மாதம்: திசெம்பர் 2016

நூல் பன்னிரண்டு – கிராதம் – 53

[ 13 ]

முதற்காமத்திற்குப் பின் பங்காஸ்வன் தன்னை முழுதும் பெண்ணென்றே உணர்ந்தான். எங்கோ கனவின் ஆழத்தில் சிலகணங்கள் ஆணென உணர்கையில் அஞ்சி விழித்தெழுந்து நெஞ்சு துடிக்க அமர்ந்திருந்து நீர் அருந்தி மீள்வான். ஆனால் ஆணென்றிருந்த நினைவு அவன் புலன்களின் ஆழத்தில் இருந்தமையால் உடலறிந்து உள்ளம் அறியாது காமத்தில் ஆண்மை செல்லும் வழிகளிலெல்லாம் முன்னரே சென்று காத்திருந்தது அவன் உடல். முற்பிறப்பு நினைவுகளால் செலுத்தப்படுபவன் கண்டடையும் வாழ்ந்த நிலமும் அறிந்த முகங்களும்போல.

பெண்ணென்றாகி அவனை நிறுத்தியது அப்பெண்ணுடல். அது அறிந்து அடைந்து திளைத்தவற்றை அவன் உள்ளுறைந்ததும் கொண்டது. வணிக இளைஞன் செல்வந்தர்குடியில் பிறந்த இளைஞர்களைப்போல உடலறிந்ததுமே காமத்தில் விழுந்தவன். பெண்களைக் கண்டு கடந்துகொண்டே இருந்தவன். அவன் அறிய அறிய கடக்கவியலாத விரிவாக அவள் இருந்தாள். “உள்ளே நுழைந்தவர்களை வெளியே விடாத புதிர்வழிக்கோட்டை அவள். அவளுக்குள் அறிந்துமுடிக்கமுடியாத ஏதோ ஒன்று உள்ளது” என்று அவன் நண்பர்களிடம் சொன்னான்.

“அது என்ன என்று ஒவ்வொருமுறையும் என் அகத்தை கூர்தீட்டி வைத்திருக்கிறேன். என் விழிப்பில் ஒன்று காமத்தில் திளைக்கையிலும் ஒன்று விலகி நோக்கியிருக்கிறது. மீண்டு வரும்போது  விலகியிருப்பது பேசத்தொடங்குகிறது. அது கண்டவற்றை, தொட்டுத்தொட்டு சேர்த்தவற்றை. ஒவ்வொருமுறையும் ஒன்று” என்று அவன் சொன்னபோது அவர்கள் திகைப்புடன் நோக்கியிருந்தனர். “இன்று ஒன்று தோன்றியது. அவள் அறியாத ஆணின் ஆழம் என்பது இல்லை. உடலில் உள்ளத்தில் உள்ளம் கடந்த துரியத்தில். அவள் முன்னரே அங்கு சென்றுமீண்டிருக்கிறாள்.”

“ஒருவேளை காமத்திலாடி சலித்த முதுபரத்தை அந்தத் தெளிவை அடையக்கூடும். ஆனால் அவள்கூட ஆண்காமத்தின் அடுக்குகளையே அறிந்திருப்பாள். நாம் சூதுக்களத்தில் பொற்கோளில் சொல்லாடலில் அடையும் நுண்மைகளை அவள் எப்படி அடையக்கூடும்? இயல்வதே அல்ல அது” என்று அவன் சொன்னான். “அச்சமூட்டுகிறது அவள் நோக்கு. அங்கே நாம் ஆடையின்றி மட்டுமே நின்றிருக்கமுடியும்.” அவன் அணுக்கத்தோழன் சொன்னான் “அவ்வண்ணமெனில் அவளை விட்டு விலகுவதே உகந்தது. அவளுக்கு அறியாத்தெய்வங்களின் துணை உள்ளது.” அவன் சிரித்து “அச்சத்தைப்போல் பெரும் கவர்ச்சி பிறிதில்லை. இனி பிறிதொரு பெண்ணை என்னால் எண்ணவும் முடியாது. தோழனே, கூர்வாள் கொண்டு போர்க்களம் பயின்ற பின்னர் பயிற்சிக்குரிய மரவாளை கையிலெடுக்கவும் கூசுவோம்” என்றான்.

ஆனால் அவள் அவனை எளிதில் கடந்து மறுபக்கம் சென்றாள். அவன் பொருள் ஒழிந்து சலிக்கத்தொடங்கியதும் பற்றவைத்து இறுதியையும் கொள்ளமுயன்றாள். அதன்பொருட்டு சற்று விலக்கம் காட்டினாள். பெருகிய எழுச்சியுடன் அவன் மீண்டும் அருகணைந்தான். ஊடிச் சினந்தும் அருகணைந்து தழுவியும் அவனை பெருக்கிப்பெருக்கி துளிஎஞ்சாது துய்த்தாள். நழுவும்பொருளை அள்ளிப்பற்றும் பதற்றத்திலேயே அவனை வைத்திருந்தாள். பற்றப்பற்ற நழுவுமென்று அவனை அறியவைத்தாள். உச்சத்தில் முற்றிலும் ஒழிந்து அவன் நின்றபோது இரக்கமின்றி அவனை உதிர்த்துவிட்டுச் சென்றாள்.

அவனை உதிர்ப்பதைப்பற்றிய எண்ணம் அளித்த உவகையை அவளே திகைப்புடன் நோக்கினாள். ஒழிந்த கலத்தை வீசுவதில் புதுக்கலம் கொள்வதைவிட பேரின்பம் உண்டென்று பிறர் சொல்லியிருந்தால் ஏற்றிருக்கமாட்டாள். நூற்றுக்கணக்கான முறை வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு உணர்ச்சிகளுடன் அவனை விடுத்தாள். சொற்களை கூட்டிக்கூட்டி அப்போது சொல்லவேண்டியவற்றை யாத்து நினைவில் நிறுத்திக்கொண்டாள். ஒவ்வொரு சொற்கோவையையும் நுண்சொல் உரைக்கும் தவத்தான்போல சொல்லிக்கொண்டே இருந்தாள்.

ஆணவத்தின் உச்சத்தில் நின்று “நீ எளியோன். எனக்கு இணையானவனே அல்ல. உன் காமத்தின் உச்சத்தில் மட்டுமே நீ என்னுடன் ஓடமுடியும். புள் மேல் காதல்கொண்டால் தவளை தாவி அழியும்” என்றாள். தன்னிரக்கத்தின் கீழ்ப்படியில் நின்று “எளியவள், நீங்கள் செல்லும் தொலைவு மிகுதி. என்னுடன் இருந்தால் இழிவும் துயருமே மிஞ்சும். மறந்துவிடுங்கள். இனியொரு பிறவியில் அணுகுவோம். அன்று நானும் இணையானவளாக இருப்பேன். இன்று சொல்கிறேன், இப்பிறவியில் பெண்ணென உங்களால் நிறைந்தேன். இனியொரு எண்ணம் எனக்கில்லை” என்று கண்ணீர் வடித்தாள்.

வஞ்சம் கொண்டு சீறி “என்னை வெறும் உடலென்று நுகர்ந்தவர் நீர். சொன்ன சொற்களை நான் ஒருபோதும் மறந்ததில்லை. என்னுடன் சோலையில் இருக்கையில் உங்கள் குலமூத்தார் ஒருவரின் குரல்கேட்டு எழுந்து ஒளிந்தீர். அன்று நான் இழிந்தேன். அவ்விருளில் இருந்து வெளிவந்ததே இல்லை நான்” என்றாள். கனிந்து “இது வாழ்க்கையின் ஒரு கட்டம். இது இப்படியே கடந்துசெல்வதே முறை. தேர்க்கு அருகே சோலைமரம் ஒன்று எப்போதும் நின்றிருக்கவேண்டுமென்று விழைவது குழந்தையியல்பு. ஆணென்று நின்று கடந்துசெல்க!” என்றாள்.

அந்த அத்தனை நடிப்புகளிலும் முழுதும் ஈடுபட்டு உணர்வுநிலைகளின் உச்சங்களில் நின்று திளைத்தாள். அவள் முகம் ஒவ்வொரு தருணத்தில் ஓர் உணர்வின் உச்சத்தில் நெளிந்துகொண்டிருப்பதைக்கண்டு தோழியர் அவளுக்கு அணங்கு கூடியிருக்கிறதென்று எண்ணினர். நடித்து நடித்து அத்தருணம் மழையொழுகிய மலைப்பாறைபோல தேய்ந்து கருக்கழிந்தபோது அதில் சலிப்புற்றாள். அவனை மிக எளிதாக வென்று கடந்தாள். நுரைத்துத் ததும்பி தன் உச்ச உறவொன்றிலிருந்து அவன் விலகியபோது உதட்டுச்சுழிப்புடன் முகடுநோக்கி பேசாமல் கிடந்தாள்.

அவன் அவள் புன்னகையைக் கண்டதுமே அதிர்ந்து நோக்கை விலக்கினான். பின்னர் “என்ன? என்ன?” என்று மீண்டும் மீண்டும் கேட்டான். அவள் மறுமொழி சொல்லாமல் எழுந்து ஆடை அணிந்தாள். “சொல், என்ன?” என்று அவன் கேட்டான். அவள் ஒன்றும் சொல்லாமல் திரும்பி விலகிச்சென்றாள். அவனை வென்றுகடந்துவிட்டோம் என்று அப்போது உணர்ந்தாள். உடம்பெங்கும் மதுக்களிபோல் ஒன்று ததும்பியது. கண்கள் மங்கலடைய கால்கள் தடுமாறின. எவரிடமாவது நகையாடவேண்டும்போல எவரையாவது தழுவவேண்டும் போலிருந்தது. காமத்தின் உச்சங்களுக்கு ஒருபடி மேல் அந்நிலை என்று உணர்ந்தாள். காற்றுபட்ட மலைச்சுனைபோல் சிலிர்த்துக்கொண்டே இருந்தாள். அடுமனைக்குச் சென்று அங்கிருந்த பெண்களிடம் நகையாடினாள். அவர்களை தழுவிச் சிரித்தாள். அவளுக்குள் பிறிதொரு அணங்கு குடிகொண்டுவிட்டதென்று அவர்கள் எண்ணினர்.

அவனை முற்றிலும் தவிர்க்கலானாள். அவனைத் தவிர்ப்பது அத்தனை எளிதென்று அப்போதுதான் உணர்ந்தாள். அவனை தன் அகம் முற்றாக முன்னரே தவிர்த்துவிட்டிருந்தது என்று அறிந்தாள். முதலில் அவன் கடும்சினம் கொண்டான். அவளை சந்தித்து மதவேழத்தின் உறுமலுடன் “ஏன் என்னை தவிர்க்கிறாய்? என்ன ஆயிற்று உனக்கு?” என்றான். அந்த ஆற்றலுக்கு அடியிலிருந்த அச்சம் அக்குரலுக்குள் எங்கோ தெரிந்தது. காற்றுக்குள் மழை இருப்பதன் குளிர்போல. அது அவன் ஆண்மையின் நிமிர்வை மைந்தரின் தோரணையாக ஆக்கி அவளை புன்னகைக்க வைத்தது. “ஒன்றுமில்லை” என்று சொல்லி அவள் கடந்துசென்றாள்.

அவன் மேலும் மேலும் சினம்கொண்டான். அவளை அச்சினம் ஒன்றும் செய்யாதென்று உணர்ந்த ஒருகணத்தில் உடைந்து “என்னை தவிர்க்காதே. நான் உனக்கென உயிர்வாழ்பவன். உன் முகமன்றி பிறிதில்லை என் நெஞ்சில். நீ என்னை விடுத்தால் மண்ணில் விழுந்து மட்கி புழுதியாவேன்” என்றான். அவள் மெல்லிய இளிவரல் உள்ளுக்குள் ஒளிந்த கனிவுடன் “என்ன சொல்கிறீர்கள்? ஆண் என நின்று பேசவேண்டாமா? இச்சொற்கள் என்னை துன்புறுத்துகின்றன” என்றாள்.

அவன் உடைந்தழுது “என்னை கொன்றுவிடாதே” என்று கைகளை நீட்டினான். அக்கணத்தில் தன்னை அன்னையென விரித்து “ஏன் இப்படி பேசுகிறீர்கள்? உங்கள் நலனன்றி பிறிதொன்றும் நான் கருதவில்லை” என்றாள். கடந்துசென்றபோது அவள் கால்நகம் ஒன்று மட்டும் புன்னகைத்துக்கொண்டிருந்தது. அவன் அதைமட்டும் கண்டான். இடிவிழுந்து எரியும் பனைபோல அவன் அங்கே நின்றான். அத்தனை அன்னை தெய்வங்களாலும் இளிவரலுக்காளானவன். அத்தனை ஆண் தெய்வங்களாலும் கனிவுடன் குனிந்து நோக்கப்பட்டவன்.

அவன் மீண்டும் மீண்டும் அவளிடமே வந்தான். நோயுற்று உடல்மெலிந்து விழிகள் பழுத்து இதழ்கள் கருகி நடுங்கும் உடலுடன் அவள் செல்லும் பாதையில் காத்து நின்றான். கண்கள் இறைஞ்சின. பின் அவை வெறும் பொருளற்ற நோக்குகள் மட்டுமாயின. பின் நோக்கும் அழிந்து இரு வெண்சிப்பிகளென்றே எஞ்சின. அவள் அவனை கடந்துசெல்கையில் உடல்கொள்ளும் ஆழ்ந்த உவகையில் திளைத்தாள். குட்டியைக் கிழித்து உண்டபின் நாவால் குருதியை நக்கும் அன்னைப்பன்றியின் நிறைவு. அவள் உள்ளத்தில் எழும் பாதைகளில் எல்லாம் அவன் எங்கோ நின்றிருந்தான். அவன் நோக்கு பரவிய மண்ணையே அவள் மிதித்து நடந்தாள்.

அவன் அளித்த உவகைகளும் பொருளிழக்கலாயின. புத்தாடை கருக்கழிந்து வண்ணமிழப்பதுபோல. அவள் பெருவணிகனின் நண்பனின் மைந்தனுடன் காதல்கொண்டாள். அக்காதலை முதற்காதலன் காணவேண்டுமென்று விரும்பினாள். அவனுடன் இருக்கையில் முதற்காதலனின் நோக்கு கதவுக்குமிழ்களின், கதவுத்துளைகளின் ஒளித்துளிகளில் இருப்பதாக உணர்கையில் நரம்புகள் இழுபட்டு உடல்கூசி உள்ளம் கூர்ந்து உச்சம்கொண்டாள். காமப்புளைவின் தருணங்களில் சாளரக்கதவு முனகினால் திரைச்சீலை நெளிந்தால் உடல்கொள்ளும் மெய்ப்பும் விழிகசிய கால்வெள்ளை கூச எழும் விதிர்ப்பும் காமத்தின் அறியாச் சுவைகளென்றிருந்தன.

பின்னர் அவள் காதல்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கு எதிரான பிறிதொன்றென இருந்தன. உணர்ச்சிப்பெருக்குடன் ஒருவனை அடைந்தாள். தெய்வப்படையல் என தன் உள்ளத்தையும் உடலையும் அவனுக்களித்தாள். எஞ்சலாகாது எதுவுமென்று சூளுரைகொண்டாள். இதுவே இறுதியென்று எண்ணி உருகி அவனுடனிருந்தாள். அவளுக்குள் அந்தச் சிறுபல்லி அமர்ந்து நொடிப்பொலி எழுப்பியதை அவள் கேட்டுக்கொண்டுமிருந்தாள். அந்த மந்தண ஒலி அத்தருணத்தின் நெகிழ்வுக்கு மேலும் இனிமையை அளித்தது.

பின் கசந்து ஊடி பிரிந்தாள். அதற்கென்றே தருணங்களை அவளுள் அமர்ந்து தேடிக்கொண்டிருந்தது பிறிதொரு உள்ளம். அதைக் கண்டடைந்ததும் சேர்த்துவைத்த சொல்லனைத்தையும் அதன்மேல் பெய்தது. வளர்த்தெடுத்து அனலென்றாக்கியது. தன்னிரக்கமும் பகைவெறியும் கொண்டு கொதித்தாள். கூர்சொற்களால் குத்தி குருதிபெருக்கினாள். தன் குருதியை உடன்கலந்து குடித்து மயங்கினாள். பிரிதலின் பெருந்துன்பத்தின் மயக்கில் திளைத்தாள். அணிகளைந்து ஆடைகலைந்து சொல்குலைந்து துயர்சுமந்து பிச்சியென்றாகி அமர்ந்திருந்தாள். இறப்பின் கூர்விளிம்புகளில் கால்கட்டைவிரல் நகங்களை மட்டும் ஊன்றி நடந்தாள். இருண்டிருண்டு சென்ற அடியிலிகளில் முடிந்தவரை சென்றாள்.

எத்தனை தொலைவுக்கு இருண்டிருண்டு உள்வாங்குகிறாளோ அத்தனை விசையுடன் எரிந்தெழமுடியுமென்று அறிந்திருந்தாள். பிறிதொருவனைக் கண்டு அவனை பதினாறு கைகளால் தழுவி இறுக்கி அவன் மார்பில் முகம்பொத்தி தன்னை இரங்கி கலுழ்ந்து கண்ணீர்வார்ந்து குலுங்கி அதிர்ந்து ஓய்ந்தபோது எழும் தனிமைக்கு காமத்தைவிட நூறுமடங்கு சுவை இருந்தது. அவன் அளிக்கும் முத்தங்களை பெற்றுப்பெற்று மழைகொண்ட பாலைநிலமெனக் குளிர்ந்து மெய்ப்புகொண்டு தளிர்பரவி பரந்துகொள்ளும் காமப்புளைவென்பது  தெய்வங்கள் திகைத்து விழித்துச் சூழ்ந்து நின்றுநோக்கும் வெறிகொண்டிருந்தது. முடிந்து உடல்கள் ஓய்ந்தபின்னரும் காற்றில் அவ்வசைவு எஞ்சியிருந்தது.

பின்னர் அந்நாடகங்களில் அவள் தேர்ந்த நடிகையென்றானாள். ஒவ்வொன்றும் பிசிறின்றி முழுமைகொண்டிருந்தன. அம்முழுமை சலித்தபோது அவள் அதன் விளிம்பை கலைத்தாள். அக்கலைவை சீர்செய்யும்போது பதைத்தாள். அடைந்தவற்றை இழந்து ஏங்கினாள். ஒருகணத்தில் பேதையென்றும் மறுகணத்தில் கலைதேர்ந்த பரத்தை என்றும் இக்கணத்தில் அன்னை என்றும் அக்கணத்தில் குருதிவிடாய்கொண்ட அணங்கு என்றும் மாயம் காட்டும் அவளை திருப்பத்திருப்ப ஒளிபெறும் வைரம் என்று உணர்ந்தனர் ஆண்கள்.

அவள் உறிஞ்சி உதிர்த்த ஆண்களின் நிரையை அனைவரும் அறிந்திருந்தனர். அதனாலேயே அவளை நோக்கி மேலும் ஈர்க்கப்பட்டனர். ஒவ்வொருவரின் ஆணவத்தையும் அவள் சீண்டினாள். தாங்கள் உதிர்க்கப்பட முடியாதவர்கள் என்ற அவர்களின் நம்பிக்கை அவர்களை அவளிடம் அழைத்துவந்தது. வெண்ணைக்கல் சிற்பம் செய்து தேர்ந்தபின் களிக்கல்லிலும் மாக்கல்லிலும் தேர்ந்து கருங்கல்லை வந்தடைவதுபோல அவள் மேலும் மேலும்  இறுகிய ஆண்களை சந்தித்தாள். வென்று மேலே சென்று திரும்பிநோக்கியபோது தன் கரும்பனையின் அடியில் உதிர்ந்து கிடக்கும் மண்டையோடுகளைக் காணும் யட்சி என அவள் விழிகள் மின்னின.

நெஞ்சு ஏறியிறங்க “ஆம்” என்று அவள் சொல்லிக்கொண்டாள். அக்கணத்தில் திளைப்பதற்காக தன்னிரக்கத்தின் படிகளில் மெல்ல இறங்கினாள். “நிறைவடையாதவளின் தனிமை” என்றாள். “எளியவள். எப்போதும் தாக்கப்படுபவள். தெய்வங்களால் கைவிடப்பட்டவள். பிறிதொன்றை நான் செய்யவியலாது. இச்செய்கைகளின் பழி சுமந்து என் உள்ளம் எடைகொள்கிறது.” அத்துயரை தன்குருதியை நக்கி உண்ணும் பெண்புலி என சுவைத்துச் சுவைத்து நிறைந்தபின் உள்ளெழுந்த ஆணவத்துடன் குகையதிர உறுமினாள். “ஆம், நான் பெண். பெண்ணென்பதனாலேயே இவையனைத்தையும் ஆற்றத்தக்கவள். தெய்வங்கள் அறிக!”

[ 14 ]

பல ஆண்டுகளுக்குப்பின் பெண்ணுருவில் பங்காஸ்வன் தன் அரண்மனையை வந்தடைந்தான். அரண்மனைக் கோட்டைக்குள் இயல்பாக நுழைந்த அவளைக் கண்டு காவலர் தடுத்தனர். “நான் உங்கள் அரசன். பெண்ணுருக்கொண்டவன்” என்று அவன் சொன்னான். தன் கைகளில் பொறிக்கப்பட்ட குலக்குறிகளைக் காட்டியும் அவர்கள் அவனை அறியவில்லை. துணைக்கழைத்த ஏவலரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. செய்தியறிந்து வந்த நூறு மைந்தருக்கும் அவனை அறியக்கூடவில்லை.

அமைச்சர் விபூதர் “மானுட உள்ளம் விழைவுகளும் ஐயங்களும் அச்சங்களும் கொண்டது. அம்மாசுபடாத உள்ளம் கொண்டவை விலங்குகள். அரசர் ஊர்ந்த புரவியாகிய பாண்டகம் இங்குள்ளது. பிற எவரையும் தன்மேல் ஏற அது ஒப்பியதில்லை. அது சொல்லட்டும்” என்றார். அவ்வெண்புரவி கொண்டுவரப்பட்டது.  பாண்டகம் அவளைக் கண்டதுமே கனைத்தபடி ஓடிவந்து  அருகணைந்து அவள் மேல் கழுத்தை உரசி நின்றது. அப்புரவியின் உளமறிந்த சூதன் “அரசே” என்று அழைத்து வணங்கினான். அவள் அதன்மேல் ஏறி அரண்மனைமுற்றம் நோக்கி சென்றாள்.

பெண்ணுருக்கொண்டு வந்தது அரசனே என்று அரண்மனை ஏற்றது. ஆகவே அவை ஒப்பியது. அதை அந்நகரும் நாடும் ஏற்றன. அரண்மனைச்சூதர் நாடுசெழிக்கும்பொருட்டு தவம்செய்து அரசர் பெண்ணுருப்பெற்று மீண்டிருப்பதாக பாடினர். அதை ஏற்று மக்கள் உவகைகொண்டு அரசியை வாழ்த்தினர். கமலத்வஜத்தின் அரசியென அமர்ந்து மீண்டும் கரையற்ற காமத்திலாடத்தொடங்கினான் பங்காஸ்வன்.

குளிர்விதை தொங்கும் காளையென மதமணம்கொண்ட இளையோர், தோள்திமிர்த்த மல்லர், நீள்கைகொண்ட வில்லவர், களம்நின்று பொருதும் வாள்வீரர் என வீரர்கள் அரண்மனைக்கு கொண்டுவரப்பட்டனர். நாவன்மைகொண்ட கவிஞர், இன்குரல் பாடகர், விழிமயங்கும் ஓவியர் என ஒவ்வொருநாளும் அழைத்துவரப்பட்டனர். நாளும் பதின்மருடன் அவள் காமத்திலாடினாள். பவளப்பேழைக்குள் அமைந்த சின்னஞ்சிறு இந்திரகோபம். சருகுக்குள் ஒளிந்த அனல்துளி. எரிந்தெரிந்து சுவை அறியும் சிறுநா. அனல்போல தான் பெருகுவது பிறிதில்லை.  கொள்ளும்தோறும் பெருகும் களியாட்டென காமம் தழைத்தது.

நூறு மைந்தரை ஈன்றாள். நூறாவது மைந்தனுக்கு முலையூட்டி படுக்க வைத்து குனிந்து அம்முகத்தைப் பார்த்ததும் மீண்டும் அவள் முதுகிலொரு தொடுகையென எதையோ உணர்ந்தாள். அவ்வண்ணமே மேற்கு வாயில் திறந்து வெளியே சென்று பணிந்து நின்ற அமைச்சரிடம் “நகர்முடியை மீண்டும் மைந்தனுக்கு அளியுங்கள்” என்று சொல்லி நடந்து காடேகினாள்.

ஆணென்று அமைந்து பங்காஸ்வன் பெற்றெடுத்த நூறுமைந்தரும் பெண்ணென்று ஈன்ற நூறுமைந்தரும் தங்களுக்குள் பகைமை கொண்டனர். பெண்ணின் மைந்தர் தங்கள் தந்தையரின் குலத்தையும் குடியையும்  பொருளையுமே உரிமை கொண்டவர் என்றனர் தந்தையின் மைந்தர். அன்னையென வந்ததும் பங்காஸ்வனே என்பதனால் மணிமுடிக்கு தாங்களும் உரிமை கொண்டவரே என்றனர் பெண்ணீன்றவர். அவர்களுக்குள் எழுந்த பூசலைத் தீர்ப்பதற்கு முன்னறி நெறிகள் எவையும் சான்றோர் அறிந்திருக்கவில்லை. நிமித்திகர் வரைந்த பன்னிரு களங்களில் வந்தமைந்த தெய்வங்களுக்கும் விடை தெரிந்திருக்கவில்லை.

ஆண் பெற்ற மைந்தர் தங்களை அழித்துவிடக் கூடுமென்று அஞ்சி பெண் பெற்ற மைந்தர் தங்கள் தந்தையரை துணை கூட்டினர்.  அவர்களோ நாடுகளெங்குமிருந்து திரட்டப்பட்ட தகுதிமிக்க பெருவீரர்கள். அவர்கள் படைகொண்டு சென்று தந்தை பெற்ற நூறுமைந்தரை சூழ்ந்து போரிட்டு கொன்றொழித்தனர். அதன்பின் எஞ்சிய தாய் பெற்ற நூற்றுவருக்குள் பூசல் தொடங்கியது. நூறு மைந்தருக்கு பல்லாயிரம் தந்தையர் குருதியுரிமை கோரினர். மன்று வந்து சான்று சொல்ல அன்னை இருக்கவில்லை. பல்லாயிரம் தந்தையர் பலநூறு குடிகளைச் சேர்ந்தவர்கள். குலங்களெனத் திரண்டு ஒருவருக்கொருவர் போரிட்டனர். ஒருவருக்கொருவர் வெட்டி முற்றிலும் கொன்றொழித்து மைந்தரென எவருமில்லாதாகினர்.

காட்டில் தனித்து சென்ற பங்காஸ்வன் அவர்கள் போரிட்டு மறைந்ததை அறிந்திருக்கவில்லை. மீண்டும் அச்செந்நதிப்பெருக்கருகே வந்து நின்றபோது அங்கு குடில் அமைத்து தங்கியிருந்த பிருங்கர் என்னும் முனிவரைக் கண்டாள். அவர்முன் சென்று வணங்கி நின்றாள். “காமக் கடும்புனல் கடந்து அப்பொன்னுலகை எய்துவதற்கென இங்கு வந்தேன். இந்நீரில் என் உடல் அமிழ மறுக்கிறது. எனவே இங்கு குடிலமைத்து தங்கியிருக்கிறேன்” என்று அவர் சொன்னார். “அதைக் கடக்கவே இங்கு வந்தேன் நானும்” என்று அவள் சொன்னாள்.

“நீ இங்கு வந்தது என் ஊழ் போலும். இன்று நான் ஒன்றை அறிந்தேன்” என்றார் பிருங்கர். “நான் ஆற்றில் நீராட இறங்குகையில் அங்கு இடையளவு நீரில் ஒரு இளம்பசு நின்றது. என்னைக் கண்டு அது கரையேறாது நீராடியது. அப்போது கரைமேல் வந்து நின்ற அன்னைப்பசு ஒன்று காமம் கரையாத ஆண்முன் கன்னியர் நின்றிருக்கலாகாது மகளே, கரையேறுக என்றது. அப்போது அறிந்தேன் நான் எங்கு தோற்றேன் என்று. கரைத்தழிப்பதை புதைத்தழிக்க இயலாது.”

“ஆம், எனக்கும் அனலடங்கி உளம் மீளுமென்றால் நன்றே” என்றாள். அவருக்கு மனைவியாக அக்குடிலில் தங்கினாள். உதறிக்கடந்த காமமனைத்தும் உடலுக்குள் கரந்திருந்த முனிவர் அவளுடன் அக்குடிலில் கணந்தோறும் காமம்கொண்டு அறிந்தார். அவள் யாரென்று ஒருசொல்லும் அவர் கேட்கவில்லை. அக்கணத்திற்கு முந்தைய கணத்தில் அவள் இல்லையென்றே கொண்டிருந்தார். எனவே ஒவ்வொருகணமும் முழுமைகொள்ள அவள் முழுமையாக தழைத்தாள். அவர் முற்றிலும் ஒழிந்தார்.

ஒவ்வொரு உறவுக்குப் பின்னரும் அவர் உடல் எடை குறைந்து வந்தது. ஒருநாள் அவ்வாற்றங்கரையில் அவளுடன் உறவுகொண்டபின் எழுந்தபோது வீசிய மென்காற்று அவரை பஞ்சென பறக்கச்செய்து கொண்டுசென்று அப்பெருக்கில்விட்டது. அவர் நீர் மேல் நடந்து அவளை திரும்பி நோக்காமல் சென்று மறுபக்கம் மறைந்தார். அவர் விட்டுச்சென்ற எடையனைத்தும் தான் கொண்டவளாக அவள் நீரை அணுகியதுமே கற்பாறையென ஆழத்தில் அமிழ்ந்தாள். நடந்து குடிலுக்குச் செல்லவே நெடுநேரமாகும் அளவுக்கு அவள் உடல் எடைகொண்டது. நின்ற இடத்தில் கற்பாறை குழிந்தது. சாய்ந்த மரம் இலையுதிர்த்துச் சரிந்தது.

ஒருநாள் அவள் வேர்ப்பலவின் அடியில் கனிகொய்து உண்டு தனித்திருக்கையில் அவளருகே வந்து நின்ற காகம் ஒன்றுக்கு ஒரு சுளை எடுத்து வீசினாள். பசித்திருந்தும் அதை உண்ணாது பறந்தெழுந்தமைந்தது காகம். ஏழுமுறை அது அவ்வண்ணம் செய்யவே அதன் விழிகளைக் கூர்ந்து “பறவையே சொல்க, இவ்வுணவு ஏன் உனக்கு ஒவ்வாதிருக்கிறது?” என்று கேட்டாள். “நான் விண்ணுலகில் வாழும் உன் மூதாதை. மைந்தரில்லா வெற்றுடல் கொண்டிருக்கிறாய். நீ அளிக்கும் உணவு பலியாகவே பொருள்கொள்கிறது. அதை நான் உண்ணலாகாது” என்றது.

“நான் நூறு மைந்தருக்கு அன்னையும் தந்தையுமல்லவா?” என்று அவள் சீறினாள். “நீ அறியமாட்டாய், உன் இருநூறு மைந்தரும் பூசலிட்டு மடிந்தனர். உன் நகரம் நாகம் ஏறி பறவைகள் கலைந்த மரம்போலுள்ளது. உன் அரண்மனையில் எருக்கு எழுந்துவிட்டது” என்றது காகம். நெஞ்சிலறைந்து அழுதபடி அவள் தன் நகர் மீண்டாள்.  மெல்ல சிற்றடி வைத்து நின்ற இடமெல்லாம் கதறி விழிநீர் உகுத்து அவள் சென்றடைந்தபோது  ஒவ்வொரு அடிக்கும் என முதுமை கொண்டிருந்தாள். நகரை அடைந்தபோது உடல்பழுத்து முடிநரைத்து பல்லுதிர்ந்து நகங்கள் சுருண்டு அழுக்காடையும் சடைமுடிகளுமாக பிச்சியென்றே ஆகியிருந்தாள்.

நகர்த்தெருக்களில் எல்லாம் குடித்தலைவன் இறந்த வீட்டின் உணர்வே நிறைந்திருந்தது. இடிந்து சரிந்து முள்ளும் புழுதியும் மண்டிப் பாழடைந்திருந்த அரண்மனைக்குள் புகுந்து தன் மைந்தர் தவழ்ந்த திண்ணையை ஆடிய முற்றங்களை அவர்களை ஈன்ற ஈற்றறையை ஒவ்வொன்றாக தொட்டுத் தொட்டு சென்றாள். நெஞ்சில் அறைந்து அழுதபடி நகரெங்கும் அலைந்தாள். தன் மைந்தர் விழுந்திறந்த மண்ணில்  விழுந்து தலையறைந்து கதறினாள். அவர்கள் எரிந்த சிதைச்சாம்பல் கலந்த மண்ணை முகத்தில் அள்ளிப் பூசினாள். அவர்களின் எலும்புகள் கரைக்கப்பட்ட ஆற்றின் கரைச்சேற்றில் புரண்டு கதறினாள்.

இரவும் பகலும் அவள் கதறல் ஒலித்தது. நகர்த்தெருக்களில் நெஞ்சில் அறைந்து அலறியும் கைவிரித்துக் கூவியும் ஓடி விழுந்து எழுந்து அழுத முதுமகளை அயலூர் பிச்சியென்றே அனைவரும் எண்ணினர். அழுது உடல் நீரனைத்தும் விழிவழியாக வெளியேற கோடைஉண்ட குளம்போல உடல் வற்றி தோல் வெடிப்புகொண்டு எடையற்ற நெற்றென ஆனாள். ஒருநாள் எவரும் அறியாது அந்நகரைவிட்டு நீங்கினாள். மீண்டும் காட்டுக்குத் திரும்பி அந்நதிக்கரையை அடைந்தாள்.

அவள் இறங்கியபோது ஆற்றுநீர் பளிங்கென இறுகி அவளை தாங்கிக்கொண்டது. அதன்மேல் காலடி வைத்து மறுபக்கம் சென்றாள். மறுநிலத்தைச் சென்றடைந்ததும் அவள் உருமீண்டு பங்காஸ்வன் என்றாகியது. அது  மீண்டும் இளமை பெற்று ஒளிர்ந்திருக்கக் கண்டான். அவன் முன் மணிமுடியும் மின்கதிர் படையும் கொண்டெழுந்த இந்திரன் புன்னகையுடன் சொன்னான்  “இது காமநிறைவுற்றோருக்கான பொன்வெளி. காமமே இங்கு மகிழ்வென்றும் தவமென்றும் ஆகும். நீ கடந்து அடைந்துவிட்டாய். நீ அடைந்த அவ்வுலகு என்னால் இன்னமும் அடையப்படாதது. நீ வாழ்க!” அவனை கைகூப்பி வணங்கிய பங்காஸ்வனிடம் “உன்னை பெண்ணாக்கி ஆடியவன் நானே. நீ வென்றமைந்தாய். விழையும் ஒரு அருட்கொடையை கேள்!” என்றான் இந்திரன்.

இந்திரனின் அவைமுன் நடனமாடிச் சுழன்றவர்கள் மெல்ல தளர்ந்து மலர்க்காடென கை முத்திரைகொண்டு நின்றனர். இளங்காற்று கடந்துசென்ற மரங்கள் மலருதிர்க்க அசைந்தாடின. மேனகை பங்காஸ்வனாக கைகூப்பி நிற்க இந்திரனாக அருட்கை காட்டி நின்றாள் திலோத்தமை. தலைக்கோல் ஏந்திய ஊர்வசி அதைச் சுழற்றி முன்னால் வந்து விழிகளில் புன்னகை ஒளிவிட “சொல்லுங்கள், இளைய பாண்டவரே! பங்காஸ்வன் தேவர்க்கரசனிடம் கேட்ட அருட்சொல் எது?” என்றாள்.

அர்ஜுனன் புன்னகையுடன் தாடியை நீவியபடி “பெண்ணுரு மீண்டு பொன்னுலகுக்குள் செல்லவேண்டும் என்றுதான்” என்றான். ஊர்வசி அருகே வந்து “ஏன்? அவன் பெண்ணுடலில் வாழ்ந்தவன் என்றாலும் ஆணல்லவா?’’ என்றாள். “பெண்ணென்றும் ஆணென்றும் அமைந்து காமத்தை அறிந்தவன் அவன். அவன் நாடும் மாற்றுலகிலும் இன்பமென ஊழ்கமென அவன் விழைவது காமத்தையே. பெண்ணென்று அறிந்த காமத்தை சிறுதுளியேனும் ஆணென்று அறிந்திருக்க மாட்டான்” என்றான் அர்ஜுனன்.

அவை கலைந்து நகையெழுப்பியது. முகம் சிவந்து விழி திருப்பிய ஊர்வசி கோல்சுழற்ற மேனகை வணங்கி இந்திரனிடம் அச்சொல்லை பெற்றாள். பெண்ணென்று நடந்து அந்தச் சோலைக்குள் மறைந்தாள்.  மரக்கிளைகள் என கைகளை வீசி நடனமங்கையர் அவளைச் சூழ்ந்து அணைத்துக் கொண்டனர். பின்னர் வளையல்கள் குலுங்க கைகொட்டி நகைத்தபடி அனைவரும் கலைந்து விலகினர்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 52

[ 11 ]

இந்திரதுவஷ்டம் என்னும் வேள்வியை இயற்றும் முறையை இல்லத்தில் அமர்ந்திருந்த முதிய வைதிகர் தன் உடலுக்குள்ளாகவே மூச்சுடனும் நாடித்துடிப்புடனும் கலந்து ஒலித்த மென்குரலால் சொல்ல ஏழு வைதிகர் அதனை குறித்தெடுத்தனர். முற்றிலும் புதிய சடங்குகள் கொண்டதாக அது இருந்தது. “தந்தையே, இவ்வேள்விச்சடங்குகள் பெரிதும் மாறுபட்டிருக்கின்றனவே?” என்றார் சலஃபர். “இவை மாகேந்திரம் எனப்படும் தொன்மையான வேதமரபைச் சேர்ந்த சடங்குகள். வாருணமும் பிறவும் வந்துசேர்வதற்கும் முந்தையவை” என்றார் முதிய வைதிகர். “இடியோசையை தாளமெனக் கொண்டவை. விழைவையே பொருளென சூடியவை.”

“மாகேந்திரம் மெல்ல வழக்கொழிந்து மகாவஜ்ரமென்றாகியது. தேவசிற்பியான த்வஷ்டாவால் விண்ணவனுக்கு சமைத்து அளிக்கப்பட்டது மின்கதிர்ப்படை. வஜ்ரமேந்திய விண்ணவனை மானுடர் அதன்பின்னரே வழிபடலாயினர். வைரவாளின் வழி என்பது வென்றுசெல்வது. வருணனும் சோமனும் மித்ரனும் விஸ்வகர்மனும் துணைநிற்கும் இந்திரனின் சொல் அது.  மின்னதிரும் நுண்தாளம் வேதத்திலமைந்தது அதன்பின்னரே” என்றார் முதுவைதிகர். “ஆயினும் இன்னமும் வடமேற்கே எஞ்சியிருக்கும் தொல்குடிகள் மாகேந்திரமுறையிலேயே வேதத்தை ஆள்கின்றனர். ரிக்வேதத்தின் கிருஷ்ணபக்‌ஷத்தில் அது சற்று எஞ்சியிருக்கிறது.”

அவர் சொன்னவற்றைத் தேடி நாடுமுழுக்க அலைந்தனர் அரசஏவலர்.  வேள்விக்குரிய நெய்யும் ஐவகை விறகும் ஒன்பது மணிகளால் ஆன அன்னமும் பாலும் தேனும் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன. ஏழு மலைகளிலிருந்து கஸ்தூரியும் கோரோசனையும் புனுகும் கொண்டுவரப்பட்டன. பன்னிரு மலைகளிலிருந்து குந்திரிக்கமும் சவ்வாதும் அகிலும் திரட்டப்பட்டன. பதினெட்டு மலைகளிலிருந்து தேனும் தினையும் கொம்பரக்கும் கொண்டுவரப்பட்டன. மூன்றுவகை பொன்னும் ஐந்துவகை பட்டும் ஒளிவிடும் ஒன்பதுவகை அருமணிகளும் வேள்விக்களத்தில் கொண்டுவந்தமைக்கப்பட்டன.

அரண்மனை முற்றத்தில் அமைந்த ஆயிரங்கால் பந்தலில் மூவெரி மூண்டெழுந்து ஆடிய எரிகுளங்கள் அமைக்கப்பட்டன. வேதம் நிறைந்த வைதிகர் நூற்றொருவர் சூழ்ந்தமர்ந்து வேள்விக்காவல் தெய்வங்களை அழைத்து தர்ப்பைமேல் அமரச்செய்து வேள்வியை தொடங்கினர். நுரைவாள் சுழற்றி இந்திரன் விருத்திரனைக் கொன்றபோது விழுந்த குருதித்துளிகள் காந்தள் மலர்களாயின. செம்பவள மணிகளாயின. இந்திரகோபப் பூச்சிகளாக உயிர்கொண்டன. காந்தளும் செம்பவளமும் இந்திரனுக்கு அவியாக்கப்பட்டது.

இந்திரனால் பாதுகாக்கப்பட்டு மழைமாறாக் காடுகளின் புதர்களுக்குள் வாழும் குருதிப்பூச்சிகளைப் பிடித்து மூங்கில்குடத்தில் இட்டுக்கொண்டுவந்து வேள்விக்களத்தில் திறந்துவைத்து வேதம் முழக்கினர். அவை பறந்தெழுந்து அனலில் தங்களை அவியாக்கிக்கொண்டபோது வைதிகர் மாகேந்திரத்தின் தொன்மையான வேதவரிகளை முழங்கினர். அனல் சுருண்டு எழுந்து ஆம் ஆம் ஆம் என முழங்கியது. வெண்ணிற வேள்விப்புகை எழுந்து பந்தலுக்குமேல் முகிலென நின்றது.

பன்னிரு நாட்கள் அவ்வேள்வி நிகழ்ந்தது. அன்னம் உண்டு போடப்பட்ட இலைகளும் தொன்னைகளும் குன்றுகளென எழுந்தன. அவிகொண்டு மயங்கி சிறகுகள் எடைகொண்ட தேவர்கள் வெண்தாடிவிதைகளென தும்பிகளென தேன்சிட்டுகளென  நகரெங்கும் விழுந்து சிறகு சரித்து மண் வருடிச் சுழன்றனர். அவிப்புகை உண்டு நனைந்த முகில்கள் கன்று முட்டிய காராம்பசு என மழை சொரிந்தன. மழைச்சாரல் அணைக்க நெய்யூற்றி மேலும் மேலுமென வேள்வித் தீயை எழுப்பினர் அந்தணர்.

நாளும் இரவும் கணமொழியாது வேதம் அதிர்ந்த காற்றில் சருகுகள் காயத்ரியில் மிதந்தன. இலைகள் அனுஷ்டுப்பில் ஆடின. இளங்காற்றில் துணிகள் உஷ்ணிக்கில் நெளிந்தன. சுவர்கள் தொட்டு வேதம் எனும் அதிர்வை உணரமுடிந்தது. ஒவ்வொருவர் உள்ளச்சொல்லோட்டமும் வேதச்சந்தமென்றமைந்தது. சந்தமே வேதமென்பதால் அவை வேதச்சொல்லென்றாயின. வேதச்சொல் கொண்டு செய்யும் செயலெல்லாம் வேள்வியே என்பதனால் நகரம் மாபெரும் வேள்விக்கூடமாகியது. உண்ணுதல் அவியூட்டலாயிற்று. உழைத்தல் வேள்விமுத்திரைகளென்றாயிற்று. உறங்குதல் வேள்விக்குள் அமைதலென மாறியது. வேள்வியன்றி பிறிதேதும் நிகழாத அந்நகரில் தேவர்களாயினர் மானுடர். தங்களுக்குத் தாங்களே அருள்பொழிந்துகொண்டனர்.

பன்னிரண்டாவது நாள் முகில் இருண்டு திரண்டது. வானில் எழுந்தது ஐராவதம். மின்படை சுழன்று நகர்மேல் கடந்து சென்றது. ஒவ்வொரு கூழாங்கல்லிலும் தெய்வ விழிகள் மின்னி அணைந்தன. ஒவ்வொரு மாளிகையும் அமராவதியில் அமைந்திருக்கும் அதன் ஒளிவடிவின் தோற்றத்தைக் காட்டி அமைந்தது. வேள்விப்பந்தலின் கிழக்கு மூலை பற்றி எரியலாயிற்று. “இந்திரனே, வருக! தேவர்க்கரசே, வருக! விழைவுக்கிறைவனே, வருக! கண் ஆயிரம் கொண்ட காமத்தலைவனே, வருக!” என்று வைதிகர் குரல் எழுப்பினர்.

வேள்வி மரமென நின்றிருந்த வேர்ப்பலாவின் கிளை பற்றி இறங்கி கொழுந்துவிட்டு வெடித்து நின்றாடி இந்திரன் கேட்டான் “வேட்பர்களே, உங்கள் விழைவென்ன? சொல்க!” கைதொழுது சலஃபர் சொன்னார் “விண்ணவர்க்கரசே, இவர் இவ்வேள்வியை ஆற்றும் அரசர். இவரது விழைவுக்கெனவே இங்கு நிகழ்கிறது இந்த மாகேந்திரப் பெருவேள்வி.” அரசனை நோக்கி “சொல்க!” என்று இந்திரன் இடியோசையால் உரைத்தான். வேள்விக்காவலனின் பீடத்திலிருந்து எழுந்து கைகூப்பியபடி பங்காஸ்வன் “விசைகொள் உடல் கேட்டு உன்னை அழைத்தேன், விண்ணவர்க்கரசே” என்றான்.

“காமமுழுமைக்கென்று இப்புவியில் பிறந்தேன் என்று என்னை உணர்கிறேன். காமத்தினாலன்றி மெய்மையையும் அறிய என்னால் இயலாது. உடலென்றான காமத்தை இளமையில் அடைந்தேன். நடுவயதில் உள்ளமென்றான காமத்தில் திளைத்தேன். இன்று காமமென்றேயான காமத்தை அறியும் கனிந்த நிலையிலிருக்கிறேன். இறுதி வாயில் திறக்கும் தருணத்தில் என் உடல் தளர்ந்துவிட்டது. இசை பெருகும் சூதனின் கையில் தந்தி தளர்ந்த யாழ்போல் ஆனேன். உன் அருள்கொண்டு என் உடல் மீண்டு எழவேண்டும். காமத்தை முழுதறிந்து நிறைய என் உள்ளம் கொள்ளும் எழுச்சியை உடல் சூடவேண்டும்.”

இந்திரன் தயங்கி சற்றுநேரம் அனலென கொழுந்தாடியபின் அரக்குவெடிக்கும் ஒலியில் சொன்னான் “முழுதறிய விழைகின்றாய், நன்று. மானுடனே, மூன்று மெய்நிலைகளை முழுதறிய இயலாதென்று அறிக! ஏனென்றால் அறிதல் வடிவிலேயே அவை இருப்புகொண்டுள்ளன.” நீலச்சுடர்கொண்டு மேலெழுந்த இந்திரன் கூறினான் “பிரம்மத்தை மானுடரால் முழுதறிய முடியாது. பிரம்மமென்று ஆவதொன்றே அதன் வழி. ஊழையும் முற்றறிய மானுடனால் இயலாது. பிரம்மத்தை அறிவதே அதன் வழி. அரசே, காமத்தை அறியவும் மானுடனால் இயலாது. காமத்தை அறிந்தவன் பிற இரண்டையும் அறிந்தவனாவான்.”

கைகூப்பி நின்றாலும் உறுதிமாறாத பங்காஸ்வன் சொன்னான் “இதுவன்றி பிறிதொன்றுக்குமாக நான் இங்கு எழவில்லை. இது அமையாவிடில் உயிர் வாழ்வதில் பொருளில்லை.” இந்திரன் கனிந்து “மாளா விழுச்செல்வம், முழுமைகொள் பெருவாழ்வு, சிறப்புறு மைந்தர், அழியாக் குடிநீட்சி, மானுடச் சொல்லில் வாழும் தகைமை இவை அனைத்தையும் அளிக்கிறேன். இவ்விழைவை  விலக்குக!” என்றான். “இவ்வேள்வி இவ்விழைவுக்கென்றே ஆற்றபப்ட்டது. இதை மறுத்து இறைவனாகிய நீ விண் திரும்புவாயென்றால் இவ்வேள்வி அனலில் விழுந்து உயிர் துறப்பதே எஞ்சும் வழியென்றிருக்கும் எனக்கு” என்றான் பங்காஸ்வன்.

இந்திரன் புன்னகைத்து “காமத்தை உணர்ந்தறிய ஆயிரம் குறி கொண்டிருந்தேன். அதன்பின் ஆயிரம் விழிகொண்டவனாகி அக்காமத்தை செறிவாக்கிக்கொண்டேன். இன்னமும் காமத்தை கடந்தவனில்லை. நான் எப்படி உனக்கு அச்சொல்லை அளிக்க முடியும்?” என்றான். பங்காஸ்வன் “காமத்தைக்  கண்டு கடப்பது என் வழி. நான் விழைவது காமத்தில் தளராமல் இருக்கும் உடல்நிலை. அழிவின்மை அமுதென கரந்திருக்கும் அரண்மனையில் வாழும் உன்னால் அதை எனக்கு அளிக்க முடியும்” என்றான்.

சலஃபர் சொன்னார் “அரசே, வேள்வியில் அனல்உண்டு எழும் தெய்வம் அளிப்பது தன் சொல்லை அல்ல. கடலின் துமியென்றே அது இங்கு தோன்றுகிறது. அதன் உப்பும் குளிரும் கடலுக்குரியவையே ஆகும். இங்கு சொல்லளியுங்கள், அதை ஆற்றுவது பிரம்மமே.” இந்திரன் தலையசைத்து “அவ்வாறே ஆகுக! காமநிறைவு கொள்க! அதற்குரியன நிகழ்க!” என்று சொல்லுரைத்து விண்மீண்டான்.

வேள்விக்களத்திலிருந்து வைரம்போல் உடல் கொண்டு மீண்டான் பங்காஸ்வன். கணுதோறும் முளைக்கும் முள்முருங்கை என்று ஆயிற்று அவன் ஆகம். நூறாயிரம் முறை காமத்திலாடினான். நூறு மைந்தரை ஈன்றான். தான் பெருகுவதை காணக்காண ஆணவம் கொண்டான். ஆணவம் காமக்கனலுக்கு காற்று. கரைதழுவும் கடலலைபோல் ஒவ்வொரு கணமும் மகளிரை தழுவிக்கொண்டிருந்தான். பின்பு ஒருமுறை இளமகள் ஒருத்தியின் அருகிருந்து எழுந்தபோது உணர்ந்தான், காமம் முழுதமையவில்லை என. ஏன் என வியந்த மறுகணம் எக்காமமும் முழுதமையவில்லை என்று அறிந்தான். முழுதமையாத காமமென்பது முற்றிலும் அமையாத காமமே என்று தெளிந்தான்.

அக்கணமே மஞ்சத்தறைவிட்டு வெளியே வந்து அங்கே நின்ற அமைச்சனிடம் “என் முதல் மைந்தனுக்கு முடிசூட்டுக!” என்று மட்டும் சொல்லிவிட்டு மேலாடையை எடுத்து இடையில் சுற்றிக்கொண்டு குளிர்ந்த காற்று சுழன்றடித்த விரிந்த முற்றத்திலிறங்கி நடந்து மறைந்தான். அவன் செல்வதை அமைச்சன் நோக்கி நின்றான். அவன் அதை முன்னரே எதிர்பார்த்திருந்தான். மூன்று தலைமுறைகளுக்கு முன் உணவின்மேல் பெரும்பித்து கொண்டிருந்த பங்காஸ்வன் மூதாதை பீதாஸ்வன் அதேபோல இருளில் இறங்கி மூழ்கி மறைந்ததை அறிந்திருந்தான். அதற்கும் முன் ஏழு தலைமுறை மூதாதையாகிய ஸ்வேதாஸ்வன் காவியம் மீது பெரும்பற்று கொண்டிருந்தான். அவனும் அதே இருளைத்தான் நாடினான்.

[ 12 ]

காட்டுக்குச் சென்ற பங்காஸ்வன் தன்னந்தனிமையில் நடந்தான். நாடி அடைந்த ஒவ்வொன்றையும் நினைவிலிருந்து உதிர்த்தான். அடிக்கு ஒரு நினைவு என அகற்றி அகற்றி பலநூறுகாதம் மண்தொடாது விண்ணில் நின்று துடிக்கும் அனலென விழைவு மட்டுமே அவனுள் எஞ்சியது. அவன் சென்றடைந்த காடு இந்திரகுப்தம் என்று அழைக்கப்பட்டது. தன் விழைவுக்கென இந்திரன் அமைத்தது அது. அவன் விழைவென அவனை மீறி வளர்ந்து பரவி அவனை ஒரு சிறுதுளியாக்கும் விரிவுகொண்டிருந்தது.

அக்காட்டுக்குள் செங்குருதிப்பெருக்கென சென்று கொண்டிருந்த ஆறொன்றைக் கண்டான் பங்காஸ்வன். அதன் கரையில் நின்று செந்நீரின் சுழிப்பை நோக்கிக்கொண்டிருந்தான். ஓடும்புரவியின் உடலென, காற்றில்பறக்கும் கொடியின் நெளிவென, நெளிந்தாடும் தழலென. அப்பெருக்கில் ஒழுகிச் சென்றுகொண்டிருந்தன காய்களும் இலைகளும் நெற்றுகளும் சருகுகளும் நுரைக்குமிழிப்படலங்களும்.  மேலும் விழிகூர்ந்தபோது அவையனைத்தும் முகங்களென உடல்களென உருக்கொண்டன. காமம்கொண்டு புணர்ந்து நெளிந்தன அவை. பல்லாயிரம் மானுடர், விலங்குகள், பறவைகள், நாகங்கள். உடல் பின்னி திளைத்துக் கொப்பளித்து குமிழியிட்டு சுழன்றமைந்து நீரென்றே ஆகியிருந்தன.

அவ்வாற்றுக்கு அப்பால் இளம்பச்சை ஒளி பரவிய நிலமொன்றை அவன் கண்டான். அங்கிருந்த மரங்கள் அனைத்தும் முலைகளென காய்த்து கனிந்திருந்தன. தோல்கதுப்பென தளிர்கள். மென்தசை வளைவுகளென தண்டுகள். பாறைக்குவையில் மென்மணல் குழைவில் காமமே ததும்பியது. உடல்பிணைந்து ஒன்றென ஆகி துய்த்து திளைத்தாடின அடிமரங்கள். அதுவே தன் இடம் என்று அவன் உணர்ந்தான். மறுகணம் அது ஒரு மயல்நீரோ என்று அஞ்சினான்.  நீ இழப்பதற்கொன்றுமில்லை. மயல்நீரென்றாலும் அதை நோக்கிச் சென்று அழிவதே உன் ஊழென்றால் பிறிதொன்றை நீ தெரிவுசெய்ய இயலாதென்று சொன்னது அவன்  நுண்ணறிவு.

மும்முறை தயங்கி, பின் துணிந்து அவ்வாற்றில் குதித்தான். பெருக்கு அவனை அள்ளிச் சுழற்றி ஆழத்திற்கு கொண்டுசென்றது. நீந்தி மேலெழும்போது அலையொன்று அவனை அறைந்து மீண்டும் உள்ளிழுத்தது.

பன்னிருமுறை அவனை சுழற்றியும் அலைத்தும் கொண்டுசென்ற அவ்வாற்றிலிருந்து அருகணைந்த உடல்புணை ஒன்றைத் தழுவி நீந்தி கரைசேர்ந்தான். எழுந்து கரையில் நின்று நீரை உதறி ஆடைதிருத்தியபோது அறிந்தான், அவன் உடல் பெண்ணாகியிருந்தது. முலைகள் பருத்து கருங்கண் கொண்டிருந்தன. தோள் மென்மையாகக் குழைய கைகள் கொடியென நெளிய  இடைவளைந்து தொடைபெருத்து ஒற்றிச்செல்லும் சிற்றடி வைத்து நடந்தான்.

தன் உடலையே திகைப்புடன் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டான். கொழுமுலைகளை மென்வயிற்றை தொட்டபோது உள்ளம் திடுக்கிட்டு கைகூச விலக்கிக்கொண்டான். இடைக்குக்கீழ் எண்ணியபோது அனல்கொண்டு எரிந்தது அவன் உடல். அவன் நினைவறிந்த நாள்முதல் எண்ணி எண்ணி ஏங்கி தேடித்தேடி அடைந்து மேலும் மேலுமென விழைந்த அனைத்தையும் அவனே கொண்டிருந்தான். ஆனால் அவையனைத்தும் பிறனெனத் தோன்றி அருவருப்பூட்டின. பிறர் கொண்டிருக்கையில் ஆறாவிழைவூட்டியவை தான் கொண்டிருக்கையில் ஒவ்வாததென ஆகும் விந்தை என்ன?

விழைவுகொண்டது அவற்றின்மேல் அல்லவா? அவையென தன்னை வெளிப்படுத்திய பிறிதொன்றின்மேலா? அது பெண்மை. நாணமென காமமென கன்னிமையென அன்னைமையென அமுதென நஞ்சென தன்னை நிகழ்த்திக்கொண்டிருக்கும் ஆடல். தெய்வம் குடியேற்றப்படாத சிலை வெறும் கல். இம்முலைகள், இத்தொடைகள், இந்த அல்குலுக்குப்பின் ஒரு பெண் இல்லை. மீண்டும் மீண்டும் அவன் உடல் கூசிக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு கட்டத்தில் குமட்டலெடுத்து வாயுமிழ்ந்தான். எதை அருவருக்கிறேன்? என் அகம் அமைந்திருக்கும் இந்த உடலையா? இதுவும் உடலே. இது உண்டு உயிர்வளர்க்கும், குளிர்வெம்மை உணரும், துயின்று விழிக்கும். இதன் இன்பங்களை என் அகம் அறியும். அக்கணம் சென்றுதொட்ட ஓர் எண்ணம் தேள்கொடுக்கென கொட்ட அவன் மீண்டும் வயிறு எக்கி வாயுமிழ்ந்தான்.

ஆம், இவ்வுடல் என்னுடையது. ஆனால் இது என்னை சொல்லவில்லை. கனவிலோ களிமயக்கிலோ நான் சொன்ன சொல்போன்றது இது. என்னால் பொருளேற்றம் செய்யப்படாதது. இதில் வெளிப்படுவது நான் அல்ல. இது என் வாய்க்குள் பிறர் எச்சில் துப்பப்பட்டு நிறைந்திருப்பதுபோல. மீண்டும் குமட்டி உமிழ்ந்து அப்படியே சோர்ந்து படுத்துக்கொண்டான். பொருளில்லாச் சொல். ஆனால் எல்லாச் சொல்லும் பொருள்குறித்தன. கனவிலும் களியிலும் சொன்ன சொற்களும் அவனுடையவை அல்லவா? ஒருவேளை அவனுள் உறையும் ஆழத்துக்குரியவை அல்லவா அவை?

நீள்மூச்சுடன் எழுந்து நின்று எங்கு செல்வதென்று எண்ணினான். அறியாநிலமெதற்காவது சென்றுவிடவேண்டும். அங்கே பெண்ணென்றேயாகி நடிக்கவேண்டும். ஆம், அதுவொன்றே செய்வதற்குரியது. ஆணென நோக்கும் விழிகள்முன் பெண்ணென்று நிற்றலாகாது. பெண்ணுக்கு அளிக்கப்படும் நோக்குகளை என் ஆண்விழி எதிர்கொள்ளலாகாது. பெண்ணென எனைச் சூழும் காமத்தை ஆணென என் உள்ளம் எதிர்கொள்வதே உயிருடன் இறத்தல். அவன் அங்கிருந்து கிளம்பி ஷீரப்பிரபை என்னும் நகரை சென்றடைந்தான்.

அங்கிருந்த சந்தையினூடாக அவன் நடந்தபோது விழிகளனைத்தும் அவனை நோக்கி திரும்பின. ஒருபோதும் தன்மேல் பிறர்நோக்கு அவ்வண்ணம் குவிவதை அவன் உணர்ந்ததில்லை. அணிகொண்டு முடிசூடி அரசயானைமேல் செங்கோலுடன் அமர்ந்து நகர்வலம் வரும்போதுகூட. இன்று ஒவ்வொரு கணமும் அணியூர்வலம் செல்கிறேன். ஒவ்வொரு இடத்திலும் அரியணையில் அமர்ந்திருக்கிறேன். ஒரு களிமகன் “பேரழகுப் பெண் நீ. ஆணொருவன் உன்னுள் புகுந்துவிட்டிருக்கிறான். கடப்பாரையை விழுங்கிய நாகமென தோன்றுகிறாய்” என்று சொல்லி வெடித்துச் சிரிக்க பல விழிகள் நகைப்பில் ஒளிகொண்டன.

என் உடலின் நெளிவை உள்ளம் கொள்ளவில்லை. உள்ளம் உடலில் அசைவாக வெளிப்படுகிறது. அவன் உடல்கொண்ட நெளிவை உள்ளத்தாலும் நடிக்கலானான். இடை வளைகையில் அவன் உள்ளத்தமைந்த தன்னுணர் உடலின் இடையையும் அசைத்தான். முலை குலுங்குகையில் அகமும் குலுங்கினான். எதிர்வரும் விழிகளை நோக்குகையில் இமைசரித்து ஓரவிழி கூர்த்து ஒல்கி நடந்தான். அத்தனை விழிகளுக்கு முன் அப்படி செல்வதே உகந்ததென்று விரைவிலேயே கண்டுகொண்டான்.

கசன் என்னும் பெருவணிகனின் மனைவிக்கு சேடியென அவன் சென்று சேர்ந்தான். “பேரரசியருக்குரிய அழகுகொண்டவள் என் பணிப்பெண்” என அவள் உவகையுடன் தோழிகளிடம் சொன்னாள். “நோக்கு, அவள் அணங்கோ யட்சியோ, யாரறிவார்?” என்றனர் தோழியர். “நோக்கினேன், ஒவ்வொரு அடியிலும் அவள் உடலென்றிருக்கிறாள். மானுடப்பெண்ணேதான்”  என்றாள் வணிகன் மனைவி. அவன் பெண்களுடன் அணியறையிலும் அடுமனையிலும் நீராட்டறையிலும் இருந்தான். அவர்கள் பேசுவதை சிரிப்பதை ஒசிவதை ஒல்குவதை கூர்ந்து நோக்கினான். நோக்க நோக்க அவை அவன் உடலிலும் கூடின. நடிக்கும்தோறும் உள்ளம் உருமாறியது. உள்ளமென்பது ஒரு நடிப்பே என்று அவன் உணர்ந்தபோது உள்ளும்புறமும் பெண்ணென்று ஆகிவிட்டிருந்தான்.

பெண்ணுடலை அவன் நாளும் நோக்கியும் தொட்டும் அறிந்துகொண்டிருந்தான். அவை வெறும் மென்தசைகள் என்றாயின. அவர்களை நீராட்டி, அகில்காட்டி, அணிபுனைந்து, சுண்ணமும் மையும் பூசி அழகூட்டினான். அவர்களுடன் நிலவிரவுகளில் தோட்டங்களில் அமர்ந்து இசை கேட்டான். அவர்கள் தங்கள் நெஞ்சின் ஆழத்து அறைகளைத் திறந்து ஒளியையும் இருளையும் வெளியே எடுத்தபோது கேட்டிருந்தான். அவன் காமம் கொள்ளவேயில்லை என்பதை பிறகெப்போதோதான் அறிந்தான். அவ்வறிதல் அவனுக்கு உவகையையே அளித்தது.

பிறகொருநாள் தனிமையில் நீராடிவிட்டு அவன் நீராழிப் படிகளில் மேலேறும்போது மேல்படியில் வணிகனின் இளமகன் நின்றிருந்தான். அவன் விழிகளை நோக்கியபோது அவள் உடல் நாணி குளிர்கொண்டது. விழிதாழ்த்தி அவனை கடந்து சென்றபோது உடலெங்கும் அவன் நோக்கு வருடிச்செல்வதை உணர்ந்தாள். தோள்கள் வெம்மைகொள்வதை, உள்ளுருகி உடல்நனைவதை அறிந்தாள். வெறுந்தரையில் கால்வழுக்கி விழுந்துவிடுவோமென்று அஞ்சினாள். சுவர்பற்றி நிற்கவும் இறுகி கூர்கொண்டு நின்ற முலைக்குவைகளுக்கு அப்பால் செறிந்தமைந்த குளிர்மூச்சை ஊதி வெளிவிடவும் விழைந்தாள்.

திரும்பி நோக்கவேண்டுமென  எண்ணி நோக்கலாகாதென்று முகத்தை இறுக்கி இதோ நோக்கிவிடுவோம் என அஞ்சி நோக்கு நோக்கென்று கெஞ்சிய அகத்தை வென்று உதிரும் நீர்த்துளி என விலகி ஓடினாள். தன் அறைக்குள் சென்று கொலைமதம் கொண்டெழுந்த மத்தகத்தைப்போல் விம்மிய முலைகளுக்குமேல் கைகளை வைத்து அழுத்தியபடி மூச்சடக்கினாள். மெல்ல நரம்புகள் விடுபட காதுமடல்களில் இளவெங்குருதி படர, கண்கள் நீர்கொள்ள, மூச்சு சீறித்தணிய அமைந்தாள். தன்னை உணர்ந்தபோது அவள் இடக்கால் நரம்பு இழுபட்டு அதிர்ந்துகொண்டிருந்தது.

செறுக்கச்செறுக்க மிகும் காமப்பெருக்கின் முன் புதுவெள்ளமெழுந்த நதியின் மணற்கரைபோல அவள் கணந்தோறும் தன்னை காத்துக்கொள்ளவே முயன்றாள். அனைத்து முயற்சிகளும் சிலந்திவலையில் துடிக்கும் பூச்சியின் சிறகுகள் சிக்கிக் கொள்வதுபோல அமிழவே செய்தன. கணந்தோறும் அவனையே எண்ணிக்கொண்டிருந்தாள். அவள் செயல்கள் பிழைத்தன. கை சென்ற இடத்திற்கு கண் செல்லவில்லை. கண் அறிந்ததை கருத்து தொடவில்லை. அவன் முன் செல்லும் தருணத்தை நூறுநூறாயிரம் வகைகளில் நடித்துக்கொண்டாள். நடிப்புகள் சலித்து எழுந்து அவன் முன் சென்று நின்றுவிட எண்ணினாள். அந்நினைப்பே கூச தலையசைத்து முகம் சிவந்தாள்.

அந்நூறுக்கும் அப்பால் என அது நிகழ்ந்தபோது பதறி உடல்வியர்த்து முலைக்குவையிடையே சுடுவியர்வை எழுந்து பனித்து இதழ்கள் தடித்து விழிகள் தழைந்து தள்ளாடினாள். அவன் கேட்ட ஓரிரு சொல் வினாக்களுக்கு குழறி தழைந்த குரலில் மறுமொழி அளித்தபின் ஓடி தன் அறைமீண்டு அமர்ந்து நெஞ்சிடிப்பை கேட்டுக்கொண்டிருந்தாள். மூடப்பெண், அறிவிலாப்பேதை என தன்னையே சலித்துக்கொண்டாள். பிழைகளைந்து மீண்டுமொரு சந்திப்பை நிகழ்த்துவதைப்பற்றி கனவுகண்டபடி சேக்கையில் முலைபுதைத்து விழுந்துகிடந்தாள்.

கூர்கொண்ட கனவு. முள்முனைமேல் பனித்துளி என நின்று நடுங்கியது அது. ஏழுநிறம் மின்ன வான்சூடி நின்றது. ஒருவன் அவளுள் பகுந்து விரிந்தான். அவன் இவனைப்போல் தோள்பெருத்தவன் அல்ல. முழவேந்திய பாணன். கண்களில் களிமயக்கு கொண்டவன். அவனோ நீண்ட உடல்கொண்டவன். நீண்ட கைகளில் நரம்புகள் பின்னியவன். வில்லவன். இவன் புரவிக்கடிவாளத்தை பிடித்து இழுத்து நிறுத்தும் சூதன். கரிய உடலில் வியர்வை வழிய ஒளிர்பவன். கூர்மீசை கொண்டவன் அவன். மெல்லுதடு அதிரும் இளமகன் இவன். அவன் குரல் முழவு. இவன் குரல் மயிலகவு. எங்கு கண்டேன் இவர்களை? எப்படி அள்ளிக்கொண்டேன்? ஏன் ஊறி எழுகிறார்கள் என் ஆழ்சுனையில்?

பின் குற்றவுணர்ச்சியுடன் புரண்டுபடுத்து அவர்களை இணைத்து ஒற்றைஉருவாக்கிக் கொண்டாள். நூறுமுகன். முகம்பெருகும் ஆண்மகன். முகம்பெருக்கி அவனை புணரும் முதலாற்றல் நான். மானென களிறென குயிலென எறும்பென உமையைப் புணர்ந்தான் சிவன் என்கின்றன காவியங்கள். நீரென நெருப்பென புணர்ந்தாலும் தீருமா? ஒன்றென உருகி இணைந்தபின்னரும் அணையுமா? வென்று கால்கீழிலிட்டு மார்மீது நின்றாடவேண்டும். கொன்று கிழித்துண்டு மண்டை மாலைசூடி கூத்தாடவேண்டும். நீறுபூசி நெருப்பென சிதைமேலெழவேண்டும்.

நெஞ்சிலும் தலையிலும் அறைந்துகொண்டு கதறவேண்டுமெனத் தோன்றியது. முட்டுவேன்கொல்! தாக்குவேன்கொல்!. இச்சுவர்களை இடிப்பேன். எழுகிறது என் மதம்கொண்ட மத்தகம். இந்நகரை தூள்தூளென்றாக்குவேன். புழுதிசூடி உறுமியபடி இங்கே சுழன்றலைவேன். குருதியாடியே வெறிதீரவேண்டும். என்னென்ன எண்ணங்கள்! எண்ணங்களில் வாழும் தெய்வம் கணம்தோறும் கோடியென பெருகும் வல்லமைகொண்டது. எண்ணம் பெருகி இரவாகிறது. இருளாகிறது. கங்குல்வெள்ளம் கரையிலாதது. காக்கும் புணையிலாதது கங்குல்வெள்ளம்.

கனவுகளில் அவன் வந்தபோதுதான் அவன் குறுமீசையை, மென்முடிபரவிய கன்னங்களை, விரிந்த தோள்களை, புயங்களிலோடிய நீலநரம்பை, மார்பில் படர்ந்த முடியை, வயிறு நோக்கி அது குவிந்திறங்கிய பொழிவை அத்தனை கூர்மையாக அவள் நோக்கியிருந்தது அவளுக்கே தெரிந்தது. அவன் கண்கள் அவள் ஆயிரம் பிறவிகளில் அறிந்தவைபோல மிக அருகே வந்து இளநகை ஒளிசூடி நின்றன. விழித்தெழுந்ததும் ஏனென்றறியாமல் அவள் ஏங்கி அழுதாள். அழுதுகுளிர்ந்தபோது உள்ளம் தித்தித்தது. உடல் அவ்வினிமையை அள்ளி விரல்முனைவரை நிறைத்துக்கொண்டது.

அவன் கையில் அவள் சென்றமைவது முன்குறிக்கப்பட்ட கணமென அவள் அது நிகழ்ந்தபோது அறிந்தாள். அதுவரை ஒவ்வொரு கணத்தையும் ஒரு முழு வாழ்வென ஆக்கும்பொருட்டே அந்நாடகங்கள் அனைத்தும் நிகழ்ந்தன என்று உணர்ந்தாள். எத்தனையோ முறை கூடிக்களித்திருந்தாள். ஊடிப்பிரிந்து கலுழ்ந்து தனித்து மீண்டும் கண்டு தழுவியிருந்தாள். எவருமில்லா நிலங்களில் அவனுடன் வாழ்ந்தாள். மேடைமேல் ஏறிநின்று பெருந்திரளிடம் இவன் என்னவன் என அறிவித்தாள். மைந்தரைப்பெற்று முதுமகளாகி மறைந்தாள். இளமகளென உருக்கொண்டு அவன் கைவிரல்பற்றி துள்ளிக்குதித்து நடந்தாள். மதலையென அவன் மடியில் கிடந்தாள்.

அவன் அவள் கைகளைப் பற்றிய நாளில் வளையல்கள் உடைபட கையை இழுத்தபடி “வேண்டாம் வேண்டாம்” என்று மூச்சிரைத்தாள். அன்புமொழி சொன்னபடி அவளை இழுத்து அவன் தன் உடலுடன் இணைத்துக்கொண்டான். “விலகுக… வேண்டாம்” என அவள் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தாள். அச்சொற்கள் பொருளிலாதொலிக்க அவள் உடல் அவன் உடலுடன் ஒட்டிக்கொண்டது. ஒவ்வொரு உறுப்புக்கும் அவற்றுக்குரிய தனிக் காமம் இருந்தது. கருங்கூர் எழ விம்மின முலைகள். தளர்ந்து நிற்கவியலாதாயின கால்கள். நோக்கிழந்தன விழிகள். மூக்கு ஆயிரம் மணங்களை அள்ளிச்சேர்த்தது.

தேனில் திளைக்கும் புழுவென காமத்திலாடுவதை அவள் முன்பு அறிந்திருக்கவே இல்லை. இதற்குத்தான் அவ்வெழுச்சிகளா? விலகி எதிர்ஓடி எட்டுத்திசைகளையும் சுற்றி வந்தமைந்தால்தான் இது இத்தனை இனிக்குமா? அவன் கைகளால் உடல் மீட்டப்பட்டாள். பற்றி எரிந்தது அவள் புரம். நின்றெரிந்தன காவல்மாடங்கள். சரிந்து மண்ணறைந்து விழுந்தன கோட்டைச்சுவர்கள். கருவூலப்பொன் உருகிக் குழம்பாகியது. ஊற்றுகொண்டன அனைத்து நீராழிகளும். ஆறுகளனைத்தும் கரைமீறிப் பரவின. தன்னை காமத்திற்கு முற்றளித்தாள். காமத்திற்குள் பிறந்து இறந்து மீண்டும் பிறந்துகொண்டிருந்தாள். விரிந்து பரவி அவள் நிலமென்றானாள். அதில் சிறுகால்களை வைத்து துள்ளிக்குதித்து களித்துக்கொண்டிருந்த சிறுமைந்தனை உவகையுடன் நோக்கிக்கொண்டிருந்தாள்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 51

[ 9 ]

இந்திரபுரிக்கு நடுவே ஆயிரத்தெட்டு அடுக்குகளில் பன்னிரண்டாயிரம் உப்பரிகைகளும் நாற்பத்தெட்டாயிரம் சாளரங்களும் கொண்டு ஓங்கி நின்ற வைஜயந்தம் என்னும் அரண்மனைவாயிலில் விரிந்த மஹஸ் என்னும் பெருமுற்றத்தின் நடுவே இந்திரனின் வெண்கொற்றக்குடை தெரிந்தது. அதன்கீழே அணிவகுத்து நின்றிருந்த ஏழு வெள்ளை யானைகள் கடல்நுரையலை போல காதுகளை ஆட்டி துதியசைத்தன. பனிமலையடுக்குகளுக்குமேல் மேரு எழுந்ததுபோல ஐராவதம் அவற்றின் நடுவே நான்கு பொற்கொம்புகளுடன் நின்றிருந்தது.

அதனருகே பன்னிரு அணிப்புரவிகள் கொடிகளுடன் நிற்க நடுவே பொன்னிறக் காதுகளும் குளம்புகளும் கொண்ட உச்சைசிரவம் நின்றது. ரம்பை, ஊர்வசி, மேனகை என்னும் தேவமகளிர் தலைமையில் அப்சரப்பெண்கள் மங்கலத்தாலமேந்தி இருநிரைகளாக நின்றிருக்க அவர்களுக்குப் பின்னால் தும்புருவின் தலைமையில் இசைகந்தர்வர்கள் கொம்புகளும் குழல்களும் முரசுகளும் முழவுகளும் மணிகளும் சல்லரிகளுமாக நின்றனர். அணிபடாம்களும் கொடிகளும் ஏந்திய தேவர்நிரைகள் அவர்களுக்குப் பின்னால் நீண்டன.

குன்றா இளமைகொண்ட சனகர் சனந்தனர் சனாதனர் சனத்குமாரர் என்னும் முனிமைந்தர்கள் தலைமையில் அமைச்சர்கள் இருபக்கமும் சூழநிற்க நடுவே தன் துணைவியான இந்திராணியுடன் முழுக்கவச உடையணிந்து மணிமுடி சூடி இந்திரன் நின்றிருந்தான். அவனுக்கு முன்னால் அவன் மைந்தன் ஜயந்தன் உருவிய வாளுடன் நின்றான். அவன் பின்னால் உடைவாள் ஏந்தி பிறிதொரு மைந்தனாகிய பாலி நின்றிருந்தான். அவனுக்குப் பின்னால் மெய்க்காவலர்களாகிய இருபத்தேழு மருத்தர்களும் இடிபடைகள் ஏந்தி நான்கு வரிசைகளாக நின்றனர்.

மாதலியின் தேர் அணுக அணுக அவர்களின் எதிரேற்புநிலை விரிதிரை ஓவியம்போல நுட்பங்களுடன் அணுகி வந்தது. அர்ஜுனன் “யாருக்காக காத்திருக்கிறார்கள்?” என்றான். “இங்கு விழவு கூடுகிறதா என்ன?” மாதலி திரும்பி சிரித்தபடி “உனக்காகவே” என்றான். “தன் மைந்தனைப் பார்க்க மாளிகை வாயிலுக்கே எழுந்தருளியிருக்கிறார் அரசர்.” அர்ஜுனன் உளஎழுச்சியுடன் “எனக்காகவா?” என்றான். “தந்தை உலகாளலாம், மைந்தர் தந்தையை ஆள்கிறார்கள்” என்றான் மாதலி.

“நீ அறிந்திருக்கமாட்டாய். உன்னை அவர் வந்து தொட்டுத்தழுவி வருவதுண்டு. உன் மஞ்சத்தில் பறந்து தழுவிச்செல்லும் சாளரத்திரைச்சீலையாக, காடுகளில் தோளுரசிச்செல்லும் மலர்க்கிளையாக, கன்னம் தொட்டு பறந்துவிடும் பறவையிறகாக அவர் உன்னை தொடுவார். உன்னை பிறர் பாராட்டும் தருணங்களிலெல்லாம் பொன்னொளிர் புன்னகையுடன் உன் மேல் நின்றிருப்பார். பாலையில் நடந்து களைத்த உன் கால்களை வந்து தடவிச்சென்ற சருகு அவரே. மயங்கிக்கிடந்த உன்மேல் மழையென விழுந்து நீரூட்டியதும் அவரே” என்றான் மாதலி.

கலுழும் நெஞ்சுடன் கைகளைக் கூப்பியபடி அர்ஜுனன் தேரில் அமர்ந்திருந்தான். தேர் சென்று முற்றத்தில் நின்றதும் மங்கலஇசை முழங்கியது. வாழ்த்தொலிகள் எழுந்தன. “இந்திரமைந்தன் வாழ்க! இளைய பாண்டவன் வாழ்க! வில்விஜயன் வாழ்க!” மூன்று நங்கையர் தலைமையில் அப்ரசப்பெண்டிர் மங்கலத்தாலமேந்தி முன்னால் வந்து அர்ஜுனனை வரவேற்றனர். ஜயந்தன் ஏழு அடி எடுத்து முன்னால் வந்து உடைவாள் தாழ்த்தி “வருக, இளையவனே! இந்நகரும் அரசரும் உன் வரவில் மகிழ்கிறார்கள்” என்றான்.

அர்ஜுனன் கைகளைக் கூப்பியபடியே நடந்துசென்று முதலில் இந்திராணியின் கால்களைத் தொட்டு சென்னிசூடி வணங்கினான். இந்திரனை அவன் வணங்கப்போகும்போது அவன் தோள்களைத் தழுவி தூக்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் விண்ணரசன். முனிவர்கள் அவர்களை மலரிட்டு வாழ்த்தினர். இந்திராணி “உன் தந்தையின் இல்லத்திற்கு வருக, மைந்தா!” என்றாள். இந்திரன் “நீ விழைவன அனைத்தும் இங்கு ஒருக்கப்பட்டுள்ளன. நீ எண்ணும் காலம் இங்கு வாழலாம். நீ விழையும் காலமென அதை மண்ணில் அமைத்துக்கொள்ளலாம்” என்றான்.

வாழ்த்தொலிகளும் இன்னிசையும் சூழ அவர்கள் அரண்மனையின் இடைநாழிகளினூடாக நடந்தனர். அர்ஜுனன் அதன் உருண்டு எழுந்த தூண்களையும் பொன்னூல்பின்னிய பட்டுப் பாவட்டாக்களையும் நோக்கியபடி நடந்தான். “எங்கோ பார்த்திருக்கிறேன் இவ்வரண்மனையை. என் கனவிலா?” என்றான். “ஆம், உன் கனவிலிருந்து எடுத்து உருவாக்கப்பட்டது இவ்வரண்மனை” என்றான் இந்திரன். அர்ஜுனன் நகைத்து “உங்கள் முகமும் அவ்வாறுதானா?” என்றான். “அல்ல, மாறாக என் கனவிலிருந்து எழுந்தது உன் முகம்” என்றான் இந்திரன்.

விழிகளை ஓட்டி அவ்வரண்மனையின் பொன்பட்டையிட்ட படிக்கட்டுகளையும் வளைந்த மேல்வளைவுகொண்ட மான்கண் சாளரங்களையும் பொற்குமிழ்கள் மின்னிய கதவுகளையும் நீர்நிழலென பாவை உடன்வந்த பளிங்குத்தரையையும் நோக்கிக்கொண்டு நடந்தான். வியப்புடன் “என் உளமயக்காகவும் இருக்கலாம் எந்தையே, இந்திரப்பிரஸ்தத்தின் மாளிகை இதைப்போலுள்ளது” என்றான்.  “ஆம், இதைப்போன்றதே அதுவும்” என்றான் இந்திரன். “இதை தன் கனவில் அவள் இளவயதில் கண்டாள்.”

“எங்ஙனம்?” என்றான் அர்ஜுனன். “மானுடர்கள் மூன்று வலைகளால் சேர்த்து பின்னப்பட்டுள்ளனர், மைந்தா” என்றான் இந்திரன். “குருதியின் வலையால். ஊழின் பெருவலையால். கனவுகளின் முடிவிலா வலையால்.” அர்ஜுனன் அங்கிருந்த சேடியரை நோக்கி “இவர்களின் முகங்களும்கூட அங்குள்ளவையே” என்றான். “ஆம்” என்று இந்திரன் நகைத்தான். “வருக, அரசவை கூடியிருக்கிறது!” என தோள்தொட்டு அழைத்துச்சென்றான்.

நீள்வட்ட அரசவை பதினாறாயிரத்துஎட்டு பெருந்தூண்களுக்குமேல் பருவுருக்கொண்ட வெண்ணிற வானம் என அமைந்த குவைக்கூரையால் மூடப்பட்டிருந்தது. அதிலிருந்து ஒளிரும் அருமணிகளையே சுடர்களாகக்கொண்ட செண்டு விளக்குகள் தொங்கின. அவ்வொளியில் துலங்கிய அவைப்பரப்பில் வலப்பக்கம் முனிவரும் இடப்பக்கம் பெண்டிரும் அமரும் பீடங்கள் இருந்தன. முகப்பில் அலைவளைவுக்குள் வளைவென அமைந்த பீடங்களில் தேவர்களும் சித்தர்களும் குஹ்யர்களும் வித்யாதரர்களும் கிம்புருடர்களும் கின்னரரும் கந்தர்வர்களும் யட்சர்களும் அமர்ந்திருந்தனர்.

“இதுவும் இந்திரப்பிரஸ்தம் போன்றதே” என்றான் அர்ஜுனன். அவனருகே நின்றிருந்த பாலி “நான் இங்கு வந்தபோது கிஷ்கிந்தையின் அவையென இது தெரிந்தது. தெரிந்ததன் வடிவிலேயே நீ இதைப் பார்க்கமுடியும், இளையோனே. தெரிந்தது உதிர்ந்து தெளிவது எழ நீ செல்லவேண்டிய தொலைவு சில உண்டு” என்றான். ஜயந்தன் “வருக இளையோனே, உனக்கென நிகர்பீடம் இடவேண்டுமென எந்தை ஆணையிட்டிருக்கிறார்” என்றான். “நிகர்பீடமா?” என்று அர்ஜுனன் திரும்பி நோக்க பாலி “தலைமேல் வைத்துக்கொள்ளவே தந்தை விழைவார். முறைமை நோக்கியே நிகர்பீடம்” என்றான்.

சனகரும் சனாதனரும் சனந்தனரும் சனத்குமாரரும் வந்து அர்ஜுனனை அழைத்துச்சென்று அரசமேடையில் இந்திரனின் அரியணைக்கு நிகராக போடப்பட்டிருந்த பிறிதொரு அரியணையில் அமர்த்தினர். வாழ்த்தொலிகள் சூழ அவன் அதில் அமர்ந்ததும் இந்திரன் எழுந்து வந்து தன் மணிமுடியை எடுத்து அவன் தலையில் சூட்டினான். முனிவர்கள் மலர்வீசி வாழ்த்த அவையமர்ந்தவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். “உன் வருகையால் மீண்டும் மைந்தனைப் பெற்ற இளந்தந்தையின் உணர்வுநிலையை அடைந்தேன்” என்றான் இந்திரன்.

பின்னர் உணர்வுமிகுதியால் அவனை கைபற்றி இழுத்து தன் தொடைமேல் அமரச்செய்தான். அர்ஜுனன் நாணி எழமுயல அவன் தன் வலிய கைகளால் மைந்தனை இறுகப்பற்றி அமரச்செய்தான். அவையமர்ந்தவர்கள் உரக்க நகைத்தனர். இந்திராணி அவன் முகத்தை தன் கைகளால் வருடி “நாணும்போதே மைந்தர்கள் அழகர்” என்றாள்.

தும்புரு கைகாட்ட அவரது இளையோரான பகு முழவுடனும் ஹஹ யாழுடனும் ஹுஹு குழலுடனும் வந்து இசைமேடையில் அமர்ந்தனர். இசையெழத்தொடங்கியதும் தேவநடனமகளிரான ஊர்வசியும் ரம்பையும் திலோத்தமையும் ஆடல்தோற்றத்தில் வந்து நின்றனர். தொடர்ந்து கிருதாசியும் பூர்வசித்தியும் ஸ்வயம்பிரபையும் வந்தனர். மிஸ்ரகேசியும் தண்டகௌரியும் வரூதினியும் பின்னர் வந்தனர். தொடர்ந்து கோபாலி, ஸகஜன்யை, கும்பயோனி, பிரஜாகரை, சித்ரலேகை ஆகியோர் வந்து பின்னின்றனர்.

இனிய குரலுள்ள ஸகை பாடத்தொடங்கியதும் அவர்கள் நடமிட்டனர். இசைவழி கைகள் செல்ல, கைவழி கண்கள் செல்ல, கால்வழி தாளம் எழுந்து உடலென்றாக, கண்வழி நோக்கும் இசையென்றாயினர் அம்மகளிர். மயில்கழுத்துகள் அன்னத்திரும்பல்கள் மான்விழிவெட்டுகள் கன்றுத்துள்ளல்கள் மலர்க்கிளையசைவுகள் கனிக்கொடி ஊசல்கள். பருவடிவு கொண்டவை அசைவிலேயே உயிர்கொள்கின்றன. ஆடலிலேயே அசைவு முழுமைகொள்கிறது.

ஆடுவதே அழகென்றாகிறது. இதோ கைநீட்டி அணுகுகிறது மதலை. துள்ளி ஓடி ஒளிந்து சிரிக்கிறது இளமை. இடையொசிய தயங்குகிறது கன்னிமை. முலைபெருத்து வளைகிறது தாய்மை. மகிழ்கிறது காதல். உள்ளம் நெகிழ்கிறது காமம். உள்ளுருகி வழிகிறது கனிவு. உடலில் நிகழ்கின்றன ஐம்பருவின் அசைவுகளனைத்தும். பாறையென உருள்கின்றன யானைகள். அனலென பாய்கின்றன புலிகள். காற்றெனச் சுழல்கின்றன பறவைகள். நீரென ஓடுகின்றன நாகங்கள். பெண்ணுடலில் நிகழ்கின்றன உடலென்றான அசைவுகள் அனைத்தும். இளயானைத் தளர்நடை. மயிலாடும் மெல்நடை. ஏறுநடை. சிம்மத்தின் எழுநடை. பாம்பு வழிதல். பருந்து எழுதல். நாரை அமைதல். மீன்கொத்தி விழுதல். சிட்டு நீந்தி நிற்றல்.

தலைக்கோலியாகிய ஊர்வசி கோலைத் தூக்க அனைத்து அசைவுகளும் அமைந்தன. ஊர்வசி “அவைக்கு வந்த மாவீரரே, முதிர்ந்த நுண்ணறிவுகொண்டவர் என்று உம்மைப் பற்றி சொன்னார்கள் இங்குள்ள முனிவர். ஆணென்றும் பெண்ணென்றும் காதலை அறிந்தவர் நீங்கள் என்றுரைத்தனர். இங்கே எங்கள் ஆடலில் ஒரு வினாவெழுகிறது. உங்கள் விடை எங்களுக்கு தெளிவு அளிக்கட்டும்” என்றாள். மேனகை “விடை எங்களுக்குத் தெரியும்” என நகைத்தாள்.

திலோத்தமை “பிழையான விடை என்றால் நீங்கள் காமத்தில் எங்களுக்கு பணிவிடை செய்யவேண்டும்” என்றாள். கிருதாசி “இல்லையேல் நாங்கள் உங்களுக்கு பணிவிடை செய்வோம்” என்றாள். அர்ஜுனன் நகைத்துக்கொண்டு பேசாமலிருக்க “என் மைந்தன் அவன். போர்க்களத்திலும் காமக்களத்திலும் அவனை விஞ்சுபவர் இல்லை. விடை சொல்வான்” என்றான் இந்திரன். அவை கலைந்து நகைத்தது. தண் என முழவொலிக்க ஊர்வசி தலைக்கோலை மீண்டும் தூக்கினாள். தாளம் நடைமாறியது. நடனம் தொடங்கியது.

[ 10 ]

காமநிறைவை கண்டடைவதற்கென்றே வாழ்ந்த அரசனொருவன் இருந்தான். அவனை பங்காஸ்வன் என்று அழைத்தனர். கடலோரச் சிறுநாடாகிய கமலத்வஜத்தின் தலைவன். தந்தை நிறைத்துச் சென்ற கருவூலம் கொண்டிருந்தான். மழை நெறிநின்றதாலும் நிலம் சுவைநிறைவு கொண்டிருந்ததாலும் கதிர்வழிப் பாதை நாட்டின் மேல் அமைந்திருந்ததாலும் எழுவகைக் காற்றுகள் சூழும் திசையில் மலைகள் திறந்திருந்ததாலும் அவன் நாட்டில் வளம் குன்றவே இல்லை. அலைகடலால் அரணிடப்பட்ட அவன் நகருக்கு எதிரிகள் இருக்கவில்லை. எனவே இளமையிலேயே காமமன்றி பிறிதொரு நாட்டமில்லாதவனாக இருந்தான்.

உடலை உணர்ந்த முதல் நாளிலேயே அரண்மனை மகளிரால் காமம் கற்பிக்கப்பட்டான். பின்னர் உடல்களினூடாக, அசைவுகளினூடாக, உணர்வுகளினூடாக, கனவுகளினூடாக, காமத்தின் வண்ண மாறுதல்களை தொட்டுத் தொட்டு அறிந்தபடி நாள் என நாழிகை என கணமென காலத்தைக் கடந்தான். பருவத்திற்கு ஒரு மாளிகை கட்டினான். அதைச் சூழ்ந்து மலர்வனங்கள் எடுத்தான். சுனைகளும் அருவிகளும் இசைமண்டபங்களும் கொடிமண்டபங்களுமென காதலுக்கான அனைத்தும் அங்கு அமைந்தன.

பொற்கிழிகளுடன் அமைச்சர்களையும் ஒற்றர்களையும் பாரதவர்ஷமெங்கும் அனுப்பி அழகுமிக்க மகளிரை தன் அரண்மனைக்கு கொண்டுவந்தான். முறித்தமஞ்சள் என மின்னிய தோலும் நீர்த்துளிக் கண்களும் கொண்ட குருவிபோன்ற காமரூபத்துப் பெண்கள். சுண்ணப்பளிங்குச் சிலைபோன்ற ஓங்கிய உடல்கொண்ட காந்தாரநாட்டுப் பெண்கள். செஞ்சந்தன வண்ணம்கொண்ட  திரிகர்த்தநாட்டவர். சுடுமண்சிலை நிறமும் சிற்றுடலும் கூர்முகமும் கொண்ட விதர்ப்பநாட்டுக் கன்னியர். அகன்ற மூக்கும் பெரிய உதடுகளுக்குள் பரந்த பற்களும் கொண்ட தண்டகாரண்யப் பெண்கள். கொழுவிய கன்னங்களும் கமுகுப்பாளை நிறமும் கொண்ட திருவிடத்துப் பெண்கள். கருங்கல்சில்லென நீர்மை மின்னிய நீண்ட விழிகளும் ஒளிரும் பற்களும் கருங்குருத்துத் தோலும் கொண்ட தமிழ்நிலத்துப் பெண்கள்.

பெண்கள் வந்துசேரும்தோறும் அழகென்பதன் இலக்கணம் மாறிக்கொண்டிருந்தது அவனுள். அழகை அறிந்த விழிகள் ஒவ்வொரு அழகுக்குள்ளும் அழகின் நுண்வண்ணங்களை காணலாயின. யானைமுகப்படாம் என மெல்ல அசைந்து நடந்தனர் காந்தாரியர். விட்டிலெனத் தாவினர் காமரூபர். காற்று கொண்டுசெல்வதுபோல நடந்தனர் விதர்ப்பினியர். அலைகளிலெழுந்தாடும் மலர்மொட்டுபோல திருவிடர். மானெனத் தயங்கினர் தமிழ்க்கன்னியர். நடக்கையில் ஒருத்தி நிற்கையில் பிறிதொருத்தி. அஞ்சி ஆடைசீரமைக்கையில் முற்றிலும் புதிய ஒருத்தி. முடிதிருத்தி திரும்புகையில் எங்கிருந்தோ வந்தமரும் ஒருத்தி. கண்கனிந்து ஊழ்கத்திலாழ்பவள். அவர்களனைவரையும் கடந்த வேறொருத்தி. ஒரு பெண்ணில் கடந்துசெல்லும் ஓராயிரம் பெண்கள். தெய்வமென்பது ஒரு வாசல் மட்டுமே. தெய்வமென நிறைந்திருக்கும் பெருவெளி பீரிடும் மடை. பெண்ணென வந்த தெய்வம் புவி நிறைத்தாள்கிறது.

பட்டுச்சிறகடித்தன சில விழிகள். சில விழிகள் காற்றில் கனன்றன. சில நகைத்து ஒளிர்ந்தன. சில நாணி மயங்கின. சில ஓரக்கூர் கொண்டிருந்தன. நேர்நின்று நோக்கின சில. சிவந்துருகிச் சொட்டிய பொற்துளியென்றாயின அவை. நோக்கு கொள்ளமுடியுமா உடல்? விழியை அள்ளி உடலெங்கும் பூசி மயங்கும் பெண்கள். தொடுவதற்கு முன் தொடுகையறியும் தோல்பரப்பில் வந்து காத்து நின்றிருக்கும் நுண்மை. முல்லைச்சரப் புன்னகைகள். பொரிபொங்கும் சிரிப்புகள். உடல்குலுங்கும் அலைநுரைப்புகள். உள்ளே தேங்கி கன்னச்சிவப்பென கண்கசிவென உதட்டுச்சுழிப்பென மெல்லசைவென கசியும் மென்னகைகள்.

எழுந்தவை குழைந்தவை கரந்தவை கனிந்தவை. ததும்புகையில் குலுங்குகையில் தொட்டுச்சிவக்கையில் அளித்து எஞ்சி அப்பால் நின்று அதுவல்ல நானென்று சொல்லி சிவந்தணைபவை. அழைப்பென்றே ஆன மென்மை. விலக்கி விழிசீறுகையில் அணைக்க விரிந்தன தோள்கள். எவையுறங்கும் வயிறு? எதுவென்றான சுழிப்பு? நெகிழ்ந்தவை இறுகுவதெப்போது? கனன்று சிவந்து உருகி பின் குளிர்ந்து ஈரம்பூத்து அவை அமையும்போது தொடுகையை விழையாது விலகுவது ஏன்? அறிந்தறிந்து ஆளலாகுமா? அறியாச்சுனைகளில் ஆழம் மிகுகிறது. இன்சொல். பெரும்பாறை விரிசலில் கசியும் ஒருதுளி. உள்ளுறைப் பேரமைதியின் ஒலி. ஒவ்வொருவருக்கும் ஓர் ஒலி. பொருளொன்றே ஆன சொற்களின் களஞ்சியம். பெண்ணென்பது விழைவு சென்றுபடியும் அருமணி. அழகென்பது அதில்பட்டு நூறுமேனி பெருகி மீளும் விழைவு.

பின்பு பெண்ணெல்லாம் அழகென்றாயினர். மானும் மயிலும் போலவே பன்றியும் காகமும் அழகெனத் தோன்றின. தசையால் அழகில்லாதவை அசைவால் அழகுகொண்டு நிகர் செய்தன. அசைவாலும் அழகுகொள்ளாதவை வேட்கையால் அழகென்றாயின. அனல்கொள்கையில் அனைத்து உலோகங்களும் அழகே. அழகென்று ஈர்ப்பது அழகென்றே எஞ்சி அழகெனச் சூழ்வது விழைவு. ஆயிரம் நா கொண்டது. பல்லாயிரம் கண் கொண்டது. லட்சம் செவி கொண்டது. கோடி மெய் கொண்டது. பூக்கும் மரம் அழகு. பூக்கவிருக்கும் மரம் உள்ளுறை அழகு. இலையுதிர்க்கையில் அதன் துயர் அழகு. காத்திருக்கும் அதன் தவம் அழகு. முதல்தளிர் கொள்கையில் அது கொள்ளும் மலர்வு பேரழகு.

நூறு மனைவியர் அவனுக்கிருந்தனர். ஆயிரம் காமமகளிர் உடனுறைந்தனர். ஒரு மலர்போல் பிறிதொன்றிலை என்றும் மலரனைத்தும் ஒன்றே என்றும் மாயம் காட்டும் இயற்கையால் விழித்திருக்கும் கணமெல்லாம் அவன் அலைக்கழிக்கப்பட்டான். அறியுந்தோறும் பெருகும், பெருகுந்தோறும் விசை கொள்ளும், விசைகொள்ளும்தோறும் இனிமை கொள்ளும் பசி. ஈரத்திலெழும் எரி. அவனுடலை எரித்து அழித்துக்கொண்டிருந்தது அது. வெறியாட்டு கொண்ட பாணனின் கையில் அமைந்த முழவுத்தோலென நாளும் தளர்ந்தது அவன் நரம்பிழைப்பரப்பு. மீளமீள அதை முறுக்கி கட்டை சேர்த்து முடுக்கி நிறுத்தினர் அவை மருத்துவர். மீளமீளக் குறைவது அன்னம். மீண்டும் மீண்டுமென எழுவது அனல். அன்னத்தை உண்டு எழும் அனலுக்கு அன்னமே எல்லையென்றாகிறது.

மெல்ல அவர்களின் கைத்திறன் எல்லை கண்டது. தன்னுடலும் தளர்வு கொள்ளும் என்று ஒருநாள் உணர்ந்தபோது இறப்பை எதிர்கண்டவன் போல அஞ்சி எழுந்து உடல் நடுங்கினான். அவன் முன் விழித்து காத்துக்கிடந்தாள் அந்தப் பெண். “ஆம்” என்று அவன் அவளிடம் சொன்னான். “ஆம், இதுவும் உடலே. ஐம்பருப்பொருள் இணைந்து உயிரனலில் எரிவது.” அவள் விழிகளை கூர்ந்து நோக்கி “எழுந்து செல்க!” என்றான். அவற்றிலுள்ளது என்ன? பெண் ஆணை வெல்லவே விழைகிறாள். வென்று செல்கையில் ஏன் துயர்கொள்கிறாள்?

காமமென்பது கொள்வதல்ல என்றும், வெல்வதல்ல என்றும், பகிர்வதுமல்ல என்றும் அவன் உணர்ந்த இளமுதிர் அகவை அது. செவிப்பரப்பில் பால்நுரையென நரை வந்தமைந்திருந்தது. கண்ணிமைகளுக்குக் கீழே நிழல் தீற்றப்பட்டிருந்தது. காமமென்பது மூழ்குதலே என்றும் மீளாதிருத்தலே என்றும் முனைகொள்ளலே என்றும் அறிந்து முதலடி எடுத்துவைத்த நாள் அது. முதல் வாயிலை தட்டினான். அப்பால் வந்து தாழ்மேல் வைக்கப்பட்ட கையை உணர்ந்தான். அங்கு எழும் மூச்சை கேட்டான். அங்கு நின்றிருந்தாள் காமக்கொடி, காமவிழியள், காமக்கன்னி, காமக்கடலி.

நெஞ்சுடைந்து நடைதளர இடைநாழியில் அவன் ஓடினான். காமினி, காமவல்லி, காமாக்‌ஷி, காமிகை, காமாம்பரை. அவன் நெஞ்சு கூவிய சொற்களை வாய் அரற்றியது. பித்தனைப்போல கைவிரித்துக் கூச்சலிட்டபடி அவை மருத்துவர்களின் மருத்துவசாலைக்குள் நுழைந்தான். “பூட்டுக என் நாணை… மருத்துவர்களே, மீட்டுக என் உடலை! என் நரம்புகளில் அனல் பாய்ச்சுக! என் குருதி மின் கொள்க!” என்றான். “இன்றே, இப்போதே… ஆம், இக்கணமே” என்று வீரிட்டான்.

மருத்துவர்கள் அஞ்சி பின்னடைந்தனர். தலைமை மருத்துவர் பிருங்கர் துணிந்து முன்னால் வந்து “அரசே, உள்ளமென்பது ஒரு நுண்மை. உடலோ பருண்மை. உடலில் மட்டுமே உள்ளம் நின்றாகவேண்டும் என்பதும் உள்ளத்தால் மட்டுமே உடல் அறியவும் ஆகவும் இயங்கவும் கொள்ளவும் முடியுமென்பதும் தெய்வங்கள் தங்களுக்கு தாங்களே இட்டுக்கொண்ட ஆணை. அதை நாங்கள் மீற இயலாது” என்றார். “மருத்துவர் முடிவில் தோல்வியடைந்தாக வேண்டிய ஊழ் கொண்டவர் என்பது மருத்துவத்தின் முதல்நெறி, அரசே” என்றார் முதுமருத்துவரான கிருபாகரர்.

“ஒவ்வொரு தோல்வியும் மருத்துவத்தை மேன்மைப்படுத்துகிறது. அது போரிடுவது எப்பெருவல்லமையுடன் எனக் காட்டுகிறது” என்றார்  சங்கரர் என்னும் மருத்துவர். “மருந்தில் வாழும் நுண்மை உடலுள் அமைந்த நுண்மையுடன் உரையாடும் தருணமொன்று உண்டு, அதை நோக்கியே மருத்துவம் இயங்குகிறது. அந்நுண்புள்ளி விலகிச்செல்லுமென்றால் மருந்துகள் பயனற்றவையே” என்றார் சூத்ரகர். “இங்குள்ள அனைத்து இறப்புகளும் மருந்துகளை வென்று நிகழ்பவையே” என்றார் சபரர். “சிதையில் எழுந்தாடும் அனலால் மருத்துவர்கள் வாழ்த்தப்படுகிறார்கள் என்கின்றன எங்கள் நூல்கள்” என்றார் சம்பவர் என்னும் இளமருத்துவர்.

அச்சொல் அனல் என வந்து சுட சீறி வாளை உருவி அவர்களை வெட்டச் சென்றான் பங்காஸ்வன். “மூடர்களே, துரத்தப்பட்ட எலிபோல ஆயிரம் சுவர்களில் முட்டி மோதி திசையுலைந்து நான் வாழ்க்கையை வீணடித்தேன். இன்றுதான் என் வழியை கண்டுகொண்டேன். இத்தருணத்தில் என் உடல் தளர்கிறது என்றால் அது ஊழ். அவ்வூழை வென்று மறுபக்கம் காணவே உங்களை இங்கு அழைத்திருக்கிறேன்” என்று அலறினான். நெஞ்சிலும் தோளிலும் அறைந்தபடி “நான் வென்றாகவேண்டும். என் உடல் எழுந்தாகவேண்டும். இல்லையேல் இக்கணமே உடல்துறப்பேன்” என்றான்.

“அரசே, உங்கள் உடலனலை மூட்டும் நூறு மருந்துகள் எங்களிடம் இருந்தன. நூறாவது மருந்தும் சென்ற ஒரு மண்டலத்துடன் முடிந்தது. இனி மருந்தென ஏதுமில்லை” என்றார் தலைமை மருத்துவர். நோக்கி சில கணங்கள் நின்று நாண் இழந்து தளர்ந்து  தள்ளாடிப் பின்னடைந்து பீடத்தில் விழுந்து அமர்ந்து விம்மி அவ்விம்மலோசையால் உளமுருகப்பெற்று தலையை அறைந்துகொண்டு அவன் அழுதான். “வீணடித்துவிட்டேன். இதுவரை நானறிந்ததெல்லாம் காமமே அல்ல. இன்றே அறிந்து விழித்தேன். இனி காமத்தை அறியலாகாதென்றால் இலக்கெட்டாத அம்பென வீணில் விழுந்தவனாவேன்.”

இமைகளில் சிலிர்த்து நின்ற கண்ணீருடன் நிமிர்ந்து அவர்களை நோக்கி சொன்னான் “காமம் கரிய பேரன்னை ஒருத்தியின் சிறுவிரல் மோதிரம். மும்முறை புவியை சுழற்றிக்கட்டும் நாகம் அது. மருத்துவர்களே, அது நுகர்வல்ல, களியாட்டல்ல. தவம்! ஆணவம் கலந்திருக்கும்வரை தவமும் களியாட்டே. ஆணவம் அழிந்து திளைக்கையில் களியாட்டும் தவமே. நான் ஈடேறும் வழி இதுவே. இதற்கு என் உடல் ஒப்பவில்லை என்றால் இருந்து பயனில்லை.”

அழுது மெல்ல அமைந்தபோது அக்கணத்தில் விரிந்த வெறுமையின் எடைதாளாது உளம் பொங்க பாய்ந்து தன் உடைவாளை எடுத்து கழுத்தை வெட்டப்போனான். அரண்மனை வைதிகர் சலஃபர் பாய்ந்து அவன் கைகளை பற்றிக்கொண்டார். “அரசே, பொறுங்கள்! உடலை வெல்வதற்கு ஓர் எல்லையுண்டு. ஏனெனில் அது பருவடிவம் கொண்டது. உயிரென அமைந்ததற்கு எல்லையே இல்லை. ஏனெனில் அது விண்ணின் துளி. வேள்விகளால் வெல்லத்தக்கதே விண். இதற்கென வேள்வியொன்றுண்டா என்று வினவுவோம்.”

வாளை உதிர்த்து இமைமயிர் ஒட்டிய கன்னங்களுடன் இளமைந்தன் என விதும்பிய இதழ்களுடன் அரசன் கேட்டான் “இதற்கென்றொரு வேள்வியா? இருக்கிறதென்று நீர் அறிவீரா?”  சலஃபர் “இல்லை. இதுவரை இதற்கென்று எவரும் வேட்டதில்லை. ஆனால் இப்புவியில் மானுடர் விழைவு தேடுவது எதற்கும் வேதத்தில் வழி உண்டென்றே என் முன்னோர் சொல்லியுள்ளனர். ஆயிரம் வேள்வி நிகழ்த்தி நூறு அகவை திகைந்து இல்லத்தில் அமர்ந்திருக்கிறார் முதுவைதிகரான எந்தை, அவரிடம் வினவுகிறேன்” என்றார்.

மறுநாள் சலஃபர் முகம்மலர்ந்து வந்து வணங்கி “அரசே, ஒரு நற்செய்தி உரைக்க வந்தேன். தங்கள் வினாவை தந்தையிடம் உரைத்தேன். முன்பு மாமன்னர் யயாதி இயற்றிய பெருவேள்வி ஒன்று உள்ளதென்றார். அதன் பெயர் இந்திரதுவஷ்டம். விழைவுக்கு இறைவனை வேட்டு வேள்விப் பந்தலில் நிலைமரத்தில் அவனை எழச்செய்து அவனிடம் அருட்சொல் பெறுவோம். விண்ணனைத்தையும் ஆள்பவன், மண்ணெல்லாம் முளைத்தெழும் முடிவிலா வீரியம் கொண்டவன், இந்திரனே, காமத்தின் தெய்வம்” என்றார். “அவ்வாறே ஆகுக!” என்று அரசன் ஆணையிட்டான்.

தலைக்கோலேந்தி வந்து ஆடிநின்ற ஊர்வசி இனிய குரலில் ஓங்கி சொன்னாள் “காமநிறைவுக்கென இந்திரதுவஷ்டமெனும் வேள்வியை எடுத்தான் அரசன். காமநிறைவே கொள்ளஇயலாதவனே காமத்தைக் காக்கவேண்டுமென எண்ணினான். மானுடர் தெய்வங்களை பகடைக்காய்களென வைத்தாடுகிறார்கள். தெய்வங்களுக்காக இரங்குக! தெய்வங்களை வாழ்த்துக!” இந்திரன் நகைத்து தன்தொடையில் தட்டினான். அவை முழுக்க சிரிப்பொலி பரவியது.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 50

[ 7 ]

இந்திரகீலத்தின் உச்சிமலை ஏந்திய வெள்ளித்தாலமென முழுமைகொண்ட வட்டமாக இருந்தது. நாண் இழுத்த வில்லென வளைந்து தெரிந்த அதன் விளிம்பைக் கடந்த போது அர்ஜுனன் கையிலிருந்த யட்சி நடைதிருந்தா, மொழியறியா பைதலென உருக்கொண்டிருந்தாள். வலக்கையின் விரலை வாய்க்குள் இட்டு மடிப்புகள் என தசைகொழுவிய கால்களை உதைத்து உடலை நெளித்து எம்பி ஆ ஆ என குரலெழுப்பி கீழிறங்க விரும்பினாள். “இறங்கிக்கொள்கிறாயா?” என்று அவன் மதலைமொழியில் கேட்டான். அவள் தலையசைத்து காட்டை சுட்டிக்காட்டினாள்.

அவன் இறக்கிவிட்டதும் அண்ணாந்து செவ்விதழ்களுக்குள் இருசிறுபற்கள் தெரிய புன்னகைத்தாள். மீண்டும் காட்டை சுட்டிக்காட்டினாள். அவன் குனிந்து அவள் புன்தலையில் கையால் வருடி “சென்று வருகிறேன், அன்னையே” என்றான். அவள் காட்டுக்குள் செல்கிறேன் என்று கையை காட்டிவிட்டு தளர்நடையிட்டுச் சென்று புதர்களுக்கிடையில் மறைந்தாள்.

மழைவிழுந்து கரைந்து மெழுக்கிட்டு கால்வழுக்கிய வெண்பளிங்குப்பரப்பில் நடந்து மையத்தை அடைந்தபோதுதான் அம்மாபெரும் வட்டத்தை அர்ஜுனன் நன்கு அறிந்தான். அண்ணாந்து வானை நோக்கியபோது மிக அருகிலெனத் தெரிந்தது. எழுவண்ண வில். எம்பிக் குதித்து அதை பற்றிக்கொள்ள முடியும் என்பதைப்போல. அதற்கு இருபுறமும் மலையின் சிறகுகளென விரிந்து நீண்டிருந்த முகில்கள் வானொளி கொண்டிருந்தன. அவை மெல்ல நுனி அலைய அசைந்துகொண்டிருந்தன.

இந்திரகீலம் கடலுக்குமேல் பறப்பதை அவன் உணர்ந்தான். கீழே நோக்கியபோது மலைமுடிகளும் மரங்கள் செறிந்த தாழ்வரைகளும் கைவிடப்பட்ட வண்ண ஆடை என கீழிறங்கி மடிந்து நெளிந்து அகன்று கொண்டிருந்தன. நோக்கியிருக்கவே மலை முடியொன்று கூரிய கல்ஊசி என்றாயிற்று. மரக்கிளைகள் பச்சை நிறக்குவியல்களின் பரப்பென மாறின. கடலின் அலைகள் எழுந்தமைவது பூனையின் கையில் வெண்ணிற உகிர்கள் எழுந்து மறைவதுபோல் தெரிந்தது.

இந்திரகீலத்தின் சிறகுகள் காற்றசையாது மெல்ல வீச, விழிநிறைக்கும் தூயஒளி நிறைந்திருந்த வானை நோக்கி அவன் எழுந்து கொண்டிருந்தான். மென் மழைத்தூறல் ஓய்ந்தது. நீர்த்துளிகள் ஒளித்துருவல்களாக சிதறி பின் மறைந்தன. வானுருகி பொழிவதுபோலிருந்தது ஒளி. சூரியன் கீழ்வானின் சரிவில் மிகப்பெரிய நீலவட்டமாக கதிர்வளையம் சூடி அதிர்ந்துகொண்டிருந்தது. இந்திரகீலம் மேலெழுவதன்  விசையை தன் உடலுள் குலுங்கிய நீர்மையால் மட்டுமே அறிந்தான்.

வானிலெழுந்து சென்ற இந்திரகீலம் மெல்ல தயங்கி நின்றது. கீழே அலைத்தோடிய காற்றில் மெல்ல அது அசைந்தது. நடக்கும் யானை மேல் நின்றிருப்பது போல் அர்ஜுனன் உடல்ததும்பினான். சூரியனை நோக்கியபோது கண்கூசவே மேற்கே சரிந்த வானிழைவின் தூயநீலத்தை நோக்கினான். அவன் மேல் நிழலொன்று கடந்து செல்ல வானை அண்ணாந்தபோது கீழைச்சூரியனிலிருந்து கிளம்பி வந்தது ஓர் அசைவு. அதன் நீள்நிழல்கற்றைகள் எழுந்து ஆழியின் ஆரங்களென  சுழன்றன. விழிகூர்ந்தபோது  ஏழு வெண்புரவிகள் இழுத்த பொற்தேரொன்று அணுகிவரக்கண்டான்.

தொலைவில் வெண்முகிலின் முனையில் அந்திச் செம்மையென அது விழிமயக்கு காட்டியது. அணுகும்தோறும் புரவிகளின் பிடரிகள் பறப்பதும் இழுவிசையில் கழுத்துகள் முன் நீண்டிருப்பதும் தூக்கப்பட்ட நீள்முகங்களும் தெளிவடைந்தன. சுழன்று பறந்த செந்நிறவால். முகில்கீற்றுகளை அளைந்தபடி பாய்ந்த மெல்லிய நீண்ட கால்கள். பொற்குளம்புகள். அவன் அவற்றின் வாயில் தொங்கிய மென்பஞ்சுநுரையைக்கூட கண்டுவிட்டான்.

பொன்னிறக் கடிவாளங்களால் அப்புரவிகளை பிணைத்துப் பற்றியபடி அதன் முன்தட்டில் நின்றிருந்த இந்திரனை அவன் கண்டான். ஏழடுக்கு வைரமுடி தொலைவிலேயே மின்னியது. பொன்னிறமுகம் ஒளிரும் நீலவிழிகளுடன் புன்னகைத்தபடி அணுகி வந்தது. பொற்துளி ஒன்று விண்ணிலிருந்து கண்ணைநோக்கி உதிர்வதுபோல. நிழல் அவனைக் கடந்து சென்ற பின்னரே தேர் முகில்களினூடாக இறங்கி இந்திரகீலத்தின் பளிங்குத்தாலத்தில் வந்து அமைந்தது.

புரவிகளின் குளம்புகள் பாறைபரப்பைத் தொட்டதும் துடிதாளமிட்டன.  விரல்தொட்டு மீட்டப்பட்ட கிணைப்பறையின் தோல் என ஆயிற்று இந்திரகீலத்தின் உச்சிவட்டம். அவனை அரைவட்டமென சுற்றி வந்து விசையழிந்து தேர் நின்றது. ஏழு கடிவாளங்களையும் இழுத்து புரவிகளை இந்திரன் நிறுத்தினான். கழுத்துகளை வளைத்தும் ஒசித்தும் அண்ணாந்தும் குனிந்தும் புரவிகள் விசையை தங்கள் உடலுக்குள் நிறுத்திக்கொண்டு அமைந்தன. குளம்புகளை பொய்யடி வைத்து முன்னும்பின்னும் ஊன்றி வால்சுழற்றி நிலை கொண்டன.

தேர்முகப்பிலிருந்து முழுக்கவச உடையுடன் ஒளிக்கற்றை சரிந்திறங்குவது போல படிகளில் கால்வைத்து இறங்கி வந்த இந்திரனைக் கண்டு அர்ஜுனன் தலைவணங்கி “எந்தையே, தங்கள் மைந்தன் பணிகிறேன்” என்றான். புன்னகையுடன் அருகே வந்து “நான் விண்ணவர்கோனின் தேர்ப்பாகனாகிய மாதலி” என்று அவன் சொன்னான். ’உன்னை அழைத்து வரும்படி அரசரின் ஆணை” என்றான். அர்ஜுனன் கைகூப்பி “தேவசாரதிக்கு வணக்கம். உங்கள் கால் என் தலைமேல் அமைவதாக!” என்றான்.

மாதலி சிரித்தபடி “விண்ணரசர் என என்னை நீ மயங்கியது இயல்பே. நான் அவர் தோற்றம் கொண்டவன். அனலை அணுகியது அனலாவதுபோல அணுக்கன் அரசனைப்போல் ஆவதென்பது எங்குமுள்ளதே” என்றான். அர்ஜுனன் ”தன்னை முழுதளித்த அணுக்கர் மாற்றுருக்கொண்ட அரசரே. நீங்கள் என் தந்தைக்கு நிகரானவர். ஊர்வலம் வரும் இறைப்படிமம் கருவறை அமர்ந்த முதல்தெய்வமே என்பது நம் கோயிலொழுகு அல்லவா?” என்றபின் குனிந்து மாதலியின் கால்களைத் தொட்டு சென்னி சூடினான்.

அவன் இரு தோள்களையும் கையால் பற்றி அள்ளி மார்போடணைத்து மாதலி சொன்னான் “இளமைந்தன் என நீ பிறந்த அன்று உன் தந்தையுடன் அஸ்தினபுரியின் முகில்கூட்டத்தின்மேல் நின்றிருந்தேன். வில் தொட்டெடுத்து நீ எய்த முதல் அம்பை விண்ணிலிருந்து பார்த்துக் களித்தேன். உன் வெற்றிகளிலும் தனிமைகளிலும் எப்போதும் உடனிருந்தேன். இன்றே உன் உடல்தொட்டு நெஞ்சோடணைக்க வாய்த்தது. தேவன் என்றே ஆயினும் மைந்தரின்பத்துக்கு நிகர் விண்ணிலும் இல்லை என்றே சொல்வேன்.”

“தங்கள் அருளால் என்றும் காக்கப்பட்டேன், தந்தையே. தங்களால் தழுவப்பட்டதும் என் உடல் நிறைவுகொண்டது” என்றான் அர்ஜுனன். “வருக!” என்று தோள் தொட்டு அணைத்து தேரை அணுகி “அப்பீடத்தில் அமர்க!” என்று சுட்டிக்காட்டினான் மாதலி. விண்மீன்களை அள்ளிச் செறித்தது போல் வைரப்பட்டை விளிம்புடன் செம்பட்டு மெத்தையுடன் சிம்மப்பிடிகளுடன் அமைந்திருந்த அரியணையை நோக்கி அர்ஜுனன் தயங்கினான்.

“எந்தையே, அது விண்முதல்வனின் அரியணை அல்லவா?” என்றான் அர்ஜுனன். “ஆம். இத்தேரை அவர் அனுப்பினார் என்றால் அதில் உன்னை அமர்த்தி அழைத்து வரவே விரும்பியிருப்பார்” என்றான் மாதலி. அர்ஜுனன் “மானுடனாகிய நான் அதில் அமரலாகாது. பொறுத்தருள்க!” என்றான். “அது உன் தந்தையின் ஆணை என்றால் அதை ஆற்றுவதே உன் கடமை” என்றபின் மாதலி பரிபீடத்தில் ஏறியமர்ந்தான்.

உள்மேடையில் சென்று இந்திரனின் அரியணையைத் தொட்டு வணங்கியபின் அதன் காலமரும் மெத்தைமேல் அர்ஜுனன் அமர்ந்துகொண்டான். “இதுவே எனக்கு உகந்ததென்று எண்ணுகிறேன், தந்தையே. எழுக தேர்!” என்றான்.

விண்ணகருக்கான பாதை வானில் ஒரு செந்நிறத் தீற்றல் என தொடுவான் வரை வளைந்து சென்றது. புரவிகள் அதன் மேல் குளம்பு தொட்டும் தொடாமலும் விரைய தேருக்குப் பின்புறம் அப்பாதை அக்கணமே கரைந்து மறைந்தது. அழகிய இடையில் அரைநாண் படிந்த வடுபோல என்று அர்ஜுனன் நினைத்தான். அவ்வெண்ணத்தை அவனே நோக்கி புன்னகைத்துக் கொண்டான். தொடத் தொட வளைந்தகன்றது தொடுவான் கோடு. முகில்குவைகள் வளைந்திறங்கி கீழே மறைந்தன. குனிந்து நோக்கியபோது அவன் அறிந்த வானம் காலடியில் இருந்தது. நீலம் குடையென கவிந்த பிறிதொரு வானம் மேலே. சிறு துளியெனக் கூட எந்த மாசும் அற்றது. அதன் வழுக்கில் எம்மாசும் நிற்காதுபோலும்.

மேலும் மேலுமென கணந்தோறும் விரைவுகொண்டது வியோமயானம். அவன் ஆடைகள் எழுந்து படபடத்தன. தலைமயிர் உடலிலிருந்து பிடுங்கிக் கொண்டு பறக்க விழைவது போல் துடித்தது. விரைவின் ஒரு கணத்தில் ஆடைகள் விலகி அக்கணமே பின்கடந்த தொலைவில் மூழ்கி மறைந்தன. அவன் இரு கைகளையும் விரித்தான். அவன் கொண்ட கடலோடியின் இரும்பு அணிகள் உடைந்து தெறித்தன. பின் ஒரு கணத்தில் முற்றக்கனிந்த பழத்தின் விதையிலிருந்து மென்தசை வழிந்தகல்வது போல் அவன் உடல் பிரிந்து பறந்து பின்னால் அகன்றது.

எஞ்சிய அவன் உடல் வெறும் ஒளிவடிவெனத் தோன்றியது. கைகளைத் தூக்கிப் பார்த்தபோது நீர்ப்பாவை என அதனூடாக மறுபக்கம் தெரிந்தது. இருக்கிறேன், இதோ இதோ என சொல்லிக்கொண்டான். அவ்வுணர்வு உள்ளிருக்கையில் மட்டுமே இவ்வண்ணம் எஞ்சலாகும். கரைந்துகொண்டிருந்தது உடல். நிலவொளியில் பனிப்படலம்போல. நீரில் உப்பு போல. இருத்தலென்பது கணந்தோறும் வந்தமையும் இன்மையென்று உணர்ந்து அமையும் பதற்றத்தால் இருத்தலை மீண்டும் உணர்ந்தான்.

சித்தத்தால் சேர்த்துத் தொகுத்து தன் உருவை செறித்துக்கொண்டான். பனிச்சிலையென ஒளியை உள்வாங்கி கடக்க விட்டான். ஒளிகடந்து செல்லும் அனைத்தும் வானே என்று உணர்ந்தான். பின்னர் அத்தேரும் அவ்வண்ணமே உருவழிவதைக் கண்டான். அவனைப்போன்றே ஒரு உணர்தல் மட்டுமென அதுவும் மாறியது. செல்கை மட்டுமே எஞ்சியிருந்தது.

மென்கருமைபடிந்த யட்சர்களின் உலகை அடைந்தனர் அவர்கள். ஒவ்வொன்றும் நிழல்மட்டுமென எஞ்சிய உலகில் அவர்களும் நிழல்களென்றே அலைந்தனர். விழைவு அவர்களை நீண்டு மடிந்து சுருங்கி மறைந்து தோன்றச்செய்தது. ஓசையற்ற உலகு. அசைவுகள் பின்னிப்படர்ந்து வலையென ஆகி ஒற்றை அசைவென்றே ஆன வெளி. நகக்கண்களிலும் நோக்குகொண்டிருந்தனர் யட்சர். முலைக்கண்களாலும் நோக்கினர் யட்சிகள்.

இளநீல ஒளி பரவிய கந்தர்வ உலகை அவர்கள் கடந்து சென்றனர். நீலச்சிறகுகள் புகைப்படலமென அசைய மணியொளி கொண்ட உடல்களும் அனல்சுடரும் விழிகளுமாக கந்தர்வர்கள் அங்கு நிறைந்திருந்தனர். வண்ண மலர்களால் ஆனவை அவர்களின் இல்லங்கள். மலரிதழ்படுக்கைகள். மலர்க்குடைகள். மலர்மொட்டு இருக்கைகள். மலர்முரசுகள். மலர்க்குழல் கொம்புகள். மலர்களன்றி பிறிதிலாத உலகு. மலர்நிழல்களும் வண்ணம்கொண்டு பிறிதொரு மலராக இருந்தன.

இளஞ்சிவப்பு நிறமான கின்னர உலகத்துக்குள் அவன் தேரில் நுழைந்தான். அனல்வடிவ உடல் கொண்டிருந்தனர் அவர்கள். எழுந்து பறந்து தொலைவு வரை அலையடித்த குழல்கள். கை முனைகளும் கால் முனைகளும் அனலலைகள் போல் நெளிந்தன. ஒருவரைஒருவர் தொட்டதுமே அவர்கள் உடல்கள் ஒன்றென ஆயின. விழைவால் நீண்டு நெடுங்கோடென்றாயினர். தனிமையால் தேங்கி வட்டமாயினர். தவத்தால் குவிந்து துளியாயினர். காதலால் சுருள்களாகி இன்னொருவரை வளைத்துச் சூழ்ந்தனர்.

இளம்பச்சை நிறம் கொண்ட கிம்புருட உலகத்தை கடந்தார்கள். ஒளி உண்டு உடல் சுடரும் பச்சைக்கற்களென உடல் கொண்டிருந்தனர் அவர்கள். நீண்ட உணர்கொம்புகள் மெல்ல அதிர இன்னிசை எழுப்பினர். அவ்விசையையே சரடென்று ஆக்கி அதில் தொற்றி ஆடிப்பறந்தனர். அனைத்தும் தளிரென்றே எஞ்சும் ஓர் உலகு. மான்களும் யானைகளும் குழவிகளென்றிருந்தன. பறவைகளனைத்தும் குஞ்சுகள். நீரெல்லாம் சிறு ஊற்றுகள். மலைகளும் தளிரென்றிருந்தன.

இசையென ஆகியவர்களைச் சூழ்ந்திருந்தது காலம். அவ்விசையின் மறுபக்கமாக பிணைந்திருந்தது வெளி. இசையே அங்கு ஒளியென்றும் இருந்தது. இசையெழுந்தமைந்தபோது ஒளியலையாகியது. வெளிமடிந்து அவர்களை ஊசலாட்டியது. அவர்களில் ஒருவரை தொடமுடிந்தால் பேரிசை ஒன்றை உடலெங்கும் நிரப்பிக்கொள்ளமுடியும். இசையென்றாகி இனித்தினித்து அங்கிருக்கமுடியும்.

வெண்பாலின் வண்ணம் கொண்டிருந்தது வித்யாதரர்களின் உலகு. வெண்நுரையென அவர்களின் உடல் இருந்தது. வெளியில் சற்றே உருவாகி அவ்விழைவழிந்ததுமே மீண்டும் கரைந்துமறைந்தனர். நீர் நுரை. பால்நுரை. தேன்நுரை. நெய்நுரை. நுரைகள் மட்டுமேயான உலகில் அனைத்தும் அலைபாய்ந்தன. பறவைகளின் நுரையே இறகு. விலங்குகளின் நுரை வெண்மயிர். மரங்களின் நுரை வெண்மலர்கள்.

ஒவ்வொன்றும் நுண்வடிவத்தில் இருந்த குஹ்யர்களின் உலகை தேர் கடந்துசென்றது இருத்தலென்னும் உணர்வென்றே அங்குளோர் எஞ்சினர். அவர்களால் உணரப்படுகையிலேயே பொருள் உருக்கொண்டது. உணரப்படும் வடிவை அது சூடியது. உணர்வுக்கேற்ப உருமாறியது. மீண்டும் கருநிலைகொண்டது. நுண்ணணு வடிவ மாமலைகள். நுண்துளிக்கடல்கள். ஒளித்துளியென வானம். அங்கே ஒவ்வொன்றும் ஆயிரம்கோடிமடங்கு எடைகொண்டு கணத்திற்கு ஆயிரம் மடங்கென எடைபெருகின. எடைமிகுந்து அவை இன்மையென்றாகி அவ்வெல்லையில் சென்றுமுட்டி மீண்டும் எடை இழந்து மீண்டுவந்தன.

நுண்சொல் வடிவென அனைத்தும் இருந்த சித்தர்களின் உலகை இறுதியாகக் கடந்தனர். ஒலியையும் பொருளையும் உதறிய தூய சொல் அறியப்படாத பெருவெளியாகி அங்கு நிறைந்திருந்தது. அதில் கரைந்திருந்தனர் சித்தர். பொருள்கொண்டு ஒலிசூடி பிறந்து குமிழியென்றாகி ஒளிசூடி மீண்டும் அதில் மறைந்தனர். கடந்துசென்றபின் அவன் அறிந்தான் ஓங்காரமென்ற ஒற்றைச்சொல் அது என.

“இவை விண்ணவரின் உலகுக்கான பாதைநிலைகள்” என்றான் மாதலி. “சிறகெழுந்து பறக்கும் வண்ணத்துப்பூச்சி இங்கே முட்டைஎன புழுஎன கூடுஎன பதங்கமென தன்னை தான் வளர்த்துக்கொள்கிறது.” அவன் கைகளைக் கூப்பியபடி தேர்த்தட்டில் நின்றிருந்தான். “இருத்தலென்பதன் மாறாநெறிகளால் கட்டப்பட்ட மானுடவாழ்க்கைதான் எத்தனை எளியது!” என்றான். “மென்பஞ்சுத் துகள்கள் பெருங்காற்றில் முட்களில் குத்திக்கொள்கின்றன தங்களை” என்றான் மாதலி.

[ 8 ]

அமராவதியின் நுழைவாயிலை அர்ஜுன்ன நெடுந்தொலைவிலேயே கண்டான். சிறுகணையாழி ஒன்று நீரோடையின் அலைநகர்வுக்குள் விழுந்து கிடப்பதுபோல் தோன்றியது. அவன் விழிகூர்ந்து நோக்கும்தோறும் அது அணுகிவருவதாகத் தெரிந்தது. இல்லை அங்குதான் நின்றுகொண்டிருக்கிறதென்று எண்ணியபோது அசைவிழந்தது.

அவர்கள் சென்ற பாதை அதைநோக்கி சென்று இணைவதை அதன்பின் அவன் கண்டான். அந்தமென்சரடால் இழுக்கப்பட்டதுபோல  அது சீராக அணுகி, உருப்பெருகி வந்தது. அது ஒரு தோரணவளைவு என அவன் அறிந்தபோதே அதன் உயர்ந்த சிற்பவளை மிகமேலே எழுந்து சென்றுவிட்டிருந்தது. அதன் நடுவே பதிக்கப்பட்டிருந்த மும்முகனின் உவத்தல்முகம் அவனை நோக்கவில்லை. ஆனால் அதன் நோக்கை அவன் உணர்ந்தான்.

அமராவதி நகருக்குள் விண்ணிலிருந்து விழுபவன்போல அவன் சென்றடைந்தான். அதன் ஆழிவட்டத்தெருக்களும் அவற்றில் ஆரத்தில் பொற்காசுகளென பொற்செதுக்குகள் எனச் செறிந்திருந்த மாளிகைகளும் நடுவே எழுந்திருந்த இந்திரனின் அரண்மனையும் பொன்னிற இலைத்தளிர்கள் கொண்ட மரங்களும் அலையடித்த சுனைகளும் சிறகலைத்து வானை அளாவிய பறவைக்குழாம்களும் நகரெங்கும் பறந்தலைந்த தேவர்களின் கவச ஒளிகளும் அப்சரஸ்களின் உடைவண்ணங்களும் ஒரேகணத்தில் எழுந்து வந்து அவனை வாங்கிக்கொண்டன. மறுகணம் அவன் அவர்களின் நடுவே தன்னை உணர்ந்தான்.

அவர்களில் சிலர் இமையாவிழிப்பு கொண்ட கண்களில் கனவுடன் புகை காற்றில்பிரிவதுபோல மிதந்து அசைந்தனர். சிலர் கால்கொண்டு கைவீசி மண்ணில் நடந்தனர். சிலர் ஒளிக்கதிர்கள் போல எண்ணத்தின் விரைவிலேயே கடந்துசென்றனர். சிலர் காற்றென ஆகி மலர்களை அசைத்தனர். சிலர் மணற்பருவென்றாகி தெருவெங்கும் பரவியிருந்தனர். அறியும்தோறும் பெருகினர். எவரும் எவரையும் நோக்கவில்லை. எவரும் தனியுள்ளம் கொண்டிருக்கவில்லை. அங்கிருந்த வெளியென அவர்களின் அகங்களும் ஒன்றென்றே இருந்தன.

நோக்க நோக்க அவன் அமராவதிப் பெருநகர் சுவரோவியங்கள்மேல் வெள்ளைபூசி மேலும் மேலும் வரையப்பட்ட ஓவிய அடுக்குபோலிருப்பதை உணர்ந்தான். ஈசலிறகுகள் என ஒளிக்குள் ஓர் ஒளிநிழலென அசைந்தனர் தேவர்கள். ஒருவரை நோக்கி சித்தம்கூர்கையில் அவர் ஒன்றுள் ஒன்றெனச் செல்லும் பல்லாயிரவரின் பளிங்குமணிநிரை எனத் தோன்றியது. ஒவ்வொன்றும் ஆடிக்குள் ஆடியென, அணைவிலாப் பாதையின் தொடக்கமெனத் தெரிந்தது. ஒன்றன்மேல் ஒன்றென ஒளியை எத்தனை முறை அடுக்கமுடியும்?  ”எந்தையே, இங்கு நான் காண்பவை என் சித்தப்பெருக்குதானா?” என்று அவன் கேட்டான்.

“மண்ணுலகென்பது இடம், காலம், பரு என்னும் மூன்று இயல்புகளால் கட்டுண்டது. அவை மூன்றிலிருந்தும் விடுபட்டதே விண்ணுலகு. இங்கு ஒருவர் எங்குமிருக்கமுடியும். எப்போதுமிருக்கமுடியும். எவ்வடிவிலும் இருக்கமுடியும். இருத்தலும் இன்மையுமாக அமையவும் இயலும்” என்றான் மாதலி.  “மைந்தா, நீ காணும் ஒவ்வொரு துளி காலஇடத்திலும் முடிவிலிவரை செல்லும் அடுக்குகளாக தேவருலகங்கள் உள்ளன. உன் விழிபடும் ஒரு கோணம் கோடானுகோடி மண்ணுலகுக்கு நிகரானது.”

அர்ஜுனன் அந்தச் சொற்களின் விரிவை நோக்கி தன் உள்ளம் எழத்தயங்குவதை உணர்ந்தான். தன்னை கைவிடாமல் சென்றடையமுடியாத பொருள்வெளி. அதை உணர்ந்து பின்நகர்ந்து நீள்மூச்சுவிட்டான். “இங்குள்ள தேவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? எந்தையே, மண்வாழ்பவர்கள் தங்கள் செயல்களால் தேவர்களாகிறார்கள் என்று நூல்கள் சொல்கின்றனவே?” என்றான்.

“ஆம், மண்ணிலிருந்தும் தேவர்கள் எழுகிறார்கள். புடவியின் பல்லாயிரம்கோடி உலகங்கள் அனைத்திலிருந்தும் கணம்கோடி தேவர்கள் இங்கு வந்துகொண்டே இருக்கிறார்கள்” என்றான் மாதலி. “நற்செயல்கள் வழியாக மானுடர் உருமாறி வந்தடையும் நிலை அல்ல தேவர் என்பது. தேவர்கள் மானுடனிலிருந்து கணத்திற்கு ஒருவரெனப் பெருகுபவர்கள். இன்னிசை ஒன்றின் உச்சியில் நீ நெஞ்சுருகும்போது ஒருதேவன் உன்னிலிருந்து எழுகிறான். மைந்தனை எடுத்து நெஞ்சோடு அணைக்கையில் பிறிதொருவன். பொற்கணங்களனைத்தும் தேவர்களென்றாகின்றன.”

“வேள்விகள் தேவர்களை பெருக்குகின்றன என்று வேதங்கள் சொல்வது இதையே. வாழ்வே பெருவேள்வி என உணர்பவன் தன்னிலிருந்து தேவர்ப்பெருக்கை உருவாக்குகிறான்” என்றார் மாதலி. “ஒவ்வொரு வாழ்வாலும் கோடிதேவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மானுடனைச்சூழ்ந்தும் தேவர்களின் உலகமொன்று உள்ளது. பிறிதொருமுறை அப்பொற்கணத்தை நீ அறியும்போது முன்னர் உன்னில் எழுந்த அந்தத் தேவனை அருகே உணர்கிறாய்.”

“மைந்தா, மானுடரைச்சூழ்ந்து நின்று அரியவை ஒவ்வொன்றையும் சுட்டி இதோ இதோ என தவித்துக்கொண்டிருக்கிறார்கள் அவன் படைத்த தேவர்கள்” என்றான் மாதலி. அர்ஜுனன் அவர்களை நோக்கிக்கொண்டே சென்றான். பின்னர் “முன்பொருமுறை எங்கள் அரசப்பேரவையின் தூண் ஒன்றின் மேலேறினேன். அங்கே குவைமுகட்டில் கீழே நிகழும் அவைக்கலைவோசை ஓங்காரமென உருக்கொண்டிருப்பதைக் கண்டேன்” என்றான். மாதலி சிரித்தான்.

அவர்கள் அமராவதியின் தெருக்களினூடாகச் சென்றபோது அர்ஜுனன் அந்த விந்தையை உணர்ந்தான். அவன் எண்ணுவதற்கேற்ப அந்நகர் மாறிக்கொண்டிருந்தது. ஒருகணம் அவன் சிற்றிளமையில் மாலினியின் இடையிலமர்ந்துசென்றபோது நோக்கிய அஸ்தினபுரியின் அந்திச்செம்மை கொண்ட காட்சியாக இருந்தது. பிறிதொரு கணம் அவன் கனவிலெழுந்த அறியாப்பெருநகர். அடுத்த கணமே ஓவியத்தில் வரைந்து சூத்ராகி காட்டிய இந்திரப்பிரஸ்தம்.

“இது என் உள்ளமேதானா?” என்று அவன் தனக்குள் என கேட்டான்.  அங்கே சொல்வதும் எண்ணுவதும் ஒன்றே என மாதலி மறுமொழி உரைத்தபோது உணர்ந்தான். “ஆம், ஆனால் உன் சிற்றுடலுக்குள் இருப்பதல்ல உள்ளம். உன் ஆளுமையால் சுமக்கப்படுவதுமல்ல. உள்ளத்திற்குள் உடல் ஒருசிறுதுளி. உள்ளத்தின் ஒரு கணநேரத் தன்னுணர்வே தான் என்பது” என்றான் மாதலி. “இது இப்பிரபஞ்சப்பெருக்கின் உள்ளம் என்பர் கவிஞர்.”

“இனிதென்றும் நன்றென்றும் அழகென்றும் இறையென்றும் ஆன அனைத்தாலும் உருவான ஒரு நகர்” என்று அர்ஜுனன் சொன்னான். ஒவ்வொன்றையும் நோக்குவது இயலாதென்று உணர்ந்து ஒன்றையும் நோக்காமல் அனைத்திலும் முழுக்கக் கரைந்து இருக்க முயன்றான். மாதலி புன்னகைத்து “இல்லை, மைந்தா. நீ இங்கு அறிபவை அனைத்தும் இனிதென்றும் நன்றென்றும் அழகென்றும் இறையென்றும் ஆனவை. விண்ணுலகென்பது ஒரு விழிப்புத் தோற்றம் மட்டுமே” என்றான்.

அவன் விழியே இருப்பென நோக்கிக்கொண்டே சென்றான். நிழலற்ற ஒளி. எதிரொலியற்ற ஓசை. பொருட்களிலிருந்து எழாத நறுமணம். உடலே ஒருநாவென அவ்வினிமையை சுவைத்தான். ஒவ்வொன்றிலும் இருந்து அவற்றின் உச்சங்களை மட்டுமே அள்ளிக்கொண்டுவந்து கொண்டுவந்து சமைக்கப்பட்ட உலகம். ஒவ்வொன்றும் மீளமுடியாத நிலையில் முழுமைகொண்டிருக்கும் வெளி. படைக்கலங்களின் கூர்மைகளை மட்டுமே கொண்டு ஒரு படையமைப்பதுபோல. “ஒருகை ஓசை” என்று அவன் சொல்லிக்கொண்டான்.

ஆம் என  அவன் புன்னகைத்தான். அவன் செய்ததன் பிழையென்ன என்று புரிந்தது. அவனென எஞ்சி அனைத்தையும் கடந்தமைவதை அறிய முயன்றான். அறிதலினூடாக அடையப்படுவதல்ல அது. ஆதலே அறிதலென்றாவது. அவன் சொன்னான் “எந்தையே, தேவன் என்றாகாமல் தேவருலகை அறியமுடியாது.” மாதலி உரக்க சிரித்தான். “ஒருமுறையேனும் தேவனென்றகாத ஒரு மானுடன்கூட மண்ணில் வாழ்ந்ததில்லை” என்றான்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 49

[ 5 ]

இந்திரகீலமலையை அர்ஜுனன் தன்னந்தனியாகவே சென்றடைந்தான். பீதர்நாட்டுக் கலங்கள் அவர்களின் கடற்பாதையிலேயே வழிபிரிந்தன. பாய்புடைத்து காற்றில் பறந்துசென்றுகொண்டிருந்த பெருங்கலங்களை கடலுக்குள் நிறுத்தமுடியாதென்பதனால் விரைவுகுறையாமலேயே கலவிலாவில் கட்டப்பட்டிருந்த மென்மரத்தாலான படகை கயிற்றை அவிழ்த்து கீழிறக்கினர். அர்ஜுனன் வீயிடம் விடைபெற்றுக்கொண்டு கயிற்றினூடாக அதில் இறங்கி அமர்ந்தான்.

கடலைக் கிழித்த கலத்தின் மூக்கு உருவாக்கிய பேரலையில் அவன் படகு எழுந்தமைந்தது. கயிறு அறுக்கப்பட்டதும் அர்ஜுனனின் படகு அலைமேல் ஏறி அமைந்து விலகிச்சென்றது. அவன் அதன் பாயை இழுத்து விரித்தான். சுக்கானைப்பற்றி பாயின் கோணத்தை திருப்பியதும் கிளையிலிருந்து எழும் சிறுபறவைபோல அது கடல்விரிவில் சென்றது. சற்றுநேரத்திலேயே கலம் விலகிச்சென்றது. கலமுகப்பில் நின்ற வீ அவனை நோக்கிக்கொண்டிருந்தார்.

அலைகளில் அவன் படகு ஊசலாடியது. ஆனால் இருமுறை வடங்களைப்பற்றி அவன் இழுத்ததுமே அது தலைவனை அறிந்த கூர்மதிப் புரவி என பணிந்தது. வீ புன்னகையுடன் திரும்பி தன் அருகே வந்து நின்றிருந்த குலப்பாடகனிடம் “வீரர்களுக்கு இவ்வுலகு போதவில்லை பாடகரே, அவர்களுக்காகவே தெய்வங்கள் மேலும்மேலுமென உலகங்களை உருவாக்குகின்றன” என்றார். அவன் முழுமையாக நோக்கிலிருந்து மறைந்ததும் “அவர் வெல்வார் என்பதில் ஐயமில்லை. அவர்கள் வெல்வதற்காகவே தெய்வங்கள் காத்திருக்கின்றன” என்றார்.

அர்ஜுனன் இருநாட்கள் கடலலைமேல் சென்றபின் தொலைவில் எழுந்துதெரிந்த கரிய பாறைமுகடுகளைக் கண்டான். அவற்றில் அலைமோதி வெள்ளிதழ் மலர்களை விரியவைத்துக்கொண்டிருந்தது கடல். அணுகும்தோறும் அவை பெரிதாகி தலைக்குமேல் எழுந்தன. அவற்றின் மடம்புகளில் அலைநீர் பால்நுரையென வழிந்தது. பாறைகள் அவனை நோக்கி பல்காட்டி நகைத்தாடுவதுபோல தோன்றியது. ஏளனப் புன்னகை கொண்டிருப்பதுபோலத் தோன்றிய அவை அணுக அணுக வெறியுடன் சிரித்துச் சுழன்று வந்தன.

அவனை அள்ளி அள்ளிச் சுழற்றிய நீலப்பரப்பு பாறைகளிலிருந்து விலக்க முயல்வதுபோல் தோன்றியது. அவன் பாயைத் திருப்பி காற்றை நெறிப்படுத்தி கரைநோக்கியே செல்லக்கண்டு பொறுமையிழந்து அள்ளித்தூக்கி அருகிருந்த பெரும்பாறையில் ஓங்கி அறைய முயன்றது. பாயைத் திருப்பி காற்றை அதன்மேல் ஏவி அவன் அப்பாறையை தவிர்த்தான். மேலும் மேலும் அவனை பாறைகளை நோக்கி வீசிய கடலை ஏமாற்றி இரு பாறைகள் நடுவே புகுந்தான்.

அதன்பின் அலைவீச்சு குறைந்தது. பாறைகளைத் தவிர்த்தும் ஒளிந்தும் அவன் முன்னேசென்று இறுதியாக எழுந்துவந்த பெரிய பாறை ஒன்றை அணுகினான். அவன் பாயைச் சுருக்குவதற்குள் வந்த பேரலை ஒன்று படகைத் தூக்கி அப்பாறைமேல் அறைந்தது. அவன் பாய்ந்து அலைமேல் குதித்து விலகினான். படகு சிம்புகளாகச் சிதறி நீரலைவில் மிதந்து ஆடியது. அவன் மீண்டுமெழுந்த அலையொன்றில் ஏறிச்சென்று பாறையின் நீள்மூக்கு நுனியை பற்றிக்கொண்டான்.

KIRATHAM_EPI_49

நீர் அவனை விட்டொழிந்த விசைக்கு கைகளை முறுகப்பற்றி அசையாமல் அமைந்து தப்பினான். அடுத்த அலை எழுவதற்குள் பாறைமுகப்பு மேல் தாவி ஏறிக்கொண்டான். அவன் கால்களை வந்து அறைந்து மீண்டது பேரலையின் நுரை. வெள்ளிக்கழலென நுரை வளைத்த கணுக்கால்களுடன் பாறைமேல் நடந்து சென்றான். பாறைகளாலான கடல்வளைவை தாவியும் நடுவே நீரில்பாய்ந்து நீந்தி பிறிதொரு பாறைமேல் பற்றி ஏறியும் கடந்துசென்றான்.

பின்னர் அவன் பச்சைக்குவைகளென எழுந்து நின்றிருந்த மலைகளைக் கண்டான். சுண்ணமலைகள் என பசுமைக்குள் தெரிந்த பாறைகள் காட்டின. தொங்கி வழிந்து சொட்டி நின்றது காடு. அவன் கரையை அடைந்து பாறைகளில் ஒட்டிநின்றிருந்த சிப்பிகளைப் பிடித்து பிளந்து வெறும் ஊனை உண்டான். மேலும் சிப்பிகளை அள்ளி தன் மேலாடையில் கட்டி எடுத்துக்கொண்டு அப்பசுமலைகளை நோக்கி நடந்தான். அவற்றிலிருந்து ஓடி கடல்நோக்கி வந்த சிற்றோடை ஒன்றின் நீர் தூயதாக இருந்தது. அதை அள்ளி அருந்திவிட்டு அந்த மலைநோக்கிச் சென்றான்.

மலைகளில் உண்ணத்தக்க கனிகளும் சிற்றுயிர்களும் நிறைந்திருந்தன. மானுடவிழியால் நோக்கப்படாத காடு என்று அதன் திமிர்ப்பே சுட்டியது. தொங்கும்காடுகளை கடந்துசென்றபோது மலைகள் சூழ்ந்த கடல்குடா ஒன்றை கண்டான். அதன் வட்டக்கரையில் அலை இதழிதழாக விரிந்து படிந்துகொண்டிருந்தது. அதன் மையம் முழுமையாகவே வெண்ணிற இருளால் மூடப்பட்டிருந்தது. அதற்குள் அருவிகள் கொட்டிக்கொண்டிருக்கும் ஒலியை கேட்டான். முகில்களுக்குமேல் பச்சைமுகிலென நின்றிருந்தது இந்திரகீலமலை.

அவன் குனிந்து கீழே கூர்ந்து நோக்கினான். அது மண்ணை தொட்டிருக்கவில்லை. நீர்ப்பொழிவுதான் கடல்மேல் கால்களை ஊன்றியிருந்தது. அக்காட்சியால் விழியும் சித்தமும் கட்டப்பட்டவனாக அவன் நோக்கிக்கொண்டு நின்றான். அவன் உடல் காய்ந்து உப்பரிக்கலாயிற்று. கடற்காற்றில் உலர்ந்த முடியும் தாடியும் பறந்து அலையடித்தன. இந்திரகீலம் பறந்து அகல்வதுபோல் தோன்றியது. அது விழிமயக்கா என அவன் இமைகொட்டி மீண்டும் நோக்கினான். வான்வழியாக வெண்பறவைகள் வந்து அதில் செறிந்திருந்த மரங்களின் மேல் அமைந்தும் எழுந்து பறந்தும் வானில் சுழன்றமைய மலையில் இருந்து வெண்புகை எழுவதுபோல் தோன்றியது.

முகில்களுக்கு அப்பால் பின்காலைச்சூரியன் எழுந்ததும் அவை வெள்ளிச்சிறகுகளாக மாறின. அப்போதுதான் அவன் மலையின் மணிமுடி என வளைந்து நின்றிருந்த வான்வில்லை நோக்கினான். அது மழைவில் போல் கரையவில்லை. ஏழுவண்ண உலோகங்களால் கட்டப்பட்ட அணித்தோரணவளைவுபோல அவ்வண்ணமே நின்றது. அவன் அதை நோக்கியபடியே அருகிருந்த மலை ஒன்றின் மேல் மரங்களை பற்றிக்கொண்டு ஏறிச்சென்றான். மேலும் மேலுமெனச் சென்று உச்சியில் நின்றபோது முகில்களுக்கு அப்பால் மிதந்து நின்றிருந்தது இந்திரகீலம்.

அதை அணுகும் வழியென எதுவும் தென்படவில்லை. அவன் மலைவிளிம்பில் சென்று நின்று கையெட்டும் தொலைவுக்கு அப்பால் நின்றாடிய மலையை நோக்கிக்கொண்டிருந்தான். அதன் மரங்களனைத்தும் தளிர்கொண்டு தழைத்திருந்தன. இலைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக நோக்கமுடியும் அண்மை. ஆனால் கீழே நோக்கியபோது பாறைகள் செறிந்த கடல் அலைவிரிய நெளிந்துகொண்டிருப்பதைத்தான் பார்க்கமுடிந்தது. அவன் மீண்டும் அந்த மலையிலேயே சுற்றிவந்தான். களைத்துப்போய் உச்சிமலைப்பாறை ஒன்றில் படுத்து விழிமூடினான்.

இமைகள் வெயிலொளியில் குருதிப்பரப்பென தெரிந்தன. அவனுக்குள்ளும் ஒளிநிறைந்திருந்தது. அவன் குருதியொளியில் சென்றுகொண்டிருந்தான். எவரோ அழைப்பதுபோலத் தோன்றி விழித்தெழுந்தான். மிக அண்மையில் நின்றிருந்தது இந்திரகீலம். விழிப்பெழுந்த மறுகணமே எம்பிப் பாய்ந்து அதன் மரச்செறிவின்மேல் சென்றுவிழுந்தான். அவன் தயங்குவான் என எண்ணி நின்றிருந்த மலை திகைத்துவிலகுவதற்குள் அவன் அதன் மரக்கிளைகளை பற்றிக்கொண்டான். மிரண்ட புரவிபோல இந்திரகீலம் அவனை உதற முயன்றது. காற்றில் கழுகுபோல சிறகடித்து துள்ளிச்சுழன்றது. மேலும் கீழும் ஆடியும் விரிந்து சுருங்கியும் அவனை வீழ்த்த முயன்று பின் மெல்ல அடங்கியது.

அவன் மரங்களினூடாக பாறை ஒன்றின் மேல் இறங்கினான். வெண்சுண்ணமலை. அதன் பாறைகள் பளிங்குபோல் ஒளிகொண்டிருந்தன. இளமழை அதன் இடுக்குகள் வழியாக நீரோடைகளை பாய்ந்து இழியச்செய்தது. இலைகள் அனைத்தும் ததும்பி சொட்டிக்கொண்டிருந்தன. நீரின் ஒளியால் காடு நிழலின்றி பொலிந்தது. அவன் பாறைகள் வழியாக மேலேறிச்சென்று மரங்களின் செறிவைக் கடந்து மென்புல்வெளி பரவிய மலைக்குவடுகளை அடைந்தான்.

சிலிர்த்த புரவியின் உடலென ஒளிகொண்டிருந்தது அந்நிலம். அதற்குமேல் பச்சைப்பாசிப்பரப்பு படிந்த பளிங்குப்பரப்பாலான முகடுகள் வந்தன. அவற்றின்மேல் எழுந்து வளைந்திருந்த வான்வில்லை கையால் தொட்டுவிடமுடியுமெனத் தோன்றியது. அங்கே மானுடர் எவரும் வந்திருக்கமுடியாதென்று அவன் அறிந்தான். தேவரோ தெய்வங்களோ அங்குள்ளனவா என்று விழிசெவிமெய்மூக்கு கூர்ந்தபடி நடந்தான்.

[ 6 ]

முதலில் அவன் அறிந்தது மணத்தை. மலர்மணமென தோன்றியது. மலருக்கு இல்லாத உயிரின் வீச்சு அதிலிருந்தது என்று பின்னர் உணர்ந்தான். புனுகா கஸ்தூரியா கோரோசனையா என்று பின்னர் ஐயுற்றான். அவையனைத்திலும் நுண்மையாகக் கலந்திருக்கும் குருதிமணம் அதில் இருக்கவில்லை. பின்னர் அவன் யாழொலியை கேட்டான். குழல் அதனுடன் கலந்ததை உணர்ந்தான். சலங்கைகளா சிறுமணியா? அவன் விழி அறிவதற்குள்ளாகவே உடல் அருகமைவை உணர்ந்தது. அவன் அவளை நோக்கியபோது மிக அருகே நின்றிருந்தாள். “எங்ஙனம் இங்கே வந்தீர், இளையவரே?” என்றாள். “இங்கே மானுடர் வர ஒப்புதலில்லை, அறியமாட்டீரா?”

அர்ஜுனன் அவளை நோக்கி விழிசலிக்காமல் நின்றான். ஒவ்வொரு கணுவிலும் மலர்மட்டுமே நிறைந்த மரக்கொம்புபோல அழகொன்றேயான உடல்கொண்டிருந்தாள். செம்மலர் நிற உடலில் மூச்சிலெழுந்த மாமுலைகள் மேல் மணிமாலை துவண்டது. அவன் நோக்கை அறிந்ததும் அவள் இதழ்களில் சிறுநகை வந்துசென்றது. தன் நோக்கைச் சரித்து மெல்ல முகம் சிவந்து “ஆனால் உங்களை இங்கு கண்டதில் நான் உவகையே கொள்கிறேன். இந்நிலத்தின் காவல்யட்சி நான். என் பெயர் வாமை. இக்கணம்வரை ஆண் என எவரையும் நோக்காதவள்” என்றாள்.

பின்னர் உதடுகளைக் கடித்து நாணம் கொண்டு மெல்ல உடல் துவண்டு “அழகு என்பது காமத்தின் உடல்வெளிப்பாடு. அணிகொள்ளுதலோ விழைவை கொண்டாடுதல். அழகுக்கு அணிகொண்டு ஆயிரமாண்டுகாலம் இங்கே காத்திருப்பதன் துயரை நான் சொல்லி புரியவைக்கமுடியாது” என்றாள். அவனை தன் சிவந்த விழிகளால் நோக்கி “நன்று, இதற்காகத்தான் அக்காத்திருப்பு என்றால் அது ஒரு தவமே. தவமுதிர்வே தவத்தை பொருள்கொண்டதாக்குகிறது” என்றாள்.

அர்ஜுனன் “நான் எந்தையை பார்க்கும்பொருட்டு இங்கே வந்தேன்” என்றான். “உங்களை அங்கே வழிகாட்டி அழைத்துச்செல்கிறேன். தேவர்களுக்கு அரசர் இங்கு எப்போதேனும்தான் வருவார். அவர் வருவதற்காக ஒவ்வொருநாளும் மலர்பூத்து மணம்கொண்டு காத்துநின்றிருக்கிறது இந்த மலை” என்றாள் யட்சி. அவன் முன்னால் செல்ல அவள் பின்னால் வந்தபடி “நாம் காதல்கொண்டாடும்பொருட்டே இது இவ்வண்ணம் நின்றுள்ளது என்றே எனக்குப்படுகிறது” என்றாள். “நீங்கள் என் அழகில் மயங்கியிருக்கிறீர்கள் என்று நான் அறிவேன். எப்பெண்ணும் உணர்ந்துகொள்வது ஆண்விழிகளின் காமம்.”

அவன் “ஆம், நான் உன் அழகால் பித்தாகியிருக்கிறேன் என்பது உண்மை” என்றான். துயர்மிக்க மென்சிரிப்புடன் “ஆனால் உளம் பொருந்தாது உடல்பொருந்தும் காமம் என்பது தன்னிழிவை எஞ்சவைப்பது. உறவுக்குப்பின் ஆணை தனிமையில் உணரச்செய்வது. நிறையாக்காமம் பேரழகையும் உளம்கசப்பதாக ஆக்கிக்காட்டும்” என்றான் அர்ஜுனன். “மானுடனாகிய என் உளம் தேவர்தேவியாகிய உனக்குத் தெரியுமா என்று ஐயுறுகிறேன்” என்றான். “எவர் சொன்னது? ஆண்களின் உள்ளத்தை மலருக்குள் தேனை அறியும் வண்டென உணர்பவள் நான். உங்கள் உள்ளத்தின் அனைத்து அசைவுகளையும் இக்காட்டின் அசைவுகள்போல கண்டுகொண்டிருக்கிறேன்” என்றாள்.

“அவ்வண்ணமென்றால் சொல், என் உள்ளம் நிறைந்துள்ள பெண் வடிவு எது?” என்றான் அர்ஜுனன். “உன் உள்ளத்தை நான் அறியவும் அவ்விடை உதவும் என எண்ணுகிறேன்” என்று புன்னகையுடன் சொன்னான். அவள் “ஆணென்பது அணுதொறும் உடலில் நிறையும் பருவத்தில் உங்களை அறிபவள் நான். இளமைக்காதலி அறிந்த ஆணை எவருமறிவதில்லை” என்றாள். அவன் தலையசைத்து நீள்மூச்செறிந்து “எவரேனும் அறிந்துகொள்ளவேண்டும் என்றே எல்லா மந்தணங்களும் ஒளிந்து காத்துள்ளன” என்றான்.

அவள் புன்னகைத்து “ஐவரும் காதல்கொண்டுள்ள பெண், பாஞ்சாலத்து அரசி, திரௌபதி” என்றாள். “ஆம், அவள்மேல் நான் மாளாக்காதல் கொண்டவனே. ஆனால் அவளை விடவும் ஒருத்தி இருக்கிறாள்” என்றான் அர்ஜுனன் நடந்தபடி. “உங்கள் தோழரின் பிறவடிவள். யாதவ அரசி, சுபத்திரை” என்றாள் யட்சி பின்னால் வந்துகொண்டே.

“ஆம், அவள்மேல் நான் கொண்டுள்ளது காதலையும் கடந்த அன்பு” என்றான் அர்ஜுனன். “மூன்றாம் முறை நீ விடைசொல்லவில்லை என்றால் நின்றுவிடு!” அவள் தயங்கி நின்றாள். அவன் முன்னால் செல்ல இடைமணியும் சிலம்பும் கழுத்தணிந்த முத்தாரமும் ஒலிக்க அவன் பின்னால் ஓடிவந்தாள். மூச்சிரைக்க கன்னியருக்குரிய இன்மழலைமொழியில் “உங்கள் அன்னை குந்தி. ஆம், அவளாகவே இருக்கமுடியும். காதல்பெண்களில் அன்னையைத் தேடுவது ஆண்களின் இயல்பு” என்றாள். அவன் புன்னகையுடன் “இல்லை… இல்லையென்று இந்த மலர்மரம் சான்று” என்றான். ஆம் என்று மலர்மரம் கிளையசைத்தது.

அவன் கடந்துசெல்ல ஓங்கி எழுந்த யட்சி பதினெட்டு கைகளும் துறுவிழிகளும் திறந்த வாயுமாக நின்று நூறு சிம்மங்களின் குரலில் அலறினாள். மரங்களை அறைந்து குலுங்க வைத்தாள். கற்பாறைகளை காலால் மிதித்துப் பிளந்தாள். அவன் திரும்பிப்பார்க்கவில்லை. “திரும்பிப்பார்… ஒருகணம் திரும்பிப்பார்” என அவள் நெஞ்சில் அறைந்தபடி கூச்சலிட்டாள். அவன் அருகே நின்ற பாறைகளில் வெடிப்போசையுடன் அறைந்தாள். அவள் நிழலெழுந்து அவன் மேல் விழுந்தது.

திரும்பாமல் அவன் கடந்துசென்றபோது மெல்லிய விம்மலோசை கேட்டது. “நில்லுங்கள், என் விழைவு மெய்யானது. இனி அது நிறைவுறப்போவதே இல்லை” என்றாள் அவள். அவன் அவ்வெல்லை கடக்கையில் “நலமுணப்படாது துறக்கப்பட்டோர் சூடுநர் இட்ட பூவோரன்னர்” என்றாள். அழுகையொலி தேய்ந்து மறையும்வரை அவன் இறுகிய உடலசைவுகளுடன் நடந்து பின்பு மெல்ல எளிதானான்.

அவன் முன் கருநிற உடலும் அலைக்கும் நீள்குழலும் ஒளிரும் வாள்விழிகளுமாக இன்னொரு யட்சி தோன்றினாள். “அவள் சான்றவள் அல்ல. ஆணுள்ளம் அறியாப்பெண் அவனுடன் ஒருபோதும் முற்றிலும் கூடமுடியாது. ஒவ்வொரு கூடலுக்குப் பின்னரும் அவ்விடைவெளி வளர்கிறது. அத்தனை ஐயங்களும் கசப்புகளும் சினங்களும் அவ்விடைவெளியிலேயே தேங்குகின்றன” என்றபடி அவள் அவனருகே வந்தாள். அவள் உடலில் வியர்வையுடன் மதநீரின் ஊன்மணமும் கலந்து அவனை அடைந்தது.

“ஆனால் சொல்லொடு சொல்லென இணையும் பெண் ஆணை விடுதலை செய்கிறாள். ஆடைகளைதல் பெண்ணுக்கு எளிது. ஆடையுடன் அவள் அனைத்தையும் களையலாகும். அகத்தின் ஆடைகளை ஆண்கள் எளிதில் களைவதில்லை” என அவனுக்குமட்டும் என எழுந்த சொற்களால் உரைத்தாள். “ஆம், சொல்லி அறியவைத்தல் இயலாததே ஆணின் அகம் பெண்ணுக்கு. உணராப்பெண்களுக்கு ஆண்களின் எச்சொல்லும் பொருளற்றதே. சொல்லச்சொல்ல அவள் உணராதவள் என்பதையே அவர்கள் உணர்கிறார்கள்” என்றான் அர்ஜுனன்.

“நான் மைந்தரை மடியிலேந்தி கணவனை அறியும் மனைவிபோன்றவள். விதைநோக்கி மரத்தை உணர்வதே உகந்தவழி” என்றாள். அர்ஜுனன் அவளை ஏறிட்டுநோக்கியபின் கடந்துசென்றபடி “நான் என்னுள் தனியன்” என்றான். “இளையவரே, தன் தனிமையை உடைக்காத பெண்ணை ஆணும் தன் ஆணவத்தை வெல்லாத ஆணை பெண்ணும் விரும்பமுடியாது” என்றபடி அவள் பின்னால் வந்தாள். “நில்லுங்கள்! உங்கள் உள்தனிமைவரை நிலத்தை ஊடுருவும் நீரென வந்தமையும் ஆற்றல்கொண்டவள் நான்” என்றாள்.

அவன் திரும்பாமல் நடந்துகொண்டிருந்தான். “ஒருகணநோக்கிலேயே என் உடலை முற்றிலும் நோக்கிவிட்டீர்கள். உடலில் காமம் எஞ்சுவதுவரை உள்ளத்திலும் காமம் எஞ்சுவதே ஆணின் இயல்பு” என்றபடி அவள் உடன்வந்தாள். வளையலோசை குலுங்க ஆடைதிருத்தினாள். “என் பெயர் தட்சிணை. உங்களுக்காகவே இங்கே காத்திருந்தேன். மலர்மென்மைகொண்டவள் மலைப்பாறைகளைப்போல காலம் கடந்து காத்து அமர்ந்திருப்பதன் பெருந்துயரை நீங்கள் அறிவீர்கள்…”

அர்ஜுனன் “ஆம்” என்றான். “நீ சொல், அவளிடம் நான் கேட்ட வினா இது. பிறிதொரு நிகரியின்றி என் நெஞ்சமர்ந்தது எவள் உரு?” என்றான் அர்ஜுனன். அவள் ஒருகணம் எண்ணியபின் “ஆணவம் கொண்ட ஆணுள்ளத்தைக் கரைத்து ஆழத்தில் நின்றிருக்கும் எளியபெண் ஒருத்தி இருப்பாள். முட்பன்றி களிமண்ணில் பதிவதுபோல நீங்கள் பதிந்த இடம் அது. உலூபி” என்றாள். அவன் “ஆம், சற்றேனும் துயர்கொள்கையில் அவளையே நாடிச்செல்கிறது என் உள்ளம்” என்றான். “ஆனால் விஞ்சியிருப்பது பிறிதொரு முகம்.”

அவள் சீற்றத்துடன் பின்னால் வந்து “நில்லுங்கள். இம்முறை பிழைக்காது. இதோ, இந்த பொற்கொம்புக் கலைமான் சான்று” என்று கூவினாள். “கணமும் தயங்காது விட்டுச்செல்லும் உங்களை கணமும் தயங்காமல் விட்டுநின்றவள் ஒருத்தியே. சித்ராங்கதை. ஆணென நிறைந்தவன் பெண்ணென்றாகி அறிந்த ஆணுள்ளம் கொண்டவள். முடிவடையாத ஆடல் வழியாக ஈசனும் அறியாத பெண்ணின் அகத்தைக் காட்டியவள்.” அவன் முன்னால்சென்றபடி “இல்லை” என்றான். ஆம் என்று கலைமான் தலையசைத்தது. அவள் உறுமியபடி “இன்னும் ஒருமுறை. இன்னும் ஒரேமுறை” என்றாள். “ஆம்” என்றான் அவன்.

“அவள் பெயர் மாலினி. அன்னையென வந்தவள். அன்னை கொண்ட விலக்கம் சற்றுமில்லாத அன்னை” என்றாள். “இல்லை” என்றான் அர்ஜுனன். அவள் சினத்துடன் ஓங்கி தன் நெஞ்சை அறைந்தபடி நின்றாள். பிடியானைபோல் பிளிறியபடி அவனை நோக்கி ஒடிவந்தாள். அவன்மேல் குளிர்ந்த காற்றென மோதி நிலையழியச்செய்தாள். “நில்லுங்கள், விட்டுச்செல்லாதீர்கள். நில்லுங்கள்!” என்று கூவினாள். அவன்முன் உடல்தளர்ந்து முலைதூங்கி முகம்சுருங்கிய முதுமகளாக வந்துநின்று வழிமறித்தாள். “இம்முதுமையில் நான் காலமுடிவுவரை இருப்பதா? சொல்லுங்கள்!” என்றாள்.

அவன் மெல்லிய புன்னகையுடன் அவளை கடந்துசென்றான். அவள் விம்மியழுவதை கேட்டான். ஊன்மட்கும் மணம் எழுந்தது. சிதைப்புகை எரிந்தது பின்னர். அவன் நீள்மூச்சுடன் கடந்துசென்றான். எதிரே மாந்தளிர் நிறத்தில் நீண்டகாதுகளில் குழைதொங்கி தோள்தொட்டாட தொய்யில் எழுதிய முலைகளும் தோள்விரிவில் பொன்னகைகளுமாக வந்தவள் அவனை நோக்கி புன்னகைசெய்து “நான் மத்யை. இடமும் வலமும் பொய்யே. முன்செல்பவனுக்கு திசையென்பது முகப்புமட்டுமே” என்றாள். “ஆம்” என்று அவன் சொன்னான்.

அவள் அவனுடன் வந்தபடி “உங்கள் உள்ளறிவதில் அவர்கள் பிழைசெய்தனர். இளைஞனாக உங்களை எண்ணியவள் வாமை. நடுவயதினனாகக் கண்டவள் தட்சிணை. நீங்கள் இன்று முதுமைக்குள் வந்துவிட்டவர். கடந்துவிட்டவர் நினைவில் எஞ்சுவதென்ன என்பதே வினா. அதை நான் அறிகிறேன்” என்றாள். அவன் புன்னகையுடன் “ஆம், முதிய மனைவியே ஆணை முழுதறிகிறாள் என்பார்கள். சொல்க, என் உளம்நின்ற முதன்மைப் பெண்முகம் எது?” என்றான்.

அவள் “முதல்பெண். அவளுக்குப் பெயரென்று உங்கள் உள்ளத்தில் ஏதுமில்லை” என்றாள். “கொழுத்த உடல்கொண்டவள். கரியவள். பரத்தைத்தெருவில் உங்களை வந்து அழைத்து தன் மடியிலெடுத்துக்கொண்டவள்.” சிரித்தபடி “பெண்மணம் பெண்வெம்மை பெண்ணொலி என உங்களுள் பதிந்த முதல்வள்” என்றாள். “உடலளித்தவள். ஒருபொழுதை மட்டுமே பகிர்ந்தவள். ஒருதுளியை மட்டுமே அளித்தவள். அளித்துப் பரந்து உடல்சூழ்ந்தபோதும் தன்னை உள்ளிழுத்து முற்றிலும் ஒளிந்துகொண்டவள். ஒருபோதும் பிறகு எண்ணாதொழிந்தவள்.” அர்ஜுனன் “ஆம், ஒருநாளும் அவளை மறந்ததில்லை. ஆனால் அவளல்ல” என்றான்.

அவள் முகம் சிவந்து “அவ்வண்ணமென்றால் இன்னொருத்தி. சென்றடையும் மறுஎல்லையில் காத்திருப்பவள். எளியசேடி. ஒவ்வொரு கணமும் நினைத்திருப்பவள். உள்ளும் புறமும் எஞ்சுவதும் கடந்ததும் அளித்தவள். எஞ்சாமல் தன்னை உணர்பவள்” என்றாள். “ஆம், அவளும் என்றும் என் நெஞ்சிலிருக்கிறாள். அவளல்ல என இந்த மலை அறியும்.” மலை ஆம் ஆம் ஆம் என எதிரொலித்தது. அவள் முகம் சுருங்கியது. “நீங்கள் என்னை கடந்துசெல்ல முடியாது” என்றாள். “முதுமகள் அறியா ஆணுள்ளம் இருப்பதில்லை.”

“சொல், நான் கொண்ட அம்முகம் எவருடையது?” என்றான். அவள் மேலும் அருகணைந்து அவன் முகத்தை கூர்ந்து நோக்கி “ஆம்” என்றாள். உடனே அச்சத்துடன் விலகி “ஆம், ஆம்” என்றாள். “எம்முகம் அது? நானே அதை இன்னமும் அறிந்திருக்கவில்லை. ஒரே ஒருமுறை அதை கனவில் மட்டுமே கண்டுள்ளேன். அன்று எழுந்த உளப்பெருக்கை மட்டுமே நினைத்திருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “அவர்… அவர்தான்” என்று அவள் சொன்னாள். “கானாடலின்போது ஒருநாள் நீரில் நீங்கள் கண்ட அம்முகம். அதை அலைகள் நெளியச்செய்தன. தேடிச்சலித்து ஓய்ந்தீர்கள். மூன்றாம்நாள் கனவில் அது குவிந்தது.”

அவன் படபடப்புடன் அவளையே நோக்கினான். அவள் முகம் மெல்ல நெகிழ்ந்தது. “கருமுகம். நீளவிழிகள். செவ்விதழ்களில் குறுநகை. அலைகுழலில் மயிற்பீலி சூடி மஞ்சள்பட்டாடை அணிந்து இதழில் குழல்சேர்த்து இசைத்தபடி கடம்பமரத்தடியில் நின்றாள் அவள்.” அவன் நீள்மூச்சுடன் நெகிழ்ந்தான். “ஆம்” என்றான். “அவர்தான் பிறிதெவருமில்லை. இப்பிறவியில் வேறுமுகமென்று ஏதுமில்லை.” அவள் “நீங்கள் விழையும் அம்முகம் கொண்டு எழுந்து உங்களை வெல்லவேண்டுமென்பதே என் ஆணை. அம்முகம் இப்புவியிலெவரும் சூடமுடியாத முகம், இளையவரே” என்றாள். “நன்று, நான் செல்லவேண்டிய வழியேது என்று சொல்” என்றான்.

அவள் அவன் முன் ஆறுவயதுச் சிறுமியென்றாகி நின்றாள். “முதுமகளாகிய மனைவி தன் கணவனுக்கு காட்டவிழையும் தோற்றம் இது” என்றாள். “என்னை கையிலெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பெயர்மகள் நான்.” அவன் குனிந்து அவளை எடுத்துக்கொண்டான். “நீ கிருஷ்ணையின் முகம் கொண்டிருக்கிறாய்” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் நான் பிறக்கவே போவதில்லை” என்று அவள் சொன்னாள். “செல்க, அந்த மலையுச்சிமேல் விண்ணகத்தேர் வந்திறங்கும் இடம் உள்ளது” என்று சுட்டிக்காட்டினாள்.

அவன் அவளை முத்தமிட்டான். “அளியவள்” என்றான். “கிருஷ்ணையைப்போல் துயர்கொண்டவள் எவருமில்லை. தன் பெண்முகம் முளைப்பதை அவள் காணப்போவதே இல்லை.” அவள் புன்னகைசெய்து “அரியணை அமர்தல்போல் தீயூழ் பிறிதில்லை, இளைய பாண்டவரே” என்றாள். முத்தமிட்டு முத்தமிட்டு அச்சிறுமியைக் கொஞ்சியபடி அவளுக்கு மலர்களையும் வண்ணத்துப்பூச்சிகளையும் சுட்டிக்காட்டி விளையாடியபடி அர்ஜுனன் மலைமேல் ஏறிச்சென்றான்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 48

[ 3 ]

“இது பிறிதொரு கதை” என்று சண்டன் சொன்னான். அவனுடன் பைலனும் சுமந்துவும் ஜைமினியும் நடந்தனர். “இக்கதையை காமரூபத்துப் பாணர் சொல்லக்கேட்டேன். அவர்களிடம் இக்கதையே மூன்று வெவ்வேறு பாணர்பாடலாகத் திகழ்கிறது. இதில் அர்ஜுனனை அவர்கள் மேற்குப்பாலையில் கண்டெடுத்த கதை சொல்லப்படுகிறது.” பைலன் புன்னகைத்து “நூறு இளையபாண்டவர்கள் நூற்றுக்கணக்கான கதைகள்” என்றான். “மாமனிதர்களை மொழி ஆடிகள்போல சூழ்ந்திருக்கிறது. அவர்கள் முடிவிலாது பெருகிக்கொண்டிருப்பார்கள்” என்றான் ஜைமினி.

“அவரை வருணனின் ஏழு மயனீர்கள் வெள்ளாடுகளின் வடிவில் வந்து தங்கள் மேல் ஏற்றிக்கொண்டு பாலையில் வந்த காப்பிரி வணிகர்களிடம் அளித்ததாக ஒரு கதை சொல்கிறது. ஏழு பாலைநிலத்து ஓநாய்கள் அவை என இன்னொரு கதை. அவருக்கு மேல் இந்திரனின் முகிலொன்று குடைபிடித்தது என்றும் அதன்கீழ் அவர் அரசன் என வந்தார் என்றும் பிறிதொரு கதை.”

“எந்தக் கதையை நீங்கள் சொல்வீர்கள்?” என்றான் ஜைமினி.  “அன்று நான் சொல்வதற்கு பொருந்திவரும் கதையை. எல்லாக் கதைகளும் நிகரான உண்மையும் பொய்யும்தான்” என்றான் சண்டன். “அவரை காப்பிரிகள் கண்டெடுத்தனர் என்பது மட்டும் மாறுவதில்லை. அதை நானும் மாற்றுவதில்லை.” பைலன்  “சொல்க!” என்றான். சண்டன் அர்ஜுனன் மீண்டு வந்து கிழக்கை வென்ற கதையை சொல்லலானான். “ஆற்றுவதற்கு கடமைகள் கொண்ட உயிரை அணைத்துக் காக்கும் அன்னையாகிறது ஊழ். அதுவே பனியில் போர்வையும் கடலில் புணையும் பாலையில் நிழலுமென்றாகிறது.”

மேற்குப் பாலைநிலத்தில் சிறியகண் என்று அழைக்கப்பட்ட  ஊற்றொன்றின் கரையிலமைந்த சிற்றூரின் மதுவிடுதியில் பெயரறியா பித்தன் என எட்டு மாதம் இருந்தவன் அர்ஜுனன் என எவரும் அறிந்திருக்கவில்லை. அவன் உடலில் இருந்த அடையாளங்களைப் பார்த்து அறியும் எவரும் அவனை காணவில்லை. அவனை அங்கே கொண்டுசேர்த்தவர்கள் தெற்கே காப்பிரிநிலம் நோக்கி சென்றுகொண்டிருந்த வணிகர்குழு. அவர்கள் அவனை அங்கே விட்டுவிட்டுச்  சென்றபோது அவர்களையும் அவன் அறியவில்லை.

இறந்தவர்களின் நிலத்தருகே உப்புவளையத்திற்கு வெளியே அவன் விழுந்துகிடந்ததை காப்பிரிவணிகர்கள் தொலைவிலேயே கண்டனர். சடலமென்று எண்ணி அருகே வந்தபோதுதான் மூச்சு ஓடிக்கொண்டிருப்பதை விலாவசைவு காட்டியது. அவனை எழுப்பி நீர் அளித்து உயிர்மீட்டனர். “இப்பாலையில் உயிருடன் ஒருவனை மீட்பது இதுவே முதல்முறை” என்றான் அவனைத் தூக்கிய ஏவலன். அவன் நாவில் நீரைத் தடவினர். துளித்துளியாக அவன் உள்நாக்கில் நீரை விட்டனர். ஒருதுளி வெல்லம் உள்ளே சென்றதும் அவன் உடலில் உயிர் பற்றிக்கொள்ள மெல்ல முனகினான்.

ஆனால் அவன் உளம் மீளவில்லை. சொல்கேட்டுப் பொருளுணரவோ விழிநோக்கி முகமறியவோ இயலாதவனாக இருந்தான். அவன் கைகளும் கால்களும் இழுத்துக்கொண்டிருந்தன. தலை ஆடியபடியே இருந்தது. நெடுநேரம் விழிகள் இமைப்பின்றி மீன்நோக்குடன் வெறித்தன. சட்டென்று உதைபட்டவன்போல உடல் அதிர அந்த அசைவின்மையிலிருந்து விடுபட்டபோது அவன் உள்ளுறுப்பில் வலிகொண்டவன்போல உடல்முறுக்கி மெல்ல முனகினான். அவன் உதடுகள் ஓசையின்றி எதையோ சொல்லிக்கொண்டே இருந்தன. எவரோ அவனிடம் பேசிக்கொண்டே இருப்பதுபோல அவன் உடலெங்கும் செவிகள் கூர்ந்திருந்தன.

அவர்களிடம் நீர் சிறிதே இருந்தது. உணவு முற்றிலும் தீர்ந்துவிட்டது. எதிர்பாராத புழுதிப்புயலால் வழிதவறி நாற்பதுநாட்கள் அலைந்து மீண்டும் தடம்தேடி கண்டடைந்திருந்தார்கள். பொதிவிலங்குகளில் ஒன்று இறந்துவிட்டிருந்தது. இருவர் கடும் நோயிலிருந்தனர். ஆகவே அவனை விட்டுவிட்டுச் செல்லலாம் என்று காப்பிரிகளின் இளந்தலைவன் சொன்னான். “இவன் நம் அனைவரையும் கொல்லும்பொருட்டு பாலையின் தெய்வங்களால் அனுப்பப்பட்டவனாக இருக்கலாம். செம்புலத்து நாகங்கள் இவன் உரு கொண்டிருக்கக்கூடும்” என்றான். “நம் உறுதியை சீண்டிநோக்குகிறது இந்தத் தெய்வம். நாம் இறந்தபின் இங்கு எழுந்துநின்று நகைக்கும் இது.”

அவன் முதிய தந்தை உடனிருந்தார். சுருக்கங்கள் மண்டிய கனிய முகம் காற்றிலாடும் சிலந்திவலையென நெளிய அர்ஜுனனை கூர்ந்து நோக்கினார். “மைந்தா, இறந்தவர்களின் கடல் இது. இவ்வழியே பலநாட்களாக வணிகக்குழுக்களேதும் சென்றதில்லை என்று காட்டுகின்றது பாதைக்குறிகள். இவன் எப்படி உயிர் வாழ்ந்தான்? எங்ஙனம் இந்த தனிமையைத் தாங்கிக்கடந்தான்? இந்த வறுநிலத்தை நூறுதலைமுறைகளாக அறிந்துள்ள நாம்கூட இங்கே இப்படி உயிருடன் எஞ்சுவது இயலாது” என்றார். “தெய்வங்கள் இவனை துணைத்துள்ளன” என்று மைந்தன் சொன்னான். “நம்மை பலிகொள்ள எண்ணும் தெய்வங்கள் அவை.”

“இல்லை. இதுநாள்வரை நானறிந்த உண்மைகளில் முதன்மையானது ஒன்றே. பாலையில் தெரியும் கானல்நீர் போன்றதே தெய்வங்களின் தோற்றமும்” என்றார் தந்தை. “ஒன்று மட்டும் உறுதி. குன்றா உளவல்லமைகொண்ட மாமனிதன் இவன். இவன் யாரென்று நாமறியோம். எவராயினும் வென்றுசெல்பவன். மண்ணில் உப்பென என்றுமிருப்பவன். இவன் நிறம் அங்கே கிழக்கே உலகின் மையமெனத் திகழும் பாரதவர்ஷத்தைச் சார்ந்தவன் என்று காட்டுகிறது. முனிவர்களும் அறிஞர்களும் வீரர்களும் செறிந்த நிலம் அது என்று கதைகளினூடாக நாம் அறிவோம்.”

அவன் உடலில் இருந்த அடையாளங்களை அவர் நோக்கினார். “மின்கதிர் இது. இது தாமரை. இது மதுக்கலமென நினைக்கிறேன். அரசகுடியினன் போலும். எளியவர்களுக்கு இக்குறிகள் பொறிக்கப்படுவதில்லை. இவனை நாம் மீட்டாகவேண்டும்.” மைந்தன் சினத்துடன் “தெய்வங்கள் நம்மை நோக்குகின்றன” என்றான். அவர் சிரித்து “ஆம், நாம் என்ன செய்கிறோம் என்று அவை நோக்குகின்றன போலும்” என்றார். “என் ஆணை இது, இவன் உடனிருப்பான்.” மைந்தன் தனக்குள் “நாம் இவனுடன் மடிவோம், அதுவே நிகழவிருக்கிறது” என்றான்.

அவர்கள் இரண்டு நாட்கள் மணல்வெளியில் நடந்தனர். நீரும் முழுமையாக தீர்ந்தது. தோல்பைகளும் குடுவைகளும் உலரலாகாது என்பதற்காக எஞ்சவைக்கப்பட்டிருந்த இறுதித்துளி நீரையும் நாவில் சொட்டிக்கொண்டனர். விடாய் தொண்டையிலிருந்து உடலுக்குப்பரவி உடலும் எரிந்தணைந்தபின் எண்ணமாக எஞ்சி பின் மெல்லிய புகைப்படலம்போல உள்ளம் உடலை உணரும் நிலை எழுந்தது. நிற்கிறோமா செல்கிறோமா என அவர்கள் அறியவில்லை. கேட்கும் சொற்களும் எண்ணும் சொற்களும் இடைகலந்த மொழி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.

“வழிக்குறிப்புகளின்படி ஓநாய்முகம்கொண்ட பாறை வருவது வரை நீரோ உணவோ இல்லை. அது நெடுந்தொலைவுக்கு கண்ணில்படவுமில்லை” என்றான் இளையவன். தந்தை ஒன்றும் சொல்லவில்லை. அவரது அமைதியால் சீண்டப்பட்டு “நாம் இன்று மாலைக்குள் நீரை கண்டடையவில்லை என்றால் இறப்போம். ஐயமே வேண்டியதில்லை” என்றான் மைந்தன். அதற்கும் அவர் ஒன்றும் சொல்லவில்லை. அக்குழுவிலிருந்த அனைவரும் பழுத்து சொல்மடிந்த விழிகளால் அர்ஜுனனை நோக்கிக்கொண்டிருந்தார்கள். அவனை அவர்கள் திரைமறைவுக்குள்தான் பார்த்தனர். சிலர் அவன் யார் என எண்ணினர். சிலர் மீண்டும் மீண்டும் அவனை கண்டுபிடித்தனர்.

ஒட்டகைகள்தான் அவர்களை கொண்டுசென்றன. அவற்றின் கால்களில் வாழ்ந்த தெய்வங்கள் பாலையை அறிந்திருந்தன. அவர்கள் பிளவுபட்டு நின்ற மணற்பாறை ஒன்றை அடைந்தபோது இடியோசை கேட்டது. “புயல்” என்றான் மைந்தன். “மணற்புயல்தான் அது.” தந்தை கைகளை விழிமேல் வைத்து நோக்கி “இடிபோல் ஒலிக்கிறது” என்றார். “இடியா?” என அவன் இகழ்ச்சியுடன் கேட்டான். மீண்டும் அவ்வொலி எழுந்தபோது அவன் “மலைப்பாறைகள் சரிகின்றன” என்றான். தந்தை  “இப்பாதையில் பெரிய மலைகளென ஏதுமில்லை” என்றார். தென்கிழக்குச் சரிவில் அவர்கள் கரிய தீற்றலை கண்டார்கள். “அது மணற்பெருக்கே” என்றான் மைந்தன். “மணலெழுச்சி செந்நிறம் கொண்டிருக்கும்” என்றார் தந்தை. அந்நிழல் உறுமியது. அதன் சுருள்கள் தெரியத்தொடங்கின.

“என்ன சொல்கிறீர்கள்? முகில்கறுத்து மழையெழுகிறதென்றா?” என்றான் மைந்தன் சினத்துடன். தந்தை “ஏன் வரக்கூடாது? இப்பாலையில் இரண்டு நாட்கள் முகில்நின்று மழைபொழியக் கண்டிருக்கிறேன், எழுபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு” என்றார். இடியோசை எழுந்தபோது அவர்கள் ஒட்டகைகளை இழுத்து நிறுத்திவிட்டு நோக்கினர். மின்னல் ஒன்று நெளிந்து அணைந்தது. மீண்டும் முகில் முழங்கியது. “மழையேதான்” என்றார் தந்தை. “ஆம்” என்றான் மைந்தன். சட்டென்று அவன் உடைந்த குரலில் “தெய்வங்களே” என்று கூவி அழத்தொடங்கினான்.

KIRATHAM_EPI_48

அனைவரும் கைகளை வானில்நீட்டி கதறி அழுதனர். முதியவர் திரும்பி பாலையில் கண்டெடுக்கப்பட்டவனை பார்த்தார். அவன் மிக அண்மையில் இருப்பவரிடம் பேசுபவன்போல ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். குளிர்ந்த காற்று வந்து ஆடைகளை அசைத்தது. மண்வெந்த மணம் எழுந்தது. புழுதிக்காற்றில் நீராவியை உணரமுடிந்தது. நீராவிக்காக அவர்கள் ஓணான்களைப்போல நாநீட்டினர். திரையை இழுத்து கொண்டுவருவதுபோல காற்று வான்முகில்பரப்பை தலைக்குமேல் கொண்டுவந்து நிறைத்தது. விழியிருட்ட பாலையின் அலைகளின் வளைவுகள் மட்டும் மீனின் தோல்பரப்பென மின்னின.

மின்னல்கள் வாள்வீச்சுகளெனச் சுழல இடி உறுமிக்கொண்டே இருந்தது. மிகத்தொலைவில் சருகுகள் நொறுங்குவது போன்ற ஒலி எழுந்தது. சிறிய மான்கூட்டம் ஒன்று அணுகுவது போல. “மழை!” என்று ஒருவன் கூவினான். “மழை!” என குரல்கள் எழுந்தன. கற்களைப்போல நீர்த்துளிகள் வந்து மேலே விழ இருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். நீர்த்துளி விழுந்ததும் வறுகலம் என வெம்மைகொண்டிருந்த பாறைப்பரப்புகள் நாகக்கூட்டங்கள்போல சீறின.

மண்ணில் விழுந்த நீர்த்துளிகள்  எண்ணையில் மாவுருளை விழுந்து அப்பமாவதுபோல சீறி சுருண்டு உருண்டு எழுந்தன. அவர்கள் முகத்தில் தோளில் தலையிலென விழுந்து சிலகணங்களில் முழுமையாக மூடிக்கொண்டது மழை. சுட்டுப்பழுத்த பாறைகள் மணியோசையுடன் வெடித்தன. கண்மயக்குபோல பாலையின் நிறம் மாறியது. துடிக்கும் தசைப்பரப்பாக அது ஆகியது.

அவர்கள் நீர்ப்புழுக்களைப்போல மழையில் உடலால் திளைத்தனர். கைகளை விரித்து நீரைப்பற்றி அள்ளிஅள்ளிக் குடித்தனர். பின்னர் தன்னிலை உணர்ந்து தோற்பரப்புகளை விரித்து மழைநீரை அதில் பிடித்து தொகுத்து அனைத்துக் குடுவைகளையும் நிறைத்துக்கொண்டனர். பொழிந்து குளிர்ந்து மெல்ல நீர்ப்பொழிவு நின்றது. காற்று பறக்கும் ஊசிகளென நீர்த்துளிகளை அள்ளிச் சாய்த்து கொண்டுசென்றது. பின் நீராவியும் வெந்த மண்ணின் மணமும் நிறைந்த குளிர்காற்று அவர்களை சிலிர்க்கச்செய்தது. நீர் முழுமையாக மண்ணுக்குள் மறைய அப்பம் வெந்து பதமாவதுபோல அதில் குமிழிவெடித்த சிறிய துளைகள் வழியாக புகைபோல ஆவி எழுந்தது.

“இந்த மழை இவர் ஒருவருக்காக” என்றார் முதியவர். “ஆம்” என்றான் ஒரு ஏவலன். “அவர் மார்பில் இருந்த அதே மின்படையை நான் வானிலும் கண்டேன்.” இன்னொருவன் “இதோ, கலங்கள் நிறைந்துள்ளன நமக்கு” என்றான். இளையவன் தலைகுனிந்து அழுதுகொண்டே இருந்தான்.  பாறைகளிலிருந்து புகையென நீராவி எழுந்தது. வான் முகில்உடைந்து வெளித்து ஒளியெழுந்தபோது அது வெண்ணிற இறகுபோல தெரிந்தது. மழை பெற்ற சிறுகுருவிகள் சிறகுகளைக் குடைந்தபடி வானிலெழுந்து சுழன்று சுழன்றமைந்தன.

அனைத்தும் நோக்கியிருக்கவே மாறிவிட்டிருந்தது. புன்னகையுடன் ஒளிகொண்டிருந்தன காற்று கரைத்த பாறைகள். செம்பட்டு என மென்மைகொண்டிருந்தது மண். வானம் இனிய தேன்பரப்பாக மங்கித்தெரிந்தது. காற்றில் மழையின் நினைவு எஞ்சியிருந்தது. அவர்கள் அம்மழையைப்பற்றி தங்களுக்கு அணுக்கமானவர்களிடம் சொல்வதைப்பற்றி எண்ணினர். சொல்லத் தொடங்கினர். அவர்களுடன் அங்கிருந்தனர். மீண்டு வந்து கண்கலங்கி அழுதனர்.

தொலைவில் அவர்கள் புகைஎழுவதைக் கண்டனர். “ஏதோ எரிகிறது” என்றான் இளையவன். முதியவர் சிரிக்கத் தொடங்கினார். அவன் கூர்ந்து நோக்கி “மணற்காற்றா?” என்றான். அதற்குள் இன்னொருவன் கண்டுகொண்டான். “ஈசல்! ஈசல்” என்று கூவினான். அவர்கள் அதை நோக்கி ஓடினர். அவர்களைச் சூழ்ந்திருந்த நிலத்தில் திறந்த நூற்றுக்கணக்கான துளைகளில் இருந்து ஈசல்கள் எழுந்து காற்றை நிறைத்தன. குற்றிலைச் சருகுகள் காற்றில் சுழன்றதுபோல. நீர்நிறம் மின்னும் திரைபோல. விரைவிலேயே அவர்கள் ஈசல்திரைக்குள் திசையழிந்து கூச்சலிட்டனர். முற்றாக வானையே மறைத்தது அது.

ஆடைகளை வீசி வீசி ஈசல்களின் சிறகுகளை உதிரச்செய்து மண்ணில் வீழ்த்தினர். விரித்த தோற்பரப்பில் விழுந்துகுவிந்த ஈசல்களை அள்ளி அப்படியே வாயிலிட்டு மென்று உண்டனர். “இதுதான் தெய்வங்களின் மாயம். இங்கு இதில் நின்றுவிட்டால் நாம் அழிந்தோம்” என்றார் முதியவர்.  “இவை வேறு உயிர்களுக்கான உணவு. நமக்கு போதுமான அளவு கிடைத்துவிட்டது. கிளம்புவோம்.” ஈசல்களைத் தேடி பறவைகள் வரத்தொடங்கின. வானிலிருந்து பிதுங்கி துளித்து மழையெனப் பெய்பவைபோல சிறுபறவைகள் வந்தன. காற்றில் தாவித்தாவி அவை ஈசல்களை உண்டன. ஈசல்கள் அவற்றுக்கு தங்ளை உவந்தளிப்பதாகத் தோன்றியது.

ஈசல்களை வறுத்து உண்டபடி நான்கு நாட்கள் நடந்து அவர்கள் சிறியகண் என்று  அழைக்கப்பட்ட விடுதி இருந்த சிற்றூரை அடைந்தனர்.   அங்கே இருநாட்கள் தங்கி இளைப்பாறி உணவும் நீரும் கொண்டபின் அவனை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். “இவரது பாதை கிழக்கு நோக்கி. நாம் இவரை கொண்டுசெல்வது முறையல்ல. கிழக்கு வணிகர்கள் எவரேனும் இங்கு வரக்கூடும். இவர் உடலில் உள்ள அடையாளங்களை அறியக்கூடும்” என்றார் முதியவர். விடுதித்தலைவனிடம் “இடிமின்னல்களை ஆளும் தெய்வத்தின் அன்புக்குரியவர் இவர். இவர் இங்கிருக்கட்டும். உங்களுக்கு நல்லூழ் தொடரும்” என்றபின் அவர்கள் பிரிந்துசென்றனர்.

விடுதியில் ஒருவேளைமட்டும் உணவுண்டு பாலையிலும் முட்புதர்காட்டிலும் அலைந்து முற்றிலும் தனித்து அவன் தங்கியிருந்தான். அவன் வருவதற்கு முன் பெய்த மழையால் அவ்வூரே செழித்திருந்தது. கலங்கள் முழுக்க ஈசல் நிறைந்திருந்தது. மலைச்சரிவில் நின்றிருந்த ஈச்சைமரங்கள் சிலநாட்களிலேயே பாளை நீண்டு இன்மதுவை சுரக்கலாயின.  அவர்கள் விதைத்து மறந்திருந்த  மணிப்புற்கள் முளைவிட்டெழுந்தன.  மேலுமொரு மழைபெய்து அவை மணிகொள்ளுமென உறுதி எழுந்தது. வரப்போகும் மணிகளின் நினைவே அவர்களை களிவெறியிலாழ்த்தியது. அவர்கள் இரவும் பகலும் பாடிக்கொண்டிருந்தனர்.

மழைமைந்தன் என அவர்கள் அவனுக்கு பெயரிட்டனர். அவனுக்கு ஊனுணவும் கள்ளும் மாறிமாறி கொண்டு கொடுத்தனர். அவனிடம் தங்கள் மொழியில் மாறிமாறி உரையாடினர். அவன் அவர்களின் உதடசைவுகளை நோக்கிக்கொண்டிருந்தான். அவர்களின் குழந்தைகளை நோக்கி சிரித்தான். ஏனென்றறியாமலேயே அங்குள்ள அனைத்து மகளிரும் அவனை விரும்பினர். அவர்கள் சமைத்த உணவில் முதல்பங்கை அவனுக்கென எடுத்துவைத்தனர். அவனுக்கு உணவளிக்க அவர்களிடையே எப்போதும் பூசல் இருந்தது. அவனுக்கு உணவு அளிக்க அவர்கள் முறைவகுத்தனர். உணவளித்த பெண்கள் எண்ணி எண்ணி சிரித்து முகம் சிவந்தனர்.

விரைவிலேயே அவன் தெய்வங்களுக்கு நிகரான வில்லவன் என அவர்கள் கண்டுகொண்டனர். புல்பறித்து வீசி பறக்கும் ஈயை வீழ்த்தும் ஒருவனை அவர்கள் கதைகளிலும் கண்டிருக்கவில்லை. வில்தேர்ந்தவனுக்கு கைகளே வில்லென்றாகுமென்று அவர்கள் கண்டனர். பின்னர் அவனை அவர்கள் தெய்வமென வழிபடலாயினர். குலத்தலைவன் அவனுக்கு ஏழு பெண்களை பரிசளித்தான். துணையிழந்து வாழ்ந்த அப்பெண்கள் அம்மாதமே கருவுற்றனர். ஏழு வில்வீரர்களால் அக்குடி பெருகி நிலம் வென்று அரசென்று ஆகும் என்றார் அங்கு வந்து தங்கிச்சென்ற தொல்குடிப்பாடகர்.

அங்கே அடுத்த பீதர்குழு வந்தபோது அவர்களால் உடல்கொண்ட தெய்வமெனக் கருதப்பட்ட அவன் வில்திறனைப்பற்றி விடுதித்தலைவன் சொன்னான். அவர்கள் அதை வெறும்சொல்லென்றே முதலில் கொண்டனர். “அதோ, அந்த ஒட்டடையின் ஒரு சரடை மட்டும் அம்புவிட்டு அறுக்கச்சொல் உன் தெய்வத்திடம்” என்றான் பீதர்தலைவன். வெளியே இளமைந்தருடன் விளையாடிக்கொண்டிருந்த   அர்ஜுனனிடம் சென்று மைந்தர் அதைச் சொல்லி அவன் ஆடையைப்பற்றி இழுத்துவந்தனர். பீடம் மீதிருந்த ஒரு மெல்லிய துரும்பை எடுத்து சுண்டி ஒட்டடையின் ஒரு சரடை மட்டும் அவன் அறுத்தான். மைந்தர் கைகொட்டி குதித்து மகிழ மேலும் சரடுகளை அறுத்தான்.  வலைவடிவு குலையாமல் அது மெல்லிய புகைக்கீற்றென விழுந்து உணவுமேடைமேல் படிந்தது. பீதர்கள் அஞ்சி எழுந்து வணங்கும் விழிகளுடன் நின்றனர்.

அந்தப் பீதர்குழுவுடன் அவன் அயிலம் என்னும் துறைநகரை சென்றடைந்தான்.  அச்சிற்றூர் மக்கள் கண்ணீருடன் அவனை தங்கள் பாலையின் எல்லைவரை வந்து வழியனுப்பினர். அவன் சென்றுவிடுவான் என அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் செல்வதை எதிர்கொள்ள முடியவில்லை. அவன் கருவைச் சுமந்திருந்த ஏழு பெண்களும் தங்கள் குடில்களின் இருளுக்குள் உடல்சுருட்டிப் படுத்திருந்தனர். வெளியே கேட்கும் ஒவ்வொரு ஒலிக்கும் அவர்கள் உடல் அதிர்ந்துகொண்டிருந்தது. குழந்தைகள் ஓடிவந்து அவன் செல்லும் செய்தியை சொல்லிக்கொண்டிருந்தனர். அவர்களைச் சூழ்ந்திருந்த இருட்டு மெல்ல நெளிந்தது.

ஒட்டகைகள் பொதிகட்டி எழுந்து காலுதற காவலர் படைக்கலங்களை எடுத்துக்கொள்ள ஏவலர் நீர்க்குடுவைகளை சீர்செய்ய அங்கிருந்து கிளம்பும் அன்று காலை அவனை பீதர்கள் தங்களுடன் அழைத்தபோது  விழிவிரிய வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். “தொலைவில்… கிழக்கே செல்கிறோம். வருகிறீர்களா, வில்லவரே?” என்றான் பீதர் தலைவன். ஆம் என அவன் தலையசைத்தான். அவன் கிளம்பும் செய்தியறிந்ததும் ஊரே சோர்ந்து ஓசையழிந்தது. அவன் நடந்த பாதையில் அவர்கள் கால்வைக்காது அருகே சென்றனர். அவன் ஒருமுறைகூட திரும்பி நோக்கவில்லை. செந்நில மடிப்பில் அவன் வணிகர்குழுவுடன் மூழ்கி மறைந்தான். புழுதிமட்டும் வானில் மெல்ல கரைந்தது.

இருளறைகளிலிருந்து பெண்கள் எழுந்தோடி வந்து கைநீட்டி கதறினர். அவன் நடந்துசென்ற பாதையின் புழுதியை அள்ளி தங்கள் நெஞ்சிலும் முகத்திலும் பூசிக்கொண்டு கண்ணீர்விட்டனர். அவர்களை பிறர் தூக்கி வீடுகளுக்கு கொண்டுசென்றனர். மது அளித்து மயங்கச்செய்தனர். விழித்தெழுந்தபோதெல்லாம் அவர்கள் நினைவுகூர்ந்து அழுதுகொண்டிருந்தனர். நாட்கள் செல்லச்செல்ல அவ்வழுகை இறுகி ஆழ்ந்த அமைதியாகியது.

பின்னர் அவர்கள் ஒவ்வொருவராக ஏழு மைந்தர்களை பெற்றனர். கரிய உடல்கொண்டிருந்த மைந்தரின் கண்கள் புதுச்சிப்பியின் ஒளிகொண்டிருந்தன. அவற்றை குனிந்து நோக்கியபோது அவர்கள் உடல்சிலிர்த்து அழுதனர். இறுக்கமெல்லாம் உருகி அழுகையாகப் பெருகியது. அம்மைந்தர்களை கைநீட்டித் தொடவும் அவர்கள் அஞ்சினர். அவர்களுக்கு இடிமழையின் ஏழு பெயர்கள் சூட்டப்பட்டன. அன்னையர் அப்பெயரைச் சொல்லி அழைக்க அஞ்சினர். கிழக்கின் மைந்தர்கள் என அவர்கள் அன்னையரால் அழைக்கப்பட்டனர்.

[ 4 ]

அர்ஜுனன் பீதர்களின் கலத்தில் மேற்குப் பாலைநிலத்தின்  முனம்பிலிருந்த அயிலம் என்னும் துறைநகரிலிருந்து கிளம்பி எட்டுமாதங்கள் பயணம் செய்து பாரதவர்ஷத்தை குமரிமுனம்பு வழியாக சுற்றிக்கொண்டு கிழக்கே சென்று புவியில் இந்திரன் வந்திறங்கும் இடமென்று தொல்கதைகளில் சொல்லப்பட்டிருந்த இந்திரகீலம் என்னும் பறக்கும் மலையை சென்றடைந்தான். முற்றிலும் தன்னுடலுக்குள் தனித்து அடைபட்டவனாக இருந்தான். அடியிலிவரை ஆழம்கொண்ட சிறுதுளைகள் போலிருந்தன அவன் கண்கள். அவன் சொற்கள் மொழியென உருக்கொள்ளா ஒலிகளென்றிருந்தன.

யவன, காப்பிரி, சோனகக் கலங்களுக்கு நிகராக பீதர்நாட்டுக் கலங்கள் நின்றிருந்த அயிலம் என்னும் துறைமுகத்தின் பாலைநிலவிரிவு உயரமற்ற செம்மண் வீடுகளாலும் வீடுகளைவிடப் பெரிதாக தோலுறையால் பொதிந்து கட்டப்பட்ட பண்டப்பொதிகளாலும் நிறைந்திருந்தது. எட்டு நீள்சாலைகள் வந்து அவ்விரிவில் இணைந்தன. அவற்றில் நான்கில் பாலைவணிகர்களின் ஒட்டகைகளின் நிரை பொதிகளுடன் வந்து சேர்ந்தன. அப்பொதிகளை துலாக்கள் தூக்கி நீருள் நின்றாடிய கலங்களில் ஏற்றின. மறுபக்கம் கலங்களிலிருந்து துலாக்கள் எடுத்துச் சுழற்றிவைத்த பொதிகள் நிலத்தில் புழுதியுடன் அமைந்தன.

பொதி ஏற்றப்பட்ட ஒட்டகைநிரை அங்கிருந்து கிளம்பி பாலைப்பாதையில் புழுதிச்சிறகு சூடிச் சென்றது. பொன்னிறப் புழுதியால் அங்கிருந்த அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கலங்கல்நீரில் மீன்கள்போல பலவண்ண ஆடையணிந்திருந்த வணிகரும் ஏவலரும் அதிலிருந்து தோன்றி அதில் மூழ்கி மறைந்தனர். கடலோசையும் சிறகுகுவித்து அணையும்  கலங்களும் சிறகு விரித்து அலைகளில் ஏறிக்கொள்ளும் கலங்களும் எழுப்பும் கொம்பொலியும் ஏவலரும் விலங்குகளும் எழுப்பும் ஓசைகளும் வணிகர்களின் ஆணைக்கூச்சல்களும் திரைக்கு அப்பால் தொடங்கவிருக்கும் நாடகம் ஒலிப்பதுபோல புழுதிக்குள் இருந்து எழுந்தன.

அங்கிருந்த சிறுமண்குடில் ஒன்றில் மேலும் எட்டு மாதம் அவன் தங்கியிருந்தான். அவன் வில்திறன் அதற்குள் அனைவராலும் அறியப்பட்டது. அவனைத் தங்கள் வணிகக்குழுவுடன் சேர்த்துக்கொள்ள அனைவரும் விரும்பினர். அதற்காக பீதர்நாட்டு வணிகர்களிடம் அவர்கள் பொருள் பேசினர். நாள்தோறும் விலையாடியும் அவன் மதிப்பு நிறுத்தப்படவில்லை.  அலைகளை நோக்கியபடி துறைமேடையில் அசைவிலாது அமர்ந்திருந்தான். பாலையில் புழுதிக்காற்று சுருள்வதைக் கண்டும் இருந்த இடம்விட்டு நகராதிருந்தான். ஒரு சொல்லேனும் அவன் உரைக்கவில்லை. ஒருவேளை மட்டும் ஊனுணவு உண்டான். கடல்நாரைகளைப்போல பாறைகளிலும் கலங்களிலும் வடப்பின்னல்களிலும் தாவிச்செல்லும் உடல்கொண்டிருந்தான்.

அவன் உடலில் இருந்த குலக்குறிகளை நோக்க நாள்தோறும் வணிகர் வந்தனர். “அரசகுலத்தான், இடிமின்னலை ஆளும் தெய்வங்களின் மைந்தன்” என்று சொல்லிக்கொண்டனர். கீழ்த்திசையிலிருந்து வந்த பெருங்கலம் ஒன்றின் தலைவர் அவனை பார்க்க வந்தார். பாறைப்பாசி என தொங்கும் நரைத்த தாடியும் நீர்ப்பைபோல தூங்கிய இமைகளும் கொண்டவர். அவனை நோக்கியதுமே அருகே வந்து அவன் உடலில் உள்ள குலக்குறிகளை நோக்கினார். திரும்பி அருகே நின்ற பீதர்நாட்டு வணிகனிடம் “உனக்கு வேண்டியதென்ன? இவரை நான் அழைத்துச்செல்கிறேன்” என்றார்.

அவர் அரசகுலத்தவர் என அறிந்திருந்த வணிகன் மும்முறை வணங்கி அழைத்துவந்தபின் வணங்கிய தோற்றத்திலேயே நின்றிருந்தான். “தாங்கள் என்னிடம் பேசியதே என் நல்லூழ். அதற்குமேல் எதுவும் வேண்டேன்” என்றான். “நன்று, உன் பெயர் நினைவில்கொள்ளப்படும்” என்றபின் அவன் செல்லலாம் என்று கையசைத்தார். அவன் விலகிச் சென்றபின் அர்ஜுனனிடம் குனிந்து “இளைய பாண்டவருக்கு என் வணக்கம். என் நாவாய் தங்கள் காலடிகளுக்காக காத்திருக்கிறது” என்றார். அர்ஜுனன் விழிகளில் ஒரு சிறு அசைவு வந்து மறைந்தது.

“தங்கள் பயணம் கீழ்த்திசை நோக்கியே இருக்குமென எண்ணுகிறேன். நீங்கள் திசைவெல்ல மேற்கே வந்திருப்பதை கதைகள் வழியாக அறிந்திருந்தேன்” என்றார் முதிய வணிகர். “பீதர்நிலத்து தொன்மையான அரசகுலமான நூவா குடியைச்சேர்ந்த என் பெயர் வீ. உங்களுக்குப் பணிசெய்ய காத்திருக்கிறேன்.” அர்ஜுனன் “ஆம், நான் கிழக்கே செல்லவேண்டும்” என்றான். “நீங்கள் நெறிவாழும் மேற்கை அறிந்துவிட்டீர்கள். மீறலின் கிழக்கை அறிந்தாகவேண்டும். என்னுடன் வருக! என் கலம் நாளைமறுநாள் கிளம்புகிறது” என்றார் வீ. அர்ஜுனன் எழுந்து “கிளம்புவோம்” என்றான். அங்கிருந்தே அதுவரை உடன்வந்த எவரையும் திரும்பிநோக்காமல் சென்று அக்கலத்தில் ஏறிக்கொண்டான்.

“எங்கள் மெய்மையின்படி நான்கு அசுரர்களால் பேணப்படுகின்றன திசைகள். செங்குருதிப் பறவை வடிவம் கொண்டது தெற்கின் தெய்வமாகிய அனல். வெள்ளைப் புலியாக மேற்கை ஆள்பவர் உலோகங்களின் தலைவர். கரிய ஆமை வடிவில் நீர்த்தெய்வம் வடக்கை ஆள்கிறது. பறக்கும் நாகத்தின் வடிவம்கொண்ட காடுகளின் தெய்வத்தால் ஆளப்படுவது கிழக்கு” என்றார் வீ. “கிழக்கின் தலைவனுக்குரியது என்று சொல்லப்படும் பொன்மலை ஒன்று அங்கே உள்ளது. அதற்குமேல் பறக்கும்மலை ஒன்றுள்ளது. நான் அதை கண்ணால் கண்டிருக்கிறேன். அதன்பெயர் இந்திரகீலம். அங்குதான் உங்கள் தெய்வமாகிய இந்திரன் வாழ்கிறான் என்கிறார்கள்.”

“வெண்முகில் சிறகுகளுடன் விண்ணில் நிலம்தொடாது பறந்துநிற்கும் மலை அது. அதிலிழிந்து பொழியும் அருவிகள் கீழே அலையடிக்கும் கடலில் வந்துவிழுகின்றன. அங்கே செல்ல பறவைகளாலும் பறக்கும் தெய்வங்களாலும் மட்டுமே முடியும். முகிலின் மேல் எப்போதும் மழைவில் வளைந்துநிற்கும் அம்மலையைப் பற்றி இளமையிலேயே கேள்விப்பட்டிருக்கிறேன். அதை எவரும் கண்டதில்லை. அங்கே கலங்கள் செல்லமுடியாது. நீருக்குள் இருந்து மலைவடிவ ஆமைகள் எழுந்துவந்து கலங்களைப் புரட்டி மூழ்கடிக்கும். பாறைமுகடுகளாகத் தெரிபவை மூழ்கிக்கிடக்கும் கொலைமுதலைகளின் செதில்கள். கலங்கள் மிகத்தொலைவிலேயே திரும்பிவிடும்.”

“என் முதிரா இளமையில் எந்தையுடன் கடலோடலானேன். அந்நாளில் ஒருமுறை எங்கள் கலம் புயலால் அடித்துச்செல்லப்பட்டு அப்பாறைகள் மேல் மோதியது. சிம்புகளாகச் சிதறிய கலத்திலிருந்து நான் மட்டும் தூக்கிவீசப்பட்டேன். பாறை ஒன்றில் பற்றிக்கொண்டு அலைக்கொந்தளிப்பை கடந்தேன். என் கலத்தில் வந்தவர்களில் எவரும் உயிருடன் எஞ்சவில்லை. நான் மட்டும் பாறைகளைத் தொற்றி மேலேறிச் சென்றேன். மேலும் மேலுமென மலைகள் எழுந்துவந்தன. கருங்கற்பாறைகள் செறிந்த மலைகள் அல்ல. சுண்ணப்பாறையாலான மலைகள். பச்சைமரங்களும் செடிகளும் அடர்ந்து வெட்டிஎடுத்து வைக்கப்பட்ட காட்டின் துண்டு என்றே தோன்றுபவை.”

“அவற்றின்மேல் முகில்கூரை ஒழியாது நின்றிருந்தது. இளமழை எப்போதுமிருந்தது.  அந்த மலைகளுக்கு நடுவே வெண்முகில் செறிந்திருக்கக் கண்டு அருகே சென்றேன். அதற்குள் பல அருவிகள் இழிந்து நீர்ப்பரப்பில் விழக்கண்டேன். கடல்நீர் அங்கே கொந்தளித்துக்கொண்டிருந்தது. அணுகி மேலே நோக்கியபோதுதான் வானில் பறந்து நின்றிருந்த மலையைக் கண்டேன்” என்றார் வீ.

“அங்கே நான் நான்குமாதம் வாழ்ந்தேன். பின்னர் கரையொதுங்கிய மரச்சிம்புகளைக் கொண்டு தெப்பம் ஒன்றைச்செய்து நீந்தி கலங்கள் செல்லும் பாதையை அடைந்தேன். அங்கே நாற்பத்தாறு நாட்கள் மிதந்துகிடந்தேன். தொடர்ந்து மழைபெய்து கொண்டிருந்தமையால் நான்  மீன்களை உண்டு அந்த சிறுதெப்பத்தில் வாழமுடிந்தது. என்னை என் குலத்தினரின் கலம் ஒன்று கண்டுபிடித்தது. அங்கிருந்த பாரதநிலத்துச் சூதன் ஒருவன் சொன்னான் நான் கண்டது இந்திரன் வாழும் பறக்கும் மலையாகிய இந்திரகீலத்தை என்று. நீரில் மூழ்கிக்கிடக்கும் மைனாகத்தின் இளையவள் அவள் என்று அவன் சொன்னான்.”

வீ  சொன்னார் “உத்தமரே, நீங்கள் இந்திரனை தேடிச் செல்வதென்றால் இந்திரகீலத்திற்குத்தான் செல்லவேண்டும்.”  அர்ஜுனன் ஆம் என தலையசைத்தான்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 47

பகுதி  ஆறு : மகாவஜ்ரம்

[ 1 ]

தண்டகாரண்யத்தைக் கடந்து திருவிடத்தின் மேட்டுநிலத்தின் மீது சண்டனும் இளையோர் மூவரும் ஏறினர். பாறைகள் ஏட்டுச்சுவடிகளை அடுக்கி வைத்தவைபோலிருந்தன. எட்டுப்பெருக்குகளாக அப்பாறைகளிலிருந்து விழுந்த திரோத்காரம் என்னும் அருவி ஒன்று மேலும் மேலும் என பள்ளத்தில் சரிந்து நூற்றுக்கணக்கான சிற்றருவிகளாக ஆகி கீழே ஆறென ஒருங்கிணைந்தது. “அருவிகள் படைகொண்டு செல்கின்றன” என்றான் ஜைமினி. “வெண்ணிற காட்டுத்தீ என நான் நினைத்தேன்” என்றான் பைலன். “அன்னங்கள்” என்றான் சுமந்து.

“அவை ஏன் அருவிகளல்லாமலாகவேண்டும்?” என்று சண்டன் கேட்டான். “ஆம், ஏன் நாம் பார்க்கும் ஒவ்வொன்றையும் பிறிதொன்றாக்குகிறோம்?” என்று சுமந்து வியந்தான். “பிறிதொன்றாக்கவில்லை, பிறிதுபலவாக்குகிறோம். சொல்லிச்சொல்லி சலிக்கும்வரை சொல்லிக்கொண்டே இருக்கிறோம்” என்றான்  பைலன். “நாம் ஒவ்வொன்றையும் அனைத்துடனும் இணைக்க விழைகிறோம். ஒன்றென ஆன ஒன்றை நோக்கி அனைத்தையும் கொண்டுசெல்கிறோம்” என்றான் ஜைமினி. “இது வெண்முகில். இது மலையின் பால். இது நிலமகளின் புன்னகை. இது ஒரு சாமரம். சரியும் வெண்பட்டு…”

சண்டன் சிரித்து “அருவி என்னும் சொல்லை உதிர்த்து அதன் கீழ் சற்றுநேரம் நின்றாலே போதும். அது தான் எதுவென நமக்கு காட்டும்” என்றான். பொழிந்துகொண்டிருந்த நீர்ப்பெருக்கை நோக்கி நின்றிருந்த பைலன் திரும்பி சண்டனிடம் “ஓயாது கழுவிக்கொண்டே இருக்கிறது” என்றான். சுமந்து “ஆம், நீரென்று ஒன்றைப் படைத்த கருணையை எண்ணிக்கொள்கிறேன். எதிலிருந்தும் கழுவி மீளமுடிகிறது” என்றான். ஜைமினி “நீங்கள் பின்னர் அக்குகையிலிருந்தவர்களை சந்தித்தீர்களா, சூதரே?” என்றான்.

சண்டன் நீர்ப்புகை படாமல் முழவை முதுகைநோக்கி தாழ்த்திக்கொண்டு சொன்னான் “ஆம், நான் தாதவனம் என்னும் ஊரில் பிரசாந்தரை சந்தித்தேன். அவர் தன்னந்தனியாகச் சென்று அங்கமலதம் எனும் சுனையில் நீராடி அந்த குருதிக்கறையை கழுவிக்கொண்டார். தாததோஷம் என்னும் பழிக்கு அவர் ஆளாகிவிட்டதாக நிமித்திகர் சொன்னதனால் மீண்டும் மும்முறை வந்து அங்கே மகாஅபராதபூசனையை செய்தார்.”

“கரூஷம் என்னும் சுனையில் சென்று தன் நிணப்பூச்சை கழுவி மீண்டார் பிரசண்டர். அவருக்கும் தந்தைப்பழி இருந்தது. நூறுபாடல்களில் விருத்திரன் புகழ்பாடி அதை அகற்றிக்கொண்டார். ஆனால் பிச்சாண்டவர் அக்குருதியை கழுவவேயில்லை. குகையிலிருந்து தனித்துவந்த அதே நடையில் தனித்து விலகிச்சென்றார். மீண்டும் மூன்றாண்டுகள் கழித்து பிரசாந்தர் அவரைக் கண்டபோதும் சடைகளிலும் உடலிலும் அக்குருதிஉலர்ந்த செம்பொடி எஞ்சியிருந்தது.”

“பிரசண்டர் அவரைக் கண்டது மேலும் ஓராண்டுக்குப்பின் காசியின் இந்திரவிழவின்போது” என்றான் சண்டன். “நகர்மையத்தில் அமைந்த இந்திரகோட்டத்தில் கோயில்கொண்டிருந்த இந்திரனின் பொற்சிலையை மலர்களைந்து அணிகளைந்து பல்லக்கிலாக்கி அரசரும் படைத்தலைவரும் அமைச்சரும் குடித்தலைவரும் தோள்களில் சுமந்தபடி நீராட்டுக்கு கொண்டுசென்றனர். வேதமோதியபடி அந்தணர் முன்செல்ல புலவரும் குடிமூத்தாரும் பின் சென்றனர். அணிப்பரத்தையரும் இசைச்சூதரும் அந்நிரைக்கு முன்னால் மங்கலம் கொண்டுசென்றனர். காசியின் பதினெட்டு பெருங்குடிகள் முழுதணிக்கோலத்தில் தொடர்ந்தனர்.”

இந்திரனை வாழ்த்தும் கூவல்கள் எழுந்து பட்டுத்தோரணங்களாலும் மலர்மாலைகளாலும் அணிசெய்யப்பட்டிருந்த நகர்த்தெருக்களை நிறைத்தன. நகரமாளிகைகளின் உப்பரிகைகளில் நின்ற மங்கையர் வாழ்த்துக்கூவி அரிமலர் தூவினர். அந்தப் பொன்மழையில் நனைந்தபடி சென்ற அணியூர்வலம் கங்கைக்கரையை அடைந்தது. படிக்கட்டில் இறங்கி கங்கையை அடைந்ததும் அந்தணர் நீரை அணைந்தனர். மலரிட்டு சுடர்நீட்டி வழிபட்டு கங்கையை வணங்கியபின் மூழ்கி எழுந்து கங்கைநீரை மும்முறை அள்ளிவீசி இந்திரனை வாழ்த்தினர். அரசர் தன் கையில் இந்திரனை எடுத்துக்கொண்டு நீரில் மூழ்கி எழுந்தார்.

காலைமுதலே கண்கூசும் ஒளியுடனிருந்த வானம் அவர்கள் கங்கையை அடையும்போதே இருட்டத்தொடங்கியது. அரசர் மூழ்கி எழுந்ததும் கருமுகில் ஒன்று வந்து வானில் நின்றது. அதில் மின்கதிர்கள் வெட்டின. இடியோசை களிறென ஒலியெழுப்பியது. ஐங்குடிப்பெருக்கும் இந்திரனை வாழ்த்தும் ஒலி உச்சம்கொண்டது. மழைத்துளிகள் சாய்வாக வந்து தைக்கலாயின. கைவீசி துள்ளி ஆர்ப்பரித்தனர் நகர்மாந்தர். ஆணும் பெண்ணும் களிவெறிகொண்டு நடனமிட்டனர்.

மழை மென்தூவல் பொழிவென அவர்களை மூடியது. உடல்கள்தோறும் பற்றி எழத்தொடங்கிய காமத்திற்கு பட்டுத்திரையாகியது. இந்திரனை மீண்டும் ஆலயத்திற்கு கொண்டுசெல்லும் வழியில் எங்கும் ஆணும்பெண்ணும் முறைமறந்து நெறிமறந்து குருதியொன்றே முன்செலுத்த கலவிகொண்டனர். அவர்கள் சூடிய களபமும் சந்தனமும் குங்குமமும் கரைந்தழிந்தன. ஆடைகள் தோலென்றாயின. நகர்மாளிகைகள் நனைந்து சிலிர்த்து நின்றன. பெருகுக பெருகுக பெருகுக என்று இந்திரனின் ஆலயமணி முழங்கிக்கொண்டிருந்தது. அத்திரள் நடுவே பிரசண்டர் அலைந்தார். காமம் எத்தனை சொற்களை கோருகிறதென்று அவர் எண்ணிக்கொண்டதுண்டு. எத்தனை விரைவாக சொற்களைத் துறக்கிறது என்று அப்போது உணர்ந்தார்.

அப்போதுதான் அவர் அந்தப் பிச்சாண்டவரை மீண்டும் கண்டார். தொலைவில் ஒரு கூரைக்கு அடியில் அவர் குந்தி அமர்ந்திருந்தார். தன் முன் பெருகிய உடற்கொந்தளிப்பை அவர் காணவில்லை என்று தோன்றியது. பின் எழுந்து அக்கூட்டத்தினூடாக நடந்தார். பிறர் விழிகாணமுடியாது ஊடே நடப்பவர்போல. மழைநீர் விழுந்ததும் அவர் உடலில் இருந்து அக்குருதிப்பொடி கரையலாயிற்று. சற்றுநேரத்தில் செங்குருதி மூடிய உடலுடன் அவர் அவர்கள் நடுவே நடந்துசென்றார்.

நூறு தலைமுறைகளுக்கு முன்பு ஒருமுறை இந்திரவிழவின் உச்சிப்பொழுதுப் பூசெய்கையின்போது ஒரு முதுபூசகரில் சன்னதம்கொண்டெழுந்த தொல்தெய்வம் ஒன்று சொன்னது “இந்திரன் தாதைக்கொலை செய்தவன். அவன் கையால் மைந்தர் மலர்கொள்ளலாகாது. அவன் நீரை கன்னியர் கொள்ளலாகாது. அவன் முன் அரசனின் செங்கோல் வைக்கப்படலாகாது.” அங்கே துள்ளிக் கொந்தளித்த பெருந்திரள் அக்குரல் கேட்டு அமைதியடைந்தது. அரசன் கைகூப்பி “ஆம், ஆணை” என்றான்.

இந்திரனின் ஆலயத்திற்கு வெளியே நகரின் தெற்குமூலையில் ஒரு வளரும் சிதல்புற்றாக விருத்திரன் கோயில்கொண்டிருந்தான். ஓலைவேய்ந்த கொட்டகைக்குள்  பன்னிரு முகடுகொண்டு நின்றிருந்த அந்தப் புற்றின்மேல் வெள்ளியாலான அவன் முகம் பதிக்கப்பட்டிருந்தது. மூதாதைதெய்வத்திற்கு அங்கே குருதிபலியும் கொடையும் பூசெய்கையும் நிகழ்ந்தன. ஐங்குலத்து அன்னையரும் அங்கேதான் மைந்தரை அவன் காலடியில் கிடத்தி அருள்கொண்டனர். இளமகளிர் மஞ்சள்நீர் கொண்டனர். அங்குள்ள ஒரு பேராலமரத்திலிருந்து செந்நிற அரக்கு என வழிந்துகொண்டே இருந்தது விருத்திரனின் குருதி. அதைத்தொட்டு நெற்றியிலணிந்து அவன் அருள்பெற்றனர்.

“விருத்திரனின் குருதியுடன் மஞ்சள்பொடியும் அரிசிப்பொடியும் மலரும் கலந்து ஒரு கூடையில் எடுத்துச்சென்று இந்திரனுக்கு படைத்தனர். அதன்பின்னரே இந்திரனுக்குரிய பூசெய்கை தொடங்கியது. அங்கே காமம்கொண்ட இளையோரும் களம்புகும் மறவரும் மட்டுமே மலர்கொண்டு இந்திரனின் அருள்பெற்றனர்” என்றான் சண்டன். “இந்திரனின் ஆலயத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் மலர்கொண்டுவந்து விருத்திரனின் காலடியில் வைக்கப்பட்டு பூசைசெய்யப்பட்டது. தாதாபராதபூசை என அது அழைக்கப்பட்டடது.”

“வேள்விதோறும் அவிகொள்பவன் எந்தை இந்திரன். அவனை தந்தைக்கொலை செய்தவன் என்று நூலேதும் சொல்வதில்லை” என்றான் ஜைமினி. “சொல்லும் நூல்களும் உள்ளன” என்றான் சண்டன். ஜைமினி “வேதமுதல்வன் இந்திரனே. ஏனென்றால் அவன் விழைவுகளின் அரசன். இப்புவியிலுள்ள ஒவ்வொன்றும் விழைவுகொண்டுள்ளன, விழைவெனவே விண்ணிருப்புகள் உயிர்களை அறிகின்றன. சூதரே, உயிரென்பதே சலிக்காத, தேயாத விழைவுமட்டும்தான்” என்றான்.

“ஏழு விழைவுகள். மூலத்தின் காமம், சுவாதிட்டானத்தின் பசி, மணிபூரகத்தின் மூச்சு, அனாகதத்தின் இதயம், விசுத்தியின் சொல், ஆக்கினையின் எண்ணம், சகஸ்ரத்தின் முழுமைநாட்டம் அனைத்தும் ஒற்றை விழைவின் ஏழுபடிநிலைகள் மட்டுமே” என்று ஜைமினி சொன்னான். “ஆகவே வேட்டலே உயிர்களுக்குரிய செயல். இங்கு உயிர்களாற்றும் செயலனைத்தும் வேட்டல்தான். அதை சொல்லென்றும் செயலென்றும் அமைப்பென்றும் முறையென்றும் வழக்கென்றும் முறைப்படுத்தியமைத்தனர் மூதாதையர். அதுவே வேள்வி.”

“வேள்வி என்பது மதலை அன்னையை நோக்கி அழுவது. அன்னை முலைகனிந்தாகவேண்டும். வேள்வி துலாவின் இப்பக்கத்தட்டு. மறுதட்டு நிகர்கொண்டாகவேண்டும். வேள்வி என்பது சொல். எல்லா சொல்லும் பொருள்குறித்தனவே” என்று ஜைமினி தொடர்ந்தான். “ஆம், தொல்வேதம் அசுரர்களிடமிருந்து வந்தது. ஆனால் மரப்பட்டை நூறாயிரம் முறை அறைவாங்கி நூறுநாள் நீரிலூறி சக்கை களைந்து ஒளிகொண்ட சரடென மட்டுமே எஞ்சும்போதுதான் அது மரவுரியாகிறது. வேள்விக்கு இனிய தேன் தேனீக்களின் மிச்சிலே. ஆனால் அது மலர்களில் ஊறியதென்பதே மெய்.”

“வேர்கள் உண்ணும் பொருட்களால் ஆனதே கனி. ஆனால் வேர்களுண்பனவற்றை எல்லாம் விலங்குகளும் உண்பதில்லை” என்று ஜைமினி தொடர்ந்தான். “இங்கு வந்த உயிர்களில் நெறிநின்றவை வாழ்ந்தன. தங்களை மேலேற்றிக்கொண்டவை வென்றன. வென்றதனால் வேதம் உருவானது. மீண்டும் வெற்றிக்கு அது நெறியென்றாகியது. வேதம் மாபெரும் அடர்களம் ஒன்றின் வெற்றிமுரசு” என்றான் ஜைமினி.

உணர்வெழுச்சியுடன் அவன் சொன்னான் “ஆம், அது குருதிபடிந்ததே. வேதமுரசு குருதிச்செந்நிறம் கொண்டது. தாதையர் குருதியா? ஆம். தனயரின் குருதியென்றாலும் ஆம். அயலவரின் குருதியென்று நீங்கள் சொல்லலாம். அதேயளவே நம்மவரின் குருதியும் ஆகும். ஆனால் இப்புவியில் அறமென ஒன்றை நிறுத்தி வாழ்வை வளர்ப்பதனாலேயே அது தேவர்களுக்கு இனியதாகிறது.   ஓசைகளில் தூயதும் சொற்களில் அரியதும் எண்ணங்களில் முழுமைகொண்டதும் என்றும் அழியாததும் ஆகிறது. அது வாழ்க!” கைகளைக் கூப்பி “ஓம் ஓம் ஓம்” என்று அவன் தொழுதான். பின்னர் முன்னால் நடந்து மறைந்தான்.

சண்டன் மறுத்தொரு சொல்லும் சொல்லாமல் தன் முழவுடன் தலைகுனிந்து நடந்தான். உடன்சென்ற சுமந்து “சொல்தேர்ந்திருக்கிறார் ஜைமின்யர்” என்றான். “அவர் தேடும் ஆசிரியர் அவருக்கு அமைக!” என்றான் பைலன். “மூன்று பாதைகள், மூன்று ஆசிரியர்கள்” என்று சுமந்து சொன்னான். “மாணவர்கள் முளைத்து அவர்களால் தேடப்படுவதாலேயே உரிய ஆசிரியன் எங்கோ திகைந்துவிட்டான் என்று பொருள் என என்னிடம் உஜ்ஜயினியில் ஒரு அந்தணன் சொன்னான்.” சுமந்து “மூன்றுமுகம் கொண்ட ஒருவரா?” என்றான். சண்டன் நகைத்தான்.

சற்றுதொலைவில் ஜைமினி நின்றிருப்பதை அவர்கள் கண்டனர். “அவர் சென்றுவிடமாட்டார் என நான் அறிவேன்” என்றான் பைலன். “அவர் நம்மால் மட்டுமே தன் இடைவெளிகளை நிறைவுசெய்யமுடியும்.” சுமந்து “அவர் நம்மை விரும்புகிறார் என்றே எனக்கும் தோன்றிக்கொண்டிருந்தது” என்றான்.  அவர்கள் அணுகியபோது ஜைமினி புன்னகையுடன் அவர்களை நோக்காது வேறுதிசை நோக்கி நின்றிருந்தான். சண்டன் அருகே வந்ததும்  ‘‘செல்வோம், அந்தணரே” என்றான்.

“நான் என் நிலைமீறி சொல்லாடிவிட்டேனா, சண்டரே?” என்றான் ஜைமினி. “உங்களை வசைபாடினேன். உங்களை வெறுக்க நான் செய்த முயற்சி அது. உங்களை விட்டு விலகிச்செல்லும்போது எண்ணிக்கொண்டேன் இத்தனை அகன்றும் என்னுள் என்ன எஞ்சியிருக்கிறது என்று. புழுதிபடிந்த உங்கள் கால்கள்தான் நினைவில் நின்றன. அவை சென்றுமீண்ட தொலைவுகளே உங்கள் சொற்களுக்கு பொருளாகின்றன. நான் இளையவன். என்னையறியாமலேயே எனக்கு அளிக்கப்பட்டவற்றால் ஆனவன். பிழைசொல்லிவிட்டேன் என்றால் பொறுத்தருள்க!”

சண்டன் சிரித்தபடி “விதையில் மணமென கனிப்பெருக்கு உள்ளது என ஒரு சூதர்பாடல் சொல்கிறது” என்றான். “நீங்கள் பற்றிக்கொண்டிருப்பவற்றால் முழுமையாக பற்றப்படுங்கள், அந்தணரே. அதைவிடப் பெரிய நல்லூழ் ஏதும் மானுடனுக்கில்லை.” ஜைமினி பெருமூச்சு விட்டு “உங்கள் சொல் நிலைக்கட்டும், சூதரே” என்றான். எழ உன்னிய ஆழ்சொற்களின் விசையால் முகம் கொந்தளிக்க தலைகுனிந்து சண்டன் நடக்க அவர்கள் உடன் சென்றனர். அவர்களின் காலடிகள் மட்டும் ஒலித்தன.

சண்டன் ஒரு சொல் உந்தியெழுந்த அதிர்வில் கைகள் பதைக்க உடல்தவிக்க நின்றான். நடுங்கும் குரலில் “அந்தணரே, வேதமுரசு குறித்து நீங்கள் சொன்னது உண்மை. அன்றும் இன்றும் அது குருதியொழுகும் செம்முரசே. ஆனால் சொல்சென்று தொடும் அறியாத் தொலைவெளி ஒன்றில் தூயவெண்முரசு ஒலிப்பதை நான் கேட்கிறேன்” என்றான். தாளமுடியாத ஒன்றை சொல்வதுபோல அவன் கண்கள் கலங்கின. முகம் சிவந்து இதழ்கள் துடித்தன.

மறுகணமே தன்னை மீட்டுக்கொண்டு “ஓர் இனிய கனவு. அது துரத்தவில்லை என்றால் எப்படி இத்தனை தொலைவு நடக்கமுடியும்? நடக்காமல் அமர்ந்துவாழும் ஊழ் இப்பிறப்பில் இல்லை. என்ன செய்வது?” என்றான். தலைதூக்கி உரக்க நகைத்தபடி “இளையோருடன் இருப்பதன் பயனை இப்போது அறிகிறேன். எத்தனை மூடக்கனவையும்    இல்லாப்பொய்யையும் துணிந்து அவர்களிடம் சொல்லலாகும்” என்றான்.

ஆனால் அவர்கள் நீர்மைபடிந்த விழிகளுடன் அவனை நோக்கியபடி நடந்தனர். “பெண்களிடமும் கனவையும் பொய்யையும் சொல்லலாம். ஆனால் அவை அவர்களைப் பற்றியவையாக இருக்கவேண்டும். பிற கனவுகள் அவர்களுக்கு பிள்ளைவிளையாட்டென்றே படும்” என்றபின் சண்டன் மீண்டும் நகைத்தான். இளையவர் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். பைலன் அவனை வெளியே கொண்டுவர விரும்பி “தந்தைப்பழி கொண்டவன் இந்திரன் என்பதே அவனை வல்லமை மிக்கவனாக்குகிறது என்று ஒரு வரி காவியத்தில் வருகிறது, சூதரே” என்றான்.

“ஆம்” என்று சண்டன் சொன்னான். “தந்தைப்பழி கொள்ளாமல் தன்னைக் கடப்பவன் இல்லை.” அவர்கள் மேலும் சொல்லின்றி ஒவ்வொருவரும் தங்கள் தனிமையில் நடந்தனர். ஜைமினி தலைநிமிர்ந்து “சண்டரே, நான் நல்லாசிரியராகிய தங்கள் கால்களைத் தொட்டு வாழ்த்துபெற விழைகிறேன்” என்றான். சண்டன்  எந்த முகமாற்றமும் இல்லாமல் “அவ்வாறே” என்றான். ஜைமினி அவன் கால்களைத்தொட்டு அப்புழுதியை சென்னி சூடினான். “நெறிகளென அறியப்படுவதே மீறலென்றும் அறியப்படுகிறது. அறியப்படும்வகையில் அது எழுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று சண்டன் சொன்னான்.

[ 2 ]

அந்திவெளிச்சம் சிவக்கத் தொடங்குகையில் அவர்கள் பாறை ஒன்றை வந்தணைந்தனர். “இது அடர்வற்ற காடு. புலிகள்  வேட்டையாடுவதற்கு ஏற்றது. இங்கு நாம் அனல்சூடியே இரவமைய முடியும்” என்றான் சண்டன். அந்தப் பாறைமேல் ஏறி அனல்மூட்டி அதைச் சூழ்ந்து அமர்ந்துகொண்டனர். இருள் விரைவிலேயே எழுந்து சூழ்ந்துகொண்டது. குளிரும் வந்து பொதிந்தது. சேர்த்துவந்த கிழங்குகளை தீயில் சுட்டு பாறையில் வைத்து உடைத்து அவர்கள் உண்டனர். தேன்தட்டுகளை மூங்கில்கூடையில் சேர்த்துக்கொண்டு வந்திருந்தான் சண்டன். கிழங்குடன் அதையும் சேர்த்து ஜைமினி உண்டான். “அடுமனை உணவை உண்ண நா வழங்காமலாகிவிடுவோம் என ஐயுறுகிறேன், சூதரே” என்றான்.

விண்ணில் மீன்கள் நிறைந்திருந்தன. புகையில் அவை நீர்ப்பாவைகள் போல அலைபாய்ந்தன. சண்டன் தன் முழவை மெல்ல மீட்டத்தொடங்கினான். அது வேழாம்பல்போல விம்மலோசை எழுப்பியது. பின் புரவித்தாளமாகியது. அவன் ஆழ்ந்தகுரல் எழுந்தது.

“அனைத்தையும் தழுவும் என் பாடல்

இசைவுகொண்டு எழுந்து

இந்திரனை நாடுகின்றன

பெருமைக்குரிய அவனை

கணவனைத் தழுவும் இளம் மணமகள்போல

ஆரத்தழுவுகின்றன

அடைக்கலம் கோருகின்றன

இந்திரனே, அழகனே

ஆண்களில் முதல்வனே

உன்னைப்பற்றும் என் உள்ளம்

வேறெங்கும் விலகுவதேயில்லை

உன்னில் நிலைக்கிறது என் காதல்

என் அரசனைப்போல் வந்தமர்க இந்த தர்ப்பையில்

அருந்துக என் இனிய சோமமதுவை!

என் விடாயை போக்குக

அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவனே

வெண்களிறுமேல் ஊர்பவனே

ஏழு ஆறுகளால் செழிப்புறுகின்றது என் நிலம்”

ரிக் வேதப்பாடலின் ஒலி அந்த இருண்ட காட்டில் முதன்முறை அது ஒலித்த அந்த அறியாக்காட்டிலென அப்போதும் தூய்மைகொண்டிருந்தது. சண்டன் பாடி நிறுத்தி விரல்களால் தன் முழவை தடவிக்கொண்டிருந்தான். பின்னர் தாழ்ந்த குரலில் சொல்லத்தொடங்கினான் “விண்ணளாவியவனின் மைந்தன் பிரம்மன். பிரம்மனின் உடலில் தோன்றிய பிரஜாபதிகளில் முதல்வர் மரீசி. மரீசியின் மைந்தனும் குலங்களுக்கு விதையுமான கசியபரை வணங்குவோம். கசியபர் தட்சப்பிரஜாபதியின் மகளாகிய அதிதியில் ஈன்ற மைந்தர்கள் ஆதித்யர்கள். தாதா, ஆரியமா, மித்ரன், ருத்ரன், வருணன், சூரியன், பகன் விவஸ்வான், பூஷா, சவிதா, த்வஷ்டா, விஷ்ணு என்னும் பன்னிரு ஆதித்யர்களின் முதல்வன் அவனே. அவனை தேவர்களின் அரசன் என்றும் ஆதித்யர்களின் தலைவன் என்றும் வேதங்கள் வணங்குகின்றன.”

முற்காலத்தில் புவிமேல் மலைகளுக்கு சிறகுகள் இருந்தன. இரவுகளில் அவை ஓசையின்றி எழுந்து பெருங்கடல்களின்மேல் பறந்தலைந்தன. முகில்களுடன் கலந்து விளையாடின. நிலவுபரவிய இரவுகளில் எழுந்து வானை நோக்கியவர்கள் பறக்கும் மலைகளின் நிழல்கள் நிலத்தில் நீலத்திரைபோல, ஈரப்பரப்புபோல ஒழுகிச்செல்வதையே கண்டனர். அவற்றிலிருந்த பறவைகளின் ஒலிகள் கலைந்து அவர்களின் தலைக்குமேல் ஒழுகிச்சென்றன. அங்கே குடியிருந்த மலைமக்கள் நிலவொளியில் சுடர்கொண்டிருந்த முகில்களை கைகளால் அள்ளி அளைந்து களித்தனர்.

KIRATHAM_EPI_47

ஒருமுறை வைதிகர் ஒருவர் காட்டுக்குள் தர்ப்பை வெட்டும்பொருட்டு சென்றபோது அங்கே பொன்னிற மான் ஒன்றைக் கண்டார். வியந்து அருகணைந்தபோது அதைப் பிடிக்கவந்த மலைமகனாகிய சிறுவனின் உடலும் பொன்னிறமாக ஒளிவிடுவதைக் கண்டு திகைத்தார். அது எப்படி நிகழ்ந்தது என்று அவர் அவனிடம் நயந்து கேட்டார். அவன் அவர்களின் குடில்கள் அமைந்த மலை இரவில் எழுந்து வானில் பறப்பதாகவும் மண்ணிலிருந்து எழுந்த புகை மலைகளை அடைந்து மரங்களின் நடுவே செறிந்து குடில்களை முகில்களென மூடியிருப்பதாகவும் சொன்னான். என்ன நிகழ்ந்தது என்று அவர் உய்த்தறிந்தார்.

அங்கு நிகழ்ந்துகொண்டிருந்த அதிராத்ர வேள்வியின் அவிகொண்டு விண்ணிலெழுந்த புகையை அதைக் கடந்துசென்ற அந்த மலையின் மக்கள் நுகர்ந்தனர். அதன் இனிமையை அறிந்ததும் நாளும் அங்குவந்து விண்ணில்நின்று வேள்விப்புகையை புசித்தனர். தேவர்களுக்கு அளிக்கப்பட்ட அவியே அவர்களை ஒளிகொள்ளச் செய்தது. அந்தணர் அதை தன் தோழர்களிடம் சொன்னார். அன்று இரவில் அவர்கள் வெளியே சென்று நோக்கியபோது பறக்கும் மாமலைகளுக்கு மேல் அம்மக்கள் நின்று புகைமாந்துவதைக் கண்டனர்.

அவர்கள்  தேவர்க்கரசனை வேள்விக்களத்தில் எழுந்த அனலில் வரவழைத்து முறையிட்டனர். வேள்வித்தலைவரான புலஸ்தியர் ஆணையிட்டார் “இனி எங்கள் வேள்விப்புகையில் ஒருமிடறும் அவர்கள் அருந்தலாகாது. இனி அவர்களின் நிழல் எங்கள் தலைக்குமேல் படலாகாது!” ஆணையை பணிந்து ஏற்று இந்திரன் எழுந்தான். தன் வைரவாளை வீசியபடி இடிமுரசொலிக்க விண்ணிலெழுந்தான். வெள்ளையானை மேல் அமர்ந்து பறக்கும் மலைகளை வேட்டையாடினான். அவற்றின் சிறகுகளை அரிந்து வீழ்த்தினான். குருதி வழிய அவை சரிந்து மண்ணில் விழுந்தன. அந்த அதிர்வில் இல்லங்களுக்குள் துயின்றவர்கள் திகைத்து விழித்தெழுந்தார்கள். அவர்களின் முற்றத்து மரங்கள் இலையுதிர்த்து நிற்பதை காலையில் கண்டார்கள்.

விண்ணில் மிதந்த மலைகள் அனைத்தும் சிறகற்று சரிந்தும் கவிழ்ந்தும் மண்ணில் விழுந்து ஆழப்பதிந்தன. சில மலைகள் வெடித்தன. சில மலைகள் உடைந்து பிளந்தன. சில சிதறிப்பரவின. மலைகளின் குருதி பாறைகள் மேல் சிவந்த வரிகளாக விழுந்தது. மலையடிவாரங்களில் மலைகளின் நிணம் செம்பாறைகளாக சிதறிக்கிடந்தது. மலைகளின் வலித்துடிப்பைக் கண்டு அவற்றின் களித்தோழர்களாகிய முகில்கள் கண்ணீர்விட்டன. அது இளமழையென மலைகளுக்கு மேல் பொழிந்தது.

மைனாகம் என்னும் இளைய மலைமட்டும் இந்திரனிடமிருந்து தப்பியது. அதன் சிறகுகள் கருநீல நிறம்கொண்டிருந்தன. எனவே அதை இந்திரன் பார்க்கவில்லை. மைனாகம் பறந்துசென்று வளியிறைவனிடம் தன்னை காக்கும்படி கோரியது. “நீ என்னை பலமுறை சிறகுவருடி வாழ்த்தியிருக்கிறாய். நான் உன் மைந்தன். என்னை காத்தருள்க!” என்று மன்றாடியது. வளியிறைவன் அதை அள்ளி எடுத்துக்கொண்டு சென்றான். அதைக் கண்ட இந்திரன் தன் வைரவாளுடன் துரத்திவந்தான். வளி அதை வருணனிடம் கொடுத்து “நீரிறையே, இவன் உன் மைந்தன் எனக்கொள்க!” என்றான்.

நீரிறைவன்  அதை தன் ஆடைகளுக்குள் மறைத்துக்கொண்டான். அது சிறகுள்ள வெண்மலையென நீருக்குள் புகுந்து நீந்தியது. மைனாகத்தைத் தொடர்ந்து ஓடிவந்த இந்திரன் குருதிபடிந்த வாளுடன் நின்று அறைகூவினான் “அவனை வெளியே விடு… அவன் சிறகுகளை வெட்டியாகவேண்டும். இது என் வஞ்சினம்.” வருணன் பெருங்குரலில் நகைத்து “விலகிச்செல், இந்திரனே! உன்னால் என் விரிவை வெல்லமுடியாது. இவன் என்றும் என் காவலிலேயே இருப்பான்” என்றான். “உன்னை ஒருநாள் வெல்வேன். ஒருநாள் நீ அவனை காத்தமைக்காக வருந்துவாய்” என்றான் இந்திரன். வருணன் உரக்க நகைத்தான். சினத்துடன் இந்திரன் திரும்பினான்.

மைனாகம் வருணனின் ஆட்சியில் நீருக்குள் வாழ்ந்தது. அது ஒளியை காணவேயில்லை. அங்கே அது தனிமையை உணர்ந்தமையால் வருணன் அதன் நீர்ப்பாவையை ஒரு பெண்ணாக்கினான். அவர்கள் புணர்ந்து மீன்மலைகளைப் பெற்றனர். அவை  மீன்களாயினும் நீருள் மூச்சுவிடும் கலையை கற்கவில்லை. பெருஞ்சிறகுகளை வீசியபடி உடல்வளைவுகளில் நீர்ப்பெருக்கு வழிந்திறங்க வெள்ளி ஒளி வீசி அவை நீருக்குமேல் எழுந்தன. அந்த அலையெழுந்து விரிந்து பெருங்கலங்களை தள்ளாடச்செய்தது. வாலசைவால் கலங்களைச் சிதறடிக்கும் பேருருவும் ஆற்றலும் கொண்டிருந்தன அவை.

அவற்றை காற்றரசன் தன் இளமைந்தர்களென எண்ணினான். வெள்ளி மரம்போல நீரைத் துப்பியபடி அவை பாய்ந்தெழுந்து காற்றின் மடியில் விழுந்து திளைத்தாடின. அமுதென  காற்றை அள்ளி உண்டன. அவை காற்றுறிஞ்சும் சீறலோசை மரக்கலக்காரர்களை அஞ்சவைத்தது. அவை சீறும் ஒலி எரிமலை எழுவதுபோல கேட்டது. அவை நகைக்கும் ஒலி காற்றிலேறி நெடுந்தொலைவு சென்று நாவாய்களில் இருந்தவர்களை கைகளைக்கூப்பி “மைனாக மைந்தர்களே, அருள்க! நெடுங்கடலின் உரிமையாளர்களே, பெருங்காற்றுகளால் பேணப்படுபவர்களே, உங்களுக்கே அடைக்கலம்” என்று கூவச்செய்தது. மைனாகமைந்தர் மானுடர் மேல் கனிவுகொண்டவர்கள் என்று நூல்கள் வாழ்த்தின.

மண்மேல் ஒரு மலையைமட்டும் இந்திரன் சிறகுடன் விட்டுவைத்தான். அதை அவன் இந்திரகீலம் என்று அழைத்தான். அவன் மண்ணுக்கு வரும்போது அவன் ஊர்தியென்றாகி அவனைச் சுமந்து விண்ணில் பறந்தது அது. அதன் குளிர்ச்சோலைகளில் அவன் அரம்பையருடன் காதலாடினான். தேவர்களுடன் விளையாடினான். அது அமர்ந்துசென்ற இடங்களில் அதைப் பார்த்தவர்கள் அது அங்கிருப்பதாக நினைத்துக்கொண்டனர். ஆகவே நூற்றெட்டு இந்திரகீலங்கள் இருப்பதாக தொல்கதைகள் சொல்லின. ஆனால் உண்மையில் அது கிழக்கே சூரியக்கதிர் படியும் முதல் எல்லையில் இந்திரனால் நிறுத்தப்பட்டது.

“வேள்வியமுதை முதலில் பெறுபவன், வேதச்சொல்லால் ஆளப்படுபவன் இந்திரன். தன் இளையோனாகிய த்வஷ்டாவால் அமைக்கப்பட்ட மின்கதிர்படைக்கலம் சூடியவன். அகி, துஷ்ணன், சம்பரன், வலவன் போன்ற அசுரர்களை வென்றவன். சசியென்றும் புலோமசை என்றும் அழைக்கப்படும் இந்திராணியை மணந்தவன், கிழக்குதிசையை ஆள்பவன். இந்திரனால் புரக்கப்படுகிறது இப்புவியும் அவ்விண்ணும். அவன் வாழ்க!” என்றான் சண்டன்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 46

[ 20 ]

இந்திரனின் படைகள் அமராவதியைச் சூழ்ந்து அதன் கோட்டைகளைத் தாக்கி எட்டுவாயில்களையும் உடைத்து உட்புகுந்தன. கோட்டை சரியும் அதிர்வில் தன் கையிலிருந்த மதுக்கிண்ணத்தில் அலையெழுந்ததைக் கண்டுதான் அமராவதி வீழ்ந்தது என்று விருத்திரன் உணர்ந்தான். அப்போதும் எழமுடியாமல்  ஏவற்பெண்டிரை நோக்கி “பிறிதொரு கலம்” என்று மதுவுக்கு ஆணையிட்டான். “இறுதிக் கலம்” என தனக்கே சொல்லிக்கொண்டான்.

இந்திராணி அவனை அணுகி சினத்துடன் “என்ன செய்கிறீர்கள்? உங்கள் கொடியும் கோட்டையும் சரிகின்றன. இன்னும் சற்றுநேரத்தில் அசுரப் படைகள் இங்கு வந்தணையும்” என்றாள். “நீ அஞ்சவேண்டியதில்லை தேவி, என்னை வெல்ல எவராலும் இயலாது” என்றான் விருத்திரன். “எனக்கு எந்தை அளித்த நற்சொல்கள் துணையிருக்கும். இந்திரனின் மின்படை ஒரு மென்மலரென என் தோளில் வந்துவிழுவதை நீ காண்பாய்.”

இந்திராணி அவன் தோளைப்பிடித்து உலுக்கி “பித்தன்போல பேசவேண்டாம். இனி உங்களுக்கு நேரமில்லை. இதோ நகரெங்கும் தேவர்கள் தாக்கப்படும் ஓசை கேட்கிறது” என்றாள். “இன்னொரு கலம் மது. இறுதிக் கலம் எனக்கென எதை வைத்திருக்கிறதென்று ஆவல்கொள்கிறேன். அதன்பின் நான் என் படைக்கலங்களுடன் எழுவேன்” என்றான் விருத்திரன். அவள் தலையிலறைந்துகொண்டு கண்ணீருடன் ஓடிச்சென்று உப்பரிகையில் ஏறி வெளியே பார்த்தாள். வருணகுலத்து அசுரப்படைகள் நீலநிற உடலும் எழுந்துபறக்கும் வெண்பிடரியும் கொண்ட புரவிகளில் நகருக்குள் நிறைவதைக் கண்டாள். “நம் முற்றத்தில்… நம் கூடங்களில்” என்று நெஞ்சைப்பற்றிக்கொண்டு கூவினாள்.

அசுரர்கள் தேவர்களை தங்கள் ஒளிரும் வாள்களால் வெட்டி வீழ்த்தினர். மதுவுண்டு தெருவெங்கும் மயங்கிக்கிடந்த தேவர்கள் தங்கள் இல்லப்பெண்டிரால் உசுப்பி உந்தி எழுப்பப்பட்டு படைக்கலங்களுடன் வெளியே அனுப்பப்பட்டனர். என்ன நிகழ்கிறதென்றறியாமல் அவர்கள் வெற்றுப்போர்க்கூச்சலை எழுப்பினர். அக்கூச்சல் தொண்டையில் எஞ்சியிருக்கவே வெட்டுண்டும் அம்புபட்டும்  விழுந்து மடிந்தனர். மடியும் கணத்தில் அவர்கள் தொலைகனவென மறந்த மானுடவாழ்க்கை மீண்டுவர திகைத்து அத்திகைப்புடன் சிலைமுகம் கொண்டனர்.

அமராவதியின் மாளிகைகளின் அடித்தூண்களை முட்டி இடித்தன நீலப்புரவிகள். அவை முனகியபடி விரிசலிட்டு வெண்புழுதிகொட்ட நோய்கொண்ட யானையென முழந்தாளிட்டு கொம்புகுத்தி சரிந்தன. அவை சரிந்தபோதெழுந்த நிலப்புழுதியால் நகர் பொற்திரையால் என மூடப்பட்டது. எங்கும் ஓலங்களும் கூச்சல்களும் எழுந்தன. அவற்றை வென்று வந்தணைந்தது அசுரப்படைகளின் வெற்றிக்கூவல்.

இந்திராணி மீண்டும் ஓடிவந்து “அரசே, எழுங்கள்… அரண்மனைக்குள் நுழைந்துவிட்டது அசுரர்படை” என்றாள். “ஆம், நான் எழுந்தாகவேண்டும். எங்கே என் படைக்கலம்?” என்றான் விருத்திரன். அவள் ஓடிச்சென்று அவன் படைக்கலங்களை கொண்டுவந்து கொடுத்தாள். நிலைகொள்ளா உடலுடன், அலையும் கைகளுடன் அவன் ஒளிரும் கவசங்களையும் காலணிகளையும் அணிந்துகொண்டான். நீண்ட வாளை வலக்கையிலும் சென்றுதிரும்பும் வேலை இடக்கையிலும் ஏந்தியபடி போருக்கெழுந்தான்.

அவனால் நிற்கமுடியவில்லை. கால்கள் தள்ளாட அரண்மனைச் சுவரை பற்றிக்கொண்டான். “சென்று போரிடுங்கள்… வீரனென களம்நில்லுங்கள்!” என்றாள் இந்திராணி. “இதோ” என்று அவன் அரண்மனையின் படிகளில் இறங்கினான். ஒருகணம் ஏன் போரிடவேண்டும் என்னும் சலிப்பு எழுந்து அவன் மேல் இனிய துயிலெனப் பரவியது. எவருக்காக இந்நகரை நான் தூக்கி நின்றிருக்கவேண்டும்? நான் இதைப் பற்றியிருக்கிறேனா, இதில் கட்டுண்டிருக்கிறேனா?

அந்த அரக்குப்பரப்பிலிருந்து தன்னை கிழித்துப்பிரித்து மெல்ல கீழிறங்கிச் சென்றான். மாமுற்றமும் களமும் ஒழிந்துகிடந்தன. காவல்நின்றிருந்த தேவர்கள் ஓடி ஒளிந்துகொண்டிருந்தனர். வற்றியகுளத்தில் மீன்கள் இறந்து பரந்திருப்பதுபோல அவர்கள் கைவிட்டுச்சென்ற படைக்கலங்கள் சிதறிக்கிடந்தன. தோற்ற களம் உண்ட பந்திபோல கொண்ட வெறுமை. களத்தில் விளைவது விஜயலட்சுமி என்று யார் சொன்னது?

அவன் முற்றத்தில் இறங்கியதும் வருணன் அளித்த நீலப்புரவிமேல் நுரைவாளை வீசியபடி கிழக்கு முனையில் இந்திரன் தோன்றினான். “இழிமகனே, இன்று உன்னைக் கொன்று குருதிசூடவே வந்தேன்” என்று வஞ்சினம் உரைத்தபடி பாய்ந்து அணுகினான். அவன் புரவியின் பிடரி பறந்தது. அவன் கவசங்களில் அரண்மனையின் படிமம் அலையடித்தது.

சுட்டுவிரல் சொடுக்கி எழுப்பிய அம்புபோல இந்திரனின் அச்சொல் அவனுள் சினம் எழச்செய்தது. காலை ஓங்கி உதைத்து அலறியபடி முன்னால் பாய்ந்தபோது விருத்திரனின் உடல் நாகமென நீண்டது. அவன் கைகள் விரிந்து கழுகின் சிறகுகளாயின. பிடரியில் செஞ்சடை விரிந்து சிம்மமுகம் கொண்டான். யானையெனப் பிளிறியபடி தன் வாளைவீசி இந்திரனின் புரவியை இருதுண்டுகளாக ஆக்கினான். குருதி பெருக விழுந்து துடித்தது அது. இந்திரனின் தலைக்கவசம் ஓசையுடன் தரையில் விழுந்து உருண்டது. அவன் தலை அது என அவன் உள்ளம் களிவெறிகொண்டது.

விழுந்த புரவி நிலம்தொடுவதற்குள் கால்களால் உந்திப் பாய்ந்தெழுந்து பிறிதொரு புரவிமேல் ஏறிக்கொண்டான் இந்திரன். வாளுடன் அணுகிய தன் வீரரை நோக்கி “விலகுக, இது என் போர்” என்று வாளைச் சுழற்றியபடி அவன் கூவினான். விருத்திரன் அவன் புரவியை மீண்டும் துணித்தான். இந்திரன் அலைநுரைவாளுடன் பாய்ந்து விலகுவதற்குள் அவன் தோளைவெட்டியது விருத்திரன் வாள்.

குருதிசிந்தியபடி ஓடிச்சென்று பிறிதொரு புரவியில் ஏறி தன் வாளை வீசினான் இந்திரன். அது கண்கூசும் ஒளியுடன் வந்து விருத்திரனை தாக்கியது. வெட்டுண்டு நிலத்தில் விழுந்து புரண்டு எழுந்தான். அவன் வால் குருதியுடன் கிடந்து துடிப்பதைக் கண்டான். கவிழ்க்கப்பட்ட கலத்து நீர் என குருதி சிற்றலையெனச் சென்று சுவர்களை மோதிப்பரந்தது. குருதிவாசனை அவனை பற்றி எழச்செய்தது. வெறிக்கூச்சலுடன் கைகளால் நிலத்தை அறைந்தபடி பாய்ந்து இந்திரனின் புரவியை வெட்டினான்.

அலறியபடி மேலெழுந்த இந்திரன் தொடைவெட்டுபட்டு புழுதியில் விழ வாருணப்படைகள் பாய்ந்து அவனை அள்ளி திருப்பிக் கொண்டுசென்றன. சுவர்கள் அதிரும் பிளிறலுடன் விருத்திரன் விண்ணில் சிறகடித்தெழுந்தான். அவன் சிறகுகளின் நிழல் அமராவதியின் தெருக்களெங்கும் பரவிக்கிடந்த தேவர்களின் சடலங்களின் மேல் பறந்தலைந்தது.

இந்திரன் குருதிவார அசுரர் கைகளில் கிடந்து துடித்தான். அசுரர்கள் விருத்திரனின் விரிவுரு கண்டு அஞ்சி அலறியபடி விலகி ஓடினர். சிலர் இந்திரனை இழுத்துச்சென்று இடிந்த மாளிகையின் சுவர்களுக்குள் ஒளித்தனர். மண்ணில் பல்லாயிரம் வேள்விநெருப்புகளில் விழுந்த நெய்யால் இந்திரன் மீண்டும் குருதியூறப்பெற்றான். புதுவிசையுடன் எழுந்து புரவியில் ஏறிக்கொண்டு சென்று வெளிமுற்றத்தில் நின்றான். “வா! வா!” என அறைகூவல்விடுத்து வாளை தூக்கினான்.

சிறகுக்காற்று விம்மலோசை எழுப்ப கழுகென அகவியபடி வந்து அவனை தாக்கினான் விருத்திரன். எம்பிப்பாய்ந்து பற்றவந்த அவன் உகிர்எழுந்த செதிற்கால்களை இந்திரன் வெட்டி வீசினான். நிலையழிந்து சரிந்துசென்று மண்ணில் விழுந்து துடித்து சிறகைவீசி மீண்டும் காற்றிலேறினான் விருத்திரன்.

இந்திரன் வெட்டுண்ட புரவியிலிருந்து இறங்கி ஓடி அரண்மனைக்குள் சென்று தன் அரியணைமேல் அமர்ந்தான். அக்கணமே ஐராவதம் பிளிறியபடி அதைக் கட்டியிருந்த சங்கிலியை உடைத்துக்கொண்டு மாமுற்றத்திற்கு வந்தது. அதன்மேல் அவன் ஏறி விண்ணிலெழுந்தான். பறந்துவந்து சூழ்ந்த விருத்திரனின் பிடரிகளை செவிகளுடன் அவன் வாள் சீவி எறிந்தது. பின் அவன் சிறகை கைகளுடன் அரிந்தது.

இந்திரனின்மேல் மழையெனப் பெய்தது விருத்திரனின் குருதி. அவன் உடல் செவ்வரக்கில் முக்கிய பொன்னகை என தோன்றியது. மீண்டும் மீண்டும் விருத்திரன் இந்திரனை தன் வாளால் வெட்டினான். இந்திரனின் இருகால்களும் செயலற்றன. ஒற்றைக்கை செயலற்றது. அவன்குருதியும் அசுரன்குருதியும் ஒன்றெனக்கலந்து பெய்து அமராவதி சிவந்தது.

வலச்சிறகு வெட்டப்பட்டதும் விருத்திரன் பிளிறலோசையுடன் சரிந்து சென்று கிழக்குவானில் விழுந்தான். அங்கிருந்து ஒற்றைச்சிறகை அசைத்தபடி பறந்து திசைமடிப்புக்குள் மறைந்தான். இந்திரன் தன் வியோமயானத்தை வரவழைத்து அதில் ஏறிக்கொண்டு சென்றான். வான்வெளியெங்கும் சொட்டிக்கிடந்தன குருதித்துளிகள். அதை நோக்கி தடம்தேடி அவன் விருத்திரனை துரத்திச்சென்றான். அதன் மேல் அவன் விமானம் ஊர்ந்துசெல்ல செந்நிறக்கீற்றென வானில் விரிந்தது அப்பாதை.

விருத்திரன் மண்ணிலிறங்கி தன் புற்றிகபுரியை தேடிச்சென்றான். அங்கே நீலக்கடல் அலைகளே நிறைந்திருக்கக் கண்டான். அவனுடைய தொல்குடியினர் சிதறி அழிந்திருந்தனர். அவர்கள் வாழ்ந்த சுவடே எங்குமிருக்கவில்லை. தன் நகர் இருந்த நிலம் மேல் அவன் தவித்தலைந்தான். “மூதாதையரே, தந்தையரே, என் தோழர்களே” என்றுகூவினான். அலைகள் ஒன்றுமறியாத அமைதிகொண்டிருந்தன.

விருத்திரன் கடல்மேல் இறங்கி ஒற்றைச்சிறகை அடித்தபடி கூவினான் “என் குலமூத்தவரே, வருணரே, எனக்கு அடைக்கலமளியுங்கள். என் குலம்காக்க உதவுங்கள்!” வருணனின் ஓசை புயல்சுழலென எழுந்தது. “ஒரு குடியில் ஒருவரே மூத்தவனாக அமையமுடியும். மூடா, இனி நானே அசுரமுதல்வனும் தேவனும் ஆவேன். செல்க!” விருத்திரன் “நம் தொல்குடி வேதச்சொல்லெடுத்து ஆணையிடுகிறேன். எனக்கு துணைநிற்க!” என்றான். “நம் தொல்குடி வேதம் மானுடரின் வேதமென்றாகிவிட்டது. இக்கணம் பல்லாயிரம் வேள்விக்குளங்களில் எனக்கென அவி பெய்யப்படுகிறது. அவிகொண்டு என் உடல் ஒளிபெற்றுக்கொண்டிருக்கிறது” என்றான் வருணன்.

விண்ணில் வண்டுமுரலும் ஒலிகேட்டு விருத்திரன் திரும்பிநோக்கினான். செங்குருதியால் நனைந்த வியோமயானம் ஒரு தெச்சிமலர் மொட்டு என தெரிந்தது. செங்கமலமென்றாகியது. செம்முகிலென விரிந்தது. அதன் ஒலிகேட்டு முகில்கணங்கள் பிளிறின. மலைச்சரிவுகள் முழங்கின. ஒற்றைச்சிறகுடன் விருத்திரன் திரும்பி ஓடினான். நிலைசரிந்து விழுந்தும் எழுந்தும் விரைந்து காட்டுக்குள் புகுந்தான். அவன்மேல் கிளைகள் அமைத்த பச்சைக்கூரை விரிய அதற்கு அப்பால் இந்திரவிமானத்தின் ஓசை மணற்புயல் சருகுப்பரப்பில் பொழிந்ததுபோல் ஒலித்தது.

இந்திரன் மரங்கள் சிதறித்தெறிக்க மண்ணிலிறங்கினான். நுரைவாளைச் சுழற்றி மரங்களையும் மலைப்பாறைகளையும் வெட்டிச் சிதறடித்தபடி விருத்திரனை துரத்தினான். “நான் இறக்க விழைகிறேன். தவம்செய்து முழுமைகொள்ள என்னை விட்டுவிடு” என்று ஓடியபடியே விருத்திரன் கூவினான். “இனி பகை ஒருதுளியும் எஞ்சாது. இப்புவியளவு பழிகொண்டாலும் சரி, இனி நான் எண்ணுவதன்றி உனக்கு இருப்பில்லை” என்றான் இந்திரன்.

விருத்திரன் விழுந்தும் எழுந்தும் ஓடிச்சென்று ஒரு மலைமேல் ஏறியபோது திறந்தவாய் என ஒரு குகையைக் கண்டான். அதற்குள் புகுந்து இருளில் மறைந்தான். அதன் வாயிலில் வந்துநின்ற இந்திரன் வாளை பாறைமேல் ஓங்கியறைந்து “வெளிவருக, அசுரனே! வெளிவந்து உன் இறப்பை அடைக! ஊழ் முடிந்தது உனக்கு” என்று அறைகூவினான்.

உள்ளிருந்து உறுமலோசைகள் மட்டும் கேட்டன. மும்முறை அழைத்தபின் சினம் கொண்டு உறுமியபடி குகைக்குள் வாளுடன் புகுந்த இந்திரன் அதன் இருளுக்குள் விழியிழந்து தடுமாறினான். இருளுக்குள் அசுரனின் பெருங்குரல் எழுந்தது. “வளரும் பெருங்குகை இது. இதன் பெயர் விருத்திரம். இது என் உடல். இந்திரனே, நீ என் வாய்க்குள் நுழைந்திருக்கிறாய். எனக்கு உணவாவாய்!” குகையின் மேற்கூரைகள் தசைகளாகி இறுகி நெருங்கின.

அதன் வெம்மையும் மென்மையும் கொண்ட கௌவலில் சிக்கிக்கொண்ட இந்திரன் தன் வாளை நிலத்திட்டு கைவிரித்து “விருத்திரனே, நான் உன் உடலுக்குள் இருப்பதனால் உன் மைந்தன். என்னைக் கொன்றால் நீ மைந்தனைக் கொன்ற பழிக்கு ஆளாவாய்” என்று கூவினான். அசுரனின் பெருநகைப்பு நின்றது. குகை ரீங்கரித்தது. பின் பெருமூச்சு விட்டது. சுவர்கள் பிதுங்கி சேறென வந்து அவனை உந்தி வெளித்தள்ளின.

ஒரு சிறு குகைவாயிலினூடாக இந்திரன் உடலெங்கும் நிணச்சேற்றுடன் பிதுங்கி வெளிவந்து விழுந்தான். குகைக்குள்ளிருந்து முழங்கும் குரல் “நலம் சூழ்க, மைந்தா!” என்று ஒலித்தது. அவன் புரண்டு எழுந்து “கொன்று செல்க படைக்கலமே!” என  தன் நுரைவாளை குகைக்குள் வீசினான். “அந்நெஞ்சிருப்பது எங்கென்று நீ அறிவாய். குருதிகொள்க!” என்று கூவினான்.

KIRATHAM_EPI_46

குகையிருளுக்குள் விருத்திரன் அலறல் எழுந்தது. அவன் வாழ்த்துக்குரலெழுந்த திசைநாடிச் சென்ற வாள் நெஞ்சில் பாய்ந்து வெட்டி உள்ளே சென்றது. “மைந்தா!” என்று அலறியபடி விருத்திரன் விழுந்து இருளுக்குள் சென்றுகொண்டே இருந்தான். அந்த ஒலி நெடுந்தொலைவுக்கு அப்பால் மேலும் அப்பால் என ஒலித்தது. ஓய்ந்தபின் குகை “ஆம் ஆம் ஆம்” என கார்வை மீட்டியது.

இந்திரன் மலையிலிருந்து இறங்கிவந்து திரும்பி நோக்கினான். நான்குமுகம் கொண்ட அம்மலையின் முகங்கள் அனைத்தும் ஊழ்கத்திலாழ்ந்திருந்தன.  அவன் அதை நோக்கியபடி அங்கே நின்றிருந்தான். பெருமூச்சுடன் திரும்பும்போது அங்கே  நாரதர் தோன்றினார். “மீண்டும் நீ வென்றாய். உன் நகரும் கொடியும் முடியும் இருள்மீண்டன. நீ வாழ்க!” என்றார். “ஆம்” என அவன் சோர்வுடன் சொன்னான்.

“உன் சோர்வை அறிகிறேன். ஆம், முறைப்படி நீ விருத்திரனின் மைந்தன் என்றானாய். மைந்தனாக ஆன பின்னர்தான் உன் அலைப்படைக்கலம் இலக்கடைந்தது” என்றார். அவன் தன் கைகளைத் தூக்கிப் பார்த்தான். “மெய், அவை தந்தையின் குருதிகொண்டுள்ளன. ஆனால் இது உன் கடன். எனவே இப்பழியும் உன் பொறுப்பே. அதை சுமந்தாகவேண்டும்” என்றார் நாரதர்.

“நான் என்ன செய்யவேண்டும், நாரதரே?” என்றான் இந்திரன். “தாதைப்பழி தீர்க்கும் தூயநீர்ச்சுனைகளிலாடுக! மும்முறை அக்குருதியை நீ கழுவியாகவேண்டும். உன் எதிரியின் குருதியை ஒருமுறை.  உன் தந்தையின் குருதியை மறுமுறை. மறைதேர்ந்த மெய்யறிவனின் குருதியை மூன்றாம் முறை” என்றார் நாரதர். “அதன்பின் உன் தந்தைக்கு ஆண்டுதோறும் நீர்க்கடன் செய்க! அவர் அருளும் நற்சொல் உன்னுடன் திகழும்.”

நீராடி தூய்மை பெற்று நோன்பிருந்து உளமொழிந்து மீண்டும் அரசத் தோற்றத்தில் இந்திரன் அமராவதிக்கு மீண்டபோது அவன் விட்டுவந்த தோற்றத்தில் இந்திராணி  காத்திருந்தாள். அணிகுலுங்க அவனை அணுகி கனிந்த விழிகளுடன்  “வருக அரசே, இந்நகர் தங்கள் காலடிகளுக்காக காத்திருக்கிறது” என்றாள். அவன் தன் செல்வங்களை மாளிகைகளை நகரை குடிகளை நோக்கினான். ஒருகணத்தில் சிறுதுளியில் அனைத்தும் எவருடையவோ கனவுதான் என்னும் உளமயக்கை அடைந்தான்.

முனிவர் வாழ்த்தி அரிமலர் சொரிய வேதமொலிக்க விண்நீர் பொழிந்து நெறிநின்றோர் அழைத்துச்சென்று இந்திரனை அரியணை அமர்த்தினர். இந்திராணி இடம் அமர அவன் அத்துலாமையத்தில் அமர்ந்தான். மண்ணில் வேள்விகள் பெருகின. அவிசொரிந்து தேவர்களைப் பெருக்கினர் மானுடர். மீண்டும் தேவபுரி பொலிவுகொண்டு எழுந்தது. அதன் மேல் இந்திரனின் மின்கொடி பறந்தது.

[ 21 ]

“விருத்திரன் உள்ளே சென்று மறைந்த குகைவாயில் அது என்று என்னிடம் கபாலர் சொன்னார்” என்றான் பிரசண்டன். “அவர் உள்ளே சென்று மறைந்தபின் அக்குகை நூற்றெட்டுநாட்கள் விம்மலோசை எழுப்பிக்கொண்டிருந்தது. அவ்வோசையை மலைக்காடுகளுக்குள் ஒளிந்துவாழ்ந்த அசுரகுடிகள் கேட்டன. அவர்கள் முழவுகளை முழக்கியபடி பூசகர் தலைமையில் அக்குகையை தேடிவந்தனர். குகைவாயிலில் இருந்து குருதிவழிந்து அரக்குபோல அலையலையாக இறங்கியிருப்பதைக் கண்டனர்.”

“வெறியாட்டெழுந்த முதுபூசகர் அது விருத்திரன் மறைந்த படுகளம் என்று உரைத்தனர். அங்கே அவரை தெய்வமாக்கி வழிபட்டனர். பின் அவர்களில் ஒருசிலர் மேலே அக்குருதிப்பரப்பைக் கடந்துசென்று நோக்கியபோது குகைமுகப்பில் பாறைச்செதுக்கு என தெரிந்த விருத்திரனின் முகத்தை கண்டடைந்தனர். மூதாதையைக் கண்ட முதற்பூசகன் கைகால்கள் இழுக்க விழுந்து வாய்நுரைகொள்ள துடித்தான். முழவுமீட்டி குரவையிட்டு அவன் காலடியில் தங்கள் குலமைந்தரை வைத்து வணங்கினர். மூதாதையின் குருதியைத் தொட்டு நெற்றியிலணிந்து வழிபட்டனர்.”

“விருத்திரனின் குருதி அந்த மலையின் மூன்று குகைவழிகளினூடாக வழிந்து மலையடிவாரத்தில் இறங்கி அங்குள்ள மூன்று சுனைகளில் தேங்கியது. அங்கமலதம், மலஜம், கரூஷம் என அச்சுனைகள் அழைக்கப்பட்டன” என்று பிரசண்டன் சொன்னான். “நான் அச்சுனைகளுக்கு சென்று பார்த்திருக்கிறேன். விருத்திரனைக் கொன்ற பழிதீர இந்திரன் வந்து அந்தச் சுனைகளில் நீராடி தன்னை தூய்மைப்படுத்திக்கொண்டான் என்கிறார்கள் தொல்கதைசொல்லிகள். முன்பு ராகவராமன் காடேகியபோது விஸ்வாமித்திர முனிவருடன் அங்கே சென்று நீராடி குலப்பழி களைந்ததாக தொல்காவியம் சொல்கிறது.”

“ஆம், நானும் அதை கேட்டிருக்கிறேன். இங்கிருந்து நான்கு நாட்கள் வழிநடைத் தொலைவிலுள்ளன அந்த சுனைகள்” என்று பிரசாந்தர் சொன்னார். “முதல் சுனையாகிய அங்கமலதம் மானுடர் நீராடுவது. கலங்கலான செந்நீர் அதில் தேங்கியிருக்கும். அதன் கரைச்சேறு செந்நிணம்போலிருக்கும். இரண்டாவது சுனையாகிய மலஜம் சற்று பெரியது. அது தேவர்களுக்குரியது. அதில் செந்நிற நிணம் மிதக்கும். அதன்சேற்றுக்கு குருதிமணம் உண்டு. அதற்கப்பாலுள்ள கரூஷம் கரியநிறமுடையது. கருநிறச்சதுப்பால் சூழப்பட்டது. அந்நீரை கையில் அள்ளி நோக்கினால் குருதிபோல சிவந்திருக்கும். அது அசுரர்களுக்குரியது.”

இளவேனிற்காலத்தில் வேதியர் சிறு கூட்டங்களாக காட்டுக்குள் சென்று அங்கமலதத்தின் கரையில் மூதாதையான விருத்திரனுக்கு நீத்தார்கடனும் பழிநீங்கு பூசனைகளும் செய்கிறார்கள். அப்போது பித்ருவனம் என்னும் அந்தக் காடு முழுக்க அனைத்து மரங்களும் அனல்கொண்டதுபோல செந்நிற மலர்களால் நிறைந்திருக்கும். புதர்களும் சிறுசெடிகளும்கூட குருதிநிறப்பூக்களையே கொண்டிருக்கும். செங்காந்தள் மலர்களாலும் குங்கும செந்தூர செங்களப விழுதுக்கலவையாலும் விருத்திரனை பூசனை செய்வார்கள். இளங்கள்ளும் தேனும் கலந்து நெய்யுடன் அவியிலிடுவார்கள். கலைமான், இளம்பன்றி, வெள்ளாட்டு ஊன்களைக் கலந்து எரியூட்டுவர். பலிவிலங்கின் குருதிகலந்த சோறே அவிமிச்சமென அளிக்கப்படும்.

அந்த மகாஅபராதவேள்வி இரவும்பகலும் இடைவிடாது நிகழும். மழைவிழுந்து வேள்வித்தீ அணையுமென்றால்தான் அப்படையலை விருத்திரன் ஏற்றுக்கொண்டான் என்றுபொருள். அதுவரைக்கும் வேள்வியாளர்களும் வருகையாளர்களும் உணவோ நீரோ கொள்வதில்லை. ஒருபொழுது உண்டு ஏழுநாட்கள் நோன்பிருந்து பன்னிருநாட்கள் நடந்து அங்கு வந்துசேர்ந்தவர்கள் அவர்கள். நான் சென்ற அன்று ஏழாவது நாளாக வேள்வி நிகழ்ந்துகொண்டிருந்தது. நூற்றெட்டு அந்தணர் வேள்விகளைச் செய்ய ஆயிரம் பேருக்குமேல் அங்கே கூடியிருந்தனர். வேள்விப்புகை எழுந்து மேலே சென்று முகிலை தொட்டிருந்தது.

பலர் சோர்ந்து ஆங்காங்கே படுத்துவிட்டனர். அன்று உச்சிப்பொழுதில் காட்டின் வெப்பம் கூடிக்கூடி வந்தது. அனைத்து இலைகளும் வாடியவை போலிருந்தன. வாடிய இலைமணம்கொண்ட வறண்ட காற்று சுற்றிவந்தது. அவ்வப்போது அங்கே வந்து மக்களைக் கண்டு திகைத்து திரும்பி ஓடிய உடும்புகளின் கண்களில் வெப்பத்தின் துயரம் தெரிந்தது. பெருமூச்சு விட்டுக்கொண்டு வியர்வையை மீண்டும் மீண்டும் துடைத்தபடி காத்திருந்தோம். எப்போதாவது காட்டின் உயிர்ப்பு என மெல்லிய காற்று வந்து தொட்டபோது இனிய நினைவு ஒன்று எழுந்ததுபோல உடல்சிலிர்த்தது.

விடாய்கொண்டு உடல்சோர்ந்து நானும் ஒரு பாறைமேல் அமர்ந்துவிட்டேன். அப்போது குரல்கள் வெடித்தெழுந்தன. புலியோ யானையோ வந்துவிட்டதென்று உணர்ந்து எழுந்துநின்று நோக்கியபோது என் தோளில் ஒரு நீர்த்துளி விழுந்தது. அதிர்ந்து உடல் சிலிர்க்க நோக்குவதற்குள் மூக்கில் ஒன்று. இன்னொன்று மார்பில். கையால் தொட்டு நோக்கினேன். அவை செந்துளிகள். குருதிபோலவே விரல்கள்நடுவே பசையாக ஒட்டின. மேலே நோக்கியபோது மலைகளுக்கு அப்பாலிருந்து முகில்குவை ஒன்று வந்து அப்பகுதியை மூடியிருப்பதைக் கண்டேன். சுனைநீரில் முகிலின் முழுவடிவை காணமுடிந்தது. அது ஒரு முகமென நான் எண்ணிக்கொண்டேன்.

சற்றுநேரத்திலேயே மழைபொழிந்து வேள்வித்தீ முற்றணைந்தது. வேள்விக்கு அமர்ந்திருந்த வைதிகர்கள் அவிமிச்சத்தையும் சாம்பலையும் மலர்களையும் சிறுசுடுமண் கலங்களில் எடுத்துக்கொண்டு சுனையில் இறங்கி அதை நீரில்விட்டுவிட்டு மும்முறை மூழ்கி நீராடி எழுந்தனர். நீரின் செவ்வலைகள் எழுந்து செஞ்சேற்றை நக்கியபடி வளைந்தன. கூடிநின்ற அனைவரும் “விருத்திரனே, விரிபவனே, மூத்தவனே, தந்தையே, வாழ்த்துக எங்களை!” என்று கூவியபடி நீரில் இறங்கி மூழ்கி நீராடினர். “பலர் அழுதுகொண்டிருப்பதை பார்த்தேன்” என்றார் பிரசாந்தர். “நானும் அன்று அழுதேன்.”

“அது பசியாலும் விடாயாலும் வந்த அழுகையாகக்கூட இருக்கலாம்” என்றான் பிரசண்டன். பிரசாந்தர் தலையை மட்டும் அசைத்தார். “கரூஷத்தில் அசுரகுடிகளின் மாமத நீராட்டுக்கு நான் சென்றிருக்கிறேன்” என்றான் பிரசண்டன். “பெயல்பொழிந்து காடுமூடியிருக்கும் கார்காலத்தில் முதல்நிலவு அன்று தேவர்கள் வந்து இறங்கி மலஜம் என்னும் சுனையில் நீராடுவார்கள் என்று சொல்கிறார்கள். தொலைவில் மலையுச்சிகளில் நின்று நோக்கினால் தேவர்கள் நீராடும் அலைவளையங்களை அச்சுனைநீரில் காணமுடியும். குளிர்காலத்தில் கார்த்திகைக் கருநிலவில் அசுரர்கள் கரூஷமென்னும் சுனையில் நீராடுவார்கள்.”

கார்த்திகை முழுக்க அவர்கள் குலங்களாகக் கிளம்பி காட்டுவழியில் நடந்து வந்து அச்சுனையருகே சிறுகுடில்கள் கட்டி தங்குவார்கள். அங்கேயே காயும் கனியும் உண்டு வாழ்வார்கள். பகலும் இரவும் விருத்திரனின் புகழ்பாடும் தொல்பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்கள். இரவில் நெருப்பிட்டு அதைச் சூழ்ந்து அமர்ந்து ஊனுணவைச் சுட்டு உண்டபடி கள்ளருந்தி நடனமிட்டபடி காத்திருப்பார்கள். அசுரகுலங்கள் வந்து பெருகிக்கொண்டே இருக்கும். நூற்றெட்டு தொல்குடியினர் அவர்கள். ஒரு குடியிலிருந்து ஒருவரேனும் வந்தாகவேண்டுமென்பது நெறி. ஆனால் ஒவ்வொருமுறையும் சில குலங்கள் மறைந்துவிட்டிருப்பதையே காண்பார்கள்.

ஒவ்வொரு குலமாக அணுக அணுக கூச்சலிட்டபடி ஓடிச்சென்று அள்ளித்தழுவி கண்ணீர் உகுப்பார்கள். அன்னையர் அள்ளி மடியிலமர்த்திக் கொள்ள தந்தையர் தலைதொட்டு வாழ்த்துவார்கள். குலங்கள் ஒன்றுசேரும் விழவுகளில் ஒன்று அது. கருநிலவுநாளன்று பொழுதுதிகைந்ததும் குலப்பூசகர் எழுந்துசென்று அங்கிருக்கும் காலமஸ்தகம் என்னும் பாறைமேல் ஏறிநின்று தன் இடையிலிருக்கும் கொம்பை எடுத்து மும்முறை பிளிறலோசை எழுப்புவார். அனைத்து அசுரர்களும் ஆண் பெண் மைந்தரென பிரிவின்றி நீரில் பாய்ந்து நீராடுவார்கள்.

அது ஒரு கட்டிலாக் களியாட்டு. சேற்றில் விழுந்து புரள்வார்கள். ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டும் தழுவியும் துள்ளிமறிவார்கள். தோள்பெருத்தோர் மல்லிடுவார்கள். சில தருணங்களில் அது போரென்றே ஆகும். சிரிப்பும் அழுகையும் பின்னர் காமமென ஆகும். உடலிணைந்து சேற்றுக்குள் திளைப்பார்கள். கரூஷத்தின் கரையில் அனைத்துப் பெண்களும் கருவுற்றாகவேண்டுமென்பது நெறி. அச்சுனையின் நீரின் ஒரு துளி உடலில் பட்டால்கூட விருத்திரனின் மைந்தர்கள் பெண்ணுக்குள் முளைவிடுவார்கள் என்று பாடல்கள் சொல்லின.

“அன்று நான் கரையமர்ந்து நோக்கியிருந்தேன். அவர்களில் ஒருவனல்ல நான் என்றே என்னை உணர்ந்தேன். என் மொழிமட்டும் அவர்களுக்கும் உரியது. எனவே அவர்கள் ஓய்ந்து களைத்து கரைநீந்தி வந்து காடுகளுக்குள் ஆங்காங்கே விழுந்து உறங்கத் தொடங்கியபோது ஒவ்வொரு முகமாக சென்று நோக்கினேன். மலர்ந்தவை, துயர்கொண்டு தணிந்தவை. பின் என் முழவை எடுத்து அவர்களைப் போற்றிப் பாடலானேன்” என்றான் பிரசண்டன். “அந்தப் பாடலை பல்லாண்டுகாலம் நான் பாடிக்கொண்டிருந்தேன். அதை பிறரும் பாடலாயினர். பின்னர் குப்த சந்திரசூடரின் விருத்திரப்பிரபாவத்தில் சமாப்திப் பாடலாக அதை கேட்டேன்.”

பொய்யான தன்னிகழ்ச்சி கலந்த சிரிப்புடன் “அதைப் பாடிய குணதனிடம் சொன்னேன், அப்பாடலைப் பாடியவன் அழிவற்றவன், அவன் என்றுமுள்ள ஒன்றின் நாக்கு என. ஆம் என்று அவன் சொன்னான்” என்றான் பிரசண்டன். பிரசாந்தர் “அது உண்மை, சூதரே” என்றார். அவர்கள் மெல்ல புரண்டு மல்லாந்துபடுத்தனர். பிச்சாண்டவர் குனிந்து நீறெழுந்த குவையை குச்சியால் கிளறினார். “இவர் எதையாவது கேட்கிறாரா?” என்றார் பிரசாந்தர். “நான் பார்த்தது முதல் இப்படித்தான் இருக்கிறார். இவருக்குள் வேறு குரல்கள் ஒலிக்கின்றன போலும்” என்றான் பிரசண்டன். “நெருப்பு எஞ்சியிருக்கிறதா?’ என்று பிரசாந்தர் கேட்டார். “இல்லை, அணைந்துவிட்டதென்று நினைக்கிறேன்” என்றான் பிரசண்டன்.

ஆனால் நெருப்பு குகைக்குள் வந்த காற்றால் ஊதப்பட்டு மீண்டும் கண்விழித்தது. “எளிதில் அணைவதில்லை. இவை காட்டுவிறகுகள்” என்றார் பிரசாந்தர். பிரசண்டன் “அந்தணரே, அங்கே விருத்திரனை வழுத்தி அந்தணர் ஓதிய வேதம் எது? அசுரர்களின் வேதமா அன்றி அந்தணர் வேதமா?” என்றான். “வேதம் கங்கை போன்றது. அது ஊறிவரும் மலைகளை இதுவரை மானுடர் ஒருமுறையேனும் நோக்கியிருக்கமாட்டார். இனி என்றும் அதை முழுக்க நோக்கப்போவதுமில்லை” என்றார் பிரசாந்தர்.

இருமல்போல் ஓசைகேட்க இருவரும் திரும்பி பிச்சாண்டவரை நோக்கினர். “இவர் மூன்றாவது முகம்போலும்” என்றான் பிரசண்டன் சிரித்தபடி. இருமல் அல்ல சிரிப்பு என்று பின்னர்தான் தெரிந்தது. அவர்கள் திகைப்புடன் நோக்கி சிலைத்திருக்க அவர் எண்ணி எண்ணி உவகைகொள்பவர் போல சிரித்தார். ஒற்றைக்கண்ணில் இருந்து நீர் வழிந்தது. இருவரையும் மாறிமாறி நோக்கி உடல்குலுங்கி அதிர கைகள் வலித்து நெகிழ சிரித்துச் சிரித்து மூச்சுவாங்கினார். அவர்கள் ஏதென்று அறியாமலேயே அச்சிரிப்பைக் கேட்டு நாணினர்.

பிரசண்டன் வெளியே பார்த்தான். மழை விட்டிருந்தது. விடிந்து இளநீலநிறமாக காற்று உள்ளொளி கொண்டிருந்தது. வெளியே சென்றாலென்ன என்னும் எண்ணம் எழுந்தது. பிரசாந்தரை நோக்க அவர் விழிகளும் அச்சத்துடன் வந்து பிரசண்டனின் விழிகளை தொட்டுச்சென்றன. சிரித்து தளர்ந்தவர் போல இருகைகளையும் பின்னால் ஊன்றி மல்லாந்தார் பிச்சாண்டவர். மேலிருந்து குளிர்ந்த நீர்த்துளி தன்மேல் விழுந்தபோது பிரசண்டன் திடுக்கிட்டான். பிரசாந்தர் “ஊற்று” என்றார். பிரசண்டன் தொட்டுநோக்கி “சேறு” என்றான்.

பிரசாந்தர் விரல்களை அசைத்து “குருதிபோல பிசுக்கு” என்றார். நீர்த்துளிகள் அவர்கள் மேல் தொடர்ந்து விழத்தொடங்கின. “குருதிமழை” என்றார் பிரசாந்தர். சிரிப்பொலி ஓய்ந்திருக்கக் கண்டு அவர்கள் பிச்சாண்டவரை நோக்கினர். அவர் அமைதியான முகத்துடன் கண்களை மூடி மழையை ஏற்றுக்கொண்டு மல்லாந்திருந்தார். சற்றுநேரத்தில் அவர்களை அக்குருதிமழை முழுமையாக மூடிக்கொண்டது. குகையின் ஆழத்தில் நீர் ஊறிவிழும் ஒலி கேட்டது. அது உறுமலென விம்மலென பொருள்கொண்டது. குருதி இளஞ்சூடாக ஊன்மணத்துடன் இருந்தது. எழுந்து விலகவேண்டும் என எண்ணியபடி உடலை அசைக்கமுடியாதவர்களாக பிரசண்டனும் பிரசாந்தரும் அங்கே அமர்ந்திருந்தனர்.

முழவை மீட்டி நிறுத்தி சண்டன் சொன்னான். “வணிகர்களே, உங்கள் குலம் தழைப்பதாக! அழியா மூதாதையின் அருள் உங்கள் குருதிகளில் விதைகளாக நிறைவதாக! உங்கள் மங்கையர் அன்னையராகுக! உங்கள் மைந்தர் நிழல்மரங்களாகுக! உங்கள் கொடிவழி தளிர் நீட்டி எதிர்காலத்தைத் தொட்டு சுருண்டெழுக! ஆம், அவ்வாறே ஆகுக!” வணிகர்கள் “ஆம் ஆம் ஆம்” என வாழ்த்தினர். பைலனும் சுமந்துவும் மெல்ல உடலசைந்து இயல்புநிலைக்கு மீண்டனர். ஜைமினி நிறைவின்மையுடன் தலையை அசைத்தான்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 45

[ 18 ]

அமராவதிக்கு மீளும் வழியெல்லாம் திரும்பத்திரும்ப விருத்திரன் வஞ்சினத்தையே உரைத்துக்கொண்டிருந்தான். செல்லும் வழியெல்லாம் மதுஉண்டு நிலைமறந்து சிரித்தும் குழறியும் பித்தர்கள்போல் பாடியும் நடனமிட்டும் கிடந்த தேவர்களைப் பார்த்தபடி சென்றான். ஒரு நிலையில் நின்று ஆற்றாமையுடன் கைவிரித்து “எப்படி இவர்கள் இவ்வண்ணம் ஆனார்கள்! அசுரர்களும் இக்கீழ்நிலையை அடைவதில்லையே?” என்றான்.

“அரசர் வழியையே குடிகளும் கொள்கின்றன” என்றாள் இந்திராணி. “நீங்கள் முடிசூடிய நாள்முதலே இதைத்தான் நான் சொல்லிவருகிறேன்.” விருத்திரன் “இவர்கள் தேவர்கள் அல்லவா?” என்றான். “ஆம், அசுரர்களில் தேவர்கள் ஒளிந்திருப்பதில்லையா என்ன?” என்று அவள் சொன்னாள்.

விருத்திரன் பெருமூச்சுவிட்டான். “அரசே, அசுரர்கள் என்றும் கள்ளிலும் காமத்திலும் திளைப்பவர்கள். தேவர்கள் அவற்றை கடந்து அமைந்தவர்கள்.  கடக்கப்பட்டவை அனைத்தும் எங்கோ கரந்துறைகின்றன. கரந்துறைபவற்றின் ஆற்றல் நிகரற்றது. ஏழு ஆழுலகங்களின் அனைத்து தெய்வங்களும் அவற்றில் வந்து குடியேறுகின்றன. இங்குள்ள தேவர்கள் இன்று உள்ளங்களில் சூடியிருப்பவை இருள்உலகத்து தெய்வ வல்லமைகளே” என்றாள் இந்திராணி.

“பாருங்கள், தேவர்கள் நிழலற்றவர்கள். இங்கோ ஒவ்வொரு தேவர்க்கும் மூன்று நிழல்கள் விழுந்துள்ளன. இதோ, மலர்சூடி இளித்தபடி செல்பவனை நான்கு கைகளுடன் நிழலெனத் தொடர்வது காளன் என்னும் காமத்தின் தெய்வம். அங்கே சினம்கொண்டு வெறித்துக் கனைப்பது கராளன் என்னும் குரோதத்தின் தெய்வம். நூறு கைகளுடன் எழுந்த நிழல்சூடி நின்றிருக்கும் அவனை நோக்குக! அவனில் கூடியிருப்பது கிராதம் என்னும் மோகத்தின் முதன்மைத்தெய்வம். கோடிகோடியெனப் பெருகி இந்நகரை அவர்கள் சூழ்ந்துள்ளார்கள்.”

“முன்னகர திசையின்றி நின்றுவிட்ட தேர் இந்நகர். கடையாணி துருவேறிவிட்டது. சக்கரம் மண்ணில் புதைந்துவிட்டது” என்றாள் இந்திராணி. “இதன் அழிவு உங்களால்தான். அரசு என்பது அரசனின் விராடவடிவம் கொண்ட உடலே. உங்கள் நோயனைத்தையும் உங்கள் விழிகளால் நீங்கள் பார்க்கும் வாய்ப்பு ஒரு நகருலாவில் அமைகிறது. அரசே, இது இங்கு நுழைந்தபின் நீங்கள் செல்லும் முதல் நகருலா.”

விருத்திரன் அவற்றை நோக்க அஞ்சி விழிமூடிக்கொண்டான். களைத்து கால்தளர்ந்து இந்திராணியின் அணைப்பில் மயங்கியவன்போல நடந்தான். அரண்மனையின் அகத்தளத்தை அடைந்ததும் “என் நகரும் வீழுமா? என் கொடியும் சரியுமா?” என்று தனக்குத்தானே என கேட்டான். “நான் தோற்கலாகுமா?” கௌமாரன் “அரசே, இன்னமும் நம் கோட்டைகளில் ஒன்று எஞ்சியுள்ளது. ஒன்று எஞ்சுவதுவரை நம்பிக்கை நீள்கிறது என்றே பொருள். நம் படைகள் எழும்படி ஆணையிடுக! வென்று பகை முடிப்போம்” என்றான்.

“ஆம், நாம் எழவேண்டிய நேரம். ஆனால் என் உள்ளமும் உடலும் களைத்திருக்கின்றன. சற்று மது அருந்தி இளைப்பாறாது இங்கிருந்து என்னால் எழமுடியாது” என்றபின் இருக்கையில் சரிந்து அருகணைந்து நின்ற சேடியரிடம் மதுக்கோப்பைகள் வருவதற்கு கையசைத்தான் விருத்திரன். அவர்கள் கொண்டுவந்த மதுவை வாங்கி ஒன்றன்மேல் ஒன்றென அருந்தினான். எரிதீயை நீர்விட்டு அணைப்பதுபோல. விடாய்கொண்டிருப்பது அவனல்ல, அவன் உயிர் என கௌமாரன் நினைத்தான்.

நீள்மூச்சுடன் இந்திராணி சொன்னாள் “ஒன்றும் செய்வதற்கில்லை, படைத்தலைவரே. ஊழ் இதுவென்றால் தலைவணங்கி காத்திருப்பதே நம் கடன்.” அவள் செல்வதை கௌமாரன் நோக்கிநின்றான். அவள் உடலசைவுகள் அனைத்திலும் துயரும் சினமும் நிறைந்திருந்தன. அவள் செல்லும்போது எதிர்த்திசையில் அவள் நிழலொன்று வருவதுபோல் தோன்றியது. அவன் விழியிமைத்து அம்மயக்கை அகற்றினான்.

அங்கிருந்து ஆவதொன்றுமில்லை. அவன் தானும் செல்லவே நினைத்தான். ஆனால் கால்கள் அசையவில்லை. விருத்திரனையே நோக்கிக்கொண்டிருந்தான். இளமையில் அவன் நோக்கி வியந்த உடல். அவன் கனவுகண்ட முகம். துயர்மிக்க இறப்பென்பது இது, வழிகாட்டியின் வீழ்ச்சி.

விருத்திரன் உடலில் அத்தனை தசைகளும் மெல்ல மெல்ல முறுக்கவிழ்வதை காணமுடிந்தது. முற்றணைந்து தாடை தளர்ந்து வாய் விரிய, கைவிரல்கள் ஒன்றொன்றாக நரம்பு தளர்ந்த யாழின் புரிகளென விடுபட, விழிகள் நனைந்த குருவியிறகுகள்போல் சரிந்து ஒட்டிக்கொள்ள துயில் அவன் உடலில் கால்கட்டை விரலில் இருந்து எழுந்து எங்கும் பரவி நெற்றிப்பொட்டை நிறைத்தது.

அவன்மேல் எழுந்த நித்ராதேவி உரத்த குரலில் தன் மொழியில் பேசலானாள். திகைப்புடனும் துயருடனும் அதை நோக்கிநின்றான் கௌமாரன். அச்சொல் மெல்ல திருந்தியது. “அகல்க. அகல்க.” கௌமாரன் அக்குரலை கூர்ந்து கேட்டான். செவிமயலா அது? “அமைக அமைக அமைக” அது அவள் குரலேதான். அவனும் அதை கேட்டிருக்கிறான்.

“அன்னையே, இவருக்கு கடமைகள் உள்ளன” என்றான். வெண்ணிற ஆடையணிந்து வலக்கையில் சாமரமும் இடக்கையில் அமுதமுமாக அவள் அவன் முன் தோன்றினாள். அவன் கைகூப்பி வணங்கி நின்றான். “அவர் இங்கிருந்து செல்ல விரும்புகிறார்.” நித்ராதேவி அவனிடம் சொன்னாள் “நான் நாடிவரவேண்டும் என்பதே நெறி. என்னை நாடுபவர்கள் தங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இங்குள்ள அனைத்தையும் விட்டுவிட்டவர்கள். அவர்களை உடலும் உறவும் சுற்றமும் பற்றிக்கொள்ளலாம். அவர்கள் நெடுநாள் முன்னரே நழுவத் தொடங்கிவிட்டவர்கள். அவர்கள் மீளமுடியாது. அடித்தளத்தின் ஆழத்தில் விரிசல் விழுந்துவிட்டது.”

“தேவி, இவர் எங்கள் குலத்தின் முதல்வர். இவரில்லையேல் நாங்கள் முற்றழிவோம்” என்று கௌமாரன் சொன்னான். “மைந்தா, மாமனிதருக்குள் வாழ்வது எளிதில் சலிப்பு கொள்கிறது. உங்களுள் விசைகொண்டு மேலெழுந்தவன் இவனே. தன் முழுமையைத் திரட்டி இங்கு வந்தடைந்தான். இனி அவன் கொள்ள ஒன்றுமில்லை என அவனுள் வாழ்வது அறிந்துவிட்டது. இந்திரனையோ வருணனையோ எஞ்சும் கயிலையையோ வைகுண்டத்தையோ  வென்றாலும் அது அடைவது ஒன்றில்லை.”

கௌமாரன் “தேவி, என் குலங்கள் இங்கே இன்னும் வேர்நிலைக்கவில்லை. இன்றுதான் நாங்கள் முளைகொண்டு எழுகிறோம்” என்றான். “ஆம், ஆனால் அது உங்கள் வாழ்க்கை” என்றாள் தேவி. “மாமனிதர்கள் எக்குலத்திற்கும் உரியவர்கள் அல்ல. குடிவிட்டெழுகிறார்கள். குலம்விட்டு எழுகிறார்கள். மானுடம்விட்டு உயர்கிறார்கள். பின்னர் தங்களையே கடந்துசெல்கிறார்கள். உதிர்த்து உதிர்த்து அவர்கள் அடைந்தவையே அனைத்தும்.” துயில்பவன் தலையை வருடி நித்ராதேவி சொன்னாள் “இனி அவர் உதிர்க்க விழைவது விருத்திரன் என்னும் வடிவை.”

செய்வதறியாது சுற்றிலும் விழியோட்டிய கௌமாரன் சினத்துடன் மதுக்கோப்பையை நோக்கி “அந்நஞ்சு அவரை கொல்கிறது” என்றான். நித்ராதேவி “மதுவை நாடுபவர் அனைவரும் மதுவெனக் கொள்வது ஒன்றையே அல்ல. அஞ்சுபவர்களுக்கு அது துணை. பணிந்தவர்களுக்கு அது குரல். தனித்தவர்களுக்கு அனைத்து வாயில்களையும் திறக்கும் காற்று” என்றாள். “எவருக்காயினும் மது என் புரவி. என்னைத் தொடர்ந்து வருகிறார்கள் என் மூத்தவளாகிய வியாதியும் எங்கள் மூதன்னையாகிய மிருத்யூவும்.”

கௌமாரன் நெஞ்சுபொறாது மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டான். நித்ராதேவி அனல்பட்டவள்போல் செந்நிறம்கொள்வதை கண்டான். அவள் சாமரம்  சவுக்காகியது. அமுதகலம் அனல்குடுவையாகியது. “துயர்! துயர்! துயர்!” என்றாள் வியாதிதேவி. சுண்டும் தைலமென மெல்ல கருகி நீலநிறம் கொண்டாள். மிருத்யூதேவி செந்நிற உதடுகளும் நீண்டுபறக்கும் செந்தழல்குழலும் கொண்டிருந்தாள். வலக்கையில் மின்படையும் இடக்கையில் துலாக்கோலும் கொண்டிருந்தாள். “இனிது! இனிது! இனிது!” என்று அவள் சொன்னாள்.

கௌமாரன் பதைப்புடனும் துயருடனும் அங்கிருந்து மீண்டான். அமராவதியிலிருந்து இறங்கிச்சென்று முகில்கணம் மேல் நின்று கீழே நோக்கினான். கோலால் அடிபட்ட நாகங்கள்போல சீறி நுரைநாக்குகள் சிதற படம்எடுத்து ஓங்கி அறைந்து நகரை கொத்தி மீண்டன அலைகள். அவன் நோக்கியிருக்கவே இறுதிக் கோட்டை கரைந்து சரிந்தது. நெஞ்சு அறைய கண்ணீருடன் அவன் விழி அசைக்காது நின்றான். இறுதி அலை ஒன்று எழுந்து எஞ்சிய புற்றுக் கோட்டையை மூடி நாற்புறமும் வெண்மலரென விரிந்து அகன்றது. நடுவே ஒரு சிறுகுமிழியென கோட்டையின் மண்குவை தெரிந்தது. பின்னர் நீல அலைகள் மட்டுமே அங்கு எஞ்சின.

நீள்மூச்சுடன் கௌமாரன் எண்ணிக்கொண்டான், சென்று மறைந்த பெருநகரங்களின்  நிரையில் பிறிதொன்று. இனி சொல்லில் மட்டுமே அது வாழும். சொல், அதனால் பொருள் என்ன? என்றோ ஒருநாள் அது வாழ்வென்று ஆகும் என்னும் நம்பிக்கையைத் தவிர? அவன் விரிந்துகிடந்த மண்ணை நோக்கி ஏங்கினான். மூதாதையரே, தெய்வவடிவங்களே, இனி என்று வந்தணையும் இச்சொல்லில் எழும் உலகு? சொல் ஒன்றே மிச்சமென்றால் இவ்வாழ்வை எதற்கு எங்களுக்கு காட்டினீர்கள்?

நெஞ்சுருகி அழுதான். நெடுநேரம் கழித்து மீண்டு நீல அலைகளை நோக்கிக்கொண்டிருந்தபோது சொல்லேனும் எஞ்சியிருக்கிறதே என்று எண்ணினான். அப்போது உருவான நிறைவை எண்ணி அவனே வியந்தான். “எஞ்சுக எஞ்சுக எஞ்சுக” எனும் சொல்லாக அவன் உள்ளம் ஓடிக்கொண்டிருந்தது.

[ 19 ]

பிரம்மகபாலம் என்னும் ஊரின் மலைக்குகையில் அணைந்து கொண்டிருந்த அனலுக்கு இப்பால் இருந்த பிரசண்டன் அப்பால் உடல் சரித்து கைகளை தலைக்கு வைத்து மேற்கூரையைப் பார்த்து படுத்திருந்த பிரசாந்தரிடம் சொன்னான் “விருத்திரகுடியின் மூத்த பூசகர் கபாலர் என்னிடம் சொன்னது இது. இதை பின்னர் நூறுமுறை அசுரர்களும் நாகர்களும் நிஷாதர்களும் சொல்லி கேட்டிருக்கிறேன். ஒவ்வொருமுறையும் ஒரு வடிவம் கொண்டு என்னுள் நின்றிருக்கும் ஒற்றைக் கதை இது.”

“கதை என்பது சிதல்புற்றென மூத்த அசுரர் என்னிடம் சொன்னார். பல்லாயிரம் கோடி சிதல்களால் சொல் சொல் என இயற்றி கோத்துருவாக்கப்பட்டு எழும் பெருமலை அது” என்றான் பிரசண்டன். பிரசாந்தர் புன்னகையுடன் “ஆம், ஆனால் நிலைமாறா ஆழத்திலிருந்து எழுந்துவரும் அலைகள் என்றும் அதை சொல்லலாம்” என்றார். அவரை ஒருகணம் நோக்கிவிட்டு “ஆம்” என்றான் பிரசண்டன்.

“புற்றுகளிலிருந்து எறும்புநிரைகள் ஊறிப் பெருகுவதுபோல மலைகளின் ஆழங்களிலிருந்து அசுரகுடிகள் எழுந்து நிலம் நோக்கி விரிந்த காலம் அது என்று என்னிடம் கபாலர் சொன்னார். ஊன் வேட்டும், தேன் எடுத்தும், மலைப்பொருள் சேர்த்தும் காடுகளுக்குள் வாழ்ந்த குலங்கள் அவை. முன்பு எப்போதோ நிலம் திருத்தி மண் விளைவித்த நினைவு அவர்களின் மொழியில் இருந்தது. மேற்கே கடலோரமாக தங்களுக்கென ஒரு நகர் அமைந்ததை அறிந்ததும் அவர்கள் தங்களிடம் நாடி வந்த அச்சொல் வழியாகவே வழியறிந்து கிளம்பிச் செல்லலாயினர்.”

புற்றிகபுரியில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரவர் தங்கள் குழந்தைகளுடனும் முதியோருடனும் படைக்கருவிகளுடனும் வந்து சேர்ந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு உணவும் இல்லமும் அளிக்க அசுரப்படைகள் பன்னிரு பிரிவுகளாகப் பிரிந்து இரவும் பகலும் பணியாற்றின. விருத்திரேந்திரனின் ஆணையின்படி அவை கூடி புற்றுக்குலத்தின் பதினெட்டு தலைவர்களிடம் மூன்று கிளையென பிரிந்து பரவிய அணைநீரை திருப்பி சூழ்ந்திருந்த வறுநிலத்தில் பரப்பும்படி ஆணையிடப்பட்டது. அதன்படி ஒவ்வொரு நீர்ப்பெருக்கும் நூறு கால்களாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு காலும் புற்று என எழுந்த சுவரால் தடுக்கப்பட்டு சுனையாக்கப்பட்டது.

சுனைநீர் சிற்றோடைகளில் பெருகி செந்நிலத்தை குளிர்வித்தது. அங்கு பொன் என அன்னம் பெருகலாயிற்று. ஒன்று நூறு ஆயிரம் என நீர்ப்பெருக்குக்கு குறுக்காக புற்றுச் சுவர்கள் பெருக பன்னிரண்டாயிரம் சுனைகள் அங்கெழுந்தன. விண்ணில் எழுந்துசென்ற கந்தர்வர்கள் மூன்று கொடிகளில் மூவாயிரம் கிளைகள் எழுந்து முப்பதாயிரம் தளிர்நுனிகளில் பன்னிரண்டாயிரம் நீலக்கனிகள் விளைந்திருப்பதைக் கண்டனர். தேன்தட்டென ஆயிற்று அந்நிலம். தேனீக்களென வந்து சுனைகளில் நீரள்ளிச் சென்றன அத்திரிகள் இழுத்த கரியநிற வண்டிகள்.

நீர்வெளிமேல் சிறகுவிரித்த பெருங்கலங்களில் வந்த வாருணீகர்களான வணிகர்கள் தங்களுக்கு நீர் கொண்டுவந்த நதிகள் நின்றுவிட்டதைக் கண்டனர். கடலாழத்திலிருந்து எழுந்து நதிமுகப்புக்கு உணவு தேடி வந்த படகுபோன்ற மீன்கள் துயரத்துடன் திரும்பிச் சென்றன. மீன்கன்னியரும் நீர்நாகங்களும் புதுமழைநீர் இல்லாமல் வருந்தினர். இருண்ட ஆழத்தில் விழியொளி மட்டுமே கொண்டு அமர்ந்திருந்த முதற்தாதையிடம் சென்று குமிழிகளென வெடித்த சொற்களால் அவை முறையிட்டன. ஒவ்வொருநாளும் ஒரு முறையீடு வருணனை வந்தடைந்துகொண்டிருந்தது.

கடலுக்குள் அமைந்த வருணனின் உள்ளங்கையாகிய ஜலஹஸ்தம் என்னும் தீவில் பன்னிரண்டாயிரம் நாவாய்கள் ஒருங்கு கூடின. நதிகள் நின்றுவிட்டால் தங்கள் குலம் அழியும் என்றும், குலம் காக்க மூதாதையாகிய வருணன் எழவேண்டும் என்றும் கோரின. முதற்றாதையாகிய வருணனை அன்னமும் பலியுமிட்டு பூசை செய்தன. ஆழத்து நீருள் அனல் வெடித்தெழுந்ததுபோல பேரலைகளென வருணன் படைகள் வந்து புற்றிகபுரியை தாக்கின. முட்டைகளை உண்ணும் பசிகொண்ட நாகங்களென புற்றுகளை விழுங்கி அழித்தன.

நீர் உண்டு பெருத்து விதை வாங்கிச் செழித்து பொன் உமிழ்ந்த வயல்கள் அனைத்தும் உப்பு நீரால் மூடின. புற்றிகபுரியும் அதைச் சூழ்ந்த வயல் பெருவெளிகளும் கடல் கொண்டன. கதறி அழுதபடி தங்கள் குலங்களை திரட்டிக்கொண்டு மீண்டும் வடக்கு நோக்கி ஓடி காடுகளுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டனர் அசுரகுடிகள். தடையுடைத்துப் பெருகி கடல் கண்டன மூன்று பெருநதிகளும்.

குளவிக்கூட்டுக்குள் குளவிக்குஞ்சுகள் மட்டுமே உகந்து அமையமுடியும். அன்னையின் நெஞ்சு அவற்றுக்கு இன்னுணவு. அங்கு செல்லும் பிற உயிர்கள் அக்கணமே உயிர் கரையத்தொடங்கிவிடுகின்றன. அமராவதிக்குள் நுழைந்ததுமே விருத்திரன் உயிரழியலானான். அங்கிருந்த அனைத்தும் அழகும் இனிமையும் கொண்டிருந்தன. அழகும் இனிமையும் மயக்கம் அளிப்பவை. மயக்கென்பது உயிர் தன் விழிப்பை மறந்து தேங்குவது.

விண்ணுலகில் காலமில்லை. காலமில்லாத இடத்தில் கணங்கள் மட்டுமே உள்ளன. முன்னும் பின்னும் எழும் இரு பெருங்காலங்களால் மட்டுமே கணங்கள் பொருளேற்றம் செய்யப்படுகின்றன. பொருளற்ற காலத்தில் எஞ்சுவது துய்த்தல் மட்டுமே. துய்த்தல் என்பது தன்னை ஒப்புக்கொடுத்தல். ஒப்புக்கொடுத்தல் என்பது இழத்தல். இழத்தல் என்பது துளித்துளியாக அழிதலன்றி வேறல்ல.

விண்ணுலக மதுவிலும் மாதரிலும் மூழ்கிக் கிடந்தான் விருத்திரன். மது எழுப்பிய மெய்யிலி உலகங்களில் உவந்தலைந்தான். காமமோ துய்க்கும்தோறும் பெருகுவது. இன்பங்களெல்லாம் அடையும்தோறும் விடாய்கொள்ள வைப்பவை. இன்பத்திலாடியவன் வென்றவை என ஏதுமில்லை, உள்ளும் புறமும். துயரென்பது தன் எல்லையை கடத்தல். கடத்தலே வெல்லல். துயரிலாடி மீள்பவன் தன்னை கடந்திருப்பான். சூதரே, துயரினூடாகவே மானுடர் வளர்கிறார்கள்.

ஒவ்வொருநாளும் விழித்தெழுந்து எங்கிருக்கிறேன் என்று உணர்கையில் கொல்லும் பழி உணர்ச்சி எழ தன் தலையில் அறைந்துகொண்டு விருத்திரன் அழுதான். ஒரு தருணம் கரைந்தழிந்த தன் நகரங்களை எண்ணி சினந்து உடல் கொதித்தான். அத்துயரும் சினமும் தாளமுடியாமல் மீண்டும் மது அருந்தினான். மதுவிலமைந்து துயின்று எழுகையில் மதுக்கோப்பைகளை அள்ளி வீசி உடைத்தான். “என்னைக் கொல்ல வந்துள்ளது. இது என்னை அழைத்துச்செல்லவே வந்துள்ளது” என்றான்.

“ஒருகணம்தான். உங்களுக்குள் வாழும் மதுவிழைவை பிறிதொரு தலையை எனக் கிள்ளி விலக்குக! விடுபடுக!” என்றாள் இந்திராணி. “ஆம், அதுவே” என்றான். ஆனால் மீண்டும் மது அவனை வந்து சூழ்ந்துகொண்டது. “என்ன செய்கிறீர்கள்?” என்று இந்திராணி சினந்து விழிநீர் உகுத்தாள். “தன்னைத்தானே அழிக்கும் சுவை ஆண்களுக்கு தெரியும், பெண்கள் அதை உணரமுடியாது” என்றான் விருத்திரன். கசப்புடன் நகைத்து “அன்னையென்றில்லாது நீங்கள் இருப்பதில்லை. சூதுக்களத்திலல்லாது நாங்களும் வாழ்வதில்லை” என்றான்.

மறத்தல் ஒன்றே வழியென்று அவனிடம் சொன்னது மது. அடைதலும் மயங்குதலும் ஒன்றே என்று அது காட்டியது. மதுவிலிருந்து விழிக்கும்போது வரும் வெறுமையை வெல்ல மேலும் மதுவே ஒரே வழி என்று அவன் கண்டான். மதுவென வந்து அவனில் நிறையும் தெய்வங்கள் அவனிலிருந்து உந்தி வெளியே தள்ளிய இருள் அனைத்தும் மது ஓய்ந்ததும் மீண்டும் வந்து அவனை சூழ்ந்துகொண்டன. விழிப்பிற்கும் மயக்கிற்கும் இடையே ஓயா ஊசலென நாட்கள் சென்றமைந்தன.

அப்போது ஒருநாள் நெடுந்தொலைவிலென மெல்லிய அதிர்வொன்றை அவன் கேட்டான். அருகிருந்த ரம்பையிடம் “அது என்ன ஓசை?” என்றான். “இது அந்தி. முல்லை மொட்டுகள் மொக்கவிழ்கின்ற ஓசை போலும்” என்று அவள் சொன்னாள். மறுநாள் மீண்டும் அவ்வோசையை அவன் கேட்டான். அது மேலும் வலுத்திருந்தது. “இம்மலர்வனத்தில் இளமான்கள் காதுகளை அடித்துக்கொள்ளும் ஒலி போலும் அது” என்றாள் மேனகை. பின்னொருநாள் அவ்வொலியைக் கேட்டபோது “களிறுகள் தங்கள் கூடுகளை முட்டுகின்றன” என்றாள் திலோத்தமை.

அன்றிரவு கனவில் தொலைவானின் சரிவில் மெல்லிய வெண்கீற்றொன்றை அவன் கண்டான். விழித்தெழுந்து அது என்னவென்று நிமித்திகரிடம் கேட்டான். “அரசே, அது ஒரு வெண்ணிறகு. விண்கடந்து சென்ற பறவை ஒன்று உதிர்த்தது” என்றான் நிமித்திகன். “என்ன சொல்கிறது அப்பறவை?” என்றான் விருத்திரன். “அலைகள் என்றுமுள்ளவை என்று” என்றான் நிமித்திகன்.

ஒவ்வொரு நாளும் அவ்வொலி வலுத்துவருவதை கேட்டான். தொலைவில் களிறுகளின் காலடிபோல அது ஒலிக்கத் தொடங்கியபோது “அது அணுகி வருகிறது. நான் அறிவேன்” என்று அவன் இந்திராணியிடம் சொன்னான். “உண்மையில் என் முதிராஇளமையிலிருந்தே அதை கேட்டுவருகிறேன். என்று என் எழுச்சியின் முரசை கேட்டேனோ அன்றே அதுவும் ஒலிக்கத்தொடங்கிவிட்டது.”

மறுநாள் அவன் அறிந்தான், அது அணுகிவரும் போர்முரசின் ஒலியென்று. “போர்முரசு” என்று அவன் தன் அமைச்சரிடம் சொன்னான். “ஆம், அரசே. கிழக்கிலிருந்து இந்திரன் படைகொண்டு வருகிறான்” என்றார் அமைச்சர். “இந்திரனா? அவனிடம் ஏது படைகள்?” என்றான் விருத்திரன். “வருணனின் அசுரப்படை அவனிடம் உள்ளது” என்று அமைச்சர் சொன்னார். “எழுக நம் படைகள்! இப்போதே களம் புகுகிறேன்” என்றான். “ஆம், இதோ படை எழ ஆணையிடுகிறேன்” என்று அமைச்சர் சொன்னார். திரும்பி வெளியே ஓடினார்.

போர்முரசுகள் ஒலிக்கலாயின. அமராவதி நகரெங்கும் பெண்களுடன் மஞ்சங்களில் மதுக்களிப்பில் மயங்கிக்கிடந்த தேவர்கள் அரைவிழிப்பில் கையூன்றி எழுந்து “அது என்ன ஓசை?” என்று கேட்டனர். “போர்முரசு” என்றனர் மகளிர். “அது ஏன் இங்கு ஒலிக்க வேண்டும்? இந்நகருக்கு எதிரிகளே இல்லையே?” என்றனர். “எதிரியே அரசனான பிறகு எதிரியென யார் இருக்க முடியும்?” என்று ஒரு தேவன் நகைத்தான். “ஆம், எதிரிக்கு குடிகளாகி அமைவதைவிட இனிய வெற்றி பிறிதொன்றில்லை” என்றான் இன்னொருவன்.

மகளிர் அவர்களை எழுப்பி உந்தி கிளப்பினர். “போர் அல்ல என எண்ணுகிறேன். இது களிப்போராகவே இருக்கவேண்டும்” என்றான் ஒருவன். “ஆம், பயிற்சிப்போர். அல்லது போர்முரசின்மேல் ஏதேனும் விழுந்திருக்கும்.” அவர்கள் படைக்கலங்களுடன் தள்ளாடியபடி தெருக்களுக்கு வந்தனர். கவசங்களை சீராக அணியாமையால் கழன்று விழுந்தன. சிலர் காலணிகளை அணிந்திருக்கவில்லை. “எப்போது முடியும் இந்தப் போர்? இருட்டிவிடுமா?” என்று ஒருவன் கேட்டான். “விரைவிலேயே முடியும். அந்தியானால் அரசர் மதுவின்றி அமையமாட்டார்” என்று ஒருவன் நகைத்தான்.

போர்முரசின் ஒலி கேட்டு கவசங்களை அணிந்துகொண்டு அமர்ந்த விருத்திரன் மது கொண்டுவர ஆணையிட்டான். மேலும் மேலும் என அருந்தி கவசங்களுடன் படுத்துத் துயின்றான். அவன் வீரர்களும் படைக்கலங்களுடன் தெருக்களில் துயின்று சரிந்தனர். சிலர் சிரித்தபடியே “இத்தனை விரைவாகவா போர் முடிந்துவிட்டது?” என்றனர். “மது இருந்தால் போரே வேண்டியதில்லை” என்றான் ஒருவன்.

KIRATHAM_EPI_45

மறுநாள் விழித்தெழுகையில் உடலில் கவசங்கள் இருக்கக் கண்டு நடந்ததை உணர்ந்து பாய்ந்து சென்று விரைந்து அமைச்சரை அழைத்து என்ன நிகழ்ந்தது என்றான் விருத்திரன். “அரசே, இந்திரனின் படைகள் அணுகிவிட்டன. நகருக்குள் அவை நுழைந்துகொண்டிருக்கின்றன” என்றார் அமைச்சர். “இனி ஒருகணம்கூட நமக்கு இல்லை” என்று கூவினார். “ஆம், காலம்…” என்று விருத்திரன் சொன்னான். “நாள் என ஒன்றுபோல் காட்டி வாளென்று வருவது. அவ்வாறே ஆகுக!”

நூல் பன்னிரண்டு – கிராதம் – 44

[ 16 ]

பன்னிரண்டு ஆண்டுகள் நடந்த அந்த சலியாப் போரில் முதற்கணம் முதலே நுண்ணளவுகளோ நுண்மைகொள்சித்தமோ தொட்டெடுக்க முடியாத காலத்துளி ஒன்றின் இடைவெளி இருந்தது. அதை கடல்களும் அறியவில்லை. எதிர்நின்ற புற்றுகளும் அறியவில்லை. வருணனின் படைகள் சிதல் நிரைகளைக் கடந்து அவ்வொரு கணத்துளியில் முன் நின்றன. ஏனெனில் அலையெழுந்து மோதிச் சிதறி கொந்தளித்து மீண்டும் எழுந்து கொண்டிருந்தபோதும் கடல்ஆழம் அதை அறியாது இருண்ட மோனத்தில் தன்னுள் தான் நிறைந்த ஊழ்கத்தில் இருந்தது. மறுபக்கம் நுரை பெருகுவதுபோல் எழுந்து கடலுக்கு நிகர்நின்ற போதிலும் புற்றுகளின் ஆழத்தில் உயிர்வெள்ளம் கொப்பளித்து அலைசுழித்துக் கொண்டிருந்தது.

அக்கணத்துளி பெருகி கனவறிந்து பின் கருத்தறிந்து இறுதியில் கண்ணறியும் வகையில் உருக்கொண்டது. அதைக் கண்டதுமே சிதல்கள் சீற்றம்கொண்டு மேலும் பெருகின. அலைகளோ மேலும் அமைதி கொண்டன. வெறிகொண்டவை எழுந்து பின் அமைகின்றன. அமைதிகொள்வன  மெல்ல வளர்ந்து நிறைகின்றன. அலைமேல் அலையென கடல்கள் வளர்ந்தன. அலைகளென எழுந்த புற்றுகள் சினம்கொண்டு வீங்கின.

புற்றுச்சுவர்களின் முகப்புகள் கரைந்து இடிந்து கடலுக்குள் விழுவதை நாளும் கௌமாரன் பார்த்துக்கொண்டிருந்தான். அது ஒவ்வொருநாளும் நிகழ்வது. இழந்தது மீண்டும் பெருகி எழுவதையே அவன் அந்நாள்வரை அறிந்திருந்தான்.  ஆயினும் தொண்ணூற்றொன்பது கோட்டைகள் சூழ்ந்த பெருநகரில் அரண்மனையின் உப்பரிகையில் அமர்ந்தபடி சொல்லென ஆகும்போது பொருளிழக்கும் அச்சத்துடன் அவன் நோக்கிக்கொண்டிருந்தான்.

அக்கோட்டைச்சுற்றை ஒரு விராடவடிவனின் பருவுடல் என்று கவிஞர் சொன்னார்கள். அன்னம், பிராணம், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் என அவை ஐந்து பெருஞ்சுற்றுகள். முதலில் இருந்த அன்னம் செவி, மூக்கு, விழி, நாக்கு, தோல் என ஐந்து. பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என பிராணம் ஐந்து. மனம் ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி, துரியம், பூர்ணம் என ஐந்து. ஸ்தவிரம், ருஜு, ஆலயம் என விஞ்ஞானம் மூன்று. தத்பரம், பரம் என ஆனந்தம் இரண்டு. இருபது வட்டங்களுக்குப் பின்னர் எழுபத்திரண்டு நாடிகளின் வளையங்கள். பின்னர் காலம், நியதி, கலை, வித்யை, ராகம், புருஷன் என்னும் வளையங்களுக்குப் பின் மாயாவளையம். அதற்குள் இருந்தது ஏழு அடுக்குகள் கொண்ட விருத்திரனின் மாளிகை.

மூலம், சுவாதிட்டம், மணிபூரம், அநாகதம், விசுத்தி, என்னும் ஐந்து நிலைகளில் முறையே ஏவலர், சூதர், காவலர், கருவூலர், அமைச்சர் ஆகியோர் குடியிருந்தனர். ஆஞ்ஞை என்னும் ஆறாம் தளத்தில் விருத்திரனின் இருப்பிடம். ஏழாம் நிலையில் உச்சியில் இருந்த சகஸ்ரத்திலிருந்து அவன் விண்ணில் எழுந்தான். முகில்களைத் தொட்டு பறந்து இந்திரபுரியை அடைந்தான். உறையிருந்த வாள் என்று அவ்வரண்மனை தோன்றியது. உறையின் வடிவும் கூரும் இருந்த வாளினால் அமைவது. இன்மையென வாள் அதனுள் எப்போதுமிருந்தது.

புற்றுப்பெருங்கோட்டைகள் கரைந்திடிந்து அலைகளுக்குள் விழும் ஓசை அவன் அறையிலிருக்கையில் நாய் நீர்குடிக்கும் ஒலிபோல் கேட்டது. உப்பரிகையில் நின்று விழிகூர்ந்தால் முதலை இரைபற்றுவதுபோல ஆகியது. எழுந்துசென்று இருளில் நின்று நோக்கியபோது வளைந்து வளைந்து வந்த நாகங்களுக்கு முன் நிரைவகுத்து முடிவிலாது சென்று நின்றிருக்கும் தவளைக்குலம் எனத் தோன்றின புற்றுக்கோட்டைகள்.

துயில்கையிலும் அவ்வோசையை அவன் கேட்டான். அவன் கனவுக்குள் குருதி எழ கரிய உருவங்கள் மண்ணறைந்து விழுந்து புதைந்து ஆழத்தில் வேர்ப்பரப்பாகி கிடந்தன. தன் குலத்து மூதாதையரின் இமையாவிழிகளை நோக்கியபடி துயிலுக்குள் அவன் விழித்துக் கிடந்தான். எழுந்ததுமே ஓடிவந்து உப்பரிகையில் நின்று நோக்குகையில் புற்றுக்குவைகளில் ஓரிரண்டு குறைந்திருப்பதைக் கண்டு நெஞ்சு பதைத்தான். எண்ணித்தொலையாதவை புற்றுகள் என்று அறிந்திருந்தும் எண்ணாமலிருக்க முடியவில்லை உள்ளத்தால். எண்ணி எண்ணிச் சலிக்கையில் புற்றுகள் குறைந்துள்ளன என்றே தோன்றிக்கொண்டிருந்தது.

புற்றுறை குலத்தலைவரை மீண்டும் மீண்டும் அழைத்து “என்ன நிகழ்கிறது?” என்று கேட்டான். “எங்கள் ஆற்றல் நூறுமடங்கு பெருகியிருக்கிறது, அரசே” என்றார் முதற்தலைவர். “புற்றுகள் குறைகின்றனவா?” என்றான். “இல்லை, இருமடங்கு கூடியிருக்கின்றன” என்றார் இரண்டாம்தலைவர். “உங்கள் ஐயம் அது” என்றார் மூன்றாம்தலைவர். “தலைவர்களே, ஐயம் என ஒன்று ஏன் எழுகிறது? என் உள்ளிருந்து அந்த ஐயத்தை எழுப்புவது எது?” என்றான். “அது உங்கள் ஆற்றலின்மையே” என்றார் நான்காம்தலைவர். அப்போது முதிய தலைவர் ஒருவர் மெல்ல அசைந்து முனகினார். “சொல்லுங்கள், மூத்தவரே” என்றான் கௌமாரன்.

“எங்கள் குலம் நூறெனப் பெருகுகிறது. அது உண்மை, ஆனால் அலைகளின் விசையோ நூற்றியொருமுறை பெருகியிருக்கிறது” என்றார் அவர். புற்றிகர் அமைதியாயினர். ஒருவர் “நாளையே அவ்விடைவெளியை வெல்வோம்” என்றார். “இளையோரே, அவ்விடைவெளியை உருவாக்கியது எது? இத்தனை நிகர்நிலையாற்றல்களின் நடுவே அவ்விடைவெளி உருவாகிறதென்றால் அது எளிய மீறல் அல்ல. அணுதோறும் ஆயிரம் புவி சென்றமைந்த எடைகொண்டது அது. அதைக் கடப்பது எளிதல்ல” என்றார் முதியவர். “வெல்வோம், வெல்வோம்” என்று அவர்கள் கூவினர். “நாம் தொடக்கம் முதலே எழுவிசை கொண்டிருக்கிறோம். இத்தனை விசையெழுந்த பின்னரும் எப்படி அந்த சிறுமாத்திரை இடைவெளி விழுந்தது?” என்றார் முதியவர்.

“நீரே சொல்லும்” என்றனர் குலத்தோர். “நாம் கொண்டுள்ள எழுவிசையே சுமையா என்ன? நீர் அதன் ஆழத்தில் அசையா நிலைவிசைகொண்டுள்ளதா என்ன?” என்றார் முதியவர். “நோக்குக முதியவரே, நாங்கள் வெல்வோம்” என்றார் இளைய குலத்தலைவர் ஒருவர். “மைந்தா, அவ்விடைவெளி எங்கள் ஆற்றலின்மையாலோ அவர்களின் ஆற்றலாலோ உருவானதல்ல. மாற்றமுடியாத ஊழொன்றால் நடுவே செருகப்பட்டது” என்றார் முதியவர். அவர்கள் அமைதிகொண்டனர். அவையின் பின்நிரையில் அசைவெழுந்தது. விழியில்லாத முதுகுலத்தலைவர் மெல்ல செருமினார். அவரை அவர்கள் நோக்கினர். முதுமையால் புற்றுக்குள் செயலற்று அமைந்த அவரை நால்வர் சுமந்து அவைக்கு கொண்டுவருவது வழக்கம்.

“இன்றுவரை நான் இங்கேதும் சொன்னதில்லை. இன்று சொல்ல விழைகிறேன். அசுரரே, புவி தோன்றிய முதற்கணம் முதல் நாம் இங்கு இருக்கிறோம். அன்னத்தை உண்டு மண்ணில் உப்பாக ஆக்குகிறோம். மண்ணை மீண்டும் அன்னமாக்குகின்றன புற்கள். புல்லும் சிதலும் இணைந்துருவாக்கிய நெசவு இப்புவி என்பார் நூலோர். எங்கேனும் புல் அழிந்து சிதல் மேலேறிய காலமுண்டா? எப்போதேனும் சிதல் ஒருகணம் முன்சென்று முந்தியுள்ளதா?” என்றார். அவர்கள் நோக்காடிக்கொண்டனர்.

“நாம் அழிப்பவர்கள். ஆக்கத்திற்கு அரைக்கணம் பின்னரே நாம் செல்ல முடியும். அந்நெறியையே இவர்கள் ஊழென்று இங்குரைக்கிறார்கள்” என்றார் முதியவர். சற்று எரிச்சலுடன் “என்ன சொல்கிறீர்கள்? இக்கோட்டை அழியுமா?” என்று கௌமாரன் கேட்டான். “ஐயமே வேண்டியதில்லை. இப்புவியில் கோடானுகோடி ஆண்டுகளாக கட்டப்பட்ட அனைத்து சிதல்புற்றுகளும் அழிந்துள்ளன. அழிந்தாகவேண்டும். உயிரை நாங்கள் வெல்ல வேண்டுமென்றால் அந்த ஆணை விண்வெளியில் ஆதித்யர்களை அள்ளி விளையாடும் பிரம்மத்திடம் இருந்து வரவேண்டும்” என்றார் முதியவர்.

அவை சொல்லின்றி கலைந்தது. ஒவ்வொருவரும் அச்சொற்களின் எடையை உணர்ந்தனர். ஏனென்றால் அவர்கள் அதை முற்றாக முன்னர் அறிந்திருந்தனர். அவ்வுண்மைக்கு எதிராகவே அவர்கள் கிளர்ந்தெழுந்தனர். மாற்றவியலாத ஒன்றுக்கு எதிராகவே அத்தனை கொந்தளிப்பு எழமுடியுமென அவர்கள் உணர்ந்தனர். அவைநீங்கிய அக்கணமே அவர்களனைவரும்  ஒன்றாக  விடுதலை உணர்வை அடைந்தனர். இனி கணம்தோறும் முழு உயிராலும் கொப்பளிக்கவேண்டியதில்லை. இனி தன்னைப்பெருக்க தன் உயிர்த்துளி ஒவ்வொன்றையும் நுரைக்கவைக்க வேண்டியதில்லை.

ஆனால் அந்த விடுதலையுணர்வால் அவர்கள் தோல்வியை ஏற்க சித்தமானார்கள். அங்கிருந்து செல்லும்போதே தோற்றழிந்தபின் தங்கள் குலங்கள் எவ்வாறு மீண்டும் எங்கோ ஒரு புள்ளியில் சிறுதுளையொன்றினூடாக கசிந்து வெளிவந்து மீண்டும் தழைக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தார்கள். தோல்வியை பலமுறை உள்ளூர அடைந்தபின் அது நிகழ்வதற்காக பொறுமையிழந்து காத்திருக்கலானார்கள்.

[ 17 ]

புற்றுக்குலங்களின் அவை முடிந்த அன்றே சகஸ்ரத்தில் ஏறி தன்னை நுண்ணுருவாக்கி  பறந்து விண் ஏகி இந்திரபுரியை அடைந்தான் கௌமாரன். அமராவதியின் பெருவாயிலுக்குள் நுழைந்தபோது அங்கே இன்மதுவின் மணமே நிறைந்திருக்கக் கண்டான். அத்தனை பூக்களிலும் கள் வழிந்தது. அத்தனை வண்டுகளும் குழலும் யாழுமென இசைத்து தரையில் விழுந்து சிறகதிரச் சுழன்றன. மது மயக்கில் அமராவதியின் மாளிகைத்தூண்களும் சுவர்களும் நெளிவதாகத் தோன்றியது அவனுக்கு. களிவெறிகொண்டு சிரித்தும் கூச்சலிட்டும் அலைந்தனர் தேவர்கள். அவர்களுடன் காமத்திலாடி கண் சிவந்து கொந்தளித்துக் கொண்டிருந்தனர் அரம்பையர்.

அவனைக் கண்டதும் கள்மயக்கில் காலாடிக்கொண்டிருந்த தேவன் ஒருவன் அணுகி வந்தான். “நீர் அசுரரா?” என்றான். “ஆம்” என்றான் கௌமாரன். “இல்லை, நீர் தேவர். நான் அசுரன்” என்றான். குழறியபடி நகைத்து “தேவனாக முன்னால் இருந்தேன். கடமையைச் சுமந்தவன் தேவன். கட்டுக்குள் வாழ்பவன் அவன். கடமைகளற்றவன் அசுரன். கட்டற்றவன் அசுரன். எங்களை விடுதலை செய்தவர் அசுரேந்திரர் விருத்திரர்…” என்றான். மதுக்கிண்ணத்தை தூக்கிக் காட்டி “நான் உண்பது என் விழைவை. இதுநாள்வரை இதை என் மூலாதாரத்தில் ஒரு துளி நஞ்சென தேக்கி வைத்திருந்தேன். இதோ, அது விடுதலைகொண்டு வளர்கிறது” என்றான்.

முகவாயிலினூடாக இந்திரனின் அரண்மனைக்குள் சென்றான் கௌமாரன். அங்கு தன்னை எதிர்கொண்ட அமைச்சரிடம் “விருத்திரேந்திரரைக் காணவந்தேன். உடனே சொல்லளிக்க வேண்டும்” என்றான். “எவரும் தன்னைக் காணலாகாதென்ற ஆணையிட்டு களியாட்டுக்குச் சென்றிருக்கிறார் அரசர்” என்றார் அமைச்சர். “சென்று நெடுங்காலம் ஆகிறது.” பொறுமையை பேணியபடி கௌமாரன் “நான் இப்போதே கண்டாகவேண்டும்” என்றான். “அரசரின் உறுதியான ஆணை அது. மீற என்னால் இயலாது” என்று அமைச்சர் சொன்னார். ஒருகணம் எண்ணி நின்றபின் அவரை தள்ளி வீழ்த்திவிட்டு அரண்மனைக்குள் புகுந்து அதன் பன்னிரண்டாவது உப்பரிகையை அடைந்தான்.

அந்த உப்பரிகையே ஒரு மலர்வனமாக ஆக்கப்பட்டிருந்தது. அங்கு சிறு குளிர்ச்சுனைகள் மான்விழிகளென ஒளிகொண்டிருந்தன. பொன்வண்டுகளென்றான தேவர்கள் யாழிசை மீட்டினர். அனைத்து மலர்களும் ஒரு திசை நோக்கி திரும்பி இருக்கக்கண்டு அங்கு சென்றான். மூன்று சுனைகளால் சூழப்பட்ட சிறு மலர்ச்சோலை ஒன்றில் அல்லியிதழ்கள் சேர்த்து அமைத்த மஞ்சத்தில் ரம்பையும் ஊர்வசியும் திலோத்தமையும் அருகிருக்க கள் மயக்கில் காமத்திலாடிய களைப்பில் விழிமயங்கி இருந்த விருத்திரனை கண்டான்.

அவனைக் கண்டதும் எழுந்து ஆடை அள்ளி உடல் மறைத்து விலகிய தேவகன்னியர் சினமும் நாணமும் அச்சமும் கொண்ட விழிகளால் அவனை சரித்து நோக்கினார்கள். விருத்திரனின் கால்களைப்பற்றி உலுக்கி “அரசே, எழுக அரசே!” என்று கௌமாரன் அழைத்தான். ஏழுமுறை அழைத்தபின் மெல்ல விழிதிறந்து கைகளை ஊன்றி எழுந்து “யார்? என்ன நிகழ்கிறது?” என்று விருத்திரன் கேட்டான். “அரசே, நான் கௌமாரன். உங்கள் முதன்மை படைத்தலைவன்” என்றான் கௌமாரன். தலையை உலுக்கி தெளிந்த விருத்திரன் “ஆம், உன்னை நினைத்துக்கொண்டிருந்தேன்” என்றபின் நீர் கொண்டுவரச்சொல்லி அள்ளி அள்ளி  தன் தலையை கழுவிக்கொண்டான். முகத்தில் நீரை அள்ளி அள்ளி அறைந்தான்.

சிற்றேப்பத்துடன் “என் குடி அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்கிறதல்லவா? குலமூத்தோர் நிறைவுகொண்டுள்ளனர் அல்லவா? மூதன்னையர் குலம் பெருகுவது கண்டு மகிழ்கிறார்களல்லவா?” என்றான். ஒவ்வொருமுறையும் எழும் அந்த வழக்கமான வினாக்கள் கௌமாரனிடம் அப்போது பெருஞ்சினத்தையே எழுப்பின. “அரசே, கீழே தாங்கள் கட்டி எழுப்பிய முதற்பெருநகர் விழுந்துகொண்டிருக்கிறது. வருணனின் படைகளால் நமது கோட்டைகள் சரிகின்றன” என்றான். அதை விருத்திரனின் உள்ளம் உணரவில்லை. “நன்று” என்று இன்னொரு ஏப்பம் விட்டான்.

உரத்த குரலில் “அரசே, புற்றிகபுரி அழியப்போகிறது. வருணனின் படைகள் அதை அழிக்கின்றன” என்றான் கௌமாரன். “யார்?” என்றான் விருத்திரன். “வருணன். அவர் படைகளால் நம் நகர் அழிகிறது” என்றான் கௌமாரன். விருத்திரன் வாய் திறந்திருக்க, கண்கள் நீர்படிந்து சிவந்து பொருளற்ற வெறிப்பு கொண்டிருக்க “என்ன சொல்கிறாய்?” என்றான். மீண்டும் கௌமாரன் அச்செய்தியை கூவிச்சொன்னான்.

மெல்ல புரிந்துகொண்டதும் “என் நகரையா?” என்ற விருத்திரன் உடனே நகைத்து “கணம் வளரும் கோட்டை அது. சரிவது அதன் இயல்பு. மீண்டும் வளர்வதற்கென்றே சரிகிறது அது. இன்னமும் அதை நீ உணரவில்லையா?” என்றான். கௌமாரன் “அரசே, வருணனை நானும் எளியவர் என்றே எண்ணினேன். உங்கள் காலடிகளை பணியும்படி அறிவுறுத்தினேன். அவர் வல்லமையைக் கண்டு இன்று அஞ்சுகிறேன்” என்றான். “அச்சம் தவிர், படைத்தலைவனே! என்னை வெல்ல எவருக்கும் ஊழில்லை” என்றபின் சோம்பலுடன் உடலை நீட்டிப்படுத்து “எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. இன்மது கொண்டுவருக!” என்றான். கௌமாரனின் அஞ்சிய முகத்தைகண்டு “படைத்தலைவருக்கும் மது வரட்டும்” என்றான். சீற்றத்துடன் “அரசே!” என்று அவன் கால்களைப்பற்றி உலுக்கினான் கௌமாரன். “வந்து பாருங்கள்! தங்கள் கோட்டை அங்கிருக்கிறதா என்றே ஐயம் கொள்கிறேன்.”

விருத்திரன் நகைத்து “எனது பகைவன் இந்திரன் மட்டுமே. அவனோ எங்கு என்றறியாது மறைந்துவிட்டான். இந்திரன் வெல்லமுடியாத என்னை இவ்வேழு உலகிலும் எவரும் வெல்ல முடியாதென்றறிக! மூடா, வருணன் என் குலத்தவர். அசுரர்களின் வெற்றி கண்டு உளம்நிறைபவர். நான் புற்றிகபுரியை அமைத்தபோது அவர் வாழும் ஆழ்கடலுக்குள் சென்று மூத்தவரே வாழ்த்துக என்னை என்று சொல்லி தலைவணங்கி அரிசியும் மலரும் நீரும் பெற்றே வந்தேன். இங்கே இந்திரனை வெல்லவரும்போதும் அவர் சொல் பெற்றேன். அவர் அருளுடனேயே இந்திரன் என்று ஆவேன்” என்றான்.

சொல்லிழந்து நின்ற கௌமாரனின் தோளில் தட்டி “நீ செல்க! உனது எளிய அச்சங்களுக்கு விடையளித்து வீணடிக்க என்னிடம் பொழுதில்லை” என்றபின் களிமயக்குடன் கண்மூடி “கள்ளுண்டவனுக்கும் காமம்கொண்டவனுக்கும் காலம் இமைக்க இமைக்க குறுகி வருவதை நீ அறியமாட்டாய்” என்றான் விருத்திரன். செய்வதறியாது அங்குமிங்கும் நோக்கியபின் கௌமாரன் எழுந்து விலகினான். அவன் மீண்டும் படிகளுக்கு வந்தபோது அங்கே இந்திராணி நின்றிருந்தாள். “வணங்குகிறேன், தேவி” என்றான்.

“என்ன சொல்கிறார்? காமம் நிறையவில்லையா அவருக்கு?” என்றாள். “ஆம், அவர் விழித்தெழ விழையவில்லை” என்றான். “அவர் விழித்தெழவேண்டும்… நான் சொல்லிச்சொல்லி சோர்ந்துவிட்டேன்” என்றாள் இந்திராணி. “கண்ணறிய மாறிக்கொண்டிருக்கிறது காலம். காலத்தில் பிந்தியவன் கணம்தோறும் தன்னை இழந்துகொண்டிருக்கிறான். வேந்தர் எண்ணி வாழும் அவ்வுலகம் இன்றில்லை. விழுந்துகிடக்கும் இனிய சேற்றிலிருந்து ஒருகணம் வெளிவந்து நோக்கும்படி சொல்லுங்கள்.” இந்திராணி அவனை அழைத்துக்கொண்டு விருத்திரனை அணுகினாள். “படைத்தலைவர் சொல்லையும் அமைச்சர் சொல்லையும் ஒற்றர் சொல்லையும் மறந்த அரசன் பகைவர் சொல்லை கேட்பான் என்பார்கள். இனி பொறுக்கமுடியாது. எழுக!” என்றாள்.

“செல்க! இனியொரு சொல்லும் கேட்க எனக்கு விழைவில்லை” என்றபின் விருத்திரன் புரண்டு படுத்தான். இரு கைகளையும் விரித்து அருகே நின்ற மகளிரை அழைத்து “என்னை தழுவிக்கொள்ளுங்கள். இவ்வினிமை ஒருகணமும் விரிசலிடாமலிருக்கட்டும். அது உங்கள் திறன்” என்றான். இந்திராணி “அரசே, அனைத்தும் அழிந்துகொண்டிருக்கின்றது என்கிறார் படைத்தலைவர். விழித்தெழுக!” என்று கூவினாள். அவன் தோளைத்தொட்டு உலுக்கி “எழுக!” என்றாள். விருத்திரன் “நீ இனியவள்” என அவள் கன்னத்தை வருடினான்.

“இனிமேலும் தயங்கினால் உங்கள் அழிவே” என்று இந்திராணி சொன்னாள். “மீண்டும் மீண்டும் இதை சொல்லிக்கொண்டிருக்கிறேன். இதோ, இறுதிக்கணமே இவர் வடிவில் வந்து நின்றிருக்கிறது. நான் சொல்வதை செவிகொள்ளுங்கள். எழுங்கள்!” என்றாள். அவள் கண்கள் கலங்கி குரல் உடைந்தது. அவன் “நீ நல்லமைச்சர். நல்ல சொற்களை சொல்கிறாய். அது உன் கடமை” என்றான். பின்னர் கௌமாரனிடம் “இந்திராணி என்றாலும் பெண். ஆண்களின் ஆற்றல் அவர்களுக்கு புரிவதே இல்லை” என்றான்.

உடைவாளை உருவி தன் கழுத்தில் வைத்து கௌமாரன் வீறிட்டான் “அரசே, உங்கள் மேல் ஆணை! ஒருகணம் எழுந்து வந்து என்னுடன் நின்று கீழே உங்கள் நகரை நோக்குக! அன்றேல் இக்கணமே சங்கறுத்து உங்கள் காலடியில் விழுவேன்.” சினத்துடன் அவனை சற்றுநேரம் பார்த்தபின் மெல்ல தளர்ந்து “பித்து நிறைந்துவிட்டது உன் உள்ளத்தில். மூடா, உன் மேல் நான் கொண்ட அன்பின்பொருட்டு எழுகிறேன். இவையனைத்தும் உன் வீண் அச்சமென அறிவேன். விருத்திரேந்திரனின் முதன்மைப் படைத்தலைவன் அச்சம்கொண்டான் என்று நான் அன்றி பிறர் அறியலாகாது. வா!” என்று எழுந்து ஆடை சுற்றி தலையணியைச் சூடி நடந்தான்.

“வருக, அரசே! ஒருமுறை கீழே நோக்குங்கள்” என்றபடி கௌமாரன் முன்னால் ஓடினான். “மூடன்” என்றான் விருத்திரன் தேவியிடம். “நம் படைத்தலைவர் அவர். நாம் காணாதவற்றை அவர் காணக்கூடும்” என்று இந்திராணி சொன்னாள். “பார்வையென்பது பார்ப்பவனின் இடத்தாலும் திசையாலும் ஆனது. ஆகவே எந்தப் பார்வையும் தன்னளவில் தனித்ததே. சென்று நோக்குக!” விருத்திரன் நகைத்து “நான் வெல்லற்கரியவன். அதை நான் அறிவேன். நீங்கள் என் வெற்றியில் ஐயம் கொண்டிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு” என்றான்.

அமராவதியிலிருந்து வெளிவந்து அங்கு தெற்கு மூலையிலிருந்த கோட்டைச்சுவர் மேல் ஏறி காவல்மாடத்தில் நின்று கீழே நோக்கினான் விருத்திரன். அக்கணமே எரிசினத்துடன் “என்ன நிகழ்கிறது அங்கே? நான் காண்பது விழிமயக்கா?” என்று கைநீட்டி கூவினான். புற்றுறைக் குலங்களால் சமைக்கப்பட்ட அவன் தொண்ணூற்றொன்பது பெருங்கோட்டைகளில் ஒன்று மட்டுமே எஞ்சியிருந்தது. பிற அனைத்தும் விழுந்து கரைந்து மறைய அங்கு வெண்நுரை எழுந்து அலை கொப்பளித்துக்கொண்டிருந்தது.

KIRATHAM_EPI_44

கௌமாரன் சொன்னான் “இன்னும் நெடுநாள் இக்கோட்டை எஞ்சாது, அதை இப்போது உள்ளுணர்கிறேன், அரசே. தங்கள் முதல் நகர் விழுவதென்பது தோல்வியின் தொடக்கம். தங்களை வெல்லலாகும் என்று இந்திரன் தேவர்களுக்கு காட்டிவிட்டால் அதன் பின் உங்கள் முடி நிலைக்காது.” தன் நெஞ்சில் அறைந்து விருத்திரன் கூவினான் “இக்கணமே எழுகிறேன். வருணனை சிறைபற்றி இங்கு என் அரியணைக்காலில் கொண்டு கட்டுகிறேன். மூதாதை என நான் எண்ணியிருந்தவன். என் குலத்து மூத்தவன். வெற்றாணவத்தால் குடிகெடுக்கும் வஞ்சகனானான்.” சினத்தால் மதம்கொண்டு சுற்றிவந்து கூச்சலிட்டான் “அவனை என் காலடியில் வீழ்த்துவேன். அவன் தலையை மிதித்தாடுவேன். இது ஆணை! என் குலமூதாதையர் மேல் ஆணை!”

“பொறுங்கள், அரசே! நான் சினம் மீதூறிச் சொன்ன சொல்லே நம் நகரை அழிக்கிறது. இச்சினம் முதலில் அவருக்கு எப்படி வந்ததென்று பார்ப்போம். நம் குலத்தார் ஒருசொல் சென்று சொன்னால் நம்மில் கனிவு கொள்ளக்கூடும். நிகர் வல்லமை கொண்ட இரு அசுரர் குலத்து அரசர்கள் அவரும் நீங்களும். உங்களை பிரித்து வெல்வது இந்திரனின் சூழ்ச்சி” என்றான் கௌமாரன். “தலைவணங்குவதா? தேவருக்கு வணங்காத தலை பிறிதொரு அசுரன் முன் இறங்குவதா?” என்று விருத்திரன் கூவினான். “வீண்சொல்! போரன்றி வேறேதுமில்லை. எழுக நமது படைகள்!”

கௌமாரன் “அரசே, இங்குள்ளவை தேவர் படைகள். அவர்கள் கள்ளுண்டு செயலற்றிருக்கிறார்கள். அங்கு நம் அசுரகுடிகளும் பிறிதொரு நிலையில் இல்லை. படைகொண்டு சென்றாலும்கூட யாரிடம் போர் புரியப்போகிறோம்? அங்கு அலையுருக்கொண்டு எழுந்து வருவதும் நமது குடியல்லவா? நாம் இந்திரனின் கண்முன் போரிட்டு அழியப்போகிறோம். ஆம், நமது அழிவுபோல் அவனுக்கு உவகை அளிப்பது பிறிதொன்றுமில்லை” என்றான்.

“ஆம்” என்று விருத்திரன் சோர்ந்து அமைந்தான். “பகை, நஞ்சு, நெருப்பு மூன்றும் ஒரு துளியும் எஞ்சலாகாது என்று கற்றிருக்கிறேன். அவனை எஞ்சவிட்டது என் பிழை” என்றான். “இல்லை அரசே, அவனை சிறுதுளியென விட்டிருந்ததே உங்கள் பிழை” என்றான் கௌமாரன். “அவனை தேடிக் கண்டடைந்து பெருக்கியிருக்க வேண்டும். நிகர் எதிரியென உங்கள் முன் அவன் நின்றிருக்கவேண்டும். தேவர்களின் ஆற்றல் நேர்விசை. அசுரர்களோ எதிர்விசை மட்டுமே கொண்டவர்கள். பேருருவப் பகைவனொருவன் இன்றி அசுரர்கள் தன்னை திரட்டிக்கொள்ள முடியாது. சினமின்றி படைக்கலங்கள் ஏந்த முடியாதவர்கள் நாம்” என்றான்.

“அரசே, அசுரர் வெற்றியெல்லாம் அவர்கள் எதிரிகளை எதிர்கொள்ளும்போது மட்டும் அமைவதே. இந்திரன் இல்லாததனால் தேவர்குலம் வலுவிழந்தது. எதிரி இல்லாததனால் அசுரர்குலம் வலுவிழந்துள்ளது. தேவர்கள் எழமுடியும். விழைவே அவர்களின் இயல்பு. தேவர்கள் எழுந்து நம்மை வெல்ல வரும்போது மட்டுமே அசுரர் எழுவார்கள். எதிர்ப்பே நம் இயல்பு” என்றான் கௌமாரன். “ஆம்” என்று சோர்ந்து தோள்தாழ்த்தினான் விருத்திரன்.

“இன்னமும் பிந்திவிடவில்லை” என்றாள் இந்திராணி. “உங்கள் வெல்லமுடியாத ஆற்றல் அப்படியே எஞ்சியிருக்கிறது. எழுக! இந்திரனை வென்று மீண்டும் புற்றிகபுரியை அமைத்தால் உங்கள் ஆற்றல் மீண்டும் நிறுவப்படும்…” விருத்திரன் “ஆம்” என்றான். “வேறுவழியில்லை. போர்தான்” என தனக்குள் சொல்லிக்கொண்டான். “அரசே, வருணனுடன் நாம் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். அவரை பகைத்தல் நன்றல்ல” என்றான் கௌமாரன். “நான் எண்ணுவதும் அதுவே” என்றாள் இந்திராணி. “பகைவரைப் பெருக்குவது அறிவுடைமை அல்ல.”

“அப்படியென்றால் நான் வெல்லமுடியாதென்று எண்ணுகிறீர்கள் அல்லவா?” என்றான் விருத்திரன். “நான் அழியக்கூடுமென ஐயுறுகிறீர்கள். அந்த ஐயம் எனக்கில்லை. நான் வெல்வேன். என் முதற்றாதையின் அழியாச்சொல்லே என் படைக்கலம்.” மீண்டும் குனிந்து அவன் நோக்கியபோது ஒரு புற்று எழுந்திருந்தது. “ஆம், அவர்களும் போர்புரிகிறார்கள். அசுரர்களாகிய நாம் ஒருபோதும் தோல்வியை ஏற்பதில்லை” என்றான்.