மாதம்: செப்ரெம்பர் 2016

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 53

[ 8 ]

கிருதயுகத்தில் கோசலநாட்டில் சோமகன் என்னும் சந்திரகுலத்து அரசன் ஒருவன் ஆண்டிருந்தான். நூறுபெண்களை மணந்து ஐம்பதாண்டுகள் வாழ்ந்தும் அவனுக்கு மைந்தர் பிறக்கவில்லை. மைந்தரின்மை அவனை நோயென பீடித்தது. தன்னை நோக்கும் எவ்விழிகளிலும் தனக்கு மைந்தரில்லை என்பதே தெரிவதாக அவன் எண்ணினான். சூழ்ந்தவர் சொற்களும் சிரிப்புகளும் நச்சு முள்ளென்றாயின. துயிலின் இருண்ட ஆழத்திலிருந்து தன் மூதாதையர் ஏங்கி அழும் குரல் எழுந்துவரக் கேட்டான்.

தன் மைந்தரன்றி பிற மைந்தரால் நிறைந்த புவியை வெறுக்கலானான். பிற மைந்தரைப் பெற்ற தந்தையர்மேல் சினம் கொண்டான். தன் துணைவியரை வசைபாடி அகற்றினான். விழைவொன்றை தொட்ட உள்ளம் அதை ஊதி ஊதி வளர்க்கிறது. அந்த ஐந்தெரி நடுவே ஒற்றைக்காலில் நிற்கிறது. சோமகன் துயிலிழந்தான். உணவை ஏற்க மறுத்தது அவன் உடல். அவன் சித்தம் கொந்தளித்து ஆடி ஓய்ந்து பின் அசைவிழந்தது. உடலும் உள்ளமும் ஆற்றலிழக்கவே படுக்கைவிட்டு எழாதவனாக ஆனான். பித்துபடிந்த விழிகளால் சாளரம் வழியாக தெரிந்த உலகை நோக்கியபடி பிணமெனக்கிடந்தான்.

அவன்முன் எமன் தன் இருளெருமை மேல் ஏறி வந்து நின்றான். “அரசே, மண்ணாள்பவனையும் சொல்லாள்பவனையும் தன்னைக்கடந்தவனையும் தானே சென்று அழைத்து வரவேண்டுமென எனக்கு நெறியுள்ளது. என் கணக்கில் உன் நாள் முடிந்துள்ளது. ஆகவே வந்துள்ளேன், எழுக!” என்றான். சோமகன் கண்ணீர் உகுத்தபடி அவனை நோக்கி மாட்டேன் என தலையசைத்தான். “நீ காம்பு கனிந்து உதிரவேண்டிய வயது இது. கண்ணீர் உகுக்கிறாயே?” என்றான் எமன். அவன் வீசிய பாசக்கயிற்றிலிருந்து உளம் திமிறி விலகியபடி “என்னை விடு, நான் உன்னுடன் வர விரும்பவில்லை” என்று சோமகன் சொன்னான்.

“உவந்து வர விரும்பாதவர்களை கொண்டுசெல்ல என்னால் இயலாது. முதுமையால், நோயால், போர்நிறைவால் மானுடர் இங்கிருந்து விடுபட்ட பின்னரே அவர்களை நான் கொய்கிறேன். விரும்பாமல் எவரும் இறப்பதில்லை என்பதே தெய்வங்களின் நெறி” என்றான் எமன். “நீ முதிர்ந்துவிட்டாய். நோயில் தளர்ந்து பிணம்போலிருக்கிறது உன் உடல். உன் உள்ளம் எண்ணங்களுக்கும் ஆற்றலற்றதாக நீர்வற்றிய ஓடையின் சேற்றுத்தடம்போலிருக்கிறது. இதற்கு அப்பால் நீ இங்கிருந்து அடையப்போவதுதான் என்ன?”

சோமகன் “ஆம், என் ஐம்புலன்களும் அணைந்துவிட்டதை உணர்கிறேன். என் நினைவுகள் உதிர்ந்துவிட்டன. முன்னோக்கிச் செல்லும் ஆற்றல் அழிந்துவிட்டது. நேற்றும்நாளையுமின்றி இன்றில் அமைந்து இங்கிருக்கிறேன். ஆயினும் என் உடலுக்குள் சிறுநெருப்பென எரிவது ஒற்றை விழைவே. எனக்குப் பிறக்கும் ஒரு மைந்தனின்றி நான் விண்ணேக முடியாது” என்றான். “விழைவறாது நான் உடலுதிர்ப்பேன் என்றால் உடல்தேடும் உயிர் என இங்கேயே இருப்பேன். எனக்களிக்கப்படும் அன்னமும் நீரும் கொள்ளப்படா. காலமில்லா வெளியில் அணையாத வெறுந்தவிப்பாக எஞ்சுவேன்.”

எமன் உள்ளமிரங்கினான். “சொல்க, மைந்தனை ஏன் நீ விழைகிறாய்?” என்றான். சோமகன் “ஏனென்றால் மானுடனுக்குரிய இரு முதன்மை விழைவுகளில் ஒன்று அது” என்றான். எமன் புன்னகைத்து “அம்மைந்தனை நீ எதன்பொருட்டு இழக்கச் சித்தமாவாய்?” என்றான். “எதன்பொருட்டும் இழக்கமாட்டேன். என் பொருட்டும் என் குடிபொருட்டும் இப்புவியின் அனைத்தின்பொருட்டும் ஏன் தெய்வங்களின்பொருட்டும்கூட!” எமன் புன்னகைத்து “நன்று, நான் உனக்கு பன்னிரண்டு ஆண்டுகளை அளிக்கிறேன். நீ மைந்தனைப் பெற்று வாழ்ந்து அறிந்தபின் வருகிறேன்” என்றான்.

நோய்ப்படுக்கையிலிருந்து சோமகன் எழுந்தான். அதை மருத்துவர் பெருவிந்தை என்று எண்ணினர். தங்கள் வெற்றி எனக் கொண்டாடினர். சோமகனின் முதல் மனைவி காளிகை கருவுற்று ஒரு மைந்தனைப் பெற்றாள். அவள் கருக்கொண்ட நாளிலேயே தீயகுறிகள் தெரியலாயின. அவள் சோமகனின் பட்டத்தரசி, இளவயதிலேயே அவனை மணந்த முதுமகள். குருதிநாள் நின்றே நெடுங்காலமாகியிருந்தது. கருவுற்றதையே அவள் அறியவில்லை. தலைசுற்றி உணவுமறுத்து அவள் படுக்கையிலிருந்தபோதுதான் மருத்துவச்சி ஐயுற்று உடல்நீர் எடுத்து நோக்கினாள். அவள் கருவுற்றிருப்பதை உணர்ந்ததும் ஐயம்கொண்டு பிற மருத்துவச்சிகளிடம் சொன்னாள். அவர்களும் உறுதிசெய்தபின் அரசனிடம் சொன்னார்கள்.

அரசன் அதைக் கேட்டு உவகையும் கூடவே அச்சமும் கொண்டான். அரசி அக்கருவைச் சுமந்து ஈன்று எழுவாளா என்று மருத்துவரிடம் கேட்டான். “நெய் வற்றும் அகல். திரிகாத்து சுடர்மிகாது சென்றணையவேண்டும்” என்றனர் மருத்துவர். அரசியை படுக்கையிலேயே வைத்து மருத்துவர் பேணினர். அவள் நாளுக்குநாள் குருதியிழந்து வெளிறிக்கொண்டே சென்றாள். நகக்கண்கள் பளிங்கென்றாயின. விழிப்பரப்பு சிப்பிபோல வெளுத்தது. உதடுகள் வாடிய ஆம்பல் போலிருந்தன. மூச்சிலசையும் வறுமுலைகளில் காம்புகள் கருமைகொள்ளவில்லை. அவள் கண்களுக்குக் கீழே தசை தளர்ந்து தொய்ந்தது. புறங்கை வீங்கி குழவியரின் கைபோல ஆகியது. கால்கள் பருத்து ஒளிகொண்டன. பேசவும் ஆற்றலற்று விழிதிறந்து கூரையை நோக்கியபடி அவள் மஞ்சத்தில் படிந்துகிடந்தாள்.

ஏழு மாதம் வரை அவளை அவர்கள் காத்தனர். ஏழாம் மாத முடிவில் குருதிப்போக்கு தொடங்கியது. அதை நிறுத்த அவர்கள் முயன்றபோது கம்பத்தில் கட்டிவைக்கப்பட்ட துணிப்பொதிபோல அவள் மெலிந்த உடலில் தொங்கிய வயிற்றுக்குள் வாழ்ந்த குழவிதசை வாயிலை நோக்கி இறங்கியது. மருத்துவர் அதை வெளியே எடுத்தபோது உயிரற்ற சிறிய தசைப்பாவை போலிருந்தது. தோல்முளைக்காத வெறுந்தசை. அதன் கைகளோ கால்களோ நெளியவில்லை. குரலெழவுமில்லை. விழிகள் மட்டும் அதிர்ந்தன. அரசி தன் மைந்தனை நோக்க தலையைத் தூக்கினாள். குழந்தையைக் காட்டியபோது முகம்சுளித்து பற்களைக் கடித்தபடி “ஜந்து” என்றாள். தலையை மஞ்சத்தில் அமர்த்தி இருமுறை முனகி மூச்சுவிட்டு துயிலில் ஆழ்ந்தாள்.

மைந்தனை மருத்துவர்கள் எண்ணைக்கொப்பரையில் போட்டு இளவெம்மை ஊட்டி நான்கு மாதம் பேணினர். தோலும் முடியும் நகமும் முளைத்தன. இதழ்விரித்து பாலை ஏற்று அருந்தினான். பசிக்கையில் முகம்சிவக்க உடலதிர சீவிடுபோல ஓசையெழுப்பினான். கால்கள் நிலம்பதியும் அதிர்வை அறிந்து வருவது எவரென உணர்ந்தான். பாலளிக்க வரும் சேடியரைக் கண்டதும் மகிழ்ந்து வாய்திறந்தான். ஆனால் அவன் கைகளோ கால்களோ அசையவில்லை. விழிதிறந்து நோக்கு கொள்ளவுமில்லை.

அன்னை இட்டபெயரே அவனுக்கு நீடித்தது. அவனை அனைவரும் ஜந்து என்றே அழைத்தனர். வெற்றுயிர் என அவனை பிறர் எண்ணினாலும் தந்தை அவன்மேல் பேரன்புகொண்டிருந்தான். அவன் பிறந்த நாளில் ஈற்றறைக்கு வெளியே நின்று தவித்தான். மைந்தனை எண்ணைக்கொப்பரையில் குனிந்து நோக்கியதும் உளமுருகி விழிநீர் பொழிந்தான். இரவும் பகலும் ஆதுரசாலையில் மைந்தனுடன் இருந்தான். விழித்திருக்கும் நேரமெல்லாம் அவனை எண்ணிக்கொண்டிருந்தான். துயிலில் அவனையே கனவுகண்டான். மைந்தன் ஒலியெழுப்பத் தொடங்கியதும் அவ்வொலி கேட்பதற்காக அருகிலேயே அமர்ந்திருந்தான். அவன் தந்தையின் காலடிகளை அறிந்ததும் முகம் மலர்ந்து “ஆ!” என ஒசையிடுவான். “என்னை அழைக்கிறான். தந்தையே என அழைக்கிறான்” என்று சோமகன் கூவி கண்ணீர்மல்குவான்.

தந்தையால் சௌமதத்தன் என்று பெயரிடப்பட்டாலும் அரண்மனையில் ஜந்து என்றே மைந்தன் அழைக்கப்பட்டான். மெல்லிய வெறுப்பும் அருவருப்பும் கொண்டு இடப்பட்ட அப்பெயர் நூறு அன்னையரின் நாவில் இனிய செல்லப்பெயராக மாறியது. இரவும் பகலும் அவன் அன்னையரின் கைகளிலும் மடியிலுமே திகழ்ந்தான். அசைவற்ற கைகால்களும் நோக்கில்லா விழிகளும் கொண்ட அந்தத் தசைக்குவை அவர்களின் விழைவால் பேரழகுகொண்டது. எண்ணும்தோறும் இனிமையளிப்பதாகியது. அவர்கள் அதுவரை அடைந்த வெறுமையனைத்தையும் நிரப்பியது. அவர்களை தெய்வமென ஆட்சிசெய்தது.

சோமகன் தன் மைந்தன்மேல் பெரும்பித்து கொண்டிருந்தான். ஒவ்வொருநாளும் காலையில் மைந்தன் முகத்தில் அவன் விழிக்க விரும்புவான் என்பதனால் அன்னை ஒருத்தி மைந்தனுடன் வந்து அவன் மஞ்சத்தறை வாயிலில் காத்திருப்பாள். அரசவை கூடும்போது அருகமைந்த அறையில் அன்னையர் அவனுடன் காத்திருப்பார்கள். சிற்றிடைவேளைகளில் அவன் அழைத்ததும் மைந்தனை அவனிடம் அளிப்பார்கள். அவன் குரல் கேட்டதுமே மைந்தன் துள்ளித் ததும்பத் தொடங்குவான். ஏழு வயதாகியும் “ஆ!” என்ற ஒற்றைச் சொல்லன்றி எதுவும் அவன் நாவில் எழவில்லை. அவ்வொரு சொல்லில்இருந்தே அவன் உணர்வதனைத்தையும் அறிந்துகொள்ளுமளவுக்கு அவர்கள் அவன்மேல் பெருவிருப்பம் கொண்டிருந்தனர்.

ஒருநாள் கீழ்த்திசையிலிருந்து வந்த புலோமர் என்னும் வைதிகர் அவன் அவையிலமர்ந்து அறமுரைத்துக்கொண்டிருந்தார். அவரைச் சூழ்ந்து வைதிகரும் அமைச்சர்களும் அமர்ந்திருந்தனர். தாழ்ந்த குரலில் புலோமர் பேசிக்கொண்டிருக்க அதைக் கேட்கும்பொருட்டு அனைவரும் அவரை நோக்கி சாய்ந்தனர். அப்போது பக்கத்து அறையில் ஜந்து வீரிட்டலறும் ஒலி கேட்டது. அதைக் கேட்டு நூறு அன்னையரும் கூச்சலிடுவதும் அழுவதும் எழுந்தது. சோமகன் அரியணையில் இருந்து இறங்கி “என்ன? என்ன ஆயிற்று?” என்று கூவியபடி பக்கத்து அறைக்குள் ஓடினான்.

அந்தப் பெரிய கூடத்திற்குள் மைந்தன் கதறியழுதுகொண்டிருக்க அரசியர் அவனை கையில் எடுக்கும்பொருட்டு கூச்சலிட்டபடி முண்டியடித்தனர். “அவனை என்னிடம் கொடுங்கள்!” என அவர்கள் கூவி அழுதனர். அவர்களை அதட்டி விலக்கிவிட்டு மைந்தனை தன் கையில் வாங்கிப் பார்த்த சோமகன் அவன் தொடையில் ஓர் எறும்பு கடித்திருப்பதைக் கண்டான். அந்த வடுவில் அவன் கண்ணீர் விட்டபடி முத்தமிட்டான். வலி அமைந்ததும் ஜந்து உடல்கூச நகைக்கலானான். அன்னையரும் நகைத்தபடி அவனைச் சூழ்ந்து வளையல் ஒலிக்க கைதட்டியும் பறவைகள்போலவும் விலங்குகள்போலவும் ஒலியெழுப்பியும் அவனை மகிழ்விக்கத் தொடங்கினர்.

அதன் பின்னரே சோமகன் அரியணையைவிட்டு இறங்கி ஓடியதை உணர்ந்து கூச்சமடைந்தான். மீண்டும் அவைக்குச் சென்றபோது புலோமர் பேச்சை நிறுத்திவிட்டு அவனுக்காகக் காத்திருந்தார். வைதிகரும் அமைச்சரும் அவர் அருகே கைகட்டி நின்றிருந்தனர். சோமகன் புலோமரை வணங்கி “பொறுத்தருள்க அந்தணரே, நான் முதுமையில் தவமிருந்து பெற்ற மைந்தன். அவனன்றி என் உலகம் பொருள்கொள்வதில்லை. அவனுக்காகவே நான் உயிர்வாழ்கிறேன். அவன் அழுமொலி கேட்டபின் நான் இங்கே அமர்ந்திருக்கமுடியாது” என்றான். அங்கே நிகழ்ந்ததை சொன்னான். “பேரன்பு என்பது பெருந்துன்பமே என இன்று உணர்ந்தேன்” என சொல்லி பெருமூச்சுவிட்டான்.

“இந்த மைந்தன் உனக்கு எவ்வகையில் பொருள் அளிக்கிறான்?” என்றார் புலோமர். “இவனே என் அறம்பொருளின்பம். இவனே என் மூதாதையர். இவனே என் தெய்வவடிவம்” என்றான் சோமகன். “இப்புவியில் எதன்பொருட்டு இவனை இழப்பாய்?” என்றார் புலோமர். அவ்வினாவை எமன் கேட்டதை நினைவுகூர்ந்த சோமகன் “எதன்பொருட்டும் இழக்கமாட்டேன். இங்கும் அங்கும் எதுவும் இவனுக்கு நிகரல்ல” என்றான்.

“ஒற்றை ஒரு மைந்தனைப் பெற்ற தந்தை அப்படித்தான் இருக்கமுடியும். அன்பெல்லாம் அந்த ஒரு மைந்தன்மேல் குவிகிறது. நிறைய மைந்தரைப் பெற்றவர்கள் பலமடங்கு அன்புகொண்டவர்கள். பலமடங்கு உவகையும் அடைவார்கள். ஆனால் அவர்களின் துயர் குறைவே” என்றார் புலோமர். “என் ஊழ் ஒரு மைந்தனை மட்டுமே பெறுவேன் என்பது. நூறு மனைவியர் எனக்கு இருந்தாலும் அவர்களின் வயிறு கனியவில்லை” என்றான் சோமகன். “நூறு மைந்தரை நீ பெறமுடியும். நூறுவிழுது விரித்த ஆலமரமாக ஆக முடியும்” என்றார் புலோமர். திகைப்புடன் “அதெப்படி?” என்றான் சோமகன். “அரசே, பிருகத்ஃபலம் என்னும் மகாபூத வேள்வி ஒன்று உள்ளது. இது கிழக்குநாட்டில் பெருநிலம் முழுக்கப் பரவிய அரசுகொண்ட மாமன்னர்களுக்கு மட்டும் செய்யப்படுவது. நூறு புத்ரகாமேஷ்டிகளுக்கு நிகர் அது. அதை ஆற்றுபவன் நூறு நிகரற்ற மைந்தரைப் பெறுவான்” என்றார் புலோமர்.

“நான் அதைச் செய்ய விழைகிறேன். எனக்கு நூறு மைந்தர் வேண்டும்” என்று அரியணைவிட்டு எழுந்து நின்று சோமகன் கூவினான். “அரசே, அது எவ்விலை கொடுத்தேனும் தாங்கள் விழைவதைப் பெறும் துணிவுள்ள சக்ரவர்த்திகளுக்குரிய வேள்வி. அதர்வவேதத்தின் இருண்டபக்கத்தைச் சேர்ந்தது. எளிய உள்ளம் கொண்டோர் அதை எண்ணவும் இயலாது” என்றார் புலோமர். “நான் விரிமண்ணாளும் பேரரசன். என் விழைவோ பாரதவர்ஷத்தை முழுதாள்வது” என்று சோமகன் சொன்னான். “நூறு மைந்தர் எழட்டும். நான் என் அஸ்வமேதப் புரவியை கட்டவிழ்க்கிறேன்.”

“அரசே, இப்புவியில் எதை அடைந்தாலும் நிகராக ஒன்றை இழந்தாகவேண்டும். கையில் கொடைகளுடன் உங்களிடம் விலைபேச வந்திருக்கும் தெய்வங்கள் நீங்கள் எடுத்துவைக்கப்போகும் மாற்றுப்பண்டம் என்ன என்றே நோக்குகின்றன. இந்த வேள்வியில் பன்னிரண்டரை லட்சம் வெண்ணிறமான பசுக்களை பலியிடவேண்டும்” என்றார் புலோமர். சோமகன் திகைத்து அமர்ந்திருக்க “அல்லது அதற்கு நிகராக தன் தந்தையை பலிப்பசுவாக்கி வேள்வியில் அவியிடவேண்டும்” என்று புலோமர் சொன்னார். சோமகன் இமைக்காமல் நோக்கி அமர்ந்திருந்தான். புலோமர் “அல்லது பெற்றெடுத்த முதல் மைந்தனை பலிப்பசுவாக குருதி கொடுக்கவேண்டும். கொடை கொடுப்பவனின் இழப்பால்தான் அளக்கப்படுகிறது” என்றார்.

“அதெப்படி முடியும்? என்ன பேசுகிறீர்கள்?” என்று தலைமை அமைச்சர் சீறினார். “இச்சொல் இந்த அவையில் எழுந்தமையே பெரும்பழி சூழச்செய்வது” என்றார் இணையமைச்சர். “நான் பேரரசர்களின் வழியையே சொன்னேன். பிறருக்குரியவை அல்ல என்றும் எச்சரித்தேன்” என்றார் புலோமர். “ஒரு மைந்தனை இழந்தாலும் நூறு மைந்தரைப் பெறமுடியும். சிம்மம்போல் உடலாற்றல் கொண்டவர்களும் முழுவாழ்க்கை கொண்டவர்களுமான மைந்தர்களையே தெய்வங்கள் அளிக்கும். வேள்வியில் குறைமைந்தர் எழமாட்டார்.”

ஒரு சொல்லும் உரைக்காது சோமகன் எழுந்து தன் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டான். அவன் தேவியர் வந்து அழைத்தும் திறக்கவில்லை. இரவெல்லாம் துயிலாமல் உலவிக்கொண்டிருந்த ஒலி கேட்டது. அவன் தனக்குத்தானே பேசிக்கொள்வதும் ஓங்கி தூண்களை மிதிப்பதும் ஓலமிடுவதும் கேட்டு வெளியே நின்றிருந்த அமைச்சர்கள் அஞ்சினர். மறுநாள் காலை கதவைத் திறந்து வெளிவந்த முதிய அரசன் இளமைகொண்டவனைப்போல் தோன்றினான். இறுகிய உடலுடன் நடந்து சென்று அவையமர்ந்து புலோமரை அழைத்துவர ஆணையிட்டான். வந்து வாழ்த்திநின்ற புலோமரிடம் “நான் ஏற்கிறேன். வேள்வி நிகழ்க! அதில் என் மைந்தனை பலிப்பசுவாக அளிக்கிறேன்” என்றான்.

அவையினர் திகைத்தனர். அமைச்சர் உரக்க “என்ன சொல்கிறீர்கள், அரசே? உங்கள் உயிருக்கு நிகரான மைந்தர் அவர்” என்றார். ஆனால் இரவிலேயே அனைத்தையும் எண்ணிமுடித்திருந்தான் சோமகன். “ஆம், நான் விழைந்தது மைந்தரை. நான் பேரன்பு கொண்டிருப்பது மைந்தர் மேல். இந்தக் குறிப்பிட்ட மைந்தன் அல்ல” என்று அவன் சொன்னான். “இது அசைவற்ற ஊன்பிண்டம். இது எனக்குப் பின் அரசாளுமா? எந்தையருக்கு நுண்சொல் உரைத்து நீர்க்கடன் இயற்றுமா? வேள்விக்காவலனாக அமர்ந்திருக்குமா? இதை மைந்தன் என எண்ணிக்கொண்டது என் இழிதகு உளமயக்குதான். உண்மையான ஆற்றல்கொண்ட நூறுமைந்தர் பிறப்பாரென்றால் இதை இழப்பதில் பிழையில்லை.”

“ஆம், இவனை இழந்தால் நான் துயர்கொள்வேன். ஆனால் நூறு மைந்தரைப் பெற்று அதை நூறுமடங்கு நிகர்செய்வேன்” என்று சோமகன் சொன்னான். “உண்மை, இது பழிசூழ் செயலே. ஆனால் அரசனாகிய நான் என் மக்களுக்கு கடமைப்பட்டவன். எனக்காக அல்ல, என் அரசுக்காகவே நான் மைந்தனைப் பெற விழைந்தேன். நூறு பெருவீரர் என் குடியில் பிறந்தால் என் அரசு பாரதத்தை ஆளும். என் குடியினர் என்னை வாழ்த்துவர். அச்சொல்லில் இப்பழி கரைந்துபோகும். நூறு மைந்தர் அளிக்கும் நீரையும் அன்னத்தையும் பெற்று என் மூதாதையர் என்னை வாழ்த்துவர். அவ்வருளில் இங்குள்ள இழிசொற்கள் மறையும்.”

“ஆற்றல்மிக்க மைந்தன் ஒருவன் பிறந்தால் அவனை இந்நாட்டின்பொருட்டு களம்புக அனுப்பமாட்டேனா என்ன? அவன் களப்பலியானால் நடுகல் சாத்தி தெய்வமாக்கமாட்டேனா என்ன? நூறு வீரர் தன் குலத்தில் பிறக்கும்பொருட்டு இவன் களப்பலியானான் என்று கொள்வோம். இவன் நூறுமரங்கள் முளைக்கும் கணுக்கள் கொண்ட மரத்தடி. இவன் பிறப்பின் நோக்கமே இதுதான் போலும். அவையோரே, இவன் நோய்கொண்டு நொந்து இறந்தால் விண்புகமாட்டான். ஏனென்றால் இங்கு இவன் நற்செயல் என எதுவும் செய்யவில்லை. ஆனால் வேள்வித்தீயில் அவியானான் என்றால் தேவர்கள் இவனை கைபற்றி விண்ணிலேற்றிக் கொண்டுசெல்வர். அவியென பெய்யப்பட்ட அனைத்தும் தூய்மை அடைகின்றன. விண்வாழும் தெய்வங்களை சென்றடைகின்றன.”

“தன் குடிகாக்கும் நூற்றுவரை எழுப்பிவிட்டு இவன் விண்புகட்டும். இவ்வெளிய ஊன்தடி பிறந்து உண்டு வளர்ந்தமைக்கு இப்பெருஞ்செயலே பொருத்தமான பொருள் அளிப்பது. அறியாமலேயே குலம்காக்கும் வீரனென்றாகிறான் இவன்” என்றான் சோமகன். “இவனுக்கு நம் நகர்நடுவே நடுகல் நாட்டி வணங்குவோம். என்றென்றும் இவன் பெயர் நம் குடிநினைவுகளில் வாழட்டும்.” அரசன் சொல்லிமுடித்தபின் அமைச்சர்களுக்கு சொல் இருக்கவில்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டு அமைதியாக நின்றனர்.

செய்தி அறிந்து அன்னையர் நூற்றுவரும் மைந்தனை நடுவே வைத்து உடலால் அரண்கட்டிக் காத்தபடி கதறி அழுதனர். “எங்கள் உயிரை எடுங்கள். எங்களைக் கொன்று அவியிடுங்கள்… எங்கள் மைந்தனை விடப்போவதில்லை” என்று அவர்கள் கூவினர். வாளேந்தி வந்த வீரர்களுக்கு முன்னால் சென்று விழுந்து “இங்கேயே உயிர்துறப்போம். எங்கள் மைந்தனை தொடவிடமாட்டோம்” என்றனர். நெஞ்சிலறைந்து அழுதனர். உடைவாளை எடுத்து தங்கள் கழுத்தில் வைத்து “எங்கள் குருதியை மிதித்துக் கொண்டுசெல்க மைந்தனை!” என்றனர்.

அரசியரின் சினம் அறிந்து புலோமர் அங்கு வந்தார். “அரசியரே, உங்கள் ஒவ்வொருவரின் வயிற்றிலும் பிறக்கவிருக்கும் மைந்தர்களை நீங்கள் தடைசெய்கிறீர்கள். இவ்வூன்தடி உங்கள் கைகளில் தவழ்ந்தது உங்கள் மைந்தர் என மறுபடியும் பிறப்பதற்கே என்று அறிக! இவன்மேல் நீங்கள் காட்டிய பேரன்பு இவன் உங்கள் மைந்தனாகப்போகிறவன் என்பதனால்தான்” என்றார். அவர்கள் கண்ணீர் வழிய அவர் சொற்களைக் கேட்டனர். “உங்களில் எவருக்கு மைந்தன் பிறக்க விருப்பமுள்ளதோ அவர்கள் மட்டும் இப்பால் வருக! பிறர் அங்கு நின்று மைந்தனை காத்துக்கொள்க!” என்றார் புலோமர்.

நூறாவது அரசியான பத்மை கண்ணீருடன் “இவன் என் உயிருக்கு நிகர். ஆனால் பெண்ணென நான் ஒரு மைந்தனில்லாமல் இறக்க விரும்பவில்லை” என்றபடி விலகி நின்றாள். இன்னொரு அரசியும் “ஆம், நான் மைந்தனில்லாமல் இறந்தால் விண்ணுலகு செல்லமாட்டேன்” என்று விலகி வந்தாள். “நான் இக்குழவியில் கண்டது பிறக்க இயலாத என் மைந்தனைத்தான். அவன் வருக!” என இன்னொருத்தி விலகினாள். அனைத்து அரசிகளும் ஜந்துவை விட்டுவிட்டு விலகினர். அவனை வயிற்றில் சுமந்துபெற்ற முதல் அரசி மட்டும் அவனை மடியில் வைத்து அணைத்து கண்ணீர் விட்டபடி உடல்குறுக்கி அமர்ந்திருந்தாள்.

“அரசி, உங்களை அன்னையென்று அழைக்கக்கூட அறியாத இந்த மைந்தனால் என்ன பயன்? முடிசூடி அமர்ந்து கோசலத்தை ஆளும் சக்ரவர்த்தி ஒருவன் எழவேண்டிய வயிறு உங்களுடையது” என்றார் புலோமர். அவள் “விலகுக! என் செவிக்கு நஞ்சாகிய சொற்களை சொல்லாதொழிக!” என்று கூவினாள். “மைந்தன் என்பவன் மைந்தனுக்குரிய இயல்புகளின் தொகுதி அல்லவா? இவன் இயல்புகள் என்ன? உங்கள் கைகளில் வாழும் இந்த ஊன்பொதியால் உங்கள் அன்னையுள்ளம் நிறைவடைகிறதா?” என்றார் புலோமர். “பேசாதே… விலகு!” என்று அன்னை கூவினாள்.

“அரசி, உங்கள் வயிற்றில் இப்போதே கருத்துவடிவாக வந்துவிட்டான் பேராற்றல் மிக்க மைந்தன். உங்கள் கண்களும் கைகளும் அறிந்துவிட்ட இந்த ஊன்குவைக்காக உங்கள் கனவகம் மட்டுமே அறிந்த அம்மைந்தனைக் கொல்ல முடிவெடுக்கிறீர்கள் இப்போது” என்றார் புலோமர். அரசி நிமிர்ந்து தன் நெஞ்சிலும் வயிற்றிலும் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு வீரிட்டலறினாள். பின்னர் மைந்தனை அப்படியே விட்டுவிட்டு ஓடி தன் அறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டாள். புலோமர் தன் மாணவர்களிடம் “பலிவிலங்கை வேள்விப்பந்தலுக்கு கொண்டுசெல்லுங்கள்” என்றார்.

அவர்கள் ஜந்துவை தூக்கிக்கொண்டு சென்றபோது அவன் அஞ்சி கழுத்து இறுகிய கன்றுபோல அமறல் ஒலியெழுப்பி துடித்தான். “ஆ! ஆ!” என அவன் அழுதது அம்மா அம்மா என்றே அவர்களின் செவிகளுக்கு ஒலித்தது. அரசியரில் மூவர் உள்ளம்பொறாமல் ஓடிவந்து அவன் ஒருகையைப்பற்றி இழுத்தனர். இளவைதிகர் அவனை மறுபக்கம் இழுத்தனர். பிற அரசியர் “வந்துவிடடீ… வேண்டாம்” என்று அவர்களை அழைத்தனர். அழுதபடி கையை விட்டுவிட்டுச் சென்று முழந்தாளிட்டமர்ந்து கதறி அழுதனர் அம்மூவரும். அரசியரின் அழுகைக்குரல் சூழ ஜந்து வேள்விப்பந்தலுக்கு கொண்டுசெல்லப்பட்டான்.

அங்கே வேள்விக்காவலனாக சோமகன் அமர்ந்திருந்தான். தந்தையின் குரலைக் கேட்டதும் ஜந்து மகிழ்ந்து மூக்கை அத்திசை நோக்கி திருப்பியபடி சிரித்து “ஆ! ஆ!” என ஓசையிட்டான். அவனை அவர்கள் கொண்டுசென்று மணைப்பலகையில் அமரச்செய்தனர். அவன் அஞ்சி தலைதிருப்பியபோது சோமகன் அவன் தோளைத்தொட்டு “அசையாதே, ஜந்து” என்றான். அவன் ஒருபோதும் அப்பெயரை சொல்வதில்லை. சௌமதத்தன் என்றே சொல்வது வழக்கம். அப்போது அச்சொல் அவனை வெறுப்புக்குரியவனாக ஆக்க உதவியது. ஜந்து தந்தையின் தொடுகையை உணர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தான். அவன் கழுத்தில் வேள்விக்கத்தி குளிராகத் தொட்டபோதும் அவன் நகைத்தான்.

அவர்கள் அவன் கழுத்தின் குருதிநாளத்தை அறுத்து பெருகிய குருதியை வேள்விக்குளத்தில் கொட்டினர். முதல்முறையாக ஜந்துவின் கைகளும் கால்களும் துடித்து இழுபட்டு நீண்டன. அவன் இருகைகளையும் விரித்து கால்களை உந்தி சோமகனை நோக்கி தாவினான். “தந்தையே” என்று கூவினான். அதற்குள் மூச்சுக்குழாயும் அறுபட்டதனால் அடுத்த சொல் குருதித்தெறிப்புகளாக அவனை பிடித்துக்கொண்டிருந்த வைதிகர்மீதும் அப்பால் நின்றிருந்த அரசன்மீதும் தெறித்தது. அவன் கைகால்கள் அதிர்ந்துகொண்டே இருந்தன.

அவன் தலையை துண்டித்து அப்பால் எடுத்து வைத்தபின் அவன் உடலை சிறுதுண்டுகளாக வெட்டி எரிகுளத்திலிட்டனர். பாம்புச்சீறல்கள்போலவும் கூகைக்குழறல்போலவும் யானைப்பிளிறல்போலவும் எழுந்த அதர்வம் அப்பலியை ஏற்றுக்கொண்டது. நெய்விழுந்த தீ எழுந்து கூரைதொட்டு நின்று ஆடியது. ஊன் உருகும் வாடை எழுந்து அரண்மனைக்குள் சூழ்ந்தபோது அரசியர் நெஞ்சில் அறைந்தபடி கதறி அழுதனர். சிலர் உப்பரிகைகளிலிருந்து கீழே குதிக்க ஓடினர். அவர்களை பிறர் பிடித்துத் தடுத்தனர். மைந்தனின் குருதியன்னை நினைவிழந்து படுத்திருந்தாள். இறுதியாக தலையையும் அவியிலிட்டபின் நூறு அதர்வச் சொல்நிரையை ஆயிரம் முறை சொல்லி அவ்வேள்வியை புலோமர் நிறைவுசெய்தார்.

அன்னையர் பித்துப்பிடித்தவர்கள்போல பலமாதகாலம் ஆடையணியாமல் அணிபூணாமல் இன்னுணவும் ஏற்காமல் இருந்தனர். சோமகனும் இறுகிய முகமும் வற்றிக்குறுகிய சொற்களுமாக அரசச்செயல்களை மட்டும் செய்து வாழ்ந்தான். ஆறுமாதங்களுக்குப் பின் அரசியர் ஒவ்வொருவராக கருவுறத்தொடங்கினர். ஒவ்வொரு கருவுறுதல் செய்தி வந்தபோதும் பிற அனைவரும் உவகைகொண்டனர். நூறுபேரும் கருவுற்ற செய்தி நூறுமடங்கு களிப்பாகியது. நூறு மடங்கு கொண்டாடிய சோமகன் ஜந்துவை அரிதாகவே எண்ணிக்கொண்டான். நூறு கருச்சடங்குகள் ஆற்றப்பட்டபோது முழுமையாகவே மறந்தான்.

அரசியர் தாங்கள் கருக்கொள்ளும்வரைதான் ஜந்துவை நினைத்திருந்தனர். தங்கள் வயிற்றில் உயிரை உணர்ந்தபின் வேறெதையும் அவர்கள் எண்ணாதவர் ஆயினர். நூறுமைந்தரும் ஒவ்வொருவராக மண்ணுக்கு வந்தபோது அரண்மனையும் அந்நாடும் ஜந்துவை முழுமையாக மறந்தனர். அவனுக்கு நகரின் தெற்குமூலையில் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டு அங்கே அவன் பலியான அன்று மட்டும் நெய்விளக்கு ஏற்றப்பட்டது. முதல்நாள் விளக்கேற்று விழாவுக்கு அரசியர் சூழ அரசன் வந்திருந்தான். கண்ணீருடன் கைகூப்பி அம்முற்றத்தில் நின்றிருந்தார்கள். அடுத்த ஆண்டு மைந்தர்களை கருவுற்றிருந்தமையால் அரசியர் வரவில்லை. அதற்கடுத்த ஆண்டு அரசனும் அக்கோயிலுக்கு செல்லவில்லை. அவை வைதிகரே உரியமுறையில் பூசனைகளை செய்தார்.

ஜந்து எப்போதாவது அவன் குருதியன்னையின் கனவில் வந்தான். அவன் விழிகள் கொண்டு நோக்கி துயரத்துடன் கைநீட்டி “அன்னையே!” என்று அழைத்தான். அவள் கருநிறைந்திருந்த நாளில் இருமுறை அக்கனவுக்குப் பின் கதறி எழுந்து ஓடமுயன்று கீழே விழுந்தாள். கனவுக்குறி நோக்கும் நிமித்திகர் நோக்கி ஜந்து அவள் வயிற்றில் மீண்டும் மைந்தனாக பிறக்க விழைகிறான் என்பதே அக்கனவின் பொருள் என்று உரைத்தனர்.

அதன்வண்ணமே நீண்ட உடலும் பெரிய கைகளும் அரசனுக்குரிய இலக்கணங்களும் கொண்டு நற்பொழுதில் பிறந்த மைந்தன் ஜந்துவின் இடுப்பில் இருந்த அதே மச்சத்தை தானும் கொண்டிருந்தான். அவன் பேரரசன் ஆவான் என்றனர் நிமித்திகர். அவனுக்கு சௌமதத்தன் என்று அன்னை பெயரிட்டாள். இளமையிலேயே படைக்கலம் கையிலெடுத்த அவன் பெருந்திறல்வீரனாக வளர்ந்தான். தன் உடன்பிறந்தார் துணையுடன் ஆரியவர்த்தத்தை முழுதும் வென்று அஸ்வமேதமும் ராஜசூயமும் நிகழ்த்தி சத்ராஜித் என அறியப்பட்டான். துலா சரியாமல் நெறிகாப்பவன் என குடிக்கு புகழ்சேர்த்தான்.

தந்தையும் அன்னையரும் முற்றிலும் மறந்தாலும் அவன் மட்டும் தன் மூத்தவனை மறக்கவில்லை. ஒவ்வொரு மாதமும் ஜந்துவின் ஆலயத்திற்குச் சென்று வணங்கி படையலும் பூசையும் இட்டு மீள்வது அவன் வழக்கமாக இருந்தது. தன் வாழ்வு என்பது பிறிதொரு விழைவின் ஈடேற்றமே என அவன் அறிந்திருந்தான். சிலையாக நின்றிருந்த ஜந்து கூரிய விழிநோக்கு கொண்டிருந்தான். அவன் முன் நிற்கும் எவரும் அவ்விழிகளை ஏறிடமுடியாமல் விலகிச்செல்வதே வழக்கம். சௌமதத்தன் மட்டுமே அவ்விழிகளை நோக்கியபடி நெடுநேரம் நின்றிருப்பான். “என்னை நான் நோக்கிக்கொண்டிருக்கிறேன் என்று தோன்றுகிறது” என்று அவன் சொன்னான்.

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 52

[ 6 ]

அடுமனை வாழ்க்கை சொல்லற்றதாக இருந்தது. அங்கே ஒற்றைச்சொல் ஆணைகள் இருந்தன. பின்னர் அவையும் மறைந்தன. நாள்முழுக்க சொற்களில்லாமலேயே சென்றது. கைகளும் கால்களும் விரைந்துகொண்டிருந்தபோது உள்ளம் சொற்களை கொப்பளித்துக்கொண்டிருந்தது. செயலும் சொல்லும் இரு தனி ஓட்டங்களாக சென்றன. எப்போதாவது சொற்பெருக்கு செயலை நிறுத்தச்செய்தது. மெல்ல சொற்கள் தயங்கலாயின. ஒரு சொல்லில் சித்தம் நின்று அதுவே குயிலோசை என மாறாது நெடுநேரம் ஒலித்துக்கொண்டிருப்பதை செயலின் நடுவே உணர்ந்து மீளமுடிந்தது. பின்னர் அதுவும் நின்றது. செயல் ஓய்ந்து அமர்கையில் நீராழத்திலிருந்து மீன்கணம் எழுந்து வருவதுபோல சொற்கள் தோன்றின.

ஆனால் அப்போது அவை பெருக்கெடுக்கவில்லை. தயங்கியவையாக எழுந்து தனித்தே மிதந்தன. சொற்கள் கனவிலென ஒலிப்பதுபோல சில தருணங்களில் தோன்றும். சொல்லடங்கிய உள்ளத்தின் பெரும்பகுதி ஒழிந்துகிடப்பதை கண்டார். காட்சிப்பெருக்காக உணர்வுப்பெருக்காக எண்ணப்பெருக்காக ஓடிக்கொண்டிருந்தவை வெறும் சொற்களே என்றுணர்ந்தது அவரை மீண்டும் மீண்டும் வியப்பிலாழ்த்தியது. அடுமனைப் பணி ஓய்ந்து காட்டில் ஓடைக்கரையிலோ மரத்தடியிலோ அமர்ந்திருக்கையில் தாடியை நீவியபடி வெறுமனே நோக்கியிருப்பது அவர் இயல்பென்றாயிற்று. ஓயாது சொல்முழங்கும் கொட்டகைகளில் அமர்ந்திருக்கையில் அங்கு ஒலிக்கும் சொற்களை தொடாமல் விலகியிருந்தன அவர் செவிகளும் விழிகளும்.

SOLVALARKAADU_EPI_52

சொல்லில் இருந்து விடுதலை என எப்போதோ ஒருமுறை அவர் எண்ணிக்கொண்டார். நகுலனும் சகதேவனும் வழக்கம்போல தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். நகுலன் அவரிடம் “உங்கள் குரல் எழுந்தே நெடுநாளாயிற்று, மூத்தவரே” என்றான். அப்போதுதான் அவரே அதை உணர்ந்தார். “சொல்லற அமர்தல் என்கிறார்கள். அமர்ந்தபின் சொல்லை அறுப்பது இயலாது. அறுத்தபின்னரே அமரவேண்டும்” என்றான் நகுலன். அவர் தாடியை நீவியபடி புன்னகை செய்தார். “நீங்கள் சொல்லும் முறை இவனுக்கும் கைவந்திருக்கிறது, மூத்தவரே” என்றான் சகதேவன்.

அப்போதுதான் தருமன் அது தன்மொழி என நினைவுகூர்ந்தார். எத்தனை சொற்களால் நிறைந்திருந்தது தன் உள்ளம். கற்ற ஒவ்வொன்றுக்கும் நிகரிவடிவை உருவாக்குவதை ஒயாது செய்துகொண்டிருந்தது. அதையே எண்ணத்திறன் என்றும் மெய்மையறிதல் என்றும் மயங்கியது. அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் பிறிதொருவரின் மெய்யறிவு. மொழியென்றானது அதன் தொலைநிழல். அந்நிழலின் நிழலுடன் ஆடி அவர் அமர்ந்திருக்கிறார். அவர் புன்னகைப்பதைக் கண்டு நகுலன் “நீங்கள் சுவடிகளையும் நாடுவதில்லை இப்போது” என்றான். அவர் ஆம் என்பதுபோல தலையசைத்தார்.

ஆனால் சொல்லற்ற வெற்றுப்பரப்பில் ஆழப்பதிந்த சொற்கள் உடல் துடிக்கச்செய்யும் ஆற்றல்கொண்டிருந்தன. சொல் கொதிக்கும் பொருளென தொடமுடியும் என்றும் விடாத பேயெனத் தொடரமுடியும் என்றும் கொடுநோயென கணம்தோறும் பெருகமுடியும் என்றும் அவர் உணர்ந்தார். எரிவைத்து விளையாடும் குழந்தையைப்போல அத்தனைநாட்களும் சொல்லாடிக்கொண்டிருந்தார் என்று தோன்றியது. கூட்டமில்லாத பிற்பகலில் தட்டுகளை கழுவிக்கொண்டிருந்தபோது மூத்த மாணவரான சலபர் உள்ளே அவர் பேசிக்கொண்டிருந்த கதையொன்றின் தொடர்ச்சியுடன் வெளியே வந்தார். முண்டகர் என்னும் முனிவர் காட்டில் சென்றுகொண்டிருந்தபோது யானை ஒன்றால் துரத்தப்பட்டு கால் உடைந்து கடும் மழையில் நொண்டிக்கொண்டே ஓடி ஒரு குகைக்குள் ஒடுங்கிக்கொண்டார்.

“குகைக்குள் இருந்து அவரால் வெளிவர முடியவில்லை. அவர் கையில் அவர் அகழ்ந்து வைத்திருந்த கிழங்குகள் இருந்தன. அவர் எரிவளர்த்து வேள்விசெய்து அவிமிச்சத்தை மட்டுமே உண்ணும் இயல்புகொண்டவர். அக்குகைக்குள் எரிவதென மரமோ சருகோ ஏதுமில்லை. அங்கு முன்பு தங்கியிருந்த நரிகளின் மலம் புழுதியில் உலர்ந்து சிதறிக்கிடந்தது. முண்டகர் அவற்றை பொறுக்கிச் சேர்த்தார். இரு கற்களை உரசி அனலெழுப்பி அவற்றைப் பற்றவைத்து எரியெழுப்பி வேதம் ஓதி ஆகுதிசெய்தார். அந்த அனலில் சுட்ட கிழங்குகளை அவிமிச்சமென உண்டார். அந்த தூயவேள்விக்கு திசைகாக்கும் தேவர்கள் எண்மரும் வந்திருந்தனர். அவிமிச்சத்தை அவருடன் ஏழு வான்திகழ் முனிவரும் உண்டனர்.”

அவர் அச்சொற்களை செவிமடுக்காமல் வெண்கலத்தட்டுக்களை கழுவி வைத்துக்கொண்டிருந்தார். பதினெட்டுபேர் தட்டுகளை கழுவிக்கொண்டிருந்தமையால் அந்த ஓசையே சூழ்ந்திருந்தது. சலபர் “அடிக்கடி ஆசிரியர் அந்தக் கதையை சொல்வதுண்டு. தூய மங்கலப்பொருட்களால் மட்டுமே வேள்வி செய்யப்படவேண்டும். ஆனால் நெருப்புக்கு இனிய அன்னமும் மலமும் ஒன்றே. இங்குள அனைத்தையும் ஒன்றெனவே தீ கருதுகிறது. ஆவலுடன் நா நீட்டி அணுகுகிறது. ஆறாப்பசியுடன் கவ்வி உண்கிறது. பிற பருப்பொருட்கள் நான்கும் அதன் ஆடல் தோழர்கள். அது மண்ணுள் இருந்து எழுகிறது. உயிர்கொண்ட மண்ணை அன்னமென உண்கிறது. நீரில் ஒளிந்துகொள்கிறது. ஐந்து காற்றுகளையும் தோழிகளாகக் கொள்கிறது. விண்ணில் கொடிவிட்டுப் படர்கிறது. அனைத்தையும் இணைப்பது அதுவே. எந்நிலையிலும் தூயது. ஒளியே உடலானது. ஒருகணமும் நில்லாதது. விண்நோக்கிச் செல்வது. அதுவே நம் தெய்வமென்றாகவேண்டும்” என்றார்.

“அகல்சுடர் எரிகிறது. மண்ணால் ஆனது அகல். நெய் அதன் ரசம். எரியே அதன் ஆத்மா. ஒளி அதன் அறம்” என்றார் வணிகர்களுடன் வந்த முதியவர். சலபரின் சொற்களிலிருந்து அச்சொல்லுக்கு பலநாட்கள் கடந்து வந்து இணைந்துகொண்டிருந்தார் தருமன். சாங்கியரின் சொல்லில் சொல்லிச் சொல்லி தேர்ந்த கூர்மை இருந்தது. “நெய்தீர்கையில் எங்கு செல்கிறது சுடர்? சுடராகும் முன் எங்கிருந்தது ஒளி? நெய்யென்றான பசுவில் உறையும் அனல் எது?” அவரை நோக்காது அச்சொற்களை கேட்டுக்கொண்டு அவர் இருளுக்குள் படுத்திருந்தார். ஒலிபொருள் படலமென மானுடச்சொற்கள் அனைத்தும் ஆகுமொரு இருள்வெளி. “பொருளின் இருப்பு இருவகை. பருண்மை நுண்மை. அகலென்றும் நெய்யென்றும் அனலென்றுமான பருப்பொருட்களின் இணைவு உருவாக்கும் ஒன்றின் நுண்மையே ஒளி.”

“அனைத்தும் பருப்பொருளே என்றறிந்தவன் மருளிலிருந்து விடுபடுகிறான். ஐம்புலனால் அறிவதும் நாளை அவ்வறிதலாக மாறக்கூடுவதும் என இருபாற்பட்ட இருப்பு கொண்டது பருப்பொருள். ஆடல்மேடையில் கூத்தர் தோன்றி அமைக்கும் நாடகம். அணியறையில் அது அவர்களின் உள்ளத்தில் உறைகிறது. அவர்கள் அணியப்போகும் வண்ணங்கள் காத்திருக்கின்றன. சொற்கள் மூச்சுவடிவில் உருக்கொண்டவாறுள்ளன” என்று சாங்கியமுதியவர் சொன்னார். “இணைந்தும் பிரிந்தும் அவர்கள் ஆடும் அக்கற்பனையை வாழ்த்துக! அணிகளைந்து அவர்கள் மீள்கையில் எங்கு செல்கிறது அரங்கு எழுந்த கூத்து? அது அங்கு விழிகொண்டு செவிதிறந்து அமைந்த பிறரில் மீண்டுமெழும் நிகழ்வாய்ப்பென சென்றமைகிறது. கருப்பொருள் பருப்பொருளென்றும் பருப்பொருள் கருப்பொருளென்றும் மாறிமாறியாடும் இது முடிவிலாப் பெருஞ்சுழல்.”

சொல்லப்பட்ட மறுகணமே அவை முழுமையாக மறைந்துவிடுவதை காலைநீராட்டுக்குச் செல்லும்போது தருமன் உணர்ந்தார். நெஞ்சில் விழுந்த சொற்களை உருட்டு உருட்டி விளையாடும் அந்த இளமைந்தன் எங்கு மறைந்தான்? அவன் அடைந்த உவகைகளுக்கு என்ன பொருள்? இன்று பிறிதொரு சொல் செவிப்படுகையில் மட்டுமே முந்தைய சொல் நீர்பட்டு எழுப்பப்பட்டு முளைகொண்டு வந்தது. “பொருள் ஒரு நிகழ்வாய்ப்பென இருக்கும் பெருவெளி அறிதலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் இவை இங்கிருப்பதே அது அங்கிருக்கிறது என்பதற்கான சான்றாகும்.” எவர் சொன்னது? பழுத்த விழிகளும் மணியொலிக்கும் குரலும் கொண்ட சாங்கியரா? தொண்டைமுழை எழுந்த கழுத்தும் தொங்கும் குண்டலங்களின் நிழல்விழுந்த நீள்முகமும் கொண்ட வைசேடிகரா? முகங்களை உதறி குரல்கள் மட்டும் வாழும் காற்றுவெளி சூழ்ந்திருந்தது அவரை.

சாலையின் ஒருநுனியில் தோன்றுகிறார்கள் மனிதர்கள். பொருளோ சொல்லோ கொண்டு வந்தமர்கிறார்கள். பின்பு எழுந்து மறு எல்லையில் மரக்கிளைகளுக்கு அப்பால் சென்று மறைகிறார்கள். முகங்களை அன்னசாலை நினைவுகூர்வதே இல்லை. தொடக்கத்தில் நினைவில் நின்ற முகங்களும் காலப்போக்கில் உருகி பிற முகங்களுடன் கலந்தன. வருவதும் செல்வதுமென காட்டில் என்றுமிருப்பது ஒரு திரள். ஒரே பசி. ஒரே நிறைவு. “பொருட்களில் உறைகின்றன பொருளியல்புகள். அவை பொருளென ஆவதற்கு முன் இயல்புகள் மட்டுமே. பொருட்களில் அவை தங்களை வெளிப்படுத்துகின்றன. கூத்தனில் உறையும் தெய்வம் போல.” சொற்கள் எப்போதுமிருந்தன. அறைந்து மழையெனச் சொட்டி ஓய்ந்து துளித்துளியாக விடுபட்டபின் அவை தூய ஒளிப்பரப்பென சித்தத்தை ஆக்கிச்சென்றன.

“வடிவுகொண்டவை அனைத்தையும் தழுவி உண்டு எழும் நெருப்பு வடிவற்றது. நெருப்பு உண்ட அவ்வடிவங்கள் நெருப்புக்குள் எங்கு உறைகின்றன?” சாங்கியம் பருப்பொருளின் நுண்மையை தேடித் தவிக்கும் பெரும்பதற்றமன்றி வேறில்லை. “கசக்கும் காயை இனிய உணவாக ஆக்கும் நெருப்பில் எங்கு உறைந்திருந்தது அவ்வினிமை?” சொல் தேனீபோல ரீங்கரித்தபடி உள்ளத்தைச் சூழ்ந்து பறந்தது. அரைத்துயிலில் ஒரு சொல் எஞ்சியிருக்க சித்தம் மூழ்கி மறைந்தது. சித்தமழிந்தபின் அச்சொல் எங்கு காத்திருக்கிறது, விழித்தபின் வந்தமர்ந்துகொள்ள? சித்தமே மானுடன். அன்னம் சித்தத்தை சூடியிருக்கிறது, விறகு நெருப்பை என. எரிந்தாடும் சித்தம் உடலை சமைத்துக்கொள்கிறது.

“ஒன்றில் இல்லாதது அதில் வெளிப்படமுடியாது. அதில் வெளிப்படுவதனாலேயே அதனுள் அது உள்ளது என்று பொருள். பொருளில் வெளிப்படும் இயல்புகள் அனைத்தும் அதுவே. பொருள் என்பது அதன் இயல்புகளின் தொகையே.” வைசேடிகர் பொருளை அறியும் பெருந்திகைப்பை அளைபவர். ஒரு சொல் பிறிதொன்றில் இருக்கும் எந்த இடைவெளியை கண்டுகொண்டு தன்னை இணைத்துக் கொள்கிறது? ஒரு சொல் பிறிதொன்றுடன் தன்னை இழக்காது இணைந்துகொள்ள இயலுமா என்ன?

“சொல் உள்ளத்தில் ஒடுங்குக! உள்ளம் ஆத்மனில் ஒடுங்குக! ஆத்மன் பிரம்மனில் ஒடுங்குக! பிரம்மன் தன்னில் ஒடுங்குக!” என்றார் முதியமாணவரான தாலகர். “இங்கு எழும் இத்தனை சொற்களுக்கு நடுவே மூடிக்கொள்பவன் அறிவிலிகளுக்குரிய உவகையை அடைகிறான். திறந்தவன் நோய்கொண்டு பெருந்துன்பத்தை அடைகிறான். அரசே, இந்தக் கல்விநிலையிலிருந்து ஆறுமாதங்களுக்குள் சித்தம் குலைந்து தப்பி ஓடியவர்களே மிகுதி. அம்புகள் பறக்கும் போர்க்களத்து வானம் இது. ஊடே செல்லும் செம்பருந்துகள் சிறகற்று வீழ்கின்றன. கொசுக்களும் ஈக்களும் அம்புகளை அறிவதே இல்லை. ஒடுங்குக! ஒடுங்கலே இங்கு வென்று வாழும் வழி.”

கொதித்துக் குமிழியிட்டுக்கொண்டிருக்கும் கலத்தருகே நின்று அதை நோக்கிக்கொண்டிருக்கையில் உள்ளம் அமைதிகொள்வது ஏன்? எரிந்தாடும் தழலில் இருந்து விழிவிலக்கமுடியாது செய்யும் ஈர்ப்பு எது? கலைந்து பூசலிட்டு கூவி ஆர்த்து அமர்ந்து ஐயம்கொண்டு எழுந்து அமைந்து மெல்ல அனைத்துப் பறவைகளும் கூடணைந்தபின் கருக்கிருட்டினுள் இருந்து இறுதியாக குரலெழுப்பும் தனிப்பறவை எதை வேண்டுகிறது? இருத்தல் என்பது அங்கு மட்டுமே வாய்த்தது என அவர் அறிந்தார். உழைத்து உடலோய்ந்தபின் குருதி மெல்ல அடங்கும்போது உள்ளமிருப்பது தெரியும், அது ஏற்கெனவே அணைந்துகொண்டிருக்கும்.

சமையலுக்கு அவர் கையும் காலும் பழக பல மாதங்களாயின. முதல்நாள் செய்த அதே உடலுழைப்பில் ஐந்துமடங்கு வேலைசெய்பவராக ஆனார். “பரிமாறக் கற்றுக்கொள்வதற்கு முன் தட்டுகளை கழுவக் கற்றுக்கொள்க! சமைக்கக் கற்றுக்கொள்வதற்கு முன் பரிமாறக் கற்றுக்கொள்க” என்று தாலகர் அவரிடம் சொன்னார். தட்டுகளைக் கழுவி விளிம்பொருமையுடன் அமைக்கத் தொடங்கிய அன்று அடைந்த நிறைவை அவர் அடிக்கடி நினைவுகூர்வதுண்டு. சீராக அடுக்கப்பட்டவை அளிக்கும் உவகைக்கு பொருள் என்ன? அவற்றை அடுக்குவதனூடாக உள்ளம் தன்னை சீரமைக்கிறதுபோலும். அடுக்கப்பட்ட ஒன்றில் படிகையில் உள்ளம் தன் முழுமைநாட்டத்தை கண்டடைகிறதுபோலும்.

காய்கறிகள் நறுக்குவதை கற்றுக்கொள்ள நெடுநாளாயிற்று. ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு வெளிவடிவில் இருந்தது. வெளிவடிவுக்குத் தொடர்பற்றதெனத் தெரிந்த உள்வடிவின் தொடர்பைத் தெரிந்துகொள்ள கண்கள் உதவாதென்று அறிந்தார். கைதொட்டு அறியமுடிந்தது காய் எனும் உயிர்க்குமிழியை. பின்னர் கைகளே அவற்றை அரிந்தன, பிளந்தன, நறுக்கின. ஒவ்வொரு காயும் மண்ணிலிருந்து உயிர்கொண்டு உப்புகொண்டு அன்னம் கொண்டு தன்னைக் கோத்து அமைத்த வடிவை மீண்டும் இழந்து சீரான துண்டுகளாகப் பிரிந்து அடுத்த இணைப்புக்கென காத்திருந்தன.

“குழம்புகள் கொதிக்கும் மணங்களை நினைவில் கொள்க! உணவின் நுண்வடிவம் மணமே” என்றார் மூத்தமாணவராகிய காலகர். காய்கறிகள் நீர்விட்டு நெகிழத்தொடங்குகையில் கறைமணம். வெந்து குழைகையில் பச்சை மணம். உப்பும் புளியும் காரமும் ஏற்று கறியென்றாகுகையில் அவை முற்றிலும் பிறிதொன்று. சற்று பிந்தினாலும் அவற்றிலிருந்து கரிமணம் எழத்தொடங்கிவிடும். உலை குமிழியிடுகையில் அரிசிமணம். ஏதோ ஒருபுள்ளியில் அன்னத்தின் மணம். அப்பங்களின் நீராவி மணத்தில் எப்போது மாவு அன்னமாகும் மணம் எழுகிறதென்று அறியமுடிந்த நாள் அன்று பிறந்தவரென உணர்ந்தார். “மணம் அறிவிக்கிறது, பிறிதொரு பருப்பொருள் பிறந்திருக்கிறது என்று” என்றார் காலகர்.

“சமையல் என்பது கலவை” என்றார் காலகர். உப்பு, புளி, காரம் என்னும் மூன்று. மாவு, ஊன், நெய் எனும் மூன்று. மூன்றும் நிகரமைகையில் உருவாகின்றது சுவை. ஒவ்வொன்றிலும் அந்த நிகர்ப்புள்ளி ஒவ்வொன்று. அப்புள்ளியில் மிகச்சரியாக அடுசெயல் நின்றால் சுவை.” பீமன் உரக்க நகைத்து கருணைக்கிழங்கு கூட்டை மரப்பிடியிட்ட சட்டுவத்தால் கிண்டியபடி “ஒருகணம் முன்னால் நின்றுவிட்டால் எழாச்சுவை. ஒருகணம் கடந்துசென்றால் மறைந்த சுவை. சுவையற்ற உணவென ஏதுமில்லை” என்றான். காலகர் வெண்டைக்காய் பொரியலை இளக்கியபடி “ஆம், சமையலறிந்தவருக்கு சுவை ஒரு பொருட்டல்ல” என்றார். “சுவை என்பது நாவறிவது. உணவிலிருப்பது சுவைக்கான ஒரு வாய்ப்புமட்டுமே” என்றான் பீமன்.

“ஆம், அரசே. உணவென்றாவது மீண்டும் ஒரு இணைவு வழியாகவே சுவையென்றாகிறது. நாவும் பசியும் உள்ளமும் என மீண்டுமொரு மும்மை. அவைகொள்ளும் ஒருமை” என்றார் காலகர். “இணைவின் கலையை அறிந்தவர்களுக்குரியது அடுமனைத் தொழில்.” முதல்நாள் உப்பும் புளியும் கலந்து கொதிக்கவைத்து காந்தாரத்துப் பசுமிளகாய் உடைத்துச்சேர்த்து அமைத்த எளிய புளிக்காய்ச்சல் மெல்லக்கொதித்து மணமெழுந்தபோது அதை முதலில் நாக்கு அறிந்தது. கிளர்ச்சியுடன் அதில் ஒரு சொட்டை அள்ளி நாவில் விட்டார். அச்சுவையை உள்ளம் அறிந்தபோது உடலெங்கும் அந்த உவகை பரவியது. திரும்பி அருகே நின்றிருந்த மாணவனிடம் “எப்படி இருக்கிறது?” என ஒரு துளியை அளித்தார். “அவ்வளவுதான், இனி சமையலில் அறிவதற்கு ஒன்றும் இல்லை. அடைவன முடிவதே இல்லை” என்று அவன் சொன்னான்.

அதன்பின் சமையல் ஒரு பித்தென்றாகி சூழ்ந்துகொண்டது. ஒவ்வொருநாளும் அன்று சமைக்கவிருப்பதை எண்ணி விழித்துக்கொண்டார். அன்று சமைத்ததை எண்ணியபடி துயின்றார். வெந்து எழுந்த உணவு இறக்கிவைக்கப்பட்டு காத்திருக்கையில் அதனருகே நின்று நோக்கிக்கொண்டிருந்தார். முன்பிலாத ஒன்று. பருப்பொருளில் எங்கெங்கோ எவ்வடிவிலோ இருந்தது. அவர் சித்தத்தில் உறைந்தது. பிறத்தலென்பது ஒன்றிணைதல். ஆதலென்பது மாறுதல். பரிமாறப்படும் போது அவரே பந்திகள்தோறும் சென்று அவை உண்ணப்படுவதை நோக்கினார். கைகளால் கலந்து அள்ளி வாயிலிடப்பட்டு உமிழ்நீருடன் மெல்லப்பட்டு உடல்நுழைந்து உடலென்றே ஆனது அவ்வுணவு. அவரிடமிருந்து எழுந்து அவர்களாக மாறியது. இதோ உண்பவர் அனைவருக்குள்ளும் இருந்துகொண்டிருக்கிறேன். அந்த முகத்தின் நிறைவு நான். இந்த உடலின் இனிய களைப்பு நான்.

சமையல் எங்கோ ஒருபொழுதில் சலிக்கும் என எண்ணியிருந்தார். ஆனால் சலிப்பு எழாது ஆர்வமே மேலும் மேலுமென வளர்ந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு புதுச்சுவையும் நூறு சுவைகளுக்கான வாய்ப்புகளாகத் தெரிந்தது. ஆக்கி ஆக்கி கைதேரும்போது ஆக்குதல் மேலும் நுண்மைகொண்டது. ஆனால் அவருடைய நாக்கின் சுவை மட்டும் மட்டுப்பட்டது. அவர் சமைத்த எவ்வுணவையும் உண்ண அவருக்குத் தோன்றவில்லை. அவற்றின் மணமே போதுமென்றாயிற்று.

அன்னத்தின் நுண்மை உடலின் நுண்மையால் அறியப்பட்டது. கொதிப்பதும் பொரிவதும் வறுபடுவதும் நொதிப்பதும் உருகுவதும் அவிவதுமான அனைத்தினூடாகவும் மெல்ல நடந்து மீள்கையில் அவர் உண்டு முடித்திருப்பார். நாவுக்கோ வயிற்றுக்கோ சுவை தேவைப்படவில்லை. பசி தீர்க்க மோர்விட்டு நீர்க்கக் கரைத்த அன்னம் மட்டுமே போதுமானதாக இருந்தது. அதை உண்டு எழுந்து ஏப்பத்துடன் கைகழுவச் செல்லும்போது ஒருமுறை இளைய யாதவர் “முனிவரில் நான் கபிலன்” என்று சொன்னதை நினைவுகூர்ந்தார்.

 

[ 7 ]

சுயம்புவமனு புடவி சமைத்த மன்வந்தரத்தில் பிரம்மன் மண்ணுக்கு வந்து தன் நிழலை சரஸ்வதி நீர்ப்பெருக்கில் நோக்கினார். அந்நிழல் அலைகளில் நெளிந்தமையால் வளைவுகள்கொண்டு பெண்ணென ஆயிற்று. தன்நிழலை பிரம்மன் புணர்ந்தபோது ஒரு மைந்தன் பிறந்தான். அவனை தந்தை கர்தமர் என்றழைத்தார். தந்தையிடம் வேதச்சொல் பெற்ற கர்தமர் சரஸ்வதியின் கரையில் பிந்துசரஸ் என்னும் குளக்கரையில் அவ்வேதச்சொல் ஒவ்வொன்றையும் தன்னுள் முளைக்கவைக்கும்பொருட்டு தவம்செய்தார். தன்னை அறிந்து எழுந்த அவரை ‘நீ அறிந்தவை இப்புவி திகழ்க!’ என்று பிரம்மன் வாழ்த்தினார்.

சுயம்புவமனு ஒரு சொல் நூறெனப்பெருகும் விழைவின் தெய்வம். அவர் துணைவி நூறுமுகம் கொண்ட சதரூபை. அவர்கள் தங்கள் காமத்தை அனலாக்கி பெருவேள்வி ஒன்றை நிகழ்த்தினர். சுயம்புவமனுவின் ஒருநெருப்பைச் சூழ்ந்தெரிந்தது சதரூபையின் நூறு இதழ்கொண்ட நெருப்பு. அவ்வேள்வியில் பிறந்த மகள் தேவாகுதி. பொன்றாப் பெருங்காமமே பெண்வடிவுகொண்டவளாக இருந்தாள் தேவாகுதி. காதல்கொண்டு ‘நீ விழைவதை கேள்’ என்று கூறிய கர்தமரிடம் ‘காலம் நுழையாத ஓர் இல்லம். கண்கள் இல்லாத ஒளிகொண்ட அறைகள். அங்கே காமம் ஓயாத ஒரு மஞ்சம்’ என்று அவள் கேட்டாள். காமரூபம் என்னும் அந்த இல்லம் காலம்திகழ்ந்த மண்ணில் எங்கும் தொடாது விண்ணிலேயே விளங்கியது. அங்கே தவவல்லமையால் காமப்பேருரு கொண்டிருந்த கணவனுடன் அவள் உவந்திருந்தாள்.

உள்ளம் காலமற்றிருந்தது என்றாலும் அவள் உடலில் முதுமை படர்ந்தது. ‘நிறைவுகொண்டாயா?’ என்று கோரிய கணவனிடம் ‘இல்லை, இன்னும் எனக்கு இளமை வேண்டும்’ என்றாள். ‘சரஸ்வதியில் ஆடுக! இளமை மீளும்’ என்றார் கர்தமர். தேவாகுதியின் கைபற்றி நீராடி தானும் இளமைகொண்டார். அவ்வாறு ஏழுமுறை இளமை மீண்டனர். ஏழாவது முறை இளமை மீண்டு காமம் நுகர்ந்து முதுமைகொண்டதும் ‘நிறைந்தாயா?’ என்றார் கர்தமர். ‘இன்னும் இன்னும் என்றே என் உள்ளம் விழைகிறது’ என்றாள் தேவாகுதி. ‘இக்காமப் பெருவிழைவை வென்று கடக்க விழைகிறேன்.’

‘காமத்தை காமத்தால் வெல்ல இயலாது’ என்றார் கர்தமர். ‘நான் இதை கடப்பதெப்படி?’ என்று அவள் கேட்டாள். ‘பெண்கள் அன்னையராகி காமத்தை கடக்கிறார்கள்’ என்று கர்தமர் சொன்னார். ‘எனக்கு ஒரு மகவு பிறக்கட்டும்’ என்று அவள் கேட்டாள். அவள் வயிறு கனிந்து ஒரு பெண்மகவு பிறந்தது. அவள் மதநீர் முலைப்பாலென ஊறி மகவுக்குச் சென்றது. ‘இன்னும் எஞ்சுகிறது என்னில் மதம்’ என்றாள் தேவாகுதி. ‘பிறிதொரு மகவு எழுக!’ என்றார் கர்தமர். அவள் கலை, அனசூயை, சிரத்தை, ஹவிர்ஃபு, கீதை, கிரியை, கியாதி, அருந்ததி, சாந்தி என்னும் ஒன்பது மகள்களை ஈன்றாள்.

‘ஒன்பது மகவுக்கும் பின்னர் என்னிடம் எஞ்சும் துடிப்பு என்ன?’ என்று அவள் கணவனிடம் கேட்டாள். ‘உன்னுள் இருப்பது என்னை வெல்லும் விழைவு. என்னை விஞ்சும் ஒரு மைந்தனுக்கு அன்னையாகுக! நீ நிறைவடைவாய்’ என்றார் கர்தமர். தேவாகுதி கருக்கொண்டு ஒரு மைந்தனை பெற்றாள். எளிய உருவிருந்தாலும் ஐந்துமடங்கு எடைகொண்டிருந்த அம்மைந்தன் வெளிவந்ததுமே அவள் படுத்திருந்த மஞ்சம் வளைந்தது. அவனை கையிலெடுக்க அவளால் முடியவில்லை. அவன் உதடுகளில் முலைக்காம்பை வைத்த மறுகணமே அவள் உடலெங்கும் குருதி இழுபட்டு தசைகள் இழுபட்டு துடிக்கத் தொடங்கின. மாந்தளிர் நிறம் கொண்டிருந்த அவனை தந்தை கபிலன் என்றழைத்தார்.

மைந்தன் மூன்றுமாதத்தில் முதற்சொல்லை உரைத்தான். ஏழுவயதில் வேதங்களை முற்றோதி முடித்தான். பன்னிருவயதில் வேதமுதன்மையாகிய பெரும்பருக் கொள்கையை பிரம்மனிடமிருந்து தானே அறிந்தான். கற்றவற்றில் ஏறி மெய்மையை தொட்டறிந்து அவர் மீண்டுவந்தபோது அன்னை தேவாகுதி இறப்புக்கிடக்கையில் இருந்தாள். அருகணைந்து அவள் கைகளை பற்றிக்கொண்டார் மைந்தர். ‘மைந்தா, எனக்கு இனி காலமில்லை. இப்போதும் என்னுள் நிறைவுறாதிருக்கும் விழைவு என்ன?’ என்றாள் தேவாகுதி.

‘பெண்ணென்றும் அன்னை என்றும் ஆன நீ இப்புவியே. புவியென்றான முதற்பேரியற்கையே. அதிலுறையும் நிறைவின்மையே இவையனைத்தும்’ என்றார் கபிலர். ‘இணைந்து உடலாகிவந்த பருப்பொருட்கள் மீளும். அந்த முதற்பெரும் நிறைவின்மை எப்போதும் வாழும்.’ அன்னை விழிநீர் பெருக்கி மைந்தனை நோக்கி கிடந்தாள். ‘பசியென, காமமென, வெற்றியென, புகழென, எஞ்சிநிற்றல் என உருக்கொண்டாடும் அப்பெரும் நிறைவின்மையால் ஆட்டிவைக்கப்படும் பொருண்மையின் அலைக்கழிவையே வெளியே புடவியெனக் காண்கிறோம். உள்ளே சித்தமென அறிகிறோம்.’

“சாங்கிய மெய்ப்பொருளை அன்னைக்குரைத்து அவள் துயரழித்து நிறைவுகொள்ளச்செய்தார் கபிலர். அரசே அறிக, இப்புவியில் அன்னமென ஆயிரம் பொருட்கள் உயிர்கொண்டெழுந்தபடியே உள்ளன. அத்தனை அன்னங்களையும் சமைப்பது ஒரே அனல். மெய்ப்பொருட்கள் எதுவும் ஆகலாம், கபிலமெய்மை இணையாமல் அவை பயன்படுவதில்லை” என்றார் குறுகிய உடலும் கூர்ந்த முகமும் சிறிய மணிக்கண்களும் கொண்டிருந்த திரிவக்ரர். கொட்டகையில் அனைத்துக் கட்டில்களும் ஒழிந்துகிடந்தன. சிறிய கட்டில் ஒன்றில் மரவுரி போர்த்தி அவர் படுத்திருந்தார். அருகே தருமன் அமர்ந்திருந்தார்.

“சாங்கியம் தொட்டு தொடங்குக! ஏனென்றால் இதுவே மண். மண்ணை உதறி எழுபவை ஒவ்வொன்றும் மண்ணில்வந்து விழுந்தாகவேண்டும். மண்ணில் வேர்கொள்பவை மட்டுமே விண்ணைச்சூடி நிற்கமுடியும்” என்றார் திரிவக்ரர். “ஒவ்வொரு கொள்கையிடமும் அறிவன் கேட்கவேண்டிய வினா ஒன்றே. இது எவருக்கு அன்னம்? இப்புவியில் உயிருள்ள அனைத்தும் அன்னமே.” தருமன் “ஆம்” என்று தலையசைத்தார். “சாங்கியத்தை அறிய மிகச்சிறந்த வழி அன்னத்தை தொடர்வதே. குருநிலை மாணவனைவிட அடுமனைப் பணியாளன் அதை அணுகமுடியும்” என்று திரிவக்ரர் சொன்னார்.

பயணிகள் மிகவும் குறைந்திருந்த கார்காலம். மலைப்பாதைகள் முழுக்க வழுக்கும் சேறால் ஆனவையாக மாறிவிட்டிருந்தன. மலைக்கு வருவதில் முதன்மையானதாகிய உப்பும் செல்வதில் முதன்மையானதாகிய மரவுரியும் மழைக்கு வீணாகிப்போகின்றவை. அவ்வப்போது அவ்வழி செல்லும் துறவிகளும் இரவலரும் வேதமாணவர்களுமன்றி வணிகர்கள் அரிதாகிவிட்டிருந்தனர். வணிகரில்லாமையால் சூதரும் பாணரும் இல்லாமலாயினர். அடுமனைப்பணிகள் பெரிதும் குறைந்து அனைவரும் கொட்டகைகளில் நாளெல்லாம் ஓய்வுகொள்ளலாயினர்.

ஆனால் அடுமனையாளர்களின் உள்ளத்தில் சொல்லவிந்துவிட்டிருந்தது. ஓய்ந்து சேர்ந்தமர்ந்திருக்கையிலும் அவர்கள் ஏதும் பேசிக்கொள்வதில்லை. ஏதேனும் கைப்பணிகளை அவர்கள் கண்டடைந்திருந்தனர். சலபர் செம்புநிலைவாய்களை உருட்டி ஓடைக்குச் சென்று மணலிட்டு நார்கொண்டு தேய்த்து மின்னும் அனல் என ஆக்கி கொண்டுவந்து வைத்தார். பித்தளை உருளிகள் பொன்னாயின. சட்டுவங்கள் வாளொளி கொண்டன. காலகர் மழைக்குள் சென்று விறகுகொண்டு வந்து கீற்றுகளென்றாக்கி அடுமனையில் அடுப்புகளுக்கு மேல் தொங்கவிட்டார். தருமன் கொடிகளால் கூடைகளும் உறிகளும் பின்னினார். சிலர் மரத்தாலான அகப்பைகளையும் கரண்டிகளையும் செதுக்கினர்.

தொலைவிலிருந்து நோக்குபவர்களுக்கு அன்னசாலை முழுமையாக கைவிடப்பட்டு கிடப்பதாகவே தோன்றியது. களைத்த காலடிகளுடன் அணுகி வருபவர்கள் அங்கே வெவ்வேறு ஒலிகள் கேட்பதைக் கண்டு திகைத்தனர். அருகணைந்து அங்கு வேலை செய்துகொண்டிருப்பவர்களை நோக்கி அவர்கள் இறந்தவர்களோ என ஐயுற்றனர். அவர்களுக்காக எப்போதும் அடுப்பில் கனலிடப்பட்டு புகையெழும்படி செய்யப்பட்டது. பெருமழைக்குள்ளும் அனல்மணம் எழுந்து அங்கு அன்னமிருப்பதை தொலைவிலேயே பயணிகளுக்கு உணர்த்தியது.

திரிவக்ரர் “பருப்பொருட்களில் வாழ்வது பொருண்மையில் குடிகொள்ளும் முதல் நிறைவின்மை. மூன்று குணங்களின் நிகர்நிலை நாடல். ஒவ்வொருவருக்குள்ளும் நின்றிருக்கும் தேடல் அதுவே. இது தன்னை தானென உணர்வது அந்த நிறைவின்மையினால்தான். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் தனித்தன்மைகொண்டிருப்பது அந்நிறைவின்மையை மையமென சூடியிருப்பதன் வழியாகவே. பொருளின் சாரமென்பது அந்நிறைவின்மை மட்டுமே. எனவேதான் ஒவ்வொரு பொருளும் பிறிதொரு பொருளில் இணையத் துடிக்கிறது. பிறிதொன்றாக விழைகிறது. பிறிதொன்றை நிரப்பி பிறிதொன்றில் நிறைந்து நிறைவுகொள்ள வெம்புகிறது. அதுவே புடவிச் செயல்பெருக்கென்றாகி நம்மைச் சூழ்ந்துள்ளது. நாமென்றும் ஆகியுள்ளது.”

“அதற்கப்பால் பொருளுக்கென சாரம் ஏதுமில்லை. பொருளென்றுணரும் பொருளான மானுடனுக்கும் ஆத்மா ஏதுமில்லை” என்றார் திரிவக்ரர். தருமன் தலையசைத்தார். மரவுரியை இழுத்துப் போர்த்திக்கொண்டு “ஆம், ஆத்மா இல்லை. பருப்பொருளின் நிறைவின்மையை பரம்பொருளுக்கான தவிப்பென எண்ணி மயங்கியவர்களால் உருவாக்கப்பட்டது ஆத்மா என்னும் எண்ணம். ஆத்மாவின் தவிப்பைக் கொண்டே உருவகிக்கப்பட்டது பரம்பொருள் என்னும் மையம். ஆத்மா இல்லை என்பதனால் அதுவும் இல்லை என்றாகிறது” என்றார். விழிகளை மூடிக்கொண்டு “ஆம், இல்லை” என்றார்.

மழையின் ஓசை அணுகிவந்தது. கூரையை பேரோசையுடன் அறைந்து பெய்யத்தொடங்கியது. பின்னிக்கொண்டிருந்த நாராலான உறிகளை எடுத்துக்கொண்டு தருமன் வெளியே சென்றார். மழைக்காமணத்தை எடுத்து தலையில் அணிந்தபடி அடுமனைக்குச் சென்று அதை அங்கே அடுக்கிவைத்தார். அங்கே அர்ஜுனன் மரம்குடைந்து கலம் செய்துகொண்டிருந்தான். அப்பால் நகுலன் ஈச்சைநாரால் சிறியபெட்டிகளை பின்னிக்கொண்டிருந்தான். அவர்கள் அவரை அறியவில்லை. அவர் மீண்டும் வெளிவந்தபோது மழைக்கு அப்பால் ஒருவர் நனைந்தபடி சீராக நடையிட்டு வருவதைக் கண்டார். ஆடையற்ற உடல்கொண்ட திசையுடலர். மயிர்பிடுங்கப்பட்ட உடலில் மழை வழிந்தது. தருமன் கூப்பிய கைகளுடன் அருகே சென்று “அருகரே, கொட்டகைக்குள் வந்தமரவேண்டும். தங்களுக்கு உணவளிக்கும் பேறுபெற அருளவேண்டும்” என்றார்.

மழைக்குள் மின்னிய அழகிய சீர்பல்நிரையுடன் புன்னகைத்து “நலம்சூழ்க! நீர் அரசரென எண்ணுகிறேன். அருள் நிறைந்த கோல் சூடுக! கோல் துறந்து நிறைவடையும் பேறு சூழ்க!” என அவர் வாழ்த்தினார் “இந்தக் கூரைநீழலில் நான் தங்கிக்கொள்கிறேன். என் வெறும்கையில் ஒருமுறை உண்ணுமளவு அன்னம் எனக்குப் போதும். என் தவநெறி அது.” தருமன் “மரவுரி கொண்டுவருகிறேன். ஈரத்தை துடைத்துக்கொள்ளுங்கள்” என்றார். அவர் மீண்டும் புன்னகைத்து “அந்த ஆலமரத்தை அதில் வாழும் பறவைகளை விரட்டிவிட்டு ஈரம்போக துடைப்பீரா?” என்றார்.

தருமன் வெறுமனே கைகூப்பினார். “இவ்வுடலில் அதைவிட கூடுதலாக உயிர்கள் வாழ்கின்றன. விழிக்குத் தெரியாத சிற்றுயிர்கள். ஒவ்வொன்றும் ஓர் ஆத்மா. இன்பதுன்பங்களும் பிறவிப் பெருஞ்சுழலும் மீட்பும் கொண்டவை.” தருமன் மெல்லிய திகைப்பை அடைந்து “சிற்றுயிர்களுக்கு ஐம்புலன்கள்கூட இல்லை என்பார்களே, உத்தமரே” என்றார். “இக்கல் புலன்களே அற்றது. அந்தமரம் ஒற்றைப்புலன் கொண்டது. அவற்றிலும் ஆத்மா உறைகிறது. ஆத்மா இல்லாத எதுவும் இங்கில்லை” என்றார் அருகப்படிவர். “வட்டமொன்று சுழலுமென்றால் மையமொன்று அமைந்தே தீரும், அரசே” என்று உரைத்து முடித்தார். தருமன் மீண்டும் தலைவணங்கினார்.

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 51

[ 5 ]

அடுமனைப்பணி உடலின் அனைத்துத் தசைகளையும் களைப்படையச்செய்வதாக இருந்தது. முதல்நாள் புலர்காலை எழுந்ததுமே அடுமனை ஒரு பூசல்களம்போல ஒளியும் ஓசையுமாக இருப்பதை தருமன் கண்டார். எழுந்துசென்று நீராடிவருவதற்குள் அங்கே வேலை நெடுநேரம் கடந்திருந்தது. அடுமனை உதவியாளர்கள் ஒவ்வொருவரும் எதையோ மறந்துவிட்டுத் தேடுபவர்கள்போல, எங்கோ செல்ல விழைபவர்கள் போல, எதையோ முடித்துவிட்டு கிளம்புபவர்கள் போல வெறிகொண்டு சுழன்றனர்.

அங்கிருந்த பெருந்திரளில் அவர்கள் தங்களுக்குத்தேவையானவர்களை மட்டுமே நோக்கினர், பேசினர். கைகளின் வீசலாக கால்களின் அசைவாக அவர்கள் நிறைந்திருந்தனர். சிலகணங்களில் அவர்கள் மறைந்து கலங்களும் அகப்பைகளும் சட்டுவங்களும் தங்கள் விருப்பப்படி முட்டி மோதி ஒலித்து முழங்கி முனகி சுற்றிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. தருமன் என்ன செய்வதென்றறியாமல் தயங்கியபடி நின்றிருந்தார். அவரை எவரும் கருத்தில்கொள்ளவில்லை. பீமன் அங்கே நீர்ப்பரப்பில் ஒரு சுழி எனத்தெரிந்தான். அவனை நோக்கியே மானுடரும் கலங்களும் சென்றன, அவனிலிருந்து விலகி வளைந்து ஓடின. அப்பால் இன்னொரு சுழியாக பிரபவர் தெரிந்தார்.

தன்னைச்சூழ்ந்து செல்லும் உடல்களுக்கு விலகி விலகி வழிவிட்டு சுவர் ஓரமாகவே சென்று அசையாமல் நின்றார். அர்ஜுனன் காய்களை நறுக்குமிடத்தில் நான்குவகையான கத்திகளுடன் பணியாற்றிக்கொண்டிருந்தான். அவன் கைகளால் காய்களும் கிழங்குகளும் சீரான துண்டுகளாக மாறி அப்பால் குவிந்தன. நகுலன் பொருட்களை சீராகப்பிரித்து அடுப்புகளுக்கு கொடுத்தனுப்பினான். சகதேவன் அடுமனைக் களஞ்சியத்தில் அமர்ந்து எடுக்கப்படும் பொருட்களை கட்டுப்படுத்தினான். அவர்கள் எவரும் அவர் வந்ததை அறியவில்லை. அவர்களின் கைகள் தாங்களே இயங்க விழிகள் அவற்றுடன் இணைந்து கொண்டன. எங்கிருக்கிறோம் என்பதையே அவர்கள் உணரவில்லை.

வெளியே முந்தையநாள் இரவெல்லாம் வந்துகொண்டிருந்த வணிகர்களும் அந்தணரும் காலையிலேயே எழுந்து நீராடி நீர்வணக்கங்களை முடித்து ஊண்மனைக்குள் குழுமிக்கொண்டிருந்தனர். மைத்ரியக்காட்டின் மரக்கூட்டங்களுக்கு அப்பால் வைதிகர் அமைத்திருந்த வேள்விச்சாலைகளில் புலரியின் எரிகொடை முடிந்து மங்கல வாத்தியங்கள் முழங்கத்தொடங்கின. “விரைவு! விரைவு!” என சரிவிறங்கும் குதிரைப்படைபோல அடுமனை முழங்கிச்சென்றுகொண்டிருந்தது.

தருமன் மெல்ல நகர்ந்து அருகே கலங்களைமூடும் பெரிய செம்புத்தட்டுகளை கழுவிக்கொண்டுவந்துகொண்டிருந்த ஒருவரிடமிருந்து அதை வாங்கினார். ஒருவர் அவரிடம் “அங்கே என்ன பார்வை? மூன்றாவது அடுப்பு… மூன்றாவது அடுப்புக்குப்போ” என்றார். அவர் அதை அங்கே கொண்டுசென்று வைத்து மீள்வதற்குள் மறுபக்கம் மேலும் தட்டுகளுடன் வந்தவர் “விரைவு… விரைவு!” என்றார். தருமன் ஓடிச்சென்று அதை வாங்கிக்கொண்டார் “நாலாவது அடுப்பு… விரைவு!”

நூற்றுக்கணக்கான அடுப்புகளில் தழல்கள் நின்றாடின. அவற்றின்மேலிருந்த செம்புக்கலங்கள் அனல்கொண்டு மெல்லிய விரிசல்மணி ஓசையுடன் செந்நிறமாயின. அவற்றில் குழம்புகளும் அவிநீரும் கொதித்து குமிழியுடைந்து தெறித்தன. வெல்லப்பாகு உருகும் மணம். கிழங்குகள் வேகும் மணம். காய்கறிகளின் கறைமணம். வெந்த அன்னம் பெரிய மரசல்லரிகளால் அள்ளி விரிக்கப்பட்ட ஈச்சம்பாயில் குவிக்கப்பட்டது. அதிலிருந்து எழுந்த புதுஅன்னத்து வெந்தமணம் பிற அனைத்து மணங்களையும் அள்ளி தன்மேல் சூடிக்கொண்டது. ஓர் இடத்தில் நசுக்கப்பட்ட சுக்கின் மணம் கூரிய ஊசி என மூக்கை குத்தியது. தட்டுகள் வந்துகொண்டே இருந்தன. தோள்கள் கடுத்தன. கெண்டைக்கால் தசைகள் இழுபட்டு வலிதெறித்தன.

“அங்கே, விளம்புகலங்கள்!” என ஒருவர் தருமனை நோக்கி கூவினார். “பரிமாறவேண்டியதுதான்! உடனே!” என இன்னொரு குரல். அவர் விளம்புகலங்களை நோக்கி ஓடினார். அப்பால் ஓடைநீரில் கழுவப்பட்ட கலங்கள் வந்துகொண்டிருந்தன. அவற்றைக்கொண்டுசென்று நிறைகலங்கள் அருகே அடுக்கினார். அவற்றில் குழம்புகளையும் அன்னத்தையும் அப்பங்களையும் அள்ளிக்கொண்டு விளம்புகாரர்கள் பந்திகளுக்குச் சென்றனர். “குடிநீர் தொன்னைகள்!” என கூச்சலிட்டபடி ஒருவர் அன்னப்பந்தலில் இருந்து ஓடிவந்தார். தருமன் ஓடிச்சென்று தொன்னைகளை கலவறையிலிருந்து பெற்றுக்கொண்டு அன்னப்பந்தல் நோக்கி சென்றார். “விரைவு… இன்னும் கால்நாழிகையில் முதல்பந்தி!”

அவருடன் எட்டுபேர் வந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் காணவில்லை. எறும்புகள் போல தலைஎதிர் வந்ததும் ஒற்றைச்சொல் உரைத்து விலகினர். பந்தலில் நீண்ட எட்டு நிரைகளாக ஈச்ச ஓலைப்பாய்கள் சுருள் நீட்டி விரிக்கப்பட்டன. ஆறுநிரை சிவப்பும் இருநிரை வெண்மையும். பாய்களின் அருகே தைக்கப்பட்ட காட்டிலைகள் விழுந்து நீண்டு இலைமாலை போல எழுந்தன. தொன்னைகளில் குடிநீர் வைக்கப்பட்டது. விளம்புபவர்கள் எதையும் எண்ணாத கையுறுதியுடன் பணியாற்றினர். முதலில் உப்பு. பின் இனிப்பு. அதன்பின் ஒரு கனி. எளிய தொடுகறிகள். ஒவ்வொரு இலையும் வண்ணப்பொட்டுகள் கொள்ள நீண்ட இலைமாலையின் வண்ணம் மாறிக்கொண்டே இருந்தது. இளம்பச்சை இலைத்தொடர் வண்ணமலர்மாலை என ஆகியது.

“பந்தி அழைப்பு!” என்றார் ஒரு விளம்புகாரர் ஓடியபடியே. ஒருவர் தருமனை நோக்கி “முதியவரே, பந்தியழைப்பு!” என்று கூவிவிட்டு தொன்னைகளுடன் சென்றார். ஒருகணம் தயங்கிவிட்டு தருமன் வெளியே சென்று அங்கே கூடிநின்று கலைந்த பேரோசையென பேசிக்கொண்டிருந்த கூட்டத்திடம் கைகூப்பி “விருந்தினர்களே, அன்னம் உண்ண வரவேண்டும்… எங்களை வாழ்த்துகொள்ளச்செய்யவேண்டும்” என்றார். ஓர் இளைஞன் சென்று மரத்தாலான மணியை அடித்தான். அவ்வொலி கேட்டதும் அவர்கள் ஒருவர் இன்னொருவரை அழைத்துக்கொண்டு இயல்பாக ஒதுங்கி எட்டு நிரைகளாக அணி வகுத்தனர்.

முதலில் முதியவர்களும் இறுதியாக இளையோருமென அமைந்த அந்த நிரையின் தலையில் நின்றிருந்த முதியவரை பிரபவரின் முதிய மாணவர் ஒருவர் கால்தொட்டு சென்னி சூடி “வந்து அமர்க, மூத்தவரே!” என்றார். அவர் தலைதொட்டு வாழ்த்தியபின் உள்ளே சென்றார். தருமனும் இன்னொரு நிரை நின்ற முதியவரின் கலதொட்டு பணிந்து உள்ளே அழைத்துக்கொண்டுசென்றார். எட்டு நிரைகளாக உள்ளே வந்தவர்கள் ஓசையின்றி உடை சுருட்டி கால்மடித்து அமர பூவும்சருகுமாக நீர்நிறையும் வயல்போல அன்னசாலை வடக்குமூலையிலிருந்து நிரம்பியபடி வந்தது.

ஒருவர் “ஏன் இங்கே இத்தனை ஆட்கள்? கலங்கள் எங்கே?” என்றார். தருமன் “இதோ” அடுமனை நோக்கி ஓடினார். அங்கே அடுப்பிலிருந்து அடுகலங்களை காதுகளில் கயிறு கட்டி மூங்கில் ஊடே கொடுத்து தூக்கி ஊன்றுகோல் நாட்டி மெல்ல அசைத்து அப்பால் இறக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் உழைப்புக்கூச்சல் கூரையை முட்டியது. வியர்வை வழியும் முதுகுடன் பீமன் ஒருவனாகவே ஒரு செம்புக்கலத்தை தூக்கி இறக்கிவைத்தான். “மேலும் தட்டுகள்!” என ஒருவர் தருமனை நோக்கி கூவ அவர் ஓடை நோக்கி ஓடினார். “கலங்கள் உடனே வேண்டும்… இரண்டாம்நிலை உணவுகள் சென்றுகொண்டிருக்கின்றன! யாரங்கே?”

பிரபவர் வெளியே சென்று ஓடையருகே நின்று உடலில் இரண்டு தொன்னை நீரை அள்ளி விட்டு வியர்வையை கழுவிக்கொண்டு இன்னொரு மரவுரி ஆடையை அணிந்தபடி பந்திநோக்கச் சென்றார். அவருடன் சென்றபடி அவருடைய முதன்மை அணுக்கன் “எட்டுநிரைகள், நாநூற்றி எழுபத்தெட்டு இலைகள்… முதல் ஆறு நிரைகள் இரவுண்ணா அருகநெறியினர். ஆகவே அன்னமே போட்டுவிடலாமென எண்ணம்” என்றபடி அவருடன் சென்றார். அவர் தருமனை அறியா விழிகளுடன் நோக்கியபடி கடந்துசென்றார். ஊண்புரைகளில் கலங்கள் முட்டும் ஒலியும் உணவு கலங்கும் ஓசையும் மெல்லும் மூக்குறிஞ்சும் இருமும் கனைக்கும் ஓசைகளுடன் கலந்து ஒலித்தன. உண்ணும் ஒலி. அதை அவர் அப்போதுதான் கேட்பதாக உணர்ந்தார். அப்படி ஓர் ஓசை உலகில் உண்டென்றே அறிவதுபோல.

தருமனை நோக்கி வந்த ஒருவர் “தொன்னைகளும் இலைகளும் பந்திக்குச் செல்லவில்லை!” என்று கூவியபடி அகப்பைகளுடன் ஓடினார். தருமன் தொன்னைகளையும் இலைக்கட்டுகளையும் கொண்டுசென்று ஊண்நிரைகளுக்குப்பின்னால் நின்றிருந்த விளம்புகாரர்களுக்கு கொடுத்தார். “சுக்குநீர்! சுக்குநீர்!” என ஒரு குரல் எழுந்தது. அவர் ஓடிச்சென்று சுக்குநீர்க்குடங்களை தோளில் சுமந்துகொண்டுவந்து வைத்தார். அவை கொதித்துக்கொண்டிருந்தன. கரிந்த வாழையிலைகளைச் சுருட்டிவைத்து தோளில் ஏற்றிக்கொண்டபோதும்கூட தளும்பி தோளில் சொட்டி விதிர்க்கச்செய்தன.

“மறுபக்கம் அமர்வுக்கொட்டகைகளுக்கு வெற்றிலைச்சுருளும் நறுமணவாய்மங்கலங்களும் செல்லட்டும்… இதோ எழப்போகிறார்கள்” என்றபடி ஒருவர் அவரைக் கடந்து ஓடினார். வாய்மங்கலங்களை வெளிக்கொட்டகைக்குள் கொண்டுசென்று அடுக்கிவிட்டு அவர் வரும்போது ஓசையாலேயே முதல்பந்தி முடிந்தது தெரிந்தது. நிறைவான ஏப்பங்களும் மூச்சொலிகளும் எழுந்தன. முதியவர் ஒருவர் மெல்ல கனைத்ததும் அனைவரும் நிரையென எழுந்தனர். தொலைவிலிருந்து பார்த்தபோது அலையொன்று எழுவதுபோல் தெரிந்தது. அவர்கள் ஆடைகலையும் ஒலிகளுடன் எதுவும் பேசாமல் வெளிப்பாதையில் நடந்து கைகழுவும் ஓடையை நோக்கி சென்றனர்.

எச்சில்கைகளை இடைக்குக் கீழாக நீட்டியபடி நிரையாகச் சென்று தோண்டிகளிலும் தொன்னைகளிலும் நீரள்ளி அப்பால் சென்று கழுவினர். கழுவப்பட்ட நீர் வழிந்து அங்கே பாத்திகளாக விரிந்துகிடந்த கீரைக்கொல்லை நோக்கி சென்றது. கலந்து உண்ணப்பட்டதுமே உணவின் மணம் எச்சிலின் மணமாக ஆகிவிட்ட விந்தையை அவர் உணர்ந்தார். எச்சில் இலைகள் சீராக மடிக்கப்பட்டு கிடந்தன. இலைகளை எடுப்பவர்கள் பெரிய கூடைகளுடன் வந்தனர். “விரைவு! இலையகற்றுக!” என கூவியபடி ஒருவர் அப்பால் சென்றார். தருமன் அவர்களுடன் இணைந்துகொண்டார்.

முதல் இலையைத் தொட்டு வணங்கியபின் எடுத்து கூடையிலிட்டார். இருபக்கமும் கை நீட்டி இலைகளை எடுத்து கூடையிலிட்டபடியே சென்றார்கள். இலைகள் நிறைந்ததும் கூடைகளைத் தோளிலேற்றி வெளியேகொண்டுசென்று அங்கே நின்றிருந்த அத்திரிகளின் மேல் கட்டினர். அவை கால்மாற்றி எடை ஏற்றுக்கொண்டபின் தும்மி பிடரி சிலிர்த்து சரிவிறங்கி காட்டுக்குள் செல்லும் பாதையில் சென்றன. தருமன் அடுமனைக்குள் சென்று அங்கிருந்து வந்த முதுமாணவரிடம் “பெரும்பாலும் கீரைக்கூட்டு இலைகளில் எஞ்சியிருந்தது. கிழங்கு அப்பமும் ஓரளவு எஞ்சியிருந்தது” என்றார். “கீரையையும் கிழங்கையும் நோக்குக!” என அவர் அடுமனையாளர்களுக்கு ஆணையிட்டார்.

“இரண்டாம்பந்தி தொடங்குகிறது, வெயில் எழுவதற்குள் மூன்றாம் பந்தி முடிந்தாகவேண்டும்” என்று ஆணை ஒன்று ஒலித்தது. “குந்திரிக்கம் செல்க!” என்று ஒருவர் ஒரு பொட்டலத்தை அளித்தார். தருமன் பந்திக்கு ஓடினார். “குந்திரிக்கமா?” என ஒருவர் அதை பெற்றுக்கொண்டு இலைகளும் பாய்களும் அகற்றி தூய்மைப்படுத்தப்பட்ட பந்தியில் புகையிட்டு உணவுமணத்தை அகற்றினார். உணவுச்சிதறல்களுக்காக தேடிவந்திருந்த ஈக்களும் அகன்றன. “அடுத்தபந்தி தொடங்குகிறது. இலைகள், தொன்னைகள்!” என்றார் ஒருவர். தருமன் மீண்டும் அடுமனை நோக்கி ஓடினார். அவர் எதிரே நகுலன் ஒரு பொதியுடன் வந்து கடந்துசென்றான்.

இலைப்பொதிகளை கொண்டுசென்று முடித்ததும் அடுமனையாளர் அவரிடம் “நான்காம்பந்திக்கு மேலும் கிழங்குகள் தேவைப்படும்” என்றார். அவர் சென்று அர்ஜுனனிடம் அதைச் சொன்னபோது “மூன்றுமூட்டை கிழங்குகள் உடனே வரவேண்டும். இன்கிழங்குகள் வேண்டாம்!” என அவர் முகம் நோக்கி ஆளறியாமல் சொன்னான். அவர் “ஆம்… இதோ” என கலவறை நோக்கி ஓடினார். அடுத்தபந்திக்கான உணவுக்கலங்கள் சென்றுகொண்டிருந்தன. ஒழிந்த அண்டாக்களையும் நிலைவாய்களையும் வளைவாய்களையும் நீர் ஊற்றி அலம்பி அப்பால் சென்ற ஓடையில் கொட்டிவிட்டு மீண்டும் கயிறுகட்டித் தூக்கி அடுப்பில் ஏற்றினர். “விறகு! எரி எழுக!” என்று பீமனின் குரல் கேட்டது. தருமன் வெளியே சென்று விறகுக்குவைகள் அருகே நின்றவர்களிடம் “விறகு!” என்றார். “இதோ” என அவன் சொல்லி விறகுகளை அள்ளி கொண்டுசென்றான். அவரும் விறகுடன் உடன் சென்றார்.

ஐந்தாம் பந்தி அரையளவே இருந்தது. அதன் இலைகளை அவரே எடுத்தார். அத்திரிகள் இலைகளுடன் சென்றதை நோக்கிவிட்டு அடுமனைக்கு வந்தபோது அது முழுமையாக ஓய்ந்து அமைதிகொண்டிருப்பதைக் கண்டு திகைத்தார். அத்தனை ஒழிந்த கலங்களும் திறந்து கிடந்தன. உணவுக்கலங்கள் மூடிவைக்கப்பட்டு விளிம்புகளில் ஆவி உமிழ்ந்தன. சற்றுமுன்புவரை சிறுகுன்றென குவிந்து வாழையிலையால் மூடப்பட்டிருந்த அன்னம் இருந்த இடத்தில் ஈச்சையோலைப் பாய் மட்டும் பரந்திருந்தது. உணவின் கலவைமணம். ஆனால் அப்போதுகூட அது எச்சில்மணமாக இல்லை, உண்ணத்தூண்டும் மணமாகவே இருந்தது. அடுப்புகளுக்குள் அனல் இளங்காற்றில் சீறிக்கொண்டிருந்தது.

குறுக்காகச் சென்ற ஒருவன் அவரை அடையாளம் கண்டு “அரசே, நீங்களா? உணவருந்தினீர்களா?” என்றார். “இல்லை” என்றார் தருமன். “அங்கே பின்கொட்டிலில் உணவருந்துகிறார்கள். தாங்கள் உள்ளறையில் அமர்ந்தால் நான் உணவுகொண்டுவருகிறேன்” என்றான் அவன். “நான் பின்கொட்டிலில் உணவருந்துகிறேன்…” என்றபின் அவர் வெளியே சென்று ஓடையில் கைகால்களை கழுவிக்கொண்டார். உடம்பு முழுக்க வியர்வை வழிந்து உப்பரித்திருந்தது. அத்தனை தசைகளும் வலியுடன் தளரத்தொடங்கின. அப்படி ஒரு பசியை அதற்கு முன் உணர்ந்ததே இல்லை என்று தோன்றியது.

பசி என எண்ணியதுமே பசி பற்றி எரியலாயிற்று. அடுமனைப் பின்கொட்டில் நோக்கி செல்லும்போது ஒவ்வொரு காலடிக்கும் பசி மேலெழுந்து உடல் எரிகொள்ளி போல தழல்கொண்டது. கொட்டிலில் அடுமனையில் பணியாற்றிய அனைவரும் கலைந்த நிரைகளாக அமர்ந்திருந்தனர். அன்னமும் அப்பமும் கூட்டும் குழம்புமாக எஞ்சிய உணவு மரக்குடைவுக் கலங்களில் குவிக்கப்பட்டு அவர்கள் நடுவே வைக்கப்பட்டிருக்க அவர்களே அதை நீண்ட அகப்பைகளால் அள்ளி தங்கள் தொன்னைகளில் போட்டு கலந்து உண்டனர். பனையோலையாலும் கமுகுப்பாளையாலும் மரப்பட்டைகளாலுமான பெரிய தொன்னைகளின் குவியல்களில் இருந்து ஒன்றை எடுத்துக்கொண்டு தருமன் உணவுத்தாலத்தை அணுகி அன்னமும் அப்பமும் குழம்பும் கூட்டுமென அனைத்தையும் அள்ளி வைத்துக்கொண்டார்.

வேறு எவரையும் நோக்க விழி கூடவில்லை. சித்தம் ஐம்புலன்களை ஆண்டு உணவின் மேல் படிந்திருந்தது. விரைவாக அள்ளி உண்டபோது அவையனைத்தும் ஒன்றெனக் கலந்தன. தனிச்சுவைகள் மறைய அறியாத புதுச்சுவை ஒன்று நாக்கை துடிக்கச்செய்தது. அனல்மேல் உணவுவிழுந்து அமையும் தண்மை. அதை குருதி உடலெங்கும் கொண்டுசெல்ல பதறித்துடித்த தசைச்சரடுகள் இழுவையிழந்து தளர்ந்தன. அடிபட்ட நாகமென துடித்த அடிவயிற்றுத் தசைகள் சொக்கி சுருளவிழ்ந்தன. உணவை உடலே ஒருங்கிணைந்து உண்ணும் உவகையை அன்று அறிந்தார். கனவு என, ஊழ்கமென.

ஓர் எல்லையில் உணவால் உடல் நிறைந்த உணர்வு எழுந்தது. வெளியே சென்று கைகால்களை கழுவிக்கொண்டு உடம்பில்மேலும் நீரள்ளிவிட்டு உப்பை தூய்மைசெய்துகொண்டார். உணவுண்ட அடுமனையாளர்கள் அனைவருமே மதுக்களிகொண்டவர்கள் போல விழிபாதிமூட கால்கள் தளர நடந்தனர். உள்ளே சென்று அங்கு குவிக்கப்பட்டிருந்த மரவுரிப்பொதிகள், கொடிச்சுருள் கூடைகளின் குவியலை அடைந்து சாய்ந்துகொண்டபோது விழியிமைகள் உருகி வழிந்து ஒட்டிக்கொண்டதுபோல துயில் வந்து அழுத்தியது.

எவரோ “அடுத்த பந்திக்கு பன்னிருநிலவாய் அன்னம் தேவை என்றார் ஆசிரியர்” என்றார். “பிருஹதாரண்யகத்தில் பெருவேள்வி. அங்கு செல்கிறார்கள்” என இன்னொருவர் சொன்னார். அப்பால் கேட்ட ஒரு குறட்டை ஒலி நகுலனுடையது போலிருந்தது. அவர் தன் முகம் மலர்ந்திருப்பதை தானே உணர்ந்தார். ஏன் புன்னகைக்கிறேன்? காட்டுக்குக் கிளம்பியபின்னர் முதல்முறையாக என் முகம் இப்படி மலர்ந்திருக்கிறது. நான் எதை எண்ணிக்கொண்டிருந்தேன்? எண்ணிக்கொள்ளவே இல்லை. விரையும் புரவியை பற்றிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு கணமும் முன்பின் இல்லாதது. எண்ணங்களால் மறைக்கப்படாதபோது கணங்கள் எத்தனை முழுமைகொள்கின்றன! உணவுசூழ இருந்தேன், ஒரு கணமும் பசியை உணரவில்லை.

பசியுடன் உணவுண்பவர்கள் ஏன் அப்படி தவிக்கிறார்கள்? காதலியை காணச்செல்பவர்கள் போல. கண்டு முத்தமிடுபவர்கள் போல. உடல்சேர்ந்து ஒன்றாக விழைபவர்கள் போல. உண்டு எழும் நிறைவில் அவர்கள் மானுடர் அடையும் உச்சமொன்றில் இருக்கிறார்கள். அதுவரை ஒருவரோடொருவர் எத்தனை பேச்சு! எவ்வளவு முறைமைச்சொற்கள்! பிறரை மதித்தல், தான் மதிக்கப்படுகிறோமா என கண்காணித்தல். உண்டபின் முழுத்தனிமை. தனிமையில் மட்டுமே எழும் எண்ணங்கள். தனிமைகொண்டவர்களுக்கு இசைகேட்பவர்களின் முகம் எப்படி அமைகிறது? அல்லது இசைகேட்பவர்கள் தனிமையில் இருக்கிறார்களா என்ன?

சற்றுநேரம்தான் துயின்றிருப்பார். மரத்தாலான மணி ஒலித்து எழுப்பியபோது உடல் மீண்டுவந்திருந்தது. எழுந்தபோது ஊழ்கம் விட்டெழுந்த புத்துணர்வு. “அடுமனையாளர்கள் செல்க!” என்று ஆணை ஒலித்தது. பீமன் மிகப்பெரிய சல்லரி ஒன்றை வலக்கையிலும் மரப்பிடி கொண்ட சட்டுவத்தை இடக்கையிலும் ஏந்தியபடி செல்வதைக் கண்டார். அர்ஜுனன் முன்னரே காய்கறிவெட்டுமிடத்தில் விரைவுகொண்டிருந்தான். வெளியே விறகுடன் நின்றிருந்த அத்திரிகளையும் கழுதைகளையும் வெறும்கையசைவாலேயே நிரைவகுக்கச்செய்து கொண்டுவந்தான் நகுலன். நினைவிலிருந்தே அத்தனை களஞ்சியக் கணக்குகளையும் தொகுத்து ஓலையில் பொறித்து அடுக்கிவிட்டு மீண்டும் பொருள் அளிக்கத் தொடங்கியிருந்தான் சகதேவன். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறன். பாண்டவர்களில் அவர் மட்டுமே பிறர் ஆணைகேட்டு பணியாற்றுபவராக இருந்தார்.

மீண்டும் பணியில் பொருத்திக்கொண்டபோது அனைத்தும் முன்னரே வகுக்கப்பட்டிருந்ததை உணரமுடிந்தது. முந்தையமுறையைவிட உழைப்பு எளிதாக இருந்தது. வெளியே உணவுப்பந்தல் நிறைந்து ஒழிந்து நிறைந்தது. வெயில் சரிந்து நிமிர்ந்து மீண்டும் சரிந்தது. மாலையானதும் அப்பொழுதுக்குரிய அடுமனைப்பணியாளர்கள் துயிலெழுந்து நீராடி வந்துசேர்ந்தனர். முன்பிருந்தவர்கள் களைத்த உடலுடன் அவர்களை நோக்கி வாழ்த்துரைத்தனர். அவர்கள் கேலியுடன் சீண்டி சொல்லாடினர். தருமன் நகுலனுடன் காட்டுக்குள் நடந்தார். கால்தளர இருமுறை நிற்கவேண்டியிருந்தது. “இங்கேயே ஏதாவது மரநிழலில் துயிலலாம் என்றுகூட தோன்றுகிறது, இளையோனே. நாகம் ஏறிக்கடந்துசென்றால்கூடத் தெரியாது” என்றார் தருமன். “உண்ணுதல் இத்தனைபெரிய வேள்வி என இன்றுதான் அறிந்தேன், மூத்தவரே” என்றான் நகுலன். சகதேவன் “உண்ணல் அல்ல சுவை. சித்தமோ நாவோ விழியோ செவியோ சுவை என உள்ளவை அனைத்தும் பெரும் உழைப்பால் உருவாக்கப்படுபவையே” என்றான்.

நகுலன் “ஆம், முரசறைபவர்களை நோக்கும்போது மண்வெட்டி பற்றுபவர்களைவிட மும்மடங்கு உழைப்பு என நான் எண்ணிக்கொள்வதுண்டு” என்றான். “சுவை என்பது என்ன? இப்புவியின் பருப்பொருட்களில் உள்ளுறைந்துள்ள நுண்மை ஒன்றை பிரித்தெடுக்கும் முயற்சி அல்லவா? இந்த புளிக்காயிலிருந்து புளிப்பை. அந்த விளாங்காயிலிருந்து துவர்ப்பை. யாழிலிருந்து இசையை. அவற்றைக் கலந்து கலந்து அவையனைத்துமாகி நின்றிருக்கும் ஒன்றை சென்றடைகிறோம்” என்றான் சகதேவன்.. அவனே வெடித்துச் சிரித்து “மீண்டும் பிரம்மத்திற்கே வந்துவிட்டோம்!” என்றான்.

நகுலனும் சிரித்து “விளாங்காயின் துவர்ப்பையும் யாழின் செம்பாலைப்பண்ணையும் இணைக்கும் ஒரு கலை உருவாகவேண்டும். அதுதான் பிரம்மத்தை அறியும் வழி” என்றான். “மூத்தவர் பீமனிடம் கேட்டால் சொல்லக்கூடும். ஒருமுறை வங்கநாட்டு இசைஞன் ஒருவனின் குழலோசையைக் கேட்டு மிகவும் புளிக்கிறது இளையோனே என என்னிடம் சொன்னார்” என்றான் சகதேவன். “ஆம், முரசின் ஓசைக்கு மத்தகம் இருக்கிறது என்று ஒருமுறை அவர் சொன்னார். அவர் புலன்களுக்கு சித்தத்தின் துணையில்லாமல் ஒன்றுடன் ஒன்று உரையாடிக்கொள்ளமுடியும்.” அவர்கள் சிரித்துக்கொண்டே வர தருமன் அச்சொற்களைக் கேட்டும் உளம்கொள்ளாமல் நடந்தார்.

சூழ்ந்திருந்த சாறிலைச் செடிகளில் இருந்து குளிர் பரப்பிய சிற்றாறு இருண்ட நீர்கொண்டிருந்தது. அதில் இறங்கியபோதுதான் உடல் எத்தனை வெம்மைகொண்டிருந்தது என புரிந்தது. அத்தனை வெம்மையையும் அது தன்னுள் இருந்தே எடுத்திருக்கிறது. நீராட நீராட உள்ளிருந்து வெம்மை எழுந்து தோலுக்கு வந்துகொண்டே இருந்தது. நெடுநேரம் கழித்து காதுமடல்கள் குளிரத் தொடங்கின. பின்பு மூக்குநுனிகள். அப்போதும் உடலுக்குள் வெப்பமிருந்தது. அதைத்தணிப்பவர்போல அவர் நீரை அள்ளி துப்பிக்கொண்டே இருந்தார். நடுக்கம் தொடங்கியபோதுதான் கரையேறத் தோன்றியது. விழிகள் அனல்கொண்டவைபோல எரிந்தன. அப்பால் காட்டுக்குள் சென்று மீண்ட நகுலன் “அமிலமென வருகிறது சிறுநீர்” என்றான். “நன்று, குருதியிலிருந்து வெம்மை அகல்கிறது” என்றான் சகதேவன்.

கொட்டகையை அடைந்தபோது அவர் அரைத்துயிலில் இருந்தார். அந்தி வணக்கம் முடித்து அந்தணர்கள் வந்துசேரவில்லை. உணவுண்டு ஓய்வெடுத்து மறுநாள் புலரியிலேயே கிளம்ப முனையும் வணிகர்கள்தான் கட்டில்களில் படுத்து துயின்றுகொண்டிருந்தார்கள். அவர்களின் பொதிகளும் கூடைகளும் தரையெங்கும் நிறைந்திருந்தன. அவ்வேளையிலேயே கட்டில்களிலிருந்து குறட்டை ஓசை கேட்டது. தருமன் தன் மஞ்சத்தை அடைந்து உடலை சரித்தார். அக்கணமே அத்தனை மூட்டுகளும் பொருத்து அவிழ்ந்தன. உடல் பல துண்டுகளாக ஆகி மரவுரிமேல் படிந்தது. நகுலன் ஆடைகளை மடித்துவைத்துவிட்டு அருகே கட்டிலில் படுத்தான்.

அருகே கட்டில்களை சேர்த்துப்போட்டு அமர்ந்திருந்த வணிகர்குழு ஒன்று உரத்தகுரலில் உரையாடிக்கொண்டிருந்தது. அவர்களின் நடுவே அமர்ந்திருந்த பெரிய வெண்தலைப்பாகை அணிந்த மனிதர் புலவர்போல தெரிந்தார். “மூன்றியல்புகளால் ஆன இவ்வியற்கையின் ஒவ்வொரு பொருளும் முதலியற்கையின் சிறுவடிவே. பொருளென்பது பொருண்மையென்றான நிலை. எதிர், நிகர் இயல்புகளின் தொகைக்குமேல் அமர்ந்த நோக்கன். நோக்கனின் கூறு உள்ளுறையாத பொருள் இல்லை. நோக்கன் விலகுகையில் பொருள் தன் பொருண்மைக்குப் பொருள்கொடுக்கும் அடிப்படையை இழந்துவிடுகிறது.”

“அப்போது பொருள் இருக்குமா?” என்று ஒருவன் கேட்டான். சாங்கியர் “பொருள் என்றுமிருக்கும். ஆனால் அதை பொருளெனக் காட்டும் எவ்வியல்பும் இருக்காது” என்றார். புன்னகையுடன் “அறியப்படாத பொருளின் இருப்பென்பது என்ன?” என்று கேட்டார் . சூழ இருந்தவர்கள் அவர் சொல்லுக்காக காத்தனர். “ஒருவராலும் ஒருபோதும் அறியப்படாதது இருப்பா இன்மையா?” என்று மீண்டும் சாங்கியர் கேட்டார். “அது இருப்பு என அறியப்படுவதற்கான வாய்ப்பு” என்றார் அப்பால் ஒருவர். “நீங்கள் சூனியவாதிபோலும்” என்றார் சாங்கியர். “ஆம், என்றோ ஒருநாள் எவ்வண்ணமேனும் இருப்பென அறியப்பட வாய்ப்பற்றதே இன்மை.”

“இன்மையென்பது ஓர் அறிதல். இருப்பென்பதும் ஓர் அறிதலென்பதனால் இன்மையும் ஒரு இருப்பே” என்றார் இன்னொருவர். “வேதாந்திகள் வந்துசேராமல் சொல்லாடல் முழுமையடைவதில்லை” என்று நகுலன் சொன்னான். “சொல்புகாவிட்டால் வேதாந்திகள் இல்லையென்றாகிவிடுவார்கள். கண்ணுக்கு அசைவும் வேதாந்திக்கு சொல்லாடலும்” என்றான் சகதேவன். “சாங்கியரே, அறியும்தன்னிலை பொருளில் கலந்த இயல்பிலியா என்ன? இல்லை எதிர்நிலையை அது காண்கையில் தான் மறுநிலையென்றாகிறதா? அது மறுநிலை என்றாவதனால் அவ்வெதிர்நிலை உருவாகிறதா?” என்றார் வேதாந்தி “அறிபடுபொருளை ஆக்குவது அறிவே. அறிவென்றாகி அதை ஆக்குகிறது அறிபடுபொருள்” அவர் தொடர்ந்தார்.

நகுலன் “இன்னும் எட்டுச் சொற்றொடர்களில் பூனை நான்குகால்களில் நிலம்தொட்டுவிடும்” என்றான். வேதாந்தி “இடக்கையால் அறிபொருளையும் வலக்கையால் அறிபவனையும் ஆக்கி நடுவே நின்றுள்ளது அறிவு” என்றார். நகுலன் “இரண்டு” என்றான். சகதேவன் சிரித்தான். வேதாந்தி “ஆகவே வெறுமையென்றிருப்பதும் அறிவென்றாகும் வாய்ப்புள்ளதே. அறிவென்றாகும் வாய்ப்பில்லாத எதுவும் இங்கு எஞ்சமுடியாது” என்றார். நகுலன் “மூன்று” என்றான். தருமன் “இளையோனே” என்றார். நகுலன் “இல்லை” என்றான். “துயில்கொள். இந்தச்சொற்கள் நமக்கெதற்கு. நாம் நாளை புலரியில் எழுந்து அடுமனைக்குச் செல்லவேண்டியவர்கள்” என்றார் தருமன்.

“அறிவென்றாகி தன்னைக் காட்டுவதனாலேயே முடிவிலிகூட இருப்பு கொள்கிறது” என்று வேதாந்தி சொன்னார். தருமன் கண்களைமூடிக்கொண்டு இமைகளுக்குள் அவ்வோசையை செந்நிறச் சிறுகுமிழிகளாக நோக்கிக்கொண்டிருந்தார். “அறிவென்றாகும்போது அது குறைகிறதா என்பதே அடுத்த வினா.” அறிவு. எவருடையது? நான் அறிந்துகொண்டே இருப்பவை என்னுள் எங்குசெல்கின்றன? திரண்டு புது அறிவை யாக்கின்றன என்றால் நானறியும் அறிவே நான் திரட்டிக்கொள்வதா? தன் குறட்டை ஒலியை தானே கேட்டு விழித்துக்கொண்டு வாயைத் துடைத்தபடி திரும்பிப்படுத்ததையே இறுதியாக அவர் பிரக்ஞை அறிந்தது.

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 50

[ 4 ]

தொல்புகழ்கொண்ட இக்‌ஷுவாகு குலத்தில் சுத்யும்னனுக்கு மைந்தனாகப் பிறந்தவன் யுவனாஸ்வன் என்னும் அரசன். குருதி ஓயாத கொடுவாள் கொண்டவன் என அவன் புகழ்பாடினர் சூதர். பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறுநாட்டு அரசரையும் அவன் அடிபணியச் செய்தான். அதன்பின்னரும் வெற்றிக்கான விடாய் ஓயாது மேலும் மேலுமென்று எழுந்தது அவன் உள்ளம். இரவுகள்தோறும் தன்னைப் பணியாத அரசர்களை வெல்வதைப்பற்றி கனவு கண்டான். அவர்களை வெல்லும் வழிதேடி போர்சூழ்கைகள் வகுத்தான். பகலில் தான் வென்ற நிலத்தின் மக்களுக்கு நீரும் அறமும் சீராகக் கிடைக்கும்படி கோல் நிறுத்தினான். பிறிதொரு எண்ணமே அவனுக்கு இருக்கவில்லை.

யுவனாஸ்வன் ஒன்பது மனைவியரை மணந்து பன்னிரு ஆண்டுகாலம் இல்லறம் நடத்தியும் அவனுக்கு மைந்தர் பிறக்கவில்லை. மணிமுடிக்கென மைந்தர் வேண்டுமென அவனிடம் அமைச்சர்கள் சொன்னபோது அதை அரசுசூழ்தலென்றே அவன் எடுத்துக்கொண்டான். தங்கள் மடியிலாட மகவுகள் தேவை என்று மனைவியர் சொன்னபோது அதை பெண்டிரின் இயல்பு என்று மட்டுமே புரிந்துகொண்டன். நாளும்பொழுதும் களம் வகுப்பதிலும் அரசு சூழ்வதிலும் அறமுரைப்பதிலுமே ஈடுபட்டிருந்தான். ஓயாது போரை எண்ணியிருந்தமையால் அவன் முகம் கற்சிலை போலிருந்தது. அசைவுகள் இரும்புப்பாவை போலிருந்தன. விழிகளில் முகமறியும் நோக்கே இருக்கவில்லை. குருதிபலி கோரும் கொடுந்தெய்வம் என்றே அவனை உணர்ந்தனர் சுற்றமும் சூழரும்.

கல் கனியாது அனல் பிறப்பதில்லை என்று நிமித்திகர் சொன்னார்கள். அரசனுக்கு மைந்தன் பிறக்கவேண்டுமென்றால் அவன் நெஞ்சு நெகிழவேண்டும். உடல் மென்மை கொள்ளவேண்டும். மண்ணில் பிறக்க விழையும் குழவியர் விண்ணில் நின்று கீழே நோக்குகிறார்கள். அருந்தவம் இயற்றுபவர்களையே அவர்கள் தேர்வுசெய்கிறார்கள். உளம்கனிந்த மடிகளிலேயே வந்து பிறக்கிறார்கள். இப்புவியில் நன்றோ தீதோ கோரப்படாது அளிக்கப்படுவதில்லை. மைந்தருக்கான பெருவிடாயை அவனுள் நிறைக்கவேண்டுமென அமைச்சர் விழைந்தனர். அவன் உடல் வேள்விக்குளமாக வேண்டும். அதில் விழைவெரியவேண்டும். ஆணவம் ஆகுதியாகவேண்டும்.

ஒருமுறை இரவுலாவச் சென்றபோது கால்களைத்து யுவனாஸ்வன் ஓர் அரசமரத்தடியில் தனித்து ஓய்வெடுக்கையில் முன்னரே அமைச்சர்கள் செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி எளிய சூதர்மகள் ஒருத்தி சற்றுமுன் பிறந்த தன் மகனுடன் அப்பால் படுத்திருந்தாள். காய்ச்சலுக்கான நச்சுமருந்து புகட்டப்பட்ட அவள் நோயுற்று மயங்கிக்கிடக்க அந்தக் குழந்தை வீரிட்டழத்தொடங்கியது. அவ்வொலியை முதலில் யுவனாஸ்வன் ஏதோ பறவை ஒலியென எண்ணினான். பின்னரே குழவியின் அழுகையென அறிந்தான். குழவிக்குரல்கள் எப்போதும் மானுடத்தை நோக்கியே எழுகின்றன, வேண்டுகின்றன, ஆணையிடுகின்றன, சீறுகின்றன. அதை ஒவ்வொருவரும் தங்களுக்கான தனிக்குரல் என்றே உணர்கின்றனர்.

செவிகுத்தும் அதன் அழுகையைக் கேட்டு அமர்ந்திருக்கமுடியாமல் அவன் எழுந்துசென்று நோக்கினான். அத்தனை தொலைவுக்கு அச்சிறிய குழந்தையின் குரல் வந்துசேர்ந்திருப்பதை உணர்ந்து வியந்தான். சருகில் கிடந்து குழந்தை செவ்விதழ்ச் செப்பு கோண கூவியழுதது. அங்கே சூதர்மகள் காய்ச்சல்கண்டு சுருண்டுகிடப்பதையும் குழவி அழுகையால் உடல்சிவந்து கைகால்கள் இழுபட்டு அதிர்ந்துகொண்டிருக்க தொண்டைதெரிய ஓசையிடுவதையும் கண்டான். தன் அமைச்சர்கள் வருகிறார்களா என வழிகளை பார்த்தான். அவர்கள் நீர்கொணரச் சென்றிருந்தனர். ஏவலரும் உடனில்லை.

அவன் அச்சூதமகளை காலால் மிதித்து எழுப்பினான். அவள் தன்னுணர்வில்லாத காய்ச்சலில் நடுங்கிக்கொண்டிருந்தாள். உதடுகள் உலர்ந்து ஒட்டியிருந்தன. மூச்சில் முலைக்குவைகள் எழுந்து அடங்கின. மெலிந்த உடல் அலைபாய்ந்தது. அழுது துடித்த குழவி ஓசையின்றி வலிப்புகொள்ளத் தொடங்கியது. யுவனாஸ்வன் அதை கையிலெடுத்தான். வாழைத்தளிர்போல அது கைகளில் குழைந்தது. மென்பட்டென வழுக்கியது. சுடர்துடிக்கும் அகல் என பதறச்செய்தது. அதை கையிலேந்திபோது கைகளுடன் கால்களும் நடுங்கின. அதை கீழே போட்டுவிடக்கூடாதென்று எண்ணி நெஞ்சோடணைத்துக்கொண்டான்.

நெஞ்சில் அதன் நெஞ்சத்துடிப்பை உணரமுடிந்தது. ததும்பும் சிறுகலம் என அதை ஏந்தியபடி அவன் அங்குமிங்கும் நிலையழிந்தான். என்ன செய்வதென்றறியாமல் சூழநோக்கினான். அவன் நெஞ்சத்துடிப்பை உடலால் உணர்ந்த அக்குழவி தன் கைகளால் அவன் மார்பின் முடியைப் பற்றிக்கொண்டது. பறவைக்குஞ்சுபோல நகம் நீண்ட அதன் கைகள் அவன் உடலைப் பற்றியபோது அவன் சிலிர்த்தான். அதை கையிலெடுத்தபோதே கனியும் கொஞ்சும் மன்றாடும் உளக்குரல் தன்னுள் ஊறியதை அறிந்தான். அக்குழவி அதை அறிந்து அழுகையை நிறுத்திவிட்டு தன் உடலை நெளித்து எம்பி தவிக்கும் வாயைக் குவித்து அவன் முலைக்கண்களைக் கவ்வி சப்பியது.

கூசித்திகைத்து அவன் பின்னடைந்தாலும் அது தன் வாயை எடுக்கவில்லை. அவன் மெய்விதிர்க்க சிலகணங்கள் நின்றான். தளர்ந்த கால்களுடன் மெல்ல பின்னடைந்து வேர்களில் அமர்ந்துகொண்டான். அவன் கண்கள் கலங்கி வழியலாயின. உடல் மெய்ப்புகொண்டு குளிர்ந்தடங்கி மீண்டும் அதிர்ந்து எழுந்தது. ஆழப்புண்பட்ட துளைவழியாக தன் குருதி வடிந்தோடுவதைப்போல உணர்ந்தான். முழுக்குருதியும் வழிந்தோட உடல் எடையழிந்து ஒழிவதாகத் தோன்றியது. கைகால்கள் இனிய களைப்பால் தொய்ந்தன. விழியிமைகள் சரிந்து ஆழ்துயில்போல ஒன்று அவனை ஆட்கொண்டது. அதில் அவன் பெண்ணென இருந்தான். அவன் கைகள் குழவியின் புன்மயிர்த்தலையை தடவிக்கொண்டிருந்தன.

அகலே நின்று நோக்கிய அமைச்சர்கள் ஓடி அருகணைந்தனர். முலையுறிஞ்சிக்கொண்டிருந்த குழந்தையை எடுத்து கொண்டுவந்திருந்த பாலை துணியில் நனைத்து ஊட்டினர். அந்நேரமும் அதை பிரியமுடியாதவனாக அவன் எழுந்து அதை நோக்கி கைநீட்டினான். அரண்மனைக்குக் கொண்டுசெல்லும்போது அக்குழவியை தன் கையிலேயே வைத்திருந்தான். அவன் மடியிலேயே அது உறங்கியது. இரவு தன்னருகே படுக்கவைத்து அதை தடவிக்கொண்டிருந்தான். தன் முலைக்கண்கள் ஊறுகிறதா என்றே ஐயம்கொண்டான். மீண்டும் இருளில் அதன் வாயில் முலைக்கண்களை அளித்து உடல் உருகலானான்.

அன்னை நோய்நீங்கி மறுநாள் விழித்ததுமே அக்குழவியை கேட்டாள். அவளை என்னருகே வந்தமர்ந்து முலையூட்டச்சொல் என்றான் அரசன். அவள் தன் குழந்தையைக் காண அரசனின் அறைக்குள் வந்தாள். அங்கு உடல்குறுக்கி அமர்ந்து முலையளித்தாள். குழவியை தன் அருகே இருந்து விலக்க அரசன் ஒப்புக்கொள்ளவில்லை. அரசப்பணியையும் நெறிகாத்தலையும் குழவியை கையிலேந்தியபடியே செய்தான். தனித்திருக்கையில் புவியில் பிறிதொன்றில்லை என்பதுபோல அக்குழவியையே நோக்கிக்கொண்டிருந்தான். கைவிரல்களால் ஓயாது வருடியும் மீளமீள முகர்ந்தும் அதை பார்த்தான். அதன் மென்தசையை முத்தமிட்டுச் சுவைத்தான். அதன் மூச்சொலி காதில்கேட்க காதுகளில் பிஞ்சுவயிற்றை சேர்த்துக்கொண்டான்.

பன்னிரு நாட்களுக்குப்பின் ஒருநாள் அமைச்சர் அக்குழவியையும் அன்னையையும் இரவிலேயே அரசனிடமிருந்து பிரித்து அவர்களின் அரச எல்லைக்கு அப்பால் கொண்டுசென்றுவிட்டனர். முகமறியா மக்கள்திரளில் அவள் முழுமையாக கலந்து மறையும்படி செய்தனர். விடிகாலையில் விழிப்புகொண்ட அரசன் அறியாமலேயே கைநீட்டி குழந்தையைத் துழாவி அதைக் காணாமல் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான். “எங்கே? என் குழந்தை எங்கே?” என்று கூவியபடி அரண்மனை இடைநாழிகளில் பித்தனைப்போல ஓடினான். எதிர்ப்படுபவர்கள் அனைவரிடமும் குழந்தையைப்பற்றி கேட்டு அழுதான். தூண்களை ஓங்கி மிதித்தான். ஏவலரை அறைந்தான்.

குழந்தையும் அன்னையும் மறைந்துவிட்டிருப்பதை உணர்ந்ததும் மேலாடை இல்லாமல் முற்றத்தில் இறங்கி கூவியபடி ஓடிய அவனை அமைச்சர் பற்றிக்கொண்டுவந்தனர். அவனிடம் மெல்ல மெல்ல அவர்களை மீண்டும் காணமுடியாது என்று சொல்லி புரியவைத்தனர். “அது அவள் குழந்தை. அன்னை தன் குழவியை இன்னொருவருக்கு விட்டுத்தரமாட்டாள். அரசன் ஆயினும். பேரன்புடையவன் ஆயினும். அவள் தப்பிச் செல்வது இயல்புதான். அரசே, உங்கள் உடலில் எழுந்த மைந்தரே உங்களுக்குரியவர்கள்” என்றனர்.

அழுது அரற்றியும் பித்தன்போல புலம்பியும் ஏங்கி சொல்லிழந்தும் அவன் அரண்மனையில் இருந்தான். அவன் தேவியர் அவனை தேற்றமுடியவில்லை. அவன் எவரும் தன்னருகே வருவதை விரும்பவில்லை. அக்குழவியின் ஆடைகளை எடுத்து நெஞ்சோடணைத்துக்கொண்டான். அது படுத்திருந்த மெத்தையின் மெல்லிய குழியை வருடி வருடி கண்ணீர்விட்டான். நாளும் அவன் துயர் ஏறிஏறிச் சென்றது. அதன் உச்சியில் அத்துயர் மறுபுரிச்சுழற்சி கொண்டது. ஏழாம்நாள் அவன் அரைத்துயிலில் இருந்தபோது தன்னருகே குழவி இருப்பதை உடலால் உணர்ந்தான்.

SOLVALARKAADU_EPI_50

விழிதிறந்தாலோ கைநீட்டினாலோ அது கலைந்துவிடுமென்றும் அறிந்திருந்தான். ஆனால் அவன் உள்ளம் உவகையால் நிறைந்தது. உடற்தசைகள் முறுக்கவிழ்ந்து தளர்ந்தன. குழவி மெல்ல அவன் முலைக்கண்ணை சுவைக்கத் தொடங்கியது. அவன் ஆழுணர்வில் அதில் திளைத்தான். குழவி அவனை உண்டபடியே இருக்க அவன் துயிலில் ஆழ்ந்தான். அங்கே அக்குழவியுடன் அறியா நிலங்களில் நடந்தான். விழித்துக்கொண்டபோது அருகே குழவி இல்லை என்னும் தெள்ளிய உணர்வு எஞ்சியிருந்தது, ஆனால் துயர் இருக்கவில்லை. குழவி கிடந்த அந்த மென்மையான மரவுரிக்குவையை கையால் நீவியபடி அவன் விழி கசிந்துவழிய படுத்திருக்கையில் தன் மேலாடை நனைந்திருப்பதைக் கண்டான். அவன் இருமுலைகளும் சுரந்திருந்தன.

யுவனாஸ்வன் மைந்தர் பிறப்பதற்கான வேள்விகளை இயற்றலானான். பிருகுநந்தனர் என்னும் பெருவைதிகர் அவன் அவையிலமர்ந்து அந்த வேள்விகளை அவனுக்காக ஆற்றினார். ஏழு புத்ரகாமேஷ்டிகளை அவன் செய்தான். ஏழாவது வேள்வியனலில் எழுந்த இந்திரன் “ஊழ்வினையின்படி இவ்வரசனுக்கு மைந்தர் இல்லை. இவன் அன்னையின் கருவுக்குள் பார்த்திவப்பரமாணுவாக இருக்கையிலேயே முடிவானது அது. விதைகள் அற்றது இவன் உடல்” என்றான். “ஊழ் பிரம்மனின் நெறி. வேதம் பிரம்மனையும் ஆளும் நெறிகொண்டது” என்றார் பிருகுநந்தனர். “வேள்விக்கு எழும் அத்தனை தெய்வங்களும் இங்கு வருக! பிரம்மனே வருக!”

மீண்டும் ஏழு புத்ரகாமேஷ்டி வேள்விகளை பிருகுநந்தனர் அமைத்தார். அமைச்சர்கள் உளம்சோர்ந்தனர். தேவியர் நம்பிக்கை இழந்தனர். கருவூலம் ஒழிந்துவந்தது. அரசன் படைக்களம் மறந்தான் என்றறிந்து எல்லைகளில் எதிரிகள் கொழுக்கலாயினர். அவன் நெறியவைக்கு வராமையால் குடிகள் கட்டவிழ்ந்தனர். “அரசருக்கு மைந்தர் இல்லை என்பதே ஊழ் என்றால் அவ்வண்ணமே ஆகுக! அரசரின் இளவல்கள் எவரேனும் அவருக்குப்பின் முடிசூடட்டும்” என்றனர் அமைச்சர். “நாங்கள் முதுமைகொண்டுவிட்டோம். எங்கள் வயிறுகள் கருக்கொள்ளும் ஆற்றலிழந்துவிட்டன. இப்பிறவியில் இப்படி என எண்ணி அமையவும் கற்றுவிட்டோம்” என்றனர் அரசியர்.

ஆனால் யுவனாஸ்வன் ஒரு சொல்லையும் செவிகொள்ளவில்லை. “உயிரின் இறுதித்துளி எஞ்சுவதுவரை மைந்தனுக்கான வேள்வியிலேயே இருப்பேன். என் உடல் முளைக்காமல் இங்கிருந்து அகலமாட்டேன்” என்றான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் அவன் மைந்தன் என்னும் நினைவிலேயே வாழ்ந்தான். அவன் உறுதிகொண்ட உடல் நெகிழ்ந்து குழைவுகொண்டது. முகத்தில் மயிர் உதிர்ந்து பெண்மை வந்தது. முலைகள் உன்னி எழுந்தன. இடைசிறுத்து தொடைபெருத்து நடை ஒல்கியது. இதழ்கள் நீர்மைகொண்டன. கண்கள் நீண்டு கூர்கொண்டு கனவுசூடின. குரலில் யாழும் குழலும் கலந்தன.

பதினான்காவது வேள்வியில் எழுந்த பிரம்மனிடம் பிருகுநந்தனர் சொன்னார் “இங்கு நிகழும் அனல்வேள்வி என்பது அரசன் தன் உள்ளத்தால் செய்யும் எண்ணவேள்வியின் மறுவடிவே. இவ்வேள்வியைக் கடந்தாலும் அவ்வேள்விக்கு நீங்கள் நின்றாகவேண்டும், படைப்பிறையே. அருள்க!” பிரம்மன் “என் ஊழைக் கடப்பது முனிவரின் தவம். அது துணை செய்க!” என்று அருளினார். “திசைமுகனே, உங்கள் அருள் இந்த கங்கைநீரென்றாகுக! இதை அருந்தி அரசனின் துணைவியர் கருக்கொள்க!” என்றார் பிருகுநந்தனர். “அவ்வாறே” என்று பிரம்மன் சொல்லளித்தார்.

தர்ப்பையால் அனலைத் தொட்டு கங்கை நீர்க்குடத்தை வருடி அதில் நான்முகன் அருளை நிறைத்தனர். முறைமைசெய்து வேள்வி முடிந்து அந்த நீர்க்கலத்துடன் வேள்விச்சாலையிலிருந்து அருகிலிருந்த கொட்டகைக்குச் சென்ற வேதியர் அங்கேயே அமர்ந்தனர். ஆடைகளை மாற்றிக்கொண்டு மஞ்சத்துக்குச் செல்ல விழைந்தவர்கள் களைப்பால் அங்கேயே அவ்வண்ணமே படுத்துத் துயின்றனர். கொட்டகைக்கு நடுவே இருந்த சிறு பீடத்தில் பொற்கலத்தில் அந்த நீர் இருந்தது.

அவ்விரவில் வேள்வி முடிந்த மணியோசைகளையும் சங்கொலிகளையும் கேட்டுக்கொண்டே அருகே இருந்த வேள்விக்காவலனுக்கான பந்தலில் அரைத்துயிலில் இருந்த யுவனாஸ்வன் தன் உடலில் அனல் பற்றி எரிவதுபோல் கனவு கண்டான். உலர்சுள்ளியைப்போல அவன் கை பற்றிக்கொண்டது. கால்களும் தலையும் எரியலாயிற்று. முலைகள் கனலாயின. வயிற்றில் தழல்சுழன்றது. அந்த அனல் அவன் உடலின் கீழ்ப்பகுதியில் மூலாதாரத்தில் இருந்தே எழுந்தது என்றறிந்தான். விழித்துக்கொண்டபோது தன் உடல் விடாயில் தவிப்பதை உணர்ந்தான். அத்தகைய பெருவிடாயை அவன் முன்பறிந்ததே இல்லை. தொண்டையை கைகளால் வருடியபடி எழுந்து ஓடி கொட்டகைக்கு வந்தான். அங்கே பொற்கலத்திலிருந்த கங்கை நீரைக்கண்டு பிறிதொன்று எண்ணாமல் அதை எடுத்துக் குடித்தான்.

ஓசைகேட்டு விழித்துக்கொண்ட பிருகுநந்தனர் கையில் ஒழிந்த குடத்துடன் நின்றிருந்த யுவனாஸ்வனைக் கண்டு திகைத்தார். என்ன நிகழ்ந்ததென்று உடனே புரிந்துகொண்டார். அனைத்து வைதிகரும் பதறி எழுந்து அரசனைச் சூழ்ந்தனர். “என்ன செய்துவிட்டீர்கள், அரசே?” மைந்தனைப் பெறுவதற்கான வேள்விப்பயனை நிறைத்துவைத்த குடமல்லவா இது?” என்றார் பிருகுநந்தனர். “நிகரற்ற வல்லமைகொண்டவனாகிய மைந்தன் இந்த நீரில் நுண்வடிவில் உறைகிறான். பருவுடல் கொள்ள பெருவெளியில் அவன் காத்திருக்கிறான்.” யுவனாஸ்வன் “நான் அறிந்திலேன். இவ்வண்ணம் எப்படி நிகழ்ந்தது என்றே எனக்குத் தெரியவில்லை” என்றான்.

நிமித்திகரை அழைத்து வருகுறி தேர்ந்தனர். பன்னிரு களம் அமைத்து கல்லுருட்டி கணக்கிட்டு நிமிர்ந்த முதுநிமித்திகர் சாந்தர் சொன்னார் “அந்தணரே, தான் எனத் திரண்ட மைந்தன் பருவுடல்கொள்வது உறுதி. தந்தையை வெல்லும் ஆற்றல்கொண்டவன் ஆவான். ஏழு பெருவேள்விகளை நிகழ்த்தி குலம் வாழச்செய்வான்.” பின்னர் எவர் விழிகளையும் நோக்காமல் “நான் சொல்வது குறிகள் காட்டுவதை மட்டுமே. அந்த மைந்தன் அரசரின் உடலிலேயே கருவுறுவான். அங்கு உயிருடல் கொண்டு பிறப்பான்” என்றார்.

ஆனால் பிருகுநந்தனரோ யுவனாஸ்வனோ திகைப்புறவில்லை. அந்தணர் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். “அரசரின் பெருவிழைவு தன் உடல்முளைக்கவேண்டும் என்பதே. அவ்வாறே அருளின தெய்வங்கள்” என்றார் நிமித்திகர். “ஆம், அவ்வண்ணமே ஆகுக! அதுவும் நல்லூழே” என்றார் பிருகுநந்தனர். அரசன் நெடுமூச்செறிந்தபோது முலைகள் எழுந்தமைந்தன. கனவுடன் கண்முனைகள் கசிவுகொண்டன. இடைநலுங்க அணிகள் குலுங்க அவன் நடந்து தன் அறையைச் சென்றடைந்தான். அங்கு மஞ்சத்தில் களைப்புடன் படுத்துக்கொண்டு கண்மூடி புன்னகைக்கும் மைந்தனின் முகத்தைக் கண்டான். மெய்விதிர்ப்பு கொள்ள “என் தெய்வமே” என நெஞ்சில் கைவைத்து அழுதான்.

அரசனின் வயிறு பெருத்தது. வரிகளோடிச் சரிந்தது. அவன் முலைக்கண்கள் கருமைகொண்டன. புதுமணல்போல மென்வரிகளுடன் முலைக்குவைகள் பருத்துச் சரிந்தன. அவன் உதடுகள் கருமைகொண்டு மூச்சில் இனிய ஊன்மணம் கலந்தது. கழுத்தும் கையிடுக்குகளும் கன்றின. கண்வெளுத்து நடை தளர்ந்தது. அரண்மனைச் சுவர்களை உடைவாளால் சுரண்டி சுண்ணத்தை உண்டான். திரி எரிந்த சாம்பலை சுட்டுவிரலால் தொட்டுச் சுவைத்தான். குங்குமத்தையும் களபத்தையும் சிறு இலைப்பொட்டலமாக எடுத்துவைத்துக்கொண்டு தின்றான். சிறு ஒலி கேட்டும் திடுக்கிட்டான். நிற்கையிலும் நடக்கையிலும் தன் வயிற்றையே எண்ணிக்கொண்டான். தனியாக அமர்ந்து வானை நோக்கி கனவுகண்டான். சிறுபறவைகளையும் வண்ணப்பூச்சிகளையும் கண்டு குழந்தைபோல முகம்மலர்ந்து சிரித்தான்.

மாதங்கள் செல்ல அரசனின் வயிறு பெருத்து வலப்பக்கம் சரிந்தது. வலக்கை ஊன்றி பெருமூச்சுடன் எழுந்தான். புரியாத ஐயங்களும் அச்சங்களும் கொண்டு உளம் கலங்கி தனிமையில் அழுதான். மத்தகம் தூக்கி கொம்பு ஒளிவிட இருளிலிருந்து வரும் களிற்றுயானையை மீண்டும் மீண்டும் கனவுகண்டான். இரவில் முழுத்துயில் இல்லாது கண் சோர்ந்து எழுந்தான். கைகள் குடைச்சல்கொள்ள நாளெல்லாம் மஞ்சத்தில் அசைவில்லாது அமர்ந்திருந்தான். கால்கள் வீங்கின. பின் முகம் உப்பி ஒளிகொண்டது. கண்ணிமைகள் கனிந்து தொங்கின. சிறு அசைவுக்கே நெஞ்சு படபடக்கத்தொடங்கியது. மழலைச்சொல் உரைப்பவன் ஆனான். அனைவர்மீதும் கனிவும் அனைத்தின்மீதும் எரிச்சலும் மாறிமாறி வந்து அவனை அலைக்கழித்தன.

அரசன் வயிற்றில் மைந்தன் இருப்பதை மருத்துவர் உறுதிசெய்தனர். அவன் வளர்ந்து கையும் காலும் கொள்வதை தொட்டுப்பார்த்து சொன்னார்கள். முழுவளர்ச்சியடைந்த மைந்தன் ஒலிகளுக்கு செவிகொடுத்தான். காலால் தந்தையின் வயிற்றை உதைத்து உந்தி முழைகாட்டினான். அவன் அசைவை அறிந்து யுவனாஸ்வன் உடல்விதிர்க்க கூசிச்சிரித்து துள்ளினான். அந்த முழைமேல் கைவைத்து கூச்சலிட்டு நகைத்தான். “உயிர்கொண்டிருக்கிறான்! உயிர்!” என்று கூவினான். “என் உயிர்! என் உயிரை நானே தொடுகிறேன்!” ஊழ்கத்தில் என என் உயிர் என் உயிர் என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.

அம்மைந்தன் எப்படி பிறக்கமுடியும் என மருத்துவர்களுக்கு புரியவில்லை. அரசன் இறக்கக்கூடும் என அவர்கள் அஞ்சினர். பாரதவர்ஷமெங்கும் தூதர்களை அனுப்பினர். அகத்தியரின் வழிவந்த முதுமருத்துவர் ஒருவர் அவர்களின் அழைப்புக்கிணங்கி வந்தடைந்தார். இடையளவே உயரமிருந்த அவர் பெரிய உருண்டை விழிகளும் ஓங்கிய குரலும் கொண்டிருந்தார். “விலாபிளந்து மைந்தன் எழுவான். ஏனென்றால் மண்ணின் விலாபிளந்தே செடிகள் எழுகின்றன.”

அரசனுக்கு மூலிகைகொடுத்து மயங்கவைத்து அவரும் அவருடைய ஏழு மாணவர்களும் அவன் வயிற்றின் தசைகளைக் கிழித்து கனி அகழ்ந்து விதையைப் பிதுக்குவது போல மைந்தனை வெளியே எடுத்தனர். குருதிவழிய குளிர்கொண்டு அவன் அழுதான். அவன் உடலிலக்கணம் நோக்கி “அரியவன். ஆள்பவன்” என்றார் அகத்தியர். அழுகை கேட்டு உள்ளே ஓடிவந்த அமைச்சர்கள் “எங்கே? அரசர் எங்கே? அவர் நலமாக இருக்கிறாரா?” என்றார்கள். தசைகளைப் பொருத்தி குதிரைவால்மயிரால் சேர்த்துத் தையலிட்டு தேன்மெழுகும் அரக்குமிட்ட பட்டுத்துணியால் சுற்றிக்கட்டி பக்கவாட்டில் படுக்கவைக்கப்பட்டிருந்த யுவனாஸ்வன் குருதிமணத்துடன் துயின்றுகொண்டிருந்தான்.

குழந்தையின் அழுகுரல்கேட்டு ஒன்பது அன்னையரும் ஓடிவந்தனர். “அமுது! முதலமுது!” என அகத்தியர் விரைவுபடுத்தினார். சேடியர் ஓடிச்சென்று நறும்பாலை கொண்டுவந்தனர். அதை தூயபஞ்சுத்திரியில் தொட்டு மைந்தன் வாயில் வைத்தனர் அன்னையர். அவன் அதைத் துப்பி வழியவிட்டு செந்நிறக் கைகளைச் சுருட்டி ஆட்டி அடிக்கால்கள் சுருங்க கட்டைவிரல் சுழிக்க அதிர்ந்த வயிற்றுடன் அழுதான். அரியதொன்று இரண்டாகக் கிழிபடும் ஒலியுடன் அழுத அவனைக்கண்டு செய்வதறியாமல் அவர்கள் திகைத்தனர்.

“முலையூட்டும் சேடி ஒருத்தியை கொண்டுவருக!” என அமைச்சர் சாம்யர் ஆணையிட்டார். ஏவலர் ஓடி முலைப்பெண்டிர் எழுவரை கொண்டுவந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் கைகளால் தொட்டதுமே மைந்தனின் உடல் நீலம்பாரித்து விரைப்புகொண்டது. அவன் உதடுகள் அவர்களின் முலைக்கண்களை கவ்வவில்லை. நாண் இழுபட்ட சிறு வில் என அவன் அவர்கள் கைகளில் இறுகியிருந்தான். ஏழு முலைப்பெண்டிரும் அவனை ஊட்டமுடியவில்லை. முலைப்பாலை அவன் வாயில் பீய்ச்ச வைத்தபோதும் உண்ணாமல் கடைவாய் வழிய அவன் துடித்து நடுங்கினான்.

“குழவி கருவறைக்குள்ளேயே குருதிவழியாக அன்னையின் முலைப்பாலை அறிந்துள்ளது. அந்த மணமே அதை முலைக்காம்பு நோக்கி இழுக்கிறது. இம்மைந்தன் அதை அறிந்திருக்கவில்லை” என்றார் அகத்தியர். “என்ன செய்வது? இறப்புதான் இளவரசரின் ஊழா?” என்றார் அமைச்சர் சாம்யர். “அவ்வாறென்றால் நாம் என்ன செய்வது?” என்றார் அகத்தியர். அப்போது மெல்ல விழி அதிர்ந்து முகம் உயிர்கொண்ட யுவனாஸ்வன் “என்ன ஓசை?” என்றான். “அரசே, தங்கள் உடல்திறந்து வந்த மைந்தன்” என்று தூக்கிக்காட்டினார் அகத்தியர். “மைந்தன் ஏன் அழுகிறான்?” என்றான் யுவனாஸ்வன். “அவனுக்கு அன்னைமுலை உகக்கவில்லை. அவனுக்கு அமுதூட்ட வழியில்லை” என்றார் அமைச்சர்.

இடக்கையை ஊன்றி உடலை அசைத்துத் தூக்கி கைநீட்டிய யுவனாஸ்வன் “மாந்தாஸ்யதி!” என்றான். என்னை உண்ணுக என்றுரைத்து தந்தையால் தூக்கி நெஞ்சோடணைக்கப்பட்ட குழவி அள்ளி அவன் மார்பை பற்றிக்கொண்டது. அவன் முலைகளில் வாய்சேர்த்து உறிஞ்சி உண்ணலாயிற்று. அவனை அன்னையர் மாந்தாதா என்று செல்லப்பெயரிட்டு அழைத்தனர். தாயுமானவன் கையால் வளர்க்கப்பட்ட அவன் பிறரைவிட அரைமடங்கு உயரமானவனாக வளர்ந்தான். மூன்று மாதங்களில் பல் தோன்றியது. ஆறு மாதங்களில் பேசினான். எட்டு மாதத்தில் நடந்தான். ஒரு வயதில் வில்லேந்தினான். ஏழு வயதில் களம்புகுந்தான். பன்னிரு வயதில் பரிதொடர்வேள்வி செய்து மாமன்னன் என புகழ்பெற்றான்.

ஆஜகவம் என்னும் அவன் வில்லின் நாணோசை தீயவருக்கு இடியென்றும் நல்லவருக்கு யாழென்றும் ஒலித்தது என்றனர் சூதர். வெற்றித்தோள்களுடன் எழுந்த மைந்தனை நோக்கி நிறைவுகொண்ட யுவனாஸ்வன் ஒருநாள் கான்புகுதலுக்கு ஒருங்கினான். அவன் கால்களைத் தொட்டு வணங்கி எழுந்த மைந்தனிடம் “நான் உன்னிடம் சொல்வது ஒன்றே. நான் உன்னிடம் சொன்ன முதல் சொல் அது, என்னை உண்ணுக! எப்போதும் உன் நாவிலிருக்கட்டும் அச்சொல்” என்றான். அவனை கானக விளிம்புவரை சென்று வழியனுப்பிவைத்தான் மாந்தாதா.

தந்தை சொன்னதன் பொருளை மறுநாள் முதல் அவன் உணரலானான். காலையில் முதன்முதலாக அவன் கண்ட ஏவலனை நோக்கி சொல்லெடுக்கும் முன் ‘என்னை உண்ணுக!’ என்றது அவன் அகம். அகம்படியாளனை, அணுக்கனை, அமைச்சரை, காவலரை, அவையோரை நோக்கி அவன் எச்சொல் எடுப்பதற்கு முன்னரும் அச்சொல் எழுந்து நின்றது. அவையில் கைவிலங்கு பூட்டப்பட்டு நின்றிருந்த அயல்நாட்டு ஒற்றனின் தலைகொய்ய ஆணையிட எழுந்தபோதும் ஊடாக வந்தது அச்சொல். அருகே சென்று தலையை கையால் வருடி அஞ்சி உணர்வழிந்திருந்த அவன் விழிகளை நோக்கி அதை சொன்னான். அவன் விழிநீர் பெருக அரசனின் கால்களில் விழுந்தான்.

அரசாளும் அன்னை என்று மாந்தாதா மக்களால் அறியப்பட்டான். வற்றாத முலைப்பால் எழும் உடல்கொண்டவன் அவன் என்றனர் சூதர். பல்லாயிரம் ஊற்றுக்கள் எழுந்து ஓடைகளாகவும் ஆறுகளாகவும் பெருகும் வறனுறல் அறியா நறுஞ்சோலை என்றனர் கவிஞர். அவன் கால்பட்ட இடங்களில் பசுமரங்கள் முளைத்தன. அவன் சொல்கொண்டு வாழ்த்திய குழவியர் சொல்பெற்றனர். அவன் கைதொட்ட நோயாளர் ஆறுதல்கொண்டனர். அவன் அரசமுனிவரில் முதல்வனென்றனர் படிவர்.

அவன் உலகுநீத்தபோது விண்ணில் இந்திரவில் எழுந்து கரையாமல் நின்றது. பொற்துருவலென ஒளியுடன் மழைபொழிந்தது. சான்றோர் கூடி அவனை மண்ணில் புதைத்தனர். நிலமென விரிந்தான் அரசன், அவன்மேல் வேர்கொண்டெழுந்தன குடிகள் என்றன கதைகள். அவன் உடல்மேல் எழுந்து விதைத்தொடர் என ஆயிரம் ஆலமரங்கள் எழுந்தன என்றன தொல்குடிச் சொற்கள். இறுதி ஆலமரம் கிளைவிரித்து கனிகொண்டது. பல்லாயிரம் பறவைகள் அதன்மேல் சிறகு குவித்தமர்ந்தன. அதன் கீழ் வந்தமர்ந்த இளஞ்சூதனின் அறிதுயில் செவியில் சென்று யுவனாஸ்வன் உரைத்தான் “என்னை உண்ணுக!”

விழித்தெழுந்து திகைத்து அமர்ந்தான் அச்சிறுவன். அச்சொல்லை அறியாது அவன் வாய் அரற்றத்தொடங்கியது. பின் அவன் ஒவ்வொரு எண்ணத்துக்கு முன்னரும் அச்சொல் இணைந்துகொண்டது. நாளடைவில் அவன் நாவுரைக்கும் எச்சொல்லும் அச்சொல்லென்றே பொருள்கொண்டன. அன்னமெனக் கனிந்தது அவன் கை. ஒருநாளும் ஒழியாது அவனை உண்டு வயிறு குளிர்ந்தனர் மானுடர். முதிர்ந்து முழுமைகொண்டு கடந்துசெல்வதற்கு முன் அவன் அச்சொல்லை தன்னை அணுகிய பிறிதொருவனுக்கு உரைத்தான். நாவிலிருந்து நாவுக்குச் சென்று அச்சொல் அங்கே அழியாது வாழ்ந்தது. வேட்கும் வேள்விநிலைகளுக்கு நடுவே வேதிக்கும் வேதநிலையென அது திகழ்ந்தது. அங்கு அன்னம் ஒழிந்த தருணமே அமையவில்லை.

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 49

எட்டாம் காடு : மைத்ராயனியம்

[ 1 ]

சாந்தீபனி குருநிலையில் இளைய யாதவர் நான்குமாதங்கள் தங்கியிருந்தார். முதல்சிலநாட்களுக்குப்பின் அக்குருகுலத்தின் பெரும்பாலான மாணவர்கள் அவருக்கு அணுக்கமானார்கள். புலர்காலையிலேயே அவர்களை அழைத்துக்கொண்டு கால்நடைகளுடன் அவர் காட்டுக்குள் சென்றார். பசுக்களை அணிநிரைத்துக் கொண்டுசெல்லவும், தனிக்குழுக்களாகப் பிரித்து புற்பரப்புகளில் மேயவைக்கவும், மாலையில் மீண்டும் ஒருங்குதிரட்டவும் அவர்களுக்கு கற்பித்தார். பசுக்களின் கழுத்துமணி ஓசையிலிருந்தே அவை நன்கு மேய்கின்றனவா என்று அறியவும் அவை நின்றிருக்கும் தொலைவை கணிக்கவும் பயிற்றுவித்தார். அவருடன் பலநாள் பாண்டவர்களும் சென்றார்கள்.

“பசுக்களை நோக்கி புரிந்துகொள்ளுதல் ஆமருவுதலின் முதல்படி. அவற்றின் மீது பெரும் அன்பிருந்தாலொழிய அது கைகூடாது. நம் குரலை நம் அன்பென அது அறிகிறது. அதன் குரலை அதன் அன்பென நாம் அறிகிறோம். அன்புக்குரிய கலமென அங்கிருக்கும் பசு ஓர் அறிவென உள்ளமைதல் அடுத்த நிலை. சிறு ஓசைகளில் அசைவுகளில் மணங்களில் அவை நம்முள் முழுமையாக உருக்கொள்ளும்போது நாம் நம்மை என அதை அறிகிறோம். அறிவென ஆன பசு நம்மை தன்னறிவென அறிகிறது. நாம் அதை நம்மறிவென அறிவதைப்போல. பின்னர் ஒரு கணத்தில் பசு நம் அறிவைவிட்டு அகல்கிறது. அது நாமென ஆகிறது. அதன்பின் நாம் காடுசென்று மேய்ந்து கன்றூட்டுவதற்காக பாலூற தொழுதிரும்புகிறோம்” என்றார் அவர்.

“மாணவர்களே, இவை ஒன்றிலிருந்து ஒன்றென எழும் நிலைகள். சிறுமி முதிர்ந்து கன்னியாவதுபோல. கன்னி கனிந்து அன்னையாவதுபோல. ஒன்றைவிட பிறிது குறைந்தது அல்ல. அறிவென்று மாறாத அன்பு பற்றென்று திரிந்து வலையாகி சூழ்கிறது. அன்பிலிருந்து எழாத அறிவு ஆணவமெனத் திரண்டு பெருஞ்சுமையாகிறது. அறிக, அன்பிலும் அறிவிலும் ஏறியமையாத யோகம் வெறும் உளமயக்கு மட்டுமே. நீர்நிலை நிலவை அள்ளி அள்ளிக் குடிக்கும் மூடர்களின் வழி அது.” ஒருகணம் புன்னகைத்து “நீர்நிலவை மட்டுமே உண்ண இயலுமென அறிந்து அள்ளுபவனோ நிலவை உண்கிறான்” என்றார்.

அவர் எப்போது தத்துவச்சொல்லென உரையாடலை மாற்றுவார் என்று ஒருபோதும் முன்னறிய முடிவதில்லை என்பதே அவருடைய முதன்மைக் கவர்ச்சி என தருமன் எண்ணினார். கன்றோட்டும் கலையை சொல்லிவருபவர் பிறிதொன்றை சொல்லத் தொடங்கும் கணத்தில் கிளையசைய வானிலெழும் பறவையைக் காணும் அச்சிலிர்ப்பால்தான் அவரைச் சூழ்ந்து ஒருசொல்லும் தவறவிடாமல் மாணவர் சென்றுகொண்டிருந்தனர். “அவர் கன்றோட்டுகையில் ஞானி. வேதமேடையில் கன்றோட்டி” என்றான் இளமாணவன் ஒருவன். “எப்போது எவ்வுரு என்றறியாமையால் அனைத்தையும் ஒன்றாக்கிக் காட்டமுடிகிறது அவரால்” என்றான் அவன் தோழன்.

வேதச்சொல் உசாவும் அவையில் முதலாசிரியனாக மேடையமர்ந்து அவர் சொல்நிரை குறித்து சொல்கையில் இயல்பாக ஆவலன் ஆனார். “ஆற்றல்மிக்க பசுக்களை முதலிலும் இறுதியிலும் நிறுத்துக! பிறபசுக்களையும் கன்றுகளையும் நடுவே கொண்டு செல்க! வழிநடத்துவது வல்லமைகொண்டதாகுக! பெருவிழைவு கொண்டது பின்னால் உந்திச்செலுத்துக! நடுவே செல்வது தன் விரைவை தானே காணமுடியாது ஒழுகவேண்டும்.” அவர்கள் அக்கணத்தில் அவையிலிருந்து காட்டுக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களுடன் நீராடிய ஓடைகளை, அவருடன் தாவிச்சென்ற கிளைகளை, அவர் அளித்த கனிகளை, அவர் நகையாட்டுகளை எண்ணி முகம் மலர்ந்தனர்.

அவரன்றி பிற எவரும் அங்கில்லை என்று மாணவர் உணரலான ஒருநாளில் அவர் துவாரகைக்கு கிளம்பினார். அச்செய்தியை சாந்தீபனி குருநிலை பெரும்பதற்றத்துடன் எதிர்கொண்டது. அவர் சென்றுவிடுவார் என்பதை அவர்கள் ஒவ்வொருவரும் அறிந்திருந்தனர். அவர் சிலநாட்கள் மட்டுமே அங்கிருப்பார் என்றே அவர்களுக்கு சொல்லப்பட்டது. பேரரசு ஒன்றின் தலைவன் அத்தனை மாதம் அங்கிருந்ததை எப்போதாவது எண்ணிக்கொள்கையில் அவர்கள் வியப்படைந்தனர். ஆனால் மீண்டும் அவர் அங்கிருந்து அகலாதவர் என்னும் மாயையை சூடிக்கொண்டு அதில் ஆடினர்.

அவர் கிளம்புகிறார் என்னும் செய்தி அதை கிழித்தபோது முதலில் அதை அவரது விளையாட்டெனக் கொள்ள முயன்றனர். அது மறையா நனவு என உணர்ந்ததும் அவர் மீண்டு வருவார் என ஆறுதல்கொண்டனர். ஒரேநாளில் சாந்தீபனி கல்விநிலை ஒலியடங்கி சோர்வு பரவி நிழலாடும் நீர்நிலைபோல ஆகியது. “அவர் இங்கிருந்தது ஒரு கனவு. நாம் அதிலிருந்து விழித்தெழுந்தே ஆகவேண்டும்” என்றார் சாந்தீபனி முனிவர். “ஆசிரியர்களின் சொற்களே அவர்கள் என்றுணர்க! இங்கு அவர் சொற்கள் முளைத்தெழுமென்றால் அவர் என்றும் இங்கிருப்பார்.”

அடுமனையிலிருந்து அகப்பையுடன் எழுந்து வந்து சொல்லவை முற்றத்தில் நின்று பத்ரர் கூவினார் “இங்கு அந்த ஆமருவி வந்து என்ன ஆயிற்று? இளையோரே, நீங்கள் கற்றது என்ன? அந்தணரும் ஷத்ரியரும் கன்றோட்டினர். கன்றுவாலிலிருந்து நீங்கள் கற்றறிந்த வேதம் என்ன? இவன் இழிமகன். இழிமக்கள் அணுக்கம் உங்களையும் இழிமக்களாக்குமென்று உணராவிடில் உங்களுக்கு மீட்பில்லை என்றறிக!” மாணவர்கள் வெவ்வேறு இடங்களில் நின்று அவரை நோக்கிக்கொண்டிருந்தார்கள். அவர் மேலும் மேலும் வஞ்சம் கொண்டு கொந்தளித்தபடியே சென்றார்.

“வேதம் மருவ வந்த வீணன். நீங்கள் கற்றவற்றை அவன் மறக்கச்செய்யவில்லை என்று உங்களால் சொல்லமுடியுமா? நான் நூறுமுறை உங்களிடம் கேட்டிருக்கிறேன். ஒவ்வொருமுறையும் ஆமென்று விழிகாட்டி முகம் திருப்பிக்கொண்டீர்கள். இளையோரே, நீங்கள் உணர்ந்தவை அனைத்தும் கலங்கிவிட்டன என்று உணரவில்லையா? அறிக, அவன் வந்தது அதற்காகவே! அவன் குழப்புபவன். கலங்கச்செய்பவன். வேதத்தை அதிலிருந்து உருவாகும் பொய்வேதமே அழிக்கமுடியும், நெருப்பை அதன் புகை அழிப்பதுபோல.”

மூச்சிரைக்க பத்ரர் தன் அகப்பையை தலைக்குமேல் தூக்கினார். “அன்னம் அளித்த கையால் சொல்கிறேன். இவன் அழிவையன்றி எதையும் கொண்டுவரப்போவதில்லை. இவன் தன் குலத்தின் குருதியிலாடி இங்கு வந்தவன். பாரதவர்ஷத்தின் குருதியில் களித்து கடந்துசெல்வான். ஆம், இது உண்மை!” அவர் குரல் உடைந்தது. கண்ணீர் வழிய அவர் சொன்னார் “அழியாதது மாறவும் கூடாது. மாறுவது அழிவது. மாறுவதும் அழிவதும் அடித்தளமாக அமையாது.” அகப்பையை ஆட்டி மேலும் சொல்ல விழைபவர் போல விம்மி பின் அவர் திரும்பினார்.

அவர் செல்வதைப் பார்த்தபடி தருமன் மரத்தடியில் நின்றிருந்தார். பின்னர் குடிலுக்குள் சென்று அர்ஜுனனுடன் உரையாடிக்கொண்டிருந்த இளைய யாதவரைக் கண்டு தயங்கி நின்றார். அவர்கள் இளங்காதலர்போல மென்குரலில் பேசிக்கொண்டு காலமறியாது அமர்ந்திருப்பதை அவர் எப்போதும் காண்பதுண்டு. இருவர் முகங்களும் ஒன்றையொன்று ஆடிகள்போல மாற்றொளித்து முடிவின்மை சூடியிருக்கும். அவர்கள் தாங்கள் மட்டும் தனியாக காட்டுக்குள் சென்று உலாவி விடிந்தபின் வருவதுமுண்டு. இளைய யாதவர் “வருக, அரசே!” என்றார். தருமன் அவர் அருகே அமர்ந்து கொண்டார்.

“விழிகளில் சொற்கள் உள்ளன” என இளைய யாதவர் புன்னகையுடன் சொன்னார். தருமன் “அந்தப் பெருவஞ்சம் பற்றி மட்டுமே நான் பேசவிழைவேன் என நீங்களும் அறிந்திருப்பீர்கள்” என்றார். “ஆம், அதைக் கேட்ட உணர்வு உங்களிடம் உள்ளது” என்றார் இளைய யாதவர். “யாதவரே, அந்தப் பெருவஞ்சத்தின் ஊற்று எது? ஒவ்வொருநாளும் நான் பிருகதரை சந்திக்கிறேன். நீங்கள் இங்கு வந்தநாளில் அவரிலெழுந்த அந்தக் காழ்ப்பு அவருள் வளர்ந்தபடியேதான் செல்கிறது. உங்கள் நல்லியல்புகள் ஒவ்வொன்றும் அவர் காழ்ப்பை வளர்க்கின்றன. அக்காழ்ப்பே அவர் மூச்சென்றாகிவிட்டது. அவர் உடலும்கூட காழ்ப்பின் பருவடிவென்று ஒளிகொண்டிருக்கிறது. காழ்ப்பினாலேயே அவர் ஆற்றல்கொண்டவராகிறார் என்று தோன்றுகிறது.”

“காழ்ப்பின் வழியாக அவர் என்னை அணுகியறியலாமே” என்று இளைய யாதவர் சிரித்தார். “என்னை விரும்புகிறவர் என் வெண்முகத்தை அறிகிறார்கள். வெறுப்பவர் கரியமுகத்தை. சுக்லகிருஷ்ண சாகைகளுடன் என்னை அறிகிறார்கள்.” மேலும் உரக்க நகைத்து “அதில் உங்கள் இடர் என்ன, அரசே?” என்றார். “பிருகதர் எளிய மனிதர். உங்களைப்போல பேருருவம்கொண்ட ஒருவர் மீதான காழ்ப்பு அவரை மேலும் விரிவாக்குகிறது. அது அவர் வாழ்வுக்கு பொருளும் ஆகிறது. ஆனால் பத்ரர் கற்றறிந்தவர். கற்றவற்றை கடந்துசெல்லவும் முடிந்தவர். அவரே உரைப்பதுபோல அன்னமிட்டமைந்த கை கொண்டவர். யாதவரே, அத்தனை கற்றும் தெளிந்தும் சென்றடையக்கூடிய இடம் அந்தக் கடுங்கசப்பின் பீடம்தானா?”

சிலகணங்கள் அவரை கூர்ந்து நோக்கியபின் “அரசே, உங்கள் வினா எழுவது எங்கிருந்து? அவருடன் சேர்ந்து சிலகணங்கள் அக்குரலை ஒலித்த உங்கள் அகத்திலிருந்தா?” என்றார். விழிகளை அவர் மேல் நிலைக்கவிட்டு மாறாமுகத்துடன் “ஆம்” என்றார் தருமன். “அங்கு நின்ற அனைவரும் அச்சொற்களை தாங்களும் சொல்லி திடுக்கிட்டு மீண்டனர். அவர் குரலுடன் வந்து இணையும் ஆயிரம் உளக்குரல்களாலேயே அது வல்லமைகொண்டதாகிறது” என்று இளைய யாதவர் சொன்னார். “அதனாலேயே நான் அதை வீண்குரல் என சொல்லமாட்டேன். அதை கேளாது கடந்துசெல்லவும் மாட்டேன். அரசே, இன்றுமாலை விடைபெறுகையில் முறைப்படி பத்ரரைச் சென்றுகண்டு அவரிடம் சொல்கொண்டபின்னரே கிளம்புவேன்.”

தருமன் அவர் சொல்லப்போவதை காத்திருந்தார். “அவர் அடுமனை மெய்மையின் களம். ஆனால் அவர் அங்கே ஒற்றைச்சுவைக்கு சமைக்கிறார்” என்றார் இளைய யாதவர். “கற்பரசிகள் கட்டுண்டிருப்பவற்றிலிருந்து பரத்தையர் எளிதில் விடுபடுகிறார்கள்.” அவர் அச்சொல்லாட்சியால் உளஅதிர்வு கொண்டார். ஆனால் அவர் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தார். “பல காடுகளை கண்டுவிட்டீர்கள், அரசே. அனைத்துக் காடுகளுக்குச் செல்லும் வழிகளும் இணையும் காடு ஒன்றுள்ளது. மைத்ராயனியக் காட்டுக்கு செல்க!” தருமன் “ஆம், தங்கள் சொல் என் வழி” என்றார்.

[ 2 ]

வேதம் வளர்ந்த காடுகள் அனைத்திலும் சென்று கல்விகற்ற லௌபாயனர் என்னும் முனிவரின் கதை ஆரண்யகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. தன் உள்ளுறைந்த அழலை அவிக்கும் மெய்ப்பொருளைத் தேடி அவர் ஏழு வயதில் உபநயனம் முடிந்ததும் இல்லம்விட்டு கிளம்பினார். பெரும்பசிகொண்டவன் அன்னம்தேடிச் செல்வதுபோல இளம்கால்களால் மலைகளை மிதித்தேறி ஐதரேயக்காட்டுக்கு வந்தார். நான்காண்டுகளுக்குப் பின் அங்கிருந்து தைத்ரியக்காட்டுக்கு சென்றார். துவைதத்திலும் காம்யகத்திலும் பிருஹதாரண்யகத்திலும் நான்காண்டுகள் வாழ்ந்து வேதமெய்மையை கற்றார். அரசே, அவர் கற்காத கல்விநிலைகளே இங்கில்லை என்கிறார்கள். அறியப்படாத காடுகளாகிய ஹிரண்யகேசம், பைப்பாலடம் போன்றவற்றிலும் அவர் கற்றிருக்கிறார்.

தன் அறுபது வயதுவரை அவர் கற்றுக்கொண்டே இருந்தார் என்கிறார்கள். தான் புதைத்து மறந்த செல்வத்தைத்தேடி அகழ்ந்து அகழ்ந்து ஏமாற்றமடையும் கருமியைப்போல அவர் கண்ணீருடன் பதறியபடி குருநிலையிலிருந்து குருநிலைக்கு சென்றார் என்கின்றன நூல்கள். ஒவ்வொன்றிலும் பேரார்வத்துடன் நுழைந்து வெறிகொண்டு கற்றுக் கடந்துசென்று எஞ்சிய உளவினாவுடன் தனித்துவிடப்பட்டு கண்ணீருடன் கிளம்பிச்செல்வதே அவர் வழக்கம். இறுதியாக மாண்டூக்யக் காட்டிலிருந்து கிளம்பி சென்ற வழியில் ஒரு இசைச்சூதனை கண்டார். வேதக்காடுகளை முழுதறிந்திருந்த அச்சூதனிடம் பேசியபோது ஒன்றை அறிந்துகொண்டார், அவர் செல்வதற்கு மேலும் சொல்வளர்காடுகள் இல்லை.

உள்ளம் வெறுமைகொள்ள மகாதலம் என்னும் இடத்திலிருந்த அன்னவிடுதி ஒன்றை அடைந்தார். அங்கு நூறுவயதான சுஃபலர் என்னும் முதிய சூதர் தன்னந்தனியாக அவ்வழிப்போகும் அயலவருக்கு உணவளித்துவந்தார். அவரிடம் உணவு பெற்று உண்டு அங்கு நின்றிருந்த மாபெரும் ஆலமரத்தின் அடியில் இரவு தங்கினார். அந்திக் காற்று குளிருடன் வீசிக்கொண்டிருந்த வேளையில் அவர் அருகே வந்து படுத்துக்கொண்ட சுஃபலர் தன் கதையை சொன்னார்.

அந்த ஆலமரம் அமைந்த காட்டுவழியினூடாக சுஃபலர் இளஞ்சிறுவனாக அவ்வழி சென்றார். அவருடன் வந்த முதியதந்தை காட்டுக்குள் பாம்பு கடித்து இறந்தபோது மேலும் செல்லும் வழியறியாமல் அழுதபடி திரும்பிவந்து பசித்துக் களைத்து அம்மரத்தின் வேர்க்குவையில் சோர்ந்து படுத்துத் துயின்றார். அவ்வழி சென்ற வணிகர்குழு ஒன்று அந்த மரத்தடியில் ஓய்வெடுத்தது. கிளைகளுக்குமேல் அவர்கள் கலங்களை கட்டிவைத்திருந்தனர். மரம் ஏறமுடியாமல் களைத்திருந்தமையால் சுஃபலரிடம் அந்தக் கலங்களை எடுத்துக் கொடுக்கும்படி சொன்னார்கள். அவர் அடிமரத்தின் விழுதுப்புடைப்புகளில் தொற்றி அதன்மேல் ஏறி கிளைக்குவையில் இருந்த கலங்களை எடுக்கையில் அவரிடம் எவரோ எதையோ சொன்னதை கேட்டார்.

அஞ்சி நிலையழிந்து விழப்போனவர் அள்ளிப்பற்றிக்கொண்டார். கலங்களுடன் உடல்தளர கீழே வந்தார். அது கீழே எவரோ பேசியதன் ஒரு கீற்றே என தன்னை ஆறுதல்படுத்திக்கொண்டார். அவர்கள் அவரிடம் “சூதரே, சமைத்துக்கொடுங்கள்” என்றார்கள். சமையலுக்கு அடுப்புமூட்டும்போது அவர் அச்சொல்லை கேட்டார். அது அவர் உதடுகளில் அசைவாக இருந்தது. அச்சொல் தன்னுள் எண்ணச்சரடென ஓடிக்கொண்டிருப்பதை அறிந்தார். அதை வியந்து நோக்கியது பிறிதொரு உள்ளம்.

அவர் சமைத்து அளித்த உணவை அவர்கள் உண்டு எஞ்சியதை அவரிடமே அளித்துவிட்டுச் சென்றனர். அவர் அவ்வுணவை உண்ணும்போது இரு மலைப்பயணிகள் அங்கு வந்தனர். பசித்திருந்த அவர்களுக்கு அவ்வுணவை அவர் பகிர்ந்தளித்தார். அன்றிரவு வணிகர்கள் அளித்த அரிசியும் பருப்பும் எஞ்சியிருந்தது. அதைக்கொண்டு மறுநாள் அவர் சமைக்கும்போது மேலும் சில வணிகர் அவ்வழி வந்தனர். அவர்கள் அளித்துச்சென்ற அரிசியும் பருப்பும் மேலும் சிலநாட்களுக்கு திகைந்தது. அவ்வழி சென்ற அந்தணருக்கு அவ்வுணவை அவர் கொடையாக அளித்தார். சிலநாட்களுக்குள் அது ஓர் உணவுச்சாவடியாகியது. உண்டவரில் உள்ளவர் அளித்துச்சென்றது இல்லாதவருக்கும் அவருக்கும் போதுமான உணவாகியது.

“வேறெங்கும் செல்லவில்லையா?” என்று லௌபாயனர் கேட்டார். “ஆலமரத்தடியிலிருந்து ஆலமரத்தடிக்குச் செல்லலாம். மரங்கள் வேறு, நிலம் ஒன்று” என்றார் சுஃபலர். அந்த மறுமொழி தனக்கேயானது என்று எண்ணியவராக லௌபாயனர் அவரை நோக்கி அமர்ந்திருந்தார். பின்னர் “சூதரே, இதில் நீங்கள் நிறைவுறுகிறீர்களா?” என்றார். “ஆம், நான் முழுமையடைந்துவிட்டேன். இன்று இறப்பினும் விண்ணுலகில் என் மூதாதையரை தேடிச்செல்வேன்” என்றார் சுஃபலர். “ஏனென்றால் நான் இதுவரை அன்னமென பரிமாறியது என் நெஞ்சு அறிந்த ஒற்றைச் சொல்லையே.”

“சுஃபலரே, இப்புவி விரிந்துபரந்தது. ஏராளமான ஊர்கள், எண்ணற்ற மாந்தர். எண்ணித்தீராத மெய்மைகள். இங்கு இவ்வொரு செயலில் அமைந்து நீங்கள் அவற்றை இழந்துவிட்டீர்கள் அல்லவா?” என்றார் லௌபாயனர். “இந்த ஆலமரம் இங்கு மட்டும்தானே நின்றுள்ளது” என்று சுஃபலர் சொன்னார். “சிற்றுயிர்ப்பூச்சிகள் பறந்தலைகின்றன. பறவைகள் ஊர்தேடிச் செல்கின்றன. யானைகளுக்கு ஒற்றைக்காடு மட்டுமே. யானைக்கூட்டங்கள் வந்து நின்று இளைப்பாறும் நிழல்கொண்ட இந்த மரம் எங்கும் செல்வதில்லை.”

அவர் சொல்வனவற்றை உணர்ந்துசொல்கிறாரா அல்லது எங்கோ கேட்டவையா அவை என எண்ணி லௌபாயனர் அவரை நோக்கிக்கொண்டிருந்தார். “ஆனால் இதன்வேர்கள் அங்கே அடிமலைச்சரிவுவரை செல்கின்றன. இதன் மகரந்தம் இக்காடு முழுக்க செல்கிறது. இதன் கொடிவழி ஒருவேளை தென்குமரிவரைக்கும்கூட சென்றிருக்கக் கூடும்.”

லௌபாயனர் நெஞ்சு இளகப்பெற்றார். “நான் இங்குள்ள அத்தனை குருநிலைகளுக்கும் சென்றுவிட்டேன், சுஃபலரே. நான் தேடுவதை கண்டடையவில்லை” என்றார். “அவ்வாறெனில் அது உங்களை தேடிவரட்டும், அந்தணரே. கனிமரங்களைப் பறவைகளும் பூக்களை வண்டுகளும் தேடிவருகின்றன” என்று சுஃபலர் சொன்னார். அவர் சொல்வதை புரிந்துகொண்டு லௌபாயனர் மெய்குளிர்ந்தார்.

“நான் உங்களை நல்லாசிரியனாகப் பணிகிறேன். நான் ஆற்றிய பிழை என்ன?” என்றார். “காட்டுப்பசுக்களின் பாலின் சுவை தொழுவத்துப் பசுக்களுக்கில்லை” என்றார் சுஃபலர். “இந்த ஆலமரத்தை ஒவ்வொருநாளும் நோக்கிக்கொண்டிருக்கிறேன். இங்கு அத்தனை பறவைகளும் கூடணைகின்றன. கிளைவிரித்து இது நின்றிருப்பது அவற்றை வரவேற்பதற்காகவே.”

நெடுநேரம் அந்த ஆலமரத்தையே நோக்கிக்கொண்டிருந்தார் லௌபாயனர். சுஃபலர் விரைவிலேயே துயின்றுவிட்டார். துயிலில் அவர் இதழ்கள் அசைந்துகொண்டிருப்பதை கண்டார். அச்சொல் என்ன என்பதை கூர்ந்து நோக்கினார். விழியுடன் செவி குவியவில்லை. ஆகவே செவிகளை மறந்து விழியால் அதை கேட்கமுயன்றார். விழிகள் அறிந்தது செவிக்குரிய சொல்லாகவில்லை. சலித்து பெருமூச்சுவிட்டு அவரும் படுத்துத் துயின்றார். துயிலில் மணிமுடிசூடிய முதிய அரசர் ஒருவர் தோன்றினார். அவர் விழிகளைக் கண்டதும் அவர் திகைத்து “சுஃபலரே நீங்களா?” என்றார். அவர் அக்குரலை கேட்கவில்லை. ஒருசொல்லை சொன்னார். தெளிவாக அதை அவர் விழிகளும் செவிகளும் அறிந்தன. அவர் அதை திரும்பச் சொன்னார். உடனே விழித்துக்கொண்டார்.

அது புலர்காலை. அவர் எழுந்தபோது அருகே சுஃபலர் இறந்துகிடப்பதை கண்டார். உடல் தளர்ந்திருந்தாலும் முகம் முலையுண்டு நிறைந்து உறங்கும் குழவியைப்போலிருந்தது. அவரை நோக்கிக்கொண்டிருந்தபோது தன் உதடுகள் அசைந்து ஒரு சொல்லை உரைப்பதை அவர் கேட்டார். சுஃபலரை அக்காட்டில் மண்மறைவு செய்துவிட்டு அங்கேயே லௌபாயனர் தங்கிவிட்டார். அங்கிருந்த அன்னச்சாவடியை அவர் தொடர்ந்து நடத்தினார். முதற்புலரியில் எழுந்து கிழங்குகளும் கீரைகளும் காய்களும் சேர்த்துவருவார். சமைத்துவைத்துக்கொண்டு வருவிருந்துக்காக காத்திருப்பார். செல்விருந்து ஓம்பி துயில்வார்.

அவர் எவரிடமும் பேசுவதே இல்லை. ஆயினும் அவர் மெய்ஞானி என்று மெல்ல புகழ்பெறலானார். அவரைத்தேடி மாணவர்கள் வந்தனர். அங்கு எவ்விலக்கும் எந்நெறியும் இல்லை என்பதனால் அத்தனை மெய்யுசாவிகளும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்குள் தொடர்ச்சியான சொல்லாடல்கள் நிகழ்ந்தன. சாங்கியர்களும் வைசேஷிகர்களும் மீமாம்சகர்களும் அமணர்களும் சார்வாகர்களும் வேதாந்திகளும் ஒருவரை ஒருவர் சந்தித்து சொல்மடுக்கும் இடமாக அது மாறியது. பிற எங்காயினும் தவிர்க்கமுடியாதபடி நிகழும் பூசல்கள் அங்கே லௌபாயனரின் இருப்பினால் தவிர்க்கப்பட்டன.

இரவும்பகலும் தத்துவம் பேசப்படும் இடம் என மகாதலம் சூதர்களால் சொல்லப்பட்டது. வணிகர்கள் அங்கு வந்து தங்கி கொடையளித்துச் செல்ல அது வளர்ந்தது. லௌபாயனரின் மாணவர்கள் அவரிடம் அடுமனையாளர்களாக சேர்ந்தனர். அவர் ஒற்றைச் சொற்களில் ஆணையிடும் பணிகளைச் செய்து அவருடன் இருந்தனர். ஆனால் அவர்களிலிருந்தே அனைத்துக் கொள்கைகளையும் நன்கறிந்த அறிஞர்களும் அறிந்ததைக் கடக்கும் படிவர்களும் உருவாகிவந்தனர். அவர்களில் முதல்மாணவரான மாதவர் அதை ஓர் கல்விநிலையாக வளர்த்தெடுத்தார். பலநூறுபேர் அங்கு ஒழியாது தங்கி சொல்லாடினர். ஆனால் அங்கு முதன்மையாக அன்னமே வழங்கப்பட்டது.

லௌபாயனர் தன் எண்பத்தெட்டாவது வயதில் நிறைவடைந்தார். ஆலமரத்தடியில் மலர்ந்த முகத்துடன் மல்லாந்து படுத்து அதன் விரிந்த கிளைகளில் கூடணைந்திருந்த பல்லாயிரம் பறவைகளை நோக்கிக்கொண்டிருந்த அவர் தன் அருகே இருந்த மாதவரிடம் அந்த மரத்தைச் சுட்டி “மைத்ரி” என்று சொன்னார். விழிமூடி நீள்துயில்கொண்டார். அந்த ஆலமரம் அதன் பின்னர் மைத்ரி என்று அழைக்கப்பட்டது. அதன் விதைகள் அக்காடு முழுக்க நட்டு விரிவாக்கப்பட்டபோது அக்காடே மைத்ராயனியம் எனப்பட்டது. ஒருங்கிணைவின் பெருங்காட்டில் எந்தக் கொள்கையும் நிகரான ஏற்புடையதே என்று இருந்தது. ஆனால் அதனாலேயே அங்கு வேதமெய்மை நிலைநின்றது. அது வேதச்சொல் வாழும் காடுகளில் முதன்மையானது என்று அறியப்பட்டது.

[ 3 ]

மைத்ராயனியக் காட்டிற்கு தன் தம்பியருடன் உச்சிப்பொழுதில் தருமன் வந்துசேர்ந்தபோது அதை ஒரு கல்விநிலை என்றே அவரால் எண்ணமுடியவில்லை. நூற்றுக்கணக்கான அத்திரிகளும் குதிரைகளும் மலைக்கழுதைகளும் அங்குள்ள மரநிழல்களில் பொதியவிழ்த்துக் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் சாணிமணமும் மிதிபட்டு சிறுநீருடன் கலந்த புல்லின் மணமும் அவற்றின் உடலில் எழுந்த வியர்வைமணமும் அங்கு நிறைந்திருந்தன. கனிகொண்ட ஆலமரம்போல அப்பகுதியே ஓசையால் நிறைந்திருந்தது. எவரும் எவரையும் முறைப்படி வரவேற்கவில்லை. முகமன்கள் உரைப்பதற்கு எவருக்கும் நேரமில்லை என்பதுபோல அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அங்கே ஓடிய நீரோடையில் கைகால்களை கழுவிவிட்டு குடில்வளாகத்திற்குள் நுழைந்தார்கள். மையமாக நின்றிருந்த சாலமரத்தின் அடியில் சுஃபலர், லௌபாயனர், மாதவர் மற்றும் அதன்பின்னர் அமைந்த பதினேழு ஆசிரியர்களின் நினைவாக கல்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மைத்ரியன்னை என்னும் அந்த முதல்மரம் அங்கு வருபவர்களின் தெய்வமாக ஆகிவிட்டிருந்ததை அதன் கிளைகளில் தொங்கிய சிறிய மலர்மாலைகள் மற்றும் வேண்டுதல் எழுதி சுருட்டிக்கட்டப்பட்ட ஓலைநறுக்குகள் ஆகியவற்றிலிருந்து உணரமுடிந்தது.

குடில்களின் மையமாக ஒரேபந்தியாக ஐந்நூறுபேர் உண்ணும் அளவுக்கு பெரிய அன்னசாலை அமைந்திருந்தது. அதற்குப் பின்னால் தொலைவில் அணையா அடுப்புகொண்ட அடுமனையிலிருந்து செங்கல்லால் ஆன புகைபோக்கி வழியாக அடுப்புப்புகை எழுந்து வானில் திருநீற்றுக் கீற்றென கரைந்து இழுபட்டு நின்றிருந்தது. அங்கிருந்து ஒரு கூரையிடப்பட்ட நீள்பாதை வழியாக உணவுக்கலங்கள் அன்னசாலைக்கு கொண்டுவரப்பட்டன. உணவுண்டவர்கள் கைகளைக் கழுவுவதற்காக நீரோடையின் ஒரு கிளை வடக்குப் பக்கமாக திருப்பிவிடப்பட்டு வளைந்துசென்றது. அதனருகே எச்சில் இலைகளும் இலைத்தொன்னைகளும் நிறைந்த பெரிய மூங்கில்கூடைகள் நின்றன. அவற்றை பொதியென ஆக்கி எடுத்துச்செல்லும் கழுதைகள் நின்றிருந்தன.

அன்னசாலையைச் சுற்றி நீளமான கொட்டகைகள் அமைந்திருந்தன. மூங்கில்நாராலான நூற்றுக்கணக்கான கட்டில்கள் வரிசையாக போடப்பட்டு ஒவ்வொரு கட்டிலுக்கும் ஒரு பரணும் அமைந்திருந்தது. அவற்றில் வணிகர்களும் வழிப்போக்கர்களும் அமர்ந்து உரத்த குரலில் பேசிச் சிரித்துக்கொண்டிருந்த ஒலி கூரைப்பரப்பை மீறி மேலெழுந்தது. “நாம் உணவு உண்டபின் இவர்களிடம் பேசுவோம்” என்றான் பீமன். “இங்கு மாணவர்கள் தங்குவதற்கான குடில்கள் எங்குள்ளன?” என்று தருமன் கேட்டார்.

அருகே நின்றிருந்த ஒரு சூதர் “இங்கு தனித்தனியான குடில்கள் எவருக்குமில்லை, உத்தமரே. முதலாசிரியர் மகாசங்கரும் கூட கொட்டகைகளில்தான் தங்கிக்கொள்கிறார். பெண்களுக்கு தனியான கொட்டகைகள் உள்ளன” என்றார். “இங்கு தங்குபவர்கள் அனைவரும் அன்னசாலையில் பணியாற்றவேண்டும் என்பது மரபு. இங்கு முதன்மையாக அன்னமே அளிக்கப்படுகிறது.” “இங்கு வேதவேள்விகளும் சொல்லவைகளும் இல்லையா?” என்று தருமன் கேட்டார். “அன்னமே இங்குள்ள வேள்வி. வயிற்றில் அன்னம் நிறைந்தபின் இயல்பாக எழுவதே மெய்ச்சொல்” என்றார் சூதர்.

மைத்ரியக் காடு ஏழு வேதக்காடுகளுக்குச் செல்லும் பாதைகள் சந்தித்துக்கொள்ளும் மையத்தில் இருந்தது. உண்மையில் அவ்விடுதியே அப்பாதைகளை உருவாக்கியது. அங்கு அன்னம் அறாது என்பதை அறியாத பயணிகள் இருக்கவில்லை. பின்னர் வணிகர்கள் சந்தித்துக்கொள்ளவும் அந்தணரும் சூதரும் உரையாடவுமான மையமாக அது ஆகியது. ‘மைத்ரியக்காட்டில் பேசப்படாத செய்தி’ என்ற சொல்லாட்சியே உருவாகி புழக்கத்திலிருந்தது. வெவ்வேறு நாடுகளின் நாணயங்களை உரியமுறையில் மாற்று கொள்வதற்குரிய இடமாகவும் அது காலப்போக்கில் மாறியது.

பந்தியில் ஐவரும் அமர்ந்தனர். திரௌபதி அப்பால் பெண்களுக்கான பந்தியில் அமர்ந்தாள். அங்கே பன்னிரு பெண்களே இருந்தனர். பத்துபேர் தங்கள் பாணர்களுடன் வந்த விறலியர். ஒருத்தி முதுபார்ப்பனி. ஒருத்தி வணிகர்களுடன் வந்த பரத்தை. “தங்கள் குலமறிவித்து பந்தி கொள்க!” என்றான் உணவுபரிமாறுபவன். திரௌபதி விறலியருடன் சென்று அமர்ந்துகொண்டாள். அனைவர் முகங்களிலும் வியப்பு தெரிந்தாலும் அவர்கள் ஒன்றும் கேட்கவில்லை.

தருமன் தன்னை வழிப்போக்கனாகிய சூதன் என்று அறிவித்துக்கொண்டான். பரிமாறுபவன் விழிகளில் ஐயத்துடன் “அப்பேருருவரும் சூதரா?” என்றான். “ஆம்” என்றான் பீமன். “நான் அடுமனைப்பணியாளன். உண்டு பெருத்தவன்.” அவன் புன்னகைத்து “நன்று” என்றான். அவர்களுடன் ஐநூறுபேர் உணவருந்தினர். அது உச்சிப்பொழுதின் நாலாவது பந்தி. ஆயினும் உணவு சூடாகவும் சுவையுடனும் இருந்தது. கீரையும் கிழங்கும் கோதுமை மாவும் சேர்த்து பிசைந்து அவித்த அப்பங்கள். அரிசியுடன் பயறு சேர்த்து பொங்கப்பட்ட அன்னம். பருப்பும் கீரையும் கலந்த கூட்டு. உள்ளே வெல்லம் வைத்து தீயில் சுட்ட கிழங்கு. எண்ணையிட்டு வதக்கப்பட்ட வழுதுணையும் வெண்டையும். புளிக்காய் சேர்த்து கொதிக்கவைக்கப்பட்ட மோர். சுக்கு போட்டு கொதிக்கவைக்கப்பட்ட குடிநீர்.

அவர்கள் உண்ணத்தொடங்கிய சற்றுநேரத்திலேயே பீமன் உண்பதை நோக்கியபடி அனைவரும் விழிமறந்து அமர்ந்திருந்தார்கள். அடுமனைப்பணியாளர் இருவர் அவனுக்காகவே பரிமாறத்தொடங்கினர். தருமன் “மந்தா… சூழை நோக்கு… மந்தா” என பலமுறை மெல்ல இடித்துரைத்தபோதும் அதை பீமன் கேட்கவில்லை. உணவைக் கண்டதுமே அவன் அதனுடன் கலந்துவிட்டிருந்தான். தருமன் தடுமாற்றத்துடன் அப்பாலிருந்த அர்ஜுனனை நோக்க அவன் புன்னகையுடன் “இரண்டின்மை” என்றான். நகுலன் “ஒன்றும் செய்யமுடியாது, மூத்தவரே” என்றான். “அவனை எவர் என அறிந்துவிடுவார்கள்” என்றார் தருமன். “அங்காடியில் யானை என அவரை சற்றுமுன் அந்த சூதன் சொன்னான். எப்படி மறைக்கமுடியும்?” என்றான் சகதேவன்.

சற்றுநேரத்தில் அடுமனைப்பொறுப்பான முதியவர் கரிபடிந்த மரவுரி ஆடையும் வியர்வை வழிந்த உடலுமாக வந்தார். விறகுப்புகை அவருடன் வந்தது. உரத்த குரலில் “நல்லுணவு கொள்பவர் ஒருவர் வந்துள்ளார் என்றனர். தாங்களென அங்கிருந்தே அறிந்தேன், விருகோதரரே. என் கைசமைத்த உணவு இனிது என நம்புகிறேன்” என்றார். “நல்லுணவு என்பதற்கு அப்பால் ஒன்றும் சொல்வதற்கில்லை. எல்லா உணவும் நன்றே” என்றான் பீமன். “ஆம், உண்மை. இதில் கூடுதலாக உள்ளது எங்கள் அன்பு மட்டுமே” என்றார் அடுமனைத்தலைவர்.

49

“பெரும்பசிக்காக தவம்புரிகின்றன அடுமனைகள். இங்கு நாங்கள் எவரையும் வரவேற்பதோ வழியனுப்புவதோ இல்லை, இளையபாண்டவரே. தங்களுக்காக எழுபவை என் நாவின் தனிச்சொற்கள். தங்களுக்கு என்னவேண்டுமென சொல்லலாம்” என்று அவர் பீமன் அருகே வந்து நின்றார். “மேலும் உணவு!” என உரக்க நகைத்தபடி பீமன் சொன்னான். “ஆம், உணவு உள்ளது. தாங்கள் மகோதரர் ஆனாலும் எங்கள் உணவுக்குவையை ஒழித்துவிடமுடியாது” என்றார் முதியவர். “அதை அறிவேன். ஆனால் என் இருகைகளாலும் ஒருவாயாலும் அதை நிகழ்த்தவே முயல்வேன்” என்றான் பீமன்.

“அடுமனைத்தலைவரை வணங்குகிறேன். நான் மூத்த பாண்டவனாகிய யுதிஷ்டிரன். இவர்கள் என் தம்பியர். அங்கே பெண்கள்நிரையில் என் அரசி அமர்ந்திருக்கிறாள்” என்றார் தருமன். “நன்று, தாங்கள் இவ்வழி செல்லவிருக்கிறீர்கள் போலும்” என்றார் அடுமனைத்தலைவர். “இல்லை, நாங்கள் வேதம் பயிலும் காடுகளினூடாக சென்றுகொண்டிருக்கிறோம். மேலும் மேலும் உண்ணவிழையும் பசிநோய் கொண்டவர்கள்போல. இங்கு வரலாம் என்று எங்கள் தோழர் ஒருவர் சொன்னார். இங்கு தங்கி கற்க விழைகிறோம்” என்றார் தருமன்.

“இங்கே கல்விச்சாலை என ஏதுமில்லை. ஆசிரியர்களும் மாணவர்களும் என எவரும் இல்லை” என்றார் அடுமனைத்தலைவர். “இது ஒரு அடுமனை, ஓர் அன்னசாலை. அதற்குமேல் எதுவும் இங்கு அமைக்கப்படலாகாது என்பது எங்கள் முதன்மையாசிரியரான மாதவரின் ஆணை. அவருடைய ஆசிரியரும் இவ்வன்னசாலையின் மெய்யாசிரியருமான லௌபாயனர் முதல் அனைவருமே இங்கு அன்னம் சமைத்து பரிமாறி நிறைவதை அன்றி எதையும் செய்ததுமில்லை.” பீமனை நோக்கி விழிசுட்டி “இவர் நல்ல அடுமனையாளர் என அறிந்திருக்கிறேன். எனக்கு பெருந்துணையாக இருப்பார். பிறர் விரும்பினால் இங்கு கொட்டகைகளில் தங்கி அடுமனைகளில் பணியாற்றலாம்.”

“அது எங்கள் பேறு” என்று தருமன் சொன்னார். “முகமன் நன்று. ஆனால் அடுமனைப்பணி அத்தனை எளிதல்ல” என்று சொல்லி அடுமனைத்தலைவர் திரும்பினார். “உண்டு ஓய்வெடுத்தபின் அடுமனைக்கு வருக! உங்களுக்கு எவரும் பணி அளிக்கமாட்டார்கள். நீங்களே இங்கு நிகழும் அன்னவேள்வியில் உங்கள் இடத்தை கண்டடையலாம்” என்றபின் அவர் உள்ளே சென்றார். அருகே நின்றிருந்த அடுமனைப்பணியாளன் “அவர்தான் இக்கல்விச்சாலையின் முதலாசிரியர் பிரபவர். அடுமனை பேணலையே கல்வியென செய்துவருகிறார்” என்றான். “ஆம், நான் எண்ணினேன்” என்றார் தருமன்.

உணவுண்டு முடித்து ஓய்வெடுப்பதற்காக அவர்கள் கொட்டகைக்குள் சென்றனர். அங்கே பாதிக்கும்மேலான கட்டில்களில் வணிகர்கள் துயின்றுகொண்டிருந்தனர். அவர்களுடன் வந்த காவல்நாய்கள் அவர்களின் பொதிகளுக்கு அருகே சுருண்டுகிடந்தன. காலடியோசைகளில் அவற்றின் செவிகள் அசைந்து மடிந்து நிமிர்ந்தன. அவற்றின் விழிகள் மட்டும் உருண்டு அவர்களை நோக்கின. கட்டில்களைத் தெரிவுசெய்து படுத்து உடல்தளர்த்திக்கொண்டதுமே தருமன் கண்மயங்கலானார். அவரருகே நகுலனும் சகதேவனும் படுத்தனர். “மந்தன் எங்கே?” என்றார் தருமன். “அவர் அடுமனைக்குள் சென்றுவிட்டார். இளையவரும் உடன் சென்றார்” என்றான் நகுலன். தருமன் கண்களை மூடியபடி “அவர்களுக்கு சோர்வே இல்லை… அவர்கள் உடல்களுக்கு இவ்வுலகு போதவில்லை” என்றார்.

“தாங்கள் அடுமனைப்பணியாளனாக செல்லவேண்டியதில்லை, மூத்தவரே” என்று நகுலன் சொன்னான். தருமன் விழி திறக்காமலேயே புன்னகைத்து “மாறாக இது ஒரு நல்வாய்ப்பென்றே எண்ணுகிறேன். அடுமனைப்பணியில் திறனற்றவை என சில இருக்கும். இசைச்சூதனாகச் செல்வதும் குதிரைச்சூதனாக சாட்டையெடுப்பதும்தான் கடினம்” என்றார். நகுலன் “இங்கு இப்படி ஒரு பெருங்கூட்டத்தில் தத்துவக்கல்வி எப்படி நடக்கமுடியும்? எவர் எதை கற்றுக்கொள்ள முடியும்?” என்றான். சகதேவன் “சந்தையில் செவி திறந்திருப்பவன் அறிஞனாவான் என்று இளைய யாதவர் சொன்னார்” என்றான்.

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 48

[ 19 ]

நீண்டபேச்சுக்குப்பின் வரும் அமைதியில் சித்தத்திலும் சொற்களில்லாமல் ஆகிவிடும் விந்தையை அதிலிருந்து விழித்தபின் தருமன் எண்ணிக்கொண்டார். காற்று மரங்களை உலைக்கும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. மிகத்தொலைவில் காட்டுக்குள் கருங்குரங்குகள் நாய்க்குரைப்பு போல ஒலியெழுப்பின. அரசமரத்திலிருந்து இலைகள் சுழன்றிறங்கி சரிந்து சென்றன.

இளைய யாதவரின் சொற்களினூடாக நெடுந்தூரம் சென்று அறியா நிலங்களில் வாழ்ந்து மீண்டபோது உதிரியான காட்சிகள் மட்டும் கனவு கலைந்து எஞ்சுவன போல அவருள் இருந்தன. இளைய யாதவர் சற்று அசைந்தபோது அவ்வோசையால் அவர் முழுமையாக மீண்டு வந்தார். “நெடுநேரமாயிற்று” என இளைய யாதவர் சொன்னார். “ஆம், நீங்கள் இதைப்போல கட்டற்றுப் பேசுவதை நான் கேட்டதே இல்லை” என்றார் தருமன்.

இளைய யாதவர் நிமிர்ந்து நோக்கி விழிகளில் சிரிப்புடன் “அப்படியா? நான் பேசிக்கொண்டே இருப்பவன் என்றல்லவா என் கல்வித்தோழர்களும் பெண்களும் சொல்கிறார்கள்?” என்றார். “இளவயதில் என்னால் ஒன்றை பேசத்தொடங்கினால் நிறுத்தமுடியாது. நான் எவர் செவிக்காகவும் பேசுபவன் அல்ல. என்னுள் எழும் ஒரு சித்திரத்தைத்தான் பேசிப் பேசி முழுமையாக்கிக்கொள்வேன். தொடுத்துச்செல்வது முழுமையடையாமல் என்னால் நிறுத்தமுடியாது. பேசத்தொடங்கியதுமே கேட்பவர்களை மறந்துவிடுவேன்” என்றபின் மேலும் சிரித்து “நான் கற்ற தத்துவநூல்களை முழுமையாகவே பேசித்தான் தொகுத்துக்கொண்டேன். அவற்றை மறுப்பதும் பேசியபடிதான்” என்றார்.

“முழு தத்துவநூலையும் நின்று கேட்பதென்றால் கடினம்தான்” என தருமன் நகைத்தார். இளைய யாதவரும் நகைத்துக்கொண்டு “அந்நூலை எவ்வகையிலும் எதிர்கொள்ளவில்லை என்றால் கேட்கலாம். என்னுடன் சுதாமன் என்னும் அந்தணன் பயின்றான். எளிய வைதிகன். என் சொற்களை சொற்களாகவே கேட்டு கடந்துசெல்பவன். இரும்புக்காதுகொண்டவன் என அவனை சொல்வார்கள்” என்றார்.  “அவன் நெடுநாட்களுக்குப்பின் என்னை காணவந்திருந்தான். பெரிய குடும்பம், பதினெட்டு குழந்தைகள். எப்படி அவர்களுடன் வாழ்கிறாய் என்று கேட்டேன். யாதவனே, நான் உன் ஒருவனிடம் அடைந்ததை இவர்கள் பதினெட்டுபேரும் சேர்ந்து எனக்கு அளித்ததில்லை என்றான்.”

தருமன் அவர் சிரிப்பை நோக்கிக்கொண்டிருந்தார். பின்பு “யாதவரே, நீங்கள் நகையாட்டாகவும் மன்றுரையாகவும் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். இன்று பேசியதுபோல உங்கள் செயல்களை நீங்கள் விளக்கிப்பேசியதில்லை” என்றார். இளைய யாதவர் விழிமாறுபட “ஆம்” என்றார். தலைகுனிந்து “அதைப்பற்றியே நான் வியந்துகொண்டிருக்கிறேன்” என்றார். தருமன் “ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் இன்னமும் முழுக்க உங்களுக்கே விளக்கிக் கொள்ளவில்லை” என்றார். இளைய யாதவர் விழிகளைத் தூக்காமல் “ஆம்” என்றார். “நீங்கள் செய்தவை உங்கள் நெஞ்சில் இருந்து உறுத்துகின்றனவா?” என்றார் தருமன். அவ்வாறு அவர் ஒருபோதும் இளைய யாதவரிடம் பேசியதில்லை என்று எண்ணமெழுந்தது.

“இல்லை, இதுவே எல்லை என்றுணர்கிறேன். யாதவர் முற்றழிவின் விளிம்புவரை சென்றுவிட்டார்கள். கூர்வாளைச் சுழற்றி விளையாடும் மைந்தனை கல்வீசி வீழ்த்துவதுபோன்றது நான் ஆற்றியது” என்று இளைய யாதவர் சொன்னார். “பிறிதொரு வழி இல்லை. அனைத்தையும் நோக்கிவிட்டு நான் அடைந்தது இது. இந்த அறுவைமருத்துவமே அவர்களை ஒன்றாக்கியது. ஆனால் இதையும் அவர்கள் கடப்பார்கள் என்றால் இனியொன்றும் செய்வதற்கில்லை.”

“அவர்கள் முற்றடங்கிவிட்டார்கள் என்றீர்கள்?” என்று தருமன் கேட்டார். “ஆம்” என்றார் இளைய யாதவர். “யாதவர்கள் ஆழத்தில் பெரும்கோழைகள். ஷத்ரியர்களைப்போல எதையும் போராடிப்பெறும் உளம்கொண்டவர்கள் அல்ல. வேளாண்குடிகளைப்போல நெடுநாட்களாக நிலம்காத்து நின்றிருப்பவர்களும் அல்ல. ஒவ்வாததை கைவிட்டுச் சென்றுகொண்டிருக்கும் உளநிலை எப்போதும் அவர்களை ஆள்கிறது. மனித உள்ளங்கள் அவர்கள் புழங்கும் சூழலில் உள்ளவற்றில் உள்ளுறைந்துள்ள பொருளை தாங்களும் பெற்றுக்கொள்பவை. எப்போதும் அக்கரைப்பச்சை நாடும் கால்நடைகளால் சூழப்பட்டவர்கள் யாதவர்.”

“களங்களில் நான் அவர்களை கூர்ந்து நோக்கியிருக்கிறேன். அவர்களால் போரைத் தொடங்குவதுதான் கடினம். இடர் என வந்ததுமே அங்கிருந்து விலகிச்செல்வதைத்தான் அவர்களின் உள்ளம் நாடுகிறது. அவர்களின் உடல்கள் விலகாதபோதுகூட உள்ளம் விலகி நெடுந்தொலைவு சென்றிருக்கும்” என்றார் இளைய யாதவர். “ஆகவே நீச்சலுக்கு அஞ்சிப்பின்னடைபவனை நீரில் தள்ளிவிடுவதைப்போல ஒவ்வொருமுறையும் அவர்களை போருக்குள் செலுத்துவது என் வழக்கம். போரில் ஈடுபட்டபின் அவர்கள் தங்கள் அச்சத்தை தாங்களே காண்கிறார்கள். அதை வெல்லும்பொருட்டு இரக்கமற்றவர்களாகவும் கண்மூடித்தனமான வெறிகொண்டவர்களாகவும் தங்களை ஆக்கிக்கொள்கிறார்கள்.”

“அவர்கள் போரிடுவதேகூட ஷத்ரியர்களைப்போல அதில் திளைப்பதற்காக அல்ல, அதை முடிந்தவரை விரைவாக முடித்து அதிலிருந்து விலகிவிடவேண்டுமென்பதற்காகவே. அவர்கள் வெற்றியமலை ஆடுவதை நோக்கியிருக்கிறேன். அவர்கள் கொண்டாடுவது தங்கள்மேல் தாங்கள் கொண்ட வெற்றியைத்தான்” என இளைய யாதவர் சொன்னார். “அவர்களின் உள்ளத்தில் நீங்காத அச்சத்தை நிலைநிறுத்திவிட்டேன். இனி ஒரு பூசலுக்கு தன்னியல்பாக அவர்கள் எழப்போவதில்லை. அது அவ்வண்ணமே நீடிக்கும்வரை யாதவரின் ஒற்றுமைக்கும் இடரில்லை.”

“ஆனால் நீங்கள் அதை நம்பவில்லை. உங்கள் உள்ளத்தின் கலக்கம் அதன்பொருட்டே” என்றார் தருமன். இளைய யாதவர் ஒன்றும் சொல்லவில்லை. “இங்கு வருவதற்கு முன் உங்கள் ஆற்றல்மிக்க உள்ளத்தால்கூட வகுத்துக்கொள்ள முடியாத ஒன்று நிகழ்ந்தது. அதனால்தான் அர்ஜுனனைத் தேடி வந்திருக்கிறீர்கள். நீங்கள் இவ்வளவு பேசியதுகூட அதனால்தான்” என்று தருமன் மீண்டும் சொன்னார். “ஆம்” என்றார் இளைய யாதவர். அவர் மேலே சொல்வதற்காக தருமன் காத்திருந்தார். ஆனால் உடையை சீரமைத்தபடி இளைய யாதவர் எழுந்துவிட்டார்.

தருமன் எழுந்தபடி இயல்பான குரலில் “இளையவன் தங்களுக்காக காத்திருக்கிறான் என நினைக்கிறேன்” என்றார். “ஆம், இருவரும் இன்று காட்டுக்குள் வேட்டைக்குச் செல்லலாம் என சொல்லியிருந்தேன்” என்றார் இளைய யாதவர். “வருகிறேன், அரசே” என்றபின் தயங்கி “நான் இன்று அரசியிடம் சற்று கடுமையாகப் பேசிவிட்டேன் என நினைக்கிறேன். அவர்களிடம் என் அன்பை தெரிவிக்கவேண்டும்” என்றார். “நீங்களன்றி எவர் அதை அவளிடம் சொல்லமுடியும்?” என்றார் தருமன். “இன்னொருமுறை சந்திக்கும்போது சிரிக்க வைத்துவிடுகிறேன்” என்றபடி இளைய யாதவர் தன் சால்வையை மீண்டுமொருமுறை சீராக போட்டுக்கொண்டார்.

பின்னர் தருமனை நோக்காமல் “சால்வனின் படையெடுப்பின்போதெல்லாம் மூத்தவர் துவாரகையில் இல்லை. பாலைவேட்டைக்குச் சென்றவர் அவ்வழியாக மதுராவுக்கும் பின் மதுவனத்திற்கும் சென்ற பின்னர் திரும்பிவந்தார். திரும்பிவரும்வரை அவரிடம் எதுவும் சொல்லப்படவில்லை. அது என் ஆணை, அவரிடம் அரசியல்செய்திகளை சொல்லவேண்டியதில்லை என்பது” என்றார். தருமன் காத்து நின்றார். “வந்ததுமே அவர் தன் அரசியிடம்தான் பேசினார். மறுநாள் என் மன்றுக்கு அவர் வரவில்லை. மாலை என் அறைக்கும் அவர் வரவில்லை.”

“அவர் எளிதில் உளத்திரிபு கொள்பவர். எளிதில் உளம்திரிபவர்களை வெல்வதும் எளிது” என்றார் தருமன். “ஆம், இடம்பொருள் அறியாப் பெருஞ்சினமே மூத்தவரின் இயல்பு. அது ஓரிரு சொல்லில் அணைந்து குளிர்வதையும் நான் அறிவேன். ஆணவமும் தன்னலமும் தொடாத உள்ளம் கொண்டவர் அவர். ஆகவேதான் அவர் சினம் கொண்டிருப்பார் என்றும் அச்சினம் தணிந்த பின்னர் அவரே வரட்டும் என்றும் ஒருநாள் காத்திருந்தேன். அவர் வரவில்லை என்று கண்டதும் நானே இயல்பாக அவர் அரண்மனைக்குச் சென்றேன். நான் வரும் செய்தியை முன்னறிவிப்பு செய்யவில்லை. வாயிலில் நின்றபின் காவலனிடம் வந்திருப்பதை அறிவிக்கும்படி சொன்னேன்.”

“உள்ளே அரசி இருந்தார்கள். அவர்கள் சென்றபின் நான் உள்ளே சென்றேன். மூத்தவர் சினம்கொண்டு பெருங்கைகளை ஓங்கியபடி என்னை தாக்க வருவார் என எண்ணினேன். பலமுறை என்னை அவர் தாக்கியதும் உண்டு. இரண்டு அடிகளை நான் வாங்கிக்கொண்டேன் என்றால் அவர் கை அதன்பின் எழாது. அவரிடம் சொல்லவேண்டிய சொற்களை எனக்குள் கோத்தபடி அவர் அறைக்குள் நுழைந்தேன். அவர் பீடத்தில் அமர்ந்திருந்தார். என் காலடியோசை கேட்டதும் நிமிர்ந்து நோக்கியபின் விழிகளை திருப்பிக்கொண்டு அமர்க என்று கைகாட்டினார்.”

நான் அமர்ந்துகொண்டேன். அவர் உடலும் முகமும் காட்டிய மூத்தவரை நான் அதற்கு முன் கண்டதே இல்லை. ஆகவே என் உள்ளம் மலைப்புகொண்டிருந்தது. எங்கு பேச்சை தொடங்குவதென்று தெரியவில்லை. கைகளை கோத்தபடி அமர்ந்திருந்தேன். அவரும் நான் பேசுவதற்காக காத்திருந்தார். அது அவர் இயல்பே அல்ல. நான் இயல்பாக மதுவனத்தில் பிதாமகர் எப்படி இருக்கிறார் என்று கேட்டேன். நன்றாக இருக்கிறார் என்று ஒற்றைச் சொல்லுரைத்தார். பெரியதந்தையர் பற்றி கேட்டேன். அதற்கும் ஒற்றைவரியே மறுமொழியாக வந்தது. மதுராவில் தந்தையைப்பற்றியும் அன்னையரைப்பற்றியும் கேட்டேன். நலமாக இருக்கிறார்கள், இடரொன்றும் இல்லை என்றார்.

அவருடைய இயல்பே அல்ல அது என்பதனால் நான் செயலிழந்துவிட்டேன். பின்னர் என்னை திரட்டிக்கொண்டு ஊக்கமெழுந்த குரலில் நான் சால்வனை வென்றதைப்பற்றி சொன்னேன். என்னிடம் வெளிப்படும் சிறுவனை மூத்தவர் பெரிதும் விரும்புவார் என எனக்குத் தெரியும். அதனாலேயே அவர்முன் இருக்கையில் என்னையறியாமலேயே நான் சிறுவனாகிவிடுவதுண்டு. என் குரல் விரைவுகொள்ளும். சிறுவர்களைப்போல கைகால்களை வீசி ஒவ்வொன்றையும் விவரிப்பேன். மலர்ந்தமுகத்துடன் அவர் கேட்டிருப்பார். ‘மூடா! மூடா!’ என தலையிலடித்து சிரிப்பார். ‘பார்த்தீர்களா இவனை, மூடச்சிறுக்கன்!’ என அருகிருப்பவரிடம் சொல்வார்.

அன்று சால்வனின் போர்நிகழ்வுகளை சொல்லச் சொல்ல அவர் விழிகள் வெறுமையாக என்னை நோக்கியிருந்தன. ஆகவே என் குரல் தணிந்தது. அதை நான் மேலெழச்செய்தபோது மிகையாகியது. செயற்கையாக சிறுவனைப்போல் நடிக்கிறேன் என உணர்ந்ததுமே என் பேச்சு அறுபட்டு நின்றது. என்ன ஆயிற்றென்றே தெரியாமல் நான் தன்னிரக்கம் கொண்டேன். ‘மூத்தவரே, இங்கு நிகழ்ந்தவை வெறும் உளப்பிளவுகள் மட்டுமல்ல. யாதவர்களுக்கு குலப்பூசல் புதிதும் அல்ல. ஆனால் தன்குலத்தை போர்முனையில் காட்டிக்கொடுப்பதை இன்றுவரை யாதவர் செய்ததில்லை. நம்மவர் அதையும் செய்தனர். கீழ்மையின் அடியிலி. அதை என் நெஞ்சு தாளவில்லை’ என்றதுமே என் கண்கள் நீர்கொண்டு குரல் உடைந்தது.

அது உண்மை உணர்வு, அரசே. நான் ஆயிரம் அலுவல்சொற்களாலும், நாள்நிகழ்வுகளாலும் மூடிமூடிவைத்திருந்த அனல். அதை மிக அணுக்கமான எவரிடமாவது சொல்ல ஏங்கியிருந்தேன். அவரன்றி அத்தனை அருகே பிறர் எவருமிருக்கவில்லை என்று உணர்ந்தேன். ‘தொன்மை மிக்க ஹேகயகுடியினர் அதை செய்தனர். என்னை களத்தில் சால்வனிடம் ஒற்றுக்கொடுத்தனர். நான் வென்றது வீரத்தால் அல்ல, அவ்வஞ்சம் கண்டு எழுந்த பெருஞ்சினத்தால்தான்’ என்றேன். என் உணர்வுகள் கட்டின்றி பெருகின. தெய்வத்தின் முன் என அமர்ந்து என் உள்ளத்தை பெருக்கினேன்.

‘காலந்தோறும் அடிமைப்பட்டுக் கிடந்த குலம், மூத்தவரே. இன்று காலம் ஒரு பீடத்தை நமக்கு காட்டுகிறது. இது ஒரு தற்செயல். நீரொழுக்கில் செல்பவன்மேல் வந்து முட்டும் தெப்பம்போன்றது. நம்மைவிடத் தகுதியான குலங்கள் பல இங்கிருக்கலாம். நமக்கு இது அமைந்தது. புதுநிலங்களை தேடிச்சென்ற நம் குடி பெருகியதனால். நம்குடிகளை இணைக்கும் வணிகப்பாதைகள் உருவாகி வந்தமையால். நம்மை வெல்லும் படைவல்லமை கொண்ட ஷத்ரியப் பேரரசுகள் இன்மையால். ஷத்ரியப் பேரரசுகளின் உட்பூசல்களால். கலங்கள் கட்டும் கலை வளர்ந்து கடல்வணிகம் பெருகியமையால். ஆயிரம் உட்சரடுகள். அவை பின்னிய வலையில் நாம் மையம் கொண்டிருக்கிறோம்.’

‘சூத்திரர் படைகொண்டு பெயர்கொண்டு வரலாற்றில் எழுந்து வரமுடியும் என்று நாம் பாரதவர்ஷத்திற்கு காட்டியாகவேண்டும். அப்பொறுப்பை நமக்கு அளித்துள்ளது காலம். அதை நாம் தவறவிட்டோம் என்றால் இப்பெருநிலத்தில் பிறகு அது நிகழ மேலும் பல்லாயிரமாண்டுகள் ஆகலாம். ஒவ்வொரு நிலத்திலும் எழுந்து வந்துகொண்டிருக்கின்றன தொல்குடிகள். அனைவருக்கும் முன்னால் செல்லும் கொடி நம்முடையது’ என்றேன். ‘அனைத்துக்குடிகளும் வளர்ந்தாகவேண்டும். அதுவே இப்பெருநிலத்தின் நல்லூழ். இங்கு நாம் கோட்டையும் கொடியும் கொண்டு அமர்ந்திருப்பது அதன்பொருட்டே.’

‘இந்தச் சுடரை நாம் அணையவிடலாகாது. அப்பெரும் பழியிலிருந்து நம்மை வரும் தலைமுறைகள் விடுவிக்காது. நம் எதிரிகள் வரவிருக்கும் புதிய பாரதவர்ஷத்திற்கு குறுக்கே நிற்பவர்கள். பெருவெள்ளத்தைத் தடுக்கும் எளிய மதகுகள். அவர்கள் உடைக்கப்பட்டாகவேண்டும். அதைவிட நம்முள் முளைக்கும் வஞ்சகர்கள் முழுமையாக அகற்றப்பட்டாகவேண்டும். தங்கள் அறிவின்மையால் தன்னலத்தால் அவர்கள் அழிப்பது மாபெரும் மானுடக் கனவொன்றை.’

‘ஆம், நான் மிகையான வன்மையுடன் இவர்களை தண்டிக்கிறேன். மூத்தவரே, நான் யானையின் கையிலிருக்கும் கழி. என் எடையைவிட நூறுமடங்கு பெரியது என் அடியின் விசை. நான் வரவிருக்கும் யுகத்தின் படைக்கருவி. புதுமழையில் நிலம் முளைப்பதுபோல பாரதவர்ஷம் தளிர்த்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருநாளும் ஒரு புதியகுடி கோல்கொண்டு எழுந்துவருகிறது. நாளுமொரு வணிகப்பாதை சென்று அறியா நிலமொன்றை தீண்டுகிறது. நிலம்பிளந்து எழுந்துவரும் பெருந்திரளின் முகப்பிலெழுந்தது இக்கருடக்கொடி.’

நான் பேசிக்கொண்டிருக்கையில் அவர் விழிகள் நிலையற்று அசைந்தன. தோள்களில் தசைகள் இறுகித்தளர்ந்தன. இயல்பாகத் திரும்பி அருகே இருந்த தாலத்திலிருந்து மாங்கனி ஒன்றை எடுத்து கைகளால் அதன் தோலை உரிக்கத் தொடங்கினார். அக்கணத்தில் என்னில் பெருஞ்சினம் எழுந்தது. ‘ஆகவே என் செயல்களுக்கு நான் இன்றுள்ள எவருக்கும் விளக்கமளிக்க வேண்டியதில்லை. கோடிமாந்தரை கால்கீழிட்டு மிதித்து எழுந்து இவர்கள் இங்கு அமைத்திருக்கும் அரசுகளின் முறைமைகளுக்கும் நெறிகளுக்கும் நான் கட்டுப்பட்டவனும் அல்ல. எளியோரின் விழிநீரை அறியாத இவர்களின் அறமல்ல என் அறம். மானுடத்தை பேரன்புடன் அணைத்துக்கொள்ளாத இவர்களின் இறுகிய வேதமல்ல என் சொல்’ என்றேன்.

‘என்னுள் இருந்து ஆணையிடும் விராடபுருஷனுக்கு மட்டுமே நான் செவிசாய்க்கிறேன். இச்சிறு உடல் அல்ல நான். இக்குடியினன் அல்ல. இக்குலத்தோனும் அல்ல. பாரதவர்ஷமெங்கும் வேரோடி பல்லாயிரம் கிளைவிரித்து வான்சுமந்து நின்றிருப்பவன். இவர்கள் அகம் பிரம்மாஸ்மி என்று சொல்லும் வீண் சொல் அல்ல என் உள்ளமைந்தது. முற்றுணர்ந்து சித்தமென்றாகி நின்றிருக்கிறேன் அவ்வறிதலை. ஆம், நானே பரமபுருஷன்!’ என்றேன். அதன்பின் சொல் செல்லாதென்று உணர்ந்து அமைதியடைந்தேன். சிலகணங்கள் தரையை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன். பின்னர் எழுந்து தலைவணங்கி அவர் அறைவிட்டு வெளியேறினேன்.

ஆனால் என் அறை நோக்கி செல்லச் செல்ல சோர்வடைந்தபடியே சென்றேன். நான் சொன்ன முழங்கும் சொற்களை மீண்டும் கேட்கையில் எவருடையவையோ என ஒலித்தன. அவற்றை ஏன் அத்தனை முழக்கினேன்? அவ்வாறென்றால் நான் அவற்றை உண்மையில் நம்பவில்லையா? தொலைவில் நின்றிருப்பவர்களிடமே கூவிச்சொல்கிறோம், தன்னுடன் சொல்லும் சொற்களை எவரும் கூவவேண்டியதில்லை என்று ஆசிரியர் சொல்வதுண்டு. என் அகம் எனக்குள் அத்தனை ஆழத்திலா அமைந்திருக்கிறது? அவை உண்மை. ஆனால் அவையே உண்மை அல்ல. அதற்கப்பாலும் ஓர் உண்மை உள்ளது. அது என்ன? அதை நான் அறிவேன். அதன்மேல் உணர்வுகளால் போர்வையிட்டிருக்கிறேன்.

அது என்ன என்று என் அறைக்குள் சென்று பீடத்திலமர்ந்ததும் உணர்ந்தேன். நான் சொன்னவை அனைத்தும் மெய்யே. பாரதவர்ஷத்தின் பல்லாயிரம் புதுக்குலங்கள் முளைத்தெழுவதை காண்கிறேன். அவை எழுந்து தழைத்து இத்தொல்பெருநிலம் வாழவேண்டுமென விழைகிறேன். இதன் தொல்மூதாதையர் அறிந்த மெய்மை பல்லாயிரம் கிளைகள் கொண்டு பெருகவேண்டுமென கனவுகாண்கிறேன். அதன்பொருட்டே இங்கு முடிசூடியிருக்கிறேன். அதற்காகவே குருதிசூடி களம் நிற்கிறேன்.

ஆனால் அது எனக்குள் வாழும் அந்த விராடபுருஷனுக்கு எவ்வகையிலும் ஒருபொருட்டல்ல. அவன் நின்றிருக்கும் வெளியில் அவனைச் சூழ்ந்திருப்பது முழுமுற்றான இன்மை மட்டுமே. அதை உணர்ந்ததுமே நான் விடுபட்டேன். இரும்புத்தூண்மீது படிந்த களிம்பு இந்த யாதவத்தோற்றம். நான் இதுவல்ல. ஆனால் இதுவும் நானே.

அன்றிரவு மீண்டும் என் உள்ளம் உருகத்தொடங்கியது. என் மூத்தவர் என் வெண்ணிழல் என என்றும் என்னுடன் இருந்தவர். கற்றும் கருதியும் நான் வளர்ந்தபோது இழந்தவை அனைத்தும் கூடி அவர் வடிவாக என்னைத் தொடர்ந்தன. அவரின்றி என்னை எண்ணிக்கொண்டதே இல்லை. அவருடன் ஆயிரம் பூசல்கள் வெடித்துள்ளன, ஆனால் அவர் என்னிடமிருந்து விலகியதே இல்லை. வெளித்தோற்றத்திற்கு அன்று நிகழ்ந்தது ஒரு எளிய விலக்கம் மட்டுமே. ஒருநாளில் ஓரிரு சொல்லில் அதை கரைத்தழிக்க முடியும். அவர் என்னிடமிருந்து விலகியதில்லை, எனவே விலகப்போவதுமில்லை. அதை நானே சொல்லிக்கொண்டேன். ஆனால் அது உண்மையல்ல என்று ஆழம் அறிந்திருந்தது.

மறுநாளே மீண்டும் மூத்தவரை காணச்சென்றேன். அவர் மாறாத விழிகளுடன் உணர்வற்ற ஒற்றைச் சொற்களுடன் என்னை எதிர்கொண்டார். தோற்று சினம்கொண்டு திரும்பி வந்தேன். இரண்டுநாட்கள் அவரை எண்ணாமலிருக்க முயன்றேன். என் அன்றாட அரசுப்பணிகளில் மூழ்கினேன். ஆனால் அவரையே எண்ணிக்கொண்டிருந்தேன் என மீண்டும் அறிந்தேன். கடல்மாளிகையில் இருந்த அவரை மீண்டும் சென்று கண்டேன். விழிநோக்கா தெய்வச்சிலைபோல அவர் மாறிவிட்டிருந்தார்.

இருநாட்களுக்குப்பின் சீற்றம்கொண்டு அவரைத் தேடிச்சென்றேன். ‘மூத்தவரே, என்னை தண்டிப்பதென்றால் எதன்பொருட்டு என்று சொல்லுங்கள். என் மேல் சினம்கொண்டிருப்பது ஏன்? அதை நான் அறிந்தாகவேண்டும்’ என விழிநோக்கி சொன்னேன். என் கண்களிலிருந்து நீர் பெருகியது. ‘நான் உங்கள் இளையோன். உங்கள் மைந்தனாகவே என்னை உணர்பவன். என் பிழையென்ன என்று சொல்லுங்கள். என் தலையால் அதை களைகிறேன்’ என்றேன். ‘அப்படி ஏதுமில்லை, உன் மிகையெண்ணம் அது’ என்றார். ஆனால் அவர் சொல்லும் விழியும் மாறவில்லை.

உணர்வு மிகுதியுடன் நான் அவர் முன் சென்று கைகளை பற்றிக்கொண்டேன். ‘மூத்தவரே, நீங்கள் என்னை அடித்திருக்கிறீர்கள். வசைபாடியிருக்கிறீர்கள். உங்கள் இந்த உளவிலக்கம் அதைவிட என்னை வதைக்கிறது. நான் என்ன செய்யவேண்டுமென சொல்லுங்கள்’ என்றேன். என் கையை மெல்ல உருவியபடி ‘ஒன்றுமில்லை. நீ சொல்வன ஏதும் எனக்குப் புரியவில்லை’ என்றார். விழிகள் உணர்வற்றிருந்தன. பெரும் ஏமாற்றம் என் நெஞ்சை நிறைத்து மறுகணமே சினமாக மாறியது. நான் அவரை நிறைந்த கண்களுடன் நோக்கி நின்றேன். அவர் என் விழிகளைத் தவிர்த்து திரும்பிச்சென்றார்.

அவரை என்னால் எவ்வகையிலும் ஊடுருவ முடியவில்லை. அவர் உளத்திரிபு ஏன் என்று எல்லா வகையிலும் எண்ணிப்பார்த்தேன். சத்யபாமையிடம் அவரைச் சென்றுகண்டு அடிபணிந்து பொறுத்தருளும்படி கோரவேண்டுமென ஆணையிட்டேன். அவளே என் துயர்கண்டு உளம்வருந்தியிருந்தாள். மூத்தவரைச் சென்றுகண்டு அவர் கால்தொட்டு சென்னி சூடி பொறுத்தருளும்படி கோரினாள். அப்போது தன் அனைத்து கட்டுகளையும் இழந்து விம்மியழுதுவிட்டாள். அவர் ‘ஒன்றுமில்லை, எனக்கு சினமோ துயரோ இல்லை. நீங்கள் தேவையில்லாது மிகைப்படுத்திக் கொள்ளவேண்டியதில்லை’ என்றுதான் மீண்டும் சொன்னார்.

என் தேவியர் சென்று குக்குடர்குலத்து அரசி ரேவதியை கண்டனர். எங்களுக்குள் நிகழ்ந்த உளப்பிளவை சீர்செய்ய அவர்களால்மட்டுமே முடியுமென மன்றாடினர். முதலில் சினந்தும் பின்பு தருக்கியும் சொல்லாடியபின் மெல்ல அவரும் தணிந்தார். அவரே சென்று பேசியபோதும் மூத்தவர் உளம் மாறவில்லை. எரிச்சலுற்று ‘மீளமீள இதையே சொல்கிறீர்கள், நீங்கள் சொல்வன ஏதும் எனக்குப் பிடிபடவில்லை’ என்று கூவினார். அக்ரூரரும் பிறரும் அவரை நான்குமுறை அவைக்கு கொண்டுவந்தனர். அவையில் ஒரு சொல் பேசாமல் மீசையை நீவியபடி எங்கோ விழியகல நெஞ்சு அலைய அமர்ந்திருந்தார்.

அவரை எண்ண எண்ண என் ஏமாற்றம் மிகுந்து வந்தது. ஒரு தருணத்தில் அது எரிச்சலாக ஆகியது. அக்ரூரரிடம் ‘இனி அவரைப்பற்றி என்னிடம் பேசவேண்டியதில்லை. மூடத்தனத்திற்கும் அளவுண்டு. எதையுமே புரிந்துகொள்ளாத ஒருவரிடம் பேசுவது பாறைமேல் தலைமுட்டுவதுபோல. அவர் விழைந்தபடி செய்யட்டும்’ என்று கசந்து சொன்னேன். அவர் கொண்டுள்ள அந்த விழியின்மையை எண்ணி எண்ணி வெறுக்கலானேன். நான் சொன்னவை எதையும் அவரால் மறுக்கமுடியாது. அவருக்கென மாற்றுநிலையும் இல்லை. ஆனால் உளஒப்புதலும் இல்லை என்றால் அவரை ஏன் மானுடராக நான் ஏற்கவேண்டும்? ஆம், அவரை நான் புறக்கணிக்கிறேன், அவர் இங்கில்லை என்றே கொள்கிறேன். அதையே மீளமீள சொல்லிக்கொண்டேன்.

ஒருநாள் அவர் தன் அரசியுடன் கிளம்பி மதுராவுக்குச் சென்றார். செல்வதற்கு முந்தைய நாள்தான் எனக்கு செய்தியறிவிக்கப்பட்டது. உண்மையில் அவர் கிளம்பிச்சென்றது ஆறுதலைத்தான் அளித்தது. அவருக்கான அனைத்தையும் செய்ய ஆணையிட்டேன். அவர் கிளம்பும்போது சற்றே விழிகனிந்து என்னிடம் பேசக்கூடுமென என் உள்ளத்தின் ஆழம் எதிர்பார்த்தது. அப்போது அதே வெற்றுவிழிகளுடன் ஒற்றைச் சொல்லுடன் நான் மறுமொழி உரைக்கவேண்டும் என எண்ணிக்கொண்டபோது நெஞ்சின் ஓரத்து எரிச்சல் மேல் குளிர் பரவியது.

ஆனால் அவர் அப்போதும் அதே விழிகளுடன்தான் விடைபெற்றார். என்னையும் நான் இறுக்கிக்கொண்டேன். முறைமைச்சொற்களுக்கு அப்பால் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவர் விழிமுன்னிருந்து மறைந்ததும் நெஞ்சு ஏக்கம் கொண்டு விம்மியது. விழிகளில் நீர்கோத்து நோக்கு மறைந்தது. என் அறைக்குச் சென்றபோது என்னால் நடக்கவே முடியவில்லை. தனிமையில் அமர்ந்து எண்ணத்தொடங்கியபோது ஒவ்வொரு எண்ணமாக எழுந்து வந்து என்னை அழுத்தின. விழிநீர் சிந்த தனிமையில் அமர்ந்து அழுதேன்.

“மறுநாளே கிளம்பி இங்கு வந்தேன். பார்த்தனின் அருகே மட்டுமே என்னால் சற்றேனும் மீட்புகொள்ள முடியுமெனத் தோன்றியது” என்றார் இளைய யாதவர். “இங்கு அனைத்தையும் கழற்றி வீசிவிட்டு சிறுவனைப்போல் சிலநாட்கள் வாழவேண்டும். அதைத்தவிர பிறிதொன்றையும் நான் எண்ணவில்லை.” தருமன் பெருமூச்சுவிட்டு “அவ்வாறு நிகழ்ந்தால் அது நன்றே” என்றார். இளைய யாதவர் விழிதூக்கி அவரை நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டார். பின்பு தலையை சரித்து குழல்கற்றைகளை அள்ளிக்கட்டி பீலி நிறுத்தியபின் “நான் வருகிறேன் அரசே, பார்த்தன் காத்திருக்கிறான்” என்றார். “நன்று” என்றார் தருமன்.

மீண்டும் ஏதோ கேட்க அவரிடம் எஞ்சியிருந்தது. அச்சொல்லில் சிலகணங்கள் தத்தளித்த பின்பு “அரசே, தாங்கள் எண்ணுவதென்ன? மூத்தவரின் உளவிலகல் சீரமைய வாய்ப்புள்ளதா?” என்றார் இளைய யாதவர். தருமன் கூரிய குரலில் “இல்லை” என்றார். திடுக்கிட்டவர் போல இளைய யாதவர் நிமிர்ந்து பார்த்தார். “சொல்லாக மாற்றத்தக்க கசப்புகளும் சினங்களும் சொல்லாக ஆக்கி வெளித்தள்ளத்தக்கவை. இது நஞ்சென அங்கு ஊறிவிட்டது. அங்கே முளைத்துப்பெருகுவது. அதை அகற்ற அவரால்கூட இயலாது. அது எவ்வண்ணம் எங்கிருக்கிறதென்பதையே அவர் அறிந்திருக்க மாட்டார்” என்றார் தருமன். “சில பிளவுகள் பளிங்கில் மயிர்கோடென தெரிபவை. ஆனால் அவை அமையும்போதே நாம் அறிந்துவிடுவோம், அவை பிளந்து விரிபவை.”

“ஆம், நானும் அதையே எண்ணினேன்” என்றார் இளைய யாதவர். “பெருஞ்செயல்களுக்காக நாம் எழும்போது சிறியவை நமக்கு எதிராகத் திரள்வதில்லை, அவை சிதறி விலகிவிடுகின்றன. பிற பெரியவையே நிகரான ஆற்றலுடன் எழுந்து வந்து வழி மறிக்கின்றன. பெருங்கனவுகளை காக்கின்றன இரக்கமற்ற தெய்வங்கள். அவை விழிநகைக்க கைசுட்டி கேட்கின்றன, நீ எதை ஈடுவைப்பாய்? எதையெல்லாம் இழப்பாய்? நம் கனவின் மதிப்பை அதன்பொருட்டு இழப்பவற்றைக்கொண்டே அறிகிறோம்.” அவர் புன்னகைத்து “என் முன் எப்போதும் முதல் எதிரி என என் மூத்தவரே நின்றிருப்பார். அதுவே ஊழ் எனில் அவ்வாறே ஆகுக!” என்றபின் நடந்தார்.

SOLVALARKAADU_EPI_48

தருமன் அவர் நடையின் தளர்வை நோக்கினார். வந்தபோது அதிலிருந்த சிறுவன் மறைந்துவிட்டிருந்தான். அவர்  இரண்டு அடி வைத்து பின்னால் சென்று “யாதவரே, இதுவும்கூட உங்களுள் எழுந்த விராடவடிவனுக்கு ஒரு பொருட்டில்லை அல்லவா?” என்றார். “ஆம், பொருட்டே அல்ல. அவனுக்கு நானேகூட ஒரு பொருட்டில்லை” என்றபின் சிரித்தபடி இளைய யாதவர் நடந்து சென்றார்.

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 47

[ 18 ]

“அரசே, ஜராசந்தனின் அனைத்து தோல்விகளுக்கும் என் அனைத்து வெற்றிகளுக்கும் பின்னணியாக அமைந்தவை எங்களைப் பற்றிய பிழைமதிப்பீடுகளே” என்றார் இளைய யாதவர். “அவரை எப்போதும் மிகைமதிப்பீடு செய்தார்கள். அவரே அவரை அவ்வண்ணம் எண்ணிக்கொண்டார். மகதத்தின் வெல்லமுடியா பெரும்படை, அவரது இரக்கமற்ற போர்த்திறம். அவரை பீமன் இயல்பாக வென்றது அந்தப் புறவாயில் வழியாகச் சென்றமையால்தான்.”

என்னை எப்போதும் குறைமதிப்பீடே செய்தனர். என்னைப் பற்றி உருவாகிப் பரவிய சூதர்சொல் என் வெற்றிகளை மட்டுமே சொன்னது. நான் வெல்லற்கரியவன் என்ற எண்ணமே உள்ளது. ஆயினும் ஷத்ரியர் உள்ளங்களில் அந்த நம்பிக்கை மீதான உள்ளுறை ஐயமும் எப்போதும் திகழ்கிறது. அது ஷத்ரியர்களுக்கு அவர்களின் குலம் அளிக்கும் குருதியில் கலந்த எண்ணம். அவர்கள் ஷத்ரியர்கள் என்பதனாலேயே சூத்திரர்களைவிட போர்த்திறம் கொண்டவர்கள், வெல்பவர்கள் என்று.

என் வெற்றிகளைக் கண்டு ஷத்ரியர் அஞ்சுவதனால் எளிதில் என் மேல் படைகொண்டு எழ துணியமாட்டார்கள். துணிந்தபின் மெல்ல வெல்லமுடியுமென எண்ணத்தலைப்படுவர். என் படைகள் பயிற்சியற்றவை. என் படைத்தலைவர் போர்மரபற்றவர். யாதவர்கள் பூசலிட்டுப் பிரிபவர்கள். அத்தனைக்கும் மேலாக நான் பேருருவம்கொண்டவன் அல்ல. என்னைக் கண்டபின் என் கரிய மெலிந்த உடலே நான் என அவர்களின் விழிமுன் எழுகிறது. அது அனைத்து மெய்ப்புரிதல்களையும் திரிபடையச் செய்கிறது. சால்வனையும் அந்தக் குறைமதிப்பீடே தோற்கவைத்தது. அவன் என்னை அவ்வாறு குறைமதிப்பீடு செய்கிறான் என்பதை அவன் அமைத்த படைசூழ்கையைக் கண்டே நான் உய்த்தறிந்தேன். அதனை முற்றிலும் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தேன்.

வஜ்ரவாகத்தில் என் படைத்தலைவர்களைக் கூட்டி ஹேகயர் எழுதிவாங்கிய ஓலையைப்பற்றி சொன்னேன். என் மைந்தரும் படைத்தலைவர்களும் கொதித்தெழுந்தனர். உடனே படை கொண்டெழுந்து அவர்களை வென்று சிறைபிடிக்கவேண்டுமென கூச்சலிட்டனர். ‘இனி பொறுப்பதென்பது நம் பெருந்தன்மை அல்ல, கோழைத்தனம். நாம் வஞ்சனையை பொறுத்தோம் என்றால் வீணர்கள் என்றே அறியப்படுவோம்’ என்று சாம்பன் கூவினான். ‘எனக்கு ஆணையிடுங்கள் தந்தையே, அவர்கள் விழைவதென்னவோ அதை அவர்களுக்களிக்கிறேன்’ என்றான் பிரத்யும்னன். ‘வேண்டாம், நாம் அவர்கள் மேல் கொள்ளும் சினம் நம்மை அழிக்கும் நோய். நாம் பூசலிட்டால் நம் கூரைகளை கொளுத்திக்கொள்வதாகவே பொருள்’ என்றேன்.

“அவையில் அதைச் சொல்லிவந்ததுமே கண்ணீர்விட்டேன். என் அவையினர் அதைக் கண்டு திகைத்து அமைந்திருந்தனர்” என்றார் இளைய யாதவர். “அரசே, அது பொய்த்துயர் அல்ல, உண்மையிலேயே யாதவரின் அவ்வுளப்பிளவு கண்டு என் உள்ளம் உருகிக்கொண்டிருந்தது. இரவுகளில் அதை எண்ணி விழித்துக்கொண்டேன் என்றால் துயில்நீத்து இருள்நோக்கி விடியும்வரை நின்றிருப்பேன். காலம்கடந்து நோக்கமுடிவதென்பது பெருந்துயர். இவர்கள் ஒருநாள் பூசலிட்டு முற்றழிவார்கள் என்று உணர்கிறேன்.” அச்சொற்கள் யுதிஷ்டிரரை நடுங்கச்செய்தன. அவர் ஏதோ கேட்க உன்னுபவர் போல உடலசைவுகொண்டாலும் சொல்லெழவில்லை.

“நினைவறிந்த நாள்முதல் இவர்களுக்காக வருந்திக்கொண்டிருக்கிறேன். என் இளமையில் என் ஆற்றலாலும் அறிவாலும் இவர்களை ஒன்றென ஆக்கிவிடலாம் என்று எண்ணினேன். அதன்பொருட்டே நான் வந்தேன் என மயங்கினேன். முதுமை நெருங்குகையில் மேலும் மேலுமென தெளிந்து வருகிறது ஊழ். கையறுநிலையில் அதை நோக்கி நிற்பதன்றி நான் செய்யக்கூடுவது பிறிதில்லை” இளைய யாதவர் தொடர்ந்தார். “அன்றிரவு நான் உருகி நீர்மைகொண்டு ஒழுகி பின் உறைந்து உறுதிகொண்டேன்.”

மறுநாள் காலை சாம்பன் தலைமையில் என் மைந்தர்கள் நடத்திய அந்தகர்களும் விருஷ்ணிகளும் அடங்கிய படை ஹேகய, போஜ, குங்குரப்படைகளை தாக்கியது. அப்போரின் செய்தியை பறவைச்செய்தி வழியாக அறிந்த சால்வன் அன்று அந்தியில் அப்பூசல் முடிவதற்குள் வஜ்ரவாகத்தை தாக்கலாமா என்று தன் படைத்தலைவர்களுடன் மதிசூழ்ந்துகொண்டிருந்தபோது நான் சிறிய படை ஒன்றுடன் அவன் படைகளை தாக்கினேன். அந்த நேரடியான விரைவுத்தாக்குதலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. என்னால் வஜ்ரவாகத்தைவிட்டு விலகமுடியாதென்றே எண்ணியிருந்தான். அவன் படைஎழுவதற்குள் மறுபக்கக் காடுகளிலிருந்து ஜாம்பர்கள் தாக்கத் தொடங்கினர். கங்கையின் கிளையாறுகள் வழியாக வந்த மச்சர்களும் அவன் படையை தாக்கலாயினர்.

மிதக்கும் இரும்புக்கோட்டையாகிய சௌபத்தை வெல்லும் வழிமுறையை நானே எண்ணி அமைத்திருந்தேன். என் படைகள் கொண்டுவந்திருந்த அரக்குருளைகள் தேர்களில் அமைந்த சுருள்வில் பொறிகளால் சௌபத்தின் இரும்புக்கூரைகள் மேல் எறியப்பட்டன. தொடர்ந்து எரியம்புகள் சென்று அவற்றில் விழுந்தன. உருகும் அரக்கு சொட்டியதும் யானைகள் பிளிறியபடி கவசங்களை வீசிவிட்டு திரும்ப சௌபம் உடைந்து சிதறியது. என் படைகள் அம்புகளைத் தொடுத்தபடி அவ்விடைவெளிகளில் நுழைந்தன. இருளில் எங்கள் படைகள் நுழைந்தமையால் நாங்கள் எத்தனைபேர் என்றும் எத்திசைகளில் உள்ளோம் என்றும் அவர்களால் அறியக்கூடவில்லை. சற்றுநேரம் அத்திகைப்பு நீடித்தது. அதற்குள் நாங்கள் அவன் படைசூழ்கையை முறித்துவிட்டிருந்தோம்.

சால்வனின் துணிவு எதனாலென்று அப்போர்க்களத்தில் தெரியவந்தது. பீதர்நாட்டு எரிப்பொடிப் பொதிகளை சுருள்விற்களில் தொடுத்து வானிலெறிந்து பற்றவைத்தான். இருளில்  அவை சிறு சூரியன்களைப்போல வெடித்து கதிர்பரப்பின. அவ்வெளிச்சத்தில் அவன் காவல்மாடங்களில் இருந்தவர்கள் எங்களை முழுமையாகவே பார்த்துவிட்டனர். அவர்கள் முரசொலிகள் வழியாக எங்கள் படைகளைப்பற்றிய செய்திகளை பகிரத்தொடங்கியதுமே காவல்மாடங்களை அழிக்கும்படி என் படைகளுக்கு ஆணையிட்டேன்.

போர் நெடுநேரம் நிகழமுடியாதென்று உணர்ந்தேன். விரைவே வெற்றி என்று அறிந்து மேலும் மேலுமென என் படைகளை ஊக்கிக்கொண்டிருந்தபோது என்னைத் தேடி மதுராவிலிருந்து தூதன் ஒருவன் வந்தான். தாருகன் என்னும் பெயர்கொண்ட அவனை நான் நன்கறிவேன். என்னால் பயிற்றுவிக்கப்பட்டு மதுராவின் எதிரிகளை உளவறிந்து எனக்குச் சொல்லும்பொருட்டு அமைக்கப்பட்ட திறமைவாய்ந்த ஒற்றன். புரவியில் என்னை அணுகி ‘யாதவரே, தீயசெய்தி!’ என்று கூவினான். அருகே வந்து ‘மகதப்படைகளால் தங்கள் தந்தை வசுதேவர் கொல்லப்பட்டார்’ என்றான்.

அதை என்னைச் சூழ்ந்திருந்தவர்களும் கேட்டனர். ‘அரசே, ஏகலவ்யனின் தலைமையில் மகதப்படைகள் மதுராநகரை தாக்கின. நகரம் அத்தாக்குதலுக்கு சித்தமாக இல்லாமலிருந்தமையால் நிலைகுலைந்தது. நிஷாதர்களின் படைகள் நகருள் புகுந்து சூறையாடின. எதிர்கொண்டு சென்ற தங்கள் தந்தை களப்பலியானார்’ என்று அவன் சொன்னான். நெஞ்சிலறைந்து அழுதபடி ‘எஞ்சியபடைகள் தங்கள் அன்னையைக் காத்தபடி வெளியேறி மதுவனம் நோக்கி செல்கின்றன. மதுவனத்தில் தங்கள் பிதாமகரிடமும் படைவல்லமை இல்லை. நாளைமாலைக்குள் மகதம் மதுவனத்தை சூழ்ந்துகொள்ளும்’ என்றான்.

கையிலிருந்த வில்லும் அம்பும் செயலற்று தழைய ஒருகணம் திகைத்தேன். எப்படியோ யாதவப்படைகள் அனைத்தும் அத்தருணத்தை உணர்ந்து மெல்ல விரைவழிந்தன. என்னருகே நின்றிருந்த என் மைந்தன் சாம்பன் ‘படைகள் திரும்புக… நாம் மதுவனத்திற்கு செல்வோம்’ என்றான். அச்சொல் எழுந்ததுமே தாருகன் விழிகளில் எழுந்த நிறைவை கண்டேன். மறுகணமே என் ஆழியால் அவன் தலையை வெட்டி வீழ்த்திவிட்டு திரும்பி குருதிவாளை ஓங்கி ‘முன்செல்லுங்கள்!’ என்று கூவினேன். தாருகனின் அன்னை ஹேகய குலத்தவள்  என்று அதன்பின்னரே என் சித்தம் உணர்ந்தது.

ஒவ்வொரு கணமும் நூறிலொன்றாக சுருங்கியாகவேண்டும் என்பதே எங்கள் போர்முறை. எண்ணவும் இடம்கொடாது தாக்கி வென்று அவ்வெற்றியை எதிரி உணர்வதற்குள்ளாகவே மீண்டாகவேண்டும். என் சிறிய விரைவுப்படையைவிட பன்னிரண்டு மடங்கு பெரியது சால்வனின் படை. பின்திரும்பி ஓடிய யானைகளில் மூன்றிலொருபங்கை திரும்ப கொண்டுவந்தார்கள் என்றால் அதன்பின் யாதவர்கள் எவரும் திரும்பிச்செல்லமுடியாது. வெற்றி வெற்றி என்று கூவுவதற்கு மாறாக ‘விரைவு! விரைவு!’ என்றே போர்க்கூச்சலெழுப்பிக்கொண்டிருந்தனர் என் படைத்தலைவர்கள்.

என்னை வழிநடத்திச்சென்றவன் வேளக்காரர் தலைவனாகிய கூர்மன். அவன் கையில் மின்னிய எரியம்பின் ஒளியைத் தொடர்ந்து படைகளை ஊடுருவி போரிட்டுச் சென்றபோது ஓர் இடத்தில் பிழையை உணர்ந்துகொண்டேன். திரும்புவதற்குள் சால்வனின் படைகளால் சூழப்பட்டேன். என் படைப்பிரிவைச் சுற்றி எரித்தூளை பற்றவைத்து புகை எழுப்பினார்கள். நான் முற்றிலும் நோக்கிலிருந்து மறைந்ததும் நான் எதிரிகளால்  சூழ்ந்து கொல்லப்பட்டேன் என்று கூர்மன் செய்தியறிவித்தான். சால்வனின் படைகள் வெற்றி எக்காளமிடத்தொடங்கின.  துயர்க்குரலுடன் யாதவப்படைகள் மீண்டும் பின்னடைந்தன.

அது ஒரு தருணம், அத்தகைய காலச்சுழிகள் கனவுகளைப்போன்றவை. இங்கிரு இதிலிரு என நம்மை இனிதாக்கி அணைத்து உள்ளிழுத்து வைத்திருக்கும் தன்மைகொண்டவை கனவுகள். என் மூச்சு திணறியது. கண்கள் முற்றிலும் இருண்டன. தேர்த்தட்டிலிருந்து விழப்போனேன். விழுந்திருந்தால் அப்போர் அங்கே முடிந்திருக்கும். துவாரகையின் வரலாறும் அறுந்திருக்கும்.  அத்தருணத்தில் என்னை உயிர்கொண்டு எழச்செய்தது என்னுள் சீறிய ஓர் அருஞ்சினமே. இழிமகன் ஒருவனின் வஞ்சனையால் வீழ்ந்தேன் என்றா என் கதை சொல்லப்படவேண்டும் என எண்ணினேன். எரிந்து வான்நோக்கும் அம்பு போல என்னைத் திரட்டி எழுந்தேன்.

அப்பால் சால்வனின் படைகளைச்சேர்ந்த கழைநோக்கி ஒருவன் தன் நீள்கழையுடன் சென்றுகொண்டிருப்பதை கண்டேன். பாய்ந்து அவனை வெட்டி வீழ்த்தியபின் கழையின் கணுக்களில் கால்வைத்து மிதித்து மேலேறி நுனிக்குச் சென்று என் இடையிலிருந்து பாஞ்சஜன்யத்தை எடுத்து ஊதினேன். அந்த ஒலியை அறியாத யாதவர் இல்லை. அக்கணமே பின்னெட்டு எடுத்துவைத்துக்கொண்டிருந்த யாதவர் வாழ்த்துக்கூச்சலும் போர்விளியுமாக பெருகி சால்வனின் படைகள்மேல் மோதினர். நான் இறக்கவில்லை என்றறிந்து சால்வனின் படைகொண்ட குழப்பமும் யாதவரின் புத்தெழுச்சியும் சந்தித்த கணத்தில் எங்கள் வெற்றி உறுதியாயிற்று. சால்வனின் படைகள் சரிந்து விழும் பெருமரம்போல ஓசையிட்டபடி பின்னகரத்தொடங்கின.

போர்க்களத்தில் அரசன் அத்தனை உயரத்துக்கு மூங்கில்மேல் ஏறுவது மதியுடைமை அல்ல என்பதனால் கீழே என் மெய்க்காவலர் கூச்சலிட்டனர். என்னை நோக்கி வந்த அம்புகளைக் கண்டேன். அதிலொரு அம்பு சால்வனுடையதென்று அறிந்த அக்கணமே என் ஆழியால் அவன் கழுத்தை அறுத்தெறிந்தேன். கழை சரியத்தொடங்கியதை உணர்ந்தும் குதிக்காமல் மீண்டும் பாஞ்சஜன்யத்தை முழக்கினேன். அது வெற்றிமுழக்கம். சால்வன் இறந்ததை அறிந்து யாதவர் வெற்றிக்குரலெழுப்பினர். வாள்களையும் வேல்களையும் தலைக்குமேல் வீசி அமலையாடினர். மூங்கிலுடன் சரிந்து படைநடுவே விழுந்த என்னை மெய்க்காவலர் சூழ்ந்துகொண்டனர். என் தோளிலும் விலாவிலும் அம்புகள் பாய்ந்திருந்ததை அதன் பின்னரே அறிந்தேன். கூர்மனின் தந்தை போஜன் என்பதை உணராதுபோனமைக்காக என் உள்ளம் எரிந்தது.

சால்வனின் படைகள் சிதறி பின்வாங்கத் தொடங்கின. யாதவர் அங்கு நின்று வெற்றிக்களியாட்டு கொள்ளவும் நகருக்கு திரும்பிச்செல்லவும் விழைந்தனர். ‘இல்லை, இறுதிப்படைவீரனும் எஞ்சும் வரை போர் புரியுங்கள். ஒருவன்கூட சிறைப்படுத்தப்படலாகாது. ஒருவன்கூட புண்பட்டு எஞ்சலாகாது. அத்தனைபேரும் கொல்லப்பட்டாகவேண்டும். இது என் ஆணை!’ என்றேன். போர்வெற்றிக்களிப்பு சற்றுநேரத்திலேயே கொலைவெறியாகியது. புண்பட்டு துடித்தவர்கள் தலைவெட்டி வீழ்த்தப்பட்டனர். தப்பி ஓடியவர்களை துரத்திச்சென்று கொன்றனர் யாதவர்.

அது உண்மையில் மிக எளிது. போராடுபவர்களே படையென இணைந்தவர்கள். தப்பி ஓட முடிவுசெய்த கணமே அவர்கள் தனியர்கள். அவர்களில் பின்தங்கியவர்கள் களைத்தவர்கள், புண்பட்டவர்கள், அஞ்சி நடுங்குபவர்கள். பிடிபட்டதுமே விழிமூடி இறப்பை ஏற்பவர்கள். எதிர்க்காதவர்களை கொல்வதன் இன்பம் ஒன்றுண்டு. அது மானுடனை விலங்கு என, அரக்கன் என ஆக்குவது. அதை அவன் தெய்வமென ஆகிவிட்டதாக எண்ணிக்கொள்கிறான். கொல்லக் கொல்ல வாள்கள் ஒளியேறுகின்றன. கொல்லப்படுபவர்கள் மானுடரல்லாது வெறும் தசைக்குவியல்களாக ஆகிக்கொண்டே செல்கிறார்கள்.

நான் என் படைவீரர்களை அவர்களின் இறுதி உளத்தடைகளும் உடைந்து வெறும் கொலைக்கருவிகளென ஆக்க விழைந்தேன். சால்வனின் படைகளுக்கு நிகழ்ந்ததென்ன என்று நூறாண்டுகளுக்கு சூதர் பாடவேண்டும் என திட்டமிட்டேன். என் படைகள் சிறைவைக்கப்பட்டிருந்த என் மைந்தரை மீட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட சால்வனின் ஏழு மைந்தரையும் அங்கேயே தலைவெட்டி சரித்தனர். என் படைகளை சால்வனின் சௌபபுரிவரை அவர்களை துரத்திச்சென்று கொல்லும்படி ஆணையிட்டு அனுப்பினேன். நானும் என் மெய்க்காவல்படையும் மட்டும் மீண்டும் வஜ்ரவாகத்திற்கு வந்தோம்.

வஜ்ரவாகத்தில் நிகர்நிலையில் போர் நடந்துகொண்டிருந்தது. சால்வனின் படைகளை என் படைகள் வென்ற செய்தியை அறிந்ததுமே அவர்களின் துணிவு தளரத்தொடங்கியது.  உடனே அவர்களுக்குள் பூசல் எழுந்தது. குங்குரர்களும் போஜர்களும் பணிய விரும்பினர். ஹேகயர் போரிட்டபடியே பின்வாங்கி சிபிநாட்டுப்பாதையில் செல்ல விரும்பினர். அப்பூசலே அவர்களின் ஆற்றலை அழித்தது. பாஞ்சஜன்யத்தை ஊதியபடி நான் அந்தகர்களும் விருஷ்ணிகளும் போரிட்டுக்கொண்டிருந்த களத்தில் தோன்றியதுமே எதிர்ப்படை சூழ்கை சரிந்து மூன்றுபிரிவுகளாகப் பிரிந்து பின்வாங்கத் தொடங்கியது.

மூன்றுநாழிகைக்குள் போர் முடிந்தது. ஹேகயர்குடி படைத்தலைவர் ஜஹ்னி  களத்தில் இறந்தார். பிறர் விருஷ்ணிகளிடம் வாள்தாழ்த்தி களம்பணிந்தனர். நான் ஆனர்த்தநகரிக்குச் சென்று அங்கே படைநிறுத்தினேன். அந்நகரும் சூழ்ந்திருந்த ஊர்களும் சால்வனின் படைகளால் சூறையாடப்பட்டு எரிபரந்தெடுக்கப்பட்டு சுடுகாடுபோல் கிடந்தன. அந்நகரில்தான் படைநிலையும் உண்டாட்டும் நிகழவேண்டுமென எண்ணினேன். அங்கு வந்த ஒவ்வொரு விருஷ்ணியும் அந்தகனும் குருதி கொதித்துக்கொண்டிருந்தான். அவர்கள் வரும்வழியெல்லாம் சூறையாடப்பட்ட ஊர்களில் இருந்த குடிகள் நெஞ்சில் அறைந்துகொண்டு கதறியபடி எதிர்நின்று முறையிட்டனர்.

சௌபநாட்டின் எல்லைவரை சென்று கொலையாட்டு செய்து யாதவப்படை மீண்டு வந்தது. சால்வனின் படைகளில் ஐந்திலொன்றே சௌபபுரிக்கு மீண்டது. ‘யானையால் நசுக்கிக் கொல்லப்பட்ட விலங்கின் குருதித்தீற்றல் போல சௌபபுரி முதல் ஆனர்த்தம் வரை சால்வப்படையினரின் குருதி நீண்டு கிடந்தது’ என அதை பிறகு ஒரு சூதன் பாடினான். குருதியாலான செய்தி ஒன்றை ஷத்ரியர்களுக்கு அனுப்ப விழைந்தேன், அதை அனுப்பினேன். ஷத்ரிய அரசுகள் அனைத்திலும் குளிர்ந்த செயலற்ற அமைதி பரவியது.

ஆனர்த்தநகரியில் சிறைப்பட்டோரை நான் மன்றுநிறுத்தினேன். தாருகனின் தலையையும் ஹேகயரான ஜஹ்னியின் தலையையும் கொண்டுவந்து ஆனர்த்தநகரியின் கோட்டைமுன் ஈட்டியில் குத்திவைத்தேன். அதன் முன் குங்குரர்களின் படைத்தலைவர் வாகுகரையும் போஜர்படைத்தலைவர் சீர்ஷரையும் கழுவிலேற்றினேன். ‘போரில் பணிந்தவர்களை கழுவேற்றுவது என்ன மரபு?’ என்று சீர்ஷர் கண்ணீருடன் கூவினார். ‘படைவீரர்களுக்குரிய மதிப்பை எங்களுக்கு அளியுங்கள், யாதவரே. உங்கள் நகருக்காக படைநின்றவர்கள் நாங்கள் என்றாவது நினையுங்கள்’ என்றார் வாகுகர்.

‘நீங்கள் போர்நெறிப்படி எனக்கு எதிராக படைகொண்டு வந்த எதிரிமன்னர்கள் அல்ல. என் கோலுக்கு வஞ்சமிழைத்தவர். குடிவஞ்சமிழைத்தவருக்கு இறுதிநீருக்கும் விண்ணேற்றும் சடங்குகளுக்கும் சூதர்பாட்டில் புகழ்மொழிக்கும் உரிமை இல்லை என்பதே நெறி’ என்றேன். அவர்களுடன் அவர்களின் அணுக்கப்படையினர் நாநூறு பேர் கழுக்கூர்களில் நின்று சுழன்று கதறித் துடித்து அமைந்தனர். அவர்களுக்கு சுற்றும் சிறைப்பிடிக்கப்பட்ட ஹேகயர்களையும் குங்குரர்களையும் போஜர்களையும் நிறுத்தி அதை பார்க்கவைத்தேன்.

அதன்பின் அவர்களில் நூற்றுக்குடையோர் அனைவரின் கால்களின் கட்டைவிரல்களையும் வெட்டும்படி ஆணையிட்டேன். அவர்களின் ஆண்விதைகளை மருத்துவர்களைக்கொண்டு அகற்றி நெற்றியில் தொழும்பர்க்குறியை சூடுபொறித்தேன். அவர்களின் உள்ளங்கைகளில் துளையிட்டு அதன்வழியாக வடம் செலுத்தி சேர்த்துக்கட்டி ஒற்றைத்திரளென இழுத்துச்சென்று துவாரகையின் துறைமேடைகளில் அடிமைகளாக பணிக்கமர்த்தினேன். என்னை கைபிணைத்துக் கட்டிய சரபனையும் என்னை சால்வனுக்கு ஒற்றுக்கொடுத்த  கூர்மனையும் கால்கள் சேர்த்துக்கட்டி குதிரைகளுடன் பிணைத்து ஆனர்த்தநகரியிலிருந்து துவாரகைவரை தரையில் இழுபட்டுச் செல்லவைத்தேன். துவாரகையை அடைந்தபோது அவர்களின் உடலில் வெள்ளெலும்புக்கூடு வெளித்தெரிந்தது.

துவாரகையில் அவர்களை தெருக்களினூடாக இழுத்துச்சென்றபோது நகர்மக்கள் இருபக்கமும் விழிதெறிக்க நின்று நோக்கினர். செல்லும்வழியிலேயே தளர்ந்துவிழுந்தவர்கள் கழுவில் குத்தி வைக்கப்பட்டார்கள். அவர்களை நிறுத்திய செண்டுவெளியில் மன்றெழுந்து ‘உங்கள் தந்தையென்றிருந்தேன். உங்கள் வாயில்கள்தோறும் வந்து நின்று விழிநீர் விட்டு இரந்தேன். உங்கள் நெறியின்மையால் அதை உருவாக்கிய அறிவின்மையால் என்னை கொலைவாள் ஏந்தச்செய்தீர்கள். இன்று உங்களுக்கு நிகழ்ந்தது யாதவர்கள் ஒருபோதும் மறக்காத செய்தியாகட்டும்’ என்று சொன்னேன்.

‘இனி இந்நகரில் ஆள்வது ஒருசொல்லே. மறுசொல் உங்கள் எண்ணங்களில் ஒருமுறை எழுந்தால்கூட உங்கள் மைந்தர் தலையறுந்து இறந்தார் என உறுதிகொள்ளுங்கள். உங்கள் எண்ணங்களுக்குள் புகுவேன். உங்கள் கனவுகளை கண்காணிப்பேன். மறுசொல்லற்ற பணிவன்றி இனி எதையும் பொறுக்கமாட்டேன்’ என்றேன். திகைப்பு நிறைந்த விழிகளுடன் யாதவர் என்னை நோக்கி நின்றனர். கதைகளில் அவர்கள் மதுராவில் குருதியாடிய அச்சிறுவனைப்பற்றி கேட்டிருந்தனர். அது சூதர்கதையென்றே ஆகிவிட்டிருந்தது. அவன் பேருருவைக் கண்டு அவர்களின் அகம் நடுங்கியதைக் கண்டேன்.

என் தமையனின் அரசி ரேவதி பெண்டிர் அமர்ந்த பேரவையில் எழுந்து கண்ணீருடன் கூவினார் ‘என் குடி அழிக்கப்படுவதைக் கண்டு நான் வாளாவிருக்கமாட்டேன். போரில் வெல்லமுடியாமலாகலாம். இந்த அவையில் நான் சங்கறுத்துச் செத்துவிழுவேன். அதை எவர் தடுப்பார் என்று பார்க்கிறேன்.’ அவர்கள் விழிநோக்கி சொன்னேன் ‘அரசி, நீங்கள் சாகலாம். ஆனால் அப்படி நிகழ்ந்தால் உங்கள் தந்தையையும் தமையன்களையும் இளையோரையும் மறுநாளே நகர்மன்றில் கழுவேற்றுவேன்.’ திகைத்து வாய்திறந்து நின்ற குக்குட நாட்டு அரசி திரும்பி உள்ளே ஓடினார்.

பதறி அமர்ந்திருந்த என் அரசியரை நோக்கி திரும்பியபோது அவர்கள் கைகூப்பினர். விழிதெறிக்க நோக்கிய சத்யபாமையிடம் சொன்னேன் ‘இது என் நகர். என் சொல்லே எவர் சொல்லும். மறு எண்ணம் எவரில் எழுந்தாலும் அவர்கள் தங்கள் குடும்பத்தினரை கழுவேற்றுகிறார்கள்.’ ஒரு நடுக்கத்தின் அசைவு மட்டுமே அவர்களில் தெரிந்தது. ‘இன்றுமாலை சத்யபாமை ஒற்றை மரவுரியுடன் சென்று போஜர்களின் குடித்தலைவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களின் கால்பொடி சென்னி சூடி பொறுத்தருளும்படி கோரவேண்டும். இன்றுமுதல் ஒருவாரம் ஊர்மன்றில் உணவு ஒழித்து நோன்பிருக்கவேண்டும்’ என்றேன்.

அனைத்து குலப்பூசல்களும் முற்றிலும் முடிவுக்குவந்தன. நகரில் குலமென்னும் சொல்லைச் சொல்லவே யாதவர் அஞ்சினர். என் படைகளனைத்தையும் மீண்டும் திரட்டிக்கொண்டு சால்வனின் சௌபபுரியை தாக்கினேன். அங்கே அவன் முதிரா இளமைந்தனை அரசனாக்கி அவன் தேவி ஆட்சிசெலுத்திக்கொண்டிருந்தாள். அந்நகரை வென்று அதன் துறைமுகப்பையும் அங்காடிகளையும் எரித்தேன். அதன் அத்தனை கட்டடங்களையும் கரியும் சாம்பலுமாக எஞ்சவைத்தேன். அக்கரியில் ஒருபிடி அள்ளிக் கொண்டுசென்று அஸ்தினபுரியின் கங்கைவாயிலில் சிலையென நின்றிருக்கும் காசிநாட்டு இளவரசி அம்பையன்னைக்குப் படைத்து ஒரு பூசனை செய்யும்படி சூதர்களை அனுப்பினேன்.

சால்வனுக்கு ஆதரவளித்த திரிகர்த்தர்களையும் உசிநாரர்களையும் தாக்கி அவர்களின் நகர்களைச் சூறையாடி எரியூட்டி மீண்டேன். கூர்ஜரனுக்கும் மாளவனுக்கும் ஓலை அனுப்பி எனக்கு நேர்ந்த போரிழப்புகளுக்காக அவர்களின் நாட்டை நான் தாக்காமலிருக்கவேண்டும் என்றால் உரிய தண்டத்தொகையை அவர்கள் துவாரகைக்கு அனுப்பவேண்டும் என ஆணையிட்டேன். ஜயத்ரதனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் என் சொல்லாக ஓலையனுப்பி அவர்கள் என் கையால் இறப்பதை விரும்பவில்லை என்றால் மறுமுறை துவாரகை என்னும் சொல்லையே நாவில் ஏற்றலாகாது என எச்சரித்தேன்.

அதன்பின்னரே போர் முடிந்தது என நிறைவடைந்தேன். ஷத்ரியநாடுகள் அனைத்திலும் என்னைப் பற்றிய அச்சமே திகழ்வதை ஒற்றர்கள் சொன்னார்கள். இந்திரப்பிரஸ்தமும் அர்ஜுனனின் வில்லும் இல்லையேல் நான் வீழ்வேன் என எண்ணியவர்கள் மறுமுறை அவ்வெண்ணத்தை உரைக்கவே நாவஞ்சினார்கள். அஸ்தினபுரியின் அவையில் கர்ணன் சகுனியிடம் ‘அஸ்வத்தாமனை அறிவுடையோன் என எண்ணியிருந்தேன். மூடன், பெருமூடன். அவன் அம்புகள் யாதவனுக்கு சிறுபூச்சிகளுக்கு நிகர் என அறிந்திருக்கவில்லை என்றால் அவன் கற்றதுதான் என்ன?’ என்றான். ‘போர் வெல்லப்படுவது தலைவர்களால், படைகளால் அல்ல என்றறிந்தால் வீணனாகிய சால்வனை அனுப்புவானா அவன்?’ ஹேகயர்களுக்கு ஆதரவளித்த சகுனி தலைகுனிந்து நிலம் நோக்கி அமர்ந்திருந்தார் என்று அறிந்தேன்.

அனைத்தும் சிலமாதங்களுக்கே என நான் அறிந்திருந்தேன். மானுடர் இன்பங்களையே விழைகிறார்கள். இன்பத்திற்காக அவர்கள் அனைத்தையும் பொறுத்துக்கொள்வார்கள். பெருஞ்சிறுமைகளை, ஈடில்லா இழப்புகளை, அணையமுடியாத வஞ்சங்களை, செரிக்க முடியாத கசப்புகளை. துவராகையில் மீண்டும் கலைகளையும் விழாக்களையும் அமைத்தேன். முதல் விழவறிவிப்புதான் கடினமானது. அது மக்களை சீண்டக்கூடாது. அதற்காக ஒரு தருணத்தை நோக்கியிருந்தேன். கம்சரால் கொல்லப்பட்ட மதுராவின் இளமைந்தருக்காக நீர்க்கடன் அளிக்கும் ஆடிமாதக் கருநிலவுநாள் வந்தது. அதற்கான அரசறிவிப்பு வெளிவந்தபோது எவரும் மறுப்பு எதுவும் சொல்லமுடியவில்லை.

மேலும் மூன்று மாதங்களாக அவர்கள் சோர்வில் இருந்தனர். உளச்சோர்வு பெரும் சுமை. நாள் செல்லச் செல்ல எடைவளர்வது. வாழ்க்கையின் பிற அனைத்தையும் அது பொருளற்றதாக்குகிறது. இறப்பை நோக்கி மட்டுமே அதனூடாகச் செல்லமுடியும். உயிர்த்துடிப்புள்ளவர்கள் அதிலிருந்து விடுபட விழைவுகொண்டனர். குழந்தைகள் துயரத்திலும் சோர்விலும் வாழ விழைவதில்லை. எங்கும் விளையாடுவதற்கென ஒரு வாய்ப்பையே அவர்களின் உள்ளம் விழைகிறது. குழந்தைகளுக்கு அண்மையானவர்கள் என்பதனால் பெண்களும் அதையே நாடுகின்றனர். அவர்களின் அவ்விழைவை கெஞ்சலாகவும் பின் சிணுங்கலாகவும் மீறலாகவும் ஆண்களுக்கு அளிக்க அவர்களால் இயலும்.

மூன்றுமாதகாலம் ஓர் இறுதி எல்லை. வஞ்சங்களும் கசப்புகளும் பேசிப் பேசி, நினைவில் ஓட்டி ஓட்டி பழையதாயின. பலதடவை பேசப்பட்ட, நினைக்கப்பட்ட ஒன்று எத்தகையதாயினும் எளிதும் சிறிதுமாக தோன்றத்தொடங்குவது மானுட உள்ளத்தின் விந்தைகளில் ஒன்று. அனைத்தையும் பேசிப் பேசி மானுடர் கடந்துசெல்வது அதனால்தான். அனைத்தும் குருதியுலர்ந்து தசைகூடி பொருக்காடி தழும்பானபோது அனைவரும் வாழ்வுக்கு வர  விழைந்தனர். நிறைவுதரும் அடிப்படை ஒன்று அமைந்த ஒரு கொண்டாட்டம் அறிவிக்கப்பட்டபோது அவர்கள் அதை நோக்கி பெருகி எழுந்தனர்.

இளமைந்தருக்கான விழவைத் தவிர்ப்பது குலமூதாதையர் விரும்பாச்செயல் என்று சொல்லிக்கொண்டனர். துயருற்றிருப்பது அவர்களின் குருதிபலியை வீணாக்குவது. தங்கள் மைந்தர் கொண்டாடுவதை அவர்கள் விண்ணிலிருந்து நோக்கி மகிழ்வார்கள். சொல்லில் இருந்து சொல்லென அவ்வெண்ணங்கள் பெருகின.  சொல்லப்பட்டு செவிகளால் கேட்கப்பட்டதுமே அவை பொருண்மையான ஆற்றல்கொண்டன.

நீர்க்கடன் விழவுக்கு பலிப்பொருட்களுடன் கடற்கரைக்கு திரண்டு வந்து, அன்னம் சமைத்து அருகம்புல்லுடன் உருட்டி இலைவிரித்துப் படைத்து வணங்கி, நீருக்கு அளித்து, மூழ்கி எழுந்து வருவது வழக்கமான சடங்கு. துவாரகையின் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் கடலுக்கு வந்தால்கூட அதை வெற்றி என்றே எண்ணினேன். காலையில் மக்கள் வரத்தொடங்கியபோது கால்பங்கு மக்கள் வரவே வாய்ப்பு என்று அக்ரூரர் கணித்துச் சொன்னார்.  ஆனால் சாலைகளில் மக்கள் பலிப்பொருட்களேந்திய தட்டுகளுடன் செல்லக்கண்டதும் மேலும் மேலுமென மக்கள் வந்தனர். மாலைக்குள் துவாரகையின் குடிகளில் பெரும்பாலும் அனைவருமே கடல்நீராடினர்.

மறுவாரமே மூதாதையருக்கான ஒரு பூசையை நிகழ்த்தும்படி ஆணையிட்டேன். அதனுடன் சூதர்களின் பாடலும் நாடகமும் அரங்குகண்டன. அதில் துவாரகையினர் கலந்துகொள்வதைக் கண்டபோது அங்கு ஏதேனும் துயர் முன்பு நிகழ்ந்ததா என்னும் ஐயமே எழுந்தது. இழந்தவற்றை நோக்கி மீளும் வெறியுடன் துவாரகையினர் களியாட்டுக்களை நோக்கி வந்தனர். கடலாட்டும், பாலையில் வேட்டையாடலும், கன்றுபூட்டலும், புரவிமெருக்குதலும், ஏறுதழுவுதலும், செண்டுவெளியின் படைக்கலப்பயிற்சிப் போட்டிகளுமாக நகர் முழுமையாக பொலிவுகொண்டது.

 SOLVALARKAADU_EPI_47

துவாரகை அமைந்ததைக்  கொண்டாடும் பெருவாயில் விழாவுக்கு நகர் முன்பைப்போலவே அணிகொண்டது. முன்பைவிட என்றார் அக்ரூரர். யவனரும் பீதரும் சோனகரும் காப்பிரிகளும் தென்னவரும் வந்து என் அவை நிறைத்தனர். அங்காடிகளில் புதுப்பொருட்கள் வந்து குவிந்தன. கள்ளும் காமமும் பெருகின. நகரெங்கும் மீண்டும் கட்டற்ற களியாட்டு ததும்பியது. பெருவாயில் பூசனைக்கு நான் என் தேரில் நகர்வீதிகளினூடாகச் செல்லும்போது கற்சுவர்களும் முரசுத்தோற்பரப்புகள் என அதிரும்படி எழுந்த  வாழ்த்தொலிகளால் சூழப்பட்டேன். களிப்பு நிறைந்த முகங்கள் அலையலையெனத் ததும்பின. அரிமலர் மழை பொழிந்த திரையை கிழித்துக் கிழித்துச் சென்றேன். என்னை வாழ்த்திய வீரர் முகங்களில் யாதவரின் அத்தனை குடிகளும் ஒன்றெனக் கலந்திருப்பதை கண்டேன்.