மாதம்: மார்ச் 2017

நூல் பதின்மூன்று – மாமலர் – 59

59. மலர்மருள் வேங்கை

தன் மஞ்சத்தில் கசனை துயிலவிட்டு அறைமூலையில் கால்களை நீட்டி அமர்ந்தபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் தேவயானி. அவன் பெருமூச்சுகள் விட்டபடி உடல் இறுகியும் அறியாது மெல்ல தளர்ந்தும் மீண்டும் இறுகியும் புரண்டுபடுத்தும் கைகால்களை நிலைமாற்றியும் துயிலிடம் மன்றாடிக்கொண்டிருந்தான். இமைக்குள் விழிகள் ஓடிக்கொண்டிருந்தன. பின்னர் மூச்சு சீரடையத்தொடங்கியது. அவன் துயில்கொள்வது வரை அசையாது அமர்ந்திருந்தாலும் அவளுக்குள் உள்ளம் நிலையழிந்துகொண்டிருந்தது. அவனுடைய சீர்மூச்சு வரத்தொடங்கியதும் அவள் முகமும் மெல்ல எளிதாகியது. பின்பு அவளும் துயின்றாள்.

பின்னிரவில் விழித்துக்கொண்டபோது அவன் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டாள். சாளரங்கள் திறந்து கிடந்தமையால் அறைக்குள் குளிர்காற்று சுழன்றுகொண்டிருந்தது. மரவுரி இருக்கிறதா என்று அருகிலிருந்த மூங்கில் பெட்டியை திறந்து பார்த்தாள். வழக்கமாக அவள் போர்த்திக் கொள்வதில்லை. எந்தக் குளிரும் அவளை நடுங்க வைப்பதில்லை. அவள் குளிரை உணர்ந்தது முழுக்க கனவுகளில்தான். மரவுரிப்போர்வை எதுவும் அறைக்குள் இருக்கவில்லை. எழுந்து வெளியே சென்று  திண்ணையில் நின்று எவரையேனும் அழைக்கலாமா என்று பார்த்தாள். எவரும் கண்ணில்படவில்லை.

அப்பால் அவன் குடில் அவன் சாம்பலாக  மூங்கில் சட்டங்களுடன் எரிந்தணைந்த சிதைபோல் கிடந்தது. தீயணைந்த நிறைவில் களைப்புடன் அனைவரும் துயில்கொள்ளச் சென்றிருந்தனர். குளிர்ந்த இரவுக்காற்றில் கரிப்பிசிறுகள் பறந்து இறங்கிக்கொண்டிருந்தன. முற்றத்தில் மெல்லிய ஓசை கேட்டு வேங்கைகள் என எண்ணி மறுகணம் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தாள். மரக்கிளையிலிருந்து சிற்றுயிர் ஒன்று இறங்கி அப்பால் சென்றது. திரும்புவதற்கு முன் அந்த ஒரு கணத்திலும் மூன்று வேங்கைகளும் முழுமையாகவே அங்கு இருப்பு கொண்டிருந்தன என்று உணர்ந்தாள்.

தலையைத் திருப்பி பின்பக்கம் அவை அவளை நோக்கியபடி படுத்திருக்கின்றன என்று கற்பனை செய்தாள். ஆனால் அவ்வொலி கேட்டபோது அவை உண்மையென இருந்தன. இப்போது கற்பனையென்று அவளுக்கு தெரிந்திருந்தது. அவற்றின் மெல்லிய மயிர்மணத்தை, வாயிலெழும் ஊன் வீச்சத்தை, பளிங்குருளைக் கண்களை, பஞ்சுக்கால்களை, உடல்கோடுகளை ஒவ்வொன்றாக நினைவிலிருந்தே மீட்டு அங்கிருந்த வெற்றிடத்தில் பொருத்தி அவற்றை வரைந்து மீட்டெடுக்க முயன்றாள். அவை முழுமையாக நினைவில் மீளவில்லை. அவ்வோவியத்தின் உறுமல் புகை போன்று காற்றில் கரைந்து கொண்டிருந்தது. இறங்கிச் சென்று காட்டில் கிடக்கும் அவற்றின் சடலத்தை பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

ஒருகணத்தில் பெரும் துயரொன்று வந்து நெஞ்சை மோத குளிர்ந்த எடையென அடைத்து நிறைத்தது. கால்கள் அவ்வெடை தாளாததுபோல மூங்கிலை பற்றிக்கொண்டு நின்றாள். எக்கணமும் வெடித்துக் கிளம்பி சிறுவழியினூடாக ஓடி காலைப்பனி ஈரமென படர்ந்த மென்மயிர் உடலுடன் இறந்து உறைந்து கிடக்கும் அவற்றை அணுகி அவற்றின் அசைவிழந்த சிறுகாதுகளின் நடுவே கழுத்தை, வெண்ணிறப் பனிமயிர் படர்ந்த அடிவயிற்றை தடவிக்கொடுக்கக்கூடும் அவள். அவை தங்கள் ஐம்பொதிக்கால்களை மெல்ல அழுத்தி கொஞ்சக்கூடும். அங்கு சென்று அவற்றைப்பார்த்தால் கதறி அழுதபடி அவற்றின் மேல் விழுந்துவிடுவோம் என்று தோன்றியது. மெல்ல தூணைப்பற்றியபடி திண்ணையில் அமர்ந்தாள்.

இருட்டுக்குள் சுள்ளிகள் ஒடிவது போன்ற ஒலி கேட்டது. ஏதோ சிற்றுயிர் என எண்ணி அவள் தலை திருப்பாமலிருந்தாள். பின்னர் மூச்சொலி கேட்டது. தலையை உலுக்கி காதுகளை  ஒலிக்கச் செய்தது வேங்கை ஒன்று. அவள் விழிதூக்கி பார்த்தபோது குருநிலையின் நுழைவாயிலில் நின்றிருந்த சாலமரத்தின் அடியில் பெரும்புலி ஒன்றை கண்டாள். அவளது உடன்பிறந்த மூன்று வேங்கைகளில் ஒன்றல்ல அது என்று முதல் கணத்திலேயே தெரிந்தது. நெஞ்சைப்பற்றியபடி மூச்சிறுக எழுந்து அது விழிமயக்கா என இருளை கூர்ந்து பார்த்தாள்.

மிக அருகிலென அதை கண்டாள். அக்கணமே அது ஏதென அறிந்தாள். மூன்று குட்டிகளை அங்கு விட்டுச்சென்ற அன்னைப்புலி. அங்கிருந்து சென்ற அதே முகத்துடன் மீண்டு வந்திருந்தது.  அதன் முகவாயின் நீள்மயிரைக் கூட காணமுடிந்தது. அவளை தன் மணிக்கண்களால் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தது. அவள் முற்றத்திற்குச் சென்றதும் தலையைத் தாழ்த்தி இரு காதுகளை சேர்த்தது. முற்றத்தின் நடுவில் நின்றபடி அவள் அதை நோக்கிக்கொண்டிருந்தாள்.

கதறி அழுதபடி ஓடி அதன் காலடியில் சென்று விழவேண்டுமென்று தோன்றியது. அதன் பொருட்டு அவள் உள்ளம் அசைந்தபோதுகூட உடல் அங்கேயே நின்றது. பின்னர் அஞ்சிய சிறுமியைப்போல வீறிட்டபடி திரும்பி குடிலுக்குள் ஓடி அவனருகே மஞ்சத்தில் சென்று படுத்துக்கொண்டாள். திடுக்கிட்டெழுந்து “யார்?” என்றபின் “நீயா? என்ன?” என்று கேட்டான் கசன். “வெளியே… அந்த வேங்கை” என்றாள். “என்ன?” என்று அவன் புரியாமல் மீண்டும் கேட்டான்.

“அன்னைப்புலி. முன்பு எனக்கு அமுதளித்தது” என அவள் அஞ்சிய சிறுமியின் குரலில் சொன்னாள். அவன் கையூன்றி எழுந்து “எங்கே?” என்றான். அவள் “வெளியே வந்து நின்றிருக்கிறது” என அவனை இறுக பற்றிக்கொண்டாள். அவன் அவள் இடையை வளைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு “அது உன் உளமயக்கு” என்றான். “இல்லை, இல்லை” என்று அவள் சொன்னாள். அவள் கன்னங்களிலும் கழுத்திலும் தோள்களிலும் மென்மையாக முத்தமிட்டபடி “உன் உளமயக்கு. ஐயமே இல்லை. புலிகள் அத்தனை அகவை உயிர் வாழ்வதில்லை” என்றான். அவள் அவன் தோளில் தன் முகத்தை அழுத்தியபடி விம்மி அழத்தொடங்கினாள்.

அவன் அவளை தன் உடலுடன் இறுகச் சேர்த்தபடி உள எழுச்சியுடன் முத்தமிட்டான். “என்னை விட்டு சென்றுவிடாதீர்கள். என்னுடன் இருங்கள். என்னை விட்டு சென்று விடாதீர்கள்” என்று அவள் தாழ்ந்த குரலில் தலையை அசைத்தபடி சொல்லிக்கொண்டிருந்தாள். அது அவள் குரலாகவே அவளுக்கு தோன்றவில்லை. இருளில் எவரோ கைவிட்டுச் சென்ற குழந்தையொன்றின் மன்றாட்டு போலவே ஒலித்தது. அங்கு அவனுடன் மஞ்சத்திலிருப்பது தன் உடலா என்று அவள் வியந்தாள். ஆடையை விலக்கி அவன் அள்ளி தன் உடலுடன் பொருத்திக்கொண்டதும் அவளல்ல. அவ்வறைக்குள் இருளில் எழுந்து வேங்கையென ஒளிரும் விழிகளுடன் அக்கூடலை அவளே நோக்கிக் கொண்டிருந்தாள்.

காலை ஒளி இமைமேல் பட்டு குருதி நிறத்தில் உள்ளே விடிவதற்கு முன்பு வரை அவள் ஒரு வேங்கையுடன் மெய்தழுவி சேக்கையில் படுத்திருந்தாள். அதன் உயிர் நீர் அவள் உடலெங்கும் பிசுக்கென படர்ந்து உலர்ந்து ஆடையென ஒட்டி தோலை இறுக்கத் தொடங்கியிருந்தது. அவள் மூச்சு முழுக்க அதன் உப்புக் குருதி மணமே நிறைந்திருந்தது. கைகள் அதன் மென்மயிர் தோளையும் விலாவையும் கழுத்தையும் வருடிக்கொண்டிருந்தன. விழித்தெழ வேண்டுமென்ற எண்ணம் எழுந்ததும் பிறகு என்று அதைத் தவிர்த்து புரண்டு வேங்கையை மீண்டும் உடல் சேர்த்து அணைத்துக்கொண்டது. அதன் வாயிலிருந்து பச்சைக்குருதி மணம் எழுந்தது. அவள் முகத்தை தன் நுண்மையான நாக்கால் மெல்ல நக்கியபடி அது உறுமியது. வெம்மை கொண்ட காற்று அவள் கன்னத்திலும் தோளிலும் படிந்தது.

“எவ்வளவு வெம்மை கொண்டிருக்கிறாய்!” என்று அது கூறியது. மானுடக்குரலாக அல்ல, வேங்கையின் இரும்புக்குரல் அது. “அனல் கொண்டவள் போலிருக்கிறாய். உன்னை தொடும்போதெல்லாம் ஏனிப்படி கொதிக்கிறாய் என்னும் எண்ணமே எழுகிறது. எப்போதேனும் நீ குளிரக்கூடுமா என்ன?” அவள்  “ஏன் இந்த வெம்மை உங்களுக்கு ஒவ்வாததா?” என்றாள். “ஒவ்வாது என்றல்ல, விந்தையாக இருக்கிறது.” அவள் “என் உடல்கூறு அப்படி. நான் பிறந்த போதே இந்த வெம்மையுடன்தான் இருந்தேன்” என்றாள்.

“பொசுக்கிவிடுவாய் போலும்” என நகைத்தபின் விழிமாறி “ஒரு சிதையில் எரிவதாகவே தோன்றியது” என்றான். அவள் அவனை உடலால் கவ்வி இறுக்கொண்டாள். “என்னுடன் இருங்கள்” என்றாள். “உன்னுடன்தான் இருக்கிறேன்” என்றான் கசன். அவள் மெல்ல துயிலில் மீண்டும் ஆழ்ந்து பின் மீண்டபோது கண்களுக்குள் செவ்வொளி பரவியது. விழித்து அறைக்குள் நிறைந்த புலரியொளியைக் கண்டு சிலகணங்கள் கழித்து இடமுணர்ந்து நினைவு கொண்டு நெஞ்சு அதிர கைநீட்டி ஒழிந்த மஞ்சத்தை உணர்ந்தாள். அவன் எழுந்துசென்ற மெல்லிய குழி நார்ச்சேக்கையில் இருந்தது. கைகளால் அதை வருடிக்கொண்டிருந்தாள். உவகையா துயரா என்றறியாது வெறுமைகொண்டிருந்தது உள்ளம். விழிநீர் பெருகி கன்னங்களில் வழிந்து சொட்டிக்கொண்டிருந்தது.

tigerகசன் வேங்கையாக மாறிவிட்டிருந்தான் என்பதை அவளால் வெறும்விழிகளாலேயே பார்க்கமுடிந்தது. காற்றில் வெண்பனிக்குவை செல்வதுபோல அவன் ஒழுகிநடந்தான். தலைநிமிர்ந்து தொலைவை நோக்கிபடி அசைவிலாது அமர்ந்திருந்தான். இருளில் அவன் விழிகள் ஒளிவிடுவதைக்கூட அந்தியில் அவள் கண்டாள். முதல்நாள் இரவில் அவளுடன் இருந்தபின்னர் அவன் அவளைப்பார்ப்பதே மாறிவிட்டது. மறுநாள் காலையில் எழுந்ததும் அவள் தன் உடல் குறித்த தன்னுணர்வையே முதலில் அடைந்தாள். நெய்யில் எரி ஏறும் ஒலியுடன் நெஞ்சு பதைப்புகொண்டது. கைகளால் மார்பை அழுத்திக்கொண்டு சிலகணங்கள் கண்மூடி படுத்திருந்தாள். பின்னர் எழுந்து ஆடைதிருத்தி வெளியே நடக்கும்போது தன் உடலைத்தவிர எதையுமே எண்ணமுடியவில்லை அவளால்.

உடல் மிதமிஞ்சி மென்மைகொண்டுவிட்டதுபோல் தோன்றியது. ஆடைகளும் அணிகளும் அயல்தொடுகையென விதிர்க்கச்செய்தன. இடத்தோள் மெல்ல துடித்துக்கொண்டது. கால்களில் சிறுகற்களும் உறுத்தின. தோள்களைக் குறுக்கி உடலை ஒடுக்கியபடி சிற்றடி எடுத்துவைத்து நீரோடை நோக்கி சென்றாள். வழியில் எதிர்ப்பட்ட விழிகளனைத்தையும் தவிர்த்தாலும் அனைத்து நோக்குகளையும் அவள் உடல் உணர்ந்துகொண்டுதான் இருந்தது. ஓடைக்கரையின் தனிமையில் மீண்டும் தன்னிலை பெற்று பெருமூச்சுடன் சுற்றும் நோக்கினாள். ஒளிபரவிய இலைத்தகடுகளும் நீரின் நிழலாட்டமும் அலைச்சுடர்வும் நீலவானின் வெண்முகில் சிதறல்களும் அனைத்தும் புத்தம்புதியவையாக தோன்றின. தன் உடல் தோலுரித்து பிறந்தெழுந்த கூட்டுப்புழு என புதியது என.

நீரிலிறங்கி கழுத்துவரை மூழ்கியபோது உடலில் இருந்து வெம்மை ஒழியத்தொடங்கியது. அவள் நீராடுகையில் எப்போதுமே நீர் வெம்மைகொண்டு குமிழியெழுவது வழக்கம். அதை தன் உடலுக்கும் நீருக்குமான உரையாடலாகவே அவள் உணர்வாள். குமிழிகள் அடங்கியபின்னர்தான் அவளுக்குள் குளிர் பரவத்தொடங்கும். குளிர் சென்று எலும்புகளைத் தொட்டபின்னர் மெல்லிய நடுக்கமொன்று எழும். அதற்கு ஒருநாழிகைக்குமேல் ஆகும். அன்று நீரின் முதற்தொடுகையே  அவளை சிலிர்க்கச்செய்தது. நீரில் மூழ்கியதுமே உடல் நடுங்கத் தொடங்கியது. கண்களை மூடி தன் உடலையே உணர்ந்தபடி குழல் நீண்டு ஒழுக்கில் அலைபாய உடல்மூழ்கிக் கிடந்தாள்.

அதே உடல்தான். அவ்வுடலையே அவள் அகம் தானென உணரவும் செய்தது, ஆயினும் அது பிறிதொன்றென ஆகிவிட்டிருந்தது. எப்போதுமே அவள் தன் உடலில் முலைகளையும் இடையையும் இயல்பாக உணர்ந்ததில்லை. தானென்று உணரும்போதும் அவை பிறிதொன்றை கரந்துள்ளன என்ற உள்ளுணர்வு இருந்தது. அவற்றின் அசைவு அவள் அசைவுகளுக்கு அப்பால் வேறொன்றென நிகழ்ந்தது. அவற்றைத் தொடுகையில் அயலுணர்வு இருந்தது. அன்று அவை முற்றிலும் அகன்றுவிட்டன என்று தோன்றியது. அவளுடன் அவை ஓசையில்லாத ஒற்றர்கள்போல் உடனிருந்தன. அவற்றைத் தொடவே அவள் கை எழவில்லை.

நீராடி எழுந்து ஈர ஆடையுடன் குடில்நோக்கிச் செல்லும்போது எதிரே வந்த பெண்கள் ஓரிரு சொற்களில் முகமனும் வாழ்த்தும் உரைத்தனர்.  அவள் எவரையும் எதிர்விழி நோக்காமல் கடந்துசென்றாள். வழக்கமான குரல்கள், ஆனால் அவர்களுக்குத் தெரியும் என நன்றாக புலப்பட்டது. அது வெறும் உளமயக்கு அல்ல என்று அவள் அகம் முடிவுறச்சொன்னது. அது அறிவால் உளத்தால் அறிந்துகொள்வது அல்ல, உடலே உணர்வது. உடல் என்பது தனித்தனியாக உள்ளத்தால் பகுக்கப்படுவது. தசையாலான ஒற்றைப்பெருக்கு. கூட்டுநடனங்களில் போர்விளையாட்டுகளில் அதை அவள் கண்டிருக்கிறாள். அவளுக்கு எங்காவது இருட்டுக்குள் சென்று ஒளிந்துகொள்ளவேண்டும் போலிருந்தது.

ஆடைமாற்றிக்கொண்டு அவள் திண்ணைக்கு வந்தபோது வேங்கைகளின் காதுத்துடி ஓசை கேட்டு மெய்விதிர்ப்பு கொண்டு திரும்பிப்பார்த்தாள். அவை குருநிலையின் மாணவர்களால் இழுத்துச்செல்லப்பட்டு காட்டுக்குள் புதைக்கப்பட்டன என அவள் அறிந்தாள். சென்று அவற்றின் உடலை பார்த்திருக்கலாம். அவை அவள் உள்ளத்திலிருந்து முற்றாக விலகிவிட்டிருக்கும். குழலை முதுகில் பரப்பி காற்றில் காயவிட்டபடி திண்ணையில் அமர்ந்துகொண்டாள். காய்ச்சல்கண்டதுபோல உடலெங்கும் சோர்வும் கண்களில் வெம்மையும் வாயில் மெல்லிய கசப்பும் இருந்தது. அந்தக் களைப்பு இனிதாகவும் இருந்தது. சுருண்டு படுத்துவிடவேண்டும், உலகை முழுமையாக அப்பால் தள்ளிவிடவேண்டும்.

கிருதர் அவளை கடந்துசென்றபோது “அமைவுக்கு வரவில்லையா?” என்றார். “காய்ச்சல்போலத் தெரிகிறது” என அவள் தலைகுனிந்து சொன்னாள். “ஓய்வுகொள்ளுங்கள்” என்றபடி அவர் தாண்டிச்சென்றார். அப்படி ஒதுங்கியிருந்து பேசுபொருளாவதைவிட சொல்லமைவுக்குச் சென்று அனைவருடனும் அமரலாம். தத்துவத்தில் ஈடுபடுவது மிக எளிது. அதன் முதல் சொற்கண்ணியை ஒரு கேள்வியாக ஆக்கிக்கொண்டால் போதும். இன்று தந்தை பருப்பொருளுக்கு தன்னை மாற்றிக்கொள்ளும் விழைவு உண்டா என்று உசாவப்போகிறார். இல்லை இங்கே எதற்கும் தன்னை மாற்றிக்கொள்ளும் விழைவு இல்லை.

ஓரவிழியில் கசனின் அசைவு தெரிந்ததுமே அவள் உள்ளமும் உடலும் துடிப்புகொண்டன. எழப்போகும் அசைவெழ அதை அடக்கிக்கொண்டாள். கசன் அவள் முற்றத்தருகே வந்து “நான் ஊன்வேட்டைக்குச் செல்லவிருக்கிறேன். நல்ல மான் கொண்டுவரும்படி ஆசிரியர் சொன்னார்” என்றான். அக்குரல் மேலும் ஆழமும் கார்வையும் கொண்டிருக்கிறதென்று தோன்றியது. வழக்கம்போல விழிதூக்கி அவன் விழிதொட்டு நேர்ச்சொல் பேச அவளால் இயலவில்லை. உடல்தளர்ந்து தொண்டை அடைத்துக்கொண்டது. கைகளால் மூங்கில்தூணை சுரண்டியபடி “ம்” என்றாள். “ஆசிரியரின் இரவு வகுப்பிற்கு வந்துவிடுவேன்…” என்று அவன் சொன்னான். “ம்” என்றாள். பேசினால் குரல் தழுதழுக்கும் என தோன்றியது.

அவன் திரும்பப்போகிறான் என கீழே விழுந்த நிழலசைவைக்கொண்டு அறிந்து அவள் அறியாமல் விழிதூக்கி அவன் விழிகளை சந்தித்தாள். பதறி விழிதாழ்த்திக்கொள்ள அவன் “உன் தந்தையிடம் நானே பேசுகிறேன்” என்றபின் திரும்பிச் சென்றான். அவன் செல்வதை நோக்கி அவள் எண்ணங்களற்று நின்றாள். பின்புதான் அவன் நடை மாறிவிட்டிருப்பதை உணர்ந்தாள். வேங்கை என்னும் சொல் நெஞ்சிலெழுந்ததும் படபடப்பு தொடங்கியது. அவனையே நெடுந்தொலைவுக்கு விழிசெலுத்தி நோக்கிக்கொண்டிருந்தாள். அவன் மறைந்ததும் நீள்மூச்சுடன் மீண்டாள்.

ஏன் நான் தளர்வுகொள்கிறேன்? அவன் ஏன் நிமிர்வுகொள்கிறான்? அவனை தான் என எழவும் என்னை நான் என குழையவும் செய்த ஒற்றை நிகழ்வின் உட்பொருள்தான் என்ன? மீண்டும் ஒரு திடுக்கிடலுடன் அவள் காலையில் கண்ட கனவை நினைவுகூர்ந்தாள். வேங்கையென்று ஆகிவிட்டிருக்கிறானா? வேங்கையின் உள்ளே புகுந்து மீண்டவன் எதை கொண்டுவந்தான்? அதற்கு முன் ஓநாய்களிடமிருந்து பெற்றதை இழந்துவிட்டானா? என்னென்ன எண்ணங்கள் என அவள் தன்னை விடுவித்துக்கொண்டாள். எழுந்தபோது கையூன்றியதை எண்ணி அந்த அசைவை பல மனைவிகளிடம் இருப்பதைக் கண்டதை நினைவுகூர்ந்து புன்னகைசெய்தாள்.

அன்று காலையுணவுக்குப்பின் அவள்  தன்குடிலுக்குள் படுத்து துயில்கொண்டாள். உச்சிப்பொழுதுக்குப்பின்னர்தான் விழித்தெழுந்தாள். அப்போது அவளருகே வேங்கை ஒன்று அமர்ந்திருந்தது. ஓசையின்றி அமர்ந்திருக்க வேங்கைபோல் திறம்கொண்ட பிற உயிர் இல்லை. அசைவில்லாது முழுநாளும் அமர்ந்திருக்க அதனால் இயலும். அது காத்திருக்கிறது என எளிதாக சொல்லலாம், அது காலமுடிவிலியின் முன் ஒரு நாற்களக்காயை நீக்கி வைத்துவிட்டு எதிர்நகர்வைக் காத்து அமர்ந்திருக்கிறது. முடிவிலிக்காலத்தின் மறுமுனையை தன்னுள்ளும் கொண்டிருக்கிறது.

பெரிய வேங்கை. அதன் கன்னமயிர் நன்றாக நீண்டு முகம் கிடைநீள்வட்டமாக மாறிவிட்டிருந்தது. அனல்நெளிவென கோடுகள் கொண்டது. கழுத்தின் வெண்மென்மயிர்ப்பரப்பு காற்று சுழன்ற மணல்அலைகள் போல. அவள் அதன் தலையை தொட்டாள். மெல்ல தலைதாழ்த்தி அவள் மடியில் தலைவைத்தது. வேங்கைத்தலைக்கு இத்தனை எடையா? அதன் கண்களை கூர்ந்து நோக்கினாள். நீள்வடிவ உள்விழி. புலியின் விழியென அல்குல் என்னும் காவியவரி நினைவுக்கு வந்தது. புன்னகையுடன் அதன் காதைப்பற்றி இழுத்தாள். வேட்கையை விழிகளாகக் கொண்டது. இந்திரனுக்கு உடலெங்கும், உனக்கு விழிக்குள். இந்திரன் விழியாக்கினான், நீ மீண்டும் அல்குலாக்கிக் கொள்கிறாய். அதன் கண்கள் சொக்கி சரிந்தன. முலையுண்டு நிறைந்த மதலையென. அவள் அதை வருடிக்கொண்டே இருக்க அதன் குறட்டையொலி எழத்தொடங்கியது.

விழித்தெழுந்தபோது அவள் உள்ளம் உவகையால் நிறைந்திருந்தது. காலையில் இழந்தவளாக வாயில்கள் திறக்கப்பட்டவளாக உணர்ந்தவள் வென்றவளாக முடிவிலாத ஆழம் கொண்டவளாக உணர்ந்தாள். மெல்லிய பாடலொன்றை வாய்க்குள் முனகியபடி அடுமனைக்கு சென்றாள். அடுமனைப்பெண் “உணவருந்துகிறீர்களா, தேவி?” என்றாள். “ஆம், பசிக்கிறது” என்றாள். “ஊன்சோறு ஆறிப்போய்விட்டது. சற்று பொறுங்கள், சூடுசெய்து தருகிறேன்” என்றாள். “இல்லை, கொடு” என வாங்கி உண்டாள். வாழ்வில் எப்போதுமே அத்தனை சுவைமிக்க உணவை உண்டதில்லை என்று தோன்றியது. மேலும் கேட்டுவாங்கி உண்டாள்.

கொல்லைப்பக்கம் சென்று அங்கிருந்த மரத்தொட்டி நீரை சுரைக்குடுவையால் அள்ளி வாழைமரத்தடியில் கைகழுவியபோது வாழைத்தூண்களுக்கு  அப்பால் தெரிந்த காட்டை பார்த்தாள். பச்சைக்கடல் அலை ஒன்று எழுந்துவந்து எல்லைகொண்டதுபோல. துள்ளிக்குதித்து பாடியபடி காட்டை நோக்கி ஓடவேண்டும் என தோன்றியது. அதன்பின்னரே அவள் அங்கே பாறைமேல் கசன் அமந்திருப்பதை பார்த்தாள். அவன் ஒரு பாறை என்றே தோன்றினான். அவன்தானா என்று பார்த்துக்கொண்டிருந்தாள். அருகே வந்த அடுமனைப்பெண் “அவர்தான். இந்தக் காட்டு ஆடு அவர் கொண்டுவந்த ஊன். அதன்பின் அந்தப்பாறையில் சென்று அமர்ந்திருக்கிறார்” என்றாள். “எப்போது?” என்றாள் தேவயானி. “உச்சிப்பொழுதிலிருந்தே” என்றாள்.

அங்கே சென்று அவனை பார்த்தாலென்ன என்று எண்ணினாள். ஆனால் அவன் அமர்ந்திருக்கும் அத்தனிமையை கலைக்கமுடியாதென்று தோன்றியது. அடுமனைப்பெண் “அவருக்காக வேங்கைகள் அங்கேதான் வழக்கமாக காத்திருக்கும்” என்றாள். அவள் நெஞ்சு அதிர திரும்பிப்பார்த்தாள். “உச்சிப்போதிலேயே அங்கே சென்றுவிடும். அவர் வரும்வரை அங்கே காத்திருக்கும்” என்றாள் அடுமனைப்பெண்.  அவள் சற்றுநேரம் நின்று அவனை நோக்கிக்கொண்டிருந்தாள்.

தனிமை நிறைந்த நெஞ்சோடு தன் குடிலறைக்கு திரும்பினாள். எழுந்த எண்ணங்களை விலக்கியபின் சுவடியை எடுத்துக்கொண்டு தந்தையை பார்க்கச் சென்றாள். அவர் காவியங்களைக் கற்கும் உளநிலையில் இருந்தார். ஆகவே அவள் கொண்டுசென்ற கவிதைநூல் அவரை உவகைகொள்ளச்செய்தது. “சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சி. அதன் செம்மஞ்சள்வரிகளால் அது ஒரு பறக்கும் வேங்கை. இனியதேன் உண்பது. எடையற்ற அசைவுகளுடன்  காற்றலைகளில் ஓசையின்றி பரவுவது. அது எந்த வேங்கையின் கனவு? அல்லது அவ்வேங்கைதான் அதன் கனவா?” அவள் அவரையே நோக்கிக்கொண்டிருந்தாள். “சின்னஞ்சிறு கருவண்டு. தேனுண்ணும் துதிக்கை. கரிய பளபளப்புகொண்ட உடல். அது பாடுவது கருமதவேழம் தன்னுள் இசைக்கும் யாழைத்தானா? மென்மலரசைய அமர்ந்தெழுவதுதான் பேருருக்கொண்டு காட்டுமரங்களை வேருடன் சாய்க்கிறதா?”

அஸ்வாலாயனரின் பிரமோதமஞ்சரி. அவர் உசாவிய அத்தனை தத்துவங்களையும் சமன்செய்துகொள்ள துலாவின் மறுதட்டில் அவர் வைத்த கனவு. அக்கனவின் தட்டு கீழிறங்கி தரைதட்டியது. மறுதட்டை நிகர்செய்யத் தவித்து இந்தத்தட்டின் கனவிலேயே ஒரு துண்டு வெட்டி அதில் வைத்தார். அவள் எண்ணிக்கொண்டிருந்ததையே சுக்ரர் சொன்னார். அல்லது அவர் சொல்வதையே அவள் உடன் எண்ணங்களாக ஆக்கி தொடர்ந்துகொண்டிருந்தாள். அந்திப்பூசனைக்காக சத்வரும் கிருதரும் வந்தபோது அவள் வணங்கி விடைபெற்றுக்கொண்டாள்.

திரும்பி தன் குடில்நோக்கி நடக்கையில் அவன் அங்கே பாறைமேல்தான் அப்போதும் அமர்ந்திருக்கிறானா என்று சென்று பார்க்கவேண்டுமென எண்ணினாள். தயங்கி முற்றத்தில் நின்றபடி எண்ணியபின் அந்தியிருளுக்குள் நடந்து குடில்களை கடந்துசென்றாள். குடில்களுக்குள் ஏற்றப்பட்ட நெய்விளக்குகளின் ஒளி செந்நிற நடைபாவாடைகள்போல விழுந்துகிடந்தது. ஒவ்வொன்றையும் கடக்கையில் அவள் எரிந்து எரிந்து அணைந்துகொண்டிருந்தாள். இருளுக்குள் சென்று நின்று தொலைவில் தெரிந்த அவன் நிழல்வடிவை நோக்கினாள். அவனை அழைக்கவேண்டுமென்னும் உந்துதல் எழுந்தது. அழைக்க எண்ணி கையை தூக்கியபோது அதை தானே உணர்ந்ததுபோல் அவன் மெல்லிய அசைவுகொண்டு திரும்ப அவன் விழிகள் எரித்துளிகளென மின்னி அணைவதை அவள் கண்டாள்.

tigerமறுநாள் அவள் இருட்காலையிலேயே எழுந்து நீராடிவிட்டு  வரும்வழியில் எதிரே அவன் வந்தான். அப்பால் எரிந்த விளக்கொன்றின் மெல்லிய ஒளியில் அவள் நிழல் இடப்பக்கமாக விழுந்து இலைகள்மேல் எழுந்து துணையொன்று வருவதுபோல் தோன்றச்செய்தது. அந்நிழலுடன் அவள் மெல்லியகுரலில் உரையாடிக்கொண்டிருந்தாள். “ஆம், அவ்வாறுதான்” என்றாள். “எப்போதும் அவ்வாறுதான் போலும். அதற்கு மாற்றில்லை, பிறிதொருவழியில்லை. எனில் அவ்வாறே ஆவதில் என்ன பிழை? பெருநெறியைப்போல் பழுதற்றது ஏதுண்டு? என்றும் காலடிகள் விழுந்துகொண்டே இருப்பதல்லவா அது?”

அவனை பிறிதொரு நிழலென கண்டாள். நீண்டு வந்து அவள் நிழலருகே நின்ற அதை நோக்கியபின் திரும்பி அவனை பார்த்தாள். சொல்லொன்றும் எடுக்காமல் புன்னகைசெய்தாள். “இன்று புலரியிலேயே காட்டுக்குள் செல்கிறேன். நேற்று ஆடு கொண்டுவந்தேன். இன்று இளம் காட்டுமாடு கொண்டுவரச்சொன்னார் ஆசிரியர்.” அவள் அதற்கும் புன்னகைபுரிந்தாள். “விலங்குகளைப்பிடிப்பது இத்தனை எளிதென்று இதற்கு முன் அறிந்ததில்லை” என்றான் கசன். “அவை நம்மை காட்டின் பிற அசைவுகளிலிருந்து வேறுபடும் தனியசைவுகளைக்கொண்டே அறிகின்றன. காட்டின் அசைவுகளுடனும் அசைவின்மையுடனும் நம் உடலசைவுகளும் அமைதியும் முற்றிலும் இசையுமென்றால் விலங்குகளால் நம்மை கண்டடையமுடியாது.”

அவள் தலைகுனிந்து “அது வேங்கைகளின் வழி” என்றாள். அவன் நகைத்து “ஆம்” என்று சொல்லி அவள் கன்னத்தை தொட்டு “மாலை பார்ப்போம்” என்று கடந்துசென்றான். அவள் அவன் தொடுகையை ஒரு மெல்லிய இறகுபோல ஏந்தி நடந்தாள். கன்னத்தை தொடவிரும்பி அது அத்தூவலை கலைத்துவிடும் என அஞ்சி முகத்தை அசைத்தாலும் அது பறந்துவிடும் என்பதுபோல நடந்தாள். எதிரே வந்த முதியதாதி வாய்திறந்து சிரித்து கடந்துசென்றாள். பிறிதொருத்தியும் அவ்வாறே சிரித்தபோதுதான் அது தன் முகம் மலர்ந்திருப்பதால்தான் என்று உணர்ந்தாள்.

அவ்வெண்ணம் மேலும் மலரச்செய்தது அவளை. சிரித்தபடி செல்லும் வழியிலேயே பூத்துக்குலைந்து தாழ்ந்து ஆடி நின்றிருந்த வேங்கையின் கிளையை  துள்ளி எம்பி கையால் தட்டினாள். உதிர்ந்த மலர்களை கையால் பற்ற முயன்று சிதறடித்துச் சிரித்தபடி குடிலைநோக்கி சென்றாள். ஏதோ எண்ணம் தோன்றி திரும்பி நோக்கியபோது மஞ்சள்மலர்கள் உதிர்ந்த மரத்தின் அடி  வேங்கை என உடல் குவித்து எழுந்து சிலிர்த்தது.

நூல் பதின்மூன்று – மாமலர் – 58

58. முள்நுனிக் காற்று

அன்று பகல் முழுக்க தேவயானி ஆழ்ந்த அமைதியின்மை ஒன்றை தன்னுள் உணர்ந்துகொண்டிருந்தாள். தந்தையின் பயிற்றறைக்குச் சென்று அவர் கூறியவற்றை ஏட்டில் பொறிப்பது அவள் காலைப்பணிகளில் முதன்மையானதாக இருந்தது. அவர் குரலும் உணர்வுகளும் நன்கு பழகிவிட்டிருந்தமையால் பல தருணங்களில் உளம் அமையாமலேயே செவிகளும் கைகளும் இணைந்து ஒலியை எழுத்தாக்கின. அவள் எழுந்து விடைகொண்டபோது சுக்ரர் “இன்று நீ உளம் குவியவில்லை” என்றார். அவள் மறுமொழி சொல்லவில்லை.

தன் குடிலுக்கு வந்தபோது ஏனென்றறியாத தனிமையையும் ஏக்கத்தையும் உணர்ந்தாள். அது ஏனென்று தன்னுள் சென்று தேடத் தேட ஆழம் அதை உந்தி வெளித்தள்ளி விலக்குவதை உணர்ந்தாள். சலித்து எதையேனும் செய்து விலகலாம் என்றெண்ணி முன்பு படித்து எச்சம் வைத்திருந்த காவியம் ஒன்றை எடுத்து சுவடிகளை புரட்டினாள். எழுத்துக்களை மொழியென்றாக்க இயலாமல் மீண்டும் பட்டு நூலில் கட்டி பேழைக்குள் வைத்து மூடிவிட்டு எழுந்து வெளிவந்தாள்.

வேங்கைகள் அப்பால் மரத்தடியில் நிழலில் படுத்திருந்தன. அவளை நோக்கி செவி சொடுக்கிய வேங்கை ஒன்று கண்ணைச் சுற்றிப் பறந்த சிற்றுயிர்களை தவிர்க்கும் பொருட்டு இமைகளை மூடித்திறந்தது. அது எதையோ சொல்ல வருவதுபோல் தோன்றியது. அவற்றை நோக்கியபடி அவள் அங்கு நின்றாள். முன்பெலாம் எழுந்து உடல் குழைத்தபடி அவளை நோக்கி ஓடிவரும் வழக்கம் கொண்டிருந்த அவை அங்கிருந்து அவளை நோக்கியபின் வாய்திறந்து  தலை திருப்பிக்கொண்டன.

அடுமனைக்குச் சென்று அங்கு ஏதேனும் வேலை செய்யலாம் என்று தோன்றியது. ஆனால் அங்குள அடுமனையாளர்களும் பெண்களும் கடினமான வேலை எதையும் அவள் செய்ய ஒப்புவதில்லை. அவளைக் கண்டதுமே அரசிக்குரிய உடல் வணக்கத்தை அவளுக்களித்து பணிந்த குரலில் ஒற்றைச் சொற்களில் பேசி உரிய இடைவெளிவிட்டு அகன்று நிற்பார்கள். ஆயினும் அடுமனை அவளுக்கு உகந்ததாகவே இருந்தது. அங்கே ஏதோ ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது எப்போதும்.

அடுமனைக்குள் அவள் நுழைந்ததும் அவர்கள் பேசிக்கொண்டிருந்ததென்ன என்னும் சிறிய துணுக்குறலை அடைந்தாள். ஒவ்வொரு விழியிலும் அறுபட்ட சொல்லொன்று ஒளியென நின்றது. தன்னைப்பற்றித்தான் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று உணர்ந்தபின் “ஏதேனும் பணி இயற்றலாமென்று வந்தேன்” என்றாள். பணிவுடன் “இங்கு அனைத்தும் முடிந்துவிட்டன” என்றார் அடுமனையாளர். அவள் “நான் கீரைகளை நறுக்குகிறேன்” என்றாள். “ஆம், அது ஒன்றுதான் இப்போது எஞ்சியுள்ளது” என்றபின் கழுவிய கீரைக்கட்டையும் கத்தியையும் கொண்டுவந்து வைத்தார் அடுமனையாளர்.

ஒவ்வொரு கீரையாக நோக்கி புழுஅரித்த இலைகளைக் களைந்து சீராக நறுக்கி அப்பால் குவித்தாள். அடுமனைக்கு அவள் வருவது அரிதென்றாலும் மெல்ல மெல்ல எந்தப் பணியிலும் எப்போதும் அவளிடம் இருக்கும் முழுமை அதிலும் கூடியது. அவள் கைகள் தேர்ந்த சூதனின் விரல்கள் யாழிலென கீரையிலும் கட்டையிலும் கத்தியிலும் தொழிற்படுவதை அவர்கள் விழிதிருப்பாது நோக்கினர். பெரிதோ சிறிதோ அல்லாமல் சீரான அளவிலேயே கீரையை வெட்டிக் குவித்த பின்பு சிவந்த கைகளை நோக்கி “செங்குழம்பிட்டதுபோல்…” என்று அவள் புன்னகையுடன் சொன்னாள்.

அப்புன்னகை அவர்கள் அனைவரையும் எளிதாக்கியது. “காய்கள் எவையேனும் உள்ளனவா?” என்றாள். “கிழங்குகள் உள்ளன” என்றார் ஒருவர். அவர் கொண்டுவந்த கிழங்குகளை விரல் தடிமனுக்கு வெட்டி கலவைக்கூட்டுக்காக தனித்தனியாக வைத்தாள். அச்செயல்களினூடாக உள்ளமைந்திருந்த நிலைகுலைவை வென்றுசெல்ல அவளால் இயன்றது. கைகள் உள்ளத்தை இயக்கும் விந்தையைப்பற்றி எண்ணிக்கொண்டாள். உள்ளத்தை எங்குதான் கொண்டு செல்ல முடியவில்லை? கால்களில், கைகளில், கண்களில், சொற்களில். ஆனால் எத்தனை இறைத்தாலும் குறையா ஊற்றென அது உள்ளில் அமைந்திருக்கிறது. நன்று, மனிதருக்கு செயலாற்றும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. இவ்விலங்குகள்போல இங்கிருப்பவற்றை அப்படியே உண்டு அமைந்த இடத்திலேயே உறங்கி வாழவேண்டியதில்லை.

உச்சிப்பொழுது கடந்த பின்னர் கசன் காட்டிலிருந்து திரும்பி வந்தான். தொலைவில் காட்டின் விளிம்பில் அவனைக் கண்ட முதற்கணம் அவள் உணர்ந்தாள், அதுவரை அவளுக்குள் இருந்த பதற்றம் அவனைக் குறித்தே என்று. அது ஏனென்றும் அப்போது தெரிந்தது. அவனைக் கொல்ல முயன்றது எவர் என்று கண்டடைய முடியவில்லை. பாறை உச்சியிலிருந்து அவன் தவறி விழுந்திருக்கலாம் என்றுதான் சுக்ரரும் பிறரும் எண்ணினர். அவ்வாறு தவறி விழக்கூடியவன் அல்ல அவன் என அவள் அறிந்திருந்தாள். வேங்கைகளின் பிழையாத கால்நுண்மை கொண்டவன். அவனை எவரோ கொல்ல முயல்கிறார்கள் என்று தனித்திருக்கையில் மிக ஆழத்தில் ஒரு எண்ணம் உறுதியாக சொன்னது. மரத்தரையில் செவிவைத்து படுத்திருக்கையில் அப்பாலெங்கோ பேசும் குரல் சொல்புரியாது தலைக்குள் கசிந்து செல்வதுபோல.

எதன் பொருட்டு?  எதன் பொருட்டு அவன் வந்திருக்கிறான்? சஞ்சீவினிக்காக என்று சுக்ரரின் மாணவர்கள் அனைவரும் எண்ணுவது அவளுக்கு தெரிந்திருந்தது. அவ்வாறு எண்ணுவதற்கே அனைத்து வழிகளும் இருந்தன. ஆனால் அவள் அவ்வாறு எண்ண விழையவில்லை. அதனாலேயே அவ்வாறல்ல என்பதற்கான நூறு செல்வழிகளை உருவாக்கிக் கொண்டிருந்தாள். ஒன்றை மறுத்தாலும் பிறிதொன்றுக்கே கடக்க முடிந்தது. அத்தனை சொற்களையும் கொண்டு தன்னுள்ளத்தை அவ்வாறே பயிற்றுவித்தாள். ஆயினும் அந்த ஐயமும் எங்கோ எஞ்சியிருந்தது. புல்விதையையும் ஐயத்தையும் முற்றிலும் அகற்ற எவராலும் இயலாது என்று இளவயதில் கேட்ட முதுமொழியை எண்ணிக்கொண்டாள்.

வேங்கைகள் கசனைக் கண்டதும் பெண்மைநிறைந்த அசைவுகளுடன் அணுகி அவன் உடலில் உரசியபடி சுழன்று, தாவி கால்தூக்கி எழுந்து, தோள் தழுவி மடியில் படுத்துப் புரண்டு மகிழ்வொலி எழுப்பி, வால் சுழற்றி, பொய்க்கடி கடித்து, போலிச் சீறல் எழுப்பி மகிழ்வு கொண்டாடின. அவன் அவளருகே வந்து “இன்று முன்னதாகவே மீண்டுவிட்டேன்” என்று  சொன்னபோது ஏன் அந்த சீற்றம் தன்னுள் எழுந்ததென்று அவளுக்கு புரியவில்லை. கடுத்த முகத்துடன் “நன்று” என்றபின் திரும்பி தன் குடிலுக்குள் சென்றுவிட்டாள். அவள் உணர்வு மாற்றத்தை புரிந்துகொள்ளாமல் சில கணங்கள் நின்றுவிட்டு அவன் தன் குடிலுக்கு சென்றான்.

பிற்பகல் முழுக்க அவள் தன் அறைக்குள் முழங்காலை கட்டிக்கொண்டு சுவர் மூலையில் அமர்ந்திருந்தாள். பின்னர் அங்கேயே படுத்து காலிடுக்கில் கைகளை புதைத்துக்கொண்டு விழிமயங்கினாள். அவனிடம் ஏன் அச்சீறிய முகத்தைக் காட்டினேன்? ஏனெனில் இவன் நிலைகுலையச் செய்கிறான். உளம்தவித்து நான் விழையும் முற்றுறுதி ஒன்றை அளிக்க மறுக்கிறான். எழுந்துசென்று அவனை பற்றித்தூக்கி “சொல், என்னுள் நுழையாது உன்னுள் எஞ்சியிருப்பதென்ன…?” என்று கேட்கவேண்டும். ஆனால் ஒருபோதும் அதை கேட்டுவிட முடியாது. இப்புவியில் அனைத்து மகளிரும் ஆண்களிடம் கேட்பது அதைத்தான். அத்தனை உளச்சொல்லையும் பெண்களுக்கு அளித்துவிடும் ஆணென ஒருவன் இருக்கக்கூடுமோ? இருந்தால் அந்தப் பெண் அவனிடம் மேலும் எதை கேட்பாள்?

அந்தியிருள் பரவி சீவிடுகளின் ஒலியெழத் தொடங்கியதும் அவள் எழுந்து பின்பக்கம் சென்று முகத்தைக் கழுவி கூந்தலைச் சீவி முடிந்துகொண்டாள். நீராடலாம் என்று தோன்றியது என்றாலும் சோம்பலால் அதை ஒழிந்தாள். சேடி வந்து “உணவருந்துகிறீர்களா?” என்று கேட்டபோது வேண்டாமென்று கையை அசைத்தாள். குடிலின் பின்பக்கம் சிறு திண்ணையில் அமர்ந்து குடில் வளைப்புகளின் எல்லைக்கு அப்பால் குறுங்காட்டில் பறவைக்குரல்கள் எழுந்துகொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்தாள்.

மின்மினிகள் எழுந்து இருளுக்குள் சுழன்று பறந்தன. காட்டு எருதொன்று காட்டின் எல்லையிலிருந்து வெளிவந்து அவளை நோக்கியது. அத்தனை தொலைவிலேயே அதன் விழிகள் மின்னித் திரும்புவதை அவள் கண்டாள். தலை குலுக்கி, செவிகளை உடுக்கென ஒலிக்கவிட்டு, எடைமிக்க காலடிகளை தூக்கி வைத்தது எருது. அதன் கால்பட்டு புரண்ட மட்கிய மரமொன்றிலிருந்து தழல்போல மின்மினிகள் எழுந்து காற்றில் சுழன்று சிதறி மறைந்தன. தோழி மீண்டும் வந்து “உணவருந்தவில்லையா, தேவி?” என்றாள். “வேண்டியதில்லை” என்று சொல்லி எழுந்து குடிலுக்குள் சென்றாள்.

மெல்லிய உறுமலோசை கேட்க சாளரம் வழியாக நோக்கியபோது கசன் தன் குடிலுக்கு முன்னால் வேங்கைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதை கண்டாள். அவன் கால்களை அசைக்க அவற்றை இரையென நடித்து வேங்கைகள் பாய்ந்துசென்று உகிர் உள்ளிழுக்கப்பட்ட பூங்கால்களால் பற்றி பல் படாமல் கடித்து உறுமியபடி இழுத்து உதறி விளையாடின. மஞ்சத்தை விரிக்காமலேயே அவள் படுத்துக்கொண்டாள். மென்சேக்கை மீது முகத்தை அழுத்தி கைகளை தலைமேல் வைத்து இருளுக்குள் தன்னை புதைக்க முயன்றாள். துயில் வரவில்லை என்றாலும் விரைந்தோடிய எண்ணங்கள் ஒவ்வொன்றாக தயங்கி நின்றன. பொருளிலாச் சொற்களென சித்தம் சொட்டிக்கொண்டிருந்தது.

பிறகெப்போதோ விழித்துக்கொண்டபோதுதான் அனலோசையை கேட்டாள். விழிப்பதற்கு முன்பே கனவில் கசனுடன் அவள் நடந்து சென்று கொண்டிருந்தபோது காடு பற்றிக்கொண்டு தழல்மணம் எழுந்ததையும் செஞ்சுடர் பட்டுக்கொடி பறப்பதுபோல் ஓசையிட்டதும் நினைவுக்கு வந்தது. உண்மையிலேயே தீயா என அரைத்துயில் கொண்ட உள்ளம் திகைத்தது. அதற்குள் சக்ரனும் பிறரும் எழுப்பிய குரலை அவள் கேட்டாள். பதறியபடி கதவைத் திறந்து வெளிவந்தபோது கசனின் குடில் எரிந்து கூரை தரை நோக்கி அமிழ்ந்துவிட்டிருந்தது. சுவர்கள் எரிந்து அதன்மேல் விழுந்தன. குடில்களிலிருந்து அலறியபடி ஓடிவந்த அனைவரும் மரக்குடங்களும் குடுவைகளும் கொண்டு நீரள்ளி சூழ்ந்திருந்த பிற குடில்களின் கூரைகளில் வீசினர். அவன் அக்குடிலுக்குள் இல்லை என அவள் அப்போதே உணர்ந்துகொண்டாள்.

tigerமெல்லிய ஒலியொன்றைக் கேட்டு அவள் திடுக்கிட்டாள். எழுந்து நின்று காட்டையே உற்று நோக்கினாள். அது வேங்கைகளின் உறுமல் என தெரிந்தது. ஆனால் மிக மெல்ல ஒரு சிறு வண்டு காதோரம் சென்றதைப்போலவே அது ஒலித்தது. மீண்டும் செவிகூர்ந்தபோது அவ்வொலி கேட்கவில்லை. ஆனால் அது செவிமயக்கு அல்ல என உறுதியாகவே தெரிந்தது. காட்டுக்குச் செல்லும் பாதையை நோக்கி சென்றாள். “எங்கு செல்கிறீர்கள், தேவி?” என்றான் ஒருவன். ஒன்றுமில்லை என்றபடி அவள் இடைவழியினூடாக நடந்து காட்டின் விளிம்பை சென்றடைந்தாள்.

அணுகியபோது வேங்கைகளின் உறுமலை அவள் கேட்டாள். அச்சிறு ஒலியிலேயே அவள் உள்ளம் அச்சம் கொண்டது. அவளறியாத வேறு வேங்கைகள் அங்கே காட்டிற்குள் இருப்பதாகத்தான் தோன்றியது. இருளுக்கு விழிபழகுந்தோறும் மரங்களின் கிளைகள் தெளிந்தன. பின்பு இலைகளின் வான்விளிம்பு துலங்கியது. பாதை செந்நிறத் தடமாக வளைந்து சென்றது. காட்டின் எல்லையை அவள் அடைந்தபோது உள்ளே புதர்களுக்குள் மூன்று வேங்கைகளும் படுத்திருப்பதை கண்டாள். அவள் காலடியோசை கேட்டு ஒன்று எழுந்து அவளை நோக்கி செவிகோட்டியது. வலது முன்காலை நீட்டி வாய்திறந்து வெண்பற்கள் தெரிய உரக்க உறுமியது. அக்கணத்திலேயே அவள் அறிந்தாள், அவை கசனைக் கொன்று உண்டுவிட்டன என்று.

திரும்பி பாதையினூடாக ஓடி குடில்தொகையை அடைந்தபோது கசனின் குடில் எரிந்து முடிந்திருந்தது. அதன்மேல் மணலையும் நீரையும் வீசி தழல்களை அணைத்துவிட்டிருந்தனர். நீராவியும் கரிப்புகையும் கலந்த மணம் சூழ்ந்திருந்தது. அவள் அங்கு கூடிநின்றவர்களை உந்திக் கடந்து சுக்ரரின் குடிலை அடைந்து படிகளில் பாய்ந்தேறி அங்கு திண்ணையில் கிருதரின் அருகே நின்று எரியணைப்பதை நோக்கிக்கொண்டிருந்த சுக்ரரின் கைகளைப்பற்றி “தந்தையே, அவரை உயிர்பிழைக்க வையுங்கள், உடனே” என்றாள். திகைப்புடன் “என்ன சொல்கிறாய்?” என்று சுக்ரர் கேட்டார்.

அவர் கைகளை உலுக்கியபடி மூச்சிரைக்க உடைந்த குரலில் “அவர் கொல்லப்பட்டுவிட்டார். அவரை அவை உண்டுவிட்டன” என்றாள். “எவை?” என்றார் சுக்ரர். “வேங்கைகள். அவை அவரை உண்டுவிட்டன. எந்தையே, அவரை மீட்டளியுங்கள். அவரை மீட்டளியுங்கள். இக்கணம் இங்கு அவர் எழவில்லையென்றால் நாளை புலரியில் நானிருக்க மாட்டேன். தெய்வங்கள்மேல் மூதன்னையர்மேல் ஆணை!” என்றாள்.

அவள் முகத்தை மெல்லிய ஒளியில் பார்த்தபோது சுக்ரர் அவள் உணர்வுகளை முழுக்க உணர்ந்துகொண்டார். அவள் கண்ணீரிலிருந்தே கசன் உயிருடனில்லையென்பது அவருக்கு உறுதியாகத் தெரிந்தது. “அஞ்சாதே, வா! அவனை நான் மீட்கிறேன்” என்றார். தன் பீடத்தில் சென்று அமர்ந்த பின்னரே தேவயானி சொன்னது என்னவென்பதை உளம் வாங்கிக்கொண்டார் சுக்ரர். திகைப்புடன் “என்ன சொல்கிறாய்? உன்னுடைய வேங்கைகளா?” என்றார். “ஆம். அவைதான். நான் நன்கறிவேன்” என்றாள். “நீ பார்த்தாயா?” என்றார். “பார்த்தேன்” என்றாள். “அவனை அவை உண்டனவா?” என்றார். “அவற்றின் கண்களை பார்த்தேன்” என்றாள்.

அவர் விழிசுருக்கி கூர்ந்துநோக்கி “கண்களையா?” என்றார். “கண்களை ஏந்திவரும் உடலையும்தான். அவைதான். அவை உண்ணும். நான் அறிவேன்” என்றாள். வாய் சற்று திறந்திருக்க அசைவிழந்து அவளையே நோக்கிக்கொண்டிருந்தார் சுக்ரர். பின்னர் கலைந்து “ஆம். உண்ணக்கூடும்” என்றபின் அருகிருந்த அகல்சுடரை தன்னருகே இழுத்துவைக்கச் சொன்னார். அவளால் அதை எடுக்க முடியவில்லை. கையிலிருந்து சுடருடன் நடுங்கி எண்ணெய் சிந்தியது. அதை தரையில் வைத்து தள்ளி அவர் அருகே கொண்டுவந்தாள். சுடரையே நோக்கிக்கொண்டிருந்த பின் அவர் திரும்பி “சஞ்சீவினியை சொன்னால் அவை மூன்றும் வயிறுகிழிந்து உயிர் துறக்கும்” என்றார். “சாகட்டும். அவை செத்தொழிந்தால் மட்டுமே எனக்கு விடுதலை. அவை அழியட்டும்” என்று பற்களைக் கடித்தபடி இரு கைகளையும் விரல்சுருட்டி இறுக்கிக்கொண்டு அவள் சொன்னாள்.

அரைக்கணம் விழிநிமிர்த்தி அவளை நோக்கியபின் “நன்று” என்ற சுக்ரர் பெருமூச்சுவிட்டார். கண்களை மூடி சுடர் நோக்கி கைநீட்டி சஞ்சீவினியை சொன்னார். மெல்லிய வலி முனகலொன்று அவளிடம் எழுந்ததைக் கேட்டு கண்களைத் திறந்து அவளை பார்த்தார். அவள் கழுத்து நரம்புகள் இழுபட்டிருந்தன. வலிப்பு வந்து பக்கவாட்டில் சரிந்து விழுபவள்போல் தெரிந்தது. “என்ன செய்கிறது?” என்று அவர் கைநீட்டி அவள் தொடையை தொட்டார். அவள் விழி திறந்து “ஒன்றுமில்லை” என்றபின் பெருமூச்சுவிட்டபோது உடல் முழுக்க மெல்லிய வியர்வை பூத்திருப்பதை நோக்கினார். “என்ன ஆயிற்று?” என்றார்.

“அவை இறந்துவிட்டன” என்றாள். “எப்படி தெரியும்?” என்று கேட்ட சுக்ரர் அக்கேள்வியை கலைக்க விரும்புபவர்போல தலையசைத்து “நன்று, அவன் உடனே வந்துவிடுவான். அவன் உடல் அழியவில்லை” என்றார். அவள் எழுந்து வெளியில் சென்று பார்ப்பாள் என்று அவர் எண்ணினார். அவள் கால்களைக் குவித்து அதன்மேல் கைகளைக் கட்டி முட்டுகளில் முகம் அமர்த்தி அமர்ந்திருந்தாள். எழுந்து அவள் குழல் கற்றைகளைத் தொட்டு வருடி என்ன செய்கிறது உனக்கு என்று கேட்க வேண்டுமென்று சுக்ரர் எண்ணினார். ஆனால் அவராலும் தன் இருக்கையிலிருந்து எழ முடியவில்லை.

சத்வர் உள்ளே வந்து “காட்டுக்குச் சென்றிருந்த கசன் திரும்பி வந்துவிட்டான். அவன் குடில் எரிந்ததை பார்த்துக்கொண்டிருக்கிறான்” என்றார். “அவனை இங்கு வரச்சொல்க!” என்றார் சுக்ரர். “சரி” என்று சத்வர் திரும்ப வெளியே செல்வதற்குள் கூரிய வேலால் குத்தப்பட்டதுபோல உடல் துடிக்க எழுந்து தேவயானி ஆடையோசையும் அணிகளின் ஓசையும் எழ பாய்ந்து குடிலைவிட்டு வெளியே சென்று இருளில் இறங்கி ஓடினாள். கைகளை ஊன்றி எழுந்த சுக்ரர் குடில் வாயிலில் நின்று நோக்கியபோது எரிந்த குடில் அருகே நின்றுகொண்டிருந்த கசனை நோக்கி பாய்ந்தோடி அவன் தோள்களை தாவிப் பற்றிக்கொண்ட தேவயானியை கண்டார்.

கசனின் கைகளைப்பற்றி தன் தோளிலிட்டு இடைவரை வளைத்து அவன் தோளில் தலைசேர்த்து அன்னைக்குரங்குடன் ஒட்டிக்கொள்ளும் குட்டிக்குரங்கென ஆகி நின்றிருந்தாள் தேவயானி. அவன் அவள் தலைமயிரைக் கோதியபடி “என்ன இது? ஏன் அழுகிறாய்?” என்றான். ஓசையின்றி விம்மியபடி “ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை” என்று சொன்னாள். “சொல்! என்ன ஆயிற்று உனக்கு? ஏன் அழுகிறாய்?” என்று அவன் கேட்டான். “எங்கு சென்றிருந்தீர்கள்?” என்றாள்.

“அறியேன். காட்டில் விழித்துக்கொண்டேன். என்னைச் சுற்றி நம் வேங்கைகள் மூன்றும் இறந்துவிட்டவைபோல் கிடந்தன. தொலைவில் இந்தத் தீ எரிந்து அணைவதைக் கண்டேன். எழுந்து இடைவழியினூடாக நடந்து இங்கு வந்தேன்” என்றான். “காட்டிற்கு எப்படி சென்றீர்கள்?” என்றாள். “அது எனக்கு நினைவில்லை” என்றபின் “நேற்று குடிலில் படுத்தேன். ஆழ்ந்த துயிலில் புகை மணத்தை அறிந்தேன். மெல்லிய வெண்பட்டாடை ஒன்று பறந்து என்மேல் விழுந்தது. என் மூக்கு வழியாகவும் காது வழியாகவும் அது எனக்குள் புகுந்தது. என் தலை கல்லால் ஆனதுபோல் ஆயிற்று. கைகால்கள் எடைகொண்டு என்னால் அசைக்க முடியாமல் ஆயின. அப்போது என் அறைக்குள் மூன்று புலிகள் நுழைந்தன” என்றான்.

“புலிகளா?” என்றாள். “ஆம். எரிதுளிபோல மின்னும் அவற்றின் விழிகளை கண்டேன்” என்றபின் தலையை வலக்கையால் மெல்ல தட்டி “ஆனால் அவை மனிதர்கள்போல் எழுந்து நடந்தன. என்னை கூர்ந்து நோக்கின. என் உள்ளங்காலை ஒன்று முகர்ந்தது. பிறிதொன்று என் முகத்தை முகர்ந்தபோது அதன் மூச்சுக்காற்று ஊன்மணத்துடன் நீராவியுடன் என்மேல் படிந்தது. பின்னர் அவை அறைக்குள் நின்று மெல்லிய குரலில் பேசிக்கொண்டன” என்றான். தேவயானி “என்ன பேசிக்கொண்டன?” என்றாள். “தங்களுக்குள் பேசிக்கொண்டன, பெண் குரலில்” என்றான்.

“பெண் குரலிலா?” என்று அவள் கேட்டாள். “ஆம், அதில் ஒரு புலி என்னிடம் ஏதோ சொன்னது. பிற இரு புலிகளும் அப்புலியை கடிந்தன. பிறகு அவை மூன்றும் மாறி மாறி என்னிடம் பேசத்தொடங்கின.” அவன் சொல்வதை அவள் விழிகள் கூம்ப கேட்டுக்கொண்டிருந்தாள். “மூன்று புலிகள். ஒன்று சிறுமிபோல பேசியது. பிறிதொன்று மூதன்னையைப்போல. பிறிதொன்றின் குரல் இளங்கன்னியின் குரல். பின்னர் அவை மூன்றும் சேர்ந்து என்னைக் கவ்வி எடுத்துக்கொண்டன” என்றான். “கொல்ல விழைந்தனவா?” என்றாள். “கவ்வின என்றால்… உண்பதற்காக அல்ல. குழந்தையை பல்படாமல் கவ்வுமே அதைப்போல. என்னை அவை காட்டுக்குள் கொண்டு சென்றன.”

அவள் “நீங்கள் பிறிதொன்றையும் நினைவுகூரவில்லையா?” என்றாள். “இல்லை” என்றான் அவன். “வருக!” என்று அவனை தன் குடிலுக்கு அழைத்துச் சென்றாள். “இன்று இங்கு தங்குங்கள்.” அவன் மஞ்சத்தில் அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டான். “நான் எங்கு வாழ்கிறேன் என்பதே அடிக்கடி குழம்பிப்போகிறது. நான் இங்கிருப்பது ஒரு கனவு என்றும் பிறிதெங்கோ வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்றும் தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும் கனவில் அந்த மெய்வாழ்வே இருக்கிறது. அதில் இவ்வாழ்வை கனவு காண்பேன். ஆனால் இந்தப் புலிகள் அங்கும் இருக்கின்றன. மூன்று வேங்கைகள், ஒளிரும் விழிகள் கொண்டவை” என்றான்.

“களைத்திருக்கிறீர்கள். இங்கேயே படுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். “வேண்டாம். நான் வேறேதாவது குடிலுக்கு செல்கிறேன்” என்றான். “படுத்துக்கொள்ளுங்கள்!” என்று அவள் அன்னையின் குரலில் அதட்ட “சரி” என்று அவன் மஞ்சத்தில் உடல் நீட்டி படுத்து கண்களை மூடிக்கொண்டான். “ஏதேனும் அருந்துகிறீர்களா?” என்று அவள் கேட்டாள். “ஆம். நன்கு விடாய் கொண்டிருக்கிறேன். இதுவரை என் உடலில் இருந்த பதற்றம் அந்த விடாய்தான். நீ கேட்கும்வரை அதை அப்படி புரிந்துகொள்ள முடியவில்லை” என்றான்.

“இருங்கள்” என்று அவள் வெளியே சென்று அடுமனைச்சேடி ஒருத்தியை அழைத்து நறும்பால் கொண்டு வரச்சொன்னாள். மஞ்சள்தூளும் மிளகுமிட்டு வெல்லத்துடன் கொதிக்க வைக்கப்பட்ட பாலை மண்கலம் ததும்ப கொண்டுவந்து கொடுத்தாள் சேடி. அதை உள்ளே கொண்டுவந்து அவனிடம் அளித்து “அருந்துங்கள்” என்றாள். “ஆம், இதை அருந்துவது போலவே கனவு கண்டேன்” என்றபடி அவன் அதை வாங்கினான். “எப்போது?” என்று அவள் கேட்டாள். “இப்போது. நான் அதை அருந்திக்கொண்டிருக்கும் போதுதான் உன் காலடிகள் கேட்டன. விழித்துப் பார்த்தால் கலத்துடன் நீ வருகிறாய்.” பின்பு மெல்லிய ஓசையெழ கலத்தின் பெரும்பகுதி பாலைக் குடித்து அப்பால் வைத்தான். வாயை துடைத்தபின் “உடல் முழுக்க எரிந்த அனல் அணைவதுபோல் இருந்தது. மிகுந்த பசியும் இருந்திருக்க வேண்டும்” என்றான்.

அவள் “உங்களுக்கு அகிஃபீனா புகை போடப்பட்டிருக்கிறது” என்றாள். “எனக்கா?” என்றான். “ஆம், ஆகவேதான் இனிப்புவிடாய். நீங்கள் விரும்பி அதை இழுத்திருக்க மாட்டீர்கள். உங்கள் குடிலுக்குள் எவரேனும் புகைக்கலமாக அதை கொண்டு வைத்திருக்கலாம்.” அவன் “எவர்…?” என்றான். “அவ்வறைக்குள் வந்தவர்களைத்தான் நீங்கள் புலிகளாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.” “ஆனால் ஏன் அவர்கள் புலிகளாக வரவேண்டும்?” என்றான். “நீங்கள் புலிகளுடன் விளையாடிவிட்டுச் சென்றதனால் இருக்கலாம். புலிகளையே எண்ணிக்கொண்டு படுத்திருப்பீர்கள்” என்றாள். “அவர்கள் உங்களைக் கொன்றிருக்கிறார்கள்.”

“என்னையா?” என்று அவன் உரக்க கேட்டான். “ஆம். உங்களை மயங்கவைத்து கொன்றிருக்கிறார்கள். குருதியின் மணம் ஏற்றதால் வேங்கைகள் உள்ளே வந்திருக்கின்றன. உங்களை வேங்கைகளுக்கு உணவாக்கியிருக்கிறார்கள்.” அவன் “நான் எப்படி மீண்டு வந்தேன்?” என்றான். “வேங்கையின் வயிற்றைக் கிழித்து வந்திருக்கிறீர்கள்.” அவன் “ஆம், புரிகிறது. அவை அங்கு இறந்துதான் கிடந்தன என்று தெரிகிறது” என்றான்.

மீண்டும் படுத்துக்கொண்டு “நான் உயிர்மீள வேண்டுமென்பதற்காக அவை இறக்க வேண்டியிருந்தது. இனிய விலங்குகள், தங்கள் முழுதுள்ளத்தை எனக்களித்தன” என்றான். “ஆனால் அவை உங்களை உண்டன” என்றாள் தேவயானி. “குருதி விடாயென்பது அவற்றின் உடலில் உறைகிறது. அவற்றின் ஆன்மா எதையும் அறியாது” என்றான் கசன். “கலத்தின் அழுக்கு பாலிலும் உண்டு என்பார்கள். புலியின் உடலில் ஆன்மா புலி வடிவில் வாழ்கிறது” என்றாள். அவன் அதை கேட்காததுபோல் நீள்மூச்சுவிட்டு “அவற்றின் முகத்தில் மாறாக் குழந்தைத்தன்மை ஒன்றிருந்தது. அவற்றில் ஒன்றை என் மகள் என எண்ணிக்கொள்வேன்” என்றான்.

அவள் கைகளைக் கட்டியபடி அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். “துயிலுங்கள்” என்றாள். “இன்றிரவு அவற்றை எண்ணாமல் என்னால் துயில முடியவில்லை” என்று கசன் சொன்னான். “அவற்றின் விழிகள் மிக அருகிலென்று தெரிகின்றன. ஆறு அருமணிகள். கைநீட்டினால் அவற்றை தொடமுடியும். ஆனால் மின்மினிகள்போல பறந்து சென்றுவிடுமோ என்று தோன்றுகிறது.” “வீண்பேச்சு. கண்ணைமூடி படுத்திருங்கள். துயிலுங்கள்” என்றாள். “துயிலவேண்டும். இந்த சித்தப்பெருக்கிலிருந்து துயிலொன்றே என்னை மீட்கும்” என்றபின் “தேவயானி” என அழைத்தான். “என்ன?” என்றாள்.

“அவை என்னை எத்தனை விரும்பி உண்டிருக்கும்! ஓர் உடலை உண்பதென்பது அதை முத்தமிட்டுக் கொஞ்சுவது போலத்தானே?” என்றான். அவள் “உளறவேண்டாம்” என்றபின் எழுந்து அவிழ்ந்து சரிந்த தன் கூந்தலை முடிந்துகொண்டாள். “அல்ல, ஓர் உடலை உண்பதென்பது முலையருந்துவதுபோல. அதை தன் உடலுடன் இணைத்துக்கொள்வதுபோல. அதுவாக ஆவதைப்போல. அவை என் உடலில் சுவைத்து திளைத்திருக்கின்றன. இதுநாள்வரை அவற்றிடம் நான் கொஞ்சியபோது ஒருபோதும் அந்த இரண்டின்மையை அடைந்ததில்லை.”

“இந்தப் பேச்சு எனக்கு சலிப்பூட்டுகிறது. துயிலுங்கள். துயிலவேண்டுமென்று எண்ணுங்கள். துயில் வந்து சேரும்” என்று அவள் சொன்னாள். “ஆம், துயின்றாக வேண்டும்” என்று தனக்குத்தானே என அவன் சொல்லிக்கொண்டான். பின் கண்களை மூடி கால்களை நீட்டிக்கொண்டு “இனிய வேங்கைகள். அவ்விழிகளிலிருந்து எனக்கு விடுதலை இல்லை” என்றான். அவன் முகம் மலர்ந்தது, பின் ஆழ்ந்த துயர்கொண்டது. “அவை மிக அருகே நின்றிருக்கின்றன. என்னை முத்தமிடுகின்றன. ஊன்மணம் கலந்த வெப்பக்காற்று” என்றான். “இனியவை… என் பிறவா மைந்தர்கள்” என்றபின் பெருமூச்சுவிட்டு “இல்லை, மகள்கள்” என்றான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 57

57. குருதித்தழல்

ஓநாய் வயிற்றிலிருந்து மீண்டு வந்த கசன் ஆளுமையில் மிக நுட்பமான மாறுதல் இருப்பதை தேவயானி உணர்ந்தாள். அது என்னவென்று அவளால் உய்த்துணரக்கூடவில்லை. அவன் முகத்தின் மாறாச்சிரிப்பும், அசைவுகள் அனைத்திலும் இளமையும், குரலின் துள்ளலும் அவ்வாறேதான் இருந்தன. ஆனால் ஒவ்வொன்றிலும் பிறிதொன்று வந்து சேர்ந்துவிட்டிருந்தது. அது ஓர் ஓநாய்த்தன்மை என்று எப்போதோ ஒருமுறை மிக இயல்பாக அவள் உள்ளம் சொல்லாக்கிக்கொண்டது. உடனே என்ன இது என்று அவளே திகைத்தாள். தன் உள்ளம் கொள்ளும் பொய்த்தோற்றம் அது என்று சொல்லிக்கொண்டாள். ஆனால் அச்சொல்லையே அவள் மீண்டும் மீண்டும் சென்றடைந்துகொண்டிருந்தாள்.

ஓநாயின் நோக்கல்ல, உடலசைவல்ல, ஓநாயென எண்ணுகையில் எழும் எதுவுமே அல்ல, ஆனால் ஓநாயென்று உளமுணரும் ஒன்று அவனிடம் குடியேறிவிட்டிருந்தது. அவன் உண்ணுகையில் அப்பால் நின்று அவள் நோக்கினாள், ஓநாயின் பசி அவனில் உள்ளதா என்று. நிலவில் அவன் அமர்ந்திருக்கையில் தன் குடிலில் நின்று தூணில் மறைந்து நின்று நோக்கினாள், அது ஒநாயின் தனிமையா என.  என்ன செய்கிறோம், பித்தியாகிவிட்டோமா என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள். இல்லை இல்லை என நூறுமுறை மறுத்துக்கொண்டாள். ஆனால் அவன் திரும்பும் ஓர் அசைவில் ஓரவிழியின் மின்னில் ஓநாய் எழுந்து மறைந்தது.

இறந்தவன் மீள்வதென்பது இயல்பானதல்ல. மானுடம் அறியாத வேறெங்கோ சென்று மீண்டிருக்கிறான். அவ்வுலகத்தின் இருளோ கெடுமணமோ ஒன்று அவனில் படிந்திருக்கிறது. சென்றவர்கள் மீளலாகாதென்றே பிரம்மத்தின் பெருநெறியைக் கடந்து வந்திருக்கிறான். ஆனால் அதுவும் பிரம்மம் அளித்த நுண்சொல்லால்தானே என எண்ணம் பகடைபுரண்டது. வழக்கத்திற்கு மாறான ஒன்று நிகழ்ந்ததனால் உருவாகும் ஐயமா இது? சற்றே வண்ணம் மாறிய உணவைக்கண்டு உருவாகும் ஒவ்வாமை போலவா? எனக்குள் நானே இதை தொட்டுத் தொட்டு வளர்த்துக்கொள்கிறேனா?

அந்த ஐயம் உருவானதால் மேலும் வெறியுடன் அவள் அவன் மீது ஒட்டிக்கொண்டாள். மேலும் மேலும் தன் அன்பை அவன் மேல் குவித்தாள். அவன் நினைவன்றி மறு உள்ளமின்றி இரவும்பகலும் இருந்தாள். ஓரிரு நாட்களில் தன் உள்ளத்தை அது வெறும் எண்ணமயக்கமே என்று நம்பவைக்க அவளால் முடிந்தது. ஆனால் ஒருமுறை வகுப்பு முடிந்து அவன் எழுந்துபோனதும் சுக்ரர் கிருதரிடம் “ஓநாய்க்குட்டியென மாறிவிட்டிருக்கிறான். ஒருதுளிக் குருதியைக்கூட நூறுமுறை நக்கும் அதன் பசியும் சுவையும் அவனுக்கு சொல்லில் அமைந்துள்ளது” என்றார். அவள் உள்ளம் நடுங்கிவிட்டது. கிருதர் “ஆம், இப்போது ஒவ்வொரு சொல்லிலும் புதிய வாயிலொன்றை திறக்க முடிகிறது அவனால்” என்றார்.

அவள்  தலைகுனிந்து தன் கைநகங்களை பார்த்துக்கொண்டிருந்தாள். “இத்தனை விரைவில் கற்றால் இவன் கற்பதற்கு இனி இப்புவியில் ஏதும் எஞ்சாது” என்று சுக்ரர் சொன்னார். “எது மையமோ அங்கே சென்று நிற்பான்” என்றார் கிருதர். அவள் ஒன்றும் சொல்லாமல் சுக்ரரின் காலைத்தொட்டு தலையில் சூடியபடி எழுந்து வெளியே சென்றாள். அவர் அவளை நோக்கிவிட்டு புருவம்தூக்கி கிருதரை நோக்கினார். கிருதர் “அவளிடம் மெல்லிய அமைதியின்மை ஒன்று குடியேறியுள்ளது, ஆசிரியரே” என்றார். “அவளிடமா? அவன் மேல் பித்தாக அல்லவா அலைகிறாள்?” என்றார். “ஆம் கட்டற்ற பெரும் காதல்மயக்கில் இருக்கிறாள். அவளுள் அவனன்றி வேறு எதுவுமே இல்லை என்பதை விழிகள் காட்டுகின்றன. ஆனால் அடியாழத்தில் ஓர் அமைதியின்மை இருக்கிறது.”

சுக்ரரால் அவர் சொல்வதை புரிந்துகொள்ள முடியவில்லை. “அவள் ஐயம் கொண்டிருக்கலாம்” என்றார் கிருதர். “என்ன ஐயம்?” என்று சுக்ரர் கேட்க கிருதர் “பெருங்காதல் அதன் பெருவிசையாலேயே இயல்பற்ற ஒன்றாக ஆகிவிடுகிறது. இயல்பற்ற ஒன்று எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற ஐயம் அதற்கே எழுகிறது. விரைந்தெழுவது நுரை. மலைப்பாறைகளின் உறுதி அதற்கில்லை என்பதை அதுவே அறியும்” என்றார்.

“ஏன் ஒரு நுரையென இருக்கவேண்டும் அது? உலகியல் உணர்வுகள் அனைத்தும் குறுகியவை, எனவே நிலையற்றவை என்று நாம் கற்றிருக்கிறோம். ஆனால் எப்போதும் அது அவ்வண்ணமே ஆகவேண்டும் என்பதில்லை. நுரையென எழுந்து பாறையென்றாகி முடிவிலிவரை நீடிக்கும் ஒரு பெருங்காதல் இம்மண்ணில் நிகழக்கூடாதா என்ன?” என்றபின் சுக்ரர் நகைத்து “பிரம்மனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம்” என்றார். கிருதர் மெல்ல புன்னகைத்தார்.

tigerகசனிலிருந்த மாற்றத்தை சக்ரனும் உணர்ந்தான். காட்டில் அவனுடன் உரையாடியபடி தேன் சேகரிக்கச் செல்லும்போது அவன் மணத்தை அறிந்ததுமே மிகத்தொலைவில் ஓநாய்கள் ஊளையிடத்தொடங்குவதை அவன் கேட்டான். ஓரே ஒருமுறை தன்னியல்பாக அவன் முன் தோன்றிய ஓநாய் ஒன்று வேங்கைமுன் வந்துவிட்டதுபோல அச்சத்தில் உறைந்து பிடரிமயிர் சிலிர்க்க முன்னங்கால் தூக்கி நடுங்கி நின்றது. பின்னர் உயிர்கொண்டு தீ பட்டதுபோல துடித்து துள்ளித் தாவி புதர்களில் விழுந்து புரண்டெழுந்து ஓடி மறைந்தது. நெடுந்தொலைவிற்கு அதன் துயர்மிகுந்த ஊளை கேட்டுக்கொண்டிருந்தது. அதைக் கேட்டு மலைமடிப்புகளிலும் மரப்பொந்துகளிலுமிருந்து நூற்றுக்கணக்கான ஓநாய்கள் ஓலமிடத்தொடங்கின.

அன்று மாலை சக்ரன் தன் தோழரிடம் சொன்னான் “அவன் ஒநாய்களை கிழித்தெழுந்ததை அவை அறியும். நினைவாக அல்ல, மணமாக இருக்கலாம், அல்லது பிறிதொரு புலனுணர்வாக இருக்கலாம். ஆனால் ஓநாய்கள் அஞ்சும் ஒன்று அவனில் குடியேறியுள்ளது.  ஒநாய்கள் அனைத்திலும் வாழும் ஒன்று. பேருருவம் என்று அல்லது செறிவு என அதை சொல்லாக்குவேன். அது என்னையும் அச்சுறுத்துகிறது.” “நமக்கு இன்னும் நெடுநாள் வாய்ப்பில்லை” என்றான் சூக்தன். “மீண்டும் அரசரின் ஆணையை சுகர்ணர் அளித்திருக்கிறார். இன்னும் அவன் கொல்லப்படவில்லை என்ற செய்தியை சொன்னபோது மீண்டும் ஒருமுறை இச்செய்தியைக் கேட்க அரசர் விரும்பமாட்டார் என்றார். அவ்விழிகள் என்னை சிறுமையுறச் செய்தன.”

“ஒருமுறை பிழைத்த முயற்சி என்பது மீண்டும் அதை பழுதறச்செய்வதற்கான வாய்ப்பென்று கொள்வோம். இம்முறை ஒவ்வொன்றையும் எண்ணி இயற்றுவோம். நான் முன்னரே சொன்னதுதான், எரியூட்ட இயலாது. புதைப்பது பயனற்றது. ஓநாய்கள் அவன் உடலை தொடுமென்று தோன்றவில்லை” என்றான் பிரபவன். “மேலும் வெம்மை கொண்ட எரி. அது என்ன?” விறகுப்புரையில் நின்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது மிகத் தொலைவில் வேங்கைகளின் ஒலியை சக்ரன் கேட்டான். பின்னர் தனக்குள் என “அவை வெறும் விலங்குகள்” என்றான்.

“எவை?” என்றான் பிரபவன். “அந்த வேங்கைகள். சென்ற முறை அவன் மறைந்துவிட்டதை முன் உணர்ந்து சொன்னவை அவை. ஓர் இரவுப்பொழுது கடந்திருந்தால் அவன் உடல் ஓநாய்களின் வயிறுகளில் எரிந்தழிந்திருக்கும். மீண்டு வந்திருக்கமுடியாது. இம்முறை அவற்றுக்கு அவ்வாய்ப்பை நாம் அளிக்க வேண்டியதில்லை” என்றான். “எப்படி?” என்றான் சூக்தன். “அவனை அவை விரும்புகின்றன. விரும்பியவற்றை அவை உண்ணவும் கூடும்” என்றான் சக்ரன். “குருதி! அவற்றிலிருந்து அவை தப்ப முடியாது. இக்குடிலுக்குள் வந்து இவ்வாறு வளர்ந்து இவை அடைந்த அறிவனைத்தும் இப்பிறவிக்குரியவை. அவற்றின் குருதி யுகங்களின் தொன்மைகொண்டது. அக்குருதி தேடுவது குருதியையே.”

மறுநாள் இரவு கசன் தன் குடிலுக்குள் துயின்றுகொண்டிருக்கையில் ஓசையற்ற காலடிகளுடன் அவர்கள் குடிலை அடைந்தனர். ஒருவன் அகிஃபீனா பொடியிட்ட புகை கொண்ட தூபக்கலத்தை சாளரத்தினூடாக மெல்ல கசனின் துயிலறைக்குள் வைத்தான். மெல்லிய புகை எழுந்து அறையைச் சூழ ஆழ்ந்து அதை உள்ளிழுத்து மூச்சில் கலந்து கொண்டான் கசன். இருமுறை அவன் தும்மியபோது அவர்கள் திடுக்கிட்டு அசையாமல் நின்றனர். அவனுக்கு விழிப்பு வந்துகொண்டே இருந்தாலும் நனைந்த மரவுரி கோழிக்குஞ்சை என துயில் அவனை மூடி அழுத்திக்கொண்டது. மெல்ல உடல் தளர்ந்து ஆழ்துயில் கொள்ளலானான்.

அதன் பிறகு எழுவரும் கதவுப்படலைத் திறந்து உள்ளே சென்று மஞ்சத்தை சூழ்ந்துகொண்டனர். சூக்தன் வெளியே என்ன நடக்கிறது என்று நோக்கி நிற்க சக்ரன் தன் வாளை உருவி கசனின் தலையை வெட்டினான். ஓசையுடன் உருண்டு தலை மரத்தரையில் விழுந்தது. துள்ளி உதைத்துக்கொண்டிருந்த கால்களை பிறிதொருவன் வெட்டினான். விரல் சுருட்டி அதிர்ந்த கைகளை பிறிதொருவன் வெட்டினான்.  எழுவர் ஏழு வாட்களால்  மிக விரைவில் அவனை சிறு சிறு துண்டுகளாக வெட்டினர்.

சக்ரன் வெளியே சென்று திண்ணையில் நின்று நோக்கினான். தேவயானியின் குடில்முன் நாவல்மரத்தடியில்  குருதிமணம் அறிந்து முன்னரே எழுந்து நின்றிருந்த வேங்கைகளில் ஒன்று மெல்ல உறுமியபடி ஓர் அடி எடுத்து வைத்தது. அவன் தாழ்ந்த குரல்கொடுத்து அழைத்தான். அவற்றின் செவிகள் அவ்வோசைக்கேற்ப அசைந்தன. கண்களின் ஒளி மின்னித் தெரிந்தது. “அவை குருதியை அறிந்துவிட்டன” என்றான் சக்ரன். “ஆம், அவை வரட்டும்” என்று சாம்பவன் சொன்னான்.

முதல் வேங்கை மூக்கை நீட்டியபடி இருவிழிச்சுடர்களாக மெல்ல காலெடுத்து வைத்து அணுகி வந்தது. அதைத் தொடர்ந்து பிற இரு வேங்கைகளும் இரு வெண்ணிறநிழல்கள் போல வந்தன. “அவற்றை இவ்வறைக்குள் கொண்டு வா!” என்றான் சக்ரன். ஒருவன் முற்றத்தில் இறங்கி சிறு கல் ஒன்றை எடுத்து முதலில் வந்த வேங்கையின் மேல் எறிந்தான். கல் அப்பால் விழுந்தாலும் விதிர்த்து உடலொடுக்கிப் பதுங்கிய மூன்று வேங்கைகளும் உறுமலுடன்  பாய்ந்து அவனை நோக்கி வந்தன. அவன் ஓடி கசன் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான். வேங்கைகள் வந்து திண்ணையிலேறி குருதி மணத்தில் கசனை உணர்ந்து திகைத்து நின்றன.

“சாளரத்தினூடாக வெளியேறுங்கள்!” என்று மெல்லிய குரலில் ஆணையிட்டான் சக்ரன். அவர்களனைவரும் வெளியேற அவன் மட்டும் அங்கே நின்றான். முதல் வேங்கை தலைதாழ்த்தி மெல்ல உறுமியது. இன்னொன்று முகம் சுளிக்க வாய்திறந்து உள்வளைந்து நுனி எழுந்த நீள்நாக்கு பதைக்க அப்படியே வயிறு பதித்து படுத்தது. இருவேங்கைகளுக்கு இடையே தன்னை நுழைத்து மூன்றாவது வேங்கை எட்டிப்பார்த்தது. சக்ரன் அவற்றின் கண்களைப்பார்த்து அசையாமல் நிண்றான். பின்னர் குனிந்து தன் அருகே கிடந்த கசனின் உடல் துண்டுகளில் ஒன்றை எடுத்து அவற்றை நோக்கி வீசினான்.

தங்கள் முன் வந்து விழுந்த ஊன் துண்டை மூன்றுவேங்கைகளுமே விலாவும் தோளும் தோல்விதிர்க்க உற்றுப் பார்த்தன. அவற்றின் தோள்களுக்குள் கால் எலும்புகள் துழாவி அசைந்தன. வால்கள் மேலே தூக்கப்பட்டு மெல்ல  சுழன்றன. முதல்வேங்கை மேலுமொரு அடிவைத்து நாக்கை நீட்டி கீழே சொட்டிக்கிடந்த குருதித்துளி ஒன்றை நக்கியது. மூன்று வேங்கைகளும் ஒரே குரலில் உறுமத்தொடங்கின. அரங்களை உரசிக்கொள்வதுபோல. பனையோலை இழுபடுவதுபோல. அவை பிறந்த கணம் முதல் வாழ்ந்த மானுடச்சூழலை முற்றிலும் உதறி கான்விலங்குகளாக மாறுவதை காணமுடிந்தது. அவை சேற்றில் தவளை விழுவதுபோன்ற ஒலியுடன் சப்பு கொட்டின.

முதல் வேங்கை பதுங்கி மேலுமொரு காலடி எடுத்து வைத்து  அந்த ஊன் துண்டை முகர்ந்தது. அதன் மேல் படிந்த குருதியை தழல்போன்ற நாவால் நக்கியது. பின்னர் காதுகளை விரித்து அதை நோக்கி உடல் சிலிர்த்துக்கொண்டே இருக்க அசையாமல் நின்றது. பின்னர் மெல்ல கால்களை நீட்டி வயிற்றை நிலம்பதித்து படுத்தது. முன்னங்காலால் அவ்வூன் துண்டை தட்டி தன்னை நோக்கி கொண்டுவந்தது.  நாக்கை நீட்டி அவ்வூன் துண்டை சுழற்றி எடுத்து கடித்து ஒருமுறை தயங்கியபின் முகத்தை ஒருக்களித்து கடைவாயால் மென்று விழுங்கியது. உறுமியபடி எழுந்து உள்ளே துண்டுகளாகக் கிடந்த கசனின் உடல் நோக்கி வந்தது.

அறைமுழுக்க சிந்திக்கிடந்த குருதியை அது நக்கி உண்ணத்தொடங்கியதும் பிற இரு வேங்கைகளும் எழுந்து உறுமியபடி அறைக்குள் நுழைந்து அவன் உடலைக் கவ்வி உண்ணலாயின. அவை உள்ளே நுழைந்ததுமே பாய்ந்து சாளரத்தினூடாக வெளியேறிய சக்ரன் “கதவுகளை மூடுங்கள். அவை உண்டு முடித்தபின் வந்து திறந்து விடலாம்” என்றபின் மெல்ல வெளியேறி அகன்றான். “ஒருவர் மட்டும் இங்கு நின்று என்ன நிகழ்கிறதென்று சொல்லுங்கள். பிறர் விறகுப்புரையருகே காத்திருப்போம்” என்று ஆணையிட்டான்.

அவர்கள் இருளுக்குள் ஒடுங்கி காத்துநின்றனர். குடிலுக்குள் வேங்கைகளின் உறுமல் கேட்டுக்கொண்டே இருந்தது. அவை கசனின் உடலை உண்கின்றன என்று நோக்கி நின்றவன் கைகளால் குறிப்புணர்த்தினான். இருளில் விலகி நின்றபோது குருதிமணம் மேலும் வீச்சத்துடன் எழுந்தது. அவர்களின் நாவில் எச்சில் ஊறிக்கொண்டே இருந்தது. மாறி மாறி உமிழ்ந்தனர். உண்டு முடித்துவிட்டன என்று அவன் கைகாட்டியதும் சக்ரனும் பிறரும் அணுகி சாளரத்தினூடாக நோக்கினர். அங்கு கசனின் உடலில் வெள்ளெலும்புகளும் முடிநீண்ட தலையும் மட்டுமே எஞ்சியிருந்தன. அவன் காலை கடித்துமென்றுகொண்டிருந்த வேங்கை கைகளால் அதைப்பற்றியபடி தலைதூக்கி அவர்களை நோக்கி பன்றிபோல மெல்ல உறுமியது.

செய்கையால் கதவை திறவுங்கள் என்றான் சக்ரன். சூக்தன் கதவைத் திறந்ததும் அவ்வசைவை நோக்கிய முதல் வேங்கை எழுந்து நீண்ட நாக்கால் தன் பக்கவாயை நக்கியபடி நிறைந்த வயிறு மெல்ல தொங்கிக் குலுங்க குருதி ஒட்டிய கால்களை தூக்கி வைத்து வெளியேறியது. திண்ணையில் அமர்ந்து தன் கால்களை  புரட்டி நோக்கி நக்கியது. பிற இரு வேங்கைகளும் வெளியே வந்து அதனருகே படுத்து தங்கள் கால்களை நக்கின. புரண்டு எழுந்து அப்பால் எழுந்த ஓசை ஒன்றை கூர்ந்து உறுமிவிட்டு மீண்டும் படுத்து கால்களை நக்கியது ஒன்று.

அறைக்குள் இருந்த வெள்ளெலும்புகளை சிறிய கூடையொன்றில் பொறுக்கிச் சேர்க்கும்படி சக்ரன் தாழ்ந்த குரலில் சொன்னான்.  சாளரம்வழியாக உள்ளே நுழைந்து கசனின் எலும்புகளை கூடையில் சேர்த்துக்கொண்டு வெளியே சென்ற சூக்தனை ஒரு வேங்கை திரும்பிப் பார்த்தது.  வாலைச் சொடுக்கியபடி எழுந்து நின்று அவனை நோக்கி உறுமியது. திண்ணையிலிருந்து தாவி முற்றத்தில் ஒருகணம் தயங்கியபின் அவனை நோக்கி ஓடிவந்தது. “ஓடு” என்று சக்ரன் சொன்னான் சூக்தன் கூடையுடன் விரைந்தோடத்தொடங்கினான்.

முன்னால் வந்த வேங்கை திண்ணையிலிருந்த பிறவேங்கைகளை நோக்கி உறும அவை பாய்ந்து வாலை தூக்கிச் சுழற்றியபடி அவனை துரத்திக்கொண்டு ஓடின. அவன் இடைவழியினூடாக பாய்ந்தோடி காட்டுக்குள் நுழைந்தான். வேங்கைகள் தாவித்துரத்தி மிக விரைவில் அவனை அணுகின. அதற்குள் அவ்வெலும்புகளை காட்டுக்குள் வீசிவிட்டு பாய்ந்து மரமொன்றில் ஏறிக்கொண்டான். புதர்களைத் தாவி இருள்செறிந்த காட்டிற்குள் சென்ற வேங்கைகள் இலையசைவுகளுக்குள் மூழ்கி மறைந்தன. சருகுகளுக்குள் அவ்வெலும்புகளை தேடி கண்டடைந்து கவ்விக்கொண்டு வந்து தரையிலிட்டு இருகால்களாலும் பற்றியபடி நக்கி உடைத்து கடைவாயால் மென்று உண்ணத்தொடங்கின.

“அக்குடிலை கொளுத்திவிடுங்கள்” என்று சக்ரன் ஆணையிட்டான். உள்ளே புகைந்து கொண்டிருந்த தூபத்திலிருந்து குடிலின் ஓலைக்கூரை வரை பற்றி ஏறும்படியாக ஒரு பட்டுச்சால்வையை நீட்டி வைத்துவிட்டு அவர்கள் விலகிச்சென்றனர். விறகுப்புரை அருகே நின்று பார்த்தபோது சால்வை மெல்ல பற்றிக்கொண்டு தழல் மேலேறுவது தெரிந்தது. செந்நிறமான வண்ணத்துப்பூச்சிபோல் சிறகு அசைய மேலெழுந்து கூரையில் தொற்றிக்கொண்டது. கூரையில் ஈச்சையோலைச்சருகுகள் சரசரவென்னும் ஒலியுடன் நெருப்பை வாங்கிக்கொண்டன.

நெருப்பு நன்றாக கூரைமேல் எழுந்ததும் சக்ரன் “நெருப்பு! நெருப்பெழுகிறது! ஓடிவாருங்கள்!” என்று கூச்சலிட்டபடி அதை நோக்கி ஓடினான். “ஓடிவருக! தீ! தீ!” என்று கூவியபடி பிறரும் அவனுடன் இணைந்துகொண்டார்கள். அதற்குள் வெவ்வேறு குடிசைகளிலிருந்து இளைஞர்களும் முனிவர்களும் வெளியே வந்து கசனின் குடில் தீ பற்றி எரிவதை பார்த்தனர். அருகே ஓடிவந்து என்ன செய்வதென்று தெரியாமல் அலைமோதி நாற்புறமும் மணலை அள்ளி அதன் மேல் வீசினர். சக்ரனும் பிறரும் மரக்குடுவைகளுடன் சிற்றோடைக்குச் சென்று நீரை அள்ளிக்கொண்டு வந்து அக்குடில் மேல் வீசினர்.

ஆனால் விரைவிலேயே கூரை எரிந்து மூங்கில் உத்தரங்கள் கரியாகி முனகி உடைந்து முறிவோசையுடன் சரிந்து குடிலுக்குள் விழுந்தது. சுவர்களும் மூங்கில்தூண்களும் பற்றிக்கொள்ள மொத்தக் கூரையும் பற்றிக்கொண்டது. “பிற குடில்களின் கூரைகளில் நீர் விடுங்கள். தீ பரவாமலிருக்கட்டும்… இனி இக்குடிலை மீட்கமுடியாது” என்று சக்ரன் ஆணையிட்டான். கசனின் குடிலைச் சுற்றியிருந்த குடில்கள் அனைத்தின் கூரைகளையும் நனைத்தனர். அனல் பற்றி எரிந்த கூரைகளின் முளைகள் வெடிக்க சிம்புகள் தழல் துண்டுகளாகப்பறந்து வந்து அக்கூரைகளில் விழுந்து ஈரத்தில் வண்டுகள் போல் ஒலியெழுப்பி நனைந்து அணைந்தன.

“அருகில் நெருங்க வேண்டாம்… மூங்கில் தெறிக்கிறது” என்று சத்வர் கூவினார். அனல் மூங்கிலை நொறுக்கி உண்ணும் ஒலி கேட்டது.  சுக்ரரும் கிருதரும் அவர்கள் குடில்களிலிருந்து எழுந்து வந்தனர். சக்ரன் அவர்களை நோக்கி சென்று “உள்ளே இளமுனிவர் இல்லை, ஆசிரியரே. எங்கு சென்றார் என்று தெரியவில்லை. வெறும் குடில்தான் எரிந்தது” என்றான். “ஆம், அவன் உள்ளே இருக்க வாய்ப்பில்லை” என்று தாடியைத் தடவியபடி சுக்ரர் சொன்னார். தேவயானி எழுந்துவந்து எரியும் குடிலை நோக்கிக்கொண்டிருந்தாள். சக்ரன் அவளிடம் “அனற்புகையின் மணம் பெற்று எழுந்தேன். ஆனால் அதற்குள் கூரை எரியத்தொடங்கிவிட்டது, தேவி” என்றான். “அஞ்சவேண்டாம், கதவு திறந்து கிடந்தது. உள்ளே எவருமில்லை.”

அவள் “தெரிந்தது” என்றாள். “தூபமோ அகல்விளக்கோ விழுந்து எரிந்திருக்கலாம்” என்றான் பிரபவன். “அவர் எங்கு போனார்?” என்று ஒரு பெண் கேட்டாள். “அறியேன். ஆனால் இரவுகளில் அவர் காட்டுக்குள் கிளம்பிச்செல்வதை பலமுறை பார்த்திருக்கிறேன். நாமறியாத சில வழிகள் அவருக்கு இருக்கும் என எண்ணுகிறேன். ஊழ்கமோ விண்ணவர் தொடர்போ” என்றான் சக்ரன். தேவயானி “வேங்கைகள் எங்கே?” என்றாள். அவன் “அவை வழக்கம்போல காட்டுக்குள் வேட்டையாடச் சென்றிருக்கும்” என்றான். “அவை பின்காலையிலேயே வேட்டையாடச்செல்வது வழக்கம்” என்றாள். “அவை விலங்குகள், பசித்திருக்கலாம்” என்றான் பிரபவன். “ஆம்” என்றான் சக்ரன்.

அவள் காட்டை நோக்கியபடி நடந்தாள். அவள் உள்ளம் திடுக்கிட்டுக்கொண்டே இருந்தது. அது ஏன் என்று மீண்டும்மீண்டும் எண்ணிக்கொண்டாள்.  அவன் காட்டுக்குள் செல்வதாக அவள் அறிந்ததே இல்லை. ஆனால் போகலாகாதென்றில்லை. அவன் தனியன், தவத்தோன். அவனுக்கான நுண்வழிகள் பல இருக்கக்கூடும். அவள் ஓர் எண்ணம் எழுந்த விசையால் உடல் உறைய நின்றாள். வேங்கைகளைப் பற்றி கேட்டபோது சக்ரனின் விழிகள் கொண்ட மாறுதலை அவள் உள்ளம் அடையாளம் கண்டுகொண்டிருந்தது. மிக ஆழத்தில் மிகக்கூரிய ஒரு ஊசிமுனை சென்று அந்த ஊசிமுனைப்புள்ளியை தொட்டறிந்திருந்தது.

அவள் தன் தொடை ஒன்று நடுநடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். அவ்வுணர்வுக்கு ஒரு சொல் அமைந்தால் அதை கடந்துவிடலாமென்று தோன்றியது. மூச்சுக்களை ஊதி ஊதி விட்டுக்கொண்டு நெஞ்சைத் துழாவி “வந்துவிடுவார்” என்றாள். அச்சொல் பொருந்தாமலிருப்பதைக் கண்டு “காட்டுக்குள் இருக்கிறார்” என்றாள். பின்னர் நெற்றிப்பொட்டை அழுத்தியபடி நரம்புகள் மெல்ல அதிர்வதை உணர்ந்தபடி குனிந்தபோது “வேங்கைகள் உடனிருக்கின்றன” என்றது உள்ளம்.

அச்சொல் அவள் உள்ளத்தின் எடையை குறைத்தது. வேங்கைகளுடன் உலவச்சென்றிருக்கலாம். வேட்டைக்குக்கூட சென்றிருக்கலாம். அவை அவனுடன் இருப்பது வரை எவரும் அவனை நெருங்கமுடியாது. அவற்றின் இருள்கடக்கும் விழியும் தொலைவைக்கடக்கும் மோப்பமும் புலன்கள் மட்டுமேயான உள்ளமும் அவனுடன் எப்போதுமிருக்கும். அவனைவிட்டு அவற்றின் சித்தம் ஒருகணமும் விலகியதே இல்லை. அவையே அவனுக்கு காவல்.

அவள் முகத்தசைகள் எளிதாக நீள்மூச்செறிந்தபடி திண்ணையில் அமர்ந்தாள். தொலைவில் காட்டில் காற்று நிகழ்த்திய இருளசைவு. அதைக் கடந்து மூன்று விழியெரிகள் தெரியக்கூடும். அவனுடைய நிழலுருவம் தெளியக்கூடும். அவள் தாடையை கையால் தாங்கியபடி நோக்கிக்கொண்டிருந்தாள். காடு அவளுக்கு இதோ அவன் என ஒவ்வொருகணமும் காட்டி விளையாடிக்கொண்டிருந்தது.

நூல் பதின்மூன்று – மாமலர் – 56

56. உயிர்மீள்தல்

கசன் திரும்பிவருவதற்காக காட்டின் எல்லையென அமைந்த உயரமற்ற பாறைமேல் ஏறி அமர்ந்து காத்திருந்தன மூன்று வேங்கைகளும். கனிகளும் தேனும் சேர்க்கச் சென்றவர்கள் காலை வெயில் மூப்படைவதற்கு முன்னரே கூடைகளுடன் திரும்பிவந்தனர். வழக்கமாக அவர்களுடன் வரும் கசனுக்காக முதல் காலடியோசை கேட்டதுமே மூன்று வேங்கைகளும் எழுந்து செவி முன்கோட்டி விழிகூர்ந்து நின்றன. கசன் அவர்களுடன் இல்லையென்பதை தொலைவிலெழுந்த மணத்தாலேயே உணர்ந்து அவை முனகியபடி மீண்டும் படுத்துக்கொண்டன.

ஒரு வேங்கை அலுப்பு தெரியும் அசைவுகளுடன் மல்லாந்து படுத்து தன்னைச் சூழ்ந்து பறந்த ஈக்களை கைகளால் தட்டி விளையாடிக்கொண்டிருந்தது. பிறிதொன்று வாலை தாழ்த்தியபடி பொறுமை இழந்து தான் நின்றிருந்த சிறிய பாறைப்பரப்புக்குள்ளேயே சுற்றி வந்தது. மீண்டும் ஒரு குழுவின் மணம் தொலைவில் எழுந்தபோது படுத்திருந்த வேங்கை தலை திருப்பி பார்த்து அதில் கசன் இல்லையென்று முனகியது. நடந்த வேங்கை நின்று வாலை நீட்டி உடலை பின்னுக்கிழுத்து முதுகை நிமிர்த்தி கோட்டுவாயிட்டது.

ஒவ்வொரு குழு கடந்துசெல்லும்போதும் அவனுக்காக அவை மூக்காலும் விழிகளாலும் நோக்கிக்கொண்டிருந்தன. அதன்பின் ஒரு வேங்கை மட்டும் கீழே குதித்து இடைவழியினூடாக நடந்து காட்டின் விளிம்புவரை சென்று நின்று மரச்செறிவுக்குள் நோக்கிக்கொண்டிருந்தது. பின்னர் சலிப்புடன் மெல்ல காலெடுத்து வைத்து தாவி மேலேறி தன் உடன்பிறந்தவர்களுடன் வந்து அமர்ந்துகொண்டது. உச்சிப்பொழுதில் ஊன்எடுக்கச் சென்றவர்கள் திரும்பிவந்தனர். அவர்களுடன் கசனைக் கொன்ற அசுரர்களும் கடந்து சென்றபோது ஒரு வேங்கை உதைபட்டதுபோல திடுக்கிட்டு எழுந்து நின்றது. அதன் உடல் நடுங்கத்தொடங்கியது. சக்ரனை நோக்கி முகம் சுளித்து பற்களைக் காட்டி சீறியது. உடலை பின்னுக்கிழுத்து பாய்வதுபோல பதுங்கியது.

வேங்கையின் சீற்றத்தை அதுவரை கண்டிருக்காத அவன் அச்சத்துடன் தன் கையிலிருந்த மானின் குருதிதோய்ந்த வேலை முன்னோக்கி நீட்டி அசையாமல் நின்றான். பிற இரு வேங்கைகளும் எழுந்து தங்கள் உடன்பிறந்தானை நோக்கி சீறியபடி “என்ன?” என்றன. இரண்டாவது வேங்கையின் உடலும் மெய்ப்புகொண்டு மயிர்ப்பிசிறுப் பரப்பு  இளங்காற்றில் அலைபாயத் தொடங்கியது. மூக்கை நீட்டியபடி அது மெல்ல காலடி வைத்து முதல் வேங்கையின் வலப்பக்கம் வந்து நின்றது. “செல்க! செல்க!” என்று அவர்களில் ஒருவன் மெல்ல சொன்னான். வேலை நீட்டியபடி மெல்ல பின்வாங்கி அவர்கள் நடந்து சுக்ரரின் தவக்குடில் வளைப்புக்குள் சென்றுவிட்டனர்.

அவர்களைத் தொடர்ந்து சென்று தயங்கி நின்று அவர்களின் காலடிகளை முகர்ந்து, ஐயம்கொண்டு திரும்பி காட்டை நோக்கி, மீண்டும் மீண்டும் காலடிகளை முகர்ந்து, நிலைகொள்ளாது உறுமியபடியும் வாலைச் சுழற்றியபடியும் அங்கே சுற்றிவந்தன இரு வேங்கைகளும். பிறிதொன்று பாறை மேலேயே முன்கால் நீட்டி படுத்தபடி அவற்றை மாறி மாறி நோக்கி உறுமிக்கொண்டிருந்தது. அந்தியில் கன்றுகளை ஓட்டியபடி காட்டுக்குள்ளிருந்து திரும்பிவந்த மாணவர்கள் மூன்று வேங்கைகளும் நிலைகொள்ளாமலிருப்பதை கண்டனர். இடைவழியில் வாலை நீட்டியபடி நின்றிருந்த வேங்கை வந்தவர்களை நோக்கி சீறியபடி பாய்வதற்கென உடல் தாழ்த்தியது.

முன்னால் வந்த பசு அஞ்சி மெய்ப்புகொள்ள காதுகளைக் கோட்டி  மூக்கை தாழ்த்தி கொம்புகளை முன் நீட்டியபடி அசையாமல் நின்றது. அதன் பிடரியும் விலாவும் விடைத்து நடுங்கின. அதை ஓட்டிவந்த மாணவன் தன் கோலை நீட்டியபடி முன்னால் வந்து “என்ன? என்ன?” என்று வேங்கையிடம் கேட்டான். கோலால் தரையைத் தட்டி “என்ன வேண்டும்? என்ன வேண்டும்? சொல்!” என்றான். பாய்வதற்கென உடல் தணித்த வேங்கை மெல்ல நிலை மீண்டு எழுந்து தன் உடலை ஓசையெழ அசைத்தபடி மெல்ல நடந்து வந்து துணியைச் சுழற்றி வீசுவதுபோன்ற அசைவுடன் பாறைமேல் தாவி ஏறிக்கொண்டது. பிறிதொன்று பாறைக்குக் கீழே வந்து நின்று தன்னைக் கடந்து செல்லும் பசுக்களையும் மாணவர்களையும் நோக்கி உறுமிக்கொண்டே இருந்தது.

“என்ன ஆயிற்று இவற்றுக்கு?” என்று ஒருவன் கேட்டான். “எங்கோ பசுங்குருதி மணம் கிடைத்திருக்கும். என்னதான் இருந்தாலும் அவை குருதியை விரும்பும் கான் விலங்குகள் அல்லவா?” என்றான் இன்னொருவன். “ஒவ்வொரு நாளும் காட்டுக்குள் சென்று வேட்டையாடி வருபவைதானே? இங்கு குருநிலையின் கன்றுக்குட்டிகளைக்கூட அவை தொட்டதில்லை” என்று ஒருவன் சொன்னான். அவற்றை நோக்கியபடி தங்களுக்குள் பேசிக்கொண்டே அவர்கள் கடந்து சென்றனர். “விலங்குகளை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. அவை நம்மை முழுதாக உட்புகவிடுவதே இல்லை” என்றான் ஒருவன்.

இருட்டத் தொடங்கியதும் ஒரு வேங்கை தரையை முகர்ந்தபடி நடந்து காட்டுக்குள் சென்றது. பின்னர் திரும்பிவந்து உரத்த குரலில் உறுமி தன் உடன்பிறந்தாரை அழைத்தது. மூன்று வேங்கைகளும் காட்டுக்குள் மணம் கொண்டபடி நின்று செவிசிலிர்த்து ஓசைகூர்ந்தன. பின் மெல்ல காலடி எடுத்துவைத்து இருட்டுக்குள் ஆறு விழிப்புள்ளிகளாக நடந்தன. முதலில் சென்ற வேங்கையின் இருபுறமும் அதன் உடன்பிறந்தார் இருபக்கமும்  பார்த்தபடி நடந்தன. மிகத் தொலைவிலேயே ஓநாய்களின் ஊளையை அவை கேட்டன. முன்னால் சென்ற வேங்கை நின்று தன் செவிகளை மடித்து வாலைத்தூக்கி மெல்ல அசைத்தது. இரு வேங்கைகளும் தங்களுக்குள் மட்டுமே கேட்கும்படி மெல்லிய உறுமலுடன் பேசிக்கொண்டன. பின்னர் முதலில் சென்ற வேங்கை புதர்களில் தாவிக் கடந்து ஓடத்தொடங்கியது. பிற வேங்கைகளும் அதைத் தொடர்ந்தன.

பாறை உச்சிவரை சென்று எச்சரிக்கையுடன் அதன் விளிம்பை அடைந்து உடல் சுருக்கி நின்றபடி கீழே நோக்கியது முதல் வேங்கை. அங்கு கசனின் எஞ்சிய எலும்புகளை நக்கியபடியும், அங்கிருந்த மண்ணை காலால் கிண்டி புரட்டியபடியும், தங்களைத் தாங்களே சுற்றிவந்து உறுமியும், ஒன்றன்மேல் ஒன்று பாய்ந்து தழுவி விழுந்து புரண்டெழுந்து விளையாடியும் ஓநாய்கள் பரவியிருந்தன. அவற்றில் ஒன்று புலியின் மணம் அறிந்து திரும்பிப் பார்த்தது. அதன் மெல்லிய உறுமலில் அனைத்தும் அசைவழிந்து விரைப்புகொண்டு நோக்க அவற்றின் கண்கள் மின்மினிக்கூட்டம்போல் தெரிந்தன. ஓரிரு கணங்களுக்குள்ளாகவே அவை ஒன்றன்பின் ஒன்றென வால்நீட்டியபடி மெல்ல நிரைகொண்டு ஒரு சிறு படையென்றாயின.

மூத்த ஓநாய் வாலைச் சிலிர்த்து குலைத்து மெல்ல அசைத்தபடி மூக்கை நீட்டி காதுகளை முன்கோட்டி முன்னால் வந்து நின்றது. அதன் இருபுறமும் ஓநாய்கள் அம்புமுனை வடிவில் தெரிந்தன. தங்களுக்குள் வண்டு முரலும் ஒலியுடன் அவை தொடர்பாடிக்கொண்டன. முன்னால் நின்ற வேங்கை பாயும்பொருட்டு மெல்ல உடல் தாழ்த்தியதும் ஓநாய்களின் தலைவன் இரு காதுகளையும் பின்னால் மடித்தது. அதன் இருபக்கமும் நின்ற இள ஓநாய்கள் விரிந்து கழுகுச் சிறகுகளென்றாயின. தலைமை ஓநாய் பின்காலெடுத்து வைத்து மெல்ல பதுங்க  இரு சிறகுகளும் நீண்டு புதர்களுக்குள் மறைந்து ஒநாய்க்கூட்டமே அரைவட்டமென்றாயிற்று.

அன்னை ஓநாய்கள் தங்கள் மைந்தர்களை திரட்டிக்கொண்டு பின்னால் சென்று புதர்களுக்குள் மறைந்து தங்கள் குகைகளை நோக்கி சென்றன. மூன்று வேங்கைகளும் கீழே பார்த்தபோது ஓநாய்க்கூட்டம் அரைவட்ட வடிவில் அவை நின்ற பாறையை சூழ்ந்திருப்பதைக் கண்டன.  தலையைச் சிலுப்பி முகத்தில் வந்து மொய்த்த கொசுக்களை விரட்டியபடி முதல் வேங்கை மெல்லிய கெடுமணம் ஒன்றை எழுப்பியது. பிற இரு வேங்கைகளும் அதை அறிந்ததும் வால்தழைந்து உடல் இளகின. அவை ஓசையின்றி பின்காலெடுத்து வைத்து புதர்களுக்குள் புகுந்து பின் திரும்பி பாய்ந்தோடத் தொடங்கின.

ஒன்றன்பின் ஒன்றென சிறு தாவல்களில் புதர்க்குவைகளைக் கடந்து ஓடி காட்டிலிருந்து வெளியேறி ஒற்றையடிப் பாதையினூடாக அவை சுக்ரரின் தவக்குடில் பகுதிக்குள் நுழைந்தன. முதல் வேங்கை தேவயானியின் குடிலை அடைந்து சாத்தப்பட்டிருந்த கதவுப்படல்மேல் தன் இரு கால்களை தூக்கிவைத்து உலுக்கியது. இன்னொன்று அதன் பின்னால் நின்று வாலைத் தூக்கி முதுகைக் குவித்து வளைத்தபடி உறுமியது. மூன்றாவது வேங்கை குடில் முற்றத்திலேயே கால் மடித்து வால் தழைத்து அமர்ந்து பெருங்குரலில் முனகியது.

கதவைத் திறந்த தேவயானி மூன்று வேங்கைகளும் நிலையழிந்திருப்பதை கண்டாள். முதல் வேங்கையின் தலையில் கை வைத்து “என்ன ஆயிற்று?” என்று கேட்டாள். அதன் பிறகே அவள் மூன்றாவது வேங்கையை கண்டாள். அது அமர்ந்திருந்த முறையிலும், வான்நோக்கி தலையைத் தூக்கியதிலிருந்தும் என்ன நிகழ்ந்ததென்பதை உய்த்துணர்ந்துகொண்டு இரு வேங்கைகளையும் தள்ளி ஒதுக்கி அவற்றின் நடுவே நடந்து முற்றத்தை அடைந்தாள். திரும்பி இருள்செறிந்த காட்டை நோக்கியதும் அவள் உடல் ஒருமுறை துடித்தது. மூச்சுவாங்க கால்கள் தூக்கி வைத்து தாவி தந்தையின் குடில் நோக்கி செல்லும்போதே அவள் ஆடை நெகிழத் தொடங்கியது. அள்ளிச் சுழற்றிக் கட்டியிருந்த கூந்தல் அவிழ்ந்து முதுகில் புரண்டது.

நடை தடுமாற, மூச்சு ஒலிக்க, வியர்வை மணம் எழ, சுக்ரரின் குடிலை அடைந்து “தந்தையே! தந்தையே!” என்று கூவினாள். கிருதருடன் பேசிக்கொண்டிருந்த சுக்ரர் அவ்வோசையைக் கேட்டு “அது யார்? தேவயானியா?” என்றார். அதற்குள் குடிலுக்குள் நுழைந்த அவள் “தந்தையே, பிரஹஸ்பதியின் மைந்தர் காட்டிலிருந்து திரும்பி வரவில்லை” என்றாள். சுக்ரர் “அவனுக்கென்ன? ஒற்றைக் கையால் வேங்கைகளை தடுத்து நிறுத்துபவனை வெல்ல காட்டில் யார் இருக்க முடியும்? கந்தர்வர்களோ தேவர்களோ அவனை வெல்ல முடியாது. அசுரர்கள் அவனை அணுகவும் முடியாது” என்று புன்னகைத்து “பதறாதே! அமர்க! இப்போது என்ன ஆகிவிட்டது?” என்றார்.

“இல்லை, நானறிவேன்.  எனது வேங்கைகள் நடந்துகொண்ட முறையே சொல்கிறது. அவை அறியும், அவர் இப்போதில்லை. கொல்லப்பட்டுவிட்டார்” என்றாள். “என்ன சொல்கிறாய்? வழக்கத்திற்கு மாறாக சற்று பிந்தியுள்ளான். அதை வைத்து அவன் கொல்லப்பட்டுவிட்டான் என்று எப்படி சொல்ல முடியும்? அசுர நாட்டில் சுக்ரரின் முதல் மாணவனைக் கொல்லும் துணிவு எவருக்குள்ளது?” என்றார் சுக்ரர். “இல்லை, நானறிவேன். அவர் கொல்லப்பட்டுவிட்டார்” என்றபோது அவள் கண்கள் நிறைந்து கன்னங்களில் நீரொழுகத் தொடங்கியது.

தரையில் முழந்தாளிட்டு அமர்ந்து தந்தையின் கால்களை பற்றிக்கொண்டு “அவரை திரும்ப அழைத்துவாருங்கள்! திரும்ப அழைத்துவாருங்கள், தந்தையே! அவர் கொல்லப்பட்டுவிட்டார்” என்றாள். சுக்ரர் “திரும்ப அழைத்துவிடலாம், மகளே.  அது மிக எளிய செயல்” என்றார். “இப்போதே திரும்ப அழையுங்கள். இப்போதே நான் அவரை பார்க்கவேண்டும்” என்று அடம்பிடிக்கும் சிறுமிபோல தலையை அசைத்தபடி சொன்னாள். “இப்போதே. இப்போதே வேண்டும்” என்றாள். “நன்று, அமர்க!” என்றபின் கிருதரைப் பார்த்து “இவளை இப்படி நான் பார்த்ததேயில்லை. இவள் வடிவில் பிறிதொரு இளமகள் வந்துள்ளாள் என்றே தோன்றுகிறது” என்றார்.

கிருதர் தேவயானியை பார்த்தபின் “இப்போது கசனின் மனைவியாக இங்கு வந்துள்ளார். மனைவியர் அனைவரும் ஒரே வகையான அச்சமும் ஐயமும் அமைதியும் கொண்டுவிடுகிறார்கள்” என்றார். வாய்விட்டு நகைத்து “ஆம், அதைத்தான் நானும் எண்ணினேன்” என்றார் சுக்ரர். “அஞ்சாதே. அவன் உயிரோடு இருக்கிறானா என்று பார்க்கிறேன்” என்றபின் அருகிருந்த அகல் சுடரை தன் அருகே தள்ளிவைக்கும்படி கிருதரிடம் கைகாட்டினார். கிருதர் சுடரை நீக்கி அவரருகே வைத்ததும் கசன் பெயரை சொன்னபடி கையை அச்சுடர் நோக்கி நீட்ட ஊதி அணைக்கப்பட்டதுபோல் சுடர் அணைந்தது. சுக்ரர் முகம் மாறி “ஆம், உனது வேங்கைகள் பிழை செய்யவில்லை. அவன் இப்போது இல்லை” என்றார்.

அவள் அறியாது அலறிவிட்டாள். “இரு, அவன் உயிர் மூச்சுவெளியில்தான் உள்ளது. எளிதில் அதை மீட்க முடியும். நீ அஞ்சவேண்டியதில்லை” என்றார். கிருதர் “அவன் உடல் அழிக்கப்பட்டிருக்கக்கூடும்” என்றார். “அவ்வுடலில் ஒரு சிறு துளி எஞ்சியிருந்தாலே போதும், மீட்டுக் கொண்டுவந்துவிட முடியும்” என்றபடி தன் இரு கைகளையும் மீன் வடிவில் கோத்து தலை குனிந்து சஞ்சீவினியை மும்முறை சொல்லி “பிரஹஸ்பதியின் மைந்தனே, உயிர் மீள்க! எஞ்சிய உடல் திரட்டி எழுக! மீண்டும் உன் விருப்பத்துக்குரிய உடலை வந்தணைக!” என்றார். அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. பின்னர் தோள்கள் துவள விழிதிறந்து “அது நிகழ்ந்துவிட்டது. அவன் இப்போது திரும்பி வருவான்” என்றார்.

“என்ன ஆயிற்று? காட்டுவிலங்குகளா?” என்று கன்னங்களின் ஈரத்தில் விளக்கொளி செந்தீற்றலென படர்ந்திருக்க தேவயானி கேட்டாள். “சொல்லுங்கள் தந்தையே, அவரை எவரேனும் தாக்கினார்களா?” சுக்ரர் “அறியேன். ஆனால் நிழலுருக்களென நான் கண்டது ஓநாய்களை. அவனை ஓநாய்கள் உண்டுவிட்டிருக்கின்றன” என்றார். “ஐயோ!” என்று தன் வாயை பொத்தினாள் தேவயானி. “அஞ்சாதே! ஓநாய்களின் வயிற்றைக் கிழித்து அவன் வெளி வந்திருக்கிறான். இன்னமும் செரிக்காத ஊன் போதும் அவன் தன் உடல் மீட்க” என்றார் சுக்ரர்.

அவள் மெல்ல தளர்ந்து தரையில் அமர்ந்து குனிந்து முகத்தை கைகளால் பொத்திக்கொண்டாள். “வந்துவிடுவான், தேவி” என்றார் கிருதர். “முன்போலவே அவர் வந்துவிடவேண்டும். தெய்வங்களே, மூதன்னையரே, வந்துவிடவேண்டும்” என்றாள் அவள். அவளை நோக்கியிருந்தபோது சுக்ரர் முன்பறியாத பெரும்கனிவொன்றை அடைந்தார். பேரரசியின் நிமிர்வுடன் அவள் தோன்றும்போது அவள் அடிநோக்கி மண்டியிட்டு வழிபட்ட உள்ளம் அப்போது இளமகளென அவளை அள்ளி மடியிலிட்டு தலை கோதியது. இப்படி இவள் என் முன் வந்தமர்தலும் நன்றே. தந்தையென பிறிதொரு வடிவம் கொள்கிறேன் என்று அவர் எண்ணிக்கொண்டார்.

வெளியே வேங்கைகளின் உறுமலோசை கேட்டதும் அவள் பதறி எழுந்து “வந்துவிட்டார்” என்று கூவினாள். “திரும்பி வந்துவிட்டார்! தந்தையே, வந்துவிட்டார்! அவை அவரை நோக்கி ஓடுகின்றன” என்றபடி கதவை நோக்கி ஓடி வெளியே எட்டிப்பார்த்தாள். அங்கே காட்டு எல்லையில் வேங்கைகள் பாய்ந்துசெல்லும் அசைவு தெரிய “அவர் வந்துவிட்டார். வேங்கைகள் அவரை அணுகிவிட்டன” என்றபடி திரும்பி அவரை நோக்கி ஓடிவந்து அவர் காலைத் தொட்டு சென்னி சூடியபின் இரு கைகளாலும் குழலை அள்ளி சுருட்டிக் கட்டியபடி தோளிலிருந்து நெகிழ்ந்த ஆடையை இழுத்து இடையில் செருகி முற்றத்தில் பாய்ந்து இருளில் ஓடி மறைந்தாள்.

கிருதர் “இந்த மாற்றம் ஒவ்வொரு பெண்ணிலும் நிகழ்வதனால் இதிலிருக்கும் மாபெரும் விந்தையை நாமறிவதே இல்லை. கன்னியென விடுதலையை கட்டின்மையை ஆணவத்தை பெருவிழைவை அணிசூடியிருக்கிறார்கள். அவை அனைத்தையும் கழற்றி வீசி வெறும் மனைவி என்றாகிறார்கள்” என்றார். சுக்ரர் சிரித்தபடி “வெறும் அன்னையென்று ஆவதற்கான ஒரு பயிற்சி அது” என்றார்.  கிருதர் புன்னகைத்து “ஆம்” என்றார்.

வெளியே ஓசைகள் கேட்டபோது சுக்ரரும் கிருதரும் எழுந்து சென்று நோக்கினார்கள். பிறைநிலவின் வெளிச்சத்தில் மூன்று வேங்கைகளும் துள்ளிக் குதித்து தரையில் விழுந்து புரண்டு எழுந்து வால் சுழற்றி முனகி நடனமாடி சூழ்ந்துவர தேவயானியும் கசனும் நடந்து வந்தனர். அவள் அவன் வலக்கையை எடுத்து தோளிலிட்டு சுழற்றி இடையில் வைத்து கைகளால் பற்றியிருந்தாள். தலையை அவன் மார்பில் சாய்த்து கால்கள் பின்ன நடந்து வந்தாள். அழுதுகொண்டிருக்கிறாள் என்று தோன்றியது. அவன் குனிந்து அவள் காதில் மெல்ல ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான்.

ஓரிடத்தில் கால் தடுமாறி அவள் விழப்போக இடையை நன்கு பற்றித் தூக்கி நெஞ்சோடணைத்து நின்றான். அவிழ்ந்து தோளில் விழுந்துகிடந்த குழலை இரு கைகளாலும் ஒதுக்கி காதுகளுக்குப்பின் வைத்து சீரமைத்தான். அக்கற்றைகளை வலக்கையால் பற்றி மெல்ல இழுத்து அவள் முகத்தை நோக்கி குனிந்து கண்களுக்குள் பார்த்து ஏதோ சொன்னான்.

இரண்டு வேங்கைகளும் காலை அவன் மேல் வைத்து அவர்களின் முகத்தருகே தங்கள் முகத்தை கொண்டுவந்து முனகி வால் சுழற்றின. பிறிதொன்று முன்னால் ஓடிவந்து அதே விரைவில் அவர்களை நோக்கி கடந்து சென்று மீண்டும் வந்தது. கிருதர் “உடனே அவர்களுக்கு மணம்முடித்து வைப்பது நன்று” என்றார். “ஆம், இப்போது இருவருமே நடிப்புகளை விட்டுவிட்டார்கள்” என்று சிரித்தார்.

tigerகசன் இறந்ததும் சுக்ரரின் ஊழ்க நுண்சொல்லால் மீண்டதும் மறுநாள் குருநிலை முழுக்க பரவியது. முனிவர்களும் பெண்களும் இளையோரும் அவனைத் தேடிவந்து அவன் கைகளைப்பற்றி நெஞ்சில் வைத்தும் தோள்களை கைகளால் தழுவியும் தலையில் கைவைத்து வாழ்த்தியும் தங்கள் உவகையையும் உளநிறைவையும் தெரிவித்தனர். இளம்பெண்கள்கூட தாங்கள் உருவாக்கி வைத்திருந்த எல்லைகளைக் கடந்து அவனை அணுகி அவன் கைகளைப்பற்றி கண்ணீர்விட்டனர். என்ன நிகழ்ந்தது என்று கேட்டவர்களுக்கு சொல்ல அவனிடம் எந்த நினைவும் இருக்கவில்லை.

அவனைத் தாக்கிய சக்ரனும் பிறரும் காலையில் அவன் மீண்டு வந்திருப்பதை அறிந்ததுமே இயல்பாக செல்பவர்கள்போல காட்டுக்குள் சென்று மறைந்துவிட்டனர். அங்கிருந்து அப்படியே ஹிரண்யபுரிக்கு சென்றுவிடுவதற்கு காட்டிற்குள் அமர்ந்து திட்டமிட்டனர். ஆனால் உச்சிப்பொழுதுக்குள் குடில்களில் இருந்து தேன் சேர்க்க வந்தவர்கள் பேசியதிலிருந்து என்ன நிகழ்ந்ததென்பது எவருக்கும் தெரியவில்லை என்பதை புரிந்துகொண்டனர். அவன் எவ்வாறு இறந்தான் எப்படி ஓநாய்களிடம்  சிக்கிக்கொண்டான் என்பதை கசனால் நினைவிலிருந்து எடுக்க முடியவில்லை என்பதை அறிந்ததும் அவர்கள் ஆறுதலடைந்தனர்.

தேனும் கிழங்குகளும் சேர்த்துக்கொண்டு  பின்னுச்சிப்பொழுதில் இயல்பான முகங்களுடன் சுக்ரரின் குருநிலைக்கே வந்தனர். அங்கு தேவயானியின் குடிலில் கசன் அமர்ந்திருக்க அவனைச் சூழ்ந்து முனிவர்களும் இளைஞர்களும் அமர்ந்து சிரித்து சொல்லாடிக் கொண்டிருப்பதை கண்டனர். அனைத்து உளத்தடைகளையும் உதறி தேவயானி எப்போதும் கசன் அருகிலேயே இருந்தாள். அவன் தோளில் தலைசாய்த்து தன் உடலை அவன் விலாவில் படியவைத்து, அவன் கையை எடுத்து தன் தோளினூடாக இட்டு மார்பில் அமைத்து பற்றிக்கொண்டு, தன் விரல்களால் அவன் விரல்களைப்பற்றி விளையாடியபடி மெல்லிய முனகலுடனும் சிறுமியருக்குரிய அடத்துடனும் அவனுடன் சொல்லாடிக்கொண்டிருந்தாள்.

அவனிடம் அவள் தந்தையிடம் பேசும் குழவிபோல் குழைந்து மறுகணமே இளமைந்தனிடம் அதட்டும் அன்னையென ஆனாள். அவள் கொண்ட நிமிர்வும் சினமும் ஆணையிடும் குரலும் அளவெடுக்கும் நோக்கும் முழுமையாகவே மறைந்துவிட்டிருந்தன. அங்கிருந்தவர்கள் அதை இயல்பாகவே ஏற்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் நன்கறிந்த தேவயானி அவ்வுடலுக்குள் தன்னை உள்ளிழுத்துக்கொண்டு பிறிதொன்றாக வெளிவந்து தெரிவதை எந்தத் திகைப்புமின்றி அவர்கள் அனைவருமே எதிர்கொண்டனர். அந்த மாற்றம் நிகழ்ந்ததைக்கூட அவர்கள் அறியவில்லை என்பதுபோல.

சக்ரன்  வாயிலில் சென்று நின்று “என்ன ஆயிற்று? உங்கள் உடல்நிலை நன்றாக உள்ளதா?” என்றான். கசன் “வருக, சக்ரரே! என்ன நிகழ்ந்ததென்று நினைவில்லை. நேற்று உங்களுடன் காட்டுக்குள் வந்தேன். பின்னர் என்னை உணர்ந்தபோது காட்டுக்குள் சேற்றிலிருந்து உடல் திரட்டி எழுந்ததுபோல் உணர்ந்தேன். நல்ல இருட்டு. நிலவொளியின் நிழல்கள். எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. எப்படி ஓநாய்களால் தாக்கப்பட்டேன், என்னைச் சூழ்ந்து இறந்து கிடந்த ஓநாய்களைக் கொன்றது யார், எதுவுமே தெரியவில்லை” என்றான்.

“என்னுடன்தான் நேற்று வந்தீர்கள். தனித்தனியாகப் பிரிந்து கிழங்கு தேடச் சென்றோம். பின்னர் தங்களை தேடிப்பார்த்தோம். குரல் கொடுத்தோம். தடம் தேர்ந்து நோக்கினோம். அறியக் கூடவில்லை. இவன்தான் தாங்கள் திரும்பியிருக்கக்கூடும் என்றான். ஆகவே நாங்கள் திரும்பிவிட்டோம்” என்றான் சக்ரன். “நன்று, இனி இவர் காட்டுக்கு செல்ல வேண்டியதில்லை. கனிதேர்ந்தும் தேன்தேடியும் இவரால் ஊட்டப்பட்டு  எவரும் இங்கு வாழ வேண்டியதில்லை” என்று சீற்றத்துடன் தேவயானி சொன்னாள். “என்ன இது? நான் இங்கு மாணவன். மாணவன் ஆற்றவேண்டிய பணிகளை ஆற்றித்தான் ஆகவேண்டும்” என்று கசன் சொன்னான்.

“மாணவன் கற்கத்தான் வந்திருக்கிறான். காடு தேர்வதற்கல்ல” என்றாள் தேவயானி. அவள் ஏதுமறியாத சிறுமியென உண்மையிலேயே மாறிவிட்டிருந்தாள். “தன் உணவையும் உறைவிடத்தையும் தானே உருவாக்கக் கற்பதுதான் கல்வியின் முதல் படி. அது அளிக்கும் முழு விடுதலையிலிருந்தே பிற அனைத்தையும் கற்க முடியும்” என்று கசன் சொன்னான். “உடலுழைப்பிலாத கல்வி உள்ளத்தை எவ்வகையிலும் பயிற்றுவதில்லை. இங்கு ஒரு காவியம் பயில்கிறோம். அங்கு ஒரு கிழங்கைத் தோண்டி எடுக்கையில் சொற்கள் அச்செயலில் எப்படி வந்து பொருந்தி புதிய ஒரு பொருளை அளிக்கின்றன என்பது இங்கு குடிலில் அமர்ந்திருந்தால் தெரியாது. காவியத்தில் காட்டையும் காட்டில் காவியத்தையும் காணத்தெரிந்தவனே இரண்டையும் அறிகிறான்” என்றான் கசன்.

வெளியே வந்த சக்ரன் வேங்கைகள் எழுந்து வாய் நீட்டி சினம்கொண்ட பார்வையுடன் தன்னை நோக்கி நிற்பதை கண்டான். மெல்லிய குரலில் “எப்படியோ அவற்றுக்கு தெரிந்திருக்கிறது” என்று  பிரபவனிடம்  சொன்னான். “எப்படி தெரியும்? நாம் பல முறை நீராடினோம். நம் உடலில் அவன் குருதி ஒரு துளிகூட எஞ்சவில்லை. இருந்தாலும் மேலும் மறைக்க மான் குருதியை பூசிக்கொண்டு வந்தோம்” என்றான் சூக்தன்.

“மணத்தால் அல்ல, உள்ளுணர்வால்” என்றான் சக்ரன். “புலன்களுக்கு அப்பால் உள்ளம் ஒரு நுண்புலன். சித்தம் பிறிதொரு நுண்புலன். ஆனால் சித்தமும் உள்ளமும் பருவடிவமான ஐம்புலன்களின் வழியாகவே செயல்படமுடியும். உள்ளம் உணர்ந்தது ஓர் ஓசையென நறுமணமென தொடுஉணர்வென உருமாறித் தெரிந்தாகவேண்டும். சித்தம் உணர்ந்தது ஒரு நினைவென  கூற்றென ஆகவேண்டும். அவற்றின் உள்ளே வாழும் ஆத்மா நம் செயலை உணர்ந்து அதை ஒரு மணமென ஆக்கிக்கொண்டிருக்கிறது.”

“அவற்றின் நோக்கு என்னை அச்சுறுத்துகிறது” என்றான் முக்தன். “அவை விலங்குகள். அத்தனைக்கும் அடியில் அவை வெறும் விலங்குகள். விலங்கென நடிப்பதன்பொருட்டே அவற்றின் ஆத்மா அவ்வடிவை எடுத்திருக்கிறது. வயல் புகுந்த நீர் வயலின் வடிவம் கொள்வதுபோல அவற்றின் ஆத்மாவுக்கும் கோரைப்பற்களும் கூருகிர்களும் குருதிவிடாயும் உண்டு” என்றான் சக்ரன்.

“எப்படி சுக்ரர் ஓநாய்களின் உடலில் இருந்து அவனை மீட்டெடுத்தார்?” என்றான் சூக்தன். “ஓநாய்களின் உடல் கிழித்து அவன் வெளிவந்திருக்கிறான். நான் சென்று பார்த்தேன். அங்கு அவற்றின் உடல்கள் வயிறு கிழிந்து சிதறிக்கிடக்கின்றன. அவன் உடலில் ஒரு துண்டு ஊனைத் தின்றவைகூட இறந்துவிட்டன. பெரும்பசி கொண்ட குட்டிகள் மட்டும் எஞ்சியுள்ளன. அவை உண்டவற்றை எரித்துவிட்டன. கிழிந்து சிதறிக்கிடக்கும் தன் குலத்தாரின் உடல்களைச் சூழ்ந்து அவை துயர்கொண்டு ஊளையிடுகின்றன” என்றான் முக்தன். “பிறிதொருமுறை இப்பிழையை நாம் செய்யலாகாது. ஓநாய்க்குட்டிகளின் பெரும்பசி கொண்ட பிறிதொரு உயிருக்கே அவன் உடல் அளிக்கப்படவேண்டும். அவனை மீட்டெடுக்க உடலென ஒரு துளியும் எஞ்சலாகாது” என்றான் சக்ரன்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 55

55. என்றுமுள குருதி

சுக்ரரின் குருநிலையிலிருந்து கசன் அங்கே வந்திருக்கும் செய்தி ஒற்றர்கள் வழியாக விருஷபர்வனை சென்றடைந்தது. தன் தனியறையில் தலைமை ஒற்றர் சுகர்ணரிடமிருந்து அச்செய்தியை கேட்ட விருஷபர்வன் ஒருகணம் குழம்பி அவரிடமே “இத்தனை வெளிப்படையாக தன் மைந்தனையே அனுப்புவாரா பிரஹஸ்பதி? அதை உய்த்துணரும் அளவிற்கு நுண்மையற்றவர் தன் மாணவர் என்று அவர் எண்ணினாரா?” என்றான். சுகர்ணர் பணிவுடன் புன்னகைத்து “ஒருவேளை இப்படி ஓர் எண்ணம் முதலில் நமக்கு எழுவதென்பதே மாபெரும் திரையென இச்செயலை சூழ்ந்திருக்குமோ? தன் மைந்தனையே அவர் அனுப்பியிருப்பதனாலேயே அது சூழ்ச்சியல்ல என்று சுக்ரர் எண்ணலாமல்லவா?” என்றார்.

விருஷபர்வன் தலையை அசைத்தபடி “என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றான். “பிறிதொன்றுக்காகவும் அவன் இங்கு வருவதற்கு வாய்ப்பில்லை” என்றார் சுகர்ணர். விருஷபர்வன் தன் சிறிய விழிகளைத் தூக்கி ஒற்றரை நோக்கி “மைந்தனுக்கும் தந்தைக்கும் பூசல் எழுவது எங்குமுளதுதானே? உண்மையிலேயே பிரஹஸ்பதியைத் துறந்து அவரை வெல்லும்பொருட்டு மைந்தன் இங்கு வந்திருக்கலாமல்லவா?” என்றான். “நானும் அவ்வண்ணமே எண்ணினேன். ஆனால் அவன் விழிகளைப் பார்த்த எவரும் அவன் வஞ்சம் கொண்டவனல்ல என்று உணர்வார்கள். இவ்வுலகின் தீமைகளை இன்னமும் உணராத சிறுவனின் நோக்கும் சிரிப்பும் கொண்டவன். அழகன். அவனை பேரழகனாக்குவது அந்த இளமை” என்றார் சுகர்ணர்.

விருஷபர்வன் திரும்பி அமைச்சர் சுகர்த்தரிடம் “நான் செய்ய வேண்டியதென்ன? சுக்ரரிடம் அவனைக் குறித்து எச்சரிக்க வேண்டுமா?” என்றான். “அதில் பொருளில்லை” என்றார் சுகர்த்தர். “அவரறியாத ஒன்றை அவரிடம் சென்று சொல்ல இயலுமா என்ன?” என்றார் சுகர்ணர். “பிறகென்ன செய்வது?” என்று சினத்துடன் கேட்டபடி எழுந்தான். சாளரத்தருகே சென்று கைகளைக் கட்டியபடி வெளியே நோக்கி நின்றான். சுகர்த்தர் “அவனைச் சூழ்ந்து நம் ஒற்றர்களை அங்கு நிறுத்துவோம். ஒவ்வொரு கணமும் அவனை அவர்கள் கண்காணிக்கட்டும். அவன் நோக்கு சஞ்சீவினிதான் என்றால் அவன் அதை அடைவதற்குள்ளேயே அவனை அழித்துவிடலாம்” என்றார்.

விருஷபர்வன் திரும்பி “உண்மையில் இதை நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன், அமைச்சரே. அணு அணுவாக அசுரர் படை தேவருலகை வென்று வருகிறது. இந்திரனின் அரியணையை தொட்டுவிடும் தொலைவிலென ஒவ்வொரு நாளும் நான் கனவில் காண்கிறேன். ஒவ்வொரு முறையும் ஐயமும் அச்சமும் என் உள்ளத்தில் எழுகின்றன. இத்தனை எளிதாக இது நிகழாது, எதுவோ ஒன்று எழுந்துவரும் என. அதுவே இப்புடவி நெசவின் மாறா நெறி. ஆனால் இத்தனை எளிதாக, எளிமையினாலேயே புரிந்துகொள்ள முடியாததாக ஒன்று நிகழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றான்.

“அதில் கவலையுறுவதற்கு ஏதுமில்லை. சுக்ரர் அவனை ஏற்றது எதனாலென்று அவரை அறிந்தவர்கள் உணரமுடியும். தன் ஆசிரியர் மீதான வஞ்சத்தை தீர்த்துக்கொள்கிறார். அவர் மைந்தனை அவருக்கு எதிரியாக்கி களத்தில் கொண்டுசென்று நிறுத்துவாரென்றால் அவரது வெற்றி முழுமையாகிவிடும்” என்றார் சுகர்ணர். சுகர்த்தர் “ஆசிரியரிடமிருந்து முற்றிலும் கற்றுவந்தவர் சுக்ரர். அத்தனை கற்க வேண்டுமென்றால் அத்தனை அணுகியிருக்கவேண்டும். அத்தனை அணுகியவர் ஒருபோதும் ஆசிரியரை முற்றிலும் வெறுக்கமாட்டார். தன் ஆணவத்திற்கு அவரிடம் ஓர் ஒப்புதல் மட்டுமே அவர் கோருவது என்று எனக்குத் தோன்றுகிறது. ஆசிரியரை வெல்ல விரும்புவார், உடைப்பதை அவர் உள்ளம் ஏற்காது” என்றார். விருஷபர்வன் “ஆம், வெறும் ஆணவத்திற்காக அவர் அத்தனை உவகை கொண்டிருக்கமாட்டார்” என்றான்.

“இதில் இவ்வண்ணம் நாம் சொல்லாடி சலிப்பதில் பொருளேதுமில்லை” என்றார் சுகர்த்தர். “நாம் செய்யக்கூடுவதொன்றே, காத்திருப்பது. அவன் ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு நோக்கும் நம் ஒற்றர்களால் கணக்கிடப்படட்டும்.” அவரை திரும்பி நோக்கிய விருஷபர்வன் “நன்று, அதுவே என் ஆணையாகுக!” என்றான். சுகர்ணர் தலைவணங்கி வெளியேறினார். சுகர்த்தர் அவனருகே வந்து “எண்ணிநோக்கினால் தீதென்று ஏதும் தெரியவில்லை, அரசே. ஆனால் உள்ளுணர்வு தீதென்றே சொல்கிறது. நன்றுசூழ்ந்து உவகைகொண்டு இயற்றுவதும் பேரழிவை விளைக்கலாகும் என நூலில் கற்றுள்ளேன்” என்றார். விருஷபர்வன் பெருமூச்சுவிட்டான்.

சில நாட்களுக்குள்ளேயே ஒற்றர்களின் செய்தி வந்தது. அச்செய்திகளைத் தொகுத்து அவனிடம் சொல்ல வந்த அமைச்சர் சுகர்த்தர் “இதை நான் முன்னரே எண்ணியிருந்தேன்” என்றார். “எவரும் விழையும் பேரழகன். அத்தூண்டில் சுக்ரருக்காக அல்ல, அவர் மகளுக்காகவே” என்றார். விருஷபர்வன் “ஆம், எவரும் எண்ணும் எளிய வழிதான் அது. ஆனால் அவள் வேலின் விசை முனையில் திரள்வதுபோல சுக்ரரின் ஆணவம் கூர்கொண்டு எழுந்தவள் என்று எண்ணியிருந்தேன்” என்றான். “ஆம் அரசே, அதுதான் இவனை அவள் காமுறுவதற்கு அடிப்படை. அவளைப்போன்ற ஒரு பெண் நிகரற்ற ஒன்றை தான் மட்டுமே அடையவேண்டுமென எண்ணுவாள். பேரழகனொருவனைக் கண்டதும் அவனை தனக்குரியவன் என்று எண்ணாமலிருக்க அவளால் இயலாது” என்றார்.

“அவர்கள் கொண்ட உளப்பரிமாற்றம் அக்குருநிலையில் அனைவருக்கும் தெரிந்துள்ளது. அவள் சுக்ரரின் கரவறைகளுக்குள் நுழைவதற்கான புதைவுப்பாதை” என்று அவருடன் வந்து சற்று பின்னால் நின்ற சுகர்ணர் சொன்னார். “சுக்ரர் இதை ஒப்புகிறாரா?” என்று விருஷபர்வன் கேட்டான். “ஆம், அவர்கள் தங்களுக்குள் சொல்லென அதை பரிமாறிக்கொள்ளவில்லை. ஆனால் எண்ணங்களால் அது உறுதிப்பட்டுவிட்டதென்பதை மூவரின் விழிகளும் நகைகளும் காட்டுகின்றன” என்றார் சுகர்ணர். “சுக்ரர் ஏன் அவனை ஏற்கிறார்?” என்றான் விருஷபர்வன். “அவர் தோளில் வளர்ந்த மைந்தன். தன் மகளுக்கு பிறிது எவரை கணவனாக ஏற்க முடியும்?” என்றார் அமைச்சர் சுகர்த்தர். “அவனை தன்னுடன் எப்போதைக்குமாக நிறுத்திக்கொள்வதற்கு, அவன் தந்தை மீதான வெற்றியை முழுமை செய்துகொள்வதற்கு சுக்ரர் இதையே சிறந்த வழியென்று எண்ணுவார்.”

தொடர்ந்து “தேவயானியும் பிறிதொன்று எண்ண வழியில்லை. தந்தையை வென்று கடந்து செல்லும் ஒருவனையே அவளால் ஏற்கமுடியும். பிரஹஸ்பதியின் இளவடிவான கசனன்றி எவரும் சுக்ரரை வெல்ல இயலாது. இப்புவியில் அவள் முழுதேற்கும் ஆண் இன்று அவன் ஒருவனே” என்றார். விருஷபர்வன் எண்ணம் தழைந்து தன் பீடத்தில் சென்று அமர்ந்தபடி தலைகுனிந்து தரையையே நோக்கிக்கொண்டிருந்தான். மடியில் கோத்து வைக்கப்பட்ட கைகள் மெல்ல அசைந்துகொண்டிருந்தன. அதில் அவன் உள்ளம் இயங்கும் முறை அவர்களின் கண்ணுக்கு தெரிந்தது. கட்டைவிரல் அசைவு நின்றதும் அவன் விழிதூக்கி “அப்படியென்றால் இதுவே தருணம் அல்லவா?” என்றான்.

சுகர்ணர் “ஆம்” என்றார். அமைச்சர் “அதை ஒற்றர்கள் தாங்களே செய்ய இயலாது. அரசாணை தேவை. அதன்பொருட்டே இங்கு வந்தோம்” என்றார். விருஷபர்வன் “அவ்வாறே ஆகுக!” என்று சுகர்ணரை நோக்கி சொன்னான். சுகர்ணர் தலைவணங்கி வெளியே சென்றார். அவர் அகன்றதும் அவர் சென்ற பாதையை ஒருமுறை நோக்கிவிட்டு அமைச்சர் குரல் தாழ்த்தி சொன்னார் “கசன் கொல்லப்பட்டதும் அச்செயலுக்கு உடன் நின்ற அத்தனை ஒற்றர்களையும் நாம் கொன்றுவிடவேண்டும், அரசே.” விருஷபர்வன் திரும்பி நோக்க “சுக்ரர் அவன் இறப்பை தாளமாட்டார். அவர் மகள் முப்புரமெரித்த மூவிழி அன்னையென சினங்கொள்ளக்கூடும். இன்று நாம் எவர் சினத்திற்கேனும் அஞ்சவேண்டுமென்றால் அவர்களுடையதைதான்” என்றார்.

விருஷபர்வன் எரிச்சலுடன் தன் கைகளை ஒன்றுடன் ஒன்று இறுக்கிக்கொண்டான். “ஒவ்வொரு முறையும் அரசுசூழ்தலின்பொருட்டு ஓர் எளியவன் கொல்லப்படுகையில் எதன்பொருட்டோ நான் எரிச்சல் கொள்கிறேன். மானுடர் மீதல்ல. தெய்வங்கள் மீதுமல்ல. ஊழென்று சொல்லி என்னை மூடனாக்கவும் உளம் கொள்ளவில்லை. பிறிதொன்றின் மீது அச்சினம். மாற்று வழியிலாது இங்கு அமைந்த இந்நெறியின் மீது” என்றான். “அவன் எளியவன் அல்ல” என்று அமைச்சர் சொன்னார். “நூல்கற்றுத் தேர்ந்தவன். வலக்கையில் இருந்த மலர் இதழ் குலையாது இருக்க இடக்கையால் இரு வேங்கைகளை சரித்துவிட்டு அவன் நுழைந்ததை நம் ஒற்றர்கள் கண்டிருக்கிறார்கள். இங்கு அவன் வந்ததும் அரசுசூழ்தலுக்காகவே. படைக்கலம் எடுத்தவன் படைக்கலத்தால் தான் கொல்லப்படலாம் என அறிவிப்பு விடுத்தவனே.”

“இச்சொற்கள் என்னை எவ்வகையிலும் தேற்றவில்லை, அமைச்சரே. அவன் அந்தணன். அசுரர் அந்தணரைக் கொல்வது பிழையல்ல. ஆனால் பாடுந்திறன்கொண்டவன், கலைபயின்றவன், சொற்சுவை அறிந்தவன், ஊழ்கம் அமைந்தவன் படைக்கலம் எடுத்து களந்தோறும் உயிர்விடும் மானுடக்கோடிகளில் ஒருவன் அல்ல. தன் கலையினூடாக, சொல்லினூடாக, சொல்கடத்தல் வழியாக மெய்மையை ஒருகணமேனும் அவன் தொட்டிருக்கக்கூடும். அவன்மேல் பிரம்மம் தன் நோக்கை ஒருகணமேனும் பதித்திருக்கக்கூடும். ஓர் கலைஞனை, புலவனை, முனிவனை கொல்வதென்பது விதைநெல்லை எரிப்பது. கருக்கொண்ட பெண்டிரை கொல்வது. எதன்பொருட்டு என்றாலும் அந்நாட்டிற்கும் அரசகுடிக்கும் அது பழி சேர்க்கிறது. செங்கோலேந்தி முடிசூடி அரியணையில் அமர்ந்திருப்பவனுக்குத் தெரியும் அது. மிக ஆழத்தில் அவன் ஒரு அமைதியின்மையை உணர்வான்.”

tigerசுகர்ணரின் பதினெட்டு ஒற்றர்கள் இளமாணவர்களாக காவலர்களாக சுக்ரரின் குருநிலையில் இருந்தனர். பிரபவன், சாம்பவன், சக்ரன், சுபலன், சுதார்யன், சூக்தன், முக்தன் எனும் ஏழு மாணவர்கள் கசனுக்கு விளையாட்டுத் தோழர்களாக மாறிவிட்டிருந்தனர். அவனுடன் கனி தேரவும் கன்று மேய்க்கவும் காட்டுக்குள் சென்றனர். புதர்களிலும் மரக்கூட்டங்களிலும் அலைந்து கனிகளும் கிழங்குகளும் திரட்டினர். கொடிகளை முறுக்கி கயிறாக்கி கவர்க்கிளை வெட்டி கொக்கி செய்து பாறையெழுச்சிகளில் தொற்றி ஏறி மலைத்தேன் எடுத்தனர். சுக்ரரின் குருநிலையில் அசுர மாணவர்கள் ஊனுணவு அருந்தும் வழக்கம் இருந்தது. ஒவ்வொரு நாளும் மான்களையும் காட்டுப்பன்றிகளையும் முயல்களையும் கொன்று உரித்து ஊன்துண்டுகளாக்கி ஈச்சையோலை முடைந்து செய்த கடவங்களில் அவற்றைப் பொதிந்து தலைச்சுமையாக்கி அவர்கள் மீண்டு வந்தனர்.

அவர்கள் ஒற்றர்களென்று சுக்ரரோ கிருதரோ சுஷமரோ அறிந்திருக்கவில்லை. நூல்கல்வியிலும் அரசுசூழ்தல்களிலும் மெய்யான ஆர்வம்கொண்ட மாணவர்களையே ஒற்றர்களென உளம்பயிற்றி அங்கே இணைத்துவிட்டிருந்தார் சுகர்ணர். நூல் ஆயும் அவைகளில் அமர்ந்து அவர்களும் சுக்ரரின் உலகியல் அரசுண்மைகளையும் பொருள்நிலை மெய்மைகளையும் கற்றவர்கள். தானறிபவற்றைத் தொகுத்து அதில் தன்நோக்கை பதித்து அறிந்தபின் தன்னைத்தான் துணிக்கும் சொல்லாடலை தேர்ந்தவர்கள். நெடுநாள் அங்கிருந்ததனால் அவ்விடத்திற்குரியவர்களாகவே நோக்கும் சொல்லும் செயலும் உருமாற ஒற்றர்களென்று பிறிதெவரும் அறியாமல் நீரில் கரைந்த நஞ்சென கரந்திருந்தனர்.

சுகர்ணரின் ஆணை வந்ததும் அவர்கள் அடுமனைக்கு அருகே விறகுப்புரையில் ஒருங்கு கூடினர். மேலிருந்து எடை மிகுந்த விறகுத் துண்டுகளை எடுத்து கீழே நின்றவர்களின் தலையில் கொடுத்த சக்ரன் சுகர்ணரின் ஆணையை சொன்னான். கோடரியுடன் நின்ற பிரபவன் “ஆம், இதை நான் எதிர்பார்த்தேன்” என்றான். விறகு பொறுக்கி அடுக்கிய சாம்பவன் “இது மிக எளியது. அதனாலேயே ஐயமாக இருக்கிறது, இதுவே தீர்வா என” என்றான். அவன் சொன்னதையே அனைவரும் எண்ணிக்கொண்டிருந்ததனால் திகைப்புடன் திரும்பிப்பார்த்தனர். அவன் அந்நோக்குகளால் நிலையழிந்து “ஆம், பல தருணங்களில் மிக எளிய செயல்களே தீர்வுகள்” என்றான். சக்ரன் “எளியவை பலமுறை நிகழ்த்தப்பட்டமையால் நிறுவப்பட்ட வழிகள். நாம் அவற்றை மீளமீள கேள்விப்பட்டிருக்கிறோம் என்பதனால் ஐயம்கொள்கிறோம். ஏனென்றால் நாம் மேலும் திறன்கொண்டவர்கள் என்றும், ஆகவே புதிய எதையாவது செய்யவேண்டுமென்றும் எண்ணிக்கொள்கிறோம். ஆணவமே அவ்வாறு எண்ணச்செய்கிறது” என்றான். “ஆம், அவனை கொன்றாகவேண்டும்.”

விறகுச்சுமையை தலையில் வாங்கிக்கொண்டு சென்ற சுபலனும் சுதார்யனும் அச்சொற்களை மெல்லிய விழிமாற்றத்துடன் பெற்றுக்கொண்டனர். “அவன் துளியும் எஞ்சலாகாது என்பதே ஆணை” என்று சக்ரன் சொன்னான். “இறந்தவனை நுண்சொல்லால் எழுப்ப ஆசிரியரால் இயலும். அவனை அவர் எழுப்புவாரென்றால் அவன் கொல்லப்பட்டான் என்பதும் தெரியவரும். நாம் பிடிபடுவோம்” என்றான். அவர்கள் விழிதாழ்த்தி நிற்க “நமது அரசரும் பிடிபட்டதாகவே பொருள். இறந்தவரை சுக்ரரால் உடலில் இருந்து எழுப்ப முடியும். உடலில் இருந்து அகன்று அலைபாயா மூச்சுவெளியில் நின்றிருக்கும் ஆத்மாவை மீண்டும் உடல்புகுத்துவார். நீர்ப்பாசிப் படலத்தை தூண்டிலிட்டு இழுத்து குவித்துக்கொண்டு வருவதுபோல் அவனிடமிருந்து எழுந்து வெளியில் பரவிய மூச்சை அவரால் சேர்த்தெடுக்க இயலும்” என்றான்.

“ஆசிரியர் இன்று எழுப்ப விழையும் முதல் உயிர் அவர் துணைவியாகவே இருக்கக்கூடும். ஆனால் அது இயலாது. ஏனெனில் அவர் இறந்த பிறகு ஏழாண்டுகள் கழித்து சஞ்சீவினியை அவர் அடைந்தார். அவர் உயிர் மண்ணுலகிலிருந்து மூச்சுலகிற்கும் அங்கிருந்து வினையுலகுக்கும் மூதாதையர் உலகுக்கும் சென்றிருக்கும். அவர் இங்கே வாழ்வை தவமென இயற்றியவர் என்பதனால் தவத்தோருலகுக்கும் மெய்யுலகுக்கும் ஒளியுலகுக்கும்கூட சென்றிருக்கக்கூடும். மூச்சுலகிலிருந்து அகன்ற உயிரை மீட்கவியலாது” என்றான் சக்ரன். “அவன் அகன்றதை அவள் அறிந்தால் அவரிடம் சொல்லி உயிர்மீட்டு எடுப்பாள், ஐயமே வேண்டாம். ஆனால் அவன் திரும்பிவர உடலிருக்கக் கூடாது. அவன் கொண்டிருக்கும் அந்த அழகிய தோற்றம் மீண்டெழக்கூடாது… அவன் உருவம் அழிந்தால் அவளால் அவனை ஏற்கமுடியாது.”

அவர்கள் ஒவ்வொருவரும் ஒரே கணத்தில் ஒரே இடத்தை வந்தடைந்தனர். அதையே சுபலன் சொன்னான். “அவனை புதைத்தால் எழுவான். எரித்தழிப்பது நன்று. சாம்பலில் இருந்து அவன் உடல்பெற இயலாது.” சக்ரன் “மூடா, சிதை எரியும் கெடுமணம் நெடுந்தொலைவுக்கு எழுவது. அனல் தசையைத் தொட்டதுமே காட்டுக்குள் ஆடுமேய்க்கும் எவரும் அதை உணர்ந்து வந்துவிடக்கூடும். எரிக்க வேண்டும், ஆனால் காற்றில் கலக்காது எரியும் அனலில்” என்றான். “அது என்ன?” என்று பிரபவன் கேட்டான். “அனல்கள் ஏழு. அதில் முதல் அனல் மண்ணில் உறைகிறது. புதைக்கப்படும் உடலை ஏழு நாட்களில் எலும்பென்றாக்குகிறது. விறகிலும் நெய்யிலும் வாழ்கிறது ஒளிகொண்ட எரி. அதன் சீற்றம் நமக்கு ஒவ்வாதது. விண்ணில் வாழும் எரிகளை விலக்குவோம். எஞ்சுவது வயிற்றில் எரியும் அனல்” என்றான் சக்ரன். “ஜடராக்னிக்கு அவனை இரையாக்குவோம்.”

“நமக்கு அத்தனை பொழுதில்லை. அவனை காணவில்லை என்று உணர்ந்த மறுகணமே அவர் சஞ்சீவினியை சொல்லக்கூடும்” என்றான் சுதார்யன். அவர்களில் இளையோனாகிய முக்தன் “வேள்வித் தீயின் அளவிற்கே விரைவுள்ளது ஓநாயின் வயிற்றில் எரியும் அனல்” என்றான். அனைவரும் அவனை நோக்கி திரும்ப அவன் “நான் இதை காவியமொன்றில் கற்றேன்” என்றான். சக்ரன் “ஆம், சரியான சொல். நாம் அதை செய்வோம்” என்றான். “ஓநாய்களுக்கா?” என்றான் சுதார்யன். “ஆம், வெறும் நான்குநாழிகை போதும் அவன் எரிந்தழிந்திருப்பான்” என்றான் சக்ரன். அவர்கள் தலையசைத்தனர்.

tigerமறுநாள் குருநிலையின் மாணவர்கள் முதற்புலரியிலேயே எழுந்து தங்கள் மூங்கில் கூடைகளும் கவண்களும் அகழ்விகளும் துரட்டிகளுமாக காட்டுக்குள் காய்கனிகள் தேர கிளம்பிச் சென்றனர். ஒருவரோடொருவர் நகையாடியும் பிடித்துத் தள்ளியும் அடித்துவிட்டு ஓடி துரத்திப்பிடித்தும் விளையாடியும் துயிலெழத் தொடங்கியிருந்த பறவைக்குரல்கள் பரவிய இலைத்தழைப்புக்கு அடியில் பனித்துளி சொட்டி அசைந்துகொண்டிருந்த புதர்களினூடாக காட்டுக்குள் நுழைந்தனர். முன்னரே வகுத்து வைத்திருந்ததன்படி ஒற்றர்கள் எழுவரும் கசனுடன் நடந்தனர். அவர்கள் உள்ளங்கள் அறைபட முகம் பதற்றம்கொண்டிருந்தது. முக்தன் அடிக்கடி சிறுநீர் கழித்தான். “என்ன இது?” என பிரபவன் வினவ “ஒன்றுமில்லை” என அவன் சிரித்தான்.

அவர்கள் அனைத்தையும் நூல்களிலேயே கற்றிருந்தனர். அனைத்துப் பயிற்சிகளையும் களரிகளிலேயே அடைந்திருந்தனர். ஆகவே நேருக்குநேர் வந்த அத்தருணம் அவர்களை அச்சுறுத்தியது. அது முற்றிலும் புதிதெனத் தோன்றியது. சக்ரன் அதை நன்குணர்ந்திருந்தான். மிகப்பெரிய பிழை எதையோ இயற்றப்போகிறோம் என அவன் உள்ளம் கூறியது. ஆகவே அனைத்து வாய்ப்புகளையும் எண்ணி எண்ணி தவிர்த்துக்கொண்டிருந்தான். அதற்குமப்பால் சென்று அவன் ஆழம் பதறிக்கொண்டிருந்தது. “எங்கே?” என்று அவன் பிரபவனிடம் கேட்டான். அவன் “மலைமுனம்புக்கு அப்பால் பள்ளத்தில் ஓநாய்க்குலம் ஒன்று வாழ்கிறது… எப்படியும் இருபது மூத்த ஓநாய்கள் அதிலுண்டு” என்றான். “உம்” என்றான் சக்ரன்.

சக்ரன் கசனிடம் மந்தணக்குரலில் “நேற்று அங்கு மலைச்சரிவில் வேர்ப்பலா ஒன்று கனிந்திருப்பதைக் கண்டேன்” என்றான். “பலாவின் மணம் எழவில்லையே” என்று கசன் கேட்டான். “ஆம், எழலாகாதென்பதற்காக அங்கே கரடியின் மலத்தை கொண்டுசென்று உடைத்து பரப்பிவிட்டு வந்தேன். குரங்குகளோ பிற கரடிகளோகூட அம்மரத்தை அணுகாது” என்றான் சக்ரன். சூக்தன் “எவருமறியாது அங்கு செல்வோம். எவரும் கொண்டு வராத கனிச் சுமையுடன் குடில் மீள்வோம்” என்றான். சிரித்தபடி “ஆம், கிருதர் திகைத்துவிடவேண்டும்” என்றான் கசன். அவர்கள் பிறரிடமிருந்து ஒதுங்கி புதரில் மறைந்து விலகிச்சென்றனர். பிறர் தங்கள் தோழர்களிடமிருந்து பிரிந்து தனித்தனியாக புதர்களுக்குள் நுழைந்து ஒரு பெரிய காணாவளையமென அவர்களை சூழ்ந்து சென்றனர்.

கசனை மிக விலக்கி கொண்டுசென்ற சக்ரன் பாறை முனம்பொன்றை சென்றடைந்தான். “இங்கிருந்து இறங்க வேண்டும்” என்று அவன் சொல்ல அம்முனையை அடைந்து குனிந்து நோக்கிய கசன் “இத்தனை செங்குத்தாகவா? ஒரு கொடியின்றி இங்கிருந்து இறங்கமுடியாது” என்றான். “கொடி செய்வோம்” என்று சக்ரன் சொன்னான். அருகிருந்த வள்ளிகளை கையால் பற்றி இழுத்து முறுக்கி இணைத்து வடம் செய்து பாறையில் நின்ற முட்புதர் ஒன்றின் அடித்தூரில் கட்டினான். “இறங்குங்கள்” என அவன் சொல்ல கசன் அதைப் பற்றியபடி மெல்ல இறங்கினான். மூன்றடி ஆழத்திற்கு அவன் இறங்கியதும் சக்ரன் தன் கையிலிருந்த வாளால் கசனின் கழுத்தை ஓங்கி வெட்டினான். வெட்டு ஆழப்பதிந்து குருதி கொப்பளிக்க அவன் உடல் திடுக்கிட்டு துள்ளித்துள்ளி கயிற்றின் பிடிவிடாமலேயே சுழன்றது. மீண்டும் ஒருமுறை வெட்டியபோது தலை தனியாக பிரிந்து தசைநார்களில் தொங்கி ஆடி உருவிக்கொண்டு கீழே சென்று விழுந்தது. தட் என அது விழுந்த ஓசை சக்ரனை விதிர்க்கச் செய்தது. உடல் நீர்த்தோல்கலம் விழும் ஓசையுடன் மண்ணை அறைந்தது. அதன் கைகால்கள் இழுத்துக்கொண்டு துடித்தன.

அசுரர்கள் ஓடிவந்து மேலே நின்று நோக்கினர். சூக்தன் “இத்தனை எளிதாகவா?” என்றான். சக்ரன் அவனை சீற்றத்துடன் திரும்பி நோக்கினான். குருதி மணம் எழுந்ததுமே அப்பால் ஓநாய்க்குரல் கேட்கத் தொடங்கியது. பிரபவன் “அங்கே மலைப்பிளவொன்றில் அவை வாழ்கின்றன” என்றான். அவர்கள் அச்சரடினூடாக பற்றி கீழிறங்கிச் சென்று தங்கள் கையிலிருந்த வாள்களால் கசனின் உடம்பை சிறு துண்டுகளாக வெட்டினர். அவன் உள்ளங்கையை எடுத்துக்கொண்ட பிரபவன் அதன் குருதி துளித்துளியாக சொட்ட மெல்ல நடந்து அருகிலிருந்த ஓநாய்க்குகையை அடைந்தான். முன்னரே மணம் அறிந்து அவை நிலையழிந்து ஊளையிட்டுக்கொண்டிருந்தன. ஒன்று அவனைக் கண்டதும் தலைநீட்டி வாய்சுளிக்க பற்களைக்காட்டி உறுமியபடி அருகணைந்தது. அவன் தன் முன் அக்கையை வீசிவிட்டு திரும்பி ஓடிவந்தான்.

குகைக்குள் பதினெட்டு ஓநாய்கள் இருந்தன. அப்போது அவற்றில் நான்கு ஓநாய்கள் குருளைகளை ஈன்றிருந்தன. முதல் ஓநாய் அந்தக் கையை முகர்ந்துகொண்டிருக்கையிலேயே பசித்து சீற்றம்கொண்டிருந்த அன்னைஓநாய்கள் குகையின் இருளிலிருந்து குரைத்தபடி நிரை நிரையெனப் பாய்ந்து வெளிவந்து அக்கையை கவ்விக் கொண்டன. பிரபவன் ஓடிச்சென்று மரத்தைப்பற்றி மேலேறி கிளைகளில் அமர்ந்து கொண்டான். கீழே சொட்டிய குருதியை முகர்ந்தபடி முதல் ஓநாய் முன்னால் செல்ல அதன் செவியசைவையும் வால்சுழற்றலையும் கண்டு செய்திபெற்று பிற ஓநாய்கள் தொடர்ந்து சென்றன. சற்று நேரத்தில் முதல் ஓநாய் கசனின் உடல் துண்டுகள் சிதறிக்கிடந்த இடத்தை சென்றடைந்தது. சென்ற விரைவிலேயே ஒரு துண்டைக் கவ்வி ஒருமுறை தலைசுழற்றி உதறியபின் கவ்விக் கவ்வி மென்று ஊனை விழுங்கியது. பின்னங்கால் மடித்து அமர்ந்து தலையைத் தூக்கி வானை நோக்கி ஊளையிடத்தொடங்கியது.

அவ்வழைப்பை ஏற்று சற்று நேரத்திலேயே அனைத்து ஓநாய்களும் அங்கே வந்து சேர்ந்தன. தங்கள் குட்டிகளை வழிநடத்தியபடி மெலிந்து உடல் ஒட்டி நா வறண்ட அன்னையரும் அங்கு வந்தனர். மரங்களிலும் பாறை விளிம்புகளிலும் அமர்ந்திருந்த அசுரர்கள் கசனின் உடல் முழுமையாகவே உண்ணப்படுவதை உறுதி செய்துகொண்டனர். செங்குருதியும் தசைத்துணுக்குகளும் படிந்த பெரிய எலும்புகளும் கரியகுழல் ஒட்டியிருந்த தலையும் மட்டுமே அங்கு எஞ்சின. செல்வோம் என்று சக்ரன் பிறரிடம் கைகாட்டினான். அவர்கள் மீண்டும் ஒருங்கு திரண்டனர். காட்டுப்புதர்கள் வழியாக நடக்கத் தொடங்கினர்.

ஒருவரோடொருவர் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. ஒவ்வொருவர் அகவிழிக்கு முன்னாலும் வழிமுட்டி நிற்கச்செய்யும் பெருஞ்சுவர் என கசனின் புன்னகைக்கும் முகம் தெரிந்தது. அதை பல்லாயிரம் திரைகளை என மீண்டும் மீண்டும் விலக்கி அவர்கள் முன்னால் சென்றுகொண்டிருந்தனர். வழியில் ஒரு சுனையைக் கண்டதும் சக்ரன் அதிலிறங்கி குளிக்கத் தொடங்கினான். பிறரும் நீரில் பாய்ந்து உடல் கழுவினர். கரைவிளிம்பில் படிந்திருந்த மென்மணலை அள்ளி கைகளையும் உடலையும் தேய்த்தனர். மூழ்கி எழுந்து மீண்டும் வந்து அந்த மணலை எடுத்து உடலைக் கழுவினர். உள்ளம் நிலையழிந்ததுபோல அந்த மணலால் தங்கள் உடலை மீண்டும் மீண்டும் கழுவிக்கொண்டிருந்தனர்.

பின்னர் ஒவ்வொருவரும் தனித்து சோர்ந்து மரநிழல்களில் படுத்து உடல் நீட்டினர். கைகளும் கால்களும் தனித்தனியாக கழன்றுவிட்டது போன்ற களைப்பை அடைந்தனர். கொந்தளித்துக்கொண்டே இருந்த உள்ளம் படுத்ததுமே முறுக்கவிழ அனைவருமே மிக எளிதில் துயிலில் ஆழ்ந்தனர். பின்னர் எப்போதோ அந்தியின் ஒலிகள் கேட்கத் தொடங்கிய பிறகு எங்கிருக்கிறோம் என்று உணரத் தொடங்கினர். ஏதோ விந்தையிலென கசன் திரும்பி வருவான் என்று அவர்கள் அனைவருமே எதிர்பார்த்தனர். நிகழ்ந்தது ஒரு கனவென்றும் நிகருலகுக்கு விழித்தெழுந்திருப்பதாகவும் உளம் விழைந்தனர். பின்னர் பெருமூச்சுடன் எழுந்து நிகழ்ந்தது கனவென்றே தங்கள் நெஞ்சுக்கு சொல்லி அதை எங்கோ ஆழத்திற்கு தள்ளினர்.

ஒவ்வாத ஒன்றை கடந்து செல்வதற்கு ஒவ்வாத பிறவற்றை எண்ணுவதே உகந்தவழி என்று தங்கள் முன்அறிதல்களால் அவர்கள் உணர்ந்திருந்தனர். இளமையிலேயே சொல்மீதுகொண்ட காதலும், கற்றுத்தேர்ந்து அறிஞனென்றாகி அவை சென்றமர விழைந்து கல்விச்சாலைகள்தோறும் சென்றதும், அங்கு அசுரர் என்பதனாலேயே சிறுமைக்கு ஆளாக்கப்பட்டு துரத்தப்பட்டதும் கசந்து கசந்து நினைவிலெழுந்தன. நல்லாசிரியர், அந்தணர், கவிஞர் என ஒவ்வொருவரும் குலம் கேட்டு முகம்சுளித்து சுட்டுவிரல் காட்டி விலகும்படி ஆணையிட்டனர். அக்கணங்களில் அவர்களில் எழுந்த அந்த கொடியதெய்வத்தை கனவில் மீண்டும் மீண்டும் அவர்கள் கண்டனர். அச்சத்தை வஞ்சமென ஆக்கிக் கொண்டனர். வஞ்சம் அவர்களை மீட்டது.

“ஆம், நான் கொன்றேன். நம் குலம் இப்புவிமேல் வாழவேண்டுமென்றால் இன்னும் ஆயிரம் அந்தணரை நாம் கொல்ல வேண்டியிருக்கும். இந்த ஓர் அந்தணன் நம் குடியின் மந்தணச்சொல்லை திருடிச்செல்வான் என்றால் நம் குலத்தின் பல்லாயிரம் பேர் இறந்து மண்ணில் உதிர நேரும். இப்புவி வெல்பவரால் வகுக்கப்பட்டது. வெல்லும்பொருட்டு இயற்றுவதே அறம்.” எவர் அதை தங்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று அவர்கள் வியந்தனர். ஆழ்ந்த சினம்மிக்க அக்குரல் எவருடையது? அத்தனை பொருத்தமான சொல்தேர்வுடன் அத்தனை உளப்பூர்வமான உணர்வெழுச்சியுடன் அது சொல்லப்பட்ட பின்னரும்கூட உள்ளிருந்து அல்ல அல்ல என்று அதை விலக்குவது யார்? அவனுக்கு ஏன் அத்தனை இளமை? ஏன் அத்தனை அறியாமை?

நூல் பதின்மூன்று – மாமலர் – 54

54 குழவியாடல்

மறுநாள் காலை நீராடச் செல்கையில் கசனைக் கண்டதுமே முனிவர்களின் மைந்தர்களும் மாணவர்களும் முகம் திருப்பி விலகிச்சென்றனர். அவர்களை நோக்கி சிரித்தபடி தனக்குள் ஏதோ பாடலை முனகியபடி சென்று ஓடையிலிறங்கி அவன் நீராடினான். அப்படித்துறையிலேயே எவரும் இறங்கவில்லை. நீந்திச் சென்று ஓர் அல்லி மலரை பறித்துக்கொண்டு கரையேறினான். ஈரம் வழிந்த உடலுடன் சென்று சுக்ரரின் அறை வாயிலை அடைந்து படிமேல் அதை வைத்து நெற்றியால் அதைத் வணங்கிவிட்டு தன் குடிலுக்கு மீண்டான்.

அவன் நீராடிச் சென்று மறைவதுவரை ஒரு சொல்லும் உரைக்காமல் அவர்கள் அனைவரும் அவனையே நோக்கியிருந்தனர். அப்போது அவன் அழகையன்றி எவரும் எதையும் எண்ணவில்லை. நின்றிருக்கையில் அழகர்கள் அசைகையில் அழகர்களல்ல, அசைவில் அழகர்கள் பேசுகையில் அழகிழப்பர். எப்போதும் எந்நிலையிலும் அழகனென்று ஒருவன் அமையக்கூடுமென அப்போதே அறிந்தனர். ஆனால் அதைக் குறித்து தங்களுக்குள் பேசிக்கொள்ள எவரும் விரும்பவில்லை. சொல்லின்றி நீரிலிறங்கி மூழ்கி எழுந்தார்கள். வழக்கமாக சிரிப்பும் பேச்சும் சிறுபூசல்களும் ஒலிக்கும் படித்துறைகளில் அலைகளின் ஓசை மட்டுமே எழுந்தது.

அச்சொல்லின்மை உறுத்தவே அவர்களிலொருவன் மிக எளிய அன்றாடச்செயல் குறித்து எதோ சொன்னான். அதை பிறிதொருவன் மறுக்க இருவர் அதில் கருத்து சொல்ல தங்களை தங்களிடமிருந்தே மறைத்துக்கொள்ளும்பொருட்டு அச்சொல்லாடலை நாவால் தட்டித் தட்டி முன்னெடுத்துச் சென்று காற்றில் நிலைநிறுத்தினர். “அழகியவன் நம்மை கவர்கிறான். அதனாலேயே அவன் அஞ்சத்தக்கவன்” என அந்தத் திரையைக் கிழித்து ஒருவன் சொன்னான். “நம் சித்தத்தை நம்மையறியாமல் எடுத்துக்கொள்ளும் எதுவும் நம்மிடமிருந்து எதையோ கைப்பற்றுகிறது.” மீண்டும் சொல்லவிந்து அவர்கள் விழிமின்கள் மட்டுமென்றாயினர்.

சுக்ரரின் வகுப்புகளில் அவன் அமர்ந்தபோது அவனருகே எவரும் அமரவில்லை. அவனைக் கண்டதுமே முகம் மலர்ந்த சுக்ரர் எப்போதும் முதற்சொல்லை அவனை நோக்கியே தொடங்கினார். பின்னர் அச்சொற்களின் அனல் தன் விழிகளில் பற்றிக்கொள்ள அங்கிருக்கும் அனைவரையும் மறந்து அதில் நின்றாடி விண் தாவி எழுந்து வெளியென்றானார். அவர்கள் அவனை மறந்து அவருடன் சென்றனர். மீண்டு இடமுணர்ந்து  எழுந்து விலகுகையில் அவனை தவிர்த்தனர். அவரளித்த சொற்களின் வெம்மை விழிகளில் நிறைந்திருக்க பல மடங்கு எடை கொண்டவனாக அவன் தனித்து நடந்து சென்றான். அவனை விழிநோக்காது உடல் நோக்கியவர்களாக சிறு குழுக்களாக அவனைத் தொடர்ந்து சென்றனர்.

ஆனால் அவனழகு அனைவரையும் வென்றுகொண்டிருப்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தனர். அவனை கண்காணிக்க வேண்டுமென்றும் அவன் செய்யும் முதற்பிறழ்வை கண்டடைய வேண்டுமென்றும் அதைக் கொண்டே அவனை அங்கிருந்து விலக்க வேண்டுமென்றும் ஒவ்வொருவரும் உறுதிகொண்டிருந்தனர். அது அவனழகை கூர்ந்து நோக்குவதற்காக அவர்கள் அணிந்துகொண்ட நடிப்பென்பதை அவர்களே அறிந்தும் இருந்தனர். எப்போதோ ஒருவர் பொருந்தாமையால் உந்திநிற்கும் ஒரு கூற்றை உரைக்கையில் அதன் உள்ளடக்கம் அவனே என அறிந்து தாங்கள் சொல்லும் ஒவ்வொன்றிலும் அவனைப் பற்றிய உட்குறிப்பு இருப்பதை உணர்ந்தனர்.

அழகுக்கும் விழிகளுக்கும் விலக்கவொண்ணா ஒப்பந்தம் ஒன்று உள்ளது என்றார் சுஷமர். “அவனை நோக்காமலிருக்க இங்கு எவராலும் இயலாது. அதை எண்ணி நாணியே நாம் நம்மை திருப்பிக்கொள்கிறோம்.” பெண்கள் ஓரவிழியால் அவனை நோக்கி தனிமையில் உளவிழியால் மீட்டெடுத்து நோக்கி மகிழ்ந்தனர். கற்பனையால் வண்ணம் தொட்டுத்தொட்டு முழுமை செய்தனர். ஆண்கள் அவனை எண்ணாமலிருக்க முயன்று எண்ணத்தில் அவனே எழுவதைக் கண்டு எரிச்சலுடன் நோக்கி எண்ணியிராமல் தன்னை மறந்தனர்.

மலர்களுக்கு மட்டுமே உரிய முழுமை கொண்டிருந்தது அவன் உடல். “அழகு அனைத்துப் பொருட்களிலும் எழுந்துள்ளது. அழகிற்கென்று மட்டுமே அமைந்தது மலர் மட்டுமே” என்றார் சத்வர். “படைத்துப் படைத்து சலித்த பல்லாயிரம் கோடி மானுட உடல்களில் ஒன்றில் மட்டும் பிரம்மன் தன் மகிழ்ச்சியை பொறித்தனுப்புகிறான். செல்லுமிடங்களெங்கும் அவர்கள் உவகையை நிறைக்கிறார்கள்.” கிருதர் “நமது மாணவர்கள் அவன்மேல் பொறாமை கொள்ளக்கூடும்” என்றார். சத்வர் நகைத்து “இல்லை. தங்களைப்போல் இருந்தும்  தங்களைவிட ஒரு படி மேலாகச் சென்றவர்கள் மீதுதான் மானுடர் பொறாமை கொள்கிறார்கள். அவன் அழகு தெய்வங்களுக்குரிய முழுமை கொண்டது. எப்போதும் அதை தாங்கள் அடையப்போவதில்லையென்று அனைவரும் அறிவர். இளையவரே, மானுடர் எதைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள்? சற்று விழைந்திருந்தால் சற்று முயன்றிருந்தால் சற்று நல்லூழ் இருந்தால் தாங்களும் அடைந்திருக்கக்கூடும் என எண்ணுவனவற்றின் மீதே” என்றார்.

கிருதர் “ஆனால் ஒவ்வொருவரும் உள்ளூற அவனை விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது” என்றார். சத்வர் “ஆம், அழகை விரும்பாத எவர் இருக்கிறார்கள்? மலர்களை நின்று நோக்குபவர்கள் குறைவு, ஆனால் அழகெனும்போது மலரே நினைவு வருகிறது. மலரொன்று எதிரில் வந்தால் அறியாது முகம் மலர்கிறது. மண்ணிலுள்ள விழிகள் அனைத்தும் அழகை அறியும். விழிகள் மலர்களை நோக்கி நோக்கி மலர்களைப்போல் ஆனவை  என தொல்கவிதை சொல்வதுண்டு” என்றார். அவர்கள் ஏடு நறுக்கிக்கொண்டிருந்தனர். சூழ எவருமில்லாமையால் நிலைவிட்டு உரைகொண்டனர். “அத்தனை பேர் அவன்மேல் காதல் கொள்கிறார்களா என்ன?” என்று கிருதர் கேட்டார்.

“பெண்கள் தங்கள் ஆழ்கனவுகளில் நிகரற்ற பேரழகிகளாகி அவனை அடைகிறார்கள். ஆண்கள் பேரழகர்களாக மாறி அவன் என நடிக்கிறார்கள். ஆணுக்குள் அமைந்த பெண் அவனிடம் காதல் கொள்கிறாள். பெண்ணுக்குள் அமைந்த ஆண் அவனுக்கு தோழனாகிறான். இளையவரே, மானுடன் ஊனுடல் கொண்டு இங்கு வாழ்வது ஒரு சிறு வாழ்வே. உள்ளம் பெருகி அவர்கள் வாழும் முடிவிலாக் கோடி உலகங்கள் இங்குள்ளன. நாம் கொண்ட நல்லூழால் அவை எடையிலாதுள்ளன. எடை கொண்டிருந்தன என்றால் இப்புவி தாங்கும் ஆமைகள் என்றோ நசுங்கி கூழாகிவிட்டிருக்கும்” என்று சத்வர் நகைத்தார்.

எந்தக் கணத்தில் அவர்கள் அவனை ஏற்றுக்கொண்டார்கள் என்பது எவருமே அறிந்திராத ஒன்றாக இருந்தது. ஆனால் ஒவ்வொருவரும் மேலும் மேலும் கூர்கொண்டு அந்த முனை நோக்கியே வந்து கொண்டிருந்தனர். தேவயானியும் அவனும் கொண்ட காதலை அறியாத எவரும் அங்கிருக்கவில்லை. அக்காதலை அவர்கள் ஒவ்வொருவரும் கொண்ட ஆழ்கனவுகளில் தங்களுள் நடித்தனர். அதனூடாக அவர்கள் அறிந்த அளவுக்கே அனைவரும் அக்காதலை அறிந்திருந்தனர். கசன் முன் அத்தனை பெண்களும் தேவயானியென்றாயினர். அத்தனை ஆண்களும் அவனென்றாயினர்.

மெல்ல மெல்லிய புன்னகைகள் அவனுக்கு அளிக்கப்பட்டன. கல்வியவையில் அவன் எழுத்தாணிக்காக துழாவினான் என்றால் எவரோ ஒருவர் அதை எடுத்து அவனுக்களித்தார். பசியுடன் அடுமனைக்கு அவன் சென்றால் எவரோ எழுந்து கலத்தை நன்கு கழுவி அவன் கையிலளித்தனர். ஒற்றைச் சொற்கள் எழுந்தன. பின் அவை தங்கள் உடன்பிறந்தாரை பெருக்கிக்கொண்டன. எளிய குறிப்புகள் வழியாக உரையாடல் தொடங்கியது. முதல் நகையாட்டு எழுந்ததுமே அனைத்து அணைகளும் உடைந்தன. சிரிப்பும் பகடியும் இன்றி அவனிடம் எவரும் பேசாமலாயினர்.

பெண்கள் மறைமுகமாக தேவயானியைச் சொல்லி அவனை களியாடினர். ஒவ்வொன்றையும் அவன் முழுமையுடன் செய்தான். வேள்விபோல், நடனம்போல் அவன் அசைவுகள் இருந்தன. அதனாலேயே அவை பெண்மைச்சாயல் கொண்டிருந்தன. அதைச் சொல்லியே அவனை சீண்டினர் பெண்கள். இளைஞர் அவனிடம் சொல்லாடுவதற்கென்று பேசுபொருட்களை கண்டடைந்தனர். அன்று கற்றவற்றை, அவற்றை கடந்துசெல்லும் உய்த்துணரல்களை, சூழ்ந்துள்ள காட்டை, வெயிலை, பனியை. ஆனால் அசுரரும் தேவரும் கொண்ட நில்லாப் போரைப்பற்றி ஒரு சொல்லும் அவர்கள் நாவில் எழவில்லை.

ஒவ்வொரு உரையாடலுக்குப் பின்னும் மேலும் அவனை நெருங்க முனைந்தனர். ஒவ்வொருவரும் அவனை தொட விழைந்தனர். செல்வோம் என அவன் கையை தொட்டனர் தோழர். இங்கு நோக்குக என அவன் தோளை தட்டினர். என்ன செய்கிறாய் என்று அவன் தோள்களில் கையூன்றினர். முதியவர் நீடூழி வாழ்க என அவன் தலையை தொட்டனர். மூதன்னையர் மட்டும் எந்தத் தயக்கமுமின்றி அவனை அணுகி இரு கன்னங்களைத் தொட்டு வருடி “காமதேவன் போலிருக்கிறாய், மைந்தா” என்றனர். அவன் கைகளை எடுத்து தங்கள் கன்னங்களிலும் கைகளிலும் வைத்து “நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தினர்.

அப்போது விழிதிகழ அகன்று நின்ற இளைய பெண்டிர் அம்மூதன்னையருக்குள் புகுந்துகொண்டு தாங்களும் அவனை வாழ்த்தினர். அவர்களின் கனவுகளில் அவன் மேலும் பெருகி நிறைந்தான். தனிமையிலிருக்கையில் அவன்மேல் உதிர்ந்த மலர்கள் அப்பெண்டிரே என அவன் அறிந்திருக்கவில்லை. ஓடையில் நீராடுகையில் அவன் உடலை உரசிச் சென்ற ஒளிமிக்க மீன்கள் எவரென்று அவன் உள்ளம் உணர்ந்திருக்கவில்லை. காற்றென வந்து அவன் குழல் கலைத்தனர். ஈரமண்ணென அவன் கால் கீழ் குழைந்தனர். சிட்டுக்குருவியென நாணம் தடுக்க தத்தித் தத்தி அவனை அணுகி மிரண்டெழுந்து மீண்டும் விலகினர். வண்ணச் சிறகுள்ள பறவையென அவன் முன் தங்களை விரித்து வைத்தனர். அவன் முன் இலைதெரியாது பூத்த கொன்றையென்றாயினர்.

அப்பெண்களனைவரிலும் தேவயானி நூறு விழிகளாக எழுந்து அவனை சூழ்ந்திருந்தாள். அவள் கொண்ட ஆணவம் அக்காதலை முற்றிலும் மறைத்து இறுகிய முகம் சூட வைத்தது. குறுகிய ஒற்றைச் சொற்களை மட்டுமே அவனுக்கு அளிக்க அவளால் இயன்றது. அவன் முன் வருகையில் தலை நிமிர்த்து நீள்குழல்புரிகள் அலைக்க அவள் நடந்தாள். சொல் சொல் என சிலம்பின கால்நகைகள். இனி இனி என ஒலித்தன வளையல்கள். அவன் முன் அமர்ந்திருக்கையில் உடல் அவனை நோக்கித் திரும்பி முகம் பிறிதொரு திசை நோக்க அமைந்தாள். அவன் கேட்க பிறருடன் உரையாடுகையில் அவள் குரல் இனிமையுடன் வலுத்தெழுந்தது. அவனுடன் உரையாடுகையில் தாழ்ந்து தனக்குள்ளென முழங்கியது.

அவனோ ஆசிரியரின் மகளென்னும் நிலையிலேயே அவளை அணுகினான். எப்பெண்டிரையும் நோக்கும் அதே விழிகளையே அவளுக்கும் அளித்தான். நலம் உசாவினான். நன்று சொல்லி வாழ்த்தினான். அன்றாட நிகழ்வுகளை உரைத்தான். எல்லை கடக்காது நகையாடினான்.  ஒருபோதும்  கடக்கவில்லை. அதுவே அவள் தன் சொல்லாலும் விழியாலும் வேண்டியதென்றாலும் அம்முறைமைச் சொல்லாடலுக்குப்பின் ஒவ்வொருமுறையும் சீண்டப்பட்டாள். சினம்கொண்டு பற்களைக் கடித்தபடி மட்டுமே அவன் முன்னிருந்து அகன்றாள்.

தனிமையில் இருக்கையில் அவள் உள்ளெழுந்த இளங்கன்னி ஐயமும் ஏக்கமும் கொண்டு தவித்தாள். தன் அழகும் நெகிழ்வும் அவனுள் சென்று பதியவில்லைபோலும் என ஐயுற்றாள். இல்லையேல் அவன் விழிகளிலும் சொற்களிலும் அத்தனை விலக்கம் எப்படி வந்தது? பெண்ணுக்கு முன் அப்படி முற்றிலும் நடிக்க இயலுமா? இல்லையில்லை என்று அவள் உள்ளம் சொல்லிக்கொண்டிருந்தது. அவனுள் வாழ்கிறேன் நான், ஐயமே இல்லை. ஆனால் மறுகணமே அது தன் விழைவு காட்டும் மாயம்தானா என்று எழுந்த ஐயத்திலிருந்து அவளால் விடுபடவும் முடியவில்லை. இக்கணம் இது மறுகணம் அது எனும் ஓயா ஊசலாட்டத்தில் திருகுகுடுமி உரசி அனல்கொண்டு உருகி தவித்தது.

இரவில் விழித்துக்கொள்கையில் அவ்வெண்ணம் எழுந்து அனல்கொண்டு நின்று தவித்தது. முறுகி முறுகி உட்டணம் கொண்டு மறுபுரி சுழன்று தளர்ந்து சோர்ந்து கண்ணீர் நிறைந்து  இரு கன்னங்களிலும் வழிந்து காதுகளை அடைய விசும்பலை அடக்கி இருட்டுக்குள் படுத்திருந்தாள். வெறி கொண்டெழுந்தோடி வாயிலைத் திறந்து முற்றத்தைக் கடந்து அவன் குடில் வாயிலைத் திறந்து உள்ளே சென்று அவனருகே அமர்ந்து தலைமயிரை பற்றித் தூக்கி உலுக்கியபடி “சொல், நான் உனக்கு எவள்?” என்று கூவவேண்டுமென்று  விழைந்தாள். ஒருபோதும் நிகழாத அதை ஓராயிரம் முறை நடித்து சலித்தாள். ஒவ்வொரு முறையும் அவ்வெண்ணம் எழுகையில் உடல் பதறும் மறைமுக உவகைக்கு ஆளானாள்.

தன் விழிகளால் அவன் இறைஞ்சவேண்டும், தன் இரங்கும் சொற்களை அவள் காலடியில் வைத்து கோரவேண்டும்,  முற்றிலும் காதலென்றாகி உருகி தன் முன் நின்றிருக்கவேண்டும். தன்னிடம் அவன் காதல் சொல்லும் காட்சிகளை மீண்டும் மீண்டும் கற்பனையில் நிகழ்த்திக் கொண்டிருப்பதே அவள் நாட்களை அமைத்தது. தனித்திருக்கும் அவளை அணுகி தயங்கி நின்று, விழிதூக்கி என்ன என்று அவள் கேட்க “என்னை கொல்லாதே! உன் சொல்லின்றி ஒரு கணமும் உயிர் வாழேன்” என்றான். நீராடி சுனைவிட்டெழுந்து வருகையில் அவளை சோலையில் மறித்து “உன் அழகு என்னை பித்தனாக்குகிறது. இப்புவியில் பிறிதொன்றும் வேண்டேன்” என்றான். இரவில் துயிலின்போது அவள் குடிலின் சிறு சாளரத்தருகே வந்து இரவெல்லாம் நின்று அவள் மென்துயில்விழிப்பில் கேட்கும்படி  நீள்மூச்செறிந்தான். எழுந்து நோக்கிய அவளிடம் “குலம் வேண்டேன், குடி நாடேன், உற்றார் சேரேன், உன் அருகொன்றே போதும். எங்கும் செல்வேன், எவ்விழிவிற்கும் சித்தமாவேன், உன் சொல்லொன்றே வேண்டும்” என்றான். “மன்று நிற்பேன். மடலூர்வேன். பிறிதொன்றும் தேரேன். உயிர் விடுவேன். கடுநரகில் உழலவும் ஒருங்குவேன்” என்றான். ஒவ்வொரு கற்பனைக்குப் பின்னரும் ‘என்ன இது? எத்தனையோ முறை கூத்திலும் காவியத்திலும் கண்டது’ என்று அவளே ஏளனத்துடன் எண்ணிக்கொண்டாள்.  மீண்டும் மீண்டும் அதற்குள் வந்துகொண்டுமிருந்தாள்.

எப்போதோ ஒருமுறை “என்ன அலைக்கழிவு இது! இரும்புச்சிலையென்று இங்கிருந்தவள்தானா நான்? நீர்ப்பாவை நெளிவென எப்போது மாறினேன்? இத்தனை எளிதாக ஓர் ஆண் முன் தோற்கக்கூடியவளா? இதுதான் என்றும் நிகழ்கிறதா?” என்று தன்னை கேட்டுக்கொண்டாள். “தோற்பது இவனிடமல்ல, காமத்திடம். அது பிறிதெங்கும் இல்லை.  என்னுள் எழுந்துள்ளது. சிலையில் எழுந்த தெய்வத்திடம் சிலை தோற்கலாகாதா என்ன?” அவன் முன் செல்லும்போது தருக்கி நிமிரவேண்டும் என ஒவ்வொரு முறையும் அவள் எண்ணுவாள். ஆனால் செயற்கையான மிடுக்காக அது மாறும். அந்த நடையும் தோற்றமும் பழக்கமற்றவை என்பதனால் ஏதோ ஒன்று பிழையென்று ஆகும். கால் தடுக்கும், கைகளில் இருந்து ஏதோ ஒன்று நழுவும், எங்காவது தோள் இடித்துக்கொள்ளும். அது அவனை திரும்பிப் பார்க்கச்செய்யும். பின்னர் எண்ணிக்கொண்டாள், அது அவனை திரும்பச் செய்யவேண்டும் என்றே தன்னுள் வாழும் பிறிதொன்று ஆற்றும் சூழ்ச்சியா என. தெய்வங்களே, மூதன்னையரே, எத்தனை பேரின் கலவை நான்? என்னென்ன சேர்ந்து சமைத்தது என் உள்ளம்? ஒரே தருணத்தில் எத்தனை களங்களில் ஆடிக்கொண்டிருக்கின்றேன்!

tigerவேங்கைகள் அவனிடம் பூனைக்குட்டிகளென்றாவதை அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். காட்டுக்குள் சென்ற அவனுக்காகக் காத்து அவை குருநிலையின் எல்லையில் அமர்ந்திருந்தன. அவன் வந்ததுமே செல்ல முனகலுடன் தாவி அவனை நோக்கி ஓடி எழுந்து கைவிரித்து அவனை அணைத்துக்கொண்டன. சுழன்று சுழன்று அவன் உடலை உரசி முத்தமிட்டன. என்ன செய்வதென்றறியாமல் பாய்ந்து ஓடி விலகி செவி பின்னுக்குச் சரித்து உடல்முடி காற்றில் அலைபாய கால்கள் ஒலிக்க அவனை நோக்கி பாய்ந்துவந்தன. அவனுக்கும் அவற்றுக்குமான உறவு குருநிலையிலேயே பேச்சென்றாகியது. அவனைக் கண்டதுமே வால் தூக்கி கால் பரப்பி உடல் குழைத்து கொஞ்சி அணுகும் வேங்கைகளைக் கண்டு பெண்கள் வாய்பொத்தி விழியொளிர நகைத்தனர். அவற்றின் கழுத்தையும் தலையையும் அவன் வருடிக் கொடுக்கையில் அவன் உடலில் தங்கள் உடல் சேர்த்து அவை நழுவிச்சுழல்கையில் ஆண்கள் முகங்களை இறுக்கி புன்னகையை கண்களில் மட்டுமே மின்னவிட்டனர்.

அவனுடன் விளையாடிக்கொண்டிருக்கையில் எங்கோ அவள் குரல் கேட்டு செவி திருப்பி மணம் கூர்ந்து தாவி அவளிடம் ஓடி பாய்ந்து அவள் உடலில் பற்றி ஏறி அவள் முகத்தில் முத்தமிட்டு தோளில் தலை வைத்து இடை பற்றி அணைத்து அவளை நிலை தடுமாற வைத்து அவை குலவின.  மெல்ல அவற்றின் நடத்தையில் ஒரு மாறுதல் நிகழ்வதை அவள் கண்டாள். அவளிடம்  சிறு குருளைகள்போலவே நடந்துகொண்டிருந்த அவை ஆண்மைமிடுக்கு கொள்ளலாயின. விழிகள் நிலைத்து கூர்ந்து நோக்க எண்ணி எடுத்து மெல்ல வைக்கும் கால்களுடன் நீட்டப்பட்ட வால்களுடன் அவளை நோக்கி வந்தன. அவளருகே அவளை நோக்காமல் தலைநிமிர்ந்து படுத்துக்கொண்டன. அவளருகே அயலவர் எவர் வந்தாலும் தோல்வாரைச் சுண்டுவதுபோன்ற மெல்லிய ஒலியெழுப்பி உறுமின. அவ்வொலியிலிருந்த எச்சரிக்கையை அத்தனை பேரும் அக்கணமே உணர்ந்து அஞ்சி விலகினர்.

இரவில் அவள் குடிலுக்கு வெளியே அவை ஒளிரும் விழிகளுடன் படுத்திருந்தன. விழிப்பு கொண்டு அவள் மஞ்சத்திலிருந்து மிகமெல்ல காலடி எடுத்துவைத்தாலும்கூட அந்த ஒலிகேட்டு மெல்லிய உறுமலுடன் அவற்றில் ஒன்று எழுந்து சாளரத்தினூடாக அவளை நோக்கியது. அவள் சோலையில் தனித்திருக்கையில் அவளை அணுகாமல் நோக்காமல் ஆனால் அவளுடன் என அவை சூழ்ந்து படுத்து பிறிதெதையோ செய்துகொண்டிருந்தன. பூச்சிகளை விரட்டியும் கைநகங்களையும் விலாவையும் நக்கி தூய்மைசெய்தும் சிறுகற்களை கைகளால் உருட்டிவிளையாடியும் அவளை அறியாதவையாக இருந்தன. அவள் அழைத்தால் ஒருகணம் கழித்தே அவை எழுந்து அருகே வந்தன. வாலை நீட்டியபடி ‘சொல்’ என நோக்கி நின்றன. அவற்றின் தலையிலும் கழுத்திலும் அவள் வருடியபோது அவற்றிலிருந்து அதுவரை அறிந்திராத மணம் ஒன்று எழுந்தது. அது பிற வேங்கைகளையும் அருகே வரச் செய்தது. அவை தன்னிடமிருந்து முற்றிலும் விலகிவிட்டன என்று அவளுக்குத் தோன்றியது. எப்போதும் உடனிருக்கையிலும் அவை அப்பாலிருந்தன.

அவற்றை அருகணையச் செய்ய அவள் செய்த முயற்சிகள் வீணாயின. அவற்றின் விழிகளை நேர்நோக்குகையில் அவள் நோக்கு சரிந்தது. அவற்றின் நோக்கு அவள்மேல் படிகையில் உள்ளுணர்வே அதை அறிந்தது. அவையறியாது அவற்றை நோக்கிக்கொண்டிருக்கையில்தான் வேங்கை எத்தனை நிமிர்வுகொண்ட விலங்கு என அவள் அறிந்தாள். யானையில் எடையாக புரவியில் விரைவாக காளையில் அமைதியாக வெளிப்படும் ஆற்றலே வேங்கையில் மென்மையென ஆகியது. ஓசையற்ற காலடிகள், வட்டக் குழவிமுகம், செவ்வுதடுகள், பால்படிந்த பைதல்விழிகள், மென்மயிர் தோல்நெளிவுகள். ஆனால் எழுந்து நடந்து அணுகுகையில் ஒவ்வொரு அணுவிலும் ஆண். சினந்து மூக்குநீட்டி செல்கையில் நூறுமுறை தீட்டிய வாள். கால்கள் படிய படுத்து கண்மூடித் துயில்கையிலும் நாணேற்றி அம்புபூட்டிய வில்.

சாளரம் வழியாக அவள் நோக்கி நின்றிருக்கையில் முற்றத்து சாலமரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பெரிய செம்பு அண்டா ஒன்றை ஐயத்துடன் அணுகி முகர்ந்து நோக்கியது ஒரு வேங்கை. அதன்பின் கையால் அதை அடித்துப் பார்த்தது. உளநிறைவுடன் சுற்றிவந்து கால்தூக்கி ஒரு சொட்டு சிறுநீர் கழித்தது. மீண்டும் சுற்றிவந்து அதன் விளிம்பில் காலை வைத்தது. அண்டா உருண்டு சரிந்து அதன் கால்மேல் விழ வீரிட்டு அலறியபடி அண்டாவின் விளிம்புக்கு அடியில் சிக்கிக்கொண்ட காலை இழுத்து எடுத்துக்கொண்டு மூன்று காலில் நொண்டியபடி ஓடி அவள் குடிலை நோக்கி வந்தது. அரற்றி அழுதபடி அவள் காலடியில் வந்து படுத்துக்கொண்டு அடிபட்ட காலை தூக்கிக் காட்டியது. அவள் சிரித்துக்கொண்டு அதன் காலைப்பற்றி நோக்கினாள். மெல்லிய வீக்கம் உருவாகத் தொடங்கியிருந்தது. அவள் அதை மெல்ல அழுத்தியபோது அது ஊளையிட்டபடி அந்தக் காலை நக்க வந்தது.

அவள் அடிபட்ட இடத்தை மெல்ல தடவிக்கொடுத்ததும் நா நீட்டி மூக்கை நக்கி காதுகளை சிலிர்த்தபடி அது ஒருக்களித்து படுத்தது. அவள் அதன் விலாவை தடவியபோது நான்கு கால்களையும் தூக்கி அடிவயிற்றைக் காட்டியது. அவள் வயிற்றைத் தடவியதும் பனையோலை கிழிபடும் ஓசையுடன் விழிசொக்கி சப்புகொட்டியது. அதன் இரு உடன்பிறந்தவையும் கால்தூக்கி வைத்து உள்ளே வந்தன. ஒரு வேங்கை அவள் அருகே வந்து படுத்து தானும் நான்கு கால்களையும் தூக்கி அடிவயிற்றைக் காட்டியது. அவள் அதையும் தடவிக்கொடுத்தபோது விழிசொக்கியது. அடிபட்ட வேங்கை ஒரு கண்ணை மட்டும் திறந்து உடன்பிறந்தவனை நோக்கியபின் மறுபக்கம் திரும்பிப் படுத்தது. மூன்றாம் வேங்கை ‘சரியான முட்டாள்கள்’ என முகம் காட்டி கண்களைச் சுருக்கியபடி வெளியே நோக்கி குடிலுக்குள் அமர்ந்தது. அவள் புன்னகையுடன் மல்லாந்த வேங்கையின் வயிற்றை வருடியபடி “என் செல்லம் அல்லவா? என் கண் அல்லவா? அமைதியாக உறங்கு…” என்று கனிந்த குரலில் சொன்னாள். அது கண்களை மூடிக்கொண்டு வாலைமட்டும் மெல்ல ஆட்டிக்கொண்டிருந்தது.

நூல் பதின்மூன்று – மாமலர் – 53

53. விழியொளிர் வேங்கைகள்

சுக்ரர் கசனை தன் மாணவனாக ஏற்றுக்கொள்வாரென்று கிருதர் உட்பட அவரது மாணவர்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை. பிரஹஸ்பதியின் மைந்தன் என அவன் தன்னை அறிமுகம் செய்துகொண்டதுமே அவன் வருகையின் நோக்கம் அனைவருக்கும் புரிந்துவிட்டது. ஒழியாது நிகழ்ந்துகொண்டிருந்த போரில் ஒவ்வொரு நாளுமென தேவர் படைகள் பின்வாங்கிக்கொண்டிருந்தன. சஞ்சீவினி நுண்சொல் இன்றி அவர்கள் அணுவிடையும் முன்னகர முடியாதென்பதை அறியாத எவரும் அக்குருநிலையில் இருக்கவில்லை. ஆயினும் முறைமைப்படி அவனுக்கு வாழ்த்துச் சொல்லி சுக்ரரிடம் அழைத்துச்சென்றனர்.

கசன் வாயிலில் கூப்புகையில் மலர்களுடன் நின்றிருக்க சுக்ரரின் தனியறைக்குள் நுழைந்த கிருதர் தலைவணங்கி அங்கே ஈச்சைஓலைப் பாயில் கால்மடித்து அமர்ந்து விழிசுருக்கி நூலாய்ந்துகொண்டிருந்த அவரிடம் பிரஹஸ்பதியின் மைந்தன் கசன் வந்திருப்பதை அறிவித்தார். அப்போது சுக்ரர் கயிலை மலையில் அம்மையும் அப்பனும் ஆடிய இனிய ஆடலொன்றை விவரிக்கும் சிருஷ்டிநிருத்யம் என்னும் குறுங்காவியத்தை படித்துக்கொண்டிருந்தார். அதே முகமலர்வுடன் நிமிர்ந்து நோக்கி “யார், கசனா…? என் இளமையில் அவனை தோளிலேற்றி விளையாடியிருக்கிறேன். எங்கே அவன்?” என்றபடி கையூன்றி எழுந்தார்.

அம்முகமலர்வை எதிர்பார்த்திராத கிருதர் வந்திருப்பவனின் நோக்கம் பற்றி ஆசிரியரிடம் சொல்லலாமா என்று ஐயுற்றார். அப்படி சொல்வது ஒருவேளை ஆசிரியரின் நுண்ணுணர்வை குறைத்து மதிப்பிடுவதாக பொருள்படுமோ என்ற ஐயம் அவரை தடுத்தது. அந்த இரு முனையில் அவர் உடலும் மெல்ல ததும்பியது. அவரைக் கடந்து சிற்றடிகளுடன் விரைந்துசென்ற சுக்ரர் படியில் மூன்று வெண்மலர்களுடன் வந்துநின்ற பேரழகனைக் கண்டு கைகளை விரித்து உரக்கக்கூவி அருகணைந்து தோள்களை தழுவிக்கொண்டார். உரத்த குரலில் “வளர்ந்துவிட்டாய்! தோள்திண்மை கொண்ட இளைஞனாகிவிட்டாய்!” என்றார். அவன் குனிந்து அவர் கால்களில் வெண்மலர்களை வைத்துவிட்டு தொட்டு சென்னிசூடினான்.

தன் கைகளால் அவன் புயங்களையும் கழுத்தையும் வருடி முகத்தில் தொட்டு “மெல்லிய மீசை, மென்பட்டு போன்ற தாடி… நன்று! இளமையிலேயே நீ பேரழகு கொண்டிருந்தாய். இளைஞனாக இந்திரனுக்கு நிகராகத் தோன்றுகிறாய்… இளமையில் கண்களில் தெரியும் நகைப்பு… ஆம், இளமையில் மட்டுமே தெரிவது… வருக!” என்றபின் இரு கைகளையும் பற்றி “வருக!” என்று உள்ளே அழைத்துச்சென்றார். “கிருதரே, இவன் என் மைந்தனுக்கு நிகரானவன். பார்த்தீரா, இவனுக்கு நிகரான அழகனை கண்டதுண்டா நீர்?” என்றார்.

அப்போதே கிருதர் என்ன நிகழுமென்பதை உள்ளுணர்ந்துவிட்டார். முடிவுகள் எண்ணங்களால் அல்ல, எப்போதும் உணர்வுகளால்தான் எடுக்கப்படுகின்றன என்று அவர் அறிந்திருந்தார். சுக்ரர் உரத்த குரலில் “அமர்க… யாரது, இன்னீர் கொண்டுவருக! அமர்க, மைந்தா!” என்றபடி அமர்ந்தார். “நான் ஒரு குறுங்காவியத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். கோடைக் குடிநீர்போல இனியது. வானம்தெரியும் சுனைபோல் ஆழம்கொண்டது. அம்மையிடம் அப்பன் சொல்கிறான், இனியவற்றை விரும்புபவன் இனியவற்றை விதைத்து வளர்க்கட்டும். காதலை விரும்புபவன் அதை காதலிக்கு அளிக்கட்டும் என… அஸ்வாலாயனரின் ஒப்புமைகள் மிக எளியவை. அணிச்செறிவற்றவை. ஆனால் நெஞ்சில் நிற்பவை… நீ காவியம் பயில்கிறாய் அல்லவா?”

“ஆம், உண்மையில் வேதமெய்மைக்கும் தத்துவங்களுக்கும் மேலாகவே நான் கவிதையில் ஈடுபட்டிருக்கிறேன்” என்றான் கசன். “ஆம், அப்படித்தான். உன் அகவை அதையே நாடச்செய்யும்… கிருதரே, பார்த்தீரல்லவா?” கிருதர் சுக்ரரை அப்படி ஒரு உவகைநிலையில் கண்டதே இல்லை. பொருள்துலங்கா விழிகளுடன் “ஆம்” என்றார். “என்ன இளமை! இளமையில் எதையும் வெல்லவேண்டும் என எண்ணாது வாழ்பவன் நல்லூழ் கொண்டவன். அவன் அழகையும் இனிமையையும் முழுதாக அறிந்து திளைப்பான்….” என்றார். கிருதர் தலையசைத்தார்.

தன்முன் வந்துநின்ற அழகனைக் கண்ட சுக்ரரின் விழிகள் தேவயானிக்குரியவை என்னும் எண்ணம் கிருதருக்குள் எழுந்தது. கசனிடம் பேசிக்கொண்டிருந்த தேவயானியை தொலைவிலேயே நோக்கியபடி அவர் அணுகியபோது அவள் முகத்திலும், நோக்கிலும், துவண்டு ஒசிந்த இடையிலும் தெரிந்த பெண்மையை முன்பெப்போதும் அவளிடம் அவர் பார்த்ததில்லை. அவனை அழைத்துக்கொண்டு திரும்பி நடக்கையில் அவள் விழிகள் அவருள் மேலும் தெளிந்து எழுந்தன. அதிலிருந்தது காதல் என்பதை ஐயமிலாது உணர்ந்தார். சீற்றமென்றும் ஆர்வமின்மை என்றும் அகல்தல் என்றும் அது தன்னை நடிக்கிறது. ஆர்வமின்மை தன் காதலை பிறரிடமிருந்து மறைக்க, சீற்றம் அதை தன் உள்ளத்திடமிருந்தே விலக்க.  அகல்தல் தன் உடலில் இருந்து மறைக்க. காதல் அதை மறைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் வழியாகவே வெளிப்படுகிறது. அதைக் கடக்கும் முயற்சிகள் வழியாகவே வலுப்பெறுகிறது. மறுப்பதற்குரிய சொற்கள் வழியாகவே மொழியாகிறது.

அக்காதல் எவ்விளைவை உருவாக்குமென்று அவர் எண்ணமுனை  வருநிகழ்வுகளை துழாவிக்கொண்டிருந்தபோதுகூட எழும் காதலொன்றைக் காணும்போது உருவாகும் இனிமை அவருள்ளத்தில் நிறைந்திருந்தது. கசனை நோக்கி ஓடிச்சென்று தழுவிக்கொண்ட சுக்ரரிலும் அதே விழிகளை கண்டார். அச்சமும் ஐயமும் கொண்டு அவர் உள்ளம் தத்தளிக்கையில்கூட ஆழத்தில் நுண் நா ஒன்று அந்த இனிமையைத் துழாவி திளைத்துக்கொண்டிருந்தது. காதலை விரும்பாத உள்ளம் இல்லை. அது உயிர்கள் கொள்ளும் களியாட்டு. ஆனால் அதை மானுடரால் ஆடியிலேயே நோக்கமுடியும். நேர்நின்று நோக்கினால் அதன் பித்து அச்சுறுத்துகிறது. அதன் மீறல் பதைப்பை அளிக்கிறது.

“இங்கே நான் வந்தபின் உன்னை நினைத்ததே இல்லை. வஞ்சத்தால் கூர்கொண்டு முன்செல்பவன் நான். ஆனால் உன்னை மறந்ததே இல்லை என இப்போது உணர்கிறேன்” என்ற சுக்ரர் கிருதரிடம் திரும்பி  சிறுவர்களுக்குரிய கொப்பளிப்புடன் “எவ்வளவு வளர்ந்துவிட்டான்! இவனை மடியிலிருத்தி முதல் பறவையை சுட்டிக் காட்டியவன் நான். இவனுக்கு வேதமுதற்சொல்லை ஓதியவனும்  நானே. நெய்யை நெருப்பென வேதங்களை இவன் கற்கும் திறன் கண்டு வியந்திருக்கிறேன். ஆசிரியரின் மைந்தன் இவன். எனக்கு இவன் மைந்தனுக்கு நிகர் அல்லது ஒரு படி மேல்” என்றார்.

கசன் கைகூப்பி “என்னை உங்கள் மாணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆசிரியரே. அதன்பொருட்டே இங்கு வந்தேன்” என்றான். இதுவே தகுந்த தருணம் என எண்ணி கிருதர் நாவெடுக்க சுக்ரர் பெருமகிழ்வுடன் அவன் கைகளைப்பற்றி “ஆம், இங்கு நூல் நவில்கையிலெல்லாம் நான் மேலுமொரு மாணவன் என்று நினைப்பதுண்டு. வேட்டைநாய்போல ஆசிரியன் சுட்டிய திசைக்கு பாய்பவனே நல்ல மாணவன். இப்போது உணர்கிறேன், நீயே என் மாணவனாக அமைய வேண்டியவன். எனக்கு நானே என சொல்லும் சொற்களை உன் செவிகளே கேட்க முடியும்” என்றார். “ஆம், அதை நானும் உணர்ந்தேன். தாங்கள் சென்றபின் எந்தையிடம் இத்தனை நாள் கல்வி கற்றேன். அவர் சொற்கள் என் அறிவை சென்றடைகின்றன. அங்கு அவை ஒரு களஞ்சியத்தில் நிறைகின்றன. ஆசிரியரே, அவை அங்கு முளைக்கவில்லை” என்றான்.

கைதூக்கி “நான் விதைக்கிறேன். நூறுமேனி விளையும்” என்று சுக்ரர் கூவினார். “உன்னை முழுமையறிவு கொண்டவனாக்குகிறேன். சென்று அவர் முன் நில்! அவரிடம் சொல், நான் சுக்ரரின் மாணவனென்று! இதுவும் அவர் மீது நான் கொள்ளும் வெற்றியென்றாகுக!” என்றார். கசன் கைநீட்டி மீண்டும் அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடி “இக்கணம் முதல் நான் தங்கள் அடியவன்” என்றான். அனைத்தும் கைகடந்து சென்றதை உணர்ந்து  மெல்ல தளர்ந்து கைகளைக் கோத்தபடி அக்காட்சியை நோக்கி அமர்ந்திருந்தார் கிருதர். சுக்ரர் திரும்பி “தேவயானியிடம் சொல்க! இவனைப்பற்றி முன்பொருமுறை அவளிடம் நான் சொல்லியிருக்கிறேன். என் ஆசிரியரின் மைந்தன் கசன் என்க! அவரை அவள் நன்கறிவாள், இவனையும் நினைவுகூர்வாள்” என்றார். “அவர்கள் முன்னமே பார்த்துக்கொண்டுவிட்டனர், ஆசிரியரே” என்றார் கிருதர். உரக்க நகைத்து “உண்மையாகவா? பார்த்துக்கொண்டார்களா? நன்ற, நன்று!” என்றார் சுக்ரர்.

அவர் எப்பொருளில் சொல்கிறார் என்று புரியாமல் ஒருகணம் நோக்கியபின் “தாங்கள் சொல்லாடிக் கொண்டிருங்கள். நான் பிறரிடம் தாங்கள் இவரை மாணவராக ஏற்ற செய்தியை சொல்கிறேன்” என்றார் கிருதர். அவர் சொல்வதற்கு செவிகொடுக்காமல் கசனிடம் “என் மகள் தேவயானி, பேரரசிக்குரிய தோற்றமும் உள்ளமும் கொண்டவள். ஊழும் அவ்வண்ணமே என்கிறார்கள் நிமித்திகர்” என்றார் சுக்ரர். திரும்பி கிருதரிடம் “இவனுக்கு நான் அடிப்படைகள் எதையும் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. விதைகள் அனைத்தும்  இவனிடம் உள்ளன. அவற்றை உயிர்கொள்ளச் செய்யும் நீர்  மட்டுமே என்னிடம் இவன் கற்க வேண்டியது” என்றார்.

தலைவணங்கியபடி வெளியே வந்த கிருதரை மாணவர்கள் சூழ்ந்துகொண்டனர். “என்ன சொல்கிறார்? இன்றே அவன் கிளம்பிச் செல்வான் அல்லவா?” என்றார் ஒருவர். இளையவன் ஒருவன் “இங்கு அவன் எதற்கு வந்திருக்கிறான் என்று எவரும் அறிவர். ஒருபோதும் நாம் இதை ஒப்ப முடியாது” எனக் கூவ பிறிதொருவன் “என்ன துணிவிருந்தால் அசுரர்களின் ஆசிரியரிடமே தேவகுருவின் மைந்தன் வந்து சேருவான்? இது சூழ்ச்சி” என்றான். “சூழ்ச்சி செய்யவும் அவர்களுக்கு தெரியவில்லை” என்றார் சுஷமர். ஒன்றோடொன்று இணைந்து எழுந்த குரல்கள் அவரைச் சூழ்ந்தன.

ஒவ்வொரு விழியையாக மாறி மாறி நோக்கிய கிருதர் ஒன்றை உணர்ந்தார். சுக்ரர் கசனை உறுதியாக ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று அவர்கள் எவரும் எண்ணவில்லை. ஒருவேளை ஏற்கவும் கூடும் என்னும் ஐயம் அவர்களுக்கு இருந்தது என்பதனால்தான் அவர்கள் காத்திருந்தனர். அவர் சொல்லப்போவதை அவர்கள்  முன்னரே கணித்து அச்சினத்தை திரட்டிக்கொண்டிருந்தனர். அச்சொற்களை அகத்தே சொல்லிக்கொண்டும் இருந்திருக்கலாம்.  எண்ண அடுக்குகளுக்கு அப்பால் ஆழத்தில் அவர் அறிந்த ஒன்றையே அவர்களும் அறிந்திருந்தனர். கனிந்த பழத்தில் மரம் தன் இனிமையையும் மணத்தையும் நிறைப்பதுபோல தந்தை தன் மகளின் உள்ளமென எழுந்திருக்கிறார்.

கிருதர் “பிரஹஸ்பதியின் மைந்தரை தன் முதல் மாணவராக நமது ஆசிரியர் சுக்ரர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இனி மறுசொல் வரும்வரை கசன் இங்குதான் தங்குவான்” என்றார். அதை மேலும் அழுத்தி “நம்முடன் அமர்ந்து கல்வி கற்பான். அவனுக்குரிய குடிலையும் பிறவற்றையும் ஒருங்கு செய்ய ஆசிரியர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார். அனைவரும் திகைத்த விழிகளுடன் அமைதி அடைந்தனர். இளைஞனொருவன் “அவன் எதற்கு வந்தான் என்று ஆசிரியர் அறிவாரா?” என்றான். கிருதர் “ஆசிரியருக்கு கற்பிக்கும் இடத்தில் நாம் இல்லையென்று நான் எண்ணுகின்றேன்” என்றார். “இருந்தாலும் நமது ஐயத்தை சொல்லவேண்டும். அவர் முதிர்ந்தவர். அக்கனிவால் சிறுமைகளை காணாது செல்லவும் கூடும்” என்றார் சுஷமர்.

சற்று முதிர்ந்த மாணவராகிய சாந்தர் “மிக அழகிய ஒன்று மிகக் கூரியதாகவே இருக்கும் என்கின்றன நூல்கள்” என்றார். கிருதர் “ஆம், ஆயினும் இத்தருணத்தில் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்று சொன்னார். கிருதர் குடில்களை நோக்கி நடக்க உடன்வந்த சுஷமர் “எப்படி அவர் ஏற்றுக்கொண்டார்? இத்தனை வெளிப்படையாகத் தெரியும் ஒன்றை எப்படி அவரால் புரிந்துகொள்ளாமல் இருக்க முடிகிறது? என்ன நிகழ்கிறது அங்கே?” என்றார். கிருதர் “புரிந்துகொள்வது மிக எளிது, உத்தமரே. நமது ஆசிரியர் தனது ஆசிரியரை வழிபடுவதை ஒருகணமும் நிறுத்தியவரல்ல. இம்மைந்தன் அவ்வாசிரியரின் மறுவடிவம்” என்றார். சுஷமர் அந்த உண்மையை உடலுருவெனக் கண்டவர்போல நின்றுவிட்டார்.

“மண்ணில் பலவகையான காதல்கள் மானுடருக்கு நிகழ்கின்றன. கன்னிமேல் இளைஞர் கொள்ளும் காதல், மைந்தர்மேல் பெற்றோர் கொள்ளும் காதல், தோழர்கள் கொள்ளும் காதல்… ஆனால் ஆசிரியனின்மேல் மாணவன் கொள்ளும் காதல் இவையனைத்திலும் முதன்மையானது. பிற காதல்கள் சுடர்கள் என்றால் ஆசிரியனுக்கும் மாணவனுக்கும் இடையே உள்ள காதலை சூரியன் என்கின்றன நூல்கள்” என்றார் கிருதர். “அத்தனை காதல்களிலும் உள்ளாழத்தில் ஆசிரியனுக்கும் மாணவனுக்குமான காதலே அடங்கியிருக்கிறது. கன்னிக்கு ஆசிரியனும் ஆனவனே பெருங்காதலன். மைந்தனுக்கு ஆசிரியனாகிறான் தந்தை. தோழனுக்கு நல்லாசிரியன் தோழனே. கற்றலும் கற்பித்தலும் இன்றி பொன்றாப் பெருங்காதல் நிகழ்வதில்லை.”

“ஏனென்றால் விழைவின்பொருட்டும் வெல்வதன்பொருட்டும் கொள்ளும் காதல்கள் விரைவிலேயே சலித்து பொருளிழக்கும். எல்லையின்றி வெல்லவும் விழையவும் எவரால் இயலும்? கற்றலோ எல்லையற்றது. கற்கப்படுவது எதுவாயினும் எந்நோக்கம் கொண்டதாயினும் கல்வி என எழுந்து வந்து முன்னிற்பது முடிவிலியாகிய பிரம்மமே” என்று கிருதர் தொடர்ந்தார். “கூறுங்கள், எந்நிலையிலேனும் நமது ஆசிரியருடனான நமது காதல் அணுவிடை குறைபடுமா?” சுஷமரும் அவருக்குப்பின் வந்த இரு மாணவர்களும்  நெகிழ்ந்த முகங்களும் ஒளிவிடும் கண்களுமாக நோக்கி நின்றனர்.

“அது உருமாறக்கூடும். ஆயிரம் திரைகளை அள்ளி போர்த்திக்கொள்ளக் கூடும். பிறிதொன்றென தன்னை நடிக்கக்கூடும். ஆனால் அனல்போல ஒளிக்கும்தோறும் எரிந்தெழும். விதைபோல புதைக்கும்தோறும் முளைக்கும்” என்றார் கிருதர். “இங்கு மூன்று மலர்களுடன் படியேறி வந்தவன் கசனல்ல. பேரழகு மீண்டும் உடல்கொண்ட பிரஹஸ்பதியேதான். கால்நகக் கணுமுதல் கூந்தல் இழைவரை அணுவணுவாக நம் ஆசிரியர் நோக்கி மகிழ்ந்து வணங்கி தன் அகத்தில் சூடிய ஆசிரியரின்  உருவையே இளந்தோற்றமென இங்கு கண்டு பேருவகை கொள்கிறார்.”

“நம் ஆசிரியர் தன் ஆணவத்தால் தன் ஆசிரியரை எதிர்க்கலாம். இம்மைந்தனை தோள் தழுவுவதால் அச்சிறுமையை கடந்து மீண்டும் ஆசிரியரை சென்றடைகிறார்” என்றார் கிருதர். பின்னர் புன்னகையுடன் “உறவுகளில் விலகிச்செல்வதும் அணுகுவதற்கான பாதையே. ஏனெனில் அது ஒரு மாபெரும் வட்டம்” என்றார். அவர் அருகே மீண்டும் வந்து “அவன் சஞ்சீவினிக்காகவே வந்துளான்” என்றான் இளமாணவன். “ஆம், அவன் அதை கற்றுச்செல்வான். அவர் கொண்டுள்ள பேரன்பை அவன் அவ்வகையில் களவுக்கு கருவியென்றாக்குவான்” என்றான் இன்னொருவன்.

“ஆசிரியரிடமிருந்து அதை அவன் கற்கவியலாது. ஏனெனில் பிறிதெவருக்கும் அதை கற்பிக்க மாட்டேன் என்று விருஷபர்வனுக்கும் தைத்யர் குலத்துக்கும் அவர் வாக்களித்திருக்கிறார். அந்த நுண்சொல் நம் ஆசிரியருக்குரியதல்ல, அசுரர்களின் செல்வமது. அனைத்தையும்விட நம் ஆசிரியரை அவர் அளித்த அச்சொல்லே கட்டுப்படுத்தும்” என்றார் கிருதர். “அவ்வாறு எண்ணுவோம்” என்றார் சுஷமர். “ஆம், அவ்வாறே நடக்கவேண்டும்” என்றார் பிறிதொருவர். தயங்கியவர்களாக தங்களுக்குள் முழுத்துச் சொட்டும் சொற்களின் தாளத்தைக் கேட்டவர்களாக அவர்கள் கலைந்து சென்றனர்.

விரைவிலேயே கசன் சுக்ரரின் குருநிலையில் அனைவராலும் விரும்பப்படுபவனாக ஆனான். முதலில் அவன்மேல் ஐயமும் அதன் விளைவான சினமும் விலக்கமும் அனைவரிடமும் இருந்தன. அவனை சுக்ரரின் முன்னிலையில் இருந்து அவனுக்கென ஒருக்கப்பட்ட குடிலுக்கு அழைத்துச் செல்கையில் எண்ணி எடுத்த சொற்களால் மறுமொழியிறுத்தார் கிருதர். மாற்றாடை ஒன்று வேண்டுமென்று அவன் கேட்டபோது “மரவுரி அணிவீர்களா அல்லது மலராடையா?” என்று மெல்லிய ஏளனத்துடன் கேட்டார். அதை அவன் உணர்ந்தாலும் “மாணவர்களுக்குரியது மரவுரி அல்லவா?” என்று இயல்பாக மறுமொழி சொன்னான்.

“இங்கு அந்தணர்களுடன் அசுரர்களும் மாணவர்களாக உள்ளனரா?” என்று அவன் கேட்டபோது “இங்குள்ள அந்தணரும் அசுரரே” என மறுமொழி சொல்லிவிட்டு அவர் கிளம்பிச் சென்றார். அவன் “நானும் அசுரனென்றாக விழைகிறேன், கிருதரே” என பின்னாலிருந்து கூவிச் சொன்னான். அறியாமல் அவர் திரும்பிவிட அவன் புன்னகைத்து “என்மேல் சினம்கொள்ளவேண்டாம், கிருதரே. நான் நேற்றென ஏதுமிலாது வாழ்பவன்” என்றான். அச்சிரிப்பின் இளமையில் அவர் முகம் மலர்ந்தார். உடனே தன்னை இறுக்கிக்கொண்டு திரும்பிச் சென்றார். ஆனல் மீண்டும் அம்முகம் நினைவுக்கு வந்தபோது புன்னகை செய்தார்.

tigerஅன்றிரவு கசன் தன் குடில்விட்டு வெளியே இறங்கி முற்றத்தில் நின்றபோது அப்பால் மைய முற்றத்தில் நின்ற வேங்கைகளில் ஒன்று அவனை நோக்கி மெல்ல உறுமியது. செவி கோட்டி மூக்கை நீட்டி அவனை கூர்ந்தபின் பின்னங்காலெடுத்து வைத்து உடலைக் குவித்து பதுங்கி முனகியது. அவன் புன்னகையுடன் கைகள் நீட்டி அதை அழைத்தான். அங்கு நின்று செவிகளை அசைத்தபடி அவனை மதிப்பிட்டது.  திரும்பி விலாவிலமர்ந்த பூச்சியை விரட்டிவிட்டு கையால் முகத்தை வருடிக்கொண்டது. ஆனால் அதன் உளக்கூர் அவனையே நோக்கியிருந்தது.

அதன் உடன்பிறந்தவை இரண்டும் எழுந்து வந்து அதற்கு பின்னால் நின்றபடி அவனை நோக்கின. பிறைநிலா பெருக்கிய ஒளியில் அவற்றின் மென்மயிர்ப் பிசிறுகள் வெண்ணிறப் புல்விதைச் செண்டுகள்போல் ஒளிவிட்டன. ஒன்று மெல்ல திரும்பியபோது இருவிழிகளும் அனலென சுடர்கொண்டு அணைந்தன. அவன் மீண்டும் ஒருமுறை அவற்றை அழைத்தான். ஒரு வேங்கை ஒருமுறை உறுமியபின் திரும்பிச்செல்வதுபோல அசைந்து தலைமட்டும் திருப்பி நோக்கியது. அதை இன்னொன்று மெல்ல அடித்தது.

கசன் அவற்றை நோக்குவதைத் தவிர்த்து நிலவை நோக்கி இடையில் இரு கைகளையும் வைத்தபடி முற்றத்து செண்பக மரத்தடியில் நின்றான். மெல்லிய காலடிகள் கேட்டும் திரும்பி நோக்கவில்லை. அவனருகே வந்து சற்று அப்பால் நின்ற வேங்கை தாழ்ந்த ஒலியில் உறுமி அவனை அழைத்தது. அவன் திரும்பி நோக்காமல் வானையே நோக்கிக்கொண்டிருந்தான். அது மீண்டும் அருகே வந்து அழைத்தது. அவன் திரும்பி நோக்கி புன்னகைத்து அழைக்கும்பொருட்டு விரல் சொடுக்கினான். பூனைக்குட்டிபோல் முதுகை வளைத்து தூக்கி வாலை செங்குத்தாகத் தூக்கி கால் தூக்கிவைத்து அவனை நோக்கி வந்தது. மெல்ல முனகிக்கொண்டு அவன் கால்களில் தன் விலாவை தேய்த்துச் சென்றது.

அப்போது அதன் உடலிலிருந்து எழுந்த மணத்தை உணர்ந்த பிற வேங்கைகள் அங்கிருந்து செல்லத் துள்ளலுடன்  பாய்ந்து ஓடிவந்து அதை பொய்க்கடி கவ்வி விலக்கியபின் தாங்கள் அவன் மேல் உரசின. அங்கிருந்த சிறு கல்லொன்றில் அமர்ந்து அவன் அவ்வேங்கைகளை கொஞ்சத் தொடங்கினான். அவற்றின் காதுகளுக்குப் பின்னாலும் அடிக்கழுத்திலும் வருடினான். அவற்றிலொன்று உடனே அவன் முன் மல்லாந்து படுத்து கால்களால் அவனை மெல்லத் தட்டி வால் குழைத்து விளையாடத்தொடங்கியது. இன்னொன்று அதன் அடிவயிற்றை முகர்ந்தது. பிறிதொன்று அவன் பின்னால் சென்று தன் முதுகை உரசியபடி சுழன்றது. எழுந்து தன் இரு கால்களையும் அவன் தோள்களில் வைத்து தலையை தன் தலையால் தட்டி விளையாடியது.

அவற்றின் ஓசை கேட்டு தன் குடிலில் இருந்து ஓடிவந்த தேவயானி விழிதுழாவி அப்பால் கசனின் குடில் முன் அவை அவனுடன் விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்தாள். தன் குடில் வாயிலிலேயே மூங்கில் தூணைத் தழுவியபடி கன்னத்தை அதில் பதித்து, குழல்கட்டு அவிழ்ந்து சரிய தலை சாய்த்து நின்று அவ்விளையாட்டை நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் நோக்கிக்கொண்டிருப்பதை ஆழ்புலன் ஒன்றால் உணர்ந்த கசன் திரும்பி அவளை பார்த்தான்.

அரையிருளிலும் மின்னும் அவள் கண்களுடன் நோக்கு கோக்க அவனால் முடியவில்லை. அவள் தன் ஆடையை திருத்துகையில் எழுந்த அணியோசை தொலைவிலிருந்து அவனை வந்தடைந்தது. அவள் நோக்குவதை அவன் நோக்கினூடாக அறிந்த வேங்கைகளில் ஒன்று எழுந்து நின்று அவளைப் பார்த்து உறுமி பின்னர் துள்ளி ஓடி படிகளில் தாவி ஏறி அவளருகே சென்று வாலைத் தூக்கியபடி அவள் உடலை தன் உடலால் உரசித் தழுவி சுழன்றது.

மீண்டுமொரு உறுமலுடன் அங்கிருந்து அவனை நோக்கி ஓடிவந்தது. அவனருகே படுத்திருந்த வேங்கை எழுந்து வால் தூக்கி அவளை நோக்கி உறுமியபடி இரு கால்களையும் விரித்து இதோ ஓடிவிடுவேன் என்று சைகை காட்டியது. அவள் புன்னகைத்து அதை சுட்டுவிரலால் அருகழைத்தாள். அவ்விரலின் ஓரசைவுக்கு அதன் உடலில் ஓர் அசைவு நிகழ்ந்தது. பின்னர் உவகையொலியுடன் அது பாய்ந்து அவளை நோக்கி சென்றது. கசன் அவளை நோக்கி புன்னகைத்தான். அவள் புன்னகையுடன் தன் அறைக்குள் செல்ல அங்கு நின்றிருந்த வேங்கை திரும்பி அவனை நோக்கி உடல்குழைத்தபடி ஓடிவந்தது.