மாதம்: திசெம்பர் 2016

நூல் பன்னிரண்டு – கிராதம் – 66

[ 7 ]

விழிதெரியா வலையிழுத்து அதன் நுனியில் இருக்கும் சிறுசிலந்தி போலிருந்தது சண்டகௌசிகையின் சிற்றாலயம். அவர்கள் புலரி நன்கு எழுந்து ஒளிக்குழாய்கள் சரிவுமீண்டு வரும் வேளையில் சென்று சேர்ந்தனர். மூன்று நாட்கள் அடர்காட்டில் விழித்தடம் மட்டுமே எனத் தெரிந்த பாதையில் ஒற்றை நிரையென உடல் கண்ணாக்கி, தங்கள் காலடியோசையையே கேட்டுக்கொண்டு நடந்தனர். மலைப்பாறைகளில் ஏறி அனல்மூட்டி அந்தி உறங்கினர். விடிவெள்ளி கண்டதுமே எழுந்து சுனைகளில் நீராடி முந்தைய நாள் எச்சம் வைத்திருந்த சுட்ட கிழங்குகளையும் காய்களையும் உண்டு நடக்கலாயினர். எங்கிருக்கிறோம் என்று தெரியாததனால் அன்னையின் ஆலயம் அணுகிவருகிறதா என்றே அறியமுடியாமலிருந்தது.

ஓங்கிய இலுப்பை மரத்தின் அடித்தடியின் பட்டை கீறி எழுதப்பட்டிருந்த குழூஉக் குறிகளை விரல்தொட்டு வாசித்த சண்டன் “அருகில்தான் அன்னையின் ஆலயம்” என்றான். அச்சொல் அவர்களை முதலில் தளரச்செய்தது. பைலன் மூச்சிரைத்தபடி ஒரு வேர்க்குவையில் அமர்ந்தான். பிறரும் அவன் அமரக்கண்டதும் கால் தளர்ந்தனர். சண்டன் “அருகில்தான்… செல்வோம்” என்றான். “ஆலயங்களை காடுகளுக்குள் வைப்பதேன் என்று தெரியவில்லை” என ஜைமினி முணுமுணுத்தான். “மானுடர் காடுகளுக்குள் தங்கள் தெய்வங்களை விட்டுவிட்டு நிரைநிலங்களுக்கு இறங்கிச் சென்றுகொண்டே இருக்கிறார்கள்” என்றான் சண்டன்.

மலை என முகடு எழுந்து ஓர் ஆலயம் பச்சை இலைப்படப்பிற்கு அப்பால் தெரியும் என்று பைலன் எதிர்பார்த்தான். எனவே சண்டன் கை சுட்டி “அதோ!” என்று காட்டியபோது அவன் விழிகள் சற்று அண்ணாந்தே அலைந்தன. “அங்கு” என்று மீண்டும் சண்டன் சொன்னான். விழிதடுமாற “ஆலயமா?” என்று பைலன் கேட்டான். அதற்குள் ஜைமினி அதை பார்த்துவிட்டிருந்தான். “சிறிய ஆலயம்… இலைகளுக்குள் அதோ” என்றான்.  ஒழுங்கற்ற பாறைப்பாளங்களை நட்டு சுவரென்றாக்கி அதன் மேலே பாறைகளை அடுக்கி எழுப்பப்பட்ட அவ்வாலயம் ஓர் ஆள் உயரத்திற்கே அமைந்திருந்தது. அதன்மேல் காட்டுமரங்களின் இலைகளும் அவற்றின் நிழல்களும் பொதிந்திருந்தன.

அங்கு மானுடர் வந்து நெடுங்காலம் ஆகிவிட்டதனால் அதன் மேல் குற்றிலைக் கொடிகளும் கூம்பிலைப் பசலைகளும் பதுப்பு பச்சைப்பாசியும் படர்ந்து மூடியிருக்க பச்சைக்குள் ஒரு பச்சை வடிவெனத் தெரிந்தது. “பசுந்தவளை இலையடர்வுக்குள் இருப்பதுபோல” என அக்கணமே ஜைமினி ஒப்புமை சொன்னான். அதன் நின்ற நீள்சதுர வடிவ வாயில் கரிய திரைத் தொங்கலெனத் தெரிந்ததைக் கொண்டே அது அங்கிருப்பதை முதலில் விழி அறிந்தது. “மிகத்தொன்மையான ஆலயம்” என்றான் சண்டன். “மானுடக் கைகள் உளியேந்தத் தொடங்குவதற்கு முன்பு  கட்டப்பட்டது. மானுட மொழி இலக்கணம் கொள்வதற்கு முன்னரே வகுக்கப்பட்ட கதைகொண்டது.”

அவர்கள் உளக்கிளர்ச்சியுடன் அவ்வாலயத்தை நோக்கி நடக்க சுமந்து “இன்றும் இமயமலைச்சாரலில் சில பழங்குடிகள் இதைப்போன்ற ஆலயத்தைக் கட்டுவதை பார்த்திருக்கிறேன். இயல்பாகவே பிளவுபட்டிருக்கும் பாறைப்படிவங்களை கண்டடைகிறார்கள். அப்பிளவுகளுக்கு நடுவே உலர்ந்த மர ஆப்புகளை அடித்து அதன் மேல் நீரூற்றி ஊறவைக்கிறார்கள். ஆப்பு ஊறி உப்பும்போது மிக மெல்ல பாறை பிளந்து தனித்தெழும். நடுவே மரநெம்புகோல்களை செலுத்தி நெம்பி மெல்ல பிளந்தெடுக்கிறார்கள். பாறைத்தோல் உரிப்பதுபோலிருக்கும்.”

சண்டன் “கல்லில் உரித்த நார்” என்றான். “ஆம்” என்றான் சுமந்து. “உருளை மரங்களில் அப்பலகைகளை ஏற்றிக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். கொடிகள் கட்டி பலநூறுபேர் நின்று எறும்புக்கூட்டம் இரை தூக்குவதுபோல எளிதாக எடுத்து அடுக்குகிறார்கள்.”  அக்கோயிலை மேலும் அணுகி நோக்கியபடி “ஆனால் இத்தனை காலம் இச்சிற்றாலயம் இங்கிருப்பது வியப்புதான்” என்றான் வைசம்பாயனன். சண்டன் “நின்றிருக்கும் கற்பாளங்கள் ஒவ்வொன்றும் இதே அளவுக்கு மண்ணுக்குள்ளும் சென்றிருக்கும். தொல்குடிகள் எதிர்காலம் என்பதை எட்டாமை என்று எண்ணப் பயின்றவர்கள். அவர்களின் பெரும் நடுகற்கள் நினைப்புக்கு அப்பாலுள்ள தொன்மை முதல் இங்கு நின்றிருக்கின்றன. அவை இம்மலைப்பாறைகளைப்போல காலம் இறந்தவை” என்றான் சண்டன்.

அவர்கள் அச்சிற்றாலயத்தின் முகப்பை அடைந்தனர். பல மாதங்களுக்கு முன்பு அங்கு வந்தவர்கள் அதன் முற்றத்தை அரைவட்டமாக கொடியும் செடியும் வெட்டி சீரமைத்திருந்தனர். அதற்குப்பின் எழுந்த புதர்களும் செடிகளும் மண்டி பச்சை இலைகளால் ஆன ஒரு முற்றம் அங்கு அமைந்திருந்தது. அதைக் கிழித்து கடந்து அவர்கள் ஆலய முகப்பை அடைந்தனர். அவர்களின் காலடிகேட்டு சிறுதவளைகள் எம்பிக்குதித்தன. ஒரு பச்சைப்பாம்பு உயிர்கொண்ட இலைத்தண்டென தலைமொட்டுடன் சுருண்டு வளைந்து நாநீட்டியது. தலைக்குமேல் ஆள்காட்டிப்பறவை கூவிக்கொண்டே சென்றது. அவர்களை அது புதருக்குள் இட்ட முட்டையிலிருந்து விலக்கும்பொருட்டு கூவியபடியே  நிலத்தில் விழுந்து சிறகடித்துப்புரண்டு அவர்களின் நோக்கை தன்மேல் வாங்கிக்கொண்டு எழுந்து பறந்து அப்பால் சென்றது.

ஆலயத்தின் கருவறைக்குள் பெயர்த்தெடுத்த கருங்கல் பாளமொன்றின் மேல் ஆளுயர நிலைக்கல்லென சண்டகௌசிகையின் சிலை அமைந்திருந்தது. அதன் மேலும் பச்சைப் பாசி படிந்திருந்தமையால் அது ஒரு வெறும் கற்பாளம் என்றே தோன்றியது. அவர்கள் இருநிரையென கைகூப்பி பணிந்து நிற்க சண்டன் இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பி அப்படியே முழந்தாளிட்டு விழுந்து கையும் தலையும் மார்பும் இடையும் காலும் நிலம் படிய அன்னையை வணங்கினான். “கரியவளே, மூத்தவளே, முழுத்தவளே, என்றும் இருப்பவளே, எங்கும் என்று ஆனவளே, என் சொல்லில் அமர்க! என் முழவில் ஒலி ஆகுக! என் எண்ணங்களில் ஒளியென்று நிறைக! என் உணர்வுகளில் அனலாகுக!” என்று வாழ்த்தினான். பின்பு சிற்றாலயத்தின் சிறு நடையைத் தொட்டு சென்னி சூடி உள்ளே நுழைந்தான்.

உள்ளே குவிந்திருந்த ஓநாயின் எச்சங்களையும் பாதி மட்கிய முடிகளையும்  உண்டு எஞ்சிய எலும்புகளையும் கையால் அள்ளி வெளியே போட்டான். பின்னர் அருகிருந்த எண்ணை வற்றி மையென எஞ்சிய தேங்காயோட்டு  அகல் ஒன்றை எடுத்து அதைக்கொண்டு அன்னையின் பாறை வடிவை மெல்ல சுரண்டினான்.  பசும்பரப்பாக படர்ந்துமூடியிருந்த  பாசி அகன்றபோது மெல்லிய பதிவோவியச் சிற்பமாக அன்னையின் உருவம் விழிமுன் எழுந்தது. பைலன் அருகே குனிந்து நோக்கி “சிற்பமா? ஓவியமா?” என்றான். “உலோகங்கள் பழகாத காலத்தில் வரையப்பட்டது இது. கல்லில் பிறிதொரு கல்லால் அடித்து உருவாக்கப்பட்ட பள்ளத்தால் ஆன சிற்பம்” என்றான் சண்டன். “இதை பதிக்கை என்பது தென்மொழி வழக்கம்.”

விரல் தொட்டு “இது அன்னையின் முகம். இவை பதினாறு  தடக்கைகள். இவை சிலம்பணிந்த கால்கள்” என்று அவன் சொன்ன அக்கணமே அனைவரும் அன்னையின் முழு உருவை பார்த்துவிட்டனர். கணம் கணமென அது தெளிவும் பொலிவும் கொண்டு எழுந்தது. கல் மறைந்து அங்கே அன்னை நின்றிருந்தாள். “வியப்புதான்” என்றான் சுமந்து. “இப்போது என் முன் சண்டகௌசிகை உடல் கொண்டு நின்றிருப்பதாகவே தோன்றுகிறது.” சண்டன் புன்னகைத்து “சிற்பங்கள் அனைத்தும் மானுடக் கற்பனையின் கல்லிலேயே செதுக்கி எடுக்கப்படுகின்றன, அந்தணரே” என்றான். சற்றுநேரத்தில் அகவை முதிர்ந்த அன்னை ஒருத்தி அவர்கள்முன் விழிகூர்ந்து நோக்கி நின்றிருப்பதாகவே உணர்ந்தனர்.

“அன்னையை நீராட்டி மலர் சாத்தி படையலிட்டு பூசெய்கை முடித்து கிளம்புவோம்” என்றான் சண்டன். ஜைமினி தரையை நோக்கி “வலப்பக்கமாக சரிந்திறங்குகிறது நிலம். அங்கொரு ஓடை இருக்க வாய்ப்புண்டு” என்றான். பின்னர் கண்களை மூடி தலையை மெல்லத் திருப்பி “ஆம் அங்கு நீரொலியும் எழுகிறது” என்றான். “இருவர் சென்று நீருடன் வருக! இருவர் புதுமலரும் படையலுக்கு உணவும் கொண்டு மீள்க!” என்றான் சண்டன். அவர்கள் பிரிந்து காட்டிற்குள் சென்றனர்.

சண்டன் அன்னையின் உருவை வெளியே இருந்த அரப்புல்லை பறித்து உரசி நன்கு துலக்கினான். வெளிவந்து அங்கு நின்றிருந்த ஈச்ச மரக்கன்றொன்றின் இலைகளைப் பற்றி வெட்டி துடைப்பமாக்கி ஆலயத்தின் உட்பகுதியை தூய்மை செய்தான்.  ஜைமினியும் சுமந்துவும் கோட்டிய கமுகுப்பாளைத் தொன்னையில் நீருடன் வந்தனர். அதை அன்னை மேல் விட்டு முழுக்காட்டி கழுவினர். ஏழுமுறை அவர்கள் நீர் கொண்டு வந்தனர். இறுதி தொன்னை நீரை அன்னை முன் வைத்தார்கள்.

வலைக்குடலையில் காட்டுப்பூக்களும் பிடுங்கிய புதுக்கிழங்குகளுமாக வைசம்பாயனனும் பைலனும் வந்தனர். தன் தோல்பைக்குள் இருந்து அரணிக்கட்டையை எடுத்து உரசி நெருப்பூட்டி காய்ந்த புல்லை எரித்து சிறு அனல் குழிக்குள் குவித்த விறகை எழுப்பினான் சண்டன். அதில் கிழங்குகளைச் சுட்டு அவை வெடித்து வெண்நகை கொண்டபோது எடுத்து கையால் உடைத்து புது வாழைத்தளிர் நாக்கில் படைத்து அன்னை முன் வைத்தான். வைசம்பாயனனும் பைலனும் மலர்களைத் தொடுத்து மாலையாக்கினர். செவ்வரளியும் செங்காந்தளும் செந்தெற்றியும் செண்பகமும் கலந்து அமைந்த மாலையை  அன்னையின் கழுத்தில் மாட்டினான் சண்டன்.

பதினாறு பெருங்கைகளில் படைக்கலங்களும், பன்றித்தேற்றையும் தெறிவிழிகளும் கொண்டிருந்த அன்னை அச்செம்மையால் ஒளி கொண்டாள். எரியும் அனற்களத்திலிருந்து ஒரு விறகை எடுத்து அச்சுடரை மும்முறை சுழற்றி மும்முறை எதிர் சுழற்றி அன்னைக்கு அனலாட்டு காட்டினான் சண்டன். பின்னர் வெளிவந்து இடக்கால் மடித்து அமர்ந்து தன் உடுக்கை எடுத்து மீட்டி அன்னையின் ஆயிரம் பெயர்கள் அமைந்த தொல்பாடலைப் பாடினான். ஒவ்வொரு சொல்லாக அவன் சொல்லச் சொல்ல அச்சொற்கள் உதிர்ந்து அன்னை அவள் மட்டுமே என அங்கு நிற்பதுபோல பைலனுக்குத் தோன்றியது.

பூசனை முடித்து அவர்கள் முற்றத்தில் வளைந்தமர்ந்து அன்னைக்குப் படைத்த கிழங்கை பகிர்ந்துண்டு அவள் அடிகளில் படைத்த நீரை அருந்தினர்.  ”அன்னையை இக்குலங்கள் கரிய மண்ணின் வடிவமென்று வழிபடுகின்றனர்” என்றான் சண்டன். “ஆடிப்பட்டம் அமைந்ததும் வயலொருக்கி வைத்துவிட்டு  விதைகளுடன் இங்கு வருவார்கள். இந்நிலத்தில்  இருந்து கரிய மண்ணை அள்ளி ஒரு தொன்னையில் நிரப்பி அதில் விதைகளிட்டு நீரூற்றி  அன்னை முன் வைப்பார்கள். மூன்று நாட்கள் இங்கே சுற்றிலும் குடில் அமைத்து தங்குவார்கள். அவ்விதைகள் முளைத்து ஈரிலை விட்டு எழுந்ததும் அன்னையை வணங்கி அவள் அருளிய கொடை என அதை கொண்டுசென்று தாங்கள் உழுது மரமோட்டி செம்மைப்படுத்தி வைத்திருக்கும் வயலில் நடுவார்கள்” என்றான் சண்டன்.

சண்டன் “எருவும் தழையுமிட்டு மும்முறை உழுது நீர்த்தேக்கிவிட்டு வந்த வயல் அப்போது செந்நிறத் தீற்றலென பாசி படிந்து இனிய ஊன் மணம் கொண்டு காத்திருக்கும். வயல் பூப்பது என்று அதை சொல்வார்கள்.  அது அன்னையின் கருக்குருதி என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். அன்னையின் அருள்கொண்ட செடிகள் ஒன்று நூறு மேனியென பெருகும் என்பது குலநம்பிக்கை. என்று இத்தெய்வம் இங்கமர்ந்ததென்று எவருமறியார். காட்டுக்குள் அன்னை அமர்ந்திருப்பது வரை ஊர்களில் கழனிகளில் அமுது விளையுமென்று தொல்பாடல்கள் சொல்கின்றன” என்றான்.

அன்னையின் அருளுணவை உண்டு ஒழிந்த இலையுடன் எழுந்த ஜைமினி இயல்பாகத் திரும்பி கருவறையை நோக்கிய உடனே வியப்பொலி எழுப்பி உடலதிர்ந்தான். “என்ன?” என்றான் சண்டன். “ஒருகணம் அன்னையின் கண்களை என் கண்கள் சந்தித்தன” என்றான் ஜைமினி. “ஆம், நான் கருவறை நுழைகையிலேயே அவளுடன் விழிதொட்டேன்” என்றான் சண்டன். அவர்களை மாறி மாறி நோக்கிய சுமந்து திரும்பி கருவறையை நோக்கியபின் “நோக்குந்தோறும் உயிர் கொண்டு எழுகிறாள்” என்றான். “ஆனால் நம் சித்தம் இது கல் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. சித்தம் கரையும் ஓர் அறியாக்கணத்தில் கல்லை திரையெனச்சூடி உள் அமர்ந்திருக்கும் அன்னை எழுந்து வந்துவிடுகிறாள்” என்றான் சண்டன்.

KIRATHAM_EPI_66

வியப்புடன் அவர்கள் நால்வரும் கருவறையை நோக்கினர். “நோக்குகிறேன் எனும் உணர்வு வந்ததுமே அவள் கல்லுக்குள் சென்று நின்றுவிடுகிறாள்” என்றான் வைசம்பாயனன். “நாம் விழி விலக்கியதுமே அவள் எழுந்து நோக்கு கொள்கிறாள் போலும்” என்று சுமந்து சொன்னான். “செல்வோம்! இருளுக்குள் நாம் கௌசிகக்காட்டைவிட்டு விலகிச்சென்றுவிடவேண்டும்” என்றான் சண்டன். அவர்கள் கை கழுவி மீண்டு வந்து அன்னையின் காலடிகளை விழுந்து வணங்கி புறம்காட்டாது நடந்து விலகி மீண்டும் காட்டுப்பாதையை அடைந்தனர்.

ஜைமினி “சிற்பநூல் முறைப்படி பீடமென்பது இவ்வுலகம். அதன் மேல் விண்ணுருக்கொண்டு அமர்ந்திருக்கின்றன தெய்வங்கள். யோகநூலின் கூற்றுக்களின்படி அப்பீடம் புறமும் அகமும் ஆன ஜாக்ரத். அதில் துரியாதீதமாக எழுந்தவையே தெய்வங்கள்” என்றான். “சண்டரே, தெய்வங்களை அப்பீடத்தில் நிலை நிறுத்துவது வேதம். இவ்வன்னையை பீடத்தில் நிலை நிறுத்தும் வேதம் எது?” சண்டன் “வேதமொன்று உள்ளது, இல்லையேல் அன்னை இங்கு அமர்ந்திருக்க வாய்ப்பில்லை. எங்கோ அது நாளும் உரைக்கப்படுகிறது. எவ்வனலிலோ அவியளிக்கவும் படுகிறது. அது நாமறியாத வேதம்” என்றான்.

“அந்தணர்களே, இப்புவி நம் நினைப்புக்கும் எட்டாது விரியும் வெளி. இதில் நாம் நடந்து நடந்து அறிவது பாரதவர்ஷம் என்னும் நிலம் ஒன்றே. நூறுநூறு நிலவர்ஷங்கள் அடங்கியது இப்புவி. பல்லாயிரம்கோடி புவிகள் அடங்கியது வான்வெளி. வானென்று சூழ்ந்தமைபவையே தெய்வங்கள். ஒற்றை ஒரு கணத்தில் ஓராயிரம்கோடிகோடி நாவுகள் வேதமோதி அன்னையை வாழ்த்துகின்றன என்று ஒரு கவிதைவரியுண்டு. பெருமழையின் ஒருதுளியே வேதமென்று நம் எளிய மொழியில் சிக்கியது. மொழி பலவாகி விரிந்துள்ள இங்கெங்கும் பரவி பெய்து கொண்டிருக்கிறது வேத மாமழை. ஒருவிதையையும் அது முளைக்காமல் எஞ்சவிடுவதில்லை என்கின்றனர் கவிஞர்.”

ஜைமினி தன் உளச்சொற்களில் உழன்றபடி தலைகுனிந்து நடந்தான். “இரண்டு வேதங்கள்” என்று அவன் தனக்குள் என சொல்வதைக்கேட்டு சுமந்து “என்ன?” என்றான். “பொன்னுருக்கொண்ட ஹிரண்யம். மண்ணுருக்கொண்ட கிருஷ்ணம்” என்றான் ஜைமினி. “ஒவ்வொரு வேதத்திற்கும் கரிய கிளையொன்று உள்ளது. அதை ஏன் கிருஷ்ணசாகை என்கின்றனர் என இப்போது அறிகிறேன்.” அச்சொற்களை ஒவ்வொருவரும் தங்கள் எண்ணத்தில் விரித்துவிரித்து பொருள் கொண்டபடி நடந்தனர். அவர்களின் காலடியோசைகள் அவ்வெண்ணங்களுக்கு தாளம் அமைத்தன.

சண்டன் அக்காட்டை விழிகளால் துழாவியபடி தனக்குள் இயல்பாக எழுந்த வரியொன்றை முனகியபடி கடந்தான். அது என்ன வரி என்று பைலன் செவிகூர்ந்தான்.

“சர்வ கல்வித மாமேகம் நான்யாஸ்தி சனாதனம்!

அவன் அதை உணர்ந்ததை விழிதிருப்பி நோக்கியதும் சண்டன் புன்னகைத்தான். “தொன்மையானது என பிறிதொன்றில்லை” என்றான் பைலன். மேலும் விரிந்த புன்னகையுடன் “அதுவே  இவையனைத்தும்” என்றான் சண்டன்.

[ 8 ]

அவர்கள் காட்டின் விளிம்பைக் கடந்து விரிந்த மேய்ச்சல்வெளியொன்றை அடைந்தனர். தொலைவிலேயே கன்றுகளின் கழுத்துமணியோசையை பைலன் கேட்டான். “இனிய ஓசை” என்றான். “காட்டுக்குள் வரும் முதல் ஊரின் ஒலி கழுத்துமணிதான்” என்று சண்டன் சொன்னான். “வேறெந்த ஒலியும் காட்டிலும் எழ வாய்ப்புள்ளது. உலோகமணியை ஊரார் மட்டுமே எழுப்பமுடியும்.” நெருங்கநெருங்க அந்த ஓசை பெருகிவந்தது. “உலோகமணிகளின் மழை” என்றான் ஜைமினி. “இவர் எப்போதுமே காவியங்களுக்குள்தான் இருக்கிறார். காட்டையும் ஊரையும் அங்கே இழுத்துவைத்துக்கொள்கிறார்” என்றான் சுமந்து.

நூற்றுக்கணக்கான மாடுகள் அந்தியொளியில் நிழல்நீள புல்வெளியில் நின்று மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றின் வால்கள் சுழல மொய்த்த பூச்சிகள் செவ்வொளியில் சிறகுசுடரப் பறந்தன. ஜைமினி ஏதோ சொல்ல வாயெடுத்து அடக்கிக்கொண்டன. “சொல்லுங்கள், அந்தணரே! எவர் என்ன சொன்னாலும் குயில் பாடாமலிருக்கிறதா?” என்றான் சண்டன். “இது பகடி என்றாலும் உண்மை. நான் எண்ணுவதைச் சொல்வதனூடாக இருக்குமிடத்திலிருந்து ஒரு கணுவேனும் மேலேறுகிறேன்” என்றான் ஜைமினி. “என்ன எண்ணினீர்?” என்றான் பைலன். “அனலை வீசும்போது பொறிகிளம்புவதுபோல” என்றான் ஜைமினி. “நன்று” என்றான் சண்டன்.

அவர்கள் புல்வெளியில் காலெடுத்துவைத்தபோது அப்பால் ஒரு சிறிய ஒற்றைக்காளை மாட்டுவண்டி செல்வதைக் கண்டனர். “வணிகர்களா?” என்றான் ஜைமினி. “இல்லை, அவர்களும் சூதர்களே. பக்கத்தண்டில் முழவும் யாழும் மாட்டப்பட்டுள்ளது. உள்ளே விறலி அமர்ந்திருக்கிறாள்” என்றான் சண்டன்.. வண்டியின் நுகமுகப்பில் அமர்ந்திருந்தவன் தெரிந்தான். “நம்மைப்போலவே கிராத சூதன், நன்று” என்று சண்டன் சொன்னான். “எப்படி தெரியும்?” என்றான் பைலன். “குழலைக் கட்டி எலும்புகொண்டு கோத்திருக்கிறான். மானுட எலும்பு.” அவர்கள் உடனே அதைக் கண்டனர். “ஆம், முழங்கை” என்றான் வைசம்பாயனன்.

புல்மேல் வண்டி மெதுவாகவே சென்றது. அவர்கள் வண்டியை அணுகினார்கள். உள்ளிருந்து ஒரு கன்னங்கரிய உடல்கொண்ட சிறுவன் எட்டிப்பார்த்தான். மூன்றுவயதான குழந்தை. வலப்பக்கம் சாய்ந்த சிறிய குடுமியும் காதில் கல்லாலான கடுக்கனும் அணிந்திருந்தான். பால்பற்கள் தெரிய  ”தந்தையே, ஒரு பாசுபத சூதர்” என்றான். “பேசாமலிரு, யார்?” என்று அவன் அன்னை அவனை பிடித்தாள். “என்ன?” என்றான் அவன் தந்தை. அவனைநோக்கி சண்டன் “பாசுபதன் என எப்படி அறிந்தாய்?” என வியப்புடன் கேட்டான். “உங்கள் கையின் பாம்புவிரலில் நாகக்கணையாழி உள்ளதே” என்றபடி சிறுவன் குதித்து கீழே இறங்கினான். “உக்ரா, என்ன செய்கிறாய்?” என்றாள் அவன் அன்னை. “அவனைப்பிடி, அறிவிலியே. அடிக்கொருதரம் வண்டியிலிருந்து குதிக்கிறான் மூடன்” என்று அவன் தந்தை சினந்தபடி கயிற்றை இழுத்து வண்டியை நிறுத்தினான்.

சிறுவன் கண்களை சுருக்கியபடி நால்வரையும் நோக்கி தனக்கே என கைசுட்டிக்கொண்டான். பின்னர் சண்டனிடம் “இவர்கள் அந்தணர்கள். இவர்களை நீங்கள் கொன்று உண்ணப்போகிறீர்களா?” என்று ஆர்வமாக கேட்டான். “ஆம், நான் தென்குமரி வரை செல்கிறேன். வழியில் உணவு இல்லாமலாகக்கூடாது அல்லவா? இவர்களில் எவரை முதலில் உண்ணலாம்?” என்றான் சண்டன். அவன் நால்வரையும் மாறி மாறி நோக்கியபின் வைசம்பாயனனை சுட்டிக்காட்டி “இவரை” என்றான். வெடித்துச்சிரித்து “ஏன்?” என்றான் சண்டன். ஜைமினியை சுட்டிக்காட்டி “இவர்தானே கொழுத்தவர்?” என்றான்.

சிறுவன் “ஆம், ஆனால் இவர் மட்டுமே உங்கள் மேல் ஐயம் கொண்டிருக்கிறார்” என்றான். சண்டன் வைசம்பாயனனை நோக்கிவிட்டு “ஆம், அதனால் அவரை உண்ணவேண்டுமா?” என்றான். “ஐயம் கொள்பவரின் ஐயத்தை உண்மையாக்குவதுதானே சிறந்தது?” என்றான் சிறுவன். சண்டன் அவன் தலையை வருடியபடி “இவன் கருவறைக்குள் இருந்தே மொழியுடன் எழுந்திருக்கிறான் போலும்” என்றான். “நான் கருவறைக்குள் இருக்கும்போது என் அன்னை காவியம் படித்தாள், அவளே சொன்னாள்” என்றான் சிறுவன்.

வண்டியோட்டிய சூதன் இறங்கி வந்து வணங்கி “பொறுத்தருள்க, சூதரே! இவன் என் ஒரேமைந்தன். இன்னொரு குழந்தை அவன் அன்னை வயிற்றில் இருக்கிறது. இவன் சற்று துடுக்குமிக்கவன். பல இடங்களில் எனக்கு அடிவாங்கி தந்திருக்கிறான்” என்றான். “உண்மையில் கூர்மபிருங்கத்தில் ஒரு அந்தணர் இல்லத்துக் காவலர்களிடம் வாங்கிய அடி இன்னும் என் உடலில் வலிக்கிறது. அங்கிருந்து நேராக இங்கே வந்தேன். அடுத்தவேளை உணவை இனிமேல்தான் தேடவேண்டும். தேள் நினைக்கும் முன்னரே கொடுக்கு சென்று கொட்டிவிடும் என்பார்கள். இவன் என் தேள்கொடுக்கு” என்றான். “கொடுக்கு இருப்பதனால்தானே அதை தேள் என்கிறோம்?” என்று சிறுவன் கேட்டான்.

“நாங்கள் அயலூர் சூதர். என் பெயர் சண்டன். இவர்கள் வைதிகர்குலத்து இளையோர்” என்றான் சண்டன். சூதன் கைகூப்பி “பொறுத்தருள்க! நான் முதலில் என்னைப்பற்றி சொல்லியிருக்கவேண்டும். தொல்சூதர் மரபான மாயூரத்தில் சகரன் மைந்தனாகப்பிறந்த என்பெயர் கிருதன். குலமுறையாகவே  மாவிரத நெறிகொண்டவன். வண்டிக்குள் இருப்பவள் என் மனையாள். மார்ஜாரகுலத்தவள். காட்டில் பிறந்துவளர்ந்தவள். காலகரின் மகளான  அவள் பெயர் சுதை” என்றான். “இவன் என் துணைவிக்கு மலாலோமகுலத்து முனிவரான லோமஹர்ஷணரில் பிறந்த மைந்தன். இவன் பிறந்தபோது பெருங்குரலெழுப்பியமையால் தந்தையால் உக்ரசிரவஸ் என்று பெயரிடப்பட்டான். உண்மையிலேயே இவன் தொண்டை மும்மடங்கு ஆற்றல்கொண்டது” என்றான்.

“சொல்லாற்றல் ஐந்து மடங்கு என நினைக்கிறேன்” என்றான் சண்டன். கிருதன் “உண்மையிலேயே இவனை எண்ணி நான் அஞ்சிக்கொண்டிருக்கிறேன், சண்டரே. ஏழுமாதங்களிலேயே நன்றாக பேசத்தொடங்கிவிட்டான். இரண்டுவயதுக்குள் ஆயிரம் பாடல்களை பாடம்கொண்டுவிட்டான். உலகநடைமுறையை அறியும்முன்னரே மொழியும்நூலும் கைவருவதன் அனைத்து இடர்களையும் அடைந்துகொண்டிருக்கிறான்” என்றான் கிருதன். “இவன் உலகமே அறிந்தோர் அறியாதோர் என இரண்டாகப் பிரிந்துவிட்டது. அறியாதோர் இழிந்தோர் என எண்ணுகிறான். இவ்வுலகில் அறியாதோரை அண்டியே அறிந்தோர் வாழவேண்டுமென்று இன்னமும் புரிந்துகொள்ளவில்லை” என்றான்.

“நீங்கள் அறிந்தோர்” என்று உக்ரன் கைசுட்டி சொன்னான். “எப்படி தெரியும்?” என்று பைலன் சிரித்துக்கொண்டே குனிந்து அவனிடம் கேட்டான். “அறிந்தோர் விழிகளில் ஒரு நகைப்பு உள்ளது. அறியாதோர் எவை கொண்டிருந்தாலும் எங்கிருந்தாலும் விழிகளில் உள்ளது ஒரு பதைப்பு மட்டுமே” என்றான் உக்ரன். ஜைமினி குனிந்து அவனைத் தூக்கி தன் தோளில் அமர்த்திக்கொண்டான். “எடையே இல்லாமலிருக்கிறான். ஒருவயதுக்குழந்தை அளவுக்கே உடல் உள்ளது” என்றான். சுதை எட்டிநோக்கி புன்னகைத்தபடி  “அவன் எதையுமே உண்பதில்லை. துயிலும் நேரம் தவிர்த்து பிறபொழுதெல்லாம் பேச்சுதான். பேசத்திறந்த வாய்க்குள் ஏமாற்றி உணவை ஊட்டவேண்டும். அதையும் துப்பிவிடுவான்” என்றாள்.

“அந்தணர்கள் சூதர்களை தூக்கலாமா?” என்று பைலன் கேட்டான். “இவன் கலைமகளின் மைந்தன்” என்றான் ஜைமினி. “இல்லை நான் சுதையின் மைந்தன். என்னை சௌதி என்றே சொல்லவேண்டும்” என்றான் மேலிருந்தபடி உக்ரன். “இது சிற்றூர். ஆனால் மலையடிவாரம் என்பதனால் சூதர்கள் அடிக்கடி வருவதில்லை என நினைக்கிறேன். ஆகவே நமக்கு அளிக்க இவர்களிடம் பொருளும் உளமும் இருக்கக்கூடும்” என்றான். “ஆம், இன்னும் காடு எஞ்சியிருக்கும் ஊர்” என்றான் சண்டன். அவர்கள் ஊரை நோக்கி சென்றனர்.

உக்ரன் “அந்தணரே, ஓர் ஊரார் வருபவர்களிடம் கேட்கவிழையும் முதற்செய்தி என்ன?” என்றான். ஜைமினி “நல்ல மழை, நல்லரசு, வெற்றிகள், வேள்விகள்” என்றான். “இல்லை, அனைவருமே கேட்பது அவர்கள் ஊரைப்பற்றி நாம் எப்படி அறிந்தோம் என்றே. நெடுந்தொலைவிலேயே அவ்வூரைப்பற்றி நம்மிடம் பலர் சொன்னார்கள் என்று நாம் சொன்னால் மகிழ்வார்கள். காட்டுக்குள் ஒளிந்து எவருமறியாது கிடக்கும் சிற்றூர்கூட கண்டடையபப்படவேண்டுமென்றே ஏங்குகிறது” என்றான். “ஆம், உண்மை” என்றான் சண்டன். “நான் எப்போதும் அதைத்தான் சொல்கிறேன்.” வைதிகர் நால்வரும் சிரித்தனர். பைலன் “நுண்மையாக உணர்ந்திருக்கிறான்” என்றான். “அந்த விழைவையே சரடெனக்கொண்டு அவர்களை தங்களை நோக்கி இழுத்துக்கொண்டிருக்கிறது நாடும் முடியும்” என்றான் வைசம்பாயனன்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 65

[ 6 ]

“காளி தன்னந்தனியளாக மீண்டும் இக்காளிகவனத்திற்கு வந்தாள்” என்றான் சண்டன். “அவள் தந்தை இருகைகளையும் விரித்து ஓடிவந்து வழிமுகப்பிலேயே அவளை எதிர்கொண்டார். “என்ன ஆயிற்று? சொல் மகளே, என்ன ஆயிற்று?” என்று அவர் கூவினார். அன்னையும் தோழியரும் தொடர்ந்தோடி வந்தனர். அவள் குலம் அவளை சூழ்ந்துகொண்டது. “தந்தையே எனக்கொரு தவக்குடில் அமையுங்கள். அங்கு கன்னிமை நோற்கிறேன்” என்று காளி சொன்னாள். தந்தை திகைப்புடன் “என்ன சொல்கிறாய்? உன் கொழுந்தன் எங்கே?” என்றார். அவள் அன்னை அதற்குள் புரிந்துகொண்டு அவளை அணைத்து “சின்னாள் நீ இங்கிரு” என்றாள். அவளை அணைத்து தன் இல்லத்திற்குள் கொண்டுசென்றாள்.

பெண்டிர் சூழ அவள் உள்ளறைக்குள் அமர்ந்தாள். அன்னை அளித்த நீரையும் உணவையும் உண்டாள். “என்னடி உன் எண்ணம்?” என்றாள் அன்னை. “கணவனிடம் பூசலிட்டாயா? நோக்கு, உன் கால்தடம் கலைவதற்குள் அவர் இங்கு வருவார்.” பெண்கள் சிரித்தனர். அவள் “இல்லை அன்னையே, அவர் வரப்போவதில்லை” என்றாள். அன்னை முகம் கூர “நான் உரைத்தேனே,  இங்கு கன்னியென திரும்பியிருக்கிறேன்” என்றாள். “என்னடி பேசுகிறாய்? மங்கலநாண் சூடி மறுகுடி சென்றவள் கன்னிமை நோன்பு ஏற்பது எப்படி?” என்று அன்னை கேட்டாள். “அன்னையே ஒவ்வொன்றாக உதிர்த்து என் கன்னி நாட்களுக்கு திரும்பிச் செல்கிறேன். கன்னியழகை எனக்கு அளித்த தெய்வங்களை வரவழைக்கிறேன். அவர்களிடம் இக்கருமையழகை உதறி பொன்னழகை எனக்களிக்கும்படி கோருகிறேன்” என்றாள் காளி.

அன்னை “நீ சொல்வது பொருளற்றது, மகளே.  கொழுநனை கைபிடிக்கும் கணத்திலேயே உன் கன்னியழகுகளை கடந்துவிட்டாய். அதன்பின் திதலையும் பசலையுமென உன்னுடல் உருமாறிக்கொண்டிருக்கிறது. அன்னை என்றானபின் கன்னிவாழ்க்கை ஒரு தொலைகனவு மட்டுமே. நீ அறிய மாட்டாய், இங்குள்ள அத்தனை பெண்டிரும் அவர்கள் கைவிட்டு வந்த அக்கன்னி வாழ்க்கையையே எண்ணி தங்கள் அறையிருளுக்குள் பிறரறியாமல் நீள்மூச்செறிகிறார்கள். முதற்புலரியில் விழிப்பு வருகையில் அக்கன்னி வாழ்க்கையின்  சில கணங்கள் கனவில் வந்து ஆடிச்சென்றதை எண்ணி கண்ணீர்விடாத பெண் இங்கெவரும் இல்லை.”

“தவம் என்பது நதி மலை மீளுவது போல, பறவை முட்டைக்குத் திரும்புதல் போல” என்றாள் காளி. “அரிதென்பதால்தான் அது தவம்.” அன்னை அதன்பின் சொல்சேர்க்கவில்லை. அவளை நோக்கி விழிநீருடன் அமர்ந்திருந்தாள். அவள் எழுந்து வெளியே சென்று குடிமூத்தார் சூழ மன்றமர்ந்திருந்த கராளரிடம் “தந்தையே, நான் கேட்டவற்றை அளியுங்கள்” என்றாள். அவள் குலம் கொந்தளித்தது. “இங்கு வந்து என் மகள் கைபற்றிச் சென்ற அவன் இவள் இங்கு வந்திருக்கும் நிலைக்கு பொறுப்பானவன். எழுக, நம் குலம்! அவனிடம் சென்று அறம் உரைப்போம். அது அவனுக்குப் புரியவில்லையென்றால் மறம் என்னவென்று அவனுக்கு தெரியவைப்போம்” என்றார் அவள் தாய்மாமன்.  கராளர் “என் குலமலரை விழிநீர் சிந்தவைத்துவிட்டான்” என்றார். “அவனை இழுத்துவந்து நம் குடிமன்றில் நிறுத்துவோம்” என்றனர் இளையோர்.

கைநீட்டி உரத்தகுரலில் கூவி காளி அவர்களை தடுத்தாள். “தந்தையே, இது அவருக்கும் எனக்குமான ஆடல் மட்டுமே. இங்கு நான் வந்தது எனக்கென அமைந்துள்ள பிடிநிலம் இங்குள்ளது என்பதனால்தான். அதிலுள்ளன என் இளமைநினைவுகள்.” கராளர் “நன்று மகளே! உனக்கு உரியது செய்ய ஆணையிடுகிறேன்” என்றார். அவர் ஆணைப்படி அக்காட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு சோலை தெரிவுசெய்யப்பட்டது. கன்னியராக மண்மறைந்த பெண்களை மண்ணளிக்கும் இடம் அது. நூற்றெட்டு கன்னியரின் கல்பதுக்கைகள் அங்கு இருந்தன.

அச்சோலையில் அமைந்த குடிலுக்கு தன்மகளை கைபற்றி அழைத்துச் செல்கையில் அன்னை சொன்னாள் “நீ இன்னும் சிறுமியைப்போல் எண்ணிக்கொண்டிருக்கிறாய், மகளே. ஒன்றறிக! மணம் முடித்து இல்லம் விட்டு கிளம்பிச்சென்ற எந்தப்பெண்ணும் மீண்டும் அந்த அன்னை இல்லத்துக்கு வந்ததில்லை. இங்கு நீ காணும் இந்தத் தூண்களும் சுவர்களும் திண்ணையும் அடுமனையும் இங்குதான் உள்ளன. நீ வளர்ந்த இல்லம் இங்கில்லை. இப்புவியெங்கும் பெண்கள் தாங்கள் விட்டுவந்த இல்லம் நோக்கித் திரும்பி அது அங்கு இல்லையென்று அறிந்து விழிநீருடன் திரும்பிச்செல்கிறார்கள். நீ வந்திருக்கலாகாது.”

“நானும் ஓர் இல்லாளே. இல்லாடலென்றால் எப்பெண்ணையும்போல் நானும் அறிவேன். இவ்வாடலில் நானோ உந்தையோ இங்குள்ள உன் குலமோ ஒரு தரப்பே அல்ல. இது இருவாள்களின் கூர்கள் உரசி அறியும் ஒரு தருணம். பெருங்காதலின் களியாட்டுக்குப்பின் இது நிகழ்ந்தாகவேண்டும். உன்னை நீ அவருக்கு முற்றளிக்கப்போவதில்லை. அவரும் தன்னை  உனக்கு முற்றளிக்கப்போவதில்லை. நீங்கள் எதை எதுவரை அளித்துக் கொள்ளப்போகிறீர்கள் என்று முடிவாவதன்பொருட்டு நிகழும் பூசல் இது. நீ அங்கு அவர் கண்முன் இருந்திருக்கவேண்டும். இங்குவந்தாலும் நீ அங்குதான் குடியிருப்பாய்.”

“ஆம்” என்று அவள் சொன்னாள். “ஆனால் தவமென்று எண்ணியபோதே நான் உள்ளிய இடம் இதுவே. ஏனென்றால் கன்னியென்றும் சிறுமியென்றும் குழவியென்றும் இங்குதான் வளர்ந்திருக்கிறேன். அன்றிருந்த அந்நிலத்திற்கு நான் மீள முடியாது. ஆனால் அன்றிருந்த என்னைச் சூழ்ந்திருந்த நிலமும் காற்றும் நீரும் இங்குதான் உள்ளன. அவை என்னை அறியும். கன்னிமாடம் அங்கு அமையட்டும் என்று எண்ணியது அதனால்தான்.”

காளியின் தோழியர்களான ஜயையும் விஜயையும் ஜயந்தியும் அபராஜிதையும் அவளுடன் தங்கினர். ஆண்கள் எவரும் அவளை பார்க்கலாகாது என்று குலநெறி வகுக்கப்பட்டது. அவள் வாழ்ந்த சோலை எல்லை வகுக்கப்பட்டு வேலியிடப்பட்டது. தந்தையும் அவளை பார்க்கவில்லை. பின்னர் பிற பெண்டிரும் அவளை பார்க்காதொழிந்தனர். நாளடைவில் அன்னையும் அணுகாதானாள். தோழியர் நால்வரால் புரக்கப்பட்டு தன் முழுத்தனிமையில் அவள் அங்கே இருந்தாள். தன்னுள் கருப்பை வடிவில் குடியிருந்த பிரம்மனின் பீடத்தை எண்ணி தவமிருந்தாள். முதற்புலரியின்போது எழுந்து படைப்பு முதல்வனை வணங்கி நோன்புணவை அருந்தி நாள் கடந்தாள். இரவில் தன்னைச் சூழ்ந்த அனைத்தையும் முற்றுதிர்த்து உள்ளம் என்றே அங்கிருந்தாள்.

அவள் உடல் மாறிவந்ததை தோழியர் அறிந்தனர். மணம்கொண்டபின் கூடிய மங்கலங்கள் அனைத்தும் அகன்றன. தோளும் இடையும் கன்னிபோல் மெலிந்தன. பின் சிறுமியென்றாகி ஒடுங்கின. யாழின் கார்வை கொண்டிருந்த குரல் நீர்த்து குழலின் மென்மை கொண்டது. நடையில் அமைதி குலைந்து சிறுதுள்ளல் வந்து கூடியது. ஓரவிழிப்பார்வை அகன்றது. அச்சமற்ற நேர்விழி நோக்கமைந்தது. சொல்லெண்ணிப் பேசும் சித்தம் மறைந்து வெள்ளிமணிக் கொலுசென சிரித்தாள். அச்சிரிப்பில் கலந்த சொற்களாக உரையாடினாள். விழிகளில் மான்கருமை அகன்று சிறுநாய்க்குட்டியின் பேதைமை வந்து படிந்தது.

வான் நோக்கி நிலவில் விழிநட்டு அமர்ந்திருக்கும் தனிமை அவளிடமிருந்து விலகி அருகிருக்கும் பொருளெதுவோ அதனால்  விளையாடப்படுபவளானாள். கூழாங்கல் பொறுக்கி சோழியாடினாள். சிறுவிதைகளை தெரிந்து கொண்டுவந்து செப்புகளில் சேர்த்தாள். காலை எழுந்ததுமே முற்றத்து மலர்களை நோக்குவதற்காக சிற்றாடை பறக்க துள்ளி ஓடினாள். சாலையோரம் உதிர்ந்து கிடந்த ஒரு வண்ண இறகைக் கண்டதும் உவகை கொண்டு கூவி கைதட்டி ஆர்ப்பரித்து அதை எடுத்து கொண்டுவந்து தோழியரிடம் காட்டிச் சிரித்து துள்ளினாள். சுவைகளில் நாட்டம் கொண்டவளானாள். பின் அனைத்தும் சுவையே என்றாகியது. புளிக்காய்களும் துவர்க்கும் குருத்துகளும்கூட அவள் நாவுக்கு உகந்தன. கன்னம் கூர்கொண்டது. இதழ்கள் குமிழ் அகன்றன. கூந்தலிலும் கழுத்திலும் பளபளப்பு குறைந்து மென்வெளிறல் கூடியது.

சிறுமியென்றாகி சூழ்ந்திருந்த சோலை மட்டுமே அறியும் மந்தணங்கள் கொண்டு அவள் அங்கிருந்தாள். அவள் கருக்குருதி நின்றது. பலமாதங்களுக்குப்பின் ஒருநாள் அடிவயிற்றை கைகளால் பொத்தி முழந்தாள் மடித்து அமர்ந்து அழுதாள். மலர் கொய்து கொண்டிருந்தவள் எண்ணியிராது குடலையை வீசிவிட்டு  அழும் ஒலி கேட்டு தோழியர் ஓடிச்சென்று நோக்கினர். “என்னடி? என்னடி?” என்றாள் ஜயை. “முள் பட்டுவிட்டதா விரலில்?” என்றாள் விஜயை. “எதையேனும் மிதித்துவிட்டாயா? இங்கு சிறு நாகக்குஞ்சுகள் உண்டே” என்றாள் ஜயந்தி. அபராஜிதை அவள் முகம்பற்றி மேலேதூக்கி விழி நோக்கியதுமே அறிந்துகொண்ட புன்னகையுடன் “அதுதான்” என்றாள்.

அவர்கள் அதை எதிர்பார்த்திருந்தனர். அச்சொல்லிலேயே அனைத்தையும் உணர்ந்தனர். இரு கைகளாலும் அவளை அள்ளி மெல்ல கொண்டு சென்றனர். தென்கிழக்கு குடில் மூலையில் அவளை அமர்த்தினர். குறுக்கே உலக்கையை அரண்வைத்தனர். ஈச்சை ஓலை துடைப்பத்தை துணைக்கு அமைத்தனர். அருந்த நீரும் இன்மாவின் உருண்டைகளும் கொண்டு வந்து அளித்தனர். “ஐந்து நாள் இங்கிரு. மீண்டும் ஒரு பெண்ணாக எழவிருக்கிறாய்” என்றாள் ஜயை. “அலையெனச் சுருண்டு பின் வாங்கிவிட்டாய். வளைந்து மீண்டும் எழவிருக்கிறாய்” என்றாள் விஜயை. “ஆம், ஆறு மலையடைந்துவிட்டது” என்றாள் ஜயந்தி. “முட்டைக்குள்ளிருந்து ஓடுடைத்து வெளிவரும் நாள் இனி” என்றாள் அபராஜிதை.

அன்று இரவில் வெளியே ஓர் உறுமல் கேட்டு அபராஜிதை திகைத்தெழுந்தாள். மெல்ல சென்று சாளரத்தைத் திறந்து வெளியே நோக்கி வியப்பொலி எழுப்பினாள். அன்று வளர்நிலவு பத்தாம் நாள். முற்றத்திற்கு அப்பால் நின்ற முல்லைக்கொடி படர்ந்த மஞ்சணத்தி மரத்திற்கு அடியில் பிடரி மயிர் பறக்க ஆண் சிம்மமொன்று நின்றிருப்பதை ஜயை கண்டாள். அது ஓர் விழிமயக்கென்று முதலில் தோன்றியது. நாணல் எழுந்த சிறு மண் மேடு என எண்ணத்தலைப்பட்டது சித்தம். மீண்டும் ஒரு முறை உறுமி “நான் சிம்மம்” என்றது அது. அதற்குள் அவள் தோழிகள் எழுந்து ஓடி வந்தனர். “சிம்மமா? இங்கு இப்படி ஓர் விலங்கை பார்த்ததே இல்லை” என்றாள் விஜயை. “அனலெழுந்து விலங்கானதுபோல் தெரிகிறது” என்றாள் ஜயந்தி. உகிர்க்கால்கள் மண்பொத்தி மெல்ல ஒலிக்க அசைவு ததும்பும் உடலுடன் முற்றத்திற்கு இறங்கி வந்து வாயில் முன் நின்று மீண்டும் உறுமியது சடைசிலிர்த்த சீயம். பின்னர் அங்கேயே வாயிலில் விழிபதித்து படுத்துக்கொண்டது.

“அது நம் இளவரசிக்குக் காவல்” என்றாள் ஜயை. “ஊனுண்ணி விலங்கு. ஆனால் அதன் கண்களில் அருள் உள்ளது” என்றாள் விஜயை. அவளிடம் சென்று அங்கு சிம்மம் ஒன்று வந்து அவளுக்கு காவலமைத்திருப்பதை சொன்னார்கள். அவள் விழிகள் அறியாத்தெய்வத்தின் நோக்கு கொண்டிருந்தன. ஐந்து நாள் அஞ்சும் சிறுமியென அம்மூலையில் உடல் ஒடுக்கி அமர்ந்திருந்தாள். தோழியரால் மஞ்சள் நீராட்டப்பட்டாள். சந்தனமும் அகிலும் கொண்டு அவள் உடலையும் குழலையும் நறுமணமூட்டினர். இரவும் பகலும் துணையென முறைவைத்து விழித்திருந்தனர்.

ஐந்தாம்நாள் முழுநிலவு. மெல்லிய யாழிசை ஒன்றை தோழியர் நால்வரும் ஒருங்கே கேட்டனர். “வண்டு முரள்கிறது போலும்” என்றாள் ஜயை. “இரவில் முரளும் வண்டுகள் உண்டா?” என்றாள் விஜயை. ஜயந்தி “அது கந்தர்வர்களின் இசை” என்றாள். இசை மேலும்மேலும் வலுத்தது. “நூறு வண்டுகள்” என்றாள் ஜயை. “ஆயிரம் பல்லாயிரம் என அவை பெருகுகின்றன போலும்” என்றாள் விஜயை.

ஜயை ஓடிச்சென்று சாளரத்தினூடாக வெளியே பார்த்தாள். காவல் சிம்மம் எழுந்து தொலைவை நோக்கி மெல்ல உறுமி எச்சரிக்கையுடன் கால்களை மெல்ல எடுத்து வைத்து பாய்வதற்காக உடல் தாழ்த்தியது. பெருகிவந்த யாழிசையால் கொண்டு வரப்பட்டவர்கள் போல வெண்சிறகுகள் பறக்கும் ஏழு கந்தர்வப்பெண்கள் அவ்வில்லம் நோக்கி வந்தனர். நுரைச்சிறகை மடித்து சுருக்கி ஆடையின் முந்தானை என்றாக்கி மண்ணில் கால் வைத்து ஒளி வடிவென்றாகி இல்லத்திற்குள் நுழைந்தனர். கைகூப்பி நின்ற ஜயை “காளிகையின் கன்னிமாடத்திற்கு வருக!” என்றாள்.

முதலில் வந்தவள் “என் பெயர் தீக்ஷை. நான் இவளை கன்னியென்று ஆக்க வந்தேன். கொண்டவற்றில் முற்றுறுதியை அளிப்பவள் நான்” என்றாள். “நான் ஸ்வாதை. இவளை மூதன்னையரின் நெறியில் நிறுத்துவேன்”  என்றாள் இரண்டாவதாக வந்தவள். மூன்றாமவள் தன்னை த்ருதி என்றாள். “குன்றாத் துணிவை இவளுக்கு அளிப்பவள்” என்றாள். நான்காமவள் தன்னை தயை என்றாள். “கருணையால் இவளை அன்னையென்றாக்குவேன்” என்றாள். ஐந்தாம் தேவி தன்னை க்ரியை என்றாள். “செயலூக்கத்தின் தெய்வம் நான்” என்றாள். ஆறாம் தேவியாகிய புஷ்டி “நான் அவள் உடலை வளரச்செய்பவள்” என்றாள். ஏழாம் தேவியாகிய லஜ்ஜை “அவளில் நாணத்தை நிறைப்பதே என் பணி” என்றாள்.

காளி எழுந்து கைகூப்பி “நன்று கந்தர்வப் பெண்களே, இக்கன்னியழகனைத்தையும் நான் சூடுவதற்குமுன் என் உடல் பொன்னொளி கொள்ளவேண்டும். அதன்பொருட்டே தவம் மேற்கொண்டேன்” என்றாள். தீக்ஷை திகைத்து “அறியாது பேசுகிறாய், இளையவளே. உடல் போர்த்திய தோல்கொண்டது அல்ல நிறம்.  உன் உள்ளமைந்த ஆழத்தின் விழித்தோற்றம் அது. கடல் நீலமும் அனல் சிவப்பும் அவற்றின் உள்ளியல்பால் ஆனவை என்று அறிக!” என்றாள். “அவ்வண்ணமெனில் என் ஆழத்தை மாற்றுக!” என்றாள் காளி.

“நாங்கள் உன்னில் விழி அறியும் புறத்தோற்றத்தை மாற்றும் ஆற்றல் மட்டுமே கொண்டவர்கள். உன்னைப்படைத்த பிரம்மனே உன் ஆழத்தை அறிவார்” என்றாள் த்ருதி. “அவ்வண்ணமெனில் பிரம்மன் எழுக!” என்றாள் காளி. “எங்கள் பணி உன்னை கன்னியென்றாக்குதல் மட்டுமே. நாங்கள் படைப்பிறைவனின் பணியாட்கள். பல்லாயிரம் கோடியெனப் பெருகி நாங்கள் இப்புவியெங்கும் வாழும் மானுடரை விலங்குகளை பறவைகளை நாகங்களை பூச்சிகளை புழுக்களை கன்னி எழிலூட்டுகிறோம். இதுவன்றி பிறிதறியாதவர்கள்” என்றாள் லஜ்ஜை.

“பிரம்மன் இங்கு எழுக!” என்று சொல்லி கைகூப்பி விழிமூடி ஒற்றைக்காலில் நின்று காளி தவம் செய்தாள். பதினான்கு நாட்கள் பிறிதொன்றிலாத சித்தத்துடன் நின்றிருந்தாள். அவளை நோக்கி விழியசைக்காது வாயிலில் நின்றிருந்தது செந்நிறச்சீயம். அவளைச் சூழ்ந்து காவல் நின்றனர் தோழியர். பதைத்தும் பொருளறியாது சுழன்றும் அங்கிருந்தனர் கந்தர்வப்பெண்கள்.

பதினான்காவது நாள் முற்றிருள் மூடிய கருநிலவின் இரவில் அவர்கள் மட்டுமே காணும் ஒரு முழுநிலவு ஒன்று வானில் எழுந்தது. அதன் ஒளி செம்பட்டுப் பாதையென நீண்டு அவள் குடில்வரை வந்தது. அதனூடாக நடந்து பொன்னுடல் கொண்ட அந்தணர் வடிவில் பிரம்மன் அவள் குடிலுக்கு எழுந்தருளினார். அவர் உள்ளே நுழைந்தபோது விளக்குகளின்றி அக்குடில் சுடர்விட்டது. அங்கிருந்த உயிர்களனைத்தும் விழிகொண்டு “எந்தையே” என கைகூப்பின.  தன் சுட்டு விரலால் விழி மூடி தவத்தில் இருந்த காளியின் நெற்றிப்பொட்டில் தொட்டு “விழித்தெழுக, இளையவளே! உன் விழைவென்ன? சொல்க!” என்றார்.

தவம் பொலிந்து விழிதிறந்த காளி “என் உடல் பொன்மயமாகவேண்டும்” என்றாள். “உன் ஆழம் முடிவற்றது, அறிவாயா? அம்முடிவிலியின் நிறம் கொண்டவள் நீ. அதைத்துறந்து ஒளிரும் புறப்பூச்சை நீ அடைய விரும்புவது ஏன்?” என்றார். “என் கொழுநனின் விருப்பம் இது. அவர் முன் பொன்னுடல் கொண்டு சென்று நிற்க விழைகிறேன்” என்றாள் காளி. “நீ இழப்பது மீண்டும் அடையப்பட இயலாதது என்று அறிக!” என்றார் பிரம்மன். “ஆம், அதை நன்கு அறிவேன்” என்றாள் காளி. “நான் அவருக்குரியவளாகவேண்டும். பிறிதெதையும் அதன்பொருட்டு இழப்பேன்.”

“பொன்னொளி பெறுக! பிறிதொருத்தியாகுக!” என்று வாழ்த்தினார் பிரம்மன். காளி உலையில் உருகி உருவழிந்து அச்சில் நிறைந்து மீளுருக்கொண்டு  எழும் பொற்சிலை என மேனி கொண்டாள்.  திரும்பி நோக்கியபோது அருகே கரிய உடல்கொண்ட பிறிதொரு பெண் நிற்பதைக் கண்டாள். பிரம்மன் “உன் கரிய தோலிலிருந்து எழுந்தவள். அவள் கோசத்திலிருந்து பிறந்தமையால் அவள்  கௌசிகை” என்றார். கரிய அன்னை புன்னகை செய்தாள். “தேவி, உன் இருள்வடிவு கொண்ட அழகனைத்தும் அவளிடமே எஞ்சும்” என்றார் பிரம்மன்.

திரும்பி நோக்கி “நன்று, அது நானிருந்த பீடம்” என்றபின் அன்னை பிரம்மனை வணங்கினாள். “நன்று சூழ்க!” என்று அவளை வாழ்த்தினார் பிரம்மன். வெளியே சென்று படிகளிலிறங்கி செந்தழலென பிடரி சிலிர்க்க நின்ற சிம்மத்தின் மேலேறி வடதிசை நோக்கிச் சென்று அவள் மறைந்தாள். கௌசிகை பிரம்மனை வணங்கி தென்கிழக்கு மூலையில் சென்று பீடம் கொண்டாள்.

அனற்சிம்மம் மீதேறி பொன்னுடல்கொண்டு தன்னை வந்தடைந்த காளியை முதலில் செஞ்சடையன் அடையாளம் காணவில்லை. ஏனெனில் அவள் சென்ற மறுகணம் முதல் அக்கரிய எழிலுருவையே தன் அகவிழியில் நிறைத்து தவம் செய்து கொண்டிருந்தான். அவன் உளம் உருகிய சொற்கள் நாண் தளர்ந்த வில்லின் அம்புகளென எழுந்து  அவள் காலடியில் விழுந்துகொண்டே இருந்தன. தன் சொற்களேதும் அவளை சென்றடையவில்லை என்பதை உணரும்தோறும் மேலும் தளர்ந்தான். காதலுடன் கொஞ்சியும் கண்ணீருடன் இறைஞ்சியும் சிறுமைந்தனென ஆகி பணிந்தும் அவன் அழைத்ததை அவள் அறியவில்லை. துறக்கப்பட்டவன் சிறுமைகொள்கிறான். இழக்கப்பட்டது பேருருக்கொள்கிறது. அவன் கரும்பாறை எழுந்த மலையடிவாரத்தில் சிறுநெருப்பென ஆடிக்கொண்டிருந்தான்.

தன் தவம் முடிந்ததென்று உணர்ந்து அவன் விழிதூக்கியபோது எதிரில் தோன்றியவளைக் கண்டு திகைத்தெழுந்து நின்றான். பின்னரே அவள் முகமும் சிரிப்பும் உணர்ந்து கைவிரித்து அருகே ஓடி அணுகி “தேவி, நீயா?” என்றான். “இதோ நீங்கள் கோரிய பொன்னுடல்” என்று அவள் சொன்னாள். நெஞ்சுருக “என் ஆணவச்சொல் அது, தேவி. நான் விழைந்ததும் பெருங்காதல் கொண்டதும் உன் கரிய உடலை அல்லவா?” என்றான். “அதை நானும் அறிவேன். அது உங்கள் ஆழத்தால் நீங்கள் விழைந்தது, உங்கள் தகுதியால் நீங்கள் பெற்றது இது” என்று அவள் சொன்னாள்.

“இப்போது நீ பேரழகி. ஆனால் அக்கரியவளுக்கே  நான் என்னை முழுதளிக்க  முடியும். இங்கு அமர்ந்து தனிமையில் உணர்ந்தேன் அலகிலா கரிய நீர் வெளி நீ. அதில் சிற்றலை எழுப்பும் விசை மட்டுமே நான்” என்றான் சடையன்.  விழிநீருடன் அவள் கைகளை பற்றிக்கொண்டான். “என் அருகமர்க, தேவி! என்னைவிட்டு நீங்காதிரு. இன்றுமுதல் நீ என் தேவி. நீ கொண்ட அக்கரிய தோற்றம் என் அன்னை. அக்கடலைக் கடந்து இவ்வமுதத்தை எடுத்திருக்கிறாய்.” அவள் இடைசுற்றி தன் உடலுடன் சேர்த்து “என் இடமென ஆகுக! உடலென உடனிரு!” என்றான்.

புன்னகையுடன் அவள் அவனை தழுவிக்கொண்டாள். இருவரும் ஓருடல் ஆயினர். வெண் விடை வலமும் செஞ்சிங்கம் இடமும் நின்றிருக்க பொன்னிறமும் செந்நிறமும் கலந்த மாதொருபாகனாக மலைமுடி மேல் அங்கிருந்தனர்.

பின்னர் வெள்விடையும் உடுக்கும் வேலும் துறந்து அவன் காளிகம் என்னும் இக்காட்டுக்கு வந்தான். காளி தவம் செய்த அக்கன்னி மூலை கௌசிகவனம் என்னும் ஒரு சோலைக்கோயிலாக மாறியிருந்தது. அதில் பதினாறு கைகளும் வெறிவிழிகளும் கோரைப்பல் நகையும் கொண்டு கோயில் கொண்டிருந்தாள் கௌசிகை அன்னை. அவள் கரிய உடல் மிளிர அமர்ந்திருந்த கருவறைக்கு முன் செஞ்சடையும் நீரணிந்த மேனியும்கொண்டு மலை இறங்கி வந்த அயல் நிலத்துத் துறவியென நின்று அவன் கைகூப்பி வணங்கினான். “அன்னையே, உன் அடிபணிகிறேன். என் தலை மீது உன் கால் அமர்க! என் ஆணவம் பனித்து குளிர்ந்து சொட்டுக! இத்தென்னிலத்தை முற்றுரிமை கொண்டவள் நீ. உன் ஏவல் பணி செய்பவன் நான்” என்றான்.

KIRATHAM_EPI_65

“கௌசிகை அன்னையின் காலடிகளால் புரக்கப்படுவது திருவிடத்துப் பெருநிலம்” என்றான் சண்டன். “அன்னையும் கன்னியும் என்றன்றி இங்கு நிலம் வேறுமுகம் கொள்வதில்லை. பொன்றா பெருந்திருவென அன்னை கோயில்கொண்டிருப்பதனால்தான் இந்நிலம் திருவிடம் என்று அழைக்கப்படுகிறது என்கிறார் மகாபைரவர் தன் காவியத்தில்.” ஜைமினி  “ஆம், பிடாரிக்கோலம் கொண்ட தாய்ப்பன்றியின் குட்டிகள் எனக் கொழுத்திருக்கின்றன இங்குள்ள அனைத்தும்” என்றான். சண்டன் நகைத்து “அதுவும் மகாபைரவரின் வரியே. வற்றாப்பெருமுலை சூடியிருப்பதனாலேயே அன்னை கொலைத்தேற்றையும் மதவிழிகளும் கொண்டிருக்கிறாள்” என்றான்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 64

[ 5 ]

காளிகக் காட்டின் பசுந்தடப் பாதையில் நடந்தபடி சண்டன் சொன்னான் “காளிகக்குடியின் பொதுமுற்றத்தில் அமைந்த நூற்றெட்டு கால் கொண்ட குருத்தோலைப்பந்தலில் காளிகப்பெருங்குலத்தின் பன்னிரு குடிமூத்தார் அவை அமர்ந்திருக்க குடிகளனைவரும் அரிமலரிட்டு வாழ்த்த  தலைகுனிந்து அடியெண்ணி நடந்துவந்த  காளியை தாய்மாமன் கைபற்றி கொண்டுவந்து மன்றுநிறுத்தினார். தந்தையும் தாயும் வாழ்த்த அவள் மலர்மாலை சூடி மணை அமர்ந்தாள்.  குரவையிட்டு வாழ்த்தினர் இளமகளிர். வாழ்த்தொலி எழுப்பினர் இளைஞர். முழவுகளும் கொம்புகளும் முழங்கின. உச்சிமரத்தின் முகட்டிலேறி அமர்ந்து முழவிசைத்து காட்டுக்கு செய்தியறிவித்தனர்.”

குடிமூத்தார் கேட்டபோது தன் பெயரை காளையன் என்றும் பைநாகப் பெருங்குலத்தான் என்றும் அவன் சொன்னான்.  காளி அவனுக்கு உகந்த இணையே என்றனர் பெண்கள். அவளருகே அவன் நின்றபோது அந்தியும் இரவுமெனத் தெரிந்தனர். கருமையும் செம்மையும் கூடிய அழகிய குனிமுத்து அவர்களின் இணைவு என குழந்தைகள் எண்ணின. கரியிலெழும் கனல்  என்று எண்ணினர் குடி மூத்தோர்.

சிறுபறை அடித்து பாடி குலதெய்வங்களையும் நீத்தாரையும் வழுத்தி பூசகர் அவனை அக்குலத்திற்குள் எடுத்துக்கொண்டார்.  அவள் தந்தை கராளர் அவன் கையிலொரு கீறலிட்டு குருதிச்சொட்டு எடுத்து நீரில் கலந்து தங்கள் குடிகள்மேல் வீசினார். தான் அணிந்த எருக்குமாலையை அவளுக்கு அவன் அணிவித்தான். அவள் காந்தள்மாலையை அவனுக்கு சூட்டினாள்.

தாய்மாமன் அவள் கைபற்றி அவனுக்களிக்க அரிமலர் பொழிந்த திரையில் மறைந்தது அக்காட்சி. விம்மியழுதபடி அன்னை தன் கணவன் தோளில் சாய்ந்துகொண்டாள். அவர்கள் கை தொட்டுக்கொண்டபோது தொலைவில் இடி முழங்கியது. மின் ஒன்று காட்டை ஒளிரச்செய்து கடந்து சென்றது. வானமொரு தூவலாக மாறி மெல்ல மண் படிந்தபோது இளமழை பெய்யலாயிற்று.

பன்னிரு நாட்கள் இல்லாள்குடியில் புதுமணம் ஆடிவிட்டு அவள் அன்னையும் தந்தையும் குடியும் சுற்றமும் கண்ணீருடன் சூழ்ந்து விடைகொடுக்க அவள் கைபற்றி அழைத்து காட்டுக்குச் சென்றான். அவள் கன்னம் தொட்டு வாழ்த்தி கைமுத்தினர் அன்னையர். அவள் கைதொட்டு நெஞ்சில் வைத்து ஏங்கினர் கன்னியர். தாள் பணிகையில் தலைதொட்டு வாழ்த்தினர் முதுதந்தையர்.

வலக்கால் எடுத்துவைத்து அவள் அக்குடியின் எல்லை கடந்தபோது அந்தி விழுந்ததுபோல் அங்கு இருள் சூழ்ந்தது. நெஞ்சுகலுழ்ந்தபடி அன்னை நிலத்தமைந்து விம்மி அழுதாள். அனைவரும் சோர்ந்து எடைகொண்ட உடல்சுமந்தவர்கள் போல் ஆங்காங்கே அமர்ந்தனர். அவர்கள் சென்றுமறைந்த சித்திரம் விழிகளில் எஞ்சியிருக்க அப்பாதையை நோக்கினர். அவன் அணிந்த எலும்புமணிமாலையும் அவள் சூடிய கல்மணிநகைகளும் ஒலிக்கும் கிலுக்கம் நெடுநேரம் கேட்டுக்கொண்டிருந்தது. பின்னர் அது எப்போதும் அக்காட்டில் இருந்தது.

நூறுவளைவுகொண்ட அலையென வடக்கே எழுந்த விந்தியமலையின் உச்சியில் அமைந்த மலைக்குகை முப்பிரிவேல்போல் மூன்றுவழிகளாக இறங்கி மண்ணுக்கடியில் சென்று பாதாள அனலை அள்ளிவந்தது. அவன் அக்குகையில் அவளுடன் வாழ்ந்தான். காலத்தை கணத்துளிகளாக்கி ஒவ்வொரு துளியையும் ஒரு முழுவாழ்வென்றாக்கி அவளுடன் அவன் காதலாடினான். பத்து விரல் நகங்களிலும் விழி கொண்டு அவள் உடலை அறிந்தான். முத்தங்களால் அவளை துளித்துளியாக உண்டு உண்டு மீட்டான். தேனில் பிறந்து தேனுண்டு தேன்திளைக்கும் தேன்புழுவென அவளில் இருந்தான்.

விழிகளை விழிகளுடன் கோத்து அவள் உள்ளத்தமைந்து சொற்களை எல்லாம் தான் உறிஞ்சிக்கொண்டான். சொல்லற்ற அமைதியில் இருவரும் ஒன்றென ஆனபோது சூழ்ந்திருந்த புவிப்பரப்பனைத்தும் செயல்கள் ஒருகணம் நிலைத்து இருண்டன. பின் ஆமென்று அவை நிலைமீண்டன. பறவைகள் எங்கோ வாழ் என்றும் ஈன்றவளே என்றும் கூவி உயிர்கொண்டன அவள் அவனை செவ்விழிகளால் நோக்கி நாணியபோது வான் சிவந்தது. அவள் நாணம் கண்டு அவன் நகைத்தபோது வெயிலொளி பரவியது. அவர்களின் காதல் சொல் பொருள்கொண்டதுபோல் நீர் ஒளிகொண்டதுபோல் அனல் வெம்மை கொண்டதுபோல் மண்நிகழ்ந்தது என்கின்றது மகாபைரவரின் சொல்திகைந்த பிரசண்ட புராணம்.

இனியகாதல் ஓர் உறவல்ல, விளையாட்டு. ஆணும் பெண்ணும் ஆடத்தகுந்த  விளையாட்டு ஒளிந்தாடலே. நாளும் இரவும் அவர்கள் ஆடியதும் அதுவே. ஒருவரை ஒருவர் ஒருகணமும் ஒழியாது நோக்குபவர் மட்டுமே ஒளிந்தாடலின் உச்ச உவகையை அறிய முடியும். இலைகளின் பசுமையில்,  நீரின் நீலத்தில் பாறைப்பிளவின் வாயிருளில் அவள் தன்னை ஒளித்துக்கொண்டாள். அவளை அறிந்த அவன் புலன்கள் முட்பன்றியெனக் கூர அவள் கால்தடமும் ஒலித்தடமும் மென்மணமும் தேடி அவளை கண்டுகொண்டான்.  பறவைக்குரலும் நிழலாடலும் ஒளியசைவும் தேர்ந்து அவளை கண்டுபிடித்தான். அவளோ தன் அல்குலும் முலைகளும் இதழ்களும் அறிந்த நுண்மை ஒன்றால் நேராக அவன் ஒளிந்திருந்த இடம் நோக்கி வந்து தழுவிக்கொண்டாள்.

ஒவ்வொரு முறையும் புதிய ஒரு காளியை அவன் கண்டுபிடித்தான். ஒவ்வொரு முறையும் புத்தம் புது காளையனை அவள் பெற்றாள். கண்டடைதலின் தருணத்தில் புதிதெனப் பிறந்தெழுந்து கூவி நகைத்து நீர்வழிப்படுபவன் புணையை என அவள் கைகளாலும் கால்களாலும் தழுவிக்கொண்டாள். அவளை அள்ளி மலரென தன் தலையிலும் மார்பிலும் சூடிக்கொண்டான். ஒவ்வொரு கண்டடைதலுக்குப்பின்னரும் முதல் முறை என உறவுகொண்டனர். உருகி இழைந்து ஒன்றென்றாகி அப்பெருநிலையின் அசைவின்மை சலித்து பிரிந்து மீண்டும் ஒளிந்தாடினர்.

பனியின் திரையிலும் புகையின் செறிவிலும் அவன் ஒளிந்துகொண்டான். ஒளிந்திருக்கையில் கண்டடையப்பட வேண்டும் என்று அவன் விழைந்தான்.  கண்டடையப்பட்டு கை தழுவி கால் பிணைத்து உடல் இணைகையில் உள்ளே ஒரு பகுதி ஒளிந்தே இருந்தது. ஒருபோதும் தாங்கள் முற்றிலும்  கண்டடையப் போவதில்லை என்றும் ஒருதுளியும் எஞ்சாது கண்டடையப்படவும் இயலாது என்றும் இருவரும் உணர்ந்தனர். எப்போதும் எஞ்சும் அவ்விடைவெளியிலேயே இருவரென்றாகி அங்கு நடிக்கும் அது தன் ஆடலை நிகழ்த்துகிறதென்று அறிந்தனர்.

துயிலும் அவள் செவியில் குனிந்து “என்னை தேடுக, இளையவளே!” என்றுரைத்து எழுந்து காலைச் செவ்வொளியில் கரைந்து அவன் உடல் மறைத்துக்கொண்டான். கையூன்றி எழுந்து அவள் அவனைத் தேடினாள். நெளியும் செம்மை படர்ந்த நீரில் காட்டுநெருப்பின் திரையில் பூத்த செண்பகத்தின் மரச்செண்டில் அவனை அவள் தேடினாள். அவளைத் தொடர்ந்து வந்து அறியாது முத்தம் கொடுத்து திகைத்துத் திரும்புகையில் நகைத்து அவன் நகையாடினான். தேடிச் சலித்து முகம் சிவந்து  ”தோற்றேன், என் முன் வருக இறைவ!” என்றாள். “எங்கேனும் நீ மறைக! நான் உன்னை கண்டுகொள்வேன். அங்கு மட்டுமே என் உருக்காட்டுவேன்” என்றான்.

அவள் ஓடி காட்டுக்குள் சென்று இலைகளுக்குள் செறிந்த நிழலில் ஒளிந்தாள். பின்னர் அங்கிருந்து மேலும் இருண்ட குகைக்குள் சென்றாள். அங்கிருந்து இரவின் கூரிருளுக்குள் முற்றிலும் உடல் மறைத்தாள். இருளென்றாகி அருவமானாள். சிரித்தபடி தேடிய அவன் தன் புலன்கள் ஊமையானதை உணர்ந்தான். தன் உள்ளம் திகைத்தமைவதை பின்பு கண்டான். உள்ளமைந்த அறியா நுண்புலனும் கைவிட்டபோது அஞ்சினான். எனினும் கைகளிலும் கால்களிலும் அமைந்த அசைவின் அறியா நெறியால் தேடித் துழாவினான். சலித்து மெல்ல சினம் கொண்டான். “எங்கிருக்கிறாய்? என் முன் வருக!” என்றான்.

அவன் காதருகே சிரித்து  ”கண்டுபிடிக்கிறேன் என்றீர்கள், காத்திருக்கிறேன்” என்றாள். மேலும் பொறுமையிழந்து “எங்கிருக்கிறாய்? என்முன் வருக இப்போதே!” என்றான் முக்கண்ணன். “தோற்றேன் என சொல்லுங்கள், தோன்றுகிறேன்” என்றாள். “நான் எங்கும் தோற்பதில்லை” என்று அவன் சொன்னான். “தோற்றேன் என்று உரைக்காமல் உங்கள் முன் வரப்போவதில்லை” என்றாள். அக்கணத்தில் வந்து தைத்த கனலம்பு ஒன்று அவனை சீறச் செய்தது. “வரவேண்டியதில்லை. நீயிலாது முன்பு நானிருந்த நிலையே  முழுமையானது. செல்க!” என்று சொல்லி திரும்பி நடந்து தன் குகை மீண்டான்.

அங்கு அவளிலாத இன்மையே ஒவ்வொரு பொருளிலும் துலங்குவதைக் கண்டான்.  உளம் விம்மி நீள்மூச்செறிந்தான். அறியாது விழிகலங்க “காளி, நகையாடாதே. இங்கு எழுக!” என்றான். அவன் துயர் அவளுக்கு அறியா உவகை ஒன்றை அளித்தது. ஒளிந்துகொள்வதனூடாகவே பெண் ஆணை எப்போதும் வெல்கிறாள் என அவள் அறிந்தாள். எப்போதும் தணிபவள் ஒருமுறை வெற்றிச்சுவையை அறிந்தபின் எளிதில் மீளமுடியாதென்றும் உணர்ந்தாள். “வென்ற தருக்கனைத்தையும் நிலத்திட்டு கை தொழுங்கள்” என்றாள்.

தளர்ந்தகுரலில் “கைதொழுதேன், வா!” என்றுரைத்தான். அவள் மேலும் எழுந்து “என் கால் தொட்டு வருக என்றுரையுங்கள்” என்றாள்.  ”கால்தொடுகிறேன், வா!” என்றான். அவள் உடல் சிலிர்த்து விழிநீர் கோத்தது. அவளில் கூடினர் இருளுருவாக தென்திசையில் அமைந்த அவள் குடியின் மூதன்னையர். “உங்கள் முடித்தலை என் காலடியில் வளையவேண்டும்” என்றாள். எரிந்தெழுந்த சினத்துடன் “வேண்டாம். நீயில்லாது நான் நிறையிலாதோன். ஆனால் வளைந்திறுவதைவிட இக்குறையுடனே வாழ்வதே மேல்” என்றான். “நானென்று எஞ்சுவது அழிந்தபின் நான் கொள்வதும் வெல்வதும் எதை? விலகிச்செல்!” என்று கூவினான்.

அப்போதும் அவன் சினம் அவளுக்கு உறைக்கவில்லை. பின்னால் சென்று சிரித்து “தோற்பவர் கொள்ளும் சினம்தான் எத்தனை அழகு!” என்றாள். “விலகிச்செல்!” என்று அவன் கூவினான். முப்பிரி வேலை தலைமேல் தூக்கி “இக்கணம் என் முன் வந்தால் உன்னை கொன்றழிப்பேன். செல்… விலகு!” என்றான். “ஒளியில் மறைந்து என்னை ஆட்டிவைத்தீர்கள். இவ்விருளில் மறைந்து நான் ஆடுகிறேன். ஆணென்றால் வந்து என்னைத் தொடுங்கள் பார்ப்போம்” என்றாள். “இல்லை… இனி அந்த ஆடல் நம்மிடையே நிகழாது. இனி ஒருபோதும் உன்னை நான் தேடப்போவதும் இல்லை” என்றான்.

“அப்படியென்றால் நன்று. நான் செல்கிறேன்” என்று அவள் திரும்பிச்சென்றாள். அவன் தன் பின்னால் வருவான் என அவள் அப்போதும் எதிர்பார்த்தாள். கேட்கும் ஓசையெல்லாம் அவன் காலடி என்று மயங்கினாள். திரும்பிப்பார்க்காது சென்ற அவளுடலில் அமைந்து சித்தம் நொடிக்கொருமுறை திரும்பி நோக்கி ஏங்கியது. அவன் வரவில்லை என உணர்ந்ததும் முதலில் திகைத்து பின் சினந்தது. அது தன் பெண்மைக்கு அவமதிப்பென்று எண்ணினாள். எங்கு செல்லப்போகிறார் என்று இகழ்ச்சியுடன் எண்ணி அதை கடந்தாள். இருண்ட வேர்க்குவை ஒன்றுக்குள் சென்று உடலொடுக்கி அமைந்துகொண்டாள். அங்கிருக்கையில் முழுமையாக இன்மைகொள்ள இயல்வதை உணர்ந்தாள். அவ்விருளில் இருந்து அவன் விழிகளாலேயே தான் உருவென வரைந்தெடுக்கப்படுவதாக அறிந்தாள். களிமண்ணில் அவன் கைகள் தன்னை வனைந்தெடுத்து கலமென்றாக்கி அவன் கொண்ட அமுதை நிறைக்கின்றன. அதை அவன் உண்கிறான். அவன் கைவிட்டால் மீண்டும் களிமண் நிலமென்றாகி விரிந்து அவன் காலடிகளை நெஞ்சில் தாங்கி அமைவதன்றி பிறிதொரு வழியில்லை அவளுக்கு.

அவன் ஒரு சொல் எடுத்தால், ஒருநோக்கசைத்தால் தாவிச்சென்று அவன் காலடியில் விழும்பொருட்டு காத்திருந்தாள்.  அவனோ அவளை மீண்டும் விழியிலிருந்தும் சித்தத்திலிருந்தும் இழந்தான். மீண்டும் அவள் தன்னிடம் ஒளிந்தாடுவதாக எண்ணினான். எத்தனை ஒளிந்தாலும் ஆணை பெண் தன் நுண்மையின் ஒரு முனையால் பின்தொடர்ந்துவிடமுடியும். தன்னை முற்றொளித்துக்கொள்ளும் பெண்ணை தன் உச்சப் புலனொன்றின் கூரால் கூட ஆண் தொட்டறிந்துவிட முடியாது. அவள் செல்லும் ஆழங்கள் முடிவற்றவை. அங்கு அவளுடைய மூதன்னையர் புன்னகைக்கும் விழிகளுடன் அவளை இரு கைகள் விரித்து பெற்றுக் கொள்கிறார்கள்.

உண்மை சினம் கொள்ள வைக்கிறது. நம்மால் மாற்றமுடியாத உண்மையோ பெருஞ்சினம் கொள்ள வைக்கிறது. ஏனெனில் நாமும் ஒரு கண்ணியென்றிருக்கும் இப்புடவிநெசவின் இரக்கமற்ற விரிவை அவை நமக்கு காட்டுகின்றன. தெய்வங்களும் அதில் ஒரு கண்ணியே. சினம் நிலை அழியச்செய்கிறது. நிலையழிவோர் முதலில் பிறழ்வது சொல்லில். சொல்லென்பது சித்தம் ஒவ்வொரு கணமும் கொள்ளும் கயிற்று நடை. ஒருபக்கம் அகமெனும் முடிவிலியின் ஆழம். மறுபக்கம் புறமென்றாகி நின்றிருக்கும் தகவுகளின் வெளி. செவிகள் சொற்களை அள்ளி முடைந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் வானத்தில் வந்து விழுந்து திகைக்கின்றன சொற்பொருட்கள். ஒருமுறை  சித்தம் அடிபிழைத்தால் சொல் ஓராயிரம் முறை தவறுகிறது.

அவன் அவளை அழைத்தான் “காளி, எழுக! எழுக என் முன்! இது உன் கொண்டவனின் ஆணை!” அவள் அதை கேட்கவில்லை. சினத்தால் அல்ல, காதலாலேயே கருமையிலிருந்து திரட்டி எடுக்கப்படுபவள் அவள் என அவன் உணரவுமில்லை. “எழுக! இக்கணமே எழுக!” சினம் கொண்டு முப்பிரி வேலைச்சுழற்றி “இதோ ஆணையிடுகிறேன், நீ என்னை உளம் நிறுத்திய துணைவியென்றால் இத்தருணத்திலே வந்து என் முன் பணிக!” என்று முக்கண்ணன் கூவினான். அதிலிருந்த கரையற்ற பெருஞ்சினத்தைக்கூட காளி புரிந்துகொள்ளவில்லை. அவன் குரலைக்கேட்டதும் மீண்டும் அவள் முகம் புன்னகை சூடியது. அவன் ஒரு கனிந்த சொல்லை எடுக்கவேண்டுமென அவள் எண்ணினாள்.

“சினம் உங்களை மேலும் சிவக்க வைக்கிறது’’ என்று இருளாகி நின்று மெல்ல சிரித்தபடி சொன்னாள். அவள் குரலில் இருந்த காதலை அவன் இளிவரலென்று எண்ணினான். முப்பிரி வேலை நிலத்தறைந்து “இத்தருணத்தில் இங்கு வா! இல்லையெனில் நான் பூட்டிய மங்கல நாண் அறுத்து இங்கு இட்டுவிட்டு விலகிச் செல்!” என்றான். அப்போதுதான் அவள் அவன் கொண்ட சினம் என்ன என்று உணர்ந்தாள்.  உளம் நடுங்கி ஓடி வந்து அவன் முன் நின்று “என்ன இது? தாங்கள் சொல்வதென்ன?” என்றாள்.

“நீ என்னை வென்று செல்கிறாய். உன் இருளைப் பயன்படுத்தி என்னை சிறுமைப்படுத்துகிறாய். சிறுமகளே, என் ஒளியுடலின் ஒரு சிறு மரு என்று மட்டுமே அமையும் தகுதிகொண்டவள் நீ. கரியவளாகிய உன்னை ஒளியுடல் கொண்ட நான் ஏற்றது என் கருணையினால் மட்டுமே” என்றான். காளி கொழுநன் சினம் அறிந்த  மனையாட்டியரின் இயல்புக்கிணங்க மேலும் தாழ்ந்து “பொறுத்தருள்க! இது ஒரு களியாட்டென்றே கருதினேன். தாங்கள் சினம் கொண்டிருப்பதை உணரவில்லை” என்றாள்.

“இல்லை, நீ உணர்ந்தாய். என் சினத்துடன் நீ விளையாடினாய். இருளென என்னைச் சூழ்ந்து இளிவரல் தொடுத்தாய்” என்றான். “இல்லை, நான் விளையாடுகையில் என் கட்டற்ற கன்னிநாட்களுக்கு திரும்பிவிடுகிறேன். மங்கலநாண் சூடி பிறிதொருவருடன் இணைந்ததை மறந்துவிடுகிறேன். என் இளமை உள்ளத்தால் செய்த பிழை இது. பொறுத்தருள வேண்டும்” என்றாள் காளி.  அவன் பற்களைக் கடித்து நீர்மைகொண்ட விழிகளால் அவளை நோக்கி “நீ உன் மூதன்னையருடன் சென்று சேர்ந்தமைந்தாய். அவர்களின் பொருட்டே உன் காலடியில் என்னை விழும்படி கோரினாய். உன் குடிக்கு முன் நான் இழிவுசூடி நின்றிருந்தேன் என்றால் உன்னுள் வாழும் தொல்குடி அன்னை மகிழ்ந்திருப்பாள். அதை நான் அறிவேன்”  என்றான்.

அவள் ஒருகணம் திகைத்தாள். அது உண்மைதானோ என உளம் மயங்கினாள். மெல்லியகுரலில் “இல்லை, அது வெறும் காதல்விளையாட்டு…” என்றாள். அவள் குரலிறங்கியமை அவனை மேலும் எழச்செய்தது. வெறுப்புடன் நகைத்து “இல்லை, உன் உளமறியும் அதை. யார் உன் மூதன்னையர்? காட்டுக்கிழங்கும் தேனும் தேடியலைந்த மலைக்குறத்தியர்.  மொழிதிருந்தாத மூடர். கற்பெனும் நெறியிலாது மைந்தரை ஈன்றுப்பெருக்கிய வெறும் கருப்பைகள். அவர்கள் முன் நான் அடிபணியவேண்டுமா என்ன?” என்றான்.

அவள் அச்சொற்களால் அனைத்தையும் மறந்து சினந்தெழுந்தாள். “ஆம், நான் அவர்களில் ஒருத்தி. அவர்களைப்போன்ற அன்னையர் ஈன்று பெருக்கியமையால் உருவானதே மானுடப்பெருங்குலம். அன்னையரையும் நீரையும் நிலத்தையும் பழிப்பவன் தன்னை இழிவுபடுத்திக்கொள்ளும் வீணன்.” அவள் சொல்மீறியது அவனை மேலும் உவகையே கொள்ளச்செய்தது. “ஆம், இதோ உன் நாவிலிருந்து எழுந்துவிட்டது உன் உளம்கொண்ட எண்ணம். நான் வீணன். உனைநாடிவந்த அரசர் கொண்ட செல்வக்குவையும் அரியணையும் இல்லாத மலைமகன். பித்தன், வெறும்பேயன்… நீ என்னை உன் சிறுகுடிக்குமுன் பணியச்சொன்னது அதன்பொருட்டே.”

முற்றிலும் தளர்ந்து அவள் மெல்ல விம்மினாள். கண்ணீரை கைகளால் மூட விரல்மீறி வழிந்தன துளிகள். நெஞ்சுலைய விசும்பியபடி “நான் இனி ஒன்றும் சொல்வதற்கில்லை. நான் சொல்லும் சொல் எதுவும் உங்கள் நெஞ்சில் நஞ்சென்றே பொருள்கொள்கிறது” என்றாள். “ஏனென்றால் நீ உளம்கொண்ட நஞ்சு அது” என்றான் அவன். அவள் சூழலையும் அவனையும் மறந்து அழத்தொடங்கினாள். அழும் பெண் ஆணை வென்றவனாக உணரச்செய்கிறாள். உளமுருகவும் செய்கிறாள். அவன் மேலும் ஒரு சொல்லிடை வெற்றியை விரும்பினான். அதை கைக்கொண்டபின் அவளை அணைத்து முத்தமிட்டு மீட்டெடுக்கலாமென எண்ணினான்.

“உன் கருமை என் கண்ணை இருளச்செய்கிறது” என்றான். “உன் கீழ்க்குடிப்பிறப்பை அறிவித்துக்கொண்டே இருக்கிறது அது.” அவள் கைவிலக்கி கண்ணீர் அனல்கொள்ள நோக்கியபோது வென்றுவிட்டேன் என அவன் உள்ளம் உவகையில் துள்ளியது. அங்கு நிறுத்துவதே நலம் என அவன் அறிந்திருந்தபோதிலும் ஆயனின் சீழ்க்கை கேட்டபின்னரும் மேலுமிரு காலடிகள் வைக்கும் கன்றுபோல சொல் முந்திச்சென்றது. “உலகை ஒளியூட்டும் செந்நிறம் நான். ஒளியனைத்தும் சென்று அமையும் முற்றிருள் நீ. நாமிருவரும் இணைதல் இயல்வதல்ல, செல்க!” என்றான்.

அவள் ஆழ்ந்த குரலில் “ஆம், நான் இருள் நிறம்கொண்டவள். அது புடவியின் நெறி. ஆதித்யர்களும் கோளங்களும் அவ்விருளின் சிறு மின்னல் துளிகள் மட்டுமே” என்றாள். அவள் குரலில் ஒலித்த அறைகூவலால் சினம்கொண்டு  அவள் விழிகளை நோக்கிய காளையன் அங்கு முழுமையான மாற்றம் நிகழ்ந்திருப்பதைக் கண்டு சற்றே அஞ்சினான். அதுவரை முற்றிலும் அடிபணிந்து நின்றிருந்த அவளுக்குள்ளிருந்து பெண்மையின் ஆணவம் பத்திவிரித்து எழுந்திருந்தது.

அதை உணர்ந்ததும் அவன் முழுமையாகவே பின்வாங்கிவிட்டான். அன்னையிடம் பாயும் அஞ்சிய மைந்தன் என அவளை நோக்கி கைவிரித்துச் செல்லவே உளமெழுந்தது. ஆயினும் அவன் நா “என் பொன்னிறம் உன்னில் ஒரு துளி மட்டுமே என்கிறாயா?” என்றது. “அனைத்து நிறங்களும் கருமையின் பரப்பில் அமைந்த சிற்றொளிகள் மட்டுமே” என்று அவள் சொன்னாள். இருவரும் சில கணங்கள் விழி கோத்தனர்.

இரு விசைகள் நிகர்கொண்ட உச்சதருணம். அது இருவரிலும் மானுடம்மீறிய உவகை ஒன்றை எழுப்பியது. போரிடும் உயிர்கள் கொலைத்தருணத்தில் அடையும் மெய்ப்பாடு அது. ஒவ்வொரு மயிர்க்காலும் உயிர்கொண்டு எழுந்து நின்றிருக்கும் கணம். அதையறிந்த உயிர் பின்வாங்குவதே இல்லை.

காளி “நான் என்றும் இருக்கும் நிலை. என்னில் நிகழும் அலையே நீங்கள். இத்தருணத்தில் அதை உணர்ந்தமையால் நீங்கள் அடையும் சினம் இது. இதைக்காட்ட வேண்டிய இடம் நானல்ல. இவையனைத்துமாகி நின்றிருக்கும் பிரம்மம். அங்கு சென்று சீறுக!” என்றாள். பெருங்காதலும் பெருஞ்சினமும் மிகச்சரியான தந்தியைத் தொட்டு மீட்ட வல்லவை. எந்தப் புள்ளியில் தன் வலியை மூவிழியன் உணர்ந்துகொண்டிருந்தானோ அங்கு பட்டன அவள் சொற்கள்.

இடிகொண்டு அனலான மரமென தழல்விட்டு கைநீட்டி அவன் சொன்னான் “நீ முழுமையென்றால் உன்னில் எழவேண்டும் அனைத்தும். செல்! எனக்குரிய அழகு வடிவம் கொண்டு இங்கு வா! உன்னை முகம் சுளிக்காமல் நோக்கி மகிழ என்னால் இயலுமென்றால் ஏற்றுக்கொள்கிறேன்.” அவள் ஏளனத்துடன் இதழ்வளைத்து “இவ்வழகு வடிவத்தை தேடித்தான் நீங்கள் வந்தீர்கள்” என்றாள். அவன் “ஆம், அது காணும் பெண்ணையெல்லாம் வென்று செல்லவேண்டுமென்ற ஆண்மையின் ஆணவம் மட்டுமே.  உன் தந்தை விடுத்த அறைகூவலின் பொருட்டே உன்னை வென்றேன். உன்னை உடனுறையச்செய்ய வேண்டுமென்று எண்ணவில்லை. உண்டு முடித்த கலம் நீ. இனி உனக்கு என் உள்ளத்தில் இடமில்லை. விலகு!” என்றான்.

அச்சொற்களில் அவள் ஒரு கணம் நடுங்கினாள். நலம் உண்டு துறக்கப்படுதல் என்பது பெண்மை என்றும் உள்ளூர அஞ்சும் கொடுநரகு, உலகாளும் அன்னை வடிவமே ஆயினும். தளர்ந்த குரலில் காளி “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “நான் மீண்டு வரவேண்டியதில்லையா? மெய்யாகவா சொல்கிறீர்கள்?” என்றாள். “செல்க, இனி ஒரு கணமும் உன்னை எண்ணிப்பார்க்க மாட்டேனென்று இதோ ஆணையிடுகிறேன். இப்புவியெங்கும் பிறந்திருக்கிறார்கள் எனக்குரிய பெண்டிர். நீ அதில் ஒரு துளி. அது உதிர்ந்துவிட்டது.”

அழுகையென ஒலித்த குரலில் “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “இனி என் விழிகளுக்கு நீ அழகல்ல. உன் உள்ளம் இனியெனக்கு ஒரு பொருட்டும் அல்ல. அதை மட்டுமே சொன்னேன்” என்றான். “இத்தனை நாள் நீங்கள் கொண்ட காதல் பொய்யென்று உரைக்கிறீர்களா?” என்றாள். அதிலிருந்த மன்றாட்டைக் கண்டு அவள் அகமே கூசியது. அவன் அத்தணிவால் மேலேற்றப்பட்டு உச்சி ஒன்றில் நின்று சொன்னான் “பொய்யல்ல, அத்தருணத்திற்கு உரியவை அவை. அக்கணங்களைக் கடந்து இங்கு வந்து நின்றிருக்கிறேன். உன்னை அங்கு முற்றுதிர்த்துவிட்டிருக்கிறேன். காதலில் ஆண் சொல்லும் அத்தனை சொற்களும் மின்னல் போன்று மறுகணமற்றவை. செல்!”

அனைத்துப் படைக்கலங்களையும் இழந்து கைதளர்ந்து கண்ணீர் வழிய விம்மியழுதபடி தலைகுனிந்து அவள் நின்றாள். அவள் அழுகைக் குரல் கேட்டு வீம்புடன் அவன் திரும்பி நின்றான். அவளுடைய அழுகையொலி அவன் நெஞ்சை அறுத்தது. மறைமுக உவகையுடன் அவன் அவ்வலியில் திளைத்தாடினான்.  “நான் ஒரு சொல்லுக்கென்று கூட உங்களை மறுதலிக்க இயலாது. அதை நீங்கள் அறிவீர்கள்” என்றாள். அவன் உடலில் ஒரு சிறு அசைவு கடந்து சென்றது. “சொல்லுங்கள், நான் என்ன செய்ய வேண்டும்? எங்கு பணிய வேண்டும்? எவ்வளவு சிறுக்க வேண்டும்?”

அவன் வலியில் திளைப்பதன் சுவையை அறிந்துவிட்டிருந்தான். தன் கோட்டைகள் ஒவ்வொன்றையும் அவனே இடித்துச் சரித்தான். தன் உடலை குருதிவழியக் கிழித்து வீசினான்.  ஏளனம் நிறைந்த முகத்துடன் “சென்று இவ்விழிந்த கரிய உடலை அகற்றி பொன்னுடல் சூடி இங்கு வா! உன்னை என் துணையெனக் கொள்கிறேன். இனி கருமையின் கீழ்மையைச் சூட என்னால் இயலாது” என்றான்.

KIRATHAM_EPI_64

அவள் உடல் தொய்ந்தபோது அணிகள் மெல்ல விழும் ஓசை எழுந்தது. முலைக்குவைகள் எழுந்தமைய நெடுமூச்சுவிட்டு “இதையே ஆணையெனக் கொள்கிறேன். பொன்னுடல் பூண்டு இங்கு மீள்கிறேன்” என்று சொல்லி திரும்பி நடந்தாள். அவன் அவள் செல்வதை முற்றிலும் தளர்ந்தவனாக நோக்கி நின்றான். ஒரு நாடகம் முடிந்துவிட்டதென அவன் அறிந்தான். ஆயிரம் முறை அவளை பின்னின்று அழைத்தான். அதை ஒலியாக்கும் ஆற்றல் அவன் உடலில் எஞ்சியிருக்கவில்லை.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 63

[ 3 ]

திருவிடத்தின் காடுகள் மாறா இருள் நிறைந்தவை. மயன் அமைத்த அசுரர் மாளிகையின் பெருந்தூண்களென எழுந்த அடிமரங்களின் மேல் சினந்தெழுந்த கொம்புகள் எனத் திமிறி நின்ற கிளைகள்சூடிய பச்சை இலைத்தழைப்பு பிளவிடாக் கூரைவெளியென மூடியிருக்க  நிழல்வரைவாகவும் விழியொளிகளாகவும் மூச்சொலியாகவும் காலரவமாகவுமே மான்களும் மிளாக்களும் காட்டெருதுகளும் அங்கே அறியப்படலாயின. செம்புக்கலம் சிலம்பும் ஒலியாக வால்துடிக்கும் அணில்களும்  சிறுமுழவு மீட்டும் ஒலியாக குவிந்து துள்ளும்  குழிமுயல்களும்  இரும்புரசும் ஒலியாக காட்டு ஆடுகளும் இருள்மடிப்புகளுக்கு அப்பால் இருப்புணர்த்தின.

முதலைத் தோலென்றும் யானைக்கால் என்றும் ஆமை ஓடென்றும் தோற்றம் கொண்ட செதில்செறிந்த அடிமரங்களின் வேர்க்கிளைகள் உருகிவழிந்து மண்ணிலூன்றிய கொம்பரக்கின் விழுதுகளெனப் பரவிய மண்ணில் சிற்றிலைப்புற்களும் பச்சிலைப்பூசணங்களும் பரவி மூடியிருந்தன. விழுந்து மண்ணில் பாதி உடல்புதைந்த தொல்மரங்களின் மேல் எழுந்த வெண்ணிறக் காளான் குடைகள் அப்பச்சையலை எழுப்பிய நுரை எனத் தெரிந்தன.

கூரிலை பசலைக் கொடிகளும் ஒட்டிப் பற்றி மேலேறும் இத்திள்களும்  மட்டுமே அங்கு கை தொடும் இலைகளெனத் தெரிந்தன. இலைநுனிகள் அனைத்திலும் தளிர்ப்பச்சை உடல்கொண்ட சிறுதவளைகள் விழித்து அமர்ந்திருந்தன. காலடியோசையில் அவை தாவி எழுந்து இலைமாறி அமர்ந்து ஆடின. உடல்மேல் பட்ட சிறுதவளை நீர்த்துளியென்றே நடுக்கம் தோன்றச்செய்தது. காட்டுக்குள் மென்புகையென நீராவி நிறைந்திருந்தது. அடியிலைகளில் அது பனித்து நுனிக்கூம்புகளில் துளித்துச் சொட்டியது. சொட்டுமொலியில் காடு படிகமாலை உருட்டி ஊழ்கநுண்சொல் உரைத்து அமைந்திருப்பதெனத் தோன்றியது. துயிலும் மாடுகளின் காதுகள் போல்  கவிழ்ந்தும் இளையோர் கைவிரித்ததுபோல் விரிந்தும் சூழ்ந்திருந்தன இலைகள்.

அவற்றுக்கிடையே சிறு கால்கள் வைத்து  வாலை அசைத்து உடுக்குத்தோலை கையால் மீட்டும் ஒலியுடன் குழறியபடி செம்போத்துகள் ஊடுருவி ஓடி அலைந்தன. நுரைக்கொழுந்தென வால் சிலிர்த்த கீரிகள் தாவிச் சென்றன. மெல்ல இழுபட்டு வளைவால் ஒளியெழுப்பி நெளிவை விழியில் எஞ்சவிட்டுச் சென்றது நாகம். பெருமரங்கள் மேல் தொற்றி அமர்ந்து கொண்டை உலைத்து கொத்திய மரங்கொத்திகள் உளியோசை எழுப்பின. அது பல்லாயிரம் கற்தச்சர்களால் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மாளிகையென அக்காட்டை எண்ணச்செய்தது.

அவ்வடர்காட்டிலும் கால்புழக்கம் பதித்த வழியொன்று சென்றிருப்பதை சற்று விழி தெளிந்த பின்னரே காணமுடிந்தது. அது பசுமைக்குள் வேறொரு பசுந்தடமென கண்ணறிகிறதா கருத்துணர்கிறதா என்னும் மயல்கூட்டி தெரிந்தது. பின்னர் அவ்வழிசென்ற உடல்களையும் அவ்வுடல்களை நாயின் நாக்கு நுனிகளென ஈரக்குளிருடன் நக்கி அசைந்த இலை நுனிகளையும் காண முடிந்தது. மொழியிலும் சித்தத்திலும் எவரெவரோ சென்ற தடங்கள் என பைலன் நினைத்துக்கொண்டான். அவ்வெண்ணம் எழுந்ததுமே கண்முன்விரியும் காட்டை அழுத்திச்சுருக்கி ஒரு ஒப்புமைமட்டுமே என்றாக்க விழைவதுதான் எது என அவன் சித்தம் வியந்தது.

அடர்காட்டின் முகப்பிலேயே நீண்ட கழிகளை வெட்டி முனை கூரச்செய்து அவர்களுக்கு அளித்திருந்தான் சண்டன். கூர்கழியுடன் வைசம்பாயனன் முன்னால் செல்ல ஜைமினியும் சுமந்துவும் பின்னால் சென்றனர். மூங்கில் வளைத்து காட்டுக் கொடி கட்டி இறுக்கிய வில்லை வலக்கையில் ஏந்தி மூங்கில் கூர் கொண்ட அம்புகளை தோள் தூளிகளில் நிறைத்து திசைகள் தோறும் விழி செலுத்தி இலைச்செறிவுகளுக்குள்ளும் மரங்களின் மறைவுக்கு அப்பாலும் கூர்நோக்கியபடி சண்டன் நடந்தான்.

அவர்களின் காலடியோசை பெருகி காட்டின் பசுமை வெளிக்கு உள்ளே எதிரொலித்து ஒரு படை நகர்வென செவிமயக்கு அளித்தது. கையெட்டும் தொலைவுக்கு அப்பால் விழியும் எட்டாதொரு பயணத்தை பைலன் முன்னர் எண்ணியிருக்கவே இல்லை. “இத்தனை தழைக்கக்கூடும் காடு என்று இதற்கு முன்னால் அறிந்ததே இல்லை, சண்டரே” என்றான். “இமயக்காடுகளை கண்டிருக்கிறேன். அவையும் இத்தனை தழைத்து பசுமை மட்டுமே என்றானதில்லை.” மூச்சிரைக்க அவன் நின்றான். மூச்சென நீராவி எழுவதை கண்டான். கொதிகலம் இவ்வுடல். ஆனால் வெளியே உருகுகையில் உள்ளே குளிர்ந்திருக்கிறது இது.

சுமந்து “ஆம், பசுமையை நீலமென்றும் கருமையென்றும் ஏன் சொல்கிறார்கள் என்று இன்றுதான் அறிந்தேன். இதுவே மலைநின்ற மாலின் வண்ணம்” என்றான். ஜைமினி “குளிர்நிறைந்த இமயக்காடு அஞ்சிய எருதின் உடலென சிலிர்த்திருக்கிறது. வறண்ட தண்டகாரண்யம் முட்பன்றியென சினந்திருக்கிறது. இக்காட்டின் ஒவ்வொரு இலையும் இளமைந்தர் கைகளைப்போல்  தொட்டு அழைக்கின்றன. கிளைமுனைகள் அன்னையர் வாழ்த்து என தலைதொட்டுத் தழுவுகின்றன” என்றான்.

சண்டன்  ”தென்னகமே பெருங்காடுகளின் நிலம். இங்கு ஆண்டுக்கு மூன்று மழைக்காலம். இது வாயுவும் வருணனும் புரக்கும் அரசு. இதோ அடி மரமென பெருத்து பசும்பெருக்கென இலை சூடி நிற்கும் இவை அனைத்தும் தென்கடலில் காற்று மொண்டு வந்த மழைநீரே” என்றான். “பாரதவர்ஷத்தை வேள்வியில் எழுந்த அனல் என்று உரைப்பதுண்டு நூலோர். அதன் கொழுந்து இமயம் என்றால் கரித்தழலே திருவிடம். பாரதம் அறத்தின் குளிர்ச்சுனை என்பர் கவிஞர். அதன் வெள்ளியலைகளே இமயம்,  குளிர்ந்திருண்ட ஆழமே திருவிடம்.”

“கரியதாகையால் இக்காடு காளிகவனம்  என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் காளிகர் எனப்படுகின்றனர். பாதாளத்தை ஆளும் வாசுகியின் வழிவந்த காளிகன் என்னும் கருநாகத்தின்  நச்சில் இருந்து முளைத்தெழுந்த காளர்கள் என்னும் தொல்பிரஜாபதிகள் நூற்றெண்மரால் உருவாக்கப்பட்ட குலம் என அவர்கள் தங்களைப்பற்றி சொல்கிறார்கள். தொல்நாகர்குலங்களுக்கும் இவர்களுக்கும் அணுக்கம் மிகுதி. இவர்களை கருநாகர்கள் என்றும் அப்பால் தாழ்வரைகளில் வாழ்பவர்களை பைநாகர்கள் என்றும் சொல்லும் மரபுண்டு.”

காட்டுப்பூனை ஒன்று மரக்கிளை ஒன்றின் தளிர்க்கொத்து சூடிய நுனி நோக்கி மெல்ல நடந்து வந்தது. அதன் மெல்லிய கால்வைப்புக்கேற்ப கிளை குரங்குவால் போல் வளைந்து தழைந்து இலைகள் குலுங்க அமைந்தது. இரு சுடர்மணிகளென விழிகொண்டு அவர்களை நோக்கி செவிமடித்து தலைதாழ்த்தி வால்தூக்கி அசைத்தது அனல்வரிகள் கொண்ட செம்பூனை. அனல்கொழுந்து  என அதன் நாக்கு நீண்டு வளைந்து செல்ல ஆழ்ந்த குரலில் அகவியபின்  அக்கிளையை உலைத்து மலர்பொழியத் தாவி எழுந்து பிறிதொரு கிளை பற்றி நிலைகொண்டு நீள்வாலைத்தூக்கியபடி நடந்து அப்பால் சென்று மறைந்தது.

“நிகரென எவருமில்லை என்றறிந்த நிமிர்வு” என்று ஜைமினி சொன்னான். “எளிய பூனை தன் எண்ணத்தால் புலியென்றாகி விட்டது.” பைலன் புன்னகைத்து  “முழவுநடனத்தின் தாளம்!” என்றான். அது குரங்குகளின் ஒலி. அலையலையென எழுந்தமைந்து கேட்டது அது. ஆனால் அவை இலைத்தழைப்புக்கு மேல் எங்கோ இருந்தன. அங்கு ஒற்றை ஓசைப்பரப்பென அலைகொண்டு நிறைந்திருந்த பறவைக்குரல்களுடன் அவையும் கலந்து ஒலித்தன.

“இக்காட்டின் முதன்மை விலங்கு யானையே” என்றான் சண்டன்.  ”இக்காடு போலவே கரியது. இதன் ஆழம்போல  ஓசையற்றது. கிளை முறிபடும் ஒலியில் மட்டுமே இங்கு யானையை அறிய முடியும். பெருங்களிறுக்கூட்டம் ஒன்று மிக அருகே கடந்து செல்லும்போதுகூட அச்சிறு ஒலிகளை அன்றி நாம் எதையும் கேட்க முடியாது. நம்மீது கருணை கொண்ட வழிகாட்டிப்பறவைகள் கூறும் மொழி கேட்க பழகிக்கொண்டால் ஒழிய இக்காட்டை எவரும் கடக்க இயலாது.”

“தென்னகத்தின் இப்பெருங்காடு கீழே கடல் சூழ்ந்திருக்கும் நீள்நிலம் சேர்த்து வைத்திருக்கும் செல்வக்குவைகளுக்கான காவலரண் என்கிறார்கள். செல்வம் உறையுமிடமென்பதனால் இது திருவிடம். இங்கு அமைந்துள்ளன நூற்றெட்டு அன்னையர் குடிகொள்ளும் ஆற்றல் மையங்கள். அதற்கப்பால் மும்முடியர்கள் ஆளும் தமிழ்த்தொல்நிலம்.    மாறாக்கன்னிமை கொண்ட முதல் தெய்வம் அமர்ந்திருக்கும் முக்கடல் முனம்பு. இப்பாரதவர்ஷம் அக்கன்னியின் தவத்தால் ஆளப்படுகிறது” என்றான் சண்டன்.

“சிற்றாடை கட்டி சிறுமியென அங்கிருப்பவள் பாரதவர்ஷமெங்கும் தேவியென, அன்னையென நூறாயிரம் முகம்கொண்டு நிறைந்திருக்கிறாள். பிடாரி என்றும் பேரருள் கொண்டவள் என்றும் உருக் காட்டுகிறாள்” என்று அவன் தொடர்ந்தான். “காளிகம் என்னும் இக்காடும் கன்னி அன்னையின் ஆலயம் என்கின்றன கதைகள். இதன் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது கருங்குமரித் தெய்வம் கௌசிகையின் ஆலயம். அவளை குமரிமுனை அமர்ந்த கன்னியின் பிறிது வடிவம் என்று வழிபடுகிறார்கள் நூற்றெட்டு தொல்குலத்தோர். ஆண்டிற்கு மும்முறை சூழ்ந்துள்ள ஊர்களிலிருந்து காடுகளுக்குள் புகுந்து அவள் ஆலயத்தை வந்தடைந்து படையலும் பூசெய்கையும் முடித்து திரும்புகிறார்கள். இங்குள பாதைகள் அனைத்தும் அன்னை ஆலயத்திற்குச் செல்லும் மானுடரின் கால் பட்டுப் பிறந்தவையே.”

[ 4 ]

காளிகக்காட்டின் காலடிப்பாதையில் சண்டன் நான்குபக்கமும் ஓடும் விழிகளுடன் காடெனச் சூழ்ந்துள்ள இலைகளையே செவிகளென எண்ணியவன்போல அன்னையின் கதையை சொல்லிக்கொண்டுவந்தான். இளையோர் நால்வரும் அவன் குரல் கேட்கும் பொருட்டு விரைவழிந்து சற்று உடல் நெருங்கிக்கொண்டார்கள். “மகபைரவர் இயற்றிய பிரசண்ட புராணத்தின் கதை இது” என்று சண்டன் சொன்னான். “இமயமலையில் தாட்சாயணியாகப் பிறந்தவள் முதற்சிவத்தின் இடம் அமைந்த சிவை. அவளே தெற்கே திருவிடத்தின் காளிகப்பெருங்காட்டில் அழகிய குறமகளென வந்தாள். அது முதலன்னையும் தந்தையும் கொள்ளும் ஆடல். மானுடரில் விலங்குகளில் பறவைகளில் பூச்சிகளில் புழுக்களில் நுண்ணுயிர்களில் அவர்கள் காதல்கனிந்த இணைகளென பிறந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களின் கூடலாலும் ஊடலாலும் இயக்கப்படுகின்றன உயிர்க்குலங்கள்.”

காளிககுலமே காராமணி நிறம் கொண்டது. அவர்கள் நடுவே கருமணி என அவள் ஒளிகொண்டிருந்தாள். அவளை காளி என்று அழைத்தனர் அவள் குலத்தோர். காளுதல் என்றால் இருளொளி கொள்ளல் என்று அவர்களின் மொழிப்பொருள். அவள் கன்னங்களின் வளைவில் வானொளி மின்னும் என்று  சொல்கின்றன தொல்கதைகள். இருளில் இருக்கையில் அவள் உடல்கொண்ட ஒளியே அச்சூழலைத் துலக்கும் என்கின்றன. அவள் கூந்தலொளியை மேனிக்கருமையின் ஒளி மிஞ்சும் என்றும் மேனிக்கருமையை விழிக்கருமை அஞ்சச்செய்யும் என்றும் கூறுகின்றனர் கவிஞர். அவள் நகங்களும் கருவண்ணம் கொண்டவை. அவை நோக்கு கொண்ட விழிகள் என ஒளிர்பவை.

தன் குலம் ஈன்ற அருமுத்தை நிகரற்ற ஒருவனுக்கே அளிக்க வேண்டுமென்று நோற்றிருந்தார் அவள் தந்தையாகிய கராளர். காளிகர் குடியின் தலைக்குடி அவருடையது. ஆயிரத்தெட்டு பேரன்னையர் பிறந்து பேற்றுத்தவமியற்றி நிறைந்து தெய்வமாகி நோன்பிருக்கும் மகளிரின் படையல்கொண்டு விண்ணமர்ந்திருக்கும் குருதிக்கொடிவழி அவருடையது. அவ்வன்னையரின் அருள் கொண்டு எழுந்த மகளை வேட்டு தன் இல்லம் வருபவர் எவராக இருப்பினும் காளிக குலத்தின் முதற்தெய்வமாக அமர்ந்திருக்கும் ஏழுதலைநாகமாகிய காளிகனின் ஆலயத்திற்குள் சென்று அவன்  அருளாணை பெற்று வரவேண்டும் என்று அறிவித்திருந்தார்.

அவள் அழகை காட்டுப்பாடலில் கேட்டு உளம் மயங்கி அங்கு வந்த இளையோரில் பலர் அவ்வாணையைக் கேட்டதுமே அஞ்சி விலகினர். துணிந்தவர் அனைவரும் பெருநாகங்கள் செறிந்த புற்றுக்குவை அமைந்த அக்கோயிலுக்குள் சென்று  அக்கணமே சீறிச் சொடுக்கும் இமைநோக்குள்ள நச்சு தீண்டி இறந்தனர். அந்நச்சு தொட்டதுமே அவர்களின் உடல்கள் காளிகர்போல் கருமைகொண்டன. முகத்தில் களியுவகை என சிரிப்பு ஒன்று எழுந்து உறைந்தது. கூப்பிய கைகளுடன் விரைத்துக்கிடந்த அவர்களின் உடல்களை மூங்கில் தெப்பத்தில் கட்டி பயோஷ்னியின் பெருக்கில் இட்டு திசைசேர்த்தனர் அக்குலத்தோர். ஒவ்வொரு நாளும் பயோஷ்னியில் ஒழுகும் ஒரு உடல் அவளை ஊருக்கு அறிவித்துச்சென்றது.

பின் அவள் வெல்லமுடியாதவள் என்றே அறியப்படலானாள். உச்சிப்பாறை முகட்டில் கனிந்த தேன்கூடு அவள் என்றனர் அயலூர்களின் அங்காடிப்பாடகர். அரியதேதும் இறைவனுக்கே என்றனர் காடுகளின் முதுகுலத்தோர். அவளையீன்ற அன்னை  தன் மகள் கன்னியென்று நின்றுவிடுவாள் என்று அஞ்சி துயர்கொண்டு ஏங்கலானாள். “கன்னியென்று நின்றிருப்பதே அவள் ஊழென்றால் அவ்வண்ணமே ஆகுக!” என்று அவள் தந்தை சொன்னார். ஆனால் தன் ஆழுள்ளத்தில் அமைதியிழந்தமையால் அவளை நோக்குவதையே தவிர்த்தார். நாள்தோறும் ஒளிகொள்ளும் இவள் ஒருநாள் சுடரென்றாகி விண்புகுவாள் போலும் என்றனர் குடிப்பாணர். அவள் நோற்கும் கன்னிமை கனிந்து கணவன் வருவான் என்றார் குலப்பூசகர்.

அவளை மணப்பதற்கென்று அனல்வண்ணன் விந்தியஅடுக்கின் ஏழு மலையை படியென்றாக்கி இறங்கி வந்தான். செஞ்சடைச்சுருள் மகுடத்தில் அனலென காந்தள் மலர் சூடி, நெற்றியில் வெண் சாம்பல் பொடி பூசி, நாகக்குழை அணிந்து, வெள்விடை மேல் வந்தவன் காளிகக் குடிவாழும் ஊர்நடுவே மன்றுநின்று தன் உடுக்கை ஒலித்தான்.  எவெரெவெரெரெவரென ஒலித்தது குறுந்தோல் வட்டக் கொட்டு. குடில்களுக்குள் இருந்து எட்டிப்பார்த்தவர்கள் “யார் இவன்? எருக்குமாலை அணிந்திருக்கிறான். பன்றிப்பல்பிறை சூடிய செஞ்சடையன். முன்பு கண்டதில்லையே இவனை” என வியந்தனர். தன் மையக்குடில் விட்டு நாகபடம் செதுக்கிய மரக்கொந்தையும் கல்மணிமாலையும் அணிந்து வெளிவந்த கராளரை நோக்கி அவன்  முழங்கும் குரலில் “குறவர்க்கரசே, உன் மகளை மணம்கொள்ள வந்துள்ளேன்” என்று உரைத்தான்.

இளிவரல் புன்னகையுடன் கராளன் “மகட்கொடை மறுத்தல் எங்கள் அன்றாட நிகழ்வாகி ஐந்தாண்டுகள் ஆகின்றன, செஞ்சடையரே.  முடிகொண்ட மாமன்னர்கள் அனுப்பிய தூதர்கள் வந்து இங்கு நிரைகொண்டு நிற்காது ஒரு நாளும் கடந்து சென்றதில்லை. எங்கள் குலதெய்வமென அமர்ந்திருக்கும் கூர்நஞ்சின் தொடுகையேற்று இறந்தவர் நிரையோ அதனினும் பெரிது. மலைமகனெனத் தோன்றுகிறீர். விரைவிலா விடையேறி வந்திருக்கின்றீர். உமக்கும் அதுவே நெறி” என்றார்.

தன் முப்புரி வேலை தோள்சாய்த்து இனிய புன்னகையுடன் எரிவண்ணன் சொன்னான் “நஞ்சு எனக்குப் புதியதல்ல. நான் உண்ணும் அமுதே அது. காட்டுக, உங்கள் குல தெய்வம் உறையும் புற்றுக்கோயிலை!” அவன் புன்னகையின் தெளிவு அவர்களை குழப்பியது. கராளர் ஒருமுறை தன் துணைவியை திரும்பி நோக்கியபின் “அவ்வண்ணமே ஆகுக!” என்றார். அவள் அவன் மேனிப்பொலிவை நோக்கி கைகூப்பி கண்ணீர்ப்படலம் ஒளிவிட நின்றிருந்தாள்.  “ஆனால் இது உன் தேர்வு என்றும் இவ்விறப்புப் பழிக்கு எங்கள் குடி பொறுப்பல்ல என்றும் நீரையோ நிலத்தையோ தொட்டு நீ ஆணையளிக்கவேண்டும்” என்றார் கராளர். அவன் நிலம் தொட்டு “ஆணை ஆணை ஆணை. இது என் முற்றுறுதி” என்றான்.

குறுமுழவு மீட்டி குலப்பூசகர் முன்னால் செல்ல குருத்தோலை முடிசூடி குடி மூத்தோர் எழுவர் அவனைச் சூழ்ந்து உடன் அழைத்துச்சென்றனர். விந்தை காண்பதற்காக இளையோரும் பெண்களுமென ஒரு பெருங்கூட்டம் அவர்களைத் தொடர்ந்து சென்றது. அவன் நடந்தபோது இடையணிந்திருந்த வெள்ளெலும்பு குடைந்து செய்த மணிமாலைகள் மெல்ல குலுங்கின. அவன் காலடிபட்ட புற்கள் வணங்கி எழுந்தன. நோக்கநோக்க கிராத வடிவம் நெஞ்சள்ளும் பேரழகுகொள்வதன் மாயமென்ன என்று பெண்டிர் அகத்தே வியந்தனர். பெருமூச்சுவிட்டபடி அவனையன்றி பிறிது நோக்காது உடன் சென்றனர்.

நூற்றெட்டு மூங்கில் கால் நாட்டி எழுப்பிய தன் குடிலின் தெற்குச் சாளரத்தினூடாக விழிகளில் இளநகையொளிர காளி அவன் செல்வதை நோக்கியிருந்தாள். இருபுறமும் நின்ற அவள் தோழிகள் ஜயையும் விஜயையும் ஜயந்தியும் அபராஜிதையும் அவள் நிலைமாற்றம் கண்டு  களியாடினர்.  ”முத்து வயலை அறுவடை செய்யும் பாண்டியன் தோற்றுத் திரும்பியது உன் வாயில். நெல்மலை கொண்ட சோழன் இளிவரலுக்குள்ளானான். பெருங்களிறுகளை கால்களாகக் கொண்ட சேரன் மகள் மறுக்கப்பட்டான். நூறுகாதுகளைக் கொண்ட திருவிட பெருமன்னன் இன்னமும் உன்னை நினைத்து ஏங்குகிறான். இவனோ நீற்றுப்பொடி பூசி புலித்தோல் ஆடையணிந்து வந்திருக்கும் மலைமகன். விழி கண்டால் பித்தனென்று தோன்றுகிறது” என்றாள் ஜயை.

“இவனுடன் சென்று நீ உச்சிமலைக்குகையில் பூதங்கள் ஏவல் செய்ய வாழப்போகிறாயா என்ன? அவனுக்கு புலித்தோல் எனில் உனக்கு மான்தோல். வெள்ளெலும்பில் அணிகள்.  உனக்கும் இருக்கும் முடிப்பிறைப் பல்லும் முப்புரிவேலும். உன்  இதழ்மேல் இதழ் பதித்து அவன் முத்தமிடுகையில் உன் நெற்றியிலும் எழும் ஒரு மூன்றாம் விழி. கரியவளே, காட்டிலிருந்து மேலும் அகக்காட்டுக்குச் செல்வதே உன் ஊழ் போலும்” என்றாள் விஜயை.

“பித்தன். அவனுக்கிணையாக நீயும் பிச்சியென்றாவாயா? அவன் ஆட்டும் உடுக்கொலிக்கு நீ ஆடிக்களிப்பாயா?” என்றாள் ஜயந்தி. “உடனாட அந்த உச்சிமலையில் பூதநிரைகளே எழும். நாதமென்று இந்தக் காளை திமிலசைக்கக்கூடும்” என்றாள் அபராஜிதை. “ஒருகையில் தழலும் மறுகையில் தாளமும் கொண்டிருப்பான். மான் தொடர மழுவேந்தி நின்ற மலைவேடன்.  அவன் துணைவியாகிய நீ கொள்ளும் ஊர்தி எது?” என்று ஜயை சிரித்தாள். “வெள்ளெருது அஞ்சும் சிம்மம்…” என்று விஜயை சொன்னாள்.

அவளோ அவ்விளிவரலை புகழ்மொழியாக ஏற்று மெய்சிலிர்த்துக் கொண்டிருந்தாள். தன் உடல் இனிய மயிர்ப்பு கொள்வது ஏன்? முலைக்குவைகள் குறுவியர்வையுடன் விம்மித்தணிவது ஏன்? தொண்டை வறள்கையில் இதழ் ஈரம் கொள்வது ஏன்? மூச்சு வெப்பம் கொள்கையில் கண்கள் பனிப்பது ஏன்? அதுவரை அறிந்திராத மெய்ப்பாடுகளால் தளர்ந்து சாளரக்கழிகளை இருகைகளாலும் பற்றிக்கொண்டு தலைசாய்த்து விழித்த கனவிலென அசைவிழந்திருந்தாள். பின் அறியா உள எழுச்சியால் அவள் கண்ணீர்விடலானாள்.

பெருநாகம் குடிகொண்ட ஆலய முகப்பை அடைந்து அதன் கதவென அமைந்த ஏழு மூங்கில்களை விலக்கி பூசகர் சொன்னார் “இதன் வாயிலுக்கு இப்பால் நின்று வழிபடுவதுதான் எங்கள் வழக்கம். நூற்றெட்டு முகடுகள் கொண்டதும் ஆயிரத்தொரு வாய்கள் கொண்டதுமான இந்தப் புற்றுக்குவை பல்லாயிரம் ஆண்டுகளாக இங்குள்ளது. இதன் பணிக்கென்று இக்காட்டில் பிறந்து வந்தவர்கள் நாங்கள். இங்கு இறப்பிலாது வாழும் எழுதலைப்பெருநாகமான காளிகன் நூற்றெட்டுமுறை கரிய மண்ணைக் கொத்தி எங்களை முளைத்தெழ வைத்தது என்பது தொல்கதை. படையலும் பூசைகளும் வெளியிலிருக்கும் இந்த மூன்று பலிபீடங்களில் மட்டுமே நிகழ்வது வழக்கம்.”

அவன் மேல் நீறிட்டு வாழ்த்தி பூசகர் சொன்னார் “நீ எங்கள் குல மகளை கைக்கொள்ள வேண்டுமென்றால் இவ்வெல்லை தாண்டி செல்ல வேண்டும். அப்புற்றுகளில் ஒன்றின் வாய்க்குள் கைவிட்டு மாநாகர்களே அருள்க, இக்குலக்கன்னியை எனக்கு நல்குக என்று கோர வேண்டும். அவர்கள் அருளினார்கள் என்றால் நீ உயிருடன் மீண்டு இப்படிக்கு இப்பால் வருவாய். எங்கள் குலம் உனக்குப்பணியும். எங்கள் குலமகள் உன் குடிக்குரியவளாவாள்.”

புன்னகையுடன் “நன்று, நான் அதை இயற்றுவேன்” என்றபின் தன் முப்பிரிவேலையும் அதில் கட்டிய உடுக்கையையும் அங்கே சாற்றிவைத்து எலும்புமணிக் கங்கணம் ஒலித்த கைகளை நீட்டி படிதொட்டு சென்னிசூடி வணங்கி அவன் வாயில் கடந்து உள்ளே சென்றான். அங்கிருந்த கன்னியர் அஞ்சி மூச்சிழுத்து நெஞ்சழுத்தி ஏங்கி “என்ன நிகழ்கிறது! தென்றிசையன்னையரே, நீங்களே சான்று” என்றனர். இளையோர் அவன் அசைவுகளை நோக்கி அவற்றுக்கேற்ப அறியாது அசையும் தசைகளுடன் இறுகிய நாணில் அம்பென நின்றனர்.

புற்றுக்குவையை அணுகி ஒருகணம் நோக்கிவிட்டு முதற்குவையில் கால் வைத்து இரண்டாம் முகடில் கைபற்றித் தொற்றி அவன் மேலேறினான்.  வெளியே நின்ற பூசகர் பதற்றத்துடன் “இளையோனே, அறியாது செய்கிறாய். நீ இதன் நூற்றெட்டு வாய்களில் பாதாளப் பெருநாகங்களின் புவிமீள்வழிகள் அமைந்துள்ளன. அது கார்க்கோடகனின் முகடு. அப்பால் அதோ அது திருதராஷ்டிரனுக்குரியது. இது மணிகர்ணனின் முகடு. அதனருகே உள்ளது அஜமுகனின் வழி. இப்பால் வியாஹ்ரன். மேலே உச்சி வாய்திறந்திருப்பது வாசுகியின் மைந்தனும் எங்கள் குலதெய்வமுமான காளிகனின் குகைவாய். ஒருமுறை உமிழ்ந்தால் இப்புவியை முற்றெரித்து சாம்பலாக்கி பறக்கவிடும் வல்லமைகொண்ட அருநஞ்சு அவன் நாவில் உள்ளது” என்று கூவினார்.

“நீ அங்கு செல்லவேண்டியதில்லை. இப்புற்றிலுள்ள அனைத்து நாகங்களும் அவனே. ஏதேனுமொரு புற்றுவாயை அணுகி அதற்குள் கைவிட்டு நாகத்தின் அருள் கொண்டால் போதும்” என்றார் முதுகுலத்தார் ஒருவர். இல்லத்துச் சாளரத்தில் நின்றிருந்த அவளிடம் ஓடிவந்த ஜயை “புற்றுமுகம் பற்றி ஏறுகிறான். பெருநாகங்களை அறைகூவுகிறான்” என்றாள். விஜயை “அவன் சற்றும் அஞ்சவில்லை. இளமைந்தன் மணல்மேட்டிலாடுவதுபோல ஏறிச் செல்கிறான்” என்றாள். அவள் அதை வேறொரு விழியால் அண்மையிலென கண்டுகொண்டிருப்பவள் போலிருந்தாள்.

கூடிநின்றவர்களில் ஒருத்தி தன் நிறையழிந்து “வேண்டாம்! நச்சுப்பெருக்கு அப்புற்று. விலகிவிடுங்கள். இளையோனே, வீண் முயற்சி வேண்டாம்” என கூவினாள். அதிலெழுந்து அலைகொண்ட பெண்டிர் அத்தனைபேரும் அவனைநோக்கி கைநீட்டி “வேண்டாம்… மீள்க!” என்று கூவி அழுதனர். அவன் அச்சொற்களை கேட்கவில்லை. முதன்மைப்புற்றுமேல் ஏறி காளிகனின் பாதைக்குள் தன் கையை விட்டான். புற்று ஒரு பெருஞ்சங்கமென்றாகி உள்ளே கார்வை எழுந்தது. அனைத்து வாயில்களிலிருந்தும் கரிய நாகத்தலைகள் சீறி எழுந்தன.

விறகுக்குவையிலிருந்து எழுந்தாடும் கரிய தழல் நாக்குகள்போல அனைத்து புற்றுவாய்களிலிருந்தும் எழுந்த நாகங்கள் சீறிநெளிந்தன. நீட்டிப் பறந்தன இருமுனை நாக்குகள். சிறுமணிக் கண்களில் அனற்துளி அசைந்தது. அணுகி நின்றிருந்த அனைவரும் அஞ்சி விலகி பின்னடைந்தனர். அலறல்களும் அழுகைகளும் கூக்குரல்களும் எழுந்து சூழ்ந்தன. அவற்றின் சீறல்கள் இணைந்து நீரலை ஒன்று எழுந்தணுகுவதுபோல ஒலித்தன. மையப்பெருவாயிலிலிருந்து ஏழு தலைகளும் பறக்கும் செந்நாவும் செம்மணி விழிகளுமாக அள்ள எழுந்த ஏழுவிரல் கைபோல எழுந்து நின்றாடியது கருநாகமாகிய காளிகன்.

அதன் கழுத்தைப்பற்றி உருவி எடுத்து கையில் சுழற்றித் தூக்கி தன் கழுத்தில் அணிந்துகொண்டு அவன் இறங்கினான். கரிய கடலலை என எழுந்து பேருருக்கொண்டு எழுந்த அதன் படம் அவன் தொட்டதுமே சுருங்கி எடுத்ததுமே மேலும் சிறுத்து  கழுத்தில் அணிந்ததும் கருமணிகோத்த ஆரமென ஆன விந்தையை அவர்கள் ஓசையடங்கி வாய்திறந்து விழிமலைத்த திகைப்புடன் பார்த்தனர். என்றும் அவன் நெஞ்சிலேயே அமைந்திருந்தது அது என்று அவர்களுக்குத் தோன்றியது.

புன்னகையுடன் வெளியே வந்து அவன் “நீங்கள் சொன்னதை செய்துவிட்டேன். குலத்தோரே, உங்கள் குலமகளை கைபிடிக்க விழைகிறேன்” என்றான். ஆயிரம் குரல்கள் ஒரே கணத்தில் வெடித்து எழுந்தன “அவ்வண்ணமே ஆகுக! இனி எங்கள் குலம்காக்கும் தெய்வமென  நீங்களே நின்றருள்க! இங்கு அளிக்கப்படும் படையல் அனைத்திலும் உங்கள் சுவைதேர் நா வந்து படுக!”

பூசகர் குரல்நடுங்க கைகூப்பி “எந்தையே, துயர்கொள்கையில் எங்கள் குரல் உங்கள் செவிகளை வந்தடையட்டும். அஞ்சுகையில் எங்கள் குரலின்மையை நீங்கள் கேட்குமாறாகட்டும். எங்கள் கொடிவழிகளுக்கு காப்பென்று உங்கள் பேரையே என்றும் உரைப்போம்” என்றார். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் அவன்.

ஜயையும் விஜயையும் ஓடிவந்து காளியின் இருதோள்களையும் பற்றிக்கொண்டு “வென்றானடி அப்பித்தன். இனி உன் கைபற்றுவான் அவன்” என்றனர். அவள் கண்ணீர் வழிய அசைவற்று தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். “வருந்துகிறாயா?” என்றாள் ஜயந்தி. “அவள் உடல் சொல்கிறது, அது உவகை” என்றாள் அபராஜிதை. அவள் அச்சொற்களுக்கெல்லாம் அப்பால் எங்கோ இருந்தாள்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 62

பகுதி ஏழு : பாசுபதம்

[ 1 ]

பைலனும் ஜைமினியும் சுமந்துவும் தொடர திருவிட நிலத்திற்குள் நுழைந்தபோது சண்டன் அர்ஜுனனின் இந்திரபுரிபுகுகை குறித்த ஏழு வெவ்வேறு காவியங்களின் கதைகளை சொல்லிமுடித்திருந்தான். அவர்கள் கேட்ட ஐயங்கள் அனைத்திற்கும் பிறிதொரு கதையையே அவன் மறுமொழியாக சொன்னான். ஒரு கட்டத்தில் அவர்கள் முற்றிலும் வினாக்கள் அழிந்து கதைச்சுழலுக்குள் மூழ்கி செவியும் விழியும் மட்டுமேயென தொடர்ந்து வந்தனர்.

“விண்ணிலிருந்து மீண்டும் இந்திரகீலமலைக்கு வந்து விழுந்தான் இளைய பாண்டவன் என்கின்றன கதைகள். அங்கிருந்து அடர்காடுகளின் வழியாக அவன் இமயமலையடுக்குகள்வரை சென்றான். இமயத்தின் இடுக்குகள் வழியாக கடல்தேடி வரும் பீதர்நாட்டு வணிகர்களுடன் சேர்ந்து சென்றான். அவர்களைப் பிரிந்து கின்னரகுடியினருடன் இணைந்துகொண்டு மேற்கு நோக்கி சென்றான். பதினெட்டு மாதங்களில் அவன் கயிலைக்குச் செல்லும் மாவிரதர்களைக் கண்டு அவர்களுடன் இணைந்துகொண்டான். எங்கும் நில்லாதவன் என்பதனால் அவனை சலன் என அழைக்கின்றன நூல்கள்” என்றான் சண்டன்.

அவர்கள் பயோஷ்னி என்னும் சிற்றாற்றின் கரையை வந்தடைந்திருந்தனர். பாறைகள் செறிந்திருந்த மலைச்சரிவில் நுரைத்தும் சீறியும் சென்றுகொண்டிருந்தது நீர்ப்பெருக்கு. சண்டன் நாணல்களைப் பறித்து இணைத்துக்கட்டி நீள்கூம்புவடிவ மீன்கோரியை முடையத்தொடங்கினான். களைத்த கால்களுடன் இளையோர் அவனைச் சூழ்ந்து அமர்ந்தனர். ஜைமினி “அவன் அங்கே கற்ற வேதம் எது?” என்றான். “அவன் அங்கே கடந்தது இந்திரனை முதன்மையாக்கிய மகாவஜ்ரம்” என்றான் சண்டன்.

“அவ்வேதம் இன்றில்லையா?” என்றான் ஜைமினி. சண்டன் புன்னகைத்து “எந்த வேதமும் முற்றழிவதில்லை, அந்தணரே. அது மண்ணுக்குள் வேரென்று நீடிக்கும். ஒவ்வொரு சொல்லிலும் அதன் பொருளும் இணைந்திருக்கும்” என்றான். ஜைமினி பெருமூச்சுடன் “நான் கற்றதே வேறு” என்றான். “சொல்க!” என்றான் சண்டன். ஜைமினி தயங்க “சொல்க அந்தணரே, இக்காடே ஒரு கல்விநிலை அல்லவா?” என்றான் சண்டன். ஜைமினி “பிரம்மனின் நாவிலிருந்து எழுந்து ககனவெளியில் ஒலியலைகளாக நீடித்தவை வேதங்கள். மானுடரால் உருவாக்கப்பட்டவை அல்ல என்பதனால் அவை ஔபௌருஷேயங்கள். மானுடனுக்கு சொல்லப்பட்டவை என்பதனால் சுருதிகள்” என்றான்.

“வேதம் பெற்ற அனைவருமே முனிவர் என்றும் வேதச்சொல்லைத் தொகுத்த அனைவருமே வியாசர்கள் என்றும் முன்னோரால் அழைக்கப்பட்டனர். சொல்தேர்ந்து வேதம் தொகுத்த முதல் வியாசர் நூறாயிரம் நூல்களாக வேதங்களை வகுத்தமைத்தார். அவற்றை ரிக், யஜூர், சாமம், அதர்வமெனப் பகுத்தார். ரிக்கால் ஹௌத்ரத்தையும் யஜுஸால் அத்வார்யவத்தையும் சாமத்தால் ஔல்காத்ரத்தையும் அதர்வத்தால் பிரம்மதத்துவத்தையும் அடையலாகுமென நிறுவினார். அழைப்பும் அளிப்பும் உசாவலும் பெறுதலுமாக வேதம் அமைந்தது.”

சண்டன் “எதனடிப்படையில் அந்த நூறாயிரம் நூல்கள் தொகுக்கப்பட்டன? எப்படி அவற்றில் இன்றிருப்பவை மட்டும் எஞ்சின?” என்றான். ஜைமினி “அது மானுடரின் வீழ்ச்சி. முன்பிருந்த மூதாதையர் வானென விரியும் உளம்கொண்டிருந்தனர். அவர்கள் வேதமன்றி பிறிதொன்றிலாது வாழ்ந்தனர். மானுடம் வளர்ந்ததும் விழைவுகள் பெருகின. வேதம் அறியமுடியாமைக்கு ஆற்றும் கடமைகளையே வேள்வியெனக் கொண்டது. விழைவுக்கு இலக்காகும் பொருளுக்கென ஆற்றப்படும் கடமைகளனைத்தும் வேதமறுப்பே. வேதமறுப்பு மானுட உள்ளத்தை குறுகச் செய்தது. அதற்கேற்ப வேதம் குறைந்து வந்தது. ஒவ்வொருநாளும் ஒரு பாடலென வேதம் மானுடரால் கைவிடப்படுகிறது” என்றான்.

சண்டன் “அந்தணரே, வேதமென இங்கு வந்த மெய்ச்சொல் வடக்கே எழுந்த பனிமலையடுக்குகளைப்போன்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் ஒரு பகுதி முதன்மைகொள்கிறது. சில பகுதிகள் கண்டெடுக்கப்படுகின்றன. சில பகுதிகள் கைவிடப்படுகின்றன. பெரும்பகுதி எவராலும் காணப்படாமல் அங்கிருக்கிறது. அறிந்தவேதமே நாம் பேசும் வேதம். அறியாவேதத்தின் நுனியே அது என்று அறிக!” என்றான். “இமயமலையடுக்குகளுக்குள் பயணம் செய்பவர்கள் அங்கு அசுரரும் அரக்கரும் கின்னரரும் கந்தர்வரும் வாழ்ந்து விட்டுச்சென்ற பெருநகர்கள் ஒழிந்து கிடப்பதை காண்பார்கள். அவர்கள் எதை வென்றார்கள்? எதை இழந்தார்கள்?” என்று சண்டன் கேட்டான்.

“வேதங்களுக்குள் விடப்பட்ட வேதங்கள் புதைந்திருக்கின்றன என்று அறியாதவன் வேதங்களை பொருள்கொள்ள இயலாது” என்று அவன் தனக்குத்தானே என சொல்லிக்கொண்டான். பின்னர் கூடையை எடுத்தபடி மீன்கொள்ளும்பொருட்டு பாறைகளின் மேல் தாவிச்சென்றான். இருபாறைகளின் நடுவே பீரிட்டு வளைந்து விழுந்த நீர்ப்பெருக்கின் குறுக்காக அந்தக் கூடையை சற்றுநேரம் வைத்து நீர் வளைந்து தெறிக்கச் சுழற்றி வீசி எடுத்தான். அதில் வெள்ளியிலைகளென மீன்கள் துள்ளின. அவற்றை செவிள்கள் வழியாக நாணலில் கோத்து இடையிலணிந்துகொண்டான்.

“செல்வோம், நாமும் உணவு தேடி மீளவேண்டும். இருட்டிக்கொண்டிருக்கிறது” என்றான் சுமந்து. பைலன் “வெள்ளித் திறவுகோல்களை கொத்தாகக் கட்டி இடைசூடி நின்றிருக்கும் வாயிற்காவலன் போலிருக்கிறார்” என்று சண்டனை நோக்கி சொன்னான். “யார் அவர் என என் உள்ளம் வினவிக்கொண்டே இருக்கிறது. ஒரு வழிகாட்டி என உணர்கிறேன். எதன்பொருட்டு நம்மை அவரிடம் ஒப்படைத்துள்ளது ஊழ்? நாம் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்?” என்றான் ஜைமினி. “நெடுந்தூரம் வந்துள்ளோம். இக்கொடும்பயணத்தை நமக்கு அமைத்த நெறி வீண்விளையாட்டை விரும்பாதென்றே கொள்வோம்” என்றான் பைலன்.

காட்டுக்குள் நுழைந்தபோது அவர்கள் அமைதிகொண்டிருந்தனர்.  முட்காடுகள் வழியாக வந்திருந்த அவர்களுக்கு பேரிலைச் செடிகள் கொண்ட பசுங்காடு அறியாமலேயே உவகையை அளித்தது. சருகுமெத்தையில் அவர்கள் கால்கள் புதைந்தன. உடல்தொட்ட மரங்களிலிருந்து மலர்ப்பொடிகள் உதிர்ந்தன. புதர்களுக்குள் செம்போத்து ஊடுருவி ஓடியது. ஆர்வத்துடன் ஒரு குரங்கு இறங்கி வந்து அவர்களை நோக்கியது. அதன் தோழி கீழிறங்கி வர மேலே செல்லும்படி அதை எச்சரித்தது.

பைலன் அருகே நின்ற வாழையின் மடல்களைப் பிய்த்து வாயில் வைத்து தேனுண்ண உறிஞ்சினான். “இது அந்தி. வாழைத்தேன் காலையிலேயே இருக்கும்” என்றான் சுமந்து. “ஆசிரியரின் மெய்ச்சொற்களை புலரியிலேயே அடையவேண்டும், அவை மலர்த்தேனைப் போன்றவை என்று ஒரு நெறிநூல் உரைக்கிறது” என்றான் ஜைமினி. “இந்தக் காட்டில்கூட நாம் நூல்களிலிருந்து விடுதலை பெறமாட்டோமா என்ன?” என்றான் பைலன். “காடாகச் சூழ்ந்திருக்கின்றன நாம் கற்ற நூல்கள்” என்றான் சுமந்து. “இலக்கணமற்றது, ஏடென்றும் பாதமென்றும் பிரிக்கப்படாத நூல் இது.”

“நாம் கனிகொள்ள வந்தோம், அதைச் செய்வோம்” என்று ஜைமினி எரிச்சலுடன் சொன்னான். “எதையும் தத்துவமாக ஆக்கவில்லை என்றால் உங்களுக்கு சொல் திகட்டுகிறதுபோலும். இதோ, இந்த மரங்களும் செடிகளும்கூட உவமைகளாக ஆகிவிடுவோமா என அஞ்சி நடுங்கி நிற்கின்றன.” சுமந்து வெடித்துச் சிரித்துவிட்டான். பைலன் சிரித்தபடி “ஜைமின்யரே, நீங்கள்கூட வேடிக்கை பேசமுடியும் என இன்று அறிந்தேன்” என்றான்.

ஜைமினி கொடிகளைப் பற்றி இழுத்து வேர்புதைந்த இடத்தைச் சுட்ட பைலன் சிறு கூர்கழியால் அகழ்ந்து கிழங்குகளை வெளியே எடுத்தான். உச்சிக்கிளைகளில் இருந்த காய்களை அக்கொடியிலேயே கவண் கட்டி வீசி எறிந்து பற்றி இழுத்து பறித்தனர். அக்கொடிகளைப் பின்னி கூடையாக்கி அவற்றில் காய்களையும் கிழங்குகளையும் சேர்த்து தூக்கிக்கொண்டனர். அச்செயலில் அவர்கள் மூழ்கியபோது சொல்லாடல் இயல்பாக நின்று அமைதி சூழ்ந்துகொண்டது.

“வேதம் பிரம்மனிலிருந்து பிறந்தது என்று அனைத்து நூல்களும் சொல்கின்றன” என்று எண்ணியிராத தருணத்தில் ஜைமினி தொடங்கினான். சுமந்துவும் பைலனும் அப்போது பிரம்மனைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருப்பதை உணர்ந்து சற்று திடுக்கிட்டனர். “ஆனால் ஒவ்வொரு நூலும் பிரம்மனின் தோற்றம் பற்றி ஒவ்வொரு கதையை சொல்கிறது.” அவன் என்ன எண்ணிக்கொண்டிருக்கிறான் என்பதை நுட்பமாகத் தொடர்ந்தன இருவரின் உள்ளங்களும். “அவ்வாறென்றால் ஒவ்வொரு பிரம்மனும் படைத்த வேதங்களும் வேறுவேறா?” என்று அவன் கேட்டபோது அம்புவிடுபட்ட வில்லென அவர்களின் அகங்கள் நிலைமீண்டன.

“ஏனோ இத்தருணத்தில் முன்பு கற்ற அன்னைநெறியின் கதையே என் நெஞ்சில் முதன்மையென எழுகிறது” என்றான் ஜைமினி “யுகத்தொடக்கத்தில் விஷ்ணு ஒரு கைமகவாக ஆலிலையில் கிடந்தார். அவரில் தன்னுணர்வு எழுந்தது. அது அச்சமென்றாகியது. அந்த மகவு வீரிட்டழுதது. அப்போது விண்ணிலிருந்து மெல்லிய மூச்சு அதன்மேல் பட்டது. ‘நான் யார்? எனையீன்றது எவர்? எதன்பொருட்டு?’ என அவர் உள்ளம் வினவியது. விண்நிறையும் இடிமுழக்கமாக ஓர் ஒலியெழுந்தது. சர்வ கல்விதமாமேகம், நான்யாஸ்தி சனாதனம். இவையனைத்தும் நானே. நானன்றி தொடக்கமென ஏதுமில்லை.”

விஷ்ணு நிமிர்ந்து நோக்கினார். நான்கு கைகளில் சங்கும் சக்கரமும் கதையும் மலரும் கொண்டு அன்னை அவர்முன் தோன்றினாள். அவள் நிழலும் வண்ணம்கொண்டிருந்தது. ரதி, ஃபூதி, புத்தி, மதி, கீர்த்தி, திருதி, ஸ்மிருதி, சிரத்தை, மேதை, ஸ்வதை, ஸ்வாகை, க்ஷுதை, நித்ரை, தயை, கதி, துஷ்டி, புஷ்டி, க்ஷமை, லஜ்ஜை, ஜ்ரும்பை, தந்த்ரி என்னும் அன்னையாற்றல்களாக அந்நிழல் பெருகிச் சூழ்ந்தது. அறியாமகவு அலகிலா அன்னையரைக் கொண்டதாக ஆகியது.

தன் கனிந்த விழிகளால் நோக்கி அன்னை சொன்னாள் “மைந்தா, நீ என் காலத்தின் ஒரு கணம். முடிவிலாது பிறந்து அழிந்து மீள்கிறாய். நீ வளர்க!” அவள் அதை எடுத்து தன் முலைகள்மேல் சேர்த்தாள். அமுதை உண்டு இளமைந்தன் கண்மயங்கலானான். அவன் செவிகளில் அன்னையின் சொல் எழுந்தது. “நீ பெருகுக! நீ சத்வகுணத்தான். பெருநிலை கொண்டமைந்தவன். மெய்மைக்கடல்மேல் அறிதுயில் கொள்க! உன் தொப்புளில் இருந்து ரஜோகுணத்தான் எழுக! செயல்நிலை கொண்ட அவனை பிரம்மன் என்று அழைக்கட்டும் முனிவர். பிரம்மன் புடவிப்பெருக்கை படைப்பான். அது வளர்ந்து தன் விசையால் மையம் கொள்கையில் அதிலெழுக தமோகுணத்தானாகிய மகாருத்ரன்! எதிர்நிலை கொண்ட அவனை அழிவிலா நஞ்சென்றும் அனல்வண்ணனென்றும் அழிப்போன் என்றும் ஆடவல்லான் என்றும் அறியட்டும் மெய்யுணர்ந்தோர்.”

“அவ்வாறு பிறந்தனர் மூன்று தெய்வங்களும் முப்பத்துமுக்கோடி தேவர்களும் எண்ணிலாப் புடவிகளும் அவற்றை இணைத்தாடும் ஊழ்ப்பெருக்கும்” என்றான் ஜைமினி. “பிறிதொரு நூலில் உள்ள கதை சற்றே மாறுபடுகிறது. காலத்தொடக்கத்தில் இங்கிருந்தது விண்நீர் மட்டுமே. அதன் அலைகளென தன்னை நிகழ்த்திக்கொண்டிருந்தவள் அன்னை. அவள் தானென்றும் தோழியரென்றும் உடல்கள் கொண்டு அதில் நீராடித் திளைத்தபோது அவள் அண்டத்துளி ஒன்று அந்நீர்ப்பரப்பில் விழுந்து பொற்துகளென சுடர்விட்டது. அன்னை அதைக் கண்டாள். நீ தவத்தான் படைப்பவனாகி எழுக என ஆணையிட்டாள். பின் தானே அதன் உயிரென புகுந்து எழுந்து வளர்ந்து புடவிகளை படைத்தெடுத்தாள்.”

“முடிவிலாக் கதைகள்” என்று பைலன் சொன்னான். “பிரம்மனின் பிறப்பு குறித்த கதைகளை நாம் இங்கு பேசுவோம் என்றால் நம் அகவை முதிர்ந்து சிதைசேர்வதுவரை ஒருகணமும் ஒழியாது பேசிக்கொண்டிருக்கலாம். இங்குள்ள குலங்கள் அனைத்தும் பிரம்மனைப்பற்றி ஒரு கதையை வைத்துள்ளன. குடிகளுக்கு ஒரு கதை அப்பெருங்கதைக்குள் இருக்கும். நூல்களில் அக்கதைகள் நூறுமுகங்கள் கொண்டு வளரும்.” ஜைமினி “அன்னையைப்பற்றி வேதங்கள் என்ன சொல்கின்றன என்று எண்ணிக்கொண்டேன்” என்றான். மூவரும் சிலகணங்கள் அமைதிகொண்டனர்.

“வாக்தேவி என்றும் அதிதி என்றும் அன்னையின் முகங்கள் உள்ளன. ராத்ரி, உஷை, சந்த்யை என அன்னை முகம் காட்டுகிறாள். ஆனால் வேள்விக்குரிய முதன்மைத்தெய்வமாகவோ தேவர்களை ஈன்ற பேரன்னையாகவோ அவளை வேதங்கள் உரைப்பதில்லை” என்றான் சுமந்து. ஜைமினி “உரைக்கும் வேதங்கள் எங்கேனும் உள்ளனவா?” என்றான். அவர்கள் மீண்டும் அமைதியானார்கள். “அறியாவேதங்கள் என சண்டர் சொல்வது அவற்றைத்தானா?” அவர்கள் தங்கள் தனித்த எண்ண ஓட்டங்களில் மூழ்கியவர்களாக நடந்தனர்.

நீண்டநேரம் கழித்து மீண்டும் ஜைமினி சொன்னான் “அப்படியென்றால் திசைநான்கையும் வென்று அர்ஜுனன் அடைந்த வேதமெய்மையின் பொருள்தான் என்ன? வேதங்களை அறிந்து கடப்பது ஒருவனுக்கு இயல்வதாகுமா?” பைலன் “ஒவ்வொரு வேதமும் பிறிதொன்றை முழுமைப்படுத்துகிறது என்கின்றன நூல்கள்” என்றான். அவன் சொன்னதென்ன என்று அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் அவனை திரும்பிப்பார்த்தனர். அவனும் தான் சொன்னதன் பொருளென்ன என்று உணராதவன்போல திகைத்து அவர்களை நோக்கினான். பின்னர் புன்னகைத்து “கற்றவை அனைத்தையும் முற்றிலும் கலைத்துவிட்டார் சூதர்” என்றான். அச்சொல்லில் எளிதாகி அவர்கள் நகைத்தனர்.

சுமந்து “கிழங்குகளின் வேதம் விதைகளுக்கில்லை. காய்களுடன் இணைந்து வேதமும் கனிகிறது” என்றபின் “அரிய சொல்லாட்சி… எனக்கே இதை எங்கேனும் எழுதவேண்டும் போலிருக்கிறது” என்றான். “மானின் வேதத்தை மானை உண்ணும் புலி தானும் அடைகிறது” என்றான் பைலன். “பைலரே, வேண்டாம். வேதமறுப்பும் வேதநகையாட்டும் பழி சேர்க்கும்” என்றான் ஜைமினி. “வேதப்பழி பிறிதொரு வேதமாகிறது” என்றான் பைலன். சுமந்து “ஆ, மெய்யாகவே அது ஓர் அரிய எண்ணம். நம் மெய்யாடலின் வரலாற்றை அதனூடாகச் சென்று அணுகியறியமுடியுமென்று தோன்றுகிறது” என்றான்.

“வேடிக்கை வேண்டாம்” என்றான் ஜைமினி சினத்துடன். “வேதங்களை நாம் கிளிகளுக்கு கற்பிப்போம். பாரதவர்ஷமெங்கும் அவை சென்று அத்தனை கிளிகளையும் வேதமொழி சொல்லப் பயிற்றும். வேதமொலிக்கும் காடுகளில் வேதம் கனிந்த கனிகள் எழும். அவற்றை உண்ட மானுடர் அவியுண்ட தேவர்களென்றாவார்கள்” என்றான் பைலன். “அக்கனிகள் அழுகி நிலத்தில் விழுந்தால் பாதாளநாகங்களால் உண்ணப்படும். அவை பொன்னுடல்கொண்டு நெளியும். வேதம் கீழுலகங்களை முற்றழிக்கும்” என்றான் சுமந்து. “வேண்டாம், இங்கேயே நிறுத்திக்கொள்வோம்” என்று ஜைமினி குரல் உடையச் சொன்னான்.

“உண்ணப்படும் கனிகளைவிட உதிரும் கனிகளே மிகுதி. அவியுண்ட அடியுலகோர் விண்ணவராவர். ஆழம் விண்ணென்றாகும். மணல்கடிகை திரும்புவதுபோல ஏழுலகும் தலைகீழாகும்” என்று பைலன் சொன்னான். “விஷ்ணு ஆழுலகில் பாற்கடலில் படுத்திருப்பார். வானெங்கும் நாகங்கள் நெளியும்.” ஜைமினி நின்று அழுகை கலந்த உரத்த குரலில் “வேண்டாம்! வேண்டாம்! போதும்!” என்று கூவினான். “சரி போதும்” என்று பைலன் சிரித்துக்கொண்டே சொன்னான். சுமந்து “வேதங்களைப்பற்றிய மெய்யறிதலை இனிமேல் நாம் இவரிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம்” என்றான். “வேதங்களை இவர் அன்னை சொன்ன தந்தையின் பெயர் என நம்புகிறார்” என்றான் பைலன். “பைலரே” என ஜைமினி கூவ “சரி, இனி இல்லை” என்றான் பைலன்.

அவர்கள் திரும்பி ஆற்றங்கரையை அடைந்தபோது காட்டுக்குள் இருள் பரவி பறவைகள் சேக்கேறும் ஒலிகள் எழுந்துகொண்டிருந்தன. ஜைமினி தலைகுனிந்தவனாக நடந்தான். ஆற்றங்கரை மணலில் அவர்களின் கால்கள் புதையும் ஒலி எழுந்தது. ஜைமினி “நகையாடலாயினும்…” என்றான். “என்ன?” என்றான் பைலன். “நகையாடலாயினும் எண்ணவேண்டிய சொற்களே” என்றான் அவன். பைலன் சிரித்து “நகையாட்டிலன்றி எவரும் கூரியவற்றை சொல்லமுடியாது, ஜைமின்யரே” என்றான்.

[ 2 ]

பயோஷ்னியின் நீரில் ஒளி கலங்கி அலையடித்துக்கொண்டிருந்தது. ஈரப்பாறைகளில் சிந்திய குங்குமம்போல செம்மை வழிந்தது. நாணல்களுக்கு அப்பால் பாறை ஒன்றின் பரப்பில் சண்டன் அனல் மூட்டி அதில் மீன்களை சுட்டுக்கொண்டிருந்தான். அவன் மீனைச் சுட்டு முடிப்பதற்காக அவர்கள் காத்திருந்தனர். சுட்ட மீன்களை இலையொன்றில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்த அவன் அவர்கள் வருவதைக் கண்டும் விழிதிருப்பவில்லை. சரியான பதத்தில் மீன் வெந்து நீலச்சுடர் எழுவதற்காக அவன் விழிகள் கூர்ந்திருந்தன.

மீன்களைச் சுட்டு முடிந்ததும் அவன் எழுந்துகொண்டு “நீங்கள் உங்கள் உணவை சுடலாம்” என்றான். ஜைமினி தன் கிழங்குக்கூடையுடன் முன்னால் அடிவைக்க “அனல் ஊனுண்டு செழித்திருக்கிறது, அந்தணரே” என்றான் சண்டன். அறியாது ஜைமினி தயங்க நகைத்து “தூய அனலைத் தேடுகிறீர் போலும்” என்றான்.

ஜைமினி திரும்பி தன் தோழர்களை நோக்கிவிட்டு முன்னால் சென்று கிழங்குகளை சுடத்தொடங்கினான். கண்களில் புன்னகையுடன் பிற இருவரும் வந்து அருகமைந்து கிழங்குகளை சுட்டனர். சண்டன் அப்பால் அமர்ந்து மீனை உண்டு முட்களை அருகிருந்த இலைமேல் வைத்தான். ஜைமினி திரும்பிப்பார்க்க “முன்பு மீன்கள் வானில் பறந்திருந்தன என்று சொல்கிறார்கள், அந்தணரே” என்றான். “மெய்யாகவா?” என்றான் சுமந்து. “ஆம், நான் இமயமலையின் உச்சிப்பாறை ஒன்றில் மீன்கள் பதிந்து உருவான முள்வடிவை கண்டிருக்கிறேன்” என்றான்.

“அவை எப்படி நீர்வாழ்வில் அமைந்தன?” என்றான் ஜைமினி அறியாமல். “அவற்றின் வேதம் சொல்மாறியிருக்கும்” என்றான் சண்டன். பைலனும் சுமந்துவும் சிரிக்க சுட்ட கிழங்குகளை எடுத்துக்கொண்டு ஜைமினி அப்பால் சென்று திரும்பி அமர்ந்து உண்ணத்தொடங்கினான். “சினம் கொள்கிறார்” என்றான் பைலன். “சினப்பது அவருக்கு நன்று. சினத்தினூடாகவே அவர் கற்றுக்கொள்கிறார்” என்றான் சண்டன்.

புதர்களுக்குள் ஓர் அசைவு கேட்க சண்டன் எட்டி அனலில் இருந்த கொள்ளிவிறகொன்றை கையிலெடுத்துக்கொண்டான். “மானா?” என்றான் பைலன். “அல்ல” என்ற சண்டன் “யார்?” என்றான். அங்கிருந்து “நீங்கள் யார்?” என குரல் கேட்டது. “இளையவர்” என்றான் சண்டன். பின்னர் உரக்க “நான் சூதன். மூன்று அந்தண இளையோரும் என்னுடனிருக்கிறார்கள்” என்றான். அங்கிருந்த குரல் “நான் அந்தணச் சிறுவன். என் பெயர் வைசம்பாயனன்” என்றது.

சண்டன் எழுந்து அந்தக் கொள்ளியை காற்றில் சுழற்றி அனலூட்டி கொழுந்தாடச்செய்தான். அந்த ஒளியில் தொலைவில் நின்ற இளையவனை காணமுடிந்தது. “வருக, அந்தணரே! நீங்கள் உரிய குழுவுடன் இணைந்துள்ளீர்கள்” என்றான் சண்டன். வைசம்பாயனன் ஆற்றின் பாறைகளை மெல்லக் கடந்து அருகே வந்தான். “முதலில் உண்ணுங்கள்” என்றான் சண்டன். “ஆம், நான் பசிகொண்டிருக்கிறேன். என்னிடம் சில கிழங்குகள் உள்ளன” என்றபடி அவன் அனலருகே அமர்ந்தான். “அவற்றை பின்னர் சுடுவோம். இப்போது சுட்டவற்றை உண்ணுக!” என்றான் சண்டன்.

அவன் உண்பதை அவர்கள் நோக்கி அமர்ந்திருந்தனர். உண்டு முடித்து கமுகுப்பாளைத் தொன்னையிலிருந்து நீரை அருந்திவிட்டு அவன் நிமிர்ந்து “கடும்பசி. வரும் வழி அடர்காடு. ஏதேனும் நீர்க்கரையில் இரவு தங்கவேண்டுமென்பதற்காக கடுநடையிட்டு வந்தேன்” என்றான். “அன்னம் அன்னத்தை அறியும் தருணத்தை நோக்கியிருப்பதுபோல நிறைவளிப்பது பிறிதொன்றில்லை” என்றான் சண்டன். “ஆம், இந்த நெடும்பாதையில் நான் மெய்யென்று முதலில் அறிந்தது பசியையே” என்றான் வைசம்பாயனன்.

அவன் வாயிலிருந்து ஏப்பம் ஒன்று எழுந்தது. “வேதநாதங்களில் முதன்மையானது உயிர்கள் கொள்ளும் ஏப்பம் என்று ஒரு சூதனின் சொல்லை வைசாலியில் கேட்டேன்” என்றான் வைசம்பாயனன். “ஜடரவேதம் என அதை அவர் சொன்னார்.” பின்னர் பைலனை நோக்கி தலைவணங்கி “விசும்ப குலத்தில் வந்தவன். என் பெயர் என வைசம்பாயனன் என்பதை கொண்டிருக்கிறேன்” என்றான். பைலனும் சுமந்துவும் ஜைமினியும் குலமும் குருமுறையும் பெயரும் சொல்லி தங்களை அறிமுகம் செய்துகொண்டார்கள்.

அவர்கள் வாழ்த்துரைத்து முடித்ததும் சண்டன் “நான் சூதனாகிய சண்டன்” என சுருக்கமாக தன்னை சொன்னான். “எங்கு செல்கிறீர்கள்?” என்று பைலன் கேட்டான். வைசம்பாயனன் “நொதித்த கள் கலம்விட்டு எழுவதைப்போல மாணவர்கள் குருநிலைகளிலிருந்து வெளியே செல்கிறார்கள் என்று ஒரு சூதன் சில நாட்களுக்கு முன் பாடக்கேட்டேன்” என்றான். “எனக்கு மெய்மையை அறிவிக்கும் ஆசிரியர் ஒருவரை தேடிச்செல்கிறேன்.” ஜைமினி “அந்த ஒப்புமை எனக்குப் புரியவில்லை” என்றான். வைசம்பாயனன் “அது ஒரு பகடி, ஜைமின்யரே. புளித்தெழும் நுரை ஆணவமே. வழிவதே நிகழ்கிறது, வெளியேற்றம் அல்ல” என்றான்.

ஜைமினி “அப்படி சொல்லமுடியுமா என்ன?” என்றான். பைலன் “அது பகடி. அதை அவரே சொல்லியும்விட்டார். பகடியை ஆராய்வதென்பது உடையை பஞ்சாக்கிப் பார்ப்பதுபோல” என்றான். ஜைமினி “வெளியேறாதவர்கள் எதை கண்டடைய முடியும்?” என்றான். “முற்றிலும் வெளியேறுபவர்களே கண்டடையமுடியும் என்று அதற்குப் பொருள்” என்றான் வைசம்பாயனன். “வெளியேறும்போதே முழுமையாகத்தானே கிளம்புகிறோம்?” என்றான் ஜைமினி. சுமந்து “பகடியையே வேதமெய்ப்பொருள் என ஆய்பவர் அவர், வைசம்பாயனரே” என்றான். “ஆம், அதை அவரைப் பார்த்ததுமே அறிந்துகொண்டேன்” என்றான் வைசம்பாயனன்.

சண்டன் சிரித்து “நன்று, நால்வரும் நிகரானவர்களே” என்றான். வைசம்பாயனன் “நானும் அதையே உணர்ந்தேன், சண்டரே” என்றான். “திசையானைகளைப்போல கிளம்பியிருக்கிறீர்கள்” என்றபின் சண்டன் உரக்க நகைத்து “அல்லது திசையாமைகளா?” என்றான். வைசம்பாயனன் “அது இலக்கு அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்தது. செல்லுமிடம் எங்கிருக்கிறதென்று தெரியவில்லை என்றால் விரைவும் அமைவும் நிகர் அல்லவா?” என்றான்.

“வைசம்பாயனரே, உங்களிடம் ஒரு வினா. நாங்கள் சற்றுமுன் அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம்” என்றான் பைலன். “இவர் அன்னைநெறிவந்த நூல்களில் பிரம்மனை முதலாற்றலாகிய பேரன்னை படைத்தமை குறித்து சொன்னார். அன்னை படைத்த பிரம்மனின் சொல்லில் எழுந்த வேதங்கள் ஏன் அன்னையைப் பாடவில்லை?” என்றான். சுமந்து “அல்லது பாடும் வேதங்கள் எங்கேனும் உள்ளனவா? நீர் அறிவீரா?” என்றான்.

“இருக்க வாய்ப்பில்லை” என்றான் வைசம்பாயனன். “வேதமென்றால் வேர்நீர் செடியை என தேவர்களை வளர்க்கவேண்டும். குன்றாது குறையாது என்றுமிருப்பவளை வேதம் வழுத்தவும் பெருக்கவும் வேண்டியதில்லை.” சற்றே முன்னகர்ந்து “இங்குள அனைத்தும் அவள் வடிவே என்றால் வேதமும் அவளே. வாக்கென வந்து வேதமென அமைந்தவள் அன்னை” என்றான்.

சண்டன் முகம் மாறியது. அனலை உந்தி செம்பொறி பறக்க விறகமைத்தபோது அவன் முகமும் அனலொளி கொண்டது. “நீர் கற்றவர், அந்தணரே” என்றான். “தொன்மையான பாடல் ஒன்று அவளை வேதமே உடலென்றானவள் என்கின்றது. சிக்ஷை அவள் குரல், சந்தம் அவள் நடை, வியாகரணம் அவள் ஆடை, நிருக்தம் அவள் காலடி, கல்பம் அவள் அருட்கை, ஜ்யோதிஷம் அவள் அளிக்கை. வேதமென்று இங்கு ஓதப்படும் அனைத்தும் அவளென்று அறிகின்றனர் அன்னைநெறி அமைந்த படிவர்.”

அனல்மேல் எடைமிக்க காட்டுவிறகுகளை ஒன்றன்மேல் ஒன்றென சாய்த்து அமர்த்தினான் சண்டன். அனல் மெல்ல அவற்றில் பரவி எழலாயிற்று. “அகலாது அணுகாது அறிக, இகல்வென்று நின்றாடும் அனலை!” என்றபின் அவன் தன் உடலை சுருட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான். பிற நால்வரும் செந்தழலின் ஆடலை, உடனாடும் நிழல்வெளியின் பெரும்பித்தை நோக்கி அமர்ந்திருந்தனர்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 61

[ 25 ]

அர்ஜுனன் எழுந்து நின்று கிளம்பும்பொருட்டு இயல்பாக ஆடைதிருத்தியபோது திடுக்கிடலை உணர்ந்தான். ஆணின் ஆடையில் தானிருப்பதை உணர்ந்ததும் பதற்றத்துடன் ஓடிச்சென்று ஆடியில் நோக்கினான். பொருந்தா ஆடையுடன் அங்கு தெரிந்த உருவத்தை அவனால் அரைக்கணம்கூட நோக்கமுடியவில்லை. “யாரங்கே?” என்று கூவினான். அப்பால் சிற்றறைக்கதவு திறந்து உள்ளே வந்த கந்தர்வ ஏவலர் பணிந்தனர். “எனக்குரிய ஆடைகளை எடுங்கள்… உடனே” என்றான். அவர்கள் தலைதாழ்த்தினர்.

அவனை ஏழு கந்தர்வமகளிர் அழைத்துச்சென்று பெண்டிருக்கான அணியறையில் தீட்டப்பட்ட வெள்ளியாலான பேராடிமுன் அமரச்செய்தனர். மலர்மரத்தில் சிட்டுக்குருவிகள் மொய்ப்பதுபோல அவர்களின் விரல்கள் அவன் மேல் தொட்டும் விலகியும் குவிந்தும் விரிந்தும் அணிசெய்யலாயின. அவன் ஆடியில் தன் உருவை நோக்கிக்கொண்டிருந்தான். ஆணின் ஆடை அகன்றதும் பெருஞ்சுமை ஒன்று அகன்றதென அவன் உடல் எளிதாகியது. அவர்கள் எடுத்துக்காட்டிய ஆடைகள் எதுவும் அவனுக்கு உகக்கவில்லை. எங்கோ தன்னை நோக்கியிருக்கும் விழிகளுக்காகவே அவன் தன் உருவை புனைய விழைந்தான்.

ஆடைகளை மாறிமாறி நோக்கி தலையை ஆட்டிக்கொண்டிருந்தவனை நோக்கி குனிந்த கந்தர்வப்பெண் “அரசி, ஓர் ஆடையை நீங்கள் ஏற்றே ஆகவேண்டும். ஆடைகள் எவையும் உள்ளம் கொண்ட கனவை அணுகாதென்றறிக! காலம் சென்றுகொண்டிருக்கிறது” என்றாள். இளநீலப்பட்டாடையை கையில் எடுத்துக்கொண்டு “இது அவ்விழிகளுக்கு உகக்குமா?” என அவன் எண்ணினான். எவ்விழிகள்? அவை நூறு ஆயிரம் பல்லாயிரமெனப் பெருகிய ஓரிணைவிழிகள் என அப்போது உணர்ந்தான். யார் அவன்? அவன் பெண்ணுள்ளத்தின் ஆழ்கனவிலிருந்து தன் உருத்திரட்டி எழுபவன். இன்னமும் அவன் முழுதுருவாகவில்லை. விழியென்றே ஆகி எங்கோ நின்றிருப்பவன்.

நீள்மூச்சுடன் “இதுவே போதும்” என்றாள். ஆடையும் அணியும் புனைந்து முகச்சுண்ணமும் விழிக்கரியும் இதழ்ச்செம்மையும் தீட்டி கைகளிலும் கால்களிலும் செம்பஞ்சுக்குழம்பு பூசி மலர்ச்சாறும் கோரோசனையும் கஸ்தூரியும் என நறுமணம் கொண்டு எழுந்தபோது விழிகள் முழுமையாக மாறிவிட்டிருந்தன. தன் உருவை நோக்கியபடி நின்றபோது இளமூச்சில் முலைக்குவைகள் எழுந்தமைந்தன. கைகள் கழுத்தைத் தொட்டு விலகின. “கிளம்புக, அரசி!” என்றாள் கந்தர்வப்பெண். “ஆம்” என்றபடி அவள் ஆடிமுன்னால் அப்படியே நின்றாள். நூறு விழிகொண்டு தன்னை நோக்கிக்கொண்டிருந்தாள். நோக்கி நோக்கி தன்னை தீட்டினாள். அகன்றுநின்று ஆணென்றாகி மீண்டும் நோக்கினாள்.

“அரசி” என்றாள் கந்தர்வப்பெண். அவள் “செல்வோம்” என ஆடையை அள்ளிக்கொண்டு மெல்ல நடந்தாள். அணிகுலுங்கும் ஓசையும் ஆடைநலுங்கும் ஒலியும் மெல்லிய மந்தணச்சொற்களென அவளுடன் வந்தன. அவை அவள் ஒளிந்துகொள்ளும் மலர்க்காடு. அவள் அங்கிருந்தபடி நோக்கிக்கொண்டிருந்தாள். எவ்விழிகள் என் இறையே? எவர் முகத்தில் பூத்தவை? அவளைக் கண்ட அத்தனை ஆண்விழிகளும் மின் கொண்டு பின் அணைந்தன. அவள் படியிறங்கி கூடம் கடந்து வெளிமுற்றத்தை அடைந்தாள்.

மாதலி அவளைக் கண்டதும் எவ்வியப்பையும் காட்டவில்லை. “வருக!” என்றபின் தேர்ப்பீடம் மீது ஏறிக்கொண்டான். அவள் தேரிலேறி இந்திரபீடத்தில் அமர்ந்து தன் வலக்காலை இடக்கால் மேல் வைத்து ஆடையைத் திருத்தி குழல் சீர்படுத்தி “செல்க!” என்றாள். தேர் குலுங்கிக் கிளம்பியது. “என்னிடம் ஊர்வசி சொன்னாள்” என்றான் மாதலி அவளை நோக்காமல். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சினந்திருந்தாள். அவள் இட்ட தீச்சொல்லுக்காக வருந்தினாள்.” அவள் “அது நன்றே” என்றாள். மாதலி “எதுவும் நன்றே” என்றான். அவன் புன்னகைப்பது முதுகிலேயே தெரிந்தது.

“நான் இவ்வுருக்கொள்ளாமலிருந்தால் எந்தையை அவைநின்று எதிர்கொள்ளத் துணிந்திருக்க மாட்டேன்” என்றாள் விஜயை. “ஏன்?” என்று மாதலி கேட்டான். “அறியேன். இவ்வுடலில் இருக்கையில் இதுவரை அறியாத துணிவொன்றை அடைகிறேன்” என்றாள் விஜயை. “தந்தையை மீறும் துணிவா?” என்றான் மாதலி. “ஆம், உண்மை. நான் பிறந்த இடத்திற்குரியவள் அல்ல என்னும் உணர்வு. முற்றாக என்னை வெட்டிக்கொண்டு சென்றுவிடவேண்டுமென்னும் விழைவு” என்றாள். “நான் இங்குள்ள எவருக்கும் இதுவரையிலான எவற்றுக்கும் உரியவளல்ல என இயல்பாகவே என் அகம் உணர்கிறது, தந்தையே.”

மாதலி தோள்குலுங்க மெல்ல சிரித்து “அதை உணராத பெண் எவள்?” என்றான். “ஆம், நான் எவருக்குரியவளென அறியேன். ஆனால் எங்கோ எவரோ என்னை முற்றுரிமைகொள்ளவிருக்கிறார் என்பதை மட்டும் நன்குணர்ந்திருக்கிறேன்” என்றாள் விஜயை. மாதலி “நன்று மகளே, அவ்வண்ணமே ஆகுக! தன்னை முற்றளித்து முழுவுரிமைகொண்டு வெல்பவள் பெண் என்பது மூத்தோர் சொல்மரபு” என்றான். தேர் நகரின் தெருக்களினூடாகச் சென்றது. “எந்தை என் உருமாற்றத்தை அறிந்திருப்பாரா?” என்றாள் விஜயை. “ஆம், ஊர்வசி அவரிடம் சொல்லாமலிருக்க முடியாது.” அவள் “நன்று, நான் அறிந்த விழிகள் முன்பு சென்று நிற்கவேண்டுமென்பது சற்றே எளிது” என்றாள்.

“அவையில் இருப்பவர் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்றான் மாதலி. “எவர் அறிந்தாலென்ன? நான் எந்தையையும் என் மூத்தவரையும் மட்டுமே எண்ணுகிறேன்” என்றாள் அவள். “விந்தைதான். இவ்வுருவில் என்னை எவர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என உய்த்துணரவே இயலவில்லை.” மெல்ல சிரித்தபடி “எந்தை முன்னரே அறிந்து எதிர்நோக்கியிருந்தாலும் என் உருவம் கண்டதும் அதிர்ச்சியே கொள்வார் என நினைக்கிறேன். மூத்தவரும் என்னை ஏற்றுக்கொள்ள மறுப்பார்” என்றாள். மாதலி “உள்ளம் எவ்வண்ணம் செல்லுமென எவர் அறிவார்?” என்றான்.

“அன்னை அருவருப்பு கொள்வார். அருகணையவே மறுப்பார்” என்றாள் விஜயை. மாதலி ஒன்றும் சொல்லவில்லை. “ஆனால் எவர்கொள்ளும் உணர்வும் எனக்கு ஒரு பொருட்டல்ல என்று தோன்றுகிறது. நான் எனக்குரிய உடலில் இருக்கிறேன் என்று உணர்கிறேன்.” மாதலி அறியாமல் திரும்பி நோக்கினான். “உண்மை, தந்தையே. நான் இப்போதுதான் முற்றமைகிறேன். அவ்வுடலில் நான் அடைந்த தனிமை இதிலில்லை. அது கன்றுதேடும் தாய்முலைக்கண் போல எக்கணமும் உறுத்து தவித்துக்கொண்டிருந்தது. இது தன்னுள் நிறைந்துள்ளது.”

“அவ்வண்ணமென்றால் நன்று” என்றான் மாதலி. “ஆனால் இது தன்னை பிறிதொருவர் முன் படைக்க விழைகிறது. கோடிவிதைகள் புதைந்துகிடக்கும் நிலம்போல பெருக விழைகிறது” என்றாள் விஜயை. அவள் மேலும் சொல்ல வாயெடுத்ததுமே நாணம் கொண்டு தன்னை அடக்கிக்கொண்டாள். அவள் சொற்களுக்காகக் காத்த மாதலியின் தோளிறுக்கம் சிலகணங்களுக்குப்பின் மெல்ல தளர்ந்தது. “ஆம், இதுவும் முழுமைகொண்டது அல்ல. ஆனால் இதன் தனிமையும் தவிப்பும்கூட தன்னளவிலேயே நிறைவானவை. பிறிதொன்றில்லாமலேயே தன்னிலிருந்து அனைத்தையும் உருவாக்கி நிறைய இதனால் முடியும்.”

அச்சொற்கள் ஓடிக்கொண்டிருக்கையிலேயே அவள் முழுதறிந்துவிட்டாள். மெய்ப்புகொண்டு இருகைகளாலும் முலைகளை பற்றிக்கொண்டாள். “இறையே, முழுமுதலே!” என மெல்ல கூவினாள். மூச்சிரைக்க அவள் உடல் தவித்தது. எழுந்து நிற்கப்போகிறவள்போல ஓர் அசைவு அவளில் எழுந்து அடங்கியது. மாதலி என்ன என்று கேட்க எழுந்த வினாவை அடக்குவது தெரிந்தது. அவன் உள்ளத் தயக்கத்தை கடிவாளம் வழியாக அறிந்த புரவிகள் மென்னடையிட்டன. அந்த சீர்தாளத்தில் அமைந்தது அத்தருணம்.

“தந்தையே, அது அவர்தான்” என்றாள் விஜயை. “எப்படி இதை எண்ணாமலிருந்தேன்? பிறிதெவர்?” அதை உணர்ந்ததும் மாதலி “ஆம்” என்றான். “நான் அவரை எண்ணி என்னை அமைத்துக்கொள்ள வேண்டியவள். அவரால் முழுமையாக நிறைக்கப்பட வேண்டியவள்” என்றாள். மாதலி பெருமூச்சுவிட்டான். “என் நல்லூழ் இது. அவரை முழுதுணரவே இப்பெண்ணுடலில் அமைந்தேன் போலும். உருகி விழிநீர் சிந்தி அவரை அறிவேன். முழுதும் படைத்து முற்றழிந்து அவரென்றாவேன்.” அவள் குரல் நனைந்து ஊறிய பட்டுபோல் மென்மைகொண்டிருந்தது. எவரிடமென்றில்லாமல் அவள் அகம் வீரிட்டது. “காணும் கேட்கும் சுவைக்கும் முகரும் உணரும் எண்ணும் அனைத்தும் அவரென்றே ஆகுக! தெய்வங்களே, இனி அவர் முகம்சூடியே என்னை அணுகுக!”

பிச்சியைப்போல அவள் இரு கைகளையும் கோத்து இறுக்கி அதில் முகம் புதைத்து அதிர்ந்தாள். பீலியும் குழலும் விழியொளியும் நகையொளியும் அன்றி இவ்விழிகளுக்கு பிறிதேதும் உவப்பல்ல. கரியவன் தோளும் நெஞ்சும் அன்றி நான் அமையுமிடம் ஏதுமில்லை. உணர்வெழுச்சியால் அவள் தோள்களை குறுக்கினாள். மெல்லிய விம்மலொன்று அவளிலிருந்து எழ மாதலி திரும்பிப்பார்த்தான். அவள் உடல்குலுங்க அழுதுகொண்டிருப்பதை நோக்கியபின் புரவிகளின் முதுகில் சவுக்கால் மெல்ல தொட்டான். அவை விரைவுகொண்டன.

[ 26 ]

இந்திர அவைக்குள் அவள் நுழைந்தபோது அனைத்து விழிகளும் திரும்பி அவளை நோக்கி உடனே திடுக்கிட்டு விலகிக்கொண்டன. அந்நோக்கே ஓர் சேர்ந்தொலியென எழுந்தமைந்தது. பின் ஆழ்ந்த அமைதியில் அவள் தன் ஆடையும் அணிகளும் ஒலிக்க மெல்ல நடந்தாள். அவளை மீண்டும் நோக்கியபின் இந்திரன் பெருமூச்சுவிட்டான். பாலி இருகைகளையும் கோத்து இறுக்க பெரும்புயங்கள் எழுந்தமைந்தன. உடலுக்குள் இருந்து இன்னொரு உடல் எழுந்து வெளியேறத் துடிப்பதென ஓர் அசைவு நிகழ்ந்தது. சனகரும் சனந்தனரும் சனாதனரும் சனத்குமாரரும் மட்டும் விழிகளில் நிறைந்த மைந்தர்களுக்குரிய ஆர்வத்தின் இளநகையுடன் அவளை நோக்கிக்கொண்டிருந்தனர்.

இந்திராணி இரு கனிவூறிய விழிகளுடன் அருகணைந்து அவள் கைகளை வளையல்களுடன் சேர்த்து பற்றிக்கொண்டாள். “வாடி” என்றாள். அவள் “அன்னையே, நிகழ்ந்ததை அறிந்திருப்பீர்கள்” என்றாள். “ஆம்” என்றாள் அவள். “அதனாலென்ன? நீ என் மகள்” என்று சொல்லி “வருக, உனக்கான பீடத்திலமர்க!” என அழைத்துச்சென்று அமர்த்தினாள். “நான் எவ்வகையிலும் துயருறவில்லை, அன்னையே. மாறாக உவகைதான் கொள்கிறேன்” என்றாள். “ஆம், அதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்றாள் இந்திராணி.

அவள் ஊர்வசியின் கண்களை சந்திக்க அவள் பதறி விலக்கிக்கொண்டாள். ரம்பையும் திலோத்தமையும் கிருதாசியும் பூர்வசித்தியும் ஸ்வயம்பிரபையும் அவளை நோக்கிக்கொண்டிருந்தனர். அவள் மிஸ்ரகேசியின் விழிகளை சந்தித்ததும் புன்னகைத்தாள். அவள் திகைத்து விழிவிலக்கி மீண்டும் நோக்கினாள். மிகமெல்லிய புன்னகை இதழ்களில் எழ தண்டகௌரியின் கைகளை தொட்டாள். அவளருகே அமர்ந்திருந்த வரூதினியும் கோபாலியும் “என்ன?” என மெல்ல கேட்க அவள் இதழ்மட்டும் அசைய ஏதோ சொன்னாள். அவர்கள் அவள் விழிகளை சந்திக்க அனைத்து முகங்களும் புன்னகையின் ஒளி சூடின.

பின்னால் நின்ற ஸகஜன்யையும் கும்பயோனியும் பிரஜாகரையும் அப்புன்னகையை அவர்களின் உடல்களிலேயே அசைவெனக் கண்டனர். சித்ரலேகை “என்ன?” என்றாள். எவரும் சொல்லாமலேயே அனைவரும் அவள் விழிகளை அறிந்தனர். ரம்பை புன்னகையுடன் அவளுக்கு மட்டுமே தெரியும்படி மெல்ல தலையசைத்தாள். திலோத்தமை அதை நோக்கியபின் குறும்புச்சிரிப்புடன் அவள் ஆரம் நன்றாக உள்ளது என கைவிரல் செய்கையால் காட்டினாள். அவள் அதைத் தொட்டு நோக்கியபின் சரி என தலையசைத்தாள். விழியுணரா சரடொன்று சிலந்திவலையென விரிந்து பின்னி அவர்களை மட்டும் ஒரு தனியுலகில் ஒன்றாக்கியது. தேவமகளிர் ஒவ்வொருவராக அதில் வந்து இணைந்துகொண்டிருந்தனர்.

அவை நிகழ்வுகளை அவள் அறியவில்லை. முறைமைச்சொற்களும் வாழ்த்துகளும் அறிவிப்புகளும் முற்றிலும் பொருளிழந்து பிறிதொரு உலகிலென நிகழ்ந்துகொண்டிருந்தன. அங்கிருந்த அத்தனை பெண்களின் ஆடைகளையும் அவள் அறிந்துவிட்டிருந்தாள். அணிகளின் அத்தனை செதுக்குகளையும் நோக்கிவிட்டிருந்தாள். விழிகளும் இதழ்களும் விரல்நுனிகளும் உரைத்த ஒலியிலா மொழியில் அவர்கள் கருத்துக்களை சொன்னார்கள். பாராட்டுக்களை ஏற்றார்கள். கச்சபர் இந்திரனை வாழ்த்தி முழங்கும் சொற்களை எடுத்தபோது மேனகை மிகநுட்பமாக உதடுகளைச் சுழித்து பழிப்பு காட்டினாள். அத்தனைப் பெண்விழிகளும் சிரிப்புகளால் ஒளிவிட்டன.

நடுவே புகுந்த இந்திராணியின் விழி அவர்களை அதட்டியபோது அனைவரும் அதை அடக்கிக்கொண்டனர். லோமசர் தன் அழியா காமத்துறப்பு நோன்பைச் சொல்லி அவையை வாழ்த்தியபோது அப்படியா என பொய்வியப்பு காட்டினாள் விழிகளால் வியந்து கும்பயோனி. உண்மையாடி என்றாள் மேனகை. ஆம் எனக்குத்தெரியும் என்றாள் கிருதாசி. சீ என்றாள் மேனகை. என்ன அதில் என்றாள் பிரஜாகரை. போடி என மேனகை அதட்டினாள். சரிதான் என்று திலோத்தமை அவர்களை அடக்கினாள். மானுடர் நடுவே தேவர்களென அப்பாலெழுந்த வாய்ச்சொற்கள் நடுவே அவர்களின் நுண்மொழி உலவியது.

இந்திரனின் குரலை அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். பலமுறை ஏதோ சொல்லப்பட்டது. பின்புதான் அத்தனை விழிகளும் தன்னை நோக்குவதை அவள் உணர்ந்தாள். இந்திராணி அவள் தொடையைத் தொட்டு “உன்னிடம்தான் சொல்லப்படுகிறது, இளையவளே” என்றாள். அவள் திடுக்கிட்டு விழித்து “என்ன?” என்றாள். “உன்னிடம் ஊர்வசியை அனுப்பியவன் நான். உன்மேல் விழுந்த தீச்சொல்லும் அவளுடையதே. மைந்தா, நீ அதை விட்டு விலகி எழமுடியும். அவளிடம் சொல்மீட்க ஆணையிடுகிறேன்” என்றான் இந்திரன். “தந்தையே, தாங்கள் என்னை மைந்தா என்றழைக்கும் சொல் என்னை கூசவைக்கிறது” என்றாள். இந்திரன் நாவெடுக்கும் முன் “நான் இவ்வுடலிலேயே இனிதமைந்துள்ளேன். பிறிதொன்றை வேண்டேன்” என்றாள்.

இந்திரன் சினம்கொண்டு கைநீட்டி ஏதோ சொல்லவந்தான். சுளித்த முகத்தில் பற்கள் இறுகியிருந்தன. பின் தன்னை எளிதாக்கிக்கொண்டு “நான் உன்னை புரிந்துகொள்கிறேன், மகளே. உள்ளம் என்பது நீர். கலத்தின் உருவே அதற்கும். ஆனால் இவ்வுடல் உன்னுடையதல்ல” என்றான். “இல்லை தந்தையே, பாறையென இறுகியிருந்தது நீர்பட்டு மென்சேறாகியிருக்கிறது, அவ்வளவே” என்றாள். “வீண் சொல் பேசாதே. இது அவளிட்ட தீச்சொல். அவள் இதை திருப்பி எடுக்கமுடியும்” என்றான் இந்திரன். “நான் அதை விழையவில்லை. சொல்மீட்சிக்கு நான் கோராமல் அவள் அருளமுடியாது” என்றாள் அவள். “என்னுள் இருந்த ஒரு முள்ளை இழந்து அமைந்திருக்கும் இதுவே என் பெருநிலை.”

“அதை பின்னர் பார்ப்போம்” என்றார் வசிட்டர். “இவ்வவை கூடியிருப்பது தேவர்க்கரசர் தன் மைந்தரை அவைநிறுத்தி வாழ்த்தும்பொருட்டு. அது நிகழட்டும்.” இந்திரன் சொல்லெடுப்பதற்குள் “மைந்தனென்றும் மகளென்றும் ஆனது ஒன்றே. அதன் தோற்றங்களை நாம் கருத்தில் கொள்ளவேண்டியதில்லை” என்றார். இந்திரன் பெருமூச்சுடன் கைகளைக் கோத்து அதில் முகத்தை பதித்துக்கொண்டான். பாலி உரக்க “இளையவனே, நான் உன்னை அவ்வண்ணமே அழைப்பேன். தந்தை உன்னிடம் விழைவதென்ன என்று நீ நன்கறிவாய். அதை அவர் இந்த அவைமேடையில் அரசகோல்சூடி நின்று மீண்டும் கோருகிறார்” என்றான். அவன் அவள் விழிகளை அப்போதுதான் நோக்கினான். “இல்லை, ஆணையிடுகிறார்” என்றான்.

அவள் அவனை நேர்விழிகளால் நோக்கி “பொறுத்தருள்க, மூத்தவரே! தந்தையும் அன்னையும் இவ்வவையும் என்னை முனியலாகாது. நான் இங்குள்ளவள் அல்ல. உங்கள் எவருக்கும் உரிமைப்பட்டவளும் அல்ல. எச்சொல்லும் எவ்வுணர்வும் எந்நெறியும் என்னை கட்டுப்படுத்தாது” என்றாள். பாலி திகைத்து அவளை நோக்கி நின்றான். இதழ்கள் சிலமுறை சொற்களுக்காக அசைந்தன. பின்னர் திரும்பி இந்திரனை நோக்கிவிட்டு “நீ உன் தந்தையின் அவையிலமர்ந்துள்ளாய்” என்றான். “ஆம், அவர் என் தந்தை. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் நான் அவருக்குரியவளல்ல.”

“பின் எவருக்குரியவள்?” என்று பாலி உரக்க கேட்டான். பெரிய கைகளை விரித்தபடி அவளை நோக்கி வந்தான். “அவருக்கு” என அவள் சொன்னாள். அக்கணமே அலையென அவளை அறைந்து மூழ்கடித்த நாணத்தால் தலைகவிழ்ந்து உடல் விதிர்த்து தோள்குறுக “அவர்தான்” என்றாள். அவள் இதழ்கள் நடுங்கின. இமைகள் அதிர்ந்தன. “யார்?” என்று அவன் கூவினான். “நீங்களனைவரும் அறிவீர்கள்” என்றாள் அவள். அவன் என்ன இது என்பதுபோல கைவிரித்தான். இந்திரன் தன் தலையை கையால் அறைந்துகொண்டான்.

“நீங்கள் ஆண்கள். உங்கள் உலகில் நின்றபடி இதை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. நான் என்னை முற்றளித்துவிட்டவள்” என்றாள். “அப்படி முற்றளிக்க எவராலும் முடியாது. அறிவிலிபோல் சொல்லெடுக்காதே. உளம்கொண்டு உடல்கொண்ட எவரும் தனிமையின் ஒரு துளியேனும் உள்ளே எஞ்சவைத்தவர்களே” என்றான் இந்திரன். “இல்லை, காதல்கொண்ட பெண்ணின் இயல்பு அது. காதலின் பெருநிலையை வாழ்நாளெல்லாம் நீட்டித்துக்கொண்டவளுக்கு அது இயல்வதே” என்று அவள் சொன்னாள்.

இந்திரன் சலிப்புடன் தலையசைத்து “வீண் சொல்” என்றான். “தந்தையே, அவ்வண்ணம் கணம் முறியாது காதலில் வாழ்ந்தவள் ஒருத்தியேனும் இருந்தாள். அவள் பெயர் ராதை” என்றாள். அவை முழுக்க வியப்பின் கார்வை எழுந்தது. “நான் இக்கணம் எனக்கு அணுக்கமானவளாக உணர்வது அவளை மட்டுமே. என்னை அறியக்கூடுபவளும் அவள் ஒருத்தியே” என்றாள். பின்னர் எழுந்து “நன்று, இந்த அவையில் அதைச் சொல்லும்பொருட்டே இங்கு வந்தேன். முழுதுருக்கொண்டு பிரம்மம் எழுந்து வந்தாலும் என் உள்ளத்தை மாற்றமுடியாதென்று இனி நான் சொல்லவேண்டியதில்லை” என்றாள்.

அவை நோக்கி கைகூப்பி “என்னை வாழ்த்துக, முனிவர்களே! என்னுடன் இருங்கள், தேவர்களே. இனி நான் ராதை” என்றபின் அவைமேடை விட்டிறங்கினாள். அவள் படிகளில் கால்வைத்து கீழே சென்று அவைமுகப்பினூடாக நடக்கையில் இந்திரன் கை நீட்டி “விஜயை” என்றான். அவள் தயங்கிநின்றாள். “தந்தையைத் தேடிவந்து நீ வெறுங்கையுடன் மீளவேண்டியதில்லை. நீ விழைந்ததைக் கோருக!” என்றான். அவள் திரும்பி அவனை நோக்கி “தந்தையே, நான் படைக்கலம்கொள்ளவே வந்தேன். அப்படைக்கலம் அவருக்கு துணைநிற்பது. ஒருவேளை களத்தில் உங்களுக்கு எதிர்வருவது” என்றாள்.

“ஆம்” என்றபோது இந்திரனின் தோள்களில் தசைகள் மெல்ல தளர்ந்தன. “அவ்வாறென்றாலும் ஆகுக! நீ உன் படைக்கலத்தை கோரலாம்.” அவள் “உங்களாலும் வெல்லப்படமுடியாத படைக்கலம்” என்றாள். இந்திரன் விழிகள் அசைவற்றிருக்க நோக்கி அமர்ந்திருந்தான். பாலி “மகாவஜ்ரமா?” என்றான். “ஆம், அதுவன்றி வேறேதும் வேண்டியதில்லை” என்றாள். பாலி சினத்துடன் கையை தூக்கியபடி முன்னால் வர இந்திரன் அவன் தோளைத் தொட்டு தடுத்தான். எழுந்து “நன்று, ஈன்றோரில்லம் நீங்கும் எந்தப் பெண்ணும் விழைவது தந்தையை தன் கொழுநன் வெல்லவேண்டும் என்றே” என்றபோதே அவன் முகம் மலர்ந்தது. “ஆனால் அதை அவள் கேட்பதிலுள்ள தன்னலத்தின் கள்ளமில்லா அழகுக்கு முன் எந்தத் தந்தையும் தோற்றாகவேண்டும். கொள்க, மகளே!” என்றான்.

அவள் திரும்பிவந்து அவன் காலடியைத் தொட்டு சென்னிசூடினாள். அவள் தோள்பற்றி தன் மார்புடன் அணைத்து காதில் மகாவஜ்ர நுண்சொல்லை மும்முறை சொன்னான் இந்திரன். அவள் அதை மும்முறை திரும்பச் சொல்லி மீண்டும் வணங்கினாள். “சென்று வருக! உன்னுடன் என்றுமிருக்கட்டும் இப்படைக்கலம். இது உன்னை வெல்லமுடியாதவனாக நிலைநிறுத்தட்டும்” என்றான். “தங்கள் வாழ்த்துக்களால் நிறைநிலைகொண்டேன், தந்தையே” என அவள் சொன்னாள்.

“மகாவஜ்ரத்தின் முதன்மை இங்கு முடிந்தது” என பாலி கசப்புடன் சொன்னான். “தந்தையே, இனி மகாநாராயணமே வேதமெனத் திகழும். அதை நீங்களே தொடங்கிவைத்துவிட்டீர்கள்.” இந்திரன் “ஆம்” என்றான். “சென்று அவனிடம் அதை சொல்லச்சொல்லுங்கள் இவளிடம். அவன் நெய்யும் வேதப்பெருவலையில் ஒரு திசைக்காவலனாக அமைவீர்கள். அவன் வேள்விச்சாலையில் அவிகொள்ள நிரையிலொருவராக நின்றிருப்பீர்கள்.” இந்திரன் பெருமூச்சுடன் “அவ்வண்ணமென்றால் அதுவே ஆகுக! நான் இத்தருணத்தை பிறிதொருவகையில் கடக்கவியலாது” என்றான். வசிட்டர் “அது அவ்வண்ணமே ஆகவேண்டுமென்பதே ஊழ், அரசே” என்றார். “அறமே வேதமென உருக்கொள்கிறது. அறம் வளர்வதே இறைநெறி. வளர்தலென்பது உதிர்தலும் முளைத்தலுமென நிகழும் முடிவிலா மாற்றம்.”

“சென்றுவருகிறேன், தந்தையே. நான் வந்த பணி முடிந்தது” என்றாள். இந்திராணியை அணுகி கால்தொட்டு வணங்கிவிட்டு பாலியின் அருகே வந்தாள். “வாழ்த்துக, மூத்தவரே!” என அவன் கால்களை தொடக்குனிந்தாள். “வெற்றி கொள்க!” என்று பாலி அவள் தலையைத் தொட்டு நற்சொல் உரைத்தான். அவள் நிமிர்ந்ததும் பொய்க்கடுமையை முகத்தில் நிறுத்தி “உன்னை இவ்வண்ணம் காண அவன் விழையமாட்டான். நீ படைக்கலங்களுடன் வந்து வில்விஜயன் என தன் போர்க்களங்களில் நிற்கவேண்டுமென்றே எண்ணுவான்” என்றான். அவள் திகைத்து இந்திரனை நோக்க “ஆம், மகளே. அவன் உன்னை இங்கு அனுப்பியது அதன்பொருட்டே” என்றான்.

“அவர் என்னை அனுப்பவில்லை” என்றாள் அவள். “நீங்களிருவரும் கொண்ட அப்போர் நிகழ்ந்ததல்ல. நிகழ்த்தப்பட்டது” என்றான் பாலி. அவள் பெருமூச்சுவிட்டாள். “ஆனாலும்…” என சொல்லத் தொடங்கியதுமே இந்திரன் “நீ இவ்வுடலில் எழுந்தது ஆணென இருந்து அறியமுடியாத பெரும் பிரேமையை அடையும்பொருட்டே. அதை வென்று சூடி முழுமைகொண்டுவிட்டாய். இது உன்னுள் கனவின் விதையென என்றுமிருக்கும். உன் மெய்யறிதல்களை கனியவைக்கும்” என்றான். அவள் “ஆம்” என்றாள்.

“ஊர்வசியின் தீச்சொல் அழியவேண்டியதில்லை. அவள் ஆணையிடும் காலம் மட்டும் நீ பெண்ணென்று வாழ்ந்தால் போதும். அக்காலத்தை நீ விழையும்படி தெரிவுசெய்யலாம்” என்றான் இந்திரன். ஊர்வசி “ஆம் இளைய பாண்டவரே, அக்காலமொன்று வரும். அன்று என் தீச்சொல்லே நற்சொல்லென்று உங்களுக்கு துணையிருக்கும்” என்றாள். கைகூப்பி “அவ்வாறே ஆகுக!” என்றான் அர்ஜுனன். ஊர்வசி அருகே வந்து அவன் கைகளைப் பற்றியபடி “மீட்டு எடுத்த சொல் என் உடலில் ஒரு கரிய மச்சமென எப்போதும் இருக்கும். அக்குறையை ஓர் அருமணி என நான் சூடியிருப்பேன்” என்றாள்.

KIRATHAM_EPI_61

அவள் தொட்டதுமே அவன் முலைகரைந்து தோள்பெருத்து கைகள் இறுகி அர்ஜுனன் என்றானான். அவள் விழிகளை நோக்கியபடி “இன்று அறிகிறேன் உன் அகத்தை” என்றான். அவள் அவன் விழிகளை நோக்காமல் திரும்பிக்கொண்டு சிலம்புகள் ஒலிக்க வளையல்கள் குலுங்க ஆடை நெகிழ்ந்து நீண்டு தரையில் இழுபட்டுத் தொடர விரைந்தோடி உள்ளே சென்றாள். அர்ஜுனன் சுரமகளிர் விழிகளை நோக்கினான். அவை மீண்டும் அகன்று வேறொன்றாக விரிந்திருந்தன. அவையை கைகூப்பி வணங்கிவிட்டு அவன் வெளியே நடந்தான்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 60

[ 24 ]

மலைப்பாறைகளை கட்டித்தூக்கும் வல்லமைகொண்ட மென்பட்டுநூல். மெல்லியது வல்லமைகொண்டதாகும்போது வாளெனக் கூர்கொள்கிறது. யாழ்நரம்பென இசை எழுப்புகிறது.  அவள் மூச்சு அவன் மார்பின்மேல் படர்ந்தது. “ஏன்?” என்று அவன் காதுக்குள் கேட்டாள். “என்ன?” என்றான். “அஞ்சுகிறீர்களா?” என்றாள். “ஏன் அச்சம்?” என்றான். “பின்?” என்றாள். அவன் பொருளில்லாமல் “ம்” என்றான். அவன் கைகள் ஓய்ந்துகிடந்தன.

“விழைவின் உச்சியிலும் ஆண்கள் செயலிழப்பதுண்டு” என்றாள் அவள். அவன் “ம்” என்றான். அவள் மெல்ல சிரித்து “அப்படி இல்லையென்று தெரிகிறது” என்றாள். அதற்கும் அவன் “ம்” என்றான். காமத்தில் சொற்கள் ஆற்றுவதென்ன? காமத்தை கூர்தீட்டுகின்றனவா? இல்லை அவை இவ்வெரிதழல் உமிழும் சருகுக்கரிகள் மட்டுமே. பொருளின்றி சுழன்று அலைபாய்கின்றன. பொருளென்பது அவ்வெரிதலின் பதற்றம் மட்டுமே. விழிகூர்ந்து நாபறக்க இரைநோக்கிச் செல்லும் நாகங்கள்போல அவள் கைகள் அவன் தோளை வளைத்தன. அவை விரல்நுனிகளில் வியர்வையீரத்தால் குளிர்ந்திருந்தன. கைகள் வெம்மைகொண்டிருந்தன. அவள் முகத்தை அவன் தோள்களில் புதைத்து “என்ன?” என்றாள்.

சொற்கள் பொருளிழக்கையில் அச்சம் அளிக்கின்றன. அயல்நிலத்தில் அறியா விலங்குபோல. பொருளை அள்ளி அச்சொற்கள் மேல் பூசத் தவிக்கிறது நெஞ்சு. “என் மேல் சினமா?” ஆனால் கொதிக்கும் கலம் மீது மெழுகும் அரக்கும் என உருகி வழிகின்றன பொருள்கள். சொல் நின்று அனல்கிறது. “ஏன் சினம்?” சொல்லையே ஒரு காமஉறுப்பென மெல்ல சுண்டிக்கொண்டிருக்கலாம். சுட்டுவிரல்தொட்டுச் சுழற்றலாம். தொட்டுத்தொடாமலென நீவலாம். காமத்தில் மட்டும் மெல்லத் தொடும்தோறும் எழுகிறது அனல். “பின் ஏன்?” காமம் உயிர்கொண்டபின் உடலுறுப்புகள் ஆடைகளை வெறுக்கின்றன. சொல் பொருளை தன்மீதிருந்து கிழித்துக்கிழித்து அகற்றுகிறது. “தெரியவில்லை.”

அவள் வாயிலிருந்து மென்மணம் எழுந்தது. வாய்நீரல்ல. அனல்கொண்ட குருதியின் மணம். உருகிச்சொட்டும் தசையின் மணம். உள்ளெங்கும் நொதிக்கிறதுபோலும் அமுது. கலத்தின் மூடி மெல்ல திறந்து ஆவி எழுகிறது. நுரையா இப்பற்கள்? நொதிப்பவற்றுள் குடியேறும் தெய்வம் என்ன? நொதிக்கும்பொருள் பிறிதொன்றாகிறது. குமிழியிட்டு நுரைத்துப் பொங்கி எல்லைகளை கடக்கிறது. இருக்கும் கலங்களில் அமையும் இயல்பே நீர்மை. பொங்கி கரைகடத்தலே நொதிப்பு. நொதிப்பவை அனைத்திலும் பித்து உறைகிறது. நெஞ்சறைந்து கூவி தலைவிரித்தாடும் வெறியாட்டுவேலனின் விசை. கள்ளிலெழுவது தலைசுழற்றிப் புயலாடும் தென்னையின் களி. களியுறையா உயிர்கள் உண்டா என்ன?

எண்ணங்கள் தொட்டுத்தொடர்ந்தோடும் இவ்வெளியின் தொடக்கத்திலும் இறுதியிலும் நின்றிருக்கும் வைரம் ஒளிரும் விழிகொண்ட தெய்வங்கள் எவை? “என் மேல் அன்பில்லையா?” தெய்வங்களுக்குப் பிரியமான செயல் பொருட்கள் நிலையழிவதுதான்போலும். மலைவிட்டு இறங்கும் பாறையுடன் பாய்கின்றன. அலையெழும் கடல்மேல் களியாடுகின்றன. மதம்கொண்ட களிறு அவற்றுக்கு உகந்தது. சீறும் நாகமே அவற்றுக்கு அண்மையானது. “ஏன்?” அவள் வியர்வையில் உப்புமணம் அகன்றது. ஊன்சாறென துளிக்கும் பிறிதொரு வியர்வை. கழுத்தில் அதன் ஈரக்கோடுகள். தோளில் அதன் மென்னொளி. “அன்பிருந்தால் இப்படியா?”

வேறொரு மணம். கருவறைக்குள் சுருண்டிருக்கையிலேயே அறிந்தது. கருக்குழவிகளின் புன்தலையில் வீசுவது. “என்ன?” ஊடுபவள் மேலும் அணுகலாகுமா என்ன? முலைக்கண்கள் விரல்களாகி தீண்டின. “அன்பா?” தொட்டு விலகுபவற்றை மேலும் தாவிப்பற்ற எழுவது எது? “அன்பென்றால் ஒன்றாவது.” மீண்டும் வந்து தொடுகையில் ஆயிரமாண்டுகாலம் அறிந்ததாக அது தெரிகிறது. “ஆம்.” தொட்டுத்தொட்டு விலகி விலகி இங்கு ஆடிக்கொண்டே இருக்கும் ஒரு விளையாட்டு. “ஒன்றாகத்தான்.”

அவள் முலைகள் அவன் மார்பில் பதிந்தன. கழுத்தைச்சுற்றிய கைகள் தலையைப்பற்றி இழுத்து குனியச்செய்தன. நாகச்சுருளில் படம் எழுவதுபோல அவள் மேலுடல் விழுத்தொடைகளில் இருந்து விம்மி எழுந்தது. பிறந்த நாய்க்குட்டிபோல விழிசொக்கியிருந்தாள். உதடுகள் அறியாச்சொல் ஒன்றை உச்சரிப்பதுபோல அசைந்தன. என்ன சொல் அது? சொல்லேதான். ஆனால் மானுடச்சொல்லா? சொல்லென்றால் அதுவே புடவிப்பின்னலில் பிறந்த முதற்சொல். அது குறிப்பதே பிரம்மம் கொண்ட முதற்பொருள். மூச்சில் மூக்குச்சிமிழ்கள் விரிந்தசைந்தன. மேலுதடு பனித்திருந்தது. கன்னக்கொழுமைகளின் சிறியபருக்கள் செவ்வரும்புகள் என துடித்தன.

“நான் எதிர்நோக்கியிருந்தேன்.” எங்கோ நீர்த்துளிகளென சொட்டிக்கொண்டிருந்தன அச்சொற்கள். அவள் உதடுகள் சொன்னது அதுவல்ல. மேலுமேதோ சொல்ல வந்தாள். ஊடேபுகுந்தது குழல்கற்றை ஒன்று. பல்லியென ஓசையிட்டு அதை அள்ளி பின்னாலிட்டாள். கையில் தொட்ட செவிக்குழையை சுழற்றி எடுத்து வீசினாள். நெற்றிக்குங்குமம் ஈரத்தில் கரைந்திருந்தது. புருவம் மழைநனைந்த மென்புல்நிரை. இமைகள் தேனருந்தும் வண்ணத்துப்பூச்சியின் இறகுகள் என சொக்கிச் சொக்கிச் சொக்கி அசைவழிந்தன. அவள் உடல்தளர்ந்ததுபோல பின்னால் வளைய தன் கைகள் அவள் இடையை பற்றியிருப்பதை அப்போதுதான் உணர்ந்தான். குலைவாழை ஒன்றை கையில் தூக்கும் நிகரின்மையின் தடுமாற்றம். அதை தோளோடு சேர்த்து உடல்வளைவுடன் இணைப்பதொன்றே வழி. “மெல்ல” என்றாள். “என்ன?” மேலும் மேலுமென மூச்சு. நெகிழ்ந்த கச்சு இறங்கி தெரிந்த வெண்மை. நீர்விளிம்பு பின்வாங்கிய பொற்சேற்றுக்கரையின் மென்கதுப்பு. மயிர்க்கால்களனைத்தும் புள்ளிகளாக சிலிர்த்து நின்றிருந்தன.

இது கணம். எது கரையென தடுக்கிறது? ஏதோ பின்விசை. இது நுரைக்கோட்டை. இது பனித்திரை. ஆயினும் அப்பாலிருக்கிறது அக்கணம். மலைப்பாறைகளை கட்டித்தூக்கும் வல்லமைகொண்ட மென்பட்டுநூல். அவள் உடல் மெல்ல அதிர்ந்துகொண்டே இருந்தது. கூட்டிலிருந்து விழுந்த குருவிக்குஞ்சின் நெஞ்சென. மென்மை மென்மை என. அவன் அசைவற்ற விழிகளுடன் அவளை நோக்கிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு கணமாக நழுவியது. அவள் இமைகள்மேல் ஒரு விதிர்ப்பு. கழுத்தில் ஒரு நரம்பின் மெல்லசைவு. விழிதிறந்து அவனைக் கண்டதுமே கூசியவள்போல மீண்டாள். அக்கணமே அவன் கைகளிலிருந்த அவள் உடலின் எடை மறைந்தது. காதோர மயிரை நீவி சீராக்கியபடி “நெடுநேரமாகிறது. நான் வந்த பணி ஒன்றுள்ளது” என்றாள்.

எதிர்பாராதபடி அந்த நாள்புழக்கச் சொற்கள் அவன் நாணைச் சுண்டி வில்லை உயிர்கொள்ளச் செய்தன. அவள் இடையை சுற்றி வளைத்து தன் உடலுடன் சேர்த்து இறுக்கி குனிந்து அவள் உதடுகளை தன் உதடுகளால் கவ்விக்கொண்டான். அவன் குழல்கற்றைகளை அவள் விரல்நுழைத்து அள்ளிப்பற்றி இறுக்கினாள். தசை தசையை தொட்டுத்துழாவி உயிர் பிறிதொன்றை அறிந்தது. ஒரு முட்டைக்குள் தழுவிப் பிரிந்து சீறி மீண்டும் தழுவும் நாகக்குழவிகள். விழியிலாதோன் விரல்கள். சிற்பத்தை, கனிகளை, பொற்கலங்களை, அணிச்செதுக்குகளை, அம்பின் கூர்முனையை அறிந்தன. “என்ன சீற்றம்?” காதருகே எள்ளி நகைப்பது பிறிதொரு கன்னி. “மெல்ல, மெல்ல…” கொஞ்சி முத்தமிடுவது அறியாத அன்னை. “அய்யோ” என கூசிச்சிரிப்பது அறியாமைகொண்ட சிறுமி. மெல்ல முனகுவது அக்கணம் பிறந்த பைதல்.

முத்தங்களென்று உண்ணத்தலைப்படுகின்றது உடல். உண்டு உண்டு எஞ்சுவது உடல். வால்விழுங்கிய நாகம் உண்டு முடிப்பதே இல்லை. விரல் தொட்டுத்தொட்டு மென்மைகொண்ட முழவுத் தோற்பரப்பு. அதிர்ந்ததிர்ந்து நின்றிருக்கும் யாழ்த்தந்தி. இது புரி. இது குமிழ். இது குடம். இது உள்ளிருந்து ஊறும் பேரிசையின் கார்வை. அவன் கை அசைவிழந்தது. “ஏன்?” அவன் அவளை விட்டுவிட்டு எழுந்தான். அவள் பின்னால் சரிந்து தன் அவிழ்ந்த குழல்பரப்புமேல் விழுந்தாள். “ஏன்?” என்றாள். கைகளை நீட்டி “ஏன்?” என்றாள். களிமயக்கிலெனக் குழைந்தது குரல். “வேண்டாம்.” அவள் சிணுங்கலாக “ஏன்?” என்றாள். அவன் “நான் செல்கிறேன்” என்றான். “விளையாடாதீர்கள்!” அவன் தன் ஆடையை சீரமைத்தான். அவ்வசைவிலேயே அவனிடமிருந்து அனல் அகன்றுவிட்டதை அவள் உணர்ந்துகொண்டாள். கையூன்றி எழுந்து “ஏன்?” என்றாள். பெருமூச்சுடன் “வேண்டாம்” என்றான்.

அவள் முகம் சிவந்து சீற்றம்கொண்டது. எழுந்து நின்றபோது கனல்கொண்ட பொற்கலங்களெனச் சிவந்திருந்த இரு முலைகளும் கருங்குவளை மொக்குகளுடன் எழுந்தமைந்தன. “என்ன ஆயிற்று, மூடா?” என்றாள். சினமும் உதடுகளை எரிந்துருகச் செய்யும். “நான் செல்கிறேன்” என்றான். “என்ன ஆயிற்று உனக்கு? அறிவிலியா நீ? இல்லை, உன் தந்தையைப்போல ஆணிலியா?” அவன் அச்சினச்சொற்களால் முழுமையாக நிலையமைந்தான். புன்னகையுடன் “அறியேன், ஆனால் இத்தருணத்தில் இது வேண்டியதில்லை என எண்ணுகிறேன்” என்றான். “சொல், ஏன்? அதை நான் அறிந்தாகவேண்டும்” என்றாள். “ஏனென்றால் இதற்குப்பின் எனக்கு எஞ்சுவதொன்றில்லை.”

அவள் விழிகள் சுருங்கின. அவன் “நீ என் காமத்தின் முழுமை. முழுமை என்பது இறப்பு” என்றான். அவள் புன்னகை செய்தாள். பல் தெரியாமல் இதழ்நீண்டு கன்னங்களில் குழிகள் எழ விழிகளில் கூர் ஒளிவிட. நஞ்சுமிழப் புன்னகைக்கும் கலையறியாத பெண்கள் உண்டா என்ன? “அஞ்சுகிறாயா?” அவன் அவள் விழிகளை நோக்கி “ஆம்” என்றான். “நீ மூடன். உன் உளம் அளிக்கும் மாயங்களை நம்புகிறாய் என்றால் எப்போதும் எதையும் நீ அறியப்போவதில்லை” என்றாள். “ஆம், ஆழுள்ளம் சொன்னதுதான்” என்றான். “என்ன?” அவன் அவளை விழிவிலக்காமல் நோக்கினான். நோக்கமுடியும்வரைதான் வெல்லமுடியுமென அவன் அறிந்திருந்தான். “இது அவருக்கு எதிரானது.”

அவள் அதை உணர்ந்திருந்தாள் என விழிகளில் வந்த வஞ்சம் காட்டியது. எனினும் “எவருக்கு?” என்றாள். “இளைய யாதவருக்கு.” அவள் இதழ்கள் மேலும் கேலியைக் காட்டி ஒருபக்கமாக வளைந்தன. “அப்படியா?” என்றாள். அதிலிருந்த நஞ்சின் கடலை முற்றறிந்தும் அவன் விழிகளை விலக்கவில்லை. “ஆம், காமத்திலாயினும் நான் தேடுவது ஒன்றையே. அதை இங்கே முற்றறிந்துவிட்டேன் என்றால் அவர்முன் நீட்ட ஓர் ஒழிந்த கலம் எனக்கு எஞ்சியிருக்காது.” அவள் கழுத்திலொரு நரம்பு துடித்தது. “வீணன்… நீ ஒரு அடிமை” என்றாள். “ஆம்” என்றான் அவன். “மேலும் மேலும் அதை உணர்கிறேன். முற்றடிமை. பிறிதொன்றுமில்லை.”

“மூடா, நீ அறியக்கூடுவன அனைத்தையும் இங்கு இதனூடாக அறியலாம். நீ தேடுவன அனைத்தும் உன்னுள் இருந்து ஊறி எழுந்து உருக்கொண்டு உன் நானென நின்றிருக்கின்றது இதோ!” அவன் தன் விழிகள் அதுவரை இருந்த முயற்சியின் சலிப்பை இழந்து இயல்பாக அவளை நோக்குவதை உணர்ந்தான். “ஆம், ஆனால் நான் அதை அவரிடமிருந்தே பெறவிழைகிறேன்.” அவள் கண்கள் மீண்டும் கனிவுகொண்டன. “நான் சொல்வதை கேள். அவரிடம் இருந்து நீ அதை அறியப்போவதில்லை. உனக்கு அது சொல்லப்படும். அதை கேட்கும்பொருட்டு நீ இழப்பவை பெருகி உன்னை நிறைப்பதனால் இறுதிக்கணம் வரை நீ அதை உணரமாட்டாய்.”

அவன் பெருமூச்சுடன் விழிகளை விலக்கிக்கொண்டான். “ஆம், அவ்வாறே நிகழலாம். இறுதிக்கணம் வரை அது எனக்கு திறக்காமலாகலாம்.” அவள் உரக்க “திறக்காது. அப்பொற்கதவத்தை பார்ப்பாய். அதன் தாழைத் தொடுவாய். விலக்கி நுழைய தோள்வல்லமை இல்லாது இப்பக்கமே நின்றிருப்பாய். அது நஞ்சினூடாக அறிதல். இதோ, இது இனித்தினித்து அறிந்து அதுவாதல். இதைத் துறந்து சென்றால் நீ அடைவதேதென்று அறிவாயா? இழப்புகள்… இழப்புகளுக்குப் பின் மானுடன் இயல்புநிலை மீளவே முடியாது. மூடா மூடா மூடா… எப்போது இந்த இருள்வான்போல்  வந்துசூழும் அறியாமையை அடைந்தாய்?” என்றாள்.

அவன் தலைதாழ்த்தியபடி “இழப்பின், துயரின் முற்றிருள்தான். அதை நான் முன்னரே கண்டுவிட்டேன்” என்றான். அவள் அருகே வந்து அவன் கைகளை பற்றிக்கொண்டாள். “சொல், வேறென்ன? வேறென்ன உனக்கு?” அவன் தாழ்ந்த குரலில் “அறியாமைதான். நான் அவர் முன் பிறந்துவிழுந்த பைதலின் வெற்றுள்ளத்துடன் நிற்க விழைகிறேன். சீம்பாலின் குருதிச்சுவையுடன் அவர் சொற்கள் எனக்கு அருளப்படவேண்டுமென எண்ணுகிறேன். முற்றறியாமை கொண்டு ஆசிரியனை அணுகாதவன் எதையும் அறிவதில்லை. தன் ஆணவத்தையே அவருடைய சொற்களென எண்ணி மயங்குவான். தன் குருதியை சுவைத்துச் சுவைத்து இறக்கும் புண்பட்ட ஊனுண்ணியென அழிவான்” என்றான்.

“அவன் ஆசிரியன், ஒப்புகிறேன்” என்று அவள் அவன் கைகளை எடுத்து தன் தோள்கள் மேல் வைத்துக்கொண்டாள். “ஆம், அவன் மெய்மையைச் சூடி நின்றிருக்கும் ஞானி. ஞானமென்றேயாகி தன்னைக் காட்டும் யோகி. மெய்மையென்று தன்னுடல் ஒளிர நின்றிருக்கும்பொருட்டு மண்ணில் துளித்துச் சொட்டிய பிரம்மம்.” அவன் விழிகளை நோக்கி “ஆனால் இங்குள்ளது உன் மேல் கனிந்த தந்தை. உன்னை அழைத்துச்செல்லும் காதலி. உனக்காகவே கனிந்த மெய்மை. எண்ணிப்பார், தெய்வங்களை விடவா ஆசிரியன் அணுக்கமானவன்? பிரம்மத்தைவிடவா அவன் முழுமையானவன்?” என்றாள்.

“ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். “தெய்வங்களென இவற்றைச் சமைப்பது என் தன்னிலைதான். பிரம்மமோ தன்னை பிற ஒன்றென்றே காட்டும் தன்மைகொண்டது. ஆசிரியன் மட்டுமே பிறிதொன்றென முழுமைகொண்டு நின்று நம்மை அவனிடம் இழுப்பவன். நானறிந்தது ஒன்றே, அனைத்தையும் உதறி ஆசிரியனை அணுகாதவனுக்கு சொல்திறப்பதில்லை.” அவள் மெல்ல தளர்ந்தாள். மென்தோள்களில் ஒன்று சரிய இடை ஒசிய தொடை ஒன்று மேலெழுந்தது. “என்ன சொல்கிறாய் என்றே தெரியவில்லை. மானுடர் இப்படி சொல்லக்கூடுமென்றே எண்ணமுடியவில்லை.” அவன் “நானும் இதை ஏன் சொல்கிறேன் என்று எண்ணி வியக்கிறேன். ஆனால் நான் பிறிதொன்றுமில்லை. நான் கலம். இதில் அமுது நிறையவேண்டுமென்றால் முற்றொழியவேண்டும். முழுத்தூய்மை கொள்ளவேண்டும். அதன்பொருட்டே இந்த அல்லல்களும் தேடல்களும். அது ஒன்றே தெளிந்து தெளிந்து வருகிறது” என்றான்.

அவன் கைகளின் எடையை அவள் உணர்ந்தாள். வலக்கையை எடுத்து தன் முலைமேல் வைத்தாள். அக்கணமே விசையெழுந்து முன்னால் பாய்ந்து அவனை முலைக்குவைகள் அழுந்த மூச்சு சீற கைவளைத்து பற்றிக்கொண்டாள். அவன் அவளை பிடித்துத்தள்ளினான். மல்லாந்து நிலத்தில் விழுந்தபோது அவள் இடைநெகிழச் சுற்றியிருந்த ஆடையும் விலகியது. இருகைகளையும் விரித்து “அளிகூர்க!” என்றாள். “பொறுத்தருள்க!” என்றபடி அவன் திரும்பினான். “செல்லாதே… விழைவறிவித்தபின் விலக்கப்பட்ட பெண்ணின் பெருந்துயரை நீ அறியமாட்டாய்” என்றாள். அவன் மேலும் ஓர் அடி எடுத்துவைத்தான். அவள் விசும்பும் ஒலி கேட்டது. எடைகொண்ட கால்களுடன் அவன் மேலும் நகர அவள் சீறலென ஒலி எழுப்பி அழுதாள்.

அவ்வழுகையை அவன் கேட்டுக்கொண்டே சென்றான். நெடுந்தூரம். ஐந்து காலடிகளால் ஆன முடிவிலி. அழுகையொலியைக் கடப்பது எளிதல்ல. மலைப்பாறைகளை கட்டித்தூக்கும் வல்லமைகொண்ட மென்பட்டுநூல். மேலுமொரு அடி. அவள் சீற்றத்துடன் எழும் ஒலியை கேட்கமுடிந்தது. நாகமொன்று படமெடுத்ததுபோல மூச்சு. “நில், மூடா நில்!” அவன் திரும்பாமல் நின்றான். அவள் அவனை நோக்கி வந்து அவன் தோளைப்பற்றி திருப்பினாள். நீர்மை அனலென எரிந்த விழிகளை கண்டான். வெறித்த முகத்தில் பற்கள் சினத்தின் ஒளிகொண்டிருந்தன. “நீ என்னை சிறுமைசெய்தாய்… திரிந்த காமம்போல் நஞ்சு பிறிதில்லை என நீ அறிவாய்.”

“தீச்சொல்லிடுகிறாய் என்றாலும் ஆகுக! நான் என் முழுமையை அவருக்கு படைத்துவிட்டேன்” என்றான். அச்சொற்களால் அவன் உள்ளம் உவகை கொண்டெழுந்தது. “அதை உணரும்தோறும் நான் மேலும் மேலும் விடுதலை கொள்கிறேன். அழகியே, நான் இன்னமும் பிறக்கவே இல்லை. கருவறைக்குள் தொப்புள்கொடியால் உணவும் உயிர்ப்பும் கொண்டு உள்ளே உறைகிறேன். என்னை அவர் சுமக்கிறார். அவருடைய குருதி. அவருடைய உயிர். அவரே என் உணர்வுகளும் எண்ணங்களும். நான் எதற்கும் பொறுப்பல்ல இனி.”

“பெண்ணென்றாகுக நீ!” என்று அவள் சொன்னாள். “பெண்ணாகி அறிக நான் இன்றறிந்த இழிவை. பெண்ணென்றாவதென்றால் என்னவென்றறிவாயா, பேடியே? நுரைத்துப் பெருகும் காமம்கொண்டாலும் தன்னிடம்கூட சொல்லமுடியாதவள். அளித்தாலன்றி அடையமுடியாதவள். இசைநிறைந்து ததும்பினாலும் விரல் நாடி காத்திருக்கவேண்டிய யாழின் தவிப்பென்ன என்று முற்றறியவேண்டும் நீயும். செல், உருகி நின்றிரு! சிறுமைகொண்டு அழல்கொள்! சிறுத்து நிழலென நிலம் படி! எஞ்சும் ஆணவத்தை எரித்து எழு! அன்றறிவாய் நான் இக்கணம் யாரென்று.”

அர்ஜுனன் கண்களை மூடி அசையாமல் நின்றான். அவன் உடல் விதிர்த்துக்கொண்டே இருந்தது. ஆடைகளை எடுத்துக்கொண்டு அவள் திரும்பிச்செல்வதன் ஓசை மட்டும் கேட்டது. அவன் விழிதிறந்து நோக்கியபோது பட்டுச்சேலையை தோளிலிட்டபடி அவள் குழல்அள்ளிச் சுழற்றி முடிவதை கண்டான். ஆடையை இடைசுற்றிவிட்டு திரும்பிநோக்காமல் சென்று மறைந்தாள். அவள் கழற்றி வீசிய குழை கீழே ஒரு துளிப் பொன் சொட்டியதென கிடந்தது. ஓர் உதிர்ந்த மலர். வான்பறவை ஒன்றின் இறகு.

அவன் குனிந்து அதை எடுக்கப்போனபோது தன் உடலை அள்ளிப்பற்றித் தொங்கிய முலைகளை உணர்ந்தான். கைவைத்தபோது அவற்றின் கரியமுனைகளை குழந்தையின் விரலென தொட்டான். இடை மெலிந்து பின்குவை பெருத்திருந்தது. கைகள் குழைந்தன. தொட்டபோது முகம் மென்மைகொண்டிருந்தது. நான் என ஒரு சொல். மறுகணம் பொருந்தா ஆடையை அணிந்திருப்பதுபோல அகம் கூசியது. அதைக் கழற்றி வீசிவிடவேண்டும். தசைகிழித்து நரம்புகளை உரித்து எறிந்துவிட்டு ஓடவேண்டும். ஒருமுறை விதிர்த்தான். வாயுமிழவேண்டுமெனத் தோன்றியது. குனிந்து தன் உடலை மீண்டும் நோக்கியதுமே நெஞ்சு அதிர்ந்து பின்னடைந்தது. கண்களை மூடி “இல்லை, இல்லை” என சொல்லிக்கொண்டான்.

பின்னர் மெல்ல தளர்வுடன் பின்னடைந்து மீண்டும் பீடத்தில் அமர்ந்துகொண்டான். அந்த அமர்கையிலேயே தன் உடலை பிறிதென்று உணர்ந்தான். ஒசிந்து அமைந்திருந்தது இடை. தோள் தழைந்து கைகள் மடியிலிருந்தன. இது என் உடல். இது நான் நிறைந்த கலம். இவ்வுடலல்ல நான். இது நான் சூடிய உருவம். மாற்றுருவம் கொண்டவன் உள்ளே மாறுவதில்லை. ஆனால் என்னை எதிர்கொள்ளும் விழிகளில் நான் பெண். அவர்கள் என்னை நோக்குகையில் எனக்குள் ஒளிந்திருந்து திகைப்பதே நான். நான் என நான் எண்ணுவது அவர்கள் அறிவதை அல்லவென்றால் நான் என சொல்லும் சொல்லுக்கு என்ன பொருள்? இருமுனைகளில் இருபொருள்கொண்ட சொல் எப்படி துடிதுடிக்கும்!

தலை நரம்புகள் முறிந்த யாழ்த்தந்திகளென துடித்தன. ஆடியை நோக்கவேண்டும் போலிருந்தது. விடாயை எண்ணத்தால் வெல்லமுயல்வதுபோல அதை அடக்கி பின் விடாயே வெல்ல எழுந்து சென்று அறைமூலையில் ஒரு குளிர்ச்சுனை என ஒளியலை அணிந்து நின்றிருந்த  சுவராடியில் தன்னை நோக்கினான். முதலில் அறியாப் பெண்ணொருத்தி திரைவிலக்கி வாயிலினூடாக அவனை நோக்கி திகைத்தபடி வருவதைப்போலவே தோன்றியது. யாரவள் என்று சித்தம் வினவியது. சரிந்த குழலைச் சீரமைத்த அசைவில்தான் அது தான் என உணர்ந்தான்.  திடுக்கிட்டு பின்னடைய அவள் அவனை நோக்கி திகைத்து தான் பின்னடைந்தாள். பின்னர் அச்சமும் ஐயமும் கொண்டு அவனை அணுகிவந்தாள். இருவரும் விழியொடு விழி தொட்டு அசைவிழந்து நின்றனர். பின் இருவருமே அஞ்சி விலகி ஓடினர்.

மூச்சிளைப்புடன் அவன் கண்களை மூடி பீடத்தில் அமர்ந்தான். அப்பால் நின்று அங்கே அமர்ந்திருக்கும் அவனை நோக்கினான். அவள் அழகி என தோன்றியது. அவள் எண்ணைக் கருங்கற்சிலையென ஒளிகொண்டிருந்தாள். நெளிவென்றும் ஒசிவென்றும் வளைவென்றும் குழைவென்றும் குவையென்றும் கரவென்றும் உடல்நிறைந்திருந்தாள். அவன் தன் முலைகளை தொட்டான். இடைவரை கையை ஓட்டினான். மீண்டும் எழுந்து ஆடியை நோக்க விழைந்தான். இம்முறை உடனே எழமுடிந்தது. கால்கள் பின்ன இடை வளைய மெல்ல நடந்தபோது விம்மியமைந்தன முலைமேடுகள்.

ஆடிக்குள் இருந்து அச்சமும் தயக்கமும் ஆர்வமும் கொண்ட ஒரு பெண் எழுந்து வந்து நீள்விழிகளால் அவனை நோக்கினாள். விழிதொட்டபோது அவள் நோக்கின் கூர் கண்டு அவன் உள்ளம் எழுந்தது. மேலும் அருகணைந்து அவளை அன்றி பிறிதிலாத விழிசூடி நின்றான். மலர்களால் அழகுறும்கொடி என விழிகளால் அழகுகொண்டிருந்தாள். அவள் எவள்? அர்ஜுனை? விஜயை? அவன் ஃபால்குனையை எண்ணினான். அது மாற்றுரு. இது தன்னுரு. உருவே அகமென்றால் இதோ என் உள்ளூர பெண் ஊறி எழுந்துகொண்டிருக்கிறாள். அச்சில் உருக்கி ஊற்றப்படுகிறேன். உறைந்து உருக்கொண்டெழுவேன். அழகி. இந்த முகம், இந்தக் கன்னங்கள், இவ்வுதடுகள், இந்தக் கழுத்து. அழகி. இது நான். அழகுபொலிந்தெழுந்தவள் நான். அவள் முலைகள் விம்மித்தணிந்தன. விழியோரம் ஈரம் கொண்டது.

KIRATHAM_EPI_60

புன்னகையுடன் நடந்து மீண்டும் வந்து தன் பீடத்தில் அமர்ந்தாள். அழகி என்னும் சொல்லாக இருந்தது உள்ளம். அப்போது பிறர் தன்னை நோக்குவதை விழைந்தாள். விண்வில்லென ஏறிடும் விழிகள் நடுவே ஒளிகொண்டு எழவேண்டும். மீன்கோடிகளை சூடிய கங்கையென அவ்விழிகளை அணிந்து நெளிகொள்ளவேண்டும். நெஞ்சு படபடத்தது. சுவர்களிலெல்லாம் விழிகள் திறந்தன. நிழல்களெல்லாம் அவளை நோக்கி நின்றன. நோக்குக நோக்குக நோக்குக! என்னை நோக்குக உலகே! என்னை நோக்குக காலமே!

அவள் அகக்குரல் கேட்டு வந்ததுபோல வாயில் திறந்து உள்ளே வந்து பணிந்த கந்தர்வன் விழிகளில் எதையும் காட்டவில்லை. அர்ஜுனன் இனிய பெண்குரலில் “நான் தேவர்க்கரசரின் அவைக்கு செல்லவேண்டும்” என்றான். கந்தர்வன் “தேர் காத்திருக்கிறது” என்றான். “எப்படி தெரியும்?” என்றான் அர்ஜுனன். “தேவபாகர் வந்தார். அவர் வந்து காத்து நிற்பதாக உங்களிடம் சொல்லும்படி சொன்னார்.” சிலகணங்கள் அவன் கந்தர்வனை நோக்கியபடி விழிநிலைத்தான். பின் இமைசலித்து தன்னை எண்ணினான். “ஆம்” என்றபடி எழுந்துகொண்டான்.