மாதம்: மார்ச் 2017

நூல் பதின்மூன்று – மாமலர் – 45

45. குளிர்ச்சுழி

மலைச்சரிவில் முண்டன் முயல்போல, பச்சைப் பந்துபோல பரவியிருந்த புதர்களினூடாக வளைந்து நெளிந்து பின்னால் தொடர்ந்து வர, பெரிய கால்களை தூக்கிவைத்து புதர்களை மிதித்து சழைத்து பாறைகளை நிலைபெயர்ந்து உருண்டு அகலச்செய்து பறப்பதுபோல் கைகளை வீசி முன்னால் சென்ற பீமன் நின்று இடையில் கைவைத்து இளங்காற்றில் எழுந்து வந்த மலர் மணத்தை முகர்ந்து ஒரு கணம் எண்ணங்களை இழந்தான். பின்னர் திரும்பி இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி விரித்து “அதே மணம்! ஐயமே இல்லை, அதே மணம்தான். இங்குள்ளது அந்த மலர். இதோ, மிக அருகே!” என்று கூவினான்.

புன்னகையுடன் அவனருகே வந்து மூச்சிரைக்க நின்ற முண்டன் “மரக்கிளைகளினூடாக தாவிச்செல்வது எளிது. அங்கு கைகளால் நடக்கலாம்” என்றான். “மண்ணில் நடப்பதைவிட வானில் நடப்பது எளிது… மண்ணில் நடக்கையிலும் கைகளால் வானிலும் துழாவிக்கொள்கிறோம்.” பீமன் அவன் தலையைத் தொட்டு உலுக்கி “மிக அருகே! அந்த மணம், ஐயமே இல்லை, அதே மணம்தான்” என்றான். “அதோ தெரிகிறது சோலை!” என்று முண்டன் சுட்டிக்காட்டியதுமே பீமன் பாய்ந்து ஓடத்தொடங்கினான்.

மலைச்சரிவின் விளிம்பிலேறி வந்து நின்ற முண்டன் சற்று சரிந்து இறங்கிப்போன நிலத்தில் இரு கைகளையும் விரித்தபடி ஓடி அகன்ற பீமனை தொலைவிலிருந்து நோக்கினான். அச்சோலைக்குள் இருந்த சுனை இளவெயிலில் ஒளி கொண்டிருந்தது. பச்சைப் பட்டால் மூடிவைத்த சுடரகல்போல. பீமன் அம்மரங்களினூடே மறையக் கண்டபின் முண்டன் சிறிய தாவல்களாக தானும் ஓடி அதை அணுகினான். சோலைக்குள் மரங்களினூடே பீமன் புதுமழை மணம் பெற்ற கரடிபோல இரு கைகளையும் விரித்து துள்ளிச் சுழன்று ஓடுவது தெரிந்தது. நறுமணம் மானுடரை பித்தாக்கிவிடுகிறது. காட்சிகளோ ஒலிகளோ சுவைகளோகூட அதை செய்வதில்லை. மணங்கள் புலன்களை எண்ணங்களிலிருந்து விடுவித்து கட்டிலாது கிளரச் செய்துவிடுகின்றன.

ஒரு மரத்தருகே சென்று நின்று திரும்பி நோக்கி “இதுவா…?” என்றான் பீமன். “நானறியேன், கண்டுபிடிக்கவேண்டியவர் நீங்கள்” என்றான் முண்டன். “இதே இடம்! இங்கு முன்பு நான் வந்திருக்கிறேன்” என்றான். பிறகு மூச்சிரைக்க “கனவில் கண்ட இடம். முன்பு கண்ட அதே சோலை” என்றான். மரங்களின் வேர்ப்புடைப்புகளில் ஏறி தாவியிறங்கி  “ஆம், எவ்வண்ணமோ இதுவும் முந்தைய சோலை போலவே அமைந்துள்ளது. அங்கிருந்து பறவைகள் விதைகளுடன் இங்கு வந்திருக்கலாம்” என்றான் முண்டன்.

பீமன் திரும்பி ஓடி பிறிதொரு மரத்தடியில் சென்று நின்றான். “இதே மணம்தான்” என்றான். “பிறகென்ன? அதிலிருந்து மலரொன்றை பறித்துக்கொள்ளுங்கள். அதுதான் கல்யாண சௌகந்திகம்” என்றான் முண்டன். பீமன் குதித்து அம்மரத்தின் சிறிய கிளையொன்றை பற்றினான். அது எடை தாங்காது சற்று சாய்ந்து மலர்களை கொட்டியது. பீமன் ஒரு மலரை எடுத்து முகர்ந்தபோது அவன்மேல் ஒரு வெண்ணிறக் கடலலை பெருகிவந்து சூழ்ந்து அறைந்து முழுக்காட்டியதை காணமுடிந்தது. பட்டு இழுபடுவதுபோல அந்த அலை விலகி மறைய கரிய ஈரத்துடன் பாறை எழுவதுபோல் அவன் குளிர்ந்து நின்றான். பின்னர் “இதுவல்ல…” என்றான். முண்டன் புன்னகைக்க “ஆனால் பெரும்பாலும் இது” என்றான். முண்டன் “நான் எண்ணினேன்” என்றான்.

அருகணைந்த பீமன் சோர்வுடன் “இதே மணம்தான். அகலே நின்றிருக்கையில் எந்த வேறுபாட்டையும் நான் காணவில்லை. கையிலெடுத்து முகரும்போது உள்ளிருந்து பிறிதொரு புலன் சொல்கிறது இதுவல்ல என்று” என்றான். பின்பு அந்த மலரை உதிர்த்துவிட்டு அருகே வந்து “இது நாமறிந்துகொள்ள முடியாத ஏதோ உள விளையாட்டு. என் சித்தம் பிறழ்ந்திருக்கக்கூடும்” என்றான். “திரும்பிவிடலாமென எண்ணுகிறேன், முண்டரே. பொருளற்ற ஒரு ஆழ்துழாவல் மட்டும்தான் இது. இதைத் தொடர்ந்துசென்று நான் அடையக்கூடுவதென ஏதுமில்லை”.

முண்டன் “பாண்டவரே, ஒரு செடியில் எழும் முள்ளில் முதலில் உருவாவது எது?” என்றான். “என்ன?” என்று பீமன் புரியாமல் திரும்பி கேட்டான். பின்னர் அவ்வினாவின் உட்பொருளை உணர்ந்தவனாக “அதன் மிகக்கூரிய முனை. முள்முனையின் இறுதிப்புள்ளி” என்றான். “அப்புள்ளியின் கூர்மையை வலுப்பெறச் செய்வதற்காகவே மேலும் மேலுமென தன் உடலை அது திரட்டிக் கூம்பி நீண்டெழுகிறது.” சிரித்தபடி “நன்று” என்றான் முண்டன். “ஐவரில் தத்துவம் அறியாதவர் நீங்கள் ஒருவரே என்கிறார்கள் சூதர்கள், நன்று.” பீமன் சிரித்து “தத்துவம் அறியேன். ஆனால் முட்களை அறிவேன்” என்றான்.

“தாங்கள் சொன்னதில் மேலுமொரு நீட்சி உள்ளது, பாண்டவரே. அம்முள்முனையின் முடிவிற்கு அப்பாலிருக்கும் வெறுமையைத்தான் அந்த முள் முதலில் அறிந்தது. அதை நிரப்பும் பொருட்டே முனையின் முதல் அணுவை உருவாக்கிக் கொண்டது” என்றான் முண்டன். “அவ்வெறுமைக்கும் அம்முதலணுவுக்குமான உரையாடல் ஒன்று ஒவ்வொரு முள்ளிலும் நிகழ்ந்து கொண்டிருந்தது. முள்முனைகள்  குத்துவதும் கிழிப்பதும் வருடுவதும் அதைத்தான்.” அவன் சொல்வதன் பொருளென்ன என்று விளங்காவிட்டாலும் எவ்விதமோ அதன் உட்பொருளை நோக்கி சென்றுவிட்ட பீமன் புன்னகையுடன் அருகே வந்தான்.

முண்டன் “அந்தச் சிற்றாலயத்தை தாங்கள் இன்னும் பார்க்கவில்லை” என்றான். பீமன் அப்போதுதான் தாழ்ந்த மரக்கிளைகள் இலைக்கொத்துகளால் பொத்தி வைத்திருந்த கரிய சிற்றாலயத்தை பார்த்தான். “அதே வடிவில், அதே அளவில்” என்றபடி அதை நோக்கி சென்றான். ஆலயத்தின் சிறிய வாயில் கதவில்லாது திறந்திருந்தது. அதன் முன் சென்று இடையில் கைவைத்தபடி நின்று உள்ளே பார்த்தான். பின்னர் திரும்பி அணுகி வந்த முண்டனிடம் “அதே சிலையா?” என்றான். “ஏறத்தாழ…” என்றபடி முண்டன் அருகே வந்தான். “இவள் அசோகசுந்தரி” என்றான். “கையில் அசோகம் ஏந்தியிருக்கிறாள். மின்கதிருக்கு மாறாக அமுதகலம்.” குனிந்து நோக்கியபடி “ஆம்” என்றான் பீமன். “ஆனால் அதே முகம்” என்றபின் “ஒளியின் மாறுபாட்டினாலா என தெரியவில்லை. இது ஊர்வசியின் முகத்தில் இல்லாத பிறிதொரு புன்னகை கொண்டுள்ளது” என்றவன் கைகளைக் கட்டி கூர்ந்து நோக்கியபடியே நின்றான். திரும்பி புன்னகைத்து “ஒருவேளை நீர் சொன்ன கதையால் உருவான உளமயக்காக இருக்கலாம். இது இளம்கன்னியின் அறியா புன்னகை. ஊர்வசியின் முகத்தில் இருந்தது துலாவின் மறுதட்டையும் அறிந்தபின் எழும் நகைப்பு” என்றான்.

“ஆம். நமது உள்ளம் கொள்ளும் சித்திரம்தான் அது” என்றபடி முண்டன் அப்படியில் அமர்ந்தான். அவன் முன் அடிமரம்போல் பருத்த உடலுடன் எழுந்து நின்ற பீமன்  “இங்கும் நானறிவதற்கு ஏதேனும் உள்ளதா?” என்றான்.  “வினாக்கள்தான். உறவுகளைப்பற்றி விடைகளை எவர் கூறக்கூடும்?” என்றான் முண்டன். “காலத்தில் பின்னகர்ந்து செல்ல வேண்டுமா என்ன? செல்கிறேன்” என்றான் பீமன்.

“இம்முறை காலத்தில் முன்னகர்ந்து செல்லலாம்’’ என்று முண்டன் சொன்னான். “இமயமலை அடிவாரத்தில் யமுனை நதிக்கரையில் குகையொன்றில் உங்கள் மூதாதை நகுஷன் ஒரு பெரும்பாம்பென இருளில் உறைகிறார். அக்குகைக்குள் வழிதவறி தங்க வரும் உயிர்களை மட்டுமே பற்றி இறுக்கி உணவாகக் கொள்கிறார். ஆகவே தீராப் பசி கொண்டிருக்கிறார். தன் பசியை முழுதடக்கும் பேருடல்  விலங்கொன்றை உண்ணும்போது அவருக்கு மீட்பு என்று சொல்லிடப்பட்டுள்ளது” என்றபின் நகைத்து “தீயூழ் என்னவென்றால் யானைகள் அச்சரிவில் ஏறமுடியாது. குகைகளுக்குள் நுழையும் வழக்கமும் யானைகளுக்கில்லை” என்றான்.

பீமன் முண்டனின் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். “அமர்க!” என்று அவன் சொன்னதும் அசோகசுந்தரியை நிலம்பணிந்து வணங்கிவிட்டு  சிறுவனைப்போல் உடலொடுக்கி படிகளில் அமர்ந்தான். முண்டன் தன் கையை அவன் முகத்தருகே காட்டினான். “காலம் நாமணியும் ஆடையைப் போன்றது. ஆடை நம்மீது படிகிறது. ஆடைக்கு நாம் வடிவளிக்கிறோம். நம்முள் எங்கோ ஆடையே நம் வடிவென்றாகிறது. நோக்குக, ஆடைகள் அனைத்தும் மானுட வடிவொன்றை கரந்துள்ளன. அணியப்படாத ஆடைகளில்கூட அணியவிருக்கும் மானுடர் உறைகிறார்கள். ஆடைகளை மாற்றிக்கொள்கையில் நம் உடல் பிறிதொன்றாகிறது. உடல் பிறிதொன்றாகையில் உளம் பிறிதொன்றாகிறது. ஏனெனில் உளமணியும் ஆடையே உடல். பாண்டவரே, உளம் எது அணிந்த  ஆடை?”

அவன் குரல் தேனீபோல ரீங்கரித்து அவன் தலையைச்சுற்றி பறந்தது. “இது பிறிதொரு காலம். அடர்காடு. யமுனை கரியநீர் பெருகிச்செல்லும் சரிவு. நீர் நோக்கி புடைத்தெழுந்த வேர்த்திரள்களாலான எழுகரை. நீர் உண்டு உரம்பெற்ற பேருடல் மரங்கள் கிளைதிமிறி இலைகொப்பளிக்க அணிவகுத்திருக்கும் கான்தடம்” என்றான். முதலில் சொற்களாக பின்னர் காட்சிகளாக பின்னர் வானும் மண்ணுமாக காலமாக அவன் சொற்கள் உருமாறிக்கொண்டே சென்றன.

tigerதொலைவிலேயே ஆறு இருப்பதை பீமன் உணர்ந்துவிட்டான்.  அவன் உள்ளமும் சித்தமும் அதை அறிவதற்குமுன் உடல் உணர்ந்துவிட்டது. அவனுக்குப் பின்னால் நால்வரும் திரௌபதியும் நடைதளர்ந்து நாவறண்டு ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி விரைவழிந்து நடந்துவந்து இறுதி ஆற்றலும் அகல மூச்சிரைத்தபடி நின்று பாறைச்சரிவின் நிழலில் பூழிமண்ணின் எடையுடன் விழுந்து அமர்ந்தனர். திரௌபதி சரிந்து கண்மூடி படுத்துவிட்டாள். பீமன் பாறைமேல் நின்றபடி “நீர்” என்றான். தருமன் தலைதிருப்பி “மொண்டு வருக, இளையோனே! எங்களால் நடக்கமுடியாது” என்றார்.

அந்த மலைச்சரிவெங்கும் நீருற்றுகளே இருக்கவில்லை. கௌதமரின் தவச்சாலையிலிருந்து களிந்தமலைச் சாரலில் உள்ள கண்வரின் தவக்குடிலுக்குச் செல்வதென தருமன் முடிவெடுத்தபோது அவரது மாணவர்களில் ஒருவர் “இவ்வழி செல்வது மிக அரிது. எவரும் அணுகலாகாதென்பதனாலேயே அங்கு சென்று குடிலமைத்திருக்கிறார் கண்வர். வடகிழக்கு நோக்கிச்சென்று மலைமேல் ஏறி மீண்டும் கீழிறங்கி அங்கு செல்வதே இயல்வது. பன்னிரு நாட்கள் நடைபயணம் தேவையாகும்” என்றான். ஒரு கணம் எண்ணியபின் தருமன் “இல்லை, அவ்வளவு நாட்கள் இங்கிருக்க இயலாது. துவைதக் காட்டுக்கே நாங்கள் திரும்பிச்செல்ல வேண்டியிருக்கிறது. வரும் முழுநிலவு நாளில் அங்கு நிகழும் வேதச் சொல்லாய்வு அமர்வில் நானும் பங்குகொள்ளவிருக்கிறேன்” என்றார்.

அர்ஜுனன் “நாம் இவ்வழியே செல்லலாம். இதுவரை நாம் அறியாத கடுமைகொண்ட பாதையாக இருக்க வாய்ப்பில்லை” என்றான். அனைவரும் திரும்பி பீமனைப் பார்க்க “செல்வோம்” என்று அவன் சுருக்கமாக சொன்னான். அன்று காலை அவர்கள் கிளம்பும்போதே “கையில் நீரெடுத்துக்கொள்ளுங்கள்” என்றார் கௌதமர். “நீள்வழி, ஆனால் எங்கும் ஓடைகள் இல்லை. அனைத்து ஊற்றுகளும் வழிதல்களும் ஆற்றுக்கு மேற்கேதான் உள்ளன. ஆறோ அறுபதடி ஆழத்தில் உருளைப்பாறைக் குவியல்களுக்கு அடியில் பெருகிச் சென்றுகொண்டிருக்கிறது.”

தருமன் “இங்கு இப்படியொரு வறண்ட நிலம் எப்படி உருவானது?” என்றார். கௌதமர் சிரித்து “மண்ணியல்பை அப்படி வகுக்கமுடியுமா என்ன?” என்றார். அர்ஜுனன் “மண்ணுக்கு அடியில் விரிசலே அற்ற  ஒற்றைப்பெரும்பாறைப்பரப்பு இருக்கக்கூடும்” என்றான். நகுலன் மூட்டையை இறுக்கிக் கட்டியபடி “இரக்கமே அற்ற மண்” என்றான். தருமன் அதன் பொருள் அறியாமுள் என தொட்டுச்செல்ல  திரும்பி நோக்கிவிட்டு “ஆம், அது அன்னை என்பதனாலேயே அவ்வாறும் இருந்தாகவேண்டியிருக்கிறது” என்றார்.

இரு பெரும்தோற்பைகளில் நீர் நிரப்பி பீமன் தன் இரு தோள்களிலும் மாட்டிக்கொண்டான். உண்பதற்கு உலர்அப்பமும் காய்ந்தபழங்களும் நிரப்பிய தோல்பையை முதுகிலிட்டான். கச்சையை இறுக்கியபடி அவன் எழுந்து நடக்க அவர்கள் வணக்கங்களுக்குப்பின் தொடர்ந்தனர். உருளைக்கரும்பாறைகள் விண்ணிலிருந்து மழையாகப் பொழிந்தவைபோல சிதறிப் பரந்திருந்த நிலவெளியினூடாக நடக்கத் தொடங்கினர். விரைவிலேயே வானில் முழு வெம்மையுடன் கதிரவன் எழுந்தான். “பெருங்கோடைக்காலம் இது” என்றார் தருமன். “நிமித்திக நூலின்படி பன்னிரண்டாண்டுச் சுழற்சி இக்கோடையை கொண்டுவந்துள்ளது. மழையிலாது இலைகளை உதிர்த்து மரங்கள் தவமிருக்கின்றன.”

“பறவைகள் அனைத்தும் நீர் தேடிச் சென்றுவிட்டன போலும்” என்றான் நகுலன். தருமன் குனிந்து செடிகளைப் பார்த்து “அத்தனை செடிகளும் தங்கள் உயிரை விதைகளில் பொறித்து மண்ணில் விட்டுவிட்டு மடிந்துவிட்டன. பல்லாயிரம் விதைகள். அவற்றில் ஒன்று எஞ்சினால்கூட அவற்றின் குலம் வாழும்” என்றபின் திரும்பி “வேதத்தில் ஒரு சொல் எஞ்சினால் போதும், முழு வேதத்தையும் மீட்டுவிடலாம் என்றொரு நூற்குறிப்புள்ளது, இளையோனே” என்றார். சகதேவன் புன்னகைத்து “முடிவின்மையை ஒவ்வொரு துளியிலும் பொறிக்கும் விந்தையையே இயற்கையில் பிரம்மம் விளையாடிக் கொண்டிருக்கிறது” என்றான்.

ஏன் அவர்கள் அனைத்தையும் சொல்லென ஆக்கிக் கொள்கிறார்கள் என பீமன் எண்ணினான். சொல்லென்றல்ல, அறிந்தவையென ஆக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் எங்கும் அதையல்லவா செய்கிறோம். அறியாத மானுடன் ஒருவனைக் கண்டால் குலமும் குடியும் ஊரும் பெயரும் கேட்டு உரையாடி அவனை அறிந்தவனென்றாக்கிக் கொள்கிறோம்.  இந்த நிலத்திற்கு ஒரு பெயரிடவேண்டும். இத்தனை பாறைகளுக்கும் எண்ணிடவேண்டும். இவற்றின் நேற்றும் முன்னாளும் தெரிந்திருக்கவேண்டும். அதன்பின் இந்நிலம் நிலமல்ல, வெறும் அறிவு.

உடலுக்குள்ளிருந்து நீர் வெம்மைகொண்டு குமிழிகளாகிக் கொதித்து தளதளத்து ஆவியாகி தோலை வேகவைத்தது. அனைத்து வியர்வைத் துளைகளினூடாகவும் கசிந்து வழிந்து ஆவியாகியது. உலர்ந்த வாய்க்குள் வெந்நீரில் விழுந்த புழுவென நாக்கு தவித்தது. புருவங்களிலும் காதோர மயிர்களிலும் உப்பு படிய திரௌபதி “சற்று நீர் கொடுங்கள், முகங்கழுவிக்கொள்ள” என்றாள்.  தருமன் ஏதோ சொல்ல எண்ணி திரும்பி நோக்கியபின் சொல்லாமல் அமைந்தார். கிளம்பியபோது முதலில் வயிறு நிறையும்படி நீரருந்தி முகம் கழுவி எஞ்சியதை தலையிலும் விட்டுக்கொண்டார்கள். ஏழு இடங்களில் அமர்ந்து உச்சிப்பொழுதைக் கடந்தபோது தோற்பைகளில் நீர் மிகக் குறைவாகவே இருந்தது. அப்போது பிறிதொருவர் நீர் அருந்துவதைக் கண்டால் உடல் பதறியது.

“அச்சமூட்டுவது இது. நம்மிடம் இருக்கும் நீரின் அளவு தெரியும், செல்ல வேண்டிய தொலைவு தெரியாது” என்றார் தருமன். அர்ஜுனன் வில்லுடன் தலை குனிந்து நடந்து அப்பால் சென்று பாறையொன்றின்மேல் அணிலெனத் தாவி ஏறி நாற்புறமும் நோக்கி “நெடுந்தொலைவெங்கிலும் நீர் இருப்பதாகத் தெரியவில்லை. அனைத்து மரங்களும் பசுமை வாடியே தென்படுகின்றன. சிறுசுனையோ ஊற்றோ இருந்தால்கூட தழைத்த மரங்கள் சில தென்படும்” என்றான். பீமன் “பார்ப்போம்” என்றபடி முன்னால் நடந்தான்.

நிழல் நீண்டு கிழக்கே சரியத் தொடங்கியது. தோல்பையில் நீர் முழுமையாகவே ஒழிந்தது. இறுதியாக எஞ்சிய அரைக்குவளை நீரை மூங்கில் குழாயில் நிரப்பி திரௌபதியிடம் கொடுத்த பீமன் “இது உனக்கு, தேவி” என்றான். அவள் அதை வாங்கி தருமனிடம் அளித்து “தாங்கள் வைத்திருங்கள்” என்றாள். “நீர் உனக்கு என்பதுதான் நெறி” என்றார் தருமன். “அதை தாங்கள் அளிக்க வேண்டும்” என்று அவள் சொன்னாள். இறுதியாக எஞ்சிய நீரையும் மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுக்கையில் அருந்தி முடித்தபோது ஐவரும் அச்சம் கொண்டிருந்தனர். “இவ்வழியை நாம் தேர்ந்திருக்கலாகாது” என்று தருமன் சொன்னார்.

“ஒவ்வொருமுறையும் நாம் அறிந்தவற்றை வைத்து இவ்வுலகை மதிப்பிடுகிறோம். ஒவ்வொருமுறையும் எதிர்காலம் என்பது முற்றிலும் அறியாததாகவே இருக்கிறது. கல்வியைக் கொண்டு வாழ்வை எதிர்கொள்ள முடியாதென்று இளவயதில் முதுசூதன் ஒருவன் என்னிடம் சொன்னான். ஏனெனில் இதுவரை வாழ்ந்த வாழ்வே நூலென மொழியென அமைந்துள்ளது. எழும் வாழ்வின் நெறிகளோ இயல்புகளோ ஏதும் அவற்றிலிருக்க வாய்ப்பில்லை.” அவர் பேசுவது அச்சூழலில் எவ்வகையிலும் பொருந்தவில்லை. ஆனால் பேசாமலிருக்கும்போது எழுந்து சூழ்ந்த அமைதியில் அக்குரல் ஒரு வழிகாட்டி அழைப்புபோல ஆறுதல் அளித்தது.

சகதேவன் “ஒவ்வொரு புல்லும் தன் தலைமுறைகள் வாழ்ந்த அறிதலை சிறுவிதைமணியாக்கி தன் தலையில் சூடியிருக்கிறது. தான் மடியும்போது எஞ்சவிட்டுச் செல்கிறது” என்றான். அவனை திரும்பி நோக்கிய தருமன் சில கணங்களுக்குப்பின் “ஆம், நம்மில் நாளை எஞ்சுமெனில் அது அறிவென்றோ உணர்வென்றோ இருக்காது. உடலில் பழக்கமென, உள்ளத்தில் கனவென, உயிரில் நுண்மையென மறைந்திருக்கும். அதை அறிய இயலாது, நம்பலாம்” என்றார். சகதேவன் சிரித்து “எப்போதும் அறிய இயலாதவற்றை அல்லவா நம்புகிறோம்?” என்றான்.

பீமன் முன்னால் நடந்து அங்கிருந்த பெரும்பாறையொன்றின்மேல் உடும்புபோல தொற்றி ஏறி அதன் உச்சியில் பாறைப்பிளவில் வேர் செலுத்தி எழுந்து கிளை விரித்திருந்த அரசமரமொன்றின் அடிமரத்தைப்பற்றி மேலேறி உச்சிக் கிளையில் நின்று சூழ நோக்கினான். பின்பு இறங்கி வந்து பாறைமேல் நின்று நகுலனிடம் “இளையோனே, அங்கு நீருள்ளது. நான் சென்று மொண்டு வருகிறேன்” என்றான்.

பீமன் பாறையிலிருந்து பாறைக்குத் தாவி மலைச்சரிவில் விரைந்தான். இலை உதிர்த்து வேரில் உயிர் மட்டும் எஞ்ச நின்ற மரங்களுக்கு அப்பால் வானிலெழுந்து சுழன்றமைந்த பறவைகள் அங்கிருக்கும் பசுஞ்சோலையொன்றில் வாழ்பவை என்று தெரிந்தது. அணுகுந்தோறும் பறவை ஒலிகள் தெளிவு கொண்டன. அவை பேசும் மொழி அனைத்தும் தனக்கு நீர் நீர் என்றே பொருள் கொள்வதை அவன் விந்தை என உணர்ந்தான். மொழி என்பது கொள்ளப்படும் பொருள் மட்டுமே என்று எங்கோ கேட்ட சூதர்சொல் நினைவுக்கு வந்தது. மேலும் அணுகியபோது பசும்கோட்டையென எழுந்த சோலை மரங்களை கண்டான். அதற்கப்பால் ஒரு ஆறு ஓடுவதை உணர்ந்தான்.

மரங்களின் பேருருவம் தெளிவடைந்து வந்தது. மலைப்பாறைகளை கவ்விப் பிரித்து உடைத்து பற்றியிருந்தன வேர்கள். சுண்ணப்பாறை கரைந்துருகி வழிந்ததுபோல அடிமரங்கள் கிளை விரித்தன. எழுந்து கிளைவிரித்து பசுந்தழைக் கூரையைத் தாங்கிய அவற்றுக்குமேல் பல்லாயிரம் பறவைகளின் பேரோசை இடையறா முழக்கமென எழுந்து கொண்டிருந்தது. பின்பு அவன் ஆற்றிலிருந்து எழுந்த நீராவியை மெல்லிய வெப்பமாற்றம் என முகத்தில் உணர்ந்தான். பின் வியர்வைக்குளிரென. மேலும் அணுகியபோது நீர்த்தண்மையென. மூச்சை நிறைக்கும் அழுத்தமென, மெல்லிய நடுக்கமென.

அச்சோலைக்குள் நுழைந்து அதன் குளிர்ந்த இருளுக்குள் அமிழ்ந்தான். சீவிடுகளின் ரீங்காரம் பகலிலும் இரவென எழுந்து அனைத்து ஒலிகளையும் ஒன்றென இணைத்திருந்தது. காற்று கடந்து செல்ல கிளைகள் முனகியபடி உரசிக்கொண்டன. காற்றலைகளால் அள்ளப்பட்ட இலைகள் சுழன்றபடி இறங்கின. சிலந்திவலையின் காணாச்சரடில் சிக்கி வெட்டவெளியில் நின்று நீந்தின. அதுவரை வெயில்கொண்டு அனல் உமிழ்ந்த பாறைகளை மிதித்து வந்த அவன் கால்கள் வெம்மையையே அறியாத குளிர்ப்பாறைகளை நீர் உறைந்த குவைகள் என்றே   உணர்ந்தன. உள்ளங்கைகளையும் பாதங்களையும் அப்பாறைகளில் ஊன்றி அத்தண்மையை உடலெங்கும் வாங்கிக்கொண்டான்.

பாறைகளைப் பற்றியபடி தொங்கி தாவி இறங்கியபோது மிக ஆழத்தில் உருளைப்பாறைகளிடையே மோதி நுரைத்து வெண்ணிறமாக ஓடிய யமுனையை கண்டான். பகலெங்கும் அவன் தன் குடுவையிலிருந்து ஒரு துளி நீரையும் அருந்தியிருக்கவில்லை. கால் நகத்திலிருந்து தலைமயிரிழை நுனிவரை எரிந்த பெருவிடாய் அவனிலிருந்து பிரிந்தெழுந்து பேருருக்கொண்டு கீழே ஓடிய குளிர்நீர்ப் பெருக்கை நோக்கி மலைத்து நின்றது. பின்னர் அலையலையாக படிகளெனச் சென்ற வேர்மடிப்புகள் வழியாக தாவி இறங்கினான். பாறைகளின் மேலிருந்து மரக்கிளைகளைப்பற்றி ஊசலாடி மேலும் இறங்கிச் சென்றான்.

இறங்குந்தோறும் யமுனை அகன்று பெருகியது. மேலே நிற்கையில் சிற்றோடையின் வெள்ளி வழிவெனத் தெரிந்த யமுனை அகன்று பெருகலாயிற்று. நூற்றுக்கணக்கான பாறைத்தடைகளில் அறைந்து வெள்ளி நுரை சிதற வளைந்து நீர்க்குவைகளென்றாகி நீர்த்திரைகளென விழுந்தாடி இறங்கிச் சென்றுகொண்டிருந்த நதியின் களித்துள்ளலை விட்டு கண்களை அவனால் எடுக்க முடியவில்லை. இரு பெரும்பாறைகள் தழுவியவை என நின்ற இடுக்கினூடாக புகுந்து மென்மணலும் சருகும் பரவிச்சரிந்த பாறை வழியாக வழுக்கிச் சென்று பெரிய பாறைத்தடம் ஒன்றில் நின்றான். இடையில் கைவைத்து மூச்சிரைக்க ஆற்றை நோக்கிநின்று தன் தோளில் தொங்கிய இரு நீர்க்குடுவைகளையும் சீரமைத்துக்  கொண்டான்.

அப்போது குகைக்குள் மெல்லிய இருளசைவொன்றை ஓரவிழி உணர திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். திறந்த குகைக்குள் யுகங்களின் இருள் மையென செறிந்திருந்தது. பேருருக்கொண்ட கன்னியொருத்தி சுட்டுவிரல் நீட்டி தொட்டு கண்ணெழுதும் சிறு சிமிழ். விழி அறிந்த அவ்வசைவு உண்மையா என்றெண்ணி அவன் மேலும் கூர்ந்து நோக்கினான். ஓசையின்மை அசைவின்மையாக தன்னை மாற்றிக்கொண்டது. நோக்குந்தோறும் இருள் மேலும் செறிந்தது. அங்கு எது இருந்தாலும் திரும்பிப்பாராது கீழிறங்கி நீரை நோக்கிச் செல்வதே தனக்கு உகந்ததென்று அவனுக்குத் தோன்றியது.

ஆனால் விந்தைகளை எப்போதும் எதிர்நோக்கும் அவனுள் உறைந்த சிறுவன் செல்லும்பொருட்டு அடி எடுத்து வைத்த அவனை பின்னிலிருந்து இழுத்தான். ஐயத்துடன் மீண்டும் கூர்ந்து நோக்கியபின் அவன் அக்குகை நோக்கி சென்றான். நின்ற பாறையிலிருந்து சற்றே சரிந்திறங்கிச் சென்று அக்குகைக்குள் நுழைய வேண்டியிருந்தது. குகைவாயிலை முற்றிலும் மூடி நின்றிருந்த மரங்களின் இலைத்தழைப்பால் உள்ளே ஒளிசெல்லும் வழிகள் முற்றிலும் மூடப்பட்டிருந்தன. அதன் வாயிலில் நின்று உள்ளே கூர்ந்து நோக்கி “யார்?” என்று அவன் கூவினான். மிக ஆழத்திலெங்கோ குகை ‘யார்?’ என எண்ணிக்கொண்டது. “உள்ளே யார்?” என்று அவன் மீண்டும் கேட்டான். அச்சொல் சில கணங்களுக்குப்பின் ஒரு விம்மல்போல திரும்பி வந்தது.

உடலெங்கும் பரவிய எச்சரிக்கையுடன் காலெடுத்து வைத்து அவன் குகைக்குள் நுழைந்தான். முற்றிலும் விழியிருள அக்கணமே அகம் எண்ணங்களை ஒளியென்றாக்கிக் கொண்டது. இருளில் உடல் கரைய உள்ளம் மட்டும் இருண்ட தைலமென வழிந்து முன்சென்றது. மேலும் சில அடிகள் வைத்தபோது குகை தூய வட்டவடிவில் இருப்பது விந்தையெனப் பட்டது. அதன் இருள் ஈரமென மெல்லிய ஒளி கொண்டிருந்ததா? இருண்மை நீர்மையென்றாகி மேலிருந்து கீழென வழிகிறதா? உருகும் பாறையா? மறுகணம் அவன் அனைத்தையும் உணர்ந்தான். அது மாபெரும் பாம்பு ஒன்றின் உடற்சுருள். குகையின் பாறை வளைவை ஒட்டியே தன் உடலை வளைத்துப் பதித்து அவனை சூழ்ந்துகொண்டிருந்தது அது.

குகையிலிருந்து அவன் வெளியே பாய்வதற்குள் பெயர்ந்து விழும் மாபெரும் வாழைத்தண்டு என அதன் தசைப்பெருக்கு சுருள்களாக அவன் மேல் விழுந்தது. நிலைதடுமாறி அவன் விழுவதற்குள் அவனுடலைச் சுற்றிக் கவ்வி இறுக்கி அது தன் உடற்குழிக்குள் இழுத்துக்கொண்டது. குகைக்குள் அதன் உடல் கீழ்ப்பகுதி இருளில் புதைந்திருக்க மேல்பகுதி காலிலிருந்து தலைவரை அவனை முற்றிலும் சுற்றிக்கொண்டு இறுக்கிச் சுழன்றது. குளிர்நீர் பெருகிச் செல்லும் காட்டாறு ஒன்றின் சுழியில் சிக்கிக்கொண்டது போல. இரு கைகளாலும் இறுகும் அத்தசைவெள்ளத்தை தள்ளி விலக்க முயன்றான். கைகள் வழுக்கி விலக அதன் பிடி மேலும் இறுகியது.

தலைக்குமேல் எழுந்த அதன் நாக விழிகளை பார்த்தான். திறந்த வாய்க்குள்ளிருந்து நாக்கு எழுந்து பறந்தது. அதன் அண்ணாக்கின் தசை அசைவு தெரிந்தது. குனிந்து அவன் தலையை அதன் வாய் விழுங்க வந்தபோது கைகளால் அதன் இரு தாடைகளையும் விலக்கி பற்றிக்கொண்டான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 44

44. வில்லுறு விசை

நகுஷேந்திரனின் ஆணைப்படி கந்தர்வனாகிய வஜ்ராக்‌ஷன் தன் துணைவர் எழுவருடன் சென்று இந்திராணி தவம் செய்துகொண்டிருந்த மகிழமரச் சோலையை அடைந்தான். தன் சொல்லால் அதற்கு அனல்வேலியிட்டிருந்தாள் இந்திராணி. அவர்களின் காலடியோசையிலேயே சாய்கதிர் பட்ட முகிலென சிவந்து எரியலாயிற்று அது. எல்லைக்கு வெளியே நின்று பெருங்குரலெடுத்து அவளை அழைத்தான். இந்திரனின் நலம்திகழும்பொருட்டு ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை பிரம்மனுக்கு பூசெய்கை ஆற்றிவந்த இந்திராணி சோலைக்குள் மலர் கொய்துகொண்டிருந்தாள். பலமுறை எழுந்த அக்குரலைக் கேட்டு அவள் அங்கிருந்து எழுந்து வந்தாள். பிற ஆடவரை ஏறிட்டும் நோக்கக்கூடாதென்று நெறி இருந்தமையால் புறம் திரும்பி நின்று அவர்களிடம் “எதன்பொருட்டு வந்தீர்கள்? இங்கு பிற ஆடவர் குரலெழுவதும் பிழையே” என்றாள்.

வஜ்ராக்‌ஷன் “பெண்ணே, கேள். மண்ணில் விளைந்து விண்ணில் இந்திரனாக அமர்ந்திருக்கும் நகுஷேந்திரனின் ஆணை இது. இந்திரன் என முடிசூடியமர்ந்த அவருக்கு இந்திராணி உரிமைப்பட்டவள். உன்னை அழைத்து வரும்படி பணிக்கப்பட்டிருக்கிறோம்” என்றான். அவள் எழுந்த சினத்தை அடக்கி “அவ்வரியணையில் அவர் இன்னும் முழுமையாக அமரவில்லை. இங்கு நீங்களே சொன்னீர்கள் அவர் நகுஷேந்திரன் என்று. மண்ணில் அவர் கொண்ட அடையாளங்களையும் நினைவுகளையும் முற்றிலும் துறக்காதவரை அவர் எப்படி இந்திரனாக முடியும்?” என்றாள். “நான் இந்திராணியென்றாகவில்லை என்பதே அவர் இந்திரனாகவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.”

வஜ்ராக்‌ஷன் “நான் இதை அறியவேண்டியதில்லை. உன்னை இழுத்துச்செல்லும்படி ஆணை. நான் வெறுமனே மீண்டால் மேலும் பெரிய படை எழும். மேலும் பெரிய சிறுமை நிகழும்” என்றான். “அவனிடம் சென்று சொல்லுங்கள், இங்கு இந்திரன் என அமர்ந்திருப்பது அங்கு குருநகரியில் அரசனென வீற்றிருந்து நிலம்புரக்கும் அவன் அகத்தில் நிகழும் கனவுமட்டுமே என்று” என்றாள் இந்திராணி. “நான் இங்கு அவனை கணவனெனக் கொண்டால் அங்கே வாழும் மானுடனுக்கும் கனவுத்துணைவியென்றாவேன். கனவுகள் அனைத்தும் கலைபவையே என அவனுக்கு புரியவையுங்கள்” என்று சொல்லி உள்ளே சென்றாள்.

வஜ்ராக்‌ஷன் திரும்பி வந்து நகுஷேந்திரனிடம் இந்திராணியின் சொற்களை சொன்னான். சினம்கொண்டு தன் அரியணையிலிருந்து எழுந்த நகுஷன் “என்ன? என்னிடம் சொல்விளையாடுகிறாளா அவள்? ராஜசூயங்களும் அஸ்வமேதங்களும் இயற்றி கொடை முழுத்து ஒளிகொண்டு விண்ணேறி நான் வந்த இடம் இது. இங்கு காலமில்லை. எனவே முடிவிலிவரை நானே இந்திரன். இது கனவென்று சொல்ல என்ன அடிப்படை அவளுக்கு? இது கனவென்றால் இக்கனவைக் கலைத்து என்னை மீண்டும் குருநகரிக்கே செல்லவைக்கட்டும் அவள்” என்றான். திரும்பி அமைச்சர்களை நோக்கி “மேலும் படைகள் எழுக… அவள் இன்றே என் அவைக்கு வந்தாகவேண்டும்” என்று கூச்சலிட்டான்.

“அரசே, தன் சோலையை அனலால் வேலிகட்டியிருக்கிறாள். அதை கடந்து செல்ல தேவர்களால் ஆகாது” என்றான் வஜ்ராக்‌ஷன்.  “எனில் நானே வருகிறேன். நான் கடக்கமுடியாத இடமொன்று இந்திர உலகில் இருக்கிறதா என்று பார்க்கிறேன்” என்று மின்படையை எடுத்துக்கொண்டு நகுஷேந்திரன் கிளம்பினான். கைநீட்டி அவனைத் தடுத்த அஸ்வினிதேவர்கள்  “அரசே, இந்திர உலகில் இவ்வண்ணம் நெறிமுறை மீறும் வழக்கமில்லை” என்றனர்.  “அரச நெறிமுறைகளை அரசனே வகுக்கிறான். இவ்வுச்சிவரை நான் ஏறிவந்தது ஒருபோதும் கூர்மடங்கா என் விழைவினால் என்றுணர்க! அது மேலும் விசைகொள்ளுமே ஒழிய ஒருபோதும் தங்கி அமையப்போவதில்லை” என்று சொன்னபின் அவர்களை விலக்கி அவன் நடந்தான்.

இந்திராணியின் சோலையை அவன் அடைந்ததும் பின்னால் ஓடிவந்த வஜ்ராக்‌ஷன்  “அதோ, அதுவே அனல் வேலி” என்றான்.  “எங்கு வேலி? நான் எந்த வேலியையும் காணவில்லை” என்றபடி நகுஷன் மதம்கொண்ட யானையென நடந்தான். கந்தர்வர்கள் வேலிக்கு மறுபுறமே திகைத்து நின்றுவிட அவன் தடை எதையும் அறியாது நடந்துசென்று சோலைக்குள் புகுந்தான். அவன் வருவதைக் கண்டு மலர் தொடுத்துக்கொண்டிருந்த இந்திராணி  திகைத்தாள். அலறியபடி எழுந்தோடி தன் குடிலுக்குள் சென்று ஒளிந்துகொண்டாள்.

குடில் வாயிலில் வந்து நின்று நகுஷன் உரக்க குரலெழுப்பினான்.  “பெண்ணே, உன் தடைகளேதும் என்னை விலக்காதென்று இன்று அறிந்திருப்பாய்… நான் இந்திரன் என்று அமர்ந்திருப்பதனால் நீ எனக்கு சொந்தமானவள். நெறிகளின்படி இந்திரன் மாறினாலும் இந்திராணி மாறுவதில்லை. சென்ற இந்திரனை நினைத்துக்கொண்டிருப்பது நீ எனக்குச் செய்யும் வஞ்சம். அதனாலேயே நீ கற்பிழந்தவளானாய்” என்றான். நடுங்கியபடி குடிலுக்குள் பதுங்கியிருந்த இந்திராணி அங்கிருந்தே கைகூப்பி அழும் குரலில் “அரசே, விண்ணுலகில் தாங்கள் செல்லமுடியாத இடமொன்றில்லை. உங்களை மீறி ஒரு நெறியும் இங்கு புலர்வதில்லை. அது இங்கு அறம் வாழ வைப்பதன்பொருட்டு உங்களுக்கு தெய்வங்கள் அளித்துள்ள நற்கொடை. அதை அறம்மீறிச் செல்ல பயன்படுத்த வேண்டாம்” என்றாள்.

“இந்திரனுக்கு அறிவுரை சொல்ல வேண்டுமென்றால் நீ வந்து அரண்மனையில் இந்திராணியாக அமர வேண்டும்” என்று நகைத்தபடி சொன்னான் நகுஷன்.  “வெளியே வா, நான் உன்னை கூந்தல்பற்றி இழுத்துச்செல்வதை இந்நகர் காணவேண்டியதில்லை.” அவள் குளிர்ந்து சொல்லிழந்தவளானாள். “வா, இப்போதே!” என அவன் உரக்க கூவினான். அவள் குரல்பெற்றபோது எண்ணத்தால் நெடுந்தொலைவு சென்றிருந்தாள். “அரசே, இச்சோலையில் மலர்களை பார்த்தீர்களல்லவா?” என்றாள். “இது தேவருலகு. இங்கே மலர்கள் வாடுவதில்லை. ஆனால் இங்கு நாளும் மலர்கள் மலர்கின்றன, அந்தியில் வாடி உதிர்கின்றன. அவை என் எதிர்பார்ப்புகள்.”

“இது ஒன்றே சான்று, நான் நீங்கள் ஆளும் தேவருலகில் இல்லை என்பதற்கு” என அவள் தொடர்ந்தாள். “கூந்தல்பற்றி நீங்கள் இழுத்துச்செல்லலாம், அவள் இந்திராணியல்ல. வெறும்பெண். அரசே, எண்ணிநோக்குக! நான் என் கொழுநனின் நினைவுடன் உங்களருகே வந்து அமர்வேன் என்றால் அது உங்கள் மணிமுடிக்கு சிறப்பாகுமா?” நகுஷன் அச்சொற்களால் உளப்பெருக்கு அடங்கி திரும்பி அச்சோலையில் கிளைதாளாமல் எடைகொண்டு மலர்ந்திருந்த வெண்ணிற மகிழமலர்க் கொத்துகளை கண்டான். கீழே அவை உதிர்ந்து வெண்ணிறக் கம்பளம் போன்றிருந்தது நிலம்.

அவன் உளம்கொண்ட இடைவெளியில் புகுந்து  “நான் ஏன் இக்காதலுடன் இருக்கிறேன் என எண்ணுக! ஏன் என் உள்ளத்தில் அவர் நினைவு அழியவில்லை?” என அவள் கேட்டாள். “ஏனென்றால் இன்னமும் எங்கோ இந்திரன் என்னை நினைத்துக்கொண்டிருக்கிறார். அவர் முற்றழியவில்லை. அவர் எங்கோ அவ்விழைவுடன் எஞ்சுவதுவரை இங்கு நானும் இப்படியே இருப்பேன். அவரை கண்டுபிடியுங்கள். அவர் உள்ளத்தில் இருந்து என்னை அழித்து மீளுங்கள். நான் நேற்று அழிந்து இன்று என்று இங்கிருப்பேன். என்னை நீங்கள் மலர்கொய்வதுபோல கொய்யலாம். மார்பில் அணியலாம்” என்றாள். “ஆம், அவன் எங்கோ எஞ்சுகிறான் என்றால் என் முடியும் கோலும் நிலைகொள்ளவில்லை என்றே பொருள். அவனை மிச்சமின்றி வெல்கிறேன். அவன் நெஞ்சழித்து மீள்கிறேன்” என நகுஷன் வஞ்சினம் உரைத்து மீண்டான்.

அரண்மனைக்கு திரும்பும்போதே மேலும் கீழுமென அமைந்த பதினான்கு உலகங்களிலும் இந்திரனைத் தேடி கண்டடைந்து வரும்படி நகுஷன் கந்தர்வர்களையும் கின்னரர்களையும் கிம்புருடர்களையும் தேவர்களையும் யக்‌ஷர்களையும் பணித்தான். அவர்கள் சிறகு சூடிய சிறுபூச்சிகளாகவும் இளங்காற்றுகளாகவும் வண்ண ஒளிக்கீற்றுகளாகவும் நறுமண அலைகளாகவும் இசைத்துளிகளாகவும் உருக்கொண்டு நூறுமுறை அவ்வுலகங்களை சுற்றி வந்தனர். எங்கும் இந்திரனை கண்டடைய முடியவில்லை.  அவர்கள் ஒவ்வொருவராக மீண்டும் அமராவதியில் வந்து சோர்ந்து அமர்ந்தனர். செய்தியை கொணர்ந்த வஜ்ராக்‌ஷனை நோக்கி பெருஞ்சினத்துடன் கூவியபடி வாளுடன் பாய்ந்தான் நகுஷன். “இல்லை, தேவர்களாலும் கண்டறியமுடியாத இடமென ஒன்றில்லை” என்று கூவினான்.

“நீங்கள் என்னை ஏளனம் செய்கிறீர்கள். மானுடனென ஒருவன் முதிர்ந்து இந்திரனாவதை உங்களால் தாள இயலவில்லை” என்று கூச்சலிட்டான். அவையில் அமர்ந்திருந்த தன்வந்திரி முனிவர் புன்னகைத்து  “இதற்கு முன் இங்கு வந்த எந்த இந்திரனும் மானுடராக இருந்த நினைவை கொண்டுவரவில்லை. ஒவ்வொரு சொல்லிலும் அது எழுவதொன்றே நீங்கள் யாரென காட்டுகிறது” என்றார். கைகளை முறுக்கி பற்களைக் கடித்து  “முனிவரே ஆயினும் இருளுக்குள் உங்களைச் செலுத்தும் ஆற்றல் எனக்குண்டு. நினைவுகொள்க, அமராவதியின் அரசன் நான்” என்றான் நகுஷன்.  “அதையும் நாளுக்கு நான்காயிரம் முறை நீங்கள் உங்களுக்கே சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார் தன்வந்திரி.

நகுஷன் தன் மின்படையை கையில் எடுக்க அவனை சனகரும் சனத்குமாரரும் சேர்ந்து பற்றி தடுத்தனர். “அரசே, சினம் அடக்குக! அவர் சொல்வதென்ன என்று செவிகொள்க!” என்றார் சனகர். வெறுப்பு நிறைந்த விழிகளுடன் தன்வந்திரி “எந்தக் கனவுக்குள்ளும் அது கனவே எனும் தன்னுணர்வு ஒரு துளி இருக்கும். கனவுகள் விந்தையெனத் தோன்றுவது அத்தன்னுணர்வால்தான்” என்றார்.  “யார் சொன்னது கனவென்று? சொல்லும், எப்படி சொல்கிறீர்கள் இது கனவென்று?” என்று சீறியபடி அவரை அணுகினான் நகுஷன்.  “சென்று பார்! அங்கே குருநகரியில் உன் முந்தைய வடிவம் அரசு வீற்றிருக்கிறது. அது அங்கில்லையென்றால் நீ இங்கு இருக்கிறாய் என்று கொள்!” என்றார் தன்வந்திரி.

சற்றுநேரம் அவரை நோக்கி நின்றபின் மெல்ல தளர்ந்து அவன் திரும்பினான். ஏளனத்துடன்  “சென்று பார்க்க வேண்டியதுதானே…?” என்றார் தன்வந்திரி. “இதுவல்ல, அதுவே என் கனவு” என்றான் நகுஷன். “அதை விட்டு இங்கு வந்தபோது என் மைந்தரை நான் முற்றுதறவில்லை. ஆகவே அது என்னுள் கனவென தங்கிவிட்டது.” மீண்டும் அரியணையில் அமர்ந்து “நான் சென்று அதை பார்க்கலாம். இங்கிருக்கும் நான் உருவாக்கும் மாயையாகவே அது இருக்கும். அது மெய்யல்ல” என்றபின் வெறியுடன் நகைத்து “இது நீங்கள் எனக்கு ஒருக்கும் பொறி. இதில் விழமாட்டேன்” என்றான். தன்வந்திரி உரக்க நகைத்தபின் எழுந்து அவை நீங்கினார்.

கொந்தளிப்புடன் தன் அரண்மனையின் உப்பரிகைகளில் உலாவிக்கொண்டும் சித்தமழிய மது அருந்திக்கொண்டும் சீற்றம் தணியும்படி மகளிருடன் காமமாடிக்கொண்டும் இருந்த நகுஷேந்திரனை அணுகிய வஜ்ராக்‌ஷன் உலகுலாவியாகிய நாரதர் வந்திருப்பதை அறிவித்தான். உடை திருத்தி முகம் செம்மையாக்கி அவன் அவைக்குச் சென்று அங்கே முனிவர்களுடன் தன் பயணக்கதைகளை சொல்லி நகையாடிக்கொண்டிருந்த இசைமுனிவரை கண்டு பணிந்து வணங்கினான். அவன் முகத்திலிருந்த துயரை நோக்கி மாறாப் புன்னகையுடன் அவர் “எதன்பொருட்டு இந்த நிலைகொள்ளாமை?” என்றார். “இந்திரன் என்றாலே நிலைகொண்டவன் என்றல்லவா பொருள்?”

தன் விழைவையும் இந்திராணியின் சொல்லையும் உரைத்து இந்திரனை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை நகுஷன் சொன்னான். நாரதர் நகைத்து “ஈரேழு உலகங்களிலும் இருக்கும் அத்தனை வடிவையும் தானெடுக்கும் வல்லமை கொண்டவன் இந்திரன். தன் உள்ளம் உருவாக்கும் அனைத்து வடிவையும் புறத்தே அமைத்துக்கொள்ளும் ஆற்றல் அவனுக்குண்டு. உன் ஒற்றர்கள் எவ்வடிவில் அவனை தேடினார்கள்?” என்றார். அப்போதுதான் தன் பிழையை உணர்ந்த நகுஷன் சோர்ந்து தன் பீடத்தில் அமர்ந்து  “ஆம். ஒரு மணற்பருவாக, ஒரு கடல்துமியாகக்கூட அவனால் ஒளிந்துகொள்ள முடியும்” என்றான். “மட்டுமல்ல, மேல்கீழ் உலகுகளில் இதுவரை எழுந்த எவ்விழியும் அறியாத புதுத்தோற்றம் கொள்ளவும் முடியும்” என்றார் நாரதர்.

“உங்களையே பணிகிறேன், உலகறிந்தவரே. நான் செய்யவேண்டியதென்ன?” என்றான் நகுஷன். “அரசே, தேடும் விழிகளிலிருந்து நாம் ஒளிந்து கொள்ளலாம். அஞ்சும் விழிகளிலிருந்து தப்புவது மிகக்கடினம். அன்பு கொண்ட விழிகளிலிருந்து தப்புவது எவராலும் இயலாது” என்றார் நாரதர்.  “என்ன சொல்கிறீர்கள்?” என்று குழப்பத்துடன் நகுஷன் கேட்டான். அவர் சொல்லவருவது என்னவென்பதை அவன் உள்ளம் மெல்ல புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டிருந்தது.  “தன் சோலையில் மலர்ந்துள்ள அத்தனை மலர்களையும் விழிகளென ஆக்கி கணவனுக்காக காத்திருக்கிறாள் இந்திராணி. அங்கு வாடி உதிரும் மலர்களை அள்ளிவரச் செய். உன் ஏவலர் கையில் ஒரு வாடிய மலருடன் தேடி அலையட்டும். எங்கு அம்மலர் மீண்டும் புதிதென மலர்ந்து ஒளிகொள்கிறதோ அங்கிருக்கிறான் இந்திரன் என்று பொருள்” என்றார் நாரதர்.

உளவிசை தாளாது தொடையில் தட்டி கூச்சலிட்டபடி எழுந்த நகுஷன்  “ஆம், இது ஒன்றே வழி! நன்று, முனிவரே! என் தலை தங்கள் முன் பணிகிறது. நன்று சொன்னீர்கள் எனக்கு!” என்றான்.  “அமைச்சர்களே, தேவர்களே” என்று கூவியபடி வெளியே ஓடி அனைவரையும் அழைத்தான். “இந்திராணியின் சோலையில் விழுந்து கிடக்கும் அத்தனை வாடிய மலர்களையும் கொண்டு வரும்படி மாருதர்களுக்கு நான் ஆணையிடுகிறேன். அம்மலர்களில் ஒன்றை எடுத்தபடி பதினான்குலகங்களிலும் செல்லுங்கள். இந்திரனை அந்த மலர்கள் அறியும்” என்று குரல் வீசினான். உளத்துள்ளல் தாளாமல் சுற்றிவந்தபடி “மலர்களிலிருந்து யார் தப்ப முடியும்? ஆம், மலர்களை எவர் ஒழிய முடியும்?” என்றான். நாரதர் “ஆம் அரசே, இருந்த இடத்திலிருந்தே பயணம் செய்பவை மலர்கள்” என்றார்.

tigerநூற்றியெட்டு மாருதர்கள் நகுஷனின் ஆணைப்படி இந்திராணியின் மகிழமரச் சோலைக்குள் புகுந்தனர். அங்கு உதிர்ந்து ஒளியழிந்து சருகென்றாகியும் பாதி மட்கியும் கிடந்த மலர்கள் அனைத்தையும் திரட்டி கொண்டுவந்து அளித்தனர். தேவரும் யக்‌ஷரும் கந்தர்வரும் கின்னரரும் கிம்புருடரும் கையில் ஒரு மலருடன் பத்து திசைகளையும் நோக்கி கிளம்பினர். அவர்களில் சூசிமுகன் என்னும் கந்தர்வன் மானசசரோவரை அடைந்ததுமே அவன் கையில் வண்ணமும் வடிவமும் இழந்து உலர்ந்து நத்தை எனச் சுருங்கியிருந்த மகிழமலர் பனிவிழும் புதுக்காலையிலென இதழ் விரித்து வண்ணமும் ஒளியும் கொண்டது. அதன் நறுமணத்தை உணர்ந்து நாற்புறமும் நோக்கிய பின்னரே தன் கையில் அது மலர்ந்திருப்பதை அவன் அறிந்தான். இளமைந்தனின் முதற்பல்லென அவன் கையில் அது வெண்ணிற ஒளிகொண்டிருந்தது. மானசசரோவரில் அவன் மேலும் தங்கவில்லை. எம்பி ஒளிவடிவு கொண்டு வானிலெழுந்து மின்னென வெட்டி அகன்றான். அவன் அமராவதிக்குத் திரும்புகையில் அணுகும்போதே அந்த மணத்தை உணர்ந்து  “என்ன மணம் அது? இதுவரை அறிந்திராத மணம்” என்றபடி நகுஷன் வெளியே வந்தான்.

சூசிமுகன் அவனை வணங்கி அந்த மலரைக் காட்டி  “அரசே, மானசசரோவரை அணுகும்போது இது மலர்ந்தது” என்றான்.  “ஒளிகொண்டு முகம் திருப்பி நீர்ப்பரப்பைக் காட்டியது.” நகுஷன் பாய்ந்து “கொடு அந்த மலரை!” என்று வாங்கி திரும்பி ஓடி தன் வியோமயானத்திலேறி மின்படைக்கலத்தை ஏந்தியபடி மானசசரோவரை நோக்கி சென்றான். அந்த மலரே அவனை வழிகாட்டி இட்டுச்சென்றது. மாருதர்கள் தேரென்றாகி அந்த மணத்தை தங்கள் மேல் ஏற்றிச்சென்றனர். “மகிழம் துயரிலாக் காத்திருப்பின் மலர், அரசே. இந்திராணி துயரிலியென அங்கிருந்தாள்” என்றான் ஒரு மாருதன். “மருதம் புணர்வின் மணம். குறிஞ்சி கண்டடைதலுக்கு. முல்லை கிளர்வுக்கு. நெய்தல் துயருக்கு. பாலை பெருவேட்கைக்கு. மணங்களால் ஆனது மானுட உள்ளம். மணங்கள் ஆள்கின்றன உறவுகளை.”

உளப்பெருங்குளத்தில் பிழைநிகர் தவம் புரிந்துகொண்டிருந்த இந்திரன் ஆயிரமாண்டு முற்றடக்கம் பயின்று உளம் கரைந்து இன்மையென்றானான். அலையடங்கி இழுத்துக்கட்டிய நீலப் பட்டுப்பரப்பென ஒளி கொண்டிருந்தது அந்நீர்நிலை. அதில் மாலை வானில் முதல் விண்மீன் எழுந்ததுபோல வெண்ணிறத் தாமரை மொட்டொன்று முகிழ்த்து வந்தது. அதன் முதல் இதழ் ஓம் எனும் ஒலியுடன் விரிந்தது. நான் எனும் ஒலியுடன் இரண்டாமிதழ் மலர்ந்தது. அது என மூன்றாமிதழ். இவை என நான்காவது இதழ். எல்லாம் என ஐந்தாவது இதழ். பொருள் என ஆறாவது இதழ். சொல் என ஏழாவது இதழ். நடனம் என எட்டாவது இதழ். நிலை என ஒன்பதாவது இதழ். ஒளியென்றும் இருளென்றும், இன்மையென்றும் இருப்பென்றும், எனதென்றும் பிறிதென்றும் கணந்தோறும் தன்னைப்பெருக்கி பல்லாயிரம் இதழ்கொண்ட வெண்தாமரையாக விரிந்தது இந்திரனின் அகம்.

அதன் நடுவே பொன்னிறப் புல்லிவட்டத்தில் ஒரு கருவண்டென எழுந்து அமர்ந்து அவன் தன்னை உணர்ந்தான். முடிவிலா மலர்தலின் மயக்கில் காலமிலியில் அமைந்திருந்தான். அப்போது விண்ணில் இருந்து ஓர் ஒளிக்கீற்றென சரிந்து வந்த வியோமயானம் அவனருகே அணுகி யாழொலியுடன் சுற்றிப்பறந்தது. அதில் மின்படைக்கலக் கருவியை கையிலேந்தி விரிந்த மகிழ மலரொன்றை மறுகையிலேந்தி அமர்ந்திருந்தான் நகுஷேந்திரன்.  “நான் உன்னை வெல்ல வந்தேன். இம்மின்படைக்கு எதிர் நில். அன்றேல் என் சொல்லுக்குப் பணி” என்று அவன் அறைகூவினான். புன்னகையுடன் கண்மலர்ந்து  “யார் நீ? நான் உனக்கு எவ்வண்ணம் எதிரியானேன்? எதன்பொருட்டு உனை நான் பணிய வேண்டும்?” என்று இந்திரன் கேட்டான்.

நகுஷன் “நீ அமராவதியின் அரசனாக முன்பிருந்த இந்திரன். அதை வென்று அரியணை அமர்ந்த நகுஷேந்திரன் நான். அங்கு என் வெற்றி முழுமையுறவில்லை. அதை நிறைவுறச் செய்யவே இங்கு வந்தேன்” என்றான். இந்திரன் முகம் மலர்ந்து  “ஆம், நீ சொன்னபின் உணர்கிறேன். விண்ணுலகை ஆண்ட இந்திரன் நான். பிழைநிகர் செய்யும்பொருட்டு என் உள்ளம் துறந்து பிறிதொன்றை சூடிக்கொண்டிருக்கிறேன். நீ என்னை எதன்பொருட்டு வெல்ல விரும்புகிறாய்?” என்றான்.  “உன் உள்ளத்தில் இந்திராணி வாழ்கிறாள். அமராவதியை அடைந்தவன் என்பதனால் அவள் எனக்குரியவள்” என்றான் நகுஷன்.

மேலும் அகம்விரிந்து புன்னகைத்த இந்திரன் “ஆம், இம்மாபெரும் மலருக்குள் நிறைந்திருக்கும் நறுமணம் எதைக் குறிக்கிறதென்று வியந்துகொண்டிருந்தேன். அது இந்திராணிமேல் நான் கொண்ட காதல். நறுமணத்தை மலர் இழக்க ஒப்புமா என்ன?” என்றான். அச்சொல்லால் சினம்கொண்டு “எழு என்னிடம் போருக்கு!” என்று நகுஷேந்திரன் அறைகூவினான். இந்திரன் சிரித்து  “போர் நிகழட்டும். ஆனால் வெற்றி என்று எதை கொள்வாய்? பொருளென்று என் கையிலிருக்கும் எதையோ ஒன்றை அடைவதே உன் வெற்றி என்றால் அது நன்று. மூடா, நீ வந்திருப்பது மலரிலிருந்து நறுமணத்தை மட்டும் அள்ளிச் செல்வதற்காக” என்றான்.

சொல்முட்டிய நகுஷன் மேலும் சினம்கொண்டு “நான் உன்னை போருக்கு அறைகூவுகிறேன். என் காலடியில் பணிக!” என்றான். “பணியலாம். துளியென்றும் தூசியென்றும் நான் ஆகலாம். அவள்மேல் நான் கொண்ட காதல் அழியுமா என்ன?” என்றான் இந்திரன். நகுஷன் தளர்ந்து  “எவ்வண்ணம் நான் அதை வெல்வேன்? நீயே கூறு!” என்றான்.  “சந்திரகுலத்து அரசனே, என்பொருட்டு அவள் தன் சோலையில் விரிய வைத்த அப்பல்லாயிரம் மலர்களின் நறுமணமே இங்கு இந்த மலரில் நிறைந்துள்ளது. நீ வெல்ல வேண்டியது என்னை அல்ல, அவளை. என்மேல் அவள் கொண்ட காதல் அழியுமென்றால், அச்சோலையின் மலர்களனைத்தும் மணமிழந்து உதிருமென்றால் பின் என்னிடமிருந்து நீ வென்றடைவதற்கு ஒன்றுமில்லை” என்றான்.  “ஆம், வென்று வருகிறேன். ஒருபோதும் அமையமாட்டேன்” என்றபின் நகுஷன் திரும்பி அமராவதிக்கு சென்றான்.

தவித்தும் குழம்பியும் தளர்ந்து அமராவதியை அடைந்த நகுஷேந்திரன் தன் அரண்மனைக்குள் நுழைந்ததும் பற்றி எரியலானான். சினமும் தவிப்பும் வெறுப்பும் விழைவும் ஒன்றையொன்று உந்த அலைகொந்தளிக்கும் உள்ளத்துடன் தன் அரண்மனையின் ஆயிரம் உப்பரிகைகளில் சுற்றி வந்தான். தன் அமைச்சர்களை அழைத்து  “சொல்லுங்கள், இந்திராணியின் உள்ளத்தை நான் வெல்லும் வழியென்ன?” என்றான்.  “அரசே, பெண்கள் பெரும்பரிசுகளை விரும்புவார்கள். அதைவிட பாராட்டை விரும்புவார்கள். அதற்கும் மேலாக பெருமதிப்பை விழைவார்கள். இவை அனைத்தையுமே இந்திரனென இங்கு அமர்ந்திருக்கும் உங்களால் அளிக்கமுடியும். இதற்கும் அப்பால் அவர் விழைவதென்ன என்று அறியேன்” என்றார் முதன்மை அமைச்சர்.

“அதை இந்திராணியிடமே கோரலாம்” என்றார் ஒருவர். “அவராலும் அதை சொல்லமுடியாது. தன் விழைவை தெளிந்துசொல்லும் பெண் என எவருமில்லை” என்றார் பிறிதொருவர். “அரசே, அதற்கும் நீங்கள் நாரதரையே நாடலாம்” என்றார் இன்னொரு அமைச்சர். “ஆம், அவரே எனக்கு வழிகாட்டுவார்” என்று கூறிய நகுஷன் ஐராவதம் மீதேறி ஏழாம் வானில் ஒரு முகில்மேல் அமர்ந்து விண்மீன்கள் உதிர்வதை நோக்கி மகிழ்ந்திருந்த நாரதரை சென்று கண்டான். “சொல்லுங்கள் இசைமுனிவரே, நான் இந்திராணியின் உள்ளத்தை எப்படி வெல்வேன்?” என்றான். “அவள் சோலையின் மலர்கள் என் காலடிகேட்டு மலரவேண்டும். அதற்கு வழி என்ன?”

“அவள் இந்திராணி. இந்திரனோ பெருவிழைவும் அதை ஊர்தியெனக்கொண்ட ஆணவமும் கொண்டவன். இந்திரன் இதுவரை இயற்றாத ஆணவச் செயலொன்றை செய்க! அவள் அதை காணட்டும். நீயே இந்திரன் என அவள் காதல்கொள்வாள்” என்றார் நாரதர். நகுஷன்  எண்ணி நின்றபின்  “அவள் அறியாத ஆணவம் எது?” என்றான்.  “அதை உன் அமைச்சரிடம் வினவியறிக!” என்றார் நாரதர். நகுஷன் அவைதிரும்பி அமைச்சர்களை அழைத்து “சொல்க, இந்திரன் செல்ல அஞ்சுமிடம் எது? செய்யத் தயங்கும் செயல் எது?” என்றான். “அரசே, முதல்தெய்வங்கள் மூவரை எதிர்ப்பதில்லை அவர். முனிவர் சொல்மீறுவதில்லை” என்றார் அமைச்சர்முதல்வர்.

தொடைதட்டி எழுந்த நகுஷன் “அழையுங்கள் எட்டு முனிவர்களை! என் பல்லக்கை அவர்கள் சுமக்கட்டும். நான் இந்திராணியை பார்க்கச் செல்கிறேன்” என்றான். திகைத்த அமைச்சர்கள் “என்ன சொல்கிறீர்கள்? அவர்களின் சொல் உங்களை பொசுக்கிவிடும்” என்றார்கள். “அதை பார்ப்போம். எங்கும் துணிந்தேறித்தான் இங்கு வந்துசேர்ந்தேன். இங்கிருந்தும் அவ்வாறே முன்செல்வேன்” என்றான் நகுஷன். “அழையுங்கள் முனிவர்களை… என் பல்லக்கை அவர்கள் சுமக்கவேண்டுமென நான் ஆணையிட்டேன் என அறிவியுங்கள்!”

சனகரும், சனாதனரும், சனத்குமாரரும், தன்வந்திரியும், சியவனரும், கௌதமரும், வசிட்டரும், உத்தாலகரும் மறுசொல்லின்றி வந்து அவன் பல்லக்கை சுமந்தனர். அதில் ஏறியமர்ந்து “செல்க மகிழமரச் சோலைக்கு!” என அவன் ஆணையிட்டான். தன் வலக்கையில் மின்படையை சவுக்காக ஆக்கி ஏந்தியிருந்தான். இடக்கையில் கல்பமரத்தின் மலரும் ஏந்தியிருந்தான். அவர்கள் நடக்கும் விரைவு போதாதென்று அவன் உள்ளம் தாவியது. “விரைக! விரைக!” என கூவினான். “நாகமென விரைக…!” என்று அவர்களை சவுக்கால் அடித்தான். எதிரே குறுமுனிவர் தன் ஏழு மாணவர்களுடன் வரக்கண்டதும் அவன் களிவெறி மிகுந்தது. “அவரிடம் சொல்லுங்கள், என் பாதைக்கு முன் வரவறிவித்து செல்லும்படி” என சூசிமுகனிடமும் வஜ்ராக்‌ஷனிடமும் ஆணையிட்டான்.

நிலமொழியில் “ஸர்ப்ப! ஸர்ப்ப!” என அவர்களை விரைவூட்டிக்கொண்டு அவன் செல்வதைக்கண்டு அகத்தியர் திகைத்து நின்றார். அவன் அருகே வந்து “என்ன நோக்கி நிற்கிறீர்? என் ஆணையை கேட்கவில்லையா நீர்?” என்றான். சீற்றத்துடன் கைதூக்கிய அகத்தியர் “உன் நாவிலிருந்து ஒலித்தவன் நாகன். அறிவிலியே, நீ மாநாகமென ஆகுக! மண்ணில் இழைக! ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் உன் குடிப்பிறந்தவனால் உன் ஆணவம் அழியும். அன்று மீண்டெழுந்து விண்ணவனாக வருக!” என தீச்சொல்லிட்டார். அக்கணமே பல்லக்கிலிருந்து புரண்டு  வானையும் காற்றையும் கிழித்தபடி  இறங்கி பேரோசையுடன் மண்ணில் வந்து விழுந்தான் நகுஷன். வரும்போதே அவன் உடல் நீண்டு வளைந்து ஏழு சுருள்கள் கொண்ட நாகமாக மாறியது. மண்ணில் விழுந்து தலை எழுந்து நா சீற அவன் நெளிந்தபோது தன் கீழுடல் கல்லென்றாகியிருப்பதை கண்டான். உடல் நெளித்து அந்த எடையை இழுத்தபடி சென்று அருகே இருந்த சிறிய குகைக்குள் புகுந்து இருளுக்குள் ஒளிந்து சுருண்டுகொண்டான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 43

43. விண்ணூர் நாகம்

படைக்களத்திலிருந்து திரும்பும்போதே நகுஷன் பிறிதொருவனாக மாறிவிட்டிருந்தான். அவன் உடலுக்குள் மற்றொருவர் நுழைந்துவிட்டதைப்போல நோக்கும் சொல்லும் மட்டுமல்ல நடையும் உடலசைவுகளும்கூட நுட்பமாக மாற்றமடைந்திருந்தன. அரண்மனைமுற்றத்தில் தேரிறங்கிய அவனைக் கண்டதுமே பத்மனின் விழிகளில் திகைப்பு தோன்றி மறைந்தது. குருதி கருகிப்படிந்திருந்த உடலுடன் அரண்மனைக்குள் நுழைந்த நகுஷன் “என் உடன்பிறந்தானுக்குரிய அரசமுறைமைகள் அனைத்தும் ஹுண்டனுக்கு செய்யப்படவேண்டும், அமைச்சரே” என்று ஆணையிட்டான். பத்மன் தலையசைத்தான்.

ஹுண்டனின் உடலை வெள்ளித்தேரிலேற்றி வாழ்த்தொலிகளும் மங்கலமுழக்கங்களுமாக குருநகரியின் அணிப்படை நாகநாட்டுக்கு கொண்டுசென்றது. படைத்தலைவன் வஜ்ரசேனன் தலைமைதாங்கி அப்படையை நடத்திச்சென்றான். படை வரக்கண்டு ஊர்களை ஒழித்து அஞ்சி ஓடிய  நாகர்குடியினர் மெல்ல உண்மையை உணர்ந்து சிறு குழுக்களாக திரும்பிவந்து வழிதோறும் கூடிநின்று திகைப்புடன் அக்காட்சியை கண்டார்கள். குருநகரியின் படைகள் எழுப்பிய வாழ்த்தொலியை அவர்கள் ஏற்று கூவவில்லை. போரில் தோற்றுத் திரும்பி ஓடிவந்த நாகர்படையினர் உடற்புண்களுடன் படைக்கலங்களுடன் மரங்கள்மேலும் பாறைகள்மேலும் நின்று அந்த அணிநிரையை நோக்கினர்.

அவர்களுக்கு என்ன நிகழ்கிறதென்றே புரியவில்லை. விழிகள் ஒவ்வொன்றையாக நோக்கி அவற்றிலிருந்த ஏதோ ஒன்றை அடையாளம் கண்டுகொண்டு உளம் நடுங்கினர். “அந்த உடலுக்குள் இருப்பது நம் அரசர் அல்ல. அது வெண்தோலர்களின் இழிதெய்வம் ஒன்று” என்று ஒரு முதியவன் சொன்னான். “அதை அவர்கள் நமக்கு அனுப்பியிருக்கிறார்கள். அது நம் குடிகளில் பரவி நோயையும் பஞ்சத்தையும் கொண்டுவரும். நம் குழந்தைகளையும் கால்நடைகளையும் அழிக்கும். நம் மகளிரின்  கருப்பாதையை ஊற்றை பாறையென அமைந்து தடுக்கும்.”

அச்சொல் விரைவிலேயே பரவியது. அணியூர்வலம் நாகநகரிக்குச் சென்றபோது அங்கே நாகர்கள் எவரும் வந்து எதிரேற்கவில்லை. கோட்டைவாயிலை திறந்துபோட்டுவிட்டு நாகர்படைகள் பின்வாங்கி காடுகளுக்குள் பரவி ஒளிந்துகொண்டன. பெண்களும் குழந்தைகளும் இல்லங்களுக்குள் கதவுகளை மூடி ஒளிந்துகிடந்தனர். அரசமாளிகை முகப்பில் ஹுண்டனின் உடல் வைக்கப்பட்டபோது நாகர்குடிகளில் இருந்து எவரும் மலர்வணக்கம் செலுத்தவோ அரிநிறைவு அளிக்கவோ வரவில்லை. படைத்தலைவன்  “என்ன நிகழ்கிறது, அமைச்சரே? உங்கள் குடி ஏன் அரசனை புறக்கணிக்கிறது?” என்றான். கம்பனன் தலைகுனிந்து தணிந்தகுரலில் “நானறியேன். குடித்தலைவர்களிடம் பேசிப்பார்க்கிறேன்” என்றான்.

கம்பனன் தன்னந்தனியாக  மலையேறிச்சென்று குலத்தலைவர்களை சந்தித்துப் பேசினான். அவர்கள் அவன் அணுகிவரவே ஒப்பவில்லை. மலையடிவாரத்திலேயே அவன் நின்றிருக்கவேண்டுமென்றும் மேலேறி வந்தால் நச்சம்பு வரும் என்றும் எச்சரித்தனர். கைகூப்பி அவன் மன்றாடியபோதும் இரங்கவில்லை. அவன் அங்கே ஒரு பாறையில் கையில் நச்சம்பு ஒன்றை ஏந்தியபடி அமர்ந்தான். வடக்குநோக்கி அவ்வாறு அமர்ந்தால் அந்திக்குள் கோரியது நிகழாவிட்டால் கழுத்தை அறுத்துக்கொள்ளவேண்டும் என்பது நாகநெறி. மேலிருந்து நோக்கிக்கொண்டிருந்த நாகர்குலத்தலைவர்கள் ஐவர் நாகபடக்கோலுடன் இறங்கி வந்தனர். நாகத்தோல் சுற்றப்பட்ட அந்தக் கோல்களை அவனுக்கும் தங்களுக்கும் நடுவே போட்டுவிட்டு பேசத்தொடங்கினர்.

அவன் சொன்ன எதையும் அவர்கள் கேட்கவில்லை. “அவ்வுடல் எங்கள் அரசனுடையதல்ல. அதை எரித்து அழிக்கவேண்டும். நம் குலமுறைப்படி அதை மண்ணில் புதைக்கக் கூடாது. நம் மண் உயிருள்ளது. மூதாதையர் கரைந்து உறைவது. பல்லாயிரம் விதைகளில் உயிராக அவர்கள் எழுவது. அவ்வுடலில் வாழும் இழிதெய்வம் அதில் கலக்கலாகாது” என்றார்கள். திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தார்கள். “நீ இழிதெய்வத்தால் ஆட்கொள்ளப்பட்டவன்…” என அவர்களில் ஒருவர் கூவியதும் அவன் “என்ன சொல்கிறீர்கள்?” என்று உளம் பதைத்தான். “நம் குலத்திற்கென வாழ்ந்தவர், நம் குலநெறிப்படி உயிரிழந்தவர் என் தலைவர்.”

“இல்லை, அவன் வெண்தோலரின் மாயத்தால் கட்டுண்டவன்…” என்றார் ஒருவர். “அங்கே அடக்கம் செய்யப்பட்டால் அதை தோண்டி எடுத்து எரிப்போம்” என பிறிதொருவர் கூறியதும் கம்பனன் சீறி எழுந்து அந்த முதிய குலத்தலைவரை நோக்கி நச்சம்பை நீட்டியபடி முன்னால் சென்று “யாரடா அவன், என் தலைவனை இழிவுசெய்வேன் என்று சொன்னது? இதோ, நான் இருக்கிறேன், என் குருதித்துளி எஞ்சும்வரை அவரை எவனும் சொல்லெடுத்துப் பேச ஒப்பமாட்டேன்” என்றான். “அவ்விழிமகனின் உடல் எங்களுக்குத் தேவையில்லை…” என அவர் சொல்லிமுடிப்பதற்குள் தன் வாளை எடுத்து அவர் தலையை வெட்டி நிலத்திலிட்டு காலால் உதைத்து சரிவில் உருட்டிவிட்டான்.

திகைத்து விலகிய குலத்தலைவர்களிடம் “ஆம், நான் இருக்கும்வரை என் தலைவனைப் பழித்து ஒரு சொல் எழ முடியாது. விழைந்தால் என்னைக் கொல்லுங்கள். அன்னையரிடம் ஆணைபெற்று உங்கள் குலத்திலேயே மீண்டும் பிறந்து பழி தீர்ப்பேன்…” என மூச்சிரைக்க அவன் கூவினான். அவர்கள் நடுங்கும் உடலுடன் பின்னகர்ந்தனர். மரங்களெங்கும் ஆயிரம் நச்சு அம்புகள் அவனை நோக்கி கூர்திருப்பி வில்விம்மி நின்றன. “நான் இன்று என் தலைவன் உடலருகே எரிபுகுவேன்… அனல்வடிவமாகி என் உடல் அழியும். மண்புகாத உடல் இந்நகரியிலேயே வாழும். என் தலைவன் அமைந்த மண்ணுக்கு இனி நானே காவல். எல்லைமீறும் எவன் குலத்தையும் ஏழு தலைமுறைக்காலம் கருபுகுந்து அழிப்பேன். ஆணை! ஆணை! ஆணை!”  என்று அவன் கூவினான்.

அன்று குருநகரியின் படைகள் சூழ மங்கலப்பேரிசையும் வாழ்த்தொலிகளும் முழங்க  நாகநகரியின் தெற்கெல்லையில் அமைந்த இடுகாட்டில் ஹுண்டன் மண்கோள் செய்யப்பட்டான். தொலைவில் மரங்களில் ஒளிந்தபடி நாகர்கள் அதை நோக்கிக்கொண்டிருந்தனர். இல்லங்களின் இருளுக்குள் அவர்களின் பெண்கள் கண்களை மூடி மூதன்னையரை வழுத்தி உதடுகளை அசைத்துக்கொண்டிருந்தனர். நாகர்களின் குலமுறைப்படி பதினெட்டு அடி ஆழக் குழி வெட்டப்பட்டு அதன் தெற்கு திசையில் பக்கவாட்டில் எட்டுஅடி ஆழமுள்ள பொந்து துரக்கப்பட்டது. அதற்குள் செம்பட்டில் பொதியப்பட்ட ஹுண்டனின் உடலைச் செலுத்தி உப்பும் நீறும் கலந்த கலவையைப் போட்டு நிறைத்தார்கள்.

இடுகுழிக்குள் களிமண்ணாலான கலங்களும் மரத்தாலான இல்லப்பொருட்களும் வைக்கப்பட்டன. ஊர்வன, பறப்பன, நடப்பன என அனைத்துவகை உயிர்களிலும் ஏழுவகை மண்ணில் வனையப்பட்டு வைக்கப்பட்டன. ஏழுவகை படைக்கருவிகளும் ஒன்பதுவகை அருமணிகளும் ஒன்பதுவகை ஊண்மணிகளும் பன்னிருவகை மலர்களும் அடுக்கப்பட்டபின் மண்ணிட்டு மூடினர். அரசனின் உடலிருந்த மண்ணுக்குமேல் மானுடக்கால் படக்கூடாதென்பதனால் அப்போதே செங்கல் அடுக்கி கூம்புவடிவ பள்ளிப்படைநிலை கட்டப்பட்டு அதன் மேல் நாகர்குலக்கொடி நாட்டப்பட்டது.

முன்னரே தன் முடிவை கம்பனன் வஜ்ரசேனனுக்கு சொல்லியிருந்தான். குருநகரியின் படைகள் ஏனென்றறியா பதற்றத்துடன் காத்து நின்றிருக்க உடலெங்கும் அரக்கும் குங்கிலியமும் தேன்மெழுகும் பூசப்பட்ட துணியை இறுக்கிச் சுற்றிக் கட்டிக்கொண்டு கம்பனன் கைகூப்பியபடி நடந்துவந்தான். கழுத்தில் ஈரமலர்மாலையும் இடையில் மரவுரியாடையும் மட்டும் அணிந்திருந்தான். அவனுக்காக ஏழு அடி தொலைவில் தெற்கு தலைவைத்த வடிவில் நீள்குழிச்சிதை ஒருக்கப்பட்டு அதில் எரிந்தேறும் அரக்குள்ள விறகுகள் அடுக்கப்பட்டிருந்தன. அதில் மெழுகையும் அரக்கையும் அடுக்கி ஊன்நெய்யூற்றி எரிமூட்டினர்.

தழலெழுந்து கொழுந்தாடி வெறிகொண்டு வெடித்து சிதறி மேலெழத் தொடங்கியதும் கம்பனன் கைகூப்பியபடி சிதையை மும்முறை சுற்றிவந்தான். பின்னர் “எந்தையே, முதலோனே, நாகதேவர்களே!” எனக் கூவியபடி எம்பி தழல்மலரிதழ்களுக்கு நடுவே பாய்ந்தான். அனலின் எட்டு கைகள் எழுந்து அவன் உடலை அள்ளி அணைத்துக்கொண்டன. அவன் செந்நெருப்பாலான ஆடையணிந்து நடனமிடுவதாக படைவீரர்கள் கண்டனர். “எரிபுகுந்தோன் வாழ்க! நிலைபேறுகொண்டோன் வாழ்க!” என அவர்கள் குரலெழுப்பினர். பின்னர் எரி நிலைகொண்டு நீலச்சுடர்பீடம் மீது நின்றாடலாயிற்று.

நாற்பத்தொன்றாம்நாள் குருநகரியிலிருந்து நகுஷன் தன் படைகளுடனும் அமைச்சர்களுடனும் நாகநகரிக்கு வந்தபோது அங்கே நாகர்கள் எவரும் இருக்கவில்லை. அந்நகரை அப்படியே கைவிட்டுவிட்டு அவர்கள் மேலும் வடகிழக்காக நகர்ந்துசென்று காடுகளுக்குள் ஊர்களை அமைத்துக்கொண்டிருந்தனர். நகுஷன் ஹுண்டனுக்கு உடன்பிறந்தார் செய்யவேண்டிய விண்ணேற்றக் கடன்கள் அனைத்தையும் செய்தான். அங்கே ஹுண்டனுக்கு ஒரு பள்ளிப்படைக் கோயிலையும் அமைத்தான். குருநகரியின் அரசகுடியினர் ஆண்டுதோறும் அங்கே வந்து பலிகொடையும் பூசெய்கையும் நிகழ்த்தி மீள்வார்கள். நாகர்கள் அங்கே வருவதே இல்லை. அவர்கள் சொல்லில் இருந்தும் ஹுண்டன் முழுமையாக மறைந்துபோனான்.

tiger“அதோ, அந்தச் சோலைதான் முன்பு நாகநகரியாக இருந்தது” என்று முண்டன் கைகாட்டினான். பீமன் “பெருங்காடாக மாறிவிட்டதே!” என்றான். “ஆம், கைவிடப்பட்ட ஊர்களை காடு வந்து அள்ளி தன்னுள் எடுத்துக்கொள்ளும் விரைவு அச்சுறுத்துவது. அங்கு பெய்யும் கதிரொளியும் அங்கு மண்ணில் வேரடர்வு இல்லாமலிருப்பதும்தான் அதற்கு ஏது என்பார்கள். ஆனால் அங்கு வாழ்ந்த மானுடரின் எச்சங்களை அள்ளி அருந்தவே வேர்கள் வருகின்றன. அங்கு நின்றிருந்த வானை உண்டு நிறையவே இலைகள் தழைக்க கிளைகள் நீள்கின்றன” என்றான் முண்டன். “ஒவ்வொரு ஊரைச் சூழ்ந்தும் பசியுடன் காடு காத்திருக்கிறது.”

அவர்கள் அணுகியதும் அக்காடு விழிகளிலிருந்து மறைந்து இடிந்தும் சரிந்தும் கிடந்த வெட்டுக்கற்களை கவ்வித்தழுவி மேலெழுந்திருந்த வேர்ப்புடைப்புகள் மட்டும் தெரிந்தன. கழுகு உகிர் என கவ்வி எழுந்தவை. உருகிய மெழுகென பாறைமேல் வழிந்தவை. தசைக்கட்டின்மேல் நரம்புகள் என படர்ந்தவை. வேர்களின் வடிவங்களுக்குள் சென்றுகொண்டிருந்தபோது ஒரு தருணத்தில் விழிபழக  வேர்வடிவாகவே அந்நகரம் தெரியத் தொடங்கியது. இடிந்த கட்டடங்கள், சாலைகள், ஊடுபாதைகள், நடுவே அரண்மனை. அதன் தென்னெல்லையில் ஓங்கிய நான்கு மரங்களால் சூழப்பட்ட ஹுண்டனின் சிற்றாலயம் அமைந்திருந்தது.

 மறுமொழி அளித்ததும் அவை ஓசையடங்கி அவனை நோக்கின. ஒரு குரங்கு கிளைகளாலான படிக்கட்டில் தாவியிறங்கி கீழ்ச்சில்லை நுனியில் காய்த்ததுபோல தொங்கி அவனை விழியிமைத்தபடி நோக்கியது. பீமன் அதை நோக்கி கைகாட்ட மண்ணில் குதித்து கைகால்களால் நடந்து வால் வளைந்து எழ அவனை அணுகி அப்பால் நின்றது. அவன் ஏதோ சொன்னதும் அது மறுமொழி அளித்து திரும்பி குரல்கொடுக்க காய்கள் உதிர்வதுபோல குரங்குகள் நிலத்தில் குதித்து வந்து சூழ்ந்துகொண்டன.

இலைகள் சொட்டி ஈரம் வழிந்து பசும்பாசி படர்ந்து குளிர்ந்திருந்த அவ்வாலயத்தை அணுகிச் சென்றார்கள். பீமன் அதனருகே சென்று நின்று சுற்றிலும் நோக்கினான். “குரங்குகளால் பேணப்படுகிறது இவ்வாலயம்” என்றான். முண்டன் திரும்பி நோக்க “இங்கே பெருமரங்களின் விதை முளைத்ததுமே அவை கிள்ளி வீசிவிடுகின்றன” என்றான்.  ஆலயத்திற்குள் ஹுண்டனின் சிறிய கற்சிலை நாகச்சுருளுக்குள் பாதியுடல் புதைந்திருக்க இடுப்புக்குமேல் எழுந்து வலக்கையில் அம்பும் இடக்கையில் வில்லுமாக நின்றிருந்தது. நாகம் அவன் தலைக்குமேல் ஐந்துதலைப் பத்தியை விரித்திருந்தது.

வலப்பக்கம் ஹுண்டனை நோக்கி வணங்கிய தோற்றத்துடன் கம்பனனின் சிலை இருந்தது. இரு சிறகுகள் விரிந்திருக்க கால்கள் மடிந்து மண்டியிட்டிருந்தன. “இங்கு நாகர்கள் வருவதே இல்லையா?” என்றான் பீமன். “இல்லை, காட்டில் ஓர் ஆலயம் அமைக்கப்படுவதே அது மறக்கப்பட வேண்டுமென்பதற்காகத்தான்” என்றான் முண்டன். “மறக்கப்படும் ஆலயங்கள் நுண்வடிவில் வாழ்கின்றன. இந்த நகரமே மண்ணில் புதைந்து மறைந்தது. நோக்கினீர் அல்லவா? இதை வேர்கள் உண்கின்றன. தளிர்களாக மலர்வது இந்நகரின் உப்பே. மலர்களாக மகரந்தமாக ஆகிறது. வண்டுகளில் ஏறி பறந்துசெல்கிறது. அங்கே தொலைவில் நாகர்களின் புதிய ஊர்கள் உள்ளன. மாநாகபுரி எனும் தலைநகர் எழுந்துள்ளது. நாகர்குலத்து அரசனாகிய மகாதட்சன் அதை ஆள்கிறான். அவன் நகரின் அத்தனை மலர்களும் இம்மகரந்தங்களால்தான் சூல்கொள்கின்றன.”

பீமன் நீள்மூச்சுடன் அந்த சிறு ஆலயத்தை சுற்றிச்சுற்றி வந்தான். “அழிவின்மை என்பதற்கு என்ன பொருள் என்றே ஐயம் கொள்கிறேன். அழிந்து மறைவதும்கூட அழிவின்மைக்கான பாதையாக அமையக்கூடுமோ?” என்றான். முண்டன் “நகுஷனின் வாழ்க்கை சூதர்நாவில் வாழ்கிறது. அவர் எதிரியென ஹுண்டன் வாழ்க்கையும் இருந்துகொண்டிருக்கும். ஹுண்டன் இருக்கும்வரை கம்பனன் பெயரும் இருக்கும். மொழிப்பெருக்கின் அறியமுடியா மறுஎல்லையில் இப்பெயர்கள் சென்று சேர்வதை இங்கிருந்தே காண்கிறேன்” என்றான்.  பீமன் மீண்டும் பெருமூச்சுவிட்டான். பின்னர் “என் மூதாதையரின் கதைகள் எனக்கு கற்பிக்கப்பட்டுள்ளன. நகுஷனின் வரலாறும் தெரியும். ஆனால் அவை நீர் சொல்லும் கதைகளைப்போல அல்ல” என்றான்.

“குலக்கதைகளின்படி நகுஷன் பதினெட்டு மனைவியரைப் பெற்றார். அவர்களில் அவருக்கு யதி, யயாதி, சம்யாதி, ஆயாதி, அயதி, துருவன் என்னும் மைந்தர்கள் பிறந்தனர். ஆயிரத்து எட்டு பெருவேள்விகளை நிகழ்த்தி லட்சம் பசுக்களை அந்தணருக்கு அளித்தார். ஆயிரம் அன்னசாலைகளையும் ஆயிரம் பள்ளிச்சாலைகளையும் அமைத்தார். இறுதியாக நூறு அஸ்வமேத வேள்விகளையும் நூறு ராஜசூயவேள்விகளையும் நிகழ்த்தி மண்ணில் இந்திரனின் மாற்றுரு என அறியப்படலானார். அவரை புலவர்கள் தேவராஜன், தேவராட், ஜகத்பதி என்று வாழ்த்தினர். மாநாகன், நாகேந்திரன் என்றும் அவர் பாடல்கொண்டார்” என்றான் முண்டன்.

பீமன் ஐயத்துடன் “இங்கு அருகில் எங்கோ ஒரு மலர்ச்சோலை உள்ளது” என்றான். “நறுமணம் எழுகிறது. அதே மணம்.” முண்டன் புன்னகையுடன் “அசோகமா?” என்றான். “இல்லை, பாரிஜாதம். ஆனால் நீர் கேட்டதுமே அசோகமென மாறிவிட்டது” என்றான். முண்டன் “அருகே உள்ளது அசோகவனம். அங்கே நகுஷன் தன் அரசி அசோகசுந்தரிக்கு எடுத்த ஆலயமொன்றுள்ளது. அங்கு நின்றிருக்கும் மலர்மரம் ஒன்றும் கவிஞர்களால் கல்யாணசௌகந்திகம் என்று அழைக்கப்படுகிறது” என்றான். பீமன் அகவிரைவுடன் முண்டனின் கையைப் பற்றியபடி “அதுதான்… ஆம், நன்கு தோன்றுகிறது. அந்த மரமேதான்… இப்போது நறுமணம் மேலும் தெளிவடைந்துள்ளது” என்றான்.

“செல்வோம்” என்று முண்டன் முன்னால் நடந்தான். “மிக அருகிலேயே உள்ளது அந்தச் சோலை. நாம் முன்புகண்ட அச்சோலையைப்போலவே சுனைசூழ்ந்த மரங்களால் ஆனது. அங்குதான் மீண்டும் செல்கிறோமா என்னும் ஐயம் எழும்.” பீமன் விரைந்து முன்னால் செல்ல முண்டன் பேசியபடியே தொடர்ந்து வந்தான். “அசோகசுந்தரியின் எரிநிலையிலிருந்து சாம்பல் கொண்டுவந்து நகுஷன் கட்டிய ஆலயம் இது. ஆனால் அவர் நகுஷனாக நின்று இதைச் செய்யவில்லை.” பீமன் நின்று திரும்பி நோக்கினான். “குருநகரியின் தலைவனை, சந்திரகுலத்துப் பேரரசனை ஏன் மாநாகன் என்றும் நாகேந்திரன் என்றும் நூல்கள் சொல்கின்றன என்று எண்ணியிருக்கிறீர்களா?”

பீமன் செவிகூர்ந்து நின்றான். “நகுஷன் தன்னை நாகன் என மறுபிறப்புச் சடங்குவழியாக மாற்றிக்கொண்டார். நாகர்குலத்து அன்னையரின் மாதவிலக்குக் குருதியில் ஏழு சொட்டு எடுத்துக் கலந்த மஞ்சள்சுண்ணக் குருதி நிறைந்த மரத்தொட்டியில் மூழ்கி எழுந்து  நாகர்குலத்துப் பூசகர் பன்னிருவர் வாழ்த்த மறுபுறம் வந்தார். நாககர்ப்பம் என்னும் அச்சடங்குக்குப் பின் நாகர்குலத்து மூதன்னையர் எழுவரின் கால்களில் தன் தலையை வைத்து அரிமலர் வாழ்த்து பெற்றார். நாகபடம் பொறித்த கோல் ஏந்தி நாகபடக் கொந்தை சூடி  நாகர்குலங்களுக்குரிய கல்பீடத்தில் அமர்ந்து நாகர்குலப் பூசகர் மண்ணிட்டு வாழ்த்த அக்குடிக்கும் அரசராக ஆனார். மாநாகன் என்னும் பெயர் அப்போது வந்ததே.”

“முதலில் நாகர்குலங்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நாகர்குலத்து மூதன்னையர் பூசகர்களின் உடலில் ஏறிவந்து அவரை தங்கள் மைந்தர் என்றனர். அவர் மறைந்தபின்னர் நாகர்குலங்கள் தங்கள் மூதாதையரில் ஒருவராக அவரையும் வணங்கத் தலைப்பட்டனர்” என்றான் முண்டன். “நகுஷன் தன் உடலின் கீழ்ப்பகுதி ஹுண்டனுடையது என எண்ணினார். குருநகரியின் அரசனாக சந்திரகுலத்து மணிமுடிசூடி அமரும்போதுகூட இடையில் நாகர்முறைப்படி கச்சையணிந்திருப்பார். அரையாடையும் குறடுகளும் நாகர்களுக்குரியவை.”

முண்டன் தொடர்ந்தான் “நாகர்களுக்குரிய தணியா விழைவை தானும் கொண்டிருந்தார். அவ்விழைவே அவரை பாரதவர்ஷத்தின் அத்தனை நாடுகளையும் வெல்லச் செய்தது. வேள்விகளை ஆற்ற வைத்தது. பலநூறு மகளிரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மைந்தரை பிறக்கச்செய்து பெருந்தந்தையாக அமர்த்தியது. மறுசொல் கேட்கவிழையா பெருஞ்சினம் கொண்டிருந்தார். பிறர் எவரும் இல்லாத தனிமையின் உலகில் வாழ்ந்தார். தன்னை காலமெனச் சூழ்ந்திருந்த அனைத்துக்கும் மேல் தலைதூக்கி மலைமுடியென அனைத்தையும் நோக்கி அமைதிகொண்டிருந்தார். ஆகவேதான் அவரை இந்திரனென்றாக்கினர் விண்ணவர்.”

tigerவிருத்திரனை வென்ற இந்திரன் அக்கொலையின் பழிக்கு அஞ்சி  பிரம்மனிடம் சென்று பழிநிகர் செய்வதெப்படி என வினவினான். “பழிகள் உடலில் படிவதில்லை, உள்ளத்திலேயே நிறைகின்றன. உன் உள்ளத்தை உதிர்த்து பிறிதொன்றென ஆக்கிக்கொள்” என்றார் பிரம்மன். “அதெப்படி?” என்றான் இந்திரன். “இமயத்தின் உச்சியில் உள்ளது மானசசரோவரம். அங்கு செல்க! அந்நீருக்குள் மூழ்கி ஆயிரமாண்டுகாலம் தவம் செய்க! நீ தொட்டதுமே அந்த நீர்ப்பெருக்கு அலைகொந்தளிக்கும். அங்கு அமர்ந்து ஒவ்வொரு அலையாக அடங்க வை. நீ இருப்பதையே அறியாமல் நீர்ப்பரப்பு ஆகும்போது முற்றிலும் உளமழிந்திருப்பாய். பின்னர் உன் உள்ளத்தை மீட்டெடு” என்றார் பிரம்மன்.

இந்திரபுரியிலிருந்து எவருமறியாது மறைந்த இந்திரன் உளப்பெருங்குளத்தில் தன் ஆயிரமாண்டு தவத்தை தொடங்கினான். அவனைத் தேடியலைந்து சலித்த தேவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் சோர்ந்தனர். விண்ணரசன் இல்லாமையால் அமராவதியின் நெறிகள் அழியலாயின. அரியணை அமர்ந்து கோல் கைக்கொள்ள அரசன் தேவை என்று உணர்ந்த தேவர்கள் அகத்தியரிடம் சென்று ஆவதென்ன என்று வினவினர். “கனி உதிர்ந்ததென்றால் காய் கனியவேண்டும். இந்திரனென்பவன் மண்ணில் விளைந்து விண்ணில் எழுபவன். மண்ணை நோக்குக” என்றார் அகத்தியர்.

தேவர்கள் மண்ணில் அலைந்தபோது குருநகரியின் நகுஷன் நூறு அஸ்வமேதங்களையும் நூறு ராஜசூயங்களையும் முடித்து சாம்ராட் என பட்டம்சூடி அரியணையமர்ந்த செய்தியை அறிந்தனர். அங்கே அவன் நூறு பெருங்கொடைகளை நிகழ்த்திக்கொண்டிருந்தான். அதை அவன் நிகழ்த்திமுடித்தானென்றால் அவன் இந்திரநிலைக்கு உரியவனாவான் என்று உணர்ந்தனர். விண்ணுலகுக்கு மீண்டு அகத்தியரிடம் “மாமுனிவரே, குருநகரியின் அரசன் மட்டுமே இந்திரநிலைக்கு அணுக்கமானவன். ஆனால் அவன் பாதியுடல் நாகன்.  அதனால்தான் இரு திசைகளில் விசைகொண்டு வந்து ஒன்றாகிய பெருநதி அவன்” என்றனர்.

“தேவர்களே, மண்ணில் எந்த நாகனும் பேரரசன் ஆகமுடியவில்லை. ஷத்ரியன் என்பதனால் அந்தத் தடை கடந்த மாநாகன் நகுஷன். எந்த ஷத்ரியனும் தேவனாக முடியவில்லை. நாகனென்று உளம் விரிந்து அவன் நம்மை நோக்கி எழுகிறான். ஒன்றை பிறிதொன்றால் நிரப்பி அவன் விண்பாதையில் அணுகிக்கொண்டிருக்கிறான். அதுவே இங்கு வரும் வழி போலும். அவனையே அரசனென்றாக்குக!” என்றார் அகத்தியர். அவரை வணங்கி மீண்டனர் தேவர்.

கொடைமுழுமை அடைந்து நகுஷன் தன் அரியணையில் அமர்ந்தபோது விண்ணிலிருந்து மலர்மழை பெய்யத் தொடங்கியது. பொன்னிற விண்வில் ஒன்று இறங்கி நகுஷனின் அரண்மனையை தொட்டது. அவன் உடல் ஒளிபட்ட மணி என சுடர்விட்டது. காலெடுத்து வைத்தபோது அவனால் ஒளியை படியாக்கி ஏறமுடிந்தது. தன் தந்தை ஆயுஸ் அளித்த உடைவாளை அவன் இடையிலணிந்திருந்தான். புரூரவஸின் மணிமுடியை தலையில் சூடியிருந்தான். குடிகள் வாழ்த்திக் கூவ, மங்கல இசை முழங்க அவன் காற்றிலேறி ஒளிகொண்டிருந்த முகில்களுக்குள் மறைந்தான்.

விண்நகர் புகுந்த நகுஷன் அமராவதியை அடைந்தபோது தேவர்களும் கந்தர்வர்களும் கிம்புருடர்களும் கின்னரர்களும் திரளாக நின்று வாழ்த்தொலி எழுப்பி வரவேற்று அழைத்துச்சென்றனர். அமராவதியின் நடுவே எழுந்த இந்திரனின் மாளிகையாகிய வைஜயந்தத்தில் அமைந்த சுதர்மை என்னும் அவையின் மையமெனச் சுடர்ந்த  அரியணையில் அவனை அமரச்செய்தனர்.  இந்திரன் சூடியிருந்த செந்தழல் முடியை அவன் தலையில் அணிவித்தனர். மின்னற்கொடியாலான செங்கோலை கையில் அளித்தனர். கல்பகமரமும் காமதேனுவும் ஐராவதமும் வியோமயானமும்  உச்சைசிரவமும் அவனுக்கு உரியனவாயின. அமுதத்தை உணவெனக்கொண்டு ரம்பை, ஊர்வசி, திலோத்தமை போன்ற தேவமகளிரின் கலைகளில் களித்து அவன் அங்கே வாழ்ந்தான். அஸ்வினிதேவரும் தன்வந்திரியும் அவனுக்கு பணிவிடை செய்தனர். அகத்தியர் உள்ளிட்ட முனிவர் வாழ்த்தளித்தனர். கிழக்குத்திசை அவன் கோலால் ஆளப்பட்டது.

விண்மகளிர் அனைவருடனும் காமத்திலாடினான் நகுஷன். அவன் நெஞ்சு சலிப்புற்றாலும் இடை மேலும்மேலுமென எழுந்தது. “நீங்கள் ஒரு நாகம்…” என்று அவனுடன் இருந்த மகளிர் சினந்தும் சலித்தும் சிரித்தும் சொன்னார்கள். “ஆம், நான் என்னைத் தொடர்பவர்களை, நான் ஊரும் மண்ணை, பறக்கும் விண்ணை வீசிச்சொடுக்கும் சவுக்கு. அவ்விசையால் முன்னகர்கிறேன்” என்றான். “நிகரின்மை என்பதல்லாமல் எதனாலும் அமையமாட்டேன் என்று அறிக… இனி எஞ்சுவதென்ன என்று மட்டுமே என்னிடம் சொல்க!” என்றான். அவன் தன்முனைப்பும் தன்னைக்கடந்த வேட்கையும் தேவர்களை முதலில் அச்சுறுத்தின. பின்னர் அவர்கள் கசப்புகொண்டனர். தாளமுடியாமலானபோது தங்களைத் தாங்களே நொந்துகொண்டு துயர்சூடினர்.

ஒருநாள் நகுஷேந்திரனின் அவைக்கு வந்த நாரதரிடம் அவன் “சொல்க, எஞ்சியுள்ளது என்ன எனக்கு?” என்றான். “மண்ணில் ஏதுமில்லை” என்றார் நாரதர். “விண்ணில்?” என்றான் நகுஷன். “விண்ணிலும் பெரும்பாலும் ஏதுமில்லை” என்றார். “அவ்வண்ணமென்றால் ஒன்று எஞ்சியிருக்கிறது அல்லவா? சொல்க, அது என்ன?” என்றான். நாரதர் “இந்திரன் இந்திராணியுடன் அல்லவா அவையமரவேண்டும்?” என்றார். நகுஷன் அதைக் கேட்டதுமே திகைத்து எழுந்து “ஆம், அவ்வாறுதான் தொல்கதைகள் சொல்கின்றன. எங்கே என் அரசி?” என்றான். “அழைத்து வருக அவளை என் அவைக்கு!” என ஆணையிட்டான்.

அவையில் இருந்த தேவர்கள் பதற்றத்துடன் “அரசே, அது முறையல்ல. இந்திராணி வடபுலத்தில் தன் தவக்குடிலில் தனித்து நோன்பிருக்கிறாள். கணவன் திரும்பிவருவதற்காக தெய்வங்களை வழிபடுகிறாள்” என்றார்கள். “அவள் என் தேவியாகவேண்டும். அதுவே முறை… அவளை அழைத்து வருக!” என்றான் நகுஷன். “அரசே, இந்திரன் இன்னும் அழியவில்லை. எங்கோ அவர் இருக்கையில் துணைவி அவருக்காக ஆற்றியிருந்தாகவேண்டும்” என்றார் சனத்குமாரர். “இந்திரனின் அரியணையில் அமர்ந்தவனே இந்திரன். இந்திரனுக்கு துணைவியாக அமர்பவளே இந்திராணி. அவளுக்கு முந்தைய கணம் என ஒன்று இருக்கலாகாது” என்று நகுஷன் சொன்னான்.

“ஆம், ஆனால் அவள் உள்ளத்தில் அவள் கணவன் இன்னும் அழியவில்லை. அது இந்திரன் எங்கோ இந்திரனாகவே உள்ளான் என்பதையே காட்டுகிறது. அவன் அவளுக்குள் இருக்கும்வரை அவள் உங்கள் துணைவியாக ஆக முடியாது” என்றார் சனகர். “அவ்வண்ணமென்றால் அவள் அவனை மீட்டுக்கொண்டுவர விழைகிறாள். என் இந்திரநிலையை அழிக்கவே தவமிருக்கிறாள். அதை நான் எப்படி ஒப்பமுடியும்?” என்று நகுஷன் சொன்னான். “அழைத்து வருக அவளை… அவள் மறுத்தால் இழுத்து வருக!” என தன் ஏவல்பணி செய்த கந்தர்வர்களிடம் ஆணையிட்டான்.

தன்வந்திரி பெருஞ்சினத்துடன் “விரும்பாத பெண்ணை இழுத்துவரச் சொல்லி ஆணையிடுவது அரசனின் முறைமையா?” என்று கூவ நாரதர் “பெருவிழைவே இந்திரன் என்னும் நிலை. இதை அறியமாட்டீரா?” என்றார். அவரை சிலகணங்கள் உற்றுநோக்கியபின் முனிவர் மெல்ல தணிந்து “ஆம், அதன் வழியை அதுவே தேர்க!” என தலைகுனிந்து தனக்குள் என சொல்லிக்கொண்டார்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 42

42. இன்குருதி

ஹுண்டனின் படைகளை நகுஷனின் படைகள் குருநகரிக்கு வெளியே அஸ்வமுக்தம் என்னும் குன்றின் அடிவாரத்தில் சந்தித்தன. குருநகரிக்கு பத்மனின் தலைமையில் காவலை வலுவாக்கிவிட்டு நகுஷன்  தன் படைத்தலைவன் வஜ்ரசேனன் துணையுடன் படைகளை நடத்தியபடி வடமேற்காக சென்றான். “அவன் படைநீக்கம் செய்து நம் நகரைச் சூழவைப்பதே உகந்தது. நாகர்களுக்கு விரிநிலத்தில் படைநடத்துவதிலோ நகர்களை முற்றுகையிடுவதிலோ முன்பயிற்சியே இல்லை. அவர்களை மிக எளிதில் வெல்லமுடியும்” என்றான் படைத்தலைவன்.

நகுஷன் மறுமொழி சொல்வதற்குள்ளாகவே பத்மன் “ஆம், அது மிக எளிது. ஆனால் குருநகரியின் ஷத்ரிய அரசன் நாகர்களின் படைகளுக்கு அஞ்சி படைசூழ்கை வகுத்தான் என்பதே இழிவு. அவர்களுக்காக படைகளுடன் காத்திருந்தான் என்று சூதர் பாடலாகாது. புழுவை அடிக்கக்கூடாது, சுண்டவேண்டும்” என்றான். நகுஷன் “ஆம், இந்நகரில் அவர்கள் வருவதற்காகக் காத்திருப்பது என்னால் இயலாதது. நான்  ஒரு தருணத்திலும் எண்ணிக் காத்திருந்து போரிடப்போவதில்லை. எப்போதும் எழுந்துசென்று தாக்குவதே என் வழி” என்றான். “ஆம், புலியும் சிம்மமும் பதுங்கும். யானை ஒளிய காட்டில் மறைவில்லை” என்றான் பத்மன்.

பாறைப்பிளவிலிருந்து எழும் அரசநாகம் மெல்ல தலைநீட்டி நாபறக்க வெளிவந்து ஓசையின்றி ஒழுகிச் செல்வதைப்போல நகுஷனின் படை  வடகிழக்கு வணிகச்சாலையை நிறைத்து ஒழுகியது. உச்சிவெயிலில்  நீரலை ஒளிகள் என வேல்நுனிகளும், வாளுறைகளும், கவசங்களும், தேர்முகடுகளும், யானைகளின் பொய்மருப்புகளும் மின்னிமின்னி ததும்பின. குறடுகளும் குளம்புகளும் சகடங்களும் மண்ணில் பதிந்த ஒலி கலந்து எழுந்த முழக்கம் சூழ்ந்திருந்த காடுகளை கார்வை கொள்ளச்செய்தது.

அன்று மாலை அவர்களின் படையெழுந்த செய்தி ஹுண்டனைச் சென்றடைந்தது. தன் படைகளுடன் கிளம்பி ஜம்புமுகம் என்னும் சிறிய மலையின் அடிவாரத்தை அடைந்து அங்கே பாடியமைத்திருந்த ஹுண்டன் ஒற்றர்கள் கொண்டுவந்த செய்தியைக் கேட்டதும் தொடையிலறைந்து உரக்க நகைத்தான். “நன்று, முற்றுகையிட்டு பொறுமையிழக்கவேண்டுமே என கவலைகொண்டிருந்தேன். நமக்கு உகந்த மலைச்சரிவுக்கே வந்து சேர்கிறார்கள். வெட்டவெளிக்கு வந்துவிடும் எலி நாகத்திற்கு நல்லுணவு” என்றான். அவனருகே நின்றிருந்த படைத்தலைவர்கள் சிரித்தனர்.

கம்பனன்  தலையை அசைக்க “என்ன சொல்கிறாய்?” என்றான் ஹுண்டன். “அவர்கள் விரிநிலத்திற்கு வருகிறார்கள் என்றால் என்ன பொருள் அதற்கு? அது காப்பற்றது என அவர்கள் அறியமாட்டார்களா என்ன?” என்றான். ஹுண்டன் “சொல் உன் தரப்பை” என்றான். “நம்மை இடக்காலால் தட்டி எறியவேண்டுமென விழைகிறார்கள்” என்றான் கம்பனன். “முடிந்தால் செய்யட்டுமே” என்று ஹுண்டன் சீற்றத்துடன் சொல்ல “அவ்வாறு பொருட்டிலை என்று காட்டிக்கொண்டாலும் அவர்கள் உள்ளே கருதியிருப்பார்கள். விரிநிலத்தில் நம்மை எதிர்கொள்ளும் வல்லமையை மும்மடங்கு வைத்திருப்பார்கள்” என்றான்.

ஹுண்டன் “என்ன சொல்கிறாய்?” என்றான் புரியாமல். “அரசே, நம்மை விளையாட்டென எதிர்கொள்கிறார்கள் என்று பிறர் எண்ணவேண்டுமென விழைகிறார்கள். ஆகவே தங்கள் முழு வல்லமையையும் முற்றிலும் வெளித்தெரியாது மறைத்தபடிதான் வருவார்கள்” என்றான் கம்பனன். ஹுண்டன் சில கணங்கள் விழித்து நோக்கிவிட்டு மீசையை நீவியபடி “அதை எண்ணி என் உள்ளத்தை சிடுக்காக்கிக்கொள்ள நான் விழையவில்லை. களம்காண வந்துவிட்டேன், இனி எது வரினும் என்ன? போரில் வெற்றியும் தோல்வியும் ஊழே. ஊழை எண்ணிக் கணக்கிடுவதென்பது அலையெண்ணியபின் நீராடுவோம் என்று கருதுவதே” என்றான்.

இருபடைகளும் ஒன்றையொன்று நெருங்கி எட்டு நாட்களுக்குப்பின் அஸ்வமுக்தத்தை வந்தடைந்தன. இரு சாராரும் சூழ்ச்சி எதையும் எண்ணவில்லை. இரு நதிகள் வெள்ளப்பெருக்கெடுத்து இரு திசைகளிலிருந்து வருவதைப்போல அவை   அணுகின. “பெருங்காதல் கொண்ட இரு நாகங்கள் போல” என்றான் நகுஷனுடன் வந்த படையமைச்சனாகிய காலகன். “வெறும் விசையாலேயே நிகழவிருக்கிறது இப்போர். எந்த அரசுசூழ்தலும் இரு தரப்பிலும் இல்லை. ஹுண்டன் கல்கதையைச் சுழற்றியபடி தோள்தட்டிவரும் காட்டாளன்போல வருகிறான்” என்றான் வஜ்ரசேனன். நகுஷன் “ஆம், அவ்வாறே நாமும் செல்வோம். வெறும்போர்” என்றான்.

அஸ்வமுக்தம் மூன்றுபுறமும் செங்குத்தான பாறைக்குன்று. உச்சியில் முளைத்திருந்த ஆலமரத்தின் அருகே உருண்ட பாறை ஒன்று ஏதோ எண்ணித்தயங்கியதென அமர்ந்திருந்தது. ஹுண்டனின் ஒற்றர்கள் மூவர் மேலேறிச்சென்று தொலைவிலேயே நகுஷனின் படைகள் அணுகுவதை நோக்கிவிட்டனர். அவர்கள் கொடியடையாளம் காட்ட முந்தையநாள் அந்தியிலேயே வந்து பிறைவடிவில் அமைவு கொண்டிருந்த ஹுண்டனின் படைகளில் முரசொலி எழுந்தது. துயில் கலைந்து யானை எழுவதுபோல படை விழிப்புகொண்டது.

மேலிருந்து நோக்கிய ஒற்றர்கள் ஒழுகும் ஆற்றின் நீர்நுரை உருமாறுவதுபோல நாகர்படை குவிந்து இழுபட்டு சுடர்வடிவம் கொள்வதை, பின்னர் அதற்கு இரு கைகள் முளைத்து நண்டு என மாறுவதை கண்டனர். அதன் முகப்பில் கேடயமேந்திய வீரர்கள் வந்து நிரைகொண்டு ஒரு கோட்டையென மாறினர். அதற்கு அப்பால் வில்லவர்கள் நச்சுமுனைகொண்ட அம்புகளுடன் நிரந்தனர். ஐந்து நிரைகளாக கவசமணிந்த புரவிகளின் தொடர்  ஒருங்கியது. அதற்குப் பின்னால் நீண்ட வேல்களுடன் காலாள்படையினர் நண்டின் கால்களென நான்கு பிரிவுகளாக  நின்றனர்.

ஒவ்வொரு படைப்பிரிவின் நடுவிலிருந்தும் கழையேறிகள் ஊன்றப்பட்ட நீள்கழைகளில் தொற்றி மேலேறி வண்ணக்கொடிகளை ஆட்டி செய்தியறிவித்தனர். காளைகள் இழுத்துவந்த பெரிய சகடமேடைகளில் போர்முரசுகள் இருந்தன.  முழைதடியேந்திய வீரர்களும் கொடியசைக்கும் செய்தியாளர்களும் கொம்பூதிகளும் அதன்மேல் அமர்ந்திருந்தனர். தொலைவிலேயே ஹுண்டனின் பாடிவீடு தெரிந்தது. அதன்மேல் சுருளவிழ்ந்து எழுந்த நாகம் பொறிக்கப்பட்ட மிகப்பெரிய கொடி காற்றில் எழுந்து பின் மெல்லத் துவண்டது.

தொலைவில் செந்நிறத் தீற்றலென நகுஷனின் படை முதலில் தெரிந்தது. பின்னர் அதன் கொடிகள் காற்றில் பறக்கும் வண்ணப்பறவைகள் என துலங்கின. வேறு எங்கிருந்தோ என படைநகரும் ஓசை எழுந்துவந்து காற்றில் செவிதொட்டுத் தேய்ந்து மறைந்துகொண்டிருந்தது.  பின்னர் திரும்பும் உலோகங்களின் ஒளிகள் கண்களை கீறிக்கீறி சென்றன. கண்கூசும்படி ஒளியலை எழத்தொடங்கியபோது உடலே படையோசையை கேட்கத்தொடங்கியது. “எளிய படைதான்” என ஒருவன் சொன்னான். “ஆனால் நம்மிடம் புரவிகள் மிகக்குறைவு. தேர்களே இல்லை. நம் வீரர்கள் புரவிக்கலை தேர்ந்தவர்களும் அல்ல” என்றான் அவன் தோழன்.

“ஆம், நாம் மரக்கிளைகளில் பறக்கும் கலையறிந்தவர்கள்… இந்த விரிவெளியில் நமது திறன்களுக்கு பொருளில்லை” என்றான் இன்னொருவன். “நாம் எதையும் முடிவு செய்யமுடியாது. போர்கள் நமது ஆற்றலால் வெல்லப்படுபவை, பிறனுடைய ஆற்றலை நாம் போர்நிகழும்வரை அறியவே முடியாது” என முதியநாகன் ஒருவன் சொன்னான். அவர்கள் கொடிகளால் செய்திகளை சொல்லிக்கொண்டே இருந்தனர். அணுகிவரும் படையின் தொலைவு, அளவு, அமைப்பு, படைசூழ்கை என விளக்கிக்கொண்டே இருந்தனர்.

“அவர்கள் நம் படைகளை அறிகிறார்களா? எங்கிருந்து?” என்றான் ஒருவன். “எவ்வகையிலும் அறியமுடியாது. அங்கிருந்து அவர்கள் பார்ப்பதற்கான எந்த வழியும் இல்லை” என்றான் இன்னொருவன். “பார்க்காமலேயே போருக்கு எழுகிறார்கள் என்றால் அவர்களின் துணிவு என்ன?” என்று ஒருவன் கேட்டான். “நாம் நாகர்கள் என்பது மட்டுமே…” என்றான் ஒரு முதியவன். “கான்குடிகள் போர் வெல்வது அரிதினும் அரிது. நாம் தனித்தனிக் குலங்கள். எதன்பொருட்டும் நாம் ஒன்றாவதில்லை. இதோ, நாகர்களின் இப்பெரும்படை ஒரு சிறு அச்சம் எழுந்தால் முந்நூறு குடிகளாக சிதறிவிடும்.”

“அவர்கள் அவ்வாறல்ல. ஆயிரம் குடிகளை இணைத்து நான்கு வர்ணங்களாக ஆக்கியிருக்கிறார்கள். இதோ, படையெனத் திரண்டுவந்து நின்றிருப்பவர்கள் பல்லாயிரம் குடிகள், பலநூறு குலங்கள். ஆனால் ஷத்ரியர் என்னும் ஒரே வர்ணம். அவ்வர்ணத்திற்குரிய அறங்களை இளமையிலேயே அவர்களின் உள்ளத்தில் செதுக்கிவிட்டிருக்கிறார்கள்” என்றான் அம்முதியவன். “ஒரு வர்ணம் என்பது தன் தனியடையாளத்தையும் தான் என்னும் ஆணவத்தையும் கொண்டு தன்னைத் தொகுத்துக்கொண்ட ஒரு திரள். தன் அடையாளத்திற்காகவும் ஆணவத்திற்காகவும் அது தன்னை முற்றழிக்கவும் சித்தமாகும்.”

“நம்மிடம் இல்லாது அவர்களிடம் இருக்கும் படைக்கலம் அதுவே, ஆணவம்” என அவன் தொடர்ந்தான். “இந்தக் களத்திலிருந்து ஓடினால் நாகர்களால் ஐந்தே நாட்களில் அனைத்தையும் மறந்து தங்கள் குடிகளில் இணையமுடியும். இனிதே வாழவும் முடியும். இங்கிருந்து தோற்றோடும் ஷத்ரியன் இழிவுபட்டு எஞ்சிய வாழ்க்கையை அழிக்கவேண்டும். புண்ணின்றித் திரும்புபவன் கருநரகிற்கு இணையான பேரிழிவை சூடவேண்டியிருக்கும்.” அவர்கள் பெருமூச்சுவிட்டனர்.

இளம்வீரன் ஒருவன் “அவர்கள் நெடுந்தொலைவு வந்துள்ளனர், நாம் இங்கே பாடியமைத்திருக்கிறோம். போரை நாளைவரை ஒத்திவைக்கும்படி கோர அவர்களுக்கு உரிமையுண்டு” என்றான். “ஆம், ஆனால் அவர்கள் கோரமாட்டார்கள். ஏனென்றால் நாம் ஷத்ரியர்கள் அல்ல. இதை அவர்கள் ஒரு போரென்றே சொல்லமாட்டார்கள். இது அவர்களுக்கு வேட்டை மட்டுமே” என்றான் முதியவன். அப்பால் கொம்போசை எழுந்தது. நிலைக்கழை ஒன்றில் குருநகரியின் அமுதகலசக் கொடி மேலேறியது. மிக மெல்லிய அதிர்வாக முரசோசை எழுந்தது.

“படைசூழ்கை… அப்படியென்றால் போர்” என்றான் இளையவன். “ஆம், உச்சிப்பொழுதிலேயே போரைத் தொடங்குகிறார்கள் என்றால் அந்திக்குள் இப்போரை முடிக்க எண்ணுகிறார்கள்” என்றான் முதியவன். “அந்திக்குள் நாம் தோற்பதா?” என்றான் இளைஞன். கீழே நகுஷனின் படை கழுகுவடிவம் கொண்டது. அதன் முகப்பில் அலகு என விற்படை ஒன்று கூர்கொண்டது. உகிர்கள் என வேல்படை அமைய சிறகுகள் என வாட்படை நிலைகொண்டது.

செய்திகளை மேலிருந்து அவர்கள் அனுப்பிக்கொண்டே இருந்தனர். ஆனால் ஹுண்டனின் படையில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவர்கள் நகரப்போவதாகவும் தெரியவில்லை. “கழுகை நண்டு எதிர்க்குமா?” என்றான் இளைஞன். “நாம் அதை அறியவே முடியாது. நமக்கு எதற்கு அக்கவலை?” என்றான் இன்னொருவன். நாகர்படையில் முரசொலிகளும் கொம்புகளும் முழங்கின. கொடிகள் எழுந்தசைய அதன் வலக்கை விரிந்து நீள இடக்கை அசைவற்றிருந்தது. “என்ன செய்கிறார்கள்?” என்றான் முதியவன். பலர் புரவிகளில் ஓடுவது தெரிந்தது.

முரசுகள் மாறி ஒலி எழுப்ப விலகிச்சென்ற படை வந்து இணைந்துகொண்டது. “அவ்வளவுதான், போர் முடிந்துவிட்டது” என்றான் முதியவன். “எப்படி சொல்கிறீர்கள்?” என்று இளைஞன் சீறியபடி எழுந்தான். “ஆணை பிழையாக வந்துவிட்டது. இனி படைகள் தலைமையின் ஆணையை ஐயமின்றி ஏற்காது” என்றான் முதியவன். “பிழையாக வந்துவிட்டதனாலேயே எச்சரிக்கை கொள்ளலாமே?” என்றான் ஒருவன்.  “அது எண்ணித்துணிவது… படை எழுந்தபின் எண்ணமில்லை. எது உடலறிந்ததோ அதுவே அங்கு நிகழும். காமத்தைப்போல” என்றான் முதியவன். அவர்கள் அமைதியடைந்து மெல்லிய சோர்வுடன் நோக்கியிருந்தனர்.

நகுஷனின் படைகள் காற்றில் பறந்துவரும் சருகுக்குவைபோல எளிதாக விரைவாக ஹுண்டனின் படைகளை அணுகின. புரவிகளின் சுழலும் கால்களும் அவற்றின் நீட்டிய தலைகளுக்குப் பின்னால் வில்லேந்தியமர்ந்த கவசவீரர்களும் தெரியலாயினர்.  மிக விரைவிலேயே குதிரைப்படைகள் மட்டும் பிரிந்து முன்னால் வந்து அவர்கள் இருந்த குன்றை அணுகி கடந்துசென்றன. முதலில் வில்லவர் அமர்ந்த அலகு செல்ல வாளோர் அமர்ந்த இறகும் வேலோர் அமர்ந்த உகிரும் தொடர்ந்து சென்றன.

அப்பால் நாகர்களின் படை அப்போதும் ததும்பிக்கொண்டிருந்தது. “சந்தையில் ஒன்றோடொன்று கால்கட்டிப் போடப்பட்ட பறவைகளைப்போல” என்றான் முதுநாகன். “மூத்தவரே, இனி தாங்கள் ஏதும் சொல்லவேண்டியதில்லை” என்றான் இளைஞன். “நான் எண்ணுவதையே சொல்லென செவி அறிகையில் சுடுகிறது.” முதுமகன் “நாம் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு போரை அல்ல மைந்தா, இந்தத் தொல்நிலத்தில் பல்லாயிரமாண்டுகளாக நிகழ்ந்துவரும் ஒன்றை. அது எப்போதும் இவ்வண்ணமே மாற்றமில்லாது தொடர்கிறது” என்றான்.

நாகர்படைகளின் முரசுகளும் கொம்புகளும் இணைந்து பிளிறலாயின. அவர்களின் வில்லவர்கள் தரையிலமர்ந்து விற்களை இழுத்து அம்புகளை எய்ய அவை வானிலெழுந்து வயலில் அமரும் கிளிக்கூட்டம்போல பாய்ந்துவரும் குருநகரிப்படைகள்மேல் அமைந்தன. அம்புபட்ட வீரர் சிலர் விரையும் புரவியிலிருந்து தெறித்து விழ நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அப்புரவிகள் அசையாமல் நின்று திரும்பி படைநோக்கி ஓடின. அவர்களில் பெரும்பாலானவர்கள் எடையில்லாத ஆமையோட்டுக் கவசம் அணிந்திருந்தனர். நாகர்களின் புல்லம்புகளின் புறாவலகுக் கூர் அவற்றை கடக்கவில்லை. புரவிகளும் கவசமணிந்திருந்தன. விரைவிலேயே நகுஷனின் படை நாகர்படைகளை அணுகி அவற்றின் முகப்பை மோதி பல பகுதிகளாகப் பிளந்தது.

நாகர்களின் வில்லவர்படை பொருளிழந்தது. பின்னால் அவர்கள் நிறுத்தியிருந்த வேல்படையை முன்னால் செலுத்த வில்லவர் அணிபிளந்து வழியமைக்கவேண்டியிருந்தது. ஆனால் முன்னால் வந்த நகுஷனின் வில்லவர் முதலிலேயே அத்தனை முரசுமேடைகளையும் தாக்கி அங்கிருந்த அனைவரையும் கொன்றனர். செய்தியில்லாமல் தடுமாறிய வில்லவர்களால் வேலேந்திகள் தடுக்கப்பட்டனர். அக்குழப்பத்தில் வாளுடன் நுழைந்த இரண்டாவது புரவியணி வெறியுடன் நாகர்களை வெட்டிவீழ்த்தலாயிற்று. பயனற்ற விற்களுடன் வாளோர் முன் அகப்பட்ட நாகர்கள் இறந்து விழுந்தனர்.

“போரல்ல, படுகொலை” என்றான் முதியவன் கசப்புடன். “நீங்கள் சற்று வாயைமூடுங்கள்” என்றான் இளைஞன். கழுகின் உடல் வந்து நாகர்படைகளை அடைந்தது. வேலேந்திய காலாள்படையினர் புரவிப்படை உருவாக்கிய விரிசல்கள் வழியாகப்புகுந்து வெட்டியும் குத்தியும் கொன்றுகுவிக்கலாயினர். “முதலில் வேல்படை நின்றிருந்ததென்றால்…” என்றான் இளைஞன். “நாம் ஒவ்வொருமுறையும் இவ்வாறுதான் எண்ணி எண்ணி ஏங்குகிறோம்” என்றான் முதுநாகன். “பார், நம் படைகள் வெறும் கும்பல். இட்டுதலைகுவிக்கிறார்கள் ஷத்ரியர்.”

நாகர்படைகளின் பின்னிரை புகைக்குவை காற்றில் கரைவதுபோல சிதையத் தொடங்கியது. “அவ்வளவுதான்…” என்றான் முதியவன். “வாயை மூடுங்கள்!” என்றான் இளைஞன். “இன்னும்கூட வாய்ப்புள்ளது… நாம் மீண்டும் ஒருங்கிணைய முடியும்… நம்மில் மூன்றிலொரு எண்ணிக்கையே அவர்களிடம்… அதை நம் படைகள் உணர்ந்தாலே போதும்.” முதுநாகன் “அவர்கள் திரும்பிவிட்டார்கள்” என்றான். “இல்லை, அவர்கள் இன்னும் அதை அறியவில்லை… பின்னாலிருப்பவர்களை அவர்கள் அறிய வழியே இல்லை” என்றான் இளைஞன். “செய்தி அழிந்திருப்பதேகூட நல்லதுதான்.”

“படை என்பது ஒற்றை உடல். உடல் தன்னைத் தானே அறியும் ஒற்றைப்பெரும்புலன்” என்றான் முதுநாகன். நாகர்களின் மொத்தப் படையும் பஞ்சுப்பரப்பு துகள்களாக ஆவதுபோல சிறு குழுக்களாக ஆகி சிதறிப்பரவத் தொடங்கியது. “கொன்று குவிக்கப்போகிறார்கள். சிறுகுழுக்களாக ஓடுவதுபோல தற்கொலை வேறில்லை” என்றான் இளைஞன். “கொல்லமாட்டார்கள்” என்றான் முதுநாகன். “ஏன்?” என அவன் திரும்பிநோக்கினான். “ஒருமுறை போரில் திரும்பி ஓடுபவர்களை கொன்றார்கள் என்றால் அடுத்த போரில் திரும்பி ஓட அஞ்சுவர். இறுதிவரை நின்று பொருதுவர். திரும்பி ஓடுபவர்களை உயிரளித்து விட்டுவிட்டால் எந்தப் போர் தொடங்கும்போதும் முடிந்தவரை பார்ப்போம், முடியாதபோது ஓடிவிடுவோம் என்றே எண்ணுவர். அது அவர்களின் போர்நுணுக்கம்” என்றான் முதுநாகன்.

இளைஞன் “ஆம், போரை நிறுத்திவிட்டார்கள்” என்றான். கீழே குருநகரியின் வெற்றிமுரசு ஒலிக்கத் தொடங்கியது. “அவர்கள் நம்மை அவர்களது நாடகங்களின் நடிகர்களாக்கிவிட்டிருக்கிறார்கள்” என்றான் இளைஞன். “அவர்கள் நம்மை நோக்கி நகைக்கிறார்கள். அதைவிட நம்மை அவர்கள் கொன்றிருக்கலாம்.” முதுநாகன் “ஒருமுறையேனும் எதிர்த்து நின்று அனைவரும் உயிர்துறந்திருந்தால் நாம் நம்மை தளைத்திருக்கும் அனைத்திலிருந்தும் விடுதலைபெற்றுவிடுவோம். நாமும் இவர்களுக்கு நிகரானவர்களே என நம் தன்னாழம் நம்பத் தொடங்கிவிடும். அதன்பின் நாம் இவர்களை வெல்லக்கூடும்” என்றான்.

“ஆனால் அவர்கள் அதற்கு நமக்கு வாய்ப்பளிப்பதே இல்லை. அவர்கள் நம்மை கூர்ந்து நோக்கி புரிந்துவைத்திருக்கிறார்கள். இதோ, பெருகிப் படைகொண்டுசென்று களமாடும் ஷத்ரியர்கள் அல்ல இப்போரை வடிவமைத்தவர்கள். அங்கே அரண்மனையில் அமர்ந்து கையில் ஏடு கொண்டு சொல்தேரும் அந்தணர்கள்தான் இதை நடத்துகிறார்கள். நாம் தோற்றுக்கொண்டிருப்பது அவர்களிடமே” என்றான் முதுநாகன். “நாம் ஏன் தோற்கிறோம், ஏன் அவர்கள் வெல்கிறார்கள் என்றால் ஒரே மறுமொழிதான். நாம் அவர்களை புரிந்துகொள்ளவில்லை, அவர்கள் நம்மை புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே இதோ நிகழும் இந்தக் களம் படைக்கலங்களால் நிகழவில்லை, எண்ணங்களால் நிகழ்கிறது.”

“ஒற்றுக்கலை பயில இவர்களின் குருநிலைகளில் நான் பன்னிரண்டு ஆண்டுகள் மாணவனாக இருந்தேன். இவர்களைப்போல உருமாறி நாற்பதாண்டுகள் இவர்களுடன் வாழ்ந்தேன். நான் அறிவேன் இவர்களை” என அவன் சொன்னான். கீழே நோக்கியபடி “உயிர்தப்பி ஓடும் ஒவ்வொரு நாகனும் நூறு கோழைகளை தன் குடிகளில் உருவாக்குகிறான். அவர்கள் நம்மைக் கொன்றால் நாம் பழிவெறி கொள்ளக்கூடும். நம் தலைமுறைகள் வஞ்சம் பெருக்கக்கூடும். அவர்கள் நம்மை ஓடவிடுந்தோறும் நாம் வெற்று காட்டுமானுடராகிறோம்” என்றான். கசப்புடன் சிரித்து “அதை அவர்கள் அறமென்றும் இரக்கமென்றும் சொல்கிறார்கள். அதன்பொருட்டும் ஆணவம்கொள்கிறார்கள்” என்றான்.

“போர் முடிந்துவிட்டது” என்றான் ஒருவன். முதியவன் தன் மேலாடையால் முகம் துடைத்து “நாமும் திரும்பவேண்டியதுதான். அவர்கள் நம்மை அறிவார்கள். நம்மை எளிதில் அவர்களால் பிடிக்கவும் முடியும். ஆனால் நாம் சென்று இக்காட்சியை நம் குலத்தவரிடம் சொல்ல அவர்கள் விழைவார்கள். ஆகவே நம்மை விட்டுவிடுவார்கள்” என்றான். இளைஞன் “அரசர்…” என்றான். “என்ன?” என்றான் முதியவன். “நம் அரசர் ஓடவில்லை. தன் மெய்க்காவலருடன் களத்திலேயே இருக்கிறார். அதோ அவர் கொடி!” முதியவன் கையை கண்மேல் வைத்து நோக்கி “ஆம்” என்றான். “என்ன செய்கிறார்?” கூர்ந்து நோக்கி “அடிபணிகிறாரா? அவர் இயல்பல்ல அது” என்றான். இளைஞன் “தனிப்போர்… ஆம், அரசர் நகுஷனை தனிப்போருக்கு அறைகூவியிருக்கிறார். அதுதான்…” என்றான்.

tigerநகுஷனின் தேரைநோக்கிப் புரவியில் பாய்ந்துவந்த படைத்தலைவன் “அரசே, நாகர்குலத்து அரசன் களம்நிற்கிறான்” என்றான். நகுஷன் “யார்?” என்றதுமே புரிந்துகொண்டு “ஹுண்டனா? களத்திலா? அடிபணிகிறானா?” என்றான். “தனிப்போர் கோருகிறான். அவன் அமைச்சன் கம்பனன் தேர்த்தட்டில் எழுந்து நின்று அதை அறிவித்தான்.” நகுஷன் விழிகளை நோக்கியபின் “ஆனால் இழிகுலத்தோரிடம் ஷத்ரியர் தனிப்போரிடும் வழக்கமில்லை. அது அவர்களுக்கு நாம் அளிக்கும் நிகர்மதிப்பென்று கொள்ளப்படும்… ஒருவேளை…” என்றான். அச்சொல் நாவிலெழுந்ததுமே அதன் பெரும்பிழையை உணர்ந்தவனாக “நான் சொல்லவருவது…” என்றான்.

“நானும் கான்மகனே” என்றான் நகுஷன். “அவனை நேரெதிர்கொள்ள என்னால் இயலும். அவன் விரும்பும் படைக்கலம்கொண்டே.” படைத்தலைவன் “அறைகூவுபவன் அவன். படைக்கலம்…” என்று மேலும் சொல்லெடுக்க “நான் அவனுடன் தனிப்போருக்கு சித்தமாக இருப்பதாக சென்று சொல்லுங்கள்” என்றான். படைத்தலைவன் வரும்போதே அதை குருநகரிப் படைகள் உய்த்தறிந்திருந்தன. செல்லும்போது அதன் மறுமொழியையும் உணர்ந்துவிட்டன. அவன் செல்லும் வழியில் படைகளில் எழுந்த ஒலியே அதை காட்டியது. நீரில் கனல்விழுந்து மூழ்குவதுபோல படைத்தலைவன் திரளில் மறைந்தான்.

அப்பால் ஹுண்டனின் கொடி மேலேறியது. அவன் படைவீரர்கள் கொம்புகளை ஊதினர். குருநகரிப் படைகளில் பேரோசை எழுந்து அதைச் சூழ்ந்தது. தன் தேரை அங்கே செலுத்தும்படி சொன்ன நகுஷன் தேர்த்தட்டில் புன்னகையுடன் கைகட்டியபடி நின்றான். தொலைவிலேயே அவன் ஹுண்டனைக் கண்டான். தன் தேர்த்தட்டில் கரிய பெருந்தோள்களுடன் இடையில் புலித்தோலாடை மட்டும் அணிந்து யானைத்தோல் காலணிகளுடன் அணிகள் ஏதுமின்றி அவன் நின்றிருந்தான். தாடியை தோல்நாடாவால் கட்டி மார்பிலிட்டிருந்தான். குழலை பெரிய கொண்டையாகக் கட்டி இடத்தே சரித்திருந்தான். அம்புவிடுவதற்குரிய தோலுறைகள் கைகளில் இருந்தன.

நகுஷனின் தேர் சென்று அவன் தேருக்கு முன்னால் நின்றது. இருவருக்கும் நடுவே இருந்தவர்கள் ஊதப்பட்ட மாவு என விலகி முற்றமொன்றை அமைத்தனர். மெல்ல படைகள் இணைந்து சூழ்ந்து ஒரு பெரும் வளையமொன்று அமைந்தது. முகங்களாலான சுவர் என அது எழுந்தது. குருதி தோய்ந்த முகங்கள். போர்க்களியில் சிவந்த கண்கள். பலர் கவசங்களைக் கழற்றி கைகளில் வைத்திருந்தனர். வாள்களையும் வேல்களையும் ஊன்றி அவற்றின்மேல் உடலெடையை தாங்கி நின்றனர்.

கம்பனன் முன்னால் வந்து நின்று “எங்கள் அரசர் இக்களம்விட்டு ஓடவோ அடிபணியவோ விழையவில்லை. ஆகவே இறப்புவரை தனிப்போரை விழைகிறார். வெறும்கைப்போர் அவர் விழைவது. அரசர் விழைந்தால் அவர் விழையும் படைக்கலத்தை கொள்ளலாம். நாகர்குல நெறிகளின்படி தனிப்போரில் வென்றால் அவர் குருநகரியை வென்றதாகவே பொருள். குருநகரியின் அரியணையை அவர் விரும்பவில்லை. ஆனால் தன் அன்னையின் எரியிடத்திலிருந்து ஒரு பிடி எரிமண் கொண்டுசெல்ல அவருக்கு குருநகரியின் குடித்தொகை ஒப்புதலளிக்கவேண்டும்” என்றான்.

படைத்தலைவன் ஏதோ சொல்வதற்குள் நகுஷன் கைநீட்டி தடுத்து “அவ்வண்ணமே” என்றான். தன் கைகளிலிருந்த அம்புறைகளைக் கழற்றி பாகனிடம் அளித்தபடி “இறப்புவரை போர். வெறும்கைகளால்” என்றான். படைத்தலைவன் “அரசே, அவர்களின் நகங்களில் நாகப்பல் நச்சு உண்டு” என்றான். “அவன் கான்மகன்” என்று நகுஷன் சொன்னான். “இங்கே கான்நெறி திகழ்க!” என்றபடி தேரிலிருந்து குதித்தான். தன் கையுறைகளை கழற்றிவிட்டு ஹுண்டன் மண்ணில் குதித்தான்.

கம்பனன் ஹுண்டனின் காலணிகளை கழற்றி வாங்கிக்கொண்டான். நகுஷனின் அணுக்கக்காவலர்கள் அவன் அணிந்திருந்த மணிமாலையையும் கணையாழிகளையும் இடைக்கச்சையையும் உடைவாளையும் கழற்றி எடுத்துக்கொண்டனர். மான்தோலாடையை இடையில் அணிந்து அதன்மேல் தோல்கச்சையை இறுக்கியபின் குனிந்து மண்ணைத்தொட்டு சென்னிசூடினான். உள்ளங்கைகளை மண்ணில் பதித்து உரசிக்கொண்டு முன்னால் சென்று நிலைமண்டிலத்தில் நின்றான். ஹுண்டன் அவன் அசைவுகளை கூர்ந்து நோக்கியபடி வந்துநின்று மண்ணைத் தொட்டு வணங்கி ஒரு துளி நாவிலும் இட்டுக்கொண்டான்.

கம்பனன் “நெறிகள் இல்லை, காட்டுமுறை” என்றான். “ஆம்” என்றான் நகுஷன். இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி சுற்றிவந்தனர். ஹுண்டனின் தோள்தசை துடித்தபடியே இருப்பதை நகுஷன் கண்டான். அதை நோக்கி விழிநட்டான். அவனும் அதை உணர்ந்ததும் அவன் விழிகள் நிலைபிறழத்தொடங்கின. நகுஷன் “உம்” என ஓர் ஒலியை எழுப்பினான். அவன் பாயப்போகிறான் என எண்ணி ஹுண்டன் பாய்ந்ததும் அவன் பாயாமல் பின்னகர்ந்தான். ஹுண்டன் நிலைபிறழ்ந்து தடுமாற அவன் புறங்கழுத்தில் ஓங்கி அறைந்தான். மண்ணில் விழுந்து கையூன்றி எழுந்த ஹுண்டன் ஓர் அடி தடுமாறி நின்றான். அவன் நிகர்நிலை சற்று பிறழ்ந்துவிட்டது என உணர்ந்ததும் குருநகரியின் வீரர்கள் வாழ்த்தொலி எழுப்பினர்.

அந்த ஒலி ஹுண்டனை சினம் கொள்ளச்செய்தது. பன்றிபோல உறுமியபடி அவன் பாய நகுஷன் அவனைத் தடுத்து பற்றிக்கொண்டான். இருவரும் தழுவிக்கொண்டு நிலமறைந்து விழுந்து உருண்டனர். கால்கள் மண்ணில் துழாவி திளைத்துப்பின்னி விடுவித்துக்கொண்டு மீண்டும் இறுகின. ஹுண்டன் நகுஷனைத் தூக்கி அறைந்தான். புரண்டு எழுந்து ஹுண்டனைப் பற்றி பக்கவாட்டில் வீழ்த்தி அவன் விலாவெலும்புகளில் ஓங்கியறைந்தான் நகுஷன். ஹுண்டன் வலியில் மெல்ல முனகினான்.  ஹுண்டன் எழுவதற்குள் நகுஷன் அவனை மேலும் மேலுமென அறைந்தான்.

ஹுண்டன் பாய்ந்தெழுந்து நகுஷனை தன் கைகால்களால் கவ்விக்கொண்டு மண்ணில் வீழ்த்தினான். அவனைப் புரட்டி மேலேறிவிட ஹுண்டன் முயல நகுஷன் அதற்கு இடம்கொடாமல் புரண்டுகொண்டே இருந்தான். இருவரும் மண்ணில் புழுக்களைப்போல உருண்டனர். மென்மையான குருதியில் ஓருடலென இருவரும் திளைப்பதைப்போல என்று நகுஷன் உணர்ந்தான். விழிகளில் நழுவிக்குழைந்து அகன்று அணுகிய காட்சிகள் எது தன் கை எது பிறன் கால் என்று அறியமுடியவில்லை. நான்கு கால்களும் நான்கு கைகளும்கொண்ட விந்தை உயிர் என தன்னை எண்ணினான். அத்தனை எண்ணங்களும் அப்போருக்குள் எங்கே நிகழ்கின்றன? எப்படி அவை அடிபடாமல் நசுங்காமல் ஊடுருவுகின்றன?

ஒருகணம் மிகமிக விரிந்து ஒருபகலென தெரிந்தது. அதில் ஹுண்டனின் கழுத்து நரம்பு புடைத்த வளைவு மிக அருகே வந்து அதிர்ந்து காத்து நின்றது. அவன் எம்பி தன் வாயால் அந்நரம்பைக் கவ்வி இறுக்கினான். ஹுண்டனின் உடல் துடித்து அதிர்வதை அவன் உடலெங்கும் உணரமுடிந்தது.  குருதியை நாவில் வெம்மையென, உப்புச்சுவையென உணர்ந்தான். ஹுண்டன் தன் கைகளை விடுவிக்கும்பொருட்டு முழு உயிர்விசையாலும் திமிற ஆற்றலையெல்லாம் திரட்டி அவனை அடக்கியபடி கடித்த பற்களை விலக்காமல் தலையை அசைத்து அத்தசையை வாயில் நெளியும் நரம்புடன் கவ்வி இறுக்கிக்கொண்டான்.

ஹுண்டன் உச்சகட்ட திமிறலுடன் ஒருமுறை அதிர்ந்தபின் மெல்ல தளர்ந்தான். அவன் மூச்சு நகுஷனின் கன்னத்தில் ஆவிவெம்மையுடன் குருதித்துளிகளுடன் தெறித்தது. அவன் கைகள் நகுஷனின் தோளில் எடையுடன் அமைந்து வியர்வையில் வழுக்கி சரிந்தன. கால்கள் கவ்வலை விடுத்து பக்கவாட்டில் அகன்றன. நகுஷன் அவனை புரட்டிப்போட்டு மேலேறி அமர்ந்து நோக்கினான். கடிவாய் சிதைந்து திறந்திருக்க அதில் மூச்சுக்குமிழிகள் குருதியுடன் வெடித்தன. மூக்கிலும் வாயிலும் குருதித்துளிகள் தெறித்தன. அவன் உதடுகள் எதையோ சொல்லிக்கொண்டிருந்தன.

தன் வாயிலிருந்த குருதியை அவன் துப்பப்போனபோது அச்சொற்கள் சித்தத்தில் உறைத்தன. “உண்க… என்னை உண்க!” அவன் திகைத்து அமர்ந்திருந்தான். “உண்க… உண்க…” என்றான் ஹுண்டன். “என்னை உன்னுடன் சேர்த்துக்கொள்க!” நகுஷன் கைகள் தளர்ந்தன. மயங்கி ஹுண்டன் மேலேயே விழுந்துவிடுபவன்போல் உணர்ந்தான். பின் அந்தக் குருதியையும் நிணத்தையும் உறிஞ்சி உண்டான். நாவால் வாயை நக்கியபடி கைகளால் ஹுண்டனின் கழுத்தைப் பற்றி அவன் மோவாயை மேலே தூக்கி வலப்பக்கமாகத் திருப்பி ஒரே மடிப்பில் கழுத்தெலும்பை மேல்நோக்கி உடைத்தான். உடல் இருமுறை துள்ளி அதிர்ந்தது. கைகள் மண்ணை அள்ளி இழுபட்டன.

நகுஷன் எழுந்து தள்ளாடி நின்றான். காட்சிகள் மயங்கி அலையடிக்க விழுந்துவிடுவோமென எண்ணி மீண்டும்மீண்டும் இமைகளை மூடித்திறந்து நிலைமீண்டான். திரும்பி அருகே நின்ற கம்பனனிடம் “இவன் உடலை குருநகரியின் கொடி தொடர கொண்டுசெல்க!” என்றான். ஓடிவந்த படைத்தலைவன் தோளைப்பற்றியபடி நின்று “நம் கோல்தாழ்த்தி இவன் உடல் மண்ணுக்கு அளிக்கப்படவேண்டும். நம் குடிகள் நாற்பத்தொருநாள் சிதைநோன்பு கொள்ளவேண்டும்” என்று ஆணையிட்டான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 41

41. எழுபடை

கம்பனன் ஹுண்டனின் அறையை அடைவதற்கு முன்னர் இடைநாழியிலேயே அவன் உவகைக் குரலை கேட்டான். கதவைத் திறந்ததும் அக்குரல் பெருகி வந்து முகத்தில் அறைந்தது. “அடேய் கம்பனா, எங்கு சென்றிருந்தாய்? மூடா, மூடா” என ஹுண்டன் நகைத்தான். கையை சேக்கையில் அறைந்தபடி “என்ன நிகழ்ந்தது தெரியுமா? நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன். என் கால்களைக் கட்டிவைத்திருந்த கொடிகள் நாகங்களாக மாறி வழுக்கிச்செல்வதை உணர்ந்து நோக்கினேன். வலக்காலை அசைக்க முடிந்தது. அப்போது அருகே இருளுக்குள் ஓர் அழுகையோசை கேட்டது. பெண்குரல் அழுகை. விழித்துக்கொண்டேன். விழித்ததுமே என் வலக்காலை மெல்ல அசைத்துப்பார்த்தேன். மூடா, என் கால் அசைந்தது… இதோ பார்!” அவன் தன் காலை மெல்ல அசைத்தான். “கல் நெகிழ்கிறது, கல் நெக்குவிடுகிறது” என்று கூவினான்.

கம்பனன் நெடுமூச்சுடன் “நன்று அரசே, நான் சில செய்திகளுடன் வந்துள்ளேன்” என்றான். “சொல்!” என்றான் ஹுண்டன். ஆனால் அவன் தன் காலை அசைத்து நோக்குவதிலேயே ஈடுபட்டிருந்தான். “தங்கள் பட்டத்து அரசியார் இன்று மண்நீங்கினார். சற்றுமுன்னர். செய்தியை இன்னமும் நகருக்கு அறிவிக்கவில்லை.” ஹுண்டன் “ஆம், அவள் சில நாட்களில் இறக்கக்கூடுமென சொன்னார்கள். நகர்அறிவிப்பு செய்க! குலங்கள் கூடுக! முறைப்படி ஈடேற்றம் நிகழ்க! ஆவன செய்!” என்றபின் “உயிர்கொண்டதுமே கால் தன் இருப்பை எனக்கு அறிவித்தது. குளிரோ வெம்மையோ அல்ல. வலியல்ல. தொடு உணர்வுகூட அல்ல. அது இருக்கிறது என என்னிடம் அந்த இருப்புணர்வாலேயே அறிவித்தது” என்றான்.

“இன்னொரு செய்தி” என்று கம்பனன் தொடர்ந்தான். “குருநகரியின் அரசன் நகுஷன் உயிருடனிருக்கிறான். மகவாக இருக்கையில் நாம் அவனை கொல்லும்படி ஆணையிட்டு கொடுத்தனுப்பினோம். அரசியர் அவனை கொல்லவில்லை.” ஹுண்டன் விழிதூக்கி நோக்கி “எங்கிருக்கிறான்?” என்றான். “அவர்கள் குழவியை ஓர் ஒற்றனிடம் கொடுத்தனுப்பினர். அவன் அதை காட்டில் விட்டுவிட்டான். அக்குழவி வசிட்ட குருநிலையில் வளர்ந்து ஆற்றல்மிக்க இளைஞனாகியதாக சொல்கிறார்கள். படைகொண்டுசென்று அவன் குருநகரியைக் கைப்பற்றி முடிசூடினான். ஆயுஸின் மைந்தன் அவன் என அறிவித்தான். இப்போது அங்கே அரசனென அமர்ந்திருக்கிறான்.”

ஹுண்டன் சற்றுநேரம் கூர்ந்து நோக்கியபின் “ஆம், அது இயல்பே. அவர்கள் அவனை எதிர்பார்த்திருந்திருப்பார்கள்” என்றபின் “என் இடதுகாலிலும் அசைவு எழும் என ஓர் உள்ளுணர்வு சொல்கிறது” என்றான். “ஆம், இது தொடக்கமே” என்றான் கம்பனன். “குருநகரியில் அவன் என்ன செய்கிறான்?” என்றான் ஹுண்டன் காலை அசைத்து நோக்கியபடி. அவனிடம் அதிர்ச்சியோ வியப்போ வெளிப்படவில்லை என கம்பனன் கண்டான். அது அவனுக்கும் வியப்பை அளிக்கவில்லை. அனைவரும் அறிந்த ஒன்று எப்படி மந்தணமாக நீடிக்கமுடியும் என அவன் எண்ணிக்கொண்டான். அனைவரும் வெறுக்கும் ஒன்றென அது இருக்குமென்றால் இயல்வதே என பின்னர் தோன்றியது.

“அரசே, அவன் அசோகசுந்தரியை மணம் செய்துகொண்டிருக்கிறான்” என்றான் கம்பனன். “யார்?” என்று ஹுண்டன் தலைதூக்கி கேட்டான். “நகுஷன்… குருநகரியின் அரசன்.” ஹுண்டன் காலை மெல்ல அசைத்து “நினைக்க நினைக்க மேலும் உயிர் ஊறுகிறது” என்றபின் “யாரை?” என்றான். கம்பனன் சற்று சினத்துடன் “குருநகரியின் அரசன் உங்களால் விரும்பப்பட்ட அசோகசுந்தரியை மணம்புரிந்துள்ளான்” என்றான். ஹுண்டனின் வாய் திறந்தபடி நின்றது. “எப்போது?” என்றான். “சில நாட்களுக்கு முன்… செய்திகள் வந்திருக்கின்றன. இங்கே குலத்தலைவர்களின் பூசல் தலைக்குமேல் இருந்தமையால் நான் எந்தச் செய்தியையும் நோக்கவில்லை. சற்றுமுன்னர்தான் அனைத்தையும் அறிந்தேன்.”

ஹுண்டன் பெருமூச்சுவிட்டான். அவன் விழிகள் மாறிவிட்டதை உணர்ந்த கம்பனன் அக்கணம் தோன்றிய எண்ணத்தை அப்படியே சொல்லாக்கினான். “நேற்றிரவுதான் அவர்களின் மணக்கூடல். அவளை அவன் புணர்ந்தபோதுதான் உங்கள் உடலில் உயிர் வந்துள்ளது.”  ஹுண்டன் “என்ன சொன்னாய்?” என்ற கூச்சலுடன் கைகளை ஊன்றி எழப்போனான். கை தளர்ந்து மஞ்சத்திலேயே சரிந்தான். “என்ன சொல்கிறாய்?” என்று தளர்ந்த குரலில் கேட்டான். “அவள் கன்னிமையை இழந்ததுமே அவளிட்ட தீச்சொல் விலகத் தொடங்கிவிட்டது” என்றான் கம்பனன்.

“ஆம், உண்மை” என்றான் ஹுண்டன். “ஆனால் அவள் ஏன் அழுதாள்?” கம்பனன் புரியாமல் “யார்?” என்றான். “அவள்தான். நான் கனவில் கேட்டது அவள் அழுகையைத்தான்.” கம்பனன் “அது உங்கள் விழைவு. அவள் மகிழ்ந்துகொண்டாடியிருக்கவே வாய்ப்பு” என்றான். “அல்ல, அவள் அழுதாள். வலியோ துயரோ இல்லாத அழுகை… ஏக்கம்கொண்டு அழுவதுபோல.” கம்பனன் அவனை நோக்கிக்கொண்டு நின்றான். “அவள் அழுதாள், உண்மையிலேயே நான் அதை கேட்டேன்” என்றான் ஹுண்டன். “ஓரிரு சொற்களும் என் காதில் விழுந்தன.” கம்பனன் “என்ன சொற்கள்?” என்றான். “நான் போகிறேன்… நான் போய்விடுகிறேன் என்று அவள் சொன்னாள்” என்றான் ஹுண்டன்.

கம்பனன் பெருமூச்சுடன் “நாம் ஏதறிவோம்? எவ்வண்ணமாயினும் நமக்கு நன்றே நிகழ்கிறது. நீங்கள் எழப்போகிறீர்கள்” என்றபின் திரும்பி நடந்தான். “அமைச்சரே” என பின்னால் அழைத்த ஹுண்டன் “இன்று தண்டனைக்குரிய அனைவரையும் விடுதலை செய்துவிடுங்கள்…” என்றான். அவன் விழிகளை நோக்காமல் “அவ்வண்ணமே” என்றான் கம்பனன். அவன் மேலும் சொல்லுக்காக காத்து நிற்க “என் கல்தன்மை எப்போது முற்றிலும் விலகும்?” என்றான். “நாம் எதிர்பார்ப்போம்… இது தொடக்கம்தான் என என் உள்ளம் சொல்கிறது” என்றான் கம்பனன்.

திரும்பி அமைச்சுநிலைக்கு நடக்கையில் அவன் உள்ளம் குழம்பி அலைபாய்ந்தது. தானாகவே அத்தருணத்தில் நாவிலெழுந்த சொற்றொடர் என்றாலும் அது உண்மையாக இருக்கக்கூடும் என உள்ளம் உறுதிகொள்ளத் தொடங்கியது. அதைமட்டும் உறுதிசெய்யவேண்டும், அவர்களின் மணஇரவு நேற்றா? ஆமெனில் ஏதோ தொடங்கவிருக்கிறது. அமைச்சுநிலைக்குச் சென்று அமர்ந்து குருநகரி குறித்த அனைத்து  ஓலைகளையும் வரவழைத்து படித்துப்பார்த்தான். ஓர் ஓலையில் நகுஷனும் தேவியும் தங்க காமக்குடில் அமைக்கும் செய்தியிருந்தது. அவன் மணஇரவு நாளை தேடினான். பிறிதொரு ஓலையில் அதுவும் இருந்தது. முந்தையநாள்தான் அந்நிகழ்வு நாள்குறிக்கப்பட்டிருந்தது.

tigerவிபுலையின் இறப்புச்சடங்கு நாகநகரியில் எந்தப் பரபரப்பும் இல்லாமல் நடந்து முடிந்தது. அவள் உடலை கொண்டுவந்து அரண்மனை முற்றத்தில் நகரின் வணக்கத்திற்காக  படுக்கவைத்திருக்கையில் கம்பனன் அதன் பெருக்கம் கண்டு உளம் அதிர்ந்தான். மானுட உடலின் அனைத்து அமைப்புக்களையும் அது இழந்து தசைத்திரளாக வழிந்து சரிந்து பிதுங்கி உப்பிக் கிடந்தது. அதை நோக்கி நின்றபோது உள்ளிருந்து ஒன்று தன் உருவை தானே சிதைக்க முற்பட்டது போலிருப்பதாக நினைத்துக்கொண்டான். அல்லது உள்ளிருக்கும் அது எட்டுத்திசையிலும் திமிறி முட்டி வெளிக்கிளம்ப முயன்றதா?

அந்த உடலை ஒன்றென எண்ண முடியவில்லை. அந்தத் தோல்பைக்குள் அவள் பலவாக இருந்திருக்கிறாள். ஒவ்வொன்றும் பிரிந்துசெல்லத் துடித்து உள்ளே பூசலிட்டு தளர்ந்து அமைந்திருக்கின்றது. ஓரிரு தோல்கட்டுகளை மெல்ல வெட்டிவிட்டால் அவள் அப்படியே பன்றிக்கூட்டம் போல பரவி அகன்றுவிடுவாள் என்று தோன்றியது. அவளை நோக்கிய அத்தனைபேரிலும் அந்தத் திகைப்பே முதன்மைகொண்டிருந்தது. “உள்ளங்கால்கள் எத்தனை சிறியவை, நாய்நாக்கு போல!” அவள் பாதங்கள் செந்நிறமாக நடைதெரியா குழந்தைகளுக்குரியவை போலிருந்தன. மணிக்கட்டின் தசைமடிப்புகளுக்குப்பின் உள்ளங்கைகளும் மிகச்சிறியவையாக இருந்தன.

அவளமைந்த பாடையை எட்டுபேர் கொண்ட குழு மாறிமாறி சுமந்து சிதைக்கு கொண்டுசென்றது. ஹுண்டன் தொட்டு அனுப்பிய அனல் அவளை எரியூட்டியது. “எரிந்து முடிய நாளையாகும்போல” என எவரோ சொன்னபோது வந்திருந்த சிறிய கும்பலுக்குள் சிரிப்பொலி எழுவதை கம்பனன் கேட்டான். மனிதர்கள் இறப்பின்போது சிரிப்பார்கள் என அவன் அறிந்திருந்தான். அவர்களுக்கு இழப்பென்று தோன்றவில்லை என்றால், சூழலில் பெருந்துயரென பரவிநிற்கவில்லை என்றால், இறப்பு என்பதும் ஒரு கொண்டாட்டம் மட்டுமே.

ஹுண்டன் அவளை ஒரு கணமும் நினைக்கவில்லை. எரியேற்றிய பின் திரும்பிவந்து சந்தித்த கம்பனனிடம் “என் இடதுகாலிலும் அசைவு தெரிகிறது. ஆம், இன்னும் அதன் தசைகளை நான் அசைக்கமுடியவில்லை. ஆனால் அசைக்கமுடியும் என அது என்னிடம் சொல்கிறது. அது இருப்பதை இப்போதுதான் நான் உள்ளிருந்து உணர்கிறேன். அது குழவிபோல என்னை தூக்கு தூக்கு என அடம்பிடிக்கிறது” என்றான். கம்பனன் “நான் ஒற்றர்களிடம் கேட்டேன், அரசே. அவர்களின் மணஇரவு நேற்று. இரவுக்குப்பின் நோயுற்றிருக்கும் அவளை திருப்பி அகத்தளத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்கள். மருத்துவச்சிகள் அவளை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.

“அவளுக்கு என்ன ஆயிற்று?” என்றான் ஹுண்டன். “அறியேன், அவள் இளம்கன்னி போன்றவள். அச்சம் கொண்டிருக்கலாம்” என்றான் கம்பனன். “அவன் எப்படி இருக்கிறான்?” என்றான் ஹுண்டன். “அதைப்பற்றி செய்தி இல்லை. பிழையாக ஏதுமில்லை என எண்ணுகிறேன்” என்றான் கம்பனன். “அவன் கல்லாகிவிட்டானா?” என்று ஹுண்டன் கேட்டான். திகைத்துநோக்கிய கம்பனன் “ஏன் அவ்வாறு கேட்கிறீர்கள்?” என்றான். ஹுண்டன் “ஒன்றுமில்லை, அவன் கல்லாகவில்லை என்றால் அவன் என் எதிரி, அவனை நான் கொன்றாகவேண்டும்” என்றான். “நான் செய்திகளை அறிந்து சொல்கிறேன்” என்றான் கம்பனன்.

ஒற்றர்களிடம் செய்திகளை உடனடியாக பறவைத்தூதாக அனுப்ப ஆணையிட்டான் கம்பனன். நகுஷன் நலமாக இருப்பதாக செய்தி வந்தது. ஆனால் அசோகசுந்தரி நாளுக்குநாள் நோய்கொண்டிருப்பதாக, நலிந்துகொண்டே செல்வதாக செய்திகள் வந்தன. பின்னர் தெளிவாக அனைத்தும் வந்துசேர்ந்தன. கம்பனன் அகத்தளத்திற்குச் சென்று ஹுண்டனை கண்டான். அவன் இருகால்களும் அசைவுகொண்டிருந்தன. படுக்கையில் புரளவும் கால்களை மடித்து எழுந்தமரவும் அவனால் முடிந்தது. அந்த உவகையில் அவன் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தான்.

கம்பனனைக் கண்டதும் “இன்று இரு கால்களையும் மடித்தேன். இச்சிதையிலிருந்து உயிர்கொண்டு எழுந்துவிட்டேன்” என்று அவன் கூச்சலிட்டான். கரியமுகத்தில் வெண்பற்கள் மின்ன “என் கால்கள் மீண்டு வந்துவிட்டன. இன்னும் சில நாட்கள்தான்… கம்பனா, மூடா, நான் மீண்டுவிட்டேன். தேர்ச்சகடம் ஏறிச்சென்ற நாகம் தன் எஞ்சிய உடலை விழுங்கி உணவும் மருந்துமென்றாக்கி அதிலிருந்த உயிரை தான் பெற்று மீண்டெழும் என்பார்கள்… இதோ நான்” என்றான்.

“ஆம் அரசே, இன்னும் சில நாட்களில் நீங்கள் மீண்டெழுவீர்கள்” என்றான் கம்பனன். “எப்படி சொல்கிறாய்?” என்றான் ஹுண்டன். “அங்கே அசோகசுந்தரி இறந்துகொண்டிருக்கிறாள். அவள் நலியுந்தோறும் நீங்கள் ஆற்றல்கொள்கிறீர்கள்” என்றான் கம்பனன். ஹுண்டன் விழிகூர்ந்து நோக்கி “அவள் எப்படி இருக்கிறாள்?” என்றான். “அவள் முதுமைகொண்டபடியே செல்கிறாள். ஒவ்வொருநாளும் பல ஆண்டு அகவை கடந்துசெல்கிறது. நடுவயதாகி முதுமகளாகிவிட்டாள். உடல்வற்றி உயிர் அணைந்துகொண்டிருக்கிறது. இன்னும் சிலகாலமே…” ஹுண்டன் கண்களை மூடி படுத்திருந்தான். அவன் உடலில் தசைகள் இறுகி நெளிந்தன. தாடை அசைந்தது.

விழிகளைத் திறந்து “அவள் உயிர்?” என்றான். “ஆம், அரசே” என்றான் கம்பனன். “அவ்வாறெனில் அவள் என் அன்னை” என்றான் ஹுண்டன். கம்பனன் என்ன சொல்வதென்று அறியாமல் நோக்கினான். “அவள் என்னை ஈன்றிருக்கிறாள். அவள் மைந்தன் நான்” என ஹுண்டன் உரக்கக் கூவினான். “என்ன நடந்தது? அவள் ஏன் இறந்தாள்? அவள் அழுதது எனக்கு மட்டும் ஏன் கேட்டது?” அவன் இரு கைகளாலும் தன் மார்பை அறைந்தான். “அவள் என்னிடம் முறையிட்டாளா? எனக்கு ஆணையிட்டாளா என்ன?” கம்பனன் “தங்கள் எண்ணம் மிகையானது, அரசே” என்றான்.

“அவளுக்கு நிகழ்ந்தது என்ன? அதை சொல்க!” என்றான் ஹுண்டன். “அவள் வல்லுறவுகொள்ளப்பட்டாள். அந்த அதிர்ச்சியால்தான் இறந்தாள்” என்றான் கம்பனன். சில கணங்கள் ஹுண்டன் அப்படியே உறைந்தான். பின் நாகச்சீறலுடன் மூச்சிரைத்து மீண்டான். “ஆம், அவ்வாறே எண்ணினேன்… அமைச்சரே, நாம் குருநகரியை வெல்லவேண்டும். அவனை கொல்லவேண்டும். அவளுக்கு நாம் செய்யும் கடன் அது.” கம்பனன் “அரசே, அது எளிதல்ல. நம் குலங்கள் சிதறுண்டிருக்கின்றன. நாம் ஆற்றலின்றி இருக்கும் காலம் இது. அவனோ பெருவலிமை கொண்டிருக்கிறான்” என்றான்.

“எண்ணிக் கணக்கிட்டு மைந்தர் அன்னைக்காக எழுவதில்லை” என்றான் ஹுண்டன். “நான் ஏன் கல்லானேன் என்பதற்கான விடை இன்று கிடைத்தது. இப்படுக்கையில் கிடந்து நான் இதுவரை உழன்றது அதை எண்ணியே… ஒரு படைவீரனும் உடன்வரவில்லை என்றாலும் நான் செல்வேன். களம்படுவேன்.” கம்பனன் “தங்களுக்கு உரைக்கவேண்டியது என் கடமை. ஆணையென்றால் தலைகொடுப்பது அடுத்த கடமை” என்றான். “எழுக, நம் படைகள்!” என்றான் ஹுண்டன்.

நினைத்திருந்ததற்கு முற்றிலும் மாறாக நாகர்குடிகள் அனைத்து வஞ்சங்களையும் மறந்து ஹுண்டனின் கொடிக்கீழ் அணிநிரந்தன. அது ஏன் என எத்தனை எண்ணியும் கம்பனனால் உணரமுடியவில்லை. அன்றிரவு தன் இல்லத்தில் உடல்தளர்ந்து படுத்திருந்த தந்தையிடம் மஞ்சத்தின் அருகமர்ந்து அவன் “குடிகள் எண்ணம் என்ன எந்தையே? இதில் சூது ஏதேனும் உண்டோ என்றுகூட உள்ளம் ஐயுறுகிறது” என்றான். மூச்சிரைப்பால் மூக்கு சற்றே மேல்நோக்கி இருக்க படுத்திருந்த அவர் தளர்ந்த குரலில் “அவர்கள் அரசனையும் குடித்தொகையையும் விட்டுப்பிரிய விரும்பவில்லை. இது அதற்கு உகந்ததாகத் தெரிகிறது போலும்” என்றார்.

“அவர்கள் வஞ்சம் கொண்டிருந்தனர்” என்றான் கம்பனன். “ஆம், ஊடாக அன்பும் கொண்டிருந்தனர். அரசன் மீண்டுவிட்டான் என அவர்கள் அறிந்ததுமே அவ்வஞ்சம் மறைந்துவிட்டது. அவர்கள் அவன்மேல் வஞ்சம் கொண்டமைக்கு வருந்துகிறார்கள். அறம்முகிழ்த்த ஒன்றை ஆற்றி அதிலிருந்து மீள விழைகிறார்கள்” என்றார் முதியவர். “மைந்தா, தொல்குடிமக்களின் வீழ்ச்சி அவர்கள் அறத்தால் அன்றி பிறிதொன்றுக்காக எழுவதில்லை என்பதனால் அமைகிறது. அவர்கள் அருகுபோல் வேரோடி வாழ்வது அவர்களுடன் என்றும் அறம் வாழ்கிறதென்பதனால் நிகழ்கிறது.”

tiger

ஹுண்டனின் தலைமையில் நாகர்குலத்தின்  பதினெட்டு பிரிவுகளும் ஒன்றிணைந்து குருநகரிமேல் படைகொண்டுவரும் செய்தியை அறிந்ததும் நகுஷன் திகைத்தான். “எப்போதுமே மலைக்குடிகள் நேரடியாக அரசுகளின்மேல் படைகொண்டு வந்ததில்லை… அவர்களுக்கு எப்படி அத்துணிவு வந்தது?” என்று பத்மனிடம் கேட்டான். “அரசே, மலைக்குடிகள் நிலம்வெல்ல ஒருபோதும் ஒருங்கிணைவதில்லை. அவர்களின் எல்லைகள் தாக்கப்பட்டாலொழிய அவர்கள் போருக்கிறங்க மாட்டார்கள்” என்றான் பத்மன். நகுஷன் “நாம் எங்காவது எல்லைமீறிவிட்டோமா?” என்று கேட்டான். “இல்லை, நாம் நம் எதிரியரசர்களைக்கூட இந்நாட்களில் எண்ணியதில்லை” என்றான் பத்மன்.

இரண்டு நாட்களில் அதற்கான விடை தேடிவந்தது. ஹுண்டன் அனுப்பிய போர் அறைகூவல் மலைக்கழுகு ஒன்றின் காலில் கட்டப்பட்ட ஓலையென குருநகரியை வந்தடைந்தது. அதை நகுஷனிடம் கொண்டுவந்து தந்த பத்மன் “அவன் அசோகசுந்தரிக்காக படைகொண்டுவருகிறான்” என்றான். “அரசிக்காகவா? அவன் ஏன் எழவேண்டும்?” என்றான் நகுஷன் திகைப்புடன். “ஓலையை வாசித்து நோக்குக!” என்றான் பத்மன். வாசித்தபின் அதை மீண்டும் சுருட்டியபடி “என்ன சொல்கிறான்? அவன் எப்படி அவளுக்கு மைந்தனாவான்?” என்றான் நகுஷன். “அவர் இழந்த உயிரை அவன் அடைந்திருக்கிறான் என நம்புகிறான்” என்றான் பத்மன்.

“விந்தைதான். பழங்குடிகளின் உள்ளங்கள் எப்படி செல்கின்றன என்பதை எண்ணவே கூடவில்லை” என்றான் நகுஷன் சிரித்தபடி. “அவருக்கு நீங்கள் இழைத்த பிழைக்கு நிகர்செய்யவேண்டுமென போருக்கு எழுந்துள்ளான். உங்களை வென்று உங்கள் குருதிதோய்ந்த வாளை அரசியின் எரியிடம் மீது வைத்து வணங்கி அவர் எரியிடத்து மண்ணில் ஒருபிடி எடுத்துச்சென்று அவன் ஆளும் நாகநகரியில் ஒரு ஆலயம் அமைக்கப்போவதாக சொல்லியிருக்கிறான்” என்றான் பத்மன். “ஆம்” என்று நகுஷன் மீசையை நீவியபடி சொன்னான். “அது பொய்யோ மெய்யோ, அச்சொற்கள் குடிகளின் உள்ளங்களை வெல்லும். நாகர்குடிகள் அவனுடன் ஒருங்கிணைந்து போருக்கெழுந்தது அதன்பொருட்டே” என்றான் பத்மன்.

“ஆம், அதற்காகவே இந்த சூழ்ச்சியைச் செய்கிறான் என ஐயுறுகிறேன்” என்றான் நகுஷன். “அச்சூழ்ச்சிவலையில் சிக்கவிருப்பது நம் குடிகளும்கூடத்தான்” என்று பத்மன் சொன்னான். “இச்செய்தியை எப்படி நம் குடிகள் அறிவார்கள்?” என்றான் நகுஷன் பொறுமையிழந்தவனாக. “அரசே, அரண்மனைச்செய்திகள்போல மக்கள் உடனே அறிவது பிறிதில்லை” என்றான் பத்மன். நகுஷன் எழுந்து கைகளால் தொடையைத் தட்டியபடி “நன்று, ஒரு போர் நிகழ்ந்தும் நீணாளாயிற்று. நம் படைக்கலங்கள் துருப்பிடிக்கத் தொடங்கிவிட்டிருக்கின்றன” என்றான்.

எண்ணியதுபோலவே ஒரு நாளைக்குள் குருநகரியெங்கும் அசோகசுந்தரிக்காகவே ஹுண்டன் படையுடன் கிளம்பி வருகிறான் என்னும் சொல் பரவியது. “அவன் அவள் மைந்தன்… அவள் முற்பிறப்பில் ஈன்றவன்” என்றான் ஒரு சூதன். “அவனை ஈன்றபின் அவள் எரிபுகுந்து மீண்டும் பிறந்துவந்தாள். அவள் இங்கே இறந்ததும் அங்கே அவன் வணங்கிய அகல்சுடரில் தோன்றி தனக்கிழைக்கப்பட்ட தீங்கு குறித்து சொன்னாள். வஞ்சினம் உரைத்து மாநாகன் கிளம்பியிருக்கிறான்.” வெவ்வேறு கதைகள் கிளம்பி ஒன்றுடன் ஒன்று முயங்கி நாளுக்கொன்று என வந்துசேர்ந்துகொண்டிருந்தன.

“நம் படைகள் ஐயுற்றிருக்கின்றன” என்று படைத்தலைவன் வஜ்ரசேனன் சொன்னான். “எதன்பொருட்டு இப்போர் என்று என்னிடமே ஒரு முதிய வீரன் கேட்டான். அறத்தின்பொருட்டு அல்ல என்று அறிவேன். நிலத்தின்பொருட்டும் அல்ல. எனில் அரசனின் ஆணவத்தின்பொருட்டா, அல்லது அவன் இழைத்த அறமின்மையின்பொருட்டா என்றான். வாளை ஓங்கி அவன் கழுத்தை சீவ எண்ணினேன். ஆனால் அவன் விழிகளைப்போலவே ஆயிரம் விழிகள் என்னை சூழ்ந்திருந்தன. எனவே எது கடமையோ அதை செய்க. படைமுரசு ஒலித்தபின் ஐயுறுபவன் கோழையோ காட்டிக்கொடுப்பவனோ ஆவான் என்றே கொள்ளப்படும் என்று சொல்லி மீண்டேன்.”

பத்மன் விழிகளைச் சரித்து அமர்ந்திருந்தான். “என்ன செய்வது சொல்லுங்கள், அமைச்சரே! அரசர் நாளை படைப்புறப்பாடுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார். புலரியில் அவர்  கோட்டைமுகப்பின் உப்பரிகையில் நின்று படைகளிடம் பேசப்போகிறார். அவருடைய முகத்துக்கு நேராக எதிர்க்குரல் எழுந்து வருமென்றால் பின்னர் போரை வெல்வதைப்பற்றி எண்ணிப்பார்க்கவும் வேண்டியதில்லை.” பத்மன் “நான் அரசரிடம் பேசுகிறேன்” என்றான்.

அன்று மாலையே பத்மன் சென்று படைக்கல நிலையத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்த நகுஷனிடம் தன் எண்ணத்தை சொன்னான். “அரசே, குடிகள் மறைந்த அரசியையே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இப்போர் அரசிக்காக நிகழ்வதென்று ஆகிவிட்டது. படைகளின் எண்ணிக்கை வல்லமையால் போர்கள் வெல்லப்படுவதில்லை, படைகள் கொண்ட உளவிசையின் ஆற்றலே வெல்கிறது. நம் முன் வழி ஒன்றே உள்ளது.” வியர்வையைத் துடைத்தபடி அமர்ந்து “சொல்க!” என்றான் நகுஷன். “நாளை உப்பரிகையில் தோன்றியதுமே நம் ஏழு முதன்மைக் குடிகளிலிருந்து நீங்கள் அரசியரை மணம் கொள்வதாக முதலில் அறிவியுங்கள். ஏழு குலத்தலைவர்களும் உங்களுடன் உப்பரிகையில் நிற்கட்டும். படைகளின் உள்ளம் அக்கணமே மாறிவிடும்” என்றான் பத்மன்.   “ஏனென்றால் மங்கல அறிவிப்பின்போது வாழ்த்தாமலிருக்க முடியாது. வாழ்த்தொலிகள் சூழ்ந்து பெருகி எழுகையில் அவ்வுணர்வால் ஒவ்வொருவரும் தூக்கிச் செல்லப்படுவார்கள்.”

“அது ஓர் எளிய சூழ்ச்சி அல்லவா? அரசன் என நான் அதை செய்தாகவேண்டுமா?” என்றான் நகுஷன். “அரசே, படைகொண்டு வருபவர்கள் நாகர்கள். நாகர்கள் இல்லாத நிலமே பாரதவர்ஷத்தில் இல்லை. ஒரு களத்தில் நாகர்கள் வென்றால் நாம் நாவலந்தீவெங்கும் நாகர்களை எழுப்புகிறோம் என்று பொருள்” என்றான் பத்மன். “அவர்கள் ஷத்ரியர்கள் அல்ல. அவர்களை நாம் போராடி வென்றாலும் இழிவே. புயல்காற்று சருகுகளை என நாம் அவர்களை வென்றாகவேண்டும்.” நகுஷன் ஆம் என தலையசைத்தான்.

அன்றே பத்மன் குருநகரியின் தொல்குடிகளை அழைத்து அரசனின் எண்ணத்தை சொன்னான். அவர்களும் அதற்காக காத்திருந்தனர். “ஆம், அதுவே முறை. இன்றைய நிலையில் அரசரின் கைகளென நிற்கவேண்டியவர்கள் அவர் குடிகளே. இன்று வென்றால் நாம் இனியும் வெல்வோம்” என்றார் குலத்தலைவர் ஒருவர். பேச்சுக்கள் முடிந்து உறுதிகளை பெற்றுக்கொண்டு பத்மன் நிறைவுள்ளத்துடன் புலரிக்கு முன்னர் சென்று நகுஷனை பார்த்தான். அனைத்தையும் விளக்கி நகுஷன் உப்பரிகையில் நின்று வீரர்களை நோக்கி சொல்லவேண்டியதென்ன என்று வகுத்துரைத்தான்.

“அரசே, நீங்கள் எழுந்ததும் வீரர்களின் வாழ்த்துரைகள் விசைகொண்டிருக்காதென்றே எண்ணுகிறேன். அதைக் கண்டு உங்கள் முகம் சுருங்கினால் அந்த எதிர்ப்பு மேலும் வீச்சுபெறும். வீரர்களை நோக்கி முகமலர்ச்சியுடன் வணங்கினீர்கள் என்றால் அவர்கள் குழப்பத்துடன் நோக்குவார்கள். உடனே ஏழு குடிகளிலிருந்து ஏழு அரசியரை மணக்கவிருப்பதை அறிவித்து குடித்தலைவர்களை அழையுங்கள். அவர்கள் உப்பரிகைக்கு வந்து உங்களருகே நிற்கட்டும்” என்று பத்மன் சொன்னான். “அவர்கள் தங்கள் கோலைத் தூக்கி ஆட்டி தங்கள் குலங்களை அறைகூவட்டும். வாழ்த்தொலிகள் எழுந்து சூழும்போது எதிர்ப்பு எண்ணம் அழிந்திருக்கும்.”

“அரசே, நம் மக்கள் நாமே பாரதவர்ஷத்தின் தொல்குடிகள் என்னும் பெருமைகொண்டவர்கள். அதிலிருந்து தொடங்குங்கள். எளிய பழங்குடிநாகர் நம் மீது படைகொண்டு வருவது நம் குடிமூத்தாருக்கும் தெய்வங்களுக்கும் இழுக்கு என்று கூறுங்கள். குருநகரியின் பெருமையை விளக்குங்கள். அதன் பெருமை காக்க எழுக என அறைகூவுங்கள். உங்களுடன் குருநகரியின் படைகள் எழும்.”

நகுஷன் “ஆம், அவ்வண்ணம்தான் செய்யவேண்டும்” என்றான். “அனைத்தும் சித்தமாக உள்ளன. நீங்கள் கவசம் பூணுக!” என்றான் பத்மன். கவசமும் அணிகளும் பூண்டு வந்த நகுஷனை அவனே கோட்டைமுகப்பு நோக்கி அழைத்துச் சென்றான். அரண்மனையிலிருந்து கோட்டைச்சுவர்மேல் அமைந்த மந்தணப்பாதை ஒன்றினூடாகவே அந்த உப்பரிகைக்கு செல்லமுடிந்தது. நிமிர்ந்த தலையுடன் எண்ணத்திலாழ்ந்து நடந்த நகுஷனின் அருகே நடந்தபடி அவன் சொல்லவேண்டிய சொற்களை பத்மன் மீண்டும் சொன்னான். “ஐயம் கொள்ளாதீர்கள். தயங்காதீர்கள். அரசன் என எழுந்து நில்லுங்கள். குடித்தலைவனாக குரல்கொடுங்கள்” என்றான்.

கோட்டைமுகப்பிலிருந்த பிறைவடிவ வெளியில் குருநகரியின் படைகள் அணிவகுத்து நிறைந்து நின்றிருந்தன. கரவுப்பாதைக்குள் அமைந்த சிறிய சாளரத்துளைகள் வழியாக வெளியே நோக்கியபடியே வந்தான் பத்மன். இருளில் பந்த ஒளியில் மின்னும் படைக்கலங்களின் முனைகள் இடைவெளியின்றி நிரந்த அம்முற்றம் ஓர் அலையிளகும் ஏரி எனத் தோன்றியது. அங்கிருந்து மானுடக்குரல்கள் இணைந்து உருவான முழக்கம் எழுந்தது. ஒரு பெருமுரசுக்குள் எறும்பென அகப்பட்டுக்கொண்டதுபோல என பத்மன் நினைத்தான்.

“பொறுங்கள் அரசே, குலத்தலைவர்களும் பிறரும் சித்தமாகிவிட்டர்களா என்று பார்க்கிறேன். அனைத்தும் சித்தமென்றால் நான் தங்கள் மெய்க்காவலனுக்கு கைகாட்டுகிறேன்…” என்றபின் அவன் ஓசையின்றி குனிந்து கரவுப்பாதையின் பெருங்கதவிலமைந்த திட்டிவாயிலைத் திறந்து வெளியே சென்றான். அங்கிருந்து நோக்குகையில் அப்பெரும்படை ஒற்றை உடலென தோன்றியது. பல்லாயிரம் தலைகள். பல்லாயிரம் விழிகள். பல்லாயிரம் கைகள். படையை விராடமானுடன் என ஏன் சொல்கிறார்கள் என அப்போது அறிந்தான்.

அரசன் தோன்றவிருந்த உப்பரிகைமேடைக்கு இரு பக்கமும் குலத்தலைவர்களை தங்கள் கோலுடன் நிற்கச்செய்தான். தீட்டப்பட்ட  இரும்புக்கலங்களால் ஆன குழியாடிகள் நான்கு எதிரே கோட்டைவிளிம்புகளில் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு முன்னால் நெய்யூற்றப்பட்ட பந்தங்கள் சித்தமாக இருந்தன.  அவன் படைத்தலைவனை நோக்க அவன் அருகே வந்து பணிந்தான். “படைகளில் மேலும் கசப்பு எழுந்துள்ளது, அமைச்சரே. வாழ்த்தொலிகள் எழாமலிருக்கக்கூட வாய்ப்புள்ளது. நான் நூற்றுவர்களிலேயே பலரை சிறையிட்டு இந்த அணிநிரையை அமைத்துள்ளேன்” என்றான்.

“பார்ப்போம்” என்றான் பத்மன். “அனைத்தையும் சித்தமாக அமையுங்கள்” என்றபின் உப்பரிகைமேடையை நோக்கினான். மூச்சை இழுத்துவிட்டு அந்த முதற்புலரியிலும் தன் உடல் வியர்த்திருப்பதை உணர்ந்தான். அணுக்கக் காவலனின் விழிகளை சந்தித்தபின் கையசைத்தான். பின்னர் திரும்பி ஆடிக்காவலர்களை நோக்கி கையசைத்தான். அரக்கும் நெய்யும் விடப்பட்ட பந்தங்கள் பற்றி எரிந்து தழல்கொண்டன. ஆடிகள் அவ்வொளியை அள்ளிக்குவித்து உப்பரிகைமேல் பெய்தன.  முரசங்களும் கொம்புகளும் குழல்களும் பேரோசையுடன் முழக்கமிடத் தொடங்கின.

எரிகுளம் என சுடர்விட்ட உப்பரிகை மேடையின் கதவுகள் உள்ளிருந்து விரியத் திறந்தன. கைகளைக் கூப்பியபடி நகுஷன் வந்து ஒளியில் நின்றான். அவன் கவசங்களில் பட்ட செவ்வொளியின் தழலாட்டத்தில் அவன் இளஞ்சூரியன் எனத் தோன்றினான். அவனை நோக்கி விழிகள் மட்டுமே உயிர்கொண்டிருக்க ஓசையின்றி அசைவின்றி அமைந்திருந்தது படைத்திரள். தெய்வங்களுக்குரிய வெறித்த விழிகளுடன் அவன் தன் கையை தூக்கினான். “வீரர்களே, குருநகரியினரே!” என அவன் அழைத்தது கோட்டைமுகப்பின் குழிவுமுகடுகளால் அள்ளித் தொகுக்கப்பட்டு காற்றில் வீசப்பட்டு படையினர் அனைவருக்கும் கேட்டது. “நான் குருநகரியின் அரசன். இந்த பாரதவர்ஷத்தை வெல்வேன். இந்திரனின் அரியணையில் அமர்வேன்” என்றான்.

அப்பெரும்படை ஒற்றை உடலெனச் சிலிர்ப்பதை பத்மன் கண்டான். “என் படைவீரர் நீங்கள். என் உடல். பிறிதொன்றுமல்ல. என் ஆணைக்கு அப்பால் எண்ணமில்லை உங்களுக்கு என்று அறிக! வெற்றிக்கென படைக்கலம் கொண்டு எழுக! இது என் ஆணை!” என்றான் நகுஷன். மேலும் சில கணங்கள் படை ஓசையற்றிருந்தது. காற்றிலாடும் பாவட்டாக்களின் சிறகோசை. பின்னர் ஒற்றைப்பெருங்குரலில் “மாமன்னர் நகுஷன் வாழ்க! குருநகரியின் வேந்தன் வாழ்க! சந்திரகுலத்தோன்றல் வாழ்க!” என வாழ்த்தொலிகள் எழுந்து கோட்டைப்பரப்பை அதிர்வுகொள்ளச்செய்தன.

நூல் பதின்மூன்று – மாமலர் – 40

40. இடிபாடுகள்

அசோகசுந்தரியின் குடிலை கண்காணிக்க கம்பனன் ஒற்றர்களை சூழமைத்திருந்தான். ஆனால் நாள் செல்லச்செல்ல அவன் அதை மறந்தான். அவன் நோக்காமலானபோது கீழே இருந்தவர்கள் அதை வெறும் அலுவலாக ஆக்கிக்கொண்டனர். முறைமையென்றாகும்போது காவல்பணியும் கணக்குப்பணியும் சிறக்கின்றன, ஒற்றுப்பணியும் நீதியளித்தலும் அழிகின்றன என்பது ஆட்சிநூலின் நெறி. நாளடைவில் அசோகசுந்தரியின் குடிலை எவருமே கண்காணிக்கவில்லை. அப்பெயரே எங்கும் பேசப்படவுமில்லை.

அரண்மனையின் ஒவ்வொன்றும் பிழையென சென்றுகொண்டிருந்தது. ஹுண்டன் வஞ்சமும் சினமும் கொண்டவனாக ஆனான். அவன் கண்களில் எழுந்த ஒளியைக் கண்டு அஞ்சிய ஏவலர் ஏறிட்டு அவனை நோக்குவதை தவிர்த்தனர். கம்பனனே அவனுக்கு பக்கவாட்டில் நின்று விழிநோக்காது சொல்லாடினான். எவ்விழிகளுமே சந்திக்காத ஹுண்டனின் விழிகள் முதுநாகத்தின் மணி என ஒளிகொண்டன. அவற்றை ஏறிட்டு நோக்கியவர்கள் அவனால் தண்டிக்கப்பட்டவர்கள் மட்டுமே. அவன் ஆணையை சொல்லி முடித்ததுமே அவர்கள் திடுக்கிட்டு விழிதூக்கி அவ்விழிகளை நோக்கி அக்கணமே நாகத்தின் முன் எலி என சித்தம் உறைந்து உடல் ஒடுங்கினர். அவர்களின் உள்ளம் அவன்முன் முழுமையாகப் பணிந்தது. தங்கள் உடலை அவர்கள் அதற்கென்றே பிறந்தவர்கள்போல மாற்று எண்ணமே இன்றி ஒப்படைத்தனர்.

அவன் நாளும் ஒருவனை கழுவிலேற்றினான். சிறு பிழைகளுக்கும் தலைவெட்டவும், யானைக்காலில் இடறவும், புரவிகளால் இழுத்துக்கிழிக்கவும், பேரெடை கட்டி தலைகீழாகத் தொங்கவிடவும் ஆணையிட்டான். எனவே அவனிடம் நீதி வழங்க வழக்குகள் வருவதை கம்பனன் தவிர்த்தான். கொலை செய்யப்படவேண்டியவர்களை மட்டுமே அவனிடம் அனுப்பினான். ஹுண்டன் தன் சாளரத்துக்கு வெளியிலேயே கழுமரம் அமைத்து அதில் அந்தக் கழுவேறி உடல்கோத்து குருதி வார கைகால்கள் துடிதுடிக்க முனகி மெல்ல மடிவதை நோக்கிக்கொண்டு மஞ்சத்தில் படுத்திருந்தான். வதைபட்ட உயிரின் இறுதித் துடிப்பின்போது தன் பாறைக்கால்களில் உயிரசைவு தோன்றுவதாக சொன்னான்.

“உயிர் தன்னில் இருப்பதை உடலால் உணர முடியாது, அமைச்சரே. ஏனென்றால் உயிரை உடல் தான் என்றே எண்ணுகிறது. ஆனால் உடலின் உச்சகட்ட வலியில் உயிர் அதை உதறி கைவிட்டுவிடுகிறது. உயிர் உதறி மேலெழுகையில் ஒருகணம் உடலால் வெறும் உயிர் உணரப்படுகிறது. ஒரு நடுக்கமாக அல்லது துடிப்பாக அல்லது வேறு ஏதோ ஒன்றாக அது வெளிப்படுகிறது. அந்த உடலசைவு ஒரு சொல்… மிகமிக அரிதான சொல்” என அவன் முகம் உவகையில் விரிய சொன்னான். “ஆனால் ஓரிரு கணங்கள் மட்டுமே அது நிகழ்கிறது. கண் அதை தொட்டு சித்தம் அறிவதற்குள் முடிவடைந்துவிடுகிறது. இன்னொருமுறை அதை பார்த்தால் தெரிந்துவிடும் என உள்ளம் பதைக்கிறது. ஆகவேதான் மீண்டும் மீண்டும் உயிர்க்கொலை செய்கிறேன்.”

அத்தனை மனிதர்களும் வெறும் உடலுயிர்களாக அவனுக்கு தெரியலாயினர். ஏவலரும் காவலரும் கழுவேறினர். ஒருமுறை அவன் இளம்வீரன் ஒருவனை கழுவிலேற்றினான். அதுவே தாளலின் எல்லையென அமைந்த இறுதிச் சுமை. அவன் குலம் கொதித்து எழுந்தது. நாகநாடு முழுக்க குலங்கள் ஒன்று திரண்டன. நாகத்தரைகளில் குடிக்கூட்டங்கள் நாளும் நடந்தன. பல குலங்கள் நாகநாட்டிலிருந்து விலகிச்செல்வதாக அறிவித்தன. கம்பனன் முதலில் படைகளை அனுப்பி அந்தக் கிளர்ச்சியை அடக்க முயன்றான். அது அரக்குக்காட்டில் எரி என படர அவர்களை பேசி அமைக்க முயன்றான். ஒரு குலம் தணிந்ததும் பிறிதொன்று எழுந்தது. எண்ணியிராத இடங்களில் எல்லாம் சாம்பல்குவைக்குள் இருந்து எரி பொங்கி எழுந்தது. ஹுண்டனின் குருதி இல்லாது அமையோம் என்றே பல குலங்கள் கொதித்தன.

இறுதியில் அது அங்குதான் முடியுமென  கம்பனன் அறிந்திருந்தான். குடிகள் தங்கள் ஆற்றலை உணராதிருக்கும்வரைதான் அச்சம் அவர்களை ஆளும். அஞ்சிய பசு துள்ளி எல்லைகடப்பதுபோல சினம்கொண்டு நிலைமறந்து எழுந்து அதனூடாக தங்கள் எல்லையை கடந்துவிட்டார்கள் என்றால் அரசனின் குருதியில்லாது குடிகள் அமையமாட்டார்கள். அது அவ்வரசனின் குருதி மட்டும் அல்ல. அரசு என்பது குடிகளை ஒடுக்கியே நிலைகொள்வது. புரவி நினைத்திருக்க பல்லாயிரம் சாட்டைத் தழும்புகள் இருக்கும். அத்தனை குடிக்கிளர்ச்சிகளிலும் அரசு என்னும் அமைப்பு உடைந்து சிதறுகிறது. கோட்டையும் காவலும் சிதறுகின்றன. கொடிகள் மண்ணில் புரண்டு மிதிபடுகின்றன. அரசின்மையின் பெருங்களியாட்டம் எழுந்து எவராலும் கட்டுப்படுத்த முடியாதபடி அனைத்தையும் உடைத்து அழிக்கிறது.

பெரிய அணை உடைந்தால் அத்தனை சிறிய அணைகளும் உடைவதுபோல குடியறமும் குலஅறமும் கற்பும் மூத்தோர்மதிப்பும் மறக்கப்படுகின்றன. அதை கட்டுக்குள் வைக்க அதைத் தொடங்கியவர்களாலேயே இயலாது. அக்களியாட்டம் பெருகிப்பெருகி பேரழிவாக ஆகத் தொடங்கும்போது அவர்கள் கைகாட்டி குறுக்கே நிற்பார்கள். ஆணையிட்டும் மன்றாடியும் நிறுத்த முயல்வார்கள். அவர்கள் உடைத்து வீசப்படுவார்கள். அழிவு முழுமைகொண்டபின்புதான் மெல்ல போதம் மீளத் தொடங்கும். மேலும் முன்செல்லமுடியாதென்று உணரும் நிலையில் மெல்ல திரும்பத் தொடங்குவார்கள் முன்னே சென்றவர்கள்.

முதலில் உருவாவது அரசு. மிகக் கொடிய அரசு. குருதிவெறிகொண்டது. கட்டின்மையின் வெறியை கொலைவெறியால் அது நிகர்செய்கிறது. அச்சம் இளம்அரசை மேலும் மேலும் ஆற்றல்கொண்டதாக ஆக்குகிறது. அரசின் ஆற்றல் குலம் குடி கற்பு என அனைத்தையும் மீண்டும் நிறுவத் தொடங்குகிறது. அந்த உடைப்பை அஞ்சாத ஆட்சியாளர்கள் இல்லை. அணையைக் கண்டதுமே கசிவை எண்ணாத சிற்பி இல்லை என்பதுபோல. அவ்வச்சம் ஒவ்வொரு சிறு மீறலையும் உச்சகட்ட வன்முறையுடன் எதிர்கொள்ள அரசுகளை தூண்டுகிறது. அச்சமே அரசு. ஆனால் அச்சுறுத்துவதில் ஓர் எல்லை உண்டு. அச்சத்தின் உச்சியில் இனி செல்ல இடமில்லை என குடிகள் திரும்பிவிட்டார்கள் என்றால் அரசின் கோன்மை எங்கோ நுண்ணிய தளம் ஒன்றில் முடிவுக்கு வந்துவிடுகிறது.

ஹுண்டன் அந்த எல்லையை சென்று முட்டிவிட்டான் என கம்பனன் உணர்ந்திருந்தான். ஒவ்வொருநாளும் அதை சீரமைக்க அவன் முழுமூச்சாக முயன்றான். நாளுக்கு நூறு ஓலைகள் எழுதினான். மீண்டும் மீண்டும் குலமூத்தவர்களை சென்று சந்தித்து பேசிக்கொண்டிருந்தான். படைவீரர்களுக்கு கருவூலத்தை திறந்துவிட்டான். எதிரிகளைப்பற்றிய அச்சத்தைப் பெருக்கும் செய்திகளையும் எதிரிகள் மீதான வஞ்சத்தையும் ஒற்றர்கள் வழியாக குடிகளிடம் பரப்பினான். ஒருநாள், இன்னும் ஒருநாள், இதோ அணைந்துவிடும் என காத்திருந்தான். அதில் அவன் பிறிதனைத்தையும் முழுமையாக மறந்தான்.

tigerஹுண்டனின் அரசியர் இருவரும் முன்னரே மெல்லமெல்ல உளப்பிறழ்வு கொள்ளலாயினர். முதலில் விபுலையில்தான் வேறுபாடு தெரியத்தொடங்கியது. அவள் பசி கூடிக்கூடி வந்தது. சுற்றிச்சுற்றி உணவறையிலேயே வந்து அமர்ந்தாள். உணவைப்பற்றியே பேசினாள். வேறு எதிலும் அவள் உளம்நிலைக்கவில்லை. அதை அவளே சொல்லி அஞ்சி அழுதாள். மருத்துவரை அழைத்து வந்து தன் தவிப்பைச் சொல்லி மருந்துகளை உண்டாள். மேலும் மேலுமென பசி ஏற அவள் அதனுடன் கொள்ளும் போராட்டமும் விசைகொண்டது. பின் அதனுடன் எதிர்நிற்க இயலாதென்று கண்டு முற்றிலும் பணிந்தாள்.

வெறிகொண்டவள்போல உணவுண்ணலானாள். எப்போதும் கண்முன் உணவு இருந்துகொண்டே இருக்கவேண்டும் என பதைத்தாள். ஒரு தாலத்தில் உணவுண்ணும்போதே பிறிதொன்றில் உணவைக் கொண்டுவந்து கண்முன் வைத்திருக்கவேண்டுமென்று கூச்சலிட்டாள். துயில்கையிலும் அவளருகே உணவு இருந்தது. விழித்தெழும்போது உணவு கண்முன் இல்லையென்றால் அது வருவதற்குள் அவள் எழுந்து நெஞ்சிலறைந்து கூச்சலிட்டாள். சேடியை அறைந்தும் உதைத்தும் சில தருணங்களில் பாய்ந்து கடித்தும் வெறிக்கூத்தாடினாள்.

அவள் உடல் பெருத்தபடியே வந்தது. தோள்களும் புயங்களும் பெருத்து தோல்வரிகள் எழுந்து தசைவிரிவுகொண்டது. இடையும் வயிறும் உப்பி அடிமரத்தூர் என ஆனாள். அவ்வெடையை அவள் சிறுகால்கள் தாளாதானபோது பெரும்பாலும் அமர்ந்தபடியே இருந்தாள். சுவர் பற்றி மெல்ல நடந்து மூச்சிரைத்து நின்றாள். உடலில் இருந்து வியர்வை ஆவி எழ முகம் குருதியென சிவப்பு கொள்ள நின்று தள்ளாடினாள்.

பின்னர் அவளால் தானாக எழுந்து நடக்க முடியாமலாகியது. தோல்நீர்ப்பைபோல பருத்து தளர்ந்து தனியாகத் தொங்கும் தன் வயிற்றை தானே பிடித்து தூக்கிக்கொண்டு புயம்பற்றி எழுப்பும் சேடியர் உதவியுடன் மஞ்சத்திலிருந்து இறங்கி எழுந்து நின்றாள். சேடியரை பற்றிக்கொண்டு ஒவ்வொரு அடியாக வைத்து கழிப்பகக் கோட்டத்திற்குச் சென்றுமீண்டாள். ஒருமுறை சேடியர் கையிலிருந்து வழுவி நிலத்தில் விழுந்து இடையெலும்பு முறித்தது. கீழே கிடந்து அலறிய அவளை சேடியர் பன்னிருவர் சேலையை முறுக்கி வடமென்றாக்கி இடைசுற்றிக் கட்டி பற்றி மேலே தூக்கினர். வாரிக்குழிக்குள் விழுந்த காட்டுயானையை தாப்பானைகள் தூக்குவதுபோல என்று இளம்சேடி ஒருத்தி சொன்ன இளிவரல் அகத்தளங்களில் நெடுநாட்கள் புழங்கியது.

சேடியர் அதற்கும் மரத்தாலங்களை அறைக்கே கொண்டுவரத் தொடங்கிய பின்னர் அவள் அரண்மனையின் சிற்றறை ஒன்றுக்குள் முழுமையாகவே அடைபட்டவளானாள். நோக்குபவர் திடுக்கிடுமளவுக்கு அவள் உடல் உப்பி வீங்கி பெருத்து தசைப்பொதிகள் நான்கு பக்கமும் பிதுங்கி வழிந்திருக்க படுக்கையை நிறைத்துக்கிடந்தாள். கைகளும் கால்களும் தனித்தனி மனிதஉடல்கள் போல அவளருகே செயலற்றுக்கிடந்தன. கன்னங்கள் பிதுங்கியமையால் மோவாய் ஒரு குமிழ், மேலே மூக்கு பிறிதொரு சிறு குமிழ் என்றான வட்ட முகத்தில் விழிகள் சிறுத்து தசைக்குள் புதைந்து கேடயத்தில் இறுக்கிய ஆணிகளின் முனைகளெனத் தெரிந்தன. வாய் சிறிய துளை என அழுந்தியிருக்க அதைச் சுற்றி ஏழு தசையடுக்குகளாக முகவாயும் கழுத்தும் அமைந்திருந்தன. முலைகள் இரண்டும் விலாவை நோக்கி வழிந்துகிடந்தன.

அவள் தன் வயிற்றின் மேலேயே தாலத்தை வைத்து விழித்திருக்கும் வேளையெல்லாம் உண்டுகொண்டிருந்தாள். அவ்வுணவு சிந்தி சேற்றுக்குழியென ஆழம் மிகுந்த தொப்புளிலும் புண்ணாகி தசையழுகும் நற்றம் கொண்டிருந்த தசைமடிப்புகளுக்குள்ளேயும் படிந்திருக்க அதை நாளில் பலமுறை சேடியர் துடைத்து தூய்மை செய்தனர். போதிய உணவு இல்லை என்னும் அச்சம் அவளை கனவிலும் உலுக்கியது. எழுந்து கைகளை அசைத்து ஊளையிட்டு சேடியரை அழைத்து “உணவு! உணவு எங்கே?” என்று கூவினாள். உணவைக் கண்டதும் சிரிப்பில் விழிகள் தசைக்கதுப்பில் புதைந்து மறைந்தன. மூக்குப்பாதையை கொழுப்பு அடைக்க மெல்லிய குழலோசை என அவள் மூச்சு ஒலித்தது.

ஆனால் அவளுக்கு முன்னரே வித்யுதைதான் இறந்தாள். விபுலை பருத்து வந்ததற்கு மாறாக அவள் மெலிந்து உருகிக்கொண்டிருந்தாள். முதலில் இருவரும் இணைந்தே உணவுண்டனர். விபுலை தாய்ப்பன்றிபோல வாயோரம் நுரைக்க சேற்றில் நடப்பதுபோன்ற ஒலியெழ உண்பதைக்கண்டு அவள் குமட்டி வாய்பொத்தி எழுந்தோடினாள். அதன்பின் அவளால் உணவுண்ணவே இயலவில்லை. ஓரிருவாய் உணவுண்டதுமே குமட்டி உடல் உலுக்கிக்கொண்டது. மருத்துவர் அளித்த மருந்துகளால் பெரும்பசி கொண்டவளானாள். ஆனால் கையில் உணவை அள்ளியதுமே வயிறு பொங்கி மேலெழுந்தது.

“தமக்கையை எண்ணவேண்டாம், அரசி” என்றார் மருத்துவர். “அவளை எண்ணாமல் நான் இதுநாள்வரை இருந்ததே இல்லை” என்றாள் வித்யுதை. அவளை மறக்கும்படி சொல்லச்சொல்ல அவள் அவளையே எண்ணிக்கொண்டிருக்கலானாள். ஒவ்வொருநாளும் அவள் மூத்தவளை எண்ணியபடி விழித்தெழுந்தாள். அவளை நோக்கலாகாது என்று உறுதிகொண்டு பின்காலைவரை பொறுத்தவள் எழுந்து சென்று நோக்கினாள். அவள் உடலின் மடிப்புகளை தூய்மை செய்யும் சேடியரைக் கண்டால் அங்கேயே குமட்டி வாயுமிழ்ந்தாள். எழுந்தோடிச் சென்று இருண்ட அறைக்குள் ஒளிந்துகொண்டாள்.

எலும்புருவாக ஆன வித்யுதை பலமுறை விபுலையை கொல்ல முயன்றாள். கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு ஓடிவருபவளை சேடியர் மிக எளிதில் பிடித்து அடக்கினர். நெஞ்சில் அறைந்து கதறியழுதபடி அவள் அங்கேயே அமர்ந்துகொண்டாள். “என்ன ஓசை?” என்று விபுலை கேட்டாள். “ஒன்றுமில்லை, தங்கள் தங்கை” என்றனர் சேடியர். “அவளிடம் உணவுண்ணும்படி சொல்” என்றாள் விபுலை மென்றபடி. அவள் தங்கையை எண்ணுவதேயில்லை. “மலக்குழிக்குள் விழுந்து பெருத்துப்போன புழு” என அவளைப்பற்றி சொன்னார்கள் சேடியர்.

ஒவ்வொருநாளும் பசியால் தவித்தும் உண்ணமுடியாமல் துடித்தும் கணங்களைக் கடந்த வித்யுதை ஒருநாள் தன் அறைக்குள் தன் ஆடையாலேயே தூக்கிட்டு இறந்தாள். அவள் அறைக்கதவு திறந்திருக்கக் கண்டு உள்ளே சென்ற சேடி சுவரோரமாக திரும்பி நின்றிருக்கும் அவளை கண்டாள். விந்தையை அவள் உள்ளம் உணர்ந்தாலும் சித்தம் அறியவில்லை. அருகணைந்தபோதுதான் அவள் உயரம் மிகுதியாக இருப்பதை உணர்ந்து மேலே நோக்கினாள். கழுத்தை இறுக்கிய மேலாடை சரிந்த உத்தரத்தில் கட்டப்பட்டு சறுக்கி சுவர்மூலைவரை வந்திருந்தது. அவள் கால்களின் கட்டைவிரல்கள் நிலத்திலிருந்து விரலிடை உயரத்தில் காற்றில் ஊன்றியிருந்தன.

தங்கையின் இறப்பை  விபுலை உணர்ந்ததாகவே தெரியவில்லை. உண்டுகொண்டிருந்தவளிடம் அச்செய்தி சொல்லப்பட்டபோது “அவள் ஏன் அப்படி செய்தாள்?” என்றாள். உடனே “இறப்பென்றால் உணவுநீத்தல் சடங்கு உண்டு அல்லவா? எவருக்கும் தெரியாமல் இங்கு உணவை கொண்டுவந்து வைத்துவிடு” என்று சொல்லி மீண்டும் உண்ணத்தொடங்கினாள். அதுவரை ஏதோ மெல்லிய இரக்கத்தால் அவளை விரும்பிவந்த அகத்தளப்பெண்டிர் அவளை வெறுக்கலாயினர். அவளுடைய சாவை எதிர்நோக்கி ஒவ்வொரு காலையிலும் வந்து நோக்கினர். அவள் உண்டுகொண்டிருப்பதைக் கண்டு “இவளுக்கு அழிவே இல்லை” என்றனர்.

tigerதன் அமைச்சறையில் சுவடி நோக்கிக்கொண்டிருந்த கம்பனன் தன்முன் வந்து பணிந்து நின்றிருந்த முதிய ஒற்றன் பெரிய செய்தியை கொண்டிருப்பதை உணர்ந்தான். “சொல்க!” என மெல்லிய குரலில் சொன்னபடி சுவடியை கட்டினான். “சொல்க!” என தயங்கிநின்ற ஒற்றனை மீண்டும் ஊக்கினான். “அமைச்சரே… இதன்பொருட்டு நான் கழுவேறவேண்டியிருக்கலாம். என் மைந்தர்களுக்கு ஒன்றும் ஆகக்கூடாது” என்றான் ஒற்றன். “சொல்க!” என்றான் கம்பனன். “சோலைக்குடிலில் இருந்த இளவரசியை காணவில்லை” என்றான் ஒற்றன்.

முதலில் கம்பனன் அதை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. இறந்திருப்பாள் என்னும் எண்ணமே இயல்பாக வந்தது. “விலங்குகளா?” என்றான். “ஒரு தேரும் புரவிகளும் வந்துசென்றுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன் அவர்கள் இளவரசியை கூட்டிச்சென்றிருக்கிறார்கள்.” கம்பனன் பாய்ந்து எழுந்து “யார்?” என்றான். “என்னால் அதை அறியக்கூடவில்லை… ஆனால் ஏதோ அரசன்.” கம்பனன் “அங்கே நம் காவலர்கள் இருந்தார்களா?” என்றான். “அவர்கள் வாரம் ஒருமுறை மட்டுமே சென்று நோக்குவது வழக்கம். அவர்களுக்கு வேறு பணிகள் மேலிடத்திலிருந்து அளிக்கப்பட்டன. முழுநேரம் அங்கு எவருமில்லை” என்றான் ஒற்றன். “சென்று நோக்கியவர்கள் அறிந்திருக்கிறார்கள்.”

ஒரு கணம் உளம் சொடுக்கிக்கொள்ள கம்பனன் தனக்கு வந்திருந்த அத்தனை ஓலைகளையும் அள்ளிப் பரப்பி அதில் மஞ்சள் பூசப்பட்டிருந்த நான்கு ஓலைகளை எடுத்தான். அயோத்தியின் அரசன் விதர்ப்பத்தின் இளவரசியையும் காமரூபத்தின் அரசன் வங்கத்து அரசியையும் மச்சர்குலத்து அரசன் காகபுரத்து அரசியையும் மணக்கும் செய்திகளைத் தவிர்த்து எடுத்த ஓலையில் குருநகரியின் அரசன் கானீனையை மணப்பதாக இருந்தது. “ஆம், இது எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது!” என்று அவன் உள்ளம் கூவியது.

“அழைத்து வருக, தலைமை ஒற்றனை!” என அவன் சொன்னான். தலைமை ஒற்றன் வரும்வரை பரபரப்புடன் ஓலைகளைத் துழாவி படிக்கலானான். அவன் வருவதற்குள் குருநகரியில் நகுஷன் திரும்பிவந்த செய்திகள் அடங்கிய இருபத்தெட்டு ஓலைகளை கம்பனன் எடுத்துவிட்டான். அவ்வோலைகள் பதினெட்டு நாட்களாக தொடர்ந்து வந்துகொண்டே இருந்திருக்கின்றன. எதையுமே அவன் பிரித்து நோக்கியிருக்கவில்லை.

தலைமை ஒற்றன் வந்து பணிந்தபோது அவன் விழிகளை ஏறிட்டு நோக்க கம்பனன் உளம் துணியவில்லை. “அவன் நகுஷன்தானா?” என்றான். “ஆம், அமைச்சரே. அனைத்துச் செய்திகளையும் நான் உடனுக்குடன் தெரிவித்துக்கொண்டிருந்தேன்” என தலைமை ஒற்றன் சொன்னான். தங்கள் செய்திகள் மதிக்கப்படாதபோது ஒற்றர்கள் கொள்ளும் சினத்துடன் ஆனால் குரலில் எதுவும் வெளிப்படாமல் “ஓலைகளில் எழுதி இங்கே நாட்படி அடுக்கும்படி சொன்னீர்கள். அதை செய்தேன்” என்றான். ஒருகணம் சினம் எழுந்தாலும் அசோகசுந்தரிக்கும் நகுஷனுக்கும் அரசனுக்குமான மும்முனைப்போர் குறித்து எதுவும் தெரியாத ஒற்றர்களுக்கு குருநகரியின் மாற்றங்கள் வெறும் செய்திகளே என உணர்ந்து அவன் அமைதிகொண்டான்.

“திரிகர்த்தர்களுக்கும் உசிநாரர்களுக்கும் பிறிதொரு போர் மூளக்கூடும். அதைக் குறித்த செய்திகளும் உள்ளன. எதுவுமே பார்க்கப்படவில்லை” என்றான் தலைமை ஒற்றன். “ஆம்” என்றான் கம்பனன். “நாகர்களை உடனடியாக வாட்டக்கூடிய இடர் அது. எல்லையில் எண்பது நாகர்குடிகள் வாழ்கின்றன” என்று தலைமை ஒற்றன் சொன்னான். கம்பனன் “நான் பார்க்கிறேன்” என்றான். “பொழுதெல்லாம் அரசருடன் இருந்தீர்கள். அங்கே மனிதர்கள் அலறிச்சாகும் ஒலியில் பிற ஒலிகள் உங்கள் செவிகளை அடையவில்லை” என்றான் தலைமை ஒற்றன்.

கம்பனன் பெருமூச்சுவிட்டான். “நகுஷன் எங்கிருந்து வந்தான்?” என்றான் கம்பனன். “அவர் தன் படைகளுடன் திரிகர்த்தர்களை அச்சுறுத்தினார். எதிர்பாராதபடி குருநகரிமேல் படைகொண்டுசென்று வென்றார். முடிசூட்டிக்கொள்வதற்கு முன்னரே சென்று கானீனை ஒருத்தியை கவர்ந்துவந்து மணம்புரிந்துகொண்டார்.” கம்பனன் “ஆம், அதை வாசித்தறிந்தேன். அவன் வந்தது எங்கிருந்து?” என்றான்.

தலைமை ஒற்றன் “அதை இருவாறாக சொல்கின்றனர். அவர் மாமன்னர் ஆயுஸின் மைந்தர். குருநகரியின் அரசர் நோயுற்றிருந்தமையால் தான் இறந்தால் தன் மைந்தனும் கொல்லப்படுவான் என அஞ்சினார். அவ்வெதிரிகளுக்கு அஞ்சி தந்தையால் வசிட்டரின் குருநிலைக்கு இளவயதிலேயே அனுப்பப்பட்டார். அங்கே கல்வி கற்றதும் தந்தையின் ஆணைப்படி வெளியே வந்து தான் கற்ற படைக்கலை கொண்டு படைதிரட்டி திரிகர்த்தர்களின் சிற்றரசர்களை வென்றார். குருநகரியை கைப்பற்றி தந்தை சூடியிருந்த முடியை தானே ஏற்றுக்கொண்டார்” என்றான்.

பின்னர் மெல்ல சிரித்தபடி “இன்னொரு கதையில் அவரை ஓர் ஒற்றன் தூக்கிக்கொண்டு காட்டில் ஒரு மரப்பொந்தில் வைத்துவிட்டதாகவும் அங்கிருந்து குரங்குகள் அவரை எடுத்து வளர்த்து இளைஞனாக்கி வசிட்ட குருநிலையில் கொண்டுசென்று சேர்த்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் கதையே மக்களால் விரும்பப்படுகிறது. ஏனென்றால் இதுவே நம்பமுடியாததாக இருக்கிறது” என்றான். “நம் ஒற்றன் ஒருவனை இறக்கும் தருணத்தில் விந்தையான முறையில் காட்டில் கொண்டுசென்று வைத்துவிட்டு வந்ததாக சொன்னார்கள் அல்லவா?” என்றான் கம்பனன்.

“ஆம்” என்றதுமே தலைமை ஒற்றன் புரிந்துகொண்டான். “நாம் செய்ததா?” என்றான். “ஆம்” என்றான் கம்பனன். “அங்குதான் குழந்தையை கொண்டுசென்று வைத்திருக்கிறான். அவன்தான் வசிட்டரிடம் சொல்லியிருக்கிறான்” என்ற தலைமை ஒற்றன் “அவன் அரசியரின் சேடியான மேகலையின் தனிப் பணியாளாக இருந்தான். மேகலை தன் மகளுடன் வாழ்வதற்காக தெற்கே சென்றபின் பணியிலிருந்து விடுபட்டு நாடோடியாக அலைந்தான். நெடுநாட்களுக்குப் பின்னர் திரும்பிவந்தான். இறுதிநாட்களில் பித்தனாகவே இருந்தான் என்கிறார்கள்” என்றான்.

“அரசியிடம் சென்று குருநகரியின் நகுஷன் சாகவில்லை, மீண்டு வந்து அரசனாக முடிசூடிவிட்டான் என்று சொல்க!” என்றான் கம்பனன். “நான் சென்று அரசரை பார்த்து வருகிறேன்.” தலைமை ஒற்றன் “அரசியிடம் சொல்வதில் பயனில்லை, அமைச்சரே. சொல்கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை” என்றான். “இச்சொல் அவர்களுக்கு கேட்கும். இதைக் கேட்பதே அவர்களை விடுதலை செய்யும். செல்க!” என்றான். தலைமை ஒற்றன் தலைவணங்கி அகன்றான்.

அவன் பெருமூச்சுவிட்டு பீடத்தில் தலை சாய்த்து கண்மூடி அமர்ந்தான். உள்ளம் எண்ணமற்று இருந்தது. பெருமலைகளுக்கு முன் நிற்கையில் உருவாகும் சொல்லின்மை. என்ன நிகழப்போகிறது? எது நிகழ்ந்தாலும் அதை எவ்வகையிலும் அவன் நடத்த முடியாது. அதன் உருவையும் பாதையையும் அறியவே முடியாது. அவ்வெண்ணம் அவனுக்கு ஆறுதலை அளித்தது. முகத்தசைகள் மெல்ல தளர்ந்தன. புன்னகைக்கமுடியுமா என எண்ணி உதடுகளை இளித்து புன்னகைத்துப் பார்த்தான். உள்ளமும் அப்புன்னகையை அடைந்தது.

எழுந்துசென்று ஹுண்டனிடம் அதைப் பற்றி சொல்லவேண்டும் என எண்ணிக்கொண்டான். ஆனால் உடலை எழுப்பமுடியவில்லை. அங்கே கொலையில் களித்திருக்கும் அரசன் தன் களித்தோழனல்ல என்று தோன்றியது. அரசுசூழ்தலும் வஞ்சமும் ஒன்றென்றுதான் அவனும் கற்றிருந்தான். ஆனால் நுட்பங்களற்ற, நோக்கங்களற்ற அந்தத் திளைப்பு அவனுக்கு குமட்டலையே உருவாக்கியது. ஆனால் சொல்லியாகவேண்டும். எழுந்தாகவேண்டும்… எழவேண்டும்.

குறடோசை எழ ஒற்றர்தலைவன் விரைந்து வந்து வணங்கினான். அவன் கேட்பதற்குள் “அரசி விண்புகுந்துவிட்டார், அமைச்சரே” என்றான். அவன் கால்கள் நடுங்கத் தொடங்கின. “நான் சென்று அரசியிடம் பேசவேண்டுமென்று சொன்னேன். அவர் துயில்வதாக சொன்னாள் சேடி. எழுப்பும்படி சொன்னேன். அவள் உணவை தாலத்தில் குவித்து அரசியின் கண்ணெதிரே வைத்துவிட்டு அவர்களை தொட்டு எழுப்ப முயன்றாள். தொட்டதுமே தெரிந்துவிட்டது” என்றான் ஒற்றர்தலைவன். கம்பனன் பெருமூச்சுவிட்டு முழுமையாக உடல் தளர்ந்தான். “நன்று” என்று மட்டுமே அவனால் சொல்லமுடிந்தது. கண்களை மூடிக்கொண்டான்.

“நான் இரக்கமே அற்றவன்” என்றான் ஒற்றர்தலைவன். திடுக்கிட்டு உடல்நடுங்க விழித்து “என்ன சொன்னாய்?” என்றான் கம்பனன். “நான் ஒன்றும் சொல்லவில்லை, அமைச்சரே” என்றான் அவன். “இல்லை, நீ சொன்னாய்.” அவன் “இல்லை, அமைச்சரே. நான் சொல்காத்து நின்றிருக்கிறேன்” என்றான். கம்பனன் தன் உடல் நன்றாக வியர்த்துவிட்டிருந்ததை உணர்ந்தான். “அரசிக்குரிய அனைத்தும் நிகழட்டும். என் ஆணை. நீயே முன்னின்று செய்க!” என அவன் எழுந்தான். “நான் அரசரிடம் செல்கிறேன்” என மேலாடையை எடுத்தான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 39

39. அலைவாங்கல்

இரவில் நகுஷன்  தன்னை மறந்து ஆழ்ந்து துயின்றான். காலையில் சித்தம் எழுந்து உலகைச் சமைத்து தான் அதிலொன்றாகி அதை நோக்கியது. அனைத்தும் தெளிந்து ஒளிகொண்டிருந்தன. துயிலில் அவன் எங்கோ இருந்தான். பிறிதொருவனாக உடல்சூடி, தானாக உளம் கரந்து கையில் வில்லுடன் அறியா நகரொன்றில் அலைந்தான். இலக்குகள் அனைத்தையும் சென்றெய்தும் விழைவே அவன் உள்ளமென்றிருந்தது. முலைபெருத்த தடித்த பெண்ணொருத்தியுடன் முயங்கும் அவனை அவனே அவ்வறையின் இருள்மூலையில் நின்று நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் பேரொலி எழும் அவை நடுவே துள்ளும் வில் ஒன்றை வென்றான். கன்னங்கரிய ஒரு பெண்முகம். அணுகும் முகம். ஆலய இருளில் அமர்ந்த மூதன்னை.

அவளை அவன் நன்கறிந்திருந்தான். அவளும் அவனை அறிந்திருந்தாள். அவளை முயங்கி அவன் மல்லாந்து உடல்விரிக்க அவள் அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். வஞ்சம் நீர்மையென கனிந்த விழிகள். வாளை ஓங்கி அவனை வெட்ட வந்தாள். அவன் விழியசைக்காமல் அவளை நோக்கிக் கிடந்தான். அவள் தன்னைக் கொல்வதே முறையென எண்ணினான். அவள் வாள் மெல்ல தளர்ந்தது. சுருங்கி ஒரு நாகமென்றாகி அவள் மண்ணுக்குள் புகுந்தாள். அவன் எழுந்து அவள் ஆடையைப்பற்ற அது ஒரு நிழலென்றாகி உருக்கொண்டு பெண்ணாகி அவனை நோக்கி நாணி புன்னகை செய்தது.

அவன் வளைக்குள் அவளைத் தொடர்ந்து தவழ்ந்து சென்றான். அவன் உடல் நாகமென்றாகியது. நீருக்குள் எழுந்தபோது வேர்திளைக்கும் ஆழமொன்றை கண்டான். குமிழிகள் ஒளிவிட்டுச் சுழல அவள் உடலும் ஒரு செங்குமிழியென எழுந்தது. சரிவிறங்கும் மலைப்பாதையில் தேரில் அவனருகே அவள் இருந்தாள். “நான் பெண்ணென்றானேன்” என்றாள். “ஏன்?” என்றான். “அணுகுவதற்காக” என்றாள். “இல்லையேல் உன்னை நான் உண்டிருப்பேன். கருத்தரித்தால்  நீ எஞ்சுவாய்.”

விழித்துக்கொண்டு கிடந்தபோது முகத்தில் புன்னகை இருப்பதை அவன் உணர்ந்து உளம் மலர்ந்தான். எழுந்து சென்று சாளரத்தினூடாக சோலையை பார்த்தான். அத்தனை இலைகளும் ஒளி சூடியிருந்தன. புதிய பறவை ஒன்று “இங்கே வாழ்” என்றது. எத்தனை ஒலிகளால் ஆனது காலை! காலை ஒரு பெரும் வான்பொழிவு. குழவிமேல் மெல்ல வருடிச்செல்லும் அன்னையின் கை என தென்றல். காலையில் தனித்திருப்பவர் குறைவு. காலைத்தனிமை ஓர் இனியதவம்.

ஏவலன் வந்து பணிந்து அவனைத் தேடி முதுசெவிலி வந்திருப்பதாக  சொன்னான். முகம் கழுவி ஆடைதிருத்தி அமர்ந்துகொண்டு “வரச்சொல்” என்றான். வரவிருப்பது நற்செய்தியல்ல என்று முன்னரே தெரிந்துவிட்டிருந்தது. தன்னை தொகுத்துக்கொள்ளவேண்டும் என்றும் நிலைபிறழலாகாது என்றும் சொல்லிக்கொண்டான். முந்தையநாளின் சொற்கள் எங்கோ நெடுந்தொலைவிலென கிடந்தன.

முதுசெவிலி வந்து வணங்கி நின்றாள். அவள் தயங்க “சொல்க!” என்றான். அவள் தணிந்த குரலில் “அரசி முதுமையடைந்துகொண்டிருக்கிறார்” என்றாள். அவன் விழிதிருப்பி “ஆம், அவள் நோயுறுவது இயல்பே” என்றான். “அதுவல்ல நான் சொல்வது, அவர் உடல் மிக விரைந்து முதுமை நோக்கி செல்கிறது.” அவன் திகைத்து நோக்க “நான் அன்று குடிலுக்குள் சென்று பார்க்கையிலேயே அரசி பிறிதொருத்தியாக இருந்தார்” என்றாள்.

“பிறிதொருத்தியாக என்றால்…?” என்று அவன் கேட்டான். அவன் நெஞ்சு படபடத்ததில் எச்சொல்லும் சிந்தைநிற்கவில்லை. “பதினெட்டு வயது கன்னியாக இங்கு வந்தார். உள்ளம் ஐந்து வயதுக்குரியதாக இருந்தது. அன்று நான் அறைக்குள் சென்றபோது பத்து வயது மூப்படைந்தவர்போல் இருந்தார்.” ஏதோ நம்பிக்கையை நாடுபவன்போல “துயர் கொண்டிருந்ததனால் விளைந்த தோற்றமா?” என்று அவன் கேட்டான். “அரசே, நான் கூறுவது முகத்தோற்றத்தையோ சோர்வையோ  அல்ல. அவர் உடல், ஊன் மூப்படையத் தொடங்கிவிட்டது.”

அவன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். “நீயே நேரில் பார்க்கலாம். வேறெவ்வகையிலும் நான் சொல்வதை உன்னால் ஏற்க இயலாது” என்றாள் முதுசெவிலி. “வருக!” என்று அவள் சொல்ல அவன் அசையாமல் அமர்ந்திருந்தான். “வந்து பார்” என்று அவள் மீண்டும் அழைத்தாள். அவன் எழுந்து அவளை தொடர்ந்தான். குழம்பிய சித்தத்துடன் இடைநாழியில் காலிடறியும் தயங்கியும் நடந்தான். அகத்தளத்தில் அத்தனை சேடியரும் திகைப்பும் குழப்பமும் கொண்டிருப்பதை காண முடிந்தது. எதிர்கொண்டு வணங்கிய இளஞ்சேடியரும் அவனை விழிதொட்டு நோக்கவோ நேர்க்குரலில் மறுமொழி உரைக்கவோ அஞ்சினர்.

“எங்கிருக்கிறாள்?” என்றான். “உள்ளறையில்” என்றாள் அணுக்கச்சேடி. உள்ளறைக்குள் நான்கு மருத்துவச்சிகள் நின்றிருந்தனர். அரசர் வந்திருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டவுடன் அவர்கள் வெளியே வர அரசன் இறுதியாக வந்த மூத்த மருத்துவச்சியிடம் “என்ன செய்கிறது அவளுக்கு?” என்றான். “இது மருத்துவ நூல்களில் சொல்லப்பட்டதல்ல, பிறிதொன்று. அதை தெய்வங்களே விளக்க முடியும்… நிமித்திகர் வரையும் களங்களில் அவர்கள் எழவும் வேண்டும்” என்றாள் அவள். ஒவ்வொரு முகத்திலிருந்தும் அவன் அச்சத்தை பெற்றுக்கொண்டான். அது நோயை, இறப்பைக் கண்ட அச்சமல்ல, மானுடம் கடந்து பேருருக்கொண்டு நின்றிருக்கும் பிறிதொன்று அளிக்கும் அச்சம்.

கதவைத் திறந்து உள்ளே சென்றபோது கடுங்குளிரில் என அவன் உடல் நடுங்கியது. பிடரியில் மூச்சுவிட்டபடி பேய்வடிவம் ஒன்று தொடர்ந்து வருவதுபோல, தோள்களில் காற்று எடைகொண்டு அழுத்தி இடைகளையும் தொடைகளையும் கெண்டைக்கால் தசைகளையும் இறுக்கித்தெறிக்க வைப்பதுபோல. மூச்சை நெஞ்சில் நிறுத்தி மெல்ல விட்டபடி அவன் உள்ளே சென்றான். மஞ்சத்தில் அசோகசுந்தரி படுத்திருந்தாள். அறையிருளில் அவள் அணிந்திருந்த ஆடைகளைக் கொண்டே அவளென்று அவன் உணர்ந்தான். மேலும் ஒரு அடி வைத்து அவளை நன்கு நோக்கியதும் திடுக்கிட்டு பின்னடைந்தான். அங்கு நடுவயதான பெண்மணி ஒருத்தி படுத்திருந்தாள்.

மூக்கு சற்று புடைத்து எழுந்து, கண்களுக்குக் கீழ் கருகியதசைகள் இழுபட்டுத் தளர்ந்து இரு அரைவட்ட அடுக்குகளாக வளைந்து, வாயைச்சுற்றி அழுத்தமான மோவாய்கோடுகளுடன் வண்ணமிழந்து வறண்டுலர்ந்த தோலுடன் இருந்தது அவள் முகம். மூச்சின் ஒலியில் “இவள்?” என்று முதுசேடியிடம் கேட்டான். “அரசியேதான். நான் உன்னை சந்திக்க ஓடி வரும்போது இருந்ததைவிட மேலும் முதுமை கொண்டுவிட்டார். கூர்ந்தால் நீர் உலர்ந்து மறைவதுபோல அவரது இளமை அகல்வதை வெறும்விழிகளாலேயே காணமுடியும்.”  மேலும் ஒருமுறை திரும்பி அவளைப் பார்த்ததும் அவன் உடல் நடுங்கியது. ஓடி கதவைத் திறந்து வெளியேறி இடைநாழியில் விரைந்து தன்னறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டான்.

அவனைத் தொடர்ந்து வந்த பத்மனிடம் “நான் இன்று எவரையும் சந்திக்கவில்லை. இனி சில நாட்கள் அவை கூடுவதும் அரசமுடிவுகளும் உம்மால் நிகழட்டும். என்னை இத்தனிமையில் விட்டு விலகிச்செல்க!” என்றான். ஏவலனை அழைத்து மதுவும் உணவும் கொண்டுவரச் சொன்னான். விலா எலும்புகள் உடைந்து தெறிக்குமளவுக்கு உண்டான். ஒவ்வொரு மூச்சிலும் மூக்கு வழியாக சிந்துமளவுக்கு குடித்தான். பின்னர் ஆடற்கணிகையரை அறைக்குள் அழைத்துவர ஆணையிட்டு அவர்களுடன் வெறிகொண்டு காமத்திலாடினான். களைத்து உடலோய்ந்து துயின்று உதைபட்டவன்போல விழித்து உடனே மீண்டும் உணவிலும் மதுவிலும் காமத்திலும் மூழ்கினான்.

வெறும்புழு என தன்னை உணர்ந்தான். அச்சொல் அவனை எரியும் தசைமேல் குளிர்த் தைலமென ஆறுதல்படுத்தியது. எதிலிருக்கிறோமோ அதில் ஒரு பகுதி என்றாதலே புழுநிலை. அழுகும் ஒரு பொருள் கொள்ளும் உயிர்வடிவம் புழு. தளிர்த்தல் மலர்தல் காய்த்தல் கனிதல் அழுகுதல் என புழுத்தலும் ஒரு வளர்நிலை. கனியும், உணவும், மலரும், மலமும்  புழுவென அசைவு கொள்கின்றன. புழுமுழுத்து சிறகு சூடுகின்றது. ஒளியும் சிறகும் யாழிசையும் கொண்டு பறக்கையிலும் தன் உடலில் புழுத்திரளை நுண்வடிவில் சுமந்தலைகிறது பூச்சி. மீண்டும் புழுவென்றாகி பெருகி எழுகிறது.

புழுவாவதன் பெருநிலை. விழிமூடினால் கண்களுக்குள் புழு நெளிவு. உடலெங்கும் பல்லாயிரம் புழுக்களென நெளிந்தன நரம்புகள். பெரிய புழுக்களென தசைகள். தன்னை தான் கவ்விச் சுருண்டிருக்கும்  ஒற்றைப்புழு என உள்ளம். செத்து அசைவழிந்த குரங்கின் உடலில் மீண்டும் நூறாயிரம் அசைவென எழுந்த புழுத்திரள். உயிர்கொண்டதென அசைந்தது புழுத்த குரங்கு. இதோ எழுந்துவிடுமென குனிந்து நோக்கி நின்றிருந்தான்.  முட்டி பால்குடிக்கும் குட்டிகளுக்கேற்ப என குரங்கின் உடல் அசைந்தது.  கூட்டம்கூட்டமாக வந்திறங்கி அப்புழுக்களை உண்டன பறவைகள். குரங்கு சிறகுகளாகி கூவிக்கலைந்து வானில் சுழன்றது. எஞ்சிய சிறுதலையில் புன்னகை மட்டும் தங்கியிருந்தது.

tigerபதினான்கு நாட்கள் அசோகசுந்தரி உயிருடன் இருந்தாள். ஒவ்வொரு நாளுமென முதுமைகொண்டு நூற்றியிருபது வயதான முதுமகளென ஆனாள். ஒவ்வொரு விழிப்பிலும் அவள் எதையோ சொன்னாள். ஒலியிலா அசைவென எழுந்த அச்சொற்களை விழிகளால் அறிந்தனர். “என் பாவை” என்றாள். முகம் மலர்ந்து “பறவைகள்” என்றாள். “அழகியவை” என எதையோ சொன்னாள். அழியா உவகை ஒன்றே அவள் முகத்தில் இருந்தது. முகம் முதிர்ந்து வற்றிக்கொண்டிருந்தாலும் புன்னகையில் துயரின்மையின் ஒளி எப்போதுமிருந்தது. இறுதியாக விழிதிறந்து கைமகவுபோல புன்னகை செய்து “இனிய தென்றல்” என்றாள். விழிமூடி அப்படியே உறைந்தாள்.

அவள் நாள்தோறுமென முதுமைகொள்ளும் விந்தையை அவ்வரண்மனையின் விழிகளும் சுவர்களும் தூண்களுமென்றாகி நகரம் நோக்கிக்கொண்டிருந்தது. “அவள் மறைந்துகொண்டிருக்கிறாள். ஒளிச்சுடராக வந்தபோதே நாம் அறிந்திருக்கவேண்டும், அது அணையும் என்று” என்றார் ஒரு முதியவர். “இறுதிச்சொல் என அவள் நம்மை பழித்துவிட்டுச் சென்றால் இந்நகரும் குடியும் அழியும், ஐயமில்லை” என்றாள் மூதன்னை ஒருத்தி. “அவள் இயல்பால் துயரற்றவள். ஒருபோதும் தீச்சொல்லிடக்கூடியவள் அல்ல” என்றான் இளஞ்சூதன் ஒருவன்.

நகரம் அதை மட்டுமே வேண்டிக்கொண்டிருந்தது.  அவன் அதை அறியாமல் தன்னை மேலும் மேலும் கீழ்மையில் புதைத்துக்கொண்டிருந்தான். எண்ணி எண்ணி அதை தன் இருட்டுக்குள் இருந்து எடுத்து தன்னைச்சுற்றி பரப்பினான். அவள் இறந்த செய்தியை பத்மன் வந்து சொன்னபோது நான்கு சேடியருடன் காமத்திலிருந்தான் நகுஷன். ஏவலன் அமைச்சர் வந்திருப்பதை அறிவித்ததும் எழுந்து வெளிவந்து கள் நிறைந்து உடல் நீர்களின் நிலையின்மை கொண்டு தளும்பி தள்ளாட நின்றான். விழிகளும் மூக்கும் ஊற்றென வழிந்தன. கதவுநிலையைப் பற்றியபடி உடலை நிறுத்தி சரிந்த இமைகளை உந்தி மேலெழுப்பி சிவந்த கண்களால் அவனை நோக்கி “சொல்க!” என்றான்.

உதடுகளும் நாவும் கள்ளூறி குழைந்து தடித்திருந்தன. மெல்லிய ஏப்பம் விட்டபோது உருகிய தசைமணத்தை மூக்கு அறிந்தது. “அரசி சற்று முன் விண்புகுந்தார்” என்றான் பத்மன். “யார்?” என்று அவன் கேட்டான். “பட்டத்தரசி” என்றான் பத்மன். “ம்” என்றான். “தாங்கள் மணம்கொண்டு நகர்நிறுத்திய கான்மகள்” என்றான் பத்மன். அவன் விழிதூக்கி நோக்க பத்மன் கண்களில் கடும் வஞ்சம் தெரிந்தது. “நன்று” என்றபின் அவன் திரும்பி தன் அறைக்குள் சென்றான்.

கதவிலிருந்து மஞ்சத்தை நோக்கி நடந்து சென்ற பன்னிரு அடிகளில் நெடுந்தூரம் உள்நகர்ந்தான். யாரோ எங்கோ எதையோ சொன்னார்கள் என்பதற்கப்பால் அவன் எதையும் உணரவில்லை. மஞ்சத்தில் குப்புற விழுந்து எழுந்து ஆடைதிருத்தி நின்றிருந்த கணிகையரிடம் “அருகிலிருங்கள்! அருகிலிருங்கள்! யார் எழுந்து சென்றாலும் அவர்கள் தலை கொய்யப்படும்” என்றபடி இருமுறை குமட்டினான். மஞ்சத்திலேயே சற்று வாயுமிழ்ந்தபின்  துயிலில் ஆழ்ந்தான்.

விழித்தெழுந்தபோது ஒவ்வொரு மதுக்கேளிக்கைக்குப்பின் உணரும் அதே வெறுமை. தலை நூறு இரும்புக்கம்பிகளால் இழுத்து நொறுங்கக் கட்டப்பட்டதுபோல இருந்தது. கண்களுக்குமேல் ஊசி குத்துவதுபோல வலி.  ஒளியை நோக்கி இமையை தூக்க இயலவில்லை. இரு கைகளாலும் தலையைப் பற்றியபடி மஞ்சத்திலேயே குனிந்தமர்ந்தான். அருகே கணிகையர் எவரும் இருக்கவில்லை. பத்மன் வந்து “தங்களுக்காகக் காத்திருக்கிறது அரசியின் உடல், அரசே. குலமுறைச் சடங்குகள் அனைத்தும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன” என்றான். “நன்று, நான் இன்னும் சற்று நேரத்தில் ஒருங்கிவிடுவேன்” என்றான் நகுஷன்.

நகுஷன் ஏவலர் இருவர் துணை சேர்க்க எழுந்து நடந்து அணியறைக்குச் சென்று வெந்நீரில் நீராடி தேன்கலந்த புளிப்புநீரை உண்டு சற்றே தலைமீளப் பெற்றான். ஆடையை பற்ற முடியாதபடி கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. ஈரம் எஞ்சிய குழலுடன் சிற்றடி வைத்து நடந்து வந்து பத்மனிடம் “செல்வோம்” என்றான். இடைநாழிகளினூடாக நடந்து அகத்தளம் வரை செல்கையில் இருவரும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. குறடோசைகள் மட்டும் மரத்தரையில் ஒரு வினாவும் அதன் விடையும் என ஒலித்தன. தன் நிழல் நீண்டு படிகளில் விழக்கண்டு அவன் திகைத்து நின்றான். “செல்க, அரசே!” என பத்மன் அவனை மெல்ல தோளில் தொட்டான்.

மகளிர்மாளிகையின் படிகளில் ஏறுகையில் நகுஷன் திரும்பி “முதுமகள் ஆகிவிட்டாள்” என்றான். சிரிப்பதுபோல உதடுகள் வளைந்தன. “முதுமகள்…” என மீண்டும் சொன்னான். பேசுவது நன்று என பத்மன் எண்ணினான். “ஆம், அவ்வாறே நானும் அறிந்தேன். அவர் அணைகட்டி அப்பால் நிறுத்தியிருந்த அகவைகள் அனைத்தும் வந்து சூழ்ந்து பற்றிவிட்டன” என்றான்.  நகுஷன் “அவளை அவ்வகையில் பார்க்க நான் விழையவில்லை” என்றான். “ஆம், அது கடினமானதே. ஆனால் அவ்வுருவை நீங்கள் பார்த்துத்தான் ஆகவேண்டும். இல்லையேல் உங்களிடம் இருந்த அவர் விலகப்போவதே இல்லை. வருக” என்று சொல்லி பத்மன் முன்னால் நடந்தான்.

அகத்தளத்தின் பெரிய கூடத்தில் பட்டு விரிக்கப்பட்ட காலில்லாப் படுக்கையில் அசோகசுந்தரியின் உடல் வைக்கப்பட்டிருந்தது. காலடியிலும் தலையருகிலும் இரு நெய்யகல்கள் ஒளியிலாச் சுடர்களுடன் நெளிந்தன. வெண்பட்டு போர்த்தப்பட்டிருந்த அந்த உடலை அணுகியதும் நகுஷன் வேறெங்கோ எதன் பொருட்டோ வந்திருப்பதாக உளம் கொண்ட மயக்கை எண்ணி வேறு எங்கிருந்தோ வியந்தான். அங்கே ஒரு மெல்லிய நறுமணம் இருந்தது. அவள் காலடியில் ஐவகை மலர்கள் இருந்தன. வெண்தாமரை, அல்லி, மந்தாரம், முல்லை. அனைத்தும் வெண்ணிறம். அசோகம் மட்டுமே சிவப்பு. ஆனால் மலர்மணம் அல்ல.

சேடி “நோக்குகிறீர்களா, அரசே?” என்றாள். தரை பன்னீரால் கழுவப்பட்டிருந்தது. குங்கிலியமும் கொம்பரக்கும் புகைந்தன. அவற்றின் மணமும் அல்ல. “அரசே?” அவன் தலையசைக்க காலடியிலிருந்து பட்டை மெல்ல அகற்றி முகம் வரை சுருட்டி மேலெடுத்தாள். சவ்வாது, புனுகு, கோரோசனை, கஸ்தூரி அனைத்தும் அங்கே மணத்தன. ஆனால் பிறிதொன்றும் கலந்திருந்தது. அந்த மணங்கள்… மலர்கள்… அறியாத மணம் நாரென அவற்றை தொடுத்திருந்தது. “அரசே, நோக்குக!” என்றான் பத்மன்.

அவன் அங்கு கிடந்த உடலை நோக்கி ஒருசில கணங்களுக்கு சித்தமென ஒன்றில்லாதிருந்தான். பின்னர் ஒரு சொல்லென அது ஊறிவந்தது. அலறிஅணுகும் கோடைப்பெருமழையென பல்லாயிரம் கோடி சொற்களாலான பெருக்காக மாறி அறைந்து மூழ்கடித்துச் சூழ்ந்தது. அங்கு படுத்திருந்த முதுமகள் தலைநரைத்து, தோல்சுருங்கி, விழிகள் குழிந்து உட்புகுந்து, பற்கள் அனைத்தும் உதிர்ந்து, உள்மடங்கி மறைந்த உதடுகளுடன் சிறுமியளவுக்கு வற்றிய சிற்றுடலுடன் தெரிந்தாள். வெறும் எலும்பென ஆன சின்னஞ்சிறு கைகள். நிலம் பதிந்ததுண்டா என்றே வளைந்த சிறுகால்கள். நரம்புகள் அனைத்தும் தெரிய எலும்புக்குவை என்றே ஆன வெற்றுக்கூடு. பெருமழை அவனை குளிர்ந்து நடுங்கச்செய்தது.  அவனுடைய ஒரு காலும் ஒரு கையும் நடுங்கத்தொடங்கின.

நிலைதவறி விழுவதற்குமுன் இரு வீரர்கள் அவனை பற்றிக்கொண்டனர். “மூடுங்கள்!” என்றான் பத்மன். சேடி பட்டை முகத்திலிருந்து இழுத்து கால்வரை மூடி அவள் உடலை மறைத்தாள். அந்தப் பட்டுக்கு அடியில் ஓர் மானுட உடலிருப்பதாகவே புடைப்புகள் காட்டவில்லை.  மீண்டும் அதை நீக்கி நோக்கினால் அங்கே சில சுள்ளிகள் இருக்கக்கூடும். சில படைக்கலங்கள் இருக்கக்கூடும். அல்லது திகைத்து மேலே நோக்கும் ஒரு சிறு குழந்தை.

ஏவலர்களின் தோள்களைப் பற்றியபடி  தன் அறை நோக்கி மீள்கையில் “என்ன இது! என்ன இது!” என்று அவன் கேட்டுக்கொண்டான். ஒரு சொல்லின் பேய்மழை. அனைத்து இலைகளையும் அறைந்து துடிக்கச்செய்து உரக்கக் கூவும் நாக்குகளாக்குகிறது. ஒற்றைச்சொல்லின் ஊழிநடனம். அறைக்குள் கொண்டுசென்று அவனை படுக்க வைத்தனர். அவன் மென்னிறகு மஞ்சத்தில் புதைந்துகொண்டே சென்றான். “மது ஊட்டிவிடுங்கள்” என்றான் பத்மன். தட் என எங்கோ அறைந்து நின்றது அவன் மஞ்சம். கணிகையர் வந்து அளித்த மதுவை பாலையில் கைவிடப்பட்டவன் நீரையென வாங்கி வாங்கி அவன் குடித்தான். கணிகையர் கைகள் நாகங்கள். படமெடுத்த உள்ளங்கை. நாகநஞ்சு.

மொத்த உடலையே மதுவால் நிரப்பிவிட விழைபவன்போல அவன் குடித்தான். உடல் நிரப்பி விரல் நுனிகளை குளிர்ந்து எடைகொள்ள வைத்த மது அவன் சித்தத்தை முற்றும் நனைத்து குழைத்து உள்ளலைகளின்மேல் முற்றிலும் படிந்து வழியவைக்க தலையை அசைத்தபடி “என்ன இது! என்ன இது!” என்றே கேட்டுக்கொண்டிருந்தான். சற்றே துயிலிலாழ்ந்து நீள்மூச்செடுத்து உடல் தளர்ந்து நெருப்பால் தொடப்பட்டதுபோல் துடித்து விழித்து எழுந்து “என்ன இது! என்ன இது!” என்று மீண்டும் உளம் பெருகலானான்.

அசோகசுந்தரியின் இறப்பை முரசுகள் அறிவித்தபோது நகரெங்கும் வாழ்த்தோசை எழுந்து அடங்காமல் அலையடித்துக்கொண்டிருந்தது. அவள் இறுதியாக சொன்ன சொல் “இனிய தென்றல்” என்று செய்தி பரவியபோது மக்கள் விழிநீர் உகுத்தனர். மூதன்னை ஒருத்தி வெறியாட்டெழுந்தவளாக கைவிரித்து ஓடிவந்து முற்றத்தில் நின்று “அவள் என்றுமிருப்பாள்! அழிவற்ற காற்றில் வாழ்வாள். துயர்நீக்கும் காற்று அவள். தேவீ, அன்னையே, காவல்தெய்வமே, எங்களை காத்தருள்க!” என்று கூவினாள். “அவள் தென்றல் வடிவானாள்.  எங்கள் குழந்தைகளுக்கு அவள் களித்தோழி ஆகுக! எங்கள் மகளிருக்கு இனிய துணைவியாகுக!” என்றார் புலவர் ஒருவர்.

அரண்மனை முற்றத்தில் அமைந்த பந்தலில் அவள் உடலை கொண்டுவந்து வைத்தபோது குருநகரியின் மக்கள் ஒருவர் எஞ்சாமல் திரண்டு வந்து மலரிட்டு வணங்கினர். அவள் காலடியில் தங்கள் குலக்கோல்களை வைத்து வணங்கிய குடிமூத்தார் எழுவர் “அவள் மூதன்னையானாள். நம் குடிவாழ என்றும் காவல் இருப்பாள்” என்றார். “இளமை ஒன்றையே எஞ்சவைத்து பிறிதனைத்தும் முன்பெங்கோ வாழ்ந்து முடித்தவள். வாழமறந்த அந்நாட்களை மட்டும் இங்கு வாழ்ந்து மறைந்தாள்” என்றனர் நிமித்திகர். இரவும் பகலும் ஒழுகிய கூட்டம் அவளை வந்து வணங்கிச் சென்றுகொண்டிருந்தது.

அவள் உடலை தெற்கே கொண்டுசென்றபோது குருநகர் முழுமையும் ஊர்வலமாகப் பெருகி தொடர்ந்தது. தென்றிசைக்காடு முழுக்க தலைகளால் மூடப்பட்டது. விழிதிகைத்து குரலெழுப்பி அழும் முகங்களால் நிரப்பப்பட்டிருந்தன மரந்திகழ் சோலைகள். “குருகுலத்து கோமகள் வாழ்க! துயரற்றவள் வாழ்க!” என்று பெருகிச் சூழ்ந்தன வாழ்த்துரைகள். அவளுக்கு அமைக்கப்பட்ட சிதைமேல் உடலை ஏவலர் தூக்கி வைத்தபோது அத்தனை சிறிய உடலா என அனைவருக்குள்ளும் எண்ணமெழுந்தது. சந்தனப்பலகைகளை அவள் மேல் அடுக்கியபோது முதுகுலத்தார் ஒருவர் நெகிழ்ந்த குரலில்
“மெதுவாக…” என்றார். அடக்க அடக்க எழுந்த அழுகையுடன் “தூய வெண்மலர்” என்றபோது வெடித்து கேவியபடி அப்படியே அமர்ந்துவிட்டார்.

இரு ஏவலர் தோள்பற்றி எங்கிருக்கிறோம் என்றே தெரியாது, கால்கள் மண் தொட்டு இழுபட, துவண்டு தொங்கிய கைகளுடன் வந்த நகுஷன் எவரோ கையிலளித்த அனற்குடுவையை வாங்கி அவள் காலடியில் வைத்தான். பின் தன் கைகளைப் பார்த்து ஏதோ சொன்னான். தழலெழுந்து நாபறக்கத் தொடங்கியதும் குருநகரின் குடிகள் நெஞ்சிலறைந்து கதறி அழுதனர். வாழ்த்துக்களும் முழவும் முரசும் கொம்பும் சங்கும் இணைந்த பேரிசையும் சூழ்ந்தன. அவ்வொலியின் விழிவடிவமென எழுந்து நின்றாடியது சிதைத்தீ.

நகுஷனிடம் “செல்வோம், அரசே” என்றான் பத்மன். “அவ்வளவுதானா?” என்று அவன் கேட்டான். “ஆம், அவ்வளவுதான்” என்றான் பத்மன். “நான் செல்லலாமா?” என்றான் நகுஷன். “ஆம், செல்வோம்” என்று பத்மன் அவனைத் தழுவி கொண்டுசென்றான். “முதுசெவிலி அங்கிருப்பார் அல்லவா?” பத்மன் புரியாமல் “ஆம்” என்றான். “அவரிடம் சொல்க, முடிந்துவிட்டது என்று” என்றான். “ஆம், சொல்கிறேன்” என்றான் பத்மன். “கொன்றபழி தின்றால்…” என அவன் பதறும் விழிகளுடன்  அவனை நோக்கி சொன்னான். “நான் தின்னவில்லை… தின்றது எரி.” “நாம் அரண்மனைக்குச் சென்று பேசுவோம், அரசே” என்றான் பத்மன்.

அரண்மனையை அடைந்தபோது அவன் திரும்பி பத்மனிடம் “அதே அரண்மனை” என்றான். “ஆம்” என்றான் பத்மன். அவன் தோளைப்பற்றி “அங்கே குரங்குகுலம் இருக்குமா எனக்காக?” என்றான். “இருக்கும், வருக அரசே!” என தேர்விட்டு இறங்கச்செய்தான் பத்மன். முற்றத்தில் நின்று அரண்மனையை நோக்கியதும் அவன் தன் ஆழத்தில் ஓடிக்கொண்டே இருந்த சொல்லை சென்றடைந்தான். “என்ன இது! என்ன இது!” என்று தனக்கே என, தன்னருகே நின்றிருக்கும் அறியாத ஒன்றிடம் என கேட்டான்.

“வருக, அரசே!” என்று பத்மன் அவனை அழைத்துச்செல்ல அவ்வொரு சொல்லை மட்டுமே மீள மீள உச்சரித்தபடி ஏவலர்களின் உடலில் தன் எடையைச் சாய்த்து அவன் நடந்து சென்றான். தன் அறைக்குச் சென்று மஞ்சத்தில் எடையுடன் விழுந்து “மது… நிறைய மது” என்றான். கண்களை மூடியபடி ஓசையின்றி அதே சொல்லை சொல்லிக்கொண்டிருந்தான். வெறும் ஒலியென்றாகியது அச்சொல். பின்னர் ஓர் எண்ணமென ஓர் அக அசைவென ஆகியது.