மாதம்: மார்ச் 2017

நூல் பதின்மூன்று – மாமலர் – 52

52. வெண்மலர்தேவன்

மூன்று மாதம் அன்னைப்புலியின் பாலை உண்டு புலிக்குருளைகளில் ஒன்றென தானும் புரண்டு வளர்ந்தது குழந்தை. மார்கழிமாதம் மகம்நாளில் பிறந்தவள் புவியாள்வாள் என்றனர் மகளிர். நிமித்திகர் கூடி அவள் நாளும் பொழுதும் கோளமை நெறியும் தேர்ந்து அவள் மண்ணில் எழுந்த தேவமகள் எனத் துணிந்தனர். ஆகவே அவளுக்கு தேவயானி என்று பெயரிடப்பட்டது.

மானுடஅன்னையரால் பேணப்பட்டாலும் அவள் புலியன்னையின் மடியிலேயே பெரும்பாலும் வாழ்ந்தாள். குழவிகள் வளர்ந்ததும் அன்னைப்புலி அவற்றை அங்கேயே விட்டுவிட்டு காட்டுக்குள் சென்று மறைந்தது. பின்னர் எப்போதேனும் புதர்களை விலக்கி மெல்ல தலைநீட்டி அவளை நோக்கி நின்றது. புலிகள் அன்னையை அறியவில்லை. ஆனால் அவள் மட்டும் அதை நோக்கி அசையாமல் நின்றாள். சிறுசெவி மடித்து தலைகுலுக்கி அது எழுப்பும் ஓசையே ஓர் சொல்லாடலென ஒலித்தது. பின் மீன் நீருள் என அது பின்வாங்கி மறைந்தது.

மூன்று புலிகளும் அவளுக்கு பிறவித் தோழர்களென எப்போதும் உடனிருந்தனர். காட்டுக்குள் சென்று வேட்டையாடி ஊனும் குருதியும் உண்டு நா சுழற்றி வாய் தூய்மை செய்தபின் அவளை நாடி அவை திரும்பி அத்தவக்குடிலுக்கே வந்தன. அவளைவிட பெரிதாக அவை வளர்ந்தபின்னும் தங்களில் ஒருவர் என்றே அவளை எண்ணின. நடக்கப்பழகும் முன்னரே புலிகளின் காலைப்பற்றி எழுந்து அவற்றின் மேல் தவழ்ந்தேறி பிடரிமயிர் பற்றி குப்புறப்  படுத்து கைகளை அவற்றின் கால்களுக்கு நிகராக அசைத்தபடி ஊர்வது அவள் வழக்கமென்றிருந்தது. அவளைத் தோளிலேற்றியபடி அவை முள் படர்ந்த புதர்க்காடுகளுக்குள் சென்று உலாவி, பாறைகளின்மேல் ஓய்வெடுத்து மீண்டு வந்தன. இரவிலும் அவள் குடிலுக்குள் நுழைந்து மஞ்சத்தின் இருபக்கமும் படுத்திருந்தன.

குருநிலையின் பிற குழவிகள் அவளை அணுகவில்லை. அனல்முடி சூடி விண்வாழும் தெய்வங்களில் ஒன்று அவள் வடிவில் மண்ணுக்கு வந்ததென்று முனிவரும் எண்ணினர். அவள் குழலில் மலர்கள் சூட்டப்பட்ட உடனே வாடின. மார்பில் அணிந்த அருமணிகளும் கருகின. அவள் நீராடும்போது நீரிலிருந்து ஆவியெழுந்தது. அவள் துயின்றெழுந்து சென்ற இடத்தை தொட்டுப்பார்த்த சேடிகள் அங்கு அனல் நிறைந்த கலம் இருந்தது போல் உணர்ந்தனர். “ஏனிந்த வெம்மை? எதை எரித்தழிக்கப்போகிறாள் இவள்?” என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். “தெய்வங்கள் மானுடருக்குள் நுழையலாகாது. எறும்புப்புற்றின்மேல் யானை நடந்துசெல்வதைப் போன்றது அது” என்றனர் மூதன்னையர்.

ஜெயந்தி இறந்த பின் சிலகாலம் தனிமையிலும் துயரிலும் மூழ்கி இருந்த சுக்ரர் மகளை  ஒருகணமும் எண்ணவில்லை. அவளைப்பற்றி எப்போதேனும் எவரேனும் வந்து சொன்னால் அரைக்கணம் விழிதிருப்பி அதைக் கேட்டபின் “உம்” என்ற வெற்று முனகலுடன் முகம் திருப்பிக்கொண்டார். அன்னையைக் கொன்றெழுந்தவள் என்னும் வயற்றாட்டியின் சொல்வழியாக அன்றி அவளைப்பற்றி எண்ணவே அவரால் இயலவில்லை. அவ்வெண்ணம் அளித்த உளநடுக்கை வெல்ல அவர் அவளைக் காண்பதையே தவிர்த்தார். எப்போதேனும் சூதரோ பாணரோ அவளைப்பற்றி  சொன்ன விந்தைச் செய்திகள் எதுவும் அவரை மேலும்  எண்ணவைக்கவில்லை.

தான் கற்ற நூல்கள் அனைத்தையும் மீண்டும் ஒருமுறை எண்ணத்திலிருந்து எடுத்து ஏடுகளாக பதிப்பதில் வெறியுடன் மூழ்கி தன் துணையைப்பிரிந்த துயரை சுக்ரர் கடந்து சென்றார். நிகழ்காலத் துயரை வெல்ல சென்றகாலத்திற்குச் செல்வதே உகந்தவழி என கண்டுகொண்டார். உருவழிந்து பரவும் எண்ணங்களே துயரின் ஊர்திகள் என்று அறிந்தார். வகுத்து உரைத்து பொறித்த சொற்கள் அவற்றை நுகத்தில் கட்டின. பாதையில் நிறுத்தின. நோக்கியறிந்து தொட்டுணரும் இலக்கு நோக்கி கொண்டுசென்றன. பல்லாயிரம் சொற்களால் ஜெயந்தி அவர் உள்ளத்தின் ஆழத்திற்கு செலுத்தப்பட்டு முற்றிலும் மறைந்தாள். அச்சொற்களனைத்திலும் அவள் ஒளியும் மணமும் நிறைந்திருந்தன.

தேவயானி வளர்ந்து சிறுமியென்றாகி சிற்றாடை உடுத்து நடை பழகத் தொடங்கியபோதுகூட அவர் அவளை அறியவே இல்லை. அவள் புலிகளிடம் இருந்து தன் நடையையும் நோக்கையும் கற்றுக்கொண்டாள். சருகசையாது அணுகும் இளங்காற்றுபோல் ஓசையின்றி வந்தாள். எளிய உயிர்களையென பிறரை ஏறிட்டு நோக்கினாள். நோக்குகையிலும் நோக்குதெரியாத விழிமங்கலால் மானுடருக்கு அப்பாலிருப்பவள் என எண்ணச்செய்தாள். தனிமையிலிருக்கையிலும் விழியறியா அரியணை ஒன்றில்  அமர்ந்திருக்கும் பேரரசி என தோன்றினாள். அவள் விழி முன் சென்று நிற்கையில் பிறர் இயல்பாக உடல் குறுக்கி கைகட்டி பணிந்தனர். வேல் முனை என மின்னும் நோக்குடன் விழிதிருப்பிய அவள் ஒற்றைச் சொல்லில் வினவியபோது மேலும் பணிந்து விடையிறுத்தனர்.

முனிவர்களும் அவர்களின் துணைவியரும் அவளுடைய அடிமைகள் என்றே அங்கிருந்தனர். மறுத்து ஒரு சொல் பொறுக்காதவளாக இருந்தாள். ஆணைகள் மீறப்படுமென எண்ணவும் கூடவில்லை அவளால். விழைந்ததை நோக்கி அக்கணமே எழுந்தாள். அடைந்த மறுகணமே கடந்துசென்றாள். சிறுமியென்றிருக்கையிலேயே அக்குருநிலையின் அனைவரையும் மணியில் சரடென ஊடுருவிச்சென்றாள். அக்குருநிலையே அவளால் இணைக்கப்பட்டது. அவளன்றி பிறிதொரு பேசுபொருள் அரிதாகவே அமைந்தது. பேசுந்தோறும் எழும் சலிப்பால் அவளை அவர்கள் பேசிப்பெருக்கிக் கொண்டனர். பெருக்குபவர்கள் விரும்பப்பட்டமையால் மேலும் பெருகியது அவளைப்பற்றிய பேச்சு. அருமணியை ஒளிவளையம் என அவளை ஏழுமுறை சூழ்ந்திருந்தன அவளைப்பற்றிய கதைகள்.

மானுடர் வியக்கும் நீள்கருஞ்சுரிகுழலை கொண்டிருந்தாள் தேவயானி. அவள் தோளில் வழிந்து முதுகிலிறங்கி இடைகடந்து கால்களைத் தொட்டு அலையடித்த அக்கரிய ஒளியை ஏழுநாட்களுக்கு ஒருமுறை நுனிவெட்டி சீர்படுத்தினர் செவிலியர். “நெய்யும் குழம்பும் தேவையில்லை, அவை உள்ளிருக்கும் அனலால் உருகி சுடர்கொள்கின்றன” என்றனர் செவிலியர். அள்ளிப்பற்றினால் இருகைக்குள் அடங்காத அப்பெருக்கை ஐந்து புரிகளெனப் பகுத்துப் பின்னி முடைந்திட்டனர்.  நீராடி வருகையில் தன் குழல் பின்னணியில் விரிய செஞ்சுடர் மேனி பொலிய அவள் தோன்றினாள். “கடுவெளி இருளில் எழுந்த கனல்வடிவக் கொற்றவை போல” என்றான் ஒரு சூதன். அவளை அவ்வுருவிலேயே நிலைக்கச்செய்தது அச்சொல்லாட்சி.

குருநிலையில் வாழ்ந்த கவிஞர்கள் அவளைப்பற்றி பாடல்களை புனைந்தனர்.  அக்கதைகள் பாணர்களினூடாக வெளியே சென்றன. அங்காடி மலர்களை காட்டிலிருந்து வரும் வண்டுகள்  சூலுறச்செய்வதுபோல அவள் பெயர் மக்களின் நாவுகளில் திகழ்ந்தது. அவளை எவரும் காணவில்லை என்பதனால் அக்கதைகள் மேலும் பலமடங்கு பெருகின. இரவுக்காற்றில் தொலைவிலிருந்து வந்து கனவைத் தொட்டு கடந்துசெல்லும் காட்டுமலரின் நறுமணம் போன்றிருந்தாள் தேவயானி. அச்சமூட்டுவது, தெய்வங்களுக்குரியது. எவரோ தவமிருந்து மண்ணிலிறக்கும் வரை விண்ணில் திரண்டு முழுத்துக் காத்திருக்கும் கங்கை.

நூல்களினூடாக விண்ணேறிச்சென்றார் சுக்ரர். அங்கே தன் ஆசிரியருடன் சொல்கோத்தார். சூளுரைத்துச் சென்று காட்டிலமர்ந்து சஞ்சீவினியை வென்றார். பேயுருக்கொண்டு  ரிஷபர்வனின் நகருக்குச் சென்று அங்கே அவனுக்கு அழிவின்மையின் நுண்சொல்லை அளித்து அரசகுருவென அமர்ந்த பின்னரே மீண்டும் தன் தவச்சாலைக்கு திரும்பிவந்தார். அப்போது தேவயானி இளநங்கையென்றாகிவிட்டிருந்தாள். அவளை அவர் விழிகள் அடையாளம் காணவில்லை. தன் மாணவர்களையே அவர் அறிந்துகொள்ளவில்லை.

மீண்டும் தவக்குடிலில் அமைந்து மெல்லமெல்ல அக்கனவிலிருந்து மீண்டு எழுந்துவந்தார். “ஆம், இது போர். நான் வென்றாகவேண்டும்” என்று சுதமரிடம் சொன்னார். “நான் அசுரர்களின் ஆசிரியன். அவர்கள் வென்றாகவேண்டும் என்பதற்காகவே எனக்கு அந்நுண்மை அருளப்பட்டுள்ளது” என்றார்.  விண்ணிலும் மண்ணிலுமென அசுரரும் தேவரும் படைபொருத அவர் மெல்ல குளிர்ந்து தன்னிலை மீண்டார். வென்றுவிட்டோம் என்னும் உணர்வே அவரை மீண்டும் இனியவராக ஆக்கியது. மலர்களின் பெயர்கள் நினைவுக்கு வந்தன. முற்றத்து மான்கள் அவரைக் கண்டு மிரளாதாயின. சிட்டுக்குருவிகள் அவரை அணுகி வந்து குரலெழுப்பத்தொடங்கின.

ஆண்டுக்கொருமுறை நிகழும் சடங்குக்கு என காட்டுக்குள் அமைந்த ஏழன்னையரின் ஆலயத்தில் பலியும் கொடையும் அளிப்பதற்கென்று சுக்ரரும் அவர் மாணவரும் சென்றனர். அத்தவச்சாலையின் முனிவரும் துணைவியரும் இளமைந்தரும் தனி நிரையென அங்கே சென்றனர். காட்டில் உலவிக்கொண்டிருக்கையில் அவர்கள் செல்வதைக்கண்டு ஆர்வம்கொண்ட தேவயானி மூன்று வேங்கைகள் விழிகளில் கூர்மையும் நடையில் அலுப்பும் தெரிய தொடர்ந்துவர தானும் அவர்களுடன் சென்றாள்.

காலகம் என்னும் கரிய சுனையின் கரையில் அமைந்த பேராலமரத்தின் விழுதுகளுக்குள் நிறுவப்பட்டிருந்தது ஏழன்னையர் ஆலயம். நீளமான பீடத்தில் திசைகளை முகமாகக் கொண்ட பிராமி, ஏறுமயிலமர்ந்த கௌமாரி, உழவார முகம்கொண்ட  வராகி, பிறைசூடிய மகேஸ்வரி, தாமரைமேல் அமர்ந்த வைஷ்ணவி, தலைமாலை அணிந்த சாமுண்டி, மின்படை கொண்ட சச்சி என அமர்ந்திருந்த அன்னையர் எழுவருக்கும் செம்பட்டு அணிவித்து செம்மலர் மாலை சூட்டி செங்குருதி குழைத்த அன்னத்தைப் படைத்து வணங்கினர் முனிவர்.

அன்னையருக்கு பூசைகளை அளித்த முதுபூசகர் தன் சிறுமுழவில் விரலோட்டி அவர்களின் தொல்புகழ் பாடியபடி  சலங்கை கட்டிய கால்களை முன்னும் பின்னும் எடுத்து வைத்து சுழன்றாடினார். உருண்ட தலைமேல் எழுந்த சிறுசெவிகள் மடிந்தசைய வேங்கைகள் இருபுறமும் அமர்ந்திருக்க நடுவே கைகளைக் கட்டியபடி தோளில் சரிந்த நீள்குழலுடன் நிமிர்ந்த தலையுடன் தேவயானி அப்பூசனையை நோக்கி நின்றாள். பூசகர் சொல்பற்றிக்கொள்ள வெறியாட்டு கொண்டு வேல்சுழற்றி காற்றில் பாய்ந்து சுழன்று அமைந்தெழுந்து பெருங்குரலெடுத்து மலைமுழங்க ஓலமிட்ட வேலன் தன் நீள்கோலை அவளை நோக்கி நீட்டியபடி  உடல்கீறி எழுந்ததுபோன்ற கொடுங்குரலில் கூவினான்.

“ஏழன்னையரின் மகள். இந்திராணி!  இதோ அன்னை எழுந்திருக்கிறாள். எழுக அன்னை! பெருவஞ்சம் கொண்டவள். பெருஞ்சினத்  திருவுரு.  எழுக அன்னை! குருதிகொள் கொற்றவை எழுக! எரிதழல் முடிசூடியவள். எளியோர் தலைகளுக்குமேல் நடந்தகலும் கொடுங்கழலாள்.  அவள் நெற்றிக்கென எழுக, பாரதவர்ஷத்தின் உச்சியில் ஒரு மணிமுடி! பாரதவர்ஷத்தின் நெஞ்சின் மேல் ஓர் அரியணை அமைக, அவளுக்கு! ஆம், அவ்வாறே ஆகுக!” துள்ளிச் சுழன்று சொல் சிதற விழுந்து கைகால் உதைத்து மெல்ல உடல் அவிந்தான் வேலன். அவன் மேல் குளிர்நீரைத் தெளித்து மலரால் அடித்து எழுப்பி அமரவைத்து தேனும் பாலும் கலந்த இன்நீரை ஊட்டினர். சிவந்த கண்கள் கலங்கி மேலே சென்று செருகி, மறைய கைகால்கள் தளர, வாயோரம் நுரைக்கொப்புளங்கள் உடைய “ஆம்! ஆம்!” என்று அவன் முனகினான்.

அப்போதுதான் சுக்ரர் தன் மகளை முழுதுறக் கண்டார். அவள்மேல் பந்தங்களின் செவ்வொளி அலையடித்துக்கொண்டிருந்தது. குழல் காற்றில் தழலென எழுந்து பறந்தது. இருபுறமும் தழலால் ஆனவைபோலிருந்தன வேங்கைகள். அவர் மெய்ப்பு கொண்ட உடலுடன் “இவள் மண்நிகழ்ந்த தேவி. வென்றெழும் தெய்வம் இவள்” என சொல்லிக்கொண்டார். மெய்ப்புகொள்ளும் உடலுடன் “இவள் என் மகள்” என்ற சொல்லை சென்றடைந்தார்.

அதன் பின் அவள் அவருள்ளத்தில் தெய்வத்திற்கு நிகரான இடத்தை அடைந்தாள். “பெருமழைக்கு முந்தைய இளங்குளிர்காற்றுதான் ஜெயந்தி. அதை நான் உணரப் பிந்திவிட்டேன்” என்று சத்வரிடம் அவர் சொன்னார். “இவள் எவர் என நான் அறியேன். ஆனால் இவளுக்கு தந்தையென்றிருப்பதனாலேயே என் பிறப்பு முழுமைகொள்கிறது.” இருண்ட நீரடியில் கிடக்கும் வைரத்தின் ஒளித்துளி என சத்வரின் உள்ளாழத்தில் ஒரு புன்னகை எழுந்தது. நான் தந்தையரை பார்க்கத் தொடங்கி நெடுநாளாகிறது சுக்ரரே என அவர் சொல்லில்லாமல் எண்ணிக்கொண்டார்.

துணைவியை இழந்தவர்கள் மகளை தலைமேல்  வைப்பதுண்டு. அது மனைவியின் இடம் மட்டும் அல்ல. மனைவியை மறக்கும் வழி. இழந்ததை ஒன்றுக்குமூன்றென மீட்கும் சூழ்ச்சி. மனைவியை மறந்ததன் குற்றவுணர்ச்சியைக் கொண்டு அதை வளர்க்கிறார்கள். உதிரிலைகள் உரமாகி தளிரிலை தழைப்பதுபோல இயற்கையின் நெறி அது. “ஆம், தெய்வங்களுக்கு முன்னரே ஊர்திகள் பிறந்துவிடுகின்றன” என்றார் சத்வர்.  ”நன்று சொன்னீர். நன்று சொன்னீர், சத்வரே” என அவர் தோளை தழுவிக்கொண்டார் சுக்ரர்.

tigerசுக்ரரின் குருநிலைக்கு அருகில் ஓடிய பிரவாகினி எனும் சிற்றோடையில் இறங்கி நீராடி மூன்று வெண்ணிற அல்லிமலர்களை கொடியுடன் கொய்து கையில் எடுத்தபடி ஈரம் சொட்டும் ஆடையும் நீர்த்துளிகள் ஒளிர்ந்து தயங்கிய பொன்னிறத் தோள்களுமாக கசன் நடந்து வந்து குடில்தொகையின் முகப்பை அடைந்தான். அங்கு மல்லாந்தும் ஒருக்களித்தும் விழிசுருக்கி மூடி முகவாய்மயிர் அவ்வப்போது சிலிர்க்க தோளும் பிடரியும் விதிர்த்து சிற்றுயிர்களை விரட்ட சிற்றிலைச்செவிகள் குவிந்தும் விலகியும் ஒலிகூர இளவெயிலாடிப் படுத்திருந்த மூன்று வேங்கைகளில் ஒன்று தொலைவிலேயே அவன் மணத்தை அறிந்தது.  செவிகோட்டி ஒலிகூர்ந்து மெல்ல உறுமியபடி எழுந்து மூக்கை நீட்டிக்கொண்டு மென்காலெடுத்து வைத்து பதுங்கி முன்னால் சென்றது.

தலையை அசைத்து சொடுக்கொலி எழுப்பியபடி பிற இரு வேங்கைகளும் திரும்பி அதை நோக்கின. ஒன்று முன்கால் தூக்கி வைத்து எழுந்து அமர்ந்து செந்நிற வாய்க்குள்  வெண்பற்கள் தெரிய, நாக்கு உள்வளைந்து அசைய,  கோட்டுவாயிட்டு உடல் நெடுக்கி சோம்பல் முறித்தது. முன்னால் சென்ற வேங்கை உறுமலில் கார்வை ஏற கால்களை நீட்டி உடலை நிலத்துடன் பதிய வைத்து பாய்வதற்கான நிலை கொண்டது. படுத்திருந்த வேங்கைகளில் ஒன்று வாலைச் சொடுக்கி  நீட்டியபடி எழுந்து மெல்லடி வைத்து அதன் பின்னால் வந்து நின்றது. மூன்றாம் வேங்கை ஆர்வமற்றதுபோல மல்லாந்து நான்குகால்களையும் காற்றில் உதைத்து முதுகைநீட்டி வாலைச் சுழற்றியபின் மறுபக்கமாக புரண்டது.

காட்டைப் பகுத்து வந்த இடைவழிகளினூடாக சீரான நடையுடன் வந்த கசன் இரு வேங்கைகளையும் தொலைவிலேயே கண்டான். ஆயினும் புன்னகைமாறா முகத்துடன் அவன் அவற்றை நோக்கி வந்தான். அணுகலாகாதெனும் எச்சரிக்கையை உறுமியது முதல் வேங்கை. இரண்டாவது வேங்கை அதை தோளுரசிக் கடந்து வழிமேல் சென்று  நின்று மேலும் உரத்த குரலில் எச்சரித்தது. நடையின் விரைவு மாறாமல் அதை நோக்கியே கசன் வந்தான். வேங்கை அஞ்சுவதுபோல் பின்காலெடுத்துவைத்து வால் தரைப்புழுதியில் புரள உடல்பதுங்க அமர்ந்தது. பின்னர் முன்கால்களை மடித்து மண்ணுடன் நன்றாக ஒட்டிக் கொண்டு காதுகளை அசைத்தபடி மூக்கைச் சுளித்து வாய்திறந்து கோரைப்பற்களைக் காட்டி ஓசையின்றி உறுமியது.

இரு வேங்கைகளும் சேர்ந்து எழுப்பிய ஆழ்ந்த ஒலியில் குடிலுக்குள்ளிருந்து இளமுனிவர் ஒருவர் எட்டிப்பார்த்து “என்ன அங்கே ஓசை?” என்று கேட்டார். கசன் அணுகுவதை அவர் பார்க்கவில்லை. வழக்கமாக தவக்குடிலுக்கு வரும் இரவலரும் பாணரும் சூதரும் அயல்முனிவரும் வேங்கைகளைக் கண்டதுமே அப்பால் நின்று அங்கு தொங்கும் கயிறொன்றைப் பற்றி இழுப்பது வழக்கம். குடில் முற்றத்தில் வளர்ந்த காட்டிலந்தை மரத்தின் கிளையில் தொங்கியிருந்த வெண்கல மணிகள் ஒலிக்கத் தொடங்கும். முனிவர் எவரேனும் இறங்கி வந்து ஆணையிட்டால் வேங்கைகள் குரல் தாழ்த்தி காற்றுபட்ட நாணல்பரப்பென உடலில் மென்மயிர்தோல் அலைபாய  எழுந்து உறுமியபடி திரும்பிச் சென்று தங்களிடத்தில் படுத்துக்கொள்ளும். அயலவன் உள்ளே நுழைந்து தங்கள் முன்னிருந்து அகல்வது வரை அவற்றின் விழிகள் பளிங்குருளைகளின் ஒளியுடன் அவர்களை நோக்கி நிலைத்திருக்கும்.

கசன் அந்த மணியை பார்த்தான் எனினும் அவன் நடை விரைவழியவில்லை. அதைக் கடந்து குடில் முற்றத்தை அவன் அணுகியபோது முற்றத்தில் படுத்திருந்த மூன்றாவது வேங்கை துள்ளி எழுந்து கால்கள் மண்ணைப் பற்றி உந்த அங்கிருந்தே ஓடி பிற இரு வேங்கைகளையும் கடந்து தாவி அவன் மேல் பாய்ந்தது. காற்றில் திரும்பும் இலைத்தளிர் போல எளிதாக அதை ஒழிந்து அவ்விரைவிலேயே அதன் முன்கால்களைப் பற்றி தன் தலைக்குமேல் சுழற்றி தரையிலிட்டு அதன் கழுத்தில் தன் வலது முழங்காலால் ஊன்றி அழுத்தி இருமுன்னங்கால்களுக்கு நடுவே இருந்த நரம்பு முடிச்சொன்றை இடக்கையின் பெருவிரலாலும் சுட்டுவிரலாலும் அழுத்தினான் கசன்.

கால்கள் செயலிழந்து உடல் நடுங்கிய வேங்கை மெல்லிய கேவல் ஒலியுடன் அங்கே கிடந்து நெளிந்தது. மேலே தூக்கிய அதன் நான்கு கால்களும் வலிப்பு கொண்டவைபோல் இழுபட்டன. நீண்ட வால் மண்ணில் புரண்டது. அஞ்சிய பிற இரு வேங்கைகளும் கால்களை இழுத்து பின்வாங்கி முற்றத்திற்குச் சென்று நின்று பெருங்குரலெடுத்து தேவயானியை அழைத்தன.

அவற்றின் ஓசை கேட்டு தன் குடிலுக்குள் ஆடை அணிந்துகொண்டிருந்த தேவயானி மடித்த பட்டுச்சேலையின் பட்டைக்கொசுவத்தை வயிற்றை எக்கி இடைக்குள் செருகிவிட்டு மறுமுனையை இடைசுற்றி எடுத்து முலைக்கச்சின் மேல் இட்டு தோளில் அழுத்தியபடி வாயிலினூடாக எட்டிப்பார்த்தாள். அதே கணம் இரண்டாவது வேங்கை வலது முன்காலால் தரையை அறைந்து உறுமியபடி எழுந்து கசனை நோக்கி பாய்ந்தது. அவன் முதல்வேங்கையை விட்டு எழுந்து காற்றில் மல்லாந்து வந்த  அதன் நெஞ்சை  இடக்கையால் அறைந்து தரையில் வீழ்த்தி அதன் அடிவயிற்றில் தன் இடது முழங்காலை ஊன்றி இரு முன்னங்கால்களுக்கு நடுவே அமைந்த நரம்பு முடிச்சை இடக்கை விரல்களால் அள்ளி  பிடியைப்பற்றி அழுத்தி மண்ணுடன் சேர்த்துக் கொண்டான். அக்காட்சியைக் கண்டு கையில் சேலை நுனியுடன் அவள் திகைத்து செயலற்று நின்றாள்.

இரு முன்னங்கால்களும் காற்றில் தாவி ஓடுவதுபோல் அசைய வாய் திறந்து நாக்கு மடிந்து வெளியே சரிந்து தொங்கிக் கிடக்க ஏங்கியழுதது வேங்கை. முற்றத்தில் நின்ற அதன் உடன் பிறந்தான் பாய்ந்து தேவயானியின் குடிலுக்குள் நுழைந்து அவளுக்குப்பின்னால் சென்று அரையிருட்டில் ஒளிந்தது. அறைக்குள் தத்தளித்தபின் குடில் மூலையில் தன் பின்னுடலை நன்கு ஒடுக்கிக்கொண்டு முன்வலக்காலை மெல்ல தூக்கி வைத்தபடி கேவி அழத்தொடங்கியது. மேலாடை நுனியைச் சுழற்றி இடுப்பில் செருகியபடி வெளியே ஓடிவந்த தேவயானி ஒற்றைக் கையால் இரு வேங்கைகளையும் வீழ்த்தியபின் வலக்கையில் ஏந்திய மூன்று வெண் அல்லி மலர்களுடன் முற்றத்திற்கு வந்து நின்ற பேரழகனைக் கண்டு நடைதளர்ந்தாள்.

இருகைகளும் ஒன்றுடன் ஒன்று விரல் கோத்து நெஞ்சக் குவடுகளின் நடுவே அமைய “யார்?” என்று அவள் கேட்டாள் அவ்வொலி நாவிலெழாமையை உணர்ந்து மீண்டும் “யார்?” என்றாள். அவ்வொலியையும் அவள் கேட்கவில்லை. மூன்றாம் முறை வயிற்றில் இருந்து காற்றைத் திரட்டி அவள் “யார்?” என்று கேட்டது மிகையாக எழுந்தது. அவன் புன்னகையுடன் “பிரஹஸ்பதியின் மைந்தனாகிய நான் கசன். என் தந்தையின் முதல் மாணவராகிய சுக்ரரை பார்க்க வந்தேன். அவருடைய மாணவராக அமைய விழைகிறேன்” என்றான்.

முதற்கணம் எழுந்த முற்றிலும் நிலையழிதலை அவனுடைய சொற்களினூடாகக் கடந்த தேவயானி சீற்றம் கொண்டு குடிலின் கல்படிகளில் இறங்கி அவனை நோக்கி வந்து “இது அசுரர்களின் முதலாசிரியரின் குருநிலை. எந்தத் துணிவில் இதற்குள் அத்துமீறினீர்? இவை நான் வளர்க்கும் வேங்கைகள். என் உடன் பிறந்தவை. இவற்றின்மேல் எப்படி உமது கை படலாம்? இதன் பொருட்டு உம்மை தண்டிப்பேன்” என்றாள். கசன் புன்னகைத்து திரும்பி வேங்கைகளை நோக்கி “இன்னும் சற்று நேரத்தில் அவை எழுந்துவிடும். அவற்றின் கைகால்களை செயலிழக்கச் செய்யும் சிறிய நரம்பு அழுத்தத்தையே அளித்தேன். அவற்றுக்கு தீங்கு ஏதும் விளைவிக்கவில்லை” என்றான்.

அவள் மேலும் சினத்துடன் “தீங்கு விளைவித்தீரா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டியவள் நான். என் முன் இப்படி தருக்கி  நின்று பேச எவரையும் விட்டதில்லை” என்றாள். அவன் அதே மாறாப்புன்னகையுடன் “பொறுத்தருள்க முனிவர்மகளே, எவரிடமும் ஒப்புதல் வாங்கி பேசும் வழக்கம் எனக்கில்லை” என்று சொன்னான். தன்னையறியாமல் குரல் மாற “நான் முனிவர் மகளென்று யார் சொன்னது?” என்று அவள் கேட்டாள். “சுக்ரரின் குருநிலைக்குள் இப்படி குரலெடுத்துப் பேச பிறிதெவரும் துணிய மாட்டார்கள். சுக்ரரின் மகள் பேரழகியென்றும் பேரரசியருக்குரிய ஓங்குகுரல் கொண்டவள் என்றும் அங்காடிகளிலேயே பாணர்கள் பாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று அவன் சொன்னான்.

தன் அழகைப்பற்றி அவன் சொன்னதும் மீண்டும் ஓர் அகஅதிர்வுக்குள்ளாகி அவள் சொல்லிழந்தாள். அதற்குள் அப்பாலிருந்த மாணவர் குடில்களில் இருந்து வந்த கிருதரும் சுஃப்ரரும் “யார் நீர்? எங்கு வந்தீர்?” என்று கசனிடம் கேட்டனர். அவன் தன் கொடிவழியும் குருமுறையும் கொண்ட செய்யுளை உரைத்து தலைவணங்கினான். அவர்களும் தங்கள் நெறி கொண்ட செய்யுளை உரைத்து தலைவணங்கி அவனை வரவேற்று அழைத்துச் சென்றனர். அவன் நோக்கு விலக்கி அவர்களுடன்  சொல்லாடத் தொடங்கியதுமே  எடையொன்றை மெல்ல இறக்கியவள்போல தேவயானி உடல் தளர்ந்தாள்.  அவன் அகன்றதும்தான் முற்றிலும் விடுதலைகொண்டாள்.

தன் நிலையழிவை தானே கண்டதால் எழுந்த சீற்றமே அது என்றும் அம்மிகைச்சீற்றம் தன்னை மேலும் நிலையழிந்தவளாகவே காட்டியதென்றும் உணர்ந்தாள். அவன் நோக்கும்போது ஏன் சினம் தன்னுள் எழுந்ததென்றும் அவன் விழி திரும்பியதும் அது முற்றும் தணிந்து ஏக்கமென்று எப்படி மாறியதென்றும் வியந்துகொண்டாள். பின்னர் குனிந்து தன் ஆடையையும் இடையணியையும் சரிபார்த்தாள். தோளில் மடித்திட்ட மேலாடையின் நெளிகள் சரியாக அமைந்திருக்கின்றனவா என்று நோக்கி அவை குலைந்திருக்கக் கண்டு விரலால் நீவி சீரமைத்தாள். அதன் பின்னரே அவன் நெடுந்தொலைவுக்கு சென்றுவிட்டதை எண்ணி தனக்குள் புன்னகைத்தாள்.

இரு வேங்கைகளும் எழுந்து உடலை உலுப்பியபடி அவளை நோக்கி வந்தன. முதல்வேங்கை  தன் காதுகளுக்குள் ஏதோ புகுந்துவிட்டதுபோல தலையை குலைத்தபின் காலால் காதை தட்டிக்கொண்டது. இரண்டாவதாக வந்த வேங்கை கால்களை நீட்டி வைத்து முதுகை வளைத்து நிலத்தில் வயிறு பட முதுகை சொடுக்கெடுத்து சிறு உடுக்கொலியுடன் உடலை உதறிக்கொண்டு அணைந்தது. முதலில் வந்த வேங்கை செல்லமாக உறுமியபடி அவளை அணுகி வாலை விடைத்து தூக்கிக்கொண்டு அவள் கால்களில் தன் விலாவைத் தேய்த்தபடி நீவிச்சென்றது. திரும்பி மீண்டும் விலாவைத் தேய்த்தபடி சுழன்றது. இரு கால்களையும் அவள் இடைமேல் வைத்து எழுந்து அவள் முகத்தைப்பார்த்து உறுமியது. அவள் அதன் காதுகளுக்கு நடுவே தன் கையை வைத்து வருடியபடி அவன் சென்று மறைந்த பாதையை  பார்த்துக்கொண்டிருந்தாள்.

இரண்டாவது சிறுத்தை நெருங்கி வந்து அவள் உடலை உரசிச் செல்ல அதன் தலையைத் தட்டி “ஆடையை கலைக்கிறாயா, மூடா?” என்றாள். இரு வேங்கைகளையும் தலையைத் தட்டி முற்றத்திலேயே விளையாடும்படி சொல்லிவிட்டு தன் குடிலுக்குள் சென்றாள். அவளைக் கண்டதும் அங்கிருந்த வேங்கை காலை தூக்கிக்கொண்டு முனகி அழுது முகத்தை சுவர்நோக்கி திருப்பிக்கொண்டது. அவள் அருகே சென்று அதன் காதைப்பற்றி இழுத்து “வெளியே செல், கோழையே!” என்றாள். மாட்டேன் என்று அது உடல் குறுக்கி தன்னை இழுத்துக்கொண்டு உள்ளேயே அமர முயன்றது.

அவள் அதன் காதுகளைப்பிடித்து இழுத்தபோது தயங்கியபடி எழுந்து மெதுவாக நடந்து வெளியே எட்டிப்பார்த்து தன் உடன்பிறந்தார் அங்கே இயல்பாக நிற்பதைக் கண்டதும் உறுமியபடி வெளியே பாய்ந்து முற்றத்தை அடைந்து அவை இரண்டையும் அணுகி உடலை உரசிக்கொண்டு வாலைத் தூக்கியபடி உறுமிச் சுழன்றது. மண்ணில் படுத்து நான்கு கால்களையும் அகற்றி தன் அடிவயிற்றை காட்டியது. மூத்த வேங்கை அதன் அடிவயிற்றில் தன் முகத்தை வைத்து உரசி அதை தேற்றியது. ஒன்றை ஒன்று உடலை உரசியும் முகத்தால் வருடியும் பொய்க்கடி கடித்தும் தேற்றிக் கொண்டன. மெல்ல அதுவே விளையாட்டென்று ஆகி பாய்ந்து விலகியும் பின்னால் சென்று கவ்வியும் கைகளால் பொய்யாக அறைந்தும்,  தழுவியபடி மண்ணில் விழுந்து புரண்டெழுந்தும் அவை விளையாடத்தொடங்கின. தன் குடிலின் வாயிலில் அமர்ந்தபடி அவை விளையாடுவதை அவள் நோக்கிக்கொண்டிருந்தாள்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 51

51. குருதியமுது

பேற்றுக்குடிலில் ஜெயந்தி நோவுற்று இரு கைகளாலும் மஞ்சத்தைப் பற்றியபடி முனகி தலையை அசைத்துக்கொண்டிருக்கையில் அவள் விரித்த கால்களுக்கு இருபுறமும் நின்று முழங்கால்களையும் பாதங்களையும் மெல்ல வருடியபடி தாழ்ந்த குரலில் “இன்னும் சில கணங்கள்தான், தேவி. எளிது, மிக எளிது. இன்னொருமுறை மூதன்னையரை எண்ணி உடலை உந்துக! மீண்டுமொருமுறை மட்டும்…” என்று சொல்லிக்கொண்டிருந்த வயற்றாட்டிகளில் ஒருத்தி திரும்பி மூக்கை சுளித்து “எரிமணம்” என்றாள். அவள் சொன்னதுமே பிறரும் அதை உணர்ந்தனர். கங்கைக்கரையில் அமைந்த சுக்ரரின் தவச்சாலையில் ஈற்றறை என அமைந்த ஈச்சையோலைக் குடிலுக்கு வெளியே விரிந்துகிடந்த காட்டின்மேல் அப்போது இளமழை பெய்துகொண்டிருந்தது. இலைத்தழைப்புகளும் கூரைகளும் ஓசையிட்டுக்கொண்டிருந்தன.

“மரத்தில் மின்னல் விழுந்திருக்கக்கூடும்” என்றாள் ஒருத்தி. “இடியோசை எழவில்லையே?” என்று பிறிதொருத்தி சொன்னாள். “ஆம், மின்னலும் ஒளிரவில்லை” என்ற இளைய வயற்றாட்டி “குடிலேதும் பற்றியிருக்குமோ…?” என்றாள். “ஆம், அனலெரியும் மணம், மிக அருகே” என பிறிதொரு வயற்றாட்டி சொல்லும்போதே “அது இக்குருதியின் மணம்” என ஒருத்தி சொன்னாள். கைகளை கூப்பி நெஞ்சோடணைத்துக்கொண்டு  குனிந்து நோக்கி “ஆம். பாறை பிளந்து வரும் கன்மதம் போலவே மணக்கிறது இக்குருதி” என்றாள். திகிலுடன் அனைவரும் ஜெயந்தியின் உடல் பிளந்து ஊறிவந்த செங்குழம்பை நோக்கினர். “கன்மதம் போலவே…” என்றாள் ஒருத்தி.

“ஆம்” என மூச்சிழுத்தபின் “சுடுமோ…?” என்று  இளையவள் கேட்டாள். “உளறாதே…” என்றபின் சற்று தயங்கிய கையை நீட்டி வைத்து அக்குருதியை தொட்டாள் முதுமகள். பின்னர் “கருக்குருதிதான். நீர்நிறம் கலந்துள்ளது” என்றாள். “வாயில் திறக்கும் நேரம்” என்றபடி ஜெயந்தியின் கால்களை மேலும் சற்று விலக்கினாள் முதுவயற்றாட்டி. விதையுறைக்குள் விதை என ஊன் பை மூடிய குழவியின் தலை பிதுங்கி வெளிவந்தது. நீர்க்குமிழி உந்தி அசைந்த பனிக்குடத்திற்குள் அது தன் சிறு கைகளை அசைத்து அதை கிழிக்க முயன்றது. “எடு!” என்றாள் முதியவள். ஆனால் வயற்றாட்டிகள் சில கணங்கள் தயங்கினர். “எடடி, அறிவிலியே!” என முதியவள் சீற இருவர் பாய்ந்து குழவியை பற்றிக்கொண்டனர்.

கந்தகம் எரியும் மணத்துடன் குருதி பெருகி வழிந்தது. முதியவள் குழவியை உறைகிழித்து வெளியே எடுத்து அதன் எழா சிறுமூக்கை சுட்டுவிரலால் அழுத்திப் பிழிந்து பால்சளி நீக்கி உரிந்த தோலுடன் சிவந்திருந்த குருத்துக்கால்களைப் பற்றி தலைகீழாகத் தூக்கி இருமுறை உலுக்கினாள். குழவி ஒருமுறை மூச்சுக்கு அதிர்ந்து மெல்ல தும்மி பூனைக்குட்டிபோல்  மென்சிணுங்கலொன்றை எழுப்பியது. பின்னர் இரு கைகளையும் உலுக்கியபடி வீறிட்டு அலறத் தொடங்கியது. வயற்றாட்டியரின் முகங்கள் மலர்ந்தன. “பெண்” என்றாள் ஒருத்தி. அருகே வந்து நோக்கி “செந்தாமரை நிறம்” என்றாள் பிறிதொருத்தி. “மென்மயிர் செறிந்த சிறுதலை. பிறக்கும் குழவியில் எப்போதும் இத்தனை மயிர் கண்டதில்லை” என்றாள் இன்னொருத்தி.

குழவியை எடுத்துச்சென்று அருகிருந்த மரத்தொட்டிக்குள் மஞ்சளும் வேம்பும் கலந்து நிறைத்திருந்த இளவெந்நீரில் தலைமட்டும் வெளியே தெரியும்படி வைத்து நீராட்டினாள் முதியவள். குழவியில் ஈடுபட்டு அவர்கள் அன்னையை நோக்க மறந்திருந்தனர். மெல்லிய முனகலோசை ஒன்று எங்கோ என கேட்டது. எவரோ படியேறுவதென்றே ஒருத்தி அதை எண்ணினாள். இன்னொருத்தி திரும்பிப்பார்த்து அச்சத்தில் மூச்சொலி எழுப்பினாள். பிறர் திடுக்கிட்டு திரும்பிப்பார்க்க  ஜெயந்தி இரு கைகளாலும் மஞ்சத்தின் விளிம்பைப் பற்றியபடி உடலை இறுக்கி பொழியும் அருவிக்குக்கீழ் நிற்பதுபோல தோள்குறுக்கி நடுங்கிக்கொண்டிருந்ததை கண்டனர்.

“வலிப்பு” என்று ஒருத்தி சொல்ல முதுவயற்றாட்டி “என்னாயிற்று? ஏன்?” என்று குழந்தையை பிறர் கைகளில் கொடுத்துவிட்டு வந்து ஜெயந்தியின் கைகளைப்பற்றி அவள் நாடியை பார்த்தாள். பின்னர் “தெய்வங்களே!” என்றாள். “என்னாயிற்று?” என்றாள் இன்னொரு முதியவள். ஒன்றும் சொல்லாமல் தன் கையில் துவண்ட ஜெயந்தியின் கையை சேக்கைமேல் வைத்தாள். இல்லையென்பதுபோல் விரல்விரிய அது மெல்ல மல்லாந்தது. அனைவருக்கும் புரிந்துவிட்டிருந்தது. அவர்கள் மெல்ல குளிர்ந்துகொண்டிருந்த ஜெயந்தியின் உடலைச் சூழ்ந்தபடி சொல்லின்றி நோக்கி நின்றனர். அப்போதும் அவள் முகத்தில் பெருஞ்சினமும் எவர் மேலென்று அறியாத வஞ்சமுமே நிரம்பி இருந்தது. அத்தசைகள் அவ்வண்ணமே வடிக்கப்பட்டவைபோல்.

“செய்தி சொல்லவேண்டும்” என்று ஒருத்தி மெல்ல சொன்னாள். அச்சொல்லில் கலைந்த மற்றவர்கள் என்ன செய்வதென்றறியாமல் அங்குமிங்கும் செல்ல முயல்வதன் முதற்கணத்தில் உடல் ததும்பினர். முதியவள் மெல்லிய நம்பிக்கை ஒன்றை மீண்டும் வரவழைத்தவளாக ஜெயந்தியின் கையைப்பற்றி மீண்டும் நாடி பார்த்தாள். அவள் கழுத்திலும் நெற்றியிலும் கைவைத்தாள். அதைக் கண்டு பிறிதொரு வயற்றாட்டியும் மறுகையையும் எடுத்து நாடி பார்த்தாள். வியப்புடன் விழிதூக்கி “எப்படி இத்தனை எளிதாக…?” என்றாள் அவள். “இதை ஒருபோதும் நாம் வகுத்துவிட முடியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொருமுறையில். ஒன்று பிறிதொன்றென நிகழ்ந்தால் இது என்னவென்று ஏற்கெனவே கண்டடைந்துவிட்டிருப்பார்கள்” என்றாள் முதுமகள்.

“எவர் சென்று சொல்வது?” என்று கையில் குழந்தையுடன் நின்ற வயற்றாட்டி கேட்டாள். “குழவியை கொடு! நான் சென்று சொல்கிறேன்” என்று சொன்ன முதியவள் தன் கைகளைக் கழுவியபின் பதமாக குழவியை வாங்கிக்கொண்டாள். உடல் உலுக்கி அழுதுகொண்டிருந்த குழந்தையின் வாயில் தன் விரலை வைத்தாள். விழியிலாப் புழுபோல குழவி எம்பி அதை கவ்வ முயன்றது. “அனல்நிறை வயிறு” என்றாள் முதுமகள். “அதன் உடலும் அனலென கொதிக்கிறது. காய்ச்சல் கொண்டிருக்கிறது” என்றாள் பிறிதொருத்தி. “ஆம்” என அப்போதுதான் அதை உணர்ந்தாள் முதுமகள். குழவியின் வயிற்றைத் தொட்டு நோக்கி “ஆம்! ஏனிப்படி கொதிக்கிறது? இதுவரை கண்டதில்லை” என்றாள்.

இன்னொருத்தி “அன்னையின் அனலையும் எடுத்துக்கொண்டது போலும்” என்றாள். “இன்னும் சற்று நேரத்தில் இதற்கும் வலிப்பு வந்துவிடக்கூடும்” என்று சொன்னபின் “தேவி இறந்த செய்தியை சொல்வதற்கு முன் இக்குழவியை காட்டவேண்டும். அதுவரை இது உயிருடன் இருக்குமென்றால் நன்று” என்றபடி அதை மெல்லிய துணியில் நன்கு சுற்றி கையில் எடுத்துக்கொண்டு சிற்றடி வைத்து வெளியே சென்றாள். வெளியே சென்று புதுக்காற்றை ஏற்றதும் அச்செயலாலேயே அவள் முந்தைய நிகழ்வுகளிலிருந்து விடுபட்டாள். ஒவ்வாதனவற்றை உதற விழையும் உள்ளம் புதிய தருணத்தை பற்றிக்கொண்டது. அவள் முகம் மலர்ந்து விரைவுநடை கொண்டாள்.

பேற்றுக் குடிலின் வெளியே மகிழமரத்தடியில் தன் நான்கு மாணவர்களுடன் நின்றிருந்த சுக்ரரை அணுகி குழவியை நீட்டி “பெண் குழந்தை, முனிவரே” என்றாள் வயற்றாட்டி. முகம் மலர்ந்த சுக்ரர் இரு கைகளையும் நெஞ்சில் சேர்த்து கூப்பி “நலம் திகழ்க! நீணாள் வாழ்க! வெற்றியும் புகழும் நீளும்குலமும் அமைக!” என்று தனக்குத் தானே என சொன்னார். “நோக்குங்கள்” என்று குழவியை மேலும் அருகே கொண்டு சென்றாள் முதுமகள். அஞ்சியவர்போல “வேண்டாம்” என்று அவர் பின்னடைந்தார். “தயங்கவேண்டாம், முனிவரே. உங்கள் மகள் இவள். கைகளில் வாங்கலாம். நெஞ்சோடணைக்கலாம், முத்தமுமிடலாம், ஒன்றும் ஆகாது” என்று வயற்றாட்டி சிரித்தபடி சொன்னாள்.

“வேண்டாம்” என்று சுக்ரர் தலையசைத்தபோது நாணத்தாலும் பதற்றத்தாலும் அவர் முகம் சிவந்திருந்தது. “வாங்குங்கள்!” என்று முதுமகள் சற்று அதட்ட அவர் தானறியாது கைநீட்டினார். அக்கைகளில் அவள் குழந்தையை வைத்தாள். “மெல்ல… மெல்ல…” என்றபடி அவர் அதை எடைதாளா கிளைகள் என தாழ்ந்த  கைகளில் பெற்றுக்கொண்டார். கைகளும் உடலும் நடுங்க அதை கீழே போட்டுவிடுவோம் என்று அஞ்சி நெஞ்சோடு சேர்த்துக்கொண்டார். அத்தருணத்தின் எழுச்சியை நிகர்செய்யும்பொருட்டு “பெண்குழந்தை அல்லவா?” என்று அவளை நோக்கி பொருளிலா வினாவை கேட்டார். “ஆம், பேரழகி. இத்தனை செறிகுழல் கொண்ட குழவியை இதற்கு முன் நான் கண்டதில்லை” என்றாள்.

“அன்னையை போல், அன்னையை விடவும்…” என்றபடி சுக்ரர் குனிந்து குழந்தையை பார்த்தார். பிறகு “முத்தமிடலாமா…?” என்றார். “ஆம், ஆனால் உள்ளங்கால்களில் முத்துவது வழக்கம்” என்றாள் வயற்றாட்டி. “ஆம், உள்ளங்கால்களில்தான்! தேவியின் கால்கள். உலகளந்த கால்கள்” என்றபடி குனிந்து காற்றில் உதைத்து விரல் சுழித்துக்கொண்டிருந்த இரு கால்களில் ஒன்றை மெல்ல தூக்கி தன் நெற்றிமேல் வைத்தார். உதடுகளால் முத்தமிட்டார். “கால்களால் ஆள்க! கால்களால் வெல்க!” என்று நடுங்கும் குரலில் சொன்னார். பனித்துளி உதிருமொரு கணத்தில் நெஞ்சு நெகிழ்ந்து விம்மி அழத்தொடங்கினார். விழிநீர்த்துளிகள் தாடிப்பிசிர்களில் வழிந்து தயங்கின.

வயற்றாட்டி  குழவியை அவர் கைகளில் இருந்து வாங்கினாள். இரு மாணவர்களும் அவரை சற்று அணுகினர். ஒருவன் அவர் தோளைத்தொட்டு “ஆசிரியரே…” என்று மெல்ல அழைத்தான். கைகளால் நெஞ்சைப்பற்றியபடி தலைகுனிந்து தோள்கள் குலுங்க சுக்ரர் அழுதார். “குழவிக்கு பசிக்கிறது. நான் உள்ளே கொண்டுசெல்கிறேன்” என்று வயற்றாட்டி திரும்புகையில்தான் அவர் தன் துணைவியை உணர்ந்து “அன்னை எப்படி இருக்கிறாள்…?” என்றார். வயற்றாட்டியின் முகம் மாறுபட்டது. அக்கணமே அவ்வுணர்வை பெற்றுக்கொண்ட சுக்ரர் உரத்த குரலில் “சொல்! எப்படி இருக்கிறாள்?” என்றார். “அவர்கள் இல்லை” என்றாள் வயற்றாட்டி. “இல்லையென்றால்…?” என்றபடி பாய்ந்து வயற்றாட்டியின் தோளைப் பற்றினார் சுக்ரர்.

“அறியேன்… ஆயிரம் பேறெடுத்தவள், இது எவ்வண்ணம் நிகழ்கிறதென்று இக்கணம்வரை புரிந்ததில்லை” என்றாள் வயற்றாட்டி. “அதில் நான் செய்வதற்கேதுமில்லை.” சுக்ரர் அவள் தோளைப் பற்றி உலுக்கி “சொல், என்ன ஆயிற்று? என்ன ஆயிற்று, இழிமகளே…? நீ என்ன செய்தாய் அங்கு?” என்றார். அத்தருணத்தில் வயற்றாட்டிகள் இயல்பாக தேரும் ஓர் ஒழிதல் சூழ்ச்சியை பின்னால் வந்து நின்ற இன்னொரு வயற்றாட்டி செய்தாள். “குழவி அன்னையை கொன்றுவிட்டு வெளிவந்தது” என்றாள். சுக்ரர் கால்கள் நடுங்க ஈரடி பின்னால் வைத்து தன் மாணவனின் தோளை பற்றிக்கொண்டார். “எங்கே அவள்?” என்றார். “உள்ளே” என்றாள் இளம்வயற்றாட்டி. விழிகளால் செல்வோம் என முதுமகளிடம் சொன்னாள்.

“அவள் எங்கே?” என கூவிய சுக்ரர் “எங்கே? எங்கே அவள்?” என்று அலறியபடி பாய்ந்து குடிலுக்குள் நுழைந்தார்.  உள்ளே நிலம்பரவி வழிந்த கருக்குருதியைத் துடைத்து உலரத்தொடங்கிய கால்களைக் கழுவி ஜெயந்தியின் சடலத்தை ஒருக்கிக்கொண்டிருந்த வயற்றாட்டிகள் சிதறி விலகினர். பெருத்த வயிறு நடுவே எழுந்திருக்க வெண்ணிறத்துணி மூடிய உடலை அவள் என எண்ண அவரால் இயலவில்லை. “எங்கே அவள்?  அவள் எங்கே? எனக்கு தெரியும்! நானறிவேன்! நானறிவேன்…” என்று கூவியபடி அருகணைந்த சுக்ரர் அவள் என உணர்ந்ததும் “ஆ!” என அலறி பின்னடைந்தார். நடுங்கியபடி நின்று நோக்கியபின் மிக மெல்ல முன்னால் சென்று மார்பின்மேல் மடித்து கோத்து வைக்கப்பட்டிருந்த அவள் கைகளை பற்றினார்.

அது தேளெனக் கொட்டியதுபோல் உதறிவிட்டு பின்னால் வந்தார். அவர் கையிலிருந்து விழுந்த அவள் கை மஞ்சத்தின் விளிம்பில்பட்டு சரிந்து தொங்கி ஆடியது. அவள் முகம் பிறிதெங்கோ கேட்கும் சொல்லொன்றுக்கு செவி கூர்ந்ததுபோல் இருந்தது. “இது அல்ல” என்று அவர் சொன்னார். பித்தனின் விழிகளுடன் “எங்கே அவள்?” என்று வயற்றாட்டியரிடம் கேட்டார். அவர்கள் மறுமொழி சொல்லவில்லை. “இது அல்ல” என்றபின் அச்சம் கொண்டவர்போல திரும்பி வாயிலை நோக்கி ஓடி வெளியே பாய்ந்தார். படிகளில் காலிடற விழப்போனவரை அவரது இரு மாணவர்கள் பற்றிக்கொண்டனர். மண்ணில் கால் மடித்து அமர்ந்து கைகளால் தலையில் அறைந்தபடி அவர் கதறி அழத்தொடங்கினார். “என் தேவி! என் தேவி!” என்று கூச்சலிட்டார். “அவள் சினங்கொண்டவள்… பெருஞ்சினமே உருவானவள்… இதை பொறுக்கமாட்டாள்” என்றார்.

இறப்பின் தருணத்தில் பொருளுள்ள ஒரு சொல்லையேனும் எவரும் சொல்லிக்கேட்டிராத முதிய வயற்றாட்டி உறைந்த நோக்குடன் நின்றாள். “அவளது சினம் இதற்காகத்தானா? இதற்காகத்தானா? இதற்காகவா சினந்தாள்? அவளது சினம்… அவளது ஆறாப்பெருஞ்சினம்…” என்று சுக்ரர் கூவிக்கொண்டே இருந்தார். முதிய சீடர் ஒருவர் பிறரிடம் உதடசைவால் ‘அவரை அழைத்துக்கொண்டு செல்லலாம்’ என்றார். இருவர் அவர் கைகளைப்பற்றி மெல்ல தூக்கி அகற்றி கொண்டுசென்றனர். தன் ஆணவமும் நிமிர்வும் அகல குழவியைப்போல் நோயாளன்போல் அவர்களின் கைகளில் தொங்கிய அவர் சிற்றடி வைத்து சென்றார். பிறர் அமைதிகொண்டிருந்தமையால் அவருடைய புலம்பும் குரலே மரக்கூட்டங்களுக்கு அப்பால் ஒலித்தது.

வயற்றாட்டி குனிந்து குழவியை பார்த்தாள். அழுது களைத்து குளிர்கொண்டதுபோல் நடுங்கிக்கொண்டிருந்தது. உதடுகளைச் சுற்றி நரம்புகள் நீலம் கொண்டு புடைத்திருந்தன. கழுத்திலும் மார்பிலும் நீல நரம்புகள் எழத்தொடங்கின. “முலையூட்ட வேண்டுமடி” என்றாள் முதுமகள். “இது காடு, இங்கு ஊற்றுமுலை கொண்ட எவள் இருக்கிறாள்?” என்றாள் இன்னொரு வயற்றாட்டி.  “முடியாது என்று சொல்ல நீங்கள் எதற்கு? அருகே அமைந்த முனிவரில்லங்களில் சென்று பாருங்கள், முலையூட்டும் பெண் எவளேனும் இருக்கிறாளா என்று!” என முதுமகள் கூவினாள். “இல்லை, அன்னையே. முலையூட்டும் பெண் எவளும் இங்கில்லை” என்றாள் இன்னொருத்தி. “என்ன செய்வது?” என்றாள் ஒருத்தி. “இங்கிருக்கும் பாலை கொடுத்துப்பார்ப்போம். இக்குழவி வாழவேண்டும் என்று ஊழிருந்தால் பால் அதற்கு ஒத்துப்போகும்” என்றாள் முதுமகள்.

பசியில் வெறிகொண்டு கைகள் அதிர்ந்து நடுங்க கால்கள் குழைய வீறிட்டலறிய குழவிக்கு அவர்கள் முதலில் நீர் கலந்த தேனை நாவில் விட்டனர். சிறுநா சுழற்றி உதடு பிதுக்கி அதை துப்பியது. “பால் கொண்டுவாருங்கள்” என்று வயற்றாட்டி கூவ பசும்பாலில் நீர் விட்டு தேன் கலந்து அதன் நாவில் விட்டனர். அதையும் துப்பிவிட்டு தலையைச் சுழற்றி ஆங்காரத்துடன் அலறி அழுதது. “அத்தனை பசுக்களின் பாலையும் கொண்டுவாருங்கள், ஏதோ ஒன்றின் சுவை உவப்பக்கூடும்” என்றாள் வயற்றாட்டி. தரையில் அமர்ந்து தன் மடியில் மகவை படுக்கவைத்து “என் அரசியல்லவா? என் தேவியல்லவா? என் குலதெய்வமல்லவா? இந்தப் பாலை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் காலடிகளை சென்னி சூடி வேண்டுகிறோம், அன்னையே! இந்த உலகை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று மன்றாடினாள்.

அக்குருநிலையில் வளரும் பன்னிரு பசுக்களின் பாலையும் அதன் நாவில் விட்டனர். எதையும் குழந்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் மேலும் அழுது உடல் கறுத்து விழிகள் இமைகளுக்கு அப்பால் செருகிக்கொள்ள குரலெழுப்பியது. பின்னர் அதன் குரல் தாழத் தொடங்கியது. முறுகப்பற்றிய விரல்கள் மெல்ல விடுபட, பெருவிரல் விலகி தளர, உடல் நனைந்த சிறுதுணியென்று மாற அதன் உயிர் அணைந்தபடியே வந்தது. “இங்கிருப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டது போலும்” என்றாள் ஒருத்தி. “வாயை மூடு! இழிமகளே, .நம்மால் முடிந்தது இங்குள அனைத்தையும் கொண்டு இவ்வனலை எழுப்புவது மட்டுமே. எந்நிலையிலும் இதுவே எல்லையென்று முடிவெடுக்காமல் இருப்பதே மருத்துவனின் கடமை” என்றாள் வயற்றாட்டி.

tigerமருத்துவநூல் கற்ற முனிவராகிய சத்வர் வந்து குழவியை பார்த்தார். அதன் வாயை நோக்கி விரல் கொண்டுசென்றபோதே அதன் உடலில் சிறு அசைவு எழுவதை கண்டார். “என்ன முடிவெடுத்திருக்கிறாள், மருத்துவரே?” என்றாள் வயற்றாட்டி. “முடிவெடுக்க வேண்டியவர்கள் நாம். இச்சிற்றுடலுக்குள் அனல் எரிந்துகொண்டிருக்கிறது, அது இங்கே பற்றிப்படர்ந்தேறவே விழைகிறது” என்று சொன்னபடி குழவியின் கால்களையும் கைகளையும் தொட்டு நோக்கி “பிறந்து இத்தனை நேரமாகிறது, ஒருதுளி உணவும் ஏற்காதபோதும் இவ்வளவு வெம்மை இச்சிற்றுடலில் எழுவது வியப்பளிக்கிறது. பிறிதொன்று இதைப்போல் நான் கண்டதில்லை” என்றார். “எங்கிருந்து எழும் அனல் இது?” என்று வயற்றாட்டி கேட்டாள். “இம்மடியில் இக்குழவியை வைத்திருக்கவே இயலவில்லை. ஆடைக்கும் நான் அணிந்த மரவுரிக்கும் அடியில் என் தொடைகள் வெந்துகொண்டிருக்கின்றன.”

“இவள் எதுவும் அருந்தாதது இவ்வெம்மையினால்தான்” என்றார் சத்வர். “பசும்பால் குளிர்ந்தது. அது இவளுக்கு உகக்கவில்லை. எரி நீரையல்ல, நெய்யையே விரும்பும்.” முதுமகள் புரியாமல் “என்ன செய்வது?” என்று கேட்டாள். “அறியேன். ஆனால் எங்கிருந்தேனும் ஒரு சொல் எழுமென்று எண்ணுகின்றேன். மருத்துவம் கற்பவர் தன் அறிவை சூழ்ந்துள்ள பொருட்களனைத்திலும் படியவைத்து தான் வெறுமைகொண்டு காத்திருக்க வேண்டுமென்பார் என் ஆசிரியர். உரிய தருணத்தில் உரிய பொருள் விழியும் நாவும் கொண்டு நம் முன் வந்து நின்றிருக்கும். பார்ப்போம்” என்றபின் மாணவர்களுடன் சத்வர் திரும்பிச்சென்றார்.

காலடிகள் ஒலிக்க காட்டுவழியே நடக்கையில் நெடுநேரம் கழித்து அவருடன் வந்த மாணவர்களில் ஒருவன் “அக்குழவியின் மணமே வேறுவகையில் உள்ளது” என்றான். “ஆம், எரிமணம். அதன் அன்னையின் உடலிலிருந்து வழிந்த குருதியும் கன்மதம்போல் கந்தகம் மணத்தது என்கிறார்கள்” என்றார் சத்வர். மாணவர்களில் இளையவனாகிய ஒருவன் “அங்கு குகையில் இந்த அனல்மணத்தை அறிந்தேன்” என்றான். நின்று திரும்பிநோக்கிய சத்வர் “எக்குகையில்?” என்றார். “சதமமலைக் குகையில். மலைத்தேனெடுக்க நாங்கள் செல்லும்போது காற்றில் இந்த மணம் எழுந்தது. அங்கு புலியொன்று குருளைகளை ஈன்றிருப்பதாக சொன்னார்கள்.”

அக்கணத்தில் தன் உளம் மின்ன “ஒருவேளை…” என்றார் சத்வர். தலையை ஆட்டி எண்ணத்தை ஓட்டியபடி நடந்து சுக்ரரின் குடிலை அடைந்தார். அங்கு மரவுரியில் மல்லாந்து படுத்து கண்ணீர் வழிய அணைமணையில் தலையை உருட்டியபடி முனகிக்கொண்டிருந்த சுக்ரரின் காலடியில் அவரது மாணவர்கள் அமர்ந்திருந்தனர். முதல் மாணவராகிய சபரர் எழுந்து வெளியே வந்தார். விழிகளால் என்ன என வினவிய அவரிடம் “குழவி எந்தப் பாலையும் உண்ண மறுக்கிறது. ஒருவேளை அது விரும்பும் பால் தாய்ப்புலியின் பாலாக இருக்கலாம்” என்றார் சத்வர். “தாய்ப்புலியா?” என்று சபரர் தயங்க அவருக்குப் பின்னால் வந்து நின்ற இளைய மாணவனாகிய கிருதன் “இங்கு மலைக்குகையொன்றில் தாய்ப்புலி குட்டி போட்டிருக்கிறது. அப்புலியையும் குழவிகளையும் இங்கு கொண்டுவருகிறேன். புலிப்பாலை கொடுத்துப்பார்ப்போம்” என்றான்.

“புலிப்பாலா? எங்ஙனம்?” என்று சபரர் திரும்ப “நாம் சுக்ரரின் மாணவர். எதுவும் இங்கு இயல்வதே” என்றபடி “இதோ, ஒரு நாழிகைக்குள் புலியுடன் திரும்பி வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டே அவன் குடில்களை நோக்கி ஓடினான். அவனும் ஏழு மாணவர்களும் உடனே கிளம்பி காட்டிற்குள் சென்றனர். சதமமலைக் குகைக்குள் அவர்கள் ஏறியபோது அவர்கள் அணுகுவதை மணம் வழியாக அறிந்த புலி முழங்கத் தொடங்கியது. அரையிருளில் தூசியும் வௌவால்எச்சமும் மட்கிய விலங்குமயிரும் கலந்து மணத்த குகைக்குள் அவர்கள் வெறுங்கைகளுடன் நுழைந்தனர். பொன்னீக்களின் ரீங்காரம் ஒலித்தது. அவர்களின் முகத்தை மணிவண்டு ஒன்று முட்டிச்சென்றது. குகைக்குள் மென்புழுதியில் தன் நான்கு குட்டிகளில் ஒன்றைக் கொன்று கிழித்து உண்டு இளைப்பாறி பிற மூன்று குட்டிகளுக்கும் முலையூட்டிக் கொண்டிருந்த தாய்ப்புலியை கண்டனர்.

குழவியின் எஞ்சிய எலும்பை நாவால் நக்கி சுவைத்துக்கொண்டிருந்த புலி முன்னங்கால்களை ஊன்றி எழுந்து குகை எதிரொலிக்கும்படி முழங்கியது. “அஞ்சவேண்டாம், அது எளிய விலங்கு. அஞ்சாத விழிகளை அது அறியாது” என்றபடி கிருதன் அதை நேர்விழிகளால் நோக்கியபடி சீராக நடந்து அணுகினான். முன்னங்காலால் ஓங்கி நிலத்தை அறைந்து உரக்க குரலெழுப்பியது புலி. அவன் அதனருகே சென்று அதன் நெற்றியில் கைவைத்தான். இருமுறை முனகியபின் புலி தலை தாழ்த்தியது.  காதுகளை மெல்ல சொடுக்கி நுண்ணிய ஈக்களை விரட்டியபடி எடைமிக்க தலையை தரையில் வைத்தது.

“குட்டிகளை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கிருதன் பிற மாணவர்களை நோக்கித்திரும்பி சொன்னான். அவர்கள் ஓடிவந்து புலிக்குருளைகளை எடுத்துக்கொள்ள புலி முன்னங்கால்களில் எழுந்து திகைப்புடன் அவர்களை பார்த்தது. “வருக!” என்று அதற்கு கைகாட்டிவிட்டு அவன் குகையைவிட்டு வெளியே சென்றான். அவர்கள் புலிக்குருளைகளுடன் மலையிறங்கி காடுகடந்து சுக்ரரின் குடில் வளாகத்தை அடைந்தனர். புலிக்குருளைகள் உடல்சூட்டை உணர்ந்து விழிசொக்கி செந்தளிர் நாநீட்டி சப்புக்கொட்டியபின் சருகில் நீர்ச்சரடு விழும் ஒலியுடன் மெல்ல துயில்கொள்ளலாயின. புலி கால்களை நீட்டிவைத்து முகத்தை நீட்டி அவர்களுக்குப் பின்னால் ஓசையில்லாமல் வந்தது. ஓர் இடத்தில் அது நின்று உறுமியபோது அவன் திரும்பி “வருக!” என்று அதனிடம் சொன்னான். நாவால் முகத்தை நக்கியபின் அது தொடர்ந்து வந்தது.

கையில் அனல்வண்ணத் துணிச்சுருள்போல புலிக்குருளைகளுடன் வந்த அவர்களைக் காண மாணவர்கள் ஓடிவந்து கூடினர். மருத்துவச்சிகள் திகைப்புடன் நெஞ்சைப்பற்றி நோக்கிநின்றனர். அவர்களுக்குப் பின்னால் ஐயத்துடன் காலெடுத்து வைத்து மீசை விடைத்த முகத்தை நீட்டி மெல்ல புதர்களை ஊடுருவியபடி வந்தது அன்னைப்புலி. அவர்கள் குழவிகளை முற்றத்தில் விட்டதும் முட்புதர் ஒன்றை பாய்ந்து தாவிக்கடந்து குழவிகளை அணுகி வாயால் கவ்வி புரட்டி அடிவயிற்றை நாவால் நக்கியது. ஒரு குருளை அதன் கால்களை நோக்கி செல்ல அருகே படுத்து கால்களை அகற்றி முலைக்கணுக்களை அவற்றுக்களித்தது. கண் திறக்காத குட்டிகள் மூக்கால் தேடி முலை அறிந்து பூநகம் எழுந்த இரு சிறுகைகளையும் தூக்கி அன்னையின் வயிற்றில் ஊன்றி முலை உண்ணத்தொடங்கின. “குழவியை கொண்டு வாருங்கள்!” என்று மருத்துவர் சொன்னார். வயற்றாட்டி நடுங்கியபடி குழவியுடன் வந்தாள். “மருத்துவரே… இது…” என்று அவள் சொல்லத் தொடங்க “அஞ்ச வேண்டியதில்லை” என்றபடி அக்குழவியை வாங்கி மெல்ல கொண்டுசென்று புலிக்குருளைகளின் அருகே வைத்தார். புலி திடுக்கிட்டு முன்னங்கால்களில் எழுந்து திரும்பியது. முகவாய்மயிர் விடைக்க மூக்கை சுளித்து கோரைவெண்பல் காட்டி மெல்ல சீறியது. கிருதன் குனிந்து அக்குழவியை எடுத்து குருளைகளுடன் சேர்த்து அதன்முன் நீட்டினான். புலி குனிந்து குழவிகளைப் பார்த்து முழவுத்தோலில் கோல்உரசும் ஒலியுடன் உறுமியது. அதன் தணிந்த வயிறு இருமுறை அதிர்ந்து அழுந்தியது. புழுதியில் இடப்பட்டிருந்த வால் சுழன்றெழுந்து தணிந்தது. மூக்கை நீட்டி குருளைகளையும் குழவியையும் மோப்பம் கொண்டபின் திரும்பி நா நீட்டி மூக்கை நக்கிக்கொண்டது.

சத்வர் குழவியின் வாயை புலியின் முலைக்கண்ணின் அருகே கொண்டுசென்றார். புலியின் காம்புகளில் இருந்து மெல்லிய வெண்நூலாக பால் சீறிக்கொண்டிருந்தது. அதன் மணத்தை அறிந்ததும் அது தலைதூக்கி தாவிப்பற்றி உறிஞ்சி குடிக்கலாயிற்று. முலையுறிஞ்சிக் கொண்டிருந்த புலிக்குருளைகளில் ஒன்று கால் தள்ளாடி அதன் மேல் விழுந்தது. எழுந்து திரும்பி குழவியை முகர்ந்துபார்த்தபின் மெல்லிய சிணுங்கல் ஒலியுடன் மீண்டும் அன்னையின் முலையை கவ்விக்கொண்டது. “அவள் வாழ்வாள்” என்றார் மருத்துவர். “நாம் அறியாத ஊழ் கொண்டவள். யுகங்களுக்கொருமுறை தெய்வங்கள் தேர்ந்தெடுத்து மண்ணுக்கு அனுப்புபவர்களில் ஒருத்தி. அவள் வாழ்க!”

அன்னைப்புலி மெல்ல சோர்ந்து தணிந்து தலையை தரையில் தாழ்த்தியது. “குருதி கொடுங்கள் அதற்கு” என்றான் கிருதன். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்க ஒருவன் காட்டுக்குள் புகுந்து மானொன்றை அம்பெய்து வீழ்த்தி கொடிகளால் இரு கால்களையும் கட்டித் தூக்கி தோளிலேற்றிக்கொண்டு வந்தான். புலியின் வாயருகே கொண்டுவந்து மானை வைத்து அதன் காதுகளைப்பற்றி தலையைத் திருப்பி புடைத்து வளைந்த கழுத்தின் குருதிக் குழாயை சிறு கத்தியால் அறுத்தான். நான்கு கால்களும் காற்றில் உதைக்க மான் துள்ளித் துள்ளி அடங்கியது. சீறித் தெறித்த குருதியை புலியின் வாயருகே காட்ட மெல்ல உடல் நீட்டி நாவெடுத்து நக்கி அருந்தியது அன்னை.

கனிந்த பழமொன்றின் செஞ்சாறை அருந்துவதுபோல் அந்த மானின் குருதியை உண்டு இளைப்பாறியது புலி. அதன் விழிகள் மெல்ல மேலே ஏற காதுகள் சொடுக்கிச் சொடுக்கி சிறு பூச்சிகளை விரட்ட ஓரிருமுறை நா நீட்டி முகமயிரையும் தாடையையும் நக்கி சப்புக்கொட்டியபடி சிப்பி விழிகள்மேல் இமைப்பாலாடைகள் படிய  மெல்ல அது துயிலலாயிற்று. நான்கு குழவிகளும் அதன் அடிவயிற்றில் ஒட்டி இறுகி அக்குருதியை அமுதென உண்டுகொண்டிருந்தன.

நூல் பதின்மூன்று – மாமலர் – 50

50. அனலறியும் அனல்

சச்சியை இந்திராணி என அமராவதியில் அமர்த்தும்பொருட்டு புலோமன்  அசுரர்களின் பெரும்படையை திரட்டினான். தைத்யர்களும் தானவர்களும் அடங்கிய படைவிரிவு கடலுடன் கடலிணைந்து கடலென்றாவதுபோல திரண்டபடியே இருந்தது. அதன் வலப்பகுதியை காலகேயர்களும் இடப்பகுதியை புலோமர்களும் வழிநடத்தினர். தலைமுறை தலைமுறையாக வெற்றியென்பதற்கு அப்பால் ஏதுமறியாத மாவீரர்கள் அவர்கள். வெற்றி மேலும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. தன்னம்பிக்கை ஐயமில்லாது செயல்படச் செய்கிறது. ஐயமின்மை முடிவெடுப்பதில் விரைவை அளிக்கிறது. விரைந்து முடிவெடுப்பவர்கள் வெல்கிறார்கள்.

புலோமர்களுக்கும் காலகேயர்களுக்கும் பிறர் அறியாத குறிச்செயல்களும் மறைச்சொற்களும் இருந்தன. அவற்றினூடாக அவர்கள் தங்களுக்குள் உளமாடிக்கொண்டனர். அவ்வுளவலையால் அசுரர்களின் பெரும்படையை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். அசுரப்படை திரண்டு மண்ணிலுள்ள அத்தனை அரசர்களையும் வென்றது. அவர்களின் கருவூலங்களால் வேள்விகளை இயற்றி விண்ணுக்குரிய பாதைகளை வகுத்தது.

அசுரர்கள் வலுப்பெறுந்தோறும் அமராவதியில் அவர்களின் ஒலிகள் கேட்கலாயின. போர்முரசுகளின் ஓசை தொலைவில் இடிமுழக்கமென எழுந்து தேவர்களின் நிறைநிலையை கலைத்தது. அமுதுண்டு காதலாடி களித்திருந்தவர்களின் உள்ளத்தின் அடியில் எப்போதும் அவ்வோசை இருந்துகொண்டே இருந்தது. பின்னர் பேச்சுக்குரல்கள் அமராவதியில் ஒலிக்கலாயின. தேவர்களின் குரல் இசையாலானது. அதில் வன்தாளமென ஊடுருவி அடுக்கழித்தது அசுரர்களின் குரல்.

தேவதேவன் காத்திருந்தான். புலோமனின் மகள் சச்சி பதினாறாண்டு அகவை முதிர்ந்து முலைமுகிழ்த்து இடைபருத்து விழிகளில் நாணமும் குரலில் இசையும் நடையில் நடனமும் சிரிப்பில் தன்னுணர்வும் கொண்டு கன்னியென்றானபோது அவன் ஹிரண்யபுரிக்கு சென்றான். வளையல் விற்கும் வணிகனாக அணிவணிகர் குழுவுடன் இணைந்துகொண்டான். அணிவணிகராக அகத்தளம் புக இளவயதினருக்கு ஒப்புதல் இல்லை என்பதனால் அவன் தன்னை முகச்சுருக்கங்களும் விழிமங்கலும் தளர்குரலும் கொண்ட முதியவனாக அமைத்துக்கொண்டான். பாண்டியநாட்டு முத்துக்கள் பதித்த சங்குவளையலும் சேரநாட்டு தந்தவளையலும், சோழநாட்டுப் பவளம் பதித்த சந்தனவளையலும் திருவிடநாட்டு செவ்வரக்கு வளையலும் தண்டகாரண்யத்தின் வெண்பளிங்குச் செதுக்குவளையலும் அடுக்கப்பட்ட பேழையுடன் ஹிரண்யபுரியின் அரண்மனைக்குள் நுழைந்து மகளிர்மன்றுக்கு சென்றான்.

அணிவணிகர் வந்துள்ளனர் என்றறிந்ததுமே அசுரகுடி மகளிர் சிரித்தபடி வந்து சூழ்ந்துகொண்டனர். கலிங்கப்பட்டும் பீதர்பட்டும் கொண்டுவந்தவர்கள் பனியென அலையென நுரையென தளிரென வண்ணம் காட்டினர். மென்பாசிக் குழைவுகள், வெண்காளான் மென்மைகள், இளந்தூறல் ஒளிகள். மலர்களையும் கொடிகளையும் தளிர்களையும் நடித்து பொன் அணியென்றாகியிருந்தது. விழிகளையும் அனல்களையும் நடித்தன அருமணிகள். அழகுடையோர் என்பதனாலேயே அழகுக்கு அடிமையாகின்றனர் மகளிர். தங்கள் உடல்சூடிய இளமையையும் கன்னிமையையும் கனிவையும் கரவையும் குழைவையும் நெகிழ்வையும் பொருளென பரப்பியவைபோலும் அணிகள் என மயங்குகிறது அவர்களின் உள்ளம்.

அணிவணிகர்களில் வளையல் விற்பவர்களை பெண்கள் மேலும் விரும்புகின்றனர். காதணிகளும் மூக்கணிகளும் பெண்களின் நிகர்விழிகள். மார்பில் அணிபவையும் இடையணிபவையும் உடல்கொண்ட எழில்கள். கைவளைகளே அணியென்றான சிரிப்புகள். ஒலிகொண்ட ஒளிகள். வளையணிவிப்பவன் அவர்களை கைபற்றி அணிகளின் உலகுக்குள் அழைத்துச் செல்கிறான். உடல்குவித்து சிறுஅணித்தோரண வாயிலினூடாக அப்பால் நுழைகிறது கை. அள்ளிக்கொள்கிறது.  நிறைவுடன் விரிகிறது. அசைத்து ஒலியெழுப்பி நகைக்கிறது. வளையலிடுபவன்போல பெண்ணின் நகைமுகம் நோக்கி விழிகளுக்குள் விழிசெலுத்தி சொல்லாட வாய்ப்புள்ளவன் எவன்? அவள் அழகையும் இளமையையும் புகழ தருணம் அமைந்தவன். அவள் வண்ணத்தையும் மென்மையையும் வாழ்த்தினாலும் பிழை செய்தவனாக உணரப்படாதவன்.

வளையலுக்கு நீளும் கையின் அச்சமும் ஆவலும். அதன் மென்வியர்வை. அலகுசேர்த்த ஐந்து கிளிகள். ஐந்து நீள்மலர்கள். கைமணிகளில் முட்டித் தயங்குகிறது வளை. முன்செல்லலே ஆகாதென்று நின்றிருக்கிறது. ஏதோ ஒரு கணத்தில் மத்தகம் தாழ்த்தும் யானைகள் என கைமணிகள் அமிழ்கின்றன. வளையலை தன்மேல் ஏறிக்கடந்துசெல்ல ஒப்புகின்றன. சென்ற வளையல் அங்கே என்றுமிருப்பதுபோல் உணர்கிறது. சச்சியின் கைவிரல் மணிமுட்டுகள் மிகப்பெரியவை. அவற்றைக் கடந்துசெல்லும் பெரிய வளையல்கள் அவள் மெலிந்த மணிக்கட்டில் வளையங்களென தொங்கின. எனவே எடுத்துப்பொருத்தும் பொன்வளைகளை மட்டுமே அவள் எப்போதும் அணிந்தாள். சங்குவளையல்களையும் தந்தவளையல்களையும் சந்தனவளையல்களையும் பளிங்குவளையல்களையும் அவள் விரும்பினாள். அணிந்தால் அவை  அழகிழப்பது கண்டு வெறுத்தாள். தன் தோழியர் எவரும் சங்கும் பளிங்கும் தந்தமும் சந்தனமும் அணியலாகாதென்று தடுத்தாள். தன் முன் பொருத்தமான சங்குவளை அணிந்துவரும் சேடிமேல் சினம்கொண்டு பிறிதொன்று சொல்லி ஒறுத்தாள். அனலும் பொறாமையும் அணையாப் பெருஞ்சினமும் கொண்ட அவளை அருளும் மருளும் ஒன்றென முயங்கிய காட்டுத்தெய்வம் ஒன்றை வழிபடுவதுபோல அணுகினர்.

மகளிர்மன்றுக்குள் வார்ப்பு வளையல்களன்றி செதுக்கு வளையல்கள் கொண்டுவரக் கூடாதென்று மொழியா ஆணை இருந்தது. ஆகவே இந்திரன் தன் பேழையை எடுத்துவைத்து மூடியைத் திறந்து முத்துச்சங்கு, அருமணிப்பளிங்கு, செதுக்குதந்த வளையல்கள் அடங்கிய தட்டுகளை எடுத்து பரப்பியபோது மகளிர் முகங்கள் அச்சத்தால் சிலைத்தன. எவரும் அணுகிவந்து அவற்றை நோக்கவில்லை. மென்முருக்குப் பலகையாலான தட்டுகளில் பட்டுக்குழாய்களில் அமைந்த வளையல்களை நிரத்திவிட்டு இந்திரன் புன்னகையுடன் “வருக, அழகியரே! உங்கள் புன்னகையை வளையலொளி வெல்லுமா என்று பார்ப்போம். உங்கள் சிரிப்புக்கு தோழியாகட்டும் வளையலோசை” என்று பகட்டுமொழி சொன்னபோதும் எவரும் அணுகவில்லை. ஆனால் விழிவிலக்கி அப்பால் செல்லவும் எவராலும் இயலவில்லை. அவர்கள் அத்தகைய அணிவளைகளை அதற்குமுன் கண்டதே இல்லை.

அணுகும்போதே இந்திரனின் வளையல்களை நோக்கிவிட்டிருந்த சச்சி “அணிச்செதுக்கு வளையல்களா?” என்றபடி அருகே வந்து இடையில் கைவைத்து நின்றாள். “ஆம் இளவரசி, அரியணையமர்ந்து முடிசூடும் அரசியர் அணியவேண்டியவை. நீரலைகள்போல் அருமணிகள் ஒளிவிடுபவை. பாருங்கள்” என்றான். சச்சி முகத்தில் வஞ்சக்கனல் வந்துசென்றதைக் கண்ட தோழியர் அஞ்சி அறியாது மேலும் பின்னடைந்தனர். ஒருத்தி இளவரசி அறியாமல் சென்றுவிடு என்று இந்திரனுக்கு விழிகாட்டி உச்சரிப்புகூட்டி சொன்னாள். அவன் அவர்களின் அச்சத்தை புரிந்துகொள்ளாமல் “அமர்க இளவரசி, தங்கள் கைகளுக்கென்றே அமைந்த அணிவளைகளின் தவத்தை முழுமைசெய்யுங்கள்” என்றான்.

“என் கைக்கு பொருந்துவன எவை?” என்றபடி அவள் அமர்ந்தாள். அவள் புன்னகைக்குள் இருந்த சீற்றத்தை அறிந்த தோழியர் ஒருவரை ஒருவர் விழிமுனையால் நோக்கியபடி மெல்ல அமர்ந்தனர். அவர்களின் முகங்கள் வெளுத்து மேலுதட்டில் வியர்வை பனித்திருந்தது. கைவிரல்களை பின்னிக்கொள்கையில் வளையல்கள் ஒலித்தன. “இவை தங்கள் கைகளுக்கு பொருந்துபவை, இளவரசி” என இந்திரன் வளையல்களை எடுத்து முன்வைத்தான். “இவை மதவேழத்தின் மருப்பில் எழுந்த பிறைநிலவுகளை கீறிச் செய்தவை. அணிச்செதுக்குகளை நோக்குக! எட்டு திருமகள்களும் குடிகொள்கிறார்கள். எழு வகை மலர்கள் கொடிபின்னி பூத்துள்ளன” என்று சொல்முறியாது பேசிக்கொண்டே அவன் வளையல்களை எடுத்தான்.

“இவை வெண்பளிங்குக் கல்வளைகள். அரக்கிட்ட குழிகளில் அமைந்துள்ளன அருமணிகள். இளங்காலை ஒளியில் விண்மீன்கள் என மின்னுகின்றன அவை.” அவள் “என் மணிக்கட்டுக்கு பொருந்தியமையவேண்டும்… நீரே அணிவித்துவிடுக!” என கையை நீட்டினாள். அவன் எடுத்த வளையல்கள் அவள் கைமணிகளை கடக்கா என்பதை உணர்ந்த தோழியர் மூச்சிழுத்தனர். “வளையலிட அறிந்துள்ளீர், அல்லவா? தன் தொழில் நன்கறியாத வணிகனை இங்கே தலைமழித்து சாட்டையால் அடித்து கோட்டைக்காட்டுக்கு அப்பால் வீசிவிடுவது வழக்கம்” என்றபோது சச்சி மெல்ல புன்னகைத்தாள். வஞ்சம்கரந்த அவள் புன்னகை கிள்ளி எடுத்த சிறுசெம்பட்டு என ஓரம் கோணலாகியிருக்கும் என தோழியர் அறிந்திருந்தனர். அவர்கள் இரக்கத்துடன் அவ்வணிவணிகனை நோக்கினர்.

“தங்கள் விரல்மணிகள் பெரியவை, இளவரசி. இவ்வளையல்கள் அவற்றை கடக்கா” என்றான் இந்திரன். “ஆனால் பெருவெள்ளமென பொழிந்து நதிகளை நிறைக்கும் மழையை இளங்காற்றுகள் சுமந்துவருகின்றன. மிகமிக மென்மையான ஒன்று அவ்வரிய பணியை செய்யும்…” என்றபின் தோழியரிடம் “நீங்கள் சற்று விலகுக! நான் இளவரசியிடம் மட்டுமே அதை காட்டமுடியும்” என்றான். அவர்கள் அப்பால் விலகினர். அவன் தன் பெட்டிக்குள் இருந்து வாழைத்தளிர் என மிகமிக மென்மையாக இருந்த பட்டுத்துணி ஒன்றை எடுத்தான். அதை அவள் கையில் ஒரு களிம்புப்பூச்சுபோல மெல்ல பரப்பி அதன்மேல் அவ்வளையல்களை வைத்தான். மெல்ல பட்டைப்பற்றி இழுத்தபோது அவள் கையை இனிதாக வருடியபடி வளையல் எழுந்து கடந்து மணிக்கட்டில் சென்றமைந்தது.

இரு கைகளிலும் சங்கும் பளிங்கும் தந்தமும் செதுக்கி அருமணி பதித்த வளையல்களை அணிவித்தபின் அத்துணியை அவள் முன் இட்டான். மென்புகை என அது தரையில் படிந்தது. அவள் விழிதூக்கி அவனை நோக்கிய கணத்தில் இளைஞனாக தன் அழகுத்தோற்றத்தை அவன் காட்டினான். அவள் விழிகளுக்குள் கூர்ந்து நோக்கி “இந்த மென்மை என் உள்ளத்திலமைந்தது, இளவரசி” என்றான். முதல்முறையாக அவள் நாணம்கொண்டு முகம் சிவந்தாள். விழிகள் நீர்மைகொள்ள இமைசரித்து நோக்கை விலக்கிக்கொண்டாள். அவள் கழுத்தில் ஒரு நீலநரம்பு துடித்தது. முலைக்குவைகள் எழுந்தமைந்தன. அவள் எழுந்து எவரையும் நோக்காமல் தன் அறைநோக்கி ஓடுவதை தோழியர் திகைப்புடன் நோக்கினர்.

அவளுடன் சிரித்தபடி உடன்வந்தன வளையல்கள். அவள் அசையும்போதெல்லாம் ஒலித்தன. தன்னுடன் பிறிதொருவர் பிரிக்கமுடியாதபடி இணைந்துகொண்டதை அவள் உணர்ந்தாள். கைகளை நெஞ்சோடணைத்தபடி மஞ்சத்தில் படுத்து கண்களை மூடி புன்னகை செய்தாள். அவள் மட்டுமே கண்ட அவன் முகம் அவள் விழிமூடினாலும் திறந்தாலும் அழியாத ஓவியமென அவளுக்குள் பதிந்திருந்தது. அந்த முகத்தை அவள் மிக நன்றாக அறிந்திருந்தாள்.

சச்சி இந்திரன்மேல் பெருங்காதல் கொண்டாள். காதல் பெண்களை பிச்சிகளாக்குகிறது. காதல் கொள்ளும்வரை அவர்கள் ஒவ்வொன்றையும் எண்ணி எண்ணி இயற்றுகிறார்கள். உலகியலில் திளைக்கிறார்கள். அறியாதவற்றை அஞ்சுகிறார்கள். தன்னில் திகழ்கிறார்கள். தன்னை நிகழ்த்துகிறார்கள். காதலின் ஒளிகொண்டதும் ஆடைகளைந்து ஆற்றில்குதிப்பதுபோல் அதுவரை கொண்டிருந்த அனைத்தையும் உதறி பாய்ந்து பெருக்கில் திளைத்து ஒழுகிச் செல்கிறார்கள். திசை தேர்வதில்லை. ஒப்புக்கொடுத்தலின் முழு விடுதலையில் களிக்கிறார்கள். எண்ணுவதில்லை, எதையும் விழைவதில்லை, அஞ்சுவதில்லை, எவரையும் அறிவதுமில்லை.

அவள் காதல்கொண்டுவிட்டாள் என தோழியர் அறிந்தனர். அக்காதலன் எவரென்றும் உணர்ந்தனர். ஆனால் அவன் எங்கிருந்து வந்தான் என்று அறியாது குழம்பினர். அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் அவளிடம் வந்துகொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை. இளங்காலையில் சிட்டுக்குருவியென மகரந்த மணத்துடன் அவள் அறைக்குள் நுழைந்தான். அவள் தோட்டத்தில் தனித்திருக்கையில் ஆண்குயிலென வந்து  குழலிசைத்தான். தனித்திருக்கும் அறைக்குள் பொன்வண்டென யாழ்மீட்டி வந்தான். அவளுடன் சொல்லாடினான். அச்சொற்களனைத்தையும் அவள் கனவுக்குள் பலநூறுமுறை முன்னரே கேட்டிருந்தாள்.

தன்னை மாயக்கலை தெரிந்த வஜ்ராயுதன் என்னும் கந்தர்வன் என அவளிடம் அவன் அறிமுகம் செய்துகொண்டான். மலர்ச்சோலையில் கொடிக்குடிலில் அவளுடன் இருக்கையில் அவன் கேட்டான் “உன்னை நான் மணம் கொள்ளக் கோரினால் உன் தந்தை என்ன செய்வார்?” அவள் முகம் கூம்பி தலைகுனிந்து “நீங்கள் தைத்யரோ தானவரோ அல்ல என்றால் ஒருபோதும் ஒப்பார். என்னை இந்திரனின் அரியணையில் அமரச்செய்ய பெரும்போர் ஒன்றை தொடுக்கவிருக்கிறார்” என்றாள். “அவ்வண்ணமென்றால் என்னுடன் நீ வந்துவிடு… நாம் கந்தர்வ உலகுக்குள் சென்று மறைந்து வாழ்வோம்” என்றான்.

“நான் இந்த நகரின் ஏழு காவல்சூழ்கைகளை கடக்கமுடியாது” என்றாள் சச்சி. “இதை காலகேயரும் புலோமரும் ஆள்கிறார்கள். அவர்கள் மட்டுமே அறிந்த நுண்சொல் வலை இதை பதினான்குமுறை சூழ்ந்துள்ளது.” இந்திரன் “அச்சொற்களை நீ எனக்குரை. நான் அவர்களை ஏமாற்றி உன்னை இங்கிருந்து அழைத்துச்செல்கிறேன்” என்றான். அவள் விழிநீருடன் “எந்தை அவற்றை எனக்கு கற்றுத்தருகையில் ஒருபோதும் பிறரிடம் பகிரலாகாதென்று குலம்மீதும் எங்கள் கொடிமீதும் அவர் முடிமீதும் ஆணைபெற்றுக்கொண்டார்” என்றாள். “ஆம், ஆனால் தந்தையைக் கடக்காமல் மகள் தன் மைந்தனை பெறமுடியாது என்பதே உலகநெறி” என்றான் இந்திரன். “வீழ்ந்த மரத்தில் எழும் தளிர்களை பார். அவை அந்த மரத்தையே உணவென்று கொள்கின்றன. ஆனால் மரம் வாழ்வது தளிர்களின் வழியாகவே.”

அவளை மெல்ல சொல்லாடி கரைத்தான். அவள் காலகேயரும் புலோமரும் கொண்டிருந்த மந்தணச்சொல் நிரையை, குறிகளின் தொகையை அவனுக்கு உரைத்தாள். ஒருநாள் இரவில் தன் வெண்புரவியாகிய உச்சைசிரவஸின் மேல் ஏறிவந்த இந்திரன் அதை பிறைநிலவின் ஒளிக்கீற்றுகளுடன் உருமறைத்து நிற்கச்செய்துவிட்டு அரண்மனைக்குள் புகுந்து அவளை அழைத்துக்கொண்டான். அவன் புரவியில் ஏறிக்கொண்டதும் அசுரர்கள் அவனைக் கண்டு எச்சரிக்கை முரசை முழக்கினர். காலகேயரும் புலோமரும் படைக்கலங்களுடன் அவனை சூழ்ந்தனர்.

ஆனால் அப்போது அவனுடன் தேவர்படைகள் முகில்குவைகளுக்குள் ஒளிந்து வந்து ஹிரண்யபுரியை சூழ்ந்துவிட்டிருந்தன. அவர்கள் புலோமர்களுக்கும் காலகேயர்களுக்கும் மட்டும் உரிய மறைமொழியில் பொய்யாணைகளை எழுப்பி பரப்பினர். ஆணைகளால் குழம்பிய புலோமரும் காலகேயரும் ஒருவரோடொருவர் போரிட்டனர். தைத்யரும் தானவரும் சிதறினர். வெறுந்திரள் என்றான அப்படையைத் தாக்கி அழித்தனர் தேவர். புரவியிலேற்றி சச்சியை விண்ணுக்குக் கொண்டுசென்று அமராவதியில் அமர்த்திவிட்டுத் திரும்பிய இந்திரன் புலோமனை களத்தில் எதிர்கொண்டான்.

தன் அசுரப்பெரும்படை காற்றில் முகில்திரளென சிதறியழிவதை நோக்கி சீறி எழுந்து போரிட்ட புலோமனை தன் மின்படைக்கலத்தால் நெடுகப்போழ்ந்து கொன்று வீழ்த்தினான் இந்திரன். புலோமன் அலறியபடி மண்ணில் விழுந்து நிலத்தில் புதைந்தான். அவன் வேள்வியாற்றலால் விண்ணில் நின்றிருந்த ஹிரண்யபுரி சிதறி பாறைமழை என மண்ணில் விழுந்து புதைந்தது. வெற்றியுடன் இந்திரன் திரும்பிவந்தபோது மீண்டும் இந்திராணியாக ஆகிவிட்டிருந்த சச்சி அவனை புன்னகையுடன் வரவேற்று மங்கலக்குறியிட்டு வாழ்த்தி அரண்மனைக்குள் அழைத்துச்சென்றாள்.

tigerசச்சியில் இந்திரன் ஜெயந்தனையும் ஜெயந்தியையும் பெற்றான். அன்னையின் இயல்புகள் அனைத்தையும் கொண்டிருந்தாள் ஜெயந்தி. மீண்டுமொருமுறை சொல்லப்படும்போது சொற்கள் கூர்மை கொள்கின்றன. விண்ணுலகில் எப்போதும் சினம்கொண்டு எரிந்துகொண்டிருந்த அவளை மண்ணுலகில் மலைமேல் நிற்கையில் ஒரு செங்கனல்துளி என மானுடரும் நோக்க இயன்றது. அனைவரும் அவளிடமிருந்து அகன்றே இலங்கினர். அவளை எதிர்கொள்கையில் நாகத்தின் முன் எலி என ஒரு பதுங்கல் அனைவர் உடலிலும் எழுந்தது.

எதன்பொருட்டு அவள் சினம் கொள்வாள் என தேவரும் முனிவரும் அறிய முடியவில்லை. உடன்பிறந்தவனும் அன்னையும் தந்தையும்கூட அதை உணர இயலவில்லை. அவளும் தான் சினம் கொள்ளவேண்டியது எதன்பொருட்டு என எப்போதும் எண்ணியிருக்கவில்லை. சினம் அவள் உடலை பதறச்செய்து உள்ளத்தை மயக்கத்திலாழ்த்தியது. சினமடங்கியதும் அவள் இனிய களைப்பொன்றிலாழ்ந்து ஆழ்ந்த நிறைவை அடைந்தாள். அவ்வின்பத்தின் பொருட்டே அவள் சினம் கொண்டாள். சினம் கொள்ளக்கொள்ள சினத்திற்கான புலன்கள் மேலும் கூர்மைகொண்டன. அவை சினம்கொள்ளும் தருணங்களை கண்டடைந்தன. அவள் முகம் சினமென்பதன் வடிவமாக ஆகியது. அவள் சொற்களும் நோக்கும் சினமென்றே மாறின.

புரங்களை எரிக்கும் அனலை தன் சொல்லில் அடையும்பொருட்டு சுக்ரர் கயிலைமலை அடிவாரத்தில் சிவனை நோக்கி தவமிருக்கும் செய்தியை அவர் தவம் முதிரும் கணத்திலேயே தேவர் அறிந்தனர். இந்திரனின் அவையில் வெம்மை கூடிக்கொண்டே சென்றதை மெல்லியலாளரான அவைக்கணிகையரே முதலில் அறிந்தனர். அவர்கள் ஆடல்முடித்ததும் உடல் வியர்வைவழிய மூச்சில் அனல்பறக்க விழிகள்எரிய சோர்ந்து அமர்ந்தனர். “என்னடி சோர்வு?” எனக் கேட்ட மூத்தவர்களிடம் “அவையில் அனல் நிறைந்துள்ளது” என்றனர். “அது நோக்கும் முனிவரின் கண்கள் கொண்டுள்ள காமத்தின் அனல்” என முதுகணிகையர் நகையாடினர். ஆனால் பின்னர் அவ்வனலை அவர்களும் உணரலாயினர். அனல் மிகுந்து சற்றுநேரம் அங்கு அமர்ந்ததுமே உடல்கொதிக்கத் தொடங்கியது. பீடங்கள் சுடுகின்றன என்றனர் முனிவர். படைக்கலங்கள் உலையிலிட்டவைபோல் கொதிப்பதாக சொன்னார்கள் காவலர்.

பின்னர் இந்திரனே தன் அரியணையில் அமரமுடியாதவனானான். அவைக்கு எவரும் செல்லாமலானார்கள். உள்ளே அரசமேடையிலிருந்த இந்திரனின் அரியணை எரிவண்ணம் கொண்டு கொதித்தது. அதன் சாய்வும் கைப்பிடியும் உருகி வடிவிழந்தன. “ஏன் இது நிகழ்கிறது? வரும் இடர் என்ன?” என்று இந்திரன் தன் அவைநிமித்திகரை அழைத்து கேட்டான். அவர்கள் நிகழ்குறிகள் அனைத்தும் தேர்ந்து “எவரோ ஒரு முனிவர் தவம்செய்கிறார். அத்தவம் தேவர்களுக்கு எதிரானது. என்றோ ஒருநாள் இந்நகரை அழிக்கும் வாய்ப்புள்ளது” என்றனர். “எவர் என்று சொல்க!” என அச்சத்துடன் இந்திரன் கேட்டான். அவர்கள் “அதை எங்கள் முதலாசிரியரே சொல்லக்கூடும்” என்றனர்.

நிமித்தநூலின் முதலாசிரியரான சூரியரை அவருடைய குருநிலைக்குச் சென்று வணங்கி வருநெறி கேட்டான் இந்திரன். அவர் மேலும் நுண்குறிகள் சூழ்ந்து “கயிலை மலையடிவாரத்தில் சுக்ரர் தவம் செய்கிறார். தன் சொல்லை வடவையெரி ஆக்கும் வல்லமையை கோரவிருக்கிறார்” என்றார். “சுக்ரரா? அவர் நம் ஆசிரியரின் முதன்மை மாணவர் அல்லவா?” என்றான் இந்திரன். “ஆம், ஆனால் ஆசிரியனுக்கும் மாணவனுக்குமான ஆணவப்பகைமை ஆலகாலத்திற்கு நிகரான நஞ்சு கொண்டது. பிரஹஸ்பதியை வெல்லும்பொருட்டு அவர் தேவர்குடியை எதிர்ப்பார். அமராவதியை அனலூட்டவும் தயங்கமாட்டார்” என்றார் சூரியர்.

இந்திரன் “அவர் ஆற்றும் தவத்தை வென்றாகவேண்டும். எதிரியை கருவிலேயே வெல்வதைப்போல் எளிது இல்லை” என்றான். எண்ணிச் சூழ்ந்து பின் தன் அவைக்கணிகையரை அழைத்து “அவர் தவம் கலைத்து வருக! அவருள் ஓடும் ஊழ்க நுண்சொல்லின் நிரையில் ஒன்று ஒரு மாத்திரையளவு பிழைபட்டாலே போதும்” என்றான். சுக்ரரை உளம்மயக்கி வெல்லும்பொருட்டு  நூற்றெட்டு தேவகன்னியர் அணிகொண்டு சென்றனர். சுக்ரர் தன் பெருஞ்சினத்தை எரிவடிவ பூதங்களாக்கி பத்து திசைகளிலும் காவல்நிறுத்திவிட்டு தவமியற்றத் தொடங்கியிருந்தார். தழலென நாபறக்க இடியோசைபோல உறுமியபடி எழுந்து வந்த எரிபூதங்கள் அவர்களை உருகி அழியச்செய்தன.

உளம்சோர்ந்த இந்திரன் செய்வதென்ன என்றறியாமல் தன் அரண்மனைக்குள் மஞ்சத்தில் உடல்சுருட்டி படுத்துவிட்டான். அவனை தேற்றிய அமைச்சர்கள் “தென்குமரி முனையில் தவமியற்றுகிறார் நாரதர். அவரிடம் சென்று வழி உசாவுவோம். மலர் சூல்கொள்கையிலேயே கனிகொய்ய அம்பெய்பவர் அவர்” என்றனர். இந்திரன் முக்கடல் முனைக்கு வந்து அங்கே பாறைமேல் அமைந்த தவக்குடில் ஒன்றில் அமர்ந்து அலையிசை கேட்டிருந்த நாரதரை அணுகி வணங்கினான். “இசைமுனிவரே, நான் சுக்ரரின் அனல்வளையத்தை கடக்கும் வழி என்ன? அவர் கொள்ளும் தவத்தை வெல்வது எப்படி?” என்று வினவினான்.

“அனலை புனல் வெல்லும்” என்றார் நாரதர். “ஆனால் பேரனல்முன் புனலும் அனலென்றேயாகும்.” நிகழ்வதை எண்ணி புன்னகைத்து “அரசே, பேரனலை வெல்வது நிகரான பேரனல் ஒன்றே. வேடர்கள் அறிந்த மெய்மை இது” என்றார். “நான் செய்யவேண்டியது என்ன?” என்றான் இந்திரன். “சுக்ரருக்கு நிகரான சினமும் சுக்ரரை வெல்லும் வஞ்சமும் கொண்ட ஒருவரை அனுப்புக!” என்றார் நாரதர். அக்கணமே இந்திரன் செல்லவேண்டியது யார் என முடிவெடுத்துவிட்டான். “அவள் அவ்வண்ணம் பிறந்ததே இதற்காகத்தான்போலும்” என உடன்வந்த அமைச்சர்களிடம் சொன்னான். “கடுங்கசப்புக் கனிகளும் உள்ளன காட்டில். அவற்றை உண்ணும் விலங்குகளுக்கு அவை அமுதம்” என்றார் அமைச்சர்.

இந்திராணி தன் மகளை சுக்ரருக்கு மணமுடித்து அனுப்ப முதலில் ஒப்பவில்லை. “அழகிலாதவர், கேடுள்ளம் கொண்டவர், கீழ்மையில் திளைப்பவர். என் மகளுக்கு அவரா துணைவர்?” என்று சினந்து எழுந்து கூவினாள். “என் மகளுக்கு அவள் தந்தையை வெல்லும் மாவீரன் ஒருவன் வருவான். வரவில்லை என்றால் அவள் அரண்மனையில் வாழட்டும். நான் ஒருபோதும் அவளை அவருக்கு அளிக்க ஒப்பமாட்டேன்” என்று சொல்லி சினத்துடன் அறைநீங்கினாள். “அரசியின் ஒப்புதலின்றி இளவரசியை அவருக்கு அளிக்கவியலாது, அரசே” என்றார் அமைச்சர். “உங்கள் மயக்குறு சொற்திரள் எழட்டும். அரசியை எவ்வண்ணமேனும் உளம்பெயரச் செய்யுங்கள்.”

ஆனால் இந்திராணியை தேடிச்சென்ற இந்திரன் முன் அவள் வாயிலை ஓங்கி அறைந்தாள். “அவர் முகத்தை நான் நோக்க விழையவில்லை. அவரில் எழும் ஒரு சொல்லும் எனக்குத் தேவையில்லை” என்று அவள் கூவினாள். சோர்ந்தும் கசந்தும் தன் மஞ்சத்தறைக்கு வந்து இரவெல்லாம் இயல்வதென்ன என்று எண்ணிச் சலித்து உலவிக்கொண்டிருந்தான் இந்திரன். ஒன்று தொட்டு எடுக்கையில் நூறு கைவிட்டு நழுவுவதே அரசாடல் என்றும் நூறுக்கும் அப்பால் ஒன்று எழுந்து கைப்படவும் கூடும் என்றும் அறிந்திருந்தான் என்பதனால் அதைத் தேடி தன் உள்ளத்தை மீண்டும் மீண்டும் துழாவிக்கொண்டிருந்தான்.

ஆனால் அன்றிரவு துயில்நீத்து தன் அறையில் மஞ்சத்தில் படுத்து உருண்டுகொண்டிருந்த இந்திராணி புலரிமயக்கில் உளம் கரைந்தபோது அவள் கனவில் புலோமன் எழுந்தான். அவன் வலப்பக்கம் காலகையும் இடப்பக்கம் புலோமையும் நின்றனர். அவர்களுக்குப் பின்னால் பேருருக்கொண்ட மகாநாகமாக திதி ஏழுதலைப் படம் விரித்து அனல்விழிகளுடன் நோக்கிநின்றாள். “மகளே, நம் குலத்துக்காக” என்றான் புலோமன். “தந்தையே…” என அவள் விம்மினாள். “அவள் நம் குலத்தாள்” என்று அவன் மீண்டும் சொன்னான். விழித்துக்கொண்ட இந்திராணி அக்கனவை சற்றும் நினைவுறவில்லை. ஆனால் அவள் உள்ளம் மாறிவிட்டிருந்தது. புன்னகைக்கும் முகத்துடன் காலையில் வந்து இந்திரனின் அறைக்கதவை தட்டினாள். எரிச்சலுடன் வந்து திறந்த அவனிடம் “நம் மகள் செல்லட்டும்” என்று சொன்னாள்.

அன்னையும் தந்தையும் ஆற்றுப்படுத்த ஜெயந்தி இரு கந்தர்வப் பெண்களால் வழிநடத்தப்பட்டு சுக்ரரை சந்திக்கும்பொருட்டு சென்றாள். சீறி எதிர்வந்த எரிபூதங்களை நோக்கி அவள் சினம்கொண்டு சீறியபோது அவை அனலவிந்து தணிந்து பின்வாங்கின. அவள் விழிமூடி அமர்ந்திருந்த சுக்ரரின் அருகே சென்று நின்றாள். அவருடைய இடத்தொடையில் தன் கைகளால் தொட அவர் தவத்துக்குள் பேரழகுடன் எழுந்தாள். அவளுடன் அங்கு ஆயிரம் முறை பிறந்து காமம்கொண்டாடி மைந்தரை ஈன்று முதிர்ந்து மறைந்து பிறந்து பின் விழித்த சுக்ரர் எதிரில் நின்ற பெண்ணை நோக்கி சினத்துடன் தீச்சொல்லிட நாவெடுத்தார். அவள் சினத்துடன் “ஏன் சினம்? நான் உங்கள் துணைவி” என்றாள். சினம் அடங்கி “ஆம்” என்றார் அவர்.

சுக்ரரின் துணைவியாக ஜெயந்தி அவருடன் காட்டில் வாழ்ந்தாள். சினம்கொண்டு வஞ்சம்பயின்று தேர்ந்த அவள் உள்ளம் அவர் சினத்தையும் வஞ்சத்தையும் சித்திரப்பட்டுச் சீலையை இழைபிரித்து நூலாக்கி அடுக்குவதுபோல முற்றறிந்தது. சினமும் வஞ்சமும் காதல்கொண்ட பெண்ணில் வெளிப்படுகையில் அவை அழகென்றும் மென்மையென்றும் பொருள்கொள்வதை சுக்ரர் உணர்ந்தார். தன்னை அன்றி பிறிதொன்றை விரும்பியிராத அவர் தன்னை அவளில் கண்டு பெருங்காதல் கொண்டார். பிறிதொன்றில்லாமல் அவளென எழுந்த தன் ஆணவத்தில் மூழ்கித் திளைத்தார். பெண்ணென்று உருக்கொண்டு தன்னுடன் தான் காமம் கொள்ளுதலே பெருங்காதலென்று அறிக!

“தேவமகள் ஜெயந்தி ஈன்ற பெண்குழந்தை இரும்பில் தீட்டிய இரும்பில் எழும் அனலென்றிருந்தது. அதற்கு தேவயானி என்று பெயரிட்டனர்” என்றான் பிரியம்வதன். இந்திராணி பெருமூச்சுடன் மெல்ல அசைந்து அமர்ந்தாள். “எரி பிறப்பதை மெல்லிய சருகுகள் முதலில் அறிகின்றன. பின்னரே அறிகிறது பெருங்காடு” என்று சுவாக் சொன்னான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 49

49. விதையின் வழி

தன் மனைவி தாரை சந்திரனின் மைந்தனாக புதனைப் பெற்று அவன் அன்னையென்றே தன்னை உணர்ந்து உடன் சென்றபின் தேவகுருவான பிரஹஸ்பதி நெடுநாள் தனியனாக இருந்தார். தன் உள்ளத்தை இறுக்கி இறுக்கி கல்லென்றாக்கிக் கொண்டார். மைந்தர் எவரையும் விழியெடுத்தும் நோக்காதவராக ஆனார். தன் மாணவர்களிலேயே இளமையும் எழிலும் கொண்டவர்களிடம் மேலும் மேலும் சினமும் கடுமையும் காட்டினார். அவர்களுக்கு உடல்வற்றி ஒடுங்கும் கடுநோன்புகளை ஆணையிட்டார். முன்னரே உடல் ஒடுங்கி அழகிலாத் தோற்றம்கொண்டிருந்த சுக்ரரையே தன் முதல்மாணாக்கராக அருகிருத்தினார். அவரிடம் மட்டுமே உரையாடினார்.

பிரஹஸ்பதி மலர்களையும் அருமணிகளையும் அழகிய ஆடைகளையும் நோக்குவதையும் தவிர்த்தார். ஆனால் அவருள் வாழ்ந்த ஏக்கம் அந்த இறுக்கத்தால் மேலும் இறுகி ஒளிகொண்டது. ஒருநாள் தன் மாணவர்களுடன் ஒரு வேள்விக்குப்பின் காட்டுக்குள் நடந்து தவச்சாலை நோக்கி வருகையில் இயல்பாக கண்களைத் தூக்கிய அவர் வானிலொளிர்ந்த சிறிய கோள் ஒன்றைக் கண்டு “அது யார்?” என்றார். “சந்திரனின் மைந்தனாகிய புதன்” என்றார் உடன்வந்த சுக்ரர். பிரஹஸ்பதி குளிர்ந்த நீரால் ஓங்கி அறையப்பட்டவர்போல உணர்ந்தார். பின்னர் அவர் விழிதூக்கவில்லை.

ஆனால் அதன்பின் அவரால் அந்த ஒளித்துளியை விட்டு சித்தத்தை விலக்க இயலவில்லை. தானறிந்த அனைத்தாலும் அதை தன்னுள் இருந்து அகற்ற முயன்றார். விழைவை அகற்ற முயல்வதைப்போல  அதை வளர்க்கும் வழி பிறிதொன்றில்லை. அவர் அதையன்றி பிறிதொன்றை நினைக்காமல் இருந்ததை அவரே உணர்ந்தபோது நெடுங்காலம் சென்றிருந்தது. “ஆம்” என அவர் தனக்குத்தானே சொன்னார். “தன்னை பிறிதொருவனாக கற்பனை செய்துகொள்ளாத மானுடர் இல்லை. அறிவு மிகுந்தோறும் அக்கற்பனை மேலும் பெரிதாகிறது. நுண்மைகொள்ளும்தோறும் கூரியதாகிறது. நான் அதிலிருந்து வெளிவந்தாகவேண்டும். நான் எவரோ அதுவே நானென்றாகிறேன்.”

“ஆம் ஆம் ஆம்” என அவர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். “நான் விழைவது ஒரு மைந்தனை. என் மைந்தன் என நான் வழிபட்டவன் இருந்த இடத்தை நிரப்பும் ஒருவனை. தந்தையென்றல்லாமல் வேறெவ்வகையிலும் நான் நிறைவுகொள்ள முடியாது.” அதை முழுச்சொற்றொடர்களில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டதுமே அவர் விடுதலை பெற்றவரானார். அதுவரை அவர் முகத்தசைகளை இறுகவைத்து, புன்னகையையும் கோணலாக ஆக்கிய உள்ளமுடிச்சு அவிழ அவர் முகம் கனிந்து இனிதாகியது.

தன் அகவை முதிர்ந்துவிட்டதை அவர் உணர்ந்தார். ஆகவே தனக்கு உகந்த சிறுவன் ஒருவனை மைந்தற்பேறு கொள்ள எண்ணினார். எச்சிறுவனைக் கண்டாலும் “இதோ” என உள்ளம் துள்ளினார். அணுகிச் செல்லச்செல்ல “இவனல்ல” என விலக்கம் கொண்டார். “விண்ணுலாவியான மைந்தனுக்கு நிகரான ஒருவனை மண்ணில் தேடுகிறேனா? என்னையே அறிவிலியென்றாக்கிக் கொள்கிறேனா?” என்று அவர் தன்னை கடிந்துகொண்டார். ஆனால் அவ்வொப்பீட்டிலிருந்து அவரால் தப்பமுடியவில்லை.

அந்நாளில் ஒருமுறை அவர் கங்கைக்கரையில் உலவியபோது நீரில் பொன்னிறமீன் ஒன்று துள்ளுவதைக் கண்டு அவ்வழகில் மெய்மறந்து நின்றார். அதன் விந்தையால் கவரப்பட்டு அருகணைந்தபோது அது ஒரு சிறுவன் என்பதை உணர்ந்தார். மானுட உடல் ஒன்றில் அத்தகைய அழகை அவர் அதற்கு முன் கண்டதில்லை. “ஆம், இவனே” என கூவியது உள்ளம்.

கரையில் அவனை நோக்கி மெய்மறந்து நின்றார். பின்னர் “மைந்தா, மேலே வா” என அவர் அழைத்தார். நீர்சொட்ட வெற்றுடலுடன் மேலெழுந்து வந்த மைந்தன் இளஞ்சுடர் என ஒளிவிட்டான். “உன் தந்தை யார்? அன்னை எவர்?” என்று கேட்டார். அன்னை காட்டுப்பெண் என்றும் தந்தை அங்கே தவம்செய்ய வந்த அந்தணர் ஒருவர் என்றும் அவன் சொன்னான். “மூவெரிகொடை முடித்து முற்றொளியுடன் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு என் அன்னை மையல்கொண்டாள். அவரிடமிருந்து என்னை பெற்றெடுத்தாள்” என்றான்.

அவன் அன்னை அவனுக்கு இட்ட பெயர் கசன். கசனுடன் அவன் வாழ்ந்த காட்டுக்குள் சென்று அவன் அன்னையை வணங்கி அவனை தனக்கு மைந்தர்கொடை அளிக்கும்படி கோரினார் பிரஹஸ்பதி. அவனை  மாபெரும் வேத அறிஞனாக ஆக்குவதாக வாக்குறுதி அளித்தார். “ஆம், நானே அவனை உரிய ஆசிரியரிடம் கொண்டுசென்று சேர்ப்பது குறித்து கவலைகொண்டிருந்தேன். அவன் இங்கிருப்பது எங்கள் குடிக்கே இடர். அரசனின் அருமணியை மின்மினி என்று எடுத்துக்கொண்டுவந்த காகம் என என்னை என் குடியினர் நகையாடுகிறார்கள்” என்றாள் அவன் அன்னை. “தங்கள் மைந்தனென்றும் மாணவனென்றும் இவன் அமைக!” என்று சொல்லி நீரூற்றி அவனை கையளித்தாள்.

பிரஹஸ்பதி அவனை தன் தவக்குடிலுக்கு கொண்டுசென்றார். விண்ணில் தேவகுருவாக அவருடைய ஒளியுடல் விளங்க ஊனுடல் இமயமலைச்சாரலில் சிந்துவின் கரையில் தர்மத்வீபம் என்னும் சிறிய ஆற்றிடைக்குறையில் அமைந்த தவக்குடிலில் மாணவர்களுடன் வாழ்ந்தது. அங்கே அவருடைய மைந்தனாக அவன் சென்று சேர்ந்தான். காட்டில் கன்றுமேய்த்தும் குழலூதியும் தந்தையிடம் வேதமும் வேதமெய்மையும் கற்றும் அவன் வாழ்ந்தான்.

கசனின் மெய்யழகை அக்குருநிலையில் அனைவரும் வியந்தனர். அவனுடன் இருக்கையில் அத்தனை விழிகளும் அவனை நோக்கியே திரும்பியிருந்தன. வேறுபக்கம் திரும்பியிருந்தால் அங்கே ஆடியோ நீர்ப்பரப்போ இருந்தது. அவன் சிறுசுனைகளில் இறங்கினால் சுனைநீர் ஒளிகொண்டு அலைவிளிம்புகள் புன்னகைக்கின்றன என்று கவிபுனையும் மாணவர்கள் பாடினர். மைந்தனை நோக்கி நோக்கி விழிசலிக்காதவரானார் பிரஹஸ்பதி. “மெய்யழகு என்பது மானுடன் தானாகவே எய்த இயலாதது. அதனாலேயே அது தெய்வங்களின் கொடை” என அவர் சொன்னார். “கோடிகோடி கற்களில் சிலவே அருமணிகள். அவை மணிமுடிகளில் அமையவேண்டியவை. செங்கோல்களில் ஒளிரவேண்டியவை. தெய்வங்களுக்கு அணியாகவேண்டியவை.”

“பேரழகர்களின் வாழ்க்கை ஒருபோதும் எளிதென கடந்துசெல்வதில்லை. அவர்களை நோக்கி விழிகள் திரும்புவதனாலேயே அவர்களின் விழிகளும் அவர்களையே நோக்கிக்கொண்டிருக்கும். தன்னைத்தான் நோக்குபவன், எதன்பொருட்டு நோக்கினும், எதையோ அறிகிறான். தனிவழி செல்கிறான்” என்றார் பிரஹஸ்பதி. “பேரழகர்கள் பிறர் ஆற்றவியலாத எதையோ ஆற்றுகிறார்கள். பிறர் எய்த அரிதான எதையோ எய்துகிறார்கள்.” சுக்ரர் மெல்லிய குரலில் “ஆனால்…” என்றார். “சொல்க!” என்றார் பிரஹஸ்பதி.

“பேரழகு கொண்டவர்களில் இனிது வாழ்ந்தவர்கள் அரிதினும் அரிது. அவர்களையே தெய்வங்கள் தங்கள் ஆடலுக்கு தெரிவுசெய்கின்றன. தேவர்கள் போட்டியென கருதுகிறார்கள். பிற மானுடர் தங்களுள் ஒருவரென எண்ணுவதே இல்லை.” பிரஹஸ்பதி அவரை நோக்கியபடி விழிமலைத்து அமர்ந்திருந்தார். “செம்பு நாணயம் வாங்கும் பொருளுக்கு ஐம்மடங்கு வெள்ளி நாணயம் வாங்கும். பொன் அதைவிட ஐந்து மடங்கு வாங்கும்” என சுக்ரர் தொடர்ந்தார். “அன்போ வெறுப்போ துயரோ மகிழ்வோ அறிவோ இருளோ எதை வாங்குகிறார்களோ அதை.”

பிரஹஸ்பதி நீண்ட மூச்சுக்குப்பின் “ஆம், உண்மை” என்றார். அதன்பின் அவர் அதைப்பற்றி ஒரு சொல்லும் உரைக்கவில்லை. ஆனால் கசனை அதற்குப்பின் அவர் நாவெடுத்துப் புகழவில்லை. தன் தவக்காட்டின் எல்லைக்கு அப்பால் செல்ல அவனை விடவில்லை. அவனைப்பற்றிய புகழ்மொழிகளை அவர் தடைசெய்தார். புதர்களுக்குள் மலர்ந்த அருமலர் என அக்காட்டுக்குள் கசன் வாழ்ந்தான். “அவன் அரியவன்… ஆகவே அவனை எவரும் அறியவேண்டியதில்லை. தன்னை அறிந்து கடக்கும் ஆற்றலை அவன் அடையட்டும். வேதச்சொல் அவன் கையில் படைக்கலமென்றாகட்டும். அதன்பின்னர் அவன் வெளிப்போந்தால் துயர்கள் விலகியிருக்கும்” என்றார் பிரஹஸ்பதி.

மைந்தனுடன் தனித்துலாவுகையில் “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படவேண்டும், மைந்தா” என்றார். “மானுடர் எவரும் ஒழுக்கத்தின்பொருட்டு கணந்தோறும் உள்ளத்துடன் போரிட்டாகவேண்டும். சூழ்ந்திருக்கும் ஒவ்வொன்றும் நம் ஒழுக்கத்துடன் ஆட விடாய்கொண்டுள்ளன. இனியமலர்கள், நறுமணங்கள், தென்றல், வண்ணங்கள், ஒளிகள் அனைத்தும் பிறழ்க பிறழ்க என்றே நம் உள்ளத்திடம் ஆழமாக சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆண்கள் தங்கள் விழைவால் வழிதவறுகிறார்கள். கன்னியர் தங்கள் ஆணவத்தால், அன்னையர் தங்கள் அன்பால் வழிபிழைக்கிறார்கள். அழகர்கள் பிறர் விழைவால் பிறழ்வுகொள்கிறார்கள். மைந்தா, ஒழுக்கம் என்பது அறத்திற்குக் கொண்டுசெல்லும் பாதை. ஒழுக்கத்தில் மாறாதிரு. உன் மதிப்பால் உவகையே கொள்முதல் செய்யப்படும்.”

மைந்தனை எந்த இடருக்கும் அனுப்பலாகாது என்றே பிரஹஸ்பதி எண்ணியிருந்தார். தேவர்கள் எவரும் அவன் இருப்பதையே அறியாமலிருந்தனர். “அடர்காடுகளில் எவ்விழியும் அறியாமல் பல்லாயிரம் பொன்வண்டுகள் வாழ்கின்றன. பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன. மலர்கள் இதழ்விரித்து நிற்கின்றன. அழகு என்பது காணப்படுவதற்கானது என்பது மானுட ஆணவம் கொள்ளும் மயக்கு. நோக்கால் முழுமைசெய்யப்படும் என்றால் அது அழகெனும் பொய் என்றே கொள்க. அன்னையின் விழிமுன் குழவி கொள்ளும் அழகும் காதலன் முன் கன்னி சூடும் அழகும் காலப்பரப்பில் தோன்றி அழியும் கண்மாயங்களன்றி பிறிதல்ல. அழகென்பது ஒரு பொருளில் தன்னை நிகழ்த்தும் அது தான் அறியும்பொருட்டு அடையும் வடிவமுழுமை. அவன் இங்கிருக்கட்டும். வேதச்சொல் வேள்விகளின் வழியாக அனலாகி நுண்மையாகி வெளியென்றாகி முழுமைகொள்வதுபோல கனியட்டும்” என்றார் பிரஹஸ்பதி.

ஆனால் சுக்ரர் தன் அறிவுக்கு அறைகூவல்விட்டு வெளிச்சென்று அறியவொண்ணாததை அறிந்து  அசுரரை இணைத்து அழிவின்மையை அளித்து எதிர்வந்து நின்றபோது அவருள் சீற்றம் பெருகியது.  “என் கண்முன் நான் பேணிய தேவர்கள் தோற்கிறார்கள். அவர்களுக்கென எதையும் செய்ய நான் கடமைப்பட்டவன்” என்று அவர் மாணவர்களிடம் சொன்னார். என்ன செய்வதென்றறியாமல் நிலைகுலைந்து தன் சோலையில் உலவிக்கொண்டிருந்தார். கற்ற நூல்களெல்லாம் வெறும் சொற்களென்றாகும் ஒரு கணத்தை வாழ்க்கையில் கண்டடையாத அறிஞன் எவன் என எண்ணிக்கொண்டார். புல்லில் எழுந்த விதைகள் இவை. கோடானுகோடி. ஆனால் ஒன்று முளைக்கும். அதில் விழவேண்டும் நீர்த்துளி.

ஆற்றின்கரையில் உலவிக்கொண்டிருந்தபோது நீராடி வெற்றுடலுடன் எழுந்து வந்த கசனைக் கண்டார். “வாள் செல்லமுடியாத வழிகளில் அனல் செல்லும்” என்ற வரி அவர் சித்தத்தில் எழுந்தது. அக்கணமே அவர் முன் அனைத்தும் தெளிந்தன. உடன் பிறிதொன்றும் தெரிந்தது, சுக்ரர் அறைகூவியது அவர் அறிவை அல்ல ஆணவத்தை. அதை தன்னுள் அழுத்தி மறைத்துவிட்டு தேவர்க்கரசனை பார்க்கும்பொருட்டு கிளம்பினார். விண்ணகம் செல்லும்போதே உடன்வந்த மாணவனிடம் “சுக்ரருக்கு மகள் இருக்கிறாள் அல்லவா?” என்றார். “ஆம், ஆசிரியரே” என்றான் மாணவன். “அவள் பெயர் என்ன?” என்றார்.

அவர் உள்ளம் செல்லும் திசையை உணர்ந்த மாணவன் “அவள் பெயர் தேவயானி. பதினெட்டு ஆண்டு அகவைகொண்டவள், அழகி” என்றான். அவர் “நன்று” என்றபின் நடக்க மாணவன் மெல்ல “அவள் இந்திரனின் துணைவி சச்சிக்கு பிறந்த ஜெயந்தியின் மகள்” என்றான். பிரஹஸ்பதி விழிகளில் திகைப்புடன் நின்று திரும்பி நோக்கினார். “ஆம், அன்னையின் இயல்புகள் அவளுக்கும் கூடியிருக்கின்றன” என்றான் மாணவன். சிலகணங்கள் தலைகுனிந்து நின்று தாடியை வருடியபடி எண்ணத்தில் அலைந்து மீண்டு புன்னகையுடன் “நன்று, ஊசல் திரும்பிவருகிறது” என்றார் பிரஹஸ்பதி.

tigerஇந்திரன் தன் அறைக்கு திரும்பும்போது நடை தளர்ந்திருந்தான். அவனுடன் நடந்த அமைச்சர் “தாங்கள் எண்ணங்களில் ஆழ்ந்திருக்கிறீர்கள்” என்றார். “நீர் ஆசிரியரின் மைந்தரை பார்த்திருக்கிறீரா?” என்றான். “ஆம், ஒருமுறை. பேரழகன்.” இந்திரன் தலைகுனிந்து நடந்தான். பின்னர் “அந்தப் பெண்ணை?” என்றான். அமைச்சர் “இல்லை, ஆனால் அவளும் அழகி என்றார்கள்” என்றார். “சுக்ரர் அவளை சுட்டுவிரலில் தொட்டு எடுத்த பனித்துளிபோல பேணுவதாக ஒரு பாடல்.” இந்திரன் “அவள் என் பெயர்மகள்” என்றான். அமைச்சருக்கு அனைத்தும் புரிந்தது. “எப்போது?” என்றார். “இவள் சச்சியாக இருந்தபோது” என்றான்.

அமைச்சர் அவனுடன் நடந்தபின் “அது நன்று” என்றார். “ஏன்?” என்றான் இந்திரன். “புலோமர்களின் அடங்கா வஞ்சமும் பொறாமையும் அவளிடமிருந்தால் நமக்கு நன்று” என்றார் அமைச்சர். “உச்சிப்பாறைமேல் கயிறுகட்டி வீசப்படும் உடும்பு பிடித்தபிடியை விடாததாகத்தான் இருக்கவேண்டும்.” இந்திரன் சிலகணங்களுக்குப் பின் “அவள் என் பெயர்மகள். நாம் வென்றால் அவள் தோற்றாகவேண்டும்” என்றான். அமைச்சர் அதற்கு மறுமொழி சொல்லவில்லை.

தன் மஞ்சத்தறைக்கு சென்ற இந்திரன் எண்ணங்கள் அழுத்த பீடத்தில் அமர்ந்து வெளியே நோக்கிக்கொண்டிருந்தான். அறைக்குள் வந்த இந்திராணியின் அணிகளின் ஓசையை அவன் கேட்டான். அவள் அவனருகே வந்து அமர்ந்து “என்ன இடர்? சுக்ரரை வெல்லும் வழியொன்றைச் சொல்ல இன்று ஆசிரியர் வருவதாக சொன்னீர்கள்” என்றாள். “அவர் சொன்ன வழி முற்றிலும் உகந்ததே” என்றான் இந்திரன். பின்னர் அவள் விழிகளை நோக்கி “ஆனால்…” என்றபின் “என் மகளை சுக்ரர் மணந்துள்ளார் என அறிவாயா?” என்றான். அவள் விழிசுருக்கி “உங்கள் மகளையா?” என்றாள்.

“ஆம், அவள் உன் மகளும்கூட” என்றான் இந்திரன். அவள் விழிகள் விரிந்தன. “இங்குள்ளது நம் ஒளியுடல், தேவி. நம் கனவுடல் புவியில் ஊனுடல்கொண்டு எழுந்து வாழ்ந்து மடிகிறது. அக்கனவால் இந்நனவை நிறைவுசெய்கிறோம். அங்கு ஊனுடல்கொண்டு வாழும் யோகியர் தங்கள் ஒளியுடலால் இங்கு வாழ்ந்து அங்குள்ள நனவை நிறைவுசெய்வதுபோல” என்றான். “நீ மண்ணில் புலோமன் என்னும் அரக்கனின் மகளாகப் பிறந்தாய். அன்று உன் பெயர் சச்சி.” அவள் விழிகளில் அறிதலும் மயக்கும் மாறிமாறி அலையடித்தன.

இந்திரன் தன் அவைப்பாடகர்களாகிய பிரியம்வதன், சுவாக் என்னும் இரு கந்தர்வர்களை அழைத்துவரும்படி ஆணையிட்டான். அவர்களிடம் “கந்தர்வர்களே, இந்திராணி சச்சியாகப் பிறந்து விண்ணுக்கு எழுந்த கதையை பாடுக!” என்றான். யாழை சுதிமீட்டி ஆழ்ந்த இன்குரலில் கந்தர்வர்கள் அந்தக் கதையை பாடலானார்கள். சித்தத்தின் ஆழத்தில் துளியென்று சுருங்கி அணுவென்று செறிந்து விதையென்று துயின்றிருந்த நினைவுகள் மெல்ல விழித்தெழ கண்களின் கனவு விரிய முலைக்குவைகள் எழுந்தமைய பெருமூச்சுவிட்டபடி இந்திராணி அக்கதைகளை கேட்டிருந்தாள்.

“இது தொல்கதை. தொல்கதைகள் ஒன்று பிறிதொன்றைத் தொட்டு எழுப்பும் ஆற்றல்கொண்டவை, அரசே. அதனால் தொல்கதைகள் முடிவுறுவதே இல்லை என்றறிக!” என்றான் பிரியம்வதன். “கதையில் இருந்து கதைக்குச் செல்கையில் முந்தைய கதையை உளம் சுமந்து கொய்துகொள்க! மலராடிச் செல்லும் வண்டு மகரந்தங்களை கொண்டு செல்கிறது. முந்தைய மலரால் அடுத்த மலரை கருவுறச் செய்கிறது” என்றான் சுவாக். “தைத்ய குடியினராகிய அசுரர் முன்பு தேவர்களால் சிதறடிக்கப்பட்டார்கள். மண்ணில் சிதறி மானுட உருக்கொண்டு காட்டுக்குடியினராக அவர்கள் வாழ்ந்தனர். வேட்டையாடி உண்டும் மலைக்குடில்களில் ஒடுங்கியும் வாழ்ந்த அவர்கள் ஆயிரமாண்டுகளில் தாங்கள் எவரென்றே அறியாமலாயினர்” என்றான் பிரியம்வதன்.

“ஆனால் அவர்களின் தெய்வங்கள் அறிந்திருந்தன. அவர்களின் குடில்முற்றங்களில் உருளைமலைக்கற்களாக கோயில்கொண்டமர்ந்து நாளும் அன்னமும் மலரும் பலிகொண்ட அத்தெய்வங்களின் விழிகள் அனலணையாதவையாகவே எஞ்சின. கமுகப்பூச்சரம் உதறி துள்ளி ஆடிய  பூசகர்களின் கண்களைத் தொட்டு அகம்புகுந்து எரிந்தெழுந்தன. அசுரகுடியின் மாண்பை அவை அறைகூவின. அழியாதவர்கள் நாம், ஆளவேண்டியவர்கள் நாம், அடங்காதவர்கள் நாம் என வெறிகொண்டாடின. மீண்டும் மீண்டும் தெய்வங்களிலிருந்து தைத்யர்கள் பற்றிக்கொண்டு எழுந்தனர்” என்றான் சுவாக்.

பெயரற்ற சிறிய மலைக்குடி ஒன்றில் பிறந்தவர்கள் புலோமை, காலகை என்னும் உடன்பிறந்தார். சிறுமியராக இருவரும் வணங்கி நின்றிருக்கையில் வெறியாட்டெழுந்த வேலன் வேல்சுழற்றி அலறிப்பாய்ந்து அவர்களை அணுகி “விதை வயிறு திறக்கட்டும்… குகைச்சிம்மங்கள் எழட்டும்… ஆம் ஆம் ஆம்!” என்று கூவி ஆர்ப்பரித்து மல்லாந்து விழுந்து நுரைகக்கி உடல்வலித்து உயிர்விட்டான். “உங்கள் வயிற்றில் எழுவர் தைத்யர்களை விண்ணேற்றும் மாவீரர்” என்றனர் குலமூத்தவர்கள். “தவம் செய்க… தவத்தால் அடைவதே அரிதென்றாகும்.”

புலோமையும் காலகையும் தங்கள் குடியிலிருந்து கிளம்பி அடர்காட்டுக்குச் சென்று அங்குள்ள மலைக்குகை ஒன்றுக்குள் ஒடுங்கி தவம் செய்யலானார்கள். காலகை குகைக்குள் தவம் செய்ய புலோமை வெளியே காட்டுக்குள் கனியும் ஊனும் தேடிக் கொண்டுவந்து அவளுக்கு ஊட்டினாள். பின்னர் தன் தவவல்லமை அனைத்தையும் புலோமைக்கு அளித்து அவளை தவத்திலமர்த்தி காலகை ஊனும் கனியும் கொண்டுவந்தாள். அவர்கள் மாறிமாறி தவம் செய்து முழுமையை அணுகினர். தவம் முதிர்ந்த கணத்தில் குகைக்குள் ஒளிப்பெருக்காக பிரம்மன் எழுந்தார். அங்கிருந்த புலோமையிடம் “நீ விழைவதென்ன?” என்றார்.

“நான் அடைவன அனைத்தும் என் தங்கைக்கும் உரியவையாகவேண்டும்” என்றாள் புலோமை. பிரம்மன் மகிழ்ந்து “ஆம், அதுவே நிகழ்க!” என்றார். “என் குடிக்கு இறப்பின்மை வேண்டும்” என்றாள் புலோமை. “இறப்பின்மையை எவருக்கும் அளிக்கவியலாது, பெண்ணே” என்றார் பிரம்மன். “அவ்வாறென்றால் இதை அருள்க! என் குடிப்பிறந்த பெண்ணால் அன்றி என் குலம் வெல்லப்படலாகாது” என்றாள் புலோமை. “அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி பிரம்மன் மறைந்தார். ஊன் திரட்டி வந்த காலகையிடம் தான் சொற்கொடை பெற்றதை புலோமை சொன்னாள். “நாமிருவரும் மைந்தரைப் பெறுவோம்… நம் குடி எழுக!” என்றாள் காலகை.

குலம் திரும்பிய புலோமையும் காலகையும் தோள்திறம்மிக்க ஐந்து இளையோரை தம் கணவர்களாக ஏற்றார்கள். அவர்களிடமிருந்து இருவருக்கும் ஐம்பது மைந்தர்கள் பிறந்தனர். புலோமையின் மைந்தர் புலோமர் என்றும் காலகையின் மைந்தர் காலகேயர் என்றும் அழைக்கப்பட்டனர். இரு குலத்திலும் வீரர்கள் ஆடிப்பாவைகள் என பெருகி நிறைந்தனர். அவர்களின் ஆற்றலால் தைத்யர்கள் பெருகி மண்ணில் பரவினர். அவர்கள் அமைத்த நகர் ஹிரண்யபுரி என அழைக்கப்பட்டது.

அவர்கள் அரசர்களை வென்று கருவூலத்தை நிரப்பினர். அச்செல்வத்தை அளித்து வேள்விகளை இயற்றி விண்ணில் எழும் ஆற்றல்கொண்டனர். ஒவ்வொருநாளும் ஹிரண்யபுரி மண்ணிலிருந்து மேலெழுந்துகொண்டே இருந்தது. புலோமர்களின் கொடிவழியில் நூற்றெட்டாவது அரசனாகிய மகாபுலோமனின் ஆட்சியில் அது மலைமடிப்புகள்மேல் நிழல்விழுந்து மடிந்து நெளிந்துசெல்ல வானில் முகில்போல ஒளிகொண்டு நின்றது.

மகாபுலோமன் மண்ணிலுள்ள மன்னர்களை எல்லாம் வென்றான். விண்ணேறிச் சென்று இந்திர உலகை வெல்ல கனவு கண்டான். அக்கனவில் அவன் பொன்றாப் பெருவேட்கையுடன் அமராவதியில் உலவினான். அமராவதி நகரில் உலவிய தேவர் நிழலுரு ஒன்று தங்கள் நடுவே அலைவதைக் கண்டு அஞ்சி இந்திரனிடம் சென்று முறையிட்டனர். நிமித்திகரை அழைத்து உசாவிய இந்திரன் அவன் புலோமன் என்று அறிந்தான். மீண்டும் வந்தபோது புலோமனின் நிழலுரு மேலும் தெளிவுகொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அது உருத் திரிந்து வந்தது.

“அங்கே பெருவேள்விகள் வழியாக அவன் வேதத்திறன் கொள்கிறான். இன்னும் சிலகாலத்தில் அவன் இங்கே ஒளியுருவுடன் வந்துவிடவும்கூடும்…” என்று நிமித்திகர் எச்சரித்தனர். “அவனை வென்றாகவேண்டும்” என்று இந்திரன் தன் படைக்கலத்துடன்  எழுந்தபோது அமைச்சர் தயங்கி “அக்குலத்திற்கு பிரம்மனின் சொற்கொடை உள்ளது, அரசே. அவர்களை அவர்களின் குலத்துப்பெண் மட்டுமே வெல்லமுடியும்” என்றார். இந்திரன் சோர்ந்து அரியணையில் அமர்ந்துவிட்டான். “பெண்களின் பெருவஞ்சத்தால் உருவான நகர் அது. அப்பெண்கொடிவழியில் ஒருத்தியால் அது அழிக்கப்படுவது இயல்வதே அல்ல” என்றார் அமைச்சர். “அழிக்கப்பட்டாகவேண்டும். வேறுவழியே இல்லை” என்றான் இந்திரன். “ஆனால் என்னுள் ஏதும் எழவில்லை” என தவிப்புடன் அரண்மனையில் சுற்றிவந்தான்.

இந்திரனின் அவைக்கு நாரதர் வந்தபோது அவன் அவரைப் பணிந்து “வழியொன்று உரையுங்கள், வானுலாவியே. நான் தங்கள் அடிபணியும்  எளியோன்” என்றான். நாரதர் “அரசே, கேட்க அரிதெனத் தோன்றும். ஆனால் அக்குலத்தில் பிறக்கும் பெண்ணால் அக்குலம் அழியும் என்பதைப்போல இயல்பான நிகழ்வு பிறிதென்ன?” என்றார். வியப்புடன் நோக்கிய இந்திரனிடம் “இதுவரை அழிந்த அனைத்துக் குலங்களும் அக்குலம் ஈன்ற கன்னியரால் அல்லவா அவ்வாறாயின?” என்றார் நாரதர். இந்திரன் அது உண்மை என அக்கணமே உணர்ந்தான்.

“கன்னியில் எழுவது கடந்துசெல்லவேண்டும் என்னும் விழைவு. பஞ்சில் தொற்றியும் காற்றில் ஏறியும் பறவைக்குள் புகுந்துகொண்டும் எல்லைகடக்க வேண்டுமென கனவு காண்கின்றன விதைகள். அரசே, எல்லைகளை பெண்களின் கருவறைகள் கடப்பதன்மூலமே இங்கு உயிர்குலம் விரிந்துபரவுகின்றது” என்றார் நாரதர். “பெருவிழைவு கொண்ட பெண் ஒருத்தி அக்குடியில் எழட்டும். பெண் முளை என்றால் குலமே விதை. உறை கிழிக்காமல் அவள் எழமுடியாது.”

நாரதரின் சொல்லின்படி இந்திரன் தன்னருகே மஞ்சத்தில் துயின்ற இந்திராணியின் அருகே படுத்து அவள் காதுக்குள் “கன்னி, நீ புலோமர்குலத்து இளவரசி…” என்று மெல்ல சொல்லிக்கொண்டே இருந்தான். “உன் பெயர் சச்சி… நீ புலோமனின் மகள்” என்றான். மெல்ல அவள் முகத்தில் ஒரு புன்னகை விரிந்தது. தன் கனவுக்குள் அவள் புலோமர்குலத்து அரசி தர்மையின் மகளென ஆனாள். விண்ணில் பறந்து நின்றிருந்த ஹிரண்யபுரியில் தன் கணவனருகே படுத்து விழிமயங்கிய தர்மை துயிலில் சிரித்தாள்.

அவள் சிரிக்கும் ஒலிகேட்டு விழித்துக்கொண்ட புலோமன் “என்ன? ஏன் சிரித்தாய்?” என்றான். “பேரழகுக் கன்னி ஒருத்தி சினம் கொண்டு சீறி அணுகிய சிம்மம் ஒன்றின்மேல் ஏறி முகில்களுக்குமேல் வந்தாள். அவளை நான் அண்ணாந்து நோக்கி நின்றேன். அவள் ஒளிகொண்டு நீர்மைகொண்டு ஒரு மழைத்துளியென்றாகி உதிர்ந்தாள். என் வாயில் விழுந்தாள். தேன் என இனித்தாள். என் வயிற்றுக்குள் அவள் நுழைவதை உணர்ந்து கூசிச்சிரித்தேன்” என்றாள். நெடுநாள் குழந்தைப்பேறில்லாதிருந்த புலோமன் அதைக் கேட்டு பேருவகையுடன் எழுந்து வெளியே ஓடி நிமித்திகரை அழைத்துவரச்செய்து குறி தேர்ந்தான். “விண்மகள் போல் ஒருத்திக்கு அரசி அன்னையாவாள்” என்றனர் நிமித்திகர்.

“சிம்மம் மீது அவள் அமர்ந்திருந்தது அவள் பெருஞ்சினம் கொண்டவள் என்பதை காட்டுகிறது, அரசே” என்று நிமித்திகர் சொன்னார்கள். “குருதிவிடாய் கொண்டவள் அவள். எரிநிகர் கன்னி. அகலில் எரிந்தால் ஒளி. அடுப்பிலெரிந்தால் அன்னம். கைமீறி கூரையேறினால் நம்மை உண்டு அழிக்கும் பெரும்பசி.” புலோமன் “என் மகள் இப்புவியின் அரசி. விண்ணாள்பவள்… அவள் பெருவஞ்சம் கொண்டிருப்பதே இயல்பு. சிம்மம் அவள் அமரும் அரியணையை குறிக்கிறது” என்றான்.

தைத்யர்குலத்தின்  பொறாமையனைத்தும் கூர்கொண்டு விதையென்றாகி முளைத்தெழுந்தாள் சச்சி. குழந்தையை தூக்கிக்கொண்டுவந்து காட்டிய வயற்றாட்டி “அனலென சுடுகிறது மகவு. அரசே, கைகளில் ஏந்த முடியவில்லை” என்றாள். கைகளில் வாங்கிய புலோமன் “ஆம், நம் குலம் கொண்ட வஞ்சம் அனைத்தும் திரண்டு எழுந்துள்ளது. வாழ்க இவ்வனல்!” என்றான். நீரால் அணைக்கமுடியாத நெருப்பு என அக்குழவியை பாடினர் அசுரகுலத்துக் கவிஞர்.

அவள் பிறவிநூலை கணித்த நிமித்திகன் அவள் அசுரகுடிப் பிறந்த இந்திராணி என்று சொன்னான். புலோமன் ஏழு தொல்பூசகரை அழைத்து வருகுறி தேர்ந்தான். இந்திரனின் அரியணையில் அமர்வாள், ஐயமே இல்லை என்றனர் எழுவரும். “ஆம், இது ஓர் அறிவிப்பு. இனிமேலும் நான் மண்ணில் தங்கியிருக்கலாகாது. விண்நுழைகிறேன், அமராவதியை வென்று என் மகளை அங்கே அரியணையில் அமர்த்துகிறேன்” என்று புலோமன் வஞ்சினம் உரைத்தான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 48

48. நில்லாத்துலா

துலாவின் நடுமுள்ளென நடுங்கி நின்றிருக்கும்படியே அறத்தை தெய்வங்கள் அமைத்தன. எனவே தோன்றிய நாள்முதல் தேவரும் அசுரரும் போரிடுவது நின்றதில்லை. எவரும் முற்றிலும் வென்றதுமில்லை, முற்றழிந்ததுமில்லை. அழிந்தாலும் மீண்டு எழும் வல்லமை கொண்டிருந்தது தேவர்கள் கொண்டிருந்த அறம். ஒரு துளி ஆயிரமென கோடியென பெருகும் ஆற்றல் கொண்டிருந்தது அசுரர்களின் மறம். அமுதம் தேவர்களின் உணவு. நஞ்சே அசுரர்களுக்குரியது. அமுதோ நஞ்சின் இளையோள். தேவர்களின் ஆசிரியர் பிரஹஸ்பதி. அவருடைய முதல் மாணவராகிய சுக்ரரோ அசுரர்களுக்கு வழிகாட்டியென்றானார். அறிந்து கடந்தமையின் அமைதி பிரஹஸ்பதியில் நிறைந்திருந்தது. அறிந்து நிறையாத விசையே சுக்ரரை ஆண்டது. அப்போர் ஒருபோதும் முடிவுறுவதில்லை.

கசியப பிரஜாபதிக்கு திதியில் பிறந்த அசுரகுடியான தைத்யர்களில் பெரும்புகழ்பெற்ற ஹிரண்யகசிபுவும் ஹிரண்யாக்‌ஷனும் பிறந்தனர். ஹிரண்யகசிபுவுக்கு அனுஹ்லாதன், ஹ்லாதன், பிரஹ்லாதன், சம்ஹ்லாதன் என்னும் மைந்தர்கள் பிறந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் அசுரகுலம் பெருகிப்பரந்தது. சம்ஹ்லாதனில் ஆயுஸ்மான், சிபி, பாஸ்கலன் என்னும் மைந்தர்கள் பிறந்தனர். பிரஹ்லாதனிலிருந்து விரோசனன் பிறந்தான். விரோசனனின் மைந்தன் மகாபலி. அவன் மைந்தன் பாணன். ஹிரண்யாக்‌ஷனின் மைந்தர் சம்பரன், சகுனி, த்விமூர்த்தன், சங்கு, அஸ்வன் என்னும் அசுரகுலத் தலைவர்கள்.

பேராற்றல் கொண்ட தைத்யர்களில் ஒருவன் சூரபத்மன். அவனிடமிருந்து பானுகோபன், அக்னிமுகன், வஜ்ரபாகு, ஹிரண்யன் என்னும் மைந்தர்கள் பிறந்தனர். சிம்மவக்த்ரன் தாரகாசுரன் என்னும் பேராற்றல்மிக்க அசுரர்களும் அக்குலத்தில் எழுந்தவர்களே. சிம்மவக்த்ரனின் மைந்தன் மகாசூரன். தைத்யர்கள் நூறுமேனி முளைக்கும் விதைகள். விருத்திரன், நரகன், மகிஷன், ரக்தபீஜன் என அவர்களின் குலமூதாதையர் ஆயிரத்தொருவர். அவர்களின் குலங்களோ பன்னீராயிரம். அவர்களின் குடிகள் பதினெட்டு லட்சம். அவர்களின் எண்ணிக்கை கணம்கோடியென பெருகுவது. பெருகுவதால் அழிவின்மையை அடைந்தவர்கள் திதியின் மைந்தர்.

கசியபருக்கு திதியில் பிறந்த மைந்தனாகிய விருஷபர்வன் இறங்கி கங்கைக்கரையில் மகாதைத்யகம் எனும் நகரை அமைத்தான். அங்கு முடிசூடி அசுரர் குலம் செழிக்க ஆண்டான். அவன் கொடிவழி வந்த நூற்றெட்டாவது விருஷபர்வனின் ஆட்சியில் பாரதப் பெருநிலம் அசுரர்களின் கோலால் முழுதாளப்பட்டது. அவர்களின் சொல் செல்லாத மலையேதும் இமயத்தில் இருக்கவில்லை. கீழைக்கடல்களை அவர்களின் ஆணை ஆண்டது. நாவலந்தீவின் தென்முனையில் அவர்களின் கொடி பறந்தது. மேலை வெம்பாலையில் அனைத்து சாலைகளிலும் அவர்களின் காவல் அமைந்திருந்தது. அவர்களின் வேதமே நெறியென்று அமைந்தது.

மண்ணை வெற்றி கொண்டபின் விண்ணிலும் கொடி நிறுத்த விருஷபர்வன் விழைந்தான். ஒவ்வொருநாளும் அதற்கென வழியெண்ணி தன் அரண்மனையில் நிலையழிந்து உலவினான். அந்நாட்களில் தன் அவைக்கு வந்த நாரதரின் கால்களைப் பணிந்து “விண்ணுலாவியாகிய முனிவரே சொல்லுங்கள், அரசனின் பாதை எது?” என்றான். நாரதர் “அரசன் விதையெனில் முளையாகவேண்டும். செடியெனில் மரமாகவேண்டும். மரமெனில் காடாகவேண்டும். எந்நிலையிலும் வளர்ந்துகொண்டிருப்பதே அவனுக்குரிய நெறி” என்றார்.

“முனிவரே, நான் மண்ணை முழுதாள்கிறேன். இனி நான் செல்ல விண் ஒன்றே உள்ளது” என்றான் விருஷபர்வன். “நான் மண்ணில் அடங்குவேன் என்றால் என்ன ஆகும்?” நாரதர் “போதுமென்று எண்ணும் அரசனின் அரச இயல்பு ஒளிமங்கும். தேங்குவது நதியல்ல, பசியற்றது நெருப்பும் அல்ல” என்றார். “ஆம், நான் விண்ணை வெல்ல விழைகிறேன். இந்திரனின் அரியணையே இனி என் இலக்கு” என்றான் விருஷபர்வன். “சொல்லுங்கள், நான் விண்ணை வெல்லும் வழி எது?”

நாரதர் “உன் விழைவு பிழையல்ல. அதில் நீ வீழ்வதும் அறமே” என்றார். “இன்று தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் உள்ள வேறுபாடு ஒன்றே. அங்கு அவர்களை சொல்லளித்து வழிநடத்த மாமுனிவராகிய பிரஹஸ்பதி இருக்கிறார். நிகரான ஒருவர் உங்களுக்கும் அமையும்வரை தேவர்களுடன் நீங்கள் நிகர்நின்று போரிட இயலாது” என்றார். “முனிவரே சொல்லுங்கள், பிரஹஸ்பதிக்கு நிகரான முனிவர் யார்?” என்று விருஷபர்வன் கேட்டான்.

“ஒரு பேரறிஞருக்கு நிகரான பிறிதொரு அறிஞர் அவரது மாணவராகவே இருக்க இயலும்” என்று நாரதர் சொன்னார். “அதை அறியாத அறிஞரில்லை. எனவே தன் அறிதலில் ஒரு பகுதியை ஒருபோதும் அவர் மாணவனுக்கு அளிப்பதில்லை. தனக்கு இறுதித்துளி அறிவு அளிக்கப்படவில்லை என்று அறியாத மாணவனும் இல்லை. தான் அறிந்தவற்றிலிருந்து அவ்வறியாத பகுதியை கற்கும்பொருட்டு கற்பனையையும் அறிவையும் ஆழத்தையும் கூர்தீட்டிச் செலுத்தி தன் ஆசிரியன் அறியாத பிறிதொன்றை அவன் சென்றடைகிறான். ஆசிரியனை மாணவன் கடந்து சென்றாகவேண்டும் என்பது இப்புவி வாழவேண்டுமென்று எண்ணும் பிரம்மத்தின் ஆணை” என்ற நாரதர் “பிரஹஸ்பதியின் மாணவர் சுக்ரர். பிரஹஸ்பதியின் ஆழத்து அமைதியிலிருந்து முளைத்தெழுந்த அனல் அவர்” என்றார்.

விருஷபர்வன் கங்கைக்கரையில் குடிலமைத்து தவம்செய்திருந்த சுக்ரரை சென்று தாள்வணங்கி அசுரர்களின் ஆசிரியராக வந்து அமையும்படி வேண்டினான். “நான் உனக்கு அனைத்து அறிதல்களையும் அளிக்க முடியும், அசுரர் தலைவனே. ஆனால் தேவருக்கு நிகராக உன்னை அமைத்தல் என்னால் இயலாது” என்று சுக்ரர் சொன்னார். “அமுது உண்ட தேவர்கள் அழியாப் பேறு கொண்டவர்கள். அசுரரோ அழிந்து மீளுருவாக்கம் கொள்பவர். சிறு ஒளித்துளி பேரிருளை விலக்குவதுபோல தேவர்களால் அசுரர்கள் அழிக்கப்படுகிறார்கள் என்பதே புடவியின் நெறி” என்றார்.

விருஷபர்வன் “ஆம், அந்த அறியமுடியாத எல்லையால் கட்டுப்படுத்தப்பட்ட பெருங்கடல் நாங்கள். அதை கடக்கும்பொருட்டே தங்கள் காலடிபணிய வந்தோம். தங்களால் அது இயலுமென்று மாமுனிவராகிய நாரதர் சொன்னார்” என்றான். அச்சொல்லால் ஆழத்தில் ஒரு நச்சுத்துளி மகிழ்வுகொள்ள அதை கண்களிலிருந்த ஒளி வெளிக்காட்ட சுக்ரர் “ஆம், எதுவும் என்னால் இயல்வதே. ஆனால் அதை நான் இயற்ற விழையவில்லை. இங்கு எதன்மேல் அனைத்தும் அமைந்துள்ளதோ அதை நான் அழிக்கலாகாது, செல்க!” என்றார். அவரது உறுதியைக் கண்டு ஏமாற்றம்கொண்டு வணங்கி விருஷபர்வன் திரும்பிச்சென்றான்.

மறுநாள் விண்ணில் தேவரும் கந்தர்வரும் யக்‌ஷரும் கின்னரரும் கிம்புருடரும் கூடிய வேள்வி ஒன்றில் தன் ஆசிரியரைக்கண்டு பணிந்த சுக்ரர் விருஷபர்வன் தன்னிடம் வந்து வணங்கி உதவிகோரியதை சொன்னார். “அழிவின்மை அசுரர்களுக்குரியதல்ல என்பது புடவியின் பெருநெறிகளில் ஒன்று. அதை அவனுக்குணர்த்தி திருப்பி அனுப்பினேன்” என்றார். அப்போது மெல்லிய புன்னகை ஒன்று பிரஹஸ்பதியின் முகத்தில் வந்து மறைந்ததை அவர் கண்டார். ஆழ்புலன் ஒன்று கூர்மைகொள்ள “தாங்கள் எதை எண்ணி உவகை கொண்டீர்கள், ஆசிரியரே?” என்றார்.

தன்னை திரட்டிக்கொண்டு “தேவர்களின் அழிவின்மை அமுதத்தால் அமைகிறது. அசுரர்கள் அதை உண்ணவில்லை” என்றார் பிரஹஸ்பதி. “ஆம், அதை அனைவரும் அறிவோம். தாங்கள் எண்ணி புன்னகைத்தது அதனால் அல்ல” என்று சுக்ரர் சொன்னார். “அதை நான் அறிந்தாகவேண்டும், ஏனென்றால் அப்புன்னகை என்னை நோக்கி தொடுக்கப்பட்டது.” “சஞ்சீவினி என்னும் ஊழ்கநுண்சொல் ஒன்றுள்ளது. தேவர்களின் அழிவின்மையை பிறருக்கும் அளிப்பது அது. அதை எண்ணிக்கொண்டேன்” என்றார் பிரஹஸ்பதி. “தேவர்களின் அழிவின்மை என்பது ஒரு சொல்லின் அழிவின்மை மட்டும்தான்.”

“அதை தாங்கள் அறிவீர்களா?” என்று சுக்ரர் கேட்டார். “இல்லை. அதை முதல் தெய்வங்கள் மூன்றே அறியும். தேவரோ முனிவரோ அதை எய்த இயலாது” என்று பிரஹஸ்பதி சொன்னார். “அப்படியென்றால் அதை நீங்கள் எவ்வண்ணம் அறிந்தீர்கள்?” என்றார் சுக்ரர். “என் ஆசிரியரான அகத்தியர் அதைப்பற்றி சொன்னார். அறியத்தேவையில்லாத அறிவு அது. அதை அறிந்தவன் அறியாமையின் ஆணவத்தை அடையக்கூடும் என்றார்.” சுக்ரர் ஆசிரியர் சொன்னதை எண்ணிக்கொண்டிருந்தார். பிரஹஸ்பதியின் அப்புன்னகையை அவரால் கடந்துசெல்ல முடியவில்லை.

மீண்டு தன் தவச்சாலை நோக்கி நடக்கையில் அவ்வெண்ணம் பெருகி குவிந்து மேலெழுந்தது. தன்னிடமிருந்து தன் ஆசிரியர் மறைத்துள்ள அறிதலின் உச்சம் அதுவே என்று எண்ணலானார். மாணவன் மிஞ்சிச் செல்லலாகாது என்று எண்ணும் ஆசிரியனின் சிறுமை. ஓர் அறிவின் முடிவு என ஒன்று உண்டு என்றால் அதுவே அவ்வறிவின் மையமும் உயிரும். அதையறியவில்லை என்றால் எதையுமே அறியவில்லை என்றே பொருள்.

மறுநாள் பிரஹஸ்பதியின் குருநிலைக்குச் சென்று அவரது தனியறைக்குள் நுழைந்து நெற்றி மண்பட வணங்கி காலடியில் அமர்ந்து சுக்ரர் கேட்டார் “ஆசிரியரே, தாங்கள் அறிந்தவற்றில் நானறியாது எஞ்சுவதென்ன?” அவர் விழிகளை நோக்கி “நான் அறிந்தவை அனைத்தையும் உனக்களித்துவிட்டேன். நான் அடைந்தவை சில உன்னால் அடையமுடியாதவை” என்றார். சினத்தை அடக்கியபடி “நான் அடைவதற்கரியது எது?” என்றார் சுக்ரர். “அடக்கம், இவ்வினாவை என்னிடம் கேட்கலாகாதென்று நீ அறிவாய். கேட்காமலிருக்க முடியவில்லை உன்னால்.”

தன் சினத்தையே ஆற்றலெனக்கொண்டு அக்கணத்தின் தடையை கடந்துசென்று சுக்ரர் கேட்டார் “சொல்லுங்கள், சஞ்சீவினி எனும் நுண்சொல்லை நீங்கள் அறிவீர்களல்லவா?” பிரஹஸ்பதி புன்னகையுடன் “ஏன் இந்த ஐயம் உனக்கு? அவை நடுவே உரைத்தேனல்லவா? முதல் மூவர் மட்டிலுமே அறிந்த சொல் அது. பிறர் அதை அறிந்தால் இப்புடவியின் நெசவே மாறிப்போகும். ஆக்கத்தாலும் அழிவாலும் ஊடுபாவாக ஓடி அமைந்தது இவ்வெளி. ஒரு முடிச்சு அவிழ்ந்தால் இவையனைத்தும் அழியும்” என்றார். சினத்தை தன்னுள் நிறுத்தி எழுந்து வணங்கி சுக்ரர் வெளியேறினார். செல்லும் வழியில் ஓடிய சிற்றோடை அருகே நின்று ஒரு பிடி நீரள்ளி கிழக்கு நோக்கி நீட்டி தனக்கென ஆணையுறுதி ஒன்றை விடுத்தார். “ஆம், எனக்கு மறுக்கப்பட்ட சஞ்சீவினியை நான் அடைவேன். ஒருபோதும் அதை அடையாமல் அமையமாட்டேன்!”

tigerதன் தவக்குடிலில் சென்றமர்ந்ததுமே பிற அனைத்தையும் ஒதுக்கி தன்னுள் ஒடுங்கி அதை தேடிச்செல்லலானார். உண்மையென ஒன்றுண்டேல் அது இப்புடவியில் எங்கேனும் இருக்கவேண்டும். புடவியில் எங்கேனும் ஒன்றுண்டேல் அது அதன் ஒவ்வொரு துளியிலும் அமைந்தாக வேண்டும். வெளியே ஒன்றுண்டேல் அது உள்ளிலும் அமைந்தாகவேண்டும். உள்ளே அமைந்ததை அறிய உள்நுழைவதொன்றே வழி. தன் உடலென்றும் உள்ளமென்றும் சித்தமென்றும் கனவென்றும் ஆழ்தலென்றும் பெருக்கென்றும் ஆன ஒவ்வொன்றையும் தொட்டுத் தொட்டு இதுவல்ல இதுவல்ல என்று கடந்து சென்றார்.

ஒவ்வொன்றும் தன்னை ஒன்று நூறு ஆயிரம் என முடிவிலாது பெருக்கிக்கொண்டிருப்பதை கண்டார். உடலென்பது அவ்வளர்தலே. உள்ளமென்பது அப்பெருக்கே. சித்தமென்பது அத்தொடர்தலே. கனவென்பது அப்பரவுதல். ஆழமென்பது அச்சுழிப்பு. முழுமை என்பது மேலுமொன்றின் முழுமை நோக்கி எழுதல். ஒவ்வொன்றும் தான் பிறிதொன்றாயின. தன்னை நுண்மையாக உருமாற்றின. உருமாறும்பொருட்டு அழிந்தன. அழிந்தமையிலிருந்து எழுந்தன. அழியாத ஒன்றை எங்கும் அவரால் காண முடியவில்லை.

ஆயிரம் அகஆண்டுகளுக்குப்பின் அவர் அறிந்தார், அனைத்தும் மாறும் என்றால் அனைத்தும் இல்லையென்றே பொருள். இவையனைத்தும் இங்கிருப்பதே மாறுதல்களுக்கு அப்பால் மாறாத ஒன்று உள்ளதென்பதற்கு சான்று. பிறந்திருக்கும் மானுடரில் மாறாது கடந்து செல்கின்றன முகங்கள். முளைத்து அழிந்து முகிழ்ப்பவை அனைத்திலும் நிலைத்திருக்கின்றன வடிவங்கள். அழிந்து உருவாகும் அனைத்திலும் அழியாதிருப்பதே அதுவென்று தன்னை காட்டுகிறது. பின்னர் ஒரு கணத்தில் அவர் அதை கண்டுகொண்டார். விழிதிறந்து நிலம் தொட்டு “ஆம்! ஆம்! ஆம்!” என்று மும்முறை சொன்னார். சஞ்சீவினியென்னும் நுண்சொல்லை அவர் அடைந்தார்.

எழுந்தபோது இடைவரை சடை வளர்ந்து மடிமீது தாடி விழுந்து உடல் மெலிந்து விழி குழிந்து பற்கள் உதிர்ந்து பேயுருக்கொண்டிருந்தார். மெல்ல நடந்து வெளிவந்து அவ்வழி சென்ற இடையப் பெண்ணொருத்தியிடம் இளம்பால் இரந்து அவள் குடம் சரித்துக் கொட்டிய அமுதை ஏழுமுறை உண்டு மீண்டார். உயிர்மீண்டதும் மீண்டும் நடந்து தன் ஆசிரியரின் தவக்குடிலை அடைந்தார். வெளியே நின்று “பிரஹஸ்பதி முனிவரை வெளியே வரச்சொல்க! மெய்யுணர்ந்த சுக்ரன் வந்துள்ளேன்” என்றார்.

அவ்விலக்கமும் ஆணையும் பிரஹஸ்பதியின் மாணவர்களை அச்சுறுத்தியது. ஒருவர் சென்று சொல்ல பிரஹஸ்பதி புன்னகையுடன் வெளிவந்தார். “வருக, சுக்ரரே!” என்றார். “உம்மிடம் சொல்பெற நான் வந்த காலம் முடிந்துவிட்டது. நீர் அறிந்த சஞ்சீவினி இன்று எனக்கும் தெரியும். மெய்யறிதலில் நாமிருவரும் அணுவிடை குறையாத நிகர்நிலை கொண்டிருக்கிறோம். ஒருவேளை நீர் அறியாததும் நான் அறிந்திருக்கக்கூடும்” என்றார் சுக்ரர். பிரஹஸ்பதி சிரித்து “சஞ்சீவினியை நான் அறியவில்லை. தேவரோ மானுடரோ அதை அறியவும் இயலாது” என்றார்.

“நானறிவேன்” என்று ஓங்கி தன் தொடையில் அறைந்தார் சுக்ரர். “இதோ…” என்று குனிந்து கீழே விழுந்து கிடந்த சருகொன்றைத் தொட்டு அச்சொல்லை சொன்னார். உயிரும் ஒளியும் மென்மையும் மீண்டு சருகு இளந்தளிராயிற்று. “சுட்டுங்கள், இறந்த எதையும்! இக்கணமே அதை உயிர் கொண்டெழச் செய்து காட்டுகிறேன்” என்றார் சுக்ரர். திரும்பி அப்பால் முன்பெங்கோ இறந்து எலும்பெனக் கிடந்த பறவை ஒன்றை நோக்கி அந்நுண்சொல்லை சொன்னார். உயிர்கொண்டு சிறகடித்துப் பறந்து அகன்றது ஒரு காகம்.

திகைத்து சொல்லற்று நின்ற பிரஹஸ்பதியை நோக்கி அத்திகைப்பாலேயே அவர் அந்த ஊழ்கச்சொல்லை அறியார் என உணர்ந்து “சஞ்சீவினியை நானறிவேன். நீர் அறிந்த சஞ்சீவினியால் ஓருயிரையேனும் எழுப்பிக் காட்டும்! இல்லையேல் என் அடிபணிந்து என் மாணவரென்று அமையும்” என்றார் சுக்ரர். பிரஹஸ்பதி “சஞ்சீவினியை நானறியேன் என்று உம்மிடம் சொன்னது உண்மை. ஆம், அறியேன்” என்றார். “எனில் இக்கணமே என் அடிபணிக! இனி நீர் தேவர்களுக்கு ஆசிரியர் அல்ல. அப்பொறுப்பை நானே ஏற்கிறேன்” என்றார். பிரஹஸ்பதி “அடிபணிவதில் எப்போதும் தயங்கியவனல்ல. ஆனால் தேவர்குலத்து நல்லாசிரியரென்பது நான் அமர்ந்திருக்கும் இடமல்ல. தேவர்களால் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது அது. அதை தேவரே மறுக்கவேண்டும். தேவர் தலைவரிடம் சென்று பேசுக!” என்றார் பிரஹஸ்பதி.

“ஆம், அதை செய்கிறேன்” என்று சொல்லி சுக்ரர் திரும்பி நடந்தார். இந்திரனின் அவைக்குள் எவரும் தடுக்காது உள்ளே நுழைந்து, அங்கிருந்த முனிவரும் தேவரும் திகைத்தெழுந்து நிற்க, முகமனோ வாழ்த்தோ உரைக்காது உரத்த குரலில் “இந்திரனே, இது என் ஆணை! உன் முதலாசிரியர் பிரஹஸ்பதியைவிட மேலும் அறிந்தவன் நான். இனி அவரல்ல, நானே உன் குலத்துக்கு ஆசிரியரென்று அமரவிருக்கிறேன்” என்றார். சினத்துடன் ஏதோ சொல்லெடுத்து பின் அதை தனக்குள் அடக்கி தருவித்த புன்னகையுடன் கைகூப்பி இந்திரன் “முனிவரே, அறிந்தவற்றால் அவர் எங்களுக்கு ஆசிரியர் அல்ல. ஆனவற்றால் அங்கு அமர்ந்திருக்கிறார். நீங்கள் அறிந்தவை எவ்வகையில் எங்களுக்கு உதவக்கூடும் என்று சொல்லுங்கள்” என்றான்.

சுக்ரர் “நான் சஞ்சீவினி எனும் நுண்சொல்லை அறிவேன். இறந்தவரை உயிர்ப்பிப்பேன்” என்றார். இந்திரன் மெல்ல நகைத்து “அதனால் எங்களுக்கென்ன பயன்? நாங்கள் இறப்பதில்லையே?” என்றான். சினம் கொண்டு உடல் நடுங்க “நானறிந்த இறுதி மெய்மை இது” என்றார் சுக்ரர். “ஆம், ஆனால் அது எங்கள் அன்றாட இயல்பு. சுக்ரரே, எழுவது அரசனின் இயல்பு. அவனருகே நின்று அவ்வெழுச்சியை நிகர்செய்வதே ஆசிரியனின் பொறுப்பு. பொன்றா பொலியா நிகர்நிலையே ஆசிரியனின் மெய்யென கொள்ளப்படும். நீர் அடைந்த எதுவும் அதை உமக்கு அளிக்கவில்லை. இங்கல்ல எவ்வரசிலும் அமைச்சனென ஆசிரியனென அமையும் தகுதி உமக்கில்லை. சென்று வருக!” என்றான் இந்திரன்.

எழுந்த சினத்தால் கைகால்கள் பதற நிலைகொள்ள முடியாமல் தழலென நின்று ஆடியவராக சுக்ரர் கூவினார் “ஆம், செல்கிறேன். என்னை வருந்தியேற்று அமரவைக்க தைத்யர்களின் ஆசிரியபீடம் காத்துள்ளது. இங்கு சொன்ன இச்சொற்களின் மெய்ப்பொருள் என்னவென்று இன்னும் சில நாட்களில் அறிவாய்.” இந்திரன் “நீர் ஆணவம்கொண்டிருக்கிறீர். அழிவீர்!” என்றான். “பார்ப்போம்” என்று சொன்ன சுக்ரர் திரும்பி நடந்து மண்ணிறங்கி மகாதைத்யகத்தின் வாயிலில் வந்து நின்றார். அவரை வழிமறித்த அசுரனை நோக்கி “உனது அரசனிடம் சென்று சொல்! கோட்டைக்கு வெளியேவந்து என் தாள் பணிந்தால் என் வலக்காலை அவன் தலைமேல் வைக்க சித்தமாக இருக்கிறேன் என்று” என்றார்.

திகைத்து ஒருவரை ஒருவர் நோக்கி வீரர்கள் மறுசொல்லெடுப்பதற்குள் முதிய அசுரனொருவன் “இதோ சொல்கிறேன்” என்று சொல்லி புரவியிலேறி அரண்மனை நோக்கி சென்றான். சற்று நேரத்திலேயே தேரில் விரைந்து வந்த விருஷபர்வன் புழுதி படிந்த உடலைத் தட்டியபடி பாய்ந்திறங்கி ஓடிவந்து அவ்விரைவிலேயே முகம் மண்ணில்பட எண் உறுப்புகளும் பொருந்த சுக்ரரின் கால்களில் தன் தலையை வைத்தான். வலக்காலை தூக்கி அவன் தலைமேல் வைத்து “உன் குலத்திற்கு இறப்பின்மையை அளிக்கிறேன், அசுரகுலத்தரசே” என்றார் சுக்ரர்.

சுக்ரர் விருஷபர்வனின் அமைச்சராக ஆன செய்தியை அறிந்தபோதும்கூட அதன் நிகழ்பொருள் என்னவென்று இந்திரன் உணரவில்லை. “ஆயிரம் தைத்யர்குலங்களை கண்டிருக்கிறோம். பல்லாயிரம் முறை அவர்களுடன் போரிட்டிருக்கிறோம். நிலமென ஒன்று எஞ்சவேண்டுமென்று எண்ணும் பிரம்மம் எங்கோ கோல் கைக்கொண்டு அரியணை அமர்ந்திருக்கும்வரை கடல் கரைகடக்க முடியாதென்றறிக! அவர்கள் விரும்புவதை இயற்றட்டும்” என்று தன் அவையில் அமர்ந்து ஏளனமாக சொன்னான்.

சுக்ரர் விருஷபர்வனின் அசுரகுருவாக வந்த செய்தியை மண்ணெங்கும் பரவிக்கிடந்த தைத்யர்கள் அறிந்தனர். குடிகளாகவும் குலங்களாகவும் திரண்டு பாடியும் ஆடியும் மகிழ்வு கொண்டாடி அவர்கள் மகாதைத்யகத்தை வந்தடைந்தனர். கார்காலத் தொடக்கத்தில் முகில்கணங்கள் விண் நிறைப்பதுபோல அசுரப்படை பெருகியது. அவர்களின் போர்முரசின் ஓசை இடியென அமராவதியில் ஒலித்தது. “மீண்டும் போருக்கெழுகிறார்கள். காடு தன்னைத் தானே எரியூட்டிக்கொண்டு அழிந்தாலொழிய புதுமுளைகள் முளைக்க இயலாதென்று அறிந்திருக்கிறேன். அவர்கள் திரளட்டும், நாம் படையுடன் கிளம்பலாம்” என்றான் இந்திரன். தேவர்கள் நகைத்தனர்.

அமராவதியின் போர்முரசு ஒலித்தபோது அமுதுண்டு காமம் கொண்டாடிக் கொண்டிருந்த தேவர்கள் தங்கள் படைக்கலங்களுடன் திரண்டனர். அவர்களுக்கு முன்னால் வியோமயானத்தில் மின்படை ஏந்தி அமர்ந்திருந்த இந்திரன் “செல்க!” என ஆணையிட்டதும் பாற்கடல் அலைஎழுந்ததுபோல் தேவர் படை போருக்குக் கிளம்பியது. விண்சரிவில் இரு பெருக்குகளும் விரைந்து வந்து ஒன்றையொன்று சந்தித்தன. இரவும்பகலும் பொருதி அந்திச்செம்மையென குருதி பெருகலாயிற்று.

போரென்பது பெருமுயக்கம். ஒன்று பிறிதை அறியும் பித்து. ஒன்று பிறிதை ஊடுருவும் உவகை. ஒன்றென்றிருத்தல். இரண்டென்று ஆழம் தவித்தல். ஒன்றென்றாக்கும் ஒல்லாப்பெருஞ்சிறை உடைபடும் திளைப்பு. இரண்டென்றாகி ஒன்று பிறிதை நோக்கும் திகைப்பு. பெருகுவதும் அழிவதுமென திகழும் மெய்மை. கொள்வதும் கொடுப்பதுமென இனிய வெறுமை. மெய்மையென மறுபெயர் சூடிய இன்மை. தேவர் படை அசுரர்களை கொன்று வீழ்த்தி கடந்தது. விண்ணேறி வந்த அசுரர்கள் காட்டெரி அணைந்தபின் கரித்துகள் மழையென உதிர்வதுபோல இறந்து மண்ணை நோக்கி பொழிந்தனர்.

மகாதைத்யகத்தில் சஞ்சீவினியெனும் ஊழ்க நுண்சொல்லை உரைத்து தன் கமண்டலத்து நீரை அமுதென ஆக்கிய சுக்ரர் அதை அங்கிருந்த அக்‌ஷயம் என்னும் மாபெரும் தடாகத்தில் ஊற்றினார். “இது அமுது. இறந்த ஒவ்வொருவர் மீதும் இதை வீசுக! இது அவர்களை எழுப்பும்” என்றார். அசுரர்படைகள் அத்தடாகத்து நீரை தோல்குடுவைகளிலும் பெருங்கலங்களிலுமாக அள்ளிக்கொண்டு சென்று இறந்து உதிர்ந்தவர்களின்மேல் தெளித்தனர். அந்நீர் தொட்டதுமே துயிலில் விழித்தவர்கள்போல உடல் சிலிர்த்து கண் விழித்து எழுந்த அசுரர்கள் எங்கிருக்கிறோமென உணர்ந்து மறுகணமே பெருஞ்சினம் கொண்டு போர்க்குரல் எழுப்பியபடி பாய்ந்து படைக்கலங்களை எடுத்தனர்.

பெருகிச் சூழ்ந்த கருமுகில்கள் பெய்து நிறைந்த பின்னும் ஒழியாமல் கற்பாறையோ என இருப்பதைப்போல் அசுரப்படை குன்றாமலிருப்பதை இந்திரன் உணர்ந்தான். மேலும் மேலுமென விரைவுகொண்டு அவர்களை வென்று கொன்று அகற்ற கீழ்த்திசையிலிருந்து பெருகி வந்து நிறைந்துகொண்டிருந்தனர். முடிவுறாதது அப்போர் என்றுணர்ந்ததும் “இப்படியே இவ்வண்ணமே இப்போர் தொடரட்டும். நான் செல்வழி சூழ்ந்து வருகிறேன்” என ஆணையிட்டுவிட்டு அமராவதிக்கு திரும்பினான்.

பிரஹஸ்பதியை சென்று கண்டு பணிந்து “என்ன நிகழ்கிறது, ஆசிரியரே? போர் மாபெரும் வீண்செயலென்று ஆகிவிட்டிருக்கிறது. நீரால் அணையா நெருப்பு புடவியை அழிக்கும் என்று தெய்வங்களுக்கு தெரியாதா?” என்றான். “ஆம், தெய்வங்கள் மட்டுமே அறிந்த சஞ்சீவினி எனும் நுண்சொல் அவர் கையில் உள்ளது. இறந்தவர்கள் எழுந்து வருகிறார்கள். எனவே கொல்வதில் பொருளொன்றுமே இல்லை” என்றார் பிரஹஸ்பதி. “நாம் என்ன செய்வது? போரிட்டாகவேண்டும், அது நம் கடன்” என்று இந்திரன் சொன்னான்.

“நம் விசையும் அவர்கள் அளிக்கும் எதிர்விசையும் நிகர்நிலை கொள்ளும் ஓர் எல்லையில் இப்போர் நிலைக்காது நடந்துகொண்டிருக்கட்டும். காலமில்லை என்பது நமது ஆற்றல். பெருகுவது அவர்களின் வழி. இப்படியே இது செல்லட்டும். அதற்குள் ஒரு மாற்று கண்டுபிடிப்போம்” என்றார் பிரஹஸ்பதி. இந்திரன் “ஆனால் நம்மிடமுள்ளது காக்கும் எண்ணம். அவர்கள் கொண்டுள்ளது வெல்லும் விசை. அணுவிடை பெரியது அது. ஆகவே இறுதியில் அதுவே வெல்லும்” என்றான். “தெய்வங்கள் அருள்வர்” என்றார் ஆசிரியர்.

நாளும் பொழுதுமற்ற தேவவெளியில் அப்போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. இந்திரனிடம் மீண்டு வந்த பிரஹஸ்பதி “சஞ்சீவினி நுண்சொல்லை சுக்ரரிடமிருந்து கற்காமல் இப்போர் முடியாது. நம்மில் ஒருவர் சென்று அதைக் கற்று மீளவேண்டும். அச்சொல்லைக்கொண்டு அசுரர்களால் கொல்லப்பட்டு மூச்சுலகில் வாழும் அத்தனை மானுடரையும் எழுப்புவோம். கணந்தோறும் பெருகும் அவர்களைக் கொண்டு அசுரர்களுக்கு அழியா எல்லையொன்றை வகுப்போம். அது ஒன்றே வழி” என்றார். “எப்படி அந்நுண்சொல்லை அவரிடமிருந்து கற்பது? அவருக்கு அணுக்கமான மாணவர்கள் என்று எவருமில்லை. அப்படியே ஆனாலும் இறுதி மெய்மையென அதை அவர் அளிப்பார் என்று சொல்ல முடியாது” என்றான் இந்திரன்.

“என் மைந்தன் கசனை அனுப்புகிறேன். அவன் இளையோன், அழகன். இன்சொல் கொண்டவன், இசையறிந்தவன். அவனால் சுக்ரரை உளம் கவரமுடியும்” என்றார். நம்பிக்கையின்றி நோக்கிய இந்திரனிடம் “அவன் அவருக்கு மைந்தனைப்போல. என் மாணாக்கனாக இங்கு இருக்கையில் அவனை தன் தோளில் தூக்கி வளர்த்தவர் சுக்ரர். அவருள் வாழும் தந்தை அவனை நோக்கி கனியாமல் இருக்க வாய்ப்பில்லை. அவன் வென்று வருவான்” என்றார் பிரஹஸ்பதி. “ஆம், அதை நோக்குவோம். நமக்குப் பிறிதொரு வழியில்லை” என்று இந்திரன் சொன்னான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 47

47. நாகநடம்

இரவுணவுக்குப் பின்னர் நாகர்கள் வந்து முற்றத்தில் எரிந்த களநெருப்பைச் சுற்றி அமர்ந்துகொள்ள தண்டகரை இரண்டு நாகர்கள் கைபற்றி கொண்டுவந்து பீடத்தில் அமர்த்தினர். சிறுவர்கள் கைகளில் எஞ்சிய ஊனுணவுடன் வந்து அமர்ந்து கடித்து மென்றுகொண்டிருந்தனர். குழந்தைகளை மடியிலிட்டு மெல்ல தட்டி துயில்கொள்ளச் செய்தனர் பெண்டிர். பீமன் தன் குடிலில் இருந்து கைகளைத் தூக்கி சோம்பல்முறித்தபடி வந்தபோது அத்தனை விழிகளும் அவனை நோக்கி திரும்பின. பெண்கள் மெல்லிய குரலில் ஏதோ சொல்ல ஆண்கள் சினம்ஒலித்த சொற்களால் அவர்களை கடிந்தனர்.

பீமன் வந்து அமர்ந்ததும் அங்கிருந்த குழந்தைகள் அஞ்சி எழுந்து விலகின. அவன் அருகே நின்ற குழந்தையை நோக்கி புன்னகை செய்தான். அது  மூக்கில் விரல்விட்டபடி இடைவளைத்து நின்றது. அவன் ஒன்றும் பேசாமல் திரும்பி இன்னொரு குழந்தையை நோக்கி சிரித்தான். முதற்குழந்தை சற்றே காலடி எடுத்துவைத்து அணுகியது. அவன் அதை நோக்கியதாகவே காட்டவில்லை. மீண்டுமொரு குழந்தையை நோக்கி சிரித்தான். இரண்டாம் குழந்தை அவனை அணுகியது. அவ்வசைவைக் கண்டதும் முதல் குழந்தை மேலும் அணுகி அவன் தோளை தொட்டுக்கொண்டு நின்றது.

அவன் அதை நோக்கி திரும்பாமல் இன்னொரு குழந்தையை நோக்கினான். இரண்டாவது குழந்தையும் அவன்மேல் சாய்ந்துகொண்டது. இன்னொரு குழந்தை வந்து அவன் தோள்மேல் ஒட்டியது. அவன் முதற்குழந்தையை தூக்கி தன் மடியிலமர்த்த அது நாணத்துடன் கண்களை கைகளால் மூடிக்கொண்டது. சற்றுநேரத்தில் அவன் உடலெங்கும் குழந்தைகள் மொய்த்துக்கொண்டன. அங்கிருந்த அத்தனை குழந்தைகளும் அவனுடன் ஒட்டியிருக்க விரும்பின. அவற்றின் பேச்சும் சிரிப்பும் அங்கே மைய ஒலியாக எழ மற்றவர்கள் புன்னகையுடன் அதை நோக்கியிருந்தனர். இளம்நாகர்களின் முகச்சுளிப்பும் மெல்ல விலகலாயிற்று.

தண்டகர் அவர்களை நோக்கி சிரித்து உடல் குலுங்கினார். “ஓசையடங்குக!” என ஒருவர் குரலெழுப்பினார்.  அப்பாலிருந்து முண்டன் அவன் உடலுக்குப் பொருத்தமில்லாத மிகப்பெரிய மரவுரியாடையை தோளும் இடையும் சுற்றி  அணிந்து அது கால்களை அடிக்கடி தடுக்க இடக்கையால் தூக்கிப்பிடித்தபடி வலக்கையில் ஒரு கோலுடன் துள்ளி நடனமிட்டபடி வந்தான். குழந்தைகள் எழுந்து நின்று கூச்சலிட்டு சிரித்தன. நாகர்களும் சிரிக்கத்தொடங்கினர். அவன் கூட்டத்தையும் ஓசையையும்  கண்டதும் அஞ்சி திரும்ப ஓடி தன் பின்னால் வந்த நாகனைக் கண்டு அஞ்சி மீண்டும் முன்னால் வந்தான். பதுங்கி மிரண்ட நோக்குடன் வந்து அனைவரையும் பணிந்தான். தண்டகர் “வருக, முண்டரே!” என்றதும் அக்குரல் பட்டு தெறிப்பதுபோல பலமுறை சுழன்று அப்பால் சென்று நின்றான். அங்கிருந்தவர் ஏதோ சொல்ல திரும்பத் தெறித்து வந்து அதே விரைவில் தண்டகரைக் கடந்து அப்பால் சென்றான். சிரிப்பொலிகள் எழுந்து சூழ்ந்தன.

தண்டகர் “நில்லும், குள்ளரே… நீங்கள் இன்று ஆடப்போவது என்ன?” என்றார். “நாகர்களின் தொல்கதையை ஆடும்படி என்னிடம் சொன்னார்கள்” என்று அவன் அஞ்சியபடி சொன்னான்.  “ஆனால் எனக்கு அந்தக் கதை தெரியாது.” தண்டகர் சிரித்து “பிறகு ஏன் ஒப்புக்கொண்டீர்?” என்றார். “வழக்கமாக நான் தெரியாத கதைகளைத்தான் சொல்வது…” என்றான் முண்டன். “ஏன்?” என்றார் தண்டகர். “தெரிந்த கதையை ஏன் சொல்லவேண்டும்? அதுதான் தெரியுமே?” என்றான் முண்டன். தண்டகர் சிரித்து “உம்மிடம் சொல்லாட இயலாது என்னால்…” என்றார். “ஆணை” என்று வணங்கி சென்று அனல்வெளிச்சத்தில் நின்ற முண்டன் கோலைச் சுழற்றி அனைவரையும் உடல் மடித்து வணங்கினான்.

“அவையினருக்கு வணக்கம்… என்னவென்றால் நான் நாகர்களின் கதையை சொல்லவேண்டியிருக்கிறது. நாகர்களிடம் அதை சொல்வதிலுள்ள சிறப்பு என்னவென்றால் என்னைப்போலவே அவர்களுக்கும் அது தெரியாது.” நாகர்கள் சிரித்தனர். “ஆகவே நான் அதை என் மாயக்கோலிடம் கேட்கலாம் என நினைத்தேன். இது எளிய கோல் அல்ல, இது செங்கோல். ஆமாம், பாரதவர்ஷத்தை ஆளும் தொல்குடிமன்னர்களின் செங்கோல்களில் ஒன்று  இது.” அவன் திரும்பி “ஐயம் வேண்டாம்… தொல்லரசான மகதத்தின் அரசர் ஏந்திய செங்கோல் இது. முடியும் கொடியும் நகரும் கோட்டையும் கொண்டு அரியணை அமர்ந்து ஆட்சி நடத்தியது” என்றான்.

“இதை எப்படி அடைந்தேன் என்கிறீர்களா? மகதர் நடத்திய ராஜசூயவேள்விக்கு சென்றிருந்தேன். அனல்வணக்கத்தின்போது அரசர்கள் அனைவரும் கோல்தாழ்த்தி வணங்கினர். நான் என் கையில் ஒரு பொய்ச்செங்கோலை செய்து வைத்திருந்தேன். அதை வைத்துவிட்டு அதேபோலத் தோன்றும் அரசச்செங்கோல் ஒன்றை எடுத்துவருவதென்று என்ணியிருந்தேன். நிழலுடன் நிழலென பதுங்கியிருந்தேன். ஒருகணம் அத்தனை பேரையும் விழிமாயத்தால் விலக்கி என் கோலை அங்கே வைத்து இதை எடுத்துக்கொண்டேன். அவையினரே, இது பாரதவர்ஷத்தை முழுதாளும் மகத சக்கரவர்த்தியின் கோல்…”

அதைச் சுழற்றி தரையில் ஊன்றி அதன்மேல் உடல் அமைத்து அமர்ந்து “உறுதியானது. ஆம், நெகிழ்வற்றது. துலாவின் நடுக்கோல் வளையலாகாது. அவையோரே, இல்லத்தின் உத்தரக்கோலும் வளையலாகாது. ஆம், கொடிக்கம்பம் வளைய இயலாது. நுகமரம் வளையாது. கொலைக்களத்து தூக்குமரமும் வளையமுடியாது” என்றான். அந்தக் கோல் வளைந்து அவன் நிலத்தில் விழுந்தான். பாய்ந்து அதை பிடிக்க அது வளைந்து நெளிந்தது. “வளைகிறதே…! உருகிவிட்டதா? ஆ!” அது ஒரு கரிய நாகமென்றாகி அவன் கையில் சுற்றிக்கொண்டது. “ஆ, நாகம்… நாகமேதான். அய்யய்யோ” என அலறியபடி அவன் துள்ளிக்குதித்து சுற்றி வந்தான். தீ சுடுவதுபோல கையை உதறினான். நாகம் அவன் கையை இறுக சுற்றிக்கொண்டு படமெடுத்து அவனை கொத்தச் சீறியது. அதன் மணிக்கண்கள் ஒளிவிட்டன.

பாம்பைப் பற்றிய குரங்கின் அச்சத்தையும் பதற்றத்தையும் நடித்தான். உடல் மெய்ப்பு கொள்ள கைகால்கள் நடுங்க அச்சத்தால் இளித்தபடி அந்தப் பாம்பைப் பற்றிய கைப்பிடியை விடாமலேயே தரையில் தலைகுத்தி விழுந்து உருண்டு எழுந்து சுழன்றான்.  அதை நோக்கவில்லை என நடித்து இயல்பாக இருக்க முயன்றான். பின்னர் விம்மி அழுதான்.  அழுகையும் சிரிப்புமாக தவித்தபோது நாகம் மீண்டும் கோலாகியது. என்ன நிகழ்கிறதென்று வியந்து கூட்டத்தை நோக்கினான். ஐயத்துடன் மீண்டும் கோலை நோக்கியபின் அதை சுழற்றினான். வீசிப் பிடித்தான். முதுகைச் சொறிந்தான். அது கோலாகவே இருந்தது.

சிரித்துக் கொந்தளித்த கூட்டத்தைச் சுற்றிவந்தபின் அந்தக் கோலை ஓர் இடத்தில் நாட்டினான். அதனருகே கைகூப்பி நின்று “செங்கோலே, அறம்விளையும் மரமே, சொல்க! உன் வேர் என்ன? நீ விளைந்த நிலமென்ன?” என்றான். அதை தன் மேலாடையை சாமரமாக்கி வீசி இளைப்பாற்றினான். “சொல்க, நீ வந்த வழிதான் என்ன?” கோல் தளர்ந்து கீழே விழுந்து நாகமாகி சீறி படமெடுத்தது. “ஆ! மீண்டுமா?” என்றான். “சொல்க, நீ யார்?” நாகம் “நான் தொல்நாகம்…  நான் இட்ட முட்டை இவ்வுலகம். மலைகள் எழுந்து முகில்கள் சூடிஅமர மரம்செறிந்து நதிகள் விரைய கடல்கள் அலையடிக்கும் விரிந்த இந்நிலம் முழுக்கவும் எனக்குரியது” என்றது. சீறி தரையைக் கொத்தி எழுந்து “அறிக மூடரே, பிற குலங்களெல்லாம் செடிகள், மரங்கள், கொடிகள். நான் வேர்” என்றது.

“வேர் மண்ணுக்குள் இருப்பதை நானும் அறிவேன்” என்றான் முண்டன். “நானே பற்றுகோல். நானே உயிர்த்தளம்” என்றது நாகம்.  “என்ன ஆயிற்று பின்னர்?” என்றான் முண்டன். “நான் கோலென்றாக முடியவில்லை. நான் நெருப்பு. நான் நீர். நானே வேர். நெருப்பும் நீரும் நெளிந்தாகவேண்டும். நீர்நோக்கி வளைந்தாகவேண்டும் வேர். அடிமரம் வளையாது எழுந்து நிற்கும். கிளைகள் நெகிழாது விரிந்துபரவும்…” நாகத்தின் குரலிலும் அவனே பேசுகிறான் என்பதை முண்டனின் தாடை இறுகியசைவதைக்கொண்டு பீமன் கண்டடைந்தான். அவ்வாறென்றால் அந்த நாகம் அவன் அணிந்துவந்த பெரிய ஆடைக்குள் இருந்திருக்கிறது. அப்படியென்றால் கோல் எங்கே?

முண்டன் அந்த நாகத்தை சுற்றி நடனமிட்டான். தன் மேலாடையை எடுத்துச் சுழற்றி தோளிலிட்டபடி சென்று அந்த நாகத்தை எடுத்து தலையில் வைத்தான். அது நெளிந்து அவன் முகத்தில் வழிந்து படம் தூக்க அது துதிக்கையென்றாகியது. ஆடைக்குள் இருந்து உடைந்த தந்தத்தை எடுத்து ஒருகையில் பிடித்து மறுகையால் அருள்காட்டி அவன் கணபதியென கால்மடித்தமர்ந்தான். பாம்பு ஊர்ந்து அவன் தோளைச்சுற்ற சுழன்றாடி இடக்கால் தூக்கி நின்று நடனசிவன் ஆனான். அது இடைவளைக்க தேவியென அமர்ந்தான். அது வழிந்து காலடியில் சுருள தன் கையில் தோன்றிய கோலை ஊன்றி நின்று முருகனானான். பாம்பு நீண்டு ஓட அதன் வாலை மிதித்து அதன்மேல் படுப்பதுபோல் நடித்து விஷ்ணுவானான்.

நாகர்கள் கைகளைத் தூக்கி கூச்சலிட்டு அவனை ஊக்கினர். நாகம் சீறி நிலத்தைக் கொத்தி படம் திருப்பியது. முண்டன் அந்நாகத்தை நோக்கி கோலுடன் ஓட அது அவனைக் கொத்தியது. வலிப்பு வந்து அவன் விழுந்து மண்ணில் சுழன்றான். மெல்ல உடல்நெளிவுகொண்டு எழுந்து  நாகமென நெளிந்தான். தன் மேல் இருந்த அணிகளை அவை அனலென சுடுவதுபோல நடித்து கழற்றி வீசினான். சீறி நெளிந்தும் சொடுக்கி எழுந்தும் நாகமென்று சுழன்று இரு கைகளையும் தலைக்குமேல் விரித்து படம் காட்டி குனிந்து மூன்றுமுறை தரையைக் கொத்தியபின் மெல்ல படிந்து புன்னகையுடன் கண்மூடினான்.

தண்டகர் சிரித்தபடி கைதூக்க நாகர்கள் தங்கள் கோல்களைத் தூக்கி அவனை வாழ்த்தினர்.  அவன் பணிந்தபடி சென்று தண்டகரை வணங்கினான். அவர் கையை அசைக்க அடிக்கப்போகிறார் என அஞ்சி திடுக்கிட்டு இரண்டு முறை சுழன்று பின்னால் சென்றான். அவர் சிரித்துக்கொண்டே அருகழைக்க மீண்டும் அணுகினான். அவர் பரிசு கொடுக்க திரும்புகையில் மீண்டும் துள்ளி பின்னால் சென்றான்.  பீமனைச் சூழ்ந்திருந்த குழந்தைகள் சிரித்துத் துள்ளி குழைந்து விழுந்தனர். பீமனே சிரித்துக்கொண்டிருந்தான். தண்டகர் அளித்த பரிசை முகர்ந்து பார்த்தான். பின்னர் அதைக்கொண்டு இடையை சொறிந்தான். முழுமையாகவே குரங்காக மாறி பாய்ந்து ஒருவன் தோளிலேறி தாழ்ந்த கிளையொன்றில் அமர்ந்து உர்ர்  என பல்லைக் காட்டியபின் அப்படியே கிளைகளினூடாகச் சென்று மறைந்தான்.

குழந்தைகளும் முதியவர்களும் ஒரேபோல சிரித்து அமைய தண்டகர் எழுந்து வணங்கினார். தன் கோல்தூக்கி அனைவரையும் வாழ்த்திவிட்டு இருவர் தோள்பற்ற நடந்து சென்றார். பீமன் ஒவ்வொரு குழந்தையையாக மேலே தூக்கிப்போட்டு பிடித்து அவர்களின் அன்னையரை நோக்கி வீசினான். “நான் நான்” என குழந்தைகள் வந்து நின்றன. அதில் ஒருவன் உளமும் உடலும் வளராத இளைஞன். பீமன் அவனையும் தூக்கி முத்தமிட்டு இருமுறை தூக்கி வீசினான். அவர்கள் “இன்னும் இன்னும்” என்று துள்ளினர். மூதன்னை ஒருத்தி “போதும், செல்லுங்கள்” என பொய்ச்சீறல் விடுக்க பீமன் “நாளை… இனிமேல் நாளை” என்றான். அவர்கள் ஒவ்வொருவராக கலைந்துசென்றனர்.

மீண்டும் தன் குடிலை அவன் அடைந்தபோது முண்டன் ஆடைகளை கழற்றிக்கொண்டிருந்தான்.  இரண்டு மரவுரியாடைகளை அவன் அணிந்திருந்தான். ஒன்று எளிதில் பலவகையாக கழற்றும் தன்மைகொண்டிருந்தது. கீழே அவனுடைய கோல் வளைந்து கிடந்தது. பீமன் குனிந்து அதை எடுத்தான். அதை சற்றே திருப்பியபோது உறுதியான கோலென்றாயிற்று. மறுபக்கம் திருப்பியபோது கொடியென்று தோன்றியது. அதை அழுத்திச் சுருக்கி ஒருகணுவுக்குள் இன்னொன்றைச் செலுத்தி உள்ளங்கையளவுள்ள குழாயாக ஆக்கமுடிந்தது. “இதை கொண்டுவந்திருந்தீரா?” என்றான் பீமன். “இல்லை, இப்போது செய்தேன். ஒன்றுவிட்டு ஒன்றென மூங்கில் கணுக்களைவெட்டி செருகிச் செய்வது. மிக எளிது” என்றான் முண்டன்.

“இனியவர்கள்” என்றபடி பீமன் பாயை எடுத்து தரையில் விரித்தபின் தலையணைக்காக தேடினான். மென்மரத்தாலான தலையணை நன்கு தேய்க்கப்பட்டு தலைக்கான குழிவுடன் அப்பால் கிடந்தது. அதை எடுத்துக்கொண்டுவந்து போட்டான். “இனிய குளிர்… நாம் நன்கு துயின்றே நாளாயிற்று எனத் தோன்றுகிறது.” முண்டன் “இல்லை, நாம் காலையில் எழுந்தாகவேண்டும்” என்றான். “ஏன்?” என்றபடி பீமன் படுத்தான். “இங்கே காலையில் நாகதேவர்களுக்கு பூசெய்கை செய்கிறார்கள்” என்றபடி வெறுந்தரையில் முண்டன் படுத்தான். “அங்கே அவர்களின் தெய்வநிரையை கண்டேன். படையலுணவையும் மலர்களையும் காலையில் படைத்திருப்பார்கள் என எண்ணினேன்.” பீமன் அவன் மேலும் சொல்லட்டுமென காத்திருந்தான். “அத்தெய்வநிரையில் குருநகரியின் அரசர் நகுஷனையும் கண்டேன்” என்றான் முண்டன்.

tigerகாலையில் சிறுமுழவின் ஒலி கேட்டதுமே முண்டன் எழுந்து பீமனை உலுக்கி எழுப்பினான்.  “பூசெய்கை தொடங்கிவிட்டதென எண்ணுகிறேன். எழுக!” என்றான். “நான் அதற்கு ஏன் வரவேண்டும்? நீரே சென்று வந்து என்ன நடந்தது என்று சொல்லும்” என்றபடி பீமன் புரண்டு படுத்தான். “சரி, நானும் துயில்கொள்கிறேன்” என முண்டன் திரும்ப படுத்துக்கொள்ள சில கணங்களுக்குப்பின் பீமன் மெல்ல திரும்பி “நான் எழுவதற்கு சித்தமாகவே இருக்கிறேன். ஆனால் ஏன் செல்லவேண்டும்? அவர்களின் பூசனை அவர்களுக்குரியது அல்லவா?” என்றான். முண்டன் ஒன்றும் சொல்லவில்லை. “மேலும் நான் எந்தப் பூசனைகளிலும் அரசுமுறைச் சடங்குகளிலும் பொதுவாக கலந்துகொள்வதுமில்லை.”

முண்டன் குறட்டையொலி எழுப்பினான். பீமன் எழுந்து அவனை உலுக்கி “சரி, செல்வோம்” என்றான். முண்டன் கண்களைத் திறந்து “எங்கே?” என்றான். “பூசனைக்கு.” முண்டன் “எந்தப் பூசனைக்கு?” என்றான். “விளையாடாதீர். நாகர்களின் குலதெய்வ வழிபாட்டுக்கு.” முண்டன் “நல்ல துயில் வந்து அமைகிறது… நாளைக்கு செல்வோமே” என்றான். “கிளம்பும்” என பீமன் அவனைப் பிடித்து உலுக்கினான். “நாம் இன்றே இங்கிருந்து கிளம்பியாகவேண்டும்” என்றான். முண்டன் வாயைத் துடைத்தபடி “இனிய துயில். எடைமிக்க வெம்மையான மரவுரிப் போர்வைபோல என்னை மூடியது. அதில் நான் குரங்காக இருந்தேன்” என்றான்.

அவர்கள் கைகால்முகம் கழுவி பூசெய்கை நிகழ்ந்த இடத்திற்கு சென்றனர். தொலைவிலேயே அங்கே பந்தங்கள் எரிவது தெரிந்தது. நிழல்கள் எழுந்து அகன்று மரக்கிளைகளின் இலைப்பொதிகளின்மேல் விழுந்து ஆட மனித உடல்களும் தழலென செந்நிறம் கொண்டிருந்தன. ஓசைக்கு அஞ்சிய பறவைகள் எழுந்து வானில் சிறகடித்தன. வானில் விடிவெள்ளி இல்லை என்பதை பீமன் கண்டான். “இன்னும் முதற்புலரியே எழவில்லை” என்றான். “நாம் விழித்துக்கொள்வதே புலரி” என்றான் முண்டன். பீமன் சினத்துடன் திரும்பி நோக்க “காலையில் நாம் பேசுவதே தத்துவம். சினம் கொள்ளவேண்டாம்” என்றான் முண்டன். பீமன் “மேலும் வேடிக்கைகள் வேண்டாம்… நான் சீர்நிலையில் இல்லை” என்றான். முழவொலி குரைப்பதுபோல கேட்டுக்கொண்டிருந்தது. அங்கே நாலைந்துபேர் மட்டுமே நின்றிருந்தனர்.

அவர்கள் அணுகியதும் அனைவரும் திரும்பி நோக்கினர். ஒருவர் ஏதோ சொல்லவர பிறிதொருவர் மெல்லிய ஒலியால் அடக்கினார். அவர்கள் சென்று நின்றுகொண்டதும் ஒருவர் குங்குமத் தாலத்தை எடுத்துவந்து அள்ளி அவர்களின் முகத்தில் பூசினார். ஓலையாலான நாகபடமுடியை அவர்களுக்கும் சூட்டினார். அங்கே நிரையாக அமைந்திருந்த தெய்வங்களில் நகுஷனை பீமன் கண்டடைந்தான். இடைக்குக்கீழே நாக உடலும் மேலே மானுட உடலும் முகமும் கொண்டிருந்தான். வலக்கையில் அமுதகலமும் இடக்கையில் செங்கோலும் இருந்தது. அப்பால் ஒரு சிறிய உலையில் மண்பானையில் அன்னம் வெந்துகொண்டிருந்தது. அருகில் ஒரு முயல் கால்கள் கட்டப்பட்டு காத்திருந்தது.

முழவோசை நடைமாறுபாடு கொண்டது. தண்டகர் வருகிறார் என எண்ணி திரும்பி நோக்கிய பீமன் அங்கே இருவர் கைகளில் தாலங்களுடன் காத்து நிற்பதைக் கண்டான். ஒருவரின் தாலத்தில் மலர்களும் இன்னொருவரிடம் செந்தூரமும் இருந்தன. பந்தத்துடன் ஒருவர் அருகே நின்றிருந்தார். முழவு விசைகொண்டு துள்ளிச்செல்லத் தொடங்கியது. மலையிறங்கும் புரவி. அனைத்தையும் வாளால் கிழித்து எழுவதுபோல அலறலோசை கேட்டது. உடலை விதிர்க்கச் செய்யும் மானுடம் கடந்த ஓசை.  குடிலில் இருந்து பாய்ந்து வந்தவரை தண்டகர் என ஒருகணம் கழித்தே பீமன் அறிந்தான். சிறுத்தையின் பாய்ச்சலுடன் வந்து அந்தப் பந்தத்தை பிடுங்கிக்கொண்டார். அதைச் சுழற்றியபடி வெறிகொண்டாடியபோது அனலால் ஆன சுழலுக்குள் அவர் நீந்துவதுபோலிருந்தது. அனல்வளையங்களைச் சூடி அதனுள் வருவதாகத் தோன்றியது.

இருமருங்கும் நின்றவர்கள் மலரும் செந்தூரமும் அள்ளி வீச அவர் சிவந்து பந்த ஒளியில் காற்று விளையாடும் தழலென்று நின்றாடினார். புலியின் உறுமல். யானைப் பிளிறல். ஓநாய்க் கூவல். ஒன்றோடொன்று கலந்து அவை உருவாக்கும் பிறிதொரு பெருங்குரல். அவர் வந்து தெய்வங்களின் முன்னால் சென்று நின்றார். பந்தச்சுடரால் தெய்வங்களை உழிந்தார். அந்த முயலை எடுத்து அவர் முன்னால் இட்டனர். நாகமென உடல்வளைத்து அதை கவ்வி எடுத்தார். பற்களாலேயே அதன் வயிற்றைக் கவ்வி உடைத்து குருதி வழிய தலையை உதறினார். குருதி அவர் உடலில் பரவியிறங்கியது. துடித்த முயலை எடுத்து நாகமூதாதையருக்கு முன்னால் படைத்தார்கள். ஆடி நின்று உடல்நடுங்கி மெய்ப்புகொண்டார். பின்னர் அப்படியே இருட்டிலிருந்து அறுபட்டு பின்னால் சரிந்து விழுந்தார்.

அவரை இருவர் முகத்தில் நீர் தெளித்து விழிக்கச் செய்தனர். இருவர் அந்த முயலைப் பகுந்து குருதியை அச்சோற்றுடன் பிசைந்து சிறிய கவளங்களாக்கி மலருடன் இலைகளில் வைத்து தெய்வங்களுக்கு படைத்தனர். பந்தங்களின் ஒளியில் கற்சிலைகள் உயிர்கொள்வது தெரிந்தது. இளைய பூசகர் ஒவ்வொரு தெய்வத்திற்கும் மலரிட்டு அடிவணங்கி மலர் எடுத்து சென்னிசூடி சுடராட்டு காட்டினார். மெல்ல கையூன்றி புரண்ட தண்டகர்  இருவர் பற்றி தூக்க  உடல் சொடுக்கி நடுங்க எழுந்து நின்று தெய்வங்களை கைகூப்பி வணங்கினார். முதல்சுடர் அவருக்கு காட்டப்பட்டதும் தொட்டு வணங்கினார்.

அவர் செல்லும்பொருட்டு திரும்பியதும் முண்டன் “முதுநாகரே, நீங்கள் எங்களுக்காக அனந்தம் நோக்கி நெறியுரைக்கவேண்டும்” என்றான். அவர் திரும்பி “நான் அதை நோக்கி நெடுங்காலமாகிறது” என்றார்.  “நாங்கள் இங்கிருந்து எங்கு செல்வதென்று அறியாமலிருக்கிறோம். அதில் ஏதேனும் வழி தெரியுமென எண்ணுகிறோம்” என்றான். “அது வழிகாட்டக்கூடியதல்ல இளையவனே, வழி கலக்கும் சுழி” என்றார் தண்டகர். “கலங்கித் தெளிகையில் எழும் என எண்ணுகிறேன்” என்று பீமன் சொன்னான். அவர் இருவரையும் நோக்கியபின் தன்னை மீண்டும் அமரவைக்கும்படி தூக்கியவர்களிடம் சொல்லிவிட்டு மெல்ல அமர்ந்தார். காட்டில் சுள்ளிகள் ஒடிவதுபோல அவர் எலும்புகள் ஒலித்தன. அமர்ந்ததும் அவர்களையும் அமர்க என கைகாட்டினார்.

நாகநச்சு கலக்கப்பட்ட ஏனத்தை இரு நாகர்கள் கொண்டுவந்து அவர் முன் வைத்தனர். அவர் கைகளைக் கோத்து மடியில் வைத்து விழிமூடி உளம் குவித்து நெடுநேரம் இருந்தார். பின்னர் விழிதிறந்தபோது நாகமென மூச்சு சீறினார். விழிகளும் நாகங்களின் இமையாநோக்கு கொண்டிருந்தன. “நோக்குக!” என அவர் பீமனிடம் சொன்னார். “கூர்ந்து நோக்குக! இந்நீர்ச்சுழி ஒரு ஆடி. ஆடியல்ல சாளரம். சாளரமல்ல இளையவனே, இது ஒரு வானம். வானமல்ல, முடிவின்மை என்றறிக! நோக்குக!” பீமன் அதை குனிந்து நோக்கினான். நீலநீர்ப்பரப்பில் அவன் நிழல் தெரிந்தது. ஒரு குமிழி அதன் மேல் அலைந்தது. இன்னொரு சிறுகுமிழி வந்து ஒட்டிக்கொண்டது.

“தெரிவது என்ன?” என்றார் தண்டகர். அவன் தன் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் விழிகள் பதைப்புடன் அவனை நோக்கின. விழிவிலக்க எண்ணினாலும் அவ்விழிகளால் அவன் ஆட்கொள்ளப்பட்டான். “சொல்க, நீ பார்ப்பதென்ன?” என அவனிடம் எவரோ கேட்டனர். அவனை நோக்கிய விழிகள் திகைப்பு கொண்டன. பின்னர் அடையாளம் கண்டுகொண்டன. அந்த முகம் தெளிவுகொண்டபடியே வந்தது. அது தன் முகம் அல்ல என அவன் உணர்ந்தான். மென்புகையென மீசை அரும்பிய இளைய முகம். பெருந்தோள்கள், மஞ்சள்நிறம். “அவன் பெயர் புரு” என்றார் தண்டகர். “அவன் தன் முதுதாதை புரூரவஸின் அதே முகம் கொண்டு பிறந்தான். ஆகவே புரு என அவனுக்கு பெயரிட்டனர்.”

பீமன்  அந்த விரிந்தகன்ற தோள்களை நோக்கினான். “அவன் அரக்கர்குலத்துக் குருதிகொண்டவன். ஆகவே அப்பெருந்தோள்கள் அமைந்தன அவனுக்கு…” என்றார் தண்டகர்.  அவனால் அத்தோள்களை விட்டு விழியகற்ற முடியவில்லை. அறியாது எழுந்த நீள்மூச்சால் அவன் தோள்கள் அசைந்தபோதும் அத்தோள்கள் அலைகொள்ளவில்லை. ஆனால் மெல்ல நீர்ப்படலம் நெளிந்தது. பிறிதொரு பெருந்தோள் தெரிந்தது. “அவன் பிரவீரன், ஏழுபுரவித் தேரை கைகளால் பற்றி நிறுத்தியவன். அவனை சந்திரகுலத்து அரக்கன் என்றனர் கவிஞர்” என்றார் தண்டகர்.

மீண்டுமொருமுறை உருவம் மாறியது. “சிங்கத்துடன் விளையாடிய அவனை பரதன் என்றனர்” என்றது அவர் குரல். மீண்டுமெழுந்த முகத்தை அவன் நோக்கியதுமே “யானைகளை வென்றவன், ஹஸ்தி. பெருநகரை அமைத்து கோல்சூடியவன்” என்றது குரல். “அதோ, அவன் குரு. பின்னர் எழுந்தவன் பீமன்.” பீமன் தோள்விரிந்த திருதராஷ்டிரனின் முகத்தை நோக்கினான். அவர் உதடுகளால் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். “உன் முகம்” என்றார் தண்டகர். பீமன் பெருமூச்சுவிட்டான். அவன் உடல் மெல்ல அசைய மீண்டும் அலையிளகியது நீர்ப்பரப்பு.

“நகுஷனின் தனிமை யதி என்னும் மைந்தனாகப் பிறந்தது. அவன் துயரம் சம்யாதியாகியது.  அவன் சினம் ஆயாதியாகியது.  வஞ்சம் அயதியாகியது. விழைவு துருவனாக ஆகியது. பாண்டவனே, அவன் கொண்ட  காமம் யயாதியெனும் மைந்தனாகியது. கணுக்களில் கூர்கொள்வதே முளையென மரத்திலெழுகிறது. அறிக, தந்தையரில் கூர்கொள்வதே மைந்தரென்று வருகிறது”  தண்டகர் சொன்னார். “ஒருமடங்கு விழைவும் இருமடங்கு வஞ்சமும் மும்மடங்கு சினமும் நான்மடங்கு துயரும் ஐந்து மடங்கு தனிமையும் கொண்டிருந்தான் நகுஷன். அவன் நூறுமடங்கு கொண்டிருந்த காமமே யயாதி.”

“யயாதி பிற ஐவரையும் வென்று குருநாட்டின் முடிசூடினான்” என்றார் தண்டகர். “தன் பொன்றாப் பெருவிழைவாலேயே சக்ரவர்த்தியென்றானான். ஐவகை நிலங்களையும் வென்றான். முடிமன்னர் கொண்டுவந்து காலடியில் சேர்த்த பெருஞ்செல்வத்தால் கருவூலத்தை நிறைத்தான். அள்ளிக்கொடுத்து அதை ஒழித்து புகழ்நிறைத்தான். வேள்விகள் செய்து விண்ணமர்ந்த இந்திரனுக்கு நிகரென்றானான்.” பீமன் நீலச்சுழியில் தெரிந்த புருவின் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். அது துயர்கொண்டிருந்தது. ஒருபோதும் சொல்லென உருக்கொள்ளாத துயரம் தன்னை விழியொளியென முகத்தோற்றமென உடலசைவென ஆக்கிக்கொள்கிறது. அத்துயரம் பெய்யாத் துளி. இறுகி முத்தென்றாகும் ஒளி. அவன் பெருமூச்சுவிட்டான்.  புரு புன்னகை செய்தான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 46

46. ஒற்றைச்சொல்

முழுவிசையுடன் தன் கைகளால் மாநாகத்தின் வாயை மூடவிடாமல் பற்றிக்கொண்டான் பீமன். இருவரின் ஆற்றல்களும் முட்டி இறுகி அசைவின்மையை அடைந்தபோது அதன் விழிகள் அவன் விழிகளுடன் முட்டின. அக்கணமே அவர்களின் உள்ளங்கள் தொட்டுக்கொண்டன. இருவரும் ஒருவர் கனவில் பிறர் புகுந்துகொண்டனர். பீமன் அவன் முன்பு முண்டனுடன் கல்யாண சௌகந்திகமலர் தேடிச்சென்ற அசோகசோலையில் நின்றிருந்தான். அவன் முன் இந்திரனுக்குரிய மணிமுடியுடன் நின்றிருந்தான் நகுஷன்.

“நான் ஆயுஸின் மைந்தனும், புரூரவஸின் பெயர்மைந்தனுமாகிய நகுஷன், உன் குலத்து மூதாதை” என்று நகுஷன் சொன்னான். “குருநகரியில் என் மஞ்சத்தில் படுத்திருக்கிறேன். அரண்மனைச் சாளரம் வழியாக வரும் காற்று என் இடப்பக்கத்தை தழுவிக்கொண்டிருக்கிறது. சாளரத் திரைச்சீலைகள் அசையும் ஓசையை கேட்கிறேன். இது கனவு என நான் நன்கறிவேன். ஆனால் கனவு மேலும் அழுத்தமான மெய்யென்றும் தோன்றுகிறது. நீ இன்னும் மண்நிகழவில்லை, ஆயினும் உன்னை என்னால் காணமுடிகிறது.”

“உங்கள் முகத்தை நான் நன்கறிந்திருக்கிறேன், எந்தையே” என்றான் பீமன். “என் இளையோனின் விழிகள் இவை.” நகுஷன் “ஆம், உன்னையும் நான் நன்கறிந்திருக்கிறேன். என் மூதாதை புரூரவஸின் முகம் கொண்டிருக்கிறாய்” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கியபடி நின்றிருந்தனர். ஒருவரை ஒருவர் நன்கறிந்திருப்பதாக உணர்ந்தனர். ஒரு சொல்கூட உரையாடிக்கொள்ள வேண்டியதில்லை என்று தோன்றியது. “ஒரு துலாவின் இரு தட்டுகளில் முழுநிறைநிகர் கொண்டு நாம் நின்றிருக்கிறோம். நீ என்னை ஏற்கவேண்டும், நான் உன்னை உண்டு உடல்கொண்டால் என் அறையில் மீண்டெழுவேன். இன்னொரு நீள்வாழ்வு எனக்கு வாய்க்கும்” என்றான் நகுஷன்.

“நீங்கள் மண்மறைந்தவர். உங்களில் எஞ்சுவதை நான் பெற்றாகவேண்டுமென்பதே நெறி” என்றான் பீமன். “விழைவகலாமல் நான் விண்புக முடியாது… நான் பசித்திருக்கிறேன்” என்றான் நகுஷன். “எந்தையே, உங்கள் ஆறாப்பசி என்பது என்ன?” என்றான் பீமன். “ஏனென்றால் நாங்கள் ஐவருமே ஐவகை பசிகொண்டவர்கள். என் பசி ஊனில். என் இளையோனின் பசி உணர்வில். மூத்தவர் அறிவில் பசிகொண்டவர்.” நகுஷன் அவனை காலத்திற்கு அப்பால் வெறித்திருந்த விழிகளால் நோக்கினான். “என் பசி எங்கு தொடங்கியதென்று எண்ணிப்பார்க்கிறேன்” என்றான். “அவிழா வினாக்களில் இருந்து அது தொடங்கியது என தோன்றுகிறது.”

தனக்குள் என நகுஷன் சொன்னான் “வாழ்க்கை என்பது சில வினாக்களை திரட்டிக்கொள்வது மட்டுமே என்று தோன்றுகிறது. அனைத்து வினாக்களையும் திரட்டி ஒற்றைவினாவென ஆக்கிக்கொள்பவன் விடுதலை அடைகிறான்.” நாகத்தின் விழிகள் இரு நிலைத்த நீர்க்குமிழிகளாக தலைக்குமேல் தெரிந்தன. அதன் உடலில் இருந்து பரவிய குளிரில் அவன் உடல் விரைத்துக்கொண்டது. செயலற்ற உடலில் இருந்து எண்ணச்சொல் என ஏதும் எழவில்லை. “ஒன்றிலிருந்து ஒன்றென அறியா முடிச்சுகள்…” என்றான் நகுஷன். அவன் விழிகள் மாறின. “என் உடல் ஏன் கல்லாகியது? ஏன் மீண்டது அது?”

பீமன் “யார்?” என்றான். நகுஷன் அக்குரலை கேட்காதவன்போல சொல்லிக்கொண்டே சென்றான். “ஏன் அவளை அங்கேயும் கண்டேன்? அவள் ஏன் எனக்கென அங்கும் காத்திருந்தாள்?” பீமன் “எந்தையே, நீங்கள் யார்?” என்றான். மிக அருகே அர்ஜுனனின் குரல் கேட்டது. “யாரது?” என்று நகுஷன் திடுக்கிட்டு திரும்பினான். “இந்திரனா? யார்?” பீமன் “எந்தையே, நீங்கள் அறிய விழைவது எதை?” என்றான். “இங்கே இக்குகைக்குள் இருக்கிறான், என் உள்ளுணர்வு சொல்கிறது” என தருமனின் குரல் கேட்டது. அர்ஜுனனின் அம்பு ஒன்று வந்து குகைமேல் பாறைவளைவை உரசிச்செல்ல அந்த ஒளியில் குகை மின்னி மறைந்தது.

பீமன் விழித்துக்கொண்டு ஒரு கணம் உடல்நடுங்கினான். “விட்டுவிட்டது” என்றான். பின்னர் எழுந்து “எங்கே?” என்றான். முண்டன் “இங்கிருக்கிறீர்கள், பாண்டவரே” என்றான். பீமன் மெல்ல இயல்புமீண்டு “அந்த வினா என்ன?” என்றான். முண்டன் புன்னகை செய்தான். “அதில் திரள்வதுதான் என்ன?” என்றான் பீமன். முண்டன் “நாம் கிளம்புவோம்… இது அல்ல என்றால் இங்கிருப்பதில் பொருளில்லை” என்றான். “என்ன நிகழ்ந்தது?” என்றான். “நீங்கள் அறிந்ததே நானும் அறிவேன்” என்றான் முண்டன். “உங்களுடன் நானும் அங்கிருந்தேன்.” பீமன் முண்டன் அருகே முழந்தாளிட்டு அமர்ந்து “என்ன நிகழ்ந்தது? என் மூதாதை இன்னும் அக்குகைக்குள்தான் இருக்கிறாரா?” என்றான்.

முண்டன் “வருக!” என எழுந்து நடந்தான். அவனைத் தொடர்ந்தபடி பீமன் “சொல்லுங்கள் முண்டரே, அவர் எங்கிருக்கிறார்? நான் அவரை உண்மையில் எப்போது சந்திக்கப்போகிறேன்? அவர் மீள்வது எப்படி?” என்றான். முண்டன் அங்கிருந்த சிறிய சுனை ஒன்றை அணுகி அதன் கரையென அமைந்த பாறையில் நின்றான். பாறையிடுக்கில் ஊறிய நீர் அந்தப் பாறைக்குழிவில் தேங்கி மறுபக்கம் வழிந்து யானை விலாவிலிட்ட பட்டு என மெல்லிய ஒளியுடன் வழிந்து சென்றது. கீழே அது தொட்டுச்சென்ற இடங்களில் பசுமை செறிந்திருந்தது. உள்ளிருந்து எழுந்த ஊற்றால் சுனை அலை ததும்பிக்கொண்டிருந்தது.

முண்டன் அமர்ந்து தன் சுட்டுவிரலை அச்சுனைமேல் வைத்தான். அவன் உளம்குவிகையில் அத்தனை தசைகளும் வில்நாண் என இழுபட்டன. விரிந்தகன்ற அலைகள் திரும்பிவந்து அவ்வூற்றுக்குள் சுழித்து அமிழ்வதை பீமன் கண்டான். மெல்ல சுனை அமைதிகொண்டது. அதன் நீலப்பரப்பில் அவன் நகுஷனை கண்டான். அவனருகே தருமன் அமர்ந்திருந்தான். தருமனின் சொற்களைக் கேட்டு கைகளால் வாய்பொத்தி உடல்வளைத்து நின்றிருந்தான் நகுஷன். பின்னர் குனிந்து அவன் கால்களைத் தொட்டு தலையணிந்தான். அவன் உடலை ஒட்டி விழுந்திருந்த கரிய நிழல் எழுந்து அவனருகே நின்றது. “ஹுண்டன்” என்றான் பீமன். “அவர் ஏன் மூத்தவரை வணங்குகிறார்?”

“அவர் விண்ணேறும் சொல்லை பெறுகிறார்” என்றான் முண்டன். “மூத்தவரிடமிருந்தா?” என்றான் பீமன். முண்டன் “அல்ல, அவர் தந்தை ஆயுஸிடமிருந்து” என்றான். பீமன் விழித்துநோக்கியபடி நின்றான். ஹுண்டனும் நகுஷனும் கைகோத்துக்கொண்டனர். காற்றில் புகை கலைவதுபோல வெளியில் கரைந்து மறைந்தனர். “அவர்கள் விண்புகுந்துவிட்டனர்” என்றான் பீமன். “ஆம்” என்று முண்டன் சொன்னான். “அவர் சொன்னதென்ன?” என்றான் பீமன். “அது ஒற்றைச் சொல்… உதடசைவு ஒரு சொல்லையே காட்டியது.” பீமன் “ஒற்றைச் சொல்லா, அனைத்து வினாக்களுக்கும் விடையாகவா?” என்றான். “ஆம், அது அவர்களுக்குரிய விடை” என்றான் முண்டன்.

tigerமுண்டனும் பீமனும் நாகவனத்திலிருந்து வெளியேறி நீரோடை வறண்டு உருவான காட்டுப்பாதையில் நடந்தனர். அதனூடாகவே மான்களும் பன்றிகளும் நடந்துசென்றிருந்தன என்பது காலடித்தடங்களில் தெரிந்தது. “நாம் திரும்பிவிடுவோம்” என்றான் பீமன். “இது மாயமான்வேட்டை என எனக்குத் தெரிகிறது. நுண்மையைத் தேடுபவன் வாழ்வை இழப்பான் என்று எனக்கு எப்போதுமே தோன்றியிருக்கிறது. இப்புவிவாழ்க்கையில் பருண்மைகளே நமக்கு சிக்குபவை. நுண்மைகள் மறுஎல்லையில் தெய்வங்களாலும் ஊழாலும் பற்றப்பட்டிருக்கின்றன. நுண்மைகளில் அளைபவன் தெய்வங்களை நாற்களமாட அறைகூவுபவன்.”

“உண்மை” என்றான் முண்டன். “ஆனால் நுண்மையென ஒன்றை தன் வாழ்க்கையில் அறியப்பெற்றவன் அதை உதறி மீள்வதே இல்லை. நுண்மை தன் அறியமுடியாமையாலேயே அறைகூவலாகிறது. அறியத்தந்த துளியை நோக்கி அறிபவனின் உள்ளத்தை குவிக்கிறது. பாண்டவரே, அறியமுடியாமையை கற்பனையால் நிறைத்துக்கொள்வது மானுட இயல்பு. கற்பனை பெருவெளியென்றே ஆகும் வல்லமைகொண்டது. பருண்மைகள் கற்பனை கலவாதவை. நுண்மையோ கற்பனையால் கணமும் வளர்க்கப்படுவது. அறிக, இப்புவியில் பருண்மைகளில் மட்டுமென வாழும் ஒரு மானுடனும் இல்லை. அறியா நுண்மைகளை நோக்கி தவமிருந்து அழியும்பொருட்டே மண்ணில் வாழ்வது மானுடம்.”

பீமன் பெருமூச்சுவிட்டான். “ஒரு துளி நுண்மை பருண்மையின் பெருமலைகளை ஊதிப்பறக்கவைத்து தான் அமர்ந்துகொள்கிறது. நுண்மையின் ஒளிகொண்ட பருண்மை ஒருபோதுமில்லாத பேரழகு கொள்கிறது. வேதமென்பது என்ன? நுண்மைகளை நோக்கி சொற்களை கொண்டுசெல்லும் தவம்தானே? வேதச்சொல் என்பது நுண்மையின் வெம்மையால் உருகி உருவழிந்த ஒலியன்றி வேறென்ன? பாண்டவரே, கவிதை என்பது பருண்மைகளை ஒன்றுடன் ஒன்று நிகர்வைத்து நடுவே துலாமுள்ளென நுண்மையை உருவகித்தறியும் முயற்சி அல்லவா?”

“அத்தனை கலைகளாலும் மானுடன் அறியமுயல்வதுதான் என்ன? தோன்றல் சுவைத்தல் திளைத்தல் அடைதல் வெல்லல் நோயுறுதல் துயருறுதல் மறைதல் என கைதொட்டு கண்நோக்கி அறியும் பருண்மைகளுக்கு அப்பால் ஏதுள்ளது எஞ்சி? அவை ஏன் போதாமலாகின்றன? ஒளியெழும் காலைக்கு ஒரு இசைக்கீற்று அளிப்பது என்ன? கார்குழலுக்கு ஒரு மலர் மேலுமென சேர்ப்பது எதை?” முண்டன் சொன்னான் “இந்த முள் உங்கள் வெறுமையை தொட்டுவிட்டது, பாண்டவரே, இதையறியாமல் இனி இதிலிருந்து மீட்பில்லை உங்களுக்கு.”

பீமன் புன்னகைத்து “கட்டுவிரியன் கடித்துவிட்டு மெல்ல பின் தொடரும். கடிபட்ட உயிர் ஓடிக்களைத்து சரியுமிடத்திற்கு வந்துசேரும்” என்றான். முண்டன் உரக்க நகைத்தான். “நாம் செய்யவேண்டியதென்ன?” என்றான் பீமன். “காத்திருப்போம்… நம்மை நோக்கி வருவதென்ன என்று பார்ப்போம்.” பீமன் “வருமென்று என்ன உறுதி உள்ளது? நிகழ்வுப்பெருக்கென ஓடும் இப்பெருவெளிக்கு நம் மீது என்ன அக்கறை?” என்றான். முண்டன் “அது நம்மை கைவிடமுடியாது. கைவிட்டால் அதற்கு ஒழுங்கோ இலக்கோ இல்லையென்று பொருள். பாண்டவரே, மெல்லிய நீர்த்துளிகூட தன்னை சிதறடிக்க ஒப்புவதில்லை” என்றான்.

அன்று உச்சிப்பொழுதில் அவர்கள் நாகர்களின் சிற்றூர் ஒன்றை சென்றடைந்தனர். தொலைவிலேயே நாய்கள் குரைக்கும் ஒலி கேட்டது. உயர்ந்த மரம் ஒன்றின் உச்சியில் கட்டப்பட்டிருந்த பரணிலிருந்து முழவோசையும் எழுந்தது. நாய்கள் தொடர நச்சு அம்புகள் இறுகிநின்றிருந்த விற்களுடன் ஆறு நாகவீரர்கள் அவர்களை நோக்கி வந்தனர். பிறர் நின்றுவிட ஒருவன் மட்டும் நச்சு வேலுடன் அவர்களை அணுகிவந்து “எவரென்று தெரிந்துகொள்ள விழைகிறோம்” என்றான். “நாங்கள் வழிப்போக்கர்கள். நாகவனத்தை பார்க்கச் சென்றோம்” என்று முண்டன் சொன்னான். சட்டென்று எம்பி தலைகீழாக சுழன்று அதேபோல நின்று “ஆடலும் பாடலும் அறிந்தவன். என் கலைகளைக் கண்டு நீங்கள் நகைக்கலாம். இவர் எதையும் அறியாதவர். ஆகவே இவரை வெறுமனே நோக்கி சிரிக்கலாம்” என்றான்.

அவன் முகம் மலர்ந்தது. “நகைக்கூத்தரா? வருக!” என்றான். முண்டன் பாய்ந்து அவன் தோள்மேல் ஏறி நின்று “எழுக புரவியே!” என்றான். அவன் திகைப்பதற்குள் குதித்து நிலத்தில் நின்று “ஆணையிடுகையில் புரவிமேல் அமர்வது எங்கள் வழக்கம்” என்றான். அவன் உரக்க நகைத்து “எங்களூர்களுக்கு நகைக்கூத்தரோ சூதரோ வருவதில்லை. நாங்கள் அவர்கள் தேடும் பொருள் அளிக்கும் வளம்கொண்டவர்களல்ல” என்றான். “நான் பொருள் தேடி வரவில்லை” என்றான் முண்டன். “பிறிது ஏது தேடி வந்தீர்கள்?” என்றான் நாகன். “உணவு, உடை” என்றான் முண்டன். “நல்ல பரிசுப்பொருட்கள், அணிகள், தங்கம், அருமணிகள்.” நாகன் “அதைத்தான் நாங்கள் பொருள் என்கிறோம்” என நகைக்க “ஆ, நீங்களும் என் மொழியையே பேசுகிறீர்கள்” என்றான் முண்டன்.

மூங்கில்புதர்களால் வேலியிடப்பட்ட சிற்றூரில் இழுத்துக்கட்டப்பட்ட யானைத்தோல் கூரைகள்கொண்ட சிறுகுடில்கள் வட்டமாக சூழ நடுவே குடித்தலைவனின் மூன்றடுக்குக் கூரைகொண்ட குடில் இருந்தது. அதன் முன் அமைந்த முற்றத்தில் அவர்கள் கொண்டுசென்று நிறுத்தப்பட்டனர். நாகர்குடிகள் கூச்சலிட்டபடி ஓடிவந்து அவர்களை சூழ்ந்துகொண்டன. இடையில் குழந்தைகளை ஏந்திய பெண்கள். அன்னையரின் ஆடைகளைப்பற்றிய குழந்தைகள். புழுதிமூடிய சிற்றுடல்கள், மரவுரிகள், கல்மாலைகள், மரக்குடைவு வளையல்கள். மலர்சூடிய நீள்கூந்தல்கொண்ட கன்னியர். வேட்டைக்கருவிகளும் படைக்கலங்களுமாக தோள்தசை இறுகி, வயிற்றுநரம்புகள் வரிந்து, வில்லெனும் கால்கள் கொண்ட இளையோர்.

பெருங்குடிலுக்குள் இருந்து முதிய நாகர்குடித்தலைவன் தன் நாகபடக் கோலுடன் இடைவரை கூன்விழுந்த உடலுடன், ஆடும்தலையில் நாகக்கொந்தையுடன், பழைய எலும்புகள் சொடுக்கொலி எழுப்ப, மூச்சொலியும் முனகலுமாக உள்ளிருந்து மெல்ல வெளிவந்து அவர்களை பழுத்த விழிகளால் நோக்கினார். “இவன் யார்?” என்று பீமனை நோக்கி விரல்சுட்டி காட்டினார். கணுக்கள் முறிந்து இணைந்தவைபோல உருவழிந்திருந்தது அவ்விரல். “நகைக்கூத்தர். இவன் அக்குள்ளரின் மாணவன். வித்தைகள் காட்டுவார்கள் என்றார்கள்” என்றான் அவர்களை அழைத்துவந்தவன். நாகர்களின் உடல்கள் சிறியவை, முதுமையால் மேலும் சிறுத்து அவர் ஒரு சிறுவனை போலிருந்தார்.

ஆடும் தலையில் நிலைகொண்ட விழிகளுடன் அவனை நோக்கிக்கொண்டிருந்தார். “நான் உன்னை முன்னரே கண்டிருக்கிறேன். உன்னை அல்ல. உன் மூதாதையரில் ஒருவரை. அல்லது…” என்றபின் “பெருந்தோளனே, உன் குடி என்ன? பெயரென்ன?” என்றார். “அஸ்தினபுரியின் குருகுலத்தில் பிறந்தவன். பாண்டுவின் மைந்தான். என் பெயர் பீமன்” என்றான் பீமன். “ஆம், நினைத்தேன்” என்றார் அவர். “என் பெயர் தண்டகன். உன் குடிமூதாதை ஒருவரை நான் முன்பு கண்டதுண்டு.” பீமன் “எப்போது?” என்றான். “நெடுங்காலத்திற்கு முன்பு… நான் நீணாட்களாக வாழ்கிறேன்” என அவர் புன்னகைத்தார். “என் கண்ணெதிரே நாடுகள் உருவாகி அழிந்துள்ளன. தலைமுறைகள் பிறந்து இறந்துகொண்டுள்ளன” என்றார்.

“நீங்கள் கண்ட என் மூதாதையின் பெயரென்ன?” என்றான் பீமன். “அவர் பெயரை நான் மறந்துவிட்டேன். உயரமானவர். மிகமிக உயரம்… மெலிந்த வெண்ணிற உருவம்… நான் அவரை சிபிநாட்டுப் பாலையில் கண்டேன்.” பீமன் “பீஷ்மர், என் பிதாமகர்” என்றான். “ஆம், அவர் பெயர் பீஷ்மர். காமநீக்க நோன்புகொண்டவர் என்றார்கள்.” அவர் அவனை நோக்கி “ஷத்ரியர்களை நாங்கள் எங்கள் குடிகளுக்குள் ஒப்புவதில்லை…” என்றார். “நான் ஷத்ரியனாக இல்லை இப்போது. காடேகி குரங்குகளுடன் வாழ்கிறேன்.” அவர் புன்னகைத்து “ஆம், உன்னிடம் குரங்குமணம் எழுகிறது. ஆகவேதான் உன்னை என் உள்ளம் ஏற்கிறது” என்றார். “இங்கு ஏன் வந்தீர்கள்?”

“நான் ஒரு மலரை தேடிவந்தேன்” என்றான் பீமன். “அதன் பெயர் கல்யாண சௌகந்திகம் என்றார்கள். அதன் நறுமணத்தை நான் உணர்ந்தேன். அதை என் தேவிக்கென கொய்துசெல்ல வந்தேன்.” அவர் அவனை நோக்கி புன்னகைத்து “அதையெல்லாம் பொருட்டென எண்ணும் நிலையில் நீ இன்னமும் இருப்பது மகிழ்வளிக்கிறது” என்றார். பின்னர் உடல்குலுங்க வாய்விட்டு நகைத்து “நன்று, பொருட்டென எண்ணாமல் அதை அறியமுடியாது, அறியாமல் கடக்கவியலாது” என்றார். பீமன் சற்றே சினம்கொண்டாலும் அதைக் கடந்து “நான் ஏன் அதைத் தேடிவந்தேன் என நானே வியந்துகொண்டிருக்கிறேன், மூத்தவரே” என்றான். “அதை அறிவதும் அம்மலரை அறிவதும் நிகர்” என்றார் அவர்.

“நீங்கள் பீஷ்மபிதாமகரை எப்போது பார்த்தீர்கள்?” என்றான் பீமன். “நெடுங்காலம் முன்பு நிகழ்ந்தது அது. அன்று நான் என் குடியை விட்டு நீங்கி உலகை முழுமையாகக் காணும்பொருட்டு அலைந்து கொண்டிருந்தேன். பாஞ்சாலத்திற்கும் சிந்துவுக்கும் கூர்ஜரத்திற்கும் சென்றேன். அங்கிருந்து சிபிநாட்டுப் பாலையில் சென்று அங்குள்ள மக்களுடன் வாழ்ந்தேன். என் குலத்தின் வருவதுரைக்கும் முறைகளும் உளமறியும் நெறிகளும் எங்கும் எனக்கு தேவையான பொருளை ஈட்டியளித்தன. என் வழிச்செலவுக்கென மட்டுமே அவற்றை பயன்படுத்திக்கொண்டிருந்தேன்” என்றார் தண்டகர்.

“என்னிடம் அனந்தம் என்னும் யானம் இருந்தது. அதில் நாகரசத்தை நிரப்பி அதை பார்ப்பவரின் உளமென்றாக்க என்னால் இயலும். விழிப்பு, கனவு, ஆழ்வு, முழுமை என்னும் நான்கு நிலைகளிலும் ஒருவன் அதில் தன்னை நோக்கமுடியும். அதை நோக்கும்பொருட்டு பீஷ்மர் வந்தார். அன்று அவர் இளைஞர்.” முண்டன் “அன்று தங்கள் வயதென்ன?” என்றான். அவர் மீண்டும் உடல்குலுங்க நகைத்து “அன்றும் நான் முதியவனே…” என்றார். பீமன் “அவர் அதில் தன்னை நோக்கினாரா?” என்றான். “ஆம், நோக்கி அதிர்ந்தார். அவர் கண்டது அவர் எண்ணியதை அல்ல.”

முண்டன் “ஆம், எப்போதுமே எண்ணியது எழுவதில்லை” என்றான். பீமன் “அவர் கண்டது எதை, மூத்தவரே?” என்றான். “அவர் எண்ணியது புருவை, கண்டது யயாதியை” என்றார் தண்டகர். “நான் அவருக்கு அவர் குலமூதாதையரின் கதையை அவருக்குள்ளிருந்தே கண்டெடுத்து சொன்னேன். அஞ்சி அமர்ந்திருந்தார். பின்னர் தெளிந்து விலகிச்சென்றார்.” பீமன் நீள்மூச்சுடன் “ஆம், புரிகிறது” என்றான். முண்டன் “மாறாமலிருக்கும்படி செலுத்தப்பட்ட ஊழ் கொண்டவர்களைப்போல அளிக்குரியோர் எவருமில்லை” என்றான்.

இளந்தலைவன் “மூத்தவரே, இவர்களை நாம் வரவேற்கலாமா?” என்றான். “ஆம், இவர்களுக்கு ஆவன செய். இவர்கள் காட்டும் கலைகளை கண்டு நாமும் மகிழ்வோம்” என்றார் தண்டகர். அவர் கைகளை முட்டில் ஊன்றி முனகியபடி எழப்போனபோது பீமன் “மூத்தவரே, நான் உங்கள் கால்களை தலைசூடலாமா?” என்றான். அவர் புன்னகைத்து “அது வழக்கமில்லை. நீ ஷத்ரியன்” என்றபின் “இங்குள நாகர் அதிர்ச்சியுறக்கூடும்” என்றார். “என் மூதாதை நீங்கள், உங்கள் குருதி நகுஷனிலூடாக என் குலத்திலும் உள்ளது” என்றான் பீமன். அவர் “ஆம்” என்று சொல்ல பீமன் சென்று அவர் காலடிகளை தொடப்போனான். அவனை அழைத்துவந்த நாகவீரன் “அது முறையல்ல… உங்களுக்கு அவர் வாழ்த்துரைத்தால் நீங்கள் எங்கள் குடியென்று ஆகிறீர்கள்” என்றான்.

பீமன் “ஆம், நாகனாகவும் நான் இருக்கிறேன்” என்றான். “எங்கள் குருதி தூயது, அதுவே எங்கள் தகுதி” என்றான் அவன். பீமன் “வீரரே, குருதிக்கலப்பில்லாத குடி என பாரதவர்ஷத்தில் ஏதுமில்லை. என் இளையோன் நாகர்குடிப் பெண்ணை மணந்தவன். நான் அரக்கர்குடிப் பெண்ணை மணந்தேன். எங்கள் குடியிலும் அரக்கரும் நாகரும் குருதி செலுத்தியுள்ளனர்” என்றான். “அப்படியென்றால் குடி என்பது பொய்யா? நீங்கள் தலைக்கொள்ளும் நால்வர்ணமும் பிழையானதா?” என்றான் நாகன்.

“எவன் பிறப்பறுக்கும் பெருஞ்செயலை மட்டுமே செய்கிறானோ அவன் அந்தணன். எது தனித்துவமேதுமின்றி, தான்மட்டுமேயென்றாகி, இயல்புகளனைத்தும் சூடி, ஏதுமில்லையென்றாகி இருக்கிறதோ அதில் தன் இறுதிப்பற்றை கொண்டிருப்பவன் அவன். அதைவிட்டு உலகியலில் உழல்பவன் அந்தணருக்குரிய கருவில் பிறந்தாலும் அந்தணன் அல்ல” என்றான் பீமன். “பிறர்நலம் காக்கும்பொருட்டு வாழ்பவன் ஷத்ரியன். கொடையினூடாக முழுமைகொள்பவன் வைசியன். உருவாக்கி உணவூட்டி வாழ்ந்து நிறைவடைபவன் சூத்திரன். செயல்களால் மட்டுமே வர்ணங்கள் உருவாகின்றன. பிறப்பினால் அல்ல.”

பீமன் தொடர்ந்தான் “நினைப்பறியா தொல்காலத்திலேயே இங்கு குடிகளும் குலங்களும் கலக்கத் தொடங்கிவிட்டன. எனவே குடித்தூய்மை குலத்தூய்மை என்பவை பொய்நம்பிக்கைகளன்றி வேறல்ல. அனைத்து மானுடருக்கும் உடல்சேர்க்கையும் பிறப்பும் இறப்பும் நிகரே. நாங்கள் அந்தணராயினும் அல்லவென்றாயினும் வேள்விசெய்கிறோம் என்னும் வேதச்சொல்லே குலமும்குடியும்வர்ணமும் பிறப்பினாலன்று என்பதற்கான முதற்சொல் ஆகும். பிறப்பில் மானுடர் விலங்குகளே. நெறிகளை ஏற்றுக்கொள்ளும் உபநயனத்தாலேயே குலமும் குடியும் அமைகின்றன.”

நாகவீரன் குழப்பத்துடன் தண்டகரை நோக்கிவிட்டு தலைவணங்கினான். இன்னொரு நாகவீரன் வந்து வணங்கி “குடிலுக்கு வந்து இளைப்பாறுக, விருந்தினரே!” என்றான். அவர்கள் அவனைத் தொடர்ந்து சென்றபோது இருமருங்கும் கூடிநின்ற நாகர்கள் அவர்களை நோக்கி சிரித்தனர். கைநீட்டி பேசிக்கொண்டனர். முண்டன் “நீர் சொன்னவற்றை எங்கு கற்றீர்?” என்றான். “அறியேன், நான் ஏன் அவற்றை சொன்னேன் என்றும் தெரியவில்லை” என்றான் பீமன். பின்னர் நின்று “நான் அஞ்சுகிறேன், முண்டரே… நான் எப்படி அச்சொற்களை சொன்னேன்? அவை நன்கு யாக்கப்பட்டவை. நான் எங்கே கற்றேன் அவற்றை?” என்றான். முண்டன் “காலப்பக்கத்தை புரட்டிப்பார்க்கலாம். ஆனால் அதற்கு நிறையவே உணவு தேவைப்படும்” என்றான். “விளையாட வேண்டாம்… என் சித்தம் பிறழ்ந்துவிட்டதா என்றே ஐயம்கொள்கிறேன்” என்று பீமன் சொன்னான்.

அவர்களை நாகர்கள் ஒரு தோல்குடிலுக்குள் கொண்டுசென்றனர். அவர்கள் அருகே ஓடிய ஓடையில் நீராடி வந்ததும் புதிய மரவுரியாடைகள் அளிக்கப்பட்டன. அடுமனைக்கு அருகிலேயே சிறிய குடிலொன்றுக்குள் அமர்ந்து பீமன் உணவுண்ணலானான். அவன் உண்பதைக் காண நாகர்குடியே சூழ்ந்து நின்றது. சிறுவர்கள் அறியாது மெல்ல அவனை அணுகி அவனருகே சூழ்ந்து அமர்ந்துகொண்டனர். பெண்கள் உளக்கிளர்ச்சியால் ஒருவரை ஒருவர் தழுவிநின்றனர். இளையோர் ஒருவரோடொருவர் விழிதொட்டுக்கொண்டனர்.

முண்டன் உணவுண்டு எழுந்து நின்று “என் உள் அனல் நிறைந்துவிட்டது… இனி காடு பற்றி எரியும்” என்றான். பீமன் அவனை திரும்பிப்பார்க்காமல் உண்டுகொண்டிருந்தான். “நான் காலத்தை புரட்டி நோக்குபவன்…” என அவன் அப்பெண்களை நோக்கி சொல்ல அவர்கள் வாய் பொத்தி சிரித்தபடி பின்னகர்ந்தனர். அவன் துள்ளி பல சுருள்களாக சுழன்று சென்று நின்று “ஆ” என்றான். பீமன் “என்ன?” என்றான். “இது எந்த இடம்? நாகநாட்டில் பீதபுரம் என்னும் நகரம். முன்பு இது ஒரு சிற்றூராக இருந்தது… இதோ, ஒரு சிற்றாலயம். இங்கு பாண்டவனாகிய பீமன் வந்திருக்கிறான். அவன் உணவருந்திய இடத்தில் நாட்டப்பட்ட சிறுகல் தெய்வமாகியிருக்கிறது.”

பீமன் ஆர்வத்துடன் எழுந்து அருகே வந்தான். முண்டன் மீண்டும் பலமுறை சுருள்பாய்ச்சல் கொண்டு அருகே வந்து நின்று “பாண்டவரே, நீங்களா?” என்றான். “ஆம், நெடுந்தொலைவு சென்றீர்களோ?” என்றான். “நாம் எங்கிருக்கிறோம்?” என்றான் முண்டன். பீமன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் சூழ நோக்கிவிட்டு “இங்குதானா?” என்றான். பீமன் “சொல்லும், நான் சொன்னது எப்படி எனக்குத் தெரிந்தது?” என்றான். “என்ன சொன்னீர்?” என்றான் முண்டன். “நாகர்களிடம் நான் சொன்னது…”

“அவை சர்ப்பநீதி என்னும் நூலில் உள்ள சொற்கள்” என்றான் முண்டன். “நான் அந்நூலை படித்ததில்லை” என்றான் பீமன். “வாய்ப்பில்லை, அந்நூல் இன்னும் எழுதப்படவில்லை.” பீமன் “என்ன சொல்கிறீர்?” என்றான். “நாகத்திடம் நீங்கள் பிடிபட இன்னும் நாளிருக்கிறது. அந்நிகழ்வை சூதர் பாடியலைய மேலும் நாட்கள் தேவை. அதிலிருந்து அஸ்தினபுரியின் கவிஞரான அக்னிபாலர் தன் சிறிய நெறிநூலை யாக்க மேலும் நாள் கடக்கும். அது உங்கள் குருதிவழிவந்த மன்னராகிய ஜனமேஜயனின் காலத்தில்… அன்று இந்நூல் மிகவிரும்பி கற்கப்பட்டது… ஏனென்றால் நாகர்குலத்து முனிவரான ஆஸ்திகன் வந்து நாகவேதத்தை மீண்டும் நிறுவிவிட்டுச் சென்றிருக்கிறார்.”

பீமன் சில கணங்கள் அவனையே கூர்ந்து நோக்கிக்கொண்டு நின்றபின் தலையை அசைத்தான். “நாகவடிவு கொண்டிருந்த நகுஷனுக்கு மூத்த பாண்டவராகிய யுதிஷ்டிரர் உரைத்ததாக இச்சொற்கள் வருகின்றன” என்றான் முண்டன். பீமன் சில கணங்கள் நிலைவிழிகளுடன் நோக்கியபின் வெடித்துச் சிரித்தான்.