் ஹிரண்யபுரிக்குச் செல்கிறார்கள். பிறர் குருநகரிக்குச் செல்கிறார்கள்” என்றாள்.

கிருபர் மேலும் குழப்பத்துடன் தலைவணங்கி “ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் பேரரசி அவரே என்னை அழைத்து சரபஞ்சரம் என்னும் மலையூருக்கு செல்லவிருப்பதாகச் சொல்லி அதற்காக தேர் ஒருக்கும்படி ஆணையிட்டார்களே…?” என்றார். ஒரு கணம் விழி நிலைக்க உதடு மெல்ல பிரிய உளம் செயலிழந்து மீண்டு வந்த சாயை “பேரரசியேவா…?” என்றாள். “அவரே தன் வாயால் உரைத்தாரா?” கிருபர் “ஆம். என்னை அவர்களின் தனியறைக்கு அழைத்தார்கள். இவ்வாணையை பிறப்பித்தார்கள். வழக்கம்போல இது அரசு சம்பந்தமாக இருக்கவேண்டுமென்பதனால் பிறரிடம் நான் பகிர்ந்துகொள்ளவில்லை. சரபஞ்சரம் செல்வதற்கான பாதையை புரவி வீரன் ஒருவனை அனுப்பி மதிப்பிட்டு வரச்சொன்னேன். அதன்படி இத்தேரை அமைத்தேன். இது சேற்றில் சிக்காது. மலைச்சரிவுகளில் சகடப் பிடி விடாது. மூங்கில்சுருள்களின் மேல் அமைந்திருப்பதனால் பீடத்தில் அதிர்வுகளும் இருக்காது” என்றார்.

சாயை தன்னை தொகுத்துக்கொண்டு “ஆம். சரபஞ்சரத்து பழங்குடித் தலைவருடன் ஒரு சந்திப்பு இருந்தது. அங்கிருந்துதான் ஹிரண்யபுரிக்குச் செல்வதற்கான எண்ணம். நெடுந்தொலைவுக்கான விரைவுத்தேர்கள் அங்கு சென்று வந்தபின் இங்கு ஒருங்கியிருந்தால் போதும்” என்றாள். அவளுக்கு செய்தி தெரிவிக்கப்படவில்லை என்பதை அதற்குள் உணர்ந்துகொண்ட கிருபர் கண்களுக்குள் மின்னிய துளிப் புன்னகையை மறைக்க விழிகளை தாழ்த்திக்கொண்டு “ஆணை, தேவி. ஆனால் சரபஞ்சரத்திலிருந்து திரும்ப இங்கு வருவதாக எண்ணமிருப்பதுபோல அரசி கூறவில்லை. அங்கிருந்து அவர்களும் குருநகரிக்கே செல்வதாகத்தான் சொன்னார்கள்” என்றார்.

மறுசொல் உரைக்காமல் ஆடை சரசரக்க அணிகள் குலுங்க திரும்பி நடந்து சாயை அரண்மனைக்குள் புகுந்தாள். படிகளில் ஏறியபோது அவள் காலடி ஓசையில் தெரிந்த சினம் காவலர்களையும் ஏவலர்களையும் நடுங்கி அசைவிழந்து நிற்கச்செய்தது. இடைநாழியில் நடந்து தேவயானியின் அறைக்கதவை ஓசையுடன் திறந்து உள்ளே சென்றாள். அங்கு கற்றுச்சொல்லிக்கு அரசாணையொன்றை கூறிக்கொண்டிருந்த தேவயானி மூடியிருந்த விழிகளைத் திறந்து அவளை நோக்கி முகக்குறிப்பால் என்ன என்று வினவினாள். “நாம் ஹிரண்யபுரிக்கு செல்வதாக இல்லையா?” என்றாள் சாயை.

தேவயானி “இல்லை, இரு நாட்களுக்கு முன் சரபஞ்சரம் சென்று அங்கு உள்ள பழங்குடி கலைவிழவொன்றை வாழ்த்திவிட்டுச் செல்லலாம் என்னும் எண்ணம் வந்தது. இங்குள்ள தொல்குடிகள் நம்மிடம் அணுக்கமாகிவிட்டார்கள். அணுகாத தொல்குடிகளில் பலர் அவ்விழவில் கலந்துகொள்கிறார்கள். அங்கு சென்று அவர்களுக்கு பரிசுகளும் அரசுப்பட்டங்களும் அளித்தால் மேலும் பலரை நமது அரசு அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்” என்றாள். சாயை கூர்ந்து நோக்கியபடி “நாம் அவர்களை தேடிச்செல்வது திட்டமாக இருந்தால் இங்கு வந்து தங்கி அவர்களை வரச்சொல்லியிருக்க வேண்டாமே…?” என்றாள்.

“ஆம், நம்மைத் தேடி வந்தவர்கள்தான் நமக்கு முதன்மையானவர்கள். நாம் தேடிச் செல்பவர்கள் எப்போதும் நம்மால் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். நம்மைத் தேடி வந்தவர்களைக் கொண்டு நாம் தேடிச்செல்பவர்களை ஆட்சி செய்யவேண்டும்” என்றாள் தேவயானி. சாயை “இந்த வேறுபாடு அவர்களுக்குத் தெரிந்தால் நம்மை அணுகுவார்களா என்ன? தங்கள் குடியின் ஒரு சாராருக்குக் கீழே ஒடுங்குவது அவர்களுக்கு உகந்ததாக இருக்குமா?” என்றாள்.

“அவ்வேறுபாட்டை ஐந்தாறு வருடங்களுக்கு எவ்வகையிலும் காட்டுவதாக இல்லை. அக்குடிகள் நமக்கு ஒத்துழைத்தார்கள் என்றால் அவர்கள் வாழும் சிற்றூர்கள் அனைத்தையும் இணைத்து மூன்று வணிகச்சாலைகள் அமைக்க எண்ணியுள்ளேன். சாலைகள் ஒவ்வொரு சிற்றூருக்கும் புறவுலகை கொண்டுவந்து சேர்க்கின்றன. புறவுலகு என்பது எல்லையற்ற ஈர்ப்புகளால் ஆனது. அதன் சுவையறிந்தவர்கள் பின்னர் தங்கள் சிறுவட்டங்களுக்குள் வாழமுடியாது. இச்சிற்றூர்கள் அனைத்தும் வணிகத்தால் இணைக்கப்பட்ட பிறகே அங்கிருந்து நமக்கு வரியும் திறையும் வரத்தொடங்கும். அதன்பின் அவற்றைத் தொகுத்து நமக்களிக்கும் பணியை நம்மை நாடி வந்த பழங்குடிகளுக்கு அளிப்போம். அவற்றை அளிக்கவில்லையென்றால் பிற குடிகளை ஒடுக்கி ஆள படைக்கலம் கொடுப்போம்” என்றாள்.

மறுசொல்லில்லாமல் சாயை அங்கிருந்த பீடத்தில் அமர்ந்தாள். தேவயானி விழி திருப்பி கற்றுச்சொல்லியிடம் அவள் விட்ட சொல்லிலிருந்து மறு சொல்லெடுத்து உரைக்கத் தொடங்கினாள். எழுத்தாணி ஓலையை கீறிச்செல்லும் மெல்லிய ஓசை மட்டும் அறைக்குள் கேட்டது. தனக்குள் ஆழ்ந்தவளாக இமைகளுக்குள் தோன்றிய எதிர்ப்பக்க முகத்தை நோக்கி மெல்லிய குரலில் தேவயானி சொல்லடுக்கிச் சென்றாள். மணிகளைக் கோத்து நகை செய்பவள்போல. பன்னிரு திருமுகங்கள் எழுதப்பட்டு முடித்ததும் கற்றுச்சொல்லி ஓலைகளை எண்ணி அடுக்கி பட்டுத்துணியால் சுற்றி மூங்கில் கூடையிலிட்டு தோளில் மாட்டிக்கொண்டு எழுந்தான். தலைவணங்கி புறம் காட்டாது வெளியே சென்று கதவை மூடினான்.

கதவு முற்றிலும் பொருந்தியபின் விழிதிருப்பிய சாயை உரக்க “நாம் எதற்காக சரபஞ்சரம் செல்கிறோம்?” என்றாள். “அங்கு பழங்குடி கலைக்குழுக்கள் அனைத்தும் வருகின்றன. கலைநிகழ்வென்றால் வருவதற்கு அவர்களின் தன்முனைப்பு தடையாக இல்லை” என்றாள் தேவயானி. சாயை ஒருகணத்தில் நெடுந்தொலைவை தாவிக் கடந்தாள். “சர்மிஷ்டையின் மைந்தர்கள் பயிலும் குருநிலையும்கூட அல்லவா?” என்றாள். தேவயானி அவள் கண்களை நேர்நோக்கி “ஆம், அவர்கள் வரவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறேன்” என்றாள்.

“அம்மைந்தரை இங்கு வரச்சொல்லி பார்க்கலாமே?” என்றாள் சாயை. “அவள் நம் சேடி” என்றாள் தேவயானி. “நாம் அவ்வாறு தகுதி இறங்குவது என்னால் ஏற்றுக்கொள்ளப்படகூடியதல்ல.” சாயை “அங்கு சென்று நோக்கினாலும் தகுதியிறக்கமே. தன்னிடமிருந்து எவர் எதை மறைக்க முடியும்?” என்றாள். தேவயானி “என்னிடமிருந்து எதையும் மறைக்க வேண்டியதில்லை. ஆனால் அரசி என ஓர் ஆணையை என் தனிப்பட்ட உளக்குழப்பங்களுக்கு விடைகாணும்பொருட்டு நான் விடுக்கமுடியாது” என்றபின் எழுந்து “மிகச்சிறிய முள், தாமரை மயிர்போல. ஆனால் கண்ணுக்குள் குத்தியதென்றால் அதுவும் வலி மிகும், துயில் களையும். அதை உடனடியாகக் களைந்துவிடுவது நன்றென்று தோன்றியது” என்றாள்.

“அதை என்னிடமிருந்து ஏன் மறைக்கவேண்டும்?’’ என்றாள் சாயை. “உன்னிடம் இருந்து மறைக்கவேண்டுமென்று தோன்றியது. ஏனெனில் என்னிடமிருந்தே மறைக்க விரும்பியது அது” என்ற தேவயானி பீடத்தில் இருந்த சால்வையை எடுத்து தோளில் இட்டுச் சுற்றியபடி “நான் ஆடை மாற்றிக்கொள்ள வேண்டும். இன்று ஏழு தொல்குடிகளின் அன்னைத் தெய்வங்களுக்கு பூசையும் கொடைவிழவும் நிகழ்கிறது” என்றாள். மறுசொல்லின்றி சாயை எழுந்து நின்றாள்.

tigerசரபஞ்சரம் அசோகவனியிலிருந்து வடகிழக்காக இமயச்சரிவில் இரு சிறிய மலைகளின் குவிமடிப்புக்குள் அமைந்திருந்தது. அங்கு செல்வதற்கு இடைச்சரடென மலையின் வளைவை சுற்றிசெல்லும் கழுதைப்பாதை மட்டுமே இருந்தது. பேரரசி அங்கு செல்லும் எண்ணத்தை வெளியிட்ட உடனே குருநகரியின் சாலைப்பணிப் படையினர் கிளம்பிச்சென்று இரவும் பகலும் உழைத்து தேர்ப்பாதை ஒன்றை உருவாக்கினர். எட்டு சிற்றாறுகளுக்குமேல் மூங்கில்கள் ஊன்றி மரப்பட்டைகள் அறைந்து பாலங்கள் உருவாக்கப்பட்டன. நீர் பெருக்கெடுத்த சுரவாகினி என்னும் நதியொன்றுக்குமேல் படகுகளை விலா சேர்த்து நிறுத்தி மேலே பலகை பரப்பி மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டது. அறுபத்தியெட்டு மலைவளைவுகளில் மண்ணை வெட்டிச் சரித்து விளிம்புகளில் மூங்கில்களை அறைந்து எழுப்பி பலகைவேய்ந்து மண்சாலையுடன் இணைத்து தேர்ச்சாலை உருவாக்கப்பட்டது.

எடைமிக்க தேர்கள் ஏதும் அப்பாதையில் செல்ல வேண்டாம் என்று கிருபர் ஆணையிட்டிருந்தமையால் அரசியின் பொருட்கள் அனைத்தும் பிறிதொரு குளம்புப்பாதை வழியாக கோவேறு கழுதைகள்மேல் பொதியென சுமத்தப்பட்டு முந்தையநாளே அங்கு கொண்டு செல்லப்பட்டன. செல்லும் வழியில் நூறு பாறைகள்மேல் காவல்மேடைகள் அமைக்கப்பட்டு வில்லவர்கள் முன்னரே சென்று தங்கி காவல் புரிந்தனர்.

முதல் புலரியிலேயே அசோகவனியிலிருந்து தேவயானி கிளம்பினாள். அரண்மனை முகப்பில் காவலர்தலைவனும் குடித்தலைவரும் அசோகவனியின் மூதன்னையரும் கூடிநின்று அவளை அரிமலர் சொரிந்து வணங்கி முகமன் உரைத்து வழியனுப்பினர். “எங்கள் நகர் இதழ்விரித்து அருமலராயிற்று. அதில் மகரந்தம் சுமந்த பட்டுப்பூச்சியென பேரரசி வந்தமர தெய்வங்கள் அருள் புரிந்தன. இது காயாகி கனியாகட்டும். விதை பொலியட்டும். நிலம்நிறைந்து மலர்க்காடென பெருகட்டும்!” என்று அசோகவனியின் சூதரான சுப்ரதர் பாடினார். குடித்தலைவர்கள் நிரையாக முன்வந்து தம் கோலை அவள் கால் நோக்கி தாழ்த்தி “எங்கள் குடியும் கொடிவழியும் என்றும் பேரரசியின் தேரின் சகடங்களென நிலை கொள்வதாக!” என்றார்கள். சூழ்ந்திருந்த குடியினர் “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று துணைக்குரல் கொடுத்தனர்.

மூதன்னையர் நறுமணச்செங்குருதி நீரை அவள் தேருக்கு முன் சுற்றி இடப்பக்கமும் வலப்பக்கமும் வீசினர். மலர் தூவி அவள் புரவியையும் தேரையும் வாழ்த்தியபின் குரவையிட்டபடி இரு பக்கமும் விலகி வணங்கினர். தன் தேர்த்தட்டில் எழுந்து பின் திரும்பி அவர்களுக்கு முகம் காட்டி கைகூப்பி நின்ற தேவயானி அரண்மனைக்கும் நகருக்கும் புறம் காட்டாமல் விலகிச்சென்றாள். அவள் முகம் அகன்று சென்றபோது கூடி நின்றவர்கள் அனைவரும் கணம் கணமெனப் பெருகிய உணர்வெழுச்சியுடன் வாழ்த்து கூவினர். “பேரரசி என்றும் இங்கிருப்பார். இந்நகரின் சுடர் ஒருபோதும் ஒளி குறையாது” என்றார் அமைச்சர் கிருபர்.

“அரசி இங்கு வந்து சென்றதை கொண்டாடும் முகமாக அசோகவனியின் தென்கிழக்கு மூலையில் அசோகசுந்தரி அன்னையின் ஆலயத்துக்கு அருகிலேயே பேரரசிக்கும் ஓர் ஆலயம் அமைப்போம். நம் குலதெய்வமென அருள்புரிந்தும் ஆணையிட்டும் என்றும் அவர்கள் இங்கு இருப்பார்கள்” என்றான் காவலர்தலைவன். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று குடிகள் ஒருங்கே குரல் எடுத்தனர். கூடி நின்றிருந்த முதுமகள்கள் உளம் பொறாது கண்ணீர் சிந்தினர்.

குடிகளின் வாழ்த்தொலியும் முரசொலியும் கொம்பொலியும் சூழ நகர்த்தெருக்களினூடாக தேவயானியின் தேர் சென்றது. அவளுக்கு முன் கண்ணுக்குத் தெரியாத திரைகள் ஒவ்வொன்றாக வந்து இணைந்து அவளை மறைத்து அப்பால் கொண்டு சென்றன. “பறவைகள் புலம்ப விலங்குகள் விழிமயங்கி நிற்க பொன்னுருகி அனலாகி சூரியன் அணைவதுபோல” என்றாள் மூதன்னை ஒருத்தி. “காலத்தில் வெளியில் எண்ணத்தில் மூழ்கி மறுநாள் கனவில் ஒளியுடன் எழுவாள் அன்னை” என்றார் சூதர் ஒருவர்.

அசோகவனியின் இறுதித் தோரணவாயிலை கடந்த பின்னர் தேவயானி தன் பீடத்தில் அமர்ந்தாள். சலிப்புடன் கால்களை நீட்டிக்கொண்டு உடல் தளர்த்தி கண்களை மூடினாள். சாயை அவளிடம் குனிந்து “அங்கு சென்று சேர முப்பத்தாறு நாழிகை ஆகும். இடையில் ஓர் இடத்தில் மட்டுமே ஓய்வெடுக்க ஒருங்கு செய்யப்பட்டுள்ளது” என்றாள். விழிகளை மூடியபடி தேவயானி தலையசைத்தாள். சாயை அவள் முகத்தையே நோக்கி நின்றாள். அவள் விழிகள் இமைகளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தன. உதடுகள் எதையோ சொல்வதற்கு முந்தைய அசைவு காட்டி இணைந்தும் மெல்ல பிரிந்தும் நெளிந்து கொண்டிருந்தன.

சாயை விழிகளைத் திருப்பி இருபுறமும் ஒழுகிச் சென்றுகொண்டிருந்த அடர்காட்டை பார்த்துக்கொண்டிருந்தாள். சரிவுகளில் தேர்ப்பாதையில் சகடங்கள் ஏறியதும் மரப்பலகைகளின் நெறிவோசையும் அதிர்வோசையும் எழுந்தன. துடிமுரசோசை எழுப்பியபடி புரவிக்குளம்புகள் கடந்துசென்றன. இறுகக் கட்டிய தோலில் இருந்து ஈரத்தோலுக்கு என மண்பரப்புக்கு புரவிக்குளம்புகள் சென்றன. மரப்பாலத்திற்கு அடியில் கரிய உருளைப்பாறைகளில் மோதி நுரைத்து, வெள்ளி காற்சரம்போல் ஓடைகள் சென்றன.

வலப்பக்கம் நுரைத்திறங்கிய காட்டருவி ஒன்று மரப்பாலத்திற்கு அடியில் ஆயிரம் காலட்டை என ஊன்றி நின்ற மூங்கில்களால் நரைகுழலை சீப்பென சீவப்பட்டு அங்கு நின்ற ஐந்து பாறைகளால் ஐம்புரிகளென பகுக்கப்பட்டு மறுபக்கம் ஒன்றிணைந்து உருளைப்பாறைகளில் முட்டி நிறைத்து நீர்நுரை எழுப்பி முழங்கி கீழிறங்கி மிக ஆழத்தில் மீண்டும் வெள்ளி வளைவென மாறி நாணல் பசுமைக்குள் புதைந்து மறைந்தது. பொலியும் நீர்த் திவலைகள் ஒவ்வொன்றும் பரல்மீன்கள் போலிருப்பதாக அவள் நினைத்தாள். பச்சைப் பட்டாடைக்குள் ஒளிக்கப்பட்ட கூர்வாள் என ஓடைகள் கடந்து சென்றன. நரைத்த ஐம்பால். அவள் திரும்பி தேவயானியை பார்த்தாள். இவள் குழல் ஒருநாள் நரைக்கும். அவள் புன்னகை செய்தாள்.

வழியில் அவர்கள் தங்குவதற்கென்று யானைத்தோல் இழுத்துக் கட்டப்பட்ட நான்கு கூடாரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. புரவிகள் அவிழ்க்கப்பட்டு ஓடைகளில் நீர் அருந்துவதற்காக கட்டப்பட்டன. கூடாரத்திற்குள் மூங்கில் பட்டைகள் அடுக்கி செய்யப்பட்ட இரு மஞ்சங்களில் புதிய மரவுரிச் சேக்கையும் இறகுத் தலையணையும் போடப்பட்டிருந்தன. தேவயானி தன் மேலாடையை களைந்தபின் மஞ்சத்தில் படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.

அப்பயணம் முழுக்க அவள் ஒரு சொல்லும் உரைக்கவில்லை என்பதை சாயை எண்ணிக்கொண்டாள். விழி திறக்காமல் தலை சாய்ந்தே இருப்பதைக் கொண்டு முந்தைய இரவெல்லாம் அவள் துயிலவில்லை என்று உய்த்துணர்ந்தாள். அப்போதுகூட அவள் உடலை துயில் வந்து அழுத்தி வளையல்கள் சரிய கைகள் தளர்ந்து மலர்ந்தாலும் உடனே உள்ளம் துரட்டியெனக் குத்தி துயில் விலக்கி அவளைத் திமிறி எழச்செய்துகொண்டே இருந்தது. கண்களை மூடிக்கொண்டு உடனே சாயை துயிலில் ஆழ்ந்தாள். புலிபோலவே துயிலிலும் அவள் இமைகள் அசைந்துகொண்டே இருப்பது வழக்கம்.

அன்று அந்தியில் அவர்கள் சரபஞ்சரத்தின் முதல் குலக்குறி பொறிக்கப்பட்ட பெருந்தூணை சென்றடைந்தனர். ஓங்கிய தேவதாரு மரத்தில் செதுக்கப்பட்ட கழுகுகளும் பாம்புகளும் ஆந்தைகளும் பல்லிகளும் சிம்மங்களும் ஆமைகளும் யானைகளும் இடைவெளி நிரப்பிக்கலந்து உருண்டு தூணென்றாகி தலைமேல் எழுந்து நின்றன. உச்சியில் சிறகு விரித்தெழுந்த செம்பருந்தொன்றின் பாவை அமைக்கப்பட்டிருந்தது.

அங்கு விழவு நிகழ்வதன் அடையாளமாக அத்தூணில் மலர்மாலைகள் சுற்றப்பட்டிருந்தன. அதன் அருகே முழவுகளும் கொம்புகளுமாக நின்றிருந்த தொல்குடியினர் தொலைவில் பேரரசியின் படைநிரை தெரிவதைக் கண்டதும் முழவுகளை ஒலிக்கத் தொடங்கினர். காட்டுக்குரங்கின் ஒலியென முதல் முரசு எழுந்தது. களிறின் பிளிறலென காட்டுக்குள் பெருமுரசுகள் முழங்கத்தொடங்கின. குதிரைகள் என கொம்புகள் கனைத்தன. கொடியேந்திய முதல் கவசவீரன் கரிய புரவியில் அணுகியதும் காத்து நின்றிருந்த காவலர்தலைவன் இறகுவிரித்த கழுகு பொறிக்கப்பட்ட தன் பெருங்கோலைத் தாழ்த்தி அவனை வணங்கி வலக்கையைத் தூக்கி வரவேற்புக்குறி காட்டினான். தொடர்ந்து முழுக்கவச உடையணிந்த புரவி வீரர்கள் இரண்டிரண்டு பேராக நெருங்கி வந்தனர். புரவிகளின் ஓசையை சூழ்ந்திருந்த மலைகள் அனைத்தும் தனித்தனியாக எதிரொலிக்க அனைத்து மலைகளும் முரசுகளென விம்மின.

அமைச்சர் கிருபரின் தேர் முதலில் வந்தது. அதைத் தொடர்ந்து தேவயானியின் ஆறு சகடத்தேர் கரிய புரவிகளால் இழுக்கப்பட்டு மெல்லிய அதிர்வுகளுடனும் குலுக்கல்களுடனும் அணுகியது. பழங்குடித் தலைவன் தன் கைகளைத் தூக்கி அசைக்க காடுகளுக்குள் பரந்திருந்த அனைத்துப் பெருமுரசுகளும் பேரோசையுடன் ஒலிக்கத் தொடங்கின. மரக்கூட்டங்களிலிருந்து ஆவியெழுவதுபோல் பல்லாயிரக்கணக்கான பறவைகள் அந்தியடங்கல் கலைந்து அஞ்சி வானில் எழுந்தன.

tigerஏறத்தாழ முன்னூறு குடில்கள் மட்டுமே கொண்ட மலைச்சிற்றூர் சரபஞ்சரம். தொல்குடிகளுக்குரிய வகையில் முற்றிலும் வட்டவடிவமாக அச்சிற்றூர் கட்டப்பட்டிருந்தது. அதைச் சுற்றிய இரண்டு ஆள் ஆழமுள்ள அகழிக்கு அப்பால் முள்மரங்களை நெருக்கமாக நட்டு இணைத்துக்கட்டிய வேலிக்குள் ஒன்றுக்குள் ஒன்றென ஒன்பது சுற்றுகளாக குடில்கள் அமைந்திருந்தன. ஒன்றுடன் ஒன்று முகம் நோக்கிய குடில்நிரைகளுக்கு நடுவே இருவர் கைகோத்துச் செல்லும் அளவுக்கே தெருக்கள் அகலம் கொண்டிருந்தன. கோட்டை வாயில் முள்மூங்கில் படலால் செய்யப்பட்டு இரு பெருமரங்களில் கட்டப்பட்டிருந்தது. அம்மரங்களின் மீது அமைந்த பந்தமேடைகளில் கொடிகள் என தழல் பறந்தலைந்தது.

அகழிக்கு மேல் அமைந்த மரப்பாலத்தினூடாக ஓசையிட்டபடி தேவயானியின் தேர் உள்ளே நுழைந்தது. வாயிலில் காத்திருந்த குடித்தலைவர்களும் மூதன்னையரும் இளையோரும் பெண்களும் வாழ்த்தொலி எழுப்பியும் குரவையிட்டும் அவளை வரவேற்றனர். தேரிலிருந்து இறங்கி அவள் மண்ணில் கால்வைத்தபோது மங்கலத் தாலங்கள் ஏந்திய மங்கையர் முதலில் வந்து மலர்தூவி வணங்கி அவளை ஊருக்குள் கொண்டுசென்றனர். குலமூத்தார் தங்கள் குடிக்கோல்களைத் தாழ்த்தி அவளை அவ்வூரில் அமையும்படி கோரினர். ஊர் நடுவே இருந்த பெரிய முற்றம் அவர்கள் தங்கள் கால்நடைகளை கட்டுவதற்குரியது. கால்நடைகள் காட்டுக்குள் கொண்டுசெல்லப்பட்டு கட்டுத்தறிகள் அகற்றப்பட்டு அது விழவுக்களமென ஒருக்கப்பட்டிருந்தது. வெயிலில் காய்ந்த சாணிமணம் நிறைந்திருந்த அவ்வட்டத்தின் கிழக்கு மூலையில் மூங்கிலால் அமைக்கப்பட்ட மேடையை அமைக்கும் பணி அப்போதும் நடந்து கொண்டிருந்தது.

மேற்கு மூலையில் தேவயானி தங்குவதற்காக மூன்று அடுக்கு மகுடக்கூரையுடன் புதிய பெருங்குடிலொன்று கட்டப்பட்டிருந்தது. அவளை அக்குடில் நோக்கி அழைத்துச்சென்ற குடிமூத்தார் “இச்சிற்றூரின் பொருட்களைக் கொண்டு முடிந்தவரை சிறப்புற இக்குடிலை அமைத்திருக்கிறோம், அரசி. தாங்கள் இளைப்பாற வேண்டும்” என்றார். ஈச்சஓலைக் கூரையிட்ட வட்டவடிவமான குடில் தரையிலிருந்து ஒரு ஆள் உயரத்தில் மூங்கில் கால் மேல் நின்றுகொண்டிருந்தது. பலகைப்படிகள் இருபுறமும் பக்கவாட்டில் ஏறி வாயிலினூடாக உள்ளே சென்றன. குடில்களில் பல அறைகள் அமைக்கும் வழக்கம் அக்குடிகளுக்கு இருக்கவில்லை என்பதனால் வட்டப் பெருங்கூடை ஒன்றை கவிழ்த்தியதுபோல ஒற்றை அறை மட்டும் கொண்டிருந்தது அது. மூன்று சாளரங்களினூடாக காற்று உள்ளே வந்து சுழன்று சென்றது.

கூரை குடையின் உட்பகுதிபோல் வளைந்து சென்று இணைந்த தொண்ணூற்றெட்டு மூங்கில்களால் ஆனது. அதன் மையமுடிச்சிலிருந்து தொங்கிய பிரம்புபின்னி அரவுடல் என அமைக்கப்பட்டிருந்த சரடின் முனையில் மரத்தாலான கொத்துவிளக்கு தொங்கியது. அதன் கைக்குழிகள் அனைத்திலும் மண்ணகல்களை வைத்து விலங்குநெய்யிட்டு ஒளி பொருத்தியிருந்தனர். சாளரக்காற்றில் அலைந்த சுடர்களால் அக்குடில் நீரில் மிதக்கும் பரிசல் என விழிமயக்கு காட்டியது. குடிலின் ஓரத்தில் அமர்வதற்கான மூங்கில் பீடங்களும் மறு எல்லையில் துயில்வதற்கான தூளிகளும் இருந்தன. தூண்களிலிருந்து தூண்களுக்கு இழுத்துக் கட்டப்பட்ட எருதுத்தோல் தூளிகள் மடித்து வைக்கப்பட்ட மரவுரிப் போர்வையும் இறகுத் தலையணையும் கொண்டிருந்தன.

தேவயானி குடித்தலைவரிடம் “அழகிய தங்குமிடம். இதுநாள் வரை இப்படி ஒன்றில் தங்க நேர்ந்ததில்லை. உச்சி மரத்தில் அழகிய கூடொன்றைக் கட்டிய பறவைபோல் உணர்கிறேன்” என்றாள். அவர் முகமன்களுக்குப் பழகாதவர் என்பதனால் மலர்ந்து தலைவணங்கி “இத்தனை பெரிய குடிலை நாங்களும் இதற்கு முன் கட்டியதில்லை. எங்கள் இளைஞர் இம்மூங்கிலை தேடிக் கொண்டுவரும் பொருட்டு இரு இரவுகள் காட்டுக்குள் அலைந்து திரிந்திருக்கிறார்கள்” என்றார். “நாளை அவர்கள் அனைவரையுமே சந்தித்து பரிசளித்து மகிழ விரும்புகிறேன்” என்றாள் தேவயானி. “ஆம், அனைவரும் வந்துவிட்டார்கள். எங்கள் குடில்கள் அனைத்திலுமே வெளியிலிருந்து வந்த உடன்குருதியினர் நெருங்கி தங்கியிருக்கிறார்கள். தோளொடு தோள் தொட்டே உள்ளே துயில்கிறோம்” என்றார் குடித்தலைவர்.

இன்னொரு குடிமூத்தார் “பேரரசி, நாளை முதற்புலரியிலேயே இங்கு விழவுகள் தொடங்கும். தங்கள் முன்னிலையில் போர்த்திறனையும் நடனத்திறனையும் காட்ட இளையோரும் பெண்டிரும் காத்திருக்கிறார்கள்” என்றார். தேவயானி “நன்று, அவர்களைவிட நான் காத்திருக்கிறேன்” என அணிச்சொல்லுரைத்து வணங்கி அவர்களுக்கு விடைகொடுத்தாள். அவர்கள் அவளுடைய சொற்கள் ஒவ்வொன்றாலும் மகிழ்ந்து முகம்மலர்ந்து ஒருவரை ஒருவர் நோக்கியபடி வெளியே சென்றனர்.

அவளுடைய பேழைகள் ஒவ்வொன்றாக ஏவலரால் உள்ளே கொண்டு வைக்கப்பட்டன. தேவயானி களைப்புடன் கைநீட்டி உடலை வளைத்தாள். “நீராட்டுக்கென ஓர் அறை அமைக்கப்பட்டுள்ளது… மரத்தட்டிகளால் ஆனது. வானம் தெரிவது” என்றாள் சாயை. தேவயானி ஒன்றும் சொல்லாமல் கிளம்ப நீராடுவதற்கான பொருட்களை எடுத்துக்கொண்டு சாயை உடன்சென்றாள். இருளில் அவர்கள் நீராடுகையிலும் தேவயானி ஒன்றும் பேசவில்லை. நீர் மலைப்பகுதிகளுக்குரிய தண்மையுடன் இருந்தது. அகிலும் மஞ்சள்பொடியும் புதிய மணம் கொண்டிருந்தன. இருண்ட வானில் விண்மீன்கள் எழுவதை தேவயானி அண்ணாந்து நோக்கிக்கொண்டே நீர் அள்ளி ஊற்றிக்கொண்டாள்.

திரும்பி வந்தபோது சாயை பேழைகளைத் திறந்து அரசிக்குரிய மாற்று ஆடைகளை எடுத்து அளித்தாள். தேவயானி தன் ஆடைகளை கையில் எடுத்தபின் அவளிடம் “இங்கு ஆடை மாற்ற மறைவிடம் இல்லையென எண்ணுகிறேன்” என்றாள். “சாளரத் திரைச்சீலைகளை மூடுகிறேன்” என்றாள் சாயை. “ஆம், நீ வாயிலில் சென்று நில்” என்றாள் தேவயானி. சற்று புருவத்தைச் சுருக்கி நோக்கியபின் சாயை வெளியே சென்றாள். தேவயானி ஆடை மாற்றியபின் மெல்ல கனைத்தபோது திரும்பி உள்ளே வந்தாள். அவள் முகத்தில் அச்சுருக்கம் அப்படியே இருந்தது.

“களைத்திருக்கிறேன். நெடிய பயணம்…” என்றபின் தேவயானி பீடத்தில் அமர்ந்தாள். “உணவு அருந்திவிட்டு படுக்கலாம்” என்றாள் சாயை. “ஆம்” என்றாள் தேவயானி. அவர்களுக்குள் பேசப்படாத ஒன்று எஞ்சியிருந்தது. அமைதியாக சாளரம் வழியாகத் தெரிந்த இருண்ட வானை நோக்கியபடி காத்திருந்தனர். சற்று நேரத்தில் பெரிய தாலங்களில் உணவுடன் மலைக்குடிப் பெண்கள் உள்ளே வந்தனர். தேவயானியும் சாயையும் நிலத்தில் அமர நடுவே மூங்கிலால் ஆன சிறு பீடத்தை இட்டு அவற்றில் புதிய ஊன்மணம் எழுந்த கொதிக்கும் குழம்பையும் புல்லரிசிச் சோற்றையும் பரிமாறினார்கள். ஊன்நெய்யில் பொரிக்கப்பட்ட கிழங்குகள். வேகவைக்கப்பட்ட காய்கறிகள்.

“தாங்கள் இங்கு வந்ததன் பொருட்டு இன்னுணவு சமைத்திருக்கிறோம், பேரரசி” என்றபடி மரக்குடுவையில் அப்போதும் குமிழ்கள் வெடித்துக் கொண்டிருந்த இன்பால் கஞ்சியை அவளுக்கு பரிமாறினாள் ஒரு மூதன்னை. “நல்லுணவு, அன்னையே. அனைத்துப் பொருட்களும் பயிர்களிலிருந்து நேரடியாக களத்திற்கு வந்ததுபோல புத்தம் புதிய சுவை” என்றாள் தேவயானி. முகம் மலர்ந்து மும்முறை தலைவணங்கி “எங்களிடம் இருக்கும் மிகச் சிறந்த உணவையே அரசிக்கென எடுத்து வைத்தோம்” என்றாள் மூதன்னை.

நூல் பதின்மூன்று – மாமலர் – 81

81. பூவுறைச்சிறுமுள்

அசோகவனிக்கு வந்த மூன்றாம் நாள்தான் தேவயானி சர்மிஷ்டையை சந்தித்தாள். முதல் இரண்டு நாட்களும் அசோகவனியிலிருந்தும் அதைச் சூழ்ந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடிச் சிற்றூர்களிலிருந்தும் வந்து அங்கே தங்கியிருந்த தொல்குடித்தலைவர்களும் குலமூத்தாரும் முறைவைத்து காலைமுதல் அந்திவரை அவளைச் சந்தித்து கோல்தாழ்த்தி முடியேற்பு செய்துகொண்டிருந்தார்கள்.

தேவயானி அவர்களுக்கு குடிப்பட்டங்களை அளித்து அவர்களின் குடிமுத்திரைகளை அவர்களுக்கு மட்டும் உரியவை என ஏற்று செம்புப்பட்டயங்களை அளித்தாள். அவர்களின் நிலங்கள் அவர்களுக்கு மட்டுமே உரியவை என்றும் அவற்றின் மீதான எத்தாக்குதலும் குருநகரிக்கு எதிரானவை என்றும் அறிவித்தாள். அதற்கு மாற்றீடாக அவர்கள் ஆண்டுதோறும் அரசுக்கு கப்பம் கட்டவும் அரசுநிகழ்வுகளில் பொருள்பங்கு கொள்ளவும் அரண்மனையின் பெருநிகழ்வுகளில் குடிகளெனத் திரண்டுவந்து அமையவும் தங்கள் கோல்தாழ்த்தி குலதெய்வங்கள் பெயராலும் மூதாதையர் நினைவாலும் சூள் உரைத்தனர்.

எண்ணியிராத வடிவுகளில் மலைப்பொருட்களும் அருங்கற்களும் அவளுக்கு அரியணைக் காணிக்கையாக வந்துகொண்டிருந்தன. அச்சிற்றூரைச் சூழ்ந்து அத்தனை செல்வமிருக்கிறதா என்ற வியப்பை அவையிலிருந்த ஒவ்வொருவரும் அடைந்தனர். அரியவை என்பவையே முடிவிலாத வேறுபாடுகள் கொண்டவை என்று அறிந்தனர். நெல்லிக்காய் அளவு இருந்த பெரிய நீலமணிக்கல்லை கையிலெடுத்து அமைச்சர் ஒருவர் “பாரதவர்ஷத்தின் முதன்மையான அருமணிகளில் ஒன்றாக இது இருக்கக்கூடும், பேரரசி” என்றார். “பழுதற்ற நீரோட்டம். முழுமையான வடிவம்.” தேவயானி விழிகளை மட்டும் திருப்பி நோக்கி சற்றே தலையசைத்து “நன்று” என்று மட்டும் சொன்னாள்.

மாகேதர் குலத்தலைவரால் கொடையளிக்கப்பட்ட புலிக்குருளைகள் ஏழு அவைக்கு கொண்டுவரப்பட்டன. ஒரே அன்னையின் மைந்தர்கள் ஒன்று பிறிதொன்றென முற்றிலும் ஒத்துப்போயிருந்தன. பிறந்து எட்டு நாட்களானவை. கூண்டுக்குள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு சிவந்த நுரைபோல தெரிந்தன. அதிலொன்றை பிடரித்தோலைப் பிடித்து தூக்கி தேவயானியின் கையில் கொடுத்த சுருத மாகேதர் “ஒற்றை அன்னை ஏழு குட்டிகளை ஈனுவது மிக அரிது. இவை உளம் ஒன்றாகி ஒற்றை உடலென இணைந்து வேட்டையாடும். சற்று பழக்கினால் மிகச்சிறந்த காவல்குழுவென்றாகும்” என்றார். தேவயானி அக்குருளையை கையில் வாங்கி அதை திருப்பி அதன் முகத்தை கூர்ந்து நோக்கினாள். சிறிய கூர்பற்களைக் காட்டி வாய் திறந்து அது உறுமியது. அதன் வெண்ணிற அடிவயிற்றில் தோல் பாலாடைபோலிருந்தது. சிறுகால்களின் விரல்களுக்கு நடுவே அவள் தன் விரலால் அழுத்திய போது விரல்களுக்குள்ளிருந்து மீன்முள் என நகங்கள் வெளிவந்தன. கால்களை வீசி அவள் முகத்தை அது அறைய முற்பட அவள் சிரித்து “சினம்கொள்கிறான்” என்றபடி திருப்பிக் கொடுத்தாள். அவர்கள் அதை வாங்கியபோது அதன் கீழ்இடக்கால் நகத்தில் அவள் ஆடை சிக்கிக்கொண்டது. சாயை குனிந்து அந்நகங்களிலிருந்து விடுவித்து ஆடையை சீர் செய்தாள்.

நீலப்பளிங்கில் செதுக்கப்பட்ட தாலம், சந்தனமரத்தில் செதுக்கப்பட்ட காளிசிலை, குடம்நீர் கொள்ளும் சுரைக்காய்க் குடுவை என வெவ்வேறு வகையான செல்வங்களை ஏழு கணக்கர் அமர்ந்து பட்டியலிட்டனர். அவற்றை முத்திரையிட்டு எண்பதிந்து பேழைகளில் அடைத்து கருவூலத்திற்கு கொண்டு சென்றனர் ஏவலர். ஒவ்வொரு நாளும் அவை முடிந்து அவள் எழுவதற்கு அந்தியாகிவிட்டிருந்தது. அதன் பின் அறைக்குச் சென்று நீராடி உடைமாற்றி உணவருந்தி மீண்டும் கலையவைக்கு வந்தாள். அங்கு குருநகரியிலிருந்து அவளுடனேயே வந்திருந்த சூதர்களும் மலைகளிலிருந்து வந்த தொல்குடிப் பாடகர்களும் ஆடியும் பாடியும் கலைநிகழ்த்தினர்.

தொல்குடி நடனங்கள் அனைத்தும் காட்டுவிலங்குகளின் அசைவுகளை மீள நிகழ்த்துவதாக இருந்தன. உறுமிப் பாய்ந்து உடல் பிடரிசிலிர்த்து வாய்திறந்து சீறிய சுதீர தொல்குடியின் கரிய இளைஞன் ஒருவன் மாற்றுரு ஏதும் கொள்ளாமல் மானுட உடலிலேயே சிம்மமென்றான விந்தையைக் கண்டு மெல்ல இதழ் வளைய புன்னகைத்து இருக்கையில் சற்று அசைந்தாள். அதை குறிப்புணர்ந்த அமைச்சர் பெரிய தாலத்தில் பொன்னும் ஆடையும் வைத்து அவளிடம் அளிக்க எழுந்து அவர்களிடம் அளித்து “சிம்மம் எழுந்ததேதான், நன்று” என்றாள். அவள் வாயிலிருந்து ஒரு சொல்பாராட்டைப்பெற்ற கலைஞன் அவன் ஒருவனே என்பதனால் அவன் கால்கள் நடுங்க நிலையழிந்து சற்றே சாய்ந்தான். அவனுடன் வந்த கலைஞர் இருவர் அவனை பற்றிக்கொண்டனர்.

அவள் “சிம்மமென எழுவது உம்முள் கல்லில் கனலென உறைகிறது. அது என்றும் அங்கிருக்கட்டும்” என்றாள். விம்மலோசையுடன் அவன் நிலத்தில் கால்மடித்து அமர்ந்து தன் தலையை அவள் காலில் வைத்து அமர்ந்து “தங்கள் கால்களை என் சென்னியில் வைக்க வேண்டும், பேரரசி. கொற்றவை முன் பணிந்த சிம்மம் நான்” என்றான். அவள் குனிந்து அவன் தலையைத் தொட்டு “என்றும் இங்கிருப்பேன்…” என்றாள். அவன் கண்ணீருடன் எழுந்து மும்முறை தொழுது விலகிச்சென்றான்.

மூன்றாம் நாள் பின்னிரவில் அவள் பன்னிரு கூத்துக்கலைஞர்கள் நிகழ்த்திய கள நாடகத்தை கண்டாள். விண்ணிலிருந்து மின்னலாக காட்டுக்குள் இறங்கிய புலி ஒன்று உடலெங்கும் தழல்நாக்குகள் எரிய விலங்குகளை வேட்டையாடி கொல்லத்தொடங்கியது. விலங்குகளும் மானுடரும் அப்புலியை வெல்லும்பொருட்டு அதையே அரசனாக்கினர். அரசனுக்கு நாளொன்றுக்கு ஒரு விலங்கென தலைகொடுத்து அதன் எரிதழலை கட்டுக்குள் வைத்திருந்தனர். இல்லங்களில் விளக்கேற்றவும் அடுப்புகளில் அனல்மூட்டவும் அதன் உடலை சுள்ளிகொண்டு தொட்டு பற்றவைத்தனர். காடு சிலிர்க்கும் கடுங்குளிரில் அதன் உடலிலிருந்த தழலில் வந்து வெம்மைபெற்றனர். எதிரிகளின் ஓசைகேட்டதும் தழலுடன் உறுமியபடி சென்ற புலி காட்டை எரித்து அவர்களைச் சூழ்ந்து அழித்தது.

அவள் அந்தப்புலியை நோக்கிக்கொண்டிருந்தாள். அந்தத் தொல்குடிக்கலைஞனின் கண்கள் புலிகளுக்குரிய நரைத்த நீள்கருவிழிகள் கொண்டுவிட்டிருந்தன. தழல்நெளிவுடன் எழுந்தாடிய புலி உறுமிச் சுழன்று விலங்குகளை அச்சுறுத்தியது. அவர்களில் ஒருவரை கிழித்து உண்டு குருதிக் கால்களை நக்கியபின் மல்லாந்து படுத்து மெல்ல கார்வையுடன் துயின்றது. அதன் இமைதாழ்ந்தபோது அவர்கள் அச்சம் அழிந்து மெல்ல அணுகி அதன் கால்களை தூய்மைப்படுத்தினர். அதன் உடலைத் துடைத்து பணிவிடை செய்தனர். தங்கள் குழவிகளைக் கொண்டுவந்து அதன் முன் வைத்து வாழ்த்துகளை பெற்றுக்கொண்டனர்.

வண்ணங்கள் கரைத்து தங்கள் உடல்களில் புலியுடலின் அனல் நெளிவுகளை வரைந்தனர். புலிக்கோடுகள் அணிந்த மைந்தர் புலியைப்போலவே காலடி வைத்து நடனமிட்டனர். புலி உறுமலைப்போலவே ஓசையிட்டு ஒருவரை ஒருவர் தாக்குவது போல நடித்து தாவியும் கட்டிச்சுழன்றும் விலகிச் சீறியும் பாய்ந்து மீண்டும் தழுவியும் விளையாடினர். புலி முதுமைகொண்டு உயிர்துறந்ததும் அதைச்சூழ்ந்து நின்று கண்ணீருடன் கதறியழுதனர். சிதை கூட்டி அதை ஏற்றி வைத்ததும் புலியின் உடலிலிருந்த தழல்கள் எழுந்து விறகு பற்றிக்கொள்ள அதன் உடல் எரிந்து விண்ணில் தாவி மறைந்தது.

அவர்கள் அத்தழலிலிருந்து ஒரு சிற்றகலை கொளுத்திக்கொண்டு வந்து தங்கள் இல்லங்கள் நடுவே ஓர் ஆலயம் அமைத்தனர். அத்தழலை சூழ்ந்தமர்ந்து புலியைப் புகழ்ந்து பாடினர். தழலுக்கு நெய்யூற்றி வளர்த்தனர். எழுந்த பெருந்தழலில் ஒருகணம் தோன்றிய புலி உறுமி அமைந்தபோது கைகளை மேலே தூக்கி “எழுபுலியே! எரிவடிவே! எங்கள் கோவே!” என்று கூவி வாழ்த்தினர். மெல்லிய புலிக்காலடிகளுடன் சுழன்று நடனமிட்டு அமைந்தனர். முழவுகள் ஓய்ந்தன. ஒற்றைமுழவுமேல் கோல் இழுபட புலியுறுமல் ஒலித்து அணைந்தது.

தேவயானி எழுந்து அவர்கள் ஒவ்வொருவராக அழைத்து பரிசுகளைக் கொடுத்தபின் தன் அறை நோக்கி நடந்தாள். அவளுடன் நடந்த சாயை “இன்றிரவு மிகவும் பிந்திவிட்டது பேரரசி. நாளை முதற்புலரியிலேயே நகரின் தெற்கு எல்லையிலுள்ள தொன்மையான இடுகாட்டில் அமைந்திருக்கும் சாமுண்டியின் ஆலயத்திற்கு குடித்தொகையின் பூசனைக்காக செல்கிறோம். இங்கு தேவிக்கு முழு எருமைகளை பலிகொடுக்கும் வழக்கம் உள்ளது. தங்கள் வருகையின் பொருட்டு பன்னிரு எருமைகளை பலிகொடுப்பதாக குடிமூத்தார் வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

“நன்று” என்று சொன்னபடி தேவயானி மெல்ல நடந்தாள். தன் அறைக்குள் சென்று பீடத்தில் அவள் அமர்ந்ததும் அணிச்சேடியர் சூழ்ந்துகொண்டு அவள் உடலிலிருந்து முடிச்சுகளை அவிழ்த்து பட்டாடையையும் அணிகளையும் அகற்றத் தொடங்கினர். காதணியை கழற்றியவள் சற்று அழுத்த தேவயானி மெல்லிய சீறலொன்றை எழுப்பினாள். சினம் சுடர்ந்த முகத்துடன் நோக்கிய சாயை விழியசைவாலேயே அச்சேடியை அகலும்படி ஆணையிட்டாள். அவள் நடுங்கி மும்முறை வணங்கி தளர்ந்த கால்களுடன் வெளியேற பிறிதொரு முதுசேடி மெல்ல திருகி காதணியை கழற்றத் தொடங்கினாள்.

“இங்கு கலைபயின்ற சேடியர் எவருமில்லை” என்று சாயை சொன்னாள். “இங்கிருப்பவர்களில் உயர்ந்தவன் நூற்றுவர்தலைவன் மட்டுமே. பிறர் எளிய காவலர். அவர்களின் பெண்டிரும் சிற்றூர்களிலிருந்து வந்த சிறுகுடி ஷத்ரியர். உயர் வாழ்க்கை இல்லையென்பதால் அணியும் ஆடையும் சமையமும் பயின்றவர்கள் இல்லை.” தேவயானியின் கச்சைமுடிச்சை அவிழ்த்தபடி “இங்குள்ள சேடியர்களே பதினெண்மர் மட்டும்தான்” என்று குருநகரியிலிருந்து அவளுடன் வந்த முதுசேடி சுகன்யை சொன்னாள். “அவர்களை அழைத்து நேற்று உசாவினேன். எண்மடிப்புப் புடவை அணியக்கூட எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அணிகளை முன்னரே நோக்கியவள் என்றுகூட ஒருத்தியை மட்டுமே சொல்ல முடிகிறது.”

“அவள் மட்டும் எங்கு பார்த்தாள்?” என்று தேவயானி கேட்டாள். சுகன்யை “அவளை குருநகரியிலிருந்து இங்கு கொண்டு குடியேற்றியிருக்கிறார்கள். இவ்வரண்மனையின் இணைப்புச் சிற்றில்லில் அவள் தங்கியிருக்கிறாள். மூன்று மைந்தர்கள் அவளுக்கு. அவள் பெயர் சேடியருக்குரியதல்ல” என்றாள். அவள் தேவயானியின் முலைகளுக்கு அடியில் நறுமணச்சுண்ணத்தைப் பூசியபடி “அவள் பெயர் சர்மிஷ்டை” என்றாள்.

தேவயானியின் கண்கள் திரும்பி சாயையை பார்க்க சாயை தலைவணங்கி விழிகளை அசைத்தாள். அணிப்பெண்டிர் அவள் இடையாடைகளையும் களைந்து வெற்றுடலாக்கினர். அவள் ததும்பும் பெருமுலைகளும் இறுகியசையும் இடைவிரிவும் சிற்றலை எழுந்த தொடைகளுமாக சென்று அவர்கள் ஒருக்கியிருந்த சிறு மரத்தொட்டிக்குள் அமர்ந்தாள். இளவென்னீரை அள்ளி அவள் மேல் விட்டு அவள் உடலை அவர்கள் கழுவத்தொடங்கினர். அவர்களின் மெல்லிய விரல்கள் தன் உடல் முழுக்க பரந்தலைவதை உணர்ந்தபடி அவள் விழிமூடி அமர்ந்திருந்தாள்.

அவள் கொண்டையிலிருந்த நூற்றுக்கணக்கான பொன்னூசிகளை ஒவ்வொன்றாக உருவி குழலை புரியவிழ்த்து விரல்களை உள்ளே விட்டு நீவி நீர்த்தொட்டிக்கு வெளியே அலையென பரப்பினாள் ஒருத்தி. அவள் கால்விரல்களை சிறிய கடற்பஞ்சால் ஒருத்தி தேய்த்தாள். நறுமண வெந்நீரை அவள் உடல்மேல் மெல்ல ஊற்றினர். ஆவியெழுந்து சூழ்ந்திருந்த ஆடிகள் பனிபடர்ந்து பட்டுபோலாயின. உடலெங்கும் நீர் சொட்ட நடந்து சென்று அவள் வெண்கல சிறுபீடம் ஒன்றில் அமர அவர்கள் மெல்லிய வெண்நுரை போன்ற பருத்தி ஆடையால் அவள் உடலை ஒற்றித் துடைத்தனர். கால்களையும் கைகளையும் பிறிதொரு மரவுரியால் துடைத்து உரசி தூய்மைப்படுத்தினர். ஈரம் படாத அவள் குழலை அகிற்புகையிட்டு ஐந்து புரிகளாக வகுந்து பின்புறம் நீட்டி நிலம் தொடுமாறு விட்டனர்.

சேடி கொண்டுவந்த வெண்ணிற ஆடையை தேவயானி இடையில் சுற்றி தோள்வளைத்து அணிந்துகொண்டாள். தளர்ந்த மேலாடைக்குள் அவள் பருத்த மார்புகளின் வளைவுவிளிம்புகள் சுடரொளிமின்ன தெரிந்தன. அணிப்பெண்டிர் வணங்கி வெளியே சென்றதும் அவள் விழிகள் மாறாமல் சாயையிடம் “இங்குதான் இருக்கிறாளா?” என்றாள். சாயை “ஆம், பேரரசி. பதினாறாண்டுகளாக இங்குதான் இருக்கிறாள். அவள் முதல் மைந்தனுக்கு இப்போது பதினைந்து முடிகிறது” என்றாள். தேவயானி விழிவிலக்கி “சேடியின் வாழ்க்கை அல்லவா?” என்று கேட்டாள். “மைந்தர் இருப்பது அதற்குத்தானே சான்று” என்று சாயை சொல்லி மெல்ல புன்னகைத்தாள்.

“அவளை நான் பார்க்க வேண்டும். இங்கு அழைத்துவரச்சொல்” என்றாள் தேவயானி. சாயை சற்று தயங்கி ”இன்றிருக்கும் நிலையில் அது தேவையில்லை என்று எண்ணுகின்றேன்” என்றாள். “ஏன்?” என்றாள் தேவயானி சினத்துடன் விழிதூக்கி. “அதனால் அவள் மேலும் இழிவெதையும் அடையப்போவதில்லை. பதினாறாண்டுகள் சேடிவாழ்க்கை வாழ்ந்தவளுக்கு சிறுமைகளோ சீண்டல்களோ எவ்வகையிலும் பொருட்டாக இருக்கப்போவதில்லை. அவள் துயருறவில்லையென்றால் தாங்கள் சினம் கொள்வீர்கள்.” தேவயானி அவள் விழிகளை சிலகணம் நோக்கிவிட்டு “அதையும் பார்ப்போம். அழைத்து வருக!” என்றாள்.

tigerஅறைக்கதவு மெல்ல திறந்து உள்ளே வந்த சாயை தலைவணங்கி அவ்வசைவாலேயே வெளியே சர்மிஷ்டை வந்து நிற்பதை உணர்த்தினாள். தேவயானி மிகச்சிறிய விழியசைவால் அவளை வரச்சொல் என ஆணையிட்டு திரும்பிக்கொண்டாள். இரு அன்னங்கள் எழுந்து பறந்த முனைகள் கொண்டிருந்தது அவள் சாய்ந்திருந்த பெரிய பித்தளைப்பீடம். திறந்த பெருஞ்சாளரத்தை நோக்கி அதை திருப்பி போட்டிருந்தாள். சாளரத் திரைச்சீலைகள் இழுத்துக்கட்டப்பட்டு நுனி துடித்துக்கொண்டிருந்தன. வெளியிலிருந்து வந்த காற்றில் அவள் நீள்குழல் தரை தொட்டு அலையிளகிக்கொண்டிருந்தது.

அறையில் முத்துச்சிப்பிகளை அடுக்கி உருவாக்கப்பட்ட வட்டத்தாலம்போன்ற ஒளிதிருப்பிகளுடன் மூன்று செண்டுவிளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. அவற்றின் பதினெட்டுசுடர்கள் கொண்ட ஒளிக்கொத்துகள் ஒளிதிருப்பியின் முத்துச்சிப்பிக்குவைகளில் பட்டு நூற்றுக்கணக்காக மாறின. ஒவ்வொரு செண்டுவிளக்குக்கு இருபக்கமும் ஒன்றையொன்று நோக்க அமைக்கப்பட்டிருந்த நிலையாடிகள் அச்சுடர்களை எதிரொளிக்க அவ்வறை அனல் பற்றி எரிவதுபோல் தோற்றமளித்தது.

சர்மிஷ்டை மெல்ல உள்ளே வந்து பதிந்த காலடிகளுடன் அவளை அணுகி சேடியருக்குரிய முறையில் இடைவரைக்கும் தலைவணங்கி “குருநகரியின் பேரரசியின் கால்களில் என் சென்னி படுகிறது. பேரரசியின் அருளுக்காக எளியவள் உள்ளம் மன்றாடுகிறது” என்று முகமன் உரைத்தாள். தலையசையாமல் அவளை உணர்ந்தபடி அமர்ந்திருந்த தேவயானி கூரிய குரலில் “உனக்கெத்தனை மைந்தர்?” என்றாள். அதை எதிர்பாராத சர்மிஷ்டை திகைத்து சாயையை திரும்பி நோக்கியபின் மூச்சொலியில் “மூவர்” என்று அவள் சொன்னாள். “இங்கு அழைத்து வரச்சொல்!” என்று தேவயானி சாயையிடம் சொன்னாள். சாயை “அவர்களைப்பற்றி கேட்டேன். சூதர்களாகையால் புரவிக்கலை பயில்வதற்காக காட்டுக்கு அனுப்பியிருப்பதாக சொல்கிறாள்” என்றாள்.

தேவயானியின் இதழ்கள் சற்றே வளைய “அது நன்று! எத்தொழிலிலும் முறையான பயிற்சி தேவையானதே” என்றாள். சர்மிஷ்டை மீண்டும் தலைவணங்கி “பேரரசியின் அருளால் இங்கு பிறிதொரு குறையின்றி இருக்கிறோம். மைந்தர்கள் மகிழ்ந்து வாழ்கிறார்கள். தேர்ந்த புரவியாளர்களாக அவர்கள் வரும்போது மேலும் சிறப்புறுவார்கள் என்று எண்ணுகிறேன்” என்றாள். தேவயானி திரும்பி சர்மிஷ்டையை ஒருகணம் பார்த்தாள். அவள் விழிகளை சந்தித்ததும் தன்னுள் மெல்லிய குழப்பம் ஒன்று ஏற்பட இமைகளைச் சுருக்கி பின் முகம் திருப்பிக்கொண்டு “மைந்தர் பயின்று வந்ததும் குருநகரிக்கு வரட்டும். நல்ல தேர்ப்பாகர்களுக்கு அங்கு தேவை நிறைய உள்ளது” என்றாள். “தங்கள் ஆணை பேரரசி!” என்றாள் சர்மிஷ்டை. தேவயானி அவள் செல்லலாம் என இடக்கையை அசைத்தாள். மீண்டும் இடைவரை தலைவணங்கி சர்மிஷ்டை திரும்பி நடந்தாள்.

தேவயானி திரும்பி அவள் நடையை பார்த்தாள். புதர்விலங்குகளுக்குரிய பதுங்கல் அவள் அடிவைப்பில் தோள் குறுகலில் கை அசைவில் அனைத்திலும் இருந்தது. அவள் விழிகளை சாயையின் விழிகள் சந்தித்தன. சர்மிஷ்டை கதவைத் திறந்து மீண்டும் ஒருமுறை அவளைநோக்கி தலைவணங்கி வெளியே சென்ற கணம் தேவயானியின் உளம் அதிர்ந்தது. அவளை அறியாமலேயே எழப்போவதுபோல் ஓர் அசைவு உடலில் பரவியது. தடித்த மரக்கதவு ஓசையின்றி சென்று பொருந்திக்கொண்டது. அவள் மெல்ல தோள்தொய்ந்தாள்.

சாயை அவள் அருகே வந்து “நிலைகுலைந்தது தாங்கள் என்று தோன்றுகிறது” என்றாள். “இல்லை” என்றாள் தேவயானி தலையை திருப்பியபடி. “தாங்கள் கடுஞ்சொல் உதிர்க்க மாட்டீர்கள் என்று நானறிவேன். ஆனால் புண்படுத்தும்படி எதையோ ஒன்றை சொல்வீர்கள் என்று எண்ணினேன். நச்சு தோய்ந்த மென்மையான மிகக்கூரிய ஒரு முள். அதற்காக காத்திருந்தேன்” என்றாள் சாயை. தேவயானி சினத்துடன் நிமிர்ந்து அவள் விழிகளை நோக்கி “இனி அவளை நான் வெல்வதற்கு ஏதுமில்லை” என்றாள்.

“ஏதோ ஒன்று எஞ்சியிருந்ததனால்தான் தாங்கள் நிலை குலைந்தீர்கள், பேரரசி” என்றாள் சாயை. “யார் சொன்னது நான் நிலைகுலைந்தேன் என்று?” சாயை “தங்கள் உள்ளம் எனக்குத் தெரியும். தங்கள் உடல் அசைவுகள் அவ்வண்ணமே என்னிலும் நிகழ்வதுண்டு. ஏனெனில் நான் தங்கள் நிழல்” என்றாள் சாயை. சில கணங்கள் அசைவற்று இறுகி சாளரத்தினூடாக இருளை நோக்கி அமர்ந்து மெல்ல தளர்ந்து நீள்மூச்சுவிட்டு இருகைகளாலும் பீடத்தின் பிடியைத் தட்டியபடி தேவயானி எழுந்தாள். மேலாடையை சீர்படுத்தியபின் “அவளிடம் ஏதோ ஒன்று மறைந்திருக்கிறது. என்னவென்றறியேன். அது என்னை அமைதியிழக்கச் செய்கிறது” என்றாள்.

“மறைந்திருப்பது ஒன்றுதான். அவள் விருஷபர்வனின் மகள் என்பது. அந்த உண்மை இந்த அனைத்து நாடகங்களுக்கு அடியில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அவள் விழைந்தால் இங்கிருந்து ஹிரண்யபுரிக்கு செல்லமுடியும். அசுரப்பெரும்படைகளை நமக்கெதிராக திருப்பவும் முடியும். ஆகவே இங்கு அவள் சிறைப்பட்டிருக்கவில்லை. தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டிருக்கிறாள். அது நமது ஆணையல்ல. அவளது கொடை. சொல்லாமல் அவள் இங்கு உங்களுக்கு உணர்த்திச்சென்றது அதுதான்” என்றாள் சாயை.

“இல்லை, அதுவல்ல. அதுமட்டுமல்ல” என்று தேவயானி சொன்னாள். “அந்தக் கதவைத் திறந்து வெளிச்சென்ற கணம் அழுத்தப்பட்ட வில் நிமிர்வதுபோல் ஒரு சிறு அசைவு அவளில் கூடியது.” அறியாது திரும்பி அந்தக்கதவை நோக்கிவிட்டு சாயை “எப்போது?” என்றாள். “ஒருகணம். அல்லது ஒருகணத்திலும் துளி. அந்நிமிர்வு ஓர் அறைகூவல். அவள் எண்ணாத, அவள் உள்ளமும் ஆழமும் அறியாத ஒரு சொல் அவள் உடலால் எனக்கு உரைக்கப்பட்டது” என்றாள் தேவயானி. “என்ன அது? அதை அறியாமல் எனக்கு அமைவுநிலையில்லை.”

“தங்கள் உளமயக்கு அது. இன்றிரவு இதைக்கொண்டு இருள்விளையாட எண்ணுகிறீர்கள் போலும்” என்றாள் சாயை. “இல்லை, இது ஊசிமுனையளவு சிறியது. ஊசிமுனையால் தொட்டு எடுக்கப்படவேண்டியது. ஆனால் ஊசிமுனைக்கு அது பெரிதே.” சாயை “பேரரசி, தங்கள் உள்ளமும் உடலும் பேராற்றல் மிக்கவை. ஆகவே சிம்மத்துடனோ வேழத்திடமோ அரசநாகத்துடனோ விளையாட விரும்புவீர்கள். எவரும் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றாள்.

அவள் திரும்பிச்செல்லப் போனபோது தழைந்த குரலில் அழைத்த தேவயானி “நில்! இது உளமயக்கு அல்ல. அனைத்து உளமயக்குகளுக்கும் உள்ள தனித்தன்மையென்பது அவை உளமயக்கென்பது எங்கோ நமக்கு தெரிந்திருக்கும் என்பதுதான். ஆகவே பதறியும் அஞ்சியும் துயர்கொண்டும் நம்மில் ஒரு பகுதி நடிக்கும்போது பிறிதொரு பகுதி சற்று விலகி அதை நோக்கிக்கொண்டிருக்கும். அத்தனை கனவுகளுக்கும் அடியில் அது கனவென்றறியும் விழிப்பொன்றிருப்பது போல. இது அப்படியல்ல. இது ஒரு வலி போல. எத்தனை எண்ணம் மாற்றினாலும் எத்தனை விலகி கற்பனை செய்தாலும் வலியை ஒன்றும் செய்யமுடியாது.”

சாயை புன்னகையுடன் தலையசைத்து “ஒன்றுதான் நாம் செய்ய இருக்கிறது. அவளை இழுத்து வருகிறேன். குழல் சுற்றிப்பிடித்து சுழற்றி தங்கள் காலடியில் விழவைக்கிறேன். கணுக்கால்களை இருகால்களாலும் மிதித்து அழுத்தும் ஒரு கலை உள்ளது. உடலின் ஒவ்வொரு பூட்டும் தாளமுடியாத வலியால் அதிர்ந்து இழுபட்டு துடிக்கும். ஓரிரு கணங்களுக்குள் அனைத்தையும் அவள் சொல்லிவிடுவாள்” என்றாள். தேவயானி புன்னகைத்து “சொல்ல மாட்டாள். ஏனெனில் அவள் விருஷபர்வனின் மகள். சொல்லிவிட்டால் நான் வென்றேன். ஆனால் அத்தனைக்கும் பிறகு அவள் சொல்லவில்லையென்றால் அவள் காலடியில் புழுவென்று நான் கிடப்பேன். அதன் பிறகு நான் உயிர்வாழ முடியாது.”

“வேறு என்ன செய்வது?” என்றாள் சாயை. “இந்த நச்சுக்கோப்பையுடன் இன்றிரவு நீங்கள் தனித்திருக்கப்போகிறீர்களா?” தேவயானி “உச்சிக்கு செல்வதில் ஒருவழிப்பாதையே உள்ளது. முனைகூர்ந்து நுனிகொண்டு எழுவது. அதன் இடர் நாம் குறுகிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான். நம் உலகும் அறிவும் நின்று திரும்புவதற்கு இடமிலாதாகும். அக்கூம்புதல் சென்று முடியும் உச்சிப்புள்ளி ஒன்றுண்டு என செல்லும்தோறும் உணர்வோம். அப்புள்ளிக்கு அப்பால் வெறுமை. கடுவெளி. அப்புள்ளியில் நின்றிருக்க எவராலும் இயலாது” என்றாள். “இயலும். அதுவரை அள்ளிவந்த அனைத்தையும் உதிர்த்தால்” என்றாள் சாயை.

தேவயானி “வரலாறு அப்படி ஒருபோதும் நிகழ்ந்ததில்லையென்று காட்டுகிறது” என்றாள். “இப்போது உச்சிப்புள்ளியை உணர்கிறீர்களா?” என்றாள் சாயை. “நான் நின்றுதிகழ இடமில்லையென்று அறிகிறேன். ஒவ்வொரு இரவும் தனித்திருக்கையில் நாற்புறமும் நெருக்கி அடைத்த சுவர்களுக்கிடையே இருப்பதுபோல் உணர்கிறேன். செய்வதற்கொன்றே உள்ளது, அச்சுவர்களைப்பற்றி மேலே தெரியும் திறப்பினூடாக வெளியேறுவது. அது மேலும் சிறிய பிறிதொரு இடத்திற்கு செல்கிறது.” அவள் பெருமூச்சுவிட்டு “வென்றவர்கள் கடந்தவர்கள் எய்தியவர்கள் இக்குறுகலையும் இதற்கப்பால் எஞ்சும் வெறுமையையும் சென்றடைந்தே ஆகவேண்டும் போல” என்றாள்.

புன்னகையுடன் “மீண்டும் காவியங்களை நோக்கி திரும்பத் தொடங்கிவிட்டீர்கள் என எண்ணுகிறேன்” என்றாள் சாயை. தேவயானி சலிப்புடன் இல்லை என கையசைத்தாள். சாயை “முன்பொருமுறை சுவரில் பல்லிகளின் பூசலொன்றை பார்த்துக்கொண்டிருந்தேன். பெரும்பல்லி ஒன்றால் சிறுபல்லி ஒன்று துரத்தப்பட்டது. ஓடிக்களைத்து சுவர் மூலை ஒன்றை அடைந்து திரும்ப இடமின்றி அங்கு திகைத்து நின்று பெரும்பல்லிக்கு உணவாயிற்று. அது செய்திருக்கக்கூடிய ஒன்றுண்டு, சுவரிலிருந்த பிடிப்பை விட்டு உதிர்ந்திருக்கலாம். அது செல்வதற்கு முடிவற்ற வெளி எட்டுத்திசையிலும் திறந்து காத்திருந்தது. தன்னால் சுவரை விடமுடியுமென்று அது எண்ணவில்லை. அல்லது அதன் கைகள் அச்சுவரை விடும் இயல்புகொண்டவை அல்ல” என்றாள்.

“நான் துறந்து செல்ல வேண்டும் என்று எண்ணுகிறாயா?” என்றாள் தேவயானி. சாயை புன்னகைத்து “ஒருதருணம் உண்டு. அனைத்தும் முற்றாக உதிர்ந்தழிந்து வெறுமை எஞ்சும் கணம். அதற்கு முந்தைய கணத்தில் பின் திரும்பியிருந்தால் அனைத்தும் நன்றாக இருக்கும். ஆனால் மானுடரால் இயல்வதில்லை. அக்கணத்தைக் கடந்த பின்னரே அம்முந்தைய கணம் அளித்த பெருவாய்ப்பைப் பற்றி அவர்கள் உணர்வார்கள். வாழ்நாள் முழுக்க அதற்கென எண்ணி ஏங்கி விழிநீர் சிந்துவார்கள்” என்றபின் “நான் வருகிறேன்” என்று தலைவணங்கி திரும்பினாள்.

“சாயை” என்று தேவயானி மீண்டும் அழைத்தாள். அக்குரல் மிகத்தாழ்ந்து எளிய பெண்ணின் குரலென ஒலிக்க வியப்புடன் சாயை திரும்பிப் பார்த்தாள். “அவள் என்னை எங்கோ வென்றிருக்கிறாள்” என்றாள் தேவயானி. சாயை விழிகள் மின்ன நோக்கினாள். “என்னை மிக மிக ஆழத்தில் எங்கோ அவள் முழுமையாக வென்றிருக்கிறாள். அது அவளுக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் அதன்வழியாக நான் அவளுக்கு எவ்வகையிலும் ஒரு பொருட்டே அல்ல என்றாகியிருக்கிறேன்” என்றாள் தேவயானி.

சாயை ஒன்றும் சொல்லாமல் நின்றிருக்க தேவயானி விழிதிருப்பிக்கொண்டு “இங்கு எத்தனை பெருஞ்செல்வம்மீது நான் அமர்ந்திருந்தாலும் அவள் துயருறப்போவதில்லை. எத்தனை நஞ்சை அவள் மேல் கொட்டினாலும் அவளுக்கு வலிக்கப்போவதுமில்லை” என்றாள். சாயை  மீண்டும் ஒருமுறை தலைவணங்கி வெளியே சென்றாள்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 80

80. நகரெழுதல்

அசோகவனியின் எல்லைக்குள் நுழைந்தபோதே தேவயானி உளச்சுளிப்புக்கு ஆளானாள். தொலைவில் தோரணவாயில் தென்பட்டதும் அவளுடைய பேருடல் என சாலையை நிறைத்து இரு எல்லைகளும் மறைய பெருகிச் சென்றுகொண்டிருந்த அணியூர்வலத்தின் முகப்பில் ஏழு தட்டுத்தேர்மீது எழுந்த மூன்று நிமித்திகர்கள் தங்கள் பெருஞ்சங்கங்களை முழக்கினர். பதினெட்டு அகல்தேர்களில் தேனீ என மொய்த்திருந்த இசைச்சூதர்கள் தங்கள் முரசுகளுடனும் கொம்புகளுடனும் குழல்களுடனும் எழுந்து மங்கலஇசை பெருக்கினர்.

நூற்றெட்டு தாமரைத்தட்டுத் தேர்களில் பொன்வண்டுகளென, பட்டுப்பூச்சிகளென செறிந்திருந்த அணிச்சேடியர் குரவை ஒலி எழுப்பியபடி மங்கலத் தாலங்களை கைகளில் ஏந்தி எழுந்து நின்றனர். இரும்புக் கவச உடைகள் நீரலைவொளி எழுப்ப சீர்நடையில் சென்ற வேல்நிரையினரும் பெருநடையின் தாளத்தில் சென்ற புரவிப்படையினரும் நாண்தொடுத்த விற்களுடன் வில்லவர் அணியும் வழிச்சென்றனர். ஆணைகளும் அறைதல்களும் ஊடாக ஒலித்தன.

தோரணவளைவை அணுகியதும் தேவயானியின் தேருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த விரைவுத் தேரிலிருந்த துணையமைச்சர் சங்கிரமர் படிகளில் இறங்கி ஓடி அவளை அணுகி தலைவணங்கி “திரையை மேலேற்றவா, பேரரசி…?” என்று கேட்டார். சாயை மெல்ல கையசைக்க அமைச்சர் ஓடி தேருக்குப் பின்னால் தொற்றி நின்றிருந்த காவலரிடம் கைகளை வீசி வீசி ஆணையிட்டார். அவர்கள் பட்டுச்சரடை இழுக்க செந்தாமரை மலரிதழ் நிறத்தில் தேரைச் சூழ்ந்து காற்றில் நெளிந்துகொண்டிருந்த பொன்னூல் அணிப்பின்னல் கொண்ட பட்டுத்திரைகள் ஏதோ எண்ணம் கொண்டவைபோல அசைவற்றன. பின் அனல்பட்ட தளிர்போல் சுருங்கத் தொடங்கின. பின்வாங்கும் அலையென சுருண்டு மேலெழுந்து தேர்க்கூரைக்கு அடியில் மறைந்தன.

பன்னிரு அடுக்குகொண்ட பொன்மகுடமும் அதன் மேல் படபடக்கும் காகக்கொடியும் கொண்ட அப்பொற்தேர் தேவயானி ஆறாண்டுகளுக்கு முன்னர் அஸ்வமேதமும் ராஜசூயமும் முடித்து சத்ராஜிதை என தன்னை பாரதவர்ஷத்தின்மீது நிறுத்தியபோது அவ்விழாவின் இறுதிநாள் நூற்றெட்டு அரசர்கள் அகம்படி வர அவள் நகருலா சென்ற அணியூர்வலத்திற்காக கலிங்கச்சிற்பி சுதீரரால் வார்க்கப்பட்டது. பாரதவர்ஷத்தில் அதற்கு முன் பிறிதொன்று அவ்வாறு சமைக்கப்பட்டதில்லை என்று சூதர்கள் பாடினர். அதற்கிணையான தேர் விண்ணில் அமராவதியின் அரசன் ஊர்வது மட்டுமே என்றனர்.

அத்தேரைப்பற்றி அவைக்கவிஞர் சூர்யஹாசர் இயற்றிய காஞ்சனயானகீர்த்தி என்னும் குறுங்காவியத்தில் அதை நோக்கும்பொருட்டு நுண்விழிகளுடன் தேவர்கள் சூழ்ந்திருப்பதனால் சூரியனோ விளக்குகளோ அளிக்காத ஒளியொன்று அதை எப்போதும் சூழ்ந்திருக்கும் என்றார். கந்தர்வர்களும் கின்னரரும் வித்யாதரரும் உடனிருப்பதனால் அத்தேர் செல்லும் வழியெங்கும் இசை முழங்கும், மரக்கிளைகளில் பொன்னிறப் பறவைகளையும் சிறகொளிரும் தேனீக்களையும் மணிவண்டுகளையும் பார்க்க முடியும் என்றார்.

பிழையற்ற நேருடல்கள் கொண்ட பன்னிரு வெண்புரவிகள் நிமிர்ந்த தலையுடன் நீண்ட கழுத்தில் பால்நுரையென குஞ்சியலைய வெள்ளிக்கோல்கள் முரசுத்தோலில் விழுவதுபோல குளம்புக்கால்கள் சீராகச் சுழல அத்தேரை இழுத்தன. ஏழடுக்காக அமைந்த இரும்புச் சுருள்விற்களின் மேல் அமைந்த அத்தேர் நீரலைகளின் மீது அன்னம் என சென்றது. அதன் நடுவே அரியணையின் மீது முகம்நிமிர்ந்து நேர்விழிகளால் எதையும் நோக்காது தேவயானி அமர்ந்திருந்தாள். அவள் அருகே நின்ற சாயை மணிச்சரங்களும் முத்தாரங்களும் சுற்றிய பெரிய கொண்டையிலிருந்து மீறிய குழல்கற்றைகளை குனிந்து சீரமைத்தாள். தோளில் படிந்திருந்த இளஞ்செம்பட்டாடையை மடிப்பு எடுத்து அமைத்தாள்.

பொதுமக்களின் விழிகளுக்கு முன் தோன்றுவதற்கு முந்தைய கணத்தில் எரிதழல் செம்மணியென உறைவதுபோல அவளில் ஒரு அமைதி எழுவதை சாயை எப்போதும் கண்டிருந்தாள். பின்னர் எத்தனை பொழுதாயினும் அவ்வண்ணமே வார்த்து வைத்த அருஞ்சிலையென அவள் அமர்ந்திருப்பாள். நோக்கில் விழியும், காலத்தில் இமையும், மூச்சில் கழுத்தும் அன்றி உயிர்ப்பென எதையுமே அவளில் காண இயலாது. பேரவைகளில் கொள்ளும் அந்த அசைவின்மையை மெல்ல காலப்போக்கில் தனித்திருக்கையிலும் அவள் கொள்ளத்தொடங்கினாள். அத்தனை பீடங்களும் அரியணைகள் ஆயின என.

அவள் வருகையை அறிவிக்க முரசுமேடைகளில் பெருமுரசுகள் பிளிறி பெருகின. கொம்புகள் கனைத்தன. முழுக் கவச உடையுடன் முகப்பில் காத்து நின்றிருந்த காவலர்தலைவன் உக்ரசேனனும் குருநகரியிலிருந்து முன்னரே வந்து அச்சிற்றூரை நிறைத்திருந்த காவலர்களும், புத்தாடையும் மலர்மாலைகளும் அணிந்திருந்த அசோகவனியின் ஐங்குடித் தலைவர்களும் அவர்களின் சுற்றமும் கைகளையும் குலக்கோல்களையும் மேலே தூக்கியும் படைக்கலங்களை நிலம்நோக்கி தாழ்த்தியும் அவளை வாழ்த்தி குரலெழுப்பினர்.

அவளை எவ்வண்ணம் வாழ்த்தவேண்டுமென்பதுகூட முன்னரே கவிஞர்களால் எழுதப்பட்டு ஒலி வகுக்கப்பட்டு அவள் செல்லுமிடத்துக்கு அவளுக்கு முன்னரே சென்றுவிட்டிருக்கும். எனவே எங்கும் ஒரே வாழ்த்தொலிகளே எழுவது வழக்கம். எந்தப் புதுநிலத்திற்கு சென்றாலும் அந்நிலம் முன்னரே அவளால் வெல்லப்பட்டுவிட்டது என்ற உணர்வை எழுப்பியது அது. மீண்டும் மீண்டும் ஒரே நிலத்தில் ஒரே முகங்கள் நடுவே ஒரே பொற்தேரில் சென்று கொண்டிருப்பதாக சாயை எண்ணிக்கொள்வதுண்டு.

வாழ்த்தொலிகள் தேவயானியில் எந்த நலுக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. நீரென எண்ணி மலர்கள் பளிங்குப்பரப்பில் உதிர்வதுபோல என அதை அவைக்கவிஞர் சுதாகரர் ஒரு பாடலில் சொல்லியிருந்தார். பல்லாயிரம் பேர் கண்ணீரும் கதறலுமாக நெஞ்சறைந்து கொந்தளிக்கையில் நடுவே கல்முகத்துடன் ஒழுகிச்செல்லும் கொற்றவை சிலை என்றார் பெருஞ்சூதராகிய மாகத சாலியர். முன்னரே நிகழ்ந்து முடிந்து காவியமென்றாகிவிட்ட தலைவியா அவள் என அத்தோற்றத்தை வியந்திருந்தார் தென்னகத்துக் கவிஞரான ஆதன் பெருங்கொற்றன்.

தேர் தோரணவாயிலை அணுகியபோது சரளைக்கற்களுடன் மண்கலந்து விரித்து நீர்தெளித்து கல்லுருட்டி இறுக்கிய புதிய தேர்ப்பாதையில் கண் அறியாதபடி ஆழத்தில் ஓடிச்சென்ற முயல்வளை ஒன்றுக்குள் அவள் தேரின் சகடம் ஒன்று இறங்க நிலைதடுமாறி அசைந்து தோளால் சாயையின் விலாவை முட்டிக்கொண்டாள். ஒரு கணம் அனைத்துக் குரல்களும் திடுக்கிட்டு ஓசையழிந்தன. அந்த அமைதி வாளால் வெளியையும் காலத்தையும் ஓங்கி வெட்டி அகற்றியதுபோல் எழ தன் தேரில் எழுந்த கிருபர் கைகளை விரைவாக வீசி வாழ்த்தொலிகள் தொடரட்டும் என்று ஆணையிட்டார். அச்சமும் கலந்துகொள்ள வாழ்த்தொலியும் மங்கல இசையும் இருமடங்கு ஓசையுடன் உயிர்த்தெழுந்தன.

சாயை அவ்வண்ணம் ஒன்று நிகழ்ந்ததை அறியாதவள் போலிருந்தாள். நீர்போல நிகழ்ந்ததை விழுங்கி முந்தைய கணத்தில் முற்றிலும் இணைந்துகொண்டாள் தேவயானி. ஆனால் சாயை பேரரசி சினம்கொண்டிருப்பதை அவள் உடல் வழியாகவே அறிந்திருந்தாள். தோரணவாயில்களைக் கடந்து பேரலையெனச் சென்று கோட்டையை அறைந்து அதன் பெருவாயிலினூடாக உள்ளே பெருகி கிளை பிரிந்து அச்சிற்றூரின் அனைத்து தெருக்களையும் நிரப்பியது தேவயானியின் அணி ஊர்வலம்.

கோட்டையின் உப்பரிகை மேலிருந்து நோக்கிய வீரர்கள் வண்ண மலர்கள் மட்டுமே நிறைந்த நதி ஒன்று அலை கொந்தளித்து வந்து அந்நகரைப் பெருக்கி கரைவிளிம்பு தொட்டு நுரைகொள்வதைக் கண்டனர். அவர்களிடமிருந்த அனைத்து முரசுகளின் தோல்களும் ஒலியால் அதிர்ந்துகொண்டிருந்தன. தூக்கிய வாள்பரப்புகள்கூட ஒலியால் அதிர்வதை கைகள் உணர்ந்தன. பெருந்திரளில் ஒழுகிய தேரில் ஒரு பொற்துளி என அவள் அமர்ந்திருந்தாள். உறைந்து நகையென்றான பொன்னல்ல, உருகி அனலென ததும்பிக் கொண்டிருப்பது.

tigerகோட்டை வாயிலில் நூற்றெட்டு முதுமகளிர் கூடி நின்று தேவயானியை வரவேற்றனர். அசோகவனியின் பெருங்குடிகளிலிருந்து காவலர்தலைவன் உக்ரசேனன் நேரில் நோக்கி நோக்கி தேர்ந்தெடுத்த பெண்டிர் அவர்கள். அவர்கள் அணியவேண்டிய அணிகளும் ஆடைகளும் அரசிலிருந்தே அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தன. அவர்கள் நிற்கவேண்டிய முறை, சொல்ல வேண்டிய உரை, நோக்கு, நகைப்பு அனைத்துமே முன்னரே வகுக்கப்பட்டு பலமுறை பயிற்றுவிக்கப்பட்டிருந்தன.

அரசி நகர்புகுவதை முதலில் அவர்கள் விந்தையான ஒரு செய்தியாகவே எடுத்துக்கொண்டனர். அது எவ்வண்ணம் நிகழுமென அவர்கள் அறிந்திருக்கவில்லை. பின் ஒவ்வொரு நாளுமென சிற்பிகளும் தச்சர்களும் காவலர்களும் பணியாட்களும் வணிகர்களும் வண்டிகளும் நகருக்குள் நுழையத்தொடங்கியதும் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். கண்ணெதிரே அவர்களின் ஊர் மாறிக்கொண்டிருந்தது. ஒரு தருணத்தில் மொத்த ஊரே உடைந்து சிதறி மரப்பாளங்களாகவும் கற்தூண்களாகவும் சூழ்ந்து கிடந்தது.

‘இவ்விடிபாடுகளுக்குள்ளா அரசி நுழையப்போகிறாள்?’ என்று திகைப்புடனும் ஏளனத்துடனும் பேசிக்கொண்டனர். ‘நம் ஊருக்கு அவள் வரவில்லை. இங்கு தான் நுழையவிழையும் ஊரை அவள் உருவாக்குகிறாள். அதற்குள் நுழைந்து அவையமர்வாள்’ என்றார் முதியவர் ஒருவர். அரசியின் வருகைநாள் நெருங்க நெருங்க புதிய மாளிகைகள் எழுந்தன. கோட்டை வளர்ந்து பெருகி பிறிதொன்றாகி தோரணவாயில்கள் மழைக்காளான்கள்போல் முளைத்தெழுந்தன. இறுதி ஏழு நாட்களில் மொத்த நகரும் பணிக்குறை தீர்ந்து வண்ணம் பூசப்பட்டு புத்தரக்கு மணத்துடன் பிறந்து வந்ததுபோல் ஒளிகொண்டு நின்றது.

“பழம்பெரும் கதைகளில் ஓரிரவில் பூதங்கள் நகரை கட்டி எழுப்புவதைப்பற்றி கேட்டிருக்கிறேன், இப்போதுதான் பார்த்தேன்” என்று முதுமகள்களில் ஒருத்தி சொன்னாள். “பணியாற்றும் கைகளுடன் காணாக் கைகள் பல்லாயிரம் சேர்ந்துகொண்டதுபோல.” விண்திரையை விலக்கி எடுக்கப்பட்டதுபோல அந்நகரம் காற்றில் தோன்றியது. அரசி சென்றபின் நுரையடங்குவதுபோல் அது மீண்டு பழைய சிற்றூராக ஆகிவிடுமென்றுகூட சிலர் எண்ணினர். சிறுகுழந்தைகள் “அரசி சென்றபின் இது நமக்கே உரியதாகிவிடுமா?” என்று கேட்டனர். அப்பால் அமர்ந்திருந்த முதியவர் “இந்நகரம் இனி எப்போதும் நம்முடையதல்ல. இது இனி ஆயிரம் வருடங்களுக்கு அரசிக்கு உரியது” என்றார். “அப்படியென்றால் நாம்…?” என்றான் சிறுவனொருவன். “நாம் அரசியின் குடிகள்.”

அனைத்தையும் விளையாட்டென மாற்றிக்கொள்ளும் முதிராச் சிறுவரன்றி பிறர் நகரில் எழுந்த மாற்றங்களை விழையவில்லை. அவர்கள் வாழ்ந்த ஊரின் கட்டடங்களும் தெருக்களும் மரங்களும் காற்றும் வானும் ஒளியும் நிலமும் ஒவ்வொரு கணமும் மறைந்துகொண்டிருந்தன. கண்காணா பெருக்கொன்றில் அவ்வூர் மெல்ல மெல்ல மூழ்கி மறைவதைப்போல. அவர்களின் கனவுகளில் மீண்டும் மீண்டும் பெருவெள்ளம் ஒன்று வந்தது. நிறைத்து மூழ்கடித்து மேலேறிக்கொண்டே வந்து போர்த்தி தான் மட்டுமே என்றாகியது. வீடுகள் அடித்தளம் கரைந்து விரிசலிட குத்துபட்ட யானைபோல சிலிர்த்து திடுக்கிட்டன. தூண்கள் முறிந்து முனகலோசையுடன் சரிந்து சிற்றலைகளை எழுப்பியபடி மூழ்கின. குமிழிகளை வெளியிட்டு அலைகளாகி எஞ்சி அவையும் அமைய இருந்தனவோ என்று விழிதிகைக்க மறைந்தன.

பின்னர் அசைவற்று விரிந்த குளிர்நீர்ப் பரப்பில் புதிய பெருநகரொன்றின் நீர்ப்பாவை வண்ணக் குழம்பலாக நெளிந்தாடியது. ஒவ்வொரு கட்டடமும் புத்துயிர் கொண்டபோது அவர்கள் அரியதொன்றை இழந்ததாகவே உணர்ந்தனர். பொருளென அமைந்த ஒவ்வொன்றும் எண்ணங்களையும் கனவுகளையும் தன்னுள் பூசிக்கொண்டவை என்றுணர்ந்தனர். மண்மேல் அவை மறைந்த பின்னரும் தங்கள் உள்ளத்தில் எஞ்சுவது கண்டனர். எனினும் கண்ணுக்கு முன் அவை இல்லையென்றானால் ஒவ்வொரு நாளுமென கருத்துக்குள்ளும் கரைந்து மறைவதையும் தெரிந்துகொண்டனர்.

ஆனால் வணிகர்நிரை வழியாக ஊருக்குள் பெருகி வந்த புதுப்பொருட்கள் அளித்த களிப்பு பெண்களை மெல்ல மாற்றி அனைத்து அழிவுகளையும் மறக்கச் செய்தது. ஒரு மாளிகை அழிந்த இடத்தில் ஒரு மரச்செப்பை வைத்து களியாட அவர்களால் இயன்றது. ஒரு சோலையை அழித்தபின் எஞ்சும் வெறுமையை புதிய ஆடையொன்றால் நிகரீடு செய்ய முடிந்தது. வாழ்வென்பது இறந்தகாலம் மட்டுமே என்றான முதியவர்கள் எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியாத தங்கள் சென்ற வாழ்க்கையை இழந்து சாவின் மணம்கொண்ட ஆழ்துயர் எய்தினர்.

களைத்து வெறித்த கண்களுடன் இல்லத் திண்ணைகளில் அமர்ந்து அறியா வண்ணக் கொப்பளிப்பாக தங்கள் முன் நிகழ்ந்துகொண்டிருந்த புதிய வாழ்க்கையை பார்த்தபோது உருவாகி வரும் அப்புதுநகரியில் தங்கள் நினைவுகளும் எஞ்சாதென்று அவர்கள் உணர்ந்தனர். எஞ்சுவது ஏதுமின்றி மறைவதே இப்புவியில் எழுந்த அனைத்திற்கும் தெய்வங்கள் வகுத்த நெறியென்று அறிந்திருந்தும்கூட இருக்கவேண்டும் என உயிர்கொண்டிருந்த வேட்கை எஞ்சவேண்டுமென்று உருமாற்றம் கொண்டு துடிக்க துயருற்ற நெஞ்சுடன் தனிமையில் அமிழ்ந்தனர். ஒருவரோடொருவர் துயர் பரிமாறி சொன்ன சொற்கள் அனைத்தும் பொருளிழந்துபோக பின்னர் பிறர் விழிகளை நோக்குவதையே தவிர்த்து அமர்ந்தனர்.

முதுபெண்டிரை திரட்டுவதற்கு வந்த அரண்மனை ஊழியர்களிடம் “நாங்கள் எதற்கு வரவேண்டும்? அரசியை நாங்கள் அழைக்கவில்லையே?” என்றாள் முதுமகள் ஒருத்தி. “உங்கள் நகருக்கு எழுந்தருள்பவர் திருமகளின் வடிவமான பேரரசி. உங்கள் குறைகளை வந்து சொல்லுங்கள் அவரிடம்” என்றான் உக்ரசேனன். “நாங்கள் இங்கு உழைத்து உண்கிறோம். மண்ணுக்கு விண் கொடுத்தால் எங்களுக்கு அவள் கொடுப்பாள்” என்றாள் ஒரு கிழவி.

“பேரரசியின் எழிலுருவை நேரில் காண்பதுவரை இப்படி எதையெல்லாமோ எண்ணுவீர்கள். நேர் கண்ட அனைவரும் சொல்வதொன்றே, தெய்வங்கள் மானுட உடல்கொண்டு மண்ணில் தோன்றமுடியும். உங்கள் குலம் தழைக்க, கன்றுகள் பெருக, நிலம் குளிர, களஞ்சியம் நிறைய திருமகள் நோக்கு உங்கள் மேல் படியட்டும்” என்றார் அமைச்சர் கிருபர். ஒரு களியாட்டென அவர்கள் அதற்கு ஒப்பினர். அழைக்கப்பட்ட முதுமகளிர் ஆடையும் அணியும் சூடி ஒருங்கியபோது பிறரும் ஆர்வம் கொண்டனர். அவர்களும் அணிகொண்டு கிளம்பினர்.

தேவயானி கோட்டைவாயிலைக் கடந்ததும் உப்பரிகைகள் அனைத்திலுமிருந்து மலர்க் கடவங்களை எடுத்து கவிழ்த்தனர். மலர்மழையினூடாக அவளது தேர் கோட்டைக்குள் நுழைந்து நின்றது. முரசுகளும் கொம்புகளும் மணிகளும் வாழ்த்தொலிகளும் எழுந்து சூழ அவள் கைகூப்பியபடி எழுந்தாள். நகர்க்குடிகளின் உவகை கட்டின்றி பெருகியது. வேலோடு வேல் தொடுத்து அமைத்த காவலர்களின் வேலி அவர்களை தடுத்தது. அதற்கப்பால் அவர்கள் ததும்பிக் கொந்தளித்தனர்.

தேவயானி தேர் தட்டிலிருந்து காவலர் கொண்டு வைத்த பொன்னாலான படி மேடையில் கால்வைத்து இறங்கி அசோகவனியின் மண்ணில் நின்றதும் வாழ்த்தொலிகள் எழுந்து உச்சத்தை அடைந்தன. கோட்டை மேல் எழுந்த பெருமுரசு துடிதாளத்தில் முழங்கி அமைந்து கார்வையை எஞ்சவிட்டு ஓய்ந்தது. பேரொலி மட்டுமே எழுப்பும் அமைதி எங்கும் நிலவியது. அமைச்சர் கிருபர் “மாமங்கலையர் வருக! நம் மண்ணை கால் தொட்டு வாழ்த்திய பேரரசிக்கு மங்கலம் காட்டி உங்கள் குடித்தெய்வமென்று அழைத்துச் செல்க!” என்று ஆணையிட்டார்.

நிரைவகுத்து நின்றிருந்த மங்கலத்தாலங்கள் ஏந்திய முதுபெண்டிர் கிளம்பியதுமே கலைந்து ஒருவரோடொருவர் முட்டிக்கொண்டனர். இரு தாலங்களில் இருந்து வெள்ளிச்செம்புகள் கீழே விழுந்தன. மூவர் அவற்றை குனிந்து எடுக்க முயல அதிலொருத்தி பிறரால் முட்டித்தள்ளப்பட்டு கீழே விழுந்தாள். அவளை காவலர் இழுத்து பின்னால் கொண்டுசென்றனர். கிருபர் அவர்களிடம் “நிரை… நிரை… ஒருவர் பின் ஒருவராக” என சொல்லிக்கொண்டே இருந்தார்.

முதன்மை மாமங்கலையினர் மூவர் பேரரசியின் எதிரே சென்று நின்று ஐம்மங்கலங்கள் நிரம்பிய தாலத்தை நீட்டி உரத்த குரலில் முன்னரே பயிற்றுவிக்கப்பட்ட சொற்களை சொன்னார்கள். “திருமகளே, மண்ணாளும் கொற்றவை வடிவே, கலைதேர்ந்த சொல்மகளே, எங்கள் சிற்றூர் அசோகவனிக்கு வருக! எங்கள் குலம் விளங்க, இந்நகர் மலர் உதிரா மரம் என்று பொலிய தங்கள் வரவு நிகழட்டும்” என்று மூத்தபெண்டு முறைமை சொல்ல தேவயானி முகம் மலர்ந்து “ஆம். இந்நகர் பொலியும். அது தெய்வங்களின் ஆணை” என்றாள்.

அடுத்த முதுமகள் தான் பலமுறை சொல்லி உளம் நிறுத்தியிருந்த சொற்களை மறந்து நினைவிலெடுக்க முயன்று தத்தளித்து வாய் ஓய்ந்து நின்றாள். தேவயானி அவளிடம் “உங்கள் மங்கலமுகத்தோற்றம் என்னை நிறைவுகொள்ளச் செய்கிறது, அன்னையரே” என்றாள். அம்முதுமகள் சொற்களை நினைவுகூர்ந்து “வெற்று அகலென இங்கிருந்தது எங்கள் சிற்றூர். இதில் நெய்யென்றாகிறது எங்கள் உள்ளம். ஒளிரும் சுடரென தாங்கள் தோன்றியிருக்கிறீர்கள். விண் நிறைந்த மூதாதையருக்கு முன் இது வைக்கப்பட்டிருக்கிறது. இங்கு அனைத்து தெய்வங்களின் அருளும் பொழியவேண்டும்” என்றாள்.

“ஆம், தெய்வங்கள் அனைத்தையும் கொடையும் பலியும் கொண்டு மகிழ வைப்போம். நம் மூதாதையர் அனைவரும் இந்நாட்களில் இந்நகரில் எழட்டும்” என்று தேவயானி சொன்னாள். பின்னர் முன்னால் நின்ற மூதன்னையின் தோளில் கைவைத்து “என் அன்னையே நேரில் வந்து அணிமங்கலத்துடன் என்னை வரவேற்றதுபோல் உணர்கிறேன். அன்னையை நான் கண்டதில்லை. தங்களைப்போல் முகம் மலர்ந்த எளிய மூதாட்டியாக பழுத்திருப்பாளென்று தோன்றுகிறது” என்றாள்.

அந்தத் தொடுகையையும் நேர்ச்சொல்லையும் எதிர்பாராத முதுமகள் தத்தளித்து “அரசி தாங்கள்… நான்… நான்… இங்கே… எளியவள்” என்று உடைந்த சொற்களுடன் விம்மும் தொண்டையுடன் நிலையழிந்தாள். தேவயானி அவள் கைகளைப்பற்றி “வருக அன்னையே, நம் அரண்மனைக்குச் செல்வோம். நம் மைந்தர் இங்கு நிறைந்து வாழ ஆவன செய்வோம்” என்றாள். அவள் சொற்களிலிருந்த மெய்யுணர்ச்சியின் அணுக்கத்தால் அனைத்து எச்சரிக்கைகளையும் கடந்துவந்த இரண்டாவது முதுமகள் கைநீட்டி தேவயானியின் கைகளை பற்றிக்கொண்டு “மகளே, நான் முதியவள். உன்னிடம் இதை சொல்லியாக வேண்டும். நீ பேரரசியே ஆனாலும் பொன் மேல் கால் வைத்திறங்கலாமா? பொன்னென மண்ணுக்கு வந்தது விண் வாழும் திருமகள் அல்லவா? அது புலரியையும் அந்தியையும் காலால் மிதிப்பதல்லவா?” என்றாள்.

தேவயானி ஒருகணம் சற்றே கலைந்து ஆனால் முகம் மாறாமல் அச்சொற்களை கேட்காதவள்போல காலடி வைத்து முன்னால் சென்று பிறிதொரு மூதன்னையிடம் முகமலர்வுடன் “அரண்மனைக்கு வருக, அன்னையே!” என்றபின் கிருபரிடம் “செல்வோம்” என்றாள். சாயை விழிகள் மாற திரும்பி உக்ரசேனனை பார்த்தாள். அவன் கைகளைக் கூப்பியவனாக உள்ளம் அழிந்து தோள்களில் முட்டிய திரளால் ஆடியபடி நின்றான்.

சாயையின் விழிகளால் ஆணை பெற்ற காவலர் முதுமகளின் தோளில் கைவைத்து தள்ளியபடி “வருக மங்கலையே” என்றார்கள். “இல்லை, நான் அரசியிடம் தவறாக ஒன்றும் சொல்லவில்லை. பொன்னை மிதிக்கும் பழக்கம் எங்கள் குலத்தில் இல்லை” என்றாள் முதுமகள். “ஆம், வருக அன்னையே” என்று காவலர் அவளை இழுத்தார்கள். அவளுக்குப் பின்னால் நின்ற இன்னொரு முதுமகள் “இங்கு நாங்கள் நெல்லையும் மலரையும்கூட கால்களால் தொடுவதில்லை. மலரென்றும் நெல்லென்றும் பொலிவது பொன்னல்லவா?” என்றாள். அவளையும் வீரர்கள் இழுத்து கூட்டத்திற்குள் புதைத்து அமிழ்த்தினர்.

அணித்தேர் வந்து நின்றது. தேவயானி அதை நோக்கி நடக்கையில் அவளுக்குப் பின்னால் பெண்களும் படைவீரர்களும் அடங்கிய குழு சுவரென்று எழுந்து முதிய மாமங்கலைகளை அவளிடமிருந்து முற்றாக விலக்கி அகற்றி கொண்டுசென்றது. தேவயானி சாயையிடம் “அம்முதுபெண்டிரை ஒன்றும் செய்யவேண்டியதில்லை. எளியவர்கள்” என்றாள். “ஆம்” என்றாள் சாயை. தேவயானி மட்டும் தேரில் ஏறிக்கொண்டாள். சாயை கிருபரை நோக்கி பிறிதொரு நோக்கு சூடிய விழிகளுடன் திரும்பினாள்.

நகரின் தெருக்களினூடாக அவளுடைய தேர் சென்றபோது இருபுறமும் கூடி நின்ற மக்கள் அரிமலர் தூவி வாழ்த்துரைத்தனர். தெருக்களில் மலர்தரைமேல் மலர்காற்றினூடாக சென்ற அவள் தேர் அரண்மனை வாயிலை சென்றடைந்தபோது முன்னரே புரவிகளில் அங்கு சென்றிருந்த கிருபரும் பிற அமைச்சர்களும் அவளுக்காக காத்து நின்றிருந்தனர். துணைக் கோட்டைத் தலைவனாகிய சித்ரவர்மன் கவசஉடையும் அரசமுத்திரையுமாக வந்து தலைவணங்கி உடைவாளை தேவயானியின் காலடியில் தாழ்த்தி வணங்கி வாழ்த்து கூவினான். தேவயானி அவன் வாழ்த்தை ஏற்று அமைச்சர்களால் வழிநடத்தப்பட்டு அரண்மனைக்குள் நுழைந்தாள்.

சாயை திரும்பி கிருபரிடம் “முந்தைய காவல் தலைவனை நான் உற்றுசாவவேண்டும். அவனுக்கு பிற நோக்கங்கள் இருந்தனவா என்று அறிந்த பின்னர் வேண்டியதை செய்யலாம்” என்றாள். “ஆணை” என்றார் கிருபர்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 79

79. விதைகளும் காற்றும்

யயாதி எளிய வெண்ணிற ஆடையை அணிந்து மீண்டும் தன் அறைக்கு வந்தபோது அவனுக்காக சர்மிஷ்டை காத்து நின்றிருந்தாள். அவன் காலடியோசையையே கேட்டிருந்தாள். எழுந்து வாயில்நோக்கி வரும் அசைவிலிருந்தவள் அவனைக் கண்டதும் நின்று முகம் மலர்ந்து பின் சூழலை உணர்ந்து சேடியரின் முறைப்படி தலைவணங்கினாள். அவனுடன் எவருமில்லை என அறிந்தபின் அருகணைந்து “களைத்திருக்கிறீர்கள்” என்றாள். “ஆம், வங்க நாட்டுக்குச் சென்றிருந்தேன்” என்றபடி அவன் பீடத்தில் அமர்ந்தான்.

அவனருகே வந்து காலடியில் தரையில் அமர்ந்தவளாக “இங்கு பேரரசியுடன்தான் தாங்கள் வருவீர்கள் என்று எண்ணியிருந்தேன்” என்றாள் சர்மிஷ்டை. “அறிவின்மை… நான் எப்படி இங்கே அரசன் என என்னை காட்டிக்கொள்ள முடியும்?” என்றான் யயாதி. “ஆம், உண்மை. நான் அதை எண்ணவில்லை” என்றாள் சர்மிஷ்டை. அவன் தணிந்து “அரசுமுறையாக பேரரசி செல்லும் இடங்களுக்கெல்லாம் நான் செல்வதில்லை. ஆகவே அதில் பிழையாக ஏதுமில்லை” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள்.

“உன்னிடம் பார்க்கவனின் ஓலை வந்து சேர்ந்ததல்லவா?” என்று அவன் கேட்டான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “மைந்தர் மூவரையும் அருகிருக்கும் அஸ்வபாதக் காட்டில் சுப்ரபாலரின் பயிற்சிக்களத்திற்கு அனுப்பிவிடும்படியும் நான் மட்டும் இங்கு சேடியாக தங்கும்படியும் சொல்லியிருந்தார்” என்றாள். பின்னர் மேலும் குரல் தாழ்த்தி “அரசி வந்தால் அழைக்கப்படாதவரை முகம்காட்டவேண்டாம் என்றும் அரசி மைந்தர் எங்கே என்று கேட்டால் மட்டும் அவர்களை புரவியோட்டப் பயிற்சி கொள்வதற்காக அனுப்பியிருப்பதாக சொல்லும்படியும் சொல்லியிருந்தார்” என்றாள்.

“அது நன்று. அவள் இங்கு ஏழு நாட்கள் தங்கியிருப்பாள் என்று எண்ணுகிறேன். அது மிகச்சிறிய காலமே” என்றான் யயாதி. “ஆம்” என்றாள் சர்மிஷ்டை. யயாதி “இயல்பென புழங்கினால் எதுவும் வெளிவராமல் அதை கடந்துவிட முடியும். அவள் இச்சிறுமைகள் அனைத்திற்கும் மேலாக பறந்து செல்ல விழைபவள். ஆகவே அவள் விழிகளிலிருந்து எளிதில் தப்பிவிடலாம். நமது அறியாமையால் பொறுமையின்மையால் மிகைநம்பிக்கையால் பிழை ஏதும் இயற்றாமல் இருந்தால் மட்டும் போதும். அதை சொல்லிவிட்டுச் செல்லலாம் என்றே வந்தேன்” என்றான்.

அவள் மெல்லிய எரிச்சல் தெரிய “அதை பார்க்கவரின் ஓலையினூடாகவே நான் புரிந்து கொண்டேன். அதைச் சொல்ல தாங்கள் வந்திருக்க வேண்டியதில்லை” என்றாள். அவன் சினத்துடன் “நான் வந்திருக்கலாகாது என்கிறாயா?” என்று கேட்டான். அவள் கண்கள் சுருங்க “என்ன பேச்சு இது? நீங்கள் எதன்பொருட்டு வந்தாலும் அது எனக்கு உவகையளிப்பதே. உங்கள் வாழ்க்கையில் மிகக்குறுகிய பகுதியே எனக்காக வெட்டி அளிக்கப்படுகிறது. இந்தப் பதினாறு ஆண்டுகளில் நான் உங்களுடன் இருந்த காலங்களை மட்டும் எடுத்து தொகுத்து பார்த்தால் ஓராண்டுகூட இல்லை. அதற்குள் நிறைந்து வாழ விழைபவள் நான். பொழுதனைத்தும் எனக்குக் கொடையே” என்றாள்.

“இந்த ஆண்டுகளில் நான் உன்னிடம் கண்டது நன்கு சொல்லெடுக்க கற்றுக்கொண்டிருக்கிறாய் என்பதுதான்” என்று அவன் சொன்னான். அவள் புன்னகை செய்தாள். அவளுடன் அணுக்கம் கொள்ளும்தோறும் பூசல் மிகுந்துவருவதை அவன் உணர்ந்திருந்தான். எப்போதும் சந்தித்த முதற்சில கணங்களுக்குப்பின் பூசல்தான் எழும், பின்னர் நெகிழ்வும் தழுவலும். மீண்டும் பூசல். அவன் காலடியில் அவள் அமர்ந்திருக்கையில் அப்பூசல் நிகழ்வதனாலேயே அவை ஓர் எல்லைக்குள் நின்றன, ஆகவே இனிமையான ஆடலாக அமைந்தன.

அவன் பூசலிடும் ஒரே பெண் அவள்தான் என எண்ணியதும் புன்னகைகொண்டு அருகே சென்று அவள் தோளைப்பற்றி “நான் வந்தது இவையனைத்தும் நானே உன்னிடம் உரைக்க வேண்டும் என்பதற்காக. பார்க்கவன் உனக்கு ஆணையிடலாகாது. நீ மறந்தாலும் நீ விருஷபர்வனின் மகளென்பதை நான் மறக்க இயலாது” என்றான். சர்மிஷ்டை “நான் மறக்கவில்லை. எப்போதும் அது எனக்கு நினைவிலிருக்கிறது. ஆனால் எங்கோ நெடுந்தொலைவில் திகழ்கிறது. அங்கிருந்த என்னை இங்கிருந்து பார்க்கையில் எவரோ என்றே நினைவுகொள்ள முடிகிறது” என்றாள்.

“உன்னை இங்கு மறைத்து வைத்திருப்பது குறித்து பெரும் குற்றஉணர்வு எனக்கு இருக்கிறது. விதையை புதைத்து வைப்பது போலத்தான் உன்னை மறைத்து வைத்திருக்கிறேன் என்று ஒருமுறை தோன்றியபோது அதிர்ந்துவிட்டேன். எதையும் முழுமையாக மறைக்கமுடியாதென்பது மனித வாழ்க்கையின் மாறா நெறிகளில் ஒன்று” என்றான் யயாதி. அவளைத் தழுவி தன் உடலுடன் இணைத்துக்கொண்டு முகத்தைப்பற்றி விழிகளை நோக்கி “உன்னை நான் மறைப்பதில்கூட பொருளுள்ளது. ஏனெனில் இவ்வுறவு நாமிருவரும் எண்ணி உருவாக்கிக்கொண்டது. இது ஒருபோதும் பிறரறிய நிகழமுடியாதென்று நாம் அறிந்திருந்தோம். ஆனால் நம் மைந்தருக்கு அத்தகைய பொறுப்போ கடனோ ஏதுமில்லை. கல்லுக்கடியில் முளைத்த செடிகளைப்போல அவர்கள் இங்கு மறைந்து வெளிறி வாழவேண்டியதில்லை. சூதர் மைந்தர்களாக இழிவுகொள்ள வேண்டியதுமில்லை” என்றான்.

சர்மிஷ்டை “அவர்கள் தாங்கள் அரச மைந்தர்கள் என்று இதுவரை அறிந்திருக்கவில்லை. நான் விருஷபர்வனின் மகள் என்று அவர்களிடம் சொன்னதுமில்லை. சூதர்கள் என்றே அவர்கள் தங்களை எண்ணுகிறார்கள். ஆகவே சூதரில் முதன்மை என்னும் தன்மதிப்பு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எத்துயரையும் இதுவரை அடைந்ததில்லை” என்றாள்.

“நாம் மறைக்க முடியாத ஒன்று உண்டு, அவர்களின் முகம்” என்று யயாதி சொன்னான். “அது தெய்வங்கள் அளிப்பது. வளரும்தோறும் தெளிந்து எவர் குருதி எவ்வுடம்பில் ஓடுகிறதென்பதை அது வெளிப்படுத்தும். அப்போது அவர்கள் பெரும் துயரை அடையத் தொடங்குவார்கள். அத்துயரை அவர்களுக்கு அளிக்கும் உரிமை நமக்கில்லை. நான் விண்ணேகினால் அதன்பொருட்டு என் மூதாதையர் முன் சென்று தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கும்.”

சர்மிஷ்டை இயல்பான உதட்டுச் சுழிப்புடன் “அதற்கு என்ன செய்ய இயலும்?” என்றாள். அது அவளியல்பு, அவள் உள்ளம் சென்றடையாத ஒன்றை எளிதாக உதறிக் கடந்துவிடுவாள். “அதைப் பேசவே நான் வந்தேன். தேவயானி இங்கு வந்து செல்லட்டும். அதன் பிறகு அவர்களை தனிப்படை திரட்டி உடன்சேர்த்து தென்னாட்டுக்கு அனுப்புகிறேன். அங்கு அவர்கள் மூவரும் மூன்று நிலங்களை வென்று அந்நிலங்களின் அரசர்களாக அமையட்டும்.”

“தேவயானி உளம்கனியும் முதுமையில் அவர்கள் யார் என்று அவளிடம் சொல்வோம். அவள் மைந்தன் யது குருநகரியின் மணிமுடியை சூடியபின் அவனை அழைத்து அவர்கள் அவனுக்கு இளையோர் என்றும் நிகர்உரிமை கொண்டவர் என்றும் சொல்கிறேன். அவர்கள் அவன் நிலத்திற்கும் குருதிக்கும் உரிமைகோராதவர்கள் என்றால் அவனுக்கு பகையிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் வென்ற நிலங்கள் அவனுக்கு உடன்குருதியர் நாடுகளாகும் என்றால் அது அவனுக்கு வலிமையே சேர்க்கும்” என யயாதி சொன்னான்.

“இவற்றையெல்லாம் ஏன் இப்போது பேசவேண்டும்?” என்றாள் சர்மிஷ்டை. “திருஹ்யூவிற்கு பதினாறாண்டு அகவை நிறைகிறது. அவன் சிறுவனல்ல” என்றான் யயாதி. “எது உங்களுக்கு உகந்ததோ அதை செய்யுங்கள்” என்றாள் சர்மிஷ்டை. அவள் முற்றிலும் உளம் விலகிவிட்டாள் என்று கண்டதும் அவ்வுரையாடல் முடிந்துவிட்டதை யயாதி உணர்ந்தான்.
யயாதி “மைந்தரை இங்கு வரச்சொல், நான் அவர்களை பார்க்கவேண்டும்” என்றான். “ஒவ்வொருமுறை வரும்போதும் நீங்கள் அவர்களை பார்த்துச் செல்கிறீர்கள். நீங்கள் யார் என்னும் வினா அவர்கள் உள்ளத்தில் எழக்கூடும். அவர்கள் இச்சிற்றூரிலிருந்து இன்றுவரை வெளியே சென்றதில்லை. ஆகவே அனைத்தும் எளிதாகவே இதுவரை சென்றுகொண்டிருக்கிறது. அதை எல்லைவரை இழுக்கவேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்” என்றாள் சர்மிஷ்டை.

“நான் உன்னைப் பார்க்கவென்று இங்கு வந்தது முதல் ஓராண்டு மட்டுமே” என்றான் யயாதி. “பின்னர் எப்போதும் மைந்தரை நோக்குவதே என் முதல் விருப்பமாக இருந்துள்ளது.” சர்மிஷ்டை “அந்த விருப்பு உங்கள் விழிகளிலும் கைகளிலும் வெளிப்படுகிறது. ஒருமுறைகூட நீங்கள் மைந்தரை தொட்டுத் தடவாமலிருந்ததில்லை. உங்கள் சொற்களனைத்தும் கனிந்திருக்கும் அப்போது. சென்றமுறை இங்கிருந்து சென்றதுமே மூத்தவன் கேட்டான், நீங்கள் யார் என்று” என்றாள். யயாதி “நீ என்ன சொன்னாய்?” என்று கேட்டான்.

“முன்னரே பார்க்கவர் சொன்னபடி நீங்கள் அரசகுடிப்பிறந்தவர், அரசியின் அலுவலர் என்று அவனிடம் சொல்லியிருந்தேன். நீங்கள் ஒற்றர் என்றும் எனவே வந்து இங்கு தங்கிச்செல்வது எவருமறியாத மந்தணமாக இருக்கவேண்டுமென்றும் ஆணையிட்டிருந்தேன். அவன் ‘நான் அதை கேட்கவில்லை. அவருக்கும் நமக்கும் என்ன உறவு?’ என்று கேட்டான். என் உளம் நடுங்கிவிட்டது. அத்தருணம் வந்தணையுமென்று எதிர்நோக்கியிருந்தேன். அதை கடப்பதெப்படி என்று எண்ணுகையில் உள்ளம் மலைக்க சரி அது நிகழும்போது பார்ப்போம் என ஒத்திப்போடுவேன்.”

“என்ன செய்தாய்?” என்றான் யயாதி. “அப்போது என் பெண்ணியல்பே கைகொடுத்தது. விழிநீர் துளிக்க ‘இவ்வினாவுக்கு சேடிப்பெண் விடைசொல்லமுடியாது, மைந்தா’ என்றேன் அவன் திகைத்துவிட்டான். அவன் சொல்லெடுப்பதற்கு முன்பு இளையவனாகிய புரு ‘மூத்தவரே, இனி இதைப்பற்றி நாம் ஒருசொல்லும் எடுக்கவேண்டியதில்லை’ என்றான். நம் மைந்தரில் அவனைப்போல் நுண்ணுள்ளம் கொண்டவரில்லை. மூத்தவர்களும் அவன் சொல்லை கடப்பதில்லை. அவர்கள் சொல்மாற்றி பிறிதுபேசி விலகிச்சென்றனர். அதன்பின் இன்றுவரை பேச்சு எழுந்ததில்லை.”

“ஆக நானே அவர்களின் தந்தை என சொல்லிவிட்டாய்” என்றான். “இல்லை, சேடிக்கு அப்படி எவரையும் சொல்லமுடியாதென்பதே அதன்பொருள். நீங்கள் அவர்களின் தந்தையாக இருக்க வாய்ப்புண்டு, அல்லது தந்தையென அமைந்த பலரில் ஒருவர்.” யயாதி “கீழ்மை… தன் மைந்தரிடம் ஒருவன் இவ்வாறு தோற்றமளிப்பது” என்றான். “இதை எண்ணியிருந்தால் அன்று எளிய உணர்வெழுச்சிகளுக்கு ஆட்பட்டிருக்கவே மாட்டேன்.” அவள் சினந்து “எளிய உணர்வெழுச்சிகளா? இப்போது அவ்வாறு சொல்லலாயிற்றா?” என்றாள்.

“இப்புவியிலுள்ள உறவுகளும் உணர்வுகளும் பொருளின்மையின் எளிமை கொண்டவையே. அதை உணரும் தருணங்கள் எனக்கும் அமைந்துகொண்டிருக்கின்றன” என்றான் யயாதி. சர்மிஷ்டை சிலகணங்கள் நோக்கிவிட்டு பெருமூச்சுடன் எழுந்து “நான் மைந்தரை வரச்சொல்கிறேன்” என வெளியே சென்றாள். யயாதி அவள் நடையிலேயே ஒரு எரிச்சல் தெரிந்ததை நோக்கி நின்றான்.

உடலின் அசைவாலேயே எரிச்சலை, வெறுப்பை, சினத்தை, புறக்கணிப்பை வெளிக்காட்ட பெண்களால் இயல்கிறது. ஒருவரிடம் அவ்வாறு தன் ஒவ்வொரு அணுவாலும் உணர்வை வெளிக்காட்டுமிடத்திற்கு பெண் செல்லும்போதுதான் அந்த ஆணை தன்னுள் அவள் முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்டாள் என்று பொருள். அவன் குழந்தையை பெற்றபின்னரே அது பெண்களுக்கு அமைகிறது.

tigerமைந்தர்களுக்காக காத்திருந்த நேரத்தில் அவர்களின் கடந்தகாலத் தோற்றங்களை அவன் உள்விழிகள் அளைந்துகொண்டே இருந்தன. அத்தனை உடல்தோற்றங்களும் ஒன்றுடன் ஒன்றென இணைந்து அலையடித்தன. சித்தத்தை இறுக்கி ஒரு பொருளென்றாக்கி அதைக்கொண்டு எண்ணங்களை நீவிப் பிரித்து தனித்தனியாக நோக்கவேண்டியிருந்தது. மூத்தவன் திருஹ்யூ பிறந்தபோது அவன் அன்னையைப்போல கரிய சிற்றுடலும் கூரிய சிறுமூக்கும் பெரிய விழிகளும் கொண்டிருந்தான். குழந்தை பிறந்த செய்தி கேட்டபோது அவன் குருநகரியில் இருந்தான். வந்துசேரும்போது பதின்மூன்றாம்நாள். குழவியை முதலில் நோக்கியபோது உடனே எழுந்தது பெரிய ஏமாற்றம். அதை ஒருகணம் முகம் காட்டிவிட்டது.

பார்க்கவன் “நன்று, ஐயமெழாது” என்றான். அவன் திரும்பிநோக்க “பேரரரசி எவர் என்று கேட்காமலிருக்கமாட்டார்” என்றான். அவ்வெண்ணம் அளித்த ஆறுதலால் முகம் மலர குழந்தையை கையில் வாங்கி முகம் சேர்த்தான். அதன் மென்கால்களில் முத்தமிட்டபோது இளங்குருதிமணம் கொண்டு சித்தம் மயங்க அவனுள் வாழ்ந்த தொல்விலங்கு தன்னை தந்தையென்றுணர்ந்தது. களிப்புடன் “இனியவன்” என்றான். பார்க்கவன் “அனைத்துக் குழவிகளையும்போல” என்றான். “இவன் அரசனாக வேண்டும். எங்கோ… நான் உறுதியாக எண்ணுகிறேன், இவனுடன் தெய்வங்கள் இருக்கும்” என்றான் யயாதி. “வயற்றாட்டி காதில் விழவேண்டியதில்லை” என்றான் பார்க்கவன்.

பேற்றுவிலக்கு கொண்டு ஈற்றறையில் படுத்திருந்தாள் சர்மிஷ்டை. கணவனும் மைந்தருமன்றி பிறர் பேற்றுவிலக்குகொண்ட பெண்ணை சென்று நோக்கலாகாதென்பது நெறி. “இங்கு எவரறியப்போகிறார்கள்?” என்றான் யயாதி. “வேண்டியதில்லை, அரசே. அதையே ஓர் அறிவிப்பென கொள்ளக்கூடும் சிலர்” என்றான் பார்க்கவன். ஈற்றறைச் செவிலியிடம் மைந்தனை திரும்ப அளித்துவிட்டு “சின்னஞ்சிறு உடல்… அதில் தளிர்மொட்டென முகம். ஆனால் அதிலேயே குலம் தெரிகிறது. குடிமுறை தெரிகிறது. தன்னியல்பும் வெளிப்படுகிறது… விந்தை!” என்றான். “அன்னையைப்போல” என்றான் பார்க்கவன்.

“ஆம், ஆனால் அவளை நோக்காதவர்கள்கூட இச்சிறுமுகத்தைக்கொண்டு இவனை ஐயுறுபவன், அஞ்சுபவன், எங்கும் எப்போதும் வெல்லாதவன் என்று சொல்லிவிடமுடியும்” என்றான். “அதுவே தடையென எண்ணி மீறிஎழுபவர் இல்லையா?” என்றான் பார்க்கவன். “உண்டு, அவ்வாறு கீறிமுளைத்தெழுவதன் முளைமொட்டும் அம்முகத்தில் தெரியும்” என்றான் யயாதி. “நம்மைவிட நிமித்திகர் அதை கூர்மையாக சொல்லக்கூடும்.”

அவர்கள் திரும்பும்போது பார்க்கவன் “பேரரசி இளவரசர் யதுவை ஈன்றபோது உங்களுக்குத் தோன்றியதென்ன?” என்றான். யயாதி முகம் மலர்ந்து “அவள் மைந்தனை ஈன்றிருக்கிறாள் என்னும் செய்தியை கொண்டுவந்த முதுசேடி நிலையழிந்து சிரித்துக்கொண்டிருந்தாள். முறைமைச்சொற்களை சொல்லக்கூட அவளால் இயலவில்லை. அவளுடன் மங்கல இசைக்கருவிகளுடன் மூன்று விறலியரும் ஐம்மங்கலங்களுடன் ஏழு அணிச்சேடியரும் வந்தனர். முதலில் கொடிதாங்கியும் சங்கூதியும் நடந்தனர். என் அரண்மனை வாயிலை அவர்கள் அடைந்ததுமே தெரிந்துவிட்டது. நான் எழுந்து நின்றதும் அணுக்கன் ஓடிவந்து நான் அரசாடை புனையவேண்டும் என்றான். ‘அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்’ என்றேன். ‘அதற்குள் அரசே… பிறந்திருப்பவன் குருநகரியின் பட்டத்து இளவரசன். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியின் முதல் மைந்தன்…’ என்றான். ‘ஆம்’ என்றபோது என் குரலில் சலிப்பே வெளிவந்தது.”

அச்செய்திக்காக இருபத்தெட்டு நாட்களாக காத்திருந்தேன். குறித்த நாள் கடந்து பதினெட்டு நாட்களாகிவிட்டிருந்தன. சுவடியை மூடிவிட்டு உடையணிந்தேன். முடிசூடி காத்து நின்றிருந்தேன். மங்கல இசை ஒலித்தது. வாழ்த்தொலிகளுக்கு நடுவே சங்கும் வரவறிவிப்பும் ஒலித்தன. நான் எண்ணியிருந்ததற்கு மாறாக முதுசேடி கதவைத் திறந்து உள்ளே ஓடிவந்து என் காதுகளை பற்றிக்கொண்டு ‘மைந்தனை ஈன்றுவிட்டீர்கள், அரசே. பாரதவர்ஷத்திற்கு சக்ரவர்த்தி பிறந்திருக்கிறார்’ என்றாள். சிரித்துக்கொண்டு என்னைப் பற்றி உலுக்கி ‘மானுடன் தெய்வங்களுக்கு நிகர்நின்றிருக்கும் தருணம். தெய்வங்கள் மானுடனை அனைத்துக்கு அப்பாலும் பொறுத்தருளும் வேளை’ என்றாள்.

அவள் என்னை தூக்கி வளர்த்தவள். அத்தருணத்தை அவள் அப்படி கலைக்காமலிருந்திருந்தால் நான் உறைந்தே இருந்திருப்பேன். சிரித்தபடி ‘முதுமகளே, இச்சொற்றொடரை பயின்றுகொண்டு வந்தாயா?’ என்றேன். சிரித்தபடி கண்ணீர் விட்டாள். எனக்கு ஐம்மங்கலத் தாலத்தில் இருந்து இனிப்பை எடுத்து ஊட்டினாள். அவளுக்கு நான் அருமணி பதித்த கழுத்தணியை பரிசளித்தேன். அன்று முழுக்க பரிசளிப்புகள் நிகழ்ந்தன. பாரதவர்ஷத்தில் பிறிதெந்த மைந்தன் பிறப்புக்கும் அவ்வண்ணம் பெரும்பரிசுகள் அளிக்கப்பட்டதில்லை. ஏனென்றால் அதற்கு முன்னர் அவ்வாறு அளிக்கப்பட்ட பரிசுகளை கணக்கிட்டு அவற்றுக்கு இருமடங்காக பரிசுகள் அமையும்படி முன்னரே கிருதர் வகுத்திருந்தார்.

மறுநாள் காலை முதற்புலரியில் தேவயானியையும் மைந்தனையும் நான் காண நற்பொழுது வகுக்கப்பட்டிருந்தது. அரசணிக்கோலத்தில் அகம்படியினருடன் சென்றேன். வரவறிவிக்கும் நிமித்திகனுக்குப் பின்னால் என் செங்கோல் சென்றது. பதினெட்டு இசைச்சூதர் பதினெட்டு அணிச்சேடியர் தொடர்ந்தனர். வெண்குடையுடன் ஏவலர் என் பின்னால் வந்தனர். அது ஓர் அரசப்பெருநிகழ்வு. என்னருகே அமைச்சர்கள் வந்தனர். ஈற்றறைக்கு வெளியே ஒரு பொற்தொட்டிலில் வெண்சேக்கையில் மைந்தன் படுக்கவைக்கப்பட்டிருந்தான். பேறெடுத்த மருத்துவச்சி அவனை எடுத்து என்னிடம் காட்டினாள். அன்னையைப்போன்ற தோற்றம். நேர்மூக்கால் பகுக்கப்பட்ட வட்டமுகம். ஒவ்வொரு உறுப்பும் பழுதற்றிருந்தது.

நான் எண்ணியதையே என்னுடன் வந்த நிமித்திகர் சொன்னார் ‘பழுதற்ற உடல், அரசே. தெய்வச்சிலைகளுக்குரிய அளவுகள். மண்ணில் பேரரசனாகவே பிறந்திருக்கிறார். பாரதவர்ஷம் பணியும் கால்கள் இவை. நம் கொடிவழியினர் பல்லாயிரமாண்டு ஆலயத்தில் நிறுத்தி வழிபடும் முகம்.’ அச்சொற்கள் ஏனோ எனக்கு பெரிய உள எழுச்சி எதையும் உருவாக்கவில்லை. நான் அவனைப் பெற்ற அச்செய்தி வந்தபோது படித்துக்கொண்டிருந்த நூலில் இருந்த ஒரு வரி எந்தப் பொருத்தமும் இல்லாமல் நெஞ்சில் ஓடிக்கொண்டிருந்தது.  ‘காமதேனு அகிடுகளின் நான்கு காம்புகளிலிருந்து நான்கு குலங்கள் பிறந்தன.’

உள்ளறைக்குச் சென்று பேரரசியை பார்த்தேன். அவளருகே சாயை நின்றிருந்தாள். என்னருகே வந்து ‘களைத்திருக்கிறார்கள். ஓரிரு சொற்களுடன் முடித்துக்கொள்ளுங்கள்’ என்றாள். நான் ‘ஆம், நான் உடனே சென்றுவிடுவேன்’ என்றபின் அவள் அருகே சென்று நின்றேன். விழிகளைத் திறந்து என்னை நோக்கினாள். நான் முற்றிலும் அறியாத பெண். நான் உள்ளூர அஞ்சும் அரசி. ‘என் குலம் வாழ மைந்தனை அளித்திருக்கிறாய்’ என்றேன். அவள் மறுமொழி சொல்வதற்குள் சாயை ‘பாரதவர்ஷம் ஆள வந்த சக்ரவர்த்தி. சுக்ரரின் கொடிவழியின் அருமணி’ என்றாள். நான் ‘ஆம்’ என்றேன்.

“அவள் ‘மைந்தன் பிறந்தமை நாட்டில் பதினெட்டுநாள் கொண்டாட்டமாக அமையட்டும். இருபத்தெட்டாம்நாள் அரையணி சூடும் விழவுக்கு பதினெட்டு ஷத்ரியநாடுகளின் அரசர்களும் வந்தாகவேண்டும்’ என்றாள். ‘ஆம், உரிய ஆணைகளை பிறப்பிக்கிறேன்’ என்றேன். ‘ஆணைகளை பிறப்பித்துவிட்டேன். சாயை என்பொருட்டு அனைத்தையும் நோக்குவாள்’ என்றாள். ‘நன்று’ என்றேன். திரும்பும் வழியெங்கும் நகரில் கொண்டாட்டங்கள் உச்சம் கொண்டிருப்பதை கண்டேன். என் அரண்மனை உப்பரிகையில் நின்று நோக்கியபோது எங்கும் களிவெறியே கண்ணுக்குப்பட்டது. நான் எந்தப் பொருளுமில்லாமல் காமதேனுவைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்.”

பார்க்கவன் புன்னகையுடன் “மைந்தரைப்பற்றி தந்தை கொள்ளும் எண்ணங்களுக்கெல்லாம் எப்பொருளும் இல்லை. அவை அச்சத்தாலோ மிகைவிழைவாலோ ஆனவையாகவே இருக்கும்” என்றான். “மைந்தனுக்கு பெயரிடவேண்டும்… ஒரு நிமித்திகரை அழைத்துவருக!” என்றான் யயாதி. பார்க்கவன் ஒருகணம் எண்ணியபின் “நானறிந்த ஒருவர் இருக்கிறார்” என்றான். உச்சிப்பொழுதில்தான் அவரை அழைத்துவந்தான். கைகளும் தலையும் நடுங்கும் வயோதிகர். யயாதி எழுந்து அவரை வணங்கியதும் அவர் கைதூக்கி வாழ்த்தளித்து “எவருக்கோ மைந்தர் பிறந்திருப்பதாக சொன்னார்கள்” என்றார். “எனக்குத்தான்” என்று அவன் சொன்னான். “நன்று” என அவர் அமர்ந்து “நாளும் பொழுதும் குறிக்கப்பட்டுள்ளதா?” என்றார். “இதோ” என்று யயாதி ஓலையை அவரிடம் நீட்ட “எனக்கு விழிமங்கல். படியுங்கள்” என்றார் கிழவர். “உரக்க படியுங்கள்… செவிகளும் சற்று பழுது.”

யயாதி நிமிர்ந்து நோக்க பார்க்கவன் “இவர் தங்களை நினைவுகொள்ளப்போவதில்லை, எவரென உசாவவும் வாய்ப்பில்லை” என மெல்லிய குரலில் சொன்னான். யயாதி சலிப்புடன் தலையசைத்தான். அவர் அவன் படித்ததை மும்முறை கேட்டுவிட்டு பெருமூச்சுடன் தாடியைத் தடவியபடி சற்றுநேரம் அமர்ந்திருதார். பின்னர் “உயர்குடிப்பிறப்பு. ஆனால் எப்பயனுமில்லாத முன்னூழ். முன்னோர்முறையென வருநிலம் தவறும். அடைவதோ கெடுநிலமே ஆகும். கொடிவழியின் ஏழாவது மைந்தனே அரசன் என முடிசூடி அரியணையமரும் ஊழ்கொண்டவன். சுமையெனத் தோளிலேறும் துயரத்துடன் அலைவதே வாழ்க்கை” என்றார்.

பார்க்கவன் போதும் என கைகாட்ட அதை காணாமல் அவர் சொல்லிக்கொண்டே சென்றார். “எங்கும் தனியன். எப்போதும் தயங்குபவன். தன் சிறுமையை உணர்ந்து அஞ்சுபவன். அவ்வச்சத்தால் எதிரிகளைப் பற்றி கற்பனை செய்துகொள்வான். எதிரிகளை கற்பனை செய்துகொள்பவன் நாளடைவில் அவர்களை எதிரிகளென அடைவான். அவர்களிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டிருப்பான். நிழலை அஞ்சும் சிற்றுயிர், நிலைகொள்வது என்பது அதற்கில்லை.”

யயாதியே போதுமென கைகாட்டினான். “ஆனால் பொறாமை அழியா நெஞ்சம் கொண்டிருப்பான். உடன்குருதியனை எண்ணி எண்ணி ஒருநாளேனும் நல்லுறக்கம் கொள்ளும் பேறு இலாதவனாக இருப்பான்” என நிமித்திகர் தொடர்ந்தார். “ஆனால் நன்மைந்தர் பேறு உண்டு. விதைபெருகும் பாலைமரம். எவ்வனலும் எரிக்காத வேர் கொண்டவன். இவன் கொடிவழி குலமென்றாகி எக்காலமும் மண்ணில் வாழும்.”

யயாதி முகம் மலர்ந்து “அவ்வாறே ஆகுக!” என்றபின் “இவனுக்கான பெயரென்ன என்று உரைக்கலாகுமா?” என்றான். அவர் வெண்புள்ளி அலைந்த விழிகளை மேல்நோக்கி உயர்த்தி சிலகணங்கள் நிலைத்தபின் “மண்ணுக்குரியவன், மண்ணை விழைபவன் என்னும் பொருளில் ஒரு பெயரிடுக! திருஹ்யூ என்பது என் உள்ளத்தில் தோன்றுகிறது” என்றார். யயாதி “அதுவே ஆகட்டும். அவனுக்கு மண் கனியட்டும்” என்றான்.

நிமித்திகர் பெருமூச்சுடன் தன் மெலிந்த கைகளை நீட்டி கால்களை எளிதாக்கினார். யயாதி உரக்க “நிமித்திகரே, பிறிதொரு பிறவிப்பொழுதை சொல்கிறேன். கணித்தளிக்கவேண்டும்” என்றான். தாழ்ந்தகுரலில் “அரசே, வேண்டாமே” என்றான் பார்க்கவன். “இல்லை, அவர் உரைக்கட்டும். விழியின்மையால் அவர் பிறவிழிகளை காணாமலாகிவிட்டிருக்கிறார். அது அவரை மானுடத்திலிருந்து முற்றிலும் விலக்கியிருக்கிறது. காலத்தை மட்டுமே காண்பவராக அமர்ந்திருக்கிறார்” என்றான் யயாதி. “இரண்டாம் முறை நிமித்தம் நோக்குவதும் பெயர் நோக்குவதும் பிழை” என்றான் பார்க்கவன். “என்னால் இதை தவிர்க்கமுடியாது” என்றான் யயாதி.

மெல்ல முனகி உடல் அலுப்பை அகற்றியபின் “சொல்லும்” என்றார் நிமித்திகர். யயாதி யதுவின் பிறவிப்பொழுதை சொன்னான். “அரசகுருதி. அவைமுதன்மைகொண்ட இளமை. ஆனால் கொடிவழிவந்த நிலம் அகன்றுபோகும். புதுநிலம் தேடி அலையும் வாழ்க்கை. காட்டெரி என அழித்துப் பரவுவது. அணையா பெருவிருப்பும் காழ்ப்பும் கொண்டு கணம்தோறும் உயிர்மிகும் உள்ளம். மைந்தர்ச்செல்வம் மிகும். கொடிவழிகள் பெருகும்.” யயாதி படபடப்பை அடக்கியபடி “நான் ஒன்றை மட்டும் கேட்க விழைகிறேன், கணியரே. இப்பிறப்பாளனின் வருகைநோக்கம் என்ன?” என்றான். “பெருங்குலம் ஒன்றின் முதல் விதைமுத்து இவன். என்றுமழியா பெருக்கு இவன் குருதியில் துளிக்கும்” என்றார் அவர்.

அவன் கேட்பதற்குள் “அவன் ஊழை சுட்டும் ஒரு பெயர் நன்று. அவ்வாறே ஆகுக என்னும் பொருளில் யது” என்றார். யயாதி வியப்புடன் “அதுவே அவன் பெயர் நிமித்திகரே. ஆனால் காற்று என அதற்கு எங்கள் முதுநிமித்திகர் பொருள் சொன்னார்” என்றான். நிமித்திகர் புன்னகைத்து “அதுவும் நான் சொன்ன பொருளில்தானே?” என்றார். யயாதி “நன்று!” என எழுந்து அவரை வணங்கினான். பார்க்கவன் அளித்த பொற்காசுகளை எடுத்து வணங்கி அவருக்கு அளித்தான். அவர் மெல்ல எழுந்து தன்னை அழைத்துச்செல்லும்படி கோரி கைநீட்டினார்.

அதன்பின் மற்ற மைந்தருக்கு அவன் நிமித்தம் நோக்கவில்லை. துர்வசு என தேவயானியின் இரண்டாம் மைந்தனுக்கு அவள் அமைத்த நிமித்திகர்களே பெயரிட்டனர். அனுதிருஹ்யூ என இரண்டாமவனுக்கு சர்மிஷ்டையே பெயரிட்டதாக செய்தி வந்தது. சர்மிஷ்டையின் மூன்றாவது மைந்தன் பிறந்தபோது யயாதி மிக அருகில்தான் இருந்தான். அந்தக் குடிவிழவிலிருந்து நேராகவே அசோகவனிக்கு வந்தான். மைந்தனை கையில் வாங்கிய முதற்கணம் எழுந்த எண்ணம் அந்த முகம் நன்கறிந்த ஒன்று என்பது. தன்முகம் அல்ல. சர்மிஷ்டையின் முகமும் அல்ல. எவர் முகம்? சற்று முன்மடிந்த காது. புடைத்த நெற்றிமுழைகள். வெறும் உளத்தோற்றமா? அருகே நின்றிருந்த பார்க்கவன் அவன் உள்ளத்தை உணர்ந்தவனாக “முகங்கள் நேர் அச்சென நம்மிலிருந்து செல்வதில்லை. நம் குருதியில் குமிழிகளாக நம் மூதாதையர் அனைவரின் முகங்களும் இருக்கின்றன என்பார்கள்” என்றான்.

அவன் தத்தளிப்புடன் குழந்தையை முத்தமிட்டபடி திருப்பித்திருப்பி நோக்கிக்கொண்டிருந்தான். மெல்லுதடுகள் கூம்பியிருக்க விழிமூடி துயில்கொண்டிருந்தது. “சைத்ர பஞ்சமி. விடிகாலை முதல்நாழிகை மூன்றாவது பாதம் முப்பத்தெட்டாவது கணம்” என்றாள் செவிலி. அவன் அந்த மணல்நாழிகையிலிருந்து உதிர்ந்த மணல்கணங்கள் மெல்ல நிறைந்து மூன்றாவது பாதமென வரையப்பட்ட கோட்டை கடந்து மேலெழுந்து ஒவ்வொன்றாக உதிர்வதை உள்ளுணர முடிந்தது. முப்பத்தெட்டாவது மணல்கணம் உதிர்ந்தபோது அவன் உள்ளம் மின்னியது. “அது எந்தை புரூரவஸின் பிறவிப்பொழுதல்லவா?” என்றான். “அவர் முகம். நம் அரண்மனையின் சுவரில் வரையப்பட்டுள்ள அவர்முகம்தான் இது” என்று கூவினான்.

பார்க்கவன் வியப்புடன் “ஆம், அவருடையது நாற்பத்தேழாவது கணம்” என்றான். யயாதி பேருவகையுடன் மைந்தனை நெஞ்சோடணைத்து “இவனுக்கு நான் புரூரவஸ் என பெயரிடுகிறேன். இவன் எந்தை எழுந்துவந்த வடிவம்” என்றான். பார்க்கவன் “அரசே, அது அரசகுலப் பெயர். இவருக்கு அதை இடுவது ஐயத்திற்கிடமாக்கும்” என்றான். “இல்லை, வேறுபெயர் இட நான் ஒப்ப மாட்டேன்” என்றான் யயாதி. “அப்பெயர் வேண்டாம்… புரு என்றே வைக்கலாம்… அது பொதுப்பெயர்தான்” என்றான் பார்க்கவன். யயாதி மெல்ல தளர்ந்து “ஆம், வேறுவழியில்லை. ஆனால் நானறிவேன் அது என் மூதாதையின் பெயர். ஒருநாள் அவையில் அதை கூவிச்சொல்வேன்” என்றான்.

சர்மிஷ்டை உள்ளே வந்து வெளியே நோக்கி தலையசைக்க மைந்தர் மூவரும் உள்ளே வந்தனர். திருஹ்யூவின் மெலிந்த உள்வளைந்த தோள்களும் நீளமுகமும் எப்போதும் முதல்நோக்கில் ஒரு விலக்கத்தையும் சில கணங்களுக்குப்பின் நெகிழ்வையும் அன்பையும் அவனிடம் எழுப்புபவை. மென்மீசை உதட்டுக்குமேல் பாசிப்படர்வுபோல தெரிந்தமை யயாதியை உவகைகொள்ளச் செய்தது. அனுத்ருஹ்யூ மூத்தவனைப்போலவே தோற்றம்கொண்டவன், அவனை மூத்தவன் என்று எண்ணி மயங்குவது யயாதியின் வழக்கம். பின்னால் வந்து நின்ற புருவின் புன்னகை மாறாத விழிகளையும் சிவந்த உதடுகளையும் நோக்கியபின் யயாதி விழிதிருப்பிக் கொண்டான்.

புருவை யயாதி நேரடியாக நோக்குவதோ விழிநோக்கிச் சொல்லாடுவதோ இல்லை. ஒருகணம் நோக்கியபின் திரும்பி மூத்தவர்களிடமே பேசிக்கொண்டிருப்பான். ஆனால் உள்ளத்துள் அவன் முகமே திகழும். பேசியது அவனுடன்தான் என பின்னர் நினைவு மயங்கும். அது ஏன் என அவன் எண்ணி எண்ணி நோக்கியதுண்டு. அவன் தோற்றம்போல் இனியது பிறிதில்லை. பொன்னிறம். புவியாண்ட மூதாதையரின் முகம். ஆனால் அவ்விழிகள் கூரியவை, அவற்றின் முன் ஒளிந்துகொள்ளவே யயாதியின் உள்ளம் விழைந்தது. அவர்கள் விடைபெறுகையில் அனைவரையும் பேச்சுப்போக்கில் இயல்பாகத் தொட்டு நற்சொல் உரைப்பான். இறுதியாக புருவை மீண்டுமொருமுறை தொடுவான்.

“வருக…” என்று அழைத்தபடி யயாதி முன்னால் சென்றான். அவர்கள் உள்ளே வந்து தலைவணங்கி முகமன் உரைத்தனர். யயாதி “முறையான பயிற்சிகள் பெறவேண்டிய பொழுது. அன்னை சொல்லியிருப்பார்கள் அல்லவா?” என்றான். திருஹ்யூ “ஆம்” என்றான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 78

78. புதைவிலெழுதல்

யயாதியும் பார்க்கவனும் முதற்புலரியிலேயே அசோகவனியை சென்றடைந்தனர். வழக்கமாக கதிர் நிலம் தொடுவதற்கு முன்னரே கோட்டைவாயிலைக் கடந்து அரண்மனைக்குள் நுழைந்துவிடுவது அவர்களின் முறை. அவர்கள் வந்து செல்வது காவலர் தலைவனுக்கும் மிகச்சில காவலருக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. அசோகவனி அவர்களின் அரசனை கண்டதே இல்லை. அரசமுறையாக வரும் ஒற்றர்கள் என்றே அவர்களை காவலர்தலைவனன்றி பிறர் அறிந்திருந்தனர்.

தலைவனின் மாளிகையின் மேலடுக்கு முழுமையாகவே யயாதிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு அவன் வந்து தங்கும்போது சர்மிஷ்டை தன் மைந்தருடனும் தோழியுடனும் புறவாயிலினூடாக உள்ளே வந்து அவனுடன் இருப்பாள். பார்க்கவன் அங்கிருந்த காவலர்களையும் ஏவலர்களையும் சேடியரையும் ஒவ்வொருவராக தேர்ந்து அமைத்திருந்தான். அங்கிருந்து ஒரு சொல்லும் வெளிக்கசியலாகாதென்று எப்போதும் கூர்கொண்டிருந்தான். அச்சேடியரும் பிறரும்கூட யயாதியை மூத்த ஒற்றர்களில் ஒருவரென்றே அறிந்திருந்தனர்.

தேவயானியின் தோழி சாயை மூன்றுமுறை அங்கு வந்து காவலர் மாளிகையில் தங்கி ஊர்க்காவலையும் எல்லைச் செய்திகளையும் ஆராய்ந்து திரும்பினாள். அந்த வரவுகள் ஒவ்வொன்றையும் தன் மந்தணக்காப்புமுறை சீராக உள்ளதா என்பதை அறிவதற்கான தருணங்களாக பார்க்கவன் எண்ணிக்கொண்டான். ஒவ்வொரு முறை அவள் வந்துசென்ற பின்னரும் பதினைந்து நாட்கள் முள்முனைத்தவம் செய்தான். தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டதுபோல் குருதியனைத்தும் தலைக்குள் தேங்க எங்கிருக்கிறோம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கடந்து சென்றன அந்நாட்கள்.

பின்னர் மணற்கடிகை தலைகீழ் என திரும்பும். குருதி வடிந்து உடல் ஓய்ந்து தலை ஒழியும். அதன்பின் சில நாட்கள் தன்னுள் எழும் விடுதலையை, தன்னம்பிக்கையை, அதன் விளைவாக அனைத்துச் சொற்களிலும் உடலசைவுகளிலும் குடியேறும் உவகையை தன் வாழ்வின் அரிய இனிமைகளில் ஒன்றாக அவன் எண்ணினான். ஆனால் அந்த நிறைவு தன் செயல்களில் பொருட்டின்மையை உருவாக்கிவிடலாகாதென்றும் தனக்கு ஆணையிட்டுக்கொண்டான். பதினாறாண்டுகள் ஒரு மந்தணத்தை கண்பெருகி செவிபெருகி கைவிரித்து புவியாளும் பாரதவர்ஷத்தின் முதல் சக்ரவர்த்தினியிடமிருந்து மறைத்துவிட்டதை எண்ணும்போது சில தருணங்களில் அவன் உள்ளம் அறியாத அச்சமொன்றால் அசைவிழக்கும்.

தொலைவிலேயே முதல் அணிவளைவை அவர்கள் கண்டனர். முதலில் அது என்னவென்றே தெரியவில்லை, மரங்களுக்குமேல் ஒரு வண்ண மலைமுகடு என தெரிந்தது. முகிலில் சில மானுடர் அசைவதுபோல. அது அணிவளைவென உணர்ந்ததும் யயாதி திரும்பி நோக்க பார்க்கவன் “அரசியை வரவேற்க அசோகவனிக்குச் செல்லும் சாலையில் ஏழு அணிவளைவுகள் அமைக்கவிருப்பதாக அறிந்தேன்” என்றான். “அவள் இங்கிருந்து செல்லப்போவது மிஞ்சிப்போனால் ஏழு நாட்கள். அதற்கு மூங்கிலால் ஆன அணிவளைவுகள் போதுமே? இவர்கள் பெருமரத்தடிகளை நட்டு மரப்பட்டைகளை அறைந்து கட்டடங்களைப்போல அல்லவா அவற்றை எழுப்புகிறார்கள்?”

பார்க்கவன் “அவற்றை அமைக்கையில் சிற்பியரும் தச்சரும் எண்ணுவதொன்றே, எந்நிலையிலும் அவை சரிந்துவிழக்கூடாது. சரிந்து விழுமென்றால் அனைவரும் நிரைநிரையாக கழுமரம் நோக்கி செல்ல வேண்டியிருக்கும். இவர்கள் ஒவ்வொருவரையும் இரவில் எழுப்பி அவர்கள் கனவில் கண்டதென்ன என்றால் கொல்விழி கொண்ட சாயை என்பார்கள்” என்றான். யயாதி “எப்படி அத்தனை அஞ்சும் ஒருவரை அவர்கள் விரும்புகிறார்கள்?” என்றான். “அவர்கள் அஞ்சுவது சாயையை. பேரளியின் திருவுருவான அரசியை அல்ல” என்றான் பார்க்கவன்.

முதல் அணிவளைவின் மீது அந்த முதலொளிப்பொழுதிலேயே தச்சர்களும் பணியாட்களும் தொற்றி அமர்ந்திருந்தனர். மர ஆப்புகளை அறைந்தபடியும் கயிறுகளை முறுக்கிக் கட்டியபடியும் இருந்தவர்கள் புரவிக்குளம்படி கேட்டு திரும்பி நோக்கி ஓசையழிந்தனர். “அவர்கள் ஒவ்வொருவரையும் ஆளும் அச்சத்தை அவ்வமைதியிலேயே காண முடிகிறது” என்று பார்க்கவன் சொன்னான். யயாதி “இவர்கள் கொண்டுள்ள அச்சத்திற்கு சற்றும் குறைந்ததல்ல எனது அச்சம்” என்றான்.

ஏழு அணிவளைவுகளிலும் பறவைகள் போலவும் ஓணான்களைப் போலவும் பணியாட்கள் செறிந்திருந்தனர். குளம்படியோசை அவர்கள் அனைவரது அசைவையும் ஓசையையும் நிலைக்க வைத்தது. மேலிருந்து பொழிந்த விழிநோக்குகளின் கீழே அவர்கள் இயல்பாகத் தோன்றும்பொருட்டு விழியலைத்து அனைத்தையும் நோக்கியபடி சென்றனர். கோட்டை முகப்பு முழுமையாகவே எடுத்துக் கட்டப்பட்டிருந்தது. இருபுறமும் வெட்டியெடுக்கப்பட்ட சேற்றுக்கல் அடுக்கிய அடித்தளம்மேல் செங்கல் அடுக்கி சுண்ணக்காரையிடையிட்டுக் கட்டப்பட்ட கோட்டை மூன்று ஆள் உயரத்தில் விரிந்து சென்று திசை மூலையில் வளைந்தது. செங்கல்லடுக்கிற்குமேல் மரத்தாலான ஆளுயரக் கட்டுமானத்தின் மீது இருபுறங்களிலுமாக எட்டு காவல் உப்பரிகைகள் அமைந்திருந்தன. கோட்டைவாயிலின் நிலைத்தண்டுகளுக்குமேல் நான்கு புறமும் திறந்த மூன்று உப்பரிகை அடுக்குகள். மைய உப்பரிகையின் உச்சியில் பெருமுரசு அமைந்த மேடை.

“முந்நூறு வில்லவர்களை இவ்வுப்பரிகையில் இருக்க வைக்க முடியும்” என்று பார்க்கவன் சொன்னான். “முகப்பில் மட்டுமே இப்போது கோட்டையை கட்டியிருக்கிறார்கள். முற்றிலும் வளைத்துக் கட்ட ஓராண்டாகலாம். அதற்குப்பின் குருநகரியின் வடமேற்கு எல்லையில் முதன்மையான காவலரணாக இச்சிற்றூர் இருக்கும். இங்கு வருவதற்கான தேர்ப்பாதை ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது. ஓராண்டில் அதுவும் பணி முடியுமென்றால் நமது காலத்திலேயே அசோகவனி ஒரு சிறு நகராக எழுந்துவரக்கூடும்.” கோட்டைக்கட்டுக்கு வலப்பக்கம் இருபது செக்குகள் எருதுகள் இழுக்க சுண்ணத்துடன் மணல் அரையும் ஒலி எழ சுற்றிக்கொண்டிருந்தன. மணற்குவியல்களுக்கு அப்பால் ஊழியர்கள் மணலை இரும்புவலைமேல் வீசி அரித்துக்கொண்டிருந்தனர். நீற்றப்பட்ட சுண்ணக் குவைகள் பனியில் குளிர்ந்து பளிங்குப்பாறைபோல ஆகி வெட்டப்பட்ட விளிம்புகளில் வெண்ணைவழிவுடன் தெரிந்தன.

“இங்குள்ள அனைத்தும் மாறிவிடும். இல்லங்கள் வளர்ந்து அடுக்குகளாகும். இச்சாலைகளில் மனிதர்கள் தோள்முட்டி நெரிபடுவார்கள். இங்குள்ள மக்களின் உள்ளங்களில் மாறாதிருக்கும் சோம்பல் முற்றும் அகலும். இன்று நடக்கையிலும் அமர்ந்திருப்பவர்களின் சாயல்கொண்டிருக்கும் இவர்களின் முகங்கள் துயில்கையிலும் ஓடுபவர்கள்போல மாறிவிடும்” என்றான் பார்க்கவன். “சிற்றூர்கள் வான்நோக்கி வைத்த யானங்கள் போல, விண்ணளிப்பதை பெறவும் விண்ணுக்கு படைக்கவும். நகரங்களோ அறியாத் திசை ஒன்றை நோக்கி சகடம் ஒலிக்க அதிர்ந்து பாய்ந்து கொண்டிருக்கும் தேர்கள். இச்சிற்றூர் இதோ அசைவுகொள்ளத் தொடங்கியிருக்கிறது.”

அவர்களை அடையாளம் கண்டுகொண்ட கோட்டைக்காவலன் வந்து சற்றே தலைவணங்கி உள்ளே செல்லும்படி பிறரறியாது செய்கை காட்டினான். கோட்டைக்கு அப்பால் முகமுற்றத்தில் இரண்டு கோட்டைக்கதவுகளை நிலத்தின்மேல் இட்டு அவற்றின் மேலமர்ந்த தச்சர்கள் உளியும் கூடமுமாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். அவற்றின் சட்டகங்களில் இரும்புக் குமிழிகள் பொருத்தப்பட்டுக்கொண்டிருந்தன. பார்க்கவன் திரும்பிப் பார்த்தபின் “அவற்றுக்கு தச்சர்களின் மொழியில் பன்றிமுலைகள் என்று பெயர்” என்றான். யயாதி திரும்பி நோக்கி “ஆம், உண்மைதான். இனி அச்சொல்லால் அன்றி நம்மாலும் அதை நினைவுகூர முடியாது” என்றான்.

மரச்சட்டகங்களை கட்டடக்கூரைகளுக்கு மேலேற்றுவதற்கான வடம்சுற்றப்பட்ட உருளைகளின் அருகே யானைகள் கந்துகளில் கால்சங்கிலி தளைக்கப்பட்டு நின்று துதிக்கைகளால் தழை சுருட்டி எடுத்து கால்வளைத்து தட்டி மண் உதிர்த்து கடைவாயில் செருகி தொங்கும் தாடைகளால் மென்றுகொண்டிருந்தன. உண்ணுதலின் உவகையில் அவற்றின் கரிய உடல்கள் முன்னும் பின்னும் அசைந்தாடின. வால் சுவை திளைக்கும் நாவென நெளிந்தது. அவற்றின் மத்தகங்களிலும் பிடரிகளிலும் அமர்ந்த சிறு புட்கள் குத்தி சிறகடித்தெழுந்து கல்லுரசும் ஒலியெழுப்பி மீண்டும் அமர்ந்து விளையாடின. அவற்றின் கரிய பேருடலுக்குள் இருந்து ஆத்மா விடுதலைபெற்று காற்றில் எழுந்து எடையின்மையில் திளைப்பதாக யயாதி எண்ணிக்கொண்டான். அப்பால் சாலமரத்தின் நிழலில் அவற்றின் பாகன்கள் அமர்ந்து சோழியும் கல்லும் ஆடிக்கொண்டிருந்தனர். அவர்களின் பூசல் ஓசை எழுந்து அடங்கியது.

அசோகவனியின் தெருக்கள் பலமடங்கு பெருகிவிட்டன என்று தோன்றியது. சாலையின் இருபுறமும் வணிகர்நிரைகள் தோள்முட்டி அமர்ந்து பொருட்களை கடைபரப்பி கொடிகளை அசைத்து கூவி விற்றுக்கொண்டிருந்தனர். வெண்களிமண் பாண்டங்கள், பளிங்குச்செதுக்குக் கலங்கள், இரும்புவார்ப்பு அடுமனைக் கலங்கள், செம்புக் கிண்ணங்கள், பித்தளைக் குவளைகள், வெண்கல விளக்குகள், உப்புக்கட்டிகள், வெவ்வேறு வடிவுகொண்ட படைக்கலங்கள், மாந்தளிர் என மின்னும் தோல்பொருட்கள், மரவுரிகள், கலிங்கப் பருத்தியாடைகள், சிறுபொன்னணிகள், மரச்செதுக்குப் பாவைகள். அசோகவனி அவற்றில் பெரும்பாலானவற்றை அதற்கு முன்னர் பார்த்தே இராது எனத் தெரிந்தது.

தங்கள் இல்லங்களிலிருந்து எழுந்து வந்து தெருக்களெங்கும் நிறைந்து பெருகிய மக்கள் உரத்துக் கூவி விலைபேசியும், சிரித்தும், பூசலிட்டும் ஒலியென ததும்பினர். அவர்களினூடாக எடைமிக்க சகடங்கள் மண்ணில் அழுந்தி ஒலிக்க மரச்சட்டங்களையும் பலகைகளையும் ஏற்றிய வண்டிகளை கோவேறு கழுதைகளும் எருதுகளும் இழுத்துச்சென்றுகொண்டிருந்தன. அவைகளை ஓட்டியவர்களும் உடன் நடந்தவர்களும் எழுப்பிய ஆள்விலக்குக் கூச்சல்களும் விலங்கு ஓட்டும் ஓசைகளும் ஊடு கலந்தன. அவர்களின் புரவிகள் மீது மக்கள் வந்து முட்டிக்கொண்டே இருந்தனர். அவர்களின் உடல்களுக்கு கூட்டமும் நெரிசலும் பழகவில்லை.

வணிகர்கள் வந்து தங்கிய யானைத்தோல் கூடாரங்கள் வீடுகளுக்கு அப்பால் தெரிந்த புறமுற்றங்களில் கற்பாறைகள் என, காட்டெருமைகள் என கரிய தொகைகளாக பரந்திருந்தன. அவற்றில் பறந்த கொடிகள் காற்றில் புறாச் சிறகென படபடத்தன. நகரின் அத்தனை கட்டடங்களிலும் பணி நடந்துகொண்டிருந்தது. அரக்கும் மெழுகும் பூசப்பட்ட கூரைகளில் காலையொளி நீர்மையென வழிந்தது. செந்நிறமும் பொன்னிறமும் மயில்நீலமும் கலந்து பூசப்பட்ட இல்லங்கள் புத்தாடை அணிந்து நாணி நிற்பவை போலிருந்தன. யயாதி “ஒரு வருகை சிற்றூரை நகரமாக்கிவிடுவது விந்தை!” என்றான். “படைகள் தங்குமிடங்கள் ஊர்களாவதை கண்டிருக்கிறோம். பேரரசியின் கால்பட்ட இடங்களில் எல்லாம் நகரங்கள் முளைக்கின்றன என்கிறார்கள் சூதர்” என்றான் பார்க்கவன்.

“அவளே அதை உருவாக்குகிறாள்” என்றான் யயாதி. “செல்லுமிடம் அனைத்தையும் திரு பெய்து பொலிவுறச் செய்வது பேரரசியின் வழக்கம்தான்” என்று பார்க்கவன் தொடர்ந்தான். “நகரமென்றாவதே அரசின் வளர்ச்சி என்பதில் அவர்களுக்கு ஐயமில்லை.” யயாதி “ஆம், அது அரசுசூழ்தலின் ஒரு கொள்கை. ஒரு சிற்றூர் எதையும் வெளியிலிருந்து பெற்றுக்கொள்வதில்லை. வெளியே எதையும் கொடுப்பதும் இல்லை. நகரங்களில் செல்வம் உட்புகுந்து சுழன்று நுரைத்துப்பெருகி விளிம்புகடந்து வெளியே வழிந்துகொண்டே இருக்கிறது. அருவி வீழும் கயம் போன்றது நகர் என்று அர்த்தசூத்ரம் சொல்கிறது. நகரங்கள் பெருகுவது நாடு பொலிவதன் அடையாளம்” என்றான். பார்க்கவன் “அரசி வரும்போது இவ்வூரின் பெயரும் மாறுகிறது. இதை அசோகநகரி என அழைக்கவேண்டுமென அரசி ஆணையிடப்போகிறார்கள்” என்றான்.

யயாதி திரும்பி நோக்கியபோது அவ்வூரை ஒட்டுமொத்தமாக பார்க்கமுடிந்தது. அசோகநகரி. ஒரே இரவில் மண்ணுக்குள் இருந்து பல்லாயிரம் நாய்க்குடைகள் எழுவதை அவன் வங்கத்தின் காடுகளில் கண்டிருக்கிறான். மண்ணுக்குள் அவை முன்னரே முழுதாக வளர்ந்து காத்திருந்தன என்று தோன்றும். அந்நகர் எங்கோ இருந்திருக்கிறது. முழுமையாக ஒருங்கி, தருணம் காத்து.

tigerஅவர்கள் அரண்மனையை அடைந்தபோது இளவெயில் வெளித்துவிட்டிருந்தது. அரண்மனை முழுமையாகவே மறுஅமைப்பு செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. அதன் இருபுறமும் இணைப்புக் கட்டடங்கள் இரண்டு கைகள்போல நீண்டிருந்தன. கூரைப் பணிகள் அப்போதும் முடிவடையவில்லை. பலகைகளும் சட்டங்களும் தொங்கும் சரடுகளும் மூங்கில் சாரங்களுமாக நின்றிருந்த மாளிகையின் பின்னணியில் நூற்றுக்கணக்கான வீரர்கள் வெவ்வேறு உயரங்களில் தொற்றி அமர்ந்தும் முற்றமெங்கும் பரவியும் கூச்சலிட்டு பணியாற்றிக்கொண்டிருந்தனர். பெருமுற்றம் முழுக்க மரச்சட்டங்களும் மரப்பலகைகளும் அட்டிகளாக பரவியிருந்தன. அவற்றை எடுத்து மேலே செல்லும் வடங்கள் சுற்றப்பட்ட சகடங்களை யானைகள் துதிக்கையால் பற்றிச் சுழற்றின. சாரங்களின் மேல் மெல்ல மெல்ல பெரும்சட்டம் ஒன்று அசைந்து தயங்கி மீண்டும் உயிர்கொண்டு ஏறிச்சென்றது.

கற்பாளங்களையும் ஓடுகளையும் கொண்டுவந்து இறக்கியபின் எருதுகள் ஆங்காங்கே தறிகளில் கட்டப்பட்டு வால் சுழற்றி கொம்பு குலுக்கி சலங்கை ஓசையுடன் வைக்கோல் மென்றுகொண்டிருந்தன. வண்டிகள் வந்து வந்து உருவான குழிவழிப் பாதையில் இரு எடை வண்டிகளை எருதுகள் தசை புடைக்க தலை தாழ்த்தி இழுத்துவந்தன. கோவேறு கழுதைகளால் இழுக்கப்பட்ட வண்டிகள் மறுபக்கம் சற்று சிறிய சாலை வழியாக வந்து நின்று அரக்குப்பொதிகளை இறக்கின. அவற்றை இறக்கி அடுக்கிய வீரர்கள் மூங்கில் வைத்து அவற்றை நெம்பி சீரமைத்தனர். கயிறுகட்டி காவடியில் பொதிகளை தூக்கிக்கொண்டு சென்றவர்கள் எழுப்பிய ஓசைகள் போர்க்களம்போல ஒலித்தன. அரக்கு உருகும் மணம் தொலைவிலிருந்து எங்கோ எழுந்துகொண்டிருந்தது.

அவர்கள் வந்ததை உள்ளிருந்து பார்த்த காவலர் தலைவன் உக்ரசேனன் ஓடிவந்து யயாதியின் புரவியின் கடிவாளத்தை பற்றிக்கொண்டு முகமன் கூறி தலைவணங்கினான். “பொறுத்தருளவேண்டும் அரசே, பணி தொடங்கி நெடுநாட்களாகின்றது. வெறிகொண்டு வேலை செய்துகொண்டிருக்கிறோம். இன்னும் பணி முடிவடையவில்லை. அரசி வருவதற்கு இன்னும் சின்னாட்கள் இருக்கிறதென்று எண்ணும்போதே நெஞ்சிலும் வயிற்றிலும் அனல் அச்சுறுத்துகிறது” என்றான். கவலையுடன் திரும்பி அரண்மனையை நோக்கிவிட்டு “துயில் மறந்து பணியாற்றுகின்றோம். எப்போது இந்த வேலை முடியுமென்றே தெரியவில்லை. இன்னும் பல கட்டடங்களுக்கு கூரைப்பொருத்தே முடியவில்லை” என்றான்.

பார்க்கவன் “முடிந்துவிடும். எப்போதும் அது அப்படித்தான். இறுதி சில நாட்களில் நாம் செய்யும் பணி பலமாதப் பணிகளுக்கு நிகரானது. எப்படி முடிந்ததென்று நாமே அறியாதிருப்போம். நம்முடன் வாழும் தெய்வங்கள் நம் கைகளையும் சித்தத்தையும் எடுத்துக்கொள்ளும் தருணம் அது. பணி முடிந்தபின்னர் நம் வாழ்நாள் முழுக்க இம்மூன்று நாட்களில் வாழ்ந்ததைப்பற்றியே பேசிக்கொண்டிருப்போம். மானுடன் வாழ்வது அவன் எய்தும் உச்சங்களில் மட்டுமே” என்றான். “ஆம், அதையே நம்பிக்கொண்டிருக்கிறேன். தெய்வங்களின் விருப்பை” என்றான் உக்ரசேனன்.

“வருக!” என்று அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான். புரவிகளை லாயத்திற்கு அனுப்பிவிட்டு இருவரும் படியேறி கூடத்திற்கு சென்றனர். அப்பெருங்கூடமெங்கும் தரையில் அரக்கை உருக்கி ஊற்றி பலகைகளை இணைத்து தோலால் உரசி மெருகேற்றிக்கொண்டிருந்தனர் ஏவலர். உக்ரசேனன் “நெய்விளக்கின் ஒளியில் இரவிலும் பணி நடக்கின்றது. இந்தப் பணிச்சாலைக்குள்ளேயே நானும் உயிர் வாழ்கிறேன்” என்றான். “எனது அறைகள் எங்கே?” என்று யயாதி கேட்டான். உக்ரசேனன் “அவற்றைப் பொளித்து கூரையை உயர்த்தி பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் பொருட்களனைத்தையும் முதற்தளத்திலுள்ள அறையில் கொண்டு வைத்திருக்கிறேன். தாங்கள் அங்கு தங்கலாம்” என்றான்.

பார்க்கவன் “நான் சென்று ஒற்றர்களையும் ஏவலர்களையும் சந்தித்து உசாவுகிறேன். அனைத்தும் நன்று நிகழ்ந்துவிட்டன என்றால் இன்றிரவு நன்கு துயிலமுடியும் என்னால்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான். உக்ரசேனன் “நல்ல அறைகள் அல்ல. ஆனால் முடிந்தவரை தூய்மை செய்திருக்கிறேன்” என்றபடி யயாதியை அழைத்துக்கொண்டு சென்று தாழ்ந்த கூரை கொண்ட அறையை அடைந்தான். யயாதி வழக்கமாக பயன்படுத்தும் தோலுறையிட்ட பீடங்களும், இறகுச் சேக்கையிட்ட மஞ்சமும், சுவடிப் பேழைகளும் ஆடைப் பெட்டிகளும் அங்கு கொண்டு வைக்கப்பட்டிருந்தன. தூய்மை செய்யப்பட்டிருந்தாலும் அங்கே புழுதியின் மணம் எஞ்சியிருந்தது. அங்கிருந்த அடைக்கலக்குருவி ஒன்றின் கூடு பிரிக்கப்பட்டிருக்கக்கூடும். அது அவர்கள் உள் நுழைந்ததும் சிட் என ஒலியெழுப்பி காற்றில் தாவி திறந்த சாளரம் நோக்கி சென்றமர்ந்தது.

யயாதி “நான் இங்கிருந்து கிளம்பியதுமே இவை அனைத்தும் மறைக்கப்பட்டுவிடவேண்டும். இதைப் பார்த்தாலே நான் இங்கு வந்து தங்குவது எவருக்கும் புலனாகிவிடும்” என்றான். உக்ரசேனன் “ஆம் அரசே, அதை நானும் எண்ணியிருக்கிறேன். பேரரசி செல்வது வரை கருவூல அறையிலேயே இருக்கும்” என்றான். பெருமூச்சுடன் கைகளை விரித்து உடலை வளைத்து எலும்பொலிகள் எழுப்பி “நான் நீராட வேண்டும்” என்று யயாதி சொன்னதும் “ஆவன செய்கிறேன். அரசியிடம் தாங்கள் வந்த செய்தியை தெரிவிக்கிறேன்” என்றபின் உக்ரசேனன் வெளியே சென்றான். யயாதி பீடத்தில் அமர்ந்ததும் இரு ஏவலர்கள் வந்து நாடாக்களை அவிழ்த்து அவன் தோல்காலணிகளை கழற்றினர். கால்விரல்களுக்கிடையே விரல் கொடுத்து இழுத்து நீவி குருதி ஓட்டத்தை சீர்படுத்தினர் அந்தத் தொடுகையால் மெல்ல இளைப்பாறுதல் கொண்டு கால்களை நீட்டியபடி உடல் தளர்த்தி கண் மூடி தலை சாய்த்தான்.

வெறுமனே அஞ்சிக்கொண்டிருக்கிறேன், இவை அனைத்தும் சீரடைந்துவிடும் என்று அப்போது தோன்றியது. உடல் ஓய்வுகொள்ளும்போது உள்ளமும் ஓய்வை நாடும் விந்தையைப்பற்றி எண்ணிக்கொண்டான். எழுந்து சென்று நிலையாடியில் தன் உருவை பார்த்தான். தாடியில் ஓடிய சில வெண்மயிர்களை தொட்டபின் விரல்களால் கண்களுக்குக் கீழே மடிந்திருந்த மென்தசையைத் தொட்டு இழுத்துப்பார்த்தான். பார்க்கவனிடம் உணர்ச்சிப்பெருக்குடன் சொன்ன காதல் நிகழ்வுகளில் அவன் மறைத்த ஒன்றுண்டு. சர்மிஷ்டையிடம் தன் அன்பைச் சொல்வதற்கு ஒத்திப்போட அவன் கொண்டிருந்த தடைகளின் பட்டியலில் கூறவிட்டுப்போனதே முதன்மையானது. தன் அகவையைக் குறித்து அவன் கொண்டிருந்த அச்சம்.

அந்த அகவசந்தகாலத்தில் ஒவ்வொரு நாளும் ஆடியில் தன் முகத்தை பார்ப்பதனூடாகவே அவன் பொழுதுகள் கழிந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு முறை நோக்குகையிலும் அகவை மிகுந்து வருவதுபோலத் தோன்றியது. உள்ளம் உவகை கொண்டு கண்கள் பொலிவுறும் தோறும் முகத்தின் முதிர்ச்சி மிகுந்து வந்தது. புன்னகை மாறாத அவன் முகத்தில் அமைந்து ஐயத்துடன் விழிகள் அவன் முகத்தை வேவுபார்த்தன. அவளுடன் இருந்த இரவில் அவன் கேட்ட முதல் வினாவே தன் அகவையைக் குறித்துதான். அவள் சிணுங்கி அவன் கையை மெல்ல அடித்து “என்ன சொல்கிறீர்கள் என்று தெரிகிறதா? என்னை உசாவி நோக்குகிறீர்களா?” என்றாள்.

“சொல், காதல்கொள்வதற்குரிய அகவை இல்லை அல்லவா எனக்கு?” என்றான். “உங்களுக்குத் தெரியும், அப்படி அல்ல என்று. உங்கள் இளமையை எவரும் சொல்லி உங்களுக்கு அறிவிக்க வேண்டியதில்லை” என்று அவள் சொன்னாள். “இல்லை. நான் ஆடி நோக்குவதுண்டு” என்றான் அவன். “ஆடியில் உள்ளிருந்து நோக்குவது உங்கள் உள்ளே விழைந்திருக்கும் அந்த இளஞ்சிறுவன். அவனுக்கு அகவை மிகையாகத் தெரியலாம். உங்கள் ஆற்றலையும் துள்ளலையும் நோக்கும் எவருக்கும் அகவை என எதுவும் தெரியாது” என்று அவள் சொன்னாள். அவன் விரும்பியது அது. பொய்யென்றே ஆகலாம் எனினும் அவள் அப்படி சொல்லவேண்டுமென்று அவள் அறிந்திருப்பதை அத்தருணத்தில் மிகவும் விரும்பினான்.

பின்னர் ஓரிரு நாட்களிலேயே அகவை பற்றிய கவலைகள் மறைந்தன. அக்கவலையே இல்லாமல் ஆக்கியது அவளுடைய அழகின்மை. அதை எண்ணிக்கொண்டதும் பிறர் அறியாமல் உடலுக்குள் புன்னகைத்துக் கொண்டான். அவள் பேரழகியென்றிருந்தால் அகவையைக் குறித்த தன் கவலைகளிலிருந்து ஒருபோதும் விடுபட்டிருக்க மாட்டான். அவளை அடைந்து அணுகி அணுக்கம் கொண்ட முதல் பொழுதிலேயே அவனை வந்தடைந்தது அவளின் அழகின்மைதான். மெலிந்த இளங்கருமைநிறத் தோள்கள். அஞ்சியவைபோல சற்று உள்வளைந்தவை. அவள் புயங்களும் மெலிந்தவை. புறங்கையின் நரம்புப் புடைப்புகள். கழுத்தின் எலும்புத்துருத்தல்.

ஒவ்வொன்றிலும் பெண்மை இருந்தது. இளமையும் மெருகும் இருந்தது. ஆனால் அழகென்று உளம் சொல்லும் ஒன்று விடுபட்டிருந்தது. வண்ணமல்ல வடிவமுமல்ல, அதற்கப்பால் பிறிதொன்று. ஒன்று பிறிதொன்றுடன் கொள்ளும் இசைவை இழந்துவிட்டிருந்தன. இவ்வளைந்த தோள்களுக்கு இம்மெலிந்த கைகள் பொருந்தவில்லையா? இடை இந்த நெஞ்சுக்குரியதில்லையா? ஆனால் அவள் அழகற்றவள் என்னும் எண்ணமே அவளுடனான உறவை முதன்மையாக முடிவு செய்தது.

அவளை ஒவ்வொரு முறை பார்க்கையிலும் எழும் முதல் எண்ணம் அவள் அழகற்றவள் என்பதே. இவள் அரசியல்ல,  வரலாற்றில் வாழ்பவளல்ல, சூதர் சொல்லில் நிலைகொள்பவளல்ல. அவ்வெண்ணம் அளிக்கும் விடுதலை உணர்வு அவள் மேலான அன்பென உருமாற்றம் அடையும். அன்பு மெல்ல அழகியென உருமாற்றி தீட்டத் தொடங்கும். அவள் கண்களை மட்டுமே நோக்கி அவை வெளிப்படுத்தும் உணர்வுகளிலிருந்து பிறிதொரு உடலை உள்ளம் வரைந்தெடுக்கும். மின்னிமின்னி மாறிக்கொண்டிருக்கும் உவகையும் ஐயமும், பொய்ச்சினமும், சிணுங்கலும். கனவிலாழும் அமைதி, களிமயக்கில் சிவந்து கனல்தல், தனிமையில் மயங்கி இமைசரிதலென அவனுக்கென முழுநாளையும் நடிக்க அவற்றால் இயலும்.

நீராட்டறை சேவகன் வந்து பணிந்து நிற்க உளப்பெருக்கு கலைந்து அவனுடன் சென்றான். இளவெந்நீர் நிறைந்த தொட்டியருகே அவன் அமர நீராட்டுச்சேவகர் இருவர் அவன் மேல் நீரூற்றி ஈஞ்சைப்பட்டையால் தேய்க்கத் தொடங்கினர். தொன்மையான ஆலயமொன்றில் மண்ணில் புதைந்து கண்டெடுக்கப்பட்ட கற்சிலை. அவர்கள் அதை உரசிக்கழுவி மீட்டெடுக்கிறார்கள் என எண்ணியதும் அவன் புன்னகை செய்தான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 77

77. துயரழிமரச்சாயல்

அசோகவனிக்கு பார்க்கவனுடன் கிளம்பியபோது யயாதி அமைதியிழந்திருந்தான். பார்க்கவன் “அனைத்தையும் விளக்கி அரசிக்கு விரிவான ஓலையை அனுப்பியிருக்கிறேன்” என்றான். யயாதி எரிச்சலுடன் “அவள் அரசுசூழ்தல் கற்றவள் அல்ல” என்றான். “ஆம், ஆனால் இத்தகைய நிலைகளில் பெண்டிர் அனைவரும் ஆண்களைவிட பன்மடங்கு நுண்ணுணர்வை காட்டுவர்” என்றான் பார்க்கவன். யயாதி பெருமூச்சுடன்  “ஆம், அதைவிட நுண்ணுணர்வை தேவயானியும் காட்டுவாள். வேட்டைவிலங்கு இரைவிலங்கைவிட நுண்மையும் விரைவும்கொண்டது என்பதனால்தான் காடு வாழ்கிறது” என்றான்.

“ஆம், ஆனால் என் நம்பிக்கை என்னவென்றால் பதினாறாண்டுகளுக்கு முன்பு அரசி சர்மிஷ்டைக்கு முதல் மைந்தன் பிறந்த செய்தியை ஒற்றர் சென்று சொன்னபோது நிகழ்ந்ததுதான்” என்றான் பார்க்கவன். அவர்கள் மாற்றுருவில் புரவிகளில் மலைப்பாதையினூடாக சென்றுகொண்டிருந்தனர். அந்தியெழுந்துகொண்டிருந்த வேளையில் அவர்களது புரவிகளின் குளம்போசை சொற்களுக்குத் தாளமென ஒலித்தது. முதுவேனிலின் வெம்மை தணியும்போது எழும் புழுதிமணம் இனிய தின்பொருள் எதையோ நினைவூட்டியது. தழையுடன் சேர்த்து அவிக்கப்படும் பொருள். காற்றிலா மரங்களில் தழைக்குவைகள் சோர்ந்து தொய்ந்திருந்தன. சிறகோய்ந்த பறவைகள் வழுக்கியவைபோல செல்லும் மங்கிய வானம்.

“அதை முழுமையாக நான் உங்களிடம் இதுவரை சொல்லவில்லை. அனைத்தும் இயல்பாக சீரடைந்தன என்றே குறிப்பிட்டேன். அன்று செய்தி கேட்டு சினந்து கொந்தளித்த பேரரசி தன் தோழி சாயையை அழைத்து அதை உசாவியறிந்து வரும்படி ஆணையிட்டார். அதற்கு மறுநாள் தீர்க்கதமஸின் குருதியில் எழுந்த ஐந்து தொல்குடி அரசர்களுக்கான தனி அவை ஒன்று அரண்மனையில் கூடவிருந்தது. அதையொட்டி விழவும் விருந்தும் ஒருங்கமைக்கப்பட்டிருந்தன. பேரரசியால் அதிலிருந்து உள்ளத்தை விலக்க இயலவில்லை.”

“ஓசையற்ற நுண்மையால் சாயை என்றும் எண்ணியிரா விரைவால் வியாஹ்ரை என்றும் அழைக்கப்பட்டவளாகிய அணுக்கத்தோழி காமவர்த்தினி பேரரசியின் தோற்றம்கொண்டு அசோகவனிக்கு வந்தாள். இங்கே காவலனின் அரண்மனையில் தங்கி அரசி சர்மிஷ்டையை அழைத்துவரச்சொல்லி அவர் பெற்ற மைந்தனின் தந்தை எவர் என்று உசாவினாள். அதை சொல்ல இயலாதென்று அரசி சொன்னபோது அவரை கைநீட்டி அறைந்தாள். கீழே விழுந்த அரசியை காலால் உதைத்தாள். கூந்தலைப் பிடித்துச் சுழற்றி சுவரோடு சேர்த்து நிறுத்தி உலுக்கி சொல்லாவிட்டால் அவரும் அவர் குழந்தையும் குருநகரியின் செண்டுவெளியில் கழுவிலமர நேரிடுமென அச்சுறுத்தினாள்.”

“அரசே, அருள்வடிவாக பேரரசி தோற்றமளிக்கையில் அவர்களின் கொடியமுகம் அணுக்கத்தோழி சாயையின் வடிவில் வெளிப்படுகிறதென்பதை அறிந்திருப்பீர்கள். பாரதவர்ஷமே இன்று அத்தோழியைத்தான் அஞ்சிக்கொண்டிருக்கிறது. நிகரற்ற கொடுமை நிறைந்த நெஞ்சம் கொண்டவள், அளியிலாதவள், எதையும் அஞ்சாதவள் அவள் என்கிறார்கள். சாயை என்று ஒரு தோழியே இல்லை என்றும் அது பேரரசியே அவ்வாறு உருமாறி வெளிப்படுவதுதான் என்றும் குடிகளில் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். அரசி வாய்திறக்க மறுத்தபோது தன் ஏவலரை அழைத்து அவரையும் குழந்தையையும் தேரிலேற்ற ஆணையிட்டாள் சாயை.”

“அரசி அதன்பின்னரே நெக்குவிட்டார். கதறியபடி அவள் கால்களில் விழுந்து அங்கே வந்து தங்கிச்சென்ற முனிவர் ஒருவருக்கு இரவுப்பணிவிடை செய்ய நேர்ந்தது என்றும் அதன் விளைவாகப் பிறந்த மைந்தன் அவன் என்றும் சொன்னார். அருகே இருந்த அகல்சுடரை எடுத்துக் காட்டி அனல்தொட்டு ஆணையிட சாயை கூறினாள். அவ்வாறே அச்சுடர் தொட்டு அரசி ஆணையிட்டார். அம்முனிவரின் பெயரென்ன என்று கேட்கவில்லை என்றும் கேட்கலாகாதென்று ஆணையிடப்பட்டதென்றும் அரசி சொன்னார். சாயை காவலர்தலைவனிடம் அந்த முனிவர் எவர் என்று கேட்டாள். அதை நான் மட்டுமே அறிவேன் என்று அவன் சொல்ல குருநகரிக்குத் திரும்பிவந்து என்னிடம் கேட்டாள்.”

“திருவிடத்தைச் சேர்ந்த அகத்தியரின் முதல் மாணவராகிய திருணதூமர் என்று நான் சொன்னேன். பிறர் அறியாமல் அசோகவனிக்கு வந்து தங்கி இமயமலைக்குச் சென்றார்கள் என விளக்கினேன். சாயை அதை நம்பவில்லை என்றே எண்ணினேன். புலியென விழிஒளிர உறுமிவிட்டு அவள் திரும்பிச்சென்றாள். அரசியை அங்கிருந்து உடனடியாக எங்காவது அறியாக் காட்டுக்கு கொண்டுசென்றுவிட ஆணையிடவேண்டுமென எண்ணினேன். ஆனால் ஓலையை பருந்திலேற்றுவதற்கு முன் என்ன நிகழ்கிறதென்று நோக்கலாமென்று தயங்கினேன்.”

“ஏனென்றால் பேரரசியின் ஒற்றர்வலையின் விரிவை நான் அறிவேன். அவர் விழிகள் செல்லாக் காடுகள் என ஏதுமில்லை. அஞ்சி முந்திச்சென்று அரசியை அனுப்பினால் அவ்வாறு அனுப்பியதே அனைத்துக்கும் சான்றென்று ஆகக்கூடுமெனத் தோன்றியது. பேரரசியிடம் சாயை என்ன சொல்லப்போகிறாள் என்று அறிய எவ்வழியும் இல்லை. குருநகரியின் பேரரசியின் தனியறைக்குள் செவிசெலுத்தும் ஒற்றர் எவருமில்லை. காத்திருப்பதன்றி வேறு வழியேதுமில்லை. அரசே, அந்த அரைநாள் பொழுதில் நான் நூறுமுறை இறந்தெழுந்தேன்.”

“பேரரசியிடம் சாயை பேசி முடித்தபின் இருவரும் கிளம்பி கொற்றவை ஆலயத்தில் அரசியரின் பூசனைவிழவுக்குச் சென்றனர். மறுநாள் காலையில் குடிப்பேரவை, அன்று மாலை செண்டுவெளி விழா. அசோகநகரிக்கு ஆணைகள் ஏதும் செல்கின்றனவா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். கொலைவாளுக்குக் கீழே தலைவைத்து கண்களை மூடி காலத்தை எண்ணியபடி காத்திருப்பதுதான் அது. மூன்று நாட்களுக்குப் பின்னரே ஒன்றும் நிகழவில்லை என்பதை என் உள்ளம் உணரத்தொடங்கியது. ஆயினும் ஒவ்வொன்றையும் நுணுகி நோக்கியபடி காத்திருந்தேன். எங்கோ அறியாவிழி ஒன்று நோக்கி காத்திருக்கிறது என்னும் உணர்வு. நீங்கள் மீண்டும் அசோகவனிக்குச் செல்வதைப்பற்றி பலமுறை பேசிக்கொண்டிருந்தீர்கள். மைந்தனை காணவேண்டும் என்று துடித்தீர்கள். உங்களை காமரூபத்தில் நிகழ்ந்த பெருங்களியாட்டுக்கு இரண்டு மாதங்களில் திரும்பலாம் என பொய்சொல்லி அழைத்துச்சென்றது அதனால்தான்.”

“நாம் திரும்ப ஓராண்டாகியது. அதனால் சினம்கொண்டு நீங்கள் என் மேல் வசைபொழிந்தீர்கள். என் ஒற்றர்கள் செய்தியனுப்பிக்கொண்டே இருந்தனர். ஒன்றும் நிகழவில்லை என ஓராண்டுக்குப் பின்னரே உறுதிகொண்டேன். உங்கள் இரண்டாவது மைந்தனின் அன்னமூட்டு விழவுக்கான செய்தி வந்தபோதுதான் நாம் திரும்பிவந்தோம். ஒவ்வொன்றாக ஆராய்ந்தபின் உறுதிகொண்டேன், அரசி சொன்னதை சாயை நம்பிவிட்டாள் என. அவள் சொன்னதை பேரரசியும் ஏற்றுக்கொண்டார் என்று.”

“அந்த ஓராண்டு எனக்கு கற்பித்தது ஒன்றுண்டு. பெரும்பாலும் அஞ்சியும் பதறியும்தான் நாம் நம்மை வெளிக்காட்டிக்கொள்கிறோம். விழைவனவற்றால் மெய்மை மறைக்கப்படுவதிலிருந்து எந்நுண்மதியாளருக்கும் விலக்கில்லை. பேரரசி தன்னை பேரழகி என்றும் பாரதவர்ஷத்தில் நிகரற்ற பெண் என்றும் எண்ணுகிறார்கள். அழகும் அறிவும் நிலையும் குறைந்த அரசி சர்மிஷ்டையை நீங்கள் விழையக்கூடுமென்ற எண்ணமே அவர்களின் நெஞ்சிலெழாதது அதனால்தான். அவர்களின் அந்த தன்னம்பிக்கையே நமக்கு காப்பு. பட்டுநூலென மிக மெல்லியது. ஆனால் உறுதியானது. நாம் அதன்மேல் நம்பி நடந்துசெல்லலாம்” என்றான் பார்க்கவன்.

“பதினாறாண்டுகளாக இது நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்பதே இது சீராக அமைந்துவிட்டது என்பதற்கான சான்று. பதினாறாண்டு என்பது நெடுங்காலம். நீர் ஓடித் தடம் கண்டு ஓடைகளாகி நிலவடிவென்றே ஆகிவிடுவதுபோல ஒவ்வொன்றும் அதன்போக்கில் முற்றமைந்துவிட்டிருக்கின்றது” என்றான்.

யயாதி சில கணங்களுக்குப்பின் “தேவயானியின் அந்நம்பிக்கையே இப்போது எனக்கு அச்சமூட்டுகிறது. அது குலைந்தால் அவள் கொள்ளும் சினம் எப்படிப்பட்டதாக இருக்கும்?” என்றான். பின்னர் தலையை அசைத்து “சுக்ரரின் மகள்… இருளில் நாகத்தை கால்தொட்டது போன்றது அவ்வெண்ணம் அளிக்கும் அச்சச்சிலிர்ப்பு…” என்றான். பார்க்கவன் ஒன்றும் சொல்லவில்லை. இருவரின் புரவிக்குளம்போசைகள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. அப்போது அவை அவர்களின் சொல்லின்மையின் தாளமாக ஆகிவிட்டிருந்தன.

tigerஓடையொன்றின் கரைக்குச் செல்வது வரை யயாதி ஒன்றும் சொல்லவில்லை. எண்ணங்கள் நிறைந்து ததும்பியவை மட்டுமே சொல்லாவது அவன் இயல்பென்பதை அறிந்த பார்க்கவனும் ஒன்றும் உரையாடாமல் காட்டை நோக்கியபடி வந்தான். ஓடையின் ஓசை தொலைவில் கேட்கத் தொடங்கியதுமே யயாதியின் புரவி விடாயை அறிவிக்க மெல்ல கனைத்தது. ஆம், நிறுத்துகிறேன் என்று சொல்ல அவன் அதன் நீள்கழுத்தை கையால் தட்டினான். நீரோடை சிறிய அருவியாகப் பொழிந்து மலையிறங்கியது. வேர்ப்புடைப்புகளில் அது வளைந்து வழிவதன் ஒளியலை இலைகளில் நெளிந்துகொண்டிருந்தது. யயாதி புரவியை நிறுத்துவதற்குள் அதுவே நின்றுவிட்டது.

அவன் இறங்கி ஓடையை அணுகினான். புரவி அணுகி பெருமூச்சுவிட்டபடி குனிந்து நீர் அருந்தி கழுத்தும் விலாவும் சிலிர்க்க வால் சுழற்றியது. பார்க்கவனின் புரவி அதனருகே வந்து தோள்சேர்ந்து நின்று நீர் அருந்தியது. ஓடைநீரை அள்ளி முகம் கழுவி தலையிலும் விட்டுக்கொண்டு வேர்மீது யயாதி அமர்ந்தான். பார்க்கவன் முழங்காலளவு நீரில் நின்று கால்களால் அளைந்துகொண்டிருந்தான். “எனக்கு ஏன் சர்மிஷ்டைமேல் காதலெழுந்தது என்பதைப்பற்றி நீ வியந்துகொண்டதில்லையா?” என்று யயாதி கேட்டான்.

அவ்வாறு எண்ணியிராத கணத்தில் கேட்பது அவன் வழக்கம் என்று அறிந்திருந்தாலும் பார்க்கவன் திடுக்கிட்டான். “அது எங்குமுள்ளதுதானே?” என்றான். “கிடைக்கும் பெண்களை எல்லாம் விரும்புபவன் ஆண் என்ற பொருளிலா?” என்று யயாதி கசப்புச் சிரிப்புடன் கேட்டான். “இல்லை என நீங்களே அறிவீர்கள், அரசே” என்றான் பார்க்கவன். “அஸ்வாலாயனரின் காவியங்களில் பெருநதிகளின் மிடுக்கைவிட சிற்றோடைகளின் எளிமையே அழகென்று சொல்லப்பட்டுள்ளது.” அதை கேட்காதவன்போல யயாதி “பெண்களை நாம் விரும்புவது ஆடைகளை விரும்புவது போலத்தான்” என்றான். “அணிமிக்கதாயினும் பெருமதிப்புகொண்டதாயினும் நமக்குப் பொருத்தமான ஆடையே நம்மை கவர்கிறது.”

“நல்ல ஆடை என்பது நம்மில் ஒரு பகுதியென்றாவது. நம்மை நாம் விழையும்படி காட்டுவது. நம் குறைகளை மறைத்தும் நிறைகளை மிகையாக்கியும் சமைப்பது” என்றான் யயாதி. மீண்டும் எண்ணநீட்டம் அறுபட்டு கைவிரல்களை காற்றில் சுழற்றி எதையோ வரைந்தான். “பெண்ணழகென்று நான் விழைந்த எதையுமே இவளிடம் நான் காணவில்லை. மீண்டும் மீண்டும் நான் எண்ணி வியந்த ஒன்றுண்டு. அவளை நான் நெடுநாள் உளம்கொண்ட பின்னரே நேரில் கண்டேன். ஆனால் மீண்டும் கண்டபோது அவளை நான் அடையாளம் காணவே இல்லை. பிறிதொருமுறை எவரும் கண்டுகொள்ளாத தோற்றம். அவளை தேவயானி முழுமையாகவே மறந்துவிட்டமைகூட அந்தத் தோற்றத்தால்தான்” என்று தொடர்ந்தான்.

முதல்முறை அவளை ஆலயத்தில் சுடரொளியில் பார்த்துவிட்டு மீண்ட அந்நாளை நினைவுறுகிறேன். மண்ணகல் சுடரால் அழகுகொள்வதுபோல அவள் தன் விழிகளால் எழிலுற்றிருந்தாள். அவ்விழிகளையே அன்று முழுக்க எண்ணிக்கொண்டிருந்தேன். அரண்மனையில் அவ்விரவில் அந்த விழிகளை எண்ணி எண்ணி பிறிதொன்றையும் எண்ணவியலாதவனாக ஆகி தவித்தேன். உளக்காடி விழிமுன் அப்படி அழியா அணையா ஓவியமென நின்றிருக்கமுடியுமா என்று திகைத்தேன். எங்கும் நிற்கவோ அமரவோ படுக்கவோ முடியாத பெருந்தவிப்பு. அவ்வண்ணம் ஒன்றை அதற்குமுன் அறிந்திருக்கவே இல்லை.

நான் ஏங்கிய முதல் வசந்தம் அதுவா என வியந்தேன். அதுவெனில் நான் நல்லூழ் கொண்டவன் என மகிழ்ந்தேன். ஆனால் இரவு செல்லச் செல்ல அந்தத் தவிப்பு தாளமுடியாதவனாகி அதிலிருந்து வெளியேற முயன்றேன். எட்டு பக்கமும் கரிய கோட்டைச்சுவரால் முற்றிலும் மூடப்பட்டிருப்பவன்போல உளம் திணறினேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட அவ்விரவின் கொந்தளிப்பை என்னால் துளி குறையாமல் மீட்டெடுக்க முடிகிறது. காலம் செறிந்து பேரழுத்தம்கொள்ளும் அத்தகைய பொழுதுகள் வாழ்க்கையில் மிக அரிதாகவே எவருக்கும் நிகழும்.

கணங்களாக காலத்தில் இருப்பது. ஒவ்வொரு எண்ணத்தையும் தனித்தனியாக அறிவது. அப்போது அறிந்தேன் நாம் எண்ணங்களில் ஒழுகுவதில்லை என. நீர்த்துளிகள் உதிரும் ஒலிபோன்றவை எண்ணங்கள். ஒவ்வொரு ஒலியும் ஒன்றுபோல் பிறிதொன்று என முதலில் தோன்றும். மிகச்சிறிய மாறுபாடு கொண்டிருப்பது பின்னர் தெரியும். மாறுபாடுகள் பொருளற்றவை என்றும் ஒன்றே ஒழியாது நிகழ்கிறது என்றும் அதன்பின்னர் அறிவோம். உள்ளம் என்பது வெறும் மாளாச் சுழல்தான் என்றும் நம் இருப்பு என்பது பொருளற்ற மீள்நிகழ்வே என்றும் அறிகையில் நாம் தனிமையிலும் இருளிலும் இருக்கலாகாது. அத்தனிமை முழுத் தனிமையாகும். இருள் கடுவெளிப் பேரிருளென்றாகும்.

அந்த விடியலைப்போல் பிறிதொன்று எனக்கு அதன் பிறகு வாய்த்ததில்லை. முதல் பறவைக் குரலெழுந்தபோது இருளுக்குள் ஓர் ஒளிக்கீற்று கீறிச்சென்றதுபோல அதை கண்களால் கண்டேன். துயில்நீப்பும் நரம்புகளின் இறுக்கமுமாக நான் நோயா மயக்கா கனவா என்றறியா நிலையில் இருந்தேன். பின்னர் விடிவெள்ளியை கண்டேன். அது நுனிநாவால் கூரம்பின் முனையை தொடுவதுபோல சுவைத்தது, மெய்கூசச் செய்தது. பின்னர் உடல்குளிரப் பொழியும் குளிரென ஓர் இசை. அது புலரியின் செவ்வொளி.

பொற்கதிர்கள் இலைகள் நடுவே தோன்றி நீண்டு பரவியபோது நான் உருகிக்கொண்டிருந்தேன். காலை தூக்கி வைத்தபோது நெடுந்தொலைவு வரை வழிந்துகிடந்த என்னை இழுத்துக்கொண்டு செல்லவேண்டியிருந்தது. சோலைக்குள் இறங்கிச்சென்றேன். மரங்களினூடாக உலர்ந்த கசந்த வாயும் அனல்கண்ட விழிகளும் குடைச்சலெடுக்கும் மூட்டுகளுமாக தளர்ந்த நடையில் சென்றேன். என்மேல் இளங்கதிரின் ஒளி முழுமையாக பொழிந்தது. பற்றி எரிந்து சுடராகி தழைந்து குதித்தெழுந்து அலையாடி நின்றேன். பின்னர் நெடுநேரம் கழித்து என்னை உணர்ந்து மெல்ல அமர்ந்து கண்கசிந்து வழிய நெஞ்சு விம்மி விம்மி அதிர அழுதேன். அழுந்தோறும் என் முடிச்சுகளனைத்தும் அவிழ, நெடுநேரம் அங்கு நின்று அழுதுகொண்டிருந்தேன்.

அதன்பின் பிறிதொருவனானேன். கண்கள் மேலிருந்து ஒரு மெல்லிய ஆடையை உரித்தெடுத்ததுபோல காட்சிகள் அனைத்தும் துலக்கம் கொண்டன. காற்றிலாடிய இலைகளின் வலைநரம்புகளை காணமுடிந்தது. இலைத்தண்டிலூர்ந்த பச்சைப்புழுவின் ஒவ்வொரு மயிரும் கண்ணுக்குத் தெரிந்தது. புலன்களனைத்தும் பன்மடங்கு கூர்மைகொண்டன. சருகின்மேல் சிற்றுயிர் ஒன்று ஊர்ந்து ஏறுவதை கேட்கும் செவிகள் வாய்த்தன. காற்றில் வந்த இளம்புழுதிமணமும் நீராவிமணமும் பச்சிலைமணமும் தனித்தனியாக நாசியை வந்தடைந்தன. என்னுள் வேட்டைவிலங்கொன்றும் இரைவிலங்கொன்றும் இருமுனைகளில் மயிர்சிலிர்த்து புலன்கூர்ந்து அமர்ந்து ஒன்றை ஒன்று கண்காணித்தன.

நான் அரசன். உடனே அவளை அழைத்துவரும்படி ஆணையிட்டிருக்க முடியும். நீ என்னிடம் அவ்வெண்ணம் என் உள்ளத்தில் எழுந்ததுமே அவளைப்பற்றி பேசத்தொடங்கிவிட்டிருந்தாய். ஆனால் என்னால் அவளை அணுகுவதைப்பற்றி எண்ணவே முடியவில்லை. எனவே நீ என்னிடம் அவளைப்பற்றி சொன்ன ஒவ்வொரு சொல்லும் கசந்தது. உன்னை கடிந்து விலக்கினேன். என் வாழ்வில் நீயில்லாது தனித்திருக்கவேண்டுமென நான் விழைந்த தருணம் அது ஒன்றே. ஆனால் தனித்திருக்கையில் என்னுள் எழுந்த அனலால் தவித்து மீண்டும் உன்னிடம் வந்தேன். அவளைப்பற்றி நீ பேச நான் விழையவில்லை. பிறிதெதையாவது நீ பேசினால் என் உள்ளம் அதில் ஒன்றவில்லை.

ஏன் அவளிடம் என்னை கொண்டுசென்று வைப்பதை அத்தனை அஞ்சினேன்? அவள் என்னுள் எழுந்த பேருருவை நேரில் கொண்டிருக்கமாட்டாள் என்பதனாலா? வெறுமொரு பெண்ணென அவளைக் காண்பது நான் தவமிருந்து பெற்ற அமுதை நீரென்றாக்கிவிடும் என்பதனாலா? அவளிடம் நான் என் விழைவை எவ்வண்ணம் சொல்லமுடியும்? தோழனோ பாங்கனோ சொல்வது என் தனிமைக்குள் ஊடுருவுவது. அவ்வெண்ணமே உளம்கூசச் செய்தது. அவள் தோழி சொல்லலாம். அது முறைமை சார்ந்தது. அது மேலும் கூச வைத்தது. கவிஞர் சொல்லலாம், அது வெறும் அணிச்சொல் என அப்போது பட்டது.

எப்படி சொன்னாலும் அது நானிருக்கும் நிலைக்கு வந்தடையாத வெற்றுச்சொல்லே. சொல் ஒன்றை எடுத்து அதற்கு நிகராக வைப்பதன் இழிவு என்னை குறுகச் செய்தது.   அவளிடம் என்னை சொல்லும் தருணத்தை நான் என்னுள் நிகழ்த்திக்கொள்ளவே இல்லை. அவ்வெண்ணம் எழுந்ததுமே பதறி விலகி பிறிதொன்றுக்கு செல்வேன். பெய்தொழியாது இடிமுழக்கி மின்னிக் கிழிபட்டுக்கொண்டே இருந்தது கருவுற்றுக் கருமைகொண்ட வானம். பின்னர் அவளிடம் அதை சொல்லவே போவதில்லை என எண்ணி அத்தன்னிரக்கத்தில் கரைந்து விழிநீர் வடிய அமர்ந்திருந்தேன். தன்னை உணர்ந்து எழுந்து  ‘எத்தனை இனிமை’ என வியந்தேன்.

உளமொரு நாவென தித்திப்பில் அளைந்தபடியே இருந்த நாட்கள். நான் விழைந்தது அதுவே என்றறிந்தேன். அக்கணங்கள் அரியவை, சிறிய அசைவில் மலர்க்கிளை ஏந்திய பனித்துளிபோல பொலபொலவென உதிர்ந்துவிடுபவை என உணர்ந்தேன். எனவே என் உள்ளத்தை பொத்திப்பொத்தி அசைக்காமல் கொண்டுசென்றேன். அக்கணம் பொழிந்தழியக்கூடும், அவ்வாறன்றி அமையாது. ஆனால் அதுவரை என் வசந்தம் நீடிக்கட்டும். எக்கணம் எக்கணம் என சிலநாட்கள். அங்கிருந்தால் ஏதேனும் ஆகிவிடும் என்று அஞ்சியே மீண்டும் அவளைப் பார்க்காமல் குருநகரிக்கு வந்தேன். பித்தன் என இங்கிருந்தேன். கேட்பதெல்லாம் இசையாகவும் கவிதையாகவும் ஆயின. நா உண்பதற்கு எப்போதும் இனிப்பை விழைந்தது. புலரியும் மாலையும் உச்சிப்பொழுதின் உருகும்வெயிலும்கூட பேரழகுடன் என்னைச் சூழ்ந்தன. இரவுகளில் விண்மீன்கள் வெளித்த வானம் என்னை மின்னிமின்னி நோக்கியது.

பின்னர் அக்கணம் உதிரவே போவதில்லை என எண்ணலானேன். அந்த நீர்த்துளி என் தளிர்முனையில் நின்று ஒளிநடுங்கி ததும்பிக்கொண்டே காலத்தை கடக்கும். இறுகி ஒரு முத்தாகும். தாமரையில் மூங்கிலில் மட்டுமல்ல, மானுடரிலும் முத்து விளைவதுண்டு. முத்து விளையக்கூடுமென்பதனால் அத்தனை சிப்பிகளும் முத்துச்சிப்பிகளாகின்றன. முத்து நிகழ்ந்தது பிறவற்றிலிருந்து பிரிந்து நிற்பதில்லை. அதன் அமைதி வலியிலும் தவத்திலும் எழுந்தது. அகல்விளக்குக்குள் புகுந்து சுடர் ஒளிந்திருப்பதே முத்துச்சிப்பி. ஒளியை அது மட்டுமே அறியும்.

ஆனால் எண்ணியிராதபடி அது நிகழ்ந்தது. நான் மீண்டும் மீண்டும் அசோகவனிக்கு சென்றுகொண்டிருந்தேன். குருநகரியில் சிலநாட்கள் நீளும்போது அவளை பார்க்கவேண்டுமென்று தோன்றும். என் உளம்கொண்ட அவள் ஓவியம் சற்றே மங்கலாகிவிட்டிருப்பதைப்போல. அல்லது இடையே உள்ள தொலைவு மிக அகன்றுவிட்டதைப்போல. கிளம்பவேண்டும் என்னும் எண்ணம் வந்ததுமே அதனுடன் போராடத் தொடங்குவேன். உளநடுக்குடன் அதை தவிர்ப்பேன் முதற்சிலநாட்கள். பின்னர் உருவளர்ந்து அருகணைந்திருக்கும் அதை உந்தி உந்தி அப்பால் நிறுத்துவேன்.

அதற்கு அடிபணியும் ஒருகணம் உண்டு. அப்போது அத்தனை சித்தக்கட்டுகளும் தெறிக்கும். காற்றில் அலைபாயும் சருகு எப்போது விண்ணிலெழ முடிவெடுக்கிறதோ அதை நிகர்த்த ஒருகணம். மறுகணமே உடலெங்கும் ஒரு துடிப்பு படர்ந்தேறும். வெளியே பாய்ந்து புரவியில் ஏறி பிறிதொரு எண்ணமில்லாமல் பாய்வேன். காற்றில் விழுந்துகொண்டே இருப்பேன். அசோகவனியில் சென்று மோதிவிழுவேன். அவளைப் பார்க்கும் கணம் வரை பெருகும் பதற்றம். அவளை நோக்க அரண்மனையின் உப்பரிகை ஒன்று உகந்தது. அங்கு சென்று நின்றிருப்பேன். நூறுமுறை உள்ளே வந்தும் வெளியே சென்றும் தவித்து எரிந்து. பின் அவள் தெரிவாள்.

எப்போதுமே அது ஓர் வண்ண அசைவுதான். உடைவண்ணம், உடல்வண்ணம். முதற்கணம் அவள் எளிய பெண். பின் நுரைபெருகியெழும் உள்ளம் அவளை அள்ளி அள்ளி நிரப்பிக்கொள்ளும். அது விழைந்த ஒருத்தியை வரைந்து அவள்மேல் பதிக்கும். அங்கு பேரழகி ஒருத்தி நின்றிருப்பாள். நெஞ்சைப்பற்றியபடி தூண்மறைவில் நோக்கி நின்றிருப்பேன். சில தருணங்களில் விம்மி அழுதிருக்கிறேன். பின்னர் மெல்ல தளர்ந்து திரும்புவேன். அங்கு வந்து சேர்வதுவரை என் உடல் உதறி காற்றில் பறக்கவிட்ட எடை முழுக்க மீண்டுவந்து என் தோளில் இடையில் தொடையில் கணுக்கால்களில் அழுத்தும்.

உள்ளறைக்குச் சென்று மஞ்சத்தில் படுத்துக்கொள்வேன். எங்கோ விழுந்துகொண்டிருப்பேன். எங்கோ மிதந்துகொண்டுமிருப்பேன். இருப்பு என்பது இவ்வண்ணம் அலைசுடராக கலையும் புகையாக ஆகுமென்றால் உடலென்பதற்கு ஏது பொருள்? காதலை இளமையிலேயே அடையவேண்டும், இந்த முதிய உடல் அவ்வெம்மையையும் விசையையும் தாளமுடியாது. கிளைதாழக் காய்ப்பவை இளமரங்கள், முதுமரக்கனிகள் இனிமையும் கசப்பும் செறிந்து சிறுத்தவை.

ஈராண்டுக்குள் எட்டுமுறை அசோகவனிக்கு சென்றேன். முதலில் மாதம் ஒருமுறை. பின்னர் அவ்வுணர்வெழுச்சி அணைகிறதா என்னும் ஐயம் எழுந்தது. அது அணைந்தால் அவ்வினிமையை இழப்பேன் என்று தோன்றவே அடிக்கடி செல்லலானேன். செல்லும் வழியின் ஒவ்வொரு மரமும் நன்கறிந்தவையாக ஆயின. அவற்றுடன் நான் பகிர்வதற்குரிய மந்தணம் ஒன்றிருந்தது. மந்தணம் பகிர்பவர்களின் நட்பு இறுகியது. அத்தொலைவு மிகக்குறுகி வந்து நான்கு பாய்ச்சலில் அங்கு சென்று சேர்வேன் என்றாகியது.

அந்நாளில் ஒருமுறை அரண்மனையின் பின்பக்கச் சோலையில் அசோகமரத்தின் அடியில் நின்றிருந்தேன். அங்கிருந்து அன்னையின் ஆலயம் செல்வதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். புதர் கலையும் ஒலி கேட்டு திரும்பி நோக்கியவன் மிக அருகே நேர்முன்னால் அவளை கண்டேன். கையில் பூக்கூடையுடன் நின்றிருந்தாள். முள்ளில் சிக்கிய ஆடையை இழுத்த கையும் அதன்பொருட்டு திரும்பிய தோள்களும் அசைவிழந்து சிலைக்க விழிகள் விரிந்து திகைப்பு நிறைந்திருக்க.

என் உடல் பதறிக்கொண்டிருந்தது. எண்ணங்கள் என ஏதுமில்லை, விழிகளே உள்ளமும் ஆகிவிட்டிருந்தன. அவள் தோளில் மெல்லிய தோல்வரிகள் மணல்மின் கொண்டிருந்தன. வளைந்தெழுந்த சிறிய மேலுதடின் மீது வியர்வை பனித்திருந்தது.  அவள் விம்மினாள், அல்லது அவ்வொலி என் உள்ளத்தால் உணரப்பட்டதா? நான் விழிவிலக்கியதும் என் உடலும் அறியாது திரும்ப மீண்டுமொரு விம்மலை கேட்டேன். தீச்சுட்டதுபோல திரும்பியபோது அவள் விழி தாழ்த்தியிருந்தாள். கண்ணீர் வழிந்து கன்னங்களில் இறங்கிக்கொண்டிருந்தது. உதடுகளைக் கடித்து விம்மலை அடக்க கழுத்து குழிந்து குழிந்து எழுந்தது.

நான் என்ன செய்தேன் என பின்னரே உணர்ந்தேன். ஏன் செய்தேன் என இன்றும் அறியேன். பாய்ந்து அவளைப் பற்றி இடக்கையால் இடைவளைத்து என் உடலுடன் இணைத்துக்கொண்டேன். அவள் முகத்தை வலக்கையால் தூக்கி உதடுகளில் முத்தமிட்டேன். உரத்த முனகலுடன் அவள் கைகளால் என்னை இறுகப்பற்றிக்கொண்டு நடுங்கினாள். நாங்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. உடல்தழுவி இறுகியும் மேலும் இறுகும்பொருட்டு நெகிழ்ந்தும் முத்தமிட்டும் மூச்சுக்கு ஓய்ந்தும் மீண்டும் முத்தமிட்டும் அங்கே நின்றிருந்தோம். பின்னர் அவள் விழிகளை நோக்கினேன். நாணத்துடன் அவை சரிந்தன. “நான் உன்னை ஈராண்டாக பார்க்கிறேன்” என்றேன். “ஆம், நான் அறிவேன். ஈராண்டுகளாக நான் கணந்தோறும் எரிந்துகொண்டிருந்தேன்” என்று அவள் சொன்னாள்.

tigerபார்க்கவன் யயாதி கூறிக்கொண்டிருந்ததை தலைகுனிந்தவனாக கேட்டுக்கொண்டிருந்தான். “செல்வோம்” என யயாதி எழுந்ததும் “ஆம், இருட்டிவிட்டது” என்று அவனும் கிளம்பினான். அவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டார்கள். “இவையனைத்தையும் உதிரிநிகழ்வுகளாக பலமுறை முன்னரே சொல்லியிருக்கிறீர்கள், அரசே” என்றான் பார்க்கவன். “இம்முறை தொகுத்துச் சொல்கிறீர்கள். இது தொகுத்துக்கொள்ளும் தருணமென எண்ணுகிறீர்கள்.” யயாதி “இல்லை, நீ தொகுத்துச் சொன்னதனால்தான்” என்றான்.

“ஒன்றுமட்டும் தெரிந்துகொள்ள விழைகிறேன் அரசே, தாங்கள் உளம்திரிய மாட்டீர்கள் என எண்ணி” என்றான் பார்க்கவன். “சொல்!” என்றான் யயாதி. “அன்று அங்கே அரசி வந்தது தற்செயலாகவா? அதைப்பற்றி சொன்னார்களா?” யயாதி சிரித்து “முதல் மைந்தன் பிறந்து ஓராண்டுக்குப்பின் அவள் ஒருமுறை சிரித்தபடிச் சொன்னாள், அவள் நான் அங்கு நின்றிருப்பதைக் கண்டுதான் வந்தாள். காத்து, பொறுமையிழந்து, சினம்கொண்டிருந்தாள். எண்ணியிராக் கணத்தில் கிளம்பி என்னை நோக்கி வந்துவிட்டாள். ஆனால் எப்படி என்னை அழைப்பதெனத் தெரியவில்லை. அவள் எண்ணம் அறிந்ததுபோல் முட்செடி ஆடைபற்றி இழுத்தது” என்றான்.

“நன்று!” என்றான் பார்க்கவன். “வருந்தருணத்தை எதிர்கொள்ளும் சூழ்திறன் அவர்களுக்குண்டா என்று அறியவே அதை கேட்டேன்.” யயாதி மேலும் சிரித்து “அது நிரம்பவே உண்டு. நான் அவளை அடைந்த முதல்நாள் இரவிலேயே அதை அறிந்தேன். அதன் களியாட்டு கொந்தளித்தெழுந்து மெல்ல குமிழிகள் உடைந்து நுரையடங்கும் தருணம். அலையமைகையில் ஆழத்துப் பாறை எழுவதுபோல தேவயானி என் உள்ளத்தில் தோன்றினாள். மிகச்சரியாக அத்தருணத்தில் அவள் கசனைப்பற்றி என்னிடம் சொன்னாள்” என்றான்.

“நேரடியாகவா?” என்றான் பார்க்கவன் புரவியைப் பற்றி இழுத்து நிறுத்தி. “இல்லை” என்றான் யயாதி. “நான் சுக்ரரை அஞ்சுகிறேனா என்று கேட்டாள். இல்லை என்று நான் சொன்னேன். பின்னர் மெல்ல அஞ்சாமலும் இருக்கமுடியாதல்லவா என்றேன். அஞ்சவேண்டியதில்லை, தன் மகளைக் கூடி கைவிட்டுச்சென்ற கசனையே அவர் ஒன்றும் செய்யவில்லை என்றாள்.” பார்க்கவன் “நீங்கள் அதை முன்னர் அறிந்திருக்கவில்லை அல்லவா?” என்றான். “ஆம், எவரும் என்னிடம் சொல்லவில்லை. நான் உசாவியறிய முயலவுமில்லை. தேவயானியைப்பற்றி அவ்வண்ணமொரு எண்ணமே என்னுள் எழவில்லை. மானுடத் தொடுகைக்கே அப்பாற்பட்ட அனல்மணி எனவே அவள் எனக்குத் தோன்றினாள்.”

பார்க்கவன் புன்னகைத்தான். “உண்மையில் அச்செய்தி என்னை நிலைகுலையச் செய்தது. பாய்ந்தெழுந்து சர்மிஷ்டையின் குழலைப்பற்றி உலுக்கி ‘என்ன சொல்கிறாய்? பழிச்சொல் கூறுகிறாயா, இழிமகளே?’ என்று கூவினேன். அவள் அழுதபடி என் கைகளைப் பற்றிக்கொண்டு ‘அறியாது சொல்லிவிட்டேன். பேரரசரான தாங்கள் இதை அறிந்திருக்கமாட்டீர்கள் என நான் எண்ணவில்லை’ என்றாள். அவளைப் பிடித்து சேக்கையில் தள்ளிவிட்டு ‘பழிச்சொல்… வீண்சொல் இது. ஆம், நான் அறிவேன்’ என்று கூவினேன். ஆனால் அவள் விழிகள் விரிந்து ஈரம் மின்னித்தெரிய அப்படியே நோக்கி படுத்திருந்தாள்.”

பின்னர் மெல்ல மூச்சடங்கி மெத்தைவிளிம்பில் அவளுக்கு புறம்காட்டி அமர்ந்து “சொல்!” என்றேன். “என்ன சொல்ல, நீங்கள் விரும்புவனவற்றையா?” என்றாள். அவளால் அப்படி சொல்லமுடியுமென்றே நான் எண்ணியிருக்கவில்லை. “உண்மையை” என்றேன். “நான் அதை சொல்லக்கூடாது” என்றாள். “சொல்!” என்றேன். “என்னை கொல்லுங்கள், சொல்லமாட்டேன்” என்றாள். திரும்பி அவளை நோக்கினேன். அவ்விழிகளை நோக்கியதும் தெரிந்துவிட்டது, அவள் சொல்லமாட்டாள் என. பின்னர் ஒற்றர்களை அழைத்து உசாவி அறிந்துகொண்டேன்.

“அது என்னை உண்மையில் எளிதாக்கியது. தேவயானி என்னிடம் மறைத்த ஒன்றுண்டு என்பது நான் அவளிடமிருந்து மறைப்பதை பிழையில்லாததாக ஆக்கியது. நான் அதை சொல்லிச்சொல்லி பெருக்கிக்கொண்டேன். அதனூடாக தேவயானியிடமிருந்து விலகினேன். அவ்விலக்கம் சர்மிஷ்டையிடம் அணுக்கத்தை வளர்த்தது. அவ்வாறு என் கட்டுகளிலிருந்து என்னை விடுவித்தமை சர்மிஷ்டை மேல் மேலும் விருப்புகொள்ளச் செய்தது. என் உள்ளத்தை அவள் நன்கறிந்திருந்தாள். நான் ஓடிச்சென்றடையும் இடங்களில் எல்லாம் முன்னரே சென்று காத்து நின்றிருந்தாள். இன்று அந்த வசந்தகாலம் வெறும் கனவென பின்னகர்ந்துவிட்டது. அந்த முதல்நாள் உறவுக்குப்பின் அனைத்தும் பிறிதொன்றென ஆகிவிட்டன. அலைகள் அடங்கின, ஆனால் எதுவும் குறையவில்லை” என்றான் யயாதி.

நூல் பதின்மூன்று – மாமலர் – 76

76. ஐம்பெருக்கு

“ஐந்து துணையாறுகள் இணைந்து பெருகி ஓடும் இந்த நதி கடலை அணுகுகையில் ஐந்து கிளையாறுகளென்றாகிறது. எந்தத் துணையாறு எந்தக் கிளையாறாகிறதென்று எவர் சொல்ல முடியும்? நதியறிந்திருக்குமோ? நீர் அறிந்திருக்குமோ? ஊற்றுமுகங்கள் அறிந்தனவோ? ஒற்றைமேலாடை என புவிமகள் இடையும் தோளும் சுற்றிய ஆழிநீலம் அறிந்திருக்குமோ? அதிலெழும் அலைகள் அறிந்திருக்குமோ? அதிலாடும் காற்றும் அதில் ஒளிரும் வானும் அறிந்திருக்குமோ? முந்நீரும் முழுப்புவியும் ஒருதுளியென தன் கால்விரல் முனையில் சூடிய பிரம்மம்தான் அதை சொல்லலாகுமோ?”

மாளவத்துக் கவிஞர் சாம்பவர் தன் குறுங்காவியத்தின் இறுதிச் செய்யுளை படித்து முடித்து ஓலை தாழ்த்தியதும் எதிரில் பீடத்தில் அமர்ந்திருந்த யயாதி தலையசைத்து “நன்று, மிக நன்று. இக்காவியம் முழுக்க எழுந்த கதையின் அனைத்துச் சரடுகளும் இந்தச் செய்யுளில் இணைகின்றன. விடையில்லா வினாவாக விண்ணை நோக்கி செலுத்தப்பட்டுள்ளது காவியம். நுண்ணியது என்பதனால் அரிது. நெஞ்சை நிறைப்பதென்பதனால் நன்கறிந்ததும்கூட” என்றான்.

சாம்பவர் முகம் மலர்ந்து தலைவணங்கி “சொல்லோடு சொல்கோத்து எழுதப்பட்ட எதுவும் குருநகரியின் பேரரசரின் அவையில் ஒலித்த பின்னரே கவிதையென்றாகிறது என்று இன்று பாரதவர்ஷம் முழுக்க கவிஞர் பாடத்தொடங்கிவிட்டனர். இவ்வொரு சொல்லுக்காகவே இத்தனை தொலைவு கடந்து வந்திருக்கிறோம். எங்கள் சொற்கள் காலத்திரை கடந்து செல்லுமென்று இப்போது உறுதி கொண்டோம்” என்றார்.  கைகூப்பியபடி அவர் எழுந்து நிற்க அவருக்குப்பின் அமர்ந்திருந்த இளைய மாணவனும் இரு கற்றுச்சொல்லிகளும் ஏடுகளை அடுக்கிக் கட்டி பிரம்புக்கூடையில் அடுக்கினர்.

யயாதி எழுந்ததும் அருகே நின்றிருந்த அரசப்பணியாளன் பரிசில்தாலத்தை நீட்டினான். சாம்பவரை அணுகி அந்தத் தாலத்தைப் பெற்று அவரிடம் அளித்து “கவிதைக்குப் பரிசில் என்பது தெய்வத்திற்கு காணிக்கைபோல. அது தெய்வத்தை அளவிடுவதில்லை, கொடுப்பவனை அளவிடுகிறது” என்றான். அவர் அதை பெற்றுக்கொண்டு  “அரசே, தாங்கள் மகிழ்ந்தளித்த சொற்கள் முதற்பரிசில். அது கருவூலத்திலிருக்கும் பொற்குவை. இப்பரிசில் அதை பணமென்றாக்கும் முத்திரைஓலை” என்றார். “குருநகரியின் யயாதியின் சொல்லால் இக்காவியம் ஒப்புபெற்றது என்பதை பாரதவர்ஷம் முழுக்க சென்று சொல்லி என் தலைமுறைகள் பொருள்பெற்றுக்கொண்டே இருக்கும்” என்றார்.

அவரது அருகிருந்த பன்னிரு வயதான சிறுவனை நோக்கி யயாதி “உரிய இடங்களில் சொல்லெடுத்து நீர் ஒழுக்கை நிறுத்தியதை கண்டேன். இக்கவிதையை நன்கறிந்திருக்கிறீர், சொல்லையும் பொருளையும்” என்றான். “என் மாணவன் சேந்தன்எழினி. தமிழ்நிலத்தைச் சேர்ந்தவன். தென்பாண்டிநாட்டின் தொன்மையான தமிழ்ப்புலவர்குடியைச் சேர்ந்தவன்” என்றார் சாம்பவர். அவன் தலைவணங்கி “முக்கடல்முனம்பின் பாணர்குலமாகிய முல்லையரில் வந்த எழினியாதனின் மைந்தன் சேந்தன்எழினி” என்றான். யயாதி முகம்மலர்ந்து “நெடுந்தொலைவு. வலசைப்பறவைபோல சொல் எல்லைகளில்லாத பிறிதொரு நிலத்தை காலடியில் காண்கிறது” என்றான்.

எழினி கரிய நிறமும் மின்னும் கன்றுவிழிகளும் கொண்டிருந்தான். அவனுடைய  மயிர்மழிக்கப்பட்ட தலைமேல் கைவைத்து “சொல்லை எவரும் பெற்றுக்கொள்ளமுடியும், இளங்கவிஞரே. அறியா ஆழங்களில் சொல் சென்று தைக்கும் இலக்குகள் சில உள்ளன. அவை எவையென கண்டறிபவன் கவிஞனாகிறான். உமக்கும் அது நிகழட்டும்” என்றான். அவன் தலைவணங்கி “தன் விழைவால் விதை பறவையின் வயிற்றிலும் விலங்கின் தோலிலும் காற்றின் அலைகளிலும் தொற்றிக்கொண்டு முளைக்கவிருக்கும் இடத்தை தெரிவு செய்கிறது. விதைக்கு இலக்கென்றாவது மிக எளிது, நாம் ஈரம் கொண்டிருந்தால் மட்டும் போதும்” என்றான்.

உவகையுடன் அவன் செவிகளைப் பற்றி உலுக்கி “நன்று, நன்று! நான் சொல்கிறேன் சாம்பவரே, ஒரு நாள்  இவருடைய ஆசிரியர் என்று அறியப்படுவீர்கள்” என்று யயாதி சொன்னான். அவன் திரும்பியதும் பணியாள் குறிப்பறிந்து பிறிதொரு தாலத்தை நீட்ட அதைப் பெற்று எழினியிடம் அளித்து “புகழ்சூடுக! வெற்புகள் பொடியாகும் காலத்திற்குப் பின்னரும் உமது சொல் வாழ்க! ஆழியலை என காலம் அமையா நாவுகொண்டு உம் சொல்லை உரைக்கட்டும்” என்றான். அவன் கைநீட்டிப் பெற்ற பரிசிலை கற்றுச்சொல்லியிடம்  அளித்து குனிந்து யயாதியின் கால்களைத் தொட்டு சென்னிசூடினான்.

யயாதி திகைத்து பின் அவன் தலைதொட்டு வாழ்த்தி “புலவர்கள் அரசரின் தாள் சூடுவதில்லை, இளங்கவிஞரே” என்றான்.  “நான் பாரதவர்ஷத்தின் முதன்மை சொல்சுவைஞரின் கால்களை தொட்டேன்” என்றான் எழினி. “கவிஞனுக்கு முதலாசிரியன் அவன்முன் அறியா இருப்பென விளங்கி சொல் தழைக்கவைக்கும் நுண்சுவைஞனே என்பார்கள். இன்றுவரை முகமிலா பேருருவனாக விளங்கியவன் தங்கள் வடிவில் மானுடத் தோற்றம் கொண்டு எழுந்திருக்கிறான். நான் வணங்கியது அவனையே.”

யயாதி “நன்று, வாழ்க!” என்று உளநெகிழ்வுடன் மீண்டும் அவன் தலையை தொட்டான்.  “இந்த அவையில் தாங்கள் எழுதப்போகும் பெருங்காவியத்திற்காக நான் காத்திருப்பேன், தென்னவரே. ஒருவேளை என் உடல் நீங்கினால் இங்கு என் செவிகளில் ஒன்று நுண்வடிவில் இருக்கும் என்று கொள்க! என் கைகள் என் மைந்தர் தோள்களில் அமைந்திருக்கும். ஒளிசூடிவரும் உங்கள் சொற்களுக்கு அவை பரிசளிக்கும். ஆம், அது நிகழும். அத்தருணத்தை இப்போது நன்குணர்கிறேன்” என்றான். சாம்பவர் கண்களில் நீர் வழிய உதடுகளை அழுத்தியபடி சற்று திரும்பிக்கொண்டார். எழினி “குருவருள் நிறைக!” என  மீண்டும் வணங்கினான். அவர்கள் புறம் காட்டாது அகன்றனர்.

tigerயயாதி இசைக்கூடத்தின் மூலையில் கைகட்டி நின்றிருந்த பார்க்கவனை அப்போதுதான் கண்டான். அவனை நோக்கி தலையசைத்தான். பார்க்கவன் அருகே வந்து வணங்கி “நான் இரண்டாவது களத்திலேயே வந்துவிட்டேன். காவியத்தில் மூழ்கியிருந்தீர்கள்” என்றான்.  “ஆம், அரிய காவியம். போர்க்களமொன்றின் உச்ச தருணம். மாயத் தெய்வமொன்று அத்தனை படைக்கலங்களையும் வீரர்களின் கைகளிலிருந்து விலக்கிவிட்டால் அங்கு அரியதோர் நடனம்தான் நிகழும். அக்காட்சியை பார்த்துக்கொண்டு இருப்பதாக எண்ணிக்கொண்டேன். ஊழ் உருவடிவுகொண்டு எழுந்து அலையடிப்பதுபோல. பிரம்மத்தின் சொல் ஒன்று உருகி உருகி சிற்பமாகிக்கொண்டிருப்பதுபோல. பல தருணங்களில் விதிர்ப்பு கொண்டு உளமிலாதவனானேன்” என்றான்.

“நான் இருமுறை எழுந்துசென்றேன், சொல்கொள்ள செவியிலாதிருந்தேன்” என்றான் பார்க்கவன். “ஒரு விந்தையான தொல்கதையிலிருந்து எழுந்தது இக்காவியம். இது பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையில் விளங்குகிறது. இங்கு நிகழ்ந்த பெரும்போர் ஒன்றைப் பற்றியது. அதை நிகழவிருக்கும் போர் என உருவகித்திருக்கிறார் சாம்பவர்”  என்றான் யயாதி. “ஐந்து உடன்பிறந்தார். அக்குலத்திலேயே அவர்களுக்கு எதிர்நிற்கப்போகும் நூறு உடன்பிறந்தார். சீதம் என்னும் நிலத்திற்காக பூசலிட்டு போருக்கு எழுகிறார்கள். பதினெட்டுநாள் நடந்த பெரும்போருக்குப்பின் நூற்றுவரைக் கொன்று ஐவர் வெல்கிறார்கள். வென்று அவர்கள் அடைந்த நாட்டை அவர்களால் ஆளமுடியவில்லை. நூற்றுவர் மூச்சுலகில் எஞ்சி பேயுருக்கொண்டு எழுகிறார்கள். கொடுங்காற்றுகளாக மரங்களை வெறிகொள்ளச் செய்கிறார்கள். அனல்மழையாகப் பெய்து ஏரிகளை சேறுலரச் செய்கிறார்கள். கருக்குழவிகளின் கனவுகளில் கண்ணொளிரத் தோன்றி அறியாச் சொல்லுரைத்து அச்சுறுத்துகிறார்கள்.”

“பன்னிரு குடிப்பூசகர் கூடி வெறியாட்டுகொண்டு வான்சொல் இறக்கி ஆவதுரைக்கின்றனர். அதன்படி ஐந்திறத்தார் அந்நிலத்தை நூறாகப் பகுத்து இறந்தவர் நூற்றுவரின் தெய்வங்களுக்கு படையலிட்டு தங்கள் மைந்தரை அத்தெய்வங்களிடம் ஒப்படைத்துவிட்டு காட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள். நூறு தெய்வங்களும் தென்றலும் குளிரொளியும் ஆகி அந்த மைந்தரை தழுவிக்கொள்கின்றன. அவர்களும் அவர்களின் கொடிவழியினரும் அந்நிலத்தை ஆள்கின்றனர்” என்று யயாதி சொன்னான்.

“மிகத் தொன்மையான ஒரு கதை இது” என்று பார்க்கவன் சொன்னான். “இக்கதையை தென்னகத் தொல்குடியினர் அனைவரும் வெவ்வேறுமுறையில் பாடுகிறார்கள். தொல்காலத்தில் ஆயிரம் மைந்தரைப்பெற்ற பெருந்தந்தை ஒருவர் இறந்து மண்மறைவுக்காக வைக்கப்பட்டிருக்கையில் உடல் பெருகத் தொடங்கியது. கைகால்கள் நீரோடைகள் போல இருபுறமும்  வழிந்தோடி நீண்டன. வயிறு உப்பி தலை உயர்ந்தெழுந்து சிறிய மலையளவுக்கு ஆகியது அவர் உடல். குடியினர் அவர் முன் வணங்கி  ‘தந்தையே, நாங்கள் செய்ய வேண்டியதென்ன?’ என்றார்கள். பூசகரில் சன்னதம் கொண்டு ‘பெருகும் விழைவுடன் இறந்தவன் நான். பெருகுதல் நிலைக்காது நான் விண்ணேக முடியாது. என்னை இரண்டாக வெட்டுங்கள்’ என்று அவர் சொன்னார்.”

அவர்கள் பெரிய கோடரியால் அவரை இரண்டாக வெட்டினார்கள். அவ்விரு துண்டுகளும் தனித்தனியாக பெருகி வளர்ந்தன.  ‘தந்தையே, நாங்கள் செய்ய வேண்டியது என்ன?’ என்று மீண்டும் குடியினர் மன்றாடினர். ‘என் உடலை துண்டுகளாக வெட்டுங்கள். அவற்றை இக்காடு முழுக்க பரப்புங்கள்’ என்றார் மூதாதை. அவர்களில் மூத்தவர்கள் தந்தையின் தலையும் நெஞ்சும் தோளும் அடங்கிய பகுதியை ஐந்து துண்டுகளாக வெட்டினார்கள். காட்டின் ஐந்து நீர்நிலைகளில் அவற்றை வீசிவிட்டு அவர்கள் திரும்ப வருவதற்குள் வயிறும் தொடையும் கால்களும் அடங்கிய பகுதியை அக்குடியின் இளைஞர்கள் நூறு துண்டுகளாக வெட்டியிருந்தனர். அவற்றை அக்காட்டின் சேற்றுநிலங்களில் விசிறியடித்த பின் அவருக்கு படையலிட்டு விண்ணேற்றம் செய்தனர்.

காட்டில் சிதறிய அவர் உடல் தனித்தனி குலங்களாக முளைத்தெழுந்தது. ஐந்து துண்டுகளிலிருந்து ஐந்து பெருங்குலங்கள் உருவாயின. அவர்கள் மழைக்காளான்களைப்போல வெளிறியநிறம் கொண்டிருந்தமையால் பாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டனர். நூற்றுவர் கரிய நிறம் கொண்டிருந்தமையால் கராளர் என்று அழைக்கப்பட்டனர். அவ்விரு குலங்களும் ஒருவரையொருவர் அஞ்சினர். எனவே ஆழ்ந்து வெறுத்தனர். வெண்ணிறத்தோர் கரியவரை சேற்றில் முளைத்தவர்கள், அழுக்குடல் கொண்டவர்கள் என எண்ணினர். கராளர் பாண்டவர்களை பாறைகளில் இருந்து எழுந்த சீழில் உருக்கொண்டவர்கள் என்றனர். பாண்டவர் பசுக்களையும், கராளர் எருமைகளையும் மேய்த்தனர். பாண்டவர்கள் நெல்லையும் கராளர் கேழ்வரகையும் பயிரிட்டனர்.

ஒவ்வொரு நாளும் இரு சாராரும் தங்களுக்குள் வெறுப்பை வளர்த்துக்கொண்டனர். அவர்கள் ஆற்றிய ஒவ்வொரு செயலும் வெறுப்பை வளர்த்தன. ஒவ்வொரு சொல்லும் நூறுமேனி பெருகி பிறரைச் சென்றடைந்தது. நூற்றெட்டு மூதாதையர் கூடி இருசாராரையும் ஒற்றுமைப்படுத்த நூற்றெட்டு முறை முயன்றனர். ஒவ்வொரு முயற்சிக்குப் பின்னரும் அவர்கள் மேலும் காழ்ப்பு கொண்டனர். நூற்றெட்டாவது முறை ஒற்றுமை முயற்சி எடுத்தவர்கள் அர்ஜுனராமன், கிருஷ்ணத் துவதீயன் என்னும் இரு உடன்பிறந்தார்.  அர்ஜுனராமன் வெண்சுண்ணநிறம் கொண்டிருந்தார். இளையவர் யானைக்கன்றுபோல் இனிய கரியநிறமுடையவர். மூத்தவர் மேழியோட்டினார், இளையவர் கன்று புரந்தார்.

காட்டின் மையமாக அமைந்த ஐங்குளத்துக்கரையில் அவர்கள் ஒருங்குசெய்த சந்திப்பு சொல்லேற்றத்திலும் படைமுட்டலிலும் முடிய மூதாதையர் இருவரும் தங்கள் பெரும் படைக்கலங்களை எடுத்து ஓங்கி விண்ணதிரும் ஒலியெழுப்பி அவர்களை அச்சுறுத்தி நிறுத்தினர். அக்கூடல் கலைந்தபின் இருவரும் ஐங்குளத்தருகே அமர்ந்து சொல்கொண்டனர்.    ‘ஏன் இப்பூசல் ஒழியாமலிருக்கிறது? தெய்வங்களை அழைத்து கேட்போம்’ என்றனர். சேற்றில் களம் வரைந்து அதில் வெண்சிப்பிகளும் கரிய கூழாங்கற்களும் பரப்பி தெய்வங்களை வந்தமையச் செய்தனர். சிப்பிகளை மூத்தவரும் கூழாங்கற்களை இளையவரும் ஆடினர். ஆட்டத்தின் ஒரு தருணத்தில் அவர்களின் கைகளை தெய்வங்கள் எடுத்துக்கொண்டன. அனைத்தும் அவர்களுக்கு தெளிவாயின.

‘இது விண்முகட்டுத் தெய்வங்களும் மண்ணாழத்துத் தெய்வங்களும் களம்காண மானுடரை கருவாக்கும் போர். மானுடரால் ஒருபோதும் நிறுத்தப்பட இயலாதது. எனவே இது உகந்த வழியில் நிகழ்வதே முறை. இதன் நெறி பேணுதல் ஒன்றே நாம் செய்யக்கூடுவது’ என்றார் மூத்தவர். ‘ஆம், காட்டெரி தளிர் வளர்ப்பது’ என்றார் இளையவர்.  ‘கரியவர்களை வெண்ணிறத்தோனாகிய நான் துணைப்பேன். வெண்ணிறத்தவரை கரியோனாகிய நீ துணை செய். அதுவே முறை’ என்றார் மூத்தவர். ‘அவ்வாறே’ என்று தலைவணங்கினார் இளையவர். இருவரும் சென்று அக்குலங்களுடன் சேர்ந்து கொண்டனர்.

ஐங்குளத்தின் கரையருகே முறைப்படி காடுதிருத்தி வெளிநிலம் அமைக்கப்பட்டது. கோள்கள் உகந்த நிலைகொண்ட நன்னாளில் இருசாராரும் தங்கள் முழு வீரர்களுடன் அனைத்துப் படைக்கலங்களுடன் திரண்டனர். மூத்தவர் மேழியைத் தூக்கி போர்க்குரலெழுப்பினார். இளையவர் வளைதடியை ஏந்தி போர்முகம் கொண்டார். முதற்கதிர் எழும் புலரியில் போர்முரசு ஒலித்ததும் அணைகள் உடைந்து நீர் பெருக்கெடுத்து எழுந்து  அறைந்து இணைந்து நுரை கொப்பளிக்க ஒன்றென ஆகி சுழிப்பதுபோல இரு படைகளும் மோதிக்கொண்டன.

அப்பெரும்போர் பதினெட்டு நாட்கள் நடந்தது. பதினெட்டாவது நாள் இருசாராரும் முழுமையாகவே இறந்து விழுந்தனர்.  இருகுடியிலுமாக ஓர் ஆணும் ஒரு பெண்ணும் மட்டுமே எஞ்சினர். குருதி வழிந்த அந்தக் களத்தில் வைத்து கராளகுலத்துக் கருநிற மங்கையாகிய கிருஷ்ணையை பாண்டவகுலத்து வெண்ணிற  இளையோனாகிய அர்ஜுனனுக்கு மூதாதையர் இருவரும் கைசேர்த்து வேதச்சொல் ஒலிக்க மணம் செய்து வைத்தனர்.  அவர்களிடம் அங்கிருந்து அகன்று தங்கள் நிலத்தைக் கண்டுபிடித்து அங்கு குருதி பெருக்கும்படி பணித்தனர்.  அந்தக் களக்குருதியைத் தொட்டு அவள் குழலில் பூசி அதை ஐந்துபுரியாகப் பிரித்து கட்டியபின் அவர்கள் தெற்கே சென்று குடியமைத்து மைந்தரை ஈன்று குடியென குலமெனப் பெருகினர்.

ஆயிரம் ஆண்டுகள் கழித்து அக்குலத்தினர் திரண்டு அந்தப் போர் நிகழ்ந்த இடத்தை நாடிவந்தனர். அங்கு பல்லாயிரம் எலும்புகள் மண்ணில் புதைந்துகிடக்க அவற்றின்மேல் வேர் சுற்றி எழுந்த மரங்கள் செறிந்த காடு செங்குருதிநிற மலர்களால் நிறைந்திருக்கக் கண்டனர். அக்காட்டில் நூற்றைவருக்கு கற்சிலைகளை நாட்டி படையலிட்டு வணங்கி வழிபட்டு மீண்டனர். குருதிப்பூவின் விதைகளைக் கொண்டுசென்று தங்கள் மண்ணில் நட்டு வளர்த்தனர். அவர்களின் குலத்தின் குறியாக அந்த மலர் அமைந்தது. இளவேனில் தொடக்கத்தில் அவர்களின் குலக்கன்னியர் ஐந்துபுரியென குழல்வகுத்து அதில் செங்காந்தள் மலர்சூடி இளையோருடன் காதலாடினர். அது இனிய புதல்வியரையும் வலிய மைந்தரையும் அளிக்குமென நம்பினர்.

“திருவிடத்திற்குத் தெற்கே தொல்தமிழ் நிலத்தின் தென்முனம்பில் முக்கடல்சந்திப்பின் அருகே மகேந்திர மலையில் வாழும் தொல்குடிகளின் கதை இது. தங்கள் மூதாதையர் வடக்கே இமயப் பனிமலைகளின் அடியில் வாழ்ந்த முதற்குடியினர் என்று அவர்கள் சொல்கிறார்கள். அவர்களிடமிருந்து இக்கதை பிற குடிகளுக்குப் பரவி வடிவ மாறுதல் அடைந்தபடியே உள்ளது” என்று பார்க்கவன் சொன்னான். யயாதி  “விந்தையான கதை. ஆனால் பாரதவர்ஷத்தின் வளர்ச்சிப்போக்கை எவ்வண்ணமோ அது சுட்டுவது போலும் உள்ளது. கருமையும் வெண்மையும் முடிவிலாது கலந்து கொண்டிருக்கும் ஒரு மாயச் சிறுசிமிழ் என்று இந்நிலத்தை சொல்லமுடியும்” என்றான்.

tigerஅவர்கள் அரசத்தனியறை நோக்கி நடக்கையில் பார்க்கவன்  “நான் இந்த அவைநிகழ்வு தொடங்குவதற்குள் தங்களை வந்து சந்திக்கவேண்டுமென்றிருந்தேன். அதன்பொருட்டே விரைந்தோடி வந்தேன்” என்றான். யயாதி “ஆம். நான் உச்சிக்குப் பின்னர்தான் இவர்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் திடீரென்று எண்ணியிராதபடி பிறிதொரு திட்டம் எழுந்தது. மாலை அசோகவனிக்கு செல்வதாக இருந்தேன். முன்னரே கிளம்பி இன்றிரவே சென்றுவிடலாம் என்று தோன்றியது. ஆகவே இவர்களை உடனே கிளம்பி அவைக்கு வரும்படி அழைத்தேன்” என்றான்.

“நான் சொல்ல வந்த செய்தி இரு வகைகளிலும் தொடர்புடையதே” என்று பார்க்கவன் சொன்னான். அவன் குரலில் இருந்த மாற்றத்தை உணராமல் சாளரங்களை மாறி மாறி பார்த்தபடி நடந்த யயாதி “சொல்!” என்றான்.  “இந்தப் பாணர்குழு இன்று காலை பேரரசியின் அவை முன் தோன்றியிருக்கிறது. அங்கே எட்டு புலவர்க்குழுவினர் முன்னரே வந்திருந்தனர். ஆகவே எவரையும் முழுநூலையும் பாடுவதற்கு அரசியின் அமைச்சர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.  அரசி அவர்கள் ஒன்பதுபேருக்குமாக அரைநாழிகைப் பொழுதையே ஒதுக்கியிருந்தார்கள்.” யயாதி “அவள் முழுக் கோபுரத்தின் எடையையும் தாங்கியிருக்கும் ஆணிக்கல்” என்றான்.

முதல் வாழ்த்துச் செய்யுளை மட்டுமே பாடினால் போதும் என்று அரசியின் முதன்மையமைச்சர் கிருபர் ஆணையிட்டிருக்கிறார். அதை ஏற்று அத்தனை புலவர்களும் தங்கள் நூல்களின் முதன்மைச் செய்யுள்களை மட்டுமே பாடியிருக்கிறார்கள். சாம்பவரும் அவ்வாறே பாடி பரிசிலை பெற்றுக்கொண்டார். பரிசில் பெற்றவர்கள் அரசியை அணுகி வணங்கி வாழ்த்தொலி கூறி புறங்காட்டாது பின்னகர்ந்தபோது தென்னகத்தின் இவ்விளைய புலவர் மட்டும் வாழ்த்தொலி கூறாது தலைவணங்கி திரும்பிச்செல்ல அரசி அவரிடம் “இவர் என்ன சொல்லற்றவரா?” என்று கேட்டார். சாம்பவர் திகைத்து சொல்வதறியாது இளையோனிடம் கையசைத்தார். இவர் அப்போதும் வாழ்த்துரைக்காமல் வெறுமே நின்றார். “வாழ்த்துரை கூற உமக்கென்ன தயக்கம்?” என்று அரசி அவரிடம் கேட்டார்.

இவர் “பேரரசி, நீங்கள் அளித்த பரிசிலை நான்  ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே முறைப்படி வாழ்த்தொலி சொல்லும் கடன் எனக்கில்லை” என்றிருக்கிறார். “ஏன் பரிசிலை ஏற்றுக்கொள்ளவில்லை?” என்று அரசி சினத்துடன் கேட்க இவ்விளைஞர்  “அது வரிசை அறியாது அளிக்கப்பட்டது. எங்கள் காவியத்தைக் கேட்டு மகிழ்ந்தளிக்கும் பரிசு மட்டுமே எங்களுக்குரியதாகும். நிரைநின்று தலைவணங்கிப் பெறுவது பரிசில் அல்ல, வறுமைக்கொடை.  அதைப் பெறுவதற்கு நாங்கள் இரவலரல்ல” என்றார்.

சினத்துடன் எழுந்த பேரரசி அமைச்சரிடம் “யாரிவன்? பேரரசியின் முன் எப்படி சொல்லெடுக்க வேண்டுமென்று இவனுக்கு சொல்லப்படவில்லையா?” என்றிருக்கிறார். சாம்பவர் அவனை இடதுகையால் தன்னுடன் அணைத்துக்கொண்டு  “பொறுத்தருளுங்கள், அரசி! தங்கள் கால்களில் சென்னி வைத்து மன்றாடுகிறேன். என் முதன்மை மாணவன். சொல்மகள் அமர்ந்த நா கொண்டவன். இவன்பொருட்டு நான் எத்தண்டத்தையும் ஏற்கிறேன்” என்றார். அரசி சினத்துடன்  “இச்சிறுவனைப் பொறுத்தருளவில்லையென்றால் இவனுக்கு நான் நிகர்நின்றதாக ஆகும். ஆகவே உங்களை விட்டனுப்புகிறேன். ஆனால் நீங்கள் இப்போதே இந்த அவை நீங்கவேண்டும். இன்றே இந்நகர்விட்டு அகலவேண்டும்”  என்றபின் உள்ளே சென்றார்.

காவலர்தலைவன் தீர்க்கபாதனும் காவலர்களும் சினத்துடன் புலவரை நெருங்க முதிய அந்தணரான சுஸ்மிதர்  “அவர்கள் சொல்லேந்தியவர்கள், வீரரே. எவ்வகையிலும் அவர்களுக்குத் தீங்கு நேர இந்நகரின் நெறியும் குடியும் ஒப்பாது. அரசி ஆணையிட்டபடி அவர்கள் நகர் நீங்கட்டும். இந்நாட்டின் எல்லைக்குள் இவர்களுக்கு ஒரு தீங்கும் நிகழாது பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை” என்றார். அமைச்சர் கிருபர் சினத்துடன்  “அவ்வாறே செய்யுங்கள்” என ஆணையிட்டுவிட்டு உள்ளே சென்றர். இரு காவலர் அவர்களை அழைத்து வெளியே கொண்டுசென்று விட்டனர். “இச்செய்தி எங்கும் பரவக்கூடாது. அது பேரரசிக்கு இழிவு” என்று சுஸ்மிதர் சொன்னார்.

“அரசி அளித்த பரிசில்களை இவர்கள் அருகிருந்த கொற்றவை ஆலயத்தின் வாயிலிலேயே வைத்துவிட்டார்கள். அங்கிருந்து தங்களை சந்திப்பதற்கு இங்கு வந்திருக்கிறார்கள். உங்களைச் சந்தித்து ஒரு சொல் பெற்றுவிட்டே மீளவேண்டும், அதன்பொருட்டே அத்தனை தொலைவு கடந்து வந்திருக்கிறோம் என அவ்விளைஞர் தன் ஆசிரியரிடம் வற்புறுத்தியிருக்கிறார்” என்றான் பார்க்கவன்.  “அவர்கள் இங்கு வந்ததை நான் அறிந்தேன். அரசியால் விலக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் பெரும்பரிசு எதையும் அளித்துவிடக்கூடாதே என்று எச்சரிக்கும்பொருட்டே இங்கு ஓடிவந்தேன்” என்றான்.

யயாதி புன்னகைத்து  “அவர்களுக்கு நான் பெரும்பரிசு அளிப்பேன் என்று எப்படி தெரிந்தது?” என்றான். “பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியின் எதிரே நிமிர்ந்து நின்று நீங்கள் என் சொல்லுக்குக் கீழ் என்று ஒருவன்  சொல்வான் என்றால் அவனிடம் இருக்கும் சொல் உலகளந்தோன் நெஞ்சில் சூடும் அருமணிக்கு நிகரானது. காலங்களைக் கடந்து செல்லும் பேராற்றல் கொண்டது.  தன்னுள் எழுந்த சொல்லின் தன்மை அறிந்தவன் மட்டுமே அப்படி உரைக்கமுடியும். பெருஞ்சொல் ஒருவனில் எழுந்ததென்றால் பிறர் அறிவதற்கு முன் அவன் அதை அறிவான்” என்றான் பார்க்கவன்.

யயாதி “ஆம், இதுவரை இந்த அவையில் அளிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய பரிசிலை இவர்களுக்குத்தான் அளித்திருக்கிறேன். பன்னீராயிரம் கழஞ்சுப் பொன். பன்னிரண்டு அருமணிகள்” என்றான். பார்க்கவன் நின்று “உண்மையாகவா?” என்றான். “ஆம்” என்று யயாதி சொன்னான். பார்க்கவன் கவலையுடன் தன் நெற்றியைத் தடவியபடி  “நான் எண்ணினேன், ஆனால் இத்துணை எதிர்பார்க்கவில்லை” என்றான். யயாதி “அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. வேண்டுமென்றால் அவர்கள் உரிய பாதுகாப்புடன் நமது எல்லை கடக்கவேண்டுமென்ற ஆணையை நான் பிறப்பிக்கிறேன்” என்றான்.

“அது தேவையில்லை. பேரரசியின் சொல்லுக்கு அப்பால் இங்கு எவரும் எதுவும் எண்ணப்போவதுமில்லை. அவர்களின் விழியும் செவியுமில்லாத ஒரு கைப்பிடிமண் கூட நமது நாட்டுக்குள் இல்லை என்று எவரும் அறிவார்கள். சொல்தேர்பவனை பழிகொள்ளும் அளவுக்கு நெறியறியாதவரல்ல அரசி” என்று பார்க்கவன் சொன்னான். “பிறகென்ன?” என்றான் யயாதி. “அரசே, நீங்கள் விரிசலின் ஒலியை கேட்கவில்லையா?” என்றான்.

“ஆம். அது முன்பெப்போதோ தொடங்கிவிட்டது. நான் அவளை பார்த்தே நீணாள் ஆகிறது. இரண்டாவது மைந்தனின் படைக்கலமளிப்பு விழாவன்று அவள் அருகே அமர்ந்தேன். அன்று மாலை அவளுடனும் மைந்தனுடனும் சொல்லாடிக்கொண்டிருந்தேன். அதன்பிறகு ஓரிரு முறை அவைகளில் சேர்ந்தமர்ந்திருக்கிறோம். விழவுகளில் அருகே நின்றிருக்கிறோம். ஓரிரு முறைமைச் சொற்களை உரைத்திருக்கிறோம். உளமாடிக்கொண்டதே இல்லை” என்றான் யயாதி.  “என் ஆணைகள் எவையும் இந்நகரில் இன்று செயல்வடிவு கொள்வதில்லை. எனவே ஆணையென  எதையும் நான் இடுவதுமில்லை. திரிகர்த்தர்களையும் சௌவீரர்களையும் வெல்ல படைகிளம்பிய செய்திகூட அவர்கள் களம்வென்ற பின்னரே என் செவிக்கு வந்தது.”

“அரசே, தாங்களும் அரசியும் பிரிந்து நெடுநாளாகிறது. இப்போது எதிர்நிற்கத் தொடங்கிவிட்டிருக்கிறீர்கள்”  என்றான் பார்க்கவன். “நான் அஞ்சுவது நிகழவிருக்கிறது என்று என் ஆழுள்ளம் சொல்கிறது.   வரும் முழுநிலவுநாளில்  பேரரசி அசோகவனிக்கு செல்லவிருக்கிறார்கள்.” யயாதி திகைத்து நின்று சிலகணங்கள் கழித்து “தேவயானியா? ஏதேனும் தெரிந்துவிட்டதா?” என்றான். “இல்லை” என்றான் பார்க்கவன். யயாதி நீள்மூச்சுவிட்டு “நன்று” என்றான்.   “ஆனால் தெரிவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன” என்றான் பார்க்கவன். “அதைத் தவிர்ப்பதைப்பற்றி பேசுவதற்கே நான் வந்தேன்.”

யயாதி நோக்கி நின்றிருக்க பார்க்கவன் “உங்கள் குலமுறையன்னை அசோகசுந்தரியின் பலிகொடைநாள் வருகிறது. அதைக் கொண்டாடும்பொருட்டு அங்கே ஒரு பெருவிழவை ஒருங்கமைக்கிறார்கள். அரசி அதற்காக அங்கு செல்கிறார் என்பது அரசின் அறிவிப்பு. ஆனால் நம் எல்லையில் வாழும் தொல்லரக்கர்குடிகளில் ஏழு நம்முடன் அரசுமுறைத் தொடர்பு கொள்ள ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். யயாதி “அதாவது கப்பம் அளிக்கப்போகிறார்கள்” என்றான். “ஆம், அதை முறைப்படி செய்வதென்றால் அவர்கள் அரசியிடம் வந்து பணியவேண்டும். அரசியின் அவையில் அமரவேண்டும். அரசி அவர்களுக்கு தலைப்பாகையும் கொடியடையாளமும் அளிப்பார்கள். அரசியின் குடித்தலைவர்களாக அவர்கள் அமைவார்கள். அந்த அடையாளம் அவர்களுக்கு பாதுகாப்பு, பிற குடிகளை வெல்வதற்கான படைக்கலம். அதற்கீடாக அவர்கள் திறை செலுத்துவார்கள்” என்றான் பார்க்கவன்.

“அதை ஏன் அங்கே நிகழ்த்துகிறாள்?” என்றான் யயாதி. “மேலும் பதினெட்டு தொல்குடிகள் அக்காடுகளில் உள்ளன. ஏழு குடிகள் நம்மவர்களாவதை அவர்கள் அறியவேண்டும். எதிர்ப்பதற்கு அஞ்சவேண்டும், பணிந்தால் நலனுண்டு என விழைவுகொள்ளவேண்டும்” என்றான் பார்க்கவன். “அவர்கள் எவரும் இதுவரை கண்டிராதபடி மிகப் பெரிய குடிவிழவாக அதை அமைக்க எண்ணுகிறார்கள். தொல்குடிகளின் போர்க்களியாட்டுகள், நடனங்கள், விருந்துகள் என ஏழு நாட்கள் நீளும் கொண்டாட்டம்.” யயாதி “அப்படியென்றால் அவள் பதினைந்து நாட்களுக்குமேல் அங்கிருப்பாள்” என்றான்.  “சர்மிஷ்டையை உடனே அங்கிருந்து அகற்றவேண்டும்.”

“இளைய அரசியை அங்கிருந்து விலகச் செய்வது பெரும்பிழை. பேரரசிக்கு பல்லாயிரம் செவிகள்” என்று பார்க்கவன் சொன்னான். “இளைய அரசி அங்கிருந்து அகற்றப்பட்டார் என்றால் ஐயம் எழும். அரசி அங்கிருக்கட்டும். அரசி தங்கியிருக்கும் மாளிகையையும் மாற்றவேண்டியதில்லை. அங்கே காவலர்தலைவன் தன் குடும்பத்துடன் தங்கியிருக்கட்டும்.” யயாதி “அவனுக்குச் சேடியாக சர்மிஷ்டை இருக்கிறாள் என்றாகவேண்டும் அல்லவா?” என்றான். “ஆம்” என்றான் பார்க்கவன். “இளவரசர் மூவரையும் வெளியே அனுப்பிவிடுவோம். அவர்கள் அங்கிருந்தால்தான் இடர். அவர்கள் காட்டுக்குள் சென்று தங்கட்டும். விழவு முடிந்து மீள்வது நன்று.”

நெடுநேரம் யயாதி ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் “ஒன்றும் நிகழலாகாது என்று தெய்வங்களை வேண்டிக்கொள்கிறேன்” என்றான். பார்க்கவன் “பேரரசியின் உயரத்தில் இருந்து இத்தனை சிறியவற்றை அவர்களால் இன்று நோக்கவியலாது. அவர்களின் இலக்கு மலைக்குடிகளை வென்றடக்கியபின் எல்லைகளை வலுப்படுத்திவிட்டு தென்னகம் நோக்கி படைகொண்டு செல்வது. அதன் நடுவே பிறவற்றை அவர்கள் அறிய வாய்ப்பில்லை. யானை நடக்கும் பாதையில் எறும்புகள் நாமெல்லாம்” என்றான்.  யயாதி “ஆம், நன்று நிகழவேண்டும்” என்றான்.