மாதம்: நவம்பர் 2016

நூல் பன்னிரண்டு – கிராதம் – 32

[ 10 ]

வாருணம் என்று அழைக்கப்பட்ட அந்நிலத்திற்குச் செல்வதற்கு பாதைகளென எதுவும் இருக்கவில்லை. விண்ணிலிருந்து விழுந்து நான்காகப் பிளந்து சரிந்ததுபோல் கிடந்த வெண்ணிற பாறைக்கூட்டங்களின் அருகே வணிகர் குழு வந்தபோது பீதர் தலைவர்  போ அர்ஜுனனிடம் தொலைவில் வானில் எழுந்து தெரிந்த வெண்ணிற ஒளியை சுட்டிக்காட்டி “அங்குதான் என்று ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் எவரேனும் சொல்வதுண்டு. அந்நிலத்தைப் பற்றிய கதைகளன்றி வேறெந்த செய்தியும் நானறிந்திருக்கவில்லை” என்றார்.

அர்ஜுனன் புன்னகைத்து “நன்று, நான் மீள்வேன்” என்றான். பீத வணிகர் குழுவில் அனைவர் விழிகளும் அவன் மேல் பதிந்திருந்தன. அவனுடைய நிமிர்ந்த தலையையும் புன்னகையையும் கண்டு அவர்கள் உணர்வெழுச்சி கொள்வது உடலசைவுகளிலும் ஓசையுடன் எழுந்த உயிர்ப்பிலும் தெரிந்தது. “விடைகொடுங்கள், மூத்தவரே” என்று சொல்லி அர்ஜுனன் குனிந்து முதிய பீதவணிகரின் கால்களைத் தொட்டு வணங்கினான். “நன்று சூழ்க! உங்கள் தெய்வங்கள் துணை நிற்கட்டும். எங்கள் தெய்வங்கள் உடனிருக்கட்டும். வெற்றி திகழ்க!” என்று போ அவனை வாழ்த்தினார்.

அவர்கள் குளம்படியோசைகளும் கால்கள் மண்ணில் விழுந்தெழும் ஓசைகளும் ஒலிக்க அவனைக் கடந்து சென்றனர். ஒவ்வொரு விழியும் கடந்து செல்லும்போதும் அவன் தலைவணங்கி புன்னகை செய்தான். கண்முன்னால் ஒரு காலத்துண்டு ஒழுகிச்செல்வதுபோல் தோன்றியது. பல மாதங்கள் உடனிருந்தவர்கள். ஒவ்வொருவரின் பெயரும் இயல்பும் உவகையும் துயரும் கனவுகளும் அவன் அறிந்தவை. அம்முகங்களில் ஒன்றைக்கூட அவன் மறக்கப்போவதில்லை. ஆனால் மீண்டும் அவர்கள் எவரையும் பார்க்க வாய்ப்பும் இல்லை. எனவே அந்நினைவுகளுக்கு எப்பொருளும் இல்லை.

குளம்படியோசைகள் முற்றிலும் மாய்ந்தன. அவர்கள் சென்றபின் எஞ்சிய புழுதியை அவன் நோக்கிக்கொண்டிருந்தான். முன்காலை வெயிலின் ஒளியில் விண்புகைபோல் நின்றது அது. ஒரு மென்மலரிதழ் போல. பின்னர் புழுதித்திரை சரிந்தபோது வளைந்திறங்கிச் சென்ற பாதையின் தொலைவில் புழுதிச்சிறகு சூடி ஒரு பெரிய பறவை செல்வதுபோல் அக்குழு சென்றுகொண்டிருந்தது.

ஒருவேளை அவர்களை மீண்டும் சந்திக்கலாம். அங்கு சென்று மீண்டும் இங்கு வந்து நிற்கையில் தங்கள் வணிகம் முடிந்து அவர்களும் இந்த இடத்திற்கு வந்திருக்கக்கூடும். விந்தைகள் நிகழக்கூடாதென்பதில்லை.

அவ்விழைவு எழுந்ததுமே அவன் புன்னகைத்தான். அவர்களை மீண்டும் சந்திப்பதனால் என்ன பொருள் வந்துவிடப்போகிறது? திரும்பிச்செல்லலாம். மீண்டும் ஏழு பாலைகளைக் கடந்து பாரதவர்ஷத்தின் விளிம்புவரை போகலாம். அங்கு விடைகொள்ளலாம். அல்லது அவர்களுடன் சென்று பீதர் நாட்டிலேயே குடிபுகலாம். அதனாலென்ன? எங்கோ ஒரு புள்ளியில் விடைபெற்றாக வேண்டியுள்ளது. வந்து உறவாடி அகன்று மறையும் உறவுகளில் பொருள் உள்ள உறவென ஏதும் உண்டா? உறவாடலின் அத்தருணத்தில் உருவாக்கப்படும் பொருள். பின்னர் நினைவுகள். நினைவுகளும் உதிரும் காலம் வரக்கூடும்.

அவன் சிபிநாட்டு பால்ஹிகரை நினைவுகூர்ந்தான். சிற்றிளமை முதலே அவர் கதைகளை கேட்டு வளர்ந்தான். அவனுடைய தொல்மூதாதை தேவாபியின் இளையோன். அவருடன் பிறந்த அனைவரும் இறந்து மறைந்து கதைகளென்றாகி, பின் நூல்களாக மாறிய பின்னரும் அவர் ஊனுடலுடன் உச்சி மலையடுக்குகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரைச் சென்று பார்த்துவிட்டு வந்து சூதனொருவன் சொன்னான் “அவர் சில ஆண்டுகளுக்கு முன்புதான் முற்றிலும் புதிதாகப் பிறந்திருக்கிறார், இளைய பாண்டவரே! அதற்கு முந்தைய எதுவுமே அவர் நினைவில் இல்லை. முழுமையாகவே அப்படி உதிர்த்துவிட்டுச் செல்வதனால்தான்போலும் அவர் உயிருடன் இருக்கிறார். இங்கு உச்சிமலைக் குடிகளில் அவருக்கு ஏழு குழந்தைகள் இருக்கிறார்கள். அவரது இளம்மனைவி மீண்டும் கருவுற்றிருக்கிறாள்.”

கைநீட்டி அவன் பாடினான் “அவருக்கு இறப்பே இல்லை. காலமென வந்து படிவனவற்றை முற்றாக உதிர்த்துவிட்டு கடந்து செல்பவருக்கு இறப்பில்லை. ஏனெனில் இறப்பென்பது அணுவணுவாக வந்து படியும் துயரத்தின் பெருந்தொகையே. இந்தத் துலாத்தட்டில் மேலும் மேலும் என வைக்கப்படும் துயரத்தின் எடை அச்சிறுந்து போகுமளவு மிகுவதற்குப் பெயர் இறப்பு. வைத்தவற்றை முற்றிலுமாக அவ்வப்போது எடுப்பவனை இறப்பு அணுகுவதே இல்லை.”

அர்ஜுனன் புன்னகைத்தபடி “அவ்விறவாமைக்கு என்ன பொருள்? நேற்றும் இன்றும் நாளையும் நினைவுகளால்தான் தொடர்பு கொள்கின்றன. நேற்றென இன்றென நாளையென ஒழுகும் காலமே வாழ்க்கையென்பது. வாழ்க்கையின்றி இருத்தல் மட்டுமேயாக இங்கு எஞ்சுவதற்கு என்ன பொருள்?” என்றான்.

சூதன் நகைத்து “எழுவினா ஒன்றே. வாழ்வதா, இருப்பதா? வாழ்பவன் வாழ்வை சுமந்தாக வேண்டும். எடை முதிர்ந்து அச்சிறுந்து சகடம் சரிந்தாகவேண்டும். இருப்பவன் இந்த மலைகளைப்போல. இவை நேற்றற்றவை. எனவே முடிவற்ற நாளை கொண்டவை” என்றான். அவர்கள் சுரபிவனம் என்னும் சிற்றூரின் ஊர்ச்சாவடியில் இரவுறங்கப் படுத்திருந்தனர். மேலே அரசமரம் இலைகளை சிலிர்த்துக்கொண்டிருந்தது.

மிகச்சிறிய புழுதித் தீற்றலாக நெடுந்தொலைவில் அவ்வணிகக் குழுவின் இறுதி அசைவு தெரிந்து வானில் மறைந்தது. ஒரு கணம் மெல்லிய நடுக்கமொன்று அவனுக்கு ஏற்பட்டது. வடிவும் வண்ணமும் இயல்பும் இயைபும் கொண்டு கண்முன் நின்ற பருப்பொருள் ஒன்று வெளியில் கரைந்து மறைவதை கண்கூடாக அப்போதுதான் அவன் கண்டான். இல்லை அது விழி மாயை. அப்பால் துளியிலும் சிறு துளியென அவர்கள் அங்கிருக்கிறார்கள். மறையவில்லை. இல்லாமலாகவில்லை.

ஆனால் வெளி மட்டுமே அங்கிருந்தது. வானும் மண்ணும் இணைந்துகொண்ட மாபெரும் வில் என. அந்த வில் மீது சில முள்மரங்கள் நின்றிருந்தன. துயருடன் விரல்விரித்து இறைஞ்சின. வானை வருடி வீண் வீண் என அசைந்தன. இப்பால் சில உப்புப்பாறைகள் வெண்பற்கள் என எழுந்திருந்தன. அங்கிருந்து அவன் நின்றிருந்த இடம் வரைக்கும் வெண்களர் மண் காற்றின் அலைகளை அணிந்தபடி கிடந்தது. அதன்மேல் மென்புழுதி சுருண்டு ஓடிச்சுழன்று மேலேறி உருவழிந்து அள்ளிச்சென்ற அனைத்தையும் கொட்டியபடி மண்ணுக்கு மீண்டது.

அந்த விற்கோட்டுக்கு அப்பால் காலமில்லை. அங்கிருப்பது இன்மை மட்டுமே. வெளி மயங்கி இன்மையென்றாகிறது. இன்மை சற்று தயங்குகையில் வெளியென்றாகிறது. மீண்டுமொரு நீள்மூச்சுடன அவன் தன்னை அவ்வெண்ணங்களிலிருந்து விடுவித்துக்கொண்டான். நடந்து தொலைதூரத்தில் தெரிந்த அந்த விண்ணொளி நோக்கி செல்லலானான்.

[ 11 ]

தொலைவிலிருந்து பார்க்கும்போது வெண்நெருப்பு எழுந்து தழல் அலைப்பதுபோலத் தோன்றியது. அணுகும்தோறும் வெம்மை மிகுந்து உடல் பொசுங்கும் என்று பட்டது.  காற்றுச் சுவடுகளன்றி வேறேதும் படிந்திராத வெண்ணிற நிலம் மெல்ல சரிந்துகொண்டிருப்பதை சற்று தூரம் நடந்த பின்னரே உணரமுடிந்தது. குனிந்து அம்மண்ணைப் பார்த்தான். அது உப்புத்தூளா என்று ஐயம் தோன்றியது. பின்காலை நேரத்திலேயே வானில் சூரியவட்டம் சூளையென எரிந்தது.

ஊஷரத்தைக் கடந்தபோதே தசையுருக்கும் உயர் வெப்பம் அவனுக்கு பழகத் தொடங்கிவிட்டது. பாலையில் நுழைந்தபோதே நிலத்தில் இருந்து உடலுக்கு வெப்பம் வந்து படியாமல் இருக்கும்பொருட்டு மென்மையான ஆடையால் முகத்தைத் தவிர பிற பகுதிகள் அனைத்தையும் திரையிடுவதுபோல் மூடிக்கொள்ளும் முறையை அவனும் கடைபிடித்திருந்தான். காற்றில் அலையடித்த மெல்லிய ஆடைக்குள் உடல் அதுவே உருவாக்கிக்கொண்ட நீராவிக்குள் வெம்மைகொண்டு வியர்த்து மீண்டும் குளிர்ந்து தன் இயல்பை பேணிக்கொண்டிருந்தது.

வெளியிலிருந்து வந்த வெங்காற்று முகத்தில் மோதி மூக்கையும் கன்னத்தையும் பொசுக்கி முடிகருக்கி உள்ளங்கையின் தோல்போல ஆக்கியது. பின்னர் கைகளால் முகத்தைத் தொட்டபோது மரத்தாலான முகமூடி ஒன்றை அணிந்திருப்பதாகத் தோன்றியது. வியர்வைமேல் காற்றுபடும் சிலிர்ப்பே குளிர் என நெஞ்சு வகுத்துக்கொண்டுவிட்டிருந்தது.

கையில் இருந்த வில்லை ஊன்றுகோலாக்கி சிற்றடி வைத்து சீரான விரைவில் அவன் நடந்தான். மூச்சு இரைக்கத்தொடங்கிய உடனேயே நின்று தொடைகளில் கைவைத்து சற்று குனிந்து வாயால் முழுக்காற்றையும் இழுத்து உள்ளே நிரப்பி நாய்க்குரைப்பு போல் ஒலியெழுப்பி மூச்சு அனைத்தையும் வெளித்தள்ளினான். அது விரைவிலேயே இளைப்பாற்றி அவன் ஆற்றலை மீட்டளித்தது.

அன்று அந்தியானபோது தொலைவில் அவன் பார்த்த வெண்ணிற ஒளி முற்றிலும் அணைந்துவிட்டது. ஒதுங்குவதற்கு பாறையோ மரநிழலோ எதுவும் இல்லாமல் மண்வெளி கண்களை நிறைத்தது. சுழன்று பார்க்கையில் பிழையற்ற வட்டம் என தொடுவானத்து ஒளிக்கோடு தெரிந்தது. கவிழ்ந்த பளிங்குக்கிண்ணம்போல முகிலற்ற வானம். உயிர் என எதுவும் அங்கு இல்லை என்று தோன்றியது. மணல் வெளியிலேயே அவன் படுத்துக்கொண்டான். வயிற்றின் குறுக்காக வில்லை வைத்து வலதுகைப் பக்கம் அம்பறாத்தூணியை போட்டுக்கொண்டு வானை நோக்கிக்கொண்டிருந்தான்.

வானொளி முற்றிலும் அணைவதற்கு நெடுநேரம் ஆகியது. கிழக்கு இருண்ட பின்னரும் மேற்குச் செம்மை வெகுநேரம் எஞ்சியிருந்தது. சூரியன் இருக்கையிலேயே விண்மீன்கள் எழுந்து வந்தன. பாலையில் புகுந்த பின்னர் விண்மீன்களை முழுமையாக நோக்குவதற்கு அவன் கற்றுக்கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் இரவில் விண்மீன்களுடன் துயின்றான். திசைகளாக முதலில் அவை பொருள்கொண்டன. பின்னர் இடங்களாயின. மண்ணின் வழிகளைச் சுட்டி நிற்கும் அதிரும் சொற்களாயின. நண்டு, தேள் என வெவ்வேறு வகை வடிவங்களாயின. ஆனால் ஒரு கணத்தில் அத்தனை பொருளையும் இழந்து திகைக்கவைக்கும் வெறும் அதிர்வுகளாகி எஞ்சின.

அந்தியில் விண்மீன்களை நோக்கி அவை கொண்ட ஒவ்வொரு பொருளையாக உதிர்த்து வெறும் அதிர்வுப்பரப்பென ஆக்கி தானும் வெறுமைகொண்டு அவற்றை நோக்கிக்கொண்டிருப்பதும் புலரிக்கு முன் அவற்றை எண்ணி எண்ணி எடுத்து ஒவ்வொன்றாக பொருளேற்றம் செய்து மண்ணுக்குரியவையாக மாற்றுவதும் அவை சுட்டும் ஒவ்வொன்றையும் தன்னுள் இருந்து எடுத்து அமைத்துக்கொள்வதுமே மீள மீள நடந்துகொண்டிருந்தது. ஏதோ ஒரு தருணத்தில் அவன் சென்றுகொண்டிருப்பது அம்மண்ணில் அல்ல, விண்மீன்கள் பரவிய இருள் வெளிக்குள்தான் என்று தோன்றியது. மண் இருப்பது அவ்விண்மீன்களுக்கு நடுவே எங்கோ அல்லது மண்ணென அவன் உணர்வது ஓர் விழிமயக்கு.

அவன் துயின்று எழுந்து நோக்கியபோது வெயில்விழுந்து சூழ்ந்து அலையடித்தது. வானம் அனைத்துத் திரைகளும் இழுக்கப்பட்டு நீல ஆடிப்பரப்பென தெரிந்தது. இரவு முழுக்க அவன் நீரருந்தவில்லை. பீதவணிகரிடம் பெற்றுக்கொண்ட தோல்குவளையில் நீர் சற்றே எஞ்சியிருந்தது. அதை அருந்தியதும் மீண்டும் அவன் உடல் நீர் என எழுந்தது.  நீரைப்பற்றி எண்ணக்கூடாதென்று தனக்குத்தானே ஆணையிட்டுக்கொண்டான். நீரைப்பற்றி எண்ணுவேன் என்றால் அதன்பிறகு நீருக்கான பயணம் மட்டுமே நிகழ முடியும்.

அவன் சென்றுகொண்டிருப்பது வருணனின் நிலம். வரமளிப்பவனின் உலகு. இங்கு அவன் விடாய்கொண்டு உயிர் துறப்பான் என்றால் அது வருணனின் ஆணை என்றிருக்கட்டும். இப்பயணத்தில் நடுவில் அவன் எங்கு இறந்து விழுந்தாலும் அதுவே முறையென்றாகுக. நீர் தேடி பரிதவித்து செத்துவிழுந்தான் என்றால்தான் அது அவன் தோல்வி.

அவன் எண்ணியதுபோலவே சற்று தொலைவில் நீரைப் பார்த்தான். அதற்கு நெடுநேரம் முன்னரே  வானில் சுழன்று கொண்டிருந்த பறவைகளை கண்டிருந்தான்.  பறவைகள் அங்கிருந்த மஞ்சள் நிறமான பாறையொன்றின் மேல் கூடிச்சுழன்று எழுந்து அமர்வதைக் கண்டபோது அங்கு நீர் இருக்கலாமென்று தோன்றியது. காலையின் அரைவிழிப்பில் சித்தம் எழுந்ததுமே  வானில் பறந்த பறவைச்சிறகுகளின் நிழலை தன்னைச்சுற்றி உயிரசைவென உணர்ந்ததை அப்போதுதான் எண்ணிக்கொண்டான். பறவைக்குரல்கள் ஓங்கின. அவை அவனை பார்த்துவிட்டிருந்தன. அவன் அணுகி அப்பாறைமேல் தொற்றி ஏறியபோது அதன் குழி ஒன்றில் நீர் இருந்ததை கண்டான். சிறிது அள்ளி வாயில் வைத்தபோது அது தூயநீர் என்று தெரிந்தது. கையில் எஞ்சியிருந்த உலர் உணவை உண்டு அந்நீரை அருந்தி தோல் குடுவையையும் நிரப்பிக்கொண்டான்.

அவனைச் சுற்றி நீர் நாடி வந்த பறவைகள் எழுந்து பறந்து அமைந்துகொண்டிருந்தன. வெண்ணிறமான கடற்காகங்கள். அவற்றின் குரல் அவனை எச்சரிப்பதுபோல மன்றாடுவதுபோல மாறி மாறி ஒலித்தது. அவற்றின் நோக்கை சந்தித்தபோது அச்சொற்களை மிக அணுக்கமாக புரிந்துகொண்டான். அவை அவனைத் தாக்கி கீழே தள்ள விரும்புபவைபோல சிறகுக்காற்று அவன் மீது படும்படியாக சீறிப் பறந்தன. ஒன்று அவன் தோளை தன் நகத்தால் கீறிச்சென்றது.

புன்னகையுடன் அவன் பாறையைவிட்டு இறங்கியபோது அவை மீண்டும் அமர்ந்து நீரருந்தத் தொடங்கின. குனிந்து நீரில் தலையை முக்கி அண்ணாந்து தொண்டையை சிலிர்த்தன. சிறகுகளை நனைத்து உதறி எழுந்து மீண்டும் அமைந்தன. நீர் நீர் என்று அவை கூவிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.

முன்னால் சென்றபோது மேலும் மேலும் பறவை நிழல்கள் தரையைக் கடப்பதை அவன் கண்டான். அவை அப்பாலிருந்து வந்து மீண்டுசென்றன. அன்று மாலை நெடுந்தொலைவில் பறவைகளின் ஓசையை கேட்க முடிந்தது. எங்கோ பெருங்கூட்டமாக அவை வாழ்கின்றன என்று எண்ணிக்கொண்டான். இரவில் அப்பறவைக்குரல்களைக் கேட்டபடி துயின்றான். கனவில் பறவைகள் சூழ வானில் மிதந்துகொண்டிருந்தான்.

மறுநாள் பகல் முழுக்க நடந்து மாலையில் வெட்டவெளியில் விண்மீன்களுக்குக் கீழே துயின்றான். அதற்கு அடுத்தநாள் பின்காலையில் தொலைவிலிருந்து பறவைகளின் சிறகடிப்பை பார்த்தான். புகையசைவென, வெண்ணிற இலைக்கொந்தளிப்பென அது அவன் காலடிகளுக்கு ஏற்ப தெளிந்து வந்தது . பறவைக்குரல் இணைந்து எழுப்பிய இரைச்சல் அணுகியது. அவன் அந்த உயிரில்லாத கடல் வரக்கூடுமென எதிர்பார்த்தான். ஆனால் கரையொதுங்கிய பெரிய மீன்கள் என வெள்ளி மின்ன நூற்றுக்கணக்கான நீர்க்குட்டைகள்தான் கண்ணுக்குத் தெரிந்தன.

அணுகுந்தோறும் அவை உருப்பெருகி வந்தன. முதல் குட்டையின் அருகே சென்றதும் அதன் கரையெங்கும் செறிந்திருந்த வெண்நாரைகளும் கடற்காகங்களும் கூச்சலிட்டபடி சிறகடித்து வானில் எழுந்து பறந்தன. குட்டையின் மணற்சேற்று விளிம்பை அணுகும்போது மென்கதுப்பு புதைந்து இடைவரைக்கும் இறங்கியது. கைகளை ஊன்றி நீச்சலிட்டு அந்நீரை அணுகி தொட்டு அள்ளி வாயிலிட்டான். உப்பு நீர். குட்டை முழுக்க வெள்ளி நாணயங்களென ஒளிர்ந்து ஒளிர்ந்து திரும்பியபடி சிறிய பரல் மீன்கள் நிறைந்திருந்தன. நோக்க நோக்க மீன்கள் மேலும் தெரிந்தன.  குறுவாள்கள், மூங்கில் இலைகள், வெள்ளிச் சிமிழ்கள். இளஞ்சிவப்பு நாக்குகள். கன்றுச்செவிகள்.

அவன் கைகளை எடுத்துவிட்டு மேலே வந்து நோக்கியபோது அவை நீர்ப்பரப்பின் மேலே வந்து விழிகள் மின்ன, வால் தவழ, செவுள்கள்  அலைபாய அவனை நோக்கின. அவன் உடல் சற்று அசைந்தபோது ஒரு கணத்தில் நீரில் விரிந்த வானில் மூழ்கி மறைந்து  பின் ஒவ்வொன்றாக உருவம்கொண்டு எழுந்தன.

கரையேறி மணல்விளிம்பில் நின்றபடி அந்தச் சுனைகளை விழிதொடும் தொலைவு வரை பார்த்தான். வெள்ளி ஆரம்போல வானிலிருந்து வான்வரைக்கும் வளைந்து கிடந்தன அவை. அக்குட்டைகளின் இடைவெளியினூடாக நடந்து மறுபக்கம் சென்றான். அங்கு சிறிய அலைகளாக தொலைதூரம்வரை படிந்துகிடந்த மணல் அவன் கால் பட்டு பொருக்குடைந்து தடம்கொண்டது. பொருக்கு உடையும் ஒலி சிம்மம் எலும்புகளை மென்று இரையுண்பதுபோல ஆழ்ந்த அமைதியுடன் ஒலித்துத் தொடர்ந்தது.

மணல் பொருக்குகள் அடர்ந்து வந்தன. அங்கு மட்டும் மழை பெய்திருக்கிறதா என்று பார்த்தான். மழை விழும் இடம் அல்ல அது. அவ்வாறென்றால் நீர் வற்றி கீழிறங்கிச் சென்றிருக்கிறது. அருகமைகாலத்தில் அல்ல. நெடுங்காலத்துக்கு முன். பலநூறு தலைமுறைகளுக்கு முன். அப்பரப்பில் பறவைகள்கூட வந்தமர்வதில்லை என்று தெரிந்தது. காலால் தட்டிப்பார்த்தான். பொருக்கு மணலுக்குள் இருந்த மீன்கள் அனைத்தும் வெறும் எலும்பு வடிவுகளாகத் தெரிந்தன. வெண்சுண்ணச் சித்திரங்கள் என பல்லாயிரம் மீன்கள். வெள்ளி இலைநரம்புகள். பளிங்குச்சீப்புகள். பல்வரிசைகள்.

குனிந்து ஒரு மீன்முள்ளைத் தொட்டபோது அது அரிசிமாவுப் பொருக்கு என உதிர்ந்தது. மீனென அது வாழ்ந்தபோது அங்கு வாழ்ந்தவர்கள் எவர்? அவற்றை உண்ணவந்த பறவைகள் எவை? இறந்தநிலம். இறந்தமையால் காலத்தை வென்ற இடம். இறப்புவரைதான் வளர்வும் தளர்வும். இறப்பு என்பது நிலையமைவு. மாறிலியென மாற்றங்களுக்கு மையம் கொள்ளும் புள்ளி. தயங்கிய விழிகளுக்கு முன் நெடுந்தொலைவில் வானின் வெண்ணிறஒளி மீண்டும் தெரியலாயிற்று. வெண்ணிற அனல். அல்லது அங்கிருப்பது வெண்பாற்கடல்.

பொருக்கு மண் மீது கால்களை தூக்கிவைத்து காண்டீபத்தை ஊன்றி உடல்நிகர் செய்தபடி நேர்நடையிட்டு அவன் சென்றுகொண்டிருந்தான். அந்தி வரை சென்று திரும்பிப்பார்த்தபோது அவன் வந்த பாதை மண் கிளறப்பட்டு ஒரு செந்நிற வடு என அவனை நோக்கி வந்து கால்களைத் தொட்டு இணைந்திருந்தது. அந்தத் தடம் அங்கே கிடக்கும். காலமுடிவுவரை. அதை எவர் வந்து பார்க்கக்கூடும்? பார்த்து அவன் விழைவை தயக்கமென எண்ணிக்கொள்வார்கள் போலும். அவன் குழப்பத்தை அச்சமென பொருள்கொள்ளலாம். மூதாதையரை நம்மில் உள்ளவற்றின் பின்நீட்சியென உருவகித்துக்கொள்கிறோம். அல்லது நம்மில் இல்லாதவற்றினாலா?

பொருக்கு மண்மேலேயே படுத்து விண்மீன்களை நோக்கியபடி துயின்றான். விண்மீன்கள் காலிடற முகில்களில் கால்புதைந்து புதைந்து தள்ளாடி நடந்துகொண்டிருந்தான். நீலநீரில் எலும்புருவான மீன்கள் நீந்தித் திளைத்தன. சுண்ணமுள் வடிவ இலைகளுடன் செடிகள் காற்றில் ஆடின. அவன் தன் கால்களை குனிந்து நோக்கினான். அவை எலும்புவடிவிலிருந்தன. நீர்விடாயென விழித்துக்கொண்டபோது புலரி எழுந்திருந்தது. பாலையின் குளிரில் அவன் ஆடைக்குள் அவன் உடம்பு சிலிர்த்து நடுங்கிக்கொண்டிருந்தது. குடுவையில் எஞ்சிய சிறிதளவு நீரை அருந்தினான். நாநனையும் அளவுக்கே நீர் இருந்தது. ஆனால் அது உடலை ஊக்கம் கொள்ளச்செய்தது.

மீண்டும் புரண்டு சுருள் விரிந்து அகன்று அகன்று சென்றுகொண்டிருந்த நிலத்தில் அசையாமல் நின்றுகொண்டிருந்த வெண்ணிற ஒளிகொண்ட தொடுவான் வளைவு நோக்கி நடந்தான். நிலப்பொருக்கு சேற்றுப்பலகை அடுக்குகளாக ஆகியது. முதலையின் செதில்தோல் பரப்புபோல வெடிப்புகள் கொண்டது. ஓட்டுக்கூரை ஒன்றின் சரிவில் நடப்பதாக மறுகணம் தோன்றியது. அவன் காலடியில் அவை ஓசையுடன் நொறுங்கி துண்டுகளாயின.

குனிந்து ஒரு சிறு ஓட்டை எடுத்துப் பார்த்தான். அதன் அடியிலும் ஈரம் இருக்கவில்லை. அடியில் அவன் எதிர்பார்த்த சிற்றுயிர்களும் இல்லை. அவற்றின் அசைவை மட்டும் கண் ஒருகணம் அடைந்து நிலைமீண்டது. என்னென்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன்? பித்துக்குள் சென்றுகொண்டிருக்கிறது என் உள்ளம். ஆனால் இத்தனித்த பயணத்தில் அவ்வாறு அனைத்து வழிகளிலும் சிதறும் எண்ணங்களே பெரும்வழித்துணை என்றாகும். அவை பெருகும் சித்தவிடாயை மாற்றுலகங்களை உருவாக்கி நிறைவுசெய்கின்றன. தனியன் பல உலகங்களில் வாழ்பவன். பல புவிகளை சுமந்து செல்பவன்.

பயணத்தில் இல்லம் துறந்து ஊர் துறந்து பெயர் துறந்து உளம் துறந்து செல்பவன் மீண்டும் இளமைந்தனாகிறான். தவழும் குழந்தையென்றாகிறான். பார்க்கும் ஒவ்வொன்றும் புதிதென்றாகிறது. பொருளற்று வெறும் பொருளென நின்று பொருள் அவனை நோக்குகிறது. பொருளை பொருள்மட்டுமே என நோக்கும் சித்தத்துடன் தவித்து தன்னிலை மீண்டு பொருள் தேடுகிறான். இது களிமண்ணால் ஆன சருகுப்பரப்பு. இல்லை, இவை அப்பங்கள். பழைய தோற்கவசப்பரப்பு. மாபெரும் ஆமையின் ஓடு. இங்கிருந்ததா ஒரு கடல்?

அப்பரப்பின் மறுஎல்லையென்று ஒன்று விழிக்குப்படவில்லை. நடந்து நெடுந்தொலைவு கடந்து திரும்பிப் பார்க்கையில் அப்பொருக்குப் பரப்பு அன்றி வேறெதுவும் புவியிலேயே இல்லை எனத் தோன்றியது. ஆம், இதுதான் கடல். இங்கிருந்த நீர் கடல்களில் மட்டுமே எஞ்சி இங்கு வற்றிவிட்டிருக்கிறது. இது கடலடி வண்டல். இக்கடலைக் குடித்து உலர்த்தியது யார்? இது ஒரு ஒழிந்த மதுக்கோப்பையா? இங்கிருந்த நீரனைத்தும் ஆவியென்றாகி எழுந்து காற்றில் நிறைந்துள்ளன. அலையடித்து அலையடித்துத் தவித்து அலையைச் சிறகென்றாக்கிப் பறந்தெழுந்து விண்நின்றுள்ளது கடல்.

KIRATHAM_EPI_32

இதோ என் தலைக்கு மேல் உள்ளது கடல். நுண் வடிவக்கடல். இங்கு வெண்சுண்ண வடிவுகளெனப் பதிந்திருக்கும் மீன்கள் அங்கு நுண் வடிவில் நீந்திக்கொண்டிருக்கலாம். அதில் ஓடிய கலங்கள் அங்கு நுண்வடிவில் மிதந்தலையலாம். கடலோடிகள் அங்கிருக்கலாம். என்ன எண்ணங்கள் இவை? ஏன் இவை தங்கள் ஒத்திசைவை, பொருள் இணைப்பை சிதறடித்துக் கொண்டிருக்கின்றன? ஒவ்வொரு எண்ணமும் பிறிதொரு எண்ணத்தால் கட்டுண்டிருக்கிறது. கட்டடத்தில் அமைந்த செங்கற்கள் போல. கட்டடம் இடிந்து சரிகிறது. என்னுள் விடுதலைகொண்டுள்ளது ஒவ்வொரு கல்லும். எண்ணங்கள் ஓட தோற்றம் மயங்கிய நோக்குடன் திரும்பியபோது அவன் தொலைவில் அந்தக் கடலை ஒரு பெரிய முகில் நிழல் என கண்டான்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 31

[ 7 ]

பீதர் வணிகர்களுடன் அர்ஜுனன் பிங்கலத்தில் இருந்து எலிமயிரின் நிறம் கொண்டிருந்த தூசரம் என்னும் பாலையை கடந்தான். மரவுரியின் நிறம் கொண்டிருந்த கபிலத்தையும் பூர்ஜப் பட்டை என வெளிறிய பாண்டகத்தையும் கடந்தான். வெயில் என்பது நிலத்திற்கு ஒன்று என்று உணர்ந்தான். மரப்பட்டைகளை உலர்த்திவெடிக்கவைக்கும் வெயிலை அவன் அறிந்திருந்தான். கற்பாறைகளை விரிசலிடச்செய்யும் வெயிலை அங்கு கண்டான்.

நீர் என்பது தேக்கமென பெருக்கென அதுவரை அறிந்திருந்தான். அது துளிகள் மட்டுமே என உணர்ந்தான். கழுதைகளில் ஏற்றப்பட்ட தோற்பைகளில் நீர்கொண்டுசென்றனர். ஒவ்வொருவருக்கும் உரிய நீர் அன்றுகாலையிலேயே வழங்கப்பட்டது. எரிக்கும் வெயிலில் அதை துளித்துளியாக அருந்தியபடி முன்சென்றனர். கையில் நீர் இருக்கும் எண்ணமே கடும் விடாயை தாங்கச்செய்யும் விந்தையில்  திளைத்தனர். அதில்  சிறுபகுதியை மறுநாளைக்கென சேர்த்துவைத்தவர்கள் பற்களைக் காட்டி மகிழ்ந்து நகைத்தனர். இரவில் துயில்வதற்கு முன் அந்த நீரை நாவில் விட்டுச் சுழற்றி அமுதென சுவைத்தனர்.

நீர்த்துளியை விரல்நுனியில் தொட்டு கண்முன் தூக்கி நோக்கினான் அர்ஜுனன். அதன் ஒளியும் ததும்பலும் முழுப்பும் நெஞ்சை ஆட்கொண்டன. அதன் வளைவுகளில் பாலைநிலப்பரப்பு வளைந்து சுருண்டிருந்தது. விழிகளைச் சந்திக்கும் விழிமணி. விழியே  நீரென்றாகியதா என்ன? சொட்டுவதும்  வழிவதும் தேங்குவதும் பெருகுவதும் விரைவதும் பொழிவதும் அலைகொள்வதும் திசையென்றாவதுமான விழியா அது?

கடக்கும்தோறும் பாதை நீண்டு வர கால்கள் தன்விழைவால்  நடந்தன. நடப்பதே அவற்றின் இருப்பு என்பதுபோல. துயிலிலும் கால்கள் நடந்துகொண்டிருப்பதாக உணர்ந்தான். அதுவரை அவன் கொண்டிருந்த நடையே மாறலாயிற்று. புதையும் மணலுக்குள் முழுக்காலையும் பதியவைத்து சிறிய அடிகளாக தூக்கி வைத்து சீரான விரைவில் நடக்கவேண்டியிருந்தது. நடைமாறுபட்டதும் நடப்பதும் எளிதாயிற்று. ஒருகட்டத்தில் அத்திரிகளும் ஒட்டகைகளும்கூட அப்படித்தான் நடக்கின்றன என்று தோன்றியது.

நாள் செல்லச்செல்ல ஒவ்வொரு நோக்கிலும் பாலையின் வடிவங்கள் பெருகின. இன்மையென, வெறுமையென, மாற்றமின்மை எனத் தெரிந்த வறுநிலம் மெல்ல தன் உயிர்க் களியாட்டத்தை காட்டலாயிற்று. பொருக்கு என எழுந்த சிறுகூடுகளுக்குள் வெண்ணிற எறும்புகளின் உலகம் கலைந்து பரவியது. சிதல்வரிகளுக்குள் ஆழ்ந்த பாதைகள் இருந்தன.  நொதித்த மாவில் என மென்மணலில் விழுந்த சிறுதுளைகளிலிருந்து கரிய எறும்புகள் கசிந்தவைபோல் எழுந்து நிரைவகுத்துச் சென்றன. கற்களின் அடியிலிருந்த விரிசல்களில் இருந்து சிற்றுயிர்கள் எட்டிப்பார்த்தன. ஒட்டகக் குளம்போசையின் நடுவே விரைந்து உட்புகுந்து மறைந்தன.

சாறே அற்றவைபோல, மறுகணம் பற்றிக்கொள்வனபோல தெரிந்த முட்புதர்கள் அனைத்திலும் புழுதிபடிந்து மண்வடிவெனத் தோன்றிய இலைகள் உயிருடனிருந்தன. அவற்றை உண்ண இருளுக்குள் விழிமின்ன எலிபோன்ற சிறு விலங்குகள் வந்தன. அவற்றை பிடிக்க பட்டுநாடா போன்ற வண்ணப்பட்டைகளுடன் பாலைநாகங்கள் பாறைகளுக்கிடையே இருந்து வளைந்து எழுந்தன.

உலோகமென மயல் காட்டிய கூர்முட்களில்கூட உயிர் இருந்தது. புலரியில் அந்த முள்முனைகளில் மென்மயிர் நுனியில் என பனித்துளிகள் நடுங்கின. அத்துளிகளை சிறு சிப்பியளவே இருந்த குருவிகள் வந்து அமர்ந்து கோதுமை மணிகள் போன்ற அலகுகளால் கொத்தி உறிஞ்சி உணடன. சாம்பல்நிறச்சிறகுக்கு அடியில் கொன்றைமலர் வண்ணம் கொண்ட அடிவயிறுள்ளவை. வெண்பஞ்சு நெஞ்சும் இளநீலவரிகொண்ட சிறகுகளும் கொண்டவை. கோவைப்பழம்போல் சிவந்தவை சிலவற்றின் சிறகுகள். பழுத்த மாவிலைபோல் பொன்மின்னியவை சில.

முள் மட்டுமேயாகி, கீழே வலையென நிழல்விரித்து நின்றிருந்த மரங்களுக்குள் மலர்செறிந்ததுபோல் நூற்றுக்கணக்கில் சிறிய குருவிகள் அமர்ந்து சலங்கைகள் குலுங்குவதுபோல் ஒலி எழுப்பி பேசிக்கொண்டிருந்தன. காலடியின் ஓசை கேட்டு அவை காற்று அள்ளி வீசிய மலர்கள் என எழுந்து சுழன்று பறந்து அமைந்தன. தொலைவில் வண்ணப் பட்டுத்துவாலை ஒன்று பறந்தலைவதெனத் தோன்றியது.

அனலென நாக்கை நீட்டிப்பறக்க வைத்தபடி சாலையோரப் பாறையொன்றில் அமர்ந்து நடுங்கி வண்ணம் மாற்றிக்கொண்டது உடும்பு. ஓசை கேட்டு வால் வில்லென வளைய கன்னச்செதில்கள் சிலிர்த்து விடைக்க தலையை மேலும் கீழும் அசைத்து நெருப்பொலியை எழுப்பியது. வண்ணமணித்தொகை என தன் வாலை சிலம்பொலியுடன் ஆட்டிக்காட்டி மணலுக்குள் தலைபதித்துக் கிடந்த நச்சு நாகம் ஒன்றை காவல்வீரன் நீண்ட கழியால் அள்ளி எடுத்து வீசினான். மென்மணல் சரிவில் அலைவடிவை வரைந்தபடி அது வளைந்து சென்று மணலுக்குள் தலை பதித்து தன்னை இழுத்து உள்ளே பதுக்கிக்கொண்டது.

மணல்மேல் கால்பரப்பி நடந்த வெண்சிறு சிலந்திகள் துளைகளுக்குள் சென்று மறைந்தன. முட்புதர்களுக்குள் பனி நிற வலைச்சுழிகள் அழகிய உந்திக்குழிகள்போல் இருந்தன. பொன்னிறக் கூழாங்கற்கள்போல வண்டுகள் சிறகுகள் ரீங்கரிக்க சுற்றிவந்தன. அவற்றை உண்பதற்காக மணலில் கால்பதிய வாலசைத்து எம்பி அமர்ந்து நடந்தன நீளவால்கொண்ட குருவிகள்.

“உயிர்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம், நீரின் சாயல் காற்றிலிருந்தால் போதும், அங்கு உயிர் இருக்கும்” என்றார் போ என்னும் பெயர்கொண்ட முதுபெருவணிகர். “வீரரே, நீர் என்பது உயிரின் மறுபெயர்.” வெந்துவிரிந்த வறுநிலம் நோக்கி “இங்கு மழை பெய்வதுண்டா?” என்றான் அர்ஜுனன். “மழைக்காலம் என்று ஒன்றில்லை. பல்லாண்டுகளுக்கு ஒருமுறை எப்போதேனும் பெய்யலாம். ஆனால் காற்றில் நீர் உண்டு. குளிர்ந்து காலையில் அவை இலைகள் மேல் பரவுகின்றன. இச்சிற்றுயிர்களுக்கு அந்த நீரே போதும்.”

“இங்கு பெரிய உயிர்களும் உள்ளன” என்று அர்ஜுனன் இரும்பாலான கவசமணிந்த புரவிபோல அவர்களின் பாதையைக் கடந்துசென்ற ஒரு பெரிய எறும்புதின்னியை நோக்கியபடி சொன்னான். “இளையபாண்டவரே, குருதியும் நீரல்லவா?” என்றார் போ. அச்சொல்லாட்சி அவனை ஒரு கணம் திகைக்கச் செய்தது. உடனே புன்னகைத்து “ஆம்” என்றான்.

முகிலற்றிருந்த நீலவானத்தின் தூய்மை ஒரு அழியா இருப்பென தலைக்கு மேல் ஏறி எப்போதும் தொடர்ந்தது. நிற்கும்போதெல்லாம் அதை அண்ணாந்து நோக்காமல் இருக்க முடியவில்லை. பாலையில் நுழைந்ததுமுதல் வானத்தின் முகிலின்மை அளித்து வந்த மெல்லிய பதற்றம் நாள்செல்லச் செல்ல விலகியது. அளியின்மை எனத் தோன்றியிருந்த அது மாசின்மை எனத் தோன்றத்தொடங்கியது.

இளைப்பாறுவதற்காக பாலைச்சோலைகளில் படுக்கும்போது வான் முழுமையாகத் தெரியும்படி முள்மர நிழல்களைத் தவிர்த்து பாறையடிகளில் அவன் மல்லாந்தான். வானை நோக்கிக் கொண்டிருக்கையில் அங்கிருந்து ஒலியின்மை வழிந்து தன்னைச் சூழ்ந்து மூடிக்கொள்வதை அவன் விழிகளால் பார்த்தான். உள்ளமென்று அவன் உணர்ந்த சொற்பெருக்கு ஓய்ந்து துளித்துச் சொட்டி மறைய முற்றிலும் இன்மையில் ஆழ்ந்து விழிதிறந்து கிடந்தான்.

விண்ணிலுள்ளது தூயநீர்ப்பெருக்கு என்கின்றது வேதம். மாமழை அக்கடலின் ஒரு துளிக்கசிவே. வருணன் அத்துளியின் காவலன். வருணனைப்போன்ற துளிகள் சென்று சேர்ந்தெழுந்த பெருங்கடல் ஒன்று அங்குள்ளது. இவ்விண்மீன்கள் நீர்த்துளிகளா என்ன? சுட்டுவிரல்முனையில் பழுத்துத் ததும்பி சொட்டத்துடிக்கும் விழிகளா?  எவரேனும் தொட்டு உசுப்புகையில் துடித்து வந்து அள்ளிப்பற்றிக்கொண்டு எரித்துக் கொழுந்தாடத் தொடங்கியது காலம்.

கழுகின் உகிர்க்கால்கள் போல புழுதிப்பரப்பை அள்ளிநின்ற வேர்ப்பற்றும் யானைக்கால்கள் போன்று கருமைகொண்டு முரடித்த அடிமரங்களும் கொண்ட மரங்கள் குறுகிய கிளைகளை நீட்டி குற்றிலைகளும் முட்களுமாக செறிந்திருந்த சோலைகள். தெற்கிலிருந்து நிலைக்காது வீசும் காற்றுக்கு வடபுலம் நோக்கி சீவப்பட்ட மயிரென வளைந்து நின்றிருந்தன அவை. சருகுகள் மென்மணலால் மூடப்பட்டிருந்தன. கால்கள் வைக்கையில் அழுந்தி ஆழங்களில் தீப்பற்றிக் கொள்ளும் ஓசை எழுப்பின.

“சருகுகளின் மேல் கால்வைக்க வேண்டாம்” என்று வணிகர்கள் எச்சரித்துக் கொண்டிருந்தனர். “நாகங்கள் உள்ளிருக்கும், கருதுக!” காலில் தோல் உறையிட்ட அத்திரி ஒன்றின்மேல் ஏறி ஒருவன் சரிவிலிறங்கிச் சென்று குவிந்த ஆழத்தில் சேறு தேங்கிய வளையத்தின் நடுவே சந்தனச்சட்டத்திற்குள் ஆடி என வானொளி ஏற்று நடுங்கிக் கொண்டிருந்த நீர்ப்பரப்பு வரை சென்று வழி உருவாக்கினான். முன்னும் பின்னும் சென்று அவன் உருவாக்கிய அவ்வழியினூடாக மட்டுமே பிறர் நடந்து சென்றனர்.

மூங்கில் குவளைகளில் நீரள்ளி முதலில் போவுக்கு அளித்தனர். அதை வாங்கி தலைவணங்கி தெய்வங்களுக்கு வாழ்த்துரைத்தபின் அவர் அருந்தினார். பின்னர் அர்ஜுனனுக்கு அதை அளித்தார். “இனிது… நீரளவு இனிதென ஏதுமில்லை புவியில்.” வரிசையாக அனைவருக்கும் நீர் அளிக்கப்பட்டது. ஓர் ஆழ்ந்த இறைச்சடங்குபோல அவர்கள் அமைதியுடன் நீர் அருந்தினர். நீரை உடல் ஏற்றுக்கொள்ளும் ஒலி எழுந்தது. அவி ஏற்கும் அனலின் ஒலிபோல. உயிர் மண்ணை உணரும் ஒலி என அர்ஜுனன் நினைத்தான்.

மானுடர் அருந்திய பிறகு அத்திரிகளுக்கும் இறுதியாக ஒட்டகைகளுக்கும் நீரளிக்கப்பட்டது. மணற்காற்று  ஓலமிட்டுக் கொண்டிருந்த இரவில் வெடித்துச் சாய்ந்தும் காற்றில் அரித்து ஊன்போல உருக்காட்டியும் நின்ற பாறைகளுக்கு அடியில் காற்றுத்திசைக்கு மறுபக்கம் அவர்கள் தங்கினர். அப்பால் பாறைமேல் மணலை அள்ளி வீசி மழையோ என ஓசையிட்டுக்கொண்டிருந்தது காற்று. தோலாடைகளால் முற்றிலும் உடல் மறைத்து முகத்தை மட்டும் காற்றுக்கு வெளியே நீட்டி அமர்ந்தபடியே துயின்றனர்.

 [ 8 ]

மழை என ஒவ்வொருநாளும் மயல்காட்டியது பாலை நிலம். ஒவ்வொருநாளும் காலையில் கடுங்குளிரில் உடல் நடுங்கி பற்கள் கிட்டிக்கத்தான் போர்வைக்கூடாரத்திற்குள் அவன் விழித்துக்கொண்டான். குளிர் குளிர் குளிர் என உள்ளம் ஓடிக்கொண்டிருக்கும். குளிரில் தோள்கள் இறுகிக்கோட்டியிருக்கும். கழுத்துத் தசைகள் எடைதூக்குவதுபோல இறுகி நிற்கும். கைவிரல்பூட்டுகள் எலும்பு ஒடிந்தவைபோல உளையும். கால்விரல்கள் மரத்து உயிரற்றிருக்கும். காதுமடல்கள் எரியும்.

உள்ளே கம்பளியும் வெளியே தோலும் வைத்து தைக்கப்பட்ட அந்தப்போர்வை அவன் உடலின் மூச்சையும் வெம்மையையும் உள்ளே சேமிப்பது. பின்னிரவில் அந்த வெம்மை கருப்பை போலிருக்கும். எந்த அணைப்பிலும் அந்த ஆழ்ந்த அன்பை உணர்ந்ததில்லை. விடியலின் இருளுக்குள் அந்த வெம்மையை  விண்மீன் மினுங்கும் கரியவானம் அள்ளி உண்டுவிடும். உடல் உயிரென எஞ்சியிருக்கும் வெம்மையை மூச்சினூடாக வெளியே அனுப்பிக்கொண்டிருக்கும். சற்று நேரத்திலேயே நடுங்கி அதிரத்தொடங்கும்.

பின்னர் சூரியனுக்கான தவம். கணம் கணம் என. எண்ணம் எண்ணம் என. விண்மீன் விண்மீன் என. அலையலையென காற்றில் காலம் அள்ளி வரப்பட்டு அவனைச்சூழும். அள்ளிச்செல்லப்பட்டு அடுத்த அடுக்கு வந்தமையும். காற்றில் எப்போதும் ஒரே மணம். புழுதி. ஆனால் வந்தபின் அந்த மணத்தின் வேறுபாடுகளை காணப்பழகிக்கொண்டான். காலைப்புழுதியில் குளிர்ந்த பனியின் ஈரம் கலந்திருக்கும். பின்னர் நீராவி. பின்னர் வறுபடும் மணல். பின்னர் மணலுமிழும் அனல். பின்னர் வெந்த சுண்ணம். பின்னர் மெல்லிய கந்தகம். பின்னர் இருளுக்குள் இருந்து முள்மரங்களின் மெல்லிய தழைமணம்.

ஒளியெழுந்ததும் கண்கள் வழியாகவே உடல் வெப்பத்தை அள்ளிப்பருகத் தொடங்கும்.  உடல்தசைகள் நீர்பட்ட களிமண் என இறுக்கம் அழிந்து குழைந்து நீளும். கைகால்கள் சோர்வு கொண்டு இனிமையடையும். கண்கள் சொக்கி மீண்டும் ஓர் இன்துயில் வந்து எடையென உடல்மேல் அமையும். சித்தம் ஒளியுடன் குழைந்து மயங்கும். குருதிக்கொப்புளங்கள் அலையும் செவ்வெளியில் சூரியக்கதிர்கள் அதிர்ந்துகொண்டிருக்கும். உடலெங்கும் குருதி உருகி கொப்பளிப்பு கொள்ளும். செவிமடல்களில் குருதியின் துடிப்பை உணரமுடியும்.

எழுந்து நோக்கும்போது முள்முனைகளில் எல்லாம் பனித்துளிகள் ஒளிவிட்டுக்கொண்டிருக்க அருமணிகள் கனிந்த வயல் எனத் தெரியும் பாலை. விண்சுரந்த நீர். விண்ணில் வாழ்கின்றன பெருங்கடல்கள். ஆனால் நோக்கி நிற்கவே அவை உதிராது காற்றில் மறையும். பின்னர் நீள்மூச்சுடன் பாலைநிலம் வெம்மைகொள்ளத் தொடங்கும். வானிலிருந்து வெம்மை மண்ணை மூடிப்பொழிந்துகொண்டிருக்கும். பின்காலையாகும்போது மண்ணிலிருந்து வெம்மை மேலெழத் தொடங்கும். பின்னர் வானிலிருந்து வரும் காற்று மண்ணின் அனலை அவிப்பதாகத் தெரியும்.

உச்சிப்பொழுதே பாலையில் பெரும்பொழுது. அறத்தின் துலாமுள் என கதிரவன் அசைவற்று நின்றிருக்க நிழல்கள் தேங்கிய பாறைகள் வெம்மைகொண்டு  கனலுண்டு கனலுமிழ்ந்து உருகுநிலையை நோக்கி செல்வதுபோலிருக்கும். பின்மாலையில் வெம்மை இறங்குகிறதா இல்லையா என உள்ளம் ஏங்கும். அப்போது மென்மையாக காதை ஊதும் நீராவி மழை என்று சொல்லும். மழை என உள்ளம் குதித்தெழும். ஆம், மழையேதான். மழைவிழுந்த வெம்புழுதியின் தசைமணம். மழைக்காற்றின் மென்குளிர். அது மயலா மெய்யா? இல்லை உணர்கிறேன். உண்மையே அது. மழை.

“மழை!” என அவன் அருகே வந்த வணிகரிடம் சொன்னான். “மழையேதான்.” அவர் இதழ்கோட்டிய புன்னகையுடன் “அதன் பெயர் மாயாவருணன். மழையெனக் காட்டுவான். மழைத்துளிகளைக்கூட உதிர்ப்பான். மழைக்காக ஏங்கும் உயிர்களுடன் விளையாடுவான். வருணனை வெறுக்கச்செய்யும்பொருட்டே அவன் தோன்றுகிறான்.” அர்ஜுனன் விண்ணை நோக்கினான். தென்கிழக்கே முகில்கள் தெரிந்தன. “முகில்கள் வந்துகொண்டிருக்கின்றன” என்றான்.

“ஆம், அவை நீர்சுமந்த கடல்முகில்கள் அல்ல. மண்ணில் இருந்து எழுந்தவை. மேலெழுந்து குளிர்ந்து குடையாகின்றன. அவைதான் மாயாவருணனின் கருவிகள்.” அர்ஜுனன் அவர் சொன்னதை நம்பவில்லை. மழை மழை  என உள்ளம் தவிக்க முகில்களை நோக்கிக்கொண்டிருந்தான். முகில்கள் காற்றில் புகை எனக்கரைந்து வானில் மறைந்தன. மேலும் மேலும் நீராவி சுமந்து தோலை வியர்க்கவைத்த காற்று மீண்டும் வெம்மைகொள்ளத் தொடங்கியது. மூச்சுத்திணறல் வந்தது. கண்ணிமைகள் வியர்த்து விழிகளுக்குள் உப்பு சென்றது. விடாய் எழுந்து உடலகம் தவித்தது.

“நீர் அருந்தலாகாது. மழைவருமென எண்ணி நீரை அருந்தவைக்கும்பொருட்டே மாயாவருணன் இதை செய்கிறான்” என்றார் வணிகர். “பாலையில் தவித்து இறக்கும் மானுடர் அருகே வந்திறங்கி அவன் நடனமிடுகிறான். வெள்ளெலும்புகளைச் சுற்றி அக்காலடிகளை காணமுடியும்.” அர்ஜுனன் அந்த மழைமயக்கு மெல்ல விலகி சூரியன் மேலும் ஒளிகொள்வதையே கண்டான். மெல்ல அந்தி. இருள்மயக்கில் மீண்டுமொரு நீராவிப்படலம் வந்து செவிதொட்டு ஏக்கம் கொள்ளச்செய்தது.

மாயாவருணனை அறிந்த தேர்ந்தவணிகரும் கூட ஏமாற்றம்கொள்ளாமல் இருக்கமுடியவில்லை. ஒருமுறை நன்றாகவே வான் மூடிவிட்டது. திசைகள் மயங்கும் இருள். ஆடைவண்ணங்கள் மேலும் ஆழம் கொண்டன. “மழை” என்றான் அர்ஜுனன். “பார்ப்போம்” என்றார் போ. மேலும் மேலும் இருட்டிவந்தது. வெம்மை முழுமையாக மறைந்து குளிர் காதுகளைத் தொட்டது. உடல் சிலிர்ப்பு கொண்டது. “ஆம், மழையேதான்” என்றான். “பார்ப்போம்” என்று போ சொன்னார்.

முதல்மழைத்துளியின் ஓசையைக் கேட்டதும் அவன் உடல் அதிரத் தொடங்கியது. சிற்றம்பு வந்து மென் தசையை தைப்பதுபோல மீண்டுமொரு மழைத்துளி. “ஆம், மழை” என்று அவன் கூவினான். “மழை! மழை!” பலர் கூவத்தொடங்கினர். இளைஞர் கைகளை விரித்து கூச்சலிட்டபடி ஆடலாயினர். “மழைதான்…” என்றார் போ.  ”பாணரே, சொல்க! இது மழையா?” என்றான் ஒருவன். பீதர்நாட்டுப்பாணன் சுருங்கிய கண்களுடன் நகைத்து “ஆம், மழை” என்றான். “அனைத்துக்குறிகளும் மழை என்கின்றன.”

மழைத்துளிகள் கூடை கவிழ்த்து கொட்டியதுபோல விழுந்தன. அக்கணமே மண்ணிலிருந்து எழுந்த நீராவிக்காற்று அவற்றை அள்ளிச் சிதறடித்தது. வானிலெழுந்த முகில்பரப்பு விரிசலிடலாயிற்று. சூரிய ஒளி அதனூடாக வந்து மண்ணில் ஊன்றி நின்றது. அதில் செந்நிறமாக புழுதிகலந்த நீராவி ஒளியுடன் அலையடித்தது. வானம் பெரும் பெட்டகம்போல் திறக்க பாலை செந்நிற ஒளிகொண்டபடியே வந்தது.

சற்றுநேரத்திலேயே முகில்பரப்பு இரண்டு பகுதிகளாகப்பிரிந்து தெற்கும் மேற்குமென வளைந்தது. பாலை முன்பிருந்ததுபோலவே வெயில்படர்ந்து விழிகூசச் சுடர்ந்தது. வணிகன் ஒருவன் குனிந்து புழுதியில் இருந்து நீர்த்துளி விழுந்து உருவான உருளையை கையில் எடுத்தான். “பனிப்பழமா?” என்றான் ஒருவன். “இல்லை நீர்தான்” என்றான் அவன்.

போ தன் ஆடையிலிருந்த மண்ணைத் தட்டியபடி “முகில் என நின்றது புழுதி” என்றார். புழுதியை மண்ணில் இருந்து எழும் வெங்காற்று மேலே கொண்டுசென்று முகிலீரத்துடன் கலந்துவிடுவதைப்பற்றி ஒருவன் சொன்னான். “வானில் ஒரு சேற்றுச்சுவர் அது” என்றார் போ. பெருமூச்சுடன் தனக்குத்தானே என “எத்தனை அறிந்தாலும் மாயாவருணனிடமிருந்து எவரும் முற்றிலும் தப்பிவிடமுடியாது” என்றார்.

பாணன் உரக்க நகைத்து “அத்தனை தெய்வங்களுக்கும் மாயவடிவங்கள் உள்ளன, பெருவணிகரே” என்றான். மூச்சிழுக்க முடியாதபடி காற்று எடை கொண்டதாகத் தோன்றியது. குருதி அழுத்தம் கூடி உடலை உடைத்துத் திறக்க விரும்பியது. “ஒரு மழை… ஒருமழை இல்லையேல் இறந்துவிடுவேன்” என முதல்முறையாக வந்த இளவணிகன் ஒருவன் கூவினான். தலையை ஓங்கி ஓங்கி அறைந்தபடி “வாழமுடியாது…. என் உடல் உருகிக்கொண்டிருக்கிறது” என்றான்.

“இந்த நீர்த்துளிகள் நச்சுக்கு நிகரானவை” என்றார் போ. “மாயாவருணன் உமிழ்வது இந்த நச்சுமழை.” பாதையின் ஓரத்தில் சிற்றுயிர்கள் இறந்து கிடப்பதை அவர்கள் கண்டனர். சிறிய ஓணான்கள் பல்லிகள் வெண்வயிறுகாட்டி எஞ்சிய உயிர் வயிற்றில் பதைக்க விரல்கள் விரிந்து சுருங்க வால்நுனி அசைய கிடந்தன. ஒருநாகம்கூட நாவீசியபடி நெளிந்துகொண்டிருந்தது. “நூறு மாயாவருணன்களைக் கடந்தே வருணனை அடையமுடியும்” என்றான் பாணன்.

[ 9 ]

பாறைகளற்று நெடுந்தொலைவு வரை அலையலையாகக் கிடந்த ஊஷரத்தைக் கடப்பதற்கு நெடுநாட்களாயிற்று. அங்கு கிடைத்த நீர் உப்பு மிகுந்திருந்தது. அதை வடிகட்ட அரிப்புகளை அவர்கள் கொண்டுவந்திருந்தனர். மென்மணலை சுண்ணத்துடன் பிசைந்து அழுத்திச்செய்த மணற்பலகை அரிப்புகளினூடாக முதலில் நீர் ஊறி கீழே வந்தது. பின்பு மூங்கில் சக்கைகளும் படிகாரமும்  கலந்து உருவாக்கப்பட்ட அரிப்புகளில் பலமுறை வடிகட்டி எடுக்கப்பட்டது. அதன்பின்னும் அது மெல்லிய உப்புச்சுவையுடன் இருந்தது.

“குருதிச்சுவை” என்று அர்ஜுனன் அதைக்குடித்தபடி சொன்னான். “கண்ணீரின் சுவையும்கூட” என்றார் போ. இளையவணிகன் ஒருவன் “ஏன் கன்னியின் இதழ்ச்சுவை என்று சொல்லக்கூடாதா?” என்றான். வணிகர்கள் நகைத்தனர். “மைந்தனின் சிறுநீரின்சுவை” என்றார் போ. பீதர்நாட்டில் இளமைந்தரின் சிறுநீரின் சிறுதுளிகளை தந்தையர் அருந்துவதுண்டு என்றான் பீதர்நாட்டுச் சூதன். “அது தன் குருதியை தானே அருந்துவது.”

உப்பரித்த நிலம் வழியாக நிழல் தொடர நடந்தனர். பின் நீளும் நிழலை நோக்கி சென்றனர். உப்பு விரைவிலேயே காற்றை வெம்மை கொள்ளச்செய்தது. நிலத்தில் இருந்து எழுந்த வெம்மை காதுமடல்களை, மேலுதடுகளை, மூக்குவளைவை, இமைகளை எரியச்செய்தது. மணல் இளகி கால்களை சேறென உள்வாங்கியதால் நடப்பதும் கடினமாக இருந்தது.

நெடுங்காலத்திற்கு முன் ஏதோ நீர் தேங்கி பின் வற்றிவிட்டிருந்த குட்டைகள் விளிம்புகளில் அலையலையாக உப்புப்படிவு இதழ்கள் போல் ஒன்றன்மேல் ஒன்றென பதிந்திருக்க மாபெரும் மலர்போல் விரிந்து தெரிந்தன. “அவற்றை மண்மலர்கள் என்கிறார்கள். வான்மழையை அளிக்கும் தெய்த்திற்கு மண் மலர்படைத்து வரவேற்கிறது” என்றார் போ. பீதர்நாட்டுச் சூதன் “புன்னகைகள்” என்றான்.

எப்போது முளைத்தன என்று தெரியாத மரங்கள் அக்குட்டைகளைச் சூழ்ந்து நின்றிருந்தன. தொலைவிலிருந்து பார்க்கையில் சற்றுமுன் காட்டு நெருப்பு எழுந்து எரிந்து எஞ்சிய அடிமரங்கள் அவை எனத் தோன்றின. அருகணைந்தபோதுதான் அவை மட்கி அழிந்து பல்லாயிரம் ஆண்டுகளாகியிருக்கக்கூடும் என்று தெரிந்தது. விழுந்து கிடந்த மரங்கள் கல்லென மாறிவிட்டிருந்தன. சில மரங்கள் வெண்ணிற உப்பாக உருக்கொண்டிருந்தன.

வணிகர்கள் உப்புப்பரப்பை உடைத்துக் கிளறி உள்ளே புதைந்திருந்த உலர்ந்த மீன்களை வெளியே எடுத்தனர். உப்பில் அமைந்திருந்தமையால் அவை கெடா ஊனுடன் இருந்தன. “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவை” என்றான் ஏவலன். ஆனால் சற்றுமுன் உயிரிழந்தவை போலிருந்தன. அர்ஜுனன அவற்றின் விழிகளை நோக்கியபோது மெல்லிய துயில் ஒன்றுக்கு அப்பால் அவன் பார்வையை அவை உணர்ந்து கொண்டிருப்பதுபோல் தோன்றியது.  மீன் விழிகள் நீர்ச்சொட்டு போன்றவை. நீர் விழிகள் என மீன்களைச் சொல்லும் கவிதைவரியை நினைவுகூர்ந்தான்.

“இங்கு பறவைகள் மீன் கொள்ள வருவதுண்டு” என்று இன்னொரு ஏவலன் சொன்னான். “நீள் அலகால் அவை மீன்களை கிளறி எடுக்கின்றன. எனவே ஆழத்தில் உப்பில் சிக்கிக்கொண்ட மீன்களை மட்டுமே மானுடர் எடுக்கமுடியும். இப்பாலைப்பரப்பில் செல்பவர்களுக்கு அது நல்லுணவு. ஆனால் மிகை உப்பால் விடாய் கூடி வரும். உப்பு நீரிலேயே இவற்றை பலமுறை கொதிக்கவிட்டு செறிந்துள்ள உப்பை அகற்ற வேண்டும். மீண்டும் நன்னீரில் கொதிக்கவிடவேண்டும்.”

“சுழல்காற்று எழுகையில் இவை உப்புடன் எழுந்து வானுக்குச் சென்றுவிடுவதுண்டு. அங்குள்ள நீராவியில் உப்பு உருகிக்கரைய இவை மழையெனக் கொட்டியதாகவும் கதைகள் உண்டு. இறையருளால் வானிலிருந்து உணவு பொழியும் என்கிறார்கள் இங்குள்ளோர்” என்றார் போ. உப்புநீரை அள்ளி யானங்களிலாக்கி அங்கிருந்த சுள்ளிகளைக்கொண்டு தீமூட்டி வாற்றி நீர் எடுத்தனர். அதில் மீன்களை வேகவைத்து உலர்ந்த கோதுமைத்தூளுடன் உண்டனர்.

அதன் பின் காற்றோ வானோ உயிர்க்குலங்களோ ஓசை எழுப்பாமையால் முற்றிலும் அமைதிகொண்டிருந்த விமூகமென்னும் பாலையைக் கடந்து சென்றனர். “அதற்கப்பால் உள்ளது லவணம். அதை சுற்றிக்கொண்டுதான் நாங்கள் செல்வோம். லவணம் இறந்தவர்களின் நிலம் என்று அழைக்கப்படுகிறது” என்றார் போ. “அங்கு ஒரு கடல் இறந்து கிடக்கிறது என்கிறார்கள்.”

KIRATHAM_EPI_31

அர்ஜுனன் புருவம் சுருக்கி நோக்கினான். “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வேறு வகையான மானுடர்கள் வாழ்ந்ததாகவும் விண்ணிலிருந்து அனல் வடிவ இறைவனால் அவர்கள் அனைவரும் உப்புச் சிலைகளென மாற்றப்பட்டதாகவும் இங்குள்ள தொல்கதைகள் சொல்கின்றன. முற்றிலும் உப்பாலானது அந்நிலம். உப்புச் சுவருக்கு அப்பால் உப்பு செறிந்த நீரால் உயிர்கள் வாழா கடல் ஒன்று  உள்ளது என்றும் அங்கே ஆழத்தில் நீரின் தேவன் வாழ்வதாகவும் சொல்கிறார்கள்” என்றார் பீதர்குலத்துப் பாணர்.

“அந்த இடத்தை நாடியே நான் வந்தேன்” என்றான் அர்ஜுனன். “நான் அறிந்து எவரும் அங்கு சென்றதில்லை. சென்று மீண்டேன் என்று ஒரு சொல்லும் காதில் விழுந்ததில்லை” என்றார் போ. “நான் அதை வெல்லும் பொருட்டே வந்தவன்” என்றான் அர்ஜுனன். “தெய்வங்களை அறைகூவலாகாது, வீரரே. இப்பெரும்பாலையைப் பார்த்தபின்னருமா மானுடம் என்னும் நீர்க்குமிழியை நம்புகிறீர்?” என்றார் பாணர். போ புன்னகையுடன் “சில மானுடர் தெய்வங்களால் தங்களை அறைகூவும்பொருட்டு தெரிவுசெய்யப்படுகிறார்கள் பாணரே” என்றார்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 30

[ 5 ]

நெடுவெளி வளைக்க விரிந்து மேலும் விரிந்து எனக்கிடந்த ஏழு பெரும்பாலை நிலங்களைக் கடந்து அர்ஜுனன் இருபத்தியாறு மாதங்களில் வாருணம் என்றழைக்கப்பட்ட அறியாத் தொல்நிலத்தை சென்றடைந்தான். வருணனின் நிலம் அது என்றன அவன் சென்றவழியில் கேட்டறிந்த கதைகள். மழைக்கலங்கல் நீரின் நிறமுடைய பிங்கலத்தைக் கடந்ததும் தன்னை அழைத்துவந்த பனிமலை வணிகர்களிடம் விடைபெற்றுக்கொண்டான். அவர்கள் “நன்று சூழ்க, வீரரே… அறியா நிலம் நோக்கி செல்கிறீர்கள். அங்கு அறிந்த தெய்வங்கள் துணை வரட்டும்” என வாழ்த்தி விடைகொடுத்தனர்.

முள்ளூற்று என்று பாலைநில மக்களின் மொழியில் அழைக்கப்பட்ட தொன்மையான சிற்றூரில் ஏழு நாட்கள் அவன் தங்கியிருந்தான். புழுதி ஓடும் நதி என பாலை வளைந்து கிடந்தது அப்பாதை. விண்வடிவத் தெய்வம் ஒன்று சாட்டையால் அறைந்து பூமி மார்பில் இட்ட குருதித் தழும்புபோல் இருந்தது அது. எங்கிருந்தோ எவரோ மறுகணம் வரக் காத்திருப்பதென ஒருமுறையும் எவரோ முந்தைய கணம் சென்று மறைந்தது என மறுமுறையும் தோன்றச்செய்யும் வெறுமைகொண்டிருந்தது.

ஏழு நாட்கள் அங்கிருந்த மதுவிடுதி ஒன்றின் வெளித்திண்ணையில் அமர்ந்து அப்பாதையையே நோக்கிக்கொண்டிருந்தான். பாதை என்பதே பெரும்கிளர்ச்சியை அளித்த இளமைக்காலத்தை எண்ணிக்கொண்டான். பின்னர் பாதைகள் அச்சத்தை அளிப்பவையாக மாறிவிட்டிருந்தன. அவற்றின் முடிவின்மை அளிக்கும் அச்சம். முடிவின்மை நோக்கி செல்லும் பாதை என்பது உருவாக்கும் பொருளின்மை குறித்த அச்சம்.

அங்கிருந்து எழுந்து மீண்டும் அஸ்தினபுரிக்கு திரும்பிவிடவேண்டும் என்று உள்ளம் விரும்பியது. உடனே கசப்புடன், அஸ்தினபுரிக்கு சென்று என்ன செய்வதென்று எண்ணிக்கொண்டான். அரண்மனைக்குள் நுழைந்து தன் அறைக்குள் நுழையலாம். மஞ்சத்தில் புரளலாம். அன்னையின் கருப்பைக்குள் மீளலாம். அங்கிருந்து பார்த்திவப் பரமாணுவுக்கு குறுகிச் செல்லலாம். அங்கிருந்து மீண்டும் கடுவெளிக்கு விரிந்தெழலாம். இப்பாதையும் அங்குதான் செல்கிறது என்று எண்ணியபோது உரக்க நகைத்தான்.

நீண்ட சடைமுடியும் தோள்களில் சரிந்துகிடந்த சடைப்புரிகளும் பித்தெழுந்த விழிகளுமாக இருந்த அவனது நகைப்பு மதுக்கடைக்குள் இருந்த காப்பிரிநாட்டுத் தொலைவணிகர் மூவரை திரும்பிப்பார்க்க வைத்தது. பெரியஉதடுகளும் எருமைவிழிகளும் மின்னும் கருநிறமும் கொண்ட ஒரு வணிகன் வெளியே வந்து “புளித்த மது அருந்துகிறீர்களா, பாரதரே?” என்று கேட்டான். அர்ஜுனன் “ஆம்” என்று உள்ளே சென்று மதுவை வாங்கி அருந்தினான். அழுகல் மணத்துடன் எழுந்த ஏப்பத்தை சற்று உடல் உலுக்க குமட்டி வெளிவிட்டபடி மீண்டும் திண்ணைக்கு வந்து அமர்ந்தான்.

“அங்கு வெயிலின் அனலடிக்கிறதே? இங்குள்ள இருள் குளுமையாக இருக்கிறதே!” என்றான் இன்னொருவன். அவனை நோக்கி மறுமொழி எடுக்க எண்ணி சொல் நாவில் எழாது அர்ஜுனன் தலையசைத்தான். “இன்னும் சில நாட்களில் வடபுலத்திலிருந்து பீதர்நாட்டு வணிகர்கள் வருவார்கள். ஆயிரம் ஒட்டகங்களுக்கு மேல் அவர்களுடன் வரும். அது ஒரு நகரும் சிற்றூர். கூடாரங்களும் உணவும் நீரும் அவர்களிடம் இருக்கும். பாடகர்களும் பெண்களும்கூட இருப்பார்கள். அவர்களின் நாட்டிலிருந்து பாலையைக் கடந்து யவன நாட்டை அடைய அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் ஆகும்” என்றான் ஒருவன்.

“அவ்வளவு தொலைவு சென்று அவர்கள் ஈட்டும் பொருள்தான் என்ன?” என்று தரையில் அமர்ந்திருந்த மேய்ப்பன் கேட்டான். பச்சைக்கண்களும் ஒடுங்கிய கன்னமும் சுருக்கங்கள் செறிந்த முகமும் கொண்டிருந்தான். முதுமைகொண்ட சோனக வணிகன் கையில் மதுக்குவளையுடன் “எந்த வணிகமும் பொருளை எண்ணி தொடங்கப்படுவதில்லை. நேர்நோக்கில் பொருள் மட்டுமே வணிகனின் எண்ணத்தில் உள்ளது. ஆனால் பொருள் என்பதற்கே மீறல், கடந்து செல்லல் என்பது உட்பொருள். எண்ணிப்பாருங்கள், உண்பதற்கும் உடுப்பதற்கும் மட்டும் பொருள் தேவைகொண்டவன் பொருள் விழைவதே இல்லை. எவராயினும் பொருள் விழைவதே பிறிதொன்றென ஆகவும் தானும் பிறரும் வகுத்த எல்லைகளிலிருந்து வெளியேறவும்தான்” என்றான்.

“ஆம், உண்மை” என்றான் காப்பிரிவணிகன். “அமர்ந்த இடத்திலிருந்து பொன் குவிப்பதைப் பற்றி கனவு காணும் இளவணிகன் எவனாவது உள்ளானா? தொலைவில் மேலும் தொலைவில் எங்கோ பொன் குவிந்துள்ளது என்றல்லவா அவன் எண்ணுகிறான்? தொடுவான் முட்டும் நெடும்பாதையைப்போல வணிகனை கிளர்ச்சியுறச் செய்வது எதுவுமில்லை. ஆம், பொன்கூட இல்லை” என்றார் முதியவர். காப்பிரி வணிகன் “உண்மைதான்” என்றான்.

முதிய வணிகன் மதுக்கோப்பையை வைத்துவிட்டு வாயை அழுந்தத் துடைத்தான். “வீரர்களின் வெற்றிக்கதைகளை சூதர்கள் பாடுகிறார்கள். தலைமுறை தலைமுறையாக அவர்கள் பெயர்கள் சொல்லில் பதிந்து நீடிக்கின்றன. வணிகர்களை எவரும் பாடுவதில்லை. வணிகர்கள் பொன் கொடுத்தால்கூட அவர் புகழை பாடவேண்டுமென்று சூதர்கள் நினைப்பதில்லை. ஆனால், இளையோரே! நாம் காணும் இப்புவி என்பது வணிகர்களால் உருவாக்கப்பட்டது. ஆம், நாம் உருவாக்கியிருக்கிறோம் இதை.”

“ஒவ்வொரு முறையும் தன் மூதாதையர் வகுத்த எல்லையொன்றை மீறி ஒரு காலடி எடுத்து வைக்கும் வணிகன் விராட வடிவம் கொண்டு இப்புவியில் நிறைந்திருக்கும் மானுடத்தின் ஒரு புதிய தளிராக எழுகிறான். அவனில் அப்போது கூடும் தெய்வமே மானுடர்க்கு அருளும் தெய்வங்களில் முதன்மையானது. அதை இவ்வெளிய மக்கள் உணர்வதில்லை. பொருள்வயின் அலையும் வணிகன் பொருளையும் அடைவதில்லை, தோழரே. வணிகம் எனும் பேரின்பத்தை அறிந்தவனே அவ்வின்பநாட்ட விசையை பொருளாக மாற்றிக்கொள்கிறான்” என்றார் முதியவர். “நீர் என்ன சொல்கிறீர், வீரரே?” என்று அழுக்கான தோலாடை அணிந்து தலையில் மேலும் அழுக்கான தலையுறையுடன் தரையில் கால்மடித்து அமர்ந்திருந்த மதுக்கடை ஏவலன் அர்ஜுனனை நோக்கி சிரித்தபடி கேட்டான். மீசையை சுட்டுவிரலால் சுழற்றியபடி அவனை நோக்கிக்கொண்டு பேசாமல் இருந்தான் அர்ஜுனன். அவன் பேசப்போவதில்லை என்று உணர்ந்தபின் ஏவலன் விழி திருப்பிக்கொண்டான்.

“அவரும் எல்லை கடந்து செல்பவரே. அவரால் வணிகர்களை புரிந்துகொள்ள முடியும்” என்றான் மெல்லிய உடல்கொண்ட ஒருவன். முகத்தைப் பாராதவர்கள் அவனை சிறுவன் என்றே சொல்லிவிடுவார்கள். “வீரர் செய்வதும் வணிகமே. அவர்கள் வெல்வது பணமல்ல, புகழ்.” முதிய வணிகன் “புகழ் அல்ல, வெற்றி. தன்மீதான வெற்றி. அது அளிக்கும் மெய்மை” என்றார். அர்ஜுனன் மெல்ல அச்சூழலில் இருந்து நழுவி மீண்டும் பாதைமேல் படர்ந்த சித்தம் மட்டுமென்றானான்.

[ 6 ]

ஏழாவது நாள், தொலைவில் குருதி ஒற்றிஎடுத்த பஞ்சுத் திவலை போல செம்புகை எழுவதை மதுக்கடைக்காரன் கண்டான். உடல் அனல்பட்டதுபோல துடிக்க “வருகிறார்கள்! அதோ!” என்று கூவியபடி கொம்பு ஒன்றை எடுத்து கவிழ்த்துப் போடப்பட்ட மரத்தொட்டி மேல் ஏறிநின்று அவன் மும்முறை முழங்கியதும் அச்சிற்றூரிலிருந்து ஆண்களும் பெண்களும் இல்லங்களில் இருந்து புதரிலிருந்து சிறுபறவைகள் என கிளம்பி பாதையை நோக்கி கூச்சலிட்டபடி ஓடி வந்தனர்.

ஒவ்வொருவரும் தங்கள் கையில் பலவண்ணக் கொடிகளை எந்தியிருந்தனர். பச்சைக் கொடி உணவையும் ஓய்விடத்தையும் குறித்தது. நீலநிறக் கொடி உணவுடன் பெண்டிரும் உண்டென்பதை குறித்தது. நீலச்சிவப்புக் கொடி அங்கு சூதாட்டம் நிகழும் என்பதை காட்டியது. மஞ்சள்நிறக் கொடி குளியல்சேவை உண்டு என்று சொன்னது. செம்பச்சைநிறக் கொடி பொருள் மாற்று வணிகத்திற்கு அழைப்பு விடுத்தது. காற்றில் துடிதுடித்து அவை எழுந்து பறந்து அவ்வணிகக்குழு நோக்கி செல்லத் தவித்தன.

அர்ஜுனன் எழுந்து அங்கிருந்த முள்மரத்தின் அடியில் மார்பில் கைகளைக் கட்டியபடி நோக்கி நின்றான். வணிகர்குழுவில் முதன்மையாக குருதிநிறப் பெருங்கொடி ஒன்று பறந்தது. அதில் வாய்பிளந்து சுருண்டு பறக்கும் முதலைச்சிம்மம் துடித்தது. அதன் நா அனல்சுருளாக எழுந்திருக்க பெரிய உருண்டைவிழிகள் பசிகொண்டிருந்தன. “பீதர்கள்!” என்றான் ஒருவன். “பீதர்கள்! பீதர்கள்!” என்று குரல்கள் எழுந்தன. “பீதர்கள்” என்றபடி ஒருவன் குடில்களை நோக்கி ஓடினான்.

வணிகக்குழு மிக மெதுவாக உருவம் கொண்டு பெருகி வளர்ந்து அணுகுவதை அர்ஜுனன் நோக்கி நின்றான். அவர்களுக்கு மேல் புழுதி எழுந்து செந்நிறக் குடைபோல் நின்றது. அனல் என படபடத்த கொடிக்குப் பின்னால் படைக்கலங்களை ஏந்தியவர்கள் சீர்நடையிட்டு வந்தனர். இரும்புப்பட்டைகள் தைக்கப்பட்ட தோற்கவசங்களும் மெழுகிட்டு துலக்கப்பட்ட தோல் காலணிகளும் தீட்டப்பட்ட இடைப்பட்டைகளும் மின்னின. பாதரசக் குமிழென ஒளிவிட்டன தலைக்கவசங்கள். வேல்முனைகளும் வாள்முனைகளும் வெயிலில் நீர் அலைவளைவுகள் என ஒளி வீசின.

இரு நிரைகளாக ஒட்டகைகள் இரட்டைப்பொதி சுமந்து நீரில் ஆடும் கலங்களைப்போல அசைந்து வந்தன. ஒட்டகைகளின் நிரைக்கு இருபுறமும் படைக்கலங்களை ஏந்திய வீரர்கள் காவல் வர தொடர்ந்து செந்நிறமான தலைப்பை அணிந்த பீதவணிகர்களும் நடந்து வந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஏவலர்களும் சுமையர்களும் நான்கு நிரைகளாக வந்தனர்.

ஒட்டகைகளின் மீது இருபுறமும் தொங்கும்படியாக பொதிகள் ஏற்றப்பட்டிருந்தன. தோலுறைகளால் பொதியப்பட்டவை. அவற்றுக்குள் பட்டும் புல்லேட்டுக் கட்டுகளும் இருக்கும் என அவன் அறிந்திருந்தான். தேய்ந்த கூழாங்கற்பற்கள் தெரிய தாடையை தொங்கவிட்டு அசைபோட்டபடியும், கடிவாளத்தை மென்றபடியும், அண்ணாந்து கழுத்தை வளைத்து எடை மிக்க குளம்புகளை எறிந்து எறிந்து எடுப்பவை மணல் எழுந்து தெறிக்க வைத்து ஒட்டகைகள் அணுகின.

பீதவணிகர்களில் பெரும்பாலானவர்கள் குருதிநிற ஆடை அணிந்து உயரமான தோல் காலணிகள் அணிந்திருந்தனர். அவர்களின் செந்நிற ஆடைகள் பாலைக்காற்றில் படபடக்க அனல் எழுந்து தழலாடுவதுபோல அவர்கள் நிரை நெளிந்தது. தொடர்ந்து வந்த அத்திரிகளில் முதிய பெருவணிகர்கள் அமர்ந்திருந்தனர். பொன்பட்டுநூல் பின்னிய தலையணிகளை அணிந்திருந்தனர். அவர்களுக்கு இருபுறமும் நாணேற்றப்பட்ட விற்களுடனும் அம்புகள் நிறைந்த தூளிகளுடனும் வில்லவர்கள் வந்தார்கள். தொடர்ந்து காவலரால் சூழப்பட்ட அத்திரிகள் உணவுப்பொதிகளையும் நீர் நிறைந்த தோற்பைகளையும் சுமந்தபடி வந்தன. இறுதியாக மீண்டும் வில்லவர்கள் வந்தனர். அவர்கள் தொலைவை தொடு பெருவிற்களும் நீண்ட அம்புகளும் கொண்டிருந்தனர்.

கொடியுடன் வந்த முதல் காவலன் விடுதிக்கு முன்பிருந்த முற்றத்தை அடைந்தபோதும் பின்நிரை வந்துகொண்டிருந்தது. பள்ளத்தில் இறங்கித்தேங்கும் நீரோடைபோல அந்தப் பெருநிரை முற்றத்தில் வளைந்து சுழலத்தொடங்கியது. பெருவணிகர்கள் தனியாகப் பிரிந்து அவர்களை ஓடிச்சென்று வரவேற்ற அவ்வூர் மக்களை விழிசுருங்கச் சிரித்தபடி எதிர்கொண்டனர். கைகளை விரித்து பெண்களை தழுவிக்கொண்டார்கள். ஊரார் கொடிகளைத் தாழ்த்தி கைகளைத் தூக்கி தங்கள் மொழியில் உரக்க வாழ்த்துரைத்தனர்.

அத்திரிகளிலிருந்து பெருவணிகர்கள் இறங்கியதும் அவர்களின் கால்களைத் தொட்டு சென்னி சூடி தங்கள் இல்லங்களுக்கு வரும்படி அழைத்தனர். கூச்சல்களும் சிரிப்பொலிகளும் வாழ்த்தொலிகளும் நிறைந்திருந்தன. சிறு குழந்தைகள் நடுவே கூச்சலிட்டபடி ஓடி வணிகர்களின் ஆடைகளைத் தொட்டு பணம் கேட்டன. அவர்கள் செம்புநாணயங்களை அவர்களுக்கு அளித்தனர். உணவைச் சூழ்ந்து கூச்சலிடும் காகங்கள்போல குழந்தைகள் அவர்களை மொய்த்தன.

காவலர்கள் படைக்கலங்களைத் தாழ்த்திவிட்டு கவசங்களையும் காலணிகளையும் கழற்றினர். சிலர் களைப்புடன் அப்படியே அமர்ந்து கைகளைத் தூக்கி சோம்பல் அகற்றினர். ஏவலர்கள் ஒட்டகைகளை கடிவாளம் அகற்றி விட்டுவிட்டு அத்திரிகளை நாடாவைப்பற்றி முதுகில் கையால் அடித்து அதட்டி அழைத்துச் சென்றனர். ஒட்டகைகள் கால்மடித்து விழுவதுபோல நிலத்தில் நெஞ்சுபட அமர்ந்து ஒருக்களித்துக்கொண்டன. அத்திரிகள் கனைத்து தங்கள் தோழர்களை அழைத்தன. பொதி அகன்றதும் முதுகை நீட்டி இளைப்பாறலுடன் சாணியுருளைகளை உதிர்த்தன. பச்சைக்குழம்பாக சிறுநீர் கழித்து வால்சுழற்றி துளிவிசிறின.

ஏவலர் பொதிகளைச் சரித்து இறக்கி இழுத்துச்சென்று ஒன்றுடன் ஒன்று சேர்த்து சிறு குன்றுகள்போல அடுக்கினர். ஒட்டகைகள் நாணொலி எழுப்புவதுபோல ஒலி எழுப்பின. தும்மல் ஓசையிட்டபடி தலைகளை குலுக்கின. அருகிலிருந்து ஓர் ஒட்டகை கண்களை நோக்கியபோது விழி திறந்தபடி அது துயிலில் இருப்பதுபோல் அர்ஜுனனுக்குத் தோன்றியது. அவற்றின் குளம்புகளில் லாடங்கள் தேய்ந்திருந்தன. குறியவாலை பட் பட் என அவை அறைந்து அவ்வோசையால் பேசிக்கொண்டன.

அத்திரிகளை நீண்ட மரத்தொட்டிகளில் ஊற்றப்பட்ட நீரை அருந்துவதற்காக கொண்டுசென்றனர். கழுத்து மணி குலுங்க ஆவலுடன் நீரருகே சென்று மூழ்கி மூக்கு மயிர்களில் துளிகள் சிதற தலைதூக்கி செவிகளை அடித்தபடி சிலுப்பிக்கொண்டு அவை நீரருந்தின. நீரின் தண்மை அவற்றின் உடலின் அனலை அவிப்பதை வால் சுழலும் துள்ளலிலிருந்து அறியமுடிந்தது.

ஒட்டகைகள் நீருக்கென தவிப்பெதையும் வெளிப்படுத்தவில்லை. ஓர் ஒட்டகை படுத்தபடியே மல்லாந்து நான்கு கால்களையும் மேலே தூக்கி உதைத்து கனைத்தது. பிற ஒட்டகைகள் ஆர்வமில்லாது அதை நோக்கின. அவற்றின் கண்ணிமைகள் பாதி மூடியிருந்தன. தேர்ந்த கைகளுடன் ஏவலர்கள் பொதிகளை அமைத்து அவற்றின் மேல் தோலுறையிட்டு மூடி இறுகக்கட்டினர். பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட்ட புளித்த மாவுக்கள்ளை மரக்குடுவைகளில் வாங்கி அருந்தினர்.

நீரை வாயிலெடுத்ததும் விழுங்காமல் வாய்க்குள்ளேயே பலமுறை சுழற்றி அவற்றின் குளுமையை உணர்ந்து துளித்துளியாக விழுங்கியபின் மீண்டும் பணியாற்றி போதுமான இடைவெளிவிட்டு இன்னொரு மிடறை அருந்தினர். அனைத்துப் பொதிகளையும் இறக்கிவைத்து அனைத்து அத்திரிகளையும் நீர்காட்டி முடித்தபிறகுதான் அவர்கள் புளித்த மதுவை அருந்தி முடித்திருந்தனர். அதன் பின்னரே ஒட்டகைகளுக்கு நீர் அளிக்கப்பட்டது.

நீரருந்தும்பொருட்டு எழுந்து தொட்டிகளை நோக்கிச் செல்ல ஒட்டகைகள் விரும்பவில்லை. எனவே மூங்கில்களில் நீர்த்தொட்டிகளை கயிற்றால் கட்டி இருவர் இருவராக தூக்கிக்கொண்டு வந்து அவற்றின் முன் வைத்து அவற்றை நீரருந்தச் செய்தனர். ஒட்டகைகளும் ஏவலரும் அத்திரிகளும் காவல்வீரரும் புழுதியால் மூடப்பட்டிருந்தனர். அம்முற்றத்தில் வந்து தங்கள் ஆடைகளை உதறிக்கொண்டபோது எழுந்த புழுதியே அவர்களை மறைக்கும் திரையாக மாறியது.

மதுவிடுதியின் அனைத்து இருக்கைகளிலும் தரையிலும் மரப்பெட்டிகளிலும் வணிகர்கள் செறிந்து அமர்ந்திருந்தனர். அவர்களின் பேச்சொலிகளும் சிரிப்போசையும் வாயில் வழியாகத் தெறித்தன. குள்ளனான மதுக்கடை ஏவலன் வெளியே வந்து குடில்களை நோக்கி ஓடினான். நான்குபேர் பெரிய மதுப்பீப்பாயை உருட்டியபடி உள்ளே சென்றார்கள். உள்ளிருந்து இரு வணிகர் சிரித்தபடி ஓடிவந்து அதை தாங்களும் சேர்ந்து உருட்டிச்சென்றனர்.

ஏவலரும் காவல் வீரர்களும் மதுவிடுதிக்குள் நுழைய ஒப்புதல் இருக்கவில்லை. அவர்கள் பொதிகளைச் சூழ்ந்து முற்றத்திலேயே நீள்வட்டமாக அமர்ந்து கொண்டனர். கால்களை வளைத்து மடிக்காமல் முழங்காலை ஊன்றி குதிகால் மேல் பின்பக்கத்தை வைத்து அமரும் அவர்களின் முறையும் பெரிய கைகள் கொண்ட உடையும் அவர்களை பறவைகள் போலக் காட்டின.

அவர்களின் உடல்கள் மிகச் சிறியவையாகவும் தோள்கள் முன்நோக்கி வளைந்து குறுகியதாகவும் இருந்தன. உடலோடு ஒப்பிடுகையில் அவர்களின் கைகள் மிகப் பெரியவை என்பதை அர்ஜுனன் கண்டான். கடும் உழைப்பின் விளைவாக அவை தோல் காய்ந்து மரத்தாலானவைபோல் தோன்றின. தொடர் அனல் காற்றால் அரிக்கப்பட்ட சுண்ணப்பாறைகள்போல மஞ்சள் முகங்கள் சுருக்கங்கள் மண்டி நிறம் கன்றிப்போயிருந்தன. கண்கள் சேற்று வெடிப்புக்குள் தெரியும் நீர்த்துளிகள்போல. வாய்கள் கத்தியால் கீறப்பட்ட புண்கள்போல.

குறுவில்லை கையால் மீட்டியது போன்ற விரைவொலியுடன் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். பூனைகளின் பூசல்போல மறுகணம் தோன்றியது. விடுதிக்காவலன் வந்து அர்ஜுனனை வணங்கி “பெருவணிகர் தங்களைப் பார்க்க விரும்புகிறார். தாங்கள் விரும்பினால் அவரிடம் வில்லவராக சேர்ந்துகொள்ளலாம்” என்றான். “நன்று” என்றபடி அர்ஜுனன் அவனுடன் சென்றான்.

விடுதிக்குப் பின்புறம் பிறைவடிவில் இருந்த மரப்பட்டைக்கூரைகொண்ட சிற்றில்களில் பெருவணிகர் பலர் உடைகளைக் கழற்றி இளைப்பாறத் தொடங்கியிருந்தனர். உடலில் படிந்த கூரிய மணல்பருக்களை அகற்றும்பொருட்டு பெரிய தோல் துருத்தியால் காற்றை விசையுடன் வீசி அவர்களின் உடலை தூய்மை செய்தபின் பெரியமரக்குடைவுக் கலங்களில் வெந்நீர் கொண்டுவந்து அதில் துணியை முக்கி அவர்களின் உடலை மெல்ல ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தனர் பெண்கள். அதிலிடப்பட்ட நறுமணத் தைலத்தின் ஆவி அங்கே சூழ்ந்திருந்தது. உடலெங்கும் பரவியிருந்த தோல்வெடிப்புகளில் நீர் பட்டபோது வணிகர்கள் முனகினர். சிலர் அப்பெண்களை கையால் அடித்துத் தள்ளினர்.

அவர்களின் ஆடைகளை கழிகளில் தொங்கவிட்டு மென்மையான குச்சிகளால் அடித்தும் தூரிகைகளால் வருடியும் மணலையும் அழுக்கையும் போக்கிக்கொண்டிருந்தனர் இளைஞர். உடல் தூய்மை செய்துகொண்டிருக்கும்போதே ஒரு கையில் மதுக்கிண்ணத்துடன் மெல்ல விழிசொக்கி உடல் தளர்ந்து இளைப்பாறினார்கள் வணிகர்கள் சிலர். சிலர் ஏனென்றறியாமல் அழுதுகொண்டிருந்தனர்.

அரைவட்ட வடிவ குடில்நிரையாலான ஊரின் மையமாக இருந்த பெரிய குடிலின் முன் விரிபலகையில் பீதர்குலத்து முதுவணிகர் படுத்திருந்தார். அவருடைய நீண்ட கூந்தல் பெண்களின் பின்னல் போல இடையையும் தாண்டி பின்னி கரிய நாகம்போல வளைந்து கிடந்தது. மெழுகு பூசி திரிக்கப்பட்ட அதன் புரிகளை கீழிருந்து ஒரு பெண் பிரித்துக்கொண்டிருந்தாள். முகவாயிலிருந்து மட்டும் ஓரிரு மயிர்கள் நீண்டு நின்ற தாடியும் கீறி நீட்டப்பட்ட காதுகளும் சுருக்கங்களுக்குள் புதைந்து மறைந்த சிறிய விழிகளும் கொண்டிருந்தார்.

இடையில் தோலாடை மட்டும் அணிந்து படுத்திருக்க அவர் உடலில் துருத்தியால் ஊதப்பட்ட காற்றுடன் வெந்நீரைக் கலந்து மென்துளிகளாக்கி புகைபோல பாய்ச்சிக்கொண்டிருந்தனர்  இரு பெண்கள். ஒரு சிறு பீடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த அவரது காலை இரு பெண்கள் வெந்நீரால் கழுவிக்கொண்டிருந்தனர். ஒருத்தி மென்மையான கல்லால் காலை உரசிக் கழுவ இன்னொருத்தி சிறிய மர ஊசியால் நகங்களுக்கிடையே இருந்த மணலை எடுத்துக்கொண்டிருந்தாள். அவர் கைகளையும் இருவர் கழுவி நகங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தனர்.

பெருவணிகர் அருகே நின்றிருந்த இரு கணக்கர்கள் புல்லால் ஆன பட்டுச் சுருளை விரித்து அவற்றிலிருந்து அவரது மொழியில் எதையோ வாசித்துக் காட்டிக்கொண்டிருக்க அவர் ஒவ்வொரு சொற்றொடருக்கும் தலையசைத்து ஒப்பு அளித்தபடி கேட்டுக்கொண்டிருந்தார். அர்ஜுனன் அருகே சென்றதும் விடுதித்தலைவர் அவனைப் பற்றி அவரிடம் சொன்னார். பீதவணிகரின் முதிய விழிகள் ஆர்வமற்றவைபோல அர்ஜுனனை பார்த்தன. இல்லையோ என்பது போன்று தெரிந்த உதடுகள் மெல்ல அசைய செம்மொழியில் “இமயமலையைச் சார்ந்தவரா?” என்றார்.

“அங்கிருந்தேன். ஆனால் பாரதவர்ஷத்தின் வடபுலத்து அரசகுடியினன். க்ஷத்ரியன்” என்றான் அர்ஜுனன். அவரது கண்கள் சற்று சுருங்கின. “உங்கள் பெயரென்ன? அதையல்லவா முதலில் சொல்ல வேண்டும்?” என்றார். “எங்கள் ஊரின் வரிசை வேறு வகையில்” என்றபின் அர்ஜுனன் “என் பெயர் விரஜன்” என்றான். அவர் சிறிய வாய் மேலும் குவிய “நன்று” என்றபடி “நீர் வில்லவர் என்பதை கைகள் காட்டுகின்றன” என்றார்.

அர்ஜுனன் தலையசைத்தான். அவர் திரும்பி ஒரு வீரனைப் பார்த்து அவரது மொழியில் அவனிடம் ஒரு வில்லை கொடுக்கும்படி சொன்னார். அவன் தன் கையிலிருந்த வில்லையும் அம்பறாத்தூணியையும் கொடுத்தான். அர்ஜுனன் அவற்றை வாங்கி கையில் அணிந்து தோளில் எடுத்துக்கொண்டான். “உமது திறமைகளில் ஒன்றைக் காட்டுக!” என்றார்.

அர்ஜுனன் திரும்பி தொலைவில் ஒரு குடிலுக்குள் இருந்து எழுந்துகொண்டிருந்த புகைச்சுருளைப் பார்த்து தன் அம்பு ஒன்றை எய்தான். வெண்பட்டாலான மரம்போல எழுந்து விரிந்து கொண்டிருந்த புகையை அம்பு இரண்டென கிழித்தது. பெருவணிகர் வியப்புடன் எழுந்து அதைப் பார்த்தார். அந்த அம்பு கீழே விழுவதற்குள் அடுத்த அம்பு அதைத் தைத்து மேலே தூக்கியது. மூன்றாவது அதை மேலும் தூக்கியது. தொடர் அம்புகளால் முதல் அம்பு வளைந்து வானத்தில் எழுந்தது.

கீழிருந்து மேலெழுவதுபோல் சென்ற அம்புகளால் அந்த முதல் அம்பு திருப்பி உந்தப்பட்டு அர்ஜுனனை நோக்கி வந்தது. அவன் அதைப் பற்றி மீண்டும் அம்பறாத்தூணிக்குள் போட்டான். பிற அம்புகள் வரிசையாக மண்ணில் தைத்து சாய்ந்து நின்று அசைந்தன. அவன் நின்றிருந்த இடத்தில் இருந்து அந்த அம்புகள் அனைத்தும் நேர் கோட்டில் ஒரே கோணத்தில் சாய்ந்து நாணல்கள் போல நின்று பீலி சிலிர்த்தன.

KIRATHAM_EPI_30

சொல்லழிந்து அமர்ந்திருந்த பெருவணிகர் கைகளை இழுத்துக்கொண்டு நீர்க்குடுவைகள் சரிய எழுந்து பதறும் குரலில் “வீரரே, நீங்கள் அஸ்தினபுரியின் விஜயரா?” என்றார். “ஆம், வேறு எவருமில்லை. கர்ணனல்ல. பரசுராமனல்ல. அப்படியென்றால் நீங்கள் அர்ஜுனனேதான்.” அர்ஜுனன் “ஆம்” என்றான்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 29

[ 3 ]

இருள் பரவத்தொடங்கியதும் அச்சிற்றூரில் இருந்த அனைத்துக் குடில்களும் உருவழிந்து கரைந்து மறைந்தன. புழுதிக்காற்று அவற்றின் புற்கூரைகளை அலைத்த ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. உச்சிவெயில் எழுந்த சற்றுநேரத்திலேயே சூரியன் நெடுமலைகளுக்கு அப்பால் இறங்கி மறைந்து விட்டிருந்தான். கதிர் சரியத்தொடங்கியதுமே மலையுச்சிகளில் இருந்து குளிர் ஓசையின்றி இறங்கி ஊரை மூடிச் சூழ்ந்தது. உடல் நடுங்கத் தொடங்கியதும் அர்ஜுனன் தோலாடைகளை இறுக்கி அணிந்து தலை உறையை போர்த்திக்கொண்டான்.

இருளெழத் தொடங்கியதும் ஓசைகள் மேலும் ஆழம் கொண்டன. அவ்வூரார் இருளிலேயே நோக்குதுலங்கப் பழகிவிட்டிருந்தனர். இளையோர் ஐவர் விறகுகளைக் கொண்டு வந்து கூம்பாகக் குவித்து தீ எழுப்பினர். அதைச் சூழ்ந்து உடல்குறுக்கி அமர்ந்து தழலில் காட்டிச்சுட்ட மலைக்கிழங்குகளையும் பொறிவைத்து பிடிக்கப்பட்ட சிற்றுயிர்களையும் பறவைகளையும் ஏவலரும் பிறரும் உணடனர்.

அனைத்துச் சிறு விலங்குகளும் அவர்களுக்கு உணவாக இருந்தன. மலைகளில் எலிகளும் கீரிகளும் உடும்புகளுமே பெரும்பாலும் கிடைத்தன. சுடுவதன்றி வேறு சமையல்முறைகளையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. “முயல்கள் இல்லையா?” என்று அர்ஜுனன் ஒருவனிடம் கேட்டான். “இங்கில்லை. நெடுந்தூரம் சென்றால் மலைச்சரிவு இன்னும் சற்று பசுமை கொண்டிருக்கும். அங்கு முயல்கள் உண்டு. ஆனால் அங்கு செல்ல பன்னிரண்டு நாட்களாகும்” என்றான் ஒருவன்.

இருள் அடரும் தோறும் குளிரும் கூடிவந்தது. அனைவரும் உடல்களை தோலாடைக்குள் ஒடுக்கிக் கொண்டு நெருப்பை மேலும் மேலும் அணுகி அமர்ந்தனர். குடில்களுக்குள் எவற்றிலும் விளக்குகள் இல்லை. அங்கு இல்லங்களில் விளக்கேற்றும் வழக்கமே இல்லை. குடில்களுக்குள் மதுவும் அகிபீனாவும் மயக்கேற்ற களிகொண்ட வணிகர் குழறிப்பேசியும் வெடித்துச்சிரித்தும் ஓசையிட்டனர். அவர்களுடன் சிரித்தும் கொஞ்சியும் குலவினர் பெண்டிர்.

அவர்களின் ஆண்களெல்லாம் முற்றத்தில்தான் இருந்தனர். துள்ளும் ஓசையில் விரைந்த சொற்களுடன் பேசிக்கொண்டனர். அவர்கள் வணிகர்களின் வரவால் உளக்கிளர்ச்சி அடைந்திருப்பது தெரிந்தது. அகிபீனாக் களியை சிறு உருளைகளாக வாயில் அதக்கிக் கொண்டிருந்தனர். மெல்ல மயக்குகொண்டு நாக்குழறினர். அனல் அவிந்ததும் அதைச் சூழ்ந்து படுத்து ஒவ்வொருவராக துயிலத்தொடங்கினர்.

குறட்டை ஓசைகளைக் கேட்டபடி அர்ஜுனன் முழங்காலில் கைகட்டி விண்மீனை நோக்கியபடி அமர்ந்திருந்தான். வான் முழுக்க அதிர்வொளிப்புள்ளிகள் செறிந்து பரவியிருந்தன. சற்றும் முகில்களே இல்லை என்று அதற்குப்பொருள். ஆனால் மழை உண்டு என்று பிங்கல முதியவர் அழுத்தி பலமுறை கூறியிருந்தார். அவர்களின் குலத்து இளையோர்கூட அதை நம்பவில்லை. வணிகர்கள் அவர் சொன்னதை தட்டவில்லை.

மறுநாள் காலை அவரிடம் ஏன் மழை வரவில்லை என்று கேட்டால் என்ன சொல்வார் என்று எண்ணிக்கொண்டான். தெய்வங்கள் பொய்ப்பதில்லை. நாளை என்று தெய்வங்கள் சொன்னது அதற்கு அடுத்த நாளைத்தான் என்று சொல்லக்கூடும். அவரது நம்பிக்கை மாறாது. மானுடத்தை சற்றும் கருதாது பேருருக்கொண்டு சூழ்ந்த அமைதிமலைகளை, நெடுந்தொலைவுக்கு அப்பால் இருந்து வரும் விசைகொண்டகாற்றை, அனல் சுமந்த புழுதிஅலைகளை நம்பி வாழும் இச்சிறு வாழ்க்கையில் தெய்வங்களே அனைத்தையும் முடிவு செய்கின்றன. அவற்றை நம்பாமல் வேறுவழியில்லை.

அறிய முடியாதவற்றை நம்பி வாழ்வதில் அழகு ஒன்று உள்ளது என்று அவன் நினைத்துக் கொண்டான். அறிதலுக்கான பெருந்தவிப்பிலிருந்து அது விடுதலை. அறிய விழைபவர்கள் வாழுமிடத்திலிருந்து சென்று கொண்டே இருக்கிறார்கள். சித்தம் அமைந்த இடத்திலிருந்து மீண்டும் மீண்டும் மேலும் மேலும் என நகர்ந்துகொண்டே இருக்கிறது. நம்பிக்கையே நிலைக்க வைக்கிறது. அமையச் செய்கிறது. பிறிதிலாது துய்க்க வைக்கிறது. எஞ்சாது கடந்து போகச் சொல்கிறது.

விண்மீன்களை அவன் விழியிமைக்காமல் நோக்கிக் கொண்டிருந்தான். அவற்றின் நடுக்கம் கூடி வருவது போலத் தோன்றியது. கண்காணா சரடொன்றில் தொற்றியபடி அவை இறங்கி இறங்கி மிக அருகே வருவது போலிருந்தது. பின்பு அவன் தன் கனவுக்குள் விண்மீன்களை நோக்கிக் கொண்டிருந்தான்.

விண்மீன்கள் அவனைச் சுற்றி அதிர்ந்து கொண்டிருந்தன. கை நீட்டினால் ஒவ்வொரு விண்மீனையாக பற்றி எடுத்து விழிமுன் கொண்டு வந்து உறுத்து நோக்கலாம் என்பது போல இரு விண்மீன்கள் அதிர்வதை அவன் கேட்டான். அதிர்வதை எப்படி கேட்க முடியும் என்று அவன் சித்தம் வியந்தபோது அது தவளைக் குரல் என்று தெளிந்தான். தவளைக்குரலா? கங்கைக்கரையிலா இருக்கிறோம்? புரவியை எங்கு கட்டினோம்?

கங்கைப்பெருக்கிலிருந்து வந்த குளிர் காற்று அவன் உடலை நடுங்க வைத்தது. ஆடையை எடுக்க கைநீட்டி அவ்வசைவிலேயே விழித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தபோது தொலைவிலிருந்து வந்து அறைந்து இரு குடில்களுக்கு இடையே பீரிட்டு வந்த காற்றில் அனல் உயிர்கொண்டு சீறிக்கொண்டிருந்தது. செம்பொறிகள் எழுந்து மறுதிசை நோக்கி பெருகிச் சென்றன. குடில்களின் கூரைகள் எழுந்து படபடத்தன. தவளைக்குரல்களை அவன் தெளிவாகக் கேட்டான். நெடுந்தொலைவிலென ஒரு முறையும் மிக அருகிலென மறுமுறையும். ஒற்றை ஓசையென ஒலித்து பின் தனித்தனி குரல்களாக மாறிச்சூழ்ந்தன.

அண்ணாந்து வானைப் பார்த்தபோது ஒரு விண்மீன்கூட இல்லையென்பதை உணர்ந்தான். படுத்திருந்தவர்களை எழுப்ப வேண்டுமென்று தோன்றியது. மறுகணம் தவிர்த்து புன்னகையுடன் கைகட்டியபடி நோக்கி நின்றான். ஒரு மின்னலில் அனைவரும் படுத்திருந்த காட்சி துடிதுடித்து அணைந்தது. இருண்ட வானில் விழியொளி அதிர்ந்தது. மறுகணம் தெற்குச்சரிவு இடியோசை எழுப்பியது. மீண்டும் ஒரு மின்னல் அதிர்ந்து வான் நிறைத்திருந்த பெருமுகில் மலைகளை நடுநடுங்க காட்டிச் சென்றது.

மின்னல்களின் கொடிபடர்வு. இடியோசை உருண்டு செல்ல மின்கதிரால் விரிசல் விட்டது வானம். இடி செவி ரீங்கரிக்க மீண்டும் வலுத்து ஒலித்தது. அச்சிற்றூரின் அனைத்து கூழாங்கற்களும் ஒளிபெற அனைத்து புற்கூரை பிசிறுகளும் பொன்னொளி கொண்டெரிய மின்காட்சி தெரிந்து மறைந்தது. மீண்டும் ஒரு இடியில் துயின்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் பாய்ந்து எழுந்தனர். ஒருவன் “இடி!” என்றான். வாகுகன் புரண்டு படுத்து. “முரசு” என்றான்.

மின்னல் அனைத்துப் பகுதிகளையும் ஒளியால் நிரப்பி விழியை முற்றிலும் பறித்துச் சென்றது. செம்மை குருதியென குமிழிகளென இமைக்குள் அதிர செவிகள் முற்றிலும் அடைந்து தலைக்குள் உலோக ரீங்காரம் நிறையும்படி பேரிடி எழுந்தது. வாகுகன் பாய்ந்தெழுந்து “என்ன? எங்கு?” என்றான். “மழை வருகிறது” என்றான் அர்ஜுனன். “இங்கா? மழையா?” என்று அவன் கேட்டான். மின்னல்கள் அதிர்ந்து அதிர்ந்து முகில் கணங்களைக் காட்டியதைப்பார்த்துவிட்டு எழுந்து நின்று கைவிரித்துச் சுழன்று “முற்றிலும் வான் நிறைந்துள்ளது, வீரரே!” என்றான்.

“ஆம்” என்றான் அர்ஜுனன். “இத்தனை விரைவாகவா முகில் வந்து நிறையமுடியும்?” என்றான் வாகுகன். “அந்தப் பிங்கல முதியவர் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார். இங்கு மழை வான் வழியாக தவழ்ந்து வருவதில்லை.. மலைகளினூடாக வந்து உச்சிப்பிளவுகள் வழியாக பிதுங்கி ஒழுகுகிறது” என்றான் அர்ஜுனன்.

இடியோசையும் மின்னல்களும் எழுந்து சூழ ஆடைபறக்க குழல் சிதறி அலைபாய நின்றிருந்தபோது நெடுந்தொலைவிலிருந்து வெந்த புழுதியின் மணத்துடன் காற்று வந்து சுழன்று சென்றது. அதில் சருகுத் திவலைகளும் புழுதியும் இருந்தன. “ஈரப்புழுதி” என்றான் வாகுகன். “அங்கே மழை இறங்கிவிட்டது” என்றான் பிறிதொருவன். “மழை! மழை!” என கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர் பிறர். அகிபீனாவின் மயக்கிலிருந்து எழுந்து “யார்?” என்றும் “என்ன?” என்றும் சிலர் கூவினர்.

குடில்களின் கதவுகளைத் திறந்தபடி அச்சிற்றூரின் இளையோர் வெளியே ஓடி வந்தனர். குழந்தைகள் கூச்சலிட்டபடி வெளியே வந்து “மழை மழை மழை” என குதிக்கத் தொடங்கின. தொடர்ந்து ஆடைகளை அள்ளி அணிந்தபடி பெண்களும் வணிகர்களும் வெளியே வந்தனர். அவர்களின் ஆடைகளை இழுத்து உப்பி அதிரச்செய்தது காற்று. குழல்களைச் சுழற்றி பறக்க வைத்தது. முகில்கள் சுடர் கொண்டெரிந்தன. இடியோசையில் முகில்கள் அதிர்வதுபோல விழிமயக்கெழுந்தது

வடமேற்கு மலைகளுக்கு அப்பால் இருந்து எழுந்து பல்லாயிரம் முகில் படிக்கட்டுகளில் உருண்டுருண்டு சென்று கீழ்த்திசையில் உறுமி மறைந்தது பேரிடித்தொடர் ஒன்று. நெடுந்தொலைவில் புரவிக்குளம்படிகள் பெருகி எழுவது போன்ற ஓசையை அர்ஜுனன் கேட்டான். ’புரவிகளா!’ என்று வியந்த மறுகணம் அது மழையெனத் தெளிந்து அவ்வுணர்வால் உடல் சிலிர்க்கப்பெற்றான். மறுகணம் பேரோசையுடன் நிலம் அறைந்து அணுகி ஊரை முழுக்க மூடி கடந்து சென்றது மழை. ஓரிரு கணங்களிலேயே அங்கிருந்த அனைவரும் முழுமையாக நனைந்துவிட்டனர்.

இளைஞன் ஒருவன் இரு கைகளையும் விரித்து தொண்டை அதிரும் கூச்சலுடன் ஓடிச் சுழன்றான். உடனே அங்கிருந்த இளையோரும் பெண்களும் கைகளை விரித்தபடி கூவி ஆர்ப்பரித்து மழையில் சுழன்றாடினர். ஒருவரையொருவர் தழுவியும் சிறுமைந்தரை தூக்கி எறிந்து பற்றியும் களியாடினர். கரைந்து வழிந்தோடிய மென்புழுதியின் சேற்றில் விழுந்து புரண்டனர். சேற்றை அள்ளி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். மழை அவர்களின் களியாட்டை தான் வாங்கிக் கொண்டது போல காற்றுடன் கலந்து சுழன்று சுழன்று அடித்தது. வெறி ஒவ்வொரு கணமும் ஏற அவர்கள் கூத்தாடினர்.

மெல்ல ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களுக்குள் எதையோ முனகலாகப் பாடியபடி கைகளை விரித்து தள்ளாடும் கால்களுடன் மெல்ல சுழன்றனர். நிலை தடுமாறி நீரில் விழுந்து சேற்றில் புரண்டு மழையை முகத்திலும் மார்பிலும் வாங்கியபடி துயர் கொண்டவர்கள் போல படுத்தனர். சிலர் அழுதனர். சிலர் தெய்வங்களை நோக்கி மன்றாடினர். சிலர் தங்கள் உள்ளமைந்திருந்த சொற்கள் சிலவற்றை வழிபாடு போல சொல்லிக்கொண்டிருந்தனர்.

KIRATHAM_EPI_29

இரு கைகளையும் மார்பில் கட்டி, மழையின் அம்புப்பெருக்கை உடல் முழுக்க வாங்கியபடி அர்ஜுனன் அவர்களை நோக்கி நின்றான். கூத்தாடியவர்களுடன் வணிகர்களும் ஏவலர்களும் கலந்துவிட்டிருந்தனர். முதியவர்கள் குழந்தைகள் என ஒருவர்கூட மீதமில்லை. மெல்ல ஒவ்வொருவராக விழுந்து விழுந்து அவன் மட்டும் எஞ்சினான். தன்னைச் சூழ்ந்து உயிரற்றவர்கள் போல கிடந்தவர்களை அவன் நோக்கிக் கொண்டு நின்றான். குளிரில் அவன் இடக்கால் மட்டும் துடித்துக் கொண்டிருந்தது. அவன் நெஞ்சில் ஒற்றைச் சொல் ஒன்று இரு பெரும்பாறைகளால் இறுகக் கவ்விப்பற்றப்பட்டிருந்தது.

[ 4 ]

மறுநாள் கதிர் எழவே இல்லை. மலைகளுக்கு அப்பால் இருந்து ஒளிமட்டும் கசிந்து மழைத்தாரைகளினூடாக பரவியது. மழையலையுடன் இணைந்து குடில்கள் நிழல்கள் போல் ஆடின. மழைக்குள் விழுந்தவர்கள் அப்படியே துயில் கொள்பவர்கள் போல, ஊழ்கத்தில் உடல் உதிர்த்தவர்கள் போல முழுநாளும் அசையாது கிடப்பதை அர்ஜுனன் வியப்புடன் கண்டான். அவன் கால்கள் குளிரில் நடுங்கி இறுகி முழங்கால் தசை உருண்டு வலிகொண்டு நின்றது. தாடை அசைவிழந்து ஒட்டிக்கொண்டது. பற்கள் உரசி அரைபட்டன. ஆயினும் குடிலுக்குள் சென்று ஒளிந்துகொள்வதற்கு அவனால் இயலவில்லை.

இரவிலேயே வணிகர்கள் மட்டும் குடில்களுக்குள் சென்று ஆடைகளைக் களைந்து உடல் துடைத்துக் கொண்டனர். சிலர் உள்ளேயே கற்செதுக்குக் கலங்களில் நெருப்பிட்டு அமர்ந்தனர். இப்போது தணியும், இதோ அலை இறங்குகிறது, இதோ ஓசை மயங்குகிறது என்று பலமுறை மாயம் காட்டி மீண்டும் மீண்டும் எழுந்து பெய்துகொண்டே இருந்தது மழை. உச்சிப் பொழுதுக்கு முன்னரே கதிரொளி மறைந்து மீண்டும் முற்றிருளாகியது. மீண்டும் இருள் வந்து மூடிக்கொண்டது

எண்ணியிராத தருணத்தில் மழை ஓயத்தொடங்கியது. சற்று நேரத்திலேயே தெற்கிலிருந்து வந்த காற்று மழையை திரைச்சீலையென சுழற்றி அள்ளிக்கொண்டு சென்றது. மீண்டும் வந்த காற்றில் துளிச்சிதர்கள் இருந்தன. மீண்டும் வீசிய காற்றில் தொலைதூரத்துப் புழுதி வெந்த மணம் இருந்தது. கூரைகள் நீரைச்சொட்டி உதறி எழுந்து மீண்டும் பறக்கலாயின. வானில் விண்மீன்கள் சில மெல்ல பிதுங்கி எழுந்து வந்தன.

இரவு முழுக்க தெற்கிலிருந்து அலையலையென காற்று வந்து ஊரைச்சூழ்ந்து சுழன்று கடந்து சென்றது. மழையில் கிடந்தவர்கள் ஒவ்வொருவராக விழித்து கையூன்றி தவழ்ந்தபடி குடில்களுக்குள் சென்றனர். அங்கே ஈரத்துணியுடனே படுத்து துயிலலாயினர். சிலர் மண்ணில் முகம் புதைத்து நெஞ்சுகலுழ்ந்தவர்கள் போல அழுதபடி ஏதோ முனகினர். சிலர் கைகூப்பியபடி மல்லாந்துகிடந்து அரற்றிக்கொண்டிருந்தனர்.

அர்ஜுனன் அருகிருந்த குடிலொன்றுக்குள் நுழைந்து தன் தோலாடையை அகற்றி மரவுரி அணிந்துகொண்டான். குடில் நடுவே இரும்பு யானத்தில் அனல் வைத்து அதைச்சூழ்ந்து வணிகர்கள் அமர்ந்திருந்தனர். ஒருவன் சற்று இடம் விட்டு “அமருங்கள், வீரரே!” என்றான். அர்ஜுனன் அமர்ந்து கைகளை அனல் மேல் நீட்டி அவ்வெம்மையை உடல் முழுக்க வாங்கி நிரப்பிக்கொண்டான். குருதியில் வெம்மை படர்ந்து செல்லச் செல்ல அவன் உடல் சிலிர்த்தபடியே இருந்தது.

குளிருக்கு வெம்மையையும் வெம்மையில் குளிரையும் உணர்வதுபோல் உடலறியும் பேரின்பம் பிறிதில்லை என்று அவன் எண்ணிக்கொண்டான். உடல் அறியும் இன்பதுன்பங்களே புறவயமானவை. மறுக்கமுடியாதவை. ஆகவே அவை மட்டுமே இன்பங்களும் துன்பங்களும். பிற அனைத்தும் உளமயக்குகள். ஆம். அகிபீனா இழுத்தால் என்ன? வேண்டியதில்லை, இப்போதே சித்தம் பித்துகொண்டிருக்கிறது. மழை மனிதர்களை பித்தாக்க முடியுமா? முடியும். அதற்கு பதினொருமாதம் அனலில் காயவேண்டும். வெந்து உருகவேண்டும். மழை இன்னும் பெய்கிறதா? இல்லை, இது காற்று.

அமர்ந்தபடியே துயிலத்தொடங்கி கையூன்றி விழுந்து வெறுந்தரையிலேயே ஆழ்ந்துறங்கினான். காலையில் ஊரின் ஓசைகளைக் கேட்டபோது எங்கிருக்கிறோம் என்ற உணர்வு சற்று பிந்தி எழுந்தது. தொடர்பயணங்களில் இட உணர்வு முற்றிலும் அகன்றுவிட்டிருந்தமையால் அவன் அப்போது மிதிலையின் உணவு விடுதி ஒன்றில் துயின்று கொண்டிருப்பதாக உணர்ந்தான். விழித்துக்கொண்டு தன்னைச் சுற்றி எவரும் இல்லை என்று கண்டபின் ஆடை திருத்தி எழுந்து நின்றான்.

குனிந்து குடில் வாயில் வழியாக வெளியே வந்தபோது அங்கு மழை பொழிந்ததன் எந்தத் தடயமும் எஞ்சியிருக்கவில்லை என்று கண்டான். தரையின் ஈரம்கூட காய்ந்துவிட்டிருந்தது. அங்கு வந்தபோது எழுந்து பறந்துகொண்டிருந்த புழுதி பல்லாயிரம் கால்தடங்களும் குளம்புத்தடங்களுமாக படிந்திருப்பதைக் கொண்டே பெய்து நனைந்த மழையை நினைவுகூர முடிந்தது. வான் நிரப்பிச் சென்றுகொண்டிருந்த காற்றில் நீர்த்துளிகள் இல்லை, ஆனால் நீர் என அது மணத்தது.

ஏவலர்கள் பொதிகளைப் பிரித்து அத்திரிகளின் முதுகில் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஓய்வும் உணவும் கொண்டு புத்துயிர் பெற்றிருந்த அத்திரிகள் கழுத்து மணியை அசைத்தபடி கடிவாளத்தை மென்று காதுகளைத் திருப்பி ஓசைகளைக் கூர்ந்தன. ஒற்றைக்கால் தூக்கி மூன்றுகாலில் நின்றன. அவற்றின் வால்சுழற்சிகளும் செருக்கடிப்பொலிகளும் பசுஞ்சாண மணமும் சிறுநீர் வீச்சமும் குடில் சூழ்ந்த அந்நடுமுற்றத்தில் நிறைந்திருந்தன.

“நாம் கிளம்புகிறோம், வீரரே!” என்றான் வாகுகன். “நம் வரவு இவர்களுக்கு நல்லூழைக் கொணர்ந்தது என்று சொல்கிறார்கள்.” அர்ஜுனன் “இவர்கள் வேளாண்மை செய்வதுண்டா?” என்றான். “இங்கு அவ்வாறு எதையும் செய்ய முடியாது. இங்குள்ள புழுதியும் காற்றும் அப்படிப்பட்டவை. இந்த மழை இவர்களின் முட்காடுகளை தளிர்க்கச் செய்யும். அதை உண்ணும் சிற்றுயிர்கள் பெருகும். இன்னும் பலமாதங்களுக்கு இங்கு ஊனுயிர்களுக்கு குறைவிருக்காது. இவர்கள் இவ்வழிசெல்லும் வணிகர்களையும் அவ்வப்போது பெய்யும் மழையையும் நம்பி வாழ்பவர்கள்.”

ஊரே அமைதியாக இருப்பதைக் கண்டு “அவர்கள் எங்கே?” என்று அர்ஜுனன் கேட்டான். கருணர் “மழை பெய்துவிட்டதால் அவர்கள் பொழுதை வீணடிக்க விரும்பவில்லை. இது ஈசல்கள் எழும் பொழுது. அவர்களுக்கு இது அறுவடைக்காலம் போல. வெயிலில் உலரச்செய்து பானைகளில் நிறைத்து மூடியை களிமண் கொண்டு பொருத்தி காற்றிலாது மூடி புதைத்து வைத்தால் நான்குமாதம் வரை இருக்கும். ஈசல்வலைகளுடன் விடிவதற்குள்ளாகவே அனைவரும் காடுகளுக்குள் சென்றுவிட்டார்கள்” என்றார்.

அர்ஜுனன் முகம் கழுவி வாகுகன் அளித்த ஊன் உணவை உண்டு புறப்படுவதற்கு சித்தமாக வில்லுடன் வந்து நின்றான். “வருணனை வணங்கி கிளம்புவோம். அளியிலாப் பெரும்பாலையை இம்முறை எளிதில் கடப்போம் என்று எண்ணுகிறோம்” என்று கருணர் சொன்னார். “வருணன் சினம் கொண்டவன். அவன் அளி பாலைமழைபோல இனியது” என்றார் ஒரு வணிகர்.

அவர்கள் ஊர் மூலையில் அமைந்திருந்த வருணனின் சிறு பதிட்டை நோக்கி சென்றனர். புலரிக்கு முன்பாகவே ஊனுணவையும் காட்டுமலர்களையும் வருணனுக்குப் படைத்து பூசனை செய்திருந்தனர் ஊர்மக்கள். அவர்கள் வருணனை வணங்கினர். வருணன் காலடியில் இருந்த சிறு கிண்ணத்தில் இருந்து செம்மண் எடுத்து நெற்றியில் அணிந்து அருள் பெற்றனர். அர்ஜுனன் அந்தக் கல்லில் விழித்த விழிகளை நோக்கினான். முந்தைய நாளின் இடிமின்னலும் மழைக்குளிரும் நினைவிலெழுந்தமைந்தன.

“கிளம்புவோம்” என்றார் வணிகத்தலைவர். ஊருக்கு புறம்காட்டாமல் பின்காலடி எடுத்து வைத்து வாயிலினூடாக ஏழு சுவடுகள் பின்சென்று குனிந்து தரைதொட்டு சென்னி சூடி வணங்கி அவர் திரும்பி நடக்க அத்திரிகளும் ஏவலருமாக வணிகர்குழு அவர்களைத் தொடர்ந்து சென்றது. அர்ஜுனன் ஆளில்லாது கைவிடப்பட்ட குருவிக்கூடுகள்போல நின்ற ஊரை இறுதியாக திரும்பிப்பார்த்தான்.

செல்லும் வழி முழுக்க புழுதி அடங்கி, வானம் குளிர்ந்த ஒளி கொண்டு, காற்றில் நீர்த்துளிகள் பரவி, இனிய மண்மணத்துடன் பயணம் இனிதாக இருந்தது. சூதரின் பாடலொன்று தொலைவில் கேட்டது. முன்பே செல்லும் வணிகர் குழுவில் மெலிந்து எலும்புகள் புடைத்த கழுத்தும் சற்றே கூன் கொண்ட முதுகும் தசைகள் இறுகிய வயிறும் கால்களும் கொண்ட முதிய சூதர் இருப்பதை அர்ஜுனன் கண்டிருந்தான். சீவிடு போல சிற்றுடலிலிருந்து எழும் பெருங்குரல் கொண்டவர். அவர்கள் அக்குழுவை நடைவிசையால் அணுகும்போதெல்லாம் அவர் பாடல் காற்றில் எழுந்து வந்துகொண்டிருந்தது.

வாகுகன் “வருணனைப் பாடுகிறார்” என்றான். அர்ஜுனன் புன்னகைத்தான். “வருணனின் நகரம் மேற்கே அலையற்ற கடலுக்கு அப்பால் உள்ளது. உப்பால் ஆன கோட்டை சூழ்ந்தது அந்நகர்” என்றான் வாகுகன். “எப்படி தெரியும்?” என்று அர்ஜுனன் புன்னகையுடன் கேட்டான். “ஒவ்வொருமுறை இவ்வழிசெல்லும்போதும் அந்நகர் பற்றி எவரேனும் சொல்கிறார்கள். இன்று மழை பெய்ததனால் வருணனை புகழ்ந்து பாடுகிறார்கள். மழையின்றி புழுதி அனலென சுழன்று கடந்துசெல்லும் பொழுதில் நடக்கும்போது வருணனை வேண்டிப்பாடுகிறோம். வருணனை நினைக்காது இப்பாதையை எவரும் கடக்க முடியாது” என்றான் நிகும்பன்

“வருணனின் பெருநகர் மூன்று பெருங்கோட்டைகளால் ஆனது” என்று கருணர் சொன்னார். “கதிரொளியில் கண் கூசவைக்கும் வெண்மை கொண்ட உப்புக்கோட்டை. அதற்கப்பால் அசைவற்ற நீலநிற நீரால் ஆன பெருங்கோட்டை. அதற்கப்பால் வெண் சங்கும் சிப்பிகளும் சேர்த்தடுக்கிக் கட்டப்பட்ட அரண்மனைக்கோட்டை. அவன் அரண்மனை நீருக்கடியில் அமைந்துள்ளது. நீர்ப்பாசிகளைப் பின்னி கட்டப்பட்டது அது என்று ஒரு கவிஞன் சொன்னான். நீரலைகளுக்கு ஏற்ப நூற்றியெட்டு அடுக்கு கொண்ட பெருமாளிகையில் நெளிந்து கொண்டிருக்கும் அதன் சுவர்கள் வளைவுகள் அனைத்தும் அலைந்தாடும்.”

“வருணன் சிறகுகள்கொண்ட மீன்தேவியராலும் நீருள் பறக்கும் நாகங்களாலும் காக்கப்படுகிறான். நீலவைரங்களால் அடுக்கிக் கட்டப்பட்டது அவன் அரண்மனைக்கூடம். அதற்குள் நீர்மணிகளால் ஆன அரியணையில் அமர்ந்து அவன் புவிநீரை எல்லாம் ஆள்கிறான்.”

“வருணனை சென்று காண்பது எப்படி?” என்று அர்ஜுனன் கேட்டான். சிரித்துக்கொண்டு “ஏன்? நீங்கள் சென்று காண எண்ணியுள்ளீரா?” என்றான் நிகும்பன். அவன் விழிளை நோக்கியபடி “ஆம்” என்றான் அர்ஜுனன். வாகுகன் அவன் கையைப்பற்றி “அர்ஜுனன் திசைத்தேவர்களைச் சென்று வென்று கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். வருணனை அவர் சென்று கண்டிருப்பாரா?” என்று கேட்டான். “காணச் சென்றுகொண்டிருக்கிறான் போலும்” என்றான் அர்ஜுனன் சிரித்தபடி.

“இவர்கள் இதை கதையென எண்ணுகிறார்கள் ஆனால் செல்லவும் காணவும் முடியுமென்றே நான் எண்ணுகிறேன்” என்றான் வாகுகன். கருணர் சிரித்துக்கொண்டு “நீராழத்தில் சென்று நீரரமகளிரைக் கவர்ந்து நீர் நாகங்களைக் கடந்து வாய்திறந்து விழுங்க வரும் கவந்தமச்சர்களை வென்று வருணனைக் காணவேண்டும். அப்படி சென்று கண்டு உமக்கு வரப்போவதென்ன?” என்றார். “மெய்மை” என்றான் அர்ஜுனன்.

“அத்தனை தொலைவில்தான் அது இருக்குமா?” என்றான் வாகுகன். “இங்கு நம்முடன் அது இயல்பாக இல்லையென்பதனால் அதற்கு அப்பால் மேலும் துலங்கி இருக்கும் என்பதுதானே பொருள்?” என்றான் அர்ஜுனன். “இதென்ன கூறுமுறை என்று எனக்கு விளங்கவில்லை” என்று கருணர் நகைத்தார். “சொல்லுங்கள், வீரரே! வருணனிடம் நீர் கோரப்போகும் மெய்மை என்ன?” என்றார்.

“ஒவ்வொரு திசைக்கும் ஒரு மெய்மை” என்றான் அர்ஜுனன். “இருண்ட ஆழத்தின் மெய்மை யமனிடம். ஒளிரும் துயரங்களின் மெய்மை குபேரனிடம். நெளியும் உண்மை வருணனிடம். உடையாத வைரத்தின் உண்மை இந்திரனிடம். மெய்மை என்பது இந்நான்கும் கலந்த ஐந்தாவது ஒன்றாகவே இருக்க முடியும். நான்கையும் கடக்காது ஐந்தாவதற்கு செல்ல முடியாது என்று தோன்றுகிறது.”

கருணர் “இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். கதை சொல்லல் என்பது இனிது. அது இங்குள்ள இறுகிய புடவிநெறிகளை மீறிச்செல்லும் கனவு. கல்லை கையில் அள்ளி அருந்தலாம். வானை அள்ளி குடத்தில் நிறைக்கலாம். ஆனால் அது அழகிய சிலந்தி வலை ஒன்றில் நாம் சென்று சிக்கிக்கொள்வது போல. திமிறும்தோறும் மேலும் சூழும். அனைத்துக் கதைகளுக்கும் நடுவே விஷக்கொடுக்குடன் சிலந்தி அமர்ந்திருக்கும். அதற்கு நம் உயிரை அளித்தாக வேண்டும்” என்றார்.

அவனருகே வந்து “கதைகளல்ல வாழ்க்கை. இங்கு இவ்வாறு இருப்பதுதான் இளைஞனே வாழ்க்கை. உவத்தல் அன்றி இப்புவியில் வாழ்வுக்கு பொருளொன்றும் இல்லை. மகிழ்வன்றி மெய்மை என்று ஒன்றில்லை” என்றார். “அவ்வாறு எண்ணுவது பிறிதொரு சிலந்தி வலை” என்று அர்ஜுனன் சொன்னான். கருணர் உரக்க நகைத்து “ஆம், இருக்கலாம்” என்றார். “இளமையிலே நான் இதில் சிக்கிவிட்டேன்.”

“நான் இங்குள்ளதே முழுமை என எண்ணிக் களியாடினேன். அக்களியாட்டு முடிந்ததுமே அவ்வாறல்ல என்று உணர்ந்து கிளம்பினேன். இங்குளதில் முழுதமைந்திருப்பவன் அங்கு என்னும் சொல்லையே அறிந்திராதவன். அங்குளதை உணர்ந்தபின் இங்கமைபவன் இயல்பானவன் அல்ல. அவன் அதைச் சொல்லிச் சொல்லி தன்னுள் நிலைநாட்டிக்கொண்டே இருக்கவேண்டும்” என்றான் அர்ஜுனன்.

கருணர் திகைப்புடன் நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டார். நிகும்பன் “வருணனிடம் நெளியும் மெய்மையை நெளிந்தபடி அடையுங்கள் வீரரே, அப்போதுதான் அது நிலையான உண்மையாகும்” என்றான். சூழ்ந்திருந்தவர்கள் நகைத்தனர்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 28

பகுதி நான்கு : மகாவாருணம்

[ 1 ]

“அதன்பின்னரும் பத்து படலங்கள் உள்ளன காவியத்தில்” என்றான் சண்டன். “உண்மையில் இதுவரையிலான படலங்களை சற்று வயதுமுதிர்ந்தவர்கள்தான் கூர்ந்து கேட்பார்கள். இதன்பின் வருபவை அகத்துறை சார்ந்தவை. அர்ஜுனன் ஒன்பது செல்வியரை மணந்து காதலாடியவை நவநிதி சர்க்கங்கள் என ஒற்றை பாதமாக அமைந்துள்ளன. அர்ஜுனனுக்கும் மீனாட்சிக்குமான காதல் ஏழு உட்பகுதிகள் கொண்ட ஒரு படலம். அவை உங்களைப்போன்ற சிற்றிளையோர் கேட்கத்தக்கவை அல்ல.”

“குபேரபுரியில் அர்ஜுனன் நூற்றெட்டு ஆண்டுகாலம் மகளிருடன் மகிழ்ந்து வாழ்ந்தான்” என்றான் சண்டன். “காமம் முடிந்ததும் காமம் எழுந்தமையால் அவனால் சித்தம் மீளவே முடியவில்லை. ஒருநாள் பத்து துணைவியருடன் அளகாபுரியிலுள்ள பிரமோதம் என்னும் வேனில்காட்டில் மலர்மரங்களுக்கு நடுவே விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த சிறிய நீர்க்குட்டை ஒன்றில் பொற்துகள்போல ஓர் எறும்பு நீந்திக்கொண்டிருப்பதை கண்டான். குனிந்து அந்த எறும்பை சுட்டுவிரலால் தள்ளி கரையேற்ற முயல்கையில் அவன் காதில் அவ்வெறும்பு வேண்டிக்கொண்ட ஓசை விழுந்தது.”

இருகைகளையும் கூப்பி எறும்பு கூவியது “பேராழிகளின் தலைவனாகிய வருணனே, இக்கடலை நான் கடக்க எனக்கு உதவுக!” திகைப்புடன் அவன் சுட்டுவிரலால் ஒற்றி அந்த எறும்பை மேலெடுத்தான். அதன் விழிகளை தன் விழிகளால் தொட்டு “நீ சென்றுகொண்டிருந்தது கடலென எவர் சொன்னது?” என்றான். “என் மூதாதையரின் அறிதல், என் விழிகளின் காட்சி இரண்டையும் என் நுண்ணறிவின் வழியாக இணைத்துக்கொண்டேன்” என்று எறும்பு சொன்னது. “அலையடிப்பது, திசைகள் அற்ற எல்லைகொண்டது, சென்றடையமுடியாத ஆழம் கொண்டது.”

அர்ஜுனன் அவ்வெறும்பை கீழே விட்டுவிட்டு எண்ணத்திலாழ்ந்தான். அவனருகே சிரித்தபடி ஓடிவந்து அமர்ந்து மூச்சிரைத்த மீனாட்சி அவன் முகம் மாறிவிட்டிருப்பதைக் கண்டு “என்ன?” என்றாள். “நான் செல்லவேண்டிய திசை ஒன்று எஞ்சியுள்ளது” என்றான். அவள் விழிகள் மாறுபட்டன. “செல்கிறீர்களா?” என்றாள். “நான் சென்றாகவேண்டியவன் என்று நீ அறிவாய்” என்றான். “ஆம், ஆயினும் உள்ளம் மாயைகளையே விழைகிறது” என்றாள்.

அவளைத் துரத்தி ஓடிவந்த ஒன்பது கன்னியரும் கூட்டுச்சிரிப்போசையுடன் அருகே அமர்ந்தனர். பதுமை “நெடுந்தூரம் ஓடிமீண்டோம் இன்று” என்றாள். சங்கினி “ஆம், மறு எல்லையில் அந்தப் பொன்முகில்வரை” என்றாள். அவர்கள் இருவரும் இருந்த நிலையைக் கண்டு பிறர் சிரிப்பழிந்தனர். நந்தை “என்ன ஆயிற்று?” என்றாள். “கிளம்புகிறார்” என்றாள் மீனாட்சி. அனைவர் முகங்களும் வாட விழிகள் நீரொளி கொண்டன.

“நான் வருணனை வென்றாகவேண்டும்” என்றான் அர்ஜுனன். “இங்கிருந்து நான் செல்லவேண்டிய திசை அதுவே.” அவர்கள் விழிதாழ்த்தி துயரெடை கொண்டனர். “கடந்துசென்றுகொண்டே இருப்பவன் நான், என் இயல்பை நீங்கள் முன்னரே அறிந்திருப்பீர்கள். என் மேல் சினம்கொள்ளவேண்டாம்” என்றான் அர்ஜுனன். “ஆண்களுக்கு கடந்துசெல்லலையும் பெண்களுக்கு நிலைகொள்ளலையும் வகுத்த நெறியை அன்றி எதையும் குறைசொல்ல விழையவில்லை” என்றாள் மீனாட்சி.

“நாளை காலை நான் இங்கிருந்து மீள்கிறேன்” என்றான் அர்ஜுனன். “வீரரே, இங்கு நீங்கள் வந்து மானுட ஆண்டு நூற்றெட்டு கடந்துவிட்டது. ஆனால் உங்களை நீங்கள் இவ்வுலகுக்குள் புகுந்தகணத்தின் மறுகணத்தில் கொண்டு சென்று அமர்த்துகிறேன்” என்று மீனாட்சி சொன்னாள். “இங்கிருந்து நீங்கள் விழையும் செல்வம் அனைத்தையும் கொண்டு செல்லலாம்” என்றாள் நந்தை. “வடக்கின் அரசன் அளித்த அம்பு அன்றி வேறேதும் கொண்டுசெல்லப்போவதில்லை” என்றான் அர்ஜுனன்.

“வீரரே, நீரின் தலைவனை வென்றுகடக்கும்பொருட்டு கிளம்புகிறீர்கள்.  நீரின் உண்மை இரண்டு. ஒளிப்பரப்பாக அலையடிக்கும் மேல்தளம் அதன் முகம். இருண்டு இருண்டு செல்லும் அசைவற்ற ஆழம் அதன் அகம்” என்றாள் மீனாட்சி. “நீர்முகத்தில் மலர்ந்திருக்கும் தாமரைகளின் தேவி பதுமை. நீராழத்தில் படிந்திருக்கும் சங்குகளின் அரசி சங்கினி. சங்கு ஆழத்து வெண்தாமரை. வெண்தாமரை அலைமேல் மலர்ந்த சங்கு.”

“சங்கும் தாமரையும் ஏந்திய வருணன்” என்றாள் மீனாட்சி. “அவனை மூன்று முதல்தெய்வங்களன்றி எவரும் முழுமையாகக் கண்டதில்லை. கதிரவனுக்குரிய ஒளிமலரென அவனைக் கண்டவர்கள் சங்கிலமர்ந்து குளிர்ந்த அவனை கண்டதில்லை. சங்கிலெழும் ஆழிப்பேரோசையாக அவனை அறிந்தவர்கள் ஓசையற்ற மலர்வென அவனை உணர்ந்ததில்லை. மலர்நாடி வருபவருக்கு ஆழத்தையும் சங்கென எண்ணுபவர்களுக்கு மலர்ந்த வெண்நகைப்பையும் அளிப்பது அவன் ஆடல்.”

“இவர்கள் இருவரும் உங்களுடன் வரட்டும்” என்றாள் மீனாட்சி. “உங்கள் இரு கைகளின் கட்டைவிரல்களிலும் மலர் வடிவிலும் சங்குவடிவிலும் வரிச்சுழியாக அமைந்திருப்பார்கள். தேவையானபோது உங்கள் அருகே எழுந்து வழிகாட்டுவார்கள்.” அர்ஜுனன் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டான். அங்குள்ள சுனை ஒன்றில் அவர்கள் அவனை இறங்கிச்செல்லும்படி சொன்னார்கள். நீரில் மூழ்கிய அவன் அலைகளுக்கு அப்பால் அவர்களின் உருவங்கள் வண்ணங்களாகி நெளிந்து கரைவதைக் கண்டான்.

“விழித்தெழுந்தபோது அவன் குபேரதீர்த்தத்தின் அருகே இருந்தான். எழுந்து அமர்ந்து எண்ணிநோக்கியபோது அனைத்தும் கனவென்றே இருந்தது. நினைவுகூர்ந்து அருகே கிடந்த தன் ஆவநாழியை எடுத்து நோக்கினான். அதில் இரும்புவளையம் கொண்ட அம்பு ஒன்று இருப்பதைக் கண்டான். அதைத் தடவிநோக்கியபடி நீள்மூச்சுவிட்டான்” என்றான் சண்டன்.

அவர்கள் தண்டகாரண்யத்தின் காட்டுப்பாதையில் சென்றுகொண்டிருந்தார்கள். பைலன் “குபேரனின் படைக்கலம் அர்ஜுனனுக்கு உதவக்கூடும். அந்தர்த்தானையைவிட பெரிய துயில்தெய்வம் ஒன்றுண்டு. வேள்விகளில் துயிலும் வைதிகரிடம் கேட்டு அவரது எதிரிகள் பெற்றுக்கொண்டு விடக்கூடும்…” என்றான். சண்டன் உரக்க நகைத்தான். ஜைமினி “இது வீண் கேலி. வேள்விகளில் எவர் துயிலமுடியும்?” என்றான். “ஆம், புகை ஒரு பெரிய தொல்லையே” என்றான் பைலன்.

“பைலரே, இது அத்துமீறல். வேள்விக்களத்தில் அவிபெறும்பொருட்டு தெய்வங்கள் வந்து சூழ்ந்துள்ளன. அவற்றின் அருகே அமர்ந்திருக்கும் வைதிகர் அனலெழும் காட்டில் நாணல்கள் போன்றவர்கள்…” என்றான் ஜைமினி. பைலன் “அப்படியென்றால் அவி கொள்ளும்பொருட்டு அந்தர்த்தானையும் நித்ரையும் வந்திருக்கக்கூடுமோ?” என்றான். ஜைமினியின் கண்கள் நனைந்தன. தொண்டை ஏறி இறங்கியது. அவன் “நான் தனித்துச்செல்கிறேன்…” என்று முன்னகர்ந்தான்.

“சரி, இல்லை. சினம் கொள்ளாதீர்” என்று அவன் கையை எட்டிப்பற்றினான் பைலன். “இதற்கெல்லாம் சினம் கொள்ளக்கூடுமா? இது எளிய சொல்லாடல் அல்லவா?” ஜைமினி “எனக்கு வேதம் எளிய சொல் அல்ல” என்றான். “ஆம், அது புகையின் எடைகொண்டது” என்றான் சண்டன். “சண்டரே, போதும்” என்றான் பைலன். ஜைமினி தலைகுனிந்து நடந்தான்.

அவர்கள் பிறகு நெடுநேரம் பேசிக்கொள்ளவில்லை. அவ்வப்போது சண்டன் பைலனின் கண்களை சந்தித்தபோது அவற்றில் புன்னகையின் ஒளி இருந்தது. ஜைமினி நின்று “நீர்” என்றான். சண்டன் தன் குடுவையை எடுத்து தலைகீழாகக் காட்டி “தீர்ந்துவிட்டது” என்றான். ஜைமினி பதற்றத்துடன் “இந்நிலம் வறண்டிருக்கிறது. குரங்குக்குரல்களும் குறைந்திருக்கின்றன. நீர்மரங்களும் கண்ணுக்குப்படவில்லை” என்றான். “ஆம், இன்னும் நெடுந்தொலைவுக்கு நீரூற்று என ஏதுமிருக்க வாய்ப்பில்லை” என்றான் சண்டன். “என்ன செய்வது?” என்று ஜைமினி பதறியபடி கேட்டான். “அந்தணரே, நீங்கள் வருணனை வேதம்கூவி அழைத்து நீர்பொழியக் கோரலாமே?” என்றான் சண்டன்.

“தன்னலத்திற்காக வேதம் ஓதுபவன் கீழ்மகன்” என்றான் ஜைமினி. “நான் இக்காட்டில் நீரில்லாது விடாய்கொண்டு இறப்பதாக இருந்தாலும் இறுதித்தருணம் வரை எனக்கென வருணனை வேண்டமாட்டேன்.” அவன் உறுதியைக் கண்ட சண்டன் புன்னகைத்து “நன்று. தொல்வேதகாலத்தின் அதே உணர்வுடன் அந்தணர் சிலர் இன்னுமிருப்பதனால் வருணன் மானுடருக்கு கட்டுப்பட்டவனே” என்றான்.

பைலன் “மானுடருக்கு தேவர்கள் எப்படி கட்டுப்படமுடியும்?” என்றான். ஜைமினி “தேவர்களில் மானுடனின் ஆணைக்கேற்ப அமையவேண்டிய பொறுப்புள்ளவன் வருணனே. முனிவர், வேதியர், கற்புடைப்பெண்டிர், சொல்தூய்மைகொண்ட கவிதை, இலக்கண முழுமைகொண்ட இசை ஆகிய ஐந்து அழைப்புக்கும் அவன் வந்தாகவேண்டும். மழைக்குருவி, வேழாம்பல், தவளை ஆகிய மூன்றின் அழைப்பையும் ஏற்றாகவேண்டும். வருணன் சொல்லுக்குக் கட்டுப்பட்டிருக்கும் வரைதான் இங்கே வாழ்க்கை. அவன் தன் விடுதலையை அடைந்தானென்றால் மண் வறண்டு உயிர்கள் அழியும்” என்றான்.

அவன் ஊக்கம்கொண்டு மேலே சொல்லிக்கொண்டே சென்றான். “அறிந்திருப்பீர் பைலரே, எங்கள் ஜைமினிய குருமுறை மிகமிகத் தொன்மையானது. வேதங்கள் எழுந்து செறிந்த காலகட்டத்தை மூன்றென வகுப்பதுண்டு. முதல் கட்டத்தில் வருணனே முழுமுதற்தெய்வம். பின்னர் இந்திரன் தெய்வமானான். இன்று பிற தெய்வங்கள் முதன்மைகொண்டு எழுந்து வருகின்றன. எங்கள் குடி வாருணவேதம் இங்கு திகழ்ந்த அக்காலத்திலேயே வேதமுதன்மைகொண்டிருந்தது.”

அவன் விழிகளை பைலன் நோக்கிக்கொண்டிருந்தான். அவை சிறுவருடையவை என பளபளத்தன. “அன்று இருந்த வாருணவேதத்தின் ஒரு கைப்பிடி அளவே நாலென வகுக்கப்பட்ட வேதத்தில் உள்ளது என்பார்கள் எங்கள் குலமூதாதையர். அன்று தந்தை தன் மடியில் மைந்தனை வைத்திருப்பதுபோல வருணன் தன் நீரால் மண்ணை வளைத்து அருள்செய்திருந்தான். வருணனுக்கான பாடல்களை மட்டும் ஜைமினிய குருமுறைமையில் தனியாகத் தொகுத்து வைத்திருக்கிறோம். அவற்றை நாங்கள் பாடி மழை வரவழைப்பதுண்டு.”

“மேற்கே சோனகநாட்டு பெருமணல்உலகை நோக்கிச் செல்லும் வழிகளினூடாகச் சென்றால் வறண்ட மலையடுக்குகள் வரத்தொடங்குகின்றன. கூர்முட்களையே இலைகளாகக்கொண்ட குட்டைப்புதர்களும் எலிகளும் கீரிகளும் மட்டும் வாழும் அம்மலைகளில் தொன்மையான வாருணக்குடிகள் வாழ்கின்றனர். அனல்சுட்ட கல் என செந்நிற மக்கள். குழல் செந்நிறம். விழிகள் பச்சைக்கற்கள்போன்றவை. அவர்களின் ஆலயங்களில் தவளைகள் சூழ வருணன் அமர்ந்து அருள்புரிகிறான்” என்றான் சண்டன்.

“புழுதியின் நிலம். பெருங்காற்றுகளின் நிலம். செடிகளுக்கு கசப்பும் விலங்குகளுக்கு நஞ்சும் மானுடருக்கு சினமும் மிகுதி அங்கு. அணுகமுடியாத முட்புதர்கள் என அம்மக்களைச் சுட்டுவர் வணிகர். ஆண்டுக்கு மூன்று மழை என்பதே அங்குள்ள கணக்கு. பன்னிரு மாதங்களும் அந்த நீர்த்துளிகளைக்கொண்டே அவர்கள் வாழவேண்டும். அவர்களின் பாடல்கள் அனைத்தும் வான் நோக்கிய மன்றாட்டுகளே” என்று சண்டன் சொன்னான். “தொல்வேதம் வாருணத்தை அவர்களிடமிருந்தே பெற்றுக்கொண்டது.”

ஜைமினி சினத்துடன் “வேதம் அந்த அசுரகுடிகளிடமிருந்து எழுந்ததா? என்ன சொல்கிறீர்?” என்று சீறினான். “அந்தணரே, தொல்வேதத்தின் தெய்வங்கள் அனைத்தும் அசுரர்களிடமிருந்து பிறந்தவர்களே. குபேரன் ஓர் அசுரன் என்றே சொல்கின்றன நூல்கள். இலங்கையாண்ட ராவணனும் உடன்பிறந்தாரும் அவன் இணைக்குருதியினர். வருணனும் அசுரபிறப்பு கொண்டவன் என்று வேதம் சொல்கிறது. வேதம்கேட்டும் அவிகொண்டும் அவன் தேவர்களுக்கு தெய்வமாக ஆனான் என்கின்றன. நீர் வேதம் கற்றிருக்கிறீர், முழுதாக அல்ல.”

அந்தக் குரலில் இருந்த கூர்மை ஜைமினியை சொல்லமையச் செய்தது. அவன் விழிகளில் சீற்றம் தெரிந்தது. அதுவரை இருந்த எள்ளல்முகம் மறைய சண்டனின் குரல் மன்றமர்ந்து மெய்யுசாவும் ஆசிரியனுக்குரியதாக மாறியது. “வருணன் அசுரன் என்று கூறும் ரிக்வேதப்பாடல்கள் பல உள்ளன. அசுரர்களின் தலைவன், அசுரருக்கு அருளும் தெய்வம். விருத்திரனை அழிக்க இந்திரன் எழுந்தபோது இந்திரனுக்குத் துணைநின்றமையால் வருணன் தேவர்களுக்கும் தெய்வமாக ஆனான்.”

ஜைமினி நெடுநேரம்  தலைகுனிந்து ஒன்றும் சொல்லாமல் வந்தான். பின்பு தொண்டையைச் செருமியபடி “வருணனும், மித்ரனும், அர்யமானும், பகனும், அம்சனும் அதிதிதேவிக்கு பிறந்தவர்கள். அவர்களை ஆதித்யர்கள் என்று கொள்வது வேதமரபு. வேதங்களில் பகனுக்கும் அம்சனுக்கும் வாழ்த்தும் இறைஞ்சலும்  இல்லை. மித்ரனும் வருணனும் இணைந்தே தெய்வங்களாக சொல்லப்படுகிறார்கள். அவ்வப்போது அர்யமானும் சேர்த்துக்கொள்ளப்படுவதுண்டு” என்றான்.

அவன் தான் கற்றவற்றை சொல்ல விழைகிறான் என உணர்ந்த பைலன் சண்டனை நோக்கினான். புதியதாக கேட்பவனைப்போல அவன் விழிகூர்ந்தான். அந்தக் கூர்தலே அவனை அறிஞனாக்குகிறது என பைலன் எண்ணிக்கொண்டான். “மண்ணில் உள்ள அனைத்தையும் வெல்லும் ஆற்றல் கொண்ட பேருருவன் என்பதனால்தான் வருணன் அசுரன் என்று சொல்லப்படுகிறான். வேதச்சொல் அறிந்து நுண்மைகொண்டவன் என்பதனால் கவிதமன் என்றும் விண்வடிவாக எழுபவன் என்பதனால் மாயாவான் என்றும் அவனை சொல்கிறார்கள். மண்ணிலுள்ளவர்களுக்கு அரசன் என்றும் விண்ணவர் வணங்கும் தேவன் என்றும் அவனைச் சொல்கின்றனர் முன்னோர்.”

“மித்ரனும் வருணனும் வேதங்களில் நரர்கள் என்று சுட்டப்படுவதுண்டு என அறிந்திருக்கிறீரா?” என்றான் சண்டன். “ஆம்” என்றான் ஜைமினி. “அவர்கள் மண்ணில் வாழ்ந்த அரசர்கள். விண்புகுந்தபின் தெய்வமானவர்கள். அவர்கள் அரசர்கள் என்றால் எவருடைய அரசர்கள்?” என்று சண்டன் கேட்டான். ஜைமினி அவன் மேலே பேசட்டும் என காத்திருந்தான். “மேற்குமலைக்குடிகள் கடலோரம் வாழ்ந்தவர்கள். மூதாதையரை கடலில் விடும் வழக்கம் கொண்டவர்கள்.  உயிருடன் கொந்தளிக்கும் கடல் அவர்களின் மூதாதையரின் உயிரின் பெருந்தொகை என அவர்கள் எண்ணுகிறார்கள். மழையை கடல்தேவனின் ஆடை என்கிறார்கள். வரமளிப்பவனாகையால் அத்தேவன் வருணன்.”

“பருவம் தவறாது மழைபொழிவதும் பனிஎழுவதும் வெயில் விளைந்து மூத்து கனிவதும் இப்புடவியின் தாளம் என்று அவர்களின் தொல்பாடல்கள் சொல்கின்றன. அதை அவர்கள் ருதம் என்கின்றனர்” என்றான் சண்டன். “ஆம். அச்சொல் வேதங்களில் அறமென்னும் பொருளில் அமைந்துள்ளது” என்றான் பைலன். “ருதத்தைக் காப்பவன் வருணன் என்று வேதங்களும் சொல்கின்றன. ஓயா தாளம் திகழும் கடலே நிலத்தின் உயிர்களிலும் விசைகளிலும் திகழும் தாளங்கள் அனைத்துக்கும் அடிப்படை.”

“வருணனை வேதம் போற்றுகிறது” என்றான் சண்டன். “நெறிகளின் தலைவன். பலிவிலங்கின் தோல் என புவியை வான் நோக்கி விரித்தவன். ஆதித்யர்கள் புவியை சுற்றிவரும்படி அமைத்தான். சூரியனால் பூமியை அளக்கிறான். அவன் செல்ல பாதையை அமைத்தளிக்கிறான். ஆண்டு, மாதம், நாள், பகல், இரவு  என அதை பகுத்தான். யக்ஞம் ரிக் என அதை செலுத்தினான். மரங்கள் மேல் வெளியை கவித்தவன். குதிரைக்கால்களில் ஆற்றலையும் பசுக்களில் பாலெனும் கனிவையும் உள்ளங்களில் ஊக்கத்தையும் நீரில் நெருப்பையும் வானில் கதிர்களையும் மலைமுகடுகளில் ஊற்றுக்களையும் அமைத்தவன்.”

“மழை பெய்வதும் பயிர் வளர்வதும் அவனால். வருணனின் ருதத்தின்படியே நதிகள் தேங்காமல் ஓடுகின்றன. ஆற்றுநீர் கடலை நிரப்புவதில்லை. வருணன் எல்லைகளை காக்கிறான்” என்று ஜைமினி தொடர்ந்து பாடினான். “பிறர் பிழைகள் எங்கள் மேல் படராதொழிக! மூதாதையர் பிழைகளுக்கும் நாங்கள் பொறுப்புகொள்ளாமல் ஆகுக!” என்றான் பைலன். ஜைமினி புன்னகை செய்தான். “மித்ரனும் வருணனும் எளியோனை அறிவனாக்குகிறார்கள். அறிவனை மெய்மையுணரச் செய்கின்றனர். வழிகாட்டி அழைத்துச்செல்கிறார்கள்.”

“ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் சண்டன்.   பைலன் “இத்தனைக்கும் பிறகு நமக்கு நீரூற்றை காட்டியாகவேண்டும் வருணன்” என்றான். சண்டன் புன்னகைத்து “அணுகிக்கொண்டிருக்கிறோம்” என்றான். “எப்படி சொல்கிறீர்கள்?” என்றான் ஜைமினி. “கருங்குரங்கின் ஓசை…” என்று சொல்லி சண்டன் சிரித்தான். “வருணனின் முழவல்லவா அது?”

[ 2 ]

இமயப்பனிமலைகளில் இருந்து மேற்கே சென்று புழுதிபடிந்து குளிர்ந்து உயிரசைவின்றிக் கிடந்த அரைப்பாலை நிலத்தில் இறங்குவதற்கு வணிகப்பாதை ஒன்றிருந்தது. வேனிலில் கீழ் நிலத்தில் இருந்து உப்புவணிகர்கள் படைக்கலங்களும், மரவுரியும், உலோகப்பொருட்களும் பிறவும் சுமக்கும் அத்திரிகளையும் கழுதைகளையும் ஓட்டியபடி மேலேறி வருவார்கள். மலைக்கம்பளியும், அருமணிகளும் கொண்டு கீழிறங்கிச் செல்வார்கள். சுழன்று காற்றிலிறங்கும் கருமணிமாலை என அவர்களின் குழுக்கள் தோற்றமளிக்கும். அவர்களுடன் வரும் சூதர்களின் பாடலோசையும் முழவொலியும் அந்த மணிகளை இணைக்கும் பொற்பட்டுநூல் என தோன்றும்.

மலைவணிகர்களுடன் அர்ஜுனன் கீழிறங்கிச் சென்றான். அவன் வில்லவன் என்று அறிந்ததுமே வழிப்பணமும் உணவும் அளித்து காவலுக்கு அமர்த்திக்கொண்டனர் வணிகர். ஒருமுறை மலையிடுக்கு ஒன்றிலிருந்து தொல்குடிக் கள்வர் சிலர் தலையெடுத்ததும் அர்ஜுனன் தன் நாணொலியை எழுப்பினான். அக்கணமே அவர்கள் அஞ்சிச் சிதறி ஓடி மறைந்தனர். “வெந்நீரில் எறும்புகள் போல ஓடுகிறார்கள். எதைக் கண்டனர் இவர்கள்?” என்றான் பெருவணிகன் மார்த்தாண்டன். “நான் தேர்ந்த வில்லவன் என அவர்கள் உணர்ந்திருப்பார்கள். அச்சம் அனைத்தையும் எளிதில் புரியவைக்கும் ஆற்றல்கொண்டது” என்றான் அர்ஜுனன்.

“வீரரே, நீங்கள் பாண்டவனாகிய அர்ஜுனனை அறிவீரா?” என்றான் நிகும்பன் என்னும் இளவணிகன். “அவர் இப்போது விண்ணுலகில் உலவிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.” அர்ஜுனன் புன்னகை செய்தான். “அவர் வில்லின் புகழ்கேட்டே இங்கே இளமைந்தர் வளர்கிறார்கள்” என்றார் முதுவணிகனாகிய கருணன். “அறத்தின்பொருட்டு கானேகியவர்கள். வெற்றியின்பொருட்டு விண்ணேகியிருக்கிறார்கள்” என்றான் நிகும்பன். “விண்ணேகிய பின் அங்கிருந்து அம்புகளையா பெற்று மீளவேண்டும்?” என்றான் மார்த்தாண்டன்.

“வில் என்பது உள்ளம். அம்பென்பது எண்ணம். கூரிய அம்பென்பது ஆற்றல்கொண்ட எண்ணம். மாபெரும் அம்புகள் மெய்யறிதல்களேயாகும்” என்றார் கருணன். “இறுகியும் வளைந்தும் நாணொலித்தும் தளர்ந்தும் அம்புகளை ஏவிக்கொண்டே இருக்கும் உள்ளம் இடைவிடாது வானத்துடன் உரையாடிக்கொண்டிருக்கிறது என்பார்கள் கவிஞர்கள்.” நிகும்பன் “அவர் மெய்யறிந்து முனிவராகவே மீண்டு வருவார்” என்றான்.

மலையிறங்கி புழுதிக்குளம்போலிருந்த சிற்றூர் ஒன்றுக்கு அவர்கள் வந்தனர். பிங்கலம் என்னும் அச்சிற்றூரில் இருபது குடில்களே இருந்தன. அவையும் மலைக்காற்றில் வந்த சருகுகளும் புழுதியும் மூடி தொலைவிலிருந்து நோக்கினால் இல்லங்களென்று தெரியாதபடி தோன்றின. ஊர்முகப்பில் நாட்டப்பட்ட பெரிய மூங்கிலில் பறந்த பச்சைநிறமான கொடி ஒன்றே அங்கு மானுடர் இருப்பதற்கான சான்றாக இருந்தது.

அத்திரிகளின் குளம்போசை கேட்டதும் அவ்வூரிலிருந்து கூச்சலிட்டபடி ஏழெட்டுபேர் அவர்களை நோக்கி ஓடிவந்தனர். புழுதியடர்ந்த கம்பளியாடை அணிந்து கம்பளியாலான தலையுறையும் அணிந்திருந்தமையால் காட்டுக்கழுதைகள் என்றே அவர்கள் தோன்றினர். பொதிவண்டிகளை அணுகி அவற்றின் கடிவாளங்களை பற்றிக்கொள்ள முண்டியடித்தனர். “பெருவணிகர்களே, இனிய நீரும் வெம்மையான படுக்கையும்” என்று ஒருவன் கூவினான். “தளரா இளமுலைகொண்ட பெண்கள். இன்னுணவு” என்று இன்னொருவன் சொன்னான்.

“விலகுங்கள்! அகலுங்கள்!” என்று வணிகர்கள் அவர்களை தள்ளிவிட்டனர். “வணிகர்களே, நான் முதலில் வந்தேன். நானே முதலில் அழைத்தேன்” என்றான் ஒருவன். “என் இன்னுணவை வணிகர் விரும்புகிறார். வணிகரே, மலையணிலை உயிருடன் வைத்திருக்கிறேன். நீங்கள் நோக்கியபின் அதை சுடுவேன்” என்றான் இன்னொருவன். “இனிய கீரி… உடும்பு” என்று ஒருவன் அர்ஜுனனின் கையை பற்றினான். “வெம்மையான தோள்கள் கொண்டவள் என் மனைவி. இனிய சொல்லாடல் கற்றவள்.” மேலும் மேலும் ஊரிலிருந்து மக்கள் வந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் ஊரை அணுகியதும் பெண்களும் குழந்தைகளும் ஓடி வெளியே வந்துவிட்டார்கள். பெண்கள் குளம்போசை கேட்டதுமே முகம் கழுவி குழல் திருத்தி ஆடை மாற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது. அங்கிருந்த பாறைகள்போல செம்மஞ்சள் நிறமான தோல். சிறிய நீலப்பச்சை விழிகள். விழிகளைச் சூழ்ந்தும் வாயைச் சுற்றியும் சுருக்கங்கள் செறிந்திருந்தன. மிகச்சிறிய உதடுகள் உள்ளிழுத்துக்கொண்டவை போலிருந்தன.

வணிகர்கள் பெண்களை தழுவிக்கொண்டார்கள். அவர்களை அப்பெண்கள் தோள்வளைத்து உள்ளே அழைத்துச் சென்றனர். பணியாளர் அத்திரிகளையும் கழுதைகளையும் அழைத்துச்சென்று ஊர்மன்றில் நிறுத்தி பொதிகளைக் கழற்றி கீழிறக்கினர். அவற்றை மையத்தில் ஒன்றாகக் குவித்து கயிறு செலுத்தி சேர்த்துக்கட்டினர். அத்திரிகளை அங்கிருந்தவர்கள் அழைத்துச்சென்று மரத்தொட்டிகளிலிருந்த நீரை அளித்தனர். பெருமூச்சுவிட்டு உடல்சிலிர்த்தபடி அவை நீர் அருந்தும் ஒலி கேட்டது.

“நம்மவர் ஒரு காவலர் இங்கிருந்தால் போதும், வீரரே” என்றார் கருணன். “இவர்களே காவல் நோக்குவர். இவர்களில் விழைவுகொண்ட சிலர் இருக்கக்கூடும் என்பதனால் நாமும் ஒரு நோக்கு கொண்டிருக்கவேண்டும், அவ்வளவுதான்.” அர்ஜுனன் “நான் இங்கிருக்கிறேன்” என்றான். “வேண்டியதில்லை. நீங்கள் இளைப்பாறலாம். இதெல்லாம் எங்களுக்குப் பழக்கமானவை” என்றான் வாகுகன் என்னும் இளவணிகன். “தாழ்வில்லை. நான் இங்கேயே இளைப்பாற முடியும்” என்றான் அர்ஜுனன்.

“நானும் உடனிருக்கிறேன்” என்றான் வாகுகன். பிறர் நீர் அருந்தவும் இளைப்பாறவும் அங்கிருந்த சிற்றில்களுக்குள் சென்றனர். குழந்தைகள் அவர்களைச் சூழ்ந்து நின்று வேடிக்கை நோக்கின. மூக்கு கூர்ந்த குழந்தைகள் செந்நிற உருளைக் கற்கள் போலிருந்தன. அவற்றின் நீலவிழிகளை நோக்கிய அர்ஜுனன் “இவர்கள் யவனரா?” என்றான். “யவனரும் இவர்களும் ஒரே குலம் என்கிறார்கள். ஆனால் இவர்களை பிங்கலர் என்பதே வழக்கு.”

அச்சிற்றூரின் மேற்கு மூலையில் இருந்த சிறிய தெய்வப்பதிட்டையை அர்ஜுனன் கண்டான். அருகே சென்று அதை நோக்கினான். நீளமான சப்பைக்கல் மேல் செந்நிறத்தில் ஒரு குத்துக்கல் நிறுத்தப்பட்டு விழிகள் வரையப்பட்டிருந்தன. அருகே பிறிதொரு விழிதிறந்த கல். “இது வருணன். துணைவி வருணையுடன்” என்றான் வாகுகன். வருணன் அணிந்திருந்த மாலையை அர்ஜுனன் குனிந்து நோக்கினான். “முதலைப் பல்லால் ஆன மாலை” என்றான் வாகுகன். “வருணை சங்குமாலை அணிந்திருக்கிறாள்.”

“இங்கு மழைபெய்வதுண்டா?” என்றான். “பெய்வதுண்டு, ஆனால் மழைக்காலம் என்று ஒன்றில்லை. மேலே பனிமலைகளில் என்ன நிகழ்கிறதென்பதே மழையை வருவிக்கிறது” என்றான் வாகுகன். “இவர்களே அதை நோக்கி சொல்வார்கள். மேலே வடமேற்குமூலையில் புகை எழுந்தால் மழை வரும் என்பார்கள்.” அர்ஜுனன் “வடமேற்கிலா?” என்றான். “ஆம், இவர்களின் மழை என்பது தென்கிழக்கில் இருந்து வந்து மலைமேல் சுழன்று இங்கே இறங்குவது” என்றான் வாகுகன்.

பிங்கலமுதியவர் ஒருவர் அருகே வந்து “வருணனின் அருள் உண்டு” என்றார். அர்ஜுனன் “எப்போது?” என்றான். “நேற்று முன்நாள் என்மேல் ஏறிவந்து அவன் தன் வருகையை சொல்லிவிட்டான். நாளையோ மறுநாளோ மழை விழும்” என்றார் அவர். “அகிபீனா இவர்களின் உணவுபோல. இவர்களின் உள்ளம் இயங்குவதே அக்களிமயக்கில்தான்” என்றான் வாகுகன்.

அர்ஜுனன் “மழைபெய்வதை உறுதியாகச் சொல்வீரா?” என்றான். “வருணன் நெறிகளுக்கு கட்டுப்பட்டவன். இங்கு வீசும் ஒவ்வொரு காற்றும் அவன் தாளத்தின்படியே” என்றார் பிங்கலமுதியவர். அர்ஜுனன் அவரை சிலகணங்கள் நோக்கியபின் “பொதிகளை தோலுறையால் நன்கு மூடுவோம்” என்றான். “இவர் அகிபீனா மயக்கில் பேசுகிறார். இப்போது மழையெழும் குறியே இல்லை” என்றான் வாகுகன். “இவ்வூரில் எவருமே நம்மை எச்சரிக்கவில்லை.”

“நாம் பொதிகளை மூடுவோம். நான் இவரை நம்புகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “தங்கள் ஆணை!” என்றான் வாகுகன். அவர்கள் மெழுகுபூசப்பட்ட தோலுறையை எடுத்து பொதிகளை நன்றாக மூடி மழைநீர் புகாதபடி செருகினர். அவ்வழியாக கையில் மதுக்குடுவையுடன் சென்ற கருணன் “மழைபெய்யப்போகிறதா என்ன? அகிபீனா அருந்திவிட்டீர்களா அதற்குள்?” என்றபடி சென்றார். “மழை வரும்” என்றார் பிங்கலமுதியவர்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 27

[ 8 ]

பொன்னகரின் தெரு வழியாக அர்ஜுனன் நடந்துசென்றான். அங்கு மாளிகைகள், காவல்மாடங்கள் அனைத்தும் பொன்னென மின்னின. செடிகளும் மரங்களும் பொன்னென்றிருந்தன. முகில்கள் பொன். அவற்றை எதிரொளித்த சுனைநீர்ப்பரப்பும் பொன். அங்கே மிதந்தலைந்த கந்தர்வரும் கின்னரரும் தேவரும் பொன்னுருவர். அளகாபுரியின் காவல் வீரரும் ஏவலாளரும் பொன்னுடல்கொண்டிருந்தனர். பொன்னென்றாகியது தன் விழியோ என்று அவன் ஐயுற்றான்.

நகரின் எவ்விழிகளும் அவன் உள்நுழைந்ததையும் ஊடுருவி கடந்து செல்வதையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொருவர் விழிகளையும் அவன் உற்று நோக்குகையில் அறியாத உணர்வொன்றால் அவர்கள் இமை சுருங்குவதையும் சிலர் உடல் சிலிர்த்து புது எண்ணம் ஒன்று எழ அருகில் நிற்பவரை திரும்பி நோக்குவதையும் கண்டான். அவர்கள் கொண்ட தடுமாற்றம் அவனை மலர்ந்து நகைக்கவைத்தது.

விந்தையான களியாட்ட உணர்வொன்றெழ தன் முன்னால் சென்றுகொண்டிருந்த கந்தர்வப் பெண்ணொருத்தியின் தோள்களை மெல்ல தொட்டான். திடுக்கிட்டுத் திரும்பி நோக்கி அருகே வந்துகொண்டிருந்த கந்தர்வனை அவள் பொய்ச்சினத்துடன் மெல்ல அடித்தாள். அது அவனுக்கு உளக்கொண்டாட்டத்தை அளித்தது. அவள் பின்குழைவை பற்றினான். அவள் படபடப்புடன் திரும்பி அந்த கந்தர்வனை நோக்க அவன் திகைத்து “என்ன?” என்றான். அவள் முகம் சிவந்து நோக்கை விலக்கிக்கொண்டாள்.

அந்நகரின் தெருக்களினூடாக பொன்வடிவ கந்தர்வர்களின் கால்களுக்கு நடுவே தன் கால்களைப் புகுத்தி நடை இடற வைத்தான். கன்னியரின் கூந்தலைப்பற்றி இழுத்து அவர்களை சினந்து திரும்ப வைத்தான். சிறு குழந்தைகள் முன் சென்று அவர்களின் விழிகளுக்குள் உற்று நோக்கி அஞ்சி அழவைத்தான். ஓடிவந்து எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு சுற்றும் நோக்கிய அன்னையர் குழந்தைகளை முத்தமிட்டு ஆறுதல் உரைத்து அணைத்து கொண்டு சென்றனர்.

நகர் நடுவே கடற்பாறையில் சிப்பிகள் அடர்ந்திருப்பதுபோல பல்லாயிரம் உப்பரிகைகளுடன் ஓங்கி நின்றிருந்த அரண்மனை அமைந்திருந்த உள்கோட்டையை நோக்கி அவன் சென்றான். பொன்னாலான பெருஞ்சுவர் சூழ்ந்த அவ்வளாகத்தின் முகப்பில் இருந்த ஒற்றை வாயிலொன்றே உள்நுழைவதற்கும் வெளிவருவதற்கும் உரியதாக இருந்தது. இறுக மூடப்பட்டு மின்னும் கரிய இரும்பால் தாழிடப்பட்டிருந்தது.

அந்தத் தாழுக்கு இருபுறமும் பொன்னுடல்கொண்ட இரு காவலர் பொன்னாலான படைக்கலங்களுடன் நின்றிருந்தனர். அர்ஜுனன் அவர்களை நெருங்குகையில் அவன் வருவதை அவர்களும் பார்த்துவிட்டிருந்தனர். ஒருவன் சினத்துடன் தன் கைவேலை நீட்டியபடி முன்னால் வந்து “யார் நீ? மானுடனா? எங்ஙனம் இதற்குள் நுழைந்தாய்?” என்றான். பிறிதொருவன் “மானுடர் இதற்குள் நுழையும் வழியே இல்லை. நீ மானுட வடிவுகொண்டு வந்த அரக்கன்” என்றான்.

அர்ஜுனன் “நான் குருகுலத்து இளவல், பாண்டவன். என் பெயர் பார்த்தன். உங்கள் அரசரைக் கண்டு பொருள்விளையாடி வென்றுசெல்ல வந்தவன்” என்றான். இருவரும் திகைத்து ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். “வென்று செல்வதற்கென்று நீயே முடிவு கட்டிவிட்டாயா?” என்று ஒருவன் மீசையை நீவியபடி சினத்துடன் கேட்டான். “ஆம். வெல்லும்பொருட்டே எச்சமரிலும் இறங்குவது என் வழக்கம். இதுவரைக்கும் எக்களத்திலும் தோற்றதில்லை. தோற்றபின் வாழும் எண்ணமுமில்லை” என்றான்.

இன்னொருவன் “இக்கோட்டைக்குள் கந்தர்வர்களோ கின்னர கிம்புருடர்களோ வித்யாதரர்களோ தேவர்களோ இதுவரை நுழைய ஒப்பளிக்கப்பட்டதில்லை. மானுடன் நுழைவதை எண்ணியும் பார்க்க முடியாது” என்றான். “இங்கு ஒரு மானுடன் வந்து நின்று உங்கள் அரசனை சொல்லாடவும் பொருளாடவும் அறைகூவுகிறான் என்று அவனிடம் சென்று சொல்லுங்கள்” என்றான் அர்ஜுனன்.

“எச்செயலையும் நாங்களேதான் செய்ய வேண்டும்” என்றான் காவலன். “நாங்கள் உள்ளே என்ன நிகழ்கிறதென்று அறிவதே இல்லை.” அர்ஜுனன் “எப்படியாயினும் இவ்வரணைக் கடந்து மறுபக்கம் நான் செல்வது உறுதி. சென்றபின் நீங்கள் வரவறிவிக்கவில்லை என்று உங்கள் அரசரிடம் சொல்வேன். அது பிழையென்றால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்” என்றான்.

இருவரும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். பின்னர் ஒருவன் “வீரரே! இவ்வாயிலை வெளியிலிருந்து எவரும் திறக்க முடியாது. இத்தாழின் திறவி என ஏதுமில்லை. பலநூறு முறை கந்தர்வர்கள் இதை திறக்க முயன்றிருக்கிறார்கள். அங்ஙனம் முயன்ற அனைவருமே நிழலுருக்களாக மாறி இப்பொன்னெயில் செதுக்குகளின் வளைவுகளில் படிந்து மறைந்துவிட்டார்கள். முடிந்தால் நீர் இதைத் திறந்து உள்ளே செல்லலாம்” என்றான்.

அர்ஜுனன் அந்தக் கதவை அணுகி தன் பொன்னுருவம் அதில் தெளிந்தெழுவதை ஒருகணம் நோக்கி நின்றான். அதிலிருந்த சித்திரச் செதுக்குகளால் அவ்வுரு சிதறிப்பரந்தும் உருவழிந்து நெளிந்தும் தோன்றியது. மலர்களும் தளிர்களும் கொடிகளுடன் பின்னிப் பிணைந்து உருவாகியிருந்த அதன் நுண்ணிய சிற்பச் செதுக்குகளுக்குள் பல்லாயிரம் கந்தர்வர்களும் கின்னரர்களும் முனிவரும் அரசரும் பெருவணிகரும் தெளிந்தும் மறைந்தும் முகம் காட்டினர். நோக்க நோக்க அவ்விழிகள் அனைத்தும் உயிர் கொண்டன. அறியா பெருங்களிப்பொன்றில் மூழ்கி அவை அமைந்திருந்தன. யோகத்தில் அமர்ந்த முனிவர்களுக்கு நிகர் என்று அவன் எண்ணிக்கொண்டான்.

அர்ஜுனன் திரும்பி காவலனிடம் “பூட்டு என்றால் அதற்கொரு திறவுகோல் இருந்தாகவேண்டும்” என்றான். “நாங்கள் இங்கு இக்கோட்டை உருவான முதற்கணம் முதல் காவல் இருக்கிறோம். எங்களுக்கு காலம் மடிப்புறுவதில்லை. இக்கணம் வரை இதற்கு ஒரு திறவி உண்டென்று அறிந்ததில்லை” என்றான். இன்னொருவன் “உள்நுழைய விரும்பும் ஒவ்வொருவரும் இதை வந்து நோக்கி இதன் திறவுமுறையை கணித்து திறவி செய்து கொண்டு வருகிறார்கள். இப்பூட்டு இதுவரை எதையும் ஏற்றுக்கொண்டதில்லை” என்றான்.

அர்ஜுனன் கல்லிரும்பு உருக்கி செய்யப்பட்ட அப்பெருந்தாழை கைகளால் தொட்டுப்பார்த்தான். அதன் பூட்டு ஒற்றை வாய் திறந்திருக்க எடை கொண்டு இரும்பு வளையத்தில் தொங்கியது. அப்பூட்டின் வளையத்திற்குள் கைவிட்டு காலால் கதவை உதைத்து இழுத்தான். “என்ன செய்கிறீர்?” என்று ஒருவன் கேட்டான். “அதை அகற்ற முயல்கிறீர்களா? அப்பெருந்தாழையா?” என்றான் இன்னொருவன். “மூடரே அதைச் செய்வர். அது பேரெடை கொண்ட இரும்புத்தாழ்.”

ஆனால் இரும்புத்தாழ் பொற்கதவிலிருந்து மெல்ல நெகிழ்ந்து ஆணிகள் பிழுதுகொண்டு பெயர்ந்து வந்தது. “வருகிறது” என்றான் ஒருவன் திகைப்புடன். இன்னொருவன் அருகே வந்து “தனியொருவனாகவா? நீர் யார்?” என்றான்.

முழு உடலும் நரம்புகள் புடைக்க தசைநார்கள் விம்மி விசைகொண்டு இறுகி நிற்க பற்களைக் கடித்து மூச்சனைத்தையும் திரட்டி இழுத்து அசைத்து அத்தாழைப் பிழுது கையிலெடுத்த அர்ஜுனன் அதன் எடை தாளாமல் சுழன்று மல்லாந்து கீழே விழுந்தான். எடையின் ஓசையுடன் செம்பொன்நிற மண்ணில் விழுந்து பாதி புதைந்தன தாழும் பூட்டும்.

அர்ஜுனன் கையூன்றி எழுந்து நின்று மூச்சிரைத்தபடி “இரும்புத்தாழை செம்பொன் தாளாது” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். “தூய பொன் மெழுகு போல் மென்மையானது, வீரர்களே” என்றபடி அக்கதவை ஓங்கி உதைத்துத் திறந்தான். ஓசையின்றி அது விலகித் திறக்க உள்ளே நிறைந்திருந்த ஒளிமிக்க பொன்நிற வெளியில் புதைபவன்போல் எழுந்து நடந்து சென்றான்.

குபேரனின் அரண்மனை வாயிலில் நின்ற பொன்னிழலுருவ வாயிற்காவலர் அவனைக்கண்டு திகைத்து விழிவிரித்தனர். அஞ்சியவர்கள் போல பின்னடைந்து பின் கூச்சலிட்டபடி பதறும் காலடிகளுடன் படைக்கலம் தூக்கி முன்னெட்டுவைத்தனர். சற்றும் அஞ்சாது அவன் அணுகியதும் சிலர் செய்தி சொல்ல உள்ளே ஓடினர். சிலர் அவனை நோக்கி ஓடிவந்து படைக்கலங்களைத் தூக்கி தாக்க முயன்றனர். “மூடர்களே, இத்தனை தடைகளைக் கடந்து வந்தவனால் உங்களையா வெல்ல முடியாது?” என்றான் அர்ஜுனன் கடுஞ்சினத்தோற்றத்துடன்.

உளம் தளர்ந்து அவர்களில் பலர் நின்றுவிட்டனர். படைக்கலங்கள் தாழ்ந்து நிலம் முட்டி ஒலியெழுப்பின. ஊக்கத்தின்பொருட்டு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்க அவர்களில் சற்றேனும் துணிவுடையவர் எனத் தோன்றியவர்களை நோக்கி “மானுடனிடம் தோற்றபின் தெய்வகணங்களுக்கு மீட்பே இல்லை என்றறிக! விலகினால் தோல்வி தவிர்க்கப்படும்…” என்றான். அவர்கள் விழி தாழ்த்தி முகம் திருப்பிக்கொண்டனர்.

மேலும் எதிரே வந்தவர்களிடம் அவன் உரக்க “என்னை உள்ளே விடுபவர்களுக்கு அவர்கள் எண்ணியிராத பரிசுகள் அளிக்கப்படும்” என்றான். “அப்பரிசுகளை அவர்களுக்கு பிறர் அறியாமல் அளிக்கவும் நான் சித்தமே” என்று மெல்லிய குரலில் சொன்னான். விழிகள் நிலைகொள்ளாமல் உருள ஒருவரை ஒருவர் நோக்கியபடி அவர்கள் படைக்கலம் தாழ்த்தி தயங்கினர். “உங்கள் விழைவுகளுக்கேற்ப பரிசளிப்பேன்… இங்குள்ள பெருமதிப்புப் பொருட்கள். இங்கில்லாதவை…” என்றபடி அர்ஜுனன் அவர்களை நெருங்கி அந்தப் படைக்கலங்களை கைகளால் விலக்கி அப்பால் சென்றான்.

இடைநாழியில் அவன் காலடி வைத்ததும் அந்த மாளிகை எங்கும் பலநூறு எச்சரிக்கை மணிகள் ஒலிக்கலாயின. பொன்னாலானவை என்பதனால் அவை ஆழ்ந்த ஓசை எழுப்பவில்லை. அரண்மனையின் அறைகள், வழிகள், படிக்கட்டுகள் எங்கும் பொற்கலங்களும் மணிநிறைந்த பெட்டகங்களும் பிற அரும்பொருட்களும் குவிக்கப்பட்டிருந்தன. அவற்றினூடாக ஒற்றையடி வைத்து உடல்நெளித்துச் செல்லவே இடமிருந்தது. அவனை அஞ்சிய ஏவல்கணங்கள் அப்பால் நின்று கூச்சலிட்டன. துணிவுகொண்டு அணுக முயன்ற காவல்கணங்களை நோக்கி அவன் பொற்கலங்களை காலால் உதைத்து உருட்டிவிட்டான். அவை அச்செல்வத்தை மிதிப்பதற்கு அஞ்சி துள்ளிக்குதித்து விலகி ஓடின.

கதவுகளைத் திறந்து திறந்து சென்ற அர்ஜுனன் அரசவையில் கொலுவிருந்து செல்வப்பேருலகின் செய்திகளை கேட்டுக்கொண்டிருந்த குபேரனின் முன் சென்று நின்றான். பொற்தூண்கள் சூழ்ந்து நின்ற நீள்வட்ட வடிவ அரசவையில் ஏழுலகத்திலும் உள்ள செல்வங்களை ஆளும் தெய்வங்களும் தேவர்களும் அமர்ந்திருந்தனர். குபேரனின் இருபக்கத்திலும் அவன் தேவியரான ரீதியும் நிதியும் அமர்ந்திருக்க அவனுக்கு மேல் இளஞ்சூரியன் என அரசக்குடை எழுந்திருந்தது.

அரியணையின் இருபக்கங்களிலும் பொன்னிற சிம்மங்கள் வாய்திறந்து விழிஉருட்டி நின்றிருந்தன. அவன் ஊர்தியான வைரக்கொம்புகள் கொண்ட வெள்ளாடு வலப்பக்கம் நின்றிருந்தது. அர்ஜுனனின் வருகையை முதலில் உணர்ந்த வெள்ளாடு வெருண்டு செவிதூக்கி ஓசையிட்டது. சிம்மங்கள் திரும்பி அறைதலோசை எழுப்ப அவை திரும்பி நோக்கியது.

அர்ஜுனன் அத்துமீறலை அங்கே காவலர் அறிவித்துக்கொண்டிருந்தனர். ஆனால் செல்வத்தை அளாவிக்கொண்டிருந்த அவர்களின் நெஞ்சங்கள் அச்சொற்களை பொருள்கொள்ளவில்லை. குபேரனின் மைந்தர்களான நளகூபரனும் மணிக்கிரீவனும் அவனைக் கண்டபின்னரே காவலர் சொன்னதென்ன என்று உணர்ந்தனர். “பிடியுங்கள் அவனை… அவனை தடுத்து நிறுத்துங்கள்!” என்று கூவியபடி அவர்கள் வாள்களை உருவி கையில் எடுத்தபடி பின்னால் ஓடி தூண்களுக்குப்பின் ஒளிந்துகொண்டனர்.

அவையில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து ஒருவரோடொருவர் முட்டிமோதி கூச்சலிட்டபடி ததும்பினர். சிலர் கால்தடுக்கி கீழே விழுந்தனர். தூண்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு “பிடியுங்கள்… விடாதீர்கள்!” எனக் கூவினர். பலர் கைகளில் செல்வக்கிழிகள் இருந்தன. அவற்றை அவர்கள் அள்ளி எடுத்து உடலோடு அணைத்தபடி ஓடியமையால் கால்பின்னி பிறர்மேல் முட்டி நிலையழிந்தனர்.

அந்தக் குழப்பமே அர்ஜுனனுக்கு காப்பாக அமைந்தது. அவன் உரத்த குரலில் “எவரும் அஞ்சவேண்டாம்… எவரையும் நான் ஒன்றும் செய்யப்போவதில்லை” என்றான். அது அவர்களை மேலும் அச்சுறுத்தியது. குபேரனின் முடிக்குறியை தன் தலையணியில் சூடியிருந்த மணிக்கிரீவன் “நீ எப்படி உள்ளே வந்தாய்? எங்கே காவலர்கள்?” என்றான். “இளவரசே, பொன்னுக்குப் பணியாற்றுபவர்கள் எங்கும் போர்புரிவதில்லை” என்றான் அர்ஜுனன் அருகே வந்தபடி. “அணுகாதே… விலகு! கொன்றுவிடுவேன்” என்று நளகூபரன் அச்சத்தால் உடைந்த குரலில் கூவினான்.

“அவர்கள் நாள்தோறும் செல்வத்தை கண்டுகொண்டிருக்கிறார்கள். அதுவன்றி பிற ஏதும் அவர்களுக்கு பொருட்டல்ல. சிலர் அஞ்சினர். எஞ்சியவர்களுக்கு கையூட்டளித்தேன்” என்றான் அர்ஜுனன். திகைத்து முகம் காட்டி “கையூட்டா? எங்கள் காவலர்களா?” என்றான் நளகூபரன். “கருவூலக்காவலர் கையூட்டு பெறாத இடம் என ஒன்று இருக்க வாய்ப்பே இல்லை” என்றபடி அர்ஜுனன் அவை நடுவே வந்து நின்றான். “மூத்தவரே, அவரிடம் படைக்கலங்கள் இல்லை” என மணிக்கிரீவன் கூவ “வாயை மூடு, மூடா!” என்று நளகூபரன் கடிந்தான்.

அர்ஜுனன் “மேலும் உங்கள் வீரர் வைத்திருப்பவை அனைத்தும் பொன்னாலான படைக்கலங்கள். பொன் உலோகங்களில் தளிர் என்பார்கள். அது எவரையும் கொல்லாது” என்றான். மணிக்கிரீவன் “பொன்னே முதன்மையானது” என்றான். “பிற ஏதேனும் ஒன்றுக்கு நிகர்கொள்கையில் மட்டுமே அதற்கு மதிப்பு. தான்மட்டுமே இருக்கையில் பொன் பொருளற்ற மஞ்சள் ஒளி…” என்றான் அர்ஜுனன். “பொன்மட்டுமே உள்ள இப்பெருநகர் ஒரு நுரைக்குமிழி அளவுக்கே நொய்மையானது, இளவரசே!”

அவன் அவைநின்று நிமிர்ந்து நோக்கியபோது குபேரனின் அரியணை ஒழிந்து கிடந்தது. அவன் இரு தேவியரும் எழுந்து நின்றிருந்தனர். அரியணைக்குப் பின்னாலிருந்து குபேரன் மெல்ல எழுந்து நோக்குவதை அர்ஜுனன் கண்டான். அவன் நோக்கியதும் குபேரனின் மணிமுடி மறைந்தது. “அஞ்சவேண்டாம் என்று தங்கள் தந்தையிடம் சொல்லுங்கள், இளவரசே” என்றான் அர்ஜுனன்.

அருகே முதிரா இளைஞனாகிய இளவரசன் மாயூரகன் கவிழ்ந்த பீடங்கள் நடுவே ஒன்றில் அமர்ந்து தேம்பி அழுதுகொண்டிருந்தான். அர்ஜுனன் அவனை நோக்கியதும் அவன் அஞ்சி கால்களை பீடம்மேல் எடுத்து வைத்துக்கொண்டு உடலைக் குறுக்கினான். “அஞ்சவேண்டாம், இளவரசே” என்று அர்ஜுனன் சொன்னதும் அவன் மேலும் கதறினான். மணிக்கிரீவன் “அழாதே, மூடா!” என்று அதட்டியதும் அலறியபடி எழுந்து தாயை நோக்கி ஓடினான்.

அரியணை அருகே உள்ளிருந்து வந்து நின்ற இளவரசி மீனாட்சி “நீங்கள் இளைய பாண்டவர் பார்த்தர் அல்லவா?” என்றாள். அர்ஜுனன் “ஆம், நீங்கள் குபேரன் மகள் என நினைக்கிறேன்” என்றபடி அவளை நோக்கி சென்றான். “இளைய பாண்டவரை வணங்குகிறேன். நீங்கள் எப்படி குபேரபுரிக்குள் நுழைந்தீர்கள் என்று நான் உசாவப்போவதில்லை. நீங்கள் கடந்த எல்லைகளை நான் நன்கறிவேன்” என்றாள். “எப்படி?” என்றான் அர்ஜுனன். “எல்லா பெண்களையும்போல நானும் அஸ்தினபுரியின் விஜயனின் புகழ் கேட்டே வளர்ந்தேன்” என அவள் புன்னகைத்தாள்.

“அவனுக்கு என்ன வேண்டும்? கேள்! எவ்வளவு பொன் வேண்டுமென்று கேள்” என்று அரியணைக்கு அப்பால் அமர்ந்திருந்த குபேரன் சொன்னான். அர்ஜுனன் “உங்கள் செல்வத்தில் ஒருதுளிகூட எனக்குத் தேவையில்லை, வடதிசைக்காவலரே. நான் உங்களை வெற்றிகொள்ளவே வந்தேன்” என்றான். “வெற்றி என்றால்? என்னை சிறைப்பிடிக்கப்போகிறாயா? மைந்தர்களே…” என்று குபேரன் கூவினான்.

“இல்லை, ஆடலையும் களத்தையும் நீங்களே முடிவு செய்யலாம். உங்களை வென்று உங்கள் அருள்கொண்டு மீள விரும்புகிறேன்.” குபேரன் எழுந்து “ஏன் என்னை வெல்லவேண்டும் நீ? திறன்கொண்டு எழும் ஒவ்வொருவரும் என்னை வெல்லக் கிளம்புவது ஏன்?” என்றான். அழுகை கலந்த குரலில் “அசுரரும் தேவருமாக என்னை வென்றவர்கள் ஒவ்வொருவரையும் நினைவுகூர்கிறேன். ஏன் எனக்கு இந்தத் துயர்?” என்றான். அர்ஜுனன் “பொருட்செல்வத்தைக் கடக்காமல் அருட்செல்வத்தை அடையமுடியாது அல்லவா?” என்றான்.

ஆடைகளை நீவி, முடியை சீரமைத்தபடி குபேரன் எழுந்து வந்து அரியணையில் அமர்ந்து “நீ என்னை சிறைப்பிடித்து இழுத்துச்செல்ல எண்ணவில்லை அல்லவா? முன்பு இரணியன் என்னை அவன் அரண்மனையில் கட்டிவைத்திருந்தான்” என்றான். “இல்லை, நான் உங்கள் தோழராகிய இந்திரனை முதற்றாதையாகக் கொண்டவன்” என்றான் அர்ஜுனன்.

“பாண்டவரே, தந்தை அறிந்த ஆடல் என்பது ஒன்றே. பொன்னும் மணியும் வைத்து நாற்களமாடுதல்… அதில் நீங்கள் அமரலாம். அவையொருக்க ஆணையிடுகிறேன்” என்றாள் மீனாட்சி. “நன்று… அவர் அக்களத்தில் அவரது அனைத்துச் செல்வங்களையும் வைத்தாடவேண்டும்” என்று அர்ஜுனன் சொன்னான். மீனாட்சி “ஆம், அதுவே நெறி” என்றாள்.

மணிக்கிரீவன் “ஆடலுக்கு வந்தமையால் நீ திரும்பிச்செல்கிறாய். படைகொண்டு வந்திருந்தால் எங்கள் படைக்கலங்களை சந்தித்திருப்பாய்” என்றான். நளகூபரன் “அசுரர்களுக்கு அஞ்சி அளகாபுரியை அமைத்தார் எந்தை. நாங்கள் இன்று அதை நூறுமடங்கு ஆற்றல்கொண்டதாக ஆக்கிவிட்டோம்” என்றான். கண்ணீர் வழிந்து ஈரமான முகத்துடன் மாயூரகன் அன்னையின் ஆடைக்கு அப்பாலிருந்து எழுந்து வந்து அர்ஜுனனை நோக்கி புன்னகை செய்தான்.

[ 9 ]

குபேரனின் அணிமண்டபத்தில் அவன் அவைமுதல்வர் சூழ்ந்திருக்க நடுவே அமைந்திருந்தது ஆட்டமேடை. அதன் வலப்பக்கம் குபேரனின் மைந்தர்களும் இடப்பக்கம் அவன் தேவியரும் மகளும் அமர்ந்திருந்தனர். அர்ஜுனன் அவைக்குள் நுழைந்ததும் அனைவரும் எழுந்து முகமன் உரைத்தனர். அவன் ஆட்டகளத்தில் இடப்பட்ட பொற்பீடத்தில் அமர்ந்தான்.

முரசம் குபேரனின் வருகையை அறிவித்தது. கொம்புகளும் குழல்களும் வாழ்த்தொலிகளும் சூழ கந்தர்வப்பெண்கள் மங்கலத்தாலங்களுடன் முன்னால் வர பொற்குடைக்கீழ் குபேரன் நடந்துவந்தான். அரசணிக்கோலத்தில் பொன்வண்டுபோல அவன் ஒளிவிட்டான். வாழ்த்தொலிகளைக் கேட்டு முதன்முறையாக அவற்றை செவியுறுபவன்போல மகிழ்ந்து பற்கள் தெரிய சிரித்து தலையாட்டினான். வணங்கியவர்களுக்கு கைதூக்கி வாழ்த்தளித்தான்.

குபேரன் வந்து அரியணை அமர்ந்ததும் அவை அவனுக்கு வாழ்த்துரைத்து அமர்ந்தது. நளகூபரன் எழுந்து அங்கு நிகழப்போகும் ஆடலை அறிவித்தான். நிகர்வைக்கும் ஆட்டம் என்ற சொல் செவியில் விழுந்ததும் அர்ஜுனன் மீனாட்சியின் விழிகளை நோக்க அவள் சிரிப்புடன் உதடுகளை மெல்ல அசைத்து “அதேதான்” என உச்சரித்தாள். மணிக்கிரீவன் குபேரனை அவனே வெல்லக்கூடிய ஆட்டத்திற்கு எழுந்தருளும்படி அழைத்தான்.

அவைநிறைத்து அமர்ந்திருந்த அவையினரை மணிக்கிரீவன் அர்ஜுனனுக்கு அறிமுகம் செய்தான். புதுத்தளிர்களின் தேவனாகிய கோமளன், புதுக்குழவிகளின் தேவனாகிய தருணன், மண்ணில் புதைந்துள்ள பொன்னின் அரசனாகிய கனகன், ஒளிவிடும் நகைகளின் தெய்வமாகிய சுவர்ணன், கருவூலங்களை ஆளும் தேவனாகிய காஞ்சனன், செம்முகில்களின் தேவனாகிய ஹிரண்யன், முலைப்பால்களை ஆளும் சுரபன், ஒன்பது மணிகளின் அரசனாகிய நவமுகன், விழிமணிகளை ஆளும் நேத்ரன் என ஆயிரத்தெட்டு தேவர்கள் அங்கிருந்தனர்.

குபேரனின் அருகே இருபக்கமும் அவனுடைய அழியா பெருஞ்செல்வத்தின் தெய்வங்களான பத்மை, மகாபத்மை, மகரை, கச்சபை, குமுதை, நந்தை, நீலை, பத்மினி, சங்கை ஆகியோர் வந்து அமர்ந்தனர். நளகூபரன் கைகாட்ட ஏவலர் இருவர் மூன்று களங்கள் கொண்ட ஆட்டப்பலகையை கொண்டுவந்து வைத்தனர். ஆடுகளம் நடுவே முள்மட்டுமே கொண்ட துலா நிறுவப்பட்டது.

முதற்களம் குபேரனுக்கும் அதற்கு எதிர்க்களம் அர்ஜுனனுக்கும் அளிக்கப்பட்டது. மூன்றாவது களம் ஊழுக்குரியது. “வீரரே, செல்வத்தைக்கொண்டு ஆடப்படும் எதிலும் கண்ணுக்குத் தெரியாத ஆட்டப்பங்காளியாக அமைந்துள்ளது ஊழ். மூவர் ஆடும் ஆடலில் எவர் வெல்லவேண்டும் என்பதை முடிவுசெய்வது ஊழே. இருவரும் ஒருவரை ஒருவர் வெல்வதற்காக ஆடுக! வெல்லப்படவேண்டியது ஊழே” என்றான் நளகூபரன். மணிக்கிரீவன் ஆட்டநெறிகளை முறைப்படி அறிவித்தான்.

அர்ஜுனன் “நிகர்வைக்கும் இவ்வாட்டத்தில் வைக்கும்பொருட்டு நான் ஒன்றையும் கொண்டுவரவில்லை. குபேரபுரிக்கு செல்வத்துடன் வருவது அறிவின்மை. குபேரனே எனக்கு ஒரு செல்வத்தை அருளட்டும். அதைக்கொண்டு ஆடுகிறேன்” என்றான். குனிந்து ஆட்டக்களத்தை நோக்கிக்கொண்டிருந்த குபேரன் அதைக் கேட்டு முகம் மலர்ந்து “ஆம், அளிக்கிறேன்” என்றான். “எனக்கு உங்கள் வலக்கை சுட்டுவிரல் கணையாழியை அளியுங்கள்” என்றான் அர்ஜுனன். “அவ்வாறே” என்று சொல்லி அக்கணையாழியை கழற்றி குபேரன் அவனுக்கு அளித்தான்.

அதை கண்ணில் ஒற்றி முதல் ஆட்டச்செயலாக களத்தில் வைத்தான் அர்ஜுனன். “நிகர்வையுங்கள், செல்வத்துக்கரசே” என்றான். குபேரன் அந்தக் கணையாழியை நோக்கி உருண்ட விழிகள் துருத்தி நிற்க சிலகணங்கள் எண்ணத்திலாடினான். குழம்பி தன் தேவியை நோக்கிவிட்டு தன் கைவிரல்களில் இருந்த கணையாழிகளை நோக்கினான். இடக்கை ஆழிவிரல் கணையாழியை தொட்டு அதைத் தவிர்த்து ஒவ்வொரு விரலாகக் கடந்து இடக்கை சிறுவிரல் கணையாழியை உருவி களத்தில் வைத்தான்.

துலாமுள் அர்ஜுனனை நோக்கி சாய்ந்தது. குபேரன் திகைத்து வாய் திறந்து ரீதியை பார்த்தான். அவள் புன்னகையுடன் நோக்கி நின்றாள். அவன் நிதியைப் பார்க்க அவள் “உங்களிடம் வைத்தாட முடிவிலாச் செல்வம் உள்ளது, அரசே. அஞ்சற்க!” என்றாள். “அந்தக் கணையாழியை நான் இழந்துவிட்டேனா?” என்றான் குபேரன் துயரத்துடன். “ஆம், ஆனால் நீங்கள் வென்றால் அதை மீட்டெடுக்கலாம்” என்றான் நளகூபரன். “ஆம், இதோ மீட்டெடுக்கிறேன்” என்று சினத்துடன் சொல்லி அர்ஜுனனிடம் “ஆடுக!” என கைகாட்டினான்.

அர்ஜுனன் இரு கணையாழிகளையும் களத்தில் வைத்தான். இரண்டையும் நோக்கியபின் அர்ஜுனனை வியப்புடன் ஏறிட்ட குபேரன் தன் கைவிரல்களை தொட்டுத்தொட்டுக் குழம்பி இடக்கை ஆழிவிரலில் இருந்தும் வலக்கை சிறுவிரலில் இருந்தும் கணையாழிகளை கழற்றி வைத்தான். துலாமுள் அர்ஜுனனை நோக்கி சாய்ந்தது.

“இவற்றையும் இழந்துவிட்டேனா?” என குபேரன் பெருந்துயருடன் கேட்டான். “ஆடி வெல்க, அரசே!” என்றாள் நிதி. “உங்கள் உள்ளத்தியல்பால் எடுக்கையில் குறைந்துவிடுகிறது, அரசே. மிகையாக எடுத்து வையுங்கள்” என்றாள் ரீதி. குபேரன் “நான் கணக்கிட்டே எடுக்கிறேன். நிகருக்கு மேலாக சென்றுவிடலாகாதென்று எச்சரிக்கை கொள்கிறேன்” என்றான். “உங்கள் கைவிரல்கள் குறுகியவை” என்றாள் ரீதி. “அதை நான் அறிவேன். நீ வாயை மூடு!” என்று குபேரன் சீறினான்.

அர்ஜுனன் தான் வென்ற அனைத்தையும் மீண்டும் மீண்டும் வைத்தாடினான். குபேரன் ஒவ்வொரு முறையும் அணுவிடைகுறைவாகவே நிகர்வைத்தான். “இவ்வாட்டத்தில் ஏதோ பிழை உள்ளது. அனைத்தும் எப்படி நிகர்பிறழக்கூடும்?” என்று குபேரன் கூவினான். “அரசே, ஆட்டமென்பது பொருள்களை முன்வைப்பதல்ல. நீங்கள் இருவருமே உங்களைத்தான் முன்வைக்கிறீர்கள். அவர் எல்லைகளை கடப்பவர். நீங்கள் புறத்தை அஞ்சி இந்நகரின் எல்லைகளுக்குள் அமர்ந்திருந்தவர்” என்றாள் மீனாட்சி.

“நான் அஞ்சுகிறேனா? நானா?” என்றான் குபேரன். “நீங்கள் அஞ்சுவது தோல்வியை அல்ல, பொருளிழப்பை. பொருள்பற்று கொண்டிருக்கும்வரை அவ்வச்சத்திலிருந்து மீளமுடியாது” என்றாள் மீனாட்சி. குபேரன் “இதோ நான் என் பெருநிதியை நிகர்க்களத்தில் வைக்கிறேன்… எனக்கு அச்சமில்லை. இவன் அதற்கு நிகரென எதையேனும் வைக்கட்டும்” என்றபடி சங்கினியை களத்தில் வைத்தான்.

அர்ஜுனன் சங்கினியை நோக்கி ஒருகணம் எண்ணத்திலாழ்ந்தபின் முதற்கணையாழியை எடுத்து களத்தில் வைத்தான். துலாமுள் அவன் பக்கம் சாய்ந்ததும் “இது எவ்வாறு? இது எம்முறை?” என குபேரன் கூவியபடி எழுந்துவிட்டான். “அரசே, அவர் வைத்தது கணையாழி. அதை ஓர் ஆண்மகன் அளித்ததும் இவள் நெஞ்சு அவனை ஏற்றுக்கொண்டுவிட்டது. அக்கணையாழி இவளுக்கு நிகர்மிகை” என்றாள் மீனாட்சி.

“இது ஊழின் ஆடல், தந்தையே. நீங்கள் ஆடலை முடித்துக்கொள்ளலாம்” என்றான் மணிக்கிரீவன். “முடித்துக்கொண்டால் நான் இழந்தவை இவனுக்குரியன ஆகிவிடும். மாட்டேன், என் பொருள் எதையும் இழக்கமாட்டேன், அனைத்தையும் வென்றமைவேன்” என்றபடி அவன் பிற செல்விகளை களத்தில் வைத்தான். அனைவரையும் அர்ஜுனன் வென்றெடுத்தான். “அவர்கள் ஒன்றின் ஒன்பது முகங்கள், தந்தையே. ஒன்று சென்றால் பிறிதும் தொடரும்” என்றாள் மீனாட்சி. “இது பொய்மை. இது ஏமாற்று” என்று குபேரன் கூவினான். கால்களை உதைத்து “அன்னையிடம் சொல்வேன்… அன்னையிடம் சொல்லிவிடுவேன்” என அழுதான்.

“போதும் தந்தையே, உங்களால் இவ்வாட்டத்தை வெல்லமுடியாது” என்றான் நளகூபரன். மீனாட்சி “ஆம். உங்களிடமிருக்கும் செல்வத்தைவிட இல்லாத செல்வம் பெரியதென்று எண்ணுகிறது உங்கள் உள்ளம்… அது செல்வர்களின் இயல்பு” என்றாள். “நான் ஆடுவேன்… நான் ஆடுவேன்…” என்று குபேரன் கதறி அழுதான். “இவன் என் செல்வங்களை கொண்டுசெல்ல விடமாட்டேன். நான் அன்னையிடம் சொல்வேன். எந்தையிடம் போய் சொல்வேன்.”

“சரி, ஆடுக!” என அர்ஜுனன் சொன்னான். ஒவ்வொன்றாக இழந்துகொண்டிருந்தான் குபேரன். இழக்க இழக்க வெறிகொண்டு மேலும் மேலுமென செல்வத்தை களம்வைத்தான். செல்வத்தை வைக்க வைக்க உளம்சுருங்கினான். அவன் இழந்தவை பெரிதென்றாயின. அவ்வெண்ணத்தால் அவன் மீண்டும் மீண்டும் தோற்றுக்கொண்டிருந்தான். முழுமையாகவே தோற்றபோது அவன் கனவில் என விழி வெறிக்க அமர்ந்திருந்தான்.

“அரசே, மேலும் ஆட பொருள் இருக்கிறதா?” என்றான் அர்ஜுனன். “நான் ஆடுவேன்… நான் ஆடுவேன்” என்றான் குபேரன் பித்தனைப்போல தலையாட்டியபடி. “இனி ஆடுவதற்கு உங்களிடம் பொருள் இல்லை, தந்தையே” என்றாள் மீனாட்சி. குபேரன் அவர்களை மாறிமாறி பொருளில்லாது நோக்கினான். பின்னர் வீரிட்டழுதபடி அங்கேயே படுத்து உடலைச் சுருட்டிக்கொண்டு அழத்தொடங்கினான்.

“அரசே, தங்கள் செல்வம் எனக்குத் தேவையில்லை. அனைத்தையும் திரும்ப அளித்துவிடுகிறேன்” என்றான் அர்ஜுனன். திகைத்து எழுந்தமர்ந்து “அனைத்துமா? திரும்பவும் எனக்கா?” என்றான். “ஆம், திரும்ப உங்களுக்கே. நீங்கள் அரிதென எண்ணும் ஓர் அறிதலை எனக்கு அளியுங்கள். அதுபோதும்” என்றான் அர்ஜுனன். குபேரன் எழுந்தமர்ந்து “வெறும் அறிதலா?” என்றான். “அனைத்து அறிதல்களும் படைக்கலன்களே” என்றான் அர்ஜுனன்.

“வீரனே, நானறிந்த பிறர் அறியாத அறிதல் ஒன்றே. செல்வத்தை முழுக்க இழந்துவிட்டதாக கனவுகண்டு விழித்தெழுந்து செல்வம் சூழ்ந்திருப்பதை உணர்ந்தபின் ஆறுதலுடன் மீண்டும் விழிமயங்குவது போல இனிய துயில் பிறிதில்லை. அச்செல்வத்தை முழுக்க கள்வர் கொள்ளையடித்துச் சென்றாலும் அத்துயில் கலைவதில்லை” என்று குபேரன் சொன்னான். “இப்புடவியை ஆளும் செல்வத்தின் தெய்வங்கள் அனைத்தும் அத்துயிலால் வெல்லப்படத்தக்கவை. மண்ணிலுள்ள அரசர்கள் அனைவரும் அத்துயிலில் முற்றாழ்பவர்கள்.”

“அத்துயிலுக்குரிய தெய்வத்தை நான் என் இடக்கால் சிறுவிரலில் இரும்பாலான கணையாழியாக அணிந்திருக்கிறேன். அதை பிறர் காணாதபடி பொன்னணிகளால் மூடியிருக்கிறேன். பொருள்காத்து அமர்ந்திருக்கும் இவ்வாழ்வில் எனக்கு துயிலின் இன்பம் இல்லை. என்றேனும் அதை உணர்ந்து துயர்கொண்டால் அவளை எழுப்பி என் தலைமேல் சூடுவேன்” என்று குபேரன் தன் இடக்கால் சிறுவிரலை நீட்டி அதிலிருந்த இரும்பு ஆழியை எடுத்தான்.

அது ஒரு கருமுகில்நிறப் பெண்ணாக மாறி அவன் முன் நின்றது. அவளுக்கு முகத்தில் விழிகளோ வாயோ மூக்கோ இருக்கவில்லை. கரிய குழல் கால்வரை விழுந்து அலையடித்தது. நீண்ட கைகள் மெல்லிய விரல்களை கொண்டிருந்தன. அவளிடமிருந்து குளிரலை வீசி அவன் உடலை சிலிர்க்கவைத்தது.

KIRATHAM_EPI_27

“மிருத்யூ தேவிக்கும், நித்ரா தேவிக்கும், வியாதி தேவிக்கும் இளையவள் இவள். ஜேஷ்டை இவள் தோழி. சிதைச்சாம்பலில் விழுந்த பிரம்மனின் நிழலில் இருந்து உருவானவள். இவளை அந்தர்த்தானை என்று அழைக்கிறார்கள். இனியவள். விழியிமைகளை மெல்லத்தொட்டு ஆழ்துயில் அளிப்பவள்” என்றான் குபேரன். “என் அறிதலின் வடிவாக இவளை உனக்களிக்கிறேன். இவள் உன் துணையென்றாகுக!”

அர்ஜுனன் தலைவணங்கி குபேரன் அளித்த அந்த இரும்பாழியை வாங்கிக்கொண்டான். “உன் அம்புகளில் ஒன்றில் இவளை அணிந்துகொள்க! இவள் உன் படைக்கலமும் ஆகுக!” என்றான் குபேரன். அர்ஜுனன்  குபேரனின் கால்தொட்டு சென்னிசூடி  வாழ்த்துபெற்றான்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 26

[ 7 ]

தன்னுணர்வு கொண்டு விழியொளி பெற்றபோது அர்ஜுனன் வளைந்து மேலேறிச்சென்ற அவ்வெண்ணிறப் பாதையின் மறு எல்லையில் இருள் குழைத்துக் கட்டப்பட்டதுபோல வளைவுகளில் ஒளிமின்ன நின்றிருந்த இரும்புக் கோட்டையை பார்த்தான். எடையற்றவனாக தன்னை உணர்ந்து அதில் நடந்து சென்றபோது முன்பொருமுறையும் எவரும் கால் தொட்டிராதது அப்பாதை என்னும் எண்ணமெழுந்தது.

செல்லச் செல்ல அகல்வது போல விழிமாயம் காட்டி நின்றிருந்தது அக்கோட்டை. பின்பு எப்போதோ ஒரு புள்ளியில் பேருருக்கொண்டு அணுகத்தொடங்கியது. குளிர்ந்த முகில்நிரைபோல அது எழுந்து வந்து சூழ்ந்தது. நெருங்கிச் செல்லும்தோறும் அதன் சுவர் திசையாக மாறியது. அதன் பெயர் அயத்வாரம் என்று அவன் அறிந்திருந்தான். அதன்மேல் எழுந்த கொடிகள் கரிய பறவைகள் போல சிறகடித்தன.

அதன் மூடிய பெருவாயில் முன் நின்றபோது குமிழ்களும் முழைகளும் சட்டங்களும் கொண்ட அந்தக் கதவின் கீழ்ச் சட்டத்தின் அளவுக்கே அவன் உயரம் இருந்தது. பொன்னாலான அதன் தாழ் அவன் தலைக்குமேல் வானில் தொங்கியதுபோல் நின்றிருந்தது. கதவைத் தொட்டு அதன் தண்மையை உணர்ந்து சில கணங்கள் நெஞ்சு கூர்ந்து தன்னை தொகுத்துக் கொண்டான்.

கையை ஓங்கி அவ்விரும்புச் சட்டத்தில் தட்டி  “யாரங்கே? வாசல் திறவுங்கள்! வாசல் திறவுங்கள்!” என்று கூவினான். உருக்கிரும்பாலான சட்டம் அவன் கையை உணர்ந்ததாகவே தெரியவில்லை. முழு உடலாலும் அதன்மேல் உந்தியும் மலை என அசைவற்றிருந்தது. மீண்டும் மீண்டும் கைகளாலும் கால்களாலும் அதை உதைத்தான். அவன் செயல்களுக்கு மிக அப்பால் தன் காலமின்மையில் அது நிலைகொண்டிருந்தது.

உள்ளே எழுந்த சினஎழுச்சியுடன் அவன் நூறு காலடி எடுத்து பின்னால் வந்தான். முழு விரைவுடன் ஓடி தன் தலையால் அவ்விரும்புக் கதவை முட்டினான். அவன் தலையை ஒரு குளிர்நீர்ப்பரப்புதான் எதிர்கொண்டது.  அலையெழுந்து விலகி அவனை உள்ளிழுத்துக்கொண்டது அது. சுருண்டு விழுந்து கையூன்றி எழுந்தபோது அவன் முன் பேருருவ பூதம் ஒன்றின் இரு கால்களை கண்டான். அவன் தலை அதன் கணுக்கால் முழை அளவுக்கே இருந்தது.

விழிதூக்கிப் பார்த்தபோது பூதத்தின் முழங்கால் உருளைகள் மட்டும் வான்தொலைவில் தெரிந்தன. அதற்கப்பால் செறிந்திருந்த இருளிலிருந்து இடியென அதன் குரல் ஒலித்தது.  “யார் நீ?” அர்ஜுனன் தலைதூக்கி  “குபேரனைப் பார்க்க வந்தவன், என் பெயர் அர்ஜுனன். குருகுலத்து ஷத்ரியன்” என்றான்.

“மானுடர் இவ்வழி வந்ததே இல்லை” என்றது பூதம். “இவ்வாயிலை அஞ்சாது தட்டி அழைத்தமையால் உன்னை பாராட்டுகிறேன்.”  அர்ஜுனன் “வாயில் ஒன்று அமைவதே தட்டி திறப்பதற்காகத்தான்” என்றான். “என்றும் நான் அஞ்சியதில்லை. என்னை அஞ்சி நீர்தான் பேருருக்கொண்டிருக்கிறீர்.” பூதம் சினத்துடன் “எனக்கா? அச்சமா?” என்றது. “அஞ்சிய முட்பன்றிதான் முடிசிலிர்த்துப் பெரிதாகும்” என்று அர்ஜுனன் சொன்னான்.

“போதும்” என்றபடி தன் உடல் குறுக்கி அவன் முன் தோன்றியது பூதம். அதன் பெருத்த வயிறு அவன் முகத்திற்கு முன்னால் நின்றது. இரு கரிய கைகளையும் அவனுக்கு இருபுறமும் ஊன்றி மூச்சுக்காற்று அவன் மேல் மூடும்படி தலையைக் குனித்து அது சொன்னது  “என்னைக் கடந்து எவரும் செல்லலாகாது என்பது நெறி. இவ்வாயிலுக்கு அப்பால் நீ செல்ல முடியாது.”

“நான் வாயில்களை கடப்பவன். ஐயம் தேவையில்லை பேருருவரே, இவ்வழிகளைக் கடப்பேன். இதற்கப்பால் உள்ள அனைத்து வாயில்களையும் கடப்பேன்” என்றான்  அர்ஜுனன்.  அந்தத் துணிவை எதிர்பாராத பூதம் தன் இரு விலாவையும் சொறிந்துகொண்டு முனகியது. பின்னர் “அதெப்படி கடப்பாய்?” என்றது. “அரிதான ஒரு பாதை அரிதான ஒருவன் மட்டுமே கடப்பதற்கென்று அமைக்கப்பட்டது. இதைக்கூட அறியாதவரா நீர்?” என்றான் அர்ஜுனன்.

பூதம் “அப்படியா?” என்றது. தலையைத் தடவியபடி எண்ணங்களில் சிக்கி பின் விடுவித்துக்கொண்டு “என் பணியை நான் செய்வேன்” என்றது. அர்ஜுனன்  அண்ணாந்து பார்த்தபோது இருளில் பூதத்தின் இரு விழிகளும் வெண்பற்களும் மட்டும் தெரிந்தன. அது குழம்பியிருப்பதை அந்த விழியசைவே காட்டியது.

“என்னுடன் போர் புரிக! வென்றால் கடந்து செல்க!” என்று பூதம் சொன்னது.  “எங்கும் எவருடனும் போர் புரிவேன். களம்காண ஒரு கணமும் தயங்கியவனல்ல. உமது படைக்கலங்களை எடும்!” என்றான் அர்ஜுனன். உரக்க நகைத்தபடி பூதம் அவன் முன் அமர்ந்தது.  “பிழை கணித்துவிட்டாய், வீரனே! இது குபேரனின் கோட்டை. இங்கு போர்களும் பூசல்களும் அனைத்தும் பொருளின் பொருட்டே. நாம் ஒரு பொருளாடல் நிகழ்த்துவோம். என்னை இவ்வணிகத்தில் நீ வென்றால் கடந்து செல்லலாம்.”

“ஆம்” என்றான் அர்ஜுனன். அதன் முன் கால்மடித்து அமர்ந்தான். “நீ கொண்டுள்ள வில்வேதம் உதவாது பொருளாடலுக்கு” என்றது பூதம். “பேருருவரே, வில்வேதம் இலக்குக்கும் நம் திறனுக்குமான நிகர்ப்பாட்டைக் கற்பிக்கும் கலை. அனைத்து கலைகளும் அதுவே” என்றான் அர்ஜுனன்.

பூதம்  தன் சுட்டுவிரலால் தரையில் ஒரு களம் வரைந்தது.  “இக்களத்தில் நான் வைக்கும் பொருளுக்கு நிகரான ஒன்றை நீ வைக்கவேண்டும். எவரிடம் செல்வம் மிகுதி என்று பார்ப்போம்” என்றது. அர்ஜுனன் புன்னகைத்தான். “என்ன புன்னகை?” என்றது பூதம். “செல்வம் காப்பவர் அனைவரும் இந்த ஒரே ஆடலை அன்றி பிற எதையுமே அறிந்திருப்பதில்லை” என்றான் அர்ஜுனன். “அப்படியா?” என பூதம் தன் தலையை தடவிக்கொண்டது.

“ஆடுக!” என்றான் அர்ஜுனன். பூதம் தன் கையை நீட்டி அதில் பூனை விழியென சுடர் கொண்டிருந்த அருமணி ஒன்றை எடுத்து முதற்களத்தில் வைத்தது. “உனது மண்ணில் நூறு பேரரசுகளை விலைக்கு வாங்கும் வல்லமை கொண்டது இந்த மணி. நிகரானதொன்றை உன் களத்தில் வை” என்றது.

அர்ஜுனன் திரும்பி தன் அருகே கிடந்த கூழாங்கல் ஒன்றை எடுத்து  ஆடையால் துடைத்து தன் களத்தில் வைத்தான்.  “இதுவா அருமணிக்கு நிகரானது?” என்று பூதம் வியப்புடன் கேட்டது.  “ஆம். உமது மணிக்கு நீர் அளிப்பதே மதிப்பு. எதைக் கொடுத்தால் நீர் அதை கொடுப்பீர் என்பதல்லவா அதன் விலையாகிறது?  நான் என் கல்லுக்கு அதே மதிப்பை அளிக்கிறேன்” என்றான் அர்ஜுனன்.

“அக்கல்லை நான் மதிக்கவில்லை” என்று பூதம் கூவியது. “அந்த மணியை நானும் மதிக்கவில்லை என்று சொல்கிறேன்” என்றான் அர்ஜுனன். பூதம் தன் தலையை தட்டிக்கொண்டு முனகி அசைந்து அமர்ந்தது. “பேருருவரே, அந்த மணி அளவுக்கே என் கல்லும் மதிப்புடையது என்றுதானே நான் இக்களத்தில் அதை வைத்துள்ளேன். அப்போதே அம்மதிப்பு உருவாகிவிட்டது அல்லவா?” என்றான் அர்ஜுனன்.

“எப்படி?” என்றது பூதம் குழப்பமாக தலையை அசைத்தபடி. “பொருளுக்கா மதிப்பு? அதற்குப்பின் அம்மதிப்பை உருவாக்குவதாக இருப்பதென்ன என்பதல்லவா? இக்கூழாங்கல்லுக்குப்பின் இருப்பவன் நான். அந்த அருமணியையோ நிகரானதையோ அளிக்காமல் இக்கூழாங்கல்லை எவரும் பெறமுடியாது. அவர்கள் அக்கணமே என் வில்லால் கொல்லப்படுவார்கள்” என்றான் அர்ஜுனன்.

பூதம் திகைத்து கைகளால் தரையை துழாவியது. பின்பு எழுந்து நின்று  “இது வணிகமல்ல. இது ஏதோ பிழை விளையாட்டு” என்று கூவியது.  “விடை சொல்ல எவரையேனும் வரவழையும்” என்றான் அர்ஜுனன். பூதம் திரும்பி அவனை தவிர்த்தபடி “இங்கு மதிப்புகாட்டும் துலா ஒன்று உள்ளது” என்றது. “அதில் வைத்து நோக்குவோம்… வருக!” என்றான் அர்ஜுனன்.

இருவரும் சென்று கோட்டைச்சுவர் மேல் பதிந்து நின்றிருந்த கந்தர்வனின் சிலையின் கையில் தொங்கிய ஒரு துலாவின் இரு தட்டுகளிலும் அந்த மணியையும் கல்லையும் வைத்தனர். நிகர் எடைகாட்டி முள் நிலைத்தது. பூதம் உறுமியது. தன் தலையையும் இடையையும் சொறிந்துகொண்டு முனகியது. “நிகர்” என்றான் அர்ஜுனன். சினந்து நிலையழிந்து கால்களை உதைத்தபடி சுற்றி வந்தது பூதம்.

“துலாவேந்திய தேவனே, மறுமொழி சொல்க! இக்கூழாங்கல்லின் மதிப்பென்ன?” என்று அர்ஜுனன் கேட்டான்.  “குபேரபுரியின் நெறிகளின்படி ஒன்று எவ்வண்ணம் விற்கப்படுகிறதோ , அல்லது விற்கப்பட இயலுமோ அதுவே அதன் மதிப்பு. இங்கிருப்போர் இருவரே. எனவே அந்தக்கூழாங்கல்லின் மதிப்பு அந்த அருமணிக்கு நிகர்” என்றான் துலாவை ஆண்ட கந்தர்வன்.

பூதம் எண்ணியிரா கணத்தில் அர்ஜுனன் கைநீட்டி அந்த அருமணியை எடுத்து  அப்பால் வீசினான். “அது வெறும் கூழாங்கல்” என்றான். பூதம் பதறி நோக்க தன் கூழாங்கல்லை எடுத்து இணையாக வீசினான். “அம்மதிப்பே இதற்கும்” என்றபின் எழுந்து “விலகும் பேருருவரே, ஆட்டம் முடிந்துவிட்டது” என்றான்.

பூதம் விலகி திகைப்புடன் நோக்கி நிற்க “திறவுங்கள் இந்தக் கோட்டைக் கதவை!” என்றான். பொற்தாழை விலக்கி பேரோசையுடன் இரும்புக்கதவை திறந்தது பூதம். அவன் அதனூடாக நடந்து மறுபக்கம் சென்றான்.

KIRATHAM_EPI_26

இரும்புக்கோட்டைக்குள் இருந்த தாம்ரவலயம் என்னும் செம்புக்கோட்டையை நோக்கிச் சென்ற பாதையில் வளைவுகளை மிதித்து மேலேறி அதன் வாயிலை அர்ஜுனன் அணுகினான். தொலைவிலேயே அதன் முன் வழிமறித்ததுபோல் கால்களைப் பரப்பி கைகளைக் கட்டி நின்ற அனல் வண்ண கந்தர்வனை அவன் கண்டான். அவன் விழிகளின் பச்சைநிற ஒளி அங்கிருந்த செவ்விருளில் மின்னித் தெரிந்தது.

தளரா நடையுடன் சென்று அவன் முன் நின்று  “வழி விடுக, கந்தர்வரே! என் பெயர் அர்ஜுனன். குருகுலத்தவன். குபேரனைக் கண்டு வென்று திரும்பும் பொருட்டு வந்துள்ளேன்” என்றான்.  கந்தர்வன் “ஆம், நீர் இரும்புக்கோட்டையைக் கடந்ததை நான் அறிந்தேன். ஒவ்வொரு முறையும் தன் எல்லையை தானே கடக்கும் ஆற்றல் கொண்டவர் நீர்” என்றான். “இவ்வாயிலைக் காப்பவன் நான். என் பெயர் அக்னிவர்ணன். என்னுடன் வணிகமாடி இதைக் கடந்து செல்க!” என்றான்.

“சொல்லும்” என்று சொல்லி அர்ஜுனன் நின்றான். தன் இடையில் இருந்த ஒரு ஓலையை எடுத்து அர்ஜுனனிடம் காட்டி “வீரரே, இச்செம்புக்கோட்டைக்கு அப்பால் பாதையின் இருமருங்கும் ஆழ்கலவறைகளில் பெருஞ்செல்வத்தை குவித்து வைத்துள்ளேன். அச்செல்வமனைத்தையும் இவ்வோலையினூடாக தங்களுக்கு அளிப்பேன். அதற்கு நிகரான விலை ஒன்றை எனக்களித்து இதைப் பெற்றுச் செல்லும்” என்றான்.

அர்ஜுனன் புன்னகையுடன் “நிகர் என்பதே செல்வத்தின் மறுபெயர்” என்றான். தன் கையில் இருந்த குருகுல முத்திரை கொண்ட கங்கணத்தைக் கழற்றி அவனிடம் நீட்டி “அச்செல்வத்தை நான் பெற்றதும் அவையனைத்தையும் உங்களுக்கே மீட்டளிப்பேன் என்று இக்கங்கணத்தால் உறுதி கூறுகிறேன். இதை பெற்றுக் கொள்க!” என்றான்.

ஒரு கணம் திகைத்தபின் கந்தர்வன் வாய்விட்டு நகைத்து “ஆம், இது வணிக முறைமையே” என்றான். “இரண்டும் நிகரானவை. பெற்றுக் கொண்டு வாயிலைத் திறவுங்கள், கந்தர்வரே” என்றான் அர்ஜுனன். கந்தர்வன் பறந்து எழுந்து சென்று அச்செம்பு வாயிலின் இருபுறத்திலுமிருந்த சக்கரங்களை தொட்டான். அவை சுழன்று கதவை ஓசையின்றித் திறந்து அர்ஜுனனை உள்ளே விட்டன.

மிகத் தொலைவில் ஒரு பேராறு உச்சிப்போதின் வெயில்பட்டு அலையிளகிக் கொந்தளிப்பதுபோல வெள்ளியாலான ரஜதவியூகம் என்னும் கோட்டை தெரிந்தது. அர்ஜுனன் கைகளால் கண்களை மூடியபடி அதை நோக்கி சென்றான். ஒளிபெய்து நிறைந்த விழிகள் நீர் பெருகி வழிந்தன.

அவன் அருகணைந்தபோது வெள்ளிக்கோட்டை முழுமையாகவே கண்களிலிருந்து மறைந்துவிட்டிருந்தது. அவன் தன் முடிக்கற்றைகளை எடுத்து முகத்தின்மேல் அடர்த்தியாகப் பரப்பி அதனூடாக அக்கோட்டையை பார்த்தான். உப்புக்குவியல் என, பனிமலைகளை வெட்டி அடுக்கியதென அது தோன்றியது.

அதன் வெள்ளிப்பெருங்கதவத்தை அணுகி நின்றான். நுணுக்கமான மலர்ச்செதுக்குகள் கொண்ட வாயிலின் தாழ் செம்பாலானதென்று தெரிந்தது. அதன் இருபக்கமும் சுடர்முடி சூடி கைகளில் செண்டாயுதத்துடன் நின்றிருந்த இரு இளஞ்சிறுவர்களின் வெள்ளிச்சிலைகளை அவன் நிமிர்ந்து நோக்கினான். அவர்களின் ஆடையின் கீழ்வளைவுகளின் அலைகளுக்குக் கீழே அவன் தலை இருந்தது.

இடப்பக்கச் சிலையின் கை தொலைவைச் சுட்டி “அணுகாதே” என்றது.  வலப்பக்கச் சிலையின் கை வெளிப்பக்கமாகச் சுட்டி “விலகிச்செல்” என்று சொன்னது. அர்ஜுனன்   பின்னால் நகர்ந்து அவர்களின் விழிகளை நோக்கினான். அவை உறுத்து விழித்தன. உதடுகள் குவிந்து “அகல்க!” என ஆணையிட்டன. மேலும் கூர்ந்து நோக்கியபோது அவை “அணுகுக!” என்றன. திடுக்கிட்டு அக்கைகளை நோக்கினான். இடச்சிலை “வருக!” என்றது. வலச்சிலை “அருகணைக!” என்றது.

அவன் அச்சிலை விழிகளை நோக்கிக்கொண்டு நின்றான். அவற்றில் ஒன்றில் மெல்ல நோக்கு திரண்டது. அவன் விழிகளை அவை சந்தித்தன. அவற்றில் ஒருவன் விழிவிலக்கிக்கொண்டான். பிறிதொருவன் விழிக்குள் மெல்லிய ஒளியென புன்னகை எழுந்தது. அர்ஜுனன் புன்னகையுடன் நோக்கி நின்றான். அவர்கள் இருவரும் ஒரே தருணத்தில் விழிதிருப்பி அவனை நோக்கினர். இருவர் முகத்திலும் சிரிப்பெழுந்தது.

சிரிப்பொலி வானிலென எழுந்தது. அர்ஜுனன் சிரித்தபடியே “வருக, இளையோரே! போதும் விளையாட்டு” என்றான். இருவரும் குதித்துக் கீழிறங்கி அவனை நோக்கி உருசுருக்கி அணுகினர். வெள்ளிக்குழம்பில் மூழ்கி எழுந்த இரு மைந்தர். இருவெள்ளி வண்டுகள் போலிருந்தனர். ஒருவன் “என் பெயர் சுஃப்ரன், இவன் தவளன். இந்த வாயிலின் காவலர். இதற்கப்பால் எவரையும் அனுப்ப எங்களுக்கு ஆணையில்லை” என்றான். “எங்களை மீறிச்செல்ல முயன்றவர்களை இச்செண்டாயுதத்தால் மெல்ல தட்டுவோம். அவர்கள் குளிர்ந்து அசைவிழந்து இச்சுவரில் ஒரு சிற்பமெனப் படிவார்கள்.”

அர்ஜுனன் அந்த வெள்ளிச்சுவரெங்கும் விழிகள் உயிர்கொண்டு பதிந்து நின்றிருந்த பல்லாயிரம் கந்தர்வர்களையும் தேவர்களையும் கண்டான். “மானுடர் எவரும் இல்லை. அவர்களால் முதல் வாயிலையே கடக்கமுடியாது” என்றான் தவளன். “தேவர்களுக்கு எதற்கு செல்வம்?” என்றான் அர்ஜுனன்.

“வீரரே, கந்தர்வ உலகிலும் தேவருலகிலும் அழகுகளும் இனிமைகளும் மதிப்புகளும் சிறப்புகளும்  அளவில்லாது நிறைந்துள்ளன. ஆனால் அவை எவருக்கும் உரிமையானதல்ல. எனவே அவை செல்வங்கள் அல்ல. செல்வமென்பது எவருக்கேனும் உரிமையானது. அச்செல்வத்திற்கு மட்டுமே எந்தை குபேரன் உடைமையாளர்” என்றான் சுஃப்ரன்.

“கந்தர்வர்களிலும் தேவர்களிலும் தானென்னும் உணர்வை அடைபவர் கோடியில் ஒருவர். அவர்களில் கோடியில் ஒருவர் தனக்கென்றே ஏதேனும் செல்வத்தை விழைகிறார்கள். இங்கு வருபவர்கள் அவர்களே” என்றான் தவளன். “அவர்கள் விழைவதே அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பெருஞ்செல்வக்குவையில் ஒட்டி ஒன்றாகி அமர்ந்திருக்கிறார்கள்.” அர்ஜுனன் அவர்களின் விழிகளை நோக்கினான். எவற்றிலும் துயர் இல்லை. இனிய கனவு ஒன்றின் மயக்குதான் தெரிந்தது.

“மாயை!” என்று அர்ஜுனன் சொன்னான். “அழியாச்சிறை. மீளமுடியாத தளை.” தவளன் “அவர்கள் எவரும் மீள விரும்பவுமில்லை” என்றான். “செல்வத்தை விழைபவர் எவரும் சென்றடையும் இடம் வேறேது?” என்றான் சுஃப்ரன். “அவர்கள் செல்வத்தின் மேல் அமைந்திருக்க முடியும். செல்வமே ஆக முடியும். அந்தக் களிமயக்கில் காலத்தை கடக்க முடியும். வேறேது தேவை அவர்களுக்கு?” என்றான் தவளன்.

அர்ஜுனன் “ஆனால் அவர்கள் செயலற்றுவிட்டார்கள். அவர்களால் எதையும் நுகர முடியாது” என்றான். தவளன் குழப்பத்துடன் “அவர்கள் நுகர விழைகிறார்களா என்ன? அவ்வாறு விழைந்தால் இன்பத்தின் தெய்வங்களை நாடி அல்லவா சென்றிருப்பார்கள்? இங்கு ஏன் வருகிறார்கள்?” என்றான். திரும்பி சுஃப்ரனிடம் “அப்படியா அவர்கள் கோரினார்கள்? குழப்பமாக இருக்கிறதே?” என்றான்.

சுஃப்ரன் “ஆம், இங்கு வந்த எவரும் அவர்கள் விழைந்தது இன்பத்தை என்று சொன்னதில்லை. செல்வத்தைத்தான் கோரியிருக்கிறார்கள்” என்றான். தவளன் சிரித்தபடி “ஆம், உண்மை” என்றபின் திரும்பி “நீங்கள்தான் குழம்பியிருக்கிறீர்கள், இளைய பாண்டவரே. எங்களை குழப்பவேண்டாம்” என்றான். “நாங்கள் குழம்பினால் மிகவும் குழம்பிவிடுவோம். மீண்டு வர நெடுங்காலமாகும்” என்றான் சுஃப்ரன்.

“நான் செல்வத்தின்பொருட்டு வரவில்லை. குபேரனை கண்டுசெல்லவே வந்தேன்” என்றான் அர்ஜுனன். “எதன்பொருட்டு காணவேண்டும்?” என்று சுஃப்ரன் கேட்டான். “அவரிடம் கேட்கவேண்டிய அனைத்தையும் என்னிடம் கேட்கலாம் நீங்கள்.” அர்ஜுனன் “நான் அவரை வென்றுசெல்ல வந்துள்ளேன். எதையும் வெல்வது மட்டுமே என் விழைவு. என் ஆசிரியனிடமிருந்து அன்றி நான் கொள்வதற்கென ஏதுமில்லை” என்றான்.

“அப்படியென்றால் முதலில் என்னை வென்று செல்க!” என்றான் சுஃப்ரன். தவளன் அவனைப் பிடித்து பின்னால் இழுத்து “என்னை வென்று செல்க… என்னை” என்றான். “என்னை என்னை” என்று சுஃப்ரன் முண்டியடித்தான். “சரி, இருவரையும்… இருவரையும்” என்றான் அர்ஜுனன். “என்ன ஆட்டம்? இங்குள்ள ஆட்டமெல்லாம் செல்வத்தால் அல்லவா?”

இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். “ஆமாம், என்ன ஆட்டம்?” என்றான் சுஃப்ரன். “வழக்கமாக வருபவர்களிடம் இதோ இச்செல்வத்தில் உங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்ளுங்கள், எஞ்சியவற்றை குபேரனிடம் பெற்றுக்கொள்ளுங்கள் என்போம். ஓடிப்போய் இக்கோட்டையை தொடுவார்கள். பசையில் ஈ என ஒட்டிக்கொள்வார்கள். நீங்கள் இதை விரும்பவில்லை.” தவளன் “இருங்கள்… நாங்களே யோசித்துவிட்டு வருகிறோம்” என்றான்.

இருவரும் அப்பால் சென்று நின்று அவனை நோக்கியபடி மாறி மாறி பேசிக்கொண்டனர். சிறு பூசல் ஒன்று நிகழ்ந்து ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளிக்கொண்டனர். பின்னர் இருவரும் தோள் ஒட்டி நடந்து அவன் அருகே வந்தனர். “எங்களுக்குத் தேவை ஒரு செல்வம்” என்றான் சுஃப்ரன். “எங்களுக்கு குன்றாத ஆர்வமளிக்கும் செல்வமாக அது இருக்கவேண்டும். நாங்கள் அதை பேரார்வத்துடன் ஏற்கவேண்டும். எங்கள் ஆர்வம் ஒரு கணம் குறையுமென்றால் அப்போதே நீர் இச்சுவரில் சிற்பமெனப் பதிவீர்.”

“இங்கு இல்லாத செல்வம் இல்லை. ஆகவே நீங்கள் எதையளித்தாலும் எங்களுக்கு ஆர்வமில்லை என்று சொல்லிவிடுவோம்” என சொல்லி தவளன் கிளுகிளுத்து சிரித்தான். “பேசாதே, மூடா!” என அவனை சுஃப்ரன் கிள்ள “கிள்ளாதே” என்று தவளன் சீறினான். “எங்கே உங்கள் செல்வம்? எங்களையே கட்டிப்போடும் செல்வம்?” என்றான் சுஃப்ரன்.

“நீங்கள் இதுவரை அறியாத பெருஞ்செல்வம் ஒன்று உங்களிடமிருக்கிறது” என்றான் அர்ஜுனன். “கந்தர்வர்களே, நீங்கள் அழிவற்றவர்கள். ஆகவே முடிவிலாக் காலம் கொண்டவர்கள். அந்தக் காலம் ஒரு பெரும்செல்வம் அல்லவா?” சுஃப்ரன் தவளனை நோக்கிவிட்டு “காலமா? அதெப்படி செல்வமாகும்?” என்றான். தவளன் “எங்களை ஏமாற்றமுடியாது” என்றான். ஆர்வத்துடன் அருகே வந்து “எப்படி காலம் செல்வமாக ஆகும்?” என்றான்.

“செல்வம் என்பது என்ன? பிறிதொன்றுக்கு நிகர்வைக்கப்படும் ஒரு பொருள் அல்லவா அது? இன்பத்துக்கு, ஆற்றலுக்கு, மதிப்புக்கு பொன்னையோ வெள்ளியையோ  நிகர்வைக்கிறோம்.  மண்முத்திரைகளை,  எழுதப்பட்ட ஓலைகளை நிகர்வைக்கிறோம். இளையோரே, வெறும் சோழிகளைக்கூட நிகர்வைப்பதுண்டு.”  சுஃப்ரன் “ஆம், அதன் பெயர் பணம்” என்றான். தவளன் “செல்வத்தை அது ஓர் அடையாளமாக ஆக்கிவிடுகிறது. ஒரு சொல்லாக மாற்றி சுருக்கிவிடுகிறது” என்றான்.

“அதேபோல நீங்கள் காலத்துக்கு பொருளை நிகர்வைத்தால் எத்தனை பெருஞ்செல்வத்திற்கு உடைமையாகிறீர்கள் என்று அறிவீர்களா?” என்றான் அர்ஜுனன். “எனக்கு இரு வெள்ளி நாணயங்களை கடனாகக் கொடுங்கள். நீங்கள் கேட்கும் கணம் அவற்றை திருப்பியளிப்பேன்” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டு “இதோ” என இரு நாணயங்களை அவனிடம் அளித்தனர்.

அவன் அவற்றில் ஒன்றை சுஃப்ரனிடம் அளித்தான். “சுஃப்ரரே, இப்போது உங்களிடமிருக்கும் இந்த நாணயம் இக்கணத்திற்கு நிகரானது. இக்கணம் பெருகும்போது இதுவும் பெருகுகிறது எனக்கொள்வோம்” என்றான். சுஃப்ரன் புரியாமல்  தலையசைத்தான். “இதை நீங்கள் இவருக்கு கடனாக அளிக்கிறீர்கள். இவர் இதை திருப்பியளிக்கையில் இதன் காலத்தின் மதிப்பையும் சேர்த்து அளிக்கவேண்டும்” என்றான். தவளன் “ஆம்” என்றான்.

“இதோ, இது இரு நாணயங்களின் மதிப்பை பெற்றுவிட்டது. நான்கு நாணயங்களாக ஆகிறது. எட்டு நாணயங்களாக பெருகிக்கொண்டே இருக்கிறது” என்றான் அர்ஜுனன். சுஃப்ரன் விழிகள் மின்ன “ஆம்” என்றான். “என்னால் அதை உணரமுடிகிறது.” அர்ஜுனன் “உங்கள் முடிவிலாக் காலம் அவரால்தான் பிளக்கப்பட்டு அடுக்கி எண்ணப்பட்டு அளவைக்காலமாக உருவாக்கப்படுகிறது என்பதை மறக்கவேண்டாம். அவர் அளிப்பதே அதன் காலமதிப்பு. அந்த நாணயத்தை நீங்கள் உங்களிடம் வைத்திருந்தீர்கள் என்றால் அளவைக்காலம் நின்றுவிடுகிறது. நாணயம் தன் மதிப்பை இழந்துவிடுகிறது” என்றான்.

இன்னொரு நாணயத்தை தவளனிடம் கொடுத்தான். “இதோ, இந்நாணயம் உங்கள் காலம். அது அவரிடமிருக்கையில் மட்டும் வளர்வதாகும்”. தவளன் சுட்டுப்பழுத்த உலோகத்தை என அதை உடனே சுஃப்ரனிடம் கொடுத்தான். “என் செல்வம் அது…” என்று கைசுட்டிக் கூவினான். “எண்ணிக்கொண்டிருங்கள். உங்கள் செல்வம் ஒன்றின் மடங்குகளெனப் பெருகுவதை பார்ப்பீர்கள். நிகரற்ற பெருஞ்செல்வம் என்பது இதுவே. குபேரனின் செல்வத்திற்கு எல்லை உண்டு. இது காலம், முடிவிலி.”

சுஃப்ரன் “என்றேனும் நான் போதும், என் செல்வத்தை திருப்பிக்கொடு என கேட்டால் இவன் எப்படி அந்நாணயத்தின் பெருகிய மதிப்பை எனக்கு அளிப்பான்?” என்றான். அர்ஜுனன் “அவர் செல்வம் உங்களிடமிருக்கிறதல்லவா? இரு மதிப்பும் நிகரல்லவா? கைமாற்றிக்கொள்ளலாமே!” என்றான். அவன் அதை ஆராயத் தொடங்குவதற்குள் “ஆனால் காலம் முடிவிலாதது. அதை பாதியில் நிறுத்துவீர்களா என்ன?” என்றான். “மாட்டேன்” என்றான் தவளன் உரக்க. சுஃப்ரன் “கடினம்தான்” என்றான்.

“நான் பெற்றுக்கொண்ட நாணயத்தை திருப்பியளிக்கவேண்டும்” என்றான் அர்ஜுனன். “ஆட்டத்தை நிறுத்தி அந்த நாணயங்களை நீங்கள் எனக்கு திருப்பி அளிக்கையில் நான் கடனை அடைத்துவிடுகிறேன்.” சுஃப்ரன் “தேவையில்லை, நாங்கள் அளித்ததைத்தானே பெற்றுக்கொண்டோம்? கடன் நிகராயிற்று” என்றான். தவளன் “ஆம், ஆனால் அந்த நாணயம் வளர்ந்துவிட்டிருக்கிறது. அதில் உமக்கு பங்கில்லை” என்றான்.

“நன்று. நான் பங்கு கோரவில்லை. இவ்வாயிலைக் கடந்துசெல்ல விழைகிறேன். வழி அளிக்கவேண்டும்” என்றான். “அங்கே சென்று நின்று இவை வெறும் ஒளியின் அலைகளே, நான் அறிவேன் என்று மட்டும் சொல்லுங்கள். வாயில் திறக்கும்” என்றான் சுஃப்ரன். அவன் விழிகள் தவளனின் கையில் இருந்த நாணயத்தை நோக்கிக்கொண்டிருந்தன. தவளன் விழி நீக்காமல் சுஃப்ரனின் கையில் இருந்த தன் நாணயத்தை நோக்கியபடி “ஆம், நம்பி உறுதியுடன் சொன்னால் அலைகளாக மாறி வழிவிட்டாகவேண்டும் இக்கோட்டை” என்றான்.

அர்ஜுனன் “நன்றி, இளையோரே. நல்ல ஆடல் நிகழ்வதாக!” என்றபின் சென்று அக்கோட்டைவாயில் முன் நின்றான். “ஒளியலைகள் மட்டுமே” என்றான். ஒளியலையாக மாறிய அக்கதவினூடாக நடந்து அப்பால் சென்றான்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 25

[ 5 ]

தன் வடபுலப்பயணத்தில் பெருஞ்செல்வர் பன்னிருவரை அர்ஜுனன் சென்று கண்டான். ஒவ்வொருவரும் குபேரனை உணர்ந்திருந்தனர். அவனை குறைபடக் கண்டிருந்தனர். முழுமையாக எவரும் கண்டிருக்கவில்லை.  “முழுமையாக அவன் தன்னுருவை திருமகளுக்கு மட்டுமே காட்டுவான் என்கிறார்கள். பிறர் அவன் முழுவுருவைக்காணும் திறனற்ற உள்ளம் கொண்டவர்கள். செல்வம் சித்தம் மயக்குவது. பெருஞ்செல்வம் பித்தாக்குவது” என்றார் முதிய வைதிகர் ஒருவர். “செல்வமென குபேரன் கொண்டிருப்பதெல்லாம் திருமகளின் வலக்கையின் மலர்வரிகளுக்குள் அடங்கும்” என்றார்.

குபேரனின் ஒரு நிழலசைவைக் கண்டவர்கூட அக்கணத்திலிருந்து  தொடங்கி நுரை பெருகுவதுபோல் பெருகி  பேருருவம் கொண்டு நின்றிருந்தனர். ஒவ்வொரு கணமும் அவனையே எண்ணிக்கொண்டிருந்தனர். வடதிசையில் அவன் பெருநகர் உள்ளது என்பதற்கப்பால் அவர் எவரும் அவனை கண்டதில்லை.  பசித்து துயில்பவனின் கனவில் உணவுக்குவையென, இளம் கன்னியின் கனவில் பொற்குவியலென, இல்லறத்தான் கனவில் ஏழடுக்கு மாளிகையென, அரசனின் கனவில் நிறைகருவூலம் என தன்னை உருமாற்றிக் காட்டிக்கொண்டே இருக்கும் மாயன் அவன் என்றனர்.

தேடி அலைந்து சலித்து வடதிசை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது ஒரு நாள் ஒரு சிற்றோடைக்கரையில் தன் கையால் மூங்கில் வெட்டிக் கட்டிய சிறு குடிலுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த முதிய அந்தணரை அவன் கண்டான். அவன் களைத்திருந்தான். இரவு தங்குவதற்குரிய மரத்தடியை தேடிக்கொண்டிருந்தான். அக்குடில் அவனை முகம் மலரச்செய்தது. அருகணைந்து குடில்முன் அமர்ந்து மாலைவெயிலணைவதை நோக்கி நின்றிருந்த அவருக்கு வணக்கம் சொன்னான்.  “வருக!” என்று அவர் புன்னகையுடன் அழைத்தார்.

“களைத்துளேன். நெடுந்தொலைவு பயணம் செய்து வந்த வழிப்போக்கன். போர்க்குலத்தான்” என்று அர்ஜுனன் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். “இன்று இரவுணவுக்கென அமுது சமைத்துள்ளேன். அதை இரண்டென பகுத்து நாம் உண்போம். விருந்தால் அது இனிமைகொள்ளவேண்டும் என இன்றைய நெறிவகுத்தோன் எனக்கு அருளியிருக்கிறான்” என்று சொல்லி அந்தணர் தன் இல்லத்திற்குள் சென்று உணவை கொண்டுவந்து அவன் முன் வைத்தார். அதைப்பகிர்ந்து இருவரும் உண்டனர்.

“என் பெயர் சௌம்யன். இக்குடிலில் தனிமையில் வேதம் ஓதி ஊழ்கம் பயின்று வாழ்கிறேன்” என அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். “நிலவு எழும் நாள் இன்று. காடு கனவு கொள்ளத்தொடங்கும் பொழுது. சொல்லாடிக் களித்திருக்க ஓர் அயலவன் வந்திருப்பது நல்லூழே” என்றார் அந்தணர். “வராதிருந்தால்….?” என்று அர்ஜுனன் குறும்பாகக் கேட்டான்.  “தனிமை அதற்கிணையாகவே இனிது” என்றார் அந்தணர் நகைத்தபடி.

உணவுண்டபின் குடில் முற்றத்தில் ஈச்சை ஓலைப்பாயை விரித்து நிலவு நோக்கி இருவரும் படுத்திருந்தனர். “தாங்கள் இங்கு வேறு என்ன செய்கிறீர்கள்?” என்றான் அர்ஜுனன்.  “ஒன்றும் செய்வதில்லை. உவகை மட்டுமே கொண்ட ஒரு வாழ்க்கையைத் தேடி இங்கு வந்தேன். இவ்வோடைக்கரையில் இக்குறுங்காட்டைக் கண்டதும் இதுவே அவ்விடம் என்று தெளிந்து இங்கு குடில்கட்டி தங்கினேன். இங்கு வந்து நாற்பதாண்டுகள் ஆகின்றன. ஒருநாள் சேர்த்ததை மறுநாளுக்கு கொண்டு செல்வதில்லை. உணவும் நினைவும்” என்றார் சௌம்யர்.

KIRATHAM_EPI_25

“ஒவ்வொரு நாளும் அன்று புதிதெனப் பிறந்தெழுகிறேன். என்னுடன் சூரியனும் எழுகிறான். விலங்குகள் பறவைகள் புட்கள் பூச்சிகள் ஒவ்வொன்றும் என்னைப்போல் பிறவிகொள்கின்றன. எங்களுக்குரிய அனைத்தும் இக்காட்டில் நிறைந்துள்ளன. நாளில் கொண்ட எதுவும் நினைவில் எஞ்சாது இங்கு வந்து படுக்கிறேன். தலைக்கு மேல் விண்மீன்களென விரிந்துள்ளது பெருவெளி. என் கையில் எதுவும் இல்லை என்பதனால் அவ்விரிவு என்னுடையதாகிறது” என்றார்.

அர்ஜுனன் நீள்மூச்சுடன்  “ஆம், விடுபடுவதே பேரின்பம். அதை என்னால் உணரமுடிகிறது” என்றான். “தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்று சௌம்யர் கேட்டார்.  “குபேரனைத்தேடி” என்று அர்ஜுனன் சொன்னான். தன் கதையை சொல்லிவிட்டு  ”அந்தணரே, தாங்கள் குபேரனை முழுதுறக் கண்ட எவரையேனும் அறிந்துளீரா?” என்றான்.  சௌம்யர் இயல்பாக “அவனை முழு வடிவில் நான் கண்டுள்ளேன்” என்றார்.

அர்ஜுனன் திகைப்புடன் “தாங்களா…?” என்றான். “ஆம். அயோத்திநாட்டில்  அஸ்வினிபுரம் என்னும் நகரில் வாழ்ந்திருந்த பெருவைதிகனின் மைந்தனாக நான் பிறந்தேன். எந்தை வேள்விச்செயல் தேர்ந்தவர். அரசர்களுக்கு உலகியல்நலன் நாடும் பெருவேள்விகளை நிகழ்த்தி வைப்பவர். ஆநிரையும் பொற்கிழிகளும் கூலக்குவைகளுமாக இல்லம்திரும்பும் தந்தையையே நான் இளமைமுதல் கண்டு வளர்ந்தேன். நான் பிறந்தது செல்வத்தின் நடுவே. பொன்னளைந்து வளர்ந்தேன். பொன்னை அறிந்தவன் பொன்னை மட்டுமே அறிந்திருப்பான். பிற அனைத்தும் பொன்னாலேயே அவனுக்குப் பொருள்படும். நானும் அவ்வண்ணமே இருந்தேன்.”

வேதம் என்பது சொல்லுக்கு நூறு பொன்னின் எடை கொண்டது என்று எந்தை என்னிடம் சொன்னார். அதுவே எனை வேதம் கற்கத்தூண்டியது. கற்கக் கற்க வேதம் விரிந்தது. பொன்குவிகிறது என்றே என் உள்ளம் மகிழ்ந்தது. பொன்னென்பதனால் நான் ஒருதுளியையும் வீணாக்கவில்லை. பிறிதெதையும் பொருட்படுத்தவுமில்லை. இளமை முதிர்வதற்குள் நான் வேதம் முழுதறிந்து நால்வகைக்கூற்றும் தேர்ந்தவனாக ஆனேன்.

எந்தை மறைந்தபின் நானும் என் வைதிகர்குலத்தின் முதல் வைதிகனானேன். வேள்விச் சாலைகளிலிருந்து வேள்விச்சாலைகளுக்கு சென்றேன். ஈட்டிக் குவித்து என் இல்லத்தை பொன்னால் நிறைத்து வைத்திருந்தேன். பொன் அளையும் நாகொண்டவன் என ஆணவம் கொண்டிருந்தேன். என்னைக் காணவருபவர்களிடமெல்லாம் நான் சொல்வதுண்டு, பொன்கறக்கும் பசுவே என் வேதம் என்று.

அன்றொரு நாள் பெருவேள்வி ஒன்றில் முதன்மை தலைவனாக அமர்ந்தேன். வேதச் சொல்லெடுத்து எரியோம்பிக்கொண்டிருக்கையில் அதில் ஒரு சொல் என் நாவில் எழவில்லை என்பதை அறிந்தேன். உடனோதியவர்கள் அச்சொல்லை ஓதி முன் சென்றுவிட்டிருந்தனர். நான் அச்சொல்லையே மீண்டும் அச்சத்துடன் எதிர்நோக்கிக்கொண்டிருந்தேன். அவ்வரி வந்தது, அச்சொல் என் நாவிலெழாது நழுவிச்சென்றது. என் உளவியளையாட்டா அது? நான் அஞ்சுவதனால் அப்படி நிகழ்கிறதா? நான் அதை கூர்வதனால் உள்ளம் என்னுடன் ஆடி மாயம் காட்டுகிறதா?

அவ்வரி வந்தது, அச்சொல்லுக்கு முந்தைய சொல் துல்லியமான ஓசையுடன் நிகழ்ந்தது. அச்சொல் இல்லையென நடித்து அதற்கு மறுசொல் என் நாவில் ஒலித்துச்சென்றது. அந்தவேள்வியில் நூறுமுறை அச்சொல் வந்தது, ஒருமுறைகூட என் நாவில் அது அமரவில்லை. வேள்விமுடிந்து எழுந்து சென்றபோது நான் பித்தனைப்போலிருந்தேன். பிறர் என் உள்ளம் கொண்ட குழப்பத்தை அறியவில்லை. நான் மட்டுமே அறிந்த ஒன்று அது என்பது முதலில் என்னை ஆறுதல்கொள்ளச் செய்தது. பின்னர் அதுவே என்னை பதற்றத்துக்குள்ளாக்கியது.

அச்சொல்லை மட்டுமே என் சித்தம் தொட்டு அளைந்துகொண்டிருந்தது. அச்சொல்லை என் உள்ளத்தால் பற்ற முடிந்தது. புரட்டிப்புரட்டி அதன் அத்தனை ஒலியமைவையும் பொருளமைவையும் காணமுடிந்தது. வேண்டுமென்றே அதை சொல்ல முயன்றேன். அச்சொல் மட்டும் நாவில் வந்தது. வேதவரியென சொல்கையில் மட்டும் அது நாவில் நிகழவில்லை.

மிகமிக அஞ்சிவிட்டேன். அது ஏதோ தேவனின் தீச்சொல். அல்லது உளநோயின் தொடக்கம். அதை எண்ணவேண்டாம், அதை விட்டு விலகிச்செல்வதே நன்று. ஆனால் விலகமுயலும்தோறும் அணுகினேன். அச்சொல்லை அன்றி வேறெதையும் எண்ணாதவனாக ஆனேன். அச்சொல் அறியாப்பேய்த்தெய்வம் போல அச்சமூட்டும் பேருருக்கொண்டு என்னைச்சூழ்ந்தது. இரவுகளில் துயிலிழந்தேன். பகலில் முற்றிலும் தனித்திருந்தேன்.

என் விழிகள் மாறுபட்டன. முகம் கொந்தளித்துக்கொண்டே இருந்தது. என் மனையாட்டி என்னிடம் மீளமீளக் கேட்டாள் “என்ன ஆயிற்று? ஏன் இப்படி இருக்கிறீர்கள்? எதையாவது அஞ்சுகிறீர்களா? எதையேனும் எண்ணி வருந்துகிறீர்களா?” ஓசையற்ற அசைவாக என் உதடுகளில் அச்சொல் நிகழ்ந்துகொண்டே இருந்தது. எனக்கு பீடைகூடிவிட்டது என்றனர் முதியவர். உள்ளச்சிதைவு என்றனர் தோழர்.  என் மனைவி கதறி அழுதபடி “என்ன ஆயிற்று உங்களுக்கு? மீண்டுவாருங்கள். நம் குழந்தைகளை என்ணுங்கள்” என்று என்னை உலுக்கினாள்.

என் செல்வம் துணைநின்றது. முதுவைதிகர் எழுவர் என்னை நடுவே இருத்தி வேள்விசெய்து  அவியும் பலியும் அளித்து என்னில் கூடிய தெய்வத்தை விரட்டமுயன்றனர். புறக்காட்டிலிருந்து பூசகனை வரவழைத்து வெறியாட்டு நிகழ்த்தினர். குறவப்பூசகன் வந்து தீயாட்டும் தெய்யாட்டும் நிகழ்த்தினான். மருத்துவர் பலர் வந்து  நெல்லிக்காய் தளமும் வில்வதளமும் வைத்து என் சித்தத்தை குளிர்விக்க முயன்றனர். ஒவ்வொன்றும் பிறிதெங்கோ நிகழ அச்சொல்லில் அமைந்திருந்தது என் சித்தம்.

நான் என்னை நோக்கிக்கொண்டிருந்தேன். கற்ற அனைத்தும் முழுமையாக நினைவிலிருந்தன. அவ்வொரு சொல் மட்டும்தான் நாவை அறியவில்லை. ஏன்? ஏன்? ஏன்? யார் விளையாடுவது என்னுடன்? அது ஓர் அறைகூவல். ஒரு இளிவரல்.  என் முன் அமர்ந்து முதிய நிமித்திகர் ஒருவர் சோழிபரப்பி வினாக்களம் அமைத்து உசாவிக்கொண்டிருந்தார். கையை ஓங்கி அறைந்தபடி நான் எழுந்தேன். “போதும்!” என்று கூவினேன். என்னைத்தடுத்த அனைவரையும் பிடித்துத் தள்ளிவிட்டு என் ஊரிலிருந்து வெளியேறினேன்.

செல்லும்வழியிலேயே என் ஆடைகளை அணிகலன்களை அடையாளங்களை களைந்தேன். என் உள்ளக் கொந்தளிப்பு அமைய ஏழுநாட்களாயின. அப்போது கங்கைக்கரைக்கு வந்துவிட்டிருந்தேன். அங்கிருந்து மேலும் வடக்காக கிளம்பிச்சென்றேன். எதைத் தேடி கிளம்பினேன் எங்கு செல்கிறேன் என்றெல்லாம் நான் அறிந்திருக்கவில்லை. சிலதருணங்களில் நம்மிடமிருந்து விலக நாம் நாமறிந்த அனைத்திலிருந்தும் தப்பி ஓடுகிறோம்.

வீரரே, உண்மையில் அது மிகச்சிறந்த ஒருவழி. நாம் என்பது நம்மைச்சூழ்ந்திருப்பவையே. ஊர், குலம், உறவு, மனை, செல்வம், ஆடைகள், அணிகள், பெயர்… அவற்றிலிருந்து நம்மை உருவி வெளியே எடுக்கும்போது நாம் அறிகிறோம் நாம் அவை அல்ல என்று. அந்த விடுதலையை அடைய துறந்தேகுவதைப்போல சிறந்த வழி பிறிதில்லை.

நூறுநாட்கள் வடதிசைநோக்கி சென்றேன். ஒரு அன்னசாலையில் ‘குபேரன்’ என்னும் சொல் காதில் விழுந்ததும் என் அகம் கொப்பளித்தெழுந்தது. என் உள்ளம் அனைத்தையும் உதறித்தெளிந்து அடுத்த அடியெடுத்துவைக்க உதவும் சொல்லுக்காக காத்திருந்தமையால் அச்சொல் அப்படி பொருள்கொண்டது. நான் உசாவவேண்டியது அவனிடம்தான். அவனைத்தான் அதுகாறும் நான் வழிபட்டிருந்தேன். வேதச்சொல்லை எனக்கு மீட்டளிக்கவேண்டியவன் அவன். வேதமாகி என்னுள் நிறைந்தவன்.

குபேரதீர்த்தம் என்னும் சுனையைப்பற்றி சொன்னார்கள் அவ்வழிப்போக்கர்கள். அப்படி ஒரு சுனை உண்மையில் உண்டா அது சூதர்களின் தொல்கதை மட்டும்தானா என்பதுதான் அவர்களின் சொல்லாடலாக இருந்தது. அது வடபுலத்தில் எங்கோ மலைமடிப்புக்குள் உள்ளது. அதில் பொன்னே நீரென ஊறும். அதைச்சூழ்ந்து பொன்மலைகள் அமைந்திருக்கும். பொன்னாலான கூழாங்கற்களும் சேறும் சூழ்ந்த அச்சுனைக்கு சுற்றிலும் செழித்திருப்பதும் பொன்நாணலும் பொற்செடிகளும்தான். பொற்பாறைகளில் படிந்திருப்பதும் பொற்பாசியே.

உரக்கநகைத்து ஒருவன் சொன்னான் “காசில்லாமல் பசித்திருந்த எவனோ ஒருவனின் கனவில் வந்த இடம் அது.” ஆனால் நான் அப்படி ஓர் இடமுள்ளது என உறுதிகொண்டேன். அவர்களிடம் ஒன்றும் சொல்லாமல் அவர்கள் தொல்கதைகளில் இருந்து சொன்ன வழியடையாளங்களை உளம்கொண்டு மேலே நடக்கலானேன்.  முந்நூறுநாட்கள் ஒவ்வொரு வழிக்குறியாகத் தேடிக் கண்டடைந்து சென்றேன்.

குபேரதீர்த்தத்திற்கு தவமுனிவர் அன்றி பிறர் செல்லமுடியாதென்றே இறுதியாக எனக்கு வழி சொன்ன முனிவர் சொன்னார். “நான் செல்வதே ஒரு தவம். சென்றடையாது உயிர்வாழமாட்டேன்” என்று அவரிடம் சொன்னேன். என் உடல் நலிந்தது. சடை அடர்ந்து கண்களில் பித்து நிறைந்தது. பிறிதொரு எண்ணமும் அற்றவனாக சென்றுகொண்டே இருந்தேன். இறுதியில் அந்த சுனையை சென்றடைந்தேன்.

பொன்மயமான அதன் கரையிலமர்ந்து தவம்செய்தேன். பதினெட்டுநாள் பிறிதொன்றிலாது என்னுள் மூழ்கினேன். என்னுள் இருந்து ஒவ்வொரு சொல்லாக உதிர்த்தேன். அந்த ஒற்றைச் சொல் மட்டும் எஞ்சியிருக்க அதுவே நான் என்றாகி அமர்ந்திருந்தேன். அச்சொல் முதலில் ஒரு வினாவாக இருந்தது. அதன்மேல் மோதிமோதி என் சித்தம் அதை ஒரு விடையென ஆக்கிக்கொண்டது.

விழிக்குள் பொன்னொளி சூழக்கண்டு இமைதிறந்தேன். பொன்னுடல் ஒளிவிடத் தோன்றிய  குபேரனை முழுமையாகக் கண்டேன். பொன்னுடல் கொண்ட மானுடன் ஒருவனை அவன் ஊர்தியாக்கியிருந்தான். வீரரே, அந்த மானுடன் நான். என் இளமைத்தோற்றம் அது. குபேரனின்  ஊர்தி மானுடனே என அறிந்திருப்பீர். ஒவ்வொருவரும் தங்கள் வடிவில் காணும் மானுடன் அவன்.

குழந்தையின் கொழுத்த குற்றுடல். இடுங்கிய சிறுகண்கள். பொற்கதாயுதம். மறுகையில் பொன்னூறும் கலம். கீழ்க்கையில் தாமரை. “என்ன விழைகிறாய்?” என்று திருந்தாக்கிளவியில் கேட்டான். “எந்தையே, நான் வேதச்சொல் ஒன்றை மறந்தேன். அது என் நாவிலெழவேண்டும்” என்றேன். “என்னிடம் செல்வத்தையே கோருவார்கள். வேதச்சொல்லை எவரும் கேட்டதில்லை” என்று அவன் சொன்னான். தந்தைக்கு விடைசொல்லும் மைந்தன்போல தடுமாறினான்.

“எனக்கு வேதமே செல்வம். வேதம் அழிந்தால் நான் முற்றழிவேன்.  அந்த ஒற்றைவேதச்சொல் அழியும் என்றால் முழுவேதத்தையும் நான் இழக்கலாகும். அந்த வேதச்சொல்லை மட்டுமே வேண்டுகிறேன்” என்றேன். “நான் அச்சொல்லை மீட்டளிக்க இயலாது” என்று அவன் சொன்னான். சீற்றத்துடன் “பிறிதொன்றும் வேண்டேன். நீ எழுந்தருளியும் எனக்குக் கனிய  உனக்கு ஆற்றலில்லை என்றே கொள்கிறேன்” என்று நான் சொன்னேன்.

அவன் “என்னிடம் உள்ளது அளவிலாச் செல்வம். ஆனால் செல்வம் மட்டுமே உள்ளது” என்றான். “அச்செல்வத்தில் இச்சொல்லுக்கு நிகரானதை அளித்து அதை மீட்டு எனக்கு அளி” என்றேன். “அச்செல்வத்தைப்பெற்று அமைக!” என்றான். “செல்வத்தைப் பெரிதென எண்ணியிருந்தால் நான் கிளம்பியிருக்கவே மாட்டேன். உன் செல்வத்தைக்கொண்டு அச்சொல்லை மீட்டெடுத்த வாக்தேவியிடமிருந்து வாங்கி எனக்கு அளி” என்றேன்.

“ஆம், அதைச்செய்கிறேன்” என்று அவன் விழிமூடினான்.  அவனருகே அவனைப்போன்றே தோன்றிய மூன்று குபேரபுரியின் ஏவலர் தோன்றினர் “வாக்தேவியை அணுகி என் செல்வத்தில் அச்சொல்லுக்கு நிகரானதை அளித்து அதை மீட்டுவருக!” என்றான். அதன்பின் என்னை நோக்கி புன்னகைத்து “என்னிடம் உள்ளது குன்றாப்பெருஞ்செல்வம். இப்புடவியையே நான் வாங்கமுடியும்” என்றான். குழந்தைமை பேதைமையாக ஆகும் சிரிப்பு அது என எனக்குப்பட்டது.

அவர்கள் வரக்காணாதபோது “எங்கு சென்றார்கள்?” என நிலையழிந்தான். “எங்கே சென்றீர்கள்?” என இரைச்சலிட்டான். அவர்கள் வரக்கண்டு “அதோ வருகிறார்கள்” என்றான். “வாங்கிவந்துவிட்டார்கள்” என்று சிரித்தான். அவர்கள் அருகணைந்து தலைவணங்கி “அரசே, சொல்லரசி அச்சொல்லை ஒரு துலாவின் தட்டில் வைத்தாள். மறுதட்டில் இணையான செல்வத்தை வைத்து எடுத்துச்செல்லுங்கள் என்றாள். நாங்கள் பொற்குவை ஒன்றை வைத்தோம். பொன்மலை ஒன்றை வைத்தோம். பொன்மலைகளை அள்ளி அள்ளி வைத்தோம்” என்றான் ஒருவன்.

“அரசே, நம் கருவூலத்தையே வைத்தோம். நம் நகரை நம் உலகையே வைத்தோம். அச்சொல் அசையவே இல்லை. வாக்தேவி நகைத்து மூடர்களே உங்கள் அரசனும் நீங்களும் அமர்ந்தாலும்கூட நிகராகாது என்றாள்” என்றான் இன்னொருவன். குபேரன் திகைத்து என்னை நோக்கி “நீ யார்? ஏன் என்னை இந்த இடரில் சிக்க வைத்தாய்?” என்று சீறினான். “அரசே, வேதச்சொல்லுக்கு இணையாகும் ஏதும் நம்மிடம் இல்லை என்று அவ்வன்னை சொன்ன போது வானம் இடிசூழ்ந்து ஆம் ஆம் என்றது” என்றான் மூன்றாமவன்.  ”நான் அன்னையிடம் சொல்வேன்… அன்னையிடம் சொல்லிவிடுவேன்” என குபேரன் அழுதான்.

நான் திகைப்புடன் நோக்க அவன் நிலத்தில் விழுந்து கைகால்களை உதைத்தபடி “நான் அழுவேன்… நான் அழுவேன்… அவளை அடிப்பேன்…” என்று கதறத் தொடங்கினான். அவர்கள் அவனை இழுத்துச்சென்றார்கள். அவன் ஊர்தியாகிய என் வடிவன் என்னை நோக்கி சிரித்தபடி உடன் சென்றான்.

என்ன அதெல்லாம் என்று எனக்குப்புரியவில்லை.  குபேரதீர்த்தத்தில் இருந்து நான் திரும்பினேன். திரும்பும் வழியில் என் எண்ண அலைகள் ஓய்ந்திருப்பதை, நான் எடையற்றவனாக இருப்பதை உணர்ந்தேன். சிரிக்கத் தொடங்கினேன். சிரித்து சிரித்து மண்ணில் விழுந்து எழுந்து மீண்டும் சிரித்தேன். சிரிப்புடன் சிற்றூர்களை கடந்து சென்றேன். என்னைக் கண்டவர்கள் அனைவரும் அவர்களை அறியாமல் சிரிக்கலாயினர்.

அச்சிரிப்பினூடாக என் நா மறந்த அச்சொல் மீண்டு வந்தது. அவ்வேதவரியை சொன்னேன். சொல் அமைந்திருந்தது. உண்மையா என நானே வியந்து மீண்டும் மீண்டும் சொன்னேன். அச்சொல் அங்குதான் இருந்தது. ஒன்றுமே நிகழாததுபோல. அனைத்தும் என் உளமயக்கென்பதுபோல. அதை மீண்டும் மீண்டும் சொன்னபடி நான் அழுதேன்.

“அங்கிருந்து இங்கு வந்து அமர்ந்தேன். வேதத்தின் அச்சொல்லை மட்டுமே இங்கு நான் ஓதிக்கொண்டிருக்கிறேன். அச்சொல்லாக நிறைந்துள்ளது இக்காடு” என்றார் சௌம்யர். அர்ஜுனன் நீள்மூச்சுடன் உடல் எளிதாக்கி புரண்டு படுத்தான். அவன்மேல் பனிக்கால நிலவு செம்பொன்னொளியுடன் நின்றது. “அச்சொல் எது?” என்று அவன் கேட்டான். “ஹிரண்ய” என்றார் சௌம்யர். “பொன் எனும் சொல். வேதம் பிரம்மத்தையும் கூழாங்கல்லையும் அனலையும் இளந்தளிரையும் அதைக்கொண்டே குறிக்கிறது.”

[ 6 ]

அர்ஜுனன் நூறு  நாட்கள் நடந்து குபேரதீர்த்தத்தை சென்றடைந்தான். ஏழுமலைமுடிகள் சூழ்ந்த ஒற்றையடிப்பாதை முதல் வழிக்குறி. சிம்மவாய் எனத் திறந்த குகை என்பது அடுத்தது. முதலைமுதுகுபோன்ற பாறைநிரை பிறகு. பூதங்களின் பாலம் தொடர்ந்து வந்தது. நெருப்பாக நீர் வழியும் பேரருவி பின்னர். சிரிக்கும் மலை அதற்கு அப்பால். வெண்பனி உருகி வழியும் முடி பின்னர். அதன்பின் அவன் குபேரதீர்த்தத்தை தொலைவிலேயே கண்டான்.

பனிமலை முடிகள் சூழ்ந்த சிறிய தாழ்வரை அது.  மஞ்சு உருகிய நீர் வந்து சேர்ந்து உருவான நீள்வட்ட வடிவான சுனை. நீலநிறத்தில் நீர் தேங்கி வான் தளும்பக் கிடந்தது. அதனருகே வெண்ணிறச் சேற்றுப்பரப்பில் ஒரே ஒரு காலடிமட்டும் சென்று திரும்பிய தடம் உலர்ந்து பளிங்குப்பாறையில் செதுக்கிய சிற்பம் போலாகி தெரிந்தது. அது சௌம்யரின் காலடி என அவன் உய்த்துக்கொண்டான்.

மண் உதிர்ந்த சரிவில் தொற்றி அந்தச் சுனையைநோக்கி இறங்கிச் சென்றான். இருமுறை பிடியுடன் மண் விரிசலிட்டு வர விழுந்து அடுத்த மண்மேட்டைப் பற்றிக்கொண்டு நின்றான். மூச்சிரைக்க இறங்கி அச்சுனை அருகே சென்று நின்றபோது அங்கே முன்னரே வந்திருப்பதாக ஓர் உணர்வுதான் ஏற்பட்டது.  அந்த மண் வெண்சுண்ணத்தாலானது. மெல்லிய கந்தகம் கலந்த நீர் எடைகொண்டதாக இருந்தது. அதில் மீன்களோ பிற சிற்றுயிர்களோ இருக்கவில்லை.

அருகே சென்று குனிந்து நோக்கியபோது அச்சுனையின் ஆழம் அச்சுறுத்தியது. அடியிலி என்றே அவன் விழி மயங்கியது. அது ஒரு பெரும் குகையின் வாய். அக்குகை எங்கு செல்லக்கூடும்? மலையிறங்கி ஆழத்திற்கு என்றால் அங்கே நீர் எப்படி நிற்கிறது? மலைஏறிச்சென்றால் அது அங்குள்ள பனிமுடிகளில் ஒன்றில் சென்று முடியலாம். அல்லது விண் நோக்கி வாய்திறந்திருக்கலாம். வெறும் வெளியை அள்ளி அள்ளி குடித்துக்கொண்டிருக்கலாம்.

அவன் அதனருகே ஒரு பாறையில் அமர்ந்தான். மடியில் கைகளை வைத்து கண்களைத் திறந்து  ஊழ்கத்தில் ஆழ்ந்தான். மேற்கே சரியத்தொடங்கிய சூரியக்கதிர் கசிந்து பரவி நீரொளி கொண்டிருந்தது வானம். முகில்கள் வெண்நுரைக் குவைகளாக அசைவற்று நின்றன. தொலைவில் மலைமுடிகள் சூடிய பனிப்பாளங்கள் மெல்ல அண்மை கொண்டு விழிகூசும்படி வந்து விரிந்தன.  மயங்கிய விழிகளுக்கு முகில்களும் பனிமுடிகளும் ஒன்றெனக் கலந்து காட்சியளித்தன.

அவன் உள்ளம் மெல்ல ஏமாற்றம் கொள்ளத் தொடங்கியது. இது வெறுமொரு சுனைதான். அவன் அதுவரை கண்டிருந்த பல்நூறு சுனைகளில் ஒன்று மட்டுமே. இமயமலைகளுக்குள் அப்படி பல்லாயிரம் பனிச்சுனைகள் உள்ளன. அங்கே செல்வது அரிதென்பதனாலேயே அவை அரிதாகத் தோன்றுகின்றன. அரியவற்றை மேலும் அரிதாக்க எழுகின்றன தொல்கதைகள். விண்ணளாவும் நம்பிக்கைகள். ஆம். எழவேண்டியதுதான். மீள்வதே முறை. ஆனால் அவன் உள்ளம் கொண்டிருருந்த இனிய சோர்வு அவனை அங்கேயே அமரச்செய்தது.

அவன் சற்று துயில்கொண்டிருக்கவேண்டும். விழிப்பு வந்தபோது அந்தி ஆகிவிட்டிருந்தது. தன்னைச்சூழ்ந்த பொன்னொளியைக் கண்டு திகைத்தபடி எழுந்தான். சூழ்ந்திருந்த அத்தனை மலைகளும் பொற்கூம்புகளாக ஒளிவிட்டன. முகில்கள் பொற்சுடர்களாக எரிந்தன. அவன் நின்றிருந்த மண்ணும் அருகிருந்த சேறும் கூழாங்கற்களும் பொன்னென்றாகிவிட்டிருந்தன. அவன் மெல்ல நடந்து அச்சுனையை அணுகினான். அது பொன்னுருகி ததும்பியது.

அவன் அதனருகே நின்று குனிந்து நோக்கினான். உள்ளே பொன்மலைகள் எழுந்த ஒரு வெளி தெரிந்தது. அதை ஊடுருவிச்சென்றது பொன்னாலான பாதை ஒன்று. அவன் கால்கள் நடுங்கின. தன் கட்டுப்பாட்டை இழந்து உள்ளே குதித்துவிடுவோம் என அவன் அஞ்சினான். ஆனால்  பின்னகரக்கூடவில்லை. பொன் அவன் சித்தத்தை நிறைத்தது. அனைத்து எண்ணங்களும் பொன்னென்றாயின.

அவன் விழிகளை மூடித்திறந்தான். நீரில் எழுந்த அவன் பாவை அவனை விழி மூடாது நோக்கியது. “விலகு… நான் உன்பாவை” என்றது. “தன் பாவைகளால்தான் ஒவ்வொருவரும் ஆழங்களுக்குள் கவரப்படுகிறார்கள்.” அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். “பொன்னொளிர் பாவை! இதுநாள் வரை எங்கிருந்தது இது?” அது சிரித்தது. “நான் நீ….” அவன் பின்னகர விரும்பினான். ஆனால் அப்புன்னகை அவனை கவ்வி வைத்திருந்தது. “நீ விலகு என்கிறாய். ஆனால் என்னை ஈர்க்கிறாய்.” அது நகைத்தது. “ஆடிப்பாவைகள் அனைத்துமே அப்படித்தான்.”

அவன் இருமுறை தள்ளாடினான். விலகு விலகு. இதுவே தருணம். விலகிவிடு. அவ்வெச்சரிக்கை ஒலியே அவனைச் சீண்டி முன் செலுத்தியது. எம்பி அந்நீரில் பாய்ந்தான். நீர் என அவனை அள்ளி அணைத்து குளிரக்குளிர இறுக்கி உள்ளிழுத்துக்கொண்டது அது. பின்னர் அவன் இருபக்கமும் பொன்னிற அலைகளாக மலைகளை காணத்தொடங்கினான். எரிந்தபடி பொன்முகில்கள் நெளிந்தன. பொன்னாலான பாதை சுருளவிழ்ந்து நீண்டு அவனை கொண்டுசென்றது.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 24

[ 3 ]

பொன்னொளிர் குழந்தை வளர்ந்து ஆண்மகன் என்றாகியது. ஆயினும் அதன் உடல் நடைதிருந்தாக் குழவிபோன்றே இருந்தது. அன்னை அதை பேருருவ மகவென்றே எண்ணினாள். நெஞ்சுகுழைந்து அமுதூட்டினாள். குழல் அள்ளிக்கட்டி மலர்சூட்டிக் கொஞ்சினாள். தூக்கி தோளில் வைத்து விண்ணகப் பாதைகளில் நடந்து ஆறுதிசை காட்டி மகிழ்வித்தாள். முகில் அள்ளிக் களித்தும் விண்மீன்களை வாரிச் சிதறடித்தும் விளையாடியது அது. தான் ஓர் இளைஞன் என்றே அது அறிந்திருக்கவில்லை.

ஒருநாள் விண்வழி ஒன்றில் அது ஆடிக்கொண்டிருக்கையில் அவ்வழியே காசியப முனிவர் சென்றார். அவர் அணிந்திருந்த சடைமகுடத்தைக் கண்டு நகைத்த குழந்தை விண்மீன்களை அள்ளி அவர்மேல் எறிந்தது. தன் மேல் வழிந்தொளிர்ந்து விழுந்த விண்மீன்களைக் கண்டு சினந்து திரும்பிய முனிவர் குழவியுடல் கொண்ட இளைஞனைக் கண்டு  “நீ யார்?” என்றார்.

“தேவவர்ணினியின் மைந்தன்.  விஸ்ரவஸுக்குப் பிறந்தவன். பிரம்மனின் கொடிவழி வந்த தேவன்” என்றான் குபேரன். “நன்று! பொன்னுடல் கொண்டிருக்கிறாய். அன்னையால் இன்னமும் குலவப்படுகிறாய் என்று எண்ணுகிறேன். என்று எழுந்து கைகால் கொண்டு ஆண்மகனாகப்போகிறாய்?” என்றார் காசியபர். “ஆண்மகனாவது எதற்கு?” என்றான் குபேரன்.

“இளைஞனே, குழவிப்பருவத்திற்கும் மானுடனுக்குமான வேறுபாடென்ன என்று அறிவாயா?” என்று முனிவர் கேட்டார். “அறியேன்” என்றான் குபேரன். “குழவி பிறிதொருவர் ஆட்சியின் கீழ் இருக்கிறது. கொஞ்சப்படினும் கொண்டாடப்படினும் அது அடிமையே.  மானுடன் பிறர் மேல் ஆட்சி செய்கிறான். எப்பருவத்திலாயினும் பிறர் ஆட்சிக்குக் கீழ் இருப்பவர்களுக்கு முழு வளர்ச்சி கிடையாது. எத்தகையவராய் இருப்பினும் அவர்கள் குழந்தைகளே” என்றபின் அவர் நடந்து சென்றார்.

அவ்வெண்ணம் கணம்தோறும் எடைகொள்ள தன் அன்னையிடம் மீண்டு வந்த குபேரன் தனித்திருந்து நெஞ்சுலைந்தான். அன்னை அவன் உள்ளத்திலமைந்தது என்ன என்று நூறுமுறை கேட்டும் அவனால் மறுமொழி சொல்லமுடியவில்லை.  ஏழிரு நாட்கள் தன்னுள் இருண்டு அமர்ந்திருந்த பின் எழுந்து வந்து அன்னையிடம் “அன்னையே, இன்னும் எத்தனை நாள் உங்களுக்கு குழந்தையாக இருப்பேன்?” என்று கேட்டான்.

“வாடாத் தளிருடல் உனக்கு வேண்டுமென்று எண்ணினேன். அதன்பொருட்டே உன்னை குழவியெனப் பெற்றேன். என்றும் நீ எனக்குக் குழவிதான்” என்றாள் அன்னை. “ஆம். உங்கள் நோக்கில் மட்டும் என்றும் குழந்தையாக இருக்கிறேன். ஆனால் இப்புடவியை நான் ஆளவேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றான்.

அன்னை திகைத்தாள். “புடவியை ஆள்வதென்பது எளிதல்ல மைந்தா, ஆள்பவன் ஒவ்வொரு நாளும் இழந்துகொண்டிருப்பவன்” என்றாள். “அவ்வாறென்றால் இழப்பதுதான் ஆள்வதற்கான வழியா?” என்றான் மைந்தன். அவன் என்ன புரிந்துகொள்கிறான் என்றுணராமல் “ஆம், தன்னை முற்றிழப்பவன் முற்றதிகாரத்தைப் பெறுகிறான்” என்றாள் அன்னை. “அவ்வண்ணமே” என்று எழுந்து குபேரன் தென்திசைக் கடல் நோக்கி சென்றான்.

கடல் ஆழத்தில் மூழ்கி இறங்கி பல்லாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் செய்தான். கடல்மேல் சென்ற கலங்கள் இருண்ட ஆழத்தில் ஒளிர்ந்த பொன்னைக் கண்டன. மீன்கள் அதை அணுகி பொன்னொளி பெற்று திரும்பி வந்தன. கடல் ஆழத்தில் குடிகொள்ளும் அந்தப் பொன் தப்தகாஞ்சனம் எனப்பட்டது. அதைப்பற்றிய கனவுகள் மண்ணில் பரவின.

தவம் முதிர்ந்து கனிந்தபோது குபேரன் பொன்னலையென உருகி பரவி கடலாழத்தில் ஒளிவிட்டுக் கொண்டிருந்தான். அவன் தவம் கண்டு மூதாதை பிரம்மன் இரங்கினார். அவன் முன் தோன்றி கைதொட்டு சுட்டுவிரலில் ஒரு பொன்னிறப்பொட்டு என மேலெடுத்தார். “என்ன வேண்டும்? கேள், இளமைந்தா!” என்றார். “இப்புடவியை நான் ஆளவேண்டும், எந்தையே” என்றான் குபேரன். “நீ பொன்னுக்கு இறைவன். புவி அனைத்தும் செல்வத்தால் ஆனது, செல்வமனைத்தையும் நீயே ஆள்க!” என்றார் பிரம்மன்.

“தனியொன்றை ஆள நான் விரும்பவில்லை. புடவியின் அனைத்தையும் ஆளும் ஆற்றலையே நான் கோருகிறேன். பிறிதொன்றும் எனக்குத் தேவையில்லை…” என்றான் குபேரன். “சிறுமைந்தர் போல பேசாதே. இது வாழ்வறிந்தவனின் விழைவு அன்று” என்றார் பிரம்மன். “எனக்கு திசைநான்கும் வேண்டும். வானும் மண்ணும் வேண்டும்…” என்று குபேரன் கைகளை உதறி காலால் நிலத்தை உதைத்தான். “மைந்தா புரிந்துகொள், நீ செல்வத்தின் தெய்வம். புடவியின் அனைத்தையும் ஆள செல்வத்தை அமைப்பதென்பது பேரழிவை விளைப்பது” என்றார் பிரம்மன்.

“எனக்கு வேண்டும்… எனக்கு வேண்டும்” என்று குபேரன் சிணுங்கினான். “நான்கு இழைகளால் நெய்யப்பட்டது இப்புவி வாழ்க்கை. நான்கு திசைகளென அவை அமைந்துள்ளன. தென் திசையை இறப்பு ஆள்கிறது. வடதிசையை நீ ஆள்க! இறப்பும் செல்வமும் துலாவின் இரு தட்டையும் நிகர் செய்க!” என்றார் பிரம்மன்.

“இப்புவியை ஆளும் வல்லமை பெறும்வரை இக்கடல்விட்டு நான் வெளிவருவதில்லை” என்றான் குபேரன். “மைந்தா, ஒருபோதும் நிகழாததற்கு விழைவு கொள்கிறாய்” என்று பிரம்மன் திரும்பினார். “அவ்வண்ணமெனில் இன்னும் பல்லாயிரம்கோடி வருடங்கள் இன்பதுன்பம் இருத்தல் இன்மையென அனைத்தையும் துறந்து வாழ்கிறேன். நன்று” என்றபடி அவன் நீர் புகுந்தான்.

உளம் கேளாது எட்டி அவனைப்பற்றி இழுத்து நெஞ்சோடணைத்து பிரம்மன் சொன்னார் “உன்னை அவ்வண்ணம் விட உன் முதுதந்தையின் உள்ளம் ஒப்பவில்லை. ஒன்று சொல்கிறேன். புவியை ஆளும் தேவர்கள் பலர் இருக்கலாம். அவர்கள் அனைவரையும்விட மேலாக நீயே வழிபடப்படுவாய். எளிய மாந்தர் உன்னையே அவர்கள் என காண்பார்கள். உன் பொன்னொளியை மீறிச்செல்லும் அகவிழி கொண்டவர் மட்டுமே பிறரை காண்பார்கள். இப்புவியில் பிறந்திறந்து மாயும் பலகோடி மாந்தரில் மிகச்சிலரே நீயன்றி பிறரைக் காண்பார். நீயே இப்புடவியை ஆள்வதற்கு நிகர் அது.”

முகம் மலர்ந்த குபேரன் “ஆம், அது போதும்” என்றான். “நீ வடதிசையில் அமர்க! உன் நகர் அங்கு அமைக!” என்று சொல்லி பிரம்மன் மறைந்தார். வெற்றிக் களிப்புடன் குதித்துக் கும்மாளமிட்டபடி அன்னையிடம் ஓடிவந்தான் குபேரன். நானே அனைத்தையும் ஆள்வேன். நானே ஆள்வேன்” என்று கூச்சலிட்டான். அவளை அள்ளித்தூக்கிச் சுழற்றி நடனமாடினான்.

குபேரன் வடக்கு திசையில் அமைத்த நகரம் அளகாபுரி என்று அழைக்கப்பட்டது. இரும்பாலானது அதன் புறக்கோட்டை வட்டம். செம்பால் ஆனது உட்கோட்டை. வெள்ளியாலான நகர்க்கோட்டைக்குள்  சந்திரனின் வெண்குளிர் ஒளி எப்போதும் நிறைந்த வானம் கவிந்திருந்தது. வெண்பட்டு என மெல்லிய தரை அங்கிருந்தது. நகரக்கட்டடங்கள் அனைத்தும் ஆடகப்பொன்னால் ஆனவை. பொற்சுவர்கள். பொற்கட்டிகளால் ஆன படிகள். பொற்தூண்கள். பொற்பாளக் கதவுகள். கிளிச்சிறைப்பொன்னால் ஆனவை இல்லங்களின் உட்பகுதிகள். மாடமுகடுகள் சாதரூபப் பொன்னுருக்கிச் செய்தவை. மணிகள் மணல் பெருக்கென இறைந்து கிடந்தன.

அங்கே மரங்களும் செடிகளும் பொன்னே. மலர்களும் தளிர்களும் பொன்னே. வண்ணத்துப்பூச்சிகளும் பறவைகளும் பொன்னால்  அமைக்கப்பட்டு மரங்களில் பதிக்கப்பட்டிருந்தன. குபேரபுரியின் காவலரும் ஏவலரும் தவிர அங்கு உயிரசைவென ஏதுமில்லை. பொன்னே ஒளியென்று நிறைந்திருந்தது. பொன்னே நறுமணமாக வீசியது. பொன்னே இன்னிசையாக சூழ்ந்திருந்தது. விழிகளுக்குள் புகுந்து சித்தமாக ஆனதும் பொன்னே.

குபேரனின் கருவூலங்கள் பதினாறாயிரத்தெட்டு. அவற்றில் அருமணி முதல் அனைத்து செல்வங்களும் நிறைந்திருந்தன. அள்ளப்படுவது அக்கணமே ஊறிநிறையும் தன்மைகொண்டிருந்தது அது. அங்கு உலவியவர்களின் நிழல்களும் பொன் நிறத்தில் விழுந்தன. அங்குள்ள இருட்டும் அடர்பொன்னிறமே.

பொன் விழைந்து இறந்தவர்கள் அங்கு வந்தனர். ஊழிக்காலம் அங்கு பொன்னை உண்டு பொன்னில் படுத்து பொன்னை உயிர்த்து பொன்னில் எண்ணம்கொண்டு பொற்கனவுகளில் ஆடினர். பொன் திகட்டி பொன்னை வெறுத்து அங்கு ஒருகணமும் வாழமுடியாமலாகி கால்வைக்கக் கூசி எண்ணஎண்ண துயர்கொண்டு கண்ணீர் உதிர்த்து அழுது மேலும் ஒரு ஊழிக்காலம் அங்கே தவம் செய்தபின்னர் மண்ணில் மீண்டும் பிறந்தார்கள். அவர்களுக்கு கலையோ கவிதையோ ஊழ்கமோ முதன்மையாக இருந்தது. பொன்னை பொன்னின் பொருட்டே அவர்கள் வெறுத்தார்கள்.

குபேரனுக்கு அளகதளம் என்னும் மணியாலான சிம்மாசனம் இருந்தது. அவன் மணிமுடி சுவர்ணஜ்வாலா எனப்பட்டது. அவன் செங்கோல் காஞ்சனகீர்த்தி. அவன் கொடி சோனஜிஹ்வா. அவன் அரியணையை பொன்னிற ஆமைகள் தாங்கியமர்ந்திருந்தன. அவன் இலச்சினை வெள்ளி உடலும் பொன்னாலான கொம்புகளும் கொண்ட வெள்ளாடு. அவன் அரண்மனை பொன்னில் எழுந்த நுரை என பன்னிரண்டாயிரம் பொற்கும்மட்டங்களும் பொற்கோபுரங்களும் கொண்டிருந்தது. அதனுள் பதினாறாயிரத்தெட்டு பொற்தூண்களால் ஆன ஆட்சிமண்டபத்தின் நடுவே அரியணையில் கையில் பொன்நிற கதாயுதத்துடன் அமர்ந்து அவன் இப்புவியாளும் பெருவிழைவுகளை அளந்தான்.

ஒவ்வொருவர் கனவிலும் வந்து பொன் காட்டி உயிர்ப்பை எழுப்பி மறைந்தான். பொன் பொன் என விழைந்த மானுடர் துழாவித்தவித்து  அலைக்கும் கைகளுக்கு அப்பால் எட்டி எட்டிச் சென்று நகைத்தான். தெய்வங்களுக்காக புவி மானுடர் வணங்கி அள்ளியிட்ட மலர்களில் பெரும்பகுதியை அவனே பெற்றுக்கொண்டான். அவர்களின் வாழ்த்துரைகள் ஓரிரு சொல்லன்றி பிற அனைத்தும் அவனையே சென்றடைந்தன. அவர்கள் முன் திசைத்தேவர்களாக மும்முதல்வர்களாக அன்னையராக தேவியராக உருக்கொண்டு அவனே தோன்றினான். வேள்விகளில் தேவர்கள் அனைவரின் உருவமும் தானேகொண்டு வந்து அவிபெற்று மீண்டவன் அவனே.

எனினும் அருள் புரியும் கனிவு அவனில் கூடவில்லை. பொன்மேல் அமர்ந்து பொன்னென ஆகிய அவன் உள்ளம் மலர் மென்மையை அறியவே இல்லை. அடம்பிடிக்கும் குழந்தையாக, அனைத்தையும் விழைபவனாக, பெற்றுக்கொள்ளமட்டுமே எண்ணுபவனாக அவன் இருந்தான்.  அள்ளக்குறையாது பொருள் நிறைந்திருந்தபோதும் ஒரு துளியை இழந்தால் அதையே எண்ணி அவன் ஏங்கினான். ஒற்றைப்பொன்னின் ஒலியையே அவன் செவி இசையென எண்ணியது.  செல்வமென்பது செல்லக்கூடியதென்றே அவனுக்கு பொருள் பட்டது. அளிப்பதென்பது இழப்பதென்றே அவன் உணர்ந்தான்.

அவனிடமிருந்து அருள் பெற்றவர்கள் அவனை வணங்கியவர்கள் அல்ல. அவனைக் கடந்து பிற தெய்வங்களை வணங்கி அவர்களிடமிருந்து அருள் பெற்று அவனிடம் வந்வர்களே. அத்தெய்வங்களின் ஆணையை மீறமுடியாமல் மட்டுமே தன் உறுதி இறங்கி அவன் தன் கருவூலத்தை திறந்தான். அள்ளி பொருள் கொடுக்கையில் ஒவ்வொரு மணிக்கும் நாணயத்திற்கும் தன்னுள் கணக்கு வைத்தான். அளித்தவற்றை எண்ணி எண்ணி சினந்து ஏங்கினான். அளித்த பொருள் உள்ளத்துள் பெருக  பெற்றவர்களால் தான் ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கப்படுவதாக எண்ணினான்.

[ 4 ]

ஜாதவேதனின் இல்லத்திலிருந்து கிளம்பிய அர்ஜுனன் உளம் தளர்ந்திருந்தான். வடக்கு நோக்கி செல்லவேண்டும் என்னும் ஆணையை அவனறியாமலேயே சித்தத்திலிருந்து கால்கள் பெற்றுக்கொண்டன. வழியை அவன் விழிகள் நோக்கவில்லை. செவி அறியவில்லை. கான் வாழ்க்கையின் நெடும்பழக்கத்தால் ஊர்களுக்குள் செல்லும் வணிகப்பாதைகளைத் தவிர்த்து காட்டுக்குள் ஊடுருவிச்செல்லும் மேய்ச்சல்பாதையை அவன் தேர்ந்தான். அவனை ஊர்களும் ஆயர்மன்றுகளும் ஓசையின்றி நழுவவிட்டுக்கொண்டிருந்தன.

மூன்று நாட்கள் சென்றபின்னரே தான் செல்ல வேண்டிய இடம் என்னவென்று அவன் சித்தத்தில் வினா எழுந்தது. அதன் பின்னர் அவன் குபேரனைப்பற்றி என்ணலானான். அந்நிகழ்வுகளுக்கோர் ஒழுங்கும் இலக்கும் இருப்பதை அப்போது உணர்ந்தான். ஊர்ப்பெரியவர் ஒருவரிடம் “குபேரனுக்கான ஆலயம் எங்குள்ளது?” என்றான். “குபேரனுக்கு ஆலயம் கட்டுவதில்லை, வீரரே. அனைத்து ஆலயங்களும் குபேரனுக்குரியவையே” என்றார் அவர் நகைத்தபடி. “வேளாண்மூத்தோரிடம் குபேரனைப்பற்றி கேட்கலாமா? வணிகர்களிடம் கேளுங்கள்.”

ஊர்பாதை ஒன்றின் முனம்பில் தன் ஏவலர் எழுவருடனும் காவலர் மூவருடனும் பொதிவிலங்குகளை அவிழ்த்து நீர் அருந்தவிட்டு, தோல்விரிப்பைப் பரப்பி பஞ்சுத் தலையணை இட்டு குடபண்டி எழுந்திருக்க கொழுவிய கன்னங்கள் தொங்க அரைத்துயிலில் என விழிகள் புதைந்து  படுத்திருந்த பெருவணிகன் ஒருவனை அர்ஜுனன் கண்டான். அவனை அணுகி வணங்கி “தங்கள் சொல்லிலிருந்து செல்வழி பெற வந்தவன். அயலூர் வழிப்போக்கன். என் பெயர் சரபன். வில்லறிந்த ஷத்ரியன்” என்றான். “சொல்க!” என்றான் வணிகன்.

“தாங்கள் இப்பெருநிதியை பெற்றது குபேரனின் அருளால் என்று எண்ணுகிறேன். குபேரனை காணும் வழி எது? எங்கேனும் எவ்வண்ணமேனும் தாங்கள் அவனை அறிந்துளீரா?” என்றான் அர்ஜுனன். கண்கள் சிரிப்பில் விரிய “அமர்க, வீரரே!” என்றான் பெருவணிகனாகிய மித்ரன்.  அர்ஜுனன் அமர்ந்ததும் இன்னீரும் உணவும் கொண்டுவர ஆணையிட்டான். தன்னைப்பற்றி சொன்னான்.

நான் உஜ்ஜயினியை சேர்ந்தவன், ஷத்ரியரே. இளமையில் நான் அறிந்தது வறுமையை மட்டுமே. ஒருவேளை உணவுக்காக, மழையில் கூரைக்காக, ஆண்டிற்கொருமுறை கிடைக்கும் ஆடைக்காக பிறிதொரு வணிகனின் கடையாளாக இருந்தேன். அவன் கைகளால் நாளும் அடிவாங்கினேன். அவன் உறவினர்களால் சிறுமை செய்யப்பட்டேன். நான் எனக்குரிய நற்பொழுது எழும் என்பதை நம்பினேன். ஒவ்வொரு நாளும் அதை கனவு கண்டுகொண்டிருந்தேன்.

ஒரு நாள் முன்புலரியில் ஆற்றில் இருட்டிலேயே நீராடி கடை திறப்பதற்கு முன்பே அங்கு செல்லும்பொருட்டு வந்துகொண்டிருந்தபோது தரையில் ஒரு வெள்ளி நாணயம் கிடப்பதை பார்த்தேன். இரவில் ஆற்றுநீரில் பரல்மீன் மின்னுவதுபோல அது சாலையில் கிடந்தது. அகம் படபடக்க அதை எடுத்து என் கண்ணில் வைத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். அதை என் ஆடையில் பதுக்கியபடி அவ்வணிகனின் கடை முன் சென்று நின்றேன்.

அதைக்கொண்டு மூவேளை உணவருந்தலாம். புதிய ஆடை ஒன்றை வாங்கிக் கொள்ளலாம். இனிய கனவுகள் ஒவ்வொன்றாக என்னுள் எழுந்தன. அதை என் ஆடைக்குள் மேலும் மேலும் பொதிந்து ஒளித்து வைத்தபடி கடையருகே ஒரு சிறு பொந்துக்குள் உடலொதுக்கி படுத்துத் துயின்றேன். என் கனவில் நான் அந்த ஒரு நாணயத்தை முடிவில்லாமல் செலவழித்துக்கொண்டே இருந்தேன். உலகையே அதைக்கொண்டு வாங்கினேன். விழித்துக்கொண்டதும் தெரிந்தது, அந்நாணயம் என்னிடம் இருப்பதுவரை மட்டுமே அந்தக் கனவுகளுக்கு பொருளுண்டு என. எந்நிலையிலும் அதை இழக்கலாகாதென்று முடிவுசெய்தேன். அதை அதைவிடப் பெரிய நாணயத்தால் மட்டுமே ஈடுவைக்கவேண்டும் என உறுதிகொண்டேன்.

அந்த நாணயம் விழுந்தகிடந்த இடம் என் நினைவில் மீண்டும் எழுந்தது. மிதித்து பதிந்துசென்ற காலடி ஒன்றில் கிடந்தது அந்த நாணயம் என்று அப்போதுதான் தெளிந்தேன். அக்காலடிகளை மீண்டும் மீண்டும் என் நினைவில் ஓட்டிக்கொண்டிருந்தேன். கனவுகளில் மீளமீளக் கண்டேன். நெடுநாட்ளுக்குப்பின் ஒரு  புலரிக்கனவில் அதைத் தொடர்ந்து சென்றபோதுதான் பொன்னிறமான இரு கால்கள்  புழுதியை மிதித்துச் செல்வதை கண்டேன். வளர்ந்தும் குழந்தையென உடல் கொண்ட ஒருவன்.

வீரரே, அவனை குபேரன் என்று நான் உணர்ந்தது மேலும் நெடுங்காலம் கழித்துதான். அன்று முதல்நாள் விழித்தெழுந்ததும் நான் செய்ய வேண்டியதென்ன என்று தெரிந்தது. அந்த வெள்ளி நாணயத்தைக்கொண்டு எளிய தின்பண்டங்களை வாங்கிக்கொண்டேன். படைவீரர்கள் இடங்கள்தோறும் சென்று அவற்றை விற்றேன். அன்று மாலை என் எளிய வயிற்றுப்பசிக்கு மட்டும் எடுத்துவிட்டு எஞ்சியதை சேர்த்தேன். என் நாணயம் அப்படியே கையில் இருப்பதை கண்டேன். செல்வம் என்பது தீ போல படர்ந்து பெருகுவது என உணர்ந்தேன்.

இங்குள்ள எளிய மக்கள் செல்வமென்றால் பொருட்குவை என்று எண்ணுகிறார்கள். கருவூலம் என்கிறார்கள் அரசர்கள். தெய்வத்திடம் அது உள்ளது என்று சொல்கிறார்கள் வைதிகர்கள். அல்ல, செல்வமென்பது நம் கையில் உள்ள ஒற்றைக் காசுதான். ஒற்றைக் காசின் மடங்குகள்தான் இப்புவியிலுள்ள அனைத்துச் செல்வமும். அதை அறிந்ததே என் வெற்றி. நான் கண்ட குபேரன் அவனே.

“ஆனால் அது வணிகர்களின் குபேரன். அரசர்களின் குபேரன் அவன் அல்ல” என்றான் வழியில் அவன் சந்தித்த ஒரு சூதன். “வீரரே, சூத்திரரும் அந்தணரும் குபேரனை அறியாதவர்கள். வணிகர்களிடம் அவ்வண்ணம் தோன்றிய குபேரன் அரசர்களிடம் வேறுமுகம் காட்டியிருக்கக்கூடும் அல்லவா?” உணவுநிலையில் அவனிடம் பேசிக்கொண்டிருந்த  அர்ஜுனன் ஆம் என தலையசைத்தபடி கையிலிருந்த ஒழிந்த தொன்னையை வீசிவிட்டு எழுந்தான்.

“இங்கே கமலதலம் என்னும் சிற்றூரில் ஊர்த்தலைவன் ஒருவன் குபேரனை கண்டுவிட்டான் என்கிறார்கள். அவன் இன்று ஒரு சிற்றரசனாக வளர்ந்துவிட்டிருக்கிறான். அவன் வழித்தோன்றல்கள் அரசனும் ஆகக்கூடும்” என்றான் சூதன். அவனிடம் விடைபெற்று கிளம்பிய அர்ஜுனன் கமலதலம் என்னும் ஊர் நடுவே புதிதாக எழுந்துவந்த ஏழுநிலை மாளிகை ஒன்றில் இருந்த ஊர்த்தலைவனை அணுகினான். அவன் ஷத்ரியன் என்று அறிந்ததும்  உள்ளே செல்ல  ஒப்பு அளித்தனர்.

வெள்ளியாலான பெரிய பீடத்தில் அமர்ந்திருந்த வியாஹ்ரதந்தன் என்னும் அந்த ஊர்த்தலைவன் அவனை வரவேற்று அமரச்செய்தான். “என்னிடம் நீங்கள் காவல்பணியாற்ற விழைந்தால் மகிழ்வேன், வீரரே. நான் வில்லவர்களையே நாடுகிறேன். நீங்கள் பெருவில்லவர் என்பதற்கு உங்கள் கைகளே சான்று” என்றான். “நான் பயணமொன்றில் இருக்கிறேன். நீங்கள் குபேரனைப் பார்த்தவர் என்றறிகிறேன். அவனை நானும் காணவிழைகிறேன்” என்றான் அர்ஜுனன்.

“நான் குபேரனை முழுமையாக பார்த்ததில்லை, வீரரே” என்றான் வியாஹ்ரதந்தன். “இச்சிற்றூரில் பிறரைப் போலவே எளிய வாழ்வை வாழ்ந்தேன். ஏவலரை அனுப்பி ஒவ்வொரு நாளும் இம்மலையிலிருந்து மலைப்பொருட்களைத் திரட்டி காவலர் துணையுடன் அருகிருக்கும் சந்தைகளுக்குக் கொண்டுசென்று விற்பதே என் தொழில். ஒருமுறை என் கையில் இருந்த கொம்பரக்குடன் சந்தையில் அமர்ந்திருந்தேன். அதை விற்று பணம் கொண்டுவந்தால் ஒழிய அன்று என் சிற்றூரே பட்டினியாகிவிடும் என்னும் நிலை. பட்டும் ஆடையும் அணிந்து என்னை அணுகிய வணிகனொருவன் என் கொம்பரக்குக்கு மூன்று பணம் அளிப்பதாக சொன்னான். என் தேவையும் அதுதான். பொருளைத் தருவதாக தலையசைக்கப்போகும் கணம் அவன் தலைக்கு மேல் ஒரு பொன்னிறப் பறவை கூவியபடி பறந்து செல்வதை கண்டேன்.”

அதற்கென நான் விழி தூக்கியபோது அவ்வணிகனின் கண்களை கண்டேன். அவன் நெஞ்சில் எண்ணியது ஐந்து பணம், சொல்லென எடுத்தது நான்கு பணம், நாவில் ஒலித்தது மூன்று பணம் என்று உணர்ந்தேன். “பத்து பணத்திற்கு ஒரு நாணயம் குறையாது” என்றேன். திகைத்து அவன் புருவம் விலக்கினான். “இதற்கா? இது என்ன பொன்னா வெள்ளியா?” என்றான். “கொம்பரக்கு. என் பொருளுக்கான மதிப்பை நான் அறிவேன்” என்றேன். ஏளன நகைப்புடன் கடந்து சென்றான். பிறிதொருவன் என்னை அணுகி “பத்து பணத்திற்கு கொம்பரக்கு என்றால்  உனக்கு என்ன விலை சொல்வாய், மூடா?” என்றான். “இது பத்து பணம் மட்டுமே. என் மதிப்பை நான் அறிவேன்” என்றேன். என் விழிகளில் இருந்த உறுதியைக் கண்டு திகைத்து கடந்துசென்றான்.

நான் என்ன சொல்கிறேன் என என் ஏவலருக்கு புரியவில்லை. என் முன் இருந்த பொருளை கூர்ந்து நோக்கினேன். பத்து பணம் பத்து பணம் என்று அதை நோக்கி மீளமீள சொல்லிக்கொண்டேன். ஆம், இதன் மதிப்பு பத்து பணம். இதை நான் முடிவுசெய்கிறேன், நானே முடிவுசெய்வேன். பிறிதொருவன் கேட்டபோது என் குரலில் இருந்த உறுதியைக் கண்டு “ஏழு பணம், என்ன சொல்கிறாய்?” என்றான். “பத்து பணம். சற்றும் குறையாது” என்றேன்.

அந்திப்பொழுது வந்து கொண்டிருந்தது. என்னுடன் வந்த  அனைவரும் சோர்ந்துவிட்டனர். என் உறுதியை அவர்கள் தங்களுக்குள் வசைபாடினர். சில பெண்கள் அழவும் தொடங்கிவிட்டனர். இளமைந்தர் பசித்தழுவதை கேட்டுக்கொண்டிருந்தேன். நான் நடுங்கும் கைகளுடன் குளிரில் உடல் குறுக்கி அங்கு அமர்ந்திருந்தேன்.

பிறிதொருவன்  அணுகி “எட்டு பணம். கொம்பரக்கை கொடுத்துவிடு. இவ்விலை இதுவரை இங்கு அளிக்கப்பட்டதில்லை” என்றான். “பத்து பணம் அன்றி விற்பதில்லை. பொருளுடன் திரும்ப என் ஊருக்குச் செல்லவும் தயக்கமில்லை” என்றேன். மூன்று பணம் என முதலில் விலை சொன்ன அவ்வணிகனே வந்தான். “ஒரு பணம் குறைத்து ஒன்பது” என்றான்.  அக்கணமே “இதோ, உனக்காக” என்று அவனிடம் அப்பொருளைக் கொடுத்து பணம் பெற்று திரும்பினேன்.

அன்றைய செலவுக்கான மூன்று பணத்தை எடுத்து வைத்த பின் எஞ்சிய ஆறு பணத்தை கையில் வைத்து நோக்கியபடி என் ஊர்வரை நடந்தேன். நான் அடைந்தது என்ன என்று என்னிடமே கேட்டுக் கொண்டேன். மானுடனின் விழைவை! பேருருக் கொண்டு இப்புவியை மூடியிருப்பது அதுதான். குபேரனின் பொன்னொளிர் தோற்றம் என்பது அதுவே. நான் வணிகம் செய்யவேண்டியது அவ்விழைவுடன்தான். என் கையில் இருப்பதென்ன? இது நான் எனக்களித்த விலை. என் விலையை பிறர் முடிவு செய்யலாகாது. ஆம், அதுவே குபேரனின் ஆணை. வீரரே, அந்த இரு அறிதல்களிலிருந்து எழுந்ததே இப்பெருஞ்செல்வம்.

“குபேரனை முழுமையாகக் கண்ட எவரேனும் உள்ளனரா என்று நானறியேன். செல்வத்தை அடைந்தவர் அனைவரும் குபேரனை தங்கள் சிற்றறிவுகொண்டு சற்றே கண்டறிந்தவர்களே” என்றான் வியாஹ்ரதந்தன். “வீரரே, உங்கள் மேல் பொன்மழை பெய்ய அந்தச் சிறுதோற்றமே போதும்.” அர்ஜுனன்   “நான் விழைவது செல்வத்தை அல்ல. செல்வத்தின் இறைவனை மட்டுமே” என்றபடி எழுந்துகொண்டான்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 23

பகுதி மூன்று : பொருள்கோள் பாதை

[ 1 ]

வளர்பிறைக்காலம் முடிவுவரை அர்ஜுனன் ஜாதவேதனுடன்அவன் குடியில் வாழ்ந்தான்.. மைந்தனுடன் விளையாடி தன் உள்ளுருகி எழுந்த அமுது அனைத்தையும் அவனுக்கு ஊட்டி அவ்வின்பத்தில் கணம் கணம் என நிறைந்து திளைத்தான். ஒன்றுபிறிதொன்றைக் கண்டடைந்து நிறைத்து தானழிவதே உயிர்களுக்கு விண்ணென்றானது வகுத்தளித்த பேரின்பம் என்று அறிந்தான்.

ஜாதவேதன் தன் மைந்தன் உயிர்மீண்ட செய்தியை தன் நூற்குலத்தையும் குடியையும் சேர்ந்த நூற்றெட்டு அந்தணர்களுக்கு நேரில் சென்று அறிவித்தான். அவனுக்கு அமிர்தன் என்று பெயர் சூட்டுவதைச்சொல்லி இடையணிநாளில் நிகழவிருக்கும் வேள்விக்கும் விருந்துக்கும் அழைப்பு விடுத்தான். “நம் வாழ்வில் முதன்மை நாள் அது. நாம் அமுதத்தால் வாழ்த்தப்பட்டவர்கள் என்பதை அனைவரும் அறியட்டும்” என்று அவன் தன் மனைவியிடம் சொன்னான். “ஒன்றும் குறையலாகாது. ஒரு கணமும் முழுமையின்றி கடந்துசெல்லலாகாது.”

“ஆம், நாம் வாழ்ந்ததே இந்நாளுக்காகத்தான்” என்றாள் அன்னை. “அழைக்கப்படவேண்டியவர்களில் எவரும் விடுபடக்கூடாது.” அவர்கள் அமர்ந்து எண்ணி எண்ணி அழைப்புக்குரியவர்களை சேர்த்துக்கொண்டனர். அந்நாளுக்குரிய  அனைத்தையும் ஒருக்குவதில் ஈடுபட்டு மெல்ல மெல்ல அதில் மூழ்கினாள். வேடர்களைச் சென்று கண்டு தேனுக்கும் தினைக்கும் சொல்லி வந்தாள். வேட்டுவப் பெண்களிடம் விறகுக்கு சொன்னாள். ஆயர்குடிகளில் நெய்யும் பாலும் குறித்துவைத்தாள்.

இல்லத்துப் பின்கட்டில் மண்ணில் புதைத்திருந்த கலங்களிலிருந்து எஞ்சிய கூலம் அனைத்தையும் எடுத்து உலர்த்திப் புடைத்து சேர்த்து வைத்தாள். முன்பு இல்லமெங்கும் புதைத்திட்டு மறந்த பொன் முழுக்க எடுத்துச் சேர்த்து ஒவ்வொருவருக்கும் அளித்தாள். நினைவுகூர்ந்து நினைவுகூர்ந்து பொன்னை எடுக்க எடுக்க உவகை கொண்டாள். கனவிலும் மண்ணைத்தோண்டி பொன்னெடுத்துக்கொண்டிருந்தாள். நினைவொன்றை சித்தம் தொட்டெடுக்கையில், மண்ணைத் தோண்டுகையில் எண்ணியிராத ஒரு பொன் கிடைக்கையில் கூவிச்சிரித்தபடி எழுந்து கைவீசி ஆடினாள்.

பின் மண்மட்டுமே எஞ்சியபோது அவளுக்குள் ஏமாற்றம் தோன்றலாயிற்று. தோண்டித் தோண்டி சலித்தபின்னரும் மண்கெல்லி நோக்குவதை நிறுத்தமுடியவில்லை. வேள்விக்குரிய அவிப்பொருள்  சேர்த்துவர புலரிமுதல் அந்தி வரை அலைந்த ஜாதவேதன் அவளை பின்னர்தான் கூர்ந்தான். “என்ன செய்கிறாய்? மண்ணில் நட்டால் முளைப்பதல்ல பொன். நிறுத்து!” என்று கடிந்தான். “எங்கோ இன்னுமிருக்கிறது பொன். நான் கனவில் கண்டேன்” என்றாள் அவள். “பொன் இருப்பது வெளியே. வேதத்தை வலையாக்கி அதை நான் சேர்த்துக்கொண்டுவருகிறேன். இது நம் மைந்தனின் நாள்” என்றான் ஜாதவேதன்.

நாளும் அந்திக்குப்பின் அந்தணனும் மனைவியும் தனித்தமர்ந்து தங்கள் கையிலிருப்பதையும் மிஞ்சி தேவைப்படுவதையும் பற்றி பேசினர்.  நாள் செல்ல நாள் செல்ல இருப்பது குறைய வேண்டுவது வளர்ந்தது. பின்னர் இடைப்பட்ட கணக்கு பேருருக்கொண்டு அவர்கள் முன் நின்றது. அவர்களின் பதற்றம் மிகுந்தது. தன்னிரக்கமும் எரிச்சலும்  மேலெழுந்தது. ‘இன்னும் சற்று… இன்னும் சில…’ என்று சொல்லிச்சொல்லி கணக்கிட்டவர்கள் ‘இன்னும் எவ்வளவு? இன்னும் எதுவரை?’ என ஏங்கலாயினர்.

“என் தகுதிக்கு மீறி அழைத்துவிட்டேன், பாண்டவரே” என்றான் ஜாதவேதன். “நூற்றெட்டு அந்தணர் அமர்ந்து செய்யும் வேள்விக்கு உரிய நெய் என நான் எண்ணியதைவிட பன்னிருமடங்கு அதிகம் தேவைப்படுகிறது. அத்தனை பெரிய வேள்விக்கு வரும் விருந்தினர் உண்பதற்கு உரிய அன்னமும் இன்னும் ஒருக்கப்படவில்லை. வேள்வி முடிந்து அவர்கள் எழும்போது அளிக்கப்படும் நற்கொடையும் சேரவில்லை. அவர்கள் அணிவதற்கு பட்டு, அவர்கள் துணைவியருக்கு ஆடை, அவர்களின் இளமைந்தருக்கு பரிசுகள் என இருந்தால் மட்டுமே அது வேள்வியென்றாகும்.”

“அளிக்கப்பட்டதை மறந்து பெறப்படாததை எண்ணிக் கணக்கிட்டுச் சொல்லி நிலைநிறுத்துபவர்கள் அந்தணர். நானும் அவ்வாறுதான் இருந்தேன். அதை எண்ணும்போது என் நெஞ்சு பதைக்கிறது” என்றான். நிலைகொள்ளாமல் கைகளை அசைத்து “உள்ளம் சென்ற தொலைவுக்கு என் செல்வம் செல்ல மறுக்கிறது. நான் என்ன செய்வேன்?” என்றான். வான்நோக்கி ஏங்கி “தெய்வங்களே, என்னை ஏன் கைவிட்டீர்கள்?” எனக் கூவினான்.

அறைக்குள் இருந்து எட்டி நோக்கிய அவன் துணைவி “களஞ்சியம் நிறைந்திருக்கும் இல்லத்தில் பிறக்கவேண்டிய மைந்தன் வெறும் சொல் மட்டும் நிறைந்திருக்கும் இல்லத்தில் பிறந்துவிட்டான்” என்றாள். சினம்கொண்ட ஜாதவேதன் “அது என் பிழை அல்ல. களஞ்சியம் நிறைந்த இல்லம் கொண்டவனுக்கு நீ அவனை பெற்றிருக்கவேண்டும்” என்றான். “களஞ்சியத்தை நிறைக்கவேண்டியது உங்கள் பொறுப்பு…” என்றாள் அவள். “ஏழை அந்தணன் என்றுதானே வந்தாய்?” என்று அவன் கூவ “ஆம், ஆனால் செயலற்றவன் என அறிந்திருக்கவில்லை” என்று அவள் திருப்பிக் கூவினாள்.

அர்ஜுனன் அவர்களைத் தடுத்து  “அஞ்சவேண்டியதில்லை, அந்தணரே. என்னால் ஆவதை நான் சேர்த்து அளிக்கிறேன்” என்றான். “தாங்கள் பாண்டவர் என்றறிவேன். ஒரு சொல் ஓலையில் எழுதி அளியுங்கள், இங்கிருக்கும் குடித்தலைவர்  இல்லத்திற்குச் சென்று வேண்டிய அனைத்தையும் பெற்றுவிடுவேன்” என்று ஜாதவேதன் சொன்னான். “இல்லை அந்தணரே, நான் நகர் புகுவதில்லை என்ற நெறி கொண்டவன். கான்புகுவதற்காக உடன்பிறந்தாருடன் அஸ்தினபுரிவிட்டு நீங்கியவன். நான் அதைச் செய்வது முறையல்ல” என்றான்.

ஜாதவேதனின் முகம் சற்று சுருங்கியது. “தாங்கள் இரவும் பகலும் தோளில் வைத்து கொஞ்சி அலையும் மைந்தனுக்காக இச்சிறு செயலை செய்வீர்கள் என்று எண்ணினேன், பாண்டவரே. நன்று, மைந்தனைவிட நெறியே உங்களுக்கு முதன்மையானது என்றுரைக்கிறீர்கள். அதுவும் அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி திரும்பி நடந்தான். அவன் மனைவி “நமக்கு நம் மைந்தன் முதன்மையானவன். அனைவருக்கும் அப்படியா?” என்றாள்.

அர்ஜுனன் அவள் விழிகளை சந்தித்ததும் நெஞ்சதிர்ந்து விழிதிருப்பிக்கொண்டான். ஜாதவேதன் உடலசைவுகளில் தெரிந்த எரிச்சலை நோக்கியதும் அந்தணனும் மனைவியும் இளமைந்தனை தங்கள் கையிலெடுத்தே நாட்களாகின்றன என்பதை உணர்ந்தான். தவழ்ந்து அவன் அவர்கள் அருகே செல்லும் போதுகூட எரிச்சலுடன் “அருகே வராதே, எண்ணை கொப்பரையை கவிழ்த்துவிடுவாய்” என்று ஜாதவேதன் சொன்னான். அடுமனைக்குள் சென்று அன்னையின் ஆடையை அவன் பற்றினால் “விலகிச் செல்! அடுப்பில் எரிகொள்ளி இருப்பதை அறியமாட்டாயா, மூடா?” என்று அவள் சினந்தாள்.

அவர்கள் விலக்கம் கொள்ள கொள்ள மைந்தன் மேலும் மேலும் அர்ஜுனனை அணுகினான். எப்போதும் அஞ்சியவன்போல அவன் ஆடைகளை பற்றிக்கொண்டான். நாளெல்லாம் அவன் தோள்களில் அமர்ந்திருந்தான். ஒரு கணமும் கீழிறங்க மறுத்தான். மைந்தனை தூக்கிக்கொண்டே காட்டிற்குச் சென்று பெருங்கலம் நிறைய மலைத்தேன் எடுத்து வந்தான் அர்ஜுனன். ஜாதவேதனிடம் அதை அளித்து “நறுமலைத்தேன் இது. ஊர்த்தலைவரிடம் கொண்டு சென்று உரிய விலை பெற்று வருக!” என்றான்.

ஜாதவேதன் விழிகளை விலக்கி  “தேனுக்கு இப்போது மதிப்பொன்றுமில்லை, பாண்டவரே. ஊர்த்தலைவர் இதை பொருட்டென எண்ணமாட்டார். ஊர்மன்றிலும் சந்தையிலும் நூறு வேடர்கள் கலம் நிறைய தேனுடன் கொள்வாரின்றி அமர்ந்திருக்கிறார்கள். நானோ அந்தணன். வணிகம் செய்யக் கற்றவனுமல்ல” என்றான்.

“மலைப்பொருள் எதுவென்றாலும் கொண்டுவருகிறேன். வேள்வி சிறக்கட்டும்” என்று அர்ஜுனன் சொன்னான்.  “எனக்குத் தேவை வேள்விச்செல்வம். மலைப்பொருளை விற்று நான் நினைக்கும் பணத்தை ஈட்ட முடியாது” என்றான் ஜாதவேதன். “நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை, மலைப்பொருளுக்கு ஓர் இயல்பு உண்டு. மிகுதியாகக் கிடைக்கும்தோறும் அதன் விலை இறங்கிவிடும்.”

அர்ஜுனன் சில கணங்கள் அவனை நோக்கி நின்றபின் மைந்தனை தூக்கிக்கொண்டு விளையாடச்சென்றான். “தேன்! தேன்!” என்று மைந்தன் துள்ள தன் கையிலிருந்த எஞ்சிய தேனடையைப் பிழிந்து அவன் வாயில் விட்டான். முகம் நிறைந்து உடலில் வழிய அமிர்தன் தேனை உண்டான். தேன் தட்டை வீசியபின் அவனுடலில் படிந்திருந்த இனிமையை தன் நாக்கால் தொட்டு அர்ஜுனன் உண்டான்.

வேள்வி நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. அந்தணனும் மனைவியும் அர்ஜுனன் இருப்பதையும் மறந்தனர். அவனுக்கு உணவளிக்க நினைவு கொள்ளவில்லை. அவனோ உணவை எண்ணவும் இல்லை. காடுகளில் அலைந்து சந்தனமும் பலாசமும் கொண்டு வந்து சேர்த்தான். கஸ்தூரியும் புனுகும் சவ்வாதும் கொண்டு வந்து வேள்விக்கு அளித்தான். அவை ஒருபொருட்டல்ல என்னும் நோக்குடன் ஜாதவேதன் அவற்றை பெற்றுக்கொண்டான்.

மைந்தனை உடல்கழுவ கொண்டுசெல்கையில் கொல்லைப்பக்கம் நீரோடைக்கரையில் அந்தணன் துணைவி தனித்திருந்து கண்ணீர்மல்க தனக்குள் பேசிக்கொள்வதைக் கண்ட அர்ஜுனன் “அன்னையே, இன்னும் என்ன துயர்? மைந்தன் முழுநலத்துடன் இருக்கிறானே?” என்றான். அவள் சினத்துடன் திரும்பி “இருந்தென்ன பயன்? இவன் வளர்ந்து எப்போது எங்களுக்கு உணவளிக்கப்போகிறான்? அதுவரை இவ்வாறு உழைத்து தேய்ந்து மடியவேண்டுமென்பது எங்கள் ஊழ்” என்றாள்.

திகைத்த அர்ஜுனன் ஏதோ சொல்லெடுப்பதற்குள் கழுவிக்கொண்டிருந்த கலன்களை கையிலெடுத்தபடி அவள் நிமிர்ந்து “வேதம் நன்குணர்ந்த அந்தணர்கள் அரசர்களுக்கு எரிசெயல் ஓம்பி பொன் பெற்று வந்து மாளிகை கட்டுகிறார்கள். எனக்கு வாய்த்தவனோ ஊக்கமில்லா மூடன். இப்பிறப்பெல்லாம் சிறுகுடிலில் கரிபடிந்த கலன்களைக் கழுவி, புகையூதி கண்கலங்கி, மிச்சில் உணவை உண்டு, கந்தல் அணிந்து வாழ்ந்து மறைய வேண்டுமென்பது என் ஊழ் போலும். முற்பிறப்பில் செய்த பிழை இவ்வாறு வந்து சூழ்ந்திருக்கிறது. பிறகென்ன சொல்ல?” என்றாள்.

“தங்கள் குறை என்ன, அன்னையே?” என்று அர்ஜுனன் கேட்டான். பேசியபடியே அடுமனைக்குள் சென்ற அவள் உளவிசையுடன் ஆடையைச் சுழற்றி இடையில் செருகியபடி வெளியே வந்து “என் குறை இதுதான். நூற்றெட்டு அந்தணர்களுக்கும் மைந்தர் இருக்கிறார்கள். அவர்களின் காதணிவிழாவும் சொல்லணிவிழாவும் நிகழ்ந்ததெவ்வாறு என்று அறிவேன். இங்கு  நான் எண்ணி எண்ணி வைத்திருக்கிறேன் அரிசிமணிகளை. அவர்களின் பெண்டிர் இங்கு வந்தமரும்போது எதை சமைத்து பரிமாறுவேன் என்று தெரியவில்லை. அவர்களின் இதழ்களில் விரியும் கெடுநகைப்பை இப்போதே காண்கிறேன். ஒவ்வொரு முகத்திற்கு முன்னும் ஒருமுறை இறந்து எழப்போகிறேன். அதைக் காணாமல் இப்போதே செத்தழியவேண்டும். அதுதான் என் விழைவு… போதுமா?” என்றாள்.

சீற்றத்துடன் திரும்பி,  அர்ஜுனன் கையிலிருந்து இறங்கி எச்சில் வழிய நகைத்தபடி தவழ்ந்துசென்று  எழுந்து அவள் ஆடையைப் பற்றி இழுத்த மைந்தனின் முதுகில் ஓங்கி அறைந்து “இவன் மீண்டு வரவில்லை என்றால் இந்தத் துயர் இருந்திருக்காது. பிறக்கவில்லை என்றே இருந்திருப்பேன். எந்த தீக்கணத்தில் அதை விரும்பினேன்? ஏதோ கொடுந்தெய்வம் இந்தப் பொறியில் என்னை சிக்க வைத்தது!” என்றாள்.

அடிபட்டு அமர்ந்து வாய்திறந்து கண்ணீர் உதிர கதறி அழுத மைந்தனைத் தூக்கி தன் தோளில் அமர்த்தி அர்ஜுனன் வெளியே சென்றான். அன்று முழுக்க நிலையற்றவனாக காடுகளில் அலைந்துகொண்டிருந்தான். அவனுள் எழுந்த வினாக்களை எதிர்கொள்ள அவனே அஞ்சினான். குழந்தையை கொஞ்சிக்கொஞ்சி அவற்றை அப்பால் துரத்தினான்.

மாலையில் திரும்பி அந்தணனின் இல்லத்திற்கு வந்தபோது அவன் முற்றம் முழுக்க கலங்கள் ததும்ப நெய்யும் தேனும் வந்து நிறைந்திருப்பதை கண்டான். மூட்டைகளில் அரிசியும் கோதுமையும் அடுக்கப்பட்டிருந்தன. அடுமனையாளர்கள் கொல்லைப்பக்கம் கொட்டகை கட்டி வெண்கல உருளிகளை உருட்டி அடுப்பிலேற்றிக் கொண்டிருந்தனர். பணியாட்கள் இல்லத்துக்கு முன் கட்டப்பட்ட பெரிய பந்தலில் தோரணங்களை அமைத்துக்கொண்டிருந்தனர். வைதிகர் அமர்ந்து வேள்விக்களத்திற்கு வாஸ்து வரையக் கோடுகள் வரைந்து கொண்டிருந்தனர்.

அவன் வருவதைக் கண்டதும் வைதிகர் மதிப்புடன் எழுந்து நின்றனர். வீரர்கள் உரத்த குரலில் “இளைய பாண்டவர் வாழ்க! அஸ்தினபுரியின் இறைவர் வாழ்க!” என்று குரல்கள் எழுப்பினர். திகைத்து நின்ற அர்ஜுனன் திரும்பி ஜாதவேதனை நோக்க அவன் அஞ்சாது அவன் கண்களை நோக்கி “ஆம், நான் சென்று ஊர்த்தலைவரிடம் சொன்னேன். சான்றுக்கு தாங்கள் அணிந்து கழற்றி வைத்த கணையாழி ஒன்றையும் கொண்டு சென்று காட்டினேன். அவரே தங்களைத் தேடி சற்று கழித்து இங்கு வருவார்” என்றான்.

கட்டற்று எழுந்த பெருஞ்சினத்துடன் கை ஓங்கியபடி அர்ஜுனன் காலடி எடுத்து முன்னால் வந்தான். “நான் ஆணையிட்டிருந்தேன். உமக்கு நான் ஆணையிட்டிருந்தேன்” என்று கூவினான். ஜாதவேதன் வெறுப்பில் வெறித்த விழிகளுடன் கைவிரித்து “அந்தணனை அடிக்க கையோங்குகிறீர்களா? அவ்வாறே ஆகுக!” என்றான். அர்ஜுனன் கை தழைத்து “உத்தமரே, வேதம் அறிந்த தாங்கள் இதை செய்யலாமா? அறத்துக்கு உகந்ததா இது?” என்றான்.

“இதுவே எனக்கு உகந்தது. இன்று எனக்குத் தேவை பொருள். என் மைந்தனை குடியவை முன் தகுந்த முறையில் நிறுத்த அதுவன்றி வழியில்லை. அதன் பொருட்டே இதைச் செய்தேன். எனக்கு இதில் பிழையென ஏதுமில்லை” என்றான் ஜாதவேதன். “மைந்தனை மீட்க விழைகையில் பொருளை நீர் எண்ணவில்லை” என்றான் அர்ஜுனன். ஜாதவேதன் உரக்க “ஆம், மைந்தன் உயிர் பெரிதே எனக்கு. ஆனால் அவன் நோயின்றி உயிர்கொண்டு நிற்கும்போது அவனைவிடப் பெரிது பொருள்தான். இதில் என்ன ஐயம்?” என்றான்.

திகைத்து அங்கு நின்ற அனைவரையும் நோக்கி சொல்லெடுக்க பலமுறை வாயசைத்த பின் திரும்பி நடந்தான். அவன் பின்னால் வந்த ஜாதவேதன் “இளைய பாண்டவரே, தங்களை வருத்துவதற்காக இதை நான் சொல்லவில்லை. எந்நூலிலும் நோக்குக! எந்த அறிஞனிடம் வேண்டுமானாலும் உசாவுக! தென்திசைத் தலைவனே உயிருக்கு முதல்வன். ஆனால் வாழ்வுக்கு முதல்வன் குபேரனே. அவனைவிட ஒருபடி மேலானவன் வடதிசை ஆள்பவனே” என்றான்.

ஒரு முதியவைதிகர் தொலைவில் நின்றபடி “உலகியலோருக்கு உகந்தவன்  செல்வத்துக்கு இறைவனே. காலனை வழுத்துபவர்கள் இருக்கிறார்கள்.  குபேரன் அருளியவர்களே மெய்யாக வாழ்கிறார்கள்” என்றார். அர்ஜுனன் திரும்பி நோக்க வைதிகர் தலைவர் “ஆம், இளைய பாண்டவரே! இப்புவியில் நோயும் இறப்பும் அணுகும்போது மட்டுமே அறத்திற்கிறைவன் எண்ணப்படுகிறான். அல்லும் பகலும் வாழ்த்தப்படுபவன் வடதிசை அண்ணலே” என்றார். தலையசைத்து “நன்று” என்றபின் அர்ஜுனன் திரும்பி நடந்தான்.

[ 2 ]

ஊழித்தொடக்கத்தில் விளையாடும் இளமைந்தன்போல தன் சுட்டுவிரலை காற்றில் அசைத்தசைத்து பன்னிரண்டாயிரம்கோடி பெருமலைத் தொடர்களைப் படைத்தபின் பிரம்மன் அவ்விரலை கட்டைவிரலில் தொட்டு மெல்ல சுண்டியபோது மிகச்சிறிய விதை ஒன்று பறந்து விழுந்தது. அதை சுட்டுவிரலால் தொட்டெடுத்து இடக்கை உள்ளங்கையில் வைத்து முகம் முன்னால் தூக்கி நோக்கி புன்னகைத்தார். விழி விலக்கி தன் முன் திசைகளை நிரப்பி எழுந்தெழுந்தமைந்துசென்ற மலையலைகளைப் பார்த்தபடி அவ்விதையிடம் “உன் பெயர் திருணபிந்து. நீயும் இம்மலைகளுக்கு நிகரென ஆகுக!” என்றார்.

அதை மெல்ல ஊதி கீழே விரிந்துகிடந்த மண்பரப்பில் விழச்செய்தார். மண் தொட்ட அவ்விதை கைகூப்பி முனிவரென எழுந்தது. திருணபிந்து  மண்ணில் புதைந்து உயிர்பெருக்கி எழுந்தது.  மண்ணை உண்டு உருப்பெருக்கி பரவி பன்னிரண்டாயிரம் கோடி மலைகளையும் முழுக்க மூடியது. புவியெங்கும் ஒருகணமும் ஓயாது நிகழ்ந்து கொண்டிருந்தது அவரது வேள்வி. பெருந்தழல் எழுந்து அவிகொண்டது. பசுமை விளைந்து அவியாகியது.

தன் அவியிலிருந்து அவர் ஈன்றெடுத்த மகள் ஹவிர்ஃபு எனப்பட்டாள். பேரழகியென அவள் வளர்ந்து நின்றபோது பிரம்மனிடம் “எந்தையே, என் மகளுக்குரிய கணவன் யார்?” என்றார் திருணபிந்து. சுட்டுவிரலால் காற்றில் ஒரு முகம் வரைந்து பிரம்மன் புலஸ்தியர் என்னும் பிரஜாபதியை படைத்தார்.  “குன்றாத பிறப்பாற்றல் கொண்டவர் இவர். பெருகிநிறைபவளான உன் மகளே இவருக்குரிய துணைவி” என்றார்.

புலஸ்தியர் ஹவிர்ஃபுவை மணந்தார். கணந்தோறும் என பல்லாயிரம் கோடி மைந்தரைப் பெற்று விண்ணில் மிதந்தலைந்த உலகங்களை முழுதும் நிரப்பினர் அவர்களிருவரும். ஹவிர்ஃபு புலஸ்தியருக்கு  ஈன்ற முதல் மைந்தர் விஸ்ரவஸ் என்று அழைக்கப்பட்டார். அழியாச்சொல் என எழுந்து சொல் பெருக்கி விரிந்து சித்தம் நிறைத்த விஸ்ரவஸ் பரத்வாஜ முனிவரின் மகளாகிய தேவவர்ணினியை மணந்தார். அந்திமஞ்சள் நிறம் கொண்டிருந்த தேவவர்ணினி கணவருடன் கூடி மகிழ்ந்த இரவொன்றில் உடலோய்ந்து உளம் நிறைந்து துயிலில் படுத்திருக்கையில் கனவில் பொன்னிறமான புல்தளிர் ஒன்றைக் கண்டு புன்னகைத்தாள். விழித்துக்கொண்டு எழுந்து தன் அருகே படுத்திருந்த விஸ்ரவஸின் தோளை உலுக்கி சொன்னாள் “தளிரொன்றின் ஒளியை நான் கண்டேன்.  பிறிதெங்கும் இல்லாது தன்னுள்ளிருந்தே எடுத்து தான் சூடி நின்ற ஒளி அது.”

விஸ்ரவஸ் அவள் தோள்மேல் கைவைத்து காதில் குழையை வருடி கழுத்தின் மென்வரிகளில் விரலோட்டியபடி “தன்னுள்ளிருந்து ஒளியெழச்செய்யும் ஆற்றல் கொண்டவை இரண்டே. விண்ணில் ஆதித்யர்கள், மண்ணில் மெய்யெழும் சொல்” என்றார். “பிறிதொன்றும் உள்ளது. அதை சற்று முன்தான் கனவில் கண்டேன்” என்றாள் தேவவர்ணினி.  “அவ்வண்ணம் ஒன்று இப்புவியில் இல்லை. அதில் எனக்கு ஐயமே இல்லை” என்றார் விஸ்ரவஸ். “அது உன் விழைவு மட்டுமே. துயில்க!” என அவள் தலையை வருடி முத்தமிட்டார்.

அவள் “இல்லை, நானறிவேன். அது கனவு மட்டும் அல்ல” என்றாள். “மலர் விரிவதற்கு முந்தைய மணமெழலே கனவு. இனிய ஒன்று நிகழவிருக்கிறது.” அவர் புன்னகையுடன் அவள் கன்னத்தை வருடி “நான் என்ன செய்யவேண்டும்? சொல்” என்றார். “தங்கள் மூதாதையாகிய படைத்தோனை அழைத்து கேளுங்கள். இன்று நான் கனவில் கண்டதென்ன என்று” என்றாள் அவள்.

சற்றே சினம் கொண்டபோதிலும் அவர் எழுந்து அறையில் இருந்த அகல் அருகே சென்று அழியாச்சொல்லை ஆகுதியாக்கி அதை வேள்வித்தீயாக  மாற்றினார். “எந்தையே, சொல்க! ஆதித்யர்களுக்கும் வேதப்பொருள் சுமந்த சொற்களுக்கும் அப்பால் தன்னொளி கொண்ட பிறிதேது உள்ளது இப்புவியில்?”  புன்னகைத்து பிரம்மன் சொன்னார் “உயிர்.” விஸ்ரவஸ் வியப்புடன் “உயிர் ஒளிர்வதை நான் கண்டதில்லை” என்றார். “ஒளிரும்” என்றார் பிரம்மன். “இளந்தளிரில் உயிரின் ஒளி வெளிப்படுகிறது. தளிர் முதிரும்போது மூவகை வினைகளும் வந்து அதை சூழ்கின்றன. பின்பு அது தன்னை மூடி நிற்பதையே தானெனக் காட்டுகிறது.”

“ஏதோ ஒரு தருணத்தில் சில நொடிகளில் மட்டுமே உயிரின் ஒளி வெளிப்படுகிறது. காதலின் கனிவில், தாய்மையின் நெகிழ்வில், ஊழ்கத்தின் முழுமையில், பெரும் கருணையில், பேரறத்தில்” என்று பிரம்மன் சொன்னார். “அவள் தன் கனவில் கண்டது அது. ஒரு புல்லிதழின் மென்தளிர். தளிரெல்லாம் பொன்னே.  காலையில் எழுவது விண்ணுலாவியான ஆதித்யனின் செந்தளிர். மாலையில் பழுத்து மீண்டும் அத்தளிரென்றாகி அவன் மறைவதே வாழ்வின் நெறி. குலமூதாதையாகிய திருணபிந்துவையே அவள் கண்டாள். அவள் வாழ்க!”

பிரம்மன் மறைந்ததும் விஸ்ரவஸ் திகைப்புடன் “உன்னில் எழுந்தது உயிரின் ஒளி. புவியின் முதல் தளிர் அது” என்றார். அவள் அவரை அணைத்து  “எனக்கு அவ்வொளி கொண்ட மைந்தன் ஒருவனை தருக!” என்றாள். “அவர் சொல்லிச் சென்றதை நீயும் கேட்டாயல்லவா? அது தளிரின் ஒளி. தளிரென்பது நோக்கியிருக்கவே முதிர்ந்து இலையாவது. விழியறியாது நிறம் மாறும் இளங்கதிர் போன்றது” என்றார் விஸ்ரவஸ்.

“வளராத தளிரொன்றை எனக்கு அருள்க!” என்றாள். “வளராது இருக்கையில் அது தளிரே அல்ல” என்றார் விஸ்ரவஸ். “உயிர்கள் அனைத்தும் மாறுபவை. மாறுதலுக்குப் பெயரே உயிர்.” அவள் இளமைக்குரிய வீம்புடன் “நானறியேன். எனக்கு குன்றாத் தளிரொளி கொண்ட மைந்தன் தேவை. பிறிதொரு குழவியை நான் ஏற்க மாட்டேன்” என்றாள். “வளரா மைந்தனா? அறிவில்லையா உனக்கு?” என்று அவர் சினக்க அழுதபடி அவள் எழுந்து சென்றாள்.

அவர் உளம் பொறுக்காது அவள் பின்னால்  சென்று “நீ பேசுவதென்ன என்று அறிவாயா? தளிரொளி கொண்டு காலமுடிவு வரை மாறாதிருப்பது இயல்வதாகுமா?” என்றார். “நானறியேன். என் கனவில் வந்ததனாலேயே அது ஒன்றைத் தவிர பிறிதெதையும் நான் ஏற்கக்கூடாது என்பதே என் உள்ளம் கொள்ளும் கூற்று. ஒரு விழைவு எழுவதென்பது தற்செயல் அல்ல. அது எழவேண்டுமென்று எங்கோ ஒன்று எண்ணுகிறது. இவ்விழைவு எழுந்தமையாலேயே இது நிகழ்ந்தாகவேண்டும்” என்றாள்.

“இது நிகழ இயலாது, சிறுமியென பேசாதே!” என்றார் விஸ்ரவஸ். “இல்லையேல் எனக்கு மைந்தனே தேவையில்லை” என்றாள் அவள். கடும் சினம் கொண்டு, பின் அவள்மேல் கொண்ட பேரன்பினால் மெல்ல கனிந்து துயர் மிக்கவரானார் விஸ்ரவஸ். செய்வதென்ன என்று அறியாமல் நிலைகுலைந்து இருந்தபின் தெளிந்து தன் தந்தையாகிய புலஸ்தியரிடம் சென்றார். அவர் தவச்சாலைக்குள் சென்று தாள் பணிந்து முகமன் உரைத்தபின் கேட்டார். “தந்தையே, அழியாத் தளிர் ஒன்றை விழைகிறாள் என் துணைவி. நான் என்ன செய்வேன்?”

புன்னகைத்து “அது பெண்களின் பேதைமை. ஆனால் பிள்ளையும் பெண்களும் கொள்ளும் பேதைமைக்குப் பின் இருப்பது சொல்தொட்டு அறியமுடியாத நுண்மை ஒன்று. அதை பேணுக!” என்றார் புலஸ்திய முனிவர். “அறிக, மைந்தா! புவியில் என்றும் அழியாதிருக்கும் பொருட்களே உலோகமெனப்படுகின்றன. அழியும் அழகுகளை அழியாது நிறுத்துவதற்கென்றே பிரம்மனால் படைக்கப்பட்டவை அவை. நீரின் ஒளியை இரும்பில் நிறுத்தலாம். அனலை செம்பின் சிவப்பில். வெயிலொளியை வெள்ளியில். புவியெங்கும் எழுந்து மறையும் புதுத்தளிரின் ஒளியை வைப்பதற்கு என்றே ஓர் உலோகம் மண்ணில் உள்ளது. அதன் பெயர் பொன். அதுவாகுக உன் மைந்தனின் உடல்” என்றார்.

ஆலிலையின் தளிர், மூங்கில்குருத்து, கொன்றைமலர், வேம்பின் முளை என வண்ணங்களைக் கலந்து எடுத்த வண்ணத்தில் மண்ணிலிருந்து பொன்னை எடுத்தார் விஸ்ரவஸ். “இப்பொன்னிறத்தில் எனக்கு ஒரு மைந்தனைத் தருக!” என்று அகிலம் படைத்த முதல்வனை எண்ணி வேண்டினார்.  பொன்னுருகிச் சொட்டியது அவர் மனைவியின் வயிற்றுக்குள். பொன் பெருகி வளர்ந்தது. அவ்வொளி கொண்டு அவள் உடல் அனல்சூடிய அகல்விளக்கு போல மிளிரத்தொடங்கியது.

கருவுற்றிருந்த அவளைக் காண வந்த நாரதர் சொன்னார் “இறைவி, உன்னில் எழுந்திருப்பவன் ஒரு தேவன். பொன்னுருக் கொண்டவன். பொன்னே உலோகங்களில் முதன்மையானது.  பொன்னில் எழுவது உலோகங்களின் கொழுந்துப்பருவம். குன்றா இளமை கொண்டவனாக இருப்பான் உன் மைந்தன். இப்புவியில் இனிவரும் பொருளனைத்தும் பொன்னாலேயே மதிப்பிடப்படும். பொருள்கள் அனைத்திற்கும் மதிப்புசொல்லும் பொருள் என்று அதுவே அமைந்திருக்கும். அப்பொருளின் தலைவனாக அவன் என்றுமிருப்பான்.”

KIRATHAM_EPI_23

அவ்வாறு பிறந்தெழுந்தான் குபேரன். என்றும் மாறாத குழந்தை உடல் கொண்டிருந்தான். குறுகிய கைகால்களும் கொழுவிய முகமும் தொந்தியும் கொண்ட பொன்மைந்தனை அள்ளி நெஞ்சோடணைத்து தேவவர்ணினி விழிநீர் உகுத்தாள்.