மாதம்: பிப்ரவரி 2017

நூல் பதின்மூன்று – மாமலர் – 28

28. மலர்திரிதல்

“புரூரவஸ் பன்னிரண்டு ஆண்டுகாலம் குரங்குகளுடன் அந்தக்காட்டில் இருந்தான் என்கின்றன கதைகள்” என்று முண்டன் சொன்னான். “காட்டில் அவன் பிறிதொரு குரங்கென்றே ஆனான். அறத்தின்பொருட்டு காமத்தையும் பொருளையும் விட்டவன் பின்னர் அவையிரண்டின்பொருட்டு அறத்தை விட்டான். பின்னர் மூன்றையும் விட்டு விடுதலை ஆகி விலங்கென்று மகிழ்ந்திருந்தான். சூரியன் சமைத்ததை உண்டான். மரங்கள் நெய்ததை உடுத்தான். பாறைகள் கட்டியதற்குள் துயின்றான்.  இருகாலமும் இல்லாமல் இருந்தான். நினைவுகளோ கனவுகளோ இல்லாமல் திளைத்தான்.”

“முதற்கதிரை நெஞ்சில் அறைந்து ஒலி எழுப்பி எதிர்கொண்டான். அந்தி அமைவை தனிக்கிளையில் அமர்ந்து ஊழ்கத்தில் மூழ்கி அனுப்பி வைத்தான். இருசுடர்களுக்கு பொழுதுகளை அவியாக்கி வேள்வி இயற்றினான். கற்றதனைத்தையும் அங்கு அவன் மறந்தான். கற்றலில்லாமல் இருந்த உள்ளம் உணர்தலை மேலும் மேலுமென கூர்தீட்டிக்கொண்டது. உணரப்பட்ட காடு அவன் உள்ளென்றாகியது. அதிலெழுந்தன சுனைகள், ஓடைகள், ஆறுகள். உயர்ந்தன மலைகள். குளிர்முகில்சூடி நின்றன. பெருமழையில் குளிர்ந்தது நிலம். தளிரும் மலரும் சூடியது பசுமை” முண்டன் தொடர்ந்தான்.

பீமன் அவன் முன் கைகளை மார்பில் கட்டியபடி ஊர்வசியின் ஆலயத்தின் படியில் அமர்ந்து சிறியவிழிகள் கனவிலென தணிந்திருக்க அப்பேச்சை கேட்டிருந்தான். “அந்நாளில் ஒருமுறை குரங்குகளுடன் அவன் கிளைவழியாகச் செல்கையில் சுனை சூழ்ந்த அச்சோலையைக் கண்டான். அங்கு சென்று சுனைக்கரை சேற்றில் இறங்கி நீரருந்த குனிந்தபோது தன் முகத்தை நோக்கி மின்பட்டது என தான் என்னும் உணர்வை அடைந்து திகைத்து எழுந்து நின்றான். நினைவுகள் அலையென வந்தறைய மூச்சுவாங்கினான். அகன்று மறைந்த எடையனைத்தும் வந்து அவன் தோளில் அமர உடல்குனித்தான்.”

“என்ன?” என்றது பெருங்குரங்கு. “இங்குதான் அவளைக் கண்டேன்” என்றான். “இங்கா?” என்றது குரங்கு. “ஆம், இங்கே…” என்று அவன் சொன்னான். “நெடுங்காலம் முன்பு. ஒருவேளை அவள் வந்து சென்ற தடம்கூட இங்கிருக்கலாம்.” மூக்கைச் சுளித்தபடி முகர்ந்து அலைந்த குரங்கு ஒரு மூக்குமலரைக் கண்டெடுத்து “இது அவளுடையதா?” என்றது. புரூரவஸ் அதை ஒருகணம் நோக்கியதுமே உடல் அதிர்ந்து விழிமங்கலடைந்தான். கால்கள் நடுங்கி நிலம் கவ்வாமலாயின. பின்னர் மூச்சைக் குவித்து சொல்லென்றாகி “ஆம், அவள் அணிந்திருந்தவைதான்” என்றான்.

மெல்ல உளம் மின்ன “அவள் வந்தபோது அணிகள் இல்லாத காட்டுப்பெண்ணாக இருந்தாள். இது நான் அவளுக்கு அளித்த அணிகளில் ஒன்று. அவளுடைய சின்னஞ்சிறு மூக்கை இது அழகுபடுத்தியது. அனைத்து அணிகளையும் அவள் கழற்றிவிட்டுச் சென்றாள். ஆனால் எஞ்சிய அந்நகைகளில்  இது இருக்கவில்லை என இப்போது உணர்கிறேன். அன்று அந்நகைகளை நோக்கவே என் நெஞ்சுகூடவில்லை.” குரங்கு அதை வாங்கி நோக்கி “இதை ஏன் அவள் கொண்டு சென்றாள்? ஏன் இங்கே விட்டாள்?” என்றது.

அவன் மறுமொழியில்லாமல் அதை நோக்கிக்கொண்டிருந்தான். நீள்மூச்சுகள் நெஞ்சுலையச் செய்தன. “அவள் முகம் இம்மண்ணுக்குரியதல்ல என்று என் உள்ளாழம் சொல்லிக்கொண்டே இருந்தது. அவள் ஒரு கானணங்கு என்று ஐயம்கொண்டிருந்தேன். அணுக்கத்தில் அரையிருளில் அவள் முகத்தை நோக்குகையில் கருவறைத்தெய்வம் போலிருந்தாள். அறியா நோக்கு ஒன்று அவள் விழிகளை அச்சுறுத்துவதாக ஆக்கியது. ஆகவே இந்த மூக்குமலரைச் செய்து அம்முகத்தில் அணிவித்தேன். அவளை என் குடிக்குள் நகருக்குள் அரண்மனைக்குள் கொண்டுவந்து சேர்த்தது இது.” அதைச் சுழற்றி நோக்கியபின் “அவளை பெண்ணென்று மண்ணில் நிறுத்தியது இந்த அணியே” என்றான்.

“அவள் யார்?” என்றது குரங்கு. “அவள் சென்றபின் கடுந்துயரில் துயில்கெட்டு அரைமயக்கில் சித்தம் சிதறி அலைய எங்குளோம் என்றில்லாது இருந்த நாட்களில் ஒருமுறை அவளை என் கனவில் கண்டேன். பிறிதொரு நிலம். பொன்னொளிர் பாறைகள். அந்திச்செவ்வொளி. அவள் பூத்த மலர்மரத்தின் அடியில் நின்றிருந்தாள். நான் நன்கறிந்த அந்த மணம். அதுதான் என்னை அங்கு இட்டுச்சென்றது. அவளை தொலைவிலேயே கண்டு ஓடி அருகணைந்தேன். கைகளை பற்றிக்கொள்ளச் சென்றபோது அவள்  பின்னடைந்தாள். விழிகளில் என்னை மறுக்கும் அயன்மை.”

கூரிய குரலில் “மானுடனே, நான் ஊர்வசி. விண்மகள். உன் கையணைந்ததும் வாழ்ந்ததும் கனிந்ததும் இங்கு நான் கண்ட ஒரு கனவு. நீ என்னை தீண்டலாகாது. ஏனென்றால் இது உன் கனவு” என்றாள். நான் மேலும் அறியாது ஓர் அடி எடுத்துவைக்க “என் ஒப்பின்றி தீண்டினால் உன்னை சிதறடிப்பேன்” என்றாள். நான் அஞ்சி பின்னடைந்தேன். அவள் நானறிந்தவள் அல்ல என விழியும் செவியும் சொல்லிக்கொண்டிருந்தன. அவளே என உள்ளம் தவித்தது.

விண்ணவனின் அமராவதிப்பெருநகரின் ஆடற்கணிகை அவள், நாரதரின் தீச்சொல்லால் மண்ணுக்கு வந்தவள் என்று அறிந்தேன். “அறிந்து கடந்தேன் அங்குள்ள வாழ்க்கையை. இனி மீளமாட்டேன், செல்க!” என அவள் சொன்னபோது ஒருகணம் என் அச்சத்தைக் கடந்து பாய்ந்து சென்று அவள் கைகளைப் பற்றினேன். அவை அனலென்றாகி பற்றி எரிந்தன. என் உடல் அழல்கொண்டு எரியலாயிற்று. பின்னர் இரவும் பகலும் எரிந்துகொண்டிருந்தேன்.

நோயில்  கிடந்தபோது என் விழிதொடும் எல்லையில் சொல்தொடா தொலைவில் அழியாது நின்ற அவள் தோற்றத்தை மட்டுமே நோக்கிக்கொண்டிருந்தேன். ஒருகணமும் பிறிதிலாத வலி. என் அலறல்களுக்கும் அரற்றல்களுக்கும் விம்மல்களுக்கும்  அப்பால் அவள் தெய்வவிழிகளுடன் புன்னகைத்து நின்றிருந்தாள். நான் ஏங்கி எரியும் வன்பால் என அவளுக்குக் கீழே விரிந்திருந்தேன். துளித்து உதிராமல் முத்தென ஒளிவிட்டபடி இருந்தாள் அவள்.

என்னை என் நகர்மக்கள் மூங்கில் பாடையில் தூக்கிக்கொண்டு போகும்போது தலைக்கு மேல் அவள் புன்னகைத்தபடி வந்து கொண்டிருப்பதையே நான் பார்த்தேன். அவர்கள் சிதை மேல் என்னை வைப்பதையும் சந்தனப்பட்டைகளால் என் உடலை மறைப்பதையும் இசையும் வாழ்த்துக்களும் முழங்க ஈமச்சடங்குகளில் ஈடுபடுவதையும் உடலில் எங்கோ இருந்த அறியா விழிகளால் நோக்கிக்கொண்டிருந்தேன். உண்மையில் அவையெல்லாம் விரைவில் முடிந்து என் உடல் எரிகொள்ள வேண்டுமென விழைந்தேன். முள்ளில் சிக்கிய பட்டாடை என எனது சித்தம் அவ்விழிந்த உடலில் மாட்டி துடித்துக்கொண்டிருக்கிறதென்று தோன்றியது. திமிறுந்தோறும் சிக்கி பறக்கும்தோறும் கிழிபட்டுக்கொண்டிருந்ந்தேன்.

இதுதான் அந்த தருணம். இதோ, இன்னும் சிறு பொழுது. இன்னும் சில கணங்கள். என் மைந்தன் சிதையை வணங்கி சுற்றிவருவதை உணர்ந்தேன். என் கால் தொட்டு தொழுதபின் தயங்கிய அவனை குடிமூத்தார் கைபற்றி ஊக்க  அனற்கலயத்தை அவன் வீசினான். அரக்கில் நெருப்பு பற்றிக்கொண்ட திப்பெனும் ஒலியைக் கேட்டு ஒருகணம் விதிர்த்தேன். என் காலை அனல் வந்து தொட்டபோது மீண்டும் ஒரு முறை விதிர்த்தேன். இரு விதிர்ப்புகளுக்கு நடுவே நான் அவளை மீண்டும் கண்டேன். இதே சுனைக்கரையில், இதே சோலையில்.

இங்கே அவள் இலைநிழலசைவுக்கு நடுவே விழிமாயமோ எனத் தெரிந்தாள். அவளைக்கண்டதும் எழுந்த உவகையால் விழுந்துவிடுபவன்போல நடுங்கினேன். பாய்ந்து அருகே சென்று அவளை  ”சியாமை!” என அழைத்தேன். திரும்பி நோக்கியபோது அவள் என்னை அறியவில்லை என்று தோன்றியது.  ”சியாமை, நான் புரூரவஸ்… உன்னை மணந்தவன்!” என்றேன்.

அவள் அருகே வரும்தோறும் சியாமை எனும் உருவம் மென்பட்டு ஆடையென அவள் உடலில் இருந்து நழுவிச் சரிந்து அவள் ஊர்வசி என்றானாள். என் முன் வந்து நிற்கும்போது பெண்மையின் அழகும் தேவர்களின் மிடுக்கும் கலந்து முந்தையோர் குகைகளில் வரைந்த வண்ண ஓவியம் போலிருந்தாள். மானுடரைக்கடந்து அப்பால் நோக்கும் தேவவிழிகள். அவளை முன்பு எப்போது கண்டேன் என உள்ளம் தவித்தது. பின் அது கனவிலென உணர்ந்தேன். இதுவும் கனவா என திகைத்தேன்.

மானுடர் அறியமுடியாத  புன்னகை கொண்ட உதடுகள். தழலென முகில்கீற்றென அணுகிவந்தாள். “அரசே, நான் யாரென்று முன்னரே சொன்னேன். எதன் பொருட்டு இவை நிகழ்ந்தன என்றும் சொன்னேன். மீண்டும் ஏன் என்னைப்பார்க்க வந்தாய்?” என்று கேட்டாள். நான் கைகூப்பி கண்ணீருடன் “ஆம், தேவி. ஏன் இந்த ஆடல் என்று உன் ஆடலைச் சொன்னாய். இதில் நான் ஆற்றும் பணி என்ன என்று நான் இன்னும் அறியவில்லை. இவ்வாடலினூடாக நான் எங்கு செல்கிறேன்? எதை வென்று எங்கு அமையப்போகிறேன்? அதை சொல், நான் விடுதலைபெறுவேன்” என்றேன்.

அவள் என் விழிகளை நோக்கி “மானுடர் ஊழும் தேவர்களின் ஊழும் வெவ்வேறு திசை கொண்டவை. மானுடர் சிறுபூச்சிகள், புகைச்சுருள்கள், மகரந்தப்பொடிகள்.  தேவர்கள் அவர்களைச் சுமந்து சுழன்று செல்லும் பெருங்காற்றுகள்.  நானறிந்தவற்றால் உங்களுக்கு பயனேதுமில்லை” என்றாள். “நீ ஆற்றுவதை நீயும் அறியமாட்டாயா என்ன? உன் ஊழை சொல். அதன் துளியே என்னுடையதும்” என்றேன். “எவருக்காயினும் ஊழ் அறியாப்பெருவலையே” என்றாள்.

“நான் உன்னிடம் கேட்க வேண்டிய வினா ஒன்றே. அதற்கு மட்டும் மறுமொழி சொல். அவ்வினா இருக்கும் வரை என் உடல் விட்டு உயிர் எழமுடியாது. அனைத்தும் அமையும் முழுமையின் முடிவிலியில் பிறிதிலாது என்னால் பொருந்தவும் இயலாது” என்றேன். “சொல்க!” என்று அவள் சொன்னாள். “நான் உன் முன் ஆடையின்றி வரலாகாதென்று என்னை ஏன் கோரினாய்? அதன்பொருட்டு என்னை ஏன் பிரிந்தாய்?” என்றேன்.

அவள் புன்னகை மாறுபட்டது. விழிதிருப்பி “முன்பு உன் மூதன்னை தாரையை சந்திரன் ஏன் விழைந்தான்? அவளை வியாழன் ஏன் ஏற்றுக்கொண்டான்? மீண்டும் அவள் ஏன் சந்திரனுடன் சென்றாள்? ஏன் அவள் செருக்கி மகிழ்ந்து யானைமேல் அமர்ந்திருந்தாள்?” என்றாள். நான் திகைத்து “அறியேன்” என்றேன். “ஒவ்வொரு முறையும் அக்கதைகளை நான் எண்ணியதுண்டு. எண்ணம் சென்று எட்டியதே இல்லை” என்று தவிப்புடன் சொன்னான்.

“நீ இதை அறியும் கணம் இன்னமும் கூடவில்லை” என்றாள் ஊர்வசி. “சொல்!” என்று கை நீட்டி அவள் தோளைப்பற்றினேன். அங்கு வெறுமையை என் கை உணர்ந்தது. அத்தருணத்தில் என் காலை என் மைந்தனின் கைகள் பற்றின. விறகுக்கட்டைகள் சரிய சிதையிலிருந்து புரண்டு கீழே விழுந்தேன். மண் என்னை இரும்புப்பலகை போல எழுந்து ஓங்கி அறைந்தது. என் நெஞ்சுக்குள் மூச்சு வெடித்தெழுந்தது.

புரூரவஸ் அந்த மூக்குமலரை கைகளால் மெல்லச்சுழற்றியபடி நோக்கிக்கொண்டிருந்தான். பொன்னிலும் மணியிலும் அமைந்த வாடாச்சிறுமலர் அதைச்சூழ்ந்து வெறும்வெளியை விழிகளால் செதுக்கி ஒரு முகத்தை உருவாக்கிவிட முயல்பவன் போலிருந்தான். குரங்கு அவனை நோக்கி விழிசிமிட்டியும் சிறுசெவி மடித்தும் உடல்சுரண்டியும் அமர்ந்திருந்தது.

மெல்ல அவன் அருகே அவளிருக்கும் உணர்வை அடைந்தான். நிமிர்ந்து நோக்கியபோது கரிய உடலில் நிலவொளி மிளிர அப்பால் சுனைக்கரையில் முழங்கால் மடித்து முட்டுகளில் முகம்சேர்த்து நீள்கூந்தல் வழிந்து நிலம்வளைந்திருக்க அமர்ந்திருக்கும் அவளைக் கண்டான். அவன் கையிலிருந்த மூக்குமலர் அவள் மூக்கில் இருந்தது. அதன் ஒளியில் அவள்  முகம் மையம்கூர்ந்திருந்தது.

புலிக்கால்முண்டன் பீமனின் அருகில் வந்தான். “மாமல்லரே, இப்போது ஒரு வாய்ப்பு. புரூரவஸ் என்றாகிச் சென்று அவளிடம் அவர் விழைந்த வினாவைக்கேட்டு அறிந்து மீள்க! அவள் மறுமொழி சொல்வாளெனில் நீங்கள் கொண்ட முடிச்சொன்றும் அவிழலாம்.” கைகளைக் கட்டி ஊர்வசியின் ஆலய கற்சுவரில் சாய்ந்து துயிலிலென சரிந்திருந்த பீமன் திடுக்கிட்டவன்போல எழுந்தான். பின்னர் “ஆம்” என்றான். பெரிய பற்களைக்காட்டி புன்னகைசெய்து “செல்க!” என்றான் முண்டன்.

பீமன் சருகுகளில் காலடிகள் ஒலிக்க மெல்ல நடந்து ஊர்வசியின் அருகே சென்று நின்றான். நீரில் அவன் உருவைக்கண்டு சற்று திடுக்கிட்டு தலை தூக்கி பார்த்தாள். பின்னர் விழிகளில் நகை எழ எழுந்து அவன் அருகே வந்து புன்னகைத்தாள். “நீயா?” என்றாள். “குரங்கெனவே மாறிவிட்டாய்.” பீமன் “ஆம், நான் கொண்டவை ஆனவை கருதியவை அனைத்தும் எங்கோ உதிர்ந்துவிட்டன. பிறிதொருவனாக இங்கிருக்கிறேன். இங்கிருந்தும் உதிர்த்துச் செல்ல ஒன்றே உள்ளது” என்றான்.  மானுடம்கடந்த நோக்கு வெறித்த விழிகளுடன் “என்ன?” என்று அவள் கேட்டாள்.

“முன்பு நான் கேட்ட அதே வினாதான், விண்மங்கையே. ஆடையின்மையை நீ அஞ்சியது ஏன்?” அவள் அவன் கண்களை நோக்கி துயருடன் புன்னகைத்தாள். “இல்லை, அவ்வினாவுடன் அனைத்தும் முடிந்துவிடக்கூடும். பிறிதொன்று தொடங்கலுமாகும். அதைச்சொல்ல பொழுது கனியவில்லை, பொறுத்தருள்க!” என்றாள். “சொல், நீ என்னை ஏன் பிரிந்தாய்?” என்று அவன் உரக்கக்கூவியபடி முன்னால் சென்றான்.

“எனில் இவ்வினாவுக்கு விடை சொல்க! புதனில் அமைந்த இரு தந்தையரின்  குருதியில் இளையை விரும்பியது எது? இளனை விரும்பியது எது?” என்றாள் அவள். “ஆணென்றும் பெண்ணென்றும் உன்னை கருசுமந்தனர். மூன்று முதலறங்களில் அறத்தை உனக்களித்தது யார்? பொருளையும் இன்பத்தையும் உனக்களித்தவர் யார்?” அவள் மேலும் அணுகி வந்து புன்னகை சிரிப்பென ஆக, விழிகளில் சிறு நஞ்சொன்று குடியேற “சந்திரகுலத்தவனே, உன்னிலமைந்த எதை விழைந்து வந்தாள் விண்மகள்?” என்றாள். “அவற்றுக்கு விடையறிந்தால் அவள் சென்றதென்ன என்றும் அறிவாய்.”

அவன் திகைத்து நிற்க அவள் மென்காலடி வைத்து பின்னால் சென்று இலைகளினூடாக வந்த ஒளிக்கதிர்களால் பின்னப்பட்ட காற்றுவெளியினூடாக தன் வண்ணங்களைக் கலந்து கரைந்து விழிவிட்டகன்றாள்.  அவள் கேட்ட வினாக்கள் உண்மையில் சொல்வண்ணம் கொண்டனவா என அவன் உள்ளம் வியந்தது. அவள் மறைந்தபோது சொற்களும் இழுக்கப்பட்டு உடன் சென்று மறைய அவன் உள்ளம் வெறுமைகொண்டது. விலகி அந்நிகழ்வைக் காட்டிய காலவெள்ளப்பரப்பு இருவிளிம்புகளும் இணைந்து ஒற்றைப்பெருக்கென்றாகியது.

பீமன் திடுக்கிட்டு விழித்து “சென்றுவிட்டாள்” எனக்குழறினான். உடனே தன்னை உணர்ந்து தன் கைகளால் தரையை அறைந்து “சென்றுவிட்டாள்! சென்றுவிட்டாள்!” என்று கூவினான். “விழிதிறவுங்கள், பாண்டவரே. நீங்கள் இருப்பது நெடுந்தொலைவில், நெடுங்காலத்துக்குப்பின்” என்றான் முண்டன். பீமன் எழுந்து அவன் தோளைப்பற்றி உலுக்கி “நான் அவ்வினாவை கேட்டேன். அவள் மறுமொழி அளிக்கவில்லை” என்றான். “அதை அறியுமிடத்தில் நானில்லை என்று அவள் எண்ணினாள். மறுவினாக்களினூடாக கடந்துசென்றாள்” என்றான்.

முண்டன் புன்னகைத்து “உங்கள் மூதாதை மண்ணில் மூன்று முறை ஊர்வசியைப் பார்த்ததாக கதைகள் சொல்கின்றன. எனவே மீண்டும் அவ்வினாவை சென்று அவளிடம் கேட்க உங்களுக்கு வாய்ப்புள்ளது. அவள் விடையுரைத்தாகவேண்டும்” என்றான். “ஏனென்றால் மூன்றாம் முறை புரூரவஸ் அவள் கேட்ட வினாக்களுக்கு விடையளித்தார். அவள் அளித்த விடையால் நிறைவடைந்து மீண்டார் என்கின்றன நூல்கள்” முண்டன் சொன்னான்.

“அவர் காட்டில் கல்லாலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்து தன்னுள் வேர் செலுத்தி  ஆழ்ந்தார். புதுத்தளிர்கொண்டு எழுந்தார். அவரை முழுமைகொண்ட முனிவர் என அறிந்தனர் குருநகரியின் குடிகள். அவருடைய மைந்தர்களும் பெயர்மைந்தர்களும் குடிகளும் திரண்டு வந்து அவரை அடிபணிந்து வணங்கினர். நெற்றியில் நிலவெழுந்து அவர் விசும்பு என்றானபோது அவரை பேரறச்செல்வர் என கல்நிறுத்தி தங்கள் குலதெய்வமென வணங்கினர். அவர் ஊர்வசியைக் கண்ட அச்சுனைக்கரையில் அவளுக்கு சிற்றாலயம் ஒன்றை அமைத்து சிலைவடித்தனர்.”

“இங்கிருந்து நீங்கள் அங்கே செல்லமுடியும்” என முண்டன் சொன்னான். “இம்முறை விடைபெற்று மீள்வீர்கள். புரூரவஸ் பெற்ற விடைகள் நூலில் இல்லை, அவற்றை ஊழ்கத்தால் மட்டுமே அறியலாகும் என்கிறார்கள். அவ்வூழ்கம் இன்று உங்களுக்கு அமையட்டும்.” பீமன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். அவன் கைகட்டி ஆலயப்படியில் மீண்டும் அமர அவனருகே வந்த முண்டன் “உளம் அமிழுங்கள். மீண்டும் அத்தருணத்தை சென்றடையுங்கள்” என்றான்.

பீமன் தோள்தளர்ந்தவனாக அப்படிகளில் நீர்ப்படலம்போல் படிந்தான். திரும்பி கருவறையில் அமர்ந்த ஊர்வசியின் தெய்வ முகத்தை பார்த்தான். பொழுது சற்று மாறியிருந்தமையால் ஒளிக்கோணம் மாறுபட்டு நோக்கு பிறிதொன்றென ஆகிவிட்டிருந்தது. அதில் இருந்த கனவு அகன்று மானுட அன்னையருக்குரிய கனிவு குடியேறியதாகத் தோன்றியது. “ஆம், அமிழ்க!” என்று முண்டன் சொன்னான். பீமன் கண்களை மூடிக்கொண்டான். முண்டன் கைநீட்டி அவன் இருபுருவங்களுக்கு நடுவே மெல்ல தொட்டபோது மாபெரும் சுட்டுவிரலொன்றால் சுண்டித் தெறிக்கவிட்டு இருள் வெளிக்குள் சென்றுகொண்டே இருக்கும் உணர்வை அடைந்தான்.

மீண்டும் குரங்குடன் அச்சுனைக்கரையை அடைந்தான். முன்பெனவே அவள் அங்கு அமர்ந்திருந்தாள். மேலும் தனிமையும் துயரும் கொண்டிருந்தாள். அவன் காலடி ஓசையைக்கேட்டு திரும்பிப்பார்த்து துயர் படர்ந்த புன்னகையுடன் “நீயா?” என்றாள். “ஆம் நானேதான்” என்று அவன் சொன்னான். எழுந்து அவன் அருகே வந்து “மீண்டும் ஒருமுறை உன்னை நான் காண்பேன் என்று வகுக்கப்பட்டுள்ளது. இன்று நீ வருவாய் என்றும் அறிவேன்” என்றாள்.

பீமன் “ஆம்” என்றான். “நான் உன்னிடம் ஒரு வினாவை கேட்க வந்துள்ளேன்.” அவள் புன்னகையுடன் “கேள், அதுவே இறுதிவினா அல்லவா?” என்றாள். அவன் “இங்கிருந்து நீ முற்றிலும் உதிரவில்லையா என்ன? ஏன் மீண்டும் இச்சுனைக்கரைக்கே வந்தாய்? விண்ணவளே உன்னில் எஞ்சியிருப்பதென்ன?” என்றான்.

அவள் விழிகள் மாறுபட்டன. இமை தாழ்ந்து, முகம் பழுத்தது. நீள்மூச்சுடன் முலைகள் எழுந்தமைந்தன. ஒரு சொல்லும் உரைக்காமல் திரும்பி நடந்தவளை அவன் பின்னால் சென்று அழைத்து “சொல்!” என்றான். அவள் சொல்லற்ற விழிகளால் நோக்கியபின் அணையும்சுடர் என மறைந்தாள்.

பீமன் விழித்தெழுந்து “இம்முறையும் நான் அதை கேட்கவில்லை. பிறிதொன்றை கேட்டேன்” என்றான். “ஆனால் அவ்வினாவுக்கான விடை எனக்குத் தெரியும்” என்றான். முண்டன் “அதுவே உங்கள் மூதாதையை விடுவித்த சொல்லாக இருக்கக்கூடும்” என்றான் முண்டன். “நூல்கள் என்ன சொல்கின்றன?” என்று பீமன் கேட்டான். முண்டன் பெரிய பற்களுடன் புன்னகைத்து “இளவரசே, மானுடன் உண்மையிலேயே அறியத்தக்க எதுவும் நூல்களில் எழுதப்பட்டதில்லை. நூல்கள் புதையலுக்கு வழிசுட்டும் வரைபடங்கள் மட்டுமே” என்றான்.

பீமன் நீள் மூச்சுடன் தலையசைத்து “நன்று! இது இவ்வாறுதான் நிகழமுடியும்” என்றான். எழுந்தபோது அவன் முகம் தெளிவடைந்திருந்தது. “நாம் இங்கிருந்தும் கிளம்பியாகவேண்டும் எனத் தோன்றுகிறது. நான் உணர்ந்த இன்மலர் மணம்  இதுவல்ல.” முண்டன் புன்னகைத்து “ஆம், நீங்கள் முன்னரே உளம்கிளம்பிவிட்டீர்கள்” என்றான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 27

27. வீடுகோள் செலவு

கீற்றுநிலா முகில்களுக்குள் மறைந்தும் விளிம்புகாட்டியும் நகரை ஆக்கி அழித்துக்கொண்டிருந்த பின்னிரவில்  முரசோ கொம்போ ஒலிக்காமல் ஓரிரு பந்தங்கள் மட்டுமே எரிந்த சிறைமுற்றத்தில் ஐம்பது வில்வீரர்கள்கொண்ட படை காத்திருந்தது. உள்ளிருந்து எழுவர் புரூரவஸை கை பிணைத்து தள்ளி அழைத்துவந்தனர். அதுவரை இருளில் கிடந்த அவன் ஒளியை நோக்கி கண்கூசி முழங்கையால் முகம் மறைத்தான். ஒரு வீரன் “ம்” என ஊக்க அவன் நடந்து அங்கே காத்துநின்ற சிறிய மூடுதிரைத் தேரில் ஏறிக்கொண்டான். படைத்தலைவன் கைகாட்ட படை ஒரு புரவி பிறிதொன்றை உந்தியதுபோல அசைவுகொண்டு கிளம்பியது.

நகரத்தெருக்களில் ஏறி கோட்டை முகப்பைக் கடந்து பெருஞ்சாலையில் ஓடி வடதிசை நோக்கி அகன்றது. அதன் ஓசை ஒரு கோபுரம் கற்களாக இடிந்து சரிவதுபோல ஒலித்து அழிந்தது. குடிமக்கள் எவரும் இல்லங்களைவிட்டு வெளியே வரலாகாதென்று ஆணை இருந்தமையால் நகர் முற்றிலும் ஒழிந்து கிடந்தது. பின்னிரவின் தூசுமணக் காற்று மட்டும் தெருக்களில் சுழித்துக்கொண்டிருந்தது. அங்காடி முகப்பில் அவிழ்த்துவிடப்பட்ட அத்திரிகள் ஒலிகேட்டு செவிகூர்ந்து கனைத்தன. நாய்கள் எழுந்து குரைக்கத்தொடங்கின.

காவல் மாடங்களில் கைகளைக் கட்டியபடி எழுந்துநின்று நோக்கிய வீரர்கள் படைசென்று மறைந்த புழுதிமணம் இருளில் எழ  பெருமூச்சுவிட்டனர். இல்லங்களின் இருண்ட அறைக்குள்ளெல்லாம் புரவிக்குளம்படிகளின் ஓசை பெருகி சுவர்களை அதிரவைத்து பின்பு ஓய்ந்தது. இருளுக்குள் சிறகடிக்கும் கலைந்த பறவைகளின் ஓசைகள் மட்டும் எஞ்சின. அங்காடிச் சதுக்கத்தில் காவல்பூதத்தின் காலருகே நின்றிருந்த பித்தன் ஒருவன் கைகளை வீசி உரக்க நகைத்தான்.

திண்ணையில் கம்பளி போர்த்தி அமர்ந்திருந்த முதியவர் நீள்மூச்செறிந்து “உறுத்துவந்தூட்டும் ஊழ்வினை. பிறிதொன்றும் சொல்வதற்கில்லை” என்றார். இடைவழிக்கு அப்பால் மறுதிண்ணையிலிருந்த இன்னொரு முதியவர் “பெருவாழ்வு. எனவே வீழ்ச்சியும் பெரிதே” என்றார். “ஆம். எண்ணுகையில் எளியோனாக வாழ்ந்து எளியோனாக இறப்பதே உகந்ததென்று தோன்றுகிறது” என்றார் முதல் முதியவர். “யானைக்கு புண் வந்து சீழ் கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா? படிகக் கோடரியால் வெட்டி முழங்கைவரை உள்ளேவிட்டு மருந்திடுவார்கள். பெருவலி கொண்டு அக்கரிய உடல் துடிப்பதை நெடுந்தொலைவிலேயே நின்று பார்க்கமுடியும்.”

மறுமுதியவர் இருமி ஓய்ந்து இழுத்து சிரித்து “எறும்புக்கும் யானைக்கும் இறப்பு ஒன்றேதான் போலும்” என்றார். மற்றவர் சொல்லெடுக்காமல் பெருமூச்சு மட்டும் விட்டார். அப்பால் எதிர்த்திண்ணையிலிருந்து ஒரு குரல் “ஆம், ஆற்றல்மிக்க விலங்குகள் நொந்து நாட்பட்டு சாகின்றன. எறும்புகள் நொடியில் பல்லாயிரமென மறைகின்றன. ஊழுக்கும் கருணையுண்டு” என்றது. முதல் முதியவர் “எவர் துயரும் அதற்கு ஒரு பொருட்டல்ல. எல்லாமே குமிழிகள்தான் நதிக்கு. அதில் பெரிதென்ன சிறிதென்ன?” என்றார்.

ஒவ்வொருவருக்கும் அவர்கள் வேட்டு எய்தி தருக்கி இழந்து ஏங்கி வாழும் அனைத்துக்கும் அப்பால் சென்று ஒரு வெறுமையின் முழுமையைக் காணும் கணமாக அமைந்தது அது. அதை சொல்லென ஆக்குவது மட்டுமே அதன் பேரெடையை தவிர்க்கும் வழி என்று தோன்றியது. ஆனால் பேசும்போதே அதன் பொருளின்மையை உணர்ந்து பெருமூச்சுடன் அமைதியானார்கள்.

கோட்டைக்கு அப்பால் குளம்படிகள் மறைந்ததும் வலி கொண்ட எருதின் ஒலியுடன் கதவுகள் மூடின. சக்கரத்தைச் சுழற்றிய பின் “இனி அவர் நகர் நுழையமுடியாது அல்லவா?” என்று ஒரு வீரன் கேட்டான். “ஆம், விலக்கு அவர் முழுவாழ்வுக்கும்தான்” என்றான் இன்னொருவன். “ஒரு சிறு மைந்தனை இழப்பதற்கே அத்தனை துயரென்றால் இத்தனை பெரிய நகரை இழப்பது துயர்களில் மலை” என்றான் அவன். “அவருக்கு இனி வாழ்வில்லை” என்றான் ஓர் இளைஞன். “மானுடர் அவ்வாறல்ல. சென்ற இடத்தில் முற்றிலும் பொருந்தும் இயல்புடையவர்கள். சில நாட்களில் இந்நகரில் இருந்ததையே அவர் மறந்துவிடக்கூடும்” என்றார் மேலே நின்ற இன்னொரு முதியவர்.

“எப்படி மறக்க முடியும்? இந்நகர் ஒரு சிலந்தி வலை. இதைப் பின்னி இயக்கி இதுவென்று விரிந்து இதன் நடுவில் இருந்தார் அவர்” என்றது மேலும் உயரத்தில் ஒரு குரல். பிறிதொருவர் “இங்கு அவருக்கென எதுவும் எஞ்சி இருக்கவில்லை. மைந்தர் இனி அவர் மைந்தரல்ல. குடிகள் அவர் குடிகளும் அல்ல. இங்கிருந்து துயர் கொள்வதைவிட அகன்று செல்வது உகந்தது” என்றார். அனைவரும் அதை உண்மை என உணர்ந்தமையால் மறுமொழி எழவில்லை. “பல தருணங்களில் பிரிவென்பது சிறந்த அறுவை மருத்துவம். அழுகியதை, கருகியதை வெட்டி வீசிவிட்டால் அப்புண் சில நாட்களிலேயே கருகும். தோழரே, தொப்புள்கூட ஒரு புண் கருகிய வடுதான்” என அவரே தொடர்ந்தார்.

புலரிவரை குருநகரியில் புரூரவஸைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தனர். அங்காடி அருகே சிறுகுளத்தில் நீராடும்போது விடிவெள்ளி நோக்கி கைதொழுதபின் “எங்கு செல்கிறார்கள் என்று தெரியுமா?” என்றார் ஒரு வணிகர். “காட்டுக்கு” என்றார் பிறிதொருவர். “காடு ஊர் போலவே விரிந்து பரந்தது. காட்டில் எங்கே?” என்றார் இன்னொருவர். “அதை அவர்தான் தெரிவு செய்யவேண்டும், தன் திறனுக்கும் தேவைக்கும் ஏற்றபடி.” தணிந்த குரலில் “நாம் மீண்டும் அவரை பார்க்கப் போவதில்லையா?” என்று ஓர் இளைஞன் கேட்டான். “பார்க்கக்கூடும், ஆனால் அவர் பிறிதொருவர் என்றாகியிருப்பார். பண்டு காட்டில் இருப்பது அவருக்கு உகந்ததாக இருந்தது. இக்குலம் அங்கிருந்துதான் கிளம்பி வந்தது என்று அவர் சொல்வதுண்டு” என்றார் ஒருவர்.

அரண்மனை அனைத்து நாண்களையும் எதிர்புரி சுற்றித் தளர்த்திவைத்த யாழ்போல முற்றிலும் ஓசை அடங்கி இருந்தது. புரூரவஸின் தேவியர் தங்கள் மஞ்சத்தறைகளுக்குள் அவிழ்ந்த குழலும் அழுது வீங்கிய முகமுமாக அமர்ந்திருந்தனர். படைவீரர்கள் வேல்களையும் வில்களையும் சாத்திவிட்டு அதனருகே சிறு குழுக்களாக அமர்ந்து தங்கள் எண்ணங்களுக்குள் மூழ்கி இருந்தனர். அமைச்சர்களின் அவையிலும் படைத்தலைவர்களின் கூடத்திலும்கூட சொல்லென ஏதும் எழவில்லை. அவ்வப்போது எழுந்த பேச்சுக்குரல்கள்கூட மிகத் தாழ்ந்த ஒலியிலேயே  இருந்தன. அமைதி ஒவ்வொருவரையும் அச்சம் கொள்ளச்செய்து மந்தணம் பேசவைத்தது. மந்தணம் பேசும்தோறும் அனைத்துத் துளைகளும் செவிகள் போலாயின. அனைத்துக் குமிழ்களும் முனைகளும் விழியொளி கொண்டன.

தன் மஞ்சத்தறைக்குள் சாளரத்தினூடாக இருள்வெளியைப் பார்த்தபடி ஆயுஸ் கைகட்டி நின்றிருந்தான். குளிர்காற்றில் அவன் ஆடை எழுந்து பறந்தது. தொலைவில் வளைந்த வானில் தெரிந்த விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தான். விண்மீன்களை நோக்குகையில் மண்மீதுள்ள ஒவ்வொன்றும் எளிதென்றும் பொருளற்றதென்றும் தோன்றும் விந்தை என்ன என்று எண்ணிக்கொண்டான். பொருளற்றவையே  அனைத்தும் என்று தோன்றுகையில் எழும் விடுதலை உணர்வை எண்ணியபோது வியப்பு எழுந்தது. இச்சிறு வாழ்க்கை, இச்சிறு வாழ்க்கை என ஓடிக்கொண்டிருந்தது சித்தம்.

சிறு கூடொன்று கட்டி நான் நான் என்று தருக்கி நின்றிருக்கும் சிதல். எங்கோ எவரோ எதற்கோ நடந்துசெல்லும் கால்களால் தட்டி சிதறடிக்கப்படுகிறது. சலிக்காது மீண்டும் மீண்டும் கட்டி எழுப்புகின்றது. சிதல்கள் பிறிதொன்றை அறிந்திலாதவை. அது ஒன்றே தங்களுக்கு ஆணையிடப்பட்டிருப்பதுபோல அவை கணம் சோராது செயலாற்றுகின்றன. அதனூடாக நிறைவடைகின்றன. அல்லது அவற்றுக்கும் நிறைவின்மை உண்டா? எண்ணி அந்தக் கூட்டை அள்ளிக்கொள்ள இயலாது சித்தம் பேதலிப்பதுண்டா?

தன் எண்ணங்களை தாளாதவன்போல நீள்மூச்சு விட்டபடி அவன் அறைக்குள் நடந்தான். பீடத்தில் இருந்த தன் உடைவாளை எடுத்து அதன் உறையில் இருந்த சிற்பச்செதுக்குகளை வருடியபடி பொருளற்ற எண்ணங்களுக்குள் சென்று மீண்டும் பெருமூச்சுவிட்டான். அதை வைத்துவிட்டு வந்து விண்மீன்களை நோக்கி நின்றிருந்தான். எவரென்று நான் இருப்பேன் இக்குலநிரையில்? இது ஒரு அருமணி மாலை. வெறுங்கல்லென்றிருந்தாலும் மணியொளி உண்டு. முண்டிப்புடைத்தெழுந்து ஒளிகொண்டு ஆவதொன்றுமில்லை. இருத்தல், கடந்துசெல்லுதலுக்கு அப்பால் எஞ்சுவதொன்றும் இல்லை.

துயின்றுகொண்டிருந்த ரயனுக்கும் விஜயனுக்கும் அருகே மஞ்சத்தில் ஒருவர் இருப்பை ஒருவர் உணர்ந்தபடி அமர்ந்திருந்தனர் ஸ்ருதாயுஸும் சத்யாயுஸும். நெடுநேரத்திற்குப்பின் ஸ்ருதாயுஸ் உடல் அசைய ஒலிகொண்டு “காட்டுக்குள் புகுந்திருப்பார்கள் போலும்” என்றான். சத்யாயுஸ் ஆம் என்று தலையசைத்தான். மீண்டும் ஒரு வினாவை அவன் கேட்க விரும்பினான். அதை சொல்லென ஆக்கினால் பிறகு அழித்தெழுத முடியாத கல்வெட்டென்று ஆகிவிடும் என்று எண்ணி ஒதுக்கினான். குளிரென குத்தும் வலியென உயிரை வதைத்த அத்தருணத்தை கடக்கத்துடித்த உள்ளம் அதில் ஆழ்வதை விரும்பத்தொடங்கியது எப்போது என எண்ணிக்கொண்டான்.

imagesஅரசவைவிட்டு  தன் இரு மாணவர்கள் நிழலென தொடர  இல்லம் வந்த அமைச்சர் பத்மர் தன் அறைக்குள் அமர்ந்து மைந்தனுக்குரிய ஆணைகளை பன்னிரு ஓலைகளிலாகப் பொறித்து பட்டுத்துணியில் சுற்றிவைத்தார். பதினாறு வயதான சுதர்மன் நகருக்கு அப்பால் குருவாகினி என்னும் ஓடைக்கரையில் அமைந்திருந்த வேதக்கல்வி நிலையிலிருந்து தேரில் அழைத்து வரப்பட்டிருந்தான். அவர் எழுதிக்கொண்டிருந்தபோதுதான் அவன் வந்து வணங்கினான். நிமிர்ந்து நோக்கி அவனை சற்றுநேரம் வெறித்தபின்  நீராடி வரும்படி ஆணையிட்டார். ஈரக்குடுமியில் நீர் சொட்ட கைகளைக் கட்டிக்கொண்டு தன் அருகே நின்ற அவனிடம் அச்சுவடிகளை கொடுத்தார்.

“இவை ஆணைகள், நெறிகாட்டுதல்கள், அருஞ்சொற்றொடர்கள். மைந்தா, அறம் ஒன்றைத்தவிர பிறிதொன்றை இறையென்றும், கொடியென்றும், உறவென்றும் இலக்கென்றும் கொள்ளாதிருத்தல் உன் கடன். நலம் சூழ்க!” என்று வாழ்த்தினார். அவன் அவர் தாள்தொட்டு சென்னிசூட தலையில் கைகளை வைத்து “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார். அவன் விழிநீரை இமையசைத்து உலரச்செய்தபடி பின்காலடி வைத்து அவர் முன்னிலை நீங்கினான். அவன் அன்னை அங்கே காத்திருந்தாள். அவன் தோளில் கைவைத்து “அழக்கூடாது” என்றாள். அவன் நிமிர்ந்து நோக்கினான். அவள் முகம் சிலையென்றிருந்தது.

மரவுரியை அணிந்து பிற அணிகளேதுமின்றி வலக்காலெடுத்து படியிறங்கி திண்ணைக்கு வந்து அங்கு எழுந்தமர்ந்திருந்த தன் தந்தையை அணுகி குனிந்து அவர் கால்களைத்தொட்டு சென்னிசூடினார் பத்மர். “முன்னரே செல்கிறாய், மூதாதையர் எண்ணம் அதுவெனில் ஆகுக!” என்றார் கிழவர். “தங்களுக்கு என் மைந்தன் இருக்கிறான், தந்தையே” என்றார். “ஆம், உனக்கு அவன் அளிக்கும் நீரும் எள்ளும் தேவையில்லை. வடக்கிருப்பவன் இங்குள அனைத்தையும் துறந்து செல்கிறான். பதினெட்டு நாட்களில் உடல் விட்டு உயிர் அகலுமென்பார்கள். முதல் ஆறு நாட்கள் விழைவுகள். இரண்டாவது ஆறு நாட்கள் சினங்கள். மூன்றாவது ஆறு நாட்கள் பற்றுகள். அவை உனக்கு நிகழட்டும்” என்றார் முதியவர்.

“தங்கள் நற்சொல் திகழ்க!” என்றார் பத்மர். “நம் குடியில் முன்னர் மூன்று மூதாதையர் வடக்கிருந்ததுண்டு. அவர்கள் சென்றமைந்த அவ்வொளிமிக்க உலகில் நீயும் சென்று அமைக! நலம் சூழ்க!” என்றார் முதியவர். அவர் முகத்தில் துயர் ஏதும் தெரியவில்லை. துயரற்ற புன்னகையுடன் அவரைத் தொழுது பத்மர்  புறம்காட்டாது விலகி இருள் பரந்த தெருவில் இறங்கினார். அங்கே நின்றிருந்த அவருடைய மாணவர்கள் தொழுது உடன்வந்தனர்.

நகருக்கு வெளியே தெற்கு எல்லையில் அமைந்த கொற்றவை ஆலயத்தின் அருகே நின்றிருந்த தொன்மையான அரசமரத்தின் அடியில் அவருக்கென தர்ப்பையிருக்கை விரிக்கப்பட்டிருந்தது. அவருடைய இரு மாணவர்கள் அங்கே காத்து நின்றிருந்தனர். நகரத் தெருவினூடாக கைகளைக் கூப்பியபடி அவர் நடக்க அவரை அழைக்க வந்திருந்த இரு மாணவர்கள் அவருக்குப்பின் ஓசையின்றி நடந்தனர்.  அவர்களின் காலடியோசைகள் மந்தணச்சொற்கள்போல இருட்டுக்குள் ஒலித்தன.

ஓர் ஆழுள்ளத்து எண்ணம்போல அவர்கள் செல்வதாக அவருடைய மாணவர்களில் ஒருவன் எண்ணிக்கொண்டான். நகரின் முழுவாழ்வையே மாற்றி அமைக்கும் நிகழ்வுகள் நடந்த அந்த இரவில் குடிமக்கள் எவரும் எதையும் அறியலாகாதென்று சொல்லப்பட்டிருந்தது. உடலுக்குள் நெஞ்சும் வயிறும் மூச்சுப்பையும் இயங்குவதுபோல் அவர்கள் அறியாது அவை நிகழ்ந்துகொண்டிருந்தன என அவனுக்குத் தோன்றியது. அத்தருணம் பின்னர் தன்னால் கூர்ந்து நினைவுற்று மீண்டும் மீண்டும் சொல்லப்படப் போவதென்பதை உணர்ந்தமையின் கிளர்ச்சியால் அவன் உடல் அடிக்கடி விதிர்த்துக்கொண்டிருந்தது. கூடவே பென்னம்பெரிய நிகழ்வுகள் அத்தனை எளிதாகவும் இயல்பாகவும்தான் நிகழுமா என அவன் உள்ளம் வியந்துகொண்டது.

இருளுக்குள் நடந்துசென்று தன் வடக்கிருத்தலுக்கான இடத்தை அடைந்த பத்மர் கொற்றவை ஆலயத்தை அணுகி கொலைவிழியும் கோட்டெயிறும் ஈரெண் கைகளில் படைக்கலங்களுமாக நின்ற அன்னையை வணங்கி அவ்வாலயத்தை மும்முறை வலம் வந்தார். அரசமரத்தடியை வந்தடைந்ததும் அவர் ஒரு மாணவனை நோக்க அவன் மெல்ல தலையசைத்து உரிய நற்பொழுது அணுகிவிட்டது என்று உணர்த்தினான். கைகூப்பியபடி அவர் அரசமரத்தடி மேடைமேல் ஏறி  தர்ப்பைப்புல் இருக்கை மேல் கால் மடித்தமர்ந்தார். முழுவிடுகை முத்திரையில் வலக்கையை மலர்த்தி அதன்மேல் இடக்கையை வைத்தார். கண்களை மூடி தன் நெஞ்சத்து ஆழத்தின் அதிர்வில் சித்தம் நாட்டி அமர்ந்தார்.

நான்கு மாணவர்களும் அவரையே நோக்கி நின்றனர். அவரது மூச்சு சீராக எழுவதையும் உடல் இயல்பாக தளர்நிலை கொள்வதையும் கண்டதும் மெல்ல பின்னடைந்து அங்கிருந்த உதிரிப் பாறைகளில் அமர்ந்தனர். அப்போதுதான் நகருக்குள் புரவிக்குளம்போசைகள் எழுந்து அகல்வதை அவர்கள் கேட்டனர். திரும்பி ஒருவரை ஒருவர் நோக்கினர். ஓசை முற்றடங்கியபோது நால்வரும் ஒருங்கே பெருமூச்சு விட்டனர்.

imagesபுரூரவஸை அவனது படைவீரர்கள் காட்டின் எல்லையென அமைந்த திரிகூடம் என்னும் மூன்று மலைப்பாறைகளின் அடிவாரம்வரை கொண்டுவந்து இறக்கிவிட்டனர். அவன் கைகளைக் கட்டியிருந்த பட்டுத்துணியை அகற்றியபின் படைத்தலைவன் “செல்க!” என்று முகம் நோக்காது ஆணையிட்டான். இடறிய காலடிகளுடன், களைப்பில் விழிகள் மங்கி காட்சிகள் நீர்ப்பாவை என அலையடிக்க அவன் நடந்தான். இமைகளை அடித்து திறந்து நோக்கினான். மெல்லத்தெளிந்த காட்டுமுகப்பில் விழுந்து பெருகிய பின்காலையின் வெண்ணிற ஒளி அனைத்தையும் வெளிறச்செய்திருந்தது. முந்தையநாள் மழைபெய்திருந்த ஈரமண்ணிலிருந்து நீராவி எழுந்து மூச்சடைக்க வைத்தது. காட்டிலிருந்து எழுந்த பறவைக்குரல்கள் செவியின் நுண்சவ்வை அதிர வைக்குமளவுக்கு உரக்க ஒலித்தன.

அவனுக்கு வாழ்த்தோ வணக்கமோ உரைக்காமல் படைவீரர்கள் தங்கள் புரவிகளில் ஏறிக்கொண்டனர். தேர் திரும்பும் சகட ஒலி கேட்டது. விழப்போன புரூரவஸ் கால்களை ஊன்றி நின்று சிறிய மரமொன்றை பற்றிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான். கால் கீழ் மண்பரப்பு காற்றுத் திரையென நெளிந்து புகையென்றாகி அடியிலியில் அவனை வீழ்த்திக்கொண்டே இருந்தது. மூச்சிரைக்க உடல் வியர்வையில் நனைந்து காட்டிலிருந்து வந்த காற்றில் குளிர்கொள்ள அவன் மெல்ல நிலைமீண்டபோது தனக்குப்பின் அச்சிறு படை நின்றிருப்பதாகவே  உள்ளம் உணர்ந்தது. திரும்பி நோக்கியபோது நெடுந்தொலைவில் குளம்புகள் எழுப்பிய புழுதி முகில்கீற்றென கரைவதைக் கண்டான்.

புல் பரப்பில் அப்படை வந்து சென்ற தடம் எஞ்சியிருந்தது. ஒரு மழையில் அது முற்றிலும் அழியும். பின் அவன் அங்கு வந்ததற்கு  சான்றிருக்காது. அங்கிருந்து அவன் மீண்டு சென்றால் அவன் புரூரவஸ் என்பதற்கும் சான்றிருக்காது. அக்கணம்வரை அவனில் நிறைந்திருந்த ஏதோ ஒன்று ஒரு கணத்தில் முழு எடையையும் அகற்றி வெறும் நுரையென, புகையென ஆயிற்று. அவன் முதலில் உணர்ந்தது ஒரு வகை உவகையை. அது விடுதலை உணர்வு என்று அறிந்தான். அதன்பின்னரே அது எதிலிருந்து என தெளிந்தான்.

உணவறையிலிருந்து முதலில் இழுத்துச் செல்லப்பட்டபோது எழுந்த முதல் அதிர்ச்சி, அது விலகியபோது எழுந்த துயர், பின்பு ஊறி எழுந்து நிறைந்த கசப்பு, அனைத்தும் அகன்ற பின் எஞ்சியது அது. அதை ஓர் உணர்வென்றே அவன் எண்ணவில்லை. நெஞ்சமெனும் பட்டுத்துணி மேல் வைக்கப்பட்ட பெரும்பாறை. சொல்லென்றாகாத ஒன்று. எஞ்சிய வாழ்நாள் முழுக்க அதை சுமந்தலையப் போகிறோமென்றே எண்ணியிருந்தான். உண்மையில் நகர் நீங்குகையில் இனி இப்பேரெடையும் நானும் மட்டும்தானா என்றெண்ணியே உளம் பதைத்தான். அது அப்படி விலகுமென்று எண்ணியிருக்கவேயில்லை.

கைகளை விரித்தபடி காடு நோக்கி ஓடவேண்டும் போலிருந்தது. இயல்பான தன்னுணர்வால் அவ்வெண்ணத்தை அடக்கியதுமே ஏன் அடக்கவேண்டும் இனி என்ற எண்ணம் வந்தது. இனி எத்தளையும் இல்லை. எந்தப் பார்வைக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை. அரசன் சொற்களெனும் சரடுகளால் நாற்புறமும் இழுத்துக் கட்டப்பட்டவன். முந்தையோர் சொன்ன சொற்கள். சூழ்ந்திருப்போர் சொல்லும் சொற்கள். நாளை நாவிலும் நூலிலும் வாழப்போகும் சொற்கள். இது சொல்லின்மை வாழும் காடு. பொருள் ஏற்றப்படாத மரங்களின், புதர்களின், விலங்குகளின் வாழ்வுப்பரப்பு.

முற்றிலும் விடுதலையடைந்திருக்கிறோம் என்று மீளமீளச் சொல்லி தனக்கே அவ்வுணர்வை ஊட்டிக்கொண்டான். அவன் உள் அதை அறிந்ததுமே இரு கைகளையும் விரித்து உரக்கக் கூவியபடி துள்ளிக்குதித்தான். சுழன்று சுழன்று கூச்சலிட்டு தடுமாறி விழுந்தான். இரு கைகளாலும் நிலத்தை ஓங்கி அறைந்து கூச்சலிட்டான். அவ்வோசை செவியில் எழ உள்ளிருந்து மீண்டும் மீண்டும் கூச்சல்கள் கிளம்பி வந்தன. சொல்லற்ற பொருளற்ற வெற்றொலிகள். விலங்குநிகர் கூவல்கள், பிளிறல்கள், அமறல்கள், அலறல்கள்.

இரு கைகளாலும் தோள்களையும் மரங்களையும் அறைந்தான். நெஞ்சும் முகமும் நிலம்பட விழுந்து புல் பரவிய தரையில் முகத்தை உரசிக்கொண்டான். புரண்டு புரண்டு எழுந்தமர்ந்து மீண்டும் கூச்சலிட்டான். பாய்ந்து காட்டுக்குள் ஓடி சுற்றி வந்தான். ஒவ்வொரு மரத்தையாக தழுவினான். துள்ளி கிளைகளைப் பற்றி குதித்து உலுக்கினான். சிரிப்பும் அழுகையும் ஓய்ந்தபோது தெய்வங்களுக்குரிய முகத்துடன் ஒரு சாலமரத்தின் அடியில் தலைக்கு கைவைத்து மல்லாந்து படுத்திருந்தான். அவன் முகம் கிளைகளினூடாக வந்த ஒளி விழுந்து பொற்தழல் சூடியது.

மெல்லிய நிழலாட்டம் ஒன்றை இமைகளுக்குள் உணர்ந்து அது எதுவென்று செவிகூர்ந்தான். ஊனுண்ணியா, பன்றியா? களிறல்ல, எருதும் அல்ல. பின்பு விழிதிறக்காமலேயே அப்பெருங்குரங்கை அவன் கண்டான். மெல்ல எழுந்து அமர்ந்தபோது சற்றும் அஞ்சாமல் அவன் அருகே முகம் நோக்கி அது அமர்ந்திருந்தது. “ரீச்” என்ற ஒலி எழுப்பி பற்களைக் காட்டியது. அவன் “ஆம்” என்றான். “ரீச்” என்று ஒலி எழுப்பி அது காட்டைக் காட்டியது. “ஆம், காட்டுக்கென்று வந்துவிட்டேன். உங்களுடன் இருக்கப்போகிறேன்” என்றான். இரு விழிகளும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டன. அக்குரங்கை பலமுறை பார்த்திருப்பதுபோல் அவன் உணர்ந்தான்.

ஒரு மெல்லிய திடுக்கிடலுடன் ஏதோ ஒரு கனவில் குரங்குகளுடன் கிளை தாவி கூச்சலிட்டதை நினைவுகூர்ந்தான். அப்போது அது உடனிருந்தது. நெடுங்காலத்துக்கு முன்பு. அல்லது நெடுங்காலத்துக்குப் பின்பா? அவனும் ஒரு பேருடல் குரங்காக இருந்தான். அவன் அதன் விழிகளை நோக்கி “பீமன்! என் பெயர் பீமன்!” என்றான். அது மெல்ல அருகே வந்து சுட்டுவிரலால் அவன் மூக்கைத் தொட்டது. பின்பு பற்களைக் காட்டியபடி குனிந்து அவன் முகவாயை தன் உதடுகளால் தொட்டது. அதற்குப் பின்னால் மேலும் குரங்குகள் எழுந்து வந்தன. அவன் எழுந்து அவற்றை நோக்கி சென்றான். ஒரு குரங்கு எழுந்து அவன் கைகளை பற்றிக்கொண்டது.

முதலில் அவனை சந்தித்த குரங்கு “வருக!” என்றது. “ஆம், இனி உங்களுடன்தான்” என்று அவன் சொன்ன முதல் கணமே அது சொன்ன மொழி எப்படி தனக்கு புரிந்ததென்று திடுக்கிட்டான். அது விழிகளை சந்தித்து “இனி நாம் பேசிக் கொள்ளமுடியும்” என்றது. புரூரவஸ் தன் நெஞ்சொலிக்கும் ஓசையை கேட்டான். “இத்தனை எளிதாகவா?” என்றான். “மிக மிக எளிது. ஒரு மெல்லிய கோடு மட்டுமே தாண்டப்பட வேண்டியது” என்றது அக்குரங்கு.

நூல் பதின்மூன்று – மாமலர் – 26

26. வாளெழுகை

மூதரசரின் எரியூட்டல் முடிந்த மறுநாளே மூதரசி அரண்மனையிலிருந்து கிளம்பினாள். எரியூட்டலுக்கு கால்நிலையா கள்மயக்கில் வந்த புரூரவஸ் சிதையில் எரி எழுந்ததுமே “களைப்பாக உள்ளது. ஏதேனும் தேவை என்றால் சொல்லுங்கள்” என்றபின் கிளம்பிச்சென்றான். எரியூட்டல் சடங்குகள் அனைத்தும் முடிந்து தென்றிசைத்தேவனின் ஆலயத்தில் வழிபட்டு அரண்மனைக்குத் திரும்பிய ஆயுஸ் அவள் அம்முடிவை எடுத்திருப்பதை முதுசேடியிடமிருந்து அறிந்தான். அமைச்சர் பத்மரிடம் அதை சொன்னபோது “ஆம், அவ்வாறே நிகழுமென்று தோன்றிக்கொண்டிருந்தது” என்றார்.

மூதரசி தன் அறைக்குள் பொருட்களை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தாள். தன் அன்னையரிடமிருந்து பெற்ற ஓலைகளை தனியாக வைத்தாள்.  அருநகைகளை இன்னொரு பெட்டிக்குள் எண்ணி வைத்தாள். அருகே அமர்ந்து சேடி ஓலையில் அதை பதிவுசெய்துகொண்டிருந்தாள். இரு சேடியர் உதவிக்கொண்டிருந்தனர். ஆயுஸும் சத்யாயுஸும் ஸ்ருதாயுஸும் அகத்தறைக்கு வந்து  துயர்கொண்ட முகத்துடன் நின்றனர். என்ன என்று அறியாத ரயனும் விஜயனும் அவர்களின் கைகளைப் பற்றியபடி மூதன்னையை நோக்கினர். அவள் விழிதூக்கி அவர்களை நோக்கி புன்னகை செய்தாள்.

ஆயுஸ் “தங்கள் முடிவை அறிந்தேன். உறுதியான முடிவு எடுப்பவர் என்று தங்களை இளமையிலேயே அறிந்திருக்கிறேன். மன்றாடவோ விழிநீர் சிந்தவோ நான் வரவில்லை. அவை உங்களை மாற்றாது என்றறிவேன். தங்கள் முடிவில் எங்களுக்கேதேனும் பங்கிருக்குமென்றால் அதன்பொருட்டு தங்கள் காலடிகளில் பிழைப்பொறை கூறவே நாங்கள் வந்தோம்” என்றான்.

அவள் அங்கிருந்து செல்லும் முடிவை எடுத்ததுமே முற்றிலும் பிறிதொருத்தியாகிவிட்டிருந்தாள். எப்போதும் அவளிடமிருந்த துயரும் மெல்லிய உள்ளிறுக்கமும் முற்றிலும் அகன்று தென்மேற்கு மூலையில் அமைந்த அன்னையர் ஆலயத்தில் சிலையென அமைந்திருக்கும் மூதன்னை நிரைகளில் உள்ள முகங்களில் விரிந்திருக்கும் இனிமையும் மென்னகையும் கூடியிருந்தன. எழுந்துவந்து ஆயுஸின் தலையில் கைவைத்து “இல்லை மைந்தா, இனிதாக உதிர்தல் என்பது இயல்பாக வருவதல்ல. தவம் செய்து அடையவேண்டிய ஒரு தருணம் அது. இங்கு என்னை தளைத்திருந்தது உங்கள் தாதையின் இருப்பு மட்டுமே. அவரில்லா இவ்வரண்மனையில், நகரில் நான் இயற்றுவதற்கொன்றுமில்லை” என்றாள்.

“இங்கிருங்கள் மூதன்னையே! எங்களை விட்டுச்செல்லாதீர்கள்” என்றபடி ரயன் அவள் கையை பற்றினான். விஜயன் பிறிதொரு கையைப் பற்றி ஆட்டியபடி “போகவேண்டாம்… போகவேண்டாம்” என்றான். “தந்தையின் இடத்தில் உங்களுக்கு மூத்தோன் இருக்கிறான். நல்லாசிரியன் இடத்தில் பிறிதொருவன் காட்டிலிருக்கிறான். இவ்வாழ்வில் அணைப்பதற்கும் ஆற்றுப்படுத்துவதற்கும் ஒருபோதும் உங்களுக்கு கைகள் இல்லாமல் ஆவதில்லை. சிறுமைந்தர்களே, நல்லூழ் கொண்டவர்கள் நீங்கள்” என்றாள் மூதரசி.

சிறுவர்கள் இருவரும் அழத்தொடங்கினர். அவள் இரு கைகளாலும் அவர்களை இழுத்து தன் தொடைகளுடன் சேர்த்துக்கொண்டு “மகிழ்ந்திருங்கள். என்றென்றும் உங்கள் மூத்தவர்களுக்கு தம்பியராய் இருங்கள். நிழல் மரங்களின் கீழே என்றும் தளிர்களாக வாழும் பேறு பெற்றவர்கள் நீங்கள்” என்றபின்  ஆயுஸிடம் “நான் கிளம்புவதற்கான அனைத்தையும் ஒருக்குக!” என்றாள். சத்யாயுஸ் “தங்கள் ஆணைப்படி அனைத்தும் ஒருங்கியுள்ளன, மூதரசியே” என்றான்.

“நாளை கருக்கலிலேயே கிளம்பிவிடலாம் என்று நான் எண்ணுகிறேன். நான் செல்லும் செய்தி நகரில் அறியப்படவேண்டியதில்லை. வாழ்த்துக்களோ வழியனுப்புதல்களோ நிகழலாகாது. ஓசையற்று இந்நகர்விட்டு நீங்கவேண்டுமென்று எண்ணுகிறேன். முதற்காலையில் காற்று அகல்வதுபோல் உகந்த அனைத்திலிருந்தும் செல்லவேண்டுமென்று பாடல்கள் சொல்கின்றன. திரும்பி ஒருகணம் நோக்க விழைந்தால், ஓங்கி ஒரு மூச்செடுத்தால், ஒரு விழிநீர்த்துளி உதிர்ந்தால் செல்லுதல் எவ்வகையிலும் பயனற்றது. அவை விதைகள். நாளுக்கு நாளென முளைத்து காடாகும் வல்லமை கொண்டவை. பின்பு அப்பெருந்துயர் முளைத்த அடர்காட்டில்தான் குடியிருக்க வேண்டியிருக்கும்” என்றாள் முதியவள்.

“செல்வது மிக எளிது. மீண்டு வராமல் செல்வது அரிதினும் அரிது. செல்பவன் மீண்டும் வருகையில் விட்டுச்சென்ற எதையும் காணமாட்டான். முழுதாக செல்லாதவன் அடைவதுமில்லை. விட்டவற்றை மீளப்பெறுவதுமில்லை” என்றாள் முதுமகள். ஆயுஸ் கைதொழுது “உங்கள் அகம் நிறைவுற மூதாதையரை வணங்குகிறேன், அன்னையே” என்றான். அவள் “உரிய கைகளில் இந்நகர் உள்ளது என்ற எண்ணம் எனக்கு உள்ளது. நேற்று முந்நாள்வரை இந்நகருக்கு என்னாகும் என்ற ஐயமிருந்தது. உன் தந்தையை எண்ணி வருந்தாதே. அவருக்குப் பின்னால் குருதிமணம் பெற்ற ஊழ் முகர்ந்து அணுகி வருகிறது. எத்தனை விரைந்து ஓடுபவனும் அதிலிருந்து தப்ப முடியாது” என்றாள்.

“உன் கைக்கு மணிமுடி வரும். உன் தந்தை கற்றுத் தந்த பேரறம் துணையிருக்கட்டும். உனது குருதியில் பேரறத்தான்கள் பிறக்கட்டும். மைந்தா, உன் தந்தைக்கு என்ன நிகழ்ந்தாலும் அதைப்பற்றி கவலை கொள்ளாதே. வாழ்ந்து அவர் ஒரு பாடமென உன் முன் அமைந்தார் என்று மட்டுமே கொள். தந்தை நெறிபிழைத்தால் தந்தையென்றாவர் சான்றோர் என்று உணர்க!” என்றாள் முதுமகள். ஆயுஸும் தம்பியரும் அவளைத் தொழுது நீங்கினர். “ஒன்றும் எஞ்சலாகாது, இளையவளே. அனைத்தையும் என் மருகியரிடம் அளித்துவிட்டுச் செல்லவேண்டும் நான்” என்றாள் மூதரசி.

அவள் மருகியர் சேடியரால் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் விழிநீர் வழிந்த கண்களுடன் மூக்குசிவந்து விசும்பினர். “நன்று வரும் என நம்புங்கள்… மானுடர் அந்நம்பிக்கையிலேயே வாழ்தல் இயலும்” என்றாள் மூதன்னை. அவர்கள் அழுதபடியே அவள் அளித்த பொருட்தொகைகளையும் ஏட்டுக்குவைகளையும் பெற்றுக்கொண்டனர். அவற்றில் அக்குடியின் மூதன்னையர் சேர்த்த பொருட்களும் எண்ணிய சொற்களும் இருந்தன. “இங்கு வரும் பெண்களுக்குரியவை இவை. நாம் இவை கடந்துசெல்லும் பாதைகள் மட்டுமே என்றுணர்க!” என்றாள் முதியவள்.

மறுநாள் கருக்கலில் அவள் செல்லவிருப்பதாக செய்தி அரண்மனை முழுக்க பரவியது. முதலில் அச்செய்தி ஓர் அதிர்ச்சியாக அனைவரிடமும் எழுந்தது. ஆனால் மூதரசி பலகாலம் முன்னரே அரண்மனையிலிருந்து பிரிந்து உலர்ந்து ஒட்டாதுதான் இருந்தாள் என்பதை அதன் பின்னரே அவர்கள் உளம் கூர்ந்தனர். அவள் செல்வதே உகந்த முடிவென எண்ணத் தலைப்பட்டனர். “அவ்வாறுதான் கிளம்பிச்செல்ல வேண்டும். முற்றிலும் அடைந்து. இனியொன்றும் இல்லையென்று நிறைந்து” என்றார் அவைப்புலவர்.

இரவில் மூதரசி அரண்மனையின் அனைத்துச் சேடியரையும் வரச்சொல்லி ஒவ்வொருவரிடமாக பெயர் சொல்லி விடைகொண்டாள். பெண்கள் குனிந்து விழிநீர் சிந்தினர். இளம்பெண்கள் சிலர் அவள் கால்தொட்டு சென்னிசூடி அழுதனர். காவலரும் ஏவலர்களும் அமைச்சர்களும் அவள் கால்தொட்டு வணங்கி கண்ணீருடன் விலகினர். சூழ்ந்து ஒலித்த விசும்பல்களும் விம்மல்களும் எவ்வகையிலும் அவளைச் சென்று தொடவில்லை. தொழுவோரின் உணர்வலைகளுக்கு அப்பால் கல்லென கண்மலர்ந்திருக்கும் கருவறைச் சிலை போலிருந்தாள்.

வீரனொருவனை துணைக்கு அழைத்துக்கொண்டு மஞ்சத்தறையில் துயின்றுகொண்டிருந்த புரூரவஸை சென்று கண்டாள். அவனருகே எழுந்து அமர்ந்த காமக்கிழத்தி “அரசே, அரசே” என்று மெல்ல உலுக்க மதுமயக்கில் துயின்றுகொண்டிருந்த அவன் வியர்த்த உடம்பும் எச்சில் வழிந்த வாயுமாக கையூன்றி எழுந்து குழறிய நாவுடன் “என்ன?” என்றான். “அரசி கிளம்புகிறார்கள்” என்றாள். “யார்?” என்று அவன் கேட்டான். “மூதரசி” என்றாள் அவள். “எங்கே?” என்றான். பின்னர் மீண்டும் படுத்துக்கொண்டு “பிறகு வரச்சொல்” என்றான்.

மூதரசி “மைந்தா, இனி நாம் பார்க்கப்போவதில்லை. விழைந்தால் எனக்கு நீர்க்கடன் செய்க! இல்லையேல் அதை ஆயுஸ் செய்யட்டும். நன்று சூழ்க! நீ கொண்ட அழல் அணைக! உன் அலைகள் ஓய்க! முதிர்ந்து நிறைவடைக!” என்று வாழ்த்தி குனிந்து அவன் தலையில் கைவைத்து “நன்று சூழ்க!” என நற்சொல் அளித்தபின் திரும்பிச்சென்றாள். என்ன நிகழ்கிறதென்று அறியாதவன்போல் மதுவால் தடித்த வாயுடன் ஒழுகும் மூக்குடன் கலங்கிய கண்களுடன் அவன் நோக்கி அமர்ந்திருந்தான். அவள் சென்றபின் “இன்னொரு கோப்பை மதுவை ஊற்று” என்று சேடியிடம் ஆணையிட்டான்.

மூதரசி வெளிவந்து ஆலயத்திலிருந்து நடப்பவள்போல கைகூப்பியபடி சென்று தன் அறையை அடைந்து “மஞ்சத்தை ஒருக்கு” என்றாள். அன்று அரண்மனையில் எவரும் துயிலவில்லை. தாழ்ந்த குரலில் ஒருவரிடம் ஒருவர் மூதரசி கிளம்புவதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். புரூரவஸின் அரசியர் அனைவரும் மூதரசியின் அரண்மனையைச் சுற்றிய இடைநாழிகளிலேயே அவ்விரவை கழித்தனர். ஆனால் மென்பட்டு விரிக்கப்பட்ட சேக்கையில் இறகுத் தலையணையை வைத்து உடல் நீட்டி படுத்த மூதரசி சேடி சுடர் தாழ்த்தி விலகுவதற்குள் மெல்லிய குறட்டை ஒலியுடன் ஆழ்ந்து துயிலலானாள்.

ஏழுமுறை சேடியரும் மருகியரும் உள்ளே வந்து நோக்கி அவள் ஆழ்ந்து துயில்வதை உறுதி செய்தபின் வெளியே சென்று “விந்தை! எப்படி உளக்கொந்தளிப்பின்றி அவர்களால் தூங்க முடிகிறது?” என்றனர். “இது ஒருவேளை இறப்பின் கணமோ?” என்றாள் ஓர் அரசி. “இல்லை, அவர் முகம் அமைதியில் இருக்கிறது, இறப்புக்குரிய இருளமைதி அல்ல அது” என்றாள் பிறிதொருத்தி. “புலரியில் நாம் எழுப்ப வேண்டுமா?” என்று கேட்டாள் ஒரு மருகி. “ஏன்? எழுப்பியாகவேண்டும் அல்லவா?” என்றாள் பிறிதொருத்தி. “அவரை இருளை நோக்கி எழுப்புவதாக ஆகுமே? அவர் விழைந்தால் எழட்டும். நாம் எழுப்பி அனுப்ப வேண்டியதில்லை” என்றாள் அரசியான முதல் மருகி.

மூதரசி பிரம்மப் பொழுதுக்கு முன்னதாகவே எழுந்தாள். “ஓம்!” என்று அவள் மெல்ல சொல்லும் குரலை அறைக்கு வெளியே துயிலும் விழிப்புமாக இருந்தவர்கள் கேட்டனர். முதிய சேடி கதவைத் திறந்து நோக்கியபோது வலக்கை ஊன்றி எழுந்து  கைகூப்பியபின் அவளை புன்னகையுடன் நோக்கி “நான் நீராடவேண்டும்” என்று முதுமகள் சொன்னாள். இரு சேடியர் அவளை அழைத்துச்சென்றனர். குளிர்நீரில் நீராடி மரவுரி சுற்றி அணிகளோ அரசக்குறிகளோ அணியாமல் அவள் வந்தாள். முற்றத்தில் அவளுக்கான ஒற்றைப்புரவித் தேர் காத்து நின்றிருந்தது.

மூதரசி தேரின் அருகே நின்றிருந்த தன் பெயர்மைந்தரை ஒவ்வொருவராக அணுகி புன்னகையுடன் “விடைபெறுகிறேன், மைந்தர்களே” என்றாள். அவர்கள் அவள் கால்தொட்டு சென்னிசூட அவர்கள் குழல்தொட்டு வாழ்த்தினாள். ஏவலன் கையிலிருந்த ஜயனை கையில் வாங்கி முத்தமிட்டு “நீளாயுள்!” என்றபின் திருப்பிக் கொடுத்தாள். பிற அனைவரையும் திரும்பிப் பார்த்தபின் தேர்ப்படியில் கால்வைத்து ஏறி பீடத்தில் அமர்ந்து “செல்க!” என்றாள். தேர்ப்பாகன் ஆயுஸைப் பார்க்க அவன் விழியசைத்தான். புரவி சவுக்கால் தொடப்பட்டதும் குளம்புகளை கற்தரையில் எடுத்துவைத்து தாளம் பெருக்கி விரையலாயிற்று. சகட ஒலிகள் எழ தேர் இருளில் உருண்டு புதைந்து மறைந்தது.

எவரும் உரைக்காமலேயே நகர்மக்கள் மூதரசி கிளம்பிச்செல்வதை அறிந்திருந்தனர். எந்த அறிவிப்பும் இல்லாமலேயே அச்சகட ஒலி அரசி கிளம்பிச்செல்வது என்று அவர்கள் உணர்ந்தனர். வாயில்களுக்கு வரவோ வாழ்த்துரைக்கவோ கூடாதென்று அரசாணை இருந்ததனால் தங்கள் இல்லங்களுக்குள் இருளில் ஒருவரோடொருவர் தோள்பற்றி நின்றபடி அவர்கள் அரசி செல்வதை பார்த்தனர். முதுபெண்டிர் மூச்சுவிட்டு ஏங்கினர். இளையோர் அத்தேர் கடந்து சென்றதும் வெளிவந்து அதன் இறுதி இருளசைவை விழிதொடும்வரை நோக்கினர்.

நகர் நீங்கிச்சென்ற தேர் காட்டு விளிம்பை அடைந்ததும் அரசி வண்டியை நிறுத்தச் சொன்னாள். கடிவாளம் இழுபட்டு தேர் நின்றதும் படிகளில் சிறுகால் வைத்து அவள் இறங்கினாள். பாகன் “அரசி, தங்களுக்காக அமைக்கப்பட்ட குடில் இங்கில்லை. அங்கு சென்று தங்களை விடும்படி எனக்கு ஆணை” என்றான். “இதுவே என் காடு. என் வழியை நானே தேர்வேன்” என்றாள் மூதரசி. பதறியபடி “இக்காட்டில் தாங்கள் தனியே எப்படி…?” என்றான் தேர்ப்பாகன்.

“இனி எவரும் என்னைத் தேடலாகாது. இவ்விடத்தில் என நீ சொல்வதும் கூடாது. இது என் ஆணை!” என்றபின் அவள் சிற்றடி வைத்து செறிந்த புதர்களை விலக்கி இருள் அலைகளாக குவிந்துகிடந்த காட்டுக்குள் புகுந்தாள். தலைவணங்கி கண்ணீர் உகுத்து கைகூப்பி நின்ற பாகன் நெடுந்தொலைவுவரை மெல்லிய இலையசைவு கேட்பதே அவள் செல்லும் ஓசையென்று எண்ணிக்கொண்டான். பின்னர் தேரிலேறி நகருக்குள் நுழைந்தான்.

imagesஅன்னை சென்றதை மறுநாள் உச்சிப்பொழுதுக்கு முன்னர்தான் புரூரவஸ் அறிந்தான். அமைச்சர் பத்மர் உணவருந்திக்கொண்டிருந்த அவனிடம் வந்து வணங்கி “மூதரசி நகர் நீங்கிவிட்டார்கள்” என்றார். அவன் உணவிலிருந்து விழியசைக்காமல் “ஆம், என்னிடம் சொன்னார். காட்டில் நமது குடிலில் அங்கிருக்கட்டும் அவர்” என்றான். பத்மர் சிறிய எரிச்சலுடன் “இல்லை, வழியிலேயே அவர்கள் இறங்கிவிட்டார்கள்” என்றார்.

கையில் ஊனுணவு நிலைக்க  திரும்பி நோக்கிய புரூரவஸ் “எங்கு சென்றார்?” என்றான்.  “அறியோம். காட்டின் இருளுக்குள் சென்று மறைந்திருக்கிறார்கள்.” அவன் ஆர்வமிழந்து மீண்டும் உணவை அள்ளி உண்டபடி “தேடி நமது ஒற்றர்கள் செல்லட்டும். கொண்டுசென்று குடிலில் சேர்க்கும்படி என் ஆணை!” என்றான். “எங்காவது செத்துக்கிடந்தால் அப்பழியை என்மேல் ஏற்றுவர் வீணர்களாகிய சூதர்.”

பத்மர் பொறுமையிழக்காமல் தன்னை காத்தபடி “மூதரசியின் ஆணை அது. எவரும் தேடி வரலாகாது என்று பாகனிடம் சொல்லியிருக்கிறார். விரும்பி கானேகியவர்களை தேடிச் செல்லக்கூடாது என்பது குடியறம்” என்றார். நாக்கைச் சுழற்றி மெல்லிய ஓசை எழுப்பிய புரூரவஸ் “நான் ஆணையிட்டபின் என்ன குடியறம்? செல்க!” என்றான். “அரசியின் ஆணையை மீறலாகாது” என கூரிய குரலில் அமைச்சர் சொன்னார். அக்குரலின் மாறுபாட்டை உணர்ந்து விழிதூக்கிய அரசன் சினமெரிய ஊனுணவை தாலத்தில் எறிந்துவிட்டு “மூடா! எவரிடம் பேசுகிறாய்? இது என் ஆணை!” என்றான்.

விழியசையாமல் அவன் கண்களைப்பார்த்த அமைச்சர் “அடேய் அறிவிலி, ஷத்ரியனாகிய நீ அந்தணன் முகத்தைப்பார்த்து இச்சொல் சொன்னமைக்காக வருந்தியாகவேண்டும். அது என் மூதாதையருக்கும் நெறிவகுத்த முனிவருக்கும் நான் செய்யும் கடன்” என்றார். “என்ன?” என்று கையை உதறி கூவியபடி அவன் எழுந்தான். “என்ன பேசுகிறாய்? யாரங்கே?” அவன் குரலின் பதற்றத்திற்கு மாறாக தணிந்த குரலில் “நீ சொன்ன அச்சொற்களுக்காக இக்கணமே உன் தலையை வெட்டி இம்முற்றத்தில் வைக்க என்னால் இயலும். பார்க்கிறாயா?” என்றார் அமைச்சர்.

புரூரவஸ் திகைத்து “யாரங்கே? காவலர்களே… வருக!” என்றான். கதவு வெடித்துவிரிய இரு வீரர்கள் உள்ளே வந்தனர். “சீவி எறியுங்கள் இந்த இழிமகனை” என்றபடி அவன் கையை வீசிக்கொண்டு முன்னால் ஓடினான். இருவரும் உடைவாள் பிடிமேல் படிந்த கைகளுடன், திகைத்த விழிகளுடன் அசைவற்று நின்றனர். அமைச்சர் உறுதியான குரலில் “ஷத்ரியர்களே, அந்தணனாகிய எனது ஆணை இது! இக்கணமே இவ்வரசனின் மணிமுடியை அகற்றுக! இவன் அரசஆடைகளைக் களைந்து கைகள் பிணைத்து தலைமுடியை மழித்து அவைக்கு இழுத்து வாருங்கள்” என்றபின் திரும்பி நடந்தார்.

புரூரவஸ் பாய்ந்து மேடையிலிருந்த தனது வாளை எடுத்துக்கொண்டு அமைச்சரை நோக்கி ஓட அவனுடைய அணுக்க வீரர்களில் ஒருவன் வாளின் பின்பக்கத்தால் அவன் முழங்காலில் ஓங்கி அடித்தான். அலறியபடி குப்புற விழுந்த புரூரவஸின் முதுகை இன்னொருவன் மிதித்து அவன் இருகைகளையும் பிடித்து முறுக்கி அவன் மேலாடையாலேயே பின்னால் சேர்த்து கட்டினான். புரூரவஸ் “ஓடிவாருங்கள், வீரர்களே… ஓடிவாருங்கள், காவலர்தலைவரே…” என்று கத்திக்கொண்டிருக்க உள்ளே ஓடிவந்த காவலர்தலைவன் அதிர்ந்து “என்ன நடக்கிறது?” என்றான். “அந்தணரின் ஆணை” என்றான் காவலன். “அமைச்சரா? அவரே சொன்னாரா?” என்றான் காவலர்தலைவன். “ஆம்” என்றான் இன்னொருவன்.

காவலர்தலைவன் “அரசே, மனிதர்களால் மானுடம் ஆளப்படுவதில்லை. வேதத்தால் ஆளப்படுகிறது. வேதநெறி நின்ற அந்தணர் சொல்லுக்கு அப்பால்  மறுசொல் இல்லை” என்றபின் “அவர் ஆணை நிகழட்டும்” என்றான். புரூரவஸ் திமிறியபடி “என் வீரர்கள் எழுவர்… நான் குருதியால் இவ்விழிவை கழுவுவேன். அத்தனைபேரையும் கழுவேற்றுவேன்… கழுவேற்றுவேன்… கருதுங்கள்… கழுவேற்றியே தீர்வேன்” என்று பித்தன்போல கூச்சலிட்டான். அவர்கள் புரூரவஸின் ஆடைகளையும் அணிகளையும்  கிழித்தும் உடைத்தும் அகற்றினர். அவன் “நான் அரசன்… சந்திரகுலத்து முதன்மையரசன்” என்று கூச்சலிட்டு திமிற காவலர்தலைவன் “வாயைமூடு, இழிமகனே!” என ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தான். அதிர்ந்து திகைத்து பின் புரூரவஸ் சிறுவனைப்போல விசும்பி அழத்தொடங்கினான்.

இடையில் சிறு தோலாடை மட்டும் அணிந்த அவனை கைபிணைத்த சரடைப்பற்றி இழுத்துச்சென்றனர். செல்லும் வழியிலேயே அவன் முழங்காலை மிதித்து மடித்து அமரவைத்து உடைவாளாலேயே அவன் தலை மயிரை மழித்தனர்.  புரூரவஸ் மெல்ல தளர்ந்து அரைமயக்கத்திலாழ்ந்து தலைதொங்க பிணம்போல அவர்களுடன் சென்றான். செல்லும் வழியிலெல்லாம் ஏவலரும் காவலரும் திகைத்து நோக்கி நின்றனர். சிலர் அழுதனர். “அமைச்சரின் ஆணை!” என்று சொற்கள் கிசுகிசுப்பாக பரவின. “அந்தணரே முனியும்படி என்னதான் இயற்றினார்?” என்றார் ஒரு முதியவர். “ஊழ்வினை உறுத்து வருகையில் உரியது உளத்திலெழும்” என்றார் முதியசூதர் ஒருவர்.

அமைச்சரின் ஆணைப்படி அவைமுரசு முழங்கலாயிற்று. அவ்வோசை கேட்டு சில கணங்களுக்குப் பின்னரே அதன்பொருள் புரிய நகர் முழுக்க பரபரப்பு எழுந்தது. “படையெடுப்பா? அரசரின் இறப்பா? படைக்கிளர்ச்சியா?” என வினவியபடி மக்கள் அலைமோதினர். சற்றுநேரத்திலேயே அரசனை சிறையிட்டு குடியவையை அமைச்சர் கூட்டியிருப்பதாக செய்தி பரவியது. அனைத்துக் குலங்களையும் சேர்ந்த தலைவர்கள் அணிந்தும் அணியாததுமான ஆடைகளுடனும்  குலமுத்திரைகளுடனும் படைக்கலம் ஏந்திய மைந்தர்கள் சூழ அவை நோக்கி ஓடிவந்தனர். செல்லும் வழியிலேயே “என்ன நிகழ்கிறது? என்ன விளைவு?” என்று வினவிக்கொண்டனர். “அந்தணர் முனிந்தால் அரசில்லை” என்றார் ஒருவர். “அவர் நம் குலங்கள்மேல் சினம்கொள்ள ஏதுமில்லை” என்றார் இன்னொருவர். “அரசர் எல்லைமீறியிருப்பார்… அதை நோக்கியே சென்றுகொண்டிருந்தார்” என்றார் பிறிதொருவர்.

அவையில் தனது பீடத்தின்மேல் இறுகிய முகத்துடன் கைகளைக் கட்டியபடி நிமிர்ந்த தலையும் எங்கும்நோக்கா விழிகளுமாக அமைச்சர் பத்மர் அமர்ந்திருந்தார். அவரைச் சூழ்ந்து சிற்றமைச்சர்கள் கைகட்டி நின்றிருந்தனர். முதன்மைப் படைத்தலைவன் நேரில் வந்து ஆணைபெற்றுச் சென்றான். அத்தனை படைத்தலைவர்களுக்கும் ஓலைகள் சென்றுசேர்ந்தன. படைத்தலைவன் மீண்டுவந்து அமைச்சரிடம் “தங்கள் மறுசொல்லுக்காக காத்திருக்கின்றன குருநகரின் படைகள், அமைச்சரே” என்றான். “நன்று” என்றார் அமைச்சர். “தங்கள் ஆணைப்படி ஆயுஸையும் பிற இளவரசர்களையும் சிறையிட்டு அழைத்து வந்துள்ளோம். அவைநிறுத்தவேண்டுமெனில் அவ்வாறே” என்றான் படைத்தலைவன். “செய்க!” என்றார் பத்மர்.

அவர் விழிகள் முற்றிலும் பிறிதொன்றாக மாறியிருந்தன. மானுடரில் தெய்வமெழும் தருணங்களைப்பற்றி சூதர்கள் பாடுவதை படைத்தலைவன் எண்ணிக்கொண்டான். அவை கூடிக்கொண்டிருக்கையிலேயே படைவீரர்களால் கட்டி இழுத்துக்கொண்டு வரப்பட்டு அவைமுன் நிறுத்தப்பட்டான் புரூரவஸ். அவன் நிலம்நோக்கி முகம் குனித்திருந்தமையால் மழித்த தலைமட்டுமே தெரிந்தது. வெற்றுடலில் தசைகள் விதிர்த்து நடுங்கிக்கொண்டிருந்தன. “இளவரசர்கள் அவை புகட்டும்” என்றார் அமைச்சர்.

அமைச்சரின் ஆணையை ஏற்று இரு ஏவலர்கள் சென்று கைகூப்பி விழிநீர் உகுத்தபடி நின்ற ஆயுஸையும் இளையோரையும் அவைமுகப்புக்கு கொண்டுவந்தார்கள். சத்யாயுஸும் ஸ்ருதாயுஸும் தலைகுனிந்து வந்து அவன் அருகே நின்றனர். ஏவலரின் கைகளைப் பற்றியபடி ரயனும் விஜயனும் வந்தனர். முதிய ஏவலர் ஒருவர் ஜயனை கைபற்றி அழைத்துக்கொண்டு வந்தார். அவை நிறைந்ததும் கைகூப்பியபடி எழுந்த அமைச்சர் சற்றுநேரம் கண்மூடியபடி நின்றார். நீள்மூச்சுடன் விழிதிறந்து “அவையோரே, இன்று என் மூதாதையரில் ஒருவர் எட்டு தலைமுறைக்கு முன் செய்த ஓரு கடுஞ்செயலை நானும் செய்யும் நிலை வந்துள்ளது” என்றார்.

“குலத்தலைவர்களே, அறத்தின் பொறுப்பு இப்புவியில் இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அந்தணனாகிய எனது நாவிலும் ஷத்ரியனாகிய இவர் வாளிலும் அது வாழவேண்டும் என்பதே அரசுநெறி. எங்கள் வழிநின்று வைசியரின் துலாவிலும் உழவரின் மேழியிலும் ஆயரின் வளைதடியிலும் கொல்லரின் கூடத்திலும் அது திகழவேண்டும்” என்றார். அவர் குரல் அடைத்ததுபோல மெல்ல ஒலித்தாலும் அங்கிருந்த அனைவரும் அதை கேட்டனர். “கோல்தாங்கி அரியணை அமர்ந்திருப்பவனே விழியறியும் தெய்வம் என்பது நெறி. அவன் முன் நின்று அரிமலரிட்டு வணங்கும் அமைச்சனாகவே நான் இருந்தாக வேண்டும் என்றார் எந்தை. இருபத்தெட்டாண்டுகாலம் அவ்வண்ணம் மறுசொல்லின்றி இந்நகரை அவருக்காக ஆண்டிருக்கிறேன். அதன்பொருட்டு உங்களால் பலமுறை சினந்துகொள்ளப்பட்டுள்ளேன். பழிச்சொல் கேட்டுள்ளேன். அது என் கடன்.”

“நாற்பத்தாறாண்டுகாலம் எனது தந்தை இவர் தந்தையின் காலடிகளில் நின்று சொல்புரந்திருக்கிறார். அவருக்கு முன் பதினெட்டு தலைமுறைக்காலம் என் மூதாதையர் குருநகரியின் கோலுக்கு வேர் என நின்றிருக்கிறார்கள்” என அவர் தொடர்ந்தார். “இன்று காலை இந்நகர்விட்டு நீங்கியது அறத்தின் இறுதித்துளி. அதுவே என் எல்லை. அதன்பின் இங்கு எஞ்சிய மறத்தைத் தாங்கும் பொறுப்பு எனக்கில்லை. எந்தை எனக்களித்த சொல் இங்கு வாழவேண்டும். வேதமே வேர். நெறிகள் அதன் கனிகள். நெறியின்பொருட்டு வாழ்வதும் வீழ்வதுமே என் தன்னறம்.”

“இவ்வரசன் மக்கள் அளித்த வரிப்பொருளை பதுக்கி நகரின் வாழ்வை அழித்தான். அது பிழை. காமத்திலாடி இந்நகரப் பெண்களின் கற்புடன் விளையாடினான். அது அதனினும் பெரிய பிழை. தன் அறைக்கு வந்த அன்னை முன் நாணிலாது அமர்ந்திருந்தான். அது மாபெரும் பிழை. ஆனால் இந்நகர்விட்டு அறம் நீங்கியதையே உரைத்தும் அறிந்திராதவனாக இருந்தான் என்பதுதான் பிழையினும் பிழை. அதன்பொருட்டு என் முப்புரிநூலைப் பற்றி நான் ஆணையிடுகிறேன், இனி இவன் முடிசூடி இவ்வரியணையில் அமரலாகாது. இனி இந்நகரின் எல்லைக்குள் இவன் நுழையலாகாது. இவன் கொண்ட அரசநிலையையும் குலமுத்திரையையும் களைந்து இந்நகரெல்லைக்கு அப்பால் கொண்டுசென்று காட்டில் தனிமையில் விட்டுவருமாறு நான் பணிக்கிறேன். இந்நகர் எல்லைக்குள் இவன் நுழைவான் என்றால், இந்நகர் மக்கள் எவரேனும் இவனுக்கு துணை நிற்பார்கள் என்றால் அரசதண்டம் அவர்கள் மேல் பாயட்டும்.”

அவை சொல்லின்றி தரித்து அமர்ந்திருந்தது. “என் சொற்களை உங்கள் முன் வைக்கிறேன். இக்குலத்தலைவர்களின் ஒப்புதலை கோருகிறேன்” என்றார் அமைச்சர். முதுகுலத்தலைவர் ஒருவர் “ஆம், அந்தணர் ஆணை வாழ்க!” என சொல்ல அனைவரும் கைதூக்கி “ஆம், அவ்வாறே ஆகுக! அந்தணர் சொல்லில் அறம் வாழ்க! எது முறையோ அது நிகழ்க!” என்றனர்.அமைச்சர் “இவனுடைய முதல் மைந்தர் ஆயுஸ் சந்திரகுலத்து வழித்தோன்றலென இம்மணிமுடியையும் கோலையும் சூடி அரியணை அமரட்டும். அவர் விழையவில்லை என்றால் அவர் இளையோர் முடிசூடுக! அவர்கள் எவரும் விழையவில்லை என்றால் இங்குள்ள குலங்கள் கூடி அரசனை தெரிவுசெய்க!” என்றார்

புரூரவஸ் தலைதூக்கி “என் மைந்தன் முடிசூடட்டும். அது அவனுக்கு என் ஆணை!” என்றான். ஆயுஸ் கண்ணீருடன் “தந்தையே…” என்று கூவ “தந்தையின் ஆணை இது!” என்றான் புரூரவஸ். “ஆம், பணிகிறேன்” என்றான் ஆயுஸ். எந்த உணர்ச்சியும் இல்லாமல் “நன்று, அவ்வண்ணமே நலம் திகழட்டும். இன்றிலிருந்து பன்னிரண்டாவது நாள் வைகாசி முழுநிலவு. குலமூத்தாராகிய நீங்கள் அனைவரும் கூடி அம்முடியை அவர் தலையில் அமர்த்துங்கள்.  சந்திரகுலத்தின் இரண்டாவது அரசர் அறம்நின்று வெற்றிகொண்டு புகழ்பெற்று நிறைவடைக!” என்றார் அமைச்சர். “அவ்வாறே ஆகுக!” என்று உரைத்தனர் குடியவையினர்.

அமைச்சர் திரும்பி கைகூப்பியபடி ஆயுஸிடம் “இளவரசே, ஒன்றுணர்க! எல்லையற்ற ஆற்றலை உணரச்செய்கிறது  அரியணை. நீங்கள் சூடியுள்ள மணிமுடியோ ஐங்குலங்களை உங்கள் காலடியில் பணியவைக்கிறது. உங்கள் கையிலிருக்கும் கோலால் எந்தத் தலையையும் வெட்டி எறியும் உரிமை பெறுகிறீர்கள். இவை அனைத்தும் இம்மக்களால் உங்களுக்கு அளிக்கப்படுபவையே. அறம்புரிந்து நலம்நாடி நெறிநிற்கும்பொருட்டே அது அளிக்கப்படுகிறது. அறம்பிழைத்து விழுந்த மன்னன் அடைந்தவை அனைத்திலிருந்தும் விலக்கப்படுவான்” என்றார்.

அழுகையை அடக்க வாயை இறுக்கியிருந்த ஆயுஸ் தலைவணங்கினான். திரும்பி அவை நோக்கி வணங்கிய அமைச்சர் “இவ்வன்செயலை செய்த பின்னர் நான் இனி அவையமைதல் முறையன்று. இன்றே இவ்வவையிலிருந்து கிளம்புகிறேன். இந்நகருக்கு வெளியே முறைப்படி தர்ப்பைமேல் வடக்கு நோக்கி அமர்ந்து உயிர்விடுகிறேன்” என்றார். அவை திகைத்தது. ஒருவர் “அமைச்சரே…” என்று ஏதோ சொல்லியபடி எழ கைநீட்டி அவரைத் தடுத்த அமைச்சர் “அந்தணர்களுக்கு கல் நாட்டும் வழக்கமில்லை. எனக்கென்று தென்திசை புரக்கும் தேவியின் ஆலயத்தில் ஒரு சொல் நாட்டுக! நான் இயற்றிய இந்த நான்கு வரிகள் ஒவ்வொரு நாளும் அவ்வாலயத்தில் அந்தணரால் பாடப்பட வேண்டும்” என்றார். அவர் ஓர் ஓலையை எடுத்து நீட்ட அதை அவைமுதல்சூதன் வந்து பெற்றுக்கொண்டான்.

“இதன் முதல் வரி அந்தணன் தனக்கே உரைக்கும் அறம். இரண்டாவது அவன் அரசனுக்கு உரைக்கும் அறம். மூன்றாவது வரி குடிகள் அவர்கள் இருவருக்கும் உரைக்கும் அறம். நான்காவது வரி அனைவருக்கும் மூதாதையர் உரைக்கும் அறம். நலம் திகழ்க!” என்றபடி தனது தலைப்பாகையையும் மேலாடையையும் கழற்றி பீடத்தில் வைத்தார். கைகளில் அணிந்திருந்த அணிகளையும் காலில் குறடுகளையும் களைந்தபின் மூன்று முறை அவையை வணங்கிவிட்டு வாயிலினூடாக நடந்தார்.

அவரை பின்னாலிருந்து அழைத்த ஆயுஸ் “அந்தணரே, தங்கள் கால்களைத் தொட்டுப்பணியும் பேறை எனக்கு அருளவேண்டும்” என்றான். பத்மர் விழிகளில் நீருடன் தலையசைத்தார். “தங்கள் மைந்தரை எனக்கு அமைச்சராக பொறுப்பேற்கும்படி தாங்கள் ஆணையிடவேண்டும்” என்றான் ஆயுஸ். “அவன் மிக இளையோன்” என்றார் பத்மர். “நானும் இளையோனே. இங்கு இதுவரை திகழ்ந்த அறம் இனியும் பெருகவேண்டும். உங்கள் குலச்சொல் எனக்கு அரணும் அறிவுறுத்தலுமாக நின்றிருக்கவேண்டும்.” அமைச்சர் “அவ்வாறே ஆகுக!” என்றார். ஆயுஸ் சென்று அவர் கால்களைத் தொட்டு வணங்க “செல்வமும் புகழும் வெற்றியும் நிறைவும் சூழ்க!” என வாழ்த்திவிட்டு வெளியேறினார்.

திரும்பி ஏவலரை நோக்கி “தந்தையை விடுதலை செய்க!” என்று அவன் ஆணையிட்டான். கைகள் விடுதலைசெய்யப்பட்டு நின்ற புரூரவஸை அணுகி கைகூப்பியபடி இடறிய குரலில் “அரசநெறி நின்றேன் என்றே நினைக்கிறேன், தந்தையே. ஆனால் மைந்தன் என சரிந்துவிட்டேன். அப்பழியிலிருந்து நான் மீளப்போவதில்லை” என்றான். அவன் தலையில் கைவைத்து “நீ பிழை என ஏதும் செய்யவில்லை, மைந்தா” என்றான் புரூரவஸ். “நான் அப்பழியிலிருந்து மீள விழையவுமில்லை. தந்தையே, தங்களுக்கு நான் இழைத்த இப்பிழைக்காக எனக்கு பிழைநிகர் உரையுங்கள். பெருந்துயர் ஒன்று என்னைச் சூழாமல் என் உளம் அடங்காது” என்றான்.

புரூரவஸ் “உன் பிறவிநூலைக் கணித்த நிமித்திகர் நீ பிள்ளைத்துயர் உறுவாய் என முன்னுரைத்தனர். அன்று அது விளங்கவில்லை, இன்று துலாவின் மறுதட்டு தெரிகிறது. நன்று திகழ்க, மைந்தா! அனைத்தும் அறிவென்றே ஆகட்டும். நிறைவுறுக!” என்றான். “ஆம், அவ்வாறே” என ஆயுஸ் தந்தையை வணங்கினான்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 25

25. எஞ்சும் ஒளி

மூதரசி அப்போதே தன் கணவரின் அறைக்கு சென்றாள். அவர் மைந்தனின் அறையில் இருப்பதாக சேடி சொன்னாள்.  “அரசர் அணிபுனையும் நேரம் இது, மூதரசி. அருகிருந்து அதைப் பார்ப்பது மூதரசரின் வழக்கம்” என்றாள். முதுமகளின் கண்கள் புன்னகையுடன் விரியக்கண்டு அவள் அதை மகிழ்வுடனே எதிர்கொள்கிறாள் என்று புரிந்துகொண்ட சேடி தன் குரலில் உள்ளடங்கியிருந்த பகடியை இனிய நகையாட்டாக மாற்றிக்கொண்டாள்.  “அரசர் அணியவேண்டிய ஒவ்வொரு நகையையும் முந்தைய நாளே அவரே எடுத்துவைக்கிறார். அதை அவர் அணியும்போது அருகில் நின்று நோக்கிக்கொண்டிருப்பார். கோழிப்போர் காண்பவனின் உடலசைவுகள் அவரில் தெரியும் என்பார்கள்” என்றாள்.

முதுமகள் சிரித்துவிட்டாள். “அணி புனைந்துமுடித்து அரசர் கிளம்பும்போது மேலும் ஒரு அணியை எடுத்துக்கொண்டு பின்னால் செல்வார். அதை அவரே அணிவிப்பார். மறுநாள் அந்தப் புதிய அணியையும் சமையர்கள் சேர்த்துக்கொள்வார்கள். மூதரசர் பிறிதொரு அணியை கையில் எடுத்துக்கொள்வார். கருவூலத்தையே அரசர் உடல் சுமக்க வைத்துவிடுவார் என்று சொல்லிக்கொள்கிறார்கள்” என்றாள் சேடி. “ஆம், தேனில் விழுந்த வண்டென இனித்தே சாகும் நல்லூழ் கொண்ட மனிதர் என்கிறார்கள் நிமித்திகர்கள். பிறிதொருமுறை இளம் தந்தையென வாழும் பேறு பெற்றவர்” என்றாள் முதுமகள்.

சேடியர் சென்று மூதரசரை வரச்சொன்னார்கள். விரைந்த காலடிகளுடன் வந்த மூதரசர் “என்ன? என்ன வேண்டும் உனக்கு? நான் அங்கே பணியிலிருக்கிறேன் என்று தெரியுமல்லவா? அரசர் இப்போது கிளம்பப்போகிறார். கிளம்புகையில் என்னை எதிர்பார்ப்பார். என்ன சொல்லப்போகிறாய்?” என்று உரத்த குரலில் துணைவியிடம் கேட்டார். அவள் புன்னகையுடன்  “அமருங்கள்” என்றாள். “அமர்வதற்கு பொழுதில்லை. பணிகள் குவிந்துகிடக்கின்றன” என்றபடி அவர் அமர்ந்தார். முதுமகள் திரும்பிப்பார்க்க சேடி புன்னகையுடன் வெளியேறி வாயிலை மூடினாள். “என்ன? ஏதாவது காதல் விளையாட்டுக்கு திட்டமா?” என்று கேட்டு அவர் எருமைபோல ஒலியெழுப்பி சிரித்தார்.

“உங்கள் மைந்தனிடம் அவன் அருநிதி காக்கும் பூதமல்ல, அரசன் என்று நீங்கள் எடுத்துரைக்கவேண்டும்” என்றாள் அன்னை. “அவனுக்குத் தெரியாததையா நான் எடுத்துரைக்கப்போகிறேன்? அவன் பேரறத்தான்” என்றார் முதியவர். “ஆம், அது முன்பு” என்றாள் மூதரசி சினத்துடன். “அன்று அவன் உடல் அறத்தின் ஒளி கொண்டிருந்தது. அவன் நகங்கள் விழிகளென ஒளிவிட்டன.” மூதரசர் எழுந்து “ஏன்? இன்று என் மைந்தனுக்கென்ன குறை?” என்றபடி முகம் வலித்து சீறி உறுத்து விழித்து  அவளை நோக்கி வந்தார்.

கைகளை வீசி தலையை ஆட்டி மூச்சு ஊடுகலக்க “இன்று புதுத்தளிரென ஒளிவிடுகிறது அவன் உடல். பால்மாறா பைதலின் விழிகள் போலிருக்கின்றன அவன் கண்கள். அவன் நகைப்பு விளையாட்டுப் பையனைப்போல் தோன்றுகிறது. நோக்கி நோக்கி சலிக்காமல் அவன் அறைவிட்டு நீங்காதிருக்கிறேன். என்னிடமா சொல்கிறாய்?” என்றார் கிழவர். அவள் அவ்வுணர்ச்சியால் சீண்டப்பட்டு சினம்கொண்டாள். அவள் குரல் மேலெழுந்தது. “ஆம், இன்று அவன் ஒளி கொண்டிருக்கிறான். அது மாளாக்காமத்தின் ஒளி. காம விழைவு மனிதனை இளமை கொள்ளச்செய்கிறது. பத்து அடி தொலைவிலேயே ஒருவன் காமத்தில் திளைப்பவன் என்பதை சொல்லிவிட முடியும். அவ்வொளி ஒரு காலத்தில் உங்கள் உடலிலும் இருந்தது. அன்றதை நான் வெறுத்தேன். இன்றும் அவ்வாறே” என்றாள்.

இதழ்கோண நகைத்தபடி கிழவர் “அதை சொல்! நீ முதுமைகொண்டு அழிந்து கொண்டிருக்கிறாய். அவனோ உயிர் பெருகி இளமை நோக்கி செல்கிறான். தாயும் மகனுமாக இருந்தாலும் இரு உயிர்கள் நீங்கள். அந்தப் பொறாமை உனக்கு” என்றார். “ஏன், அந்தப் பொறாமை உங்களுக்கு இல்லையா?” என்று கேட்டாள் மூதரசி. “இல்லை, ஏனெனில் அவனாக நின்று அதை நடிப்பவன் நான். மீண்டும் அவ்வுடலில் புகுந்து வாழ்கிறேன்” என்றார். முகம் இழுபட்டுக் கோண இடறிநின்ற பற்கள் தெரிய அவள் “நாணில்லையா?” என்று சீறினாள்.

“இல்லை. எந்த நாணமும் பிழையுணர்வும் அறக்குறையும் என்னில் இல்லை. வாழ்வு இனிது. காமமன்றி பிறிதனைத்துமே பொய்யானவை” என்றார் கிழவர். “அறத்தையும் பொருளையும் கொண்டு காமத்தை கட்டுப்படுத்தவே மூதாதையர் முயன்றிருக்கிறார்கள். ஏனெனில் எளியோரின் காமம் கட்டுக்குள் நின்றாகவேண்டும். படையானைநிரை சங்கிலியில் பிணைக்கப்பட்டு துரட்டியால் மிரட்டப்பட்டிருக்க வேண்டும். பட்டத்து யானைக்கு தடைகள் தேவையில்லை.” அவள் நடுங்கும் தலையுடன் கூர்ந்து நோக்கியபடி அமர்ந்திருந்தாள். அவர் எக்களிப்புடன் “என்ன பார்வை?” என்றார். அவள் தலையசைத்தாள்.

“முதுமகளே, உண்மையில் உன் முகம் நோக்கவே நான் விரும்பவில்லை. அச்சுருக்கங்களில் இருக்கும் இறப்பு என்னை கசப்படையச் செய்கிறது. இன்று என் மைந்தனின் முகமன்றி வேறெந்த முகமும் எனக்கு முதன்மையானதல்ல. செல்!” என்றார் கிழவர். அவள் தளர்ந்து குரல் தழைந்து “நான் சொல்வதை சற்று செவிகூர்ந்து கேளுங்கள். எல்லையற்ற ஒன்று புவியிலிருக்க இயலாது. புலியின் பசியைவிட விரைவாக அமைக்கப்பட்டுள்ளன மானின் கால்கள். எங்கோ ஒவ்வொன்றும் பிறிதொன்றால் தளையிடப்பட்டிருக்கின்றது என்று அறிவதே அறத்தின் முதற்படி” என்றாள்.

“நெறிநூல்களை திரும்பச்சொல்லாதே! நானே அவற்றை மறக்க முயன்றுகொண்டிருப்பவன்” என்றார் கிழவர். “காமம் பெருநதிகளைப்போல. அவற்றின் குறுக்கே அணைகள் நில்லா. கடல் ஒன்றே அதன் இலக்கு.” அவள் “ஆம், காமம் கட்டற்றது. கட்டற்ற காமத்தைப்போல் அழிவை அளிப்பது பிறிதொன்றுமில்லை” என்றாள். கிழவர் சலிப்புடன் “பெருந்துயருற்றுவிட்டான் என் மைந்தன். ஒரு பிறவிக்குரிய அனைத்து கப்பங்களையும் தெய்வங்களுக்கு கட்டிவிட்டான். இனி அவன் மகிழ்ந்தாடட்டும். உனது சிற்றறிவின் சொற்களைக் கொண்டு அவனை எரிச்சல் மூட்டாதே!” என்றார்.

பெருமூச்சுடன் தளர்ந்து “நன்று, நானே சென்று அவனிடம் சொல்கிறேன். நீங்கள் அறமுரைக்க வேண்டுமென்று விழைந்தேன். நீங்களிருக்கையில் என் நா எழக்கூடாதென்றே தயங்கினேன். நீங்கள் ஆற்றாதபோது அக்கடனை ஆற்றும் பொறுப்பு எனக்குண்டு. அன்னையென சென்று அவன் முன் நிற்பேன். அறமென நான் எண்ணுவதை அவனிடம் உரைப்பேன்” என்றாள்.  அவர் ஏளனத்துடன் நகைத்து “செல், இன்று உன் சொற்களைக் கேட்கும் செவி அவனுக்கில்லை. உன் உடலில் ஊர்ந்து அவனை அணுகும் இறப்பைக்கண்டு அவன் முகம் சுளித்து துரத்திவிடுவான். நீ யார், எங்குளாய் என்று அப்போதறிவாய். செல்!” என்றபடி பீடத்தில் அமர்ந்து சுவடிக்கட்டொன்றை எடுத்து புரட்டத்தொடங்கினார்.

imagesசில கணங்கள் அவரை நோக்கி நின்றபின் முதுமகள் கதவைத் திறந்து ஓசையற்ற காலடிகளுடன் வெளியே சென்றாள். மேலாடையை தோளில் சுற்றியபடி அங்கு நின்ற ஏவலனிடம் “என்னை அரசரிடம் அழைத்துச் செல்” என்றாள். தலைவணங்கி அவன் அவளை அழைத்துச் சென்றான். ஊர்வசிக்கென புரூரவஸ் கட்டிய காமமண்டபத்திற்கு வெளியே ஆணிலிகள் எழுவர் காவல் நின்றனர். அரசி வருவதைக் கண்டதும் அவர்களின் தலைவி அருகே வந்து வணங்கி “அரசர் இப்போது…” என்றாள். “அறிவேன். நான் வந்துளேன் என்று சொல்!” என்றாள் கிழவி. “இப்போது எவரையும் உள்ளே விடமுடியாது, அரசி” என்று தலைவி சொன்னாள். “நானும் உள்ளே நுழையக்கூடாதென்பது ஆணை.”

“நான் உள்ளே செல்கிறேன். என் தலையை வெட்டி அவனிடம் கொண்டுவை” என்றபடி முதுமகள் முன்னால் நடந்தாள். “அரசி, நான் சொல்வதை கேளுங்கள். இப்போது அரசர்…” என்றபடி அவளுக்குப் பின்னால் ஆணிலிகள் மூவர் சென்றனர். “விலகுங்கள்!” என்று சீறிவிட்டு தன் முழுதுடலாலும் பெருங்கதவைப்பற்றி இழுத்து ஓசையுடன் திறந்து முதுமகள் உள்ளே சென்றாள். அங்கே குந்திரிக்கப்புகை பட்டுச்சல்லாபோல படர்ந்து காட்சிகளை மறைத்தது. வெண்திரைக்கு அப்பாலிருந்த சூதர் மென்மையாக இசையெழுப்பிக்கொண்டிருந்தனர். அக்காட்சி அவளுக்கு முதலில் ஓர் திரைஓவியம் போலிருந்தது.

ஏழு ஆடையிலாப் பெண்கள் நடுவே வெற்றுடலுடன் மெய்திளைத்து காமத்திலாடிக்கொண்டிருந்த புரூரவஸ் ஓசை கேட்டு திரும்பிப்பார்த்தான். ஒருகணமும் அவன் விழிகளில் நாணம் எழவில்லை. உடல் கூச்சம்கொண்டு சுருளவுமில்லை. நச்சுச் சிரிப்பொன்று உதட்டில் எழ “இங்கு வரலாகாதென்று நீ அறிய மாட்டாயா, முதுமகளே? இல்லை அறிந்து மகிழ்ந்துதான் வந்தாயா?” என்றான். நாணமற்ற அப்பெண்களும் வியர்வையும் நகைகளும் மின்னும் முலைகளும் இடைகளுமாக நகையாட்டு தெரிந்த கண்களுடன் முதுமகளை நோக்கினர். ஒருத்தி ஏதோ முனக பிறர் நகைத்தனர்.

“இங்கு நீ உயிரலையில் திளைப்பதாக உன் தந்தை சொன்னார். நீ திளைப்பதை நோக்கிச் செல்லலாம் என்று வந்தேன்” என்றாள் அன்னை. “இதற்கு முன் இதை பார்த்திருக்கமாட்டாய்” என்றான் புரூரவஸ். “பார்த்துளேன். அழுகிய ஊனில் புழுக்கள் நெளிவதை” என்றாள் அவள். அவன் உரக்க நகைத்து “நன்று, உன் உள்ளம் எரிவது அச்சொற்களில் தெரிகிறது. நோக்கினாய் என்றால் கிளம்பு” என்றான். “நான் உன்னிடம் அறமுரைக்க வந்துளேன். காமத்தில் திளைக்கும் உன்னிடம் அதை எப்படி சொல்வது என்று உன் தந்தை என்னிடம் சொன்னார். காமத்தின் உச்சத்தில்தான் அதை சொல்லவேண்டும் என்று நான் கருதினேன். ஏனெனில் உன் இழிகற்பனை செல்லும் எல்லைக்கெல்லாம் விழைவை ஓட்டி நீ இங்கு அமைத்திருக்கும் இக்களியாட்டங்களின் நடுவே உன்னுள் எழுந்த ஆழத்தில் திகைத்து நின்றிருக்கிறது ஒரு உள்ளம். நான் சொல்வதை அந்த உள்ளம் கேட்கட்டும்” என்றாள் முதுமகள்.

அவன் எழுந்தமைந்து “ஆம், சொல். காமம் கலந்தால் எல்லாமே கலை என்றான் பாணன். அன்னை நல்லுரை கலைவடிவு கொள்வதெப்படி என்று பார்க்கிறேன்” என்றான். அவள் விழிகள் பதறாமல் அவனை நோக்கி “மைந்தா, காமம் மனிதனைப் பெருக்கும் இன்பமல்ல. ஒவ்வொரு கணமும் அவனை குறைக்கும் இன்பம். விளைநிலத்து விதை என அவனைப் பெருக்குவது அறம் ஒன்றே. காமத்தையும் செல்வத்தையும் அறியாது அறம் நோக்கி சென்றதன் தோல்வியை முன்பு நீ அறிந்தாய். நன்று! இப்போது காமத்தைத் தொடர்வதன் எல்லையை அறிந்துவிட்டாய். செல்வத்தையும் அறிந்துளாய். கடந்து சென்று அறத்தை அறி. இது தெய்வங்கள் உனக்களித்திருக்கும் நல்வாய்ப்பென்று உணர். இல்லையேல் பேரழிவை நீ சந்திப்பாய்” என்றாள்.

நச்சுத்துளி சூடிய அரவப்பல்லென இளிவரல் முனைகூர்த்து நின்ற விழிகளுடன் அவளை நோக்கிய புரூரவஸ் “நன்று! சற்றுமுன் என்  பாங்கனிடம் கேட்டேன், காமத்தில் நான் இழந்திருக்கும் இன்பம் ஏதென்று.  அரசே, முள்வேலிகளைப் பிளந்து குருதி கீறிய உடலுடன் சென்றடைகையிலேயே காமம் முழுதமைகிறது. உங்களைத் தடுக்கும் வேலிகள் இங்கில்லை, ஆணையிடும் குரல்கள் பின்னால் ஒலிக்கவில்லை, கால்தடம் முகர்ந்து வேட்டை நாய்கள் தொடர்ந்து வரவுமில்லை. அதையே நீங்கள் இழக்கிறீர்கள் என்றான். நன்று, அவன் அதைச் சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் சொற்களுமாக நீ வந்துவிட்டாய். முடிந்தவரை உன் சினத்தை உமிழ்ந்துவிட்டு செல்! இவ்வின்பம் பெருகட்டும்” என்றான்.

சில கணங்கள் அவனை நோக்கி நின்றபின் “ஊழுக்குமுன் சொல் வீசி நிற்பது கை வீசி கடலலையைத் தடுப்பதுபோல என்று சூதர் பாடல் உண்டு. அதை நன்கறிந்தும் நான் இங்கு சொல்ல வந்தது, இவற்றை சொல்லாமலானேன் என்ற உணர்வை நான் பின்னால் அடையக்கூடாது என்பதற்காக மட்டுமே. சொல்லிவிட்டேன். கீழ்மகனே, நீ அடைவதை அடை” என்றபின் திரும்பிச்சென்றாள். அவன் பின்னால் நகைத்து அப்பெண்களிடம் ஏதோ சொல்ல அவர்கள் சேர்ந்து சிரிக்கும் ஒலி அவளைத் தொடர்ந்து வந்தது.

அங்கு நின்றிருக்கையில் தன் உள்ளம் எவ்வுணர்வையும் அடையவில்லை என்றே எண்ணியிருந்தாள். ஆழம் அலையற்றிருந்தது. உடல் நடுக்கமோ பதற்றமோ இன்றி நின்று சொல்கோத்தது. கதவைக் கடந்து வெளியே வந்ததும்தான் தன் கைகள் நடுங்கிக்கொண்டிருப்பதை, கால்கள் உளம்தொட்ட இடத்தில் விழாது பிறழ்வதை அவள் உணர்ந்தாள். விழுந்துவிடலாகாது என்ற ஒரே எண்ணமே அவளை செலுத்தியது. அறியாது கைநீட்டி அவளை பற்றவந்த ஏவலனை “உம்” என்ற ஒற்றைச் சொல்லில் விலக்கினாள்.

மூச்சை சீராக இழுத்து விடும்போது உடல் ஒருநிலைப்படுவதை காலடிகள் நிலைகொள்வதை அவள் உணர்ந்தாள். ஒரு மூச்சு, பிறிதொரு மூச்சு, மேலும் ஒரு மூச்சென்று நடந்தாள். இடைநாழியைக் கடந்து தன் அறைவாயிலை அடைந்ததும் ஏவலனிடம் விலகிச்செல்லும்படி கைகாட்டிவிட்டு கதவைத் திறந்து உள்ளே சென்றாள். முதுகுக்குப்பின் கதவு மூடியதும் பேரலையென துயரம் வந்து அவளை அறைந்தது. ஒரு பெருநகர் ஒரே கணத்தில் பனித்திரைஓவியமென மறைவதுபோல வாழ்வென அவளறிந்தவை அனைத்தும் இல்லாதாயின என்றுணர்ந்தாள். வெறுமை நிறைந்து உடல் பலநூறுமடங்கு எடைகொண்டது.

கதவில் சாய்ந்து நின்று ஆடிக்கொண்டிருந்த முழங்கால்களுடன் மஞ்சத்தில் விழிமூடி படுத்திருந்த தன் கணவனை பார்த்தாள். அவர் மார்பின்மீது சுவடிகள் கலைந்து கிடந்தன. முகம் இனிய கனவொன்றில் மலர்ந்து நிலைத்திருந்தது. எங்கிருந்து என்று அறியாமல் ஒரு அழுகை வந்து அவளை உலுக்கியது. விசும்பி அழத்தொடங்கியவள் அவ்வொலியை செவியால் கேட்டதுமே பெருங்குரலெடுத்து தேம்பலானாள். அவள் உள்ளத்தில் ஒரு பகுதி எவரோ அழுவதுபோல் அதை நோக்கி நின்றது. அத்தனை தொலைவு வந்தவளுக்கு நான்கடி வைத்து படுக்கை வரை செல்லமுடியவில்லை. தரையில் அமர்ந்து தலையில் கை வைத்து மெலிந்த மூட்டுகளில் முகம் சேர்த்து தோள் குலுங்க அழுதாள்.

அவ்வழுகை அவரை எழுப்பவில்லை என நெடுநேரம் கழித்து உணர்ந்ததும் கையூன்றி மெல்ல நிமிர்ந்து தவழ்ந்து மஞ்சத்தை நோக்கி சென்றாள். அதன் காலைப் பற்றியபடி மெல்ல எழுந்து அவரை நோக்கியபோது மெல்லிய ஐயம் ஒன்று எழுந்தது. இல்லை இல்லை என்று சித்தம் கைவீசி கூச்சலிட்டாலும் கடுங்குளிர் எனச் சூழ்ந்து பெருகிய அவ்வெண்ணம்  உருமுழுத்து விழிதுறுத்து பீடத்தில் அமர்ந்தது. “ஆம் ஆம் ஆம்” எனும் சொல்லாக இருந்தது உள்ளம்.

அருகில் சென்று தன் கணவரின் காலடிகளை தொடுவதற்குள்ளாகவே அவளுக்கு தெரிந்துவிட்டிருந்தது. மெலிந்த  கால்களை மெல்ல தொட்டு உலுக்கி “அரசே” என்றாள். உடல் அசைந்தபோது அவர் தலை அசைந்தது. ஆம் என அவர் புன்னகையுடன் சொல்வதைப்போல. தோள்களை மெல்ல தொட்டு உலுக்கி “அரசே” என்றபின் மூக்கில் கைவைத்து பார்த்தாள். பின்பு நீண்ட மூச்சுடன் நெற்றியில் கலைந்துகிடந்த அவரது குழலை அள்ளி பின்னால் நீவிச்செருகி வைத்தாள். மீண்டும் மீண்டும் மூச்சுக்கள் எழுந்து உடல் உலுக்க வெளிப்போந்தன.

உடனே சென்று ஏவலரை அழைக்க அவள் விழைந்தாலும் உடல் அசையவில்லை. அந்தக் கணங்கள் பிசின் என அவளை இழுத்துக்கட்டி வைத்திருந்தன. பலநூறுமுறை உள்ளத்தால் எழுந்தபின்னரும் எழாது அங்கிருந்தாள். பின் உள்ளமும் களைத்து அதை கைவிட்டாள். அவர் அருகிலேயே அமர்ந்திருக்க விழைந்தாள். அவ்வெண்ணம் வந்ததுமே மீண்டும் அவருடன் இருக்கப்போவதில்லை என்னும் உணர்வை அடைந்தாள். அவள் அவரை மணக்கையில் ஏழு வயது. அவருக்கு பதினெட்டு. பெண்ணென்று அவளறிந்த ஒரே ஆண். அன்றைய அவர் முகத்தை நினைவில் மீட்கமுயன்றாள். அது உருக்கொள்ளாமை கண்டு திகைத்தபின் மைந்தன் பிறந்த நாளை நினைவுகூர்ந்தாள். அன்றைய வண்ணங்கள்கூட நினைவில் அசைந்தன. ஓசைகளை நீருக்கு அப்பாலென கேட்கமுடிந்தது. அவர் முகம் நினைவில் எழவில்லை.

“என்ன இது?” என அவள் தன்னுள் வியந்தாள். ஒவ்வொரு காலகட்டமாக அவரை நினைவுகூர முயன்றாள். இறுதியாக அவரைப் பார்த்த காட்சி அன்றி எந்த முகமும் நினைவில் எழவில்லை. “என்ன இது! என்ன இது!” என உள்ளத்தின் ஒரு மூலை வியந்தபடியே இருந்தது. பின்னர் அவள் அம்முயற்சியை கைவிட்டாள். அவளால் புரூரவஸின் அத்தனை காலகட்டங்களையும் பெட்டிக்குள் சுருட்டிவைத்த ஓவியங்களைப்போல எடுத்து விரிக்கமுடிந்தது. அவன் கையறைந்து எச்சில் வழிய தவழ்ந்த முகம்.  சோறூட்டும்போது இதழ்கோட்டி சுவையறியும் முகம். முதல் படைக்கலத்தை அஞ்சியபடி கையில் எடுத்தபோதிருந்த முகம். முகங்கள் நிரைவகுத்தன. ஒவ்வொன்றும் விழிக்கூர் கொண்டு மிக அருகே என அவளை நோக்கின.

அவன் நோயுற்றதும் மீண்டதும் அக்கணம் என அவளுக்குத் தெரிந்தன. பெண்களுடன் அவன் இருந்த காட்சியை நினைவு விரித்துக்கொண்டபோதும் அதிலும் அவள் சினம்கொள்ளவில்லை என்று தெரிந்ததும் அவள் புன்னகை புரிந்தாள். அப்புன்னகை அவள் உடலையும் எளிதாக்கியது. அவர் அருகே மஞ்சத்தில் இயல்பாக அமர்ந்துகொண்டாள். “தீங்கேதுமின்றி நீணாள் வாழவேண்டும்” என அவள் புரூரவஸ் குறித்து நினைத்துக்கொண்டாள். தான் தீச்சொல்லிடுவதுபோல் ஏதேனும் சொல்லிவிட்டோமா என அஞ்சினாள். இல்லை, ஒன்றும் சொல்லவில்லை என்று தேறினாள். ஊழ் அவனை ஆட்டுவிக்கிறது. ஆனால் இறுதியில் மெய்யறிந்து அமைவான் என்றே சொல்கின்றன பிறவிநூல்கள்.

அவள் கால்நீட்டி அவர் அருகே படுத்துக்கொண்டாள். உடல் தளர்ந்தபடியே வந்தது. புரூரவஸையே நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்ததும் அவ்வண்ணமென்றால் நான் இவரை விரும்பவில்லையா என கேட்டுக்கொண்டாள். பொருளற்றிருந்தது அவ்வினா. பிறிதொரு ஆணை நினைத்ததில்லை. காமத்தில் களித்ததுண்டு.  பொன்னொளிர் மைந்தனை அளித்தவர் என பெருமிதம் கொண்டதுண்டு. ஆனால் விரும்பியதில்லையா என்ன? விருப்பம் என்றால் என்ன? வாழ்வின் அந்தந்த கணங்களில் உள்ளம் அணுகியதுண்டு, விழைவுகொண்டதுண்டு. மாறா விருப்பமே அன்பு எனப்படுகிறது. அன்பென்று உணர்ந்ததுண்டா?

அன்பு வெறும் சொல்லென்றிருந்தது. அன்பு அன்பு அன்பு என சொல்லிக்கொண்டே சென்றது உள்ளம். அன்பென்றால் என்ன? தன்னை விடுத்து அவருக்கென வாழ்வது. அவர் நலனையே சூழ்வது. அவருக்குப் பணிவிடை செய்வது. உடனிருக்க விழைவது. ஆம், அவை அன்புதான் என்றால் அன்புகொண்டிருந்தாள். அக்கணமே உணர்ந்தாள், அவர் அவள் உள்ளை நனைக்கவே இல்லை என. உடனிருந்து வாழ்ந்தொழுகி மறைந்த மனிதர். வாழ்வு பிணைக்கப்பட்ட நுகத்தின் மறுபக்க இணை. பிறிதென்ன? ஆம், பிறிதென்ன? அன்பென்று எண்ணிக்கொள்ளலாம். அவ்வாறுதான் எண்ணிக்கொள்கிறாள். ஆனால்…

அவள் அப்போது ஆழ்ந்து அறிந்தாள், அவர் தனக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை என. அக்கணம் உண்மையில் பேரிழப்பை அவள் உணரவில்லை என. முதுமையில் கணவனை இழந்த பெண்டிர் அனைவரும் உணரும் உண்மைபோலும் இது. இளமையில் இழந்திருந்தால் இழப்புகள் ஒன்றன்மேல் ஒன்றெனப் பெருகி இந்த வெறுமையை மறைத்திருக்கும். இளமையில் கணவனை இழக்கும் பெண்கள் நல்லூழ் கொண்டவர்கள். எஞ்சிய நாளெல்லாம் இழப்பின் துயரை அன்பின் கலுழ்வு என எண்ணிக்கொண்டிருக்கலாம்.

கணவன் பெண்ணை உள்தொடுவதே இல்லை. அவன் கறக்கும் பசு. காதலை, காமத்தை, குடியை, அடையாளத்தை சுரந்தளித்து அகிடுவற்றி வெறுமைகொள்ளும் உயிர். ஏன் இத்தனை கடுமையாக எண்ணிக்கொள்கிறேன்? ஏனென்றால் இது உண்மை. கணவன் ஒரு பொருட்டே அல்ல பெண்களுக்கு. அவன் உயிர் அளித்த தந்தை அல்ல. மெய்யளிக்கும் ஆசிரியன் அல்ல. உயிர் பகிர்ந்த மைந்தனும் அல்ல. ஒரு வெறும் நிமித்தம் மட்டுமே. குடும்பமும் குலமும் குமுகமும் பெண்களுக்கு எப்பொருளும் அளிப்பதில்லை. அவை ஆண்களின் படைப்புக்கள். அவள் அவற்றுக்கு அப்பாலிருந்துகொண்டிருப்பவள். அங்கிருந்து எதுவும் அவளுக்கு வந்துசேரமுடியாது.

தந்தை என்னும் சொல் அவளுக்குள் இனித்தது. எழுபதாண்டுகளுக்கு முன் இளஞ்சிறுமியாக தன் தொல்குடிச் சிற்றூரில் துள்ளி அலைந்ததை எண்ணிக்கொண்டாள். அவள் முகத்தில் நகை எழுந்தது. உடலைக் குறுக்கி இனிய மெய்ப்பை அடைந்தாள். ஒளிரும் இலைநுனிகளின் காலை. மலர் மணமும் இளஞ்சேற்று மணமும் கலந்த காலை. எங்கு சென்றுகொண்டிருக்கிறேன்? என்னுடன் இருக்கிறார்கள் தோழிகள். கலகலவென்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். குடிநீர் சேந்த குடங்களுடன் சென்றுகொண்டிருந்தனர்.

மாலிகை குனிந்து மண்ணில் பதிந்த காலடிகளை நோக்கி மான் என்றும் நாய் என்றும் பன்றி என்றும் சொல்லிக்கொண்டிருந்தாள். ஒருநாள் அவள்தான் ஆண்புலியின் தடத்தை கண்டாள். ஆண்புலித் தடத்தைக் கண்டவளுக்கு காமம் வாய்க்கும் என்று மூத்தவளாகிய சந்திரை சொன்னாள். நாணி நகைத்து அடித்து ஓடியவளை மண் அள்ளிவீசி வசைபாடி அழுதாலும் அதன்பின் மாலிகை கால்தடங்களை பார்க்காமலிருக்க முடியாதவளாக ஆனாள்…

உச்சிப்பொழுது கடந்தபோது உணவருந்த அழைக்கவந்த சேடி முதிய அரசரின் அருகே மூதரசி குழவிபோன்று தெளிந்த முகத்துடன் நீண்ட சீர்மூச்சுடன் துயின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். அவளை எழுப்புவதற்கு முன்னர் அவள் அரசர் முகத்தை நோக்கி அவர் இறந்துவிட்டிருப்பதை உணர்ந்தாள். மூச்சு நின்று வெளிவர பின் அவள் திரும்பி காவலரை அழைத்துவர ஓடினாள்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 24

24. என்றுமுள பெருங்கொடை

ஒவ்வொருநாளும் கடையனாக கீழோனாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தான் புரூரவஸ். அதற்கென்று புதிய வழிகளை அவனுள் நிறைந்து விம்மி கரைமுட்டும் ஒன்று தேடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. தன் கையிலிருந்து ஒரு மணி பொன்னும் வெளிப்போவதை அவன் விரும்பவில்லை. உலகெங்கிலுமிருந்தும் பொன் தன்னைத் தேடி வரவேண்டுமென்று எண்ணினான். அவையமர்ந்ததும் வரவுகளை மணிகளென நாணயங்களென உசாவி அறிந்தான். அக்கணக்குகளை தானே அமர்ந்து மும்முறை நோக்கி மீண்டும் கணக்கிட்டு நூறு வினாக்களால் கணக்கர்களை திகைக்க வைத்து சிறு பிழையேனும் கண்டுபிடித்து அவர்களை கீழ்ச் சொற்களால் வசைபாடி ஏடுகளை அவர்கள் முகத்தில் வீசி மீண்டும் எழுதி வர ஆணையிட்டான்.

பின்னறைக்குள் சென்று திரும்பி அவை நோக்கி “எத்தனை முறை எழுதினாலும் கையிலிருக்கும் பணம் மிகுவதில்லை” என்று பல்லைக் கடித்தபடி சொன்னான் துணைக்கணக்கன் ஒருவன். முதுகணக்கர் “இப்போதுதான் இந்த அரசரை நீ பார்க்கிறாய். இங்குள்ள அத்தனை அரசர்களும் இவ்வண்ணமே இருக்கிறார்கள். சொற்களை உதடுகளுக்கு அப்பால் வை!” என்று ஆணையிட்டார். “நம் பணி கணக்கெழுதுவது. நாம் அறியும் செல்வம் பொன்னோ நாணயமோ அல்ல, வெறும் எண்களே.” நாளும் பொழுதும் அவர்கள் கணக்குகளை எழுதினார்கள். எழுதிக்களைத்த விரல்களுடன் தனிமையில் படுத்துக்கொண்டு அரசனை எண்ணி அறியாது புன்னகை புரிந்தனர்.

நதிவரம்பு காக்கவும், வண்டிச்சாலைகள் போடவும், வழிமண்டபங்கள் பேணவும், சந்தைநெறிகள் புரக்கவும், ஏரி நிறைக்கவும், கால் திருத்தவும், ஆலயங்கள் நடக்கவும், காவல் சிறக்கவும் செல்வம் கோரி எழுந்த அத்தனை கோரிக்கைகளையும் தீ கண்ட கரடியென சினந்தெழுந்து விலக்கினான். “எங்கிருக்கிறது இத்தனை பணம்? எவருக்காக இச்செல்வம்? இதைக் கொண்டுசெல்பவர் யார்? இப்போதே நான் அறியவேண்டும். வீணர்களே, நீங்கள் மகிழ்ந்திருக்கவா என் கருவூலத்துச் செல்வம்?” என்று அவன் கூவினான்.

பொன் கோரி எதிரே நின்றிருந்த சிற்றமைச்சர் பிழை செய்ததுபோல் தானே குறுகி “இது குடிமுறைமை, அரசே” என்றார்.  கையிலிருந்த தாலத்தால் அவரை அடிக்க ஓங்கியபடி “என்ன முறைமை? நீங்களெல்லாம் களஞ்சியத்துப் பெருச்சாளிகள். நான் அறிவேன். துளையிட்டு உண்டு இந்நகரை அழித்தவர்கள் நீங்கள். சிறுவனை அமரவைத்து மேலும் உண்டு மகிழ திட்டமிட்டீர்கள். என் உயிராற்றலால் நான் மீண்டு வந்ததனால் ஏமாற்றம் அடைந்திருக்கிறீர்கள். உங்கள் விழிகளில் தெரிகிறது அந்த சினம்… என்ன எண்ணம்? என்னைக் கொன்று இச்செல்வத்தைக் கவரலாம் என்றா? அதற்குமுன் உங்கள் ஒவ்வொருவரையும் நான் கொல்வேன், அறிக!” என்றான்.

எவரும் எச்செலவுக்கும் அவனிடமிருந்து நிதியொப்புதல் பெறமுடியவில்லை. அரசுப்பணிகள் அனைத்துமே முற்றிலும் முடங்கின. நாளும் வணிகர்களும் உழவர்களும் ஆயர்களும் குடிக்குழுக்களாக வந்து நின்று அமைச்சர்களிடம் மன்றாடினர். பின் மன்றாட்டுகள் வசையும் மிரட்டலுமாக உருமாறின. அயல்வணிகர்கள் சிலர் ஊணில்லா விடுதிகளைச் சூறையாடி கொளுத்திச்சென்றனர்.  சிற்றமைச்சர்கள் பேரமைச்சர் பத்மரை அவரது அறையில் வந்து கண்டு “இவ்வண்ணமாயின் இங்கு அரசென்று ஒன்று நிகழாது, அமைச்சரே. நீங்கள்தான் எடுத்துச் சொல்லவேண்டும்” என்றனர். உடன் வந்த படைத்தலைவன் “படைகளுக்கு கூலிகொடுத்து மாதங்களாகின்றன. அவர்கள் வேலேந்தி காவல்நின்று பட்டினி கிடக்கவேண்டுமென்பதில்லை. சென்று சொல்க!” என்றான்.

“அரசருக்கு செவி இருப்பதுபோல் தெரியவில்லை” என்றார் பத்மர். சினத்துடன் “இல்லையென்றால் எழுத்தாணியால் குத்தி அதை உருவாக்கவேண்டியது உங்கள் பொறுப்பு. அரசனுக்கு ஒர் அணுவும் குறைந்தவனல்ல அந்தணன். அமைச்சனாக அந்தணனை வைக்கவேண்டுமென்று முடிவெடுத்தவர்கள் மூடர்களுமல்ல” என்றான் படைத்தலைவன்.  அமைச்சர் விழிதூக்கி நோக்கி “அந்தணரின் சொல் வேத முழுமையை மதிக்கத் தெரிந்தவர்களிடம் மட்டுமே செல்லும். அவரோ மதம் கொண்டெழுந்த யானைபோல் இருக்கிறார். காண்பவை அனைத்தும் எதிரிகளெனத் தெரிகின்றன” என்றார்.

“நாங்கள் தங்களிடம்தான் வந்து சொல்லமுடியும்” என்ற படைத்தலைவன் ஒரு கணத்துக்குப்பின் பற்களைக் கடித்து கைகளை நெரித்து திரும்பி நோக்கி “சொல்லிக்கொண்டே இருப்போம். எங்கோ ஓரிடத்தில் உடைவாளை உருவி அரசனுக்கு முன் நீட்டுவோம். அப்போது எங்களுக்குப்பின் இந்நகரின் அத்தனை மக்களும் இருப்பார்கள். பேரறத்தான் என்ற பெயர் கொண்டவர் அறத்தால் தலை கொய்யப்பட்டார் என்று ஆகவேண்டியதிருக்கும், சென்று சொல்க!” என்றபின் திரும்பிச்சென்றான்.  சினத்துடன் அவனை தடுத்துப்பேச எழுந்த பத்மரை நோக்காமல் அவர்கள் குறடுகளில் சினம் ஒலிக்க இறங்கிச்சென்றனர். அவர் தூக்கிய கையை மெல்ல தணித்து “மூதாதையரே…” என நீள்மூச்செறிந்தார்.

படைத்தலைவன் விழிகளை அவன் விலகிய பின்னர்  ஒருகணம் நினைவுகூர்ந்தபோது அமைச்சர் உளம் நடுங்கினார். அரசனிடம் அதை சொல்லியே ஆகவேண்டும் என்று எண்ணி துணிந்தபின் அவை புகுந்தார். அங்கு வணிகர்கள் தங்குவதற்கு பாதைகளில் சத்திரம் அமைப்பதற்காக மேலும் பொன் கேட்டு வந்து நின்ற கலிங்கச்சிற்பியிடம் அரசன் இரைந்து கொண்டிருந்தான்.  அவரை அழைத்துவந்த சிற்றமைச்சர் நடுங்கியபடி பின்னால் சென்றுவிட்டிருந்தார். “எவருக்கு இந்தப் பொன்? நானே கேட்க விழைந்தேன். எதற்காக இப்பொன்?” என்றான் புரூரவஸ்.

சிற்பி பணிந்து “இது இங்கிருந்து அளிக்கப்பட்ட திட்டம், அரசே. பாதி பணி முடிந்தும்விட்டது. இப்போது நிதி இல்லை என்றால் செய்த பணி வீணாகும். கட்டியவை இடிந்து சரியும். குறித்த நிதிக்குள் என் பணியை முடித்திருக்கிறேன்” என்றார். “எதிர்த்துப் பேசுகிறாயா? அடேய், எவனோ எங்கோ வந்து தங்குவதற்கு எதற்கு குருநகரின் நிதியை நான் அளிக்க வேண்டும்?” என்றான் புரூரவஸ்.

குலமூத்தார்  ஒருவர் சினந்தெழுந்து அதை குரலில் காட்டாமல் “அரசே, தங்கள் நாவாலேயே சொல்லிவிட்டீர்கள். குருநகரின் நிதி அது. வணிகர்கள் வருவதால்தான் குருநகரி செழிக்கிறது. எங்கள் தொழில் பெருகுகிறது. எங்கள் விளைகளுக்கு விலை கிடைக்கிறது. அவர்கள் வந்து தங்குவதென்பது எங்கள் உபசரிப்பால்தான். அதற்கென்று கட்டப்பட்ட மண்டபங்கள் எங்கள் வரிப்பணத்தில்தான் அமைந்துள்ளன”  என்றார்.

“என்னை எதிர்த்துப் பேசுகிறாயா? யார் நீ? எவர் தூண்டுதலில் இதை பேசுகிறாய்? பிற நாட்டு அரசனின் ஒற்றனா நீ?” என்றபடி வாளை உருவி படிகளில் இறங்கி அவரை நோக்கி சென்றான் புரூரவஸ். தன் இடையில் இருந்த வாளில் கைவைத்தபடி அசையா விழிகளுடன் நோக்கி நின்ற குலத்தலைவர் “தாங்கள் என் தலையை வெட்டலாம். ஆனால் அறிக, பன்னிரு மைந்தர்களின் தந்தை நான்” என்றார். அச்சொல் ஒரு கணம் அச்சுறுத்த புரூரவஸ் நின்று கால்தேய்த்து தரையில் காறி உமிழ்ந்து “இழிமகன்! இழிமகன்! உனக்கு அரசவாளின் கூர்மை ஒருநாள் காட்டப்படும்” என்று உறுமியபடி மீண்டும் அரியணை நோக்கி சென்றான்.

அவைக்குள் புகுந்த அமைச்சர் பத்மர் ஓடிவந்து குலத்தலைவரின் தோள்களைப்பற்றி அமரச்செய்து “பொறுத்தருளுங்கள், குடித்தலைவரே. மும்முறை என் தலை தங்கள் தாள்களில் பணிகிறதென்று கொள்ளுங்கள்” என்று கூவினார். “என்பொருட்டு அமர்க… என்பொருட்டு குளிர்க!” என கைகூப்பி அவையிடம் மன்றாடினார்.  மூன்று படிகளில் தாவிஏறி அரசரின் அரியணை அருகே சென்று “அவர்தான் மட்டுமீறி பேசிவிட்டார், அரசே. பொறுத்தருளுங்கள். நான் அவர்களிடம் பிறகு பேசுகிறேன். உரியமுறையில் பிறகு தண்டிப்போம். இப்போது நாம் அவையை முடிப்போம். இதை நாளை பேசுவோம்” என்றார்.

“நாளை ஏன் பேச வேண்டும்? இப்போதே சொல்கிறேன், என் கருவூலத்திலிருந்து ஒரு மணி பொன்னும் வெளிப்போகாது. நானறியாது எதுவும் நிகழாது இங்கு. இது என் ஆணை!” என்றான் புரூரவஸ். “ஆம், அதுவே உண்மை. அவ்வாறே நிகழட்டும். வருக!” என்று அமைச்சர் அழைத்தார். பல்லைக் கடித்தபடி “இங்கு இதை முடித்துவிட்டுத்தான் கிளம்பவிருக்கிறேன். என்னை எதிர்த்துப் பேசிய இவனை…” என்றான் புரூரவஸ். “அங்கே தங்களுக்கு என மூன்று அழகியர் காத்துள்ளனர். வடமேற்கு திசையிலிருந்து வந்தவர்கள். சுண்ணம்போல் வெண்ணிற உடல் கொண்டவர்கள்” என்றார் அமைச்சர் தாழ்ந்த குரலில்.

அவன் விழிகள் மாறுபட்டன. “ஆம், நான் சொல்லியிருந்தேன்” என்றபடி எழுந்து திரும்பி அவை நோக்கி “எவராயினும் எனது ஆணைப்படியே இங்கு எதுவும் நடக்கும். அதை மறந்து எவரும் எதையும் பேச வேண்டியதில்லை” என்று உரக்க கூவிவிட்டுச் சென்றான்.  அவனுடன் செல்ல அணுக்க ஏவலர்களை பணித்தபின் மூச்சுவாங்க கைகூப்பியபடியே மீண்டும் அவைக்கு வந்த அமைச்சரிடம் குலத்தலைவர்கள் அனைவரும் எழுந்து ஒரே குரலில் “இங்கு என்ன நிகழ்கிறது, அமைச்சரே? பொறுமையின் நெல்லிப்பலகையை வந்தடைந்துவிட்டோம். இனி அரசன் அவன் குடிகளை காணப்போவதில்லை, எதிரிகளையே காண்பான்” என்றனர். “பொறுத்தருள்க… பொறுத்தருள்க. என்பொருட்டு, என் நெறியின்பொருட்டு, என் தந்தையின்பொருட்டு, நான்கொண்ட வேதத்தின் பொருட்டு” என்றார் அமைச்சர்.

“நாங்கள் இவனுடைய கோலுக்கு கட்டுப்பட்டவர்கள். ஏனென்றால் இக்கோல் எங்கள் மூதாதையருக்கு ஒரு வாக்களித்திருக்கிறது. எங்கள் குடிபுரக்கவும் நிலம்காக்கவும் அமைந்த காவலரண் இது. எங்கள் தலைக்குமேல் எழுந்த தெய்வம் அல்ல. எங்கள் மூதாதையர் சொல் எங்களை கட்டுமேயொழிய இவ்விழிமகனின் கையிலிருக்கும் இந்த ஆறு அடி உயர வெற்றுக்கழி அல்ல. அவனிடம் சொல்லி வையுங்கள்” என்றார் ஒருவர்.

சட்டென்று சிவந்து “குடிமூத்தவரே, இது அரசர் அவை. நான் அவர் அமைச்சன். இச்சொல்லை இங்குரைப்பதை ஒப்பமாட்டேன்” என்று அமைச்சர் சொல்லத்தொடங்க “இழிமகன், கீழ்மகன், சிறியன்… என்ன செய்யப்போகிறீர்கள்? தலை கொய்யப்போகிறீர்களா? கொய்யுங்கள் பார்ப்போம்!” என்று அந்த குலத்தலைவர் சினந்தார்.

மூச்சிரைக்க கண்கலங்க ,“ஒன்று செய்வேன், இனி அரசனைப் பழித்து ஒரு சொல் எழுந்தால் உங்கள் இல்லத்திற்கு வந்து என் குருதியைச் சிந்துவேன். அப்பழி தொடர்க உங்கள் கொடிவழியை” என்றார் அமைச்சர். குலத்தலைவர் மெல்ல தளர்ந்து “அமைச்சரே,இது உங்கள் பணியல்ல, அறம் . உங்கள் எட்டு தலைமுறை மூதாதையரை நம்பி வாழ்ந்தோம். இப்போது உங்களை நம்புகிறோம்” என்றார்.

அமைச்சர் “அரசரின்பொருட்டு நான் மும்முறை தலைவணங்குகிறேன். பழியனைத்தும் நான் கொள்கிறேன். பொறுத்தருளுங்கள்! இன்று அவை முடியட்டும்” என்றார். “அவையை நாங்கள் முடித்துக்கொண்டோம். இனி நாங்கள் இங்கு இருக்கப்போவதில்லை” என்றபடி குலத்தலைவர்கள் வெளியே சென்றனர். அவர்களில் இளையவர் ஒருவர் திரும்பி “சென்று சொல்லுங்கள், குலப்பழி கொள்ளும் வாய்ப்பை எங்களுக்கு வழங்கவேண்டாம் என்று” என்றார்.

அமைச்சர் கைகூப்பி விழிகசிய நின்றார்.  இன்னொருவர் “அமைச்சரே, அரசரே  எங்கள் இல்லம்தோறும் வந்து வணங்கி அழைக்காமல் இங்கு அரசவை நிகழாது. இனி ஆணைகள் அனைத்தையும் குலத்தலைவர்களின் அவையே பிறப்பிக்கும்” என்றார். “இல்லை, வேண்டாம். அது மோதலென்றாகும். குருதியெழும். வேண்டாம்,  நானே இதற்கு ஆவன செய்கிறேன். சென்று வாருங்கள்” என்று கைகூப்பினார் அமைச்சர்.

மீண்டும் சென்று அரசனை சந்திக்க விழையாது தன் அறையிலேயே அமர்ந்திருந்தார். மெல்ல உளம்தேறி சென்று பார்த்துவிடுவோம் என்று எண்ணி அவர் அரண்மனையின் அகத்தளத்திற்குச் சென்றபோது அங்கு கணிகையர் நடனம் நடந்துகொண்டிருந்தது. மதுவருந்தி வெறிசிவந்த கண்களுடன் அரசன் மஞ்சத்தில் சாய்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். கைகூப்பி நின்று நோக்கிய அமைச்சர் ஒரு சொல்லும் எடுக்காது திரும்பி தன் இல்லத்திற்குச் சென்றார்.

imagesஇரவு இறுகி மெல்லிய புழுதிமணத்துடன் காற்று தெருவில் சுழன்று சென்றுகொண்டிருந்தது. தாழ்ந்திருந்த மறு எல்லையில் ஒரு விண்மீன் மட்டும் அதிர்ந்தது. தன் இல்லத்தில் முகப்புத்திண்ணையில் விரிக்கப்பட்ட மெத்தையில் படுத்து கண்களை மூடி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த அமைச்சரை திண்ணையின் மறுபக்கம் மெத்தையில் படுத்திருந்த அவரது முதுதந்தை எழுந்தமர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார்.

MAMALAR_EPI_24

தந்தை எழுந்தமர்ந்த அசைவை அவர் மூடிய விழியால் கண்டார்.  அவர் பேசப்போகிறார் என்பதை எதிர்பார்த்தார். அவர் பேசட்டும் என்று காத்திருந்தார். கனைத்தபின் “என்ன நிகழ்கிறது?” என்று முதியவர் கேட்டார். மைந்தர் பெருமூச்சுவிட்டார். “அரசன் எல்லை மீறிவிட்டான் அல்லவா?” என்றார். அமைச்சர் மீண்டும் பெருமூச்சுவிட்டார். தன் சொல்லால் அதை ஆதரிக்கவேண்டாமென நினைத்துக்கொண்டார்.

“இந்நகரே அதைப்பற்றித்தான் பேசிக்கொள்கிறது. அரசன் என்று வந்தவன் ஒர் இடுகாட்டு இழிதெய்வம் என்கிறார்கள். அவன் மீண்டு வந்ததே இந்நகர் மீது விதிக்கப்பட்ட தீச்சொல் என்று அன்றே சொன்னார்கள்” என்றார் முதியவர். “தாங்கள் எண்ணியது உறுதியடைந்துவிட்டால் மனிதர்களின் உள்ளே ஏதோ ஒன்று உவகையே கொள்கிறது. அதை மேலும் பெருக்கி பரப்பி பேருரு கொள்ளச்செய்கிறார்கள். இந்நகர்மேல் கண் வைத்திருக்கும் அயல் அரசர்கள் அனைவருக்கும் இன்று மக்களிடையே இருக்கும் வெறுப்பு மிகப்பெரிய ஈர்ப்பை அளிக்கும். மக்களால் வெறுக்கப்படும் அரசன் அயலாரால் எளிதில் தோற்கடிக்கப்படுவான்.”

“ஆம், இதையெல்லாம் நானும் அறிவேன்” என்று பத்மர் சொன்னார். “பிறகென்ன? நீ அந்தணன் அல்லவா? ஆற்றவேண்டிய பணி வடிவிலேயே பிரம்மம் உனக்கு தோற்றமளிக்கும். சென்று சொல் உன் அரசனிடம், என்ன நிகழ்கிறது என்று” என்றார் முதிய அந்தணர். “பயனில சொல்வதெப்படி?” என்றார் அமைச்சர். “என் சொற்கள் அவர் காதில் விழுமென்று எனக்குத் தோன்றவில்லை. உண்மையிலேயே உள்ளே பிறிதொருவர் குடியேறிவிட்டாரோ என்று ஐயுறுகிறேன்.”

முதியவர் நகைத்து “ஒவ்வொரு நாளும் மனிதனுக்குள் புதிய மனிதன் குடியேறுகிறான் என்பார்கள். நாம் காணும் ஆறு முந்தைய நாள் கண்டது அல்ல” என்றார். “அத்துடன் இறப்பின் தருணத்தை அடைந்து மீண்டவன் ஒருபோதும் முந்தைய மனிதனாக இருப்பதில்லை. பெருங்கொடுங்கோலர்கள் கருணை மிக்கவர்களாகி இருக்கிறார்கள். அச்சம் நிறைந்தவர்கள் பெருவீரர்களாகியிருக்கிறார்கள். மறுவழியிலும் நிகழும் போலும். அரசன் அவ்வெல்லையில் கண்டதென்ன, பெற்றதென்ன என்று நாமறியோம். இந்த மேடையில் இந்த நாடகம் இவ்வண்ணம் நடிக்கப்பட வேண்டுமென்பது ஊழாக இருக்கலாம்” என்றார்.

அமைச்சர் “நான் என்ன செய்ய வேண்டும்? பயனிலா சொல்லைச் சொல்லி என் தலையை தெறிக்க விடவேண்டுமா?” என்றார். “இறப்புக்கு அஞ்சுபவன் அந்தணன் அல்ல. அந்தணனுக்கு வேதமும் தொல்மரபும் அவன் கற்ற நூல்களும் அரணென அமைந்துள்ளன. அவ்வரணுக்குள் நின்றுகொண்டே அறத்தின் குரலை அவன் தன் சூழலை நோக்கி எழுப்புகிறான். அதற்குப் பிறகும் அவன் கொல்லப்படுவான் என்றால் அவ்வாளை ஏந்தியிருப்பது அறத்தின் தெய்வம் என்றே பொருள். அப்பலியை அவன் உவந்து அளிக்கவேண்டும். அதன்பொருட்டே அவன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்” என்றார் முதியவர்.

நடுங்கும் கிழக்குரலில் அவர் தொடர்ந்தார் “செல்லுமிடமெங்கும் இனிய படுக்கையும் குடிநீரும் உணவும் உடையும் அருட்கொடையுமாக அவனை எதிர்கொள்ளும் அதே அறம் அளித்தவற்றை திரும்பக் கேட்கிறதென்றே அதற்குப் பொருள். இன்று அதற்குத் தேவை உன் தலை என்றால் சென்று அளி!”  பின்னர் அவர் “மூதாதையரே…” என முனகியபடி முதிய எலும்புகள் ஒலிக்க மெல்ல கால்களை நீட்டி படுத்துக்கொண்டார்.

மெல்லிய அதிர்வுடன் அச்சொற்களைக் கேட்டிருந்த மைந்தன் கைகூப்பி “நன்று தந்தையே, இதை நானே அறிவேன் எனினும் இத்தனை கூரிய சொற்களில் எவரேனும் என்னிடம் கூற வேண்டியிருந்தது போலும். சென்று தலை கொடுக்கிறேன்” என்றார். “நிகழ்க! அதற்கு முன் மூதரசரை சென்று பார். அவரிடம் சொல். அவர் அறிந்திருக்கவேண்டும் அனைத்தையும்” என்றார். “இல்லை தந்தையே, அவர் எதையும் எண்ணக்கூடியவராக இல்லை. அரசர் விழிகளை இருள் மூடியிருக்கிறதென்றால் தந்தை விழிகளை ஒளி மூடியிருக்கிறது. இருவரும் பார்வையற்றவர்களே” என்றார்.

முதியவர் முகம் மலர்ந்து நகைத்து “ஆம், அவரை இளமைமுதல் அறிவேன். அரசர் என்பதைவிட அவர் கோலேந்திய காட்டுக்குலத்தலைவரே” என்றார்.  மேலும் உளம் கனிந்து “இனியவர். முதுமையில் அவ்வண்ணம் ஒரு நோய்க்கு அவர் ஆளாகியிருக்கக்கூடும். அது கலையாது அவருக்கு உயிர்மீட்சி நிகழ்க!” என்றபின் கைகளைக் குவித்து “ஓம்! அவ்வாறே ஆகுக!” என வாழ்த்தினார்.

“மைந்தர் உயிர் மீண்டதை களித்துக் கொண்டாடி மகிழ்ந்தார் மூதரசர். இன்று இத்தனை வயதான தன் மைந்தனை ஒரு கைக்குழந்தை என்றே எண்ணுகிறார். ஒவ்வொரு நாளும் எழுந்து இன்றும் அவர் உண்ணும்போது வந்து பார்த்திருக்கிறார். எவ்வளவு உணவை அவர் உண்டபின்னும்கூட சேடியிடம் இன்னும் சற்று பரிமாறும்படி அறிவுறுத்துகிறார்.  அரசர் எழுந்து சென்றபிறகு அத்தாலத்தில் எஞ்சும் உணவைப் பார்த்து இதையும் அவனை உண்ணவைத்திருக்கலாமே என்று சேடிகளை நோக்கி வசை பாடுகிறார். அரசர் பேசுவதெல்லாமே மழலை எனத் தோன்றுகிறது போலும். ஒவ்வொரு சொல்லுக்கும் அகம் மகிழ்கிறார்.  ஒருமுறை அரசர் புரவியேறி செல்வதைக்கண்டு மகிழ்ந்து அவர் துள்ளிக் குதித்ததை நான் பார்த்தேன்” என்றார் அமைச்சர்.

“விந்தை என்று சொல்லவில்லை, தந்தையே. பித்தோ கள்மயக்கோ என்று சொல்லத்தகுந்த ஒரு நிலையின்மை அவரிடம் இருக்கிறது மைந்தனைக் காண்கையில். ஒருநாள்கூட மைந்தன் துயின்றபிறகு ஓசையற்ற காலடிகளுடன் வந்து அவர் தலையிலிருந்து கால்வரை மெல்ல தொட்டு நோக்கி உறுதிப்படுத்தாமல் இவர் சென்று படுத்ததில்லை. இவரிடம் சென்று மைந்தனைப்பற்றி குறை சொல்வதென்பது…” என்றபின் அமைச்சர் நகைத்து “அதைவிட மைந்தனிடமே சென்று ஒரு வாளைக் கொடுத்து தலையை குனித்துக் காட்டலாம்” என்றார்.

“நன்று, அவ்வண்ணமெனில் தாயிடம் செல்” என்றார். சற்று விழிமாறிய அமைச்சர் “ஆம், அன்னையிடம் சொல்லலாம். அரசர் நோயில் சுருண்டு இறப்பை நெருங்கிக்கொண்டிருந்த போதும் அன்னை தன் நிலை மாறவில்லை. இன்று முளையிலிருந்து திரும்ப எழுந்து ஈரிலைத்தளிரும் தண்டும் கிளையுமென விரிந்தபோதும்கூட அதே நிலை கொண்டிருக்கிறார்” என்றார். பின்னர் கைகூப்பி “நன்று தந்தையே, அரசியிடம் சொல்கிறேன்” என்றார்.

imagesமறுநாள் முதற்புலரியிலேயே அரசன் எழுவதற்கு முன்னர் கிளம்பி அரண்மனைக்குச் சென்றார் அமைச்சர். மூதன்னை எழுந்து நல்லாயுளை வழங்கும் கௌரியின் ஆலயத்திற்குச் சென்றிருப்பதாக சேடி சொன்னாள். ஒவ்வொரு நாளும் கௌரியின் ஆலயத்திற்குச் சென்று அருகே ஓடும் சிற்றாற்றிலிருந்து  ஏழு குடம் நீரை தன் கைகளாலேயே சுமந்து கொண்டுவந்து ஊற்றி மலரிட்டு வணங்கி மீண்டு அதன் பின்னரே முதல் வாய் நீரை அருந்தும் வழக்கம் கொண்டிருந்தார் மூதன்னை. அன்னை வழிபட்டுக்கொண்டிருந்த கௌரியின் சிற்றாலயத்தின் முன் சென்று காவல்சேடியரின் அருகே கைகட்டி காத்து நின்றார் அமைச்சர்.

நீரூற்றி மலரிட்டு வணங்கி கைகளைக் கூப்பியபடியே குனிந்த உடலும், நடுங்கும் தலையும், காகத்தின் காலடிபோல் ஒற்றி எடுத்து வைக்கும் சிற்றடிகளுமாக வந்த அன்னையை நோக்கி வணங்கி “தங்களிடம் ஓரிரு சொற்கள் பேச விழைகிறேன், அன்னையே” என்றார். நோக்கி விழிமாறிய அன்னை “மைந்தனைப் பற்றித்தானே? சொல்லும்!” என்றாள். “தங்களிடம் அன்றி பிறிதொருவரிடம் நான் சொல்வதற்கு ஏதுமில்லை” என்றார் அமைச்சர். “ஆம், என்னிடம் இது வருமென்று எனக்குத் தெரியும்” என்றாள் மூதன்னை.

“அரசியே, அரசர் கொள்ளும் சிறுமை எல்லையின்றி சென்றுகொண்டிருக்கிறது. காமத்தில் திளைக்கிறார்.  செல்வத்தை மரக்கிளைகள் பாறைகளை பற்றுவதுபோல இறுக்கிக் கொண்டிருக்கிறார். அறமென்ற ஒன்றையே மறந்திருக்கிறார். குடிமக்களின் கப்பமும் வணிகர்களின் செல்வமும் கருவூலத்திற்கு வருவதென்பது ஒன்று நூறென பெருகி அறப்பணிகளாகவும் காவல்பணிகளாகவும் அவர்களுக்கே திரும்பிச் செல்வதற்காகத்தான். இச்சிறு உண்மையைக்கூட அறியாதிருக்கிறார் என்றால் அரசர் தன் அழிவை நோக்கி தானே நடந்து செல்கிறார் என்றுதான் தோன்றுகிறது” என்றார் அமைச்சர்.

அமைச்சர் சொல்வதையெல்லாம் மறுசொல்லின்றி நெஞ்சில் கூப்பிய கைகள் விலகாமல் கேட்டுக்கொண்டே வந்த மூதன்னை அரண்மனை விளிம்பை அடைந்ததும் “என்னிடம் சொல்லிவிட்டீர்களல்லவா? என்னால் இயல்வதை நான் செய்கிறேன். நானும் என் கணவரும் அரசரிடம் பேசுகிறோம்” என்றபின் ஒருகணம் தயங்கி “ஆனால் ஊழுக்கு எதிராக படைகொண்டு செல்ல எவராலும் இயலாது. இங்கு என்ன நிகழவேண்டுமென்று அது எண்ணியிருக்கிறதோ அதை நோக்கியே நீங்களும் நானும் மட்டுமல்ல, இதோ நம் காலடியில் நிரைவகுக்கும் எறும்புக்கூட்டமும் சென்றுகொண்டிருக்கிறது என்று எண்ணுகிறேன். நீர்வழிப்படும் புணைபோல செல்லும் இப்பெருக்கில் நாம் செய்வதற்கென்று ஏதுமில்லை” என்றாள்.

“அன்னையே, என் உள்ளத்தில் தங்களை வந்து காணவேண்டுமென்று தோன்றியதும் தாங்கள் என் சொற்களை செவிகொண்டதும்கூட ஊழாக இருக்கலாம் அல்லவா?” என்றார் அமைச்சர். மெல்ல நகைத்து “சொல்லாடற்கலையை தாங்கள் முறையாகக் கற்றதை நான் அறிவேன்” என்றபின் அரசி தன் அறைக்குள் சென்றாள்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 23

23. இருள்மீட்சி

பன்னிரு நாட்கள் துயிலிலேயே இருந்தான் புரூரவஸ். மென்பட்டுச் சேக்கையில் கருக்குழவியென உடல் சுருட்டி, முட்டுகள் மேல் தலை வைத்து, இரு கைகளையும் மடித்து கழுத்தில் சேர்த்து படுத்திருந்தான். மருத்துவர்கள் அவனை நோக்கியபின் “மூச்சும் நெஞ்சும் சீரடைந்துள்ளது. உமிச்சாம்பலுக்குள் அனல் என உடலுக்குள் எங்கோ உயிர் தெரிகிறது” என்றனர். நெஞ்சுபற்றி ஏங்கிய மூதரசரிடம் “ஆயினும் நம்பிக்கை கொள்வதற்கு ஏதுமில்லை. இது இறுதி விழைவொன்று எஞ்சியிருப்பதனால் மண் மீண்டு வந்த உயிரின் சில நாட்களாகவும் இருக்கலாம்” என்றனர். அவர் “நற்செய்தி சொல்லுங்கள், மருத்துவர்களே!” என கைபற்றி ஏங்கினார். “அவன் மீண்டு வருவான் என அவர்கள் சொல்லவில்லை. இதையும் அவர்களால் சொல்ல இயலாது” என்றாள் அன்னை.

சிதை சென்றவன் மீண்டு வருதல் நாட்டுக்கு நலம் பயக்குமா என்று நகர்மக்கள் ஐயுற்றனர். சென்றவன் மீள்வது நற்குறியல்ல. வாய்க்கரிசி இடப்பட்டவனுக்கு அருகே இருளுலகத்தின் பன்னிரு தெய்வங்கள் வந்து சூழ்ந்துகொள்கின்றன. அழுகைகளையும் அமங்கலப் பொருட்களையும் கண்டு அவை உளமகிழ்கின்றன. காண்பவர் உள்ளங்களுக்குள்  துயரின் அறவுணர்வின் இங்கிதத்தின் சுவர்களை மீறிச்சென்று அமர்ந்து மெல்லிய உவகை ஒன்றை அவை ஊதி எழுப்புகின்றன. பாடையில் படுத்திருப்பவனைச் சூழ்ந்திருக்கும் துயரையே அணுகிநின்றோர் காண்பர். அகன்று நிற்பவர்கள் அங்கே நின்றிருப்பவர்களின் உடலசைவுகளில் வெளிப்படும் நிறைவையும் நிம்மதியையும் காணமுடியும். அவர்களின் நிழல்களை மட்டும் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தால் அங்கே எழுந்துள்ள இருட்தெய்வங்களின் அசைவை கண்கள் அறியும் என்றனர் குலப்பாடகர்.

இடுகாட்டுக்கு பாடை கொண்டுசெல்கையில் நிழலுருக்களென தொடர்கின்றன அத்தெய்வங்கள். சிதையில் எரி எழுந்து தழலாடுகையில் சூழ்ந்து களியாட்டு கொள்கின்றன. அவ்வுடல் உருகி கருகி நெய்யென்றாகி எரியுண்டு விண்ணில் மறைகையில் உதறி எழும் உயிரை சரடெறிந்து பற்றி இழுத்துக்கொண்டு தங்கள் உலகுக்கு செல்கின்றன. இறக்கும் எவ்வுயிரும் சென்றடைவது மண்ணுக்கு அடியில் வாழும் இருளுலகையே. ஒவ்வொரு கல்தரிப்புக்கும் நடுவே சிறுதுளி இருளென நிறைந்திருப்பது அவ்வுலகே. அங்கே அவை பதினாறு நாட்கள் வாழ்கின்றன. அங்குள்ள துலாமேடை ஒன்றில் அவ்வுயிர்கள் நிறுத்தப்படுகின்றன.  யமன் தலைமையில் நூற்றெட்டு இருளுலகதேவர்கள்  அவற்றை பிழையும் பழியும் உசாவி அவை மிகுந்திருப்பின் மேலும் அடியில் வாழும் இருளுலகுகளுக்கு தள்ளுகின்றனர். பதினாறாம்நாள் ஊண்கொடை அதன்பொருட்டே.

பழிகடக்கும் நிறைகளால் விடுவிக்கப்படும் நல்லுயிர்கள் எழுந்து விண்ணுக்கு அடியில் மண்ணுக்குமேல் கொதிக்கும் அடுமனைக்கலத்திற்குமேல் நீராவி என அருவுருவாகி நின்றிருக்கும் மூச்சுலகிற்கு செல்கின்றன. அங்கே நாற்பத்தொரு நாட்கள் அவ்வுயிர்கள் வாழ்கின்றன. அவற்றை அங்கே விண்கனிந்து வந்தமையும் மூதாதையர் கூடியமர்ந்து உசாவுவார்கள். நன்றும் அன்றும் முறையும் வழுவும் சொல்லி கணக்கு தீர்க்கப்படும். நன்று மிகையே எனில் மூதாதையர் அவ்வுயிரை அள்ளி தங்கள் நெஞ்சோடணைத்து கொண்டுசெல்வார்கள். ஏழு விண்ணுலகங்களையும் கடந்து நலம் நிறைந்தோர் சென்றடையும் ஃபுவர் லோகத்தை அவ்வுயிர் அடையும். அங்கு தவம் முழுத்ததென்றால் தேவருலகடையும். நாற்பத்தோராம் நாள் நீர்க்கொடை அதனால்தான்.

இங்கு விட்டுச்சென்ற விழைவுகள் அவற்றை இழுக்குமென்றால் விண்சென்ற நீராவி குளிர்ந்து சொட்டுவதுபோல் மூச்சுலகிலிருந்தே மண்ணுதிர்ந்து மீண்டும் கருபுகுந்து உருவெடுத்து மண் திகழும் அவ்வுயிர்கள். “விழைவுகளின் சரடறுத்து வினைகளின் வலையறுத்து விண்புகுதல் எளிதன்று” என்றனர் குலமூத்தார். “சிதைசென்ற அரசன் மீண்டு வருகையில் ஆழுலகத்து தெய்வங்கள் அவனுடனே நகர் புகுந்துவிட்டிருக்கின்றன போலும்” என்றனர் மூதன்னையர். “இன்று அவை அவர் அரண்மனைச் சேக்கையைச் சூழ்ந்து நின்றிருக்கும். சினந்தும் சீறியும் சுழன்றாடும். பின் இருட்துளிகளென்றாகி அவர் நிழலில் குடியேறும். இவ்வாழ்வை உதறி மீண்டும் அவர் சிதை செல்லும்வரை அவை அவருடன் இருக்கும்” என்றார் பூசகர்.

ஒவ்வொரு நாளுமென புரூரவஸ் தன் உடலிலிருந்து முளைத்து மீண்டு வந்தான். கருவறை விட்டு இறங்கிய கைமகவு என அவன் விழிகளில் நோக்கின்மை பாலாடையென படிந்திருந்தது. கைகளும் கால்களும் ஒத்திசைவிழந்திருந்தன. மெல்ல அவன் தசைகளில் துடிப்பு எழுந்தது. மட்கிய மரப்பட்டைபோலிருந்த தோல் உரிந்து உயிர்த்தோல் எழுந்து வந்தது. உதிர்ந்த மயிர்கள் ஆலமரக்கிளையில் புதுத்தளிர் பொடித்தெழுவதுபோல முளைத்தன.  கண்கள் ஆடைவிலகி முகம் நோக்கத் தொடங்கின. நாவு துழாவி எழுந்த ஒலி சொல்லென திருத்தம் கொண்டது. நீர்சொட்டி அசையும் இலையென திடுக்கிட்டு திடுக்கிட்டு எழுந்தமைந்த நெஞ்சக்கூடு உலைதுருத்தி என சீராக மூச்சு இழுத்து உமிழத் தொடங்கியது.

புரூரவஸ் ஓநாய்க்குட்டியின் பெரும்பசி கொண்டவனானான். நாழிகைக்கொருமுறை படுக்கையை கையால் தட்டி “உணவு! உணவு!” என்று அவன் கூவினான். பாலில் கரைத்த தேனை முதலில் அவனுக்கு ஊட்டினர். பின்னர் உப்பிட்ட அன்னச்சாறு. நெய்சேர்த்த இளங்கஞ்சி சில நாட்களிலேயே. ஒவ்வொருநாளும் நெல்லிக்காய்ச்சாறு கலந்த பழக்கூழ் அளிக்கப்பட்டது. பின்னர் நெல்லிக்காய், தானிக்காய், கடுக்காய் கலந்த முக்காய்வடித்த மூலிகைமது மூன்றுவேளை கொடுக்கப்பட்டது. வேம்பெண்ணை பூசி உலரச்செய்த உடல்மேல் கல்மஞ்சளும் சந்தனமும் பயறுப்பொடியும் உழப்பிய கலவை பூசப்பட்டு வெந்நீரில் முக்கிய மென்பஞ்சால் வேது செய்யப்பட்டு ஒற்றி எடுக்கப்பட்டது.

உடல் பெருக்கி நாற்பத்தொன்றாம்நாள் படுக்கையில் எழுந்தமர்ந்தான். கூட்டுப்புழுவின் உடலென அவன்மேல் உலர்ந்த தோல்சுருள்கள் இருந்தன. விரிந்த தசைகளின் வெண்வரிகள் தோளிலும் புயங்களிலும் மழைநீர்வடிந்த மென்மணற்தடமென படிந்திருந்தன. அவன் எழுந்தமர்ந்து உணவுண்டுகொண்டிருந்தபோது கைகூப்பியபடி உள்ளே வந்த அமைச்சர் உவகையுடன் “இக்காட்சியைக் காண்பதற்கென்றே என் விழிகள் நோக்குகொண்டன போலும். இந்நாள் இனியென்றும் குருநகரியின் விழவுநாள்” என்றார். வாயில் வடிந்த கஞ்சியைத் துடைத்த சேடியின் கையை விலக்கி அவரை அயலவர் என நோக்கும் கூர்மையுடன் விழிநாட்டி “என் மணிமுடியை இப்போது சூடுவது யார்?” என்று கேட்டான் புரூரவஸ்.

குழப்பத்துடன் “தங்கள் முதல் மைந்தர் ஆயுஸ், அரசே” என்றார் அமைச்சர். “நான் இறக்கவில்லை என்று அவன் வருந்துகிறானோ?” என்றான் அரசன். புரூரவஸின் விழி அல்ல அது என்று அமைச்சர் உள்ளே திடுக்கிட்டார். “என்னை சிதைக்கு கொண்டுசெல்ல காத்திருந்தான்போலும்” என்றான் புரூரவஸ். அமைச்சர்  “அரசே, இளவரசர் மணிமுடி சூடுவதில்லை. கோலேந்தி கொலுவீற்றிருப்பதுமில்லை.  நெறி வழங்குகையில் மட்டுமே அரியணை அமர்கிறார். குல அவைகளில் மட்டுமே கோல் கைக்கொள்கிறார்.  அரசுமுறை செய்திகளில் மட்டுமே கணையாழியில் முத்திரை இடுகிறார்” என்றார். “ஆம். தன் எல்லைகளை அவன் உணர்ந்திருப்பது நன்று” என்றான் புரூரவஸ்.

மறுவாரமே எழுந்து நடக்கலானான். “என் அணியாடைகள் வரட்டும்!” என்று ஆணையிட்டான். ஆடையும் அணியும் அவனுக்கு உடல் கொள்ளாதபடி சிறிதாகிவிட்டிருந்தன. அனைத்தையும் புதிதாக சமைக்கும்பொருட்டு அணிக்கலைஞர்களுக்கும் பொற்கொல்லர்களுக்கும் ஆணையிட்டான். புதிய தோற்றத்தில் முடிசூடி கோலேந்தி வெண்குடை எழ அவன் அவை மீண்ட அன்று குடிகளும் குலமூத்தாரும் பெருவணிகரும் படைவீரர்களும் ஒருங்கே பேருவகை கொண்டனர். எழுந்து நின்று கைகளை உயர்த்தி “சந்திரகுலத்து முதல் மன்னன் வாழ்க! பேரறத்தான் வாழ்க! பெருங்கருணையோன்  வாழ்க! இறந்து மீண்ட இறையருளோன் வாழ்க!” என்று அவர்கள் குரலெழுப்பியபோது அது அவர்களின் உயிர்விசை கொண்டிருந்தது.

அவைக்குள் நுழைந்து அவ்வாழ்த்துக்களை தலைவணங்கி ஏற்று அரியணையில் அமர்ந்து உடலை எளிதாக்கிக்கொண்டதும் இயல்பாகவே அவன் நோக்கு திரும்பி அருகிலிருந்த ஆயுஸைப் பார்த்தது. இரு புருவங்களும் சுருங்கி ஒன்றையொன்று தொட்டன. சற்று தலைசரித்து அருகே நின்றிருந்த அமைச்சரிடம் “அவன் ஏன் இங்கிருக்கிறான்?” என்றான். “அதுதான் முறைமை, அரசே” என்றார் அவர். “அவன் அவை வீற்றிருக்க வேண்டியதில்லை” என்றான் புரூரவஸ். “அரசே, அது குடிவழக்கு” என்றார் அமைச்சர். “அதை நான் மாற்றுகிறேன். அரியணைச் சுவை அறிந்த ஒருவன் இவ்வவையில் இருக்கலாகாது. இக்கணமே அவனை நம் எல்லைக்கனுப்புக! அங்குள்ள தொல்குடிகளை ஒருங்கு திரட்டி அங்கே காவலரண் ஒன்றை அவன் அமைக்கட்டும்” என்றான்.

அமைச்சரின் முகம் மாறியது. ஆனால் விழிகள் எதையும் காட்டாது நிலைத்திருந்தன. “அவ்வாறே” என்று தலைவணங்கி திரும்பிச்சென்றார். முதல் அரசாணையாக தன் கணையாழியை அந்த ஓலையிலேயே அவன் பதித்தான். அவ்வோலையை அவையில் அமைச்சர் படித்தபோது முற்றிலும் அறியாத இருட்பேருருவம் ஒன்று முன்னெழுந்ததுபோல் அவையினர் திகைத்து ஒருவரையொருவர் நோக்கி விழிசலிக்க அமர்ந்திருந்தனர். அவை முழுக்க எழுந்த கலைவோசையைக் கேட்டு புரூரவஸ் கைதூக்கினான். “நன்று! நாம் அடுத்த அவைச் செயல்களுக்கு செல்வோம்” என்று ஆணையிட்டான். ஆயுஸ் எழுந்து தந்தையை வணங்கி வெளியேறினான்.

அன்று உச்சிப்பொழுதுவரை அரசன் தன் அவையில் அமர்ந்திருந்தான்.  முன்னாட்களில் ஆயுஸ் இட்ட அனைத்து ஆணைகளையும் அவன் நிறுத்திவைத்தான். அனைத்து முடிவுகளையும் மாற்றி அமைத்தான். எழுந்து செல்கையில் அமைச்சரிடம் “அமைச்சரே, இனி நான் அறியாது ஏதும் இங்கு நிகழக்கூடாது. இதுவரை நிகழ்ந்த பிழைகளேதும் இனி எழலாகாது. சிறு பிழைக்கும் என் தண்டம் வலிதென இவர்களுக்கு உரையுங்கள்” என்றபின் நடந்து அவைவிலகிச் சென்றான். அமைச்சர் “ஆணை!” என உரைத்து தலைவணங்கி நின்றார். குழப்பச்சொற்களுடன் அவை கலைந்து சென்றது. ஆயுஸ் அருகே வந்து “நான் இன்றே கிளம்புகிறேன், அமைச்சரே” என்றான். “தந்தைசொல் மீறாதிருங்கள் இளவரசே, நலம் சூழும்” என்றார் அமைச்சர். “ஆம், அவரிடமிருந்து நான் கற்றதும் அதுவே” என்றான் ஆயுஸ்.

imagesஎப்போதும் உச்சிப்பொழுதின் உணவிற்கு ஊன் மிக வேண்டுமென்று புரூரவஸ் ஆணையிட்டிருந்தான். உடல் புடைக்க உண்டபின் மதுவும் அருந்தி மஞ்சத்தில் படுப்பது அவன் வழக்கம். நோய்மீண்டபின் தன் துணைவியரை பார்க்க மறுத்து ஒவ்வொரு நாளும் இளம்அழகியொருத்தி தன் மஞ்சத்திற்கு வரவேண்டுமென்று ஆணையிட்டிருந்தான். அவன் துணைவியர் நாளும் அவன் அறைவாயில்வரை வந்து அவன் முகம் காணவேண்டுமென கோரி நுழைவு மறுக்கப்பட்டு விழிநீருடன் மீண்டுசென்றனர். அவன் மைந்தருக்கும் நோக்கு விலக்கப்பட்டது.

ஆனால் மூதரசர் மட்டும் அவனுடனேயே இருந்தார். உடல்தேறி அவன் எழுந்த நாட்களில் மூதரசர் ஒவ்வொரு நாளும் புலரிவிழிப்புகொண்ட உடனேயே ஒரு காவலன் தோள் பற்றி வந்து துயின்றுகொண்டிருக்கும் அவன் காலடியில் அமரும் வழக்கம் கொண்டிருந்தார். அவனுக்கு சேடியர் உணவூட்டுகையில் நோக்கியிருப்பார். அவன் சிறுமைந்தனைப்போல உதடு குவித்து உறிஞ்சி உண்ணும்போது மகிழ்வில் மலர்ந்து சுருக்கங்கள் இழுபட்டு விரிந்த முகத்துடன் பற்கள் அனைத்தும் தெரிய சிரித்தபடி “நல்லுணவு! நல்லுணவு! பிரம்மம் அதுவே. உயிர் அதுவே. எண்ணம் அதுவே. மூதாதையரின் வாழ்த்து என வருவதும் அதுவே” என்பார்.

ஒவ்வொருநாளும் மருத்துவர்களைச் சென்று கண்டு “எத்தனை விரைவில் அவன் நலம்பெறுவான், மருத்துவர்களே?” என்று கேட்பார். “மூதரசே, அவர் நலம்பெறுவதே ஒரு மருத்துவ விந்தை. நுரையெழுவதுபோல அவர் உடல் எழுகிறது. இதற்குமேல் ஒன்றை மானுட உடலில் எதிர்பார்ப்பதே அரிது” என்றனர் அவர்கள். ஆயினும் நட்ட விதையை ஒவ்வொரு நாளும் தோண்டிப்பார்க்கும் இளம்குழந்தை போலிருந்தார்.

அவர் துணைவியே அவரை நகையாடினாள். “நேற்று உண்ட உணவிற்கு இருமடங்கு இன்று உண்கிறான். நீங்களோ கலத்தில் எஞ்சிய உணவைப் பார்த்து சினம் கொள்கிறீர்கள். சேடியர்கள் பின்னறைகளில் உங்களை எண்ணி நகைகூட்டுகிறார்கள்” என்றாள்.  “அவர்களுக்குத் தெரியாது தந்தையின் அனல்…” அவர் சினந்து சொன்னார். பின்னர் மனைவியின் மெல்லிய கரங்களை விரல்களுக்குள் எடுத்துக்கொண்டு “அவன் உணவுண்ணும்போது இளங்குழவியாக நம் மடியிலமர்ந்து இட்டும் தொட்டும் கவ்வியும் துழன்றும் அமுதுகொண்ட காட்சி என் நினைவிலெழுகிறது.  நீ நினைவு கூர்கிறாயா?” என்றார்.

“இல்லை” என்று அவள் சிரித்தபடி சொன்னாள். “உன் நெஞ்சில் கனிவு வற்றிவிட்டது. முதுமகளாகிவிட்டாய்” என்றார். முதுமகளுக்குரிய மிகைநாணத்துடன் “உங்களுக்கு மட்டும் இளமை திரும்புகிறதோ?” என்றாள் அவள். “ஆம், எனக்கு இப்போதுதான் ஒரு மைந்தன் பிறந்திருக்கிறான். இளந்தந்தை என்றே உணர்கிறேன். முந்நாளில் இவன் என் மடிதவழ்ந்தபோது அத்தனை எண்ணங்களுக்கு அடியிலும் இவன் நினைவு இருந்துகொண்டே இருக்கும். எது ஓயும்போதும் ஒளிர்விழிகளும் நகைமுகமும் பட்டுக்கைகளும் எழுந்து வரும். இப்போதும் அவ்வாறே உணர்கிறேன். எண்ணித் துயில்கிறேன். எண்ணியபடி விழிக்கிறேன்” என்றார்.

நிலைகொள்ளாது தன் அறைக்குள் சுற்றியபடி “என்னால் இங்கிருக்க முடியவில்லை. நான் மீண்டும் என் மைந்தனின் அறைக்கே செல்கிறேன்” என்றார். “உங்களுக்கு பித்தென்று சொல்கிறார்கள். அதை மீள மீள நிறுவவேண்டாம்” என்றாள் அன்னை. “ஆம், பித்துதான். அதை நான் இல்லையென்றே சொல்லவில்லை. ஏழூர் மன்றில் நின்று கூவுவேன், நான் பித்தன் என்று. பிள்ளைப்பித்துபோல் பெரும்பித்து பிறிதில்லை” என்றார் அவர். “பிள்ளை முதியவனாகிவிட்டான், விழி பார்க்கிறதா?” என்றாள். அவர் “பார்த்தேன். அவன் முதுமை குறைந்து வருகிறது. நீ அதைப் பார்த்தாயா?” என்றார்.  “நோயுறும்போது அவன் தாடியிலும் குழலிலும் ஓரிரு நரைகள் இருந்தன. இன்றுள்ளதா அது?”

திகைத்து “ஆம், இல்லை!” என்றாள் அவள். “முளைத்து வரும் முடி அனைத்தும் கரிய பட்டுபோல் உள்ளன. நேற்று அவன் துயிலும்போது அவன் குழலை மெல்ல தடவிப்பார்த்தேன். கரடிக்குட்டியின் தோல்போல் தோன்றியது. அடி, அவன் இளமை மீள்கிறான். மேலும் குருதியூறி அவன் உடலின்  சுருக்கங்கள் அனைத்தும் விலகும்போது இளமைந்தனாக இருப்பான்” என்றார். அவள் முகம் மலர்ந்து “ஆம்” என்றாள். அவர் கண்களில் குறும்புடன் “படை பயில்வான். நூல் தேர்வான். பின் பிறிதொரு பேரழகியை மணம் கொள்வான்” என்றார்.

அவள் நோக்கில் எழுந்த கூர்முள்ளுடன் “ஆம், காட்டுக்குச் சென்று எவளென்றறியாத இருள்தெய்வம் ஒன்றை அழைத்து வருவான்” என்றாள். வலிக்கும் நரம்பு முடிச்சொன்றில் தொட்டதுபோல் அவர் முகம் மாறியது. “நன்றுசூழவே உனக்குத் தெரியவில்லை, மூடம்!” என்றார். “தீது நிகழ்ந்தவளின் அச்சம் இது” என்றாள். “தீதென்ன நிகழ்ந்தது? சொல், இறுதியில் எஞ்சிய தீதுதான் என்ன? பொன்னுடல் கொண்ட ஏழு மைந்தர்களை பெற்றிருக்கிறான். ஆல் என அருகு என இக்குடி பெருகுவதற்கு அவர்களே உகந்தவர்கள். பிறிதேது?” என்றார்.

அவள் “ஆம், ஆனால்…” என்றபின் “நன்று, நானொன்றும் அறியேன்” என்று சொல்லி மூச்செறிந்தாள். “ஐயுறாதே, அழகி. நன்றே நிகழ்கிறது. ஆம், ஒரு பெருந்துயர் வந்தது. கடலிலெழுந்த பேரலை அறைந்து நகர்கோட்டையை உடைத்துச் சென்றதும் முத்துக்கள் எஞ்சியிருப்பதைப்போல இதோ இளமைந்தர்கள் இருக்கிறார்கள்” என்றபின் “இங்கிருக்க முடியவில்லை. இங்கிருக்கையில் என் மைந்தன் எங்கோ நெடுந்தொலைவில் இருக்கிறான் என்றுணர்கிறேன். அங்கு சென்று அவனுடன் இருக்கிறேன்” என்றார்.

“அங்கு அவனை அவர்கள் குளிப்பாட்ட வேண்டும்.  அவன் சற்று துயிலவேண்டும். ஆகவேதான் பேசி மன்றாடி உங்களை இங்கு அனுப்புகிறார்கள்” என்றாள் மூதன்னை. “நான் ஓசையின்றி அவ்வறையிலேயே இருக்கிறேன். ஓவியம்போல் இருப்பேன்” என்றார். “நீங்கள் அங்கிருந்தால் சேடியர் இயல்பாக இருக்க முடியாது. சற்று இங்கிருங்கள்” என்று அவள் சொல்ல அவர் சோர்ந்து பீடத்தில் அமர்ந்தபின் “ஏதேனும் ஒரு மாயம் வழியாக என் விழிகளை மட்டும் அவன் அறையில் ஒரு பீடத்தில் எடுத்துவைத்துவிட்டு வரமுடியுமென்றால் அதன்பொருட்டு எதையும் கொடுப்பேன்” என்றார்.

புரூரவஸ் உடல் மீண்டு வந்தபோது ஒவ்வொரு நாளும் அவரும் உடல் வளர்ந்தார். கேட்டு வாங்கி உண்ணலானார். படுத்தால் எழாது துயிலலானார். ஒவ்வொரு நாளும் முகம் தெளிந்து வந்தது. விழி ஒளி கொண்டார். குரல் நடுக்கம்கூட இல்லாமல் ஆயிற்று. “எப்படி இருக்கிறீர்கள் தெரியுமா?” என்று கேட்டாள் அவர் துணைவி.  மைந்தனின் அணிகள் அனைத்தையும் கொண்டு வரச்சொல்லி அவற்றில் நல்லனவற்றை தேர்ந்து கொண்டிருந்தார் அவர். திரும்பி “எப்படி?” என்றார். “ஓவியம் வரையும்பொருட்டு துணியை சட்டத்தில் இழுத்துக்கட்டியதுபோல”  என்றாள் அவள்.  அவர் நகைத்து “ஆம், இன்னும் சில நாட்களில் ஒரு இளமங்கையை நானும் மணந்துகொள்ள முடியும்” என்றார். பொய்ச்சினத்துடன் “நன்று! தந்தையும் மைந்தனும் சேர்ந்து தேடுங்கள்” என்றாள் முதியவள்.

images புரூரவஸ் மீண்டு வரும் செய்தியை நகரில் உள்ளோர் முதலில் நம்பவில்லை. மீண்டும் மீண்டும் அச்செய்தி வந்தபோது அது அவர்களை அச்சுறுத்தியது.  சூதர் சொன்னபடி அரசன் உடலில் அறியாத் தெய்வமொன்று குடியிருக்கக்கூடுமோ? இடுகாட்டில் அலைந்த இயக்கர்களோ கந்தர்வர்களோ உள்நுழைந்து எழுந்திருக்கக்கூடுமோ? “ஆமாம், அதை முன்னரே சொன்னார்கள். பின் எவ்வாறு இவ்வண்ணம் எழுதல் இயலும்?” என்று முதிய பெண்கள் ஐயுற்றனர். “அவர் விழிகள் மாறியிருக்கின்றன என்கிறார்கள். ஓநாயின் இரு கண்கள் அமைந்திருக்கின்றன என்று அரண்மனையில் பணிசெய்யும் அணுக்கன் ஒருவன் சொன்னான்” என்று அங்காடியில் ஒருவன் பேசினான்.

சற்று நேரத்திற்குள்ளேயே நகரெங்கும் அக்கூற்று ஆயிரம் வடிவம் கொண்டது. “ஓநாயென அவர் உண்கிறார்” என்றான் ஒருவன். “ஒவ்வொரு நாளும் ஒரு கிண்ணம் பசுங்குருதியருந்துகிறார்” என்றான் பிறிதொருவன். “நாளுக்கு ஒரு வெள்ளாட்டை கொண்டுவந்து அவர் முன் நிறுத்துகிறார்கள். உறுமியபடி பாய்ந்து வந்து வெறும்வாயால் அதன் கழுத்தைக் கவ்வி குருதியுறிஞ்சி வெறும்தோலென அதை எடுத்து வீசுகிறார்” என்றான் இன்னொருவன். இரவில் அங்கு அரசனென வந்துள கொடுந்தெய்வத்திற்கு களம் வரைந்து மந்தணப் பூசனைகள் நிகழ்கின்றன என்றும் குருதிபலி கொடுத்து நிறைவுசெய்யப்படுகின்றது என்றும் பேசினர்.

நாள்தோறும் பெருகின கதைகள். அரண்மனையிலும் அவையிலும் அவன் ஆற்றிய அறமிலாச் செய்கைகள் ஒவ்வொன்றும் பெருகிப்பெருகி அவர்களை வந்தடைந்தன. அவன் மேன்மேலும் கொடுமைகொண்டவனாக ஆகுந்தோறும் அவர்களுக்குள் கதைதேடும் குழவிகள் அதை விரும்பி அள்ளி எடுத்துக்கொண்டன.  அவன் நடந்து செல்கையில் கால் பட்ட கல் குழிகிறது. கதவுகளை வெறும் கையால் உடைத்து மறுபக்கம் செல்கிறான். நீராட இறங்குகையில் சுனைநீர் பொங்கி வழிந்து வெளியே ஓடிவிடுகிறது. அவனைக் கண்ட புரவிகள் அஞ்சி குரலெழுப்புகின்றன. அவன் மணம் அறிந்ததும் யானைகள் கட்டுக் கந்தில் சுற்றி வருகின்றன. இந்நகர் பேரழிவை நோக்கி செல்கின்றது, பிறிதொன்றுமில்லை என்றனர் நிமித்திகர்.

தங்கள் அச்சத்தை அவர்களே உள்ளமைந்த இருள்நாக்கு ஒன்றால் நக்கிச் சுவைத்து மகிழ்ந்தனர். ஆகவே சொல்லிச் சொல்லி அதை பெருக்கிக்கொண்டனர். அச்சுறுத்தும் கதைகளை சொல்லும் சூதர்களுக்கு வெள்ளி நாணயங்கள் விரிப்பில் விழுந்தன. எனவே அவர்கள் மேலும் மேலும் கற்பனை நுரையை எழுப்பினர். ஆறு மைந்தர்களை அரசனிடமிருந்து முற்றிலும் விலக்கி வைத்திருக்கிறார்கள். அருகணைந்த எவரையும் பற்றி குருதிஉண்ண அவர் துடிக்கிறார். முதற்பகையென அரசமைந்தனே இருக்கிறார்.

“நோக்கியிருங்கள், ஒருநாள் அவரை முதல்மைந்தனே வாள்கொண்டு தலைகொய்து கதைமுடிப்பார்” என்றான் ஒரு சூதன். கேட்டுநின்றவர்கள் விழி ஒளிர மூச்செறிந்தனர். எவரேனும் கேட்கிறார்களா என்ற ஐயத்தை அடைந்து ஒருவரை ஒருவர் ஒளிர்கண்ணால் நோக்கிக்கொண்டனர். ஒன்றும்நிகழா அந்நகரில் கதைகளில் மட்டுமே கொந்தளித்தன அனைத்தும். நகரம் நழுவிச்சென்று கதைப்பரப்புக்குள் விழுந்துவிட்டது போலிருந்தது. கதைகளில் வாழும் நகர் ஒன்றுக்குள் நடப்பதாக உணர்ந்தபோது அவர்களின் கால்கள் விதிர்த்தன. உள்ளம் பொங்கி விழிகள் மங்கலாயின. மீண்டும் மீண்டும் நீள்மூச்செறிந்தபடி அங்கிலாதவர் போல் நடந்தனர்.

நூல் பதின்மூன்று – மாமலர் – 22

22. எரிந்துமீள்தல்

ஒவ்வொருநாளும் அரசனின் உடல் சுருங்கி நெற்றாகி, உலர்ந்த புழுபோலாகி, வெண்பட்டுப்படுக்கையில் வழிந்த கறையென்றாகி கிடந்தது. அறையெங்கும் மட்கும் தசையின் கெடுமணமே நிறைந்திருந்தது. அதை மறைக்க குந்திரிக்கப் புகை எழுப்பிக்கொண்டிருந்தனர். தரையை மும்முறை கோரோஜனையும் புனுகும் கொண்டு தூய்மைப்படுத்தினர். தேவர்களை அடிமைகளாக்கி ஆளும் இருளுலகத்து கொடுந்தெய்வம்போல அனைத்து நறுமணங்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு மேலும் பெருகி நின்றிருந்தது அக்கெடுமணம்.

அரண்மனை முழுக்கவும் அந்த மணம் பரவி முற்றத்தில் நின்றால்கூட அதை முகரமுடிந்தது. “நோயுற்ற விலங்கின் உடலில் அழுகும் புண்போல் அம்மஞ்சத்தறை” என்றார் ஒரு முதுகாவலர். “இந்நகரிலுள்ள அனைவருக்கும் வலிக்கும் புண் அது, மூத்தவரே” என்றான் இன்னொரு இளைய காவலன். ஒவ்வொரு காலையிலும் அரசனின் இறப்புச்செய்திக்கென நகர் விழித்திருந்தது. ஒவ்வொருமுறை முரசு முதலுறுமலை எழுப்பியதும் முதலெண்ணத்துளி செய்திதான் என்றே செவிகூர்ந்தது.

பின்னர் அவன் இறக்கப்போவதில்லை என இளிவரலாக அவ்வெதிர்பார்ப்பை மாற்றிக்கொண்டது. ஆயிரம் ஆண்டுகாலம் அங்கு அவ்வுடல் அழுகியபடி கிடக்கும் என்றொரு சூதன் கதை சொன்னான். அதை பெரியதோர் முதுமக்கட்தாழியில் சுருட்டி அமைத்து பரணில் எடுத்து வைப்பார்கள். நெடுங்காலத்துக்குப் பின் அதை எடுத்துப்பார்த்தால் அழுகி நொதித்து ஊறி நுரையெழுந்து மதுவென்றாகியிருக்கும். அதில் ஒரு துளி அருந்தினால் காதற்பெருங்களிப்பை அடையமுடியும்.

ஏழாண்டுகாலம் காதலின் கொண்டாட்டத்தில் திளைத்தபின் எஞ்சிய வாழ்நாளெல்லாம் அதன் பெருவலியுடன் வாழத்துணிந்த எவருக்கும் அது அளிக்கப்படும். பேரின்பத்தின் பொருட்டு பெருந்துன்பத்தை ஏற்கத் துணிபவர் யோகியர். அவர்கள் உண்ணும் அறிவமுது அது. ஒரு கையில் தேன்கலமும் மறு கையில் நச்சுக்கலமும் என நின்றிருக்கும் ஒரு தேவியின் வடிவில் அதை இங்கு ஓர் ஆலயத்தில் வைப்பார்கள். ஒரு கண் நகைக்க மறு கண் சினக்கும் சிலை அவள்.  ஒரு காலை விண்ணிலும் மறு காலை கீழுலகிலும் விரித்து மண்ணுலகில் உடலமைத்து நின்றிருப்பாள். அவளை பிரேமை என்றனர் கவிஞர். விண்ணாளும் முதலாற்றலின் பெண் வடிவம்.

ஒருநாள் மஞ்சத்தறைக்குச் சென்று வழக்கம்போல அரசனைப் போர்த்தியிருந்த போர்வையை மெல்ல விலக்கிய சேடி எப்போதும் மெல்ல தசை நெளிந்துகொண்டிருக்கும் அவன் வயிறு சேற்றுப்படிவென அமைந்திருப்பதைக் கண்டாள். மெல்ல அவன் மூக்கில் கை வைத்துப் பார்த்தாள். மூச்சோடுகிறதா இல்லையா என்பது எப்போதும் அறியக்கூடுவதாக இருந்ததில்லை. அவன் இறந்தபின்னர் அவனுடலில் ஏதோ அறியாத் தெய்வமே வாழ்கிறது என்னும் அலர் அரண்மனையில் அதனால்தான் புழங்கியது.

தன் ஆடையிலிருந்து சிறுநூலொன்றை எடுத்து அவன் மூக்கருகே காட்டினாள் அச்சேடி. அது அசையாமல் நிற்பதைக்கண்டு மூச்சிழுத்து நெஞ்சைப்பற்றி ஒருகணம் நின்றபின் வெளியே ஓடி அங்கு நின்றிருந்த மருத்துவர்களிடம் “அரசர் உயிரவிந்துவிட்டது போலும், மருத்துவரே”  என்று சொன்னாள். அவர்கள் அதைப்போல பலமுறை கேட்டிருந்தனர். “நன்று, முதுமருத்துவர் வந்து நோக்கட்டும்” என்றனர். “இல்லை, உண்மையாகவே. இதை என் உள்ளாழமும் அறிந்தது…” என அவள் சொன்னாள்.

அவர்கள் ஆர்வமில்லாது உள்ளே சென்று அவன் நாடியைத் தொட்டு நோக்கினர். இருப்பதுபோன்றும் இல்லை என்றும் காட்டியது நாடி. முன்னர் பலமுறை அதைத் தொட்டு நாதமெழாமை உணர்ந்து இறந்துவிட்டானென்று எண்ணி மீண்டும் மீண்டும் நோக்கி உயிர்கொண்டுள்ளான் என உறுதி செய்தமையின் குழப்பம் அவர்களை ஆட்கொண்டது. அவர்களில் இருவர் ஓடிச்சென்று முதுமருத்துவரை அழைத்துவந்தனர்.

முதுமருத்துவர் அரசனின் நாடியை ஏழுமுறை நோக்கியபின் “அரசர் இறந்துவிட்டார். ஐயமில்லை” என்றார். ஏவலர் அப்போதும் ஐயம்கொண்டிருந்தனர். செய்தி சென்றதும் ஆயுஸ் நேரில் பார்க்க வந்தான். அவனிடம் முதுமருத்துவர் அரசனின் மண்நீங்கலை சொன்னார். அவன் அரசனின் மஞ்சத்தருகே சற்றுநேரம் நின்றான். குனிந்து சுருங்கி சுள்ளி என்றாகிவிட்டிருந்த கால்களைத் தொட்டு தலையில் வைத்து வணங்கியபின் திரும்பி தன்னருகே நின்றிருந்த அமைச்சரிடம் “ஆவன செய்க!” என்றான்.

அரசன் விண்ணேகியதை அறிவிக்க முகக்கோட்டைமேல் எழுந்த பெருமுரசம் முழங்கலாயிற்று. ஆனால் அரசனின் இறப்பை எதிர்பார்க்கும் புலன்கள் முன்னரே மழுங்கிவிட்டிருந்தமையால் முதலில் அதை எவரும் அடையாளம் காணவில்லை. செவிமங்கி பிற ஒலி ஏதும் கேட்காது ஆன முதியவர் ஒருவர்தான் “அரசர் நாடு நீங்கினார் போலும்” என்றார். “என்ன?” என்றான் இளையவன் ஒருவன். அவர் தயங்கி “அந்த முரசொலி!” என்றார்.

அனைவரும் ஒரே தருணத்தில் திகைத்து “ஆம்!” என்றனர். மறுகணமே அம்முரசோசை சொல்லென மாறி பொருள் கொள்ளலாயிற்று. “சந்திரகுலத்து அரசன் புரூரவஸ் மண்மறைந்து விண்ணேகினான். புகழ்கொண்டு உடல் துறந்தான்!” நகரம் ஆர்த்தெழுந்தது. “நீடுவாழ்க அரசர். நெடும்புகழ் நின்று ஓங்குக!” என்று வாழ்த்து கூவினர். தெருக்களில் கூடிநின்று தங்கள் பூசெய்கை அறைகளிலிருந்து தட்டுமணிகளையும் செம்புக்கலங்களையும் கொண்டுவந்து சீராகத் தட்டி ஒலிக்கத் தொடங்கினர். சற்றுநேரத்தில் குருநகரமே மாபெரும் இசைக்கருவி என அதிர்ந்துகொண்டிருந்தது.

உயிர் நீத்த அரசனுக்கு முறைமை செய்யும்பொருட்டு தாலங்களில் சுடர், நீர், மலர், கனி, பொன் என்னும் ஐந்து மங்கலப்பொருட்களும் மஞ்சளரிசியும் ஏந்தி தலைப்பாகைகளோ அணிகளோ இன்றி மக்கள் அரண்மனை நோக்கி நிரை நிரையாகக் குவிந்தனர். அரண்மனைமுற்றம்  தலைகள் செறிந்து கருமைகொண்டது. அரண்மனைக்காவலர் எவரையும் கட்டுப்படுத்தவோ ஆணையிடவோ இல்லை. பேச்சில்லாமலேயே அரண்மனை எறும்புப்புற்றென சீராக இயங்கியது.

அரண்மனைக்குள் தங்கள் அறையில் மூதரசியும் அரசரும் விழிநீர் வார ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி தங்கள் முழுத்தனிமைக்குள் எட்டுத்திசை வாயில்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களிடம் அமைச்சர் சூழ ஆயுஸ் வந்து செய்தியைச் சொன்னபோது மூதரசர் கதறியழுதபடி நெஞ்சில் அறைந்துகொண்டார். அவர் கைகளை எட்டிப் பற்றிக்கொண்டாள் முதுமகள். அமைச்சர் அருகே செல்ல ஆயுஸ் வேண்டாம் என கைகாட்டினான்.

முதியவரை துணைவி மெல்லப்பற்றி படுக்கையில் படுக்கவைத்தாள். அவர் உடலில் மெல்லிய வலிப்பு வந்துசென்றது. அவர் பற்கள் கிட்டித்து கண்கள் செருகியிருந்தன. முதியவள் மெல்ல சாமரத்தால் வீசிக்கொண்டு அருகே அமர்ந்திருந்தாள். அவளுடைய மெல்லிய உதடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருந்தன. சுருக்கங்கள் செறிந்த கன்னங்களினூடாக கண்ணீர் வழிந்தது.  பெருத்த விம்மலோசையுடன் முதியவர் மீண்டு வந்தார். தன் துணைவியின் கைகளைப்பற்றி நெஞ்சோடணைத்துக்கொண்டு  விம்மி அழுதுகொண்டே இருந்தார். ஆயுஸும் அமைச்சர்களும் ஓசையின்றி விழிபரிமாறியபின் திரும்பி நடந்தனர். அதன்பின் அவர்கள் பிறரிடம் ஒரு சொல்லும் பேசவில்லை.

ஆயுஸ் முகமுற்றத்திற்கு வந்து அங்கு கூடியிருந்த மக்களிடம் அரசர் மண்மறைந்ததை முறைப்படி அறிவித்தான். அவர்கள் “பேரறத்தான் புரூரவஸ் வெல்க! சந்திரகுலத்து பெரும்புகழ் வாழ்க!” என்று கண்ணீருடன் கூவினர். இறப்பில் குவியம்கொண்ட புரூரவஸின் நற்பண்புகள் அவர்களை துயர்வெறி கொள்ளச்செய்தன. இறப்பு என்னும் பேருரு தங்களை அச்சுறுத்தி அத்தனை நற்பண்புகளையும் மறக்கவைத்து அவனை புறக்கணிக்கச் செய்ததை எண்ணியபோது எழுந்த குற்றவுணர்ச்சி உடன் இணைந்துகொண்டது.

ஈமச்சடங்குகள் இயற்றும்பொருட்டு வைதிகர் நூற்றொருவர் அரண்மனைக்கு வந்தனர். ஏழு நிமித்திகர் களம்பரப்பி அரசன் மண்மறைந்த பொழுதைக் கணித்து நாற்பத்தொரு நாட்களில் அவன் விண்ணுலகு சேர்வது உறுதி என்றனர்.  முற்றத்தில் அவன் உடல் கொண்டு வைக்கப்பட்டு குலமூத்தார் சூழ்ந்தமர்ந்து முறை செய்தபோது ஒரு தொல்சடங்கைச் செய்யும் அமைதியும் ஒழுங்குமே அங்கு நிலைத்தது. நிரையாக வந்து அவன் காலடியில் மங்கலப்பொருள் படைத்து மலரிட்டு வணங்கி சுற்றிச்சென்றனர் மக்கள். அவனுடன் குருதியுறவுகொண்ட மூத்தகுடிகளில் அவனுக்கு தந்தை, உடன்பிறந்தார், மைந்தர் முறை கொண்டவவர்கள் அவன் முகத்தில் வாய்க்கரிசியிட்டு இடம்சுற்றி சென்றமர்ந்து கொண்டிருந்தனர்.

இறுதியில் மூதரசரையும் அரசியையும் நான்கு ஏவலர் கை பற்றி அழைத்து வந்தனர். மூதரசர் மூர்ச்சையில் கொண்டுவரப்படுபவர் போலிருந்தார். மூதரசி உள்மடிந்த மெல்லிய உதடுகளால் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். முற்றத்தை அடைந்ததும் மூதரசர் திரும்பி எங்குள்ளோம் என நோக்கினார். விழி சென்று ஒருகணம் மைந்தனின் உடலைப்பார்த்ததும் அறியாது உடைந்து அடிபட்ட விலங்கென குரலெழுப்பி நடுங்கினார். அவரைத் தாங்கிவந்த முதிய வீரர் “அரசே!” என்று மெல்லச் சொல்லி அணைத்து முன்னால் இட்டுச்சென்றார்.

அரசியோ அங்கிலாதவள் போலிருந்தாள். சரடுகளால் இயக்கப்பட்ட பாவையென அவள் உடல் அசைந்தது. இருவரும் மும்முறை உடல் சுற்றிவந்து குல மூத்தார் அளித்த மலரையும் அரிசியையும் அவன் கால்களிலும் முகத்திலும் வைத்து மீண்டபோது முதற்படியிலேயே மூதரசர் நினைவழிந்து விழுந்தார். கூட்டம் ஓசையிட்டு சளசளக்க தளபதி ஒருவன் “அமைதி!” என ஆணையிட்டு அமையச்செய்தான். அரசரை போர்வையொன்றில் படுக்கவைத்து நான்குமுனைகளையும் பற்றித்தூக்கி உள்ளே கொண்டு சென்றார்கள்.

மூதரசி தடுமாறும் சிறிய அடி வைத்து செதுக்கிய மரப்பாவை போன்ற சுருங்கிய முகத்துடன் கூப்பிய கைகளுடன் அவரைத் தொடர்ந்து சென்றாள்.  அவர்கள் செல்வதை விழிநிலைத்து நோக்கி நின்றனர் மக்கள். அவர்கள் நோக்கு மறைந்ததும் நீள்மூச்சு ஒன்று அனைவரையும் தழுவியபடி எழுந்தது. சூதன் ஒருவன் “துயர்கொள்ளுதல் ஒரு தவம்” என மெல்லிய குரலில் சொன்னான். அனைவரும் திரும்பிநோக்க அவன் தன் யாழின் நரம்பில் விரலை ஓட்டிக்கொண்டிருந்தான்.

ஆயுஸ் உடைவாளேந்தி தந்தையின் கால்மாட்டில் நின்றான். ஸ்ருதாயுஸ், சத்யாயுஸ் இருவரும் அவனுக்கு இருபக்கமும் வாளேந்தி நிற்க பின்னால் இரு சேடியரின் ஆடைகளைப் பற்றியபடி விஜயனும் ரயனும் நின்றனர். ஜயனை ஒரு முதுசேடி இடையில் வைத்திருந்தாள். குலச்சடங்குகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்தன. அரசனின் ஏழு மூத்தவர்களின் சிதைக்குழிகளில் வைக்கப்பட்ட நீர் அவன் மேல் தெளிக்கப்பட்டது. பன்னிரு குலங்களின் சார்பிலும் பட்டுகள் போர்த்தப்பட்டன. பன்னிரு குடிகளைச் சேர்ந்த பன்னிரு மூதன்னையர் அவனை தங்கள் மகன் என கொண்டு பாலூற்றி வணங்கினர். பன்னிரு குடியின் பன்னிரு சிறுவர் அவனை தம் தந்தையென எண்ணி நீரூற்றி கால்கழுவி வணங்கினர்.

பின்னர் வைதிகர்கள் அவன் உடலை கங்கைநீரூற்றி தூய்மை செய்தனர். வேதச்சொல் சூழ அவனை வாழ்த்தி விண்ணேற்றம் கொடுத்தனர். குடிமூத்தார் கிளம்புக என ஆணையிட்டதும் குரவையொலியும் வாழ்த்தொலியும் சூழ அவன் உடலை பசுமூங்கில் பின்னிக்கட்டி மலர் அணிசெய்த பாடை மேல் ஏற்றிவைத்தனர். முரசுகள் முழங்கின. கொம்புகளும் குழல்களும் சங்கும் மணியும் இணைந்துகொண்டன.

images அரசனின் உடல் அரசகுடியின் இடுகாடு நோக்கி கொண்டு செல்லப்பட்டது. வேதமோதிய அந்தணர் குழு முன்னால் செல்ல  இசைச்சூதர்கள் இசையுடன் தொடர்ந்தனர். வாழ்த்தொலிகளுடன் அவன் குடிநிரைகள் பின்னால் சென்றனர். அவன் மணந்த தேவியர் மங்கலக்குறி களைந்து மரவுரி அணிந்து விரிந்த தலையுடன் நெஞ்சை அறைந்து அழுதபடி அரண்மனை முற்றத்தின் எல்லைவரை வந்து அங்கு விழுந்து மயங்கினர். அரண்மனைப்பெண்டிர் கண்ணுக்குத்தெரியா வரம்பால் கட்டப்பட்ட கடல் அலைகளைப்போல முற்றத்திற்குள் நெஞ்சறைந்தும் தலையறைந்தும் அலறியும் விழுந்து அழுதுநின்றனர்.

ஆயுஸும் மைந்தர் ஐவரும் இருபுறமும் பாடையை தொடர்ந்தனர். சந்திரகுலத்தின் பதினெட்டு பெருங்குடிகளைச் சேர்ந்தவர்கள் பாடையை தூக்கிச் சென்றனர். போரில் விழுந்த அரசனை முரசொலிக்க கொம்பும் குழலும் துணைக்க வேலும் வாளும் ஏந்திய படைவீரர்கள் களநடனமிட்டு முன்செல்ல தெற்கு நோக்கி கொண்டு செல்வது குருநகரியின் வழக்கம். நோயுற்று முதிர்ந்த அரசனின் இறப்பை குல மூத்தார் பன்னிருவர் முன்னால் சென்று சங்கூதி மூதாதையருக்கு அறிவித்துக்கொண்டு செல்ல ஆண்கள் கழியேந்தி வேட்டைநடனமிட்டுக்கொண்டு செல்வார்கள். இளமையில் நோயுற்று இறந்த புரூரவஸை சிதை நோக்கி கொண்டுசெல்கையில் ஒவ்வொருவரிடமும் துயரும் அமைதியுமே விளைந்தது.

குருநகரியின் குறுங்கோட்டையின் தெற்கு வாயிலினூடாக பாடை சுமந்து சென்ற பெருநிரை அப்பால் கடந்து அங்கு விரிந்திருந்த இடுகாடுகளை அணுகியது. நெருஞ்சியும் ஆவாரையும் கொடுவேலியும் எருக்கும் மண்டியிருந்த அப்பாழ்வெளியில் அன்றுதான் வழிசெதுக்கப்பட்டிருந்தது. அந்தப் புதுமண்ணில் மண்புழு நெளியும் கதுப்பில் காலடிகள் மேலும் மேலுமென பதிந்து சென்றன. இருமருங்கும் செறிந்த மரங்களிலிருந்து பறவைகள் கலைந்து எழுந்து வானில் சுழன்றொலித்தன.

அரசர்களுக்குரிய இடுகாடு தென்மேற்கே எழுந்த நடுகற்கள் மலிந்த குன்றொன்றின் அடிவாரத்தில் அமைந்திருந்தது. அங்கு ஓடிய சிற்றாறு பூர்வமாலிகா என்றழைக்கப்பட்டது.  அதன் கரையில் மண்குழைத்து இடையளவு உயரத்தில் அமைக்கப்பட்ட மேடையில் சந்தனக்கட்டைகளால் ஆன சிதை ஒருக்கப்பட்டிருந்தது. நெய்யும் தேன்மெழுகும் கொம்பரக்கும் ஒருபுறம் கடவங்களில் காத்திருந்தன. குங்கிலியமும் குந்திரிக்கமும் ஜவ்வாதும் புனுகும் கோரோஜனையும் பிற நறுமணப்பொருட்களும் மறுபால் வைக்கப்பட்டிருந்தன. பதினெட்டு மலர்க்கூடைகளில் ஏழுவகை மலர்கள் நீர் தெளித்து வாடாது பேணப்பட்டிருந்தன.

இடுகாட்டுத் தலைவன் தொலைவில் எழுந்த ஓசையைக் கேட்டதும் கைகாட்ட வெட்டியான்கள் எழுவர் எழுந்து தங்கள் வெண்சங்குகளை ஊதினர். அவர்களின் கலப்பறைகள் ஒலிக்கலாயின. மரங்கள் நடுவே வண்ணங்கள் ஒழுகி ஆறென வருவதுபோல அந்த அசைவுநிரை தெரிந்தது. இடுகாடு ஒருக்க அமைக்கப்பட்டிருந்த சிற்றமைச்சர் வேர்வை வழியும் வெற்றுடலுடன் ஆணைகளை இட்டபடி அங்குமிங்கும் பாய்ந்துகொண்டிருந்தார்.

இடுகாட்டை அணுகிய வைதிகர்கள் வெளியிலேயே நின்று பொற்குடங்களிலிருந்த நீரை மாவிலைகளில் அள்ளி அரசன் செல்லும் பாதையில் தெளித்து வேதம்பாடி  தூய்மைப்படுத்தியபின் வேதமோதியபடியே சென்று பூர்வமாலிகாவில் இறங்கி மூழ்கி மறுபுறம் கரையேறி ஈர ஆடையும் குழலுமாக தங்களை தூய்மைப்படுத்தும் வேதச்சொற்களை உரைத்தபடி அவ்வழியே சென்று மறைந்தனர். குலமூத்தார் முன்னால் சென்று அரசனின் பாடையை இறக்கி வைத்தனர்.

அதுவரை இயல்பாக நடந்து வந்த பலரும் உளம் தளர்ந்துவிட்டிருந்தனர். எங்கோ எவரோ விசும்பும் சிற்றொலி எழுந்தபோது கட்டுகள் அவிழ்ந்து அனைவருமே அழத்தொடங்கினர். சற்று நேரத்தில் அம்மானுடநிரையின் இறுதிவரை தேம்பும் ஒலி எழுந்து அவ்வெளியை சூழ்ந்தது. சிதைச்சடங்குகள் ஒவ்வொன்றாக முடிந்ததும் குலமூத்தார் அரசன் படுக்கவைக்கப்பட்டிருந்த பட்டின் நான்கு முனையையும் பற்றி மெல்ல தூக்கிக்கொண்டு சென்று சிதைமேல் வைத்தனர். அவன் உடம்புக்கு மேல் மெல்லிய சந்தனப்பட்டைகள் அடுக்கப்பட்டன. சுற்றிலும் நெய்யும் அரக்கும் தேன்மெழுகும் ஊற்றப்பட்டது.

அரக்கிலேயே எரிமணம் உறைந்திருந்தது. எரியின் குருதி அது என சூதர்சொல் என்பதை ஆயுஸ் நினைவுகூர்ந்தான். அவன் உள்ளம் விழவு ஓய்ந்த களமென உதிரி வீண்சொற்கள் சிதறிக்கிடக்க வெறித்திருந்தது. வெற்றுவிழிகளுடன் அனைத்தையும் பார்த்தான். பிறிதெங்கோ இருந்துகொண்டும் இருந்தான். அங்கே வாளேந்தி நிற்கவேண்டியவன் ஜாதவேதஸ் அல்லவா என நினைத்தான். ஆனால் வேதத்துறவு கொண்ட அவனுக்கு குருதியும் குலமும் குடியும் இல்லமும் ஏதுமில்லை. அதை எண்ணி அவனுக்காக அவன் பலமுறை வருந்தியதுண்டு. அப்போது அவன் பறவை என்றும் தான் புழு என்றும் தோன்றியது.

“அரசமைந்தர் எழுக…! எரிசெயல் ஆகுக!” என்றார் ஈமச்சடங்குகளை நடத்திய முதுவெட்டியான். ஆயுஸ் சென்று அரசநாவிதன் முன் அமர்ந்தான். அவன் கந்தகம் கலந்த நீரில் கைமுக்கி அவன் குழல்கற்றையை ஈரமாக்கி கூர்கத்தியால் மழித்து முடித்தான். முடி காகச்சிறகுகள் போல அவன் மடியிலும் தரையிலும் விழுந்தது. எவருக்கோ அவை நிகழ்வதுபோல அவன் எண்ணினான். கிண்ணத்தில் இருந்து மலரால் கந்தகநீர் தொட்டு அவன்  தலையில் தெளித்து “அவ்வாறே ஆகுக!” என்றான் நாவிதன். அவனுக்கு ஏழு பொன்நாணயங்களை காணிக்கையாகக் கொடுத்துவிட்டு கைகூப்பியபடி ஆயுஸ் எழுந்தான்.

அவன் உடன்பிறந்தார் இருவரும் இருபுறமும் உடைவாள் கொண்டு தொடர்ந்தனர். சிறுவர்கள் ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி தங்களை ஏவிய முதுஏவலர்களின் சொல்லுக்கு ஏற்ப நடந்தனர். முதிய ஏவலர்   ஒருவரின்  இடையில் அமர்ந்து வாயில் சுட்டுவிரல் இட்டபடி வந்த ஜயன்  அங்கு நிகழ்வதை நோக்கிக்கொண்டிருந்தான். வரும் வழியில் ஓசையை அஞ்சி அழுது காலுதறித் துடித்து பின்பு சற்று துயின்று எழுந்த அவன் முகத்தில் கண்ணீரின் இரு கோடுகள் உப்பெனப் படிந்திருந்தன. மீண்டும் ததும்பிய கண்ணீர் இமைகளிலும் விழிப்படலங்களிலும் சிதறி இருந்தது.

MAMALAR_EPI_22

“நற்பொழுது” என்றார் குலமூத்தார் ஒருவர். பிறிதொருவர் கைதூக்க முழவுகளும் கொம்புகளும் சங்குகளும் மணிகளும் இணைந்து ஆர்த்தன. புரூரவஸின் புகழ் பாடி சூதர்கள் இசைக்குரல் பெருக்கினர். குடிகள் அழுகையோசை கொண்டன. இடறிய குரலில் வாழ்த்தொலிகளும் கலந்தெழுந்தன. “சந்திரகுல மூதாதை வாழ்க! குருநகரி ஆண்ட பேரரசன் வாழ்க! அறச்செல்வன் வாழ்க! வெல்லற்கரிய பெரும்புயத்தான் வாழ்க!” என ஓசையிட்டனர் மக்கள்.

ஆயுஸின் கையில் மூன்று உறவுமைந்தர் கொண்டுவந்த எரிகுட உறியை அளித்தனர். அனல் பெருக்கப்பட்ட அக்கலத்தை  ஏந்தியபடி சிதையை மும்முறை சுற்றிவந்து அவன் தந்தையின் கால்களில் மலரிட்டு வணங்கினான். மைந்தர் நால்வரும் மும்முறை சுற்றி வந்து கைமலர்த்தி மலரிட்டு வணங்கினர். ஜயனை ஏந்திய முதுஏவலர் அவனை தந்தையின் காலடியில் மெல்ல இறக்கி மலரள்ளி அவன் கையில் கொடுத்து போடும்படி சொன்னார். நாற்புறமும் சூழநின்றவர்களை விரிவிழிகளால் திகைத்து நோக்கியபடி கையை உதறிவிட்டு திரும்பி ஏவலன் தோளை கட்டிக்கொண்டான் ஜயன்.

அரசருக்கு அணுக்கர்களும் குருதிஉறவு கொண்டவர்களும் குல மூத்தாரும் சுற்றி வந்து மலர் தொட்டு எடுத்து அடிபணிந்து சென்னிசூடி வணங்கி விலகியமைந்தனர். “எரியூட்டுக!” என்றார் முதுகுலத்தலைவர். அதுவரை இறுகிய முகம் பூண்டிருந்த ஆயுஸ் விம்மி அழத்தொடங்கினான். “அரசே, அரசர்கள் அழலாகாது” என்று மெல்ல சொன்ன குலத்தலைவர் “எரியூட்டுக!” என்றார்.

ஆயுஸின் கைகள் அவன் உள்ளத்தை அறியாததுபோல குளிர்ந்திருந்தன. “எரியூட்டுக, அரசே!” என்று மீண்டும் சொன்னார் குலமூத்தவர் ஒருவர். அவன் விம்மி அழுதபடி ஒரு அடி பின்னெடுத்து வைத்தான். “இது தாங்கள் கொண்ட பேறு. அவருக்கு தாங்கள் அளிக்கும் இறுதிக் கொடை. மைந்தனென தங்கள் கடன்” என்றார் குலமூத்தார். “இல்லை! இல்லை!” என்றபின் மீண்டு விலக பிறிதொருவர் அவன் தோளைப்பற்றி “முறை செய்க, அரசே!” என்றார்.

இரு குலமூதாதையர் அவன் இரு கைகளையும் பற்றி அக்கைகளில் இருந்த அனல்குடத்தை சிதையின் காலடியில் இருந்த நெய்நனைவின்மேல் வைத்தனர். திப் என்னும் ஒலியுடன் நீலச்சுடர் பற்றி எரிந்து மேலேறியது. பசு நீர் அருந்தும் ஓசை எழ செந்நிற நீர்போல் நெய்பட்ட இடமெல்லாம் வழிந்து பரவி மலரிதழ்கள்போல் கொழுந்தாடி எழுந்தது எரி.

அக்கணம் சிதையில் இருந்த புரூரவஸின் உடல் மெல்ல எழுந்தமைந்தது. விறகு விரிசலிடுவது என்னும் ஐயமெழுப்பும்படி  மெல்லிய முனகலொன்று அவன் நெஞ்சிலெழுந்தது. அதை ஆயுஸ் மட்டுமே கேட்டான். உடல்துடிக்க “நிறுத்துக! எந்தை இறக்கவில்லை! எந்தை இறக்கவில்லை!” என்று கூவியபடி நெருப்பின் மேல் பாய்ந்து சிதைமேல் தவழ்ந்து ஏறி புரூரவஸின் இரு கால்களையும் பற்றி இழுத்து சிதையிலிருந்து புரட்டி தரையிலிட்டான்.

நிலத்தில் கவிழ்ந்து விழுந்த புரூரவஸின் உடல் மீண்டும் ஒரு முறை துடித்தது. அந்த வலியை உணர்ந்து முனகியபடி  இடக்கையை சற்றே ஊன்றி தலைதூக்கி வாய்திறந்து அவன் முனகினான். “அரசர் இறக்கவில்லை! அரசர் இறக்கவில்லை!” என்று முன்நிரையோர் கூவினர். என்ன ஏதென்று அறியாமல் பின்னிரையோர் பின்னால் திரும்பி ஓடினர். சிலர் கூச்சலிட்டபடி சிதை நோக்கி வர காவலர்கள் ஈட்டிகளும் வேல்களும் ஏந்தி வேலியாகக் கட்டி அவர்களை மறித்து நிறுத்தினர். கூச்சல்களும் ஓலங்களும் அலறல்களும் அங்கே நிறைந்தன.

“கழுவேற்றுங்கள்! அம்மருத்துவர்களை கழுவேற்றுங்கள்!” என்று யாரோ கூவினார்கள். “கிழித்தெறியுங்கள்! அவர்களின் குலங்களை எரியூட்டுங்கள்!” என்று வேறொரு குரல் எழுந்தது. “ஆம்! ஆம்… கொல்க… கொல்க!” என கூட்டம் கொந்தளித்தது. விலகியோடியவர்கள் திரும்பவந்து கூடினர். கூட்டம் அலைக்கொந்தளிப்பு கொண்டு ஆரவரித்தது.

தீப்புண் பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில்  குடத்திலிருந்த குளிர்நீரை கொண்டுவந்து புரூரவஸின் மேல் கொட்டினார் குலமூதாதை ஒருவர். சத்யாயுஸும் ஸ்ருதாயுஸும் தந்தையின் உடலை பற்றிக்கொண்டு “எந்தையே! எந்தையே!” என்றனர். விஜயனும் ரயனும் ஏவலர் உடல்களில் முகம் புதைத்தனர். ஜயன் விழித்து நோக்கி திரும்பி ஒரு காகத்தை முகம் மலர்ந்து சுட்டிக்காட்டினான்.

புரூரவஸின் உதடுகள் வெயில் பட்ட புழுக்களென நெளிந்தன. “நீர் கொண்டுவாருங்கள்! இன்நீர் கொண்டுவாருங்கள்!” என்றனர் சிலர். ஒருவர் கொண்டுவந்த குளிர்நீரை மூன்று முறை உதடு நனைந்து வழிய உறிஞ்சிக்குடித்ததும் புரூரவஸ் கண் விழித்தான். “எங்கிருக்கிறேன்?” என்றான். அவன் உதடசைவால் அதை உணர்ந்தாலும் என்ன சொல்வதென்று அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் மறுமொழி சொல்வதற்குள் அவனே புரிந்துகொண்டு “இடுகாடா?” என்றான்.

ஆயுஸ் அஞ்சி பின்னடைந்தான். குலமூத்தார் ஒருவர் “அரசே, தாங்கள் இறந்து மீண்டிருக்கிறீர்கள்” என்றார். “ஆம், நான் அங்கு சென்று அவளைக் கண்டேன். மீளும்படி அவள் சொன்னாள்” என்றான். பின்னர் தெளிவுற அனைத்தையும் உணர்ந்தவனாக இரு கைகளையும் ஊன்றி உடலை மெல்ல மேலே தூக்கி “நிமித்திகர்களோ மருத்துவர்களோ அவர்களின் குடிகளோ எவ்வகையிலும் தண்டிக்கப்படலாகாது. இது அரசாணை!” என்றான்.

அருகே நின்ற அமைச்சர் “ஆணை, அரசே!” என்றார். திரும்பி துணைஅமைச்சர்களை நோக்கி ஓடிச்சென்று “இது அரசாணை! நிமித்திகர்களோ மருத்துவர்களோ பிறரோ எவ்வகையிலும் தீங்கிழைக்கப்படலாகாது. முரசறைந்து அறிவியுங்கள்!” என்றார். அவர்கள் கைகளை வீசியபடி ஓடினர். எவரோ ஒருவர் “பேரறத்தார் எங்கள் அரசர் வெல்க! நீணாள் வாழ்க சந்திரன் பேர்மைந்தர்!” என்று கூவ கூட்டம் வாழ்த்தொலியால் கொந்தளித்தது.

புரூரவஸ் மீண்டும் விழிகளை மூடியபின் “இனி நான் மீண்டெழுவேன்… ஆம்…” என்றான். “ஆம் தந்தையே, தாங்கள் மீண்டெழுவீர்கள். நூறாண்டுகாலம் வாழ்வீர்கள்” என்று ஆயுஸ் சொன்னான். அப்போதுதான் அவன் கால்களும் கைகளும் எரி நெய்யால் தசையுருகி வழிந்துகொண்டிருப்பதை அமைச்சர்கள் கண்டனர். “இளவரசரை மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள் உடனே! வழிவிடுங்கள்!” என்றனர். “ஒன்றுமில்லை… நான் மீண்டுவிடுவேன்” என்றான் ஆயுஸ் முகம் மலர்ந்திருக்க, விழிநீர் வழிய.

“இளவரசரை அழைத்துச் செல்லுங்கள்” என்று குலமூத்தார் கூவினர். வெண்பட்டொன்றை விரித்து அதில் படுக்கவைத்து ஆயுஸை தலைக்கு மேல் தூக்கிச்சென்றனர். அவனுக்குப் பின்னால் புரூரவஸையும் ஏவலர் கொண்டுசென்றனர். “அறம் இறப்பதில்லை. தன் சிதையிலிருந்தும் முளைத்தெழும் ஆற்றல் கொண்டது அது” என்று ஒரு புலவர் தன் இரு கைகளையும் விரித்து கூவினார். “அறச்செல்வர் வாழ்க! சந்திரகுலத்து முதல் மன்னன் வாழ்க!” என்று குருநகர் குடிகள் எழுப்பிய வாழ்த்தொலிகளால் இடுகாட்டுவெளியின் அனைத்து இலைகளும் அதிர்ந்தன. அவ்வோசைகளின் மேல் மிதந்து செல்வதுபோல் இருவரும் ஒழுகி அகன்று சென்றனர்.