மாதம்: ஏப்ரல் 2017

நூல் பதின்மூன்று – மாமலர் – 89

89. வேர்விளையாடல்

முண்டன் கதையை முடித்தபின்னரும் பீமன் காட்சிகளிலிருந்து விடுபடவில்லை. முண்டன் எழுந்துசென்று அருகே நின்றிருந்த அத்திமரத்தில் தொற்றி ஏறி கனிந்தவற்றை மட்டும் பறித்து கைகளால் உடைத்து மலரச்செய்து உள்ளே செறிந்திருந்த செம்மணித்தசையை பற்களாலேயே சுரண்டி உண்ணத்தொடங்கினான். அவன் கிளைதாவிய அசைவில் விழிப்புகொண்ட பீமன் முதற்கணம் அவனை குரங்கென்றே உணர்ந்தான். எழுந்து கொண்டு “கனிந்துள்ளனவா?” என்றான். “ஆம், பசிக்கிறது” என்றபின் அவன் தாவி நிலத்தில் விழுந்து அணுகி கையிலிருந்த கனிகளை அளித்தான்.

பீமன் அவற்றை வாங்கி உண்டபின் “அஸ்ருபிந்துமதியின் கதையை நான் கேட்டுள்ளேன்” என்றான். “விழிநீர்மகள். ஒவ்வொருவருக்கும் அவ்வண்ணம் ஒருத்தி உண்டு என்பார்கள் கவிஞர். அவளையே பிற பெண்களிடம் மானுடர் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் அடைகிறார்கள். பின்னர் சொல்லிச் சொல்லி தங்களை தேற்றிக்கொண்டு இவளே என்றும் இவ்வளவே என்றும் நிறைவுகொள்கிறார்கள். அது நிறைவல்ல என பின்னர் அறிகிறார்கள். அப்போது வாழ்க்கை சென்றுவிட்டிருக்கும். முன்னோக்கிச் செல்லும் உள்ளமும் இல்லாமலாகிவிட்டிருக்கும். பின்னால் நோக்கவும் அடைந்தவற்றையும் இழந்தவற்றையும் எண்ணி எண்ணி ஏங்கவுமே பொழுதிருக்கும்” என்றான் முண்டன்.

“யயாதி என்னவானார்?” என்றான் பீமன். “கதைகளின்படி அவர் ஆயிரமாண்டுகாலம் காட்டில் அஸ்ருபிந்துமதியுடன் காமத்திலாடினார். காமநிறைவடைந்தபின்னர் குருநகரிக்கு மீண்டு தன் இளைய மைந்தன் புருவை அழைத்து அவன் இளமையை திருப்பியளித்து அவனை அரசனாக ஆக்கினார். முதுமைசூடியபின் மீண்டும் காடேகினார். பிருகுதுங்கம் என்னும் மலையை அடைந்து அங்கே ஏழு குகைகளில் வாழ்ந்த சப்தசிருங்கர்கள் என்னும் முனிவர்களுடன் வாழ்ந்து மெய்யுணர்ந்து உடல் உதிர்த்து விண்புகுந்தார்.”

“பிருகுதுங்கத்தில் தன்னைத் தேடிவந்த முனிவர்களுக்கு மாமன்னர் யயாதி உரைத்த நெறிகளும் மெய்யறிவுகளும் யயாதிசூக்தங்கள் என்னும் பேரில் மூன்று தொகுதிகளாக முனிவர்களால் தொகுக்கப்பட்டுள்ளன. இன்றும் அவை அரசுசூழ்தலுக்கான நூல்களாக பயிலப்படுகின்றன” என்றான் முண்டன். பீமன் நிறைவில்லாதவனாக கைகளை நக்கியபின் “நான் விழைவது பிறிதொன்று” என்றான். “அவர் அறிந்த மெய்யறிதல்களால் என்ன பயன்? அதைப்போன்ற பலநூறு மெய்யறிதல்கள் சேர்ந்து பெரும் சொற்குவையாக நம் தலைக்குமேல் உள்ளன. மூத்தவர் அவற்றை நாள்தோறும் பயின்று தன்னை எடைமிக்கவராக ஆக்கிக்கொள்கிறார்.”

“நீங்கள் அறியவிழைவதுதான் என்ன?” என்றான் முண்டன். “அவர் மீண்டும் தன் தேவியரை சந்தித்தாரா?” என்றான் பீமன். “அவர்களுடனான உறவை அவர் எப்படி அறுத்துக்கொண்டார்?” முண்டன் “அதை நான் சொல்லமுடியாது. தொடக்கம் முதலே இக்கதைப்பெருக்கில் வினாக்களே திரண்டெழுகின்றன” என்றான். “ஆம், அன்னையர் அவரை எப்படி ஒரே கணத்தில் அறுத்துக்கொண்டார்கள்? அவர்களில் அவர் எவ்வண்ணமேனும் எஞ்சினாரா?” என்றான் பீமன். “அவ்வாறு முற்றிலும் தன்னிலிருந்து தன் ஆண்மகனை அகற்றிவிட பெண்களால் இயலுமா?”

முண்டன் புன்னகை புரிந்து பேசாமலிருந்தான். பீமன் ஆற்றாமையுடன் கைகளை விரித்து “தனக்கு மட்டுமே என்றும் தனக்கில்லையென்றால் முற்றழியவேண்டும் என்றும் எண்ணுவது எப்படி மெய்யன்பாக இருக்கவியலும்? தம் மைந்தன் என்றால் இவ்வண்ணம் நடந்துகொண்டிருப்பார்களா?” என்றான். முண்டன் “இத்தகைய பலநூறு வினாக்களின் தொகையை சுமையெனக்கொண்டே ஒவ்வொருவரும் வாழ்க்கையை முடிக்கிறார்கள்” என்றான். பீமன் தன்னுள் மூழ்கி நெடுநேரம் அமர்ந்தபின் “தாயின் உறவன்றி உறவென்று வேறேதும் உண்டா இப்புவியில்?” என்றான். முண்டன் சிரித்து “அது ஒன்று எஞ்சியுள்ளது உங்களுக்கு, நன்று” என்றான்.

“என் வினாக்களுடன் நான் இங்கிருந்து எழமுடியாது” என்றான் பீமன். திரும்பி கருவறைக்குள் அமர்ந்திருந்த தேவயானியை நோக்கியபின் “அவரிடம் நான் அனைத்தையும் உசாவியாகவேண்டும்” என்றான். “நீங்கள் சென்றகாலத்திற்குள் செல்லவேண்டுமா?” என்று முண்டன் கேட்டான். “ஆம், அங்கே நான் யார் என்று அறிந்தாகவேண்டும்.” முண்டன் தன் முகத்தருகே பறந்த ஒரு இறகுப்பிசிறை நோக்கியபின் “இதை நோக்குக, இளவரசே” என்றான். “இதன் நிலையழிதலை. இதை அலைக்கழிக்கும் காற்றுகளை விழிகளால் காணமுயல்க!”

பீமன் அதை நோக்கி விழிநாட்டினான். அதன் ஒவ்வொரு பீலியையும் அணுக்கமாக பார்க்கமுடிந்தது. அது மிகச்சிறிய சிட்டுக்குருவி ஒன்றின் கழுத்தில் இருந்த இறகு. பருப்பொருள் வடிவை உதறி ஒளியாக மாறும் முதல்படியிலிருந்தது. அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் தொட்டு அசைத்தது காற்று. அல்லது ஒவ்வொரு பீலிக்கும் தனிக்காற்றா? காற்றென்பது ஒரு பெரும் படையெழுச்சியா? அவ்வசைவுகளினூடாக உயிர்கொண்டதுபோல சிறகுப்பிசிறு எண்ணியது, குழம்பியது, முடிவெடுத்து திரும்பியது, வேண்டாம் என்றது, ஆம் என்று மீண்டும் நிலைத்தது, அடடா என எழுந்தது, ஆ எனத் திகைத்துத் திரும்பியது, போதும் என விழுந்தது, இதை மட்டும் என மீண்டும் எழுந்தது.

முண்டன் தன் கைகளை அதைச்சுற்றி மெல்ல அசைக்கலானான். அந்தக் காற்றால் இறகு அலைவுற்றது. அவன் கையை விலக்கியபோது முகர விரும்பும் நாய்க்குட்டி என தேடிச்சென்றது. கைகளை நீட்டியபோது அஞ்சிய பறவை என விலகியது. காற்றலைகளை அவன் காணத் தொடங்கினான். மிக மென்மையான நீல ஒளியாக அவை இருந்தன. குளிர்ந்திருந்தன. அவற்றில் கோடிக்கணக்கான மென்துகள்கள். ஒவ்வொன்றும் ஒளிகொண்டிருந்தது. ஊடே பறந்தன நுண்ணுயிர்கள். மிகச்சிறிய சிறகுத்துளியை அணிந்தவை. அவற்றை அளைந்துகொண்டே இருந்தது சிறகுப்பிசிர்.

“எங்கிருக்கிறீர்கள், இளவரசே?” என மிகத் தொலைவில் எங்கோ இருந்து முண்டன் கேட்டான். “ஓர் அரண்மனையில்… மஞ்சத்தில்” என்றான் பீமன். “என்ன செய்கிறீர்கள்?” என்று மீண்டும் முண்டன் கேட்டான். “படுத்திருக்கிறேன், துயில்கிறேன்… நீங்கள் என் கனவில் வந்து இக்கேள்வியை எழுப்புகிறீர்கள்.” முண்டன் மெல்ல நகைத்து “ஆம்” என்றான். “எங்கிருக்கிறீர்கள்?” என்றான் பீமன். “நெடுந்தொலைவில்… எதிர்காலமெனும் பெருக்கின் மறுகரையில்” என்றான் முண்டன். பீமன் “ஆம், என்னால் உணரமுடிகிறது” என்றான். “நீங்கள் கனவுகாண்பது எதை?” என்றான் முண்டன். “என் கனவில் எப்போதும் நான் ஒரு பேருருவன். திரண்ட தோள்களும் திமிர்க்கும் தசைகளும் கொண்டவன். காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கிறேன்.”

“எங்கே?” என்றான் முண்டன். “ஓர் இனிய சோலைக்காடு. அறியா மணம் ஒன்றால் அழைக்கப்படுகிறேன். எண்ணிய மலர் என தன்னை உருமாற்றிக் காட்டும் மாயமணம் அது. உடன் ஒரு குரங்கு வருகிறது.” முண்டன் சிரித்து “குரங்கா?” என்றான். “ஆம், தாவியும் சுழன்றும் எழுந்தும் அது கையூன்றி முன் செல்கிறது. நிழல் என. வழிகாட்டும் நிழல். அந்நிழலை நான் தொடர்கிறேன். அதன் அசைவுகளை நிகழ்த்துகிறேன். அப்படியென்றால் நான்தான் நிழலா? நிழலுக்கு வண்ணமும் வடிவமும் எண்ணமும் இருப்பும் உண்டா?”

“அங்கு ஒரு சிற்றாலயத்தை காண்கிறேன். அதற்குள் ஓர் அன்னைத்தெய்வம் ஐம்புரிக்குழலை அவிழ்த்திட்டு வெறிமின்னும் கண்களும் அருள்நிறை இளநகை சூடிய இதழ்களுமாக நின்றிருக்கிறது. அதன் முன் நின்றிருக்கிறேன்” என்றான் பீமன். “அவள் யார்?” என்றான் முண்டன். “அறியேன். அவள் என் அன்னையை நினைவுறுத்துகிறாள்.” முண்டன் “உங்கள் பெயர் என்ன?” என்றான். “என் பெயர் புரு. சந்திரகுலத்தின் பேரரசர் நகுஷரின் மைந்தர் யயாதியின் கடைமைந்தன். அவர் கொடியையும் குடியையும் கொடையெனப் பெற்று அரசாள்கிறேன்.”

tigerவிழித்தபோது அக்கனவை சேற்றில்படிந்து மட்கிய இலையின் வடிவப்பதிவுபோல நினைவுகளில்தான் புரு அறிந்தான். அப்பதிவிலிருந்து கனவை மீட்டெடுக்க விழைவதுபோல இருண்ட அறையின் கூரைச்சரிவில் நெய்விளக்கின் தாழ்திரியின் சிற்றொளியில் அலையடித்த நிழல்களை நோக்கியபடி படுத்திருந்தான். பின்னர் எழுந்து தன் கைகளை நோக்கியபடி “சிவம்யாம்!” என முழுமைச்சொல் உரைத்தான். எழுந்து மிதியடியை அணிந்துகொண்டபோது கதவைத் திறந்த ஏவலன் வணங்கினான்.

நீராட்டறைக்கு அவனுடன் செல்கையில் இடைநாழியில் காத்து நின்றிருந்த அமைச்சன் சுபகன் வணங்கி உடன் சேர்ந்துகொண்டான். தந்தை பார்க்கவனின் நீத்தார்கடனுக்காக அவன் கங்கைக்கரைக்குச் சென்று பதினைந்துநாட்களுக்குப் பின்னரே மீண்டிருந்தான். இருவரும் சொல்லில்லாமல் நடந்தனர். அவர்களின் காலடிகள் உரையாடல்போல் ஒலித்தன. இடைநாழியின் வளைவுகளில் நிழல்கள் இணைந்து ஒன்றாயின.

நீராட்டறைக்குள் நுழைந்ததும் ஏவலர் வந்து புருவை வணங்கி அவன் மேலாடையை கழற்றினர். இனிய தைலமணத்துடன் ஆவியெழ கலத்தில் நிறைந்திருந்த நீரின் அருகே வெண்கலச் சிற்றிருக்கையில் அவன் அமர அவர்கள் அவன் இடையாடையைக் கழற்றிவிட்டு எண்ணை பூசத்தொடங்கினர். நறுமணம்கலந்து காய்ச்சப்பட்ட எள்ளெண்ணையின் மணத்தை நீராவி அள்ளி அறைமுழுக்க கொண்டுசென்று சுவர்களில் துளியாக்கி வழியச்செய்தது.

“மீண்டும் அதே கனவு” என்று புரு சொன்னான். அவன் குரலை எதிர்பாராத சுபகன் சுவரில் வழிந்த நீர்த்துளியிலிருந்து விழிவிலக்கி “எண்ணினேன்” என்றான். “யார் அவன்? எதற்காக அவ்வுருவை கனவுகாண்கிறேன்?” என்றான். “நீங்கள் திண்தோள்கொண்டவர் அல்ல. உங்கள் விழைவுதான் அவ்வாறு கனவிலெழுகிறது” என்றான் சுபகன். “நாம் அறியாத மூதாதையரைப்போலவே நாம் அறியவும் இயலாத வழித்தோன்றல்களும் நம் கனவிலுறைகிறார்கள் என்று நிமித்திகர் சொன்னார். அது மெய்யென்றே எனக்கும் தோன்றுகிறது” என்றான் புரு. “ஒவ்வொரு மரத்திலும் விதைகள் உறைகின்றன. விதைகளுக்குள் விதைகள் வாழ்கின்றன என்று ஒரு சொல்லாட்சி உண்டு.”

சுபகன் “அவ்வண்ணம் எண்ணிக்கொள்வதனால் நிறைவு கொள்கிறீர்கள் என்றால் அதுவே ஆகுக!” என்றான். “எவ்வாறு எண்ணினாலும் எந்த வேறுபாடும் உருவாகப்போவதில்லை. அவன் கொடிவழியினன் என்றால் அவனை காணப்போகிறீர்களா என்ன?” புரு “அவன் உருவை ஓவியர்களைக்கொண்டு வரைந்து வைக்கவேண்டுமென எண்ணினேன். எங்காவது அது இருக்கவேண்டும். வண்ணங்களில் அல்ல, கல்லில். ஆயிரமாண்டுகளானாலும் அங்கே அது காத்திருக்கவேண்டும். என்றோ ஒருநாள் அவன் வந்து அதன்முன் நிற்பான்” என்றான்.

சுபகன் நகைத்து “அதை நீங்கள் என அவன் பிழையாக எண்ணிக்கொள்ளக்கூடும். அவன் கனவில் வந்த உருவம்” என்றான். “இந்த நுண்ணிய வலைப்பின்னலை நெய்துகொண்டிருக்கும் கைகளிடம் எங்களுக்கும் இதை ஆடத்தெரியும் என்று காட்டவேண்டாமா?” என்றான் புரு. “அவனை நான் அத்தனை நீர்ப்பரப்பிலும் முகமெனக் காண்பேன். மஞ்சள் நிறமும் பெரிய தாடையும் கொண்ட முகம். விழிகள் சிறியவை, ஆனால் அழியா நகைப்பு சூடியவை. அவன் பேருடலுக்குள் இருக்கும் அறியாச் சிறுவன் ஒருவன் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுவான்.”

சுபகன் “அரசே, நீங்கள் இளமையை முற்றிழந்தவர். அக்கனவு அதனால்தான் என நினைக்கிறேன்” என்றான். “நீயே சொன்னாய், இப்படி எண்ணிக்கொள்வதில் பயன் ஏதுமில்லை என. அப்படியென்றால் ஏன் குறைத்து அறியவேண்டும், பெருக்கியறிவது உவகையையாவது அளிக்கிறதே?” என்றான் புரு. “அவ்வாறெனினும் ஆகுக!” என்று சுபகன் சிரித்தான். “சூதர்களைக்கொண்டு அதை பாடச்செய்வோம். நுரையெனப் பெருக்குவார்கள். பின் கவிஞர்களைக்கொண்டு எழுதச்செய்வோம். நுரையை பளிங்குப்பாறையாக்கும் சொற்றிறன் அவர்களிடமுண்டு” என்று புரு நகைத்தான்.

நீராட்டுக்குப்பின் அவர்கள் இயல்படைந்து பேசியபடி நடந்தனர். “சற்றுநேரத்தில் கிளம்பிவிடலாம், அரசே. இளவரசர்களும் அரசியும் முன்னரே ஒருங்கிவிட்டனர். தேர்களும் வண்டிகளும் காவலர்படைகளும் காத்திருக்கின்றன” என்றான் சுபகன். புரு “ஆம், கிளம்பவேண்டியதுதான். ஒவ்வொருநாளாக இந்நாளை நோக்கி எண்ணி எதிர்பார்த்து அணுகினேன். கிளம்பும் தருணத்தில் ஒரு தயக்கம் இக்கணங்களை நீட்டித்து அதை ஒத்திப்போடச் சொல்கிறது. இப்போது நானே நம்பும் ஒரு செயல்மாற்று அளிக்கப்படுமென்றால் தவிர்த்துவிடுவேன்” என்றான்.

சுபகன் புன்னகைத்து ஒன்றும் சொல்லாமல் தலைவணங்கி வெளியேறினான். அவனிடம் சொன்னவற்றைப்பற்றி எண்ணிக்கொண்டு அணிச்சேவகரிடம் தன் உடலை அளித்தான். அவர்கள் நறுஞ்சுண்ணம் பூசி, அரச உடையும் அணிகளும் பூட்டி அதை ஒருக்குவதை ஆடியில் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உடல் பிறிதொன்றாகி எழுந்துகொண்டிருந்தது, சிறகுபூண்டு கூடுதிறந்தெழும் பட்டாம்பூச்சி என. ஏவலர் இருவர் அரசமுத்திரை கொண்ட பட்டுத்தலைப்பாகையை அவனுக்கு சூட்டியபோது அவன் மெல்லிய திடுக்கிடலை உணர்ந்தான். ஒவ்வொரு முறை முடிசூடும்போதும் எழும் எண்ணம்தான். அன்று அடிபட்டுக் கன்றிய தோல்மேல் என அத்தொடுகை மேலும் அழுத்தம் கொண்டிருந்தது.

tigerஅவன் முடிசூட்டிக்கொண்டபோது குருநகரியில் அவன் உடன்பிறந்தார் எவரும் இருக்கவில்லை. யயாதி அவனை கொடிவழியினன் என அறிவித்து முதுமையை அளித்துவிட்டு கானேகிய மூன்றுநாட்களில் அவன் உடன்பிறந்தார் நால்வரும் நகர் நீங்கினர். யது நகர்நீங்கப்போவதாக தன் அணுக்கரைக்கொண்டு நகரில் முரசறைவித்தான். தெருமுனைகளில் அவ்வறிவிப்பு முழங்கியபோது மக்கள் திகைத்து நின்றுகேட்டனர். உணர்வெழுச்சியுடன் சினத்துடன் வஞ்சத்துடன் சொல்லாடிக்கொண்டனர். “குருதிவழி என்பது தெய்வங்களால் அருளப்படுவது. அதை மாற்ற மானுடருக்கு ஆணையில்லை” என்றார் முதிய அந்தணர்.

“இம்முடிவை தெய்வங்கள் விரும்பியிருந்தால் முதல் நால்வரை பலிகொள்ள தெய்வங்களால் இயலாதா என்ன?” என்றார் பூசகர் ஒருவர். “மூதாதையர் மூச்சுவெளியில் நின்று பதைக்கிறார்கள். அரசன் தன்னலம் கருதி எடுத்த முடிவு இது” என்றார் அங்காடிமுனையில் கூடியிருந்த கூட்டத்தில் நின்றிருந்த பெருவணிகர். “இதோ, அசுரக்குருதி நம் மேல் கோல் ஏந்தி அமரவிருக்கிறது… தோழரே, இவையனைத்தும் இதன்பொருட்டே நிகழ்த்தப்பட்டன. இது சுக்ரரின் சூழ்ச்சி. விருஷபர்வனின் அரசாடல்” என்றார் சூதர் ஒருவர். ஒவ்வொருநாளுமென ஒற்றர்கள் ஓலையனுப்பிக்கொண்டிருந்தனர். மீண்டுவந்து ஒருமுறை அவன் அத்தனை ஓலைகளையும் படித்தான். தான் அமர்ந்திருப்பது எதன்மேல் என அறிந்துகொண்டான்.

குலமூத்தார் பன்னிருவர் திரண்டு அரண்மனைக்கு வந்து அமைச்சர்களுடன் சொல்லாடினர். பேரமைச்சர் சுகிர்தர் “நான் இதில் சொல்வதற்கேதுமில்லை. அமைச்சன் என என் கடமையை செய்யவேண்டும்” என்றார். “நீர் அமைச்சர் மட்டுமல்ல, அந்தணர். அறமுரைக்கக் கடமைகொண்டவர்” என்றார் குலத்தலைவரான குர்மிதர். “அந்தணர் உரைக்கும் அறம் முன்னோரால் சொல்லப்பட்டதாகவே இருக்கவேண்டும். தன் விழைவை அறமாக்க அந்தணருக்கு உரிமை இல்லை” என்றார் சுகிர்தர். “நூல்நெறிகளின்படி தன் குருதிவழி எது என முடிவெடுக்கவேண்டியவர் அரசர் மட்டுமே. பிற எவரும் அல்ல.”

“அவ்வண்ணமென்றால் மூத்தவர் நாடாளவேண்டுமென்னும் நெறி எதற்கு? நூல்கள் ஏன் அமைத்தன இதை?” என்றார் குலமூத்தாரான பிரகிருதர். “மூத்தாரே, தந்தையே தன் மைந்தன் எவன் என முடிவெடுக்க முடியும்…” என்றார் சுகிர்தர். “நூல்கள் முடிவெடுக்கும் உரிமையை அரசனுக்கு அளித்தது இதனால்தான். தன் மைந்தரை அரசர் துறந்துவிட்டார். அதன்பின் அவர்கள் எப்படி மைந்தர் என சொல்லி முடிகோர முடியும்?” குலத்தலைவர்கள் சினந்து “இது பெரும்பழி… பாரதவர்ஷத்தின் பேரரசியை அவர் துறந்திருக்கிறார்… நாங்கள் ஏற்கமுடியாது. அசுரக்குருதியை ஒருபோதும் எங்கள் குடிகள் தலைமையெனக் கொள்ளாது” என்றனர்.

அவர்கள் திரண்டுசென்று அரண்மனைக்கு வெளியே சோலையில் ஒரு ஸாமி மரத்தடியில் தங்கியிருந்த யதுவை கண்டனர். “அரசே, பேரரசியின் குருதியே எங்கள் நாட்டை ஆளவேண்டும். அசுரக்குருதியிலிருந்து நீங்களே எங்களுக்குக் காப்பு” என்றனர். “உங்களை எங்கள் இளவரசர் எனச்சொல்லி பதினாறுமுறை மூதாத்துள்ளோம். இனி அவர்களிடம் சொல்மாற்ற எங்களால் இயலாது” என்றார் குலமூத்தாரான சம்பவர்.

யது கைகூப்பி “என் சொல்லை பொறுத்தருள்க, குலத்தலைவர்களே. தந்தையை நாங்கள் கைவிட்டோம், அவர் எங்களை கைவிட்டார். இரண்டும் அத்தருணத்தில் அவ்வாறு நிகழவேண்டுமென்றிருந்தது. ஒருநாள் கழித்து ஒருமுறை அமைச்சர்களுடன் சொல்லாடிவிட்டு அவர் முன் நின்றிருந்தால் நான் அவர் முதுமையை ஏற்றுக்கொண்டிருப்பேன். அவருடைய முதுமைநலிவை நேரில்கண்டு என் உள்ளம் அஞ்சித்திகைத்திருந்த தருணத்தில் அதை நான் கொள்வதைப்பற்றி எண்ணிப்பார்க்கவே இயலவில்லை. அத்தருணத்தை அமைத்த தெய்வங்களின் வழிப்பட்டு நான் கிளம்பவிருக்கிறேன். அவர் அளித்த சொற்கொடை இருக்கிறது. அதுவே நிகழ்க!” என்றான்.

உரத்த குரலில் அழுகையும் விம்மலுமாக “நாங்களும் வருகிறோம்… எங்கள் குடிகளனைத்தும் உங்களைத் தொடரும்… இங்கே வெற்றுநிலமும் கட்டடங்களும் எஞ்சட்டும். அதை கோல்கொண்டு ஆளட்டும் அசுரகுடியினன்” என்றார் பிரகிருதர். “என்னுடன் வருபவர்கள் வரலாம். ஆனால் எந்தையின் சொல்லென்ன என்று அவர்கள் அறிந்திருக்கவேண்டும். காட்டெரியென பரவும் வாழ்க்கை. நீர்நிழலென நிலைகொள்ளா இருப்பு. ஆபுரக்கும் எளியதொழில்” என்றான் யது. “ஆம், ஆனால் உங்கள் குடி பெருகிக் கிளைகொண்டு பாரதத்தை மூடுமென்றும் சொல் உள்ளது. அதுபோதும். வருகிறோம். இது எங்கள் சொல்” என்றார் குர்மிதர்.

ஆனால் மறுநாள் ஐந்து குலங்கள் மட்டுமே அவர்களுடன் கிளம்பின. அக்குடிகளிலும் ஒரு பகுதியினர் பின்எஞ்சினர். சினக்கொதிப்புடன் நாடுநீங்குவதாக வஞ்சினமுரைத்து ஆடவர் இல்லம் திரும்பி மகளிரிடம் சொன்னபோது அவர்கள் விழிகள் மாற முதலில் அதற்கு உடன்பட்டனர். பின்னர் நிலத்தையும் குடியையும் விட்டுச்செல்வதன் இடர்களைப்பற்றி உரைக்கலாயினர். நிலம்நீங்குபவன் குடியை இழக்கிறான். அந்நிலத்தில் நடுகற்களென நின்றிருக்கும் மூதாதையரையும் துறக்கிறான். சென்றடையும் நிலத்தில் அவன் ஈட்டுவதே குலமென்றாகும். “குலமும் நிலமும் நம் மூதாதையர் நம் மைந்தருக்களிப்பவை. அவற்றை மறுக்க நமக்கு உரிமையுண்டா?” என்றாள் மூதன்னை ஒருத்தி.

மறுநாள் முதற்புலரியில் யது நகர்நீங்கினான். முந்தையநாள் இரவு சிற்றமைச்சரான லோமரூஹர் வந்து சுகிர்தர் முன் பணிந்து மறுநாள் தான் யதுவுடன் செல்லவிருப்பதாகச் சொல்லி ஆணைகோரினார். “நானும் என் குலத்து இளைய அந்தணர் நூற்றெண்மரும் இளவரசருடன் செல்ல முடிவெடுத்துள்ளோம், உத்தமரே. உங்கள் நற்சொல்லை நாடுகிறோம்” என்றார் லோமரூஹர். “ஆம், எந்நிலையிலும் அரசனை அந்தணன் கைவிடலாகாது என்பது நூல்நெறி. அந்தணர் உடனிருந்து வேதச்சொல்கொண்டு மூவெரி ஓம்பும்வரைதான் இளவரசர் அரசர் எனப்படுவார். நம் கடன் இது. நன்று சூழ்க!” என்றார் சுகிர்தர். லோமரூஹர் அவரை வணங்க “செல்லுமிடம் ஏதென்று அறியோம். அங்கு சூழ்வதென்ன என்பதும் ஊழின் கைகளில். ஆனால் அந்தணரால் அரசர் கைவிடப்பட்டார் என்னும் சொல் எழலாகாது” என்றார் சுகிர்தர்.

யது அரண்மனையிலிருந்து கிளம்பும்போது சுகிர்தரை தாள்பணிந்து வணங்கினான். “இளவரசே, அந்தணர் சொல் துணைகொள்க! படைவீரர்களை உடன்பிறந்தார் என எண்ணுக! துணியவேண்டிய இடத்தில் துணிக! பொறைகொள்ள வேண்டிய இடங்களில் பொறுப்பதே அத்துணிவை எய்துவதற்கான வழி. எந்த வெற்றியும் எத்தோல்வியும் அத்தருணத்தால் அச்சூழலால் முடிவாவதல்ல என்று உணர்க! நீண்டகால வெற்றியே வெற்றி. மீண்டெழ முடியாது போவதொன்றே தோல்வி” என்று சுகிர்தர் வாழ்த்தினார். “நலம் சூழ்க! தெய்வங்களும் மூதாதையரும் உடன்எழுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என வாழ்த்தி வேதச்சொல் உரைத்து நீர் தெளித்தார்.

யது திரும்பிப்பார்க்காமல் நடந்துசென்றான். எத்தனைபேர் தொடர்கிறார்கள், அவர்கள் கொண்டுவருவன என்ன என்று அவன் நோக்கவில்லை. நூறு வண்டிகளிலும் இருநூறு அத்திரிகளிலும் பொருட்களையும் குழந்தைகளையும் பெண்டிரையும் ஏற்றிக்கொண்டு படைக்கலங்களை ஏந்தியபடி ஐந்துகுலத்தவர் உடன் சென்றனர். குருநகரியின் ஆயிரம் படைவீரர்கள் படைத்தலைவன் சத்ரசேனனால் வழிநடத்தப்பட்டு உடன் சென்றனர்.

குருநகரியின் கோட்டையைக் கடந்ததும் அவனுடன் சென்ற குடிமக்கள் உளம் ஆற்றாது திரும்பிநோக்கி விம்மினர். சிலர் மண்ணில் அமர்ந்து தாங்கள் செல்லப்போவதில்லை என கைகளால் அறைந்தபடி அழுதனர். குலமூத்தார் சினந்து ஆணையிட அவர்களை பிறர் தேற்றி தூக்கிச்சென்றனர். சிலர் தங்கள் மைந்தருடனும் பெண்டிருடனும் மீண்டும் நகர்நோக்கி ஓடிவந்தனர். கோட்டைக்குள் பெருமுற்றத்தில் கூடிநின்று செல்பவர்களை நோக்கி விழிநீர் வடித்தவர்கள் ஓடிமீண்டவர்களை நோக்கி கைவிரித்துப் பாய்ந்து சென்று அணைத்துக்கொண்டனர். சூழ்ந்துநின்று கதறியழுதனர்.

செல்பவர்கள் விழிமறைந்தனர். புழுதியடங்கியது. ஒன்றும் நிகழாததுபோல் ஆயிற்று ஒளியெழுந்துகொண்டிருந்த தொடுவானம். “தொடுவானை எதுவும் கலைக்கமுடியாது, இளையோரே. அது காலமெனும் கூர்வாள். எத்தனை கொன்றாலும் குருதிபடியா ஒளிகொண்டது” என்றார் சூதர் ஒருவர். அவர்கள் துயருடன் இல்லம் மீண்டும் சென்றவர்களுடன் சென்ற கற்பனையில் அலைந்தபடியும் ஆங்காங்கே அமர்ந்தனர்.

ஆனால் அவர்கள் சென்றது நீர்ச்சிறைவிளிம்பு கிழிந்தது என அடுத்த அணி துர்வசுவுடன் கிளம்பிச்செல்ல வழியமைத்தது. யது கிளம்பிய மறுநாள் கரும்புலரியில் துர்வசு சுகிர்தரை கால்தொட்டு வணங்கி சொல்பெற்று தன்னந்தனியே கிளம்பினான். அவன் கோட்டையைக் கடந்து நின்று மூன்று திசைகளையும் நோக்கியபின் மேற்கு நோக்கி திரும்பியபோது அவன் சாலைத்தோழனாகிய ரணசிம்மன் தன்னைத் தொடர்ந்த சிறு படைப்பிரிவுடன் பின்னால் சென்று அடிபணிந்தான். அவன் செல்வதைக் கண்டதும் மூன்றுகுலங்கள் கிளம்பி துர்வசுவுடன் சேர்ந்துகொண்டன.

அவர்கள் கிளம்பிச் சென்றபோது முந்தையநாளின் எழுச்சியும் துயரும் இருக்கவில்லை. வெறுமைகொண்ட விழிகளுடன் மக்கள் நோக்கிநின்றனர். ஒருவேளை செல்லுமிடத்தில் மேலும் சிறந்த வாழ்க்கை அமையக்கூடுமோ என்னும் ஐயம் அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. ஒருநாள் கழித்து அதை எவரோ சொன்னார்கள். சொல்லானதுமே அது பெருகலாயிற்று. நகர்நீங்கியவர்கள் செல்வம் செழித்த புதுநிலங்களில் சென்று குடியேறும் கதைகள் தோன்றலாயின. பின்னர் ஒவ்வொருவரும் அந்நகரைவிட்டு வெளியேறும் ஆழ்கனவு ஒன்றை தங்களுக்குள் பேணிவளர்க்கத் தொடங்கினர்.

திருஹ்யூவும் அனுதிருஹ்யூவும் திரும்பி ஹிரண்யபுரிக்கே செல்லக்கூடுமென அமைச்சர்கள் எதிர்பார்த்தனர். விருஷபர்வனின் அழைப்புடன் பறவைத்தூதும் வந்தது. ஆனால் அவர்கள் கிளம்பி தெற்கும் கிழக்குமாகச் சென்றனர். அவர்களுடன் அசுரப்படைகளிலிருந்த வீரர்களின் சிறுகுழுக்களும் ஓரிருகுடியினரும் உடன்சென்றனர். நகரை ஆளும்பொறுப்பு பேரமைச்சர் சுகிர்தரின் கைக்கு வந்தது. அவர் அமைச்சர்களின் சிறுகுழு ஒன்றை அமைத்தார். அரியணைமேல் யயாதியின் கோலும் முடியும் வைக்கப்பட்டு அவர் பெயரில் முத்திரையிடப்பட்ட ஓலைகளால் ஆட்சி நடந்தது.

முடிசூடிய பின்னர் அமைச்சர்களை அழைத்து அவர்கள் சென்ற இடத்தைப்பற்றி அறிந்துவர ஒற்றர்களை அனுப்பும்படி புரு சொன்னான். உறுதியான குரலில் “அது கூடாது, அரசே. இனி அவர்களை நாம் தொடரக்கூடாது” என்றார் அவர். “அவர்கள் எவ்வண்ணம் எங்கிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ளலாம் அல்லவா?” என்றான் புரு. “அறிந்து என்ன செய்யப்போகிறீர்கள்? அவர்கள் பெருமரங்கள் என கிளைவிரித்து விழுதுபரப்புவார்கள் என்பது உங்கள் தந்தையின் சொல். இது வேர் தாழ்த்தும் பருவம். இப்போது அவர்களை தோண்டி எடுப்பது வீண்வேலை” என்றார் சுகிர்தர்.

“இன்று அவர்கள் செல்லுமிடமெங்கும் கடும் எதிர்ப்புகளுக்கு ஆளாவார்கள். தங்கள் ஆற்றலையெல்லாம் திரட்டி போரிடவேண்டும். அவர்களின் உள்ளமும் எண்ணிக்கையும் ஒற்றுமையும் வலுப்பெறவேண்டும். எதிர்கொள்ளும் மாற்றுவிசைகளே அவர்களை வளர்க்கவேண்டும். அப்போதுமட்டுமே அவர்கள் வென்று வாழமுடியும்” என்றார். புரு தலைகுனிந்து அமர்ந்திருக்க மூத்த ஒற்றனான சந்திரபாலன் “தாங்கள் நிலைகொள்ளும் வழிகளை அவர்கள் கண்டடையவேண்டும், அரசே” என்றான்.

“இப்போது அவர்கள் இருக்குமிடத்தை நாம் அறிந்துகொண்டோம் என்றால் என்ன செய்வோம்? ஒவ்வொரு நாளுமென அவர்களை பின் தொடர்வோம். அவர்களுக்கு எதிரிகள் எழுகையில் நாமும் அவர்களை எதிரிகளெனக் கொள்வோம். போர் நிகழுமென்றால் உதவிக்கு படை கொண்டுசெல்ல விழைவோம். அரசே, அவர்கள் நால்வரும் நான்கு திசைகளுக்கு சென்றிருக்கிறார்கள். நான்கு திசைகளுக்கும் படையனுப்பிக் காக்கும் ஆற்றல் நமக்கு இல்லை. நம்மால் இயலாதவற்றை எண்ணி ஏங்கிச் சலிப்பதே அதன் விளைவென்று ஆகும்” என்றார் அமைச்சர்.

“மேலும் அவ்வாறு அவர்களுக்கு உதவுதல் உங்கள் தந்தையின் ஆணையை மீறுவதே. அவர்கள் நம் குருதியினர் அல்ல. நம் சமந்தரோ நமக்கு கப்பம் அளிப்பவரோ அல்ல. குருநகரியின் மக்களின் செல்வத்தையும் வீரர்களின் உயிரையும் எந்நெறியின்பொருட்டு அவர்களுக்காக செலவிடுவீர்கள்?” என்றார் சுகிர்தர். “அத்துடன் மறுநாள் படைவீரர்கள் எவரையும் உடன் அழைக்காமல் கருவூலத்தில் ஒரு பொன்னைக்கூட கேட்காமல் நாடுநீங்கிய உங்கள் உடன்பிறந்தார் நம் உதவியை ஏற்றுக்கொள்வார்கள் என எண்ணுகிறீர்களா?”

அவர்களில் யது தனக்குரிய நிலம்தேடி தன் படைகளுடன் தென்றிசை நோக்கி சென்றான். கங்கையையும் யமுனையையும் கடந்து, மாளவத்தையும், கிகடர்களின் தேவபுரியையும் தாண்டி தென்மேற்காக தன்குடிகளை அழைத்துச்சென்றான். நிஷாதர்களின் நாட்டில் தோலூறிய கழிவுநீர் ஓடிய சர்மாவதி நதியைக் கடந்து யதுவும் அவன் படையினரும் மேலும் சென்று மனிதர்கள் வாழாது வெயில் பரவி வீண்நிலமாகக் கிடந்த பர்ணஸா என்னும் ஆற்றின் படுகையை அடைந்து அங்கே தங்கள் குடியை நிறுத்தினர். யதுவின் அமைச்சரான லோமரூஹர் அங்கே சிற்றூர் ஒன்றை அமைத்தார். அவர்களின் முதல் ஊர் அங்கே அமைந்தது.

துர்வசு தன் தோழன் ரணசிம்மனுடன் நகர்நீங்கிச் செல்கையில் காட்டு எல்லையில் சந்திரகுலத்தின் அனைத்து அடையாளங்களையும் துறந்தான். குருநகரியின் கடைசிப் புழுதியையும் தன் காலடியிலிருந்து அகற்றும்பொருட்டு ஓடையில் கால்கழுவிவிட்டு மேற்காக சென்றான். சப்தசிந்துவையும் கூர்ஜரத்தையும் கடந்து சென்றபோது நாடுகளே இல்லாத பெரும்பாலைநிலம் அவர்களை எதிர்கொண்டது. அணையாத அனல்காற்றுகள் வீசும் கந்தவதி என்னும் நிலம் அவர்களுக்கென அமைந்தது.

தன் உடன்பிறந்தவனாகிய திருஹ்யூ யமுனைக்கு அப்பால் சென்று மச்சர்களுடன் இணைந்துகொண்டதையும் அனுதிருஹ்யூ மேலும் கடந்து சென்று தண்டகாரண்யத்தின் தொல்குடிகளுடன் இணைந்து தனிக்குடி கண்டதையும் சூதர்களும் தென்னகப் பாணர்களும் வந்துபாடிய பாடல்களினூடகவே புரு அறிந்துகொண்டான். அந்தச் செய்திகள் குருநகரியில் பரவுவதற்கு அவன் ஆணையிட்டான். சூதர்சொல் பெருகுவதென்பதை அவன் அறிந்திருந்தான். யயாதியின் மைந்தர் நான்கு நகர்களை அமைத்து அரசமுடி சூடிவிட்டனர் என்னும் செய்தி குருநகரியின் குடிகளை உளம் அமையச் செய்தது. அதன்பின்னரே அவர்கள் புருவை தங்கள் அரசன் என ஏற்றுக்கொண்டனர்.

புரு சுகிர்தரை தூதனுப்பி குருநகரியின் செல்வத்தில் பெரும்பகுதியை கன்னிச்செல்வமெனக் கொடுத்து குருநகரிக்கு கப்பம்கட்டும் சிற்றரசெனத் திகழ்ந்த கோசல நாட்டின் அரசன் புஷ்டியின் மகள் பௌஷ்டையை மணந்து பட்டத்தரசியாக்கினான். அந்த மணவிழா பன்னிருநாட்கள் குருநகரியில் கொண்டாடப்பட்டது. பாரதவர்ஷத்தின் அரசர்கள் திரண்டுவந்து அந்த மணவிழாவை அணிசெய்தனர். ஷத்ரியப் பேரரசி அமைந்ததுமே குருநகரியின் மக்களின் உள்ளம் மாறத்தொடங்கியது. முதல் இளவரசன் பிரவீரனின் இடையணிவிழா நடந்தபோது குடிகள் நடந்தவை அனைத்தையும் மறந்து பெருமிதமும் களிவெறியும் கொண்டு கொண்டாடினர்.

சுகிர்தரின் சொல்படி நகரின் கோட்டையை மேலும் ஒரு சுற்று விரிவாக்கி அதற்கு சந்திரபுரி என்று பெயரிட்டான். சந்திரகுலத்துக் குருதிவழியால் ஆளப்படுவது அந்நகர் என அப்பெயர் ஒவ்வொரு முறை உச்சரிக்கப்படுகையிலும் உறுதியாயிற்று. விருஷபர்வனின் கொடிவழி வந்தவன் அவன் என்பதை விரைவிலேயே அனைவரும் மறந்தனர். ஆனால் நகரின் முத்திரையாக ஹிரண்யபுரியின் அமுதகலசம் அமைந்தது. அதைக் குறித்து அந்தணரும் ஷத்ரியர் சிலரும் உளக்குறை கொண்டிருந்தாலும் அவ்வடையாளத்தை பெண்டிர் விரும்பியமையால் விரைவிலேயே அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முடிசூடி எழுந்து தன்னை புரு ஆடியில் பார்த்துக்கொண்டான். முதிய அணிச்சேவகர் “தங்கள் தந்தை பேரரசர் யயாதியை நான் பார்த்திருக்கிறேன், அரசே. அவரைப்போலவே தோன்றுகிறீர்கள்” என்றார். புரு புன்னகையுடன் “ஆம், ஒரே முகங்கள்தான்” என்றான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 88

88. விழிநீர்மகள்

படுக்கையறை வாயிலில் பார்க்கவன் “ஓய்வெடுங்கள், அரசே!” என்றான். அவன் விழிகள் மாறிவிட்டிருப்பதை யயாதி கண்டான். வெறும் நோக்கிலேயே நோக்கப்படுபவன் இளைஞனா முதியவனா என்று தெரியுமா? “தேவையில்லை என்று எண்ணுகிறேன். களைப்பாக இல்லை” என்று யயாதி சொன்னான். “பொழுது வீணடிப்பதற்குரியதல்ல என்று தோன்றுகிறது. நாழிகைக் கலத்திலிருந்து இறங்கும் ஒவ்வொரு மணல்பருவும் இழப்பதற்கு அரிய காலத்துளி என நினைக்கிறேன்” என்றவன் புன்னகைத்து “இளமை எனும் இன்மது” என்றான்.

பார்க்கவனும் உடன் புன்னகைத்து “ஆம், மானுட உடலின் இளமை மிக அரிதானது. நோக்கியிருக்கையிலேயே ஒழிந்து மறைவது. ஆனால் இளைஞர்கள்தான் காலத்தை வீணடிப்பவர்கள். அளவற்றது இளமை என மயங்குபவர்கள். முதுமையிலிருந்து இளமைக்கு மீண்டிருப்பதனால் அதன் அருமையை அறிந்திருக்கிறீர்கள்” என்றான். “எனக்கு இன்மது கொண்டுவரச்சொல். என் காவியநூல்கள் உள்ளே இருக்கின்றன அல்லவா?” பார்க்கவன் “பாணர்களையும் விறலியரையும் வரச்சொல்கிறேன். பரத்தையர் வேண்டுமென்றாலும் ஆணையிடுகிறேன்” என்றான்.

“வரச்சொல்” என்றபின் யயாதி பீடத்தில் அமர்ந்தான். பார்க்கவன் தலைவணங்கி வெளியேறினான். அவன் சுவடிகளை படிக்கத் தொடங்கினான். உத்பவரின் ரிதுபரிணயம் என்னும் அகச்சுவைக் காவியம். கையில் எடுத்ததுமே சுவடிகளை புரட்டிப்புரட்டி அதிலிருந்த காமவிவரிப்புகளை தேடிச்சென்றான். அந்த நூல் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அத்தகைய நூல்களின் அமைப்பும் சிக்கலும் ஊடுவழிகளும் உள்ளறிந்தவையாக இருந்தன. குருதித்தடம் முகர்ந்துசெல்லும் ஊனுண்ணி விலங்குபோல. சௌம்யன் என்னும் கந்தர்வன் சரிதை சுசரிதை என்னும் இரு காட்டுதேவதைகளைப் புணரும் இடத்தை சென்றடைந்தான். முதல் வரியே படபடப்பை ஊட்டியது. எவரோ தன்னை நோக்கும் உணர்வை அடைந்தான். நிமிர்ந்து அறையின் தனிமையை உறுதிசெய்தபின் மீண்டும் படித்தான்.

உடல்கள் இணைவதன் சொற்காட்சி. வெறும் உடல். உயிர்விசையால் நிலையழிந்து விலங்காகி புழுவாகி நெளியும் நுண்மொழிதல். பதினெட்டு பாடல்களைக் கடந்ததும் அவன் புரவி கால்தளரலாயிற்று. சலிப்புடன் மேலும் எத்தனை பாடல்கள் என்று நோக்கினான். அறுபது பாடல்கள் கொண்ட ஒரு பாதம் அது. சுவடியை மூடி கட்டிவைத்துவிட்டு சலிப்புடன் எழுந்து சாளரம் வழியாக நோக்கினான். இலைகள் சுடர உச்சிவெயில் இறங்கிய சோலைக்குள் பறவைகளின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. ஒளிச்சிதறல் வட்டங்களாகி நிழல்கள் கண்ணிகள் எனத் தெரிந்தன.

அந்த அமைதியும் அசைவின்மையும் உள்ளத்தை அமையச்செய்ய அவன் சலிப்புற்றான். உள்ளிருந்து ஒரு விசை எழுக, விரைக, பறந்தலைக என்றது. அச்சுவரை உடைத்து வெளியேறவேண்டும் என. தசைகளெங்கும் தினவென அந்த வேட்கை எழுந்ததும் ஒருகணம்கூட அறைக்குள் அமர்ந்திருக்க இயலாதென்று தோன்றியது. மது கொண்டுவர இத்தனை நேரமா? என்ன செய்கிறார்கள்? அத்தனைபேரும் நீருக்குள் உடல்கள் என மெல்ல அசைகிறார்கள். கிளைகள் தாலாட்டுகின்றன. உதிரும் இலைகள் மிதந்திறங்குகின்றன. எங்கும் விரைவென்பதே இல்லை. புரவி ஒன்றில் ஏறி மலைச்சரிவில் பீரிட்டிறங்கவேண்டும். கற்கள் தெறித்து உடன் உருண்டு வர. காற்று கிழிபட்டு இரு காதுகளிலும் ஊளையிட்டுப் பறந்தலைய.

மீண்டும் சுவடியை எடுத்து புரட்டினான். சாரங்கரின் ‘கிரௌஞ்ச சந்தேசம்’. சுவடிகளை புரட்டிச்சென்றபோது ஒரு வரியால் நிறுத்தப்பட்டான். புன்னகையில் நீண்டும் பேசுகையில் குவிந்தும் செவ்வுதடுகள் அழகிய மீன்கள் என நீந்திக்கொண்டிருக்கின்றன. புன்னகையுடன் விழிசரித்து அவன் அக்காட்சியை நிகழ்கனவில் கண்டான். சுருங்கியும் நீண்டும் செல்லும் செக்கச்சிவந்த மென்மையான மீன். அவன் உடல் தித்திப்படைந்தது. சூழ்ந்திருந்த காற்று தேன்விழுதென மாறியதுபோல. மீண்டும் ஒரு வரியை படித்தான். ‘உன் எண்ணங்களின் இனியமதுவில் கால்சிக்கிக்கொண்டன இரு கருவண்டுகள். சிறகடித்து சிறகடித்து தவிக்கின்றன’. ஆனால் அந்த ஒப்புமைக்குள் செல்லமுடியவில்லை. மீண்டும் அந்த முதல் ஒப்புமைக்கே சென்றான். அதை அன்றி பிறிதை அன்று எண்ணமுடியாதென்று தோன்றியது.

இன்மதுவுடன் சேடியர் வந்தனர். பெண்களின் காலடியோசையை தன் செவிகள் தெளிவாக தனித்தறிவதை உணர்ந்தான். நெஞ்சு படபடத்தது. அவர்களின் உருவை ஒருகணம் முன்னரே உள்ளம் வரைந்துகொண்டது. அவர்களில் ஒருத்தி சற்று பருத்த மூத்த வயதினள் என்றும் இருவர் இளையவர்கள் என்றும் அவன் அகம் நோக்கிக்கொண்டிருந்தபோதே அவர்கள் கதவைத் திறந்து மதுக்கோப்பைகளும் நுரைசூடிய குடுவையில் மதுவுமாக உள்ளே வந்தனர். அவர்களை ஒருகணம் நோக்கியதுமே நெஞ்சு படபடக்க அவன் விழிகளை தாழ்த்திக்கொண்டான்.

கண்முன் அவர்களின் சிலம்பணிந்த கால்கள் நடமாடின. கோப்பைகள் உரசும் ஒலி, மது தளும்பும் சிரிப்பு. மூச்சொலி, அணிகளின் குலுங்கல். உடை கசங்கலின் நுண்ணொலி. வியர்வையும் மலரும் சாந்தும் குங்குமமும் நறுஞ்சுண்ணமும் கலந்த மணம். ஏன் என்னால் விழிதூக்கி அவர்களை நோக்கமுடியவில்லை? ஏன் உடல் பதறிக்கொண்டிருக்கிறது? நெஞ்சின் ஓசையே காதுகளில் நிறைந்திருந்தது. “அரசே, இன்மது பரிமாறலாமா?” அவன் நிமிராமல் “ஆம்” என்றான். அவ்வொலி மேலெழவில்லை. வியர்வை பூத்த உடல்மேல் சாளரக்காற்று மென்பட்டுபோல வருடிச்சென்றது. அவர்கள் சென்றுவிட்டால் போதும் என விழைந்தான்.

மது ஊற்றப்படும் ஓசை. ஒருத்தி மெல்லிய குரலில் ஏதோ சொன்னாள். பிறிதொருத்தி சிரித்தாள். மூத்தவள் அதை அடக்கினாள். முதலிருவரும் குயிலும் குருவியும். இவள் மயில். கோப்பையை வாங்கியபோது அவன் அப்பெண்ணின் விரல்களை நோக்கினான். நிமிர்ந்து அவர்களின் கண்களைக் கண்டதுமே திடுக்கிட்டு நோக்கு தாழ்த்திக்கொண்டான். அவள் சிரிப்பு படர்ந்த குரலில் “ஏதேனும் தேவையா?” என்றாள். “இல்லை” என்றான். அவர்கள் அவனுக்காக காத்திருக்க அவன் ஒரு மிடறு அருந்திவிட்டு கோப்பையை பீடத்தின் மேல் வைத்தான். “இவள் இங்கே நின்று தங்களுக்கு பரிமாறுவாள்” என்றாள் மூத்தவள். “வேண்டாம்” என்று அவன் பதறிய குரலில் சொன்னான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “இல்லை… வேண்டாம்” என்றான்.

பக்கவாட்டில் எவரோ நின்றிருக்கும் உணர்வு எழ திடுக்கிட்டு நோக்கியபோது அங்கே ஆடியில் அம்மூவரும் தெரிந்தனர். ஒருத்தி மாநிறமான மெல்லிய உடலும் நெளியும் கூந்தல் கரைவகுத்த நீள்முகமும் கனவுதேங்கியவை போன்ற பெரிய விழிகளும் சிறிய மூக்கும் குமிழுதடுகளும் நரம்போடிய மெல்லிய கைகளும் கொண்டவள். இன்னொருத்தி நுரைபோன்ற கூந்தலும் உருண்ட முகமும் சிரிப்புஒளிரும் சிறிய விழிகளும் பெரிய சிவந்த உதடுகளும் தடித்த கழுத்தும் கொண்டவள். நீலநரம்புகள் படர்ந்த வெண்ணிறத் தோல். உயரமற்ற உடல்.

மூத்தவள் அவர்களைவிட உயரமானவள். பெரிய கொண்டையும் வலுவான கழுத்தும் திரண்ட தோள்களும் இறுகிய இடைக்குமேல் பெரிய குவைகளென முலைகளும் உருண்ட பெரிய கைகளும் கொண்டவள். உறுதியான நோக்குள்ள கண்கள். செதுக்கப்பட்டவை போன்ற உதடுகள். அக்குழலை அவிழ்த்திட்டால் தொடைவரை அலையிறங்கக்கூடும். இளஞ்செந்நிறமான அவள் கைகளில் நரம்புகளே இல்லை. வளையல்கள் சற்று இறுக்கமாக இருந்தன. வளையல் படிந்த தடம் உருண்ட மணிக்கட்டில் தெரிந்தது. விரல்களில் செம்பாலான நாகமோதிரம் ஒன்றை அணிந்திருந்தாள்.

அவன் நோக்கை விலக்கிக்கொண்டான். “இல்லை… நீங்கள் செல்லலாம்… எனக்கு ஒரு குவளை போதும்” என்றான். “ஒரு குவளையா?” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்றபின் அவன் நிமிர்ந்து அவளை நோக்கி “நான் மயங்கி காலத்தை வீணாக்க விழையவில்லை” என்றான். அவள் மெல்ல சிரித்து உதடுகளை மடித்து “ஆம், அது நன்று. மதுவருந்துவது அதன் நெகிழ்வை அறிந்து மகிழ்வுகொள்வதற்காக. துயில்வதென்றால் மது எதற்கு?” என்றாள். பின்னர் திரும்பி குவளைகளை எடுத்துச்செல்லும்படி விழிகளால் ஆணையிட்டாள். அவர்கள் அவற்றை எடுத்துக்கொண்டு செல்கையில் முகங்கள் சற்று கூம்பியிருப்பதை பக்கவாட்டுத் தோற்றத்திலேயே கண்டான்.

அவர்கள் கதவை மூடியதும் அவள் அவனருகே வந்து “நீங்கள் விரும்பியது என்னை. ஆகவே நானே இங்கிருந்தேன்” என்றாள். அவன் பதறி “யார் சொன்னது?” என்றான். “ஆடியில் உங்கள் நோக்கை கண்டேன். நிலைத்ததும் தேடியதும் என்னுடலையே.” அவன் “இல்லை” என்றான். “ஆம்” என்று சொல்லி அவள் அவன் தோளை தொட்டாள். அவன் உடல் துடிக்கத் தொடங்கியது. “இன்று நான் உங்களுடன் இருக்கிறேன்.” அவன் பேசாமலிருந்தான். ஆனால் உடல் அனல்கொண்டது. காதுகளும் கண்களும் எரியத்தொடங்கின. அவள் அவன் தலைமேல் கையை வைத்து “நான் இருக்கட்டுமா?” என்று தாழ்ந்த குரலில் கொஞ்சலாக கேட்டாள்.

அக்குரல்மாற்றம் அவனை பின்னாலிருந்து உதைக்கப்பட்டதுபோல திடுக்கிடச் செய்தது. எழுந்து நின்று “வேண்டாம். செல்க!” என்றான். அவள் “ஏன்?” என்றாள். எழுந்ததுமே அவன் உடலின் அதிர்வுகளும் அடங்கிவிட்டிருந்தன “செல்க… செல்க!” என்று கைநீட்டி சொன்னான். குரல் உடைந்து பிற எவருடையதோ என ஒலித்தது. “செல்… செல்!” என்று அவன் உரக்க சொன்னான். அக்குரல்மாற்றத்தால் அவள் திகைத்து “ஆணை” என தலைவணங்கி வெளியே சென்றாள்.

கதவு மூடும் ஒலியில் அவன் இழுத்த கையால் விடப்பட்டவன் போல தளர்ந்தான். திரும்பவும் அமர்ந்துகொண்டு மூச்சிரைத்தபடி கண்களை மூடினான். உடலெங்கும் குருதி நுரையழிவதை உணர்ந்தான். மீண்டும் கதவு திறக்கும் ஒலி எழுந்தபோது அவன் உடல் குளிர்ந்திருந்தது. “யார்?” என்றான். “அரசே, நான்தான்” என்றான் பார்க்கவன். அவனருகே வந்து வணங்கி “மாலினியை திருப்பி அனுப்பினீர்கள் என்றாள்” என்றான். “யார்?” என்றான். “இப்போது வந்தவள்… சேடி.” யயாதி “ஆம், அவள் என்னிடம்…” என்றபின் “என்னால் இது இயலாது” என்றான். “ஆம், நான் அதை எண்ணினேன். மற்ற இருவரும் என்னிடம் சொன்னபோதே நீங்கள் இருக்கும் நிலை புரிந்தது.”

யயாதி சீற்றத்துடன் “என்ன நிலை?” என்றான். “முதிரா இளைஞனின் உளநிலை…” என்று பார்க்கவன் புன்னகைத்தான். “காமம் எண்ணங்களிலேயே நிகழமுடியும். உடல் அச்சமும் அருவருப்பும் ஊட்டும்” என்றான். யயாதி “இல்லை…” என்றபின் தயங்கி “ஆம், உண்மை” என்றான். “முதிரா இளமையின் இடரே எதையும் எதிர்கொள்ளமுடியாதென்பதுதான். உடலை எதிர்கொள்ள அஞ்சியே காமத்தை தூய்மைப்படுத்திக்கொள்கிறீர்கள். புகையோவியமென அது நிலம்தொடாது ஒளிகொண்டு நிற்கிறது. அதை மண்ணுக்கிழுப்பது உடல் என நினைக்கிறீர்கள்” என்றான். வாய்விட்டுச் சிரித்தபடி “நாளெல்லாம் எண்ணுவது பெண்ணை. ஆனால் பெண்ணுடல்மேல் வெறுப்பு. அந்த இரு நிலையைக் கடப்பதன் பெயரே அகவை எய்துதல்” என்றான்.

யயாதி நாணத்துடன் சிரித்து “ஆம்” என்றான். அச்சிரிப்பினூடாக அவர்கள் அத்தருணத்தின் இறுக்கத்தை கடந்தனர். “உங்களிடம் குற்றவுணர்ச்சி ஏதேனும் உள்ளதா?” என்றான் பார்க்கவன். “அதை நானே கேட்டுக்கொண்டேன். இல்லை, உடை களைந்து நீரில் குதித்தவனின் விடுதலையையே உணர்கிறேன்” என்றான் யயாதி. பார்க்கவன் “ஒருவேளை இனி அது எழக்கூடும். அவ்வாறு எழவேண்டியதில்லை” என்றான். “அரசே, மைந்தனுக்கு தந்தை அளிக்கும் கொடைகளில் முதன்மையானது முதுமை அல்லவா? அத்தனை தந்தையரும் கைக்குழவியாக மைந்தர் இருக்கும்நாள் முதல் துளியாக மிடறாக அளிப்பது தானடைந்த முதுமையைத்தானே?” என்றான்.

யயாதி மெல்லிய உளக்கிளர்ச்சியுடன் “ஆம்” என்றான். “அதேபோல மைந்தர் தந்தைக்கு அளிக்கவேண்டியதும் இளமையை அல்லவா? தங்கள் இளமையின் மகிழ்வையும் விடுதலையையும்தானே இளஞ்சிறுவர்களாக அவர்கள் தந்தையருக்கு பரிசளிக்கிறார்கள்? தந்தையரின் முதுமையை அதனூடாக அவர்கள் தொடர்ந்து விலக்கிக் கொண்டிருக்கிறார்கள். தந்தையர் முதிர்ந்து உடலோய்ந்தமைகையில் மைந்தரின் தோளிலும் காலிலும் சொல்லிலும் விழியிலும் உள்ள இளமையைத்தானே துணைகொள்கிறார்கள்?”

“ஆம்” என்று யயாதி சொன்னான். மீண்டும் மீண்டும் ஒரே சொல்லையே சொல்கிறோம் என உணர்ந்து “உண்மை” என்றான். உள எழுச்சி தாளாமல் எழுந்துகொண்டு “மெய். நான் இதை எண்ணியதே இல்லை” என்றான். “அரசே, அத்தந்தையர் இறந்து மூச்சுலகெய்திய பின்னர் மைந்தர் அளிக்கும் உணவும் நீரும் நுண்சொல்லுமே அவர்களை என்றுமழியா இளமையுடன் விண்ணில் நிறுத்துகிறது” என்றான் பார்க்கவன். “ஆம்” என்றபடி யயாதி அமர்ந்தான். “ஆகவே எங்கும் நிகழ்வது இங்கு அதன் முழுமையுடன் அமைந்தது என்றே கொள்க!” என்றபின் பார்க்கவன் எழுந்தான். “நீங்கள் விழைந்தால் வேட்டைக்கு செல்லலாம். மாலையில் கூத்தர் நிகழ்த்தும் அவைநிகழ்வுகளுக்கு ஒருங்கு செய்துள்ளேன்” என்றபின் தலைவணங்கி வெளியே சென்றான்.

tigerகதவுக்கு அப்பால் ஓசை கேட்டபோது யயாதி சுவடியை மூடிவிட்டு நிமிர்ந்தான். கதவு மெல்ல திறந்தது. அதனூடாக ஆடைவண்ணம் தெரிந்தது. அதிலேயே அவன் சர்மிஷ்டையை அடையாளம் கண்டான். உள்ளம் கிளர எழுந்து நின்றான். அவள் உள்ளே வந்து விழிதிகைத்து நின்று அறியாமல் திரும்பிச்செல்பவள் போல கதவை பற்றினாள். “சர்மிஷ்டை” என அவன் அழைத்தான். “இளமை மீண்டுவிட்டேன். நான் என்றும் விழைந்தது இது.” அவள் உதடுகளை மடித்துக் கவ்வி கண்களில் பதைப்புடன் அவனை நோக்கினாள். “என்ன நோக்குகிறாய்? இது என் இளமையுருவம்… நீ அதை பலமுறை கனவில் கண்டிருப்பதாக சொல்லியிருக்கிறாய்” என்றான். “இல்லை, இது புருவின் உருவம்” என்று பட்டு கசங்கும் ஒலியில் சர்மிஷ்டை சொன்னாள்.

அவனுக்கு அது கேட்கவில்லை. மேலும் உளம் பெருக “பார்! முதிரா இளமையையே அடைந்திருக்கிறேன். என் இளமையைச் சூடியபோதே உன்னைத்தான் எண்ணினேன். உன்னுடனிருக்கையில் நான் இளையவனாக இருக்கலாகாதா என ஏங்கியிருக்கிறேன். அவ்வெண்ணத்தால் அத்தனை தருணங்களிலும் குறையுணர்ந்திருக்கிறேன்” என்றான். களிப்புடன் நகைத்து “உன்னை அத்தனை அகவைநிலைகளிலும் அடைவேன். எச்சமில்லாது காமத்தை அடைந்து ஒழிந்து எழவேண்டும் நான்” என்றபடி அவளை நோக்கி கைவிரித்தபடி சென்றான்.

அவள் “விலகு… அணுகாதே!” என கூவினாள். முகம் சுளித்து கைகள் உதறிக்கொண்டன. “அணுகாதே என்னை…” என்று உடைந்த உரத்த குரலில் கூச்சலிட்டு கதவுடன் முதுகு ஒட்டிநின்று நடுங்கினாள். முன்வளைந்த தோள்கள் இறுக கழுத்துத் தசைகள் இழுபட்டு அதிர “போ… அணுகாதே…” என்றாள். “ஏன்?” என்று அவன் நின்றான். “நீ என் மைந்தனின் இளமையை சூடியிருக்கிறாய்… நீ கொண்டிருப்பது என் மகனை.” அப்போதுதான் அவள் எண்ணுவதை அவன் அறிந்துகொண்டான். தலையை கல் தாக்கியதுபோல அவ்வுணர்வு அவனை சென்றடைந்தது. இருமுறை உதடுகளை திறந்துமூடினான். பின்னர் சென்று தன் பீடத்தில் அமர்ந்துகொண்டான்.

அவள் “மூடா, அதைக்கொண்டு நீ எதை அடையப்போகிறாய்? எந்தப் பெண்ணை?” என்றாள். வெறுப்பில் அவள் கண்கள் சுருங்கி உறுமும் ஓநாய் என பற்கள் தெரிந்தன. “அப்பெண்ணை எந்த விழிகளால் நோக்குவாய்? எந்த உடலால் அடைவாய்? நீ நோக்கியமையால் இந்த உடலை நான் உதறவேண்டும். நோன்பிருந்து இதை உலரச்செய்யாமல் இனி ஆடிநோக்க என்னால் இயலுமா?” அவன் கைவீசி “போ!” என்று கூவினான். அவள் மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்தபின் கதவைத் திறந்து வெளியே சென்றாள். கதவு மூடிய ஒலி அவனை அறைந்தது. வியர்வையுடன் நெற்றியைத் தட்டியபடி அவன் அமர்ந்திருந்தான். அனைத்து திகிரிகளும் மணலில் சிக்கி இறுகி அசைவிழக்க எண்ணங்கள் வெம்மைகொண்டன.

பின்னர் விடுபட்டு எழுந்தான். அனைத்தையும் அள்ளி ஓரு மூலையில் குவித்து தன் அகத்தை தூய்மை செய்தான். அப்போது அத்தனை முடிச்சுகளையும் தனித்தனியாகக் காணமுடிந்தது. ஒவ்வொன்றாகத் தொட்டு அவிழ்க்கமுடிந்தது. ஒவ்வொரு விரிதலும் அவனை எளிதாக்கின. எழுந்து இடைநாழியில் நடந்தபோது அவன் முகம் தெளிவுகொண்டிருந்தது. அவனை நோக்கி வந்த பார்க்கவனிடம் “நான் நாளைப்புலரியில் இங்கிருந்து கிளம்புகிறேன். காட்டுக்குச் செல்கிறேன்” என்றான். “எங்கே?” என்று பார்க்கவன் கேட்க “என்னை காட்டு எல்லைக்குக் கொண்டுசென்று இறக்கிவிடுங்கள், போதும்!” என்று அவன் சொன்னான்.

tigerஇளவேனிலில் மலர்பெருகி வண்ணம்பொலிந்திருந்த காட்டினூடாக யயாதி நடந்தான். பின்னர் அறிந்தான் அந்தக் காட்டிற்கு அவன் முன்னரும் வந்திருப்பதை. எப்போது என உள்ளம் வியந்தது. நினைவில் அக்காடு எவ்வகையிலும் எஞ்சியிருக்கவில்லை. மேலும் மேலுமெனச் சென்று முதிரா இளமையைக் கடந்து மீண்டுவந்தான். கனவிலா? ஆனால் அந்நிலத்தை எப்போதேனும் நோக்கியிருக்கவேண்டுமே! அவனால் அதை உணரவே முடியவில்லை. சலித்தபின் அதை அப்படியே உதறிவிட்டு அக்காட்டின் காட்சிகளில் உளம் திளைக்க மெல்ல நடந்தான்.

அன்று காலையில்தான் புரு கருக்கிருட்டிலேயே காட்டுக்குச் சென்றுவிட்டிருப்பதை அரண்மனை ஏவலர் உணர்ந்தனர். அவன் சென்ற தடமே எஞ்சியிருக்கவில்லை. “நீரில் மீன் என சென்று மறைவதே துறவு” என்று அமைச்சர் சொன்னார். “அவ்வாறு சென்றவர் மீள்வதில்லை. நாம் அவரை தொடரவேண்டியதில்லை.” அவன் பார்க்கவனிடம் “ஏன் அவன் சென்றான்?” என்றான். “முதுமை கொண்டவர்கள் கானேகவேண்டும் அல்லவா?” என்றான் பார்க்கவன். “அவள் அவனை நேற்று சந்தித்தாளா?” என விழிவிலக்கி யயாதி கேட்டான். “ஆம், அங்கிருந்துதான் உங்கள் அறைக்கு வந்தார்கள்” என்றான் பார்க்கவன். யயாதி திகைப்பு கொண்டவன்போல ஏறிட்டு நோக்கிவிட்டு “நான் உடனே கிளம்பவேண்டும்” என்றான். “நீங்கள் நம் எல்லைக்குட்பட்ட சுமவனத்திற்கே செல்லலாம், அரசே. உங்கள் உளநிலைக்கு உகந்தது அம்மலர்க்காடு” என்றான் பார்க்கவன்.

அவனை காட்டின் எல்லையில் இறக்கிவிட்டபின் பார்க்கவன் விழிகள் நீர்மை மின்ன விடைகொண்டான். நகரம் அகன்றதுமே அவன் விடுதலைகொள்ளத் தொடங்கியிருந்தான். காட்டில் நடந்ததுமே உடல் விசைகொண்டது. காண்பவை எல்லாம் துலக்கமடைந்தன. அங்கு வரும்வரை ஒவ்வொன்றும் எத்தனை சிடுக்கானவை என்றே உள்ளம் திகைப்பு கொண்டிருந்தது. முந்தைய நாள் இரவில் அவன் துயிலவில்லை. ஒவ்வொன்றையாக அணுகி நோக்கி வியந்து விலகிக்கொண்டிருந்தான். ஆனால் காட்டில் இலைப் பசுமைக்குள் நிழலொளி நடனத்திற்குள் அறுபடா சீவிடின் சுதியின்மேல் எழுந்த காற்றோசையின் அலைகளுக்குள் மூழ்கியபோது அவையெல்லாம் மிகமிக எளியவை என்று தோன்றின.

அங்கிருப்பது சலிப்பு மட்டுமே. அச்சலிப்பை வெல்லும்பொருட்டு உள்ளத்தை கலக்கி அலையெழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். அதனூடாக அடையும் உணர்வுகளை அக்கணங்களில் உண்மை என நம்பி அதில் திளைக்கிறார்கள். விழிநீரும் குருதியும். புனலும் அனலும். அவை மட்டுமே அவர்களின் நாட்களை பொருள்கொண்டவையாக ஆக்குகின்றன. அவ்வெடையின்மையை அடைந்தபோது அவ்வாறு அக்காட்டில் சென்றது நினைவில் எழுந்தது. அவன் தந்தையின் வலிமையான கைகளில் சிறு குழவியாக இருந்தான் அப்போது. மிதந்து ஒழுகியபடி அக்காட்டை நோக்கிக்கொண்டு சென்றான்.

நகுஷனின் தொடுகையை தாடியின் வருடலை வியர்வை மணத்தை அவனால் உணரமுடிந்தது. அச்சிறுவயதுக்குப்பின் அங்கே வந்ததே இல்லை. ஆனால் கனவில் அந்த இடம் அச்செனப் பதிந்திருக்கிறது. அங்கிருக்கும் அத்தனை கரவுகளையும் சரிவுகளையும் காணமுடியுமெனத் தோன்றியது. நீர்தெளிந்து வான் விரிந்த சுனை ஒன்றை நினைவுகூர்ந்தான். உடனே அதற்குத் திரும்பும் வழியும் உள்ளத்தில் எழுந்தது. செல்லச் செல்ல மேலும் துலங்கியபடி வந்த திசையில் இலைகள் நீரலையொளி சூடி நின்றிருப்பதைக் கண்டான். நீலச்சுனை காலை வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்தது.

அதன் சேற்றுக்கதுப்பில் பறவைகளின் காலடிகள் மட்டுமே இருந்தன. நாணல்கள் காற்றில் குழைந்தாடின. மெல்லிய அலைகளால் சேறு கலைவுறவில்லை. சேற்றில் நீர்வரிகளைக் கண்டபோது இனிய உணர்வொன்றால் அகம் சிலிர்ப்புகொண்டபின் அது ஏன் என சென்று துழாவிய சித்தம் எதையோ தொட்டுவிட அவன் நின்றுவிட்டான். மென்மையான முலைமேல் எழுந்த தோல்வரிகள். எவர் முலைகள் அவை? மூச்சுத் திணறியது. தலையை அசைத்து அவ்வெண்ணத்தை விரட்டியபின் சுனையை அணுகினான். பேற்றுவரிகள் படிந்த அடிவயிறு. யார் அது?

அங்கே நின்று தன் முகத்தை நீரில் நோக்கியதை நினைவுகூர்ந்தான். தந்தையின் குரல் கரையில் கேட்டுக்கொண்டிருந்தது. கையிலிருந்த மலர்க்கிளையால் நீர்ப்பரப்பை அடிக்க ஓங்கியவன் தன் விழிகளை தான் சந்தித்து திடுக்கிட்டான். உடல் சிலிர்க்க பின்னால் செல்வதுபோல ஓர் அசைவெழுந்தது. குளிர்கொண்டதுபோல உடல் உலுக்கிக்கொண்டது. விழிவிலக்காமல் அவன் நோக்கிக்கொண்டே இருந்தான். பின்னர் அதை நோக்கி கைசுட்டினான். அது அவனை நோக்கி கை சுட்டியது. அவன் புன்னகை செய்தபோது அதுவும் நாணிச்சிரித்தது.

அவன் குனிந்து நீரை நோக்கினான். இது எவர் முகம்? இளமையின் தயக்கமும் நாணமும் இனிய நகையும் கொண்டது. என் முகம். என்னில் நிகழ்ந்துகொண்டே இருப்பது. என்னில் வந்தமர்ந்த பறவை, அஞ்சி எழுந்து சிறகடித்துச் செல்வது. அவன் நீரை அள்ளி முகம் கழுவி சிறிது அருந்தினான். திரும்பியபோது பின்னால் அசைவெழுந்தது. திடுக்கிட்டு நோக்க நீருக்குள் இருந்து அவன் பாவை எழுவதுபோல ஒரு பெண் எழுந்தாள். “யார்?” என்றான் யயாதி. அவள் முகவாயிலிருந்து நீர் உருண்டு சொட்டியது. இளமுலைக் குவைகளில் வாழைத்தண்டில் என வழிந்தது. தோள்களில் முத்துசூடி நின்றது.

“யார்?” என அவன் மீண்டும் உரக்க கேட்டான். அவள் கைதூக்கி தன் குழலை நீவி நீரை வழித்தபின் இடை நீர் விளிம்பிலிருந்து மேலெழ ஒளிகொண்ட மெல்லுடலுடன் எழுந்து அணுகினாள். “யார் நீ?” என்றான் யயாதி. “என் பெயர் அஸ்ருபிந்துமதி” என்று அவள் சொன்னாள்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 87

87. நீர்க்கொடை

யயாதி தன் அகம்படியினருடன் குருநகரிக்கு சென்றுசேர பதினெட்டுநாட்களாகியது. அவன் உடல்கொண்ட களைப்பால் வழியில் ஒருநாளுக்கு நான்கு இடங்களில் தங்கி ஓய்வெடுக்க நேர்ந்தது. தேரிலும் பெரும்பாலான நேரம் துயின்றுகொண்டும் அரைவிழிப்பு நிலையில் எண்ணங்களின் பெருக்காகவுமே அவன் இருந்தான். அவன் கண்ட ஒவ்வொரு இடமும் உருமாறியிருந்தன. அண்மையில் உள்ளவை உருவழிந்து கலங்கித் தெரிந்தன. சேய்மையிலிருந்தவை ஒளிப்பெருக்கெனத் தெரிந்த தொடுவான் வட்டத்தில் கரைந்தவைபோல மிதந்தன. கலவிளிம்பில் ததும்பிச் சொட்டுவதுபோல அங்கிருந்து ஒவ்வொரு பொருளும் எழுந்து உருக்கொண்டு அணுகி அவன் முன் வந்து காற்றில் அலையும் நீர்ப்பாவைபோல் நின்றன.

ஓசைகளின் மீது அழுத்தமான எதையோ கொண்டு மூடியதுபோலிருந்தது. ஆனால் குரல்கள் சில மிக அண்மையில் எழுந்து உடலை துணுக்குறச் செய்தன. பெரும்பாலான நுண்ணிய மணங்கள் நினைவிலிருந்தே அகன்றுவிட்டிருக்க கூரிய நாற்றங்களால் ஆனதாக இருந்தது நிலம். மங்காதிருந்த புலன் மெய்தான். மரத்தடிகளில் படுத்ததும் வந்து தழுவும் குளிர்காற்று மணமும் ஒலியும் அசைவொளியும் அற்று தான்மட்டுமாக இருந்தது. குழல் கலைத்து ஆடை உலைத்து சூழ்ந்துகொண்டது. காற்று பட்டதுமே மெல்ல அவன் துயிலத் தொடங்கினான். விழித்தபோது முந்தையவை அனைத்தும் கரைந்து பரவி மறைய முற்றிலும் புதியவனாக விழித்தெழுந்தான். அவனுக்கு அணுக்கனாக வந்த காவலனை ஒவ்வொரு முறையும் “யார்?” என திகைத்து கேட்டான்.

பார்க்கவனின் குரலும் முகமும் தெளிவாக இருந்தமையால் எப்போதும் அவன் உடனிருக்க வேண்டுமென விழைந்தான். விழித்தெழுந்து அவனைக் காணவில்லை என்றால் பதைத்து “அவன் எங்கே? பார்க்கவன் எங்கே?” என்றான். அவன் தசைகள் நொய்ந்து நீர்மிகுந்த சேற்றுக்கதுப்பென ஆகிவிட்டிருந்தன. செதிலாகச் சுருங்கிய தோலுடன் அவை கன்னங்களிலும் தாடைக்குக்கீழும் புயங்களிலும் தொங்கின. உதடு முற்றாக மடிந்து உள்ளே சென்றிருக்க மூக்கு வளைந்து உதட்டைத் தொடுவதுபோல புடைத்திருந்தது. நினைத்தெடுத்துச் சொல்லாக்கி உரைக்க இயலாமையால் அவன் உதிரிச்சொற்றொடர்களால் பேசினான். ஒரு சொற்றொடர் துலங்கியதும் அதன் வெளிச்சத்தில் தடுமாறி முன்னகர்ந்து அடுத்த சொற்றொடர்களை உருவாக்கினான். தொடர்ந்து பேசினால் மூச்சுபோதாமல் திணறி அத்திணறலே குரலை தழுதழுக்கச்செய்ய கண்கள் கலங்கி விம்மினான். அந்த விம்மல் வழியாகவே துயர் எழ அவன் பேசியதெல்லாமே கண்ணீரில் சென்று முடிந்தது. சற்றே தாழ்ந்திருந்த இடக்கண்ணிலிருந்து மட்டும் நீர் வழிய முகம் இடப்பக்கமாக கோணலாகி இழுபட விசும்பி விசும்பி அழுதான். முகச்சுருக்கங்களின் மேல் கண்ணீர் தயங்கித்தயங்கி வழிந்தது.

சுற்றிலும் இருந்தவர்களின் விழிகளை நோக்கமுடியாதானமையால் விரைவிலேயே அவன் அவர்களை எண்ணவும் முடியாதவனானான். ஆகவே தன் உணர்வுகளை மறைக்க அவனால் இயலவில்லை. இனிய எளிய உணவுகள் அவனுக்கு பிடித்திருந்தன. அக்காரம் சேர்த்த கஞ்சியை ஏவலன் நீட்டும்போது இருகைகளாலும் வாங்கி முகம் மலர தலையசைத்து மகிழ்ந்து ஆவலுடன் அள்ளிக்குடித்தான். இனிய உணவை கையில் கொடுத்தால் சிறுகுழந்தையைப்போல மகிழ்ந்து சிரித்துக்கொண்டே இருந்தான். எண்ணியிராதபடி ஏதேனும் இன்னுணவு நினைவில் எழுந்தால் அதை உடனே அருகிருந்தவர்களிடம் சொல்லி கொண்டுவரும்படி ஆணையிட்டான். “எனக்கு அக்காரச்சாற்றிலிட்டு வேகவைத்த கிழங்கு வேண்டும்” என்று அவன் கேட்டபோது ஏவலன் “அரசே, நாம் பயணத்திலிருக்கிறோம்” என்றான். “எனக்கு வேண்டும்… வேண்டும்” என்று அவன் கேட்டான். “அரசே” என்று ஏவலன் சொல்ல “வேண்டும்…” என்று அவன் அழுவதுபோன்ற முகநெளிவுடன் சொன்னான். பார்க்கவன் அவனை விலகும்படி தலையசைத்து “கொண்டுவருகிறோம் அரசே… இதோ” என்றான். “எப்போது?” என்றான் யயாதி. “இதோ” என்றான் பார்க்கவன். பின்னர் ஒரு பெரிய மலரைக் கொண்டுவந்து காட்டி “பார்த்தீர்களா? மலர்” என்றான். அதை வாங்கிப் பார்த்து முகம் மலர்ந்து “மலர்” என்றான். நிமிர்ந்து பார்க்கவனிடம் “பெரிய மலர்” என்றான். அவன் கேட்டதை பின்னர் நினைவுறவே இல்லை.

அவர்கள் இரவில் எவருமறியாமல் மூடப்பட்ட தேரில் குருநகரிக்கு வந்து சேர்ந்தார்கள். யயாதியின் உருமாற்றத்தைப்பற்றி குருநகரியின் தலைமை அமைச்சருக்கும் இளவரசர்களுக்கும் மட்டுமே செய்தியனுப்பப்பட்டிருந்தது. கோட்டை வாயிலிலேயே தலைமையமைச்சர் சுகிர்தர் காத்திருந்தார். கூண்டுத்தேர் வந்து நின்றதும் பார்க்கவன் இறங்கிச்சென்று தலைவணங்கி அரசனின் வருகையை சொன்னான். சுகிர்தர் வந்து தேர் அருகே பணிந்தார். பார்க்கவன் “அரசே… அரசே…” என்று அழைக்க திரையை விலக்கி எட்டிப்பார்த்த யயாதி “யார்? யார்?” என்று பதறினான். “அரசே, நான் பார்க்கவன்… இவர் தலைமையமைச்சர் சுகிர்தர்” என்றான் பார்க்கவன். “ஆம், தெரிகிறது” என்றபின் யயாதி “என் இடை வலிக்கிறது. நாம் எப்போது செல்வோம்?” என்றான். “வந்துவிட்டோம், அரசே.” யயாதி “என் இடையில் வலி” என்றான்.

சுகிர்தர் திகைத்துப்போய் “என்ன இது?” என்றார். பார்க்கவன் திரைச்சீலையை மூடி “செல்லலாம்” என பாகனுக்கு ஆணையிட்டுவிட்டு “சுக்ரரின் தீச்சொல். ஆனால் சொல்முறிவு உள்ளது. அரசர் தன் முதுமையை சிலகாலத்திற்கு மைந்தர் எவருக்கேனும் அளிக்க விழைகிறார்.” சுகிர்தர் “மைந்தரா? இளமையை எவர் அளிப்பார்?” என்றார். “திரும்பப் பெற்றுக்கொள்ளலாமே?” என்றான் பார்க்கவன். “ஆம், ஆனால் இப்புவியில் மானுடர் விழையாதவை அது. நோயும் மூப்பும் இறப்பும்தான். ஜரைதேவியும் வியாதிதேவியும் மிருத்யூதேவியின் புதல்விகள்.” பார்க்கவன் “ஆனால் அவர் அரசர்…” என்றான். அவன் என்னபொருளில் அதை சொன்னான் என சுகிர்தரால் உணரமுடியவில்லை.

அவர்கள் அரண்மனைக்குச் சென்றபோது அங்கே இரு இளவரசர்களும் காத்து நின்றிருந்தனர். யது ஐயத்துடனும் தயக்கத்துடனும் பின்னால் நின்றிருக்க துர்வசு எதுவும் புரியாமல் புருவங்களைச் சுருக்கியபடி முன்னால் நின்றான். தேர் நின்றதும் சுகிர்தர் இறங்கி அவர்களிடம் சென்று மெல்லிய குரலில் பேச இருவரும் தயங்கியபின் மெதுவாக அருகணைந்தனர். பார்க்கவன் திரையை விலக்கி “அரசே, அரண்மனை” என்றான். “எங்கே?” என்றான் யயாதி. “அரண்மனை, குருநகரி.”

யயாதி “ஆம்” என்றபின் பார்க்கவனின் தோளைப் பற்றியபடி இறங்கினான். நிலையான தரையில் விசை எஞ்சியிருந்த உடல் தள்ளாடியது. பார்க்கவன் அவனை பற்றிக்கொண்டு “வருக” என்றான். யதுவும் துர்வசுவும் அருகே வந்து அவனைப் பணிந்து “நல்வரவு, தந்தையே. அரண்மனை தங்களுக்காகக் காத்திருக்கிறது” என்றனர். யயாதி “ஆம், நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்… நான் உங்களிடம் ஒன்று கோரவேண்டும்” என்றான். பார்க்கவன் “அரசே, இது இரவு… நாம் ஓய்வெடுக்கவேண்டும். நாளை காலை முறைப்படி சான்றோர் முன் அதை கோருவோம்” என்றான். “ஆம், அதுவே முறை” என்றான் யயாதி.

அவன் பார்க்கவனை பற்றிக்கொண்டு ஒவ்வொரு படியாக ஏறி குருநகரியின் அரண்மனையின் முகப்பை அடைந்து பெருங்கூடத்திற்குள் நுழைந்தான். மூச்சுவாங்கியபடி நின்று “நான் முதுமை கொண்டுவிட்டேன்…” என்றான். “அரசே, அனைத்தையும் நாம் நாளை பேசுவோம்” என்றான் பார்க்கவன். “ஆம், முறைமைப்படி நான் கோரவேண்டும்” என்றான் யயாதி. அவர்கள் பெருங்கூடத்தில் இருந்த பீடங்களை அடைந்ததும் யயாதி “நான் சற்று அமர்கிறேன்… மூச்சுவாங்குகிறது” என்றான். பார்க்கவன் “ஆம், வருக!” என அழைத்துச்சென்றான். பீடத்தில் அமர்ந்ததும் யயாதி நிமிர்ந்து புதியவர்கள் என மைந்தர்களை நோக்கி “இவர்களிடம் நான் ஒன்று கோரவேண்டும்… என்னிடம் சுக்ரர் சொன்னது. இல்லை… அவர் இல்லை. அவருடைய மாணவர். அவர் பெயரை மறந்துவிட்டேன்” என்றான்.

பார்க்கவன் “அரசே… நாளை…” என தொடங்க யயாதி சினந்து “வாயை மூடு, மூடா! நீ என்ன என்னை பேசவே விடமாட்டாயா?” என்றபின் அதே சினச்சிவப்பு முகத்தில் எஞ்சியிருக்க “எனக்கு முதுமையை தீச்சொல்லிட்டார் சுக்ரர்… அதுதான் நீங்கள் காண்பது” என்றான் யயாதி. “ஆனால் சொல்முறிவும் அளித்துள்ளார். என் முதுமையை உவந்துபெறும் ஒருவருக்கு நான் அளிக்கமுடியும்…” யது திரும்பி சுகிர்தரை பார்க்க அவர் “ஆம், அதை நாம் நாளையே பேசிமுடிப்போம். நான் இளவரசரிடம் அதைப்பற்றி விளக்கி…” என்று சொல்லத் தொடங்கினார். யயாதி கைதூக்கி அவரைத் தடுத்து “நான் கேட்பது என் மைந்தனிடம். என் அரசுக்கும் குருதிவழிக்கும் நீட்சியாக அமையவிருப்பவன் அவன். நீ என் முதுமையை பெற்றுக்கொள்ளவேண்டும். நான் விரும்பும்வரை அதை கொண்டிருக்கவேண்டும்.”

யது அதை எதிர்பார்க்காமையால் மலைத்துப்போய் நின்றான். “என்ன சொல்கிறாய்?” என்றான் யயாதி. “நீ முதுமைகொள்வது உனக்கும் நன்று…” என்றபின் “நீர்க்கலம் வருக! சொல்லோதி பொழிவுக்கொடை அளிக்கிறேன்” என்றான். யது புரிந்துகொண்டு சினம் மேலிட நிலையழிந்து உரத்தகுரலில் “நீங்கள் அடைந்தது உங்கள் இழிசெயலின் விளைவை. அதை பிறர் ஏன் சுமக்கவேண்டும்?” என்றான். “மூடா…” என்றபடி யயாதி எழப்போக பார்க்கவன் அவனைப் பிடித்து “அரசே…” என்றான். “விடு என்னை… நீ என் அரசை கொள்ளப்போகிறாய். என் மூன்று வினைகளுக்கும் நீயே தொடர்ச்சி…” என்றான். “ஆம், ஆனால் ஊழெனில் அதை தெய்வங்கள் அளிக்கவேண்டும். மானுடர் அளிக்கக்கூடாது. அவ்வாறு அளிக்கக்கூடும் என்றால் அத்தனை தந்தையரும் தங்கள் பிணிகளை மைந்தர்மேல் ஏற்றிவைப்பார்கள்… நான் உடன்படமுடியாது” என்றான்.

யயாதி “தந்தையரின் பிணிகளும் மைந்தருக்கு வருகின்றன” என்றான். “நான் அளிப்பதையே நீ கொள்ளமுடியும்…” யது “நீங்கள் எங்களுக்கு அளித்தவை எவையும் நீங்கள் ஈட்டியவை அல்ல. சந்திரகுலத்து மூதாதையரின் செல்வங்கள் இவை. எங்களை இக்குலத்தில் பிறக்கச்செய்த தெய்வங்களால் இவை அளிக்கப்பட்டுவிட்டன. உங்களிடம் இரவலராக நாங்கள் வந்து நிற்கவில்லை” என்றான். யயாதியின் தலை நடுங்கியது. கைகள் நடுக்கத்தில் அங்குமிங்கும் அலைபாய்ந்தன. பீடத்தில் மீண்டும் அமர்ந்து கைகளை தொடைக்குக்கீழே வைத்து நடுக்கத்தை அடக்கியபடி “இளையவனே…” என்றான். துர்வசு “நீங்கள் எவர்பொருட்டு இத்தீச்சொல்லை பெற்றீர்கள் என அறிவோம். அவர்களுக்காக எம் அன்னையை ஏமாற்றினீர்கள். அவர்களே இந்த மூப்புப்பிணியையும் ஏற்கக் கடமைப்பட்டவர்கள். செல்க!” என்றான்.

பார்க்கவன் “இளவரசே, இதையெல்லாம் இந்நள்ளிரவில் பேசவேண்டியதில்லை. நாம் நாளை அமர்ந்து பேசுவோம்” என்றான். “நீர் எத்தனை பேசினாலும் எங்கள் முடிவு இதுதான். இவரை நம்பி மூப்பை ஏற்பதன் மடமையை நான் அறிவேன். இவர் எதன்பொருட்டு இளமையைக் கோருகிறார்? அடைந்த பெண்கள் போதவில்லை அல்லவா? மேலும் காமத்தில் திளைக்க உடல் தேவை அல்லவா? இவருக்கு காமம் எப்போது திகட்டும்? அமைச்சரே, காமம் திகட்டிய எவரேனும் உள்ளனரா? இவர் திரும்பிவந்து முதுமையை பெற்றுக்கொள்வார் என நீங்கள் எண்ணுகிறீர்களா? சொல்லுங்கள்…” என்றான் யது.

பார்க்கவன் “அதை நாம் பேசுவோம்” என்று சொல்ல யது “விலகுங்கள்! இது எங்களுக்குள் பேசி முடிக்கவேண்டிய சிக்கல். தந்தையே, உங்கள் காமத்தை நான் நம்பவில்லை. உங்கள் நேர்மையையும் நான் நம்பவில்லை. என் தாயை ஏமாற்றியவர் நீங்கள். உங்கள் இழிவைக்கண்டு உளம்வெறுத்துச்சென்று அவர்கள் முடிமழித்து துவராடை அணிந்து தனிச்சோலையில் தவமிருக்கிறார்கள். நீங்கள் அதன்பின்னரும் காமம் நிறையாமல் வந்து இளமைக்காக இரக்கிறீர்கள். இப்படி இரந்து நிற்பதனூடாகவே மேலும் இழிவுகொள்கிறீர்கள். உங்களை நம்பி இளமையை அளிக்க நான் மூடன் அல்ல” என்றான். துர்வசு “அவர்களிடம் சென்று கேட்டுப்பாருங்கள்! அவர்கள் உங்களுக்கு அளித்தது இந்த முதுமை. அவர்களே பெற்றுக்கொள்ளட்டும்” என்றான்.

யயாதி வாயை இறுக மூடியபோது அது சுருங்கி ஒரு துணிமுடிச்சென ஆயிற்று. அவன் விழிகளில் வெறுப்பு தெரிந்தது. அவன் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. “அரசே, நாம் இப்போது இதைப் பேசியது பிழை. எவர் உள்ளமும் நிலைகொண்டிருக்கவில்லை. வெறும் உணர்வாடல் இது. நாளை ஆவதை எண்ணி சொல்லெடுத்துப் பேசுவோம்” என்றான். யயாதி “இனி எனக்குப் பேச ஏதுமில்லை. இவர்கள் என் கொடிக்கும் குருதிக்கும் வழித்தோன்றல்கள் அல்ல” என்றான்

சுகிர்தர் “அரசே…” என கைநீட்ட “விலகு… இது என் சொல். மூதாதையர் அறிக! என் குலதெய்வங்கள் அறிக! நான் கொண்ட படைக்கலங்கள் கொன்றவர்களின் உயிர்கள் அறிக! இன்றுவரை நான் அவையமர்ந்து அளித்த தீர்ப்புகளால் இறந்தவர்கள் அறிக! இது என் சொல்! இவர்கள் என் மைந்தர்கள் அல்ல. இவர்களின் பிறவிநூல்களை நோக்கிய அன்றே இவர்களின் ஊழை உணர்ந்தேன். அது ஏன் என இன்று புரிந்துகொள்கிறேன்.”

அவன் குரல் நடுக்கமிழந்து உரக்க ஒலித்தது. “மூத்தவனே, நீ ஒருபோதும் நிலைகொள்ளமாட்டாய். குடியுடனும் கன்றுகளுடனும் நிலத்திலிருந்து நிலம் நோக்கி சென்றுகொண்டே இருப்பாய். உன் செல்வம் ஒருபோதும் மண்ணில் நிலைக்காது, அது கால்கொண்டு அலைவதாகவே அமையும். உன் குடிகளுக்கும் அதுவே ஊழென்றமையும். நீங்கள் அந்தணராலும் ஷத்ரியர்களாலும் வேட்டையாடப்படுவீர்கள். எரித்து அழிக்கப்படுவீர்கள். கொன்றுகுவிக்கப்படுவீர்கள். நீங்கள் வெல்பவை அனைத்தும் கணம்கணமென கைநழுவும். நீங்கள் கட்டி எழுப்பிய அனைத்தும் உங்கள் கண்ணெதிரே நுரையெனப் பொலியும். ஆம், அவ்வாறே ஆகுக!”

யது நடுங்கி பின்னடைந்து அறியாது கைகூப்பிவிட்டான். யயாதி துர்வசுவை நோக்கி திரும்பி “நீ ஒருபோதும் பசுநிலத்தை காணமாட்டாய். பாறைகள் வெடித்த பாலைகளில் அனல்காற்றுகளால் அலைக்கழிக்கப்படும் சருகென்றமையும் உன் வாழ்வு. உன் கொடிவழிகளுக்கும் அவ்வாறே. ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபின் தன்னை தூக்கும்படி கை நீட்டினான். யது பாய்ந்து வந்து ஓசையுடன் நிலத்தில் விழுந்து யயாதியின் கால்களை பற்றிக்கொண்டு “பொறுத்தருள்க தந்தையே… என் அச்சமும் ஐயமும் என்னை ஆட்கொண்டுவிட்டன. நான் சொன்னவற்றின் பொருளை நான் உணர்கிறேன். அவையனைத்தும் என்னுள் உறையும் உங்கள் மேல் கொண்ட வெறுப்பிலிருந்து எழுந்தவை. தந்தையே நான் நீங்களேதான்” என்றான்.

யயாதி “ஆம், நான் உன்மேல்கொண்ட வெறுப்பும் என்மேல் நான் கொண்டதே” என்றான். யது கண்ணீருடன் தலைதூக்கி “அளிகூர்ந்து சொல்முறிவளியுங்கள்… நான் மீளும் வழி உரையுங்கள், தந்தையே” என்றான். யயாதி நீள்மூச்செறிந்து “ஆம், நான் அதையும் அளித்தாகவேண்டும். உன் குருதி நூறுமேனி விளையும். மைந்தா, நிலம் பெருகுவதல்ல, கால்நடைகளோ ஆண்டுதோறும் இருமடங்காகும். எனவே உன்குலம் ஆபுரந்து வாழட்டும். பாரதவர்ஷமெங்கும் பரவி கிளையிலிருந்து கிளைபிரிந்து என்றும் அழியாது நிலைகொள்ளட்டும்”என்றான்

மேலும் உளம் எழ அவன் குரல் ஆணை என ஒலித்தது “உன்குடியில் மாவீரர் எழுவர். பேரன்னையர் பிறப்பர். சிப்பிகளனைத்தும் முத்து நிகழும் வாய்ப்புகளே என்பதுபோல குலங்களெல்லாம் தெய்வம் வந்து பிறப்பதற்கானவை. உன் குடியில் விண்நிறைந்த பரம்பொருள் கனிந்து துளித்துச் சொட்டி நிறைக! அவன் பெயரின் பொருட்டே உன்குருதியை மானுடக்குலம் போற்றும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.

கண்ணீர் வழிய அருகே வந்து மண்டியிட்ட துர்வசுவின் தலையைத் தொட்டு “தந்தை என உன் குலத்தை நான் வாழ்த்துகிறேன். கல்கரையும் வறுதியிலும் பசுந்தளிர்விடும் பாலைமுட்கள் போலாகட்டும் உன் குடி. என்றும் அழியாது. உன் கொடிவழியில் பிறந்தவர்கள் மலைநாடுகளை ஆள்வார்கள். அவர்களில் எழுந்த அரசி ஒருத்தியின் குருதியில் பேரரசர்கள் பிறந்து கங்கைக்கரைகளில் கொடிதிகழ்வார்கள். ஆம், அவ்வாறே ஆகுக!” நெஞ்சு விம்மி விம்மித் தணிய யயாதி பார்க்கவனிடம் “நாம் உடனே அசோகவனிக்கு செல்லவேண்டும்” என்றான். “அரசே, தாங்கள் களைத்திருக்கிறீர்கள். ஓய்வெடுங்கள்” என்றான் பார்க்கவன். “இல்லை. இனி ஒருகணம்கூட என்னால் பிந்த இயலாது… எழுக தேர்!” என்றான் யயாதி.

tigerமறுநாள் புலரிச்சுடர் எழுந்தபோது அவர்கள் அசோகவனியை சென்றடைந்தனர். அவர்கள் வருவது சொல்லப்படாததனால் கூண்டுத்தேரைக் கண்டு கோட்டைக்காவலர் தலைவன் திகைத்து அருகே ஓடிவந்தான். பார்க்கவன் சுருக்கமாக செய்தியைச் சொல்ல அவனும் இருகாவலரும் புரவிகளில் முன்னே சென்றார்கள். காலையில் அசோகவனியின் தெருக்களில் வணிகம் தொடங்கிவிட்டிருந்தது. சாலைநெரிசலுக்கு அப்போதும் பழகாத மக்கள் வந்து குறுக்கே விழுந்துகொண்டே இருந்தனர். அரண்மனை முகப்பை அடைந்ததும் தேர் விரைவழிய யயாதி விழித்துக்கொண்டு “எங்கு வந்துள்ளோம்?” என்றான். “வந்துவிட்டோம், அரசே” என்றான் பார்க்கவன்.

அரண்மனை முற்றத்திலேயே காவலர்தலைவனுடன் மூன்று மைந்தரும் காத்து நின்றிருந்தார்கள். திருஹ்யூயும் அனுதிருஹ்யூயும் முன்னால் நின்றிருந்தனர். அவர்களின் முகங்கள் குழப்பம்கொண்டவர்களைப்போல தெரிந்தன. புரு அவர்களுக்குப்பின்னால் அவர்களால் பாதிமறைக்கப்பட்டு நின்றான். பார்க்கவன் “இறங்கலாம், அரசே” என்றான். யயாதி கைநீட்ட அதைப் பற்றி மெல்ல அவனை இறக்கினான். படிகளில் கால் வைத்து நடுங்கியபடி இறங்கி கூனிட்டு நின்ற யயாதி நெற்றிமேல் கை வைத்து அவர்களை நோக்கினான்.

மைந்தர் மூவரும் அருகே வந்து கால்தொட்டு வணங்கினர். “நலம் சூழ்க!” என வாழ்த்திய யயாதி “நான் உங்களிடம் ஒரு கோரிக்கைக்காகவே வந்தேன்” என்றான். “உள்ளே சென்று பேசுவோம்” என்றான் பார்க்கவன். “இல்லை, நான் இனிமேல் முறைமைகளுக்கு நேரத்தை வீணடிப்பதாக இல்லை. நிகழ்ந்தவை இவர்களுக்குத் தெரியும் என எண்ணுகிறேன்.” பார்க்கவன் “ஆம், அனைத்தும் ஒற்றர்களின் வழியாக முன்னரே தெரிந்திருக்கின்றன. நீங்கள் வருவதை நான் பறவையோலையினூடாகத் தெரிவித்தேன்” என்றான். “அப்படியென்றால் நான் சொல்விளையாட விழையவில்லை. என் மைந்தரில் ஒருவர் இம்முதுமையை பெற்றுக்கொண்டு தன் இளமையை எனக்கு அளிக்கவேண்டும். நான் விழைவதுவரை அதை கொண்டிருக்கவேண்டும்” என்றான் யயாதி.

அனுதிருஹ்யூ புருவங்களைச் சுருக்கியபடி அசையாமல் நின்றான். “முதல்மைந்தர் இருவரும் மறுத்துவிட்டனர். ஆகவே இங்கே உங்களிடம் வந்துள்ளேன்” என்றான் யயாதி. “பொறுத்தருள்க, தந்தையே. நேற்றே என்னிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டுவிட்டது. இரவெல்லாம் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். உவந்து உங்கள் முதுமையை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றுதான் எண்ணினேன். ஆனால் என் உள்ளம் அதை ஏற்கவில்லை. நான் என்னை கட்டாயப்படுத்தி மட்டுமே அதை பெற்றுக்கொள்ளமுடியும்” என்றான் திருஹ்யூ.

யயாதி “ஆம், இதை நான் எதிர்பார்த்தேன்” என்றான். அனுதிருஹ்யூ “நானும் அதையே சொல்ல விழைகிறேன், தந்தையே” என்றான். “நீங்கள் என் தந்தையென்றாகி இன்னமும் ஒருமாதம்கூட ஆகவில்லை. நான் ஏற்றுக்கொண்டாலும் உள்ளம் அவ்வண்ணம் எண்ணவில்லை. எவரோ ஒருவருக்கு என் இளமையை ஏன் அளிக்கவேண்டும் என்னும் குரலை என்னால் அடக்கவே முடியவில்லை” என்றான்.

யயாதி புருவை நோக்கி திரும்பாமல் “மூன்றாமவனும் சொல்லட்டும்” என்றான். புரு “நான் பெற்றுக்கொள்கிறேன், தந்தையே” என்றான். யயாதி திகைத்துத் திரும்பி நோக்கி “எண்ணித்தான் சொல்கிறாயா?” என்றான். “ஆம், நான் முன்னரே உடன்பிறந்தார் எவரேனும் ஏற்றுக்கொண்டு எனக்கு வாய்ப்பு வராதமையுமோ என ஐயம் கொண்டிருந்தேன்… இது என் நல்லூழ் என்றே எண்ணுகிறேன்.” யயாதி அவனையே நோக்கிக்கொண்டு சிலகணங்கள் நின்றான். தலை நடுங்க உதடுகள் எதையோ சொல்வனபோல் அசைந்தன. “ஏன்?” என்று பின்னர் கேட்டான். “நான் உங்களை எப்போதும் என் தந்தையென்றே எண்ணிவந்திருக்கிறேன்” என்றான் புரு.

“உன் அன்னை எப்போது அதை சொன்னாள்?” என்றான் யயாதி. “தந்தையே. இப்போதுவரைக்கும்கூட அன்னை அதை சொல்லவில்லை. ஏனென்றால் நீங்கள் சொல்லும்படி அவருக்கு ஆணையிடவில்லை. பேரரசியின் ஆணையால் நாங்கள் இளவரசர்கள் என அறிவிக்கப்பட்டோம். இவ்வரண்மனைக்கு அரசமுறையாக குடிவந்தோம். அரசகுடியினருக்குரிய அணிகளும் ஆடைகளும் முத்திரைகளும் கொடிகளும் முறைமைகளும் எங்களுக்கு அளிக்கப்பட்டன. அன்னை இன்னமும் சேடியருக்குரிய இல்லத்தில் சேடியாகவே இருக்கிறார். அவரை அரசியாக ஆக்கவேண்டியவர் நீங்கள் என்றார்” என்றான் புரு.

“ஆனால் நான் என் மொழிதிருந்தா நாளிலேயே உங்களை என் தந்தை என உணர்ந்திருந்தேன். என் நினைவறிந்த உங்கள் முதல் தொடுகையே அதை சொல்லிவிட்டது. என் தோள்களை வருடி புயங்களைப் பற்றி அழுத்திப் பார்த்தீர்கள். என்னை மடியிலமர்த்தி என் குழலை ஆழ மூச்சிழுத்து முகர்ந்தீர்கள். அன்று அறிந்த உங்கள் மணம் என் நினைவில் இன்றுமுள்ளது. என் கனவில் தந்தையாக எப்போதும் அத்தொடுகையுடனும் மணத்துடனும் வந்துகொண்டிருக்கிறீர்கள்” என புரு தொடர்ந்தான். “பேரரசி என்னிடம் உன் தந்தை யார் என்று கேட்டபோது நெஞ்சறிந்த ஒன்றை மறைக்க என்னால் இயலவில்லை. அன்று நான் சொன்ன சொல்லால்தான் நீங்கள் இம்முதுமையை கொண்டீர்கள். நான் இதை ஏற்றுக்கொள்வதே அறம்.”

யயாதி தொழுவதுபோல நெஞ்சில் கைகுவிய “வேண்டியதில்லை, மைந்தா. நீ எனக்களித்தது என்ன என்று அறியமாட்டாய். மைந்தன் என இப்புவியில் உறவேதுமில்லை என்று என் உள்ளம் எண்ணத்தொடங்கியிருந்தது. குருதியின் நேர்நீட்சியான மைந்தரும் பொய்யுறவே என்றால் இப்புவியில் உறவு என்பதே இல்லை. நீ நான் நம்பிவாழ்ந்த ஓர் உலகம் இடிந்து நொறுங்கி மண்ணில் விழாமல் காத்திருக்கிறாய்” என்றான். “புத் என்னும் நரகம் ஏதென்று வரும் வழியில் எண்ணிக்கொண்டேன். உறவென ஏதுமில்லாமல் வாழ்தலும், இறந்தபின் நினைக்கப்படாமல் மறைதலுமே புத். அதிலிருந்து மீட்பவனே புத்ரன். எனக்கு நீ ஒருவனே மைந்தன். என் முடியும் கொடியும் குடிமரபும் உனக்குரியவை.”

“தந்தையே, நான் அவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால் உங்கள் முதுமையையும் ஏற்றாகவேண்டும்” என்றான் புரு. “அதனூடாகவே நீங்கள் உங்கள் மைந்தன் என என்னை உலகோர் முன் நிறுவுகிறீர்கள். உங்கள் துயரையும் நோயையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே உங்கள் கொடையையும் பெற்றுக்கொள்ளும் தகுதியை அடைகிறேன்” என்றான் புரு. அருகே வந்து மண்டியிட்டு யயாதியின் கால்களைத் தொட்டு “எனக்கு உங்கள் முதுமையை அளியுங்கள், தந்தையே” என முறைமைப்படி செம்மொழிச் சொல்லால் கேட்டான்.

யயாதி பெருமூச்சுடன் திரும்பி நோக்க சுகிர்தர் “நீர்…” என்றார். ஏவலன் ஒருவன் பித்தளை வால்குடுவையில் நீருடன் ஓடிவந்தான். சுகிர்தர் அதை வாங்கி “கங்கையே, செல்லுமிடம் கனிந்து அடையுமிடத்தை முற்றிலும் நிரப்பும் நீயே கொடைகளுக்குச் சான்று. உன் ஒழுகுதலென இக்கொடை வளர்ந்து செல்க!” என்று உரைத்து நீட்டினார். யயாதி அதை வாங்கிக்கொண்டபோது கைநடுக்கத்தால் நீர் ததும்பிச் சிந்தியது.

புரு இரு கைகளையும் ஏந்த அதில் நீரூற்றி “என் முதுமையை உனக்களிக்கிறேன். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் யயாதி. வால்குடுவையை பார்க்கவன் பெற்றுக்கொண்டான். புரு எழுந்துகொள்ள சுகிர்தர் “நீங்கள் இளமையை அளிக்கவேண்டும், இளவரசே” என்றார். புரு வால்குடுவையை வாங்கிக்கொண்டான். யயாதி கையேந்த புரு நீரூற்றி “என் இளமையை கொள்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.

அனைவரும் மெல்ல உடல்தளர்ந்தனர். எவரிடமிருந்தென்றில்லாமல் ஓரிரு பெருமூச்சொலிகள் எழுந்தன. யயாதி திருஹ்யூவையும் அனுதிருஹ்யூவையும் நோக்கி “உங்கள்மேல் எனக்கு இப்போது சினமில்லை, மைந்தர்களே. ஆனால் நிகர்முறை செய்வதற்காக நான் உங்களுக்கும் தீச்சொல்லிட்டாகவேண்டும்” என்றான். அவர்கள் கைகூப்பி நின்றனர். திருஹ்யூயை நோக்கி “நீயும் உன் இரு உடன்பிறப்புகளைப்போல நிலையற்று அலையும் ஊழ்கொள்க! நீரில் அமைக உன் வாழ்வும் உன் குருதிவழியினரின் வாழ்வுத்தொடரும். தோணியோட்டுக, மீன்கொள்க! ஒருபோதும் நீரிலிருந்து எழாதமைக!” என்றான்.

திருஹ்யூ தலைவணங்கினான். “ஆனால் உன் கொடிவழியினர் அரசுகள் அமைப்பார்கள். மீன் உங்கள் கொடியாகும். மச்சர்கள் என குலப்பெயர் கொள்வீர்கள். உங்கள் குடிப்பிறந்த பெண் ஒருநாள் பாரதவர்ஷத்தில் அழியாப் புகழ்கொண்ட பேரரசியென்றமைவாள். அவள் குருதியில் எழும் அரசர்களால் இப்பெருநிலம் ஆளப்படும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் யயாதி.

அனுதிருஹ்யூவிடம் “தென்னகக் காடுகளில் நீ அலைவாய். அரக்கருக்கும் அசுரருக்கும் உரிய வாழ்க்கையே உனக்கும் உன் குடிமுறைகளுக்கும் அமையும்” என்றான். அனுதிருஹ்யூ தலைவணங்கினான். “ஆனால் அனல்குடிபிறந்த அந்தணன் ஒருவனால் உன் குடி அரசகுலமாக ஆக்கப்படும். தென்னகத்து நிலங்களை நீங்கள் ஆள்வீர்கள். முற்றிலும் புதுப் பெயரும் புது முத்திரையும் கொள்வீர்கள். உன் குருதி வாழும். உன் பெயர் முற்றிலும் மறைந்துபோகும். ஆம், அவ்வாறே ஆகுக!”

யயாதி பார்க்கவனிடம் கையை நீட்டி “செல்வோம், இனி என்னால் இங்கு நின்றிருக்கமுடியாது” என்றான். அவன் கைகளை பற்றிக்கொள்ள மெல்ல நடந்து படிகளில் ஏறினான். ஒவ்வொரு அடிக்கும் உடல் ஆற்றல்கொண்டுவருவதை உணரமுடிந்தது. இறுதிப்படியில் கால்வைத்தபோது பார்க்கவனே பிடியை விட்டுவிட்டான். விழிகள் தெளிய ஓசைகள் துலங்க நிமிர்ந்த உடலுடன் சுற்றும்நோக்கிய கணத்தில் புருவின் நினைவு எழுந்தது. பின்பக்கம் வியப்பொலிகளும் மெல்லிய பேச்சுக்கசங்கலும் கேட்டன. திரும்பிப் பார்க்கலாகாது என தனக்கே ஆணையிட்டுக்கொண்டு அவன் முன்னால் சென்றான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 86

86. சூழ்மண்

காலடியோசை கேட்க தேவயானி சீற்றத்துடன் திரும்பி வாயிலில் வந்து தலைவணங்கிய யயாதியை பார்த்தாள். அவன் தலைக்குமேல் கூப்பிய கைகளுடன் உள்ளே வந்து எட்டு உறுப்புகளும் நிலம்படிய விழுந்து சுக்ரரை வணங்கி முகம் நிலத்தில் பதித்து அவ்வாறே கிடந்தான். அவன் எழுவதற்காக சற்றுநேரம் காத்தபின் நிலைமாறாக்குரலில் “இவையனைத்தையும் நான் நன்றாக அறிந்திருந்தேன். பெருஞ்சினத்துடன் இவள் இங்கு வருவதற்காக பதினாறாண்டுகளாக காத்திருந்தேன்” என்றார் சுக்ரர். தலைதூக்காமலேயே யயாதி “நான் எதையும் விளக்க வரவில்லை. இரக்கவோ மன்றாடவோ முயலவில்லை. என் பிழை எனக்குத் தெரியும். ஆசிரியர் என்பதனால் எளியமனிதர்களை உங்களால் அறியவும் முடியும்” என்றான்.

“உன் பிழை புலன்களைத் தொடர்ந்தது” என்றார் சுக்ரர். “அறியேன் என நடிப்பவனுக்குப் பின்னால் காமம் நிழலெனப் பெருகிப் பேருரு கொள்கின்றது.” யயாதி “ஆம் ஆசிரியரே, எனக்கு உகந்த தண்டனையை அளியுங்கள். எதுவாக இருப்பினும் அது தங்கள் அருளே என தலைமேல் தாங்கி இங்கிருந்து மீள்கிறேன்” என்றான். சுக்ரர் விழிதூக்கி இரு கைகளையும் முறுக்கி நீட்டி தோள்களை இறுக்கி முலைகள் விம்ம நின்றிருந்த தேவயானியிடம் “இவனை என்ன செய்வதென்று நீ சொல், மகளே!” என்றார்.

அவள் உதடுகள் கோணலாயின. பற்களைக் கடித்து முறுக்கிய கைகளை தொடைமேல் அடித்த பின் அங்கிருந்து செல்வதற்கு திரும்பினாள். அவ்வசைவு அவள் உடலில் கூடிய அக்கணமே காற்றிலிருந்து பிறிதொரு தெய்வம் அவள்மேல் ஏறியதுபோல கழுத்துத்தசைகள் இழுத்துக்கொள்ள வலிப்பெழுந்த அசைவுகள் உடலில் கூட திரும்பினாள். தன் இடக்காலால் யயாதியின் தலையில் ஓங்கி மிதித்தாள். இறந்த உடலென அவன் தலை அந்த உதையை ஏற்று அசைந்தது. முகத்தை தரையிலிருந்து அகற்றாமல் அவன் அவ்வாறே கிடந்தான். முதல் உதையால் வெறிகொண்டு நிலையழிந்த அவள் அவன் தலையை எட்டி எட்டி உதைத்தாள். “இழிமகனே! இழிமகனே!” என்று மூச்சென்றே ஒலித்தபடி உதைத்து பின்பு நிலைத்தாள்.

கைகளை இடையில் ஊன்றி இடைதளர்ந்து உலைவாய் என மூச்சு சீற நின்றாள். சீறும் ஓநாய் என வெண்பற்கள் தெரிய “இழிமகனே…” என கூவினாள். அவன் தலைமேல் எச்சிலை காறி உமிழ்ந்து “உன்மேல் தீச்சொல்லிட்டு என் மீட்பை அழிக்க நான் விரும்பவில்லை. இனி உன் எண்ணத்தில் என் முகமோ பெயரோ எழாதொழியட்டும். என் குருதியில் பிறந்த கொடிவழிகள் தந்தையென உன் பெயரை ஒருபோதும் சொல்லாது அமையட்டும். இப்பிறப்பிலேயே என் ஊழ்ச்சுழலை அழிப்பேன். எனவே இனி ஒரு பிறவியிலும் உன் துணையென அமரமாட்டேன். நீ என்னை தொட்டாய் எனும் நினைவை தவத்தால் வெட்டி அறுப்பேன். இனி மறுகணம் முதல் நீ இருந்ததும் மறைவதும் எனக்கொரு பொருட்டில்லை” என்றபின் திரும்பி குழலை இடக்கையால் சுற்றிச் சுழற்றி பற்றினாள். விழிகள் அலைய குடிலோரத்தில் சுவரில் மாட்டப்பட்டிருந்த உடைவாளை நோக்கி சென்று அதை எடுத்து தன் நீள் குழலை அறுத்தாள். அந்தக் கரகரப்பு ஓசை யயாதியின் உடலை உலுக்கவைத்தது. குழல்தொகையை ஓங்கி நிலத்திட்டு மூச்சு வாங்கி ஒருகணம் நின்றபின் கதவை இழுத்துத் திறந்து காலடிகள் மிதியோசை கொள்ள வெளியே சென்றாள்.

எவ்வுணர்ச்சியும் இல்லாமல் அவளுடைய கொந்தளிப்புகளை நோக்கிய சுக்ரர் “எழுக!” என்றார். யயாதி எழுந்து கண்ணில் நீர்வழிய கைகளைக் கூப்பியபடி அமர்ந்தான். “நீ செய்தது வஞ்சம்” என்றார் சுக்ரர். யயாதி “அல்ல, அதை நான் எந்த தெய்வத்தின் முன்னும் சொல்வேன். வஞ்சனை செய்பவன் அதை தன் திறனென எண்ணிக்கொள்வான். அதன்பொருட்டு அவன் ஆழத்தில் ஒரு துளி மகிழ்ந்துகொண்டிருக்கும். நான் இதை பிழையென அறிந்திருந்தேன். ஒவ்வொரு கணமும் அதன்பொருட்டு இவளிடம் பொறுத்தருளக் கோரிக்கொண்டிருந்தேன். இன்று இவள் கால்களால் என் தலை மிதிபட்டபோது என் பிழையனைத்தும் விலகிச் சென்றுவிட்டது. இன்று உங்கள் முன் அமர்ந்திருப்பவன் தூயன். இவனுக்கு என்ன தண்டனையோ அதை அளியுங்கள்” என்றான்.

“ஆம், உணர்ந்து நீ மீளவேண்டும். இக்கணம்வரை உனை ஆட்டிவைத்தது உன் காமம். தசைகளிலெரியும் அனல் அது. அதை காதல் என்றும் கவிதை என்றும் கலை என்றும் பெருக்கிக் கொண்டாய்” என்றார் சுக்ரர். “ஏனென்றால் நீ அணுகிவரும் முதுமையை அஞ்சினாய். காமத்தினூடாக உயிர்பெருக்கி இளமையை மீட்க முயன்றாய். தவத்தார் தவறுவது தாங்கள் விட்டு விலகுவதை முற்றறிந்துள்ளோமா என்னும் ஐயத்தால். உலகத்தோர் தவறுவது அடைந்ததை முற்றும் அடைந்தோமா என்னும் கலக்கத்தால்.”

“முதுமை எய்தி குருதி வற்றி தசை சுருங்கி எலும்புகள் தளர்ந்தபின்னரே நீ உன்னை கடப்பாய். எண்ணமென்றால் இறந்தவையே என்று மாற, இருப்பென்றால் எஞ்சுதலென்றாக, ஒவ்வொன்றும் அசையும் அமையும் காலமென்றே தெரியும் ஒரு நிலையிலேயே காமம் என்றால் என்னவென்று நீ அறியலாகும். இது என் தீச்சொல். நீ முதுமை அடைக!” என்றார் சுக்ரர். யயாதி தன் தலை அவர் காலடியில் பட வணங்கி கூப்பிய கைகளுடன் எழுந்து செல்வதற்காக திரும்பினான். “நீ இத்தீச்சொல்லுக்கு மாற்று கேட்கவில்லை” என்றார் அவர். “ஆம், மாணவனாகிய எனக்கு எது தேவை என்று நீங்கள் அறிவீர்கள்” என்றான் யயாதி. “நீ விழைந்தால் இம்முதுமையை பிறருக்கு அளிக்கலாம். ஆனால் உன் பொருட்டு அதை அவர் விரும்பி பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் சுக்ரர். யயாதி மீண்டும் தலைவணங்கி வெளியேறினான்.

tigerயயாதி வெளியே வந்துகொண்டிருந்தபோதே முதுமை எய்தத் தொடங்கியிருந்தான். ஒவ்வொரு அடிக்கும் அவன் உடல் வலுவிழந்து கால்கள் நடுங்கின. நோக்கு இரண்டாக பிளவுபட்டு அண்மையும் சேய்மையும் பிழைகொண்டதாயின. கைகளில் நடுக்கமிருப்பதை உணர்ந்தபின் தூண்களை பற்றிக்கொண்டு படிகளில் இறங்கினான். இறுதிப்படியை அடைந்தபோது அவன் உடல் கூன் விழுந்து முகம் நிலம் நோக்கியிருந்தது.

கழுத்தைத் தூக்கி முற்றத்தை பார்த்தபோது கிருதரும் சத்வரும் சுஷமரும் திகைப்புடன் அவனை நோக்கி வருவதைக் கண்டான். கிருதர் “அரசே…” என்றழைக்க கைநீட்டி “இது என் ஆசிரியரின் கொடை” என்றான். “எதுவாயினும் நான் அதை ஈட்டியிருக்கிறேன் என்றே பொருள்.” கிருதர் அவன் கைகளை பிடித்துக்கொண்டார். சத்வர் “அரசி இப்போதுதான் அறுந்த கூந்தலுடன் இறங்கிச் சென்றார். இங்கு தங்கும்படி கேட்டபோது மூச்சொலியால் எங்களை உதறி நடந்து சென்றார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை” என்றார். “இனி அவள் பாதை அவளுக்கு” என்றான் யயாதி. “என்னால் புரவியில் இனி திரும்பமுடியாது. இன்றொருநாள் இங்கிருக்கிறேன். தேர் கொண்டுவரும்படி விருஷபர்வனிடம் கூறுக!”

கிருதர் “தீச்சொல்லுக்கு மாற்றுச்சொல்லுண்டு. ஆசிரியர் என்ன சொன்னார்?” என்றார். “இம்முதுமையை நான் விழைந்தால் பிறிதொருவருக்கு அளிக்கலாம் என்றார். பெறுபவரும் கொடுப்பவரும் உவந்தால் அது நிகழும் என்றார்” என்றான் யயாதி. கிருதர் “இளமையும் முதுமையும் எனக்கு ஒன்றுதான். முற்றிலும் மனமுவந்து இதை இக்கணமே நான் பெற்றுக்கொள்கிறேன். ஆனால் கொடை என்பது கொள்பவருக்கும் கொடுப்பவருக்கும் நலன் விளைப்பது. இம்முதுமை உங்களுக்கு எதை கற்றுத் தரவேண்டுமோ அது நிகழவேண்டும்” என்றார்.

“உங்கள் காமம் உடலில் விளைந்தது என்று ஆசிரியரிடம் சொன்னீர்களா? என்றார் சத்வர். “ஆம், நான் வெறும் உடல் மட்டுமே என்றேன்” என்றான் யயாதி. “ஆகவேதான் இதை உங்களுக்கு அளித்திருக்கிறார். உங்கள் காமம் முற்றிலும் உடல் சார்ந்ததே எனில் இப்போது முற்றிலும் வற்றி அடங்கியிருக்க வேண்டும். உள்ளத்திலோ கனவிலோ ஆழத்திலோ ஒரு துளியேனும் காமம் எஞ்சினால் அது உங்கள் உடலின் விழைவல்ல என்றே பொருள்” என்றார் சத்வர். “நீங்கள் அறிவதனைத்தையும் தடுத்துக்கொண்டிருந்தது உடலென்று நடித்துக்கொண்டிருந்த அகம். உடலெனும் திரை விலகினால் இன்று அது தான் எவர் என்று அறியும்.”

யயாதி “களைப்புற்றிருக்கிறேன்” என்றான். அச்சொல்லாடல் அவன் உள்ளத்தை தளரச் செய்தது. கிருதர் “அரசே, உங்களுக்குள் ஒரு துளியேனும் காமம் எஞ்சுவதை நீங்கள் எங்ஙனமேனும் கண்டால் இவ்வுடலை எவருக்கேனும் அளித்து இளமையைப் பெற்று அக்காமத்தை நிறைவு செய்யுங்கள். அதன் பின்பு உங்கள் உடலை மீட்டுக்கொள்ளுங்கள். துளியென எஞ்சும் காமம் கல்லுக்குள் புகுந்த தேரையின் முட்டை.” என்றார். யயாதி “என்னுள் நோக்கவும் என்னால் இயலவில்லை. உள்ளம் திகைத்துள்ளது” என்றான்.

“இம்முதுமையை உங்களிடமிருந்து எவர் பெறுகிறாரோ அவர் நல்லூழ் கொண்டவர்” என்றார் கிருதர். “இடருற்று துயருற்று வாழ்ந்து முதிர்ந்து அறிவதனைத்தையும் இமைக்கணத்தில் அவர் அறிகிறார். இளமையிலேயே முதுமை கொண்டவனே மெய்மையின் பாதையில் முந்திச் செல்கிறான். நாமறிந்த மெய்ஞானியர் அனைவரும் நூறுமடங்கு விசைகொண்ட ஆனால் நூறுமடங்கு குறைவான இளமைக்காலம் கொண்டவர்கள். விரைவிலேயே முதுமைக்கு வந்தவர்கள். பின்னர் என்றும் முதுமையில் அமைபவர்கள்.”

யயாதி “என்னை நானே கூர்ந்து நோக்குவதற்கான தருணம் இது என உணர்கிறேன்” என்றான். சுஷமர் “வருக! எனது குடிலில் தாங்கள் இளைப்பாறலாம்” என்றார். சுஷமரின் கைபற்றி செல்லுகையில் யயாதி தனது கால்களும் தளர்ந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். ஆகவே தொலைவுகள் பெருகிவிட்டிருந்தன. ஒவ்வொன்றும் ஒளிகுன்றி பிறிதென்றாகி சூழ்ந்திருந்தன. கண்கள் வண்ணங்களையும் கூர்மைகளையும் இழந்துவிட்டிருக்க அதை ஒரு கரையென்றாக்கி அலையடித்து நிறைந்திருந்தது அவன் அகம். நினைவுகளும் உருமாறிவிட்டிருந்தன. வஞ்சங்களும் விழைவுகளும் மங்கி ஒவ்வொன்றும் ஒரு நூலில் இருந்து படித்தறிந்தவைபோல் ஐயமின்மையின் தெளிவு பெற்றிருந்தன. சுவடிகளைப்போல தொட்டுத் தொட்டு வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் எடுத்து நோக்க முடியும் என்பதுபோல.

புன்னகைத்து “என் வாழ்வை ஒரு சுவடிச்சாலையாக மாற்றிக்கொண்டிருக்கிறேன். எப்பகுதியையும் கைநீட்டி எடுத்துவிட முடியும். எல்லாமே என்னிடமிருந்து பிரிந்து பிறிதொன்றாகிவிட்டிருக்கின்றன” என்றான். சுஷமர் “மொழியில் அமைவதெல்லாமே நம்மிடம் இருந்து விலகிவிடுகின்றன. முதுமையென்பது நம் அறிதல்களையும் உறுதல்களையும் சொல்லாக்கி, மீண்டும் மீண்டும் சொல்லி பிறிதொன்றாக்கி, நம்மிடமிருந்து விலக்கிக் கொள்வதே. இளமையில் உறுதல்களின் முன் மாணவனாக இருக்கிறோம். முதிர்கையில்  அறிதல்களின் மாணாக்கனாகிறோம்” என்றார்.

அவரது குடிலின் படிகளை ஏறி மஞ்சத்தை அடைந்தபோது யயாதி மூச்சுத் திணறத் தொடங்கியிருந்தான். “அமருங்கள். நான் நீர் கொண்டு வருகிறேன்” என்றார் சுஷமர். “ஆம், உடன் பல்லுக்கு மென்மையான உணவு எதுவும் இருந்தால் கொண்டு வருக!” என்றான் யயாதி. பின்னர் மெல்ல மஞ்சத்தில் அமர்ந்து தன் மூட்டுகளையும் கால்களையும் அழுத்திப் பற்றியபடி “விந்தைதான். இத்தனை காலம் எனது மூட்டுகளைப்பற்றி நான் எண்ணியதே இல்லை. இன்று ஒவ்வொரு எண்ணமும் மூட்டுகளைப்பற்றிய தன்னுணர்வுடன் உள்ளது” என்றான். “ஓய்ந்து சலித்த இரு புரவிகள் போலிருக்கின்றன. இக்கணம் படுத்து இனி எழ முடியாது என அறிவிக்கும் தன்மை கொண்டிருக்கின்றன.”

“நான் தங்களுக்கு இன்நீரும் உணவும் கொண்டுவருகிறேன், அரசே” என்றபின் சுஷமர் வெளியே சென்றார். யயாதி தன் குழலைத் தொட்டு விரலால் நீவி தலைக்குப்பின் தோல்வாரால் கட்டியபடி திரும்பிப் பார்த்தபோது அவ்வறையின் ஒரு மூலையில் பட்டுச் சால்வையொன்று கிடப்பதை கண்டான். எவரோ அளித்த கொடை. அதனை சுஷமர் தூக்கிவீசியிருந்தார். அதைக் கண்டதுமே சித்தம் உணராது உளம் எழுச்சிகொண்டது.

மஞ்சள்பட்டில் வெள்ளிநூல்களால் நுண்ணிதின் பின்னப்பட்ட அணிமலர்கள். அதை நோக்கிக்கொண்டிருக்கையில் அலையலையென நினைவுகள் வந்து உடலை அதிர வைத்தன. ஒரு தனியறையில் அறையிருளில் படுத்திருக்கையில் சுவரில் சாளரம் வழியாக வந்த இரவின் ஒளியில் கொக்கியில் நெளிந்துகொண்டிருந்த கலிங்கத்துச் சால்வை. அருகிருந்தவள் அவன் முதல் பெண். முதல் காமத்தின் களைப்பு. அருவருப்பும், இனிமையும், இழப்புணர்வும், தனிமையும் கலந்த தத்தளிப்பு.

பொன்னூல் பின்னிய பட்டின் வேலைப்பாட்டை அவன் தனியாக அதுவரைக்கும் நோக்கியதில்லை. எத்தனை வளைவுகள், கரவுகள், குழைவுகள். இத்தனை குழைவென்றால் அவன் நெஞ்சம் எத்தனை நெகிழ்ந்திருக்கவேண்டும்! ஓவியக்கோடுகள் நெளிகின்றன. இசை வளைகிறது. நடனத்தில் உடல் குழைகிறது. நீரும் நெருப்பும் வளைந்தாடுகின்றன. காற்று தொடும் அனைத்தும் அலைவுகொள்கின்றன. நெஞ்சின் நெகிழ்வை தாளாமல் அவன் விம்மினான். இருளில் அவ்வோசை அங்கு உடனிருந்த அறியாத் தெய்வமொன்றின் குரலென ஒலித்தது.

ஏன் அதை படைத்தான்? மலர் அவனுக்கு போதவில்லை. கடல்நுரையும் காற்றலை படிந்த மணல்மென்மையும் நிறைவளிக்கவில்லை. அவை கொண்ட பொருண்மையிலிருந்து அவற்றின் அழகைமட்டும் பிரித்தெடுக்க விழைகிறான். பட்டிலும் பொன்னிலும் சாந்திலும் கல்லிலும் எழும்போது அது அக்குழைவின் எழில் மட்டுமே. மலர் தொட்டு தளிர் தொட்டு நகை செய்யும் கைகளுக்கு தெய்வங்களின் அருளிருக்கிறது. தந்தையின் காலடியை தான் நடிக்கும் மைந்தர் அவர். அணி சூடுவோரை நோக்கித் திருமகளும் அணி செய்பவரை நோக்கி பிரம்மனும் குனிந்து புன்னகை செய்கிறார்கள். காமம் கொண்டவரை நோக்கி புன்னகைக்கின்றது பிரம்மம். ஒன்றிலிருந்து ஒன்றென தான் பெருகுவதை அது உணரும் தருணம் அது.

முதல் பெண்… அவள் யார்? நினைவில் படிந்த மென்மணலை அள்ளி ஒதுக்க ஒதுக்க ஆழம்தான் தெரிந்தது. ஆனால் மிக அருகே இருந்தது அவள் மணம். அதைத் தொட்டு தொடர்ந்து சென்றபோது அவள் முலைகளின் மென்மை. அதற்கப்பால் இருளென மங்கிய வெளியில் அவளது கூச்சம் கலந்த புன்னகை. செவியினூடாக நினைவுக்கு நேரடியாகச் சென்ற மென்சிரிப்புக் குரல். இருளில் பேசும் பெண்கள் பிறிதொருவர். காமம் கிளர்ந்தபின் பேசுவது முற்றிலும் புதிய ஒருவர். உச்சத்தில் விலங்காகுபவர். அக்கணம் அவளில் வந்து கூடி பின் விலகி மீண்டும் மலைகளென முகில்களென காற்றென பெருநதியென ஆகிறது என்றுமுள தெய்வம் ஒன்று.

சுஷமர் உள்ளே வந்ததும் யயாதி “எனக்கு ஓர் ஆடி கிடைக்குமா?” என்றான். சுஷமர் “கொண்டுவருகிறேன்” என்றபின் இன்நீர் கலத்தையும் உணவுத் தாலத்தையும் அருகே தாழ்பீடத்தில் வைத்தார். “ஆடி நோக்குக! ஆனால் நாளையே கிளம்பிச்சென்று உங்கள் முதுமையை பிறிதொருவருக்கு அளியுங்கள்” என்றார். யயாதி குழப்பத்துடன் “ஏன்?” என்றான். “ஆடி நோக்க விழைந்த கணம் உங்கள் காமத்தை கண்டுவிட்டிருக்கிறீர்கள். அது ஒழிந்து உளம் அமையாது நீங்கள் எழவியலாது.”

யயாதி “நான் காமம் கொள்ளவில்லை. வெறுனே எண்ணிப்பார்த்தேன்” என்று சொன்னான். “உங்கள் உடல் காமம் கொள்ளாது. உடலிலிருந்து மறைந்தபின் உள்ளம் கொள்ளும் காமம் மேலும் தெளிவும் கூர்மையும் கொண்டிருக்கும்” என்றார் சுஷமர். விழிதாழ்த்தி “ஆம்” என்று யயாதி சொன்னான். “இளமையான பிறிதொருவன் அங்கிருந்து அனைத்தையும் நடிப்பான். அவனை இங்கிருந்து நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். அது வெற்று ஏக்கம், எஞ்சுவது வெறுமை.” யயாதி “உண்மைதான்” என்றான்.

“முதியவர் உள்ளங்கள் அனைத்திலும் அவர்களின் இளமைத் தோற்றமே திகழ்கிறது. உள்ளுறைபவனுக்கு முதுமை வந்தமையவேண்டும்” என்றார் சுஷமர். யயாதி தனக்கே என மெல்லிய குரலில் “ஆனால் இத்தனை இனிதான ஒன்றை முன்னர் நான் அறிந்ததில்லையென்று தோன்றுகிறது. அழகியது, நிறைவூட்டுவது, ஏனென்றால் புறமென ஒன்றில்லாமையால் மிகத் தூயது. பகிர்தலுக்கிடமில்லாதது என்பதனால் மிகமிகத் தனியானது” என்றான். சுஷமர் சிரித்து “நான் நூல்களில் அறிந்ததே. முதிரா இளமையில் புலனின்பங்களைப்பற்றிய கற்பனையாலும் இளமையில் புலனின்பங்களாலும் முதுமையில் புலனின்பங்களின் நினைவுகளாலும் சூழப்பட்டு மனிதன் மெய்மையின் பாதையிலிருந்து விலக்கப்படுகிறான். தேனே தேனீயின் சிறை” என்றார்.

யயாதி நீள்மூச்சுடன் இன்நீரை கையில் எடுத்தபின் “ஆம், இதை நான் துறந்தாக வேண்டும். எஞ்சியிருக்கும் துளி மிக ஆற்றல் கொண்டது. ஒன்று நூறுமேனியென விளைந்து பெருகுவது” என்றான். சுஷமர் “நீங்கள் ஆடியை நோக்க வேண்டாம் என்றே சொல்வேன்” என்றார். யயாதி “ஏன்?” என்றான். “இன்றொரு நாள் உங்கள் முகம் உங்கள் நினைவில் இல்லாமலிருக்கட்டும். இன்றிரவு உடலிலாது வாழ்ந்திருக்கலாம். நாளை காலை நீங்கள் ஆடி நோக்கலாம். அம்முகத்தை சுமந்தபடி செல்லும்போது உங்களுக்கு பிறிதொரு உலகம் தென்படக்கூடும்” என்றார்.

“உடல் எண்ணங்களை இப்படி அழுத்தும் என்று எண்ணியிருக்கவேயில்லை” என்றான் யயாதி. “இதுவரை நீரையும் அனலையும் இழுக்கும் விண் என்னை இழுத்துக்கொண்டிருந்ததுபோல் உணர்ந்தேன். மண்ணில் கால் பதித்து நிற்கவே உளம் இருத்தி முயல வேண்டியிருந்தது. இன்று விண்ணுடன் பிணைத்த அனைத்துச் சரடுகளும் அறுந்துவிட்டன. மண் என்னை இழுக்கிறது. இங்கு எங்காவது படுத்தால் நீரிலென புதைந்து மண்ணுக்குள் சென்றுவிடுவேன். அங்கு பின்னி நிறைந்திருக்கும் பலகோடி வேர்களால் கவ்வி உண்ணப்பட்டுவிடுவேன்.” சுஷமர் “அதுவும் நன்றே. உப்பென்றாகி இந்த மரங்களனைத்திலும் தளிரென எழுந்து மீண்டும் வானில் திளைக்கலாம்” என்றபின் வெளியே சென்றார்.

அன்றிரவு தன்னால் துயில்கொள்ள முடியாதென்றே யயாதி எண்ணியிருந்தான். படுக்கையில் படுத்து உடலை நீட்டிக்கொண்டு இருட்டையே நோக்கிக்கொண்டிருக்கையில் உள்ளே ஓடும் குருதியலைகள் இருட்டுக்குள் நெளிவதுபோலத் தெரிந்தது. ஊருலாவின்போது ஓர் உழவர் ஒவ்வொரு விதையையும் எத்தனை ஆழத்தில் புதைக்கவேண்டும் என்று சொன்னதை நினைவுகூர்ந்தான். “முட்டையை உடைத்துக்கொண்டு குஞ்சு வெளிவருகிறது. கருப்பையை கிழித்து குழவி எழுகிறது. விதை மண்ணைப் பிளந்து எழவேண்டும். ஒவ்வொரு விதைக்கும் ஒவ்வொரு ஆற்றல். அந்த முதல்முளை எத்தனை மண்ணின் எடையை தாங்கமுடியும் என்பதை பார்க்கவேண்டும்” என்றவர் “எங்கே விழுந்தாலும் முளைப்பது ஆலமரம் மட்டுமே” என்றார்.

மண்ணுக்கும் உயிருக்குமான போர். எழுவதுமுதல் நின்றிருக்கும் ஒவ்வொரு கணமும். மண்ணை நினைத்துக்கொண்டிருந்தது விழித்த பின்னர்தான் தெரிந்தது. எழுந்து வெளியே வந்தபோது அனைத்தும் தெளிவாகியிருந்தது உள்ளத்தில். வெறும் நல்லுறக்கத்தால் தீர்வன என்றால் உளச்சிடுக்குகளுக்கு உண்மையிலேயே என்னதான் பொருள்? அவன் வெளியே வந்தபோது முற்றத்திலிருந்து சுஷமர் மேலேறி வந்தார். “இளவெயில் எழுந்துவிட்டது. நீராடி வருக! ஆவன அனைத்துக்கும் சொல்லியிருக்கிறேன்” என்றார். “தாங்கள் குருநகரி செல்வதற்கு விருஷபர்வன் அனுப்பும் தேர்கள் உச்சிப்பொழுதில் வந்துசேரும்.”

யயாதி நீராடி மாற்றுடை அணிந்து வந்து இளவெயிலில் அமர்ந்துகொண்டான். சுனைநீர் அத்தனை தண்மைகொண்டிருப்பதை முன்னர் உணர்ந்ததில்லை. தண்மையால் அது உலோகம்போல் எடைகொண்டிருந்தது. துவட்டி ஆடை அணிந்தபின்னரும் உடல் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. குளிர் உடலுக்குள் இருந்து எழுந்து வந்துகொண்டிருந்ததுபோல் தோன்றியது. எலும்புகள் உலோகத்தாலானவைபோல தண்மையுடன் இருந்தன. இளவெயில் பட்டபோது தோல் மெல்ல சூடாகி சுருக்கங்கள் விரியத் தொடங்கின. குருதியில் வெம்மை படர்ந்தது. பின் தசைகள் உருகுவதுபோல் நெகிழ்ந்தன. அன்னைப்பறவை குஞ்சை என வெயிலின் சிறகுகள் அவனை சூழ்ந்துகொண்டன. கண்கள் மெல்ல மூட இமைகளுக்குள் குருதிச்செம்மை ஓடியது. உள்ளம் மெல்ல சொக்கி செயலிழந்து சிறுதுயில் ஒன்றில் இளமையில் விளையாடிய காலையொளி பரவிய சோலை ஒன்று மின்னும் இலைகளும் நீரலை வளைவுகளுமாக வந்தது.

விழித்துக்கொண்டபோது கிருதர் அவனை நோக்கி வந்தார். விழி தெளியாமையால் யயாதி அவரை அடையாளம் காண சற்று பிந்தியது. பொதுவான புன்னகையுடன் “வருக!” என்றான். அவர் அருகணைந்து “வணங்குகிறேன், அரசே” என்றபோதுதான் அது கிருதர் என தெரிந்தது. “கிருதரா… என்ன செய்தி?” என்றான். “இரு செய்திகள். பேரரசி அரசு துறந்து இங்கே அருகிலிருக்கும் ஜலசாயை என்னும் சோலையில் தங்க முடிவெடுத்திருக்கிறார். அங்கு அவருக்காக ஒரு குடில் கட்டப்பட்டுள்ளது. தனிமையில் தவமியற்றவிருக்கிறார்.” எவரைப்பற்றியோ என அதை யயாதி கேட்டான். அச்செய்தியுடன் நினைவுகளையும் எண்ணங்களையும் கொண்டுசென்று இணைக்கமுடியவில்லை. அவை வேறெங்கோ அலைந்துகொண்டிருந்தன.

“அரசியின் அணுக்கத்தோழி சாயையை எட்டு நாட்களுக்கு முன்னர் காட்டில் புலிகள் தின்றுவிட்டிருக்கின்றன. அவரைத் தேடியலைந்த ஹிரண்யபுரியின் ஒற்றர்கள் அவர் அணிந்திருந்த நகை ஒன்றை கண்டடைந்தனர். தேடிச்சென்றபோது எலும்புகளும் குழலும் மட்டும் எஞ்சியிருப்பதை அறிந்தனர்.” சில கணங்களுக்குப் பின்னரே அதுவும் அவனுள் பதிந்தது. ஆனால் அதற்குள் மீண்டும் அடைக்கோழிபோல அவன் இமைகள் சரிந்துவந்தன. தாடை தளர்ந்து வாய் திறந்தது. மெல்லிய குறட்டை ஒலி எழக்கேட்டு கிருதர் புன்னகையுடன் திரும்பி காலடி எடுத்துவைத்தார்.

காலடியோசை கேட்டு விழித்துக்கொண்ட யயாதி முன்னர் நிகழ்ந்தவற்றுடன் இணைந்துகொள்ளமுடியாமல் திகைத்து “யார், கிருதரா?” என்றான். அவன் ஆழ்மண்ணில் புதைந்திருக்க எவரோ தலையை மாறி மாறி உதைத்து “முளைத்தெழுக… முளைத்தெழுக” என்று சொல்லிக்கொண்டிருந்த கனவை நினைத்து கசிந்த வாயைத் துடைத்தபடி “என் முதுமையை கொடுத்துவிட முடிவெடுத்துள்ளேன்” என்றான். “தங்கள் மைந்தருக்கு அளிப்பதே முறை. தந்தையின் மூன்றுவகை ஊழுக்கும் மைந்தரே உரிமையும் கடமையும் கொண்டவர்கள்” என்றார் கிருதர்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 85

85. இறுதி நஞ்சு

ஹிரண்யபுரியை அடைய ஒரு நாள் இருக்கையில்தான் யயாதி குருநகரியிலிருந்து கிளம்பி தன்னைத் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதை தேவயானி அறிந்தாள். அவன் பெயர் நீண்ட இடைவேளைக்குப்பின் காதில் விழுந்ததும் ஒரு திடுக்கிடலை உணர்ந்தாள். உடலே நாவென கசப்பை உணர்ந்தவள்போல. உடலே முகமென சுளிப்பு கொண்டவள்போல. ஏழு நாட்களாக சுடரொன்றை அணையாது காப்பதுபோல் அவள் தன் வஞ்சத்தை உள்ளத்தில் பொத்திக்கொண்டு சென்றாள். புரவிமேல் உடலை எளிதாக அமைத்துக்கொண்டு சீரான விரைவுடன் சென்றாள். புரவியின் தாளத்தை உடல் அடைந்த பின்னர் உடல்வலி குறைந்தது. ஆனால் இரவில் படுத்ததுமே துயில்வந்து மூடியது.

நன்கு துயின்றமையால் காலையில் விழிகள் துலங்க உடல் புத்துயிர்கொள்ள எழுந்தாள். சுனைநீராட்டும் குறைந்த உணவும் அவளை விடுவித்துக்கொண்டே இருந்தன. பசு ஒன்று மானாகி பின் கொக்கென்று எழுந்ததுபோல. உடலின் எடை குறையும்தோறும் உள்ளம் விடுதலைகொள்வதன் விந்தை என்ன? உடலசைவுகளை உள்ளம் எங்கோ நடிக்கிறது போலும். உடலே எடைகொள்கிறது. அவள் பின் மேலும் பின் என சென்று துழாவும் எண்ணங்கள் இயல்பாக விலகி தூயவிழிகளுடன் சூழ்ந்திருக்கும் காட்டையும் ஒளிர்ந்து ஊடுசென்ற ஓடைகளையும் சாலைமுன் எழுந்து மருண்ட விழிகளுடன் நோக்கிய மான்கணங்களையும் இருளலையென மலைச்சரிவொன்றில் எழுந்து குறுக்காகக் கடந்துசென்ற காட்டுயானைக் கூட்டத்தையும் நோக்கியபடி சென்றாள். பின்னர் எண்ணிக்கொண்டு தன்னுள் இருந்து வஞ்சத்தை மீட்டெடுத்தாள். துயிலும் குழந்தையை உலுக்கி உலுக்கி விழிக்கச்செய்வதுபோல அதை திகழச்செய்தாள்.

ஹிரண்யபுரி ஒரு நாள் பயணத்தில் இருக்கிறதென்று உணர்ந்தபோது அவள் தன் வஞ்சத்தை மேலும் பெருக்கும் பொருட்டு நடந்த அனைத்தையும் சொல் தொட்டு தீட்டிக்கொண்டாள். நிகழ்வின் காட்சிகளும் உளப்பதிவின் ஓவியங்களும் தன்னுள் சொற்களாகவே அங்கிருப்பதை உணர்ந்தாள். ஒவ்வொரு நிகழ்வையும் நோக்கையும் அசைவையும் சொல்லென மாற்றிக்கொள்ள முடியும், பொருட்களை பணமென ஆக்கிக்கொள்வதுபோல. அந்தப் பணத்தை மீண்டும் பொருளென்றாக்கினால் அது பிறிதொன்று.

அச்சொல்லை நானே தெரிவு செய்ய முடியும் என்பது எத்தனை பெரிய வாய்ப்பு! இழந்ததை பறிகொடுத்தது என்றும் பழிசூடியதை சிறுமைசெய்யப்பட்டது என்றும் சொல்மாற்றம் செய்துகொண்டால் அது அவ்வண்ணமே ஆகிவிடுகிறது. மானுடனுக்கு உளமென்ற ஒன்றை அளித்த தெய்வங்கள் பயந்தது நற்கொடையா தீச்சொல்லா? தனிமையை கைவிடப்படுதல் என்றும் இயலாமையை வெறுமை என்றும் சினத்தை அறச்சீற்றம் என்றும் வஞ்சத்தை நெறியுணர்வு என்றும் மாற்றி அங்கே சேர்த்து வைத்திருக்கிறேன். நான் என நானுணரும் அனைத்தும் சொல் சொல்லென தேர்ந்து நான் அடுக்கிப் பின்னி படைத்தெடுத்தவை.

பதினேழாண்டுகால வாழ்விலிருந்து தன் வஞ்சத்திற்குரிய நிகழ்வுகளை மட்டுமே திரட்டி ஒற்றைப்பெரும்பரப்பென ஆக்கி அதில் தன் பிறிதொரு உருவை கொண்டுசென்று நிறுத்தினாள். அங்கு மீண்டும் வஞ்சம் ஊடென சினம் பாவென பின்னிய வாழ்க்கையொன்றை வாழ்ந்தாள். மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டவளாக புறக்கணிக்கப்பட்டவளாக சிறுமை செய்யப்பட்டவளாக. நச்சு மட்டுமே நெய்யெனக் கரைந்த சிறுகடல். அதைக் கடைந்தெடுத்த ஆலகாலம்.

இறுதிச் சாவடியில் இருந்து அவள் கிளம்பும்போதுதான் குருநகரியிலிருந்து வந்த ஒற்றன் குதிரை வியர்வை மணமெழுப்ப சாலையில் இருந்து புழுதிமூடிய மீசையும் தாடியுமாக முற்றத்திற்குள் நுழைந்தான். அவனை முன்னரே அறிந்திருந்த தேவயானி கூர்ந்து நோக்கியபடி நின்றாள். அவளைக் கண்டதும் புரவியிலிருந்து இறங்கி அருகணைந்து முறைப்படி தலைவணங்கி முகமன் சொன்னபின் “செய்தியுடன் வந்துள்ளேன், பேரரசி” என்றான். அவள் திரும்பிப்பார்க்க குரல் கேட்கா தொலைவுக்கு காவலர்கள் விலகி நின்றனர்.

“குருநகரியிலிருந்து அரசரும் அமைச்சர் பார்க்கவரும் சிறு காவல்படையுடன் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றான். அவள் சொல் என விழியொளி காட்ட “சரபஞ்சரத்தில் நிகழ்ந்தது அனைத்தையும் கிருபர் பறவையோலை வழியாக அரசருக்கு அறிவித்துவிட்டார். செய்தியறிந்ததுமே கிளம்பிவிட்டார்கள். அவர்கள் வரும் செய்தியை வழியிலிருந்த ஒற்றர்கள் எனக்கு பறவையோலை வழியாக அறிவித்தனர்” என்றான். தேவயானி “சிறைப்படுத்திச் செல்ல விழைகிறாரா என்ன?” என்றாள். அவ்வினாவின் பொருளின்மையை உணர்ந்தாலும் உள்நிறைந்த வஞ்சம் அதைக் கேட்டு நிறைவுகொண்டது.

“இல்லை அரசி, சிறிய காவல்படையுடன்தான் வருகிறார். தங்களைச் சந்தித்து மன்றாடும்பொருட்டு, பிழை பொறுத்தல் கோரும்பொருட்டுதான்” என்றான் ஒற்றன். “தாங்கள் இளைய அரசியைக் குறித்த செய்தியை அறிந்ததை பார்க்கவர்தான் அரசரிடம் சென்று சொன்னார். அப்போது தன் தனியறையில் நூலாய்ந்துகொண்டிருந்த அரசர் அஞ்சி உளம் உடைந்து குரல் எழுப்பினார். கைகால்கள் நடுங்க எழுந்து நின்றபின் சுவடியை வீசிவிட்டு ஓடிச்சென்று தன் மஞ்சத்தறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டார். பார்க்கவர் அக்கதவைத் தட்டி நெடுநேரம் அவரை அழைத்துக்கொண்டிருந்தார். பின்னர் அரசர் கதவைத் திறந்தபோது மூக்கு வழிவார மது அருந்தி நிலையழிந்திருந்தார். நாம் காட்டுக்குச் செல்வோம், காட்டில் வாழ்வோம் என திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.”

“பார்க்கவர் உள்ளே நுழைந்து அவர் கையை பற்றிக்கொண்டு சொன்ன சொற்களை அவர் கேட்கவில்லை. பீடத்தில் அமர்ந்து தன் தலையை தானே அறைந்தபடி அழுதுகொண்டிருந்தார். பார்க்கவர் அவரது இரு கைகளையும் பிடித்து தடுத்து கடுஞ்சொல் சொல்லி சொல்நிலைக்கச்செய்து பின்னர் இனிய தாழ்ந்த குரலில் தேற்றினார். அதன் பிறகு இருவரும் அங்கிருந்தே பாய்ந்து வெளிவந்து புரவிகளில் ஏறிக்கொண்டு தங்களைத் தொடர்ந்து வரத்தொடங்கினர்” என்றான் ஒற்றன். “மூன்று குறுக்கு வழிகளினூடாக விரைவில் அவர்கள் அணுகமுடிந்தது. வழியில் இரு ஆறுகளில் படகுகளில் ஏறிக்கொண்டு விரைவுகொண்டனர். இன்னும் ஏழெட்டு நாழிகையில் அவர்கள் இங்கு வந்துவிடக்கூடும்.”

தேவயானி நீள்மூச்சுடன் படியிறங்க “தாங்கள் இங்கு காத்திருப்பது நன்று. அரசரின் சொற்களைக் கேட்டுவிட்டு தாங்கள் முடிவெடுக்கலாம் என்பது அமைச்சரின் சொல்” என்றான் ஒற்றன். அவன் செல்லலாம் என்று இடக்கை காட்டிவிட்டு திரும்பி காவலரிடம் “செல்வோம்” என்றாள் தேவயானி. அவர்கள் புரவியிலேறிக்கொண்டு விரைந்து சாலைகளில் குளம்புகள் தொட்டுப்பறக்க தாவிச்சென்றனர். அந்த இடத்தை விட்டு நீங்கியபோதிருந்தே தன் பின்னால் யயாதி வந்துகொண்டிருப்பதாக ஓர் உணர்வு இருந்துகொண்டிருந்தது அவளுக்கு. விலக விலக அது வலுத்தபடி வந்தது.

இரு தேவதாருமரத்தில் செதுக்கப்பட்ட இரு குலக்குறித்தூண்கள் நின்றிருந்த ஹிரண்யபுரியின் எல்லை வாயிலை அடைந்தபோது அவள் வந்துகொண்டிருக்கும் செய்தியை அறிந்து எல்லைக்காவலர்தலைவனும் பன்னிரு காவலரும் காத்து நின்றிருந்தனர். காவலர் தலைவன் தன் கையிலிருந்த அமுதகலசக் கொடியைச் சுழற்றி மும்முறை தாழ்த்தி வணங்கினான். அவன் அருகே புரவி வந்து நிற்க மூச்சிரைத்தபடி தேவயானி “தந்தை எங்கிருக்கிறார்?” என்றாள். அந்த நேர்வினாவால் அவன் திகைத்து பின் மீண்டு “அவர் ஹிரண்யபுரிக்குத் தெற்கே அமைந்துள்ள காகவனம் எனும் சோலையிலிருக்கிறார். மாணவர்கள் மட்டுமே உடனிருக்கிறார்கள். சென்ற ஏழாண்டுகளாக சொல்லவி நோன்பு கொண்டிருக்கிறார்” என்றான்.

புரவி கடிவாளத்தின் இழுப்புக்கு தலைதிருப்பி கால்தூக்க அவன் “பேரரசி, தாங்கள் அவரை பார்க்க வேண்டுமெனில் முன்னரே செய்தி அனுப்புவது நன்று. அறிவிப்பின்றி எவரையும் அசுரப்பேராசிரியர் பார்ப்பதில்லை” என்றான். தேவயானி அவனை திரும்பி நோக்கியபின் மறுமொழி சொல்லாமலேயே புரவியை தட்டினாள். மாந்தளிர் உடலில் வியர்வை வழிந்து உப்புமணத்துடன் புழுதிசுருட்டி மணிகளாகி உருள, மூச்சில் குருதியின் அனல் வெம்மை எழ, குஞ்சி உலைய தலை குலுக்கி வாயில் தொங்கிய நுரையை உதறித்தெறிக்கவிட்டு புரவி முன்னங்காலால் தரையை மும்முறை தட்டியது. நீரிலிருந்து எழுந்ததுபோல மூச்சுசீறி, காதுகளை முன் கோட்டி, விழிகளை உருட்டி ஒருமுறை கனைத்தபின் தாவி ஹிரண்யபுரியின் எல்லையென அமைந்த பாலத்தை துடிதாளத்துடன் கடந்து அப்பால் சென்றது.

வழிகளனைத்தும் மாறிவிட்டிருந்தபோதிலும்கூட தன் உள்ளத்தில் அவை மிகத் தெளிவான அடையாளத்துடன் எழுவதை அவள் உணர்ந்தாள். அனைத்தும் மாறுகையிலும் மாறாமல் இருக்கும் ஒன்றை ஆழம் அறிந்திருக்கிறது. சுக்ரரின் குருநிலை அணுகுந்தோறும் அவள் புரவி விரைவுகொண்டது. அதன் தாளம் சூழ்ந்திருந்த காட்டுக்குள் பசுமையின் துடிப்பென ஒலித்தது. சிற்றோடை ஒன்றின் கரையில் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து அதை நிறுத்தினாள். வந்தடைந்துவிட்ட உணர்வு அவள் உள்ளத்தில் எழுந்ததும் அதுவரை செலுத்தி வந்த விசை முற்றிலும் தீர்ந்துவிட்டிருந்தது.

புரவியிலிருந்து இறங்கி எருமைத்தோல் காலணிகளை கழற்றி வீசிவிட்டு வெற்றுக்கால்களுடன் நடந்து சிற்றோடைக்குள் இறங்கி நீர் தழுவிச்சென்ற கரிய பாறையொன்றில் அமர்ந்தாள். கால்களை ஓடும் நீருக்குள் விட்டுக்கொண்டு அமர்ந்திருந்தபோது உடலெங்கும் எரிந்தெழுந்த வியர்வை குளிர்ந்து தோல் சிலிர்க்கத் தொடங்கியது. குளிர்ந்த தெளிநீரை அள்ளி முகத்திலும் உடலிலும் விட்டுக்கொண்டாள். உடல் குளிரக் குளிர உள்ளே கிழிந்து பறந்து துடித்துக்கொண்டிருந்த எண்ணங்களும் மெல்ல நனைந்து படியத்தொடங்கின. கண்களை மூடிக்கொண்டு தன்னைச் சூழ்ந்திருந்த நீரோசையை மட்டும் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள். காட்டின் காற்றோசை அதனுடன் இணைந்துகொண்டது.

எழுந்து சென்று சுக்ரரை பார்க்கவேண்டுமென்று ஒரு சிறு உளப்பகுதி அவளை அழைத்தது. முரண்டு பிடிக்கும் யானையை செவி பற்றி இழுப்பதுபோல். அவள் தன்னிலை அங்கேயே நின்றிருக்க விழைந்தது. வந்தது அதற்காகத்தான் என்பதுபோல. சென்று செய்ய வேண்டியது என்னவென்று அறியாதது போல. தந்தையிடம் சொல்ல தன்னில் சொற்கோவை ஏதும் இல்லையென்பதால்தான் அந்தத் தயக்கம் என்று உணர்ந்தாள். ஐந்து சொற்றொடர்களை உருவாக்கிக் கொள்ள முடிந்தால் அங்கிருந்து கிளம்ப முடியும். நிகழ்ந்த அனைத்தையும் அவ்வைந்து சொற்றொடர்களில் சொல்ல வேண்டும். அதற்குள் உணர்வுகள் கிளர்ந்து அனைத்தும் கட்டற்று எழுந்துவிடும்.

எண்ணி எண்ணி நோக்கினும் சொல்லென ஆகாமல் விரிந்து கிடந்தது அந்தப் பதினேழாண்டுப் பெருவெளி. வழிநெடுக சொல்லெடுத்துக் கோத்து அவள் தீட்டிக்கொண்டிருந்த அனைத்தும் பிறிதொரு வெளியாக அப்பால் பரந்து கிடந்தன. ஒன்றையொன்று அறியாதவை. இரண்டும் அவளுடன் தொடர்பற்றவை என்று தோன்றியது. பலமுறை அவள் அங்கிருந்து உள்ளத்தால் எழுந்தாள். உடல் அங்கேயே அமர்ந்திருந்தது. நெடுநேரமாயிற்றென்று தோன்றியது. நீரருந்தி பிடரி சிலிர்க்க காற்றில் நின்று உடல் ஆற்றிக்கொண்ட அவள் புரவி அவள் எழாது அமர்ந்திருப்பதைக் கண்டபின் இருமுறை மெல்ல கனைத்து தலையை உலுக்கி காதுகளை அடித்துக்கொண்டபின் சென்று அப்பால் புல் மேயத்தொடங்கியது. தங்கள் புரவிகளை நீரூட்டி மேயவிட்டபின் வெவ்வேறு மரநிழல்களிலாக அவளது காவல்வீரர்களும் படுத்துக்கிடந்தனர். புரவிகளின் தும்மலோசையும் செருமலோசையும் கேட்டுக்கொண்டிருந்தன. சிறு குருவிகள் வந்து அவற்றின்மேல் அமர்ந்து விளையாடத்தொடங்கின.

தொலைவில் வண்ண அசைவுகளாக அவள் யயாதியும் பார்க்கவனும் பிறரும் வருவதைக் கண்டாள். அவள் தலைக்குப் பின்னால் புரவிக்குளம்படி ஓசை ஒலித்துக்கொண்டிருக்க சரடில் சிலந்தி பறந்து அணுகுவதுபோல் அவர்கள் ஓசையின்றி வந்தனர். வண்ணங்கள் வடிவக்கூர் கொண்டன. முகமென்றாயின. விழிகள் என்று தெளிந்தன. யயாதி தன்னைப் பார்த்துவிட்டதை அவள் உணர்ந்தாள். அவன் புரவி விரைவழிந்தது. புரவியின் காதுகளின் மயிர்கூடத் தெரியுமளவுக்கு அணுகி வந்தனர். பிற காவலர்கள் நின்றுவிட பார்க்கவனும் அவனும் மட்டும் புரவிகளின் மேலிருந்து இறங்கி நடந்தனர்.

நீரைப் பார்த்ததும் யயாதியின் புரவி தலையைச் சிலுப்பி நீள்மூச்சு விட்டது. அவன் கடிவாளத்தை விட்டதும் ஆணை பெறாமலேயே புரவி நீரைநோக்கிச் சென்று குனிந்து குடிக்கத் தொடங்கியது. நீர் உள்ளே சென்றதும் உடல் சிலிர்த்து வால்சுழற்றி பசுஞ்சிறுநீர் கழித்தது. அச்சிறுநீரின் மணத்தை உணர்ந்து மேய்ந்து கொண்டிருந்த புரவிகள் தலைதூக்கி செவிகோட்டி மூக்கை நீட்டிச் சுழித்து விரித்து கனைத்தன. யயாதி தன் தோல்காலணிகளுடன் சில அடிகள் எடுத்து வைத்தபின் குனிந்து அவற்றைக் கழற்றிவிட்டு அவளருகே வந்தான். ஓடைக்கப்பால் மணற்சரிவில் நின்று அவளை நோக்கினான்.

அவள் அவன் விழிகளையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கைகூப்பி “நான் பிறிதொன்றும் சொல்வதற்கு இல்லாதவன். என்னை வெறுமொரு உடல் மட்டுமே என்று இப்போது உணர்கிறேன். குருதி விந்து சீழ் மலம் இவையே நான். அரசி, நான் விழிநீரும்கூட. உடலின் விசைகளால் இயக்கப்பட்டவன். நிகழ்ந்தவை அனைத்திற்கும் என் விழைவன்றி பிறிதெதையும் விளக்கமென சொல்லமாட்டேன்” என்றான். அவள் கண்களைத் தாழ்த்தி நீரோடையை பார்த்துக்கொண்டிருந்தாள். “அறியா இளமைந்தனாக பிழைசெய்து மீண்டு அன்னையின் முன் வந்ததுபோல் இங்கு நின்றிருக்கிறேன்” என்று யயாதி சொன்னான்.

அவள் தன்னுள் எங்கெங்கோ தத்தளித்துக்கொண்டிருந்தாள். ஓடையில் மிதந்து வந்த சருகொன்று காலைத் தொட்டதும் திடுக்கிட்டு எங்கிருக்கிறோம் என வியப்பவள்போல திகைத்து பின்னர் நிமிர்ந்து அவனை நோக்கியபோது அவளுக்குள் சொல் முளைத்திருந்தது. “இது உன் மீதான வஞ்சம் மட்டும் அல்ல” என்றாள். பற்களைக் கடித்தபடி “ஆணென்பதாலேயே நீ பழி சுமந்தாகவேண்டும்” என்றபின் எழுந்து திரும்பி நடந்தாள்.

tigerகிருதர்தான் தேவயானியை முதலில் பார்த்தார். அவரால் அவளை அடையாளம் காண முடியவில்லை. பதினேழாண்டுகளில் ஒன்பது முறை அவர் குருநகரியின் அரண்மனைக்கு வந்து சக்ரவர்த்தினியாக அவைவீற்றிருந்த தேவயானியை பார்த்திருந்தார். அத்தோற்றம் அவர் உள்ளத்தில் பதிந்து இளமை முதல் அவர் அணிந்த மற்ற தோற்றங்கள் அனைத்தையும் முற்றாக அழித்துவிட்டிருந்தது. குடிலுக்கு முன் சிறு கோடரியால் வேள்விக்கென சமதையை வெட்டிக்கொண்டிருந்தவர் விழி சுருக்கி மண்சாலையில் நடந்து வரும் பெண்ணை பார்த்தார். எளிய வெண்ணிற ஆடை அணிந்து நீண்ட குழல் காற்றில் அலையடிக்க வெற்றுக்கால்களுடன் வந்தவள் நிமிர்ந்த நடையும் சீராகச் சுழலும் கைகளும் கொண்டிருந்தாள். அவர் அறிந்த வேறெவரையோ அவள் நினைவுறுத்தினாள். பின் உள்ளம் பற்றிக்கொண்டு வியப்புக்குரலுடன் அவர் எழுந்தார்.

தேவயானி குடில் வாயிலை அடைந்ததும் அவர் படிகளில் இறங்கி அவளை நோக்கி கைவிரித்தபடி ஓடி “வருக! வருக தேவி! என்ன இது? ஏன் எளிய தோற்றம்?” என்றார். “தந்தையைப் பார்ப்பதற்காக” என்று அவள் சுருக்கமாக சொன்னாள். “ஆம். தாங்கள் அரச உடையில் வராமல் இருந்தது நன்றே” என்றார் கிருதர். அவளுடன் நடந்தபடி “ஏன் என்று தெரியவில்லை. ஒருகணம் தொலைவில் உங்கள் அன்னை ஜெயந்தி என்று எண்ணிவிட்டேன். அதே நடை, அதே நோக்கு. நடுவயதில் பெண்டிர் தங்கள் அன்னையைப்போல் ஆவது எண்ணியிராத வியப்பளிப்பது” என்றபின் படலை விலக்கி உள்ளே சென்று நின்று புன்னகையுடன் “வருக!” என்றார்.

தொலைவில் சுஷமரும் சத்வரும் அவளைப் பார்த்து சிரித்து உவகைக் குரல் எழுப்பியபடி விரைந்து வந்தனர். சத்வர் அவளருகே வந்து “அரச அணிகளால் உங்கள் அழகும் நிமிர்வும் உருவாகவில்லை என்பது இப்போது தெரிந்தது. கலையமர் செல்வி வெண்கலை உடுத்து வந்ததுபோல் இருக்கிறீர்கள், தேவி” என்றார். தேவயானி புன்னகைத்து “நான் தந்தையை பார்க்கவேண்டும்” என்றாள். “அவர் சொல்லெழா நோன்பு கொண்டிருக்கிறார். நெடுநாட்களாகிவிட்டமையால் இப்போது விழிகளிலும் சொற்களின்றி ஆகிவிட்டிருக்கிறது. உங்களை அவர் சந்திக்க விழைகிறாரா என்று தெரியவில்லை” என்றார் சுஷமர்.

கிருதர் “நான் உள்ளே சென்று நீங்கள் வந்திருப்பதை சொல்கிறேன்” என திரும்ப தேவயானி அவர் தோளைத் தொட்டு “வேண்டியதில்லை. நானே சென்று அவரை பார்க்கிறேன். தீச்சொல்லிட்டு என்னை அழிப்பார் என்றால் அவ்வாறே ஆகட்டும்” என்றபின் அவர்களைக் கடந்து பின் மையக்குடில் நோக்கி சென்றாள். நெடுநாட்களுக்குப்பின் தங்கள் தவக்குடிலுக்கு வந்திருந்தபோதிலும்கூட நலம் உசாவவோ முகமன்கள் உரைக்கவோ அவள் முற்படவில்லை என்பதைக் கொண்டே அவள் நிலையழிந்திருக்கிறாள் என்பதை கிருதர் உய்த்துணர்ந்து கொண்டார்.

அவள் உள்ளே சென்றதும் “என்ன ஆயிற்று?” என்றார் சத்வர். “அவள் பாரதவர்ஷத்தின் பேரரசி. ஒவ்வொரு புயலும் விசை பெருகி மையம்கொண்டு தேடி வரும் மலைமுடி போலிருக்கிறாள்” என்றார் கிருதர். “போர்க்களத்தில் யானைமேல் அமர்ந்திருப்பது போன்றது அரசனின் இடம் என்றொரு கவிச்சொல் உண்டு” என்றார் சுஷமர். “இது அரசுமுறைப் பயணமல்ல. தனிப்பட்ட முறையில் இடரோ துயரோ கொண்டிருக்கிறார்கள்” என்றார் சத்வர். “பார்ப்போம்” என்று கிருதர் குனிந்து தன் கைக்கோடரியை எடுத்துக்கொண்டார்.

மையக்குடிலில் வாயிலில் நின்றிருந்த இளம்மாணவன் தேவயானியைக் கண்டதுமே அடையாளம் கண்டுகொண்டு தலைவணங்கி விலகினான். அவள் குடிலின் கதவென அமைக்கப்பட்டிருந்த மூங்கில் படலைத் திறந்து உள்ளே சென்றாள். தரையில் விரிக்கப்பட்ட புலித்தோல் மீது மலரமர்வில் கால் மடித்து கைகளை மார்பில் கட்டியபடி விழிமூடி அசைவிலாது அமர்ந்திருந்த சுக்ரரைக் கண்டு ஒருகணம் நின்றாள். அவர் இறந்து சிலையாக்கப்பட்டு அங்கிருக்கிறார் என்னும் எண்ணமே முதலில் எழுந்தது. “தந்தையே…” என்றாள். அவர் விழிகள் அதிர்ந்து இமைகள் மேலெழுந்தன. கண்கள் குருதிச் செம்மை கொண்டிருப்பதை அவள் கண்டாள். ஒருகணம் உளம் நடுங்கி பின்னடைந்தாள்.

திரும்பி வந்த உள்ளம் உந்தி முன்செலுத்த காலடி எடுத்து வைத்து அவர் அருகே சென்று முழந்தாளிட்டு அவரை நெற்றிநிலம்பட வணங்கி “தங்களைப் பார்ப்பதற்கென்று வந்திருக்கிறேன், தந்தையே” என்றாள். சுக்ரர் செவ்விழிகளால் அவளை நோக்கியபடி அசைவிலாது அமர்ந்திருந்தார். கொடுஞ்சின மூதாதைத் தெய்வமொன்றின் முன் நின்றிருப்பதாக அவள் உணர்ந்தாள். “நான் உங்களிடம் துயர் ஒன்றை முறையிடும்பொருட்டு வந்துள்ளேன், தந்தையே” என்றாள் தேவயானி.

அவள் மேலும் சொல்ல வாயெடுப்பதற்குள் அவர் கைகாட்டி “போதும்” என்றார். நெடுங்காலத்திற்குப் பிறகு நாவிலெழுந்தமையால் அவரது சொல் வெறும் மூச்சொலியாக இருந்தது. “நான் என்ன நிகழ்ந்ததென்று சொல்லவேண்டியுள்ளது. எவரிடமேனும் சொல்லும் பொருட்டே இத்தனை தொலைவு வந்தேன்” என்றாள். “அவன் சர்மிஷ்டையிடம் மைந்தரை ஈன்றுளான், அதுதான் இல்லையா?” என்றார் சுக்ரர். “ஆம், தங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் தேவயானி. சுக்ரர் “விருஷபர்வனின் ஒற்றர் அதை அறியாமல் இருப்பரா? அவனறிந்தால் என்னிடம் உரைக்காமலிருப்பானா? அம்மைந்தர் அரசகுடி பிறந்தோர். மானுடரின் வஞ்சங்களும் துயர்களும் குடிப்பிறப்பையும் ஊழையும் மாற்ற முடியாது” என்றார்.

நீள்மூச்சுடன் மெல்ல கால்மடித்து அமர்ந்துகொண்டு “ஆம் தந்தையே, அவர்களை முறையான அரசகுடியினராக அறிவித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்” என்று தேவயானி சொன்னாள். “ஆனால் என் வஞ்சம் அரசன் மீது பெருகிக்கொண்டே இருக்கிறது. என் நெஞ்சு ஒழியாது நான் அமைதி கொள்ள இயலாது. இச்செயலின் பொருட்டு அவன் துயர்கொள்ள வேண்டும். இதை எண்ணி நொந்து அழிய வேண்டும்.” இத்தனை எளிதாகவா சொல்வது என்று ஓர் உள்ளம் வியந்தது. பிறிதொரு சொல் இல்லை தன்னுள் என உணர்ந்துகொண்டது.

சுக்ரர் “அவ்வஞ்சம் வெளிப்பட்டபின் உன் உளம் ஒழியுமென்று உறுதியாக எண்ணுகிறாயா?” என்றார். “ஆம், ஒழியும். ஒருவேளை ஒழியவில்லையென்றால்கூட நான் அதை வெல்லும்பொருட்டு தவம் மேற்கொள்ள முடியும். ஆனால் இவ்வஞ்சத்தை என்னுள் கரந்தபடி என்னால் வாழமுடியாது” என்றாள். சுக்ரர் “அவனை நீ ஏன் பொறுத்தருளலாகாது? எப்படி மணிமுடியைத் துறந்து மீண்டாயோ அதைப்போல அவனையும் துறந்து காடேகினால் நீ விடுதலை கொள்வாயல்லவா?” என்றார்.

“இனி குருநகரிக்குச் சென்று மணிமுடி சூடி அமர்ந்திருக்கும் எண்ணமெனக்கில்லை. எண்ணினாலும் அது இயல்வதல்ல. ஆனால் ஒருமுறை தீண்டாமல் நான் படம் சுருக்க இயலாது” என்றாள் தேவயானி. “அன்று என்னைத் துறந்து சென்ற கசன்மேல் தீச்சொல் இடுகையில் என்னுள் உறைந்த அன்னையொருத்தி எழுந்து வந்து சொற்களை பற்றிக்கொண்டாள். அன்றே நான் அவனை அழித்திருக்க வேண்டும். அதைச் செய்திருந்தால் இன்று இத்தனை நஞ்சு கொண்டிருக்கமாட்டேன்.”

சுக்ரர் புன்னகைத்து “இதற்கு விளக்கமென எதையும் எவரும் சொல்லிவிடமுடியாது. இருந்தால்களும் ஆனால்களும் கொண்டதல்ல வாழ்க்கை. அது அவ்வண்ணமே அமைய வேண்டுமென்று ஊழால் வகுக்கப்பட்டது. ஊழுக்கு மானுடன் ஆற்றும் எளிய எதிர்வினைகளே இருந்தால்களும் ஆனால்களும். அவை வெற்றுச் சொற்கள். பொருளற்ற பொருமல்கள், ஏக்கங்கள்…” என்றார்.

தேவயானி பொறுமையிழந்து “நான் சொல்லாட விரும்பவில்லை. இதோ, அவன் வந்துகொண்டிருக்கிறான். இத்தருணத்தில் நம் குடில் வாயிலை அவன் அடைந்திருப்பான் என்று எண்ணுகின்றேன். உங்கள் தவச்சீற்றத்தால் அவனை பொசுக்குங்கள், தந்தையே! ஆயிரமாண்டு அவன் இருள் நரகில் திளைக்கட்டும்” என்றாள்.

சுக்ரரின் உதடுகள் ஏளனத்துடன் வளைந்தன. “நீ காவியங்களையும் தொல்கதைகளையும் முற்றும் மறந்துவிட்டாய் போலும். தீச்சொற்களின் வரலாறை அறிவாயா? முற்றழிக்கும் தீச்சொல்லிட தெய்வங்களுக்கும் உரிமையில்லை. புதுப்பிறவி கொண்டெழும் வாய்ப்பையே தீச்சொல்லெனும் பேரில் அளிக்கவேண்டும்” என்றார். “அதிலும் அன்னையரும் ஆசிரியர்களும் அந்தணரும் முனிவர்களும் தேவர்களும் தெய்வங்களும் அளிக்கும் தீச்சொற்கள் காலம் கனிகையில் நற்கொடைகளாகவும் அமைந்தாகவேண்டும்.”

தேவயானி பெருஞ்சினம் எழ தன் கையை ஓங்கி தரையில் அறைந்தபடி “அவ்வண்ணமெனில் நான் தீச்சொல்லிடுகிறேன். அவனை இக்கணமே மீளா இருளுக்கு அனுப்புகிறேன்” என்றாள். சுக்ரர் “தீச்சொல் என்பது என்ன? அம்பை தொடுப்பவன் நிகர் விசையுடன் கையை தன்னை நோக்கி இழுக்கிறான். துலாவின் ஒரு தட்டில் தீச்சொல்லை வைக்க மறுதட்டில் நீ வைப்பதென்ன என்பதுதான் முதன்மையான வினா. அன்னை தன் கடனை, ஆசிரியன் தன் கொடையை, அந்தணன் தன் நோன்பை, முனிவர் தன் தவத்தை, தேவர்கள் தங்கள் மேன்மையை, தெய்வங்கள் ஊழை அங்கே வைக்கலாம். நீ உன் வஞ்சத்தையே வைக்க முடியும். மகளே, நிகராக உன் துலா தட்டும் தாழும். அவனுக்கு நீ அளிப்பதை நீயும் அடைந்தாலொழிய உன்னால் தீச்சொல்லிட இயலாது” என்றார்.

தேவயானி தொண்டையில் குருதிக்குழாய்கள் புடைக்க நரம்புகள் நீலமென முடிச்சுவிழ விழிகளில் நீர்மையொளிர “நான் அழிகிறேன். நானும் இருளில் உழல்கிறேன். இனி இந்த இரு கால் மாக்களின் இழிவை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. தந்தையே, இக்கணம் நான் எழுந்து கசந்து நோக்குவது என் கையைப்பற்றிய இக்கீழ்மகனை அல்ல. ஆணெனத் தருக்கியபடி வெற்றுக்காமம் மட்டுமே உளமென்றாகி அலையும் மானுடரில் பாதியை. அனைவருக்குமான ஒரு தீச்சொல்லை இட்டு அமையாமல் இந்த அகஇருளில் இருந்து எழ என்னால் இயலாது” என்றாள்.

“நீ கசனுக்கு அளித்த தீச்சொல்லின் மறுவிசையாலேயே இப்பெருந்துயரை இன்று அடைந்தாய். இத்தருணத்திலாவது அதை நீ உணர்ந்தாக வேண்டும். இன்றளிக்கும் தீச்சொல்லின் விசையை எங்கு சென்று முடிப்பாய்? ஒரு முடிச்சு பிறிதொரு முடிச்சாவதை உணரவில்லை என்றால் வாழ்க்கையில் நீ எதை கற்றாய்? அறுத்து விடுபடுவதன்றி அவிழ்த்து மீள்வது வாழ்வில் எவருக்கும் இயல்வதல்ல” என்றார் சுக்ரர். “நன்று, என்னை நீங்களும் கைவிடுகிறீர்கள். இச்சொல்லுக்கு அது ஒன்றே பொருள். இறுதிப் புகலிடமென நான் வந்த தந்தையின் நாவிலிருந்து உன் துயர் உன்னுடையது மட்டுமே என்று கேட்கையில் என் ஊழுறவு வலையின் இறுதிக் கண்ணியும் அறுபடுகிறது போலும்” என்றபடி தேவயானி திரும்பினாள்.

வாயிலில் தோன்றிய கிருதர் தலைவணங்கி “யயாதி” என்றார். “அவனை வரச்சொல்” என்றார் சுக்ரர். “இங்கு அவன் வரவேண்டியதில்லை. தங்கள் முன் வந்து விழிநீர் சிந்தி இரந்து கருணை பெற்று திரும்பவிருக்கிறான். ஆணிலி, கோழை, சிறுமதியாளன்” என்று தேவயானி கூவினாள். “பிழை இயற்றாத மானுடர் எவர்? மாமுனிவரும் காமத்தால் நடை தவறியவர்களே” என்றார் சுக்ரர்.

தேவயானி “கரந்து ஒன்று செய்பவன் தான் செய்யும் அனைத்தையும் கரந்தே செய்யும் சிற்றுயிராகிறான். தெய்வங்கள் பறவைகளை விண்ணிலும் விலங்குகளை மண்ணிலும் உலவும்படி செய்தன. அரவுகளையும் முயல்களையும் எலிகளையுமே ஆழங்களுக்குள் வாழச்செய்தன. பறக்க எண்ணி விண்நோக்குவதே விலங்கின் மீட்பு. மண்ணுக்குள் புக விழைவது கீழ்நெறி. அவன் கீழ்மகனாக தன்னை ஆக்கிக்கொண்டவன். தந்தையே, மறுஎண்ணமின்றி அவனை தீச்சொல்லிட்டு எரித்தழித்தால் மட்டுமே நீங்கள் என் தந்தை. இல்லையேல் நீங்கள் எனக்களித்த ஒவ்வொரு சொல்லையும் மறப்பேன். என் உள்ளத்திலிருந்து இறுதி ஆண்மகனென எஞ்சியிருக்கும் உங்களையும் கழற்றி வீசுவேன்” என்றாள்.

“அணிந்தவை அனைத்தையும் கழற்றி வீசினால் மட்டுமே துறவு நிகழும். துறவு இன்றி கல்வி இல்லை. எத்தனை துறக்கிறோமோ அத்தனை கற்கிறோம். முழு துறவு முழுமை அறிவிற்கான வழி” என்றார் சுக்ரர்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 84

84. பிறிதொரு சோலை

தேவயானி தன்னை உணர்ந்தபோது ஒரு கணம் சோலையில் இருந்தாள். ஹிரண்யபுரியா என வியந்து இடமுணர்ந்து எழுந்தமர்ந்தாள். பறவையொலிகள் மாறுபட்டிருந்ததை கேட்டாள். உடல் மிக களைத்திருந்தது. வாய் உலர்ந்து கண்கள் எரிந்தன. சாளரத்தினூடாகத் தெரிந்த வானம் கரியதகடு போலிருந்தது. சாளரத்திரையை விலக்கி தொலைவை நோக்கியபோது விடிவெள்ளியை கண்டாள். எண்ணியிராத இனிய சொல் போன்று அது அவளை உளம்மலரச் செய்தது. விழியசைக்காது அதையே நோக்கிக்கொண்டிருந்தாள். ஒரு முத்து. ஓர் ஊசித் துளை. ஒரு விழி. ஒரு யாழ் நரம்புத்துடிப்பு. ஒற்றைச்சிறுமணியோசை.

மொத்தப் புவியையும் ஒரு பெருங்கலமென உந்திக்கவிழ்த்து அதில் நிறைந்திருக்கும் இருளனைத்தையும் உருகி ஓடசெய்கிறது. இருள் கரைவதை அவள் நோக்கிக்கொண்டிருந்தாள். முதற்பறவை ஒலியை தொடர்ந்தெழும் ஒலிக்கலவை. முதல் செந்தீற்றல். பெருஞ்சோர்வுக்குப் பின் விடிபவை புத்தம்புதிய காலைகள். ஒரு சிறு சாம்பல்நிறக் குருவி சிறகடித்து வந்து சாளரத்தினூடாக பாய்ந்து உள்ளே நிறைந்த விடிகுளிர்காற்றில் தாவித் தாவி சுழன்று மீண்டும் சாளரத்தை அடைந்தது. சட்டத்தில் அமர்ந்து இருமுறை சிறகடுக்கியபின் மணிக்கண்களை உருட்டி சிறு அலகைத் திறந்து ரிப் ரிப் என்றது. துடித்தெழுந்து காற்றில் ஏறி அரையிருளைக் கிழித்து அப்பால் சென்று மறைந்தது.

காலடி ஓசை கேட்டு கிருபர் வருவதை அவள் உணர்ந்தாள். வாயிலுக்கு அப்பால் நின்று அவர் வாழ்த்துரைக்க உள்ளே வரும்படி கையசைவால் ஆணையிட்டாள். கிருபர் உள்ளே வந்து தலைவணங்கி “அனைத்தும் சித்தமாகிவிட்டன, பேரரசி. முதல்ஒளி எழுகையில் குடித்தெய்வங்களுக்கு பூசனைகள் தொடங்குகின்றன. அதன் பின்னர் படையலும் கூட்டுணவும். தொடந்து இளையோரின் போர்விளையாடல்கள். உச்சிப்பொழுதில் உணவுக்கும் ஓய்வுக்கும் பின்னர் அந்தியில் பெண்களும் இளையோரும் ஆடல்நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்கள்” என்றார். “நான் சித்தமாக வேண்டும். சேடியரை அனுப்பச் சொல்லுங்கள்” என்றாள். கிருபர் எந்த மாற்றமும் தெரியா விழிகளுடன் “நேற்று அந்தியிலேயே சாயாதேவி தனிப்புரவியில் கிளம்பிச் சென்றார். தங்கள் ஆணை என்று தெரிவிக்கப்பட்டது” என்றார். அவள் ஆம் என்று தலையசைத்தாள். மீண்டும் ஒருமுறை தலைவணங்கி அவர் வெளியே சென்றார்.

எழ எண்ணம் இருந்தும் உடல் அசையாமலிருந்தது. வெளியே வானம் ஒளிக்கசிவு கொண்டு வருவதை எண்ணமில்லாது ஒழிந்த உள்ளத்துடன் நோக்கிக்கொண்டிருந்தாள். கல்வளையல்களின் ஒலி கேட்டது. தொல்குடியைச் சேர்ந்த இரு பெண்கள் உள்ளே வந்து கதவருகே நின்றனர். ஒருத்தி கதவை அசைத்து ஒலியெழுப்பினாள். புன்னகையுடன் தேவயானி எழுந்தபோது ஒருத்தி “நீங்கள் எங்களைவிட மிக உயரமாக இருக்கிறீர்கள், பேரரசி” என்றாள். அவர்களுக்கு முறைமைச்சொல் உரைக்கவும் வணங்கவும் தெரிந்திருக்கவில்லை.

தேவயானி புன்னகையுடன் ஒருத்தியின் அருகே சென்று தோளைத்தொட்டு “ஆம், ஆனால் என்னளவு உயரமிருந்தால் உங்களால் காடுகளுக்குள் எளிதில் புகுந்து செல்ல முடியாதல்லவா?” என்றாள். “ஆம்” என்றாள் அவள். “ஆகவே உங்கள் உடல் உங்களுக்குப் பொருத்தமானதே. இருவருமே இளமான்களைப்போல் அழகிகள்” என்றாள். இருவரும் நாணி உடல் வளைத்து பின் கைகளால் வாய்பொத்தி ஓசையிட்டு சிரித்தனர். “நான் நீராடவேண்டும். எனது ஆடைகளை எடுத்துக்கொண்டு வருக!” என்றாள். முதல்பெண் “இதோ, எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்றபின் குழம்பி “எந்த ஆடை என்று எங்களுக்குத் தெரியவில்லை, பேரரசி. தாங்களே எடுத்துத் தந்தால் நாங்கள் கொண்டுவருகிறோம்” என்றாள்.

சிரித்தபடி தேவயானி சென்று பேழையைத் திறந்து தன்னுடைய அணியாடைகளையும் உள்ளாடைகளையும் எடுத்து வைத்தாள். அவர்கள் அதை மூங்கில் கூடைகளில் அடுக்கி எடுத்தபடி அவளுடன் வந்தனர். முற்றத்தைக் கடந்து சுனைக்குச் செல்லும்போது இருவரும் அவளுடன் இடைவெளி அழிந்து அணுகிவிட்டிருந்தனர். “பேரரசி என்று சொன்னபோது நாங்கள் தெய்வங்களைப்போல என்று கற்பனை செய்துகொண்டிருந்தோம். ஏனென்றால் கதைகளில்தானே தெய்வங்களும் பேரரசிகளும் வாழ்கிறார்கள். ஆனால் நேரில் பார்த்தபோதுதான் நீங்கள் மானுடர் என்று தெரிந்து கொண்டோம்” என்றாள் ஒருத்தி. “ஆனால் தேரில் வருகையில் உண்மையில் தெய்வம் போன்றே தெரிந்தது. நீங்கள் பேசி சிரித்தபோதுதான் மானுடப்பெண் என்று தெளிந்தது” என்றாள் இன்னொருத்தி.

“இங்கெல்லாம் பெண்கள் இவ்வாறு நிமிர்ந்து அமர்வதற்கு ஆண்கள் ஒப்புவதில்லை. நாங்கள் மீறினால் எங்கள் ஆண்கள் அடிப்பார்கள்” என்றாள் முதல் மலைப்பெண். “ஆண்கள் ஒருபோதும் நம்மை அடிக்க ஒப்புக்கொள்ளக்கூடாது” என்றாள் தேவயானி. “ஏன்?” என்று அவள் கேட்டாள். “உடல்மேல் அவர்கள் செல்வாக்கு செலுத்தினார்கள் என்றால் உள்ளத்திலும் எண்ணத்திலும் அவ்வாறே ஆகிவிடும். பிறகு அவர்களின் அடிகளை நாமே கேட்டு பெற்றுக்கொள்வோம்” என்றாள் தேவயானி. “ஆம், உண்மைதான். ஆனால் அவர்கள் அடிக்கும்போது என்ன செய்வது?” என்றாள் இரண்டாமவள். “கண்ணில் மண்ணை வாரி வீசிவிட்டு அப்படியே ஓடிவிடவேண்டியதுதான்” என்றாள் முதலாமவள்.

இருவரும் அந்தச் சிறு நகைச்சுவைக்கு உடல்குலுங்க சிரித்தனர். சிரிப்பை நிறுத்தி கண்களைத் துடைத்தபின் மீண்டும் வெடித்துச் சிரித்தனர். முகம் சிவந்து உடலே அதிர சிரித்து பின் மூச்சிரைக்க ஓய்ந்தனர். தேவயானி தன் முகம் மலர்ந்திருப்பதை உணர்ந்தாள். ஒரு சிரிப்பில் மிக எளிதாக ஒதுக்கித் தள்ளக்கூடியவைதானா இவையனைத்தும்? முகில்களைத்தான் மலையென எண்ணிக்கொண்டிருந்தோமா? அவ்வெண்ணம் வந்ததும் அவள் மீண்டும் சோர்வடைந்தாள்.

நீர் விளிம்பருகே அரசமரத்தின் வேர்களில் ஆடைக்கூடையை வைத்தனர். முதலாமவள் “தாங்கள் நீராடும்போது ஆண்கள் அனைவரும் வெளியே சென்றுவிட வேண்டுமென்று சொல்கிறார்கள்” என்றாள். “யார்?” என்று தேவயானி கேட்டாள். “உங்கள் அமைச்சர்” என்று அவள் சொன்னாள். “எவருமே பார்க்கவில்லையென்றால் பெண்களுக்கு வருத்தமாக இருக்காதா என்று நான் அவரிடம் கேட்டேன். நான் கேட்டதே அவருக்குப் புரியவில்லை” என்றாள். இரண்டாமவள் சிரிப்பை அடக்கி பின் கையைத் தட்டியபடி உரக்க நகைத்தாள்.

குளிர்ந்த சுனை மரக்கூட்டங்களுக்கு நடுவே வானில் கசிந்த மெல்லிய ஒளியை தான் வாங்கி மான்விழிபோல் உள்ளொளிகொண்டு சருகுகள் உதிர மெல்ல சிலிர்த்தபடி கிடந்தது. ஆடைகளைக் களைந்து இடையில் மட்டும் சிற்றாடை அணிந்து நீரில் இறங்கினாள் தேவயானி. குளிர் கால்களைத் தழுவியபோதுதான் உடல் எத்தனை வெம்மை கொண்டிருக்கிறதென்று தெரிந்தது. கைநீட்டி பாய்ந்து நீரில் நெடுந்தொலைவு சென்று மூழ்கி முகத்தில் விழுந்த கூந்தலை தலைக்குப் பின்னால் சுழற்றி முடிந்தபடி எழுந்தபோது உடலிலிருந்து வெப்பம் ஒழுகிச் செல்வதை உணரமுடிந்தது. உள்ளே இருந்து ஒரு வெம்மை எழுந்து காதுமடல்களை சிவக்கச் செய்தது.

சேடியர்போல் தரையில் நின்று பொருட்களுக்கு காவல் இருக்காமல் இரு மலைப்பெண்டிரும் ஆடை களைந்து நீரில் பாய்ந்து நீந்தி அருகே வந்தனர். முதலாமவள் “மறுஎல்லை வரை சென்று வருவோமா?” என்றாள். “ஆம்” என்றபடி தேவயானி நீந்தினாள். நீண்ட கைகளைத் தூக்கி வைத்து அவள் நீந்தியபோதிலும்கூட ஒரு மலைப்பெண் கால்களால் நீரை உந்தி மீன்போல துள்ளித் துள்ளி விழுந்து அவளை முந்திச் சென்றுவிட்டாள். மறுகரையில் சரமலர் சிலிர்த்த நாணல்கள் நடுவே நின்ற பாறை ஒன்றில் ஏறி நின்று கைகளை அசைத்து வெண்பற்களைக் காட்டி உரக்க நகைத்தாள். தொடர்ந்து நீந்திச்சென்ற தேவயானி அப்பாறையில் ஏறிக்கொண்டாள்.

“உங்கள் முலைகள் பெரியவை, அரசி. யானை மத்தகம் போலிருக்கின்றன அவை” என்றாள் அவள். தேவயானி நகைத்து “ஆம், எங்களுக்கு அப்படித்தான்” என்றாள். “உங்கள் குழந்தைகளும் பெரிதாக இருக்குமோ?” என்றாள் தொடர்ந்து நீந்தி அவளருகே வந்து நின்ற இன்னொரு பெண். “ஆம், அவர்கள் அரசர்கள் அல்லவா?” என்று கரையில் நின்ற முதலாமவள் சொன்னாள். தேவயானி “வருக!” என்று சொல்லி மீண்டும் நீரில் பாய்ந்து நீந்தி முதற்கரைக்கு   செல்லலானாள். கூவிச் சிரித்தபடி அவர்கள் தொடர்ந்து வந்தனர். ஒருத்தி தேவயானியின் முடியைப்பற்றி இழுத்து மூழ்கடித்த பின் தாவி விலகிச்சென்றாள். தேவயானி சிரித்தபடி அவளை அணுகி பிடித்து நீரில் மூழ்கடித்து தலைக்குமேல் தாவி அப்பால் சென்றாள்.

நீராடும்போது முழுக்க அவர்கள் இடைமுறியாது பேசிக்கொண்டே இருந்தனர். சிட்டுக்குருவிகளைப்போல களிப்பு இயல்பாக சொற்களாகி சிந்திக்கொண்டே இருந்தது. அச்சிற்றூருக்கு வெளியே மனிதர்களையோ நிலங்களையோ அவர்கள் பார்த்ததில்லை. ஆனால் மொழி வழியாக அவர்களுக்கு பாரதவர்ஷம் முழுமையும் தெரிந்திருந்தது. அணிகளைப்பற்றி ஆடைகளைப்பற்றி அவர்கள் அவளிடம் உசாவிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு செய்திக்கும் மகிழ்ந்து சிரித்து குலுங்கி மீண்டும் வினாக்களை எழுப்பினர். அணிகளைப்பற்றிய பேச்சில் சலித்து உறவுகளைப்பற்றிய பேச்சுக்கு சென்றனர். அதில் குன்றா ஆர்வம் அவர்களுக்கு எழுந்தது. ஆண்களைப் பற்றித்தான் அவர்கள் கேட்டனர். வீரர்களை, பயணிகளை.

“அங்கே தெற்கு முனையில் கடல் இருக்கிறது” என்றாள் முதலாமவள். “கடலென்றால் இந்தச் சுனைபோல ஆயிரம் மடங்கு பெரிது.” கைகளை விரித்து “அவ்வளவு பெரிது. அதன் முனையில் ஒரு சிறுமியை தெய்வமாக நிறுத்தியிருக்கிறார்கள். மெய்யான சிறுமி அல்ல. முன்பு மெய்யான சிறுமியாக இருந்தாள். அதன் பிறகு அவளை சிலையாக ஆக்கிவிட்டார்கள். அவளை கன்னித்தெய்வம் என்று தொழுகிறார்கள். அந்தத் தெய்வம் எப்படி இருக்குமென்று நான் கேட்டபோது பெரிய கண்களுடன் அஞ்சிய சிறுமி போலிருக்கும் என்று எங்கள் பூசகர் சொன்னார். அவள்தான் வெல்லப்படாத அரசி. ஏனென்றால் அவள் கன்னி” என்றாள்.

அவர்கள் உதவ தேவயானி அரசிக்குரிய ஆடை அணிந்து மணிமுடி சூடி ஒருங்கி வந்தாள். அவர்கள் “சென்றுவிடாதீர்கள் அரசி, இதோ நாங்களும் ஆடை மாற்றி வருகிறோம்” என்றபடி விரைந்து ஓடி தங்கள் குடி முறைப்படி இடைசுற்றி தோளிலிட்ட மான்தோல் ஆடை அணிந்து கல்மாலைகளும் கல்வளைகளும் குலுங்க ஓடி வந்தனர். “நீங்கள் இருவரும் என் அருகே நில்லுங்கள்” என்று தேவயானி சொன்னாள். “ஆம், நாங்கள் உங்கள் அருகே இருக்க வேண்டுமென்று அமைச்சர் சொன்னார். எங்கள் கல்மாலைகளைப் பார்த்துவிட்டு பொன்னணிகள் வேண்டுமா என்றும் கேட்டார். வேண்டாம் என்றோம்” என்றாள்.

“ஏன்?” என்று தேவயானி கேட்டாள். “அவற்றை நாங்கள் அணியலாமா என்று எங்கள் குடிமூத்தார் முடிவெடுக்க வேண்டும். அவர்கள் அதைப்பற்றி இன்னும் பேசி முடிக்கவே இல்லை. எந்த ஒரு செய்தியையும் அவர்கள் பேசி முடிப்பதற்கு பல மாதங்களாகும். நீங்கள் அந்த அணிகளை இங்கு கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். அவர்கள் முடிவெடுத்த பிறகு நாங்கள் அணிகிறோம்” என்றாள். “வேண்டாம் என முடிவெடுத்தால்?” என்று தேவயானி சிரித்தபடி கேட்டாள். “அப்படி முடிவெடுத்தால் நான் முதுதந்தையின் முடியைப்பிடித்து உலுக்குவேன். வேண்டாம் என்று சொல்லிவிடுவாரா என்ன?”

வெளியே சூதர்கள் தங்கள் இசைக்கலங்களுடனும் அணித்தாலங்களுடனும் காத்து நின்றிருந்தனர். காலையொளி சுழித்தும் வளைந்தும் மின்னும் கவச உடையணிந்த காவலர்கள் படைக்கலங்களுடன் நிரைவகுத்தனர். அவள் கைகூப்பியபடி வெளியே வந்ததும் வாழ்த்தொலிகளும் மங்கலஇசையும் ஒருங்கே எழுந்தன. குருநகரியின் செங்கோலுடன் கவசவீரன் முன்னால் செல்ல கொடிஏந்திய வீரன் தொடர படைக்கலமேந்திய வீரர்கள் நிரைவகுத்து முன்னேகினர். அவர்களுக்குப் பின்னால் தேவயானி இருபுறமும் மலைக்குடிச்சேடியர் தொடர அரசியருக்குரிய நீள்காலடிகொண்ட சீர்நடையில் சென்று மேடையை அடைந்தாள்.

பணிக்குறை தீர்க்கப்பட்டு மலர்களும் மாலைகளும் கொண்டு அணி செய்யப்பட்ட மேடையின் நடுவே தோதகத்தி மரத்தால் புதியதாக செய்யப்பட்ட அரியணை இருந்தது. அவள் அதில் அமர்ந்ததும் முற்றம் முழுக்க கூடிநின்ற குடியினர் கைகளைத் தூக்கி வாழ்த்தி குரலெழுப்பினர். பெண்கள் குரவையிட்டனர். அவர்களை முற்றிலும் புதியவர்களைப்போல அவள் நோக்கிக்கொண்டிருந்தாள் அவ்வாழ்த்தொலிகள் வேறெவருக்கோ அளிக்கப்படுவதுபோல் தோன்றியது. அத்தனை விரைவாக அனைத்திலிருந்தும் தன் உள்ளம் விலகிவிடுமென்று எண்ணியபோது அவளுக்கே விந்தையாக இருந்தது. விலகிநின்று நோக்குகையில் அவை எத்தனை வேடிக்கையாக பொய்யாகத் தெரிகின்றன என்று வியந்துகொண்டாள். அத்தனை அவைகளிலும் முற்றிலும் விலகிய சிலர் இருந்திருப்பார்கள். அவர்கள் முன் இளிவரல்நடிகையாக அமர்ந்திருந்திருக்கிறேன்.

அணிச்சொல் கோத்து அமைத்த வாழ்த்துக்கள் நகைகள் போலிருந்தன. நகைகள் எத்தனை பொய்யானவை! மானுடனின் ஆணவமே நகைகள். எனக்கு மலர் போதவில்லை தளிர் திகையவில்லை என அவன் தெய்வங்களிடம் சொல்கிறான். முகமனுரைகள். உணர்வெழுச்சியால் சொல்லப்படுவனவற்றைச் சேர்த்து உணர்வை நீக்கி அணிமொழிகளென்று ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். பொய்மலர்கள்போல. எவரை புகழ் பாடுகிறார்கள்? மண்ணாளும் அனைவருக்கும் ஒரே புகழ்மொழி என்றால் புகழப்படுவது மண்ணாள்வதென்னும் செயல்பாட்டை அல்லவா? வணக்கமுறைமைகள். நடனங்களிலிருந்து எடுக்கப்பட்ட அசைவுகளை நடனமறியாதோர் நிகழ்த்தும் பகடிக்கூத்து. காணிக்கைகள். இவற்றிற்கு இருமடங்கு தாங்கள் கொள்ளப்போவதில்லை என்றால் இவற்றை எவர் கொண்டுவருவார்கள்? இது விலை. சொல்லில்லா வணிகம். அடிபணிதல்கள். பணிபவன் அதைக்கொண்டு ஆற்றலை ஈட்டி பிறிதொரு இடத்தில் ஆணையிடமுடியும்…

ஒவ்வொரு சடங்காக கடந்து செல்லும்தோறும் அவள் முற்றிலும் விலகி வேறெங்கோ இருந்துகொண்டிருந்தாள். போர்விளையாட்டு பயின்ற இளைஞர்கள் புலிகளையும் சிம்மங்களையும் குரங்குகளையும் கரடிகளையும் நடித்தனர். கலைவிளையாடிய பெண்கள் மான்களையும் மயில்களையும் மரக்கிளைகளையும் உடலில் காட்டினர். மொழி முதிராத தொல்குடியினர் என்பதனால் தலைமுறைகளாக அனைத்தையும் உடலசைவுகளாகவே அவர்கள் காட்ட வேண்டியிருந்தது. நகரங்களில் அவைகளில் நிகழும் பயின்று தேர்ந்த கூத்தரின் நடன அசைவுகளுக்கு இல்லாத இயல்புத்தன்மையும் ஒத்திசைவும் அவர்களின் ஆடலுக்கு இருந்தது. அது விழியசைவுபோல, நா நெளிவுபோல சொல்லெழுப்பும் உடலின் நடனம்.

அவை தொடர்புறுத்தும் சொற்களனைத்தையும் பிரித்தபின் நகரங்களில் நடனத்தையும் போர்க்கலையாடல்களையும் உருவாக்கி இருக்கிறார்கள். ஒவ்வொன்றையும் பொருளிழக்க வைத்த பின்னர் அவற்றை கலையென்று பயின்று நுண்மையாக்கிக்கொள்கிறார்கள் போலும். பின் மேலும் மேலும் நுண்மை. மேலும் மேலும் பொருளிழப்பு. அது ஒரு பூசல். தெய்வங்களிடம் அறைகூவுகிறான் மானுடன். நீ அளித்த மூவகை ஊழின் ஆயிரம்கோடி உணர்வுகளை விலக்கி எங்கள் அசைவுகளை தூய்மை செய்துகொண்டிருக்கிறோம். ஒன்பது மெய்ப்பாடுகள். மலையில் ஒரு கல்லை எடுத்து வைத்து தெய்வமெனக் கும்பிடுவதுபோல. இதோ, ஒவ்வொன்றும் பொருளிழக்கிறது. ஒவ்வொன்றும். ஆம், ஒவ்வொன்றும் பொருளிழக்கின்றது.

அச்சொல்லாகவே அவள் நாள் முழுக்க எண்ணச்சுழல் கொண்டிருந்தாள். உச்சிப்பொழுது குடிலுக்கு வந்து உணவுண்டு சற்று இளைப்பாறி தோழியருடன் சொல்பரிமாறி மீண்டும் அரங்குக்குச் செல்லும்போது ஆழம் அச்சொல்லாக இருந்தது.  இரவில் நிகழ்வுகள் முடிந்து குடிலுக்கு வந்து ஆடைகளை மாற்றி அமர்ந்தபோது கிருபர் வந்து தன் நிழல் உள்ளே விழும்படி வெளியே நின்றார். மெல்லிய கனைப்போசையால் அவரை உள்ளே அழைத்து “நாளை புலரியிலேயே நான் கிளம்பவேண்டும், அமைச்சரே” என்றாள்.

“இங்கு நாம் மூன்று நாட்கள் இருப்பதாக சொல்லியிருந்தோம், அரசி” என்றார் கிருபர். “ஆம், ஆனால் நான் சென்றாகவேண்டும். இன்று காலையே நான் கிளம்பவேண்டியிருந்தது. இவர்களின் கலைநிகழ்வுகள் இத்தனை ஒருங்கிணைக்கப்பட்டபின் ஏமாற்றத்தை அளிக்கவேண்டாம் என்றுதான் இங்கு தங்கினேன். நாளை இங்கு வேட்டையும் விருந்தும் மட்டும்தான் அல்லவா?” என்றாள். “ஆம் அரசி, நாளை மறுநாள் முற்றோய்வு. அதன் பிறகு கிளம்புவதாக இருந்தது.” தேவயானி “நன்று! நீங்கள் இங்கிருந்து விருந்தையும் பிறவற்றையும் சிறப்பியுங்கள். நான் கிளம்புகிறேன். எனக்கு இரு புரவிகள் வேண்டும்” என்றாள்.

கிருபரின் விழிகள் எதையும் காட்டவில்லை. “ஆணை!” என்றார். “நான் ஹிரண்யபுரிக்கு செல்வதாக இருக்கிறேன். மாற்றுப் புரவிகளுடன் நான்கு புரவிவீரர்கள் மட்டும் துணை வந்தால் போதும்” என்றாள். “ஆணை!” என்று தலைவணங்கி கிருபர் வெளியே சென்றார்.

tigerசரபஞ்சரத்திலிருந்து கிளம்பியபோது இருந்த விரைவில் குதிமுள்ளால் புரவியை உதைத்து உதைத்து அதன் உச்ச விரைவுக்கு கொண்டு சென்றாள். சிறு செவிகளை பின்னுக்குச் சரித்து, விழிகளை உருட்டி, தலைதூக்கி மூக்கை விடைத்து, மூச்சு சீறி நுரைத்துளிகள் அவள்மேல் முன்மழைச்சாரலோ என தெறிக்க மலைச்சரிவில் கூழாங்கற்கள் உருண்டு சிதற பாய்ந்திறங்கியது புரவி. சிற்றோடைகளை தாவிக்கடந்தது. சேறுபதிந்த சாலைவளைவுகளில் குளம்புகள் உதைத்து பறக்கவிட்ட சேற்றுத்துளிகள் அவள் முதுகில் விழுந்தன. உரக்க கூச்சலிட்டு அதை மேலும் மேலும் தூண்டி மூச்சிரைக்க உடலெங்கும் அனல் பறக்க விரைந்துகொண்டே இருந்தாள்.

உச்சிப்பொழுதில் ஆலமரத்தடியில் சற்றுநேரம் இளைப்பாறியபோது அனைத்து எலும்புகளும் உடைந்து உடலுக்குள் ஒரு குவியலாகக் கிடந்து குலுங்குவதுபோல் உணர்ந்தாள். தொடைத்தசை இழுத்துக்கொண்டிருக்க வலியுடன் பல்லைக் கடித்தபடி நடந்தாள். மரத்தடியில் துணைவீரன் இலைபறித்துப் பரப்பி செய்த மெத்தையில் படுத்தபோது மேலே பசுந்தழைவெளி தலைக்குமேல் குவியம்கொண்டு சுழன்றது. துயின்ற அரைநாழிகைக்குள் உள்ளம் துடித்தெழுந்து அப்பாலென நின்று பொறுமையிழந்து அவளை உலுக்கியது. மீண்டும் பாய்ந்து புரவிமேல் ஏறிக்கொண்டாள். அவளுடன் வந்த காவல் வீரர்கள் மூச்சோசையுடன் மார்பில் தலைகவிந்து துயின்று கொண்டிருந்தனர். அவள் எழுந்து சென்ற ஓசைகேட்ட பிறகே அவர்கள் விழித்தெழுந்து பாய்ந்து புரவிகளில் ஏறிக்கொண்டு அவற்றைத் தூண்டி கூச்சலிட்டபடி உடன் வந்தனர்.

அன்று மாலை வழிவிடுதி ஒன்றில் தங்குகையில் அவள் தோளிலும் கையிலும் தொடையிலும் இழுதசைகள் அனைத்தும் அடிபட்டு வீங்கியவைபோலிருந்தன. எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி அனல் கொண்டு தேய்ந்தவை போலிருந்தன. புரவியிலிருந்து இறங்கிய பின்னரும் புரவியில் இருப்பதுபோலவே கால்கள் அகன்று உடல் அசைவு நீடிக்க அவளால் விடுதியின் படுக்கை அறை வரைகூட நடக்க முடியவில்லை. மரக்கிளைகளை பற்றிக்கொண்டு ஆங்காங்கே நின்று அவள் அச்சிறு மரக்கட்டடத்தை அணுகினாள். அதன் பொறுப்பாளன் தன் மனைவியுடன் அவளுக்காக காத்து நின்றிருந்தான். அவன் வணங்குவதை அறியாதவளாக உள்ளே சென்றாள்.

நீராடாமல் உணவருந்தாமல் மஞ்சத்தில் படுத்துக்கொண்டாள். விடுதிக்காவலன் அவள் ஆணைக்காக வாயிலில் காத்து நின்றிருக்க அவள் அப்படியே துயிலில் ஆழ்ந்தாள். சிறுமியாக எங்கோ சிறு காடு ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்தாள். மூன்று புலிகள் உடனிருந்தன. அவள் சிரித்தபடி ஓடி மல்லாந்து விழ அவள்மேல் கால்வைத்து எழுந்த வேங்கை ஆழ்ந்த கார்வைக் குரலில் “என்னால் உன்னை உண்ணமுடியும்” என்றது. அவள் சிரித்தபடி அதைப் பிடித்து தள்ளினாள். “நான் உண்ணவில்லை என்பதனால் நீ என் உணவல்லாமலாவதில்லை” என்றது அப்பால் நின்ற புலி. பிறிதொன்று “மூவரில் ஒருவர் எப்போதும் மீறவே விழைகிறோம்” என்றது.

அவள் காட்டுக்குள் ஊனுணவின் மணத்தை உணர்ந்தாள். “ஊனுணவு!” என்றாள். “எங்கள் குருளைகளில் ஒன்றைக் கொன்று சமைத்திருக்கிறார்கள்” என்றது இன்னொரு புலி. அவள் விழித்துக்கொண்டபோது ஏவலன் உள்ளே வந்து ஊனுணவை அவள் அறைக்குள் வைத்துவிட்டு அவள் எழுவதற்காக காத்து நின்றிருப்பதை கண்டாள். உணவை பார்த்த பின்புதான் எத்தனை பசி என்று புரிந்தது. ஆயினும் எழுந்து உணவருகே சென்று அமருமளவுக்கு உடலை உந்த முடியவில்லை. அவள் நோக்கியதைக் கண்டு “உணவை படுக்கைக்கு கொண்டு வரவா, அரசி?” என்று ஏவலன் கேட்டான். “வேண்டாம்” என்றபடி கையை ஊன்றி உடலை நெம்பித்தூக்கி துணியால் ஆனவைபோல் துவண்டிருந்த கால்களை மரத்தரையில் ஊன்றி நின்றாள்.

அறை படகென தள்ளாடியது. கண்களை மூடி நிலைகொண்டபின் சென்று பீடத்தருகே அமர்ந்து அவ்வுணவை உண்டாள். முதல் வாய்க்குப் பின் உணவை உள்ளம் மறுக்கத் தொடங்கியது. செலுத்திச் செலுத்தி மீண்டும் சற்று உண்டுவிட்டு எழுந்தாள். கைகழுவிவிட்டு மீண்டும் படுக்கைக்கு வரும்போது மரவுரி விரிக்கப்பட்ட அம்மெத்தை எத்தனை இனியதென்று உளம் மகிழ்ந்தது. இதில் விடியும்வரை படுத்திருக்கப்போகிறோம் என்னும் எண்ணமே இனித்தது. கையால் அதன் மென்மையை அழுத்தி உணர்ந்தாள். சிதையும் புதைகுழியும் சேக்கையென வந்து எப்போதும் உடனிருக்கின்றன. விழுந்து புதைந்துகொள்பவள்போல் தன்னை உள்ளே அழுத்திக்கொண்டாள். ஏவலன் கதவை சாத்தியபடி வெளியே சென்றான்.

அவள் துயிலில் ஆழத்தொடங்கியிருந்தாள். பாய்ந்து செல்லும் புரவியொன்றின்மேல் அப்படுக்கை அமைந்திருந்தது. மலைச்சரிவொன்றில் உச்சவிரைவில் அவள் இறங்கிக்கொண்டிருந்தாள். முதல் புள் ஒலிப்பதற்கு முன்னரே அவள் விழித்துக்கொண்டாள். ஆழ்ந்த துயில் உள்ளத்தை தெளிவடையச் செய்திருந்தது. எழுந்தபோதே முகத்தில் ஒரு புன்னகை இருப்பது தெரிந்தது. கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தபின் வெளியே சென்று இருண்ட வானில் தெரிந்த விடிவெள்ளியை நோக்கினாள். அது ஒரு துண்டு இனிமையெனத் தெரிந்தது. நாவால் அதை வருடி அறியமுடியும். முதற்புட்குரல் அதை நோக்கி எழுந்தமைய அது மெல்ல அதிர்ந்தது. புட்குரல்கள் பெருகி எழத்தொடங்கின.

ஏவலன் அவளை அணுகி “ஒளிஎழும்போது கிளம்பிவிடுவோம், பேரரசி” என்றான். “ஆம்” என்று திரும்பி உள்ளே வந்து தன் மாற்று ஆடையை எடுத்துக்கொண்டு நீராடச் சென்றாள். குளிர்ந்த நீர் சிற்றலைகளுடன் கரை தொட்டுக்கிடந்த சுனையில் மென்மணலில் கால் புதைய இறங்கி இடைவரை நீண்டு சுருட்டிக் கட்டியிருந்த குழலை அவிழ்த்து நீட்டிவிட்டு பாய்ந்து மூழ்கி எழுந்தாள். குளிர்நீர் எண்ணங்கள் அனைத்தையும் நனைத்து படியச் செய்தது. மழைக்குப்பின் மணல் அலைகளென சித்தம் மென்மையாக பரவிக்கிடந்தது. ஒரு பறவைச் சுவடுமில்லா மென்கதுப்பு. சுனையின் விளிம்புகளில் இரவெல்லாம் நெளிந்த சுனையின் அலைவடிவுகள்.

சுற்றிலும் மரக்கிளைகளின் விளிம்புகள் தீட்டப்பட்ட வேல்முனைகள், வாள்கருக்குகள், அம்புநுனிகள் என ஒளிகொள்ளத் தொடங்கின. காடு குரங்குகளின் ஒலியால் எக்களித்துக்கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் புலரி அளிக்கும் நம்பிக்கைதான் மானுடனை வாழ வைக்கிறது. இருத்தல் என்பது இனிமை. அனைத்து துயர்களுக்கும் மாற்று அதுதான். உண்ணுதல், உறங்குதல், நீராடுதல். மரங்கள் நடுவே, ஓடைகளின் அருகே, விண்ணுக்குக் கீழே இனிய காற்றில், நறுமணத்தில், மெல்லோசைகளில் கரைதல். துயரென்பது இருத்தலை மறுத்தல். இருத்தல் பொருளிழந்துபோதல். இருத்தல் இனிமை என உறுத்து வந்து உரைக்கும் இயற்கை ஒன்றே அதற்கு மாற்று.

அப்போது அங்கிருந்தே கிளம்பி எங்கோ அவளுக்கென காத்திருக்கும் அந்த இனிய தவச்சோலை ஒன்றுக்கு சென்றுவிட வேண்டுமென்று தோன்றியது. இப்புவியில் எவரும் அவளுக்கு பகைவர்களில்லையென்பதுபோல, எவரிடமும் கடன்கள் இல்லையென்பதுபோல. எப்போதும் இருந்தது அச்சோலை அவளுக்குள். அவளுக்கு மட்டுமே உரியது. அங்கு ஆண்டு முழுக்க மலரும் கல்யாண சௌகந்திகம் ஒன்று நின்றிருக்கிறது. நினைத்த மணத்தை காட்டும் வானத்து மலர்ச்செடி. அதன் அருகே சிறு குடில் வளைத்தோடும் சிறு இன்சுனை. அங்கு சென்றுவிட வேண்டும்.

அவ்வெண்ணம் எழுந்ததுமே தன் வஞ்சத்தை சிக்கிமுக்கிக் கற்களென உரசி அனலெழுப்பிக் கொண்டாள். இல்லை, இவ்வெறுப்பை ஒருபோதும் அணையவிடலாகாது. என் ஆணவம் எஞ்சவேண்டும். எனக்கிழைக்கப்பட்ட தீங்கிற்கு நிகர்செய்யும் வரையாயினும். மீண்டும் மீண்டும் ஆண்களால் தோற்கடிக்கப்படும் பெண் நான். அவர்களைவிட உயர்ந்தவள் என்பதனாலேயே அஞ்சப்படுகிறேன். நுகர்ந்து துறக்கப்படுகிறேன். நல்லுணர்வால் ஏமாற்றப்படுகிறேன். பெண்ணின் பெருஞ்சினமென்ன என்று இவர்கள் அறியவேண்டும். அது சூதர் சொல்லில் என்றும் வாழவேண்டும். நிகர்செய்யப்படா பழி பெருகும். எரியை எரியே அணைக்கமுடியும் என்பது நெறி.

நூல் பதின்மூன்று – மாமலர் – 83

83. எரிமலர்க்கிளை

உணவருந்தி முடித்ததும் முதுமகள் ஒருத்தி காட்டிய கொப்பரையில் இருந்த புல்தைலம் கலந்த வெந்நீரில் கைகளை கழுவிக்கொண்டு தேவயானி எழுந்தாள். வெளியே முன்முழுமைச் செந்நிலவு எழுந்திருந்தது. மரங்கள் நிழல்களென மாறிவிட்டிருந்தன. குடில்களனைத்திலும் ஊன்நெய் விளக்குகள் எரியத்தொடங்க அணுகிவரும் காட்டெரிபோல் குடில்நிரையின் வடிவம் தெரிந்தது. வானிலிருந்து நோக்கினால் தீப்பந்தம் ஒன்றை விரைவாகச் சுழற்றியதுபோல் அச்சிற்றூர் தெரியுமென்று அவள் எண்ணிக்கொண்டாள்.

“தாங்கள் இளைப்பாறலாமே, பேரரசி?” என்றாள் சாயை. “ஆம். உடல் களைத்திருக்கிறது. துயில் நாடுகிறேன். ஆனால் இந்த இளங்காற்றை விட உளமெழவில்லை. எழுந்து வரும் விண்மீன்களையும் முழுநிலவையும் சற்று துய்த்துவிட்டுச் செல்லலாம் என்று தோன்றுகிறது. பிறிதொருமுறை இப்படி ஒரு மலைச்சிற்றூரில் இயல்பாக தங்கும் வாய்ப்பு அமையப்போவதில்லை” என்றாள். “தாங்கள் விரும்பினால் முற்றத்தில் சென்று அமர்ந்து நிலவை நோக்கலாம். பீடங்களை அங்கு கொண்டு இடச் சொல்கிறேன்” என்றாள் சாயை.

“வேண்டியதில்லை. இந்த முற்றத்தை ஒருமுறை சுற்றி நடந்து வரலாமென்று எண்ணுகிறேன். பகல் முழுக்க தேரில் அமர்ந்திருந்ததின் அசைவு உடலில் எஞ்சியிருப்பதுபோல் உள்ளது” என்றபடி தேவயானி கைநீட்ட சாயை மேலாடையை எடுத்து அவளுக்களித்தாள். அதை தன் தோளிலிட்டபடி வெளியே சென்று வட்டப்பெருமுற்றத்தில் இறங்கி காற்றில் மேலாடையும் குழலும் எழுந்து பறக்க சற்றே முகவாய் தூக்கி விண்ணை நோக்கியபடி ஓய்ந்த உடலுடன் நடந்தாள்.

சாயை அவளையும் அந்தப் பெருமுற்றத்தையும் நோக்கிக்கொண்டு உடன் நடந்தாள். பறவைக்குரல்கள் அடங்கியமையால் குடில்களில் இருந்து மகளிரும் சிறுவரும் எழுப்பும் ஓசைகள் வலுத்து ஒலித்தன. சிறு குழந்தைகள் குடில்களின் படிகளில் பாய்ந்திறங்கி அப்பால் இருந்த மரங்களில் தொற்றி ஏறி குதித்தும், ஒருவரை ஒருவர் துரத்தியும், பிடித்துத் தள்ளியும், கட்டி மண்ணில் விழுந்து புரண்டும் விளையாடிக்கொண்டிருந்தனர். மலைக்குடி மகவுகள் பொழுதுமுழுக்க விளையாடிக்கொண்டே இருப்பதனால் விளையாட்டில் தங்களை மறக்கும் இயல்பு கொண்டிருந்தன. நகரங்களில் எக்குழந்தையும் தன் இல்லத்தையும் ஆற்றவிருக்கும் கடமைகளையும் மறந்து விளையாடுவதில்லை என்று அப்போது தோன்றியது.

விலங்குகள் விளையாடுவதுபோல என்று ஒரு சொற்றொடர் எழுந்தது உள்ளத்தில். வளர்ந்த பின்னரும்கூட அவர்கள் விளையாடுகிறார்கள். உடல் ஓய்ந்த முதியவர்களுக்குக் கூட விளையாட்டுகள் உள்ளன. விளையாடாத உயிர் எதை இழக்கிறது? ஏன் விளையாடுகிறார்கள்? அத்தனை விளையாட்டுகளும் வாழ்க்கையின் போலிக்குறுநடிப்புகள். வேட்டைகள், புணர்தல்கள், சமையல்கள், பூசல்கள். வாழ்க்கையை தனக்குரிய நெறிகளுடன் தன் சொல்திகழும் எல்லைக்குள் அமைத்துக்கொள்வதே விளையாட்டு. தெய்வங்களும் ஊழும் அமைக்கும் இடர்களும் துயர்களும் இல்லாத பிறிதொரு வாழ்க்கை. விளையாட்டை இழந்தமையால்தான் அரசாடுகிறேனா?

இளையவரும் கன்னியரும்கூட நாணமோ ஒதுக்கமோ இன்றி ஒருவரை ஒருவர் கைபற்றி தோள்தழுவி விளையாடினர். அவள் நகர்நுழைந்தபோது வரவேற்புக்கு வந்து நின்ற மக்களைவிட பத்துமடங்கினர் அங்கிருப்பதாக தோன்றியது. குடில்களில் இருந்து இளையோரும் சிறுவர்களும் மகளிரும் மையமுற்றத்திற்கு வந்தபடியே இருந்தனர். அங்கே சிறு குழுக்களாக அமர்ந்து தங்கள் இல்லங்களிலிருந்து கலங்களிலும் தாலங்களிலும் உணவை கொண்டுவந்து வைத்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு உண்டனர். சிரித்தும் கூச்சலிட்டும் உவகை கொண்டாடினர். சிறு குழந்தைகள் சிறு குருவிகள் என ஒவ்வொரு அன்னையிடமிருந்தும் ஒவ்வொரு வாயென வாங்கி உண்டு அக்கூட்டத்தினூடாக எழுந்தும் அமர்ந்தும் விளையாடிக்கொண்டிருந்தனர்.

இருட்டுக்கு மேலும் அழுத்தம் வந்தது. விண்மீன்கள் கம்பளம்போல ஒளியுடன் விரிந்தன. நிலவு எண்ணியதைவிட மேலெழுந்துவிட்டதை தேவயானி கண்டாள். முற்றத்தில் எவரும் விளக்குகளை வைத்திருக்கவில்லை என்பதனால் நிலவொளி ஈரத்தண்மையுடன் படிந்து குழல்களையும் ஆடைகளையும் ஒளிரச்செய்தது. கண்களும் பற்களும் மின்னின. தேவயானி “நாமும் இங்கு நம் உணவை கொண்டுவந்து அமர்ந்துகொண்டிருக்கலாம்” என்றாள். “அரசியர் உடன் உணவருந்துவதென்பது குருநகரியில் ஒரு பெரிய சடங்கென்றே கொள்ளப்படுகிறது. அதற்குரியவர்கள் ஓராண்டுக்கு முன்னரே தெரிவு செய்யப்பட்டு அதற்கென பயிற்சி அளிக்கப்பட்டு வந்து சேர்வார்கள். அவ்வாறு உணவருந்தியவர்கள் அதை ஒரு தகுதியெனக் கொள்ளவும் செய்வார்கள்” என்றாள் சாயை.

அவள் குரலில் இருந்த நகையாட்டை உணர்ந்து மெல்லிய எரிச்சலுடன் “ஆம், அது ஒரு அரசுசூழ்தல் முறை. இங்கு நாம் மலைக்குடிகளென ஓரிரவை கழித்திருக்கலாம். சில தருணங்களிலேனும் கவசங்களை கழற்ற வேண்டியுள்ளது” என்றாள் தேவயானி. பேசியபடி விழிதிருப்பியவள் ஒரு கணம் திகைத்து “யார் அது?” என்றாள். “எவர்?” என்றாள் சாயை. “அவ்விளைஞர்கள்… அங்கே செல்லும் அம்மூன்று இளையோர். மூவரில் இருவரின் நடை ஒன்று போலிருக்கிறது. அது நான் மிக நன்கறிந்த அசைவு” என்றாள். சாயை “அவர்கள் இக்குடியின் இளைஞர்கள். நாளை அவர் எவரென்று உசாவுவோம்” என்றாள்.

“அல்ல, அவர் இக்குடியினர் அல்ல” என்று கூர்ந்து நோக்கியபடி தேவயானி சொன்னாள். “மலைக்குடியினர் அனைவருக்கும் தனித்த நடையும் அசைவும் உள்ளன. இம்மலைச்சரிவில் பாறைகளினூடாக நடப்பதனாலாக இருக்கலாம். மரங்களில் தொற்றி அலைவதனால் உருவான தோளசைவுகள் அவை. அவர்கள் இங்கு வேட்டை விலங்குகள்போல் சூழலைக் கூர்ந்து எண்ணி காலெடுத்து நடக்கிறார்கள். இவர்கள் நிகர்நிலத்து ஊர்களில் வளர்ந்தவர்கள்” என்றாள். மீண்டும் விழிகூர்ந்து “நான் நன்கறிந்த அசைவு. நன்கறிந்த நடை” என்றபின் “அது அரசரின் நடை” என்றாள்.

“என்ன சொல்கிறீர்கள், அரசி?” என்று சாயை கேட்டாள். “ஆம், ஒளியில் அவர்களைப் பார்த்திருந்தால் இவ்வசைவு அத்தனை துலக்கமாக தெரிந்திருக்காது. நிழல் என அசைவு மட்டுமேயாகி செல்கிறார்கள். அது நன்றாக காட்டிக் கொடுக்கிறது. அவர்களில் மூத்த இருவரின் நடையும் அசைவும் நமது அரசர் யயாதிக்குரியவை” என்றாள் தேவயானி. “அவர்களை அழைத்து வா” என்றாள். சாயை அப்பால் நின்றிருந்த மலைக்குடி இளைஞன் ஒருவனை அருகழைத்து தொலைவில் ஒருவரோடொருவர் பேசிச் சிரித்தபடி சென்றுகொண்டிருந்த அந்த மூவரையும் சுட்டிக்காட்டி அவர்களை அழைத்து வரும்படி சொன்னாள்.

“ஐயமே இல்லை” என்றாள் தேவயானி. “ஐயம் வில்லிலிருந்து விடுபட்ட அம்பு, வழியில் தடுத்து நிறுத்தஇயலாது” என்றாள் சாயை. “என்ன சொல்கிறாய்?” என்று அவள் சீற்றத்துடன் கேட்டாள். “இந்த ஐயம் அசோகவனிக்கு வருவதற்கு முன்னரே இருந்தது உங்களுக்கு.” தேவயானி “என்ன சொல்கிறாய்?” என்று மீண்டும் உரத்த குரலில் கேட்டாள். “ஏனெனில் நீங்கள் உங்களை அறிவீர்கள். இங்கிருந்து நீள்தொலைவுக்கு விலகிச் சென்றுவிட்டதை அறிந்திருப்பீர்கள். அவரையும் அறிவீர்கள்” என்றாள். “கலை காமத்தை எழச்செய்கிறது.”

தேவயானி உடல் நடுங்க இரு கைகளையும் மார்பில் கட்டிக்கொண்டு விழிநிலைத்து அணுகிவரும் அவ்விளைஞர்களை நோக்கினாள். மூவரும் அவள் அருகே வந்து முறைமைப்படி இடைவளைய வணங்கி நின்றனர். மூத்தவனிடம் “நீங்கள் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்றாள். மூத்தவன் “என் பெயர் திருஹ்யூ. இவர்கள் என் இளையோர். இவன் அனுதிருஹ்யூ, மூன்றாமவன் புரு. நாங்கள் அசோகவனியின் சேடியாகிய சர்மிஷ்டையின் மைந்தர்” என்றான். “உங்கள் தந்தை எவரென்று அறிவீர்களா?” என்று தேவயானி கேட்டாள்.

மூத்தவன் நாவெடுப்பதற்குள் முந்திக்கொண்டு “ஆம், அறிவோம்” என்று புரு மறுமொழி சொன்னான். “அவர் குருநகரியின் அரசர் யயாதி.” தேவயானியிடம் சிறு மாறுதலும் உருவானதாக உடல் காட்டவில்லை. சாயை அவள் மேலும் சொல்லெடுப்பதற்காக காத்து நின்றாள். தேவயானி மிக இயல்பான குரலில் “அதை உங்கள் அன்னை சொன்னார்களா?” என்றாள். “ஆம், ஆனால் அதைவிட நாங்களே தெளிவாக உணர்ந்திருந்தோம். எங்கள் அன்னையைப் பார்ப்பதற்காக அரசர் வந்து அசோகவனியின் காவலர் மாளிகையில் தங்குவதுண்டு. நாங்கள் அங்கிருந்து கிளம்புவதற்கு ஒருநாள் முன்னர்கூட வந்திருந்தார். உடன் அவரது அணுக்கத்தோழர் பார்க்கவனும் இருந்தார்.”

தேவயானி தலையசைத்தபோது அவள் இரு குழைகளும் ஆடி கன்னங்களை தொட்டன. சாயை அவர்கள் செல்லலாம் என்று கையசைத்தாள். அவர்கள் திரும்பியதும் தேவயானி “பொறுங்கள்” என்றாள். புரு திரும்பிப் பார்த்தான். தேவயானி இரு கைகளையும் விரித்து தலையசைத்து அவனை அருகே அழைத்தாள். அவன் ஐயுற்று நிற்க அவள் புன்னகை செய்து “நான் உங்கள் தந்தையின் முதல் மனைவி. உனது அன்னை… வருக!” என்றாள். தயங்கியபடி அருகே வந்த அவனுடைய மெலிந்த தோளில் கைவைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு வலக்கையால் அவன் குழலை வருடி “உன் பெயர் புரு அல்லவா?” என்றாள்.

“ஆம், அரசி” என்றான் புரு. “அன்னையே என்று சொல்க!” என்றாள். “ஆம், அன்னையே” என்றான் புரு. “அது உங்கள் மூதாதை புரூரவஸின் பெயர் என்று அறிவாயா?” என்றாள். “ஆம், அறிவேன்” என்றான் புரு. “அன்னை என என் பாதங்களைப் பணிக!” என்றாள் தேவயானி. அவன் குனிந்து அவள் கால்தொட்டு சென்னிசூட “நலம் திகழ்க! வெற்றியும் புகழும் விளங்குக! காலத்தில் படரும் கொடிவழி அமைக!” என்று தேவயானி அவன் தலையில் கைவைத்து வாழ்த்தினாள். பிற இருவரும் வந்து அவள் கால்களைத் தொட்டு வணங்கினர். அவள் அவர்கள் தலையில் கைவைத்து வாழ்த்தினாள்.

சாயையிடம் “இவர்களுக்கு பரிசுகள் அளிக்கவேண்டியிருக்கிறது” என்றாள். சாயை ஆணையேற்று குடிலுக்குள் சென்றாள். தேவயானி இரு கைகளையும் விரித்து மூன்று மைந்தரையும் தன் உடலுடன் அணைத்துக்கொண்டாள். திருஹ்யூவின் தோள்களைத் தொட்டு “உங்கள் அன்னையின் தோள்கள் போலிருக்கின்றன. மைந்தா, அரசகுடிப்பிறந்தவர்கள் ஒருபோதும் வலுவற்ற உடல் கொண்டிருக்கலாகாது. உள்ளம் உடலை தான் என பதித்து வைத்துக்கொள்ளும். உடலின் வலுவின்மையை அது தானும் நடிக்கும். நன்கு உடல் தேறுக!” என்றாள். “ஆம், அன்னையே” என்று அவன் தலைவணங்கினான். அனுதிருஹ்யூவிடம் “மூத்தவனுடன் எப்போதும் இரு, மைந்தா. ராகவராமனின் உடன் அமைந்த இளையவனைப்போல” என்று அவள் சொன்னாள். அவன் வணங்கினான்.

புரு “தாங்கள் எங்களை ஒடுக்கக்கூடுமென்று அஞ்சினோம், அன்னையே” என்றான். அவள் அவன் விழிகளை நோக்கி “உண்மையிலேயே அவ்வச்சம் இருந்ததா?” என்றாள். அவன் “தாங்கள் அணித்தேரிறங்கி வருகையில் நேரில் கண்ட கணமே அது முற்றிலும் விலகியது. தாங்கள் பேரன்னை. அவ்வாறன்றி பிறிதெவ்வகையிலும் அமைய முடியாதவர். ஆகவேதான் நான் உணர்ந்த உண்மையை உங்களிடம் சொன்னேன்” என்றான். “அது நன்று. அன்னையிடம் பொய் சொல்லலாகாது என்று நீ எண்ணியதை உணர்கிறேன்” என்றாள் தேவயானி. “நீ வெல்பவன். உன் கொடிவழியினர் என்றும் உன்னை வழிபடுவர். பாரதவர்ஷத்தில் உன் குருதி பெருநதியென கிளைவிரிந்து பரவும்” என்றாள்.

சாயை உள்ளிருந்து மூன்று மணிமாலைகளையும் அரசக் கணையாழிகளையும் எடுத்து வந்தாள். அவற்றை தேவயானி அவர்களிடம் கொடுத்தாள். திருஹ்யூ “இவற்றை நாங்கள் அணிகையில்…” என்று தயங்கியபடி சொல்லத் தொடங்க “ஆம், நீங்கள் எவரென்ற வினா எழும். யயாதியின் மைந்தர், குருகுலத்து இளவரசர் என்றே சொல்லுங்கள்” என்றபின் சாயையிடம் “கிருபரிடம் கூறுக! இவர்கள் குருநகரியின் இளவரசர்கள். சூதர்களுக்குரிய கல்வியும் அடையாளங்களும் இனி இவர்களுக்கு இருக்கலாகாது” என்றாள். அவள் தலைவணங்கி “அவ்வாறே, பேரரசி” என்றாள். தேவயானி அவர்களிடம் “செல்க, நாம் மீண்டும் சந்திப்போம்” என்றாள். அவர்கள் மீண்டும் அவள் கால்தொட்டு வணங்கி விடைகொண்டனர்.

tigerகுடிலுக்குள் சென்றதுமே தேவயானி உடலசைவுகள் மாற பிறிதொருத்தி என்றானாள். அரவென சீறித்திரும்பி தன்னைத் தொடர்ந்து உள்ளே வந்த சாயையிடம் “உனக்குத் தெரிந்திருக்கிறது” என்றாள். “ஆம், முன்னரே தெரியும்” என்று சாயை சொன்னாள். “அவளுக்கு முதற்குழந்தை பிறந்ததுமே கண்காணிக்கத் தொடங்கினேன். அரசர் இங்கு வந்து தங்கிச் செல்லும் ஒவ்வொரு தருணத்தையும் நன்கு அறிந்திருந்தேன்.” தேவயானி உரத்த குரலில் “நீ இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை? என் நலனுக்காக என்று பொய் சொல்லமாட்டாய் என்று எண்ணுகிறேன்” என்றாள்.

“சொல்ல வேண்டாம் என்று தோன்றியது. உங்கள் நலனுக்காக அல்ல” என்றாள் சாயை. “ஏன்?” என்றாள் தேவயானி. “என் வஞ்சத்துக்காக” என்று சாயை சொன்னாள். தேவயானி திகைத்து பின் மீண்டு உடைந்த குரலில் “நான் உன்னை நம்பினேன். உன்னை என் ஒரு பகுதியென எண்ணினேன்” என்றாள். “உங்கள் ஒரு பகுதியாக இருப்பதனால்தான் சொல்லவில்லை. ஏனென்றால் உங்கள்மேல் நச்சுமிழ விரும்பினேன்” என்றாள். “முற்றிலும் உங்களுக்கு படைக்கப்பட்ட உள்ளம் கொண்டவள் நான். ஆனால் என்னுள் இவ்வஞ்சத்தின் நச்சுப்பல் இருந்துகொண்டே இருந்தது.”

“துயில்கையில் பலமுறை உடைவாளை உருவி உங்கள் கழுத்தில் பாய்ச்ச வேண்டுமென்று எண்ணியிருக்கிறேன். பின்னர் அறிந்தேன், இது இன்னும் கூரிய உடைவாள். இன்னும் குளிர்ந்தது, குருதி சிந்தாதது, அமைதியானது. எனவே இதை தேர்வு செய்தேன்” என்றாள் சாயை. அவள் விழிகளில் தெரிந்த வெறுப்பைக் கண்டு அஞ்சி தேவயானி பின்னடைந்தாள். “ஏன் இதை செய்தாய்?” என எழாக் குரலில் கேட்டாள்.

அவளை அசையா விழிகளுடன் நோக்கி சாயை அணுகிவந்தாள். “என்னை அறியமாட்டீர்களா, அரசி? என்னையன்றி நீங்கள் நன்கறிந்த எவருளர்?” அவள் மூச்சுக்காற்று தேவயானிமேல் நீராவியுடன் பட்டது. “நான் வேங்கை. கசனின் குருதிச் சுவையை அறிந்தவள். உனது குருதிச் சுவையையும் அறிய வேண்டாமா?” சன்னதமெழுந்த வாயிலிருந்து கிளம்பும் தெய்வக்குரல் போலிருந்தது அவள் உரை.

தேவயானி மேலும் பின்னடைந்து பீடத்தில் முட்டி, சுவரை நோக்கிச் சென்று சாய்ந்து நின்றாள். “நிழல் கருமையாக இருப்பதே தெய்வ ஆணை” என்றாள் சாயை. “நிழல் எழுந்து உருவை விழுங்கும் தருணம் ஒன்றுண்டென்று உணர்க! நீ சென்று நின்ற உச்சம். அசோகவனிக்குள் நுழைவதற்கு முன் அதை நீ உணர்ந்திருந்தாய். ஆனால் உன்னுள் ஒன்று வீழ்ச்சியடைய விழைந்தது. விந்தை அது, அழிவதற்கு மானுடர் கொள்ளும் விழைவு. தங்கள் நெஞ்சிலேயே ஈட்டியை பாய்ச்சிக்கொள்கையில் அவர்கள் கொள்ளும் உவகை.” அது உளமயக்கா கனவா என தேவயானி வியந்தாள். தன் கால்கள் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்ததும் உடலை இறுக்கி விழாமலிருக்க முயன்றாள்.

“என் கடன் அவ்வுச்சத்திலிருந்து இழுத்து உன்னை இருள் நிறைந்த ஆழங்களுக்குத் தள்ளுவது. இது அத்தருணம்” என்றாள் சாயை பிறிதெங்கோ இருந்து என ஒலித்த குரலில். தேவயானி இரு கைகளும் நடுங்க எதையாவது பற்றிக்கொள்ளத் துழாவி மீண்டுவந்த கைகளை ஒன்றோடொன்று சேர்த்து நெஞ்சோடு அழுத்திக்கொண்டு திறந்த வாயுடனும் ஈரம் நிறைந்த விழிகளுடனும் சாயையை நோக்கி நின்றாள்.

“இப்போது உன்னுள் கொதிக்கும் நஞ்சனைத்தையும் உமிழ்ந்து ஒழிக! அதன் பின்னரே உனக்கு மீட்பு” என்ற சாயை தன் கைகளை கழுத்துக்குப் பின் கொண்டுசென்று அணிந்திருந்த மணியாரத்தின் பட்டு நூல் முடிச்சை இழுத்து அறுத்து வீசினாள். கூரையிலிருந்து நாகக்குழவி விழுந்ததுபோல அது தரையில் நெளிந்து கிடந்தது. சரப்பொளி ஆரத்தையும் கண்டமாலையையும் மேகலையையும் அறுத்து மணிகளும் காசுகளும் சிதற நிலத்தில் எறிந்தாள். கடகங்களையும் வளையல்களையும் சிலம்புகளையும் கழற்றியிட்டாள். இடையணிந்த பொன்னூல்பின்னிய பட்டு நூலாடையையும் களைந்தபின் அங்கிருந்த பேழையொன்றின் மீது கிடந்த மரவுரி மேலாடையை எடுத்து இடைசுற்றி அணிந்தபின் “நான் செல்கிறேன். மீண்டும் நாம் காண ஊழிருந்தால் அது நிகழ்க!” என்றாள்.

அவள் திரும்பியதும் தேவயானி கைகள் காற்று உலைக்கும் மரக்கிளைகள் என பதறிச் சுழல உடைந்த குரலில் “உன்னை கொல்வேன். உன் தலைகொய்து உருட்டுவேன். இழிமகளே… உன்னை கழுவேற்றுவேன்” என்றாள். சாயை திரும்பி புன்னகையுடன் “என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது. நான் உன் மறுபாதி” என்றபின் வெளியே இறங்கி இருளில் அமிழ்ந்து மறைந்தாள். அவளைத் தொடர்ந்து ஓடிச்சென்று வாயில்சட்டத்தில் கைபற்றி நின்று வெளியே நோக்கிய தேவயானி அவள் முற்றத்தில் காற்றில் சருகுகளென சுழன்று உலைந்து அலைகொண்டிருந்த தலைகளுக்கு நடுவே புகுந்து அறிய முடியாதபடி கடந்து மறைவதைக் கண்டாள்.

tigerசில கணங்களுக்குப்பின் மீண்டு உடல் எடை மிகுந்தவள்போல தள்ளாடி மெல்ல நடந்து மஞ்சத்தை சென்றடைந்தாள். அதன் இழுபட்ட கயிறுகள் முனகும்படி விழுந்து இறகுத் தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள். அவள் உடல் துள்ளி விழுந்தது. உள்ளங்கால்கள் இரண்டும் அனலில் நின்றவை போலிருந்தன. பின் உள்ளங்கைகளும் எரியத் தொடங்கின. நாவும் மூச்சும் கண்களும் அனலென கொதித்தன. தழலெழுந்து வயிற்றை நெஞ்சை உருக்கி பற்றி எழுந்தாடத் தொடங்கியபோது முற்றிலும் காலம் இல்லாதாயிற்று.

அவள் தன்னை உணரத் தொடங்கியபோது களைத்து கைகளும் கால்களும் தனித்தனியாக உதிர்ந்து கிடக்க சித்தம் கம்பத்தில் கொடியென தனித்து படபடத்தது. கொடி கிழிந்துவிடுவதுபோல் துடித்தது. நெய்யில் சுடரென தனித்தெழுந்து வெறும்வெளியில் நின்று தவித்தது. தலையை இரு பக்கமும் அசைத்தபோது கண்கள் பெருகி வழிந்து காதுகளை அடைந்திருப்பதை உணர்ந்தாள். ஓங்கி அறைந்து நெஞ்சை உடைக்கவேண்டும் என்று வெறிகொண்டாள். ஆனால் இமைகளை அசைப்பதற்குக்கூட எண்ணத்தின் விசை எதுவும் எஞ்சியிருக்கவில்லை.

அந்த இரவு தன்னை என்ன செய்கிறதென்று அவளால் உணர முடியவில்லை. பளிங்குக் கலம் விழுந்து உடைந்து பல நூறு துண்டுகளானதுபோல் உள்ளம் வெறும் சொற்களின் தொகையாக இருந்தது. ஒன்றோடொன்று இணையாதபோது சொற்கள் முற்றிலும் பொருளற்றிருந்தன. பொருள் தேடி அவை ஒன்றையொன்று முட்டி மோதி குழம்பின. அந்த ஒழுங்கின்மையின் வலி தாளாமல் அவள் எழுந்தமர்ந்தாள். குடிலுக்குள் உலவினாள். சாளரத்தினூடாக குருதிநிறைந்த தாலமென எழுந்துவந்த நிலவை பார்த்தாள். முற்றமெங்கும் எழுந்தமர்ந்து விளையாடியும் உண்டும் குடித்தும் களித்துக்கொண்டிருந்த மக்களை நோக்கினாள். காட்சிகளில் உளம் பொருளேற்றாவிட்டால் அவற்றுக்கு ஒன்றுடனொன்று தொடர்பும் இசைவுமில்லை என்று அறிந்தாள்.

மீண்டும் வந்து சேக்கையில் படுத்து முகத்தை புதைத்துக்கொண்டாள். உடல்நோய் எளிது, நோயுறா உடல்பகுதியால் நோயை வெல்ல முயலலாம். உள்ளம் நோயுறுகையில் நோயே உள்ளமென்றாகிவிடுகிறது. இச்சொற்கள் அனைத்தையும் ஒன்றோடொன்று பொருள் கொள்ளும்படி இணைத்துவிட்டால் மட்டும் போதும். உள்ளமென்ற ஒன்று மீண்டு வந்தால் போதும். ஆனால் ஒரு சொல்லை பற்ற முயல்கையில் ஒரு நூறு சொற்கள் கிளைகளிலிருந்து எழுந்து கலைந்து கூச்சலிட்டு சுழன்று பறந்தன. பற்றிய சொல் வெறித்த விழிகளுடன் செத்துக் குளிர்ந்திருந்தது.

இவ்விரவை தான் கடக்கவே போவதில்லை என்று தோன்றியது. ஆடைகள் அணிகள் அனைத்தையும் கழற்றிவிட்டு வெறுமொரு விலங்கென இவ்விருளில் பாய்ந்து திசை எல்லைவரை ஓடினால் இவையனைத்திலிருந்தும் விடுதலை பெறக்கூடும். அந்த முடிவின்மையின் பொருளிலாமை அளித்த அச்சம் பெருகி திரும்பி வந்து ஊருக்குள் இல்லத்திற்குள் உடைகளுக்குள் புகுந்துகொள்ளச் செய்தது. நானென்பது ஓர் இன்மை என உணர்வதே துயரத்தின் உச்சம். அவ்வின்மையின்மேல் சூடிக்கொண்டவையே பெயர், குலம், தன்னிலை, ஆணவம், உடல், அணிகள், உறவுகள் அனைத்தும்.

ஏன் இத்தனை துயருறுகிறேன்? இழந்தது எதை? எண்ணியிரா வஞ்சத்தை முன்னரும் சந்தித்திருக்கிறேன். புழுதியென சருகென உதிர்க்கப்பட்டிருக்கிறேன். ஆணவமென ஒரு துளியும் எஞ்சாது கவிழ்ந்து தரையில் சிந்திய அழுக்குக் கீற்றென கிடந்திருக்கிறேன். அவ்வின்மையிலிருந்துதானே முளைத்தெழுந்தேன்? பின்னர் வென்றடைந்து அள்ளிச் சுற்றிக்கொண்ட அனைத்தும் அவ்வெறுமையின்மீது அமைந்தவையே என்று உள்ளூர அறிந்திருந்தேன் அல்லவா? இவையனைத்தும் உதிர்ந்து மீண்டும் அந்த வெறுமைக்குச் செல்லும்போது நான் இழப்பதென்ன?

இழப்பல்ல, தோற்கடிக்கப்படுதல். முற்றாக வீழ்த்தப்படுதல். முழுத் தோல்வியில் இருந்து மீண்டு எழுவது எளிதல்ல. ஆணவத்தை ஆயிரம் மடங்கு பெருக்கி எழுந்து மண்ணில் ஆழ வேரூன்றி விண்ணைப்பற்றி முகில்தொட்டு உலாவும்படி தலைதூக்கி நிற்கவேண்டியிருக்கிறது. அங்கிருந்து மீண்டும் சரிவதென்பது பெருவீழ்ச்சி. எதை இழந்தேன்? இத்தருணத்தில் அரசனென அமர்ந்திருக்கும் அவனை சிறைபிடித்து கழுவிலேற்ற என்னால் ஆணையிடமுடியும். அவை நடுவே நிற்கச் செய்யலாம். காடேகும்படி சொல்லலாம். இல்லை, அவை இயல்வதல்ல என்று அவள் உள்ளம் அறிந்திருந்தது. தன் மைந்தருக்குத் தந்தை என்பதனால், குருநகரியின் சந்திரகுலத்துக் கொடிவழியின் குருதி என்பதனால்.

நான் அடைந்ததனைத்தும் அவன் உவந்து அளித்ததே என்று அறிந்துகொண்டதே இத்தருணத்தின் தோல்வியா? அவன் அளிக்காத ஒன்றும் என்னில் எஞ்சவில்லை என்று எண்ணும் தன்னிரக்கமா? உயிரை மாய்த்துக் கொள்ளலாம். அது இத்தருணத்தின் தோல்வியை மீண்டும் வலியுறுத்துவது. இப்புள்ளியிலிருந்து சீறி மேலெழுவது எப்படி? இக்கணத்திலிருந்து விண்ணளாவ எழுவது எப்படி? இனி ஒளி உண்டு வளர இயலாது. இருள் குடித்து மண்ணுக்குள், பாதாளங்களில் விரிவதே வழியென்றாகும். பெருவஞ்சமே சுக்ரரின் மகளுக்கு தெய்வங்கள் வகுத்ததென்பதாகும்.

தெய்வங்களே, மூதன்னையரே, எத்தனை வெறுக்கிறேன்? கடுங்கசப்பன்றி ஒரு சொல் இல்லை. இத்தனை தொலைவுக்கு ஓர் உயிரை பிறிதொன்று வெறுக்கலாகுமா? தெய்வங்கள் சினக்குமோ? ஆனால் செய்வதொன்றுமில்லை. என்றும் அவனை வெறுத்துக்கொண்டுதான் இருந்தேன். என் உடலை கைப்பற்றியவன். என் உடலை அவன் ஆள்கையில் உள்ளிருந்த கசப்பு நொதித்து நுரைத்து பெருகியது. அவனுக்கு நான் என்னை அளித்தேன்? அன்று என் அகம் களித்திருந்தது. இவனை ஒரு கணமும் விரும்பியதில்லை. அதனால்தானா? ஆம், அதனால்தான். தன் உடல்வெம்மை சேக்கையை கொதிக்கச்செய்வதை உணர்ந்து எழுந்தமர்ந்தாள். எழுக இருள்! எழுக நஞ்சு! எழுக ஆழுலகங்கள்! இரு கைகளின் நகங்களும் கைவெள்ளையை குத்திக்கிழிக்க பற்கள் உதடுகளில் குருதியுடன் இறங்கின.

புற்றுவாய் திறந்தெழும் ஈசல்களென என்னிலிருந்து கிளம்பி இவ்வறை நிறைத்து சுழன்று பறந்து சிறகுதிர்ந்து ஊர்ந்துகொண்டிருக்கும் இவ்வெண்ணங்கள் எவை? ஒவ்வொரு தருணத்திலும் மானுட உள்ளத்தில் எண்ணங்களைப் பெய்யும் தெய்வங்கள் விழி அறியாதபடி சுற்றிலும் காத்து நிற்கின்றன. முன்பு இத்தருணத்தை எதிர்கொண்ட மானுடர் நுரைத்து பெருக்கி இங்கு விட்டுச்சென்ற சொற்களா இவை? என்றும் இங்குள்ளனவா? மானுடர் பிறந்து வந்து இவற்றில் பொருந்தி பின் விலகி மறைகின்றார்களா? நதியென காற்றென கடலென மலைகள் என இச்சொற்கள் முடிவிலி வரை இருந்துகொண்டிருக்குமா என்ன?

அவள் தன்னினைவு அழிய விரும்பினாள். மது அருந்தலாம். அகிஃபீனாவுக்கு ஆணையிடலாம். கிருபரை அழைத்துச் சொன்னால் விரைவிலேயே அவை இங்கு வரும். ஆனால் அவள் இருக்கும் நிலை அவர்களுக்கு தெரிந்துவிடும். மூவரையும் இளவரசர்கள் என அவள் அறிவித்துவிட்டதை இப்பொழுது குருநகரியின் அகம்படியினரும் காவலரும் அறிந்திருப்பார்கள். இவ்விரவு முழுக்க அவர்கள் அதைப்பற்றித்தான் பேசி சலிக்கப்போகிறார்கள். அனைத்தையும் களைந்து வெறும் பெண்ணென அவர்கள் முன் சென்று நிற்பது என்பது சுட்டுப்பழுத்த வாள் ஒன்றை நெஞ்சில் தைத்துக்கொள்வதற்கு நிகர். பிறிதொன்றில்லை. இவ்விரவுதான்… இதைக் கடப்பதொன்றுதான் வழி. அந்தக் கீழெல்லையில் ஒரு கீற்றுஒளி எழுவது வரைதான்.

ஒழுக்கு எத்தனை எடைகொண்டதாக ஆயினும், கணங்கள் சுட்டுப்பழுத்து வெம்மை கொண்டிருப்பினும், சென்றவையும் வருபவையும் குருதி சுவைக்கும் முட்பெருக்கென்று சூழினும் காலத்தால் நின்றுவிட முடியாதெனும் அருளைக் கொண்டுள்ளது மானுடம். கணம் பிறிதொரு கணம் மீண்டும் ஒரு கணம் என அது உருண்டு முன்சென்றே ஆகவேண்டும். அள்ளி தானளிக்கும் அனைத்தையும் இறந்தகாலம் என்று ஆக்கியே ஆகவேண்டும். தேர் கடந்து சென்றபின் நிலைத்திருக்கும் திறன் புழுதிக்கு இல்லை.

வெளியே முற்றத்திலிருந்து ஒவ்வொருவராக எழுந்து கடந்து சென்றனர். சூழ்ந்திருந்த குடில்களில் விளக்குகள் அனைத்தும் அணைந்தன. மறுஎல்லையில் மேடைப்பணியின் குறை தீர்க்கும் தச்சர்களின் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. பேச்சுக்குரல்கள், மரை திருகும் ஒலிகள். அங்கிருந்து நெய்விளக்குகளின் ஒளி செந்நிறக் கசிவாக பரந்து முற்றத்து மண்ணில் நீண்டிருந்தது. ஒளியை அங்கு சென்று தொட்டு காலால் கலைக்க முடியுமென்பதுபோல. இப்பெருவலியை நானே எனக்கு அளித்துக்கொள்கிறேன். ஆணவம் மிக்கவர்கள் தங்களை துன்புறுத்துவதில் பெருந்திறன் கொண்டவர்கள்.

எத்தனை இனிது குருதிச் சுவை? தன் குருதிச் சுவை. தன் சிதைச் சாம்பலைத் தொட்டு நெற்றியிலிடும் வாய்ப்பு ஒருவனுக்கு அளிக்கப்படுமென்றால் அவனடையும் பெருநிறைவுதான் என்ன? பேரரசி இங்கு இறந்தாள். வெளியே சென்று அப்பெருமுரசின் முழைதடி எடுத்து மும்முறை முழக்கி உலகுக்கு அறிவிக்க வேண்டும் அதை. இம்மேடையில் இதுவரை நடந்த நாடகம் முடிவுக்கு வருகிறது. பெருநதி மீண்டும் ஊற்றுக்குத் திரும்புவதுபோல சுக்ரரின் சிறு குடிலுக்குச் சென்று அமையவேண்டும். அங்கு அவள் விட்டு வந்த இளமை காத்திருக்கக்கூடும். கற்று நிறுத்திய காவியத்தின் இறுதிச்சொல்லும் நுனி துடித்து காத்திருக்கக்கூடும்.

கிளம்புவதொன்றே வழி. உளம் உளத்தின்மேல் செலுத்திய பெருவிசையாலேயே அவள் களைப்புற்றாள். மஞ்சத்தில் சென்று படுத்தபோது ஒன்றோடொன்று முட்டிக்கொண்ட நூறு சொற்றொடர்கள் இறுகி அசைவிழந்து நின்றன. பின் அவள் உளநெருக்கடி மட்டுமே அளிக்கும் ஆழ்துயிலில் அமிழ்ந்தாள்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 82

82. மலைநிலம்

அசோகவனியிலிருந்து ஹிரண்யபுரிக்குச் சென்று சுக்ரரைப் பார்த்து வருவதாகத்தான் தேவயானியின் முதல் திட்டம் அமைந்திருந்தது. அது மாற்றப்பட்டுவிட்டதை சாயை கிளம்புவதற்கு முந்தையநாள் கிருபரின் நாவிலிருந்துதான் அறிந்தாள். பயணத்துக்கான தேர்கள் ஒருங்கிவிட்டனவா என்று பார்ப்பதற்காக கொட்டிலுக்குச் சென்றிருந்த அவள் மலைப்பாதைகளில் ஊர்வதற்குரிய அகன்ற பட்டைகொண்ட ஆறு பெரிய சகடங்களில் அமைந்த தேர் அரசிக்கென ஒருக்கப்பட்டிருப்பதை கண்டாள். இரண்டு புரவிகளுடன் விரைவிலாது செல்லும் அது நெடும்பயணத்திற்கு உகந்ததல்ல. சினத்துடன் திரும்பி தன்னருகே நின்றிருந்த கிருபரிடம் “இத்தேரை ஒருக்கும்படி ஆணையிட்டது யார்?” என்றாள்.

“மலைப்பாதைப் பயணம் அல்லவா? தேவி, பல இடங்களில் வெறும் பாறைப்பரப்பிலும் சரளைக்கல் சரிவிலும் இறங்கிச் செல்கிறது. இரட்டைச்சகடங்கள் கொண்ட விரைவுத்தேரில் பயணம் செய்வது இயலாது” என்றார் கிருபர். “இங்கிருந்து ஹிரண்யபுரி வரை சீரான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதை நான் உமக்கு சொல்ல வேண்டியதில்லை” என்றாள் சாயை. குழப்பத்துடன் கிருபர் வணங்கி “ஆனால் என்னிடம் அரசி ஹிரண்யபுரிக்குச் செல்வதாக சொல்லவில்லையே?” என்றார். அப்போதும் தானறியாத ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று சாயை ஐயம் கொள்ளவில்லை. மேலும் சினத்துடன் “அத்தகைய ஆணைகளை பிறப்பிக்க வேண்டியவள் நான். இங்கிருந்து பேரரசியும் அணுக்கப்படையினரும் மட்டும் ஹிரண்யபுரிக்குச் செல்கிறார்கள். பிறர் குருநகரிக்குச் செல்கிறார்கள்” என்றாள்.

கிருபர் மேலும் குழப்பத்துடன் தலைவணங்கி “ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் பேரரசி அவரே என்னை அழைத்து சரபஞ்சரம் என்னும் மலையூருக்கு செல்லவிருப்பதாகச் சொல்லி அதற்காக தேர் ஒருக்கும்படி ஆணையிட்டார்களே…?” என்றார். ஒரு கணம் விழி நிலைக்க உதடு மெல்ல பிரிய உளம் செயலிழந்து மீண்டு வந்த சாயை “பேரரசியேவா…?” என்றாள். “அவரே தன் வாயால் உரைத்தாரா?” கிருபர் “ஆம். என்னை அவர்களின் தனியறைக்கு அழைத்தார்கள். இவ்வாணையை பிறப்பித்தார்கள். வழக்கம்போல இது அரசு சம்பந்தமாக இருக்கவேண்டுமென்பதனால் பிறரிடம் நான் பகிர்ந்துகொள்ளவில்லை. சரபஞ்சரம் செல்வதற்கான பாதையை புரவி வீரன் ஒருவனை அனுப்பி மதிப்பிட்டு வரச்சொன்னேன். அதன்படி இத்தேரை அமைத்தேன். இது சேற்றில் சிக்காது. மலைச்சரிவுகளில் சகடப் பிடி விடாது. மூங்கில்சுருள்களின் மேல் அமைந்திருப்பதனால் பீடத்தில் அதிர்வுகளும் இருக்காது” என்றார்.

சாயை தன்னை தொகுத்துக்கொண்டு “ஆம். சரபஞ்சரத்து பழங்குடித் தலைவருடன் ஒரு சந்திப்பு இருந்தது. அங்கிருந்துதான் ஹிரண்யபுரிக்குச் செல்வதற்கான எண்ணம். நெடுந்தொலைவுக்கான விரைவுத்தேர்கள் அங்கு சென்று வந்தபின் இங்கு ஒருங்கியிருந்தால் போதும்” என்றாள். அவளுக்கு செய்தி தெரிவிக்கப்படவில்லை என்பதை அதற்குள் உணர்ந்துகொண்ட கிருபர் கண்களுக்குள் மின்னிய துளிப் புன்னகையை மறைக்க விழிகளை தாழ்த்திக்கொண்டு “ஆணை, தேவி. ஆனால் சரபஞ்சரத்திலிருந்து திரும்ப இங்கு வருவதாக எண்ணமிருப்பதுபோல அரசி கூறவில்லை. அங்கிருந்து அவர்களும் குருநகரிக்கே செல்வதாகத்தான் சொன்னார்கள்” என்றார்.

மறுசொல் உரைக்காமல் ஆடை சரசரக்க அணிகள் குலுங்க திரும்பி நடந்து சாயை அரண்மனைக்குள் புகுந்தாள். படிகளில் ஏறியபோது அவள் காலடி ஓசையில் தெரிந்த சினம் காவலர்களையும் ஏவலர்களையும் நடுங்கி அசைவிழந்து நிற்கச்செய்தது. இடைநாழியில் நடந்து தேவயானியின் அறைக்கதவை ஓசையுடன் திறந்து உள்ளே சென்றாள். அங்கு கற்றுச்சொல்லிக்கு அரசாணையொன்றை கூறிக்கொண்டிருந்த தேவயானி மூடியிருந்த விழிகளைத் திறந்து அவளை நோக்கி முகக்குறிப்பால் என்ன என்று வினவினாள். “நாம் ஹிரண்யபுரிக்கு செல்வதாக இல்லையா?” என்றாள் சாயை.

தேவயானி “இல்லை, இரு நாட்களுக்கு முன் சரபஞ்சரம் சென்று அங்கு உள்ள பழங்குடி கலைவிழவொன்றை வாழ்த்திவிட்டுச் செல்லலாம் என்னும் எண்ணம் வந்தது. இங்குள்ள தொல்குடிகள் நம்மிடம் அணுக்கமாகிவிட்டார்கள். அணுகாத தொல்குடிகளில் பலர் அவ்விழவில் கலந்துகொள்கிறார்கள். அங்கு சென்று அவர்களுக்கு பரிசுகளும் அரசுப்பட்டங்களும் அளித்தால் மேலும் பலரை நமது அரசு அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்” என்றாள். சாயை கூர்ந்து நோக்கியபடி “நாம் அவர்களை தேடிச்செல்வது திட்டமாக இருந்தால் இங்கு வந்து தங்கி அவர்களை வரச்சொல்லியிருக்க வேண்டாமே…?” என்றாள்.

“ஆம், நம்மைத் தேடி வந்தவர்கள்தான் நமக்கு முதன்மையானவர்கள். நாம் தேடிச் செல்பவர்கள் எப்போதும் நம்மால் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். நம்மைத் தேடி வந்தவர்களைக் கொண்டு நாம் தேடிச்செல்பவர்களை ஆட்சி செய்யவேண்டும்” என்றாள் தேவயானி. சாயை “இந்த வேறுபாடு அவர்களுக்குத் தெரிந்தால் நம்மை அணுகுவார்களா என்ன? தங்கள் குடியின் ஒரு சாராருக்குக் கீழே ஒடுங்குவது அவர்களுக்கு உகந்ததாக இருக்குமா?” என்றாள்.

“அவ்வேறுபாட்டை ஐந்தாறு வருடங்களுக்கு எவ்வகையிலும் காட்டுவதாக இல்லை. அக்குடிகள் நமக்கு ஒத்துழைத்தார்கள் என்றால் அவர்கள் வாழும் சிற்றூர்கள் அனைத்தையும் இணைத்து மூன்று வணிகச்சாலைகள் அமைக்க எண்ணியுள்ளேன். சாலைகள் ஒவ்வொரு சிற்றூருக்கும் புறவுலகை கொண்டுவந்து சேர்க்கின்றன. புறவுலகு என்பது எல்லையற்ற ஈர்ப்புகளால் ஆனது. அதன் சுவையறிந்தவர்கள் பின்னர் தங்கள் சிறுவட்டங்களுக்குள் வாழமுடியாது. இச்சிற்றூர்கள் அனைத்தும் வணிகத்தால் இணைக்கப்பட்ட பிறகே அங்கிருந்து நமக்கு வரியும் திறையும் வரத்தொடங்கும். அதன்பின் அவற்றைத் தொகுத்து நமக்களிக்கும் பணியை நம்மை நாடி வந்த பழங்குடிகளுக்கு அளிப்போம். அவற்றை அளிக்கவில்லையென்றால் பிற குடிகளை ஒடுக்கி ஆள படைக்கலம் கொடுப்போம்” என்றாள்.

மறுசொல்லில்லாமல் சாயை அங்கிருந்த பீடத்தில் அமர்ந்தாள். தேவயானி விழி திருப்பி கற்றுச்சொல்லியிடம் அவள் விட்ட சொல்லிலிருந்து மறு சொல்லெடுத்து உரைக்கத் தொடங்கினாள். எழுத்தாணி ஓலையை கீறிச்செல்லும் மெல்லிய ஓசை மட்டும் அறைக்குள் கேட்டது. தனக்குள் ஆழ்ந்தவளாக இமைகளுக்குள் தோன்றிய எதிர்ப்பக்க முகத்தை நோக்கி மெல்லிய குரலில் தேவயானி சொல்லடுக்கிச் சென்றாள். மணிகளைக் கோத்து நகை செய்பவள்போல. பன்னிரு திருமுகங்கள் எழுதப்பட்டு முடித்ததும் கற்றுச்சொல்லி ஓலைகளை எண்ணி அடுக்கி பட்டுத்துணியால் சுற்றி மூங்கில் கூடையிலிட்டு தோளில் மாட்டிக்கொண்டு எழுந்தான். தலைவணங்கி புறம் காட்டாது வெளியே சென்று கதவை மூடினான்.

கதவு முற்றிலும் பொருந்தியபின் விழிதிருப்பிய சாயை உரக்க “நாம் எதற்காக சரபஞ்சரம் செல்கிறோம்?” என்றாள். “அங்கு பழங்குடி கலைக்குழுக்கள் அனைத்தும் வருகின்றன. கலைநிகழ்வென்றால் வருவதற்கு அவர்களின் தன்முனைப்பு தடையாக இல்லை” என்றாள் தேவயானி. சாயை ஒருகணத்தில் நெடுந்தொலைவை தாவிக் கடந்தாள். “சர்மிஷ்டையின் மைந்தர்கள் பயிலும் குருநிலையும்கூட அல்லவா?” என்றாள். தேவயானி அவள் கண்களை நேர்நோக்கி “ஆம், அவர்கள் வரவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறேன்” என்றாள்.

“அம்மைந்தரை இங்கு வரச்சொல்லி பார்க்கலாமே?” என்றாள் சாயை. “அவள் நம் சேடி” என்றாள் தேவயானி. “நாம் அவ்வாறு தகுதி இறங்குவது என்னால் ஏற்றுக்கொள்ளப்படகூடியதல்ல.” சாயை “அங்கு சென்று நோக்கினாலும் தகுதியிறக்கமே. தன்னிடமிருந்து எவர் எதை மறைக்க முடியும்?” என்றாள். தேவயானி “என்னிடமிருந்து எதையும் மறைக்க வேண்டியதில்லை. ஆனால் அரசி என ஓர் ஆணையை என் தனிப்பட்ட உளக்குழப்பங்களுக்கு விடைகாணும்பொருட்டு நான் விடுக்கமுடியாது” என்றபின் எழுந்து “மிகச்சிறிய முள், தாமரை மயிர்போல. ஆனால் கண்ணுக்குள் குத்தியதென்றால் அதுவும் வலி மிகும், துயில் களையும். அதை உடனடியாகக் களைந்துவிடுவது நன்றென்று தோன்றியது” என்றாள்.

“அதை என்னிடமிருந்து ஏன் மறைக்கவேண்டும்?’’ என்றாள் சாயை. “உன்னிடம் இருந்து மறைக்கவேண்டுமென்று தோன்றியது. ஏனெனில் என்னிடமிருந்தே மறைக்க விரும்பியது அது” என்ற தேவயானி பீடத்தில் இருந்த சால்வையை எடுத்து தோளில் இட்டுச் சுற்றியபடி “நான் ஆடை மாற்றிக்கொள்ள வேண்டும். இன்று ஏழு தொல்குடிகளின் அன்னைத் தெய்வங்களுக்கு பூசையும் கொடைவிழவும் நிகழ்கிறது” என்றாள். மறுசொல்லின்றி சாயை எழுந்து நின்றாள்.

tigerசரபஞ்சரம் அசோகவனியிலிருந்து வடகிழக்காக இமயச்சரிவில் இரு சிறிய மலைகளின் குவிமடிப்புக்குள் அமைந்திருந்தது. அங்கு செல்வதற்கு இடைச்சரடென மலையின் வளைவை சுற்றிசெல்லும் கழுதைப்பாதை மட்டுமே இருந்தது. பேரரசி அங்கு செல்லும் எண்ணத்தை வெளியிட்ட உடனே குருநகரியின் சாலைப்பணிப் படையினர் கிளம்பிச்சென்று இரவும் பகலும் உழைத்து தேர்ப்பாதை ஒன்றை உருவாக்கினர். எட்டு சிற்றாறுகளுக்குமேல் மூங்கில்கள் ஊன்றி மரப்பட்டைகள் அறைந்து பாலங்கள் உருவாக்கப்பட்டன. நீர் பெருக்கெடுத்த சுரவாகினி என்னும் நதியொன்றுக்குமேல் படகுகளை விலா சேர்த்து நிறுத்தி மேலே பலகை பரப்பி மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டது. அறுபத்தியெட்டு மலைவளைவுகளில் மண்ணை வெட்டிச் சரித்து விளிம்புகளில் மூங்கில்களை அறைந்து எழுப்பி பலகைவேய்ந்து மண்சாலையுடன் இணைத்து தேர்ச்சாலை உருவாக்கப்பட்டது.

எடைமிக்க தேர்கள் ஏதும் அப்பாதையில் செல்ல வேண்டாம் என்று கிருபர் ஆணையிட்டிருந்தமையால் அரசியின் பொருட்கள் அனைத்தும் பிறிதொரு குளம்புப்பாதை வழியாக கோவேறு கழுதைகள்மேல் பொதியென சுமத்தப்பட்டு முந்தையநாளே அங்கு கொண்டு செல்லப்பட்டன. செல்லும் வழியில் நூறு பாறைகள்மேல் காவல்மேடைகள் அமைக்கப்பட்டு வில்லவர்கள் முன்னரே சென்று தங்கி காவல் புரிந்தனர்.

முதல் புலரியிலேயே அசோகவனியிலிருந்து தேவயானி கிளம்பினாள். அரண்மனை முகப்பில் காவலர்தலைவனும் குடித்தலைவரும் அசோகவனியின் மூதன்னையரும் கூடிநின்று அவளை அரிமலர் சொரிந்து வணங்கி முகமன் உரைத்து வழியனுப்பினர். “எங்கள் நகர் இதழ்விரித்து அருமலராயிற்று. அதில் மகரந்தம் சுமந்த பட்டுப்பூச்சியென பேரரசி வந்தமர தெய்வங்கள் அருள் புரிந்தன. இது காயாகி கனியாகட்டும். விதை பொலியட்டும். நிலம்நிறைந்து மலர்க்காடென பெருகட்டும்!” என்று அசோகவனியின் சூதரான சுப்ரதர் பாடினார். குடித்தலைவர்கள் நிரையாக முன்வந்து தம் கோலை அவள் கால் நோக்கி தாழ்த்தி “எங்கள் குடியும் கொடிவழியும் என்றும் பேரரசியின் தேரின் சகடங்களென நிலை கொள்வதாக!” என்றார்கள். சூழ்ந்திருந்த குடியினர் “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று துணைக்குரல் கொடுத்தனர்.

மூதன்னையர் நறுமணச்செங்குருதி நீரை அவள் தேருக்கு முன் சுற்றி இடப்பக்கமும் வலப்பக்கமும் வீசினர். மலர் தூவி அவள் புரவியையும் தேரையும் வாழ்த்தியபின் குரவையிட்டபடி இரு பக்கமும் விலகி வணங்கினர். தன் தேர்த்தட்டில் எழுந்து பின் திரும்பி அவர்களுக்கு முகம் காட்டி கைகூப்பி நின்ற தேவயானி அரண்மனைக்கும் நகருக்கும் புறம் காட்டாமல் விலகிச்சென்றாள். அவள் முகம் அகன்று சென்றபோது கூடி நின்றவர்கள் அனைவரும் கணம் கணமெனப் பெருகிய உணர்வெழுச்சியுடன் வாழ்த்து கூவினர். “பேரரசி என்றும் இங்கிருப்பார். இந்நகரின் சுடர் ஒருபோதும் ஒளி குறையாது” என்றார் அமைச்சர் கிருபர்.

“அரசி இங்கு வந்து சென்றதை கொண்டாடும் முகமாக அசோகவனியின் தென்கிழக்கு மூலையில் அசோகசுந்தரி அன்னையின் ஆலயத்துக்கு அருகிலேயே பேரரசிக்கும் ஓர் ஆலயம் அமைப்போம். நம் குலதெய்வமென அருள்புரிந்தும் ஆணையிட்டும் என்றும் அவர்கள் இங்கு இருப்பார்கள்” என்றான் காவலர்தலைவன். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று குடிகள் ஒருங்கே குரல் எடுத்தனர். கூடி நின்றிருந்த முதுமகள்கள் உளம் பொறாது கண்ணீர் சிந்தினர்.

குடிகளின் வாழ்த்தொலியும் முரசொலியும் கொம்பொலியும் சூழ நகர்த்தெருக்களினூடாக தேவயானியின் தேர் சென்றது. அவளுக்கு முன் கண்ணுக்குத் தெரியாத திரைகள் ஒவ்வொன்றாக வந்து இணைந்து அவளை மறைத்து அப்பால் கொண்டு சென்றன. “பறவைகள் புலம்ப விலங்குகள் விழிமயங்கி நிற்க பொன்னுருகி அனலாகி சூரியன் அணைவதுபோல” என்றாள் மூதன்னை ஒருத்தி. “காலத்தில் வெளியில் எண்ணத்தில் மூழ்கி மறுநாள் கனவில் ஒளியுடன் எழுவாள் அன்னை” என்றார் சூதர் ஒருவர்.

அசோகவனியின் இறுதித் தோரணவாயிலை கடந்த பின்னர் தேவயானி தன் பீடத்தில் அமர்ந்தாள். சலிப்புடன் கால்களை நீட்டிக்கொண்டு உடல் தளர்த்தி கண்களை மூடினாள். சாயை அவளிடம் குனிந்து “அங்கு சென்று சேர முப்பத்தாறு நாழிகை ஆகும். இடையில் ஓர் இடத்தில் மட்டுமே ஓய்வெடுக்க ஒருங்கு செய்யப்பட்டுள்ளது” என்றாள். விழிகளை மூடியபடி தேவயானி தலையசைத்தாள். சாயை அவள் முகத்தையே நோக்கி நின்றாள். அவள் விழிகள் இமைகளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தன. உதடுகள் எதையோ சொல்வதற்கு முந்தைய அசைவு காட்டி இணைந்தும் மெல்ல பிரிந்தும் நெளிந்து கொண்டிருந்தன.

சாயை விழிகளைத் திருப்பி இருபுறமும் ஒழுகிச் சென்றுகொண்டிருந்த அடர்காட்டை பார்த்துக்கொண்டிருந்தாள். சரிவுகளில் தேர்ப்பாதையில் சகடங்கள் ஏறியதும் மரப்பலகைகளின் நெறிவோசையும் அதிர்வோசையும் எழுந்தன. துடிமுரசோசை எழுப்பியபடி புரவிக்குளம்புகள் கடந்துசென்றன. இறுகக் கட்டிய தோலில் இருந்து ஈரத்தோலுக்கு என மண்பரப்புக்கு புரவிக்குளம்புகள் சென்றன. மரப்பாலத்திற்கு அடியில் கரிய உருளைப்பாறைகளில் மோதி நுரைத்து, வெள்ளி காற்சரம்போல் ஓடைகள் சென்றன.

வலப்பக்கம் நுரைத்திறங்கிய காட்டருவி ஒன்று மரப்பாலத்திற்கு அடியில் ஆயிரம் காலட்டை என ஊன்றி நின்ற மூங்கில்களால் நரைகுழலை சீப்பென சீவப்பட்டு அங்கு நின்ற ஐந்து பாறைகளால் ஐம்புரிகளென பகுக்கப்பட்டு மறுபக்கம் ஒன்றிணைந்து உருளைப்பாறைகளில் முட்டி நிறைத்து நீர்நுரை எழுப்பி முழங்கி கீழிறங்கி மிக ஆழத்தில் மீண்டும் வெள்ளி வளைவென மாறி நாணல் பசுமைக்குள் புதைந்து மறைந்தது. பொலியும் நீர்த் திவலைகள் ஒவ்வொன்றும் பரல்மீன்கள் போலிருப்பதாக அவள் நினைத்தாள். பச்சைப் பட்டாடைக்குள் ஒளிக்கப்பட்ட கூர்வாள் என ஓடைகள் கடந்து சென்றன. நரைத்த ஐம்பால். அவள் திரும்பி தேவயானியை பார்த்தாள். இவள் குழல் ஒருநாள் நரைக்கும். அவள் புன்னகை செய்தாள்.

வழியில் அவர்கள் தங்குவதற்கென்று யானைத்தோல் இழுத்துக் கட்டப்பட்ட நான்கு கூடாரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. புரவிகள் அவிழ்க்கப்பட்டு ஓடைகளில் நீர் அருந்துவதற்காக கட்டப்பட்டன. கூடாரத்திற்குள் மூங்கில் பட்டைகள் அடுக்கி செய்யப்பட்ட இரு மஞ்சங்களில் புதிய மரவுரிச் சேக்கையும் இறகுத் தலையணையும் போடப்பட்டிருந்தன. தேவயானி தன் மேலாடையை களைந்தபின் மஞ்சத்தில் படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.

அப்பயணம் முழுக்க அவள் ஒரு சொல்லும் உரைக்கவில்லை என்பதை சாயை எண்ணிக்கொண்டாள். விழி திறக்காமல் தலை சாய்ந்தே இருப்பதைக் கொண்டு முந்தைய இரவெல்லாம் அவள் துயிலவில்லை என்று உய்த்துணர்ந்தாள். அப்போதுகூட அவள் உடலை துயில் வந்து அழுத்தி வளையல்கள் சரிய கைகள் தளர்ந்து மலர்ந்தாலும் உடனே உள்ளம் துரட்டியெனக் குத்தி துயில் விலக்கி அவளைத் திமிறி எழச்செய்துகொண்டே இருந்தது. கண்களை மூடிக்கொண்டு உடனே சாயை துயிலில் ஆழ்ந்தாள். புலிபோலவே துயிலிலும் அவள் இமைகள் அசைந்துகொண்டே இருப்பது வழக்கம்.

அன்று அந்தியில் அவர்கள் சரபஞ்சரத்தின் முதல் குலக்குறி பொறிக்கப்பட்ட பெருந்தூணை சென்றடைந்தனர். ஓங்கிய தேவதாரு மரத்தில் செதுக்கப்பட்ட கழுகுகளும் பாம்புகளும் ஆந்தைகளும் பல்லிகளும் சிம்மங்களும் ஆமைகளும் யானைகளும் இடைவெளி நிரப்பிக்கலந்து உருண்டு தூணென்றாகி தலைமேல் எழுந்து நின்றன. உச்சியில் சிறகு விரித்தெழுந்த செம்பருந்தொன்றின் பாவை அமைக்கப்பட்டிருந்தது.

அங்கு விழவு நிகழ்வதன் அடையாளமாக அத்தூணில் மலர்மாலைகள் சுற்றப்பட்டிருந்தன. அதன் அருகே முழவுகளும் கொம்புகளுமாக நின்றிருந்த தொல்குடியினர் தொலைவில் பேரரசியின் படைநிரை தெரிவதைக் கண்டதும் முழவுகளை ஒலிக்கத் தொடங்கினர். காட்டுக்குரங்கின் ஒலியென முதல் முரசு எழுந்தது. களிறின் பிளிறலென காட்டுக்குள் பெருமுரசுகள் முழங்கத்தொடங்கின. குதிரைகள் என கொம்புகள் கனைத்தன. கொடியேந்திய முதல் கவசவீரன் கரிய புரவியில் அணுகியதும் காத்து நின்றிருந்த காவலர்தலைவன் இறகுவிரித்த கழுகு பொறிக்கப்பட்ட தன் பெருங்கோலைத் தாழ்த்தி அவனை வணங்கி வலக்கையைத் தூக்கி வரவேற்புக்குறி காட்டினான். தொடர்ந்து முழுக்கவச உடையணிந்த புரவி வீரர்கள் இரண்டிரண்டு பேராக நெருங்கி வந்தனர். புரவிகளின் ஓசையை சூழ்ந்திருந்த மலைகள் அனைத்தும் தனித்தனியாக எதிரொலிக்க அனைத்து மலைகளும் முரசுகளென விம்மின.

அமைச்சர் கிருபரின் தேர் முதலில் வந்தது. அதைத் தொடர்ந்து தேவயானியின் ஆறு சகடத்தேர் கரிய புரவிகளால் இழுக்கப்பட்டு மெல்லிய அதிர்வுகளுடனும் குலுக்கல்களுடனும் அணுகியது. பழங்குடித் தலைவன் தன் கைகளைத் தூக்கி அசைக்க காடுகளுக்குள் பரந்திருந்த அனைத்துப் பெருமுரசுகளும் பேரோசையுடன் ஒலிக்கத் தொடங்கின. மரக்கூட்டங்களிலிருந்து ஆவியெழுவதுபோல் பல்லாயிரக்கணக்கான பறவைகள் அந்தியடங்கல் கலைந்து அஞ்சி வானில் எழுந்தன.

tigerஏறத்தாழ முன்னூறு குடில்கள் மட்டுமே கொண்ட மலைச்சிற்றூர் சரபஞ்சரம். தொல்குடிகளுக்குரிய வகையில் முற்றிலும் வட்டவடிவமாக அச்சிற்றூர் கட்டப்பட்டிருந்தது. அதைச் சுற்றிய இரண்டு ஆள் ஆழமுள்ள அகழிக்கு அப்பால் முள்மரங்களை நெருக்கமாக நட்டு இணைத்துக்கட்டிய வேலிக்குள் ஒன்றுக்குள் ஒன்றென ஒன்பது சுற்றுகளாக குடில்கள் அமைந்திருந்தன. ஒன்றுடன் ஒன்று முகம் நோக்கிய குடில்நிரைகளுக்கு நடுவே இருவர் கைகோத்துச் செல்லும் அளவுக்கே தெருக்கள் அகலம் கொண்டிருந்தன. கோட்டை வாயில் முள்மூங்கில் படலால் செய்யப்பட்டு இரு பெருமரங்களில் கட்டப்பட்டிருந்தது. அம்மரங்களின் மீது அமைந்த பந்தமேடைகளில் கொடிகள் என தழல் பறந்தலைந்தது.

அகழிக்கு மேல் அமைந்த மரப்பாலத்தினூடாக ஓசையிட்டபடி தேவயானியின் தேர் உள்ளே நுழைந்தது. வாயிலில் காத்திருந்த குடித்தலைவர்களும் மூதன்னையரும் இளையோரும் பெண்களும் வாழ்த்தொலி எழுப்பியும் குரவையிட்டும் அவளை வரவேற்றனர். தேரிலிருந்து இறங்கி அவள் மண்ணில் கால்வைத்தபோது மங்கலத் தாலங்கள் ஏந்திய மங்கையர் முதலில் வந்து மலர்தூவி வணங்கி அவளை ஊருக்குள் கொண்டுசென்றனர். குலமூத்தார் தங்கள் குடிக்கோல்களைத் தாழ்த்தி அவளை அவ்வூரில் அமையும்படி கோரினர். ஊர் நடுவே இருந்த பெரிய முற்றம் அவர்கள் தங்கள் கால்நடைகளை கட்டுவதற்குரியது. கால்நடைகள் காட்டுக்குள் கொண்டுசெல்லப்பட்டு கட்டுத்தறிகள் அகற்றப்பட்டு அது விழவுக்களமென ஒருக்கப்பட்டிருந்தது. வெயிலில் காய்ந்த சாணிமணம் நிறைந்திருந்த அவ்வட்டத்தின் கிழக்கு மூலையில் மூங்கிலால் அமைக்கப்பட்ட மேடையை அமைக்கும் பணி அப்போதும் நடந்து கொண்டிருந்தது.

மேற்கு மூலையில் தேவயானி தங்குவதற்காக மூன்று அடுக்கு மகுடக்கூரையுடன் புதிய பெருங்குடிலொன்று கட்டப்பட்டிருந்தது. அவளை அக்குடில் நோக்கி அழைத்துச்சென்ற குடிமூத்தார் “இச்சிற்றூரின் பொருட்களைக் கொண்டு முடிந்தவரை சிறப்புற இக்குடிலை அமைத்திருக்கிறோம், அரசி. தாங்கள் இளைப்பாற வேண்டும்” என்றார். ஈச்சஓலைக் கூரையிட்ட வட்டவடிவமான குடில் தரையிலிருந்து ஒரு ஆள் உயரத்தில் மூங்கில் கால் மேல் நின்றுகொண்டிருந்தது. பலகைப்படிகள் இருபுறமும் பக்கவாட்டில் ஏறி வாயிலினூடாக உள்ளே சென்றன. குடில்களில் பல அறைகள் அமைக்கும் வழக்கம் அக்குடிகளுக்கு இருக்கவில்லை என்பதனால் வட்டப் பெருங்கூடை ஒன்றை கவிழ்த்தியதுபோல ஒற்றை அறை மட்டும் கொண்டிருந்தது அது. மூன்று சாளரங்களினூடாக காற்று உள்ளே வந்து சுழன்று சென்றது.

கூரை குடையின் உட்பகுதிபோல் வளைந்து சென்று இணைந்த தொண்ணூற்றெட்டு மூங்கில்களால் ஆனது. அதன் மையமுடிச்சிலிருந்து தொங்கிய பிரம்புபின்னி அரவுடல் என அமைக்கப்பட்டிருந்த சரடின் முனையில் மரத்தாலான கொத்துவிளக்கு தொங்கியது. அதன் கைக்குழிகள் அனைத்திலும் மண்ணகல்களை வைத்து விலங்குநெய்யிட்டு ஒளி பொருத்தியிருந்தனர். சாளரக்காற்றில் அலைந்த சுடர்களால் அக்குடில் நீரில் மிதக்கும் பரிசல் என விழிமயக்கு காட்டியது. குடிலின் ஓரத்தில் அமர்வதற்கான மூங்கில் பீடங்களும் மறு எல்லையில் துயில்வதற்கான தூளிகளும் இருந்தன. தூண்களிலிருந்து தூண்களுக்கு இழுத்துக் கட்டப்பட்ட எருதுத்தோல் தூளிகள் மடித்து வைக்கப்பட்ட மரவுரிப் போர்வையும் இறகுத் தலையணையும் கொண்டிருந்தன.

தேவயானி குடித்தலைவரிடம் “அழகிய தங்குமிடம். இதுநாள் வரை இப்படி ஒன்றில் தங்க நேர்ந்ததில்லை. உச்சி மரத்தில் அழகிய கூடொன்றைக் கட்டிய பறவைபோல் உணர்கிறேன்” என்றாள். அவர் முகமன்களுக்குப் பழகாதவர் என்பதனால் மலர்ந்து தலைவணங்கி “இத்தனை பெரிய குடிலை நாங்களும் இதற்கு முன் கட்டியதில்லை. எங்கள் இளைஞர் இம்மூங்கிலை தேடிக் கொண்டுவரும் பொருட்டு இரு இரவுகள் காட்டுக்குள் அலைந்து திரிந்திருக்கிறார்கள்” என்றார். “நாளை அவர்கள் அனைவரையுமே சந்தித்து பரிசளித்து மகிழ விரும்புகிறேன்” என்றாள் தேவயானி. “ஆம், அனைவரும் வந்துவிட்டார்கள். எங்கள் குடில்கள் அனைத்திலுமே வெளியிலிருந்து வந்த உடன்குருதியினர் நெருங்கி தங்கியிருக்கிறார்கள். தோளொடு தோள் தொட்டே உள்ளே துயில்கிறோம்” என்றார் குடித்தலைவர்.

இன்னொரு குடிமூத்தார் “பேரரசி, நாளை முதற்புலரியிலேயே இங்கு விழவுகள் தொடங்கும். தங்கள் முன்னிலையில் போர்த்திறனையும் நடனத்திறனையும் காட்ட இளையோரும் பெண்டிரும் காத்திருக்கிறார்கள்” என்றார். தேவயானி “நன்று, அவர்களைவிட நான் காத்திருக்கிறேன்” என அணிச்சொல்லுரைத்து வணங்கி அவர்களுக்கு விடைகொடுத்தாள். அவர்கள் அவளுடைய சொற்கள் ஒவ்வொன்றாலும் மகிழ்ந்து முகம்மலர்ந்து ஒருவரை ஒருவர் நோக்கியபடி வெளியே சென்றனர்.

அவளுடைய பேழைகள் ஒவ்வொன்றாக ஏவலரால் உள்ளே கொண்டு வைக்கப்பட்டன. தேவயானி களைப்புடன் கைநீட்டி உடலை வளைத்தாள். “நீராட்டுக்கென ஓர் அறை அமைக்கப்பட்டுள்ளது… மரத்தட்டிகளால் ஆனது. வானம் தெரிவது” என்றாள் சாயை. தேவயானி ஒன்றும் சொல்லாமல் கிளம்ப நீராடுவதற்கான பொருட்களை எடுத்துக்கொண்டு சாயை உடன்சென்றாள். இருளில் அவர்கள் நீராடுகையிலும் தேவயானி ஒன்றும் பேசவில்லை. நீர் மலைப்பகுதிகளுக்குரிய தண்மையுடன் இருந்தது. அகிலும் மஞ்சள்பொடியும் புதிய மணம் கொண்டிருந்தன. இருண்ட வானில் விண்மீன்கள் எழுவதை தேவயானி அண்ணாந்து நோக்கிக்கொண்டே நீர் அள்ளி ஊற்றிக்கொண்டாள்.

திரும்பி வந்தபோது சாயை பேழைகளைத் திறந்து அரசிக்குரிய மாற்று ஆடைகளை எடுத்து அளித்தாள். தேவயானி தன் ஆடைகளை கையில் எடுத்தபின் அவளிடம் “இங்கு ஆடை மாற்ற மறைவிடம் இல்லையென எண்ணுகிறேன்” என்றாள். “சாளரத் திரைச்சீலைகளை மூடுகிறேன்” என்றாள் சாயை. “ஆம், நீ வாயிலில் சென்று நில்” என்றாள் தேவயானி. சற்று புருவத்தைச் சுருக்கி நோக்கியபின் சாயை வெளியே சென்றாள். தேவயானி ஆடை மாற்றியபின் மெல்ல கனைத்தபோது திரும்பி உள்ளே வந்தாள். அவள் முகத்தில் அச்சுருக்கம் அப்படியே இருந்தது.

“களைத்திருக்கிறேன். நெடிய பயணம்…” என்றபின் தேவயானி பீடத்தில் அமர்ந்தாள். “உணவு அருந்திவிட்டு படுக்கலாம்” என்றாள் சாயை. “ஆம்” என்றாள் தேவயானி. அவர்களுக்குள் பேசப்படாத ஒன்று எஞ்சியிருந்தது. அமைதியாக சாளரம் வழியாகத் தெரிந்த இருண்ட வானை நோக்கியபடி காத்திருந்தனர். சற்று நேரத்தில் பெரிய தாலங்களில் உணவுடன் மலைக்குடிப் பெண்கள் உள்ளே வந்தனர். தேவயானியும் சாயையும் நிலத்தில் அமர நடுவே மூங்கிலால் ஆன சிறு பீடத்தை இட்டு அவற்றில் புதிய ஊன்மணம் எழுந்த கொதிக்கும் குழம்பையும் புல்லரிசிச் சோற்றையும் பரிமாறினார்கள். ஊன்நெய்யில் பொரிக்கப்பட்ட கிழங்குகள். வேகவைக்கப்பட்ட காய்கறிகள்.

“தாங்கள் இங்கு வந்ததன் பொருட்டு இன்னுணவு சமைத்திருக்கிறோம், பேரரசி” என்றபடி மரக்குடுவையில் அப்போதும் குமிழ்கள் வெடித்துக் கொண்டிருந்த இன்பால் கஞ்சியை அவளுக்கு பரிமாறினாள் ஒரு மூதன்னை. “நல்லுணவு, அன்னையே. அனைத்துப் பொருட்களும் பயிர்களிலிருந்து நேரடியாக களத்திற்கு வந்ததுபோல புத்தம் புதிய சுவை” என்றாள் தேவயானி. முகம் மலர்ந்து மும்முறை தலைவணங்கி “எங்களிடம் இருக்கும் மிகச் சிறந்த உணவையே அரசிக்கென எடுத்து வைத்தோம்” என்றாள் மூதன்னை.

நூல் பதின்மூன்று – மாமலர் – 81

81. பூவுறைச்சிறுமுள்

அசோகவனிக்கு வந்த மூன்றாம் நாள்தான் தேவயானி சர்மிஷ்டையை சந்தித்தாள். முதல் இரண்டு நாட்களும் அசோகவனியிலிருந்தும் அதைச் சூழ்ந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடிச் சிற்றூர்களிலிருந்தும் வந்து அங்கே தங்கியிருந்த தொல்குடித்தலைவர்களும் குலமூத்தாரும் முறைவைத்து காலைமுதல் அந்திவரை அவளைச் சந்தித்து கோல்தாழ்த்தி முடியேற்பு செய்துகொண்டிருந்தார்கள்.

தேவயானி அவர்களுக்கு குடிப்பட்டங்களை அளித்து அவர்களின் குடிமுத்திரைகளை அவர்களுக்கு மட்டும் உரியவை என ஏற்று செம்புப்பட்டயங்களை அளித்தாள். அவர்களின் நிலங்கள் அவர்களுக்கு மட்டுமே உரியவை என்றும் அவற்றின் மீதான எத்தாக்குதலும் குருநகரிக்கு எதிரானவை என்றும் அறிவித்தாள். அதற்கு மாற்றீடாக அவர்கள் ஆண்டுதோறும் அரசுக்கு கப்பம் கட்டவும் அரசுநிகழ்வுகளில் பொருள்பங்கு கொள்ளவும் அரண்மனையின் பெருநிகழ்வுகளில் குடிகளெனத் திரண்டுவந்து அமையவும் தங்கள் கோல்தாழ்த்தி குலதெய்வங்கள் பெயராலும் மூதாதையர் நினைவாலும் சூள் உரைத்தனர்.

எண்ணியிராத வடிவுகளில் மலைப்பொருட்களும் அருங்கற்களும் அவளுக்கு அரியணைக் காணிக்கையாக வந்துகொண்டிருந்தன. அச்சிற்றூரைச் சூழ்ந்து அத்தனை செல்வமிருக்கிறதா என்ற வியப்பை அவையிலிருந்த ஒவ்வொருவரும் அடைந்தனர். அரியவை என்பவையே முடிவிலாத வேறுபாடுகள் கொண்டவை என்று அறிந்தனர். நெல்லிக்காய் அளவு இருந்த பெரிய நீலமணிக்கல்லை கையிலெடுத்து அமைச்சர் ஒருவர் “பாரதவர்ஷத்தின் முதன்மையான அருமணிகளில் ஒன்றாக இது இருக்கக்கூடும், பேரரசி” என்றார். “பழுதற்ற நீரோட்டம். முழுமையான வடிவம்.” தேவயானி விழிகளை மட்டும் திருப்பி நோக்கி சற்றே தலையசைத்து “நன்று” என்று மட்டும் சொன்னாள்.

மாகேதர் குலத்தலைவரால் கொடையளிக்கப்பட்ட புலிக்குருளைகள் ஏழு அவைக்கு கொண்டுவரப்பட்டன. ஒரே அன்னையின் மைந்தர்கள் ஒன்று பிறிதொன்றென முற்றிலும் ஒத்துப்போயிருந்தன. பிறந்து எட்டு நாட்களானவை. கூண்டுக்குள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு சிவந்த நுரைபோல தெரிந்தன. அதிலொன்றை பிடரித்தோலைப் பிடித்து தூக்கி தேவயானியின் கையில் கொடுத்த சுருத மாகேதர் “ஒற்றை அன்னை ஏழு குட்டிகளை ஈனுவது மிக அரிது. இவை உளம் ஒன்றாகி ஒற்றை உடலென இணைந்து வேட்டையாடும். சற்று பழக்கினால் மிகச்சிறந்த காவல்குழுவென்றாகும்” என்றார். தேவயானி அக்குருளையை கையில் வாங்கி அதை திருப்பி அதன் முகத்தை கூர்ந்து நோக்கினாள். சிறிய கூர்பற்களைக் காட்டி வாய் திறந்து அது உறுமியது. அதன் வெண்ணிற அடிவயிற்றில் தோல் பாலாடைபோலிருந்தது. சிறுகால்களின் விரல்களுக்கு நடுவே அவள் தன் விரலால் அழுத்திய போது விரல்களுக்குள்ளிருந்து மீன்முள் என நகங்கள் வெளிவந்தன. கால்களை வீசி அவள் முகத்தை அது அறைய முற்பட அவள் சிரித்து “சினம்கொள்கிறான்” என்றபடி திருப்பிக் கொடுத்தாள். அவர்கள் அதை வாங்கியபோது அதன் கீழ்இடக்கால் நகத்தில் அவள் ஆடை சிக்கிக்கொண்டது. சாயை குனிந்து அந்நகங்களிலிருந்து விடுவித்து ஆடையை சீர் செய்தாள்.

நீலப்பளிங்கில் செதுக்கப்பட்ட தாலம், சந்தனமரத்தில் செதுக்கப்பட்ட காளிசிலை, குடம்நீர் கொள்ளும் சுரைக்காய்க் குடுவை என வெவ்வேறு வகையான செல்வங்களை ஏழு கணக்கர் அமர்ந்து பட்டியலிட்டனர். அவற்றை முத்திரையிட்டு எண்பதிந்து பேழைகளில் அடைத்து கருவூலத்திற்கு கொண்டு சென்றனர் ஏவலர். ஒவ்வொரு நாளும் அவை முடிந்து அவள் எழுவதற்கு அந்தியாகிவிட்டிருந்தது. அதன் பின் அறைக்குச் சென்று நீராடி உடைமாற்றி உணவருந்தி மீண்டும் கலையவைக்கு வந்தாள். அங்கு குருநகரியிலிருந்து அவளுடனேயே வந்திருந்த சூதர்களும் மலைகளிலிருந்து வந்த தொல்குடிப் பாடகர்களும் ஆடியும் பாடியும் கலைநிகழ்த்தினர்.

தொல்குடி நடனங்கள் அனைத்தும் காட்டுவிலங்குகளின் அசைவுகளை மீள நிகழ்த்துவதாக இருந்தன. உறுமிப் பாய்ந்து உடல் பிடரிசிலிர்த்து வாய்திறந்து சீறிய சுதீர தொல்குடியின் கரிய இளைஞன் ஒருவன் மாற்றுரு ஏதும் கொள்ளாமல் மானுட உடலிலேயே சிம்மமென்றான விந்தையைக் கண்டு மெல்ல இதழ் வளைய புன்னகைத்து இருக்கையில் சற்று அசைந்தாள். அதை குறிப்புணர்ந்த அமைச்சர் பெரிய தாலத்தில் பொன்னும் ஆடையும் வைத்து அவளிடம் அளிக்க எழுந்து அவர்களிடம் அளித்து “சிம்மம் எழுந்ததேதான், நன்று” என்றாள். அவள் வாயிலிருந்து ஒரு சொல்பாராட்டைப்பெற்ற கலைஞன் அவன் ஒருவனே என்பதனால் அவன் கால்கள் நடுங்க நிலையழிந்து சற்றே சாய்ந்தான். அவனுடன் வந்த கலைஞர் இருவர் அவனை பற்றிக்கொண்டனர்.

அவள் “சிம்மமென எழுவது உம்முள் கல்லில் கனலென உறைகிறது. அது என்றும் அங்கிருக்கட்டும்” என்றாள். விம்மலோசையுடன் அவன் நிலத்தில் கால்மடித்து அமர்ந்து தன் தலையை அவள் காலில் வைத்து அமர்ந்து “தங்கள் கால்களை என் சென்னியில் வைக்க வேண்டும், பேரரசி. கொற்றவை முன் பணிந்த சிம்மம் நான்” என்றான். அவள் குனிந்து அவன் தலையைத் தொட்டு “என்றும் இங்கிருப்பேன்…” என்றாள். அவன் கண்ணீருடன் எழுந்து மும்முறை தொழுது விலகிச்சென்றான்.

மூன்றாம் நாள் பின்னிரவில் அவள் பன்னிரு கூத்துக்கலைஞர்கள் நிகழ்த்திய கள நாடகத்தை கண்டாள். விண்ணிலிருந்து மின்னலாக காட்டுக்குள் இறங்கிய புலி ஒன்று உடலெங்கும் தழல்நாக்குகள் எரிய விலங்குகளை வேட்டையாடி கொல்லத்தொடங்கியது. விலங்குகளும் மானுடரும் அப்புலியை வெல்லும்பொருட்டு அதையே அரசனாக்கினர். அரசனுக்கு நாளொன்றுக்கு ஒரு விலங்கென தலைகொடுத்து அதன் எரிதழலை கட்டுக்குள் வைத்திருந்தனர். இல்லங்களில் விளக்கேற்றவும் அடுப்புகளில் அனல்மூட்டவும் அதன் உடலை சுள்ளிகொண்டு தொட்டு பற்றவைத்தனர். காடு சிலிர்க்கும் கடுங்குளிரில் அதன் உடலிலிருந்த தழலில் வந்து வெம்மைபெற்றனர். எதிரிகளின் ஓசைகேட்டதும் தழலுடன் உறுமியபடி சென்ற புலி காட்டை எரித்து அவர்களைச் சூழ்ந்து அழித்தது.

அவள் அந்தப்புலியை நோக்கிக்கொண்டிருந்தாள். அந்தத் தொல்குடிக்கலைஞனின் கண்கள் புலிகளுக்குரிய நரைத்த நீள்கருவிழிகள் கொண்டுவிட்டிருந்தன. தழல்நெளிவுடன் எழுந்தாடிய புலி உறுமிச் சுழன்று விலங்குகளை அச்சுறுத்தியது. அவர்களில் ஒருவரை கிழித்து உண்டு குருதிக் கால்களை நக்கியபின் மல்லாந்து படுத்து மெல்ல கார்வையுடன் துயின்றது. அதன் இமைதாழ்ந்தபோது அவர்கள் அச்சம் அழிந்து மெல்ல அணுகி அதன் கால்களை தூய்மைப்படுத்தினர். அதன் உடலைத் துடைத்து பணிவிடை செய்தனர். தங்கள் குழவிகளைக் கொண்டுவந்து அதன் முன் வைத்து வாழ்த்துகளை பெற்றுக்கொண்டனர்.

வண்ணங்கள் கரைத்து தங்கள் உடல்களில் புலியுடலின் அனல் நெளிவுகளை வரைந்தனர். புலிக்கோடுகள் அணிந்த மைந்தர் புலியைப்போலவே காலடி வைத்து நடனமிட்டனர். புலி உறுமலைப்போலவே ஓசையிட்டு ஒருவரை ஒருவர் தாக்குவது போல நடித்து தாவியும் கட்டிச்சுழன்றும் விலகிச் சீறியும் பாய்ந்து மீண்டும் தழுவியும் விளையாடினர். புலி முதுமைகொண்டு உயிர்துறந்ததும் அதைச்சூழ்ந்து நின்று கண்ணீருடன் கதறியழுதனர். சிதை கூட்டி அதை ஏற்றி வைத்ததும் புலியின் உடலிலிருந்த தழல்கள் எழுந்து விறகு பற்றிக்கொள்ள அதன் உடல் எரிந்து விண்ணில் தாவி மறைந்தது.

அவர்கள் அத்தழலிலிருந்து ஒரு சிற்றகலை கொளுத்திக்கொண்டு வந்து தங்கள் இல்லங்கள் நடுவே ஓர் ஆலயம் அமைத்தனர். அத்தழலை சூழ்ந்தமர்ந்து புலியைப் புகழ்ந்து பாடினர். தழலுக்கு நெய்யூற்றி வளர்த்தனர். எழுந்த பெருந்தழலில் ஒருகணம் தோன்றிய புலி உறுமி அமைந்தபோது கைகளை மேலே தூக்கி “எழுபுலியே! எரிவடிவே! எங்கள் கோவே!” என்று கூவி வாழ்த்தினர். மெல்லிய புலிக்காலடிகளுடன் சுழன்று நடனமிட்டு அமைந்தனர். முழவுகள் ஓய்ந்தன. ஒற்றைமுழவுமேல் கோல் இழுபட புலியுறுமல் ஒலித்து அணைந்தது.

தேவயானி எழுந்து அவர்கள் ஒவ்வொருவராக அழைத்து பரிசுகளைக் கொடுத்தபின் தன் அறை நோக்கி நடந்தாள். அவளுடன் நடந்த சாயை “இன்றிரவு மிகவும் பிந்திவிட்டது பேரரசி. நாளை முதற்புலரியிலேயே நகரின் தெற்கு எல்லையிலுள்ள தொன்மையான இடுகாட்டில் அமைந்திருக்கும் சாமுண்டியின் ஆலயத்திற்கு குடித்தொகையின் பூசனைக்காக செல்கிறோம். இங்கு தேவிக்கு முழு எருமைகளை பலிகொடுக்கும் வழக்கம் உள்ளது. தங்கள் வருகையின் பொருட்டு பன்னிரு எருமைகளை பலிகொடுப்பதாக குடிமூத்தார் வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

“நன்று” என்று சொன்னபடி தேவயானி மெல்ல நடந்தாள். தன் அறைக்குள் சென்று பீடத்தில் அவள் அமர்ந்ததும் அணிச்சேடியர் சூழ்ந்துகொண்டு அவள் உடலிலிருந்து முடிச்சுகளை அவிழ்த்து பட்டாடையையும் அணிகளையும் அகற்றத் தொடங்கினர். காதணியை கழற்றியவள் சற்று அழுத்த தேவயானி மெல்லிய சீறலொன்றை எழுப்பினாள். சினம் சுடர்ந்த முகத்துடன் நோக்கிய சாயை விழியசைவாலேயே அச்சேடியை அகலும்படி ஆணையிட்டாள். அவள் நடுங்கி மும்முறை வணங்கி தளர்ந்த கால்களுடன் வெளியேற பிறிதொரு முதுசேடி மெல்ல திருகி காதணியை கழற்றத் தொடங்கினாள்.

“இங்கு கலைபயின்ற சேடியர் எவருமில்லை” என்று சாயை சொன்னாள். “இங்கிருப்பவர்களில் உயர்ந்தவன் நூற்றுவர்தலைவன் மட்டுமே. பிறர் எளிய காவலர். அவர்களின் பெண்டிரும் சிற்றூர்களிலிருந்து வந்த சிறுகுடி ஷத்ரியர். உயர் வாழ்க்கை இல்லையென்பதால் அணியும் ஆடையும் சமையமும் பயின்றவர்கள் இல்லை.” தேவயானியின் கச்சைமுடிச்சை அவிழ்த்தபடி “இங்குள்ள சேடியர்களே பதினெண்மர் மட்டும்தான்” என்று குருநகரியிலிருந்து அவளுடன் வந்த முதுசேடி சுகன்யை சொன்னாள். “அவர்களை அழைத்து நேற்று உசாவினேன். எண்மடிப்புப் புடவை அணியக்கூட எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அணிகளை முன்னரே நோக்கியவள் என்றுகூட ஒருத்தியை மட்டுமே சொல்ல முடிகிறது.”

“அவள் மட்டும் எங்கு பார்த்தாள்?” என்று தேவயானி கேட்டாள். சுகன்யை “அவளை குருநகரியிலிருந்து இங்கு கொண்டு குடியேற்றியிருக்கிறார்கள். இவ்வரண்மனையின் இணைப்புச் சிற்றில்லில் அவள் தங்கியிருக்கிறாள். மூன்று மைந்தர்கள் அவளுக்கு. அவள் பெயர் சேடியருக்குரியதல்ல” என்றாள். அவள் தேவயானியின் முலைகளுக்கு அடியில் நறுமணச்சுண்ணத்தைப் பூசியபடி “அவள் பெயர் சர்மிஷ்டை” என்றாள்.

தேவயானியின் கண்கள் திரும்பி சாயையை பார்க்க சாயை தலைவணங்கி விழிகளை அசைத்தாள். அணிப்பெண்டிர் அவள் இடையாடைகளையும் களைந்து வெற்றுடலாக்கினர். அவள் ததும்பும் பெருமுலைகளும் இறுகியசையும் இடைவிரிவும் சிற்றலை எழுந்த தொடைகளுமாக சென்று அவர்கள் ஒருக்கியிருந்த சிறு மரத்தொட்டிக்குள் அமர்ந்தாள். இளவென்னீரை அள்ளி அவள் மேல் விட்டு அவள் உடலை அவர்கள் கழுவத்தொடங்கினர். அவர்களின் மெல்லிய விரல்கள் தன் உடல் முழுக்க பரந்தலைவதை உணர்ந்தபடி அவள் விழிமூடி அமர்ந்திருந்தாள்.

அவள் கொண்டையிலிருந்த நூற்றுக்கணக்கான பொன்னூசிகளை ஒவ்வொன்றாக உருவி குழலை புரியவிழ்த்து விரல்களை உள்ளே விட்டு நீவி நீர்த்தொட்டிக்கு வெளியே அலையென பரப்பினாள் ஒருத்தி. அவள் கால்விரல்களை சிறிய கடற்பஞ்சால் ஒருத்தி தேய்த்தாள். நறுமண வெந்நீரை அவள் உடல்மேல் மெல்ல ஊற்றினர். ஆவியெழுந்து சூழ்ந்திருந்த ஆடிகள் பனிபடர்ந்து பட்டுபோலாயின. உடலெங்கும் நீர் சொட்ட நடந்து சென்று அவள் வெண்கல சிறுபீடம் ஒன்றில் அமர அவர்கள் மெல்லிய வெண்நுரை போன்ற பருத்தி ஆடையால் அவள் உடலை ஒற்றித் துடைத்தனர். கால்களையும் கைகளையும் பிறிதொரு மரவுரியால் துடைத்து உரசி தூய்மைப்படுத்தினர். ஈரம் படாத அவள் குழலை அகிற்புகையிட்டு ஐந்து புரிகளாக வகுந்து பின்புறம் நீட்டி நிலம் தொடுமாறு விட்டனர்.

சேடி கொண்டுவந்த வெண்ணிற ஆடையை தேவயானி இடையில் சுற்றி தோள்வளைத்து அணிந்துகொண்டாள். தளர்ந்த மேலாடைக்குள் அவள் பருத்த மார்புகளின் வளைவுவிளிம்புகள் சுடரொளிமின்ன தெரிந்தன. அணிப்பெண்டிர் வணங்கி வெளியே சென்றதும் அவள் விழிகள் மாறாமல் சாயையிடம் “இங்குதான் இருக்கிறாளா?” என்றாள். சாயை “ஆம், பேரரசி. பதினாறாண்டுகளாக இங்குதான் இருக்கிறாள். அவள் முதல் மைந்தனுக்கு இப்போது பதினைந்து முடிகிறது” என்றாள். தேவயானி விழிவிலக்கி “சேடியின் வாழ்க்கை அல்லவா?” என்று கேட்டாள். “மைந்தர் இருப்பது அதற்குத்தானே சான்று” என்று சாயை சொல்லி மெல்ல புன்னகைத்தாள்.

“அவளை நான் பார்க்க வேண்டும். இங்கு அழைத்துவரச்சொல்” என்றாள் தேவயானி. சாயை சற்று தயங்கி ”இன்றிருக்கும் நிலையில் அது தேவையில்லை என்று எண்ணுகின்றேன்” என்றாள். “ஏன்?” என்றாள் தேவயானி சினத்துடன் விழிதூக்கி. “அதனால் அவள் மேலும் இழிவெதையும் அடையப்போவதில்லை. பதினாறாண்டுகள் சேடிவாழ்க்கை வாழ்ந்தவளுக்கு சிறுமைகளோ சீண்டல்களோ எவ்வகையிலும் பொருட்டாக இருக்கப்போவதில்லை. அவள் துயருறவில்லையென்றால் தாங்கள் சினம் கொள்வீர்கள்.” தேவயானி அவள் விழிகளை சிலகணம் நோக்கிவிட்டு “அதையும் பார்ப்போம். அழைத்து வருக!” என்றாள்.

tigerஅறைக்கதவு மெல்ல திறந்து உள்ளே வந்த சாயை தலைவணங்கி அவ்வசைவாலேயே வெளியே சர்மிஷ்டை வந்து நிற்பதை உணர்த்தினாள். தேவயானி மிகச்சிறிய விழியசைவால் அவளை வரச்சொல் என ஆணையிட்டு திரும்பிக்கொண்டாள். இரு அன்னங்கள் எழுந்து பறந்த முனைகள் கொண்டிருந்தது அவள் சாய்ந்திருந்த பெரிய பித்தளைப்பீடம். திறந்த பெருஞ்சாளரத்தை நோக்கி அதை திருப்பி போட்டிருந்தாள். சாளரத் திரைச்சீலைகள் இழுத்துக்கட்டப்பட்டு நுனி துடித்துக்கொண்டிருந்தன. வெளியிலிருந்து வந்த காற்றில் அவள் நீள்குழல் தரை தொட்டு அலையிளகிக்கொண்டிருந்தது.

அறையில் முத்துச்சிப்பிகளை அடுக்கி உருவாக்கப்பட்ட வட்டத்தாலம்போன்ற ஒளிதிருப்பிகளுடன் மூன்று செண்டுவிளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. அவற்றின் பதினெட்டுசுடர்கள் கொண்ட ஒளிக்கொத்துகள் ஒளிதிருப்பியின் முத்துச்சிப்பிக்குவைகளில் பட்டு நூற்றுக்கணக்காக மாறின. ஒவ்வொரு செண்டுவிளக்குக்கு இருபக்கமும் ஒன்றையொன்று நோக்க அமைக்கப்பட்டிருந்த நிலையாடிகள் அச்சுடர்களை எதிரொளிக்க அவ்வறை அனல் பற்றி எரிவதுபோல் தோற்றமளித்தது.

சர்மிஷ்டை மெல்ல உள்ளே வந்து பதிந்த காலடிகளுடன் அவளை அணுகி சேடியருக்குரிய முறையில் இடைவரைக்கும் தலைவணங்கி “குருநகரியின் பேரரசியின் கால்களில் என் சென்னி படுகிறது. பேரரசியின் அருளுக்காக எளியவள் உள்ளம் மன்றாடுகிறது” என்று முகமன் உரைத்தாள். தலையசையாமல் அவளை உணர்ந்தபடி அமர்ந்திருந்த தேவயானி கூரிய குரலில் “உனக்கெத்தனை மைந்தர்?” என்றாள். அதை எதிர்பாராத சர்மிஷ்டை திகைத்து சாயையை திரும்பி நோக்கியபின் மூச்சொலியில் “மூவர்” என்று அவள் சொன்னாள். “இங்கு அழைத்து வரச்சொல்!” என்று தேவயானி சாயையிடம் சொன்னாள். சாயை “அவர்களைப்பற்றி கேட்டேன். சூதர்களாகையால் புரவிக்கலை பயில்வதற்காக காட்டுக்கு அனுப்பியிருப்பதாக சொல்கிறாள்” என்றாள்.

தேவயானியின் இதழ்கள் சற்றே வளைய “அது நன்று! எத்தொழிலிலும் முறையான பயிற்சி தேவையானதே” என்றாள். சர்மிஷ்டை மீண்டும் தலைவணங்கி “பேரரசியின் அருளால் இங்கு பிறிதொரு குறையின்றி இருக்கிறோம். மைந்தர்கள் மகிழ்ந்து வாழ்கிறார்கள். தேர்ந்த புரவியாளர்களாக அவர்கள் வரும்போது மேலும் சிறப்புறுவார்கள் என்று எண்ணுகிறேன்” என்றாள். தேவயானி திரும்பி சர்மிஷ்டையை ஒருகணம் பார்த்தாள். அவள் விழிகளை சந்தித்ததும் தன்னுள் மெல்லிய குழப்பம் ஒன்று ஏற்பட இமைகளைச் சுருக்கி பின் முகம் திருப்பிக்கொண்டு “மைந்தர் பயின்று வந்ததும் குருநகரிக்கு வரட்டும். நல்ல தேர்ப்பாகர்களுக்கு அங்கு தேவை நிறைய உள்ளது” என்றாள். “தங்கள் ஆணை பேரரசி!” என்றாள் சர்மிஷ்டை. தேவயானி அவள் செல்லலாம் என இடக்கையை அசைத்தாள். மீண்டும் இடைவரை தலைவணங்கி சர்மிஷ்டை திரும்பி நடந்தாள்.

தேவயானி திரும்பி அவள் நடையை பார்த்தாள். புதர்விலங்குகளுக்குரிய பதுங்கல் அவள் அடிவைப்பில் தோள் குறுகலில் கை அசைவில் அனைத்திலும் இருந்தது. அவள் விழிகளை சாயையின் விழிகள் சந்தித்தன. சர்மிஷ்டை கதவைத் திறந்து மீண்டும் ஒருமுறை அவளைநோக்கி தலைவணங்கி வெளியே சென்ற கணம் தேவயானியின் உளம் அதிர்ந்தது. அவளை அறியாமலேயே எழப்போவதுபோல் ஓர் அசைவு உடலில் பரவியது. தடித்த மரக்கதவு ஓசையின்றி சென்று பொருந்திக்கொண்டது. அவள் மெல்ல தோள்தொய்ந்தாள்.

சாயை அவள் அருகே வந்து “நிலைகுலைந்தது தாங்கள் என்று தோன்றுகிறது” என்றாள். “இல்லை” என்றாள் தேவயானி தலையை திருப்பியபடி. “தாங்கள் கடுஞ்சொல் உதிர்க்க மாட்டீர்கள் என்று நானறிவேன். ஆனால் புண்படுத்தும்படி எதையோ ஒன்றை சொல்வீர்கள் என்று எண்ணினேன். நச்சு தோய்ந்த மென்மையான மிகக்கூரிய ஒரு முள். அதற்காக காத்திருந்தேன்” என்றாள் சாயை. தேவயானி சினத்துடன் நிமிர்ந்து அவள் விழிகளை நோக்கி “இனி அவளை நான் வெல்வதற்கு ஏதுமில்லை” என்றாள்.

“ஏதோ ஒன்று எஞ்சியிருந்ததனால்தான் தாங்கள் நிலை குலைந்தீர்கள், பேரரசி” என்றாள் சாயை. “யார் சொன்னது நான் நிலைகுலைந்தேன் என்று?” சாயை “தங்கள் உள்ளம் எனக்குத் தெரியும். தங்கள் உடல் அசைவுகள் அவ்வண்ணமே என்னிலும் நிகழ்வதுண்டு. ஏனெனில் நான் தங்கள் நிழல்” என்றாள் சாயை. சில கணங்கள் அசைவற்று இறுகி சாளரத்தினூடாக இருளை நோக்கி அமர்ந்து மெல்ல தளர்ந்து நீள்மூச்சுவிட்டு இருகைகளாலும் பீடத்தின் பிடியைத் தட்டியபடி தேவயானி எழுந்தாள். மேலாடையை சீர்படுத்தியபின் “அவளிடம் ஏதோ ஒன்று மறைந்திருக்கிறது. என்னவென்றறியேன். அது என்னை அமைதியிழக்கச் செய்கிறது” என்றாள்.

“மறைந்திருப்பது ஒன்றுதான். அவள் விருஷபர்வனின் மகள் என்பது. அந்த உண்மை இந்த அனைத்து நாடகங்களுக்கு அடியில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அவள் விழைந்தால் இங்கிருந்து ஹிரண்யபுரிக்கு செல்லமுடியும். அசுரப்பெரும்படைகளை நமக்கெதிராக திருப்பவும் முடியும். ஆகவே இங்கு அவள் சிறைப்பட்டிருக்கவில்லை. தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டிருக்கிறாள். அது நமது ஆணையல்ல. அவளது கொடை. சொல்லாமல் அவள் இங்கு உங்களுக்கு உணர்த்திச்சென்றது அதுதான்” என்றாள் சாயை.

“இல்லை, அதுவல்ல. அதுமட்டுமல்ல” என்று தேவயானி சொன்னாள். “அந்தக் கதவைத் திறந்து வெளிச்சென்ற கணம் அழுத்தப்பட்ட வில் நிமிர்வதுபோல் ஒரு சிறு அசைவு அவளில் கூடியது.” அறியாது திரும்பி அந்தக்கதவை நோக்கிவிட்டு சாயை “எப்போது?” என்றாள். “ஒருகணம். அல்லது ஒருகணத்திலும் துளி. அந்நிமிர்வு ஓர் அறைகூவல். அவள் எண்ணாத, அவள் உள்ளமும் ஆழமும் அறியாத ஒரு சொல் அவள் உடலால் எனக்கு உரைக்கப்பட்டது” என்றாள் தேவயானி. “என்ன அது? அதை அறியாமல் எனக்கு அமைவுநிலையில்லை.”

“தங்கள் உளமயக்கு அது. இன்றிரவு இதைக்கொண்டு இருள்விளையாட எண்ணுகிறீர்கள் போலும்” என்றாள் சாயை. “இல்லை, இது ஊசிமுனையளவு சிறியது. ஊசிமுனையால் தொட்டு எடுக்கப்படவேண்டியது. ஆனால் ஊசிமுனைக்கு அது பெரிதே.” சாயை “பேரரசி, தங்கள் உள்ளமும் உடலும் பேராற்றல் மிக்கவை. ஆகவே சிம்மத்துடனோ வேழத்திடமோ அரசநாகத்துடனோ விளையாட விரும்புவீர்கள். எவரும் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றாள்.

அவள் திரும்பிச்செல்லப் போனபோது தழைந்த குரலில் அழைத்த தேவயானி “நில்! இது உளமயக்கு அல்ல. அனைத்து உளமயக்குகளுக்கும் உள்ள தனித்தன்மையென்பது அவை உளமயக்கென்பது எங்கோ நமக்கு தெரிந்திருக்கும் என்பதுதான். ஆகவே பதறியும் அஞ்சியும் துயர்கொண்டும் நம்மில் ஒரு பகுதி நடிக்கும்போது பிறிதொரு பகுதி சற்று விலகி அதை நோக்கிக்கொண்டிருக்கும். அத்தனை கனவுகளுக்கும் அடியில் அது கனவென்றறியும் விழிப்பொன்றிருப்பது போல. இது அப்படியல்ல. இது ஒரு வலி போல. எத்தனை எண்ணம் மாற்றினாலும் எத்தனை விலகி கற்பனை செய்தாலும் வலியை ஒன்றும் செய்யமுடியாது.”

சாயை புன்னகையுடன் தலையசைத்து “ஒன்றுதான் நாம் செய்ய இருக்கிறது. அவளை இழுத்து வருகிறேன். குழல் சுற்றிப்பிடித்து சுழற்றி தங்கள் காலடியில் விழவைக்கிறேன். கணுக்கால்களை இருகால்களாலும் மிதித்து அழுத்தும் ஒரு கலை உள்ளது. உடலின் ஒவ்வொரு பூட்டும் தாளமுடியாத வலியால் அதிர்ந்து இழுபட்டு துடிக்கும். ஓரிரு கணங்களுக்குள் அனைத்தையும் அவள் சொல்லிவிடுவாள்” என்றாள். தேவயானி புன்னகைத்து “சொல்ல மாட்டாள். ஏனெனில் அவள் விருஷபர்வனின் மகள். சொல்லிவிட்டால் நான் வென்றேன். ஆனால் அத்தனைக்கும் பிறகு அவள் சொல்லவில்லையென்றால் அவள் காலடியில் புழுவென்று நான் கிடப்பேன். அதன் பிறகு நான் உயிர்வாழ முடியாது.”

“வேறு என்ன செய்வது?” என்றாள் சாயை. “இந்த நச்சுக்கோப்பையுடன் இன்றிரவு நீங்கள் தனித்திருக்கப்போகிறீர்களா?” தேவயானி “உச்சிக்கு செல்வதில் ஒருவழிப்பாதையே உள்ளது. முனைகூர்ந்து நுனிகொண்டு எழுவது. அதன் இடர் நாம் குறுகிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான். நம் உலகும் அறிவும் நின்று திரும்புவதற்கு இடமிலாதாகும். அக்கூம்புதல் சென்று முடியும் உச்சிப்புள்ளி ஒன்றுண்டு என செல்லும்தோறும் உணர்வோம். அப்புள்ளிக்கு அப்பால் வெறுமை. கடுவெளி. அப்புள்ளியில் நின்றிருக்க எவராலும் இயலாது” என்றாள். “இயலும். அதுவரை அள்ளிவந்த அனைத்தையும் உதிர்த்தால்” என்றாள் சாயை.

தேவயானி “வரலாறு அப்படி ஒருபோதும் நிகழ்ந்ததில்லையென்று காட்டுகிறது” என்றாள். “இப்போது உச்சிப்புள்ளியை உணர்கிறீர்களா?” என்றாள் சாயை. “நான் நின்றுதிகழ இடமில்லையென்று அறிகிறேன். ஒவ்வொரு இரவும் தனித்திருக்கையில் நாற்புறமும் நெருக்கி அடைத்த சுவர்களுக்கிடையே இருப்பதுபோல் உணர்கிறேன். செய்வதற்கொன்றே உள்ளது, அச்சுவர்களைப்பற்றி மேலே தெரியும் திறப்பினூடாக வெளியேறுவது. அது மேலும் சிறிய பிறிதொரு இடத்திற்கு செல்கிறது.” அவள் பெருமூச்சுவிட்டு “வென்றவர்கள் கடந்தவர்கள் எய்தியவர்கள் இக்குறுகலையும் இதற்கப்பால் எஞ்சும் வெறுமையையும் சென்றடைந்தே ஆகவேண்டும் போல” என்றாள்.

புன்னகையுடன் “மீண்டும் காவியங்களை நோக்கி திரும்பத் தொடங்கிவிட்டீர்கள் என எண்ணுகிறேன்” என்றாள் சாயை. தேவயானி சலிப்புடன் இல்லை என கையசைத்தாள். சாயை “முன்பொருமுறை சுவரில் பல்லிகளின் பூசலொன்றை பார்த்துக்கொண்டிருந்தேன். பெரும்பல்லி ஒன்றால் சிறுபல்லி ஒன்று துரத்தப்பட்டது. ஓடிக்களைத்து சுவர் மூலை ஒன்றை அடைந்து திரும்ப இடமின்றி அங்கு திகைத்து நின்று பெரும்பல்லிக்கு உணவாயிற்று. அது செய்திருக்கக்கூடிய ஒன்றுண்டு, சுவரிலிருந்த பிடிப்பை விட்டு உதிர்ந்திருக்கலாம். அது செல்வதற்கு முடிவற்ற வெளி எட்டுத்திசையிலும் திறந்து காத்திருந்தது. தன்னால் சுவரை விடமுடியுமென்று அது எண்ணவில்லை. அல்லது அதன் கைகள் அச்சுவரை விடும் இயல்புகொண்டவை அல்ல” என்றாள்.

“நான் துறந்து செல்ல வேண்டும் என்று எண்ணுகிறாயா?” என்றாள் தேவயானி. சாயை புன்னகைத்து “ஒருதருணம் உண்டு. அனைத்தும் முற்றாக உதிர்ந்தழிந்து வெறுமை எஞ்சும் கணம். அதற்கு முந்தைய கணத்தில் பின் திரும்பியிருந்தால் அனைத்தும் நன்றாக இருக்கும். ஆனால் மானுடரால் இயல்வதில்லை. அக்கணத்தைக் கடந்த பின்னரே அம்முந்தைய கணம் அளித்த பெருவாய்ப்பைப் பற்றி அவர்கள் உணர்வார்கள். வாழ்நாள் முழுக்க அதற்கென எண்ணி ஏங்கி விழிநீர் சிந்துவார்கள்” என்றபின் “நான் வருகிறேன்” என்று தலைவணங்கி திரும்பினாள்.

“சாயை” என்று தேவயானி மீண்டும் அழைத்தாள். அக்குரல் மிகத்தாழ்ந்து எளிய பெண்ணின் குரலென ஒலிக்க வியப்புடன் சாயை திரும்பிப் பார்த்தாள். “அவள் என்னை எங்கோ வென்றிருக்கிறாள்” என்றாள் தேவயானி. சாயை விழிகள் மின்ன நோக்கினாள். “என்னை மிக மிக ஆழத்தில் எங்கோ அவள் முழுமையாக வென்றிருக்கிறாள். அது அவளுக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் அதன்வழியாக நான் அவளுக்கு எவ்வகையிலும் ஒரு பொருட்டே அல்ல என்றாகியிருக்கிறேன்” என்றாள் தேவயானி.

சாயை ஒன்றும் சொல்லாமல் நின்றிருக்க தேவயானி விழிதிருப்பிக்கொண்டு “இங்கு எத்தனை பெருஞ்செல்வம்மீது நான் அமர்ந்திருந்தாலும் அவள் துயருறப்போவதில்லை. எத்தனை நஞ்சை அவள் மேல் கொட்டினாலும் அவளுக்கு வலிக்கப்போவதுமில்லை” என்றாள். சாயை  மீண்டும் ஒருமுறை தலைவணங்கி வெளியே சென்றாள்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 80

80. நகரெழுதல்

அசோகவனியின் எல்லைக்குள் நுழைந்தபோதே தேவயானி உளச்சுளிப்புக்கு ஆளானாள். தொலைவில் தோரணவாயில் தென்பட்டதும் அவளுடைய பேருடல் என சாலையை நிறைத்து இரு எல்லைகளும் மறைய பெருகிச் சென்றுகொண்டிருந்த அணியூர்வலத்தின் முகப்பில் ஏழு தட்டுத்தேர்மீது எழுந்த மூன்று நிமித்திகர்கள் தங்கள் பெருஞ்சங்கங்களை முழக்கினர். பதினெட்டு அகல்தேர்களில் தேனீ என மொய்த்திருந்த இசைச்சூதர்கள் தங்கள் முரசுகளுடனும் கொம்புகளுடனும் குழல்களுடனும் எழுந்து மங்கலஇசை பெருக்கினர்.

நூற்றெட்டு தாமரைத்தட்டுத் தேர்களில் பொன்வண்டுகளென, பட்டுப்பூச்சிகளென செறிந்திருந்த அணிச்சேடியர் குரவை ஒலி எழுப்பியபடி மங்கலத் தாலங்களை கைகளில் ஏந்தி எழுந்து நின்றனர். இரும்புக் கவச உடைகள் நீரலைவொளி எழுப்ப சீர்நடையில் சென்ற வேல்நிரையினரும் பெருநடையின் தாளத்தில் சென்ற புரவிப்படையினரும் நாண்தொடுத்த விற்களுடன் வில்லவர் அணியும் வழிச்சென்றனர். ஆணைகளும் அறைதல்களும் ஊடாக ஒலித்தன.

தோரணவளைவை அணுகியதும் தேவயானியின் தேருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த விரைவுத் தேரிலிருந்த துணையமைச்சர் சங்கிரமர் படிகளில் இறங்கி ஓடி அவளை அணுகி தலைவணங்கி “திரையை மேலேற்றவா, பேரரசி…?” என்று கேட்டார். சாயை மெல்ல கையசைக்க அமைச்சர் ஓடி தேருக்குப் பின்னால் தொற்றி நின்றிருந்த காவலரிடம் கைகளை வீசி வீசி ஆணையிட்டார். அவர்கள் பட்டுச்சரடை இழுக்க செந்தாமரை மலரிதழ் நிறத்தில் தேரைச் சூழ்ந்து காற்றில் நெளிந்துகொண்டிருந்த பொன்னூல் அணிப்பின்னல் கொண்ட பட்டுத்திரைகள் ஏதோ எண்ணம் கொண்டவைபோல அசைவற்றன. பின் அனல்பட்ட தளிர்போல் சுருங்கத் தொடங்கின. பின்வாங்கும் அலையென சுருண்டு மேலெழுந்து தேர்க்கூரைக்கு அடியில் மறைந்தன.

பன்னிரு அடுக்குகொண்ட பொன்மகுடமும் அதன் மேல் படபடக்கும் காகக்கொடியும் கொண்ட அப்பொற்தேர் தேவயானி ஆறாண்டுகளுக்கு முன்னர் அஸ்வமேதமும் ராஜசூயமும் முடித்து சத்ராஜிதை என தன்னை பாரதவர்ஷத்தின்மீது நிறுத்தியபோது அவ்விழாவின் இறுதிநாள் நூற்றெட்டு அரசர்கள் அகம்படி வர அவள் நகருலா சென்ற அணியூர்வலத்திற்காக கலிங்கச்சிற்பி சுதீரரால் வார்க்கப்பட்டது. பாரதவர்ஷத்தில் அதற்கு முன் பிறிதொன்று அவ்வாறு சமைக்கப்பட்டதில்லை என்று சூதர்கள் பாடினர். அதற்கிணையான தேர் விண்ணில் அமராவதியின் அரசன் ஊர்வது மட்டுமே என்றனர்.

அத்தேரைப்பற்றி அவைக்கவிஞர் சூர்யஹாசர் இயற்றிய காஞ்சனயானகீர்த்தி என்னும் குறுங்காவியத்தில் அதை நோக்கும்பொருட்டு நுண்விழிகளுடன் தேவர்கள் சூழ்ந்திருப்பதனால் சூரியனோ விளக்குகளோ அளிக்காத ஒளியொன்று அதை எப்போதும் சூழ்ந்திருக்கும் என்றார். கந்தர்வர்களும் கின்னரரும் வித்யாதரரும் உடனிருப்பதனால் அத்தேர் செல்லும் வழியெங்கும் இசை முழங்கும், மரக்கிளைகளில் பொன்னிறப் பறவைகளையும் சிறகொளிரும் தேனீக்களையும் மணிவண்டுகளையும் பார்க்க முடியும் என்றார்.

பிழையற்ற நேருடல்கள் கொண்ட பன்னிரு வெண்புரவிகள் நிமிர்ந்த தலையுடன் நீண்ட கழுத்தில் பால்நுரையென குஞ்சியலைய வெள்ளிக்கோல்கள் முரசுத்தோலில் விழுவதுபோல குளம்புக்கால்கள் சீராகச் சுழல அத்தேரை இழுத்தன. ஏழடுக்காக அமைந்த இரும்புச் சுருள்விற்களின் மேல் அமைந்த அத்தேர் நீரலைகளின் மீது அன்னம் என சென்றது. அதன் நடுவே அரியணையின் மீது முகம்நிமிர்ந்து நேர்விழிகளால் எதையும் நோக்காது தேவயானி அமர்ந்திருந்தாள். அவள் அருகே நின்ற சாயை மணிச்சரங்களும் முத்தாரங்களும் சுற்றிய பெரிய கொண்டையிலிருந்து மீறிய குழல்கற்றைகளை குனிந்து சீரமைத்தாள். தோளில் படிந்திருந்த இளஞ்செம்பட்டாடையை மடிப்பு எடுத்து அமைத்தாள்.

பொதுமக்களின் விழிகளுக்கு முன் தோன்றுவதற்கு முந்தைய கணத்தில் எரிதழல் செம்மணியென உறைவதுபோல அவளில் ஒரு அமைதி எழுவதை சாயை எப்போதும் கண்டிருந்தாள். பின்னர் எத்தனை பொழுதாயினும் அவ்வண்ணமே வார்த்து வைத்த அருஞ்சிலையென அவள் அமர்ந்திருப்பாள். நோக்கில் விழியும், காலத்தில் இமையும், மூச்சில் கழுத்தும் அன்றி உயிர்ப்பென எதையுமே அவளில் காண இயலாது. பேரவைகளில் கொள்ளும் அந்த அசைவின்மையை மெல்ல காலப்போக்கில் தனித்திருக்கையிலும் அவள் கொள்ளத்தொடங்கினாள். அத்தனை பீடங்களும் அரியணைகள் ஆயின என.

அவள் வருகையை அறிவிக்க முரசுமேடைகளில் பெருமுரசுகள் பிளிறி பெருகின. கொம்புகள் கனைத்தன. முழுக் கவச உடையுடன் முகப்பில் காத்து நின்றிருந்த காவலர்தலைவன் உக்ரசேனனும் குருநகரியிலிருந்து முன்னரே வந்து அச்சிற்றூரை நிறைத்திருந்த காவலர்களும், புத்தாடையும் மலர்மாலைகளும் அணிந்திருந்த அசோகவனியின் ஐங்குடித் தலைவர்களும் அவர்களின் சுற்றமும் கைகளையும் குலக்கோல்களையும் மேலே தூக்கியும் படைக்கலங்களை நிலம்நோக்கி தாழ்த்தியும் அவளை வாழ்த்தி குரலெழுப்பினர்.

அவளை எவ்வண்ணம் வாழ்த்தவேண்டுமென்பதுகூட முன்னரே கவிஞர்களால் எழுதப்பட்டு ஒலி வகுக்கப்பட்டு அவள் செல்லுமிடத்துக்கு அவளுக்கு முன்னரே சென்றுவிட்டிருக்கும். எனவே எங்கும் ஒரே வாழ்த்தொலிகளே எழுவது வழக்கம். எந்தப் புதுநிலத்திற்கு சென்றாலும் அந்நிலம் முன்னரே அவளால் வெல்லப்பட்டுவிட்டது என்ற உணர்வை எழுப்பியது அது. மீண்டும் மீண்டும் ஒரே நிலத்தில் ஒரே முகங்கள் நடுவே ஒரே பொற்தேரில் சென்று கொண்டிருப்பதாக சாயை எண்ணிக்கொள்வதுண்டு.

வாழ்த்தொலிகள் தேவயானியில் எந்த நலுக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. நீரென எண்ணி மலர்கள் பளிங்குப்பரப்பில் உதிர்வதுபோல என அதை அவைக்கவிஞர் சுதாகரர் ஒரு பாடலில் சொல்லியிருந்தார். பல்லாயிரம் பேர் கண்ணீரும் கதறலுமாக நெஞ்சறைந்து கொந்தளிக்கையில் நடுவே கல்முகத்துடன் ஒழுகிச்செல்லும் கொற்றவை சிலை என்றார் பெருஞ்சூதராகிய மாகத சாலியர். முன்னரே நிகழ்ந்து முடிந்து காவியமென்றாகிவிட்ட தலைவியா அவள் என அத்தோற்றத்தை வியந்திருந்தார் தென்னகத்துக் கவிஞரான ஆதன் பெருங்கொற்றன்.

தேர் தோரணவாயிலை அணுகியபோது சரளைக்கற்களுடன் மண்கலந்து விரித்து நீர்தெளித்து கல்லுருட்டி இறுக்கிய புதிய தேர்ப்பாதையில் கண் அறியாதபடி ஆழத்தில் ஓடிச்சென்ற முயல்வளை ஒன்றுக்குள் அவள் தேரின் சகடம் ஒன்று இறங்க நிலைதடுமாறி அசைந்து தோளால் சாயையின் விலாவை முட்டிக்கொண்டாள். ஒரு கணம் அனைத்துக் குரல்களும் திடுக்கிட்டு ஓசையழிந்தன. அந்த அமைதி வாளால் வெளியையும் காலத்தையும் ஓங்கி வெட்டி அகற்றியதுபோல் எழ தன் தேரில் எழுந்த கிருபர் கைகளை விரைவாக வீசி வாழ்த்தொலிகள் தொடரட்டும் என்று ஆணையிட்டார். அச்சமும் கலந்துகொள்ள வாழ்த்தொலியும் மங்கல இசையும் இருமடங்கு ஓசையுடன் உயிர்த்தெழுந்தன.

சாயை அவ்வண்ணம் ஒன்று நிகழ்ந்ததை அறியாதவள் போலிருந்தாள். நீர்போல நிகழ்ந்ததை விழுங்கி முந்தைய கணத்தில் முற்றிலும் இணைந்துகொண்டாள் தேவயானி. ஆனால் சாயை பேரரசி சினம்கொண்டிருப்பதை அவள் உடல் வழியாகவே அறிந்திருந்தாள். தோரணவாயில்களைக் கடந்து பேரலையெனச் சென்று கோட்டையை அறைந்து அதன் பெருவாயிலினூடாக உள்ளே பெருகி கிளை பிரிந்து அச்சிற்றூரின் அனைத்து தெருக்களையும் நிரப்பியது தேவயானியின் அணி ஊர்வலம்.

கோட்டையின் உப்பரிகை மேலிருந்து நோக்கிய வீரர்கள் வண்ண மலர்கள் மட்டுமே நிறைந்த நதி ஒன்று அலை கொந்தளித்து வந்து அந்நகரைப் பெருக்கி கரைவிளிம்பு தொட்டு நுரைகொள்வதைக் கண்டனர். அவர்களிடமிருந்த அனைத்து முரசுகளின் தோல்களும் ஒலியால் அதிர்ந்துகொண்டிருந்தன. தூக்கிய வாள்பரப்புகள்கூட ஒலியால் அதிர்வதை கைகள் உணர்ந்தன. பெருந்திரளில் ஒழுகிய தேரில் ஒரு பொற்துளி என அவள் அமர்ந்திருந்தாள். உறைந்து நகையென்றான பொன்னல்ல, உருகி அனலென ததும்பிக் கொண்டிருப்பது.

tigerகோட்டை வாயிலில் நூற்றெட்டு முதுமகளிர் கூடி நின்று தேவயானியை வரவேற்றனர். அசோகவனியின் பெருங்குடிகளிலிருந்து காவலர்தலைவன் உக்ரசேனன் நேரில் நோக்கி நோக்கி தேர்ந்தெடுத்த பெண்டிர் அவர்கள். அவர்கள் அணியவேண்டிய அணிகளும் ஆடைகளும் அரசிலிருந்தே அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தன. அவர்கள் நிற்கவேண்டிய முறை, சொல்ல வேண்டிய உரை, நோக்கு, நகைப்பு அனைத்துமே முன்னரே வகுக்கப்பட்டு பலமுறை பயிற்றுவிக்கப்பட்டிருந்தன.

அரசி நகர்புகுவதை முதலில் அவர்கள் விந்தையான ஒரு செய்தியாகவே எடுத்துக்கொண்டனர். அது எவ்வண்ணம் நிகழுமென அவர்கள் அறிந்திருக்கவில்லை. பின் ஒவ்வொரு நாளுமென சிற்பிகளும் தச்சர்களும் காவலர்களும் பணியாட்களும் வணிகர்களும் வண்டிகளும் நகருக்குள் நுழையத்தொடங்கியதும் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். கண்ணெதிரே அவர்களின் ஊர் மாறிக்கொண்டிருந்தது. ஒரு தருணத்தில் மொத்த ஊரே உடைந்து சிதறி மரப்பாளங்களாகவும் கற்தூண்களாகவும் சூழ்ந்து கிடந்தது.

‘இவ்விடிபாடுகளுக்குள்ளா அரசி நுழையப்போகிறாள்?’ என்று திகைப்புடனும் ஏளனத்துடனும் பேசிக்கொண்டனர். ‘நம் ஊருக்கு அவள் வரவில்லை. இங்கு தான் நுழையவிழையும் ஊரை அவள் உருவாக்குகிறாள். அதற்குள் நுழைந்து அவையமர்வாள்’ என்றார் முதியவர் ஒருவர். அரசியின் வருகைநாள் நெருங்க நெருங்க புதிய மாளிகைகள் எழுந்தன. கோட்டை வளர்ந்து பெருகி பிறிதொன்றாகி தோரணவாயில்கள் மழைக்காளான்கள்போல் முளைத்தெழுந்தன. இறுதி ஏழு நாட்களில் மொத்த நகரும் பணிக்குறை தீர்ந்து வண்ணம் பூசப்பட்டு புத்தரக்கு மணத்துடன் பிறந்து வந்ததுபோல் ஒளிகொண்டு நின்றது.

“பழம்பெரும் கதைகளில் ஓரிரவில் பூதங்கள் நகரை கட்டி எழுப்புவதைப்பற்றி கேட்டிருக்கிறேன், இப்போதுதான் பார்த்தேன்” என்று முதுமகள்களில் ஒருத்தி சொன்னாள். “பணியாற்றும் கைகளுடன் காணாக் கைகள் பல்லாயிரம் சேர்ந்துகொண்டதுபோல.” விண்திரையை விலக்கி எடுக்கப்பட்டதுபோல அந்நகரம் காற்றில் தோன்றியது. அரசி சென்றபின் நுரையடங்குவதுபோல் அது மீண்டு பழைய சிற்றூராக ஆகிவிடுமென்றுகூட சிலர் எண்ணினர். சிறுகுழந்தைகள் “அரசி சென்றபின் இது நமக்கே உரியதாகிவிடுமா?” என்று கேட்டனர். அப்பால் அமர்ந்திருந்த முதியவர் “இந்நகரம் இனி எப்போதும் நம்முடையதல்ல. இது இனி ஆயிரம் வருடங்களுக்கு அரசிக்கு உரியது” என்றார். “அப்படியென்றால் நாம்…?” என்றான் சிறுவனொருவன். “நாம் அரசியின் குடிகள்.”

அனைத்தையும் விளையாட்டென மாற்றிக்கொள்ளும் முதிராச் சிறுவரன்றி பிறர் நகரில் எழுந்த மாற்றங்களை விழையவில்லை. அவர்கள் வாழ்ந்த ஊரின் கட்டடங்களும் தெருக்களும் மரங்களும் காற்றும் வானும் ஒளியும் நிலமும் ஒவ்வொரு கணமும் மறைந்துகொண்டிருந்தன. கண்காணா பெருக்கொன்றில் அவ்வூர் மெல்ல மெல்ல மூழ்கி மறைவதைப்போல. அவர்களின் கனவுகளில் மீண்டும் மீண்டும் பெருவெள்ளம் ஒன்று வந்தது. நிறைத்து மூழ்கடித்து மேலேறிக்கொண்டே வந்து போர்த்தி தான் மட்டுமே என்றாகியது. வீடுகள் அடித்தளம் கரைந்து விரிசலிட குத்துபட்ட யானைபோல சிலிர்த்து திடுக்கிட்டன. தூண்கள் முறிந்து முனகலோசையுடன் சரிந்து சிற்றலைகளை எழுப்பியபடி மூழ்கின. குமிழிகளை வெளியிட்டு அலைகளாகி எஞ்சி அவையும் அமைய இருந்தனவோ என்று விழிதிகைக்க மறைந்தன.

பின்னர் அசைவற்று விரிந்த குளிர்நீர்ப் பரப்பில் புதிய பெருநகரொன்றின் நீர்ப்பாவை வண்ணக் குழம்பலாக நெளிந்தாடியது. ஒவ்வொரு கட்டடமும் புத்துயிர் கொண்டபோது அவர்கள் அரியதொன்றை இழந்ததாகவே உணர்ந்தனர். பொருளென அமைந்த ஒவ்வொன்றும் எண்ணங்களையும் கனவுகளையும் தன்னுள் பூசிக்கொண்டவை என்றுணர்ந்தனர். மண்மேல் அவை மறைந்த பின்னரும் தங்கள் உள்ளத்தில் எஞ்சுவது கண்டனர். எனினும் கண்ணுக்கு முன் அவை இல்லையென்றானால் ஒவ்வொரு நாளுமென கருத்துக்குள்ளும் கரைந்து மறைவதையும் தெரிந்துகொண்டனர்.

ஆனால் வணிகர்நிரை வழியாக ஊருக்குள் பெருகி வந்த புதுப்பொருட்கள் அளித்த களிப்பு பெண்களை மெல்ல மாற்றி அனைத்து அழிவுகளையும் மறக்கச் செய்தது. ஒரு மாளிகை அழிந்த இடத்தில் ஒரு மரச்செப்பை வைத்து களியாட அவர்களால் இயன்றது. ஒரு சோலையை அழித்தபின் எஞ்சும் வெறுமையை புதிய ஆடையொன்றால் நிகரீடு செய்ய முடிந்தது. வாழ்வென்பது இறந்தகாலம் மட்டுமே என்றான முதியவர்கள் எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியாத தங்கள் சென்ற வாழ்க்கையை இழந்து சாவின் மணம்கொண்ட ஆழ்துயர் எய்தினர்.

களைத்து வெறித்த கண்களுடன் இல்லத் திண்ணைகளில் அமர்ந்து அறியா வண்ணக் கொப்பளிப்பாக தங்கள் முன் நிகழ்ந்துகொண்டிருந்த புதிய வாழ்க்கையை பார்த்தபோது உருவாகி வரும் அப்புதுநகரியில் தங்கள் நினைவுகளும் எஞ்சாதென்று அவர்கள் உணர்ந்தனர். எஞ்சுவது ஏதுமின்றி மறைவதே இப்புவியில் எழுந்த அனைத்திற்கும் தெய்வங்கள் வகுத்த நெறியென்று அறிந்திருந்தும்கூட இருக்கவேண்டும் என உயிர்கொண்டிருந்த வேட்கை எஞ்சவேண்டுமென்று உருமாற்றம் கொண்டு துடிக்க துயருற்ற நெஞ்சுடன் தனிமையில் அமிழ்ந்தனர். ஒருவரோடொருவர் துயர் பரிமாறி சொன்ன சொற்கள் அனைத்தும் பொருளிழந்துபோக பின்னர் பிறர் விழிகளை நோக்குவதையே தவிர்த்து அமர்ந்தனர்.

முதுபெண்டிரை திரட்டுவதற்கு வந்த அரண்மனை ஊழியர்களிடம் “நாங்கள் எதற்கு வரவேண்டும்? அரசியை நாங்கள் அழைக்கவில்லையே?” என்றாள் முதுமகள் ஒருத்தி. “உங்கள் நகருக்கு எழுந்தருள்பவர் திருமகளின் வடிவமான பேரரசி. உங்கள் குறைகளை வந்து சொல்லுங்கள் அவரிடம்” என்றான் உக்ரசேனன். “நாங்கள் இங்கு உழைத்து உண்கிறோம். மண்ணுக்கு விண் கொடுத்தால் எங்களுக்கு அவள் கொடுப்பாள்” என்றாள் ஒரு கிழவி.

“பேரரசியின் எழிலுருவை நேரில் காண்பதுவரை இப்படி எதையெல்லாமோ எண்ணுவீர்கள். நேர் கண்ட அனைவரும் சொல்வதொன்றே, தெய்வங்கள் மானுட உடல்கொண்டு மண்ணில் தோன்றமுடியும். உங்கள் குலம் தழைக்க, கன்றுகள் பெருக, நிலம் குளிர, களஞ்சியம் நிறைய திருமகள் நோக்கு உங்கள் மேல் படியட்டும்” என்றார் அமைச்சர் கிருபர். ஒரு களியாட்டென அவர்கள் அதற்கு ஒப்பினர். அழைக்கப்பட்ட முதுமகளிர் ஆடையும் அணியும் சூடி ஒருங்கியபோது பிறரும் ஆர்வம் கொண்டனர். அவர்களும் அணிகொண்டு கிளம்பினர்.

தேவயானி கோட்டைவாயிலைக் கடந்ததும் உப்பரிகைகள் அனைத்திலுமிருந்து மலர்க் கடவங்களை எடுத்து கவிழ்த்தனர். மலர்மழையினூடாக அவளது தேர் கோட்டைக்குள் நுழைந்து நின்றது. முரசுகளும் கொம்புகளும் மணிகளும் வாழ்த்தொலிகளும் எழுந்து சூழ அவள் கைகூப்பியபடி எழுந்தாள். நகர்க்குடிகளின் உவகை கட்டின்றி பெருகியது. வேலோடு வேல் தொடுத்து அமைத்த காவலர்களின் வேலி அவர்களை தடுத்தது. அதற்கப்பால் அவர்கள் ததும்பிக் கொந்தளித்தனர்.

தேவயானி தேர் தட்டிலிருந்து காவலர் கொண்டு வைத்த பொன்னாலான படி மேடையில் கால்வைத்து இறங்கி அசோகவனியின் மண்ணில் நின்றதும் வாழ்த்தொலிகள் எழுந்து உச்சத்தை அடைந்தன. கோட்டை மேல் எழுந்த பெருமுரசு துடிதாளத்தில் முழங்கி அமைந்து கார்வையை எஞ்சவிட்டு ஓய்ந்தது. பேரொலி மட்டுமே எழுப்பும் அமைதி எங்கும் நிலவியது. அமைச்சர் கிருபர் “மாமங்கலையர் வருக! நம் மண்ணை கால் தொட்டு வாழ்த்திய பேரரசிக்கு மங்கலம் காட்டி உங்கள் குடித்தெய்வமென்று அழைத்துச் செல்க!” என்று ஆணையிட்டார்.

நிரைவகுத்து நின்றிருந்த மங்கலத்தாலங்கள் ஏந்திய முதுபெண்டிர் கிளம்பியதுமே கலைந்து ஒருவரோடொருவர் முட்டிக்கொண்டனர். இரு தாலங்களில் இருந்து வெள்ளிச்செம்புகள் கீழே விழுந்தன. மூவர் அவற்றை குனிந்து எடுக்க முயல அதிலொருத்தி பிறரால் முட்டித்தள்ளப்பட்டு கீழே விழுந்தாள். அவளை காவலர் இழுத்து பின்னால் கொண்டுசென்றனர். கிருபர் அவர்களிடம் “நிரை… நிரை… ஒருவர் பின் ஒருவராக” என சொல்லிக்கொண்டே இருந்தார்.

முதன்மை மாமங்கலையினர் மூவர் பேரரசியின் எதிரே சென்று நின்று ஐம்மங்கலங்கள் நிரம்பிய தாலத்தை நீட்டி உரத்த குரலில் முன்னரே பயிற்றுவிக்கப்பட்ட சொற்களை சொன்னார்கள். “திருமகளே, மண்ணாளும் கொற்றவை வடிவே, கலைதேர்ந்த சொல்மகளே, எங்கள் சிற்றூர் அசோகவனிக்கு வருக! எங்கள் குலம் விளங்க, இந்நகர் மலர் உதிரா மரம் என்று பொலிய தங்கள் வரவு நிகழட்டும்” என்று மூத்தபெண்டு முறைமை சொல்ல தேவயானி முகம் மலர்ந்து “ஆம். இந்நகர் பொலியும். அது தெய்வங்களின் ஆணை” என்றாள்.

அடுத்த முதுமகள் தான் பலமுறை சொல்லி உளம் நிறுத்தியிருந்த சொற்களை மறந்து நினைவிலெடுக்க முயன்று தத்தளித்து வாய் ஓய்ந்து நின்றாள். தேவயானி அவளிடம் “உங்கள் மங்கலமுகத்தோற்றம் என்னை நிறைவுகொள்ளச் செய்கிறது, அன்னையரே” என்றாள். அம்முதுமகள் சொற்களை நினைவுகூர்ந்து “வெற்று அகலென இங்கிருந்தது எங்கள் சிற்றூர். இதில் நெய்யென்றாகிறது எங்கள் உள்ளம். ஒளிரும் சுடரென தாங்கள் தோன்றியிருக்கிறீர்கள். விண் நிறைந்த மூதாதையருக்கு முன் இது வைக்கப்பட்டிருக்கிறது. இங்கு அனைத்து தெய்வங்களின் அருளும் பொழியவேண்டும்” என்றாள்.

“ஆம், தெய்வங்கள் அனைத்தையும் கொடையும் பலியும் கொண்டு மகிழ வைப்போம். நம் மூதாதையர் அனைவரும் இந்நாட்களில் இந்நகரில் எழட்டும்” என்று தேவயானி சொன்னாள். பின்னர் முன்னால் நின்ற மூதன்னையின் தோளில் கைவைத்து “என் அன்னையே நேரில் வந்து அணிமங்கலத்துடன் என்னை வரவேற்றதுபோல் உணர்கிறேன். அன்னையை நான் கண்டதில்லை. தங்களைப்போல் முகம் மலர்ந்த எளிய மூதாட்டியாக பழுத்திருப்பாளென்று தோன்றுகிறது” என்றாள்.

அந்தத் தொடுகையையும் நேர்ச்சொல்லையும் எதிர்பாராத முதுமகள் தத்தளித்து “அரசி தாங்கள்… நான்… நான்… இங்கே… எளியவள்” என்று உடைந்த சொற்களுடன் விம்மும் தொண்டையுடன் நிலையழிந்தாள். தேவயானி அவள் கைகளைப்பற்றி “வருக அன்னையே, நம் அரண்மனைக்குச் செல்வோம். நம் மைந்தர் இங்கு நிறைந்து வாழ ஆவன செய்வோம்” என்றாள். அவள் சொற்களிலிருந்த மெய்யுணர்ச்சியின் அணுக்கத்தால் அனைத்து எச்சரிக்கைகளையும் கடந்துவந்த இரண்டாவது முதுமகள் கைநீட்டி தேவயானியின் கைகளை பற்றிக்கொண்டு “மகளே, நான் முதியவள். உன்னிடம் இதை சொல்லியாக வேண்டும். நீ பேரரசியே ஆனாலும் பொன் மேல் கால் வைத்திறங்கலாமா? பொன்னென மண்ணுக்கு வந்தது விண் வாழும் திருமகள் அல்லவா? அது புலரியையும் அந்தியையும் காலால் மிதிப்பதல்லவா?” என்றாள்.

தேவயானி ஒருகணம் சற்றே கலைந்து ஆனால் முகம் மாறாமல் அச்சொற்களை கேட்காதவள்போல காலடி வைத்து முன்னால் சென்று பிறிதொரு மூதன்னையிடம் முகமலர்வுடன் “அரண்மனைக்கு வருக, அன்னையே!” என்றபின் கிருபரிடம் “செல்வோம்” என்றாள். சாயை விழிகள் மாற திரும்பி உக்ரசேனனை பார்த்தாள். அவன் கைகளைக் கூப்பியவனாக உள்ளம் அழிந்து தோள்களில் முட்டிய திரளால் ஆடியபடி நின்றான்.

சாயையின் விழிகளால் ஆணை பெற்ற காவலர் முதுமகளின் தோளில் கைவைத்து தள்ளியபடி “வருக மங்கலையே” என்றார்கள். “இல்லை, நான் அரசியிடம் தவறாக ஒன்றும் சொல்லவில்லை. பொன்னை மிதிக்கும் பழக்கம் எங்கள் குலத்தில் இல்லை” என்றாள் முதுமகள். “ஆம், வருக அன்னையே” என்று காவலர் அவளை இழுத்தார்கள். அவளுக்குப் பின்னால் நின்ற இன்னொரு முதுமகள் “இங்கு நாங்கள் நெல்லையும் மலரையும்கூட கால்களால் தொடுவதில்லை. மலரென்றும் நெல்லென்றும் பொலிவது பொன்னல்லவா?” என்றாள். அவளையும் வீரர்கள் இழுத்து கூட்டத்திற்குள் புதைத்து அமிழ்த்தினர்.

அணித்தேர் வந்து நின்றது. தேவயானி அதை நோக்கி நடக்கையில் அவளுக்குப் பின்னால் பெண்களும் படைவீரர்களும் அடங்கிய குழு சுவரென்று எழுந்து முதிய மாமங்கலைகளை அவளிடமிருந்து முற்றாக விலக்கி அகற்றி கொண்டுசென்றது. தேவயானி சாயையிடம் “அம்முதுபெண்டிரை ஒன்றும் செய்யவேண்டியதில்லை. எளியவர்கள்” என்றாள். “ஆம்” என்றாள் சாயை. தேவயானி மட்டும் தேரில் ஏறிக்கொண்டாள். சாயை கிருபரை நோக்கி பிறிதொரு நோக்கு சூடிய விழிகளுடன் திரும்பினாள்.

நகரின் தெருக்களினூடாக அவளுடைய தேர் சென்றபோது இருபுறமும் கூடி நின்ற மக்கள் அரிமலர் தூவி வாழ்த்துரைத்தனர். தெருக்களில் மலர்தரைமேல் மலர்காற்றினூடாக சென்ற அவள் தேர் அரண்மனை வாயிலை சென்றடைந்தபோது முன்னரே புரவிகளில் அங்கு சென்றிருந்த கிருபரும் பிற அமைச்சர்களும் அவளுக்காக காத்து நின்றிருந்தனர். துணைக் கோட்டைத் தலைவனாகிய சித்ரவர்மன் கவசஉடையும் அரசமுத்திரையுமாக வந்து தலைவணங்கி உடைவாளை தேவயானியின் காலடியில் தாழ்த்தி வணங்கி வாழ்த்து கூவினான். தேவயானி அவன் வாழ்த்தை ஏற்று அமைச்சர்களால் வழிநடத்தப்பட்டு அரண்மனைக்குள் நுழைந்தாள்.

சாயை திரும்பி கிருபரிடம் “முந்தைய காவல் தலைவனை நான் உற்றுசாவவேண்டும். அவனுக்கு பிற நோக்கங்கள் இருந்தனவா என்று அறிந்த பின்னர் வேண்டியதை செய்யலாம்” என்றாள். “ஆணை” என்றார் கிருபர்.