மாதம்: திசெம்பர் 2016

நூல் பன்னிரண்டு – கிராதம் – 73

[ 20 ]

பீதர்நாட்டு வணிகர்களுடன் மகாநாகம் வந்து காமரூபம் வழியாக இமயமலையடுக்குகளுக்குமேல் ஏறிய அர்ஜுனன் அங்குதான்   வெண்சுடர் கின்னரர்களின் உச்சிநிலம் குறித்து கேட்டறிந்தான். பீதவணிகர் ஆண்டுதோறும் கோடைகாலத்தின் தொடக்கத்திலேயே அத்திரிகள் சுமக்கும் வணிகப்பொருட்களுடன்  மலையடுக்குகள்மேல் ஏறிச்சென்று  இமயமலைச்சரிவுகளில் அமைந்த ஆயிரத்தெட்டு சிற்றூர்களில் வாழ்ந்த மலைமக்கள் வந்துகூடும் ஏழு அங்காடிகளை சென்றடைந்தனர். தவளம், சுஃப்ரம், பாண்டுரம், ஸ்வேதம், சுக்லம், அமலம், அனிலம் என்னும் ஏழு சந்தைகளும் ஆண்டுக்கொருமுறை கோடைப்பருவத்தின் இறுதி இரண்டு வாரங்களில் மட்டுமே கூடின. கோடை முழுதும் மலைக்குடிகளின் விழவுக்காலம்.

பீதவணிகர்  உலோகப்பொருட்களையும் ஆடைகளையும் அணிகலன்களையும் விற்று நறுமணப்பொருட்களையும் கவரிமான்மயிரையும் மலைக்காளைத்தோலையும் அருமணிக்கற்களையும் மாற்றாக வாங்கிக்கொண்டு மீண்டனர். அப்பொருட்களை காமரூபர்களுக்கும் நாகர்களுக்கும் விற்று பொன்னாக ஆக்கிக்கொண்டு கடலோரங்களில் அமைந்த தங்கள் வணிகச்சிற்றூர்களுக்கு மீண்டனர்.  கின்னரர்களிடமிருந்து மலைமக்கள் பெற்று வணிகர்களுக்கு விற்கும் அருமணிகளுக்கு பன்னிரண்டாயிரம் மடங்கு விலை அளித்தனர் யவனர். “தெய்வங்களின் கண்கள்” என அவற்றை யவன மணிநோக்கிகள் சொன்னார்கள். அச்செல்வத்தால் பீதர்களின் கடற்கரைச்சிற்றூர்கள் செழித்துக்கொண்டிருந்தன.

“மழையெனப் பெய்வது விண்ணில் பரந்த நீர்.  மழையுடன் வெயிலெழ விண்வில் வளையும் பொழுதுகளில் வான்நிறையும் தேவர்கள் அப்பல்லாயிரம்கோடித் துளிகளில் சிலவற்றை மட்டும் கைகளால் தொட்டு எடுக்கிறார்கள். உருவிலிகளாகிய அவர்கள் மண்ணின் களியாட்டை நோக்கி மகிழும்பொருட்டு அவற்றை விழிகளென்றாக்கி சூடிக்கொள்கிறார்கள். வெண்பற்களென்று அணிந்து சிரிக்கிறார்கள். மணிகளென அள்ளி வீசி விளையாடுகிறார்கள். அவை ஆலங்கட்டிகளாக மண்ணில் விழுகின்றன” என்றான் பீதர்களுடன் சென்ற காமரூபத்துப் பாணன். அவர்களுடன் பொதிக்காவலனாக வில்லேந்தி அர்ஜுனன் சென்றான். செல்லும் வழியெங்கும் வெண்சுடர் கின்னரர்களைப்பற்றிய பேச்சே வணிகர்களிடம் தொடர்ந்தது.

“அவற்றில் சில தேவர்களின் ஆடைகளில் தங்கிவிடுகின்றன. அவர்கள் ஏழாம் வானை அடையும்போது அங்கிருக்கும் ஒளியை தாம் சூடிக்கொண்டு அவை சுடர்கொள்கின்றன. விண்ணவர்நாட்டுக்குள் நுழைவதற்குமுன் தேவர்கள் அவற்றை உதறிவிடுகிறார்கள். அவை அருமணிகளாக  ஒளியுடன் உதிர்ந்து பனியிலும் பாறையிடுக்கிலும் மின்னிக்கிடக்கின்றன. அவற்றையே கின்னரர்கள் தொட்டு எடுத்து சேர்க்கிறார்கள். மலையிறங்கி வந்து இம்மலைமக்களுக்கு அளிக்கிறார்கள்” என்றான் பாணன்.  “மலையுச்சியில் வாழும் மானுடர் அறியவொண்ணா கின்னரர்களின் வழித்தோன்றல்கள் என இம்மலைமக்கள் தங்களை எண்ணுகின்றனர். கின்னரஜன்யர் என்பதே பதினெட்டு பெருங்குலங்களும் நூற்றெட்டு குடிகளுமாகப் பிரிந்து உச்சிமலைச்சரிவுகளில் வாழும் இவர்களுக்குரிய பொதுவான பெயர்.”

கின்னரர் அன்றி பிறருக்கு அம்மக்கள் வரியோ கப்பமோ கொடுப்பதில்லை. அவர்களின் சிற்றூர்மன்றுகளில் கின்னரமூத்தார்கள் வெண்புகைச் சிறகுகளுடன் பனிநுரைக் குஞ்சியுடன் முப்பிரிவேல் ஏந்தி வெள்ளெருதுமேல் ஏறி அருள்புரிந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களின் காலடியில் எட்டு கால்கைகளுடன் பெருவயிறழுந்த ஊர்ணநாபன் என்னும் அரக்கன் மல்லாந்து நோக்கி தொழுது கிடந்தான்.  முழுநிலவுநாட்களில் கின்னரர்கள் நிலவொளியில் பறக்கும் வெண்பஞ்சுத்துகள்கள்போல வந்திறங்கி அவர்களின் கன்னியரை கனவுக்குள் புகுந்து உளம் மயக்கி புணர்ந்து மீண்டனர் என்றனர் குலப்பாடகர்.

கின்னரஜன்யரில் குழவி  பிறக்கையில் முதல்வினா விழிநிறமென்ன என்பதாகவே இருந்தது. பச்சைமணிவிழி என வயற்றாட்டி சொன்னால் அக்கணமே அதன் தந்தை கைகளை விரித்து வடக்குமலையுச்சிகளை நோக்கி “தேவர்களே, கின்னரரே” என்று கூவி அழுவான். பிறர் அவனைச் சூழ்ந்து கூச்சலிட்டு வாழ்த்தி கொண்டாடுவார்கள். அன்று அவன் ஒரு கொழுத்த கன்றை அறுத்தாகவேண்டும்.   பச்சைமணிவிழிகள் அமைந்தவர்கள் மட்டுமே அக்குலங்களில் உயர்ந்தோர் என்று கொள்ளப்பட்டனர். அவர்களுக்கே மன்றமைத்து சொல்லுசாவும் தகுதி இருந்தது. தாங்கள் கின்னரகுருதிகொண்டவர்கள் என்பதை காட்டும்பொருட்டு அவர்கள் அனைவரும் தங்கள் தலையணிக்குமேல் வெண்ணிற நாரையிறகொன்றை சூடியிருப்பார்கள். குடித்தலைவர்கள் கவரிமான்மயிர் குச்சத்தை அணிந்திருப்பார்கள்.

அவர்கள் அனைவரும் கடலோரத்தின் பறக்கும் மலைகளில்தான் முன்பு வாழ்ந்துவந்தனர் என்று அவர்களின் குலக்கதைகள் கூறின. ஊர்ணநாபன் என்னும் அரக்கனின் வழிவந்தவர்கள் அவர்கள்.  பெருவயிற்றிலிருந்து எழுந்த எட்டு கைகள் கொண்ட சிலந்தி வடிவன் அவன். வயிற்றில் விழிகொண்டவன்.  பறக்கும் மலைகளின் அரசியான மகாசிகையின் நடுவே இருந்த உக்ரஸ்தூபம் என்னும் குன்றின்மேல் அவன் வாழ்ந்தான். பறக்கும் மலைகளில் எங்கிருந்தாலும் அவனை காணமுடிந்தது. பறக்கும் மலைகளையும் அவற்றுக்குக் கீழே அலையடித்த கடலையும் அவன் தன் திசையறியும் பெருவிழிகளால் நோக்கிக்கொண்டிருந்தான்.   தன் உடலில் இருந்து பல்லாயிரம் வெள்ளிச் சரடுகளை நீட்டி மலைகள் அனைத்தையும் தன்னுடன் இணைத்துக்கொண்டிருந்தான்.

அடங்காப்பெரும்பசி கொண்டிருந்த அவன் தன்னை ஊட்டிப்புரக்கும் குடியொன்றை அமைக்கும்பொருட்டு  மலைப்பாறைகளில் ஒட்டியிருந்த சிப்பிகளின் வாயைத்திறந்து அதற்குள் தன் விரல்நுனியில் எழுந்த எச்சில்பசையை துளித்தான். அவை கருவுற்றுப் பிறந்த மைந்தர்கள் பெருகி அவன் குடியென்றாயினர். அவர்களுக்கு சூக்தர் என்று பெயர் அமைந்தது. அவர்கள் அனைவரையும் அவன் தன் நுண்வலையால் பிணைத்திருந்தான். அவர்கள் எங்கு சென்றாலும் எவருடனிருந்தாலும் அவனுடைய வலைநுனியில்தான் இருந்தனர். அவர்களின் அசைவுகளை அவன் அறிந்தான். அவர்களின் எண்ணங்களையும் அச்சரடினூடாக அவன் உணர்ந்துகொண்டிருந்தான். வலைச்சரடு அவர்களுக்கு ஆணையிட்டது, கண்காணித்தது, எல்லையமைத்தது.

சூக்தர் கடற்பாறைகளில் தொற்றிச் சென்று மீனும் சிப்பியும் பொறுக்கியும் மலையுச்சிகளில் தேனும் ஊனும் திரட்டியும் உணவு கொண்டுவந்து தங்கள் குடிமூதாதையான ஊர்ணநாபனுக்கு படைத்தனர். அவன் உண்டதுபோக மிச்சிலை தாங்கள் உண்டனர். எட்டு கைகளில் இரண்டு கைகளால் இடைவெளியில்லாமல் அவன் உண்டான். உணவு போதாமலானால் அவன் அவர்களையே பிடித்து உண்டான். அவனை தெய்வமென்றும் மூதாதை என்றும் கொடியபகை என்றும் அக்குடி எண்ணியது. அவர்களின் குடிமன்றுகளில் அவன் உருவை பாறையில் பொறித்து வழிபட்டனர். மைந்தர் பிறந்ததும் கொண்டுசென்று அவன் காலடியில் வைத்து வணங்கி மீண்டனர். கனவுகளில் அவன் பசைச்சரடை இழுத்து அவர்களை அருகணையச்செய்து தூக்கி உண்பதைக் கண்டு அலறி விழித்து உடல்நடுங்கினர்.

ஒருமுறை விண்ணில் ஒளிவடிவாகச் சென்ற தேர் ஒன்றை ஊர்ணநாபன் கண்டான். பசிகொண்டிருந்த அவனுக்கு  ஏழு வெண்குதிரைகள் இழுக்க உருண்டு சென்ற அது ஒரு பெரும் பூச்சி என்று தோன்றியது. அவன் தன் வெள்ளிச்சரடை வீசி அத்தேரைப்பற்றி இழுத்தான். அதிலிருந்தவன் அனல்வடிவ உடல்கொண்டிருந்தான். தேர்ச்சகடங்கள் அசைவிழக்க அவன் திரும்பி நோக்கி “யாரது?” என்றான். “நான் ஊர்ணநாபன். எனக்கு நீ இன்று இரை.” அவன் புன்னகைத்து “அரக்கனே, நான் விண்ணாளும் தேவன். இடிமின்னல்களை ஆள்பவன். நீ சிறியவன், என்னை விடு” என்றான்.

“பசியே எனக்கு விழி” என்றபடி ஊர்ணநாபன் அவனைப் பிடித்து இழுக்க அவன் சினந்து தன் வாளை உருவினான். மலைகள் அதிரும்படி இடி முழங்கியது. எட்டுநாக்குகளுடன் மின்னல் சுழன்றெழுந்தது. மின்வாளால் விண்ணரசன் ஊர்ணநாபனின் எட்டு கைகளையும் வெட்டினான். நீலக்குருதி பீரிட்டு வழிய அவன் மகாசிகையின் உச்சிப்பீடத்தில் விழுந்தான். தன் வலைச்சரடுகளை வீசி  மலைமேல் தொற்றிக்கொண்டான். சினம் பெருக பெருங்குரலில் கூவியபடி அவன் பறக்கும் மலையை சிறகடித்தெழச்செய்து விண்ணரசன்மேல் போர்கொண்டு சென்றான்.  அவன் சரடால் பிணைக்கப்பட்ட அனைத்து மலைகளும் சிறகுவீசி அவனுக்குப் பின்னால் நிரைகொண்டு சென்றன.

“எதிரியை தாக்குங்கள்” என ஊர்ணநாபன் ஆணையிட்டான். அவன் வலைச்சரடுகளினூடாக அவ்வாணை அத்தனை சூக்தர்களையும் சென்றடைந்தது. அவர்கள் சிப்பிநஞ்சு பூசிய வாளிகளை எய்து விண்ணவனுடன் போரிட்டனர். ஊர்ணநாபன் தன் வயிற்றில் ஆறாப்பசியாகக் கொதித்த நஞ்சை விண்ணவன் மேல் உமிழ்ந்தான். விண்ணரசனின் ஏழு புரவிகளில் ஒன்று கருகி புகைந்து அலறிவிழுந்தது. அவன் தேர்ப்பாகனின் இடக்கரம் கரியாகியது. அதுவரை விளையாட்டு எண்ணம் கொண்டிருந்த விண்கோ இடியோசை எழுந்து முகில்கணங்கள் அதிர ஊர்ணநாபன் அமர்ந்திருந்த மலைகளின் சிறகுகளை வெட்டினான்.   அவை அதிர்வோசையுடன் கடலில் விழுந்தன. நீர்சிதற அலைவிரிய மூழ்கி மறைந்தன.

மலைகளிலிருந்த ஊர்ணநாபனை வானரசன் எட்டு துண்டுகளாக வெட்டினான். எட்டுதிசைகளிலாக அவன் உடல் சிதறி கடலில் விழுந்தது. ஊர்ணநாபனின் உடலுடன் தங்களைப் பிணைத்திருந்த சரடுகள் அறுந்து சூக்தர்கள் கடலில் விழுந்தனர். வாழ்நாளெல்லாம் அறுபடாச் சரடால் ஆட்டுவிக்கப்பட்ட அவர்களால் அதன் தொடர்பில்லாமல் தனித்துச்செயல்பட இயலவில்லை.  நீச்சலறிந்தவர்கள்கூட அலைகளில் மூழ்கித் தவித்தனர். அலைகளால் அள்ளி கரைகளில் ஒதுக்கப்பட்ட சூக்தர் ஒருவரை ஒருவர் நோக்கி  கதறினர். ஒரு முதுசூக்தர் தன் மைந்தனின் உடலில் அறுபட்டு நீண்டிருந்த சரடுடன் தன் சரடை பிணைத்தார். அதைக்கண்ட பிற சூக்தர்கள் தங்கள் உடலில் எஞ்சியிருந்த சரடுகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து மீண்டும் ஒரு வலையென்றாயினர். அவ்வலை அவர்களில் எவரும் தனியாக மூழ்காது செய்தது. கரையணைந்தவர்கள் பிறரை இழுத்து கரைசேர்த்தனர்.

தவளைமுட்டையென வெள்ளிச்சரடால் இணைக்கப்பட்ட சூக்தர்களின் திரள் எங்கு செல்வதென்றறியாமல் கரையில் நின்று ஒருவரோடொருவர் முட்டி தன்னுள் தானே ததும்பி அலைக்கழிந்தது.  வான் நோக்கி கைகளை விரித்து “எந்தையே! எங்கள் அரசே!” என ஊர்ணநாபனை எண்ணி அலறி அழுதது. “எண்கரத்தோய், வயிற்றுவிழியுடையோய்! எழுக, எங்கள் தேவனே! உங்கள் குடிகாக்க எழுக, வேந்தே!” என்று கூவி மன்றாடியது. அலைநக்கிய கரையிலும் பாறைகளிலும் நீலநிறப்பெருக்காக ஊர்ணநாபனின் நஞ்சு வழிந்துகிடப்பதைக் கண்டனர்.  மரங்களின் இலைகளில்இருந்து கொழுத்த துளிகளாக அது சொட்டியது. அவர்கள் அதை அள்ளி தங்கள் உடலெங்கும் பூசிக்கொண்டு கதறி அழுதனர். “எளியோருக்கு இனி எவர்? எங்கள் குடிகாக்கும் கோல் இனி எது?” என நெஞ்சிலறைந்து முறைகூட்டினர்.

அவர்கள் மேல் வானிறைவனின் சினம் இடியோசையாக இறங்கியது. மின்பட்டு பிளந்த பாறைகள் உருண்டுவந்து அவர்களை கொன்றன. இறந்தவர்களின் உடலில் இருந்து சரடுகளை அறுத்தெடுக்கையில் அவர்கள் துயர்மீதூற தலையில் அறைந்துகொண்டு விண்நோக்கி பழிகூவி அழுதனர். அறுபட்ட சரடின் நுனியை தங்கள் கைகளில் ஏந்தி அதை நோக்கி நோக்கி ஏங்கி கண்ணீர்விட்டபடி விலகிச்சென்றனர்.  பின்னர் அந்த அறுநுனிகளை பிற அறுநுனிகளுடன் பிணைத்துக்கொண்டு ஆறுதலடைந்தனர். அறுபடும்தோறும் பிணைக்கவே அவர்களின் சரடுகளின் முடிச்சுகள் மேலும் மேலும் பெருகின. ஆயிரம் கால்கள் கொண்ட ஒற்றைவிலங்கென அவர்கள் நடந்தனர்.

இந்திரனின் வஞ்சத்தை மீறி எஞ்சியவர்கள் வடக்கே சென்று புறக்குடிகள் வாழும் சிற்றூர்களை அடைந்தனர்.  சென்ற இடங்களில் எல்லாம் அவர்களின் உடலில் இருந்து சொட்டிய நஞ்சு ஊறி மக்களும் கால்நடைகளும் உயிர்துறந்தனர். அவர்களின் காலடிபட்ட செடிகள் கருகின. ஒற்றைத்திரளென வந்த அம்மக்களை கைகளும் கால்களும் தலைகளும் பெருகியிருக்க ஊர்ந்து வரும் கடல்வாழ்பெருவிலங்கு என்றே தொல்குடிகள் எண்ணின.  நாகர்களும் காடவரும் அவர்களை தங்கள் நிலங்களுக்குள் புகாமல் அம்புகளாலும் வேல்களாலும் கற்களாலும் துரத்தி அடித்தனர். அவர்கள் கடக்காதபடி ஆறுகளின் மேல் அமைந்த பாலங்களை அழித்தனர். அவர்கள் சென்ற காடுகளைச் சூழ்ந்து நெருப்பிட்டனர். அவர்கள் துயில்கையில் சூழ்ந்து வந்து அம்புகளால் வேட்டையாடினர்.

இறந்தவர்களை அறுத்திட்டுக்கொண்டு மேலும் முடிச்சிட்டு இறுகியவர்களாக சூக்தர்கள் தொடர்ந்து வடக்குமலை ஏறிச்சென்றனர். குளிரில் அவர்களின் முதியோரும் இளையோரும் இறந்தனர். மலைப்பாறை உருண்டும் காலிடறி ஆழத்தில் உதிர்ந்தும் ஒவ்வொருநாளும் இறப்பு நிகழ்ந்தது. ஆனால் வேறெங்கும் செல்ல திசை திறந்திருக்கவில்லை. சிப்பிகளையும் நத்தைகளையும் உண்ணும் வழக்கமிருந்தமையால் அவர்களுக்கு எப்போதும் உணவு கிடைத்தது. அவர்கள் மறைந்தும் மூழ்கியும் செல்ல சதுப்புநிலங்களும் மலைப்புதர்ச்சரிவுகளும் உதவின.

சூக்தர் ஒவ்வொருவரும் விழிகளை மூடி தங்கள் சரடின் மறுமுனையில் ஊர்ணநாபனே இருப்பதாக எண்ணிக்கொண்டனர். அவ்வெண்ணம் அவர்களின் அச்சத்தை அகற்றி ஊக்கமளித்தது. பின்னர் விழிதிறந்து அம்முனையில் தங்கள் குடித்தொகை இருப்பதைக் கண்டு ஏமாற்றம் கொண்டனர். நாளடைவில் அக்குடித்தொகையே ஊர்ணநாபன் எனத் தோன்றலாயிற்று. அச்சரடினூடாக அவர்கள் தங்கள் குடித்தொகையின் எண்ணங்களையும் உணர்வுகளையும் சொல்லின்றி அறிந்துகொண்டனர். எண்ணியிருக்கையில் எவரோ ஒருவர் “எந்தையே” என ஊர்ணநாபனை எண்ணி விழிநீர் சொட்டி அழுதபோது அக்குடியே விம்மலோசைத் தொகை எழ சேர்ந்து கலுழ்ந்தது.

பதினெட்டு மாதங்களுக்குப்பின்  மலைநாகர்களால் துரத்தப்பட்டு  தப்பிச்சென்று எஞ்சிய நாற்பத்தெட்டு ஆண்களும் முப்பத்தேழு பெண்களும் எழுபத்தொரு குழந்தைகளும் ஒரு பனிக்குகைக்குள் உடலோடு உடல் ஒட்டி ஒற்றைச்சரடால் பின்னப்பட்டு கூட்டுக்குள் பட்டுப்புழு என ஒண்டி படுத்திருந்தபோது கின்னரரை கண்டனர். அவர்கள் பலநாள் உணவுண்டிருக்கவில்லை. குளிரில் அவர்களின் உடல் நடுங்கி பின் அடங்கி அனல்போல் எரியலாயிற்று. உலர்ந்த உதடுகளும் ஒளிவறண்ட விழிகளுமாக  வெட்டிக்குவித்திட்டு மட்கும் வாழைத்தண்டுகள்போல ஒற்றைத்தசைக்குவியலாக அவர்கள் கிடந்தனர். அப்போது ஒரு சிறுவன் அக்குகைவாயிலை சுட்டிக்காட்டினான். இன்னொருவன் திரும்பிநோக்கினான். வெண்ணிற ஒளியாக ஏழு கின்னரர்கள் மெல்ல அவர்களை நோக்கி வந்தனர்.

உடல் விதிர்க்க அவர்கள் அசைந்து விலக முயன்றனர். பின்னர் அறியாது கைகூப்பி கண்மூடினர். “எந்தையே எந்தையே” என ஊர்ணநாபனை எண்ணி உளம் கரைந்தனர். அந்த அச்சத்தின் விசை தாளமுடியாமல் அவர்களின் எஞ்சிய உயிர்விசையும் அழிந்தது. பின்னர் அவர்கள் விழிதிறந்தபோது கின்னர உலகில் இருந்தனர். வெண்ணிற ஒளியாலான சிறகுகளுடன் அவர்களைச் சூழ்ந்து பறந்த கின்னரர்கள் அன்னைமுலைப்பாலென இனித்த அமுதை அளித்தனர். கருக்குழி என வெம்மைகொண்ட ஆடைகளை போர்த்தினர். நீர்த்துளி நீரிலுதிரும் இசையில் இன்சொல் கூறினர். அவர்களின் கனிந்த விழிகள் விண்மீன்கள்போல அவர்களுக்குமேல் மின்னின. புன்னகைகள் மூழ்கிச்செல்லும் கடலாழத்தில் வளைந்து ஒளிகாட்டிச் செல்லும் மீன்களைப்போல எழுந்தமைந்தன.

அங்கே பன்னிருநாட்கள் வாழ்ந்தபின்னர் அவர்கள் மலைச்சரிவில் இருந்த இனியசோலை ஒன்றில் விழித்தெழுந்தனர். அங்கே வெம்மை ஊறும் ஏழு ஊற்றுகள் இருந்தன. அதைச் சூழ்ந்திருந்த மரங்களில் கனிகள் செறிந்திருந்தன. விழித்தெழுந்ததும் அவர்கள் தங்களிடம் என்ன நிகழ்ந்திருக்கிறதென எண்ணி வியந்தனர். சற்று கழித்தே தங்கள் உடலைப் பின்னிய சரடு முற்றிலும் அறுபட்டிருப்பதை உணர்ந்தனர். கனவில் கின்னரர்கள் தங்கள் சரடுகளை வெள்ளிக்கத்திகளால் வெட்டுவதைக் கண்டதை நினைவுகூர்ந்தனர். அஞ்சி நடுங்கி ஒருவரை ஒருவர் கைகளாலும் கால்களாலும் தழுவிக்கொண்டனர். அழுது அரற்றியபடி ஒற்றை உடற்திரளாக அங்கே கிடந்தனர்.

ஆனால் நெடுநேரம் அப்படி இருக்கமுடியவில்லை. பசிக்கையில் கைகளை விடுத்து அவர்கள் பிரிந்தாக வேண்டியிருந்தது.  உணவுண்டபோது முதல்முறையாக ஓர் இளைஞன் அவ்வுணவும் தானும் மட்டுமே தனித்திருக்கும் உணர்வை அடைந்தான். அது அச்சமா திகைப்பா இன்பமா என்று அறியாமல் தவித்தான். அத்துடன் அந்த உணர்வையும் தான் மட்டுமே அடைவதை அறிந்தான். திரும்பி ஆங்காங்கே கனிகளைப் பறித்து உண்டுகொண்டிருந்த தன் குடியினரைக் கண்டபோது அவர்கள் எவருக்கும் அவ்வுணர்வுகள் தெரியவில்லை என்று அறிந்து ஒரு துடிப்பை அடைந்தான். இனி அந்த இன்பத்தை ஒருபோதும் தன்னால் விடமுடியாதென்று அப்போது உணர்ந்தான்.

அவர்கள் செய்யவேண்டியவை அனைத்தும் அவர்களின் குலமூத்தாரின் கனவில் சொல்லப்பட்டிருந்தன.  அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உற்றாருடன் தனித்தனியாக தங்கவும் தங்கள் உணவை தாங்களே தேடி உண்ணவும் விழைந்தனர். எனவே மென்பாறைகளைக் குடைந்து தனித்தனியாக சிறு இல்லங்களை அமைத்தனர். இல்லங்கள் இணைந்து அச்சுனைக்கரையில் சிற்றூர் ஒன்று எழுந்தது. அதுவே அவர்களின் முதற்குடி.   அச்சிற்றூர் சூடகம் என அழைக்கப்பட்டது. அக்குடியிலிருந்து மேலும் மேலுமெனப்பெருகி ஆயிரத்தெட்டு ஊர்களாயின.

அவர்களின் உள்ளிருந்து சுனையாழத்து தலைப்பிரட்டைகள் என சொற்கள் வால்துடிக்க விழிதெறிக்க எழுந்து வந்தபடியே இருந்தன. முன்பு சொல்லாமல் உணர்ந்தவை அனைத்தையும் சொல்லி தெரிவிக்கவேண்டியிருந்தது. ஒரு சொல்லின் போதாமை பிறிதொரு சொல்லை உருவாக்கியது. சொல்பெருகி அவர்களின் மொழி செறிந்தது. சொல்லிச்சொல்லி நிறையாதபோது சொல்லலில் திறம்கொண்ட பாணர்கள் பிறந்துவந்தனர். சொல்கடந்து சொல்லும் பூசகர்கள் உருவாயினர்.

அவர்களின் கருவில் கின்னரர்களின் பச்சைவிழிகளும் பளிங்குநிறமும் கொண்ட குழவிகள் பிறந்தன. அவர்கள் தங்களை கின்னரஜன்யர் என்று சொல்லிக்கொண்டனர்.  அவர்களைத் தேடி ஒவ்வொரு கோடையிலும் கின்னரர்கள் மலையிறங்கி வந்தனர். கின்னரர்களுக்கும் மானுடர்களுக்கும் நடுவே தொடர்பாளர்கள் அவர்களே. கின்னரர்களிடம் பேசும் மொழி அவர்களிடம் மட்டுமே இருந்தது. தங்களை பிறர் பார்ப்பதை கின்னரர் விரும்பியதுமில்லை. கின்னரர் என எவருமில்லை என்றும் அது அக்குடிகளின் பாணர்களின் கதைகளில் வாழும் தேவர்களே என்றும் பீதவணிகர்களில் சிலர் எண்ணினர். அருமணிகள் கிடைக்கும் நிலத்தை பிறர் அறியாது காப்பதற்கு உருவாக்கப்பட்ட கதைகள் அவை என்றனர்.

[ 21 ]

கின்னரஜன்யரின் மலைச்சிற்றூர்கள் அனைத்தும் உச்சிப்பாறைமேல் கழுகுகள் கட்டிய கூடுகள்போல முகில்சூழ அமைந்திருந்தன. மலைப்பாறைகளை உருட்டி தங்கள் ஊர்களைச் சுற்றி காவலமைத்திருந்தனர். விரும்பாதவர்கள் மலையேறி வரக்கண்டால் அவர்களில் பத்துவயதான சிறுவர்களேகூட அந்தப் பாறைகளை உருட்டி கீழே செலுத்திவிடமுடியும். பன்னிருநாட்கள் பெருமழை என நில்லாது பொழியுமளவுக்கு அவர்களிடம் பாறைகள் இருந்தன. கோடைகாலத்தில் மலையாறுகளை வழிதிருப்பி படையென்றாக்கி செலுத்தவும் குளிர்காலத்தில் பனிப்பாளங்களைப் பிளந்து இறக்கவும் அவர்களால் இயன்றது.

ஆகவே அங்கே தொல்பழங்காலத்திற்குப்பின் எதிரிகள் என எவரும் அணுகியதே இல்லை. ஆயினும் அவர்கள் தெய்வச்சடங்குபோல ஒவ்வொரு ஆண்டும் காவல்பாறைகளை அமைத்து பூசனை செய்துவந்தனர். கோடைமுடிவில் பாறைகளை அரணமைக்கும் நாளில் உயிர்ப்பலி கொடுத்து இறுதிப்பாறையாக அமைவதற்கு  குருதியாட்டு நிகழ்த்தி எடுத்துவைப்பார்கள். அப்போது குலப்பெண்டிர் குரவையிட வீரர்கள் தங்கள் வேல்களை வானுக்குத்தூக்கி போர்க்குரலெழுப்புவர். அதன்பின்னர் அடுத்தகோடைகாலம் வரை அவ்வரணுக்கு அப்பால் எவரும் செல்ல அவர்கள் ஒப்புவதில்லை. கோடையின் முதல் இரு நிலவுகள்வரை கின்னரர்கள் வந்திறங்கி மீளும் பொழுது. அப்போது அம்மலைச்சரிவை அணுகும் எவரையும் நோக்கியதுமே கொல்ல அவர்கள் சித்தமாக இருப்பார்கள்.

கோடையின் மூன்றாவது நிலவுப்பொழுது தொடங்கும் அன்று மீண்டும் குருதியாட்டு நிகழ்த்தி அந்த இறுதிப்பாறையை முதலில் பெயர்த்தெடுப்பார்கள். குரவையும் போர்க்குரல்களும் ஒலிக்க வழிதிறந்து வாயிலில் உயரமான மரத்தின்மேல் மூங்கில் கட்டப்பட்டு இளஞ்செந்நிறக் கொடி ஏற்றப்படும். அங்கே கொடி ஏறுவதை நோக்கிச் சொல்ல கீழே பாறைகளின் மேல் பீதவணிகர்கள் ஏவலரை நிறுத்தியிருப்பார்கள். கொடி ஏறிய செய்தி முழவுகள் வழியாக அடிநிலத்துச் சிற்றூர்களில் பரவும். அங்கே பலநாட்களுக்கு முன்னரே வந்து அத்திரிகளை அவிழ்த்துக்கட்டிவிட்டு மூங்கில்தட்டி கூட்டியமைத்த பொதிக்குடில்களில் பொருட்களை சேர்த்துவைத்து சிறுகுடில்களில் தங்கி உண்டும் குடித்தும் பாட்டுகேட்டும் காத்திருக்கும் வணிகர்கள் வாழ்த்துக்கூச்சல்களும் சிரிப்புகளுமாக கிளம்புவார்கள்.

அத்திரிகள் பொதிகளின் எடை திரண்டமைந்த குளம்புகள் ஓசையுடன் உருண்டு இறங்கும் உருளைக்கற்கள் பரவிய மலைப்பாதையில் மிதிபட்டு ஒலியெழுப்ப எறும்புநிரை என வளைந்து மேலேறிச்சென்று  அங்காடிகளை அடைந்தன. ஒவ்வொரு அங்காடிக்கும் வெவ்வேறு நிரைகள் சென்றன. கீழே சிற்றூர்களில் சிறுவர்கள் தங்கள் இல்லக்கூரைகளின் மேல் ஏறிநின்று அந்த நிரைகளை நோக்கி கூவி கைவீசினர். மலையேறுபவர்களுடன் சென்று கின்னரஜன்யரின் கதையைப் பாடிய சூதர்களின் முழவொலி அவ்வப்போது சரிவிறங்கிச் சுழலும் காற்றில் சிதர்களாக வந்து செவிதொட்டுச் சென்றது.

கின்னரஜன்யர்களின் ஏழு சிற்றூர்களின் நடுவே அமைந்திருந்தது தவளம் என்னும் சந்தை. அது குறும்பாறைகள் அமைந்த  மலைச்சரிவு. அங்கே வளர்ந்திருந்த முட்புதர்களை வெட்டி அகற்றியிருந்தனர். ஈரப்புதுமண்ணில் மண்புழுக்கள் நெளிந்துகொண்டிருந்தன. அவர்கள் செல்லும்போதுகூட ஓர் எல்லையில் புதர்களை வெட்டி அகற்றும் வேலை நடந்துகொண்டிருந்தது. சந்தைமுற்றத்தின் வடபுலத்தில் வட்டமாக அமைந்திருந்த சோலைக்குள் மரங்களில் கட்டி இழுத்து அறையப்பட்ட தோல்கூடாரங்களில் சந்தைக்கென வந்த கின்னரகுடியின் வணிகர்கள் வந்து தங்கியிருந்தனர். தென்வளைவில் பீதவணிகர்களுக்கான இடம் ஒருக்கப்பட்டிருந்தது.

முதல்பீதர்குழு உள்ளே நுழைந்தபோது கின்னரஜன்யர்களின் பெண்களும் குழந்தைகளும் வெண்பனித்துருவல் போன்ற ஆடைகளையும் தலையணிகளையும் அணிந்து கழிகளில் செந்நிற மலர்க்கொத்துகளைக் கட்டியபடி கூடிநின்று கைவீசி இன்குரலெழுப்பி வரவேற்றனர். பூசகர்கள் மூங்கில்குழாய்களையும் காட்டுமாட்டுக் கொம்புகளையும் ஊதி முழவுகளை முழக்கி இசையெழுப்பினர்.  பீதவணிகர்கள் குழந்தைகளுக்காக இனிப்புகளையும் பெண்களுக்காக அணிப்பொருட்களையும் கொண்டுவந்திருந்தனர். முதியபீதர்கள் அவற்றை நீட்டியபடி சிலந்திவலையென முகம் சுருங்க சிரித்துக்கொண்டு அணுகினர்.

மூத்தகுடித்தலைவர் கையசைப்பதுவரை காத்து நின்ற குழந்தைகள் பாய்ந்துவந்து அவற்றை வாங்கிக்கொண்டு கூச்சலிட்டனர். பெண்கள் சிறுமிகளை உந்தி முன்னால் அனுப்பி பனையோலையால்  செய்யப்பட்ட தலைமலர்களையும் சிப்பிகளாலான காதணிகளையும் சங்குவளையல்களையும் பெற்றுக்கொண்டனர். கிளர்ச்சியுடன் அவற்றை எடுத்துக்கொண்டு ஓடி சூழ்ந்து நின்று வியப்பொலி எழுப்பி நோக்கி நோக்கி வியந்தனர். சிறுபூசல்களும் சிரிப்பொலிகளும் எழுந்தன. பனிக்காளையின் வெண்மயிரை முடியெனச் சூடிய  முதுகுடித்தலைவர் வந்து தன் கைக்கோலைத் தூக்கி அவர்களை வாழ்த்தி வணிக ஒப்புதல் அளித்ததும் அவர்களின் முதல் அத்திரி எல்லைகடந்து அங்காடிமுற்றத்திற்குள் நுழைந்தது.

அத்திரிகளை தறியறைந்து நிறுத்தி பொதியவிழ்த்து அடுக்கி கோல்நாட்டி கூடாரங்களை எழுப்பினர் வணிகர். அர்ஜுனன் தன் வில்லை அருகே வைத்துவிட்டு பணியாட்களுடன் இணைந்து கூடாரங்களைக் கட்டினான். கோடையென்றாலும் நிலமாந்தருக்கு அங்கே  கூதிர் காரென குளிர்ந்தது. விழிகூச வழிந்துகிடந்த வெயிலும்கூட குளிர்ந்து விரைத்திருந்தது. பாறைகள் குளிரில் உடல்சிலிர்ப்பவை போலிருந்தன. அருகே ஓடிய ஓடையிலிருந்து மரக்குடைவுக் கலத்தில் நீரள்ளிக் கொண்டுவந்து தொட்டியை நிறைத்தான். வணிகர்கள் நீர் அள்ளிக் குடித்துக்கொண்டிருந்தனர். ஏவலர் அத்திரிகளை நீர் அருந்த கொண்டுசென்றனர்.

அர்ஜுனன் அக்குடில்களில் ஒன்றை அணுகி அடுப்புமூட்ட அனல் கேட்டான். புதிய தலையணி அணிந்த இளம்பெண் ஒருத்தி உள்ளிருந்து சிறுகலத்தில் அனல்கொண்டுவந்து அவனிடம் தந்தாள். அவள் விழிகள் பச்சைமணிக்கல் போலிருந்தன. வெண்பனிபோன்ற நிறம். குருதிச்செம்மைகொண்ட இதழ்கள். அவனைக் கண்டதும் விழிகள் சுருங்க “உங்கள் உடலெங்கும் ஏன் இத்தனை வடுக்கள்?” என்றாள். “அவை போரிலடைந்த புண்கள். நான் ஒரு வில்லவன்” என்றான்.

“ஆம், கதைகளில் கீழ்நிலத்தின் போர்வில்லவர்களைப்பற்றி கேட்டிருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். பின்னர் வாய்பொத்திச் சிரித்தாள். அவன் “என்ன?” என்றான். இல்லை என தலையசைத்தாள். “சொல்” என்றான் அர்ஜுனன். “இங்கே செல்குறி பதித்துச் செல்லும் சிலமரங்களுண்டு. அவைதான் இப்படி உடலெங்கும் வடுக்களுடன் இருக்கும்” என்றாள். “இவை செல்குறிகளே” என்றான் அர்ஜுனன் அனலுடன் திரும்பியபடி. “யார் பதித்த குறிகள்?” என்றாள். “பலர்…” என்றபின் அவன் புன்னகைத்து திரும்பி நடந்தான்.

அவன் கூடாரத்திற்குச் சென்று அடுமனைப் பீதனிடம் அனலை கொடுத்தான். அவனுக்குப் பின்னால் வந்த மூத்தபீதர் “வில்லவரே, பெண்களின் உள்ளம் எல்லைமீற விழைவது. ஏனென்றால் அது உயிரின் முதல்விழைவு. நீர்ப்பரப்பின் விளிம்பு போன்றது அவர்களின் காமம். விரிந்துபரவுவதே அதன் வழி. ஆனால் இம்மக்கள் நிலத்தோரை விரும்புவதில்லை. கின்னரர் அன்றி பிறர்குருதி இவர்களுக்குள் கலக்கலாகாதென்னும் நெறி கொண்டவர்கள்” என்றார்.

“நான் எல்லை மீறவில்லையே!” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் அதற்கான வாய்ப்பு உண்டு என அவர்களில் எவருக்குத் தோன்றினாலும் நாம் எவரும் மலையிறங்க முடியாது” என்றார் பீதர். அர்ஜுனன் “நான் எதையும் பிழையாகக் காணவில்லை. அவள் கேட்டது ஆர்வம்கொள்ளும் சிறுமியின் வினாக்களையே” என்றான். “ஆம், ஆர்வமாகவே அது தொடங்கும். ஒரு பெண் எதன்பொருட்டு ஆணின் உடலை நோக்கினாலும் அது ஒன்றின்பொருட்டென்றே ஆகும். அவளிடமிருந்து விலகிக்கொள்ளுங்கள். இது என் ஆணை!” என்றார் பீதர்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 72

[ 18 ]

தளிர்ப்பசுமை சூழ்ந்த சோலைக்குள் மரங்களின் அடிக்கவர்களின்மேல் கட்டப்பட்ட சிறுகுடில்கள் குருவிக்கூடுகள்போலிருந்தன. காற்றில் மரங்கள் ஆட அவை மெல்ல ஆடுவது தொட்டில்போலிருந்தது. மூங்கில் வேய்ந்த தரைமேல் ஈச்சையோலைகளைப் பரப்பி மெத்தென்றாக்கியிருந்தனர். வைதிகமுனிவரான காண்டவரின் மாணவர்களான சந்திரரும் சிகரரும் அங்கே தங்கள் மாணவர்களுடன் இருபது குடில்களிலாக தங்கியிருந்தனர். விருந்தினர்களுக்கான பெரிய குடில் நடுவே நின்றிருந்த பிரமோதம் என்னும் இலுப்பைமரத்தின் மேல் அமைந்திருந்தது. அதில் அந்தணர் நால்வரும் தங்கவைக்கப்பட்டனர்.

அவர்கள் சுகவாணிச் சோலைக்குள் நுழைந்ததுமே சந்திரரும் சிகரரும் நேரில் வந்து வரவேற்று அழைத்துச்சென்றனர். அவர்கள் அளவைநோக்கு கொண்ட வைதிகர்கள் என்பதனால் ஜைமினி மிக அணுக்கமாக உணர்ந்தான். அவர்களும் மிக விரைவிலேயே அவனை தங்களவர் என கண்டுகொண்டனர். சூதமைந்தனை ஜைமினி தோளிலேற்றிக்கொண்டு வந்தமையால் முதலில் சந்திரர் அவனை நேர்கொண்டு நோக்குவதை தவிர்த்திருந்தார். அவன் தன் குருமரபைச் சொன்னபோது அவர் விழிகள் வியப்பில் சுருங்கி உக்ரனை ஒரு கணம் நோக்கி அகன்றன.

ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல் முறைச்சொல் உரைத்து அவர்களை அழைத்துச்சென்று குடில்களில் அமர்த்தினர். நீராடி வந்ததும் பால்கஞ்சியும் பழங்களும் அளித்து மன்று அமர்த்தினர். சூதர்கள் இருவருக்கும் மாணவர்களின் குடில்களுக்கு அப்பால் சிறிய குடிலொன்று அளிக்கப்பட்டது. நால்வரும் அவர்களின் அந்தி வேள்வியில் கலந்துகொண்டனர். வேள்விக்குப்பின் அங்குள்ள மாணவர்களின் வினாக்களுக்கு ஜைமினி அளித்த மறுமொழிகள் அவனை மகாவைதிகன் என அவர்கள் எண்ணும்படி செய்தன. அதுவரை இருந்த நோக்கும் நடப்பும் மாற அவர்கள் மூதாசிரியனிடமென அவனிடம் பேசலாயினர்.

இரவுணவுக்குப்பின் அந்தணர் நால்வரும் அமர்ந்திருந்த விருந்தினர் குடிலுக்கு நூலேணி வழியாக உக்ரன் ஏறிவந்தான். வாயிலில் நின்றபடி கைகளை விரித்து “எங்கள் குடில் சிறியது… அங்கே கரடி வந்து என்னை தூக்கிக்கொண்டு செல்லப்போகிறது… மூத்த தந்தையை கரடி சங்கைக்கடித்து கொல்லும்” என்றான். தன் கையை கடித்துக்காட்டி “கரடி குருதியைக் குடிக்கும். மூத்த தந்தை அழுவார்” என்றான். “ஏன் மூத்த தந்தைமேல் இத்தனை சினம்?” என்றான் சுமந்து. “வேறென்ன, ஆணைகளை இடுகிறார் அல்லவா?” என்றான் பைலன். “இவர் அவருடைய ஆணைகளுக்கு மட்டுமே கட்டுப்படுகிறார்” என்றான் சுமந்து. “விதையிலேயே மரத்தின் அனைத்து இயல்புகளும் இருக்கும் என்பார்கள். எத்தனை சரி என எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றான் வைசம்பாயனன்.

“எங்கள் குடிலில் இதேபோல மான்தோல் படுக்கை இல்லை” என்று உக்ரன் சொன்னான். “இதேபோல தொங்கும் விளக்கும் அங்கே இல்லை.” உள்ளே வந்து கொடியை சுட்டிக்காட்டி “இவ்வளவு பெரிய கொடி அங்கே இல்லை” என்றான். “நீங்கள் இங்கேயே இரவு தங்குங்கள், சூதரே” என்றான் ஜைமினி. “ஆம், நான் அவருடன் தங்கமாட்டேன். அவரை இருட்டில் கரடி பிடிக்கும்போது நான் அழவே மாட்டேன்” என்றான். உள்ளே வந்து மான்தோலிருக்கையில் அமர்ந்து பலமுறை எம்பி அந்த மென்மையை நுகர்ந்து மகிழ்ந்தபின் “ஆனால் அங்கே என்னிடம் நல்ல முழவு இருக்கிறது. பெரிய முழவு. அதை நீங்கள் கேட்டால் தரவே மாட்டேன்” என்றான்.

கீழே விளக்கொளி விழுந்துகிடந்த வட்டத்தில் சண்டன் வந்து நின்று “இங்கே இருக்கிறானா சுண்டெலி?” என்றான். “ஆம்” என்றான் ஜைமினி. “உங்களை கரடி பிடிக்கப்போவதாக சொல்கிறார்.” சண்டன் சிரித்தபடி “மேலே வரலாமா?” என்றான். “வருக… உங்கள் இடம் அல்லவா இது?” என்றான் ஜைமினி. சண்டன் நூலேணி வழியாக மேலே வந்து “மைந்தரை வளர்ப்பது எளிதல்ல.பெற்றவர்களுக்கு மெய்யுசாவ நேரமிருப்பதில்லை என்பது ஏன் என்று புரிந்தது” என்றான். “காலைமுதல் இவன் பேச்சைக்கேட்டு என் தலைக்குள் எலிச்சத்தம் நிறைந்துவிட்டது. மைந்தன் என்ற சொல்லே உடலை நடுங்கச்செய்கிறது.”

ஜைமினி சிரித்து “அதிலும் இவர் மைந்தர்களாலான ஒரு படைக்கு நிகரானவர்” என்றான். சண்டன் களைப்புடன் அமர்ந்துகொண்டு “இனிய காடு…” என்று சுற்றிலும் பார்த்தான். “அழகாக இருக்கிறது. அனைத்தும் தளிர்விட்டிருக்கிறது” என்றான் சுமந்து. பைலன் “இக்காட்டின் அடியில் நீர் நிறைந்துள்ளது. எங்கெல்லாம் பள்ளங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் நீர் ஊறி எழுந்துள்ளது” என்றான். “ஆம், சுகவாணி என இதற்குப் பெயர் வந்ததே அதனால்தான். இங்கே கிளிகள் மிகுதி” என்று சண்டன் சொன்னான். உக்ரன் “அதில் ஒரு கிளியின் பெயர் சகனை. அது என்னிடம் இங்கே உள்ள வேதங்களை கேட்டுக்கேட்டு தங்கள் வேதங்களை மறந்துவிட்டதாக சொன்னது” என்றான்.

அவர்கள் அந்திப் பறவைகளின் ஒலியை கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தனர். “என்ன ஓசை! கூடணைந்தபின்னர்தான் அவை பேசிக்கொள்ளவே தொடங்குகின்றன போலும்” என்றான் பைலன். சண்டன் பெருமூச்சுடன் அசைந்தமர்ந்தான். “இரவு இத்தனை வெம்மையுடன் சூழ்ந்துகொள்ளுமென எண்ணியதே இல்லை… ஏதோ பெருவிலங்கின் ஆவிமூச்சுபோல இருக்கிறது காற்று” என்றான் பைலன் மீண்டும்.

ஜைமினி “நாகங்கள் மரங்களின்மேல் சுற்றி ஏறும் பொழுது. அவற்றைக் கண்டபின்னர்தான் பறவைகள் ஒலியெழுப்புகின்றன” என்றான். “நாகங்களுக்கான அச்சம் அவற்றின் ஆழத்திலேயே பொறிக்கப்பட்டுள்ளது. முன்பு ஒரு தெருவித்தையன் முட்டை ஒன்றை என் கையில் தந்தான். அதை படம்கொண்ட நாகத்தின் அருகே நீட்டும்படி சொன்னான். நாகம் மெல்ல அதைநோக்கி குனிந்தபோது என் கையிலிருந்த முட்டை மெல்ல அதிர்வதை உணர்ந்தேன்” என்றான் வைசம்பாயனன்.

பைலன் சண்டனை நோக்கி “தங்கள் உள்ளம் இங்கில்லைபோலும்” என்றான். சண்டன் விழித்து “என்ன?” என்றான். “எதை எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றான் சுமந்து. சண்டன் “காலபீதி என்னும் முனிவரைப்பற்றி” என்றான்.

அவர்கள் நோக்கி அமர்ந்திருக்க சண்டன் “மகாருத்ரபுராணத்தில் இக்கதை உள்ளது. அந்த முட்டையைப்பற்றி சொன்னபோது நினைவிலெழுந்தது” என்றான். “சொல்லுங்கள்” என்றான் வைசம்பாயனன். “நான் அந்தக் கதையை கேட்டதே இல்லை” என்று எழுந்து வந்து இடையில் கைவைத்து நின்றான் உக்ரன். “சென்று அமர்ந்துகொள்ளுங்கள். சூதர் சொல்வார்” என்றான் பைலன். அவன் திரும்பி நோக்கியபின் சென்று ஜைமினியின் மடியில் அமர்ந்தான். அவனை மெல்ல தழுவிக்கொண்டான் ஜைமினி. ஜைமினியின் மார்பில் தன் தலையை சாய்த்து கால்களை நீட்டிக்கொண்டு உக்ரன் அமர்ந்தான். சண்டன் சொல்லத் தொடங்கினான்.

[ 19 ]

மாம்டி என்னும் அந்தணன் பத்தாண்டுகாலம் மைந்தரில்லாமையால் பதினாறு ருத்ரர்களை பதினாறு மாதம் நோற்று தன் மனையாட்டியாகிய காலகேயியின் கருவில் ஒரு குழவியை பெற்றான். கூரை கிழிய பொன்மழை விழுந்த கருமி என அவன் ஆனான். களஞ்சியம் நிறைந்த வேளாளன் என கைபெருகப்பெற்றான். அந்தணருக்கும் சூதருக்கும் அள்ளி வழங்கினான். அவன் தலைக்குமேல் கந்தர்வர்கள் இன்னிசையுடன் எப்போதுமிருந்தனர். அவன் செல்லுமிடமெல்லாம் கின்னரர்கள் நறுமணம் சூழச்செய்தனர். அவன் கேட்கும் சொல்லையெல்லாம் வித்யாதரர்கள் கவிதையென்றாக்கினர்.

ஒருநாள் விண்ணில் பறந்த இந்திரன் தன் நிழல் நீண்டு விழுவதை கண்டான். “என்ன இது, தேவர்களுக்கு நிழல் விழலாகாதே?” என்று அவன் மாதலியிடம் கேட்டான். “அரசே, தேவர்கள் தன்னொளி கொண்டவர்கள். ஆகவே அவர்களுக்கு நிழலில்லை. இன்று உங்களைவிட ஒளிகொண்ட ஒருவன் இதோ கீழே சென்றுகொண்டிருக்கிறான். அவன் உங்கள் உடலுக்கு நிழல் சமைக்கிறான்” என்றான் மாதலி. “யாரவன்?” என்றான் இந்திரன். “தவமிருந்து மைந்தனைப்பெற்ற மாம்டி என்னும் அந்தணன். அவன்மேல் விண்ணவர்கள் மலர்சொரிந்தபடியே உள்ளனர்” என்றான் மாதலி.

இந்திரன் அவனை கூர்ந்து நோக்கினான். “மாற்றிலாத இன்பத்தை மானுடர் உலகியலில் பெறமுடியாதே? எவ்வாறு இப்படி நிகழ்ந்தது?” என்றான். “அவன் தேவர்களை அறிந்தான். தேவருக்கும் தேவரான தென்றிசைத்தலைவனை இன்னும் அவன் அறியவில்லை” என்றான் மாதலி. இந்திரன் அன்றே சிறுகருவண்டாக மாறி பறந்துசென்று யமனை அடைந்தான். “மாம்டியின் மைந்தனின் ஊழ் என்ன? சொல்க, அறச்செல்வரே!” என்றான். “ஊழ்நெறியை முன்னால் அறியலாகாது, அரசே” என்றான் யமன். “அது புடவியை நெய்திருக்கும் ஊழின் ஓட்டத்தை அழிப்பதாகும். அதைச் சொல்ல எனக்கு ஆணையில்லை.” இந்திரன் “அவன் எவ்வண்ணம் இறப்பான் என்பதை மட்டும் சொல்லுங்கள்” என்றான். “எவ்வண்ணம் இறப்பான் என்பது எவ்வண்ணம் வாழ்வான் என்பதைத்தான் சுட்டுகிறது. அதை நான் சொல்லமுடியாது” என்றான் யமன்.

பலவாறாகக் கேட்டும் யமன் இரங்காததனால் இந்திரன் யமன் அறியாமல் சித்திரபுத்திரனிடம் சென்று “அந்தணரே, நான் வேள்விகாக்கும் தேவர்தலைவன். ஒன்றை மட்டும் சொல்லுங்கள், ஊழ்முதிர்கையில் அவனை அழைத்துவரும் யமபுரியின் காவலன் யார்?” என்றான். “அதைச் சொல்ல எனக்கு ஆணையில்லை, அரசே” என்றார் சித்திரபுத்திரன். “உம்மால் பிறிதொருவரை அனுப்ப முடியுமா?” என்றான் இந்திரன். “இல்லை, அம்மைந்தன் கருக்கொள்கையிலேயே இங்கே இவனும் இருட்துளியாக ஊறிவிட்டிருப்பான். இருவரும் சேர்ந்தே பிறக்கிறார்கள். இங்குள்ள பெருங்கோட்டைவாயிலில் அவன் ஒரு சிறுபுள்ளியென தோன்றிவிட்டிருப்பான்” என்றார்.

இந்திரன் காலபுரியின் கோட்டைச்சுவர் வழியாக விழி ஆயிரம் கொண்ட வண்டாகப் பறந்தான். கோடானுகோடி கொலைவிழிகளையே கருங்கற்சில்லுகள் என அடுக்கிக் கட்டப்பட்டிருந்தது அக்கோட்டை. “மாம்டியின் மனைவியிலமைந்த கருவை கொல்லப்போகும் காலதேவன் எழுக! இது அரசாணை!” என்று கூவிக்கொண்டே சென்றான். கோட்டைச்சுவரில் ஒரு கண் அசைந்தது. “மாம்டியின் மைந்தன் நூறாண்டு வாழ்ந்தபின்னர் சென்று அழைக்கவேண்டும் என்பதல்லவா ஆணை?” என்றது அக்கண்களின் வாய். “நீ அதை எப்படி அறிவாய்?” என்றான் இந்திரன். “என் பெயர் காலமார்க்கன். நானே அவனை அழைத்துவரவேண்டியவன். இங்கே கருத்தவத்தில் இருக்கிறேன்” என்றான் அவன்.

இந்திரன் “கரியவனே, நான் உன்னைத்தான் தேடிவந்தேன். எனக்கு ஓர் அருள் செய்க! மாம்டியின் மனைவி காலகேயியின் கருவிலிருக்கும் குழவிக்கு உன் முகத்தை மட்டும் காட்டி மீள்க!” என்றான். காலமார்க்கன் “அதற்கு எனக்கு ஆணையில்லை, அரசே” என்றான். “உன்னை அவன் அறிவானா என எப்போதேனும் எண்ணியிருக்கிறாயா?” என்றான் இந்திரன். “ஆம், அவ்வியப்பு எனக்கு உண்டு. நான் அவனை அறிவேன் என்பதனால் அவனும் என்னை அறிந்திருக்கவேண்டும்” என்றான் காலமார்க்கன். “அத்தனை குழவியரும் அவர்களின் காலனை கருவறைக்குள் அறிந்திருக்கின்றனர். அவனைநோக்கி கைகூப்பியபடியே மண்ணில் தோன்றுகின்றனர்” என்றான் இந்திரன்.

காலமார்க்கன் “ஆனால் அவனை கருவறைக்குள் சென்று நோக்க எனக்கு நெறியில்லையே?” என்றான். இந்திரன் “காலனே, அவனை நீ கொண்டுவருவதே ஊழ் என்றால் கருவில் விதையென இருக்கும் அவன் உன் முகத்தை நன்கறிந்திருப்பான்” என்றான். காலமார்க்கன் “ஆவல் என்னை அலைக்கழிக்கிறது. ஆனால் அவன் என்னை அறிந்துகொண்டால் பின்னர் என்னிடம் நெருங்கமாட்டான். இறப்பை மானுடன் தெரிவுசெய்து தேடிவந்து அணிகலன் என எடுத்து சூட்டிக்கொண்டாகவேண்டும். விரும்பாதவனை அணுகி உயிர்கவர எங்களுக்கு ஆணையில்லை” என்றான்.

“அவ்வாறு நிகழுமென்றால் அதுவே அவன் ஊழ் அல்லவா?” என்றான் இந்திரன். “அவன் ஊழ் அதுவென்றால் நாம் என்ன செய்தாலும் அது நிகழ்ந்தாகவேண்டும், காலமார்க்கனே” என மீண்டும் சொன்னான். “ஆம், அதை ஆராய்ந்துநோக்கவே விழைகிறேன். ஆனால் என் உள்ளம் தயங்குகிறது” என்றான் காலமார்க்கன். “ஆவல் எழுந்தபின் எவரும் அமைந்ததே இல்லை. நீ சென்று அவனை நோக்குவாய்” என்றபின் புன்னகையுடன் விழைவுக்கிறைவன் தன் அரியணைக்கு மீண்டான்.

இந்திராணி உளச்சோர்வுடன் “தேவர்க்கரசே, அந்த அந்தணனின் இன்பத்தை அழிப்பதனால் நீங்கள் அடைவதென்ன?” என்றாள். “நான் எனக்கு பெருநெறி இட்ட ஆணைகளை நிறைவேற்றுபவன் மட்டுமே. மானுடன் மண்ணில் காலூன்றி நின்று விண்ணவனுக்குரிய இன்பங்களை அடையக்கூடாது. மானுடனின் சித்தத்தில் முட்டைக்கருவுக்குள் சிறகுகள்போல  ஞானப்பேரார்வம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதுவன்றி பிறிதை அவன் அழியா இன்பமென உணரலாகாது” என்றான்.

கருவுக்குள் புகுந்து அங்கே துரியத்தில் இருந்து துளித்து உருக்கொண்டு சுஷுப்தியில் சொக்கிச் சுருண்டிருந்த குழவியின் நெற்றிப்பொட்டில் தொட்டு எழுப்பினான் காலமார்க்கன். உடல் அதிர்ந்து விழித்து அசுரவடிவில் வந்த அந்த முகத்தை நோக்கி அஞ்சி குழவி ஓசையிலாது அழுதது. கால்களை உந்தி உந்தி கருநீரில் நீந்தி விலகமுயன்றது. சிரித்தபடி அணுகி “நான் உன் காலன். உன்னை அழைத்துச்செல்லவிருப்பவன்” என்றான் காலமார்க்கன். “நான் வரமாட்டேன்” என்று குழவி அஞ்சி நடுங்கியபடி சொன்னது. அதன் சொற்கள் குமிழிகளாயின. “எவரும் மறுக்கமுடியாத அழைப்பு என்னுடையது” என்றான் காலமார்க்கன்.

கருக்குழவி அழுதுநடுங்கிக்கொண்டு கருவறைக்குழிக்குள் ஒடுங்கியது. அன்னை தன் வயிற்றில் கொப்புளங்களையும் நடுக்கங்களையும் உணர்ந்தாள். மருத்துவர்கள் அவளை ஆய்ந்துநோக்கி அவள் வயிறு அருவியருகே அமைந்த பாறைபோல உள்நடுக்குகொண்டிருப்பதை உணர்ந்தனர். ஒன்பது மாதங்களானபோது கருவறை சுருங்கி கருவழி வாய் திறந்து குழவியை உமிழ்ந்து வெளித்தள்ள முயன்றது. மைந்தன் தன் இரு கால்களாலும் கருவழியை அழுத்தி மூடிக்கொண்டான். வலி தாளாமல் அன்னை துடித்தாள். குழவி வெளிவரவில்லை. கைதுழாவி நோக்கிய வயற்றாட்டியர் உள்ளே குழவியின் கால்கள்தான் தொடுபடுகின்றன என்றனர்.

பன்னிருமுறை அவ்வண்ணம் குழவி வந்து முட்டி மீண்டது. மூன்று மாதம் குழவி உள்ளேயே இருந்தது. தன் மனையாட்டியின் துடிப்பை தாளமுடியாமல் மாம்டி ருத்ரர்களை வேண்டினான். அவர்கள் மறுமொழி உரைக்காமை கண்டு பதினாறு கைகளுடன் காட்டாலயத்தில் அமர்ந்திருந்த காளியன்னையின் திருநடையில் சென்று நின்றான். “அன்னையே, என் மைந்தனை காத்தருள்க!” என்று கூவினான். பூசகனில் சன்னதமாக எழுந்த அன்னை “அவன் அஞ்சுகிறான். அவன் அச்சமென்ன என்று கேள்” என்றாள். “என் அகல்விளக்கு எண்ணையில் அவன் எழுக!” என ஆணையிட்டாள்.

அகல்விளக்கின் கரியநெய்யில் அச்சம்நிறைந்த கண்களுடன் மைந்தன் தோன்றினான். “தந்தையே, நான் காலமார்க்கன் என்னும் அசுரனால் கொல்லப்படுவேன். ஆகவே நான் வெளிவரவே அஞ்சுகிறேன்” என்றான் மைந்தன். “நீ நிறைவாழ்வுடையவன் என நிமித்திகர் சொல்கிறார்கள், மைந்தா” என்றான் மாம்டி. “நூறாண்டு வாழ்ந்தாலும் இறுதியில் அந்த அசுரனால் கைப்பற்றப்படுவேன் அல்லவா? தந்தையே, நான் இங்கேயே இருந்துகொள்கிறேன்” என்றான் மைந்தன். “அது நீ வாழுமிடமல்ல, மைந்தா. அன்னையின் வயிற்றில் வாழ்வதற்கொரு காலமுள்ளது” என்றான் மாம்டி. “நான் வளராதொழிகிறேன். சிறுகருவாகிறேன். பார்த்திவப்பரமாணுவாக மாறுகிறேன். தந்தையே, இறப்பு என்னை அச்சுறுத்துகிறது” என்றான் மைந்தன்.

KIRATHAM_EPI_72

“மூடா, நீ அஞ்சுவது இறப்பை அல்ல, பிறப்பை” என்று மாம்டி சொன்னான். “நான் பிறக்கவே விரும்பவில்லை. மண்ணில் வரவேமாட்டேன்” என்று மைந்தன் கைகளால் தொப்புள்கொடியை பற்றிக்கொண்டான். “இங்கே அனைத்தும் இனிதாக உள்ளது. அன்னையின் குருதியால் சூழப்பட்டிருக்கிறேன். அதையே உண்டு உயிர்க்கிறேன். அவள் நெஞ்சத்தை கேட்டுக்கொண்டிருக்கிறேன். மேலும் இனிதாக அப்புவியில் என்ன இருக்கிறது?” என்றான். மாம்டி திகைத்து நோக்கிக்கொண்டு நின்றான். அக்கணம் உண்மையிலேயே புவியில் என்னதான் இருக்கிறதென்று அவனால் சொல்லமுடியவில்லை.

அக்கருக்குழவி காலபீதி என அழைக்கப்பட்டான். அவனைப்பற்றிய செய்திகளை அறிந்து முனிவரும் நூலறிந்த அந்தணரும் வந்து அவனை கண்டனர். “சொல்க, நான் புவிபிறப்பது ஏன்? அங்கிருப்பவற்றில் இங்கிருப்பவற்றைவிட இனியது எது?” என்றான் காலபீதி. “அங்குளோர் அனைவரும் தேடுவது அமுதை. நானோ அவ்வமுதில் திளைத்து இங்கே வாழ்பவன். நான் ஏன் மண்ணிறங்கவேண்டும்?”

அனைவரும் மறுமொழி இன்றி திரும்பிச்சென்றனர். மன்றுகளிலும் இல்லங்களிலும் அமர்ந்து சொல்லாடினர். இரவுகளில் தனித்திருந்து எண்ணி எண்ணி குழம்பினர். உண்பது, புணர்வது, விளையாடுவது, அடைவது, வெல்வது, கற்பது, எய்துவது என்னும் ஏழு மெய்யுவகைகளும் இருப்பது என்னும் ஒருநிலையின் மாற்றுருக்களே என்றும் இருத்தலென்பது இறத்தலுக்கெதிரானதென்னும் உவகையை மட்டுமே கொண்டது என்றும் உணர்ந்தனர். அவ்வறிதல் அவர்களை சோர்வுறச்செய்தது.

மாம்டி மீண்டும் பதினாறு ருத்ரர்களை எண்ணி தவம்செய்தான். ஒவ்வொருவரிடமாக அவன் கேட்டான் “என் மைந்தன் கேட்டதற்குரிய விடை என்ன?” அவர்கள் “பிறப்பு இறப்பால் நிகர்செய்யப்பட்டாகவேண்டும். பிறிதொரு விடையும் எங்களிடமில்லை” என்றனர். தாங்களும் குழம்பி “பிறப்பதனால் வாழ்வமைகிறது. வாழ்வமைவதனால் இறப்பு நிகழ்கிறது. பிறிதொரு விளக்கமும் இதற்கில்லை” என்றனர். பதினாறாவது ருத்ரன் “அந்தணனே, ஒரு மெய்வினாவுக்கு முழுமெய்மை மட்டுமே விடையென்றாகும். நீ கேட்கும் இவ்வினாவுக்கு பிரம்மஞானம் மட்டுமே விடை. அதை மகாருத்ரனிடம் கேள்” என்றார்.

மாம்டி மகாருத்ரனை எண்ணி தவம்செய்தான். அவன் ஏழு கருநிலவுக்காலம் தன்னை உதிர்த்து அருந்தவம் செய்து நிறைந்தபோது மின்னல்தொட்டு எரிந்தெழுந்த கரும்பனையாக மாருத்ரம் அவன் முன் எழுந்தது. “எனக்கு பிரம்மஞானம் அருள்க!” என்றான் மாம்டி. அவன் மேல் அனல் கவிந்தது. தலைமுடியும் இமைமயிர்களும் பொசுங்கின. எரிமணமென எழுந்தது மூச்சு. தன்னுள் அவன் “ஆம்” என்னும் ஒலியை கேட்டான். “சிவோகம்” என முழங்கியபடி அவன் எழுந்துகொண்டான்.

மாம்டி தன் மைந்தனிடம் மீண்டான். காளியின் அகலெண்ணையில் மைந்தனை வரவழைத்தான். கால்கட்டைவிரலை வாயிலிட்டு தன்னைத்தான் சுவைத்து மகிழ்ந்திருந்த காலபீதி “சொல்க தந்தையே, நான் ஏன் வெளிவரவேண்டும்?” என்றான். “ஏனென்றால் நீ சிவம். உருக்கொண்டு உருவழிந்து சிவம் ஆடும் நடனமே நீ கொள்ளும் வாழ்க்கை” என்றான் மாம்டி. “ஒவ்வொரு உயிர்த்துளியும் ஒவ்வொரு பருப்பொடியும் அவ்வாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. இது அழியாத தாளமென்றறிக! எழுக காலரூபனாக! காலத்துடன் நின்றாடுக!”

மனையாட்டியின் வயிற்றில் வாயை வைத்து அவன் முதன்மைச்சொல்லை மூன்றுமுறை சொன்னான். “சிவமேயாம்! சிவமேயாம்! சிவமேயாம்!” குழவி அச்சொல்லை தான் முழங்கியது. அன்னையின் உள்ளத்தில் எரிதழல்தூண் ஒன்று கனவென எழுந்தது. எரிந்து எழுவதுபோல மைந்தன் வெளியே வந்தான். அரைவிழி திருப்பியபோது தன் நிழலென உடன் எழுந்த காலமார்க்கனைக் கண்டான். புன்னகையுடன் கைகளை வீசி உடல்நெளித்து அதனுடன் ஆடினான்.

காலநிழலுடன் ஆடி வளர்ந்தவனை மகாகாலர் என்று வழுத்தினர் நூலோர். சொல்தேர்ந்த அறிஞனாகி சொல்கரைந்து யோகியாகி அமர்ந்தார் மகாகாலர். ஒவ்வொருமுறை அவர் வளரும்போதும் அவரைவிட வளர்ந்தான் காலமார்க்கன். அவர் ஆற்றும் செயல்களில் விளைவுகுறித்த அச்சமாக இருந்தான். அவர் கற்ற நூல்களில் ஐயமானான். அவர் கொண்ட உறவுகளில் ஆணவத்தின் இறுதிக் கசப்பானான். அவர் செய்த பூசனைகளில் பழக்கமெனும் பொருளின்மையானான். அவர் அமைந்த ஊழ்கங்களில் எஞ்சும் தன்னிலையானான்.

நூறாண்டு முதிர்ந்தபோது ஒருநாள் அவனை நோக்கித் திரும்பி அவர் கேட்டார் “உன்னை வென்ற மானுடர் எவரேனும் உளரா?” காலமார்க்கன் சொன்னான் “வெல்லலாகாதென்பதே புடவியின் முதல்நெறி.” மகாகாலர் “தேவர்களில் உன்னை வென்றவர் எவர்?” என்றார். “தேவர்கள் என்னால் வாழ்த்தப்படுபவர்கள் மட்டுமே” என்றது நிழல். “தெய்வங்களில் உன்னை வென்றவர் எவர்?” என்றார் மகாகாலர். “முக்கண்முதல்வனின் காலடியில் அமைபவன் நான்” என்றான் காலமார்க்கன். “அவர் ஏந்திய பினாகமும் பாசுபதமும் என்னை ஆள்கின்றன.”

தன் இடையாடையை அவிழ்த்துவீசிவிட்டு தென்மேற்கு திசையில் வடக்கு நோக்கி அமர்ந்தார் மகாகாலர். ஊழ்கத்திலாழ்ந்து சென்றார். உடலுருகி சித்தம் அழிந்து தன்னிலையும் மறைந்தபோது அப்பால் எழுந்த அனல்துளியை கண்டார். “ஆம்” என்றபடி விழிதிறந்தார். அருகே நீண்டுகிடந்த கரிய நிழலைக்கண்டு புன்னகையுடன் கைகளை விரித்து “அருகே வா, காலமார்க்கனே!” என்று அழைத்தார்.

விண்தொடும் பேருருவுடன் அவர் முன் எழுந்தது கருநிழல். அது மான்மழுவும் நீர்மலிச்சடையும் முக்கண்ணும் முப்புரிவேலும் கொண்டிருந்தது. அதைநோக்கி விழிதூக்கி “யாமேநீ!” என்றார் மகாகாலர். “ஆம் யாமேநீ” என்றது நிழல்.

சண்டன் சொல்லி முடித்தபோது வைதிகர் நால்ரும் இருளை நோக்கிய விழிகளுடன் அமர்ந்திருந்தனர். இலைத்தழைப்பு வழியாக காற்று ஓடிக்கொண்டிருந்தது. இடைவெளியில் தெரிந்த ஒற்றை மீன் நடுங்கியது. நீண்டநேரம் கடந்து பைலன் பெருமூச்சுடன் விழித்துக்கொண்டான். அவ்வொலியில் பிறரும் நனவுமீண்டனர். ஜைமினி எழுந்துசென்று கருந்திரி எரிந்த அகலை தூண்டினான். ஒவ்வொருவரும் நிழல்பெற்றனர்.

உக்ரன் “பெரிய தந்தையே” என மெல்லிய குரலில் அழைத்தான். “சொல்க!” என்றான் சண்டன். “மகாகாலர் பெற்ற அந்த மெய்மையின் பெயர் என்ன?” சண்டன் “அதை பாசுபதம் என்கின்றனர் அறுநெறிச் சைவர்” என்றான். அவன் எழுந்து அருகே வந்து நின்று “எப்படிப்பட்டது அது?” என்றான். “அறியேன். யோகநூல்கள் உரைப்பவற்றை சொல்கிறேன்” என்றான் சண்டன். “பிநாகம் பொன்னிறமான பெருநாகம். அது வடதிசையிலிருந்து தென்திசைவரை நிறைத்திருக்கும் முடிவிலா வளைவையே உடலெனக்கொண்டது.”

“அதற்கு ஏழு தலைகள். செந்நிறமான ஆணவம், அனல்நிறமான சினம், பொன்னிறமான விழைவு, பசும்நிறமான அறிவு, நீலநிறமான மொழி, கருநீலநிறமான ஊழ்கம் கருநீலச்செம்மைகொண்ட தன்னிலை என அதை வகுக்கின்றன நூல்கள். பாசுபதம் அதன் அம்பு. அது நீலநா பறக்கும் தழல்வடிவமான சிறுநாகம். நிழலற்றது அது” என்றான் சண்டன். “பாசுபதம் பெற்றவன் தானும் சிவமென்றாகிறான்.”

அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த சொல்லையே உக்ரன் கேட்டான் “பெரிய தந்தையே, அர்ஜுனன் பாசுபதம் பெற்றானா?” சண்டன் “பெற்றான் என்கின்றன சூதர்கதைகள். திசைவென்றவன் பின் வெல்வதற்கு எஞ்சுவது அதுவே. ஏனென்றால் அது திசைகளின் மையம்” என்றான்.

தன் உடலுறுப்பென தோளில் கிடந்த முழவை எடுத்து சண்டன் பாசுபதச் சொல்லை  பாடலானான். தாளம் உறும சொல் உடனிணைந்து ஆடியது.

ஓம்! நமோ பகவதே மகா பாசுபதாய!

அதுலபலவீர்ய பராக்ரமாய! திரிபஞ்சனயனாய!

நானா ரூபாய! நானாபிரஹரணோத்யதாய!

சர்வாங்கரக்தாய! ஃபின்னாக்ஞனசயபிரக்யாய!

ஸ்மஸானவேதாளப்ரியாய…

பைலன் ஒருசொல்லால் அறையப்பட்டான். அவன் விரல்கள் நடுங்கத் தொடங்கியபின்னரே அச்சொல்லை அவன் சித்தம் அறிந்தது. சர்வாங்க ரக்தாய! குருதியுடல். கருக்குழவியுடல். சர்வாங்க ரக்தாய! கொலைகளத்தில் குருதிசூடிக் கூத்தாடும் உடல். சர்வாங்க ரக்தாய! அனலுடல். அனலெனும் குருதிப்பேருடல்.  சர்வாங்க ரக்தாய!  சர்வாங்க ரக்தாய! குருதியுடல் கொண்டெழுக! சர்வாங்க ரக்தாய! சர்வாங்க ரக்தாய! சர்வாங்க ரக்தாய! சிவாய!

நூல் பன்னிரண்டு – கிராதம் – 71

[ 16 ]

காகவனத்திலிருந்து சண்டனும் இளவைதிகர் நால்வரும் கிளம்பும்போது உக்ரன் கிளர்ச்சியுடன் அங்குமிங்கும் பாய்ந்துகொண்டிருந்தான். முடிச்சு போட்டுவைத்த தோல்மூட்டையை அவன் பிரித்துக்கொண்டிருப்பதைக் கண்ட பைலன் “என்ன செய்கிறீர், சூதரே?” என்றான். பொதியிலிருந்த ஆடைகளை எடுத்து வெளியே போட்டபடி “என்னுடைய அரணிக்கட்டை, உள்ளே வைக்கிறேன்” என்றான் உக்ரன். “எங்கே அரணிக்கட்டை?” என்றான் பைலன்.

அரணிக்கட்டை தன் கையில் இல்லை என்பதை அப்போதுதான் உக்ரன் உணர்ந்தான். “என் அரணிக்கட்டை… என் அரணிக்கட்டை…” என்று கைகளை உதறியபடி அழத்தொடங்கினான். “அஞ்சவேண்டாம், இதோ எடுத்துத்தருகிறேன்” என்றான் ஜைமினி. “என் அரணிக்கட்டை எங்கே?” என்று உக்ரன் அழுதபடி கால்களால் தரையை உதைத்தான். அரணிக்கட்டையை குடிலெங்கும் தேடினார்கள். “நாய் தோண்டி வெளியே போடுவதுபோல மூட்டையை குதறிவிட்டார்” என்றான் ஜைமினி. “இதென்ன புதிய குழப்பம்? எங்கு வைத்தீர், சூதரே?” என்றான் சுமந்து.

“நீங்கள் என் அரணிக்கட்டையை திருடிவிட்டீர்கள்” என்று கண்ணீருடன் கைசுட்டி உக்ரன் சொன்னான். “நான் ஊர்த்தலைவரிடம் சொல்வேன்… அவர் உங்களை அடிப்பார்.” வைசம்பாயனன் “அவர் ஏதேனும் மூட்டைக்குள்தான் செருகியிருப்பார். அவிழ்த்துப்பாருங்கள்” என்றான். “மீண்டும் நான்கு மூட்டைகளையும் அவிழ்ப்பதா?” என சுமந்து சலித்துக்கொண்டான். “என் அரணிக்கட்டை!” என உக்ரன் வீரிட்டான். “செவி ரீங்கரிக்கிறது… ஏதாவது செய்யுங்கள். இனி இந்தக் குரலைக் கேட்டால் என் காது உடைந்துவிடும்” என்றான் வைசம்பாயனன். ஜைமினி ஒவ்வொரு மூட்டையாக பார்த்தபோது சுமந்துவின் மூட்டைக்குள் அது இருந்தது.

“நீ என் அரணிக்கட்டையை திருடினாய்… நீ கள்வன்” என்றான் உக்ரன். “சரி, இதோ வைத்துக்கொள்ளுங்கள்” என்றான் சுமந்து. அதை வாங்கி மார்போடணைத்தபடி இமைமயிர் ஒட்டியிருக்கும் கன்னங்களுடன் சுமந்துவை சீற்றத்துடன் நோக்கிய உக்ரன் அவன் கண்களை சந்தித்ததும் உதட்டைப்பிதுக்கி பழிப்பு காட்டினான். “அனைத்தையும் எடுத்துக்கொண்டுவிட்டீர்கள் அல்லவா?” என்றான் வைசம்பாயனன். அவன் போ என தலையசைத்தான். “அப்படியே விட்டுவிடுங்கள். அவரிடம் பேசவேண்டாம்…”

அவர்கள் மீண்டும் பணிகளில் விசைகொள்ள “வைதிகரே, இதை எங்கே வைப்பது?” என்று உக்ரன் மெல்லிய குரலில் கேட்டான். மறுமொழி சொல்லவேண்டாமென விழிகளால் பைலன் சொல்ல எவரும் அதை கேட்டதாக காட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் அங்குமிங்கும் செல்வதனூடாக நடந்த உக்ரன் “அந்தணரே, இதை எந்த மூட்டையில் வைப்பது?” என்றான். பைலனைத் தொட்டு “இதை உங்கள் மூட்டையில் வைக்கலாமே” என்றான். அவன் ஒன்றும் சொல்லாதது கண்டு வைசம்பாயனனிடம் “இதை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள், அந்தணரே” என கெஞ்சும் குரலில் சொன்னான்.

வைசம்பாயனன் சிரித்துவிட்டான். “கொடுங்கள்… ஆனால் நான் கொடுக்கும்வரை இதை கேட்கக்கூடாது” என்றான். “இல்லை, நான் முழவை மட்டும்… ஆ! என் முழவு! என் முழவு!” என உக்ரன் கூவினான். “என் முழவை காணவில்லை…” பைலன் “முழவு உங்கள் தந்தையிடமிருக்கும்… சென்று எடுத்துவாருங்கள்” என்றான். உக்ரன் “என் முழவு” என்றபடி வெளியே ஓடினான். அதை நோக்கிவிட்டு புன்னகையுடன் திரும்பி “இவரையும் கூட்டிச்செல்லப் போகிறோமா என்ன?” என்றான் பைலன். “அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்” என்றான் சுமந்து. “அவர் நம்முடன் அவரது தந்தையும் தாயும் வருவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்…” என்று ஜைமினி சொன்னான்.

முழவுடன் பாய்ந்து உள்ளே வந்த உக்ரன் மூச்சிரைத்தபடி “என் முழவு… இதில் காற்று இருக்கிறது” என்றான். “அரணிக்கட்டையில் அனல். இருபெரும் பூதங்களையும் இரு கைகளாக கொண்டிருக்கிறார்” என்றான் பைலன். அதை வாங்கி தன் மூட்டையில் வைத்த ஜைமினி “இனிமேல் கேட்கக்கூடாது… இது இங்கேதான் இருக்கும்” என்றான். “நான் எப்படி பாடுவது?” என்று உக்ரன் கேட்டான். “பாட்டு வரும்போது கேளுங்கள் சூதரே, எடுத்துத் தருகிறேன்.” உக்ரன் கவலையுடன் “எனக்கு இப்போது பாட்டு வருகிறதே” என்றான். “இவருக்கு சிறுநீரும் பாட்டும் ஒன்று. வந்துகொண்டே இருக்கும்” என்றான் பைலன்.

“பேசாமல் இரும், சூதரே… எங்களுக்கு பணிகள் உள்ளன” என்று ஜைமினி சொன்னான். உக்ரன் வைசம்பாயனனைத் தொட்டு “அந்தணரே, என்னுடைய அரணிக்கட்டையை எடுத்துக்கொடுங்கள்” என்றான். “பிடித்து வெளியே போட்டுவிடுவேன், தெரிகிறதா?” என வைசம்பாயனன் அதட்ட அவனை விழித்து நோக்கியபின் “நீ பன்றி” என்றான் உக்ரன். “நீர் எலிக்குஞ்சு…” என்றான் வைசம்பாயனன். “பிடித்து எலிவளைக்குள் போட்டுவிடுவேன்.” உக்ரன் ஆர்வம் கொண்டு “எலிவளைக்குள்ளா?” என்றான். நெருங்கிவந்து “உள்ளே என்ன இருக்கும்?” என்றான். “அய்யோ, ஜைமின்யரே இவரை கொஞ்சம் அப்பால் கொண்டுசெல்லமுடியுமா?” என்றான் வைசம்பாயனன் தலையில் அடித்துக்கொண்டு.

“எலிவளைக்குள் பூனை நுழையுமா?” வைசம்பாயனன் “இதற்குமேல் என்னால் தாளமுடியாது” என்றான். “எலிவளைக்குள் நான் போவேன்.” ஜைமினி “நான் உங்களை எலிவளைக்குள் கொண்டுசெல்கிறேன் சூதரே, வருக!” என்று தூக்கிக்கொண்டு சென்றான். “அப்பாடா… இது என்ன வார்ப்பு என்று எனக்கு பிடிகிடைக்கவே இல்லை” என்றான் வைசம்பாயனன். “கல்வி ஞானம் அனைத்தையும் தெய்வங்கள் இப்படி அவ்வப்போது கேலிசெய்வதுண்டு” என்றான் சுமந்து. “இது கொடுமையான கேலி. ஞானம் என்பது குரங்குக்கு வால் என கூடவே பிறந்து தன்விருப்பப்படி செயல்படும் என்றால்…” என்றான் பைலன்.

சண்டன் குடில்வாயிலில் வந்து நின்று “ஒருங்கிவிட்டீர்களா?” என்றான். “ஆம், கிளம்பிக்கொண்டிருக்கிறோம்” என்றான் பைலன். “ஜைமின்யர் எங்கே?” என்று சண்டன் கேட்டான். “அவர் சூதமைந்தரை கொண்டுவிட்டுவிட்டு வரச்சென்றிருக்கிறார். இங்கே அவரால் எதையுமே செய்யமுடியாத நிலைமை” என்று பைலன் சொன்னான். “அவரும் நம்முடன் வரவிருப்பதாக எண்ணுகிறார்” என்றான் சுமந்து. “அவனும் வரவேண்டியதுதானே? வேறெங்கே செல்வது?” என்றான் சண்டன்.

“அவரா?” என்று சுமந்து பைலனைப் பார்த்தான். “அவருடைய பெற்றோர் வருகிறார்களா?” சண்டன் “இல்லை, சுதைக்கு கரு தாழ்ந்துவிட்டது. பத்து நாட்களுக்குள் குழவியிறங்கலாம். இங்கேயே தங்கி மகவுக்கு விழி தெளிந்தபின் கிளம்புவதுதான் அவர்களின் எண்ணம்” என்றான். சுமந்து “அப்படியென்றால்…?” என்றான். “நீங்கள் எண்ணுவது புரிகிறது, அந்தணர்களே. உக்ரன் நம்முடன் மட்டுமே வரமுடியும். அவன் தேடியடையவேண்டியது ஆசிரியரை. தந்தையுடன் இருக்கும் அகவை முடிந்துவிட்டது.”

வைசம்பாயனன் “ஐந்தாண்டுகள் வரை தந்தையே ஆசிரியன் என்பார்கள்” என்றான். “அது பிறருக்கு. இவன் அனலென்றே எழுந்தவன்” என்றான் சண்டன். சுமந்து “அது உண்மை. ஆனால் எப்போது அனல் எப்போது பைதல் என்று சொல்லமுடியவில்லை. அதுதான் சிக்கலே” என்றான். “பார்ப்போம்” என்று சொன்னபின் சண்டன் “நீங்கள் சொன்னபின்னர்தான் நினைவுகூர்கிறேன். அவன் மட்டும் நம்முடன் வருகிறான் என்பதை அவனிடம் நாம் இன்னமும் சொல்லவில்லை. நேற்றுமுன்னாளே அவன் பெற்றோரிடம் சொல்லிவிட்டேன்” என்றான்.

சுமந்து “அன்னைக்கு உவப்புதானா?” என்றான். “அன்னை அவன்மேல் கொண்டிருக்கும் விலக்கம் வியப்பூட்டுவது. சிம்மத்தைப் பெற்ற அன்னைமானின் மருட்சி அது. அவளால் அவனை புரிந்துகொள்ளவே முடியவில்லை. புரிந்துகொள்ள முடியாத எதையும்போல அவளுக்கு அவன் அச்சமூட்டுகிறான். அச்சம் விலக்கமாகி விலக்கம் வெறுப்பாகிவிட்டது.” சுமந்து “நாம் விலகிச்செல்லும் ஒவ்வொன்றின்மேலும் நாம் கொள்ளும் வெறுப்பு வியப்பூட்டுவது” என்றான். “வெறுப்பை உருவாக்கியே விலகிச்செல்கிறோம்” என்றான் பைலன்.

“அவள் நாம் அவனை எவ்வளவு முந்தி அழைத்துச்செல்கிறோமோ அவ்வளவு நன்று என நினைக்கிறாள். அவர்களின் சீர்வாழ்வொழுக்கில் அவன் பெரிய இடர். அவன் விலகிச் சென்றபின் அவள் அறிந்த வாழ்க்கையின் இனிமைகளில் திளைக்க முடியும்” என்றான் சண்டன். ஜைமினி உள்ளே வந்து “ஒரே அழுகை… அவருடைய முழவு இங்குதான் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு நம்முடன் வருவேன் என்று சொல்கிறார்” என்றான். பின்னால் ஓடிவந்து குடிசைக்குள் புகுந்த உக்ரன் “நானும் வருவேன், நானும் வருவேன், நானும் வருவேன்” என உச்சகட்ட கீச்சுக்குரலில் கூவினான். “ஷுத்ரசிரவஸ் என்று பெயரிட்டிருக்கவேண்டும். என்ன ஒரு குரல்” என்றான் பைலன் செவிகளில் விரல் நுழைத்து.

உக்ரனிடம் கைசுட்டி “சத்தம் போடாதே! நீயும் வருகிறாய்” என்றான் சண்டன். “நானுமா?” என அவன் விழிவிரிய கேட்டான். “ஆம், உன் மூட்டையை எடுத்துக்கொள். நாம் கிளம்புகிறோம்.” அவன் மெல்ல ஐயம் கொண்டு “தந்தை?” என்றான். “அவர் வரவில்லை.” அவன் புருவம் சுருக்கி “அன்னை?” என்றான். “அவளும் வரமுடியாது.” அவன் தலைசரித்து சற்றுநேரம் சிந்தனை செய்தபின் “அன்னையின் உள்ளே இருக்கும் குழவி?” என்றான். “அதை எப்படி கொண்டுசெல்லமுடியும்?”

உக்ரன் பெருமூச்சுவிட்டான். பின்னர் பின்னகர்ந்து சுவருடன் முதுகைச் சேர்த்தபின் “நானும் வரமாட்டேன்” என்றான். “குருவைத் தேடி போகவேண்டாமா?” என்றான் ஜைமினி. “வேண்டாம்… நான் வரமாட்டேன்” என்று கூவியபடி அவன் திரும்பி வெளியே ஓடினான். “வருவான். தகுந்த தருணங்களில் அவனுள் இருந்து அந்த வரலாற்றுமானுடன் வெளியே எழுவான்… நாம் கிளம்புவோம்” என்றான் சண்டன்.

அவர்கள் மூட்டைகளுடன் வெளியே வந்தபோது ஊர்த்தலைவரும் குடிமூத்தவர்களும் பிறரும் வெளியே காத்து நின்றிருந்தனர். ஊர்த்தலைவர் “எங்கள் சிறுகுடியில் இனி சொல்பெருகும், அந்தணர்களே. மகாசூதர் காலடிபட்ட நிலம் இது என எங்கள் குலங்கள் பெருமிதம்கொள்ளும்” என்றார். குடிமூத்தார் ஒருவர் “உங்கள் எழுத்தாணி தொட்ட எங்கள் மைந்தர்நாவுகளில் கலைமகள் வாழ்வாள். இந்த மலைக்குடி உங்களால் வாழ்த்தப்பட்டது” என்றார். பைலன் “எங்கள் உடலில் இந்த நிலத்தின் உப்பு கலந்துவிட்டது, குடியினரே. அது எப்போதும் அங்கிருக்கும்” என்றான்.

குடிப்பெண்டிர் அன்னம், நீர், மலர், விளக்கு, ஆடி எனும் ஐந்து மங்கலங்கள் கொண்ட தாலங்களுடன் இருநிரைகளாக நின்றிருந்தனர். குலத்தலைவர் குடுவைகளிலிருந்து மஞ்சள்நீரை எடுத்து அவர்களின் கால்களை கழுவினார். மலர், கனி, ஆடை, நறுமணம், பொன் என்னும் ஐந்து மங்கலங்கள் பரப்பிய தாலங்களை எடுத்து அந்தணர் நால்வருக்கும் அளித்தார். சண்டனுக்கு ஆடையும் நறுமணமும் பொன்னும் கொண்ட தாலத்தை அளித்து வணங்கினார். பெண்களின் குரவையோசையும் ஆண்களின் வாழ்த்தொலிகளும் சூழ எழுந்தன.

அவர்கள் கிளம்பிச் செல்லும்போது பைலன் திரும்பிப்பார்த்து “எங்கே சூதர்?” என்றான். “அம்மாவின் ஆடைக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறார்” என்றான் சுமந்து. கூட்டமாக அவர்களை குடியினர் ஊர்ச்சுற்றுக்கு அப்பால் கொண்டுசென்றனர். பைலன் திரும்பிப்பார்த்தான். அவன் விழிகளை சந்தித்ததும் சுதையின் சேலைக்குள் இருந்து நோக்கிக்கொண்டிருந்த உக்ரன் முகத்தை மூடிக்கொண்டான். அவன் புன்னகையுடன் “நாம் அழைக்கவேண்டுமென எதிர்பார்க்கிறாரோ?” என்றான். “சண்டர் அழைப்பார் என நினைக்கிறார் போலும்” என்றான் சுமந்து.

அவர்கள் சற்றுதொலைவுக்குச் சென்றதும் “பெரிய தந்தையே” என்று அழைத்தபடி உக்ரன் ஓடி அவர்களுக்குப் பின்னால் வந்தான். அனைவரும் சிரித்தபடி திரும்பிப்பார்த்தனர். சண்டன் “வருக, மைந்தா!” என்றான். பாதி வழி வந்ததும் நின்று “என் முழவு…” என்றபடி திரும்ப ஓடினான். “முழவு இங்கே இருக்கிறது” என்றான் சண்டன். “அம்மா?” என்றான் உக்ரன். “நீ மட்டும்தான் வருகிறாய்” என்றான் சண்டன். “அம்மா வரவேண்டும்” என்றான் உக்ரன். சண்டன் “நீ மட்டும்தான் வருகிறாய்… வா!” என்றபடி திரும்ப நடந்தான்.

உக்ரன் விம்மி அழுதபடி “அம்மாவும் வரவேண்டும்” என்று முனகிக்கொண்டு வந்தான். அவர்களை நெருங்கியதும் ஜைமினி அவனை தோளில் தூக்கிக்கொண்டான். “அம்மா அம்மா” என உக்ரன் கைநீட்டி கூவி அழுதான். சுதை திரும்பி உள்ளே சென்றுவிட்டாள். “அம்மா அம்மா” என்று அவன் கைகளை உதறி அழுதான். “இறக்கிவிடுங்கள், ஜைமின்யரே” என்றான் சண்டன். ஜைமினி இறக்கிவிட்டதும் உக்ரன் சுதை சென்றவழியை நோக்கியபடி நின்றான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. சிறியகரிய நெஞ்சு ஏறியமைந்தது.

“இளையவர். அவருக்கு இன்னமும் அன்னையைப் பிரியும் வயதாகவில்லை” என்றான் வைசம்பாயனன். “உறவுகளிலிருந்து வெட்டிக்கொள்ளாமல் அறிவுப்பயணம் இல்லை. அது எப்போதேனும் நிகழ்ந்தே ஆகவேண்டும்” என்றான் சண்டன். உக்ரன் அவர்களுக்குப் பின்னால் மெல்ல நடந்துவந்தான். புல்வெளியைக் கடந்து அவர்கள் மலைப்பாதையை அடைந்தனர். உக்ரன் “அந்தணரே, என்னை தூக்கிக்கொள்ளுங்கள்” என்றான். ஜைமினி அவனை தூக்கிக்கொண்டான். அவன் தோளில் முகம்புதைத்து கண்ணீர்விட்டபடி உக்ரன் வந்தான்.

“மகாசூதரே” என்று ஜைமினி மெல்ல அழைத்தான். “வருந்துகிறீரா?” உக்ரன் “ஆம்” என்றான். “அன்னையிடம் திரும்ப விரும்புகிறீர்களா?” என்றான் ஜைமினி. “ஆம்” என்றான் உக்ரன். “நான் உங்களை நாளையே திரும்ப கொண்டுசென்று விட்டுவிடவா?” உக்ரன் மறுமொழி சொல்லவில்லை. “சொல்லுங்கள், செல்கிறீர்களா?” உக்ரன் பெருமூச்சுவிட்டான். “உங்கள் கண்ணீர் என்னை வருத்துகிறது, சூதரே.” உக்ரன் “நான் திரும்பிச் செல்லமுடியாது” என்றான். “ஏன்?” என்றான் ஜைமினி. “அன்னை என்னை வெறுக்கிறாள்” என்றான் உக்ரன்.

ஜைமினி சற்று அயர்ந்துபோனான். “ஏன் அப்படி சொல்கிறீர்கள்? அவர் உங்கள் அன்னையல்லவா?” என்றான். “ஆம், ஆனால் அன்னையானாலும் விருப்பும் வெறுப்பும் உண்டு.” இது யார் சொல்வது என ஜைமினி வியந்தான். குழந்தையின் முகத்தை பார்க்கவேண்டுமென விழைந்தான். “ஆனால் அவர் உங்கள் மேல் பெரும்பற்று கொண்டிருக்கவேண்டும் அல்லவா?” என்றான் ஜைமினி. மறுமொழிக்காக காத்தபோது அவன் நெஞ்சு அறைந்தது. “அறிவுடையோர் பாமரரை வெறுக்கிறார்கள்” என்று உக்ரன் சொன்னான். “ஆனால் பாமரர் அறிவுடையோரை மும்மடங்கு வெறுக்கிறார்கள்.”

ஜைமினி மெல்ல உடல்தளர்ந்தான். தோளிலிருந்த சிறுமைந்தனின் உடல் பலமடங்கு எடைகொண்டதுபோல் தோன்றியது. “ஏனென்றால், அறிவுடையோர் தங்கள் விருப்பப்படி பாமரர் வாழ்வை ஆட்டிவைக்கிறார்கள்” என்றான் உக்ரன். “அப்படியென்றால் ஏன் பாமரரை அறிவுடையோர் அஞ்சுகிறார்கள்?” என்றான் ஜைமினி. “பெருந்திரளாக ஆகும்போது பாமரர் மாபெரும் வல்லமை கொண்டவர்கள். ஒற்றைநிலைபாடு கொள்கையில் அவர்கள் அறிவுடையோரை பேரலை சிறுதுரும்பை என அள்ளி அடித்துச்செல்கிறார்கள்.”

ஜைமினி பெருமூச்சுவிட்டான். “இதை எங்கே அறிந்தீர்கள்?” என்றான். “குருகுலோதயம் என்னும் சிறுநூலில் அரசு சூழ்தல் பற்றி வரும் பகுதிகளை ஒரு முதுசூதர் பாடினார். நான் அதை கேட்டபோது இப்படி எண்ணிக்கொண்டேன்” என்றான் உக்ரன். “அதை யாத்தவர் யார்?” என்றான் ஜைமினி. “அவர் குருகுலத்து மூத்தவரான கிருஷ்ணதுவைபாயன மகாவியாசர்” என்றான் உக்ரன். ஜைமினி “அவர் மறைந்துவிட்டார் என்கிறார்களே?” என்றான். “அவர் மறையமுடியாது. அவருக்காகவே இங்கே அரசரும் முனிவரும் அந்தணரும் வீரரும் மக்களும் இணைந்து இவையனைத்தையும் நடிக்கிறார்கள். அவர் தெய்வங்களின் ஆடலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.”

ஜைமினி “அவர் பெயரில் வந்துகொண்டிருக்கும் பாடல்கள் சூதர்களே பாடுபவை என்கிறார்கள்” என்றான். “இல்லை, அவற்றை பிறர் பாடமுடியாது” என்றான் உக்ரன். “நீங்கள் கூடவா?” என்றான் ஜைமினி. சிலகணங்களுக்குப்பின் “நான் பாடலாம்” என்றான் உக்ரன். ஜைமினி மீண்டும் பெருமூச்சுவிட்டு அவன் முதுகை கையால் வருடி “ஆம் மகாசூதரே, தாங்கள் மட்டுமே பாடமுடியும்” என்றான்.

[ 17 ]

அன்று உச்சிப்பொழுதில் அவர்கள் சுகவாணி என்னும் சிறிய சோலையை சென்றடைந்தனர். நெடுந்தொலைவிலேயே அங்கே ஒலித்த பறவைக்குரல்களை கேட்டார்கள். களைத்துப்போயிருந்த சுமந்து “நாம் அங்கே ஒரு நல்ல சோலையை காணமுடியுமென நினைக்கிறேன்” என்றான். “ஆம், அங்கே முன்னர் தண்டக முனிவரின் குருநிலை இருந்தது. இன்றும் அவருடைய மாணவர்கள் அங்கே வாழ்கிறார்கள். இனிய சுனை ஒன்றும் சுற்றும் அழகிய மலர்மரங்களும் உள்ளன” என்றான் சண்டன்.

பைலனின் தோளில் இருந்த உக்ரன் துயில்கொண்டிருந்தான். அவன் எச்சில் பைலனின் தோளில் வழிந்தது. “தூங்கிவிட்டாரா?” என்றான் ஜைமினி. “ஆம்” என்றான் பைலன். “நான் வைத்துக்கொள்ளவா?” என்றான் ஜைமினி. “வேண்டாம்… எடையே இல்லாமலிருக்கிறார்” என்றான் பைலன். சுமந்து “நாம் எவ்வளவு விரைவாக நீர் அருந்துகிறோமோ அவ்வளவு நன்று” என்றான். “ஏன்?” என்றான் வைசம்பாயனன். “எனக்கு நீர்விடாய் இருக்கிறது, அதனால்தான்” என்றான் சுமந்து. வைசம்பாயனன் சினந்துநோக்க பைலன் சிரித்தான்.

அவர்கள் சுகவாணிக்குள் நுழைந்தபோது சிறிய நீரோடை ஒன்று குறுக்காக கடக்கக் கண்டனர். தெளிந்த நீர் இன்மையின் ஒளி என அலைபாய ஓடிக்கொண்டிருந்தது. சுமந்து நீர் அள்ளி அருந்தினான். பிறரும் நீரிலிறங்க பைலன் மெல்ல உக்ரனை தரையில் படுக்கவைத்தான். விழித்துக்கொண்ட உக்ரன் “நான் நான்!” என்றான். “என்ன?” என்றான் பைலன். “நான்தான் தின்பேன்.” பைலன் சிரித்து “எதை?” என்றான். “பலாப்பழம்… மிகப்பெரியது.” பைலன் “சிறியவை கனவில்கூட வருவதே இல்லைபோலும்” என்றான்.

உக்ரன் எழுந்து இறங்கி நீரை அள்ளி தலைமேல் விட்டுக்கொண்டான். “குடுமியை நனைக்கவேண்டாம்” என்று சண்டன் கூரிய குரலில் சொல்ல அவன் “சரி” என கரையில் ஏறி நின்றுகொண்டான். அப்பால் முருங்கைமரங்களாலான ஒரு காட்டுச்செறிவு தெரிந்தது. விழுந்து விழுந்து முளைத்து பசுந்தளிர்க்கற்றைகளாக அசைந்துகொண்டிருந்தது அத்தழைப்பு. “முருங்கை” என்று உக்ரன் சுட்டிக்காட்டினான். “ஆனால் காய்களே இல்லை.” சுமந்து “காய்கள் அதோ மேலே நிற்கின்றன” என்றான். “இங்கே எவரோ அன்றாடம் வந்து கீரை கொய்து செல்கிறார்கள். சேற்றுக்குள் காலடிகள் தெரிகின்றன” என்று சுமந்து சுட்டிக்காட்டினான்.

KIRATHAM_EPI_71

உக்ரன் “முருங்கை” என்றான். குனிந்து ஒரு சிறிய முசுக்கட்டைப் புழுவை நோக்கினான். அது சிலிர்த்த உடலுடன் மெல்ல சென்றுகொண்டிருந்தது. “அது சிறிய குட்டி… முருங்கையின் குழவி” என்றான். திரும்பி ஜைமினியிடம் “முருங்கைக்குழவி” என்றான். அவன் கண்களில் மெல்ல பாலாடையென ஓர் மங்கல் நிகழ்வதைக் கண்ட ஜைமினி மெல்ல “யார்?” என்றான். அதற்குள் அவன் சொல்வதைக் கேட்க பிறரும் அருகணைந்தனர். “முருங்கைக்குட்டி என்று ஒரு சிறுகுழவி இருந்தது முன்பு” என்றான் உக்ரன். “அது அன்னையின் கையில் பிறந்தது. விரலிடுக்குகளுக்குள் வளைந்து ஒடுங்கி வாழ்ந்தது.” அவன் கைகளை இடுக்கி அதேபோல அமர்ந்துகாட்டினான். “மிகச்சிறிய குட்டி அது.”

“அன்னை அந்தக் குட்டிக்கு பாலும் சோறும் ஊட்டி அணைத்து வைத்துக்கொள்வாள். அது அன்னையிடம் பேசிக்கொண்டே இருக்கும்.” கைகளை விரித்து “ஒருநாள் பெரிய வேடன் ஒருவன் வந்தான். அவன் கருமையாக இருந்தான். மிகப்பெரிய மீசை. அவன் கண்கள் களாப்பழம் போல சிவந்தவை. அவன் அந்த முருங்கையன்னையை ஓங்கி வெட்ட முருங்கையன்னை அப்படியே கீழே விழுந்தது. அதை அந்த வேடன் கூட்டிக்கொண்டுவந்த பெரிய எருமை மேய்ந்தது.” சண்டன் கூர்விழிகளுடன் அருகணைந்து “எருமையா?” என்றான். “ஆம், அது அந்த முருங்கையன்னையை மேய்ந்தது” என்றான்.

“அந்த வேடன் முருங்கையன்னையின் தடியை வெட்டி சிறுதுண்டுகளாக ஆக்கி கட்டி கையில் எடுத்துக்கொண்டு சென்றான். அதிலிருந்த முருங்கைக்குட்டி அப்படியே விதை போல மண்ணில் உதிர்ந்தது. அதற்கு எங்கே செல்வதென்றே தெரியவில்லை. அழுதுகொண்டே இருந்தது. அதன்பின்னர் காற்றுசெல்லும் திசையிலேயே அதுவும் செல்ல ஆரம்பித்தது. அதற்கு யாருமே இல்லை அல்லவா?” என்றான் உக்ரன். “ஆம்” என்றான் ஜைமினி. “அந்த முருங்கைக்குட்டி அழுதுகொண்டே சென்றது. செல்லும் வழியில் இலைகளைத் தின்றது. தின்னும்போதும் அது அழுதது.”

“அது என்ன ஆயிற்று?” என்றான் ஜைமினி. “அந்த முருங்கைக்குட்டி காட்டிலேயே வாழ்ந்தது. ஒவ்வொருநாளும் இரவில் அது அன்னையை நினைத்து அழுதுகொண்டே இருந்தது. ஒருநாள் அது மேய்வதற்காக செல்லும்போது அன்னையின் மணம் வருவதை அறிந்தது. அன்னை அன்னை என்று கூவியபடி அது முடியைச் சிலிர்த்தபடி ஓடியது. ஓடி ஓடி…” அவன் கைகளை தரையில் ஊன்றி புழுபோல தவழ்ந்து காட்டினான். மூச்சிரைக்க எழுந்து “அது ஒரு பெரிய வயலை சென்றடைந்தது. அங்கே…” அவன் கைகளைத் தூக்கி சுட்டுவிரல் அசையாமலிருக்க கண்கள் செருக புன்னகைத்தான்.

ஜைமினி நெகிழ்ந்து அவனை அள்ளி தன் கையில் எடுத்துக்கொண்டான். “அங்கே அவன் என்ன கண்டான்?” என்றான் பைலன். “அந்த வேடன் முருங்கையன்னையை துண்டுதுண்டாக வெட்டி நட்டிருந்தான். அன்னை அத்தனை கணுக்களிலும் முளைத்து பல்லாயிரம் மரங்களாக வளர்ந்து ஒரு பெரிய காடாக ஆகிவிட்டிருந்தாள். முருங்கைக்குட்டி அந்தக் காட்டுக்குள் சென்று குடியேறியது.” அவன் கைகளை விரித்து “எங்கே பார்த்தாலும் அன்னை. நூறு ஆயிரம் இலக்கம் அன்னையர். அன்னைக்காடு… அது அன்னைக்காட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்தது.”

அவன் பால்பற்கள் தெரிய சிரித்தான். ஜைமினி உளம் எழ அவனைத் தழுவி புன்மயிர் குடுமியை முத்தமிட்டான். “என் அரணிக்கட்டை எங்கே?” என்றான் உக்ரன். “ஆரம்பித்துவிட்டார்” என்றான் பைலன். சுமந்து சிரித்தான். ஐயத்துடன் சுமந்துவை நோக்கி “இவர் என் அரணிக்கட்டையை எடுத்துவிட்டார்” என்றான் உக்ரன். “இல்லை இளஞ்சூதரே, உள்ளே இருக்கிறது” என்றான் ஜைமினி. “எங்கே?” என்றபடி அவன் சென்று இறக்கி வைக்கப்பட்ட மூட்டைகளை பிரிக்கத் தொடங்கினான்.

“இதென்ன தொடர்பே இல்லாமல் ஒரு குழந்தைக்கதை?” என்றான் வைசம்பாயனன். “அது இப்போது குழந்தையாக இருக்கிறது” என்றான் சண்டன். பைலன் “ஆனால் அக்கதையினூடாக வெளியே வந்துவிட்டார். இனிமேல் திரும்ப மாட்டார்” என்றான். “ஆம்” என்றான் சண்டன். “ஆனால்…” என்றபின் “சுதை, பாவம்” என்றான். “என்ன?” என்றான் ஜைமினி. “அவன் சொன்னதை கேட்டீர்கள் அல்லவா?” அவர்கள் அதை ஒரு குளிர்காற்றென ஒருங்கே உணர்ந்தனர். “ஈன்று மீளமாட்டாளா?” என்றான் பைலன். “அறியேன். ஆனால் அவன் உணர்கொம்புகள் கொண்ட உயிர்” என்றான் சண்டன்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 70

[ 14 ]

உக்ரனின் குரல் மிக மெல்லிய ஊழ்க நுண்சொல்போல் முதலில் எழுந்தது. “அடிமுடி.” அவன் அதையே சொல்லிக்கொண்டிருக்க பைலனின் உள்ளத்தில் அச்சொல் குழம்பிப்பரவியது. அடிதல், முடிதல். அடித்து அடித்து அடிமையெனப் பணிந்து அடிதொழுது முடிந்தமைந்த முடி. முடிந்த முடி, முதலென முடியென எழுதல். அடியென அமைவென விழுதல். சொல் எங்கெல்லாம் சென்று தொடுகிறது! நச்சுக்கொடுக்கு இல்லாத சொல்லென ஏதுமில்லை. அத்தனை சொற்களும் ஊழ்க நுண்சொற்களே. மொழி என்பது ஓர் ஊழ்கவெளி. மொழிப்படலம். அடிமுடி காணாத அனல்வெளி. மொழியாகி நின்றிருக்கும் இதில் எல்லா சொற்களும் அடிமுடியற்றவை.

உக்ரனின் சொற்கள் நஞ்சுண்டு மயங்கி காலிடறி நடக்கும்  வெள்ளாட்டுநிரைகளென ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு ஒன்றை ஒன்று சார்ந்தும் சரித்தும் நிரைகொண்டன. நிரைகலைந்து மீண்டும் கண்டுகொண்டன. என்ன சொல்கின்றான்? அவன் விரல்கள் தவிப்பதை பைலன் கண்டான். வைசம்பாயனன் அவன் கையில் அரணிக்கட்டையை எடுத்து அளித்தான். அச்செயல் பைலனை மெல்லிய அதிர்வுக்குள்ளாக்கியது. அறியாப்பொருள்கொண்ட ஒரு செயல். மானுடர் கைகளை தெய்வங்கள் எடுத்துக்கொள்ளும் தருணம். எப்போதும் முள்முனைமேல் நிலைபிறழாதிருக்கிறான் இவ்விளையசூதன். சொல்லே அருளென்றாகுமா? சொல்லிலே விசும்பு வெளித்தெழலாகுமா?

அரணிக்கட்டையின் மென்மரப்பரப்பில் உக்ரனின் விரல்கள் ஓடலாயின. தொட்டுத்தொட்டு அவை தாவ மென்மரம் தோற்பரப்பென ஒலிகொண்டது. அறிதல்களுக்குரிய அடி. அடிதாளம். அறிந்தறிந்து செல்லும் முடி. முடிதாளம். “அவ்வண்ணம் எழுந்தான் அனலுருக்கொண்ட முதலோன்!” என்றான் உக்ரன். “அது அறியவொண்ணா அப்பழங்காலத்தில் நிகழ்ந்தது. ஒவ்வொரு நாளும் அவனை அழகுருவனாக தன் அருகே கண்டுகொண்டிருந்தாள் அன்னை. அருள்புரிக் கைகளுடன் அவனை தங்கள் தவத்திற்குப் பின்  எழுப்பினார்கள் முனிவர்கள். ஆட்டன் என அவனை அறிந்துரைத்தனர் கவிஞர்.”

ஆனால் அனைவரும் அறிந்திருந்தனர், அனலென்பது என்னவென்று. தங்கள் காதலை, தவத்தை, சொற்களைக் கடந்து அரைக்கணத்தின் ஆயிரத்தில் ஒரு மாத்திரையில் அடிமுடி அறியவொண்ணா அப்பெருங்கனலைக் கண்டு அஞ்சிப்பின்னடைந்து அறிந்தவற்றுள்  மீண்டமைந்தனர். அறியவொண்ணாமையும் அறிதலுமாக நின்றிருந்தது அது. அதன் நிழலில் வாழ்ந்தது விசும்பு.

அந்நாளில் ஒருமுறை விண்ணுலாவியாகிய நாரதர் பிரம்மனின் அவைக்கு சென்றார். அங்கு தன் தேவியுடன் அமர்ந்து படைப்பிறைவன் தாயம்  விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டார். ஒரு முகம் சிரிக்க இன்னொன்று கணிக்க மற்றொன்று வியந்து நோக்கியிருக்க பிறிதொன்று ஊழ்கத்திலமைந்திருக்க ஒரு கையில் தாமரையும் மறுகையில் மின்படையும் கொண்டு கீழிருகைகளால் எண்களத்தில் பகடை உருட்டிய பிரம்மன் திரும்பி “வருக நாரதரே, இங்கு விசைமுற்றிய ஓர் ஆடல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வெற்றியும் தோல்வியும் வாள்முனை கொண்டுள்ளன” என்றார்.

“ஆம், இருவர் முகத்திலும் அதன் உவகை உள்ளது” என்றபடி அருகணைந்தார் நாரதர். பகடையை உருட்டிவிட்டு புன்னகையுடன் பின்சாய்ந்து “ஆம், ஆடுக!” என்றார் பிரம்மன். திரும்பி நாரதரிடம் கண்சிமிட்டி “ஒவ்வொரு பகடையும் ஒரு புதுப் படைப்பு. பகடை நின்றபின்னரே படைக்கப்பட்டது என்ன என நான் அறிவேன். காலம், இடம், பரு, பொருள் என நான்கு பக்கங்களின் ஆடல் மட்டுமே இப்பகடை” என்றார். உதடுகோட்டி பகடையின் எண்களை நோக்கிய கலைமகளைச் சுட்டி “என் படைப்புக்கு இவள் சொல்நிகர் வைக்கவேண்டும். அவள் சொல்லுக்கு நான் படைத்தளிக்கவேண்டும் என்பதே ஆடல்நெறி” என்றார்.

தேவி அக்களங்களை சுட்டுவிரலால் தொட்டு எண்ணி காய்களை கருதிக்கருதி நகர்த்திவைத்தாள். பின்னர் “ஆம்” என தலையசைத்து காய்நிரைத்து நிமிர்ந்து புன்னகைத்தாள். “நன்று” என்றார் நாரதர். குனிந்து நோக்கிய  பிரம்மன் “ஆம், அது தன் பெயரைப் பெற்றுவிட்டது” என்றார். “சொல்சூடுவதுவரை பொருள் நின்று பதைக்கிறது. சொல் அதன் அடையாளம் ஆனதும் பிற அனைத்து அடையாளங்களையும் அதற்கேற்ப ஒடுக்கி அதற்குள் நுழைந்து ஒடுங்கிக்கொள்கிறது. விந்தைதான்!” என்றார் நாரதர். “சொல்லெனும் சரடால் பொருள்வெளியுடன் இணைந்து தானில்லாதாகிறது” என்றாள் கலைமகள்.

“இனி உன் ஆடல்” என்றார் பிரம்மன். பகடையை கையில் எடுத்து மெல்லிய சீண்டலுடன் நகைத்து கலைமகள் அதை உருட்டினாள். புரண்டு விழுந்த எண்களை நோக்கி பிரம்மன் குனிய நாரதரிடம் “ஒலி, வரி, பொருள், குறிப்பு என நான்கு பட்டைகளால் ஆன புதிய ஒரு சொல், அதற்குரிய பொருளைப் படைத்தமைப்பது அவர் ஆட்டம்” என்றாள். தலையில் மெல்ல சுட்டுவிரலால் தட்டியபடி இடக்கையால் காயொன்றை நகர்த்தி தயங்கி பின்னெடுத்து மீண்டும் தயங்கி மீண்டும் வைத்தார் நான்முகன். மீண்டும் நகர்த்தியபோது முகம் தெளிந்தது. “இதோ” என்றார்.

“ஆம், பொருள் பிறந்து சொல்லென்றாகிவிட்டது” என்றார் நாரதர். “விந்தை, பொருள் தனக்கு முன்னரே இருந்த சொல்லை நடிக்கிறது.” மீண்டுமொரு ஆடலுக்கென அன்னை பகடையை எடுத்தபோது “மொழி தொடாத பொருளொன்று புடவியில் இல்லை என்பார்கள். மொழியிலிருந்து பொருளுக்கோ பொருளிலிருந்து மொழிக்கோ சென்றுகொண்டிருக்கிறது நில்லாப்பெருநெசவு” என்று தனக்குத்தானே என சொன்னார். “சொற்பொருள் என விரியும் இதை தன் ஆடையென்றாக்கி அணிந்து நின்றாடுகிறான் ஒருவன். அவனுக்கு சிவம் என்று சொல். அச்சொல்லுக்கு ஆடல் என்று பொருள். அச்சொல்லுக்கும் பொருளுக்கும் அப்பால் அவனொரு அடிமுடியிலி மட்டுமே” என்றார்.

பிரம்மன் திரும்பி நோக்கி “அடிமுடி காணவொண்ணா ஒன்று என்றால் அது பிரம்மம் மட்டுமே. அதுவன்றி பிறிதேதும் ஆக்கப்பட்டதும் அழிவுடையதுமேயாகும்” என்றார். நாரதர் “ஆம், அதையே நானும் எண்ணினேன். தங்கள் படைப்பிலிருந்து எழுந்தது புடவி. புடவியிலிருந்து எழுந்தது சிவம் என்பது தொல்கூற்று. அவ்வண்ணமெனில் அடியிலிருப்பது தங்கள் படைப்பே. அதன் சுழியத்தில் எழுந்த அனல் எப்படி அடியிலியாகும்?” என்றார். பிரம்மன் நகைத்து “ஆம், அதை நீர் சென்று கேளும்” என்றார். “சென்று கேட்கலாம், ஆனால் நான் விழைந்த வடிவில் அவன் வரும்போது அவ்வினாவுக்கு பொருளே இல்லை. அனைத்து உசாவல்களுக்கும் அப்பால் எழுந்து நிற்கும் அந்த அனற்பெருந்தூணிடமல்லவா அதை நாம் கேட்க வேண்டும்?” என்றார்.

கையில் பகடையுடன் புன்னகைத்து நின்ற தேவி “இவர் அறியாத ஒன்றுள்ளது, முனிவரே. படைப்பின் முன் படைத்தவன் மிகச்சிறியவன். தன்னை நிகழ்த்தி வளர்ந்தெழும் படைப்புக்கு வேரும் கிளையும் முடிவடைவதே இல்லை. எனவே அதற்கு மண்ணும் வானும் இல்லை” என்றாள். “அது நீ படைக்கும் சொல்லுக்கு. அது உளமயக்கு. நான் படைப்பவை காலமும் இடமும் கொண்ட இருப்புக்கள். அவை என் கைக்கு அடங்குபவை” என்றார். “நீங்கள் அதை அறியமுயல்கையிலேயே அது அறிபடுபொருள் என்றாகிவிடுகிறது. அறிவை மட்டுமே அறியமுடியும் என்பதனால் அனைத்து அறிபடுபொருட்களும் அறிவை அளித்து அறிவுக்கு அப்பால் நின்றிருப்பவை மட்டுமே” என்றாள் கலைமகள்.

அவள் சிரிப்பால் சீண்டப்பட்டு சினம்கொண்டு “அறிந்து வந்து உனக்கு அறிவென்பது பொருள் அளிக்கும் தோற்றம் மட்டுமே என்று காட்டுகிறேன்” என்றபடி பிரம்மன் எழுந்துகொண்டார். அவருடைய களிமுகம் சினத்தில் வெறித்தது. கணித்த முகம் தன்னுள் ஆழ்ந்தது. வியந்த முகம் பதைக்க ஊழ்கமுகம் விழித்தெழாதிருந்தது. “அளிகூர்ந்து அமருங்கள், படைப்பவரே!  ஒரு சொல்லாடலின்பொருட்டு நான் சொன்னது இது. சென்று அம்முடிவிலியை அடி தேடுவதென்பது வீண் வேலை. அத்துடன்…” என்றார் நாரதர்.

“அத்துடன் எனில்? சொல்க!” என்றார் பிரம்மன். “ஒருவேளை அடி சென்று தொடமுடியாவிடில்…” என நாரதர் தயங்க “வீண்சொல்!” என்று பிரம்மன் சீறினார். “அடியென அமைந்திருக்கிறது என் படைப்பு. சொல் எத்தனை வளர்ந்தாலும் ஆணிவேரிலிருக்கிறது விதையின் முதல் துளி. சென்று அதைத் தொடுவதொன்றும் எனக்கு அரிதல்ல. வருக, சென்று தொட்டுக்காட்டுகிறேன்” என்றார். நாரதர் உடனெழுந்து “நான் இதை எண்ணவில்லை, தேவி” என்றார். கலைமகள் சிரித்து “நன்று, சிலவற்றை அவர் கற்கலுமாகும்” என்றாள். “வந்து நான் என்ன கற்றேன் என்று சொல்கிறேன். இங்கு படைத்தவன் நானே, எனவே மூவரில் முதல்வனும் நானே” என்றபின் நாரதரிடம் “வருக!” என்று சொல்லி பிரம்மன் நடந்தார்.

விண்வெளியில் பிரம்மனுடன் நடக்கையில் நாரதர் “தாங்கள் அடிதேடலாகும். அடிதொடுவதும் உறுதி. ஆனால் அதற்கு முடியுமில என்று சில நூல்கள்  உரைக்கின்றன. விண்வடிவோன் அறியாத முடியென்று இருக்கலாகுமா என்ன?” என்றார். ”ஆம், முடியென்று ஒன்றெழுந்தால் அவர் விண்வடிவப் பேருடலிலேயே அது சென்றமையலாகும்” என்றார் பிரம்மன். “அவரிடம் முடி சென்று தொடமுடியுமா என்று கேட்போம்” என்ற நாரதர் “ஒருவேளை தொடமுடியாமலானால் அதையும் தாங்களே தொட்டுக்காட்டலாம்” என்றார். நகைத்து “ஆம், அடியும் முடியும் அறிந்தபின் அவன் எல்லையை நான் வகுப்பேன்” என்றார் பிரம்மன்.

அவர்கள் சென்றபோது நாரணனும் நங்கையும் பாற்கடலின் கரையில் கரந்தறிதலை விளையாடிக்கொண்டிருந்தனர். அவரை கண்மூடச்செய்துவிட்டு மணல்கூட்டி வைத்து தன் கையிலிருந்த அணி ஒன்றை திருமகள் ஒளித்துவைத்தாள். அவர் அவள் விழிநோக்கி சிரித்தபடி கைவைத்து அதை எடுத்தார். “எப்படி எடுத்தீர்கள்? கண்களை நீங்கள் மூடவில்லை” என்று அவள் சினந்தாள். “மூடிக்கொண்டுதான் இருந்தேன்…” என்றார் நாரணன். “மீண்டும்… இம்முறை நீங்கள் அறியவே இயலாது” என்றபடி அவள் தன் கணையாழியின் சிறிய அருமணி  ஒன்றை மண்ணில் புதைத்தாள். “சரி, விழிதிறவுங்கள்… தேடுங்கள்” என்றாள்.

அவர் அவளை நோக்கி நகைத்தபின் அந்த மணல்மேல் கையை வைத்தார். “இல்லை” என அவள் கைகொட்டி நகைத்தாள். மீண்டும் ஓர் இடத்தில் கை வைத்தார். “இல்லை… இன்னும் ஒரே முறைதான்… ஒரேமுறை… தவறினால் நான் வென்றேன்” என்றாள். அவர் கையை வைத்ததும் முகம் கூம்பி “ஆம்” என்றாள். அவர் எடுப்பதற்கு முன் தானே மணலைக் கலைத்து அருமணியை எடுத்தபடி “ஏதோ பொய்யாடல் உள்ளது. எப்படி உடனே கண்டுபிடிக்கிறீர்கள்?” என்றாள். நாரணன் சிரித்தார். அவர்களை நோக்கி பிரம்மனும் நாரதரும் வருவதைக் கண்டு தேவி முகம் திருப்பிக்கொண்டாள்.

அருகணைந்த நாரதர் “தேவி சினந்திருக்கிறார்” என்றார். “ஆம், அவள் மறைத்துவைத்தவற்றை நான் எளிதில் கண்டுபிடிக்கிறேன் என வருந்துகிறாள்” என்றார் நாரணன். நாரதர் “தேவி, செல்வங்களை மண்ணிலன்றி எங்கும் ஒளித்து வைக்கமுடியாது. அவரோ மண்மகளின் தலைவர்” என்றார். தேவி சினத்துடன் திரும்ப “அறிவிழிகொண்டவர் முன் எதை மறைக்கமுடியும் என சொல்லவந்தேன்” என்றார். பிரம்மன் “நாம் வந்ததை சொல்லும், முனிவரே” என்றார்.

“முழுமுதன்மைக்கு ஒரு அணு குறைவென்றே மும்மூர்த்திகளும் அமையமுடியுமென தாங்களும் அறிந்திருப்பீர்கள்” என்றார் நாரதர். “ஆனால் சிவப்படிவர் தங்கள் இறைவன் அடியும்முடியுமற்ற பெருநீட்சி என எழுந்தவர் என்கிறார்கள். அது ஆணவம் என அனைத்தையும் படைத்தவர் எண்ணுகிறார். அடி தேடிக் கண்டடைந்து இவ்வளவுதான் என அவரை வகுத்துரைக்க சென்றுகொண்டிருக்கிறார்.” நாரணன் “முடி தேடி நான் செல்லவேண்டியதில்லை. அது என் அடிவரை வந்து நின்றிருக்கும் என அறிவேன்” என்றார். “ஆம், அதை அறியாதோர் எவர்?” என்றார் நாரதர். “ஆனால் ஆற்றப்படாதவை அனைத்தும் விழைவுகளும் கூற்றுகளுமென்றே பொருள்படும் என்று நான் சொல்லவில்லை என்றாலும் நூலோர் பின்னர் சொல்லக்கூடும்.”

“அதை ஆற்றிவிடுகிறேன். அவன் முடிதொட்டு மீள்கிறேன்” என்று விஷ்ணு எழுந்தார். “நன்று, ஆனால் முன்னரே நீங்கள் மூன்றடியால் அளந்த விண் அது. அதை மீண்டும் அளப்பதில் விந்தை என்ன இருக்கிறது? அன்று அளக்காது எஞ்சியது அவுணன் சென்றமைந்த ஆழம். அதை அளந்து மீள்கையில்தான் உங்கள் மூன்றாம் அடியும் முழுதமைகிறது” என்றார் நாரதர். பிரம்மன் ஏதோ சொல்ல முயல அதை முந்தி “பருவுருக்கொண்டவை அனைத்தும் நான்முகன் படைப்பென்று அனைவரும் அறிவர். பரு அனைத்திலும் உறையும் விண்ணையும் படைத்தவர் முழுதளந்துவிட்டால் அதன்பின் அவரை முனிவர்கள் முழுமுதலுக்கு நிகர் என்றே போற்றுவர்” என்றார் நாரதர்.

தேவி புன்னகையுடன் “இங்கு கைப்பிடி மண்ணை அகழ்ந்து மணி தேர்வதுபோல் அல்ல அது. அடியிலா ஆழம். அங்கே அனலென அகழ்ந்து ஆழ்ந்துசெல்கிறது அவர் அடி என்கிறார்கள்” என்றாள். சினத்துடன் திரும்பி “அளந்து மீள்கிறேன். அது நான் என்னையும் அறிந்துகொள்ளுதலே” என்றார் விஷ்ணு. “நன்று, இதோ நூலோர் நவின்று மகிழும் ஒரு நூலுக்கான கதை” என்று நாரதர் சொன்னார்.

அவர்கள் கயிலாய மலைக்குச் சென்றபோது அங்கே தன் இரு இளமைந்தருடன் ஆடிக்கொண்டிருந்தாள் அன்னை. “தேவி, உங்கள் கொழுநன் எங்கே?” என்று நாரதர் கேட்டார். “இங்கு இவர்களின் தந்தையென இருப்பவர் நினைத்தபோது எழுந்தருள்வார். அயனும் அரியும் சேர்ந்து தேடுபவர் எவரென நான் அறியேன். அவரை நீங்களே கண்டடைக!” என்றாள் தேவி. “திசையிலியின் மையத்தில் அடியிலியில் தொடங்கி முடியிலியில் ஓங்கி நின்றிருக்கும் அனலே அவர் என்றனர் நூலோர். அடிமுடி காண சென்றுகொண்டிருக்கிறார்கள் இவர்கள். அவர்கள் காண்பதைக் காண சென்றுகொண்டிருக்கிறேன் நான்” என்றார் நாரதர்.

“நானும் உடன்வருகிறேன்” என தன் வேலுடன் எழுந்தான் இளைய மைந்தன். “அது முறையல்ல, மைந்தா” என்றாள் அன்னை. “எந்தையென வந்தவரை நான் இன்றுவரை முழுதாகக் கண்டதில்லை.” தேவி அவனைத் தடுத்து “தனயர் தந்தையரை முழுதுறக் காணலாகாது, மைந்தா. அவர் அளிக்கும் முகமே உனக்குரியது” என்றாள். உணவுண்டுகொண்டிருந்த மூத்த மைந்தன் “ஆம், அன்னை சொல்லியே தந்தைமுகம் வந்தமையவேண்டும்” என்றான்.

அவர்கள் செல்லும் வழியில் விண்கடல் கரையோரம் அமர்ந்து தன் சிறு கமண்டலத்தில் மணலை அள்ளி அப்பாலிட்ட அகத்தியரைக் கண்டனர். “என்ன செய்கிறீர்கள், குறுமுனியே?” என்றார் நாரதர். தலைதூக்கி நோக்கியபின் அதே கூருள்ளத்துடன் மணல் அள்ளிக் கொட்டியபடி “அளந்துகொண்டிருக்கிறேன்” என்றார் அகத்தியர். “கடல்மணலையா? நன்று” என நகைத்தார் பிரம்மன். “அதை அளந்து முடித்துவிட்டு கடலை அளப்பீர் அல்லவா?” என்றார் விஷ்ணு. “இல்லை, நான் அளந்துகொண்டிருப்பது என்னை. எனக்கு எப்போது சலிக்கிறதென்று பார்க்கிறேன்” என்றார் அகத்தியர். “சலிக்காத ஒன்றை அளக்கச் செல்கிறோம். உங்கள் கமண்டலத்துடன் வருக!” என்றார் நாரதர். அவர்  ஆவலுடன் எழுந்து “செல்வோம்… நான் திரும்பிவந்து இதை அளக்கிறேன்” என்றார்.

[ 15 ]

ஆசிரியனை அளக்க நான்கு மாணவர்கள் கிளம்பிச்சென்றனர். ஒருவர் தன் ஆணவத்தால், பிறிதொருவர் தன் அறிவால், மூன்றாமவர் தன் ஆர்வத்தால் சென்றனர். நான்காமவர் சென்றது அளந்து விளையாடும்பொருட்டு. பதினான்கு வெளிகளை, இறத்தல், நிகழ்தல், வருதல், நுண்மை, இன்மை எனும் ஐந்து காலங்களை,  காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருஷன், மாயை, துரியம் என்னும் எட்டு தன்னிலைகளை அவர்கள் கடந்துசென்றனர். நால்வரும் அப்பால் அப்பாலெனச் சென்று அவர்கள் உற்றதெல்லாம் அகன்றபின் கடுவெளியின் மையப்பெரும்பாழில் முழுமுதன்மை என எழுந்த அனல்பேருருவைக் கண்டு நின்றனர்.

“நான் சென்று அடியளந்து மீள்கிறேன்” என்றார் பெருமாள். தன் உருப் பெருக்கி கொடுந்தேற்றையும் மதவிழியும் கொண்டு பன்றி வடிவெடுத்தார். அவ்வுருக் கண்டதும் நீரென புகையென நெகிழ்ந்து அவரை தன்னுள் அணைத்துக்கொண்டாள் புவிமகள். “நான் விண்சென்று முடிதொட்டு மீள்கிறேன்” என்று எழுந்தார் பிரம்மன். “எங்கு செல்கிறார்கள்?” என்றார் அகத்தியர். “அளந்துவர” என்றார் நாரதர். “விளையாடும்பொருளை ஏன் அளக்கவேண்டும்? அளந்தால் ஆட்டம் முடிந்துவிடுமே?” என்றார் குறுமுனி.

 KIRATHAM_EPI_70 (1)

காலமிலியில் இரு தெய்வங்களும்  பறந்தும் அகழ்ந்தும் சென்றனர். மண்ணைக் கடந்து ஏழு ஆழுலகுகளைக் கடந்து மொழியின்மை, வடிவின்மை, ஒளியின்மை, விழியின்மை, அகமின்மை, நுண்மையின்மை, இன்மையின்மை எனும் ஏழு இருளுலகுகளையும் கடந்து சென்றுகொண்டே இருந்தார் விஷ்ணு. அங்கும் முடிவிலாது சென்றது அனலுருவின் அடி. மேலும் மேலுமென செல்லச்செல்ல அவர் உள்ளம் ஒடுங்கிக் கூம்பி குறுகி ஊசியென்றாகி நீண்டு மேலும் மேலும் கூர்ந்து இன்மையென்றாகியது. இன்மையென இருந்தது. அந்த முழு விடுதலையை அடைந்து மீண்டதும் அது என்ன என திகைத்தார்.  அப்பெருநிலை கலைய எழுந்த முதல் அதிர்வின் ஓசையையே அந்நிலைக்கான பெயரெனச் சூட்டினார். “தம!”

மேலெழுந்து சென்றுகொண்டே இருந்த பிரம்மன் செல்லுந்தோறும் விரிந்தார். ஒளியால் ஒலியால் திசையால் மையத்தால் இருப்பால் இன்மையால் நுண்மையால் ஆன வான்களைக் கடந்தார். வானென  விரிந்து அகன்று பரவி மெலிந்து இலாதானார். பின் மீண்டபோது தான் கண்டடைந்தது என்ன என திகைத்தார். தன் படைப்புக்கற்பனை அனைத்தும் பெருக நான்கு கைகளாலும் வெளிதுழாவினார். “எழுதழலென எழுக ஒரு மலர்!” என்றார். அவர் முன் செம்மஞ்சள் ஒளியுடன் வந்து நின்றது செந்தாழை. அதன் ஒரு மடலை எடுத்துக்கொண்டு கீழிறங்கி வந்தார்.

அவர்களை நோக்கி ஓடிவந்த நாரதர் “திருமகள் தலைவனே, நீங்கள் அறிந்ததென்ன?” என்றார். “அறியவொண்ணாமையை அறிந்து ஓர் ஊழ்கநுண்சொல் என்றாக்கி கொண்டுவந்தேன்” என்றார் நாரணன். “அது தம என்னும் பொருள்பெருகும் ஒலி.” நாரதர் வணங்கி “ஆம், முடிவிலிக்கு ஒரு மந்திரம் நிகர். நீங்கள் அறிந்து மீண்டீர் என ஒப்புகிறேன்” என்றார்.

பிரம்மனிடம் திரும்பி “தாங்கள் அறிந்ததென்ன, கலைமகள் கொழுநரே?” என்றார் நாரதர். “கூறமுடியாமை கவிஞனிடம் அணியென்று மலர்கிறது. இது பெருந்தழலின் ஒரு கொழுந்து” என்று தாழைமலர் மடலைக் காட்டினார். “இது வெம்மையும் வீறும் இல்லாத தழல். அதன் அழகு மட்டுமே ஆகி என் கையில் அடங்குவது.” நாரதர் கைகூப்பி “ஆம், பொருந்தியெழும் ஒப்புமை ஒன்று பொருளுக்கு நிகர். முடியிலாதெழும் அனலே இம்மலர். நீங்களும் அறிந்துமீண்டீர்” என்றார்.

நாரதர் தலைநிமிர்ந்து நோக்கி “அலகிலியே, அறியமுடியாமை அறிந்து மீண்டுளார்கள் இருவரும். இவை மெய்யென்றால் அவ்வாறே ஆணையிடுக!” என்றார். இடியோசை எழுந்து “ஆம் ஆம் ஆம்” என முழங்கியது. “நாங்கள் அறியுமொரு  உருக்கொண்டெழுந்து அருள்புரிக!” என்றார் நாரதர். இடியோசை நகைப்பென்று ஆகி மறைந்தது. அகத்தியரிடம் திரும்பி “நீங்கள் சென்று முயல்க!” என்றார் நாரதர். தன் கமண்டலத்துடன் சென்று எதிரே நின்றிருந்த எரியெழுகையை கமண்டலத்தில் அள்ளி வந்து அவர்களிடம் காட்டினார் குறுமுனி. ஓங்கி நிறைந்திருந்த அனல் அங்கே குளிர்ந்த சிற்றலைகளுடன் ஒளிகொண்டிருந்ததை அவர்கள் நால்வரும் கண்டனர்.

“காலநாகக் குழவி சுருண்டமைந்த தாழைமடலுக்கு வணக்கம். தன் வாலை தான் கவ்வி ஒலிக்கும் ஊழ்கநுண்சொல்லுக்கு வணக்கம். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று உக்ரன் சொல்லி முடித்தான். அவனைத் தாங்கி நின்றிருந்த உள்ளங்கை ஒன்று விலகியதுபோல மண்ணில் விழுந்து உடல்வளைத்து கைத்தாளமென ஒலித்த அரணிக்கட்டைமேல் முகம் பதித்து அவன் கிடந்தான். மெல்லிய கரிய உடல் அப்போதுதான் முட்டையை உடைத்து வெளிவந்த குஞ்சுபோல ஈரத்துடன் மெல்ல விதிர்த்து உதறிக்கொண்டிருந்தது. ஜைமினி எழுந்துசென்று அவனைத் தொட்டபோதும் எம்பி விழுந்தது. அவன் உக்ரனை மெல்லத்தூக்கி எடுத்தான். அவன் கைகளும் கால்களும் விரைத்து இழுபட்டிருக்க வாயோரம் மென்னுரை வழிந்தது.

உக்ரனை தோளில் சாய்த்தபடி ஜைமினி வெளியே செல்வதை அவர்கள் நோக்கி அமர்ந்திருந்தனர். ஜைமினியின் தோளில் எச்சில் வழிந்தது. மெல்லிய குரலில் உக்ரன் ஏதோ சொன்னான். இருமுறை அவன் குழறிய பின்னரே அவன் சொல்வதென்ன என அவனுக்குப் புரிந்தது. உக்ரன் “தரமாட்டேன்” என்றான். மெல்ல நெளிந்தபடி மீண்டும் “யாருக்கும் தரமாட்டேன்” என்றான். “அது என் அரணிக்கட்டை”

ஜைமினி “ஆம், எவருக்கும் அதை அளிக்கவேண்டியதில்லை” என்றான். உக்ரன் விழித்துக்கொண்டு எழுந்து தலைதிருப்பி அவனை பார்த்தான். சிறிய சுட்டுவிரலைக் காட்டி “நான் அதில் தாளமிடுவேன்” என்றான். ஜைமினி “ஆம், நீங்கள் நெருப்பில் தாளமிடுபவர், மகாசூதரே” என்றான்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 69

[ 13 ]

சண்டன் நீராடி எழுந்து சடைத்திரிகளை தன் தோள்மேல் விரித்து கைகளால் ஒவ்வொரு சரடாக எடுத்து ஈரம் போக உதறி பின்னுக்கு எறிந்தபடி நடந்தான். அவனுடைய மரவுரி ஆடையைத் துவைத்து அழுத்திப் பிழிந்து கைகளில் எடுத்தபடி ஜைமினி பின்னால் சென்றான். சுமந்துவும் வைசம்பாயனனும் பைலனும் தங்கள் ஆடைகளைப் பிழிந்தபடி பின்தொடர்ந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் அகத்தே  அவன் சொற்களையே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தனர்.

ஏதோ ஒரு கணத்தில் பைலன் இனி அங்கு ஒரு நாளும் தங்கியிருக்க முடியாதென்று உணர்ந்தான். அவ்வுணர்வு எழுந்ததுமே உள்ளம் பொங்கியெழுந்தது. அங்கிருந்து கிளம்பவேண்டுமென உடல் தவித்தது. அங்கு  தங்கும் ஒவ்வொரு நாளும் சென்றடையும் இலக்கு அகன்று போகிறது. பின்னர் தோன்றியது,  அக்கணம் வரை இலக்கென்று ஏதும் இருக்கவே இல்லை என்று. அது  பிறர் அறியாது தனிமையில் வருடி மகிழும் ஓர் இனிய கற்பனையாகவே இருந்தது. எங்கிருந்தோ ஒரு ஆசிரியன் எழுந்து வந்து அவன் தலையைத் தொட்டு வாழ்த்தி தன் சொல்வளையத்திற்குள் எடுத்துக்கொள்கிறான். வான்நிறைந்த நீராவி குளிர்கலத்தில் பனித்து சொட்டாவதுபோல மெய்மை திரண்டு எழும் ஒரு மனிதர்.

ஆனால் அது அவன் வாசித்து அறிந்த நூல்களில் இருந்தும் கேட்டறிந்த கதைகளில் இருந்தும் உருவான உளஓவியம் மட்டுமே. அவன் விழைவதென்ன என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. இல்லத்திலிருந்து எழுந்து கதைகளுக்குள் சென்றுவிடவேண்டுமெனும் விழைவு. காலந்தோறும் அப்படி கிளம்பிக்கொண்டே இருக்கிறார்கள். அனைத்தையும் கலைத்து கடந்து செல்லும் ஓர் ஆசிரியன் என்றால் அவனுக்கு அனைத்து இலக்கணங்களும் தெரிந்திருக்கவேண்டும். இம்மண்ணை நோக்கி ஒன்றை சொல்லும் தகுதி உடையவனுக்கு பெரும்கனவுகள் இருக்கவேண்டும். கனவில் உலாவும் ஒருவன் வாழ்ந்து அறிந்திருக்கவேண்டும் அனைத்தையும். ஒன்றிலாது பிறிதொன்றிலை.

நான்கு முனைகளிலும் முழுமைகொண்ட ஒருவன் இருக்க முடியுமா என்ன? கவிஞனும் அறிஞனும் பித்தனும் பெருஞ்சூழ்ச்சியாளனுமான ஒருவன்.  எங்கோ அப்படி ஒருவன் இருந்தாகவேண்டும். ஏனெனில் அது சொல்லப்பட்டுவிட்டது. நினைவுக்கு எட்டிவிட்டது. சென்றடையும் தொலைவென்ன என்பதே வினா.  சண்டன் சொன்ன அனைத்தும் மறுசொல் இலாத உண்மை என்று உறுதிகொண்டது உள்ளம். அழைத்துச்செல்பவன் அறியாச்சிறுவனே. ஏனெனில் உக்ரன் ஒவ்வொரு கணத்திலும் முழுவிசையுடன் இருந்தான். எய்யப்பட்டு  இலக்கு நோக்கி செல்லும் அம்பிற்கு மட்டுமே அவ்விரைவு இயல்பு. அவன் வழி பிழைக்க வாய்ப்பே இல்லை.

அவர்கள் குடில்களுக்குச் சென்றபோது தெற்குமூலையில் இருந்த சூதர்குடிலில் இருந்து சுதையின் உரத்த குரல் கேட்டது. “அடித்து கொன்றேவிடுவேன். கொன்றேவிடுவேன்! பொய் சொல்லவில்லை, கொன்றேவிடுவேன். நில்!” மூங்கில் படல் கதவைத் திறந்து உக்ரன் வெளியே ஓடி வந்தான். வந்த விரைவில் வெளியே கால் பிழைக்க முழங்கால் ஊன்றி மண்ணில் விழுந்து புரண்டெழுந்து மீண்டும் ஓடி வந்தான். ஜைமினி ஓடிச்சென்று அவன் இரு கைகளையும் பற்றிக்கொண்டான். “ஓடாதே, நில்! நில், மூடா!” என அன்னையின் குரல் கேட்டது.

குடிலுக்குள்ளிருந்து இடையில் கைவைத்து வெளியே வந்த சுதை “பிடியுங்கள் அவனை! பிடித்து நிறுத்துங்கள்… இதோ வருகிறேன்” என்றாள். பைலன் “என்ன ஆயிற்று?” என்று கேட்டான். “உணவு ஊட்டிவிடவேண்டுமென்றான். வாய் திறந்தால் நூலும் நெறியுமாக பேசித்தள்ளுகிறானே, ஓரிடத்தில் அமர்ந்து சற்று உணவை அள்ளி உண்டாலென்ன கேடு இவனுக்கு? பருப்பும் நெய்யுமிட்டு அன்னத்தைப் பிசைந்து இலைமேல் வைத்துவிட்டு பால் எடுக்க அப்பால் சென்றேன். தரையில் இருந்து மண்ணை அள்ளி அன்னத்தில் கலந்து வைத்துவிட்டு அமர்ந்திருக்கிறான். அறிவுடையோன் செய்யும் செயலா இது? அன்னத்தில் மண் கலந்தால் தெய்வங்கள் எப்படி பொறுக்கும்?”

ஜைமினி குனிந்து “என்ன இது, சூதரே? தாங்கள் இதை செய்யலாகுமா? தாங்கள் அறியாததா?” என்றான். “அந்த அன்னம் எறும்புகளுக்குரியது. அவை என்னை வாழ்த்துவதை நான் முன்னரே கேட்டுவிட்டேன்” என்றான் உக்ரன். முதல் கணம் அவன் உண்மையாகவே ஏதோ சொல்கிறான் என்று ஜைமினி எண்ணினான். கண்களில் வந்து சென்ற சிரிப்பின் சிறு மிளிரைக் கண்டதும் தானும் சிரித்தான்.  இரு புயங்களிலும் அவனை பற்றித்தூக்கி தன் தோள்மேல் அமர்த்திக்கொண்டு  முழங்காலில் மண் இருந்ததை கைகளால் தட்டியபடி “காலையில் நீராடுவதோ தெய்வங்களுக்கு பூசெய்கையோ உங்களுக்கு வழக்கமில்லையா, இளம்சூதரே?” என்றான்.

“நான் புலரிக்கு முன்னரே எழுந்து வெளியே சென்று காகங்களை பார்த்தேன்” என்றான் உக்ரன். “குருவிகளும்கூட இங்கு நிறைய இருக்கின்றன.” “காகங்களிடம் பேசினீரா?” என்றான் ஜைமினி. “இந்த ஊரே காகங்களுக்கு புகழ்பெற்றது” என்று சண்டன் சொன்னான். “ஆம், காகங்கள் அதை அறிந்திருக்கின்றன. பல காகங்கள் அடர்காட்டிலிருந்து இங்கு வருகின்றன. இங்குள்ள பெண்டிர் முதல் நாளிரவே காகங்களுக்கு உணவை அள்ளி வீசிவிட்டு படுக்கிறார்கள். காலையில் காகங்களின் குரல் கேட்டே நான் எழுந்தேன்” என்றான் உக்ரன். கையைத் தூக்கி “காகங்கள் இந்த ஊரை அன்னவயல் என அழைக்கின்றன” என்றான். அவன் நகையாடுகிறானா என பைலன் நோக்கினான். ஆனால் அவன் முகம் விசையுடனிருந்தது. “அவர்கள் இங்கே இந்த மனிதர்களை வரவழைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு அவர்கள் ஆணையிடுகிறார்கள்” என்றான் உக்ரன்.

“வருகிறேன்” என்று சொல்லி சண்டன் முன்னே சென்றான். “அவனை இறக்கிவிடுங்கள். அவன் ஏதாவது உண்ணவேண்டுமல்லவா? இந்த வயிற்றை வைத்துக்கொண்டு அவனை நான் எப்படி துரத்திப் பிடிப்பது?” என்றாள் சுதை. “நன்று விறலியே, நாங்களே இவனுக்கு ஏதாவது வேள்வி  அன்னத்தை ஊட்டிவிடுகிறோம்” என்று வைசம்பாயனன் சொன்னான். “நீங்கள் ஓய்வெடுங்கள்” என்றான் சுமந்து. “இத்தனை சிறிய உடலை வைத்துக்கொண்டு இவ்வளவு சொற்களை எங்கிருந்து எடுக்கிறான் என்றே எனக்குப் புரியவில்லை. சொல்லெடுத்து சொல்லெடுத்தே உள் ஒழிந்து ஒரு நாள் சருகாக உதிர்வான் மூடன்” என்று முணுமுணுத்தபடி உள்ளே சென்றாள் சுதை.

“தாங்கள் உண்பதற்கென்ன, சூதரே?” என்று ஜைமினி கேட்டான். “உண்ணும்போது என் உள்ளோடும் சொற்பெருக்கு முறிவடைகிறது. ஐந்து கவளம் உணவென்றால் ஐந்து முறை இடைவெளி வருகிறது.” அவனை தோளில் வைத்து ஆட்டியபடி “கங்கையை கோடரியால் பிளக்க முடியுமா என்ன?” என்றான் ஜைமினி சிரித்தபடி. “முடியாது. ஆனால் அலை கிளப்ப முடியும்” என்றான் உக்ரன். “எதற்கும் மறுமொழி சொல்கிறான்” என்றான் சுமந்து. “ஆம், வாயிலேயே நான்கு அடிபோட்டால் ஒழுங்குக்கு வருவான். அதை அவன் தந்தை செய்வதில்லை” என்று குடிலுக்குள் சுதை சொன்னாள்.

அவர்கள் அந்தணர்களுக்குரிய  குடில்களுக்குள் சென்றனர். ஜைமினி உக்ரனை இறக்கிவிட்டுவிட்டு “இது சூதஆசிரியரின் மரவுரி. நான் கொடியில் காயப்போட்டுவிட்டு வருகிறேன்” என்று வெளியே சென்றான். இடுப்பில் கைவைத்து குடிலில் நின்ற உக்ரன் “அழகிய குடில், அந்தணர்களுக்கு மட்டும் சிறந்த குடில்களை  அளித்திருக்கிறார்கள்” என்றான். “ஆம், அவர்கள் வேள்வி செய்து வேதம் புரப்பவர் அல்லவா?” என்றான் பைலன். “நன்று. வேதமும் அவர்களை நன்கு புரக்கிறது” என்றபடி உக்ரன் சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கிருந்த அரணிக்கட்டை அவன் நோக்கை கவர ஓடிச்சென்று அதை எடுத்து “அரணிக்கட்டை, நான் இதை உரசி அனல் எழுப்பப் போகிறேன்” என்றான்.

“அதை உரசுவதற்கு தோளில் ஆற்றல் தேவை” என்றான் வைசம்பாயனன் தன் மரவுரியை உதறி நீண்ட கழியில் மாட்டி மேலேயிருந்த மூங்கிலில் காயப்போட்டபடி. “சிறிய தோள்களுக்கு சிறிய அனல் வரும்” என்றான் உக்ரன். வைசம்பாயனன் “அனல் அந்த மரக்கட்டையின் ஆழத்தில் அமர்ந்திருக்கிறது. அதுவரைக்கும் உங்கள் விசை சென்றாலொழிய அது வெளியே வரவிரும்பாது” என்றான். விழிகள் சுருக்கி ஏறிட்டு “ஏன்?” என்றான் உக்ரன். “ஏனெனில் தன்னை எரித்தபடியேதான் அந்த அனல் வெளிவர முடியும்” என்றான் வைசம்பாயனன். சிறுவனின் கண்கள் மாறுபட்டன. “ஆம், பிறிதொரு அனல் வந்து அவ்வனலை எழுப்பவேண்டியிருக்கிறது” என்றான். அவன் சொல்வதென்ன என்று புரியாமல் அனைவரும் திரும்பிப்பார்த்தனர். அவன் அரணிக்கட்டையை ஒன்றோடொன்று தட்டிப்பார்த்தான்.

பைலன் “இளம்சூதரே, தாங்கள் ஏதேனும் ஆசிரியரை தேடிப்போவதைப்பற்றி எண்ணியிருக்கிறீர்களா?” என்றான். “ஆசிரியரா…?” என்று அவன் விழிதூக்கிப் பார்த்தான். “எனக்கா?” என்றான். “ஆம், தங்களுக்கு சொல் முழுமையையும் வேத மெய்மையையும் கற்பிக்கும் ஒருவர்.” குனிந்து அரணிக்கட்டையை நோக்கி “எனக்குத்தான் எந்தை கற்பித்துக்கொண்டிருக்கிறாரே?” என்றான் உக்ரன். “தாங்கள் கற்றதற்கு அப்பால் உள்ளவற்றை  கற்பிப்பவர்” என்றான் சுமந்து. அவன் அதை தட்டியபடி மூக்கை உறிஞ்சினான். “ஆம், அப்படி ஒருவர் இருக்கலாம். ஆனால் நான் இதுவரை அவரைப்பற்றி எண்ணியதில்லை” என்றபின் “நான் சூதனல்லவா? எனக்கு சூதர்கள் பாடல்களை கற்பிப்பார்கள். ஆனால் அவர்கள் கற்பிக்கத் தொடங்கும்போதே அந்தப் பாடல் எனக்கு முன்னரே முழுமையாகத் தெரியும் என்பதை ஒவ்வொருமுறையும் உணர்கிறேன்” என்றான்.

“பாடலுக்கு அப்பால் செல்லும் ஒரு உள்ளம் கொண்டவர் நீங்கள். மெய்மையறிந்த நா கொண்டவர். நேற்று இவ்வூரே அதை உணர்ந்து நிற்கிறது” என்றான் சுமந்து. அவன் சொல்வதென்ன என்று புரியாதவன்போல உக்ரன் விழிதூக்கிப் பார்த்தான். பின்னர் “அரணிக்கட்டையில் காத்திருக்கும் அனலின் பெயரென்ன?” என்றான்.  உள்ளே வந்த ஜைமினி “சூதரே, எங்களிடம் இன்று சண்டர் ஒன்று சொன்னார். இவர்கள் கேட்பது அதைப்பற்றியே” என்றான். என்ன என்று வினவுவதுபோல அவர்களை நோக்கினான் உக்ரன்.

வைசம்பாயனன் “நாங்கள் நால்வரும் எங்கள் இயல்புக்கிசைந்த மெய்யாசிரியர் ஒருவரைத் தேடி இல்லம்விட்டிறங்கி வந்தோம். அந்நால்வரும் ஒருவராகவே எங்களை அணுகக்கூடும் என்றார் சண்டர். அவ்வொருவரை தேடிச்செல்லும் தகைமை கொண்டவர் தாங்களே என்றார்”  என்றான். “எங்கள் நால்வரையும் நீங்களே வழிகாட்டி அழைத்துச் செல்லவேண்டும் என்றார் சண்டன்” என்றான் பைலன்.

“நானா…?” என்றபின் அவன் அரணிக்கட்டையை மேலே தூக்கி “இதை நான் பெரியவனான பிறகு கடைந்து நிறைய தீயை எடுப்பேன். இந்தக் காடுகள் அனைத்தையுமே எரியூட்டுவேன்” என்றான். அவன் உள்ளம் முழுமையாக அதில் திரும்பவே அதை தரையில் வைத்து பிள்ளைக்கட்டையால் தாய்க்கட்டையின் புழைக்குள் செருகி கைகளால் உருட்டத் தொடங்கினான். ஜைமினி அருகே வந்து அவன் முகத்தைப்பற்றி மேலே தூக்கி “சூதரே, ஆசிரியர் என்று எவரையாவது தாங்கள் தேடிச் செல்கிறீர்களா? தங்கள் உள்ளத்தில் ஏதேனும் முகம் எழுகிறதா? கனவிலேனும் வழி தென்படுகிறதா? இன்று உங்களை நம்பியே நாங்களும் திசைதேர வேண்டியவர்களாயிருக்கிறோம்” என்றான்.

“நான் ஆசிரியர் என்று எவரையும் உணரவில்லையே” என்றான் உக்ரன். “ஆனால் இந்த அரணிக்கட்டையில் அனல் எடுக்க எனக்கு யாரோ கற்பிக்கப்போகிறார்கள் என்று இப்போது தோன்றுகிறது” என்றவன் எழுந்து நின்று “நான் சென்று குலத்தலைவரிடம் கேட்கிறேன், ஒருவேளை அவர் எனக்கு இதை கற்பிக்கக்கூடும்” என்றான். சற்று எரிச்சலுடன் அரணிக்கட்டையை வாங்கி அப்பால் வைத்துவிட்டு ஜைமினி சொன்னான் “இளம்சூதரே, தங்கள் உள்ளம் தாங்கள் எண்ணுவதைவிட பலநூறு மடங்கு ஆழம் கொண்டது. பாதாள கங்கை பெருகி மேலெழும் சிறு துளை போன்றவர் தாங்கள். சொல்க, உங்கள் உள்ளத்தில் ஒரு பெயரேனும் எழுகிறதா?”

உக்ரன் அவனை உதறி “ஆ, அது என்னுடைய அரணிக்கட்டை. இனி அதை நான்தான் வைத்திருப்பேன்” என்றான். கடுமையாக “சொல்லுங்கள்!” என்றான் ஜைமினி. “அது என்னுடையது… என்னுடையது…” என்று அவன் கூச்சலிட்டன். “அவனை விடுங்கள், ஜைமின்யரே” என்றான் பைலன். “ஒரு கணம் முதிராக்குழவியாகவும் மறுகணம்  மெய்யுணர்ந்த ஆசிரியனாகவும் மாறி  ஏதோ ஒன்று இச்சிற்றுடலில் இருந்து நம்முடன் விளையாடுகிறது. அதை ஒருபோதும் நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது.” உக்ரன் “என்னுடைய அரணிக்கட்டை… என்னுடைய அரணிக்கட்டை… என்னுடைய அரணிக்கட்டை…” என்று  கால்களை மாறி மாறி உதைத்தபடி வெறியுடன் வீறிட்டான். அவன் கழுத்தில் நரம்புகள்  புடைத்தன.

“என்ன குரல்… காதுக்குள் கொண்டுவந்து கொம்பை ஊதியதுபோல் இருக்கிறது. அவனை வெளியே விடுங்கள்” என்றான் வைசம்பாயனன். ஜைமினி பிடியை விட்டதும் பாய்ந்து சென்று அரணிக்கட்டையை எடுத்து அதன் பிள்ளைக்குழவியையும் அப்பாலிருந்து தேடி எடுத்து அவற்றை இருகைகளிலும் வைத்தபடி உதடுகளைப் பிதுக்கி பகையுடன் கூர்ந்து பார்த்து “போடா” என்றான்.  பின்னர் பாய்ந்து வந்து ஜைமினியை அடிக்கத் தொடங்கினான். வேடிக்கையாக சிரித்தபடி அதைத் தடுத்த ஜைமினி சிறுவன் மேலும் மேலும் வெறிகொண்டு பற்களை கிட்டித்தபடி அடிப்பதை அறிந்து எப்படி தடுப்பது என்று தெரியாமல் பின்னடைந்தான். அவன் முழங்கையிலும் மணிக்கட்டிலும் பட்ட அடி நன்றாகவே வலித்தது.

பைலன் வந்து உக்ரனைப் பிடித்து இழுத்து அப்பால் தள்ளினான். நிலத்தில் விழுந்த அவன் மூச்சிரைக்க எழுந்து பற்கள் தெரிய சிறுநெஞ்சு உலைய கண்களில் நீர் நிறைந்திருக்க “கொல்வேன்… கொல்வேன்… உங்கள் அனைவரையும் கொல்வேன்” என்று கூச்சலிட்டான். “சரி” என்றான் பைலன். “நான் அரணிக்கட்டையை கொளுத்தக் கற்றுக்கொள்ளும்போது உங்கள் மரவுரியைத்தான் முதலில் கொளுத்துவேன்” என்றான். கைகளை உதறிக்கொண்டிருந்த ஜைமினி அறியாமல் புன்னகைத்து “அதுவரைக்கும் நன்று” என்றான். “நீங்கள் நால்வருமே அறிவிலிகள்” என்றான் உக்ரன். “நான் உங்கள் தலைமயிரை கொளுத்துவேன்.”

“சரி, அதற்கென்ன?” என்றான் ஜைமினி. மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை சற்று சாய்த்தபடி “நான் மேலும் பெரியவனாகும்போது உங்கள் நால்வரையுமே கொளுத்துவேன்” என்றான். ஜைமினி “நன்று, அவ்வாறே ஆகுக!” என்று சிரிக்க பைலன் சேர்ந்துகொண்டான். உக்ரன் “இதை நான் கொண்டுசென்று குலத்தலைவரிடம் கொடுக்கிறேன். அவர் எனக்கு பால் தருவார். அதைக் குடித்ததும் எனக்கு தோளில் ஆற்றல் வரும். அதன் பிறகு நான் இதைக் கடைந்து அனலை எடுப்பேன். உங்களுக்கு தரமாட்டேன்” என்றபின் அதை மார்போடணைத்தபடி வெளியே சென்றான்.

சுமந்து “அவனிடம் எந்த நேர்வினாவும் எழுப்புவதில் பொருளில்லை” என்றான். அவர்கள் திரும்பிப் பார்த்தனர். “இதற்குள் நீங்கள் இதை உணராதது விந்தையே. கதை சொல்லும்போது மட்டுமே அவன் மெய்யறிவர் போலிருக்கிறான். பிற தருணங்களில் எல்லாம் சின்னஞ்சிறுவனாகவே தோன்றுகிறான்” என்றான். “உண்மை” என்றான் வைசம்பாயனன். “அவனை அழைத்து ஒரு கதை சொல்லும்படி கேளுங்கள், சொல்லமுடியாது. எதுவுமே நினைவுக்கு வராது. ஒரு வினா எழுப்புங்கள், விடை அவனுக்கு தெரிந்திருக்காது. அவனே தானாகவே சொல்லத் தொடங்கினால் விண்முனிவர் வந்து நாவிலமர்கிறார்கள். சூதமூதாதையர் வந்து விரல்களை எடுத்துக்கொள்கிறார்கள்” என்றான் சுமந்து.

“ஆம்” என்றான் பைலன்.  “அவனை பேசவைக்கலாம். இத்தருணத்தில் அவன் நாவில் தானாக எழும் கதை எதுவோ அதைக்கொண்டு நாம் புரிந்துகொள்ளவேண்டும்” என்று சுமந்து சொன்னான். “அவனை எப்படி சொல்ல வைப்பது?” என்றான் வைசம்பாயனன். “அவன் தன்னியல்பாக கதை சொல்ல வைக்க நம்மால் முடியும்” என்று சுமந்து சொன்னான் “அவனை மீட்டி சொல்பெருக வைப்பது ஒரு முதற்சொல்லே.” பைலன் “ஆம், நேற்று அவன் கதை சொன்னதைப் பார்த்தபோது நானும் அதையே எண்ணினேன்” என்றான்.

ஜைமினி “ஆம், அவன் உள்ளத்தில் ஒரு சொல் சென்று விழுகிறது. தேனுண்ட எடையால் நிலத்துதிர்ந்த தேனீபோல ரீங்கரித்தபடி தன்னைத் தானே அது சுற்றி வருகிறது. எங்கோ ஒரு புள்ளியில் தன் கொடுக்கை எடுத்து அது கொட்டுகிறது. அக்கணத்தில் அவனிடம் இருந்து அவன் கொண்டிருக்கும் அச்சிறுவனின் உடலும் உள்ளமும் மறைகின்றன. சொல்லென அவனுக்குள் குடியிருக்கும் தெய்வம் எழுகிறது. பிறகு அவன் சொல்வதெல்லாம் பிறிதொரு மொழி” என்றான். “அதைத்தான் நானும் உணர்கிறேன். அவனை ஊழ்கத்திலாழ்த்துவது நாம் பேசிக்கொண்டிருப்பதில் இருந்து எழும் ஒரு சொல். தற்செயலாகவே அது நிகழ்கிறது” என்று சுமந்து சொன்னான்.

“அச்சொல்லை எப்படி கண்டடைவது? எப்படி அவனிடம் அதை சேர்ப்பது?” என்றான் வைசம்பாயனன். “நாம் பேசுவது எதையும் அவன் விழிசெவி கொடுத்து கேட்பதில்லை. வேறு ஏதோ ஒன்றில் ஈடுபட்டு விளையாடிக்கொண்டல்லவா இருக்கிறான்?” என்றான் பைலன். “ஆம், அவனிடமென ஒரு சொல்லும் நாம் சொல்லலாகாது. ஆனால் அவன் காதில் அச்சொல் இயல்பாக விழவேண்டும். எச்சொல் அவனை மீட்டுகிறதெனக் கண்டுகொண்டால் அதையே மீளமீளச் சொல்லவேண்டும். இது ஒரு முயற்சிதான், பார்ப்போம்” என்றபின் சுமந்து எழுந்து வாயிலை நோக்கினான். மார்போடு அரணிக்கட்டைகளை அணைத்தபடி உக்ரன் வருவது தெரிந்தது.

“இங்குதான் வருகிறான்” என்றான் சுமந்து. ஜைமினி “குலத்தலைவர் அரணிக்கட்டை பற்றவைக்க கற்றுக்கொடுக்கவில்லை போலும்” என்றான்.  முகம் தளர்ந்திருக்க குடில் வாயிலுக்குள் வந்த உக்ரன் “நான் இந்த சிற்றூரை தீச்சொல்லிட்டு எரிக்கப் போகிறேன்” என்றான். ஜைமினி சிரித்தபடி “ஏன்?” என்றான். அவன் சினத்துடன் புருவம் நெரிபட “நான் மிகச்சிறியவனென்று அவர் சொல்கிறார். அவர் கிழவர். நீர் நாளைக்கே செத்துப்போய்விடும் என்று அவரிடம் சொன்னேன். நான் தீச்சொல்லிட்டபோதுகூட அவரும் அவரது துணைவியும் மூன்று மகள்களும் சிரித்தனர்” என்றான்.

ஜைமினி சிரித்துவிட்டான். அதைக் கண்டு உக்ரனும் முகம் மலர்ந்து “அவர்களில் ஒருத்தி எனக்கு பால் கொண்டுவந்து தந்தாள். அவள் அழகி. அவளுக்கு ஏழு மைந்தர் பிறப்பார்கள்” என்றான். பைலன் “நீங்கள் அதை அருந்தினீர்களா?” என்றான். “ஆம், அது சூடான பாலாகையால் அதை அருந்தினேன். அதன் பிறகு அவர்கள் என் எதிரிகள் என்றாலும் நான் அரணிக்கட்டையை கடைந்தபின் அவர்களுக்கு தீச்சொல்லிடப்போவதில்லை என்றேன். ஏனென்றால் அவர்கள் குலத்தில் ஒன்பது வீரர்கள் பிறப்பார்கள்” என்றான். “அப்படியென்றால் எங்களை எரிக்க வந்தீர்களா?” என்றான் ஜைமினி.

உக்ரன் மிக இயல்பாக அரணிக்கட்டையை கீழே வைத்து அரைநழுவிய மரவுரியை ஏற்றி அணிந்தபடி “உங்களை காலமும் எரிக்கமுடியாது. நீங்கள் நால்வரும் அழியாச்சொல் கொண்டவர்கள். ஒற்றைச்சொல்லின் நான்கு முகங்கள் நீங்கள்” என்றான். மீண்டும் அரணிக்கட்டையை கையில் எடுத்துக்கொண்டு மூக்கை உறிஞ்சியபடி “நான் உள்ளே வந்தால் இந்த அரணிக்கட்டையை நீங்கள் பிடுங்கிக்கொள்வீர்கள்” என்றான்.  ஜைமினி “ஆம், சில சமயம்” என்றான். உரத்த குரலில் “பிடுங்கிக்கொண்டால் நான் தீச்சொல்லிடுவேன்” என்று கூவினான்.

பைலன் “அந்த அரணிக்கட்டை தங்களுடையது, சூதரே, அதை தாங்களே வைத்துக்கொள்ளலாம்” என்றான். “அப்படியென்றால் இதை கொண்டுபோய் என் முழவின் பக்கம் வைத்துவிட்டு வருகிறேன். அது என் முழவு, அதை எவரும் எடுக்கக்கூடாது என்று அன்னையிடமும் தந்தையிடமும் மூன்று முறை சொன்னேன்” என்றான். “தந்தை உங்கள் ஆசிரியரா? அவரை நீங்கள் நன்கு அறிவீர்களா?” என்றான் வைசம்பாயனன். அவன் அதை கேட்டதாகத் தெரியவில்லை. “ஆசிரியரென்றால் அவரை அடிமுடி காணவேண்டுமல்லவா? அவ்வாறு நீங்கள் அவரை கடந்துவிட்டீர்களா?” என்று சுமந்து கேட்டான்.

ஆசிரியர் என்ற சொல் அவன் காதில் விழுந்ததா என ஒருவரை ஒருவர் விழிகளால் கேட்டுக்கொண்டனர். அவன் உள்ளே வந்து அரணிக்கட்டையை தரையில் வைத்து “எனக்கு இதைவிட பெரிய அரணிக்கட்டை வேண்டும். நான் அதன் மேல் ஏறி நின்று கடைவேன்” என்றான். மீண்டும் இடையில் மரவுரி நழுவியது. ஜைமினி முழந்தாளிட்டு அமர்ந்து அதை சரியாகக் கட்டினான். “ஆசிரியனை நல்ல மாணவன்தான் முற்றறிய முடியும்” என்றான் பைலன். “அவ்வளவு பெரிய அரணிக்கட்டை எனக்குத் தேவை. அதன் அடிமுடி நான் காண்பேன்” என்றான் உக்ரன். “ஆனால் அரணிக்கட்டைகளை சிறுவர்களிடம் கொடுக்கக்கூடாது. நெருப்பு சிறுவர்களை நண்பர்களாக நினைத்துவிடும்” என்றான்.

ஜைமினி உடனே அவன் நெஞ்சில் விழுந்த சொல்லை அடையாளம் கண்டு கொண்டான். விழிகளால் பிறருக்கு குறிப்பு காட்டியபின் “அடிமுடி காண்பதற்குப் பெயர்தான் கற்றல். அடியிலிருந்து முடி வரை ஒன்றை அறிந்தபின்னர் நாம் அதன் பகுதியாகிறோம்” என்றான். “ஆசிரியனை அடிமுடி காண்பது மாணவருக்கு இயலுமா?” என்றான் பைலன். “இவ்வளவு பெரிய அரணிக்கட்டை… இதன் அடிமுடியை யார் காணமுடியும்?” என்று வைசம்பாயனன் சொன்னான். “ஏன்?” என்று உக்ரன் கேட்டான். “இதற்குள் அனலிருக்கிறதே. அனலின் அடிமுடி காண்பது எளிதா என்ன?” என்றான் பைலன்.

உக்ரனின் விழிகள் மாறுவதை நால்வரும் நோக்கினர். கண்கள் விரிந்து இதழ் ஒரு சொல்லை திரும்பத் திரும்ப சொல்லலாயிற்று. விழிகூர்ந்தபோது அடிமுடி என்னும் சொல் அவன் நாவில் திகழ்வதை காணமுடிந்தது. பைலனை நோக்கிவிட்டு “ஆசிரியனை அடிமுடி காணுதல்தான் கல்வி” என்றான் வைசம்பாயனன். “ஆனால் எவரேனும் மெய்யாசிரியனை அடிமுடி காணமுடியுமா?” என்றான் பைலன். “காணமுடியும், நாமும் அடிமுடி அறியா பேருருவர் ஆகி அருகே நின்றால்” என்றான் சுமந்து.

“அனற்பெருந்தூண்” என்று உக்ரன் சொன்னான். கைகளைத் தூக்கி விழிகள் தெறித்து நிற்க “அனலின் அடிமுடியின்மை” என்றான். “அனற்பெருந்தூண். இருபுறமும் விசும்பு சூடி நின்றிருந்தது அது” என்றான். அவனுக்குப் பின்னால் எவரோ வந்து நிற்பதுபோல தோன்றி ஜைமினிக்கு மெய்சிலிர்த்தது. “அனல்நெடுந்தோற்றம். மகாருத்ரம்” என்றான் உக்ரன்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 68

[ 11 ]

காகவனத்தின் ஊர்மன்றில் தன் கையிலிருந்த முழவை மீட்டியபடி உக்ரன் பாடினான். அவன் முன் கம்பளியும் மரவுரியும் போர்த்தி அமர்ந்திருரந்தவர்களின் கண்களில் மன்றெரி அனல்முனைகொண்டிருந்தது. காற்று குடில்கூரைகளை சீறவைக்க தழல் எழுந்து ஆடி குவிந்து பரந்து மீண்டும் எழுந்தது. அப்பால் அவர்களின் தொழுவங்களில் கன்றுகள் காதடித்து குளம்புவைத்து இடம்மாறிநிற்கும் ஒலி கேட்டது. காட்டின் சீவிடு ஒலி சூழ்ந்து நின்றிருக்க அவன் குரல் அதன் ஒருபகுதியே என ஒலித்தது.

“கல்பத்தின் தொடக்கத்தில் பிரம்மம் தன்னுள் பிறிதொன்று இருப்பதை உணர்ந்தது. அது விஷ்ணு என்றாகியது. விஷ்ணு தன்னுள் இருந்து பிரம்மனை கண்டெடுத்தார். பிரம்மன் தனக்குள் புடவிகள் இருப்பதை கண்டடைந்தார். அவற்றை அவர் விரித்துப்பரப்பி விசும்பை நிறைத்தபோது அவை தங்களுக்குள் அனலிருப்பதை அறிந்தன. அனல் தன்னை ருத்ரம் என்று அறிந்தது. ருத்ரம் தன்னை மகாருத்ரம் என்று கண்டடைந்தது. மகாருத்ரமே பிரம்மம் என அறிந்தது. அதில் ஒருதுளியென்று விஷ்ணு தன்னை அறிந்தார்” என்றான் உக்ரன். முழவை மீட்டியபடி அவன் பாடலானான்.

பிரம்மனிலிருந்து எழுந்த ருத்ரம் ஒரு நீலநிறமான உடல்கொண்ட சிறுவனாக இருந்தது. சீறிஎழுந்து நின்றாடி அவன் தன் தந்தையிடம் கேட்டான். “தந்தையே, என் பெயர் என்ன?” பிரம்மன் குனிந்து அச்சிறுவனை நோக்கி ஒருகணம் எண்ணி “எரிதலென்றே ஆன நீ ருத்ரன்” என்றார். “உனக்குரிய உறைவிடம் சூரியன்.” அவன் கோடி கைகளை விரித்து வெளியெங்கும் பரவினான். விண்பரவிய நீரில் விழுந்து செந்நிற உடல்கொண்ட சிறுவனாக எழுந்து “சொல்க, தந்தையே என்பெயர் என்ன?” என்றான். “நீ பவன்” என்றார் பிரம்மன். “நீர் உன் இருப்பிடமாகுக!”

பவன் தொட்ட அனைத்தும் வெம்மை உண்டு கனல்கொண்டன. உலோகங்கள் உருகின. பாறைகள் கனித்துண்டுகளாயின. செங்கனல் வடிவிலெழுந்த மூன்றாவது மைந்தன் கேட்டான் “தந்தையே, என் பெயரென்ன என்று சொல்க!” பிரம்மன் “நீ சர்வன்” என்றார். “நீ வாழுமிடம் மண். அன்னத்திலெழுந்து அன்னத்தை உண்டு அன்னத்தைவென்று வாழ்க!” காற்றை புரவியெனக்கொண்டு எழுந்து திசைதோறும் பரவிய புகைவண்ண மைந்தன் கேட்டான் “நான் யார்?” பிரம்மன் சொன்னார் “வடகிழக்கு மூலையில் என்றுமிருந்து மண்புரத்தல் உன் தொழில். உனக்குரியது காற்று. நீ மண்ணின் மூச்சில் வாழ்க! உன் பெயர் ஈசானன் என்றமைக!”

விண்ணளாவ எழுந்த அனல்வடிவாக நின்று இளமைந்தன் ஒருவன் கேட்டான் “எனக்கு பெயரிடுக, தந்தையே!” பிரம்மன் அவனை நோக்கி “பொன்னிறமான நீ பசுபதி. நீ மண்பொருட்டு விண்ணைச் சூடியவன். எரியென்று அடுமனைகளில் வாழ்க! வேள்விகளில் அவிகொள்ளும் நாவாகுக! அகல்களில் சுடர்மணியென்று ஒளிர்க!” கரியநிறமாக விண்ணில் பரந்து நிறைந்த இளமைந்தன் “தந்தையே, என்னை அறிக!” என்றான். “விண்ணில் வாழும் நீ பீமன். மின்னலென காணப்படுக! இடியென கேட்கப்படுக! உன்னை முனிவர் பர்ஜன்யன் என வணங்குக!” என்றார்.

தவழ்ந்து வந்து எழுந்து நின்ற மைந்தன் கேட்டான் “தந்தையே, நான்?” அவன் இளம்பச்சை நிறம்கொண்டிருந்தான். குனிந்து அவன் தலையை வருடி உளம்கனிந்து பிரம்மன் சொன்னார் “நீ உக்ரன். மெய்யமைந்த சொல்லில் வாழ்க! இளந்தளிரில் மின்மினியில் உன் ஒளிதிகழ்க!” வெம்மையின்றி ஒளிமட்டுமேயாகி வெண்ணிறத்தில் எழுந்த எட்டாவது மைந்தனை நோக்கி பிரம்மன் அருளினார் “நீ மகாதேவன். சந்திரனில் வாழ்வாய். உலகனைத்துக்கும் குளிராவாய், காதலில் பிரிந்தோரை மட்டும் காய்வாய். சுனைகளை கனவிலாழ்த்துவாய், கடல்களை கொந்தளிக்கச் செய்வாய். நீ வாழ்க!”

எட்டு ருத்ரர்களுக்கு அவர்களின் இடப்பக்கத்திலிருந்தே தேவியரை உருவாக்கினார் பிரம்மன். சூரியனில் அமர்ந்த ருத்ரன் சுவர்ச்சலையை மணந்தான். முதற்புலரியில் நீரில் எழும் பொன்னலையாகிய உஷையை பவன் மணந்தான். காற்றில் புழுதியென எழுந்த விகேசியை சர்வன் துணைகொண்டன. ஈசானன் தன்னுடலில் சிவையை சூடினான். அவிகொள்கையில் நாவெனக் கொழுந்தாடும் ஸ்வாகை பசுபதிக்கு மனைவியானாள். விண்வடிவனாகிய பீமன் திசைதேவிக்கு துணைவனானான். சொல்வடிவனாகிய உக்ரன் பற்றுறுதியாகிய தீக்‌ஷையை மணந்தான். குளிர்நிலவு வடிவம்கொண்ட மகாதேவனில் நிழலுருவாக ரோகிணி அமைந்தாள்.

தவத்திலமர்ந்து மெய்ச்சொல் அறிந்து முழுமைகொண்ட யோகி ஒருவன் தன் நாவை தழலாக்கினான். அதிலெழுந்தான் உக்ரன். உக்ரன் படர்ந்தேறிய அவன் மொழி அனல்கொண்டது. அவன் அகம் சுடராகியது. அவனறிந்த அனைத்தும் எரிந்தன. தழலுரு என எழுந்து வெளிவந்த அவன் கிழக்கே ருத்ரனையும் மேற்கே மகாதேவனையும் ஒருங்கே கண்டான். அவன் நின்ற மண்ணில் சர்வனும் அவன் மேல் கவிந்த வானில் பீமனும் அவன் உள்ளங்கை அனலில் பசுபதியும் மூச்சு சூழ்ந்தகாற்றில் ஈசானனும் அவன் குருதி நீரில் பவனும் எழுந்தனர்.

எண்மரும் ஒன்றென்றாகி அவனில் நிறைந்தபோது அவன் தலை எழுந்து விண்முட்டி ஏழுமேலுலகுகளையும் கடந்து அலகிலா வெளியில் பரவிச்சென்றது. அவன் கால்கள் மண்ணிலிறங்கி இருளில் ஆழ்ந்து சென்றன. முடிவிலியென தன்னை உணர்ந்து அவன் சொன்னான், சிவமேயாம். அச்சொல் விசும்பெங்கும் பல்லாயிரம்கோடி இடிகளாக ஒலித்தபடியே சென்றது. ஆதித்யகோடிகள் எதிரொலித்தன, சிவமேயாம். காலம்படர்ந்த கடுவெளி முழங்கியது, சிவமேயாம். சிவம் சிவம் சிவம் என இன்மை ஒலியணிந்தது. இருநுனி முடிவிலி என சிவம் பிறந்து நின்றது.”

“ஆம், அவ்வாறே ஆகுக!” என்று உக்ரன் கைகூப்பி சொன்னான். “ஆம் ஆம் ஆம்” என கூட்டம் உடன் முழங்கியது. குலத்தலைவர் கைகூப்பி “இங்கு இவ்வண்ணம் நீங்கள் எழுந்தருளவேண்டுமென்பது முழுமுதலின் நெறிபோலும், நல்லாசிரியரே. எங்கள் சிற்றறிவால் அதை அறிய முடியவில்லை. சிறுமதியை பொறுத்தருளவேண்டும்” என்றார். “உங்கள் சொல் எங்கள் மைந்தர் நாவிலும் வளரவேண்டுமென்று அருள்க!” என்றார் குடிமூத்தார் ஒருவர். உக்ரன் அச்சொற்களை கேட்டதாகவே தெரியவில்லை. அவன் அனலைநோக்கியபடி அமர்ந்திருந்தான்.

[ 12 ]

காலைநீராட்டின்போது ஜைமினி “நான் அக்கதைகளை பயின்றிருக்கிறேன். சற்று மாறுபட்ட வடிவில் மகாருத்ரபுராணத்திலும் சூரியபுராணத்திலும் உள்ளது. ஆனால் இவர் சொல்வது முற்றிலும் பிறிதொன்று” என்றான். சுமந்து “விஷ்ணுவை முதன்மைத்தெய்வமாகக் கொண்ட நூல்களில் உள்ள கதை பிறிதொன்று” என்றான். வைசம்பாயனன் அப்பால் சுனைநீரில் இடுப்பளவு ஆழத்தில் நின்று சுனைக்கு மறுகரையில் ஒரு நாணல்மேல் மீன்கொத்தி அமர்ந்திருப்பதை நோக்கிக் கொண்டிருந்தான்.

“இவன் எங்ஙனம் கற்றான் இக்கதைகளை?” என்றான் பைலன். சுமந்து “அவன் கற்றிருப்பதுபோல் தெரியவில்லை. கனவில் கண்டதுபோல் உள்ளது” என்றான். “கற்காமல் எப்படி இக்கதைகளை சொல்லமுடியும்?” என்றான் பைலன். “ஏன் முடியாது? நான் பிறந்தது அயோத்தியில். மலையென ஒன்றை நான் முதல்முறையாகக் கண்டது எந்தையுடன் கயிலை செல்லும்போது. முதல்முறை மலை என்முன் எழுந்தபோதே நான் உணர்ந்தேன், அதை நான் நன்கறிவேன் என்பதை” என்றான் ஜைமினி. “நாமும் மலையமைந்துள்ள இம்மண்ணில்தான் இருக்கிறோம். ஒரே உப்பு நாம். ஆகவே நாம் உள்ளறிந்திருக்கிறோம். கதைகள் காற்றுபோல, மூச்சென நம்முள் ஓடுவதுதான் உயிர்க்குலங்கள் அனைத்திலும் புகுந்து வெளிவந்துள்ளது. மானுடம் மூச்சாலும் கதைகளாலும் ஒன்றென கோக்கப்பட்டுள்ளது என்பார்கள்.”

பைலன் “விந்தைதான். நான் இளவயதில் மெய்மையறிந்து நூலியற்றியவர்கள் என பல முனிவர்களைப்பற்றி கேட்டிருக்கிறேன். சொல்திருந்தா இளமையில் இவ்வண்ணம் நிகழுமென்பதை எண்ணியும் பார்த்ததில்லை” என்றான். வைசம்பாயனன் நீரில் மூழ்கி எழுந்து குடுமியை அடித்து துளிகளைந்தபடி கரை நோக்கி வந்தான். “நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள், வைசம்பாயனரே?” என்றான் ஜைமினி. “நீங்கள் பேசுவதைக் கேட்டேன். மலையுச்சிப்பாறையில்கூட பாசி முளைத்திருப்பதைக் காணலாம். ஈரமிருந்தால் போதும். பாசியின் விதை காற்றில் உள்ளது. அவனுக்குள் சொல்லூற்று உள்ளது. வெளியே இருந்து ஓர் எண்ணத்தின் விதை சென்று விழுந்தால்போதும்.” அவர்கள் அது மேலும் உகந்ததாக இருப்பதை உணர்ந்தனர்.

“அவன் சொன்ன கதை கிராதமதத்திற்கு மிக அண்மையானது” என்றான் பைலன். “சிவமேயாம் என்பது பொதுவான ஊழ்கச்சொல்” என்றான் சுமந்து. “ஆம், ஆனால் சிவம் ஒரு தவத்தோனின் சொல்லில் முளைத்து எழுந்து தன்னைத் தானுணர்ந்து பெருகியது என்பது அவர்களின் நோக்கே” என்றான் பைலன். “ஆம், அதை நானும் எண்ணினேன். விந்தைதான். கதைகளினூடாக எளிதில் சென்று தொடமுடிகிறது அனைத்தையும்” என்றான் வைசம்பாயனன். ஜைமினி “குரங்கு கைபற்றி முயன்றேறும் கிளைநுனியில் பூத்த மலரில் வண்ணத்துப்பூச்சி எளிதில் சென்றமைகிறது என்று ஒரு சூதர்சொல் உண்டு” என்றான். “அனைத்துக்கும் ஒப்புமை வைத்திருக்கிறார். அவருக்காக இந்தப்புவியே ஒன்றை ஒன்று ஒத்துப்போக முயல்கிறது” என்றான் பைலன். வைசம்பாயனன் நகைத்தான்.

சண்டன் வருவதை அவர்கள் கண்டனர். “பிந்தி எழுந்திருக்கிறார்” என்றான் சுமந்து. “ஆம், நேற்று நெடுநேரம் அவரும் குலத்தலைவரும் கிருதரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்” என்றான் பைலன். “எதை?” என்றான் வைசம்பாயனன். “நான் கேட்டபோது கிருதர்தான் பேசிக்கொண்டிருந்தார். அஸ்தினபுரியில் நிகழ்வதை” என்றான் பைலன். “பாண்டவர்களைத் தேடி நாடெங்கும் ஒற்றர்களை அனுப்பியிருக்கிறான் துரியோதனன்.” வைசம்பாயனன் “ஏன்?” என்றான். “அவர்கள் அரிய அம்புகளை தேடிச்சென்றிருப்பதாக சூதர் சொல்லிப்பரப்பும் கதைகளைக் கண்டு அஞ்சியிருக்கலாம்” என்றான் பைலன்.

“ஏன் அஞ்சவேண்டும்? அவரிடம் அரசு இருக்கிறது. இந்திரப்பிரஸ்தத்திலும் அமுதகலசக்கொடியே பறக்கிறது. உஜ்ஜயினியில் நான் கேட்டது என்னவென்றால் பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள் அனைவருமே அவரைத்தான் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இன்று பாரதவர்ஷமெங்கும் எழுந்துவரும் அசுரர்களையும் நிஷாதர்களையும் சூத்திரர்களையும் வென்றொழிக்க அவரால்தான் இயலும் என நினைக்கிறார்கள்” என்றான் வைசம்பாயனன். “அரசர்களை அரியிட்டு அரியணை அமர்த்தியது நால்வேதம். அதை காக்கும்பொறுப்பு அரசர்களுக்குண்டு. இளைய யாதவர் வேதத்தை கடந்துசெல்ல முயல்கிறார் என்று சொல்கிறார்கள். அச்சொல்லே அத்தனை ஷத்ரியர்களையும் துரியோதனனிடம் சென்றுசேரச்செய்கிறது. இனி அவரை வெல்ல எவராலும் இயலாது.”

“ஆம், மறுபக்கம் துவாரகை அழிந்துகொண்டிருக்கிறது” என்றான் சுமந்து. “மூத்த யாதவர் சினம்கொண்டு பிரிந்துசென்று மதுராவில் இருக்கிறார். வசுதேவரும் அவருடன் இருக்கிறார். துவாரகை இருண்டுகிடக்கிறது. இளையவர் இன்னமும் தன் இருள்சூழ்ந்த தனிமையில்தான் இருந்துகொண்டிருக்கிறார்.” ஜைமினி “ஆம், இனி அவர்களை வெல்ல எதனாலும் இயலாது. பாண்டவர்கள் மாவீரர்கள் என்பதில் மாற்றுச்சொல் இல்லை. ஆனால் அரசும் படையும் குடியும் இன்றி அவர்கள் என்ன செய்யமுடியும்?” என்றான். சுமந்து “அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். கதைகளுக்குள் புகுந்துகொள்கிறார்கள். அங்கே வாழ்வார்கள்” என்றான்.

அருகே வந்த சண்டன் “பாண்டவர்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள் போலும். என்னிடம் ஒரு தெய்வம் வந்து சொன்னது” என்றான். சிரித்தபடி பைலன் “நீங்கள் இதழசைவு நோக்குவதில் திறத்தோர் என அறிவேன்” என்றான். சுமந்து “ஆம், அனைத்து வல்லமைகளும் வாய்ப்புகளும் துரியோதனருக்கே என்றும் பாண்டவர் கதைகளிலும் இளையயாதவர் தத்துவத்திலும் வாழ்வதொன்றே எஞ்சும் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்” என்றான். வைசம்பாயனன் “இனி பாண்டவர் வெல்வதென்றால் தற்செயல் என தெய்வமெழவேண்டும்” என்றான்.

“நேற்று நெடுநேரம் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தன. கிருதர் நிறைய செய்திகளை வைத்திருக்கிறார். அதுவே அவருடைய வாழ்க்கை என்பதனால் சொல்லிச்சொல்லி நினைவில் வளர்த்திருக்கிறார். நிறைய சொல்லப்படுவது பிழையென்றாகிறது. எதிர்ச்சொல் எடுக்கப்படுகையில் பொய்யென தன்னை சமைத்துக்கொள்கிறது” என்றான் சண்டன். “ஆகவே, நான் பேசாமல் செவிமூடி சிவமூலி இழுத்தேன். அங்குள்ள சொற்களெல்லாம் மின்மினிகளாகி என்னைச்சூழ்ந்து பறந்தன. நான் கொண்ட சொற்கள் அனல்துளிகளாகி உடன் கலந்தன. தொலைவிலிருந்து ஒரு மணம் வந்து என்மேல் படிந்தது. உழுதவயலின் மணம். அது என்னை கொண்டுசென்றது” என்றான் சண்டன்.

“நீர் என்ன எண்ணுகிறீர், சூதரே?” என்றான் வைசம்பாயனன். “நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, அனைத்தும் துரியோதனருக்கு உகந்தவகையில் திரண்டுள்ளன” என்றான் சண்டன். “ஆனால் ஒன்று உள்ளது, அது பாண்டவர்களுக்கு ஆதரவானது. அதை தவிர்க்கமுடியாமை என நான் சொல்வேன். ஊழ் என்று நீங்கள் சொல்லலாம். இறைநெறி என்று அவர் சொல்லலாம்.” அவர்கள் நீரில் எழுந்து நின்று அவன் சொல்வதை விழிநட்டு கேட்டனர். “மரம் எனில் அது வளரும் என்பதுதான் தவிர்க்கமுடியாமை. வளரும் மரத்தில் அணிவிக்கப்பட்ட சட்டம் இரும்பேயானாலும் உடைந்து விழும் என்பது அதன் அடுத்தகட்டம். இளையோரே, ஒரு தவிர்க்கமுடியாமை இன்னொரு தவிர்க்கமுடியாமையை நெறியாக்குகிறது. அவை ஒரு சரடென நீண்டு வாழ்க்கையையும் வரலாற்றையும் இயற்கையையும் கட்டியிருக்கின்றன.”

“எனவே இங்கு தற்செயலென ஒன்று இல்லை. தற்செயல் காண்பவன் தன் அறியாமையையே அறிகிறான்” என்று சண்டன் தொடர்ந்தான். “நேற்று கிருதர் சொல்லிக்கொண்டிருக்கையில் நான் குலத்தலைவரின் விழிகளை நோக்கிக்கொண்டிருந்தேன். கிருதரின் சொற்களில் அவர் தனக்குரிய ஒன்றை தேடிக்கொண்டிருந்தார். அவர் தேடியது பாண்டவர்களின் வெற்றியை. அஸ்தினபுரியின் படைவல்லமையை, கௌரவர்களின் வீரத்தை, ஆசிரியர்களும் பிதாமகர்களும் ஆதரிக்கும் தகைமையை, ஷத்ரியகுடிகளின் முழுத்துணைப்பை அவர் சொல்லிக்கொண்டிருந்தார்.”

வரலாறு எழுந்து வந்து துரியோதனனின் அரியணையை தாங்கிநின்றிருக்கும் காட்சியை காட்டினார். ஒருதுளியும் மிச்சமில்லை. ஒரு விரிசலுக்கும் வாய்ப்பில்லை. ஆனால் குலத்தலைவர் தவித்துத் தவித்து சொல்லிடைவெளி தேடிக்கொண்டிருந்தார். “அவர்களை தெய்வங்கள் கைவிடுமா என்ன?” என்றார். “இந்திரனும் வாயுவும் தர்மனும் அவர்களை விட்டு விலகிவிடுவார்களா?” என கேட்டார். நான் புன்னகையுடன் கிருதரை நோக்கிக்கொண்டே இருந்தேன். அவரால் அச்சொற்களை புரிந்துகொள்ளமுடியவில்லை. மேலும் ஊக்கத்துடன் “அஸ்தினபுரியின் அரசர் கலியின் வடிவம். நிமித்திகநூலின்படி கலியுகம் பிறந்துவிட்டது. எனவே அவர் ஆள்வதில் ஐயமே இல்லை” என்றார்.

குலத்தலைவர் “மூத்தவர் கந்தமாதனத்தை வென்றதாக சொல்லப்படுகிறதே?” என்றார். “இருக்கலாம். ஆனால் அவரால் படைக்கலம் ஏந்தமுடியுமா என்ன?” என்றார் கிருதர். “இளையவர் திசைத்தேவர்களை வென்று அம்புகளை வென்றிருக்கிறாராமே?” என்றார் குலத்தலைவர். “அவரை ஆளும் யாதவர்தான் இருண்டு அமைந்துவிட்டாரே?” என்றார் கிருதர். “இளைய யாதவர் எழுவார், அது விடியலுக்கான கருக்கிருட்டு என்கிறார்களே?” என்றார் குலத்தலைவர். “அது வீண்சொல், மூத்தவர் விலகியதுமே யாதவகுலம் அவரை கைவிட்டுவிட்டது. துவாரகைக்கு அவர் மீள்வதும் அரிதே” என்றார் கிருதர்.

கிருதர் ஏன் இன்னமும் செம்புநாணயங்களுக்கு மேல் எதையும் கண்ணால் பார்க்காதவராக இருக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். செய்தி என்பது நடந்தவை அல்ல, நாம் நினைப்பவையும் அல்ல, கேட்பவர்கள் நடுவே உருவாகும் நிகர்நிலைப்புள்ளிதான். அதை கண்டடைபவனே நல்ல சூதன். நான் புன்னகையுடன் “ஆனால் நிஷாதர்களும் அசுரர்களும் சூத்திரப்பேரரசுகளும் பெருகிவருகின்றனவே?” என்றேன். “தெற்கே திருவிடம் முதல் வடக்கே கின்னரநாடுவரை இன்று அவர்களின் அரசுகளே எண்ணிக்கையில் மிகுதி. அவர்களுக்கு எதிராக திரண்டிருக்கும் ஷத்ரியர்களோ முற்றொருமைகொள்ளவுமில்லை. அனல்குலத்து ஷத்ரியர்களை இன்னமும் பிறர் ஏற்கவில்லை” என்றேன்.

குலத்தலைவர் முகம் தெளிந்தது. “ஆம், அதை நானும் அறிந்தேன். ஷத்ரியர் ஒன்றுதிரள்வதே பிறர் குடிவேறுபாட்டை மறந்து ஒருங்கிணைவதற்கான உந்துதலாக ஆகும். இனி தங்கள் தலைமேல் அந்த அனல்முடியைச் சூட நிஷாதரும் அசுரரும் சூத்திரரும் ஒப்பமாட்டார்கள்” என்றார். “ஆனால் ஷத்ரியர் புலிகள். இவர்கள் இன்றுதான் உகிரும் எயிறும் முளைத்த நரிகள்” என்றார் கிருதர். “ஆனால் ஷத்ரியர்கள் வாழ்வதெல்லாம் தொல்நதிக்கரைகளில். புதிய சூத்திரநாடுகள் அனைத்தும் கடற்கரைகளில் எழுந்து வருகின்றன. கலவணிகத்தால் பொன்குவித்துள்ளன. பீதர்நாட்டு எரிபடைகளை சேர்த்து வைத்துள்ளன. அவர்களுக்கு இப்போது தேவை ஒரு வெற்றி மட்டுமே” என்றேன்.

கிருதர் சொல்லிழந்துவிட்டார். என்னை வாய்திறந்து நோக்கிக்கொண்டிருந்தார். குலத்தலைவர் உரக்க “ஆம், இப்போது தேவை வெற்றி. இப்போது வெல்லாவிட்டால் இனியில்லை” என்றார். அப்போதுதான் கிருதருக்கு அனைத்தும் புரிந்தது. அதற்குள் காலம் கடந்துவிட்டது. “இறையருள் எங்குள்ளதோ அது வெல்லும்” என்றார். “தெய்வங்கள் எளியவருடன் மட்டுமே உள்ளன. சவுக்கடி பட்டவர்களை நோக்கி வருவதே உண்மையான தெய்வம்” என்றார் குலத்தலைவர். இறுதியாக கிருதர் “வேள்வியால் வளர்க்கப்பட்ட தேவர்கள் அவர்களுடன் இருப்பதாக சொல்லிக்கொள்கிறார்கள்” என்றார். மேலும் தாழ்ந்தகுரலில் “வேதமே மாபெரும் படைக்கலம் என்று ஒரு கவிஞர் பாடினார்” என்றதும் குலத்தலைவர் உரக்க “எங்களிடமும் வேதங்கள் உள்ளன. நாங்களும் அவியளித்து அன்னையரை போற்றுகிறோம். அவர்களின் தேவர்கள் எழட்டும், பிடாரிவடிவாக எங்கள் அன்னையர் அவர்களை களத்தில் சந்திப்பார்கள்” என்றார்.

அதன்பின் அப்படி வெளிப்பட்டுவிட்டதை எண்ணி அவரே சற்று நாணி “நாங்கள் எளிய மலைக்குடியினர். எங்களைக் காக்கும் அரசே எங்களுக்குரியது. எவர் வென்றாலும் நாங்கள் வரிகொடுத்து அடிபணியும் குடிகளே” என்றார். கிருதர் அச்சொல்லால் ஆறுதலடைந்து “ஆம், நாங்கள் சூதர். வென்றோர் எவரோ அவரே எங்கள் பாடலுக்குரியோர். தோற்றோரைப்பாடுபவை குலக்கதைகள் மட்டுமே” என்றார். “ஆனால் குலக்கதைகளை மீண்டும் நாம் பாடத் தொடங்குவோம் அல்லவா?” என்றேன். “ஆம், அதெல்லாம் சற்று கழித்துதானே?” என்றார் கிருதர். குலத்தலைவர் புன்னகைபுரிந்தார்.

“இன்றுகாலை நான் வென்றதை கிருதர் புரிந்துகொண்டார். அவருக்கும் துணைவிக்கும் மரவுரி பரிசாகக் கிடைத்தது. எனக்கு கலிங்கத்து வெண்கூறை” என்று சண்டன் நகைத்தான். “குலத்தலைவரில் எழுந்த விசையையே தவிர்க்கமுடியாமை என்கிறேன். ஆலமரம் வேரை ஆறுகாதத்திற்கு விரித்துவிட்டது. அடிமரம் பெருக்காமல் வழியே இல்லை. ஷத்ரியர்களின் கூட்டு அழியும், அதுவே வரலாற்றின் நெறி.”

“ஆனால் அது எப்படி?” என்றான் சுமந்து. “எப்படியேனும். நீர் தன் வழியை தன் முழு உடலாலும் கண்டடைகிறது” என்றான் சண்டன். “இது நிகழ்ந்தாகவேண்டும். பாரதவர்ஷம் தேங்கவேண்டுமா வளரவேண்டுமா என்பதே வினா. தேங்குதலென்பது அழிவு.” ஜைமினி பெருமூச்சுவிட்டான். பின்னர் “அவ்வண்ணமென்றால் வேதம் அழியுமா?” என்றான். “வேதச்சொல் கூர்மைபெறும்” என்றான் சண்டன் “அது அனைவருக்கும் உரியதென ஆகும்.”

அவர்கள் அச்சொல்லால் அமைதியை நோக்கி செலுத்தப்பட்டனர். சண்டன் நீரில் இறங்கும் ஒலி கேட்டது. நீரில் “சிவமேயாம்” என கூவியபடி இறங்கி மூழ்கி எழுந்தான். வைசம்பாயனன் “நான் இங்கு ஒரு பிச்சாண்டவரால் ஆற்றுப்படுத்தப்பட்டேன், சண்டரே” என்றான். சண்டன் எழுந்து முகத்தில் வழிந்த நீரை வழித்தபடி நோக்கினான். “நான் சொல்வளர்க்கும் ஆசிரியர் ஒருவரை சந்திப்பேன் என்று அவர் சொன்னார். அது ஒருவேளை நீங்களோ என்னும் ஐயமே என்னை விலகி நின்று உங்களை நோக்கச் செய்தது” என்றான் வைசம்பாயனன். “நான் நோக்கிநின்றிருக்கிறேன் என்பதையே நேற்று உக்ரன் சொன்னபோதுதான் அறிந்தேன். இரவெல்லாம் நான் அதையே எண்ணிக்கொண்டிருந்தேன்.”

சண்டன் “நான் எவருக்கும் ஆசிரியன் அல்ல” என்றான். “ஆம், நீங்கள் சொல்சுருக்கிச் செல்லும் வழிகொண்டவர்” என்றான் வைசம்பாயனன். “சொல்லுங்கள், நான் என் ஆசிரியரை எப்படி கண்டடைவேன்?” சண்டன் “இவர்கள் மூவரும்கூட ஆசிரியரைத் தேடியே வந்துள்ளனர்” என்றான். “ஆம், நாங்கள் ஒவ்வொருவரும் தேடுவது ஒவ்வொரு சிறப்புள்ள ஆசிரியனை” என்றான் பைலன். “சொல்லில் மாறாநெறியமைக்கும் ஆசிரியனை ஜைமின்யர் தேடுகிறார். நான் சொல்லைக் கலைத்துவிளையாடும் ஒருவரைத் தேடுகிறேன். இவர் தேடுவது உலகென அமையும் ஒருவரை. அவரோ கனவுகளைச் சமைப்பவரை விழைகிறார்.”

“ஒருவரே நால்வராகவும் ஏன் இருக்கக்கூடாது?” என்றான் சண்டன். “அவர்கள் திகைப்புடன் அவனை நோக்க “ஐந்தாவதாக ஒருவன் வந்திருக்கிறான். அவன் தேடுவது இந்நான்காகவும் ஆகி அப்பாலும் என அமைந்திருக்கும் ஒருவரை. அவன் கண்டடைபவரே உங்களுக்கும் ஆசிரியர்.” அவர்கள் சொல்லிலாது நிற்க ஜைமினி மட்டும் மெல்ல அசைந்தான். “நோக்குவிழிக்கேற்ப உருக்கொள்ளும் மலைபோன்ற ஒருவர். அள்ளும் கலத்திற்கேற்ப அமையும் ஆறுபோன்ற ஒருவர்” என்று சண்டன் சொன்னான். தலை காய்ந்துவிட்டதாக உணர்ந்து மீண்டும் நீரில் மூழ்கினான்.

அவன் எழுந்துவருவதற்காக அவர்கள் காத்து நின்றிருந்தனர். அவன் நீர் பிளந்தெழுந்து சடைக்கற்றைகளை அள்ளி தோளிலிட்டு வாயில் அள்ளிய நீரை உமிழ்ந்தான். ஜைமினி “அவரை எப்படி கண்டடைவது?” என்றான். சண்டன் சிரித்து “காட்டில் நீர்கண்டடைய ஒருவழி செய்வதுண்டு. குரங்குக்கு உப்பு அள்ளி ஊட்டி விடாய்கொள்ளச் செய்வார்கள். அதுசெல்லும் வழியில் தாங்களும் சென்று சுனையையோ ஊற்றையோ அடைவார்கள்.” அவன் சொல்வதை உணர்ந்து பைலன் புன்னகைத்தான்.

KIRATHAM_EPI_68

“எண்ணிஎண்ணிச் சென்று நீங்கள் அடையப்போவதில்லை, அந்தணர்களே. ஐயம்கொண்ட எவரும் ஆசிரியர்களை அணுகியதில்லை. நீரோடை நதிசேர்வதுபோல தன் இயல்பால் இருப்பால் நுண்மையால் தன்போக்கில் அவரைநோக்கி செல்பவனே அடைகிறான். அவனுக்கு பிறிதொருபாதை இருப்பதில்லை.” மீண்டும் மூழ்கி எழுந்து சண்டன் சொன்னான் “சிறியவனைத் தொடர்க! அவன் உங்களை கொண்டுசேர்ப்பான். அவனை முன்னரே என்றும் வாழும் சொல் தன் நாவென தெரிவுசெய்துவிட்டது.”

நூல் பன்னிரண்டு – கிராதம் – 67

[ 9 ]                   

காகவனம் என்று அழைக்கப்பட்ட அந்தச் சிற்றூர் முன்னூறு மூங்கில் இல்லங்களும் நடுவே வட்டவடிவமான மன்றுமுற்றமும் கொண்டிருந்தது. ஊரை வளைத்துச் சென்ற முள்மர வேலிக்கு நடுவே கன்றுகள் சென்று வருவதற்கான வலப்பக்க வாயிலும் மானுடரும் வண்டிகளும் செல்வதற்கான இடப்பக்க வாயிலும் இருந்தன. வலப்பக்கவாயிலில் புகுந்த காலடிப்பாதை வளைந்து சென்று ஊரின் பின்புறம் இருந்த குறுமரங்களால் ஆன சோலையை அடைந்தது. அதற்குள் கன்றுகளைக் கட்டும் தொழுவங்கள் அமைந்திருந்தன. இடப்பக்க வாயிலை அடைந்த வண்டிப்பாதை ஊரை வளைத்துச் சென்ற மூன்றாள் உயரமான அகழிக்கு மேல் போடப்பட்ட மரப்பாலத்தின் மேல் ஏறி உள்ளே சென்று முற்றமன்றில் முடிந்தது.

மன்று நடுவே நின்றிருந்த தொன்மையான அரசமரத்தினடியில் குலத்தலைவரும் குடிமூத்தாரும் அமர்ந்து நெறியுசாவும் மேடை அமைக்கப்பட்டிருந்தது. இல்லங்களுக்கு நடுவே பிறிதொரு சிறிய முள்வேலியால் காக்கப்பட்ட குலத்தலைவரின் மூன்றடுக்கு மூங்கில் இல்லம் அமைந்திருந்தது. அதன்மேல் அவர்களின் குடிமுத்திரையான ஆலிலை பொறிக்கப்பட்ட கொடி பறந்தது. ஓராள் உயரத்திற்கு மண்குவித்து மேலே மூன்றாள் உயரத்திற்கு முள்மரம் நட்டு அமைக்கப்பட்ட அவ்வேலியின் நான்கு மூலைகளிலும் தேக்குமரங்கள் நடப்பட்டு அவற்றின் உச்சியில் பரண் கட்டப்பட்டு காவல்மாடம் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றில் எந்நேரமும் காவலர் இருவர் தொலைதேரும் அம்புகளும் நீள்வில்லுமாக அமர்ந்திருந்தனர்.

புல்வெளியைக் கடந்து அவர்களின் வண்டி வருவதைக் கண்டதும் கிழக்கு வாயிலின் அருகே இருந்த காவல்மாடத்தின் உச்சியில் நின்றிருந்த வீரன் கொம்பை முழக்கினான். பிற மூன்று காவல்மாடங்களிலிருந்தும் கொம்புகள் எழுந்தன. வயலுக்கு வெளியே நான்கு குடிவீரர்கள் கையில் தோதகத்திமரம் செதுக்கிச் செய்த நீண்ட ஈட்டிகளுடன் தோன்றினர். அவர்களுக்குக் காவலாக சற்று பின்னால் நான்கு வில்லேந்திய வீரர்கள் வந்தனர். சண்டனும் கிருதனும் தங்கள் கையிலிருந்த முழ்வுகளை தலைக்கு மேல் தூக்கி விரல்களால் மீட்டி ஓசை எழுப்பினர்.

சூதர்வருகைக்குரிய குழூஉக்குறி அது. அந்த முழவோசை கேட்டதும் காவலர்கள் விரைவு தணிந்து உடல் இயல்புநிலை கொள்ள காத்து நின்றனர். உடலுக்கு இயல்புநிலை என்பது கோணல்நிலையா என பைலன் எண்ணிக்கொண்டான். அவர்கள் நேர்கொண்ட உடலுடன் சீரடிகளுடன் இரும்புப்பாவைகள் போல் அதுவரை வந்தனர். அது பயின்று உருவாக்கிய இறுக்கம். அவன் ஒவ்வொரு உடலாக நோக்கினான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணல் கொண்டிருந்தன. அந்தக்கோணல் எங்குள்ளது? அவர்களின் இயல்பிலா? அவ்வாறென்றால் அவர்களின் உள்ளத்திலுள்ளதா அது? எண்ணங்களிலும் உணர்வுகளிலும் அது இருக்குமா?

அதோ அவன் இடையில் வலக்கை வைத்து சற்றே இடக்கால் வளைத்து நிற்கிறான். இன்னொருவன் அருகே மார்பில் கைகட்டி முதுகை வளைத்து நின்றிருக்கிறான். உடலில் எப்பகுதி கோணலாகிறதென்பதைக்கொண்டு அவர்கள் எவ்வகைப்பட்டவர்கள் எனச் சொல்லும் நிமித்திகமுறை உள்ளதா? உடல்நிமித்திகர் இதை அறிவார்களா என்ன? மறுகணமே அவன் புன்னகையுடன் அக்கோணலைக்கொண்டு அவர்களுக்குரிய தெய்வமேதென்று சொல்லும் ஒரு மெய்யியல் உருவாகக்கூடுமா என எண்ணினான். நீ இடப்பக்கம் கோணல்கொண்டிருக்கிறாய், உனக்குரியது அதர்வம். வலப்பக்கம் கோணலாகிய உனக்கு யஜுர். நடுவளைந்த உனக்கு ரிக். அதிலும் உன் தோள் சரிந்துள்ளது, ஆகையால் உன்னுடையது கரியகிளை. எந்தவேதமும் இல்லாதவர் யார்? முற்றிலும் நிகர்நிலைகொண்டவர்களா?

அவன் புன்னகைப்பதைக்கண்டு “மலைப்பகுதியின் சிற்றூர்கள் சிறிய அரசுகள் போலவே இயங்குகின்றன” என்றான் கிருதன். “இங்கு வரி கொள்வதற்கு மட்டுமே அரசென்று ஒன்று வந்து தொடுகிறது” என்றான் சண்டன். கிருதன் “ஆம், அதுவும் நன்றே. அரசு அங்கு நிகழ்த்தும் வேள்வியில் இவர்களுடையதென ஒரு பிடி அரிசி சென்றாலும் அந்நலன் இவர்களுக்குரியதல்லவா? எத்தனை தனித்து காட்டுக்குள் வாழ்ந்தாலும் வான் மழை அனைவருக்குமாகவே பெய்கிறது. மழை கொணரும் வேதம் அனைவருக்கும் உரியதே” என்றான். சண்டன் புன்னகைத்தான்.

உக்ரன் “ஏன் அத்தனைபேரும் வளைந்து நிற்கிறார்கள்?” என்றான். பைலன் திடுக்கிட்டான். “காற்றுவீசும்போதுதான் செடிகள் இப்படி வளையும்” என்று உக்ரன் சுட்டிக்காட்டினான். “அங்கே கண்ணுக்குத்தெரியாத காற்று வீசுகிறது.” பைலன் சிரித்தபடி “ஆளுக்கொரு காற்றா?” என்றான். “ஒரே காற்றுதான். அவர்களின் வேரும் கிளைகளும்தான் வேறுவேறு” என்றான் உக்ரன். கிருதன் “இப்படித்தான் வாயில்வந்ததை உளறுவான். அவன் யாரைச்சொல்கிறானோ அவர்களைநோக்கி கையை வேறு சுட்டுவான். இவனால்தான் நான் ஒருநாள் கழுவிலேறி அமரப்போகிறேன்” என்றான்.

வண்டிக்குள் இருந்த அவன் அன்னை சுதை “அவன் பொருளில்லாமல் சொல்வதில்லை. நமக்குத்தான் புரிவதில்லை” என்றாள். “உன்னைப்போன்ற கரிய காட்டுப்பெண்ணை அணைந்தபோது லோமஹர்ஷருக்கு சற்றே கிறுக்குபிடித்திருக்கவேண்டும். அந்தக்கிறுக்குதான் இப்படி தனியாகப்பிரிந்து வந்து பிறந்திருக்கிறது” என்றான் கிருதன். “தந்தையே, கிறுக்கு தொற்றக்கூடியதா?” என்றான் உக்ரன். “இல்லை, இருந்தால் எனக்கு தொற்றியிருக்குமே?” என கிருதன் பல்லைக்கடித்தபடி சொன்னான்.

அவர்கள் அவ்வூரின் வாயிலை அடைந்ததும் கிருதன் கைகளை தலைக்குமேல் தூக்கி “என்பெயர் கிருதன், தொல்சூதர் மரபான மாயூரத்தில் சகரன் மைந்தனாகப் பிறந்த பாடகன். வண்டிக்குள் என் மனையாட்டி இருக்கிறாள்” என்றான். “அவள் கருவுற்றிருப்பதனால் நடக்கமுடியவில்லை.” திரும்பி சண்டனை சுட்டிக்காட்டி “அவர் பாசுபத நெறிகொண்ட சூதர். அவர்கள் அயலூர் வைதிகர். கல்விதேடி நிலம்பெயர்பவர்” என்றான். சுதை தன் பெரிய வயிற்றுடன் மெல்ல இறங்கினாள்.

பைலனும் சுமந்துவும் வைசம்பாயனனும் ஜைமினியும் தங்களை அறிமுகம் செய்துகொண்டதும் ஊர்க்காவலர் முகங்கள் மாறின. அவர்களின் தலைவன் “நீங்கள் இங்கெழுந்தருளியது எங்கள் சிற்றூரை அருள் கொள்ளச்செய்கிறது, அந்தணர்களே” என்றான். திரும்பி அருகே நின்ற இன்னொருவனிடம் “அந்தணர்கள் என ஊர்த்தலைவரிடம் சொல்” என்று ஆணையிட அவன் உள்ளே ஓடினான்.

“வருக, தங்கள் கால்களால் எங்கள் ஊர் பொலிக!” என்று அவன் நால்வரிடமும் சொன்னான். ஆனால் ஐயத்துடன் அவன் விழிகள் ஜைமினியின் தோள்மேல் இருந்த உக்ரனை பார்த்துக்கொண்டிருந்தன. பின்னர் “அவருக்கு இன்னமும் மெய்யணைவுச் சடங்கு செய்யப்படவில்லையா?” என்றான். ஜைமினி புரியாமல் “சூதர்களுக்கு பன்னிருவயதில்தானே அணைநூல் அளிப்பார்கள்?” என்றான். அவன் மேலும் குழம்பி “வடபுலத்து அந்தணர் இத்தனை கரியநிறம் கொண்டிருப்பதில்லை” என்றான். “இவன் அந்தணன் அல்ல, சூதன்” என்றான் ஜைமினி புரிந்துகொண்டு.

கிருதன் பதறியபடி “ஆம், அவன் என் மைந்தன். என் மனைவிக்கு முனிவராகிய லோமஹர்ஷணரில் பிறந்தவன். உக்ரசிரவஸ் சௌதி என்பது அவன் பெயர்” என்றான். அவர்கள் ஒருகணம் சொல்லிழந்தவர்களாக நோக்கினர். “அந்தணர் மேல் அமர்ந்து பயணம்செய்யும் முதல்சூதனை பார்த்திருக்கிறார்கள். அவர்களின் உலகம் இடிந்துசரிந்து மீண்டும் எழுந்து அமைய சற்றுநேரமாகும்” என்றான் சண்டன் சிரித்தபடி. காவலர்முதல்வன் பெருமூச்சுவிட்டு “வருக!” என்றான். கிருதன் “கீழிறங்கு கரியா. உன்னை இவ்வண்ணம் கண்டால் ஊர்த்தலைவர் என்ன சொல்வார் என்று அறியேன்” என்றான். ஜைமினி “அவன் தனக்குரிய ஊர்தியிலேயே செல்கிறான் சூதரே, அமைதிகொள்க!” என்றான்.

ஊர்த்தலைவர் உள்ளிருந்து மேலாடையை எடுத்து சுற்றிக்கொண்டு ஓடிவந்தார். அதை அவர் விரைந்து பெட்டியிலிருந்து எடுத்திருக்கவேண்டுமென அதில் வீசிய தாழம்பூப்பொடியின் மணமே காட்டியது. கைகூப்பியபடி “வருக வருக! அந்தணர் காலடிபடுவதனால் எங்களூரில் அறமும் கல்வியும் செழிக்கட்டும். சூதர் சொற்களினூடாக மாவீரரும் பத்தினியரும் தவமுனிவரும் தேவரும் தெய்வங்களும் எங்களூரில் குடியேறட்டும்” என்றார். அவர் ஜைமினியின் மேல் அமர்ந்திருக்கும் உக்ரனை திட்டமிட்டு விழிதவிர்ப்பது தெரிந்தது. முன்னரே அவருக்கு சொல்லப்பட்டுவிட்டது என்று ஜைமினி உணர்ந்துகொண்டான்.

அக்குடியின் ஆண்களும் பெண்களும் அவருக்குப்பின் வந்து கூடினர். பெண்கள் குடங்களில் மஞ்சள் கரைத்த நீருடனும் குடலைகளில் மலர்களுடனும் வந்தனர். அவர் குடங்களில் இருந்த நீரை எடுத்து வைதிகர் மூவரின் கால்களையும் கழுவினார். ஜைமினி உக்ரனை இறக்கி விட்டான். குலத்தலைவர் ஜைமினியின் கால்களில் மஞ்சள்நீரூற்றிவிட்டு விழிவிலக்கிக்கொண்டார். ஜைமினி ஊர்த்தலைவர் ஒருபெண்ணிடம் திரும்பக்கொடுத்த சுரைக்குடுக்கையை தான் வாங்கி மஞ்சள்நீரை அள்ளி உக்ரனின் கால்களில் விட்டு தானே கழுவினான். ஊர்த்தலைவரின் கழுத்தில் தசைகள் இழுபடுவதை காணமுடிந்தது.

மூன்று பெண்கள் சுடர், நீர், அரிசி, மலர், பொன் என ஐந்து மங்கலங்களைக் காட்டி அவர்களை வரவேற்றனர். பிறர் அரிமலர் தூவி வாழ்த்துரைத்தனர். குரவையோசை சூழ்ந்து ஒலித்தது. அவர்கள் தங்களுடன் அழைத்துச்சென்றமையால் உக்ரனும் அந்த வாழ்த்துக்களுடன் உள்நுழைந்தான். கிருதனும் அவன் மனைவியும் தொடர்ந்துசென்றனர். இரு காவலர் அவர்களின் வண்டியை அப்பால் கொண்டுசெல்ல இறுதியாக சண்டன் தன் தோல்மூட்டையுடனும் முழவுடனும் நுழைந்தான்.

ஊர்த்தலைவர் அவர்களை அழைத்துச்சென்று மன்றுநடுவே நின்றார். “தாங்கள் தங்குவதற்காக குடில்கள் ஒருக்கப்படுகின்றன, அந்தணர்களே. அந்தணர் தங்கும்பொருட்டு இங்கே குடில் ஒன்று உள்ளது. ஆனால் அந்தணர்கள் இங்கு வந்து பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஆகவே குடில் சற்று தூசடைந்துள்ளது. பெண்டிர் அதை சீரமைத்துக்கொண்டிருக்கிறார்கள். சற்றுநேரம் பொறுங்கள்” என்றார். திரும்பி சண்டனிடம் “சூதர்கள் தங்குவதற்கு அப்பால் குடில்கள் இரண்டு உள்ளன. அவை உழவுப்பொருட்கள் போட்டுவைக்க இப்போது பயன்படுத்தப்படுகின்றன. எடுத்து அகற்றிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சற்றுநேரத்தில் சித்தமாகிவிடும்” என்றார்.

“இவன் எங்களுடன் தங்குவான்” என்றான் ஜைமினி. ஊர்த்தலைவர் அதை கேட்காதவர் போலிருந்தார். “நாங்கள் உரிய ஆசிரியரைத் தேடிச்செல்லும் மாணவர்கள். இங்கு ஒருநாள் மட்டுமே தங்குவதாக உள்ளோம்” என்றான் பைலன். “இப்போது எங்கள் மெய்யாசிரியராக வழிகாட்டி அழைத்துச்செல்பவர் இவர்.” ஊர்த்தலைவர் அதையும் கேட்டதாக காட்டிக்கொள்ளவில்லை. “அந்தணர்களே, இங்கு எங்கள் குலத்தின் சிறார் எண்ணும் எழுத்தும் பயில்கிறார்கள். அவர்களுக்கு சொல்முறைசெய்ய அந்தணர் வேண்டும்.. பல்லாண்டுகாலமாக இங்கே அந்தணர்களை கொண்டுவர முயல்கிறோம். எவரும் இத்தனை தொலைவுக்கு வருவதில்லை. உங்கள் கையால் மெய்சொல் பெற்றால் அவர்களின் சித்தம் தெளியுமென நினைக்கிறேன்” என்றார். “ஆம், அது எங்கள் கடமை” என்றான் வைசம்பாயனன்.

[ 10 ]

காகவனத்தின் முற்றத்தில் நடுவே மன்றெரி மூட்டப்பட்டது. தழலெழுந்து இருளுக்குள் ஆட சூழ்ந்திருந்த இல்லங்கள் நிழல்திரையென ஆடின. ஊர்த்தலைவரும் குடிமூத்தாரும் கரிய கம்பளியாடைகளை போர்த்தியபடி வந்து எரியருகே இடப்பட்ட மணைகளில் அமர்ந்தனர். ஊரார் ஒவ்வொருவராக கம்பளிகளும் மரவுரிகளும் கொண்டு உடல்மூடி வந்து அமர்ந்தனர். சற்றுநேரத்தில் அந்த முற்றமே முழுமையாக நிறைந்தது. குழந்தைகள் முதல்வளையமாகவும் ஆண்கள் அடுத்த வளையமாகவும் அமர்ந்திருக்க இடப்பக்கத்தில் பெண்கள் தனியாக அமர்ந்தனர். நான்குபேர் பெரிய மரக்குடுவையிலிருந்து அவர்களுக்கு கொதிக்கும் இன்சுக்குநீரை மூங்கில் குவளைகளில் அளித்தனர். அனைவருமே ஊனுடன் உணவுண்டு நிறைந்திருந்தனர். சிலர் அப்போதே மெல்லிய துயிலில் எடைகொண்ட தலையுடன் ஆடினர். குழந்தைகள் விழிசொக்கி அன்னை மடிகளில் தலைசாய்த்தன.

கிருதனும் சண்டனும் தங்கள் முழவுகளுடன் வந்தனர். அவர்கள் நெருப்பருகே வந்து குலத்தலைவரை வணங்கியதும் அவர் “அந்தணர்கள் எங்கே?” என்றார். “அவர்களின் சடங்குகள் சில முடியவில்லை. வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் சண்டன். அவர் உக்ரனைப்பற்றி பேச விரும்புகிறார் எனத் தெரிந்தது. ஆனால் அவரை ஏதோ ஒன்று தடுத்தது. அப்பால் அந்தணர்குடில்களின் அருகே பேச்சொலியும் சிரிப்பும் கேட்டது. “அங்கு அவர்களுக்கு குறையென ஏதுமில்லை அல்லவா?” என்றார் ஊர்த்தலைவர். “நன்று என்றனர்” என்றான் சண்டன். உக்ரனின் குரல் உரக்க கேட்டது. “உங்கள் மைந்தனுக்கு மிகக்கூரிய குரல்” என்றார் குலத்தலைவர். “ஆம், அதன்பொருட்டே அவனுக்கு அப்பெயர் இடப்பட்டது” என்றான் கிருதன். அவர் முகம் சுளித்து திரும்பிக்கொண்டார்.

நால்வரும் நடந்து வந்தனர். இம்முறை வைசம்பாயனனின் தோள்மேல் உக்ரன் இருப்பதை ஊர்த்தலைவர் கண்டார். அறியாமலேயே அவர் விழி திரும்பி சண்டனைப் பார்த்துவிட்டு விலகியது. கிருதன் தாழ்ந்தகுரலில் “என்ன நிகழ்கிறதென்றே தெரியவில்லையே” என்றான். “என் மனைவி சொன்னால்தான் கொஞ்சம் கேட்பான். அவள் பயணக்களைப்பில் படுத்துவிட்டாள். எனக்கு உண்மையிலேயே அச்சமாக இருக்கிறது. சண்டரே, நீராவது அவனிடம் கொஞ்சம் சொல்லமுடியுமா?” என்றான். சண்டன் புன்னகைமட்டும் செய்தான். ஊர்த்தலைவர் வேறுபக்கம் நோக்கியவராக “மைந்தருக்கு உலகமுறை தெரியாது. கற்றுத்தருவது பெற்றோரின் கடன்” என்றார். கிருதன் “நான் கற்றுத்தர ஏதுமில்லை, தலைவரே. அவன் தேவைக்குமேல் கற்றுக்கொண்டவன். நாகக்குஞ்சுக்கு நஞ்சதிகம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்” என்றான்.

அவர்கள் அருகே வந்து ஊர்த்தலைவரை வணங்கிவிட்டு அமர்ந்தனர். உக்ரன் “நாம் இப்போது பாடப்போகிறோமா?” என்று ஆவலுடன் கிருதனிடம் கேட்டான். “நான் பாடப்போகிறேன். நீ சென்று அமர்க!” என்று எரிச்சலுடன் கிருதன் சொன்னான். “நானும் பாடுவேனே” என்றான் உக்ரன். ஊர்த்தலைவர் எரிச்சலுடன் “நாங்கள் இங்கு புராணமும் கதையும் கேட்டு மெய்யுணரும்பொருட்டு அமர்ந்திருக்கிறோம். குழவிச்சொல் கேட்டு மகிழ்வதற்காக அல்ல” என்றார். உக்ரன் “குழவிச்சொல்லில் மெய்யுணர முடியாதா உங்களுக்கு? நீங்கள் விரும்பும் கதையை சொல்லுங்கள். நான் சொல்கிறேன்” என்றான்.

“என்ன இது?” என்றார் ஊர்த்தலைவர். “அவனுக்கு எல்லா கதையும் உளப்பாடமாகத் தெரியும். அவன் நினைவுத்திறன் ஏதோ தீயதெய்வத்திற்குரியதென்றே நான் அஞ்சுவதுண்டு” என்றான் கிருதன். ஊர்த்தலைவர் “ஆனால்…” என ஏதோ சொல்லமுயல கிருதன் “அவன் பலதருணங்களில் முற்றிலும் புதியகதைகளையும் சொல்கிறான். அக்கதைகளை நூல்தேர்ந்தோர்கூட சொன்னதில்லை. ஆனால் அவற்றைக்கேட்டவர்கள் அவை நூலுக்குரிய கதைகள் என்றே சொல்கிறார்கள். சென்றபிறப்பில் இவன் கதைகளை ஆண்ட மாமுனிவனாக இருக்கக்கூடும் என்று ஒரு அயலகச்சூதன் ஒருமுறை சொன்னான். ஒன்றுமட்டும் சொல்கிறேன் தலைவரே, இவன் சொல்லும் எச்சொல்லுக்கும் நான் பொறுப்பல்ல. நான் இவனுக்கு கற்பித்ததெல்லாம் மொழியை மட்டுமே” என்றான்.

ஊர்த்தலைவர் அவனையே நோக்கி சிலகணங்கள் இருந்தார். பின்னர் “இவ்வனல் எதன் வடிவம் என்று சொல்?” என்றார். “குலத்தலைவரே, முதன்மைப் பருப்பொருட்கள் மூன்றே. அனல், நீர், மண். வானம் என்பது பருப்பொருட்களின் இன்மைநிலை. அவ்வின்மையின் நீரோ நிலமோ அனலோ அமைக்கும் அசைவையே காற்று என்கிறோம்” என்றான் உக்ரன். “முப்பெரும் பருப்பொருட்களும் மூன்று முதலியல்புகளின் பருவெளிப்பாடுகள். மாறாநிலையியல்பு கொண்ட நிலம் தமஸ். அதை ஆளும் நீர் சத்வம். அதன்மேல் எரிந்தெழும் அனல் ராஜஸம்.” வைசம்பாயனன் “இதை நான் இதுவரை கேட்டதே இல்லை” என்றான்.

ஜைமினி “இது தொல்பிராமணங்களில் ஒன்றான கிருஷ்ணபதத்தில் வரும் ஒருபாடலின் பொருள். நீ இதை எப்படி கற்றாய்?” என்றான். “நான் காட்டின் விளிம்பில் நின்றிருந்தபோது சிவந்த சிறகுகளும் கரிய தலையும் கொண்ட பறவை ஒன்றைக் கண்டேன். அது சென்றமர்ந்து எழுந்த இடங்களில் எல்லாம் அனல் பற்றி எரிந்தது. அப்பறவையை கைநீட்டி அருகே வரவழைத்தேன். என் கைகளில் அது வந்தமர்ந்தது. என் நாவில் தன் வெண்ணிற அலகால் தொட்டது. அப்போது இவையனைத்தும் எனக்கு தெரியவந்தன” என்றான் உக்ரன்.

வியப்புடன் எழுந்து “அந்தப்பறவையின் பெயர் அனலை. அக்னிக்கு கிரௌஞ்சப்பறவை ஒன்றில் பிறந்தது அது. அக்கதை தேவலரின் புராணகதாகௌமுதியில் உள்ளது” என்றான் பைலன். “இக்கதைகளை இவனுக்கு எவர் கற்பித்தார்கள்?” கிருதன் அச்சத்துடன் “நான் ஒன்றும் அறியேன், அந்தணர்களே. இந்த மூடன் இப்படி பல கதைகளைச் சொல்லி எங்கு சென்றாலும் என் அன்னத்தில் மண்ணிடுகிறான். அடேய், வாயை மூடு! சென்று உன் அன்னையருகே படுத்து துயில்! போ…” என்றான். சண்டன் “மேலே சொல், மைந்தா” என்றான்.

“பொருளென்பது ஒரு வெளிப்பாடு மட்டுமே” என்றான் உக்ரன். “அப்பால் கருத்து என்றும் இப்பால் பொருளென்றும் அறிதலில் இயல்பென்றும் அறியமுடியாமையில் முடிவிலி என்றும் தன்னை வெளிப்படுத்தும் ஒன்றின் ஒருமுகம். நிலமென்று நின்ற நேர்நிலை பிரம்மன். அதில் செயலென்று எழுந்த அனலே சிவன். அமைந்த நீரின் தண்மையே விஷ்ணு. நிலத்திலும் நீரிலும் உறைகிறது அனல். தழல்தலென்றும் எரிதலென்றும் வெம்மையென்றும் ஒளியென்றும் இங்கு நின்றிருப்பதை ருத்ரம் என்றது தொல்வேதம். அனைத்தையும் உண்டழிக்கும் அதன் நாக்கு திகழும் சுடலையில் அதை ருத்ரனென்று அமர்த்தினர் முன்னோர். அறிக, செம்மையெல்லாம் ருத்ரம்! குருதி ஒரு ருத்ரன். செங்காந்தள் மலர் ஒரு ருத்ரன். செம்புலத்து மண் ஒரு ருத்ரன். பதினாறு ருத்ரர்கள் ஆள்கிறார்கள் புவியை. அவையோரே, அலகிலாப்பெருவெளியை ஒரு சிதையென்றாக்கி நின்றெரிவது மகாருத்ரம். அறிக மானுடரே, எரிவதெல்லாம் சிவமே!”

சிவந்தெரிந்த தழலாட்டத்தில் அறியாத் தொல்தெய்வமொன்று வந்தமைந்த சிறுகருங்கற்சிலை என அவன் நின்றிருந்தான். அங்கிருந்த அனைவர் உணர்வுகளும் மாறிவிட்டிருந்தன. எரிகொள்ளும் கரி என அவன் சுடர்ந்துகொண்டே சென்றான். அவன் விழிகளில் ஆடிய செந்தழல்துளிகளை நோக்கி அவர்கள் அமர்ந்திருந்தனர். “அன்னமனைத்திலும் அனலுறைகிறது. வெளியெங்கும் ஒளியென அதுவே நிறைந்துள்ளது. சொல்லில் எண்ணத்தில் சித்தத்தில் துரியத்தில் அதுவே மெய்யென்று நின்றுள்ளது. ஆம் அவ்வாறே ஆகுக!” அவன் கைகூப்பினான்.

தீ எரியும் ஒலி மட்டும் அங்கு கேட்டுக்கொண்டிருந்தது. பின்னர் ஊர்த்தலைவர் “இவர் எங்ஙனம் இதையெல்லாம் கற்றார்? ஒலியணுகூட பிழைக்காத முழுமை இச்சொல்லில் எப்படி கைவந்தது?” என்றார். “நான் அறியேன், தலைவரே. இவனை நான் வளர்க்கவே இல்லை” என்றான் கிருதன். சண்டன் “வேளிரே, ஒன்றுணர்க! கற்றுத்தேரும் சொல் ஒருபோதும் மெய்மையை சென்றடைவதில்லை. அது ஓர் ஒப்பந்தம் மட்டுமே. கற்பித்தவர்களுக்கும் கற்றவர்களுக்கும் நடுவே ஒரு படைக்கலம்வைப்பு, ஒரு நிகர்நிலை ஒப்பு. அழியா மெய்ச்சொல் கல்லில் அனலென எழவேண்டும். அது கற்பதற்கேதுமில்லை. ஒலிகளையும் ஒப்புமைகளையும் மட்டுமே அது இங்கிருந்து பெற்றுக்கொள்கிறது” என்றான்.

“இவர் சொன்னவை முன்னரே மகாருத்ரபிரபாவம் என்னும் நூலில் உள்ளவை” என்றான் சுமந்து. “ஆனால் மேலும் கூரிய சொற்களில் இவரிடமிருந்து அவை வெளிப்படுகின்றன. அந்நூலை கற்றுத் தேர்ந்து தன்சொல்லென ஆக்கி அளிக்கும் ஆசிரியர் போலிருக்கிறார்.” உக்ரன் “அந்தச் சிறிய குருவி தன் அலகால் தொட்டு பாறைகளை உருகச்செய்துவிடும்” என்றான். அவன் சொன்னதென்ன என்று அறியாமல் தலைவர் திகைப்புடன் திரும்பி நோக்கினார். “அதன் குரல் கூரியது. சிக்கிமுக்கிக் கல் உரசும் ஒலிகொண்டது” என்று அவன் கைகளை அசைத்தான். சிறுவர்களுக்குரிய வகையில் சிறுநெஞ்சு விம்ம கைகளை அசைத்து “சிவ் சிவ் சிவ் சிவ்!” என்றான். ஊர்த்தலைவர் பெருமூச்சுடன் “ஆம், நாம் அறிந்தது சற்றே” என்றார்.

குடிமூத்தவர் ஒருவர் “இளையசூதர் முதற்சிவம் வெளியில் எழுந்த கதையை சொல்லட்டும். இன்றிரவு நாம் அனலுருக்கொண்டு எழுந்த அவன் காலடியில் அமர்ந்திருக்கிறோம்” என்றார். “ஆம், தன்னை இவர் சொல்லவேண்டுமென அதுவே முடிவுசெய்துள்ளது போலும்” என்றார் ஊர்த்தலைவர். கைகூப்பி பணிந்து “நான் வேண்டுமென்றால் சிவபுராணத்திலிருந்து அக்கதையை சொல்கிறேன். நான் அதை பலமேடைகளில் பாடியதுண்டு” என்றான் கிருதன். ஊர்த்தலைவர் திரும்பிப்பார்த்தபின் மறுமொழி ஏதும் சொல்லாமல் நோக்கை விலக்கிக்கொண்டார்.

சண்டன் குனிந்து உக்ரனைத் தூக்கி அங்கிருந்த மரத்தாலான சிறிய பீடத்தின்மேல் நிறுத்தினான். தன் முழவை எடுத்து அவன் கைகளில் கொடுத்தான். “எழுக சொல்!” என்றான். உக்ரன் அந்த முழவை திருப்பித்திருப்பி பார்த்தபின் “இது எனக்கா?” என்றான். “ஆம்” என்றான் சண்டன். “நானே வைத்துக்கொள்ளலாமா?” என்றான். “ஆம், வைத்துக்கொள்!” என்றான் சண்டன் புன்னகையுடன். “கேட்டாலும் தரமாட்டேன்” என்று உக்ரன் தலையைச் சரித்து புருவம் சுளித்து சொன்னான். “உன்னுடையதேதான் இது, போதுமா?” அவன் அதன் தோற்பரப்பை கையால் வருடியபடி “மென்மையாக உள்ளது” என்றான். பின்பு நிமிர்ந்து “அழுதாலும் தரமாட்டேன்” என்றான். சண்டன் சிரித்து “வேண்டாம்” என்றான்.

KIRATHAM_EPI_67

“எந்தையின் முழவு இதைவிடப்பெரியது. ஆனால் அவர் அதை நான் தொடுவதற்கே விடமாட்டார். நான் அதை ஒருமுறை முள்வைத்து கிழித்துவிட்டேன்” என்று அவன் சொன்னான். “ஆனால் இதை கிழிக்கமாட்டேன்.” அவன் முகம் புன்னகையில் மலர்ந்தது. “ஏனென்றால் இது என்னுடையது. நான் எவரிடமும் இதை கொடுக்கமாட்டேன்.” அதன்மேல் கைகளால் வருடிக்கொண்டே இருந்தான். அவன் உள்ளம் அந்த அசைவில் தெரிந்தது. “முழவுமீட்டக் கற்றுள்ளாயா?” என்றான் பைலன். “இல்லை, ஆனால் நான் அனைத்துப்பொருட்களையும் தாளமாக்குவேன்” என்றான் அவன். அவன் கைகள் அசைய அசைய உடல் மயக்கு கொண்டது. விழியிமைகள் துயிலில் என தளர்ந்தன.

அவனுடையதா என்று ஐயுறச்செய்யும் குரலில் அவன் மெல்ல முனகினான். வண்டு முரல்வதுபோல. ஓநாய்க்குட்டியின் முனகலென அது ஆகியது. பின் புலிக்குருளையின் உறுமலைப்போல. அவன் மையச்சுருதியை பற்றிவிட்டான் என சண்டன் புரிந்துகொண்டான். சுட்டுவிரல் சீறிக்கொத்தும் நாகக்குழவி என முழவை தொட்டுச்சென்றது. அம்மெல்லிய ஒலிக்கேற்ப அவன் உடலே முழவுத்தோலென அசைந்தது. முழவென்று ஆகி ஒருவன் முழவுமீட்டுவதை அப்போதுதான் பார்க்கிறோம் என சண்டன் எண்ணிக்கொண்டான். “சிவமேயாம்!” என்று உக்ரன் சொன்னான். விரல் துடித்து எழ விசைகொண்ட தாளத்துடன் இசைந்து “சிவமேயாம்!” என்றான். மேலும் உரத்து வெடித்தெழுந்தது அச்சொல் “ஆம், சிவமேயாம்!”