மாதம்: ஓகஸ்ட் 2016

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 43

[ 13 ]

அவை முடிந்ததும் எழுந்த இளைய யாதவரை மாணவர்கள் சூழ்ந்துகொண்டார்கள். அவர்கள் அவரிடம் பேச ஒருவரை ஒருவர் கடந்து முண்டியடிப்பதைக் கண்டபின் தருமன் புன்னகையுடன் வெளியே நடந்தார். நகுலனும் சகதேவனும் அவரைத் தொடர்ந்து சென்றனர். அர்ஜுனன் இளைய யாதவர் அருகிலேயே நின்றுகொண்டான். “அவர் மேல் சினம் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அதை மறந்துவிட்டனர், மூத்தவரே” என்றான் நகுலன். “ஆம், பத்ரர் அவருக்கு நன்று செய்தார். அவர் அங்கு வந்து பேசிய சொற்களின் கீழ்மையே மாணவர்களை அவரிடமிருந்து அகற்றி இளைய யாதவைரை நோக்கி கொண்டுவந்துவிட்டது. அதை சாந்தீபனி முனிவர் அழுத்திச் சொல்லியும் காட்டிவிட்டார்” என்றார் தருமன்.

“நானும் அவ்வண்ணமே எண்ணினேன்” என்று நகுலன் சொன்னான். “இக்கல்விநிலையின் பெரும்பாலான மாணவர்கள் எளிய குடிப்பிறப்பு கொண்டவர்கள். யாதவர்கள் பலர். சூத்திரர்களும் நிறையபேர் உள்ளனர். அவர்கள் இவ்விழிசொற்களைக் கேட்டு சினமே கொள்வார்கள்.” தருமன் “அவர் இன்று பேசியதும் இளநெஞ்சங்களுக்கு எழுச்சியளிப்பதே. தத்துவத்தை எதிரீடுகளாகப் பிரிப்பது மிக எளிது. நன்று தீது என. எளியது கடியது என. நின்றது செல்வது என. அவர் இன்று மிக இயல்பாக அதை பழையது வருவது என பிரித்துக்காட்டினார். இளையோரின் உள்ளம் என்றும் வருவதையே ஏற்கும். அது உகந்ததா அல்லவா என்பதுகூட அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல” என்றார்.

அவர்கள் பேசியபடியே வெளியே சென்று முற்றத்தில் நடந்தனர். “உண்மையில் இவ்விளையோர் அவரை வெறுத்தனரா என்றே எனக்கு ஐயம்தான். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெரும்போக்கில் அடித்துச்செல்லப்பட்டனர், அவ்வளவுதான். சிலர் அவருடன் உள்ளத்தால் ஓயாது உரையாடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு அவரை எதிரியாக நிறுத்திப்பேசித்தான் பழக்கம். அவரிடம் அவர்கள் கேட்கும் வினாக்களை எல்லாம் அப்போது உணர்வெழுச்சி நிறைந்த குற்றச்சாட்டுகளாக ஆக்கிக்கொள்ளலாம். அவருக்கு எதிராக நின்றிருக்கையில் அவருக்கு நிகரென்றும் தோற்றமளிக்கலாம்” என்றார் தருமன்.

“இன்று அவர் தன்னியல்பான எளிமையுடனும் பேரறிவுடனும் தங்கள் முன் தோன்றியபோது அந்த மாற்றுருக்கள் அனைத்தும் கழன்று உதிர்ந்துவிட்டன. அவரை என்றுமே அவர்கள் வழிபட்டனர், அவ்வியல்புநிலைக்கே அவர்கள் மீண்டனர். அவரை எதிர்த்தோம் என்பது இன்று அவர்களுக்கு தங்களைப்பற்றி ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. வெறுமனே வழிபடவில்லை என்றும் எதிர்த்து உரிய விடைகள் பெற்றே ஏற்றுக்கொண்டோம் என்றும் சொல்லிக்கொள்ள முடிகிறது” என்று தருமன் சொன்னார். “காமத்திற்கு ஆயிரம் மாற்றுருக்கள் என்பார்கள், அறிவியக்கத்தில் அது பல்லாயிரம். ஏனென்றால் ஆணவத்தைக் கடந்து அறிவிலாடுவது மானுடருக்கு எளிதல்ல. அவ்வாறு கடந்தவர்கள் பின்னர் மானுடரும் அல்ல.”

“அவர்களை அவர் வென்றுவிட்டார். இனி அவரை அவர்கள் வழிபடத் தடையேதுமில்லை” என்றான் நகுலன். தருமன் பேசாமல் வந்த சகதேவனை நோக்கி “நீ என்ன எண்ணுகிறாய், இளையோனே?” என்றார். “எழுச்சிகொண்ட வழிபாட்டுணர்வு இங்கு இருந்துகொண்டுதான் இருக்கும்” என்று அவன் சொன்னான். அவனை சிலகணங்கள் நோக்கி சொல்லெதிர்பார்த்த தருமன் “சொல்!” என்றார். “ஆனால் மானுட உள்ளத்தின் இருட்பாதைகள் எளியவை அல்ல. அதேயளவுக்கு காழ்ப்பும் இங்கு நீடிக்கும்.”

தருமன் நெற்றி சுருங்க “ஏன்?” என்றார். “ஏனென்றால் காழ்ப்பு தன்னளவிலேயே சுவைமிக்கது. மூத்தவரே, மானுடன் தேடுவதென்ன? அவன் உள்ளத்தை மிச்சமின்றி நிறைத்து அவன் நாட்களை விரைவுகொள்ளச் செய்யும் ஒன்றுக்காகத்தானே? காழ்ப்பைப்போல அதை அளிக்கும் பிறிது எது? காமமும் ஆணவநிறைவும் தோன்றி உடன் மறையும் இன்பங்கள். காழ்ப்பு தொடத்தொட வளர்வது. அனைத்தையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு தான்மட்டுமே எனத் திகழ்வது” என்றான் சகதேவன். “காழ்ப்புகொண்டவனை அது ஆற்றல்கொண்டவனாக ஆக்குகிறது. பழுக்கக் காய்ச்சிய வாள் மும்மடங்கு வல்லமை கொள்கிறது.”

“பிராமணரும் ஷத்ரியரும் அவரை ஏற்கமாட்டார்கள் என்கிறாயா?” என்றார் தருமன். “அது அத்தனை எளிதல்ல, மூத்தவரே. தங்கள் பெருமையுணர்வாலேயே அந்தணர் அவரை ஏற்கலாம். தங்கள் கூரிய நேருள்ளத்தால் ஷத்ரியரும் அவரை ஏற்கக்கூடும். தங்கள் இழிவுணர்வால் யாதவர் அவரை வெறுக்கலாம். தாங்கள் சூத்திரர் என்பதனால்தான் அவரை விரும்புகிறோம் என எவரும் எண்ணிவிடலாகாதென்பதற்காக அவர்கள் அவரை புறக்கணிக்கலாம். இப்படித்தான் இது நிகழுமென எவரேனும் சொல்வதனாலேயே அப்படி அல்லாமலாகலாம். வெறுப்பும் விருப்பும் அவற்றை அடைபவர்கள் தங்களை எவ்வகையில் இங்கு முன்வைக்கிறார்கள் என்பதை மட்டுமே சார்ந்துள்ளன.”

சிலகணங்களுக்குப்பின் தருமன் “இளையோனே, வரவர உன் சொற்களைக் கேட்பதே அச்சமும் துயரமும் அளிப்பதாக உள்ளது. ஒரு சொல்லாலும் உன்னை எதிர்த்து நிற்கமுடிவதில்லை. என் ஆழம் சொல்கிறது நீ சொல்வனவெல்லாம் உண்மை என்று” என்றார். “உண்மைமுன் நின்றிருக்க பயின்றோமென்றால் முதலில் எழும் திகைப்பும் துயரமும் விலகி மெல்ல ஓர் ஆறுதலை அடையத்தொடங்குவோம், மூத்தவரே. அது நிலையழிந்து நீரில் செல்பவன் காலடியில் பாறையை உணர்வதுபோல” என்றான் சகதேவன். நகுலன் புன்னகைத்து “பாறை கால்கீழிலென்றால் நன்று. கூரையென மெல்லிய புல்அமைவதே உகந்தது. தலைமேல் விழுந்தாலும் தீதில்லை” என்றான். சகதேவன் சிரித்துவிட்டான்.

அவர்கள் குடில்களை அணுகும்போது தொலைவிலேயே தருமனின் குடில்முற்றத்தில் பிருகதர் நிற்பதைக் கண்டனர். “உங்களுக்காகக் காத்து நின்றிருக்கிறார்” என்றான் நகுலன். “என்ன நாடகத்தை ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை. வரவர எவரைப் பார்த்தாலும் கூத்தரங்கில் அமர்ந்திருக்கும் உணர்வு வந்துவிடுகிறது, இளையோனே” என்றார் தருமன். பிருகதர் அவர்களை நோக்கி வந்து “அந்த இழிமகனுடன் வருவீர்கள் என்று அஞ்சினேன். அவனுடன் வந்திருந்தீர்கள் என்றால் என் சுடுமொழிகளை அவன் கேட்டிருப்பான். வீணன்” என்றார். “பார்த்திருப்பீர்கள், அத்தனைபேர் முன்னிலையிலும் என் கால்களில் விழுகிறான். என்னவென்று நினைத்தான் என்னை? இவன் காலில் விழுந்தால் அனைத்தையும் மறந்து இவனை நெஞ்சில் சூடுவேன் என்றா?”

“நான் வேண்டுவதென்ன? எனக்கு முறைமை செய்யவேண்டுமென்று எவரிடம் கேட்டேன்? ஆம், நான் அவன் ஆசிரியன். அவனுக்கு எழுத்தறிவித்தவனே நான்தான். ஆனால் எனக்கு அது ஒரு பொருட்டே அல்ல. நான் எதையும் எதிர்பாராது இங்கே வாழ்ந்து எளிய மனிதனாக மடியப்போகும் ஒருவன். இங்குள்ள எத்தனை பேருக்கு இன்று தெரியும், நான் பெரியவருக்கு அணுக்கன் என்று? என் கையால்தான் வேததரங்கிணியையும் பிரஸ்னசமுச்சயத்தையும் ஏட்டில் எழுதினேன் என்று சொன்னால் இவர்கள் நம்பப்போவதில்லை. நான் அதை ஒரு பொருட்டென எண்ணவுமில்லை.”

“என் வஞ்சம் நேரடியானது. என் ஆசிரியரை அவன் சிறுமைசெய்து அவர் கடந்தேக வழிவகுத்தான். அதை அவர் மைந்தர் மறக்கலாம், நான் மறக்கப்போவதில்லை. என் நோக்கில் அவன் ஒருபோதும் சாந்தீபனிக் கல்விநிலைக்கு உரியவன் அல்ல, அவன் நச்சுச்செடி. பிடுங்கிக் களையவேண்டியவன். ஆம்.” அவர் மூச்சிரைத்தார். “அதைத்தான் அவனிடம் சொல்ல விழைகிறேன். எனக்கு இங்கே எந்த இடமும் இல்லை. என்னை குருநிலையின் எப்பொறுப்பிலும் விட்டுச்செல்லவில்லை ஆசிரியர். ஆனால் அவரை நான் நெஞ்சில் சூடியிருக்கிறேன். ஒருநாளும் அவர் அடிகளை சென்னிசூடாமல் நாள் விடிந்ததில்லை எனக்கு. என் உடலை மண்தின்னும் வரை அவ்வண்ணமே இருப்பேன்.”

“சென்று சொல்லுங்கள் அவ்விழிமகனிடம், நான் அவனை எவ்வகையிலும் ஏற்கவில்லை என்று! நான் எதையுமே பொறுத்துக்கொள்ளவில்லை என்று… ஆம்!” மேலும் சொல்லப்போகிறவர் போல இருமுறை உடலெழுந்துவிட்டு அவர் திரும்பிச்சென்றார். அவர் குரல் இடறியதை, தொண்டை ஏறியிறங்கியதை, விழிகள் நீரணிந்ததை தருமன் திகைப்புடன் நோக்கி நின்றார். “உணர்ச்சிகளை செம்மையாக உருவாக்கிக்கொண்டுவிட்டார். இப்போது அவர் உள்ளம் நிறைவுகொண்டிருக்கும்” என்றான் நகுலன். “அவர் வாழ்நாளெல்லாம் சூட ஒரு அரிய தோற்றம் அமைந்துவிட்டது. சரியான சொற்கள். உகந்த உணர்வுகள். நாளைக்குள் இங்குள்ள அத்தனை பேரிடமும் அதை சொல்லிவிடுவார்.”

“நாம் இரக்கமற்றவர்களாக ஆகிக்கொண்டிருக்கிறோமா?” என்றார் தருமன். “இரக்கமற்றவராக ஆகப்போகிறவர் இவர்தான். தோற்றங்களைவிட மாறுதோற்றங்கள் விசை மிக்கவை, முழுமையாக்கப்பட்டவை. நல்ல நடிகர்களை தேர்ந்த புரவிகளை போர்வீரர்கள் என தெய்வங்கள் விரும்புகின்றன” என்றான் சகதேவன். குடிலருகே சென்றதும் “நன்று, நான் ஓய்வெடுக்கிறேன்” என்றார் தருமன். குடுமியில் எடைகொண்ட கதவென ஒருகணம் ஒரு சொல்லில் நின்று சுழன்று பின் “இன்றே அவளை அவர் சந்திக்கிறாரா?” என்றார். “ஆம், அங்குள்ள முறைமைகள் முடிந்ததும் சந்திக்கக்கூடும்” என்றான் நகுலன்.

“நன்று!” என்றபின் தருமன் உள்ளே சென்றார். தலைவணங்கி நகுலனும் சகதேவனும் தங்கள் குடில்களுக்கு சென்றனர். தன் அறைக்குள் நுழைந்ததும் தருமன் பெரும் விடுதலையுணர்வை அடைந்தார். பாயை விரித்து விழிமூடி எண்ணங்களின்றி படுத்துவிடவேண்டுமென்று தோன்றியது.

[ 14 ]

அர்ஜுனன் வந்து குடிலுக்குள் தலைவணங்கி நின்றான். பாயில் படுத்திருந்த தருமன் துயில் மயக்கம் எஞ்சிய விழிகளுடன் “ம்?” என்றார். “அரசியை இளைய யாதவர் பார்க்கச் செல்கிறார். தாங்களும் உடனிருக்கவேண்டுமென்றார்.” தருமன் “நானா? அவர்கள் தனியாக சந்திக்க விழையலாம்” என்றார். “இளைய யாதவர் அது ஒரு முறைமைச் சந்திப்பாகவே அமையவேண்டுமென விழைகிறார்.” தருமன் சிலகணங்கள் எண்ணிவிட்டு “அப்படி அவர் சொன்னாரா?” என்றார். “ஆம்” என்றான் அர்ஜுனன். “சரி” என அவர் எழுந்துகொண்டார்.

உடல்தூய்மை செய்துகொண்டு அவர் அவனுடன் சென்றார். செல்லும் வழியில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. தொலைவில் அரசமரத்தடியில் திரௌபதி தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டதும் தருமன் மெல்லிய குரலில் “இளைய யாதவர் ஏன் நான் உடனிருக்கவேண்டும் என்றார்?” என்றார். “அதை அவரே அறிவார். ஆனால் அவர் அரசியை தனியாக சந்திக்க விரும்பவில்லை எனத் தெரிந்தது. இன்றிருக்கும் அவரது உளநிலை அதற்குரியதல்ல என்று நீங்களும் அறிவீர்கள்.” தருமன் “ஆம்” என பெருமூச்சுவிட்டு “அவரிடம் அரசி எந்நிலையில் இருக்கிறாள் என்று சொன்னாய் அல்லவா?” என்றார். “ஆம், சொன்னேன்” என்றபின் அர்ஜுனன் “தாங்களே செல்லலாம்” என்று நின்றுகொண்டான்.

அவர் அரசமரத்தடியை அடைந்ததும் திரௌபதி ஒருகணம் நிமிர்ந்து பார்த்தாள். அவள் விழிகளில் வியப்பில்லாததைக் கண்டு அவளுக்கு அவர் வருவது தெரியும் என அவர் உய்த்தறிந்தார். அரசமரத்தடியில் அமர்ந்து பேசுவதற்காக மரத்தாலான பீடங்கள் போடப்பட்டிருந்தன. அவர் அவளுக்கு நிகராக ஆனால் சற்று விலகி அமர்ந்தார். அவள் அவர் அமர்ந்ததையே உணராதவள் போலிருந்தாள். அவர் அவளை ஓரக்கண்ணால் பார்த்தார். நிமிர்ந்த தோள்கள், சொடுக்கி எழுந்த தலை. கருங்குழல் சரிந்து பின்னால் பீடத்தில் விழுந்து வளைந்திருந்தது. ஆடையணிகளின்றியும் அரசியென்றே தெரிந்தாள்.

அவள் அவர் நோக்குவதை உணர்கிறாள் என எண்ணியதும் அவர் தன் விழிகளை விலக்கிக்கொண்டார். விழிகள் விலகியதுமே அவள் தோற்றம் மேலும் முழுமையுடன் உள்ளே தோன்றியது. நோக்கியபோது அறியாத குறுநிரைகள் அப்போது தங்கள் மென்நிழலுடன் அசைந்தன. அவர் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. முற்றிலும் அறியாத பெண்மீதென பெரும் ஈர்ப்பு அவள் மேல் ஏற்பட்டது. அவள் உடலின் மெல்லிய வியர்வை மணத்தை, வெம்மையை உணரமுடிந்தது. முதிரா இளைஞன் என அவர் உள்ளம் கிளர்ந்தபடியே சென்றது. அறியாது அவருடல் அவளை நோக்கி நகர்ந்தது. நகரவில்லை, அப்படி ஓர் அசைவு உடலுக்குள் நிகழ்ந்தமைந்தது. அதை அஞ்சி அவர் மறுபக்கம் விலக அவ்வசைவு அவர் உடலில் நிகழ்ந்தது.

அச்சிறு அசைவால் அவர் உணர்வுகள் கலைந்தன. ஏக்கமெழுந்து நெஞ்சு எடைகொண்டது. கண்ணீர் குளிர்ந்த விழிகளை இமைகளால் அடக்கினார். அப்போது தெரிந்தது, இழந்தது என்ன என்று. இழக்கப்பட்ட பெண்ணைப்போல இனிதான சுட்டெரிக்கும் பிறிதொன்றுண்டா? விரும்பும் பெண்ணை இழந்தவர்கள் எப்படி உயிர்வாழ்கிறார்கள்? என் அகம் உருகிக்கொண்டிருக்கிறது. மிக அருகே இருந்தும் எங்கோ என்றிருக்கிறாள். அவளறிவாளா? அறிவாள். அவள் நுண்ணுணர்வின் கூர்மை அவர் அறிந்ததே. வியந்து திகைத்து அஞ்சி அடைக்கலமான நஞ்சு அது. அவள் அறிவாள் என்பதில் ஐயமே இல்லை. ஆனால் சிறுபூச்சியை என உதறிவிட்டு அமர்ந்திருக்கிறாள். பெண்களால் அது முடியும்.

தொலைவில் இளைய யாதவர் வருவதைக் கண்டதும் அவர் பெருமூச்சுவிட்டார். நன்று, இல்லையேல் இத்தன்னிரக்கம் சினமாக பற்றி எழுந்துவிடக்கூடும். புறக்கணிக்கப்படுகையில்தான் நாம் எத்தனை ஆணவம் கொண்டவர்கள் என்று தெரிகிறது. இளைய யாதவர் வருவதையே நோக்கிக்கொண்டிருந்தார். அவர் சிறுவனைப்போல மேடுகளை தாவிக்கடந்தும் அருகே நின்ற மரங்களின் கிளைகளைப் பற்றி ஆட்டிவிட்டும் அப்பால் எழுந்து பறந்த பறவை ஒன்றை நின்று நோக்கி முகம் மலர்ந்தும் வந்தார். அவர் தலையில்சூடிய மயிற்பீலி காற்றில் நலுங்கியது. அத்தனைக்கும் அப்பால் அவரை ஒரு சிறுவன் என்று நிலைநிறுத்துகிறது அது.

அவர் அரசமரத்தடிக்கு வந்ததும் “இந்திரப்பிரஸ்தத்தின் அரசரையும் அரசியையும் வணங்குகிறேன். முறைமைசார்ந்த சந்திப்பு என்பதனால் என் கையுறையாக இதை கொண்டுவந்தேன்” என்று தன் இடையிலிருந்து ஒரு சிறு கருவியை எடுத்து அவர்கள் முன் வைத்தார். “பீதர்களிடமிருந்து இதை பெற்றேன். கலங்களில் அமைக்கப்படும் வடக்குநோக்கிக் கருவியை கையில் கொண்டுசெல்லும்படி சிறிதாக அமைத்துள்ளனர்” என்றார். அக்கருவியில் வட்டமான சிறுவெள்ளிப்பேழைக்குள் கல்லிரும்பாலான சிறிய கரியமுள் நின்று நடுங்கிக்கொண்டிருந்தது. அதன் அசைவுகள் அடங்கியதும் முள் வடக்கு நோக்கி நிலைத்தது.

“பீதர்நாட்டில் சில இடங்களில் இத்தகைய ஆற்றல்கொண்ட கல்லிரும்புப் பாறைகள் உள்ளன” என்றார் இளைய யாதவர். “அவற்றை அவர்கள் கரிய ஆமை என்று வழிபடுகிறார்கள். மண்ணுக்குள் உள்ள தெய்வங்களின் செல்வத்தைக் காக்கும் வல்லமைகொண்ட தெய்வம் அது.” தருமன் புன்னகையுடன் “ஆம், குபேரன்” என்றார். அந்தப் பேழையை கையிலெடுத்து மும்முறை சுற்றியபின் கீழே வைத்தார். நிலையழிந்து தடுமாறி மெல்ல மீண்டும் வடக்கையே அது காட்டியது. “நிலைபெயராமை” என்று இளைய யாதவர் சிரித்தார். தருமன் “குபேரனை எண்ணிய மனம் வேறெங்கும் நிலைப்பதில்லை. வடவன் இப்புவியின் பல்லாயிரம் கோடி உள்ளங்களை தன்னில் நிலைபெறச் செய்பவன்” என்றார்.

அந்தச் சிறிய கருவி தருமனின் உள்ளத்தின் அனைத்துத் துயரங்களையும் விலக்கிவிட்டது. திரௌபதி முறைப்படி குனிந்து அக்கையுறையை ஒருமுறை தொட்டு அதை ஏற்றுக்கொண்டாள். “அரசி, தங்களை ராஜசூயம் வேட்டு அமர்ந்திருக்கும் கோலத்தில் சந்தித்துச் சென்றேன். இன்று இங்கே மரவுரி அணிந்து அமர்ந்திருக்கிறீர்கள். ஒன்றுமட்டும் சொல்ல விழைகிறேன். அரசர் அரியணையாலோ மணிமுடியாலோ அமைந்தவர்கள் அல்லர். அவர்கள் ஆளும் மக்களின் உள்ளங்களில் உள்ளது அவர்களின் பீடம். அங்கமர்ந்து நீங்கள் இன்றும் ஆள்கிறீர்கள். நாளை அரியணையும் மணிமுடியும் செங்கோலும் தேடிவரும், ஐயம் வேண்டியதில்லை.”

நெடுநாட்களாகவே பேசாமலிருந்தமையால் திரௌபதி தன் குரலையே இழந்துவிட்டவள் போலிருந்தாள். அவள் நெஞ்சுக்குள் இருந்த சொற்கள் தொண்டையை முட்டுவதை தருமனால் உணரமுடிந்தது. பெருமூச்சுடன் உடலை அசைத்தபின் அவள் இருமுறை தொண்டையை சீரமைத்தாள். பின்னர் “வெற்று முகமன்கள் சொல்லாதவர் என்று உங்களைப்பற்றி எண்ணியிருந்தேன். கூர்மதியர், சொல்வலர், களவீரர், காத்துநிற்பவர், கைவிடாதவர், தளர்ந்தமையாதவர் என்றெல்லாம் எண்ணியிருந்தேன். எஞ்சியது இவ்வெண்ணம் ஒன்றே. அதையும் இப்போது இழந்தேன்” என்றாள். இளைய யாதவர் அவள் முகத்தையே நோக்கி அமர்ந்திருந்தார். “அணிச்சொற்களை சொல்லிவிட்டீர்கள். கடமை முடிந்தது. நீங்கள் செல்லலாம்” என அவள் எழுந்தாள்.

“அரசி…” என அழைத்தபோது அவர் குரல் உணர்வெழுச்சி கொண்டிருந்தது. “தன்னடக்கம் கருதி நீங்கள் சொன்ன அச்சொற்களை மறுப்பவன் அல்ல நான். ஆம், நான் கூர்மதியன், சொல்வலன், களவீரன்தான். ஐயமே தேவையில்லை, காத்துநிற்பவன், கைவிடாதவன், ஒருபோதும் தளர்ந்தமையாதவன். என் சொற்கள் வெறும் முகமன்கள் அல்ல.” திரௌபதி சீற்றத்துடன் “அவைநடுவே நான் சிறுமைகொண்டு நின்றேன். காத்து நிற்கும் வீரராகிய நீங்கள் எங்கிருந்தீர்கள்?” என்றாள்.

இளைய யாதவர் “ஆம், நான் அங்கிருக்கவில்லை. அத்தனை விரைவாக அனைத்தும் முடிவாகுமென நான் எண்ணியிருக்கவில்லை. குடிப்பூசலில் எரிந்துகொண்டிருந்த யாதவர்களின் ஊர்கள்தோறும் சென்றுகொண்டிருந்தேன் அப்போது. என் எல்லைகள் மேல் சால்வனின் படை எழுந்த அன்றே அஸ்தினபுரியில் சூது நிகழ்ந்தது” என்றார். “அரசி, நான் வெல்லற்கரியவனே. ஆனால் ஊழாலும் அல்ல. நான் மானுடன், தெய்வம் அல்ல.”

“அப்படி என்றால் இப்போது எழட்டும் உங்கள் படை. சென்று அவ்வீணரின் நெஞ்சுபிளந்த குருதியை கொண்டுவந்து எனக்கு அளியுங்கள். என் குழல்சீவி ஐந்துமுடி போட்டு அமைகிறேன்…” அவள் குரல் எதிர்பாராதபடி உடைந்தது. “வஞ்சம் சுமந்து வாழமுடியவில்லை, யாதவரே. நாளும் எரிந்துகொண்டிருக்கிறேன். இவ்வஞ்சத்துடன் இறப்பேன் என்றால் பேரணங்காகி இக்காடுகளில் குருதிவெறிகொண்டு அலைவேன். என்னை காப்பாற்றுங்கள். நீங்களன்றி எனக்கு யாருமில்லை. இத்தனிமையில் ஒவ்வொருநாளும் உங்களையே எண்ணி உங்களுடன் பேசிக்கொண்டே இருந்தேன்.”

முதல்முறையாக தருமன் திரௌபதியின் அழுகையொலியை கேட்டார். அவர் உடலில் குளிர்ந்த வாள் பாய்ந்ததுபோல இருந்தது. இடக்கால் நடுங்கலாயிற்று. அவள் விம்மியும் விசும்பியும் அழுதாள். “மாவீரருக்கு மகளும் தங்கையும் ஆனேன். ஐவருக்கு மனைவியானேன். பெருவீரர்களை மைந்தரெனவும் பெற்றேன். எவரும் எனக்கு உதவவில்லை. சிற்றில்பிறந்த சிறுகுடிப்பெண்ணுக்குக் கூட இழிவு நேர்ந்தால் சினந்து வேல்கொண்டு எழ ஆண்மகன் ஒருவனேனும் இருப்பான். எனக்கு எவருமில்லை. தன்னந்தனிமை… இத்தனை தனிமையை நான் எப்போதும் உணர்ந்ததில்லை. யாதவரே, கைவிடப்பட்டபின் உணரும் தனிமை ஆயிரம்மடங்கு எடைகொண்டது.”

“அரசி, அவர்கள்…” என இளைய யாதவர் தொடங்கியதும் அவள் ஒரே கணத்தில் உச்சகட்ட சினம்கொண்டாள். “ஆம், அவர்களின் அறக்கணக்குகள் எனக்குத் தெரியும். அவர்களின் அரசியல்கணக்குகளும் தெரியும். பெண்ணென நான் தேடுவது எக்கணக்கும் இன்றி எனக்கென வந்து நிற்கும் ஓர் ஆண்மகனை. இயலாமையின் உச்சத்தில் ஒருவர் அங்கேயே சங்கறுத்துக்கொண்டு செத்துவிழுந்திருந்தால் அடங்கியிருக்கும் என் அழல்.” அவள் உடல் நடுங்கியது. கரிய தோலுக்குள் அனலென செங்குருதி ஓடுவது தெரிந்தது. கழுத்திலிறங்கிய நீலநரம்பு தோள்வளைவில் எழுந்து கைகளில் இறங்கியது.

“அரசி!” என இளைய யாதவர் சொன்னதும் அவள் மேலும் சினத்துடன் கைநீட்டி “போதும், சொல்லவருவது அரசியல் கணக்குகளை என்றால் அதை நான் முன்னரே அறிந்துவிட்டிருக்கிறேன் என்று கொள்ளுங்கள். அறம், அரசு, வேறென்ன சொல்லப்போகிறீர்கள் ஆண்கள்? காமம் கொண்டாடவும் மைந்தரைப் பெற்று மகிழவும் குலமகள் வேண்டும் உங்களுக்கு. உங்கள் அரசியலுக்கு முன் அவள் வெறும் பகடை. உங்கள் கணக்குகள் முடிந்தபின் வெறும் பழைய ஆடை” என்றாள். அவள் விழிகள் சிவந்திருந்தன. மூச்சு ஏறியிறங்கியது.

அவளை சிலகணங்கள் நோக்கியிருந்தார் இளைய யாதவர். அவள் மூச்சு அடங்கி தலைதாழ்த்தி கைவிரலால் விழிநீர்ப்பிசிறைச் சுண்டி உதடுகளை இறுக்கி மூச்செறிந்ததும் மெல்லிய குரலில் “அரசி, அங்கே நீங்கள் உரைத்துவந்த வஞ்சினத்தைக் கேட்டு நடுங்கினேன். குலமாதர் அவ்வண்ணம் குடிவேரையே அகழ்ந்தெடுப்பதாக வஞ்சினம் உரைப்பதில்லை” என்றார்.  வெறிக்குரலில் அவள் “நான் குலமாதல்ல. நான் அரசி! கோலேந்தி அரியணை அமர்பவள். இப்பெருநிலத்தை குடைகவிழ்த்து ஆள்பவள்” என்றாள்.

“ஆம், நீங்கள் அரசி. அதனாலேயே இது அரசியலென்றாகிவிடுகிறது. இது குடிப்பூசல் அல்ல. ஆகவேதான் இதன்பொருட்டு குருதிபெருகவிருக்கிறது” என்றார் இளைய யாதவர். “இது உங்கள் தனிமதிப்பைப் பற்றியதென்றால் நாளை களத்தில் கழுத்தறுபட்டு விழவிருக்கும் பல்லாயிரம் தந்தைகள் பல்லாயிரம் தனயர்கள் பல்லாயிரம் உடன்பிறந்தோர் ஏன் அதற்கு வாள்கொண்டு எழவேண்டும்? அவர்களுக்கு இதிலென்ன? எந்த உரிமையில் அவர்களையும் இணைத்துக்கொண்டு அந்த வஞ்சினத்தை அவைமுன் உரைத்தீர்கள்?”

அவள் சினத்துடன் ஏதோ சொல்ல வர கையமர்த்தித் தடுத்து “அங்கு நீங்கள் நின்றது அரசியென. சொன்ன சொற்களெல்லாம் அரசியென்றே” என்றார் இளைய யாதவர். “அரசி, இப்பாரதப் பெருநிலத்தில் எத்தனை அரசர்கள் களத்தில் தலையுடைந்தும் நெஞ்சுபிளந்தும் இறந்திருக்கிறார்கள்? எத்தனை அரசர்கள் தேர்க்காலில் கட்டி இழுக்கப்பட்டிருக்கிறார்கள், அறிவீர்களா? அரசர்கள் கழுவேற்றப்பட்டிருக்கிறார்கள். உயிரோடு தோலுரிக்கப்பட்டிருக்கிறார்கள். எண்ணைக்கொப்பரைக்குள் வெந்திருக்கிறார்கள். அவர்களின் தலைகள் வெட்டி கோட்டைமுகப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் பற்கள் அரண்மனைமுகப்பில் மாலையென தொங்கவிடப்பட்டிருக்கின்றன. ஆம், அப்படித்தான் இங்கு அரசியல் நிகழ்ந்திருக்கிறது. அங்கு அறமென்பது வெற்றிக்குரிய வழியென்றே பொருள்படுகிறது.”

“நீங்கள் அரசியென முடிசூடிக் கோலேந்தியதுமே இந்த ஆடலுக்குள் வந்துவிட்டீர்கள். படைகொண்டு நாடுகளை வெல்லும்போது நீங்கள் பெண்ணல்ல. திறைகொண்டுவந்த மன்னர் உங்கள் காலடியில் முடிசரிக்கும்போதும் நீங்கள் பெண்ணல்ல. ஆனால் அரசியல் தோற்று அவைமுன் நிற்கும்போதுமட்டும் பெண்ணென்று ஆகிவிடுவீர்களா என்ன? அரசி, அந்தணன் ஒருவன் வேள்விக்கரண்டியை கீழே போட்டுவிட்டு செங்கோலேந்தினால் அவன் அரசனே. அவன் மறத்துக்கு தன்னை கொடுத்தவன். களத்தில் தோற்று வீழ்ந்து தன் நெஞ்சுக்கு நேராக வாளை ஓங்கும் எதிரியிடம் அவன் நான் அந்தணன், நீ என்னைக் கொன்றால் அந்தணக்கொலைக்கான பழிசேரும் என்று சொன்னானென்றால் அவன் எத்தகைய வீணன்?”

“பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். இது உங்கள் ஆடல். நீங்கள் தொடங்கியது இது. பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியென்றாக விழைந்தவர் இவர் அல்ல, நீங்கள். ஐவரும் உங்கள் கனவுக்கான பகடைகள் மட்டுமே. நம்மை நம்மைவிட அறிந்தவர் நம் எதிரிகள். உங்களை வெல்லாமல் தன் வெற்றி முழுமையடையாதென்று கௌரவமுதல்வன் அறிந்திருக்கிறான். அரசியலில் வெற்றி என்பது முற்றழிப்பதே. எதிரியைக் கொன்று அவன் பற்களை மாலையெனச் சூடுபவன் வீணன் அல்ல. அவன் அவ்வெதிரியின் குலத்திற்கு அழியாத அச்சுறுத்தலை அளிக்கவிரும்புகிறான். சிறுமையின் சுமைகொண்டு அக்குலம் சுருங்கிச் சிறுக்கவைக்க முயல்கிறான். உங்கள் நிமிர்வை அழிக்காமல் வெற்றியில்லை என்று மூத்தகௌரவன் எண்ணியிருந்தால் அது மானுடநெறிமீறல். ஆனால் அரசுசூழ்தலில் உகந்த வழியே.”

அவள் குத்திட்ட விழிகளுடன் அவரையே நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் விழிகளை ஓரக்கண்ணால் நோக்கிய தருமன் அகம் நடுங்கி தலைகுனிந்தார். அந்தச் சொல்லாடல் அப்போதே முடிந்துவிடவேண்டுமென்று மட்டுமே அப்போது விழைந்தார். “அவைநின்று சொல்லுரைத்துவிட்டீர்கள். உங்கள் கொழுநர் ஐவரையும் அதற்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்கிவிட்டீர்கள். அரசி, உங்கள் சொல்லுக்கு நானும் முழுதும் கட்டுப்பட்டவனே. கௌரவர் ஒவ்வொருவரும் தலையுடைந்து களத்தில் மறைவர். குருதியாடி நீங்கள் கூந்தல் முடிவீர்கள். விழிநீரும் கண்ணீரும் விழுந்த களம்வழியாக நடந்து நீங்கள் முடிசூடுவீர்கள். ஐயமே தேவையில்லை, இது நிகழும்.”

அவள் உதடுகள் மெல்லப் பிரிந்த ஒலி கேட்டதுபோல் தோன்றியது. “அரசி, அதில் உங்கள் விழிநீரும் கலந்திருக்கும். உங்கள் வயிற்றுக்குருதியும் அங்கு வீழ்ந்திருக்கும்.” திரௌபதி நடுங்குவது தெரிந்தது. உதடுகளை மடித்து இறுக்கி அத்தருணத்தைக் கடக்க அவள் முயன்றாள். “என்ன சொல்கிறீர்கள், யாதவரே?” என்றபோது அவள் குரல் மிக ஆழத்திலிருந்து வந்தது. “அரசி, சிம்மங்களுக்கு குருதிச்சுவை காட்டுவதைவிடக் கொடியது தெய்வங்களுக்குக் காட்டுவது. தங்கள் பீடம்விட்டு எழுந்த தெய்வங்கள் குளிர்ந்தமையாமல் திரும்பா” என்றார் இளைய யாதவர். “தெய்வங்களுக்கு அனைவரும் எளிய சிற்றுயிர்கள் மட்டுமே. வென்றவரும் தோற்றவரும் வெறும் குருதிதான்.”

அவள் இருகைகளையும் சேர்த்து பற்றிக்கொண்டாள். அவள் கழுத்துத்தசை இழுபட்டு அதிர்ந்தது. ஏதோ சொல்லவருபவள்போல் தோன்றினாள். ஆனால் உடனே எழுந்து ஆடையைப்பற்றி இழுத்துச் செருகியபடி நடந்து அகன்றாள். இளைய யாதவர் அவளையே நோக்கி அமர்ந்திருந்தார். தருமன் “கூரிய சொற்கள், யாதவரே” என்றார். “ஆம், ஆனால் பிறிதெவரும் அவர்களிடம் இதை சொல்லப் போவதில்லை” என்றார் இளைய யாதவர்.

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 42

[ 11 ]

சாந்தீபனிக் கல்விநிலையின் முகப்பில் நின்றிருந்த சுஹஸ்தம் என்னும் அரசமரத்தின் அடியில் தருமன் இளைய யாதவரை எதிர்கொள்ளக் காத்திருந்த மாணவர்களுடன் நின்றிருந்தார். பீமனும் நகுலனும் சகதேவனும் அவருக்கு இருபக்கமும் நின்றிருந்தனர். மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் இருக்கலாகாது என்று சொல்லப்பட்டிருந்தமையால் ஒரு இளம் மாணவன் கையில் வைத்திருந்த பெரிய நீள்வட்ட மரத்தாலத்திலிருந்த எட்டுகான்மங்கலங்கள் அன்றி வேறு வரவேற்புமுறைமைகள் ஏதுமிருக்கவில்லை.

தொலைவில் பறவைகள் எழுந்து ஓசையிடுவதைக் கேட்டதும் தருமன் அவர்கள் அணுகிவிட்டதை உணர்ந்தார். அதற்குள் அங்கிருந்த வீரன் ஒருவன் சங்கொலி எழுப்பினான். காத்து நின்றிருந்தவர்களில் ஒருவன் மறுசங்கொலி எழுப்பினான். குதிரைக்குளம்படிகள் கேட்கத்தொடங்கின. ஈரமுரசில் கோல்கள் விழுவதுபோல சருகுகள் மேல் அவை ஒலித்தன. பின்னர் பசுந்தழைப்புக்கு அப்பாலிருந்து வண்ணங்கள் கசிந்து இணைந்து அவர்கள் தோன்றினர்.

முதலில் அர்ஜுனனும் இளைய யாதவரும் இணையாக புரவியில் வந்தனர். அவர்களுக்குப் பின்னால் சாத்யகி வந்தான். இறுதியாக இரு காவல்வீரர்கள் வந்தனர். ஒருவன் கையில் சங்கு வைத்திருந்தான். அவர்களைப் பார்த்ததும் அவன் மீண்டும் சங்கொலி எழுப்பினான். காத்து நின்றிருந்தவர்கள் எதிர்ச்சங்கம் முழக்கினர். இளைய யாதவரின் புன்னகை வெண்மலர் போல கரிய முகத்தில் தெரிந்தது. அவர் சுரிகுழல்கற்றைகள் தோளில் சரிந்திருந்தன. தலையிலணிந்திருந்த மயிற்பீலி அப்போது எடுத்து வைத்ததுபோலிருந்தது. கரியபுரவிமேல் அவர் அமர்ந்திருந்தார். காட்டின் நிழலுக்குள் அது மறைந்துவிட்டிருந்தமையால் அவர் மிதந்து வருவதுபோலத் தோன்றியது.

முதன்மை மாணவன் இளையோனிடமிருந்து தாலத்தை வாங்கிக்கொண்டு முன்னால் சென்றான். தாலத்திலிருந்த மலர்மாலையை எடுத்து இன்னொரு மூத்தமாணவன் இளைய யாதவருக்கு சூட்டினான். இளையமாணவர்கள் அவர் மேல் பொன்னிற மலர்களைத் தூவி வேதச்சொல் உரைத்து வரவேற்றனர். அவர்கள் விலகியதும் தருமன் இரு கைகளையும் விரித்தபடி அணுகிச்சென்று இளைய யாதவரை தழுவிக்கொண்டார். “நன்று, தவக்கோலம் தங்களுக்கு அழகு” என்று சொல்லி அவர் தோள்களைப் பற்றி அழுத்தினார் இளைய யாதவர். தருமன் “ஆம், இங்கு உவகையுடன் இருக்கிறேன்” என்றார்.

பீமனை நோக்கி “காடாளத் தொடங்கிவிட்டீர், மந்தரே. வரும் வழியிலேயே சில குரங்குகளைப் பார்த்தபோது அவை உங்கள் நண்பர்கள் என உணர்ந்தேன்” என்றார். “ஆம், அங்கே இருப்பவை குறியன் கூட்டம். அவற்றின் ஒலியைக் கேட்டேன்” என்றான் பீமன். பீமனின் பெரிய கைகளைப் பற்றியபடி “குறியன் என்பவன் வால்குறுகிய முதுகுரங்கா? என்னிடம் அவன் வரவேற்புரைத்தான்” என்றார் இளைய யாதவர். “ஆம், அவன் எனக்கும் உங்களைப்பற்றி சொன்னான்” என்றான் பீமன்.

பீமனிடம் “தங்கள் தோள்கள் மேலும் பருத்திருக்கின்றன, நன்று” என்றபின் நகுலனையும் சகதேவனையும் நோக்கி கைகளை விரித்தார் இளைய யாதவர். அவர்கள் ஒரேஅசைவாக வந்து அவர் கால்தொட்டு சென்னி சூடினர். “இளையோர்தான் சற்று களைத்திருக்கிறார்கள்” என்றார் இளைய யாதவர். “ஆம், என்ன இருந்தாலும் காடு கொடிது” என்றார் தருமன். “வருக அரசே, தங்களுக்காக ஆசிரியர் காத்திருக்கிறார்” என்றான் முதுமாணவன்.

அவர்கள் இன்மொழி பேசியபடி இருபக்கமும் அசோகமும் மந்தாரையும் நிரைவகுத்த கல்விநிலைப் பாதை வழியாக சென்றனர். இளைய யாதவர் “இங்கு அனைத்தும் மாறிவிட்டன. மரங்கள், குடில்கள், முகங்கள்…” என்றார். “அவை மாறாமலிருக்காது என்று நன்கறிவேன். ஆயினும் மாறியிருப்பதைப் பார்க்க உள்ளம் பரபரப்படைகிறது.” தருமன் “ஆம், நானும் எங்கும் மாற்றங்களையே முதலில் பார்ப்பேன். அது முதுமைகொள்வதன் அடையாளம் போலும்” என்றார். சிரித்தபடி “இல்லை, அந்த மாற்றத்தின் நடுவே மாறாதிருக்கும் ஒன்றைக் கண்டு நிறைவடைவதற்கான முயற்சி அது. அனைத்தும் மாறுவது நாம் மறக்கப்படுவோம் என்பதற்கான சான்று. மாறாமலிருக்கும் ஒன்று நாம் எஞ்சவும் கூடும் என்பதற்கான நம்பிக்கை” என்றார் இளைய யாதவர்.

தருமன் விழிகளையே நோக்கிக்கொண்டு நடந்தார். அவரிடம் இளைய யாதவரைப்பற்றி சினம்கொண்டு பேசிய இளமாணவர்களில் பலர் அங்கிருந்தனர். அனைவர் விழிகளும் வியப்பால் விரிந்து இளைய யாதவரையே நோக்கிக்கொண்டிருந்தன. அவர்கள் என்ன உணர்கிறார்கள் என தருமனால் உணரமுடிந்தது. அவரைக் கண்டதும் முதலில் எழும் எண்ணம் அவர் உருவம் மிகச்சிறியது என்பதே. அவர் பேருடலன் அல்லர். ஆனால் குறியவனும் அல்லர். அவர்கள் விழிகளுக்கு முன் முதற்கணம் அவர் இயல்புருவைவிட குறுகிச் சிறுக்கிறார்.

ஏனென்றால் அவர்கள் அவரை குழந்தைவயதில் கதைகளாக அறிந்தவர்கள். குழந்தைகளின் தன்னுணர்வில் முதன்மையானது தாங்கள் சிறியவர்கள் என்பதே. ஆகவே அவர்கள் எப்போதும் மேலே பார்க்கிறார்கள். மேலே ஏற முயல்கிறார்கள். அண்ணாந்து சொல்கேட்கிறார்கள். அவர்களின் உலகம் மேலேதான் உள்ளது. அவ்வுலகில் அவர்கள் அவரை அறிந்தனர். அண்ணாந்தே அவரை நோக்கினர். அவர்களின் அறியா உள்ளத்தில் அவர் உருவம் கதைகளால் விரித்து பெரிதாக்கப்பட்டது.

அக்கதைகளுக்கு அயலானவராக அவர் எளிய உடலுடன் தென்படுவார். ‘இவரா? இவரேதானா?’ என நெடுநேரம் சித்தம் திகைக்கும். பின்னர் ‘இத்தனை எளியவரா? எப்படி?’ என வியக்கத் தொடங்குவார்கள். அவர் அசைவுகள் சொற்கள் சிரிப்புகள் அனைத்திலும் அது எவ்வண்ணம் நிகழ்ந்தது என்பதற்கான சான்றுகளை தேடுவார்கள். கூர்ந்து நோக்கப்படுவதனாலேயே அவர் பெரிதாகத் தொடங்குவார்.

மானுடப் பெருவெள்ளத்தில் கூர்ந்து நோக்கப்படுபவர்கள் மிகமிகச் சிலரே. காதலின் போது காதலர் கூர்ந்து நோக்கிக் கொள்கிறார்கள். நோக்கி நோக்கி ஒருவரை ஒருவர் வளர்க்கிறார்கள். ஆனால் அது காலநுரை. இருவருக்குள் நிகழ்ந்தழியும் கனவு. அவரோ பல்லாயிரம் விழிகளால் நோக்கப்படுகிறார். நோக்குகளை சேர்த்துக் கோக்கின்றன சொற்கள். அவர்கள் விழிகளில் ஏறி அவரைக் கூர்ந்து நோக்குவது அவர்களின் உள்ளம். அவ்வுள்ளம் அவரில் தன்னை படியச்செய்கிறது.

பின்னர் அவர் அவர்களின் வடிவாகிறார். அவரை வளர்த்தெடுப்பது அவர்கள் தங்களைப்பற்றிக் கொள்ளும் விழைவுக் கற்பனைகளின் வளர்ச்சி. அவரைப் பற்றிய கதைகள் புத்துருக் கொள்கின்றன. அக்கதைகளை அவர்கள் மேலும் வளர்த்தெடுக்கிறார்கள். அவர் பேருருக்கொள்ளத் தொடங்குகிறார். அவ்வுருவுக்குத் தொடர்பே இல்லாமல் அவர் எளிய மானுடனாகச் சிரித்து புழங்குகையில் தொன்மத்திற்கும் மானுடனுக்கும் நடுவே மயங்கித் தவிக்கிறது அவர்களின் சித்தம். அந்த மாயத்தால் அவர் ஒருபோதும் சித்தம்விட்டு இறங்காதவராகிறார்.

அவர்களின் விழிநடுவே சென்றுகொண்டிருக்கும்போது ஒரு நாடகத்தில் கூத்தர்கள்போல அணிகொண்டு வந்து நின்றிருப்பதாகத் தோன்றியது. விழாக்களிலும் அவைகளிலும் எப்போதும் தோன்றும் உணர்வுதான். ஆனால் மிகச்சில கணங்களிலேயே அதை வென்றுவிடமுடியும். ஏனென்றால் அங்கு அத்தனைபேருமே நடிகர்களாக இருப்பார்கள். இங்கு நோக்கும் விழிகள் உணர்வெழுச்சிகளால் நிறைந்திருந்தன. அத்துடன் அவை நிகழின் விழிகள் அல்ல. வரும் தலைமுறைகளின் விழிகள். அறியாத காலமடிப்புகளில் எங்கெங்கோ நின்றுகொண்டு நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அசைவுகள் பொய்யென ஆகாதிருக்க தருமன் தன்னை இறுக்கிக்கொண்டார். அது செயற்கையான மிடுக்காக தன் உடலில் தோன்றக்கண்டார். தளர்த்தியபோது அது செயற்கையான புறக்கணிப்பாகத் தோன்றியது. இயல்புநிலை என்பது இரண்டுக்கும் நடுவே ஒரு நடிப்பா என்ன என நினைத்துக்கொண்டபோது புன்னகை ஏற்பட்டது. அப்புன்னகை அவரை சற்று இயல்பாக ஆக்கியது. அவரை பார்த்தார். அவர் புல்லும் கல்லும் மண்டிய ஓடையின் மீன் போல மிக இயல்பாக அவர்களினூடாக சென்றுகொண்டிருந்தார். வாழ்த்துக்களை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். இறுகிய முகங்களையும் அதே புன்னகையுடன் எதிர்கொண்டார்.

எதிரே மாணவர்கூட்டத்திற்குள் பாதி புதைந்தவராக பிருகதர் நின்றுகொண்டிருந்தார். சேற்றுக்குள் உடல்புதைத்து மூச்சுக்கு முகம் மட்டும் நீட்டி ஒடுங்கியிருக்கும் விரால்மீன் போல. அவர் விழிகள் அவரில் கூர்ந்திருந்தன. சிறிய சுருக்கத்துடன். ஐயமா ஆர்வமா வெறுப்பா என்றறிய முடியாத சுருக்கம். கூட்டம் நெரிபட்டதனால் அவர் சற்று ததும்பிக்கொண்டிருந்தார். அவரை இளைய யாதவர் கடந்துபோகும் கணத்தில் கண்டுவிட்டார். முகம் மலர்ந்து புன்னகைத்து கைகளைக் கூப்பியபடி “வணங்குகிறேன், ஆசிரியரே” என்றபடி அவரை நோக்கி சென்றார். அறியாது அவர் உடல் பின்னடைவின் அசைவை காட்டியது. இளைய யாதவர் குனிந்து அவர் கால்களை சென்னி சூடினார். “வாழ்த்துங்கள்” என்றார். அவர் தலைமேல் வெறுமனே கைவைத்தார்.

எழுந்து “நீண்டநாள் ஆயிற்று பார்த்து. நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?” என்றார். “ஆம்” என்று பிருகதர் சொன்னார். மேலும் பின்னடைய அவர் விழைவதுபோல் தோன்றியது. மாணவர்கள் இளைய யாதவரைச் சூழ்ந்து உடல்களால் அலையடித்தனர். அர்ஜுனன் அவர் தோளில் தொட்டு “செல்வோம், யாதவரே” என்றான். “தங்கள் குடிலுக்கு பின்னர் வந்து சந்திக்கிறேன், ஆசிரியரே” என்றபின் அவர் முன்னால் சென்றார். திரும்பி பிருகதரைப் பார்த்த தருமன் அவர் விழிகளில் அதே சுருக்கம் நீடிப்பதை கண்டார்.

சாந்தீபனி முனிவர் தன் குடிலின் வாயிலிலேயே கைகளைக் கூப்பியபடி வந்து நின்று இளைய யாதவரை வரவேற்றார். “உங்கள் ஆசிரியரின் இல்லத்திற்கு வருக, யாதவரே” என்றார். இளைய யாதவர் குனிந்து அவர் கால்களைத் தொட்டு சென்னிசூடினார். அவர் அதில் ஒரு கணம் திகைத்ததுபோல் தோன்றியது. “அழிவற்றதாகுக உங்கள் மெய்யறிதல்!” என்று முணுமுணுத்தபின் “வருக!” என்று அவர் தோளைத்தொட்டார். அவர்கள் உள்ளே நுழைந்ததும் அர்ஜுனன் தலைவணங்கி வாயிலிலேயே நின்றான். நகுலன் “நாம் கூடத்திற்குச் சென்று காத்திருப்போமே!” என்றான். “ஆம்” என்றார் தருமன்.

அவர்கள் மாணவர்களினூடாக கூடம் நோக்கி சென்றனர். மாணவர்களின் ஓசை அதற்குள் பெருகி அப்பகுதியை சூழ்ந்திருந்தது. ஒரு சொல்லவை உச்சத்தில் முடிந்தபின்னர் அச்சொல்லாடலை ஒவ்வொருவரும் முன்னெடுப்பதுபோல் தோன்றியது. “நடிகன்!” என ஒரு குரல் கேட்டது. தருமன் அறியாது திரும்பிப்பார்த்தார். புன்னகையுடன் கண்ணொளிரத் தெரிந்த அத்தனை விழிகளில் எது அதைச் சொன்னது என்று அறியமுடியவில்லை. அவர் தலைதிருப்பியதுமே “பொய்ப்பணிவே ஆணவத்தின் உச்ச வெளிப்பாடு” என அக்குரல் சொன்னது. அவன் தனக்குள் மகிழ்கிறான் என தருமன் எண்ணினார். மீண்டும் திரும்பிநோக்கி அவனுக்கு அந்த உவகையை அளிக்கலாகாது என கழுத்தை இறுக்கிக் கொண்டார்.

கூடத்தில் புல்பாய்களில் அவர்கள் அமர்ந்தனர். நகுலன் “இளைய யாதவர் சற்று தளர்ந்திருக்கிறார்” என்றான். “ஆம், நடையிலும் தளர்வுள்ளது. நான் இன்றுவரை அவரை இத்தகைய தளர்வுடன் பார்த்ததே இல்லை” என்றான் சகதேவன். அர்ஜுனன் “துவாரகையில் நிகழ்ந்தவற்றைத்தான் சொல்லிக்கொண்டு வந்தார். அவர் உள்ளம் தளர்வதில் பொருளிருக்கிறது” என்றான். தருமன் அவனை திரும்பிப் பார்த்தார். “யாதவர்களின் உட்பூசல்… அது உச்சத்தை அடைந்திருக்கிறது” என்றான் அர்ஜுனன்.

“யாதவர்குலங்கள் பூசலிடாமலிருந்ததே இல்லையே?” என்றார் தருமன். “ஆம், ஆனால் முன்பு அவர்களை இணைக்கும் சரடாக இளைய யாதவர் இருந்தார். இன்று அப்பூசலை உருவாக்குவதாகவே அவரது இருப்பு மாறிவிட்டது. அதைத்தான் எண்ணி துயர்கொள்கிறார்” என்று அர்ஜுனன் சொன்னான். “இன்று அவர் நம்பிய அனைவருமே அப்பூசலில் அவருக்கு எதிராக அமர்ந்திருக்கிறார்கள்.” அச்சொற்களைக் கேட்டு சற்று அதிர்ந்த தருமன் அவன் விழிகளை நோக்கி “அக்ரூரருமா?” என்றார். “பலராமரும்” என்றான் அர்ஜுனன். தருமன் சிலகணங்களுக்குப்பின் பெருமூச்சு விட்டு “ஆம், அவ்வாறே அது ஆகும். அவர்கள் கருமையும் வெண்மையும்” என்றார்.

[ 12 ]

அவை நிரம்பி நீராவி வெம்மையும் வியர்வை வாடையும் கொள்ளத்தொடங்கியது. தருமன் கைகளைக் கட்டியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். வெளியே சங்கு முழங்க உள்ளிருந்தவர்கள் அமைதியாயினர். வெளியே இருந்து ஒரு மாணவன் சிற்றகல் ஒன்றை ஏந்தியபடி கூடத்திற்குள் நுழைந்தான். பிறிதொருவன் சங்குடன் தொடர்ந்தான். அவனுக்குப் பின்னால் இளைய யாதவரும் சாந்தீபனி முனிவரும் இணையாக கூடத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று அவர்களை வணங்கினர். அவர்களை கைதூக்கி வாழ்த்தியபடி சாந்தீபனி முனிவர் தன் பீடத்தை அடைந்தார்.

விளக்கேந்திய மாணவன் சிற்றகலால் அங்கிருந்த பிற நெய்யகல்களை ஏற்றியதும் தர்ப்பை போடப்பட்டிருந்த பீடம் ஒளிகொண்டது. சாந்தீபனி முனிவர் அவை நோக்கி திரும்பி “இன்று இங்கு நுண்வடிவாக இருக்கும் எந்தை மகிழ்வுகொள்கிறார். அவருக்கு உகந்த முதல்மாணவர், அவர் எண்ணிய இரண்டாவது மைந்தர், இன்று இக்கல்விநிலைக்கு வந்திருக்கிறார். இக்கல்விநிலையின் தலைவரென அவர் அமர்ந்து இதை வழிநடத்தவேண்டுமென எந்தை விழைந்திருக்கிறார். என்றாயினும் அவர் பெயருடன் இணைந்தே இது நினைக்கப்படுமென்றே என் உள்ளம் சொல்கிறது” என்றார்.

மாணவர்கள் விழிவிரித்து அமர்ந்திருந்தனர். அவர்கள் எண்ணுவதென்ன என்று உணரமுடியவில்லை. அகல்சுடர்களை ஏற்றி முடித்து மாணவன் பின்னால் சென்று அமைந்தான். “எந்தை அமர்ந்த இந்த ஆசிரியபீடத்தில் இன்று இளைய யாதவர் அமர்ந்து நமக்கு அவர் அருளிய சொற்களை சொல்லவேண்டுமென விழைகிறேன்” என்றார் சாந்தீபனி முனிவர். இளைய யாதவர் அதை மறுப்பார் என தருமன் எண்ணினார். ஆனால் புன்னகையுடன் இளைய யாதவர் அவையை நோக்கி “ஆசிரியர்களின் சொற்கள் மாணவர்களில் வாழ்கின்றன, விதையின் உயிர் மரத்தில் சாறெனத் திகழ்வதுபோல” என்றார். “நான் எண்ணுவதை சொல்கிறேன். ஒவ்வொரு சொல்லுக்கும் நான் அவருக்கு கடன்பட்டிருக்கிறேன்.” சாந்தீபனி முனிவர் அவர் கைகளைப்பற்றி பீடத்தில் கொண்டுசென்று அமர்த்தினார். அருகே இருந்த பீடத்தில் தான் அமர்ந்துகொண்டார்.

“இளையோரே, அந்த அழகிய மரம் தன் கிளைகளை மண்ணில் விரித்துள்ளது. வேரை விண்ணில் பரப்பியிருக்கிறது” என்று அவர் சொன்னார். “விண்ணகம் தூயநீர் ஒன்றால் நிறைந்துள்ளது என்கின்றன நூல்கள். அப்பாற்கடலின் திவலையையே நாம் மழை என்கிறோம். விசும்பின் துளி இங்கு பசும்புல் தலையாகிறது. பருப்பொருள் அன்னமாகிறது. அன்னம் அன்னத்தை வளர்க்கிறது. அன்னத்தின் ஆடலையே இங்கு இயல்வாழ்வு என்கிறோம். ஆயிரம் கிளைகள். பல்லாயிரம் சிறுகிளைகள். பற்பலப் பல்லாயிரம் சில்லைகள், முடிவிலா இலைகள்.”

“அனைத்திலும் பெருகும் சாறு ஒன்றே. அது விண்ணில் ஊறுவது. இளையோரே, வேர் அங்கிருக்கிறதென்றால் அதன் விதை எங்கிருந்தது? விண்ணகத்தில் நுண்வடிவாக இருந்தது அவ்விதை. முளைத்த பின்னரே தன்னை கண்டுகொண்டது அது. இலைகளின் காரணமென சில்லைகளும் சில்லைகளின் காரணம் என கிளைகளும் கிளைகளின் காரணமென மரமும் மரத்தின் காரணமென வேர்களும் வேர்களின் காரணமென விதையும் என்றால் அவ்விதையின் காரணமென அமைவது எது? அதுவே இங்குள அனைத்தும். அதை வணங்குக!”

“முடிவற்றுத் தளிர்ப்பதே அதன் விழைவென்பதனால்தான் அது இங்கு இவ்வண்ணம் உருக்கொண்டது. இங்கிருந்து வளர்ந்தெழுகிறது. அவ்வண்ணமென்றால் அதன் அழியாச்சொல் உயிர்த்திருப்பது தடியிலா, கிளையிலா, சில்லையிலா, இலையிலா? இல்லை எழுந்து ஒளிகொள்ளும் புதுத்தளிரில் மட்டுமே. உறுதியும் வண்ணமும் கொண்டவை மரமும் கிளைகளும். ஆனால் தளிருக்கு மட்டுமே பொன் அளிக்கப்பட்டுள்ளது” என்று அவர் சொன்னார். தனக்குள் என அவர் சொல்லிக்கொண்டே சென்றபோது அவரும் அங்கின்றி அச்சொற்கள் முழங்குவதுபோல் தோன்றியது.

“தளிரென எழுந்த ஒவ்வொன்றுக்கும் நிகராக அறியாத வானத்து ஆழங்களில் அதன் வேர்நுனி முளைகொள்கிறது என்றறிக! இங்கு ஒரு தளிரை கிள்ளுபவன் அங்கு ஒரு வேர்முளையின் பழிகொள்கிறான். இளையோரே, தடியால் இலையால் முள்ளால் தளிரை காத்துக்கொள்கிறது மரம். ஏனென்றால் தளிரிலேயே அது வாழ்கிறதென அது அறிந்துள்ளது.” அவர் விழிகள் பாதி மூடியிருந்தன. இதழ்கள் அசைகின்றனவா என்னும் உளமயக்கு ஏற்பட்டது. “இலைகளின் அலைகளாக ஒரு பெருவெள்ளம். புவிமூழ்கடித்து அது எழுகிறது இன்று. அதன் நுரைகள் அறைகின்றன இமயமலைமுடியை. அதன் ஆழிப்பேரோசை சுமந்த சங்குகள் ஆகின்றன நாம் உரைக்கும் ஒவ்வொரு சொல்லும்.”

“இனியவர்களே, பெருவெள்ளம் எழுகையில் உங்கள் தனிக்கிணறுகளால் என்ன பயன்? அவை விண்ணில் ஊற்று கொண்டவை ஆயினும்?” என்று அவர் சொன்னார். அச்சொற்கள் மீண்டும் மீண்டும் முழங்கும் அமைதியொன்றினூடாக கடந்து சென்றார். “ஊற்றென்பதும் உள்ளுறைந்த பெருவெள்ளமே. அதை அறிந்தவன் வெள்ளத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. இன்று தேவை அஞ்சாமை. நொய்மையான இல்லங்களை, ஒழுகும் களஞ்சியங்களை, நீச்சலறியாத இளமைந்தரை கொண்டுள்ள இல்லறத்தாரின் அச்சத்தால் எதிர்கொள்ளப்படுகிறது இன்றைய பெருவெள்ளம். மலைவிளிம்பில் நின்று அலைவெளிச்சம் கண்டு உவகையுடன் கைவிரித்து எழும் இளையோர் வருக! அவர்கள் இப்பெருவெள்ளத்தின் பொருளுணர்க! அவர்கள் சொல்லில் எழுக மேலும் புதுமழை!”

அவர் கைகூப்பினார். சாந்தீபனி முனிவர் கைகூப்பி முழுமைப்பாடலை பாடினார். அதன் பின்னரும் அவை ஓசையில்லாமல் அமர்ந்திருந்தது. அவ்வசைவின்மையில் மெல்லிய நிழலாட்டமென வாயிலுக்கு அப்பால் பத்ரர் தோன்றினார். அந்த நாடகத்தனமான தோன்றுதலுக்காகவே அவர் அங்கு காத்திருந்ததை உடனே தருமன் உணர்ந்தார். அவர் அடுமனையிலிருந்து வருபவர்போல கையில் ஒரு மரச்சட்டுவத்தை ஏந்தியிருந்தார். இடையில் தோலாடை நனைந்திருந்தது. உடலெங்கும் வியர்வை வழிந்தது. “இளையோனே, நான் உன் அணிச்சொற்களைக் கேட்க வரவில்லை. நீ இங்கு வந்துள்ளாய் என்றறிந்தேன். உன்னைக் காணும்பொருட்டே வந்தேன். உன் சொற்களைக் கேட்டேன்.”

SOLVALARKAADU_EPI_42

இகழ்ச்சியுடன் உதடுவளைத்து “சொற்களின் அரசவைநடனம். நன்று!” என்றார். “அணியும் ஆடையும் இன்றி அவை ஆடினால் மேலும் காமத்தை தூண்டக்கூடும்…” இளைய யாதவர் “தங்கள் சொற்களுக்கு நன்றியுடையேன், பத்ரரே” என்றார். கைகளைத் தூக்கி உரத்த குரலில் கூவியபடி அவர் அணுகினார். “நான் கேட்பதொன்றே. எனக்கு அணிகளில்லாமல் அவைநிற்கும் ஆண்மகனாக மறுமொழி சொல். நீ வேதத்தை ஏற்பவனா? மறுப்பவனா?” அவர் முகம் சினத்தால் இழுபட்டு நெளிந்தது. “எந்த வேதம் என்று தொடங்கவேண்டியதில்லை. எலி தப்பிச்செல்லும் வளைகளை எல்லாம் மூடியபின் தடியெடுத்தவன் நான். நால்வேதமென இன்று அமைந்து இப்புவியை ஆளும் மெய்ச்சொல்லை நீ ஏற்றவனா? மறுப்பவனா? அதைமட்டும் சொல்!”

“நான் வேதமறுப்பாளன் இல்லை” என்றார் இளைய யாதவர். “பத்ரரே, மலர்கொண்டு நிற்கும் மரத்திலிருந்து மகரந்தத்தை கொண்டுசெல்கிறது சிறுவண்டு. வேரும் கிளைகளும் இலைகளும் மலர்களும் கொண்ட அந்த மரத்தை அது மறுக்கவில்லை. அம்மரத்தின் நுண்சாரத்தையே அது கொண்டுசெல்கிறது. அந்த மரத்தை அது அழிவற்றதாக்குகிறது.” பத்ரர் கைகளை ஓங்கி அறைந்து சினமும் ஏளனமும் கலக்க நகைத்தார். “வேதத்தை அழிவற்றதாக்க வந்துள்ளான் யாதவன். மகிழ்ந்திருங்கள், முனிவர்களே. களிகொள்ளுங்கள், மாணவர்களே. உங்கள் வேதம் இனி அழியாது. இதோ அதைக் காக்கும் தெய்வம் எழுந்தருளியுள்ளது.”

“மெல்லிய சிறுவண்டுகளே மரத்தைக் காப்பவை, பத்ரரே” என்றார் இளைய யாதவர். “ஆகவேதான் யானை உண்ணும் கிளையிலும் மான் உண்ணும் இலைகளிலும் பறவைகள் உண்ணும் கனிகளிலும் தன் சாறை மட்டும் வைத்திருக்கும் மரம் வண்டுகள் நாடிவரும் மகரந்தத்தில் தன் கனவை வைத்திருக்கிறது. வெளியே சென்று பாருங்கள், தான் செல்லவிரும்பும் திசைநோக்கி கைநீட்டி மலர்க்குவளைகளில் மகரந்தப்பொடி ஏந்தி நின்றிருக்கும் பெருமரங்களை காண்பீர்கள்!” பத்ரர் உச்சகட்ட வெறுப்புடன் “போதும்!” என்றார். “நான் உன்னிடம் ஒப்புமைகளால் விளையாட இங்கு வரவில்லை. இதுவரை நீ இயற்றிய வேள்விகள் என்ன? அதைமட்டும் சொல்!”

“நான் தேவர்களிடம் வேட்பதில்லை” என்றார் இளைய யாதவர். “அவ்வண்ணமென்றால் நீ வேள்விச்செயல்களை மறுக்கிறாயா?” இளைய யாதவர் “இல்லை” என்றார். “வேண்டுபவர்கள் வேட்கலாம். பெற்று நிறையலாம். வேள்வி பிழையென்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. அது இகம். வேதம் பரத்திற்கும் உரியது என்று மட்டுமே சொல்கிறேன்.” பத்ரர் “மண்ணில் உள்ளது விண் என உணர்ந்தோர் அருளியது வேதம். மண்ணின்றி நிற்கும் திறன்கொண்டதாகையால் அது மானுடம் கடந்தது. அதை இங்கமர்ந்து சொன்னவர் நீ துறந்து சென்ற உன் ஆசிரியர்” என்றார். இளைய யாதவர் “ஆம், நான் அவர் சொல்லை துறக்கவில்லை. நான் வேதகாவலன். வெண்ணை உண்பவன், எனவே ஆகாவலன்” என்றார்.

“இனி நீ ஒன்றும் சொல்லவேண்டியதில்லை. இதோ இந்த அவையிலேயே சொல்லிவிட்டாய், வேள்வி புரப்பவன் அல்ல நீ என்று. இது வேதநிலம். வேள்வி புரக்காதவனுக்கு இங்கு முடியும் கோலும் இல்லை. வேதமறுப்பாளனைக் கொன்று அவன் குடிவெல்வது ஷத்ரியரின் கடமை. எண்ணிக்கொள் நாட்களை, அவர்கள் எழுந்து வருவார்கள். உன் நகரும் கோட்டையும் கொடியும் வீழும் தருணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது” என்று பத்ரர் கூவினார். “என்ன சொன்னாய், மூடா? நீ வேதசாரம் நாடுபவனா? மலமுருட்டிச் செல்லும் வண்டுக்கு மகரந்தச்சுவை தெரியுமா? இழிமகனே, என் ஆசிரியர் அமர்ந்த பீடத்திலிருந்து இக்கணமே இறங்கு!”

“அதைச் சொல்லவேண்டியவன் நான்” என்றார் சாந்தீபனி முனிவர். “பத்ரரே, உம்மை இங்கு நான் பேசவிட்டதே நீர் உச்சகட்டமாக என்ன பேசிவிட முடியுமென்று இந்த அவை அறியட்டும் என்றுதான். கற்றும் தெளிந்தும் ஒருவன் அடைந்தவற்றுக்கெல்லாம் அடியிலிருப்பது தன் பிறப்பின் மீதான வெற்றுப்பெருமைதான் என்றால் அவனே இழிந்தோனினும் இழிந்தோன். இங்கு நீர் இழிவுசூடவில்லை, உமக்குள் சென்ற வேதமெய்மையையும் இழிவு செய்கிறீர். உம்மை கீழ்மகனாகக் காட்ட வேண்டிய அத்தனை சொற்களையும் சொல்லிவிட்டீர்… நீர் செல்லலாம்!”

“ஆம், செல்கிறேன். உங்கள் இழிந்த அவையில் நான் சொல்லாட வரவில்லை. என் செயல்களம் அடுமனை. இங்குள்ள அனைவருக்கும் பசியாற்றும் கை இது. உங்கள் கைகளின் வேள்விக்கரண்டிக்கு நிகரானது இது.” அவர் தன் சட்டுவத்தை தூக்கிக் காட்டினார். “ஏனென்றால் வேதத்திற்கு என்னை முற்றளித்தவன் நான். எனவே செய்வதெல்லாம் எனக்கு வேள்வியே. என் ஆசிரியர் அமர்ந்த பீடத்தில் அமரத் துணிவுகொண்ட இவ்விழிமகனிடம் அவன் யார் என்று சொல்லிச்செல்லவே வந்தேன். யாதவா, உன் சொல்லை உன் குடியினர்கூட செவிகொள்ளப்போவதில்லை. வேதமென்பது பல்லாயிரம் முனிவர் கொண்ட அருந்தவத்தின் அமுது நனைந்தது. உன் வீண்சொற்களால் அதை நீ தொடவும் முடியாது.”

அவர் போகத் திரும்பியதும் “பத்ரரே” என இளைய யாதவர் மெல்ல அழைத்தார். அவர் அறியாது நோக்கித் திரும்ப அவரை கூர்ந்து நோக்கி மெல்லிய குரலில் இளைய யாதவர் சொன்னார் “தவத்துக்கு நிகரானது போர்க்களக்குருதி என நூல்கள் சொல்கின்றன. என் சொல் ஒவ்வொன்றையும் குருதியால் ஆயிரம் முறை நீராட்டி எடுத்து வைக்கிறேன். அவை வேதச்சொல் அளவுக்கே ஒளிகொள்வதை காண்பீர்கள்!” பத்ரர் மெய்சிலிர்ப்பதை காணமுடிந்தது. அவையினர் அனைவரும் கொண்ட விதிர்ப்பை தன் உடலால் தருமன் உணர்ந்தார். “ம்ம்” என உறுமிவிட்டு பத்ரர் வெளியே சென்றார்.

அவை பெருமூச்சொலிகளுடன் மெல்ல மீண்டது. சாந்தீபனி முனிவர் “இளையோரே, எந்தை சொன்ன சொல்லை மறுத்துச்சென்றவர் இவர் என்று நாம் அறிவோம். ஆயினும் எந்தை இவரையே தன் மாணவர் என்று எண்ணினார் என நான் அறிவேன். மறுப்பதனூடாக இவர் அவர்சொல்லை வாழவைக்கலாம். தொகுத்து முன்செல்லலாம். யோகியரின் பாதையை நாம் அறியோம். இதோ, உலகச்செயலனைத்தையும் ஒருங்குசெய்து ஓயாது அமைந்திருக்கும் இவரை மாபெரும் யோகி என்றே என் உட்புலன்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. இன்று அவர் அறியாப்புதிர். நாளை அவர் சொற்களினூடாக அப்புதிர் அழியலாம். இவர் எவரென்று நாம் அறியலாம். நன்று, அதுவரைக்கும் பின்பும் சாந்தீபனிக் கல்விநிலையின் முதலாசிரியர் அவரே. இது எந்தைவடிவென்று இங்கிருந்து நான் இடும் ஆணை. ஆம் அவ்வாறே ஆகுக!” என்றார்.

அவர் எழுந்து இளைய யாதவரை வணங்கினார். அதன்பின் மூத்தமாணவர்கள் ஒவ்வொருவராக வந்து அவரை வணங்கி விலகினர். அனைவருக்கும் மலரளித்து “மெய்மை கைவருக!” என இளைய யாதவர் வாழ்த்தினார். தருமன் எழுந்து இளைய யாதவரை அணுகியபோது அவர் விழிகளை நோக்கினார். அவரறிந்த களிச்சிறுவன் அங்கிருக்கவில்லை. யோகத்திலாழ்ந்த விழிகள். கடந்துசென்றமையால் கனல்கொண்டவை. அவர் காலடியில் தலை வணங்கியபோது தன் வாழ்நாளில் முதல்முறையாக ஆணவம் முழுதடங்கி சித்தம் அவிந்து பணிந்தது அகம். “வெல்க, நிறைக!” என்றார் இளைய யாதவர். தருமன் ஒருகணம் நெஞ்சுவிம்ம கண்ணீர் கொண்டார்.

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 41

[ 9 ]

அர்ஜுனன் குடிலுக்குள் வந்து வணங்கி கைகட்டி நின்றான். அவர் சுவடிக்கட்டை கட்டி பேழைக்குள் வைத்தபின் நிமிர்ந்து பார்த்தார். அருகே தெரியும் எழுத்துக்களுக்காக கூர்கொண்ட விழிகள் சூழலை நோக்கி தகவமைய சற்று நேரம் ஆகியது. அவன் உருவம் நீருக்கு அப்பாலெனத் தெரிந்து மெல்ல தெளிவடைந்தது. அவனைச் சூழ்ந்திருந்த குடிலின் தூண்களும் மரப்பட்டைச் சுவர்களும் சாளரங்களுக்கு அப்பால் மரங்களும் உருக்கொண்டன.

SOLVALARKAADU_EPI_41

அர்ஜுனன் அவர் நோக்கு மீள்வதற்காகக் காத்து நின்றிருந்தான். சுவடிகளை வாசிக்கையில் அவர் விழிகள் பிற உலகங்களை கரைத்து அகற்றிவிடுவதை அவன் அறிந்திருந்தான். சுவடிகளிலிருந்து எழும்போது விழியிழந்தவர் போல் முகம் கொண்டிருப்பார். அந்தத் திகைப்பு மெல்ல விலகி அவர் விழிகளில் நோக்கு திரும்பியபின்னரே அவர் அவன் தமையன் என்று மீண்டு வருவார். “ம்?” என்று அவர் கேட்டார். “இளைய யாதவர் அணுகிவிட்டார்” என்றான்.

தருமன் மேலாடையைச் சீரமைத்து கையூன்றி எழுந்தார். அவர் மூட்டுகளில் முதுமையின் தளர்ச்சி ஒலித்தது. “இன்று பின்னுச்சி வேளை இங்கு வந்தடையக்கூடும் என்றார்கள். காட்டுக்குள் அவர் நுழைந்ததை அறிவித்து முரசு எழுந்தது.” தருமன் “இங்கு ஏற்பாடுகள் தொடங்கிவிட்டனவா?” என்றார். “இல்லை மூத்தவரே, அவர் சாத்யகியை மட்டும் அழைத்துக்கொண்டு தனியாகத்தான் வருகிறார். இங்கு வரவேற்புகள் ஏதும் தேவையில்லை என அறிவுறுத்தியிருக்கிறார்.” தருமன் வியப்புடன் நோக்கி “தனியாகவா?” என்றார். “ஆம்” என்றான் அர்ஜுனன். “நெடுநாட்களுக்குப்பின் வருகிறார் என்றார்கள்” என்றார் தருமன். “அதனால்தான் அப்படி வருகிறார் போலும்” என்றபின் அர்ஜுனன் தலைதாழ்த்தி வெளியே சென்றான்.

முகம் கழுவி குழல் திருத்தி தருமன் வெளியே வந்தார். சாந்தீபனி குருநிலை முழுக்கவே இளைய யாதவர் வரும் செய்தி பரபரப்பை உருவாக்கியிருந்தது. ஆனால் அவர்கள் அப்படி கிளர்ச்சிகொள்ளவில்லை என்று காட்ட விரும்பினர். ஆகவே மிகையான இயல்புணர்வை நடித்தபடி மெல்ல நடந்தனர். சிறிய செய்திகளை உரக்கச் சொல்லி தேவையின்றி சிரித்தனர். தருமன் அவர்களை நோக்கியபடி நடந்தார். அவரை நோக்கி தலைவணங்கி முகமன் உரைத்தபடி மாணவர்கள் சிறுவேலைகளை ஆற்றியபடி கடந்துசென்றனர். காலைவேள்விக்கென கொண்டுசெல்லப்பட்ட பசுவையும் கன்றையும் இருவர் ஓட்டிக்கொண்டு சென்றனர். பெரிய பித்தளை அண்டாக்களுடன் மூவர் சென்றனர். அனைவர் விழிகளிலும் அத்தருணம் இருந்தது.

சாந்தீபனி முனிவர் அவரது குடிலை விட்டு வெளியே வந்து திண்ணையில் நின்றபடி நெய்ப்பானைகளை கொண்டுசென்றவர்களுக்கு ஏதோ ஆணையிட்டுக்கொண்டிருப்பதை தருமன் பார்த்தார். அவர் கிளர்ச்சி கொண்டிருந்தார், அதை அவ்வண்ணமே அவர் உடலும் முகமும் வெளிப்படுத்தவும் செய்தன. அவர் முனிவரை தொலைவிலிருந்தே வணங்க அவர் உரக்க “இளையோன் வருகிறான், அரசே” என்றார். “ஆம், அறிவேன்” என்றார் தருமன். “நெடுநாட்களுக்குப்பின் வருகிறான். எந்தை மகிழ்வார்” என்றார் சாந்தீபனி முனிவர். “இது அவன் ஆசிரியனாக அமர்ந்திருக்கவேண்டிய இடம்” என்றபின் புன்னகைத்து உள்ளே சென்றார்.

குருநிலைக்கும் இளைய யாதவருக்குமான உறவை அங்கு வந்தநாள் முதலே தருமன் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். அங்குள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு உரையாடலிலும் அவரைப் பற்றியே எண்ணிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தனர். அவர் ஆசிரியராக அமர்ந்த குருநிலை என்று அவர்கள் எண்ணுவதாகத் தோன்றும். ஆனால் அவர் அக்குருநிலையை முற்றிலுமாகத் துறந்து சென்றார் என்பதை அவர்கள் எப்போதும் நினைவில்கொண்டிருந்தனர். தன் ஆசிரியரைத் துறந்து சென்றார் என்றும் அவரை வாழ்வு துறக்க வைத்தார் என்றும் அறிந்திருந்தனர். இளைய யாதவரை எண்ணுவது தங்கள் ஆசிரியருக்குச் செய்யும் பிழை என்றும் உள்ளம்கொண்டிருந்தனர்.

ஆகவே ஒவ்வொரு உரையாடலும் இயல்பாக இளைய யாதவரைப் பற்றியதாக மாறும். அவர் எண்ணங்களையும் செயல்களையும் தொட்டுத்தொட்டுச் சென்ற ஒரு கட்டத்தில் ஒரு மூத்த மாணவன் “நாம் ஏன் அவரைப்பற்றி பேசவேண்டும்? அவர் சாந்தீபனி குருநிலையின் ஆசிரியர் அல்ல” என்று உரக்க சொல்வான். அத்துடன் அவ்வுரையாடல் அறுபட்டு நிற்கும். பெருமூச்சுடன் ஒவ்வொருவரும் சுக்கான் பற்றி கலம் திருப்புவதுபோல தங்கள் எண்ணச்செலவை மாற்றியமைப்பார்கள்.

ஆனால் அங்கு பேசப்படும் ஒவ்வொன்றும் இளைய யாதவருக்குரிய மறுமொழிகள் என்பதை சிலநாட்கள் அச்சொற்களனுக்குள் அமைந்ததுமே தருமன் புரிந்துகொள்ளத் தொடங்கினார். அவர் அங்கிருந்த நாட்களே குறைவானவை. அவர் சொல்லி அங்கு எஞ்சியவையும் சிலவே. ஆனால் அவர்கள் உசாவியும் எண்ணிப்பெருக்கியும் அவர் தரப்பை மிகவலுவாக உருவாக்கிக்கொண்டிருந்தனர். அவர் பெயரைச் சொல்லாமல் அவரை மறுத்தனர், அவருடன் சொல்லாடினர். வென்று கடந்ததுமே அவர்கள் அவராக மாறி அவர் தரப்பை மேலும் உருவாக்கிக்கொண்டு அதனுடன் பொருதலாயினர்.

தத்துவம் பிசிறின்றி கோக்கப்படும்போதே அதைச் சார்ந்தவர்களின் நாளுள்ளம் ஐயம்கொள்ளத் தொடங்குகிறது. எனவே நாளுண்மையைச் சொல்லும் ஒருவன் அதன் உயிர்நிலையைச் சுண்டி அதிரச் செய்துவிடமுடியும். நாளுண்மையில் வலுவாக நின்றிருக்கும் தத்துவம் எப்போதும் தன் இயல்பான சிறுமையை உணர்ந்தபடியே இருக்கிறது. பறக்கும் கவிச்சொல் ஒன்று அதை எழுச்சிகொள்ளச் செய்கிறது. கவ்விய அனைத்தையும் கைவிட்டு அது தானும் சிறகு விரிக்கிறது. உலகியலே தத்துவத்தின் எதிரி. தத்துவம் உலகியலின் பிடிபடாக் கனவு. அவர் ஒருதருணம் நாளுண்மையென வந்து நின்றார். மறுகணமே கவிச்சொல்லென ஆகி அதை வென்றார்.

தத்துவத்தை அணுகும்தோறும் ஒவ்வொரு மானுடரும் மெல்லிய திரிபுகொள்ளத் தொடங்குவதன் விந்தையை தருமன் எண்ணிக்கொண்டே இருந்தார். தாளாப்பேருண்மை ஒன்றை சுமந்தவர்கள் போல ஒரு முகம். புரிந்துகொள்ளப்படாதவர்களாக, தனியர்களாக, ஒவ்வொன்றையும் பொருளின்மையெனக் கண்டு நகைப்பவர்களாக, எக்கணமும் உதிரக்காத்து அதிர்பவர்களாக அதன் நூறாயிரம் பாவனைகள். அப்படியே மறுபக்கமென உண்மையென்பதை முற்றிலும் மறுத்து எளியோரில் எளியோனாக மண்ணில் நின்றிருக்கும் ஒரு தரப்பு. வியர்வை கொட்ட தோட்டத்தில் உழைப்பவர்கள், கன்றோட்டுபவர்கள், அடுமனையில் பணியாற்றுபவர்கள், சொல்லவைகளில் விழிதிருப்பி எங்கோ என அமர்ந்திருப்பவர்கள், அரிய சொல்லாட்சி எழுகையில் தனக்குள் என மெல்ல நகைத்துக்கொள்பவர்கள், அனலெழும் சொல்லாடல்களில் கடந்து எளிய இளிவரலொன்றை சொல்பவர்கள் என அது முகம்பெருகுகிறது.

சாந்தீபனி குருநிலையை சுற்றி வருகையில் தருமன் மாணவர்களையே நோக்கிக் கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோற்றத்தில் நடமாடிக்கொண்டிருந்தனர். தத்துவம் கற்றபின் அக்கல்வியென்றே ஆகி இயல்பாக அமைந்த எவருமே இல்லையா என்று வியந்தார். தத்துவம் மானுட ஆணவத்துடன் மட்டும்தான் நேரடியாக உரையாடுகிறதா? அந்த இயல்பான பாதையை வெட்டி அதை உள்ளிருக்கும் பசிக்கு உணவாக்குவதற்கான பயிற்சிதான் என்ன? தத்துவம் அனலெரியும் உலைமையம். அதை அணுகும்தோறும் ஒவ்வொன்றும் உருகி உருக்கலைந்தாகவேண்டும். புடமிடப்பட்டு மாசுகளைந்து மறுபக்கம் எழுபவனே தத்துவத்தைக் கடந்தவன். தத்துவத்தைக் கடக்காதவனுக்கு அதனால் பயனேதுமில்லை.

அவர் ஓடைக்கரையை அடைந்தபோது அங்கே பெரிய செம்புக்கலங்களை நீரிலிட்டு தேய்த்துக்கொண்டிருந்தனர். கலவளைவுக்குள் நீர் சுழித்து எழுந்து சென்றது. நீண்ட குழலை நாரால் முடிந்து தோளில் இட்டிருந்த நடுவயதான ஒருவர் கலங்களை நாரால் தேய்த்துக்கொண்டிருந்தார். அவரைச் சூழ்ந்து இளமாணவர்கள் கலம் தேய்த்தனர். தருமன் அருகே வந்ததும் அவர் நோக்கி “வருக, அரசே!” என்றபின் விழிகளால் அப்பால் கிடந்த நாரை சுட்டிக்காட்டிவிட்டு திரும்பி மாணவர்களிடம் “தேர்ந்த வேதிக்கூட்டு என்பது அக்கலத்தின் பங்கில்லாது நிகழ்வது” என்றார்.

தருமன் என்ன செய்யப்போகிறார் என்பதையே அனைத்து மாணவர்களும் ஓரவிழியால் நோக்கிக்கொண்டிருந்தனர். அவர் தன் ஆடையை மடித்து மேலேற்றிவிட்டு அந்த நார்ச்சுருணையை எடுத்துக்கொண்டு நீரில் இறங்கினார். அருகே ஊறிக்கொண்டிருந்த கலத்தை தேய்க்கத் தொடங்கினார். அவர் அவரை முற்றிலும் அறியாதவர் போல பேசிக்கொண்டே சென்றார். “ஆகவே கலம் தேர்வதே வேதியியலின் முதல் பணி. அத்தனை உலோகங்களும் வேதிச்செயலில் பங்குகொள்ளும் வேதிப்பொருட்களே. மண் நன்று. ஏனென்றால் அது அன்னையென நின்றுள்ளது. ஆயினும் அது சிலவற்றுடன் இணைந்தாடும் தன்மைகொண்டது.”

“கல்குடுவைகள் மேலும் நன்று” என்று அவர் சொன்னபடியே சென்றார். “அவையும்கூட பொன்மாற்று வேதியியலுக்குப் பயனற்றவை. பீதர்களின் பளிங்குக்குடுவைகளே இதுகாறும் வந்தவற்றில் மிக உகந்தவை. அவை ஈடுபடுகின்றனவா என்று இனிமேல்தான் முற்றுறுதி செய்யவேண்டும்.” காலால் நீரைத் தள்ளி தான் தேய்த்த கலத்தை அவர் கழுவினார். அங்கே தருமன் நிற்பதைக்கண்ட மாணவர்கள் பலர் அருகே வந்தனர். இயல்பாகவே பலர் கலம் கழுவத்தொடங்கினர். ஓடை இடமின்றி ஆனதும் எஞ்சியவர்கள் கரையில் கைகட்டி நின்றனர்.

“அனைத்து வேதிக்கலவைகளும் சமன்வயங்களே” என்று அவர் தொடர்ந்தார். “எந்த சமன்வயத்திலும் அதை நிகழ்த்தும் கலத்தின் இயல்பு கலந்துள்ளது. முற்றிலும் அவ்வாறு கலக்காத ஒரு சமன்வயம் இங்கு நிகழமுடியுமா என்பதே ஐயம்தான்.” அவர் உடல் இறுகி நார்நாராக அசைந்தது. கடுமையான உடலுழைப்பை மேற்கொள்பவர் என தருமன் எண்ணிக்கொண்டார். வெண்மயிர் கலந்த தாடியில் நீர்த்துளிகள் ஒளிர்ந்து ஆடிச் சொட்டின. “ஆகவே கலம் ஏது என்பது முதற்கேள்வி. அதைவிடுத்துப் பேசுவதெல்லாம் பொய்யே.”

தருமன் தனக்குள் ஒரு புன்னகை எழுவதை உணர்ந்தார். அதை முகத்தில் எழாது காத்தபடி “அப்படியென்றால் இளைய யாதவர் தத்துவ சமன்வயம் செய்யும் ஆற்றலற்றவர் என நீங்கள் எண்ணுகிறீர்களா, உத்தமரே?” என்றார். அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சிகொள்வது உடலசைவுகளாகவே தெரிந்தது. அத்தகைய நேரடியான வினாவை எப்போதுமே எதிர்கொண்டிராத அவர் சிலகணங்கள் நிலைகுலைந்துபோனார். அவர் கைகள் பதறுவதையும் விரல்களால் சுருணையை இறுகப்பற்றுவதையும் தருமன் கண்டார். அவர் விழிகள் நிலையழிந்து உருண்டன. உதடு ஒருமுறை சொல்லின்றி திறந்து மூடியது. மறுகணம் உரத்த குரலில் “என்ன சொல்கிறீர்? இளைய யாதவனா? அவனைப்பற்றி இங்கு என்ன?” என்றார்.

“இங்கு பேசப்படுவது அவரைப்பற்றித்தான் என்று எண்ணினேன்” என்றார் தருமன். “நான் பிழையாகப் புரிந்துகொண்டேன் என்றால் பொறுத்தருளவேண்டும்… ஆனால் எனக்கு அதையே எண்ணத் தோன்றியது.” அவர் கையை வீசி “அறிவின்மை!” என்றபின் குனிந்து நீரை காலால் தள்ளி கலம்மீது வீசினார். “நான் பேசிக்கொண்டிருப்பதே வேறு. இது தத்துவத்தின் கூர்முனை. அன்றாட அரசியலுக்கு இதனுடன் தொடர்பு ஏதுமில்லை.” தருமன் “ஆம், புரிந்துகொள்கிறேன். நான் அரசன், அன்றாட அரசியலை என்னால் தவிர்க்கமுடிவதில்லை” என்றார்.

“அறியாமையை என்னால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை” என்றார் அவர். “நான் பேசிக்கொண்டிருப்பதே வேறு.” தருமன் “ஆம், ஆனால் என் பொருட்டு நான் கேட்ட வினாவுக்கே நீங்கள் மறுமொழியிறுக்கலாமே” என்றார். “என் பணி அதுவல்ல” என்ற பின் அவர் கலத்தை விசையுடன் தேய்க்கத் தொடங்கினார். “தத்துவம் அரசியலும் ஆகவேண்டுமல்லவா?” என்றார் தருமன். தன் புன்னகையை முழுமையாகவே உள்ளே மறைத்துக்கொள்ள முடிந்தது அவரால். அவர் தேய்ப்பதை நிறுத்திவிட்டு “நான் பேசிக்கொண்டிருந்த தளமே வேறு” என்றார். “அச்சம் கொள்ளவேண்டியதில்லை, நேரடியாகவே நீங்கள் இளைய யாதவரைப்பற்றி என்னிடம் பேசலாம்” என்றார் தருமன்.

அவர் சுருணையை வீசிவிட்டு “அச்சமா, எனக்கா? என்னை என்னவென்று எண்ணினீர்? நான் இப்போதிருக்கும் ஆசிரியரின் தந்தை இங்கிருந்தபோது வந்தவன். இவரை களித்தோழனாகவே அறிந்தவன். நீங்கள் சொல்லும் இளைய யாதவனை சொல்திருந்தா சிறுவனாகக் கண்டவன்” என்றார். “ஆம், நேரடியாகவே சொல்கிறேன். தத்துவ சமன்வயம் செய்ய இவன் யார்? இவன் அரசன். அரசமுனிவரான ஜனகர்கூட அவை கூட்டி அங்கு முனிவர்கள் அனைவரையும் அவையமரச்செய்து வேதச்சொல் ஆய்ந்தார். இவன் கற்ற நூல்கள் என்ன? இவன் கொண்ட ஆசிரியர்கள் எவரெவர்? சாந்தீபனி குருநிலை இவனை இன்னமும் ஏற்கவில்லை. எங்கள் ஆசிரியரின் பழிச்சொல் அவன் மேல் உள்ளது.”

“இவன் இன்னமும் ஆணிவேர் அமையாத யாதவகுலத்தின் அரசன். பாலைநிலத்திற்கு அப்பாலிருப்பதனாலேயே இன்னமும் ஷத்ரியர்களால் வெல்லப்படாதிருக்கிறான். ஆனால் இவன் தேன்தட்டில் தேன் நிறைகையில் கரடிகள் தேடி வரும்… அதன்பின் காட்டுக்குள் ஓடி ஒளிந்து தத்துவ சமன்வயம் செய்யட்டும். தன் எட்டு மனைவியருக்கும் அவற்றை சொல்லிக்கொடுக்கட்டும்.” அவர் விழிகள் ஈரமணிந்தன. முகம் வெறுப்பால் சுளித்து கழுத்துத்தசை இழுபட்டது. “அரசன் என இவன் ஆற்றிய வேள்வி எது? இவன் வென்ற களங்கள் எவை? சொல்லுங்கள்!”

“இனிமேல் வெல்லலாம் அல்லவா?” என்றார் தருமன். “ஆம் வெல்லவும் கூடும். அவன் தத்துவம்பற்றி பேசுவதெல்லாம் அவ்வாறு வெல்லும்பொருட்டே. குலம்கொண்டு படைசேர்க்க இயலாதவன் வேதச்சொல் கொண்டு சேர்க்க முயல்கிறான். அதனால்தான் அவன் கலம் மாசுடையது என்கிறேன். அவன் நோக்கம் அதுவாக இருக்கையில் நிரைநிரையென வரும் தலைமுறைகளுக்கான ஐந்தாவது வேதத்தை அவன் எப்படி அமைக்க முடியும்? அவன் எண்ணுவது ஓர் எளிய போர்ச்சூழ்கை என்றால் அதை சொல்லுங்கள். அதற்கு தத்துவ சமன்வயம் என்றெல்லாம் பெரிய சொற்களை அளிக்க வேண்டியதில்லை.”

அவர் சுருணையை தூக்கி வீசிவிட்டு நடந்துசென்றார். தருமன் அவரை நோக்கி நின்றார். ஒரு மாணவன் “அவர் பெயர் பத்ரர். இங்குள்ள மூத்த ஆசிரியர்” என்றான். “சொல்லவைகளில் நான் அவரைக் கண்டதே இல்லையே?” என்றார் தருமன். “அவர் எங்கும் வருவதில்லை. அடுமனையில் பணியாற்றுவார். தொழுவில் கன்றுகளுடன் துயில்வார். விழைபவர்கள் அவரைத் தேடிச்சென்று சொல்கேட்கலாம்” என்றான் ஒருவன். இன்னொருவன் “அவர் ஆசிரியரை விழிதொட்டுப் பேசுவதே இல்லை. மையக்குடில் பக்கமாகவே செல்வதில்லை” என்றான். “உண்மையில் இங்கு வேதமுழுதறிந்தவர் இவரே என்கிறார்கள். ஆசிரியர் தன் மைந்தரென்பதனால்தான் சாந்தீபனி குருநிலைக்கு அவரை ஆசிரியராக ஆக்கினார்” என்றான்.

அவ்விழிகளை தருமன் மாறிமாறி நோக்கினார். மீறலை விழையும் இளம் நெஞ்சங்கள். கற்பிக்கப்பட்டவை அனைத்தும் பிழையென்றும் தங்கள் நுண்ணறிவால் அதற்கப்பால் சென்று கற்கப்போவதாகவும் எண்ணிக்கொள்வதில் கிளர்ச்சி அடைபவர்கள். தாங்கள் அறியாத ஏதோ ஒன்று தங்களைச் சூழ்ந்துள்ளதாகவும் எச்சரிக்கையுடனும் கூர்மதியுடனும் அவற்றைக் கடந்துசென்று நோக்கும் திறன் தங்களுக்கு மட்டுமே உள்ளதாகவும் கற்பனை செய்துகொள்பவர்கள். தருமன் புன்னகையுடன் “ஆனால் அவர் ஆசிரியருக்குரிய நிகர்நிலை கொண்டவராகத் தெரியவில்லையே?” என்றார்.

இளமாணவன் ஒருவன் கிளர்ந்து முன்வந்து “அவர் இங்கு சொன்னவையே உண்மை. இளைய யாதவர் ஒரு சிற்றரசன். சூதர்பாடல்களின் வழியாக அவர் தன்னை ஒரு கதையாக மாற்றிக்கொண்டிருக்கிறார். தவளை நுரைகிளப்புவதுபோல. அக்கதைகள் அவரை தகுதிகொண்டவராக ஆக்குவதில்லை” என்று கூவினான். இன்னொருவன் “எவரும் உருவாக்கலாம் வேதத்தை. எவர் ஏற்பார்கள்? இவர் செய்யும் தத்துவ சமன்வயத்தை யாதவர்களின் குலங்களனைத்தும்கூட ஏற்கப்போவதில்லை. ஷத்ரிய குலங்களுக்கு இவர் எளிய ஆமருவி மட்டுமே” என்றான். “தன் ஆசிரியரின் பழிசுமந்த ஒருவரால் பயனுள்ள எதை சொல்லிவிடமுடியும்?” என்றான் வேறொருவன்.

தருமன் அவர்களை நோக்கிக்கொண்டு நின்றார். அவர்கள் ஒற்றைக்குரலில் கூவத்தொடங்கினர். இளமைந்தரானதனால் அவர்களின் உணர்வுகள் அவர்களின் குரலை அவர்கள் கேட்கும்தோறும் பெருகின. “ஒருபோதும் அவர் சாந்தீபனி குருநிலையின் பெயரை பயன்படுத்தலாகாது” என்று ஒருவன் சொன்னான். “அவர் சால்வருடன் களத்தில் தோற்றவர். வங்கரையும் கலிங்கரையும் எப்படி அவரால் எதிர்கொள்ளமுடியும்?” என்றான் இன்னொருவன். “தலையில் அடிபட்ட பாம்பின் இறுதிப்படம். இறுதிச்சீறல்” என்று மற்றொருவன் கூச்சலிட்டான்.

அவர்கள் அத்தனைபேரும் இளைய யாதவராக மாறி தங்களுக்குள் நூறாயிரம் முறை நடித்தவர்கள் என தருமன் எண்ணிக்கொண்டார். அப்படி நடிக்காத இளையோர் எவரும் பாரதவர்ஷத்தில் இன்றிருக்க வழியில்லை. அந்நடிப்பின் உச்சியில் அவர்கள் ஒவ்வொரு முறையும் அறியும் உண்மை ஒன்றுண்டு, அவர்கள் அவர் அல்ல. வீடுதுறந்து காடேகி குருநிலைகள்தோறும் சென்று வேதச்சொல் கற்றுத்தேர்ந்தாலும் அவர்கள் சென்றடையும் இடம் ஒன்றுண்டு. அதற்கப்பாலொரு பீடத்தில் அவர் அமர்ந்திருக்கிறார். அது அவர் வருவதற்கு முன்னரே அவருக்காக போடப்பட்ட பீடம். வந்ததுமே அவ்வண்ணம் இயல்பாக தன் பீடத்திலமர்பவனே அதற்குரியவன். படிப்படியாக ஏறிச்சென்று அடைவதென ஏதுமில்லை இங்கு.

வேறுவழியே இல்லை. வாழ்நாளெல்லாம் நீங்கள் அவரை ஊடியும் நாடியும் ஆடிக்கொண்டிருக்கவேண்டியதுதான் என தருமன் எண்ணிக்கொண்டார். அவ்வெண்ணம் ஒரு புன்னகையாக விரிய அவர்கள் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

 

[ 10 ]

நகுலன் அருகே வந்து வணங்கி “அவர்கள் காட்டை கடந்துவிட்டனர். இன்னும் அரைநாழிகைக்குள் நுழைவார்கள்” என்றான். தருமன் “அர்ஜுனன் எங்கே?” என்றார். “அவர் தங்களிடம் செய்தியைச் சொன்னதுமே கிளம்பி தன் தோழரை எதிர்கொள்ளச் சென்றுவிட்டார். இந்நேரம் அவர்கள் தோள்தழுவியிருப்பார்கள். அவர்களுக்கு இடையே எப்போதும் சொல்லப்படாத ஏதும் இருப்பதில்லை.” தருமன் “அப்படி ஒரு மானுட உறவு நிகழமுடியுமா, இளையோனே?” என்றார். நகுலன் “மானுட உறவுகள் தூயவை என்றுதான் காவியங்கள் சொல்கின்றன” என்றான். “ஆம், காவியங்கள் மானுடரை தேவர்களாக்க விழைபவை” என்றார் தருமன்.

சகதேவன் உள்ளே வந்து “மூத்தவரே, அனைவரும் முகப்புக்குச் செல்கிறார்கள்” என்றான். “அரசி?” என அவனைப் பார்க்காமல் கேட்டார் தருமன். “அவளுக்கு நானே சென்று செய்தி சொன்னேன். முறைமைப்படி அவள் முகப்புக்குச் சென்று வரவேற்க வேண்டியதில்லை. வரவேற்புச்சடங்குகள் முடிந்தபின்னர் இளைய யாதவரே வந்து அவளைப் பார்க்கவேண்டும். அதற்கு அவள் குடிலில் இடமில்லை. ஆகவே தென்கிழக்கு மூலையில் நின்றிருக்கும் அரசமரத்தடி மேடையில் சந்திக்கும்படி சொல்லலாமா என்று கேட்டேன். அவ்வண்ணமே என்றாள். அதை இளைய யாதவரிடம் முறைப்படி நானே தெரிவிக்கலாமென எண்ணுகிறேன்.”

“நான் நேற்றிரவும் அவள் குடிலைச்சுற்றி நடந்துகொண்டிருந்தேன். கருக்கிருட்டு வரை” என்றார் தருமன். “மூத்தவரே…” என்ற நகுலன் “இங்கு இரவில் நாகங்கள் அலைவதுண்டு. புலிகளும் நுழைவதுண்டு என்கிறார்கள்” என்றான். தருமன் “அதை நான் எண்ணவில்லை அப்போது” என்றார். “சில தருணங்களிலாவது ஏதேனும் நிகழ்ந்து இறந்தாலும் நன்றே என்று தோன்றும், அதைப்போன்ற கணம் அது. நான் நேற்று இறப்பை அவ்வளவு விரும்பினேன். அதிலிருந்து என்னை மீட்டது ஓர் எளிய நினைவு. சூக்தன் எனும் அக்குரங்குக்குட்டி. அதை உளம்கனிந்து எண்ணிக்கொண்டபோது உறவுகளின் இனிமைக்குள் மீண்டும் அமிழ்ந்தேன். அதில்தான் நான் சுருண்டு துயில முடிகிறது.”

அவர்கள் பேசாமல் நின்றனர். “இளையோனே, நேற்று என்னை அலைக்கழித்த எண்ணம் இதுதான். மீளமீள ஒரே வினாதான். அரசியிடம் நான் கொண்ட அணுக்கம்போல இப்புவியில் எனக்கு பிறிதொன்று அமைந்ததில்லை. என் இளையோராகிய நீங்கள் என் உடல். நான் உங்கள் தந்தைநிலை கொண்டவன் என்பதனாலேயே நான் உங்களுக்கு அணுக்கமானவன் அல்ல. அவளிடம்தான் நான் அனைத்து வாயில்களையும் திறந்தேன். இளையோனே, அவள் எனக்குள் சென்ற தொலைவுக்கு தெய்வங்களும் சென்றதில்லை. அவளிருக்கும்வரை நான் மந்தணங்கள் அற்றவன் என எண்ணியிருந்தேன். அவள் முன் மட்டுமே அந்த விடுதலையில் திளைத்தேன்” என்றார் தருமன். “இளையோனே, ஒருநூலின் வரியை இருவரும் ஒரேகண்ணால் கண்டடையும் தருணத்தின் பேருவகை. ஒரே எண்ணத்தை இருவரும் ஒரேசமயம் அடைவதன் பெருவியப்பு. அறிவென உணர்பவன் தன்னை அனைத்திலிருந்தும் பிறிதென ஆக்கிக்கொள்பவன். மீதமின்றி பகிர பிறிதொரு அறிவைக் கண்டடைவான் என்றால் அவன் தேவர்களுக்குரிய இன்பத்தை அடைகிறான்.”

“அப்படி இருந்தேன். எத்தனை பகலிரவுகள். எத்தனை ஆயிரம் சொற்கள். மகத்தான தருணங்கள்…” என அவர் சொன்னபோது குரல் இடறியது. “நிகழ்ந்தது இழிவின் எல்லை. அங்கு நான் நின்றிருந்த இடம் சிறுமையின் உச்சம். ஒன்றையும் மறுக்கவில்லை. ஆனால் அது அவையனைத்தையும் இல்லையென்று ஆக்கிவிடுமா? ஒரே கணத்தில் நான் அவளுக்கு யாருமில்லை என்றாகிவிடுவேனா? எண்ணி எண்ணி நோக்கினாலும் என்னால் சென்றடைய முடியவில்லை. அதெப்படி அதெப்படி என்றே என் உள்ளம் மருகிக்கொண்டிருக்கிறது. இனி அவையெல்லாம் வெறும் நினைவே என்றால் நான் வாழ்ந்திருந்த ஓர் உலகமே கனவென்றாகிறது.”

அவர்கள் ஏதேனும் சொல்வார்கள் என அவர் எண்ணினார். அவர்கள் பேசாமல நிற்பதைக் கண்டு “இளையோனே, நீ அனைத்தையும் அறிந்து அமைந்தவன். நீ சொல். இது ஒரு சிறிய இடைவெளிதானே? என்றோ ஒருநாள் இதை எண்ணி இப்படியும் இருந்தோமா என்று நாம் வியக்கப்போகிறோம்தானே? இன்று நான் இழந்து நிற்கும் அனைத்தையும் பிழையீடு செய்து மீண்டும் எய்தமுடியும் அல்லவா?” என்றார். சகதேவன் பேசாமல் நின்றான். “சொல்” என்றார் தருமன். “இல்லை மூத்தவரே, அது முடிந்துவிட்டது. இனி அது எவ்வகையிலும் மீளாது” என்று அவன் சொன்னான். “அந்நினைவுகளும் மெல்ல அழியும். அவ்வுணர்வுகள் அனலவிந்து மறையும். அதை வேண்டுமென்றால் இத்தருணத்திற்கான ஆறுதலாகக் கொள்ளலாம்.”

விழித்து தருமன் அவனைப் பார்த்திருந்தார். “ஆண்பெண் உறவின் இயல்பே அதுதான், மூத்தவரே. எத்தகைய மேன்மைகொண்டது என்றாலும் அது கனவென்றே அழிந்து மறையும். இவ்வுலகில் எளிதில் மறையாதது குருதியுறவு மட்டுமே. அதுவும் குருதியால் அழிக்கப்படக்கூடும். மானுடர் கொள்ளும் எவ்வுறவிலும் இறுதிச்சொல் என ஒன்று சொல்லப்படாது எஞ்சும். நஞ்சென்று எங்கோ கரந்திருக்கும்.” தருமன் நோக்கிக்கொண்டே இருந்தார். பின்னர் ஆமென தலையசைத்து மீண்டார். பெருமூச்சுடன் “ஒன்றும் எஞ்சாதா, இளையோனே? அத்தனை பழிகொண்டவரா மானுடர்?” என்றார். சகதேவன் மறுமொழி சொல்லவில்லை. “சொல்” என்றார் தருமன். அவன் சிலகணங்கள் நின்றபின் திரும்பி நடந்து சென்றான்.

அவனையே நோக்கிக்கொண்டிருந்தபின் கையூன்றி எழுந்த தருமன் கால்கள் நிலைகொள்ளும்வரை தூணைப் பற்றிக்கொண்டு நின்றார். பின்னர் நகுலனிடம் “நேற்று எண்ணினேன், அவள் குடிலின் கதவைத் தட்டி அவள் முன் நின்று எச்சமின்றி என்னுள் உள்ள அனைத்தையும் இழுத்து வெளியே போட்டாலென்ன என்று. அவளுக்கு என் விழிநீர் புரியும் என்று தோன்றியது” என்றார். “அதை நீங்கள் ஏன் செய்யவில்லை?” என்றான் அவன். “அதை அவள் மறுதலித்தாள் என்றால் அங்கே நான் இறந்தாகவேண்டும்” என்றார் தருமன். “அல்லது அங்கு அவளை நான் கொன்றாகவேண்டும்…”

“ஆம், அதனால்தான் மானுடர் அந்த எல்லைவரை செல்வதில்லை” என்றான் நகுலன். “மூத்தவரே, ஆனால் அது நீங்கள் எண்ணுவதுபோல எளிதும் அல்ல. அவள்முன் சென்று நிற்பதை அதைச் செய்வதற்கு முன்னரே நீங்கள் பலமுறை நடித்துவிடுவீர்கள். ஒவ்வொரு முறையும் அது வளர்ந்து உருமாறும். அங்கே நீங்கள் நிற்கையில் நீங்கள் விழைந்த ஒன்றை நடிக்க முயல்வீர்கள். விரும்பாததையும் சேர்த்து நடிப்பீர்கள். உங்களை நீங்களே விலகி நின்று வியந்து நோக்கிக்கொண்டிருப்பீர்கள்.”

“அது பொய்யென்று நீங்கள் அறிவீர்கள். ஆகவே நீங்கள் அந்தத் தருணத்திற்காக நாணுறுவீர்கள். அன்று அப்படி அங்கு நின்ற உங்களை நீங்களே வெறுப்பீர்கள். அப்படி தன்னைத்தானே வெறுக்கும் ஓர் உச்சத்தருணமாவது வாழ்க்கையில் நிகழாத மானுடர் எவருமிருக்கமாட்டார்கள்” என்று நகுலன் சொன்னான். “மூத்தவரே, உச்சத்தருணங்களில் வாழ்வது மிகமிகக் கடினம். மாபெரும் யோகியரே அங்கு இயல்பாக இருக்கமுடியும். அல்லது அறிவிலா மூடர். பிறர் அங்கே நடிக்கமட்டுமே முடியும்.”

அவன் புன்னகைத்து “ஆகவே மாவீரனாகவோ மாபெரும் தொன்மமாகவோ ஆகாது எளிய தருணங்களினூடாகவே வாழ்ந்து முடிபவன் மகிழ்வுடன் இருக்கிறான். தன்னைத்தானே வெறுக்கவும் ஏளனம் செய்யவும் நேர்வதில்லை அவனுக்கு” என்றபின் தலைவணங்கி “தங்களுக்காகக் காத்திருக்கிறார்கள் அங்கே” என்றான்.

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 40

[ 7 ]

கருணன் வருவதை தருமன் தொலைவிலேயே பார்த்துவிட்டார். அவனை அப்போது அவர் விரும்பவில்லை. அவர் முகக்குறியிலேயே அதைப்பார்த்துவிட்ட அர்ஜுனன் புன்னகையுடன் “சூதர்கள் நம் எதிர்காலம், மூத்தவரே. அவர்கள் நம்மைத் தொடர்வதை நாம் தடுக்கமுடியாது. அவர்கள் நம்மைப்பற்றி சொல்வது நமக்கு அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கும். ஆனாலும் அதுவே நாம் என்று நெடுமூச்சுடன் அமையவேண்டியதுதான்” என்றான். நகுலன் “அவர்களின் இளிவரல் பலசமயம் உளம் சோரச்செய்கிறது” என்றான். “அவர்கள் அனைத்தையும் மாபெரும் கேலிக்கூத்தாக ஆக்கிவிடுகிறார்கள்”

தருமன் “சூதர்களின் நிலை இரக்கத்திற்குரியது” என்றார். “இங்கு மலைக்குடிகளையும் செம்படவர்களையும் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் உலகில் தங்களைவிட மேலானவர்களென எவரையும் பார்ப்பதே அரிது. அவ்வப்போது வந்துசெல்லும் விருந்தினருக்கு அவர்கள் எவ்வகையிலும் கட்டுப்பட்டவர்கள் அல்ல. ஆகவே அவர்கள் எங்கும் தலைவணங்காமல் எந்த இழிவையும் எதிர்கொள்ளாமல் காட்டுமரங்களென வான்நோக்கி நிமிர்ந்திருக்கிறார்கள். ஆனால் சூதர்கள் பாடகர்களாகவும் தேரோட்டிகளாகவும் அடுமனையாளர்களாகவும் மருத்துவர்களாகவும் முனிவர்களையும் அந்தணரையும் அரசர்களையும் சார்ந்தே வாழவேண்டியிருக்கிறது. அரசு நிகழுமிடங்களில் வரலாறு சமைக்கப்படும் தருணங்களில் உடனிருக்கிறார்கள். ஆனால் உலைக்களத்துப்பூனை என வெறும் சான்றாகவே எஞ்சுகிறார்கள்.”

“அவர்களைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு தருணமும் அவர்களிடம் நீ எளியவன், நீ வெறும் விழியும்சொல்லும் மட்டுமே என்று சொல்லிக்கொண்டிருக்கின்றது. அவ்விழிவுணர்வை அவர்கள் தங்கள் அங்கதத்தைக்கொண்டு கடந்துசெல்கிறார்கள்” என்று அவர் தொடர்ந்தார். “அவர்களின் வழி ஒன்றே, அவர்கள் எளியவர்கள் என்பதனால் அனைத்தையும் அவர்கள் அளவுக்கே எளிமையாக்கிவிடுகிறார்கள். மகாவியாசன் அவர்களுக்கு சொல்தடுமாறும் முதியவனாகத் தெரிகிறான். அரசமுனிவர் யயாதி காமம் கொண்டலைபவர். பெருந்தோள் ஹஸ்தி உணக்குவையில் முளைத்தெழுந்த குடைக்காளான்…”

அர்ஜுனன் புன்னகைத்து “அல்லது, அவர்களுள் இருந்து எளியமனிதர்களை வெளியே எடுத்துவைக்கிறார்களோ?” என்றான். தருமன் முகம் சுளித்தபின் அப்பேச்சைத் தவிர்த்து நகுலனிடம் “மந்தன் எங்கே?” என்றார். “இங்கும் காடுதான். அவர் இருந்தால் இந்தச் சூதனின் எட்டிச்சாறை தன் நவச்சாரக்குழம்பால் எதிர்கொண்டிருப்பார்” என்றான் நகுலன். “இரு நாட்களுக்கு முன் இருவரும் அடுமனைத் திண்ணையில் சொல்கோத்தனர். அவர் வென்று வென்று சென்றார். அவர் தொடையிலும் தோளிலும் அறைந்து சிரிப்பதைக் கண்டு நான் அருகே சென்றேன். இவன் முகம் சிறுத்து கண்கலங்கி நின்றிருந்தான். அவரிடமிருந்து விடுபட்டதும் நேராகச்சென்று மூக்கு தளும்ப குடித்துவிட்டு வந்து என் சொல்லையெல்லாம் கசக்கவைத்துவிட்டீரே இளையபாண்டவரே, நீர் உண்பதெல்லாம் நஞ்சாகிறதா என்ன என்று அடுமனை வாயிலைநோக்கி புலம்பிக்கொண்டிருந்தான்.”

சகதேவன் “ஆம், மூத்தவர் அதைக் கேட்காதவர் போல உள்ளே பெருங்கலத்தில் அஷ்டமதுரத்தை பெரிய சட்டுவத்தால் கிளறிக்கொண்டிருந்தார். அன்று அதை இங்குள அனைவரும் சொல்லோடு சொல் சேர்த்து புகழ்ந்தபடியே உண்டனர்.” தருமன் முகம் மலர்ந்து “ஆம், இளையவன் கைபட்ட உணவில் அவன் இருப்பான். அதில் ஒரு விள்ளலை வாயில் இட்டதுமே அதை உணர்ந்தேன்” என்றார். நகுலன் “அவருடைய பசி அதிலிருக்கிறது. அவர் சமைக்கும் உணவை உள்ளத்தால் உண்டுவிடுகிறார். அவருள் அது சமைக்கப்பட்டு நம் நாவுக்கு இனிதாக மீண்டு வருகிறது. உண்டுபுறந்தருதலால்தான் அவர் ஓநாய்வயிற்றர் எனப்படுகிறார்” என்றான்.

அர்ஜுனன் கண்களில் சிரிப்புடன் “அதில் அவருடைய நஞ்சு கலந்திருக்காதா என்ன?” என்றான். தருமன் “அன்னையின் வயிறு அது, பார்த்தா. அழுகிய ஊனுண்ணும் ஓநாயின் முலைப்பாலை ஜடரன் எழாத கைக்குழந்தைக்கு மருந்தெனக் கொடுப்பதுண்டு. அது அமுது” என்றார். அப்பேச்சால் மெல்ல அவர்கள் மலர்ந்து இயல்புநிலையை அடைந்தனர். அவர்கள் அமர்ந்திருந்த சிறுமேட்டின்மேல் அரசமரம் பச்சைநிறக் காசுகள் என இலைகள் பளபளத்துத் திரும்ப காற்றொலிசீறியபடி பசுஞ்செண்டு போல நின்றிருந்தது. தருமன் கால்களை நீட்டி இளைப்பாறிக்கொண்டார். அர்ஜுனன் சிறியபுற்களைப் பறித்து காற்றில் வீசி ஒன்றை பிறிதொன்றால் தைத்தான்.

மூச்சிரைக்க மேலேறி வந்த கருணன் மதுவருந்தியிருப்பது தெரிந்தது. ஆகவே மிகையான பணிவுடன் கைகளைக் கட்டி உடலை வளைத்து அருகணைந்தான். அவன் இடப்புருவம் மட்டும் மேலேறி துடித்துக்கொண்டிருந்தது. அவன் தருமனிடம் “அஸ்தினபுரியின் பேரரசரை நான் இன்று வணங்க முடியாது. ஏனென்றால் அவர் இன்று பேரரசர் இல்லை. நாளைதான் பேரரசர். இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசரையும் நான் வணங்க முடியாது. ஏனென்றால் அவர் நேற்று பேரரசர். என்னைப்போன்ற எளிய சூதன் எப்படி நிகழ்காலத்தில் நின்று தங்களை வணங்குவதென்று தெரியவில்லை. ஆகவே குருகுலத்தில் சொல்லாராய வந்த நெறியுடையோனை வணங்குகிறேன்” என்றபின் சகதேவனிடம் “நான் சரியாகத்தானே பேசுகிறேன்?” என்றான். சகதேவன் சலிப்புடன் “ஆம்” என்றான்.

“நன்று” என்றபடி கருணன் கையூன்றி பெருமூச்சுடன் அமர்ந்தான். “உண்மை, நான் ஒப்புக்கொள்கிறேன். நான் மது அருந்திவிட்டே வந்திருக்கிறேன். காலையிலேயே சென்றேன். அங்கே ஏழுகளிமகன்கள் ஒரு குழுவாக மதுவருந்த வந்திருந்தனர். ஒருவன் கேட்டான் ஏழுபேருக்கும் கள் கொடுங்கள் என்று. பனையர் கள்ளை எடுத்ததும் இன்னொருவன் எழுந்து பூசலிட்டான். அதெப்படி அத்தனை பேருக்கும் நீயே கள் சொல்லலாம், எனக்கு கள் போதும் என்றான். மூன்றாமவன் பற்களைக் கடித்தபடி வஞ்சத்துடன் ஆமாம் நான் எனக்குப்பிடித்ததையே அருந்துவேன், எனக்கு கள்தான் வேண்டும் என்றான்.”

“நான்காமவன் பூசலிடவேண்டாம், கள் அருந்தினால் என்ன பிழை என்றான். கடும்சினத்துடன் நிலத்தை அறைந்து நான் கள் மட்டும்தான் அருந்துவேன், எவன் தட்டிக்கேட்பது என்றான் ஐந்தாமவன். ஆறாமவன் அவரவருக்கு வேண்டியதை கேட்டு குடிப்போம் நண்பர்களே, எனக்கு கள் சொல்கிறேன் என்றான். ஏழாமவன் சற்று முதிர்ந்தவன். என்ன பூசல் இங்கே, அனைவருக்கும் பொதுவாக ஒரு முடிவுக்கு வருவோம், நாம் கள் அருந்துவோம் என்றான். சீறி எழுந்து ஒப்புக்கொள்ளமுடியாது, நான் கள்தான் அருந்துவேன் என்று கூவினான் முதலாமவன். இரண்டாமவன் கைகளை சுருட்டிக்கொண்டு முன்னெழுந்து நான் கள் அருந்துகிறேன் ஆண்மையிருந்தால் நீ தடுத்துப்பார் என்றான். பெரிய அடிதடி. ஒருவன் மேல் இன்னொருவன் கலத்தை எடுத்து அடித்தான். இருவர் கட்டிப்புரண்டனர். ஒருவன் நெஞ்சில் அறைந்து அலறினான். இன்னொருவன் தரையில் உருண்டு ஆடையின்றி எழுந்து நின்று அழுதான்.”

சிறிய ஏப்பம் விட்டு “பூசல் பெருகிக்கொண்டே சென்றது. நான் உள்ளே நுழைந்து நாம் இனிய கள்ளை அருந்துவோம் நண்பர்களே. இதிலென்ன பூசல்? நாம் என்ன வேதமெய்மையா ஆராய்கிறோம் என்றேன். ஆம் உண்மை என்று எழுவரும் கண்ணீருடன் என்னை தழுவிக்கொண்டார்கள்” என்றான் கருணன். “அவர்கள் வணிகர்களுக்கு பொதிசுமப்பவர்கள். பொதிகளில் என்ன இருக்கிறது என்று அவர்கள் கேட்டுக்கொள்வதே இல்லை. அதை அறிந்தால் அந்த அறிவையும் சேர்த்து அல்லவா சுமக்கவேண்டும்? நல்ல மனிதர்கள். அவர்களிடம் நான் ஆணித்தரமாக கேட்டேன், நண்பர்களே சூதனுக்கு கள்வாங்கிகொடுக்கும் நல்லூழ் உங்களில் எவருக்கு உள்ளது என்று. எழுவரின் மூதாதையரும் நற்செயலாற்றி பயனீட்டி வைத்திருந்தார்கள்.” பெரிய ஏப்பம் வெடிக்க ஒருமுறை உலுக்கிவிட்டு “உயர்ந்த கள்” என்றான்.

“நாம் பிறிதொரு தருணத்தில் பேசுவோமே” என தருமன் எழப்போனார். “இருங்கள் அரசே, நான் எங்கே செல்வேன்? நான் சற்று முன் அடைந்த மெய்யறிதலை உங்களிடம் சொல்லவேண்டும் என்றுதான் குடிலுக்குச் சென்றேன். அங்கே நீங்கள் இல்லை. இங்கிருக்கலாம் என்று தேடிவந்தேன்” என்று அவன் அவர் கால்களை பிடித்தான். “மெய்யறிவைத்தேடி இத்தனை தொலைவுக்கு காட்டுக்குள் வந்திருக்கிறீர்கள். நான் அறிந்த மெய்யறிவை உங்களிடமன்றி எவரிடம் சொல்வேன்? சாதகப்பறவைக்கு மழைபோல தவம்செய்தவனுக்கு மெய்யறிவை வழங்குக என்றுதானே பராசரமாலிகை சொல்கிறது?”

தருமன் சலிப்புடன் தலையசைத்து “சொல்லும்” என்றார். அர்ஜுனன் முகத்தில் எழுந்த புன்னகை அவனை சினம்கொள்ளச் செய்தது. “அதாவது ஒரு காடு. அடர்காடு. ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்டது அது. அங்கே எட்டியும் பலாவும் நின்றிருக்கின்றன. பிணம்நாறிப்பூவும் செண்பகமும் பூக்கின்றன. அங்கே நின்றிருப்பனவற்றில் ஒன்றை மட்டும் மூதாதையர் அடையாளம் காண்கிறார்கள். அது பனை” என்றான் கருணன். “ஆ! எத்தனை அழகிய மரம். கரியது. உறுதியான உடல்கொண்டது. முள்சூடி சிலிர்த்து நிற்பது. தெய்வங்கள் உறுமிச்சூழும் தலைகொண்டது. கருமுலைக்கொத்து கனிந்த அன்னைப்பன்றி அல்லவா பனை? அன்னை இக்காடெங்கும் பேருடல்கொண்டு நின்று முழங்கும் சொல் என்ன?”

“என்ன?” என்றார் தருமன் புரியாதவராக. “அந்தப்பனையில் எழுகின்றன நீள்முலைக்காம்புகள். அன்னையின் வேர்கள் மண்ணுக்குள் அறிந்த கனிவு கிளையிடுக்குகளில் முலைக்காம்புகள் என வளர்கின்றன. அவற்றை எடுத்து மெல்லச்சீவி கலங்களுக்குள் வைக்கவேண்டும். கலங்கள்… என்ன சொன்னேன்? ஆம், கலங்கள் தூயவையாக இருக்கவேண்டும். அன்னையின் முலைச்சாறு தேங்குபவை அவை. தூய பால். இனியது, சிற்றுயிர்கள் தேடிவந்து விழுந்து சாகுமளவுக்கு அரியது…” என அவன் தொடர்ந்தான். “அதை அப்படியே அருந்துபவரும் உண்டு. ஆனால் அதை எடுத்து முந்தைநாள் கள்ளின் ஓரிரு துளியை ஊற்றி உறைகுத்தி, இருங்கள் அவ்வாறு முன்னிருந்ததை உறைகுத்துவதை என்னவென்று சொல்வீர்கள்? நீங்கள் கற்றறிந்தவர் அல்லவா? நான் எளிய களிமகன், தெருமுனைச்சூதன்…”

சுருங்கிய விழிகளுடன் தருமன் நோக்கி அமர்ந்திருந்தார். “ஆ, நினைவுக்கு வந்துவிட்டது. சுருதி. சுருதிப்பிரமாணம்” என்றான் அவன். “நான் பொதுவாக எதையும் மறப்பதில்லை” என்று சொல்லி தலையசைத்தான். “என்ன சொன்னேன்! உறைகுத்தி மண்ணில் புதைத்திட்டு காத்திருக்கவேண்டும். நான்கு நாட்கள்… இல்லை ஏழு. அல்லது இன்னமும்கூட. உண்மையில் அதுவே சொல்லும், நறுமணம் நுரையென எழுந்து தான் கனிந்துவிட்டதை அறிவிக்கும். அரசே, இதை நோக்கியிருப்பீர்கள்… தான் கனிந்ததை அறிவிக்காத கனியென்று உலகில் ஏதுமில்லை.”

“பொறுத்திருக்கவேண்டும். நாவில் எச்சில் எழ நாளுக்கு நான்குமுறை திறந்துபார்க்கக்கூடாது. சுட்டுவிரல் விட்டு தொட்டு நாவில் வைத்து சுவைபார்க்கக்கூடாது. ஆசைமீதூறி அரைச்சமையலிலேயே எடுத்து மாந்தலாகாது. அதற்குள் தேவர்கள் புடமிடப்படுகிறார்கள். பித்தின் தெய்வமாகிய சோமன். மின்னலுக்குரிய இந்திரன். அலைகளின் அரசனாகிய வருணன். எரிந்தெழும் அக்னி. அரசே, நோயாற்றும் அஸ்வினிதேவர்கள், வழித்துணையாகிய பூஷன், உலகு துலக்கும் சூரியன், ஏன் இருளேறி வரும் எமனும்கூடத்தான். அவர்களை நுரைக்கவும் குமிழிகளாகி வெடிக்கவும் விட்டுவிடவேண்டும்.”

“பின்பு அதை மெல்ல காய்ச்சுகிறோம். மிகமென்மையாக. எரிந்தெழுந்தால் அமுதை தேவர்கள் உண்டுவிடுவார்கள். அடிமண்டியே நமக்கு எஞ்சும். ஆவியெழவில்லை என்றால் அசுரர்களுக்குரிய மதுவாக ஆகும் அது. தூய மது எழும்போது மூன்று தெய்வங்களும் வந்து சூழ்ந்துகொள்கிறார்கள். படைப்பவன், காப்பவன், அழிப்பவன். அவர்களருகே நின்று குற்றம்குறை சொல்லும் அவர்களின் துணைவியரும் வருவார்கள். கல்வி, செல்வம், வீரம். நாம் அதை அருந்தும்போது அத்தனை தெய்வங்களையும் மும்முறை வணங்கவேண்டும்.”

“இனிய மதுவாக நமக்குள் இறங்குவது என்ன? கரும்பனை அல்லவா? அரசே, அந்தப்பனை நின்றிருக்கும் பெருங்காடே அல்லவா? அதன்பின் நகரங்கள் நமக்கு வெறும் குப்பைக் குவியல்களாகிவிடுகின்றன. கல்விநிலைகள் ஓசையிடும் கிள்ளைக்கூட்டங்கள். அரசுகள் விழியிழந்தோர் விரல்தொட்டு ஆடும் விளையாட்டுக்கள். போர்க்களங்கள் கலங்கள் ஒலிக்கும் அடுமனைப்புழக்கடைகள். இல்லங்கள் புதைகுழிகள். நாம் பேருருக்கொண்டு எழுகிறோம். நம் கால்களால் மலைகளையும் ஆறுகளையும் கடந்துசெல்கிறோம். நம் மூச்சுக்காற்றில் கடல்களில் அலைகள் சுருளக்காண்கிறோம். பாலைவனங்களில் புயல் கிளப்புகிறோம்.”

அவன் கைகளை விரித்தான் “காட்டை உண்டவன். காடுறையும் தொல்தெய்வங்கள் அனைத்தும் குடியேறிய உடல்கொண்டவன். அவர்களின் எடை தாளாமல் அவன் தள்ளாடி நடக்கிறான். எதிரே யார்?” கோணலாக சிரித்துக்கொண்டு அவன் கேட்டான் “யார்?” அர்ஜுனன் புன்னகையுடன் “யார்?” என்றான். “பிரம்மன்! அவன் கேட்டான், யார் நீ என்று. நான் சொன்னேன், அகம் பிரம்மாஸ்மி! ஆம். அதைத்தான் சொன்னேன். ஏனென்றால் நானே அது. அவன் திகைத்து நின்றான். அப்போது அப்பால் ஒருவன். யார் அவன்?”

“சிவன்” என்றான் நகுலன். “ஆம், அவனேதான். நான் யார் தெரிகிறதா என்றான். நான் சொன்னேன், தெளிவாகச் சொன்னேன். ஆம், நான். அகம் பிரம்மாஸ்மி. அவன் சினம்கொண்டு நோக்கினான். அப்போது வந்தது யார்? ஆம், விஷ்ணு. சங்காழிகதைமலர் கொண்டு வந்து நின்றான். இவை என்ன என்றான். இவையனைத்தும் நானே. அகம் பிரம்மாஸ்மி என்றேன். அவன் சிரித்து ஆம் அவ்வாறே என்றான்” என்றான் கருணன். “அரசே, இதோ என் வாயில் நறுமணமிக்க ஆவியாக எழுவதே அம்மெய்ப்பொருள். அது கரும்பனைகளில் உறுமப்படுவது. காட்டில் முழங்குவது. மண்ணின் ஆழத்தில் அமைதியாவது. அகம் பிரம்மாஸ்மி! ஆம்!”

அவன் சுட்டுவிரலைக் காட்டி ஒருகணம் அசைவிழந்தான். கண்ணிமைகள் சரிந்து வந்தன. உடல் தளர்ந்தபடியே செல்ல அவன் தன்னை பிரக்ஞையால் உந்தி நிமிரச்செய்தான். “அகம் பிரம்மாஸ்மி என்று உணர்வது மிக எளிது. கையளவு தெளிகள்ளே போதும். அந்தச்சொல் ஏதாவது தொந்தரவுசெய்தால் பிரக்ஞானம் பிரம்மாஸ்மி என்பதை எடுத்து அதன்மேல் வீசுவேன். அது உடைந்தால் தத்வமசி. அவற்றின் மேல் ஒவ்வொன்றாக எடுத்து வீசிக்கொண்டே இருக்கவேண்டும். எழுவதற்கு தருணமே அளிக்கக்கூடாது. ஈஸோவாஸ்யம் இதம் சர்வம். ஏகம் ஏவத்விதீயம் பிரம்ம. சர்வகல்விதம் பிரம்ம. அவ்வளவுதான். மெல்ல அடங்கி ஒருவகையான நிறைநிலை ஏற்படும். அதைத்தான் யோகம் என்கிறார்கள்.”

“போதும்” என்று முகம் சிவக்கச் சொன்னபடி தருமன் எழுந்தார். “இளையோரே, இப்படியே நீங்கள் சென்றால் நான் எப்படி என் குடிலுக்குச் செல்வது?” என்றான் கருணன். “நாளை காலையில் செல்லலாமே” என்றபடி நகுலன் எழுந்தான். கருணன் “இது முறையல்ல. நான் மெய்ச்சொற்களை ஊழ்கத்திலறிந்த சூதன்” என்றான். தருமன் விரைவாக நடந்து சரிவிலிறங்க அவருடன் இளையோர் சென்றனர். “மூடன்” என்றார் தருமன் பற்களைக் கடித்தபடி. “கருத்துக்களின் லீலை” என்றான் அர்ஜுனன். சினந்து திரும்பி நோக்கியபின் ஒன்றும் சொல்லாமல் தருமன் நடந்து சென்றார். அர்ஜுனன் இளையவர்களை நோக்கி புன்னகைசெய்தான்.

[ 8 ]

“ஒரு சொல் இன்னொன்றாக மாற ஆயிரமாண்டுகாலம் ஆயிற்று என்பதே வேதமெய்மையின் சுருக்கமான வரலாறு” என்றார் சாந்தீபனி முனிவர். அவர்முன் அவரது மாணவர்கள் நிரைவகுத்து அமர்ந்திருந்தனர். “ஈராயிரமாண்டுகளுக்கு முன்பு வேதமுனிவர் கண்டடைந்தார்கள். அறியமுடியாமையாகவே தன்னை உணர்த்தும் ஒன்றை. அதை அது என்றல்லாமல் எச்சொல்லாலும் குறிப்பிடமுடியாதென்று அறிந்தனர். தத் என்னும் சொல்லே வேதமெய்ச்சொல் என விளங்கியது அன்று.”

“ஒன்றேயான அது என அதை அறிந்தனர். அதுவன்றி ஏதுமிருக்கவில்லை என உணர்ந்தனர். ஒருமையான அது மேலே உள்ளதா இல்லை கீழே உள்ளதா, அங்கு படைப்பாற்றல் உண்டா, அது முன்னால் உள்ளதா இல்லை பின்னால் உள்ளதா, அது எப்படி பிறந்தது, அதை யார் உருவாக்கினர், அல்லது உருவாக்கவில்லை என பல்லாயிரம் வினாக்களாக அதை அணுகினர். வான் வடிவமான அதுவே அறியும், அல்லது அதுவுமறியாது என்று வகுத்தனர்” என்று சாந்தீபனி முனிவர் தொடர்ந்தார். “ஆயிரமாண்டுகளுக்குப்பின் அது ஒரு பெயரை சூடிக்கொண்டது, பிரம்மம்.”

“வியப்பின் ஒலி அது. பெரிது என்றும் முழுமை என்றும் பிறிது என்றும் பெருகுவது என்றும் உறுதி என்றும் அழிவற்றது என்றும் பல பொருள் கொள்வது. விரிந்துபெருகும் அத்தனை பொருள்களையும் அச்சொல் தன்னில் சூடிக்கொண்டது. அச்சொல் ஆண்டது வேதம்விளைந்த தொல்காடுகளை” சாந்தீபனி முனிவர் சொன்னார். “தைத்ரியம் சொல்கிறது ரிக் எல்லையுள்ளது, சாமம் எல்லையுள்ளது. யஜூர் எல்லையுள்ளது. பிரம்மமோ எல்லையற்றது.”
.
“எல்லையற்றதைச் சொல்லும் சிறு சொல். அச்சொல் ஒவ்வொரு பொழுதும் ஓர் தனியறிதலாயிற்று. அவ்வறிதல்களின் தொகைக்குமேல் விண்மீன் என அண்மையும் சேய்மையுமாகி நின்றது. இவையனைத்தும் ஆகும் ஒன்று. இவையனைத்துக்கும் அப்பால் எஞ்சும் ஒன்று. அதுவே இவையனைத்தும். அந்த மெய்மையை அச்சொல் குறிக்கத் தொடங்கியதும்தான் அது முளைத்துத் தீராத விதையென்றாகியது. நிலமனைத்தையும் பசுமைகொள்ளச் செய்யும் பெருநதி என இம்மண்ணில் பெருகலாயிற்று” என்றார் சாந்தீபனி முனிவர்.

“இங்குள்ள அனைத்தும் அச்சொல்லின் முடிவிலா தோற்றங்களே என்றுணர்க! குடிநெறியும் கோல்முறையும் வேள்வியும் ஊழ்கமும் அதுவே. மேழியும் துலாவும் வாளும் தர்ப்பையும் அதுவே. உருவற்றது ஆயிரமாயிரம் தெய்வங்களாக ஆலயங்கள்தோறும் விழிதிறந்தது. பெயரற்றது பல்லாயிரம் பெயர்களாக மொழிநிறைத்தது. அறியப்படாதது அன்னையென்றும் தந்தை என்றும் கன்னி என்றும் மைந்தன் என்றும் வந்து நம்மருகே அமர்ந்தது. கழனியில் உணவும் களத்தில் குருதியும் கல்விச்சாலையில் மொழியும் ஊழ்கத்தில் ஒளியும் ஆகியது. அதை வணங்குக!”

“சென்ற ஆயிரமாண்டுகாலமாக அச்சொல் தன்னை பிறிதொன்றாக ஆக்கிக்கொண்டிருக்கிறது. நாம் காடுகளில் காண்பது அந்தப் பெருந்தவிப்பையே” என்று சாந்தீபனி முனிவர் சொன்னார். “அத்தனை மெய்ச்சொற்களும் வேதங்களில் உள்ளன. அவை தங்கள் யுகம் எழுகையில் முளைத்துப் பெருகி எழுகின்றன. வேதங்களில் இருந்து எழுந்தது ஆத்மா என்னும் சொல். அகம் என்றும் பிரக்ஞானம் என்றும் இதம் என்றும் எழுந்துவந்த பலநூறு சொற்கள் சென்று சூழ்ந்து பறந்து ரீங்கரித்து அச்சொல்லை துயிலெழுப்பின. வேதமெய்மையைக் கற்க வருபவன் அது எழுந்து வந்த பாதையை மொழியில் காணக்கூடும்.”

“ஒன்றே பிரம்மம், பிறிதில்லை என்று முழங்கினர் படிவர். இவையனைத்தும் பிரம்மமே என்று அறிந்தனர். அதிலமர்ந்தனர். யானைமேல் ஏறுபவன் யானையாகிறான். இளையோரே, முகில்மேல் ஏறிக்கொள்பவன் தேவனாகிறான். பேரறிவின்மேல் ஏறிக்கொண்டவன் என்னாவான்? அறிவென்று தன்னை உணர்ந்து அவன் சொன்னான் அதுவே நான். அவ்வுணர்வை நோக்கியபின் பிரக்ஞையே பிரம்மம் என்று அவன் கூறினான். தன் வடிவிடம் சுட்டினான் அது நீ. தனக்குத்தானே சுட்டி ஆத்மனே பிரம்மன் என்றான். பின் எழுந்து விண்ணை தலைசூடி நானே பிரம்மம் என்றான்.”

சாந்தீபனி முனிவர் கைகூப்பி நிறுத்தியதும் அவரது மாணவர்கள் “ஏகம் ஏகத்விதீயம் பிரம்ம”, “சர்வகல்விதம் பிரம்ம”, “சோஹம்”, “பிரக்ஞானம் பிரம்மாஸ்மி”, “தத்வமசி”, “அயம் ஆத்ம பிரம்ம”, “அகம் பிரம்மாஸ்மி” என்னும் ஏழு பெருஞ்சொற்றொடர்களை ஏழுமுறை ஓதினர். அவை ரீங்கரித்து சொல்லவையை நிரப்பி அமைதியென்றாயின.

“அங்குளதை இங்குளதாகக் காணும் பெருந்தவமே இன்று நிகழ்கிறது” என்றார் சாந்தீபனி முனிவர். “மாண்டூக்யர்களின் சொற்கள் இவை. காணமுடியாதவன், செயல்களுக்கு அடங்காதவன், பற்றற்கரியவன், உய்த்தலுக்கு அப்பாற்பட்டவன், எண்ணம் கடந்தவன், சொல்கடந்தவன், நுண்ணுணர்வின் உட்பொருள், பெருவெளியை தன்னுள் அடக்கியவன், நீடித்த அமைதிகொண்டவன், இரண்டற்றவன், இனியவன், நான்காவதாக நின்றிருப்பவன், அவனே ஆத்மன், அவனே அறியத் தகுந்தவன். அத்தனை வேதமெய்மரபுகளும் இன்று அளாவிக்கொண்டிருப்பது இந்த ஒளியிருள்பெருவெளியையே.”

“அழிவற்றதை கணம்நில்லாது உருமாறும் இவ்வுடலுக்குள் காண்கிறார்கள். நோயும் மிடிமையும் ஐயமும் அச்சமும் விழைவும் துயரும் கொந்தளிக்கும் இதனுள் அலையற்றது அமைந்துள்ளது எங்ஙனம் என விளக்க முனைகிறார்கள்” என்ற சாந்தீபனி முனிவர் புன்னகைத்தார். “குடுவையில் பயனுள்ளதாக இருக்கும் மருந்துக்கலவை போலிருக்கிறது இவர்களின் மெய்யறிதல். உடலுக்குள் அது நஞ்சோ மருந்தோ என்று இன்னும் முடிவாகவில்லை. காடுகளில் மெய்மை என்பது சொல்லில் நின்றிருந்தால் போதும். கழனியில் அது மேழியென உழுது விதையென முளைத்து கதிரென அறுவடை ஆகவேண்டும்.”

“கட்டிறந்த பாழ்வெளியில் களித்திருக்கும் முனிவருக்குரிய மருந்து எங்ஙனம் கூடுகட்டி குஞ்சுகளை ஊட்டும் குடித்தலைவனுக்கு உகந்ததாகும்?” என்று சாந்தீபனி முனிவர் தொடர்ந்தார். “எங்கும் எழுவது அவ்வினாவே. முன்பு ஒரு விடுகதையை கேட்டேன். பிரம்மன் படைத்தவற்றில் பெரிய காளைக்களிறொன்று இருந்தது. அதன் ஒரு கொம்பிலிருந்து மறுகொம்பு வரைக்கும் ஆயிரம்கோடிக் காதம் தொலைவு. அப்படியென்றால் அதன் வலக்கொம்பிலிருந்து எழுந்து பறக்கும் செம்பருந்து எத்தனை காலம் கழித்து இடக்கொம்பை சென்றணையும்?”

சிலகணங்கள் அமைதி. இளைய மாணவன் ஒருவன் “புலரிஎழுந்து அந்திக்குள்” என்றான். முகம் மலர்ந்து “நன்று” என்றார் சாந்தீபனி முனிவர். “கதிரவன் கடக்கும் வானம் அது. அதைத்தான் இங்கும் சொல்வேன். இங்கிருந்து அங்குவரை ஒற்றைச் சிறகடிப்பில் செல்லும் ஒரு பறவையால் மட்டுமே இங்கு எழும் அத்தனை எண்ணங்களையும் ஒன்றெனத் தொகுக்க முடியும்.” அவையை நோக்கியபடி சிலகணங்கள் தன்னுள் ஆழ்ந்தவராக அமர்ந்திருந்தபின் மெல்ல கலைந்து “மானுடம் காட்டும் உண்மை ஒன்றுண்டு, தேவையானது நிகழும். எண்ணங்கள் கோடி ஒன்றை ஒன்று தொடுத்து ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு பெருகலாம். அனைத்தையும் கடந்து நோக்கும் ஒன்றுள்ளது, மானுடனின் தேவை. அது ஒவ்வாததை தள்ளி உரியதை அள்ளும். தொடுக்கும். உருக்கி ஒன்றாக்கும்.”

சாந்தீபனி முனிவர் பற்கள் தெரிய நகைத்து “பலசமயம் அது வேள்விக்கரண்டியால் மண்ணள்ளலாம். கூர்வாளால் கதிர்கொய்யலாம். பொற்பட்டால் மீன் துழாவலாம். அவ்வண்ணமென்றால் அதுவே தெய்வங்கள் எண்ணிய பயன் என்றுதான் பொருள்” என்றார். “விளைந்துபெருகும் அனைத்தையும் இணைக்கும் கொள்கையை முன்வைத்தது சாந்தீபனி குருநிலை. சமன்யவம் ஒன்று நிகழ்ந்தாகவேண்டும்.”

குரல் மெல்ல மேலெழ “இளையோரே, என்றும் அது நிகழ்ந்துகொண்டேதான் உள்ளது. நால்வேதம் அமைத்த வேதவியாசர் செய்தது சப்த சமன்வயம். இனி ஒரு தத்துவ சமன்வயம் நிகழ்ந்தாகவேண்டும். இந்த ஆறு ஓடிஓடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. அணைகட்டி நீரை மேலெடுத்து கழனி நிறைத்தாகவேண்டும்” என்றார் சாந்தீபனி முனிவர். கைகூப்பி அவர் தன் உரையை முடித்தபோது அவை ஒலியடங்கி நோக்கிக்கொண்டிருந்தது.

“ஓம் அது முழுமை. இது முழுமை.
முழுமையிலிருந்து முழுமை எழுகிறது
முழுமையிலிருந்து முழுமை பிறந்தபின்னரும்
முழுமையே எஞ்சியிருக்கிறது”

சாந்தீபனி முனிவர் கைகூப்பி அவ்வேதச்சொல்லை உரைத்தபோது அவரது மாணவர்களும் இணைந்துகொண்டனர். அவர் தன் வலப்பக்கம் திரும்பி அங்கிருந்த தன் தந்தையின் மரமிதியடிகளைத் தொட்டு சென்னிசூடிவிட்டு எழுந்து கூப்பிய கைகளுடன் வெளியே சென்றார். ஒரு மாணவன் எழுந்து சங்கை முழக்கினான். மெல்லிய பேச்சுக்குரல்களுடன் மாணவர்கள் கலைந்து செல்லத் தொடங்கினர்.

SOLVALARKAADU_EPI_40

தருமன் எண்ணங்களில் ஆழ்ந்தவர் போல தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார். “மூத்தவரே” என்றான் நகுலன். திடுக்கிட்டு அவனை நோக்கியபின் தருமன் கையூன்றி மெல்ல எழுந்தார். தாடியை கையால் தடவியபடி அவர் நடக்க அவர்கள் கொண்டுவந்திருந்த சுவடிகளை எடுத்துக்கொண்டு நகுலன் உடன் சென்றான். வெளியே முன்னிரவின் இருள் நிறைந்திருந்தது. தொலைவில் அகல்சூடி அமைந்திருந்த குடில்திண்ணைகள் இருளில் மிதந்தவைபோல் தெரிந்தன.

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 39

[ 6 ]

“என்ன நிகழ்ந்தது என்று நான் இளைய யாதவனிடம் மூன்றுமுறை கேட்டிருக்கிறேன்” என்றார் சாந்தீபனி முனிவர். “முதல்முறை தவிர்க்கும் புன்னகையுடன் அதை பிறிதொரு தருணத்தில் சொல்கிறேன் ஆசிரியரே என்றான். அப்போது மூத்தவர் உடனிருந்தார். அவர் உரத்த குரலில் இவன் என்ன சொன்னான் ஆசிரியரிடம் என நானும் அறியேன். நான் பலமுறை அதை கேட்டுவிட்டேன். என்னிடமும் சொன்னதில்லை என்றார்.”

இரண்டாம் முறை நாங்கள் இருவரும் துவாரகையில் அவன் அறையில் தனித்திருக்கையில் கேட்டேன். என்ன நிகழ்ந்தது என சொல்லிவிடலாம் ஆசிரியரே. ஆனால் வெளியே நிகழ்ந்தவற்றை மட்டுமே சொல்லமுடியும். அதனால் பயன் என்ன? என்றான். அவன் முகத்தில் எப்போதுமுள்ள மாறாபுன்னகை அப்போதுமிருந்தது. ஆனால் விழிகளில் வலியை கண்டேன். ‘அப்படியென்றால் உனக்கும் வலி உண்டா? நீயும் துயர்கொள்வதுண்டா? நன்று’ என என் உள்ளம் சொல்லிக்கொண்டது. அதை உணர்ந்ததுபோல அவன் உரக்க நகைத்து “லீலை!” என்றான். மேலும் ஓசையெழச் சிரித்துக்கொண்டு “ஆம், லீலை… அரிய சொல்” என்றான்.

மூன்றாம் முறை நான் அவனிடம் கேட்டது எந்தை கிளம்பிச்சென்று பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தபோது. முதியோர் இல்லம்விட்டு சென்றால் ஒரு வியாழவட்டம் நிறைவுகொண்டபின் விழிமறைந்தவர் மண்மறைந்துவிட்டார் என்று கணித்து நீர்க்கடன்கள் செய்வது வைதிகமுறைமை. மூன்றுவியாழவட்டம் காப்பது நடுஅகவையருக்கும் ஐந்து வியாழவட்டம் காப்பது இளமைந்தருக்கும் வழக்கம் என்று நிமித்திகர் என்னிடம் சொன்னார்கள். அதுவரை நான் அதை எண்ணியதில்லை. அதை அவர்கள் நாவிலிருந்து கேட்ட அன்றுதான் எந்தையை முற்றாக இழந்தேன்.

கங்கையில் நீர்க்கடன்களை முறைப்படி செய்து எந்தையை விண்ணேற்றினேன். அதன் பின் எனக்குள் சூழ்ந்த வெறுமையை தாளாமல் துயில் முற்றழிந்தேன். இந்த சாந்தீபனி குருநிலையின் வாயிலில் ஒருநாள் எந்தை வந்து நிற்கப்போகும் தருணத்தை நான் ஒவ்வொருநாளும் எதிர்பார்த்திருந்தேன் என அப்போது உணர்ந்தேன். அவருக்காகவே நான் இங்கு வேதச்சொல் பயின்றேன். அவர் இருந்த காலத்தைவிட இருமடங்கு பெரிதாக இதை வளர்த்தெடுத்தேன். என்னருகே அவர் எப்போதுமிருந்தார். மீண்டுவந்து அவர் சொல்லப்போகும் சொல்லை எத்தனை முறை நான் கருக்கொண்டு உருத்திரட்டியிருப்பேன்!

அவர் வரப்போவதில்லை என்று தெளிந்ததும் ஒருகணத்தில் அனைத்தும் பொருளிழந்தன. அதெப்படி என்று வியந்தபடி எண்ணியெண்ணி மருகியபடி இருந்தது என் அகம். அவர் மீண்டுவரவில்லை என்றால், நான் என்னவானேன் என அவர் அறியவே இல்லை என்றால், நான் அடைந்தவற்றைக்கொண்டு என்ன செய்வது? லீலை என்கிறோம், ஊழின் பெரும்பொருளின்மை என விளக்குகிறோம்… அச்சொல்லை வாழ்ந்தறிய நேர்வது நம் உடலும் நம் நகரும் நாமறிந்த அனைத்தும் துண்டுகளாக துகள்களாக பொடிபடலமாக உடைந்து சிதறிப் பரந்தழிவதற்கு நிகர்.

தாளாமலானபோது கிளம்பி துவாரகைக்கு சென்றேன். அங்கே அவன் தன் மனைவியருடன், கவிஞரின் பாடல்களிலும் சூதர் கலைகளிலும் போர்க் களியாட்டுகளிலும் மூழ்கித் திளைத்துக்கொண்டிருந்தான். அவனை அவ்வண்ணம் கண்டதும் எழுந்த பெருஞ்சினத்தை என்னால் அடக்கமுடியவில்லை. அவன் அவைநின்று “மூடா! உன் ஆசிரியர் மறைந்து வியாழவட்ட நிறைவாகிறது. அதை அறிவாயா?” என்று கூவினேன். “ஆம், நிமித்திகர் சொன்னார்கள். அவருக்கு நான் ஆற்றவேண்டிய சடங்குகள் ஏதுமில்லை என்றனர்” என்றான்.

“அவரைக் கொன்றவன் நீ” என்று கூவினேன். “பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் உன் சொற்களால்தான் அவர் துரத்தப்பட்டார். அப்பழியை நீ சுமந்தாகவேண்டும்” என்றேன். “ஆசிரியரே, அப்பறவை கிளையிலிருந்து விண்ணுக்கு எழுந்ததா இல்லை சிறகோய்ந்து மண்ணில் விழுந்ததா?” என்றான். “அது விண்ணேகியது என்றுதான் உங்கள் குருநிலையில் சொல்கிறீர்கள்.” நான் “ஆம், துறவிக்கு துறத்தல் எல்லாம் மெய்யறிதலே. அவர் வென்று சென்றார்” என்றேன். “அவரை வெல்லச்செய்தவன் எப்படி பழி சுமக்கவேண்டும் என்கிறீர்கள்?” என்று அவன் சிரித்தான்.

“நீ அவரை துயர்கொள்ளச் செய்யவில்லை என இந்த அவையில் உன்னால் உறுதிசொல்ல முடியுமா? அவர் செல்கையில் உன்னை வாழ்த்தினார் என்று ஆணையிட்டு உரைப்பாயா? ஆசிரியரின் இறுதிவாழ்த்தைப் பெறாதவன் கல்வி நிறைவடைந்தவனா என்ன?” என்றேன். “அவர் என்னை வாழ்த்தவில்லை. பழிச்சொல்லே அளித்துச் சென்றார்” என்று அவன் மாறாசிரிப்பிருந்த விழிகளுடன் சொன்னான். “ஆகவேதான் அவரது மெய்யறிதலின் ஒரு துளியையும் நான் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என உறுதிகொண்டிருக்கிறேன்” என்றான். “சாந்தீபனி குருநிலையுடன் எனக்கு இனி உறவில்லை. அங்கு நான் கற்றேன். ஆசிரியருக்குரிய கொடையையும் அளித்தேன்.”

“அவரிடம் நீ சொன்னதென்ன?” என்றேன். என் குரல் தணிந்திருந்தது. “அதை நான் ஒருபோதும் சொல்லப்போவதில்லை” என்றான். “ஏனென்றால் நான் சொல்வது என் தரப்பே ஆகும்.” நான் உரக்க “நீ நாணுகிறாய். நீ அஞ்சுகிறாய். உன் சிரிப்புக்குப் பின் அது இருப்பதை அவை அறிக!” என்றேன். அவன் நகைத்து “ஆசிரியரே, நான் எண்ணிக்கொண்டிருப்பது லீலையைப் பற்றி மட்டும்தான்” என்றான். நான் திகைத்து நோக்க சிரித்துக்கொண்டே “பெரும்பொருளின்மை” என்றான். நான் திரும்பி நடந்தேன்.

அங்கே ஒருகணமும் இருக்கமுடியாமல் நான் அன்றே கிளம்பிவிட்டேன். துவாரகையிலிருந்து பாலைநிலம் வழியாக உஜ்ஜயினிக்கு சென்றேன். செல்லும்வழியில் ஒரு பாலைச்சோலையில் முள்மரத்தடியில் இளைப்பாறிக்கொண்டிருந்தேன். அப்போது தொலைவில் புரவியில் அவன் தனியாக வருவதை கண்டேன். பாலையின் காற்றும் ஒளியும் கலந்த அலைமேல் அவன் உருவம் நெளிந்துகொண்டிருந்தது. அது என் விழிமயக்கா என ஐயம் கொண்டேன். அவனாகிய அலைகள் இணைந்து மெல்ல திரண்டு அவனேயாக மாற அருகணைந்தான். புரவிக்குளம்புகள் மணலில் அழுந்தி ஒலித்தன.

SOLVALAR_KAADU_EPI_39

நான் நோக்கியபடியே இருந்தேன். அவன் இறங்கி அருகே வந்தான். முகமன் சொல்லாமல் “தங்களிடம் பேசவே வந்தேன், ஆசிரியரே” என்றான். “சொல்!” என்றேன். “சொல்லற்குரிய தருணம் அல்ல அது. ஆசிரியனைப் பழித்தல் என்பது இந்த ஆடலின் ஒரு தருணம்போலும். அதை இன்னமும் என்னால் கடக்க முடியவில்லை” என்றான். முதல்முறையாக அவன் முகம் கலங்குவதை நான் கண்டேன். “நான் கடக்கவே இயலாத ஒன்று அது” என்றபடி அமர்ந்தான். பெருமூச்சுவிட்டபடி மணலை அளைந்துகொண்டிருந்தான். “சொல்!” என்றேன்.

“நான் இதை உங்களுக்காகவே சொல்ல வந்தேன்” என்றான். “சொல்வதனூடாக நான் இதிலிருந்து விடுபடப்போவதில்லை. இதன் பொறி அத்தனை எளிதில் அறுபடுவதல்ல.” நான் அவனை நோக்கிக்கொண்டிருந்தேன். அதுவும் அவன் ஆடும் நாடகமா என எண்ணும் உள்ளத்தை என்னால் வெல்லமுடியவில்லை. “ஆனால் நீங்கள் இதில் சிக்கிக்கொண்டீர்கள் என இன்று அவையில் நீங்கள் கொண்ட சினம் கண்டு அறிந்தேன். இதிலிருந்து நீங்கள் மீண்டாகவேண்டும். இல்லையேல் உங்கள் கல்வியும் அறிவும் தெளிவும் இதனால் அழிந்துவிடக்கூடும். குருதியெல்லாம் நஞ்சாகக்கூடும்” என்றான்.

நான் அவன் சொன்ன சொற்களை விழிகளால் கேட்பவன் போல் அமர்ந்திருந்தேன். அவன் சொன்னது முற்றிலும் உண்மை என நான் அப்போது அறிந்தேன். அவ்வினாவுடன் நான் வாழ முடியாது. “ஆசிரியரே, எந்தை நந்தகோபரின் கை பற்றி நானும் என் தமையனும் கல்விச்சாலைக்குள் நுழைந்தபோது மையக்குடிலில் இருந்து ஆசிரியர் கைகளை விரித்தபடி பாய்ந்து என்னை பற்றிக்கொண்டார். ‘வந்தாயா, வந்துவிட்டாயா’ என்று கூவினார். திரும்பி ‘பிருகதரே, இவன்தான், இவனேதான்’ என்றார். ‘வந்துவிட்டான், இதோ என் முன் வந்து நின்றிருக்கிறான்’ என்று கண்ணீர் ஒலித்த குரலில் கூவினார்” என்றான் இளைய யாதவன்.

அவர் கொண்ட அக்கொந்தளிப்பைக் கண்டு எந்தை திகைத்தார். ‘ஆசிரியரே, இவர்களை நீங்கள் பிறிதெவரோ என எண்ணியிருக்கக்கூடும். இவர்கள் அரசிளங்குமரர்கள் அல்ல, யாதவர்கள். என் மைந்தர், கோகுலமென்னும் ஆயர்ச்சிறுகுடியினர்’ என்றார். ‘ஆம், இவர்களைப் பார்த்தாலே தெரிகிறதே, ஆயர்ச்சிறுவர். ஆனால் இவர்கள்தான் நான் தேடியவர்கள். இவர்களுக்காகவே இங்கு இக்கல்விநிலை எழுந்தது’ என்றார் அவர். என்னைத் தூக்கி தோளிலேற்றிக்கொண்டு அறைக்குள் சென்றார். அங்கிருந்த இன்னுணவை எடுத்து என்னிடம் தந்து ‘உண்க! இது என் முதல் இனிப்பு’ என்றார்.

அன்றுமுதல் நான் உஜ்ஜயினியின் சாந்தீபனி குருநிலையின் மாணவனாக அன்றி இளமைந்தனாகவே கருதப்படலானேன். இரவும் பகலும் நான் ஆசிரியருடன் இருந்தேன். பயிற்றமர்வுகள் முடிந்து மாணவர்கள் சென்றபின் அவர் மடிமேல் ஏறியமர்ந்து சொல்கேட்கத் தொடங்குவேன். என் ஐயங்கள் ரக்தபீஜனைப்போல துளியிலிருந்து ஒன்றென முளைப்பவை. அவர் ஒவ்வொரு வினாவுக்கும் மேலும் மேலும் மலர்ந்தபடியே செல்வார். விடைபெறாத வினா ஒன்று உதடுகளில் எஞ்ச அவர் அருகே படுத்து துயில்வேன். அவ்வினாவுடன் விழித்தெழுவேன். அவருடன் காலையில் நீராடுவேன். அனலோம்புகையில் அருகமர்வேன். அவர் உடலின் ஓர் உறுப்பென அவர் குருதி என்னில் ஓட என் துடிப்பு அவர் எண்ணமென்றாக வாழ்ந்த நாட்கள் அவை.

அந்நாளில்தான் என்னை அக்ரூரர் காணவந்தார். ‘இளையோனே, உனக்கான நாள் வந்துவிட்டது’ என்றார். கல்விநிலையின் சாலமரத்தடியில் அமரச்செய்து என்னிடமும் மூத்தவரிடமும் மதுராவில் என்ன நிகழ்கிறது என்று சொன்னார். இளமைந்தர்கள் கொன்றுவீழ்த்தப்பட்ட செய்திகேட்டு நான் உடல் விதிர்த்து எழுந்து நின்றுவிட்டேன். ‘இன்னுமா அவன் நெஞ்சு பிளக்கப்படவில்லை?’ என்றேன். ‘அதை நீ செய்யவேண்டுமென்பது ஊழ் போலும்’ என்றார் அக்ரூரர். ‘உன் ஆசிரியரின் வாழ்த்துபெற்று நாளை கிளம்புவோம்!’

நடுங்கும் உடலுடன் நான் ஆசிரியரை தேடிச்சென்றேன். அவர் தொலைவில் அமர்ந்து நூலாய்ந்துகொண்டிருந்தார். அவர் முகம் கொண்ட ஒளி என்னை எரிந்தெழச் செய்தது. ஓடிச்சென்று அந்தச் சுவடிகளைப் பிடுங்கி வீசிவிட்டு கூவினேன். ‘இந்நெறிகளுக்கு என்ன பொருள்? இங்கு நாம் ஆராயும் மெய்ச்சொல்லால் என்ன பயன்? சொல்திருந்தா இளமைந்தர் கொன்று குவிக்கப்படுகையில் அவன் நெஞ்சு கிழிக்க வாளென எழாத வேதங்கள் போல் இழிந்தவை எவை?’ என்றேன். தரையை காலால் உதைத்து ‘நம்மை கட்டிவைப்பதுதான் இச்சொற்களால் ஆவதென்றால் இவற்றை மிதித்துத் தள்ளுகிறேன்’ என்று கூவினேன்.

புன்னகையுடன் ஆசிரியர் ‘மைந்தா, அவர்கள் மானுட மைந்தர்கள் என்பதனால் நீ கொதித்தெழுகிறாய். ஏனென்றால் நீயும் மானுடன்’ என்றார். ‘திரும்பிப்பார், அதோ அக்கிளையில் சிறு கிளிக்குஞ்சை கவ்வி வந்து கூருகிரால் பற்றி அமர்ந்து கொத்திக் கிழித்து உண்ணுகிறது காகம். இப்போதும் கிளிக்குஞ்சின் கதறல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.’ திரும்பி நோக்கி நான் உடல் தளர்ந்தேன். ‘ஆம்’ என்றேன். ‘ஒருகணம் திரும்பி கீழே நோக்கு. துடிக்கத் துடிக்க அந்தப் புழுக்குழவியை கவ்வி கொண்டுசெல்கின்றன எறும்புகள்’ என்றார். நான் அக்கணத்திறப்பில் புவியென விரிந்த மாபெரும் கொலைக்களத்தைக் கண்டு குளிர்ந்துறைந்து நின்றேன்.

ஆசிரியர் ‘அலகிலா பேரின்பவடிவம் இப்புவி. அலகிலா துயரவெளியும்கூட. நெறி, அறம், அன்பு, இரக்கம், அழகு என நின்றுளது நம்முன். மீறல், மறம், வெறுப்பு, கொடுமை, இருள் என அதுவே மறுகணம் தன்னை காட்டுகிறது. மைந்தா, அதையே லீலை என்றேன்’ என்றார். ‘இருநிலைகளுக்கு நடுவே அசையா நிகர்நிலை கொண்டவன் அந்த லீலையை காண்கிறான். இன்பத்திலும் துன்பத்திலும், இருளிலும் ஒளியிலும், அறத்திலும் மறத்திலும் அசையாத சித்தம் கொண்டவனே யோகி.’ அவர் சொற்கள் என்னுள் இன்றும் ஒலிக்கின்றன.

ஆசிரியர் என் தோளில் கைவைத்து  சொன்னார் ‘மைந்தா கேள், துயரத்தில் துவளாமல் இன்பத்தை நாடாமல் பற்றும் அச்சமும் சினமும் எழா உள்ளம் கொண்டவனே இப்பெருவிளையாடலை காணும் விழிப்புள்ளவன். அவனையே யோகி என்கின்றனர். பற்றின்றி இன்பத்தை நாடாமல் துயரை வெறுக்காமல் நின்றிருப்பவனின் சித்தமே நிலைபெற்றது. இங்கு அனைத்தும் புயலொன்றால் அலைக்கழிக்கப்பட்டு சுழன்று ஆடிக்கொண்டிருக்கின்றன. தானும் அதில் ஆடுபவன் ஆடலை அறிவதில்லை. சித்தம் அசைவற்றவன் அந்தப் பெருஞ்சுழற்காற்றை கண்டுகொள்கிறான்.’

நான் அதை கேட்டுக்கொண்டு சிலகணங்கள் நின்றேன். பின் என் உள்ளிருந்து ஒரு சீறல் எழுந்தது. அவர் கையை தட்டிவிட்டுவிட்டு வெளியே ஓடினேன். நேராக சென்று அக்ரூரரிடம் ‘கிளம்புக! இப்போதே…’ என்றேன். ‘ஆசிரியரின் வாழ்த்துரை பெற்றுவிட்டாயா?’ என்றார் அக்ரூரர். ‘நான் என் உள்ளுறைபவனின் வாழ்த்தை பெற்றுவிட்டேன்’ என்றேன். அவருடன் கிளம்பிச்சென்றேன். மதுரா நகர்புகுந்து என் மாமனை களத்தில் கொன்றேன். அந்தப் பாழ்பட்ட நிலத்தை குருதியால் மும்முறை கழுவினேன். அறம் மீறக்கண்டும் அஞ்சி அமர்ந்திருந்த மாக்கள் உயிர்வாழவும் தகுதியற்றோர் என அறிவித்து அவர்களை தேடித்தேடி வேட்டையாடினேன்.

குருதியைப்போல புரிந்துகொள்ள முடியாத ஒன்று இப்புவியில் இல்லை, ஆசிரியரே. அருந்த அருந்த விடாய்பெருக்கும் இனிய மது அது. எரியென்று கொழுந்துவிடும் நீர். கோடானுகோடி விதைகள் கலந்த ஓடை. நான் அதில் மிதந்துசென்றேன். எங்கோ ஓர் இடத்தில் என்னை நிறுத்திக்கொள்ள வேண்டுமென அறிந்திருந்தேன். ஆனால் குருதி குருதியை பெருக்கியது. ஒருநாள் மதுராவில் தெருவில் நடந்தபோது எதிரே வந்த இளமைந்தன் ஒருவனை நோக்கி புன்னகையுடன் குனிந்தேன். அவன் விழிகளில் எழுந்த அச்சத்தை, அவன் உடல் அறியாது குன்றிச் சிலிர்ப்பதை கண்டேன்.

என்னை உணர்ந்தவனாக நான் திரும்பி ஓடினேன். அங்கிருந்தே புரவியேறி சாந்தீபனி குருநிலைக்கு வந்தேன். தன் அறையில் அமர்ந்து அதைப்போலவே சொல்லாய்ந்துகொண்டிருந்த ஆசிரியரின் முன் சென்று கண்ணீருடன் நின்றேன். ‘ஆசிரியரே, நான் சொல்லாய்ந்த ஒருவன் செய்தற்கு அஞ்சும் அனைத்தையும் செய்துவிட்டு வந்துள்ளேன்’ என்றேன். கால்மடித்து அவர் முன் விழுந்து ‘என்மேல் தீச்சொல்லிடுக! என்னை எரியால் பொசுக்குக! நான் குருதியாடிய கொடுந்தெய்வம் இன்று’ என்றேன்.

ஆசிரியர் மாறாபுன்னகையுடன் ‘மைந்தா, நீ செல்லும்போது சொன்னதையே இன்றும் சொல்கிறேன், இது லீலை. இப்புவி என்றும் குருதியால் நனைந்தபடிதான் உள்ளது’ என்றார். நான் கடும் சினம் கொண்டேன். ‘அங்கு இறந்துவிழுந்த இளமைந்தரின் குருதியும் இவ்வீணரின் குருதியும் ஒன்றா?’ என்றேன். ‘என்ன ஐயம்? அனைத்துக் குருதியும் ஒன்றே. அம்மைந்தர் வளர்ந்து படைவீரர்களாகி களம்பட்டால் மட்டும் அது அறமென்றாகிவிடுமா?’ என்றார். ‘இவை பொருளற்ற இறப்புகள்’ என்றேன். ‘அனைத்து இறப்பும் பொருளற்றதே. ஏனென்றால் அனைத்து வாழ்வுகளும் பொருளற்றவையே’ என்றார் ஆசிரியர்.

அவர் என்னிடம் ‘பொருளின்மை எனும் கரிய யானையின் மத்தகத்தின்மேல் அமர்ந்தவனே யோகி. அவ்விருளில் வெண்தந்தங்கள் என இரு நிலவுகள் எழும். அதுவே மெய்மை’ என்று சொன்னார். அச்சொற்களை தாளமுடியாதவனாக நான் அங்கே அமர்ந்தேன். அவர் சொல்வனவற்றை வெறுமே பார்த்துக்கொண்டிருந்தேன். ‘நீ விழைந்ததை ஆற்றி மீண்டுவிட்டாய். இனி உனக்குக் கடமைகள் இல்லை. இங்கேயே இருந்து எஞ்சியதை கற்றுச்செல்க! ஒருவேளை இனிமேல் உனக்கு லீலை என்னும் சொல் பசுங்குருதி மணம் கொண்ட கருக்குழவி போல பொருள் அளிக்கக்கூடும்’ என்றார்.

நான் மீண்டும் சில ஆண்டுகள் குருநிலையில் கற்றேன். என்னுள் எழுந்த எரித்துளி மேல் மேலும்மேலும் சொற்களைப் போட்டு மூடிக்கொண்டே இருந்தேன். என்னை அங்குள்ள அனைவருமே அச்சத்துடனும் அருவருப்புடனும்தான் பார்த்தனர். ஆசிரியர் மட்டுமே என்னை அவருக்கு உகந்தவனாக கொண்டிருந்தார். ‘ஆம், அவனே என் முதல்மாணவன். சொல்லுக்கு அப்பால் சென்று சொல் எழுந்த ஊற்றைக் காணும்வரை செல்லத்துணிபவன்’ என்றார். அவரை எதிர்த்துப் பேச அவர்கள் அஞ்சினர்.

ஆனால் ஒருநாள் நான் வேள்விக்கு தர்ப்பைமேல் அமர்ந்த ஆசிரியரின் வலப்பக்கம் அமர்ந்திருந்தேன். அவர் கையின் பொருளுணர்ந்து அன்னத்தை எடுத்து அவியாக அளித்தேன். அன்று வேள்வி முடிந்ததும் மூத்தமாணவர் எழுவர் என் கைதொட்ட அவிமிச்சத்தை உண்ணமாட்டோம் என்று மறுத்தனர். என்னை சுட்டிக்காட்டி வெறுப்பு எழுந்த குரலில் ‘குருதிபடிந்த அன்னம் அது. தெய்வங்கள் ஏற்காதது’ என்றார் சம்யுக்தர். ‘ஷத்ரியன் போர்க்களத்தில் சிந்தும் குருதியன்றி பிற அனைத்தும் கொலையே. இவன் கன்றோட்டும் குலத்தின் நெறிமீறி தாய்மாமனைக் கொன்றவன். பழி சூழ்ந்தவன்.’

அக்கணத்தில் எழுந்த பெருஞ்சினத்தால் நான் கூவினேன் ‘ஆம், இங்கு நீர் ஆற்றும் இது பொருளற்ற வேள்வி. அங்கு மதுராவில் நான் ஆற்றிய குருதி வேள்வியே தெய்வங்களுக்கு உகந்தது. அங்கு எழுந்த நாணொலியும் வஞ்சினமுமே வேதம். அந்தணரே, பசித்தவனுக்கு அன்னமும் நோயுற்றவனுக்கு மருந்தும் தனித்தவனுக்குத் துணையும் வஞ்சிக்கப்பட்டவனுக்கு வாளுமென எழுவதே மெய்வேதம்.’ என் சினமே சொற்களை கொண்டுவந்து சேர்த்தது. ‘இங்கு இதைப்போல ஆயிரம் மடங்கு பெரிய குருதிவேள்வி ஒன்றை நிகழ்த்துவேன். அத்தனை தேவர்களையும் வரவழைத்து மெய்வேதம் எதுவென்று காட்டுவேன். இது என் ஆணை! அறிக தெய்வங்கள்!’

அதன்பின் அங்கு தங்க விரும்பாமல் கிளம்பிச் சென்றுவிட்டேன். மகதத்தை வென்று என் நிலத்தை மீட்டேன். கடலோரம் சென்று துவாரகையை அமைத்தேன். என் வினா என்னைத் துரத்த வெவ்வேறு மெய்நூல்கள்தோறும் சென்றுகொண்டிருந்தேன். வேதமெய்மையை வைரத்தின் பட்டைகள் என திருப்பித்திருப்பி முடிவிலா வெளியாகக் காட்டின அவை. பஞ்சுப்பொதிகளை எரிதுளி என அவற்றை என் வினா கடந்து சென்றது. நாள் செல்லச்செல்ல நாகத்தின் தலைக்குள் நஞ்சு முதிர்ந்து குளிர்நீல மணி ஆவதுபோல அவ்வினா என்னுள் எஞ்சியது. அதை பிற எவரிடமும் கேட்டறிய வேண்டியதில்லை என்று தெளிவுகொண்டேன். என்னுள் இருந்து ஓர் ஆசிரியன் எழுந்து அவ்விடையை எனக்கு அருளவேண்டும். அவனுக்காக காத்திருக்கலானேன்.

அப்போதுதான் ஆசிரியர் என்னை அழைத்து பிரபாச தீர்த்தத்திற்கு அழைத்துச்செல்லும்படி கோரினார். அவர் மைந்தர் முன்னரே மறைந்துவிட்டார் என நான் அறிந்திருந்தேன். அவர் புன்னகையுடன் ஒருநாள் அதை என்னிடம் சொன்னார். ‘என்னை வெல்ல அவன் கிளம்பிச்சென்றான்.’ மேலும் சிரித்தபடி ‘மைந்தர் தந்தையிடமிருந்து அகன்று அகன்று அவரை வெல்ல முயல்கிறார்கள். வெல்லுந்தோறும் அணுகி வந்தமைகிறார்கள். ஆனால் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை, செல்வதை மட்டுமே அவனால் திட்டமிடமுடியும் என்று’ என்றார். ‘அவர் எங்கே?’ என்றேன். ‘பிரபாச தீர்த்தமாடச் சென்றான். அங்கு சென்றவர்களில் சிலரே மீள்கிறார்கள்’ என்றார்.

ஆனால் அன்று நான் பிறிதொரு ஆசிரியரை கண்டேன். அவர் நடுங்கிக்கொண்டே இருந்தார். ஒரேநாளில் பல்லாண்டுகால முதுமை வந்து கூடியதுபோல. அவர் கைபற்றி மலைப்பாதையில் அழைத்துச்சென்றபோது விட்டில் ஒன்றை பற்றியிருப்பதுபோலவே உணர்ந்தேன். அவர் மைந்தன் உயிருடனிருப்பதாக நிமித்திகர் சொன்னபோது கூண்டைத் திறந்து நான் முற்றிலும் அறியாத ஒருவர் வெளிவந்தார். அங்கு அலறிவிழுந்து நினைவுமீண்டு எழுந்ததுமே என் கைகளை பற்றிக்கொண்டு ‘என் மைந்தன்! என் மைந்தன்!’ என அரற்றத் தொடங்கினார்.

என்னிடம் அவர் மைந்தனை மீட்டுக்கொண்டு வரவேண்டும் என்று ஆசிரியக்கொடை கோரியபோது என் கைகளைப் பற்றி நெரித்துக்கொண்டிருந்த கைகளில், கலங்கி வழிந்த விழிகளில் நான் கண்டது பேதைமையையே ஆற்றலாகக் கொண்ட அன்னை ஒருத்தியைத்தான். என் நெஞ்சுக்குள் மிக ஆழத்தில் ஒன்று நலுங்கியது. நான் அவரிடம் அவர் மைந்தனுடன் மீள்வதாக உறுதியளித்தேன். ‘என் மைந்தனை ஒருநோக்கு காட்டு. அவன் கால்களை தோள்களை நான் ஒருமுறை விழிகொண்டால் போதும். மானுடன் என வந்தமைக்கு பிறிதொன்றும் எனக்குத் தேவையில்லை’ என்று அவர் அழுதார்.

நான் பஞ்சஜனத்தை வென்று அச்செய்தியுடன் அவரை காணச்சென்றேன். அவர் நான் வருவதை அறிந்து கண்ணீருடன் எனக்காகக் காத்திருந்தார். நான் அவர் தனியறைக்குள் சென்றதுமே ‘எங்கே என் மைந்தன்? எப்போது வருகிறான்?’ என்றார். ‘அவர் அங்கு ஆற்றிய பணிகளை முடித்துவிட்டு நாளை இங்கு வந்துசேர்வார். நான் துவாரகை வழியாக வந்தேன்’ என்றேன். அங்கு நிகழ்ந்ததை நான் சொல்வதைக் கேட்கும் பொறுமை அவருக்கு இருக்கவில்லை. ‘எப்போது கிளம்புவான்? இன்று கிளம்பியிருப்பானா? அவந்திக்கு அருகேதானே பஞ்சஜனம்? அவன் அங்கிருந்து இங்கு வர தேர் அளிக்கப்பட்டுள்ளதா?’

நான் அவர் விழிகளை நோக்கி என் நெஞ்சில் அதுவரை கொண்டுவந்த வினாவை கேட்டேன் ‘ஆசிரியரே, இந்த மைந்தனுக்கும் மதுராவில் கம்சனால் கொல்லப்பட்ட ஆயிரம் மைந்தருக்கும் வேறுபாடு ஏதேனும் உள்ளதா?’ நான் கேட்டதென்ன என்று அவர் அக்கணமே புரிந்துகொண்டார். நெஞ்சில் உதைபட்டவர்போல பின்னடைந்து நடுங்கும் இரு கைகளையும் நெஞ்சோடு கோத்து ‘என்ன சொல்கிறாய்?’ என்று அடைத்த குரலில் கேட்டார். ‘லீலை என்றால் என்னவென்று தாங்கள் சொன்னது இதுவா? இல்லை இது மாயை என்பதுவா?’ என்றேன்.

ஆசிரியரே, அப்போது என்னுள் எழுந்த இன்பத்தை எண்ணி இன்று கூசுகிறேன். அச்சொற்களை கேட்டவன் அறிதலின் வேட்கையால் அலைக்கழிக்கப்பட்ட மாணவன் அல்ல. அவன் பிறிதொருவன். அவனை நான் நன்கறிவேன். மிக எளியவன், ஆனால் அவனைத் தவிர எவரையும் ஒரு பொருட்டாக எண்ணாதவன். ஆசிரியனென்று வந்த ஒருவருக்கு மாணவனென்று பணிந்தமைய நேரிட்டமையாலேயே சினம் கொண்டவன். அவ்வஞ்சத்தை ஆயிரம் பட்டுத்துணிகளால் பொற்பேழைகளால் நறுமணங்களால் மூடிக்கரந்தவன். அத்தருணம் அவன் வணங்கியமைந்த அத்தனை தருணங்களுக்கும் மறுதுலா. அவன் வென்று பேருருவம் கொண்டெழுந்த கணம் அது.

ஆசிரியர் உடல்குன்றிச் சிறுப்பதை அப்போது நான் கண்டதைவிட பலமடங்கு தெளிவாக பின்னர் வந்த ஒவ்வொரு நாளிலும் கண்டேன். நுரைக்குமிழிகள் உடைந்துடைந்து அமைவதுபோல அவர் தான் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் எண்ணி மீட்டு உடைந்து அவிந்துகொண்டே சென்றார். உண்மையிலேயே அவர் உடல் சிறுத்து கூன்கொண்டது. ‘ஆம்!’ என்றார். தனக்குத்தானே என ‘ஆம்! ஆம்!’ என தலையசைத்தார். ‘லீலை!’ என முனகி ‘நஞ்சு… ஆலகால நஞ்சு’ என்றார். பின்னர் சீறல் ஒலி எழுப்பி அழுதபடி கால் தளர்ந்து அப்படியே தன் பீடத்தில் அமர்ந்தார். தோள்குறுக்கி தலைகவிழ்ந்து உடல் அதிர விசும்பினார்.

நான் அவரை நோக்கிக்கொண்டு நின்றேன். என்னுள் அப்பேருருவனும் படம்சுருக்கும் பாம்பென சிறுத்து சுருளத்தொடங்கினான். நான் பெருமூச்சுவிட்டு தோள் தளர்ந்தேன். அங்கிருந்து விலகிச் சென்றுவிட வேண்டுமென்று மட்டுமே அப்போது விரும்பினேன். ஒரு சொல்லேனும் சொல்லவேண்டும். ஆனால் எச்சொல் எடுத்தாலும் அது மேலும் கூரிய படைக்கலமாகவே ஆகும் தருணம் அது. நான் திரும்பிச்செல்ல உடலசைந்தபோது என் உடலுடன் பிணைக்கப்பட்டவர் போல அவர் உடல் விதிர்த்தது. ‘ம்’ என்று முனகியபடி அவர் நிமிர்ந்தார்.

என் விழிகளை அவர் விழிகள் சந்தித்தபோது அவற்றில் கூரிய நகைப்பு ஒன்றைக் கண்டு திகைத்தேன். ‘சரியான அம்பு, இளையோனே. சரியான இலக்கும்கூட’ என்றார். அவர் விழிகள் நாகக்கண்கள் போலிருந்தன. ‘ஆசிரியனைக் கொன்று உண்டு எழுகிறாய். நன்று!’ என் உடல் குளிர்ந்து நடுங்கத்தொடங்கியது. அவர் சொல்லப்போவதை நான் முழுதுணர்ந்துவிட்டேன். ‘இவ்வூழே உனக்குமென்றுணர்க! உன் முதல்மாணவன் உன்னை மறுப்பான். நீ வாழ்ந்தது எவருக்காகவோ அவர்களே உன்னை அழிப்பர்!’

நான் அது ஒரு நல்வாழ்த்து என்பதுபோல் கைகூப்பி தலைவணங்கினேன். ‘தன்னந்தனிமையில் நீயும் உணர்வாய், லீலை என்றால் என்னவென்று!’ பித்தனைப்போல உரக்க நகைத்து ‘நச்சுப் பாம்பை வளர்ப்பவன் அதனால் கடிபட்டாகவேண்டும் அல்லவா? உன்னிடமும் வளர்கிறது அச்சொல்’ என்றார். அவர் வெறிகொண்டு நகைத்து என்னை நோக்கி கைசுட்டி ‘லீலை! ஆம் லீலை!’ என்றார். நான் குனிந்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினேன். அவர் ‘வெல்க!’ என என்னை வாழ்த்தினார். நான் திரும்பி மறுபக்க வாயிலினூடாக வெளியே சென்றேன். புரவியில் ஏறி அதை சவுக்கால் அடித்து விரையச்செய்து புழுதிபறக்க பாலைவெளியில் பாய்ந்து துவாரகை நோக்கி சென்றேன்.

“மறுநாளே உங்கள் தந்தை உஜ்ஜயினி நீங்கியதாகவும் நீங்கள் வந்தபோது அவர் அங்கு இல்லை என்றும் அறிந்தேன். நான் அவர் மீளமாட்டார் என அறிந்திருந்தேன் என்று என்னிடம் இளைய யாதவன் சொன்னான்” என்றார் சாந்தீபனி முனிவர். “நான் அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை. கண்களில் துயருடன் உரக்க நகைத்தபடி நாகம் என்னிடம் வளர்ந்துகொண்டே இருக்கிறது ஆசிரியரே என்றான். எழுந்து புரவிமேல் ஏறிக்கொண்டு பாலையில் புழுதி பறக்க திரும்பிச்சென்றான்.”

தருமன் “சில சொற்கள் கொலைவாள் போன்றவை” என்றார். “ஒருவர் தன் வாழ்நாளெல்லாம் எதை தன்னிடமிருந்தே மறைத்துவருகிறாரோ அதை அவரிடம் சுட்டும் சொற்கள். அவற்றை ஒருபோதும் நாம் சொல்லக்கூடாது. ஏனென்றால் கொல்லும் சொற்கள் எல்லாம் கொன்றபின் மேலும் குருதிப்பசி கொண்டு திரும்பிவருபவை.”

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 38

[ 5 ]

“பெரும்பாலான வெற்றிகளை இளைய யாதவன் படைவல்லமை இல்லாமல்தான் அடைந்திருக்கிறான் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள், அரசே” என்றார் சாந்தீபனி முனிவர். தருமன் புன்னகையுடன் “ஆம்” என்றார். “இரு வகையில் அவன் வெற்றிகள் அமைந்துள்ளன என்று கதைகள் காட்டுகின்றன. ஒன்று மிகச்சிறிய படையுடன் எதிர்பாராத தருணத்தில் சென்று பெருந்தாக்குதலை நிகழ்த்தி வென்றதுமே விலகிச்சென்றுவிடுவது. அது வேங்கையின் வழி. அது வருவதையும் செல்வதையும் விழிகளறிய முடியாது. கூர்ஜரத்தின் கருவூலங்களை அவன் வென்றது அவ்வண்ணமே.”

“பிறிதொன்று தனிக்களிறின் வழி” என அவர் தொடர்ந்தார். “மத்தகம் குலுக்கியபடி அது தன்னந்தனியாக வந்து மன்றில் நிற்கும். துதிக்கை தூக்கி தூக்கி சின்னம் விளித்து அறைகூவும். தன் தனிவல்லமையாலேயே வென்று நின்றிருக்கும். துவாரகையின் ஒற்றர்கள் பஞ்சஜனத்தை உளவறிந்துகொண்டிருப்பதை நான் அறிந்திருந்தேன். ஒருநாள் துவாரகையின் தலைவன் பஞ்சஜனம் மீது போர்கொள்வான் என எண்ணியும் இருந்தேன். உண்மையில் எனக்கு அதில் உணர்வுகள் ஏதுமில்லை. அந்த ஆடல் எவ்வகையில் முடியும் என்றறிவதற்கான மெல்லிய ஆர்வம் மட்டுமே இருந்தது.”

வணிகர்களாகச் சென்ற என் ஒற்றர்களிடமிருந்து இளைய யாதவன் என்னைப் பற்றி விசாரித்தறிந்ததை நானும் உணர்ந்துகொண்டேன். என்னைத் தேடி அவன் வருவான் என எதிர்பார்த்தேன். வேங்கையாகவா யானையாகவா என்று எண்ணி எண்ணி நோக்கினேன். அப்போதறிந்தேன், அவனுடன் நான் உளப்போரில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை. நான் விலகிய இடைவெளியில் எந்தைக்கு இனியவனாக ஆனவன் என அவனை அறிந்திருந்தேன். எங்கோ மைந்தன் என என் உள்ளம் தந்தையை உரிமைகொண்டிருந்தது. மைந்தனுக்கும் மாணவனுக்குமான சமர் வரலாற்றில் முடிவதேயில்லை.

அவன் வந்தால் அவனை வென்று நின்றிருக்கவேண்டும் என உறுதிகொண்டேன். அவனைவிட ஒரு படி மேலானவன் என அவன் என்னை உணரும் தருணமே என் இறுதி வெற்றி. நான் ஆற்றியவை அனைத்தும் தந்தைக்குமேல் நான் கொண்ட வெற்றிகள் என நன்கறிந்திருந்தேன். அவர் அளித்த மொழியும், அவர் கற்பித்த வேதமும் முற்றிலும் பயனற்ற சூழலில் வந்து என் தனித்திறனால் முளைத்தெழுந்து அரசொன்றை அமைத்திருக்கிறேன். அவர்களுக்குரிய வேதங்களை அருளியிருக்கிறேன். அவர் தன் முழுதறிவால் ஆக்கிய முதன்மை மாணவனை வென்றால் எந்தையிடம் நான் பிறிதொன்றும் சொல்வதற்கில்லை. அந்தத் தருணத்தை எட்டுத்திசைகளிலும் எக்கணமும் என எதிர்நோக்கியிருந்தேன்.

இன்று எண்ணுகையில் வியப்புடனும் நாணத்துடனும் எண்ணிக்கொள்கிறேன். நான் ஆற்றிய அனைத்துக்கும் பின் எந்தையிடம் “பாருங்கள், என்னால் என்ன இயலும் என்று” என மீளமீள சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறேன். என் முன்னிருந்து அவர் விலகி நின்ற தருணமே இருந்ததில்லை. நான் அவரை விட்டு வந்ததே அவரை மீறி வளர்வதற்காகத்தான். ஆனால் அவர் பொருட்டே நான் வாழ்ந்திருக்கிறேன். அவரற்ற உலகில் எனக்கு இலக்குகளே இல்லை.

நான் இளைய யாதவன் சோனகர் அல்லது யவனர் துணையுடன் ஒரு கூர்த்தாக்குதலை பஞ்சஜனம் மீது தொடுப்பான் என்றே எண்ணினேன். உண்மையில் ஒரு பெரிய யவனக்கப்பல் தன் விற்பொறிகளுடன் வந்து கரையணைந்தது என்றால் பஞ்சஜனம் வீழ்ச்சி அடைந்துவிடும். ஆகவே மகாசங்க மலையின் பாறைமடிப்புகள் முழுக்க சிறிய நோக்குமேடைகளை அமைத்து அங்கு இரவும் பகலும் எரியம்புகளுடன் தொலைவில்லவரை நிறுத்தினேன். மகாசங்க முடிமேல் ஒரு காவல்மாடத்தை அமைத்து தொலைகடலை கூர்நோக்க ஆணையிட்டேன்.

பஞ்சஜனத்திற்கு வரும் இரண்டு மலைப்பாதைகளிலும் காவலரண்களை அமைத்து படைகளை நிறுத்தினேன். பெரியபடை வந்ததென்றால் உடனே அறிவிக்கும்படி மலைக்காவல்மாடங்களில் ஆட்களை வைத்தேன். முள்ளம்பன்றி என அஞ்சி கூர்சிலிர்த்து நின்றிருந்தது பஞ்சஜனம். சங்கன் என்னிடம் “எதை அஞ்சுகிறீர், அந்தணரே?” என்று கேட்டான். “துவாரகை நம்மை வென்றாகவேண்டும்” என்றேன். “நம்மை எவரும் வெல்லமுடியாது. ஏனென்றால் நிலத்தைக் கைவிட்டு காடுகளுக்குள் புகுந்துகொள்வோம்” என்று அவன் சொன்னான். “மூடா! நீ சேர்த்த செல்வம் இருக்கும்வரை எங்கும் படைகள் உன்னை நாடிவரும்” என்றேன். புரியாமல் என்னை விழித்துப்பார்த்தான்.

ஏழுமாதகாலம் நான் யாதவர்களுக்காக காத்திருந்தேன். அவன் வரவில்லை. துவாரகையிலிருந்து படை எழுவதற்கான எந்த அடையாளமும் கிடைக்கவில்லை. மெல்ல சங்கனும் படைகளும் எச்சரிக்கை இழந்தனர். அவ்வாறு எச்சரிக்கையை இழக்கச்செய்வதே அவன் நோக்கமா என்று எண்ணி நான் மேலும் எச்சரிக்கை கொண்டேன். அத்தனை கதைகளை கேட்டிருந்தும்கூட அவன் அவ்வாறுதான் செய்வான் என என்னால் ஏன் எண்ணமுடியவில்லை என்று இன்று வியக்கிறேன். அவன் பஞ்சஜனர்களின் அலைவிழா அன்று விழவுக்களத்தில் தோன்றினான்.

தரங்கர்களின் தொல்விழா அது. அவர்களுக்கு கடலே முழுமுதல் தெய்வத்தின் கண்தொடு வடிவம். பெருந்தோற்றம் கொண்ட அன்னையின் ஆடைநுனி என அவர்கள் கடலை எண்ணினர். ஒவ்வொருநாளும் அதைத்தொட்டு வணங்குவர். மலரும் அன்னமும் கொண்டு அதை வழிபடுவார்கள். அலைகளின் கை வந்து தங்கள் படையல்களை வாங்கிச் செல்லும்போது குரவையிட்டு கண்ணீர் மல்குவர். குழந்தை பிறந்த ஏழாவதுநாளே சிறு மரப்படகில் ஏற்றி அலைகளுக்குமேல் கொண்டுசெல்வது அவர்களின் சடங்கு. ஏழாவது வயதில் தன்னந்தனியாக கடலுக்குள் ஊர்ந்து அலைப்பரப்பைக் கடந்து ஆழ்கடல் வரை சென்றுவரவேண்டும். பதினெட்டு வயதில் ஆழ்கடலுக்குள் சென்று அவன் உருவை விடப் பெரிய ஒரு மீனை பிடித்துவரவேண்டும்.

பஞ்சஜனத்தின் கடற்கரை பேரலைகள் எழுவது. அது ஏன் என்று நான் கண்டடைந்திருந்தேன். இருபக்கமும் இரு மலைகள் கடலுக்குள் இறங்கிச் சென்றிருக்க நடுவே நின்றிருக்கும் நிலம் அது. அலைகள் மலைநீட்சிகளில் அறைபட்டு வெண்ணுரை சிதற எழுந்து சுழன்று கொப்பளிக்கும். அங்கு எழும் அலைகளின் திசைகளையும் சுழிகளையும் அங்கேயே பிறந்து வளர்ந்த முதியோராலும் கணிக்க முடியாது. கடலோட்டமும் காற்றும் அப்பாறைகளின் அமைப்பும் இணைந்து ஆற்றும் பெருநடனம் அது. அறியாதோர் அந்தக் கரையில் நின்றிருப்பதே கூட உயிரிடர் அளிக்கலாம். அலை வலமிருந்தோ இடமிருந்தோ மட்டுமல்ல சுழன்று நேர்பின்னாலிருந்துகூட வரும். ஒரு மரத் தடியை நீரிலிட்டால் விறகுத்துகள்களாகவே அதை காணலாம். பஞ்சஜனர் மட்டுமே அவ்வலைகளில் ஆட இயலும்.

அலையற்ற கடற்கரைகளையே மீனவர்குடிகள் நாடுவது வழக்கம். ஆனால் தரங்கர் இக்கடற்கரையை அறியாத தொல்காலத்திலேயே தெரிவுசெய்திருந்தனர். சிலமீன்கள் அலைநுரைக்கும் அருவிமுனையை நாடுவதுபோல. ஏனென்றால் அவை அங்கு வாழப் பழகிக்கொண்டால் எதிரிகளை அஞ்சவேண்டியதில்லை. தரங்கர்களுக்கு அங்குள்ள கொலைக்கடலே பெரும்காவல். அவர்களன்றி எவரும் அக்கடல் வழியாக அவர்களை அணுகமுடியாது. இருபக்கமும் எழுந்த மலைச்சுவர்கள் பக்கக் காவல். எதிரிகளற்றிருந்தமையால் அவர்கள் நட்புகளும் அற்றவர்கள் ஆனார்கள். ஆகவே காலத்தால் கைவிடப்பட்டு அங்கேயே மாற்றமின்றி வாழ்ந்தனர். பாரதத்தை அலைக்கழித்து கோத்திணக்கிய வேதப்பொற்சரடு அங்கு வந்துசேரவேயில்லை.

அவர்கள் பிற நான்கு குடிகளுடன் இணைந்தபோதுதான் உண்மையில் உரையாடவே கற்றனர் என்பார்கள். பஞ்சஜனர் அரசமைத்து சுங்கம் கொள்ளவும் வணிகம் செய்யவும் தொடங்கிய பின்னர் ஐந்துகுடிகளின் மொழிகளும் இணைந்து பஞ்சஜனம் என்னும் மொழியாகியது. வணிகர்களுடன் பேச அவர்கள் செம்மொழியின் சொற்களை கற்றனர். அரசே, நீர்ப்பாசியின் ஒருதுளி போன்றது செம்மொழியின் ஒரு சொல். அது எங்கோ வேதத்தில் இருந்து வந்திருக்கும். துளி ஈரம்போதும், அது முழுவேதத்தையும் கொண்டுவந்து அங்கே பரப்பிவிடும்.

ஐங்குடி அமைந்தபின் அங்கு வந்து அவர்களில் ஒருவனாகிய முதல் வைதிகன் நான். நான் அங்கு வேதமெழச் செய்தேன். விண்மீன் கணிக்கவும் கடல்மீன் கணிக்கவும் வேதம் உதவுவதை அவர்கள் கண்டனர். அங்கு சங்கன் காவலென அமர முதல்பெருவேள்வியை நான் இயற்றியபோது அவர்களும் இப்பெருநிலத்தின் வேர்ப்பின்னலில் இணைந்து இதன் குடிகளானார்கள். அவர்கள் கடலன்னையின் குரல் குடிகொண்ட சங்கத்தை வழிபடும் வழக்கம் கொண்டவர்கள். அவர்களின் குடிமூத்தோர் தலையில் ஒரு சங்கை அணிந்தபடியே அவையமரும் வழக்கம் கொண்டிருந்தனர். அவர்களின் தெய்வச்சொல்லின் வெண்ணிறவடிவம் என அமைந்திருந்தது பாஞ்சஜன்யம்.

பாஞ்சஜன்யத்தின் ஓங்காரமே வேதத்தின் முதல் ஒலித்துளி என நான் அவர்களுக்கு கற்பித்தேன். அவர்களின் அனைத்து இறைவழிபாடுகளிலும் பாஞ்சஜன்யம் மையமென அமர்ந்தது. தரங்கர்களின் அலைவிழவை ஐங்குடியினரும் கொண்டாடும் பெருவிழவென நான் மாற்றினேன். அதன் முதல்நாள் வேள்வியின் எரிகொடையும் மூன்றாம்நாள் கடற்கொடையும் நிகழும். கடற்கொடைநாளில் முதற்புலரியில் அலையன்னைக்கு அன்னமும் மலரும் அளித்து வணங்கியபின் பகல் முழுக்க போர்விளையாட்டுகளும், பெண்டிரின் நடனங்களும் நிகழும். அதன்பின் இளையோர் அலையிலிறங்கி கடலாடுவார்கள்.

உணவுக்கும் மதுவுக்கும் பின் அலைநீராட்டு நிகழ்ந்துகொண்டிருந்தது. வெற்றுடல்கொண்ட ஆணும் பெண்ணும் கொந்தளித்துச் சுழன்றடித்த அலைகளுக்குள் பாய்ந்து நீந்தித் துடித்தனர். சினந்த புரவிகள் போல பிடரி பறக்க எழுந்து வந்த அலைகள்மேல் தாவி ஏறி கைவீசி பறந்தனர். அறைந்து சுருண்ட அலைகளில் சென்று கரியபாறைகளை கைகளால் கவ்விக்கொண்டு ஏறி மேலே சென்றனர். ஆண்களும் பெண்களும் உடல்தழுவி நீருக்குள் புகுந்தனர். வெண்பற்கள் ஒளிவிடச் சிரித்தபடி மேலெழுந்து வந்தனர்.

முதியோர் கரைமுழுக்க நிரைநின்று கைவீசிக் கூவியும் துள்ளி ஆர்ப்பரித்தும் அவர்களை ஊக்கினர். கரைமீள்பவர்களுக்காக மணல்வெளியில் ஊனுணவும் மீனுணவும் சமைக்கப்பட்டன. அரசமேடையில் சங்கன் கோல்சூடி மணிமுடி அணிந்து பொன்னணிகளும் மணியாரங்களும் ஒளிவிட அமர்ந்திருந்தான். அவனருகே ஐங்குலத்தைச்சேர்ந்த அவன் ஐந்து அரசியரும் முடிசூடி அமர்ந்திருந்தனர். பின்னால் அமைச்சர் குழு நின்றிருந்தது. அரசமேடையின் வலப்பக்கம் பொன்மேடையில் பாஞ்சஜன்யம் மலர்சூடி அமர்ந்திருந்தது. அதனருகே வைதிகனுக்கான தர்ப்பைமேடையில் நான் அமர்ந்திருந்தேன். இடப்பக்கம் மங்கலமுழவுகளும் கொம்புகளும் குழல்களுமாக இசைச்சூதர் நின்றனர்.

அலைகளில் பெருங்கூச்சல் எழுவதை நான்தான் முதலில் கண்டேன். சுறாமீன் வந்திருக்குமென முதலில் எண்ணினேன். ஆனால் அத்தகைய அலைவெளியில் பெருஞ்சுறா நீந்த முடியாது. எப்போதாவது தவறிவரும் பெருமீன்கூட பாறைகளின் அறைபட்டு உயிரிழந்து உடல்சிதறிக் கரையொதுங்குவதே வழக்கம். அனைத்து இளையோரும் ஒருங்கு திரண்டு ஒரு மீன்சுழி என ஆவதை, அவர்கள் அலைகளில் எழுந்தமைந்து ஏதோ கூவுவதை கேட்டேன். அலை ஒன்று மேலெழுந்து அமைந்தபோது அதன் உச்சியில் ஒருகணம் யானைமருப்பிலென அமர்ந்து கைவீசி இறங்கி மறைந்த இளைய யாதவனை அடையாளம் கண்டுகொண்டேன்.

SOLVALAR_KAADU_EPI_38

வந்தவன் இளைய யாதவன் என்று நான் சொன்னதும் சங்கன் சினத்துடன் எழுந்து நின்றான். “படைகொண்டு வந்துள்ளானா? எங்கே?” என்றான். “தனியாக வந்துள்ளான். கடல்வழியாக” என்றேன். “நீந்தியா? இக்கடல் வழியாகவா?” என்றான் சங்கன். நான் “ஆம்” என்றேன். அவன் திகைப்புடன் நோக்கி நின்றான். அவன் மனைவியர் வியப்புடன் கிளர்ந்து எழுந்து நின்று நோக்கினர். தங்களுக்குள் துள்ளும் குரலில் மொழியாடிக்கொண்டனர்.

முதலில் இளையோரிடம் எழுந்த திகைப்பும் விலக்கமும் அகல்வதை கண்டேன். அவன் அந்த அலைகளில் ஏறிவந்தான் என்பதே அவனை அவர்களில் ஒருவனாக ஆக்கியது. அவனை அவர்கள் பிடிக்க முயன்றனர். அவன் அவர்களின் தோள்களை மிதித்து தாவி அகன்றான். தழுவிய கைகளினூடாக நழுவிச்சென்றான். ஒரு கட்டத்தில் அது ஓர் விளையாட்டாகியது. நீர்த்துளிகள் பளிங்குமணிகளாகத் தெறித்து ஒளிவிடும் வெளியில் அவன் கரிய முகம் எழுந்து சிரித்து மறைந்துகொண்டிருந்தது. கரையில் இருந்த அனைவருமே சொல்லின்றி அதையே நோக்கிக்கொண்டிருந்தனர். “அலைபிறந்தவன் போலிருக்கிறான்” என்று ஒரு பெண் சொன்னாள். “அவனை அலைமகள் கொழுநன் என்கிறார்கள்” என்று இன்னொருத்தி சொன்னாள். இக்கதைகளை எல்லாம் இவர்கள் எப்படி அறிந்தனர் என்று நான் வியந்தேன்.

பின்னர் அவன் கரையணைந்தான். அவனைச் சூழ்ந்து ஐங்குடியின் இளம்பெண்கள் முலைததும்பும் இளைய உடல்களுடன் கைவீசி நீந்தி வந்தனர். அவனைத் தழுவியும் அவன் உடல்தொட்டு வழுக்கியும் நீந்திச் சிரித்தனர். மணல்விளிம்பில் அவன் கரையேறியபோது அவன் உடலையே அங்கிருந்த அனைவரும் முழுவிழியாலும் நோக்கிக்கொண்டிருந்தனர். முற்றிய எருமைக்கொம்பு போல என நான் எண்ணிக்கொண்டேன். கருமையின் ஒளி. உறுதியின் ஒளி. உயிரின் ஒளியும்கூட. அத்தசை வளைவுகள், எலும்பசைவுகள்.

அவன் வந்து சங்கனின் அரசமேடைக்கு முன்னால் நின்றான். “அரசே, யாதவனாகிய நான் இங்கே உங்கள் குடியென வந்து நின்றிருக்கிறேன். தங்கள் பாதங்களை வணங்குகிறேன்” என்றான். சங்கன் அச்சொற்களை எதிர்பார்க்கவில்லை. முகம் மலர்ந்து அரியணையில் அமர்ந்து நிமிர்ந்த தலையுடன் “நன்று, வாழ்க!” என்று வாழ்த்தினான். “நான் இங்கு உங்கள் குலத்தை போருக்கு அறைகூவுகிறேன். படைக்கலம் எதுவாயினும் போர்முறை எதுவாயினும் எவருடனும் தனிப்போருக்கு நான் ஒருக்கமாக உள்ளேன். வென்றால் உங்கள் ஐங்குலமும் எனக்கு அடங்கவேண்டும்” என்றான்.

அவனைச் சூழ்ந்து வேலியென நின்றிருந்த ஐங்குடியினர் அதை எதிர்பார்க்கவில்லை. சிலகணங்கள் அமைதிக்குப்பின் ஒலிகள் கலைந்தன. மெல்லிய குரலில் அவன் என்ன சொன்னான் என்று பேசிக்கொண்டனர். மெல்ல குரல்கள் எழுந்து முழக்கமாயின. “பாரதவர்ஷம் முழுக்க இருக்கும் நடைமுறை இது. நீங்கள் என்னிடம் போர்புரிய மறுக்க முடியாது” என்றான். நான் சங்கனிடம் “வேண்டாம், மறுத்துவிடு!” என்றேன். என் விழிகளை அவன் சந்திக்கவில்லை. பீடத்தில் கைகளை வைத்தபடி விழிசுருக்கி நோக்கி அமர்ந்திருந்தான்.

இளைய யாதவன் “இங்குள்ள கன்னியர் சொல்க, நான் கோருவது பிழையா என” என்றான். அத்தனை பெண்களும் கைகளைத் தூக்கி “பிழையல்ல! ஆண்கள் எழுக! போர் நிகழ்க!” என்று கூவினர். பற்கள் ஒளிவிட கிள்ளைக்குரல்களுடன் கூவிச்சிரித்தனர். நான்கு பெண்கள் ஓடிச்சென்று அவனைத் தூக்கி தங்கள் தோள்மேல் உயர்த்தினர். “ஆம்! இளைய யாதவனுக்கு இங்கே யார் நிகர்?” என்று ஒருத்தி உரக்கக் கூவினாள். “ஆம்! ஆம்! சொல்க!” என்று மற்ற பெண்கள் கூவினர்.

சங்கன் எழுந்து தன் செங்கோலையும் மணிமுடியையும் எடுத்து அமைச்சர்களிடம் கொடுத்தான். நான் “வெறும் மற்போர் போதும். வென்றான் என்றால் அவன் கோருவதை அளிப்பேன் என சொல்லளிக்க வேண்டாம்” என்றேன். “இச்சிறுவன் வெல்வான் என்கிறீர்களா, அந்தணரே?” என்றான் சங்கன் சினத்துடன். ஒன்றும் சொல்லமுடியாதென்று உணர்ந்து நான் அமைதியானேன். சங்கன் மேலாடையைக் களைந்தபடி “இளையோனே, என்னுடன் தோள்கோத்து களம் நில்!” என்றான்.

“அவ்வண்ணமே” என்றான் இளைய யாதவன். “வெற்றிக்குப்பின் நான் கோருவது ஐங்குலத்தின் அரசனாக அமர்தலை” என்றான். “முதலில் நீ களத்தில் எத்தனை கணம் நிற்பாய் என்று பார்… தன்னந்தனியாக கடலுக்குள் சென்று சுறா கொண்டுவந்து அரசனாக ஆனவன் நான்” என்றான் சங்கன். “ஆம், அதை அறிந்தே உங்களை வெல்லவந்தேன். அச்சுறாவையும் இன்று வென்றவனாவேன்” என்றான் இளைய யாதவன். பெண்கள் கூவிச்சிரித்து “வெல்க! வெல்க!” என்றனர்.

அவர்கள் மணலில் இறங்கி தோள்விரித்து நின்றனர். கொடுக்கு விரித்த கடல்நண்டின் முன் ஒரு சிறு கருவண்டு நிற்பதுபோலத்தான் இருந்தது. தன் பெருந்தோள்களைத் தட்டியபடி சங்கன் சுற்றிவர அவனை கூர்ந்து நோக்கியபடி இளைய யாதவன் சுழன்றான். அப்போதும் அவன் முகத்தில் இளநகைப்பு இருந்தது. அவனை நோக்கிக்கொண்டிருந்தபோது எனக்கு ஏற்பட்ட வியப்பை இப்போதும் நினைவுகூர்கிறேன். அவனுக்கு அச்சமென்பதே இல்லையா? வென்றுவிடுவோம் என அத்தனை உறுதியாகவா எண்ணுகிறான்? தனிப்போரில் எந்தப் பெருவீரனும் தோற்பதற்கு வாய்ப்புள்ளது என்று அறிந்திருக்கிறேன். தான் யாரென அறிந்தவர்களுக்குரிய உறுதியா அது? அல்லது எதையுமே அறியாத குழந்தையாடலா? அனைத்தையும் வெறும் லீலை என்று கற்பிக்கும் எந்தையின் சொற்களை அவ்வண்ணமே தலைசூடிக்கொண்டானா?

ஆனால் போர் தொடங்கியதுமே தெரிந்துவிட்டது, அவனே வெல்வான் என. அவனே வென்றாகவேண்டும். அதை பின்னாளில் பலமுறை பகுத்து ஆய்வு செய்திருக்கிறேன். நம் எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் கதைகளுக்கான இடம் பற்றி எண்ணிப்பாருங்கள். கதைகளில் உள்ள ஒத்திசைவு வாழ்க்கையில் இல்லை. எனவே நாம் கதைகள் வாழ்க்கையை வழிநடத்தவேண்டுமென விழைகிறோம். கதை போல வாழ்க்கையை ஆக்க நம்மையறியாமலேயே முயல்கிறோம். அப்படியே கதைபோல நிகழ்ந்தது என்பதே நாம் ஒரு நிகழ்வைப்பற்றி சொல்லும் உச்சநிலை பாராட்டு. அது கதையல்ல என்றால் கதையென்றாக்கிக் கொள்வோம். கதையென ஒத்திசையாத ஒன்றை நினைவிலிருந்தே அகற்றுவோம்.

அரசே, நம் வாழ்க்கையில் பெரும்பாலும் கதையாக நாம் கேட்டவற்றையே மீளவும் நடிக்கிறோம். அந்நிகழ்வின் அறமோ நெறியோ அல்ல, அதில் செயல்படும் ஆற்றல்கள் அல்ல, அதன் பின்னாலுள்ள கதையின் வடிவமே நம் உள்ளத்துள் கரந்து அத்தருணத்தை முடிவுசெய்கிறது. அங்கே இளைய யாதவன் வெல்வதை அத்தனை இளையோரும் உளவிழிகளால் நோக்கிவிட்டனர். ஏனென்றால் அதற்கிணையான கதைகளை அவர்கள் பலமுறை கேட்டு அதில் பலமுறை உளம்நடித்திருந்தனர். அவனை நீங்கள் நன்கறிவீர்கள் அரசே, தன்னை ஒரு கதையென ஆக்கிக்கொள்வதையே எப்போதும் செய்துகொண்டிருக்கிறான். ஓர் எழுச்சிமிக்க நாடகத்தருணமென அனைத்தையும் ஆக்கிக்கொள்கிறான். அன்று அவன் அலைகளின் மீதேறி பஞ்சஜனத்தின் விழாவுக்கு வந்ததே சிறந்த நாடகத் தொடக்கம்.

தனித்த அழகிய இளைஞன், ஒளிவிடும் சிரிப்புடன் மழலையின் தெளிந்த விழிகளுடன் வந்து மற்களத்தில் நிற்கிறான். எதிரே அவனைவிட பல மடங்குபெரிய தோள்கள் கொண்ட மல்லன். அங்கிருக்கும் அன்னையரும் கன்னியரும் யார் வெல்லவேண்டுமென விழைவார்கள்? அத்தனைபேரின் விழிகளும் வேண்டிக்கொண்டிருந்தன. உள்ளங்கள் ஏங்கிக் கனிந்திருந்தன. நான்குமுறை அவன் சங்கனை தோள் தவிர்த்துத் தாவியகன்றபின் இளையோரும் அவன் வெல்வதையே விழைந்தனர். ஏனென்றால் அவன் வென்றால்தான் புதுவரலாறு நிகழ்கிறது. ஏதோ ஒன்று முன்னகர்கிறது. இளையோர் விழைவதெல்லாம் புதியனவற்றை மட்டுமே. அது அழிவேயாக இருப்பினும்.

அங்கு அது புதிது. ஆனால் எத்தனைமுறை நிகழ்ந்த கதை! அங்கு கதை மெல்ல அனைவரையும் கைப்பற்றிக்கொண்டு தன்னை நிறுவியது. இனி அதன் விழைவே நிகழுமென நான் நன்கறிந்திருந்தேன். வியப்பென்னவென்றால் அதை சங்கனும் உள்ளூர அறிந்திருந்தான். அங்குள்ள உள்ளங்கள் திரண்டு வந்து எதிரே நின்றபோது அவன் தோள்கள் அவ்வெடை தாளாது தழையத் தொடங்கின. அத்தனைபேரையும் கதைமாந்தராகக் கொண்டு அந்த நாடகம் நிகழ்ந்து முடிந்ததுமே நேராகத் தொன்மமாக ஆகியது. அவன் சங்கனை தூக்கிச்சுழற்றி தரையில் அறைந்து அவன் இரு கைகளையும் பற்றி முறுக்கி ஒன்றாக பிடித்துக்கொண்டு கைதூக்கி வெற்றிக் குரலெழுப்பினான். கூடி நின்ற அனைவரும் அவனுடன் சேர்ந்து ஆர்ப்பரித்தனர்.

அவன் எழுந்தபோது இளங்கன்னியர் பாய்ந்துசென்று அவனைப் பற்றித் தூக்கி தலைமேல் வீசி கூவி ஆர்த்தனர். இளையோர் அவன் மேல் மேலாடைகளையும் கிளிஞ்சல்களையும் வீசி கூச்சலிட்டனர். அன்னையர் அவனை தொட்டு நோக்க முண்டியடித்தனர். அங்கே நிகழ்ந்துகொண்டிருந்த உணர்வுக்கொப்பளிப்பை என் பீடத்தில் அமர்ந்தபடி நான் நோக்கிக்கொண்டிருந்தேன். எத்தனை முறை நிகழ்ந்த நாடகம் இது. இன்னும் எத்தனை முறை இது இங்கே நிகழும். ஒருவேளை மண்மீது எங்கோ ஒவ்வொரு நாளும் கணமும் இது நிகழ்ந்துகொண்டிருக்கிறதுபோலும். ஒரு தலைவனை தங்களுக்குள் இருந்து எடுத்து முன்வைக்கிறார்கள். எவர் முன்? இதோ தலைக்குமேல் தூக்குகிறார்கள். அப்படியென்றால் தெய்வங்களுக்கா காட்டுகிறார்கள்?

அவன் வீரர்களுக்குரிய முறையில் நடந்துகொண்டான். சங்கன் முடிதுறக்க அதை வாங்கி தான் அணிந்துகொண்டு ஐங்குடியின் கோல்சூடி அரியணையில் அமர்ந்து அலைவிழவை தலைமைதாங்கி முடித்துவைத்தான். உடனே அந்த முடியை எடுத்து சங்கனின் மூத்த மைந்தனின் தலையில் சூடி அரிமலரிட்டு வாழ்த்தி அவனை ஐங்குடியின் அரசனாக ஆக்கினான். சங்கனின் ஐந்து துணைவியரையும் அன்னை என ஏற்று அடிபணிந்து மலர்கொண்டு வாழ்த்து பெற்றான். தன் வெற்றிக்கு ஈடாக அவன் கோரியது இரண்டே. ஐங்குலம் என்றும் துவாரகைக்கு அணுக்கர்களாக இருக்கவேண்டும். என்னை அங்கிருந்து அழைத்துச்செல்ல ஒப்பவேண்டும்.

ஐங்குலத்து மூத்தோர் கூடி அவனை வணங்கி அவர்களின் அருங்கொடையாக பாஞ்சஜன்யத்தை அவனுக்கே அளித்தனர். ஐங்குலம் என்றும் துவாரகையின் ஒருபகுதி என்பதை அக்கொடை வழியாக அவர்கள் உறுதியளித்தனர். இன்று அவ்வுறவு மேலும் வலுவாகிவிட்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பட்டத்து இளவரசர் பிரத்யும்னர் சங்கனின் மகளை மணம் புரிந்துகொண்டிருக்கிறார். துவாரகையின் வல்லமை வாய்ந்த கடலோடிகளில் பெரும்பாலானவர்கள் ஐங்குலத்தோரே.

பாஞ்சஜன்யம் இன்று துவாரகையின் அரசவையில் பொற்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் துவாரகையின் குடிப்பேரவை கூடும்போது குலங்கள் இணைந்தமர்வதற்கான அறைகூவலாக அது ஒலிக்கிறது. அவை நிறைவில் இளைய யாதவன் தன் ஆணைகளை உரைத்து முடித்ததும் அவன் சொல்லுக்கு தெய்வங்கள் அளிக்கும் ஆதரவுக்குரலாக அது ஒலித்தமைகிறது. பாஞ்சஜன்யமே அவனுள் வாழும் தெய்வத்தின் ஓசை என்கிறார்கள் துவாரகையின் சூதர்.

அவன் என்னிடம் வந்து பணிந்து “உங்களுக்காகவே இங்கே வந்தேன், ஆசிரியமைந்தரே. உங்களை என் ஆசிரியரிடம் அழைத்துப்போவதாக உறுதி கொடுத்தேன்” என்றான். “நான் அதை அறிந்திருக்கிறேன். எந்தையை சந்திப்பதில் எனக்கும் ஆர்வமிருக்கிறது. நீ செல்க! நான் இங்கு என் பணிகளை இருநாட்களில் முடித்துவிட்டு உன்னைத் தொடர்ந்து உஜ்ஜயினிக்கு வருகிறேன்” என்றேன். “நன்று, உங்கள் சொற்களை ஆசிரியரிடம் அறிவிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவன் துவாரகைக்கு மீண்டான்.

நான் அங்கே செய்து முடிக்க பல பணிகளிருந்தன. எனக்குப்பின் அங்கு வைதிகனாக அமர்வதற்கு என் முதல்மாணவனாகிய சக்ரனை அமைத்தேன். ஐங்குடிக்குரிய முதல்நூல்களையும் வழிநூல்களையும் வகுத்து அந்நெறிகளை அரசவை ஏற்க வைத்தேன். அங்கு வேள்விகளும் பூசனைகளும் நிகழவேண்டிய முறைமையையும் குடிகளின் ஒழுக்கமும் அறமும் செல்லவேண்டிய வழிகளையும் வகுத்து நான் எழுதிய சங்கஸ்மிருதி என்னும் நூலை அவர்களின் குடியவை ஏற்க வைத்தேன். அனைத்தையும் ஒருக்கியபோது அங்கு நான் இருந்தாகவேண்டுமென்பதில்லை என்று ஆயிற்று. அவர்களிடம் விடைபெற்று நான் கிளம்பினேன்.

ஐங்குடியினரும் விழிநீர் வார வந்து என்னை வழியனுப்பினர். என் கால்களில் இளையோர் நிரையென வந்து விழுந்து வணங்கி மலரும் சொல்லும் கொண்டனர். இளங்குழவியரை என் காலடித் தடங்களில் வைத்து எடுத்தனர். என் கால்பொடியை எடுத்து ஆடைகளில் முடிந்துகொண்டனர். பஞ்சஜனத்தின் எல்லையில் நின்று திரும்பி நோக்கியபோது அழுநீர் நிறைந்த ஆயிரம் விழிகளைக் கண்டபோது ஒன்றுணர்ந்தேன், நான் முன்னரே அங்கிருந்து கிளம்பிவிட்டிருக்கவேண்டும்.

அங்கே அதுவரை நான் இருந்தது என் ஆணவத்தால்தான். அந்தணன் விதைக்கவும் காக்கவுமே கடமைப்பட்டவன், அறுவடையை செய்வான் என்றால் அவன் சூத்திரனாவான். களஞ்சியம் நிறைப்பான் என்றால் வைசியன் ஆவான். கோல்கொண்டு அதை காக்கையில் ஷத்ரியன் ஆவான். பசித்தவருக்கு பகிரமறுத்தான் என்றால் வருணமற்றவன் ஆவான். ஒருபோதும் தன் அந்தண்மையை மீண்டும் அடையமாட்டான்.

நீள்மூச்சுடன் திரும்புகையில் எண்ணிக்கொண்டேன், எந்தை காலடியில் சென்று பணிவேன். வெல்வதன் தோல்வியை அறிந்துவிட்டேன் தந்தையே. அனைத்தும் லீலையே என்பதை விழிமுன் கண்டு மீண்டுவிட்டேன். இனி என்னை மாணவனாக ஏற்றுக்கொள்க. இனி உங்கள் மெய்மையை எனக்குள் ஊற்றுக. இவையனைத்தும் இக்கலம் இவ்வண்ணம் ஒழிவதற்காகத்தான் நிகழ்ந்தன போலும்.

ஆனால் நான் மீண்டு வந்தபோது எந்தை சாந்தீபனி குருநிலையில் இல்லை. நான் வந்துசேர்வதற்கு முந்தையநாள்தான் இளைய யாதவன் வந்து எந்தையிடம் சொல்லாடிச் சென்றிருந்தான். அன்றுகாலை எந்தை குருநிலை நீங்கியிருந்தார். அவர் எனக்கிட்ட ஆணை மட்டும் அங்கிருந்தது. நானே சாந்தீபனி குருநிலையின் ஆசிரியனாக அமர்ந்து அதை நடத்தவேண்டும் என்று தந்தை கூறியிருந்தார்.

அதை என்னிடம் சொன்ன அவரது மாணவர்களிடம் நான் திகைப்புடன் கேட்டேன் “நானா? எனக்கு அவர் எதையும் கற்பிக்கவில்லையே?” அவர்கள் “இல்லை, கற்பிக்கவேண்டிய அனைத்தையும் அவனுக்கு அளித்துவிட்டேன். அவனே அமர்க என்றே முதலாசிரியர் சொன்னார்” என்றனர். “குருகுலக் கல்வி முடித்து அவன் மீள்கிறான். தந்தையின் வாழ்த்து அவனுக்கு உண்டு என்று சொல்லுங்கள் என்றார் முனிவரே” என்றனர்.

“அவர் சொல்லிச்சென்றது என்ன என்று எனக்குப்புரியவில்லை. ஆனாலும் அவர் ஆணையை ஏற்று நான் இக்குருநிலையின் தலைவனாக ஆனேன். அதன் பின் அறிந்தேன் அவர் சொன்னதன் பொருளென்ன என்று” என்றார் சாந்தீபனி முனிவர். “அவர் கற்பிக்க விழைந்தது பெருவிளையாட்டை. அவரது மாணவர்கள் அதை லீலை என்னும் கருத்துருவாகவே அறிந்தனர். நான் அதில் ஆடி மீண்டு வந்திருந்தேன்.”

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 37

[ 4 ]

அந்திவேளை வேள்வியும் சொல்லாடலும் முடிந்தபின் முன்னிரவில் சாந்தீபனி குருநிலையின் முதன்மை ஆசிரியரின் தனியறைக்குள் தருமன் அவர் முன் அமர்ந்திருந்தார். அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் முறுகிச்சென்று முறிந்திருந்ததன் அமைதி அங்கே நிலவியது. “பிருகதர் எந்தையின் அணுக்கர். இனியவர். எளிய பற்றுக்களால் ஆனவர். அவருக்கு எந்தைமேல் உள்ள அன்பு இப்போது இளைய யாதவன் மீதான வஞ்சமாக மாறிவிட்டது” என்றார் சாந்தீபனி முனிவர். அவர் முகம் மெல்லிய சிரிப்பில் வளைந்தது. “அது எளியதென்பதனாலேயே கடினமானதும்கூட.”

“அரசே, எளியமானுடர் இனியோர் என்று அறிவுடையோர் இரங்கிச் சொல்வதை கேட்டிருப்பீர். அது கற்றவரின் ஆணவத்தால் சொல்லப்படுவதன்றி வேறில்லை. கல்வியே ஒருவனை தன்னைத் தான் காணச்செய்கிறது. தன்னை அறியாதவனின் உணர்வுகள் அனைத்தும் விலங்கியல்பு போல தன்பெருக்காக எழுபவை. அது அன்பென வெளிப்படுகையில் அதிலிருக்கும் கட்டின்மை நம்மை வியக்கச்செய்கிறது. எண்ணத்தெரிந்தவனின் தடைகளேதும் அதில் இருப்பதில்லை என்பதனால் அது இறைவடிவமென்றே நம்மால் எண்ணப்படுகிறது.”

“ஆனால் வெறுப்பும் சினமும் ஐயமுமாக அது மாறும்போது அந்தக் கட்டின்மையும் விளக்கமின்மையும் நம்மை அச்சுறுத்துகின்றன. நம் சொற்களும் நெறிகளுமெல்லாம் முழுமையாகவே தோற்று நின்றிருக்கும் இடம் அது” என்றார் சாந்தீபனி முனிவர். “கட்டற்ற பேரன்பு மட்டுமே அவ்வண்ணம் ஒருவனில் வெளிப்படும் என்றால் அவன் கல்லாத எளியோன் அல்ல, கடந்துசென்ற மெய்யறிவன். ஆனால் பேரன்புக்கும் பெருவஞ்சத்திற்கும் அணுவிடையே வேறுபாடு. பாலே திரிவதற்கு எளியது.”

“ஆம்” என்று தருமன் சொன்னார். “அதை நெறியவைகளில் பலமுறை பார்த்திருக்கிறேன். நெறிகளுக்கு அப்பாற்பட்ட பெருவஞ்சமும், ஆறாச் சினமும், விழிமூடிய தன்னலப்போக்கும் எளிய மக்களில்தான் பெரும்பாலும் வெளிப்படுகின்றன.” சாந்தீபனி முனிவர் “எந்தைக்கும் இளைய யாதவனுக்கும் இடையே நிகழ்ந்த பூசல் என்னவென்று என்னால் ஒருசொல் மாறாது சொல்லிவிடமுடியும். ஏனென்றால் அவர் நானே” என்றார். “நான் உஜ்ஜயினி சாந்தீபனி குருநிலைக்குத் திரும்பி வந்தபோது எந்தை அங்கில்லை. கதறியபடி ஓடிவந்த பிருகதர் அவர் அன்று காலையிலேயே கிளம்பிச்சென்றதை என் காலடியில் விழுந்து நெஞ்சிலறைந்தபடி சொன்னார். அக்கணமே அனைத்தையும் நான் தெளிவுறக்கண்டேன். பின்பு ஒவ்வொருவரிடமாக கேட்டு அறிந்துகொண்டேன். துவாரகையில் சென்று தங்கிய நாட்களில் இரு யாதவர்களிடமும் நிகழ்ந்தவை குறித்து பேசியிருக்கிறேன்.”

எந்தைக்கு மலைமகள் ஒருத்தியில் பிறந்தவன் நான். நீர் எளிதில் துளியாகிறது. உலோகம் மிகுவெப்பத்தில் உருகி அனலென்று சொட்டுகிறது. எந்தை துறவுபூணவே எண்ணியிருந்தார். ஐம்புலன்களையும் வெல்வது அவருக்கு எளிதாகவே இருந்தது. ஆனால் கனிவு என்னும் ஆறாவது புலனை வெல்ல அவரால் இயலவில்லை. காட்டில் நீராடச்செல்லும்போது ஒர் அன்னைநாய் தன் மைந்தனை நாவால் உடலெங்கும் நக்குவதை கண்டார். அன்னையின் கண்களிலிருந்த மயக்கம் அவரை மெய்விதிர்ப்பு கொள்ளச்செய்தது. எளிய நாய் ஒன்று தெய்வவடிவாக அங்கிருப்பதை கண்டார். அக்கணத்தில் அவர் ஒரு மைந்தனுக்காக விழைந்தார்.

அவ்விழைவே நான். அரிதில் பிறந்தவனாகிய என்னை தன் வடிவாகவே அவர் கண்டார். தன் மடியிலமர்த்தி வேதச்சொல் கற்பிப்பார். தானறிந்த அனைத்தையும் ஒரேநாளில் எனக்கு கற்பிக்க முயல்வார். என் இளமையின் சிறிய கலத்தை உணர்ந்ததும் சினந்து என்னை உலுக்குவார். உடனே கனிந்து தழுவி கண்ணீர்மல்குவார். எப்போதும் என்னைச் சூழ்ந்தே இருந்தது அவருடைய சித்தம். அதை நான் ஒரு மாறாத்துணை என என்னுடன் எப்போதுமே உணர்ந்துகொண்டிருந்தேன். மழைக்காலப் பேரருவியென என்மேல் கொட்டிக்கொண்டே இருந்தார்.

அவரிடமிருந்து தப்புவதற்காக இளமையிலேயே எங்காவது கிளம்பிச்செல்லத் தொடங்கினேன். ஆனால் ஓரிரு நாட்களிலேயே நான் அவருக்காக தவிக்கத் தொடங்குவேன். மீண்டு வந்தால் படுத்தபடுக்கையாக இருக்கும் அவரைத்தான் காணவேண்டியிருக்கும். ஒரு சொல் எழாமல் என்னைத் தழுவி கண்ணீர்விடுவார். அரசே, தாயுமான தந்தை இரண்டுக்கும் அப்பால் சென்று பலிகொள்ளும் தெய்வமாக ஆகிவிடுகிறார்.

பின்னர் என்னையே நான் நுணுகி ஆராயத்தொடங்கினேன். ஏன் அவரை விட்டுப்போக என்னால் இயலவில்லை? அது பேரன்பினால் என்றால் அவருடனிருக்கையில் நான் ஏன் விட்டுச்செல்லத் தவிக்கிறேன்? அவர் என்னை முற்றிலும் சூழ்ந்துகொண்டிருந்தார். என் காற்றும் வானும் பொருள்வயப் பேருலகும் அனைத்தும் அவரே என்பதுபோல. அவர் சொல்லாகவே இருந்தது என் சித்தம். நானே எதையேனும் எண்ணிக் கண்டடைந்து மகிழ்ந்த மறுகணமே அது அவரது சொற்களே என்று உணரும் தருணத்தின் சோர்வு ஒவ்வொன்றும் ஓர் இறப்பாக இருந்தது எனக்கு.

அப்படியென்றால் அது அன்பல்ல. ஏன் நான் மீண்டு வருகிறேன் என்றால் பிறிதொரு உலகில் வாழ எனக்குப் பழக்கமில்லை என்பதனால்தான். அந்த மெய்யுலகங்களில் நான் அயலவனாகத் தவிக்கிறேன் என்பதனால்தான். நான் என்னை மீட்டுக்கொள்ளாவிட்டால் வெறும் நிழலென எஞ்சுவேன். உயிர்வாழும் ஏட்டுச்சுவடி. மெய் பிதற்றும் கிளிப்பிள்ளை. நான் என்னை அவ்வாறு எண்ணவே நடுங்கினேன். நான் எனும் சொல்லாக எனக்குள் எழுந்த தெய்வம் விழிசீற ஆயிரம் கைகள் கொண்டு எழுந்தது அப்போது. பின்பு தெளிந்த நிலையிலும் அதுவே உறுதியாகப் பட்டது. எந்தைக்கு நல்மைந்தனாக நானிருப்பதென்பதேகூட அவரிலிருந்து பிரிந்து நான் என என்னை வளர்த்துக்கொள்வதே.

வேறு வழியே இல்லை, குருதி வழிய அறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். உடைந்து விழுந்த பிஞ்சிலிருந்தும் பால் வடியும். அது தாய்மரத்தின் பால்தான். ஆயினும் அப்பிஞ்சின் குருதியும் கூட. கிளம்பிச்சென்றாகவேண்டும், இன்றே, இல்லை நாளை. இனி பிந்தலாகாது, இனியில்லை பொழுது… இவ்வாறு நாட்களை செலுத்திக்கொண்டிருந்தேன். என் குழப்பங்களை அறியாது தந்தை மேலும் மேலும் கைகள் பெற்று என்னை தழுவிக்கொண்டிருந்தார். ஒரு கை எனக்கு ஊட்டியது. ஒரு கை என்னை நீராட்டியது. ஒரு கை எனக்கு கற்பித்தது. ஒரு கை இரவில் என்னை கால்தழுவி ஆற்றியது. ஆசிரியர், நண்பர், ஏவலர் அனைவரும் அவரே.

பொறுக்கமுடியாமல் ஒருநாள் கிளம்பிச்சென்றேன். அது இயல்பான உதிர்வே என கிளம்பியபின் கொண்ட விடுதலையால் உணர்ந்தேன். அவ்விடுதலை நாள் செல்லச்செல்ல வளர்வதிலிருந்து உறுதி செய்துகொண்டேன். சாந்தீபனி காட்டிலிருந்து தெற்கே உஜ்ஜயினி வந்தேன். அங்கிருந்து மேலும் சென்றேன். அங்கிருந்து கிளம்புவதற்கு முன் பிருகதரை அழைத்து நான் பிரபாச நீரில் ஆடிவிட்டு திரும்பிவருவதாகச் சொன்னேன். ஆனால் நான் சென்றது மேற்குமலைகளின் உச்சியில் சௌராஷ்டிர நாட்டுக்குள் அஷ்டசிரஸ் முடிமேல் இருக்கும் பிரபாசத் தீர்த்தத்துக்கு அல்ல. மாளவத்திற்கு வடக்கே இன்றைய துவாரகைக்கு தென்னெல்லையாக அமைந்த பிரபாசக் கடல்துறைக்கு. அனைவரும் அறிந்த இடம் யாதவர்களின் தூநீராட்டுத் தலமான பிரபாச தீர்த்தம்தான். அப்படித்தான் பிருகதர் எடுத்துக்கொண்டார்.

எந்தை என்னைப் பின் தொடர்ந்து வந்து நாளும் என்னைப் பற்றிய செய்திகளை அவருக்கு அனுப்ப தன் மாணவர்களையோ ஒற்றர்களையோ அமைப்பார் என அறிந்திருந்தேன். ஓரிரு நாட்களுக்குள்ளாகவே என்னை திரும்பிச்செல்லும்படி கோரி மன்றாட்டு வந்துவிடும். தந்தையிடம் பொய் சொல்லக்கூடாது என்பதனால் பிராபச ஜலம் என்று பிருகதரிடம் சொன்னேன். அவர் தான் எண்ணியதையே கேட்கும் எளிய உள்ளத்தவர் என அறிந்திருந்தேன். அவ்வண்ணமே நிகழ்ந்தது. எந்தை பிரபாச தீர்த்தம் வரை ஒற்றர்களை அனுப்பி நான் அங்கே சென்றடையவில்லை என்று கண்டடைந்தார்.

பிரபாசத் துறை குறித்து நான் வியாசரின் காவியத்தில்தான் படித்தேன். அது கடல் நிலத்திற்குள் பீரிட்டு வந்து உருவாக்கிக்கொண்ட ஒரு பெருஞ்சுழி. அதன் விளிம்பில் இறங்கினால் நீர் நம்மை அள்ளி நெடுந்தொலைவுக்கு சுழற்றிக் கொண்டுசென்று மறு எல்லையிலுள்ள சிறிய குகைவாயிலுக்கு முன் விட்டுவிடும். அக்குகை அதனுள் உள்ள இயற்கையான அருமணிகளால் ஒளிகொண்டது. அதனுள் அமர்ந்தால் ஊழ்கம் எளிதில் வயப்படும் என்றது வியாசமாலிகை. ஆனால் அங்கு செல்லும் தகுதி நமக்கு உண்டா என்பதை கடலே முடிவு செய்யும். தகுதியற்றவர்களை அது தன் சுழிமையத்திற்கு கொண்டுசென்று விழுங்கிவிடும்.

“அங்கு சென்று என்னை நானே நோக்கி அறியவேண்டுமென விழைந்தேன். ஓராண்டில் திரும்பி வரலாமென்று எண்ணித்தான் சென்றேன். ஆனால் அங்கே நான் எண்ணாதவை அனைத்தும் நிகழ்ந்தன” என்று சாந்தீபனி முனிவர் தொடர்ந்தார். “பிரபாசத் துறைக்கு நெடுங்காலமாக எவரும் செல்வதில்லை என்று அவந்திக்குச் சென்ற பின்னரே அறிந்தேன். மாளவத்தின் ஆட்சிக்கு அப்பாற்பட்ட நிலம் அது. அங்கு முனிவர்கள் செல்வதற்கான பாதை ஒன்று முன்பிருந்தது. ஆனால் சிலநூறாண்டுகளாக அப்பகுதியில் வாழ்ந்த ஐந்து தொல்குடிகள் ஒற்றைக் குமுகமாக இணைந்து அரசு ஒன்றை அமைத்துக்கொண்டிருந்தனர். அதற்கு பஞ்சஜனம் என்று பெயர். மாளவமும் பிற அரசுகளும் அதை அஞ்சின.”

ஐந்து வெவ்வேறு குடிகள் கலந்துருவானது பஞ்சஜனம். அந்நிலம் முற்றிலும் வேறுபட்ட ஒன்று. அடர்காடு சூழ்ந்த மலைப்பிரிவு ஒன்று நீண்டு கடலுக்குள் இறங்கி நின்றிருக்கும். அது சங்கு வடிவமானது. அதை இன்று சங்ககிரி என்றே சொல்கிறார்கள். மலைத்தெய்வமான தாரையை வழிபடும் தாராபுத்ரர்களும், பறக்கும் நாகத்தை வழிபடும் சிரோநாகர்களும், முகில்வடிவ யானையை வழிபடும் கஜமேகர்களும் அந்த மலைக்காட்டில் வேட்டையாடி வாழ்ந்தனர். கடலாமையை வழிபடும் மகாஜலர்களும் அலைத்தெய்வத்தை வழிபடும் தரங்கர்களும் கடலோரமாக மீன்பிடித்து வாழ்ந்தனர். அவர்களுக்குள் பல்லாயிரமாண்டுகளாக ஓயாது போர் நிகழ்ந்துவந்தது.

சிலநூறாண்டுகளுக்கு முன்பு பெருங்கடல்கொந்தளிப்பு ஒன்று நிகழ்ந்தது. கடலலைகள் எழுந்து சங்ககிரியை முழுமையாகவே மூடின. கடலை அறிந்திருந்த தரங்கர்ளும் மகாஜலர்களும் நீருக்குமேல் படகுகளில் ஏறி தப்பினர். அலைகள் மலைவிலாவை ஓங்கி அறைந்து நுரை எழுப்பின. நீர் வடிந்து கடல் நிலைமீண்டபோது பாறையிடுக்குகளில் எல்லாம் சிப்பிகளும் சங்குகளும் சோழிகளும் நிறைந்திருப்பதை மலைமக்கள் கண்டனர். அவர்கள் அதை ஆர்வத்துடன் பொறுக்கி சேர்த்தனர். ஏனென்றால் கடல்குடிகளை அஞ்சி அவர்கள் கடலருகே செல்லும் வழக்கமே இருக்கவில்லை.

இரு பாறைகளுக்கு நடுவே கிடந்த பெரிய சங்கு ஒன்றை கஜமேகர்குலத்தைச்சேர்ந்த இளைஞன் ஒருவன் கண்டான். முதலில் அதை அவன் ஒரு வெண்பன்றிக்குட்டி என்றே எண்ணினான். பின்னர் அது பளிங்குப்பாறை என நினைத்தான். வழுக்குப் பாறைகளில் தொற்றி ஏறி அவன் மேலே சென்று அதை கையில் எடுத்தான். வெண்ணை உறைந்து கல்லானதுபோல குளிர்ந்து போயிருந்த அது ஒரு பெரிய சங்கு என தெரிந்தது. பிற சங்குகளிலிருந்து அது வேறுபட்டிருப்பதை அவன் கண்டான். அது வலம்புரியாக சுழன்றிருந்தது.

அதை அவன் எடுத்துக்கொண்டு சென்று துளையிட்டு ஊதினான். சிம்மம்போல அது ஒலியெழுப்பக் கேட்டு மலைச்சரிவில் வாழ்ந்த மதயானைகள்கூட மத்தகம் தாழ்த்தின. அதை கையிலேந்தியதனாலேயே அவன் குடியில் அவன் அனைவராலும் பணியப்பட்டான். அவனை அக்குடி தங்கள் அரசனாக்கியது. ஒருநாள் கஜமேகர்கள் தங்கள் படைக்கலங்களுடன் திரண்டு அவன் தலைமையில் மலையிறங்கி தரங்கர்களின் சிற்றூர்களுக்கு சென்றார்கள். அவர்கள் வருவதைக்கண்டு சினந்து தங்கள் மீனெறி வேல்களுடனும் தூண்டில்முட்களுடனும் தரங்கர்கள் எதிர்த்துவந்தனர். கஜமேகர்களின் தலைமுகப்பில் அவர்களின் தலைவன் மிகப்பெரிய வலம்புரிச் சங்குடன் வருவதைக் கண்டனர். அவன் அதை மும்முறை ஊதியதும் அவர்கள் படைக்கலங்களை விட்டுவிட்டு முழங்கால் ஊன்றி பணிந்தனர்.

அவன் அவர்களை வென்று அவர்களை தன் மக்கள் என அறிவித்தான். அவர்களின் குலத்தலைவி அமரும் பாறைப்பீடத்தில் அந்த சங்கை தன் தலையில் வைத்தபடி அரசன் என அமர்ந்தான். அவர்கள் அவனுக்கு மீனும் சிப்பியும் முத்துக்களும் அளித்து வணங்கினர். அவன் பெருஞ்சங்கத்தின் கதை அனைத்து குலங்களுக்கும் பரவியது. எந்த எதிர்ப்பும் இன்றி ஐந்து குலங்களும் அவனை தங்கள் அரசனாக ஏற்றுக்கொண்டன. அவன் தன் தலையில் அந்த வெண்சங்கை முடியெனச்சூடி அமர்ந்து ஆட்சி செய்தான். அவனை அவன்குடி சங்கன் என்று அழைத்தது. மாளவர்களும் பிறரும் அவனை சங்காசுரன் என்றனர்.

சங்கனின் வழிவந்த அரசர்கள் மாளவம், விதர்ப்பம், கூர்ஜரம் போன்ற பிற அரசுகளின் எல்லைகளைத் தாக்கி கருவூலங்களைக் கொள்ளையிடுவதை தங்கள் பொருள்வளர்க்கும் வழியாகக் கொண்டிருந்தனர். வணிகப்பாதைகளில் வண்டிகளை மறித்து சூறையாடினர். பயணிகளில் பெண்களையும் அரசகுடியினரையும் அந்தணரையும் பிணையாகப் பிடித்துக்கொண்டுசென்று சிறையிட்டு பெரும்பொருளுக்கு விலைபேசினர். செல்வம் சேரச்சேர அவர்கள் கோட்டையையும் அரண்மனையையும் கட்டிக்கொண்டனர். அவர்களின் அரசன் சங்குவடிவமான பொன்முடியை சூடிக்கொண்டான். அவர்களின் குலக்குறியான அந்த வலம்புரிச் சங்கு அரண்மனையின் மையத்தில் ஒரு பொற்பீடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அதை பாஞ்சஜன்யம் என்றனர்.

சங்கனின் படைகள் முன்னரே ஒருமுறை துவாரகைக்கு வந்த யாதவப்பெண்களை கவர்ந்து கொண்டுசெல்ல முயன்றன. செய்தி அறிந்த கிருஷ்ணனும் பலராமனும் ஒருசிறு புரவிப் படையுடன் குறுக்குவழியாகச் சென்று அவர்களை மறித்து போரிட்டு தங்கள் பெண்களை மீட்டனர். சங்கனின் மைந்தன் ஒருவன் அப்போரில் கொல்லப்பட்டான். துவாரகை உருவாகி வந்தமை பஞ்சஜனர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. துவாரகைக்கு வரும் கலங்களை பஞ்சஜனர் தாக்கி கொள்ளையடித்தனர். அவர்களை சென்று தாக்கி வெல்லும் அளவுக்கு துவாரகைக்கு படைவல்லமையும் இருக்கவில்லை. எனவே ஒவ்வொருநாளுமென அங்கே கரையிலும் கடலிலும் போர்களும் பூசல்களும் நிகழ்ந்துகொண்டிருந்தன.

இவை எதையும் அறியாமல் நான் பிரபாசத் துறைக்கு சென்றேன். நான் எங்கு செல்கிறேன் என்பதை எவரிடமும் சொல்லவில்லை. மாளவத்தின் எல்லையைக் கடந்ததுமே என்னை எவரோ தொடர்வதுபோல உணர்ந்தேன். சற்றுநேரத்திலேயே என்னை வளைத்துக் கொண்டார்கள். என்னை அறைந்து வீழ்த்தி கைகளை பின்னால் கட்டி இழுத்துச்சென்றனர். அவ்விளமையில் அதையும் ஒரு காவிய நிகழ்வாகவே எண்ணிக்கொண்டேன். என்னை கொண்டுசென்று சங்கன் முன் நிறுத்தினர். முதற்சங்கரசரின் பன்னிரண்டவது கொடிவழியினன் அவன். என்னிடம் என் கொடிவழியையும் குருமுறைமையையும் கேட்டான்.

நான் வேண்டுமென்றே பொய் சொன்னேன். என் குருமுறை கௌதமநெறி என்றும் என் தந்தை பெயர் விபாசர் என்றும் சொன்னேன். ஏன் அப்படி சொன்னேன் என்று இன்றும் தெரியாது. அந்த இளமையையே சுட்டுவேன். ஏதோ ஒன்று நிகழவேண்டுமென எண்ணினேன். முனிவர்களை கொல்லமாட்டார்கள் என எண்ணியிருக்கலாம். அல்லது பிணைத்தொகைக்காக அவர்கள் என் தந்தையை அணுகக்கூடாது என்பதனாலாக இருக்கலாம். என் ஆணவம் நிமிர்வதற்கான ஒரு தருணமல்லவா அது?

அவர்கள் என்னைப்பற்றி தூதுக்களை அனுப்பினர். மாளவர் என்மேல் ஆர்வம் காட்டவில்லை. கௌதமர்கள் தங்களில் எவரும் காணாமலாகவில்லை என்று சொல்லிவிட்டனர். ஓராண்டுகாலம் என்னை அவர்கள் சிறை வைத்திருந்தனர். பின்னர் என்னை அவர்களின் படகுகளில் அடிமைப்பணிக்காக சேர்த்துக்கொண்டனர். உண்மையில் எனக்கு அவ்வுலகம் புத்தம்புதியதாக இருந்தது. ஒவ்வொருநாளும் புதிய அறிதலுடன் விடிந்தது. கடுமையான உடலுழைப்புக்குப்பின் பெரும்பசியுடன் உண்பதும் உடல் சோர்ந்து தன்னைமறந்து துயில்வதுமே பேரின்பம் என்று கண்டுகொண்டேன். படகோட்டவும் கடல்புகுந்து மீன்கொள்ளவும் பயின்றேன். அவர்கள் மொழியை நன்கு கற்றேன். நாளடைவில் அவர்களில் ஒருவனாக ஆனேன். அவர்களால் விரும்பப்பட்டேன்.

என் கல்விப்புலம் எனக்கு உதவியமையால் அவர்களில் கற்றோன் என முதன்மை பெற்றேன். எங்கும் எக்குலத்திலும் அந்தணனுக்கான இடமொன்று உள்ளது. செந்தண்மை என்பதே அந்தண்மை என்பதனால். அவர்களின் மொழிக்கு நான் இலக்கணம் அமைத்தேன். அவர்களிடமில்லாத சொற்களை செம்மொழியிலிருந்து எடுத்து அளித்தேன். அவர்களின் கடற்குறிகளைத் தொகுத்து சமுத்ரலக்‌ஷணகாரிகை என்னும் நூலை இயற்றினேன். அந்நூலை அவர்கள் அனைவரும் மனப்பாடம் செய்யவைத்தேன். அவர்களின் குமுகநெறிகளை தொகுத்து சங்க ஸ்மிருதி ஒன்றை அமைத்தேன். அவை புதிய தலைமுறைகளுக்கு எளிதாக கற்பிக்கப்பட்டன. அவர்களின் தொழிலும் குமுகமும் சொற்களால் உறுதியாக கட்டி நிறுத்தப்பட்டன.

என்னை அங்கே எவரும் சிறையிட்டிருக்கவில்லை. விரும்பியிருந்தால் நான் கிளம்பி வந்திருக்கமுடியும். ஆனால் மீண்டு வந்து நான் ஆற்றும் செயற்களங்கள் ஏதுமிருக்கவில்லை. எந்தை நான் இறந்துவிட்டதாக எண்ணி இறுதிச்சடங்குகளைச் செய்தார் என சூதன் ஒருவனிடமிருந்து அறிந்தபோது பெரும் விடுதலையையே அடைந்தேன். அங்கே மூன்று சங்ககுலக் கன்னியரை மணந்தேன். அவர்களில் எனக்கு ஏழு மைந்தர் பிறந்தனர். ஏழு விழுதுகளால் மண்ணுடன் அசையாது பிணைக்கப்பட்டேன். நான் இயற்றிய உலகில் அதன் மைய அறிஞனாக என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன். சிலந்திக்கு தன் வலையே சிறை.

ஒருமுறை என் தந்தை எனக்கான நீர்க்கடனை இயற்றும்பொருட்டு சௌராஷ்டிரத்தில் அஷ்டசிரசுக்குமேல் அமைந்திருந்த பிரபாசதீர்த்தம் சென்றிருந்தார். அவருடன் துவாரகையிலிருந்து வந்த இரு யாதவர்களும் துணைசென்றனர். நான் அங்குதான் உயிர்துறந்ததாக அவர் எண்ணிக்கொண்டிருந்தார். அங்கு சென்று எனக்கான கடன்களை முற்றும் செய்து தான் துறவுபூண்டு உலகியல் கடன்களில் இருந்து விடுபடவேண்டுமென விழைந்தார். இப்பிறவியில் தனக்கு எஞ்சியிருப்பது அது என்றே அவர் எண்ணினார்.

அவர் உள்ளத்தில் நான் கொண்டிருந்த இடமென்ன என்று யாதவர்களுக்கோ பிற மாணவர்களுக்கோ தெரியாது. நான் இறந்ததாக செய்தி கேட்டதுமே எந்தை அதை தெய்வங்களின் அடி என்றே எடுத்துக்கொண்டார். தீபட்ட யானைபோல அலறித்துடித்தபடி அவர் தன் ஆசிரியரிடம் ஓடினார். அனைத்தையும் துறந்து மலைக்குகை ஒன்றில் தவம் செய்திருந்த அவர் “அரியதே பறிக்கப்படும் என்னும் ஊழின் நெறியை காவியங்களை நோக்கினாலே அறியலாம். அது உனக்கு அரியதென்று தோன்றியதேகூட அது பறிக்கப்படும் என நீ அறிந்ததனால்தானோ?” என்றார்.

“அத்தனை இரக்கமற்றதா அது? அத்தனை நெறியின்மையா நம்மை ஆள்கிறது?” என்றார் எந்தை நெஞ்சில் ஓங்கி அறைந்தபடி. “அதன்மேல் கேள்விகளால் மோதாதே, மூடா! கேட்கக்கேட்க விடையின்மை கொள்வதன் பெயரே ஊழ் என்பது. அதைவிட்டு விலகிச் செல். உன் ஊழுக்கு உன்னை ஒப்படை” என்றார். “என் மைந்தன்! நான் அவனை விழியால் பிறிதொருமுறை பார்ப்பேனா? பிறிதொன்றையும் நான் வேண்டேன்” என்று எந்தை நெஞ்சுடைந்து கதறினார். “இறப்பைக் கண்ட அனைவரும் சொல்பவை இவை. சொற்களைக் கருதி வை. ஒருவேளை நீ அவனை மீண்டும் காண நேர்ந்தால் அத்தனை சொல்லும் பொருளின்றிப்போகும்” என்றார் ஆசிரியர்.

எந்தை அவர் சொல்வன எதையும் செவிகொள்ள முடியாதவராக இருந்தார். நாற்பது நாட்கள் தன் குருநிலையின் இருளுக்குள் ஒடுங்கிக் கிடந்தார். தன்னை இறுக்கிச் சுருட்டி ஓசையே இன்றி அத்துயரை முழுக்க பெற்றுக்கொண்டார். ஒரு சொல்கூட மிச்சமின்றி என்னை தன் உள்ளத்திற்குள் செலுத்திப் புதைத்தார். என்னைப்பற்றி அவர் எவரிடமும் பேசுவதில்லை. என்னை அவர் முற்றிலும் மறந்துவிட்டதாகவே பிருகதர் போன்றவர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் அவருக்குள் ஆறாத புண் என நான் குருதி கசிந்துகொண்டிருந்தேன். என்னை அவர் எண்ணுவதே இல்லை. ஆனால் அவர் கனவில் மாறா இளமையுடன் நான் வந்துகொண்டிருந்தேன்.

அந்த இருளிலிருந்து அவரை மீட்டது இளைய யாதவனைப் பற்றிய கனவு. அனைத்திலும் நம்பிக்கையிழந்து இருண்டு சென்றுகொண்டிருந்த அவருக்கு மீண்டும் வாழ்விருப்பதாக அறிவித்தது. மலையடிவாரத்து சாந்தீபனி குருநிலையை உதறி உஜ்ஜயினிக்கு வந்து அவனுக்காகக் காத்திருக்க முடிவெடுத்ததே அவரை மீட்டது. தன் மாணவர்கள் சென்று துவாரகையை அமைத்து படைவல்லமை கொண்டதும் எந்தை அவர்களிடம் கோரியது தன்னை மைந்தன் இறந்த பிரபாச தீர்த்தத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் என்றுதான்.

உண்மையில் மூத்த யாதவர் அவருக்கு ஒரு மைந்தன் இருந்ததையே அப்போதுதான் அறிந்தார். “ஆசிரியரே, உங்களுக்கு மைந்தன் ஒருவன் இருந்தானா? நான் இன்றுவரை அறியவில்லையே? உங்கள் மைந்தனே இவன்தான் என்றல்லவா எண்ணினேன்?” என்றார். “ஆம், இவனும் என் மைந்தனே. இவனுக்கு எப்படி கற்பிப்பது என அவனிடமிருந்தே கற்றேன். என் மைந்தன் மேல் கற்பாறை விதைமுளைமேல் என அமர்ந்திருந்தேன். அவன் என்னை உதறிச்சென்று விடுதலைகொண்டான்” என்றார் எந்தை. இளையவன் அதைக் கேட்டு புன்னகையுடன் வேறெங்கோ நோக்கி நின்றிருந்தான்.

யாதவர்களுடன் கிளம்பி பன்னிரு நாட்கள் பயணம் செய்து அரிய மலைவளைவுகளைக் கடந்து பிரபாச தீர்த்தத்தை அணுகி நீர்க்கடனுக்காக அமர்ந்தார் எந்தை. இலைமேல் அன்னமும் மலரும் படைக்கப்பட்டு என் வடிவாக அங்கிருந்து எடுக்கப்பட்ட சிறிய கூழாங்கல் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. சடங்குகள் செய்வதற்காக அமர்ந்த முதிய அந்தணர் விழியறியாதவர். அவர் அக்கூழாங்கல்லைத் தொட்டதுமே “இது உயிருள்ளதாயிற்றே!” என்றார். “என்ன சொல்கிறீர்கள்?” என்றார் எந்தை. “இம்மைந்தன் இறக்கவில்லை. உயிருடன் எங்கோ இருக்கிறான். இவனுக்களிக்கப்பட்ட அன்னத்தையும் நீரையும் இவன் மூதாதையரே இதுவரை பெற்றுக்கொண்டனர்… ஐயமே இல்லை” என்றார் அந்தணர். எந்தை “மைந்தா! என் உயிரே!” என அலறியபடி மயங்கி விழுந்துவிட்டார்.

திரும்பிவரும் வழியெங்கும் எந்தை கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் இளைய யாதவன் ஒருசொல்லும் கேட்கவில்லை. சாந்தீபனி குருநிலையை அடைந்ததும் எந்தை இரு யாதவர்களையும் அருகழைத்தார். “நான் உங்களுக்கு ஆசிரியனாக அமைந்து இதுகாறும் கற்பித்தேன். ஆசிரியக்கொடை இன்றி கல்வி முழுமையாவதில்லை. இன்று உங்களிடம் ஆசிரியக்கொடை கோருகிறேன், என் மைந்தன் எங்கிருந்தாலும் மீட்டுக் கொண்டுவருக! அவனை கண்டபின்னரே நான் அனலவிந்து உயிர்துறக்க முடியும். பிறிதொன்றும் இப்புவியில் எனக்குத் தேவையில்லை” என்றார். மூத்த யாதவர் “எட்டாண்டுகாலம் ஆகிவிட்டது. அவர் விழைந்திருந்தால் மீண்டு வந்திருக்கக்கூடுமே” என்றார். “எதையும் நான் கேட்க விழையவில்லை. என் மைந்தனை எனக்கு கொண்டுவந்து கொடுங்கள்… அது ஒன்றே எனக்குரிய ஆசிரியக்கொடை” என்றார் எந்தை. “அவ்வண்ணமே ஆகுக!” என்றான் இளைய யாதவன்.

நான் விடைபெற்றுச் சென்றதை பிருகதரிடமிருந்து மீண்டும் கேட்டறிந்தான். ஒவ்வொரு சொற்துளியையும் ஒவ்வொரு முகக்குறியையும் அவரிடமிருந்து மீட்டெடுத்தான். ஏழுநாட்கள் பன்னிருமுறை அவரிடம் அவன் உரையாடினான் என்கிறார்கள். இறுதியில் அவன் அவராக மாறி என் முன் அத்தருணத்தில் நின்றிருந்தான். என் விழிகளின் கரவை கண்டடைந்தான். பிரபாச தீர்த்தம் என்னும் சொல்லை நான் தவிர்த்ததை, பிரபாச நீர் என்றே சொன்னதை உணர்ந்தான். மூத்தவரிடம் “ஐயமே இல்லை மூத்தவரே, அவர் சங்கனின் சிறையில் இருக்கிறார்” என்றான்.

“ஆனால் அவர்கள் பிணையர்களைப் பற்றி செய்தி அறிவிப்பார்கள். பிணைமீட்புச் செல்வம் கோருவார்கள்” என்றார் மூத்தவர். “ஆம், அது நிகழவில்லை. ஆசிரியரின் மைந்தர் தன் பெயரையும் குலத்தையும் மறைத்திருக்கலாம். அவர்கள் அந்தணரை கொல்வதில்லை” என்றான். “ஆனால் அவர் இத்தனை நாள் எங்கிருக்கிறார்? அவர்களுடன் அவர் வாழ்கிறாரா?” என்றார் மூத்தவர். “அறியேன். அவரை தேடிச் செல்வோம். அவரை மீட்காமல் திரும்பமாட்டோம் என உறுதிகொள்வோம்” என்றான் இளைய யாதவன்.

நான் வந்த வழியை அவர்கள் அவ்வாறே மீண்டும் நடித்தனர். என்னைப் போலவே உஜ்ஜயினிக்கு வந்து அங்கிருந்து பஞ்சஜனத்தின் எல்லைவரை வந்தனர். அங்கே ஒரு வணிகச்சாவடியில் அவர்களிடம் பஞ்சஜனத்தின் கஜமேக குலத்தைச் சேர்ந்த வணிகன் ஒருவன் அறிமுகமானான். அவன் துவாரகைக்குச் சென்று வணிகம்செய்ய விரும்பினான். அவன் அவர்களிடம் துவாரகைபற்றி கேட்டுக்கொண்டிருந்தான். அவர்கள் துவாரகை பற்றி அவனிடம் பேசிக்கொண்டே பஞ்சஜனம் குறித்து கேட்டறிந்தனர். அவன் நான் இயற்றிய கடல்நூலில் இருந்து ஒரு செய்யுளை பாடினான். அதைக் கேட்டதுமே இளைய யாதவன் சொல்லிவிட்டான் “ஐயமே இல்லை, இது சாந்தீபனி குருநிலையில் பயின்றவரால் யாக்கப்பட்டது. இதை இயற்றியவர்தான் நாம் தேடுபவர்.”

SOLVALAR_KAADU_EPI_37

“நான் என் பெயரை கிரிஜன் என்று அங்கே சொல்லியிருந்தேன். அவர்கள் மீட்டுச் செல்ல விரும்புவது என்னைத்தான் என அன்றே அவர்கள் முடிவு செய்தனர்” என்றார் சாந்தீபனி முனிவர். “அன்று அவர்களால் பஞ்சஜனரை வெல்லமுடியாத நிலை இருந்தது. படைகொண்டு சென்றால் என்ன என்று மூத்தவர் கேட்டபோது இளைய யாதவன் சிரித்தபடி “மூத்தவரே, நாம் படைகொண்டுசென்றால் பஞ்சஜனரின் படைகளுடன் மட்டுமல்ல அதை நடத்திவரும் சாந்தீபனி குருநிலையின் பேரறிவுடனும் போரிட வேண்டியிருக்கும். நாம் வெல்லமுடியாது” என்றான். “அப்படியென்றால் என்னதான் செய்வது?” என்றார் மூத்தவர். “வென்றாகவேண்டும் என்றால் அதற்கான வழி ஒன்று இருப்பதை கண்டுகொள்ளலாம்” என்றான் இளையவன்.

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 36

[ 3 ]

தருமன் சாந்தீபனிக்காட்டின் நடுவே ஓடிய அஸ்வினி என்னும் சிற்றாற்றின் கரையில் நீராடுவதற்குச் சென்றபோது அங்கே நீராடிக்கொண்டிருந்த ஒரு முனிவரைக் கண்டு தலைவணங்கினார். பிறிதொரு இடம்தேடி அவர் விலக முயல அவர் “வணங்குகிறேன், அரசே. இங்குள்ள ஆறுகளும் ஓடைகளுமெல்லாம் சேறு மண்டியவை. சில இடங்களில் மட்டுமே நீராடமுடியும். தாங்கள் இங்கேயே நீராடலாம்” என்றார். “ஆம், நான் ஆற்றின் கரைவழியாக நோக்கியபடியே வருகிறேன்” என்றபடி தருமன் அந்தப் பாறைநீட்சியை அடைந்தார்.

“இந்தப் பாறை நீண்டு பெரும்பெருக்கு வரை வந்துள்ளது. எனவே கரையோரச் சேற்றை மிதிக்காமல் தெளிநீரில் இறங்கமுடியும். இப்படி சில இடங்களே உள்ளன” என்றார். “என் பெயர் பிருகதன். இங்கு வேதம் பயிற்றுவிக்கிறேன்.” தலைதாழ்த்தி “வணங்குகிறேன், உத்தமரே” என்றார் தருமன். அவர் தன் ஆடைகளை கழற்றிவிட்டு நீரில் இறங்குவதைப் பார்த்தபடி பிருகதர் நீருக்குள் நின்றார். “இங்கே ஒழுக்கு இல்லை. இப்பகுதியில் நிலம் முற்றிலும் நிகர்பரப்பாக உள்ளது. ஓடைகளும் இங்கே தவழத்தான் செய்கின்றன. முன்பு இது பெரும்சதுப்பு. இப்போதுகூட உள்காடுகள் சதுப்பாகத்தான் உள்ளன. மானுடர் வரத்தொடங்கியதும் சதுப்பு குறைந்தது” என்றார் பிருகதர்.

“நூறாண்டுகளுக்கு முன்பு அஸ்வினி சற்று தேங்கிச்சென்ற ஓர் இடத்தை உடைத்து நீர் பக்கவாட்டில் ஊறிப் பரவாமலாக்கினர். அதன்பின் சதுப்பு பாதியாக குறைந்துவிட்டது” என்றபடி அவர் நீரில் மூழ்கி தாடிசொட்டிப் பெருக எழுந்தார். தருமன் நீரில் இறங்கி மூழ்கி எழுந்து நடுக்கத்துடன் உடலை உலுக்கிக்கொண்டார். “தங்கள் இளையோர் வரவில்லையா?” என்றார் பிருகதர். “அவர்கள் தமையனுடன் காட்டுக்குள் சென்றுவிட்டனர். இன்று நான் தனியன்” என்றார் தருமன். “நன்று, அவ்வப்போது தனிமையும் தேவையே” என பிருகதர் நகைத்தார். தருமன் புன்னகைத்து மீண்டும் மூழ்கினார். “இங்கு இக்குருநிலை அமைந்து எத்தனை காலமாகிறது?” என்றார் தருமன்.

“நாநூறாண்டுகள் என்கிறார்கள். இன்றுள்ள குடில்கள் அமைந்து நூறாண்டுகள் கடந்துவிட்டன. இவை மாளவத்தின் அரசன் பிரபாவர்மனின் கொடை” என்றார் பிருகதர். “பிரபாவர்மன் மாளவ அரசர்களில் முதலில் பெருவேள்வியைச் செய்தவன் என்னும் பெருமைகொண்டவன். அவன் பெயர் நூல்களில் அதிராத்ரம்வேட்ட பிரபாவர்மன் என்றுதான் பதிவாகியிருக்கிறது. அறிந்திருப்பீர்கள், மாளவர்கள் தூயஷத்ரியர்களாக கருதப்படுவதில்லை. தொன்மையான ஜனபதங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல அவர்கள்.” தருமன் “ஆம், அவர்கள் மத்ரநாட்டு அரசர் அஸ்வபதியின் மைந்தர். அவர் நைமிசாரண்யக் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றபோது அவர்களின் அன்னை மாளவியைக் கண்டு மணம்கொண்டார். அவர்களுக்குப் பிறந்த ஏழு மைந்தர்களே மாளவர்” என்றார்.

நகைத்தபடி பிருகதர் “அக்கதையை அவர்கள் இன்று சொல்லவிழைகிறார்கள். பழைய நூல்களில் அவர்கள் வெறுமனே படைக்கலமேந்திய தொல்குடியினர் என்றுதான் சொல்லப்படுகிறார்கள். மாளவர்களின் நாடு நைமிசாரண்யத்தின் விளிம்பில் அமைந்துள்ளது. விந்தியமலையைக் கடந்து தண்டகாரண்யத்திற்கும் தெற்கே செல்வதற்கான வழி அது. வணிகவழிகளில் சுங்கம் கொள்ளத் தொடங்கியதும் மலைமக்களான மாளவர் அரசொன்றை அமைத்தனர். நெடுங்காலம் அன்னையரால் ஆளப்பட்டது அவ்வரசு. பிரபாவர்மனின் மூதாதையான மகாகாலர் சிம்மவக்ரர் என்னும் பேரில் அரசராக முடிசூட்டிக்கொண்டார். கலிங்கத்திலிருந்து சிற்பிகளை வரவழைத்து கோட்டையும் அரண்மனையும் கட்டினார்” என்றார்.

“ஆயினும் மாளவர்கள் பிற ஷத்ரியர்களால் அரசர்களென ஏற்கப்படவில்லை. ஷத்ரிய அவைகளில் அவர்களுக்கு அழைப்பும் இருக்கவில்லை. எனவே மாளவர்கள் வேள்விகளை நிகழ்த்த விரும்பினர். இல்லறத்தாருக்குரிய சிறிய வேள்விகளையே அவர்களால் நிகழ்த்தமுடிந்தது. அரசர்களுக்குரிய பெரிய வேள்விகளை நிகழ்த்த அவர்களுக்கு எந்த வேதநிலையிலிருந்தும் அந்தணர் செல்லவில்லை. அனைத்து வேதநிலைகளுக்கும் அவர்கள் செய்தியனுப்பினர். இறுதியில் அவர்கள் இங்கு வந்துசேர்ந்தனர். இங்கிருந்து நூற்றெட்டு அந்தணர் சென்று பிரபாவர்மன் விரும்பிய அதிராத்ர வேள்வியைச் செய்து அளித்தனர்.”

“அதற்கு மாற்றுதவியாக பிரபாவர்மன் பாரதவர்ஷம் முழுக்க பன்னிரண்டு கல்விநிலைகளை சாந்தீபனி குருநிலைக்கு அமைத்து அளித்தான். தலைமையிடமாகிய இங்கே சேற்றுப்பரப்பை மேடுறுத்தி குடில்களை அமைத்தான்” என்றார் பிருகதர். “அவ்வாறு உஜ்ஜயினியில் அவன் அமைத்த குருநிலையில்தான் உங்கள் இளைய யாதவர் பயின்றார்.” அச்சொற்களில் இருந்த அழுத்தம் தருமனை அவர் விழிகளை நோக்கவைத்தது. அந்த வெறுப்பு அவர் அத்தனை சொற்களை ஏன் பேசுகிறார் என்பதை காட்டியது. தருமன் ஒன்றும் சொல்லவில்லை.

“அவரைப்பற்றி நான் சொல்வது உங்களுக்கு உவப்பாக இராது என நான் அறிவேன்” என்றார் பிருகதர். “ஆனால் நான் சொல்ல விழைவனவற்றை எங்கும் சொல்வேன். அதுவே என் இயல்பு.” தருமன் ஒளியின்றி புன்னகை செய்தார். “உஜ்ஜயினியில் ஷிப்ரை ஆற்றின் கரையில் இருக்கிறது அந்த குருநிலை. நான் அங்கே பன்னிரண்டு ஆண்டுகாலம் இருந்தேன். அப்போதுதான் இளைய யாதவன் அங்கே கல்வி பயில வந்தான். என்னைவிட இருபதாண்டுகள் இளையவன்.” அவர் நீரில் மூழ்கி சற்றுநேரம் கழித்து எழுந்தார். தாடியின் நீரை கையால் தெறிக்கச்செய்துவிட்டு “இங்கிருந்து அவனுக்காகவே முதலாசிரியர் கிளம்பி அங்கே சென்றார் என்றால் நம்பமாட்டீர்கள்” என்றார்.

“இன்றிருப்பவரின் தந்தை அவர். சாந்தீபனி குருநிலை கீழே அரசர்களிடமும் அறிஞர்களிடமும் புகழ்பெறுவது அவரது அறிவுத்திறனால்தான். பாரதவர்ஷத்திற்கு வெளியிலும் உள்ள அனைத்து மெய்யறிதல்களையும் அறிந்தவர் அவர் காலத்தில் அவர் ஒருவரே. இளமையில் குருநிலைகள்தோறும் சென்று தங்கி வேதமெய்மைகளை கற்றார். ஆறு நோக்குகளையும் ஆறு வழிபடுமுறைகளையும் அறிந்தார். சமணர்களிடம் சென்று அமர்ந்து அவர்களின் மெய்மையில் தேர்ச்சிபெற்றார். நாகர்களின் வேதங்களும் நிஷாதர்களின் வேதங்களும்கூட அவருக்குத் தெரிந்திருந்தன. அவர் பெரும்பயணி. கிழக்கே தாம்ரலிப்தியிலும் மேற்கே சிந்துவின் கரையிலும் சென்று தங்கி யவனரும் பீதரும் காப்பிரியும் சோனகரும் கொண்டுள்ள மெய்மைகளைக் கற்று அறிந்தார்” என்றார் பிருகதர்.

பின்னர் இங்கு வந்தமர்ந்து இருபதாண்டுகாலம் அனைத்தையும் உட்கொண்டு உணர்ந்தார். அனைத்து நோக்குகளையும் ஒற்றைப்பெரும்பரப்பென ஆக்கும் சாந்தீபனியின் சமன்வயக் கொள்கையை அவையனைத்தையும் கொண்டு அவரே நிறுவினார். சாந்தீபனி மெய்மரபின் முதன்மைப் பேரறிஞர் அவரே” என்றார் பிருகதர். “ஆனால் அவர் நாளும் துயர்கொண்டிருந்தார். ஒருநாள் அதை அவரது அணுக்கமாணவனாகிய எனக்கு சொன்னார். இங்கு வந்து அவர் காலடியில் அமர்ந்து மெய்ச்சொல் கற்ற ஒவ்வொருவரும் ஒன்றைத்தேடி வந்திருந்தனர். பலவற்றை அவர்களால் ஏற்கமுடியவில்லை. அவர்கள் ஒருவர் என்பதனால் அவர்களுக்குரிய மெய்மையும் ஒன்றே என அவர்கள் எண்ணினர். அதற்குச் செல்லும் வழியும் ஒன்றே என நம்பினர்.

அவர்களுக்கு அவர் பன்முகம் கொண்ட மெய்மையை கற்பித்தார். அவர்கள் அதில் நெஞ்சளைந்து சலித்து ஒன்றைமட்டும் எடுத்துக்கொண்டனர். அதை ஏற்று பிறவற்றை மறுத்தனர். ஏற்பது உறுதியாக அமையவேண்டும் என்பதனால் மறுப்பை பன்மடங்கு வலுவாக்கிக்கொண்டனர். மறுப்பே அவர்களின் ஏற்பை நிலைநிறுத்தியது. நாளடைவில் அவர்களின் தத்துவமென்பது வலுவான மறுப்புகளின் தொகை என்றாயிற்று. அரசே, நீங்களே அதை காணலாம், அனைத்து தத்துவமாணவர்களும் மறுப்புகளால் ஆனவர்கள். எனவே எதிர்நிலையே அவர்களின் ஆளுமை.

ஒன்றின் எதிர்நிலையும் அந்நிலை அளவே உண்மையானது என்று சாந்தீபனி கல்விநிலை சொன்னது. எதிர்நிலையை பொறுத்துக்கொள்ளவேண்டும் என சிலர் அதை புரிந்துகொண்டனர். எதிர்நிலையைக் கொண்டு தன்னிலையை வலிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என பிறர் விளங்கிக்கொண்டனர். எதிர்நிலையால் நிரப்பப்படும் ஒன்றில்லையேல் தன்னிலை வலுவற்றதாகிவிடும் என்று அவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை

அதைவிட கருத்துக்களின் லீலை என்பதை அவர்களால் உள்வாங்கிக்கொள்ளவே முடியவில்லை. கருத்துக்கள் என்பவை அம்புகள் என்றே அவர்களின் உள்ளத்தில் பதிவாகியிருக்கின்றன. அவை வில்நிற்பதற்கு முன்னரே இலக்கமைந்துவிட்டவை, வெல்பவையும் தோற்பவையும் என அவை இருபாற்பட்டவை என்று அவர்களின் உள்ளம் எண்ணுகிறது. விளையாடுதல் என்றால் இலக்கை விட்டுவிடுதல் என்றே அதில் பொருள் அமைகிறது. வானிலாடும் பறவைக்குலங்கள் போன்றவை அவை என அவர் சொன்னார். அவர்கள் அப்பறவைகளில் எது வல்லூறு என்றே நோக்கினர்.

பலநூறுமுறை தோற்றபின் முதலாசிரியர் சொன்னார் ‘ஒருவேளை இது மானுடருக்குப் புரியும் மெய்யறிதலே அல்ல என்றிருக்கலாம். இது தெய்வங்களுக்குரியது என்றிருக்கலாம். என் மெய்யறிதல் என்னுடன் மண்புகலாம். அவ்வாறென்றால் அதுவே ஆகுக!’ பெருமூச்சுடன் அவர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார் ‘பயனும் வெற்றியும் நாடும் வரை கருத்துக்களை எவரும் அறிவதேயில்லை

அரசே ,சோர்ந்துபோய் அவர் பலநாட்கள் சொல்லவைக்கு வருவதையே தவிர்த்தார். இருண்ட அறைக்குள் நாட்கணக்கில்  ஊழ்கத்திலாழ்ந்து தன்சொற்களை தானே அளைந்தபடி அமர்ந்திருப்பதையே விரும்பினார். தன் ஒளியை முற்றிலும் தானே விழுங்கிக்கொண்ட கரிய வைரம் போல் அவர் இருப்பதாக அன்று ஒரு கவிஞன் எழுதினான்.”

அப்போதுதான் அவர் ஒரு கனவுகண்டார். ஒருநாள் காலை தன் அறைக்குள் துயிலெழுந்து நான் அரணிக்கட்டை கடைந்துகொண்டிருந்த அறைக்கு வந்தபோது முகம் மலர்ந்து பரபரப்பு கொண்டிருந்தார். என்னிடம் ‘நான் அவனைக் கண்டேன்’ என்றார். ‘யாரை?’ என்றேன். ‘இளையவனை. என் சொல்லை வளர்த்தெடுக்கும் மாணவனை’ என்றார். ‘எங்கு?’ என்றேன். ‘என் கனவில்… சற்றுமுன். அவன் குழந்தை விழிகளும் விளையாட்டுச்சிரிப்பும் கொண்டிருந்தான். லீலை என என் முதலாசிரியர் சொன்னதை அவனால் மட்டுமே தெளிவுறப் புரிந்துகொள்ள முடியும்’ என்றார்.

நான் குழப்பத்துடன் ‘ஆசிரியரே, அவர் எங்கிருக்கிறார்?’ என்று கேட்டேன். ‘தெற்கே, உஜ்ஜயினியின் குருநிலையில் அவனைப் பார்ப்பதாகத்தான் என் கனவு சொன்னது. நான் அங்கே செல்லவிரும்புகிறேன்’ என்றார். ‘அங்கு யாதவர்களின் மைந்தர் மட்டுமே வருகிறார்கள் என்று அறிந்தேன்’ என்றேன். ‘நன்று. அவன் யாதவன் அல்ல என்று எப்படி எண்ணுகிறாய்?’ என்றார். இங்கிருந்து கிளம்பி அங்கு சென்றோம். அங்கு ஆசிரியர் ஒவ்வொரு மைந்தனிலும் அவனை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். ‘கனவில் நான் கண்டது முகமல்ல, கண்கள் மட்டுமே’ என்றார். ஒருநாள் தன் மூத்தவனாகிய பலராமனுடன் வந்த இளையவனைக் கண்டதுமே சொல்லிவிட்டார் ‘இவனேதான்’ என்று.

”வெறும் நான்காண்டுகாலம்தான் அவர்கள் அங்கே கற்றனர்” என்றார் பிருகதர். “வரும்போது அவர்களுக்கு செம்மொழியின் எழுத்துக்கள்கூடத் தெரிந்திருக்கவில்லை. அவன் எங்கோ கோகுலத்தில் கன்றோட்டிக் கொண்டிருந்தான். எப்போதும் குழலிசைத்து தனிமையிலிருக்க விழைந்தான். அவன் மூத்தவனோ எதற்கும் இருப்பதிலேயே பெரிய தடியை எடுத்து அடிக்க முனையும் பெருஞ்சினம் கொண்டிருந்தான். ஆசிரியர் அவர்களைச் சுட்டியதும் நான் வியந்தேன். நானும் அவர்களை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தேன். ஓரிரு நாட்களிலேயே ஒன்று தெரிந்துகொண்டேன், இளையவன் நிகரற்ற அறிவுகொண்டவன். எதையும் பிறிதொருமுறை சொல்லவேண்டியதில்லை அவனுக்கு. எதிலும் தொடக்கத்துக்கு அப்பால் கற்பிக்கவேண்டியதில்லை.”

அவனுக்கு எழுத்தறிவித்தவன் நான். ஆசிரியரின் ஆணைக்கேற்ப ஒவ்வொருநாளும் அவனை எழுப்பி நீராடக் கூட்டிச்செல்வேன். நானே என் கைகளால் வேம்பும் மஞ்சளும் பயிறும் கலந்த பொடியால் அவனை நீராட்டுவேன். அவன் உடலில் இருந்து சாணிமணத்தை அகற்றியவன் நான். மொழித்தூய்மை வரும்பொருட்டு நாளெல்லாம் அவனுக்கு சொற்களை பாடக் கற்றுக்கொடுத்தேன். ஆசிரியர் அவனுக்கென்றே அமர்ந்து வேதம் பயிற்றுவித்தார். முதிர்ந்த மாணவர்கள்கூட அமரமுடியாத மெய்யவைகளில் அவன் எழுந்து சொல்லாடினான். எவரும் அவனுக்கு நிகர்நின்று பேசமுடிந்ததில்லை. சொல்லில் இருந்து அவன் செல்லும் தொலைவை நூறாண்டுகாலம் வேதப்பெருங்காடுகளில் சொற்தவம் செய்த தொல்முனிவரே சென்றுள்ளனர் என்று ஆசிரியர் சொல்வார்.

மலர்ந்த முகமும் கனிந்த குரலும் இன்றி ஆசிரியர் அவனிடம் பேசியதில்லை. ‘வேதச்சொற்களில் அவன் தீர்க்கதமஸ். வேத நூலமைவில் அவன் வியாசன். வேதமெய்மையில் அவன் யாக்ஞவல்கியன். வேதநுண்மையில் அவன் தத்தாத்ரேயன்’ என்று அவர் சொல்வார். கல்விச்சாலைகளிலேயே அவனை நோக்கி ‘நீ எதையும் கற்றுக்கொள்ளவில்லை, மைந்தா. உனக்கு நான் அனைத்தையும் நினைவூட்டுகிறேன்’ என்பார். ஒவ்வொரு முறையும் அவனிடம் பேசும்போது அவர் தன்னுள் கைகூப்பிக்கொள்கிறார் என நான் உணர்வதுண்டு

அவன் கற்றமுறையை இப்போதும் நினைவுகூர்கிறேன். பிறர் வேதங்களை கைகூப்பியபடி அணுகினர். நம் அகலில் சுடரென அமைகையிலும் எரியின் கட்டற்ற பேராற்றலை நாம் அறிவோம். அவனோ அன்னை முந்தானையைப் பற்றி இழுக்கும் மைந்தன் என அதை அணுகினான். ‘முதல்முறையாக நான் காண்கிறேன், மெய்யறிவுடன் விளையாட வந்த ஒருவனை’ என ஆசிரியர் பேருவகையுடன் சொன்னார். சொல் மாறாமல், சந்தம் பிழைக்காமல் வேதமோத வேண்டுமென்பதே நெறி. வேதத்தை அது பிழைக்கலாகாது என்னும் அச்சமில்லாமல் ஓத எவராலும் இயல்வதில்லை. வேதத்தை இருமுனையும் கூர்கொண்ட வாளை என கையிலேந்துகிறோம். அச்சமே வேதம் அளிக்கும் உணர்வு.

அவ்வச்சம் அழியும்போது கால்நடைகளின் கால்களில் வழி என வேதம் மாறிவிட்டிருக்கும், அதை ஓதுபவன் அதை அறியாமலாவான். அவன் வேதங்களை விளையாட்டுச் சொற்களாக்கினான். வேதச்சொற்களைக் கொண்டு காட்டில் தோழருடன் வட்டாடினான். பசுக்களை அழைக்கும் ஒலியாக அதை மாற்றிக்கொண்டான். பூசல்களில் தோழரை வசைபாடவும், கேலிசெய்யவும்கூட வேதமே உருமாறி அவன் நாவிலெழுந்தது. அதைப்பற்றி ஆசிரியரிடம் முறையிட்டவர்களிடம் ஆசிரியர் சொன்னார் ‘கங்கையை நீ எதற்கெல்லாம் பயன்படுத்துகிறாய் என்று பார். அன்னை தன் மைந்தனுக்கு மலம்கழுவி விடமாட்டாளா என்ன?’ அவர் அவனை ஏனோ தலைமேல் தூக்கி வைத்துக்கொள்கிறார் என்றே அவர்கள் எண்ணினர். தன் மாயப்பேச்சுக்களால் அவரை அவன் கவர்ந்துவிட்டான் என்றனர்.

உஜ்ஜயினியின் சாந்தீபனிக் கல்விநிலையில் அவனை பிற மாணவர் அனைவருமே வெறுத்தனர். சுதாமன் என்னும் ஏழைப்பிராமணன் அன்றி அவனுக்கு நண்பர்களே இருக்கவில்லை. அவனை ஏன் வெறுக்கிறீர்கள் என்று நான் மாணவர்களிடம் கேட்டிருக்கிறேன். ‘ஆசிரியரே, மறுகணம் என்ன செய்வான் என முற்றிலும் அறிந்துகொள்ள முடியாத ஒருவனிடம் எப்படி நண்பராக இருக்கமுடியும்?’ என்று சொன்னார்கள். கல்விநிலையிலிருந்தே ஒருநாள் கிளம்பிச்சென்றார்கள். கம்சனைக் கொன்று மதுராவை அவர்களிருவரும் வென்றதாக அறிந்தோம்.

அவன் தன் தாய்மாமனைக் கொன்றது எங்கள் கல்விநிலை முழுக்க பலமாதங்கள் கொந்தளிப்பை உருவாக்கியது. தாய்மாமன் யாதவர்களுக்கு தந்தைக்கு நிகரானவர். அவனை சாந்தீபனி குருநிலை மறுத்துரைக்கவேண்டும் என்று பல யாதவர்குழுக்கள் கோரினர். அவன் அரசை கைப்பற்றியமை மகதத்தை சினம்கொள்ளச் செய்துள்ளது என்றும், சாந்தீபனிக் கல்விநிலைகள் மீது மகதச்சார்புள்ள ஷத்ரியர் முனியக்கூடும் என்றும் சொல்லப்பட்டது.

நானேகூட ஆசிரியரிடம் ‘நாம் நம்மை இளைய யாதவனுடன் முழுமையாக அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டியதில்லை, ஆசிரியரே’ என்று சொன்னேன். ஏனென்றால் நான் ஷத்ரியரின் சினத்தை அஞ்சினேன். அதைவிட அவன் கட்டின்மையை அஞ்சினேன் ‘இது அவனுடைய கல்விநிலை. இங்கு முதன்மைமாணவன் அவனே. மாற்று எண்ணம் உள்ளவர்கள் இதிலிருந்து விலகலாம்’ என்றார். நான் தலைகுனிந்து விலகிச்சென்றேன்.

உண்மையில் நான்கூட அவன்மேல் மயங்கிக்கிடந்த காலம் அது. அவன் பேரறிவுத்திறம், அச்சுமை சற்றுமில்லாத இளமைக்களியாட்டம் இரண்டும் மாறிமாறி என்னை அலைக்கழித்தன. புலன்கடந்த யோகியாகவும் உலகின்பங்களில் திளைப்பவனாகவும் ஒருவன் எப்படி ஒரேநாளில் தோற்றமளிக்கமுடியுமென்ற விந்தையை என் எளிய சித்தம் கடந்ததே இல்லை. அவனிடம் பூசலிடுவதுகூட அவனுடன் களியாடுவதன் ஒரு பகுதியே என்றாகியது.

அவன் சொன்னால் என் உள்ளம் மிக எளிதில் வேதப்பொருள் தொட்டறிந்தது. அத்தகைய நானே அவனை சினந்து வெறுக்கும் தருணமொன்று வந்தது. நான் உஜ்ஜயினி சாந்தீபனி குருநிலைக்கு நீண்டகாலத்துக்குப்பின் சென்றிருந்தேன். அன்று அவன் ஆசிரியரை பார்க்க வந்தான். குருநிலை விட்டுச்சென்று துவாரகையின் அரசனாக மணிமுடிசூடியபின் முதல்முறையாக அங்கே வருகிறான் என்றனர். அவனைப் பார்க்கும் ஆவலில் நானும் எரிந்துகொண்டிருந்தேன்.

அவன் வருவதையொட்டி குருநிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு செய்யும் மரபு எங்கள் வேதக்கல்விநிலைகளில் இல்லை என்பதை அறிந்திருப்பீர்கள். ஆகவே பலர் அதையொட்டி சினம் கொண்டிருந்தனர். ஆனால் நான் உளமகிழ்ந்தேன். மாவிலைத் தோரணங்களையும் மலர்மாலைகளையும் சுற்றிச்சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் தன் கொடியுடனும் அணிப்படையுடனும் அரசமுடிசூடி வருவான் என நான் எதிர்பார்த்தேன். தொலைவில் அரசமுரசு ஒலிக்கக் கேட்டதும் முகப்புக்கட்டடத்தின் உப்பரிகைமேல் ஏறி நின்றுகொண்டேன். என் உள்ளம் துள்ளி விழுந்துகொண்டிருந்தது.

கருடக்கொடி தொலைவில் தெரிந்தது. தனிப்புரவியில் ஒருவன் அக்கொடியுடன் புழுதிச்சிறகு சூடியவனாக வந்தான். புழுதிக்கு அப்பால் நான்கு புரவிகள் தெரிந்தன. ஒன்றில் அவன் கரிய உடலை நான் கண்டேன். எளிய வெண்ணிற ஆடை. அணித்தோற்றமென ஏதுமில்லை. பிறிதொன்றில் பலராமன் அமர்ந்திருந்தான். சற்று அப்பால் வந்த இருபுரவிகளில் ஒன்றில் அக்ரூரரும் மற்றொன்றில் கிருதவர்மனும் இருந்தனர். நான் கைகளை வீசி மகிழ்ச்சியொலி எழுப்பிக்கொண்டே இருந்தேன். ஆனால் அவர்கள் என்னைப் பார்க்காமல் கடந்து உள்ளே சென்றனர்.

SOLVALAR_KAADU_EPI_36

அவன் அவ்வண்ணம் எளிய தோற்றத்தில் வந்தது என்னை ஏமாற்றம் கொள்ளச்செய்தது. ஆனால் அங்கிருந்த பிற யாதவர் அதில் மகிழ்ச்சி அடைந்தனர். சேதிநாட்டு யாதவன் ஒருவன்  “நோக்குக, அவன் இன்னமும் கன்றுமேய்ப்பவனே. அவன் தந்தை மதுராவில் இன்னும் உறுதியாக அரியணை அமரவில்லை. ஜராசந்தர் எண்ணுவதுவரை மட்டுமே அது நீடிக்கும். மகதப்படைகளை அஞ்சி பாலைநிலத்தைக் கடந்துசென்று கடற்பாறைகளுக்கு மேல் ஒரு சிறு ஊரை அமைத்து அங்கே ஒளிந்திருக்கிறான். சிந்துவில் செல்லும் படகுகளை கொள்ளையடிக்கிறான். கூர்ஜரன் சினப்பதுவரை அவன் ஆடல் நீடிக்கும்’ என்றான்.

அவன் முழு அரசனாகவில்லை என்று முன்னரே பலர் சொல்லி கேட்டிருந்தேன். அவனுக்கு அஸ்தினபுரியில் அவன் அத்தையின் ஆதரவு இருக்கக்கூடும் என்ற ஐயத்தாலேயே அவனை ஷத்ரிய மன்னர் விட்டுவைத்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். எனக்கு அவ்வரசியல்கள் புரியவில்லை. ஆனால் அவனையே எண்ணிக்கொண்டிருந்தேன். அவன் தோற்கக்கூடுமென என்னால் எண்ணமுடியவில்லை.

நான் குருநிலைக்குச் சென்றேன். அப்போது அவன் மட்டுமே ஆசிரியருடன் இருந்தான். அவன் தமையனும் பிற யாதவரும் வெளிக்கூடத்தில் இருந்தனர். அவர்கள் என்னைக்கண்டு எழுந்து தலைவணங்கினர். அவர்களின் முகங்கள் கவலையுடன் இருந்ததைக் கண்டேன். அவர்கள் உடலெங்கும் புழுதி வியர்வையில் ஊறி வழிந்தது.  பலராமனிடம் நான் ‘ஏன் புழுதியுடனேயே வந்தீர்கள்? நீராடி உடைமாற்றிவிட்டு ஆசிரியரை சந்திக்கலாமே?’ என்றேன். அவன் ‘இளையோனின் விருப்பம்’ என்றான். உள்ளே செல்லலாமா என அறியாமல் நான் நின்றேன்.

வெளியே ஏதோ ஒலி கேட்டது. நான் நோக்கியபோது இளைய யாதவன் மறுவாயில் வழியாக வெளியேறி புரவியில் ஏறிக்கொள்வதை கண்டேன். ‘இளையோன் கிளம்பிவிட்டான்’ என்று பலராமன் கூவியபடி வெளியே ஓடினான். பிறரும் அவனுடன் சேர்ந்து வெளியே ஓடினர். அவர்கள் முற்றத்தில் நின்ற புரவிகளில் ஏறிக்கொண்டனர். நான் வெளியே சென்று இளைய யாதவனை நோக்கியபோது அவன் பின்பக்கத்தை மட்டுமே கண்டேன். அவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். குருநிலையின் மாணவர்கள் கூடி அவர்கள் செல்வதை பார்த்தனர். எவருக்கும் ஏதும் புரியவில்லை.

நான் ஆசிரியரின் அறைக்குள் சென்றேன். அவர் புலித்தோலில் கைகளைக் கட்டியபடி அமர்ந்திருந்தார். அருகே சென்று பணிந்தேன். அவரே ஏதேனும் சொல்வார் என எதிர்பார்த்தேன். அவர் துயர்கொண்டவராக தலைகுனிந்து அமர்ந்திருந்தார். நான் மெல்ல ‘என்ன நடந்தது? இளையோனைப் பார்க்க நானும் ஆவல்கொண்டிருந்தேன்’ என்றேன்.

ஆசிரியர் ‘நான் அவனிடம் ஒரு ஆசிரியக் காணிக்கையை கோரியிருந்தேன். அதை அளித்துவிட்டுச் செல்கிறான்’ என்றார். நான் புரியாமல் ‘அவன் ஏதும் கொண்டுவரவில்லையே?’ என்றேன். ‘அதை செய்தியாகக் கொண்டுவந்து அளித்தான்’ என்றார். ‘ஆசிரியரே, அதன்பொருட்டு நீங்கள் ஏன் துயர்கொள்ளவேண்டும்?’ என்றேன். அவர் பெருமூச்சுவிட்டபின் எழவிரும்புபவராக கைநீட்டினார்.

நான் அவரை தூக்கினேன். என் தோள்பற்றி நின்றபோது அவர் தள்ளாடுவதை உணர்ந்தேன். ‘ஆசிரியரே, உங்களுக்கு என்ன ஆயிற்று?’ என்றேன். ‘என் மைந்தன் சிலநாட்களில் இங்கு வருவான். அவனே இனி இக்குருநிலையை தலைமைதாங்கி நடத்தட்டும்’ என்றார். நான் ‘ஆம், அது அனைவரும் எதிர்பார்த்ததுதானே?’ என்றேன். ‘நான் நாளை காலையே கிளம்பிச்செல்கிறேன்’ என்று அவர் எங்கோ நோக்கியபடி சொன்னார். நான் திடுக்கிட்டு ‘ஏன்?’ என்றேன். ‘எங்கு செல்கிறீர்கள், ஆசிரியரே?’ என்று மேலும் பதறிக் கூவினேன். ‘நான் கிளம்பியாகவேண்டும். இனி இங்கிருந்து சொல்லாடுவது கேலிக்குரியது’ என்றார்

அக்குரலில் இருந்த தளர்வை ஒருநாளும் மறக்கமுடியாது என்னால். ‘நானும் வருகிறேன், ஆசிரியரே’ என்றேன். ‘இல்லை, இப்பயணத்தை நான் தனியாகவே நிகழ்த்தவேண்டும். மீண்டும் திரும்பிவரப்போவதில்லை. எய்தினேன் என்றால் நன்று. இல்லையேல் அப்படியே உதிர்கிறேன் என்றுபொருள். அதுவே ஊழ்’ என்றார். நான் துயரத்துடன் ‘வேண்டாம், ஆசிரியரே. தாங்கள் எழுப்பிய அமைப்பு இது. நாங்கள் உங்கள் மைந்தர். எங்களை கைவிட்டுவிட்டுச் செல்லவேண்டாம். அது எவ்வகையிலும் முறையல்ல. நாங்கள் ஏதிலிகளாகிவிடுவோம்’ என்றேன். சொல்லும்போதே அழத்தொடங்கினேன்.”

ஆனால் அவர் உறுதியுடனிருந்தார். மேற்கொண்டு ஒரு சொல்லும் உரைக்கவில்லை. ‘என்ன நிகழ்ந்தது?’ என்று நான் கேட்டேன். அவர் மறுமொழி சொல்லவுமில்லை. அன்றிரவு நான் ஆசிரியரின் குடிலுக்கு வெளியே அமர்ந்திருந்தேன். அவர் என்னை அழைத்து ஏதேனும் சொல்வார் என எண்ணி காத்திருந்தேன். அவர் இரவெல்லாம் துயிலாமல் குடிலுக்குள் இருளில் அமர்ந்திருந்தார். இரவெல்லாம் அவர் மூச்சொலியை நான் கேட்டேன்.

அரைத்துயிலில் அவரைத் தொடர்ந்து எங்கோ சென்றுகொண்டிருந்தேன் அவர் எழுந்த ஒலிகேட்டு நான் எழுந்தேன். வெள்ளி முளைத்திருந்தது அப்போது. நான் வாயிலில் சென்று நின்றேன். அவர் கையில் ஒரு கோலுடன் வெளியே வந்தார். என்னைப் பார்க்கவில்லை என்பதுபோல கடந்து சென்று இருளுக்குள் நடந்தார். அவரைத் தொடரவேண்டுமென என் கால் தவித்தது. ஆனால் நான் அங்கேயே நின்றிருந்தேன்.

 “அவர் சென்றது ஏன் என்று ஓரிரு மாதங்களிலேயே தெரியவந்தது” என்று சினத்துடன் பிருகதர் சொன்னார். “சாந்தீபனி குருநிலையின் தலைமாணாக்கனாகிய இளைய யாதவன் சென்று துவைத குருநிலையில் மாணவனாகச் சேர்ந்த செய்தியை காடே பேசிக்கொண்டது. அங்கிருந்து அவன் சாந்தோக்ய குருநிலைக்குச் சென்றான். குருநிலைகள்தோறும் அவன் தாவிக்கொண்டிருந்தான். வேதக்குரங்கு என அவனை எள்ளிநகையாடினர் வைதிகர். அதை வளர்த்த குறவனின் காதைக் கடித்துவிட்டு கிளைக்குத் தாவியது அது என்றனர்.”

“ஆம், உண்மையில் நடந்தது அதுவே. சாந்தீபனி குருநிலையின் மெய்மையை முழுமையாக மறுத்துரைத்தான். ஆசிரியரின் முகத்தை நோக்கி அதை சொன்னான் என நான் உய்த்துணர்ந்தேன். அவர் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையையே பொருளில்லாததாக ஆக்கினான். அவர் நின்றிருந்த நிலம் புகையென ஆகியது. அவர் அனைத்தையும் உதறிவிட்டுச் சென்றது அதனால்தான்” என்றார் பிருகதர்.

“அன்று அவனை நான் வெறுக்கத் தொடங்கினேன். வேம்பென நஞ்சென அவனை எண்ணிக்கொள்கிறேன் இன்று.” அவர் மூச்சிரைத்தார். பின்பு பற்களைக் கடித்தபடி பாறைமேல் ஏறிச்சென்று தன் மரவுரியை எடுத்து அணிந்தார். மேலாடையை படீர் படீர் என உதறினார். சுழற்றி தன்மேல் அதை அணிந்துகொண்டு தலைமயிரை கைகளால் தட்டி நீரைத்தெறிக்கவிட்டார்.

நீரில் தருமன் அவரையே நோக்கியபடி நின்றார். “அவன் அதன்பின் இங்கு வந்ததே இல்லை. நானும் அவனை சந்தித்ததில்லை. அவன் வெற்றிகளை அறிந்துகொண்டே இருந்தேன். துவாரகை பாரதத்தின் முதன்மைப்பெருநகராக வளர்ந்ததையும் சூதர்வழி கேட்டேன். அவன் குடி அவனை தெய்வமென வழிபடுகிறது என்றார்கள். வேதம் புதிது செய்யவந்த வித்தகன் என அவனை சில இளவைதிகர் போற்றுவதையும் கேட்டேன்.” வெறுப்பில் முகம் சுளிக்க “இப்போது இங்கு வரப்போகிறான் என்று செய்தி வந்துள்ளது. அவனைச் சந்திக்கும் நல்லூழ் எனக்கு அமைகிறது. நன்று!” என்றார்.

அவர் விழிகளின் ஒளியையே நோக்கிக்கொண்டிருந்தார் தருமன். வெறுப்பு உருவாக்கும் ஆற்றலை எண்ணிக்கொண்டார். எளிய மனிதர் இவர். இவருள் ஊறித் தேங்கிய வெறுப்பின் விசையால் பல மடங்கு பேருருக் கொண்டிருக்கிறார். “இங்கு வருவதாக அவன் எழுதிய ஓலையை வாசித்தேன். அதில் ஒரு வரி… என்னை கொந்தளிக்க வைத்தது அது. குருவசை புரிந்தமையின் விளைவை அவன் அறிகிறானாம் இன்று. ஆகவே இங்கு குருவை எண்ணி ஒரு விளக்கேற்றிவிட்டுச் செல்ல விழைகிறானாம்.”

“மூடன்! மாமூடன்!” என அவர் கூவினார். “தன் ஆசிரியரை அவன் வசைபாடவில்லை, கொன்றான். ஆம், கொன்றான். எங்கள் ஆசிரியர் சென்ற வழிகூட எவருக்கும் தெரியாது. காட்டுப்பறவைபோல எங்கோ உதிர்ந்திருப்பார். இவன் இத்தனை காலம் கழித்துத்தான் செய்தவற்றை உணர்கிறானா?” மேலாடையை தோளிலிட்டுவிட்டு திரும்பி தருமனிடம் “அவனிடம் சொல்லுங்கள், நான் இங்கு இருக்கிறேன் என்று! அவன் முகத்தில் நான் காறி உமிழ்ந்தேன் என்று! நாற்பதாண்டுகளாக நான் என் குருவின் கால்களையே எண்ணிக் கொண்டிருப்பவன். என் முகத்தை ஏறிட்டு நோக்கும் தகுதி அவனுக்கில்லை என்று அவனிடம் சொல்லுங்கள்!” என்றார்.

அவர் திரும்பி நடந்து செல்வதை தருமன் நோக்கிக்கொண்டிருந்தார். தளர்ந்த காலடிகளுடன் நீரில் நின்றமையால் அதன் இழுவிசையை அறிந்தார். மும்முறை மூழ்கி எழுந்து கரைவந்து தலைதுவட்டிக்கொண்டார். தன் உடல் எடைகொண்டு கால்களை அழுத்துவதாக உணர்ந்தார்.

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 35

ஏழாம் காடு : சாந்தீபனி

[ 1 ]

பிருஹதாரண்யகத்தில் இருந்து கிளம்பி சாந்தீபனிக் காட்டுக்குச் செல்லும் வழியெங்கும் தருமனும் தம்பியரும் இளைய யாதவரையே எண்ணிக்கொண்டு சென்றனர். ஆனால் ஒரு சொல்லேனும் அவரைப்பற்றி பேசிக்கொள்ளவில்லை. அவரைப்பற்றி எண்ணும்போது எப்போதுமே எழுந்துவரும் உளஎழுச்சியும் உவகையும் அப்போது உருவாகவில்லை. முன்பு எப்போதும் உணர்ந்திராத தனிமையும் நிலைகொள்ளாமையுமே வந்து மூடிக்கொண்டது.

தருமன் அவரைப்பற்றி பேச எண்ணினார். துவாரகையில் என்ன நடந்தது, சால்வன் தோற்கடிக்கப்பட்டுவிட்டானா? ஆனால் அவ்வினாவுக்கு விடையென வழக்கம்போல உள்ளம் பொங்கியெழும் ஒரு வெற்றிக்கதை சொல்லப்படாவிட்டால் வாழ்க்கையில் நம்பிப் பற்றிக்கொள்ள வேறேதும் எஞ்சியிருக்காது. அத்தருணத்தில் அவர் பெயர் ஒன்றே நீண்ட இருட்குகைப்பாதையின் மறுஎல்லையின் ஒளிப்புள்ளியாகத் தெரிந்தது.

அவர் விழைந்ததுபோலவே செல்லும் வழியில் ஒரு இசைச்சூதனை கண்டுகொண்டார்கள். பிருஹதாரண்யகத்திலிருந்து கிளம்பி மரத்தடிகளிலும் காட்டிலமைந்த அறச்சாவடிகளிலும் இரவு தங்கி பதினெட்டுநாட்கள் நடந்து சாம்யகம் என்னும் காட்டில் அமைந்த அன்னநிலையத்தில் உணவுக்காகக் காத்திருந்தபோது அவன் அவர்களுக்கு முன்னால் நின்றிருந்தான். புழுதிபடிந்த உடலுடன் கந்தையென்றான மரவுரி அணிந்து சிக்குபிடித்த தலைமுடியும் தாடியுமாக நின்ற அவர்களை அங்கே உணவுக்கென நிரைவகுத்த எவரும் அடையாளம் காணவில்லை.

கருணன் என்னும் அச்சூதன் மட்டும் திரும்பி நோக்கி “அந்தப் பேருடலரும் உணவுக்காகவா வந்து நின்றிருக்கிறார்?” என்றான். பீமன் “ஆம், சூதரே. இங்கு அன்னம் அளந்து வழங்கப்படவில்லை அல்லவா?” என்றான். “அது உண்மை. ஆனால் அளவின்றி வழங்கப்பட்டால் நீங்கள் ஒருவர் உண்பதற்கான அன்னம் இக்காட்டில் இருக்காது” என்றான் அவன்.

“அஞ்சவேண்டாம். நான் அளவுக்குட்பட்டே அன்னத்தை உண்பதாக உள்ளேன். என் உணவு காட்டில் அளவிறந்து கிடைக்கிறது” என்றான் பீமன். “அது நன்று. காட்டில் நீர் மான்களை வேட்டையாடுகிறீரோ?” பீமன் “காட்டெருமைகளை” என்றான். கருணன் சற்று சொல்நின்று பின்பு “வாய்ப்புள்ளது. உமது உடல் அத்தகையது” என்றான். பின்னர் “எப்போதேனும் மான்களோ பன்றிகளோ சிக்குமென்றால் என்னையும் எண்ணிக்கொள்ளும்” என்றான்.

அவர்கள் பனையோலைத் தொன்னைகளில் பருப்பும் கீரையும் கிழங்குகளும் அரிசியுடனும் வஜ்ரதானியத்துடனும் கலந்து வேகவைக்கப்பட்ட அன்னம் வாங்கிக்கொண்டு சென்று ஆலமரத்தடியில் வேர்புடைப்புகளில் அமர்ந்தனர். “இரண்டுநாள் பசிக்கு சூடான அன்னம் அளிக்கும் இன்பம் நிகரற்றது” என்றான் சூதன். “ஆனால் சூடான ஊனுணவு என்றால் உயிரே எழுந்து நடனமிடத் தொடங்கிவிடும்.” பீமன் “ஆம், ஊன் ஊனை வளர்ப்பது” என்றான்.

“எனக்கு மானின் ஊன் பிடிக்கும். அவை உண்ணும் புல்லின் மணம் அவ்வூனில் இருக்கும்” என்றான் கருணன். “பன்றி ஊனை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு சேர்த்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டால் கையில்கொண்டுசெல்லும் உணவு அது. தீயில் வாட்டி கொழுப்பு உருக அப்படியே உண்ணலாம். தென்னகத்துப் பாணர் யாழில்லாமல் பயணத்துக்கு இறங்கக்கூடும், இது இன்றி இறங்குவதில்லை.”  “அதற்கு சில பன்றிகளை உடன் கூட்டிச்செல்லலாமே?” என்றான் பீமன்.

ஏறிட்டு அவனைப் பார்த்த கருணன் வெடித்துச் சிரித்து புரைக்கேறினான். மீண்டும் புரைக்கேறி தடுமாற பீமன் அவன் தலையில் ஓங்கி ஒரு தட்டு தட்டினான். மூச்சு சீரடைந்ததும் அவன் கலங்கிய கண்களுடன் “அதற்காக தலை சிதறுமளவுக்கா அடிப்பது?” என்றான். பெருமூச்சுடன் “நான் நீங்கள் எவர், எங்கு செல்கிறீர் என அறிந்துகொள்ளலாமா?” என்றான். “நாங்கள் சாந்தீபனிக் காட்டுக்கு செல்கிறோம்” என்றான் பீமன். “அது இன்னமும் எட்டுநாட்கள் பயணத்தில் அல்லவா உள்ளது?” என்றான் சூதன். “அப்படியா? நாங்கள் கேட்டுத்தெரிந்துதான் சென்றுகொண்டிருக்கிறோம்.”

சூதன் “நானும் உங்களுடன் வரலாமென நினைக்கிறேன். உணவு குறைவின்றி கிடைக்கும்…” என்றான். “நீர் எங்கே செல்கிறீர்?” என்றான் பீமன். “உண்மையை சொல்லப்போனால் நான் அதை இன்னும் அறியவில்லை. ஊர்கள்தோறும் சென்று சலித்தேன். சரி காடுகள்தோறும் செல்லலாமே என எழுந்தேன். துவைதக்காடு சென்றேன். அவர்கள் சொல்வதை நான் நாவில் ஏந்தியிருந்தால் பட்டினி கிடந்தே சாகவேண்டியதுதான் எனத் தோன்றியது. சிறந்த கதைகள் ஏதேனும் சிக்குமென்றால் ஒரு குறுங்காவியத்துடன் ஊர்களில் தோன்றுவேன்” என்றான் கருணன்.

அன்னத்தை வழித்து உண்டுவிட்டு தருமனை நோக்கி கருணன் “இவர் யார்? கல்விநிலையில் இருந்து துரத்தப்பட்ட முனிவர் போலிருக்கிறார்?” என்றான்.  பீமன் “இவர் அரியணையிலிருந்து துரத்தப்பட்ட முனிவர், யுதிஷ்டிரர் என்று பெயர்” என்றான். “ஆ!” என்று கருணன் வாயை பிளந்தான். “கதைகளிலிருந்து இறங்கி வந்துவிட்டீர்களே! அய்யோ, நான் முதல்முறையாக கதைகளில் பேசப்படும் ஒருவரை நேரில் பார்க்கிறேன்.” பீமன் “எப்படி இருக்கிறார்?” என்றான். “திரும்ப கதைக்குள் சென்றுகொண்டிருப்பவர் போலிருக்கிறார்” என்றான் கருணன். பீமன் நகைத்தான்.

“ஓநாய் போல சிரிக்கிறீர். அப்படியென்றால் நீர் விருஹோதரர். அந்தப் பெண் துருபதன் மகள். அவர் வில்விஜயர். அடாடா, ஏன் இது எனக்கு முன்னர் தோன்றவில்லை? நான் உடனே காவியம் எழுதியாகவேண்டுமே” என்றான் கருணன். பீமன் “கூச்சலிடாதீர். உமக்கு சிறந்த காவியங்கள் காத்திருக்கின்றன” என்றான். “நீங்கள் இப்போது எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றான் கருணன்.

“பிருஹதாரண்யகத்திலிருந்து. சாந்தீபனிக் காட்டுக்கு செல்கிறோம். உமக்கு வழி தெரியுமா?” என்றான் பீமன். கருணன் “சூதர்களுக்கு அனைத்து வழிகளும் தெரியும். அவர்கள் வழி தவறினால் அதுவே வழியென்றாகிவிடும்” என்றான்.

“நீர் அறிந்த வழி என்றால் எங்களுடன் வாரும்” என்றார் தருமன்.  கருணன் “அரசே, வணங்குகிறேன். தங்களை முனிவரென பார்க்கையில் ஜனகரை நினைவுகூர்கிறேன். அவரை அரசமுனிவர் என்கிறார்கள்” என்றான். தொன்னையைச் சுருட்டி கையில் எடுத்தபடி எழுந்து “ஏன்?” என்றான் பீமன். “அவர் அவ்வாறு அழைக்கப்பட விரும்பினார்” என கருணன் கைவிரல்களை நக்கியபடி சொன்னான். “பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி என அத்தனை அரசர்களும் அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் அவைச்சூதர்களால், அவர்களின் மஞ்சத்தறையின் சுவர்களுக்குள். அதைப்போன்ற ஓர் அழைப்பாகவே இதுவும் இருக்கும், அதை யாரோ கவிஞன் எழுதிவைத்துவிட்டான்.”

“சாந்தீபனி என்றால் அனைத்தையும் சுடரச்செய்வது என்று பொருள். நான் முதலில் அதை கேட்டபோது அங்கே காட்டுத்தீ எரிந்துகொண்டிருக்கும் என எண்ணினேன். பின்னர் சொன்னார்கள் அது மின்மினிகள் நிறைந்த காடு என. மின்மினி இருந்தால் நாகங்களும் இருக்கும் அல்லவா என்றேன். ஆம், அவையும் ஒளிவிடும் என்றார்கள். நஞ்சும் அதன் உணவும் ஒளிவிடுவதைப்பற்றி எண்ணியபோது மிகவும் வேதாந்தமாக அமைந்துவிட்டது. அதை ஏதேனும் முனிவருக்கு அளித்து நிகராக ஒரு கதையை பெற்றுக்கொள்ளலாம் என எண்ணுகிறேன்” என்றான் கருணன்.

அவர்கள் காட்டுப்பாதையில் செல்லத் தொடங்கினர். பீமன் மரங்களிலிருந்து கனிகளையும் காய்களையும் கொண்டுவந்தபடியே இருந்தான். “இத்தனைக்கும் பின்னரா நீங்கள் அங்கே உணவுக்கு வந்து நிரையில் நின்றீர்கள்?” என்றான் கருணன். “நான் இத்தனை கனிகளை உண்டால் காதல்பாடல்களை அன்றி வேறெதையும் பாடாமலாகிவிடுவேன்.” தருமன் “இங்கிருக்கும் காடு ஏன் சாந்தீபனி என அழைக்கப்படுகிறது?” என்றார். “நான் கற்றறிந்ததை சொல்கிறேன். உண்மை என்பது பரவலாக அனைவராலும் ஏற்கப்படுவதனால் நாச்சொல் என நீடிப்பது. மக்கள் தங்கள் விழைவை சொல்லிச்சொல்லி நிலைநாட்டிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு அதற்கு உதவுவதே சூதர்களின் கடன்” என்றான் கருணன்.

அரசே, சௌனக குருநிலையில் இருந்து பிரிந்து சென்ற பதினெட்டு பிரிவுகளில் ஒன்று சாந்தோக்யமரபு.  அதிலிருந்து பிரிந்து வளர்ந்த ஏழு பிரிவுகளில் ஒன்று என சாந்தீபனி மரபு சொல்லப்படுகிறது. முன்பு சாந்தோக்யக் காட்டின் வேதச்சொல்லவையில் சகஸ்ரர் என்னும்  இளைஞர் எழுந்து   ‘பிறிதிலாதது ஏன் தன்னை பிறிதெனக் காட்டுகிறது? அதற்குரிய விடையன்றி எதுவும் பொருளற்றதே’ என்றார். ஆசிரியராக அமர்ந்திருந்த பன்னிரண்டாவது  ஸ்வேதகேது  ‘மைந்தா, நோக்க எவருமே இல்லாதபோதும் கன்னியர் அணிசெய்துகொள்கிறார்கள். மைந்தர்கள் விளையாடுகிறார்கள்’ என்றார்.

அதன் பெயர் லீலை என்று ஸ்வேதகேது சொன்னபோது சகஸ்ரர் ‘அது ஒரு சொல் மட்டுமே’ என்றார். ‘அனைத்தும் சொற்களே’ என்று ஸ்வேதகேது அதற்கு மறுமொழி சொன்னார். அறிதலுக்கு நிகராக மானுடர் வைக்கத்தக்கது ஒரு சொல்லே. அச்சொல்லை எடுத்துக்கொண்டு அங்கு பிறிதொரு அறிதலை வைத்துச்செல்வதே பிறர் செய்யத்தக்கது’. அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாதவராக சினந்து சகஸ்ரர் சாந்தோக்ய குருநிலையிலிருந்து  கிளம்பிச்சென்றார். பிறிதொரு குருநிலையை நாட உளம்கொள்ளாதவராக அவர் காட்டுப்பாதைகளில் கால்கள் கொண்டுசென்றதுபோல சென்றுகொண்டிருந்தார். பலநாட்கள் அலைந்து அவர் சென்றடைந்த காடுதான் இன்று சாந்தீபனி என அழைக்கப்படுகிறது.

அரசே, சகஸ்ரர் அதைக் கண்டது ஆடிமாதக் கருநிலவு நாளில். அவர் ஒரு காட்டின் விளிம்பை சென்றடைந்ததும் அங்கே இருந்த குரங்குகள் அனைத்தும் ஒரு திசைநோக்கி செல்வதைக் கண்டார். அங்கு நீரோ இன்னுணவோ இருக்கக்கூடுமென எண்ணினார். பின்னர் காட்டுப்பசுக்களும் மான்களும் அதே திசைநோக்கி சென்றன. விலங்குகள் அனைத்தும் கூட்டம் கூட்டமாக மலையேறிச்செல்லக் கண்ட அவர் தானும் உடன்சென்றார். வளைந்து சுழன்றேறிய அப்பாதை அவரை ஒரு மலையுச்சியில் கொண்டுசென்று சேர்த்தது.

அங்கே விலங்குகள் அனைத்தும் ஒன்றை ஒன்று நெருக்கியபடி மரங்களிலும் புதர்களிலுமாக காத்திருப்பதை கண்டார். அவை காத்திருப்பது எதுவென்றறியாமல் அவரும் அத்திசை நோக்கி விழி நாட்டி நின்றார். இருள் பரவத்தொடங்கியதும் அவர் தொலைவில் தரையும் வானும் சந்திக்கும் வளைகோட்டில் மெல்லிய நீலவெளிச்சத்தை கண்டார். அங்கொரு பெரிய ஏரி தேங்கியிருப்பதாக முதலில் எண்ணினார். ஆனால் வான் ஒளி அணைய அணைய அந்த வெளிச்சம் கூடியபடியே வந்தது. சற்றுநேரத்தில் அங்கே காட்டுத்தீ எரிந்தணைந்த கனல்வெளி பரந்திருப்பதுபோல் தெரிந்தது. அவ்வொளி பச்சைநீரொளியா என விழியை மயக்கியது

குரங்குகள் ஊளையிடத்தொடங்கின. ஒன்றுடன் ஒன்று இணைந்துகொண்டு அவை எழுப்பிய ஊளை அறுபடாது வானில் எழுந்து வளைந்தது. அங்கிருந்த அத்தனை விலங்குகளும் ஒலியெழுப்பத் தொடங்கின. அவ்வொலிகள் அனைத்தும் கலந்து அந்த மலையின் கூக்குரல் என ஒலித்தது. அவர் கீழிறங்கி செல்லத்தொடங்கினார். வரையாடுகள் மட்டுமே செல்லத்தக்க மலைச்சரிவு அது. உள்ளத்தின் விசையால் இயக்கப்படும் அச்சமற்ற இளையோர் மட்டுமே அவ்வழி செல்லமுடியும்.

ஏழுநாட்கள் பயணம் செய்து அவர் அந்த காட்டை சென்றடைந்தார். அது ஒளிவிடுவது ஒரு விழியமயக்கோ என்னும் ஐயம் அவருக்கிருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் அவர் அணுகிச் செல்லும்தோறும் அந்த ஒளி மிகுந்தபடியேதான் வந்தது. அது இளநீல ஒளியெனத் தோன்றியது. செந்நிறமோ பச்சையோ என மாறிமாறி மாயம் காட்டியது. பேருருவம் கொண்ட மின்மினி அது என எண்ணம் குழம்பியது. கந்தர்வர்கள் மானுடரை ஈர்த்து அழிக்க வைத்த பொறியோ என்று அஞ்சியது.

அந்தக் காட்டை அவர் காலையில் சென்றடைந்தார். அது ஒரு மாபெரும் நொதிச்சேற்றுக்குழி. அதன்மேல் விழுந்து மட்கிக்கொண்டிருந்த பெரிய மரங்களின் மீதன்றி எங்கே கால்களை வைத்தாலும் புதைந்து உள்ளிழுத்தது. நொதித்துக் குமிழிவெடிக்கும் சேற்றின் நீராவிவாடை பன்றி வாய்திறந்ததுபோல எழுந்தது. அங்குள்ள மரங்களெல்லாமே பெரும்கோபுரங்கள் போல எழுந்த அடிமரங்களுடன் கிளைவிரித்து பச்சைக்கூரையை தாங்கி நின்றன. அவற்றின் வேர்கள் நீராடும் பாம்புக்கூட்டங்கள் போல சதுப்புக்குள் மூழ்கி அப்பால் எழுந்து வளைந்து மீண்டும் மூழ்கிப்பரவியிருந்தன.

அச்சதுப்பு முழுக்க மூழ்கிய யானையின் துதிக்கைக்குமிழ் போலவும், தளிர்விட்டெழும் வாழைக்கன்றின் கூம்புமுனைபோலவும், ஆட்டுக்குட்டியின் இளங்கொம்புகள் போலவும், பசுவின் வால்மயிர் போலவும் மூச்சுவிட எழுந்த வேர்கள் பரவியிருந்தன. அத்தனை மரங்களிலும் இளநீலநிறமான பாசிப்பரப்பு படர்ந்து மேலேறியிருந்தது. பெருமரங்கள் இடைவெளிவிட்டு உருவான ஒளிகொண்ட வட்டங்களில் கிளைகளிலிருந்து கிளைகளாகப் பிரிந்த கள்ளிச்செடிகள் பசுந்தழல்போல செறிந்து மேலெழுந்திருந்தன.

அங்கு பெரிய விலங்குகள் ஏதுமில்லை. கீரிகள், முயல்கள் போன்ற சிறு விலங்குகள் தரையில் விழுந்த மரங்களின் மீதும் சருகுக்குவைகளின் மீதும் மட்டுமே பாய்ந்து ஓடின. கிளைகளில் சிறிய கரும்பட்டு உடலும் வெண்நுரைபடர் முகமும், நீண்ட வாலும் கொண்ட குரங்குகள் சுண்டப்பட்டவை போல தெறித்துச் சென்று சிறுநுனிகளில் அமர்ந்து ஊசலாடி எக்காள ஒலியெழுப்பின. அணில்கள் கிளைகளில் நீர்த்துளிகளென தொற்றி நீண்டோடி வால் தெறிக்க உளிசெதுக்கும் ஓசையெழுப்பின. பறவைகளின் ஓசை தழைப்பசுங்கூரைக்குமேல் ஓயாது ஒலித்துக்கொண்டிருந்தது. புதர்களுக்குள்ளும் சருகுக்குவைகளுக்குள்ளும் செம்போத்துக்கள் கொல்லன் துருத்தியென ஓசை எழுப்பி ஊடுருவி ஓடின.

அங்கு ஒளிவிடுவது எது என அவரால் உணரமுடியவில்லை. பெரிய மரமொன்றின்மேல் தொற்றி ஏறி அதன் உச்சிக்கவை ஒன்றில் கால்நீட்டி அமர்ந்தார். செல்லும்வழியில் பறித்துக் கொண்டுசென்ற கனிகளை அங்கு அமர்ந்து உண்டார். அந்த மரக்கிளையிலிருந்த பாசிப்படலம் அவர் உடலில் சாம்பலென பூசிக்கொண்டது. அது இருந்தால் கொசுக்கள் கடிக்காதென்று எண்ணி அவ்வண்ணமே விட்டுவிட்டார். அங்கு ஒளியுடன் கந்தர்வர்கள் வந்திறங்கக்கூடுமென எண்ணினார். அவர்கள் வரும்பொழுது தான் விழித்திருப்போமா என ஐயுற்றார். அவர்களின் மாயையால் துயின்றுவிடக்கூடும். துயிலாதிருக்கவே தன் முழுச் சித்தத்தையும் குவித்தபடி அமர்ந்திருந்தார்.

இருள் பரவத்தொடங்கியதும் அவர் மெல்ல தன் உடல் ஒளிகொள்வதை கண்டார். திகைப்புடன் எழுந்து தன் கைகளை பார்த்தார். இளநீலப் பட்டுப்பரப்பாக அவர் உடல் மாறிவிட்டிருந்தது. வயிறும் கால்களும் மின்னத் தொடங்கின. தன்னைச் சூழ்ந்திருந்த மரங்கள் அனைத்தும் இளநீலமாக ஒளிகொள்ளத் தொடங்கியபோதுதான் அது என்ன என்று அவருக்குப் புரிந்தது. அந்த மரங்களின் மேல் படர்ந்திருந்த பாசியின் ஒளி அது. கூர்ந்து நோக்கியபோது அதன் ஒவ்வொரு துளிப்பருவும் மிகமென்மையான ஒளியை வெளிவிட்டது. ஆனால் அவை இணைந்து அக்காட்டையே ஒளிகொள்ளச் செய்தன.

அந்த ஒளியில் இலைப்பரப்புகளும் பளபளத்தன. சற்றுநேரத்தில் கீழே சதுப்புவெளியிலிருந்து பல்லாயிரக்கணக்கில் மின்மினிகள் எரிகனல்மேல் காற்றுபட்டதுபோல கிளம்பத்தொடங்கின. அவை எழுந்து இலைகள்மேல் அமர்ந்தன. காற்றில் சுழன்று நிறைந்தன. காட்டின் ஒளி செந்நிறமாகியது. விழிகொள்ளாத விம்மலுடன் அவர் அதை நோக்கி அமர்ந்திருந்தார். பின்னர் அந்தக் கள்ளிச்செடிகள் ஒளிகொள்ளலாயின. அவற்றுக்குள் பச்சைநிற ஒளியே சாறென ஓடுவதுபோல. அவற்றின் தண்டுகளுக்குள் அது ஓடுவதன் அலைகளை பார்க்கமுடிந்தது.”

இரவெல்லாம் அவர் அந்த ஒளியில் விழிகளில் ஆத்மா நிறைந்திருக்க அமர்ந்திருந்தார். புலரியில்தான் துயின்றார். துயிலில் அவரது மூடிய இமைகளுக்குமேல் வெயில்காசுகள் விழுந்தபோது அவர் ஒரு கனவுகண்டார். அக்கனவில் அவர் அறிந்ததன் அதிர்வில் உடல் நிலைதடுமாற கீழே விழுந்தார். அவரது ஒரு கால் மரக்கிளையில் சிக்கிக்கொண்டதனால் கீழே மரத்தடிமேல் விழாது தப்பினார். உடலெங்கும் சிராய்ப்புகளில் குருதி வழியும்போதும் அவர் மகிழ்ந்து சிரித்துக்கொண்டிருந்தார்.

SOLVALAR_KAADU_EPI_35

அரசே, அவர் உருவாக்கிய கொள்கையை மகாலீலாசித்தாந்தம் என்கிறார்கள். இவ்விசும்பும் புடவியும் பிரம்மத்தின் விளையாட்டுக்கள். செயலுக்குத்தான் தேவையும் இலக்கும் உண்டு. ஆடல் ஆடலின் இன்பத்திற்கென்று மட்டுமே நிகழ்த்தப்படுவது. அது ஆடியும் கன்னியுமாகி தன்னை பார்த்துக்கொள்கிறது. சிம்மமும் மானுமாகி தன்னை கிழித்து உண்கிறது. புழுவும் புழுவுமாகிப் புணர்ந்து புழுவாகப் பிறக்கிறது. அலைகளினூடாக தன்னை நிகழ்த்திக்கொள்கிறது கடல் என்று அக்கொள்கையை சகஸ்ரர் முன்வைத்தார் என்று அவர்களின் நூல் சொல்கிறது.

”அனைத்தும் ஒளிவிடும் காட்டுக்கு பாரதவர்ஷமெங்கிலும் இருந்து இன்று மாணவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அத்தனை வேதமெய்மைகளையும் சாந்தீபனியின் மெய்மையாக மாற்றிக்கொள்ளமுடியும் என்கிறார்கள். அனைத்து மெய்மையாகவும் அது உருமாறவும் கூடும்.  ஏனென்றால் அது ஒளி. தான் தொடுவதையெல்லாம் தானென்று காட்டும் பெருமாயத்தையே நாம் ஒளி என்கிறோம்” என்றான் கருணன். “சாந்தீபனி கல்விநிலையின் நூற்றெட்டு கிளைகள் பாரதம் முழுக்க இருக்கின்றன. தெற்கே உஜ்ஜயினியில் இருக்கும் சாந்தீபனிக் கல்விநிலையில்தான் இளைய யாதவர் தன் மூத்தவருடன் சேர்ந்து கல்விபயின்றார்.”

அவர்கள் பிறிதொரு அன்னநிலையத்தின் அருகே கட்டப்பட்டிருந்த கொட்டகையில் ஈச்சையோலைப் பாய்களில் அமர்ந்திருந்தனர். ஆமணக்கெண்ணை ஊற்றப்பட்ட கல்விளக்குகள் எரிந்த கொட்டகைக்குள் பலர் துயின்றுகொண்டும் சிறுகுழுக்களாக அமர்ந்து பேசிக்கொண்டும் இருந்தனர். பெரும்பாலானவர்கள் எளிய யாதவர்களாகவும் சூத்திரர்களாகவும் தோன்றினர். நாடோடிகளான சூதர்களும் அவர்களுள் இருந்தனர். அவர்களின் முழவுகளும் யாழ்களும் தலைமாட்டில் ஒலிமறந்து அமைந்திருந்தன.

அவர்களை தருமன் நோக்குவதைக் கண்ட கருணன் “சாந்தீபனிக்காடுதான் வேதக்கல்விநிலைகளில் அனைத்துக் குடிகளும் தேடிவருவதாக உள்ளது. அது வேதக்கல்விக்கு குலம் நோக்குவதில்லை. வேதமெய்மை அனைவருக்கும் உரியதென்று  எண்ணுகிறது. வேதம் நாடிவரும் புதுக்குலங்களால்தான் அது இன்று பேணப்படுகிறது” என்றான். “ஆம், யாதவர்கள் மட்டுமல்ல நிஷாதர்களும் கூட தங்கள் மைந்தர்களை சாந்தீபனிக் கல்விநிலைகளில்தான் சேர்க்கிறார்கள்” என்றான்.

[ 2 ]

“இப்புடவியின் அனைத்து உயிர்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளன” என்றார் சாந்தீபனி முனிவர். “இங்குள்ள ஒரு சிறுபுழு அழியும் என்றால் அதை உண்ணும் ஒரு பறவை அழியும். அப்பறவையை நம்பியிருக்கும் ஒரு விலங்கு அழியும்… கோடானுகோடி உயிர்கள் ஒன்றுடன் ஒன்று முழுமையாக தொடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள உப்புகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலந்துள்ளன. உப்புகளுடன் உயிர்கள் பின்னப்பட்டுள்ளன. அரசே, ஒன்றை ஒன்று சார்ந்தே இங்குள்ள அனைத்தும் செயல்படுகின்றன. தனித்திருக்கும் பெரும்பாறைகூட மழையிலும் வெயிலிலும் கரைந்து தன்னை செதுக்கிக் கொண்டிருக்கிறது.”

அவ்வாறென்றால் மெய்மை மட்டும் எப்படி தனித்தமைய முடியும்? இங்குள்ள எந்த மெய்யறிதலும் பொய் அல்ல. பயனற்றதும் அல்ல. அது எதனுடன் இணையவேண்டியது என்பது மட்டுமே நாம் அறியவேண்டிய வினா. ஒவ்வொரு உண்மையும் தனக்கு இணையும் எதிரும் ஆன பிற பல்லாயிரம் உண்மைகளுடன் இணைந்தே பொருள்கொள்கிறது. உயிர்களைப்போல உப்புகளைப்போல உண்மைகளும் பெருநடனமொன்றின் சிறுதுளியசைவுகள் மட்டுமே. அதையே லீலை என்கிறார் எங்கள் முதலாசிரியர்.

பிருஹதாரண்யக மரபை நோக்குங்கள். நேதி நேதி என மறுத்துமறுத்துச் சென்று எஞ்சுவதே இறுதியுண்மை என்று அது எண்ணுகிறது. அது மறுத்துச் சென்ற அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கைகோத்து ஒற்றைப் பேருருவாக அவர்களை சூழ்கின்றன. பின்னர் அவர்கள் நிகழ்த்துவது அந்த இறுதியுண்மையை படைக்கலமாகக் கொண்டு முடிவிலியுடன் ஒரு போர். பொருளில்லாத பெருநடனமே அதுவும். அரசே, இங்குள்ள அனைத்தும் பொருளின்மையின் பேரழகு கொண்டவை. கோடானுகோடி இணைவுகளும் பிரிவுகளும் விரிவுகளும் ஒடுங்கல்களுமாக நிகழும் இந்த விளையாட்டை உணர்ந்துகொண்டவன் விடுதலை கொள்கிறான்.

அரைநாழிகைநேரம் ஒரு சிறுநாய்க்குட்டியின் விளையாட்டை கூர்ந்து நோக்கி பொருள்கொள்ள முயல்க! சித்தம் சிதறிப்போகும். அதன் பொருளின்மை பேரலையாக எழுந்து வந்து எண்ணப்பெருவெளியுடன் மோதும். நம்மால் பொருளின்மையை தாளவே முடிவதில்லை. நாம் இங்கு ஒவ்வொன்றையும் எண்ணி அடுக்கியிருக்கிறோம். பெயரிட்டு இலக்கமைத்து பொருத்திப் பொருள் அளித்து வைத்திருக்கிறோம். நம் சிற்றுலகுக்கு அப்பால் உள்ளது இந்த நிகழ்பெருக்கு. பொருளின்மையின் கொந்தளிப்பு அது.

அதை நோக்குபவன் முதலில் தன் சின்னஞ்சிறு உலகின் எளிய நெறிகளைக்கொண்டு அதற்கொரு பொருள் சமைத்து அளிக்கிறான். அதுவே அதன் மெய் என்று தன்னைச் சூழ்ந்தவர்களிடம் சொல்லிச்சொல்லி நிலைநாட்டுகிறான். அரசே, மெய்கண்டவன் ஏன் மெய்யிலமராமல் அதை தோளிலேற்றி ஊர்க்கோலம் செல்கிறான்? ஏனென்றால் அவன் தன்னைச்சூழ அம்மெய்மை திகழும் ஓர் உலகை அமைத்துக்கொள்ள விழைகிறான். அது அவன் கோட்டை. அதுவே அவன் சுற்றம். அவன் மொழி அது. அவன் மூச்சிழுக்க விழையும் காற்றுவெளி.

பிறிதொருவன் தன்னை காத்துக்கொள்ள முயல்வதில்லை. காற்றில்வைத்த மணப்பொருள் என அவன் கரைந்து மறைகிறான். அவனைக் கரைக்கும் முடிவிலியை அறியமுடியாமையின் வெறிப்பு ஒளிரும் விழிகளால் நோக்கிக்கொண்டிருக்கிறான்.  யோகி அறியும் இருள் என்கின்றன அதை நம் நூல்கள். அவனை பரமஹம்சன் என்கின்றன. செத்தவன்போல் வாழ்பவன். அறிந்து கடந்து  இல்லாமல் இருப்பவன் அவன்.

அரசே கேள், அப்பொருளின்மையின் மையத்தில் பெரும்கொண்டாட்டமொன்று உள்ளது என்று கண்டுகொண்டவனே விடுதலை பெற்றவன். கொண்டாட்டங்கள் அனைத்தும் பொருளற்றவையே. பொருளற்றவை மட்டுமே கொண்டாட்டமாக ஆகவும் முடியும். இது லீலை. நிகழ்வுகளின் பெருவிளையாட்டு. நிகழ்வுகளை நோக்கும் பார்வைகளின் பெருவிளையாட்டு” என்றார் சாந்தீபனி முனிவர். “ஆகவே எந்தக் கொள்கையையும் எங்கள் மரபு விலக்குவதில்லை. எதனுடனும் மோதுவதும் மறுப்பதும் இல்லை. அனைத்தையும் உள்ளிழுத்துக்கொண்டு ஒற்றைப் பெரும்படலமெனப் பின்னி விரிந்துசெல்லவே முயல்கிறது.

”எங்கள் கொள்கையை சமன்வயம் என்கிறோம். ஒன்றுக்கு முற்றிலும் நிகரென பிறிதொன்றைக் கண்டு ஒன்றின் போதாமையை பிறிதொன்று நிரப்ப தன் இயக்கநெறிகளின்படி தானே வளர்ந்துசெல்லும் முறை இது” என்று சாந்தீபனி முனிவர் சொன்னார். “உலகியலும் மெய்யியலும், தத்துவமும் காவியமும், வேட்டலும் துறத்தலும் என முன்னோர் முரண்பட்டவை என வகுத்த அனைத்தையும் ஒன்றென இணைத்து நோக்குகிறோம். எவ்வுண்மையையும் நிலைநாட்டுவதற்காக அல்ல, உண்மைகளென இங்கு வந்தவை அனைத்தும் உண்மையின் பகுதிகளே என அறிவதற்கே இங்கு மெய்யவை கூடுகிறது.”

அவர்கள் சாந்தீபனிக் காட்டின் நடுவே அமைந்திருந்த கல்விநிலையின் மையக்குடிலில் அமர்ந்திருந்தனர். நூறு நெய்யகல்களின் பொன்னிற இதழ்கள் மெல்ல அசைந்துகொண்டிருந்த அந்த நீள்வட்டக் கூடத்தில் நூறு மாணவர்கள் மடியில் மலர்க்கை வைத்து உடல் நிமிர்ந்து விழிசரித்து அமர்ந்து அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தனர். பெரிய குடையெனக் கவிந்திருந்தது வளைக்கப்பட்ட மூங்கில்களைக்கொண்டு எழுப்பப்பட்ட கூரை. சுற்றிலும் நூறு தூண்கள் விளக்குகளை ஏந்தி நின்றிருந்தன.

“எவருமில்லா காடு தனக்குத்தானே என கொண்டாடிக்கொண்டதை எங்கள் முதலாசிரியர் கண்டார். தான் அடைந்த மெய்மையையே அவர் பெயர் எனக் கொண்டார். அனைத்தையும் ஒளிவிடச் செய்வதாக இருந்தது அந்த அறிதல். இன்று நாங்கள் இங்கு அளிக்கும் கல்வி என்பது எங்கு எதைக் கற்றாலும் அதை ஒளிவிடச்செய்யும் அறிவுதான்” என்றார் சாந்தீபனி முனிவர். “விலக்குவது எங்கள் வழக்கமல்ல என்பதனால்தான் அனைவரையும் இங்கு அமைத்துக்கொள்கிறோம். ஆகவேதான் மானுடர் அனைவருக்கும் உரியதென இது திகழ்கிறது.”

“நால்வேத மெய்மையும், தொல்வேதங்கள் அறிந்தவையும், வேதம் கிளரா புறமானுடருக்குத் தெளிந்தவையும் அனைத்தும் சென்று முயங்கிச் சுழிக்கும் ஒரு மையம். அது நாங்கள் விரியவிரியத்தான் உருவாகும் என்பதனால் எங்கள் கல்விநிலையை இங்கிருந்து தென்னகம் வரை விரித்துச்சென்றோம். யவனரும் சோனகரும் பீதரும் காப்பிரிகளும் கொண்டுள்ள மெய்மைகளையும் அள்ளி அணைத்துக்கொண்டோம். ஒரு மனிதனுக்குரிய மெய்மை உலகுக்குரியதாகும் என்றும் உலகுக்குரியதே ஒவ்வொருவருக்குரியதுமாகும் என்றும் எங்கள் ஆசிரியர்கள் சொன்னார்கள்.”

“இங்கு நிகழ்வது ஒரு பந்தாடல், அரசே” என்றார் சாந்தீபனி முனிவர். “பந்தைக் காணாமல் ஆட்டத்தைக் காண்பவரின் திகைப்பை இதற்குள் நீங்கள் அடைந்துவிட்டிருப்பீர்கள். இந்த ஆடல் எதன்பொருட்டென்று அறியும்கணம் இவையனைத்தும் இனிய களியாட்டாக மாறித் தெரியத் தொடங்கும். அத்தருணம் உங்களுக்கு அமைவதாக!” தருமன் எழுந்து தலைவணங்கினார்.

அவர்கள் மெய்யவை முடிந்து பந்த ஒளியும் நிழல்களும் முயங்கி ஆடிய அரையிருளில் தங்கள் குடில்களுக்கு திரும்பினர்.  தருமன் “இங்கிருந்து இளைய யாதவர் கிளம்பியிருக்கிறார், இங்கு மீண்டும் வந்துசேர்ந்திருக்கிறார்” என்றார். “எதற்காக இக்குருநிலையில் இருந்து அவர் கிளம்பினார்? எதைக் கண்டுகொண்டபின் திரும்பிவந்தார்?” அவர் சொற்களுக்கு எவரும் மறுமொழி சொல்லவில்லை.

இரு பந்தங்களைக் கடந்து சென்றபின் தருமன் “இன்று அவர் சொல்வது சாந்தீபனி குருநிலையின் சொற்களைத்தானா?” என்றார். அர்ஜுனன் இருட்டுக்குள் “இல்லை” என்றான். அவனைக் கூர்ந்து நோக்கினார் தருமன். ஆனால் மேலும் சொல்லாமல் அவன் நடந்து மேலும் இருளுக்குள் சென்றான். தலையசைத்தபடி தருமன் தொடர்ந்தார்.

நூல் பதினொன்று – சொல்வளர்காடு – 34

[ 11 ]

இருளில் வெளியே இறங்கி குடில்முற்றத்தில் நின்று அப்பால் தெரிந்த திரௌபதியின் குடிலை தருமன் நோக்கிக்கொண்டிருந்தார். தொலைவில் எங்கோ ஒரு காட்டுநாயின் ஊளை கேட்டது. இருளிலும் காகங்கள் சிறகடித்துப் பறந்துகொண்டிருப்பதை கண்டார். அவற்றின் கருமை வானத்தின் கருமையை குறைத்துக்காட்டியது. இருட்டுக்குள் அங்கு அவர் நிற்பதை அவரன்றி வேறெவரும் அறியவில்லை. அவ்வெண்ணமே பெரும் கோட்டையென சூழ்ந்து பாதுகாப்பளித்தது. ஆனால் அதுவே அதை பொருளற்ற செயலாகவும் ஆக்கியது.

என்ன எண்ணுகிறேன் இப்போது? இவ்விருளில் இப்படி நின்றபடி அவளையே எண்ணிக்கொண்டிருப்பதை அவள் அறியவேண்டும் என்று விழைகிறேனா? அவள் குடில்விட்டு வெளியே வருகிறாள். ஏதோ நினைப்பில் விழி சுழற்ற அவரை காண்கிறாள். அவர் அத்தனிமையில் அவளுக்காக நின்றிருப்பதை அறிந்ததும் அவள் முகம் மாறுகிறது. விழிகள் கனிகின்றன. மெல்ல அருகே வருகிறாள். எத்தனை எளிய உளநாடகம். மானுடர் தங்கள் பகற்கனவுகளுக்குள் ஆணவம்மிஞ்சிய மூடர்களாக மட்டுமே இருக்கமுடியும்போலும்.

அங்கே ஆயிரம் ஆண்டுகாலம் நின்றிருக்கலாம். தெய்வங்களும் மூதாதையரும் அன்றி எவரும் அறியப்போவதில்லை. விண்மீன்கள் என விழிதிறந்து மண்நோக்கிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு அது ஒருபொருட்டும் அல்ல. அங்கேயே ஒரு கற்பாறையாக மாறி அவர் காலத்தில் நிலைத்தாலும் தலைக்குமேல் விண்மீன்கள் மாறாது சிமிட்டிக்கொண்டிருக்கும். பெருமூச்சுடன் அந்த வீண் எண்ணங்களை விரட்டினார். உள உச்சங்களில் எண்ணங்கள் ஏன் கட்டவிழ்ந்து சிதறுகின்றன? முனைகூர்ந்தால் கொள்வதற்குப் பொருளில்லை என்பதனாலா? அல்லது கொள்ளும் அப்பொருளின் எடையை அஞ்சியா? மீண்டும் பொருளற்ற எண்ணங்கள்…

அங்கே நின்றிருக்கமுடியாமல் அவர் தன் அறைக்குள் சென்றார். நெய்யகல் மெல்லிய ஒற்றை இதழசைவாக நின்றிருந்தது. தூண்நிழல் அருகே அதன் காவல்பூதமென நின்றாடியது. பீடத்தில் அமர்ந்து அருகே வைக்கப்பட்டிருந்த சுவடியில் ஒன்றை எடுத்துப்புரட்டினார். மைத்ரேயியின் வினாக்களுக்கு யாக்ஞவல்கியர் அளித்த விடைகள் அடங்கிய சிறுநூல் அது. கைபோன போக்கில் ஏடுகளை புரட்டினார். “கணவர்கள் அவர்கள் கணவர்கள் என்பதனால் விரும்பப்படுவதில்லை, மைத்ரேயி. மாறாக அவன் ஆத்மா என்பதனால் விரும்பப்படுகிறான். மனைவி மனைவி என்பதனால் விரும்பப்படுவதில்லை. அவள் ஆத்மா என்பதனால் விரும்பப்படுகிறாள்.” கண்களை மூடி அச்சொற்களை அவர் தனக்குள் ஓடவிட்டார். உள்ளம் அச்சொற்களுக்கு அப்பால் தனியாக ஒரு சொல்நிரையென சென்றுகொண்டிருந்தது.

IMG-20160822-WA0000

“அனைத்தும் அவற்றின் பொருட்டு விரும்பப்படுவதில்லை. அனைத்தும் ஆத்மா என்பதனாலேயே விரும்பப்படுகின்றன.” அவர் அவ்வெழுத்துக்களையே நோக்கிக்கொண்டிருந்தார். பூர்ஜமரப்பட்டையில் கடுக்காய் கலந்த மையால் இறகுமுனைகொண்டு எழுதப்பட்ட வரிகள். அவை எழுதப்பட்டு எத்தனை ஆண்டுகளாகியிருக்கும்? முப்பதாண்டுகளுக்கு குறையாது. அவற்றை எழுதிய இளமாணவன் முதிர்ந்திருப்பான். அவன் அறிந்துவிட்டானா அவன் எழுதியதன் பொருளென்ன என்று?

அவர் சுவடியை வைத்துவிட்டு எழுந்து வெளியே சென்றார். மீண்டும் முற்றத்தில் நின்றிருந்த கொன்றையின் அடியில் கைகளை மார்பில் கட்டிக்கொண்டு நின்று அவள் குடிலை நோக்கிக்கொண்டிருந்தார். அவள் துயின்றிருப்பாளா? அவள் காட்டுக்குள் வந்த அன்று நன்கு துயின்றாள். மறுநாளும் துயின்றாள். எப்போது துயில்மறக்கலானாள்? துயின்றுகொண்டிருக்கவும்கூடும். இனி அவளுக்கு ஊசலாட்டம் இல்லை. இறுகி இரும்புக்குண்டு என ஆகிவிட்டது அவள் உள்ளம். அது குளிர்ந்த உலோகம் அல்ல. நஞ்சு குளிர்ந்தது. தொட்டால் கை எரிவது. அவளால் துயில முடியாது.

அவள் குடில்கதவைத் தட்டி அவள் பெயர் சொல்லி அழைத்தால் என்ன? அவள் எழுந்து வந்தால் அவளிடம் மென்குரலில் ‘அன்னையிடம் மைந்தன் என வந்துள்ளேன்’ என்று சொல்லவேண்டும். அப்போது குரல் உடையலாம். கண்களில் நீர் நிறையலாம். அவரே இருளுக்குள் புன்னகைத்துக்கொண்டார். அவள் முகம் அப்படியேதான் இருக்கும் என்பதில் ஐயமே எழவில்லை. இருளுக்குள் இருண்ட தேவிசிலை போல. கல்விழிகள், கல்லுதடுகள். கண்களைக்கொட்டினாலும் இருளில் எழுந்த அந்தப் பாவை விழிகளுக்குள் நின்றது. நிமிர்ந்து வானில் அலைந்த காகங்களை பார்த்தார்.

அப்படி அவள் முன் சென்று நிற்கும் உரிமையை அளிப்பது எது? அவளுடன் காமத்திலாடிய பொழுதுகளின் நினைவுதான். ஆணுக்கு மட்டும்தான் அது அத்தனை முதன்மையானதா? பெண்ணை ஆட்கொண்டுவிட்டதாக, அவளுக்குள் புகுந்து முற்றிலும் அறிந்துவிட்டதாக எண்ணுகிறானோ? அந்தத் தனிமையின் தருணங்களை அவளால் கடக்கவேமுடியாதென்று எண்ணிக்கொள்கிறானோ? ஆனால் ஆணுக்கு தன் உடல் எதுவோ அது அல்ல பெண்ணுக்கு என்று தோன்றியது. ஆண் உடல் அவனுக்கு மட்டும் உரியது. அவள் உடலோ முதன்மையாக அவள் குழந்தைகளுக்குரியது. குழந்தைகளுக்குப்பின் அது அவளுக்கு முற்றிலும் வேறுபொருள் கொண்டுவிடுகிறதோ? அவள் கொள்ளும் தனிமையின் தருணங்கள் காமத்தில் மட்டுமல்ல…

எண்ணங்கள் அழுத்த அவர் இருளில் நடந்தார். நின்றபோது சுமைகொண்ட எண்ணங்கள் நடந்தபோது உடன்பறப்பதன் விந்தையை உணர்ந்து புன்னகைத்துக்கொண்டார். முற்றிலும் அகன்று சென்றுவிட்டாளா? மீளவே மாட்டாளா? ஆம், அவ்வாறுதான், ஐயமே இல்லை. அதுவே முறை. அதுவன்றி பிறிது எதுவும் அத்தருணத்தை, அங்கெழுந்த சொற்களை பொருளற்றவையாக்கிவிடும். ஆனால் அவ்வாறு அது முற்றிலும் முடியாது என்றே அரற்றிக்கொண்டிருக்கிறது உள்ளம். அது வெறும் விழைவு. ஏக்கம். ஆனால் அதை தொடும் அருகமைவில் பார்க்கமுடிகிறது.

இருளில் தன் காலடிகள் ஒலிக்க நடந்தார். மரக்கிளைகளில் கூடணைந்திருந்த பறவைகள் எழுந்து சிறகடித்துப் பறந்தன. புதர்களுக்குள் ஒரு சிற்றுயிர் சருகின் சலசலப்புடன் ஓடி மறைந்தது. தொடர்பில்லாமல் வாரணவதம் நினைவுக்கு வந்தது. அந்த எரிமாளிகையை குகைமுடிவில் எழுந்து இருளில் நின்று நோக்கியபோது அது ஒரு சிதை எனத் தோன்றியது. அதில் தானும் உற்றோரும் எரிந்துகொண்டிருப்பதுபோல. அதிலெரிந்தவர்கள் அறுவர். அறியாத ஆறுமுகங்கள். அவர்களாகி அங்கே எரிந்தமைந்தது அவரும் ஐவரும்.

பிருஹதாரண்யகத்தின் கதை சொல்லிக்கொண்டுவந்த வைரோசனனிடம் திரௌபதி கேட்டாள் “அவர்கள் ஏன் இங்கிருந்து கிளம்பிச்சென்றார்கள்? அவர்களுக்குரியதல்லவா இந்தக் கல்விநிலை?” வைரோசனன் “இல்லை, அரசி. இதன் நிலமும் பொருளும் மட்டுமே அவர்களுக்குரியவை. இங்குள்ள கல்வி யாக்ஞவல்கியரால் வகுக்கப்பட்டது. சுலஃபை மைத்ரேயி இதை தலைமை தாங்கி நடத்தியபோதுதான் பெண்கள் இங்கு சேர்க்கப்பட்டார்கள். பெண்களுக்கு வேதம் கற்கவும் வேள்விகளில் அமரவும் இணையுரிமை அளிக்கப்பட்டது” என்றான்.

“யாக்ஞவல்கியரின் காலத்திலேயே இங்கு வேதாங்கங்களும் உபவேதங்களும் முழுமையாக கற்பிக்கப்பட்டன. மைத்ரேயிதேவி இங்கு இயற்கலைகள் அனைத்தும் கற்பிக்கப்பட ஆணையிட்டார். வேள்வியை பெரும் களியாட்டமாக ஆக்கியதும் அவர்தான். ஆனால் ஒருநாள் அனைத்தையும் விட்டுவிட்டு அவர்கள் இங்கிருந்து கார்கியின் கல்விநிலையை சென்றடைந்தனர். இங்குள்ள ஒருதுளிப் பொன்னோ ஒரு பசுவோ அங்கு செல்லவில்லை.”

“கார்கியின் கல்விநிலையில் மெல்லமெல்ல ஆண்கள் அனைவருமே விலகிச்செல்ல பெண்கள் மட்டுமே அப்போது எஞ்சியிருந்தனர். தலைமை மாணாக்கி வதவா பிரதித்தேயியின்கீழ் அவர்கள் அமைந்தனர். அவர்கள் அங்கு ஏழாண்டுகாலம் ஊழ்கம் பயின்றனர். பின்னர்தான் ஜனகரின் அவையில் யாக்ஞவல்கியரை கார்கி கண்டுகொண்ட மெய்யவை நிகழ்ந்தது. அதன்பின் மூன்றாண்டு கடந்து கார்கி முழுமையடைந்தார். வதவா பிரதித்தேயியும் உடன் அமர்ந்து முழுமைகொண்டார். பின்னர் பதினெட்டு ஆண்டுகள் கார்கியின் வேதநிலை மைத்ரேயியால் நடத்தப்பட்டது. அக்காட்டுக்கு இன்று கார்கவனம் என்று பெயர்.”

அவள் “அங்கு வேதம் கற்பிக்கப்பட்டதா என்ன?” என்றாள். “ஆம், அங்கு கற்பிக்கப்படும் வேதம் பிறிதெங்கும் இல்லாதது. அதை சாக்தவேதம் என்கிறார்கள். அதில் ரிக் யஜுர் சாமம் மூன்றும் பிற எங்கும்போலவே. அதர்வத்தில் தொல்லன்னையரைத் தொழும் பாடல்கள் ஆயிரம் மிகையாக உள்ளன” என்றான் வைரோசனன். “இங்குள்ள வேதநிலைகள் எதனுடனும் அதற்கு தொடர்பில்லை. அவர்களின் சடங்குகள் முற்றிலும் மந்தணமானவை. அவர்கள் பாடும் சந்தமும் வேறுபட்டுள்ளது.”

“இன்றுள்ள மைத்ரேயியை நான் ஒருமுறை அதர்வவேதப் பெருவேள்வி ஒன்றில் கண்டிருக்கிறேன். அவர் விழிகளை நோக்க அஞ்சி விலக்கிக்கொண்டேன். கார்கக் காட்டை பிற வைதிகமுறைமைகள் முழுமையாகவே விலக்குகின்றன. ஆயினும் ஒவ்வொருநாளும் ஒரு பெண் பாரதவர்ஷத்தில் எங்கோ இருந்து தன் இல்லத்தைத் துறந்து நிலைகொண்ட விழிகளுடன் ஊர்களையும் அடர்காடுகளையும் கடந்து அங்கே சென்றுகொண்டிருக்கிறாள். பிற வேதநிலைகளில் இருந்து மாணாக்கர் வெளியேறுவது உண்டு. கார்கக் காட்டிலிருந்து எவரும் வெளியேறியதே இல்லை.”

“அவர்கள் மைத்ரேயிக்கும் கார்கிக்கும் யாக்ஞவல்கியரால் சொல்லப்பட்ட மெய்ச்சொற்களை நூல்களாக்கிக் கொண்டிருக்கிறார்களா?” என்றாள் திரௌபதி. “இல்லை அரசி, முதுமை வருவதை அறிந்து தன் பொருள்களை மனைவியருக்கு பங்கிட்டளித்துவிட்டு கானேக முடிவுசெய்த யாக்ஞவல்கியரிடம் மைத்ரேயி ஏழு வினாக்களை கேட்கிறார். அவை இங்குள்ள நூல்களில் சொல்லப்பட்டிருப்பவையே. அவற்றுக்கு மறுமொழி அறியாது திகைத்த யாக்ஞவல்கியருக்கு மைத்ரேயி அளிக்கும் மறுமொழிகளாக அமைந்துள்ளன அவர்களின் நூல்கள்” என்றான் வைரோசனன். “கார்கியுடனான உரையாடலிலும் கார்கியே மெய்மையுரைப்பதாக அந்நூல்கள் சொல்கின்றன.”

அவர்கள் குடில்முற்றத்தை அடைந்துவிட்டிருந்தனர். தருமன் அவள் முகத்தை நோக்க முயன்றான். நெய்விளக்கின் செவ்வொளியில் அது உணர்வற்றிருந்தது. அவள் ஒன்றும் சொல்லாமல் தன் குடிலுக்குள் புகுந்து மறைந்தாள். வைரோசனன் “அரசே, ஓய்வெடுங்கள். நாளை காலை இங்கே சொற்பேரவை நிகழ்கிறது. பிருஹதாரண்ய மரபின் துணைமரபுகளான முண்டகவனம், மாண்டூக்யவனம், பிக்‌ஷுகவனம், முக்திகவனம் போன்ற பதினெட்டு தரப்புகளும் வந்து ஒரே களத்தில் சொல்லாடலுக்கு நிற்கிறார்கள்” என்றான்.

இருண்ட காட்டுக்குள் சென்றுவிட்டதை அறிந்து தருமன் நின்றார். வழிதவறிவிட்டால் புலரிவரை சுற்றிவரவேண்டியதுதான். கால்களில் வந்த வழியின் நினைவு இருக்கக்கூடும் என்று தோன்றியது. அப்படியே திரும்பி நடந்தால் குடில்களுக்கு சென்றுவிடமுடியும். ஆனால் ஒரு அடி தவறான திசையில் வைத்தாரென்றால் அது முற்றிலும் பிழையான எல்லைக்கு கொண்டுசெல்லக்கூடும். இன்னும்கூட கந்தகம் கொந்தளிக்கும் குழிகள் கொண்டது இக்காடு. மானுடர் வாழ்ந்து வாழ்ந்து இதன் ஒரு சிறுபகுதியைத்தான் பழக்கி எடுத்திருக்கிறார்கள்.

திரும்பி நடந்தபோது அவர் தைத்ரியக்காட்டின் அந்தக் குட்டிக்குரங்கை நினைத்துக்கொண்டார். அங்கிருந்த நாளெல்லாம் அவர் மடியில் உறங்கியது அது. அதன் அன்னை பலமுறை அதைத் தொடர்ந்து வந்து அவரை நோக்கி அமர்ந்திருந்துவிட்டு சென்றது. சிலநாட்களில் அவர் குடிலிலேயே அது தங்கத் தொடங்கியது. அவரது மரவுரிகளைக் கொண்டுசென்று கூரைமேல் போட்டது. காட்டுக்கனிகளைக் கொண்டுவந்து குடிலெங்கும் உருளவிட்டது. சுவடிகளை ஒருமுறை அது தொட்டபோது அவர் சினம்கொண்டு கை ஓங்கினார். பற்களைக் காட்டிச் சீறியபடி தூணில் ஏறிக்கொண்டது. இருகைகளாலும் கால்களாலும் குறுக்குச்சட்ட மூங்கிலைப்பற்றிக்கொண்டு அமர்ந்து ஊசலாடுவதுபோல ஆடி ‘ஹஹ் ஹஹ்’ என்று ஓசையிட்டது.

அவர் மீண்டும் அதை அதட்ட மேலே சென்று சிறுதுளி சிறுநீரை அவர் அருகே பீய்ச்சியது. அதன் நாற்றத்தால் அறை நிறைந்தது. அன்று முழுக்க மேலேயே அமர்ந்திருந்தது. அவர் இரவு படுத்தபோது மெல்ல அருகே வந்து அமர்ந்து ‘ர்ர்ர்’ என்றது. அவர் அதன் தலையின் புன்மயிரை மெல்ல தடவினார். அவர் அருகே உடலை ஒட்டிக்கொண்டு குழந்தைபோல சுருண்டு படுத்துக்கொண்டு உடனே துயிலில் ஆழ்ந்தது. ஆனால் அதன் பின் அது சுவடிகளை தொடவே இல்லை.

அவர்கள் அங்கிருந்து கிளம்பியபோது அது மரக்கிளைகளில் தாவியபடி கூடவே வந்தது. அதன் பின்னால் ஓசையிட்டபடி அதன் அன்னை வந்தது. அவர்கள் தைத்ரியத்தின் எல்லையெனத் திகழ்ந்த ஓடையை கடந்தபோது அது இருகால்களில் எழுந்து தலைமேல் கைவைத்து நின்று எம்பி எம்பி ஓசையிட்டு அழுதது. கண்களில் நீர் வழிய தலைகுனிந்து தருமன் நடந்தார். பற்களை இறுகக்கடித்து கைகளை முறுக்கிப் பற்றியிருந்தார். எல்லைக்கு அப்பால் அவர் மறைந்ததும் தொலைவில் அதன் கூரிய அழுகை ஒலி கேட்டது. நெஞ்சுலைய அவர் விம்மிவிட்டார்.

இருளில் நின்று அவர் விழிநீர் உகுத்தார். முதல் துளி விழிநீரின் வெம்மையை கன்னங்களில் அறிந்ததும் அனைத்துத் தடைகளும் அவிழ்ந்தன. அவர் விம்மியும் தேம்பியும் அழுதார். நின்று மீண்டும் கிளர்ந்து அழுதுகொண்டே இருந்தார். கால் தளர்ந்து ஒரு சாலமரத்தின் அடியில் அமர்ந்தார். அழுகை முற்றிலும் ஓய்ந்ததும் அவர் உள்ளம் இனிய துயிலுக்குப்பின் விழித்ததுபோல தெளிவடைந்திருந்தது. வழியை சித்தம் நன்றாக அறிந்தது. தன் குடிலுக்குத் திரும்பி மரவுரிச்சேக்கையிட்ட மஞ்சத்தில் படுத்துக்கொண்டார். மரவுரிச்சுருள் ஒன்றை அருகே போட்டுக்கொண்டபோது அந்தக் குரங்கு அருகே படுத்திருப்பதைப்போல உணர்ந்தார். அதற்கு சூக்தன் என்று பெயரிட்டார். அதை வருடியபடி துயிலில் ஆழ்ந்தார்.

[ 12 ]

காலையில் நீராடி மீண்டபோது குடில்முற்றத்தில் காலன் காத்து நின்றிருந்தான். அவர் அவனை நோக்கி வணக்கங்களை ஏற்றபின் தன் குடிலுக்குள் சென்று ஈர ஆடைகளை மாற்றிக்கொண்டார். வெளியே வந்தபோதும் அவன் அங்கேயே மரத்தடியில் நின்றிருந்தான். “சுருக்கமாகச் சொல், நான் எரிசெயலுக்கு சென்றாகவேண்டும்” என்றார் தருமன். காலன் விதுரரை அறியாமல் அவருடன் அஸ்தினபுரிக்கு சென்றிருந்தான். அவர்கள் செல்லும் பாதையில் அவர்களுக்குச் சற்று முன்பென அவன் சென்றான்.

“அமைச்சர் நலமாக சென்று சேர்ந்தார்” என்றான் காலன். “அவர் தன் வருகையை முன்னரே ஓலையினூடாக அறிவித்திருந்தார். எனவே காட்டெல்லை கடந்ததுமே அவருக்கு அரசவரவேற்பு முறைமைகள் கிடைக்கத் தொடங்கிவிட்டன.” தருமன் அதில் இடக்கு இருக்கிறதா என அகத்தால் தேடினார். “ஆனால் பேரரசிக்கு அவருக்கு ஏதாவது ஆகக்கூடுமென்ற ஐயம் இருந்தது.” தருமன் புருவம் சுருக்கி “எவரிடமிருந்து?” என்றார். “அஸ்தினபுரியின் அரசரிடமிருந்தும் தம்பியரிடமிருந்தும்தான். விதுரர் பாண்டவர் பக்கம் உளம்சாய்ந்தவர் என அவர்கள் எண்ணுகிறார்கள் என்பதில் ஐயமில்லை.”

“அதனால் அவரை அவர்கள் கொல்வார்களா? துரியோதனனை என்னவென்று எண்ணினார் அன்னை? அவன் புவியாளப் பிறந்த சக்ரவர்த்தி” என்றார் தருமன். “ஆம், ஆனால் அவருக்குப் பிடிக்கும் என ஏதாவது அமைச்சனோ ஒற்றனோ எல்லை மீறலாம் அல்லவா? வழிகள் முழுக்க காக்கப்படவேண்டுமென்பது அன்னையின் ஆணை. ஆகவே நான் முழுமையான விழிகளும் கண்களுமாக கடந்துசென்றேன்” என்றான் காலன். தருமன் பெருமூச்சுடன் “சொல்க!” என்றார்.

“அரசே, விதுரர் கிளம்பிய நாள் முதல் பேரரசர் உடல்நலம் குன்றி படுத்துவிட்டார். உணவு உண்பது குறைந்து அவர் உடல் மெலிந்து என்பும்தோலுமென ஆகியது. இசையோ மைந்தர்களோ அவரை மகிழ்விக்க முடியவில்லை. உயிர்துறக்க முடிவுசெய்தவர் போலிருந்தார். யுயுத்ஸுவும் சஞ்சயனும் மட்டுமே அவருடன் இரவுபகலென எப்போதும் இருந்தனர். அவர்களால்தான் அவர் உயிர்வாழ்ந்தார். ஒருநாள்கூட பேரரசரின் மைந்தர்கள் வந்து அவரைப் பார்க்கவில்லை. அரசர் அவர் இறந்த செய்தி உண்டென்றால் எனக்குச் சொல். பிறிதேதும் எனக்குத் தேவையில்லை என்று சொல்லிவிட்டதாக சொல்கிறார்கள்.”

“யுயுத்ஸூ மதிநுட்பம் மிகுந்தவர். விதுரர் குறித்த செய்தி மட்டுமே பேரரசரை மீளச்செய்யும் என்றுணர்ந்து ஒற்றர்களை வரவழைத்து விதுரர் குறித்த தகவல் வந்துவிட்டது என்று சொல்லி அவருக்கு நம்பிக்கையூட்டி உணவுண்ணச் செய்வார். நாளுக்கு முப்பதுமுறை அவர் கேட்டுக்கொண்டே இருப்பார். வருகிறார் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அந்நிலை சிலநாட்கள் நீடிக்கும். மீண்டும் பேரரசர் உணவை மறுக்கத் தொடங்குவார். சிலநாட்கள் கழித்து மீண்டும் ஒரு பொய்ச் செய்தி அவருக்கு கிடைக்கச்செய்யப்படும். அவரை அவ்வாறு உயிர்தக்கச் செய்தனர் அவ்விளையோர்.”

“ஆனால் உண்மையிலேயே விதுரர் வருகிறார் என்னும் செய்தி வந்தபோது அதை பேரரசரிடம் சொல்லி நம்பவைக்க முடியவில்லை. அவர் பலநாட்களாக உடல் நலிந்து மஞ்சத்திலேயே படுத்திருந்தார். நினைவு எப்போதாவது திரும்பி அலைபாய்ந்து மீண்டும் சுஷுப்தியில் மூழ்கிக்கொண்டிருந்தது. ஒருநாள் இரவு உச்சகுரலில் அலறியபடி எழுந்தமர்ந்து இளையோனே இளையோனே என்று கூவியிருக்கிறார். கைகளால் அரண்மனைத்தூண்களை அறைந்தபடி அங்குமிங்கும் முட்டிமோதியிருக்கிறார். அருகணைந்து அவரை அமரச் செய்தபோது அவர் விதுரர் இறந்துவிட்டதாக கனவுகண்டது தெரியவந்தது. அரசே, இங்கு விதுரர் நோயுற்று இறப்பை அணுகிய அந்த இரவுதான் அது.”

“இங்கு நோய்மீண்டு விதுரர் எழுந்தநாளில் அவரது கனவில் அவர் வந்து புன்னகை புரிந்திருக்கிறார். அவர் மீண்டுவருகிறார் என்று களிகொண்டு கூவி ஆர்ப்பரித்திருக்கிறார். ஆனால் உடனே நம்பிக்கையிழந்து அது விண்ணிலிருக்கும் இளையோனின் குரல் என எண்ணத் தொடங்கிவிட்டார். அவர் உண்மையில் வரும் செய்தியை சொன்னபோது யுயுத்ஸுவை அறைந்து விலகிச்செல் மூடா, உன் சொற்களை நம்ப நான் சிறுமைந்தன் அல்ல என்று கூவினார். மீண்டும் மீண்டும் நினைவு தவறிக்கொண்டிருந்தது. அரைத்துயிலில் இளையோனே என்ற சொல்லன்றி எதுவும் அவர் நாவில் எழவில்லை.”

“விதுரர் கோட்டைமுகப்பை அடைவதுவரை அவரிடம் அரசர் நோயுற்ற செய்தி சொல்லப்படவே இல்லை” என்று காலன் தொடர்ந்தான். “சொல்லப்பட்டதும் அவர் தேரிலமர்ந்து கண்ணீர்விட்டு அழுதார். விரைவு விரைவு என கூவிக்கொண்டே இருந்தார். பேரரசர் நோயிலிருப்பது நகரில் பரவியிருந்தமையால் விதுரரின் வரவை மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவரைக் கண்டதும் வசைபாடத் தொடங்கினர். குலமகளிர் மாளிகை முகப்பில் நின்று அவரை கைசுட்டி பழிச்சொல் கூறினர். அவர் எதையும் கேட்கவில்லை. அரண்மனை முகப்பில் இறங்கி இடைநாழியில் ஏறி ஓடினார். இருமுறை கால்தவறி விழுந்தவரை கூடவே ஓடிய ஏவலர் பற்றிக்கொண்டனர்.”

“பேரரசரின் மஞ்சத்தறைக்குள் புகுந்து அவர் அருகே அமர்ந்து அவர் கால்களை பற்றிக்கொண்டார் விதுரர். அவர் பாதங்களில் தன் தலையை வைத்து ஓசையின்றி குலுங்கி அழுதார். பேரரசரும் அவர் குரலைக் கேட்டதுமே விழித்துக்கொண்டார். அவர் நெஞ்சு விம்மிக்கொண்டிருந்தது. தொண்டைக்குள் சிக்கிய ஒலி அங்கே நின்று பதைத்தது. அவர் கைகளை நீட்டி விதுரரின் தலையை தொட்டார். குழலைப்பற்றி இழுத்து தூக்கி ‘உணவு உண்டாயா? நெடுந்தொலைவு வந்திருப்பாய்’ என்றார். ‘இல்லை’ என்றார் விதுரர். ‘உணவருந்து… யுயுத்ஸு, இளையோனை உணவருந்தச் செய்’ என்றார் பேரரசர்.”

“யுயுத்ஸு ‘தந்தையே, நீங்கள் உணவருந்தவேண்டும்’ என்றான். ‘ஆம், கொண்டுவா’ என்றார். அதன்பின் கண்ணீர்விட்டு விசும்பி அழலானார். அவர்கள் அவர் அருகே நின்று அவர் அழுது ஓய்வதுவரை நோக்கிக்கொண்டிருந்தனர். அவர் மீண்டதும் ‘உணவு கொண்டுவா… ஊனுணவு…’ என்றார்.” காலன் சிரித்து “அவ்வளவுதான், நீர் நீரை கண்டு இணைந்துகொண்டது. ஒரு சொல் பேசப்படவில்லை. மறுநாள் காலை பேரரசர் பீடத்தில் இசைகேட்க அமர்ந்திருக்க அருகே விதுரர் அமர்ந்து ஓலைச்சுருக்கங்களைச் சொல்வதை நோக்கினால் அங்கே ஏதும் நிகழ்ந்தமைக்கான எந்தச் சான்றும் இருக்கவில்லை” என்றான்.
“விதுரர் மீண்டும் அமைச்சர் ஆனாரா?” என்றார் தருமன். “ஆம், அதைத்தான் அஸ்தினபுரியில் விந்தையாக பேசிக்கொண்டார்கள். விதுரர் அகன்றதுமே அமைச்சுப்பொறுப்பு முழுமையாகவே அங்கரின் கைகளுக்குச் சென்றது. அவரும் பால்ஹிகரும் அதை நடத்தினர். அவர் மீண்டுவந்ததும் அவரையே அமைச்சராக மீண்டும் அமைத்து அரசர் ஆணையிட்டார். அவரே கிளம்பிவந்து அமைச்சரைக் கண்டு பணிந்து இயல்பாக முகமன் சொல்லி அவ்வாணையை அளித்தார். விதுரரும் ஒன்றும் நிகழாததுபோல அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் உங்களை சந்தித்ததை சொல்லவில்லை, உங்களைப்பற்றி அரசர் ஏதும் கேட்கவுமில்லை.”

“அவனுக்குத் தெரிந்திருக்கும்” என்றார் தருமன். “ஆம், இங்கு எப்போதும் அவரது ஒற்றர்கள் சூழ்ந்துள்ளனர்” என்றான் காலன். “அவரை மீண்டும் அமைச்சராக ஆக்க பூரிசிரவஸுக்கு விருப்பமில்லை என்று அறிந்தேன். அதை அவர் சொன்னதாகவும் ‘அவர் என் தந்தை. அவ்வண்ணமே இங்கிருப்பார்’ என்று அரசர் சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. நான் அதை உறுதி செய்துகொள்ளவில்லை.” தருமன் “அவன் அவ்வாறு சொல்லக்கூடியவனே. சிறியன அவன் இயல்பல்ல” என்றார்.

காலன் தலைவணங்கி அகல தருமன் வேள்விச்சாலைக்கு சென்றார். நகுலனும் சகதேவனும் முன்னரே அங்கிருந்தனர். அவர் அவர்களுக்கு அருகே அவருக்கென இடப்பட்ட தர்ப்பைப்புல் இருக்கையில் அமர்ந்தார். பிருஹதாரண்யகத்தில் வழக்கமான மாபெரும் வேள்விச்செயல் நடந்துகொண்டிருந்தது. அவி உண்ட நெருப்பு ஒளியிழந்து சுருண்டது. மெல்ல எழுந்து கொழுந்து விட்டு தாவி காற்றில் ஏறி நின்று துடித்தது. பீதர்நாட்டுப் பட்டை விரித்து உதறும் ஒலிபோலிருந்தது அதன் ஓசை. வேதச்சந்தத்தில் அது மட்டும் தனியாக ஒலித்தது. கட்டப்பட்டு திமிறி தாவும் சிம்மம். மண்ணில் கட்டப்பட்டுள்ளது எரி. மாதரிஸ்வானுக்கு அன்னையிலிருந்து விடுதலையே இல்லை.

வேள்விமீதம் உண்டபின் அவர்கள் எழுந்து வெளியே வந்தனர். தருமன் சுருக்கமாக காலனின் செய்தியை சொன்னார். “ஆம், நான் அதையே எதிர்பார்த்தேன்” என்றான் நகுலன். வைரோசனன் அவர்களருகே வந்து “வரும் முழுநிலவுநாளில் இங்கே பெரும் பூதவேள்வி ஒன்று நிகழவிருக்கிறது, அரசே” என்றான். “அதை நிகழ்த்துபவர் அஸ்தினபுரியின் அரசர். பேரரசர் உடல்நலம் குன்றியிருந்தபோது நாளும் அவருக்காக அவியிட்டு வேண்டிக்கொள்ள ஆணையிட்டிருக்கிறார். இப்போது அவர் உடல்நிலை செம்மையாகிவிட்டமையால் அதை பெருங்கொடை வேள்வியாக ஆக்கும்படி ஆணை.”

நகுலன் “அஸ்தினபுரியில் நாளும் வேள்வி நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள்” என்றான். “அஸ்தினபுரியின் செல்வம் அத்தனை வேதநிலைகளுக்கும் சென்றுகொண்டிருக்கிறது. வைதிகர் அனைவருமே இன்று அஸ்தினபுரிக்கான வேள்விகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.” வைரோசனன் “உண்மையில் இன்று பாரதவர்ஷம் முழுக்கவே வேள்விகள் பெருகிவிட்டிருக்கின்றன. அத்தனை ஷத்ரிய மன்னர்களும் தொடர்வேள்விகள் செய்துகொண்டிருக்கிறார்கள். இதுபோல வேள்வி பெருகிய காலம் பிறிதில்லை என்கிறார்கள். வேள்விப்புகை நீர் சுமக்காத கார்மேகம்போல நகர்கள் மேல் பரவி நின்றிருக்கிறது என ஒரு சூதன் பாடினான்” என்றான். நகுலன் புன்னகை செய்து “சூதர்கள் நஞ்சு கலந்தால்தான் சொல் மணக்கும் என்று அறிந்தவர்கள்” என்றான்.

“ஒவ்வொருவரும் வேள்விப்புரவலர் என்னும் பெயர் பெறுவதற்காக போட்டியிடுகிறார்கள். பெருவேள்வி புரிபவன் முதன்மை ஷத்ரியன் என்று எண்ணுகிறார்கள்” என்றான் வைரோசனன். சிரித்துக்கொண்டு “முன்பெல்லாம் அயோத்தி, கோசலம் போன்ற தொன்மையான அரசகுடியினர் வேள்விகளை பெரிதாகச் செய்ததில்லை. அதனால் அவர்கள் அடைவதற்கொன்றுமிருக்கவில்லை. உருவாகி வரும் புதிய அரசர்களும் குலத்தூய்மை அற்றவர்களுமே தங்களை உயர்ந்தோர் என நிலைநாட்டும்பொருட்டு வேள்விகளை செய்வார்கள். வேள்விகளைச் செய்வதே குலத்தகுதிக் குறைவு என்பதற்கான சான்றாக ஷத்ரியர்களின் அவைகளில் இளிவரலுக்கு ஆளாகும்” என்றான்.

“நாம் கிளம்புவோம்” என்றார் தருமன். “எங்கு, மூத்தவரே?” என்றான் நகுலன். “கார்க குருநிலைக்குச் செல்வோம். அங்கிருக்கும் இன்றைய மைத்ரேயியை பார்ப்போம்” என்றார் தருமன். நகுலன் தயங்க வைரோசனன் “அவர்கள் ஆண்களை அங்கு விரும்புவதில்லை” என்றான். “சென்று பார்ப்போம். உள்நுழைய ஒப்புதல் இல்லை என்றால் நாம் நின்றுவிடுவோம். திரௌபதி மட்டும் செல்லட்டும்” என்றார் தருமன். “அவர்களின் வேதநிலையை பிற வேதநிலைகள் ஏற்றுக்கொள்வதில்லை” என்றான் நகுலன். “நாம் அவ்வாறு பிரித்துப் பார்க்கவில்லை. நாமும் எவருடனும் இல்லாதவர்களே” என்றார் தருமன். அவர்கள் தலையசைத்தனர்.

ஆனால் மாலையில் காட்டில் இருந்து திரும்பிவந்த அர்ஜுனன் அதை உறுதியாக மறுத்துவிட்டான். “மூத்தவரே, நாம் சாந்தீபனி குருநிலைக்குச் செல்வோம்” என்றான். “ஆம், அங்கும் செல்லவேண்டும். ஆனால்…” எனத் தொடங்கிய தருமனிடம் “நாம் அங்குதான் சென்றாகவேண்டும், மூத்தவரே. சிலநாட்களில் அங்கே இளைய யாதவர் வருவார். நாம் அவருக்காக காத்திருப்போம்” என்றான் அர்ஜுனன். “ஆம், நன்று” என்றார் தருமன். “திரௌபதியும் அதையே விரும்புவாள்.” அர்ஜுனன் அதற்கு மறுமொழி என ஏதும் சொல்லவில்லை. அவன் சொல்வான் என எதிர்பார்த்து பின்பு தருமன் “அவள் அவரிடம் மட்டுமே பேசவிழைவதாக என்னிடம் சொன்னாள்” என்றார். அதற்கும் அவன் ஒன்றும் சொல்லவில்லை.