மாதம்: பிப்ரவரி 2017

நூல் பதின்மூன்று – மாமலர் – 21

21. விழைவெரிந்தழிதல்

ஏழாண்டுகள் சியாமையுடன் வாழ்ந்தபோது ஒவ்வொரு நாளும் புரூரவஸின் உடல் பொலிவுகொண்டு வந்தது. அவன் சிரிப்பில், சொல்லில், நோக்கில், அமர்வில் வென்றவன் எனும் பீடு தெரிந்தது. அவன் இருக்குமிடத்தில் கண்ணுக்குத் தெரியா கந்தர்வர்கள் நிறைந்திருப்பதுபோல் இசையொன்று நிறைந்திருந்தது. அருமணிபோல் உடல் ஒளி சுரந்தது.

அவன் உணர்ந்து அமைந்த அறம் கனிந்து இனிமையின் வண்ணம் சூடியது. அன்னையின் விழிகளுடன் பிழை செய்தோரை நோக்கினான். தந்தையின் கைகளுடன் தண்டித்தான். தெய்வத்தின் கால்களால் அவர்களை ஆட்கொண்டான். அவனை ஆயிரம் முதுதந்தையர் ஓருருக்கொண்டு எழுந்த அரசன் என்று அவன் குடி போற்றியது. அவன் கோல் கீழ் அமைவதற்கென்று தொலைவிலிருந்தும் குலங்கள் கொடிவழி முறை சொல்லி அணுகின.

உவகைகொண்டு முழுத்தவனை உலகு விரும்புகிறது. அவன் உண்ணும் அமுதின் ஒருதுளியேனும் சிந்தி தன்மேல் படாதா என ஏங்குகிறார்கள் மானுடர். தேன்மலர் தேடி வண்டுகள் என யாழ் மீட்டியபடி அவனைத் தேடி வந்தனர் பாணர். சுமையென பொருள்கொண்டு அவன் கொண்ட பெருங்காதலை பாடியபடி மீண்டு சென்றனர். சென்ற இடங்களில் எல்லாம் விழியொளிர இளைஞரும், முகம் கனிய முதியவரும் அவர்களைச் சூழ்ந்தமர்ந்து அக்கதைகளை கேட்டனர்.

அவன் தொட்டளித்த செடிகள் நூறுமேனி விளைகின்றன என்று உழவர் சொல்லினர். முதற்துளி பாலை அவன் அரண்மனைக்கு அனுப்பி அவன் ஒரு வாய் உண்பான் என்றால் கலம் நிறைந்து தொழு பெருகுகிறது என்றனர் ஆயர். மண்ணில் தெய்வமென வாழ்த்தப்பட்ட முதல் மாமன்னன் அவனே என்றனர் புலவர்.

முற்றக் கனிந்த அமுது எப்படியோ இறுகி நஞ்சென்றாகிறது. சியாமை சென்றபின் அவனில் வாழ்ந்த தெய்வங்கள் அனைத்தும் ஒழியலாயின. ஆலயத்தின் கருங்கற்களின் பூட்டுகள் நடுவே நுழைந்து பருத்து புடைத்தன நச்சுவேர் நரம்புகள். நிலையிளகிச் சரிந்தவற்றின்மேல் படர்ந்து பரவியது வழுக்கும் பசும்பாசி. நாகமென விழிஒளி கொண்டு சொடுக்கிக் கொத்தின நினைவுத்துளிகள். நொடியென்றாகி நீண்டது அவன் காலம். சிறு ஓசைக்கும் சிலிர்த்தெழும் தேள்கொடுக்கென எழுந்தன சென்றவை. அனல்பட்டுப் பழுத்த கலமென காத்திருந்தன அவள் விட்டுச்சென்ற பொருட்களனைத்தும்.

ஓரிரு நாட்களிலேயே தளிர் சருகானதுபோல அவன் ஒளியிழந்தான். கண்கள் குழிந்து, உதடு உலர்ந்து, கன்னமேடுகள் எழுந்து, மூக்கு புடைத்து பிறிதொரு முகம் கொண்டான். ஏழாண்டுகளாக அஞ்சி அகன்றுநின்ற அகவைநிரை பாய்ந்து அவன்மேல் அமர்ந்து பந்தென அவனை எற்றித் தட்டி தெறிக்கச்செய்து கொண்டுசென்றது. கணம்தோறும் மூப்புகொண்ட அவனை நோக்கி கண்ணீர்விட்டனர் அவன் பிற தேவியர்.

வந்து சென்றவள் ஒரு விண்ணணங்கு என்பது ஊரெங்கும் பேச்சாயிற்று. “ஆம், பிறிதொருத்தியாக இருக்க வழியில்லை. அம்முழுமை மானுடருக்கு கூடுவதில்லை” என்றனர் நிமித்திகர். “மானுடப்பெண்ணென அவள் இவ்வாழ்வில் முழுதமைந்ததை நாம் நோக்கினோமே!” என்றனர் செவிலியர். “மானுடரையும் தேவர்களே முற்றிலும் ஆடமுடியும்” என்றார் சூதர். “ஏனெனில் முழுமை என்பது அவர்களுக்கு மட்டுமே கைவரும்.”

இங்கு அவள் இருந்த காலமனைத்தும் இத்தனை எளிதாக கனவாகக் கூடுமா என்று அவன் அன்னை திகைத்தாள். “இவ்வளவு நொய்யதா? இத்தனை நிலையற்றதா? இப்படி பொய்யென்றும் பழங்கதையென்றும் ஆவதா? இதன்மேலா அமர்ந்துள்ளோம்? இவ்வண்ணமா ஆடுகிறோம்?” என உளம்கலங்கி அழுதாள். “தெய்வங்களின் ஆடலே இதுதான். ஏற்றிவைத்து தூக்கிவீசி ஆடுதல் அவர்கள் இயல்பு. சிறகுகள்  மனிதனுக்குரியவை அல்ல. கால்களே மண்ணை நன்கறிந்தவை” என்றார் அவன் தந்தை.

ஒவ்வொரு நாளும் மருத்துவர் அவன் அரண்மனைநோக்கி வந்தனர். எட்டுத் திசைகளிலிருந்தும் மூலிகைகளும் உப்புகளும் கல்சாறுகளும் மண்நீர்களும் கொண்டுவந்து மருந்துகள் சமைத்துப்பூசியும் ஊட்டியும் முகரச்செய்தும் அவன் உடலை மீட்டெடுக்க முயன்றனர். உள்ளமே உடலை நடிக்கின்றது என்றறிந்த நிமித்திகர் கவடி புரட்டி சோழி நிரத்தி அவன் சூழ்வினை என்னென்று நோக்கினர். பழுதேதும் காணாதபோது ஒருவரோடொருவர் சொல்லுசாவி திகைத்து அமைந்தனர்.

உளம்கொண்ட கடும்துயர் உடலில் எப்படி பெருவலியென வெளிப்பட முடியுமென்று அவன் உடல் நோக்கி கற்றனர் மருத்துவர். நாண் இறுக்கப்பட்ட வில்லென படுக்கையில் அவன் வளைந்து நிற்பதைக்கண்டு விதிர்த்து அலறினாள் ஒரு சேடி. பாய்ந்து உள்ளே வந்த முதுமருத்துவர் சக்ரர் காலிலிருந்து தலைவரை அவனை இழுத்து பூட்டி நின்று அதிர்ந்த கண்அறியாச் சரடொன்றைக் கண்டு உணர்ந்து நெஞ்சோடு கைசேர்த்து “தெய்வங்களே அகல்க! எளியோர் மானுடர்!” என்று கூவினார்.

அவன் கைவிரல் நுனிகள் வலியில் அதிர்ந்துகொண்டிருந்தன. இறுதிமூச்சு எடுப்பவன்போல் கால்கள் நீண்டு கட்டைவிரல் சுழன்று நெளிந்தன. துயிலிலும் விழிப்பிலும் சொல்லென இதழ்களில் அசைந்துகொண்டிருந்தது ஏதோ ஓர் எண்ணம். ஒரு கணமும் நில்லாமல் அசைந்த கருவிழிகள் மூடிய இமைகளுக்குள் கிழித்து வெளிவரத் துடித்து உந்திச் சுழன்றன. ஒரு சொல்லும் உட்புகாது எட்டுத் திசைகளையும் கல்கொண்டு மூடிய அறையென்று ஆயிற்று அவன் உள்ளம்.

தந்தையும் தாயும் அருகிருந்து மன்றாடினர், கல்லென்றறிந்த பின்னும் தெய்வத்துடன் உரையாடாதிருக்க ஒண்ணா மாளாப்பெருநோயாளர் என. “மைந்தா கேள், நன்று நடந்ததென்று கொள். உனக்கு வாய்த்தனர் ஏழு நன்மக்கள். பெண்ணென்று அவள் இங்கிருந்த போதெல்லாம் பெருமகிழ்வை உனக்களித்தாள். உன் இல்நிறைத்து மங்கலம் சேர்த்தாள். இன்று அவள் அகன்றிருந்தாலும் என்றோ வருவாள் என்று காத்திருப்பதே முறை” என்றார் தந்தை.

“காத்திருப்பதற்கு உன் உடல் தேறவேண்டும். உளம் அமையவேண்டும்” என்றாள் அன்னை. “அவள் நல்லன்னையென இங்கிருந்தவள். ஒருபோதும் அதை மறவாள். மீண்டு வருவாள். நம்பி உளம் தேர்க, குழந்தை!”   என்றாள். அவன் யாரிவர்கள் என்பதுபோல் நோக்கினான். கழுவிலேற்றி அமரவைக்கப்பட்டவன்போல நரம்புகள் புடைத்து பற்கள் கிட்டித்து உடல் மெய்ப்பு கொண்டதிர துடித்து அடங்கி மீண்டும் எழுந்தது.

“எந்த தெய்வம் என் மைந்தனை விடுவிக்கும்? எவ்வேள்வி அவனை மீட்டு கொண்டுவரும்?” என்று தந்தை நிமித்திகரிடம் கேட்டார். அவையமர்ந்த முனிவர்களின் காலடியில் விழுந்து “அவன் வாழ இயலாதென்றால் வலியின்றி சாகவாவது வழியமையுங்கள், உத்தமர்களே”  என்று அன்னை கதறி அழுதாள்.

ஆனால் அவன் மைந்தர் எழுவரும் அவ்வண்ணம் ஆற்றாப் பெருந்துயரேதும் உறவில்லை. அன்னை சென்று மறைந்த மறுநாள் அவர்களுக்கு புரியாமையின் திகைப்பே இருந்தது. இளையவனாகிய ஜயன் மட்டும் “அன்னை எங்கே?” என்று சிணுங்கிக்கொண்டிருந்தான். “அன்னை வருவாள்” என்று அவனுக்கு சொல்லச்சொல்ல அவன் துயர் பெருகியது. முதுசெவிலி ஒருத்தி “அவனுக்கு சொற்கள் புரியாது, சேடியே. அன்னை என அவன் நினைவுகொண்டு சொன்னதுமே அவனை மடியிலிட்டு முலையூட்டுக!” என்றாள். “முலையுண்ணும் பருவம் கடந்துவிட்டானே?” என்றாள் சேடி திகைப்புடன். “ஆம், அவனை மீளக்கொண்டு செல்வோம்” என்று செவிலி சொன்னாள்.

அன்னை என்றதுமே அவனுக்கு முலைப்பால் அளிக்கப்பட்டது. முதல் இருமுறை திகைத்தபின் அவன் முலையருந்தலானான். பின்னர் அன்னை என்னும் சொல்லே அப்பால் மணமென்றும் சுவையென்றும் அவன் உள்ளத்தில் உருமாறியது. அவன் கனவுகளில் அச்சொல் மணத்து இனித்தது. அதை நெஞ்சிலேந்திய சேடி அதன் மானுட வடிவமானாள். அவன் அவள் உடலுடன் இணைந்திருக்கவும் அவள் முலைகள்மேல் உறங்கவும் விரும்பினான். ஓரிரு வாரங்களில் அவளே அவன் அன்னையென்றானாள். சியாமையின் முகத்தை அவன் முற்றிலும் மறந்தான்.

ரயனுக்கும் விஜயனுக்கும் இடைவெளியில்லாமல் ஏதேனும் ஒன்று அளிக்கப்படவேண்டும் என ஆணையிட்டார் அமைச்சர். அவர்கள் புரவிகளையும் படைக்கலங்களையும் பெருவிருப்புடன் அணுகினர்.  “ஒருமுறை புரவியிலிருந்து விழட்டும். ஓரிருமுறை வாள்புண் பதியட்டும். இறப்பின் ஆடைநுனி வந்து அவர்களை தொட்டுச்செல்லட்டும். அவர்கள் அறிந்த உலகமே முற்றிலும் மாறிவிடும். அதை வென்று நிலைகொள்ளும் அறைகூவலுக்கு முன் பிறிதொன்றும் ஒரு பொருட்டென்றிருக்காது” என்றார் அமைச்சர். ஸ்ருதாயுஸுக்கும் சத்யாயுஸுக்கும் இரு சிறுபடை புறப்பாடுகள் அளிக்கப்பட்டன. முதல் வெற்றியின் மயக்கில் அவர்கள் மண்ணை ஒளிமிக்கதென காணத்தலைப்பட்டனர்.

தனித்திருந்தவன் ஆயுஸ். அவனை தலைமூத்தவனாகிய ஜாதவேதஸ் காட்டிலிருந்து வந்து சந்தித்தான். சோலைக்குள் அழைத்துச்சென்று அமரவைத்து மெல்லிய குரலில் சொல்லாடினான். மீண்டு வந்தபோது அவன் முகம் நீர்நிறைந்த பஞ்சென எடைகொண்டிருந்தது. உடன்பிறந்தோர் இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் தங்களுக்குள் மூழ்கி விழிதாழ்த்தியிருந்தனர். ஜாதவேதஸ் “அவ்வாறே” எனச் சொல்லி பிரிந்தபோது ஆயுஸ் “ஆம்” என்றான். தனிமைகொண்டபோது ஜாதவேதஸ் புன்னகைத்தான். ஆயுஸ் ஒரு துளி விழிநீர் விடுத்து ஏங்கினான்.

தந்தை அகன்ற அவையில் இளவரசனாக அமர்ந்த ஆயுஸ் அரசுசூழ்தலினூடாக ஆண் என எழுந்தான். தந்தையின் குரலும் நோக்கும் அவனுக்கு அமைந்தன. தந்தைக்கு இணையாக அறம் நிற்கும் உளம் கொண்டிருந்தான். தந்தை கைசூடிய கோல் அவனிடமும் அசையாது நின்றது. “அரசே, இந்திரனின் அரியணை அதில் அமர்பவரை இந்திரனாக்குவது என்பார்கள். அறிக, அனைத்து அரியணைகளும் அவ்வாறே! அவை அரசர்களை ஆக்குகின்றன” என்றார் அமைச்சர்.

தந்தையின் அறைக்குள் சென்று அவர் எரிபற்றி பொசுங்கும் தசையென நெளிந்து துடிப்பதை இடையில் கைவைத்து சில கணங்கள் நோக்கி நின்றனர் மூத்தவர் இருவரும். அருகே சென்று அவன் தாள் தொட்டு தலை சூடியபின் ஒன்றும் சொல்லாமல் கிளம்பி ஜாதவேதஸ் மீண்டும் தன் ஆசிரியர்களை சென்றடைந்தான். அவனுக்குப் பின்னால் சென்ற ஆயுஸின் தோளைத் தொட்டு “இது இறப்பே, ஆனால் மீளும் வாய்ப்புள்ளது” என்றான் ஜாதவேதஸ். விழிகளில் வினாவுடன் நின்ற இளையோனுடன் “முழுதறிந்தால் முற்றிறப்பு. இது எஞ்சியதை அறிய மீளவேண்டுவது” என்றபின் அவன் நடந்து மறைந்தான்.

imagesநின்று கொல்லும் பிரிவெனும் நோய் புரூரவஸை வெண்பூசனம் படிந்து காட்டில் பாதிமூழ்கிக் கிடக்கும் வீழ்மரமென மாற்றியது. அவன் தோல்மேல் நோய்த்தேமல் படர்ந்து தயிர்ப்புளிப்பு வாடை எழுந்தது. கைவிரல்களுக்கு நடுவே வெண்ணிறப் புண் நிறைந்தது. விரல் முனைகள் அழுகி வீங்கி நகங்கள் உதிர்ந்தன. நரைத்த தலைமுடி பழுத்து கொத்துகளாக, கீற்றுகளாக அகன்று படுக்கையெங்கும் பரவிக்கிடந்தது. பாசிபடிந்த ஓடைக்கரை பாறையென்றாயிற்று அவன் தலை. வயிறு முதுகெலும்புடன் ஒட்டி தொப்புள் இழுபட்டது. விலாஎலும்பின் வரிகளுக்கு மேல் துலாக்களென இருபுறமும் புடைத்திருந்தன கழுத்தெலும்புகள்.

நாள் செல்லச்செல்ல வலி வலியென அதிர்ந்துகொண்டிருந்த விழிகள் மெல்ல நிலைத்து நோக்கிலாத ஒளிகொண்ட நிலைத்த இரு மணிகளென்றாயின. மாளா நோயாளிகளுக்கே உரிய அந்நோக்கை மருத்துவர்களும் அஞ்சினர். பாலில் கலந்த தேனை சிறு மர அகப்பையிலெடுத்து அவனுக்கு ஊட்டும் தாதி ஒரு கணமும் அந்நோக்கை தான் சந்திக்கலாகாதென்று விழி கருதினாள். ஆயினும் உளம் தவறி சந்தித்தபோது அஞ்சி கைநடுங்க அமுது அவன் உடலில் கொட்டியது. தளர்ந்து அவள் திரும்பிச்சென்றபோது அவ்விழிகள் மாறாஓவியமென அகக்கண்முன் நின்றன. அழிக்க அழிக்க தெளிவுகொண்டது அது.

கனவுகளில் அவ்விழிகள் பிறிதொரு முகம் சூடி எழுந்து வந்தன. தென்திசையின் குளிர் சூடிய இருண்ட பேருடல். இரு கைகளையும் சிறகுகளென விரித்து வந்து சூழ்ந்து உளச்செவி மட்டுமே அறியும் மென்குரலில் “வருக!” என்றழைத்தது. அவள் “எங்கு?” என்றபோது “நீ நன்கறிந்த இடத்திற்கு. அங்குளார் உன் மூத்தோர்” என்றது. அதன் மூச்சில் சாம்பல்புகை நாற்றம் இருந்தது. அருகணைந்த வாயில் ஊன் உருகிய நெடி எழுந்தது. அதன் கைகள் அவளைத் தொட்டபோது கோடையின் முதல் மழைத்துளி விழுந்ததுபோல் குளிர்கொண்டு அவள் அதிர்ந்தாள்.

அஞ்சியபடி எழுந்தமர்ந்து நெஞ்சைப் பற்றிக்கொண்டு நடுங்கினாள். எழுந்தோடிச் சென்று உடன் உறையும் செவிலியர் மஞ்சங்களை அடைந்து அவர்களின் கால்களைப்பற்றி உலுக்கி எழுப்பி “அஞ்சுகிறேன்! அஞ்சுகிறேன்!” என்றாள். “எவரை?” என்றார்கள் அவர்கள். “அதை! அவர் விழிகளில் குடிகொள்ளும் அதை!” என்றாள். பிறிதொரு சொல்லிலாமலே அவர்கள் அனைவரும் புரிந்துகொண்டனர். சிற்றகல் ஒளியில் ஒருவரோடொருவர் கை கோத்தபடி உடல்குறுக்கி அமர்ந்து விழிகள் தாழ்த்தி நீள்மூச்சுகளுடன் அவ்விரவைக் கடந்தனர்.

காலையில் நீராடச் செல்லும்போது வானில் எழுந்த முதல் வெள்ளியைக் கண்டு நீள்மூச்சுவிட்டு உளம் நெகிழ்ந்தனர். குளிர்நீரில் நீராடி எழுந்தபோது அன்று மீண்டும் புதிதென பிறந்ததுபோல் உணர்ந்தனர். முதுசெவிலி பிறிதொருத்தி கையைப்பற்றி “இவையல்ல என்றிருக்கையிலும்கூட இன்றொரு நாள் அளிக்கப்பட்டதென்பது மாறாத உண்மை அல்லவா?”  என்றாள். “ஆம், நானும் அதையே எண்ணினேன். இருக்கிறோம் என்பதற்கு நிகரான இறைக்கொடை ஒன்றுமில்லை” என்றாள் அவள். அச்சொற்களால் உளம் எளிதாகி இன்சொல்லாடி சிரித்தபடி அவர்கள் திரும்பி வந்தனர்.

imagesநோயுற்ற ஒருவர் பிறருடைய உவகைகளை தடுப்பவர். உவகைவிரும்பும் உலகத்தாரால் அவர் வெறுக்கப்படுகிறார். வெறுப்பை குற்றவுணர்வாலும் கடமையுணர்வாலும் அறவுணர்வாலும் கடந்து செல்கின்றனர் மானுடர். ஆனால் நாள் செல்லச்செல்ல அவ்வுறைகள் அகல்கின்றன. கடந்துசெல்லும் விழைவு மட்டுமே எஞ்சியிருக்கிறது. அவர்களைவிட்டு நெடுந்தொலைவுக்கு அகன்றுசென்றுவிட்ட பிறரின் முதுகில் ஒரு புலன் அவர்களின் இறப்புச்செய்திக்காக காத்திருக்கிறது.

குருநகரி புரூரவஸ் இறப்பதற்கென்று எண்ணம் கொள்ளலாயிற்று. முதலில் துயருடனும் தயக்கத்துடனும் அது குறித்து பேசினர். “இவ்வாறு எண்ணுவது பெரும்பழியென்றும் தோன்றுகிறது. ஆயினும் இவ்வலியிலிருந்து அவருக்கு மீட்பு அது ஒன்றே” என்றார் முதுகாவலர் ஒருவர். கேட்டவர்கள் பதறி “என்ன சொல்கிறீர்? வாயை மூடும்… அரசப்பழி இறைப்பழிக்கு மேல்” என்று அவர் கைகளை பற்றினர். “ஆம், அனைத்து நோய்களுக்கும் இறப்பெனும் இறுதி மருந்து உண்டென்பதே மானுடருக்கு மிகப்பெரிய ஆறுதல்” என்றார் குடிமன்றில் ஒரு மூத்தோர். எதிர்ச்சொல் என நீள்மூச்சுகள் எழுந்தன. எவரோ அசைந்தமரும் ஒலி.

இல்லமன்றுகளில், நகர்த்தெருக்களில், அங்காடிகளில், அப்பேச்சு பரவி நெடுநாள் கழித்தே மூதரசரிடம் வந்தது. உடைவாளை உருவி பாய்ந்தெழுந்து “எவன் அச்சொல் உரைத்தது? அந்நாவை இப்போதே அறுத்தெறிவேன்” என்று கூவினார். நடுங்கும் வாளுடன் முதிய கை அதிர கால்பதறினார். “அரசே, அது தனி நபர் கூற்றல்ல. அவ்வாறு இந்நகர் எண்ணுகிறது” என்றார் அமைச்சர். “எனில் இந்நகரை அழிப்பேன். இக்குடியின் குருதியிலாடுவேன். என் மைந்தனன்றி எவரும் எனக்கொரு பொருட்டல்ல” என்று அரசர் அலறினார்.

“நான் அச்சொல் இங்கு புழங்குகிறது என்பதை மட்டுமே உரைத்தேன். நம் இறுதி அன்னம் நம் மூதாதையர்களுக்குச் செல்லும்வரை நம் சொல் அவர்களை நோக்கி எழுந்தாகவேண்டும். நம் அரசர் மீண்டு வருவார்” என்றார் அமைச்சர்.

ஆனால் அன்றிரவு மூதரசர் தன் அரசியிடம் பேசுகையில் தளர்ந்த குரலில் “இன்று ஒருவன் என்னிடம் இவ்வாறு சொன்னான். எந்த தந்தைக்கும் இறப்பின் தருணம் அது. பற்றி எரிந்து எழுந்து கூவி அடங்கினேன் எனினும் என்னுள் எங்கோ அவ்விழைவை நானும் கொண்டிருக்கிறேனா என்ற ஐயம் வந்துவிட்டது. என் மைந்தன் கொள்ளும் துயரை என்னால் தாளமுடியவில்லை. நீ அறிவாய், நான் துயின்று நெடுநாட்களாயிற்று. சுவையறிந்து உண்ட காலம் மறந்தேன்” என்றார்.

நெஞ்சு எடைகொள்ள நீள்மூச்செறிந்து “என் நரம்புகள் வண்டுபட்ட சிலந்திவலைபோல இத்துயரை சுமக்கின்றன என்றார் மருத்துவர். இதை அறுத்து விடுவித்தாலொழிய எனக்கு மீட்பில்லை” என்றார். மஞ்சத்தில் அமர்ந்து தலையை கைகளால் பற்றியபடி “மைந்தர் முதிர்வதற்குள் தந்தையர் உயிர்துறக்க வேண்டும். இல்லையேல் மைந்தர் கொள்ளும் உலகத்துயர்கள் அனைத்தையும் மும்மடங்கு விசையுடன் தந்தையர் அடைவர். நீண்ட உயிர்கொண்டவன் வாழ்வில் இன்பம் பெறமாட்டான் என்று அக்காலத்து மூதாதையர் சொன்னது அதனால்தான் போலும்” என்றார்.

மூதரசி அருகே அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். அவர் சீற்றத்துடன் அவளை நோக்கி கைநீட்டி “அழுகிறாயா? நீ அழுதாக வேண்டும். பொன்னுடல் கொண்ட மைந்தனென்று எத்தனை முறை தெய்வங்களுக்கு முன் தருக்கி நிமிர்ந்து நின்றிருப்பாய்? வஞ்சம் கொண்டவை அவை. மானுடர் நிமிர்வதை விரும்பாதவை. அடிமைகள் தங்கள் காலடியில் நக்கி தவழ வேண்டுமென்று விரும்பும் கொடியவனாகிய ஆண்டையைப் போன்றவை. வாழ்த்துரைத்தும் பலியளித்தும் தெய்வங்களை நாம் மேலும் தீயவர்களாக்கி வைத்திருக்கிறோம்” என்று கூவினார்.

விழிகளை நிலம்நோக்கித் தாழ்த்தியபடி “தெய்வங்களை ஒன்றும் சொல்ல வேண்டாம்” என்று அவள் மெல்லிய குரலில் சொன்னாள். “பின் எவரைச் சொல்வது? சொல், எவரைச் சொல்வது?” என்று அவர் கையோங்கி அவளை அடிக்க வந்தார். விழிநீர் வழியும் பழுத்த விழிகளை நிமிர்த்தி அவரை கூர்ந்து நோக்கி “உங்கள் மைந்தனை சொல்லுங்கள்” என்றாள். குளிர்நீர் ஊற்றப்பட்டவர்போல் உடல் விதிர்த்து பின் தோள் தளர்ந்து “ஏன்?” என்றார் முதியவர்.

“எவளென்றறியாமல் அவளை எப்படி அவன் மணந்தான்? ஏன் இங்கு அழைத்துவந்து அரசியென்று அமர்த்தினான்? அவள் தந்தையை தாயை குலத்தை குடியை அவன் பார்த்தானா? அதைப்பற்றி நான் மும்முறை அவனிடம் உசாவியபோது சினந்து என்னை அகன்று போகும்படி சொன்னான். அவளை சிறுமை செய்யும் பொருட்டு அதைக் கேட்கிறேன் என்று புரிந்துகொண்டான். எண்ணித் துணியாத அரசன் அனைத்தையும் அடைந்துதான் ஆகவேண்டும்” என்றாள் அன்னை.

தளர்ந்த குரலில் மூதரசர் “நீ இப்படி சொல்வாயென்று நான் எண்ணியதே இல்லை” என்றார். முதியவள் “இங்குளோர் அனைவரும் எண்ணுவது அதைத்தான். என்னை அஞ்சியே அவர்கள் அதைச் சொல்லாமல் விடுகிறார்கள். எனவே நான் சொல்லியாக வேண்டும். இத்துயர் அவன் விரும்பி எடுத்து சென்னிமேல் சூடிக்கொண்டது. அரசே, பெருந்துயர்கள் எவையும் தெய்வங்களால் அனுப்பப்படுவதில்லை. தெய்வங்களின் கைகளைத் தட்டி அகற்றி, தேவர்கள் அமைக்கும் கோட்டைகளை உடைத்துத் திறந்து, மனிதர்கள்தான் அவற்றைத் தேடிச் சென்று அடைந்து சுமந்துகொண்டு வருகிறார்கள். வென்றேன் வென்றேன் என்று கொக்கரிக்கிறார்கள். தெய்வங்கள் துயருடன் விழிகனிந்து மேலே நோக்கி நின்றிருக்கின்றன” என்றாள்.

நீள்மூச்சுடன் எழுந்து ஆடையை அள்ளி உடல்மேல் சுற்றிக்கொண்டு சுருங்கிய கன்னங்களில் படர்ந்து வழிந்த நீரை ஆடையால் துடைத்தாள். “இன்று சாவே அவனுக்கு முழுமையென்றால் அது விரைந்து வரட்டும். இப்போதல்ல, அவன் விழுந்தநாள் முதல் நான் தெய்வங்களிடம் வேண்டிக்கொண்டிருப்பது அது ஒன்றையே” என்றாள்.

அவளை நோக்கி நின்றிருந்த மூதரசரின் தலை குளிர் கண்டதுபோல் ஆடியது. அறியாது கை நீட்டி அருகிருந்த பீடத்தைப் பற்றி நிலை மீண்டார். எடை மிகுந்து தரையுடன் உருகி ஒன்றானதுபோல் இருந்த கால்களை இழுத்து நடந்தார். மஞ்சத்தில் அமர்ந்து “தெய்வங்களே, மூதாதையரே” என்று கூவியபடி உடல்தளர்ந்து படுத்துக்கொண்டார். அரசி சிற்றடிவைத்து வெளியே செல்லும்போது “ஓர் அன்னையாக நீ துயர் கொள்ளவில்லையா?” என்றார்.

MAMALAR_EPI_21

“அனைத்துத் துயரையும் உங்கள் அனைவருக்கும் முன்னரே முழுதறிந்துவிட்டேன். இனி துயர் ஏதும் எஞ்சியில்லை என்னும்போது இந்த அமைதியை அடைந்தேன்” என்றபின் அவள் வெளியேறினாள். முதியவர் படுக்கையில் படுத்து கைகளையும் கால்களையும் நீட்டிக்கொண்டார். அவர் உடலில் இருந்து அத்தனை மூட்டுகளும் மெல்ல கழன்று உடல் தனித்தனி உறுப்புகளாகியது. உள்ளம் நீர்மைகொண்டு ஒழுகிப்பரந்து சொட்டியது. இறுதியாக எண்ணிய ‘மேலாடை’ என்னும் சொல் அப்படியே காற்றில் நின்றிருக்கும் சுடர் என அசையாது நின்றது.  அப்போது அவர் ஒரு விந்தையான உணர்வை அடைந்தார், அப்படுக்கையில் அவ்வண்ணம் படுத்திருப்பது புரூரவஸ்தான் என.

நூல் பதின்மூன்று – மாமலர் – 20

20. விண்வாழ் நஞ்சு

குருநகரி மீண்ட விஸ்வவசு தன் பொந்துக்குள் பிற கந்தர்வர் எழுவரையும் கூட்டி அமர்ந்து சொல்சூழ்ந்தான். “நாம் இங்கு செய்வதற்கு ஏதுமில்லை. ஒருவர் முப்பொழுதும் அவளை தொடர்க! ஆறு மைந்தரை அறுவர் தொடர்க! அரசனை நான் தொடர்கிறேன்” என்றான். “நாம் அறிய வேண்டியதென்ன? ஆற்றப்போவதென்ன? அதில் தெளிவின்றி பின் தொடர்வதனால் ஏது பயன்?” என்றான் சந்திரஹாசன். “நான் ஒன்றும் அறியேன். ஆனால் ஏதோ ஒன்றை அணுக்கமாக தொடர்வோம் என்றால் முன்பு அறிந்திராத ஒன்று கண்முன் எழுந்து வருமென்பது ஓர் அரசுசூழ் மெய்மை. இன்று நம் முன்னிருப்பது இச்செயல் ஒன்றே. விழி முழுமையும் திறந்திருக்கட்டும். செவி உச்சக்கூர் கொண்டிருக்கட்டும். மூக்கு மணமனைத்தையும் பெறட்டும். எண்ணம் புலன்களில் மட்டும் குவிந்திருக்கட்டும். எங்கோ ஒன்று நிகழும் என்று காத்திருப்போம்” என்றான் விஸ்வவசு.

விஸ்வவசு இரவும் பகலும் புரூரவஸின் அருகிலேயே இருந்தான். வண்டின் இசை ஒன்று தன்னை எப்போதும் சூழ்ந்திருப்பதை ஓரிரு கணங்களில் புரூரவஸ் உணர்ந்தாலும் அவனைச் சுற்றி ஒலித்த மங்கல இசையும், வாழ்த்துரைகளும், அரசுசூழ் சொல்லாடல்களும், குலத்தலைவர் கூற்றுகளும், மன்றில் எழுந்த வழக்குகளும் அவனை ஆழ்த்தி வைத்திருந்தன. அரசனின் அரியணைக்குப்பின் இருந்த சிறுதுளையில் புகுந்து சொல்கேட்டிருந்தான் விஸ்வவசு. அவன் மஞ்சத்தில் தென்கிழக்கு மூலையில் ஒரு துளையிட்டு அங்கு இரவில் உடனிருந்தான். ஊர்வசியுடன் அவன் காதலாடுகையில் மச்சிலிருந்து தொங்கிய மலர்க்கொத்து விளக்கில் அமைந்திருந்தான்.

நாட்கள் கடந்தனவெனினும் ஒன்றும் புலப்படாமை கண்டு அவ்வப்போது உளம் சோர்ந்தான். பிறிதொன்றும் செய்வதற்கில்லையென்று அதிலேயே தொடர்ந்தான். பெருங்காதலை அறிந்தவனின் உடலில் இருக்கும் குழந்தைக்குரிய துள்ளல் புரூரவஸிடம் இருந்தது. வெறுமனே இருக்கையில் இன்நினைவு கொண்டவன்போல் முகம் மலர்ந்திருந்தது. இதழ்களில் அவன் இறுதியாகக் கேட்ட பாடலின் இசை எழுந்தது. புதியவர்களிடம் பேசுகையில் அருஞ்செய்தி கொண்டுவருபவர்கள் அவர்கள் என அவன் எண்ணுவதுபோல் தோன்றியது. அவன் கை அலைநீரில் பாவை தெரிவதெனப் பெருகியிருந்தது என்றனர் புலவர். ஒன்று உகந்த இடத்தில் நூறு அளித்தான். போதுமென சொல்தயங்கும் பாவலர் முகம் கண்டு மேலும் கோருகிறார் என்று எண்ணி மீண்டும் அளிப்பதற்கு அள்ளினான்.

அந்நாளில் ஒருமுறை பட்டத்துயானையாகிய துங்ககீர்த்தி நோயுற்றிருக்கும் செய்தியை படைத்துறை அமைச்சர் வந்து அவையில் சொன்னார். அதன் நலம் விசாரித்தபின் மருத்துவர் குழு கூடி ஆவன செய்யட்டும் என்று ஆணையிட்டு பிற தொழிலில் மூழ்கினான் புரூரவஸ். நோயிலும் துயரிலும் அவன் உள்ளம் நிலைக்காதிருந்தது. தேன் மட்டுமே தேரும் வண்டென்று ஆகிவிட்டிருந்தது அது. அன்று அவை முடிந்து அவன் எழுந்தபோது ஆயுஸ் “தந்தையே, நாம் துங்ககீர்த்தியை பார்த்துவிட்டுச் செல்லலாமே?” என்றான். “நன்று” என்று சொல்லி செல்வோம் என்று அமைச்சரிடம் கை காட்டினான் புரூரவஸ்.

அமைச்சர்களும் இரு படைத்தலைவர்களும் ஏவலரும் தொடர அவன் யானைக்கொட்டிலை நோக்கி நடந்தான். அவனை எதிர்கொண்டு வணங்கிய சிற்றமைச்சர் கொட்டிலாளரும் யானைக்காப்பரும் அவனுக்காக காத்திருப்பதை உணர்த்தினார். தலைமை மருத்துவர்கள் மூவர் அவனருகே வந்து யானையின் நோய் குறித்தும் அளித்துள்ள மருந்துகள் குறித்தும் சுருக்கமாக சொன்னபடி உடன்நடந்தார்கள். அவர்கள் சொல்வதை அவன் செவிகூரவில்லை. துள்ளும் கன்றுகளையும் முலைபெருத்து வெண்துளி கசிய மைந்தரை நோக்கிய அன்னைப்பசுக்களையும் மட்டும் நோக்கி மகிழ்ந்தபடி அவன் நடந்தான்.

யானைக்கொட்டில் நோக்கி செல்கையில் அங்கு இரு ஆடுகள் கட்டப்பட்ட சிறு தொழுவம் வந்தது. ஆயுஸ் முகம் மலர்ந்து திரும்பி கைசுட்டி “அன்னையின் வளர்ப்பு ஆடுகள்!” என்றான். ஒருகணம் உடல் விதிர்க்க, விழிகள் மின்னிச்சென்று அவற்றைத் தொட்டு மீள, திரும்பி மருத்துவரிடம் யானையின் மருந்து குறித்தொரு ஐயம் கேட்டபடி புரூரவஸ் கடந்து சென்றான். அத்தருணத்தில் அவனில் நிகழ்ந்து மறைந்த ஒன்றை அருகே பறந்து வந்த விஸ்வவசு அறிந்துகொண்டான். ஆம், இதுவே, இதுவேயாம் என அவன் உள்ளம் துள்ளியது. “குறையொன்று இல்லாது முழுதும் மலர்ந்த உள்ளம் இல்லை மானுடர் எவருக்கும்” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

மீண்டும் தன் துளைக்கு வந்து தோழரை அங்கு வரச்சொன்னான். “அந்த ஆடுகள் எவை? விளக்குக!” என்றான். முதுகந்தர்வனாகிய சூர்யஹாசன் “ஊர்வசி இங்கு வந்தபோது உடன் வந்தவை அவை. அவள் உளம்கொண்ட ஆழமே இரு ஆடுகளாக பின் தொடர்ந்தது. தேவருலகில் அவள் அறிந்தவை அனைத்தும் ஸ்ருதன் எனும் வெண்ணிற ஆடாயின. அவள் அவற்றுள் ஊடுபுகுந்து தான் எண்ணியவை ஸ்மிருதன் என்னும் கரிய ஆடாயின. ஸ்ருதனும் ஸ்மிருதனும் மீண்டும் அவளை தேவகன்னிகையாக்கி விண்ணுக்கு அழைத்து வரும் பொறுப்பு கொண்டவை” என்றான். முகம் மலர்ந்த விஸ்வவசு “ஆம், இதுவே வழி. நன்று, நாம் ஆற்ற வேண்டியதென்ன என்பது தெளிவுற்றுவிட்டது” என்றான்.

சியாமை குருநாட்டிற்கு வந்த தொடக்க நாட்களில் பட்டத்துயானைக்கும் அரசப்புரவிக்கும் நிகரான மதிப்புடன் அந்த இரு ஆடுகளும் கொட்டிலில் பேணப்பட்டன. அவற்றை பராமரிப்பதற்கென்று ஏழு தேர்ந்த இடையர்கள் மூதிடையர் ஒருவரின் தலைமையில் அமர்த்தப்பட்டனர். தினம் அவற்றை நீராட்டி அரண்மனையின் பசுஞ்சோலைகளில் மேயவிட்டு அந்தியில் புகையிட்டு கொட்டிலில் கட்டி இரவெல்லாம் உடனிருந்து காவல் காத்தனர். ஒவ்வொரு நாளும் முதற்புலரியிலேயே எழுந்து அவற்றிடம் வந்து பிடரி தடவி, காதுகளை வருடி, இன்குரலில் முகம் தாழ்த்தி உரையாடிக்கொண்டிருப்பது அரசியின் வழக்கமாக இருந்தது. அவற்றை அரண்மனைக்குப் பின்னிருக்கும் அணிக்காட்டில் உலவவிட்டு அவளும் உடன் செல்வாள். அங்கு மேய்ந்து நிறைந்து அவை மரநிழல்களில் படுத்து அசை போடுகையில் இரண்டுக்கும் நடுவே சருகுமெத்தையில் படுத்து துயில்வாள். அவை அசைபோடும் மலர்களை தன் கனவில் மலரச்செய்வாள்.

பின்னர் அவள் வருவது குறைந்தது. வாரம் ஒருமுறை என்றாகி பின் மாதம் ஒருமுறை என்றாகியது. சிறப்பு நாட்களில் மட்டுமே என குறைந்து பின்னர் அவள் அதை முற்றிலும் மறந்தாள். அவள் வராமலானபோது ஆடுகளை பராமரிப்பவர்கள் ஆர்வமிழந்தனர். பாராட்டப்படாத பணி வெற்றுச்சடங்கென்று ஆகிறது. சடங்கென்றாகும் பணி உளம் குவிதலற்று பொருளிழக்கிறது. மறக்கப்பட்ட ஆடுகள் தங்கள் விலங்கியல்புக்கு திரும்பின. உடலெங்கும் புழுதிபடிந்து கட்டற்று வளர்ந்த உடலுடன் அவை காட்டுக்குள் செருக்கடித்து திரிந்தன. அந்தியில் தொழு திரும்பின. தங்கள் தோற்றுவாயை முற்றிலும் மறந்தன. அவற்றைப் பராமரிப்பவர்களும் அவற்றை மறந்தனர். இரு விலங்குகள் அங்கிருப்பவை என்பதற்கு அப்பால் எதுவும் எவருக்கும் தெரியாமலாயிற்று. அவையோ முதிர்வு கொள்ளா தோற்றத்துடன் கொட்டிலில் நின்றன.

மழைமுகில் திரண்டு துளிச்சாரல் நிறைந்த காற்று சுழன்றுகொண்டிருந்த ஓர் அந்திவேளையில் விஸ்வவசு தன் தேவஉரு மீண்டு கொட்டில் நோக்கி சென்றான். உடன் பிற கந்தர்வர்களும் ஓசையின்றி தொடர்ந்தனர். அவர்களை எதிர்கொண்ட காவலர்களுக்கு அவர்களும் காவலர் வடிவு காட்டினர். சேடியருக்கு சேடியர் உருவையும் மருத்துவருக்கு மருத்துவர் உருவையும் காட்டினர். கற்பனை அற்ற விலங்குகளுக்கு மட்டும் அவர்களின் தன்னுருவே தெரிந்தது.

பன்னிரு வாயில்களைக் கடந்து கொட்டில்களுக்குள் சென்றபோது காவல்நாய் குரைக்கத்தொடங்கியது. விழித்திருந்த முதிய பிடியானையாகிய சிருங்கை மெல்ல அமறி பிற யானைகளை எச்சரித்தது. கொட்டில்களுக்குள் உடல் திருப்பி துதி நீட்டி மோப்பம் கொண்டு அவை தேவர்களை அறிந்தன. துங்ககீர்த்தி துதிதூக்கி உரக்கப் பிளிறி அறைகூவியது. அதன் ஏழு பிடி துணைகளும் உடன் சின்னம் விளித்தன. கொட்டிலெங்கும் ஓசை நிறைய அருகிருந்த வாளால் இரு ஆடுகளின் கட்டுச் சரடுகளையும் வெட்டி நுனி பற்றி இழுத்தபடி வெளியே ஓடினான் விஸ்வவசு. அவனைத் தொடர்ந்து வாட்களைச் சுழற்றியபடி பிற கந்தர்வர்களும் விரைந்தனர்.

ஓசை கேட்டு அனைத்து திசைகளிலிருந்தும் உள்ளே வந்த காவலர்கள் ஆடுகளை இழுத்தபடி செல்லும் தேவர்களைக் கண்டு “திருடர்கள்! விடாதீர்கள்! பிடியுங்கள்!” என்று கூச்சலிட்டபடி வில்லும் வாளுமெடுத்து ஓடிவந்தனர். “அம்பு செலுத்த வேண்டாம். ஆடுகளுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது” என்று முதலில் ஓடிவந்த காவலர் தலைவன் கூவினான். கொட்டிலுக்கு வெளியே வந்து இருளில் பாய்ந்த விஸ்வவசு தன் இரு கைகளையும் விரித்து சிறகுகளாக்கி காற்றை மிதித்து மேலேறினான்.

இரு ஆடுகளும் அலறியபடி சரடில் கழுத்து இழுபட்டுத் தொங்க கால்கள் நீண்டு காற்றிலுதற அமறியபடியும் துடித்தபடியும் அவனுடன் சென்றன. மண்ணில் அமைந்து ஏழாண்டுகாலம் அவை உண்ட உணவனைத்தும் எடையெனத் தேங்கியமையால் உயிர் வலிகொண்டு அவை அலறின. ஏழு தேவர்களும் வானில் எழுவதைக்கண்ட காவலர் தலைவன் அரண்மனைக்குள் ஓடினான். அந்தப் வேளையிலும் சியாமையுடன் காமம் ஆடிக்கொண்டிருந்த புரூரவஸின் சந்தன மண்டபத்தின் கதவை ஓங்கித் தட்டி “அரசே! அரசே!” என்று கூவினான்.

எழுந்து கதவுக்குப் பின்னால் நின்று “என்ன? சொல்?” என்று எரிச்சலுடன் புரூரவஸ் கேட்டான். “அரசியின் இரு ஆடுகளையும் கள்வர் கவர்ந்து செல்கிறார்கள்” என்றான் காவலர் தலைவன். “பிடியுங்கள் அவர்களை! பிறரை தலை வெட்டிவிட்டு ஒருவனை மட்டும் இழுத்து வாருங்கள்” என்றான் புரூரவஸ். “அரசே, அவர்கள் மானுடர்கள் அல்ல. காற்றை மிதித்து விண்ணிலேறிச் செல்கிறார்கள். நாங்கள் அவர்களைப் பின்தொடர இயலவில்லை” என்றான் காவலன். “என் ஆடுகள்! அவை மறைந்தால் நான் இங்கு இருக்கமுடியாது” என சியாமை கூவினாள்.

தேவியுடன் உறவுகொள்கையில் வாளை உருவி தொடையருகே வைத்திருப்பது அரசன் வழக்கம். அக்கணம் மூண்டெழுந்த சினத்தில் தன் நிலை மறந்த புரூரவஸ் வாளை எடுத்தபடி ஓடிச்சென்று சாளரம் வழியாக நோக்கினான். தொலைவில் அரைமின்னலில் எட்டு தேவர்களும் ஆடுகளுடன் செல்வதைக் கண்டான். “எனது ஆடுகள்! பிடியுங்கள் அவற்றை!” என்று கூவியபடி அவனுக்குப் பின்னால் சியாமை எழுந்து வந்தாள். பெருஞ்சாளரத்தினூடாக வெளியே பாய்ந்து தன் தவ வல்லமையால் இரு கைகளையும் விரித்து காற்றில் பறந்தெழுந்தான் புரூரவஸ்.

அக்கணம் விண்ணில் எழுந்த தேவர்தலைவன் தன் ஒளிர்படையை அசைக்க மின்னலொன்று வெட்டிச் சுழன்று கொடிவீசி வான் பிளந்து நின்றதிர்ந்து மறைந்தது. அந்த ஒளியில் சியாமை புரூரவஸின் வெற்றுடலைக் கண்டாள். அலறியபடி மயங்கி கால்குழைந்து சாளரத்தைப் பற்றியபடி சரிந்து தரையில் விழுந்தாள்.

விண்ணில் விரைந்த தேவர்களை துரத்திச்சென்ற புரூரவஸ் இருளை உறிஞ்சிப் பரந்திருந்த முகில்களுக்கு மேலே அவர்கள் எழுவதைக் கண்டான். முகில்விளிம்புகளை மிதித்துத் தாவி வாளைச் சுழற்றியபடி அவர்களை அணுகினான். அவனைச் சூழ்ந்து மின்னல்கள் துடித்தன. இடியோசை எழுந்து திசைகளனைத்தையும் அதிரச்செய்தது. ஒளிரும் வெண்முகில்களுக்கு அப்பால் தேவர்கள் விரைந்து செல்வதை அவன் கண்டான். “நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்று கூவியபடி அவன் தொடர்ந்து சென்றான். “விண்ணகர் புகுந்தாலும் விடமாட்டேன். விண்ணவர்கோனையும் வெல்வேன்” என வஞ்சினம் கூவினான்.

ஆனால் இன்னொரு மின்னலில் கீழிருந்து ஆடை சிறகெனப் பறக்க குழல் எழுந்து நெளிய பறந்தணைந்த பெண்ணுருவம் ஒன்று அந்த இரு ஆடுகளையும் பாய்ந்து கழுத்தை கைகளால் சுற்றி பற்றிக்கொள்வதைக் கண்டான். அறிந்த முகம், பொன்னொளிர் நிறமென்றாலும் நன்கு பழகிய உடலசைவுகள். திகைத்து நின்று அவன் சொல்லெடுப்பதற்குள் இரு ஆடுகளுக்கும் சிறகுகள் முளைத்தன. இரு கால்களையும் அவற்றின்மேல் ஊன்றி சரடுகளை பற்றிக்கொண்டு அவள் எழுந்து நின்றாள். அவளைக் கண்டது எங்கென அவன் அப்போது உணர்ந்தான். மறுகணமே அவள் எவளென்றும் தெளிந்தான்.

அவன் கைகால்கள் செயலற்றன. சிறகுகள் தொய்வடைய அவன் கீழே சரியலானான். “தெய்வங்களே! மூதாதையரே!” என கூவியபடி அவன் விண்ணில் முகில்கணம் ஒன்றை பற்றிக்கொண்டான். அவன் உடைவாள் ஒளியுடன் கீழிறங்கிச் சென்று மண்ணில் விழுந்தது. அவள் விண்ணில் புதைந்து சிறு புள்ளியென மாறி மறைந்தாள். புலரி ஒளி எழுந்ததும் செந்நிற முகில்கீற்றுகள் சிதறிப்பரந்திருக்க ஓய்ந்த போர்க்களமென ஒழிந்து கிடந்த வான்வெளியை நோக்கி புரூரவஸ் திகைத்தான். திசை என ஏதுமற்ற அந்தப் பெருவட்டத்தை சுழன்று சுழன்று நோக்கி சோர்ந்து சுருங்கினான். அவன் உடல் எடைகொண்டு வந்தது. முன்னோர் அளித்த முதற்சொல் அவன் சித்தத்திலிருந்து மறைய மெல்ல மண் நோக்கி விழலானான்.

imagesமுகில்களைக் கடந்து காற்றைக் கிழித்தபடி குருநகரின் புறக்கோட்டைக் காட்டின் குறுமரங்களின்மேல் வந்து விழுந்து கிளையுடைத்து தரையில் பதிந்தான். உடலில் படிந்த புழுதியும் சருகும் பறக்க பாய்ந்தெழுந்து ஆடையிலா உடலுடன் நகர்த்தெருக்கள் வழியாக ஓடி குருநகரியின் அரண்மனை முற்றத்தை அடைந்தான். அவனைக் கண்டு காவலர் திகைத்து ஓசையிட்டனர். பொன்னுடல் இளவெயிலில் மின்ன பித்தனைப்போல “அரசி எங்கே? எங்கே சியாமை?” என்று கூவியபடி படிகளில் ஏறி அரண்மனைக்குள் புகுந்தான். அவனைக் கண்டு அனைவரும் சிதறிப்பரந்தனர்.

அவனை எதிர்கொண்ட அரண்மனை முதுசெவிலி “நேற்று நீங்கள் கிளம்பியதும் தன்னினைவிழந்து கிடந்த அரசியை தூக்கிக்கொண்டு சென்று மஞ்சத்தில் படுக்க வைத்தோம். நீர் தெளித்து முகம் தெளியச்செய்தோம். ஆடுகள் ஆடுகள் என கூவி அரற்றினார். பின்னர் என் மைந்தர், என் மைந்தரை விட்டுச்செல்லமாட்டேன் என கலுழ்ந்து விழிநீர் வார்த்தார். அவர் அருந்த இன்நீருடன் வந்தபோது மஞ்சம் ஒழிந்திருப்பதைக் கண்டோம்” என்றாள்.

“எங்கு சென்றாள்? எங்கு சென்றாள் அவள்?” என்று கூவியபடி அவன் படிகளிலேறி அரண்மனை இடைநாழிகளினூடாக ஓடி தன் மஞ்சத்தறையை அடைந்தான். அங்கே அவள் இல்லை. திரும்பி அவள் மஞ்சத்தறையை மீண்டும் அடைந்து அவள் பேழைகளை திறந்து தேடினான். அவன் அளித்த அணிகளும் ஆடைகளும் அருமணிகளும் அங்கே இருந்தன. திரும்பியபோது சிறுபீடத்தின்மேல் அவன் அணிவித்த கல்மாலையும் மங்கலத்தாலியும் மெட்டிகளும் கணையாழியும் இருந்தன.

அவன் கால்தளர்ந்து மஞ்சத்தில் அமர்ந்தான். “அரசே, இவ்வறைக்கு வாயில் ஒன்றே. இவ்விடைநாழி வழியாக வந்து படிகளினூடாகவே வெளியேற முடியும். இங்கு காவலர் இருந்தனர். சேடியர் பலர் நடந்தனர். இவ்வழியாக அரசி சென்றிருக்க வாய்ப்பில்லை. அறையிலிருந்து எவ்வண்ணம் அவர்கள் மறைந்தார்கள் என்றறியேன்” என்றாள் முதுசெவிலி. பிறிதொருத்தி ஏதோ சொன்னாள். என்ன என அவன் விழிதூக்க அவள் “ஒன்றுமில்லை, சாளரம் வழியாக அரசி எழுந்து சிறகுகொண்டு பறந்து செல்வதைக் கண்டதாக இளஞ்சேடி ஒருத்தி சொல்கிறாள். கீழே அவள் கலம் கழுவிக்கொண்டிருக்கையில் அதை கண்டாளாம். அஞ்சி மயங்கி விழுந்து விழித்தெழுந்ததும் அழுதபடி தான் கண்டதை முதுசேடியிடம் சொல்லியிருக்கிறாள்” என்றாள்.

“அவளை அழைத்து வா! மெய்யேதென்று உசாவுவோம்” என்றாள் முதுசெவிலி. “தேவையில்லை” என்றுரைத்து இரு கைகளாலும் தலையை தாங்கிக்கொண்டான். குறடொலிக்க வாயிலில் வந்து நின்ற காவலர் தலைவன் “அரசியை நகரெங்கும் தேட காவலர்களை அனுப்பியிருக்கிறோம், அரசே” என்றான். அருகே வந்து நின்ற ஆயுஸ் “அன்னையை தேடிப்பார்க்க ஒற்றர்களும் சென்றுள்ளனர்” என்றான். புரூரவஸ் “நன்று, முறைப்படி அதை செய்க! ஆனால் அதனால் பயனில்லை” என்றான். திகைப்புடன் “ஏன், தந்தையே?” என்றான் மைந்தன். “அவள் இனி மீளமாட்டாள்” என்றான்.

ஆயுஸ் புருவங்கள் சுருக்கி நோக்கினான். “அவள் சென்றுவிட்டாள். அது ஒன்றே மெய்” என்று அவன் சொன்னான். அதற்குமேல் ஆயுஸ் ஏதும் கேட்கவில்லை. புரூரவஸ் உடைந்து விழிநீர் சிந்தத்தொடங்கினான். ஆயுஸ் திரும்பி நோக்க வாயிலில் நின்றிருந்த காவலர் விலகிச்சென்றனர். அவன் எழமுயன்றான். உடல் எடை மிகுந்தபடியே வந்தது. எழுந்து மஞ்சம் நோக்கி நடக்க முற்பட்டவன் தூக்கி வீசப்பட்டவன்போல ஓசையுடன் மரத்தரையில் விழுந்தான். பதறி ஓடி வந்து அவனைத் தூக்கி மஞ்சத்தில் படுக்க வைத்து நீர் தெளித்து விழிப்பூட்டி குளிர்நீர் அருந்த வைத்தனர் செவிலியரும் சேடியரும். விழிப்பு மீண்டதுமே “சென்றுவிட்டாள்…” என்று அவன் தன்னுள் என சொன்னான்.

அச்சொல் கூரிய வாளென உடலுக்குள் புகுந்ததுபோல தசைகள் விதிர்க்க கைகால்கள் துடித்தபின் மீண்டும் மயங்கினான். “அரசே” என்று அவனை உலுக்கினாள் செவிலி. ஆயுஸின் ஆணைப்படி அறைக்குள் வந்த மருத்துவர்கள் “இப்போது அவருக்கு விழிப்பு பெரும்துயர் அளிப்பது. துயிலட்டும், அதுவே நன்று” என்றனர். அனைவரையும் விலக்கி துயிலுக்கு புகை அளித்து அவனை மஞ்சத்திலிட்டனர். அவன் துயிலுக்குள்ளும் வலிகொண்டு துடித்தபடியே இருந்தான். முனகியபடியும் தலையை அசைத்தபடியும் இருந்தவன் அவ்வப்போது சவுக்கடி பட்ட புரவி என துடித்து எழமுயன்றான்.

ஆயுஸ் அவன் அருகிலேயே இருந்தான். பிற மைந்தருக்கு அவனே அனைத்தையும் சொல்லி புரியவைத்தான். மூன்றாம்நாள் விழிப்புகொண்ட புரூரவஸ் எழுந்து ஆடையை அள்ளிப்போட்டுக்கொண்டு கீழிறங்கிச்செல்ல அவனைத் தடுக்க முயன்றவர்களை கைகாட்டி விலக்கியபின் ஆயுஸ் உடன் சென்றான். முற்றத்தை அடைந்து புரவி மீதேறி விரைந்தபோதும் அவன் ஆயுஸ் உடன்வருவதை காணவில்லை. நகர்த்தெருக்களினூடாகச் சென்று கோட்டையைக் கடந்தான். எங்கும் நிற்காமல் காட்டுக்குள் புகுந்தான். அவனை முன்னால் செல்லவிட்டு பின் தொடர்ந்த ஆயுஸ் தன்னைத் தொடர்ந்த காவலர்களை எல்லைக்கு அப்பால் நிற்கச்செய்தான்.

புரூரவஸ் காட்டுக்குள் சென்று சோலைசூழ்ந்த சிறுசுனையை அடைந்தான். புரவியிலிருந்து இறங்கி அவன் உள்ளே சென்றதை அப்பால் நின்று மைந்தன் நோக்கினான். சற்றுநேரம் கழித்து அவன் தொடர்ந்துசென்று சோலைக்குள் புகுந்து ஓசையில்லாது நடந்தான். அதற்கான தேவையே இருக்கவில்லை. ஆயுஸ் மிக அருகே வந்து நின்றபின்னரும்கூட புரூரவஸ் எதையும் அறியவில்லை. விழியிமைக்காது அந்தச் சுனையையே நோக்கியபடி அமர்ந்திருந்தான். அவனை நோக்கியபடி ஒரு மரத்தில் சாய்ந்தவனாக ஆயுஸ் நின்றான்.

காட்டின் ஒலி மாறுபட்டது. இலைநுனியொளிகள் அணைந்தன. ஒளிக்குழல்கள் சாய்ந்து சிவந்து மறைந்தன. மரச்செறிவுக்குள் இருள் தேங்கியது. கொசுக்களின் ஓசை அவர்களைச் சூழ்ந்தது. புரூரவஸ் அதே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தான். சென்று அவனை அழைக்கலாமா என ஆயுஸ் ஐயுற்றான். மேலும் இருட்டி வந்தபோது அவன் மெல்லிய காலடிகளுடன் அணுகிச்சென்று “தந்தையே!” என அழைத்தான். முதல் சிலமுறை புரூரவஸ் அக்குரலை கேட்கவில்லை. கேட்டதும் திடுக்கிட்டுப் பாய்ந்தெழுந்து “யார்?” என்றான். “நான்தான்… ஆயுஸ்” என்றான் ஆயுஸ். “யார்?” என்று அவன் பதறிய நோக்குடன் கேட்டான். “யார் நீ?” உரத்த குரலில் “சொல்! யார் நீ?” என்றான்.

ஆயுஸ் வெறுமனே நோக்கியபடி நின்றான். “நான் பாண்டவனாகிய பீமன்… இது என் சோலை…” என்றான் புரூரவஸ். ஆயுஸ் திரும்பி நோக்கியபோது மிக அப்பால் படைத்தலைவனின் செந்நிறச் சிறுகொடி தெரிந்தது. அவன் பெருமூச்சுடன் திரும்பிச் சென்றான். புரூரவஸ் மீண்டும் அந்த நீர்நிலையருகே அமர்ந்தான். அவன் விழிமறைந்து நின்று ஆயுஸ் நோக்கிக்கொண்டிருந்தான். விழித்து துயில்கொள்பவன் போலிருந்தான் புரூரவஸ். ஆயுஸ் எண்ணியிராது ஓர் ஐயத்தை அடைந்தான். அங்கிருப்பவன் பிறிதொருவன்தானா? எப்படி அறியக்கூடும்? மானுட உடலை மட்டுமே அறிய வாய்க்கிறது. உள்ளே குடிகொள்வது எது? அது இடம்மாறிவிட்டதென்றால் அது உரைப்பதன்றி வேறு சான்றுதான் எது?

நிலவெழுந்து வந்தது. இலைநிழல்கள் நீரில் விழுந்தன. சுனை உள்ளிருந்து என ஒளிகொண்டபடியே வந்தது. குளிர்ந்த காற்றில் இலைகள் அசைந்தபோது எழுந்த கலைவோசை அது விடியலோ என ஐயுறச்செய்தது. இனிய வெம்மைகொண்ட படுக்கையில் படுத்திருக்கிறோமா என்ன? அல்லது இவையனைத்தும் கனவா? சுனைக்குள் நிலவொளி நேரடியாகவே விழுந்தபோது அதன் சிற்றலைகளின் வளைவுகள் தளிர்வாழையிலைகள்போல பளபளத்தன. ஆயுஸ் ஒரு நறுமணத்தை உணர்ந்தான். பாரிஜாதம் எனத் தோன்றிய மறுகணமே செண்பகம் என்றும் தோன்றியது. மிக அருகே அந்த மணம். இல்லை, மிக அப்பால் அலைபெருகி விரிந்த நறுமணப்பெருக்கின் சிறு துளியா?

புரூரவஸ் எழுந்து இரு கைகளையும் முன்னால் நீட்டினான். நேர் எதிரில் நின்றிருக்கும் எவரிடமோ பேச விழைபவன்போல முகம்நீட்டியபடி முன்னால் சென்றான். நடனமிடுவதுபோல கைகளை விரித்தான். சுழன்றபோது அவன் முகம் ஒருகணம் தெரிந்தது. அதில் ஆலயச்சுவர்களில் வரையப்பட்டிருக்கும் யக்‌ஷர்களின் முகங்களில் தெரியும் களிப்பித்து தெரிந்தது. விழிகள் புடைத்து தெறிப்பவைபோல வெறித்திருந்தன. வாய் மலர்ந்து பற்கள் ஒளிவிட்டன. மெல்ல அவன் முனகுவது கேட்டது. பாடுகிறானா என அவன் செவிகூர்ந்தான். பாட்டல்ல, வண்டு போல் ஒரு முரல்வு. அவன் உதடுகளிலிருந்து அவ்வொலி எழவில்லை. மூச்சிலிருந்தோ உடல்முழுமையிலும் இருந்தோ அது எழுந்துகொண்டிருந்தது. அவன் கைகளை விரித்துச் சுழன்றான். பின்னர் அச்சுனையின் கரையில் அமர்ந்து கால்நீட்டி படுத்துக்கொண்டான்.

அவன் உடலில் வலிப்பு எழுவதை ஆயுஸ் கண்டான். கைகால்கள் சேற்றில் இழுபட்டன. நாக்கு வாயிலிருந்து பாதி நீண்டு தொங்கி அதிர்ந்தது. அவன் திரும்பி நோக்கியபோது படைத்தலைவனும் காவலரும் மிக அண்மையில் மரங்களில் மறைந்து நின்றிருந்தனர். அவன் கைகாட்ட அவர்கள் ஓடிவந்தனர்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 19

19. மண்ணுறு அமுது

ஏழாண்டுகாலம் அமராவதி காத்திருந்தது. ஊர்வசியே அமரகணிகையரில் தலைக்கோலி என்பதனால் அவளை மையமாக்கியே அங்குள்ள ஆடல்கள் அதுவரை ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. அவள் முன்னின்று ஆடியதை தொடர்ந்தாடியமையால் ஒவ்வொருவரும் அவளைப்போலவே ஆகிவிட்டிருந்தனர். அனைவரிலும் வெளிப்பட்டமையாலேயே அவள் அங்கில்லாமை மேலும் துலக்குற்றது. அவள் இடத்தில் ரம்பையோ திலோத்தமையோ நின்று நிகழ்த்தப்பட்ட ஆடல்கள் அனைத்திலும் அவள் எழுந்து வந்து மறைந்துகொண்டே இருந்தாள். ஒவ்வொரு நிகழ்வுக்குப்பின்னும் அவளைப்பற்றி பேசிக்கொண்டு கலைந்து சென்றனர் முனிவரும் தேவர்களும். அப்பேச்சை எடுக்கவேண்டாமென இந்திரனின் ஆணை எழுந்தபிறகு அவளைப்பற்றி எண்ணியபடி கலைந்து சென்றனர்.

“அவை நடனங்கள் உயிரிழந்துள்ளன, அரசே. கலை முழுமை கொள்வதில்லை. ஆனால் நிகழ்கையில் இதோ முழுமை என முகம் காட்டியாகவேண்டும். இங்கு ஆடலனைத்தும் அவள் இன்மையையே காட்டி எழில் சிதைந்துள்ளன” என்றார் அவையில் எழுந்த தும்புரு முனிவர். “சொல்க, ஊர்வசி எப்போது மீள்வாள்?” என்றார் சௌரவ முனிவர். அவையே அவ்வினாவுடன் இந்திரனை நோக்க அவன் தத்தளித்த விழிகளுடன் நாரதரை நோக்கினான். “மானுடக் காதலின் எல்லை என்ன என்றுணர்ந்து தன் எல்லையின்மையை கண்டடையும் வரை அவள் அங்கிருப்பாள்” என்றார் நாரதர். “அதற்கு எத்தனை காலமாகும்?” என்றான் விஸ்வவசு என்னும் தேவன். “அது அவள் ஆழத்தையும் நுண்மையையும் பொறுத்தது” என்று நாரதர் மறுமொழி சொன்னார்.

அன்று அவை நீங்குகையில் இந்திரன் நாரதரிடம் தாழ்ந்த குரலில் கேட்டான் “இசை முனிவரே! மெய்மையை அறிய அவள் விழையவில்லை என்றால் என்ன செய்வது?” நாரதர் திடுக்கிட்டுத் திரும்பி நோக்கி “ஏன்?” என்றார். “அவள் தன் அறிவை ஒத்தி வைத்திருந்தால்…?” என்று மீண்டும் இந்திரன் சொன்னான். “அறிவை விழையாத எவரேனும் உளரா? அதைத் தடுக்க எவருக்காயினும் இயலுமா?” என்றார் நாரதர். இந்திரன் புன்னகைத்து “நீங்கள் காமத்தையும் காதலையும் அறிந்ததில்லை, முனிவரே” என்றபின் அகன்று சென்றான்.

அன்றே விஸ்வவசுவையும் ஏழு கந்தர்வர்களையும் அழைத்து “நீங்கள் குருநாட்டுக்கு செல்லுங்கள். புரூரவஸின் அரண்மனையில் எப்போதும் இருந்துகொண்டிருங்கள். அங்கு என்ன நிகழ்கிறதென்பதை எனக்கு அறிவியுங்கள்” என்றான். ஒரு கருவண்டென யாழிசை மீட்டியபடி விஸ்வவசு எழுந்தான். உடன் சிறுபொன்வண்டுகளென கந்தர்வர்கள் சென்றனர். அவர்கள் சியாமைக்காக புரூரவஸ் அமைத்த சந்தனமரத்தாலான தூண்கள் கொண்ட அணிமண்டபத்தில் உத்தரங்களைத் துளையிட்டு உள்ளே புகுந்து அமைந்தனர். அங்கு இருந்தபடி நிகழ்வதனைத்தையும் நோக்கினர். சொல்லப்பட்ட ஒவ்வொன்றையும் கேட்டு உணர்ந்தனர்.

சியாமை காதலில் ஏழு மைந்தரின் அன்னையென ஆகி கனிந்துவிட்டிருந்தாள். தன் மைந்தரினூடாக கணவனை ஏழு மடங்கு பெருக்கிக்கொண்டாள். அவன் கொண்ட அறத்தூய்மை ஜாதவேதஸில் வெளிப்பட்டது. அவன் உடலழகை கொண்டிருந்தான் ஆயுஸ். அவன் கூர்மொழியென ஒலித்தான் ஸ்ருதாயுஸ். சத்யாயுஸ் அவன் நடையை தான் கொண்டிருந்தான். ரயனும் விஜயனும் அவன் சிரிப்பின் அழியா இளமையை வெளிப்படுத்தினர். ஜயன் அவளுக்கு மட்டுமே அறிந்த அவன் நோக்கொன்றை எப்போதேனும் தன் இளவிழிகளில் மின்னச் செய்தான். ஒவ்வொன்றிலும் புதியதொரு புரூரவஸை கண்டடைந்தாள். அக்கண்டடைதலினூடாக தன் கணவனை ஒவ்வொரு நாளும் புதியவனாக மீண்டும் மீண்டும் அடைந்து கொண்டிருந்தாள்.

செவிலியின் கை உதறி ஓடிய ஜயனை துரத்திப்பிடித்து இரு குட்டிக்கைகளையும் பற்றி இழுத்துச்சென்று தானே வெந்நீர் தொட்டிக்குள் ஏற்றி அமரச்செய்து சிகைக்காய் பசை இட்டு குழல் அலம்பியபின் நெஞ்சோடு சேர்த்து மரவுரியால் தலைதுவட்டிக்கொண்டிருக்கும் ஊர்வசியை விஸ்வவசு பார்த்தான். அப்பால் முற்றத்தில் ஓசையெழக்கேட்டு அவனைத் தூக்கி இடையில் வைத்தபடி “என்ன அங்கே ஓசை?” என்று கூவிக்கொண்டு அவள் வெளியே சென்றாள். மைந்தனின் எடையால் மெல்ல தள்ளாடினாள். அங்கு பூசலிட்டு ஆடிக்கொண்டிருந்த ரயனையும் விஜயனையும் தாழ்ந்த மரக்கிளையொன்றை ஒடித்து தளிருடனும் மலருடனும் வீசியபடி துரத்தினாள்.

தேன்கூடொன்றைப் பிய்த்து மாறி மாறி வீசி விளையாடிக் கொண்டிருந்த இருவரும் துள்ளிக் குதித்து அவளுக்கு வாய் வலித்துக்காட்டிச் சிரித்தபடி ஓடி அகன்றனர். பொய்யாக அவர்களை வசைபாடியபடி மூச்சிரைக்க படியேறி வந்தாள். இடையில் இருந்த ஜயன் இரு விரல்களை வாயிலிட்டு அவள் தோளில் தலைசரித்து விழிகள் மேலெழுந்து செருக துயிலத் தொடங்கியிருந்தான். எச்சில்குழாய் அவள் ஆடைமேல் படிந்தது. மெல்ல அவனை கொண்டுசென்று சிற்றறைக்குள் வெண்ணிற விரிப்பிட்ட படுக்கையில் சாய்த்தாள்.

சேடி வந்து ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் ஆசிரியர் இல்லத்திலிருந்து வந்துகொண்டிருப்பதை சொன்னாள். “எப்போது? வந்துவிட்டார்களா?” என ஆடை திருத்தாமல் அவள் எழ “தாங்கள் முறைப்படி ஆடை அணியவில்லை, அரசி” என்றாள் சேடி. ‘விடு’ என கையை அசைத்தபடி அவள் உடல் குலுங்க விரைந்து நடந்துசென்று படிகளிறங்கி பெருங்கூடத்திற்குள் புகுந்தாள். அரண்மனை முற்றத்தில் குளம்படிகள் ஒலிக்க இரு சிறுபுரவிகளில் வந்து இறங்கிய ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் அவளை நோக்கி சிரித்தபடி ஓடிவந்து இருகைகளையும் பற்றிக்கொண்டனர்.

“இப்புரவிகளில் அங்கிருந்து நாங்களே வந்தோம்” என்று சொன்னான் ஸ்ருதாயுஸ். “நான் ஒருமுறை கூட நிலைபிறழவில்லை” என்றான் சத்யாயுஸ். இருவர் தலைகளையும் கையால் வருடி “ஆம் நான் அறிவேன்” என்றாள். “எப்படி?” என்றான் ஸ்ருதாயுஸ். “உங்கள் தந்தையும் ஒருபோதும் புரவியில் நிலை தடுமாறியதில்லை என்று அறிந்திருக்கிறேன்” என்றாள் அவள். “இன்னும் சிலநாட்களில் நான் மலைமேலிருந்து பாய்ந்திறங்குவேன்” என்றான் ஸ்ருதாயுஸ். அவன் பேசவிடாமல் மறித்து கைவீசி “எங்கள் ஆசிரியர் பலதேவர் குதிரையில் அமர்ந்து விரைந்தபடியே தரையில் கிடக்கும் குறுவாளை எடுக்கிறார்…” என்றான் சத்யாயுஸ். “நான் எடுப்பேன்… நான் அடுத்த மாதம் எடுப்பேன்” என்று மற்றவன் இடைமறித்தான்.

அரசவைக் களத்தில் இருந்து புரூரவஸ் முதல் மைந்தன் ஆயுஸுடன் பேசியபடி நடந்துவந்தான். தந்தையின் முகத்திலிருந்த எண்ணச்சுமையையும் கையசைவுகளையும் அவன் சொற்களைக் கேட்டபடி நடந்துவந்த மைந்தனின் விழிக்கூரையும் தொலைவிலிருந்தே நோக்கிநின்றாள். அருகே வந்த புரூரவஸ் “நாளை முதல் இவனுக்கு தென்மொழிகளில் ஏதேனும் ஒன்றை கற்றுக்கொடுக்க வேண்டுமென்று எண்ணியிருக்கிறேன். உகந்த ஆசிரியர் ஒருவர் வந்திருக்கிறார்” என்றான். அவள் ஆயுஸைப் பார்த்து புன்னகைக்க அவன் இளையோர்களை நோக்கி “இவர்கள் எப்போது வந்தார்கள்?” என்றான். “புரவியில் நாங்களே வந்தோம்” என்றான் ஸ்ருதாயுஸ். “நிலைபிறழவே இல்லை… விரைந்து வந்தோம்” என்றான் சத்யாயுஸ்.

ஆயுஸ் அன்னையை நோக்கி புன்னகைத்தான். குழந்தை நகை அல்ல, முதியவனின் குழந்தை நகைப்பென தோன்றியது அவளுக்கு. இரு கை நீட்டி அவனை அள்ளி நெஞ்சோடணைக்க உளம் எழுந்தாலும் அது இனி முறையன்று என்று அறிந்தவளாக “முழுப்பொழுதும் அவையமர வேண்டுமா? இளமைந்தர் சற்று விளையாடுவதும் வேண்டாமா?” என்று அவனிடம் கேட்டாள். “முற்றிலும் கேட்காமல் எதையும் அறிய முடியாது, அன்னையே” என்றான் ஆயுஸ். “அறிய அறிய அதைவிட்டு அகலமுடியாது. அரசனின் அவை என்பது வாழ்க்கையின் மையம் நடிக்கப்படும் நாடகமேடை.”

மறுபக்கம் உள்ளறை வாயிலில் வந்து நின்ற முதுசெவிலி “மைந்தர் உணவருந்தும் பொழுது” என்று மெல்ல சொன்னாள். “நன்று, நானே விளம்புகிறேன்” என்றபின் “வருக இளவரசே, உணவருந்திவிட்டுச் செல்லலாம்” என முறைப்படி தன் முதல் மைந்தனை அழைத்தாள். இளையவர்கள் “நாங்கள் உணவருந்தவில்லை… இப்போது உணவருந்தவே வந்தோம்” என்று கூவினர். புரூரவஸ் தன் எண்ணங்களிலாழ்ந்தவனாக மெல்ல திரும்ப “எங்கு செல்கிறீர்கள்? மைந்தருடன் அமர்ந்து இன்று உணவருந்துங்கள்” என்றாள். “எனக்காக அங்கே குடித்தலைவர் காத்திருக்கிறார்” என்று புரூரவஸ் சொல்ல, இயல்பாக விழிதிருப்பி அவள் இரு மைந்தரையும் பார்த்தாள். ரயனும் விஜயனும் பாய்ந்து சென்று புரூரவஸின் இரு கைகளையும் பற்றிக்கொண்டனர். “வாருங்கள் தந்தையே, எங்களுடன் உணவருந்துங்கள்” என்று துள்ளினர். “சரி சரி, கூச்சலிடவேண்டாம். வருகிறேன்” என்றான் புரூரவஸ்.

இரு கைகளையும் பற்றி அவனை அவர்கள் அழைத்துச் சென்றனர். புன்னகையுடன் அன்னையைப் பார்த்த ஆயுஸ் “உங்கள் தலைமைந்தன் குறைகிறான் அல்லவா?” என்றான். “ஆம். ஆனால் அவன் வேதம் பயில்கிறான். இல்லறத்தாருடன் அமர்ந்துண்ண வேதக்கல்வியின் நெறி ஒப்புவதில்லை. இங்கு நாமனைவரும் கூடியிருக்கையில் நமக்கு மேலிருந்து நம்மை வாழ்த்தும் பீடத்தில் அவன் அமர்ந்திருக்கிறான். அது எனக்குப் போதும்” என்று அவள் சொன்னாள்.

ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் கைகளை பற்றிக்கொண்டு ஒருவரோடொருவர் ஊக்கத்துடனும் சொற்திணறலுடனும் கைவீச்சுகளுடன் ஏதோ பேசியபடி முன்னால் சென்றனர். உணவறைக்கூடத்தில் கால்குறுகிய நீள்பீடத்தில் அவர்களுக்காக இலைத்தாலங்கள் போடப்பட்டிருந்தன. கிழக்கு நோக்கி புரூரவஸ் அமர்ந்ததும் அவனுக்கு இருபுறமும் ரயனும் விஜயனும் அமர்ந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் இடைமறித்து குரல் எழுப்பியும், மீறிச்சொல்லத் துடித்து மெல்ல தோள்பிடித்து தள்ளியும், கழுத்தில் நீலநரம்புகள் புடைக்க உடல் துடிக்க பேசிக்கொண்டு வந்த ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் உணவறை வாயிலிலேயே நின்று சொல்தொடர புரூரவஸ் “போதும் பேச்சு, வந்தமருங்கள்” என்று உரத்த குரலில் சொன்னான்.

அவர்கள் பாய்ந்து வந்தமர சியாமை “என்ன இது? முடி அள்ளித்திருத்துங்கள். முறைமை மறந்துவிட்டீர்களா?” என்றாள். ஆயுஸ் “அங்கு ஆசிரியர் இல்லத்தில் அனைத்துக்கும் முறை உண்டு. அதை மீறி தாங்களென்றிருக்கவே இங்கு வருகிறார்கள், அன்னையே” என்றான். சியாமை புன்னகைத்து “நீ கொடுக்குமிடம் அவர்களை வீணர்களாகிய இளவரசர்களாக ஆக்காமல் இருந்தால் போதும்” என்றாள். “அவர்கள் சந்திரகுலத்து இளவரசர்கள். ஒவ்வொருவருக்கும் தனிநாடும் குடியும் கொடிவழியும் அமையுமென்பது நிமித்திகர் கூற்று” என்றான் புரூரவஸ்.

முடியள்ளி தோல்நாரிட்டுக் கட்டியபடி ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும் பீடங்களில் அமர்ந்து உடனே விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடங்கினர். ஆயுஸ் கண்களில் சிரிப்புடன் சியாமையைப் பார்த்து “இனி சில நாட்களுக்கு புரவிகளன்றி வேறேதும் அவர்கள் உள்ளத்தில் இருக்காது, அன்னையே” என்றான். புரூரவஸ் நகைத்து “ஆம், அதன் பின்னர் புரவிகள் முற்றிலுமாக சித்தத்திலிருந்து மறைந்து போகும். கால்களென்றே ஆகும். எண்ணுவதை இயற்றும். அப்போது மட்டுமே ஒருவன் புரவியேற்றம் கற்றுமுடித்தான் என்று பொருள்” என்றான்.

சேடியர் உணவுக்கலங்களுடன் வந்தனர். “இருவர் குறைகிறார்கள்” என்று இரு விரலைக்காட்டி ரயன் சொன்னான். விஜயன் “ஆம், இருவர்” என்றான். சியாமை திரும்பி சேடியிடம் “குழந்தையை எடுத்துக்கொண்டு வா” என்றாள். புரூரவஸ் “அவன் எதற்கு? துயின்றுகொண்டிருக்கும் நேரம்” என்றான். “இல்லை, அரிதாக அமையும் ஒரு நேரம். அது முழுமையடையட்டும்” என்றாள். “உனக்கு சித்தம் குழம்பிவிட்டது போலும்” என்று புரூரவஸ் சொன்னான். சியாமை புன்னகைத்தாள்.

செவிலி துயின்று கடைவாய் வழிந்த ஜயனை தோளில் தூக்கிக்கொண்டு வந்தாள். “நீயும் அமர்ந்துகொள்” என்றான் புரூரவஸ். அவனுக்கு எதிர்ப்பக்கம் முகம் நோக்கியபடி சியாமை அமர்ந்தாள். செவிலி ஜயனை அவள் மடியில் அமர்த்தினாள். உணவுக்கலங்கள் நிரந்ததும் “இன்னும் ஒருவர்” என்றான் ரயன். “அவன் இங்கில்லை. அவனுக்கு இனி பதினெட்டாண்டுகள் அன்னையும் தந்தையும் மூதாதையரும் தெய்வமும் ஆசிரியர் ஒருவரே. அனைத்தையும் அளித்தாலன்றி வேதம் ஒரு சொல்லையும் அளிப்பதில்லை” என்றான் புரூரவஸ்.

“நாங்கள் கற்பதும் வேதம்தான் என்றாரே?” என்றான் சத்யாயுஸ். “வேதங்கள் பல. நீ கற்கும் தனுர்வேதம் அதிலொன்று. அவை எல்லாம் வேதமெனும் கதிரவனின் ஒளிகொள்ளும் ஆடிகளும் சுனைநீர்ப்பரப்புகளும் மட்டுமே” என்று புரூரவஸ் சொன்னான். “அறுவர் நீங்கள். ஆறு கலைகளுக்கும் தலைவராக அமையப்போகிறவர்கள். புவியாள்வீர்கள், படைகொண்டு வெல்வீர்கள், அறம் நாட்டுவீர்கள். அவற்றினூடாக பெரும்புகழ் கொள்வீர்கள். அவையனைத்தும் பிழையற நிகழ வேண்டுமென்றால் அங்கே அடர்காட்டில் எவர் விழியும் தொடாத ஆற்றங்கரையொன்றில் எளிய குடிலில் அவன் வேதமொன்றே சித்தம் என்று தவம் இயற்றியாக வேண்டும்.”

புரூரவஸின் முகத்தில் எழுந்த உணர்வெழுச்சியைக் கண்டு சிறுவர்கள் முகம் கூர்த்து அவனை நோக்கினர். அத்தனை விழிகளிலும் இளமையின் நகைப்பு சற்றே மறைந்ததைக் கண்டு அவள் “போதும், இது அரசுசூழ்தலுக்கான மேடையல்ல. உணவு அருந்துவதற்கானது” என்றாள். தன்னருகே இடப்பட்ட இலைத்தாலமொன்றில் ஒரு கரண்டி அன்னத்தையும் நெய்யையும் பழங்களையும் தேன்கலந்த இனிப்பையும் அள்ளி வைத்தாள். சிறுகிண்ணத்தில் நுரைத்த மதுவை ஊற்றி அருகே வைத்தாள். ரயன் “அது அவனுக்கா?” என்று கை சுட்டி கேட்டான். அப்படி கேட்கலாகாதென்று புரூரவஸ் விழியசைத்து தடுப்பதற்குள் விஜயன் “அவன் அங்கு அதையெல்லாம் உண்ணலாகாதே?” என்றான். “ஆம், ஆகவேதான் இங்கு அவை பரிமாறப்படுகின்றன” என்றபின் சியாமை “உணவருந்துங்கள்” என்று கூற செவிலியர் இன்மதுவும் உணவும் அவர்களுக்கு பரிமாறினர். பேசிச் சிரித்தபடி நடுவே சிறுபூசலிட்டுக் கூச்சலிட்டபடி அவர்கள் உண்ணலாயினர்.

imagesவிஸ்வவசுவும் தோழர்களும் குருநகரிலிருந்து கிளம்பி அமராவதியை அடைந்து இந்திரனின் அரண்மனைக்குள் புகுந்து அவன் மஞ்சத்தறையில் சென்று சந்தித்தனர். நிகழ்ந்ததைக் கூறி “ஊர்வசி ஒருபோதும் மீளப்போவதில்லை, அரசே” என்றனர். விழிசுருக்கி எழுந்த இந்திரன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். “அன்னையென கனிந்திருக்கிறாள். மூதன்னை என முழுமைகொள்ளும் பாதையிலிருக்கிறாள். அவ்வாழ்க்கையிலிருந்து ஒருபோதும் அவள் மீளமாட்டாள்” என்றான் விஸ்வவசு.

“என்னால் புரிந்துகொள்ளக் கூடவில்லை. இங்கு அவள் முழுமையிலிருந்தாள், மெய்மையிலாடினாள், முடிவின்மையில் திளைத்தாள். அங்கிருப்பதோ துளித்துச் சொட்டும் கணமென சிறுவாழ்வு. தேவர்கள் உண்டு எஞ்சிய மிச்சில். அசுரர்களின் கால்பொடி படிந்த குப்பை. அதிலெப்படி அவள் அமைய முடியும்?” என்றான் இந்திரன். விஸ்வவசு “அதை புரிந்துகொள்ளவே இத்தனை நாள் நானும் அங்கு இருந்தேன். இங்கிலாத பேருவகை ஒன்று அங்குள்ளது, அரசே. வாழும் அக்கணம் மீளாதென்று, பிறிதொருமுறை எதுவும் அமையாதென்று ஒவ்வொரு மானுடரும் உள்ளுணர்ந்திருக்கிறார்கள். எனவே அக்கணங்களில் பொங்கி முற்றிலும் நிறைகிறார்கள்” என்றான்.

புரியாமல் நோக்கி அமர்ந்திருந்த இந்திரனின் விழிகளை நோக்கி “அதைவிட இனிது சென்றவை நினைவில் மீளும் துயரம். மானுடர் ஒவ்வொருவருக்கும் சென்றகாலம் எனும் பெருஞ்செல்வம் கருவூலம் நிறைய உள்ளது. அரசே, அறியாத ஆயிரம் பண்கள் நிறைந்த ஒரு பேரியாழ் அது. இங்கு தேவர்களுக்கு அதில்லை” என்றான் உடன் சென்ற சந்திரஹாசன் என்னும் கந்தர்வன்.

பிரபாஹாசன் என்னும் பிறிதொரு கந்தர்வன் அருகில் வந்து “அதைவிடவும் இனிது எதிர்காலம் முற்றிலும் அறியவொண்ணாதது என்பது. ஒவ்வொரு படியாக கால் வைத்தேறி முடிவிலா விண்ணுக்குச் செல்வதுபோல. கண்ணுக்குத் தெரியாத மறுதரப்புடன் காய் நீக்கி பகடையாடுவதுபோல. மானுடர் கொள்ளும் இன்பங்களில் முதன்மையானது நாளை நாளை என அவர்கள் மீட்டும் பெருங்கனவு. ஒவ்வொரு நாளும் அவர்களின் வீட்டு முற்றங்கள் வரப்போகும் விருந்தினருக்காக பதுங்கிய முயலின் தோலென விதிர்த்து நிற்கின்றன. அவர்கள் இல்லக்கதவு புன்னகைக்கும் வாயென திறந்திருக்கிறது. அவர்களின் அடுமனைகளில் அனல்நீர் காத்து அன்னம் தவமிருக்கிறது” என்றான்.

சூரியஹாசன் என்னும் கந்தர்வன் “நேற்றுக்கும் இன்றுக்கும் நடுவே கணமும் அமையாத துலாமுள்ளென அவர்கள் நின்றாடும் பேரின்பத்தைக் கண்டு நானே சற்று பொறாமை கொண்டேன், அரசே” என்றான். ஜ்வாலாக்‌ஷன் என்னும் கந்தர்வன் “முதன்மையாக அறிதல் என்னும் பேரின்பம் அவர்களுக்குள்ளது. முற்றறிதலுக்குப் பின் அறிதல் என்னும் செயல் நிகழ்வதில்லை. இங்கு என்றும் இருக்கும் பெருமலைகளைப்போல் மெய்மை நிறைந்துள்ளது. அதில் திகழ்வதனாலேயே இங்கு எவரும் அதை அறிவதில்லை. அங்கோ ஒரு சிறுகூழாங்கல்லென கண்முன் வந்து நிற்கிறது மெய்மையின் துளி. சிற்றெறும்பென அதைக் கண்டு திகைத்து அணுகிக்கடந்து ஏறிக்கொள்ளும் உவகை அவர்களை ஆட்டிப்படைக்கிறது” என்றான்.

“ஆம் அரசே, அறிதலுக்கு நிகரான விடுதலை ஒன்றில்லை. அறியும்பொருட்டு அமர்வதே தவம். அங்கு எவ்வகையிலேனும் ஒரு தவத்தில் அமையாத ஒருவனை நான் கண்டதில்லை. உழுபவனும், வேல்தாங்கி எழுபவனும், துலாபற்றுபவனும், கன்று பெருக்கி காட்டில் வாழ்பவனும், மைந்தரை மார்போடணைத்து உணவூட்டும் அன்னையும், தவத்தில் உளம் கனியும் கணங்களை அறிந்திருக்கிறார்கள். மானுடராகச் சென்ற எவரும் மீள்வதில்லை” என்றான் சுவர்ணஜிஹ்வன் எனும் கந்தர்வன்.

சுஃப்ரஹாசன் என்னும் கந்தர்வன் சொன்னான் “அரசே, அறிந்த அனைத்தையும் சுருக்கி ஓர் அழகுப்படிமமென்று ஆக்க அவர்களால் முடிகிறது. விண்நிறைத்துப் பறந்திருக்கும் பறவைக்குலம் அனைத்தையும் ஒற்றை இறகென ஆக்குகிறார்கள். புவி மூடியிருக்கும் பசுமைக்கடலை ஒரு தளிரில் உணர்கிறார்கள். ஒற்றைச் சொல்லில் வேதமெழுகிறது. ஒரு சொல்லணியில் காவியம் விரிகிறது. கற்பனையை மூன்றாம் விழியெனச் சூடியவன் அழிவற்ற பேரின்பத்தின் அடியில் அமர்ந்த தேவன். மானுட உருக்கொண்டு சென்ற எவனும் மீள வழியே இல்லை.”

“அரசே, படிமங்களென குறுக்கி ஒளிமணி என்றாக்கி தங்கள் கருவூலங்களில் சேர்த்த பெருஞ்செல்வத்தின் மேல் அமர்ந்திருக்கிறார்கள். தங்கள் உளச்சிற்றில்களில் அவர்கள் ஒளிச்சுடரென வைத்திருப்பது அவற்றையே. அவ்வொளியில் அனைத்தையும் கண்டு பெருக்கிக்கொண்டு அவர்கள் அமைத்துள்ள உலகு நாம் அறியாதது” என்றான் ரத்னஹாசன் என்னும் கந்தர்வன். “ஒரு மலரால், தளிரால் அவர்கள் தங்கள் மைந்தருடலை அறிகிறார்கள். தழல்நெளிவால், நீர்வளைவால் மலரையும் தளிரையும் அறிகிறார்கள். சினத்தால், நகைப்பால் எரியையும் நீரையும் அறிகிறார்கள். அவர்கள் முடிவிலியில் திளைக்கும் முடிவிலி என உள்ளம் கொண்டமைந்தவர்கள்.”

அவர்களின் விழிகொண்ட திளைப்பிலிருந்தும் சொல்கொண்ட விசையிலிருந்துமே அவர்கள் உணர்ந்தது மெய்மையென்று இந்திரன் அறிந்துகொண்டான். “என்ன செய்வதென்று அறியேன், அக்கனி பழுத்து உதிரக் காத்திருப்பது ஒன்றே வழியென்று என்னிடம் சொன்னார் நாரதர்” என்றான். “கனி உதிரலாகும் அரசே, அவளோ அங்கு ஆணிவேர் அல்லவா?” என்றான் விஸ்வவசு. சினந்து திரும்பி “எனில் அந்த மரம் கடைபுழங்கி நிலம்பதிக! வேருடன் பிடுங்கி இங்கு கொண்டு வாருங்கள்” என்றான் இந்திரன். அவர்கள் விழிகளில் துயருடன் நிற்க “என்ன செய்வீர்கள் என்று அறியேன். அக்கனவிலிருந்து உலுக்கி எழுப்புங்கள் அவளை. விழித்து விலகினால், விழிப்புற்றால் அவள் அறிவாள் என்னவென்றும் ஏதென்றும். அவள் இங்கு மீள அது ஒன்றே வழி. செல்க!” என்றான்.

ஒவ்வொருவராக தயங்கி சொல்லெடுக்க முனைந்து பின் அதை விலக்கி விழிகளால் ஒருவருடன் ஒருவர் உரையாடி வெளியே சென்றனர். கந்தர்வர்கள் விஸ்வவசுவைச் சூழ்ந்து “என்ன சொல்கிறார்? எண்ணிச் சொல்கிறாரா? அறிந்து அவள் மீளவேண்டுமென்பதல்லவா இசை முனிவரின் ஆணை? கனியாத காயை பால் சொட்ட முறித்து வீசுவதால் என்ன பயன்? இங்கு வந்து எண்ணி எண்ணி துயருற்றிருப்பாளென்றால் அவள் அங்கு சென்றதே வீணென்றாகுமல்லவா?” என்றார்கள். “நாம் அதை எண்ணும் கடமை கொண்டவர்களல்ல. ஆணைகளை நிறைவேற்றுபவர். அதை செய்வோம்” என்றபின் விஸ்வவசு மீண்டும் புரூரவஸின் அரண்மனைக்கே மீண்டான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 18

18. மலர்ப்பகடை

மலர்மரத்தின் அடிபோல உளம்கலந்திருக்க இடம் பிறிதொன்றில்லை. சூழும் மணம் எண்ணங்களை பறக்கச்செய்கிறது. அங்கிலாதாக்கி ஆட்கொள்கிறது. அவ்வப்போது உதிரும் இலைகளும் மலர்களும் தொட்டு திடுக்கிடச்செய்கையில் எழுந்துவரும் இவ்வுலகு மேலும் இனிதென்றாகிறது. சொற்களால் ஒருவரிடம் ஒருவர் தங்களை ஓவியமென தீட்டிக்கொண்டனர். துளிதொட்டு துளிதொட்டு ஆக்கிய அந்த ஓவியம் ஆயிரம் ஓவியங்கள் அழித்தழித்து எழுந்த திரைமேல் அமைந்தது.

தங்கள் விருப்ப வடிவை தீட்ட எண்ணி தீட்டிமுடித்து நோக்கி அதைக் கண்டு வியந்து அகன்று அதை பிறர் நம்புகிறாரா என எண்ணி ஐயுற்றனர். அதை வெல்லும்பொருட்டு மெல்லிய துயரை அதில் பூசி கூர்படுத்திக்கொண்டனர். இனிய தருணத்தின் துயர் மேலும் இனிதென்று உணர்ந்து அதை தொட்டுத்தொட்டு பெருக்கினர். ஒருவர் துயரை பிறிதொருவர் ஆற்றினர். சொற்கள் சொற்களென பெருகி பின் பெருமழை துளியென்றாவதுபோல் ஓய்ந்து பொருளற்ற ஒற்றைச் சொற்களும் விழிக்கசிவுமென எஞ்சினர்.

உணர்வுகளை தட்டிஎழுப்பி விசைகொள்ளச் செய்வது எளிது. அவை கொள்ளும் திசைமீறல்களை கட்டுப்படுத்துதல் அரிது. ஆடற்களமொன்றில் வழிகுழைந்து திசைமயங்கி தடுமாறி மீண்டும் மீண்டும் ஒரே இடத்தையே வந்தடைந்தனர். பெண் பெருகியதும் ஆண் குறுகியதும் முழுமை அடைந்தபோது இருவர் பரபரப்பும் அடங்கியது. பின் சொற்கள் எழவில்லை, நீள்மூச்சுகளும் சிறுபுன்னகைகளும் மென்தொடுகைகளுமே எஞ்சின.

இனிமை முழுத்தபோது இருவருமே தனிமையை விரும்பினர், மேலுமொரு சொல் அவ்வினிய குமிழியை உடைத்துவிடும் என அஞ்சியவர்கள்போல. அவ்வெண்ணத்தால் அச்சம்கொண்டு ஒருவரை ஒருவர் உள்ளத்தால் விலக்கினர். ஒருவர் சொல்லும் சொல்லை மற்றவர் செவிகொடுக்காமல் வெற்றுப்புன்னகையும் தலையசைப்பும் அளித்தனர். இனிமை அது இழக்கப்படும் எனும் துயரை தவிர்க்கமுடியாமல் தான் கொண்டுள்ளது. அத்துயரால்தான் அது மேலும் இனிதாகிறது.

புரூரவஸ் நீண்டமூச்சுடன் மீண்டுவந்தான். பிறிதொன்றை பேசுவதற்கு உளம் அமையவில்லை. அனைத்தையும் பொருளிழக்கச்செய்து அதுவொன்றே மெய்மை என்றது அந்த நறுமணம். மரத்தை நிமிர்ந்து நோக்கி “இந்த மலர்கள்தான்” என்றான். அவள் காதுக்குள் என ஒலித்த குரலில் “என்ன?” என்றாள். “இந்த மலர்களின் மணத்தைத்தான் இச்சோலையை அணுகுகையிலேயே நான் அறிந்தேன். அங்கிருக்கையில் பாரிஜாதம், அணுகுகையில் செண்பகம். இப்போது இதுவரை அறியாத மலரின் மணம்… ஆனால் புதியதல்ல. நான் அறிந்த ஒன்று” என்றான். அவள் “ஆம், இந்த மணம் விண்மலர் ஒன்றுக்குரியது என்கிறார்கள்” என்றாள்.

அவன் எழுந்து அந்த மரக்கிளையொன்றை தாவிப்பற்றி இழுத்து ஒரு வெண்மலரை பறித்தெடுத்தான். அவள் முகம்மலர்ந்து எழுந்து அதை கைநீட்டி வாங்கி காம்பைப்பற்றி இதழ்களைச் சுழற்றி நோக்கி “தூய வெண்மை” என்றாள். “ஆம், மாசில்லாதது” என்று அவன் சொன்னான். வெறும் சொற்களுக்கு அப்பால் ஏதேனும் சொல்ல அவர்கள் அஞ்சினர். பொருள்கொள்ளும் சொற்கள் அத்தருணத்திற்கு ஒவ்வாத எடைகொண்டிருந்தன. ஆனால் அறியாது “வண்ணங்கள் பல கோடியென பெருகிக்கிடக்கும் மலர்களின் வெளியில் வெண்ணிறம் இத்தனை பேரழகு கொள்வதெப்படி?” என்றான். அத்தருணத்திலும் வினாவென அமையும் தன் உள்ளத்தை எண்ணி மறுகணம் சலிப்புற்றான்.

அவள் “அதன் மென்மையினால்…” என்றாள். எத்தனை பெண்மைகொண்ட மறுமொழி என எண்ணியதுமே எத்தனை சரியான சொல்லாட்சி என்றும் அவன் உணர்ந்தான். நிமிர்ந்து விழியிமை சரிய, சிறு உதடுகள் சற்றே கூம்ப, மலரை நோக்கி குனிந்திருந்த அவள் முகத்தை நோக்கியபின் “ஆம், பிற எவ்வண்ணத்தைவிடவும் வெண்மையே மென்மை மென்மை என்கிறது” என்றான். என்ன சொல்கிறோம் என வியந்தபடி “வேறெந்த மலரையும் இதழ் தொட்டு வருடலாம். வெண்மலரைத் தொட விரல் தயங்குகிறது” என்றான். அவள் நிமிர்ந்துநோக்கி புன்னகை செய்தாள்.

வீண்சொல் பேசுகிறோம் என அவன் உள்ளம் தயங்கியது. ஆகவே சொன்னவற்றை மேலும் கூராக்க முனைந்தான். “தூய்மை ஒரு மலரென்றானதுபோல்” என்றான். “நான் ஒரு புன்னகை என்று இதை நினைத்துக்கொண்டேன்” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்று அவன் வியப்புடன் சொன்னான். அவள் சிறுமியைப்போல் மிக எளிமையாக சொல்லும் ஒரு வரிக்கு முன் கற்று அடைந்த தன் கவிதைவரிகள் ஒளியிழக்கின்றனவா? ஒவ்வொரு ஒப்புமைக்கும் ஏற்ப அம்மலர் தன்னை மாற்றி காட்டிக்கொண்டே இருப்பதுபோல் தோன்றியது. இது உண்மையிலேயே விண்ணுலக மலரா என்ன?

சொற்களினூடாக அனைத்தையும் கடந்து கீழிறங்கி வந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். ஓர் எண்ணம் பிறிதொன்றுடன் தொடர்புகொள்ளவே விழைகிறது. கோத்துக்கொண்டு சரடென வலையென கூரையென தரையென மாறுகிறது. எண்ணங்கள் எழுந்தாலே அவை வடிவமென்றாகிவிடுகின்றன. சொற்கள் அறுந்த மாலையின் மணிகள். விண்மீன் மின்னுகைகள்.

“திரும்பு! இதை உன் குழலில் சூட்டுகிறேன்” என்று அவன் சொன்னான். அவள் சிரித்தபடி திரும்பி அள்ளிச்சுருட்டி வளைத்துக்கட்டிய தன் கொண்டையை அவிழ்த்து விரல்களால் நீவி குழலை விரித்திட்டாள். பொழிந்து அவள் இடைக்குக்கீழ் எழுந்த இணைப்பாறைகளில் வழிந்த அக்குழலின் பொழிவில் ஒரு கீற்றெடுத்து சுட்டு விரலில் சுற்றிக் கண்ணியாக்கி அதில் அம்மலரை அவன் வைத்து இழுத்து இறுக்கினான்.

வெண்மலர் அவள் கூந்தலிலேயே மலர்ந்ததுபோல் தோன்றியது. அக்கருமை கூர்ந்து ஒளிமுனை சூடியதுபோல. “வேல்முனை ஒளிபோல” என்றான். அவள் திரும்பி நகைத்து “அவையில் பாணர்களின் பாடல் மிகுதியாக கேட்கிறீர்கள் போலும்” என்றாள். அவன் அவ்விழிகளில் இருந்த ஒன்றால் மிகச்சற்றே சீண்டப்பட்டான். உண்மையில் அதை அப்போது அவன் உணரவுமில்லை. “அது அரசனின் தொழில்” என்றான்.

“ரீங்கரித்து சுழன்று சுழன்று குளவி தன் புழுவையும் குளவியாக்குகிறது என்பார்கள். சூதர்கள் பாடிப்பாடி வேடர்களை அரசர்களாக்குகிறார்கள் என்று என் தந்தை சொன்னார்” என்றாள். அவன் சற்றே சினம்கொண்டு “அனைத்து வேடர்களும் அரசர்கள் ஆகிவிடுவதில்லை” என்றான். “ஆம், ஆனால் அரசர்கள் அனைவரும் வேடர்களாக இருந்தவர்களே” என்றாள் சியாமை.

அவன் முகம் சிவந்து “எந்தை என்னை காட்டில் கண்டெடுத்தார். நான் விண்ணுலாவியான ஒளிக்கோள் புதனுக்கும் வைவஸ்வத மனுவின் மகள் இளைக்கும் பிறந்த மைந்தன் என்று நிமித்திகர் கூறினர். நான் வேடர் குலத்தவனல்ல” என்றான். “காடுவென்று நாடாக்கி முடிசூடும் குடியினர் குலம்சேர்த்து பொது அரசன் என முடிசூடும் மைந்தனை காட்டில் கண்டெடுத்ததாக சொல்லும் வழக்கம் இங்குண்டு. அவன் தேவர்களுக்குப் பிறந்தவன் என்று கதைகள் உருவாகி வரும். ஏனெனில் தங்களில் ஒருவனை தலைவனென்று ஏற்பது வேடர்களுக்கு எளிதல்ல. தெய்வங்கள் அருளிய மானுடன் அவர்களுக்குத் தேவை. நீங்கள் சந்திரகுலத்தோன் என்பது உங்கள் குலவழியை வேடர்களிடமிருந்து விலக்கும்” என்றாள்.

கண்கள் நீர்கொள்ள அவன் உரக்க “மலைமகள் நீ. அரசு அமைதலும் வளர்தலும் உனக்கென்ன தெரியும்?” என்றான். “நதிகள் ஊறும் மலைமேல் இருப்பவள் நான். நீர்ச்சுவையை இங்கிருந்தே கூற முடியும்” என்றாள். சொல்லெடுத்து அவளை வெல்ல முடியாதென்று அறிந்தபோது அவன் மேலும் சினம்கொண்டான். “என் பிழைதான், எளிய காட்டாளத்தியிடம் சொல்லாட வந்திருக்கலாகாது” என்றான்.

அவன் சினம் அவளை மேலும் நகைசூட வைத்தது. “ஏன், முதல்நோக்கில் காட்டாளத்தி என உணரவில்லையா அரசர்?” என்று சிரித்தபடி கேட்டாள். “காட்டாளத்தியிடம் அரசர்கள் காதல் கொள்வது புதிதல்ல” என்று அவன் சொன்னான். “காட்டாளத்தியிடம் அரசர்கள் கண்டடைவது தங்கள் உள்ளுறையும் காட்டாளர்களைத்தானே?” என்றாள் அவள்.

சினம் எல்லைமீற “உனக்கென்ன வேண்டும்? இறுதிச்சொல் உரைத்து என்னை வென்று நிற்க வேண்டுமா?” என்று புரூரவஸ் கேட்டான். அவனை முழுதும் வென்றுவிட்டதை அறிந்ததும் ஒரு மாயப்பொழுதில் சிறுமியென்றாகி சிரித்தபடி “ஆமாம், இதோ வென்றுவிட்டேன். இவ்விரு விரல்களில் ஒன்றை தொடுங்கள்” என்று கொஞ்சி அவள் கைநீட்டினாள். அவன் சற்றே சினந்து “எதற்கு?” என்றான். “தொடுங்கள்!” என்றாள். சுட்டுவிரலை அவன் தொட “தோற்றுவிட்டீர்கள்! தோற்றுவிட்டீர்கள்!” என்று அவள் கைகொட்டி நகைத்தாள். “சரி, தோற்றுவிட்டேன்” என்று அவன் சொன்னான். மெல்ல முகத்தசைகள் இறுக்கமிழந்தன. “தோற்றவர் எனக்கு தண்டமிடவேண்டும்” என்றாள். “என்ன?” என்றான். “தண்டம், தண்டம்” என்றாள்.

அச்சிரிப்பினூடாக அவன் சினத்தை கடந்தான். “இதோ” என்று இரு செவிகளையும் பற்றி அவள் முன் மும்முறை தண்டனிட்டான். அவள் அவன் தலைமேல் கைவைத்து “போதும் அடிமையே… உன்மேல் கனிவுகொண்டோம்” என்றாள். “தேவி, உன் காலடிகளை சென்னிசூடுகிறேன். என்றும் உடனிருக்கவேண்டும்” என்று அவன் சொன்னான். “அருளினோம், அடியவனே” என அவள் நகைத்தாள்.

அந்தச் சினம் தலைமுட்டும் ஆடுகள் பின்விலகுவதுபோல விசைகூட்ட உதவியது. ஏன் அச்சினம் எழுந்தது என்று எண்ணியபோது அவளை எளிய பேதை என்று எண்ணிய ஆணவத்தில் அடிபட்டதனால் என்று உணர்ந்தான். ஆனால் பின்னர் இணைந்தபோது அவள் எளியவள் அல்ல என்பது அவனை எழுச்சிகொள்ளச் செய்தது. ஊடியும் முயங்கியும் வென்றும் அடங்கியும் சொல்லாடியும் சொல்மறந்தும் அவர்கள் காதல் கொண்டாடினர். அந்த மலர்மரத்தினடியில் அவளை அவன் மணம் கொண்டான். பொன்னிற நாணல்சரடொன்றை எடுத்து மும்முறை சுழற்றி விரலாழியாக்கி அவள் கையிலணிவித்தான். “இன்று முதல் நீ என் அரசி” என்றான். விழிகனிந்து “என்றும் உங்கள் இடம் அமைவேன்” என்று அவள் சொன்னாள்.

சருகுமெத்தைமேல் அவர்கள் உடல் ஒன்றாயினர். அவள் வியர்வையில் எழுந்தது அந்த மலர்மணம். இதழ் இணைந்தபோது மூச்சில் மணத்ததும் அதுவே. உடல் உருகியபோது மதமென எரிமணம் கொண்டிருந்ததும் அந்த மலர்நினைவே. எழுந்து விலகி வான்நோக்கிப் படுத்து மெல்ல உருவாகி வந்த புறவுலகை உள்ளிருந்து எடுத்த ஒற்றைச் சொற்களை எறிந்து எறிந்து அடையாளம் கொண்டபடி கிடந்தபோது அவன் “நீயிலாது நான் அரண்மனை மீளப்போவதில்லை” என்றான். அவள் அச்சொற்களை கேட்காமல் எங்கோ இருந்தாள். திரும்பி அவள் உடல்மேல் கையிட்டு வளைத்து “என் அரசியென நீ உடன்வரவேண்டும்” என்றான்.

திடுக்கிட்டு அவனை எவர் என்பதுபோல நோக்கி “என்ன?” என்றாள். “உன்னை உடனழைத்துச் செல்லவிருக்கிறேன்” என்றான். அவள் அவன் கையை மெல்ல எடுத்து விலக்கிவிட்டு “இல்லை, இக்காடுவிட்டு நான் எங்கும் வருவதாக இல்லை” என்று மறுத்தாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “இந்தக் காடு என் உள்ளம். இதை நான் என் ஆடுகளுடன் சூழ்ந்தறிந்துள்ளேன். இதைவிட்டு வந்தால் பொருளற்றவளாக ஆவேன்” என்றாள்.

துயர்சீற்றத்துடன் “உனைப்பிரிந்து ஒருநாளும் இனி வாழமுடியாது. எங்கிருந்தாலும் உன்னுடன்தான்” என்றான் அரசன். “உங்கள் நகரில் நான் வாழ காடு இல்லை” என்று அவள் சொன்னாள். “இக்காட்டிலும் எனது நகரத்தை நான் கொண்டுவந்து விடமுடியும்” என்று அவன் மறுமொழி சொன்னான். அவள் கை பற்றி நெஞ்சோடணைத்து “பிரிவெனும் துயரை எனக்கு அளிக்கவேண்டாம்” என்றான்.

அவன் கண்களில் நீரைக் கண்டு அவள் மனம் குழைந்தாள். அவன் அவளிடம் “நீ என் தேவியென அன்னையென தெய்வமென உடனிருக்கவேண்டும்” என்றான். “உங்களுடன் நான் வருவதென்றால் மூன்று உறுதிகளை நீங்கள் எனக்கு அளிக்கவேண்டும்” என்றாள். “எந்த உறுதியையும் அளிக்கிறேன்” என்று அவன் சொன்னான். “என் இடமும் வலமும் அமைந்து இவ்விரு ஆடுகளும் எப்போதும் அரண்மனைக்குள் இருக்கும். அவற்றை முற்றிலும் காப்பது உங்கள் கடன்” என்றாள். “ஆம், என் உயிரை முன்வைத்து காப்பேன்” என்று அவன் சொல்லளித்தான்.

“நான் வேள்விமிச்சமான நெய்யன்றி பிற உணவை உண்பதில்லை. அதை உண்ணும்படி சொல்லலாகாது” என்றாள். விந்தையுணர்வுடன் அவன் “நன்று, அதுவும் ஆணையே” என்றான். அவள் அணங்கோ என ஓர் எண்ணம் உள்ளில் எழுந்தது. அணங்குகள் வேள்விநெய் அருந்துமா என எண்ணி அதை கடந்தான். ஆனால் அவ்வச்சம் அவளை மேலும் அழகாக்குவதை உடனே உணர்ந்தான்.

அவள் அவன் கைகளை பற்றிக்கொண்டு சில கணங்கள் தன்னைத் தொகுத்து பின் விழிதாழ்த்தி “ஒருபோதும் ஒளியில் என் முன் உங்கள் வெற்றுடலுடன் தோன்றலாகாது” என்றாள். திகைத்து “ஏன்?” என்று அவன் கேட்டான். அவள் “தோன்றலாகாது, அவ்வளவுதான்” என்றாள். “சொல், ஏன்?” என்றான் அவன் சற்றே எரிச்சலுடன்.

“அவ்வாறுதான்… பிறிதொன்றும் சொல்வதற்கில்லை” என்றாள். “நன்று! வெற்றுடலுடன் ஒளியில் உன்முன் தோன்றமாட்டேன்” என்றான் புரூரவஸ். “இம்மலரின் நறுமணத்தை எண்ணி ஆணையிடுங்கள்” என்றாள். “அவ்வாறே ஆணையிடுகிறேன்” என்று அவன் சொன்னான்.

தன் குலத்திடமும் தந்தையிடமும் சொல்லளித்து மீள்வதாக சொல்லிச்சென்று அவள் அன்று மாலையே மீண்டுவந்தாள். இரு ஆடுகள் இரு பக்கமும் வர அவன் கைபற்றி காட்டிலிருந்து வெளியேறி வந்தாள். காட்டின் எல்லையில் அமைந்த முக்குடைமலை ஒன்றை கடக்கையில் குனிந்து கூழாங்கல் ஒன்றை பெண்செல்வமென எடுத்துக்கொண்டாள். அவன் அரண்மனைக்குள் வலக்கால் எடுத்துவைத்து நுழைந்தபோது தன் இரு விழிகளில் ஒற்றி அவனுக்களித்தாள்.

 imagesசியாமையுடன் ஏழு ஆண்டுகாலம் பித்தெடுத்த பெருங்காதலில் திளைத்து வாழ்ந்தான் புரூரவஸ். அவ்வேழு ஆண்டுகளும் அவன் ஆண்ட குருநகரமே அவளுடைய அணியறையும் அரசமன்றும் மட்டுமே எனத் திகழ்ந்தது என்றனர் குலப்பாடகர். நகரில் எங்கும் அவளைப்பற்றியே அனைவரும் பேசினர். பாலைநிலமெங்கும் காற்று பதிந்திருப்பதுபோல நகரின் அனைத்துப்பொருட்களிலும் அவளே இருந்தாள் என்றனர் அரசவைக்கவிஞர்.

வேடன் மகளை மைந்தன் மணம்கொண்டு வரும் செய்தியை அறிந்தபோது ஹிரண்யபாகு திகைத்து பின் கடும்சினம் கொண்டார். அவன் செங்கோலை வலுவாக்கும் தென்னகத்து சூரியகுலத்து அரசன் ஒருவனின் மகளை அவர் மணம்பேசிக்கொண்டிருந்த காலம் அது. அவன் முன்னரே மணம்கொண்டிருந்தவர்கள் புகழ்பெற்ற தொல்குடிகளில் பிறந்தவர்கள். “அவனை அங்கேயே நிற்கச் சொல்லுங்கள்! நகர் நுழையவேண்டியதில்லை. அவளை அவன் மணம்புரிந்து நகர் நுழைக்க நான் ஒப்பவில்லை. விழைந்தான் என்றால் அவளை விருப்பக்கிழத்தியென கொள்ளட்டும். அப்பால் ஆற்றுமுகத்தில் மாளிகை அமைத்து அங்கே அவளுடன் வாழட்டும்” என்றார்.

அன்னை “காட்டுப்பெண் மாயமறிந்தவள் என்பார்கள். என் மைந்தன் உள்ளத்தை அவள் எப்படி கவர்ந்தாள் என்றறியேன்” என கலுழ்ந்தாள். “அவள் கானணங்கு. கொலைவிடாய் கொண்ட வாயள். என் மைந்தன் குருதிகுடித்தபின் கான்மீள்வாள்” என்றாள். “வீண்சொல் பேசாதே. கானகமகளிரை அரசர் மணப்பதொன்றும் புதியதல்ல” என்றார் ஹிரண்யபாகு.

தந்தையின் செய்தி அறிந்ததும் புரூரவஸ் உறுதியான குரலில் “நான் பெண்ணெனக் கொள்பவள் இவள் ஒருத்தியே. எனக்கு தந்தையின் முறையென வருவது அரசு. அவர் அளிக்கவில்லை என்றால் என் துணையுடன் மீண்டும் காட்டுக்கே செல்கிறேன். நகரில் இவளின்றி ஒருநாளும் அமையமாட்டேன்” என்றான். அவனுடைய உறுதியைச் சொன்ன அமைச்சர்கள் “மறுசொல் எண்ணாமல் ஆனால் உணர்வெழுச்சியும் இல்லாமல் சொல்லும் சொற்கள் பாறைகள் போன்றவை அரசே, அவற்றுடன் பேசுவதில் பொருளில்லை” என்றனர்.

பன்னிருநாட்கள் அவன் நகர்எல்லைக்கு அப்பால் காத்திருந்தான். பின்னர் “நான் என் துணைவியுடன் கானேகினேன் என எந்தையிடம் சொல்லுங்கள்” என்றபின் திரும்பிச்சென்றான். ருத்ரன் நகருக்குள் சென்று ஹிரண்யபாகுவிடம் “அவரை அச்சுறுத்தியோ விருப்புஎழுப்பியோ உளம்தளர்த்தியோ அவளிடமிருந்து அகற்றமுடியாது, அரசே. தணிவதன்றி வேறுவழியில்லை உங்களுக்கு” என்றான். “அவளிடம் அப்படி எதை கண்டான்?” என்றாள் அன்னை. “அதை அவளைக் கண்டதும் நீங்கள் உணர்வீர்கள்” என்றான் ருத்ரன்.

சினத்துடன் “அவன் அரசன்” என்றார் ஹிரண்யபாகு. “அரசே, அவள் புவிக்கெல்லாம் அரசி போலிருக்கிறாள்” என்றான் ருத்ரன். “அவள் எப்படி இந்நகரில் வாழ்வாள்?” என்றாள் அன்னை. “அவள் விண்நகர் அமராவதியும் கண்டவள்போல தெரிகிறாள், அன்னையே” என்றான் ருத்ரன். இறுதியில் அவனுக்குப் பின்னால் தூதர்களை அனுப்பி அவன் துணைவியை ஏற்பதாக தந்தையும் தாயும் ஒப்புக்கொண்டனர்.

சியாமையுடன் புரூரவஸ் நகர்நுழைந்த நாளில் நகர்மக்கள் முகப்பெருக்காகக் கூடி ஆர்ப்பரித்து காத்திருந்தனர். அவன் ஊர்ந்த தேர் உள்ளே வந்ததும் கடுங்குளிர்கொண்டு மலைச்சுனை உறைவதுபோல அவர்கள் சொல்லும் அசைவும் இழந்தனர். சித்தமழிந்து விழிகள் வெறும் மலர்களென்றாக நின்றிருந்தனர். ஒரு வாழ்த்தொலியும் எழவில்லை. அமைதியில் தேர்ச்சகட ஒலி மட்டுமே கேட்டது. நெடுநேரம் கழித்து ஒருவன் பாய்ந்து சென்று முரசை முழக்கினான். உடன் பொங்கி எழுந்தது மக்களின் பேரொலி.

அவள் புவியரசியென்றே பிறந்தவள் போலிருந்தாள். பேரரசர்களின் மணிமுடிகளுக்குமேல் கால்வைத்து நடப்பவள் போல தேரிறங்கிச் சென்று அரண்மனைப்படிகளில் ஏறினாள். அருள்புரிபவள் போல ஹிரண்யபாகுவையும் மூதரசியையும் கண்டு புன்னகைத்து முறைப்படி வணங்கினாள். அவளுடன் தேரிறங்கி வந்த ஆடுகள் சூழ்ந்திருந்த திரளையும் முரசொலிகளையும் அரண்மனைவிரிவையும் அறியாதவை போலிருந்தன. அவை மட்டுமே அறிந்த காடு ஒன்றில் அவை அசைபோட்டபடி சிலம்பிய குரலெழுப்பியபடி நடந்தன.

“இவள் முடிமன்னர் பணியும் பேரரசி. இவள் அருளால் நம் மைந்தன் பாரதவர்ஷத்தை முழுதாள்வான்” என்றார் ஹிரண்யபாகு. “ஆம், நாம் இவள் நோக்கில் எளியோர். ஆனால் இவள் வயிற்றில் அவனுக்கொரு மைந்தன் பிறந்தால் அவன் மன்றில் எழுந்து நின்றாலே போதும், குடிமுடிகள் தலைவணங்கும். கோல்கள் தாழும்” என்றாள் மூதரசி. அரண்மனையே அவளைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதை மூதரசி கண்டாள். பேசாது நின்ற வீரர் விழிகளிலும் அவளே ஒளிவிட்டாள் என்பதை உணர்ந்தாள்.

அரண்மனையில் அவளுடன் வாழ்வதற்கு ஓர் அணிமண்டபத்தை புரூரவஸ் அமைத்தான். அதில் அழகிய மங்கையர் மட்டுமே பணிபுரியும்படி வகுத்தான். கவிதையும் இசையும் நடனமும் மதுவும் இன்னுணவும் காதலின் களி சிறகோய்ந்து மண்ணுக்கு வந்த தருணங்களில் வந்து இணைந்துகொண்டு அவனை மீண்டும் எழச்செய்தன. மண்ணில் கால்தொடுவதே உந்தி விண்ணுக்கு எழுவதற்காகத்தான் என அவன் எண்ணினான்.

அவனை பிறர் நோக்குவதும் அரிதாயிற்று. கதிரையும் நிலவையும் காற்றையும் பனியையும் மழைச்சாரலையும் அவன் அக்காதலின் பகுதியென்று மட்டுமே அறிந்தான்.வானும் மண்ணும் அக்காதலின் களங்கள் என்று மட்டுமே பொருள்சூடின. அவள் அனைத்துமாகி அவனைச் சூழ்ந்திருந்தாள். களித்தோழியாகி சிரித்தாடினாள். குழவியென்றாகி அவன் உளம் குழையச்செய்தாள். அன்னையென்று ஆகி மடியிலிட்டாள்.

காதலில் பெண்ணின் அத்தனை தோற்றங்களும் காதலென்றேயாகி வெளிப்படுகின்றன. சழக்குச்சிறுமகள் என, வஞ்சமகளென, சினக்கொற்றவை என எழுந்து அவனை காய்ந்தாள். அவன் சிறுத்துச் சுருங்க அணைத்து மீண்டெழச்செய்தாள். விலகுதல்போல அணுகுவதற்கு உகந்த வழி பிறிதில்லை. விலகியணுகும் ஆடல்போல காமத்துளியை கடலாக்கும் வழியும் ஒன்றில்லை.

எத்தனை அழகிய சிறுமைகள். அறுந்துதிர்ந்த சிறுமணி ஒன்றுக்கென பெரும்பேழைகள் நிறைய அணிகள் கொண்டவள் நாளெல்லாம் ஏங்கினாள். அதை மீட்டுக்கொடுக்காதவன் என அரசனை குற்றம்சாட்டி ஊடினாள். தோழியொருத்தி சூடிய பொன்னிழையாடை கண்டு முகம் சிவந்தாள். பாணினிக்குக் கொடுத்த சிறுபொருளை மும்முறை எண்ணி கணக்கிட்டாள். மூதன்னை சொன்ன சொல் ஒவ்வொன்றையும் நினைவுகூர்ந்து சொல்லாப்பொருள் கொண்டாள். அவள் நோக்கிலும் நடையிலும் குறைகண்டாள்.

எத்தனை அழகிய மலர்தல்கள்! தெருவில் கண்ட கீழ்மகள் ஒருத்தியின் இடையிலமைந்த கரிய குழந்தையை முகம் மலர்ந்து அள்ளி எடுத்து முலைகள்மேல் சூடிக்கொண்டாள். அதன் மூக்கை தன் பட்டாடையால் துடைத்தாள். அணிந்த அருமணிமாலையைக் கழற்றி அதற்கு அணிவித்தாள். திருடி பிடிபட்டு கழியில் கட்டுப்பட்டிருந்தவனை அக்கணமே சென்று விடுவித்தாள். அவன் சவுக்கடிப்புண்ணுக்கு தானே மருந்திட்டாள். அரியணை அமர்ந்து கொடையளிக்கையில் கைகள் மேலும் மேலும் விரியப்பெற்றாள்.

தாயக்கட்டையென புரண்டுகொண்டே இருந்தாள். காவிய அணிகளுக்கு காட்டுப்பெண்ணென நின்று பொருள்வினவி நகைக்கச் செய்தாள். அதன் மையமென எழுந்த மெய்மையை பிறர் உன்னும் முன்னரே சென்றடைந்தாள். நாளெல்லாம் அணி புனைந்தாள். ஒரு சிறுகுறை நிகழுமெனில் உளம் குலைந்தாள். அணியின்றி மலர்ச்சோலையில் சென்று தனித்திருந்தாள். யாரிவள் என்று ஒவ்வொரு முறையும் எண்ணி குலையச்செய்தாள். எண்ணிய ஒவ்வொன்றையும் தானே அழித்து பிறிதொருத்தி என எழுந்தாள்.

பிறிதொன்றிலாத காமமே காமம் என்று அவன் உணர்ந்தான். காமத்திலாடுதல் பெண்களை பேரழகு கொள்ளச்செய்கிறது. பெண்ணழகு காமத்தை மீண்டும் பெருக்குகிறது. புரூரவஸ் ஏழு பிறவிக்கும் இயன்ற இல்லின்பத்தை அவ்வேழு ஆண்டுகளில் அடைந்தான் என்றனர் கவிஞர். அவள் அவனுடைய ஏழு மைந்தரை பெற்றெடுத்தாள். ஆயுஸ், ஸ்ருதாயுஸ், சத்யாயுஸ், ரயன், விஜயன், ஜயன் என்னும் மைந்தர் அவன் அரசுக்கு உரியவர்களெனப் பிறந்தனர். மைந்தருக்கென நோற்று அவர்கள் அரண்மனையைத் துறந்து காடேகி வேள்விநிகழ்த்துகையில் ஈன்ற தலைமைந்தனாகிய ஜாதவேதஸ் தந்தையின் மெய்மைக்கு வழித்தோன்றல் என்று ஆனான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 17

17. நறுமணவேட்டை

ருத்ரனின் குரல் கேட்டு அவன் விடிகாலையில் உடல்வெம்மை படர்ந்த மெல்லிய சேக்கையில் எழுந்தமர்ந்தபோதும் கனவுக்குள்தான் இருந்தான். “அரசே, முதற்பொழுது எழுந்துவிட்டது” என்று ருத்ரன் சொன்னான். காற்றில் சாளரக் கதவொன்று ர்ர் ர்ர் என மரக்குடுமியில் சுழன்றுகொண்டிருந்தது. அறைக்குள் சிற்றகல் கரிபடிந்த இறகுவடிவ பித்தளை மூடிக்கு அடியில் அனலிதழ் குறுகி எரிந்துகொண்டிருந்தது. அவன் மெல்ல தன்னை திரட்டிக்கொண்டான். இடமும் காலமும் தன்னிலையும் துயிலின்போது விலகிநின்று விழிப்பிற்குப்பின் மெல்ல வந்தமைவதை அவன் முன்னரும் கண்டிருக்கிறான். அவை விழிப்பின் மூன்று நிலைகள் மட்டுமே என கற்றிருக்கிறான்.

கானாடலில் அவனுக்கு முதற்படைத்துணை என இடம் நின்று உடன் வருபவன் அணுக்கனாகிய ருத்ரன். குற்றுடலும் இரட்டை மண்டையும் குரங்குக் கண்களும் கொண்ட முண்டன். அவன் சிறுமைந்தனாக இருக்கையிலேயே உடன் வந்த விளையாட்டுத்தோழன். சிறுவனாகவே உடல் எஞ்சிவிட்டதனால் உள்ளத்தையும் அவ்வாறே அமைத்துக்கொண்டவன். அவனுடன் பேசும் அனைவரையும் சிறுவர்களென்றாக்கும் ஊக்கம் கொண்டவன். ஆனால் சொல்கடந்து நுண்புலம் தேரவும் அவனால் இயலுமென புரூரவஸ் அறிந்திருந்தான்.

அவன் எழுந்த அசைவு காதில் விழுந்ததும் ருத்ரன் மஞ்சத்தறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து அவன் காலருகே நின்று “அரசே, கானகம் சித்தமாகிவிட்டது” என்று அழைத்தான். கனவுக்குள் காட்டிலொரு குரங்கென தாவிக்கொண்டிருந்ததை எண்ணினான். அக்கனவுக்குள் நுழைந்து வந்த ருத்ரன் “நகர்புக பொழுதாகிவிட்டது, அரசே” என்றான். கிளையிலாடியபடி “இன்னொரு நாள்” என்றான் புரூரவஸ். “நகர் காத்திருக்கிறது, அரசே” என்றான் ருத்ரன். “இன்னும் ஒரு நாழிகை” என்றான் கெஞ்சலாக. “இப்போதே நாம் புறப்படவில்லையெனில் கோட்டை மூடுவதற்குள் நகரை அணுக முடியாது.”

“இன்னொரு கணம்” என்றபின் திரும்பி பின்காலை ஒளியில் இலையனைத்தும் மலரென மின்னிய காட்டை பார்த்தான். அவன் கைபற்றி “வருக, அரசே!” என்றான் ருத்ரன். “ஆம்” என்று விழித்துக்கொண்டபோதுதான் அவன் தன் மஞ்சத்தை உணர்ந்தான். எழுந்து ஆடையை சீரமைத்தான். சாளரத்துக்கு அப்பால் விண்மீன் பரவிய வானம் வளைந்திருந்தது. குளிர்காற்றில் இலைப்பசுமை மணத்தது.

ருத்ரனைப் பார்த்து “எங்கு செல்கிறோம்?” என்றான். “காடு ஒருங்கியிருக்கிறது நமக்காக. இது இளவேனில் தொடங்கும் காலம்” என்றான் ருத்ரன். அவன் முகம் மலர்ந்து “இங்கு என் சாளரத்தைக் கடந்து வந்த குளிர் காற்றில் முல்லையின் மணம் இருந்தது” என்றான். அவன் வெளியே நடக்க ருத்ரன் உடன் வந்தான். புரூரவஸ் “கனவில் நான் ஒரு குரங்கென கிளைகள் நடுவே பாய்ந்துகொண்டிருந்தேன், ருத்ரரே” என்றான். “ஆம், நம் குலம் அங்கிருந்து வந்தது” என்றான் ருத்ரன்.

“அறியாத பெருங்காடொன்று. அங்கு மானுட உருக்கொண்ட குரங்கென நானிருந்தேன். என்னைச் சூழ்ந்து மரமானுடர் வால்சுழற்றிப் பாய்ந்தனர். அவர்களுடன் நானும் பாய்ந்தேன். எனினும் அவர்களில் ஒருவனல்ல நான் என்றும் உணர்ந்திருந்தேன்” என்றான் புரூரவஸ். “உங்கள் குரல் அங்கு புகுந்துவந்து அழைத்தது. இங்கு எழுந்து ஆடையை சீர் செய்துகொண்டபின்னரும் நெடுநேரம் அக்கனவில் இருந்தேன்” என்றான். ருத்ரன் “கனவுகள் நன்று. ஒரு பேழைக்குள் பிறிதொரு பேழை என நம்மை அவை பெருகச்செய்கின்றன” என்றான்.

புரூரவஸ் “இக்கனவு தொடர்ந்து என்னுள் இருக்கிறது. கனவு கலைந்து எழுந்து நீரருந்தி படுத்த பிறகும் அக்கனவே தொடர்கிறது. தொடர்பற்ற துண்டு வாழ்க்கைத்தருணங்கள் அவை. பொருள்கொண்டு இணைத்தெடுக்க இயலவில்லை” என்றபின் நினைவு கூர்ந்து நின்று “அதில் நான் பிறிதொருவனாக இருந்தேன்” என்றான். ருத்ரன் அவனருகே வந்து “அரசனாகவா?” என்றான். புரூரவஸ் குழம்பியபின் “அரசனைப்போல. ஆனால் அரசன் அல்ல. ஐந்து உடன்பிறந்தாரில் இரண்டாமவன் என எவரோ சொன்ன நினைவுள்ளது” என்றான்.

“உங்கள் மூதாதையரில் எவரும் அவ்வண்ணம் சொல்லும்படி இல்லையே?” என்றான் முண்டன். “அக்காட்டில் மிக அருகில் எங்கோ ஒரு குடிலில் எனக்கென தேவி ஒருத்தி காத்திருப்பதாக உணர்ந்தேன். கிளைகளூடாக பாய்ந்து செல்கையில் என் உடன்பிறந்தார் இருவர் தொடர அவள் சிறுமலர்த் தோட்டமொன்றில் நின்றிருப்பதை கண்டேன். கருநிறமும் வெண்ணிறமும் கொண்ட இரட்டையர் அவர்கள்.” அவன் பெருமூச்செறிந்து “ஐவருக்கும் அவள் ஒரு துணைவி” என்றான்.

“அது நம் குலவழக்கமே” என்றான் ருத்ரன். “ஆனால் நம் கதைகளில் அரசர்கள் என எவரும் அவ்வண்ணம் இல்லை.” புரூரவஸ் “நானும் அதை பலவாறாக எண்ணி நோக்கியிருக்கிறேன். அவர்கள் முகங்கள் அத்தனை தெளிவாக என்னுள் உள்ளன. அவள் முகம் ஒருநாளும் ஒழியாது உள்ளே எழுகிறது” என்றான். ருத்ரன் குரங்குபோல் கண்சிமிட்டி புன்னகைத்தான். பெரிய சோழிப்பல் நிரைகள் அரையிருளில் மின்னின. “தேவி அழகியா?” என்றான். “கரியவள், கருமையிலேயே பெண்ணழகு முழுமை கொள்ளமுடியுமென்று தோன்றச் செய்பவள்” என்றான் புரூரவஸ்.

“யார் கண்டார்? இன்று அவளை நாம் பார்க்கவும் கூடும்” என்றான் ருத்ரன். எரிச்சலுடன் திரும்பிநோக்கி “நான் விளையாட்டென இதைச் சொல்லவில்லை ருத்ரரே, அவள் முகத்தை தெளிவுறக் கண்டேன். நீண்ட விழிகள். சிற்பமுழுமை கொண்ட மூக்கு. அன்னையின் கனிவும் மழலையின் எழிலும் சூடிய உதடுகள். நிமிர்வும் குழைவும் ஒன்றென்றேயான உடல். ஒரு கணமே அவளைக் கண்டேன் என தோன்றுகிறது. அவளை நோக்கி நோக்கி ஒரு முழு வாழ்நாள் இருந்தேன் என்றும் அப்போது தோன்றியது” என்றான்.

“ஐவரா…?” என்றான் ருத்ரன் தனக்குத்தானே என. “நம் குடிப்பிறந்த எவர் முகமேனும் ஒப்பு உள்ளதா?” என்றான். “ஆம். நானும் உள்ளில் அதையே தேடிக்கொண்டிருக்கிறேன். எல்லா முகங்களிலும் அவர்களின் தோற்றம் உள்ளது என ஒரு முறையும் முன்னர் கண்டதே இல்லை என மறுமுறையும் தோன்றுகிறது” என்று புரூரவஸ் சொன்னான். ருத்ரன் “ஆம், முகங்கள் மீளமீளப் பிறக்கின்றன. உள்ளங்கள் தனித்தன்மைகொண்டு முகத்தை மாற்றி வனைகின்றன” என்றான். “அரசே, ஐவர் முகமும் தெரிந்திருக்கிறதா?”

“ஆம். இருவரையே நான் இன்று பார்த்தேன். பிற இருவரையும் மிக அருகிலென நினைவிலிருந்து எடுக்க முடிகிறது. தவத்தோற்றம் கொண்ட மூத்தவர், விழிக்கூர் கொண்ட இரண்டாமவர். அழகர்களான இரட்டையர். இது முற்பிறவியோ என ஐயுறுகிறேன்” என்றான் புரூரவஸ். ருத்ரன் நகைத்து “பிறவிச்சுழலில் முன் என்ன பின் என்ன? இங்கு முடையப்பட்டிருக்கிறது எவ்வகையில் எது என எவருமறியார்” என்றான்.

வெள்ளி எழுந்தபோது கானாடலுக்கான கல்நகைகளும், தோலாடையும், தோள்பட்டையும் அணிந்து களைப்பறியா கரும்புரவியில் படைத்தோழர் புடைசூழ அவன் நகர் நீங்கினான். கல்லடுக்கி மரம் வேய்ந்து கட்டப்பட்ட சிற்றில்கள் நிரைவகுத்த அவன் நகரின் தெருக்களில் இருபுறமும் எழுந்த குடிகள் அரிமலர் வீசி அவன் குடியையும் கொடியையும் வாழ்த்தி ஒப்பக்குரல் எழுப்பினர். கோட்டை வாயிலை அவன் கடந்தபோது கொடி மாற முரசொலி எழுந்தது. தேர்ச்சாலையைக் கடந்து சிற்றாறுகள் இரண்டைக் கடந்து மறுகரை சென்று காட்டுக்குள் புகுந்தான்.

காடு மெல்லிய குளிராக, தழை மணமாக, ஈரமண் மணமாக, மகரந்தப்பொடி கலந்த காற்றாக அவனை வந்து சூழ்ந்தது. பின்னர் பச்சை இலைகளின் அலைக்கொந்தளிப்புக்குள் நீரில் மீனென மூழ்கி மறைந்தான். அவனில் அணியப்பட்டவையும் புனையப்பட்டவையுமான அனைத்தும் அவிழ்ந்து அகன்றன. அவனுடலில் எழுந்த ஒருவனிலிருந்து பிறிதொருவன் என தோன்றிக்கொண்டே சென்றான். பன்னிரு தலைமுறைகளை உதிர்த்து அக்காட்டில் கல்மழு ஏந்தி, செங்கழுகின் இறகு சூடி, தன் குலத்தலைமை கொண்டுநின்ற ஊருபலன் என்னும் முதுமூதாதையாக ஆனான்.

அவனுக்கு உளமறியும் வால் முளைத்தது. கைகளில் காற்றை அறியும் காணாச்சிறகுகள் எழுந்தன. புரவியிலிருந்து தாவி மரக்கிளைகளில் தொற்றிக்கொண்டான். கிளைகள் வளைந்து வில்லென்றாகி அம்பென அவனை ஏவ பிறிதொரு கிளையைத் தொற்றி கூச்சலிட்டபடி தாவினான். நீரில் விழுந்து அலைதெறிக்க நீந்தி எழுந்து பல்லொளிர கூச்சலிட்டான். கரை மென்சதுப்பில் புரண்டு களிமண் சிலையென எழுந்தான். இளவெயிலில் அச்சேற்றுடன் படுத்து உலர்ந்தெழுந்து மீண்டும் நீர்க்களியாடினான். அன்றும் மறுநாளும் அக்காட்டிலேயே பிறிதொன்றிலாதிருந்தான்.

imagesமூன்றாம்நாள் சாலமரத்தில் கட்டிய ஏறுமாடத்தில் ஈச்சைஓலை பரப்பிய மூங்கில் படுக்கையில் மரவுரி போர்த்தி துயின்றுகொண்டிருந்தபோது மீண்டும் அக்கனவு வந்தது. அதில் அவன் சாலமரத்தின் உச்சியில் கட்டப்பட்ட பெருங்குடிலொன்றின் அடுமனையில் அமர்ந்து தன் முன் குவிந்திருந்த ஊன்சோற்றை அள்ளி உண்டுகொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்து அமர்ந்திருந்தனர் உடன்பிறந்த நால்வர். பன்றி ஊனை எடுத்து பற்களால் பற்றி இழுத்து கவ்வி உண்டான். அவனுடலில் ஊறிய ஊற்றுக்கள் அனைத்தும் அச்சுவையை முன்னரே அறிந்திருந்தன. சுவை சுவை என பல்லாயிரம் நாவுகள் துடித்தன. உண்ணும்தோறும் பெருகியது உணவு. தன் உடல் இருமடங்கு பெருத்திருப்பதை அவன் கண்டான்.

தான் யார் என ஒரு எண்ணக்கீற்று எழுந்து ஓடுவதை உணர்ந்து ஒருகணம் உண்பதை நிறுத்தினான். “என்ன, மூத்தவரே?” என்றான் கரிய இளையோன். “நான் ஒரு தொல்மூதாதை, எங்கோ அடர்காட்டில் கல்மணிமாலை அணிந்து கழுகிறகு சூடி நின்றிருக்கிறேன் என்று எண்ணிக்கொண்டேன்” என்றான். புன்னகையுடன் “இப்போதே அப்படித்தான் இருக்கிறீர்கள்” என அவன் சொன்னான்.

“உண்ணுங்கள்” என்றபடி அவன் குலமகள் அருகே வந்து மேலும் அன்னத்தை அவன் முன் வைத்தாள். நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான். இருள்செறிந்த தொல்குகைகளில் அறியா முதுமூதாதையர் கல்கொண்டு செதுக்கிய ஓவியச்சிற்பத்தின் வடிவம். இருளைச் செதுக்கி எடுத்த எழில் என்று தொல்கதைகள் கூறும் தோற்றம். நீண்ட இவ்விழிகள் எவரைப் பார்க்கின்றன? இங்கிருந்துண்ணும் இப்பேருடலனையா? இங்கிருந்து நோக்கும் மண்மறைந்த மூதாதையையா?

விழித்துக்கொண்டு குளிரிலா அச்சத்திலா என்றறியாத நடுக்கத்தில் அவன் நெடுநேரம் படுத்திருந்தான். தன்னை வந்தடையும் விழிப்பு காலைத் தன்னிலையை மிகப்பிந்தி கொண்டுவந்து சேர்க்கிறதா? அந்த இடைவெளியில் நின்று தவிக்கும் அகம் எவருடையது? எங்கு உறைகிறது அது? நீள்மூச்சுடன் எழுந்து குடில்முகப்பில் வந்துநின்று ஓசைகளாக இருளுக்குள் சூழ்ந்திருந்த காட்டை நோக்கினான். பின்னர் ஏணி எனக் கட்டிய கொடி வழியாக தொற்றி இறங்கி இன்னமும் இருள்பிரியாத காட்டினூடாக சுள்ளிகள் ஒடியும் ஒலியெழுப்பி நடந்தான்.

இருள் திரண்டெழுவதுபோல் எதிர்கொண்டு வந்தது பிடியானை வழிநடத்திய யானைக் கூட்டமொன்று. பிளிறி அவன் வருவதை தன் குலத்திற்கு அறிவித்தாள் முகக்கை மூதன்னை. கிளையொன்றில் மலைத்தேனீக்கூடுபோல் கிடந்த கரடியொன்று நீளுகிர்கள் ஒன்றுடனொன்று முட்டி கூழாங்கற்கள்போல ஒலிக்க இறங்கி கையூன்றி உடல் ததும்பி புதருக்குள் சென்று மறைந்தது. நீர்மை ஒளி வளைய சென்றன நாகங்கள். விழிமின்னத் திரும்பி நோக்கிய செவி சிலிர்த்த மான்கணங்கள் கடந்து சென்றன.

புலரி வரை அவன் நடந்து சென்றுகொண்டிருந்தான். எங்கு செல்கிறோம் என்று அவன் உள்ளம் அறிந்திருக்கவில்லை. ஆனால் செல்லும்போது அருகணைகிறோம் எனும் அறியா உணர்வொன்று கூர்கொண்டு அவனை வழிநடத்தியது. முதலொளி எழுந்து இலைத்தழைப்பினூடாக ஆயிரம் விழுதுகளாக காட்டில் இறங்கிநின்ற பொழுதில் முற்றிலும் அறியா நிலமொன்றில் அவன் இருந்தான். கைகளை விரித்து வெய்யோனின் வெள்ளிக் காசுகளை ஏந்தி விளையாடியபடி நடந்தான்.

இன்று என் உள்ளம் ஏன் இத்தனை உவகை கொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டான். உவகைக்கு உவகையே போதுமான ஏதுவாகும் என்று அவன் குலமூத்தார் சொன்னதை எண்ணிக்கொண்டு அதன்பொருட்டும் புன்னகைத்தான். சிறு சுனையொன்றில் மான்கள் நீர் அருந்தும் ஒலி கேட்டது. அவற்றை அப்போதே பார்க்கவேண்டும் என்று எண்ணமெழுந்தது. ஏன் அவ்வாறு தோன்றியதென்று பின்பு பலநூறு முறை அவன் எண்ணியதுண்டு. அவை நீர் அருந்தும் ஒலி விலங்குகள் நீர் அருந்தும் ஒலிபோல விரைவு குறைந்துவரவில்லை. சீரான தாளம்போல் ஒழுகிச்சென்றது என்பதை அவன் உணர்ந்தது பல்லாண்டுகளுக்குப் பின்னர்தான்.

மெல்ல நடந்தபோது அவை மான்களல்ல ஆடுகள் என ஓசை பிரித்தறிந்தான். மான்கள் நீர் அருந்துகையில் அவ்வப்போது தலைதூக்கி இடைவெளி விடுவதுண்டு. ஆடுகளின் மூச்சு மான்கள்போல சீறல்கொண்டதும் அல்ல. அப்பால் மலையூற்று ஊறித்தேங்கிய சிறு சுனையொன்றைச் சூழ்ந்து செறிந்திருந்த மரங்களாலான சோலையை கண்டான். இலைகளுக்கு அப்பால் நீரலை நெளிந்தது. மரங்களின் பசுமையில் நீர் நிறைவு துலங்கியது.

காலையொளியில் சுடர்கொண்டிருந்த இலைத்தழைப்புகளை நோக்கியபடி, மெல்லிய காலடியோசையால் சிறுபசுந்தவளைகளை புல்நுனிகளிலிருந்து தாவித்தெறிக்கச் செய்தபடி, அவன் அச்சோலையை அணுகினான். அவன் வரவை அறிந்த ஆள்காட்டிக்குருவி சிறகடித்து எழுந்து ஓசையிட்டது. புதரில் முட்டையிட்டிருந்த செம்மூக்கன் சிறகொடிந்ததுபோல புல்வெளியில் விழுந்து எம்பிக்குதித்து எழுந்து பறந்து கூவியபடி மீண்டும் விழுந்தது. அவன் அணுகுவதை ஆடுகள் அறிந்துவிட்டிருக்கின்றன எனத் தெரிந்தது. ஆனால் அவன் வேட்டைக்காரனல்ல என்பதை எப்படியோ புல்வாய் விலங்குகள் அறிந்திருந்தன என்பதனால் அவனை அஞ்சி அவை ஓடுவது அரிது.

சோலையை அணுகும்போதே பாரிஜாத மலரின் மணத்தை அவன் உணர்ந்திருந்தான். அணுகுந்தோறும் அந்த மணம் குறைந்து வருவதன் விந்தையை பின்னர்தான் உணர்ந்தான். சோலையின் முகப்பென அமைந்த இரு சாலமரங்களின் அடியில் வந்து நின்றபோது செண்பக மலர்களின் மணமே அவனைச் சூழ்ந்திருந்தது. தான் அறிந்தது செண்பக மணத்தைத்தான், தொலைவில் அதையே பாரிஜாதம் என்று எண்ணிக் கொண்டேன் என்று அவன் எண்ணினான். அது எவ்வண்ணம் என கூடவே வியந்தான். மீண்டும் முகர்ந்தபோது அது மனோரஞ்சிதமா என ஐயம் எழுந்தது. எண்ணிய மணத்தை தான்காட்டும் மலர் என்றால் அது யக்‌ஷரோ கந்தர்வரோ சூடிய மலரா?

சருகுகளில் காலடிகள் ஒலிக்க அவன் உள்ளே சென்றபோது சோலை நடுவே காலை ஒளியை உறிஞ்சிக்கிடந்த சுனைநீரின் அலைவை கண்டான். தாழ்ந்திருந்த மரக்கிளைகளின் அடியில் நீரின் ஒளியலைகள் நெளிந்தன. பின்னர் அவன் தன் இரு ஆட்டுக்குட்டிகளை நீரருந்த காட்டி நின்றிருந்த கரிய கான்மகளை பார்த்தான். ஒரு கணம் உள்ளம் பதறி சொல்லழிந்து முடிவிலியில் பறந்து மீண்டும் திடுக்கிட்டு விழித்து உடல்பொருந்தி எண்ணமென்றாயிற்று. அது உருவெளித்தோற்றம் அல்ல, உளமயக்கும் அல்ல. அணங்கோ என ஐயம் எழுந்து மயிர்சிலிர்த்தான். கால்களை நோக்கி இல்லை எனத் தெளிந்த பின்னரும் நெஞ்சம் துடித்துக்கொண்டிருந்தது.

அவளை அவன் முன்னர் கனவில் கண்டிருந்தான் என்றும் அவன் உடல்கொண்ட மெய்ப்பும் உளம்கொண்ட கொப்பளிப்பும் அதனால்தான் என்றும் பின்னரே சித்தம் உணர்ந்தது. உடன்பிறந்த நால்வருடன் அவன் இருந்த அக்குடிலில் இருந்தவள். அவன் வந்த காலடியோசை கேட்டு முகம் தூக்கி நீண்ட விழிகளால் அவள் நோக்கினாள். முற்றிலும் அச்சமற்ற பார்வை. மடமோ நாணமோ பயிர்ப்போ அறியாது நிமிர்ந்த உடல்.

ஆடுகளும் கீழ்த்தாடையின் தொங்குதாடியில் நீர் சொட்டிவழிய தலைதூக்கி காதுகளை முன்கோட்டி சுண்ணக்கூழாங்கல் என ஒளிவிட்ட கண்களால் அவனை கூர்ந்து நோக்கின. அவற்றின் குறிய வால்கள் துடித்தன. கன்னங்கரிய ஆடு மெல்ல கனைக்க வெண்ணிற ஆடு செருமலோசை எழுப்பியது. பின் அவன் தீங்கற்றவன் என உணர்ந்ததுபோல் மீண்டும் குனிந்து நீரில் தலையை வைத்தது. கரிய ஆடு “ஆம்” என தலையசைத்தபின் தானும் நீரை முகர்ந்தது.

எவர் என்பதுபோல் அவள் புருவங்கள் மெல்ல சுழித்து நெற்றி மடிப்புகொண்டது. வாழைப்பூநிற உதடுகள் மெல்ல விரிந்து உப்புப்பரல் என பல்நிரை தெரிந்தது. அவளை முடிமுதல் அடிவரை கருவறை வீற்றிருக்கும் தேவிமுன் நின்றிருக்கும் அடியவன் என நோக்கினான். ஆயிரம் முறை விழுந்துவணங்கி எழுந்தான் என அத்தருணத்தை பின்னர் அவன் சொற்களாக்கிக்கொண்டான். அரசன் என்றும் ஆண் என்றும் அல்லாமலாகி விழியென்றும் சித்தமென்றும் அங்கு நின்றிருந்தான்.

ஆடுகளை நோக்கி மெல்லிய சீழ்க்கை ஒலி ஒன்றை எழுப்பியபின் அவள் சேற்றில் ஊன்றிய வளைகோலை கையில் எடுத்துக்கொண்டு உலர்ந்து வெடிப்புகள் பரவி தரையோடு வேய்ந்ததுபோல் ஆகியிருந்த கரையில் அவற்றின் பொருக்குகள் உடைந்து ஒலிக்க மேலேறி வந்தாள். நாணல் வகுந்திருந்த வழியினூடாக அவள் காலடிகள் விழுந்து விழுந்து எழுவதை, அவள் அணிந்த மான்தோல் கீழாடை நெளிவதை அவன் பிற ஏதுமில்லாத வெளியில் கணம் கணமென அசைவு அசைவு என கண்டான்.

அவள் அணிந்திருந்த வெண்கல்மாலை உன்னிஎழுந்த இளமுலைகளின்மேல் நழுவிப்புரண்டது. இடையில் அணிந்திருந்த கல்மேகலை நெற்றுபொலிந்த செடிபோல மெல்ல ஒலித்தது. மான்தோலாடை தொடைவரை சுற்றி அதன் நுனியை எடுத்து முலை மறைத்து வலத்தோளில் செலுத்தி சுழற்றிக் கட்டியிருந்தாள். கைகளில் எருதின் கொம்புகீறி நுண்செதுக்குகளுடன் செய்த வளையல்கள். கால்களில் மென்மரத்தால் ஆன சிலம்பு. காதுகளில் ஆடின செம்மணிக் கல்லணிகள். மூச்சில் வியர்த்த மேலுதடுகளுக்கு மேல் புல்லாக்கின் நிழல் அசைந்தது.

அவன் அருகே வந்து “யார்?” என்று அவள் கேட்டபோது திடுக்கிட்டு விழித்துக்கொண்டு நீள்மூச்சுடன் “என் பெயர்…” என்றான். ஒரு கணம் தன் பெயரே தன் நினைவிலெழாத விந்தையை உணர்ந்து தடுமாறி இடறிய குரலில் “நான் அரசன்” என்றான். மீண்டும் சொல்சேர்த்து “நகரத்தவன்” என்றான். அவள் இதழ்கள் விரிய, கொழுவிய கன்னங்களில் மெல்லிய மடிப்புகள் எழ, பற்கள் ஒளியுடன் விரிய புன்னகை செய்து “பெயரில்லாத அரசனா?” என்று கேட்டாள். “ஆம்” என்று சொல்லி உடனே “இல்லை” என்று பதறி பெருமூச்சுவிட்டான். அவள் சிறிய ஒலி எழ சிறுமியைப்போல் வாய்பொத்தி தோள்குறுக்கி சிரித்தாள்.

அவன் தத்தளித்து மூச்சுத்திணறி தன் பெயரை கண்டடைந்தான். “என் பெயர் புரூரவஸ்” என்றான். உடனே சொல்பெருக “புதனுக்கு இளையில் பிறந்த மைந்தன். இங்கு காட்டு அரசனான ஹிரண்யபாகுவின் மைந்தனாகப் பிறந்தேன். உத்தரகுரு நாட்டை ஆள்கிறேன்” என்றான். அவள் விழிகளில் நகைப்பு மின்ன “தன் பெயரை இத்தனை எண்ணிச்சூழ்ந்து உரைக்கும் ஒருவரை முதல்முறையாக பார்க்கிறேன்” என்றாள். “நான் என்னை ஒரு கணம் பிறிதொருவனாக உணர்ந்தேன். பிறிதேதோ பெயர் என் நாவில் எழுந்தது” என்றான்.

புருவம் சுருங்க அவள் “யார்?” என்றாள். “என் கனவில் எழுந்த ஒருவன்… இன்னும் வாழ்ந்திராதவன்” என்றான். “விந்தைதான்” என்று அவள் சொன்னாள். “முதற்கணம் உங்களைப் பார்த்தபோது முன்பு எப்போதோ கனவில் கண்ட ஒருவர் என்றுதான் நானும் எண்ணினேன். அம்மயக்கத்தை இந்தச் சுனைச்சரிவில் ஏறி வருகையில் ஒவ்வொரு காலடியாலும் கலைத்து இங்கு வந்தேன்” என்றாள். அவன் அவள் விழிகளை நோக்கி “உன் பெயர் என்ன, கன்னியே?” என்று கேட்டான். “சியாமை” என்று அவள் சொன்னாள். “நான் இங்கு காட்டை ஆளும் அரசனாகிய கருடபக்‌ஷனின் மகள்.”

“உன்னை முன்னர் இங்கு பார்த்ததே இல்லை. இந்த அடர்காட்டில் என்ன செய்கிறாய்?” என்றான். அவள் “இவை நான் வளர்க்கும் ஆடுகள். இவற்றுடன் இக்காட்டில் உலவுவதே என் விளையாட்டு” என்றாள். “இவற்றை கால்போனபோக்கில் விட்டு நான் தொடர்ந்து செல்வேன். அவற்றை என் உள்ளம் என்பார்கள் என் தோழிகள்.” இரு ஆடுகளும் சற்று அப்பால் சென்று உதிர்ந்த மலர்களையும் பழுத்த இலைகளையும் பொறுக்கித் தின்னத் தொடங்கிவிட்டிருந்தன.

அவன் திரும்பி இரு ஆடுகளையும் பார்த்தான். “இனியவை” என்றான். “கரியது ஸ்ருதன். வெண்ணிறமானது ஸ்மிருதன். இவை இரண்டும் எப்போதும் என்னுடன் இருக்கும். இரவில் என் படுக்கையின் இரு பக்கமும் இவற்றை கட்டி இருப்பேன். விழித்துக்கொண்டதும் முதலில் இவற்றையே பார்ப்பேன். பகல் முழுக்க இவற்றுடனேயே இருப்பேன்” என்றாள். “இரவில் விழித்துக்கொண்டு இவற்றின் கண்கள் ஒளிவிடுவதைக் காணும்போது நான்கு விண்மீன்கள் எனக்கு காவலிருப்பது போலிருக்கும்.”

இருவரும் தங்கள் சொற்களை கைமாறிக்கொண்டனர். விழிகளால் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டே இருந்தனர். சியாமை புரூரவஸின் தோற்றத்தை அன்றி பிறிதெதையும் அறியவில்லை. அவளிலிருந்து பேருருவம் கொண்டு எழுந்த ஒருத்தி அப்பொன்னிற உடலை ஒவ்வொரு தசையாக நரம்பாக அசைவாக மெய்ப்பாக நோக்கிக்கொண்டிருந்தாள். அப்பெண்ணின் உள்ளங்கையில் அமர்ந்து பிறிதொருத்தி எளிய சொற்களால் சூதுகளம் ஒன்றமைத்து அவனை ஈர்த்தும் அணுகுகையில் விலக்கியும் விலகியபின் மீண்டும் நெருங்கியும் ஆடினாள்.

புரூரவஸ் அவள் விழிகளையன்றி பிறிதெதையும் அறியவில்லை. முலைச்சுவை மறவா சிறுகுழந்தையொன்று அவனுள் இருந்து எழுந்து அவள் மடியில் படுத்து மலர்மென்மை கொண்ட கால்களை நெளித்து, சிறுகட்டை விரல் சுழித்து, காற்றை அள்ளிப்பற்றியது போன்று சிறுகை குவித்து விளையாடியது. பாலாடை படிந்து பார்வை மறைந்த பைதல் பருவமென்பதால் அவள் விழிகளும் இதழ்களின் மணமுமன்றி ஏதும் அவனை சென்றடையவில்லை. அவள் சுவையை எண்ணி இதழூறி வழிய சொல்லிலா குதலைமொழிகளுடன் அவன் அவள் அருகே இருந்தான். அப்போது அவன் அந்த மலர்மணத்தை அறிந்தான். அதுவரை அறியாததாக இருந்தது அது. பிறிதொன்றிலாது வந்து சூழ்ந்துகொண்டது.

நூல் பதின்மூன்று – மாமலர் – 16

16. அறமென்றமைந்தோன்

இளவேனில் எழுந்தபின் தோன்றும் முதற்கதிர் முதல் மலரைத் தொடுவதற்கு முன் தங்கள் முலைதொட வேண்டுமென்று தேவகன்னியர் விழைவதுண்டு. அவர்கள் அழகை பொன்கொள்ளச் செய்யும் அது. தன் தோழியர் எழுவருடன் இமயச்சாரலில் அமைந்த சௌகுமாரியம் என்ற சோலையை அடைந்து அங்கு ஓடிய சிறு காட்டாற்றில் பாய்ந்து நீராடி ஈரக்குழல் உதறி கரையேறி மலர்செறிந்த மரக்கிளைகளில் தொங்கி ஊசலாடி விளையாடிக்கொண்டிருந்தாள் ஊர்வசி. நீந்துகையில் மீன்களென்றும் கிளை தாவுகையில் கிளிகளென்றும் ஓடி ஒளிகையில் வெண்முயல்கள் என்றும் புதர்கள் ஊடே தாவுகையில் மான்களென்றும் அவர்கள் உருமாறினர்.

அப்போது அவ்வழியே கருமுகில்தேர் ஒன்றில் ஏறி கேசி என்னும் அரக்கன் தன் ஏழு படைவீரர்களுடன் சென்றுகொண்டிருந்தான். அவன் நீளக்கருங்குழல் காற்றிலெழுந்து நூறு யோசனை தொலைவுக்கு அலையலையென பறந்து கொண்டிருந்தது. அதன் இருளால் கருக்கல்வானம் மேலும் இருண்டது.  முதலொளிக்கு முன் தன் இருளுலகம் சேர்ந்துவிடவேண்டும் என அவன் விரைந்துகொண்டிருந்தான்.

இளவேனில் எழுந்ததும் முதற்சேவல் மரக்கிளையில் ஏறி நின்று செங்கனல் கொண்டையைச் சிலிர்த்து சிறகடித்து “எங்கோ எழுந்தருளாயே! எங்கோ எழுந்தருளாயே!” என்று கூவியது. கீழ்வான் விளிம்பில் அருணனின் தேர்ப்புரவிகளின் குளம்புத் தடங்கள் சிறு செந்நிறத் தீற்றல்கள் எனத் தோன்றலாயின. “வருக, எம் தேவா!” என்று கூவியபடி நாகணவாய்கள் துயிலெழுந்தன. உள்ளான்களும் காகங்களும் காற்றில் எழுந்து சிறகசைத்து களியாட்டெழுப்பின. தேர்முகம் தெளிந்து கிழக்கே ஒளியரசன் வானிலெழுந்து செங்கதிர்முடி துலங்கி வந்தான்.

முதற்கதிர் வந்து மலர் தொடும்போது அவற்றுக்குமேல் தங்கள் மெய்யுருக் கொண்டு பொன்முலைகளைத் திறந்து காத்து நின்றனர் தேவகன்னியர். அவ்வான் மீது கரிய அலையெனப் பறந்த கேசியின் தலைமுடி சூரியக்கதிரை மறைத்தது. சினம் கொண்ட ஊர்வசி சலிப்போசையிட்டபடி அக்குழலை தன் கையால் பற்றி வீசி விலக்கினாள். ‘யார் அது?’ என திரும்பி நோக்கிய கேசி கதிர்கொண்டு பொன்பூசி நின்ற ஊர்வசியை கண்டான்.

அக்கணம் அவன் பிறிதெதையும் எண்ணவில்லை. தேரைத் திருப்பி பாய்ந்துவந்து அவளை அள்ளித்தூக்கி தன் தேரிலேற்றி “செல்க, என் அரண்மனைக்கு!” என்று தேர்ப்பாகனுக்கு ஆணையிட்டான். இருளுருக்கொண்ட தேர்ப்புரவிகள் குளம்பறைய தென்னிருள் நோக்கி விரைந்தன. ஊர்வசி கைநீட்டி அலறினாள். கீழே இருந்த அவள் தோழிகள் வெண்நாரைகளாக சிறகுகொண்டு பறந்து அவனைத் துரத்தினர். கரிய கூகைகளாக எழுந்த கேசியின் வீரர்கள் அவர்களை சிறகுகொய்து மண்ணில் வீழ்த்தினர்.

வான்வழியே அவர்கள் செல்லும்போது கங்கையில் புதுப்புனலாடி ஒளியலைத்த நீர்ப்பரப்பைப் பிளந்து பொன்னொளிரும் வெற்றுடலுடன் எழுந்து கரைவந்து ஈரக்குழலை உதறி தோள்மேல் பரப்பி விரல்களால் நீவியபடி நின்றிருந்த புரூரவஸ் தன்மேல் விழுந்து மறைந்த நிழலைக்கண்டு நிமிர்ந்து நோக்கினான். அவன்மேல் விழுந்த முதற்கதிரின் ஒளி வேள்வி விறகின் மேல் எழுந்த தென்னெரியென சுடர்ந்தது. அவனை நோக்கி கைவீசி  “என்னை காத்தருள்க, அரசே!” என்று ஊர்வசி கூவினாள்.

மின்விரைவில் கடந்து சென்ற கருந்தேரைக் கண்டதுமே புரூரவஸ் கையருகே இருந்த தன் உடைவாளை மட்டும் எடுத்துக்கொண்டு பாய்ந்து அருகணைந்த தன் புரவியிலேறி அதை விண்ணில் பாய்ந்தெழச் செய்தான். ஒளிமேல் காலூன்றும் திறன் கொண்டிருந்த அவன் புரவி வானிலேறி மிதந்து கேசியின் விண்தேரைப் பின்தொடர்ந்து சென்றது. தேரின் குடைத்தூணில் கேசியின் கருங்குழலினால் பன்னிருமுறை சுற்றிக் கட்டப்பட்டு நின்றிருந்த ஊர்வசி வெண்நிறக் குஞ்சிமுடி பறக்க பாற்கடல் அலையென பாய்ந்துவந்த புரவிமேல் வெற்றுடலுடன் வாளேந்தி அமர்ந்திருந்த புரூரவஸைக் கண்டு விழிமலர்ந்து நோக்கினாள்.

கேசியைத் துரத்தி மறித்த புரூரவஸ் தன் உடைவாளால் அத்தேரின் விளிம்புகளில் நின்று வில்லும் வேலுமேந்தி போரிட்ட அரக்கர்களின் பறக்கும் கூந்தலை வெட்டினான். அவர்கள் பாறைகள்போல சென்று மண்ணில் விழுந்தனர். அங்கு எழுந்து நின்று பறக்கமுடியாமல் கைவீசி கூச்சலிட்டனர்.  கேசியின் கூந்தலை வெட்டி கீற்றுகளாக பறக்கச்செய்தான். அவை மண்ணில் இறங்கிப்படிய விண்பறவையின் சிறகுகள் அவை என அங்கே கன்று மேய்த்திருந்த ஆயர் கூச்சலிட்டு மேலே நோக்கினர்.

குழலறுபட்டு தேர்த்தட்டில் விழுந்த கேசியைப் பற்றி வாளால் அவன் தலையை முற்றிலும் மழித்தான். தன் ஆற்றலனைத்தும் இழந்து வெறும் உடலென தேர்த்தட்டில் கிடந்த கேசியை அவன் ஆடையைக் கொண்டே கைகள்பிணைத்து தேரில் இட்டான். முடியாலான கட்டுகள் அறுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஊர்வசி அவனை நோக்கி “நன்று செய்தீர் அரசே, இதை நினைத்திருப்பேன்” என்றாள்.

“நீ யார், அழகியே? கான்தேவதையா? விண்ணுலாவியா? நீர்மகளா? மண்ணில் எப்பெண்ணும் இப்பேரழகு கொண்டு நான் பார்த்ததில்லை” என்றான் புரூரவஸ். ஊர்வசி “நான் அமராவதியின் ஊர்வசி. இது உங்கள் உளம்கொண்ட என் தோற்றமே” என்று புன்னகைத்தபின்  “வருகிறேன்” எனச் சொல்லி ஒரு பொற்கிளியாக மாறி சிறகடித்து எழுந்து காற்றில் பறந்து மறைந்தாள்.

அமராவதிக்குத் திரும்பி வந்த ஊர்வசி கிளம்பிச்சென்றவளாக இருக்கவில்லை. அவள் விழிகள் உள்நோக்கி திரும்பிவிட்டிருந்தன. விரல்நுனிகளில் எப்போதும் மென்பதற்றம் இருந்தது. இரு கால்களும் இணையாக நிலத்தூன்றவில்லை. இடை ஒசிந்து தோள் நிலையழிந்து காற்றில் உலையும் மலர்க்கொடி என்றிருந்தாள். எண்ணங்களில் எங்கெங்கோ சென்று நீள்மூச்சுடன் திரும்பிவந்தாள். கைநகம் கடித்து இமை தாழ்த்தி அமர்ந்து ஏங்கினாள். சிற்றொலியில் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு எங்குளோம் என உணர்ந்து நீள்மூச்செறிந்தாள். அவளிடம் நிகழ்ந்த மாற்றங்களை தோழியர் அறிந்தனர். அவளுக்கு நிகழ்ந்ததென்ன என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அந்நாளில் இந்திரன் அவைக்கு விண்ணுலாவியாகிய நாரதர் வந்தபோது அவரை மகிழ்விக்கும்பொருட்டு ஸ்ரீநிருத்யம் என்னும் பெருங்கூத்தை அவையில் நிகழ்த்தும்படி இந்திரன் ஆணையிட்டான். பாடகியர் இரு நிரையாக அமர்ந்து பாற்கடலில் துயில்பவனின் பேரழகை அவன் நெஞ்சில் அணிந்த அருமணியாகிய துணைவியின் பொன்றாப் பொலிவை போற்றிப்பாடினர். திருமகளாக நடனமங்கையர் நடுவே ஊர்வசி கால்விரல் முதல் நெற்றி வகிடு வரை நூற்றெட்டு அணிகளை அணிந்து நின்றாள். இளம்பச்சைப் பட்டாடை சுற்றி குழலில் மலர்சூடி இவளே அவளென்று நாரதர் முதலிய முனிவரும் விழிமயங்கும்படி தோன்றினாள்.

ஆடல் தொடங்கியது. சொல் ஒவ்வொன்றும் விரல் அசைவாக மாறுவதை அவையோர் கண்டனர். இசையென்பது உடலசைவாகி தாளம் காலடிகளாகி பாடல்கொண்ட பொருளனைத்தும் விழிமின்னல்களாகி ஓர் உடலில் ஒரு காவியம் நிகழ்ந்தது. தன்னை திருமகளென்றே ஆக்கி அங்கு நிறைந்திருந்தாள் ஊர்வசி. பொன்னொளிர் பேருடல் என ஓருடல் என்று ஒரு வரி பாடலில் எழுந்தபோது நாணத்தால் கண்சிவக்க முகம்கன்ற உடல் சற்று சிலிர்த்து நிலையமைந்து அவள் காட்டிய முத்திரையைக் கண்டு இசைமுனிவராகிய நாரதர் சினந்தெழுந்தார்.

“நிறுத்து!” என்று கூவினார்.  “நிறுத்துக! நிறுத்துக! ஆடலை நிறுத்துக!” என்று கைவிரித்து கூச்சலிட்டபடி அவை நடுவே வந்தார். உடனாடிய மங்கையர் திகைத்து நிலைமண்டிலத்தில் கால்பரப்பிவைத்து நின்றுநோக்க ஊர்வசியை அணுகி  “நீ ஆடியதென்ன? உன் கைவிரல் இங்கு மலர்ந்து சொன்னதென்ன?” என்றார்.  “நான் அறிந்து ஆடவில்லை, முனிவரே. இது அதுவாக ஆகி ஆடிய நடனம்” என்றாள் ஊர்வசி. பெருஞ்சினத்துடன் “நீ காட்டிய கைமுத்திரை விண்ணளாவ விரிந்தவனுக்குரியதல்ல. அது மானுடனை சுட்டுகிறது” என்றார் நாரதர்.

புரியாமல் திகைத்து பிற பெண்களைப் பார்த்தபின் இடையில் கைவைத்து ஒசிந்துநின்று  “என்ன பிழையென்று நான் அறியக்கூடவில்லை, முனிவரே” என்றாள் ஊர்வசி.  “நீ காட்டியது ஆழிவண்ணன் உடலை அல்ல. மானுட உடலை” என்றார் நாரதர். “நீ அவனுக்கு மானுடன் ஒருவனை இணை வைத்தாய். இழிமகளே, தேவகன்னியர் எண்ணவும் ஒண்ணாத செயல் ஒன்றைச் செய்தாய்.”

அப்போதுதான் அனைத்தையும் உணர்ந்தாள். ஆனால் அச்சமோ துயரோ கொள்ளாமல் முகம் மலர்ந்து இதழ்களில் புன்னகை விரிய கண்களில் ஒளியுடன் “ஆம்” என்றாள். தோழியரை விழிநுனியால் நோக்கியபடி நாணித்தலைகுனிந்து  “அதை நன்குணர்கிறேன்” என்றாள்.  “முனிவர் மகளெனப் பிறந்தவள் நீ. தெய்வங்களுக்குரிய மலரென இங்கிருப்பவள். மானுடனை எண்ணி எப்படி காமம் கொண்டாய்?” என்று நாரதர் கூவினார். “ஓடையின் திசையை அது முடிவு செய்யமுடியாதென்பார்கள், முனிவரே” என அவள் மெல்லிய குரலில் சொன்னாள்.

நாரதர் கைநீட்டி “இனி நீ இங்கிருக்கலாகாது. உன்னுள் குடியேறிய இந்நஞ்சு முற்றிலும் நொதித்து அமுதென்றாகி ஒளிகொண்டபின் இங்கு மீண்டுவருவதே முறை. நீ விழைந்த மானுடனை அடைக! அவன் எல்லையை அறிந்து  கடந்து தெய்வகன்னியாக உன்னை உணர்கையில் இங்கு மீள்க!” என்றார்.

“அத்தீச்சொல் ஏற்ற ஊர்வசி கிளையிலிருந்து உதிரும் மலரென மண்ணில் விழுந்தாள்” என்றான் முண்டன். அவன் உடலிலேயே புரூரவஸின் விரைவை, கேசியின் ஆற்றலை, ஊர்வசியின் ஆடலை, நாரதரின் சினத்தை நோக்கிக்கொண்டிருந்த பீமன் எண்ணம் அறுபட்டு மீண்டுவந்தான்.  நிமிர்ந்து அமர்ந்து “சொல்க!” என்றான்.

அவன் அருகே வந்து முழந்தாளிட்டு அமர்ந்து நிமிர்ந்து அவன் விழிகளை நோக்கி முண்டன் சொன்னான் “ஊர்வசி மண்ணுக்கு வந்தாள். அவளை புரூரவஸ் கண்டடைந்தார். மண்ணிலவள் தோன்றிய இடம் இது. இச்சுனைக்கரையில் இந்தச் சோலையில் தான் புரூரவஸ் ஒரு காட்டு இளம்கன்னியாக அவளை கண்டடைந்தார்.”

பீமன் திரும்பி ஆலயக்கருவறைக்குள் அமர்ந்திருந்த கரிய சிலையின் முகத்தைப் பார்த்தான். மாறாக்குமிண்சிரிப்பும் நிலைநோக்கும் கொண்டிருந்தாள். கல்லில் எழுந்த கண்ணொளி காலத்தை அறியாது என அவன் எண்ணிக்கொண்டான். “அன்னையின் ஆலயமுகப்பில் இருக்கிறோம். அவள் அனைத்தையும் அறிக!” என முண்டன் சொன்னான். “என்னிடம் மாயக்கலை ஒன்றுள்ளது. அதைப் பற்றும் உளஉறுதியும் தொடரும் விரைவும் உங்களுக்கிருக்குமென்றால் இக்காலத்திலிருந்து பெயர்த்தெடுத்து உங்களை அக்காலத்திற்கு கொண்டு செல்வேன்.”

பீமன் அருகே அவன் முகம் வந்தது. விழிகள் முடிவிலி திறக்கும் இரு துளைகளெனத் தெரிந்தன. “புரூரவஸாக உங்களை ஆக்குவேன். காலம் கடந்து அங்கு சென்று உங்கள் மூதாதை என ஆகி இங்கு வந்து அன்று நிகழ்ந்ததை மீண்டும் நடிக்க வைப்பேன். அன்று முதல் இன்று வரை மானுடம் அறிந்த அனைத்து அறிதலும் உங்களுடன் இருப்பதனால் அன்று நிகழ்ந்ததை விழைந்தால் நீங்கள் இன்று மாற்ற முடியும். அனைத்துத் தருணங்களையும் பிறிதொன்றென அமைக்க முடியும்.”

“அறியாக் கன்னியென மண்ணில் வந்த ஊர்வசியிடம் புரூரவஸாக நின்று உங்கள் உளத்தெழுந்த வினாவை கேட்க முடியும்.” பீமன் விழிசுருக்கி “எவ்வினாக்களை?” என்றான். “உங்களை இங்கு இவ்வண்ணம் நிறுத்துவனவற்றை, இங்கிருந்து மேலும் எழாது எடையளிப்பவற்றை.” பீமன் தன் மெல்லிய செந்தாடியைத் தடவியபடி அவனை நோக்கிக்கொண்டிருந்தான். “ஐயுற வேண்டாம், நான் உங்களை அங்கு கொண்டு செல்வேன்” என்றான் முண்டன். “அது ஓர் உளமயக்கா?” என்றான் பீமன். “இப்புவியில் நிகழும் மானுட வாழ்க்கை யாவும் ஓர் உளமயக்கே. உளமயக்குக்குள் எத்தனை உளமயக்கு நிகழ்ந்தாலென்ன?” என்றான் முண்டன்.

மீண்டும் ஏதோ சொல்ல நாவெடுத்தபின் தன்னை கலைத்துக் கூர்த்து  “நன்றி முண்டரே, நான் சித்தமே” என்றான் பீமன். “ஒன்று கேளுங்கள்! நீங்கள் அங்கு செல்வது மட்டுமே என் திறனால் அமையும். மீண்டு வருவது உங்கள் விழைவே. மீண்டு வரவேண்டாம் என்று தோன்றியதென்றால் நான் ஒன்றும் செய்ய இயலாது” என்றான் முண்டன். புன்னகையுடன் “ஆகுக!” என்றான் பீமன்.

தன் கைகளை விரித்த முண்டன் வலக்கையிலொரு சிறு வெண்மலரை வைத்திருந்தான். இடக்கையில் ஒரு கூழாங்கல். அதை பீமன் முன் நீட்டினான். “இது விண்ணிலிருந்து உதிர்ந்த மலர். இது அவளை நாடிச்செல்லும் ஒரு மானுடன். இதைத் தொடுக!” என்றான். பீமன் கை நீட்டி அந்தக் கூழாங்கல்லை தொட்டான். “செல்க!” என அவன் சொன்னான். அது ஒரு கனவென்று அவன் எண்ணினான். கனவுக்குள் என அவன் குரல் ஒலித்தது. “செல்க…” பீமன் இனிய துயிலில் என உடல்தளர்ந்தான். ஆம் கனவேதான் என்று சொல்லிக்கொண்டான். “செல்க!” என மீண்டும் எங்கோ முண்டனின் குரல் ஒலித்தது.

imagesவேட்டைக்குச் செல்வதை புரூரவஸ் ஒருபோதும் விரும்பியிருந்ததில்லை. அரசர்கள் மாதம் இருமுறை வேட்டை கொள்ளவேண்டுமென்பது அரண்மனையின் நெறிகளில் ஒன்றென கடைபிடிக்கப்பட்டது. அரண்மனைகள் உருவாவதற்கு முன்பு காட்டுக்குடிலின் மீது குலக்கொடி நாட்டி கொந்தைமுடி சூடி கல்பீடத்தில் அமர்ந்து பசுங்கோல் ஏந்தி ஆண்ட அக்காலத்தில் இருந்தே அரசர்களுக்கு அது முறையென குலமூத்தார் கூறினர். குலநெறி பிழைக்கவேண்டாம் என்பதனால் அவன் வேட்டையை வெறும் கானாடலாக ஆக்கிக்கொண்டான்.

அவன் இளவயது முதலே ஊனுணவை முற்றிலும் தவிர்த்திருந்தான். அறியாச் சிறுவனாக இருக்கையில் ஒருநாள் அரண்மனை முற்றத்தில் அமைந்த அணிக்குளத்தில் ஆம்பலும் குவளையும் மலர்ந்திருக்க ஊடே துள்ளி வெள்ளிஒளி காட்டி அலைவளயங்களின் நடுவே மூழ்கி களியாடிக்கொண்டிருந்த இளமீன் ஒன்றை இலைகள் நடுவே வெண்மலரோ என விழிமாயம் காட்டி அமைந்திருந்த கொக்கு சவுக்கென கழுத்தைச் சொடுக்கி கவ்விச் செல்வதை அவன்  கண்டான்.

பதறியபடி “அன்னையே! அன்னையே!” என்று கூவி அழுது அதைத் தடுக்க பாய்ந்து சென்றான். சிறகுக் காற்று அவன்மேல் பட சிவந்த நீள்கால்களின் மடிந்த உகிர்களில் பற்றிய துள்ளும் மீனுடன் கொக்கு எழுந்து அப்பால் நின்றிருந்த சிறுமஞ்சணத்தி மரத்தின் கிளையில் அமர்ந்தது. நிகழ்ந்ததென்னவென்று அப்போதும் அறியாது நிலைத்துறைந்த மீனின் விழிகளை அவன் பார்த்தான். இறுதிச் சொல் உறைந்திருந்த திறந்த வாயின் பற்கள் புன்னகை எனத் தெரியக்கண்டு பதைத்து நின்றான்.

வால் சுழற்றித் துள்ளும் மீனின் கண்களைக் கொத்தியது கொக்கு. பின் அதை கவ்வித் தூக்கி கழுத்து வளைத்து நேராக்கி அலகுக்குள் செலுத்தி கிளையிறங்கும் நாகமென தலை நெளித்து விழுங்கியது. கொக்கின் கழுத்துக்குள் துடித்தபடி செல்லும் மீனை அவன் கண்டான். கைகால்கள் வலிப்புற மல்லாந்து விழுந்தான். வாயோரம் நுரை வழிய விழிகள் மேலெழுந்து செல்ல தரையில் கிடந்தவனை செவிலியர் ஓடிவந்து தூக்கி மடியிலிட்டு நீர் தெளித்து கன்னம் பற்றி உலுக்கினர்.

மேலே செருகிய விழி மீண்டதும் அள்ளி அன்னையைப்பற்றி அவள் முலைக்குவடுகளுக்குள் முகம் புதைத்து உடல் குலுங்க விசும்பி அழுதான். “என்ன ஆயிற்று? என்ன ஆயிற்று?” என்று செவிலியர் அவனை தேற்றினர். பிறர் அவனைத் தொடும் ஒவ்வொரு தொடுகைக்கும் உடல் அதிர்ந்து கூசி அட்டையென வளைந்தொடுங்கிக்கொண்டான். அள்ளி அவனை கொண்டுசென்று வெண்பட்டுச் சேக்கையில் படுக்க வைத்தனர். அவன் சித்தத்தை திருப்பும்பொருட்டு பொன் வளையல்கள் குலுங்க கைகொட்டி கொஞ்சினர். அவன் உடல் தொட்டு கூச்சமூட்டினர். அன்னை அவன் தலையை தன் மடியில் எடுத்துவைத்து புன்தலை மயிரை விரலால் அளைந்தபடி “ஒன்றுமில்லை மைந்தா, ஒன்றுமில்லை” என்றாள்.

அவன் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது. இரு கைகளும் விரல் ஒன்றுடனொன்று ஏறிப்புரண்டு இறுகியிருந்தன. கழுத்து வலிபட தூக்கில் தொங்குபவன் போன்று அவன் கால்கள் இழுபட்டிருந்தன. ஏழு நாட்கள் ஒளியை அஞ்சி இருளுக்குள்ளேயே கிடந்தான். சிற்றறையின் கதவு சற்றே திறந்து செவிலி உள்ளே வரும் ஒளி விழிபட்டபோதே அலறியபடி எழுந்து இருண்ட மூலைக்கு ஓடி ஒடுங்கிக்கொண்டான். அறியாத எவரைக் கண்டாலும் அஞ்சி கண்களை மூடிக்கொண்டு மெத்தையில் உட்புறமாகக் கவிழ்ந்து புதைய முயன்றான். “அன்னையே அன்னையே அன்னையே” என்ற ஒரு சொல்லன்றி எதுவும் அவன் நாவில் எழவில்லை.

அரண்மனை மருத்துவர்கள் அவனை நோக்கியபின் “எதைக் கண்டோ அஞ்சினார் இளவரசர்” என்றனர். நிமித்திகர் அவன் நாளும் கோளும் நோக்கியபின் “அவர் முன் ஏதோ இருட்தெய்வம் எழுந்து முழுதுரு காட்டியது, அரசி” என்றனர். கவடி நிரத்தி சோழி பரப்பி பன்னிருகளக் கணக்குகள் இட்டு மீண்டும் மீண்டும் கலைத்து நோக்கியும் அத்தெய்வம் ஏதென்று அறியக்கூடவில்லை. இருட்தெய்வங்கள் எழுந்தால் பன்னிருகளத்தின் நான்கு முனையிலும் வைத்த அகல்சுடர்கள் அணையுமென்றும் தொட்டுவைத்த மஞ்சள் பொட்டுகள் குருதிச் சிவப்பு கொள்ளுமென்றும் நூல்கள் கூறின.

ஆனால் மங்கலத்தெய்வம் எழுந்ததுபோல சுடர் புகையற்று அசைவிழந்து நின்றது. மஞ்சள் பொன்னொளி கொண்டது.  அஞ்சி நடுங்கி உடல் வலிப்புற்று சேக்கையில் கிடந்த மைந்தனை நான்கு சேடியர் தூக்கிக்கொண்டு வந்து பன்னிருகளம் முன் இடப்பட்ட மான்தோல் மஞ்சத்தில் அமர்த்துகையில்  அவர்கள் அறிந்திராத இன்மணமும் எழுந்தது. “களத்தில் எழுந்துள்ளது நற்தெய்வமே” என்றார் நிமித்திகர். ஆனால் பற்கள் கிட்டிக்க, நீல நரம்புகள் சென்னியில் புடைத்து கழுத்தில் இறங்கி தோள்பரவி மணிக்கட்டில் பின்னி கைவெள்ளையில் தெளிய, கண்கள் சுழன்று மேலேற, உடல் துள்ளி விழ அப்பெருந்துயரம் அச்சிற்றுடலில் ஏன் எழுகிறது என அவர்களுக்கு புரியவில்லை.

அந்நாளில் அங்கு வந்த மாமுனிவராகிய துர்வாசரின் காலடியைத் தொட்டு சென்னிசூடி அன்னை கேட்டாள் “அருளுரையுங்கள் முனிவரே, மைந்தனை ஆட்கொண்ட அத்தெய்வம்தான் எது?” அவர் அன்னையின் விழிநீர் கண்டு உளம் இளகினார். “நன்று! நான் நோக்கி உரைக்கிறேன்” என்றபடி மைந்தனை வைத்த இருளறைக்குச் சென்றார். துயர்கொண்ட முகத்துடன் அன்னையும் தந்தையும் உடன் வந்தனர். “மைந்தன் மீண்டெழுவானா, முனிவரே? எங்கள் குல நிமித்திகரும் மருத்துவரும் பூசகரும் அவன் எஞ்சுவது அரிது என்கிறார்கள்” என்றார் அவன் தந்தை ஹிரண்யபாகு.

“இவன் விண்ணாளும் தெய்வமரபில் புதன் மைந்தனாக இளையின் கருவில் பிறந்தவன் என்றார்கள் நிமித்திகர். இவன் பிறந்ததுமே இனி இப்புவியாளும் அரசகுலமெலாம் இவன் குருதியில் பிறக்குமென்று உரைத்தனர் வருங்காலம் உய்த்தறிந்த ஏழு தொல் நிமித்திகர். வாள் வலி கொண்டு புவி வென்று முடிசூடி அமரும் மாவீரன் என்று இவனை எண்ணினேன். மானுடரைக் கட்டி நிறுத்தும் அச்சமும் ஐயமும் அறத்தயக்கமும் முற்றிலும் இல்லாத உளம்கொண்டவன் என்று கருதினேன். இவனோ கருகி உதிர்ந்த மலர்போல் இருக்கிறான்” என்று அவன் தந்தை சொன்னார்.

அன்னை விம்மியபடி “என் மைந்தன் நாடாளவேண்டியதில்லை. அரசக்கொடிவழிகள் இவனில் பிறந்தெழவும் வேண்டியதில்லை. என் மடி நிறைத்து பிறந்து முலையுண்டு வளர்ந்த என் மைந்தன் நான் வாழும் காலம் வரை கண் நிறைய என் முன் திகழ்ந்தால் மட்டும் போதும். அருள் புரிக, தவத்தோரே” என்றாள்.

மைந்தன் கிடந்த சிற்றறையின் வாயிலில் நின்றிருந்த சேடி தலைவணங்கி “துயில்கிறார்” என்று மென்குரலில் சொன்னாள். நன்று என தலையசைத்தபின் கையசைவால் அன்னையையும் தந்தையையும் வெளியே நிற்கச்செய்து துர்வாசர் உள்ளே நுழைந்தார். காலடி ஓசையின்றி அணுகி இளமைந்தனின் முகம் நோக்கி அமர்ந்து திரும்பி அவர் விழிகாட்ட சேடி கதவை மூடினாள். அறைக்குள் இருள் நிறைந்தது. கதவின் கீழிடுக்கு வழியாக தரையில் விழுந்த வாள் என மின்னிய ஒளியில் மெல்ல அறையிலுள்ள அனைத்தும் துலங்கின. மைந்தனின் நெற்றிப்பொட்டில் கைவைத்து தன் உளம் குவித்தார் துர்வாசர்.

கனவுக்குள் அவன் அவரைக் கண்டான். அவர் கை பற்றி உலுக்கி கண்ணீருடன் “சொல்க, சொல்க முனிவரே, இது ஏன் இவ்வண்ணம் நிகழ்ந்தது? இங்கு ஓருயிருக்கு பிறிதுயிருடன் என்ன பகை? ஒன்று பிறிதை அழிப்பதில் எழும் அப்பேருவகையின் பொருள்தான் என்ன? மீனெனத் துடிதுடிக்கையில் என் உள்ளத்தின் ஒரு பாதி கொக்கென சுவையறிந்தது ஏன்?” என்றான்.

“கொல்லுதலும் கொலையுறுதலும் இங்கு ஒழியுமொரு கணமில்லை. அவ்விரு செயல்களின் சரடுகளால் ஊடுபாவென நெய்யப்பட்டுள்ளது இப்புடவி” என்றார் துர்வாசர். அக்கொக்கை சேற்றுச்சுனை ஒன்றின் கரையில் முதலை ஒன்று பாய்ந்து கவ்வி  சிறகு படபடக்க, நீரில் அலைகொந்தளிக்க, உள்ளிழுத்து மறையும்  காட்சியை அவனுக்கு காட்டினார். வீறிட்டலறியபடி அவரை அள்ளிப்பற்றி கைகால்களால் இறுக்கிக்கொண்டு அவர் தொடையில் முகம் புதைத்து கூவியழுதான்.

“அந்த முதலையும் உண்ணப்படும். அச்சேற்றில் அதை உண்ணும் பல்லாயிரம் சிறுபுழுக்களின் மூதாதையர் பிறந்துவிட்டனர். இவையனைத்தும் ஒரு நிலையில் உள்ளமும் அறிவும் ஆழமும் கொண்ட உயிர்க்குலங்கள்.  பிறிதொரு முறையில் அன்னத்தை உண்டு அன்னமென்றாகும் வெறும் பருப்பொருட்கள். நிகர் நிலையொன்றுண்டு. அதில் நின்றிருக்க மட்டுமே நம்மால் இயலும்” என்றார் துர்வாசர்.

“சொல்க, நான் என்ன செய்யவேண்டும்?” என்றான். “நானறிந்ததெல்லாம் நாம் நம்மை ஆள்வதைப்பற்றி மட்டுமே. நம் கைகளால் கொலை செய்யாதிருப்பது. நம் உள்ளத்தால் அறம் மீறாதிருப்பது. இளையோனே, நமது விழைவுகள் முறை மீறாதிருக்கட்டும். நமது கனவுகளும் கரைகண்டு அமைவதாகுக! மானுடர் இப்புவியில் ஆற்றுவதற்கு பிறிதொன்றுமில்லை.” அவன் பெருமூச்சுடன் “ஆம். ஆனால்…” என்றான். “ஆமென்பது உன் உறுதி, அதை கொள்க! ஆனால் என்பது ஒரு வினா. இறுதிநீர் அடிநாவில் குளிரும் வரை அது தொடர்க! அவ்வாறே ஆகுக!”

அவன் சற்றுநேரம் அமைதியாக இருந்தான். பின்னர் “ஆம்” என்றான். “இளையோனே, நீ என்றும் துலாமுள் என அறத்தட்டுகள் நடுவே நிற்கப்போகிறவன். ஆணும் பெண்ணும் கருச்சுமந்து பெற்றனர் உன்னை. நீ அறியாத ஒன்றும் இங்கு இருக்கப்போவதில்லை” என்று உரைத்தபின் எழுந்து கதவைத் திறந்து வெளிவந்த துர்வாசர் சேடியரிடம் “துயிலட்டும். நாளை மீண்டுவிடுவார்” என்றார்.

மறுநாள் முதற்புலரியில் அனைவரும் அயர்ந்து துயில் கொண்டிருக்கையில் எழுந்து அவன் கதவைத் திறந்து வெளியே சென்றான். குளிரிலும் நோய்மெலிவிலும் உடல்நடுங்க மெல்ல கால்வைத்து நடந்தான். ஒவ்வொரு நாளும் விழித்திருக்கும்போதெல்லாம் நினைவிலும் கனவிலும் அவன் கண்டு அஞ்சிய அணிச்சுனை அருகே சென்று நின்றான். அதில் புதிய மீன்கள் வெள்ளித் தெறிப்பென எழுந்து விழுந்தன. புதிய மலர்கள் மொக்கவிழ்ந்து வண்ணம் காட்டின. புதிய வெண்கொக்குகள் இரண்டு வந்து அஞ்சனமரத்தின் கிளைகளில் அமர்ந்தன.

MAMALAR_EPI_16

கைகூப்பியபடி கிழக்கே தெரிந்த முதற்கதிரை பார்த்து நின்றான். பொன்னொளி எழுந்து வந்து அவன் உடலை குளிப்பாட்டியபோது கைகளைக்கூப்பி அவன் கால் மடித்து அமர்ந்திருந்தான். மஞ்சத்தறையில் அவனைக்காணாத சேடியர் தேடிப்பதைத்து ஓடி அலைகையில் சேடி ஒருத்தி அவனைக் கண்டு திகைத்து ஓசையின்றி கைகாட்டினாள். அரண்மனை மகளிரும் காவலரும் பின் அரசனும் அரசியும் வந்து அவனைச் சுற்றி நின்று நோக்கினர். யாரோ ஒரு முதுகாவலர் “எந்தையே!” என்று ஒலியெழுப்பி கைகூப்ப அனைவரும் அவனை வணங்கினர். தந்தையும் தாயும் கைகூப்பினர். பேரறத்தான் என்று அவன் அதன்பின் அழைக்கப்பட்டான்.

பின் எப்போதும் அவன் ஊன் உண்டதில்லை. படைக்கலம் பயின்று தேர்ந்தான். வாள் கொண்டு வெல்லவும் வில் கொண்டு விழி எல்லைவரை தொடவும் தேர்ந்தான். நிகரற்ற வீரன் என்று அவன் குலம் அவனை கொண்டாடியது. ஆனால் ஒரு களத்திலும் ஒருபோதும் பகைவனை அவன் கொல்வதில்லை என்று அனைவரும் அறிந்திருந்தனர். கொல்லாநெறி நின்றதால் அவனை பேரளியின் மைந்தன் என்று வணங்கினர். தென்திசை முதல்வனின் வடிவில் கல்லால மரத்தின் கீழ் கால் மடித்தமர்ந்திருக்கும் தோற்றத்தில் அவனுக்கு சிலையெழுப்பி தங்கள் தென்திசை சிற்றாலயங்களில் அமர்த்தி வழிபட்டனர்.

நூல் பன்னிரண்டு – மாமலர் – 15

15. இருகருவிருத்தல்

தாரை  கருவுற்றிருக்கும் செய்தி அவர்கள் இருவரையுமே விடுவித்தது. அவர் அனைத்தையும் உதறி இளஞ்சிறுவன் என்றானார். குழவியின் நினைவன்றி பிறிதில்லாதவராக முகம் மலர காடுகளிலும் நகர்தெருக்களிலும் அலைந்தார். பிறக்கவிருக்கும் குழவிக்கு விளையாட்டுப்பொருட்களும் ஆடைகளும் கொண்டுவந்து சேர்த்தார். மனைவிக்கு வேதுவைக்கவும் மூலிகைச்சாறு கொடுக்கவும் தானே முன்னின்றார். பிறர் நகையாடுவதுகூட பெருமையென்றே தோன்றியது. “முதுமையில் பிறக்கும் மைந்தன் முற்றறிஞன் ஆவான் என சொல்லுள்ளது” என்று சொன்ன காமிக முனிவரிடம் அவர் அருகே நின்ற முனிவர்களின் ஏளனப்புன்னகையை உணராமல் “ஆம், அவன் அழியாத தண்ணொளி கொண்டவன். அவன் கருநிமித்தங்களை கருதிநோக்கினேன்” என்றார்.

அவளும் முழுமுகமலர்வை அடைந்தாள். அப்போதுதான் அவள் அவ்வாறு மகிழ்வதையே தன்னுள்ளம் விழைந்திருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார். ஐயம்கொள்ளற்கு அரிய ஒன்றின்பொருட்டு அது நிகழவேண்டுமென்றே அவர் எண்ணியிருந்திருக்கிறார். துயர்கொள்வதை ஆழுள்ளம் விரும்புவதனால்தான் அதை வளர்த்துக்கொள்கிறது. ஆனால் துயர் இயல்புநிலை அல்ல, அந்த வாள்முனையில் நெடுந்தொலைவு நடக்கமுடியாது என அறிந்தார். அனைத்தையும் வீசிவிட்டுக் களித்தாட விழைந்திருந்தனர் இருவரும். அது கருக்கோளால் அமைந்தது.

பிறக்கவிருக்கும் குழவியைப்பற்றி பேசிப்பேசி பன்னிருகால் புரவியில் நாள் கடந்தனர். அக்குழவியின் அழகும் பெருமையும் அதற்கென வெளியே அவர்கள் செய்யவேண்டியவையும் என தொட்டுப்பேசி அது சலிக்கையில் அதைக் குறித்த அச்சங்களுக்கு சென்றனர். கருவிலேயே நோயுறுமோ என அவள் கேட்டாள். கருநாகங்களை கனவுகாண்பதாக சொன்னாள். அசைவிழந்துள்ளதோ என ஐயுற்றாள். அஞ்சி பாய்ந்துவந்து அவரை கட்டி இறுக்கிக்கொண்டு உடல்நடுங்கினாள். “என்ன இது? உனக்கென்ன பித்தா?” என்றார் அவர். அவளை பேசிப்பேசித் தேற்றி இயல்படையச் செய்தார்.

அவள் அவ்வாறு நடுங்குவதும் தான் தேற்றுவதும் மிகத்தொன்மையான ஒரு நாடகத்தில் ஒவ்வொரு முறையும் புதியதாக இருக்கும் நடிப்பு என அவர் உள்ளம் அறிந்தது. ஆனால் அத்தருணம் தித்தித்தது. மகவைப்பற்றிய இன்மொழிகளைச் சொல்லி மெல்ல அவளை மலரச்செய்தார். அவள் விழிகசிய உடல் மெய்ப்புகொள்ள முலைக்காம்புகள் கூர்கொண்டு அதிர அதைக் கேட்டு நீள்மூச்செறிந்தாள். பின்னர் பாய்ந்து அவரை கைகவ்வித் தழுவி “செத்துவிடுவேன்… அப்படியே செத்துவிடுவேன்” என புலம்பினாள். “என்ன இது வீண்பேச்சு? நான் இல்லையா என்ன?” என்றார். அச்சொற்களை தன் தந்தையரும் அவ்வாறே சொல்லியிருக்கக் கூடுமென உணர்ந்தபோது அவை மேலும் இனிதாயின.

இனித்து இனித்து கடந்த ஒன்பது மாதங்களில் அவர்கள் நெடுந்தொலைவு வந்துவிட்டிருந்தனர். அவள் பேற்றுநோவு கொண்டபோது அவர் அவள் நீராடுவதற்காக மூலிகைவேர் சேர்க்கும்பொருட்டு காட்டிலிருந்தார். மாணவன் ஒருவன் வந்து மூச்சிரைக்க “தேவிக்கு வலி” என்றான். அவருக்கு ஈற்றுநோவென உளம் கூடவில்லை. “விழுந்துவிட்டாளா? எங்கே?” என பதறி ஓடினார். எதிரே ஓடிவந்த இன்னொருவன் சிரித்தபடி “ஆண்மகவு…” என்றான். “எங்கே?” என்றார். “ஆசிரியரே, தங்களுக்கு மைந்தன் பிறந்துள்ளான்.” அவர் கைதளர அப்படியே அருகிருந்த பாறையில் அமர்ந்து “தெய்வங்களே!” என்றார்.

மாணவர் தோள்பற்றி அவர் இல்லம் மீண்டார். எதிரே வந்த முதுசெவிலியின் முகத்திலிருந்த புன்னகையில் பிறிதொன்றும் இருப்பதை அவர் அகம் உணர்ந்தது. “நற்செய்தி ஆசிரியரே, தண்ணொளி கொண்ட மைந்தன்!” என்றாள். அவர் “ஆம், அறிந்தேன்” என்றார். குடிலில் ஏறி அங்கு நின்றிருந்த பெண்களை நோக்கியபோது அனைவர் முகத்திலும் அந்த முள்பொதிந்த புன்னகை இருப்பதை கண்டார். “எங்கே?” என்றார். “வருக!” என அவரை அழைத்துச்சென்றாள் ஒருத்தி.

ஈற்றறைக்குள் மரவுரிமேல் கிடந்தாள் தாரை. அருகே மென்பஞ்சு துகிலுக்குள் குழவியின் தலைமட்டும் தெரிந்தது. “வெள்ளிக்குழல்…” என்றாள். அவர் கைகள் நடுங்கத் தொடங்கின. அவள் துணியை விலக்கி மைந்தனை காட்டினாள். “பால்வெண்நிறம்…” என்றாள். அவர் குழவியை குனிந்து நோக்கியபோது கால்கள் தளர்ந்தன. அதன்மேலேயே விழுந்துவிடுவோம் என அஞ்சினார். ஒரு நோக்குணர்வை அடைந்து திரும்பி அவள் விழிகளை சந்தித்தார். முற்றிலும் ஆர்வமற்ற விழிகளுடன் அவரை நோக்கியபின் அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

திரும்பிவந்து இல்லமுகப்பில் அமர்ந்தபோது தன் உள்ளம் ஏன் அமைதிகொண்டிருக்கிறது என்று அவருக்கே புரியவில்லை. குழவிநலம்சூழ முனிவர்துணைவியரும்  பிறபெண்டிரும் வந்துகொண்டிருந்தனர். சற்றுநேரத்தில் சந்திரன் தன் அணுக்கர்களுடன் வரும் ஒலி கேட்டது. தேர் வந்து நின்றதையும் அணுக்கர் புரவிகளிலிருந்து இறங்கியதையும் கண்டபின்னரும் அவர் எழவில்லை. புன்னகையுடன் அணுகி வந்த சந்திரன் “இங்கு பிறந்துள்ளது என் மகன் என்று நான் அறிந்தேன். அவனையும் அவன் அன்னையையும் அழைத்துச்செல்லவே வந்தேன்” என்றான்.

“அதை முடிவுசெய்யவேண்டியவள் அவளே” என்று அவர் அவன் கண்களை நோக்கி சொன்னார். கௌதமரின் துணைவியாகிய முதுமகள் உள்ளிருந்து இறங்கிவந்து “என்ன சொல்கிறாய்? பிறன்மனை தேடும் இழிவு இன்னுமா உன்னிடம் வாழ்கிறது?” என்றாள். “அவள் வந்துசொல்லட்டும்” என்றான் சந்திரன். உள்ளிருந்து தாரை குழவியை துணிச்சுருளில் சுற்றி எடுத்துக்கொண்டு வந்து நின்றாள். “செல்வோம்” என்றாள். அனைவரும் திகைத்து அவரை நோக்க அவர் விழிகளை அசையாமல் நிலைக்கச்செய்து அங்கு நின்ற ஒரு மரத்தை வெறித்துக்கொண்டிருந்தார்.

“வருக!” என அவள் கைகளைப்பற்றி தேர்நோக்கி அழைத்துச்சென்றான் சந்திரன். நிமிர்ந்த தலையுடன் உறுதியான அடிவைத்து அவள் நடந்துசென்று தேரிலேறிக்கொண்டாள். அவர்கள் அமராவதிநகரின் தெருக்கள் வழியாக சென்றபோது இருமருங்கும் தேவரும் துணைவியரும் வந்து நின்று நோக்கினர். அவள் யானைமேல் மணிமுடிசூடி அமர்ந்து நகர்வலம் செல்லும் பேரரசி போலிருந்தாள்.

images “சந்திரன் தாரையை மணந்து பெற்ற மைந்தன் புதன். வெள்ளியுடல் கொண்டிருந்த மைந்தனை சந்திரன் உருகிச்சொட்டிய துளி என்று மண்ணிலுள்ளோர் கண்டு வாழ்த்தினர். விண்ணில் ஒரு வெண்தழலெனச் சுழன்று சென்ற புதன் தன்னருகே மங்கா ஒளிர்சிரிப்புடன் சென்ற அழகி ஒருத்தியை கண்டான். “யார் இவள்?” என்று அவன் வினவியபோது வைவஸ்வத மனுவின் மகளான அவள் பெயர் இளை என்றறிந்தான். பின்னர் அவன் அங்கே வந்தபோது அவள் தோற்றம்கொண்ட அழகிய இளைஞன் ஒருவனை கண்டான். “அவன் இளையின் உடன்பிறந்தவனாகிய இளன். அவர்கள் இரட்டையர் போலும்” என்றனர்.

வைவஸ்வத மனுவுக்கு சிரத்தை என்னும் துணைவியில் பிறந்த இளையை மணம்கொள்ள புதன் விழைந்தான். ஒருநாள் அவள் தந்தையிடம் சென்று அவர் கன்னியை கைக்கொள்ள கோரினான். “அவள் இங்கில்லை. அடுத்த மாதம் இளவேனில் எழுகையில் இங்கு வருக!” என்றான் அவள் உடன்பிறந்தானாகிய இளன்.  அவன் புன்னகையில் அறியாத பொருள் ஒன்று இருப்பதாக உணர்ந்தவனாக புதன் திரும்பி வந்தான். மீண்டும் அடுத்த மாதமே சென்று வைவஸ்வத மனுவின் இல்லக் கதவை தட்டினான். இம்முறை அழகிய புன்னகையுடன் கதவைத் திறந்த இளை சிரித்தபடி “அன்னையே, நீங்கள் சொன்ன வெள்ளியுடலர்” என்றாள்.

வைவஸ்வத மனுவும் சிரத்தையும் அவனை முகமன் சொல்லி அமர்த்தினர். “உங்கள் மைந்தன் இல்லையா இங்கு?” என்றான் புதன். “அவன் வெளியே சென்றுள்ளான். உங்கள் விழைவை சொல்க!” என்றார் வைவஸ்வத மனு. “உங்கள் மகளை மணம்கொள்ள விழைகிறேன்” என்றான் புதன். வைவஸ்வத மனு “எவரும் விழையும் அழகி இவள் என்று நான் அறிவேன். இவள் கைகோரி நாளும் ஒரு தேவன் வந்து என் வாயிலை முட்டுகிறான். ஆனால் இவளை மணப்பவனுக்கு ஒரு தெரிவுமுறைமையை நான் வகுத்துள்ளேன்” என்றார். “சொல்க!” என்றான் புதன்.

“எவர் பிறிதொருவர் கூறாத பெரும்செல்வம் ஒன்றை அவளுக்கு கன்னிப்பரிசென்று அளிக்கிறார்களோ அவனுக்குரியவள் அவள்” என்றார் வைவஸ்வத மனு. இளையை நோக்கித்திரும்பி “அது எத்தகைய பரிசு?” என்றான் புதன். “இங்கு அமர்ந்திருக்கிறாள் என் தாய், அவள் உரைக்கவேண்டும் அப்பரிசு நிகரற்றதென்று” என்றாள் இளை. புதன் “அத்தகைய பரிசுடன் வருகிறேன்” என எழுந்தான்.

புதன் தன் அன்னையிடம் சென்று “நிகரற்ற பெண் பரிசு எது? அன்னையே, சொல்க!” என்றான். முதுமகளாகிவிட்டிருந்த தாரை சொன்னாள் “எந்தப் பெண்ணும் விழைவது ஒருபோதும் அறம்பிறழா மைந்தனை மட்டுமே.” புதன் அன்னையை கூர்ந்துநோக்கி நின்றான். “ஆம் மைந்தா, அன்னையர் காமுறுவது அதன்பொருட்டு மட்டுமே. நான் விழைந்தவண்ணம் பிறந்தவன் நீ. நான் எண்ணியதும் இயற்றியதும் உன்பொருட்டே.”

புதன் திரும்பிச்சென்று வைவஸ்வத மனுவின் வாயிலை முட்டினான். அதைத் திறந்து “வருக!” என்ற வைவஸ்வத மனு அவன் வெறும் கைகளை நோக்கி  குழப்பத்துடன் “அந்நிகரற்ற பரிசை கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்றார். “ஆம். அதை அக்கன்னியிடம் மட்டுமே சொல்வேன்” என்றான். தன் முன் வந்து நின்ற இளையிடம் “தேவி, ஒருபோதும் அறம் வழுவா மைந்தனொருவனை என் குருதியில் நீ பெறுவாய். அறம் காக்கும் குலப்பெருக்கு அவனிலிருந்து இம்மண்ணில் எழும். இதுவே என் பரிசு!” என்றான்.

நெஞ்சு விம்ம கைகோத்து அதில் முகம் சேர்த்து விழிநீர் உகுத்தாள் இளை. அவள் பின் வந்துநின்று அவள் அன்னை “நன்று கூறினாய்! பெண் விரும்பும் பெரும்பரிசை அளித்தாய். இவள் கைகொள்க!” என்றாள். அவன் அவள் கைகளைப்பற்றி “இச்சொற்கள் மெய்யாகுக! சந்திரகுலம் மண்ணில் எழுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.

ஏழு முனிவர் கை பற்றிஅளிக்க எரி சான்றாக்கி சந்திரனின் மைந்தனாகிய புதன் இளையை மணந்தான். மணநாள் இரவில் அவன் அவளிடம் “உன் உடன்பிறந்தான் எங்குள்ளான்?” என்றான். “வேற்றூர் சென்றுள்ளார். எங்குள்ளார் என்று அறியேன்” என்றாள் அவள். அவன் கைகளை பற்றிக்கொண்டு அவள் கேட்டாள் “எனக்கு இரு சொற்கொடைகளை அருளவேண்டும் நீங்கள். என் உடன்பிறந்தான் குறித்து ஒருபோதும் கேட்கலாகாது. ஒரு மாதம் உங்களுடன் இருந்தால் மறுமாதம் நான் என் தந்தை இல்லத்தில் இருப்பேன். அங்கு வந்து என்னை பார்க்கலாகாது.” அவன் “அவ்வண்ணமே” என்று அவளுக்கு கைதொட்டு ஆணை அளித்தான்.

ஒரு மாதம் அவர்கள் ஊடியும் கூடியும் காதலில் ஆடினர். இளை அவன் உள்ளத்தின் ஒவ்வொரு எண்ணத்தையும் உணர்ந்துகொள்பவளாக இருந்தாள். “ஆணுள்ளம் பெண்ணுக்கு இத்தனை அணுக்கமானது என்று நான் இதுவரை அறிந்திருக்கவில்லை” என்று அவன் அவளிடம் சொன்னாள். அவள் புன்னகை புரிந்தாள். “ஆண் அறிந்தவை அனைத்தையும் அறிந்திருக்கிறாய்” என ஒருமுறை அவன் அவளை வியந்தான். அவள் சிரித்தபடி கடந்துசென்றாள்.

மாதம் ஒன்று நிறைந்ததும் அவள் அவனிடமிருந்து விடைபெற்று வைவஸ்வத மனுவின் இல்லத்திற்கு சென்றாள். அவள் சென்றபின்னரே அவள் இருந்ததன் நிறைவை புதன் உணர்ந்தான். காணுமிடமெல்லாம் அவளென்று இருக்க எண்ணுவதெல்லாம் பிறிதொன்றில்லை என்றாக அவன் கணமும் வாழமுடியாதவன் ஆனான். சிலநாட்களை தன் அரண்மனையில் முடங்கிக் கழித்தபின் இளமுனிவராக மாற்றுருக்கொண்டு அவளைக் காணும்பொருட்டு வைவஸ்வத மனுவின் இல்லத்திற்கு சென்றான்.

வைவஸ்வத மனுவின் இல்லத்தை அடைந்து கதவைத் தட்டியதும்  இளன் வந்து கதவைத் திறந்தான். அவனுக்கு கால்கழுவ நீர் ஊற்றி இன்மொழி சொல்லி வரவேற்று அழைத்து அமரச்செய்தான். “உத்தமரே, யார் நீங்கள்?” என்றான். “நான் கௌதமகுலத்து முனிவனாகிய சம்விரதன். இங்கு திருவுருக்கொண்டு பிறக்கவிருக்கும் மைந்தன் ஒருவனை கருக்கொள்ளும் கன்னி ஒருத்தி இருப்பதாக அறிந்தேன். அவளுக்கு என் நற்சொல் அளித்துச்செல்ல விழைந்தேன்” என்றான். இளன் “அவள் இங்கில்லை. எங்கள் தந்தையுடன் பிறந்த சுயம்பு மனுவின் இல்லத்தில் விருந்தாடும்பொருட்டு சென்றுள்ளாள்” என்றான்.

ஏமாற்றம் அடைந்த புதன் “நன்று, அவளுக்கு என் நற்சொற்கள் உரித்தாகட்டும்” என எழுந்தபோது இளன் ஈரத்தரையில் மிதித்து அப்பால் சென்றான். அவன் காலடிச்சுவடுகளை கண்டதும் என்ன என்றறியாமலேயே புதன் உடல் பதைக்கத்தொடங்கியது. பின்னர் “இளை! நீ இளை!” என கூவியபடி எழுந்தான். “இல்லை, நான் அவள் உடன்பிறந்தான். என்னைப்போலவே அவள் தோற்றம் இருக்கும்” என்று இளன் பதறியபடி சொன்னான். “நீ அவள்தான்… என் உள்ளம் சொல்கிறது” என்று புதன் கூச்சலிட்டான். “இல்லை இல்லை” என சொன்னபடி அவன் வெளியேற முயல புதன் பாய்ந்து அவன் கைகளை பற்றிக்கொண்டான்.

அவனைத் தொட்டதுமே அவனுக்கு உறுதியாயிற்று. “நீ இளைதான்… நான் எந்த தெய்வத்தின் முன்பும் ஆணையிடுவேன். நீ என் துணைவி இளை!” என்று அவன் கண்ணீருடன் சொன்னான். அழுதபடி இளன் அவன் கைகளை பற்றிக்கொண்டான். “ஆம், நான் இளைதான்.  ஒருமாத காலம் ஆணாக இருப்பேன். அதன்பொருட்டே இங்கு வந்தேன்.”

என்ன நிகழ்ந்தது என அவள் அன்னை சொன்னாள். வைவஸ்வத மனுவும் சிரத்தையும் ஓர் மைந்தனுக்காக தவமிருந்தனர். மித்ரனையும் வருணனையும் வேள்வியில் எழுப்பி மன்றாடினர். ஒரே நேரத்தில் இரு எரிகுளங்களில் மித்ரனும் வருணனும் எழுந்தனர். மித்ரன் வைவஸ்வத மனுவிடம் “அழகிய மைந்தனைப் பெறுக!” என சொல்லளித்த அதே வேளையில் வருணன் “அறம் வளர்க்கும் மகள் பிறக்கட்டும்” என்றான்.

இரு சொற்களுமே நிகழ்ந்தன. பிறந்த மகவு ஆணும் பெண்ணுமாக இருந்தது.  இருபால் குழவியை முழுதுடலும் எவருக்கும் தெரியாமல் வளர்த்தனர் வைவஸ்வத மனுவும் சிரத்தையும். வைவஸ்வத மனு அதை  மைந்தன் என்றே அனைவரிடமும் சொல்லி அவ்வாறே காட்டிவந்தார். அன்னையோ அதை மகள் என்று அணிசெய்து அகத்தளத்தில் வைத்து கொஞ்சி வளர்த்தாள். ஆணென்றும் பெண்ணென்றும் மாறிமாறி உருக்கொண்டு வளர்ந்தது குழவி. அன்னை அதை இளை என்றாள். தந்தை இளன் என்றார்.

ஒருநாள் அவர்களின் இல்லத்திற்கு முதுமுனிவர் அகத்தியர் வந்தார். “மைந்தனை கொண்டுவருக… அவன் பெருந்தோளன் ஆவதற்குரிய நற்சொல்லை நான் உரைக்கிறேன்” என்றார். “மைந்தனைக் கொண்டு வா” என வைவஸ்வத மனு ஆணையிட சேடி ஒருத்தி பெண்ணென ஆடையணிந்த மைந்தனை கொண்டுவந்தாள். திகைத்த வைவஸ்வத மனு அகத்தியரைப் பணிந்து நடந்ததை சொன்னார்.  சிரத்தை அவர் கால்களைப் பணிந்து “எங்கள் மைந்தனை மீட்டருள்க, முனிவரே!” என வேண்டினாள்.

“இக்கணமே இவன் ஆண் என்றாகுக!” என்று உரைத்து தன் கமண்டலத்து நீரை தெளித்தார் அகத்தியர். குழவி ஆணென்றாகியது. “இவனுக்கு சுத்யும்னன் என்று பெயரிடுக!” என அவர் ஆணையிட்டார். மைந்தனை வாழ்த்திவிட்டுச் சென்றார். வைவஸ்வத மனு பேருவகைகொண்டு களியாடினார். அனைவருக்கும் விருந்தளித்தார். குலதெய்வங்களை வணங்கி விழவுகொண்டாடினார். சுத்யும்னனின் அன்னையும் அதில் கலந்துகொண்டு களியாடினாளென்றாலும் அவளுக்குள் மகளை இழந்த துயர் எஞ்சியிருந்தது.

சுத்யும்னன் போர்க்கலைகளும் ஆட்சிக்கலைகளும் கற்றுத்தேர்ந்தான். குடித்தலைமைகொள்ளும் தகைமையை அடையும்பொருட்டு அவன் ஐவகை நிலமும் கண்டுவர தன் தோழருடன் பயணமானான். வழியில் அவர்கள் குமாரவனம் என்னும் சோலைக்குள் நுழைந்தனர். அது உமை தன் தோழியருடன் வந்து நீராடும் இடம். அதற்குள் ஆண்கள் நுழையலாகாது என நெறியிருந்தது. மீறுபவர்கள் பெண்ணென்றாகுவர் என உமை அளித்த சொல் நின்றிருந்தது.

காட்டின் எல்லையைக் கடந்த சுத்யும்னன்மேல் பறந்த ஏழு கிளிகள் “இது உமையின் காடு. இங்கு ஆண்களுக்கு இடமில்லை” என்று கூவின. அதைக் கேட்டு அஞ்சி அவன் துணைவர்கள் நின்றுவிட்டனர். சுத்யும்னன் “நான் நுழையலாமா, கிளியே?” என வேடிக்கையாகக் கேட்க ஏழு கிளிகளில் ஒன்று “நீங்கள் நுழையலாம், அழகரே” என்றது. சுத்யும்னன் உள்ளே நுழைந்தான். அக்கணமே அவன் பெண்ணென்று ஆனான்.

அழகிய மங்கையாக வைவஸ்வத மனுவின் இல்லம் திரும்பிய சுத்யும்னனைக் கண்டு அன்னை ஓடிவந்து அணைத்துக்கொண்டாள். “என் மகள் மீண்டுவந்துவிட்டாள்” என்று கூவி சிரித்தாடினாள். கண்ணீருடன் முத்தமிட்டு தழுவி மகிழ்ந்தாள். தந்தையோ ஆழ்ந்த துயர்கொண்டு தன் அறைக்குள் முடங்கிக்கொண்டார். தன் காலடிகளை வந்து பணிந்த இளையை நோக்கி திரும்பக்கூட அவரால் இயலவில்லை.

துயர்மிகுந்து தனித்தலைந்த வைவஸ்வத மனு வசிட்டரைச் சென்றுகண்டு தன் குறைசொல்லி விழிநீர் விட்டார். வசிட்டர் வந்து இளையை கண்டார். தந்தைக்கும் தாய்க்கும் இருக்கும் விழைவுகளைச் சொல்லி ஒரு மாதம் பெண்ணாகவும் மறுமாதம் ஆணாகவும் இருக்கும் சொல்பேறை அவளுக்கு அருளினார். இளை மறுமாதம் இளன் என்றானாள்.

“நீங்கள் என்னை பிரிய நினைத்தால் அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி இளன் கைகூப்பினான். திகைத்துநின்ற புதன் ஒரு சொல்லும் கூறாமல் திரும்பி ஓடினான். தன் அரண்மனைக்குள் சென்று தனியறையில் அமர்ந்து நெஞ்சுருகினான். இளையை அவ்வண்ணமே மறந்துவிட முடிவெடுத்தான். அம்முடிவை உறுதிசெய்ய எண்ணங்களைத் திரட்டும்தோறும் அவளுடன் கொண்ட உறவின் தருணங்கள் எழுந்து தெளிவுகொண்டு வந்தன.

அவ்வுறவின் அழகே அவள் ஆணும்கூட என்பதுதான் என அப்போது அறிந்தான். பிறிதொரு பெண்ணிலும் அந்தக் காம முழுமையையும் காதல் நிறைவையும் அடையமுடியாதென்று தெளிந்தான். அதைச் சொன்னபோது அவைக்கவிஞர் காகஜர் ஆணென்று  உள்ளமும் பெண்ணென்று உடலும் கொண்ட ஒரு துணைவியையே ஆண்கள் விழைகிறார்கள் என்றார். ஆனால் காமத்தின் ஒரு நுண்கணத்தில் ஆணுடலும் பெண்ணுள்ளமும் கொண்டவளாகவும் அவள் ஆவதை அவன் மகிழ்ந்து அறிந்திருந்தான். எண்ண எண்ண அவன் அவள்மேல் பெரும்பித்து கொள்ளலானான். வைவஸ்வத மனுவின் இல்லத்திற்குச் சென்று இளையை மனைவியெனக் கொள்ளவே விழைவதாகச் சொன்னான்.

இளை கருவுற்றாள். அக்கருவுடன் தன் தாய்வீடு சென்று அங்கே இளன் என்று கருவை சுமந்து வளர்த்தாள். ஆண்வயிற்றில் ஐந்துமாதமும் பெண்வயிற்றில் ஆறுமாதமும் வளர்ந்து அக்குழவி முழுமைகொண்டது. பொன்னொளி கொண்ட உடலுடன் பேரழகனாகப் பிறந்தது. “கோல்சூடி அறம்பேணும் ஆயிரம் மாமன்னர்கள் பிறக்கும் குடிக்கு முதல் மூத்தான் இவன்” என்றனர் நிமித்திகர். “ஆணென்றும் பெண்ணென்றும் அன்னைகொண்டவன். அனைத்துயிர்க்கும் அளி சுரக்கும் உள்ளத்தோன்” என்றனர் முனிவர்.

images சந்திரகுலத்து முதல் மன்னன் புரூரவஸ் இவ்வாறு புதனுக்கும் இளைக்கும் மைந்தனாகப் பிறந்தான். அவனை ஏழு பெரும்தீவுகளென அமைந்த புவியனைத்திற்கும் அரசன் என்று ஆக்கினான் புதன். அவன் குருதியில் பிறந்த மன்னர்களால் சூரியனால் அளக்கப்பட்ட புவி நூற்றெட்டு நிலங்களாக பகுத்து ஆளப்பட்டது. அறத்துலா கணமும் அசையாது புவியாண்டான் புரூரவஸ்.

ஒருமுறை அறம் பொருள் இன்பம் எனும் மூன்று மெய்மைகளும்  மூன்று முனிவர்களென உருக்கொண்டு அவன் அரண்மனைக்கு வந்தன. முனிவர்களைப் பணிந்து வரவேற்று அவையில் அமர்த்தி முகமனும் முறைமையும் செய்து நற்சொல் கேட்க அமர்ந்தான்.

அம்மூன்று முனிவரில் நீண்ட வெண்தாடியும் புரிசடையும் குழலும் கனிந்த விழிகளும் கொண்டிருந்த முதியவரே இன்பர்.  நரைமீசையும் கூரிய தாடியும் அச்சமில்லா விழிகளும் கொண்டிருந்த நடுஅகவையர் பொருளர். நாணச்சிரிப்பும் தயங்கும் விழிகளும் மெலிந்த சிற்றுடலும் பெண்களுக்குரிய மென்முகமும் தோளில் சரிந்த சுரிகுழலும் கொண்டிருந்த பதினகவையர் அறத்தார். அவர் தங்களை இன்பர் என்றும் பொருளர் என்றும் அறத்தார் என்றும் அறிமுகம் செய்துகொண்டபோது அரியணை விட்டெழுந்து வந்த புரூரவஸ் இரு கைகளையும் கூப்பியபடி சென்று இளையவராகிய அறத்தாரை கால்தொட்டு சென்னிசூடி  “என் அவைக்கு முதல் நல்வரவு, முனிவரே” என்றான்.

சினம்கொண்ட இன்பர் முழங்கும் குரலில்  “மூத்தவருக்கு முதன்மையளிக்காத முறை கொண்டதா உனது அரசு?” என்று கேட்டார்.  “பொறுத்தருள்க முனிவரே, இவ்வவையில் என்றும் அறமே முதன்மைகொண்டது” என்றான் புரூரவஸ். மேலும் சினம்கொண்ட பொருளர்  “இங்கு நீ அமர்ந்திருப்பது பொருள்மேல் என்று அறிந்திராத மூடனா நீ?  அறம் மட்டும் ஓச்சி வாழ்வதென்றால் காட்டுக்குள் தவக்குடில் அமைத்து அங்கு சென்று தங்கு. கோலும் முடியும் அரணும் குடியும் வாழ்வது பொருள்மேல் என்பதை எப்படி மறந்தாய்?” என்றார்.

புரூரவஸ் மேலும் பணிந்து  “முனிய வேண்டாம் பொருளரே, இங்கு நான் ஈட்டியுள்ள பொருளனைத்தும் அறத்தின் விளைவாக அதர்வினவி எனைத் தேடிவந்தவையே. அறம் துறந்தொரு பொருளை என் உள்ளமும் தொட்டதில்லை” என்றான். “இன்பமே மங்கலம் என்றறிக! இன்பத்தை அறியாத அரசன் மங்கலம் அற்றவன். அவன் மண்ணில் மைந்தரும் ஆக்களும் விளைகளும் பெருகாது. மழைவிழுந்து நிலம் பொலியாது” என்றார் இன்பர். “அனைத்துமாகி நின்றிருக்கும் அறம் என்னையும் குடிகளையும் வாழவைக்கும்” என்றான் புரூரவஸ்.

இன்பரும் பொருளரும் சினந்து “இனி ஒரு கணம் இங்கிருக்கமாட்டோம்” என கூவியபடி அவைவிட்டு எழுந்தனர். பொருளர் திரும்பி “மூடா, பொருள் என்பதன் திறன் அறியாமல் பேசினாய். பொருள் அளிக்கும் பெருந்துன்பம் இரண்டு. பொருளருமை அறியாது அள்ளி இறைக்கும் வீணன் எய்தும் வெறுமை முதலாவது. அதைவிடக் கொடியது, பொருளை அஞ்சி அதை பதுக்கி வாழும் கருமி அறியும் குறுகல். நீ    ஏழாண்டு காலம் வீணனாய் இருப்பாய்! எஞ்சிய இருபத்தோராண்டு காலம் கருமியாயிருப்பாய்! பொருளெனும் பெருந்துன்பத்தை அறிந்தபின் அதன் அருளைப்பெறுவாய்” என்றபடி வெளியேறினார்.

இன்பர் சினத்துடன் சிறிதே நகைத்து “காமத்தின் பெருந்துன்பம் பிரிவு. பிரிவு பேருருக்கொள்ள வேண்டுமென்றால் அரிதென ஓர் உறவு நிகழவேண்டும். பெருங்காதல் உனக்கு அமையும். அதை இழந்து பிரிவின் துயரை அறிவாய்! அறிந்தபின்னரே அதை கடப்பாய்” என்றுரைத்து உடன் வெளியேறினார். தயங்கியபடி எழுந்த அறத்தார் “நானும் அவர்களுடன் செல்ல கடமைப்பட்டவன், அரசே. இன்பத்தையும் பொருளையும் இரு கைகளென உணர்பவன் தன் தலையென கொள்ளத்தக்கது அறம். அவை இரண்டையும் நீர் அறிந்து நிறைகையில் உம்மில் நான் அமைவேன்” என்று சொல்லி வெளியேறினார்.

MAMALAR_EPI_15

“இன்பத்துயரும் பொருள்துயரும் பெற்று அறமறிந்து அமைந்தார் உம் மூதாதை புரூரவஸ். அவர் புகழ் வாழ்க!” என்றான் முண்டன். “அவர் அவ்விரு பெருந்துயர்களையும் அறிந்தது ஊர்வசியுடன் கொண்ட காதலால். அவளை அவர் சந்தித்த இடம் இந்தச் சோலை. அவள் நினைவாக அவர் அமைத்ததே இச்சிற்றாலயம்.”