மாதம்: ஒக்ரோபர் 2016

நூல் பன்னிரண்டு – கிராதம் – 12

[ 14 ]

யக்‌ஷவனத்திலிருந்து பதினெட்டுகாதம் தொலைவிலிருந்த அஸ்வபக்ஷம் என்னும் சோலை நடுவே நீர் நிறைந்திருந்த அஸ்வபாதம் என்னும் சுனைக்கு புலரியெழும் வேளையில் அர்ஜுனன் வந்தான். தனது வில்லையும் அம்புகளையும் அங்கிருந்த பாறை மேல் வைத்துவிட்டு சேறு வழுக்கிய சுனை ஓரம் மெல்ல நடந்து நீர்நுனி அலையும் விளிம்பை அடைந்து குனிந்து அள்ளி முகம் கழுவிவிட்டு அருந்துவதற்காக மீண்டும் ஒருமுறை நீரை அள்ளியபோது சுனைநீர் கொப்பளித்து அலையெழுந்து வந்து அவன் கால்களை நனைத்தது.

வியந்து அவன் விழிதூக்க நீருக்குள்ளிருந்து கூப்பிய கைகளுடன் சித்ரசேனன் எழுந்து நின்றான். அவனருகே அவன் தேவி சந்தியை பொன்னிறவடிவில் நின்றாள். கந்தர்வன் “இளைய பாண்டவரே, உங்களால் அடைக்கலம் அளிக்கப்பட்ட கந்தர்வனாகிய சித்ரசேனன் நான். என்னைக் கொன்றழிக்க இளைய யாதவர் படையாழியுடன் வந்துவிட்டார். உயிரஞ்சி உங்கள் வில்நிழல் தேடி வந்துள்ளேன்” என்றான். அர்ஜுனன் “நன்று, என் சொல் அவ்வண்ணமே உள்ளது” என்றான். “நீங்கள் இளைய யாதவரின் துணைவர் அல்லவா?” என்றாள் சந்தியை. “நான் தனியன்” என்று அவன் சொன்னான்.

“இச்சுனைக்குள் மறைந்திருங்கள், கந்தர்வரே. உங்கள் தேவியும் உடனிருக்கட்டும். இக்காட்டை என் வில்லால் அரணமைத்துக் காப்பேன். என்னைக் கடந்து இதற்குள் எவரும் நுழைய முடியாது என்று உறுதி கொள்ளுங்கள்” என்றான். அவனை வணங்கி மீண்டும் நீருக்குள் புகுந்து நிழலென அசைந்து மறைந்தான் சித்ரசேனன். சுனையின் நீர்வாயில்கள் மூடின. அது வானை தன்மேல் பரப்பிக்கொண்டது.

அர்ஜுனன் தன் அம்புத்தூளியைத் தோளிலிட்டு வில்லை ஏந்தியபடி வந்து அஸ்வபக்ஷத்தின் முகப்பில் இருந்த பாறை ஒன்றின்மீது ஏறி கீழ்த்திசையை நோக்கியபடி இளைய யாதவரின் வரவுக்காக காத்திருந்தான். அவன் குழலை காற்று அசைத்தது. அவன்மேல் காலைவெயில் ஒளிமாறிக் கடந்துசென்றது. அசையா மரமென அவன் தொலைவில் நின்று நோக்குகையில் தோன்றினான். அவனருகே காண்டீபம் துணைவன் என நின்றிருந்தது. அதில் அவன் கைபட்ட இடம் தேய்ந்து தழும்பாகி ஒளிகொண்டிருந்தது.

மரங்களின் நிழல்கள் காலடியில் தேங்கிக்கிடந்த உச்சிப்பொழுதில் மலைச்சரிவில் இளைய யாதவர் புதர்ச்செறிவிலிருந்து வெளிவருவதை அர்ஜுனன் கண்டான். வெயிலுக்கு மயங்கி சோலைகளுக்குள் ஒண்டியிருந்த பறவைகள் எழுந்து சிறகடித்து வானில் சுழன்றன. ஒரு காட்டுநாய் ஊளையிட அதன் தோழர்கள் ஏற்றுப்பாடின. அவர் கால்பட்டு உருண்ட பாறைகள் கீழே மலைப்பள்ளத்தில் விழும் ஒலிகள் கேட்டன.

குரல் எட்டும் தொலைவு வரை இளைய யாதவர் வருவதற்காக காத்தபின் தன் வில் தூக்கி நாணொலி எழுப்பி உரத்த குரலில் அர்ஜுனன் சொன்னான் “இளைய யாதவரே, நீங்கள் தேடி வரும் கந்தர்வன் இக்காட்டுக்குள் எனது பாதுகாப்பில் உள்ளான். அடைக்கலம் கோரியவருக்காக உயிரும் இழப்பது மறவனின் அறம்.  இது போர் எச்சரிக்கை, திரும்பிச்செல்க!”

இளைய யாதவர் அக்குரலைக் கேட்டதாகத் தெரியவில்லை. சீரான காலடிகளுடன் அவர் வந்துகொண்டிருந்தார். அப்பால் காட்டுப்புதருக்குள் காலவரும் அவர் மாணவர்களும் வருவதை அவன் கண்டான். நாணொலியை மீண்டும் எழுப்பி “யாதவரே, அதோ அந்த இரட்டைப்பாறை எனது எல்லை. அதைக் கடந்து இதற்குள் வரும் எவரும் என்னால் கொல்லப்படுவார்கள். திரும்புக! இப்புவியில் என்னை வெல்ல எவரும் இல்லை” என்று அர்ஜுனன் கூவினான்.

இளைய யாதவர் அழுக்குபடிந்த தோலாடை அணிந்திருந்தார். புழுதி சூடி திரிகளாக ஆன குழலை நாரால் முடிந்து பின்பக்கம் விட்டிருந்தார். அவர் தலையில் என்றும் விழிதிறந்திருக்கும் பீலி அன்று இருக்கவில்லை. இடையில் எப்போதும் அவர் சூடியிருக்கும் குழலும் இல்லை. வலக்கையில் கதையும் இடக்கையில் படையாழியும் ஏந்திய கரிய உடல் புழுதியும் அழுக்கும் கொண்டு ஒளி அணைந்திருந்தது.

அணுகிக்கொண்டிருந்த இளைய யாதவரை நோக்கி சினமெழுந்த பெருங்குரலில் அர்ஜுனன் கூவினான் “யாதவரே! மீண்டும் சொல்கிறேன். நேற்றுவரை உங்கள் மேல் நான் கொண்டிருந்த அனைத்து அன்பையும் முற்றறுத்து இங்கு வந்து நின்றுள்ளேன். களம் புகுந்தபின் குருதியோ நட்போ பொருட்டென ஆகக்கூடாது என்று கற்ற போர்வீரன் நான். நமது போரால் இருவரும் அழிவோம் என்றே கொள்க… தங்கள் இலக்கு நான் எனறால் மட்டுமே அணுகுக!”

ஒருகணமும் தயங்காத காலடிகளுடன் இளைய யாதவர் அணுகி வந்தார். அவர் விழிகள் தன்மேல் பதிந்திருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். அவர் இரு கைகளும் இரு சிறகுகள்போல காற்றில்  வீசின. கால்கள் உருண்டபாறைகள் மேல் எடையுடன் பதிந்து மேலேறின. இரைநோக்கி இறங்கிவரும் பருந்தின் அலகென கூர்ந்திருந்தது அவர் முகம்.

அர்ஜுனன் தன் நாணை முற்றிறுக்கி இழுத்து விம்மலொலியெழுப்ப மரக்கூட்டங்களிலிருந்து பறவைகள் கூச்சலிட்டபடி எழுந்து பறந்தன. வில்லை வளைத்து அவன் அம்பு தொடுப்பதற்குள் கண்தொடா விரைவுகொண்ட கையால் ஏவப்பட்ட இளைய யாதவரின் படையாழி ஒளிக்கதிரென அவனை நோக்கி வந்தது. உடல்சரித்து அதை தவிர்த்தான். அருகிருந்த மரம் அலறலுடன் முறிந்து கிளையோசையுடன் மண்ணில் சரிந்தது.

துடித்தெழுந்து அதிர்வோசையுடன் திரும்பிச் சென்ற படையாழியுடன் இணைந்து சென்றது அவன் தொடுத்த அம்பு. அதை உடலொசிந்து இளைய யாதவர் தவிர்த்தார். மறுகணம் சுழன்றெழுந்து மீள வந்தது அவர் படையாழி. விழிமின்னி வண்டென ஒலித்துக் கடந்துசென்று அவர் அருகே நின்ற மரக்கிளையை முறித்தது பாண்டவனின் பிறையம்பு. அவனருகே ஒரு பாறை ஓசையுடன் பிளந்து விழ துள்ளித் துடித்தபடி திரும்பச்சென்றது படையாழி.

எய்தும் தவிர்த்தும் அவர்கள் நின்றாடினர். சூழ்ந்திருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. பாறைகள் பொறியனல் சீறி பொடி உதிர்ந்தபடி வெடித்தன. காற்று கிழிபட்டு கிழிபட்டு அதிர்ந்தது. ஊடே பறந்த பறவைகள் அறுபட்டு விழுந்து துடித்தன. அனல் உமிழ்ந்த இளைய பாண்டவனின் அம்பு பட்டு பசுமரம் ஒன்று பற்றிக்கொண்டது. படையாழி வந்து சீவிச் சென்ற பொறிதட்டி பைம்புற்கள் அனல் கொள்ள அர்ஜுனனைச் சூழ்ந்திருந்த காடு நெருப்பாகியது.

ஒருதழலை மறுதழல் தழுவ அவர்களைச் சூழ்ந்தது பேரனல். மேலே எரிந்து சுழன்றது அனலாழி. ஐந்து நெருப்புகள் சூழ அவர்கள் போரிட்டனர். சோமக்கணையால் இளைய யாதவரைத் தாக்கி அவரை பித்தெழச் செய்தான். காற்றுக்கணையால் இலைச்சுழல் எழுப்பினான். இந்திரக்கணையால் முகில் பிளந்து மின்னெழச் செய்தான்.

ஒருவரை ஒருவர் முற்றறிந்திருந்தனர் இருவரும். அர்ஜுனன் கையெடுப்பதற்குள் அவன் எண்ணிய அம்பை இளைய யாதவர் அறிந்தார். அவர் விழி திரும்புவதற்குள் அங்கே அர்ஜுனன் நோக்கினான். ஒவ்வொரு இலக்கையும் ஒவ்வொரு எண்ணத்தையும் அவர்கள் ஒன்றென அறிந்தனர். ஒற்றைப்பெருஞ்சினம். ஓருருவாகிய ஆணவம். ஒன்றென்றே ஆன தன்னிலை. பார்த்தனாகி நின்று இளைய யாதவர் தன்னுடன் போரிட்டார். கிருஷ்ணனாக மாறி அர்ஜுனன் தன்னை தாக்கினான்.

இருபாதியெனப் பிரிந்து தங்களுக்குள் போரிட்டனர். ஒருகணத்தின் ஒருகோடியின் ஒருதுளியில் அவர்களின் போர் இதோ இதோ என முன்னகர்ந்தது. அனலாகி கரியாகி காடு அவர்களைச் சூழ்ந்து புகைந்தது. வெம்மை உமிழ்ந்த பாறைகள் மணியோசையுடன் வெடித்துருண்டன. வானிலெழுந்த பறவைகள் கூச்சலிட்டு தவித்தன. கொன்றும் வென்றும் கடந்தும் மீண்டும் ஒரு கொடுங்கனவில் நின்று களியாடினர்.

பின் ஒரு கணத்திரும்பலில் அர்ஜுனன் அறிந்தான், அங்கெழுந்து அறியா முகம் சூடிநின்ற பிறிதொரு இளைய யாதவரை. அவன் உள்ளம் திடுக்கிட அம்பெடுத்த கை தளர்ந்தது. அணுக்கத்தின் எல்லைக்கும் அப்பால் அங்கு அறியாது கரந்திருந்தவன் எவன்? முகம் சூடி ஆடியது எம்முகம்? அத்தனை நாள் ஒன்றே காலமென, உடலென்று பிறிதிலாததுபோல வாழ்ந்தபோதே அது அங்கிருந்ததா?

சிறுதுளி. இன்மையை விட சற்றே பெரிது. ஆனால் கணம்கணமென அது பேருருக்கொண்டது. ஆயிரம் பல்லாயிரம் கைகள் முளைக்க, ஒன்றன்மேல் ஒன்றென விழிகள் வெறிக்க, முகம் மீதேறிய  முகங்கள். நகைக்கும் ஒரு வாயும், சினந்து பிளந்ததொரு வாயும், அறைகூவுமொரு வாயும், வசைபாடி வெறுக்குமொரு வாயுமென திசை சூழ்ந்தது. அவனறியாத பேருருவத்தைக் கண்டு அஞ்சியும் அதிர்ந்தும் அவன் எய்த அம்புகள் இலக்கழிந்தன. ஆழி வந்து அவனை நக்கி குருதி உண்டு மீண்டது. சுவைகண்டு வெறிகொண்டு விம்மி மீண்டும் வந்தது.

குருதி தெறிக்க அவன் பின்னால் விழுந்து கையூன்றி எழுந்து கால் வைத்து பின்னடைந்தான். அவன் முன் வந்து விழுந்து நிலத்தை ஓங்கியறைந்து மண்கிளறிச் சுழன்றெழுந்தது கொலைத்திகிரி. அர்ஜுனன் திரும்பி ஓடினான். முழங்கியபடி அவனை காற்றில் துரத்திவந்தது அது. எழுக என் அம்புகள். உயிர்கொள்க நான் கற்ற நுண்சொற்கோவைகள். இதோ என் படைக்கலங்கள். இதோ என் தவத்தின் கனிகள். என்னை நானென உணரவைத்த என் அறிதல்கள்.

ஆனால் அவையனைத்தையும் முன்னரே அவன் இளைய யாதவர் மேல் ஏவியிருந்தான். இல்லத்து நாய்க்குட்டிகள் என அவரை அணுகி குலவிக்குழைந்து உதிர்ந்தன அவை. அவர் அறியாத ஒன்று எழுக! அவர் அறியாதது என்றால் தானும் அறியாதது. அறியாது கரந்து ஆழத்திலிருக்கும் ஒன்று. வெறிக்கூச்சலுடன் அவன் நின்றான். தன் இருளுக்குள் இருந்து அந்தச் சொல்லை எடுத்து அம்பில் ஏற்றி திரும்பி நின்று எய்தான். நச்சுமிழ்ந்தபடி சென்று அவர் நெஞ்சில் தைத்தது அது.

அவர் திகைத்து கையோய்ந்து நிற்பதைக் கண்டான். தன்னுள் எழுந்த பெருங்களிப்பின் ஊற்றென்ன என அக்கணத்திலும் உள்வியந்தான். “யாதவனே, கொள்க! இது நீயறியா பார்த்தன். இதோ நீ காணா நஞ்சு. நீ அணுகாத ஆழத்து இருளில் ஊறியது” என்று கூவியபடி அம்புகளை எய்துகொண்டு அணுகினான். காலெடுத்து காலெடுத்து பின்வாங்கிய இளைய யாதவர் நின்று பேரலறலுடன் வானுருக்கொண்டெழுந்தார். அவர் கையில் இருந்தது காண்டீபம். அவர் தோளெழுந்தது அவன் சூடிய அம்புத்தூளி. அவர் இடப்பக்கம் நின்றிருந்தாள் அவள்.

“நீ?” என்று அவன் திகைத்தான். வெறியுடன் நகைத்தபடி அவள் அவர் பின்னால் மறைந்தாள். விழியுமிழ்ந்த நஞ்சு. நகைப்பில் நிறைந்த நஞ்சு. அவள்தான். என் நெஞ்சுதுளைக்கும் வாளியின் கூர்முனையென அமைவது அவள் நஞ்சேதான். இளைய யாதவர் கையிலெழுந்த காண்டீபம் உறுமியபடி அர்ஜுனன் மேல் அம்புக்குமேல் அம்பெனத் தொடுத்தது. அது அவனை நன்கறிந்திருந்தது.

அம்பு ஒன்று அர்ஜுனன் தொடையை தைக்க அவன் சரிந்து மண்ணில் விழுந்தான். அவன் உருண்டு சென்ற நிலமெங்கும் அம்புகள் வந்து நட்டுச் செறிந்து வயலென நின்றன.  அவன் நன்கறிந்த குரல்களை கேட்டான். அன்னையென குருதியென காதலென கடமையென அவனைச் சூழ்ந்திருந்த விழிகளெல்லாம் அம்புமுனைகளென ஒளிகொண்டெழுந்து விம்மி வந்து தைத்து நின்று நடுங்கின.

KIRATHAM_EPI_12

பெருவஞ்சத்துடன் கையூன்றி எழுந்து அவன் கைநீட்டியபோது சுட்டுவிரலில் இருந்தது யாதவரின் படையாழி. “செலுத்துக! செலுத்துக என்னை!” எனத் துடித்தது அது. “இது என் வஞ்சம்! ஆம், என் வஞ்சம் இது” என்றது. “படைநின்ற தெய்வம் கொண்ட வஞ்சம் இது. செலுத்துக என்னை!” அவனே ஒருகணம் அதன் வெறிகண்டு திகைத்தான். அவன் அதை விடுவதற்குள்ளாகவே எழுந்து பறந்து சென்றது. அதிலிருந்து குருதித்துளிகள் வீசப்பட்ட செம்மொட்டுமாலையெனத் தெறித்தன.

உடலெங்கும் எழுந்த வெறியால் உலைந்தாடி கைவீசி  நகைத்து “கம்சரின் பொருட்டு. யாதவனே, இதோ கம்சரின் பொருட்டு!” என்று அர்ஜுனன் கூவினான். திகைத்து கையோய்ந்து நின்ற இளைய யாதவரின் தலையறுக்கச் சென்று இறுதிக்கணத்தில் அவர் தலைசரிக்க அவர் முடித்திரளை வெட்டிவீசி மீண்டது.

“நில் நில்!” என அவர் கூவ மீண்டும் சீறி அவரை அணுகியது. வஞ்சமெழுந்த விழியென இளைய யாதவர் அதை கண்டார். “நீயா?” என்று கூவியபடி பின்னால் திரும்பி ஓடினார். அவரைத் தொடர்ந்து வந்து குதிகாலை வெட்டியது நற்காட்சி. குருதியுடன் மண்ணில் விழுந்த அவர்மேல் வந்து சுழன்று இழைவெளியில் புரண்டகன்ற அவர் தோள்தசையைச் சீவி திரும்பிச்சென்றது. குருதிசுவைத்த அதன் நாக்கு மின்னொளி சிதற காட்டில் சுழன்றது. “சிசுபாலனுக்காக! சிசுபாலனுக்காக!” என்று அர்ஜுனன் கூவினான்.

எரிபுகை எழுந்து இருண்ட வானுக்குக் கீழே அவர்கள் மட்டுமே இருந்தனர். விழிகள் மயங்கி மறைய உடலறிந்த காட்சியில் ஒருவரை ஒருவர் கண்டு போரிட்டனர். ஆயிரம் முறை ஆரத்தழுவிய தோள்கள், அன்புகொண்டு பின்னியாடிய விரல்கள் ஒன்று பிறிதை தான் என அறிந்தன. ஒன்று புண்பட்டபோது பிறிதும் வலிகொண்டது. அவ்வலியால் வெறிகொண்டு மேலும் எழுந்தது. மேலும் குருதி என கொந்தளித்தது. தன் குருதி உண்டதுபோல் சுவையறிந்து திளைத்தது.

எரிந்த காட்டுக்குள் நிகழ்ந்த போர் இருளுக்குள் எதிராடிப்பாவைத் தொடர்பெருக்கு என எழுந்தது. தொலைகாடுகளில் இடியெனப் பிளிறி தலைகுலுக்கி ஓடிவந்து மத்தகம் அறைந்தன இணைக்களிறுகள். கொம்புகள் மோதின எருதுகள். சீறி வளைந்து தாவி அறைந்து கைபின்னிப் புரண்டன வேங்கைகள். கவ்விக்கிழித்து தசைதெறிக்க குருதிசீற ஒன்றையொன்று கடித்துண்டன ஓநாய்கள். வானில் சுழன்று கொத்தி சிறகுதிர்த்து தசைத்துண்டுகள் என மண்ணில் விழுந்து துள்ளித்தாவின சிட்டுகள். நீள்கழுத்து பின்னி அறைந்து சிறகடித்து எழுந்து விழுந்து நீர்சிதறப் போரிட்டன அன்னங்கள். ஒன்றை ஒன்று விழுங்கின நாகங்கள். போர்வெளியாகியது உலகம். குருதிச் சாந்தணிந்தாள் மண்மகள்.

உடலெங்கும் செங்குருதி வழிய மண்ணில்புரண்டு தன்னைச் சூழ்ந்து அதிர்ந்த படையாழிச் சுழற்பெருக்கைக் கடந்து எழுந்த அர்ஜுனன் இளைய யாதவரின் அருகே நிழல் சுருண்டசைவதை கண்டான். பெண்ணுருக்கொண்ட பெருநிழல் நான்கு கைகளும் நீண்டுபறக்கும் குழலும் கொண்டு எழுந்தது. அஞ்சி அவன் எழுவதற்குள் அவன் காண்டீபத்தை வெட்டி எறிந்தது ஆழி. அவன் அருகிருந்த பாறையை எடுத்தபடி எழுந்ததும் அவனை அணுகி ஓங்கி அறைந்து தெறிக்கச்செய்தது கதை.

அவன் முழுவிசையாலும் பாய்ந்து அவர் மேல் முட்டி பின்னால் சரிந்தான். இருவரும் உடல்தழுவி மலைச்சரிவில் உருண்டனர். அவர்கள் உடல்பட்டு எழுந்த பாறைகள் உருண்டு முட்டி மலையாழத்தில் பொழிந்தன. அவர் கையமர்ந்த படையாழியை அவன் உதைத்து வீசினான். கதையைப் பற்றியபடி சுழன்று  எழுந்து அறைந்து தெறிக்கச்செய்தான். அவர் தோளை கடித்தான். உடலை கைநகங்களால் கிழித்தான்.

இரு உடல்களும் தழுவியறிந்தன முன்பு தழுவியபோது அறியாத அனைத்தையும். வழிந்த இரு குருதிகளும் கலந்து ஒன்றென மணத்தன. ஒன்றென வாயில் சுவைத்தன. தசையிறுகப் பற்றி இறுகி அசைவிழந்து நின்ற கணத்தில் இளைய யாதவரின்  விழித்த கண்களை அருகே கண்டான். அவை நோக்கிழந்து பிறிதொரு கனவில் இருந்தன.

“யாதவரே” என்று அவன் அழைத்த ஒலி அவனுள் புகுந்து மூலாதாரத்தை அடைந்தது. அவன் உடல் தசைவிதிர்த்து நடுங்கிக்கொண்டிருந்தது. அவன்  கைகளைப்பற்றி நிறுத்தி கால்களால் தொடையை அழுத்தி நெஞ்சில் தோளூன்றி மேலெழுந்தார் இளைய யாதவர். பிறிதெங்கோ எழுந்த கொலைநகைப்பு ஒன்றை அவன் கேட்டான். அனல் சூழ்ந்த வான்வெளியில் என அம்முகத்தை கண்டான். அனைத்து எண்ணங்களும் மறைய விழிமட்டுமேயாகி கிடந்தான்.

அக்கணத்தில் நீருக்குள் இருந்து சித்ரசேனன் கைகூப்பியபடி எழுந்தான். “யாதவரே, என்னைக் காக்கவந்த வீரர் அவர். அவர்மேல் அளிகொள்க! இதோ நான் வந்து நிற்கிறேன். என்னைக் கொன்று முனிவரின் வஞ்சினம் நிறைவுறச் செய்க!” என்று கூவியபடி ஓடிவந்தான். “நான் இனி உங்கள் அடைக்கலம் அல்ல, பாண்டவரே. இனி எனக்கு கடன்பட்டவரல்ல நீங்கள்” என்று அலறினான்.

மறுஎல்லையில் இருந்து காலவர் தன் மாணவர் சூழ கூவியபடி ஓடிவந்தார். “யாதவரே, வேண்டாம்! என் வஞ்சினத்தில் இருந்து விலகுக. சொல்பேணி நான் எரிபுகுகிறேன். எனக்கென இப்பேரழிவு நிகழவேண்டியதில்லை.” உறுமியபடி திரும்பிநோக்கியது சிம்மம். அவர் திகைத்து நின்று “நானறிந்திலேன்! யாதவரே, நான் அறியாது பிழையிழைத்தேன்” என்று கைகூப்பினார்.

மறுபுறம் ஓடிவந்த சித்ரசேனன் “கொல்க என்னை… என் பொருட்டெழுந்த இவ்வீரனுக்காக இறக்கிறேன்” என்றபடி அணுக நுதல்விழி சீற நோக்கியது பைரவம். அவன் கைகூப்பி நிற்க அவன் துணைவி உருவழிந்து வரிகொண்ட வலிகையாக ஆகி மண்ணில் படிந்தாள்.

“எங்கள் பகை அழிந்தது. நிறுத்துங்கள் போரை” என சித்ரசேனனும் காலவரும்  இணைந்து குரலெழுப்பினர். அர்ஜுனன் மீதிருந்து எழுந்த இளைய யாதவர் உடலெங்கும் குருதி வழிய வெற்றுடலுடன் அக்கணம் கருவறைக்குள் இருந்து வந்தவர் போலிருந்தார். கால்கள் நிலைகொள்ளாது அசைய  கண்களை மூடி தன்னை திரட்டினார். பின்னர் வாயிலூறிய குருதியை ஓங்கி துப்பினார். மூச்சில் சிதறின குருதிமணிகள்.

“யாதவரே, குளிர்க… நிறுத்துக போரை!” என்றார் காலவர். குருதிச்சரடு தெறிக்க அவர் தன் கைகளை உதறிக்கொண்டார். அவர்களை எவரென்பதுபோல நோக்கியபின் தளர்ந்த நடையுடன் திரும்பிச்சென்றார். அவர் செல்வதை சொல்லற்று நோக்கி நின்றபின் இருவரும் அர்ஜுனனை நோக்கி ஓடிச்சென்றனர்.

கிழித்துண்ண முயன்ற பருந்தின் உகிரலகில் இருந்து நழுவி விழுந்த பறவைக்குஞ்சு போல அர்ஜுனன் அங்கே கிடந்தான். சித்ரசேனன் “எழுக, இளையவரே! என் பொருட்டு நீங்கள் அளித்தவற்றுக்காக என் குலம் கடன்பட்டிருக்கிறது” என்றான். காலவர் “இளையவரே, வென்றவர் நீங்கள். இது என்ன ஆடலென்று இப்போது அறியமாட்டீர்” என்றார்.

[ 15 ]

எரிதழலில் அவியிட்டு விண்ணுலாவியாகிய நாரதரை அழைத்து தான் செய்யவேண்டியதென்ன என்று காலவர் கேட்டார். செய்த பிழைக்காக சித்ரசேனன் தன் நாவரிந்து இடட்டும் என்றார் நாரதர். தன் சொல்பேணுவதற்காக அந்நாவை எரித்து அச்சாம்பலைப் பூசட்டும் காலவர் என வகுத்தார். இருவரும் அதை ஏற்றனர். “என் விரல்கள் யாழைத் தொடுகையில் நாவாகின்றன. இந்நாவால் நான் அடைவதொன்றுமில்லை” என்றான் சித்ரசேனன். அதை எரித்த சாம்பலை தன் நெற்றியிலிட்டு நீராடி எழுந்து மீண்டும் தவம்புகுந்தார் காலவர்.

“அர்ஜுனன் மட்டும் அதிலிருந்து மீளவில்லை” என்றான் சண்டன். அவர்கள் தண்டகாரண்யத்தின் நடுவே ஓடிய பிரபாவதி என்னும் சிற்றோடையின் கரையிலிருந்த பாறைமேல் அமர்ந்திருந்தனர். “ஏன்?” என்றான் பைலன். “அஸ்வபக்ஷத்தில் இருந்து திரும்பிய அர்ஜுனன்  இருளிலேயே தன் குடிலுக்குள் சென்று படுத்துக்கொண்டான். அவன் உடலெங்குமிருந்த புண்களை மறுநாள்தான் சகதேவன் கண்டான். நகுலனை அழைத்து அவற்றுக்கு மருந்திடும்படி கோரினான்.”

திகைப்புடன் “மூத்தவரை இப்படி உடல்நைந்து குருதிவழியச் செய்யும்படி வென்றவர் எவர்?” என்று நகுலன் கேட்டான்.  “பிறிதெவர்?” என்றான் சகதேவன். நகுலன் பிறகேதும் சொல்லவில்லை. அர்ஜுனன் உடல்தேறி மீண்டெழ நாற்பத்தொரு நாட்களாயின. அவன் உடல் ஒளி மீண்டது. ஆனால் அவன் விழிகள் முற்றிலும் மாறிவிட்டிருந்தன. பிறிதெங்கோ நோக்கி அவை அலைபாய்ந்துகொண்டிருந்தன. யுதிஷ்டிரர் மலையிறங்கி வருவதுவரை அவன் அங்கிருந்தான். அதன் பின் தன் உடன்பிறந்தாரிடம் சொல்லிவிட்டு கிளம்பமுற்பட்டான்.

யக்‌ஷவனத்திலிருந்து அவர்கள் கிளம்பும் தருணம் அது. அர்ஜுனன் அவன் கிளம்பிச் செல்லவிருப்பதை தமையனிடம் சொன்னபோது பீமன் திடுக்கிட்டு “தனியாகவா? எங்கே?” என்றான். “அறியேன். ஆனால் நான் சென்று அடையவேண்டியவை பல உள்ளன. அவை நான் மட்டுமே செல்லக்கூடிய இடங்கள்” என்றான் அர்ஜுனன். “மீண்டும் ஒருவர் தனித்துச் செல்வதை ஒப்பமுடியாது…” என்று பீமன் உரக்க சொன்னான். “செல்பவருக்கு ஒன்றுமில்லை. இங்கிருப்பவர்கள் சென்றவரை ஒவ்வொரு கணமும் எண்ணி துயர்கொள்ளவேண்டியிருக்கிறது.”

“இளையவனே, நீ செல்வது எதை அடைவதற்காக?” என்றார் யுதிஷ்டிரர். “அம்புகளை” என்று அவன் சொன்னான். “நாம் போரிடப்போவதில்லை, இளையோனே. போரிடுவதென்றால் நம் உடன்பிறந்தவரை எதிர்கொள்ளவேண்டும். நான் அதற்கு ஒருபோதும் ஒப்பமாட்டேன்” என்றார் யுதிஷ்டிரர்.

அர்ஜுனன் “வில்வீரன் அம்புகளைத் தேடுவது தன்னை நிறைத்துக்கொள்வதற்காக மட்டுமே” என்றான். சினத்துடன் கைகளைத் தட்டியபடி அருகே வந்த பீமன் “வீண்சொற்கள் வேண்டாம். நீ அம்புகள் தேடுவது எதற்காக? இளைய யாதவருக்கு எதிராகவா?” என்றான். அவன் விழிகளை ஏறிட்டு நோக்கி “ஆம்” என்றான் அர்ஜுனன். பீமன் கடும் சினத்துடன் அறையும்பொருட்டு கையோங்கி அணுகி “மூடா, இன்று இப்புவியில் நமக்கு நண்பர் என பிறரில்லை” என்றான்.

யுதிஷ்டிரர் கைநீட்டி அவனை தடுத்தபின் அர்ஜுனனிடம் “பார்த்தா, நீ அவருக்கு எதிராக படைநிற்கப்போவதில்லை. இது என் ஆணை!” என்றார். “நாம் அவர் கருவிகள். நம்  பிறவிப்பெருநோக்கம் அதுமட்டுமே.” சகதேவன் “ஆம், மூத்தவரே நம் ஊழ் அவருடன் பிணைந்தது” என்றான்.

அர்ஜுனன் “என்றும் நான் அவர் நண்பனே. அதை நன்கறிவேன்” என்றான். “ஆனால் அடிமை அல்ல. பணியாள் அல்ல. மாணவனும் அல்ல. இணையானவனே நண்பனாக அமைய முடியும். நண்பனாக அமைந்தால் மட்டுமே அவர் எனக்கு ஆசிரியராக நிற்கவும் இயலும்” என்றான். பீமன் இகழ்ச்சியுடன் நகைத்து “அவருடன் போரிட்டுத்  தோற்ற சிறுமை உன்னை எரியவைக்கிறது” என்றான்.

அர்ஜுனன் “இல்லை மூத்தவரே, நான் அவரிடம் தோற்கவில்லை” என்றான். “அக்கணத்தில் அவரால் என்னை வெல்லமுடிந்தது, கடக்கமுடியவில்லை என்று அறிந்தேன். அங்குதான் என் உள்ளம் சிறுமைகொண்டு சுருங்கியது.” அவன் சொல்வதென்ன என்று அறியாமல் அவர்கள் நோக்கினர். தானே அதை தெளிவுற உணராதவன் போல அர்ஜுனன் தலையை குலுக்கிக்கொண்டான்.

“முதல்வனாக அன்றி நின்றிருக்கமுடியாத ஆணவம் இது. பார்த்தா, இவ்வாறு தருக்கிய எவரும் முழுவெற்றி அடைந்ததில்லை” என்றான் பீமன். அர்ஜுனன் நிலைமாறாத மொழியில் “மூத்தவரே, நீங்கள் இதை புரிந்துகொள்ளமுடியாது. ஆழியும் பணிலமும் ஏந்திய அண்ணலின் கதைகளிலேகூட அவன் முன் நிகரென எழுந்து நின்றவர்களே அவனருளுக்கு உரியவர்களானார்கள். தென்னிலங்கைக் கோமகனோ இரணியனோ எவராயினும் அதுவே வீரர்களின் வழி” என்றான்.

பீமன் அலுப்புடன் தலையை அசைத்து “நீ முடிவுசெய்துவிட்டாய். ஆணவம் கொண்டவர்களிடம் பேசிப் பயனில்லை. நூறுகோணங்களில் சிந்தனைசெய்து அனைத்து விடைகளையும் கண்டடைந்திருப்பாய்” என்றான். “ஆம், என் ஆணவம் அடிபட்டது, இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் அது நான் அவர் முன் தோற்றதனால் அல்ல. நானறியாத ஒன்று அவரில் பேருருக்கொண்டு எழுந்ததைக் கண்டேன். அதனெதிர் நிகரென ஒன்று என்னுள்ளும் எழுவதைக் கண்டேன். அதனால்தான்” என்றான் அர்ஜுனன்.

“அந்த ஆழுலகை அறியாது இனி இங்கிருக்க என்னால் இயலாது. மூத்தவரே, அம்பு என்பது ஒரு சொல் மட்டுமே. இப்புடவி கொண்டுள்ள ஆழ்மெய்மை ஒன்றே அம்பென உருக்கொண்டு என்னை வந்தடைகிறது. நான் அறிந்து அதை கைக்கொண்டாகவேண்டும். மறுமுறை அவர்முன் சென்று நின்றிருக்கையில் என் அம்புத்தூளியில் அது இருந்தாகவேண்டும்.”

யுதிஷ்டிரர் பெருமூச்சுடன் “அவன் சென்றுமீளட்டும், மந்தா. நாம் தடைசொல்ல வேண்டியதில்லை” என்றார். பீமன் “ஆம், நாம் சொல்வதற்கொன்றும் இல்லை” என்றான். யுதிஷ்டிரர் அர்ஜுனனிடம் “இளையோனே, நாம் நோக்காது ஒழிந்த காட்சிகளாலானது இப்புவி நின்றிருக்கும் பீடம். நாம் கேளாது  ஒளிந்துகொள்ளும் ஒலிகளாலானது நமைச் சூழ்ந்த வானம். ஒளிந்திருப்பவற்றை தேடிச்செல்பவன் விரிந்து விரிந்து சூழும் பேரிருளை மட்டுமே அறியமுடியும் என்கின்றன நூல்கள்” என்றார்.

அர்ஜுனன் “ஆம் மூத்தவரே, நான் அதை அறிவேன்” என்றான். “நான் தேடிச்செல்வது முழுமையை அல்ல, என்வயமாகி என்னில் அடங்கும் அதிலொரு துளியை மட்டுமே.” யுதிஷ்டிரர் “கரியிருள் சூழும் என்கிறார்கள். அதன் தோலுரித்து எழும் ஒளிக்கு நீ உகந்தவனாக ஆகுக!” என்று வாழ்த்தினார். அர்ஜுனன் அவர் காலடிகளைத் தொட்டு சென்னி சூடினான்.

யுதிஷ்டிரர் திரும்பி  இளையவனாகிய சகதேவனிடம் “நன்று சூழுமா, இளையோனே?” என்றார். “நிகரென நின்று மட்டுமே அறியும் சொல் ஒன்று அவருக்காகக் காத்துள்ளது, மூத்தவரே” என்றான் சகதேவன்.

“அர்ஜுனன் தன் உடன்பிறந்தார் நால்வரிடமும் விடைபெற்றான். விழிநோக்காது திரௌபதியிடம் சொல்கொண்டான். யக்‌ஷவனத்திலிருந்து காண்டீபத்தை மட்டும் கையில் கொண்டு திரும்பிநோக்காமல் நடந்து வடக்குத்திசையேகினான். அவன் காலடிகள் பட்டு வளைந்த புல்நுனிகள் மெல்ல நிமிர்வதை உடன்பிறந்தார் நோக்கி நின்றனர்” என்றான் சண்டன்.

“அவன் பயணத்தை அயோத்திநாட்டுக் கவிஞராகிய சம்விரதர் அர்ஜுனேந்திரம் என்னும் காவியமாகப் படைத்தார். அதை இன்று சூதர் பாடியலைகின்றனர். அர்ஜுனன் கதை நன்று. அது எப்போதும் பெண்களிடமிருந்து அரிசியும் நெய்யும் பெற்றுத்தருவது. இளம்பெண்கள் மட்டும் தனித்தமர்ந்து கேட்பார்களென்றால் மெல்ல அவர்களின் கைவளைகளையோ குழைகளையோகூட கழற்றி வாங்கிக்கொள்ள முடியும்.” அவன் தன் மடிச்சீலையை அவிழ்த்து ஒரு பொன்வளையையும் ஒற்றைக்காதணியையும் காட்டினான். பைலன் புன்னகைத்தான்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 11

[ 12  ]

யக்‌ஷவனத்திலிருந்து வில்லுடன் கிளம்பிய அர்ஜுனன் எங்கும் நில்லாமல் புரவிகளிலும் படகுகளிலுமாக பயணம்செய்து மூன்றாம்நாளே சப்தஃபலத்தை சென்றடைந்தான். அச்சிற்றூரைச்சுற்றி மண்குவித்து எழுப்பப்பட்டிருந்த சிறியகோட்டைவாயிலில் அவனை காவலர்தலைவன் சதமன் தடுத்தான். சதமனை நன்கறிந்திருந்த அர்ஜுனன் திகைப்புடன் “என்ன செய்கிறீர்? நீர் என்னை அறியமாட்டீரா?” என்றான். “எவராயினும் நிறுத்துக என்று எனக்கு ஆணை, பாண்டவரே” என விழிதிருப்பி சதமன் சொன்னான்.

சினத்தை அடக்கியபடி  “நான் இளைய யாதவரை பார்த்தாகவேண்டும், இப்போதே” என்று அர்ஜுனன் சொன்னான். “அவர் எவரையும் சந்திக்கவிரும்பவில்லை என்பது மாறா ஆணை. தேவியருக்கும் படைத்துணைவருக்கும் ஒற்றருக்கும்கூட முகம் மறுக்கப்படுகிறது” என்றான் சதமன். “மறுக்கவே முடியாத முகம் என்னுடையது, மூடா” என்று அர்ஜுனன் சீறினான். “விலகு, நான் அவரைச் சந்திக்கும் உலகில் பிறமானுடர் இல்லை” என்று சொல்லி வாயில் கடக்கப்போனான்.

சதமன் வாளை உருவி குறுக்கே நின்று “என் தலையறுத்திட்டபின்னரே நீங்கள் உள்ளே நுழைய முடியும், பாண்டவரே” என்றான். “அரசரின் ஆணைக்காக உயிர்கொடுப்பதே இப்போது என் கடன்.” அர்ஜுனன் திகைத்து நின்று அவனைக் கூர்ந்து நோக்கியபின் “என்ன இது? இதுபோல் ஒருநாளும் நிகழ்ந்ததில்லை” என்றான்.  அப்பாலிருந்து வந்த முதிய யாதவ வீரராகிய கலிகர் “மூத்தவர் பிரிந்துசென்றபின் அரசர் தன்னிலையில் இல்லை, பாண்டவரே. உடலுக்குள் அவர் அகம் மாறிவிட்டிருக்கிறது” என்றார்.

“நான் அறியாத அகம் ஒன்று அவரிடமில்லை. எனக்கு அதில் ஐயமே இல்லை. சென்று சொல்லுங்கள், நான் வந்திருக்கிறேன் என்று” என்று அர்ஜுனன் கூவினான். “அவரின்றி நான் இல்லை என்பதனாலேயே நானின்றி அவரும் இருக்கலாகாது. சென்று சொல்லுங்கள் நான் வந்துள்ளேன் என்று.” கலிகன் “எச்செய்தியும் தன்னருகே வரலாகாதென்றே அரசாணை உள்ளது. அதை நாங்கள் மீறமுடியாது” என்றான். “என் வருகையை அறிவிக்கவில்லை என்றால் உங்கள் அனைவருக்கும் அவர் அளிக்கும் தண்டனை எழும்” என்றான் அர்ஜுனன்.

“ஆணையை நிறைவேற்றுவதே எங்கள் பணி. அரசரின் சொல்லெண்ணி ஆய்ந்து நோக்குவதல்ல” என்றான் சதமன். அர்ஜுனன் பற்களை கடித்துக்கொண்டு  “நான் கடந்துசெல்கிறேன். யாதவநாட்டில் எனக்கு எல்லைகளில்லை என்று அவன் சொன்ன சொல் என் செவிகளில் உள்ளது” என்றான். அவன் அவர்களைக் கடந்துசெல்ல முயல வாளை உருவிய கலிகன் “தங்களை எதிர்கொண்டுநிற்க என்னாலோ யாதவப்படைகளாலோ இயலாது, பாண்டவரே. ஆனால் உங்கள் முன் தலையற்று விழ எங்களால் முடியும்” என்றான்.

அர்ஜுனன் தயங்க குரல் தழைத்து அவன் சொன்னான் “இளவயதில் உங்கள் வேட்டைத்துணைவனாக வந்தவன் நான். இதுவே நம் உறவின் முடிவென்றால் அவ்வண்ணமே ஆகுக!” .அர்ஜுனன் தளர்ந்த குரலில் “நான் என்ன செய்யவேண்டும் இப்போது?” என்றான். சதமன் பேசாமல் நின்றான். “என் பொருட்டு ஒன்றை மட்டும் செய்யுங்கள். நான் வந்திருக்கும் செய்தியை மட்டும் அவருக்கு அறிவியுங்கள்…” என்றான் அர்ஜுனன்.

கலிகரின் விழிகள் மெல்ல கனிந்தன. “அதுவே ஆணைமீறலாகும். ஆயினும் தங்களுக்காக அதைச்செய்து அதற்குரிய தண்டனையை அடைய நான் சித்தமே” என்றார்.  அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். கலிகர் கோட்டைக்குள் செல்ல அர்ஜுனன் வெளியே நிலையற்ற உடலுடன் காத்து நின்றான். அந்தச் சிறுகோட்டையும் சூழ்ந்துள்ள மரங்களுமெல்லாம் இருளால் மூடப்பட்டுள்ளதாகத் தோன்றியது. கரிப்புகை படிந்த சுவரோவியம்போல. அது என்ன விழிமயக்கு என எண்ணிக்கொண்டான். மழைமூட்டமிருக்கிறதா என வானைநோக்கினான். கண்கூசவைக்கும் வெயிலே வானில் வளைந்திருந்தது.

இருநாழிகை கடந்தபின் கலிகர் திரும்பி வருவதை அவன் கண்டான். நெடுதொலைவிலேயே என்ன விடை எனத் தெரிந்துவிட்டது. அவன் அறிந்துவிட்டதை உணர்ந்த கலிகரின் நடையும் மாறுபட்டது. அருகே வந்ததும் கலிகர் அர்ஜுனின் வளைந்த புருவத்தின் முன் தலைவணங்கி “பொறுத்தருள்க பாண்டவரே, எவரையும் சந்திக்கும் நிலையில் இல்லை யாதவ மாமன்னர்” என்றார். “நான் வந்துள்ளேன் என்று சொன்னீரா?” என்றான் அர்ஜுனன், அவ்வினாவின் பொருளின்மையை உணர்ந்தபடியே.

“ஆம், அவர் காட்டிலிருந்தார். நான் அருகே சென்று பின்னால் நின்று தலைவணங்கி  ‘அரசே, தங்கள் தோழர் இளையபாண்டவர் முகம்காட்ட விழைவுகொண்டு வந்து நின்றிருக்கிறார்’ என்றேன். சீறித்திரும்பி ‘யார் நீ? உன்னிடம் ஆணையிட்டிருக்கிறேன் அல்லவா, எச்செய்தியும் என்னிடம் வரலாகாதென்று? ஆணையை மீற எப்படி துணிவுகொண்டாய்?’ என்று கூவினார். நான் பணிந்து ‘ஆம், ஆணையை மீறியமைக்கான தண்டம் என் தலைமேல் விழுக! இளைய பாண்டவர் என்பதனால்தான் நான் வந்தேன். அவர் தங்களில் ஒருபாதி என்று அறிந்த முதியவன் என்பதனால்’ என்றேன்.”

“இளையவர் குரலை அவ்வண்ணம் நான் கேட்டதேயில்லை, பாண்டவரே. ஒவ்வொருநாளும் அவர் உடலும் குரலும் விழிகளும் மாறிக்கொண்டிருக்கின்றன. ‘என்னுடன் எவரும் இல்லை. அவன் எவனாயினும் கிளம்பிச்செல்லும்படி சொல். ஆணை!’ என்றார். மீண்டும் ஒரு சொல்லெடுக்க எனக்கு துணிவிருக்கவில்லை. ஆயினும் என் உள்ளம் பொறாது  ‘அன்னையைத்தேடும் கன்றென வந்துள்ளார் பாண்டவர். அவர் கண்களின் துயர்கண்டே வந்தேன்’ என்றேன்.  ‘இங்குள்ள எம்மானுடருடனும் எனக்கு உறவில்லை. செல்… இக்கணமே செல்லவில்லை என்றால் உன் தலையை வெட்டி உருட்டுவேன்’ என்று கூவினார்.”

“அவர் முகம் வெறுப்பிலென சுளித்திருந்தது. கண்களில் பித்தெழுந்திருந்தது. உடல் நோய்கொண்டதென நடுங்கியது. தலைவணங்கி நான் மீண்டேன்” என்றார் கலிகர்.  அர்ஜுனன் நம்பாதவன் போல அச்சொற்களை கேட்டுநின்றான். பின் அவர் சொன்ன அனைத்தையும் ஒற்றைக்கணத்தில் தன்னுள் மீட்டெடுத்தான். “அவருக்கு என்ன ஆயிற்று?” என்றான். “அவரில் கூடிய தெய்வங்களே அதை அறியும்” என்றார் கலிகர். நீள்மூச்சுடன் “நான் திரும்பிச்சென்றேன் என்று அவரிடம் சொல்க!” என்றான் அர்ஜுன்ன். அவர்கள் மெல்ல தளர்ந்தனர்.

அர்ஜுனன் திரும்பிநடக்க கலிகர் “இளவரசே…” என்று பின்னால் நின்று அழைத்தார். திரும்பிய அர்ஜுனனிடம் “பொறுத்திருங்கள். அனைத்து மானுடர் வழியாகவும் அறியாத்தெய்வங்கள் கடந்துசெல்கின்றன. விண்பறப்பவரும் இருளூர்பவரும்…” என்றார். அர்ஜுனன் தலையசைத்தான். “இது ஒரு பருவம். இது கடந்துசெல்லும்.” அர்ஜுனன் “நான் வந்தது உடனடியாக அவர் போருக்குச் செல்லவிருக்கிறாரா என்று அறிவதற்கே” என்றான். “அறியேன். அவர் உள்ளம் செல்லும் வழியென்ன என்று எவராலும் உணரமுடியவில்லை” என்றார் கலிகர். “காலவர் வந்துசென்றபின்னரும் அவர் எதுவும் சொல்லவில்லை.”

அன்றிரவு மாற்றுருக்கொண்டு இருளுக்குள் காகமென அக்கோட்டைவாயிலை அர்ஜுனன் கடந்துசென்றான். நூறு புற்கூரைவீடுகள் மட்டும் கொண்ட அச்சிற்றூரின் தெருக்களினூடாக இருளிலும் நிழலிலும் கரந்து சென்று  ஊரின் மையமாக அமைந்த மரப்பட்டைக்கூரையிட்ட மாளிகையை அடைந்தான். அதனுள் புகுவது அவனுக்கு மிக எளிதாக இருந்தது. அங்கே விளக்கெரிந்த மாடியறையே யாதவருக்குரியது என உய்த்து படிகளைத் தவிர்த்து உத்தரச் சட்டங்களில் தொற்றி அங்கே சென்றான்.

அறை வாயிலருகே நின்றிருந்த காவலனை ஒலிகாட்டி திரும்பச்செய்து அவன்  விழிசலித்த கணத்தில் உள்ளே நுழைந்தான். அவன் காலடியோசை கேட்டு இளைய யாதவர் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தார். அவர் அமர்ந்திருந்த மஞ்சமெங்கும் ஏடுகள் சிதறிக்கிடந்தன. எழுந்தபோது அவை தரையில் விழுந்து பரவின. இளைய யாதவரின் உடல் நடுங்கிக்கொண்டிருக்க கண்கள் நிலையற்று உருள்வதைக் கண்ட அர்ஜுனன் “இளையவரே, நான்… தங்கள் தோழன்” என்று தணிந்த குரலில் சொன்னான்.  “எவர் உன்னை உள்ளே விட்டார்கள்? எப்படி வந்தாய்? யாரது?” என்று இளைய யாதவர் பதறினார்.

திகைப்புடன் அவருடைய அழுக்குடலையும் சிக்குகொண்ட கூந்தலையும் மெலிந்த தோள்களையும் தாடிபடர்ந்த முகத்தையும் நோக்கிய அர்ஜுனன் “இளையவரே, தங்களை சந்திப்பதற்காக வந்தேன்” என்றான். “நான் எவரையும் சந்திப்பதாக இல்லை. என்னை தனிமையில் விடுக! செல்…” என்று அவர் வெளியே கைசுட்டி சொன்னார். “நீங்கள் இருக்கும் நிலை புரிகிறது, இளையவரே. உங்கள் உள்ளம் இருள்கொண்டிருக்கிறது. நானும் கடந்துசென்ற இருள்தான் அது… ஆனால் ஒளியிலும் இருளிலும் நான் உங்களுடன் இருந்தாகவேண்டும்..” என்றான் அர்ஜுனன்.

“வெளியே போ… வெளியே போ” என்று கைசுட்டி பித்தன்போல இளைய யாதவர் கூச்சலிட்டார். “யாரங்கே? இவனை உள்ளே விட்டது யார்? யாரது?” வாயிலில் வந்து நின்ற காவலன் அர்ஜுனனைக்கண்டு திகைத்து வெளியே சென்று கூவி தோழர்களை அழைத்தான். அர்ஜுனன் மேலும் அமைதிகொண்டு “என்ன நிகழ்கிறதென புரிகிறது, யாதவரே. தனிமையை விழைந்தால் அதிலிருங்கள் சின்னாள். நான் பின்னர் வந்து பார்க்கிறேன். ஆனால் இத்தருணத்தில் பெருமுடிவுகள் ஏதும் தேவையில்லை” என்றான்.

அவன் அருகே செல்ல இளைய யாதவர் பற்களைக் கடித்தபடி பின்னால் சென்றார். “அரசே, கந்தர்வன் ஒருவனைக் கொல்ல நீங்கள் வஞ்சினம் உரைத்தீர்கள் என்று அறிந்தேன். ஆராயாது எடுத்த முடிவு அது. வேண்டாம். அவன் பிழையேதும் செய்யவில்லை. அது காலவ முனிவர் கொண்ட பிழைப்புரிதல். அதை அவரிடமே நான் பேசுகிறேன். அவன் அவர் கால்தொட்டு சென்னிசூடி மன்னிப்பு கோருவான்…” என்றான்.

“நீ எதற்கு இதைப்பேசுகிறாய்? நீ யார் இதைச் சொல்ல?” என்றார் இளைய யாதவர். “அவன்தேவி என்னை வந்து கண்டு அடைக்கலம் கோரினாள். அவன்பால் பிழையில்லை என்று கண்டு நான் அவளுக்கு சொல்லளித்தேன்.” பற்கள் தெரிய இளிப்பதுபோல் சீறியபடி “எது பிழை என்று முற்றறிந்துவிட்டாயா? உன் புல்லறிவை எனக்கு அளிக்கும்பொருட்டு வந்தாயா?” என்றார் இளைய யாதவர். படீரென தன் நெஞ்சை ஓங்கியறைந்தபடி உரத்த குரலில் “துவாரகையின் அரசன் உன் சொல்கேட்டுத்தான் மெய்யும் பொய்யும் அறியவேண்டுமா?”

அர்ஜுனன் என்ன நிகழ்கிறதென்றே அறியாதவனாய் தவித்தபடி “இல்லை, அவ்வாறில்லை. யாதவரே, என்னை நீங்கள் அறியமாட்டீர்களா? இதை நாம் பேசி முடிவுசெய்வோம். தாங்கள் முந்தி படையாழி கைக்கொள்ளவேண்டியதில்லை” என்றான். “கைக்கொண்டால் நீ என்ன செய்வாய்?” என்றபடி இளைய யாதவர் அருகே வந்தார். வெறிச்சிரிப்பு போல சினம் கொண்ட முகம் சுளித்திருந்தது. “என்னை நீ என்ன செய்வாய்? அவ்விழிமகனுக்கு அடைக்கலம் கொடுக்கையில் நீ அறிந்தாயல்லவா அவனை நான் கொல்வேன் என வஞ்சினம் உரைத்தேன் என்று?”

அர்ஜுனன் கைநீட்டி அவர் கைகளை பற்றப்போனான். “இல்லை இளையவரே, உண்மையிலேயே எனக்குத்தெரியாது தாங்கள் அவ்வாறு வஞ்சினம் உரைத்தீர்கள் என்று. அறத்தைச் சொல்லி அவர்கள் கோரியமையால் மட்டுமே வாக்களித்தேன். மங்கலம் நிறைந்த பெண்ணின் முகம் கண்டு அவ்வறத்தை நான் உறுதிசெய்துகொண்டேன்” என்றான்.

அவன் கையைத் தவிர்த்து “எப்படி அந்த வாக்கை அளித்தாய் நீ? இழிமகனே சொல், எப்படி அளித்தாய் அந்த வாக்கை? அவனைக் கொல்வதாக வஞ்சினம் உரைத்தவர் எவரென அறியாமல் அவ்வாக்கை அளிக்கும் துணிவை எப்படி கைக்கொண்டாய்?” என்றார் இளைய யாதவர். அவன் கண்கள் விரிந்து அதற்குள் விழிகள் உருண்டன. “இப்புவியில் எவர் வந்தாலும் எதிர்நிற்கமுடியும் என நினைத்தாய் அல்லவா? நீ இப்புவியின் அறமனைத்தையும் காக்கப்பிறந்தவன் என்று எண்ணினாய் அல்லவா? சிறுமதியனே, நீ யார்? அஸ்தினபுரி என்னும் சிற்றரசின் இளவரசன். அதையும் இழந்து காடுசேர்ந்து இரந்துவாழும் கோழை. எப்படி அந்த உறுதியை அவளுக்களித்தாய்? உனக்குமேல் இப்புவியில் எவருமில்லை என்று எண்ணினாயா?”

அர்ஜுனன் பற்களைக் கடித்து ஒருகணம் தன்னை இறுக்கி கட்டுப்படுத்திக்கொண்டு பின் பெருமூச்சுடன் மெல்ல தளர்ந்தான். “இவை ஏன் நிகழ்கின்றன என்று நானறியேன். எங்கோ எதுவோ பிழைபட்டுவிட்டது. இச்சொற்கள் உங்களுக்குரியவை அல்ல” என்றான். திரும்பிச்செல்ல அவன் உடல் அசைந்ததும் அவன் தோளைத்தொட்டு திருப்பி தன் முகத்தை அவன் முகமருகே கொண்டுவந்து உற்றுநோக்கி இளைய யாதவர் சொன்னார் “அஞ்சி ஓடாதே. நீ ஆண்மகனுக்குப்பிறந்தவன் என்றால் அஞ்சி பின் திரும்பாதே. அடைக்கலம் கொடுக்கையில் நீ அறிந்திருக்கவில்லை நானென்று. இன்று என் ஆழி எதிர்எழுகிறதென அறிந்ததும் என்னிடம் வந்து மன்றாடுகிறாய்.”

“நான் எவரையும் அஞ்சவில்லை” என்றான் அர்ஜுனன். “ஆம் நீ அஞ்சமாட்டாய். ஏனென்றால் நீ மாவீரனான பாண்டுவின் மைந்தன் அல்லவா? ஆண்மையின் உச்சத்தில் நின்று அவன் பெற்ற மைந்தன் அல்லவா?” என்று வெறுப்புடன் இளைய யாதவர் நகைத்தார். உடல்நடுங்க அவர் கைகளைப்பற்றியபடி “இளையவரே, வேண்டாம். இதற்குமேல் சொல்லெடுக்கவேண்டாம்” என்றான். அக்கைகளை வீசியடித்து உரக்க “சொல்லெடுத்தால் என்ன செய்வாய்? வில்லெடுத்து என் தலைகொய்வாயா? முடிந்தால் அதைச்செய். செய் பார்ப்போம்” என்று கூவினார் இளைய யாதவர்.

அர்ஜுனனின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவ்விழிகளில் இருந்த வன்மையை அவனால் விழிதொட்டு நோக்கமுடியவில்லை. “அறிவுடையவன் என்றால் ஆய்ந்து முடிவெடுக்கவேண்டும். ஆணென்றால் எடுத்த முடிவுக்காக உயிர்துறக்கவேண்டும். நீ பேடு. உன் தந்தைக்கு சிறந்த மைந்தன்தான். போ, போய் பெண்ணுருக்கொண்டு பெண்களுடன் புனலாடு. பெண்டிரின் ஆடை அணிந்து அரங்கேறி நடனமாடு. போ!”

ஒருகணம் அது இளைய யாதவரேதான் எனத் தோன்றிவிட்டது. உயிருடன் உறவுகொண்ட நண்பனே அப்படி உட்புகுந்து அறியமுடியும். உயிர்துடிக்கும்படி நரம்புமுடிச்சில் கைவைத்து கொல்லமுடியும். அப்படியென்றால் தோள்தழுவிக் களியாடுகையிலும் ஒரு உளமூலை இவற்றையெல்லாம் அள்ளி எண்ணிச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. சிரிப்புக்கும் கனிவுக்கும் அப்பால் படைக்கலம் கூர்கொண்டபடியே இருந்திருக்கிறது. இவரும் இவ்வாறென்றால் இப்புவியில் எஞ்சுவதுதான் என்ன? நெஞ்சுவிம்ம விழிநீர்திரள அவன் முற்றிலும் தளர்ந்து விழுபவன் போலானான்.

“என்ன சொன்னாய், பெண்ணுக்கு சொல்லளித்தாயா? அவைநடுவே தன் தேவியை இழிவடையவிட்டு நோக்கி நின்ற புல்லன். நீயா பிறிதொரு பெண்ணைக் காக்க உயிர்கொடுக்கப்போகிறாய்?” அர்ஜுனன் “இளையவரே, வேண்டாம். அளிகூருங்கள்… வேண்டாம்” என்று உடைந்த குரலில் சொன்னான். “ஆ! ஏன் நீ நின்றாய் என்று அறியாதவனா நான்? அவள் உளம்நிறைந்த கர்ணன் அவளை இழிவுபடுத்தட்டும் என்று காத்து நின்றாய். அவள்  பீமனைக் கடந்து உன் காலில் வந்து விழுந்து அடைக்கலம் கோரட்டும் என்று நோக்கி நின்றாய். அன்பும் அறமும் எங்கே? உன்னுள் மலமெனப் புளித்து நாறுவது ஆண்மையின் வெற்றாணவம் அல்லவா?”

அவன் இளைய யாதவரின் விழிகளையே பதைப்புடன் நோக்கினான். அவனறிந்த எவரும் அங்கில்லை. அவை ஒருகணமும் நிலைகொள்ளாமல் உருண்டன. காட்சியென எதையும் அள்ளமுடியாதவை போல. அவன் பற்களை இறுகக் கடித்து கைமுட்டிகளை முறுக்கி கண்களின் மென்நரம்புகள் வழியாக குருதி சூடாகப் பெருகிச்செல்ல நின்றான். “சொல், உன் குரல் எங்கு போயிற்று?” என்றார் இளைய யாதவர். அவன் இதழ்கள் மட்டும் வலியுடன் அசைந்தன. “நான் சொல்லவா? அவைநடுவே ஆடைகளையப்பட்டது உன் அன்னை. அவையமர்ந்து நோக்கி நின்றிருந்தவர் விதுரர்…” இளைய யாதவர் தன் தொடையில் ஓங்கி அறைந்தபடி வெடித்துச் சிரித்தார்.

“போதும்!” என்று அர்ஜுனன் கூவினான். “போதும், இனி சொல்லில்லை” என்றான். “ஆம், சொல் இல்லை. சொல்லே வேண்டியதில்லை. செல். ஆணென்றால் வில்லுடன் வா” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் பற்களை கடித்துக்கொண்டு முகம்தூக்கி “வருகிறேன். சித்ரசேனன் என் காவலில் இருப்பான். எவரும் அவனை தொடப்போவதில்லை. எதிர்வரும் எவரும் என் எதிரிகளே. வில்லுண்டு, காண்டீபம் அதன் பெயர்” என்றபின் அர்ஜுனன் திரும்பி வாயிலில் நின்ற காவலரை விலக்கி அறையை விட்டு வெளியே சென்றான்.

அவனுக்குப்பின்னால் காலடிகள் ஒலிக்க ஓடிவந்த இளைய யாதவர் “நான் என் படையாழியுடன் வருகிறேன். முடிந்தால் அவனைக் காப்பாற்று. எதிரே நீ நின்றால் உன் தலையறுத்து உருட்டிவிட்டு அவனைக் கொன்று எரிப்பேன். அந்நீறை என் நெஞ்சிலும் நெற்றியிலும் சூடி நின்றாடுவேன். ஒரு பேடியை வென்று நிற்க என் படையாழிக்கு அரைக்கணமே போதும்” என்றான். உரக்க நகைத்தபடி “உன்னைக் கொல்லும்போதே நான் என் இறுதி முடிச்சையும் அவிழ்க்கிறேன். இங்கு என்னை கட்டிவைக்கும் ஏதுமில்லை பின்னர்” என்றார்.

KIRATHAM_EPI_11

திரும்பிப்பார்க்காமல்  அர்ஜுனன் படிகளில் இறங்கினான். வழியெங்கும் அவன் சந்தித்த அத்தனை யாதவர்விழிகளும் திகைப்புகொண்டிருந்தன. அரண்மனையைவிட்டு வெளியே வந்து இருண்ட முற்றத்தில் பந்தங்களின் செவ்வொளி சூழ்ந்த வெறுமையில் இறங்கி நின்றபோது அனைத்தும் கனவெனத் தோன்றியது. மறுகணமே நகைப்பும் எழுந்தது.

[  13  ]

அர்ஜுனன் யக்‌ஷவனத்திற்குத் திரும்பியபோது அவனிடம் ஏற்பட்டிருந்த மாறுதலை சகதேவன் மட்டுமே  உணர்ந்தான். பீமனும் அர்ஜுனனும் பிறரிடமிருந்து தனித்தலையும் வழக்கம் கொண்டவர்கள் என்பதனால் அவர்களின் துயரம் எப்போதுமே சொல்லில் பகிரப்படுவதில்லை. ஆயினும் மூத்தவர்களின் ஓரிரு அசைவுகளிலேயே அவர்களின் உள்ளறியும் ஆற்றல் சகதேவனுக்கு இருந்தது.

அர்ஜுனன் சென்றது எங்கு என அவன் அறியவில்லை. ஆனால் வந்து சேர்ந்த முதல்நாள் உணவருந்த கைகழுவி வந்து அமர்ந்தபோதே அவன் தமையனின் உள்ளத்துயரை உணர்ந்துகொண்டான்.

அன்றிரவு அர்ஜுனன் தன் வில்லுடன் காட்டுக்குள் சென்றபோது சற்றுதொலைவில் சகதேவனும் தொடர்ந்து சென்றான். நெடுந்தொலைவுவரை இளையவன் வருவதை அர்ஜுனன் உணரவில்லை. நீர்நிலையொன்றின் அருகே அவன் நின்றபோதுதான் விழிப்புகொண்டு பறவைக்குரல்களை அறிந்தான். வில்லுடன் திரும்பியபோது சகதேவன் அருகணைவதைக் கண்டு புருவம் சுருக்கி காத்து நின்றான். அவனை நெருங்கி வணங்கிய சகதேவன் “தாங்கள் தனிமையில் செல்வதால் உடன் வந்தேன், மூத்தவரே” என்றான்.

“நான் எப்போதும் தனிமையில்தான் செல்கிறேன்” என்றான் அர்ஜுனன். “இல்லை, எப்போதும் இளைய யாதவர் உடனிருக்கிறார்” என்று சகதேவன் சொன்னான். “ஆகவேதான் தங்களுடன் பிற எவரும் அருகணைய முடியாமலிருக்கிறது. உடன்பிறந்தோர் நால்வரும். மணந்த தேவியரும் மைந்தரும்கூட.” அர்ஜுனன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். பின்னர் “நீ எளிதில் தொட்டுவிடுகிறாய், இளையோனே. இன்று நீயே எந்தையின் வடிவாக எங்களுள் இருக்கிறாய். உன்னிடம் நான் சொல்லியாகவேண்டும்” என்றான். சகதேவன் புன்னகைத்தான்.

“நான் இளைய யாதவரை இழந்துவிட்டேன்” என்று அர்ஜுனன் தரைநோக்கியபடி சொன்னான். சகதேவன் எம்மறுமொழியும் சொல்லாமை கண்டு விழிதூக்கி நோக்கினான். அவன் புன்னகையுடன் “அவ்வாறு இழக்கப்படும் உறவல்ல அது, மூத்தவரே” என்றான். அர்ஜுனன் “உறவுகளில் அப்படி ஏதேனும் உண்டா என்ன? அவர் இங்குவருகையில் தமையனை இழந்த துயரை சுமந்துவந்தார். காவடியின் மறுஎடையாக என்னை இழந்த துயரை வைக்க விழைகிறார் போலும்” என்றான்.

“அது வெறும் குருதியுறவு” என்றான் சகதேவன். “குருதியுறவென்பது ஒரு தொடக்கம் மட்டுமே. மண்ணில் வாழ்க்கை குருதித்தொடர்புகளால் நிகழவில்லை. இங்கு நிகழும் லீலையை கர்மஜாலா என்கின்றனர் நூலோர். எனவே உறவுகளனைத்தும் கர்மபந்தங்கள் மட்டுமே.” அர்ஜுனன் அவன் சொல்வதை நோக்கிக்கொண்டிருந்தான். உரிய சொற்களை மட்டுமே எடுத்துக்கோக்க அவனால் எப்படி முடிகிறது? ஏனென்றால் அவன் உணர்வுகளை அவற்றுடன் இணைத்துக்கொள்வதில்லை.

“செயல்வலையில் சிக்கிய மானுடருக்கு செயலுறவே மெய். நீங்கள் அவ்வாறு இணைக்கப்பட்டவர்கள்” என்று அவன் மீண்டும் சொன்னான். “இப்போது நிகழ்வதென்ன என்று நீ அறியமாட்டாய், இளையோனே. நானும் அவரும் களம்குறித்துவிட்டோம். இருவரில் ஒருவரே எஞ்சுவோம்” என்றான் அர்ஜுனன். அவன் சொல்வதை கூர்ந்து நோக்கியபின் சகதேவன் மீண்டும் புன்னகைத்தான்.

“சொல், இவற்றுக்கெல்லாம் என்ன பொருள்?” என்று அர்ஜுனன் கேட்டான். “அபஹாரம் என்று இதை நிமித்திகமெய்நூல் சொல்கிறது, மூத்தவரே. மானுட வாழ்க்கை என்பது இப்புவியை ஆளும் பெருவல்லமைகளினால் ஆட்கொள்ளப்படுவதே. வெற்றியால் புகழால் செல்வத்தால் காதலால் வஞ்சத்தால் அச்சத்தால் சிறுமையால் ஆட்கொள்ளப்பட்டுத்தான் இங்கு அத்தனை மானுடரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவருடைய ஆட்கொள்ளல் என்ன என்று என்னால் அறியமுடியவில்லை. ஆனால் அதுவும் இயல்பென்றே நூலறிந்த நெஞ்சால் உணர்கிறேன்.”

“என்னை அச்சுறுத்துகிறது அந்த வஞ்சம்” என்று  அர்ஜுனன் சொன்னான். “பிற எவரும் என்னை இப்படி வெறுக்க இயலாது. பிறிதெவ்வகையிலும் என் மேல் இப்படி நச்சுமிழமுடியாது.” சகதேவன் சிரித்து “ஆம், அவர் ஒருவரே உங்களை உட்கடந்து கொத்த முடியும். நீங்கள் அவரையும் அவ்வண்ணம் செய்யலாம்” என்றான். “நானா, அவரையா? நீ அவ்வாறு நிகழுமென எண்ணுகிறாயா?” சகதேவன் “இது நிகழுமென முன்நாள் வரை எண்ணியிருந்தோமா?” என்றான். “ஒருநாளுமில்லை. என் நெஞ்சில் அன்னையூட்டிய முலைப்பால் எஞ்சியிருக்கும் வரை அது நிகழாது” என்றான்.

சகதேவன் மறுமொழி சொல்லவில்லை. அர்ஜுனன் சட்டென்று இளையோனின் கைகளை பற்றிக்கொண்டான். “இளையோனே, எனக்கு அச்சமாக உள்ளது. உண்மையிலேயே அது நிகழவும் கூடும். என்னை ஆள்வது எந்த தெய்வமென்று நான் அறியேன்” என்றான். அக்கைகளை நெரித்தபடி “அவ்வாறு நிகழுமென்றால் அதற்கு முன்னரே நான் இறக்கவேண்டும். அதைநான் செய்தேன் என்று என்னை நோக்கி நான் இழிவுகொள்ளலாகாது… நான்  அஞ்சுகிறேன், இளையோனே” என்றான்.

“அது நிகழட்டும்” என்று சகதேவன் சொன்னான். “அணுக்கங்கள் அப்படி ஓர் எல்லையில் முட்டிக்கொண்டாகவேண்டும். குருதியும் சீழுமெழ மீண்டும் தழுவிக்கொண்டாகவேண்டும்.” அர்ஜுனன் “என்ன சொல்கிறாய்?” என்றான். “நட்பின் கெடுமணம் இது, மூத்தவரே” அர்ஜுனன் தளர்ந்து கைகளை விட்டுவிட்டு இருளை நோக்கி திரும்பிக்கொண்டான். “இனித்தினித்து அறிந்தீர்கள். இனி கசந்து கசந்து அறிவீர்கள். அறிதல் அணுக்கத்தையே உருவாக்கும்” என்றான் சகதேவன்.

“எல்லா உறவுகளிலும் இத்தகைய ஒரு தருணம் நிகழும் என்று எண்ணுகிறாயா?” என்றான் அர்ஜுனன். “நிகழுமென்றால் ஒரு புதியஆழம் வெளிப்படுகிறது” என்றான் சகதேவன். நெடுநேரம் தன்னுள் ஆழ்ந்து தனித்து நின்றபின் மீண்ட அர்ஜுனன் “எத்தனை பெரிய ஆடல்” என்றான். “ஆம்” என்று சகதேவன் சொன்னான் “நிமித்திகக் கலை அதன் நுனியை அறிய முழுவேதத்தையும் எடுத்தாள்கிறது.”

“இளையோனே, இப்போர் நிகழுமென்றால் என்ன ஆகும்?” என்றான் அர்ஜுனன். “நீ உன் நிமித்திகநூலைக்கொண்டு சொல்!” சகதேவன் “ஒவ்வொரு செயலுக்கும் நிமித்திகநூலை அணுகுபவர் மூடர். உங்கள் பிறவிக்கணக்கை நான் நோக்கிவிட்டேன். நன்றே நிகழும்” என்றான். “நான் என்ன செய்வது?” என்றான் அர்ஜுனன். “மூத்தவரே, உங்களிருவரையும் சுழற்றிச்செல்லும் அப்பெருக்குக்கு உங்களை ஒப்படையுங்கள்.” அர்ஜுனன் சிலகணங்கள் எண்ணியபின் “ஆம், வேறுவழியில்லை” என்றான்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 10

[ 9 ]

இளைய யாதவரைப் பார்ப்பதற்காக தன் பன்னிரு மாணவர்களுடன் காலவர் காட்டிலிருந்து கிளம்பினார். உசிநாரத்தைக் கடந்து திரிகர்த்தத்துக்குள் நுழைந்து வாரணவதம் சென்று ஏழு சிந்துப்பெருக்குகளைத் தாண்டி யாதவ நிலத்திற்குள் நுழைந்தார். சப்தஃபலம் என்னும் யாதவச் சிற்றூரில் இளைய யாதவர் தங்கியிருப்பதை அறிந்து அங்கு சென்றார்.

செல்லும் வழியிலேயே இளைய யாதவரைப் பற்றிய செய்திகளை கேட்டறிந்தார். தமையனுடன் கொண்ட பூசலாலும் யாதவ குடிப்போர்கள் அளித்த கசப்பாலும்  உளம் நைந்த இளைய யாதவர் அங்கு கராளசிவத்தை பூசனை செய்து தனிமையில் வாழ்வதாகவும் எவரையும் சந்திப்பதில்லை என்றும் வழிப்போக்கனாக சந்தித்த சூதன் சொன்னான்.

சப்தஃபலத்தின் வாயிலில் அவரைத் தடுத்த காவலர்தலைவன் சதமன் “எவரும் தன்னை சந்திக்க வேண்டியதில்லை என்று இளைய யாதவரின் ஆணை, முனிவரே” என்றான். காலவர் தன்னை அவ்வாறு ஒரு காவலன் தடுப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அவருடைய முதல்மாணவன்  சலஃபன் முன்னால் சென்று “கௌசிககுலத்து காலவ முனிவரை அறிந்துகொள்க! யாதவ அரசருக்கு அருள்புரியும்பொருட்டு இங்கு வந்துள்ளார்” என்றான். “எவராயினும் உள்ளே செல்ல ஒப்புதலில்லை” என்று சதமன் சொன்னான். “நீங்கள் தேடிவந்த இளைய யாதவர் உள்ளே இல்லை என்று மட்டும் அறிக!”

“நான் சந்திப்பதற்கு பிறிதொருவரும் இல்லை. அதன்பொருட்டே வந்தேன், சந்தித்த பின்பே மீள்வேன்” என்றார் காலவர். சதமன் “எனக்களிக்கப்பட்ட ஆணைகளை நான் மீறலாகாது, முனிவரே. என்மீது நீங்கள் முனிந்தாலும் நன்றே” என்றான். “சிறிதோ பெரிதோ தவமே என் வழி” என புன்னகையுடன் சொன்ன காலவர் அக்காவல் நிலைக்கு வெளியே முற்றத்தில் தன் மாணவர்களுடன் அமர்ந்தார். “இதனால் பயனில்லை, முனிவரே” என்றான் சதமன். “தவத்திற்கு கொடுந்தெய்வங்களும் இரங்கியாகவேண்டும்” என்றார் காலவர்.

முதிய காவலரான கலிகர் வந்து பணிந்து “புரிந்து கொள்ளுங்கள், முனிவரே. தமையனுடன் கொண்ட உளப்பிரிவால் நிலையழிந்திருக்கிறார் அரசர். இங்கு முழுத் தனிமையில்  புற்றுசூழ்ந்த தவநெறியர்போல் அமர்ந்திருக்கிறார். அமைச்சரோ சுற்றமோ அவரை அணுகுவதில்லை. தேவியருக்கும் அவரைப் பார்க்க ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இங்கிருப்பவர் காலமுகம் கொண்ட கடுஞ்சைவரைப்போல இங்குள அனைத்திற்கும் புறம் காட்டியவர்” என்றார்.

“எவ்வுருக்கொண்டாலும் இப்புவியில் எனக்கென இருப்பவன் அவன் ஒருவனே” என்றார் காலவர். கண்களை மூடி மடியில் கைவைத்து அமர்ந்தார். நீரும் உணவுமின்றி மூன்று நாட்கள் அக்காவல் முற்றத்தில் அவரும் மாணவர்களும் காத்திருந்தனர். அஞ்சியும் பதறியும் சப்தஃபலத்தின் யாதவர் அவர்களை வந்து பார்த்துச்சென்றனர். “அரசரிடம் சென்று சொல்வதா?” என்றான் சதமன். “அவருக்கு இன்று செவிகளே இல்லை” என்றார் கலிகர். “தவத்தோர் முனிந்து சொல்லேவினால் இச்சிற்றூர் அழியும். அவர் எரிசினத்துக்குப் புகழ்பெற்ற விஸ்வாமித்திரரின் சொல்மைந்தர்” என்றான் சதமன். “அவர் தன் தவத்தால் அரசரை அவர் வாழும் இருளுக்குள் இருந்து எழுப்பினால் அது நன்றே” என்றார் கலிகர்.

மூன்றாவது நாள் காலையிருளுக்குள் இலைகள் சூடிய பனித்துளிகள் உதிரும் ஒலி மட்டும் எழுந்துகொண்டிருந்த வேளையில்  நுண்அழைப்பு ஒன்றால் இழுத்துவரப்பட்டவர் போல திறந்து கிடந்த கோட்டைக்கதவு வழியாக நகருக்குள் இருந்து கரிய உடலுடன் தளர்ந்த நடையுடன் இளைய யாதவர்  வெளியே வந்தார். முன்னரே கண்டிராதபோதும் தொலைவிலேயே அவர் யாரென உணர்ந்து காலவர் எழுந்து கைகூப்பினார். அதன்பின்னரே அவரைக் கண்ட காவலர் காலைத்துயில் கலைந்து எழுந்து நின்று தலைவணங்கினர்.

எலும்புகள் புடைத்து கரியும் அழுக்கும் படிந்த தோலுக்குள் அசைந்தன. தேம்பிய தோள்களில் பரவிய குழலில் சருகுப்பொடியும் புழுதியும் படிந்திருந்தன. ஒட்டடைபோன்ற தாடி முகத்தை மூடியிருந்தது. தளர்ந்து நனைந்த இமைகளுக்குள் கண்கள் நிலம் நோக்கி சரிந்திருந்தன.  அவரை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பது தெரிந்தது. காலவர் “யாதவர்க்கரசே, நீ எவரென உணர்ந்தபின்னரே வந்தேன்” என்றார்.

“இங்கு நான் அரசு துறந்து அமைகிறேன். யாதவ மன்னனாக தங்களுக்கு நான் அளிக்கும் எதுவும் இல்லை. துவாரகையை ஆள்பவள் யாதவப் பேரரசி சத்யபாமை” என்றார் இளைய யாதவர். அவர் திரும்பிச் செல்லும்படி கைகாட்டிவிட்டு திரும்பினார். காலவர் “நான் பார்க்க விழைந்தது யாதவனை அல்ல” என்றார். இருவரும் ஒருகணம் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். அவர் நெஞ்சு திடுக்கிட்டது. “நான் காண விழைந்தது பெருங்காலத் தோற்றம் கொண்டெழும் விராடனையே” என்று அவர் சொன்னார். “உம்” என இளைய யாதவர் உறுமினார்.

பந்த ஒளியில் அவர் நிழல் நீண்டு விழுந்து கிடப்பதை அப்போதுதான்  காலவர் கண்டார். அவர் விழிகள் விரிந்தன. திரும்பி அவர் முகத்தை நோக்கி  கைகூப்பி “எனக்கு அருள்க, இருளே! என் பழி நீக்குக, பேராற்றலே!” என்றார். அவர் விழிகள் மெல்ல காலவரை ஏற்றுக்கொண்டன. “உம்” என மீண்டும் உறுமியபடி அவர் தலையை அசைத்தார். “சொல்க!” என்றார். அவரை அஞ்சி காலவரின் மாணவர்கள் விலகி நின்றனர். எழுந்த காற்றில் பந்தச்சுடர் ஒன்று நீண்டுபறக்க எதிர்த்திசையில் எழுந்த பெருநிழலைக் கண்டு ஒருவன் அஞ்சி “ஆ!” என்றான்.

காலவர் “என் மூதாதையின் பெயர் கொண்ட இழிவை நீ அறிந்திருப்பாய். ஷத்ரியக்குருதி என்று இன்றும் வேதச்சொல்லவைகளில் நாங்கள் இரண்டாம் நிரையில் அமரவைக்கப்படுகிறோம். அச்சொல்லை வளர்க்கும் செயலொன்று நிகழ்ந்தது. அப்பழியை தீர்க்க வேண்டுமென்று கோருகிறேன்” என்றார். அவர் “உம்” என முனகினார். நிகழ்ந்ததை காலவர் சொன்னார். “அவன் செய்தது ஏனென்று நானறியேன். என் குலக்குறையின் பொருட்டே நான் இழிவு படுத்தப்பட்டேன் என்று உணர்கிறேன்.”

கருகிய இதழ்கள் பல்காட்டி விரிய இளைய யாதவர் புன்னகைத்தார். “நான் அறிவேன்” என்றார். காலவர் “எப்படி?” என்றார். “நான் அதை நிகழ்த்தினேன்” என்று அவர் சொன்னார். அவர் உதடு அசையவில்லை என்று அவர் விழிமயங்கியது. அவர் பின்னமர்ந்து பிறிதொருவர் பேசியதுபோலத் தோன்றியது. “என் இரு கைகளையும் விரித்து சூரியனுக்கு நான் அளித்த நீர்மேல் காறி உமிழ்ந்தான் அவன். அவனைக் கொன்று எரித்து அச்சாம்பலைச் சூடாது இனி நான் தவம் இயற்றுவதில்லை என்று உறுதி கொண்டேன்.”

“இளையோனே, முனிவரின் தவம் பேணுதல் அரசரின் கடமை என்று நீ அறிந்திருப்பாய். என் தவக்காவலனாக உன்னைத் தெரிவு செய்தேன்” என்றார் காலவர். “ஆம்” என்று அவர் நீள்மூச்சுடன் சொன்னார். அவர் விழிகளை நோக்குவதையே தவிர்த்தார். உடலெங்கும் பிறிதொன்று நின்று தவிப்பதுபோல் ஒரு அசைவு ஓட எழுந்துகொண்டார். “உன் சொல் தேடுகிறேன், யாதவனே” என்றார் காலவர். “அவனை எரித்தழிப்பேன். உங்களுக்கு நீறளிப்பேன்” என்று அவருக்குப் பின்னாலென ஒரு குரலெழுந்தது.

இளைய யாதவர் திகைத்தவர் போல காலவரை நோக்கி “என்ன?” என்றார். “அவனை எரித்தழிப்பதாக சொல்லளித்தாய்” என்றார் காலவர். விழிகள் சற்று சுருங்க தலை நடுநடுங்க கூர்ந்து நோக்கிய இளைய யாதவர் “அவன் யார்?” என்றார். வியப்புடன் ஒருகணம் எண்ணி பின் எழுந்து காலவர் “சித்ரசேனன் என்று பெயர் கொண்ட கந்தர்வன். விண்முகிலில் வாழ்பவன். அங்கு தன் இரு தேவியருடன் குலாவி அமைந்து விழித்தெழுந்தபோது என் மேல் எச்சில் உமிழ்ந்தான்” என்று புதியவனிடம் என மீண்டும் சொன்னார்.

“நன்று” என்றார் இளைய யாதவர். அவர் விழிகள் நிலையற்று உருண்டு கொண்டிருந்தன. விரல்கள் அறியாத எதையோ தொட்டுத்தொட்டு மீட்டுவன போல் அசைந்து கொண்டிருந்தன. “தங்கள் ஆணையை சென்னி சூடுகிறேன். அவனைக் கொன்று அனலூட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன். இது என் வஞ்சினம்” என்றார். காலவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடவேண்டுமென்னும் உணர்வையே அடைந்தார். “உன் சொற்களை நிலம் சான்றாக்கி ஏற்கிறேன்” என்றார்.

அவர் திரும்பிச்செல்லும்போது காலவர் ஓர் அடி முன்னால் வைத்து “இன்று பதினேழாவது நாள். நாற்பத்தொரு நாள் முடிவில் அவனை எரித்த சாம்பலை என் உடல் அணியவேண்டும். இல்லையேல் நான் எரிபுகுந்து மறைவேன்” என்றார். இளைய யாதவர் திரும்பாமல்  ”அது என் வஞ்சினமும் கூட” என்றார். தலைவணங்கி “என் குரு மரபும் சொல் மரபும் உனக்குத் துணை நிற்கும், யாதவனே. ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் காலவர்.

தலைவணங்கி அவ்வாழ்த்தை ஏற்காது, திரும்பி ஒரு சொல்லும் பேசாது அவர் திரும்பிச் சென்றார். அருகே நின்றிருந்த முதல் மாணவன் சலஃபன் “அவரால் வெல்ல முடியுமா?” என்றான். “அவனால் மட்டுமே வெல்ல முடியும்” என்றார் காலவர். “ஆசிரியரே, தாங்கள் சொன்னதை அவர் சரியாகக் கேட்கவில்லை என்றே நினைக்கிறேன். தன்னுள் உழலும் ஒன்றுக்குள் சிக்கி உழன்று கொண்டிருந்தவர் தாங்கள் சொல்லி முடிப்பதற்குள்ளேயே சொல்லளித்து எழுந்துவிட்டார்” என்று சலஃபன் தயங்கியபடி சொன்னான்.

“ஆம், தான் அளித்த வாக்கு என்ன என்று இன்னும் அவன் அறிந்திருக்கவில்லை. வாக்களித்தது அவனல்ல” என்றார் காலவர். “சித்ரசேனன் எவர் என்று அறிந்த பின்னரே அவன் முழுதுணர்வான். ஆனால் அவன் சொல் நின்றிருக்கும்.” புன்னகையுடன் சலஃபனின் தோளில் கை வைத்து “ஒருவேளை அதுவும் நன்றென்றே ஆகலாம். இன்று அவன் இருக்கும் செயலற்ற நிலையிலிருந்து மீள்வதற்கு இப்போர் ஒரு வழியாக ஆகக் கூடும். யாரறிவார்? இவையனைத்தும் அதன் பொருட்டே என்றிருக்கவும்கூடும். செயலும் விளைவும் மறுசெயலும் என பின்னிச் செல்லும் இப்பெரு வலையில் ஒரு கண்ணியை உணர அனைத்தையும் உணர்ந்தாக வேண்டும் என்பர்” என்றார்.

அன்றே தன் மாணவர்களுடன் சித்ரகூடத்திற்கு திரும்பிச்சென்றார் காலவர். தன் முன் அனலவனை எழுப்பி “இங்கு திகழ்க, எரியே! என் வஞ்சினம் நிறைவேற்றும் மானுடனை கண்டுகொண்டேன். துவாரகையின் இளையோன் சொல்பெற்று மீண்டுள்ளேன். என் குடிமேல் விழுந்த எச்சிலின் பொருட்டு விண்ணாளும் கந்தர்வனை எரித்தேன். அச்சாம்பலைச் சூடி எழுந்தேன். இனி வேள்விக்களங்களில் எல்லாம் இந்நிகழ்வுக்கு நீயே சான்று” என்றார்.

“ஒருவேளை என் சொல் திகழவில்லை என்றால் வெஞ்சாம்பலாக ஆகி மறைபவன் நான். என் ஊனுடலை உனக்கு அவியாக்குவேன். எரிந்தெழுந்து என் மூதாதையர் வாழும் உலகுக்கு என்னை கொண்டுசெல்க!” என்றபின் புலித்தோலை விரித்து அதன்மேல் மலரமர்வில் உடல் நிறுத்தி அமர்ந்து விழிமூடினார்.

 [ 10 ]

மாலைக்கதிர் கடலில் பெய்து அணைந்ததும் தன் மென்முகில் சேக்கையில் சித்ரசேனன் துயிலெழுந்தான். முன்னரே எழுந்த அவன் தேவி சந்தியை பூத்த காட்டில் பரவி மலர்மணத்தையும் மகரந்தங்களையும் அள்ளிக்கொண்டு வந்து அவனுக்குச் சுற்றும் பரப்பி அவன் துயிலுக்குள் இளம் இனிய கனவுகளை எழுப்பியிருந்தாள்.  புன்னகையுடன் எழுந்து அமர்ந்து கைதூக்கி சோம்பல்முறித்தபடி தோன்றி ஒளி கொள்ளத் தொடங்கியிருந்த முழுநிலவைப் பார்த்தான்.

சந்தியை கந்தர்வநாளின் புலரிவேள்விக்கென அனைத்தும் அமைத்து காத்திருந்தாள். பனித்துளி எடுத்து நீராடி, நிலவொளி தொட்ட வெண்முகில் கீற்றொன்றை ஆடையாய் புனைந்து வேள்விக் குளத்தருகே வந்தமர்ந்தான். தன் அச்சங்களையும் ஐயங்களையும் வஞ்சங்களையும் விறகென எரிகுளத்தில் அடுக்கி விழைவை அதில் நெய்யாக்கினான். இரு கைகளின் சுட்டுவிரல் தொட்டு மின்கதிர் எழுப்பி வேள்விக்குளத்தில் அனலூட்ட முயன்றான்.

பன்னிருமுறை முயன்றும் அனலெழாமை கண்டு குழப்பத்துடன் தன் தேவியை நோக்கினான். அவளுக்கும் நிகழ்வதென்னவென்று புரியவில்லை. மீண்டும் ஒரு முறை முயன்றதும் அனலோன் தன்னை தவிர்க்கிறான் என்று புரிந்துகொண்டான். தன் நெஞ்சில் கைவைத்து “என்னிலூறும் இசையின் முதல் துளியை சான்றாக்கி ஆணையிடுகிறேன். எழுக, அனலவனே!” என்றான்.

அனல் மூலையிலிருந்து எரியின் குரல் எழுந்தது. “என்னை பொறுத்தருள்க, கந்தர்வனே! இன்று உன் வேள்விக்குளத்தில் நான் தோன்ற மாட்டேன். ஏனென்றால் இன்னும் சில நாட்களுக்குள் உன்னை எரித்தழிக்கும் ஆணையை பெறப்போகிறேன். இதுநாள்வரை உன் வேள்விக்குளத்தில் தோன்றி நீ அளித்த அவியும் வேதச்சொல்லும் பெற்று விண்ணவருக்கும் திசை தெய்வங்களுக்கும் அளித்தவன் நான். அந்த நன்றிக்கடன் இதை உன்னிடம் சொல்லச் செய்கிறது. இனி உன்னிடம் இருந்து அவி பெறுவது முறையல்ல.”

“யார்? நீயா என்னை எரித்தழிப்பது? ஏன்?” என்றான் சித்ரசேனன். “நானல்ல. அணைகட்ட முடியாத ஆற்றல் கொண்ட ஒருவன் உன்னை எரித்தழிப்பதாக வஞ்சினம் உரைத்திருக்கிறான்” என்றான் கனலோன். “யார் அவர்? புடவியாளும் மூவரா? தேவருக்குத் தலைவரா? திசை நால்வரா?” என்றான் கந்தர்வன். “இல்லை, இவன் மண்ணில் வாழும் ஓர் அரசன். துவாரகையின் யாதவன்” என்றான் அனலோன்.

திகைப்புடன் “அவனுக்கேது அவ்வாற்றல்?” என்றான் கந்தர்வன். “மண்ணில் வாழ்பவருக்கு ஆற்றல் அளிப்பது வேதம். நான்கு வேதங்களும் கொண்ட மெய்ப்பொருளை ஒற்றைச் சொல்லென ஆக்கி தன் நாவில் சூடியவன் அவன். அவன் உன்னிடம் போருக்கெழுந்தால் நீ அரைக்கணமும் எதிர் நிற்க முடியாது என்றறிக!”

“நான் என்ன செய்ய வேண்டுமென்று அறியேன். என்ன பிழை செய்தேன்?” என்றான் சித்ரசேனன். “நீ காமமயக்கில் உமிழ்ந்த எச்சில் காலைத்தவம் செய்யக் கைநீட்டிய காலவரின் உள்ளங்கை குழியில் விழுந்தது. அது தன் குலத்தின் மீதான எள்ளலே என்று அவர் எண்ணிக்கொண்டார். அவருடைய ஆறாச்சினமே இளைய யாதவனின் வஞ்சினமாக மாறியது” என்றான் அக்னி. “அது நான் அறியாது செய்த பிழை. அன்று என்னுள் கூடியதென்ன என்று நான் இன்றும் அறியேன். தெரியாப்பேய் ஒன்று என் சேக்கையை வென்றது என்றே உணர்கிறேன்” என்று சித்ரசேனன் சொன்னான்.

“பேய்கள் எழுவது உள்ளமெனும் இருளுக்குள் இருந்தே” என்று அனலோன் சொன்னான். “நான் செய்யவேண்டியது என்ன?” என்று சித்ரசேனன் கேட்டான். “இனி நீ செய்வதற்கு ஒன்றுமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. உரைத்த வஞ்சினங்கள் அனைத்தையும் நிறைவேற்றி முடித்த ஒருவனின் சொல் இது. அது உரைக்கப்பட்டபோதே அச்செயல் முடிந்துவிட்டதென்று நான் கொண்டேன்” என்றான் எரியன்.

“நான் காலவரை அணுகி அவர் கால்களில் பணிந்து பொறுத்தருளும்படி கோருவேன். அவர் ஆணையிடும் அனைத்தையும் செய்து முடிப்பேன். ஆயிரமாண்டுகாலம் அவர் வேள்விக்கு காவலனாக நின்றிருப்பேன்” என்றான் சித்ரசேனன். “இவை அனைத்தும் அவர் அவ்வஞ்சினத்தை இளைய யாதவனிடமிருந்து பெறுவதற்கு முன் செய்திருக்க வேண்டியவை. இன்று நீ செய்வதற்கொன்றே உள்ளது. நிகர் வல்லமை கொண்ட பிறிதொருவரிடம் சரண் அடைக! அவன் படைக்கலத்தால் காக்கப்படுவாய்.”

“ஆம், நான் மூன்று தெய்வங்களிடம் செல்வேன். தேவர் கோமகனிடம் செல்வேன்” என்றான் சித்ரசேனன். “அவர்கள் எவரும் அவ்விளைய யாதவனிடம் நின்று போரிட முடியாது. வேதச்சொல்லை வல்லமை என்று கொண்ட மானுடன் அவன். வேதக்காட்டை விதையென்றாக்கும் ஊழ்நெறி கொண்டு வந்தவன்” என்று எரியன் சொன்னான். “தன் எதிர்நிற்பவனிடம் அவனே கருணை கொண்டால் மட்டுமே அவனை தடுக்க முடியும். ஒவ்வொரு அம்புக்கும் ஒருதுளி அருளையும் அவன் எவனுக்கு அளிப்பானோ அவன் மட்டுமே இளைய யாதவன் முன் நிற்க முடியும்.”

“யாரவன்? அவன் மூத்தோனா? நான் பலராமனிடம் சென்று அடிபணிவேன்” என்றான் கந்தர்வன். “இல்லை சுபத்திரையா? வசுதேவனா? அவன் மைந்தர்களா? எவராயினும் இதோ செல்கிறேன்.” அனலோன் புன்னகைத்து “இல்லை. குருதியென்பது உறவல்ல என்பதை இளைய யாதவனே உணர்ந்துகொண்டிருக்கும் தருணமிது. அது கடமை மட்டுமே என்று அறிந்ததன் சுமையால் அவன் சித்தம் இருண்டுள்ளது. மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வின் ஒரு கணத்தில் உணரும் அக்கசந்த உண்மையே பேயுருக் கொண்டு அவனை ஆள்கிறது இன்று” என்றான்.

“பின்பு யார் அவனுடன் எதிர்நிற்கும் ஆற்றல் கொண்டவன்?” என்றான் சித்ரசேனன். “இளைய பாண்டவன் பார்த்தன். ஊழால் இணைக்கப்பட்டவர்கள் அவர்கள். அவர்கள் சொல் கைமாறிப் பிரிந்து சில நாட்களே ஆகின்றன. இளைய யாதவன் வஞ்சினம் உரைத்ததை இளைய பாண்டவன் அறிவதற்குள்ளாகவே சென்று தாள் பணிக! அவனிடமிருந்து அடைக்கலம் பெறுக!” என்றான் அக்னி.

“ஆம், இக்கணமே” என்று எழுந்தான் கந்தர்வன். அக்னி “அதற்கு நீ செல்வதைவிட உன் துணைவி மட்டும் செல்வதே உகந்தது” என்று அறிவுறுத்தினான். “பார்த்தன் இன்றிருப்பது யக்‌ஷவனத்தில். அவன் தமையன் அளித்துச்சென்ற அறத்தின் கோல்சூடி அமர்ந்திருக்கிறான். அவனை வெல்ல அறமெனும் சொல்லே வழியாகும். உன் துணைவி திருமிகுக் கோலத்தில் செல்லட்டும்.”

[ 11 ]

யுதிஷ்டிரர் கந்தமாதன மலையேறிச் சென்றபின்னர் யக்‌ஷவனத்தின் தனித்த தவக்குடிலில் பாண்டவர் நால்வரும் காத்திருந்தனர். அர்ஜுனன் பகலும் இரவும் அங்கிருந்த கூம்புமரக்காட்டுக்குள் வில்லம்புடன் உலவினான். உள்ளைக் குவிக்க வெளிக்குறி ஒன்றை தேர்வதே அவன் வழியென்றாகியிருந்தது. விடுபட்ட அம்புடன் எழுந்து பறந்து இலக்கைத் தொட்டதும் அவன் உள்ளம் ஒரு வட்டத்தை முழுமை செய்தது. முற்றிலும் தனித்தவனாக அலைவதற்கு காடே உரியதென்று அறிந்த விடுதலை அவன் உடலில் திகழ்ந்தது.

மாலை சிவந்து விண்முகில்கள் எரிசூடத் தொடங்கிய பொழுதில் விண்ணில் சுழன்று சென்ற இறகுப் பிசிர் ஒன்றை தன் அம்பில் கோத்து குறி நோக்கிக்கொண்டிருந்த அர்ஜுனன் பெண்குரல் அழுகை ஒலி கேட்டு வில் தாழ்த்தி திரும்பிப் பார்த்தான். அங்கே மலர் உதிர்த்து மேடையிட்டு அதன்மேல் நின்றிருந்த மரம் ஒன்றின் அடியில்  பொன்னிற உடல்கொண்ட அழகியொருத்தியை கண்டான். மங்கலக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தது அவள் தலைக்குமேல் எழுந்த கிளையில் அமர்ந்த பறவை. அவள் தனித்து வந்திருப்பதை உணர்ந்தபின் அருகே வந்து “யார் நீ?” என்று அவன் கேட்டான்.

இளமுலைகள் மேல் விழிநீர் வழிய அவள் அவன் முன் வந்து நின்றாள். “வீரரே, எடுத்த வீரர் எவராயினும் தங்கள் அம்பின் எல்லைக்குள் அவர் அரசரே என்கின்றன நூல்கள். செல்வதறியாது அழுதுகொண்டு இக்காட்டுக்குள் நுழைந்தேன். உங்கள் நாணொலி கேட்டு அடைக்கலம் வேண்டி வந்திருக்கிறேன். என் துயருக்கு நீங்களே காப்பு” என்றாள்.

“சொல்க!” என்றான் அர்ஜுனன். “விண்வாழும் கந்தர்வனாகிய சித்ரசேனனின் துணைவி நான். இசையன்றி படைக்கலம் ஏதுமில்லாதவன் என் கொழுநன். கருதாப்பிழை ஒன்றுக்காக எம் கணவனை எரித்து அழிப்பதாக அரசனொருவன் வஞ்சினம் உரைத்திருக்கிறான். அவன் எரிந்தழிவான் என்றால் அச்சிதையிலேயே நானும் அழிவேன். என் மங்கலநாணுக்கு நீங்களே காவல். என் கற்பின் மீது ஆணை” என்றாள்.

“என்ன பிழை?” என்று அர்ஜுனன் கேட்டான். “காதலின் மயக்கில் அவன் வெற்றிலைச்சாற்றை உமிழ்ந்தான். அது மண்ணில் நின்றிருந்த முனிவர் ஒருவர் மேல் விழுந்தது. தன் குலம் மீதான இழிவென அவர் அதைக் கொண்டார்” என்றாள் அவள். அர்ஜுனன் “அவன் காதலாடுகையில் உடனிருந்த துணைவி யார்?” என்றான். “நானே. மங்கலம் அன்றி பிறிதெதையும் சூடாதவள் நான்” என்று அவள் சொன்னாள்.

அவளை ஒருகணம் நோக்கியபின் “தேவி, உடனிருந்தவர் தாங்கள் என்றால் அவர் அறிந்தொரு அமங்கலம் செய்திருக்க வாய்ப்பில்லை. அக்கருதாப்பிழைக்காக உங்கள் கொழுநனை எவரும் கொன்று அழிக்க நான் ஒப்பேன்” என்றான்.  “இளவரசே, புவிதொட்டு அவ்வாணையை எனக்கு அளியுங்கள்” என்றாள் சந்தியை.  குனிந்து மண் தொட்டு “ஆணை” என்றான் அர்ஜுனன்.

அவள் கைகூப்பி “உங்கள் வில்லை நம்பி மீள்கிறேன்” என்றாள். புன்னகையுடன் விழிநீர் ஒப்பியபடி திரும்பியவளிடம் “வஞ்சினம் உரைத்த அரசன் யார்?” என்றான் அர்ஜுனன். “துவாரகையை ஆளும் இளைய யாதவன்” என்றாள் சந்தியை. திகைத்து “அவரா? ஏன்?” என்றான் அர்ஜுனன். சந்தியை “சூதுச்சொல் வழியாக அம்முனிவரால் அவரது வஞ்சினம் பெறப்பட்டது” என்றாள்.

அர்ஜுனன் “அவ்வண்ணமெனில் அஞ்ச வேண்டியதில்லை. இப்புவியில் என் சொல்லே இறுதியென எண்ணுபவர் அவர்.  அவரிடம் உண்மை என்ன என்று நானே உரைக்கிறேன். உங்கள் கணவரை அவ்வஞ்சினத்திலிருந்து விடுதலை செய்கிறேன்” என்றான்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 9

[ 6 ]

முந்நூறாண்டுகளுக்கு முன்பு விருஷ்ணிகுலத்தின் ஒரு பிரிவாகிய  கோகிருதம் என்னும் தன் தொல்குடியிடமிருந்து ஏழு பசுக்களையும் மூன்று காளைகளையும் பங்குச்செல்வமாக பெற்றுக்கொண்டு மதனர் என்னும் யாதவர் வடக்காகக் கிளம்பினார். அப்போது அவருக்கு இருபத்தெட்டு வயது. அவர் மணந்த சுதமைக்கு இருபத்தொன்பது.  அவர்களுக்கு ஏழு குழந்தைகள் இருந்தன. அவர்கள் நோக்கிய நிலமெல்லாம் முன்னரே குடியேறிய யாதவர்களுக்குரியவை என மரங்களில் இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. இன்னும் இன்னும் என விலக்கி இருக்கும் இருக்கும் என நம்பி அவர்கள் சென்றுகொண்டிருந்தனர்.

யாதவகுடிகள் விரிந்து  கன்று பெருகிய காலம் அது. மேய்ச்சல்நிலங்களுக்கான பூசல்கள் தொடங்கிவிட்டிருந்தன. கோகிருதத்தின் குடியவை கூடி அவர்களுக்குரியதென அமைந்த காட்டில் எங்கு எவர் தங்கள் கன்றுகளை மேய்க்கவேண்டும் என்று நெறியமைத்தது. கன்றுகளின் காதில் அவற்றின் உரிமையாளர்கள் மணிகோத்து அடையாளம் பொறிக்கவும் முறைவைத்து காடுகளை மாற்றிக்கொண்டு எல்லைக்குள் மட்டுமே மேய்க்கவும் ஆணையிட்டது.

மதனர் வளர்த்த காராம்பசு ஒன்று கட்டவிழ்த்துக்கொண்டு அவர் உடன்பிறந்த மூத்தவரின் பசுக்களுக்காக வகுக்கப்பட்டிருந்த புல்வெளியில் புகுந்தது. அது அங்கு மேய்வதைக்கண்ட மூத்தவர் அதை பிடித்திழுத்துச்சென்று பெருமரம் ஒன்றில் கழுத்து இறுகக் கட்டினார். பகலெல்லாம் பசுவைக் காணாது அலைந்த மதனர் அந்தியில் அதை கண்டுகொண்டார். நீரும் புல்லுமின்றி குரலெழுப்ப இயலாது கழுத்திறுகித் தொங்கி நின்ற பசுவைக் கண்டதும் அழுதபடி ஓடிச்சென்று கட்டை அவிழ்த்து பசுவை விடுவித்தார். அதன் கண்களில் வழிந்திருந்த கண்ணீரின்தடம் அவர் நெஞ்சை கொந்தளிக்கச் செய்தது.

சினத்தால் நடுங்கும் உடலுடன் அவர் சென்று தன் தமையன் முன் நின்று “இது முறையா? குலம்புரக்கும் அன்னை உணவும் நீருமின்றி நிற்கச்செய்ய நமக்கு என்ன உரிமை?” என்றார். அவ்வுணர்வை புறக்கணித்து “என் எல்லைக்குள் வந்தது உன் பசு” என்று தமையன் சொன்னார். “பசு எவருக்கும் உரிமையல்ல. யாதவர்கள்தான் பசுக்களுக்கு உரிமையானவர். மூத்தவரே, நிலத்தை நாம் பகுக்கலாம், பசுவுக்கு அது ஒற்றைப்பெருவெளியே” என்றார். “நான் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறாய்?” என்றார் மூத்தவர். “எழுந்து என் பசு முன் தலைவணங்கி பொறுத்தருளும்படி கோருக! பசுவின் பழிகொண்ட குலம் வாழ்வதில்லை” என்றார் மதனர்.

சினம் கொண்ட மூத்தவர் “விலகிச்செல் அறிவிலியே, நீ எனக்கு அறிவுரை சொல்கிறாயா?” என்று கூவியபடி இளையவனை கையால் பிடித்துத் தள்ளினார். மல்லாந்து விழுந்த மதனர் சினம் தலைமீற அருகிருந்த கல்லை எடுத்து தமையன் தலைமேல் ஓங்கி அறைந்தார். அதன்பின்னரே தான் செய்ததென்ன என்று அறிந்து அழுதபடி தமையன் காலில் விழ முன்னால் சென்றார். அவரை உதைத்து உதறிவிட்டு “தந்தைப்பழி கொண்டவனே, நீ இனி இங்கிருக்கலாகாது” என்று தமையன் கூவினார்.

குருதி வழிய தமையன் ஓடிச்சென்று குலமூத்தார் கூடிய அவையில் நின்று கதறி முறையிட்டார். நிலம் வகுத்த எல்லையை மீறியதும் அதைத் தடுத்த தமையனை தாக்கியதும் பெரும்பிழை என அவை வகுத்தது. பங்குச்செல்வத்தைப் பெற்று குலம்விட்டு விலகிச்செல்லும்படி மதனருக்கு ஆணையிட்டது. அவருக்கு தந்தையின் செல்வமெனக் கிடைத்தது பதினேழு பசுக்கள். அவற்றில் பத்து பசுக்களை அடிபட்ட தமையனுக்கு பிழையீடாக அளித்துவிட்டு எஞ்சியவற்றுடன் இரவெழுவதற்குள் குடிநீங்கும்படி சொன்னார்கள் மூத்தார்.

பதினேழு நாட்கள்  ஊர்கள் வழியாகவும் குறுங்காடுகள் வழியாகவும் தனக்கென நிலம் தேடி நடந்து களைத்த மதனர் ஒருநாள் மாலையில்  ஓர் அத்திமரத்தின் அடியில் தங்கினார். இளமழை சொரிந்த  குளிர்மிக்க அவ்விரவில் பாளைக்குடிலை தலைக்குமேல் அமைத்து மரவுரிகளைப் போர்த்தியபடி மனைவியை அணைத்துக்கொண்டு துயின்றார். அவரைச் சூழ்ந்து அவர் அழைத்துச்சென்ற பசுக்கள் நின்றன. அவற்றைச் சூழ்ந்து எருதுகள் நின்றன. காட்டுவிலங்குகள் அணுகாதிருக்க தறியறைந்து மணிகோத்துக் கட்டிய சரடு அவர்களை சூழ்ந்திருந்தது.

காலையில் அவர் கண்விழித்தபோது அவரைச் சூழ்ந்து ஏழு கனிந்த அத்திப்பழங்கள் விழுந்துகிடக்கக் கண்டார். அவ்விடம் திருமகள் உறையும் நிலம் என அவர் உணர்ந்தார். அங்கேயே குடில் ஒன்று கட்டி குடியிருக்கலானார். ஏழு கனிகள் விழுந்த இடத்தில் கல் ஒன்று நாட்டி திருமகளை நிறுத்தி வணங்கினார். மங்கலமஞ்சளும் மலரும் கொண்டு அவளை வழிபட்டாள் அவர் குலமகள். “இது இளையவள் அருளிய இடம். இங்கு அமைவோம். இங்கு தழைக்கும் நம் குடி” என அவர் அவளிடம் சொன்னார்.

அந்நிலத்தில் திருமகள் பொலிந்தாள். கன்றுகள் பெற்றுப்பெருக குடி எழுந்துபரந்தது. சப்தஃபல கன்னிகை என்றே அத்திருமகள் அழைக்கப்படலானாள். அவ்வூரும் சப்தஃபலம் என்று பெயர்கொண்டது. நூற்றெட்டு தலைமுறைகளாக அங்கே ஆபுரந்து அறம்வளர்த்த அத்தொல்குடி மாதனிகர் என்று அழைக்கப்பட்டது. விருஷ்ணிகுலத்தின் அவைகளில் அத்திமரத்தின் இலையை தலைப்பாகையில் சூடியமர்ந்திருக்கும் உரிமை கொண்டிருந்தது.

சப்தஃபலத்தின் தென்மேற்குமூலையில் இருந்த சிற்றாலயத்தில் சிறிய கற்சிலையாக கைகளில் மலரும் அமுதகலமும் சுடரும் கொண்டு அருட்கை மலர்ந்து அமந்திருருந்த சப்தஃபலகன்னிகையே அவ்வூரில் வாழ்ந்த மூன்று கொடிவழிகளுக்கும் பொதுவான குடித்தெய்வம். அன்னைக்கு ஒவ்வொருநாளும் அன்றலர்ந்த புதுமலர்களால் பூசனை செய்யப்பட்டது. புத்தரிசிச்சோறும் மஞ்சள்குழம்பும் படைக்கப்பட்டது. கருவுற்றாலும் ஈன்றாலும் அங்குவந்து வழிபட்டனர். புதுப்பாலை அன்னைக்குப் படைத்தனர். அவர்களின் ஆநிரை காப்பவள் அவள் என்று தொழுதனர்.

முதற்புலரியில் ஊரெழுவதற்கு முன்னர் சப்தஃபலத்தின் இளையவள் எழுந்துவிடுவாள். குறுங்காட்டிலிருந்து நீராவி கலந்த குளிர்காற்றில் பசுந்தழை மணம் மொண்டு ஊர்மேல் நிறைப்பாள்.  இல்லங்களின் முற்றங்களில் இரவில் பூத்த மலர்களை உதிர்த்துப்பரப்புவாள். காற்று அலைபரவிய புதுப்புழுதித் தெருவில் அவள் காலடித்தடம் தெரியும். இல்லத்துப்பெண்கள் காலையெழுந்து கதவுதிறக்கும்போது மங்கல இளம்வெளிச்சமாக அவள் முற்றத்தை நிறைத்திருப்பாள். அவர்கள் பச்சரிசி மாவால் பசுஞ்சாணிப்பரப்பில் அவள் கால்தடங்களை கோலமாக வரைந்து வைப்பார்கள்.

அன்று இளையவள் தன் கோயிலில் இருந்து எழுந்து வெளிவந்தபோது எதிரே இருண்ட சாலையில் கலைந்த குழலும் தளர்ந்துலைந்த நடையுமாக இளையோன் ஒருவன் வருவதைக் கண்டாள். விடியொளி விழிதுலக்கத் தொடங்கியிருந்தபோதும் அவனைச் சுற்றியிருந்தது அடரிருள் ஒன்று. அவனைத் தொடர்ந்து எலிகள் வந்துகொண்டிருந்தன. தலைக்குமேல் வௌவால்கள் அவனைச் சூழ்ந்து சிறகடித்தன. அவன் வருவதற்குள்ளாகவே கெடுமணம் கொண்டு காற்று வந்தது.

அன்னை அவன் முன்னால் புன்னகையுடன் நின்று “மைந்தா” என்றாள். அவன் அவளை அலையும் விழிகளுடன் நோக்கி ஒருகணம் நின்று பின் தன் அழுக்கான கையை நீட்டி “விலகு” என ஒதுக்கிவிட்டு கடந்துசென்றான். அவள் “நான் யாரென்று அறிவாயா?” என்றபடி அவன் பின்னால் செல்ல அவன் இயல்பாக காறித்துப்பிய எச்சில் அவள் முகத்தில் விழுந்தது. திகைத்து அவள் அங்கேயே நின்றுவிட்டாள். அவன் திரும்பி நோக்காமல் நடந்து மறைந்தான்.

நின்றிருக்கவே அவள் உடல் கருமைகொண்டது. அவள் வலத்தோள்மேல் காகம் ஒன்று வந்தமர்ந்தது. அவள் இனிய புன்னகை மறைந்து கரிய கோரைப்பற்கள் எழுந்தன. கனைத்தபடி கழுதையொன்று அவளருகே வந்து நிற்க அவள் அதன் மேல் ஏறியமர்ந்தாள்.  கையில் அவள் கொண்டிருந்த வெண்தாமரை மலர் துடைப்பமாக மாறியது. அவள் உடலெங்கும் பரவியிருந்த ஒளி மெல்ல இருண்டு ஒட்டடைப்படர்வாகியது.

[ 7 ]

கசியபப் பிரஜாபதிக்கு அரிஷ்டையெனும் துணைவியில் பிறந்த பதினாறாயிரம் கந்தர்வர்களில் மூத்த நூற்றெண்மரில் ஒருவனாகிய சித்ரசேனன் தன் காதல் மனைவியாகிய சந்தியையுடன் விண்முகில் ஒன்றில் யாழுடன் அமர்ந்து காதலாடினான். அந்தியெழும் வேளையில் காற்றில் பனித்துளியென விண்ணில் பொன்னிறத்தில்  திரண்டு வரும் பேரழகி அவள். அந்தி இருண்டு விண்ணின் விழிகள் திறக்கும்போது அவனை மொழியால் சூழ்ந்து, மேனியால் தழுவி, காமத்தால் புதைத்து அவள் மகிழ்விப்பாள். மழைக்கால மலைகளைப்போல அவனிலிருந்து குளிரருவிகள் ஒளியுடன் எழும். அத்திமரம் கனிகொண்டதுபோல அவன் வேரும் தடியும் கிளையும் இனிமைகொண்டு நிறைவான்.

ஆனால் முதற்சூரியக் கதிர் எழுவதற்குள் அவள் உடல்கரைந்து உருமாறத்தொடங்குவாள். அவள் உடலின் தோலில் சுருக்கங்களும் மடிப்புகளும் உருவாகும். முகமெங்கும் வரி படரும். உடல்கூன கண்கள் பஞ்சடைய கூந்தல் நரைத்துக்குறுக முதுமகளாக ஆவாள். அவளுக்கு அப்போது வலிகை என்று பெயர். இருவுருக்கொண்ட ஒருமகள்  அவள் என்று சித்ரசேனன் அறிந்திருக்கவில்லை.  இரவில் ஒருமுகமும் பகலில் மறுமுகமும் கொண்ட அவளுடைய எழில் முகத்தை மட்டுமே அவன் கண்டான்.

முன்பு அந்திப்பொழுதில் முகிலில் கனிந்த மழைத்துளி ஒன்று செவ்வொளிபட்டு பொன்னென்றாகியது. அவ்வழி விண்ணில் கடந்துசென்ற பிரம்மன் புன்னகைத்து அவளை ஒரு கன்னியென்றாக்கினான். கைகூப்பி நின்றிருந்த கன்னியிடம் “பிந்துமதி என்று எழுந்தவள் நீ. இசைகொண்டு உன்னை மீட்டும் கந்தர்வன் ஒருவனுக்கு காதலியாகுக!” என்று வாழ்த்தினான். விண்ணில் ஒளிவிட்டு நின்றிருந்த அவளை இரு தேவியர் அணுகி இருகைகளையும் பற்றிக்கொண்டனர். வலக்கையைப் பற்றியவள் திருமகள். “நான் இளையோள். உன்னில் எழிலையும் மங்கலத்தையும் நிறைப்பவள்” என்றாள். இடக்கையைப் பற்றியவள் இருள்மகள். “நான் தமக்கை. உன்னை நீ மட்டுமே அறியும் பேராற்றல் கொண்டவளாக ஆக்குவேன்” என்றாள்.

இருவரில் ஒருவரைத் தெரிவுசெய்ய முடியாது பிந்துமதி திகைத்தாள். இருவரும் இரு கைபற்றி இழுக்க அவள் இரண்டாகப் பிரிந்தாள். ஒருத்தி பேரழகுகொண்ட சந்தியை. பிறிதொருத்தி முதுமைகொண்டு சுருங்கிய வலிகை. அந்தியில் எழுந்தவள் சூரியனை அறியவே இல்லை. பகலில் உழன்றவள் விண்மீன்களை பார்த்ததே இல்லை. ஆனால் சந்தியையைக் கூடும் காமத்தின் ஆழத்தில் சித்ரசேனன் வலிகையைக் கண்டான். அழகைப் பிளந்தெழுந்த ஆற்றலை உணர்ந்தான்.

அன்றும் அவளுடன் காமத்தில் திளைக்கையில் ஆழத்து அலைகளில் ஆயிரம் கைகளும் பல்லாயிரம் கண்களும் கொண்டெழுந்த வலிகையின் விழைவின் பேராற்றலை உணர்ந்து திகைத்துத் திணறிக் கொண்டாடி மூழ்கி எழுந்து மீண்டு வந்து மல்லாந்து படுத்து அன்று அவனுடன் உரையாட எழுந்த விண்மீனை நோக்கிக் கொண்டிருந்தான். அவனருகே புரண்டுபடுத்த சந்தியை “நீங்கள் என்னுடன் இருக்கையில் பிறிதொருவரிடம் செல்கிறது உங்கள் உள்ளம். என் கைகளுக்குச் சிக்கிய உடலுக்குள் உள்ளம் இல்லை என்பதை ஒருகணம் உணர்ந்தேன்” என்றாள்.

“ஆம், ஆழத்தில் நீ பிறிதொருத்தியாக ஆகிறாய். அந்த ஆற்றலை எதிர்கொள்கையிலேயே என்னுள்ளும் ஆற்றல் எழுகிறது” என்றான் சித்ரசேனன். “அது நானல்ல” என்று அவள் சீறினாள். “அதுவும் நீயே. நீயென்று நீ நிகழ்த்துவது மட்டும் அல்ல நீ” என்று அவன் நகைத்தான். அவள் சினத்துடன் அவனை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவன் முகத்தின் உவகைக்குறி அவளை எரியச்செய்தது. பின்னர் குனிந்து அவன் செவிகளுக்குள் “நான் அவளென்று ஆனால் உங்களுக்கு பிடித்திருக்குமா?” என்றாள். அவள் வினாவை நன்குணராத சித்ரசேனன் “ஆம்” என்றான். அவள் மூச்சில் முலைகள் எழுந்தமைய அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள்.

முதற்கரிச்சான் குரலெழுப்புவதற்குள் விழித்துக்கொண்டு அவன் இதழ்களை முத்தமிட்டு எழுப்பி விடைகொண்டு அகல்வது அவள் வழக்கம். அன்று அவள் வஞ்சமெழுந்த விழிகளால் அவனை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். கீழ்த்திசையில் முதல்புள் காலை என்றது. முகில்குவையின் நுனிகளில் செம்மை படரத் தொடங்கியது. அவள் புறங்கைகளில் நரம்புகள் புடைத்தெழுந்தன. கண்களுக்குக் கீழே தோல்வளையங்கள் கருகியிறங்கின. முகவாயில் ஆழ்ந்த வாய்வரிகள் விரிசல்போல் ஓடின. நெற்றியில் கோடுகள் படிந்தன.

அவனை முத்தமிட்டு “எழுக!” என அவள் சொன்னபோது அவள் வலிகையென்றாகிவிட்டிருந்தாள். அவன் விழித்து கையூன்றி எழுந்து அவளை நோக்கி “யார் நீ?” என்று கூவினான். “நான் மூத்தவளாகிய வலிகை. சந்தியையின் மறுமுகம்” என்றாள். “இல்லை, நீ எவரோ. நான் உன்னை அறியேன்” என்று அவன் கூவியபடி எழுந்தான். அவள் அவன் ஆடைபற்றி நிறுத்தி “நீ என்னை அறிவாய்” என்றாள். அவள் விழிகளில் எரிந்த விழைவைக் கண்டதுமே அவன் அறிந்துகொண்டான். “ஆம்” என்றான். அவனிலும் அவ்விழைவு பற்றிக்கொண்டது.

அவளுடன் அவன் காமத்திலாடினான். எரி எரியை ஏற்று எழுவதுபோன்ற காமம். கீழே சித்ரகூடமெனும் காடு புள்ளொலியும் சுனைகளிள் மணியொளியும் என நிழல்கரைந்து விடிந்துகொண்டிருந்தது. காதலில் கொண்டிருந்த எல்லா நுண்மைகளையும் அழகுகளையும் அவன் துறந்தான். இன்சொற்களும் நெகிழுணர்வுகளும் அகன்றன. வன்விழைவே இயல்பென்றான விலங்கென மாறினான். கூடி முயங்கி மூச்சிரைக்க திளைத்த பொழுதில் அவள் வாயிலிட்டு அளித்த வெற்றிலைச்சாற்றை தன் வாயில் வாங்கி மென்று திரும்பி நீட்டி நிலத்துமிழ்ந்தான்.

[ 8 ]

கௌசிக குலத்தில் பிறந்தவரும் விசுவாமித்திர மாமுனிவரின் கொடிவழி வந்தவருமாகிய காலவ முனிவர் கின்னரநாட்டின் மேல்விளிம்பில் அமைந்த  சித்ரகூடம் என்னும் பசுங்காட்டின் நடுவே குடில் அமைத்து தன் பதினெட்டு மாணவர்களுடன் தவமியற்றி வந்தார். ஆறாக்கடுஞ்சினம் கொண்ட முதல்முனிவரின் அவ்வியல்பையே தானும் கொண்டவர் என்று அவர் அறியப்பட்டிருந்தார்.

ஆவணி மாதக் காலை ஒன்றில் காலவர் தன் முதல் மாணவர் மூவருடன் அக்காட்டின் நடுவே ஓடும் சித்ரவாகினி என்னும் ஆற்றின் கரைக்கு கதிர்வணக்கத்திற்காக சென்றார். நீராடி, சடைமுடிக் கற்றைகளை தோளில் பரப்பி, கிழக்கு நோக்கி இடைவரை நீரில் நின்று, எழுசுடர் கொண்டிருந்த செம்மையை தன் முகத்தில் வாங்கி, சூரியனை வழுத்தும் வேதச்சொல்லை ஓதி,   நீரள்ளி கதிருக்கு நீட்டி கை மலர்ந்தபோது அதில் உமிழப்பட்ட வெற்றிலைச்சாறு வந்து விழுந்தது.

பறவை எச்சம் போலும் என்று எண்ணி அதை நோக்கிய காலவர் அறிந்து அருவருத்து கையை உதறி அதை நீரில் விட்டார். கைகளை மும்முறை கழுவியபடி தலை நிமிர்ந்து வானைப் பார்த்தபோது கடந்து சென்ற முகில் ஒன்றின் மேல் அரைமயக்கில் படுத்திருந்த கந்தர்வனின் கழலணிந்த காலை கண்டார். அப்பால் அக்காலுடன் பிணைந்ததென கந்தர்வப் பெண்ணொருத்தியின் கால் தெரிந்தது.

KIRATHAM_EPI_09

நிகழ்ந்ததென்ன என்று அக்கணமே உணர்ந்த  காலவர் குனிந்து நீரில் ஒரு பிடி அள்ளி வான் நோக்கி நீட்டி “நீ எவராயினும் ஆகுக! என் தவத்தூய்மை மேல் உமிழ்ந்த உன்னை இன்று நாற்பத்தொரு நாள் நிறைவுறுவதற்கு முன் எரித்தழிப்பேன். உன் பிடி சாம்பலை அள்ளி நீறென உடலணிந்து இங்கு மீண்டு என் தவம் தொடர்வேன். ஆணை! ஆணை! ஆணை!” என்றார். அவருடைய மூன்று மாணவரும் குனிந்து நிலம் தொட்டு “புவி சான்றாகுக! நிலை சான்றாகுக! வேர் சான்றாகுக!” என்றனர்.

சினம் எரிந்த உடலுடன் காலவர் சென்ற வழியெல்லாம் தளிரிலைகள் கருகின. புட்கூட்டம் அஞ்சிக் கூவி வானிலெழுந்தது. தன் குடில் மீண்ட காலவர் தனியறைக்குள் சென்று புலித்தோல் விரித்து அதன் மேல் அமர்ந்து விழிமூடி ஊழ்கத்தில் ஆழ்ந்தார்.  அவர் அறைக்கு வெளியே மாணவர்கள் கைகூப்பி காத்து நின்றனர். ஊழ்கத்தில் தன் இதழ்களை ஒவ்வொன்றாக விரித்து மூதாதையர் அளித்த முதற்சொல்லை மீட்டார். அதன் சரடு வழியாகச் சென்று அங்கு அடைந்து உச்சிநின்று கூவினார். “என் தவத்தை இழிவு செய்தவன் எவன்? தெய்வங்களே இங்கெழுந்து அவனை காட்டுங்கள்!”

தன்னுள் எஞ்சிய இறுதி வேதச்சொல்லெடுத்து ஆணையிட்டார். “இங்கு எழுக என் கையின் அவிகொண்ட எரி!” அவர்முன் அகல் சுடரிலிருந்து எழுந்து திரைச்சீலையை பற்றிக்கொண்டு நின்றெழுந்த அனலவன் “முனிவரே, அவன் பெயர் சித்ரசேனன். விண்ணில் தன் துணைவியுடன் காதல்கொண்டிருக்கையில் நிலைமறந்தான்” என்றான். காலவர் சீற்றத்துடன் “எப்போதும் நிலைமாறாதவனே விண்ணூரும் தகுதிகொண்டவன். அவன் கால்கீழே வேதச்சொல் ஓதும் முனிவர் வாழ்வதை அவன் அறிந்திருக்கவேண்டும்” என்றார்.

அனலோன் “ஆம், ஆனால் காதலென்பது கட்டற்றது அல்லவா?” என்றான். “காலவரே, இக்காடு விண்ணில் அவன் கொண்ட காதலின் பொருட்டு மண்ணில் அவனால் உருவாக்கப்பட்டது. ஆயிரமாண்டுகாலம் தன் யாழை மீட்டி அதன் சுதியின் அலைகளிலிருந்து இப்பசுமரப் பெருவெளியை அவன் படைத்தான். இங்கு மரங்களை சமைத்து, சுனைகளையும் குளிர்ந்த பாறைகளையும் உருவாக்கினான். விழிமின்னும் மான்களும் தோகை விரிக்கும் மயில்களும் பாடும் குயில்களும் அவனால் உருவாக்கப்பட்டதே. இங்கு ஆண்டு முழுக்க வெண்குடையென நின்று கனிந்து மழை பெய்து கொண்டிருக்கும் முகில் அவன் இல்லம். தன் நூற்றியெட்டு தேவியருடன் அவன் இங்கு வசிக்கிறான். வெல்லற்கரியவன். விண் துளிகளுக்கு நிகரான அம்பு பெய்யும் ஆற்றல் கொண்டவன்.”

காலவர் சினம் மேலும் கொழுந்துவிட கூவினார் “என் சொல் மாறாது. இவன் செயலால் என் தவம் கொண்ட இழிவு இவன் அழியாமல் அணையாது. அவனை நான் வென்றாக வேண்டும்.”  எரியன் “முனிவரே! அவனுடைய காட்டில் குடியேறியிருப்பது தாங்கள்தான். தன் இன்பத்தை பெருக்கிக்கொள்ளும் பொருட்டு குயிலுக்கு காகத்தையும் மயிலுக்குக் கோழியையும் மானுக்குப் புலியையும் குளிரோடைக்குக் காட்டெரியையும் அவனே உருவாக்கினான். தன் காமத்திற்கு மாற்றாக இங்கு உங்களை அவன் குடியேற்றினான். முற்றும் துறந்து தவம் செய்யும் பொருட்டு வெற்றுடலுடன் நீங்கள் இக்காட்டின் எல்லைக்கு வந்தபோது இவ்வழியே என்று கூவும் வழிகாட்டிப் பறவையாக உங்கள் முன் தோன்றி இங்கு அழைத்துவந்தவன் அவன்தான்” என்றான்.

“இக்காடல்ல நான் குடியிருக்கும் இடம். என் உள்ளத்தில் எழுந்த வேதச்சொல் விளையும் வெளியில் அமர்ந்திருக்கிறேன். பிறிதொன்றும் எனக்கொரு பொருட்டல்ல” என்று காலவர் சொன்னார். “பொறுத்தருள்க, முனிவரே! அவனை இங்கு அழைத்து வருகிறேன். உங்கள் வேள்விக்காவலன் என்று நின்றிருப்பான். உங்கள் தாள் பணிந்து பிழை பொறுக்குமாறு அவன் கோருவான்” என்றான் அனலோன். “இல்லை, நான் விழைவது அவன் எரிநீறு மட்டுமே” என்று காலவர் சொன்னார்.

“ஆம், அவன் அறியாமல் இப்பிழை ஆற்றப்பட்டிருக்கலாம். ஆனால் அவன் உமிழ்ந்த மிச்சில் என் மீதல்ல, நான் கொண்ட தவம் மீது மட்டுமல்ல, எந்தையின் மீதும்கூட. என் முதுமூதாதை விசுவாமித்திரர் மீது விழுந்த வாய்நீர் அது. அனலோனே, மானுடர்க்கரிய அருந்தவம் இயற்றி படைப்பவனுக்கு நிகரென பேருரு கொண்டபோதும் அந்தணர் அல்ல என்பதனால் ஆயிரம் அவைகளில் இழிவுபட்டவர் என் மூதாதை விசுவாமித்திரர். இன்றும் அவ்விழிவின் ஒரு துளி சூடியே நானும் என் குலத்தோரும் இம்மண்ணில் வாழ்கிறோம்.”

“என் கையில் விழுந்த அவ்வெச்சில் இங்கு நாளை வேதியரால் இளிவரலாக விரியுமென்பதை நான் அறிவேன். அது சூதர் சொல்லில் எப்படி வளரும் என்றும் நானறிவேன். அவனைப் பொசுக்கிய சாம்பல் ஒன்றே அதற்குரிய மறுமொழியாகும். கௌசிககுலத்தின் தவத்திற்குச் சான்றென அது நின்றிருக்கட்டும் கதைகளில்” என்று காலவர் சொன்னார். “இனி சொல்லாடவேண்டியதில்லை. நீ செல்லலாம்” என்றார்.

அனலோன் “அவ்வண்ணமெனில் உங்கள் சொல்வல்லமையால் அவனுடன் போர்புரிக! முனிவரே, மண்ணில் எவரும் அவனை வெல்ல முடியாதென்று அறிவீர்” என்றான். காலவர் “விண்ணில் ஒருவன் அவனை வெல்ல முடியுமென்றால் மண்ணிலும் ஒருவன் அவனை வெல்ல முடியும். யாரெனக் காண்கிறேன்” என்று  சூளுரைத்தார். “அவன் படைக்கருவி யாழில் அவன் இசைக்கும் இசை. வில் செல்லாத தொலைவுக்கு சொல் எட்டா சேய்மைக்கு செல்லும் ஆற்றல் கொண்டது இசை… அவனை வெல்லமுடியாது” என்றபடி அனலவன் அணைந்து கரியென எஞ்சினான்.

அன்றாட அறச்செயல்களை நிறுத்தி, நீரன்றி உணவுகொள்ளாது அவ்வறைக்குள் அமர்ந்து தன்னுள் நிறைந்து புடவிப்பேரோவியத்தை விரித்து விரித்து பறந்து புள் என தேடி ஏழுநாட்கள் அமர்ந்திருந்த காலவர் இளைய யாதவரை கண்டடைந்தார். அவரை முழுவடிவில் கண்டதுமே வானிலிருந்து அறுந்து மண்ணறைந்து விழுந்தவர்போல் அதிர்ந்து அலறினார். விழிதிறந்து உவகையுடன் “ஆம்!” என்று கூவியபடி எழுந்தோடி கதவைத் திறந்து வெளிவந்தார். தன் மாணவர்களிடம் “அவனே… ஆம், அவனே!” என்று கூச்சலிட்டார்.

அவர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். “அவனே வெல்வான். அவனை வெல்லல் மூன்று இறைவருக்கும் அரிது” என்று காலவர் கொந்தளித்தார். “இப்புவியில் விண்ணின் துளியென வந்துதிர்ந்தவன். மண்ணையும் முழுதும் வெல்லும் பேராற்றல் கொண்டவன். அவனே அக்கந்தர்வனையும் வெல்ல முடியும்” என்றார். முதல் மாணவனாகிய சலஃபன் “அவர் யாதவ அரசரல்லவா?” என்றான். “அவன் யாரென நான் அறிவேன். அவனால் என்ன இயலுமென அவனும் அறிவான். கிளம்புங்கள்” என்று சொல்லி காலவர் அங்கிருந்து புறப்பட்டார்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 8

[ 3 ]

முன்பு தேவரும் அசுரரும் வாசுகியை நாணாக்கி மந்தரமலையை மத்தாக்கி  பாலாழியைக்  கடைந்தபோது எழுந்தவர் இரு தேவியர்.  இருளோரும் ஒளியோரும் இருபுறமும் நின்றிழுக்க மந்தரமலை சுழன்று பாற்கடலில் நுரையெழுந்தபோது அதன் அடியாழத்தில் ஓவியங்களென்றும் எழுத்துக்களென்றும் பொறிக்கப்பட்டு காலமின்மையில் துயின்றிருந்த தெய்வங்கள் ஒவ்வொன்றாக கண்விழித்தெழுந்தன.

பால்வண்ணப் பேரேட்டில் ஆமென்றும் அல்லவென்றும் குறிக்கும் ஓமென்ற எழுத்தால் எழுதப்பட்டிருந்த  பிரக்ஞாதேவி என்னும் அன்னை எட்டு கைகளுடன் விழித்தெழுந்தாள். அவள் முன்பக்கம் பொன்னிறமும் பின்பக்கம் கருநிறமும் என இருபுறமும் முகமும் முலைகளும் இடையும் கொண்டிருந்தாள். பேரழகும் நுண்ணறிவும் தண்ணளியும் கொண்டு மலர்ந்திருந்தது ஒரு முகம். மறுபக்கம்  எழுந்த முகம் கொடுமையும் மடமையும் கீழ்மறமும் என சுளித்திருந்தது.

சுழன்று சுழன்று ஒன்றுபிறிதெனக் காட்டி மேலெழுந்தாள் பிரக்ஞை. அவளை நோக்க பாலாழியின் பலகோடி மீன்கள் விழிகளாக எழுந்து சூழ்ந்தன. “இவள்! ஆம், இவள்!” என்று வியந்தன அவை. அவள் அசைவில் எழுந்த குமிழிகள் சொற்களென்றாகி ஒளிகொண்டன. பாலாழியின் மேல்விளிம்பை அடைவதற்கு முற்கணம்  தேவர்கள் “எங்களுள் அழியாதிருப்பவளே, எழுக!” என்று கூவிய ஒலி கேட்டதும் தேவியின்  கொடுமுகம் மறுமுகத்தை இடக்காலால் உதைத்து உந்தி விலக்கி தான் மேலெழுந்து வந்தது.

அவள் தோற்றத்தைக் கண்டு திகைத்த தேவர்கள் தங்கள் பிடியை நழுவவிட்டு அஞ்சிக் கூவியபடி பின்னகர்ந்தனர். இளித்த வாயும் வெறித்த விழிகளுமாக அவள் தேவர்களை நோக்கி பேருருக்கொண்டு விண்நிறைத்து மிதந்துசென்றாள்.  நாகவடம் நழுவ அதை இழுத்தோடியபடி கூவிக் களியாடிய அசுரர் “எங்களுள் விடாயென இருப்பவளே, எழுக!” என்று கூவியபோது தேவியின் இன்முகம் புன்னகையும் அருளுமாக எழுந்து, பொன்னொளி விரிய அவர்களை நோக்கி சென்றது. திகைத்து விழிகூட மேலே நோக்கி சொல்லவிந்தனர் அசுரர். அவர்கள் கைநழுவி நோக்கித் திகைத்த கணத்தில் தேவர்கள் தாங்கள் இழந்த நீளத்தை மீட்டெடுத்தனர்.

இரு அன்னையரும் எழுந்து விண்ணில் நின்றிருக்க  இருண்டும் குளிர்ந்துமிருந்தது வானத்தில் பாதி. ஒளிர்ந்து வெம்மைகொண்டிருந்தது மறுபாதி.  முனிவர்களின் மெய்மை அவரைவிதையென இரண்டாகியது. அவர்களில் ஒருபாதி கைகூப்பியபடி எழுந்து “விண்ணளந்தோனே, நீங்களே காக்க வேண்டும்! இத்தெய்வங்களை வென்றருளவேண்டும்” என்றது. மறுபாதி ஓடிச்சென்று முழந்தாளிட்டு “அனலுருவோனே, இத்தெய்வங்களை நீங்களே கொண்டருள்க!” என்று கூவியது.

விஷ்ணு பொன்னுருவ அன்னையைச் சுட்டி “இன்முகம் கொண்ட இவள் என் நெஞ்சமர்ந்தோளின் மாற்றுருவென்றிருக்கிறாள். இவள் என் துணைவியென்றமைக! எங்கெல்லாம் பதினாறு செல்வங்களும் எட்டு மங்கலங்களும் பொலிகின்றனவோ அங்கெல்லாம் இவள் வழிபடப்படுக!” என்றார்.  மூன்று கைவல்லிகளில் தாமரை மலரும் வெண்சங்கும் சுடரும் ஏந்தி வலக்கை அருளி நின்றிருக்க அன்னப்பறவைக் கொடியுடன் வெண்யானை மேல் எழுந்த அன்னை அவர் வலக்கையின் செந்நிற வரியோடிய குழிவில் சென்று குடிகொண்டாள்.

மூன்று கைகளில் பாசமும் அங்குசமும் துடைப்பமும் ஏந்தி, அருட்குறி அமைந்த இடக்கையுடன், நாகமாலையை கழுத்தில் சூடி, காகக்கொடி பறக்க, கழுதைமேல் எழுந்து கோரைப்பல்காட்டி  உறுமிய அன்னையை ஆதிசிவன் தன் மகளெனக் கொண்டார். அவள் சென்று அவர் காலடியில் பணிந்துநிற்க இடக்கால் தூக்கி அவள் மடியில் வைத்து அருளளித்தார். “துயர்கொண்ட உள்ளங்களில் நீ குடிகொள்க! இருளும் அழுக்கும் கெடுமணமும் உன் இயல்பாகுக! உண்மையென்பது உன் வடிவும் ஆகுக!” என்று செம்மேனியன் அருள்புரிந்தார்.

சிவமகளை வருணன் மணந்தான். மூத்தவளும் இளையவளும் வடக்கிலும் தெற்கிலுமென குடிகொண்டனர். இரு அன்னையரில் ஒருவரை வழிபடுபவர் பிறிதொருவரின் சினத்திற்காளாவார்கள் என்றனர் முனிவர். நூல்நெறிப்படி அமைந்த ஆலயங்களில் முதுகொடு முதுகொட்டி இருபுறமும் நோக்கி அவர்கள் அமர்ந்திருந்தனர். இருவகை உலகத்தியல்பு அறிந்த முனிவர் இருவரையும் நிகரென வணங்கி அருள்பெற்றனர். அவர்கள் நெஞ்சில் மீண்டும் ஓருருக்கொண்டு இணைந்து அவள் பிரக்ஞாதேவி என்றானாள். அவளை அவர்கள் ஊழ்கத்தில் முகம் கண்டு புன்னகைத்தனர். அப்புன்னகை தெரிந்த மானுடரை முனிவர் என்றனர் கவிஞர்.

[ 4 ]

காம்யக வனத்திற்குத் தெற்கே இருந்த காளிகம் என்னும் குறுங்காட்டுக்குள் முன்பு ரகுகுலத்து ராமனும் அவன் இளையோனும் வழிபட்ட பேராலயமொன்றிருந்தது. அங்கு குளிரும் இருளும் நிறையவே முனிவர் அவ்விடம் நீங்க அது கைவிடப்பட்டு காட்டுப்பெருக்கால் உண்ணப்பட்டது. வேர்களுக்குள் கிளைகளுக்கு அடியில் இரு கல்லுருவங்களாக மூத்தவளும் இளையவளும் மூழ்கிக்கிடந்தனர். அவர்களுக்குமேல் எழுந்து பச்சைகொண்ட மரங்களில் நறுந்தேன் சூடிய மலர்கள் விரிந்து வானொளிகொண்டு நின்றன.

சாந்தீபனி குருநிலையில் இருந்து தன் தோழனைத் தவிர்த்து தனியாகத் திரும்பிய இளைய யாதவர் தன் எண்ணச்சிதறலால் வழிதவறி கால் கொண்டுசென்ற போக்கில் அக்காட்டுக்குள் நுழைந்தார். உலகில் கொள்வனவற்றையும் சூழ்வனவற்றையும்  எண்ணி எண்ணி அலமலந்த உள்ளம் கொண்டிருந்தமையால் வழியை அவர் அறியவில்லை. வழியறிந்தபோது விடாய் கொண்டு உடலெரிவதை உணர்ந்தார். மலர்பூத்த மரம் மீது பறவைகளின் ஒலி கேட்டு அங்கு வேர் அருகே நீரோடை இருப்பதை உய்த்தறிந்தார்.

KIRATHAM_EPI_08

தன் காலடிகள் தன்னை தொடர்ந்தொலிக்க அந்த மலர்மரத்தடியில் வந்து நீரோடையைக் கண்டு அள்ளி அருந்தியபின் இளைப்பாற வேர்ப்பற்றில் அமர்ந்தார். எண்ணம் எழுந்து சூழ உடல்தளர்ந்து விழிமூடி மயங்கியபோது அவர் பெண்குரல் விசும்பியழும் ஒலியை கேட்டார். தன்னுள் எழுந்ததோ அவ்விசும்பல் என்று திகைத்தார். பின் விழித்தெழுந்து நோக்கியபோது கருநிறமும் கெடுமுகமும் கொண்ட பெண் ஒருத்தி உடல்குவித்து அமர்ந்து அழுவதைக் கண்டார்.

அவளை அணுகி “பெண்ணே, நீ யார்?” என்று அவர் கேட்டார். “என்னை மூத்தவள் என்பார்கள். இக்காட்டில் நான் கோயில்கொண்டிருக்கிறேன்” என்றாள். “நீ அழுவது எதனால்?” என்றார். “தனித்து கைவிடப்பட்டவர்கள் அழுவதே இயல்பு” என்று அவள் சொன்னாள். “நீ கைவிடப்பட்டது ஏன்?” என்றார். அவள் தன் கையை நீட்டிக்காட்டினாள்.  அதில் இருந்து ஒளிவிட்ட அருமணியைக் கண்டு அவர் அருகணைந்தார். அவள் “என் விழிநீர்த்துளியால் உருவானது இது. இவ்வரிய மணியை நிகிலம் என்றழைக்கிறார்கள். இதை என்னிடமிருந்து பெற்றுச் சூடாமல் எவரும் மெய்மையை அறிவதில்லை” என்றாள்.

“இங்கு வாழ்ந்த ஒவ்வொரு முனிவருக்கும் இதை நான் நீட்டியிருக்கிறேன். எவரும் இதை பெற்றுக்கொண்டதில்லை. எவரும் ஏற்காத இந்த அருமணி என் கைகளை அனல் என எரிக்கிறது. அதன் துயர்தாளாது நான் அழுகிறேன்.” அவர் அதை நோக்கியபடி “இவ்வருமணியின் சிறப்பென்ன?” என்றார். அது ஒரு விழிமணி போலிருந்தது. “யாதவனே, நீ நோக்கியறிந்த ஒவ்வொன்றிலும் மறைந்துள்ள பிறிதொன்றுள்ளது. அதை இது காட்டும்” என்றபடி அவள் புன்னகைத்தாள். “இதன் ஒளியில் ஒவ்வொன்றும் நிலைமாறும். உன்னைச் சூழ்ந்துள்ள இப்புடவி முற்றிலும் திரிந்து உருமாறும்.”

அவள் கண்களை நோக்கியபடி அவர் திகைத்து நின்றார். “ஆம், இது எளியவர்களுக்கு உகந்தது அல்ல. அறிக, கோழைகளுக்குரியதல்ல மெய்மை! தன்னை உரித்து தான்போர்த்தி நின்றாடுபவர்களுக்குரியது அப்பாதை. தன்னைக் கொன்று தானுண்டு செரித்து மேலேறும் மாவீரர்களுக்குரியது அம்மலைமுடி. தன்னை நீறாக்கி தானணிபவர்களின் வானம் அது. சொல்க,  நீ அவர்களில் ஒருவனா?”

அவர் மூச்சடைக்கும் அச்சத்துடன், விழிவிலக்கவொண்ணா பேரார்வத்துடன்  அவளை நோக்கி நின்றார். “அறிதலென்பது நீ அறியத்தொடங்கிய நாளிலிருந்தே இனிதென்றே உன்னை வந்தடைந்திருக்கும்.  உண்ணும் புணரும் தழுவும் வெல்லும் கொள்ளும் இன்பங்களை சிறு திவலைகளென்றாக்கும் பேரின்பமே அறிதலென்பது.” அவள் விழிகள் நாகவிழிகளின் ஒளிரும் வெறிப்பு கொண்டிருந்தன. “ஆனால் அறிக, உவகையினூடாக அறிவது அறிவின் ஒருபக்கம் மட்டுமே. கடுந்துயரும் கசப்பும் வலியும் கொண்டு கணம் கணமென வதைபட்டு அறியும் அறிவும் ஒன்றுண்டு. அவ்வறிவாலும் இவையனைத்தையும் அறிந்தவனே மெய்யறிவன்.”

அவள் நுண்சொல் ஓதும் பூசகிபோல காதருகே காற்றசைவென பேசினாள். “அவன் அறியும் வேதம் வேறு. அவன் அடையும் வேதநிறைவும் மற்றொன்று. இருமையென அறிந்து ஒருமையென்றாக்கி அறிவதே மெய்மை.” அவர் தோள்களில் அவள் தன் கைகளை வைத்தாள். அவள் வாயிலிருந்து மட்கிய ஊன்நாற்றம் வீசியது. பீளைபடிந்த பழுத்த விழிகள் நோக்கிழந்த இரு துளைகளென்று தோன்றின. “உலர்ந்த குருதியில் மட்கும் பிணங்களில் எரியும் மயிரில் எழும் சொற்களின் வேதம். சீழில் சளியில் மலத்தில் அழுகலில் எழும் வேதம். கண்ணீரில் கதறலில் வசைகளில் சாவில் எழும் வேதம். அதைக் கல்லாது நீ அறிவதுதான் என்ன?”

அவர் பெருமூச்சுடன் மெல்ல தளர்ந்து “ஆம், உண்மை” என்றார். “நானறிந்த வேதம் குறைபட்டதென்பதை ஒவ்வொரு சொல்லும் எனக்கு உணர்த்துகிறது. நான் கொண்ட பெருஞ்சோர்வு அதன்பொருட்டே.”  “நீ அவ்விழிகளால் அதைப் பார்க்க முடியாது. அந்த மெய்மையை அறியும் ஒளிவிழி இதுவே” என அவள் அந்த அருமணியை அவர் கண்களுக்கு முன் காட்டினாள். “கொள்க! இனியவனே, இதைக் கொள்க! உனக்கென்றே இன்று என் கையில் பூத்துள்ளது இது.”

அவள் கறைப்பற்கள் நடுவே சிறியவெண்புழுக்கள் நெளிந்தன. கரியநாக்கு பெரிய புழுவென துழாவியது. காம்பு கூம்பித் தொங்கிய வறுமுலைகள் அவர் மார்பின் மேல் படிந்தன. எலும்பெழுந்த கைகள் அவர் தோளை வளைத்து அவர் முகத்தை தன் முகம் நோக்கி இறுக்கின. அவள் மூச்சில் புண்சலம் நாறியது. “நீ வீரன். வென்று செல்பவன். யுகங்களுக்கொருமுறை மண்ணில் எழும் மாமானுடன். மெய்மையை மணிமுடியெனச் சூடி காலத்தைக் கடந்து நின்றிருப்பது உன் முகம். வெற்று அச்சத்தால் நீ அதை இழந்துசெல்வாயா என்ன?”

அவர் உடல் உதறிக்கொண்டே இருந்தது. “அஞ்சுகிறாய், இளையோனே. எதை அஞ்சுகிறாய் என்று எண்ணிப் பார். ஏன் அஞ்சுகிறாய் என்று ஆராய்ந்து பார். அஞ்சுவது என்னையா? உன்னுள் இருந்து எழுந்து வந்து இங்கு நான் நின்றிருக்கிறேன். உன் மலக்குடலில், குதத்தில் வாழ்கிறேன். நீ உண்ணும் இன்னுணவெல்லாம் எனக்களிக்கும் படையல். உன் மூச்சில் நானும் கலந்துள்ளேன். உன் விந்துவில் ஊறி உன் தேவியர் வயிற்றில் முளைத்து உன் மைந்தரென முகம் கொண்டு நின்றிருக்கிறேன்.”

அவர் “நான் என்ன செய்யவேண்டும்?” என்றார். “என்னைத் தழுவுக! என்னைச் சூடுக! ஏழாண்டுகாலம் என்னை உடன்கொள்க!” அவள் தன் இதழ்களை அவர் வாயருகே கொண்டுவந்தாள். மட்கிய ஊன்போன்று கரியவை. அழுகிக்கிழிந்து தொங்கியவை. அவர் அறியாது அவளை சற்று உந்தி விலக்கினார். “மண்ணிலெழும் மாமனிதரில் கணமேனும் என் கையின் இந்த மணி கொள்ளாதோர் எவருமில்லை. விண்வேதம் கொய்தெடுத்த மாமுனிவர் ஒவ்வொருவர் மடியிலும் ஏழாண்டுகாலம் அமர்ந்தவள் நான். நீ அவர்களில் ஒருவனல்லவா? அவர்கள் அறிந்ததை நீ அறியவேண்டாமா?”

அவர் பெருமூச்சுவிட்டார். கண்களை இறுகமூடி “ஆம்” என்றார். “எதற்கு அஞ்சுகிறாய்? நீ அறிந்ததில்லையா என்னை? உன் மைந்தரின் மலத்தை அருவருத்தாயா? அவர் எச்சிலை நீ அமுதென்று எண்ணவில்லையா? அவர்மேல் கொண்ட அக்காதலை எனக்கும் அளி. என்னைப் புல்கு. முதல் உறவுக்குப்பின் நான் இனியவள் என உணர்வாய். என்னை பேரழகி என்று உன் விழிகள் அறியும்.  என் அருகிருப்பதை மட்டுமே விழைவாய். ஏழரையாண்டுகாலம் என்னுடன் நீ இருந்து நிறையும்போது இவ்வருமணியை உனக்களித்து நான் மீள்வேன். இது முழுமை. இது சமன். இதுவே பிறிதொன்றிலாமை…”

அவர் மேலும் ஒருமுறை பெருமூச்சுவிட்டார். “நான் பைநாகப் படமணிந்தவனின் மகள். அவன் சூடிய சுடலைப்பொடி நாறும் உடல்கொண்டவள். நிணமொழுகும் தலைமாலை சூடிய காலபைரவனின் தமக்கை. உக்ரசண்டிகை என்றும் அகோரிகை என்றும் காளபயங்கரி என்றும் பவஹாரிணி என்றும் என்னை வழிபடுகிறார்கள் முனிவர்கள்.” அவர் “ஆம்” என்றார். “அழகனே, கொள்க இவ்வொளியை!” என்றாள். எப்பொருளும் இல்லாமல்  “ஆம்” என்று அவர் சொன்னார்.

ஒருகணம் மெல்லப்புரள, முன்பெங்கோ முடிவான மறுகணத்தில் அவர் அவளை அள்ளி அணைத்து உடலுடன் சேர்த்து இறுக்கி இதழ்களில் முத்தமிட்டார். காமம் கொண்டு முனகியபடி அவள் அவர் உடலுடன் தன்னைப் பொருத்திப் புல்கி ஒன்றானாள்.  “நீ இனியவன். நீ எனக்குரியவன்” என்று விழிசொக்கப் புலம்பினாள். அவள் உடலில் ஊறிவழிந்த மதநீர் எரிமணம் கொண்டிருந்தது.

அக்காட்டின் பசிய இருளுக்குள் அவளை அவர் புணர்ந்தார். கிளறப்பட்ட சதுப்பென கெடுமணங்கள் குமிழியிட்டெழுந்தன அவளிலிருந்து. சிதையென அவரை ஏற்று எரித்தாள். சேறென அவரைச் சூழ்ந்து மட்கவைத்தாள். சிம்மமென அவரை நக்கி உண்டாள். அவர் விழித்தெழுந்தபோது அவள் அங்கிருக்கவில்லை. அவள் ஒரு கெடுமணமாக தன் உடலில் படர்ந்துவிட்டிருப்பதை உணர்ந்தார்.

[ 5 ]

காளிகக் காட்டிலிருந்து வெளிவந்த இளைய யாதவரின் நடையும் நோக்கும் மாறிவிட்டிருந்தன. புல்தெறித்துச் செல்லும் வெட்டுக்கிளி என நடந்துகொண்டிருந்தவர் நிலம் அதிர ஆண் எருமையென கால் எடுத்து வைத்தார். சுவைதேர்ந்து இன்கனியும் மெல்லூனும் தேனும் நறுநீரும் உண்டவர் கிழங்கைப்பிடுங்கி மண்ணுடன் மென்றார். சேற்றுடன் உழன்ற பன்றியைக் கொன்று குருதி வேகாது தின்றார். கலங்கல் நீரை அள்ளி அருந்தி ஈரச்சேற்றிலும் இருண்ட குகையிலும் படுத்துறங்கினார்.

எட்டு நாட்களுக்குப்பின் அவர் சியாமளபதம் என்னும் சிற்றூரைச் சென்றடைந்தபோது அவ்வூரார் அவரை காடுவிட்டெழுந்து வந்த காளாமுகன் என்று எண்ணினர். அவர் வருவதை அகலே எழுந்த நாய்க்குரைப்பிலேயே அறிந்த ஊர்மூத்தார் உணவும் நீரும் ஏந்தி ஊருக்கு வெளியே காத்து நின்று “கொள்க, கபாலரே! எங்கள் ஊர்செழிக்க வாழ்த்துக!” என்றனர். அவர் ஊருக்குள் நுழையாதபடி வேலிப்படல்களை முன்னரே மூடிவிட்டிருந்தனர். பெண்கள் குழந்தைகளைத் தழுவியபடி உள்ளறைக்குள் ஒடுங்க கன்றுகளை எண்ணி பசுக்கள் குரல்கொடுத்துக்கொண்டிருந்தன.

சப்தஃபலம் என்னும் யாதவச்சிற்றூரை அவர் சென்றடைந்தபோது அங்கிருந்த யாதவப்படைத்தலைவன் சதமன் அவரை அடையாளம் காணவில்லை. கபாலமும் சூலமும் உடுக்கும் இன்றி வந்த காளாமுகரை நோக்கி வியந்த அவன் அருகிருந்த முதிய யாதவவீரராகிய கலிகரை நோக்கி “யாரவர்? யாதவர் நிலத்திற்குள் கொடுஞ்சைவர் நுழைவதில்லையே?” என்றான். கண்களுக்குமேல் கைகளை வைத்து நோக்கிய கலிகர் “யார்?” என்றார். மெல்லிய நடுக்கம் ஓடிய உடலுடன் “எந்தையரே, யார் அவர்?” என்றார். மேலும் உரக்க “இல்லை, இருக்கவியலாது” என்று கூவினார்.

மறுகணமே சதமன் கண்டுகொண்டான். “ஆ! அவரேதான்! அரசர்” என்றான். அக்கணத்திலேயே அத்தனை வீரர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டனர். காவல்மேடையிலிருந்து மரப்படிகளில் உடல்முட்டி நெரிந்திறங்கி ஓடி அவர்களை அணுகிவந்த இளைய யாதவரை நெருங்கி “அரசே!” என்று கூவினர். அவர் உடலில் சேறும் ஊனும் மலமும் நாறியது. அவர் விழிகள் சிவமூலிக் களிகொண்டவனைப்போல அலைபாய்ந்தன.

“அரசே, தாங்களா? என்ன ஆயிற்று?” என்று கலிகர் கூவினார். சதமன் அப்படியே அவர் கால்களில் சரிந்து அழத்தொடங்கினான். “அரசே! அரசே!” என யாதவ வீரர் அவரைச் சூழ்ந்துகொண்டு கூவினர். அவர்  மெல்லிய கூர்குரலில் “இந்நகரில் நான் சிலநாட்கள் இருப்பேன். இங்கு நான் எவரையும் காண விழையவில்லை” என்றார். “ஆம், ஆணை” என்றார் கலிகர்.

அவர்கள் எவரையும் நோக்காமல் நடந்து அச்சிற்றூரின் நடுவே அமைந்திருந்த அரசமாளிகையை அடைந்தார். அவருக்காக நீராட்டுப்பணியாளர்களும் சமையர்களும் அங்கே காத்து நின்றிருந்தனர்.  அவர் அவர்களை ஏறிட்டும் நோக்கவில்லை. முகமன்கள் எவையும் அவரை சென்றடையவில்லை. செல்லும்வழியில் தூண்மடிப்பில் விழுந்துகிடந்த மாடப்புறாவின் எச்சத்தை அவர் கைதொட்டு எடுத்து மூக்கில் வைத்து முகர்ந்து முகம் மலர்ந்ததைக் கண்டு அவர்கள் திகைத்தனர்.

அடுமனைக்குள் புகுந்து அதன் கொல்லைப்பக்கம் கரிபடிந்த மூலையில் குவித்திட்ட குப்பைக்குமேல் அமர்ந்துகொண்டு உணவு கொண்டுவரும்படி சொன்னார். அவர்கள் திகைத்து முகமும் முகமும் நோக்க முதிய அடுமனையாளன் “அரசாணை எனில் அவ்வாறே” என்று மெல்லிய குரலில் சொன்னார்.  அவர்கள் அளித்த உணவை இருகைகளாலும் அள்ளி உண்டார். உண்ணும்போதே சொறிந்துகொண்டார். உரத்த ஒலியுடன் ஏப்பம் விட்டார்.

அவர்கள் இல்லம் புகுந்த பேயை என அவரை பார்த்துக்கொண்டிருந்தனர். எழுந்துசென்று கையைக் கழுவாது உதறிவிட்டு இருளுக்குள் நடந்தார். அவருக்கான நீராட்டும் மஞ்சத்தறையும் ஒருக்கியிருப்பதைச் சொல்ல பின்னால் சென்ற ஏவலர் அவர் அரண்மனைக்கு வெளியே சென்று அங்கு நின்றிருந்த இலைமூடி தழைந்த வாகைமரத்தின் அடியில் புழுதியிலேயே உடல்சுருட்டிப் படுத்து துயிலத் தொடங்கியது கண்டு அஞ்சி அப்பால் நின்றனர். அவரை எழுப்புவதா என்று மெல்ல முதிய குடித்தலைவரிடம் ஏவலன் ஒருவன் கேட்டான். “அவரில் வாழும் தெய்வமேது என்று அறியோம். காத்திருப்போம்” என்று அவர் சொன்னார்.

அன்றிரவு முழுக்க அவர்கள் இருளுக்குள் அவருக்காக காவல் நின்றனர். மறுநாள் விழித்தெழுந்த அவர் மீண்டும் வந்து அடுமனைக்குப்பின் அமர்ந்து உணவுகொண்டார். அரண்மனையை ஒட்டிய குறுங்காட்டுக்குள் சென்று அந்தி இறங்கிய பின்பு மீண்டார். நாட்கள் செல்லச் செல்ல அவர் விழிகள் அவ்விடத்தை அறியலாயின. அரண்மனையின் அறையில் துயிலவும் ஏவலர் விழிநோக்கவும் தொடங்கினார்.

ஆனால் அழுக்கும் இருளும் கெடுமணமும் அவரைச் சூழ்ந்திருந்தன.  அவர் அசைவுகள் காற்றில் பிரியும் புகைபோல ஓய்ந்திருந்தன. சொற்கள் அவரைச் சென்றடைய நெடுந்தொலைவு பயணம் செய்யவேண்டியிருந்தது. வெறித்த விழிகளுடன் அவர் தன்னுடன் பேசுபவர்களை நோக்கிக் கொண்டிருந்தார். கண்முன் அகல்சுடர் சரிந்துவிழுந்து திரைச்சீலை பற்றி எரிந்து தன் ஆடையை தொடவரும்போதும் வேறெங்கோ இருந்து அதை நோக்கிக் கொண்டிருந்தார்.

தன் இருளாழத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் பெருஞ்சினம் கொண்டார். கொலைத்தெய்வம் போன்று வெறிகொண்டு சுளித்த முகத்துடன் கைநீட்டி அடிக்க வந்தார். “ஈன்ற பூனைபோலிருக்கிறார். அவரை அணுகாதொழியுங்கள்” என்று ஏவலர்தலைவன் இளையோரிடம் சொன்னான். தனிமையில் நாளெல்லாம் அமர்ந்திருந்தார். நீள்மூச்சு விட்டு  அவர் அசைந்தமர்கையில் “அவர் எண்ணி ஏங்குவதுதான் எதை? இளையோரே, எந்தை கொள்ளும் துயர் எதன்பொருட்டு?” என்று அமைச்சர்கள் புலம்பினர். முதுபூசகர் “அவர் துயரில் மகிழ்ந்தாடுகிறார். அவரைச் சூடிய பேய் அதில் திளைக்கிறது” என்றார்.

அங்கு அவர் வந்துசேர்ந்த செய்தி துவாரகைக்கு அனுப்பப்பட்டது. அரசர் ஆட்சிச்செயல்கள் அனைத்திலும் இருந்து விலக விழைவதாக ஆணை சென்றபோது அக்ரூரர் திகைத்து என்ன நிகழ்ந்தது என்று வினவி செய்தியனுப்பினார். என்ன நிகழ்ந்தது அரசருக்கு என குடித்தலைவருக்கும் நிமித்திகருக்கும் புரியவில்லை. குடிமூத்தார் குடிப்பூசகர் மூவரைக் கூட்டி உசாவினார். அரசருக்கு அகோரசிவம் உளம்கூடிவிட்டிருக்கிறது என்றனர் அவர்கள். அச்செய்தியையே துவாரகைக்கு அனுப்பினர்.

அக்ரூரர் உடனே கிளம்பி சப்தஃபலத்திற்குச் செல்ல விழைந்தார். “என்ன நிகழ்ந்துள்ளதென்று உணரமுடிகிறது, அரசி. மூத்தவர் பிரிந்து சென்றதும், யாதவர் உளத்திரிபு கொண்டதும் அரசரின் உள்ளத்தை உலைத்துவிட்டிருந்தன. அவர் தன் தோழரை காணச்சென்றதே அதன்பொருட்டுதான். அவர் உள்ளம் நிலையழிந்துள்ளது” என்றார். “இத்தருணத்தில் அவருடன் நான் இருந்தாகவேண்டும்… அது என் கடன் என்றே உணர்கிறேன்.”

சத்யபாமை அதை தடுத்துவிட்டாள். “நாம் அறியாத பலர் நாளும் கடந்துசெல்லும் ஒரு வாயில் போன்றவர் அவர். நாம் அறிந்தவர்களைக்கொண்டு அதை மதிப்பிடலாகாது. அக்ரூரரே, நம் தலைக்குமேல் எழுந்து நின்றாலும் இந்நகரின் அணிப்பெருவாயிலை நாம் எவரும் காண்பதே இல்லை. அதைக் காண நாம் கடலில் ஊர்ந்து விலகிச்செல்லவேண்டும்.  அவர் எவரென்று அறிய நாம் காலத்தில் பறந்தகலவேண்டும். பிறிதொரு யுகத்தில் நாம் அவரை ஒன்றென நோக்கமுடியும். முடிவிலா முகங்களினூடாக தன்னை தான் நோக்கிக்கொண்ட அந்த முழுமுகத்தை. அதுவரை அவர் ஆணைகளை தலைக்கொள்வதே நாம் செய்யக்கூடுவது.” அக்ரூரர் பெருமூச்சுடன் “ஆம், தேவி” என்றார்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 7

பகுதி இரண்டு : திசைசூழ் செலவு

[ 1 ]

ஜ்ஜயினி நகரின் தெற்குபுறக் கோட்டைக்கு வெளியே முதல் அன்னசாலை அமைந்திருந்தது. தாழ்வான பழைய கோட்டையில் இருந்து கிளம்பி தெற்கே விரிந்திருக்கும் தண்டகாரண்யம் நோக்கிச் செல்லும் பெருஞ்சாலை இரவுக்காற்றால் தடங்கள் அழிக்கப்பட்டு அன்று புதிதெனப் பிறந்திருந்தது. இருமருங்கும் அரண் அமைத்திருந்த பெருமரங்கள் காலைக்காற்றில் இருளுக்குள் சலசலத்தன. அன்னசாலைக்குள் எரிந்த விளக்கொளி அதன் அழிச்சாளரங்கள் வழியாக செந்நிறப்பட்டு விரிப்பு போல முற்றத்தில் நீள்சதுர வடிவில் விழுந்து கிடந்தது.

அன்னசாலையின் சரிந்த மரப்பட்டைக்கூரையின் இடுக்குகள் வழியாக எழுந்த விளக்கொளியில் அடுமனைப்புகை அசைந்தது. அங்கு அமர்ந்து உண்பவர்களுக்கு புலரிக்கு பின்னரே உணவளிக்கப்பட்டது. முதற்காலையிலேயே கோட்டையிலிருந்து வெளியேறிச் செல்பவர்களுக்குரிய உலர்உணவுதான் அப்போது அளிக்கப்பட்டது. கோட்டையின் விளிம்பை ஒட்டிச்சென்று அகழியில் பொழிந்த இரு நீரோடைகளில் நீராடிய வணிகர்கள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டபடி அன்னசாலை நோக்கிச் சென்று கூடினர்.

முகப்பிலிருந்த பெருமுற்றத்தில் கோட்டை மூடிய பின்னர் வந்து சேரும் வணிகர்களின் ஏவலரும் விலங்குகளும் தங்குவதற்கான அகன்ற வெளி இருந்தது. அங்கே நூற்றுக்கணக்கான வண்டிகளும் குதிரைகளும் அத்திரிகளும் காளைகளும் அவிழ்க்கப்பட்டு வண்டிச்சக்கரங்களிலும் தறிகளிலும் கட்டப்பட்டிருந்தன. காலைச் சந்தடியில் விழித்துக்கொண்டு எழுந்த விலங்குகள் வால்சுழற்றி சாணியிட்டு நீர்பெய்தபின் இரவில் மென்று மிச்சமிருந்த வைக்கோலை கடிக்கத் தொடங்கின. கழுத்துமணியோசைகள் களமெங்கும் ஒலித்தன. பழைய மரவுரிகளால் உடலை முற்றிலும் மூடி மூட்டைகள் போல ஒடுங்கித் துயின்றுகொண்டிருந்த பணியாட்கள் அவ்வொலிக்கு மேலும் உடலை குறுக்கிக் கொண்டார்கள்.

முற்றத்தின் இருபக்கங்களிலும் நண்டுக்கொடுக்குபோல நீண்ட கொட்டகைநிரையில் வரிசையாக இடப்பட்ட நார்க்கட்டில்களில் தலையருகே பணப்பொதிகளுடன் அயல்வணிகர்கள் துயின்றுகொண்டிருந்தனர். அவர்களின் உடைமைகளைக் காக்கும் காவலர் கைகளில் உருவிய வாள்களுடன் தலைமாட்டில் உறங்காமல் அமர்ந்திருந்தனர். காலையில் கிளம்பிச்செல்லும் வணிகர்கள் சிலர் கோட்டைக்குள் இருந்து திட்டிவாயிலினூடாக தங்கள் பொதிகளுடன் வெளிவந்துகொண்டிருந்தனர்.

அன்னசாலையின் மையப்பெருங்கூடத்தில் பலவண்ண உடையணிந்த வணிகர்கள் ஈரக்குழலின் நீர் ஆடைகளில் சொட்ட, இளங்குளிருக்கு உடல்குறுக்கி நடுங்கியபடி நின்றிருந்தார்கள். கண் தெளியத்தொடங்காத காலையில் வெண்குதிரைகளும் வெளிர்நிற ஆடைகளும் மட்டுமே துலக்கமாகத் தெரிந்தன. உலோகப்பரப்புகள் மட்டும் விண்ணிலிருந்து ஒளியை அள்ளித்தேக்கியிருந்தன. உணவின் மணம் எங்கும் நிறைந்திருந்தது. ஊடாக வடகிழக்கு மூலையில் அமர்ந்திருந்த உருளைப்பிள்ளையாருக்கு முன் காலையில் நடந்து முடிந்திருந்த வேள்விக்கொடையின் எரிநெய் மணமும் எண்ணைக்காரலும் கலந்து வீசியது.

பருப்புடன் சேர்த்து வறுத்துப்பொடித்து நெய்யுடன் உருட்டிய கோதுமை உருளைகளும் வேகவைத்து உலரவைக்கப்பட்ட கிழங்குகளும் வெல்லத்துடன் பொடித்து உருட்டப்பட்ட கொள்ளும் அவலும் வணிகர்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றை கரியிலைகளில் நன்றாகச் சுற்றிக்கட்டி மேலே பாளைப்பொதியால் மூடி நீர்புகாத பொதிகளாக அளித்தனர். பெற்றுக்கொண்ட வணிகர்கள் அங்கிருந்த வெண்கலக்குடங்களில் தங்கள் நாணயங்களை போட்டுவிட்டு வெளியே சென்றார்கள்.

இசைச்சூதரும் வழிப்போக்கரும் தனிநிரையில் நின்றிருந்தனர். அவர்களுக்குரிய உணவில் உலரச்செய்யப்பட்ட ஊனும் மீனும் வறுத்து இடித்துச் சேர்க்கப்பட்டிருந்தது. அவற்றை நீரும் காற்றும் புகாவண்ணம் கட்டி அளித்தனர். பொதிசூத்திரர்களுக்கு பிறிதொரு இடத்தில் அதே உணவு அளிக்கப்பட்டது. அவர்கள் கோருமளவுக்கு உணவளிக்கவேண்டுமென்று நெறியிருந்தது. அடுத்த அன்னசாலையைக் கணக்கிட்டு அவர்கள் உணவு பெற்றுக்கொண்டார்கள்.

அந்தணருக்கும் முனிவர்களுக்குமுரிய நிரைகளில் அவ்வேளையில் அயல்பயணம் செல்லும் அந்தணர் ஓரிருவரே நின்றிருந்தனர். முனிவர்களென எவருமில்லை. அவர்களுக்கு நெறிநின்று அந்தணர் சமைக்கும் எளிய நோன்புணவு அளிக்கப்பட்டது. வெல்லமோ உப்போ சேர்த்து வறுத்து உருட்டப்பட்ட கோதுமையும் அரிசியும். நெல்லிக்காயும் உப்பும் கலந்த பொடி. அவற்றை வாங்கி அளிப்பவனையும் அரசனையும் வாழ்த்தி அவர்கள் முற்றத்தை அடைந்தனர். நகர்நோக்கித் திரும்பி அந்த மக்களை மும்முறை வாழ்த்திவிட்டு தங்கள் வழிதேர்ந்தனர்.

கையில் வாங்கிய நான்கு பொதிகளையும் கொடிபின்னி அமைத்த தொங்குகூடைக்குள் போட்டு தோளில் இட்டபின் பைலன் திரும்பி நகரை நோக்கினான். அந்நகருக்குள் நுழைந்தோமா என்றே அவனுக்கு ஐயமாக இருந்தது. பன்னிரு நாட்களுக்கு முன்னர்தான் அவன் வடக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்தான். அந்நகரின் வேதநிலைகள் நான்கில் தங்கியிருந்தான். மூன்று வேள்விகளில் கலந்துகொண்டான். நான்கு வேதச்சொல்லவைகளில் அமர்ந்தான். பன்னிருநாளும் சொற்களங்களில் ஈடுபட்டிருந்தான். ஆனால் அங்குள்ள எந்தப் பொருளையும் எம்மனிதரையும் தொடாமல் விலகி வெளிச்செல்வதாகத் தோன்றியது.

“அருள், பொருள், புகழ் மூன்றும் திகழ்க! என்றும் நூலோர் நாவில் விளைக! நீடுசெல் கொடிவழிகள் நினைப்பில் பொலிக! ஆம், அவ்வாறே ஆகுக!” என அவன் அந்நகரை வாழ்த்தினான். பின்னர் திரும்பி தெற்குநோக்கிய சாலையில் நடக்கத்தொடங்கினான். சாலையெங்கும் வணிகர்களின் தலைப்பாகைகளின் வண்ணங்களும் வண்டிச் சகடங்களின் இரும்புப்பட்டைகளும் உலோகக்குமிழ்களும் ஒளிகொண்டு அசைந்தன. மணியோசைகளும் ஆழியரவங்களும் குளம்படிகளும் காலடிகளும் அச்சுரசல்களும் அணிகுலுக்கங்களும் ஆடைச்சரசரப்பும் கலந்து சாலையிருளை நிறைத்துப் பெருகிச் சென்றுகொண்டிருந்தன.

இரவில் அவன் நன்கு துயின்றிருக்கவில்லை. எனவே தலை சுழன்று மெல்லிய குமட்டல் இருந்தது. கால்களும் உறுதியுடன் மண்ணில் படியவில்லை. அந்நகரிலிருந்து கிளம்பும் முடிவையே பின்னிரவில்தான் எடுத்தான். அம்முடிவை நோக்கி அவன் வந்துகொண்டிருப்பதை அவன் அறியவில்லை. எண்ணி உழன்று சலித்து மீண்டும் எழும் எண்ணத்துளி கண்டு அதைச் சென்று தொட்டு அது வளர்ந்து நீண்டு உலகை வளைக்கத் துழாவி ஓய்ந்து சுருள்கையில் மீண்டும் சலித்து புரண்டுபுரண்டு படுத்துக்கொண்டிருந்த ஒருகணம் ஏன் இன்னமும் இங்கிருக்கிறேன் என்ற எண்ணம் எழுந்தது.

ஆம், அங்கு ஏன் இருக்கவேண்டும்? அங்கு என்ன எஞ்சியிருக்கிறது? ஒழிந்த கலம். அல்லது பறவைகள் எழுந்து சென்ற மரம். மிச்சில்கள், எச்சங்கள். வெறும் வாசனைகள். அவன் அக்கணமே எழுந்து தன் ஆடைப்பொதியை எடுத்துக்கொண்டு நுனிக்காலில் நடந்து குடிலின் கதவுப்படலைத் திறந்து வெளியே தேங்கியிருந்த இருட்டுக்குள் இறங்கி அதன் குளிரை உடலெங்கும் ஏற்று நடக்கலானான். எங்கு செல்வதென்று அவன் எண்ணியிருக்கவில்லை. அவன் வந்தது வடக்கிலிருந்து என்பதனால் செல்வது தெற்காகவே இருக்கமுடியுமென கால்கள் முடிவெடுத்தன.

வேதச்சொல்லவையில் அவன் ஆசிரியராக பீடத்தில் அமர்ந்திருந்த பெருவைதிகரான பார்க்கவரிடம் கேட்டான் “வேதங்கள் விழைவை நிறைவுசெய்கின்றன என்கிறீர்கள், ஆசிரியரே. விழைவை அறிய அவை உதவுகின்றனவா?” அவர் அவனை புருவம் சுளிக்கக் கூர்ந்து நோக்கி “நீ கேட்பது என்னவென்று உணர்கிறாயா?” என்றார். “விடாய்க்கு நீரே நிறைவளிக்கும். விழைவுக்கு விழைபொருளே விடையாகும். தத்துவம் அல்ல.” அவருடைய மாணவர்கள் சிலர் சிரித்தனர்.

“வடக்கே கிருஹ்யபாதம் என்னும் ஓர் ஊரில் வைக்கோற்போர்களும் கூரைகளும் விளைநிலங்களும் தீப்பற்றி எரிந்துகொண்டே இருந்தன, ஆசிரியரே. அங்குள்ளவர்கள் நீரும் மண்ணும் இட்டு அதை அணைத்தனர். அதை அணைப்பதற்கென ஓர் இளைஞர் படையையே உருவாக்கினர். அங்கு சண்டகர் என்னும் முனிவர் சென்றார். மூடர்களே, எதனால் நெருப்பெழுகிறதென்று உணராமல் அதை எத்தனை காலம்தான் அணைத்துக்கொண்டிருப்பீர்கள் என்று கேட்டார். மறுமுறை எரிகோள் நிகழ்கையில் அது எப்படி எங்கிருந்து வருகிறது என நோக்கும்படி ஆணையிட்டார்.”

“அதன்பின் அவர்கள் கண்டடைந்தனர், அவ்வூரின் அருகே காட்டின் விளிம்பில் இருக்கும் கரும்பாறை ஒன்றன் குழியில் அனல் ஊறி அது கொதித்துக் கொண்டிருந்தது. அதன்மேல் விழும் சருகுகள் அனலாயின. அவை பறந்து விழுந்து ஊர் எரிந்தது. அந்த அனல்குழிக்குச் சுற்றும் பாறைகளால் வேலியமைத்துக் காத்தனர். அனலிடர் இல்லாமலாயிற்று” என்று பைலன் சொன்னான். “விழைவின் ஊற்றை அறியாமல் விழைவை வெல்ல முடியாது.”

“ஏன் வெல்லவேண்டும்?” என்று பார்க்கவர் கேட்டார். “பசியும் விடாயும் காமமும் போல விழைவும் மானுடனின் முதலியல்பு. அவனை ஆக்கிய விசைகள் அதில் தொழிற்படுகின்றன. அதை அடைவதே இன்பம். இன்பம் மானுடருக்கு தெய்வங்களின் கொடை. அவ்வின்பமே மானுடவாழ்க்கையின் பொருள்.”

“விழைவு நிறைவேறுமென்று உறுதியிருக்கும் என்றால் மட்டுமே நீங்கள் சொல்வது மெய். விழைவுகள் அனலென தொட்டவற்றை எல்லாம் உண்டு பெருகுபவை. மாமன்னர்களுக்குக் கூட அவற்றில் சிறுதுளியேனும் நிறைவுறுவதில்லை. நிறைவுறாத விழைவே துயரம். அத்துயரத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர் மானுடர். எங்கும் நான் காண்பது அத்துயர் நின்று ததும்பும் முகங்களை மட்டுமே. அத்துயரை வெல்லாமல் மானுடனுக்கு மீட்பில்லை” என்றான் பைலன்.

பார்க்கவர் “வேதவேள்வி அனைத்து விழைவுகளையும் நிறைவுசெய்யும் என்கின்றன முன்னோர் சொற்கள்” என்றார். பைலன் “விழைவுகளை நிறைவுசெய்ய எவற்றாலும் இயலாது, ஆசிரியரே. அவை மூன்று தெய்வங்களுக்கும் மேலே எழுந்து நிற்கும் ஆணவத்தை பீடமாகக் கொண்டவை” என்றான். “இது வேதமறுப்பு. இவ்வேதநிலையில் இத்தகைய சொல்லெழ இடமில்லை” என்று பார்க்கவர் சினத்துடன் சொன்னார்.

பைலன் “அறிந்துக் கடக்காமல் துயரை வெல்ல முடியாது, ஆசிரியரே. மானுடம் துயர் சுமந்து கூன்கொண்டிருக்கிறது. அதற்கு மீட்பென வருவது மெய்யறிவாகவே இருக்க முடியும். அனல்மேல் நெய்பெய்து அணைக்கவியலாது” என்றான். “உன் வயதென்ன?” என்றார் பார்க்கவர். “ஒன்பது” என்றான். “ரிக்வேதத்தை முழுதறிந்த மாவைதிகரான வசு என் தந்தை. அவரிடம் நான் வேதங்களைக் கற்றேன்.” பார்க்கவர் இகழ்ச்சியுடன் “ஆனால் வாழ்க்கையைக் கற்றுத்தேர்ந்ததுபோலப் பேசுகிறாய்” என்றார்.

“ஆம், வாழ்க்கையையும் கற்றேன். வாழ்க்கையின் அடர்சுருக்கமே காவியங்கள். நான் இரண்டாண்டுகாலம் காவியங்களில் ஆழ்ந்திருந்தேன்” என்றான். பார்க்கவர் “அக்காவியங்களின் மையப்பொருள் வேதமே என்றறியாமல் நீ கற்றதுதான் என்ன?” என்றார். பைலன் சலிப்புடன் தலையை அசைத்து “நான் வேதத்தை மறுக்கவில்லை. வேதத்தால் பயன்கொள்வதெப்படி என்றே வினவுகிறேன். வழிபட்டு இறையெழுப்பி அருள்கொள்ளவேண்டிய தெய்வச்சிலைகளை நீங்கள் வயல்கொல்லையில் காவல்பாவைகளாக நிறுத்திக்கொள்கிறீர்களோ என்று ஐயம் கொள்கிறேன்” என்றான்.

சொல்மீறிவிட்டதை அக்கணமே அவன் உணர்ந்தான். பார்க்கவரின் விழிகள் சுருங்கின. “நீ இங்கிருந்து செல்லலாம்” என்று அவர் இறுகிய குரலில் சொன்னார். “ஆயிரம் தலைமுறைகளாக வேதம் நாவிலிருந்து நாவுக்கென பற்றிப்படர்ந்து எரிந்து ஒளியாகி இங்கு நம் வரை வந்து சேர்ந்துள்ளது. மருந்தை அருந்துபவன் அதை முற்றறிந்துவிட்டு உட்கொள்வதில்லை. மருந்து உள்ளே என்ன செய்கிறதென்பதை மருத்துவனும் சொல்லிவிடமுடியாது. வேதமே சொல்லில் எழுந்த மருந்து. பிறவிப் பெருந்துயர் அழிக்கும் அமுது. அதைப் பேணுவதும் கொள்வதுமே நம் கடன். ஆராய்வதற்கு நாம் வேதம் வந்தமைந்த முனிவர்கள் அல்ல, எளிய மானுடர்.”

அதே சலிப்புடன் பைலன் அமர்ந்துகொண்டான். “இன்று ஓர் அலையென எழுந்துள்ளது இவ்வாணவம். வேதப்பொருள்கொள்ள தங்கள் சிறுமதியை புன்வாழ்வை கீழ்விழைவை மட்டுமே அளவீடாகக் கொள்கிறார்கள். சொல்விளக்கம் அளிக்கிறார்கள். பொருள்நீட்டிச் செல்கிறார்கள். அவர்கள் அடைவது வேதத்தை அல்ல, வேதமென மாயைகாட்டி வரும் தங்கள் ஆணவத்தை மட்டுமே. நீராடும் ஆற்றுக்கு உடலை அளிப்பவனே விண்ணிழிந்து மலைதழுவி மண்விரிந்து பெருகும் ஆற்றை அறிகிறான். தன் சிறு கொப்பரையில் அதை அள்ளி வருபவன் கையிலிருப்பது ஆறல்ல. அவன் சிறுமை மட்டுமே. அதை அவன் ஆறென காட்டத் தொடங்குகையில் வேதமறுப்பெனும் பெரும்பழி சூழ்கிறது அவனை.”

அவன் பெருமூச்சுடன் உடல்தளர்த்திக்கொண்டான். கண்களை மூடி அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். “அளந்தமைந்த ஒலியே வேதம். அது கவணில் அமைந்த கல். அதன் இழுவிசையில் எடையில் வளைவில் முன்னரே அமைந்துவிட்டது இலக்கு. அதை அடைவதற்குரிய பயிற்சியே வேள்வி எனக்கொள்க!” அவை முடிந்ததும் அவன் பெருமூச்சுடன் எழுந்து தனியாக நடந்தான். அவனைச் சூழ்ந்து வந்த வேதமாணவர்கள் சிறுசொற்களில் எள்ளலும் இளிவரலுமாக பேசிக்கொண்டனர்.

அவன் இருளில் படுத்துக்கொண்டு தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டான். ஆணவமே தானா? ஆனால் இப்புவியை இவ்வானை இவ்வூழை அறிவேன் என எழும் ஆணவமில்லாது அறிவென்பது ஏது? அவ்வாணவத்தை தெய்வங்கள் விரும்பாதா என்ன? கொள்ளவும் வெல்லவும் அல்ல, அறிந்து அளித்துச் செல்ல எழும் விசை அல்லவா இது? இதை இழந்தபின் நான் என்னவாக ஆவேன்? இந்த வேதமாணவர்களைப்போல தர்ப்பை ஏந்தி காணிக்கை கோரி அலையும் எளிய உயிராக. அதைவிடத் தூயதல்லவா இந்த ஆணவம்?

KIRATHAM_EPI_07

காலையில் கருக்கிருட்டில் இறங்கியபோது அறியாமணம் கேட்டு அன்னையிடமிருந்து கிளம்பும் நாய்க்குட்டி என தன்னை உணர்ந்தான். குளிரில் இருண்டுகிடந்த நகர்ச்சாலைகளில் கொழுப்பெரியும் பெருவிளக்குகளின் ஒளி சிந்திக்கிடந்த வட்டங்களில் எரிந்தெழுந்தும் இருளில் அணைந்தமைந்தும் நடந்துகொண்டிருந்தான். திட்டிவாயில் வழியாக வெளியே சென்றபோது “மீண்டுமொரு கூடு. உதிர்ப்பவை என்னில் எஞ்சாமலாகுக! வருபவற்றுக்கு நான் திறந்திருப்பேனாக!” என்று சொல்லிக்கொண்டான்.

[ 2 ]

பின்னுச்சிப் பொழுதில் வெயிலாறத் தொடங்குவதுவரை பைலன் நடந்துகொண்டிருந்தான். வழியில் ஒரு சிற்றோடைக்கரையை அடைந்ததும் அமர்ந்து தன் கூடையை இறக்கி பொதியைப் பிரித்து உணவுருளைகளில் ஒன்றை எடுத்து விரியிலை ஒன்றில் வைத்து ஓடைநீரை அதில் ஊற்றி ஊறவைத்தான். அது நீரை வாங்கி பெருக்கத் தொடங்கி பின் விண்டு விழுந்ததும் இலைத்தொன்னையில் குடிக்க நீர் மொண்டு அருகே வைத்தபின் உண்ணலானான்.

தனிமையில் தலைக்குமேல் எழுந்த பறவைக்குரல்களை கேட்டுக்கொண்டே அவ்வாறு உண்ணும்போது உளநிறைவொன்றை உணர்ந்தான். குருநிலைகளில் வேதசாலைகளில் எப்போதுமிருக்கும் அமைதியின்மையை அக்காட்டில் உணரமுடியவில்லை. பறவைக்குரல்களும் பசுமையும் சூழ அமர்ந்திருக்கையில் தன்னிடமிருந்து சிறகடித்தெழுந்து வானில் அலையும் அனைத்தும் மீளவந்து கூடணைந்து அமைதிகொள்வதாகத் தோன்றியது. நகரங்களல்ல, காடே தன் இடம் என்னும் எண்ணம் எழுந்தது.

அவன் கைகழுவச் செல்கையில் எதிர்ப்புறம் நீரொழுக்கின் மேல் பகுதியில் சூதன் ஒருவன் புதர்களுக்குள் இருந்து எழுந்து வந்து கைகழுவும்பொருட்டு குனிந்தான். அவனைக் கண்டதும் நிமிர்ந்து நின்று “நீங்கள் கைகழுவிக்கொள்ளுங்கள் உத்தமரே, நான் ஊன் தின்ற கையன்” என்றான். அவனை வெறுமனே நோக்கிவிட்டு பைலன் கைகழுவக் குனிந்தபோது “ஆனால் எனக்குப் பின்னால் விழிக்குத் தெரியாத பலநூறு சூதர்கள் அட்டவூன் படிந்த கைகளை கழுவுகிறார்கள். அதற்குமப்பால் பலநூறு வேடர்கள் பச்சையூன் படிந்த கைகளை கழுவிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.

பைலன் திகைப்புடன் எழுந்துகொண்டான். வெடித்துச் சிரித்தபடி சூதன் “அறிவிலாப் பெருக்கு. தேர்விலாதது. அளிப்பவை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் ஒன்றுக்கு தூய்மையென ஏதுள்ளது?” என்றான். அவன் கண்களை நோக்கி ஒருகணம் நின்றபின் பைலன் குனிந்து தன் கைகளை கழுவத்தொடங்கினான். அவனும் கைகளைக் கழுவியபடி “அந்தணருக்குரிய வேதமெய்மையைத் தேடிக் கிளம்பியவர் நீங்கள் என எண்ணுகிறேன், உத்தமரே” என்றான்.

எரிந்தெழுந்த சினத்துடன் பைலன் அவனை ஏறிட்டு நோக்கினான். “தாங்கள் மெய்யுசாவிய அந்தச் சொல்லவைக்கு வெளியே நான் அமர்ந்திருந்தேன்” என்றான் சூதன். “என் பெயர் சண்டன்.” பைலன் “அங்கு ஏன் வந்தீர்?” என்றான். “வேதநிலைக்கு ஏன் வருவார்கள் சூதர்கள்? உணவுக்காகத்தான்” என்றபின் “இங்கே தங்களைப் பார்ப்பேன் என எண்ணவில்லை. ஆனால் பார்த்தபின் தாங்கள் கிளம்பியது இயல்பே என்று தோன்றியது” என்றான்.

“ஏன்?” என்று பைலன் கேட்டான். அவனுடைய இயல்பான புன்னகை அவன் தயக்கத்தை அகற்றியது. “தலைமைவைதிகர் தங்களை கிளம்பும்படிதானே ஆணையிட்டார்?” என்றான் சண்டன். பைலன் சிரித்துவிட்டான். கைகளை உதறியபடி “அவர் எளிய வேதியர்” என்றான். “வேதியர்களே எளியவர்கள் அல்லவா?” என்றான் சண்டன். “ஏன்?” என்றான் பைலன் புன்னகையுடன். “செயல்கள் அனைத்துக்கும் இங்கேயே நிகரான விளைவுண்டு என நம்புபவர்கள் எளியவர்களன்றி எவர்?”

“ஏன், செயலுக்கு எதிர்விளைவு இல்லையா என்ன?” என்றான் பைலன். “உண்டு, ஆனால் இங்கு என எவர் சொன்னது? பாதாளத்தில் விளைவெழக்கூடாதா? தேவருலகில் எழலாகாதா? ஊழ் பணம் கொடுத்தால் தராசைத் தூக்கும் வணிகனா என்ன? அது கள்ளுண்ட குரங்கு அல்லவா?” என்று சண்டன் சொன்னான். “நல்லவேளையாக நீங்கள் தப்பினீர்கள். நீங்கள் செல்வதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.”

“எங்கு?” என்றான் பைலன். “எங்கும். செல்லவேண்டும் என முடிவெடுப்பதே தேவை. செல்லவேண்டிய இடங்கள் முடிவற்றவை.” அவன் தன் மரவுரி மூட்டையை தோளில் மாட்டிக்கொண்டான். மறுதோளில் முழவை அணிந்தான். கைத்தடியை எடுத்துக்கொண்டு “நான் செல்லலாமென எண்ணுகிறேன்” என்றான். “நானும் வருகிறேன். எனக்கு வழிநடைச் சொல் கேட்கவேண்டுமெனத் தோன்றுகிறது.”

“சூதர் பணியே வழிநடை மொழிவுதான்” என்று சண்டன் சொன்னான். “வழிகளில் மட்டுமே அவை பொருள்படுகின்றன போலும். இல்லங்களில் எங்களுக்கு சொல் வாய்ப்பே அளிக்கப்படுவதில்லை.” பைலன் தன் பொதிக்கூடையை எடுத்து அணிந்துகொண்டு கிளம்பினான். “வழிகளில் செல்பவர் மூவர். அந்தணர், சூதர், வணிகர். அந்தணர் எங்கோ சென்றுகொண்டிருக்கிறார்கள். சூதர் எங்கிருந்தோ வந்துகொண்டிருக்கிறார்கள். வணிகர் வழிகளிலேயே இருந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் சண்டன்.

“நீர் எங்கிருந்து வருகிறீர்?” என்று பைலன் கேட்டான். “அவந்தியிலிருந்து நான் உஜ்ஜயினியின் சாந்தீபனி குருநிலைக்குத்தான் வந்தேன். அங்கே வேதநிறைவுக்கொள்கையின் மேல் அமர்ந்து சௌரஃப்யர் தன் மாணவர்களுடன் சொல்லாடி மகிழ்ந்திருக்கிறார். அவர் அவையில் அமர்ந்திருந்தேன். சாந்தீபனி குருநிலையில் முளைத்து இளைய யாதவன் சொல்லாக எழுந்த வேதநிறைவு மெய்மையின் சொல் சொல்லென எடுத்து வைத்து ஆராய்ந்தார். வேதங்களை அவர் செம்மறியாடுகள் என எண்ணிக்கொண்டிருக்கிறார். உணவூட்டிப் பேணி வளர்த்து ஆண்டுதோறும் மயிர்வெட்டி கம்பளியாக்கி போர்த்திக்கொள்கிறார்.”

வாசலுக்கு இப்பால் நின்று நான் உரக்கக் கூவிச் சொன்னேன் “முனிவரே, நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பதை வேதநிறைவு என்கிறீர்கள். நான் அதை வேதத்தின் மயிர் என்றே சொல்வேன்.” அவர் என்னை “வெளியே போ, இழிமகனே” என்றார். “நன்று, இதை நீங்கள் எனக்கு உணவிட்டபின் சொல்வதே முறை” என்றேன். அவர் “நீ தத்துவங்களைக் களியாடும் தகுதிகொண்டவனா? மூடா!” என்றார். “நான் களியாடவில்லை முனிவரே, மயிர்கள் செம்மறியின் உயிரிலிருந்து முளைப்பவை அல்லவா? தன்னை பெருக்கிக்கொள்ளவும் போர்த்திக்கொள்ளவும்தானே அது மயிர்கொள்கிறது?” என்றேன்.

சொல்லச்சொல்ல எனக்கு அந்த ஒப்புமையின் கூர்மை வியப்பளித்தது. “நோக்குக, செம்மறியின் உயிரும் உள்ளமும் மயிரில்தான் வெளிப்படுகிறது. அது சினக்கையிலும் மகிழ்கையிலும் மயிர்நிரை சிலிர்க்கிறது. இளம் ஆடுகளை அது தன் மயிரழகால் அல்லவா கவர்கிறது?” என்றேன். தன்னை அறியாமல் சற்றே செவிகொடுத்த சௌரஃப்யர் எழுந்து “அவனை வெளியே துரத்துங்கள்!” என்று கூச்சலிட்டார். “நானே என்னை வெளியே துரத்திக்கொள்கிறேன். அதற்கான ஊதியத்தையும் எனக்கே அளியுங்கள்” என்றேன்.

அவர்கள் அளித்த உணவுக்குப் பின்னர்தான் உங்கள் குருநிலைக்கு வந்தேன். இவர்கள் தூயஅளவைவாதிகள். இவர்களுக்கு வேதநிறைவு பேசுபவர்மேல் வெறுப்பு. அவர்களைக் களியாடி சில செய்யுட்களைப் பாடி இவர்களிடம் பொருள்கொள்ளலாம் என்று எண்ணினேன். நீங்கள் சொல்லாடி எழுந்துசென்றபின் பார்க்கவர் துயருடன் சென்று தன் குடிலில் அமர்ந்தபோது சென்று இந்த செம்மறியாட்டின் கதையைப் பாடினேன். சிரித்துவிட்டார்.

“இவர்களை என்ன சொன்னீர்?” என்று சிரித்தபடி பைலன் கேட்டான். “இவர்கள் எனக்குப் பரிசு அளித்தபின்னர்தான் வாழ்த்தினேன். ஏனென்றால் வாழ்த்துவது என் தொழில். வைதிகர்களே, அடுமனையில் எரிவதும் அனலே என்றுணர்வது மெய்மை. அடுமனையிலேயே அனலெரியவேண்டும் என எண்ணுவது உலகியல் உண்மை. அனலென்பது அடுமனையே என்பது நடைமுறை அறிவு. பிரம்மத்தில் இருந்து தெய்வங்கள் எழுவது போல மெய்மை உலகியலுண்மை ஆகிறது. தெய்வங்களிலிருந்து வைதிகர் தோன்றுவதுபோல உலகியலுண்மை நடைமுறை அறிவாக ஆகிறது. அது வாழ்க என்றேன்.”

“அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று பைலன் சிரிப்பை அடக்கியபடி கேட்டான். “அவர்கள் அதற்கும் எனக்குப் பரிசளித்தார்கள். நுண்மையான சொல்லறிவு கொண்டவர்கள். அதைப் பெற்றுக்கொண்டு நான் உடனே கிளம்பிவிட்டேன்.” பைலன் “ஏன்?” என்றான். “நான் சொன்னதை அங்கே மூங்கில்மேல் ஒரு கிளி அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. அது சற்றுக்கழித்து நான் சொன்னதில் ஏதேனும் தீய உட்பொருளைக் கண்டடைந்து அவர்களுக்கு சொல்லிவிடக்கூடும்.”

பைலன் சிரிக்கத் தொடங்கினான். “அந்தக் கிளி அவர்களின் வேதநிலைக்கு வெளியேதான் பெரும்பாலும் அமர்ந்திருக்கிறது. அதற்கு அவர்கள் உணவளிக்கிறார்கள். அவர்கள் ஓதும் வேதச்சொல்லைக் கேட்டு அது திருப்பிச் சொல்கிறது. ஆனால் அதன் அலகுகளால் சொல்லப்படும்போது வேதச்சொற்கள் திரிந்து வசைச்சொற்களாக ஆகிவிடுகின்றன. முதலில் நான் அதைக்கேட்டு திகைத்தேன். அதன்பின்னர்தான் அவை வேதச்சொற்கள் என்று புரிந்துகொண்டேன். வெளியே வருவது எதுவாக இருந்தாலும் உள்ளே செல்வது வேதம் அல்லவா?”

பைலன் சிரித்துக்கொண்டே இருந்தான். “முன்பொருமுறை நான் காட்டுமரத்தின்மேல் அமர்ந்து தூங்கிவிட்டேன். விழித்துக்கொண்டு சப்புக்கொட்டியபடி எச்சில் துப்பினேன். கீழே அவ்வேளையில் இரு அந்தணர்கள் வந்து அமர்ந்திருப்பார்கள் என யார் கண்டது? அவர்கள் தங்கள் மூட்டையைப் பிரித்துவைத்து பலநாள் பசியுடன் விரைந்து வேதச்சொல்லுரைத்து அள்ளி உண்பதற்காக கையெடுத்த வேளை. தீச்சொல்லிட்டுவிடுவார்கள்  என்று திகில்கொண்டதும் நான் கிளிபோல ஓசையிட்டுக்கொண்டு மேலே ஒடுங்கிக்கொண்டேன். மூத்த அந்தணன் ‘தாழ்வில்லை, அது கிளியின் எச்சமே’ என்றான். இளையவன் ‘இருந்தாலும் எச்சமல்லவா?’ என்றான். மூத்தவன் ‘அக்கிளி உண்ட உயர்வான கனிகளை எண்ணுக’ என்றான். இளையவனுக்கு உளநிறைவு.”

பைலன் சிரித்தபடி தலையை அசைத்து “நீர் அதை வேண்டுமென்றே கூட செய்திருப்பீர்” என்றான். “இல்லை என்று சொல்லமுடியாது. அவர்களும் என்னைப் பார்க்கவில்லை என்றும் சொல்லமுடியாது. ஏனென்றால் தூய்மையிழக்கும் அந்தணன் மெய்மையடைகிறான் என்பது எவ்வளவு உண்மையோ அதைப்போன்ற உண்மை தூய்மையிழக்கும் உணவைத் துறந்தால் அதைவிட கீழான உணவே அடுத்தவேளைக்குக் கிடைக்கும் என்பது” என்றான் சண்டன். “அவ்விருவரும் வேதநிறைவுக்கொள்கையை கற்றறிந்தவர்கள் என்று எனக்குத் தோன்றியது. அவர்கள் அக்கிளி உண்ட கனியை விளைவித்த மரம் உண்ட சேற்றைத்தான் உண்டுகொண்டிருந்தார்கள்.”

பைலன் ஒருகணம் கழித்து வெடித்துச் சிரித்தபடி “எல்லை கடக்கிறீர் சூதரே… இதற்காகவே இளைய யாதவரின் படையாழியால் தலைகொய்யத் தகுதியானவர் ஆகிறீர்” என்றான். “நான் சென்று பார்த்தனின் கால்களைப் பணிவேன். அவர் என்னை காப்பார்” என்றான் சூதன். “ஏன்?” என்று பைலன் கேட்டான். “நஞ்சுக்கு நஞ்சே மருந்து என்கிறது சனகநூல்” என்றான் சூதன்.

நூல் பன்னிரண்டு – கிராதம் – 6

[ 10 ]

முனிவர்கள் கூடிவந்து தன்னிடம் சொன்னதைக் கேட்டு மகாகாளர் மூக்கிலிட்ட கையை குடைந்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் அருகே நின்ற முதல் மாணவன் உரத்தகுரலில் “நாங்கள் நேற்றே கிளம்புவதாக இருந்தோம். எங்கள் ஆசிரியர் மகதமன்னரைக் காணச் செல்லவேண்டியிருக்கிறது. இங்கு நாங்கள் தங்குவது இயலாதது” என்றான். “மேலும் நாங்கள் பெற்றுக்கொள்வது பொன்னும் மணியும் மட்டுமே. அதை அளிக்க வைதிகரால் இயலாது” என்றான் இரண்டாவது மாணவன். மகாகாளர் தன் மூக்கிலிருந்து உருட்டி எடுத்த அழுக்கை முகர்ந்தபின் “செய்துவிடலாம்” என்றார். அவர்கள் திகைத்து அவரைப் பார்த்தனர்.

அவர் “அவனை நான் அறிவேன்” என்றார். “யார்?” என்றார் கனகர். “இந்த குருநிலையை அழிக்கும்பொருட்டு அனுப்பப்பட்ட மாயாவிதானே?” என்றார் மகாகாளர். புன்னகையுடன் “அவன் அழிப்பவன். அதற்குமேல் அவனுக்கு இலக்கு என ஏதுமில்லை” என்றார். அவர்கள் ஒருவரோடொருவர் விழிகளால் பேசிக்கொண்டபின் கனகர் “நாங்கள் இப்போது பொன்னென ஏதும் அளிக்கவியலாது. ஆனால் எங்களில் ஒருவர் பாரதவர்ஷத்தின் ஏதேனும் பெருமன்னருக்கு வேள்வி செய்யச் செல்வோம். கிடைக்கும் பொன் அனைத்தையும் உங்களுக்கே அளிப்போம்” என்றார்.

“எனக்கு காணிக்கை என ஏதும் தேவையில்லை” என்று மகாகாளர் சொன்னார். “நான் இதை என் பொருட்டே செய்யலாமென எண்ணுகிறேன்.” அவர்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். “அதைவிட நான் அறிந்தாகவேண்டிய ஒன்று அவனிடம் உள்ளது. அதை அவனைச் சூழ்ந்து சிறைப்பிடிக்காமல் நான் அறியவும் முடியாது.” கருணர் “அவனை முன்னரும் எதிர்கொண்டிருக்கிறீர்களா?” என்றார். “அவனை எதிர்கொண்டபடியேதான் இருக்கிறேன்” என்றார் மகாகாளர்.

அவர்கள் நினைத்தது ஈடேறுமென்ற எண்ணத்தை அடைந்தனர். ஆனால் அவ்வெண்ணம் ஆறுதல் அளிக்கவில்லை. அவர்களின் நெஞ்சங்களை பதறச்செய்தது. பின்வாங்கிவிடலாமா என ஒவ்வொருவரும் ஆழத்தில் எண்ணி பிறரை எண்ணி அதை கைவிட்டார்கள். “இருளைக்கொண்டு ஆடுகிறான். அவனுள்ளும் இருக்கும் அவ்விருள். அதையே அவனுக்கு அனுப்புகிறேன். அதை என்ன செய்வான்?” என்றார் மகாகாளர். அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் முனிவர்கள் மாணவர்களை பார்த்தனர். அவர்களும் ஒன்றும் புரியாமல்தான் நின்றுகொண்டிருந்தனர்.

“அபிசார வேள்வியை நடத்த இடம் வேண்டும் அல்லவா? இங்கு நடத்தமுடியாது…” என்றார் கனகர். “அதற்குரிய பொருட்கள் என்னென்ன என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் இன்றே சேர்த்துக்கொள்ளத் தொடங்குவோம்” என்றார் கருணர். “இக்காட்டினுள் ஒரு மலைப்பாறை போதும். எளிய வேள்விக்குரிய நெய்யும் விறகும் தர்ப்பையும் தோலிருக்கைகளும் போதும். பிறிதொன்றும் தேவையில்லை” என்றார் மகாகாளர்.

அவர்கள் திகைப்புடன் நோக்கிக்கொண்டபின் “அபிசாரம் என்றால்….” என்று சொல்லத்தொடங்க “மண்ணிலுள்ள இழிபொருட்களை அளித்து அது செய்யப்படுகிறது. காய்ந்தமலம் முதல் காக்கைச்சிறகுவரை ஆயிரத்தெட்டு பொருட்கள் அதற்குத் தேவையாகின்றன. ஆனால் நான் விண்ணிலுள்ள இழிபொருள் ஒன்றையே அவியாக்கவிருக்கிறேன்” என்றார் மகாகாளர்.

“இது ஒரு தருணம். ஒருவேளை நான் இங்கு வந்ததே அதன்பொருட்டாகவிருக்கலாம்” என்றபின் எழுந்துகொண்டு “நாள் கடந்து நாள் இரவு கருநிலவு. அந்நிசி உகந்தது” என்றார். அவர் நடந்துசென்றபோது திகைத்து நின்றிருந்த அவரது மாணவர்களும் உடன் சென்றனர். “என்ன சொல்கிறார்?” என்றார் சூத்ரகர். “நாமறியாதது. ஆனால் அவரால் முடியும் என நினைக்கிறேன்” என்றார் கனகர். “எப்படி?” என்றார் சூத்ரகர். “அதை சொல்லத்தெரியவில்லை. ஆனால் ஆற்றலை மட்டும் நம்மால் எளிதில் புரிந்துகொள்ளமுடிகிறது” என்றார் கனகர். “நம் அச்சத்தால் அதை அறிகிறோம்.”

கருநிலவுநாளில் அந்தியில் குருநிலையில் அனைத்து வேள்விச்சடங்குகளும் முடிந்தபின் முனிவர் பதினெண்மரும் உணவருந்தாமல் துயிலச்சென்றனர். அனைவரும் துயின்றபின்னர் எழுந்து வெளியே நடந்து இருளுக்குள் ஒன்றுகூடினர். இருள்வழியாகவே சென்று காட்டுக்குள் இருந்த சிறிய பாறையடுக்கு ஒன்றை அடைந்தனர். அதன்மேல் வெண்ணிற ஆடையாக மகாகாளர் நின்றிருப்பது தெரிந்தது. கனகர் ஒருகணம் உளச்சோர்வுகொண்டார். அதை அவர் உடலசைவு வழியாகவே பிறர் அறிந்து நின்றனர்.

கனகர் “இப்போதுகூட நாம் திரும்பிச்சென்றுவிடமுடியும்” என்றார். பிறர் ஒன்றும் சொல்லவில்லை. இருளுக்குள் அவர்களின் விழிவெண்மைகள் மட்டும் தெரிந்தன. “நாம் எப்போது வேண்டுமானாலும் திரும்பியிருக்கலாமே?” என்று பின்னால் நின்றிருந்த அஸ்வகர் கேட்டார். அவர் முதலில் இருந்தே அஞ்சியவர் போலிருந்தார் என்பதை கனகர் உணர்ந்தார். “இதுவரை வந்துவிட்டோம். இதனாலேயே பாதிப்பங்கு செயலை ஆற்றிவிட்டோம். திரும்பிச்சென்றால் எஞ்சியதை கற்பனையில் ஆற்றியபடி மீதி வாழ்வை வீணாக்குவோம். சென்று செய்து விளைவை எதிர்கொள்வதே நாம் செய்வதற்குகந்தது.”

அது முற்றிலும் உண்மை என அனைவரும் உணர்ந்தனர். ஒன்றும் சொல்லாமல் மேலே சென்றனர். அவர்களை வரவேற்புச்சொல் ஏதுமின்றி மகாகாளர் எதிரேற்றார். அங்கே எளிய நிகர்சதுர வேள்விக்குளம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் கிழக்கே மேற்குநோக்கி மகாகாளர் அமர்வதற்கான புலித்தோல் இருக்கை. மகாகாளர் அமர்ந்ததும் இரு மாணவர்களும் அவருக்கு இருபக்கமும் பின்னால் அமர்ந்து வேள்விக்கு உதவிசெய்தனர். மகாகாளர் எந்த முகமனும் இல்லாமல் அனலேற்றி நெய்யூற்றி அவியிட்டு வேள்வியைத் தொடங்கினார். அதர்வம் ஒலிக்கத்தொடங்கியது.

மூன்று வேதங்களும் முற்றொதுக்கியவற்றால் ஆன நான்காம் வேதம். கனகர் அதை முன்னரே ஒலியெனக் கேட்டதே இல்லை. அதன் ஒலி ஒத்திசைவற்று இருப்பதாக முதலில் தோன்றியது. எருதுகள் செல்லும் காலடியோசைபோல. எருதுகளைக் கண்டபின்னர் அவற்றின் ஒசை ஒன்றென்றாகியது. பின்னர் அவர் அந்த ஓசையால் முற்றாக ஈர்க்கப்பட்டார். கல் அலைத்து ஒழுகிய பேரருவியென அது அவர்களை இட்டுச்சென்றது. மலைச்சரிவுகளில் சென்று அடியிலி நோக்கி பொழிந்தது.

எரிகுளத்தில் கதிர் எழுந்து நின்றாடியது. எந்த ஒலியையும் தான் ஏற்று நடிக்கத்தெரிந்தது தழல். அனைத்தையும் நிழல்கொண்டு தன்னுடன் ஆடவைக்கும் மாயம் அறிந்தது. தன்னிலிருந்து எழுந்து பேருருக்கொண்டு தலைமேல் எழுந்து நின்றாடும் அந்நிழலை அவர் நன்கறிந்திருந்தார். அது அவரை அறியாததுபோல் வெறிகொண்டு ஆடியது. காற்று நிழலை அசைத்தது. மரக்கூட்டங்களை நிழல் அசைத்தது.

அனலை மட்டுமே நோக்கியிருந்த மகாகாளரின் விழிகளுக்குள்ளும் அனலெரிந்தது. அவர் கை அவியளிப்பதை நிறுத்தி ஓங்கியபடி காற்றில் நின்றபோது அவர்கள் தம் எண்ணங்கள் அறுந்து அவரை நோக்கினர். அவர் உரத்த குரலில் “இருளெழுக! இருளென எழுக! இருண்டெழுக!” என்று கூவினார். பின்னர் அனலில் கையிலிருந்த இறுதி விறகை எறிந்து “எழுக! எங்குமுள்ளதே எஞ்சுவதே எழுக! எரிவதே அணைவதே எழுக! திகழ்வதே தெரிவதே மறைவதே எழுக! சூழ்க! சூழ்க! சூழ்க!” என்றார்.

கீழே பாறைக்கு அடியில் செறிந்திருந்த மரக்கூட்டங்களுக்கு நடுவே இருள் செறிந்து உருண்டு உருவானதுபோல் ஓர் அசைவை கனகர் கண்டார். அவர் விழிதிரும்பியதுமே தாங்களும் திரும்பிய பிறமுனிவரும் அதைக் கண்டனர்.

[ 11 ]

“தாருகக் காட்டின் எட்டு முனிவர்களால் எட்டுத் திசைகளிலிருந்தும் எட்டு யானைகள் எழுப்பப்பட்டன என்கின்றன தொல்கதைகள்” என்றார் பிச்சாண்டவர். இருள் சூழ்ந்திருந்த இரவில் குளிர்ந்த இருள் எனக் குவிந்தெழுந்த பாறை ஒன்றின் மேல் அவர்கள் அமர்ந்திருந்தனர். “அவை எட்டுத் திசையானைகளாகச் செறிந்த கடுவெளியின் இருளே. அதர்வச்சொல் ஒவ்வொன்றுக்கும் நடுவே நிறைந்திருப்பது அவ்விருளே. இருளைக்கொண்டு இருளை ஏவினார் மகாகாளர். இருள்வேழங்கள் துதிக்கை தூக்கி பிளிறியபடி வந்து அந்த வேள்விக்குண்டத்தை எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து செவியாட்டி இருளை ஊசலாட்டியபடி நின்றன.”

“மகாகாளர் தன் கையிலிருந்த கங்காளத்தை மீட்டினார். விம்மலென எழுந்த அந்த ஓசையை செவிகோட்டி அவை கூர்ந்தன. அவற்றின் விழிகளென அமைந்த இருட்துளிகள் மின்கொண்டன. அந்தக் கங்காளத்தை அவர் சுழற்றி காட்டில் எறிந்தபோது அவை கொலைப்பிளிறலுடன் காட்டுக்குள் பாய்ந்தன. காட்டுக்குள் நிறைந்திருந்த கங்காளத்தின் ஒலியை அவை கேட்டன. செவிகோட்டி ஒலிதேர்ந்தும் துதிநீட்டி மணம்கொண்டும் அவை காட்டுக்குள் ஊடுருவிச் சென்றன.”

“இருளென இருளில் கரைந்து, இருளிலிருந்து இருட்குவையென பிதுங்கி எழுந்து அவை சென்றன. பிளிறும் பேரிருருள். கங்காளம் மீட்டிச்சென்றுகொண்டிருந்த கிராதனைக் கண்டதும் எட்டும் இணைந்து ஓருருக்கொண்டன. கரியமலைபோல பேருடல் கொண்டு அவனை மறித்தன.”

பிச்சாண்டவர் வைசம்பாயனனை நோக்கி “அக்கரியுரித்தல் நிகழ்ந்த இடமென பன்னிரு இடங்களை நானே கண்டுள்ளேன். பாண்டவர்களை எரித்துக்கொல்ல கௌரவர்கள் முயன்ற வாரணவதம் அதிலொன்று” என்றார். “ஆனால் அது நிகழ்ந்திருக்குமென நான் எண்ணும் ஓர் இடத்தை பின்னர் கண்டேன். இமயமலைச்சரிவில் திரிகர்த்தநாட்டின் மறு எல்லையில் கின்னரர் நாடு தொடங்குமிடத்திலுள்ளது அது. கஜசர்மம் என்று அந்த மலை அழைக்கப்படுகிறது. அதனுள் ஆயிரம்பேர் நின்றிருக்கும் அளவுக்கு பெரிய குகை ஒன்றுள்ளது.”

இளவயதில் நான் எங்கள் எல்லை கடந்து சென்று வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டிருந்தேன். காட்டெருது ஒன்றை துரத்திச்சென்று வழிதவறி வழிகண்டுபிடிப்பதில் தோற்று மீண்டும் வழிதவறி நான் கஜசர்மத்தை சென்றடைந்தேன். நெடுந்தொலைவிலேயே யானை மத்தகம் போன்ற அந்த மலைப்பாறையைக் கண்டேன். அதன் மேல் மரங்கள் நின்றிருந்தன. அப்படியென்றால் அதற்கருகே நீர்நிலை இருக்கும் என உய்த்து எரியும் விடாயுடன் அதனருகே சென்றேன்.

நீர்நிலை மான்விழிபோல கிடந்தது. நீரள்ளி அருந்தியபோது என் மேல் அம்புகள் குறிவைக்கப்படுவதை கண்டேன். ஒன்றும் செய்வதற்கில்லை என்பதனால் நீரை அள்ளி அருந்தி முடித்து மண்ணில் முகம் பதிய குப்புற விழுந்துகிடந்தேன். அவர்கள் என்னை சூழ்ந்துகொண்டனர். என்னை பிடித்துத் தூக்கி நாரால் கைகளைக் கட்டி இழுத்துச் சென்றனர். அவர்களின் மொழியிலிருந்தும் தோற்றத்திலிருந்தும் என்னைக் கொல்லமாட்டார்கள் என என் ஆழம் உய்த்தறிந்தது. ஆகவே நான் என்னை முற்றாக அவர்களுக்கு ஒப்படைத்துக்கொண்டேன்.

அவர்கள் அங்குள்ள பதினெட்டு குகைகளிலாக வாழும் தொல்குடி. தங்களை அவர்கள் காலர்கள் என அழைத்துக்கொண்டார்கள். என்னை அங்குள்ள சிறுகுகை ஒன்றில் அடைத்து வைத்தனர். அவர்களின் குடிப்பூசகர் புலித்தோலாடை அணிந்து உடலெங்கும் சாம்பல்பூசி சடைமுடிமேல் பன்றிப்பல்லால் ஆன பிறைநிலவு சூடி கழுத்தில் நாகத்தை மாலையென அணிந்திருந்தார். அவர்கள் அவரை சிவம் என்றனர்.

முழுநிலவுநாள் வரை அங்கேயே என்னை அடைத்து வைத்திருந்தனர். முழுநிலவு எழும்போது அவர் உடலில் எழுந்த சிவம் என்னை அயலான் அல்ல என்று அறிவுறுத்தியதும் என்னை அவர்களில் ஒருவராக சேர்த்துக்கொண்டனர். அவர்களை அறிந்தபின்னர் அங்கிருந்து செல்லலாம் என எண்ணி நான் நான்குமாதகாலம் அவர்களுடன் வாழ்ந்தேன். அவர்களில் ஒரு பெண்ணையும் மணந்துகொண்டேன்.

குடிப்பூசகரான சிவம் முதல்முறை சூர்கொண்டபோது என்னை சிவந்த விழிகளால் நோக்கி “கையிலுள்ளது மண்டை. மண்டையை கையிலேந்தியவன். மண்டை உதிரும் இடமொன்று உண்டு. தேடுக! தேடிச்செல்க!” என்றது. அதன்பொருள் அன்று எனக்குப் புரியவில்லை. நான் அவர்களில் ஒருவராக ஆனபின் ஒவ்வொரு முழுநிலவிலும் என்னை நோக்கி அதையே சொன்னது. “மண்டையைக் கையிலேந்தும் ஊழ்கொண்டவர் சிலரே. ஊழ் கனிக! இருள்பழுத்து சாறு எழுக!”

நான் கிளம்புவதற்கு முந்தைய முழுநிலவில் “ஏழுலகைப் பெய்தாலும் நிறையாதது மண்டை. முடிவுள்ளதொன்றாலும் நிறையாத கலம். முடிவிலி நிறைக்கட்டும் அதை. முடிவிலா கடுவெளி நிறைக்கட்டும் அக்கலத்தை. பெரும்பாழே அதை நிறைக்கட்டும்” என்றது. அன்றுதான் அச்சொற்கள் நான் உணராத பெரும்பொருள் கொண்டவை என்று உணர்ந்தேன். அவரிடம் மறுநாள் அதைப்பற்றி கேட்டேன்.

ஆனால் அவருக்கு அவர் சொன்னது என்னவென்று புரியவில்லை. “நான் ஒன்று காட்டுகிறேன். நான் சொன்னதன் பொருள் அதிலிருந்ததென்றால் நீயே உணர்க!” என்று சொல்லி என்னை மட்டும் உச்சிமலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மிக அணுகி ஒரு மலைப்பாறையை சுற்றிவந்த பின்னர்தான் ஒரு குகைவாயில் இருப்பது தெரிந்தது. அதற்குள் சுளுந்தொளியை ஏந்தியபடி என்னை அழைத்துச் சென்றார்.

விந்தையானதொரு கனவென என்னுள் நிறைந்திருக்கும் ஓவியத்தொகையை அங்கே கண்டேன். கருமைபடிந்த கற்சுவர்வளைவில் மின்னும் கருமையால் வரையப்பட்டவை அவ்வோவியங்கள். மெல்ல முதல் யானையை விழி அடையாளம் கண்டதும் யானைகள் தெரியலாயின. பின்னர் மேலும் மேலும் யானைகள். இறுதியில் அவ்விருளே யானைகளாலானதென்று தோன்றியது.

அந்த இருள்பரப்பால் முற்றிலும் சூழப்பட்ட மக்களைக் கண்டேன். அவர்கள் கடுங்குளிரில் என ஒருவரோடொருவர் ஒண்டிக்கொண்டு ஒற்றையுடலாக பாறையொன்றின் அடியில் கூடியிருந்தனர். வானில் இரு மெல்லிய அரைவட்டங்களாக இரு நிலவுகள் வரையப்பட்டிருந்தன. ஒன்று சூரியன் பிறிதொன்று சந்திரன் எனத் தெளிந்தேன். கூர்ந்துநோக்கியபோது மரங்கள் இலைகளை இழந்து கிளைகளில் வழிந்து உறைந்து தொங்கிய பனியுடன் நின்றிருக்கக் கண்டேன். இருளுக்குள் இருளாக பனியை வரைந்திருந்தனர். நோக்க நோக்க அச்சூழலே பனிமூடி உறைந்திருப்பதை அறியமுடிந்தது.

அக்கூட்டத்தில் ஒருவன் கரிய வெற்றுடலும் பிடரிமேல் படர்ந்த சடையுமாக எழுந்து முதலில் வந்த பெருவேழத்தை எதிர்கொண்டான். அதன் இரு கொம்புகளைப்பற்றி நடுவே தன் வேலைச் செலுத்தினான். அதைக் கொன்று பிளந்தான். அதன் ஊனை வெட்டியெடுத்து உண்டது அவன் குடி. அவ்வூன்கொழுப்பை எரித்து அனலாக்கி அதைச் சூழ்ந்து அமர்ந்து வெம்மை கொண்டன. அதன் தோலை உரித்து விரித்து அதைப் போர்த்தியபடி உடல்கூட்டி அமர்ந்திருந்தன.

அப்பால் யானைத்தோலை இழுத்துப் போர்த்தியபடி நின்றிருக்கும் அக்குலமூத்தானின் உருவத்தைக் கண்டேன். அதன் மத்தகத்தின் மேல் வலக்கால் ஊன்றி இடக்காலால் அதன் முன்வலக்காலை உதைத்து விலக்கி தலைக்குமேல் எழுந்த இரு கைகளால் அதன் பின்னங்கால்களை பற்றித்தூக்கி அத்தோலை தன்னைச்சூழ அமைத்து விழிகள் வானை நோக்க இதழ்களில் குறுநகையுடன் அவன் நின்றிருந்தான். அவன் காலடியில் வலப்பக்கம் சூரியநிலவும் இடப்பக்கம் சந்திரநிலவும் நின்றிருந்தன. அவன் உடல் செந்நிறத்தழலுருவாக வரையப்பட்டிருந்தது.

சிவம் என்னிடம் “மண்வடிவான அன்னை மகியின் ஆணைப்படி சூரியன் முற்றணைந்த காலம் ஒன்றிருந்தது. அன்று பகல் இருக்கவில்லை. முடிவடையாத இரவொன்றே திகழ்ந்தது. அன்று எங்கள் குலம் அழியாதபடி காக்க விண்ணிலிருந்து இறங்கி வந்த தெய்வம் இது. இதையே முதற்சிவம் என்கிறோம்” என்றார். நான் அந்த ஓவியத்தையே நோக்கிக்கொண்டிருந்தேன். அம்மூதாதையையே விடியல்கதிரவன் என வரைந்திருக்கிறார்கள் என்று தோன்றியது.

அவன் காலடியின் சிவந்த அழலை செம்பாறைக்குழம்பால் வரைந்திருந்தனர். அச்செம்மை அவன் உடலில் கீழிருந்து மேல் நோக்கி வீசியது. நோக்க நோக்க அனல் வெம்மையை அறியமுடிவதுபோலிருந்தது. அந்த எரியொளி வட்டத்திற்கு அப்பால் இருள். யானைகளாகச் செறிந்து குகைவிளிம்புவரை சென்று மெய்யிருளுடன் முற்றாகக் கலந்தது அது. என்னைச் சூழ்ந்திருக்கும் மதவேழங்களை உடலால் உணர்ந்தேன். செவியசையும் காற்றை. துதிக்கை மூச்சை. அதன் ஈர ஊன்மணத்தை. மரப்பட்டைபோன்ற உடல்கள் உரசிக்கொள்ளும் ஒலியை.

“நெடுநாட்கள் அக்காட்சி என் நினைவுக்குள் இருந்தது. பின் அது கனவுக்குள் சென்று வளர்ந்தது. நான் ஒருபோதும் அதிலிருந்து விடுபட்டதே இல்லை” என்றார் பிச்சாண்டவர். “இந்த நிறையாக் கபாலம் என் கைக்கு வந்தபின் அதை மீண்டும் கண்டேன். நாம் நம் விலங்கியல்பால் சென்றுகொண்டிருக்கும் பாதையில் பெருநிழலென தொடர்ந்து வருகிறது. நனவின் இடைவெளியில் அதை நாம் ஓர் எச்சரிக்கை உணர்வு என அறியக்கூடும். கனவுகளில் அச்சமென காணவும் கூடும். ஆனால் மெய்மை விழைந்து திரும்பி நடக்கத் தொடங்கும்போது நேர் எதிரில் காண்கிறோம்.”

“நான் அதை எதிரில் கண்டநாளை நினைவுறுகிறேன்” என்று பிச்சாண்டவர் தொடர்ந்தார். “அஞ்சிக் கூச்சலிட்டபடி எழுந்து நின்றேன். என் உடலில் இருந்து நீரும் மலமும் வெளியேறிக்கொண்டிருந்த வெம்மையை உணர்ந்தேன். தடுக்கி விழுந்து எழுந்து ஓடி என் ஆசிரியர் காலடியில் விழுந்தேன். யானை யானை என்று கூவினேன். ‘மரத்தை மறைக்கும் மாமதம்’ என அவர் புன்னகை செய்தார். என்னை எழுப்பி அவர் அருகே அமரச்செய்து என் ஆயிரமிதழ்த் தாமரையின் மையத்தை தன் சுட்டுவிரலால் தொட்டார். நான் அந்த யானையை என் முன் மிக அருகே கண்டேன்.”

“இரு நிலவுகள் எழும் யோகப்பெருநிலை” என்று பிச்சாண்டவர் சொன்னார். “அதைப் பிளந்தெழவேண்டுமென்பதே இலக்கு. கரியுரித்தெழும் கனலால் விடியும் காலை அது. நீளிருள் நீங்கும் தருணம்.” வைசம்பாயனன் அவரை நோக்கியபடி கனவிலென அமர்ந்திருந்தான். “எண்கரியை நீ கண்டுவிட்டாய். நன்று. அவை ஒன்றெனத் திரண்டு உன்முன் எழுக!” என்றபின் அவர் தன் சுட்டுவிரலை நீட்டி அவன் நெற்றிப்பொட்டை தொட்டார். அவன் விழிகள் எடைகொண்டவைபோல சரிந்தன. என்ன நிகழ்கிறது என அவன் உள்ளம் விழிப்புகொள்ள முயலும்தோறும் சித்தம் சரிந்து மறைந்தது. விழிகளுக்குள் இருள் ஊறி நிறைந்து மூடியது.

இருளின் மெல்லிய அசைவை அவன் மிக அருகெனக் கண்டான். அது ஒரு தோல்சிலிர்ப்பு. இருளில் விரிசல்கோடுகள் என வரிகள். யானைத்தோல். மூக்கு தொடுமளவுக்கு அண்மையில் அதை நோக்கிக்கொண்டு நின்றான். பின்னர் அகன்று அகன்று அதை முழுமையாகக் கண்டான். மிகப்பெரிய மத்தகம். இரு பேருருளைகள். கீழே அவன் ஒரு வெண்தந்தத்தைக் கண்டான். அது நீரில் பிறையென அலையடித்தது.

“சிவோஹம்” என்னும் ஒலி கேட்டு விழித்துக்கொண்டான். அவர் அவன் விழிகளைக் கூர்ந்து நோக்கி “என்ன கண்டாய்?” என்றார். “யானை” என்றான். அவர் “சொல்!” என்றார். “ஒற்றைப் பெருந்தந்தம்” என்றான். “ஒன்றா?” என்றார். “ஆம், அது நீர்ப்பாவையென்றாடியது.” அவர் சிலகணங்கள் அவனைக் கூர்ந்து நோக்கியபடி “வானில் நிலவு இருக்கவில்லையா?” என்றார். “இல்லை” என்றான் “அதன் பாவை மட்டுமே.”

அவர் எழுந்துகொண்டு “நீ செல்லும் திசை வேறு” என்றார். “ஆசிரியரே…” என அவன் எழுந்துகொண்டான். “நீ கனவுகளினூடாக அங்கு சென்றடைபவன். சொல்லை அளைபவன். உன் ஆசிரியன் ஒற்றைநிலவில் விழிதிறந்திருக்கும் ஒருவன்.” அவர் தன் சூலத்தை ஊன்றியபோது எலும்புமணிகள் குலுங்கின. “ஆசிரியரே, என்னை கைவிடாதீர்கள்… என்னை அழைத்துச்செல்லுங்கள்” என்று அவன் கூவியபடி அவர் கால்களைப் பற்றினான்.

அவர் தன்னை விடுவித்துக்கொண்டு நடந்து இருளுக்குள் சென்று மறைந்தார். அவரை உள்ளிழுத்துக்கொண்டு இருள் நலுங்காமல் நிறைந்து சூழ்ந்திருந்தது. தன் ஆடைக்குள் இருந்து பாவையொன்றை எடுத்துக்காட்டி மறைத்துக்கொண்ட அன்னை. அவன் அதையே நோக்கிக்கொண்டிருந்தான். நீள்மூச்சுகளாக விட்டுக்கொண்டு நெடுநேரம் அமர்ந்து பின் களைத்து படுத்துக்கொண்டான். அவ்வண்ணமே விழிமயங்கித் துயில்கொண்டான்.

பறவைக்குரல் கேட்டு அவன் விழித்துக்கொண்டான். வாயைத் துடைத்தபடி எழுந்தமர்ந்தபோது அவன் உடலில் இருந்து எழுந்து பறந்தது கொசுப்படலம். செந்நிறத் தீற்றலாகத் தெரிந்த கீழ்வான் சரிவை நோக்கியபடி எழுந்து நின்றான். குளிருக்கு கைகளை கட்டிக்கொண்டான். முதற்பறவைகளின் தனிக்குரல்கள் இருளில் ஒலித்துக்கொண்டிருந்தன. சாம்பல்வானப் பின்னணியில் எழுந்து சுழன்று மீண்டும் இறங்கிய சிறிய பறவைகளைக் கண்டான்.

KIRATHAM_EPI_06

வான்சிவப்பு அடர்ந்து விரிந்தது. ஓடைகளாக செவ்வொளி வழிந்து பரவியது. இருண்டபரப்பை கிழித்துப் போர்த்தியபடி எழுந்த செவ்வுருவை அவன் கண்டான். அதன் தெற்கு மூலையில் மெலிந்த வெண்பிறை வெள்ளிக்கம்பி போல வளைந்து நின்றிருந்தது.

வெண்முரசு விவாதங்கள்

நிகழ்காவியம்

நூல் பன்னிரண்டு – கிராதம் – 5

[ 8 ]

அந்தியிருளத் தொடங்கிய வேளையில் தண்டகாரண்யத்தின் நடுவே ஓடிய மதுவாகினி என்னும் சிற்றோடையின் கரையில் உருண்ட மலைப்பாறை ஒன்றின்மேல் அமர்ந்திருந்த பிச்சாண்டவர் தன்னருகே ஈச்ச ஓலை பின்னிய தழையாடையை இடையில் அணிந்து தரையில் கைகட்டி அமர்ந்திருந்த வைசம்பாயனனிடம் சொன்னார்.

“வடக்கே இன்று அந்த குருநிலை தாருகவனம் என்றழைக்கப்படுகிறது. அதில் அத்ரிமுனிவர் நிறுவிய கிராதமூர்த்தியின் சிவக்குறியைச் சூழ்ந்து கல்லால் ஆன ஆலயம் ஒன்று எழுந்துள்ளது. அறுவகை சைவநெறியினருக்கும் அவ்விடம் முதன்மையானது. அதனருகே ஓடும் சுகந்தவாகினியில் நீராடி எழுந்து எருக்கமலர் தொடுத்துச்சூட்டி கள்ளும் ஊனும் படைத்து கிராததேவனை வழிபட்டு வெண்சாம்பல் பூசி புதிய கப்பரை ஏந்தி வடக்கே உயர்ந்தெழுந்த பனிமலைகளை நோக்கிச் செல்வது அறுவருக்கும் தொல்மரபாக அறியப்பட்டுள்ளது.”

“நான் அங்கிருந்து மலையிறங்கி கங்கைப்பெருக்கினூடாக வந்தேன். அறுவகை சமயங்களுடனும் சொற்போரிட்டேன். பன்னிரு நாடுகளில் பிச்சையெடுத்து உண்டேன். என் துணையோருடன் காசிப்பெருநகர் அடைந்தேன். அங்கு இரு பெரும் சுடலைத்துறைகளில் இரவும் பகலும் எரிதாழாது சிதைகள் எரிகின்றன. அத்தழல்களுக்கு நடுவே கையில் முப்புரிவேலும் உடுக்கையும் கொண்டு வெற்றுடல் கோலமாக காலபைரவன் நின்றிருக்கும் ஆலயம் உள்ளது. அவன் கையிலிருந்து உதிர்ந்த கப்பரை குருதி உலராத பலிபீடமாக ஆலய முகப்பில் அமைந்துள்ளது. நாளும் பல்லாயிரவர் பலியும் படையலும் கொண்டு அங்கே வருகின்றனர். அவ்வாலயத்தின் முகப்பில் கட்டப்பட்டுள்ள நுழைவுமணி ஓய்ந்து ஒலியடங்கும் கணமே இல்லை.”

“ஆலயத்திற்கு தென்மேற்கே படித்துறையருகில் பார்ப்புக்கொலைப் பேய் தொழுத கையுடன் மூதாட்டி வடிவில் அமர்ந்திருக்கிறாள். கங்கையில் நீராடுவதற்கு முன் அவள் முன்னிலையில் பழைய ஆடைகளை நீக்குவது மரபு. கொண்ட நோய்களையும் பீடைகளையும் அங்கு ஒழித்து புதிதாகப் பிறந்தெழுந்து காலவடிவனை வணங்குகின்றனர். இறந்தோர் ஆடைகளும் அங்கு குவிக்கப்பட்டு எரியூட்டப்படுகின்றன. அக்கரி படிந்த அவள் முகம் சென்றது எதையோ எண்ணியதுபோல தன்னுள் தொலைந்து தோளுக்குள் புதைந்திருக்கும்.”

“காசியிலிருந்து கிளம்பி நான் தென்றிசை செல்கிறேன். தென்னகத்தில் ஆதிசிவமென அமைந்த மலை என மாகேந்திரம் சொல்லப்படுகிறது. நஞ்சு சூடிய மாநாகர்களால் ஆளப்படுவது அது. அவர்களால் ஏற்கப்படுபவர்கள் மட்டுமே அதில் ஏறி அம்மலையின் உச்சியில் குவைக்கல் வடிவில் குடிகொள்ளும் சிவத்தை தொட்டுவணங்கமுடியும். அடுத்த சொல் கேட்பதற்கு முன்னர் சென்று அதை வணங்கி மீளும்படி என் ஆசிரியரின் ஆணை. அதைத் தலைக்கொண்டு நான் கிளம்பினேன்” என்றார்.

வைசம்பாயனன் அவர் கால்களையே நோக்கிக்கொண்டிருந்தான். அவை நகங்கள் மண்செறிந்து விரல்கள் காய்ப்பேறி எலும்புக்கணுக்கொண்டு பாலைநிலத்து முள்மரங்களின் வேர்த்தூர் போலிருந்தன. அவை செல்லும் தொலைவை அவன் எண்ணிநோக்கினான். உடல் சரியும் கணம் வரை அவை சென்றுகொண்டுதான் இருக்கும்போலும். உடல்சரிந்த பின்னரும் உள்ளம் தான் கொண்ட விசை தீராது மேலும் செல்லும். அங்கே காத்திருப்பது எது?

அவன் எண்ணத்தை உணர்ந்ததுபோல அவர் உரக்க நகைத்து “எது எது என்று தேடிச்செல்பவன் இல்லை இல்லை என்று மறுத்துமறுத்துச் செல்கிறான். அவன் அறியும் பேரிருள் இப்புடவியை ஏழுமுறை மூடியிருக்கிறது. விழியறியும் இருள் சிறுதிரை. உணர்வறியும் இருள் பெருந்திரை. எண்ணம் அறியும் இருள் இயலாத்திரை. இருளுக்கு இருளாவது யோகம் அறியும் இருள்” என்றார். அவன் உள்ளம் நடுங்கத் தொடங்கியது. கைகளை மார்புடன் நன்கு கட்டி இறுக்கிக்கொண்டான்.

“அஞ்சுகிறாயா?” என்று அவர் கேட்டார். “இப்புவியே அஞ்சுபவர் அஞ்சாதோர் என இருவகைப்பட்ட மானுடருக்கானது. தனித்தனிப்பாதைகள்.” இருளுக்குள் அவருடைய பற்கள் சிரிப்பில் மின்னி அணைந்தன. “அஞ்சுதல் உன்னை குடும்பத்தவன் ஆக்கும். விழைவுகளால் நிறைக்கும். அள்ளி அள்ளி குவிக்கவைக்கும். அடைந்ததை அறியமுடியாது அகவிழிகளை மூடும். அஞ்சாமை உன்னை யோகியாக்கும். அறியுந்தோறும் அடைவதற்கில்லை என்றாகும்.”

மலைப்பாறையில் கால்களை நீட்டிக்கொண்டு அவர் படுத்தார். உடலை ஒவ்வொரு உறுப்பாக எளிதாக்கி பரப்பிக்கொண்டார். விண்மீன்கள் செறிந்த வானை நோக்கி “சிவம்யாம்” என்றார். “ஆம், சிவமேயாம்” என்று மீண்டும் சொன்னார். அவருடைய விழிகள் மூடிக்கொள்வதை அவன் கண்டான். அருகே அவர் கால்களைப் பற்றி அமுக்கியபடி அமர்ந்திருந்தான். அவர் உறுப்புகள் துயிலில் விடுபட்டுச் சரிவதை காணமுடிந்தது.

“ஆசிரியரே…” என அவன் மெல்லிய குரலில் அழைத்தான். “சொல்க!” என்றார் அவர். “சொல்லுங்கள், நான் செல்லும் இடம் என்ன?” அவர் விழிமூடியபடியே புன்னகைத்தார். “நீ வேதம் கற்றுக் கடந்து காவியத்திற்குள் நுழைந்துள்ளாய். காவியம் கடந்து எதில் நுழைவாய்?” என்றார். அவன் அவர் சொற்களுக்காக காத்திருந்தான். “அக்காவியத்தில் நீ தேடுவது என்ன? பொய்யெனும் இனிப்பையா மெய்யெனும் கசப்பையா?” அவன் சீற்றத்துடன் “உண்மையை. அதை மட்டுமே. பிறிதெதையும் இல்லை” என்றான். அவர் உடல் குலுங்க நகைத்தார். “அதைத் தேடிச்சென்ற உன் மூதாதையொருவன் சொன்னான், இல்லை இது இல்லை என. பலமரம் கண்ட தச்சன் அவன். ஒருமரமும் கொள்ளாமல் மீண்டான். நேதி! நேதி! நேதி!”

அடக்கமுடியாத சினம் எழுந்து அவன் உடலை பதறச்செய்தது. அவன் கைகள் வழியாகவே அதை உணர்ந்தவர்போல அவர் மேலும் நகைத்து “எவர் மேல் சினம்? நீ செய்யப்போவது என்ன? யோகியென இங்கிருப்போர் விலக்கி விலக்கி அறிவதை நீ தொகுத்துத் தொகுத்து அறியப்போகிறாய். வேறென்ன?” என்றார். அவர் மீண்டும் நகைத்து “ஒரே இருளை அறிய ஓராயிரம் வழிகள். சிவநடனம். சிவமாயை. சிவப்பேதைமை. அறிவென்றும் அறியாமை என்றும் ஆகி நின்றாடல். அனலொரு கையில் புனலொரு கையிலென பொன்றாப் பேராடல். சிவமேயாம்! சிவமேயாம்!” என்றார். அவன் சினத்துடன் “நான் அறியப்போவது இருளை மட்டும் அல்ல. இவ்வாழ்க்கையை. இதிலுள்ள அனைத்தையும்” என்றான். “அனைத்தையும் ஒன்றெனக் கலந்தால் இருளன்றி வேறேது வரும்? மேலே அவ்வீண்மீன்களை தன் மடியில் பரப்பி அமர்ந்திருக்கும் இருள்.”

அவர் துயில்வதுவரை அவன் நோக்கி அமர்ந்திருந்தான். பின்னர் எழுந்து விண்மீன்களை நோக்கினான். அவை இருண்ட சதுப்புக்குள் திகைத்துத்துடித்து புதைந்துகொண்டிருந்தன. திசைதேர் கலையை நன்றாகப் பயின்றிருந்தும்கூட அவனால் விண்மீன்களை கணிக்க முடியவில்லை. அறியாமொழியின் எழுத்துக்கள் என அவை வானில் சிதறிக்கிடந்தன. மீண்டும் மீண்டும் அந்த அலகின்மையை அள்ளமுயன்று தோற்றுச் சலித்தபின் கால்தூக்கி வைத்து திரும்பி காட்டுக்குள் புகுந்தான்.

சீவிடுகளின் ஒலியால் தொகுக்கப்பட்ட இருள்குவைகளும் நிழலுருக்களும் காற்றசைவுகளும் சருகொலிகளும் காலடியோசையும் எதிரொலியுமாக சூழ்ந்திருந்தது தண்டகப்பெருங்காடு. வடபுலக்காடுகள் போல இரவில் அது குளிர்ந்து விரைத்திருக்கவில்லை. அடுமனைக்கூடம் போல மூச்சடைக்கவைக்கும் நீராவி நிறைந்திருந்தது காற்றில். ஆனால் உடல்தொட்ட இலைப்பரப்புகள் குளிர்ந்த ஈரம் கொண்டிருந்தன. எங்கோ ஏதோ உயிர்கள் ஒலிகளென உருமாறி அடர்ந்திருந்தன. இருளே குழைந்து அடிமரங்களாக கிளைகளாக இலைகளாக மாறி உருவென்றும் அருவென்றுமாகி சூழ்ந்திருந்தது. அவன் நடந்தபோது அசைவில் கலைந்து எழுந்தன கொசுப்படைகள். சற்றுநேரத்தில் அவனை மென்துகில்படலமெனச் சூழ்ந்து அவை ரீங்கரித்தன. சேற்றில் பதிந்த காலடியில் இருந்து சிறு தவளைகள் எழுந்து பறந்தன.

அவ்விருளில் நெடுந்தொலைவு செல்லமுடியாதென்று தோன்றியது. எங்காவது மரக்கிளையிலோ பாறையிலோ அமர்ந்து துயில்வதொன்றே வழி. ஆனால் அவன் மிகக்குறைந்த தொலைவே விலகி வந்திருந்தான். விழித்தெழுந்ததும் அவர் இயல்பாக அவனை கண்டடைந்துவிடமுடியும். சேற்றில் அவன் காலடித்தடம் பதிந்திருக்கும். அதைக் கண்டு அவன் விலகிச்செல்ல விழைகிறான் என அவர் புரிந்துகொள்ளக்கூடும். இல்லை, வேறெதன்பொருட்டோ சென்றிருக்கிறான் என எண்ணினால் தொடர்ந்து வருவார். மீண்டும் அவர் முகத்தை நோக்க அவனால் இயலாது.

ஆனால் அவர் எதற்கும் தயங்குபவர் அல்ல. தன் மூவேலால் அவன் தலையை அறைந்து பிளக்கலாம். அதன் கூர்முனையை அவன் நெஞ்சில் வைத்து வா என்னுடன் என ஆணையிடலாம். அல்லது அறியாதவர் போல கடந்தும் செல்லலாம். ஆனால் மீண்டும் அவர் அவன் வாழ்க்கையில் வரவேண்டியதில்லை. அவன் வாழ்ந்த உலகம் வேறு. அவன் அங்கு மீண்டு செல்லவிரும்பினான். பொருள் கொண்ட சொற்களின் உலகம். பொருள்கோடலுக்கான வாய்ப்புகள் அனைத்தையும் முன்னரே தன்னுடன் வைத்துக்கொண்ட சொற்களின் உலகம்.

சொற்களின் உலகம்போல உகந்தது எது? சொற்களென வந்தவை அனைத்தும் பல்லாயிரம் முறை முன்னோரால் கையாளப்பட்டவை. அவர்களின் கைவிழுக்கும் மணமும் படிந்தவை. அங்கு புதியதென ஏதுமில்லை. புதியவை என்பவை பழையவற்றின் உடைமாற்றம் மட்டுமே. ஆனால் இக்காடு நேற்று முளைத்தெழுந்தது. இதோ என்னைச் சூழ்ந்திருக்கும் இலைகள் இதுவரை மானுடனைப் பாராதவை. இக்கொசுக்கள் முதல்முறையாக அருந்துகின்றன மானுடக்குருதி. மறுகணம் இவை எவையென்று நான் அறியவே முடியாது.

சொல்கோத்து சொல்கோட்டி சொல்சிதைத்து சொல்மறைத்து மானுடன் உருவாக்கிக்கொள்வதுதான் என்ன? அறியமுடியாமையின் பெருவெளிக்குள் அறியப்படும் ஒரு சிற்றுலகைத்தானா? அறியப்படாத நூல்கள் உண்டா? இருந்தாலும் அவை அறியத்தக்கவையே என்னும் வாய்ப்பை கொண்டுள்ளவை. எங்கோ எவராலும் ஒருமுறையேனும் வாசிக்கப்படாத நூல் ஒன்று இருக்கலாகுமா? அப்போதும் அது வாசிப்பதற்கென்றே எழுதப்பட்டதாகையால் வாசிக்கத் தக்கதே.

எல்லா சொல்லும் பிறசொல் குறித்ததே. எல்லா சொல்லும் பொருள் குறிப்பது அவ்வாறே. சொல் என்பது ஓர் ஓடை. சொற்றொடர்களின் ஓடை. நூல்களின் ஓடை. அறிதலின் ஓடை. ஒன்று பிறிதை ஆக்கி ஒன்று பிறிதில் ஊறி ஒன்றென்று ஓடும் பெருக்கு. இங்குள்ளவை ஒவ்வொன்றும் தனித்தவை. இந்த இலை அதை அறியாது. இக்கொசு பிறிதை எண்ணாது. இவற்றைக் கோத்திருக்கும் அறியமுடியாமை என்னும் பெருக்கு இருண்டு மேலும் இருண்டு குளிர்ந்து மேலும் குளிர்ந்து அடங்கி மேலும் அடங்கி தன்னுள் தானை முடிவிலாது சுருட்டிக்கொண்டு சூழ்ந்திருக்கையில் இவை என்ன செய்தாலும் எஞ்சுவது பொருளின்மையே.

அவன் நாகத்தின் ஒலியைக் கேட்டான். அதைக் கேட்பதற்கு ஒரு கணம் முன்னரே அவன் உட்புலன் அதை அறிந்து உடல் மயிர்ப்பு கொண்டது. சிலகணங்கள் எங்கிருக்கிறோம் என்பதையே அவன் உணரவில்லை. பின்பு கைகால்கள் அனைத்துத் திசைகளிலும் உதறிக்கொள்ள நின்ற இடத்திலேயே உடல் ததும்பினான். அதன் பின்னரே அது யானை என்றறிந்தான். அவன் முன் பிறைநிலவின் நீர்ப்பாவை என ஒரு வெண்வளைவாக ஒற்றைத் தந்தம் மட்டும் தெரிந்தது. மறுகணம் இருளில் மின்னும் நீர்த்துளி என கண்கள். விழிகளால் அன்றி அச்சத்தால் அதன் நீண்டு தரைதொட்டுத் துழாவிய துதிக்கையையும் கண்டுவிட்டான்.

ஆழுள்ளத்தில் கரந்த எண்ணமொன்று அசைவதுபோல அவன் மிகமெல்ல தன் வலக்காலைத் தூக்கி பின்னால் வைத்தான். அடுத்த காலை எடுக்கையில் தன் உடலால் அசைக்கப்பட்ட காற்றின் ஒலியையே அவன் கேட்பதுபோல் உணர்ந்தான். நிறுத்தி நெஞ்சில் செறிக்கப்பட்ட மூச்சு எடைகொண்டு குளிர்நீரென கற்பாறையென ஆயிற்று. மீண்டுமொரு கால் எடுத்துவைத்தபோது விலகிவிடமுடியுமென நம்பிக்கை எழுந்தது. மீண்டுமொரு காலில் விலகிவிட்டோமென்றே எண்ணம் பிறந்தது. மீண்டுமொரு கால் வைத்தபோது விழிகள் கூர்மைகொண்டன. யானையின் செவிகள் இருளை துழாவிக்கொண்டிருந்தன. செவிகளிலும் மத்தகத்திலும் செம்பூக்கள் இல்லை. முற்றுக்கரியுருவம். அதன் உடல் இருள்வெளி கனிந்து திரண்ட சொட்டு என நின்று ததும்பியது.

மீண்டும் இரு அடிகள் எடுத்துவைத்து அப்படியே பின்னால் பாய்ந்து ஓடத்தொடங்கலாமா என அவன் எண்ணினான். யானை துரத்திவருமென்றால் புதர்களில் ஓடுவது அறிவுடைமை அல்ல. பெருமரத்தில் தொற்றி ஏறவேண்டும். அல்லது உருள்பாறை ஒன்றில். அல்லது செங்குத்துப்பள்ளத்தில். அல்லது அதன் முகக்கை எட்டாத மேட்டில். ஒரு கணத்திற்குள் அவன் உள்ளம் அக்காட்டில் அவன் கண்ட அனைத்தையும் தொட்டு தேடிச்சென்று பெரும்பலா மரம் ஒன்றை கண்டுகொண்டது. அதன் கீழ்க்கணு அவன் கையெட்டும் உயரத்தில்தான் இருந்தது. முதற்கிளை யானைமத்தகத்திற்கும் மேலே. இரண்டாம் கிளை அதன் கைமூக்கின் நுனிக்கும் மேலே. அதுதான்.

உடல் ஓடத்தொடங்கி கால்கிளம்புவதற்கு முந்தைய கணத்தில் அவன் அடுத்த சீறலை கேட்டான். விழிதிருப்பி தனக்குப் பின்னால் நின்றிருந்த கரிய யானையை கண்டான். மறுகணமே வலப்பக்கமும் இடப்பக்கமும் யானைகளை கண்டுவிட்டான். மேலுமிரண்டு. மேலுமிரண்டு. எட்டு. எட்டுத்திசையானைகள். எட்டு இருள்மத்தகங்கள். எழுந்த பதினாறு வெண்தந்தங்கள். ஓசையின்றி பெருகி அவை சூழ்ந்தபின்னரே அவன் முதல் யானையை கண்டிருக்கிறான். எண்பெருங்கரியின் நடுநுண்புள்ளி. தன் கால்கள் திகிரியென ஆகி உடல்சுழல்கின்றதா? சூழ்ந்த இருள் சுழல்கின்றதா? எட்டுத்திசையும் ஒற்றைப்பெருவட்டமென்றாகின்றனவா?

அவன் விழித்துக்கொண்டபோது விழிகளுக்குள் காலையொளி புகுந்து கூசவைத்தது. நிழலாட்டத்தை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தமர்ந்த பின்னர்தான் யானைகளை நினைவுகூர்ந்தான். அவன் மேல் குனிந்தபடி பிச்சாண்டவர் நின்றிருந்தார். “உயிருடன் இருக்கிறாய்” என்று அவர் சொன்னார். “தொலைவில் உன்னை பார்த்தபோதே தெரிந்துகொண்டேன்.” அவிழ்ந்த தழையாடை அப்பால் கிடந்தது. அவன் உருண்டு அதை கைநீட்டி எடுத்து இடையில் சுற்றிக்கொண்டு எழுந்து நின்று சுற்றிலும் பார்த்தான். திகைப்புடன் “யானைகள்!” என்றான்.

“என்ன?” என்றார் அவர். “எட்டு யானைகள்! அவை என்னை சூழ்ந்துகொண்டன.” அவர் புன்னகையுடன் “வா” என்று அழைத்துச்சென்றார். அவன் இரவில் செறிந்த காடென நினைத்த இடம் சேறுமண்டிய புதர்ப்பரப்பாக இருந்தது. “இதோ நீ நின்றிருந்த இடம்” என அவர் காட்டிய இடத்தில் அவன் காலடித்தடம் இருந்தது. அவர் முன்னால் சென்று “இங்கு களிறு ஒன்று நின்றிருக்கிறது. பிண்டம் கிடக்கிறது. காலடிகள் உள்ளன. தழை ஒடித்து தின்றிருக்கிறது” என்றார். அவன் ஓடிச்சென்று அந்தத் தடங்களை பார்த்தான். “நான் எட்டு யானைகளை பார்த்தேன்… என் விழிகளால் பார்த்தேன்.” அவர் புன்னகையுடன் “ஆம், அதற்கு வாய்ப்பிருக்கிறது” என்றார்.

“நான் பார்த்தேன்… உண்மையாகவே பார்த்தேன்” என்று கூவியபடி அவன் பாய்ந்து புதர்களுக்குள் ஓடினான். அவன் விழுந்து கிடந்த இடத்தை புதர்கள் வழியாக சுற்றிவந்தான். யானைக்காலடிகளை காணாமல் மீண்டும் மீண்டும் விழிதுழாவி சலித்தான். திரும்பி வந்து மூச்சிரைக்க நின்று “நான் பார்த்தேன்!” என்றான். அவர் “பார்த்திருக்கக்கூடும் என்றுதானே நானும் சொன்னேன்” என்றபின் கனிவுடன் புன்னகைத்து அவன் தோளைத்தொட்டு “வருக!” என்றார்.

[ 9 ]

சௌகந்திகத்திற்கு வந்த கிராதன் அங்கிருந்து சென்றபின்னரும் அவன் சூர் அங்கே எஞ்சியிருந்தது. தேவதாரு மரங்களின் காற்று சுழன்று வீசும் ஒரு கணத்தில் அதை மூக்கு உணர்ந்தது. வேள்விப்புகையின் இன்மணத்தின் உள்ளே அது மறைந்திருந்தது. முனிவர்கள் காமத்தின் ஆழ்தருணத்தில் தங்கள் மனைவியரின் உடலில் அதை உணர்ந்தனர். அதை அறிந்ததுமே அனைத்தும் மறைந்து அவன் நினைவு மட்டும் எழுந்து கண்முன் நின்றது. மெய்ப்பு கொண்டு எழுந்து திசைகளை நோக்கி பதைத்தனர். “இங்குள்ள அனைத்திலும் அவன் எப்படி ஊடுருவ முடியும்?” என்றார் கனகர். “அத்தனை வேள்விகளும் மகாருத்ரம் ஆனது எப்படி? அனைத்து வேதச்சொற்களும் ருத்ரமாக ஒலிப்பது எப்படி?”

“நாம் காட்டாளர்கள் அல்ல” என்று சூத்ரகர் சொன்னார். “காட்டின் வேர்களை உண்கின்றன பன்றிகள். தண்டை உண்கின்றன யானைகள். இலைகளை மான்கள். கனிகளை குரங்குகள். நாம் மலரில் ஊறிய தேனை உண்பவர்கள். ஆம், காட்டின் உப்பும் சூரும் கொண்டதே அதுவும். அதுவே காட்டின் சாரம். தோழரே, வண்ணத்துப்பூச்சிகளே காட்டை அறிந்தவை. அவற்றின் சிறகிலேறிப் பறக்கிறது காடு. நாம் வேதநுண்சொல்லை மட்டுமே அறியவேண்டியவர்கள். இந்தக் கொடுஞ்சூரால் அதை நாம் இழக்கிறோம்.” குருநிலையின் எட்டு முதன்மை முனிவர்கள் தங்களுக்குள் ஒன்றாகி அதைப்பற்றி பேசிக்கொண்டனர். பேசப்பேச சினமும் துயரும் கொண்டு ஒன்றுதிரண்டனர்.

அவர்கள் அதை அத்ரியிடம் சொன்னார்கள். அவர் விழிசொக்கும் பெரும்போதையிலென இருந்தார். “ஆம், நானும் அறிகிறேன் அந்த மணத்தை. கருக்குழந்தையின் குருதி போல, புதிய கிழங்கில் மண் போல, மழைநீரில் முகில்போல அது மணக்கிறது. அதன் ஊர்திகளே இவையனைத்தும்” என்றார். அவர்கள் சோர்ந்த முகத்துடன் எழுந்தனர். “இவரிடம் சொல்லிப்பயனில்லை. தன்னை இழந்துவிட்டார்” என்றார் கருணர். “அவர் அறிந்த ஒன்றை நாம் அறியவில்லை என்று பொருளா இதற்கு?” என்றார் கனகர். “தன்னை இழந்தபின் அறிந்தாலென்ன அறியாவிட்டாலென்ன?” என்றார் கர்த்தமர்.

“வந்தவன் யார்?” என்றார் கனகர். “நாம் அவனை நேரில் கண்டோம். இரந்துண்ணும் காட்டாளன். அவனிடம் காடுகள் தங்கள் இருளுக்குள் தேக்கிவைத்துள்ள மாயம் ஒன்றிருந்தது. சற்றுநேரம் நம் கண்களைக் கட்ட அவனால் முடிந்தது. பிறிதென்ன?” சூத்ரகர் “தன் காட்டுத்தெய்வத்தை நம் ஆசிரியரின் நெஞ்சில் நிறுத்திவிட்டுச் சென்றான். இதோ நம் குருநிலை வாயிலில் கல்லுருவாக நின்று பூசெய்கை கொள்கிறது அது” என்றார். “அவன் நம் மீது ஏவப்பட்டவன், ஐயமே இல்லை” என்றார் அஸ்வகர்.

“சூழ்ந்திருக்கிறது காடு. நோயும் கொலையும் குடிகொள்ளும் வன்னிலம் அது. அதை விலக்கியே இவ்வேலியை நம் குருநிலைக்குச் சுற்றிலும் அமைத்தனர் முன்னோர். அந்த வேலியை நாமே திறந்தோம். அவனை உள்ளே விட்டதே பெரும்பிழை” என்றார் கனகர். “அவன் இரவலன்” என்றார் சூத்ரகர். “ஆம், ஆனால் காட்டாளர் நம் எதிரிகள். இரவலராகவும் இங்கொரு வேதமறிந்த அந்தணன் மட்டுமே உட்புக முடியும் என்று நெறியிருந்தது அல்லவா? அதை எப்போது மீறினோம்?” அவர்கள் அமைதியடைந்தனர். “என்றோ ஒரு இடத்தில் நாம் நம்மை நம் முன்னோரைவிடப் பெரியவர்களாக எண்ணிக்கொண்டோமா? அதன் விளைவைத்தான் சுமக்கிறோமா?”

“ஆயிரம் ஆண்டுகாலம் வேதச்சொல் கேட்டு தூயமணம் கொண்டு நின்றிருந்த தேவதாருக்களில் மலநாற்றம் கலந்துவிட்டிருக்கிறது. வேதச்சொல் கொண்டு கூவிய பசுக்களின் அகிடுகளில் குருதிச்சுவை கலந்த பால் சுரக்கிறது” என்றார் கனகர். “நாம் நம்மை இழந்துவிட்டோம். இந்தக் காட்டாளரின் கல்தெய்வத்திற்குப் பூசைசெய்யவா தேவதாருக்கள் மணம் கொள்கின்றன? இதன் மேல் ஊற்றவா நம் பசுக்கள் அமுதூறுகின்றன? இதை வழுத்தவா வேதச்சொல் எடுக்கிறோம்?”

நாளுக்குநாள் அவர்களின் அச்சமும் விலக்கமும் கூடிவந்தன. முதலில் மாறிமாறி அதைப் பேசிக்கொண்டிருந்தவர்கள் சொல்தேய்ந்து அமைதியடைந்தார்கள். சொல்லப்படாதபோது அவர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அது பேருருக்கொண்டு வளர்ந்தது. அதை எதிர்கொண்டு நோக்கவே அவர்கள் அஞ்சினர். எனவே அதன்மேல் எண்ணங்களையும் செயல்களையும் அள்ளிப்போட்டு மூடி அழுத்தினர். உள்ளூறி வளர்ந்து அவர்களின் குருதியில் கலந்தது. அவர்களின் விரல்நுனிகளில் துடித்தது. அவர்களின் காலடிச்சுவடுகளில் பதிந்துகிடந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் பிறர் காலடிகளை உடனே அடையாளம் கண்டுகொண்டனர்.

ஒருநாள் தாருகக்காட்டுக்கு கூன்விழுந்து ஒடுங்கிய சிற்றுடலும் வெண்ணிற விழிகளும் உடைந்து பரவிய கரிய பற்களும் கொண்ட வைதிகர் ஒருவர் தன் இரு மாணவர்களுடன் வந்தார். தொலைவில் வரும்போதே நடையின் அசைவால் அவரை வேறுபடுத்தி நோக்கி நின்று கூர்ந்தனர். அருகணைந்ததும் அவருடைய முதன்மை மாணவனாகிய கரிய நெடிய இளைஞன் “எங்கள் ஆசிரியர் அதர்வத்தைக் கைப்பற்றிய பெருவைதிகர். இவ்வழி செல்லும்போது இக்குருநிலையைப்பற்றி அறிந்தோம். ஓய்வுகொண்டு செல்ல விழைகிறோம். அவரை அடிபணிந்து அருள்பெறும் நல்வாய்ப்பை உங்களுக்கு அளிக்கிறோம்” என்றான்.

KIRATHAM_EPI_05

அவர்கள் திகைப்புகொண்டாலும் அச்சொல்லில் இருந்த முனைப்பே அதை ஏற்கச்செய்தது. கனகர் “எங்கள் குருநிலைக்கு வருக, அதர்வ வைதிகரே!” என்றார். வெளிறிய குறிய உடல்கொண்டிருந்த இரண்டாவது மாணவன் “இக்குருநிலையின் தலைவரே வாயிலில் வந்து எங்கள் ஆசிரியரை வரவேற்கவேண்டுமென்பது மரபு” என்றான். “அவ்வண்ணமே” என்று அஸ்வகர் திரும்பி உள்ளே ஓடினார். அத்ரிமுனிவர் தன் இரு மாணவர்களுடன் வந்து வாயிலில் நின்று வரவேற்று அதர்வ வைதிகரை உள்ளே அழைத்துச்சென்றார்.

மகாகாளர் என்று பெயர்கொண்டிருந்த அவர் வந்த முதல்நாள் முதலே அங்குள்ள அனைவராலும் வெறுக்கப்பட்டார். வெறுக்கப்படுவதற்கென்றே ஒவ்வொன்றையும் செய்பவர் போலிருந்தார். எப்போதும் மூக்கையும் காதையும் குடைந்து முகர்ந்து நோக்கினார். அக்குள்களை சொறிந்தார். அனைத்துப் பெண்களையும் அவர்களின் முலைகளிலும் இடைக்கீழும் நேர்நோக்கில் உற்றுநோக்கினார். அவர்கள் திகைத்து அவர் விழிகளை நோக்கினால் கண்கள் சுருங்க இளித்தார். உணவை இடக்கையால் அள்ளி வாயிலிட்டு நாய்போல் ஓசையெழ தின்றார். அவ்விரல்களை ஒவ்வொன்றாக நக்கியபின் இலையையும் வழித்து நக்கினார்.

உணவுண்ணும் இடத்திலேயே காலைத்தூக்கி வயிற்றுவளி வெளியிட்டார். அவ்வோசைக்கு அவரே மகிழ்ந்து மாணவர்களை நோக்கி சிரித்தார். அடிக்கடி ஏப்பம் விட்டு வயிற்றைத்தடவி முகம்சுளித்து மாணவர்களை கீழ்ச்சொற்களால் வசைபாடினார். அவர் இருக்குமிடத்திற்கே எவரும் செல்லாமலானார்கள். அவர் அங்கிருப்பதையே எண்ணவும் தவிர்த்தனர். குருநிலையின் வேள்விக்கூடத்திற்கும் சொல்கூடும் அவைக்கும் அவர் வந்தமரும்போது அவர் அமரக்கூடும் இடத்தை முன்னரே உய்த்தறிந்து அங்கிருந்தோர் விரல்தொடுமிடத்தில் சுனைமீன்கூட்டம் போல விலகிக்கொண்டனர்.

ஒருநாள் சுகந்தவாகினியில் நீராடி எழுந்த கனகர் மரவுரியை உதறும்போது எழுந்த எண்ணம் ஒன்றால் திகைத்து அசையாமல் நின்றார். உள்ளத்தின் படபடப்பு ஓய்ந்ததும் தன் தோழர்களிடம் திரும்பி “ஒருவேளை இவர்தான் நமக்காக வந்தவரோ?” என்றார். “யார்?” என்றார் அஸ்வகர். “இந்த அதர்வர். இவர் அபிசாரவேள்வி செய்யக்கற்றவர். நாம் எண்ணியது ஈடேற இவரை அனுப்பியதோ ஊழ்?” அவர் சொல்லிச்செல்வதற்குள்ளாகவே அவர்கள் அங்கு சென்றுவிட்டிருந்தனர். ஆனால் அவ்வெண்ணத்தை அவர்களே தங்களுக்குள் மறுத்துக்கொண்டார்கள். ஒன்றும் சொல்லாமல் ஒருவரை ஒருவர் நோக்கினர்.

கருணர் “ஆனால் இவர் இழிகுணத்தவர். இவரிடம் என்ன ஆற்றல் இருக்கக்கூடும்?” என்றார். அதன் மறுமொழியை அவரே அறிந்திருந்தார். கனகர் அந்த எதிர்ப்பால் ஆற்றல்கொண்டு “நமக்குத் தேவை இழிவின் ஆற்றல்தான். அந்த கல்லாக் காட்டாளன் முன் நம் சிறப்புகள் செயலற்றதைத்தான் கண்டோமே! அவனை வெல்ல இவரால்தான் இயலும்” என்றார். “இவர் கற்றது நாமறிந்த நால்வேதம் அல்ல. கிருஷ்ணசாகையுடன் அதர்வம் நம் எண்ணத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது. அது கீழ்மையின் உச்சம் என்கிறார்கள். அதன் சொற்கள் எழுந்தால் பாதாளநாகங்கள் விழியொளியும் மூச்சொலியுமாக எழுந்து வந்து நெளியும். ஆழுலக இருள்மூர்த்திகள் சிறகுகொண்டு வந்து சூழ்வார்கள். இவர் அவர்களின் உலகில் வாழ்கிறார்.”

“ஆம், இவரே” என்றார் சூத்ரகர். “இவரைக் கண்டதுமே நான் அதைத்தான் நினைத்தேன்.” கர்த்தமர் “இல்லையேல் இவரே நம்மைத்தேடி வரவேண்டியதில்லை” என்றார். மிகவிரைவிலேயே அவர்கள் கருத்தொருமித்தனர். “ஆம், இவரிடமே பேசுவோம். இவர் விழைவதை நாம் அளிப்போம்” என்றார் அஸ்வகர். “நாம் என்ன விழைகிறோம்?” என்றார் சூத்ரகர். அதை அவர்கள் அதுவரை எண்ணவில்லை என்பதனால் சற்று தயங்கினர். “நாம் விழைவது வெற்றியை” என்றார் கனகர். “அந்தக் காட்டாளனை முழுதும் வென்றடக்கவேண்டும். அவன் இங்கு அடைந்துசென்ற வெற்றியின் கெடுமணமே நம்மைச் சூழ்ந்துள்ளது. தோற்று அவன் ஆணவம் மடங்குகையில் இந்த நாற்றமும் அகலும்.”

“அவனை வேதமே வெல்லவேண்டும்” என்று அஸ்வகர் கூவியபடி கனகரின் அருகே வந்தார். “வேதமென்பது மலர்மட்டுமல்ல, சேற்றை உண்ணும் வேரும்கூடத்தான் என அந்தக் கிராதன் அறியட்டும்.” கனகர் “ஆம், அதர்வம் காட்டாளர்களின் சொல்லில் இருந்து அள்ளப்பட்டது. ஆயிரம் மடங்கு ஆற்றல் ஏற்றப்பட்டது. காட்டுக்கீழ்மையால் உறைகுத்தப்பட்ட பாற்கடல் அது என்கின்றது பிரஃபவசூத்ரம். அந்த நஞ்சை அவன் எதிர்கொள்ளட்டும்” என்றார்.

அத்தனை விசையுடன் சொல்லப்பட்டதும் அவர்கள் அதன் வீச்சை உள்ளத்தால் உணர்ந்து அமைதிகொண்டார்கள். ஒருவரை ஒருவர் நோக்காமல் முற்றிலும் தனித்து நின்றிருந்தார்கள். கனகர் தன் மரவுரியை மீண்டும் உதறிவிட்டு “உங்களுக்கு ஒப்புதலென்றால் நானே அவரிடம் சென்று பேசுகிறேன்” என்றார். “ஆம், தாங்களே பேசுங்கள்” என்றார் சூத்ரகர். பிறர் தலையாட்டினர்.

வெண்முரசு விவாதங்கள்

நிகழ்காவியம்

நூல் பன்னிரண்டு – கிராதம் – 4

[ 7 ]

அத்ரி முனிவரின் சௌகந்திகக் காட்டின் அழகிய காலையொன்றில் தொலைவில் மரம்செறிந்த காட்டுக்குள் ஒரு கங்காளத்தின் ஒலி கேட்கத் தொடங்கியது. அப்போது அங்கு வைதிகர் நீராடி எழுந்து புலரிக்கு நீரளித்து வணங்கிக்கொண்டிருந்தனர். பெண்டிர் அவர்களுக்கான உணவு சமைக்க அடுமனையில் அனலெழுப்பிக்கொண்டிருந்தனர். தொழுவத்தில் பால்கறந்தனர் முதிய பெண்கள். சிலர் கலங்களில் மத்தோட்டினர். அருகே வெண்ணைக்காக அமர்ந்திருந்தனர் இளமைந்தர். முற்றத்தில் ஆடினர் சிறுவர். மலர்கொய்து வந்தனர் சிறுமியர். இளையோர் சிலர் விறகு பிளந்தனர். சிலர் ஓலைகளில் நூல்களைப் பொறித்தனர்.

தூயது சௌகந்திகத்தின் காலை. தூய்மையில் விளைவதே மெய்மை என்று அத்ரி முனிவர் அவர்களுக்கு கற்பித்தார். விலக்குவதன் வழியாக விளைவதே  தூய்மை. மூவேளை நீராடி உடலழுக்கு களைதல். அனலோம்பி மூச்சை நெறிப்படுத்தல். வேதமோதி அகத்தை ஒளிகொள்ளச்செய்தல். சௌகந்திகம் சூழ்ந்திருந்த பெருங்காட்டை முற்றாக விலக்கி வேலியிட்டு தன்னைக் காத்தது. வேதச்சொல் கொண்டு தன்னைச் செதுக்கி கூர்மையாக்குக என்றார் அத்ரி. வாழைப்பூ என தன்னை உரித்து உரித்து தேன்மலர் கொள்க என்றார்.

இனிய புலரியை அதிரச்செய்த கங்காள ஒலியைக் கேட்டு அவர்கள் திகைப்புகொண்டனர்.  முதலில் அது உக்கில்பறவையின் உப்பலோசை என்று தோன்றியது. சீரான தாளத்தால் அது மரங்கொத்தியோ என ஐயுற்றனர் மாணவர். தொலைதேரும் கருங்குரங்கின் எச்சரிக்கையோசை என்றனர் சில மாணவர். இளையோன் ஒருவன் “அது கங்காளத்தின் ஓசை” என்றான்.

அவர்கள் அதை முன்பு கேட்டிருக்கவில்லை. அவனைச் சூழ்ந்துகொண்டு “அது என்ன?” என்றனர். “மலைவேடர் கையிலிருக்கும் சிறுதோல்கருவி அது. விரல்போன்ற சிறுகழியால் அதை இழும் இழுமென மீட்டி ஒலியெழுப்புவர். கங்காளம் என்பது அதன் பெயர். அவர்களின் கையிலமைந்த நாவு அது என்பார்கள் என் குலத்தவர். கதைகளையே அவர்களால் அவ்வொலியால் சொல்லிக்கொள்ள முடியும்” என்று அவன் சொன்னான். “அது விம்மும். ஏங்கும். அறுவுறுத்தும். அறைகூவும்.”

“எங்கள் மலையடிவாரத்து ஊரில் கங்காளத்தின் திரளொலி எழுந்தால் அனைவரும் அஞ்சி ஓடிச்சென்று ஒளிந்துகொள்வர். கரிய திண்ணுடலுடன் மலையிறங்கிவரும் வேட்டுவர்கள் ஊர்புகுந்து சாவடியில் நிலைகொண்டால் ஊர்ப்பெரியோர் கூடி அரிசியும் பொன்பணமும் பிறபொருட்களுமாகச் சென்று பணிந்து மலைக்கப்பம் கொடுத்து வணங்குவார்கள். அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு ஊரை வாழ்த்தி வெளியேறுகையில் ஊர்முகப்பில் நின்றிருக்கும் மரத்தின் பட்டையில் தங்கள் குலக்குறியை பொறித்துச்செல்வார்கள்.”

“தனிவேட்டுவர் மலையிறங்கும் ஒலி ஆறுதலளிப்பது. அவர்களை எதிர்கொண்டு வரவேற்று அழைத்துச்சென்று எங்கள் கன்றுகளை காட்டுவோம். அவற்றின் வாய்கட்டி வைத்திருக்கும் மலைத்தெய்வங்களை விடுவித்து மீண்டும் புல்கடிக்கச் செய்ய அவர்களால் முடியும். அணங்குகொண்டு அமர்ந்திருக்கும் கன்னியரை புன்னகை மீளச்செய்யவும் நோய் கொண்டு நொய்ந்த குழவியரை பால்குடிக்க உதடுகுவியச் செய்யவும் அவர்களால் முடியும்.”

அங்கு அதுவரை கங்காளர் எவரும் வந்ததில்லை. “இது வைதிகர் குருகுலம். இங்கு எவருக்கும் கொடையளிப்பதில்லை. இத்திசையில் எங்கும் வேட்டுவர் இல்லங்களும் இல்லை” என்றார் கனகர்.  ”வேதம்நாடி வரும் படிவரும் வைதிகருமன்றி பிறர் இதனுள் புக ஒப்புதலுமில்லை.” பிரபவர்  ”அவன் எதன்பொருட்டு வருகின்றான் என நாம் எப்படி அறிவோம்?” என்றார். தசமர் “அயலது எதுவும் தீங்கே” என்றார்.

“அவனுடன் நாய் ஒன்றும் வருகிறது” என்றான் ஓர் இளையோன்.  “எப்படி நீ அறிவாய்?” என்றனர் அவனைச் சூழ்ந்து நின்ற பெண்கள். “புள்ளொலி தேரும் கலையறிந்தவன் நான்” என்று அவன் சொன்னான். “அவனுடன் இன்னொருவரும் வருகிறார். அது பெண் என்கின்றது புள்” என்றான். “காட்டை ஒலியால் அறிந்துகொண்டிருக்கிறாய். நோயும் கொலையும் வாழும் இக்காடு அவ்வொலியால் உன்னையும் வந்தடைகிறது. காடுவாழும் உள்ளத்தில் வேதம் நிற்பதில்லை” என்றார் அவன் ஆசிரியரான கனகர்.

அவர்கள் குடில்தொகையின் வாயிலென அமைந்த மூங்கில்தூண்களின் அருகே காத்து நின்றனர். இளையோர் இருவர் முன்சென்று அவனை எதிர்கொள்ள விழைந்தனர். மூத்தோர் அவர்களை தடுத்தனர். “கொல்வேல் வேட்டுவன் அவன் என்றால் எதிரிகளென உங்களை நினைக்கலாம். அந்தணரையும் அறவோரையும் அறியும் திறனற்றவனாகவே அவன் இருப்பான்” என்றார் சூத்ரகர். அச்சமும் ஆவலும் கொண்டு ஒருவர் கைகளை ஒருவர் பற்றியபடி அங்கே காத்து நின்றிருந்தனர்.

கங்காளத்தின் ஓசை வலுத்து வந்தணைந்தது. மரக்கூட்டங்களிலிருந்து பறவைகள் எழுந்து கலைந்து பறந்தன. கொல்லையில் நின்றிருந்த பசுக்கள் குரலெழுப்பலாயின. அவன் மரக்கூட்டங்களுக்கு நடுவே தோன்றியதும் இளையோர் அஞ்சிக் கூச்சலிட்டபடி பின்னடைந்தனர். கரிய நெடிய உடலில் ஆடையின்றி வெண்சாம்பல்பொடி பூசி அவன் வந்தான். அவன் இடைக்குக் கீழே ஆண்குறி சிறுதுளை வாய்கொண்ட செந்நிறத் தலைபுடைத்து விரைத்து நின்றது. அதில் வேர்நரம்புப் பின்னல்கள் எழுந்திருந்தன. சினம் கொண்ட சுட்டு விரல் போல. சீறிச் சொடுக்கிய நாகம் போல. யானைகுட்டியின்  துதிமுனை போல. நிலம் கீறி எழுந்த வாழைக்கன்றின் குருத்துபோல.

சடைத்திரிகள் தோள்நிறைத்து தொங்கின. வேர்புடைத்த அடிமரம்போன்ற கால்கள் மண்ணில் தொட்டுத் தாவுவதுபோல் நடந்தன. வலத்தோளில் தோல்வாரில் மாட்டப்பட்ட முப்புரிவேல் தலைக்குமேல் எழுந்து  நின்றிருந்தது. இடக்கையில் மண்டைக்கப்பரை வெண்பல் சிரிப்புடன் இருக்க இடைதொட்டுத் தொங்கிய கங்காளத்தை வலக்கையின் சிறுகழியால் மீட்டியபடி நடந்து வந்தான். அவனுக்குப் பின்னால் நிலம் முகர்ந்தும், காற்றுநோக்கி மூக்கு நீட்டியும், விழிசிவந்த கரியநாய் வால் விடைக்க தொடர்ந்து வந்தது. அப்பால் வெண்ணிற ஆடையில் உடல் ஒடுக்கி நீண்ட கூந்தல் தோளில் விரிந்திருக்க நிலம்நோக்கி தலைதாழ்த்தி நோயுற்ற முதியவள் சிற்றடி எடுத்துவைத்து வந்தாள்.

பதறி ஓடி உள்ளே வந்து அவன் உள்ளே புகாதபடி மூங்கில்படலை இழுத்துமூடினர் இளையோர். அவன் மூடிய வாயிலருகே செஞ்சடைவழிந்த தலை ஓங்கித்தெரிய வந்து நின்று “பிச்சாண்டி வந்துள்ளேன். நிறையா கப்பரையும் அணையா வயிறும் கொண்டுள்ளேன்” என்றான். கங்காளம் குரலானது போலிருந்தது அவ்வோசை. “இரவலனுக்கு முன் மூடலாகாது நம் வாயில். திறவுங்கள்!” என்றார் முதியவராகிய சாம்பர். “அவன் காட்டாளன். இது வைதிகர் வாழும் வேதநிலை” என்றார் கனகர். “அவன் கொலைவலன் என்றால் என்ன செய்வது?” என்றார் சூத்ரகர். “எவராயினும் இரவலன் என்றபின் வாயில் திறந்தாகவேண்டும் என்பதே முறை” என்றார் சாம்பர். தயங்கிச்சென்ற இளையோன் ஒருவன் வாயில் திறக்க அவன் நீள்காலடி எடுத்துவைத்து உள்ளே புகுந்தான்.

அத்தனை விழிகளும் அவனையே நோக்கி நிலைத்திருந்தன. அத்தனை சித்தங்களிலும் எழுந்த முதல் எண்ணம் ‘எத்தனை  அழுக்கானவன்! எவ்வளவு அழகற்றவன்!’ என்பதே. தோல்வாடையும் ஊன்வாடையும் மண்மணமும் இலைமணமும் கலந்து காட்டுக்கரடிபோல் அவன் மூக்குக்கு தெரிந்தான். கங்காளத்தின் ஓசை குடில்சுவர்களைத் தொட்டு எதிரொலித்து சௌகந்திகக்காட்டுக்குள் பரவியது. நோயுற்றவள் சுகந்தவாகினிக்கு அப்பால் தரையில் குனிந்தமர்ந்தாள். நாய் அவளருகே கால்மடித்து செவிகோட்டி மூக்குநீட்டி கூர்கொண்ட முகத்துடன் அமர்ந்தது.

அவன் உள்ளே நுழைந்தபோது தேவதாருக்காட்டுக்குள் நிறைந்திருந்த நறுமணத்தை ஊடுருவியது மதம்கொண்ட காட்டுவிலங்கின் நாற்றம். தொழுவத்துப் பசுக்கள் கன்றுகளைக் கண்டவைபோல குளம்புகள் கல்தரையில் மிதிபட, கொம்புகளால் தூண்களையும் அழிகளையும் தட்டி நிலையழிந்து, முலைகனத்து குரலெழுப்பின. கூரையேறிய சேவலொன்று தலைசொடுக்கி சிறகடித்துக்  கூவியது. வளர்ப்புக்கிளிகள் ‘அவனேதான்! அவனேதான்!’ என்று கூவிச்சிறகடித்து உட்கூரையில் சிறகுகள் உரச சுற்றிப்பறந்தன.

அவ்வோசைகள் சூழ அவன் நடந்து முதல் இல்லத்தின் முன் சென்றுநின்றான். கங்காளத்தின் தாளத்துடன் இயைய “பசித்துவந்த இரவலன், அன்னையே. உணவிட்டருள்க, இல்லத்தவளே!” என்று கூவினான்.

அவனை சாளர இடுக்குகளினூடாக பெண்கள் நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் குரல்கேட்டு பதுங்கியிருக்கும் விலங்கின் உடலென அக்குடில் அதிர்வுகொண்டது. அதன் மூடிய கதவுகளின் இடுக்குகள் விதும்பின. அவன் மும்முறை குரலெழுப்பியதும் கதவு மெல்லத்திறக்க மேலாடைகொண்டு மூடிய தோளை ஒடுக்கி கால்கள் நடுங்க முனிவர்மனைவி முறத்தில் அரிசியுடன் வெளியே வந்தாள். தலைகுனிந்து நிலம்நோக்கி சிற்றடி வைத்து வந்து படிகளில் நின்று முறத்தை நீட்டினாள். அவன் தன் கப்பரையை அவளை நோக்கி நீட்டி புன்னகையுடன் நின்றான்.

அவளுடைய குனிந்த பார்வை திடுக்கிட்டு நிமிர்ந்தது. அவன் விழிகளை சந்தித்ததும் அவள் கைகள் பதற முறம் சரிந்து அரிசி சிந்தலாயிற்று. தன் கப்பரையாலேயே அவ்வரிசியை முறத்துடன் அவன் தாங்கிக்கொண்டான். கப்பரை விளிம்பால் முறத்தை மெல்லச்சரித்து அரிசியை அதனுள் பெய்தபோது அவன் விழிகள் அவள் உடலிலேயே ஊன்றியிருந்தன. விழி தழைத்திருந்தாலும் முழுதுடலாலும் அவனை நோக்கிய அவள் மெய்ப்புகொண்டு அதிர்ந்தாள். சுண்டிச்சிவந்த முகத்தில் கண்கள்  கசிந்து வழிய, சிவந்து கனிந்த இதழ்கள் நீர்மையொளி கொள்ள, உயிர்ப்பின் அலைக்கழிப்பில் கழுத்துக்குழிகள் அழுந்தி எழ, முலைக்குவைகள் எழுந்து கூர்கொண்டு நிற்க எங்கிருக்கிறோம் என்றறியாதவள் போலிருந்தாள்.

“நலம் திகழ்க இல்லாளே! உன் குலம் பெருகுக! கன்றுடன் செல்வம் தழைக்க! சொல்கொண்டு பெருகுக உன் கொடிவழி!” என்று சொல்லி கங்காளன் திரும்பியபோது கனவிலென காலெடுத்து வைத்து அவளும் அவனைத் தொடர்ந்துசென்றாள். அவள் இல்லத்திலிருந்து கைநீட்டியபடி வெளியே வந்த இன்னொருத்தி “என்ன செய்கிறாய், வாமாக்‌ஷி? எங்கு செல்கிறாய்?” என்று கூவ அவன் திரும்பி நோக்கி மெல்ல நகைத்தான். வெறிகலந்த விழிகள். பித்தெழுந்த சிரிப்பு. அவள் மேலாடை நழுவ பெருமுலைகள் இறுகி மாந்தளிர்நிற காம்புகள் சுட்டுவிரல்களென எழுந்து நின்றன. விம்மி நெஞ்சோடு கைவைத்து அழுத்தி ஒருகணம் நிலைமறந்தபின் அவளும் உடனிறங்கி அவனுடன் சென்றாள்.

அவன் கங்காளத்தை மீட்டியபடி இல்லங்கள்தோறும் சென்றான். அவன் செல்வதற்குள்ளாகவே ஆடை நெகிழ்ந்துருவிச் சரிய, விழிகளில் காமப்பெருக்கு செம்மைகொள்ள, விம்மும் முலைகளை தோள்குறுக்கி ஒடுக்கியும், கைகொண்டு இறுக்கியும், தொடைசேர்த்து உடல் ஒல்கியும் முனித்துணைவியர் அன்னத்துடன் திண்ணைகளுக்கு வந்தனர். உறவுத்திளைப்பிலென குறுவியர்வை கொண்ட நெற்றிகள். பருக்கள் சிவந்து துடித்த கன்னங்கள். கனிவு கொண்டு சிவந்த இதழ்கள். மூச்சு அனல்கொள்ள விரிந்தமைந்த மூக்குத்துளைகள். சுருங்கி அதிர்ந்த இமைகளுக்குள் பால்மாறா பைதல்நோக்குபோல் ஒளியிழந்து தன்னுள் மயங்கிய  விழிகள்.

குடிலுக்குள் இருந்து அஸ்வக முனிவர் ஓடிவந்து “என்ன செய்கிறாய், மாயாவியே? நீ யார்?” என்று கூவினார். கிருபர் “தடுத்து நிறுத்துங்கள் அவனை! நம் குலக்கொடிகளை மயக்கி கொண்டுசெல்கிறான் அவன்” என்றார். அவன் கங்காளத்தின் தாளம் மாறுபட்டது. குடில்களில் இருந்து குழந்தைகள் கூவிச்சிரித்தும் துள்ளியார்த்தும் அவனுக்குப்பின் திரண்டுசென்றன. அவனை நோக்கி மலர்களைப் பறித்து வீசின. அவனுடன் செல்ல முண்டியடித்தன. கங்காளம் அழைக்க வேதம் பயின்ற இளையோர் தங்கள் கையிலேந்திய பணிக்கருவிகளை அங்கேயே உதறி அவனைத் தொடர்ந்தனர். சுவடிகளை உதறி கல்விநிலைகளில் இருந்து எழுந்து அவன் பின்னால் ஏகினர்.

வேள்விச்சாலைக்குள் பன்னிரு முனிவர் சூழ அமர்ந்து வேதமோதி அவியிட்டுக்கொண்டிருந்த அத்ரியின் முன் சென்று நின்ற கருணர் மூச்சிரைத்தபடி “முனிமுதல்வரே, எண்ணவும் இயலாதது நிகழ்கிறது. எங்கிருந்தோ வந்த கிராதன் இதோ நம் இல்லப்பெண்களையும் மாணாக்கர்களையும் இழுத்துக்கொண்டு செல்கிறான். முடிவற்ற மாயம் கொண்டிருக்கிறான்… எழுந்து வருக! நம் குருநிலையை காப்பாற்றுக!” என்று கூவினார். “இங்கிருந்தே வெல்வேன் அவன் மாயத்தை” என்று கூவியபடி அவியிலிட தர்ப்பை ஒன்றைக் கையிலெடுத்த அத்ரி அது பொசுங்கி எரிந்து தழலாவதைக் கண்டார்.

சினத்தால்  உடல் அதிர எழுந்து அவர் வெளியே சென்று நோக்கியபோது கரிய திண்ணுடலில் தசைத்திரள் அதிர கங்காளம் மீட்டியபடி குடில்நிரை நடுவே கடந்துசென்ற காட்டாளனைக் கண்டார். “யாரவன்?” என்று கூவினார். “முன்பு இவன் இங்கு வந்துள்ளான். இவன் காலடிகளை நான் முன்பும் எங்கோ கண்டுள்ளேன். இவ்வோசையையும் நான் அறிவேன்.”  கர்த்தமர் “அடர்காட்டின் இருளில் இருந்து வந்தான். வெண்சாம்பல் அணிந்த காலன். அவன் நாயும் துணைவந்த நோயும் அங்கே அமர்ந்துள்ளன” என்றார்.

கையிலிருந்த வேள்விக் கரண்டியைத் தூக்கியபடி “நில்! நில்!” என்று கூவினார் அத்ரி. அவன் திரும்பி அரைக்கணம் நோக்கியபோது அவ்வெறிச்சிரிப்பின் துளியைக் கண்டு திகைத்து பின்னடைந்தார். சௌகந்திகக் காடே அவன் சூர்மணத்தை சூடிக்கொண்டிருந்தது. ஈரமண் மணம், பழைய வியர்வையின் மணம், புதிய விந்துவின் மணம். “யார் இவன்? யார் இவன்?” என்று கூவியபடி அவனைத் தொடர்ந்தோடினார். “நிறுத்துங்கள் அவனை… வாயிலை  மூடுங்கள்!” என்றபடி கீழே கிடந்த கழியொன்றை எடுத்துக்கொண்டு முன்னால் பாய்ந்தார்.

கங்காளம் கதிமாற கட்டுப்பசுக்கள் வடங்களை அவிழ்த்துக்கொண்டு குளம்புகள் மண்மிதித்து ஒலிக்க, வால்சுழல, நாக்குநீட்டி கரிய மூக்கைத் துழாவியபடி கூவி அவனைத் தொடரலாயின. வேள்விச்சாலைக்குள் நால்வேதங்களாக உருவகித்து நிறுத்தப்பட்டிருந்த வெண்ணிறமும் செந்நிறமும் சாம்பல்நிறமும் கருநிறமும் கொண்ட பசுக்கள் நான்கும் கட்டறுத்துக் கூவியபடி நடையில் உலைந்த பெருமுலைகளின் நான்கு காம்புகளிலும் பால்துளிகள் ஊறிநின்று துளித்தாடி புழுதியில் சொட்ட, திரள்வயிறு அதிர, வால்சுழல அவனைத் தொடர்ந்தோடின.

அவனை முந்திச்சென்று மறித்த அத்ரி “நில் இழிமகனே, இக்கணமே நில்! என் வேதப்பேராற்றலால் உன்னையும் உன் குடியையும் பொசுக்கியழிப்பேன்…” என்று கூச்சலிட்டார். அவர் கையில் இருந்து நடுங்கியது விறகுக்கழி. “என் குடிப்பெண்களை இழுத்துச்செல்லும் நீ யார்? எதன்பொருட்டு இங்கு வந்தாய்?” அவன் புன்னகையுடன் “நான் இரவலன். பசிக்கு அன்னமும் என் குடிக்கு பொருளும் இரந்துபெற வந்தேன். எனக்களிக்கப்படும் அனைத்தையும் பெறும் உரிமை கொண்டவன். இவர்கள் எவரையும் நான் அழைக்கவில்லை. எதையும் கவரவுமில்லை. எனக்களிக்கப்பட்டவை இவை. என்னைத் தொடர்பவர் இவர்கள்” என்றான்.

“இது மாயை. இது கீழ்மையால் வல்லமை கொண்ட காட்டாளனின் நுண்சொல் வித்தை… இதை என் தூயவேதத்தால் வெல்வேன்” என்று அத்ரி தன் கையைத் தூக்கினார். அதர்வவேத மந்திரத்தைச் சொல்லி அவன் மேல் தீச்சொல்லிட்டார். அவன் புன்னகையுடன் அவரை நோக்கி “வேதங்கள் இதோ என் பின் வந்து நின்றிருக்கின்றன, முனிவரே” என நான்கு பசுக்களை சுட்டிக்காட்டினான். அவர் திகைத்து மெல்ல கை தழைத்தார்.

அவன் புன்னகையுடன் “தூயவை மட்டும் நிறைந்த உங்கள் வேதக்காட்டில் இப்போது எஞ்சியிருப்பது என்ன, முனிவரே?” என்றான். அவர் தழைந்து கண்ணீர் நனைந்த குரலில் “இது மாயம்… இது வெறும் மாயம்” என்றார். “சரி, மாயத்தை அவிழ்க்கிறேன்” என்று தன் கையறியாது மீட்டிக்கொண்டிருந்த கங்காள ஒலியை நிறுத்தினான். அவனைச் சூழ்ந்திருந்த பெண்கள் நிலைமீண்டு அஞ்சியும் நாணியும் கூவியபடி ஆடைகளை அள்ளி தங்கள் உடல் மறைத்தனர். ஆடையற்றவர் தோள்குறுக்கி நிலத்தில் கூடி அமர்ந்தனர். இளையோர் விழிப்பு கொண்டு ஒருவரை ஒருவர் நோக்கி வியக்க பசுக்கள் கன்றுகளை நோக்கி குரலெழுப்பின.

“இப்பெண்களில் காட்டாளனைப் புணராத ஒருவரேனும் உளரேல் அழைத்துச்செல்க!” என்றான் அவன். அத்ரி தனக்குப் பின்னால் வந்து கூடிய முனிவர்களை விழிநோக்கி தயங்கி நின்றார். “இவ்விளையோரில் காட்டாளனாக ஒருகணமேனும் ஆகாத ஒருவன் உளன் என்றால் கூட்டிக்கொள்க!” என்று அவன் புன்னகையுடன் சொன்னான். அத்ரியின் உதடுகள் சொற்களின்றி அசைந்தன. “காட்டை நினைத்து அசைபோடாத ஒரு பசுவையேனும் அழைத்துச்சென்றால் நீங்கள் அமுதுகொள்ளலாம்” என்று அவன் மேலும் சொன்னான்.

அத்ரி சினத்துடன் “நீ வேதமுனிவரை இழிவுசெய்கிறாய், கீழ்மகனே” என்று கூவினார். “காட்டாளத்தியாகி உங்கள் மனைவியர் அளித்த கொடையை காட்டாளனாக மாறி நுகராதவர்கள் உங்களில் எவர்? முனிவரே, உங்கள் கையில் இருக்கும் அவ்விறகுக் கட்டையை காட்டாளன் அல்லவா ஏந்தியிருக்கிறான்!” என்று அவன் வெண்பல்நிரை காட்டிச் சிரித்தான். அத்ரி தன் கையிலிருந்த கழியை அப்போதுதான் உணர்ந்தார். அதை கீழே வீசிவிட்டு “ஆம், மானுடராக நாங்கள் மாசுள்ளவர்களே. ஆனால் மாசற்றது எங்கள் சொல்லென நின்றிருக்கும் வேதம். அதுவே எங்கள் அரணும் அரசும் தெய்வமும் ஆகும்” என்றார்.

“காட்டாளன் அறியாத வேதம் இந்நான்கில் ஏதேனும் உள்ளதென்றால் அழைத்துச்செல்க!” என்று அவன் பசுக்களை சுட்டிக்காட்டினான். அத்ரி முன்னால் நின்ற அதர்வம் என்னும் கரிய பசுவை தொடையில் தட்டி அழைத்தார். அது சீறி மூக்கு விடைத்து விழியுருட்டி தன் கொம்புகளைச் சாய்த்தது. அவர் அஞ்சி பின்னடைந்து சாம்பல்நிறமான சாமம் என்னும் பசுவின் திமிலைத் தொட்டு “என் அன்னையல்லவா?” என்றார். அது கொம்புகளைச் சரித்து குளம்பெடுத்து முன்னால் வைத்தது. செந்நிறப்பசுவான யஜுர் அவரை நோக்கி விழிசரித்து காதுகளை அடித்துக்கொண்டது. வெண்பசுவான ரிக்கை நோக்கி கைகூப்பி “என் தெய்வமே, என்னுடன் வருக!” என்றார் அத்ரி. அது அவரை அறியவே இல்லை.

கண்ணீருடன் “தோற்றேன். இன்றுவரை வென்றேன் என நின்று தருக்கிய அனைத்தையும் முற்றிழந்தேன். இனி நான் உயிர்வாழ்வதற்குப் பொருளில்லை” என்று கூவியபடி அவர் தன் இடையாடையை அவிழ்த்து வடக்குநோக்கித் திரும்ப அவன் அவர் தோள்களில் கையை வைத்தான். “வெங்குருதியையும் விழிநீரையும் அறியாமல் எவரும் வேதத்தை அறிவதில்லை, முனிவரே” என்றான். “நீ யார்? நீ யார்?” என்று அவர் உடல் நடுங்க கூவினார். “காட்டுச்சுனையிலிருந்து காட்டை விலக்குவது எப்படி?” என்றான் அவன் மேலும். “நீ காட்டாளன் அல்ல… நீ காட்டாளன் அல்ல” என்று அவர் கூச்சலிட்டார்.

அவன் விலகிச்செல்ல அவர் அவனைப்பற்றி இழுத்து “சொல், நீ யார்? நீ யார்?” என்றார். “இங்கு ஒருவர் மட்டிலுமே என்னை உண்மையுருவில் கண்டவர். உங்கள் அறத்துணைவி. அவரிடம் கேளுங்கள்” என்றபின் அவன் திரும்பிச் சென்று சுகந்தவாகினியை கடந்தான். அவன் கால்பட்டு ஒரு உருளைக்கல் பெயர்ந்து உருண்டது. நாய் எழுந்து வால்குழைத்து முனகியது. அவன் நடந்துசெல்ல அவனைத் தொடர்ந்து நோயும் சென்றது. அவர்கள் கங்காள ஒலியுடன் நடந்து மரக்கூட்டங்களுக்கிடையே மறைந்தனர்.

அத்ரி திரும்பி தன் குடிலுக்குள் ஓடினார்.  அங்கே வெளியே நிகழ்ந்தவை எவற்றையும் அறியாமல் அடுமனையில் துவையல் அரைத்துக்கொண்டிருந்த அனசூயையிடம் “சொல், நீ கண்டது என்ன? சொல்!” என்று கூவினார். “என்ன கண்டேன்? எதைக் கேட்கிறீர்கள்?” என்றாள் அவள். “சற்றுமுன் நீ கொண்டுசென்று கொடுத்த பிச்சையை ஏற்ற இரவலன் யார்? சொல்!” என்றார் அவர். “நான் கண்டவன் ஒரு இளஞ்சிறுவன். காட்டுக்குலத்தவன். ஆடையற்ற சிற்றுடலில் சாம்பல் பூசியிருந்தான். இடக்கையில் கப்பரையும் வலக்கையில் கழியும் ஏந்தி இடையமைந்த கங்காளத்தை மீட்டிக்கொண்டிருந்தான். மாசற்ற வெண்பல் சிரிப்பு கொண்ட அவனைக் கண்டதும் என் முலைக்கண்களில் பாலூறியது. இக்கணம்வரை அவனைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்.”

KIRATHAM_EPI_04_UPDATED

அவர் திகைத்து நின்றிருக்க அவள் தொடர்ந்தாள் “அவன் தோள்களில் மானும் மழுவும் பச்சைகுத்தப்பட்டிருந்தன. நெற்றியில் அறிவிழி ஒன்று பொட்டெனத் திறந்திருந்தது. செஞ்சடைக்கற்றையில் பிறைநிலவென வெண்பல் ஒன்றைச் சூடியிருந்தான். அவனுக்கு இருபக்கமும் காலைச்சூரியனும் அணையாத சந்திரனும் நின்றிருக்கக் கண்டேன்.”

அம்பு விடுபட்ட வில் என நாண் அதிர நிலையழிந்து துவண்ட அத்ரி மீண்டெழுந்து  “எந்தையே!” என்று கூவியபடி வெளியே ஓடினார். நெஞ்சில் அறைந்தபடி “வந்தவன் அவன். ஆடல்வல்லான் ஆடிச்சென்ற களம் இது. முனிவரே, துணைவரே, நாமறியாத வேதப்பொருளுரைக்க எழுந்தருளியவன் பசுபதி. கபாலன். காரிமுகன், பைரவன், மாவிரதன். அவன் நின்ற மண் இது. அவன் சொல்கேட்ட செவி இது” என்று ஆர்ப்பரித்தார்.

அழுதபடியும் சிரித்தபடியும் ஓடிச்சென்று அவர் அந்த உருளைக்கல்லை எடுத்து அந்த இடத்திலேயே சிவக்குறியாக நிறுவினார். “இது கிராதசிவம்!” என்றார். நால்வேதப்பசுக்களை நான்கு திசையிலும் நிறுத்தி அவற்றின் பால்கறந்து அதில் ஊற்றி முழுக்காட்டினார். “சிவமாகுக! ஓம் சிவமாகுக!” எனக் கூவியபடி கைகூப்பினார்.

வெண்முரசு விவாதங்கள்

நிகழ்காவியம்

நூல் பன்னிரண்டு – கிராதம் – 3

[ 5 ]

இமயப்பனிமலையின் அடியில் அமைந்திருந்த தேவதாருக்காடு சௌகந்திகம் என்று தேவர்களால் அழைக்கப்பட்டது. அங்கிருந்து எழுந்த நறுமணம் முகில்களில் பரவி அவற்றை வெண்மலரிதழ்கள் என ஆக்கியது. தொல்பழங்காலத்தில் நிலம்விட்டு மலைநாடி எழுந்து வந்த அத்ரி மாமுனிவர் அங்கே சுகந்தவாகினி என்னும் சிற்றோடையின் கரையில் தனிக்குடில் கட்டி வாழ்ந்தார். நாளும் தேவதாருச் சமிதையால் அவர் அனலோம்பினார். அப்புகையை ஒற்றி உறிஞ்சி வானில் விளங்கிய முகில்கொழுந்துகளை கந்தர்வர்களும் கின்னரர்களும் தேவர்களும் எடுத்துச்சென்று கிழித்துப் பங்கிட்டு தங்கள் முகம் விளக்குவதற்காக வைத்துக்கொண்டனர்.

அத்ரி மாமுனிவரின் கொடிவழியில் வந்த நூற்றெட்டாவது அத்ரி சௌகந்திகத்தில் குருநிலை அமைத்து மாணவர்களுடன் வேதச்சொல் ஓம்பினார். அவரது அறத்துணைவி அனசூயை அவரைப் பேணினாள். பசுங்கோபுரங்களென எழுந்த தேவதாருக்களால் குளிர்ந்த அக்காட்டில் அத்ரி விளைவித்த மெய்மையை நாடி முனிவர்கள் வந்து குடிலமைத்துக்கொண்டே இருந்தனர். நிகரற்ற அறிவர்களாகிய நூற்றெட்டு முனிவர்களால் அக்காடு பொலிந்தது.

அவர்களும் மாணவர்களும் ஓதும் வேதச்சொல் இரவும் பகலும் ஒருகணமும் ஒழியாதொலிக்கவே அங்கு தீயதென்று ஒன்று தங்காதாயிற்று. வேதம் கேட்டு வளர்ந்த தேவதாருக்கள் பிறிதெங்கும் இல்லாத நறுமணம் கொண்டிருந்தன. அங்கு முளைத்த பிறசெடிகளின் வேர்களும் தேவதாருக்களுடன் பின்னி சாறு உறிஞ்சி நல்மணம் கொண்டன. அவற்றின் கனியுண்ட கிளிகளின் சிறகுகளிலும் மணம் கமழ்ந்தது. அனைத்து ஒலிகளும் வேதமென்றே எழுந்த அக்காட்டை வேதவனம் என்றனர் முனிவர்.

வேதம் கனிந்த சித்தம் கொண்டிருந்த அத்ரி முனிவர் அரணிக்கட்டைகள் இன்றி தன் சொல்லினாலேயே அனலெழுப்பும் வழக்கம் கொண்டிருந்தார். அவர் சொற்கள் நுண்ணொலி நிறைந்த விண்கனிந்து நேராக எழுபவை என்றனர் அறிஞர். வேதச்சொல்லவை ஒன்றில் அவர் ஒப்புமை சொல்லும்போது பறக்கும் முதலைகளின் சிறகுகள் என்று ஒரு வரி வந்தது. அங்கிருந்த அவைமுனிவர் எழுவர் அக்கணமே எழுந்து “முதலைகள் பறப்பதில்லை, அவற்றுக்கு சிறகுமில்லை” என்றனர். திகைத்த அத்ரி தான் சொன்னதென்ன என்று அருகமைந்த  மாணவர்களிடம் கேட்டார். அவர்கள் அதைச் சொன்னதும் திகைத்து அமர்ந்தார்.

தன்னுள் தானறியாது கரந்தமைந்த ஆணவமே சொல்லென நாநழுவி விழுந்தது என்று உணர்ந்தார் அத்ரி. ஆனால் அந்த அவையில் தலைதாழ்த்தி சொல்லெனும் முடிவிலிக்கு முன் சித்தம் கொண்டாகவேண்டிய அடக்கத்தைச் சொல்ல அவரால் இயலவில்லை. “நான் சொன்னது உண்மை, பறக்கும் முதலை இங்குள்ளது” என்றார். “எனில் அதைக் காட்டுக எங்களுக்கு. அதுவரை உங்கள் சொல்லில் எழுந்த மெய்மை அனைத்தும் ஐயத்தால் தடுத்துவைக்கப்படட்டும்” என்றனர் முனிவர். “அவ்வாறே ஆகுக!” என்று அத்ரி எழுந்துகொண்டார்.

நிலையழிந்து குடில்மீண்ட அவரிடம் “ஆணவமற்ற அறிவை தாங்கள் அடைவதற்கான தருணம் இதுவென்றே கொள்க!” என்று அனசூயை  சொன்னாள். “ஆணவம் கொள்பவர் புவியனைத்துக்கும் எதிராக எழுகிறார். தெய்வங்கள் அனைத்தையும்  அறைகூவுகிறார். மும்முதல்தெய்வங்களேயானாலும் ஆணவம் வென்றதே இல்லை.” அத்ரி அவளை தன் கையால் விலக்கி “நான் கற்றவை என் நாவில் எழவில்லை என்றால் அந்நாவை அறுத்தெறிவேன். நான் வெல்கையில் வென்றவை வேதங்கள். அவைமுன் நாணுகையில் நாணுபவையும் அவையே” என்றார்.

இரவெல்லாம் அவர் தன் குடிலுக்குள் தனக்குள் பேசியபடி உலவிக்கொண்டிருந்தார். உடலுள் எழுந்த புண் என வலித்தது உள்ளம். விடிகையில் முடிவுகொண்டிருந்தார். அன்றே வேள்விக்கூடத்தில் புகுந்து எரியெழுப்பினார். ஐவகை அவியும் நெய்யும் அளித்து வேதச்சொல்கொண்டு தென்றிசையில் வாழும்  மேதாதேவியை அழைத்தார். “வாலறிவையே, இங்கு எழுக! இந்த அவைமுன் வந்து என் சொல்லுக்கு பொருளென்றாகுக!” என்றார்.

பிரம்மனின் மைந்தர் தட்சப் பிரஜாபதிக்கு பிரசூதி என்னும் துணைவியில் பிறந்தவள் மேதை. அவள் தென்னிசை ஆளும் தர்மதேவனை மணந்தாள். சொல்லில் எழும் மெய்மைக்குக் காவலென அமைந்தவள். எட்டு கைகளில் மலரும் மின்கதிரும் அமுதும் விழிமணிமாலையும் ஏடும் எழுத்தாணியும்  அஞ்சலும் அருளலுமென அமர்ந்தவள். அவர் உள்விழிமுன் தோன்றி “முனிவரே, முடிவற்ற நெளிவுகொண்ட நாவே சொல்லுக்கு முதல் எதிரி என்றுணர்க! பொருள்கடந்து மொழிகடந்து முடிவிலா ஆழம்வரை செல்வது  நாவென அமைந்த நாகம். அதை பணிக! அவையொன்றில் தலைவணங்குவதனால் எவரும் பெருமையிழப்பதில்லை. பணிந்த அவைகள் வழியாகவே வென்று செல்கின்றது அறிவு” என்றாள்.

சினந்து சிவந்த அத்ரி தன் இடக்கையால் தர்ப்பையை எடுத்து வலக்கையை நீட்டி அவியெடுத்து தன் முன் எரிந்த வேள்வித்தீ நோக்கி நீட்டியபடி சொன்னார். “நானறிந்த வேதமெல்லாம் இங்கு திரள்க! என் சொல் பொய்யாகுமென்றால் வேதம் பிழைபடுக!” அனலில் அவியிட்டு அவர் ஆணையிட்டார். “மேதாதேவியே, என் அவியை உண்க! என் வேதச்சொல் கொள்க! நால்வேதம் அறிந்தவனாக இங்கமர்ந்து ஆணையிடுகிறேன். என் சொல்லுக்கு அரணாக எழுந்துவருக!”

அவர் முன் நின்று மேதாதேவி பதைத்தாள். “பிழைக்கு ஆணையென்று தெய்வம் வந்து நிற்கமுடியாது. அது பொய்மையை நிலைநிறுத்துவதென்றே ஆகும்.” அத்ரி  “வேதத்தின் ஆணைக்கு தெய்வங்கள் கட்டுப்பட்டாகவேண்டும். இயலாதென்றால் சொல்க! என் சொல்லனைத்தையும் உதறி இந்த அவைவிட்டு எழுந்து செல்கிறேன்” என்றார். “முனிவரே அறிக, கலைமகளைக் கூடி எந்தை பிரம்மன் படைத்த இப்புவியில் இல்லை உங்கள் சொல்லில் எழுந்த உயிர்” என்றாள் மேதை.

“அவ்வாறென்றால் என் சொல்லில் உறையும் மெய்மையாகிய உன்னைப் புணர்ந்து பிரம்மன் படைக்கட்டும் அதை” என்றார் அத்ரி. “என்ன சொல்கிறீர்கள், முனிவரே? அவர் என் தந்தைக்குத் தந்தை. நான் அவள் மகள்” என்று அவள் கூவினாள். “நான் எதையும் அறியவேண்டியதில்லை. பிழைத்த சொல் சூடி இந்த அவை விட்டு எழமாட்டேன்” என்று கூவினார் அத்ரி.

தன் முன் எழுந்த அனலில் நெய்யும் அவியும் சொரிந்து வேள்வி செய்தார். தன் மூலாதாரத்திலிருந்து வேதச்சொல்  எடுத்து அனலோம்பினார். நீலச்சுடர் எழுந்து நாவாடியது. சுவாதிஷ்டானத்திலிருந்து எழுந்த சொல் செஞ்சுடர் கொண்டது. மணிபூரகத்தின் சுடர் மஞ்சளாக பெருகி எழுந்தது. அனாகதத்தின் சுடர் பச்சையொளி கொண்டிருந்தது. விசுத்தியின் சுடர் பொன்னிறம் பெற்றிருந்தது. ஆக்ஞையின் சுடர் வெண்ணிறமாக அசைவற்று நின்றது. சகஸ்ரத்தின் சுடரை எழுப்ப அவர் தன் நெற்றிமேல் தர்ப்பையை வைத்தபோது அனலில் எழுந்த பிரம்மன் “ஆகுக!” என்று சொல்லளித்தார்.

ககனப்பெருவெளியில் மேதையைப் புணர்ந்து பிரம்மன் நிகருலகு ஒன்றைப் படைத்தார். அவருள் இருந்து ஆழ்கனவுகளை எழுப்பினாள் மேதை. அவை பருவுருக்கொண்ட உலகில் பல்லிகள் பேருருக்கொண்டு நிலமதிர நடந்தன. கழுகுக்கால்களும் புலிமுகமும் கொண்ட வௌவால்கள் கூவியபடி வானில் மிதந்தன. தந்தம் வளைந்த பேருருவ யானைகள் வெண்கரடித்தோல் கொண்டிருந்தன. கால்பெற்று நடந்தன நாகங்கள். ஆமைகள் இடியோசை எழுப்பி வேட்டையாடின. சிறகு கொண்டன முதலைகள். அவற்றிலொன்று மரக்கூட்டத்திலிருந்து சிறுகிளை வழியாக இறங்கி சௌகந்திகக் காட்டுக்குள் வந்து இளவெயில் காய்ந்து கண்சொக்கி அமர்ந்திருந்தது.

அதை முதலில் கண்டவன் அவரை எதிர்த்து எழுந்த முனிவர்களில் முதலாமவராகிய கருணரின் மாணவன். அவன் ஓடிச்சென்று தன் ஆசிரியரிடம் சொல்ல அவர் திகைத்தபடி ஓடி வெளியே வந்தார். அங்கே அதற்குள் முனிவர்களும் மாணவர்களும் கூடியிருந்தார்கள். கருணர் அருகே சென்று அந்த முதலையைப் பார்த்தார். நான்கடி நீள உடலும் நீண்ட செதில்வாலும் முட்புதர்ச்செடியின் வேரடிபோல மண்ணில் பதிந்த கால்களும் கொண்ட முதலை இளம்பனையின் ஓலைபோன்ற தோல்சிறகுகளை விரித்து வெயில் ஊடுருவவிட்டு பற்கள் நிரைவகுத்த வாயைத் திறந்து அசையாது அமர்ந்திருந்தது.

அது விழிமயக்கா ஏதேனும் சூழ்ச்சியா என்று கருணர் ஐயம் கொண்டார். ஆனால் அதை அணுகும் துணிவும் அவருக்கு எழவில்லை. செய்தியறிந்து அங்கே வந்த அத்ரி முதலையை நோக்கிச்சென்று அதன் தலையைத் தொட்டு “எழுந்து செல்க!” என்றார். அது செதில்கள் சிலிர்த்தெழ விழிப்புகொண்டு எழுந்து விழிகளை மூடிய தோலிமைகளை தாழ்த்தியது. முரசுத்தோலில் கோலிழுபட்டதுபோல பெருங்குரலில் கரைந்தபடி சிறகடுக்கை விரித்து அடித்து வாலை ஊன்றி காற்றில் எழுந்தது. அதன் சிறகடிப்போசை முறங்களை ஓங்கி வீசியதுபோல் ஒலித்தது. அக்காற்றேற்று சிறுவர்களின் முடியிழைகள் பறந்தன. காற்றில் ஏறி அருகிருந்த மரக்கூட்டங்களுக்குள் புகுந்து மறைந்தது.

கருணர் திரும்பி இரு கைகளையும் தலைக்குமேல் விரித்து “எந்தையே, ஆசிரியரே!” என்று கூவியபடி அத்ரியின் காலடிகளில் விழுந்தார். அவரைத் தொடர்ந்து ஐயம்கொண்ட அத்தனை முனிவர்களும் அவர் முன் விழுந்து கண்ணீருடன் மாப்பிரந்தனர். அவர்களின் தலைக்குமேல் தன் கைகளை வைத்து “வேதச்சொல் என்றும் மாற்றில்லாதது” என்றார் அத்ரி. பின்னர் தன் குடில்நோக்கி நடந்தார்.

குடிலில் அவருக்கு கால்கழுவ நீர் கொண்டுவந்த அனசூயையிடம் பெருமிதம் எழ “என் சொல்லில் இருந்து எழுந்து வந்தது அந்தப் பறக்கும் முதலை” என்றார். அவள் அவர் விழிகளை நேர்நோக்கி “பிழைபட்ட சொல்லுக்காக தன்னை பிழையாக்கிக்கொண்டிருக்கிறது புவி” என்றாள். சினத்துடன் அவளை ஏறிட்டு நோக்கிய அத்ரி ஏதோ சொல்ல நாவெடுத்தபின் அதை அடக்கி தலைகுனிந்து கடந்து சென்றார்.

[ 6 ]

கலைமகளைப் புணர்ந்து பிரம்மன் படைத்த புவியில் இல்லாத விந்தைகள் நிறைந்திருந்தன மேதையைப் புணர்ந்து அவன் படைத்த பிறபுவியின் படைப்புகளில். கட்டற்று எழுந்த அவன் கற்பனையால் உருவங்கள் ஒன்றுகலந்தன. குன்றுகளும் யானைகளும் ஒன்றாகி எழுந்தன பேருருவ விலங்குகள். மரங்களும் எருதுகளும் ஊடாடி கொம்புகள் கொண்டன.  சிறகுகொண்டன சிம்மங்கள். சிம்ம முகம் கொண்டன நாகங்கள். நாக உடல்கொண்டு நெளிந்தன புலிகள். நடந்தன மீன்கள்.

தன் படைப்புப்பெருக்கை நோக்க நோக்க பிரம்மன் பெருமிதம் கொண்டான்.  மேலும் மேலுமென படைப்புவெறி பெருக பிற அனைத்தையும் மறந்து அதிலேயே மூழ்கிக்கிடந்தான். அவன் நாவில் சொல்லாகவும் கைவிரல்களில் உருவாகவும் நின்றிருந்தாள் மேதாதேவி. அவர்கள் படைத்த நிகருலகு விரிந்து சென்று விண்ணுலகையும் பாதாளத்தையும் தொட்டது. அங்கு இறப்பென்பதே இருக்கவில்லை. எனவே அதன் எடை ஏழுலகங்களையும் அழுத்தியது. அதன் விரிவு திசைகளை நெளியச் செய்தது.

இறப்பின்றிப் பெருகிய அவ்வுலகின் எடையால் தர்மதேவனின் துலாத்தட்டு நிகரிழந்தது. எருமை ஏறிய தேவன் விண்ணுலகுக்குச் சென்று கலைமகளைக் கண்டு வணங்கி சொன்னான் “அன்னையே, ஆக்கப்பட்டவற்றை அழித்து நிகர்நிலையை நிறுத்துவதே என் தொழில். அறம் வாழ்வது என் துலாக்கோலினால்தான் என்பது தெய்வங்களின் ஆணை. இன்று பெருகிச்செல்லும் அவ்வுலகை அழிக்கும் வழியறியாது திகைக்கிறேன். உருக்கொண்ட ஒவ்வொன்றையும் மொழிசென்று தொட்டாகவேண்டும். பெயர்கொண்ட ஒன்றையே என் பாசவடம் கொண்டு நான் பற்றமுடியும். அங்குள்ள எதையும் இன்னும் மொழியின் பெருவெளி அறியவில்லை. தாங்களே அருளல்வேண்டும்.”

அன்னை தன் தவம் விட்டு எழுந்து சென்று நோக்கியபோது கட்டின்றிப்பெருகி பின்னி முயங்கி தானே தன்னை மேலும் பெருக்கிச் சென்றுகொண்டிருந்த அவ்வுலகின் கனவுக்கொந்தளிப்பைக் கண்டு திகைத்து நின்றாள். கைநீட்டி விலங்குகளைப் பற்றி சுழற்றித் தூக்கி உண்டன பெருமரங்கள். கண்கள் கொண்டிருந்தன மலைப்பாறைகள். யானைகளை தூக்கிச்சென்றன கருவண்டுகள். நண்டுக்கால்களுடன் நிலத்திலறைந்து ஓசையிட்டு நடந்தன பேருருவ எறும்புகள். வகைப்பாடும் தொகைப்பாடும் ஒப்புமையும் வேற்றுமையும் அழிந்தமையால் மொழியை சிதறடித்துவிட்டிருந்தன அவை.

கனவிலென களிவெறியிலென நடமிட்டுக்கொண்டிருந்த தன் கொழுநன் கைபற்றி “நிறுத்துங்கள்! என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று அன்னை கூச்சலிட்டாள்.  போதையில் விழிமயங்கியிருந்த அவன் அவளை கேட்கவில்லை. அவனை உலுக்கி அவள் மேலும் கூவினாள். “விழித்தெழுங்கள்! கனவுமீளுங்கள்!”  விழிப்பு கொண்ட பிரம்மன் அவளை நோக்கி “யார் நீ?” என்றான். “உங்கள் சொல்லென அமைந்து உலகங்களை யாப்பவள். உங்கள் துணைவி” என்றாள் சுனைகளின் அரசி.

ஏளனத்துடன் சிரித்து “நீயா? உன் சொல் தவழும், நடக்கும் இடங்களில் பறப்பது இவள் கற்பனை. இனி இவளே என் துணைவி” என்று சொல்லி தன் கைகளை அசைத்துக்காட்டினான் பிரம்மன். அவனருகே களிவெறியில் சிவந்த விழிகளுடன் எங்கிருக்கிறோமென்றறியாது ஆடிக்கொண்டிருந்த மேதாதேவியை நோக்கி “நில்… இழிமகளே நில்!” என்று சொல்லன்னை கூவினாள். அவள் அக்குரலை கேட்கவேயில்லை. அவள் குழல்பற்றிச் சுழற்றி நிறுத்தி “கீழ்மகளே, இது நெறியல்ல என்று அறியமாட்டாயா நீ?” என்றாள் கலையரசி.

“நெறியிருக்கும் இடத்தில் களியாட்டமில்லை. களியாட்டில்லாது படைப்பெழுச்சியும் இல்லை” என்றாள் மேதை. “இவை எங்கள் ஆக்கங்கள். நிகரற்றவை, அழிவற்றவை.” அவள் தள்ளாடியபடி பிரம்மனை பற்றிக்கொண்டு “நாம் ஏன் வீண்சொல்லாடி பொழுது களைகிறோம்? இது நம் ஆடல்… வருக!” என்றாள். “ஆம், இதுவே நாம் தெய்வமாகும் தருணம்” என்ற பிரம்மன் திரும்பி தன் துணைவியிடம் “அகல்க! தன் உச்சத்தைக் கண்ட எவரும் மீண்டு வருவதில்லை. பறக்கத் தொடங்கியபின் கால்கள் சிறுக்கின்றன பறவைகளுக்கு. விலகிச்செல்! இப்படைப்புக் களியாட்டத்திற்கு முன் பிறிதென்று ஏதுமில்லை” என்றான்.

“அறிந்துதான் பேசுகிறீர்களா? ஆக்கல் புரத்தல் அழித்தல் என்றாகி நின்ற மூன்று பெருநிலைகளில் தொடக்கம் மட்டுமே நீங்கள். மூன்று விசைகளால் முற்றிலும் நிகர்செய்யப்பட்டது இப்பிரபஞ்சம்” என்றாள் வெண்மலரில் அமர்ந்தவள். “இப்படைப்புகளை அழிக்க எவராலும் இயலாது. இவை தங்களைத் தாங்களே புரப்பவை. எனவே இங்கு முழுமுதலோன் நான் மட்டுமே. அவர்கள் அங்குள்ள எல்லைகொண்ட சிற்றுலகங்களை ஆள்க! நான் ஆள்வது கட்டற்ற இப்படைப்புப் பெருவெளியை” என்றான் பிரம்மன்.

துயருற்றவளாக அன்னை கயிலை முடியேறிச் சென்றாள். அவளை யமனும் தொடர்ந்தான். அங்கே வெள்ளிப்பனிமலை முடி என வடிவுகொண்டு ஊழ்கத்திலிருந்த முதற்பெரும்சிவத்தின் முன்சென்று நின்று கைகூப்பி விழிநீர் விட்டாள். “உலகு காக்க எழுக, இறைவா!” என்று முறையிட்டாள். “அழிப்பவனே, அறம்புரக்க விழிசூடுக!” என்றான் யமன். பனிப்பரப்பு உருகி உடைந்து பேரோசையுடன் சரிவுகளில் அலைசுருண்டு இறங்கிச்சென்றது. பலநூறு பனிச்சரிவுகளால் மலைமடிப்புகள் இடியென முழங்கின. பொன்னுருகும் ஒளியுடன் அவன் முகம் வானிலெழுந்தது.

அன்னையும் காலனும் நிகழ்ந்ததை சொன்னார்கள். “இக்கணமே பிரம்மனை இங்கு அழைத்து வருக!” என்று செந்தழல்வண்ணன் ஆணையிட்டான். அவ்வாணையை ஏற்று நந்திதேவர் சென்று பிரம்மனை அழைத்து வீணே மீண்டார். “இறையுருவே, யார் அச்சிவன் என்று கேட்கிறார் பிரம்மன். அவர் திளைக்கும் அவ்வுலகில் தெய்வம் பிறிதில்லை என்கிறார்” என்றார். சினம் கொண்டபோது அவன்  எரிசூடிய பெருமலையென்றானான். அனல்கொண்டு சிவந்த அவன் உடலில் இருந்து உருகிய பனிப்பாளங்கள் பேராறுகளாகச் சரிவிறங்கி பல்லாயிரம் அருவிகளென்றாகின. அவை சென்றடைந்தபோது ஏழ்கடல்களும் அலைகொண்டு கொந்தளித்தன.

எரிகொண்ட அவன் உடலில் இருந்து நீராவி பெருகிஎழுந்து முகில்களாகி வெண்குடையெனக் கவிந்தது. நெற்றிவிழி திறந்தது. அதிலிருந்து உருகிய செம்பாறைக்குழம்பெழுந்து பெருகியது. அவ்வனல்துளியிலிருந்து உருக்கொண்டு எழுந்தான் காலபைரவன். அனல் குளிர்ந்து கரியுடல் கொண்ட அவன் விழிகளிரண்டும் சுடரென எரிந்தன. அவனைத் தொடர்ந்து வந்தது கரிய நாய். அதன் விழிகள் எரிமீன்களென புகையின் இருளில் தெரிந்தன.

“ஆணையிடுக!” என்றது பைரவசிவம். “அழைத்து வருக படைப்போனை!” என்றது முதற்சிவம். இடியோசைகளும் மின்னல்களும் தொடர பைரவசிவம் பிரம்ம உலகுக்குச் சென்றது. அங்கு வெறிகொண்டாடி நின்றிருந்த பிரம்மனை நோக்கி “முழுமுதல் படைப்போன் விழியிலிருந்து எழுந்த அவன் வடிவோன் வந்துள்ளேன். நோக்குக!” என முழங்கியது. பிரம்மன் நோக்கிழந்து மயங்கிய விழியும் உதடுகளில் பெருகிய நகையுமாக மேதாதேவியுடன் நடமிட்டுக்கொண்டிருந்தான். அவன் தோளைப்பற்றி “நில், வா என்னுடன்! இது படைப்பிறைவனின் ஆணை!” என்ற பைரவனிடம் கால்தள்ளாட நின்று “யார் படைப்போன்? இங்கு நானன்றி பிறனில்லை” என்றான் பிரம்மன்.

KIRATHAM_EPI_3

இடியோசை என முகில்களில் முழங்கிய உறுமலுடன் பைரவசிவம் தன் வலக்கையின் சுட்டுவிரலை நீட்டியது. அங்கொரு அனல்பெருந்தூண் அடியிலி திறந்து  எழுந்து விண் கடந்து சென்றது. அதன் வெங்கனலில் அக்கணமே பிரம்மன் உருவாக்கிய பிறவுலகு எரிந்து சாம்பலாகியது. அடுத்த கணம் வீசிய பெரும்புயல்காற்றில் அச்சாம்பலும் பறந்தகல கனவென மறைந்தன அங்கிருந்தவை அனைத்தும். அவை அமைந்திருந்த காலமும் அலைநெளிந்து மறைந்தது.

திடுக்கிட்டு விழித்து அண்ணாந்து நோக்கிய பிரம்மன் மாபெரும் குடையென புகைசூடி நின்ற அனல்தூணைக் கண்டு அஞ்சி அலறியபடி உடலொடுக்கி அமர்ந்தான். “நெறியிலியே, நீ மீறியவை மீண்டும் மீறப்படக்கூடாதவை” என்று கூவியபடி பைரவசிவம் தன் சுட்டுவிரலையும் கட்டைவிரலையும் குவித்து நகமுனையால் மலர்கொய்வதுபோல பிரம்மனின் தலைகொய்து மீண்டது.

தன் கணவன் தலையுடன் மீண்ட பைரவசிவத்தைக் கண்டு அலறியபடி ஓடிவந்த கலைமகள் நெஞ்சிலறைந்து அழுதாள். “இறைவா, படைப்பென்று இல்லையேல் புவனம் அழியும். அருள்க!” என்றாள். “தேவி, படைக்கப்பட்டவை அனைத்தும் மொழியிலுள்ளன. அப்படைப்பிலுள்ளான் படைத்தவன். உன்னிலிருந்து அவனை மீட்டுக்கொள்க!” என்றது முதற்பெரும்சிவம். தேவி கண்மூடி தன்னுள் நிறைந்த கலையில் இருந்து வெண்ணிற ஒளியாக பிரம்மனை மீட்டெடுத்தாள்.

நான்முகமும் அறிவிழியும் அமுதும் மின்னலும் ஏடும் மலரும் கொண்டு தோன்றிய பிரம்மன் வணங்கி “என்ன நிகழ்ந்ததென்றே அறிகிலேன், அண்ணலே. என்னை மீறிச்சென்று பிறிதொன்றாகி நின்றேன்” என்றான். “ஆம், படைப்பென்பதே ஒரு பிழைபாடுதான். பிழைக்குள் பிழையென சில நிகழ்வதுண்டு. தன்னை தான் மீறாது படைப்பு உயிர்கொள்வதில்லை. நிகழ்ந்தவை நினைவாக நீடிக்கட்டும். அவை இனிவரும் படைப்புக்குள் நுண்வடிவில் குடிகொள்வதாக!” என்றது சிவம்.

நிழலுருவாகத் தொடர்ந்துவந்த மேதாதேவி கண்ணீருடன் கைகூப்பி நின்றாள். “நான் வேதச்சொல்லுக்கு கட்டுப்பட்டவள். வேதமே என் செயலுக்குப் பொறுப்பாகவேண்டும்” என்றாள். “ஆம், நெறியுடன் இயையா பேரறிவென்பது வெறும் பித்தே. இனி என்றும் நீ அவ்வாறே ஆகுக!” என்றது சிவம். கைகூப்பி வணங்கி அவள் தன் இடம் மீண்டாள்.

அனைவரும் சென்றபின் முதற்சிவத்தின் முன் பேருருக்கொண்டு நின்றது பைரவசிவம். அதன் நிழல் வெண்ணிறமாக நீண்டு மடிந்து கிடந்தது. வெருண்டு நாய் முரல பைரவசிவம் திரும்பி நோக்கியபோது துயர்மிக்க விழிகளுடன் பெண்ணுருவம் கொண்டு எழுந்து கைகூப்பி நின்றதைக் கண்டது. “நான் நீங்களியற்றிய கொலையின் பழி. விடாது தொடரும் நெறிகொண்டவள்” என்றாள் அவள். “உங்கள் கையில் இருக்கும் அந்த மண்டை உதிருமிடத்தில் நிலைகொள்வேன்.”

திகைப்புடன் தன் கையிலிருந்த பிரம்மகபாலத்தை நோக்கி அதை கீழே வீச முயன்றது பைரவசிவம். அது விழாமல் கையுடன் ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டது. கையை உதறியும் வீசியும் முயன்று தோற்றபின் அண்ணாந்து “இறையே, இக்கபாலத்துடன் நான் என்ன செய்வேன்?” என்று கூவியது.

“நீ செய்ய மறந்தது ஒன்றுண்டு. பிரம்மனின் தலைகொய்யும்போது அவனிருந்த பெருநிலை என்னவென்று அறிந்திருக்கவேண்டும்” என்றது சிவம். “தெய்வங்களை, பிரம்மத்தின் ஆணையை விலக்கும்படி அவனைப் பித்தெடுக்க வைத்த அப்பெருங்களியாட்டுதான் என்ன என்று நீ உற்றிருக்கவேண்டும்.” திகைப்புடன் “ஆம், அவ்விழிகளைத்தான் நான் எண்ணிக்கொண்டிருந்தேன். அதிலிருந்த பேருவகையை எங்கும் நான் கண்டதில்லை” என்றது பைரவசிவம்.

“உண்ணும்போதும் புணரும்போதும் கொல்லலாகாதென்றனர். அவ்விரண்டைவிடவும் மேலானதொன்றில் இருந்தவனை நீ கொன்றாய்” என்றது சிவம். “அவ்விரண்டும் ஆகி அவற்றைக் கடந்தும் அமைந்த பெருநிலை அது. அதில் ஒரு துளியையேனும் அறியாது தீராது உன் பழி.” பைரவசிவம் துயர்கொண்டு தலைகுலுக்கி “ஆம், இன்றுணர்கிறேன். இறையே, நான் செய்த பிழையை அறிகிறேன். சொல்க, நான் மீளும் வழியென்ன?” என்றது.

“பிரம்மனின் தலைகொய்கையில் இருவிரல் நகங்களை மட்டும் பயன்படுத்தினாய். அதிலிருந்தது உன் ஆணவம். தெய்வமே என்றாலும் ஆணவம் இழிவே. அது அழியும் காலம் உன் கபாலம் கழன்றுதிரும்” என்றது சிவம். “அது உதிர்கையில் நீ அறிவாய், பிரம்மன் இருந்த பொங்குநிலையை. அதிலாடுகையில் நீ மீள்வாய்.” உடல்வீங்க விம்மி “எங்கு? நான் என்ன செய்யவேண்டும் அதற்கு?” என்றது பைரவசிவம். “மண்டை என்பது இரப்பதற்கே. இரந்துண்டு நிறையட்டும் உன் வயிறு. நீ நிறைவுகொள்ளும் இடத்தில் இது உதிர்வதாக!” என்றது தொல்சிவம்.

இரந்துண்டு பசிநிறைய இரவலன் உருவில் எழுந்தது பைரவசிவம். கரியநாய் தொடர்ந்துவர நோயில் ஒடுங்கிய உடலும் சூம்பிக்கூம்பிய கைகளும் ஒளிமங்கிய விழிகளுமாக பார்ப்புக்கொலைப் பேய் பெண்ணுருவில் உடன் வர உடும்புத்தோல் கங்காளத்தை மீட்டியபடி தேவர் வாழும் வீதிகளில் திரிந்தது. கந்தர்வர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் மானுடரும்  வாழும் ஏழுலகங்களிலும் இல்லம்தோறும் இரந்துண்டது. சுவைகோடி அறிந்து, உணவுக்குவை கோடி தீர்ந்தபின்னும் அழியாத பெரும்பசியுடன் அலைந்தது. அதன் கங்காளத்தின் ஓசை இடித்தொடர் என முகிலடுக்குகளில் பெருங்காலமாக முழங்கிக்கொண்டிருந்தது.

இருநீர் பெருநதி கங்கை வளைந்தொழுகிய காசித்துறைக்கு  அது வந்தது. வரணாவும் அஸியும் வந்தணைந்த பிறைவடிவப் படித்துறையில் மூதாதையரை நீரூற்றி வானேற்றும்பொருட்டு அன்னம் அளிக்க அமர்ந்திருந்த ஒவ்வொருவரிடமாகச் சென்று  இரந்தது. கரியபேருடலும் சூலமும் கப்பரையும் கொண்டு கங்காளம் மீட்டிவந்த காட்டுருவனை அருவருத்தும் அஞ்சியும் விலகினர் மானுடர். அவர்கள் இட்ட உணவை அக்கணமே உண்டு கடந்த அவன் அழல்கண்டு திகைத்தனர். அவன் உடல் அணுகியபோது கொதிக்கும் தணல் என காற்று வெம்மைகொண்டதை உணர்ந்தனர். அவன் சென்றவழியில் கல்லுருகி தடம் பதிவதைக் கண்டு மருண்டனர்.

“அவன் யார்? விண்ணுருவன் வடிவாக முடிமன்னர் இருந்தாளும் இந்நகரில் எப்படி வந்தான்?” என்றனர். அவனை நிழல் எனத் தொடர்ந்த நாயை, நோயுருக்கொண்ட பெண்ணைக் கண்டு முகம் சுளித்தனர்.  அங்கே நீர்க்கரைநோக்கி அமைந்திருந்த சிற்றாலயத்திற்குள் ஆழியும் வெண்சங்கும் ஏந்தி  அமர்ந்திருந்த விண்ணவன் அவன் வருகையைக் கண்டான். ஆலயமுகப்பில் வந்து நின்று கங்காளத்தை முழக்கிய பைரவசிவத்தைக் கண்டு சினந்தெழுந்த விஸ்வக்சேனன் தன் தண்டுப்படையை ஓங்கியபடி தாக்கவந்தான். அக்கணமே தன் இடக்கை முப்புரிவேலால் அவன் தலையறுத்து நிலத்திட்டது பைரவசிவம்.

படிக்கட்டில் அமர்ந்திருந்தவர்கள் கூவியபடி எழுந்தனர். தலையற்ற உடல்கிடந்து துடிக்க செங்குருதி வழிந்து படியிறங்கியது. அமர்ந்திருந்த பீடத்திலிருந்து புன்னகையுடன் எழுந்த விண்ணவன் தன் படையாழியை எடுத்து வீச அது பைரவசிவத்தின் கழுத்துப்பெருநரம்பை வெட்டியது. துளையூற்றென சீறிப்பெருகிய  குருதி அவன் ஏந்திய கப்பரையில் நிறைந்தது. செவ்விழிகளால் அதை ஒருகணம் நோக்கியபின் ஏந்தி இதழ்சேர்த்து அருந்தினான் இரவலன். அருந்தும்தோறும் விடாய் மேலிட்டு மீண்டும் மீண்டும் உறிஞ்சினான். சுவையறிந்து அவன் உடலே நாவாகித் திளைத்தது.

ஊறி உண்டு மேலும் ஊற மேலும் உண்டு அவன் மேனி ஒளிகொண்டது. கங்காளநாதத்திற்கு இசைய அவன் கால் வைத்து நடமிடலானான். களிவெறி எழுந்து அவன் இடம்நிலை மறந்தான். விழிகளும் கைகளும் கால்களும் தாளத்தில் இசைய அவன் ஆடுவதை அங்கிருந்தோர் அஞ்சி கூடிநின்று நோக்கினர்.  அவன் கையிலிருந்த கபாலம் நிலத்தில் உதிர்ந்தது. முழந்தாளிட்டு மடிந்தமர்ந்த பார்ப்புக்கொலைப் பேய் படிக்கட்டில் பழந்துணியெனப் படிந்தமைந்தது. அவன் கைக்குவிகைகளில் விரல்மலர்கைகளில் ஆக்கமும் அழிவும் புரத்தலும் புரிதலும் எழுந்தமைந்தன. அவன் அருகே கையில் சிறிய வெள்ளித்தட்டுடன் நின்றிருந்த அழகிய முனிவன் புன்னகையுடன் “ஆம்!” என்றான்.

வெண்முரசு விவாதங்கள்

நிகழ்காவியம்