மாதம்: நவம்பர் 2016

நூல் பன்னிரண்டு – கிராதம் – 42

[ 12 ]

பொன்வண்டென உருக்கொண்டு அமராவதியிலிருந்து தப்பி ஓடிய இந்திரன் சதகூபம் என்னும் பெருங்காட்டின் நடுவே ஆயிரத்தெட்டு கிளைகளுடன் நின்றிருந்த பிரபாவம் என்னும் ஆலமரத்தின் உச்சியில் இருந்த ஆழ்ந்த பொந்தை தன் வாழிடமாகக் கொண்டான். அவனுடன் பணி செய்ய வந்த நூற்றெட்டு தேவர்கள் சிறு வண்டுகளாகவும் பொற்சிறைத் தேனீக்களாகவும் உடனிருந்தனர். தேனீக்கள் காடெங்கிலும் சென்று பூங்கொடியும் தேனும் கொண்டு வந்து அவனுக்குப் படைத்தன. வண்டுகள் அவனைச் சூழ்ந்திருந்து சிறகதிர இசைமீட்டின.

பொந்துக்குள் ஆழத்தில் செறிந்திருந்த இருளில் அவன் தன்னை படிய வைத்துக்கொண்டான். உள்ளே ஒளிவரும் பொந்துகள் அனைத்தையும் அரக்கு வைத்து மூடச்செய்தான். தேன்மெழுகால் கட்டிய சிறுகுழியில் நறவல் தேக்கி அதனுள் மூழ்கி தன்னைமறந்து கிடந்தான். நாள் மடிந்து பொழுது கடப்பதை அவன் அறியவில்லை. காலம் செல்வதை அவனிடம் எவ்வண்ணம் சொல்வதென்று தேவர்கள் எண்ணி எண்ணி தயங்கினர். அவனோ மது மயக்கிலிருந்து ஒருகணமும் மீண்டு வரவும் இல்லை. ஆயிரம் ஆண்டுகாலம் அவ்வண்ணம் சென்றது.

எவரும் அறியாது மறைந்த இந்திரனைத் தேடி நாரதர் யாழிசை ஒலிக்கும் கருவண்டென காடுகளிலும் ஊர்களிலும் நகர்களிலும் அலைந்தார். பல்லாண்டுகாலம் அவ்வண்ணம் செல்லுகையில் இரவின் இருளுக்குள் சில தேனீக்கள் தேன்தேடி அலைவதையும் மலர்தோறும் அமர்ந்தெழுந்து சுழலுவதையும் கண்டார். அவற்றில் ஒன்றை அணுகி “யார் நீங்கள்? அந்திக்குப்பின் தேனீக்கள் தேன்நாடிப் பறப்பதில்லை” என்றார். “நாங்கள் இந்திரனின் அணுக்கர்கள். அவர் எப்போதும் மதுவில் ஆட விழைகிறார்” என்றன. “எங்கிருக்கிறார்?” என்றார் நாரதர். “இக்காட்டில் ஒரு பொந்துக்குள்” என்ற தேவர்கள் அவரை அழைத்துச்சென்றனர்.

மறுநாள் புலரியில் நாரதர் இந்திரன் வாழ்ந்த அப்பொந்துக்கு வந்தார். அதைச் சூழ்ந்து பொன்னிற மலர்கள் மலர்ந்து நறுமணம் சூழ்ந்திருந்தது. இருளுக்குள் தேன்குழிக்குள் மூழ்கி அசைவற்று கிடந்த இந்திரனைக் கண்டார். அவர் வருகையை அவன் அறியவில்லை. தேவர்களை அழைத்து “இப்பொந்தை மூடியிருக்கும் அனைத்து அரக்கையும் அகற்றுக!” என்றார். தேவர்கள் “அரசரின் ஆணை அது” என்றனர். “அரசரின்பொருட்டு இது என் ஆணை” என்றார் நாரதர்.

“அரசரிடம் ஆணை பெற்று செய்கிறோம்” என்றபின் ஒரு தேவன் “நாரதரின் ஆணையை நிறைவேற்றலாமா, அரசே?” என்றான். தேனில் ஊறி செயலற்ற சித்தம் கொண்டிருந்த இந்திரன் “ஆம்” என்று ரீங்கரித்தான். வண்டுகள் எழுந்து அப்பொந்தை மூடியிருந்த மெழுகனைத்தையும் தள்ளி வெளிவிட்டன. கதிரொளி சாய்ந்து பொந்துக்குள் விழுந்தது. இந்திரன் மிதந்திருந்த தேன் ஒளி கொண்டது. கண்கள் கூச விழித்தெழுந்து “யார்? என்ன நிகழ்கிறது?” என்ற அவன் கூவினான்.

அவன் அருகே வந்த நாரதர் “பொழுதுவிடிந்துவிட்டது, அரசே” என்றார். “நான் துயில் முடிக்கவில்லை” என்று அவன் சொன்னான். “மூடா, இன்னும் ஒரு பொழுது நீ துயின்றால் பின்னர் அமராவதியை அசுரரிடமிருந்து மீட்கவே இயலாது” என்றார் நாரதர். அவர் நாரதர் என்பதை உணர்ந்த இந்திரன் மெல்ல துயில்கலைந்து  தேன்குழம்பின் விளிம்பில் நீந்தி வந்து அரக்கை பற்றிக்கொண்டு அமர்ந்தான். “என்ன செய்யவிருக்கிறாய்?” என்று நாரதர் கேட்டார். “செய்வதற்கொன்றுமில்லை. இவ்வினிமையிலேயே இருந்துவிட விழைகிறேன்” என்றான்.

“இது இனிமையல்ல. செயலின்மையின் இனிமை ஒரு போதும் முழுமையாவதில்லை. செயலற்றவனைச் சூழும் ஆழுலகத்து தெய்வங்கள் அவனை முழுதும் இனித்திருக்க விடுவதில்லை. விழித்திருப்பவனின் இனிமை மட்டுமே தெய்வங்களுக்குரியது” என்றார் நாரதர். அவர் கைகாட்ட தேவர்கள் இந்திரனைப்பற்றி இழுத்து மேலே கொண்டு வந்தனர். துளைகள் வழியாக வந்த ஒளியில் அவன் சிறகுகள் காய்ந்தன. அவன் உணர்கொம்புகள் சுருள் அவிழ்ந்தன. அவன் கால்கள் தேன்பிசுக்கிலிருந்து பிரிந்து எழுந்தன. இமைகள் மேலேற அவன் சூழலை நோக்கினான். “ஆம், நெடுநாட்களாகிறது” என்று பெருமூச்சுவிட்டான்.

அவன் அருகே அமர்ந்து நாரதர் சொன்னார் “உன் கடன் அமராவதியை மீட்பது. இந்திரனே, மண் முழுக்க வேள்விக்களங்களில் உனக்காகவே அவியளிக்கப்படுகிறது. அவற்றை உண்டு மண்ணிலும் விண்ணிலும் அசுரர்கள் தழைத்து எழுகிறார்கள். பயிருக்கு அளித்த நீர் களைக்குச் செல்வதை அறியாதவர்களாக இருக்கிறார்கள் அந்தணர். கொடிய நோய் என விருத்திரன் விண்ணுலகையும் வியனுலகையும் ஆள்கிறான்.”

“தேவருலகு என்பது என்ன? அது அரசன் தன் கருவூலத்தில் வைத்திருக்கும் பொன்போன்றது. அது அங்கு இருக்கும்வரையே அங்காடிகளில் வணிகம் திகழும். பயணிகள் புலம் கடக்க முடியும். இந்திரனே, சான்றோர் சொல் திகழ்வதும், மகளிர் கற்பு வாழ்வதும், நூலோர் சொல் வளர்வதும், வேதியர் அனல் அணையாதிருப்பதும் அப்பொன்னாலேயே. இன்று அது களவு போகிறது. மண்ணில் ஒவ்வொருநாளும் அறம் குன்றுவதையும் கண்டபின்னரே உன்னைத் தேடி கிளம்பினேன். இது உன் பிறவிக்கடன்.”

“அரசனே, கடமையிலிருந்து தப்பி ஓடுபவர்கள் தீராப்பழி கொள்ளுகிறார்கள். பழி நிழல்போல, நாம் அதை உதறினாலும் நம்மை அது விடாது. நாம் அறியாது நம்முடனேயே இருக்கும். சித்தத்தின் அத்தனை சொற்களாலும் நாம் கொண்ட பழியை விலக்கலாம். அச்சொற்கள் ஊறிவரும் ஆழ்சுனை ஒன்றுண்டு. அங்கு நஞ்சென அது கலந்திருக்கும். பழி விலக்கி ஆண்மை கொள். அதுவன்றி நீ கொள்ளும் விடுதலை பிறிதொன்றில்லை” என்றார் நாரதர்.

“ஆம்” என்று சொல்லி இந்திரன் உடைந்து அழுதான். “தோல்வியின் தருணமொன்றை எவ்வண்ணம் எதிர்கொள்வதென எனக்கு தெரிந்திருக்கவில்லை. வெற்றியை மட்டுமே பயின்றிருக்கிறேன்.” நாரதர் கனிந்து அவனை தொட்டார். “துயர்களை விட்டு விலகுவதே மிகச்சிறந்த வழி. இழிவுகளைக் கடந்து செல்வது அதனிலும் நன்று. ஆனால் தோல்விகளைக் கண்டு விலகுபவன் மேலும் தோல்விகொள்கிறான்” என்றார் நாரதர். உளம் கரைந்து விம்மி அழுது விசும்பி ஓய்ந்தான் இந்திரன். “கடந்ததை எண்ணவேண்டாம். ஆவதை நோக்குக!” என்றார் நாரதர்.

“சொல்க, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று இந்திரன் கேட்டான். “உன் நச்சுக் கொடுக்கு உயிர் பெறட்டும். சிறகுகளில் ஆற்றல் பெருகட்டும். கண்களில் கனல்துளி வந்தமையட்டும். இந்திரனென எழு! எதன்பொருட்டு பிறந்தாயோ அதை ஆற்று” என்றார் நாரதர். “அவ்வண்ணமே” என்று இந்திரன் சொன்னான். “புலரட்டும், என் படைக்கலங்களை சூடுகிறேன். பொருதி நின்று என் கடன்முடிக்கிறேன். இனி சோர்வில்லை.”

ஆனால் அன்று கடந்து மறுநாள் காலையில் நாரதரை வரவேற்ற தேவர்கள் விழிதாழ்த்தி அவர் முன்னிருந்து ஒழிந்தனர். “என்னவாயிற்று?” என்றார் நாரதர். “அரசர் மீண்டும் மதுவுக்குள் மூழ்கியிருக்கிறார்” என்றனர் தேவர். உள்ளே மீண்டும் நிறைக்கப்பட்ட மதுக்குளத்திற்குள் விழுந்து சிறகுகள் ஊறி கால்கள் செயலற்று மிதந்துகிடந்தான் இந்திரன். சினத்துடன் “அதை உடையுங்கள்” என்றார் நாரதர். மதுக்குழியை தேவர்கள் உடைக்க ஒழிந்தொழிந்து செல்லும் மதுவையும் அறியாது மிதந்துகிடந்தவன் கால்தொட்டு மது ஒழிந்த தரையை அறிந்ததும் விழித்து “என்ன?” என்றான்.

குழியின் பின்னால் தவழ்ந்து கரையேற முயன்று வழுக்கி மீண்டும் விழுந்து உருண்டெழுந்துகொண்டிருந்தவன் விண்ணரசன் என்பதை எண்ணுகையில் நாரதர் நீள்மூச்செறிந்தார். “எழுக, தேவர்க்கரசே!” என்றார். மங்கலாக புன்னகைத்தபடி குழறிய குரலில் “தேன் இனிது. தேனாடல் அதனினும் இனிது” என்று இந்திரன் சொன்னான். “எழுக! நீ வெல்ல வேண்டியது அமராவதி” என்றார் நாரதர். அவன் மெல்ல கையூன்றி நிமிர்ந்து “இப்போது நான் அமராவதியில்தான் இருந்தேன்” என்றான். “பன்னிரு கோடி பொன்மாடங்கள் கொண்ட பெருநகர். ஒளிச்சிறகுகளுடன் தேவர்கள். செல்வங்களுக்கெல்லாம் தலையாயவை செறிந்த கருவூலம். வெண்ணிற யானை. பொற்கொம்புள்ள பசு. புலரிகதிரென அரியணை. பேரழகுகொண்ட துணைவி…”

“அது பொய். அரசே, இது மலர்களில் நிறைந்த நறுந்தேன். வண்டுகளைப் பித்தாக்கும்பொருட்டு தெய்வங்கள் இதை அவற்றின் இதழ்களில் சேர்க்கின்றன. வாழ்நாள் முழுக்க மலரிலிருந்து மலர் தேடி ஒருபோதும் நிறைவுறாது பண்ணிசைத்து பறந்து பறந்து அழிவதே வண்டுகளின் வாழ்வென வகுத்துள்ளது புவி சமைத்த நெறி. பேதைமையை விளம்புவது இது. இதை உண்ணும் ஒவ்வொரு சித்தத்திற்குள்ளும் ஒரு பொன்னுலகு பொலிந்து மறைகிறது” என்றார் நாரதர்.

“நாரதரே, வெளியே பருவடிவுகொண்டு இருக்கும் பொன்னுலகு அருளும் அனைத்து உவகைகளையும் இந்த மது உருவாக்கும் பொய்யுலகும் அருளுமென்றால் இது எவ்வகையில் குறைவுபட்டது? தேறலை பழிக்காதீர். இனிமை மட்டுமே கொண்ட ஒன்று இப்புவியில் பிறிதொன்றில்லை” என்றான் இந்திரன். “உணவென்றால் அது தெவிட்டியாகவேண்டும். இனிமை மட்டுமே கொண்ட ஒன்றை நாம் உண்பதில்லை. அது நம்மை உண்கிறது. உன்னை இது கரைத்தழிப்பதை நீ உணரவில்லையா?” என்றார். “இனித்து இனித்து கரைந்தழிவதற்கு அப்பால் பிறவிக்கான பொருளேதும் உண்டா?” என்றான் இந்திரன்.

“நீ ஒரு கனவின் துளியென்றால், நீ கொள்வதே பொருள். மூடா, தன்னை உருவென இருப்பென ஆக்கிய ஆற்றலின் ஆணையை மீறும் உரிமை அசுரருக்கோ தேவருக்கோ மானுடருக்கோ  தெய்வங்களுக்கோ இல்லை” என்றார் நாரதர். இந்திரன் சோம்பலுடன் உடல்நெளித்து “ஆயிரம் ஆண்டு நான் இவ்வுடலில் எழவேயில்லை. இச்சிறுதுளிக்குள் ஒரு பெரும்பொன்னுலகு எழுந்து விரிந்தது. எண்ணுகையில் இப்புவி ஒரு பொருட்டல்ல என்றே துணிகிறேன்” என்றான்.

சொல்லிப் பயனில்லை என உணர்ந்து நாரதர் சீறியபடி பாய்ந்து சிறகு விரித்து இந்திரனின் தலையில் தன் கொடுக்கால் கொட்டினார். அதன் நச்சு உள்ளே செல்ல பெருவலியில் துடித்து அலறியபடி அவன் செயலிழந்து அமர்ந்தான். தன் கால்களால் அவனைக் கவ்வி தூக்கி எடுத்து வெளியே கொண்டுசென்று காலை வெயிலேற்று வெம்மை கொள்ளத் தொடங்கியிருந்த ஆற்றுமணலில் இட்டார்.

KIRATHAM_EPI_42

சுடுமணலில் புரண்டு சிறகுகள் பொசுங்க கதறி அழுதபடி தவித்தான் இந்திரன். “எத்தனை மதுவுண்டாலும் இவ்வெம்மையை உன்னால் கடக்க முடியாது. நீ விழையும் அனைத்து மதுவையும் கொண்டுவரச் செய்கிறேன், இவ்வுண்மையை கடந்துசெல் பார்ப்போம்!” என்றார் நாரதர். இந்திரன் தவழ்ந்து சென்று நதியின் விளிம்பை அடைந்து அலைகளில் ஏறி ஆழத்தில் பாய்ந்து மூழ்கி எழுந்து தன் சிறகுகளை உதறிக்கொண்டான். மூழ்கிமூழ்கி குளிர் நீரை உதறி மீண்டபோது அவன் சித்தம் தெளிந்திருந்தது.

அருகே கடந்துசென்ற இலையொன்றைப் பற்றி மேலேறி அமர்ந்தபோது மெல்ல சித்தம் மீண்டுவந்தது. நீள்மூச்சுகள் விட்டபடி சோர்ந்து விழுந்து கைகளை உரசிக்கொண்டான். சிறகுகள் உலர்ந்ததும் எழுந்தமர்ந்து விழிகளை உருட்டியபடி “நான் செய்வதற்கென்ன உள்ளது, நாரதரே?” என்றான். “நீ வென்றெடுப்பதற்கு ஓர் உலகுள்ளது. அதை வென்றேயாக வேண்டிய கடமை உள்ளது” என்றார் நாரதர்.

[ 13  ]

ஆயிரமாண்டு இந்திரனின் சித்தத்தில் படிந்த தேன்விழுதுகள் அனைத்தையும் கங்கை கழுவி அகற்றியது. சாம்பல் அகன்று அனல் எழுவதுபோல் அவன் தன்னிலை மீண்டான். கரைசேர்ந்து தன் முழு நினைவுடன் அவன் மீண்டான். பொன்னிற உடலும் சுடர்கொண்ட கண்களுமாக நின்று வணங்கி “முனிவர் தலைவரே, என்னை வாழ்த்துக! இதோ, மீண்டு வந்துள்ளேன்” என்றான். தன் உரு மீண்டு அவன் முன் வந்த நாரதர் “உன் தருணம் நெருங்கிவிட்டது. விருத்திரனை நீ வென்றாகவேண்டும். ஆயிரம் ஆண்டு இந்திரன் அரியணையில் அவன் அமர்ந்திருந்தான் என்றால் அவனை மும்மூர்த்திகளும் வாழ்த்தியாக வேண்டுமென்பதே நெறி. மும்மூர்த்திகளின் அருள் பெற்றபின் அவனே இந்த யுகத்தின் இந்திரன் எனப்படுவான்” என்றார்.

“நான் என்ன செய்யவேண்டும்?” என்றான் இந்திரன். “அவன் நகரம் அழிக்கப்படவேண்டும். நகர் காக்க அவன் விண்ணுலகிலிருந்து படைகொண்டு எழும்போது அவனைக் கொன்று வெல்ல வேண்டும்” என்று நாரதர் சொன்னார். “ஆம், அது ஒன்றே வழி. ஆனால் அவனை வெல்லும் ஆற்றல் என் படைகளுக்கு இல்லை. என் படைக்கலங்கள் எதனாலும் கணந்தோறும் வளரும் அவன் பெருங்கோட்டைகளை அழிக்கவும் முடிவதில்லை” என்று இந்திரன் சொன்னான். “அப்போரின் அனைத்து செய்திகளையும் நான் அறிந்தேன். எவ்வண்ணம் விருத்திரன் அந்நகரை அமைத்தான் என்பதை உசாவி உணர்ந்தேன்” என்று நாரதர் விளக்கினார்.

த்வஷ்டாவின் மைந்தனாகப் பிறந்தவன் தன் ஏழு வயதில் தந்தையிடம் ஒரு வினாவை கேட்டான். “தந்தையே, வேதங்களில் தலையாயது எது?” அவர் “ரிக்வேதம்” என்றார். “ரிக்வேதத்தில் தலையாயது எது?” என்று அவன் கேட்டான் “நாசதீய சிருஷ்டி கீதம்” என்று அவர் சொன்னார். “சிருஷ்டி கீதத்தில் தலையாயது எது?” என்று அவன் கேட்டான். “அதன் முதல் வரி” என்று அவர் சொன்னார். “முதலில் பொற்கரு எழுந்தது.” மைந்தன் “அம்முதல் வரியில் தலையாயது எது?” என்று கேட்டான். “முதற்சொல், முதல் எனும் சொல்” என்றார் தந்தை. “தந்தையே, அச்சொல் ஒன்றே போதும். ஒரு சொல்லில் இல்லாத வேதம் முழு பாடல்பெருக்கிலும் இருக்க வழியில்லை” என்றபின் தந்தையிடம் விடைபெற்று அவன் கிளம்பிச் சென்றான்.

தெற்கே பெருங்கடல்முனையை சென்றடைந்து வருணனிடம் கேட்டான் “என் குடிமூத்தோனே, ஒரு சொல் மட்டும் என்னில் எஞ்சியிருக்கச் செய்க!” வருணன் தன் அலைப்பரப்பை விலக்கி ஒரு தீவைக் காட்டினான். பிரணவம் என்னும் அந்தத் தீவில் வெண்மணல் மட்டுமே இருந்தது. பறவைகளும் அங்கு செல்லவில்லை. அங்கு சூழ்ந்த அலைகள் அத்தனை ஒலிகளையும் உண்டு ஓங்காரமென்றாக்கின. அங்கு அமர்ந்து அவ்வொரு சொல்லை ஊழ்கப் புள்ளியென நிறுத்தி விருத்திரன் தவம் செய்தான். அவ்வொரு புள்ளியை கோடிமுறை திறந்து அதனுள் எழுந்த முடிவிலியைக்  கண்டான். அவன் தந்தையென்றே வடிவுகொண்டு முன்னால் வந்தது அது. “மைந்த, நீ விழைவதென்ன?” என்றது.

“எந்தையே, என் தந்தைகொண்ட இலக்கு நிறைவேற வேண்டும். அதற்கு எனக்கு மூன்று நற்சொற்கள் தேவை” என்றான். “கேள்” என்றது இறை. “கணந்தோறும் தானாகவே வளரும் ஒரு நகரம் எனக்குத் தேவை” என்று அவன் சொன்னான். “ஆம், அவ்வாறே ஆகுக!” “தந்தையே, என் நகரம் மண்ணிலுள்ள பாறைகளாலோ மரங்களாலோ உலோகங்களாலோ வெல்லப்படலாகாது. மானுடர் இயற்றிய எக்கருவிகளாலும் அது எதிர்க்கப்படலாகாது. விண்ணிலுள்ள தேவர்களோ தெய்வங்களோ என்னை வெல்லலாகாது” என்று அவன் கேட்டான். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றது முடிவிலி.

கண்விழித்தெழுந்து தன் தந்தையைத் தேடி வந்தான். “உங்கள் கனவை நிறைவேற்றிய பின்னர் மட்டுமே இனி உங்களை பார்ப்பேன், தந்தையே. நான் வெல்கவென்று அருளுங்கள்” என்றான். “அவ்வாறே” என்று த்வஷ்டா தன் மைந்தனின் தலைதொட்டு வாழ்த்தினார். “விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட மூச்சுலகில் அனல்கொண்ட புயல்காற்றுகளென அலைந்து கொண்டிருக்கின்றனர் உன் தமையர் பலனும் திரிசிரஸும். அவர்களை அனலவித்து அமையவைக்கும் புனலும் அன்னமும் உன் கைகளிலிருந்து விழவேண்டும். இந்திரனை வென்றபின் நீ அதை இயற்றுக!” என்றார். “அவ்வாறே” என்றபின் அவன் கிளம்பிச் சென்றான்.

ஏழு பெருநிலங்களை அவன் கடந்து சென்றான். தானாக வளரும் ஒரு நகரம் தனக்கென அமையுமென்ற சொல்லை கைக்கொண்டு தேடிச் சென்றான். பெரும்பாலையருகே மென்மணல் மீது  இரவில் துயில்வதன்பொருட்டு படுத்தபோது அவ்வெண்ணத்தையே நெஞ்சில் நிறைத்து விண்ணை நோக்கிக்கொண்டிருந்தான். அனல் பெருகும், புனலும் பெருகும். அவை அணையும், வற்றும். அணையாத, வற்றாத ஒன்றால் அமைவதே என் கோட்டை  என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.

துயின்று கண்திறந்தபோது தன்னைச் சுற்றி நூறு பெரும்மண்குவைகள் எழுந்திருப்பதைக் கண்டான். திடுக்கிட்டு நோக்கியபோது அவை அனைத்தும் சிதல் புற்றுகள் என்று தெரிந்தது. ஓரிரவில் இப்பெரும்புற்றுகள் எப்படி எழுந்தன என்று அவன் வியந்தான்.

ஒரு புற்றை சுட்டுவிரலால் உடைத்து அதிலிருந்து வெண்ணிறச் சிற்றுடல்கொண்ட சிதலெறும்பு ஒன்றை எடுத்து சுட்டுவிரலில் வைத்து தன் கண்முன் கொண்டுவந்தான். “சிற்றுயிரே, சொல்க! இப்பெரும் ஆற்றல் எப்படி உனக்கமைந்தது?” என்று அவன் கேட்டான். “நான் சிற்றுயிரல்ல, இப்புவியில் இருக்கும் பேருயிர்களில் ஒன்று. என் முன் மானுடரும் விலங்குகளும் வான்நிறைக்கும் பறவைகளும் சிறுதுளிகளே” என்றது சிதல். “ஏனெனில் இச்சிற்றுடல் அல்ல நான் என்பது.  கோடானுகோடி உடல்களில் எரியும் உயிரின் பெருந்தொகை நான்.”

‘ஆம், சிதலே என் நகரை அமைக்கும் புவியின்ஆற்றல்’ என்று அவன் எண்ணிக்கொண்டான். “மண்ணுக்குள் வாழும் முதல் மூதாதையின் பெயரால், அவர் மைந்தராகிய த்வஷ்டாவின் பெயரால், மண்ணிலிருந்து எழுந்த அசுரனாகையால் உங்களை பணிந்து கேட்கிறேன், சிற்றுருவரே. எனக்கு அருள் புரிக!” என்று அவன் சொன்னான். “ஆம், நீயும் எங்கள் குலமே” என்றது சிதல். “உன்னை நாங்கள் ஏற்கிறோம். பன்னிரு பெருங்குலங்களாகப் பிரிந்து உன்னை துணைப்போம். ஆனால் எங்கள் அன்னம்பெருக நீ உதவவேண்டும். ஒவ்வொருநாளும் எங்களுக்கு உண்ணக்குறையாது அன்னம் அளித்தாகவேண்டும்.” “ஆம், ஆணை” என்றான் விருத்திரன்.

“சிதல்களின் ஆணை பெற்று அவன் தேடிச் சென்று கண்டடைந்த இடமே புற்றிகபுரி. அங்கு சிதல்புற்றுகள் ஒன்றன்மேல் ஒன்றென மண்ணலை என மலைநிரை என எழுந்து அமைத்த தொண்ணூற்றொன்பது கோட்டைகள் சூழ்ந்தது அவன் நகர். விண்ணோரும் மண்ணோரும் கைகொள்ளும் எப்படைக்கலமும் சிதல்களை அழிக்க முடியாது என்றறிக! ஏனெனில் காலத்தின் அளவுக்கே பெரியவை அவை. காலமே ஆன பிறிதொன்றே அதை வெல்ல முடியும்” என்றார் நாரதர்.

இந்திரன் சோர்வுடன் “நான் என்ன செய்ய முடியும், முனிவரே? அந்நகரை அழிக்க நானறிந்த எவ்விசையாலும் இயலாது என்றல்லவா முதற்தந்தையிடமிருந்து அவன் வரம் பெற்றிருக்கிறான்? முதல் முறையாக மண் விண்ணை முற்றிலும் வெல்கிறது என்றல்லவா அதற்குப் பொருள்?” என்றான்.

“வேந்தனே, மண்ணும் விண்ணும் ஒன்றையொன்று வளர்ப்பவை. மண் அளிக்கும் அவியும் சொல்லும் விண்ணாளும் தேவர்களுக்கானது. தேவர்கள் அளிக்கும் மழையாலும் ஒளியாலும் காற்றாலும் மண் செழிக்கிறது. மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவே துலாமுள் என நின்றிருக்கும் அனலே நிகர்நிலையை புரக்கிறது. அந்நிகர்நிலை இன்று அழிந்துள்ளது. விண் சரிந்து மண் எழுந்தால் மண்ணைக் காக்கும் விண்விசைகளும் அழியும். விளைவாக மண்ணும் அழியும்” என்றார் நாரதர். “என்னைத் தேடி வந்து இந்நிகரில் அழிவைச் சொன்னவன் அனலோன். நீ வென்றேயாகவேண்டும். விருத்திரனை வெல்லாது இப்புவி வாழ பிறிதொரு வழியில்லை.”

இந்திரன் தன்னுள் என “ஆம், அவனை வென்றாகவேண்டும்” என்றான். “எவ்வண்ணமேனும் நிகழ்த்தப்படவேண்டுமென உறுதிபூணப்பட்ட ஒரு செயல் நிகழ்ந்தே ஆகும் என்று உணர்க! நீ இழப்பது எதுவென்றாலும் இக்கடனை முடிப்பாய் என்றால் இங்கிருந்தே கிளம்புக!” என்றார் நாரதர். “ஆம், என்னை ஆக்கிய தெய்வங்கள் மேல் ஆணையாக!” என்று இந்திரன் வஞ்சினம் உரைத்தான்.

“நீ வெல்வாய். வெற்றியையே வேதம் அறைகூவுகிறது. வேதமுதல்வனாகிய உன்னை வெற்றிநோக்கி கொண்டுசெல்லும் ஊர்தி அதுவே. ஆயிரம் வேள்விகளில் இக்கணம் முதல் ஒழியாது அவிசொரியப்படும். உன்னை ஊக்கும் வேதச்சொல் ஒரு கணமேனும் ஓயாது முழங்கும். இடியின் தலைவனே, உன் போர்முரசென்றாகுக வேதம்!” என்றார் நாரதர்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 41

[ 10 ]

சண்டன் “மும்முகப் பிரஜாபதியை நான்முகப் பிரஜாபதி வென்றதே கதை என்றறிக!” என்றான். முழவை மீட்டி “மும்முகன் அறியாதது ஒரு திசை மட்டுமே. அது வலமில்லை இடமில்லை பின்னாலும் இல்லை. தன் முன்பக்கத்தை. தன்னை நோக்காத மும்முகன் குலத்தோர் மறைந்தனர். தன்னை மட்டுமே நோக்கிய நான்முகன் மைந்தர் எழுந்தனர்” என்றான். வணிகர்கள் “ஆம்! ஆம்!” என்றனர். “அரிய சொல்” என்றார் ஒரு முதுவணிகர்.

ஜைமினி உரக்க “இவை முறையான கதைகளல்ல. இவற்றுக்கு நூற்புலம் ஏதுமில்லை. சொல்லிச்சொல்லி அனைத்தையும் உருமாற்றுகிறான் இந்த வீணன்” என்று கூவினான். சண்டன் புன்னகையுடன் திரும்பி “அவ்வாறென்றால் நீங்கள் அறிந்த மெய்க்கதையை நீங்கள் சொல்லுங்கள், உத்தமரே” என்றான். ஜைமினி “அதை இவ்வணிகர்முன் சொல்ல எனக்கு உளமில்லை” என்றான். சண்டன் “அப்படியென்றால் அவர் சொல்லட்டும்” என பைலனை சுட்டினான்.

பைலன் “இளையவர் சொல்ல விரும்புவார்” என்றான். சுமந்து ஊக்கத்துடன் “ஆம், நானறிந்ததை சொல்கிறேன்” என முன்னால் சென்றான். “விஸ்வரூபனின் கதையை தேவலரின் புராணகாதம்பரி சொல்கிறது” என்றான். “அந்நூலை நான் நான்குமுறை முழுதாக கற்றிருக்கிறேன். பலமுறை சொல்லியும் இருக்கிறேன்.” “சொல்க! சொல்க!” என்றனர் வணிகர். அவன் சொல்லத்தொடங்கினான்.

அசுரகுலத்தில் பிறந்தவள் அன்னை வாகா. அசுரர்களுக்கு முழவின்குரல் என்பது நெறி. அன்னையோ இளமையிலேயே குழலினிமைகொண்ட குரலுடனிருந்தாள். அசுரகுலமுறைப்படி வேட்டையாடி ஊனுண்டு மதுக்களியாடி அவள் வாழ்ந்தாள். ஒருநாள் காட்டுக்குள் அவள் செல்கையில் ஒரு முனிவர் ஆற்றங்கரையில் அமர்ந்து வேதமோதக் கண்டாள். அவள் அச்சொற்களை ஒருமுறைதான் கேட்டாள். தீட்டிக்கூராக்கிய வைரங்களெனச் சொல்லெழ வேதமோதக் கற்றாள்.

அந்நதிக்கரையிலமர்ந்து வேதமோதிக்கொண்டிருந்தவர் மாமுனிவராகிய த்வஷ்டா. அவர் காட்டுக்குள் செல்கையில் மரங்களில் பறவைகள் சிறகோய்ந்து அமைந்திருக்க மீன்கள் நீர்ப்படலத்திற்குள் விழிகளென நிறைந்திருக்க மானும் சிம்மமும் இணைந்து மயங்கிநிற்க இனிய ஓசையுடன் வேதமெழக்கேட்டார். அருகே சென்று நோக்கியபோது அதை ஓதுபவள் ஓர் அசுரகுலப்பெண் என்று கண்டார். அவளிடம் “அசுரகுலத்தவளே, வேதமுழுமை உன்னில் எப்படி கைகூடியது?” என்று கேட்டார். “இது வேதமென்றே நானறியேன். ஆற்றங்கரையில் நான் கேட்ட ஒரு பாடல் இது. இனிதென இருப்பதனால் பாடினேன்” என்றாள் அவள்.

வேதத்தை அறியும் நல்லூழும் வேதமோதிப் பெற்ற நற்பலனும் கொண்டவள் அவள் என உணர்ந்த த்வஷ்டா “நீ வேதமுணர்ந்த மைந்தனைப் பெறுவாய்!” என வாழ்த்தினார். அவளுக்கு வாகா என்று பெயரிட்டு தன் துணைவியாக்கிக்கொண்டார். அவளிடம் காமம் கொள்வதற்காக தன்னுள் இருந்து  உகிர்களும் எயிறுகளும் அனல்பரவிய குருதியுமாக அசுரன்  ஒருவன் எழுவதை அவர் உணர்ந்தார். அவள் வேதத்தை பெற்றுக்கொண்டாள். அவர் விழியுளமறிவென  ஏதுமில்லா விலங்குக் காதலை அவளிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

வாகாவின் வயிற்றில் பிறந்த மைந்தன் மும்முகம் கொண்டிருந்தான். மூன்றுமுகம் கொண்ட மைந்தனைக் கண்டு திகைத்த த்வஷ்டாவிடம் அவரது தந்தையாகிய விஸ்வகர்மர் சொன்னார் “மூன்று விழைவுகள் மைந்தனுக்காகக் கோரின. ஒன்று அசுரனொருவனுக்காக எழுந்தது. மற்றொன்று வேதமெய்யறிவன் பிறக்கும்பொருட்டு வேண்டியது. மூன்றாம் விழைவு இரண்டையும் கடந்த படிவனொருவனுக்காக எழுந்தது. மூன்று விழைவுகளும் இணைந்துபிறந்த இம்மைந்தன் மும்முகனாகத் திகழ்கிறான்.”

மும்முகன் வளர்ந்து மெய்யறிவனென்றானான்.  வேதமெய்மையை ஓதியது ஒரு முகம். ஊனும் கள்ளும் கொண்டு களித்தது பிறிதொருமுகம். ஊழ்கத்திலமைந்திருந்தது மூன்றாம் முகம். வேதிய முகத்தை அன்னை விரும்பினாள். கிராத முகத்தை தந்தை விரும்பினார். இருவரையும் விரும்பியது ஊழ்க முகம். வேதியரின் ஒழுங்கும் அசுரரின் விசையும் படிவரின் அமைதியும் கொண்டவர் அவர் என்றனர் முனிவர். அவர் சொல்லும் ஒவ்வொரு வேதச்சொல்லையும் தேவர்கள் விரும்பி ஏற்றனர். அவர் அளித்த அவிகொள்ள மும்மூர்த்திகளும் வானிலெழுந்தனர்.

அந்நாளில் பிரஜாபதியான கசியபர் நாரதரிடம் கேட்டார் “இப்புவியில் வேதத்தை முழுதறிந்தவர் யார்?” நாரதர் சொன்னார் “மண்ணுலகில் வாழும் வேதமெய்யறிவராகிய திரிசிரஸ்.” அதைக் கேட்டு கசியபர் ஆணவம் புண்பட்டார். தானறியாத வேதமேது திரிசிரஸிடம் என்றறிய தானே ஒரு மைனாவாக மாறி அவர் அருகே மரக்கிளையில் அமைந்து அவர் ஓதும் வேதத்தை கேட்டார். அவர் கற்ற வேதத்தையே திரிசிரஸ் பாடினார். ஆனால் அவர் ஒருபோதும் உணராத இனிமை அதில் இருந்தது.

திகைப்புடன் மீண்டு வந்து நாரதரிடம் “அந்த வேதத்தின் இனிமை எப்படி அமைந்தது?” என்று கேட்டார். “அந்தணமுனிவரே, அவருடைய அசுரமுகம் பிறிதொரு வேதத்தை பாடுகிறது. வைதிகமுகம்கொண்டு அவர் பாடும் அனைத்து வேதவரிகளுடனும் ஒரு சொல்லென அதுவும் இணைந்துகொண்டுள்ளது. அப்போதுதான் அது முழுமையடைகிறது” என்றார் நாரதர். “மறைந்த வேதம் அது. நீருக்குள் ஒளியென அது இருக்கையிலேயே வேதம் முழுமைகொள்கிறது.”

கசியபர் மேலும் ஆணவம் புண்பட்டார். திரிசிரஸிடம் வந்து அவர் பாடிய அந்த வேதவரிகளுக்கு பொருளென்ன என்று கேட்டார். திரிசிரஸின் இருமுகங்களுக்கும் அதன் பொருள் தெரிந்திருக்கவில்லை. ஊழ்கமுகம் கொண்ட திரிசிரஸ் மூன்று கைவிரல் செய்கைகளில் அதற்கு முழுவிளக்கம் அளித்தார்.  அனைத்து விரல்களையும் விரித்து முழுவிடுதலை காட்டினார். கைமேல் கைவைத்து அமரும் முத்திரையை காட்டினார். கட்டைவிரலை சுட்டுவிரலால் தொட்டு முழுமைமுத்திரையை காட்டினார்.

கசியபர் “ஆம், ஒன்று பிறிதை நிறைக்க எழுந்த மும்முகனே வேதமுதல்வன். காட்டாளனும் மெய்யறிவனும் இருபுறம் நிற்கையிலேயே வேதம் முழுமைகொள்கிறது” என்றார்.  நாரதர் புன்னகைத்து “காட்டாளனும் வேதமும் இருபுறம் நிற்கையிலேயே ஊழ்கம் தகைகிறது” என்றார். பின்னர் மேலும் உரக்க நகைத்து “வெறிகொண்டெழும் காட்டாளனுக்கு இருபுறமும் வேதமும் ஊழ்கமும் காத்துநிற்கின்றனவா, முனிவரே?” என்றார். “ஆம்” என்று கசியபர் சொன்னார்.

அங்கிருந்து இந்திரன் ஆண்டமர்ந்த அமராவதிக்கு நாரதர் சென்றார். அங்கே அவையமர்ந்திருந்த இந்திரனிடம் அந்நகரின் முழுமையை புகழ்ந்து பேசினார். “ஒரு துளி ஆசுரம் கலந்திருப்பதனால் இந்நகர் அழியாநிறை கொண்டிருக்கிறது. இது வாழ்க!” என்றார். சினம்கொண்ட இந்திரன் “இங்கு ஆசுரமென ஏதுள்ளது? இது தேவர்களின் உலகு” என்றான். “அரசே, இங்கு அவையமர்ந்திருக்கும் பிரஹஸ்பதி அசுரர்களுக்கும் குரு அல்லவா?” என்றார் நாரதர். இந்திரனால் மேலும் சொல்லெடுக்க முடியவில்லை.

ஆனால் அவன் உள்ளம் திரிபடைந்தது. பிரஹஸ்பதியை அவன் ஐயத்துடன் நோக்கலானான். ஐயம்கொண்டவன் தன் அனைத்து அறிவாலும் அந்த ஐயத்தை நிறுவிக்கொள்ளவே முயல்கிறான். ஆகவே அதை அவன் நிறுவிக்கொள்வான். ஐயம் அச்சமாகியது. அச்சம் சினத்தை கொண்டுவந்தது. ஒருநாள் தன் அவைக்கு வந்த பிரஹஸ்பதியிடம் இந்திரன் “நீங்கள் உங்கள் முழுதுள்ளத்தை தேவர்களுக்கு அளிக்கவில்லை. அசுரர்களையும் உங்கள் மைந்தரென்றே எண்ணுகிறீர்கள்” என்றான்.

“நான் தேவருக்கும் அசுரருக்கும் ஆசிரியன். கற்பிப்பது என் பணி. கல்வியை விழைவுக்கு அவர்களும் நிறைவுக்கு நீங்களும் பயன்படுத்துவதனால் நீங்கள் மாறுபடுகிறீர்கள்” என்றார் பிரஹஸ்பதி. இந்திரன் “தேவர்களுக்கு மட்டுமென நீங்கள் மெய்மையை கற்பிக்கவில்லை” என்றான். “மெய்மை அனைவருக்கும் உரியது” என்றார் பிரஹஸ்பதி. “மாணவனை விரும்பாத ஆசிரியனால் அறிவை அளிக்கமுடியாது” என்று இந்திரன் சொன்னான்.

உளம் புண்பட்ட பிரஹஸ்பதி “நீ என்னை ஐயப்படுகிறாயா?” என்றார். “நீங்கள் இனி தேவர்களுக்கு மட்டும் உரியவராக இருப்பதாக சொல்லுங்கள்” என்றான். “அச்சொல்லை நான் சொல்லமுடியாது. நீ என் அருமையை அறிந்து மீள்வதுவரை தேவருலகைவிட்டு அகல்கிறேன்” என்று சொல்லி பிரஹஸ்பதி கிளம்பிச்சென்றார். இந்திராணி “அவர் நம் முதன்மையாசிரியர். அவரை அழையுங்கள்” என்றாள். இந்திரன் “அவர் செல்லட்டும். நாம் நம் மெய்மையை மட்டும் சூடி இங்கிருப்போம்” என்றான்.

மறுநாள் வேள்விக்கு அமர்ந்த முனிவர்கள் “முதன்மைவைதிகரான பிரஹஸ்பதி அமராமல் வேள்வி இங்கு நிகழாது” என்றனர். “ஏன், நீங்கள் வேதம் முற்றறிந்தவர்கள் அல்லவா?” என்று இந்திரன் சினம்கொண்டு கேட்டான். “ஆம், ஆனால் நாங்களறிந்தது தேவர்களின் வேதம். அசுரவேதம் அறிந்தவர் அவர்மட்டுமே. அதுவுமிணையாமல் வேதம் முழுமைகொள்வதில்லை.” இந்திரன் திகைத்து அமர்ந்திருக்க “சென்று அவரை அழைத்துவாருங்கள், அரசே!” என்றனர் முனிவர்.

நாரதரை அழைத்து “என்ன செய்வது, முனிவரே? இங்கிருந்து மறைந்த பிரஹஸ்பதியை நான் எங்கு சென்று தேடுவது?” என்றான் இந்திரன். “மண்ணில் அவருக்கு நிகரென பிறிதொருவன் இருக்கிறான். அவன் பெயர் திரிசிரஸ். வேதமெய்மை உருக்கொண்டு எழுந்த அவனை பேருருவன் என்கின்றனர்” என்றார் நாரதர். நாரதரையே அனுப்பி திரிசிரஸை அழைத்துவரச்சொல்லி வேதவேள்வியைத் தொடங்கினான் இந்திரன். ஐயம்கொண்டிருந்த முனிவர் திரிசிரஸின் முதற்சொல்லைக் கேட்டதும் அவரே முதல்வர் என ஏற்றனர்.

வேதம் செழித்தது விண்நகரில். ஆனால் நாள் செல்லச்செல்ல அசுரர்களும் பெருகலாயினர். இந்திரனின் அரியணையைத் தாங்கிய துலாக்கோல் நிலைபிறழ்ந்தது. அதன் முள் அசுரர்பக்கம் சாயத்தொடங்கியபோது இந்திரன் அது எவ்வாறு நிகழ்ந்தது என்று முனிவர்களை அழைத்து கேட்டான். “அரசே, நாம் இடும் வேள்விக்கொடை அசுரர்களுக்கும் செல்கிறது” என்றனர் முனிவர். “எவ்வண்ணம் செல்லமுடியும்? தேவர்களில் அசுரர்களுக்கு அவியிடுபவர் யார்?” என்றான் இந்திரன். ஐயத்துடன் சொல்லின்றி நின்றனர் தேவர். அவர்களின் சொல்லின்மையைப் புரிந்துகொண்ட இந்திரன் தலையசைத்தான்.

மறுநாள் வேள்வி நிகழ்கையில் தலைமைகொண்டு அமர்ந்திருந்த மும்முகனையே இந்திரன் நோக்கிக்கொண்டிருந்தான். அவருடைய கிராதமுகம் சொல்லும் வேதச்சொல்லை இதழ்களைக் கூர்ந்து நோக்கினான். அவர் அசுரர்களுக்கு கொடையளிப்பதைக் கண்டான். அனலில் நீலக்கொழுந்து எழுந்து நாவாகி அந்த கொடையைப் பெற்றுக்கொண்டதை உணர்ந்தான். என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தான்.

அன்றே ஒரு கிளியென்றாகி பறந்து மண்ணுலகுக்கு சென்றான். கிளிகள் சொல்லும் மொழிகளைக் கூர்ந்தபடி அலைந்தான். ஒரு கிளி சொன்ன சொல் வேதச்சந்தத்துடன் இருப்பதை உணர்ந்ததும் அதை பின்தொடர்ந்தான். அக்கிளி சென்றணைந்த மரத்தின் அடியில் பிரஹஸ்பதி தவம் செய்துகொண்டிருந்தார். அவர் காலடியில் விழுந்து “பிழை செய்துவிட்டேன், ஆசிரியரே. ஆசிரியர் மாணவருக்கு உரிமைகொண்டாடலாம், ஆசிரியனுக்கு மாணவன் உரிமைகொண்டாடக்கூடாதென்று இன்று அறிந்தேன். கனிவு கொள்க!” என்றான்.

பிரஹஸ்பதி கனிந்தார். தன் முதன்மை மாணவனாகிய காம்யகன் என்னும் சிற்பியை இந்திரனுடன் அனுப்பினார். மறுநாள் வேள்வி நிகழ்கையில் காம்யகன் திரிசிரஸின் அருகே நின்றிருந்தான். வேள்வியனலில் அவியிடும்போது கிராதமுகம் அசுரர்களுக்கு என வேதமோதி அளித்த அவி அனல்சேரும் முன் தச்சன் அந்தத் தலையை துண்டித்தான். திகைத்து திரும்பிநோக்கிய வேதமுகம் தான் ஓதிய சொல்மறந்து நின்றது. அந்தத் தலையை இந்திரன் துண்டித்தான். இருமுகமும் சரிந்தபோது ஊழ்கமுகம் நிகர்நிலை அழிந்து முகம் சுளித்தது. அந்தத் தலையை இந்திரன் துணித்தான்.

“இந்திரன் திரிசிரஸை வென்ற கதை இது” என்றான் பைலன். ஜைமினி “ஆம், மும்முகன் செய்த வேள்வி அசுரர்களுக்குச் சென்றது. அந்தக் கரவுக்குரிய தண்டமே அவருக்கு அளிக்கப்பட்டது” என்றான். “அப்படியென்றால் பன்னிரு தூயநீர்நிலைகளில் ஏன் இந்திரன் நீராடி பழி களைந்தான்?” என்றான் சுமந்து. “வேதமோதி அவிக்கரண்டியுடன் அமர்ந்த வைதிகனைக் கொன்ற பழி அகலும்பொருட்டே” என்றான் ஜைமினி.

“அசுரனும் அந்தணனும் கலந்து ஒன்றாகக்கூடுமென்பதை உணர்ந்தே ஊழ்கமுகம் புன்னகைத்தது என்று தேவலரின் புராணகாதம்பரி சொல்கிறது” என்றான் பைலன். “ஆம்” என்றான் சுமந்து. உரக்க நகைத்து சண்டன் சொன்னான் “அசுரரில் இருந்து வேதத்தையும் வேதத்திலிருந்து அசுரத்தையும் வெட்டிவிலக்குவதே தேவர்களுக்கரசனின் முதற்பணி போலும்.”

[ 11 ]

பிரம்மகபாலத்தின் குகைக்குள் அமர்ந்திருந்த மூவரில் சூதன் எழுந்துசென்று இலைமறைப்பினூடாக வெளியே நோக்கினான். “இன்னமும் ஓயவில்லை மழை. நீர்ப்பொழிவுகள் பெருமரங்கள் போல வேரூன்றி நின்றிருக்கின்றன” என்றான். அந்தணர் “இந்த மழை எளிதில் ஓயாது. இக்காட்டைக் கண்டதுமே அதை அறிந்தேன். நீர்கொள் உடல்கொண்ட மரங்களே இங்கு மிகுதியாக உள்ளன. நீர்நிலைகள்தோறும் தவளைகள் செறிந்திருக்கின்றன” என்றார். சூதன் திரும்ப வந்து அமர்ந்துகொண்டான். பிச்சாண்டவர் இருகைகளையும் மார்பின்மேல் கட்டி தசைச்சிலையென அமர்ந்திருந்தார்.

“மலைச்சிற்றூரில் கபாலரின் சொற்களில் நீங்கள் கேட்ட விருத்திரனின் கதையை சொல்க!” என்றார் பிரசாந்தர். “அந்தணரே, குளிர்ந்த பாறைமேல் படுத்து விண்மீன்களை நோக்கியபடி நான் கேட்ட கதை இது” என்று பிரசண்டன் சொன்னான். “திரிசிரஸின் இறப்பால் உளமுடைந்த த்வஷ்டா அனைத்தையும் துறந்து பித்தனென காட்டில் அலைந்தார். சடைவளர்ந்து நிலம்தொட்டது. தாடிவளர்ந்து கால்களில் ஆடியது. கைநகங்கள் வளர்ந்து சுருண்டு உள்ளங்கைக்குள் செறிந்தன. அவர் இமைமயிரும் வளர்ந்து நோக்கைமூடியது. உடல்பழுத்து மண்படியும் நிலையை அடைந்தும் உயிர் எஞ்சி நின்றது. நூற்றெட்டுமுறை முயன்றும் தன் உடல்விட்டு உயிரை உதிர்க்க அவரால் இயலவில்லை.”

நெஞ்சுள் அமைந்த உயிரிடம் அவர் கோரினார் “சொல்க, இந்தப் பட்டமரம்விட்டு விண்ணிலெழ உனக்கு என்ன தடை?” உயிர் சொன்னது “விடாய்கொண்டும் விழைவுகொண்டும் வஞ்சம்கொண்டும் எவரும் இறக்கலாகாது, அசுரரே. நான் கொண்ட வஞ்சம் அடங்கவில்லை.” கண்விழித்த த்வஷ்டா நடந்து காட்டைவிட்டு வெளியே வந்து அவ்வழி சென்ற இடைச்சி ஒருத்தியிடமிருந்து இளம்பால் வாங்கி அருந்தி தன் உயிரை மீட்டுக்கொண்டார். உயிரின் வஞ்சம் ஒழிய என்ன செய்வதென்று எண்ணியபடி ஊர்கள் தோறும் அலைந்தார்.

அப்பயணத்தில் அவர் பிரஹஸ்பதியை கண்டடைந்தார். குற்றாலமரத்தின் உச்சியில் இருந்த பொந்து ஒன்றுக்குள் ஒரு மலைக்கழுகு உணவுகொண்டு போடுவதைக் கண்டு மரத்தின் மேலேறி அதற்குள் அவர் எட்டிப்பார்த்தபோது கையளவே ஆன உடல் ஒன்று சுருண்டு மூச்சசைவுடன் இருப்பதைக் கண்டார். அவர் பிரஹஸ்பதி முனிவர் என்று உணர்ந்ததும் வணங்கி தன் உளத்தேடலை சொன்னார். முனிவரின் குரல் வெளியே எழவில்லை. ஆகவே அவ்வுருவை அவர் அருகே ஓடிய கங்கையின்மேல் வைத்தார். கங்கையில் அலைகளென அவர் குரல் மாறியது. அவ்வதிர்வை விழிகளால் நோக்கி அவர் குருமொழியை உணர்ந்தார்.

பிரஹஸ்பதி சொன்னார் “மைந்தா, சிற்பியென நீ கொண்ட பொருட்களின் எல்லையையே அப்படைப்புகளும் கொண்டுள்ளன என்று நீ அறிக! பொன் உருகுவது. பாறை பிளப்பது. இனி உன் கலை அனலில் எழுக!” த்வஷ்டா கைகூப்பி “நான் செய்ய வேண்டியதென்ன, முதலாசிரியரே?” என்றார். “அணையாத அனலில் உன் படைப்பு எழுக!” என்றார் பிரஹஸ்பதி. முனிவரை மீண்டும் பொந்துக்குள் வைத்துவிட்டு காட்டுக்குள் செல்லும்போது அணையாத அனலேது புவியில் என்பதே அவர் எண்ணமாக இருந்தது. எரிவதென்பதனாலேயே அணைவது எரி. அந்தியில் மறைவது விண்கதிர். அணையாதெரியும் அனலென ஏதுள்ளது?

அவ்வழி செல்கையில் கங்கைச்சதுப்பில் குழியகழ்ந்து முட்டையிட்டு காலால் தள்ளி மூடியபின் ஆமை ஒன்று “அனல்கொள்க, மைந்தர்களே! அழியாத அனல்கொள்க!” என்று நுண்சொல் உரைத்தபின் நீர்நோக்கி செல்வதைக் கண்டதும் அக்கணம் அவர் அறிந்தார், அழியா அனலென்பது உயிர் என. உளமென்றாகி உணர்வுகொள்வதும் சொல்லென்றாகி பொருள்கொள்வதும் உயிரே. உயிரில் எழுக என் சிற்பம் என்று அவர் உறுதிகொண்டார். தன் கலையை எழுப்ப பேரனல் கொண்ட கருவறை ஒன்றை அவர் நாடினார். அனல் ஓங்கிய உயிர் எது புவியில் என்று நோக்கிக்கொண்டு காடுகளில் நடந்தார்.

யானையென பெருகிய தசைத்திரளைத் தூக்கியலையும் உயிரனலே ஆற்றல்கொண்டது. சிம்மமென முழங்குவது சினம் மிக்கது. செம்பருந்தென ஆன உயிர் விரைவெழுந்தது. சிற்றெறும்பென ஆனதோ கணம்கோடியெனப் பெருகுவது. அனைத்துமான உயிர் ஒன்று இருக்கவேண்டும் புவியில். அவர் களைப்புடன் அமர்ந்த புதர்காட்டில் ஒரு யானை தன் மைந்தனிடம் சொன்னது “கவ்விச்சுருட்டிச் செயலற்றதாக்கும் நாகங்களைப்பற்றி எச்சரிக்கை கொள்க, மைந்தா!” அக்கணமே சிம்மம் ஒன்று தன் குருளையிடம் “சீறும் பாம்பின் நஞ்சுக்கு நிகரான எதிரி உனக்கில்லை, குழந்தை” என்றதைக் கேட்டார். செம்பருந்து ஒன்று தன் குஞ்சிடம் “நீளும் நாவின் விரைவுக்கு நம் விழி செல்லமுடியாது என்று கொள்க!” என்றது. அன்னை எறும்பு புற்றுக்குள் அமர்ந்து சொன்னது “பெருகுவதில் நமக்கு நிகர் அது ஒன்றே. எனவே நம் புற்றுகளை காத்துக்கொள்க!”

த்வஷ்டா நாகங்களின் முதல் தந்தையான தட்சனின் மகள் தனுவை மணந்தார். அவளுக்குள் எரிந்த நெருப்பில் உருகிக் கரைந்தது அவரது சித்தம். அவள் கருவறையில் எழுந்த மைந்தன் சிம்மப்பிடரியும் சிறகும் நாகங்களின் உடலும் யானையின் தந்தங்களும் கொண்டிருந்தான். வளர்ந்துகொண்டே இருப்பவன் என்னும் பொருளில் அவர் அவனை விருத்திரன் என்றழைத்தார். அவன் உகிர்கொண்டு கிழித்தான். தந்தங்களால் சரித்தான். பறந்தெழுந்தான். நெளிந்து இருளாழத்தில் மூழ்கினான். அவனை வெல்லும் எவ்வுயிரும் மண்ணில் இருக்கவில்லை.

விருத்திரனுக்கு அனைத்து அறிவுகளையும் தந்தை அளித்தார். அனைத்து போர்க்கலைகளையும் தாய் அளித்தாள். இளைஞனான விருத்திரன் தன்னந்தனியாக நடந்துசென்று மேற்கே வெந்துசிவந்த செம்புலன்களுக்கு அருகே,   மூன்று பேராறுகள் பொற்களி சுமந்து வந்து கடல்காணும் முகப்பில் ஏழு கடல்கள் சூழ்ந்த தீவு நிலமொன்றை அடைந்தான். அங்கிருந்த பெரும் சிதல்புற்றின் மேல் அமர்ந்து நாகமொழியில் சீறி சிதல்களை அழைத்தான். அவனை அணுகி வணங்கிநின்ற சிதல்குலங்களின் நூற்றெட்டுதலைவர்களிடம் தனக்கு ஒரு வெல்லமுடியா பெருங்கோட்டையை அமைக்கும்படி ஆணையிட்டான்.

ஆயிரம்புற்றுகளை எழுப்பி அவை உருவாக்கியதே முதல்கோட்டை. அதற்குள் மேலும் மேலும் கோட்டைகளை எழுப்பிக்கொண்டே இருந்தன அவை. அந்நகர் புற்றிகபுரி என்றழைக்கப்பட்டது. அதன் புற்றுகள்தோறும் பன்னிரண்டாயிரம் நச்சுநாகங்கள் காவல்காத்தன. அவற்றின் இமையாவிழிகள் பத்து திசைகளிலும் நோக்கியிருந்தன.

புற்றிகபுரியில் ஒன்பது கோட்டைகள் முதலில் எழுந்தன. அவை தொண்ணூற்றொன்பது பெருங்கோட்டைகளாயின. கோட்டைக்குள் கோட்டையென அவை விரிந்தபடியே சென்றன. ஒவ்வொருநாளும் எழுந்து ஒரு புதுக் கோட்டையைக் கண்டனர் அந்நகர் வாழ்ந்த அசுரர். அந்நகரின் புகழ் வளரவே அசுரகுடிகள் நான்கு திசைகளிலிருந்தும் அங்கு சென்று குடியேறின. புற்றிகபுரி  வளர்ந்து அங்கே செல்வம் பெருகியது. வணிகர்களும் பாடகர்களும் புலவர்களும் அந்நகர்நோக்கி வரலாயினர்.

கருவூலம் செழித்ததும் விருத்திரன் வேள்விகளைத் தொடங்கினான். நூற்றெட்டு அசுரவேள்விகளை முடித்து மண்ணிலுள்ள அத்தனை அரசர்களையும் திறைகட்டும்படி சொன்னான். எட்டுத் திசைதேவர்களையும் வென்றான். பின்னர் விண்புகுந்து அமராவதியின் அரியணையில் அமரும்பொருட்டு இந்திரவிஜயம் என்னும் பெருவேள்வி ஒன்றைத் தொடங்கினான். அவ்வேள்வி ஆயிரத்தெட்டு நாட்களாக இரவும்பகலும் ஒழியாத அவிப்பெருக்குடன் அணையாத அனலுடன் நிகழ்ந்தது.

அமராவதியில் இந்திரன் அமைதியிழக்கலானான். முதலில் அவன் கனவில் வெண்ணிற இறகு ஒன்று காற்றில் மிதப்பது தெரிந்தது. அது என்ன என்று நூல்களிலும் அறிஞரிலும் உசாவினான். அவர்களால் விடையளிக்க முடியவில்லை. பின்னர் அவன் ஆழ்ந்து அமைதியிலமைந்திருக்கையில் செவிக்குள் ஒரு நரம்புத்துடிப்பென மெல்லிய அதிர்வொன்று கேட்டது. பின்னர் அவ்வொலி வலுக்கலாயிற்று. குறுமுழவு ஒன்றின் தொலைவொலி. அவன் கனவில் ஒரு வெண்ணிறப் புகைக்கீற்றைக் கண்டான். குறுமுழவொலி பெருமுழவின் அதிர்வாகியது. அவன் கனவில் வெண்முகிலொன்று அணுகுவதைக் கண்டான்.

ஒருநாள் காலையில் அவன் போர்முரசின் முழக்கம் அது என்று நன்கறிந்தான். அன்று கனவில் வெண்களிற்றில் ஏறிவரும் விருத்திரனின் தோற்றத்தைக் கண்டான். அமைச்சரை அழைத்து நிகழ்வதென்ன என்று நோக்கினான். விருத்திரன் இந்திரவுலகுக்கு படைகொண்டு எழவிருக்கிறான் என்றனர். “அசுரர் அவனுடன் இணைந்து பெருகியிருக்கின்றனர். வேள்விப்பயனுடன் அவர்கள் போருக்கெழுந்தால் அவனுடன் எதிர்நின்று களமாட நமக்கு ஆற்றலில்லை” என்றனர் தேவர். “அவன் வேள்வி முடியலாகாது. அதன்பின் இந்திரஅரியணை உங்களை ஏற்காது” என்றனர் அமைச்சர்.

பெரும்படையுடன் இந்திரன் புற்றிகபுரிமேல் போருக்குச் சென்றான். விண்ணில் அவன் முகில்படை திரண்டது. மின்கதிர்கள் சுழன்று சுழன்றறைந்தன. இடியோசை கேட்டு நாகங்கள் வெருண்டு சீறிய ஒலி புற்றிகபுரியில் புயல்போல ஒலித்தது. விண்கிழிந்து கங்கைப்பெருக்குகள் விழுந்ததுபோல நகர்மேல் மழை பொழிந்தது. இடியும் மின்னலுமாக இந்திரனின் படைக்கலங்கள் நகரின் நண்ணமுடியாத பெருங்கோட்டைகளை தாக்கின.

நூற்றெட்டுமுறை இந்திரன் புற்றிகபுரியைத் தாக்கினான். நகரின் புற்றுக்கோட்டைகள் மின்படைக்கலம்கொண்டு பிளந்து இற்றுக் கரைந்து வழிந்தோடின. ஆனால் அவை மயிர்க்கற்றைகள்போல சிலிர்த்து எழுந்துகொண்டுமிருந்தன. போர்முடிந்து கை சலிக்கையில் கோட்டைகள் முந்தைய உயரத்தைவிட மேலாக மீண்டும் எழுந்து நிற்பதை இந்திரன் கண்டான். நெஞ்சு ஓய்ந்து அவன் அமராவதிக்கு வந்து அமர்ந்தான்.

“அது உயிருள்ள கோட்டை, அரசே. அதை வெல்லவே முடியாது” என்றனர் தேவர். “உயிரின் அனல். அதை அணைக்க முடியாது. அழியுந்தோறும் பெருகுவது அது” என்றனர் அமைச்சர்.  சோர்ந்து அமர்ந்திருந்த இந்திரனின் காதுகளில் போர்முரசின் ஓசை பெருகிக்கொண்டிருந்தது. பின்னர் தேவியின் சொல்கூடக் கேட்காத முழக்கமாக அது ஆயிற்று. இருகைகளாலும் காதுகளைப் பொத்தி உடல்சுருட்டி நடுங்கியபடி அமர்ந்திருந்தான்.

அவனைச் சூழ்ந்திருந்த நீர்த்துளிகள் நடுங்கி உதிரத்தொடங்கின. பின்னர் அவன் மாளிகைக்கூரைகள் இற்று சரிந்தன. அங்கே ஒளிகொண்டு தொங்கிய விண்மீன்கள் விழுந்து சிதறின. பின்னர் அவன் நான்கு திசைகளையும் மூடும் பேரொலியுடன் எழுகடல்போல அசுரர் வருவதைக் கண்டான். அமராவதியின் கோட்டைகள் இற்றுச்சரிந்தன. தெருக்களில் வெற்றிக்கூச்சலுடன் அசுரர்படைகள் நிறைந்து கரைமுட்டிப் பெருகின.

“இனி இங்கிருக்கலாகாது அரசே, விரைக!” என்றனர் அமைச்சர். இந்திரன் ஒரு பொன்வண்டாக மாறி பறந்துசென்று மறைந்தான். அவன் அமைச்சரும் துணைவரும் பொற்தாலங்களில் வெண்ணிற ஒளிகொண்ட பாரிஜாத மலர்களுடன் சென்று கரியயானைமேல் ஏறி அமராவதிக்குள் நுழைந்த விருத்திரனை எதிர்கொண்டு வரவேற்றனர். நகருக்குள் நுழைந்ததும் விருத்திரன் இந்திரனின் ஐராவதத்தின் மேல் ஏறிக்கொண்டான். அமராவதியின் தெருக்களினூடாக தேவர்கள் மலர்மழை சொரிய மாளிகை நோக்கி சென்றான்.

KIRATHAM_EPI_41

அங்கே அரண்மனை முகப்பில் இந்திராணி அசுரப்பெண்ணாக உருவம்கொண்டு அவனுக்காக காத்திருந்தாள். அவளைச் சூழ்ந்து மங்கலப்பொருட்களுடன் சேடியர் நின்றனர். அவனை நீரும் மலரும் சுடரும் காட்டி வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றனர். விருத்திரன் இந்திரனின் மணிமுடியைச் சூடி அரியணையில் இந்திராணியுடன் அமர்ந்தான். இனி வேதியர் அளிக்கும் அவியில் பாதி தனக்குரியதென்று ஆணையிட்டான். அரசர்சூடும் மணிமுடிகள் அனைத்திலும் தன் காலடிப்புழுதியின் பரு ஒன்று அருமணியென பதிக்கப்பட்டாகவேண்டும் என்றான்.

இந்திரனின் வியோமயானம் பறந்து மண்ணுக்குச் சென்று கங்கைக்கரையில் ஒரு புற்றுக்குள் அமர்ந்து தவம் செய்திருந்த த்வஷ்டாவை அழைத்துவந்தது. இந்திரனை வென்று அரியணையில் ஒளியுடன் அமர்ந்திருந்த மைந்தனைக்கண்டு அவர் விழிபொங்கினார். “என் அனல் இன்று அவிந்தது. நிறைவுற்றேன். இனி என் உயிர் உதிரும். விண்திகழ்வேன்” என்றார். தேவர் புடைசூழச் சென்று ஏழுகடல்களிலும் தன் மூத்தவர்களான பலனுக்கும் திரிசிரஸுக்கும் நீத்தார்கடன்புரிந்து நிறைவுறச்செய்தார்.

மைந்தரை விண்ணேற்றியபின் த்வஷ்டா தன் உடலை உதறினார். அவரிலிருந்து  ஆடி ஒளியை திருப்பியனுப்புவதுபோல உயிர் எழுந்து விண்ணுக்குச் சென்றது. விண்ணில் ஒரு சிவந்த ருத்ரனாக அவர் சென்றமைந்தார். அவரை நான்கு ருத்ரர்களில் ஒருவராக அசுரர் வழிபட்டனர். விருத்திரேந்திரனின் கோல்கீழ் ஆயிரமாண்டுகாலம் புவியும் வானும் செழித்தன.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 40

[ 8 ]

பிரம்மகபாலத்தின் மழைசூழ்ந்த குகையறைக்குள் இருந்து பிரசண்டன் சொன்னான் “மும்முகன் பிறந்த கதையை நான் விருத்திரர்களின் தொல்லூரில் கேட்டேன். அந்தணரே, அங்கே காட்டுக்குள் அமைந்த பாறையொன்றின்மேல்  மூன்று பெருங்கற்களை மூன்று திசைநோக்கி முதுகிணைய நிறுத்திவைத்து விழிகளும் வாயும் வரைந்து அவர்கள் வழிபடுகிறார்கள். மும்முகனின் ஒரு முகம் கனிந்த தந்தை. அதன் காலடியில் மலரும் நீரும் மாவுணவும் படைத்து வழிபட்டனர். இரண்டாவது முகத்தின் அடியில் கள்ளும் குருதியும் படைத்தனர். மூன்றாம் முகத்தின் முன்பு ஊழ்கநுண்சொல்லன்றி எதையும் படைப்பதில்லை.”

“முதல் முகத்தை முழுநிலவிலும் இரண்டாம் முகத்தை கருநிலவிலும் வழிபட்டனர். மூன்றாம் முகத்தை ஆண்டுக்கொருமுறை இளவேனில் தொடங்கும் நாளில் பூசகர் மட்டுமே சென்று வணங்கினர்” என்றான் பிரசண்டன். “மும்முகனின் கதையை எனக்கு கபாலர் சொன்னார். இடிந்தழிந்த மகாவீரியத்திலிருந்து ஒரு சிறுகல்லை எடுத்துவரச் சொன்னான் த்வஷ்டா. அதை கொண்டுசென்று காட்டுக்குள் நட்டான். ஒவ்வொரு நாளும் அதனருகே அமர்ந்து விழிநீர் சிந்தி அழுதான். அவனுடைய கண்ணீர்பட்டு அக்கல் முளைத்தது. பேருருவம் கொண்டு ஒரு மலையென எழுந்து வளர்ந்தது. மூன்றுமுகம் கொண்டு எழுந்து நின்றிருந்த அந்த மலையை த்வஷ்டா தன் முதற்றாதையின் மண்வடிவமென எண்ணினான். அதற்கு விஸ்வரூபன் என்று பெயரிட்டான்.”

மும்முகம் கொண்ட மலையைப்பற்றி தொல்லசுரர்குடியின் பாடகர்கள் பாடியலைந்தனர். அதைக் கேட்டு அசுரர்குடியினர் ஒவ்வொரு கோடையிலும் இருமுடிகட்டு சுமந்து அங்கே வந்துசேர்ந்தனர். ஒருமுடிச்சில் உணவும் உடையும். மறுமுடிச்சில் மலைவடிவனுக்கான பூசனைப்பொருட்கள். பதினெட்டு நாட்கள் காடுகளுக்குள் ஓடைக்கரையிலும் பாறையுச்சியிலும் தங்கி வறண்ட ஓடையின்  நீர்வழிந்த தடம்கொண்ட பாறைகளினூடாக ஏறி மேலே சென்று அவனை நோக்கினர். அசுரர்களில் ஹிரண்யர்கள் அவன் தந்தைமுகத்தை மட்டுமே காணமுடிந்தது. அவன் சினமுகத்தைக் கண்டனர் மகிடர். அவன் நுண்முகத்தைக் காணும் வழி மேலும் அடர்ந்த காட்டுக்குள் வாழ்ந்திருந்த சண்டர் என்னும் குடிக்கு மட்டுமே இருந்தது.

மும்முகப் பெருமலை தொல்குடிகள் அளித்த பலிகொடைகளைப் பெற்று பேருருவம் கொண்டு வளர்ந்தது. அதன் முடிகள் எழுந்து முகில்களை தொட்டன. அதன் குளிர்ந்த முடியிலிருந்து நூற்றெட்டு அருவிகள் பொழிந்தன. அவை ஒழுகிய பாதைகளிலெல்லாம் அசுரர்களின் ஊர்கள் எழுந்தன. அந்நீரை உண்டு அவர்களின் குடிகள் செழித்தன. தந்தைமுகத்தைக் கண்ட அசுரர்கள் வேளாண்தொழில் செய்து செழித்தனர். சினமுகம் கண்டவர் வேட்டுவராயினர். நுண்முகம் கண்டவர்களோ அருங்காட்டுக்குள் வாழ்ந்தனர். அவர்கள் மட்டுமே பிற இருகுலங்களுக்கும் முதன்மைப்பூசகர் என்று கருதப்பட்டனர்.

பிற இருமுகங்களையும் அறிந்திருந்தனர் சண்டர்குடிப் பூசகர். அறம்பிழைத்த வேட்டுவரை அருட்தந்தையிடம் அனுப்பி பன்னிருநாட்கள் உணவொழித்து நோன்புகொண்டு மீளச்செய்தனர். அறம் கடந்த வேளிரை கொடுந்தந்தையிடம் சென்று குருதிசிந்தி பிழைபொறுக்கக் கோரி மீளவைத்தனர். இரு தந்தையருக்கும் அப்பால் இருவரின் குடிகளையும் நோக்கியபடி ஊழ்கத்தில் இருந்தான் இருள்தந்தை. அவன் விழிகளுக்கு முன் தழைத்து செறிந்து அணுகமுடியாத மந்தணம் இருளெனச் சூழ்ந்து கிடந்தது பெருங்காடு.

அங்கிருந்துதான் கஸ்தூரியும் கோரோசனையும் புனுகும் கொண்டு உயிர்கள் வந்தன. கொலைமதவேழங்கள் அங்கே பிடிகளுடன் புணர்ந்து குட்டிகளை ஈன்றன. புலிகளும் சிம்மங்களும் அதன் வாயில் திறந்து ஒளிரும் விழிகளுடன் வளையெயிறும் கூருகிருமாக வந்து எச்சரித்துச் சென்றன. இரவில் அங்கிருந்து குளிர்ந்த மூலிகைத்தென்றல் வீசி  நோயுற்ற உடல்களை ஆற்றியது. எப்போதும் மழைதிகழும் அந்த வானையே அவர்களால் பார்க்கமுடிந்தது. அங்கே எழும் இடியோசையையும் களிறோசையையுமே அதன் குரலென அவர்கள் அறிந்திருந்தனர்.

ஒவ்வொரு நாளும்  வளர்ந்த மும்முகனின் புகழ் விண்ணை அடைந்தது. அவன் குளிர்முடியை நோக்க விண்ணவர் வந்துசெல்வதை தேவர்க்கரசன் அறிந்தான். “இக்கணமே அதை அழிக்கிறேன்” என்று அவன் கிளம்பினான். மலைமேல் முகிலில் தோன்றி தன் மின்படைக்கலத்தை செலுத்தினான். பன்னிரண்டாயிரம் முறை மின்னல்கள் மலையைத் தாக்கின. திசைமறைத்த பெருமுகம் புன்னகையும் சிரிப்புமாக மின்னி மின்னி அணைந்ததே ஒழிய ஒரு சிறுபாறைகூட அதிலிருந்து உதிரவில்லை.

அசுரர்களின் குடிகளில் மக்கள் ஒரு மாதம் தொடர்ந்து  இரவிலும் பகலிலும் மலைமுடிமேல் சுழன்றடித்த மின்னல்களைக் கண்டனர். “இந்திரன் எழுந்துவிட்டான்” என்று பூசகர்கள் அஞ்சிக்கூவினர். தங்கள் முற்றங்களில் சோரும் பெருமழைக்கு தலையில் காமணங்களைப் போட்டு உடல்குறுக்கி நின்று அவர்கள் அந்தப் போரை நோக்கினர். முகில்முழக்கமாக இந்திரன் போர்க்குரலெழுப்பினான். அடர்காட்டுக்குள் அவ்வொலியை எதிரொலியாக எழுப்பி மறுமொழி அளித்தான் மும்முகன்.

இறுதியில் சோர்ந்து இந்திரன் திரும்பியபோது முகில்பரப்பு விரிசலிட்டு வான்புன்னகை எழுந்தது. காடெங்கும் இலைகளில் ஒளிநகை விரிந்தது. காற்று சுழன்றடிக்க காடு கூச்சலிட்டது. பறவைகள் வானிலெழுந்து சிறகுலைத்து நீர்த்துளி சிதறின. அசுரகுடிகள் கைகளைத் தூக்கி கூச்சலிட்டபடி துளிவிழுந்த சேற்றுமுற்றங்களில் கூத்தாடினர். கொம்பும் குழலும் விளித்து வெற்றியறைந்தனர். இன்னுணவும் கள்ளும் உண்டு களியாடினர். “வெல்லற்கரியவன் குன்றுமுகன்” என்றனர் பூசகர்.

ஆற்றாமையும் கண்ணீருமாக தன் அரண்மனையில் ஒடுங்கிக்கிடந்தான் இந்திரன். இந்திராணியாலும் அவனை தேற்றமுடியவில்லை. தேவர்கள் நாரதரைத் தேடி அழைத்துவந்தனர். அவனைத் தேடிவந்த நாரதரிடம் “தோற்று திரும்பினேன், நாரதரே. ஒவ்வொருமுறை தோற்கையிலும் என் அரியணையின் கால் ஒன்று புதைகிறது. ஏழு தோல்விகளுக்குப்பின் நான் இந்திரனென அமையமுடியாது என்பது நெறி. அரியணை என்றும் இருக்கும். அமராவதியும் இருக்கும். இங்குள்ள செல்வமனைத்தும் இவ்வண்ணமே இருக்கும். இந்திராணியும் மாற்றமின்றி நீடிப்பாள். நான் ஒருவனே மறைவேன். இன்மையுள் கரைவேன்” என்றான்.

“போரின் ஒரு தருணத்தில் அப்பேருருவனை வெல்ல என்னால் ஆகாது என்ற எண்ணம் எழுந்துவிட்டது. என் மின்படைகள் அவனை வெண்ணிறஇறகென வருடிச் செல்வதையே கண்டேன். அதிரும் ஒளியில் அவன் முகத்தில் எழுந்த பெரும்புன்னகை என்னுள் ஆழத்தில் உறைந்த ஒன்றை அதிர வைத்தது. அது நான் என்னைப்பற்றி என் கனவுகளில் மட்டுமே உணர்ந்த ஓர் உண்மை. இசைமுனிவரே, நான் ஒரு துலாமுள்ளன்றி வேறல்ல. அசுரரும் தேவருமென பிரிந்து பிறிதொன்று ஆடும் களத்தில் நான் ஓர் அடையாளம் மட்டுமே.”

“கை தளர்ந்த மறுகணமே கால் பின்னடைந்தது. என் அச்சத்தை ஐராவதம் உணர்ந்ததும் அது திரும்பி ஓடியது” என்றான் இந்திரன். “எப்படைக்கலமும் இனி என்னை சினந்தெழச் செய்யாதென்று உணர்ந்தேன். நான் மறையும் தருணம் அணுகிவருகிறது.” நாரதர் புன்னகைத்து  “இந்திரனே, மகாவீரியத்தை நீ வென்றது எப்படி?” என்றார்.  “வஞ்சத்தால், இரக்கமற்ற பெருவிசையால்” என்றான்.  “ஆம், நுண்கலையை எப்போதும் வெல்வது குருட்டுப்பெருவிசையே. கலையை அழிப்பது காட்டாளருக்கே எளிது. கலை தன்னை அறிபவனின் விரிவை தன் பாதையெனக்கொண்டு எழுவது. நுண்மைகொண்டவனில் அது நுண்மை. கனவுநிறைந்தவனில் அது கனவு. அரசே, தெய்வங்களில் அது தெய்வத்தன்மை. வீணரிடமும் வெறிகொண்டவரிடமும் அது வீண்” என்றார் நாரதர்.

“மலர்பூத்த மரத்தை மோதும் மலைவேழமெனச் சென்று நீ மகாவீரியத்தை அழித்தாய். அதுவே முறை. பிறிதெவ்வகையிலும் அதை வெல்ல முடியாது. ஒலி கேளாதவனே யாழை உடைக்கமுடியும். விழியில்லாதவன் மட்டுமே ஓவியத்தை அழிக்கிறான். சுவை உணராதவனே  தேன் கலத்தை கவிழ்க்கும் ஆற்றல்கொண்டவன்” என்றார் நாரதர். “உன்னை வெல்ல எழுந்த கலையை உணராத மூடனாகச்சென்று வென்றாய். அதுவே போர்வீரனின் வழி. அதன்பின் அந்நகரை உன்  நகருக்குள் அமைத்துக்கொண்டாய். அதுவே அரசர்களின் வழி.”

இந்திரன் நீள்மூச்சுவிட்டான். “இங்கு உன்னை அறைகூவி நிற்பது பொருளில்லாப் பேருரு. இதன் மடம்புகளிலும் முகடுகளிலும் கரவுகளிலும் சரிவுகளிலும் ஒழுங்கென்று ஒன்றுமில்லை. இதில் உள்ளவை அனைத்தும் விசை என்ற பொருள்மட்டுமே கொண்டவை. அரசே, பெருமலையின் ஒவ்வொரு கூழாங்கல்லும் சிற்பத்துக்கு எதிரானது. அதன் ஒவ்வொரு இருப்பிலும் கலையின் மறுப்பு திகழ்கிறது” என்றார் நாரதர். “கலை தன்னைத் திறந்துவைத்து தன்னை அணுகுபவனுக்காக காத்திருக்கிறது. கலைப்பொருளில் முழுமை கூடுவது அதை அறிந்து உணர்பவன் உடனுறைகையில் மட்டுமே. அதன்முன் அதை மறுத்து நின்றிருந்தபோது நீ அதன் முழுமையை சிதைத்தாய். அதை வென்றாய்.”

“இது முழுமைகூடிய இருப்பு. தன்முன் இருக்கும் எவரையும் இது அறிவதில்லை. எவரும் இதில் எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாது. எதைக்கொண்டும் இதை மறைக்கவோ திரிக்கவோ இயலாது. எச்சொல்லாலும் இதை விளக்கவோ விரிக்கவோ இயலாது. பொருண்மையின் நெகிழ்வற்ற அறியாமையைச் சூடி நின்றிருக்கிறது மும்முக மாமலை. இதை வெல்ல உன் குருட்டுவிசை உதவாது என்று அறிக!” என்று நாரதர் சொன்னார். “கலையை இழந்த சிற்பியின் கட்டற்ற வஞ்சப்பெருக்கு பொருண்மை கொண்டெழுந்தது இம்மலை.”

“இதன் விழியின்மை முன் உன் மின்னொளி செல்லாது. இதன் செவியின்மை முன் உன் இடி ஒலிக்காது. இதன் அசைவின்மை முன் உன் ஆற்றல் இயங்காது” என்றார் நாரதர். “இதை நான் வெல்வது எப்படி?” என்றான் இந்திரன். நாரதர் அவன் தோளில் கைவைத்து “வெல்லும் வழி ஒன்றே” என்றார். “இவ்வசைவின்மையை கலை அசைவுள்ளதாக்கும். இவ்விழியின்மையை கலை ஒளி அறிவதாக ஆக்கும். இச்செவியின்மையில் கலை இசை நிறைக்கும். உன் அரசவையின் பெருந்தச்சனை அங்கு அனுப்பு. வானிடிக்கு கரையாத மலை கலைஞனின் சிற்றுளிக்கு நெகிழ்வதை நீ காண்பாய்.”

முகம் மலர்ந்த இந்திரன் “ஆம், அவ்வாறே!” என்றான். தனது அரசவையின் முதன்மை சிற்பியாகிய காம்யகனை அழைத்து “மும்முகனை வென்று வருக!” என்று ஆணையிட்டான். காம்யகன்  ஆயிரம் கைகள் விரித்தெழும் வல்லமை கொண்டவன். “தேவசிற்பியே, சென்று அவனை ஒரு சிற்பமாக்குக! பகைகண்டு அஞ்சும் கண்ணும் படைக்கலத்திற்கு முன்நிற்கும் உடலும் அவனில் எழுவதாக!” என்றார் நாரதர்.

காம்யகன் ஆயிரம் கைகளில் உளிகளும் கூடங்களும் அளவுகோல்களும் அளவைக் கயிறுகளும் நீர்நிகரிகளும் கொண்டு எழுந்து மண்ணிறங்கி மும்முகன் முன் சென்று நின்றான். அவன் நோக்கு தன்மேல் பட்டதுமே மும்முகன் மகிழ்ந்து குனிந்து நோக்கினான். “உன்னை மூடியிருக்கும் பொருளின்மையை செதுக்கி எடுப்பேன். உன்னுள் உறங்கும் பொருள் துலங்கச்செய்வேன்” என்றான் காம்யகன். “நீ என் கைகளுக்கும் கருவிகளுக்கும் முன் வெறும் முதற்பொருள் மட்டுமே.”

அவன் முன் சிறு மைந்தனென மகிழ்ந்து வளைந்து நின்றான் பேருருவன். அவன் காலடியில் இருந்த பாறை ஒன்றில் சிற்றுளியை வைத்து மெல்ல தட்டி கல்நுனியை உடைத்து வீசினான் சிற்பி. “உன்னிலிருந்து விலகிச்செல்லும் இந்தக் கற்சில்லைப் பார். பொருளற்றது என நீயே காண்பாய். பொருள்கொண்ட ஒன்றிலிருந்து பொருளின்மை எப்படி விலகிச்செல்லமுடியும்? அப்படியென்றால் அது உன்னுடையதல்ல என்றே பொருள்” என்றான் சிற்பி. செதுக்கிச் செதுக்கி அப்பாறையை சுட்டுவிரல் நகமென்றாக்கினான்.

குனிந்து தன் காலை நோக்கிய மும்முகன் திகைத்து “எங்கிருந்தது இது?” என்றான். “உன்னுள். நீயல்லாத அனைத்தையும் விலக்குகையில் நீ மீள்வாய்” என்றான் காம்யகன். “ஆம், விலக்குக!” என்றான் மும்முகன். அவன் தலைமேல் கூடுகட்டியிருந்த பறவைகள் கூவின. மூதாதைமுகம் கொண்ட தலைமேல் வாழ்ந்த கௌதாரிகள் “எந்தையே, எண்ணித் துணிக! தன்னை பிறிதொன்றாக ஆக்குவது இறப்பேயாகும்” என்று கூவின. முனிந்த முகம்கொண்ட தலைமேலிருந்த சிட்டுக்குருவிகள் “முகம்கொண்டபின் நீங்கள் முடிவிலியை தலைசூட முடியாது, தந்தையே” என்று சிலம்பியபடி எழுந்துபறந்து சுழன்றன. சொல்லின்மையில் அமைந்த மலையில் வாழ்ந்த மைனாக்கள் “தாதையே, விழிகொண்டபின் ஒளியின்மையை நோக்கமுடியாதவர் ஆவீர்” என்றன.

ஆனால் தன்னைத்தான் நோக்கி உவகையிலாடி நின்றது மலை. கல்திரை விலக்கி எழும் அந்த உருவம் தன்னுள் ஒளிந்திருந்தது என்று எண்ணியது. “மலையரே, அது அச்சிற்பியின் உள்ளத்திலுள்ள உருவம்” என்றன கௌதாரிகள். “அவன் அகற்றுவனவற்றில் எஞ்சுவதைக்கொண்டே நீர் அவனை வெல்லமுடியும்” என்றன சிட்டுக்குருவிகள். “பேருருவரே கேளுங்கள், உருவின்மையே தெய்வங்கள் விரும்பும் உருவம்” என்றன மைனாக்கள். எச்சொல்லையும் அவன் செவிகொள்ளவில்லை. சிற்பி முதுமரத்தைக் கொத்தும் மரங்கொத்திபோல கற்பாறைகளில் தொற்றி ஏறி செதுக்கினான். அவன் கோரும் வகையிலெல்லாம் வளைந்து திரும்பி உதவியது மும்முகம்.

முற்றுருக்கொண்டு மும்முகன் எழுந்தபோது சிற்பி திரும்பி “அரசே, இதோ என் பணி முடிந்தது” என்றான். விண்ணில் ஐராவதம் தோன்றியது. அதிலிருந்த இந்திரன் தன் மின்படையைச் சுழற்றி மும்முகனை மூன்றாகப் பிளந்து வீழ்த்தினான். அவன் தலைகளை வெட்டி அகற்றினான் காம்யகன். மழையிரவின் இருளுக்குள் இடியோசை கேட்டு குடில்களுக்குள் இருந்த அசுரகுடிகள் எழுந்தோடி வந்து நோக்கினர். மின்னல்கள் வெட்டி அணைந்துகொண்டிருந்தன. பூசகன் ஒருவன் கைசுட்டி “அதோ” என்றான். மறுமின்னலில் அவன் சுட்டியதென்ன என்று அவர்கள் கண்டுகொண்டனர். அங்கே பேருருவ முகம் மறைந்துவிட்டிருந்தது.

மறுநாள் விடிந்தபோது அவர்கள் அது விழிமயக்கல்ல என்று உறுதிகொண்டனர். கூட்டம்கூட்டமாக கண்ணீர்விட்டுக் கதறியபடியும் முழவுமீட்டி மும்முகனின் கதையைப் பாடியபடியும் அவர்கள் காட்டுக்குள் புகுந்து மும்முகனின் அடிநிலத்தை சென்றடைந்தனர். அங்கே பெருமுகமென அவர்கள் அன்றுவரை கண்டிருந்த தோற்றம் பாறைக்குவியலென சிதைந்து பரந்திருப்பதைக் கண்டனர். அதனருகே அமர்ந்து கண்ணீர்விட்டனர். மலரும் ஊன்படையலும் அளித்து மண்விழுந்த மூத்தோனை வணங்கி தங்கள் இல்லங்களுக்கு மீண்டனர்.

மும்முகனின் முதற்தலையிலிருந்து எழுந்த   கௌதாரிகள் தொல்வேதச் சொல்லுரைத்து காட்டை நிறைத்தன.  களிமயக்கின் முகத்திலிருந்து எழுந்த சிட்டுக்குருவிகள் விழைவின் பாடல்களை பாடின. ஊழ்கமுகத்திலிருந்து எழுந்த மைனாக்கள் நுண்சொற்களை உரைத்தன. அவற்றைக் கலந்து அவர்கள் உருவாக்கிய பாடலின் சொற்களில் மும்முகன் வாழ்ந்தான்.

“இந்திரன் மும்முகனை வென்ற கதையை ஒளிரும் ஆற்றங்கரையில் இளஞ்சூதனாகிய குணதன் சொல்லக்கேட்டேன். நிலவலைகளைக் கேட்டபடி அமர்ந்திருந்தேன்” என்றான் பிரசண்டன். “அவன் பாடிமுடித்ததும் நான் விருத்திரர்களின் மலைக்குடியில் என்னிடம் முதற்பூசகன் சொன்ன கதையை சொன்னேன். இருகதைகளும் நீர்ப்பரப்பில் இரு நெற்றுகள்போல மிதந்துசென்றன. அணுகி அகன்று மீண்டும் அணுகி அவை செல்வதை உணர்ந்தபோது நான் அலைகளைத்தான் எண்ணிக்கொண்டேன். அவனும் அதை எண்ணி அக்கணத்தில் அலைகள் என்று சொன்னான்.”

“திரிசிரஸை இந்திரன் வென்ற கதையை நான் பிறிதொரு வடிவில் கேட்டுள்ளேன்” என்றார் பிரசாந்தர். “த்வஷ்டாவின் மைந்தராக அசுரகுலமகள் வாகாவின் வயிற்றில் பிறந்து தன் தவத்தால் முழுமைகொண்டு இந்திரநிலை தேடிய முனிவர் அவர். ஒரு தலையால் வேதமும் மறு தலையால் ஊழ்கமும் பயின்றார். மூன்றாவது தலையை களிமயக்குக்கு அளித்திருந்தார். ஒவ்வொரு கணமும் வைதிகரும் ஊழ்கப்படிவரும் எதிர்கொண்டு போராடும்  விழைவனைத்தையும் தனியாகப் பிரித்து ஒரு தலைக்கு அளித்தமையால் அவர் வேதம் தூய்மைகொண்டது. ஊழ்கம் முழுமைகொண்டது.”

“இந்திரன் படைக்கலத்துடன் எழுந்துவந்து அவரை வென்றபோது வேதமுகத்திலிருந்து மரங்கள் பற்றி எரியும் அனலெழுந்தது. களிமயக்கின் முகத்திலிருந்து நீர்நிலைகள் சுருண்டெழும் புயலெழுந்தது. ஊழ்கமுகத்திலிருந்து மலைகளை நுரைக்குமிழிகளென உடைக்கும் ஓங்காரம் எழுந்தது. இந்திரன் அஞ்சி ஓடி தன் அமராவதியில் ஒளிந்துகொண்டான். நாரதர் அவனிடம் சொன்னார், திரிசிரஸின் வெற்றி அவரது ஒரு முகம் பிறிதொன்றுக்குத் தெரியாதென்பதே.  இந்திரன் வெண்முகிலொன்றை மாபெரும் ஆடியென்றாக்கினான். அதில் களிமுகத்தை வேதமுகத்திற்குக் காட்டினான். வேதமுகத்தை ஊழ்கமுகத்திற்குக் காட்டினான். ஊழ்கமுகத்தை களிமுகம் கண்டது.”

“களிமுகம் கண்ட வேதமுகம் தன் கரந்துறைந்த விழைவைக் கண்டறிந்து சொல்தவறியது. வேதம் பிழைக்கவே அதன் ஆற்றல் அழிந்தது. வேதமுகம் கண்ட ஊழ்கமுகத்தின் அமைதிக்குள் அறிவின் வினா எழுந்தது. ஊழ்கம் கலைந்தது. ஊழ்கமுகம் கண்ட விழைவுமுகம் தன்னுள் உறைந்த பிறிதொன்று களியாட்டை அறிவதேயில்லை என்று உணர்ந்து திகைத்தமைந்தது. மும்முகமும் செயலிழக்க அத்தருணத்தில் இந்திரன் அவற்றை மூன்றென வகுந்திட்டான்.”

“அத்தலைகளை தேவசிற்பி ஒருவன் வெட்டிக்கொண்டுசென்றான். அமராவதியின் மூன்று வாயில்களையும் அம்முகங்கள் அணிசெய்தன. ஒரு வாயில் இளங்காலையில் வேதமோதும்படி அமரர்களை அழைத்தது. மற்றொன்று அந்தியில் கொண்டாடி மகிழும்படி கூவியது. பிறிதொன்று இரவின் அமைதியில் முழுதடங்கி உள்ளுணரும்படி சொன்னது” என்றார் பிரசாந்தர்.

[ 9 ]

கைமுழவை மீட்டி மெல்ல நடனமிட்டுச் சுழன்று நின்ற சண்டன் சொன்னான் “அமராவதிக்குள் நுழையும் வேதியர் களிமயக்கில் நின்றிருக்கும் முகத்தினூடாகவே செல்லவேண்டும் என்று நெறியுள்ளது. விழைவாடுபவர் ஊழ்கப்படிவரின் முகத்தினூடாக நுழையவேண்டும். வணிகர்களே, ஊழ்கப்படிவர் நுழைந்தால் வேதமுகம்கொண்ட வாயிலே காட்டப்படும்.” கைகளால் விரைந்து தாளமிட்டு நிறுத்தி “ஏனென்றால் ஒவ்வொருவரும் தாங்கள் விழைந்தவற்றின் வடிவில்தான் விழைவுக்கரசின் அணிநகருள் புகமுடியும். இழந்ததென்ன என்று அறிந்தாலே விழைந்தது என்ன என்று அறிவதுதான் அல்லவா?” என்றான்.

வணிகர்கள் உரக்க நகைத்தனர். சிலர் வெள்ளி நாணயங்களை சண்டனை நோக்கி வீச அவன் குனிந்து அவற்றைப் பொறுக்கி தன் மடிச்சீலையில் முடிந்துகொண்டான். “வெள்ளியும் பொன்னும் துள்ளிவருவதைப்போல் அழகிய காட்சியென புவியிலேதும் இல்லை. வணிகர்களே, கங்கைப்பரப்பில் மீன் துள்ளுவதைப்போல் இங்கு செல்வம் துள்ளட்டும். உடனெழுந்து துள்ளும் என் சொல்” என்றான்.

“விருத்திரனை இந்திரன் வென்ற கதையை சொல்லவந்தாய், சூதனே” என்றார் முதிய வணிகர். “ஆம் அக்கதையைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். கதைகளுக்குள் கதைகள் புகுந்துகொள்கின்றன. கதைகளிலிருந்து கதைகளை பிரித்தெடுத்து நீட்டுகையில் கதைகளுடன் அவை பின்னிக்கொள்கின்றன. வணிகர்களே, மண்ணுக்கு மேலே கிளையென கொடியென தண்டென பின்னிய கதைகளை நாம் காண்கிறோம். காணா ஆழத்தில் வேரெனப் பின்னிய கதைகளை அறிவதே இல்லை.” முழவை மும்முறை மீட்டி “ஒரு மிடறு இனிய கள் ஒருவேளை அக்கதைகளை மீட்டுக்கொண்டுவரக்கூடும்” என்றான்.

“இது கள்ளருந்தும் தருணம் அல்ல. கதை இருந்தால் சொல்க!” என்றார் முதிய வணிகர். “ஆம், மேலெழுந்த கதைகளைச் சொல்கிறேன். கரந்துறையும் கதைகளை உங்கள் கரந்துறையும் காதுகள் கேட்பதாக!” என்று சொல்லி முழவை மீட்டி மெல்ல ஆடினான் சண்டன். ஜைமினி பைலனிடம் “இவர் சொல்பவை எந்நூலில் உள்ள கதைகளென்றே தெரியவில்லை” என்றான். “நூலில் இடம்பெறப்போகும் கதைகள்” என்றான்  பைலன். சுமந்து சிரித்தபடி “நூலில் இருந்து உதிர்ந்த கதைகளும் உண்டு எனத் தோன்றுகிறது” என்றான்.

“மும்முகனின் குருதி ஊறிப்பெருகி ஓர் அலையென எழுந்து விண்ணை அறைந்தது. அமராவதியில் தன் உப்பரிகையில் நின்று நோக்கிய இந்திரன் தொலைவில் அந்திவானம் வழக்கத்தைவிட சிவந்திருப்பதைக் கண்டான். அச்சிவப்பு பெருகிவருவதை உணர்ந்ததும் அச்சம் கொண்டான். அது ஒரு குருதிப்பேரலையென எழுந்து வந்து அமராவதியின் நகர்முகத்தை அறைந்தது. கோட்டையைக் கடந்து தெருக்களை நிறைத்தது. சுழியும் நுரையுமெனப் பெருகி வந்தது” சண்டன் சொன்னான்.

இரு கைகளையும் விரித்து அக்குருதிமுன் நின்று இந்திரன் சொன்னான் “முனிவனைக் கொன்ற பழி என்னைச் சூழ்க! என் நகரை விட்டொழிக!” குருதியில் ஒரு முகம் மூக்கும் வாயும் கொண்டு எழுந்தது. “மூன்று பழிகளால் சூழப்பட்டாய், இந்திரனே. ஊழ்கத்திலமர்ந்த முனிவனைக் கொன்றமையால் நீ பழிகொண்டாய். வேதமோதிய வைதிகனைக் கொன்றமையால் இருமடங்கு பழிகொண்டாய். காமக்களிமயக்கில் இருந்தவனைக் கொன்றமையால் மும்மடங்கு பழிகொண்டாய்.”

“இப்பழிக்கு உன் நகரும் நாடும் கொடியும் முடியும் குலமும் சுற்றமும் குருதியும் போதாது” என்றது குருதிவடிவம். “இப்பெருநகரை நூறுமுறை உண்டாலும் தீராது என் பழி” என்று கூவியது. துயருடன் “அப்பெரும்பழிக்கு நிகரென நான் கொடுப்பதேது?” என்றான் இந்திரன். குருதிகண்டு அங்கே ஓடிவந்த நாரதர் சொன்னார் “இக்கணத்தில் கொடுப்பதென்றால் இந்திரபுரியும் மிகச்சிறிது. ஆனால் எதையும் முடிவிலிவரை நீட்டினால் மிகப்பெரிதே. இப்பழியை காலத்தில் நீட்டிச்செல்க!” குருதிவடிவன் “ஆம், அவ்வாறு என் பழி நிகர்செய்யப்பட்டாலும் நன்றே” என்றான்.

“இந்திரனுக்கென இப்பழியை உயிர்கள் சுமக்கட்டும். அவன் முகிலருளால் வாழ்பவை அனைத்தும் இங்கு வருக!” என்றார் நாரதர். மண்ணிலுள்ள அனைத்துக்கும் தேவருலகில் உள்ள  நிகர்வடிவங்கள் வந்து அவர்கள் முன் நிரைவகுத்தன. “இந்திரனை வேண்டி அருள்கொள்வனவற்றில் முதன்மையானவை இவை” என்றார் நாரதர். “நிலம் மழை கொள்கிறது, நீர் மின் கொள்கிறது, மரம் இடி கொள்கிறது, பெண் அவன் ஆண்துளியை கொள்கிறாள்.    அவர்கள் இப்பழியை ஊழிமுடிவுவரை சுமக்கட்டும்” என்றார்.

“என்பொருட்டு இதை சுமப்பவர்களுக்கு நற்சொல்லொன்றை அளிப்பேன். அப்பழி சுமக்கும் நாள்வரைக்கும் அக்கொடையும் உடனிருக்கும்” என்றான் இந்திரன். “அவ்வாறே ஆகுக!” என்றனர் நிலமும் நீரும் மரமும் மங்கையும். குழிகையில் நிறைக என அருளி அப்பழியை நிலத்திற்கு அளித்தான் இந்திரன். இணைகையில் வளர்க என்று நீர் அப்பழியை சூடிக்கொண்டது. முறிந்தாலும் இறப்பில்லை என்னும் நற்சொல்லுடன் பழிசூடியது மரம். விழைவு அடங்காதெரிக என்னும் வாழ்த்துடன் அதைப் பெற்றாள் பெண். நிலத்தில் களரூற்றாக செங்குழம்பெழுந்து குமிழியிடுவது அப்பழியே. நீரில் குமிழிகளென நுரைகொள்வது அக்குருதி. மரத்தில் அது செவ்வரக்கு. பெண்களில் அது மாதவிடாய்.

“வணிகர்களே, தாதவனம் என்னும் ஊரின் பெருவழிச் சந்திப்பில் நான் பிரசாந்தரைக் கண்டேன்.  இந்திரன் அவனுக்கு வேள்வியில் பலிகொடுக்கப்படும் பசுவின் தலை காம்யகன் என்னும் தச்சனுக்கு செல்லவேண்டும் என்று அறிவித்ததாக சொன்னார். வேள்வியில் கழுத்துக்குழாய் வெட்டி குருதிசொரிந்து அனலெழுப்பியபின் துண்டுபடுத்தி அகற்றி இலைத்தாலம்மீது பசுவின் தலை வலக்கொம்பு கீழே சரிந்த நிலையில் வைக்கப்படும்போது பொன்னிறச் சிறகுகள் கொண்ட ஈயெனப் பறந்துவந்து அப்பலியை கொள்பவன் அவனே என்றார்” என்று சண்டன் தொடர்ந்தான்.

“பின்னர் குத்ஸிதம் என்னும் மலைக்குடியில் நான் பிரசண்டரைக் கண்டேன்” என்றான் சண்டன். “முதிய சூதர் சடைமுடிக்கற்றைகள் தோளில் சரிய செவ்விழிகளில் கள்ளின் பித்து வெறித்திருக்க என்னிடம் சொன்னார், தொல்குடி அசுரர் தங்கள் குடியிலிருந்த அத்தனை தச்சர்களின் கட்டைவிரல்களையும் வெட்டி வீசினர். அவர்கள் கல்வெட்டி சுவர் எழுப்புவதில்லை என்றும் மரம்வெட்டி கூரைவேய்வதில்லை என்றும் உறுதிகொண்டனர். அதன்பின்னரே உள்காடுகளுக்குள் புகுந்து கற்குகைகளை இல்லங்களாகக் கொள்ளலாயினர்.”

நூல் பன்னிரண்டு – கிராதம் – 39

[ 6 ]

ஏழுமாத காலம் எண்ணி எண்ணி ஏங்கி வெந்து சுருங்கிய இந்திரனிடம் இந்திராணி சொன்னாள் “அஞ்சுவதை விட்டு அகலவேண்டும். வஞ்சம் கொள்வதை நோக்கி அணுகவேண்டும். அகன்றிருப்பதனால் பெருகுவதே வஞ்சம். சென்று அவ்வசுரனை காணுங்கள். அவனுடன் சொல்லாடுங்கள். அவன் யாரெனத் தெளிந்தால் இவ்வஞ்சம் அணையக்கூடும்.” இந்திரன் சினத்துடன் உறுமினான்.

“கரந்தமையும் எண்ணம் எதுவும் நஞ்சு. வஞ்சம் வீண் எண்ணங்களை உணவெனக்கொண்டு பெருகுவது. நீங்கள் எண்ணுபவன் அல்ல அவ்வசுரன் என்றிருக்கலாம். உங்கள் சொல்கேட்டு நண்பனென்றும் ஆகலாம். சென்று பாருங்கள். நல்லவை நிகழுமென நம்புங்கள்” என்றாள் இந்திராணி. எண்ணி இருநாட்கள் இருந்தபின் “ஆம், அவன் முகம் எனக்கு வேண்டும். வெறுப்பதற்கேனும். அவன் வல்லமையை நான் அறியவேண்டும். என்னுள் போர்புரிந்துகொள்வதற்கேனும்” என்றான் இந்திரன்.

ஒரு வெண்புறாவாக மாறி பறந்து மகாவீரியத்தின் முகடு ஒன்றின்மேல் இறங்கினான் முதல் அமரன். முதிய அந்தணனாக உருக்கொண்டு கழியூன்றி நடந்து சென்று நான்கு ருத்ரர்களை சந்திக்க  ஒப்புதல் கேட்டான். முதல் ருத்ரன் மலைப்பாறைகளை தேடிச் சென்றிருந்தான். இரண்டவது ருத்ரன் இரும்பு அகழ மண்ணுக்குள் துளைத்துச் சென்றிருந்தான். நான்காம் ருத்ரன் வேள்விச்சாலையில் மட்டுமே  இருப்பவன்.

இந்திரனை மூன்றாவது ருத்ரனாகிய த்வஷ்டாவின் முன் கொண்டுசென்று நிறுத்தினர் அசுரகுலக் காவலர். “அரசே, அளப்பரிய ஆற்றல்கொண்டிருக்கிறாய். நீ அமைத்த நகர்தான் இதுவரை மண்மேல் எழுந்தவற்றிலேயே முதன்மையானது. அதைப் பார்த்து வாழ்த்திச் செல்லவே வந்தேன். நீ வாழ்க! உன் நகர் நீடூழி வாழ்க!” என்றான்.

நற்சொல் கேட்டு மகிழ்ந்த த்வஷ்டா “அந்தணரே, நீர் விரும்பும் பரிசு எது? சொல்லுங்கள், இப்போதே அளிக்கிறேன்” என்றான். “நான் பரிசில்பெற வரவில்லை, ஒரு சொல்லுரைத்துச் செல்லவே வந்தேன். அரசே, முழுமையான செல்வத்தையும் அழகையும் இன்பத்தையும் மானுடரோ அசுரரோ நாடிச் செல்லலாகாது. முழுமையைத் தேடும் இன்பமே அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழுமையில் அமர்வது அவர்களுக்கு பெருந்துன்பமே ஆகும்” என்றார் அந்தணர்.

“அரசே, முழுமையை நாடி மலர்களுக்கு தேனீக்கள் என தெய்வங்கள் வந்துகொண்டிருப்பர். அவர்களில் ஒருவர் இப்பெருநகரை அடையவிரும்பினால்கூட நீ அத்தெய்வத்துடன் சமராடவேண்டியிருக்கும். அது உன்னை அழிவுக்கே கொண்டுசெல்லும். மானுடர் பெற்றுப்பெருகுபவர். அன்னத்தில் முளைக்கும் எதுவும் அன்னத்தின் கட்டுக்குள் அடங்கியதே. அன்னம் மிகுவதில்லை குறைவதுமில்லை. அன்னம் அழிந்தே அன்னம் பிறக்கமுடியும். அன்னம் எரிந்தே அன்னம் வாழமுடியும்.”

“வேந்தே, தெய்வங்கள் எண்ணத்தில் பிறப்பவர்கள். எண்ண எண்ணப் பெருகுபவர்கள். ஆகவே தெய்வங்களை மானுடரோ அசுரரோ வெல்லவே முடியாது. தேவர்கள் எண்ணங்களை உருவாக்குகிறார்கள். எண்ணங்கள் வேள்விகளாக ஆகுதியாகின்றன. செயல்களாக பெருகுகின்றன. வேள்வியும் செயலும் தேவர்களை பெருக்குகின்றன. ஆம், நீ வல்லவன். தெய்வங்களை எதிர்த்து நிற்பவன். ஆனால் அச்சமர் புயல்காற்றில் மலர்மரம் என உன் உள்ளத்தை ஆக்கும். ஒருகணமும் நீ உவகைசூடி  அமைய முடியாது.”

“ஆகவே முழுமைக்கு முன்னரே நின்றுவிடுவதே இன்பத்தில் என்றும் வாழும் வழி. உலகோருக்கு என முன்னோர் நெறியொன்று அமைத்துள்ளனர். அணிகொள்கையில் ஒரு குறை வை.  அன்னமுண்ணும்போது ஒரு துளி கசப்பும் இலையில் வை. செல்வக்குவையில் ஒரு பிடி அள்ளி பிறருக்கு அளி. அரசே, இல்லத்தில் ஒரு சாளரக்கதவை எப்போதும் மூடி வை. அகல்களில் ஒன்றில் சுடரில்லாமலிருக்கட்டும். அதுவே வாழ்நெறி” என்றார் அந்தணர்.

“வெறுமையும் முழுமைகொள்ளலாகாது என்றறிக! எனவே நீர் சேந்தும்போது ஒரு குவளை மிச்சம் வை. மலர்கொய்யும்போது ஒரு மலர் மிஞ்சியிருக்கட்டும். மைந்தரைக் கொஞ்சும்போது ஒரு சொல் உள்ளத்திலேயே எஞ்சட்டும்” என்றார் அவர். “பெருக்கத்தில் பணிவென்று மூதாதையர் சொன்னது இதையே. செல்வம் இன்பமென மாறும்போதே பொருள்கொள்கிறது. ஆணவமென இருக்கையில் அது நோய்க்கட்டியே ஆகும்.”

எண்ணம் திரள நோக்கிக்கொண்டிருந்த ருத்ரனிடம் “இப்பெருநகர் முழுமைகொண்டிருக்கிறது. இதன் அனைத்து முகடுகளும் பழுதற்ற வடிவுடன் உள்ளன. அனைத்து உப்பரிகைகளும் கொடிகள் பறக்க ஒளிகொண்டுள்ளன. இதன் அனைத்துச் சாளரங்களும் வாயில்களும் விரியத் திறந்துள்ளன. இது தெய்வங்களுக்கு விடப்படும் அறைகூவல். உன் நலம்நாடியே இதை சொல்கிறேன். இப்பன்னிரண்டாயிரம் முகடுகளில் ஒன்றை இடித்துவிடு. அந்தக் குறை இந்நகரை வாழச்செய்யும்” என்றார் அந்தண முதியவர்.

சினந்தெழுந்து கைகளை தட்டியபடி த்வஷ்டா கூவினான் “ஒளி வளருமென்றால் இருளும் உடன்வளருமென்றறிக, அந்தணரே! மலைகளைவிடப் பெரிது மலைநிழல் என்று உணர்க! முழுமையை வென்றபின் நான் மானுடனல்ல, அசுரனுமல்ல. நானே தெய்வம்.” அந்தணர் முகம் சுளித்து “தருக்கி நிமிரலாகாது, அரசே. தெய்வமென்று தன்னை உணர்தலைப்போல மானுடன் தெய்வங்களுக்கு இழைக்கும் பிழை பிறிதொன்றில்லை” என்றார்.

“ஆம், தெய்வங்களைப்போல வெல்வது என்றால் அது பிழை. தண்டிப்பதென்றால் பெரும்பிழை. அடைவதென்றால் பிழையினும் பிழை. ஆனால் படைப்பதென்பது பிழையல்ல. படைத்து திரும்பி நோக்கி இது நான் என்றுணர்பவனை தெய்வமென்றாக்குவது தெய்வங்களைப் படைத்த வல்லமை” என்றான் த்வஷ்டா. “ஆம், உன்னால் படைக்கமுடியும் என்று உணர்ந்துவிட்டாய். வென்றவனென்று உன்னை உணர்ந்துவிட்டாய். இனி நீ ஓர் அடி எடுத்து பின்னால் வைக்கலாம். ஒரு முகடை இடி. ஓர் உப்பரிகையையாவது அழி” என்றார் அந்தணர்.

“அதை எந்தக் கலைஞனாலும் செய்யமுடியாது, அந்தணரே. அந்தக் குறையின் சிறுபுள்ளியிலேயே சென்று மோதிக்கொண்டிருக்கும் அவன் சித்தமெல்லாம். அதை வெல்லாமல் அடுத்த படைப்பை அவன் ஆக்கமுடியாது. அறிந்து ஒரு படைப்பில் குறைவைத்த கலைஞன் வாளெடுத்து தன் கைகளை தானே அறுத்தெறிந்தவன். இதை வென்றபின் இனிமேல் என்ன என்றே நான் எழமுடியும்” என்றான் பொற்சிற்பி.

அந்தணர் தன் உருமாற்றி மணிமுடியும் ஒளிர்படையும் கொண்டு எழுந்தார். பெருங்குரலில் இந்திரன் சொன்னான் “நான் தேவர்க்கரசன். எனக்கிணையாக ஒன்றை நான் ஒப்பக்கூடாதென்பதே தெய்வங்கள் எனக்கிட்ட ஆணை. இம்மணிமாளிகையை நான் அழித்தாகவேண்டும். அதை அழிக்க வேண்டாமென்றுதான் நானே உன்னிடம் வந்தேன்.” அவன் எவரென உணர்ந்ததும் மேலும் சினம்கொண்டு “இது போருக்கான அறைகூவல். இதை எதிர்கொள்ளவேண்டியவர் என் உடன்பிறந்தார் இருவர்” என்றான் த்வஷ்டா.

“ருத்ரனே கேள், என்னை எதிர்த்து எவரும் இன்றுவரை வாழ்ந்ததில்லை. அழியவேண்டாம் என்று உன்னிடம் கோருகிறேன்” என்றான் இந்திரன். “படைக்கப்பட்டுவிட்ட ஒன்று அழிவதில்லை. அது பிறிதொரு படைப்புக்குள் தன்னை செலுத்திக்கொண்டுவிடும்” என்றான் த்வஷ்டா. சினந்து தன் வாளை நீட்டியபடி அவனை அணுகி இந்திரன் கூவினான் “இக்கணம் உன்னிடம் எச்சரிக்கிறேன்.  அந்த மாடங்களில் ஒன்றை இடி. அந்த உப்பரிகைகளில் ஒன்றையேனும் உடை!”

“இயலாது, இந்திரனை இங்கு வரவழைத்தது அது என்று உணரும்போது அதை ஆக்கியவன் என்று என் உள்ளம் உவகையே கொள்கிறது” என்றான் த்வஷ்டா. “தணிந்து கேட்கிறேன், அதன் வாயில்களில் ஒன்றையேனும் மூடி வை” என்றான் இந்திரன். “நான் இக்கலைவடிவை அழித்தேன் என பெயர்கொள்ள விழையவில்லை. எண்ணிச்சொல்!” த்வஷ்டா “எண்ணவே வேண்டியதில்லை, இது இங்கு இவ்வாறே இருக்கும்” என்றான். “ஒரு அகல்சுடரையாவது அணைத்து வை” என்றான் இந்திரன். “ஒரு துளி குங்குமம்கூட அந்நிலத்தில் விழுந்து கறையாகாது” என்றான் த்வஷ்டா.

சினத்தால் உடல் ததும்ப நின்று நோக்கியபின் மீண்டும் ஒரு புறாவென மாறி தேவர்க்கிறைவன் மறைந்தான். அவன் செல்வதை நோக்கி நின்ற த்வஷ்டாவிடம் அவன் மூத்தவர் இருவரும் வந்தனர். “எல்லைகடந்து ஒரு புறா நகருக்குள் வந்தது என்று அறிந்தேன்” என்றான் அஜைகபாத்.  “என் கூர்முனைகள் அதை கிழிக்கவில்லை என்று கண்டேன்” என்றான் அஹிர்புத்ன்யன். “வந்தவன் இந்திரன். நம் நகர்முழுமை கண்டு நெஞ்சழிந்து மீள்கிறான்” என்றான் த்வஷ்டா.

[ 7 ]

மகாவீரியமென்னும் அசுரர்பெருநகரை வெல்ல எண்ணிய இந்திரன் தன் படைத்தலைவர்களை அழைத்து அவர்களிடம் படைகொண்டு செல்வதைப்பற்றி கேட்டான். அவர்கள் ஒற்றைக்குரலில் அஜைகபாத் அமைத்த ஏழு கோட்டைகளைக் கடந்து எவரும் செல்லமுடியாது என்றனர். அஹிர்புத்ன்யனின் ஆயிரம்கோடிக் கூர்முனைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் தேவர்களுக்கும் இல்லை என்றனர்.

இந்திரன் துயருடன் தன் அரண்மனையில் உலவினான். தொலைப்பயணியான நாரதரை அழைத்துவரும்படி சொல்லி அவரிடம் ஆவதென்ன என்று கேட்டான். “அரசே, போர் பயனற்றபோது சூழ்ச்சி பயனளிப்பது. சூழ்ச்சியும் பயனற்றுப் போகும்போது தவம் பயனளிப்பது. சூழ்ச்சி வழியாகவே அசுரர்களின் பெருநகரை வெல்லமுடியும்” என்றார் நாரதர். “அதற்கான வழிகளை சொல்க!” என்றான் இந்திரன்.

“சூழ்ச்சிகளில் தலையாயவை எட்டு. காமத்தால் அறிவிழக்கசெய்தல், பெருவிழைவால் நிலையழியச்செய்தல், தன் வல்லமையை மிகையென எண்ணச்செய்தல், தன் வல்லமையை குறைவென எண்ணி அஞ்சவைத்தல், அணுக்கர்களை நம்பிக்கையிழக்க வைத்தல், ஏவலர்களை நேர்மையிழக்கச்செய்தல், பொய்யிலக்குகளை நோக்கி திருப்பிவிடுதல், நட்புகளுக்குள் பகை உருவாக்கல்” என்றார் நாரதர். “அறம் வெற்றியால் மட்டுமே நிலைக்குமென்றால் அறத்தின்பொருட்டு இவற்றை ஆற்றலாம் என்கின்றன நூல்கள்.”

“இவை ஒவ்வொன்றுக்கும் உரியவர்கள் உள்ளனர். எதிரியரசு ஒற்றையொருவனை நம்பியிருக்குமென்றால் காமமும் பெருவிழைவும் கொண்டு அவனை வெல்வது உகந்த வழி. வெற்றிமேல் வெற்றிகொண்டெழும் நாட்டை மிகைநம்பிக்கை கொள்ளச்செய்யலாம். பல்லாண்டுகளாக போரிலீடுபடாத நாட்டை குறைநம்பிக்கை கொள்ளச்செய்யலாம். அடித்தளத்திலிருந்து மேல் தளம் மிக அகன்றுபோகுமளவுக்கு பெரிய நாட்டை அணுக்கர்களை சோர்வுறச்செய்தும் ஏவலரை திரிபடையச்செய்தும் வெல்லலாம். உரிய அமைச்சர்கள் இல்லாதவர்களை திசைதிருப்பிவிடலாம்” என்று நாரதர் சொன்னார். “ஆனால் எங்கும் எப்போதும் வெல்லும் வழி என்பது நட்புத்திரிபு என்னும் சூழ்ச்சியே.”

இந்திரன்  “ஆம்” என்று தலையசைத்தான். “திரிபுகொள்ளச் செய்யத்தக்கவர் இருவகை. அரசின் உச்சியிலிருப்பவர் மேலும் உச்சிநோக்கி செல்லும் தகுதிபடைத்தவர் தாங்கள் என எண்ணியிருப்பார்கள். அவர்களிடம் அவர்களின் வல்லமையும் கொடையும் உரியமுறையில் மதிக்கப்படவில்லை என்று சொல்லி உளத்திரிபடையச் செய்வது எளிது. மிகஅடித்தளத்தில் உள்ளவர்களிடம் அவர்கள் வெளியேதெரிவதில்லை என்னும் உளக்குறை இருப்பதனால் அவர்களை வெல்வதும் எளிது” என்றார் நாரதர்.

“நடுவிலிருப்பவர்களை திரிபடையச் செய்வது கடினம். அவர்களுக்கு மேலே வாய்ப்புகள் நிறைந்துள்ளன. கீழே அச்சுறுத்தும் வீழ்ச்சிகளும் தென்படுகின்றன. ஆகவே நிலைவிட்டு ஓர் அடியும் எடுத்துவைக்க அஞ்சுவார்கள்” என நாரதர் தொடர்ந்தார். “ஆனால் எவராயினும் அவர்களுக்கு எதிரியென ஒருவன் சுட்டிக்காட்டப்படவேண்டும். அவர்கள் இழந்ததை எல்லாம் பெறும் ஒருவன். அவர்கள் செல்லவேண்டிய இடங்களில் முந்திச்செல்பவன். அவர்களுக்கு என்றும் தடைக்கல்லாகி நிற்பவன்.”

“அவ்வெதிரி திரிபுக்குரியவனுக்கு மிகவும் கீழிருப்பவனாக இருக்கலாகாது. அவனை அவர்கள் திறனற்றவன் என்றே உள்ளூர எண்ணுவர். மிக மேலே இருப்பவனாகவும் எண்ணக்கூடாது. மேலிருப்பவர்களை அவர்கள் உள்ளூர அஞ்சுவர். அவனுக்கு நிகரானவனாக அவன் எண்ணுபவனாகவே எதிரி இருக்கவேண்டும். அத்தகைய ஒருவன் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே இருப்பான். அவன் மேல் நம் இலக்குக்குஉரியவன் கொள்ளும் உள்ளுறை அச்சத்தை நாம் தொட்டறியவேண்டும். தூண்டி வளர்க்கவேண்டும்.”

“அரசே, ஐந்து வகையினர் எளிதில் திரிபடையக்கூடியவர். அச்சம் கொண்டவன் திரிபடைவான். அவன் அஞ்சுவதை எளிதில் பெரிதாக்கிக் காட்டலாம். விழைவு கொண்டவன் திரிபடைவான். அவனுக்கு நாம் வாக்குறுதிகளை அளிக்கலாம். அன்பு கொண்டவர் திரிபடைவர். அவர்கள் அன்புகொண்டுள்ளவற்றின் பொருட்டு பணிவார்கள். ஆணவம் கொண்டவர்கள் திரிபடைவார்கள். அவர்களின் ஆணவத்தை புண்படச்செய்யலாம். அரசே, வீணே இருப்பவனைப்போல திரிபடையச் செய்ய எளிதானவன் எவனுமில்லை. அவனை மூச்சுக்காற்றால் ஊதிப்பறக்கவிடலாம்.”

மகாவீரியத்தைத் தாங்கி நின்றிருந்தவை நான்கு ஆமைகள். அவை ஆழுலகத்தின் அன்னையின் கைநகங்களிலிருந்து உருவானவை. கிழக்கே மஞ்சள் நிறம்கொண்ட கனகன், மேற்கே சிவப்பு நிறம் கொண்ட சோனன், தெற்கே நீலநிறமான சியாமன்,  வடக்கே பச்சை வண்ணம் கொண்ட ஹரிதன். அவை ஒன்றையொன்று நோக்கமுடியாத கோணத்தில் திரும்பி நின்று ஆழ்துயிலில் இருந்தன. ஒவ்வொன்றும் அந்நகரை அதுமட்டுமே தாங்குவதாக எண்ணியிருந்தது. அவ்வெண்ணம் அவற்றுக்குள் செரிக்காத ஊனுணவென கிடந்தது. அதன் சுமையால் அவை இனிய புன்னகையுடன் கண்சொக்கி அமைந்திருந்தன.

அப்பால் நின்று அவற்றை நோக்கியதுமே அவற்றின் உள்ளக்கிடக்கையை அரசன் புரிந்துகொண்டான். சிற்றறிவுகொண்டவர்கள் அருகருகே இருந்தால் ஒற்றை எண்ணத்தையே கொண்டிருப்பர். அவர்கள் சிற்றறிவுகொண்டவர்கள் என்பதனால் மாறாமலிருப்பர். மாறாமலிருப்பவற்றுக்கு இருக்கும் உறுதியினால் அவர்கள் மேல் பெருஞ்சுமைகள் ஏற்றப்பட்டிருக்கும். சிற்றறிவுகொண்டவர்கள் அனைத்தையும் தாங்கி அடித்தளமாவது என்பது பெரும்பிழை. மேலும் செல்லும் அறிவுகொண்டவர்கள் அனைத்தையும் தாங்கி அடித்தளமாக அமைந்து அறியப்படாமலிருக்க ஒப்பமாட்டார்கள்.

மானுடரின் இக்கட்டுகளை எண்ணி நகைத்தபடி இந்திரன் ஒரு பொற்சரடென ஒளிவிடும் நாகமென மாறி நெளிந்து அந்த ஆமைகளின் அருகே சென்றான்.  தெற்கை ஆளும் திசையாமையாகிய நீலனின் கழுத்தில் சுற்றிக்கொண்டான். “மகாபலரே, பேரெடைசுமப்பவரே, அழியாதவரே, வாழ்க! உங்களை நம்பி இப்புவியின் பெருநகர் ஒன்று அமைந்துள்ளது. எண்ண எண்ண பெருமை கொள்ளவேண்டியது இது” என்றது நாகம்.

“என் பெயர் சுவர்ணை. பொன்னொளியுடன் நான் பிறந்தபோது என்னை சிறு ஆரம்போலிருக்கிறாள் என்றனர் என் குலத்து மூத்தோர். இவள் எந்தக் கழுத்திற்கு அணி என்று வியந்தனர். என் ஊழ்நெறி நோக்கிய நிமித்திகர் நான் இப்புவியிலேயே பேராற்றல்கொண்ட ஒருவரின்  அணிகலன் ஆகும்பொருட்டு பிறந்தவள் என்றனர். என்னைச் சூடுபவரை தெய்வங்கள் தங்களுக்கு நிகரென ஏற்கும்.”

“ஆற்றல்மிக்கவரைத் தேடி நான் அலைந்தேன். புவிதாங்கும் ஆமைகள் என் மூதாதையர். வாசுகியும் சேடனும் என் குலமூத்தார். மண்மேல் எழுந்தபோது இந்நகரைக் கண்டேன். இந்நகரின் எடைதாங்கும் உங்களைப்பற்றி அறிந்தேன். உங்கள் நால்வரையும் இங்கு வந்து கண்டேன். நால்வரில் எவர் ஆற்றல் மிக்கவர் என்று அறிந்து உங்களை அணுகினேன். என்னை ஏற்று என் பிறப்புக்கு ஒரு பொருள் தருக!” என்றது நாகம்.

“ஆம், நீ எனக்கு இனியவள். என் ஆற்றலை அறிவிக்கும் அடையாளமும் கூட” என்றது நீலன். மகிழ்ச்சியுடன் நீலனின் முதுகுமேல் வளைந்தேறி நின்று “கண்டேன் புவியிலேயே ஆற்றல்மிக்கவரை. நிகரற்றவரின் துணைவி ஆனேன். நானும் நிகரற்றவளானேன்” என்றது நாகம். சினத்துடன் திரும்பிய வடக்குதிசையின் ஆமையாகிய ஹரிதன் “எவ்வாறு சொல்கிறாய், இவனே நிகரற்றவன் என்று?” என்று கேட்டது.

நாணத்துடன் விழிசரித்து “வடவரே, நால்வரில் நீங்களே செல்வர். இந்நகரின் செல்வம் அனைத்தும் குவிக்கப்பட்ட கருவூலம் குபேரமூலையிலேயே உள்ளது. அதைத் தாங்குபவர் நீங்கள். இவர்களனைவரும் உங்கள் அளிநிழல்கீழ் வாழ்பவர்களே” என்றது நாகம். “அப்படியென்றால் நான்?” என்று சீறிக்கேட்டது கீழ்த்திசையின் கனகன். நாணம் கொண்டதென நெளிந்து “நீங்களே நால்வரில் அழகர். புலரிப்பொன்னொளி கொண்டவர்” என்றது நாகம்.

மேற்குத்திசையின் சோனன் கால்களை உதைத்து திரும்பிநோக்கி “என்னை நீ அறியமாட்டாய்” என்றது. வேட்கையுடன் மூச்செறிந்து “உங்களை அறியாதோர் எவர்? நீர் நகரின் நீர்நிலைகள் அனைத்துக்கும் தலைவர் அல்லவா?” என்றது நாகம். “நாள்தோறும் பெருகும் நீர்நிலைகளை சுமப்பவன் நான். என்னைவிட எடைதாங்குபவனா இவன்?” என்றது சோனன். “தெற்குத்திசையில் மூதாதையர் அமைந்திருக்கிறார்கள். அவர்களே நாள்தோறும் பெருகும் எடைகொண்டவர்கள்” என்றது நாகம்.

“பெண்ணே நீ அறியமாட்டாய், இந்நகரின் கருவூலம்போல கணம்தோறும் பெருகும் பிறிதொன்றில்லை” என்றது ஹரிதன். “எவர் சொன்னார்? நானறிவேன், இங்கு பெருகும் ஒளியின் எடையை” என்றது கனகன். “உயிருக்கு நிகரான பிறிதேதுள்ளது?” என்றது தெற்கின்  ஆமை. அவர்களின் சொல்லாடல் பூசலாகியது. ஆமைகள் மாறிமாறி காலால் உதைத்துக்கொண்டன. அவை தலைகளால்முட்டி போரிடத்தொடங்கியபோது நாகம் வழிந்து கீழிறங்கி மறைந்தது.

நகர் அதிரத்தொடங்கியதை முதலில் உணர்ந்தவன் முதற்சிற்பியாகிய கர்மகனே. அவனுடைய கணையாழியில் இருந்த சின்னஞ்சிறு நீலமணிக்குள் ஒளிநலுங்குவதை அவன் கண்டான். “நகர் நிலையழிகிறது… கிளம்புக! அனைவரும் கூரைமீதிருந்து அகல்க!” என்று கூவினான். அவன் வெளியே வந்து அச்செய்தியை சொல்லிக்கொண்டிருக்கையிலேயே நகரில் வாழ்ந்த கூண்டுக்கிளிகள் நிலையழிந்து ஒலியெழுப்பலாயின. பசுக்கள் தொடர்ந்து குரலெழுப்பின. நாய்கள் ஊளையிட்டபடி வெளியே ஓடின.

அனைவரும் வெளியேறிவிடும்படி அறைகூவி நகரின் பெருமுரசுகள் ஒலிக்கத் தொடங்கின. அவ்வொலி கேட்டு அஞ்சியும் கூவியும் அசுரர்குலம் தெருக்களுக்கு வந்தது. கூரையிலிருந்து தூசுப்பொருக்குகள் உதிர்ந்தன. மரங்கள் திடுக்கிட்டு சருகுதிர்த்தன. பின்னர் அடிபீடம் ஆட தூண்கள் நடுங்கத் தொடங்கின. வெண்முட்டையோடுபோன்ற சுவர்களில் நீர்வரிபோல விரிசல்கள் ஓடி கொடிப்பரப்பென கிளைவிட்டுப் பரவின. கூரைப்பரப்பு பிளந்து வெண்ணிற வானம் தெரிந்தது.

பாறை பிளக்கும் ஒலியுடன் காவல்மாடமொன்று உடைந்து சரிந்தது. அந்த அதிர்வில் இரு சிறுமாடங்கள் சரியலாயின. மெல்ல கரைந்து நதிநீரில் விழும் கரைமணல்குவை என அரசமாளிகையின் முகடுகளில் ஒன்று சரிவதைக்கண்டு மக்கள் அஞ்சி கூச்சலிட்டார்கள். அடுக்குகள் வெடித்து கற்கள் சரிய அடிபட்டுப்புரளும் மலைப்பாம்பு போல  கோட்டை புரண்டுவிழுந்தது. மெல்ல நிலையழிந்து காலிடறுவதுபோல தடுமாறி மண்ணை பேரெடையுடன் அறைந்து விழுந்தது முரசுமேடை.

உயர்ந்தவை ஒவ்வொன்றாக சரியலாயின. “வெளியேறுக! வெளியேறுக!” என முரசுகள் கூவின. மக்கள் கூவியும் அலறியும் மைந்தரையும் பெற்றோரையும் அள்ளி தோளிலேற்றிக்கொண்டு நீரலைத்திரளென கோட்டையின் நான்கு வாயில்களையும் நோக்கி முண்டியடித்தனர். அவர்கள் வெளியேறும்பொருட்டு பொறிகளால் இயக்கப்பட்ட பெருவாயில்கள் திறக்கப்பட்டன. அவர்கள் மதகுமீறிய வெள்ளமென வெளியே பீரிட்டனர்.

அப்போது விட்டில்கூட்டம் மண்ணிலிறங்குவதுபோல தேவர்கள் விரித்த சிறகுகளும் கைகளில் நாணேற்றப்பட்ட அம்புகளுமாக கோட்டையைச் சூழ்ந்துகொண்டு தாக்கத்தொடங்கினர். அசுரர்கள் கூட்டம்கூட்டமாக இறந்துவிழுந்தனர். தங்கள் மக்களே கட்டுப்பாடிழந்து தெருக்களில் நிறைந்தமையால் சேற்றில் சிக்கிக்கொண்ட யானைபோலாயினர் நகரின் அசுரப்படையினர். விரைவிலேயே அவர்கள் அனைவரும் கொன்றழிக்கப்பட்டனர். ருத்ரர் நால்வரும் அரண்மனைக்குள் அமைந்த கரவுப்பாதை வழியாகத் தப்பி மண்ணுக்கு அடியில் அமைந்திருந்த கரளாகம் என்னும் சுரங்கமாளிகைக்குள் சென்று ஒளிந்துகொண்டனர்.

இந்திரன் அந்நகரை முற்றாக இடித்தழித்தான். அதன் மக்களையும் படைகளையும் அவன் படைக்கலங்கள் கொன்று குவித்தன. அச்சடலங்களை இடிந்திடிந்து விழுந்த நகரின் மாளிகைகளே அடக்கம் செய்தன. மகாவீரியம் ஒரு பெரும் இடுகுழியாக மாறியது. அதன் பெருமாளிகை சரிந்த புழுதி விண்ணில் பெரிய குமிழி என எழுந்தது. அதில் முகில்தொட்டதும் குளிர்ந்து மழையென்றாகியது. அப்புழுதியில் அசுரர்களின் குருதியும் கலந்திருந்தது. சுற்றிலுமிருந்த காடுகள் அனைத்திலும் குருதிமழை பெய்தது.

கான்மக்கள் கைநீட்டி மழையைத் தொட்டபோது ஒட்டும்பசையென குருதியில் கைநனையக்கண்டு அஞ்சி குகைகளுக்குள் ஓடி ஒளிந்துகொண்டனர். அந்தணர் வேள்வித்தீ மூட்டி அவியளித்து இந்திரனைப் போற்றி வேதம் பெருக்கினர். இடிந்தழிந்த நகர்மேல் ஏழு வண்ணத்தில் இந்திரவில் எழுந்து நிற்பதை உயிர் எஞ்சிய சிலரே கண்டனர். அவ்வில்லைக்கண்டு அந்தணர் தங்கள் வேள்விச்சாலைகளிலிருந்து வெளியே ஓடிவந்து கைகூப்பி வாழ்த்து கூவினர்.

தன் குடியுடன் கரவறையில் ஒளிந்துகொண்டு த்வஷ்டா கண்ணீர் விட்டான். “நான் படைத்தவை அழிவதைக் கண்டேன். மைந்தர்துயருக்கு நூறுமடங்கு பெரிய துயர் இது” எனச் சொல்லி ஏங்கினான். அவன் அளித்த அவியை ஏற்க முன்னோர் அனலிலும் புனலிலும் எழவில்லை. கனவுகளில் அவர்களின் முனகலோசைகளை இருளுக்குள் கேட்டான். திடுக்கிட்டு எழுந்தமர்ந்தவனை அவன் துணைவியாகிய சுபகை தேற்றினாள். “அனைத்தையும் மறப்போம்” என்றாள்.

“மறப்பதற்கு நிறையவே உள்ளன தேவி” என்றான் த்வஷ்டா. பொன்மாளிகையின் ஒவ்வொரு தூணையும் ஒவ்வொரு சிற்பத்தையும் மறந்தாகவேண்டும். மறக்கமுனைகையில் அவை மேலும் ஒளிகொண்டெழுந்து வந்தன. கண்மூடினால் அங்கே சென்றுலாவ முடிந்தது. “நான் சென்று மீளும் அந்நகர் எங்குள்ளது, இளையோனே?” என்று அவன் தன் தம்பியாகிய ருத்ரனிடம் கேட்டான். “அவை உங்களால் பொன்னில் செதுக்கப்படுவதற்கு முந்தைய வடிவில் உள்ளன, மூத்தவரே. பொருளில் எழாத கலையின் உலகொன்று உள்ளது. அது மண்ணுள் வாழும் விஸ்வகரின் கனவு என்கின்றனர்.”

“என் ஆணவத்தால் நால்வரையும் தோல்வியுறச் செய்தேன். என் குடியை முற்றழித்தேன்” என்று த்வஷ்டா சொன்னான். இளையோனாகிய ருத்ரன் சொன்னான் “மூத்தவரே, ஆணவம் அழிந்த சிற்பியின் கைகள் வெறும் தசைக்கொடிகள். அவன் விரல்களில் குடிகொள்ளும் தெய்வங்களுக்குரிய இன்னமுதென்பது அவன்கொள்ளும் கனவுகளே. கனவுகள் ஆணவம் செழிக்கும் வயல்கள். கனவுநிறையட்டும் உங்களுக்குள்.”

“ஆம்” என்றான் த்வஷ்டா. “நான் மீண்டு எழுந்தாகவேண்டும். என் உள்ளத்தின் அனல் முளைக்கவேண்டும்.”  ருத்ரன் “மூத்தவரே, அந்நகரிலிருந்து ஒரு கல்லை எடுத்துவரச் சொல்லுங்கள். அதை என் அனலில் இட்டு உங்கள் வஞ்சத்தை எழுப்புக! அதுவே உங்கள் படைப்புக்கு விதையாகட்டும்” என்றான். “நான் இனிமேல் படைப்பதென்றால் இந்திரனை வென்றபின்னரே அது நிகழமுடியும். இவ்வஞ்சம் நஞ்சென்று என்னுள் இருக்கையில் இனி நான் சிற்பியே அல்ல” என்றான் த்வஷ்டா.

அசுரர்கள் வெளியே சென்றால் கொன்றழிப்பதற்காக அத்தனை நீர்க்குமிழிகளிலும் விழிகளை நிறுத்தியிருந்தனர் தேவர். த்வஷ்டாவின் மைந்தர்களில் ஒருவனாகிய நளன் என்னும் குரங்கு அவர்களை ஏமாற்றி இடிந்து சரிந்த நகருக்குள் சென்றது. அங்கே சடலங்கள் வெள்ளெலும்பாகக் கிடந்தன. மண்டைகளின் சிரிப்பைக் கண்டு அஞ்சி அது கண்களை மூடிக்கொண்டது. கைநீட்டி சிக்கிய  அங்கிருந்த முதற்கல்லை எடுத்துக்கொண்டு துள்ளிவிலகித் திரும்பி ஓடிவந்தது.

அந்தக் கல்லை கையில் வாங்கிப்பார்த்தான் த்வஷ்டா. அது மூன்றுதலைகொண்ட சிம்மம். மகாவீரியத்தின் காவல்மாடங்களில் ஒன்றின் முகப்பிலிருந்த முத்திரைக்கல். “ஆம், இது ஒரு செய்தி” என்று சொல்லிக்கொண்டான். “இதுவே எஞ்சவேண்டுமென்பது ஊழ்.” ஒருமுறையேனும் அவன் அந்நகரில் அதை பார்த்திருக்கவில்லை. ஆனால் உயரத்திலமைந்து அந்நகரை அது பார்த்துக்கொண்டிருந்தது என்று உணர்ந்தான்.

அதை அவன் ருத்ரனின் வேள்வித்தீயிலிட்டான். தழலில் அலையலையென எழுந்து கரைந்து சென்றன முகங்கள். அவற்றில் மும்முகம் கொண்ட மைந்தன் ஒருவனை அவன் கண்டான். “ஆம், அவன்தான். அவன் பெயர் திரிமுகன். அவனே என் மைந்தன்” என்று கூவினான். “என் ஆற்றலெல்லாம் அம்மைந்தன் ஆகுக! பேருருக்கொண்டு அவன் எழுக! அவன் வெல்லட்டும் இந்திரனை” என்று வஞ்சினம் உரைத்தான்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 38

[ 4 ]

பிரம்மகபாலத்தின் மலைக்குகைக்குள் மழைக்காற்று தழல்கெட்டு  கனல்கொண்டிருந்த எரிகுளத்தில் இருந்து பொறிஎழ வீசியது. செவ்வொளியில் குகைச்சுவர்கள் தசைப்படலமென சுருங்கி விரிந்து அதிர்ந்தன. செங்கனல்துளியை கைபொத்திப் பற்றி விரல் இடுக்குகளில் குருதியென அனல்வழிய வாயில் சேர்த்து முகம் குனித்து ஆழ இழுத்தார் பிச்சாண்டவர். நெஞ்சு நிறைத்த புகையை உடலெங்கும் பரவவிட்டு மேலும் மேலுமென உடல் குறுக்கி ஒடுங்கினார். சடைப்புரிகள் சரிந்துவிழுந்து நிழலுடன் ஆடி முகம் மறைக்க அமர்ந்த பிச்சாடனரின் இருபக்கமும் அமர்ந்து அந்தணரும் சூதனும் கதையாடினர்.

பிரசாந்தர் “சொல்க சூதரே, நீங்கள் அந்த மலைச்சிற்றூருக்குள்  கண்ட விருத்திரன் யார்? எவ்வண்ணம் அவர்களின் குலத்தலைவன் ஆனான்? அவனை ஈன்றவர் யார்? இந்திரன் அவனை வென்ற கதை எது?” என்றார். பிரசண்டன் “அவர்கள் சொன்ன கதையை நான் இன்று சொல்லமுடியாது. அக்கதையை அன்று என்னுள் இருந்த ஒரு கதைசொல்லி உள்வாங்கினான். அந்தணரே, சூதனுள்   கதைகள் விதைகளெனச் சென்று விழுகின்றன. அக்கதையை நான் நூறு சந்தைகளில் பாடியிருப்பேன். அது ஒரு கவிஞர் நாவில் விழுந்து என்னிடமே மீண்டு வந்தது. விருத்திரப்பிரபாவம் என்னும் அந்நூலை நான் சந்தை ஒன்றில் சூக்தன் என்னும் சூதன் பாடக்கேட்டேன்” என்றான்.

“கதை நின்றுகொண்டிருப்பதில்லை. அது நீரோடை, பேராறு, அலைகடல். கதைக்குள் கதைமாந்தர் ஒவ்வொருவரும் தங்களுக்குள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சொற்கள் ஒவ்வொன்றும் உரசிக்கொண்டிருக்கின்றன” என்றான் பிரசண்டன். பிரசாந்தர் “கதையில் எது வளர்கிறதோ அதுவே உண்மை என்று எனது ஆசிரியர் சொன்னதுண்டு. சூதர் சொல்லில் மெய்யே வளரும் என்று எண்ணுகின்றேன்” என்றார். “வளர்வதேதும் மெய்யே என்று கொள்வதன்றி மானுடருக்கு வேறுவழியில்லை” என்றான் பிரசண்டன்.

அந்தணரே, நான் கண்ட அந்த மலைக்குகைக்குள் வளைந்து எழுந்த மென்பாறைச்  சுவர்ப்பரப்பில்  கூரிய கற்களால் அடித்து கீறி வடுவாக்கி வரையப்பட்ட ஈராளுயர ஓவியமாக நின்றிருந்தான் விருத்திரன். நீர்ப்பாசி படிந்த அச்சுவரில் அவ்வோவியத்தை காண்பதற்கு விழி பழகவேண்டும். பள்ளக்கோடுகளென செல்லும் அவ்வோவியத்தின் மீது விழிகள் பரவி துழாவி வடிவொன்றை அள்ள முயல்கின்றன. நழுவி மேலும் விழைவு கொண்டு தவிக்கும் ஒரு கணத்தில் மின்னென அம்முகம் தெரிகிறது. அதன்பின் அம்முகமன்றி பிறிதொன்று தெரிவதில்லை.

தொல்முகம் அது.  நாமறிந்த மரங்கள் முளைத்திருக்கவில்லை. நாம் காணும் நகரங்களும் விதைகளுக்குள் இருந்தன. யாரறிவார்? அன்று  மலைகள்கூட சிறியவையாக இருந்திருக்கும். நதிகள் இவ்வண்ணம் திரண்டிருக்காது. யார் முகம் அது? இங்கு எழுந்த அனைத்தையும் கண்டு திகைத்து நின்றிருக்கும் மூதாதை முகம். இல்லை, இங்கெல்லாம் நிறைந்துபெருகியிருக்கும் தன் முகம் கண்டு புன்னகைத்து நிற்கும் தந்தைமுகம். விரிந்த தோள்களில் மலர்கள். சடைத்திரிகள் தொங்கிய பிடரி. ஒரு கையில் வாள். பிறிதொன்றில் அமுதகலம். விரிந்த அருள்விழிகள். இதழ்களின் இருபுறமும் எழுந்த வளைதேற்றைகள்.

இந்நாள்வரை இங்கு நிறுவப்பட்ட எந்தப் பேராலயத்திலும் நாம் அம்முகத்தை கண்டதில்லை. என் மைந்தரென சுற்றும் பெருகியிருக்கும் இன்முகம். என் மூதாதையர் என தெற்கில் பெருகியிருக்கும் கிராத முகம். நான் என் கனவால் அதை கண்டுகொண்டேன். அதிலிருந்தேன். விருத்திரன் என்ற சொல்லை என் சித்தம் தொட்டெடுத்ததே  பின்னர்தான். பந்தம் கொளுத்திவைத்து பச்சையூன் படைத்து மூதாதையை வழிபட்டனர் அவர்கள். மைந்தர்களை அவர் காலடியில் கிடத்தி வணங்கி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் ஒவ்வொரு பந்தத்தையாக அணைத்து இருளுக்குள் அவரை அமைத்துவிட்டு  வணங்கி புறம்காட்டாமல் வெளியேறினர். “தந்தையே, மூத்தவரே, விருத்திரனே,  மீண்டும் எங்கள் இளமைந்தருடன் வருகிறோம். எங்கள் குலம் பெருகட்டும். எங்கள் உணவு செழிக்கட்டும். எங்கள் சொற்களில் கனிவு நிறைந்திருக்கட்டும். எங்கள் அம்புகளில் கூர் திகழட்டும். அருள்க!”  என்றார் முதுபூசகர் கபாலர். அப்போதுதான் அச்சொல் என்னுள் உறைத்தது. விருத்திரனா? தொல்கதைகள் சொல்லும் அசுரர்தலைவனா?

திரும்பும்போது கேட்டேன் “என்ன சொன்னீர், விருத்திரனா?” கபாலர் “ஆம், எங்கள் குலம் அவரால்தான் விருத்திர குலம் என்று அழைக்கப்படுகிறது” என்றார். என்னுள் அலையென வந்தடித்த பலநூறு கதைகளிலிருந்து நான் விடுபட நெடுநேரமாகியது. வழுக்கும் பாறைகளினூடாக கொடிபற்றி இறங்கி மீண்டும் குகை இல்லங்களுக்கு வந்து குளிர்ந்த பாறையொன்றில் அமர்ந்து நீரருந்தினோம். என்னருகே கபாலர் படுத்துக்கொண்டார்.

விருத்திரன் வாழ்ந்த கதையை அப்பூசகரிடம் நான் கேட்டேன். அவர்களின் தொல்கதையை அவர் சொன்னார். “இப்புவி உளிஓயா பெருந்தச்சன் ஒருவனால் கற்பாறையில் செதுக்கப்பட்டது, பாடகரே. அவனே மலைகளையும் தாழ்வரைகளையும் ஆறுகளையும் நிலவிரிவுகளையும் உருவாக்கியவன். அலைக்கும் கடல்களை அமைத்தவன். அவனை தச்சன் என்று வழிபட்டனர் என் முன்னோர். அந்த முதற்சிற்பி தன் வடிவில் படைத்தவனே பெருந்தச்சனாகிய விஸ்வகன். அவனே இங்கு எழுந்துவரும் ஒவ்வொன்றையும் படைப்பவன். தன்கூட்டை தன்னைச்சுற்றி கட்டிக்கொள்ளும் புழுவென இவையனைத்துக்கும் அடியில் அவன் குடியிருக்கிறான். அவன் மைந்தன் கர்மகன். அவனிடமிருந்தே எங்கள் குடி எழுந்தது.”

பிரசாந்தர் சற்று உளஎழுச்சி கொண்டு கையூன்றி “விஸ்வகர்மன்! அவர்கள் வழிபடுவது விஸ்வகர்மனை” என்றார். “விஸ்வகர்மனை அசுரன் என்றும் அவர் பெற்ற நான்கு மைந்தர்களை மகாருத்ரர்கள் என்றும் பராசரரின் புராணமாலிகை சொல்கிறது.” பிரசண்டன் “கதைகளை கதைகளைக்கொண்டே அறியமுடியும், அந்தணரே. கதைகள் கதைகளுக்கு மட்டுமே பொருள்சேர்க்கின்றன” என்று புன்னகையுடன் சொன்னான்.

கற்பாறையின் தண்மைமேல் முதுகமைத்து மல்லாந்து படுத்து வானை நோக்கியபடி கபாலர் சொன்னா “மண்ணுக்குள் புதைந்த சிறுவிதைகளிலிருந்து எழுந்தவை, ஒவ்வொரு கணமும் மண்பிளந்து எழுந்துகொண்டே இருக்கின்ற கோடானுகோடி மரங்களும் செடிகளும். பல்லாயிரம் கோடி துளைகளிலிருந்து விதை கொண்டு வெளிவருகின்றன சிற்றுயிர்கள். இருண்ட வளைகளிலிருந்து மின்னும் கண்களுடன் சுருண்டெழுந்து வருகின்றன நாகங்கள். நாம் நின்றிருக்கும் இம்மண்ணுக்கு அடியில் அனைத்தையும் முளைத்தெழச்செய்யும் பெரும்பரப்பு ஒன்றுள்ளது.”

முதலில் உள்ளது சமூலம். அதை விதைகளினாலான உலகம் என்றனர் என் முன்னோர். அவ்வுலகுக்கு அடியில் சிற்றுயிர் முட்டைகள் செழித்த ஆழுலகொன்று உள்ளது. அதை தாதம் என்றனர். அதற்கும் அடியில் உள்ளது பெருநாகங்கள் பின்னிய பிறிதொரு உலகு. அதை ஜாதம் என்றனர்.  பாடகரே, அதற்கும் அடியில் உள்ளது இப்பெரும்பாறைகளுக்கும் மலைகளுக்கும் ஆணிவேரென்றான ஓர் உலகம். அதன் பெயர் பீஜம். அவ்வுலகுக்கும் அடியில் உள்ள ரேதம் என்னும் உலகில் வாழ்கிறார்கள் மண்மறைந்த நம் மூதாதையர்.

அவர்கள் சென்றடைவது முதுதாதை ஒருவனின் மடியை. அனலுருவ உடல்கொண்ட அவனை விஸ்வகன் என்கின்றனர். அவ்வுலகு ரேதம். அவன் மண்விரிவின் ஆழத்தை முழுக்க நிரப்பும் பேருடலன். அவன் அருகே அவனுடன் நிகரென உடல் பின்னிப் படுத்திருக்கிறாள் மூதன்னையாகிய ஜலை. நீரே உடலென்றானவள். அவர்களுக்கு அடியிலிருப்பது அனலம். தீயும் நீரும் ஒன்றென அலையடிக்கும் முடிவிலி அது. அதன் மேற்பரப்பே அன்னையும் தாதையும் கொண்ட மஞ்சம்.

முதலன்னையும் முதுதந்தையும் பிரிக்கமுடியாத உடலிணைவில் என்றுமுள்ளனர். அவர்கள் பிரியாமலிருப்பதனால் அடியிலுள்ள அனல் வேலியிடப்பட்டிருக்கிறது. அவர்களின் தழுவலில் ஒருகணம் நெகிழ்வு விழுந்தால் அனல் பொங்கி எழுந்து உலகை மூடும். அன்னை தன் விரிந்த அல்குலால் தந்தையின் எழுந்த குறியை தழுவி இணைந்திருக்கிறாள். அவன் உடலில் இருந்து விதைப்பெருக்கு நீள்கொடியினூடாக சாறு என அவள் வயிற்றுக்குள் சென்று குருதியில் கலந்துகொண்டே இருக்கிறது. அவள் உடலின் வியர்வைத்துளைகள் அனைத்தும் கருவாய்களென திறக்க அவற்றிலிருந்து தெய்வங்களும் தந்தையரும் அன்னையரும் எழுந்துகொண்டே இருக்கிறார்கள்.

பாடகரே, அறிக! ஒவ்வொரு கணமும் ஓராயிரம் கோடி தெய்வங்கள் அவளிடமிருந்து மண்ணுக்கு எழுந்து வருகின்றன. அவற்றின் வடிவங்களும் முடிவற்றவை. ஈயென எறும்பென கொசுவென குளவியென பாம்பென பல்லியென மானென குரங்கென களிறென சிம்மமென தெய்வங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. அன்னை வாயிலிருந்து பிறந்த பெரும் குமிழி ஒன்று மேலெழுந்து வந்தது. மண்ணில் காலூன்றி தோள்பெருத்த தந்தை என எழுந்ததும் அவன் குனிந்து ஆழத்தை நோக்கி தன் அன்னையிடம் கேட்டான் “அன்னையே, நான் செய்யவேண்டியதென்ன?”

“நீ தச்சன். உன் கைகளில் இருந்து பிறிதொரு உலகு முளைப்பதாக!” என்று அன்னை சொன்னாள். அவனுக்கு கர்மகன் என்று பெயரிட்டான் தந்தை. கர்மகன் நிலத்தை வயல்களென்றாக்கினான். ஆறுகளை ஏரிகளாக்கினான். குகைகளை இல்லங்களாக மாற்றினான். கால்தடங்களை சாலைகளாக்கினான். எரியை அடுப்பிலும் நீரை கலத்திலும் நிற்கும்படி செய்தான். கல்லை தெய்வமாக்கினான்.

அவன் கைகள் பெருகிக்கொண்டிருந்தன. துயிலிலும் அவன் கைகள் பணியாற்றிக்கொண்டிருந்தன. நான்கு பக்கமும் பதினெட்டு கைகள் எழுந்ததும் அவனால் படுத்துறங்க முடியாமலாகியது. தன் கைகளை பகிர்ந்தளிக்கும்பொருட்டு அவன் மைந்தர்களைப் பெற எண்ணினான். தனக்குரிய துணைவியைத் தேடி அவன்  காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கையில் யா என்னும் காட்டுமகளைக் கண்டான். அவள் உடலில் நூறு பேற்றுவாய்கள் விரிந்திருந்தன. இவளே என்று முடிவுசெய்து அவளை அணுகி “நீ மைந்தரால் நிறைவாய்” என்றான்.

முதல் தச்சனுக்கு யா என்னும் அன்னையில் ஆயிரத்தெட்டு மைந்தர் பிறந்தனர். அவர்களில் முதல்வர் நால்வர். முதல் மைந்தன் நான்கு கைகளில் உளியும் கூடமும் முழக்கோலும் சரடும் கொண்டு பிறந்தான். “தந்தையே, நான் யார்?” என்றான். “அஜைகபாத் என்று நீ அறியப்படுவாய். நீ கற்சிற்பி. பாறைகள் உன் கைக்கு நெகிழும்” என்றான் தந்தை. நான்கு கைகளுடன் உளியும் கூடமும் துருத்தியும் அனலூதியும் கொண்டு எழுந்தான் இரண்டாமவன். “தந்தையே, நான் செய்யவேண்டியதென்ன?” என்றான். “நீ கொல்லன். உன்னை அஹிர்புத்ன்யன் என்பர். நீ படைக்கலங்களை இயற்றுக!” என்றான் தந்தை.

மூன்றாமவன் வணங்கி நின்றான். அவன் கைகளில் துலாவும் ஊதுகுழாயும் கிடுக்கியும் சிற்றுளியும் இருந்தன. “நீ த்வஷ்டா. உன் கனவுகளை பொன்னில் எழுப்புக!” என்றான் தந்தை. இறுதியாக நான்கு கைகளும் அனலென உருகிப்பறக்க வந்த மைந்தனிடம் “நீ ருத்ரன். அனலே உன் ஊடகம். வேள்விக்குளங்களை அமைத்து கணமொரு சிற்பமென சமைப்பாயாக!” என்றான் கர்மகன்.

பாடகரே, நான்கு தச்சர்களால் உருவானவை மண்ணில் எழுந்ததே மானுடம் கொண்ட செல்வங்கள் அனைத்தும். அவர்கள் கோட்டை சூழ் நகரங்களை செய்தார்கள். கொடியென சாலைகள் நெளிந்தன அங்கு. கூரை கவிழ்ந்த மாடங்கள் அமைந்தன. பொற்சூடிய அரண்மனைகள் எழுந்தன. முட்களும் உகிர்களும் அலகுகளும் படைக்கலங்களாக மாறின. நான்கு திசைகளையும் நால்வர் ஆண்டனர். கிழக்கே பொற்தச்சன் த்வஷ்டா நின்றான். மேற்கே இரும்புத்தச்சன் அஹிர்புத்ன்யன் இருந்தான். வடக்கை ஆண்டவன் கல்தச்சனாகிய அஜைகபாத். மூதாதையர் எரிந்தணையும் தெற்கில் வாழ்ந்தான் ருத்ரன்.

[ 5 ]

“பிரதீகம் என்னும் சிற்றூரில் ஒரு சந்தையில் நான் நின்றிருக்கையில் அங்கு இளம்சூதன் ஒருவன் பாடிய பாடலைக் கேட்டு வியந்து அருகணைந்தேன்” என்றான் பிரசண்டன்.  “அவன் என் சொற்களை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான். சென்று நின்று செவிகொடுத்தபோது கேட்டேன், அவை என் சொற்களல்ல. என் சொற்கள் ஒன்று நூறென முளைத்து காவியமாகிவிட்டிருந்தன.”

“குப்த சந்திரசூடர் என்னும் கவிஞர் யாத்த விருத்திரப்பிரபாவம் என்னும் அந்நூலை அன்றுதான் நான் முதல்முறையாகக் கேட்டேன். பன்னிரண்டு பாதங்களிலாக நூற்றிருபது பாடல்கள் கொண்டது அது. விருத்திராசுரனின் மும்மூதாதையரின் கதையிலிருந்து தொடங்கி அவன் விண்மேவியது வரை பாடியது. அதை விழிமின்ன கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் தொல்குடி அசுரர் என்று கண்டேன். அவர்கள் அதற்கு தங்கள் மடிச்சீலையில் எஞ்சும் நாணயங்களைக்கூட கொடுப்பார்கள். எனவே அக்கதை ஒருபோதும் அழியாதென்று தெளிந்தேன்.”

“அன்று பாடிக்கொண்டிருந்தவன் பெயர் குணதன். அவனை அன்றிரவு அந்தியில் ஊருக்கு வெளியே ஆற்றங்கரையிலிருந்த விடுதியில் சந்தித்தேன். அக்காவியத்தை எனக்காக முழுமையாகப் பாடும்படி சொல்லி நினைவில் நிறுத்திக்கொண்டேன். அன்றிரவு முழுநிலவு. ஆற்றுநீர் மின்னிக்கொண்டிருந்தது. தென்றலை ஒளியலைகளாக பார்த்துக்கொண்டிருந்தேன். முழுநிலவின் ஒளியில் தன் மைந்தரின் படைப்புலகை நோக்கி உவகைமயக்கில் இருந்த கர்மகனின் தோற்றத்தை அவன் பாடினான்” என்றான் பிரசண்டன்.

“நான் நான் என மானுடன் தருக்கி எழும் தருணங்கள் இரண்டு. தன் கலை கண்டு நெஞ்சு எழுகையில். தன் மைந்தர் செயல் கண்டு வயிறு மலர்கையில். இரண்டும் நிகழ்ந்தன கர்மகனுக்கு அப்போது. நான்கு கைகளையும் விரித்து நான்கு மைந்தரையும் நெஞ்சோடணைத்து விழிநனைந்தான். விம்மி விம்மி எழும் உள்ளத்தால் நிலைகொள்ளாது தவித்தான். உச்சகணங்களை நிற்க இடமில்லாது ஊசிக்கூர்களாகப் படைத்த தெய்வங்கள் மானுடனுடன் விளையாடுகின்றன” என்று குணதன் பாடினான்.

ஒளியலைகளாக தன்னைச் சூழ்ந்த தெய்வங்களை நோக்கி கர்மகன் கேட்டான் “தெய்வங்களே சொல்க, இப்புவியில் நிகரற்றவன் யார்?” தெய்வங்கள் அமைதிகொண்டிருந்தன. “சொல்க, யார்?” என்று அவன் கூவினான். தெய்வங்களின் ஒலியெழாதிருக்கவே “காண்பீர்கள். மாற்றுச்சொல் இல்லாது நீங்களே ஏற்பீர்கள்” என்றான்.

பெருந்தச்சனாகிய கர்மகன் தன் மைந்தரிடம் “உங்களில் முதல்வர் எவர் என்றறிய விழைகிறேன், மைந்தர்களே. உங்களால் இயன்ற உச்சங்களை சமைத்து அளியுங்கள்” என்றான். “ஆணை” என்று நான்கு மைந்தரும் அவனைப் பணிந்தனர். “அறிக, அவை தெய்வங்கள் அஞ்சும் முழுமை கொண்டிருக்கவேண்டும். அம்முழுமைக்குமேல் ஒன்று எண்ணற்கும் அரிதாக இருக்கவேண்டும்.” மைந்தர் “அவ்வாறே” என்றனர். “படிப்படியாக வெல்வது மானுடர் வழக்கம். தன்னை எரித்து பெருகியெழுவதே ஆசுரம். அவ்வழியே உங்களுக்கு” என்றான் கர்மகன்.

மைந்தர் ஆணைபெற்றுக் கிளம்பினர்.  கற்தச்சனாகிய அஜைகபாத் ஒரு யானை வடிவம் கொண்டு துதிக்கைதூக்கிப் பிளிறியபடி காட்டுக்குள் புகுந்தான். அவனுடைய பிளிறல் கேட்டு பதினெட்டாயிரம் காட்டுயானைகள் துதிசுழற்றி சின்னம் விளித்து அவனைப் பணிந்தன. அந்த யானைகளை அழைத்துவந்து மலைப்பாறைகளை உருட்டி அவன் ஒரு கோட்டையைக் கட்டினான். இரையைச் சுற்றி இறுக்கிய மலைப்பாம்புபோல மகாவீர்யம் என்னும் மலையை ஏழுமுறை சுற்றியிருந்தது அந்தக் கோட்டை.

இரும்புக்கொல்லனாகிய அஹிர்புத்ன்யன் ஒரு செங்கழுகாக மாறி பறவைக்குலங்களை அறைகூவினான். வேழாம்பலின் அலகுகள் வாள்களாயின. பருந்துகளின் அலகுகள் வேல்களாயின. கழுகுகளின் உகிர்கள் அம்புகளாயின. அந்தப் பெருங்கோட்டை வெல்லமுடியாத படைக்கலங்களால் நிறைந்தது.

அனைத்து உலோகங்களும் முனைகொண்டமையால் அது முள்செறிந்த மலையுச்சி மரம்போலவும் சினந்த முள்ளம்பன்றிபோலவும் சீறி நின்றது. தெய்வங்களும் அதை அணுக அஞ்சி வளைந்து பறந்தன. அதற்குள் புகுந்த காற்று பல்லாயிரம் சீறல்களாக கிழிபட்டது. அங்கு நீட்டிநின்றிருந்த கூர்களில் ஒளி நீர்த்துளியெனச் சொட்டி நின்றது. அவற்றின் நிழல்களால் நிலம் நாளும் மும்முறை சீவித் தூய்மையாக்கப்பட்டது. அக்கோட்டைக்குள் பறவைகள் நுழையவில்லை. பூச்சிகளும் அங்கு செல்ல அஞ்சின.

த்வஷ்டா ஒரு மாபெரும் தவளை வடிவை எடுத்தான். கங்கை ஆறு காலையிளவெயிலில் பொன்னிறமாக ஓடும் கணத்தில் நீருக்குள் குதித்து மூழ்கி வாயைக் குவித்து ஊதி நுரையெழுப்பலானான். அந்நுரைக்குமிழிகள் ஒன்றன்மேல் ஒன்றென எழுந்து பெருமாளிகையென்றாயின. தன்னைத்தானே பெருக்கிக்கொண்டமையால் அம்மாளிகை முழுமுதல்தெய்வத்தின் உள்ளத்தில் வாழ்ந்த அந்த முதல்மாளிகையைப்போலவே தானும் அமைந்தது.

படைப்பின் குறை என்பது படைப்பாளியின் எல்லை. தன்னைத்தான் உருவாக்கும் படைப்பு படைப்பவனிடமிருந்து விடுதலைகொண்டுவிடுகிறது. சூதரே, அனைத்து வடிவங்களும் தங்கள் முழுமையை சென்றடையும் உள்விருப்பாலேயே செயலூக்கம் கொள்கின்றன. முழுமை முழுமை எனத்துடிக்கும் வடிவங்களையே நாம் கலை எனக்கொள்கிறோம்.

அணிமாளிகை விண்முட்ட குவிந்து உயர்ந்து பதினெட்டாயிரம் முகடுகளுடன் இருபத்தெட்டாயிரம் உப்பரிகைகளுடன் முப்பத்தெட்டாயிரம் பலகணிகளுடன் நின்றது. அதன் அழகைக்காண தெய்வங்கள் விண்ணிலும் மண்ணிலும் நிறைந்து நெரித்தனர். தெற்கே கடல்சூழ்ந்த நிலங்களில் இருந்தும் வடக்கே பனிசூழ்ந்த உச்சிகளில் இருந்தும் மேற்கே பெரும்பாலைகளில் இருந்தும் கிழக்கே எழுந்த பசுங்காட்டுவெளிகளில் இருந்தும் பன்னிரண்டாயிரத்துஎட்டு பழங்குலங்களைச் சேர்ந்தவர்களும் தேடி வந்தனர். அவர்களின் பாணர்கள் அதை பாடல்களாகப் பாடினர்.

பாட்டில் அந்த மாளிகை நெய்யுண்ட எரியென மேலும் வளர்ந்தது. அதைப் பாடியவர்களெல்லாம் அதில் ஒரு மாடத்தைக் கட்டினர். அதைக் கேட்டவர்களெல்லாம் ஓர் உப்பரிகையை இணைத்தனர். நினைவுகூர்ந்தவர்களெல்லாம் ஒரு பலகணியை திறந்தனர். பெருகிப்பெருகிச் சென்ற மாளிகை விண்முகில்கள் நடுவே பொன்னிற ஒளியுடன் எழுந்து நின்றது. மழைமுகில்கள் அதில் முதுகுரசிக்கொண்டன. அவை அதன் தண்மையால் எடைபெற்று அங்கேயே நின்றமையால் தேங்கிக் குளிர்ந்து சுனையென்றாயின. சுனையின் அடிப்படலம் கிழிய மழையெனப் பொழிந்தன. அதன் பொன்மாடங்கள் மேல் எப்போதும் மழை பொழிந்துகொண்டிருந்தது. அதன் கூரைமடிப்புகளிலிருந்து அருவிகள் கொட்டிக்கொண்டிருந்தன.

சிறந்தவை தங்கள் இருப்பாலேயே அறைகூவலென்றாகின்றன.  விண்ணுலாவியாகிய நாரதர் ஒருநாள் முகில்களினூடாகச் செல்லும்போது கூட்டம்கூட்டமாக அசுரதெய்வங்கள் செல்வதைக் கண்டார். “எங்கு செல்கிறீர்கள், தெய்வங்களே? உங்களை ஆளும் பெருந்தெய்வமொன்று மீண்டும் எழுந்துள்ளதா?” என்றார். “ஆம், அத்தெய்வத்தின் மாளிகை எழுந்துள்ளது அங்கே” என்றார்கள் அவர்கள்.

அவர் மேலும் செல்லும்போது கந்தர்வர்கள் ஒளிரும் மணிமுடிகளும் வெண்சிறகுகளுமாக வண்ணத்துப்பூச்சிகளின் பெருக்கென சென்றுகொண்டிருப்பதைக் கண்டார். “எங்கு செல்கிறீர்கள், கந்தர்வர்களே?” என்றார். “பேரழகு எங்களை ஈர்க்கிறது. பிறிதெங்கும் நிலைக்கமுடியவில்லை” என்றனர்.

மேலும் செல்லும்போது கின்னரர்கள் செல்வதைக் கண்டார். “அழகிய பொருட்களில் இசை நிறைந்துள்ளது, நாரதரே” என்றனர். மேலும் சென்றபோது வித்யாதரர்களைக் கண்டார். “மெய்மை என்பது முழுமை. முழுமையே அழகென விழிகளால் அறியப்படுகிறது” என்றனர்.

இறுதியாக அவர் தேவர்களைக் கண்டார். அவர்கள் பித்தெழுந்த விழிகளுடன் விண்ணில் ஒளிக்கீற்றுகளாக வழிந்து சென்றுகொண்டிருந்தனர். “எங்கு செல்கிறீர்கள், தேவர்களே?” என்றார். “நாங்கள் வெற்றியை நாடுபவர்கள். உடல்மேல் உள்ளம் கொண்ட வெற்றியே ஆற்றல். பொருள்மேல் ஆற்றல் கொண்ட வெற்றியே செல்வம். செல்வத்தின்மேல் கனவு கொண்ட வெற்றியே அழகு. அழகின்மேல் மானுடன் கொள்ளும் வெற்றியே கலை. முழுமைகொண்ட கலை  மெய்மையின் பருவடிவு.  மெய்மையே மானுடனை தெய்வமாக்குகிறது. அதை ஒருவன் அடைந்துள்ளான். அவனைக் காணச்செல்கிறோம்” என்றனர்.

நாரதர் அமராவதிக்குச் சென்று அங்கே வைஜயந்தத்தில் இந்திராணியுடன் அமர்ந்திருந்த இந்திரனைப் பார்த்தார். அவனைச் சூழ்ந்திருந்தன முழுமைகொண்டவை அனைத்தும். நீர்மலர்களில் தாமரை. கிளைமலர்களில் பாரிஜாதம். கொடிமலர்களில் முல்லை. பறப்பனவற்றில் செங்கழுகு. தவழ்வனவற்றில் அன்னம். பாடுவனவற்றில் குயில். பேசுவனவற்றில் பசுங்கிளி. ஆடுவனவற்றில் மயில். தாவுவனவற்றில் புள்ளிமான். தயங்குவனவற்றில் வரிப்புலி. முக்கனிகள் காய்த்த மரங்கள். முலைகனிந்த காமதேனு. நிழல் விரித்த கல்பமரம். துதிக்கை அசைத்தபடி ஐராவதம்.

வணங்கி அருகமர்ந்த நாரதர் “முழுமையைத் தோற்கடிப்பது தெய்வங்களின் ஆடல்போலும்” என்று பெருமூச்சுடன் சொன்னார். இந்திரன் வினாவெழுந்த புருவங்களுடன் நோக்க “தெய்வங்கள் அழகிலும் சிறப்பிலும் முழுமையை அடைந்ததுமே நிறைவின்மைகொள்கின்றன. ஏனென்றால் முழுமைக்கு அப்பால் நின்றிருப்பவை அவை. மேலுமொரு முழுமையை அவை படைக்கின்றன. முந்தைய முழுமையை குறையென ஆக்கி விளையாடுகின்றன” என்றார்.

அவரை நன்குணர்ந்திருந்த அவன் அவர் சொல்லவருவதை உய்த்தறிந்தான். “சொல்க, இங்கு நீங்கள் கண்ட குறை என்ன?” என்றான் இந்திரன். “நான் காணவில்லை. இங்குள்ள தேவர்கள் காண்கிறார்கள்போலும். மண்ணில் அசுரசிற்பியின் மைந்தர் நால்வர் அமைத்த மகாவீர்யம் என்னும் பெருநகர் அனைத்திலும் முழுமைகொண்டிருக்கிறதென்கிறார்கள். பெருஞ்சிற்பியின் நான்கு மைந்தர்களான ருத்ரர்களில் த்வஷ்டா அமைத்த மணிமாளிகை  விண்முகில்களையே ஆடையென அணிந்து நின்றிருக்கிறது.”

“அங்கு சென்று சூழ்ந்திருக்கின்றன அவர்களின் தெய்வங்கள். உடன் நம் தேவர்களும் நெருக்கியடிக்கிறார்கள். இங்கு வரும்போது பார்த்தேன், இலையுதிர்காலத்து பொன்னிறச் சருகுகள் என தேவர்கள் அமராவதியிலிருந்து உதிர்ந்து சென்றுகொண்டே இருக்கிறார்கள். இப்பெருநகரின் அனைத்து வீதிகளும் ஒழிந்துகிடக்கின்றன. அமுதமுண்ணவும் இங்கு தேவரில்லாமலாகும் நிலைவருமோ என எண்ணிக்கொண்டேன்” என்றார் இசைமுனிவர்.

வினைமுடித்து நாரதர் கிளம்பும்போது இந்திரன் முகம் சுருங்கி இதழ்கள் இறுகி கைவிரல்களால் வெளியை சுழித்துக்கொண்டிருந்தான். அவர் சென்றபின் வியோமயானம் மீதேறி விண்வழி ஊர்ந்தான். கீழே மண்மகளின் மணிமுடி என எழுந்து நின்ற மாளிகையைக் கண்டான். அவன் உடல் பதறத்தொடங்கியது. யானை மேலிருந்து வழுக்கி விழுபவன்போல தடுமாறினான்.

உடல் எரிய திரும்பி அமராவதிக்கு வந்தான். அவனுக்கு காய்ச்சல் கண்டிருக்கிறதென எண்ணி அவன் தேவி அவனை ஆறுதல்படுத்த வந்தபோது சினந்து கையோங்கி அவளை அடிக்கப்போனான். கொந்தளிப்பு தாளமுடியாமல் சுற்றிச்சுற்றி வந்தான். அருகே வந்து உசாவிய வசிட்டரிடம் நிகழ்ந்ததை சொன்னான். “முதல்வனாக அன்றி நான் இருக்கவியலாதென்பதே என் நெறி. முதன்மை என்பது கணம்தோறும் நூறு குரல்களால் அறைகூவப்படுவது” என்றான். “வெற்றிகளால் ஆனதே என் காலம். இவ்வரியணை முந்தைய கணம் வரை நான் வெல்லப்படவில்லை என்பதன் சான்றுமட்டுமே” என்று உறுமினான். “நான் வென்றாகவேண்டும். எவ்வகையிலாயினும் வென்றாகவேண்டும்” என்றான்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 37

[ 3 ]

பிரம்மகபாலமென்னும் ஊரில் மின்னும் இடியும் சூழ்ந்த மலைக்குகைக்குள் அமர்ந்து பிரசாந்தர் என்னும் அந்தணர் சொன்னார் “சர்வஜித் வளர்ந்து பதினெட்டாண்டு திகைந்து முடிகொண்டு அரியணை அமர்வதுவரை நூலாய்ந்தும் நெறிதேர்ந்தும் அரசமுனிவர் என ஆட்சி செய்தார் சித்ரகேது. அவரை குடிகள் தந்தையென கொண்டாடினர். பற்றற்றவன் செய்யும் உலகியல்செயல்கள் தவமென்றாகின்றன. அவற்றின்மேல் ஊழின் துலாமுள் அசைவற்று நிற்கிறது. அவை வைரமுனைகொண்ட வாட்கள். அளியின்றி அளிப்பவை. சினமின்றிக் கொல்பவை.”

சித்ரகேது தன் ஆட்சிக்காலம் முழுக்க தன் பேச்சிலும் எண்ணத்திலும் இரு சொற்களை முற்றிலும் இழந்திருந்தார்.  ‘என்’ என்றோ ‘மகன்’ என்றோ அவர் நா உரைப்பதில்லை. அவர்முன் அச்சொற்களை சொல்லலாகாதென்று ஆணையிருந்தது. அமைச்சர்கள் நூறுமுறை பயிற்றுவித்த பின்னரே அவர் முன் அயலாரை அனுப்பினர். மைந்தனுக்கு பதினெட்டு அகவை நிறைந்ததும் அவனுக்கு முடியளித்துவிட்டு மரவுரி அணிந்து காடேகி தவம் செய்யலானார். தன்னுள் உறைந்த சொற்கள் அனைத்தையும் அகழ்ந்தெடுத்து அருகிலோடிய ஆற்றுப்பெருக்கிலிட்டு சொல்லின்மையை சென்றடைந்தார்.

தவம் கனிந்து அவர் முற்றிலும் சொல்லிழந்தவராக ஆனார். ஓணான்கள் அவர் தலைமேல் தாவின. எலிகள் அவர் கால்மடிப்புகளில் ஒடுங்கிக்கொண்டன. அவர்மேல் சாரைப்பாம்பு சுழன்றேறி மேலே சென்றது. அதைத் தொடர்ந்து அரசநாகம்  ஏறிச்சென்று கவ்வி விழுங்கியது. மரங்கள்போல் பாறைபோல் அவர் ஆனார். அவ்வெறும்வெளியில் யாழிசையுடன் நாரதர் தோன்றி பிரம்மனுக்குரிய நுண்சொல்லை அவர் செவியில் உரைத்தார்.

அச்சொல்லை தவம்செய்து பெருக்கி மொழியென்றாக்கினார். அம்மொழியின் கனிவில் பிரம்மன் அவர் முன் தோன்றினார். “மைந்தா, நீ வேண்டுவதென்ன?” என்றார் பிரம்மன். “மானுடன் அறிவதன் உச்சமென ஒன்றுண்டு எனில் அது” என்றார் சித்ரகேது. “மைந்தா, நீ கோரியது அருளல்ல, உன் ஆணவநிறைவை மட்டுமே. அது உனக்கு அமைக!” என்று சொல்லி பிரம்மன் மறைந்தார்.

உடலே தான் என்னும் உணர்விலிருந்து சித்ரகேது விடுபட்டார். அக்கணமே விரும்பிய உடல்கொள்ளும் ஆற்றல்கொண்டவராக ஆனார். நீரென ஒழுகவும் நெருப்பென எழுந்தாடவும் காற்றென பரக்கவும் ஒளியென விரியவும் முகிலெனத் தவழவும் அவரால் இயன்றது.  ஊனுணர்வழிந்தவன் உள்ளிருப்பையும் துறக்கிறான். அவர் இருப்பும் இன்மையும் என இருநிலையும் கொண்டவராக ஆனார். விண்வாழும் கந்தர்வர்களைப்போல எங்குமிருந்தார். அவர் உடல் அங்கே கிடந்து மட்கி எலும்புக்கூடாக மாறி மறைந்தது.

அவ்வாறு விண்ணில் செல்கையில் ஒருமுறை காட்டில் ஒரு வேடனும் அவன் துணைவியும் ஒரு சுனைக்கரையில் காதலாடுவதைக் கண்டார். அவர்கள் சிவனும் உமையுமென தெரிந்ததும் விண்ணிலிருந்து இறங்கி அங்கு மலர்ந்திருந்த நீலம் ஒன்றில் விழிகொண்டு அவர்களை கூர்ந்து நோக்கினார். உமையை அள்ளி தன் மடியிலமர்த்திய ஈசன் “இவள் என்னவள்” என்று எண்ணி முகம் மலர்ந்த கணம் சித்ரகேது வெடித்துச் சிரித்தார்.

அச்சிரிப்பொலியைக் கேட்டு சினம்கொண்டு எழுந்து நோக்கிய உமை “யார் நீ? உருக்கொண்டு எழு! நீ எதனால் சிரித்தாய் என்று சொல்!” என்று சீறினாள். சித்ரகேது எழுந்து “உலகளந்து புரப்பவனுக்கும் எனது என்னும் எண்ணத்தை கடக்கமுடியவில்லை என்றால் மானுடர் எங்ஙனம் அதை வெல்வது?” என்றார். தேவி மூச்சில் முலைகளெழுந்தமைய கண்களில் ஈரம் மின்ன “இழிந்தோனே, தன் உடைமை என தெய்வங்கள் எண்ணுவதனால்தான் அவர்கள் மானுடருக்கென இறங்கிவருகிறார்கள். மானுடர் அவ்வாறு எண்ணும்போது தெய்வநிலையை இழக்கிறார்கள்” என்றாள்.

“நான் தெய்வநிலையை இழந்தேன். என் மைந்தனை நான் தீண்டியதுகூட இல்லை” என்றார் சித்ரகேது சினத்துடன். “ஆம், இதுவரை உன்னுள்ளத்தில் கரந்து எஞ்சிய நஞ்சு பெருகி உன்னை வென்றுவிட்டது. நஞ்சென நீ வளர்க!” என்றாள் உமை. நீரில் ஒரு குமிழியென ஆகி மறைந்த சித்ரகேது மீண்டும் தன் தவச்சாலைக்கு வந்தார். அங்கே வெள்ளெலும்புக்குவையெனக் கிடந்த தன் உடலை நோக்கி ஏங்கியபடி சுற்றிவந்தார். அப்பகுதியிலேயே காற்றென குளிரென கெடுநாற்றமென செவிமாயச்சொல் என நின்றிருந்தார்.

“என் மகன் என் மகன் என்று சித்ரகேது சொல்லிக்கொண்டிருந்தார். அச்சொல்லே மொழியாக அதில் திளைத்தார். நீண்டநெடுங்காலம் அங்கே அவர் காத்திருந்தார்” என்றார் அந்தணர். “காத்திருக்கப்படுபவை எய்தப்படும் என்று சொல்கின்றன தொல்மொழிகள். தேயும் காத்திருப்புகளை காலம் உருமாற்றி வெற்று நினைவுகளும் ஏக்கங்களுமாக ஆக்குகிறது. வளரும் காத்திருப்புகள் காலத்தையே தங்கள் விழைவுக்கான படைக்கலமாகக் கொள்கின்றன.”

சித்ரகேது காத்திருந்த அந்தக் குடிலுக்கு ஒரு நாளிரவு சுசரிதன் என்னும் அந்தணன் ஒருவன் பசித்து மழையில் நனைந்து வந்துசேர்ந்தான். இடிந்த குடிலை தொலைவிலேயே கண்ட அவன் அதை அணுகி உள்ளே பார்த்தபோது வெள்ளெலும்புகளைக் கண்டான். ஆயினும் அந்த மழைக்குளிரில் வெளியே செல்ல அவனால் இயலவில்லை. ஆகவே உள்ளே நுழைந்து அமர்ந்து அங்கிருந்த கற்களை உரசி நெருப்பெழச்செய்து அந்தக் குடிலின் தூண்களையும் சட்டங்களையும் எரித்து அனலாக்கி அதில் தன் உடலை காயச்செய்தான். கையுடன் கொண்டுவந்திருந்த கிழங்குகளை அதில் சுட்டு உண்டான்.

அவனைக் கண்டதும் அக்குடிலுக்கு மேலே காஞ்சிரமரத்தில் கசந்துத் திரண்ட காய்களாக குடிகொண்டிருந்த சித்ரகேது ஒரு கரும்பூனையாக மாறி உள்ளே வந்தார். பூனையின் குரலைக் கேட்டதும் சுசரிதன் திரும்பிப்பார்த்தான். அதன் கண்களின் ஒளி அவனை அச்சுறுத்தியது. அவன் தன் உபவீதத்தைப் பற்றியபடி வேதச்சொல்லெடுத்து இந்திரனை வாழ்த்தலானான். அஞ்சிய பூனை அருகே வந்து அவனை நோக்கி விழிசுடர்ந்தபடி அமர்ந்தது.

“இந்திரனே, இது உன் படைக்கலம். இது உன் கையில் இருக்கிறது. இதுவே எனக்குக் காவல்” என்று கூவியபடி அந்தணன் ஒரு கழியை எடுத்து தன்னருகே வைத்துக்கொண்டான். பூனை சித்ரகேதுவின் குரலில் “அந்தணனே, அஞ்சாதே. நான் உன்னை ஒன்றும் செய்யமுடியாது. இந்திரன்சொல் உன்னிடமுள்ளது. ஆனால் அழியாப்பெருவிழைவுடன் நான் இங்கு காத்திருக்கிறேன். இங்கு எவரும் வருவதில்லை. இந்த வெள்ளெலும்புகள் என் முந்தைய பிறவிக்குரியவை. இவற்றை விட்டுவிட்டு நான் செல்லமுடியாது” என்றது.

“எது உன் துயர்?” என்றான் சுசரிதன். பூனை தன் கதையை சொன்னது. “ஆம், உன் துயர் எனக்குப் புரிகிறது. விழைவுகள் அனல்துளி. அவற்றின்மேலிட்டு மூடும் மூத்தோர்சொற்கள் உலர்சருகுகள். கற்றோர்சொற்கள் பச்சை இலைகள். அனல் அனைத்தையும் உண்ணும்” என்றான் சுசரிதன். “நான் உருக்கொண்டெழ விழைகிறேன். என்னில் எஞ்சிய அனைத்தும் நுரைத்தெழுந்து பேருருக்கொண்டு ஆடாமல் நான் மீளமுடியாது” என்றது பூனை. “ஆம், துளியென இருப்பது எதுவும் பெருகும் விழைவுகொண்டதே” என்றான் சுசரிதன்.

“அந்தணனே, அணுகுவோர் எவராயினும் துயர்சொல்லி வழிகோருபவர்களுக்கு அந்தணன் சொல்லளித்தாகவேண்டும். அச்சொல்லால் அவனும் அவன் குடியும் அழியுமென்றாலும் அது அவன் கடன் என்கின்றன நெறிநூல்கள். நூலறிந்து உபவீதமணிந்த அந்தணன் எந்நிலையிலும் மானுடருக்கு அமைச்சனே. இன்று உன்னை என் சொல்வலன் எனக்கொள்கிறேன். நான் செய்வதற்குரியதென்ன?” என்றது. சுசரிதன் “ஆம், அது உண்மை. உனக்கு உதவியாகவேண்டியது என் பொறுப்பே” என்றான். “இது ஒரு நிமித்தம் போலும். நான் சற்றுமுன் கேட்டுவந்த கதையே உனக்குரிய விடையென ஆகிறது. அதை சொல்கிறேன்.”

பிரம்மனின் சொல்கனிந்து உருவான மைந்தராகிய கசியப பிரஜாபதி உடலும் உள்ளமும் வளர்ந்து  இளமையின் ஒளிகொண்ட இளைஞராக ஆனபோது வான்கீழ் கைவிரித்து நின்று இறைஞ்சினார் “எந்தையே, நான் கொள்ளவேண்டிய துணைவி யார்? எங்குள்ளாள்?” விண்ணில் தோன்றிய பிரம்மன் சொன்னார் “மைந்தா, ஆண் பிறக்கும்போதே பெண் அவனுள் பிறந்துவிட்டிருக்கிறாள். அவன் கொள்ளும் விழைவும் கனவும்தான் திரண்டு பின்னர் ஊனுருக்கொண்டு கருவறையில் திகழ்கின்றன. விழையாத பெண்ணை எவரும் அடைவதில்லை. உள்விழைந்த பெண்ணை எவரும் அடையாதுபோனதுமில்லை. நீ விழையும் பெண் எவள்? அவளை முகமெனத் திரட்டு. அம்முகத்தை கண்டடை.”

கசியபர் தன்னுள் தேடி தவமிருந்தார். தன் சிற்றிளமையிலேயே காமம் ஊசிமுனையால் தொட்டு உட்செலுத்திய நஞ்சென குருதியில் நுழைந்து நுரைத்து ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்தார். அந்நுரையில் ஒளிக்குமிழியென எழுந்த முகமொன்றைக் கண்டார். கண்விழித்து “தந்தையே, ஒளிதவழ் முகம் கொண்டவள். இனியவள். அவளை இன்று கண்டேன்” என்றார். பிரம்மன் புன்னகைத்து “தட்சப்பிரஜாபதியின் மகளாகிய அவள் பெயர் அதிதி. அவளை கொள்க!” என்றார்.

அதிதியை மணந்து பன்னிரு ஆதித்யர்களுக்கு தந்தையானார் கசியபர். விஷ்ணு, சுக்ரன், ஆரியமா, தாதா, த்வஷ்டா, பூஷா, விவஸ்வான், சவிதா, மித்ரன், வருணன், அம்சன், பகன் என்னும் பன்னிரு ஆதித்யர்களும் விண்ணில் ஒளியுடன் திகழலாயினர். ஒளிகொண்ட மைந்தரை எண்ணி மகிழ்ந்து வாழ்ந்த கசியபர் அம்மகிழ்ச்சியில் பளிங்கில் மயிரிழைவிரிசல்போல மெல்லிய குறையொன்று ஓடுவதைக் கண்டு முதலில் வியந்தார். பின்னர் அதையே எண்ணிக்கொண்டிருந்தார். பின் அது என்னவென எண்ணப்புகுந்தார். பின்னர் அதை கண்டுகொண்டார்.

துயருடன் தனித்து நின்றிருந்த கசியபர் மேல் முகிலென எழுந்த பிரம்மன் கேட்டார் “சொல்க, உன் துயர் என்ன?” கசியபர் சொன்னார் “எந்தையே, என்னை எண்ணி நாணுகிறேன். ஒளியையும் இன்சுவையையும் நறுமணத்தையும் நுகர்ந்து என் உள்ளம் சலித்துவிட்டது. இருளையும்  எரிசுவையையும் கெடுமணத்தையும் நாடுகிறது. அவையே சுவையென்று எண்ணுகிறது.” பிரம்மன் புன்னகைத்து “நீ நாணவேண்டியதில்லை. உன்னுள் குருதியில் வாழும் மைந்தரின் விழைவு அது. அவர்கள் உன் உடல்திறந்து வெளிவரட்டும். உன் விழைவைத் தொடர்ந்து செல்க!”

தன் உள்ளோடிய இருள்குமிழிகளைத் தேடி காசியபர் கண்டடைந்த முகம் தட்சப்பிரஜாபதியின் இரண்டாவது மகள் திதி என்றார் பிரம்மன். அவளை மணந்த கசியபர் தைத்யர்களை பெற்றெடுத்தார். இருளின் பேராற்றலை திதியில் அறிந்த கசியபர் அவள் கைகளால் முற்றிலும் வளைக்கப்பட்டு பிறிதொன்றுமறியாது நெடுங்காலம் வாழ்ந்தார். கரிய பேருருவும் கட்டற்ற சினமும் சினமளிக்கும் பேராற்றலும் கொண்டிருந்தனர் அவரது மைந்தர். ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்‌ஷன், சிம்ஹிகை என்னும் மூவரிலிருந்து தைத்யர்களின் குலம் பெருகியது.

பின்னர் இருளின் தழுவலுக்குள் தன் தனிமையை உணர்ந்த கசியபர் தான் விழைவது வெல்லும் பெண்ணை அல்ல தான் வென்றாளும் பெண்ணையே என்று உணர்ந்தார். பிரம்மனிடம் அதை சொன்னார். “மைந்தா, அன்னையெனப் பெண்ணை விழைவதும் பின்னர் தோழியென பிறிதொருத்திமேல் மையல்கொள்வதும் ஆண்களின் இயல்பே. உன் உள்ளில் எழுந்த மகள் தட்சனின் மகள் தனு. அவளை கொள்க!” என்றார்.

தனுவை மணந்து மீண்டும் இளமைந்தனென்றாகி ஐவகை நிலங்களிலும் விளையாடி காதல்கொண்டாடினார் கசியபர். த்விமூர்த்தா, சம்பரன், அயோமுகன், சங்குசிரஸ், கபிலன், சங்கரன், ஏகசக்ரன், மகாபாகு, தாரகன், மகாபலன், ஸ்வர்பானு, ருஷபர்வா, புலோமன், விப்ரசித்தி  போன்ற தானவர் அவர்களுக்குப் பிறந்தனர். ஆதித்யர்களின் ஒளியையும் தைத்யர்களின் இருளையும் கலந்து அமைந்த அகம் கொண்டிருந்தனர் அவர்கள்.

மீண்டும் மீண்டும் தன்னுள்ளிருந்து பெண்களை கண்டெடுத்தார் கசியபர். அரிஷ்டை, சுரசை, கஸை, சுரஃபி, வினதை, தாம்ரை, குரோதவஸை, இரா, கத்ரு என்னும் தட்சமகளிரை மணந்தார். பின்னர் முனி, புலோமை, காலகை, நதை, தனாயுஸ், சிம்ஹிகை, பிராதை, விஸ்வை, கபிலை என்னும் மகளிரையும் மணந்து பெருங்குலங்களைப் படைத்து முதற்றாதையாக அமர்ந்திருந்தார். அக்குலங்கள் வாழ்ந்த ஊர்மன்றுகளில் கல்லில் எழுந்து மலரும் நீரும் படையலும் கொண்டார். அவர்களின் பிறப்புக்கும் இறப்புக்கும் விழியானார். அவர்களின் வேண்டுதல்களுக்கு செவியானார்.

தைத்யர்களான ஹிரண்யகசிபுவையும் ஹிரண்யாக்‌ஷனையும் விண்ணளந்தோன் வென்று அழித்த கதையை கசியபர் கேட்டார். தைத்யர் குலத்தை இந்திரன் அழித்துக்கொண்டிருக்கும் செய்திகள் நாளும் வந்தவண்ணமிருந்தன. வஞ்சம் எரிய அவர் சுக்ரமுனிவரை வரவழைத்து அவரிடம் கோரினார் “என் மைந்தர் தோற்பது எங்கே? அவர்களின் வஞ்சம் நிறைவேறும் வழி என்ன?” சுக்ரர் சொன்னார் “முனிவரே, தைத்யர்கள் ஆற்றல் மட்டுமே கொண்டவர்கள். அவர்களை தேவர்கள் வெல்வது எளிது.”

“ஆதித்யர்களை நான் ஏவுகிறேன். அவர்கள் வென்றுவரட்டும் தேவர்களை” என்றார் கசியபர். “அவர்கள் நெறிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். வேதச்சொல் அவர்களை வடமெனப் பிணைக்கும்” என்றார் சுக்ரர். “என்ன செய்வது?” என்றார் கசியபர். “ஒன்றே வழி. ஆதித்யர்களின் ஒளியும் தைத்யர்களின் இருளும் கொண்ட தானவர்களில் தெய்வங்களையும் தேவர்களையும் வெல்லும் மைந்தர்கள் எழுவதாக!”  மகிழ்ந்து “ஆம், அவ்வாறே” என்றார் கசியபர்.

கசியபர் பெருவஞ்சம் எரியும் உள்ளத்துடன் தன் துணைவியாகிய தனுவைப் புணர்ந்து பெற்ற மைந்தன் பலன் என்றழைக்கப்பட்டான். மைந்தன் பிறந்ததும்  அவன் நெற்றியில் கைவைத்து “உன் மூத்தவர்களின் குருதிக்கு நிகர் கேள், மைந்தா!” என்று வாழ்த்தளித்து மீண்டார் கசியபர். அவனுக்கு படைத்துணையாக விக்‌ஷரன், வீரன் என்னும் இரு மைந்தரையும் தனு பெற்றாள். தம்பியருடன் பலன் இளைஞனாக வளர்ந்தபோது அவன் பிறப்புநோக்கத்தை தனு சொன்னாள். வஞ்சினம் உரைத்து பலன் கிளம்பிச்சென்றான்.

விண்ணை வெல்லும்பொருட்டு தம்பியரை உடனழைத்துக்கொண்டு சென்ற பலன் வழியில் கடல்விளிம்பில் நின்று அந்திவணக்கம் செய்துகொண்டிருந்தான். அருகே அவன் தம்பியரும் அந்திவணக்கம் புரிந்தனர்.  பிறபொழுதுகளில் விக்‌ஷரன் நான்கு திசைகளையும் வீரன் விண்ணையும் நோக்கி மூத்தவனை காவல்புரிவது வழக்கம். அந்திவணக்கமென்பதனால் மூவரும் விழிமூடியிருந்தனர்.

விண்ணில் வெள்ளையானைமேல் எழுந்தருளிச் சென்றுகொண்டிருந்த இந்திரன் அவர்களைப் பார்த்தான். புலித்தோலாடை அணிந்து ஒளிவிடும் தண்டுப்படைக்கலத்துடன் நின்றிருந்த அந்தத் தானவர்கள் விண்புகும் ஆற்றல்கொண்டவர்கள் என அக்கணமே உணர்ந்தான். மறு எண்ணம் நிகழ வாய்ப்பளிக்காமல் தன் மின்கதிர் வாளெடுத்து பலனை இரு துண்டுகளாக வெட்டினான். திகைத்து விழிதிறந்த இளையோரின் தலைவெட்டி இட்டான். அவர்களின் குருதிகலந்து கடல் சிவந்தது.

மைந்தர் கொல்லப்பட்ட செய்தி கேட்டார் கசியபர். சினம்கொண்டு கொந்தளித்தபடி சுக்ரரை நாடிச்சென்றார். “என்ன நிகழ்ந்தது? குறி நோக்கிச் சொல்க! என் மைந்தர் எப்படி அழிந்தனர்?” என்றார். சுக்ரர் ஏழுவகை குறிநோக்கியபின் சொன்னார் “அவர்கள் அன்னையின் முலைப்பால் உண்டவர்கள். முலைப்பாலே குருதியென்றாகிறது. தேவர்கள் குருதியற்றவர்கள். ஏனென்றால் அவர்கள் பிறப்பதில்லை, ஒளிபோல எண்ணம்போல வெளியில் தோன்றி நிற்பவர்கள். அவ்வாறு தோன்றும் ஒருவனே இந்திரனுடன் எதிர்நிற்க முடியும்.” “அவ்வண்ண்ணம் ஒருவன் தோன்றுக! அவன் என்னிலிருந்தே தோன்றுக!” என்று கசியபர் கூவினார். “அது நிகழும். அதற்குரிய தருணம் வரும்” என்றார் சுக்ரர்.

“அரசே, கேள்! உன் வஞ்சம் பருவுடல்கொண்ட ஒருவனில் படர்ந்தெழவேண்டும். நீ கசியபரின் மைந்தனாகப் பிறக்கவேண்டும்” என்றான் சுசரிதன். “எவ்வண்ணம்?” என்று பூனை கேட்டது. “உன் எலும்புகளில் ஒன்றை நான் எடுத்துக்கொள்கிறேன். அதைத் தொடர்ந்து என்னுடன் வருக! நான் கசியபரின் குருநிலைக்குச் சென்று அவரை வணங்கி அவருடைய வேள்விநெருப்பில் அதை இடுவேன். அங்கு நீ எழுக!” என்றான் சுசரிதன். “நன்று அந்தணனே, நான் உனக்கு பொருளேதும் அளிக்கமுடியாதவன். உடல்கொண்டெழுந்ததும் உன் குடித்தோன்றல்கள் எவரேனும் என்னைத் தேடி வரட்டும். உரிய பொருளை அவர்களுக்கு அளிப்பேன்” என்றார் சித்ரகேது.

அந்தணன் வணங்கி “அவ்வாறே ஆகுக, அரசே!” என்றான். “ஆனால் அன்று நான் உயிருடனிருக்கமாட்டேன். என் வாழ்நாள் இன்னமும் ஏழு மாதங்கள் மட்டுமே. இப்போது இச்சொல்லை உரைத்தமையால் இந்திரன் என்னிடம் முனிந்திருக்கிறான். அவன் மின்னிடி விழுந்து நான் கருகி இறப்பேன். அதை அறிந்தபின்னரே உங்களுக்கு செல்வழி சொன்னேன்” என்றான். “நம் இருவருக்கும் வேறு வழியில்லை. அந்தணனே, உங்கள் கொடிவழியினர் மார்ஜார ரகசியம் என்னும் குறிச்சொல்லைச் சொன்னால் அவர்களை நான் அடையாளம் கண்டுகொள்வேன்” என்றார் சித்ரகேது.

சித்ரகேதுவின் எலும்புத்துண்டு ஒன்றுடன் சுசரிதன் அங்கிருந்து கிளம்பி கசியபரின் வேள்விச்சாலைக்கு சென்றான். உடன் கரிய பூனையும் சென்றது. கசியபரின் மாணவர்கள் அவனை  முகமனும் பூசனையும் செய்து அழைத்துச்சென்றனர். நீராடச் செய்து உணவளித்தனர். அவன் சென்று கசியபர் செய்துகொண்டிருந்த மகாஉத்தீபன வேள்வியில் ஹோதாவாக அமர்ந்தான். தன் விரல்களுக்கு நடுவே எலும்புத்துண்டை வைத்திருந்தான். கரிய பூனை வேள்விக்குடில்மேல் ஏறி கூரையில் அமர்ந்து நோக்கிக்கொண்டிருந்தது.

கசியபர் சுபவேள்வியைத்தான் இயற்றிக்கொண்டிருந்தார். தன் உள்ளம் கொண்டிருந்த வஞ்சத்தை இனிய வேதச்சொற்களால் மூடிமறைத்திருந்தார். வேள்வி நிகழ்ந்து கொண்டிருந்தபோது அவியிடுவதாக கைநீட்டிய சுசரிதன் அந்த எலும்புத்துண்டை எரியிலிட்டான். எலும்பு எரியும் கெடுமணம் எழுந்ததும் ஹோதாக்கள் அஞ்சிக்கூவியபடி எழுந்தனர். அக்கணமொரு பூனையின் குரலையும் அவர்கள் கேட்டனர்.

கெடுமணம் முகர்ந்ததும் கசியபருக்குள் இருந்து  அவ்வஞ்சம் உளம்மீறி எழுந்தது. வேள்வியில் அவர் உரைத்துவந்த வேதச்சொல் மாறுபட்டது. இருண்ட தொல்வேதச் சொல்லை ஓதியபடி தன் இடப்பக்கச் சடைத்திரி ஒன்றைப் பற்றி அறுத்தெடுத்து எரியிலிட்டார். “எழுக, என் வஞ்சமே! எழுக இருளே! எழுக என் நஞ்சே!” என்று  கூவினார். அவிகொண்டு எழுந்த அனலில் இருந்து கரிய உடல் ஒளிர அசுரப்பேருரு ஒன்று எழுந்து வந்தது.

KIRATHAM_EPI_37

இடத்தோளில் வைத்த தண்டமும் வலக்கையில் ஒளிரும் வாளுமாகத் தோன்றிய காருருவன் இடியோசை எழுப்பி கேட்டான் “தந்தையே, என்னிடம் எதை விழைகிறீர்கள்? எதன்பொருட்டு நான் இப்புவியிலெழுந்தேன்?” கசியபர் அவன் கொடுந்தோற்றம் கண்டு அஞ்சி பின்னடைந்தார். அவன் கூர்வாட்கள் போன்ற வளையெயிறுகளும்  ஈட்டிமுனைபோன்ற உகிர்களும் கொண்டிருந்தான். “எந்தையே, ஆணையிடுங்கள். நான் உங்கள் மைந்தன்” என்றான் அவன்.

“நீ என்னுள் இருந்தாயா? இல்லை. இது என் விழிமாயை. இவ்விருளை நான் இத்தனைநாள் சூடியிருக்க இயலாது” என்றார் கசியபர். “மைந்தரைக் கண்டு இவ்வண்ணம் சொல்லாத தந்தை உண்டா?” என்றான் விருத்திரன். “நீ என் மைந்தன் என்பதற்கு சான்று ஒன்று சொல்க” என்றார் கசியபர். “உங்கள் துணைவியரில் ஒருத்தியை அழைத்து வினவுக! என்னை அவள் அறிவாளா என்று” என்றான் விருத்திரன்.

தன் ஒளிமிக்க தேவியாகிய அதிதியை அழைத்துவரும்படி ஆணையிட்டார் கசியபர். வேதநிலைக்குள் நுழைந்த அதிதி விருத்திரனின் இருளுருவைத்தான் முதலில் கண்டாள். “ஏன் இவ்வுருக் கொண்டீர்கள்? எங்கே செல்லவிருக்கிறீர்கள்?” என்று கேட்டபடி வந்து அவன் கைகளை பற்றிக்கொண்டாள். விருத்திரன் உரக்க நகைத்து “அன்னையே, நான் உங்கள் கொழுநனல்ல, அவர் உருக்கொண்ட மைந்தன்” என்றான்.

கசியபர் “எப்படி நீ இவனை நான் என எண்ணினாய்?” என்று கேட்டார். அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “பெருஞ்சினம்கொள்கையில் உங்களை இத்தோற்றத்தில் பலமுறை கண்டிருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். உடல்தளர்ந்த கசியபர் “ஆம், நீ நானேதான்” என விருத்திரனிடம் சொன்னார். “என் பணியென்ன, தந்தையே?” என்றான் விருத்திரன்.

“மைந்தா, என் மைந்தர்களை வஞ்சத்தால் கொன்ற இந்திரனை நீ பழிதீர்க்கவேண்டும். அவனை வென்று இழுத்துவந்து இந்த வேள்விச்சாலை கம்பத்தில் கட்டவேண்டும். அவன் உளம் வருந்தி என் மைந்தருக்கு அன்னம் அளிக்கவேண்டும்” என்றார் கசியபர். “ஆணை!” என்று சொல்லி விருத்திரன் தலைவணங்கினான்.

பிரம்மகபாலம் என்னும் ஊரின் குகைக்குள் அனல்வெம்மைக்கு உடல்கூட்டி அமர்ந்திருந்த பிரசாந்தர் என்னும் அந்தணர் தன் முன் அமர்ந்திருந்த பிரசண்டன் என்னும் சூதனிடம் சொன்னார் “விருத்திராசுரன் உருக்கொண்ட கதை இது என்கின்றது விக்ரமேந்திரம் என்னும் தொல்காவியம். அந்தணர் ஏற்கும் நூல் இதுவேயாகும்.”

வெளியே மழை நிலைத்துப் பெய்துகொண்டிருந்தது. நீர்த்திரைக்குள் மின்னல்கள் அடங்கி ஒளிதுடித்து அணைந்தன. இடி போர்த்தப்பட்டதென ஒலித்தது. கபாலர் இன்னொரு சிவமூலிச்சுருளை பற்றவைத்துக்கொண்டு உடலை ஒருக்களித்துக்கொண்டார். பிரசண்டன் “கதைகள் வாள்களையும் கதைகளையும் போல. மின்னும் இடியும் எழ அவை மோதிக்கொண்டே இருக்கின்றன இப்பாரதவர்ஷத்தில்” என்றான். “சொல்க, உமது கதையை!” என்றார் பிரசாந்தர்.

“அந்தணரே, ஏழாண்டுகளுக்கு முன்பு நான் கராளம் என்னும் மலைச்சிற்றூருக்குச் சென்றிருந்தேன். இரு பெருமலையடுக்குகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் அவ்வூர் சுழன்று ஏறி மீண்டும் அதேயளவு இறங்கும் ஒற்றையடிப்பாதை ஒன்றில் பன்னிருநாட்கள் நடந்தாலன்றி அணுகமுடியாதது. அவ்வூரிலிருந்து ஆண்டுக்கொருமுறை ஒரு வணிகர்குழு கிளம்பி காட்டுக்கு வெளியே இருக்கும் சதவிருட்சம் என்னும் ஊரின் சந்தைக்கு வந்து உப்பும் பிறபொருளும் வாங்கிக்கொண்டு மீளும். பிறர் வேற்றுநிலத்தை அறிவதே இல்லை.”

“அவ்வண்ணம் சென்ற வணிகர்குழு ஒன்றுடன் நானும் சென்றேன்” என்று பிரசண்டன் சொன்னான். “அவர்களுக்கு நான் பாடிய பாடல் பிடித்திருந்தது. ஏழு நாட்களில் அவர்களின் மொழியைக்கற்று அம்மொழியிலேயே பாடத்தொடங்கினேன். அவர்கள் என்னை தங்களுடன் வந்துவிடும்படி கோரினர். அவ்வூர் முற்றிலும் குகைகளால் ஆனது. நூற்றெட்டு பெருங்குகைகள். அவற்றின் முன் பட்டைக்கற்களை அடுக்கி உருவாக்கிய சிறுகுகைகளும் இருந்தன.”

“அங்கிருந்த மக்களுடன் நானும் உடன்கலந்தேன். இனிய இரு மாதரை மணந்தேன். ஊனும் தேனும் கிழங்கும் கனியும் உண்டேன். மலைச்சுனை பெருகி விழுந்த அருவியில் நீராடினேன். கனவென அவ்வாழ்க்கையில் மகிழ்ந்திருந்தேன்” என்று பிரசண்டன் சொன்னான். “மூன்றாண்டுகள் அங்கு வாழ்ந்தேன். ஓராண்டு முடிந்தபின்னரே அவர்கள் வழிபடும் தெய்வத்தை மலையேறிச்சென்று கண்டேன். யானைவிலாவென எழுந்த கற்பாறையில் ஒட்டிக் கீழிறங்கிய கொடிகளைப் பற்றிக்கொண்டு விரிசல்களில் கால்வைத்து மேலேறிச் செல்லவேண்டும். திறன்மிக்க இளையோர் மட்டுமே அங்கு சென்றடையமுடியும்.”

“ஆண்டுக்கொருமுறை அவ்வாண்டு பிறந்த இளமைந்தரை தங்கள் தோள்களில் கட்டிக்கொண்டு மலையேறுவர். முதுபூசகரான கபாலர் இளையோரை மிஞ்சும் விரைவுடன் எழுந்து மேலே செல்வதைக் கண்டேன். விட்டில்களென ஏறிச்செல்லும் அவர்களை உயிரச்சத்துடன் நான் தொடர்ந்துசென்றேன். மேலே பாறைகள் மேலும் மேலுமென ஏறி வான் நோக்கி சென்றன. கரிய உடலில் திறந்த வாய் என அங்கு ஒரு குகை திறந்திருக்கக் கண்டேன்.”

“இதைப்போன்ற குகைவாயில் அது. உள்ளே ஏழு கிளைகளாக பிலவழி விரிந்து செல்கிறது. கைகூப்பியபடி இருளுக்குள் துயிலும் மூதாதையரை விழித்தெழக் கோரியபடி பூசகர் குகைக்குள் நுழைந்தார். பூசனைப்பொருட்களுடன் பிறர் தொடர்ந்துசென்றனர். பந்தங்களுடன் சென்றவர்களுக்குப் பின்னால் நானும் இருந்தேன். ஈரம் வழியும் தொல்குகைச்சுவர். அதில் கல்லோவியம் என அவர்களின் தொல்தெய்வம் நின்றிருக்கக் கண்டேன்.”

“ஒரு கையில் ஓங்கிய தண்டு. மறுகையில் வாள். வளைதேற்றை, கூருகிர், கொடுங்கண். சடைசரிந்த பெரும்பிடரி. அவர்கள் விருத்திரன் என்னும் மூதாதை என அத்தெய்வத்தை சொன்னார்கள்” என்றான் பிரசண்டன்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 36

பகுதி ஐந்து : மாகேந்திரம்

[ 1 ]

உணவருந்திவிட்டு ஜைமினியும் பைலனும் சுமந்துவும் சிரித்துப் பேசிக்கொண்டே வெளியே வந்தனர். “அன்னசாலை உணவுகள் இனியவை” என்றான் சுமந்து. “ஏனென்றால் உரிய பசியுடன் நாம் அவற்றை அணுகுகிறோம்.” பைலன் “வேதசாலை உணவுகள் ஆன்மாவுக்கானவை” என்றபின் ஜைமினியை நோக்கி புன்னகை செய்தான். “நான் பெரும்பசியுடன் சென்றுகொண்டிருக்கிறேன். ஆகவே ஆசிரியர் சுவையானவராகவே இருப்பார் என நம்புகிறேன்” என்றான் சுமந்து.

“வியாசர் வாழ்வது தெற்கே என்று எவர் சொன்னார்கள் உம்மிடம்?” என்று பைலன் கேட்டான். “நான் அவரைப்பற்றி மட்டுமே கேட்டுக்கொண்டு செல்கிறேன். ஒவ்வொருவரும் அவரைப்பற்றி ஒவ்வொரு செய்தியை சொல்கிறார்கள். திரௌபதியை ஐவரும் மணம்புரிந்துகொண்டபோது அவர் பாஞ்சாலத்தில் தோன்றி ஐவரையும் ஒருத்தி மணப்பது பிழையல்ல என்று பாண்டவர்களுக்கு அறிவுறுத்தினார் என்று ஒரு சூதன் பாடினான். அஸ்தினபுரியின் அவைக்களத்தில் நாற்களமாடல் நிகழ்வதற்கு முன்னர் அவர் அங்கே சென்று அது கூடாதென்று வலியுறுத்திச் சொன்னார் என்கிறார்கள்.”

“ஆம், அத்தனை கதைகளிலும் அவர் உரிய தருணங்களில் எல்லாம் தோன்றி அறிவுரை சொல்கிறார்” என்றான் பைலன். “அதை உண்மையெனக்கொண்டால் அவர் அஸ்தினபுரியின் நிலவறை ஒன்றில் வாழ்ந்துகொண்டிருக்கவேண்டும்.” சுமந்து சிரித்துக்கொண்டு “ஆனால் அவர் காட்டில் பாண்டவர்கள் வாழ்ந்தபோதும் நேரில் தோன்றி செல்வழி சொல்லியிருக்கிறார்” என்றான். “உண்மையில் திருதராஷ்டிரரும் பாண்டுவும் பிறப்பதற்கு முன்னரே அவர் அஸ்தினபுரிவிட்டு விலகிச்சென்றுவிட்டார். அவருடைய நுண்ணறிவு நிகழ்வதனைத்தையும் காட்டியமையால் அவர் தனிமையிலமர்ந்து தவம்செய்யச் சென்றார் என்கிறார்கள்.”

“அல்லது குற்றவுணர்ச்சியாகவும் இருக்கலாம்” என்றான் பைலன். “இருக்கலாம். குற்றவுணர்ச்சியிலிருந்துதான் பெருங்காவியங்கள் தோன்றுகின்றன” என்று சுமந்து சொன்னான். “புற்றுறைமுனிவரின் குற்றவுணர்ச்சியே முதற்காவியம்” என்றான் ஜைமினி. “நான் அவருடைய காவியத்தின் பகுதிகளை இளமையிலேயே வாசிக்கத் தொடங்கிவிட்டேன். மொழியென நானறிந்ததே அவருடைய சொற்களைத்தான். அவரிடமன்றி எங்கும் என் சித்தம் அமையாதென்று தோன்றியது” என்றான் சுமந்து.

ஜைமினி “அது அவரென்று எவருக்குத் தெரியும்? பெருந்தவளை என அவர் நீருள் எங்கோ மூழ்கியிருக்கிறார், குமிழிகளென காவியங்கள் மட்டும் கிளம்பிவருகின்றன என்பதை என்னால் நம்பமுடியவில்லை. அனைத்தும் சூதர்சொல்லாகவும் இருக்கலாமே?” என்றான். “இல்லை, அது அவர் சொற்களே” என்றான் சுமந்து. “அவருடைய சொற்களை என்னால் பல்லாயிரம் சொற்களுக்கு நடுவே முதல்செவியிலேயே சொல்லிவிடமுடியும். அவரன்றி பிறர் அந்த உயரத்திற்கு செல்லமுடியாது. தோழரே, விண்ணிலிருந்து செம்பருந்து உதிர்க்கும் ஒற்றை இறகு போதும், அது அங்கே அளாவிய முகிலையும் ஒளியையும் நாம் அறிவதற்கு.”

பைலன் சிரித்து “நீர் கவிஞர்” என்றான். “ஆம், நான் வியாசனின் மாணவன். தலைமுறைகள் என் சொற்களைப் பாடும், ஐயமே இல்லை அதில்” என்றான் சுமந்து. அந்தக் குரலில் எழுந்த நம்பிக்கையை உணர்ந்து பைலன் திரும்பி அவனைப் பார்த்தான். சுமந்துவின் முகம் அனல்கொண்டது போலிருந்தது. பைலன் பெருமூச்சுடன் “நீர் எவரென அறிந்திருக்கிறீர். நான் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்றான்.

அவர்கள் கொட்டகையை அடைந்தபோது சண்டனின் முழவின் உறைமட்டும் இருந்தது. “சூதர் எங்கே?” என்றான் பைலன். “யார்?” என்று சுமந்து கேட்டான். “எங்களுடன் வந்தவர். சூதர்களில் அவர் ஒரு பிட்சாடனர்” என்றான் பைலன். “ஆசாரங்களில்லாதவர். எதையும் அத்துமீறி மட்டுமே நோக்கும் துடுக்கர். ஆனால் கற்றவர். சொல்தேர்ந்தவர்” என்றான் ஜைமினி. “கற்று சொல்தேர்ந்தவர் அப்படித்தான் இருக்கமுடியும் போலும்” என்று சுமந்து சிரித்தான். “ஏன் முறைமைகொண்டு ஒழுகும் முனிவர்கள் இல்லையா?” என்றான் ஜைமினி சினத்துடன். “ஓர் அமைப்பை ஒட்டி ஒழுகும் எவரும் முனிவர்கள் அல்ல” என்றான் சுமந்து. ஜைமினி அவனை சிலகணங்கள் நோக்கிவிட்டு விழிதிருப்பிக்கொண்டான்.

“அமைப்புகளை விரும்புபவர்கள் எளிய மனிதர்கள். அவர்கள் தெப்பத்தைப் பற்றிக்கொண்டு நீந்த விழையும் கைதளர்ந்தோர். அமைப்பை பொருள்படுத்திக்கொள்ள அமைப்புமனிதர்களை அவர்கள் முனிவர்களென ஆக்கிக்கொள்கிறார்கள்” என்றான் சுமந்து. “ஜைமின்யரே, இங்குள்ள ஒவ்வொரு வேதநிலையிலும் ஒரு முனிவர் இருக்கிறார். நெறிநின்று இயங்கும் ஓர் உடல். மரபில் பொருந்தி இருந்துகொண்டிருக்கும் ஓர் உள்ளம். அதற்கப்பால் அவர்கள் ஏதுமில்லை. வயது முதிர்ந்தால் நாம் எவரையும் முனிவர் என சொல்லத் தொடங்கிவிடலாம். நமக்கு முதுமைமீது இருக்கும் அச்சமும் கனிவுமே அவரை அப்படி காட்டத்தொடங்கிவிடும்.”

“அறிதலென்பது மீறலால் அன்றி நிகழமுடியாது. தனித்து அன்றி அதை கொள்ள முடியாது. தன் தனிமையைப் பகிர்பவரிடமன்றி அதை அளிக்கவும் முடியாது” என்றான் சுமந்து. பின்னாலிருந்து முழவுடன் வந்த சண்டன் “முழவின் தோலை அடுப்புநெருப்பில் காட்டி சற்று காயவைத்தேன்” என்றான். “நாளைக் காலைக்குள் காய்ந்துவிடுமே, ஏன் உடனே?” என்றான் பைலன். “இங்கே வணிகர்கள் இருக்கிறார்கள். என்னை பாடச்சொல்வார்கள். வேறு சூதர்களும் இல்லை என்பதை நோக்கினேன்” என்றபின் “இவர் யார்?” என்றான்.

சுமந்து தன்னை அறிமுகம் செய்துகொண்டதும் அவன் உரக்க நகைத்து “நன்று, ஓடைகள் நதிதேடிச் செல்லும் என்கின்றது தொல்மொழி” என்றான். “நதி ஓடி ஓடி உருவாக்கும் ஆழமென்பது ஓடைகளுக்கான பொறியே.” பைலன் “நாங்கள் அர்ஜுனனின் திசைவெற்றி குறித்த கதைகளைத்தான் பேசிக்கொண்டே வந்தோம்” என்றான். ஜைமினி “அவை பெரும்பாலும் புனைவுகள். கவிஞர் தங்களுக்குத் தோன்றியதை சொல்லிவைக்கிறார்கள்” என்றான். சுமந்து “ஆம், நானும் அக்கதைகளைக் கேட்டபடியே வந்தேன். மேற்குக்கடற்கரையில் காண்டீபத்துடன் நின்றிருக்கும் பார்த்தனை எதிர்க்க வெண்ணிறப் பிடரிமயிர் கொண்ட பன்னிரண்டாயிரம் நீலப்புரவிகளிள் பெரும்படையுடன் வருணன் வந்த சித்திரம் எனக்கே பேரெழுச்சியை ஏற்படுத்தியது” என்றான்.

“பிறகு?” என்றான் பைலன். “அலைகளின் முடிவின்மையால் வருணன் எதிர்க்க கரைமணல்களை அம்புகளாக்கி அர்ஜுனன் அவனுடன் போரிட்டான். அலைகள் வல்லமை மிக்கவை. ஆனால் மணல்களின் எண்ணிக்கைக்கும் ஒருமைக்கும் முன் அவை தோற்றே ஆகவேண்டும். வருணனை வென்று கயிற்றம்பைக் கொண்டு அர்ஜுனன் மீண்டான்” என்றான் சுமந்து. “ஆம், நல்ல கற்பனையே” என்றான் பைலன். “குபேரனை அவன் வென்றது எடைமிக்க கற்பாறைகளால் என்று அந்தக் கதையில் வந்தது. குபேரனின் படைக்கலங்களான பொன்னும் வெள்ளியும் இரும்பும் அழிபவை. அழிவற்ற கல்லை அவற்றால் வெல்லமுடியவில்லை” என்றான் சுமந்து.

பைலன் “யமனை எப்படி வென்றான்?” என்றான். “ஒரு புல்வேரை அவன் தன் படைக்கலமாக ஆக்கினானாம். யமன் இப்புவியில் எதை அழித்தாலும் புல்லை அழிக்கமுடியாது. புல்வேரின் முன் யமனின் அனைத்துப் படைக்கலங்களும் பொருளிழந்தன. அவனுடைய தண்டத்தை அம்பெனக் கொண்டு அர்ஜுனன் புவிமீண்டான்” என்றான் சுமந்து. சண்டன் “நன்று, கவிஞர்கள் கற்பனைசெய்யத் தேறியிருக்கிறார்கள்” என்றான். “அர்ஜுனனின் வெற்றிக்கதையை கேட்டுக்கேட்டு மக்களுக்கு சலிக்கவில்லை” என்றான் ஜைமினி. “சூதர்களின் சொல்லில் வாழும் அர்ஜுனர்கள் பல்லாயிரம்பேர். அத்தனைபேரின் எடையையும் தாங்கி மண்ணில் வாழ்கிறான் அவ்வெளிய மனிதன்” என்றான் சண்டன்.

வணிகர்களில் ஒருவன் “சூதரே, உங்களுக்காகவே காத்திருக்கிறோம்” என்றான். “முழவு நா கொண்டுவிட்டதல்லவா?” என்றான் இன்னொருவன். “நா தளர்ந்திருந்ததென்றால் சற்று யவன மதுவை அதன்மேல் பூசுக! நா துடித்து எழக்காண்பீர்” என்றான் பிறிதொருவன். அவர்கள் நகைத்தனர். உணவுக்குப்பின் அனைவருமே வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தனர். வெளியே மழைக்காற்று சுழன்று வீசியது. சிலர் மரக்கட்டில்களில் பொதிகளை தலைக்கு வைத்துக்கொண்டு துயின்றுகொண்டிருந்தனர். சண்டன் எழுந்து அவர்களை அணுகி “என்ன கதை சொல்ல?” என்றான். “இளைய பாண்டவரின் கதைதான். அவர் திசைவென்ற வரலாறு” என்றான் ஒருவன்.

“கேட்டுக்கேட்டு சலித்துவிட்டேன்… புதிய கதை ஏதேனும் சொல்!” என்றான் முதிய வணிகன் ஒருவன். “விருத்திராசுரனை இந்திரன் வென்ற கதையைச் சொல்லும், சண்டரே” என்றான் பைலன். “விருத்திராசுரன் கதையா? அது மிகமிகத் தொன்மையானதல்லவா? ஏட்டுக்கல்விக்கு முன்னரே கேட்டறிந்த கதை” என்றான் ஒரு வணிகன். “என்ன கதை கேட்டீர்கள்?” என்றான் சண்டன். “மாமுனிவராகிய காசியப பிரஜாபதிக்குப் பிறந்தவன் விருத்திரன். அவர் தனு என்னும் மனைவியில் பெற்றெடுத்த தானவர்களில் ஒருவன்” என்றார் ஒரு வணிகர். “அல்ல, அவன் த்வஷ்டாவால் உருவாக்கப்பட்டவன்” என்றார் இன்னொரு வணிகர்.

சண்டன் நகைத்து “ஊருக்கொரு கதை உண்டு, வணிகர்களே. விருத்திராசுரனை இந்திரன் கொன்றான் என்பதில் மட்டும் பிறிதொரு கருத்தில்லை” என்றான். “நீரே சொல்லும்” என்றான் ஒரு வணிகன். சண்டன் “கதை என்பது நீர் போல. நேற்று அருந்திய நதி இன்றுள்ளது அல்ல. நேற்றிருந்த விருத்திரன் அல்ல இன்று வாழ்பவன். சொல் நாளும் வளர்வது, வணிகர்களே” என்றான். “ஆகவே சொல்லை ஓம்புக! சொல் வேள்வியெரி போல. நெய்யும் அவியும் சமித்துமிட்டுப் பேணுபவர்களிடமே அது வாழும்.” வணிகர்களில் மூத்தவர் நகைத்து “எந்தக் கதையும் நாணய ஒலியில் இருந்தே தொடங்குமென நாங்கள் அறிவோம், சூதரே” என்றார்.

அவர்கள் அளித்த நாணயங்களை வாங்கி தன் மடிச்சீலையில் பொதிந்து செருகிக்கொண்ட பின்னர் சண்டன் கதையை தொடங்கினான். “அழிக்கப்பட்ட ஒன்று அழிவற்றதாகும் விந்தை என்ன? வணிகர்களே, அழியாது பேணி நெஞ்சோடு சேர்த்து மானுடம் கொண்டுசெல்வதுதான் என்ன? அழிவன சூழ்ந்தது இப்புவி. அழிவென அழிவென கூவிக்கொண்டிருக்கிறது காலம். சூழ்ந்து பறக்கும் பெருங்காற்று கற்பாறைகளை கரைத்துக்கொண்டிருக்கிறது. ஒளியற்ற வெம்மையற்ற நெருப்பொன்றில் எரிந்துகொண்டிருக்கின்றன அனைத்தும்.”

“இப்புவியில் முற்றழிவது எது? பிழையுணர்வு வளர்கிறது. தன்னிரக்கம் குமைகிறது. வெற்றிக்களிப்பு மிகுகிறது. வஞ்சம் கரந்து ஊறிப்பெருகுகிறது. அழிவதுதான் என்ன? அழிவின்மை என்பது நலனா தீதா? வணிகர்களே, இங்கு அழியாதது இருளா ஒளியா? அழிந்தழிந்து செல்லும் வாழ்வுக்குமேல் அழியாமல் நின்றிருக்கும் தெய்வங்களின் பிறப்புவாயில் என்ன? ஓடும்நதிமேல் படர்ந்த விண்முகில்களென தனிவழி சென்றுகொண்டிருக்கின்றன தெய்வங்கள். தெய்வங்களை வழிபடுக! அவை நம் அச்சங்களின் கூர். நம் ஐயங்களின் இருள். நம் வஞ்சங்களின் கசப்பு. நம் துயர்களின் எடை. அவை வாழ்க!”

[ 2 ]

பிரம்மகபாலம் என்னும் மலைப்பாறைக்கு மேலிருந்த குகையொன்றில் ஒரு மழைக்குளிர்காலத்தில் மூவர் சந்தித்துக்கொண்டனர். ஒருவர் மெய்ச்சாம்பல்பூசி கரித்தோலுடுத்து மூவிழிதிறந்து முப்புரிவேல் ஏந்திய பெயரற்ற பிச்சாண்டவர். இன்னொருவர் தருப்பைச்சுருளும் துணிப்பொதியும் கைக்கோலும் கொண்டு அயலூர் செல்லும் வைதிகர். பிரசாந்தர் என்பது அவர் பெயர். மூன்றாமவன் முழவேந்தி கொம்பு இடைகட்டி கழியில் தொங்கும் பொதியுடன் வழிநடைசெல்லும் சூதன். அவன் பெயர் பிரசண்டன்.

குகைக்கு வெளியே இளமழை பொழிந்துகொண்டிருந்தது. உள்ளே காட்டுவிறகை அடுக்கி எரிமூட்டி வெப்பத்தை நிறைத்தான் சூதன். வெளிக்குளிர் உள்ளே நுழையாமலிருக்க மரக்கிளைகளை வெட்டிச் சாய்த்து அதன்மேல் தழைகளை அடுக்கி கதவமைத்திருந்தனர். செவ்வொளியே குளிரை விரட்டியது. குகைச்சுவர்கள் அனல்கொண்டதும் அவர்களின் இறுகிய உடல்கள் தழைந்தன.

KIRATHAM_EPI_36

மெல்லிய சோர்வுடன் கண்களை மூடிக்கொண்டு தரைப்புழுதிமேல் தன் ஆடையை விரித்து படுத்துக்கொண்ட பிரசாந்தர் “இனியபொழுது. இவ்விரவில் தெய்வங்கள் நம்மைச் சூழ்ந்து நிற்பதாக!” என்றார். அச்சொல் முடிவதற்குள் கதவுத்திரையின் இடைவெளியினூடாக குகையின் ஆழங்களனைத்தும் ஒளிகொண்டதிர மின்னலொன்று வெட்டி அதிர்ந்து அணைந்தது. இடியோசை எழுந்து குகைக்குள் பெருமுழக்கமொன்று முழவின் ரீங்காரமென நீடித்தது.

பிரசாந்தர் திரும்பி நோக்கி “இக்குகை மேலும் பலகாதம் உள்ளே செல்கிறது போலும்” என்றார். “இது குகையல்ல அந்தணரே, பிலம். மண்ணுக்குள் ஓடும் பேர்விரிசல் இது. இதற்குள் ஆறுகள் ஓடக்கூடும். பலநூறு கிளைகளுடன் இது விரிந்து செல்லக்கூடும்.” பிறிதொரு மின்னல் அந்தணரை ஒளிர்ந்தணையச் செய்தது. திரும்பிநோக்கி இடியோசைக்காக அவர் காத்திருந்தார். இடியெழுந்து அவ்வோசை இருளுக்குள் உருண்டோடிச் செல்வதை கண்டார். “நெடுந்தொலைவு” என்றார். “ஆம், இருளுக்குள் ஓசை சென்றுகொண்டே இருக்கிறது, மீளவில்லை” என்றான் சூதன்.

பிச்சாண்டவர் அங்கிலாதவர் போல அமர்ந்திருந்தார். அவர் கையில் சிவமூலிகை புகைந்துகொண்டிருந்தது. விழிகள் அதன் அனலுடன் இணைந்து கனன்றணைந்தன. “பாதாளம்வரை செல்லும்போல” என்று பிரசாந்தர் புன்னகைத்தார். “ஆம், பாதாளமூர்த்திகள் வெளியே வரும் வழியாக இருக்கலாம்” என்றான் சூதன். பிரசாந்தர் அச்சத்துடன் “வெறும்கதைகள்” என்றார். “பாதாளமென்று ஒன்று இருந்தால் அது வெளிவந்துதானே ஆகவேண்டும்?” என்றான் சூதன். அந்தணர் சரியாக புரிந்துகொள்ளாமல் “ஆம்” என்றார்.

“அனைத்தும் புதைந்துகொண்டே இருக்கின்றன, அந்தணரே. புதைந்தவை சென்றடையும் ஆழம் ஒன்று இருக்கும். மிச்சமின்றிப் புதைபவை அங்கே முழுதமையக்கூடும். மிச்சமென சில கொண்டவை அவற்றை விதைமுளையெனக் கொண்டு மேலெழுந்து வரும்.”  பிரசாந்தர் விழிகள் அசைவிழந்திருக்க சூதனை நோக்கியபின் பெருமூச்சுடன் “ஆம்” என்றார். பிச்சாண்டவர் அங்கு நிகழ்ந்த சொற்களுடன் தொடர்பற்றவர்போல வெடித்து நகைத்து இருமி உடல்குலுங்கி அமைந்து மீண்டும் புகையை ஆழ இழுத்தார்.

மீண்டுமொரு மின்னல் எழுந்து குகைக்குள் தழைநிழல்களின் காடு ஒன்றை கூத்தாட வைத்து அணைந்தது. குகைச்சுவரில் பதிந்திருந்த கற்களின் மேல் மின்னலின் ஒளி சற்றுநேரம் எஞ்சி விழிகளென தெரிந்து அணைந்தது. பிரசாந்தர் “இந்திரனே, மருத்வானே, பிதௌஜஸே, பாகசாசனனே, விருத்தசிரவஸே, சுனாசீரனே, புருஹூதனே, புரந்தரனே, ஜிஷ்ணுவே, லேகர்ஷபனே, சக்ரனே, சதமன்யூவே, திவஸ்பதியே, சுத்ரமாவே, கோத்ரஃபித்துவே, வஜ்ரியே, வாசவனே உன்னை வணங்குகிறேன்” என்று சொல்லி தன் தலைமேல் கைகளால் மும்முறை குட்டிக்கொண்டார்.

இடி உறுமியது. மின்னல் கூர்வாள்கள்போல குகையிருளில் நீண்டு சுழன்றணைந்தது. மேலும் உரத்த குரலில் “நீ விருதஹா, விருஷா, வாஸ்தோஷ்பதி, சுரபதி, வலராதி, சசீபதி, ஜம்பஃபேதி, ஹரிஹயன், ஸ்வராட், நமுசிசூதனன், சம்கிரந்தனன், துஞ்ச்யவனன். நீ வாழ்க!” என்றார். தலைக்குமேல் கைகளைக் கூப்பி “துராஷாடன் அல்லவா நீ? மேகவாகனனே, ஆகண்டலனே, சகஸ்ராக்‌ஷனே, ருஃபுக்‌ஷாவே என்னை காத்தருள்க! எங்களுக்கு துணைநின்றருள்க!” என்றார்.

சூதன் “இந்திரநாமங்கள்” என்றான். “ஆம், இடிமின்னலில் இருந்து அவை நம்மை காக்கின்றன” என்றார் பிரசாந்தர். சூதன் நகைத்துக்கொண்டு “அஸ்தினபுரியின் குடிகள் இந்திரன் மைந்தனாகிய அர்ஜுனனின் பெயர்களை சொன்னால் போதுமென நினைக்கிறார்கள்” என்றான். அந்தணர் “பண்டு விருத்திராசுரனைக் கொன்று பிளந்த மின்படை அவன் கையிலுள்ளது. சூதரே, இதோ மின்னி அணைவது அதன் ஒளிதான்” என்றார்.

“இருளே உருவான அரக்கன். அவனைக் கொன்றது மின்னலெனும் வாள். அவன் இடியோசையென ஒலியெழுப்பி விழுந்தான். இருளுக்குள் கரைந்து மறைந்தான். இருள்செறியும் இடங்களில் அவன் எழுந்து வருகிறான். அப்போது விளக்கென, வேள்விச்சுடரென இந்திரனை ஏற்றுவோம். அவன் நம்மை அவன் மடியில் வைத்துக் காப்பான்” என்றார் பிரசாந்தர்.

பிச்சாண்டவர் மீண்டும் உரக்க நகைத்து இருமினார். “இவர் துயில்வதே இல்லை. இந்த அனலை உண்டபடி எப்போதும் செவ்விழி திறந்து விழித்திருக்கிறார்” என்றார் அந்தணர். “அவர் மூன்றாம் விழி துயிலும்போலும்” என்றான் சூதன். மின்னுடன் இடியோசை எழ பிரசாந்தர் உடலை குறுக்கிக்கொண்டு “மழைக்கால இடிக்கு இத்தனை ஒலியிருக்காது. இன்று வான்கிழிவதுபோல முழங்குகிறது” என்றார்.

“அந்தணரே, விருத்திரனை வெல்ல ஒருபோதும் இந்திரனால் முடியாது என்று அறிக! அவர்கள் என்றுமிருப்பார்கள். அப்போர் முடிவடைவதேயில்லை” என்றான். “விருத்திரன் கொல்லப்பட்டான் என்பதே தொல்கதை” என்றார் பிரசாந்தர். “சொல்க, அக்கதை என்ன?” என்றான் சூதன். “முன்பு இப்புவியை ஆண்டிருந்த சித்ரகேது என்னும் ஷத்ரிய அரசனின் மறுபிறப்பே விருத்திரன்” என்றார் பிரசாந்தர். “சொல்க!” என்று சூதன் சொன்னான்.

“சித்ரபாகம் என்னும் நாட்டை அவன் ஆண்டுவந்தான். ஏழாண்டுகள் இல்லறம் கண்டபின்னரும் அவன் தேவி கிருத்யத்யூதி கருவுறவில்லை. கொடையும் நோன்பும் இயற்றியும் பயனிருக்கவில்லை. அவர்கள் மாமுனிவராகிய அங்கிரசரிடம் சென்று தங்களுக்கு மைந்தனை அளிக்கவேண்டுமென கோரினர். மைந்தன் இல்லாது தன் நாடும் குடியும் அழியுமென்றால் மூதாதையருக்கு பழிசேரும் என்றும் அதை தவிர்க்கும்பொருட்டு உயிர்துறந்து பேயென அலைவதே மேலென்று எண்ணுவதாகவும் சித்ரகேது கண்ணீருடன் சொன்னான்” அந்தணர் சொல்லலானார்.

அங்கிரசர் அவர்களிடம் சொன்னார் “மைந்தனை அளிப்பதும் எடுப்பதும் மானுடரால் இயல்வதல்ல. தெய்வங்களை கோருவோம். உயிருக்கு இறைவனை அழைக்கிறேன். அவனிடம் கேள்!” சித்ரகேது இயற்றிய பெருவேள்வியில் எழுந்த யமன் “நான் எடுப்பவன், அளிப்பவன் அல்ல. உயிரளிக்கும் ஆற்றல்கொண்டவர் ஒருவரே. படைப்பு முதல்வனாகிய பிரம்மனிடம் கோருக!” என்றான்.

வேள்வி தொடர்ந்தது. அவியுண்டு எழுந்த நெருப்பில் தோன்றிய பிரம்மன் “பிறப்பும் இறப்பும் துலாநிகர் கொண்டது, முனிவரே. அந்நெறிகளை பிரம்மனும் மீறமுடியாதென்றறிக! இவன் குருதியில் மைந்தர் பிறக்கமுடியாது. இவனது முற்பிறவிகளிலேயே அது வகுக்கப்பட்டுவிட்டது” என்றார். “மாட்டேன், மைந்தன் பிறக்காமல் அமையமாட்டேன். அருவேள்வி எதுவானாலும் செய்யுங்கள். என் இறுதிச்செல்வத்தையும் ஈடுவைக்கிறேன். கடுந்தவம் எதுவானாலும் என் இறுதிக்குருதிவரை அளிக்கிறேன்” என்று சித்ரகேது கூவினான்.

“வேறுவழியில்லை, அரசே” என்றார் அங்கிரசர். “அதை நானறியவேண்டியதில்லை. நான் விழைவது மைந்தனை” என்று அவன் சொன்னான். “விழைவுகளின் அரசன் இந்திரனே. வேள்விக்கு கட்டுப்பட்டவன். அவனிடம் கோரலாம்” என்றார் அங்கிரசர். வேள்விமரத்தில் மின்னெனப் பாய்ந்து எரியென எழுந்த இந்திரனிடம் அரசனின் விழைவை அவர் உரைத்தார். “தேவர்க்கரசே, அளிகொள்க! அரசனுக்கு அருள்க!” என்றார்.

“படைக்கப்படாததை உருவாக்க இயலாது என்னால்” என்றான் இந்திரன். “அளிகொள்க! அரசே, அளிகொள்க” என்று சித்ரகேது கூவியபடி மண்டியிட்டு கைநீட்டி இரந்தான். “விண்ணாளும் தேவர்களில் ஒருவனை இவன் மைந்தன் என மண்ணுக்கு அனுப்புகிறேன். இவன் தேவியிடம் அவன் ஊனுடல்கொண்டு பிறப்பான். மண்ணில் அறுபதாண்டுகாலம் வாழ்ந்து சிறந்து விண்மீள்வான்” என்றான் இந்திரன். “ஆனால் இவன் என் மைந்தன் என ஒருகணமும் நீ எண்ணலாகாது. எண்ணும் அக்கணம் அம்மைந்தன் உயிர்நீப்பான்.”

சித்ரகேது “ஆம், ஆணை! அவ்வாறே, ஆணை!” என்று கூவினான். அங்கிரசர் “எண்ணிச்செய்க, அரசே!” என்றார். “இல்லை, இது எனக்களிக்கப்படும் பேரருள்…” என்றான் சித்ரகேது. “அரசே, நாம் மாந்தர். தேவர்கள் அல்ல. அவர்களுடைய வாள்முனைகளின் உலகு” என்றார் அங்கிரசர். “ஆம், வாள்முனையில் எறும்பு ஊரும். அது அஞ்சவேண்டியதில்லை” என்றான் சித்ரகேது. “தேவர்க்கரசே, இதோ சொல்லளித்தேன். எனக்கு மைந்தனை அருள்க!” இந்திரன் “அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி மீண்டான்.

சித்ரகேதுவின் மனைவி கருவுற்று மைந்தன் ஒருவனை ஈன்றாள். சர்வஜித் என்று அவனுக்கு பெயரிட்டனர். பொன்னொளிகொண்ட உடலும் மணிவிழிகளும் கொண்ட அழகனாக இருந்தான் அம்மைந்தன். அவன் பிறந்த கணமே வயற்றாட்டியரால் அங்கிருந்து விலக்கப்பட்டான். அன்னைக்கு அவன் முகமே காட்டப்படவில்லை. அவனுக்கு அமுதூட்ட முலைததும்பும் செவிலியர் வெளியே காத்துநின்றிருந்தனர்.

அரசனும் தேவியும் அவனை ஒருபோதும் நேரில் பார்க்கவேயில்லை. ஒருகணமேனும் தன் மகன் அவன் என எண்ணிக்கொள்ளலாகாதென்பதை அவன் கருவில் இருந்தபோதே தங்களுக்குள் சொல்லி உறுதிகொண்டு அதையே தவமெனச் செய்து அகத்தை பயிற்றுவித்திருந்தனர். அம்மைந்தனைப் பற்றிய ஒரு செய்தியும் தங்கள் செவிக்கு வரக்கூடாதென்று அவர்கள் ஆணையிட்டிருந்தனர். அவன் அறியாமலும் அவர்களின் விழிமுன் சென்றுவிடக்கூடாதென்று அனைவரும் நெறிகொண்டிருந்தனர்.

மைந்தனை மறக்க அரசன் அரசப்பணிகளில் கணமிடைவெளியின்றி மூழ்கினான். மாலையில் களைத்து தளர்நடையிட்டுச் சென்று படுக்கையில் விழுந்து அக்கணமே துயின்றான். காலையில் அலுவல்செய்தியொன்றுடன் தன்னை எழுப்பவேண்டுமென அமைச்சர்களுக்கு அவன் ஆணையிட்டிருந்தான்.

மைந்தனை எண்ணாமல் கடக்க தேவி ஒரு வழி கண்டுகொண்டாள். ஒரு மரப்பாவையை அவள் தன் மகன் என எண்ணினாள். அதற்கும் சர்வஜித் என்று பெயரிட்டாள். அந்தப் பாவையை நெஞ்சோடணைத்து அமுதூட்டினாள். கொஞ்சிக் கனிந்து குதலை பேசினாள். ஆடையும் அணியும் அணிவித்து மடியிருத்திக்கொண்டாள். அருகே படுக்கவைத்து துயின்றாள். அதையே கனவிலும் கண்டாள். பாவை அவளுக்குள் ஊறிய முலைப்பால் அனைத்தையும் உண்டது. அவள் உதடுகளில் எழுந்த முத்தங்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டது. அவள் கனவிலும் அதுவே வந்தது. அவள் மெல்ல தன் மைந்தன் இருப்பையே மறந்தவளானாள்.

அகத்தளத்தில் அன்னையையும் தந்தையையும் அறியாமல் வளர்ந்தான் சர்வஜித். அவனுக்கு ஒரு வயதானபோது ஒருநாள் சேடியொருத்தி அவனை கொற்றவை ஆலயத்திற்கு கொண்டுசென்றாள். அங்கே விளையாடிக்கொண்டிருந்த மைந்தன் அவ்வழி சென்ற நாயொன்றைக் கண்டு அதைத் துரத்தியபடி வெளியே சென்றான். மறுதிசையில் சேடியர் தேடிப்பதைத்து கூச்சலிட்டுக்கொண்டிருக்க மையச்சாலையில் இறங்கி அவன் கூட்டத்தில் கலந்தான். கூட்டத்தின் அலையால் உந்திச்செல்லப்பட்ட மைந்தன் அதில் மகிழ்ந்து துள்ளிக்கொண்டிருந்தான்.

அப்போது குலத்தாரின் அவைக்கூட்டம் முடித்து அவ்வழியே தேவியுடன் சென்ற சித்ரகேதுவின் தேர்முன் அவன் வந்தான். தேவி அறியாமல் பதறி எழுந்து “என் மகன்!” என்று கூவினாள். அவள் மடியிலிருந்த பாவை கீழே விழுந்தது. அதை காலால் தட்டி வீசிவிட்டு பாய்ந்து ஓடும் தேரிலிருந்து இறங்கி அவனை அள்ளி நெஞ்சோடணைத்து முத்தமிட்டு “என் மகன்! என்மகன்!” என்று அவள் அழுதாள். அருகே நின்ற சித்ரகேது கைகால்கள் பதற தேரை பற்றிக்கொண்டான்.

அன்றிரவே அம்மைந்தன் கடும்சுரம் கண்டு இறந்தான். அவன் சடலத்தருகே நெஞ்சறைந்து தலைமோதி கதறிக்கொண்டிருந்தாள் அன்னை. பித்தனைப்போல வெறித்து நின்றிருந்த சித்ரகேது ஒரு கணத்தில் பாய்ந்து மைந்தனை கையிலெடுத்துக்கொண்டு ஓடினான். “அரசே! அரசே” என்று கூவியபடி அமைச்சரும் பிறரும் பின்னால் ஓடினர். தேரிலேறி “செலுத்துக, காட்டுக்கு!” என்று ஆணையிட்டான். “விரைக! விரைக!” என்று கூவிக்கொண்டே இருந்தான்.

தேர் சென்று அங்கிரசரின் குருநிலை முன் நின்றது. இறங்கி ஓடி மைந்தனின் உடலை முனிவர் முன் இட்டு அவன் கூவினான் “நான் ஒருகணமும் எண்ணவில்லை. ஒருகணமும் இவனை உரிமைகொள்ளவில்லை. இவன் உயிருடலை நான் தொடவே இல்லை.” அங்கிரசர் “ஆம்” என்றார். “என் துணைவி செய்த பிழைக்கு என்னை ஏன் தண்டிக்கின்றான் தேவர்க்கிறைவன்? நான் எண்ணவில்லை. மைந்தன் என்று இவனை கொள்ளவே இல்லை.” நெஞ்சில் ஓங்கி அறைந்து அவன் கண்ணீருடன் அலறினான். “தெய்வங்கள் சொல்க! அறமென நின்றிருக்கும் மூதாதையர் சொல்க! தேவர்க்கரசன் அறமுள்ளவன் என்றால் இங்கெழுக… நான் எண்ணவே இல்லை.”

“ஆனால் அவள் உன் அறத்துணைவி. அவள் எண்ணியது நீ எண்ணியதேயாகும்” என்றார் அங்கிரசர். “அவ்வண்ணமென்றால் அவளை நான் நீங்குகிறேன். அவள் என் துணைவியல்ல என்று இப்போதே அறிவிக்கிறேன். இந்த அனல் சான்றாகுக! அவள் என் துணைவியல்ல என்று தெய்வங்கள் அறிக! அவள் என் துணைவி அல்ல என்று மூதாதையர் அறிக! அவள் என் துணைவியல்ல என்று குலமும் குடியும் சுற்றமும் அறிக! ஆம் ஆம் ஆம்” என்றான். நெருப்பு எழுந்து தழலாடி அதை ஏற்றது.

“தேவர்க்கரசே, இது உனக்கு ஏற்புடையதென்றால் இம்மைந்தன் எழுவானாக!” என்றார் அங்கிரசர். துயிலில் இருந்து என மைந்தன் எழுந்து தந்தையை நோக்கினான். அவனை நோக்காமல் திரும்பி அப்பால் சென்ற சித்ரகேது “அவனை அகத்தளத்திற்கு கொண்டுசெல்க!” என ஆணையிட்டான். “வேந்தே, நீ அரசமுனிவனாக ஆகமுடியுமென்று உன் பிறவிநூல் சொல்கிறது. பற்றறுத்து மீளாமல் உனக்கு அது இயல்வதல்ல என்பதனாலேயே இது நிகழ்ந்தது என்று கொள்க! பற்றுவனவற்றில் பெரும்பற்று மைந்தனே. அதை வென்றாய். இனி நீ அடைவன முடிவற்றவை. நீ வாழ்க!” என்றார் அங்கிரசர்.

“அங்கிரசரின் சொல் நிலைத்தது. அவன் முடிவின்மையை அடைந்தான்” என்றார்  பிரசாந்தர். “முடிவின்மை என்பது இப்பெரும் ஊசலின் இருபக்கங்களிலும் உள்ளது. அவன் ஒளிர்ந்து அதை அடையவில்லை. இருண்டு அடைந்தான். அவன் தேடியது திரண்டு அவன் தெய்வமாகவில்லை. அவன் கரந்தது கூர்ந்து அவன் அசுரன் ஆனான். அவனே விருத்திராசுரனாகப் பிறந்தான் என்கின்றனர் தொல்நூலோர்.”