மாதம்: மே 2016

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 47

[ 7 ] 

இசைச்சூதர் விதுரரை ஓரவிழியால் நோக்கியபின் விழிபரிமாறி விரைந்து பண்ணுச்சத்தை அடைந்து, குடம் ரீங்கரிக்க விரல் நிறுத்தினர். பெருமூச்சுடன் கலைந்து கைகளால் பீடத்தை தட்டியபின் “நன்று” என்றார் திருதராஷ்டிரர். “இனிது! வசந்தத்தில் வண்டுகள் சிறகுகளால்தான் பாடமுடியும்.” பெருமூச்சுவிட்டு “பறத்தலும் பாடுவதும் ஒன்றேயான ஒரு வாழ்க்கை… நன்று” என்றார். மேலும் பெருமூச்சுடன் “விதுரா, வசந்தங்கள் வந்து செல்கின்றன. எண்ணி அளிக்கப்பட்டிருக்கின்றன மானுடருக்கு நாட்கள்” என்றார்.

“வணங்குகிறேன், மூத்தவரே” என்றார் விதுரர். சூதர்கள் எழுந்து ஒவ்வொருவராக ஓசையின்றி தலைவணங்கி அவைவிட்டகன்றனர். “இசைக்குள் நீ வருவதுபோல் ஒரு உளக்காட்சி எழுந்தது. உன் காலடி ஓசையை நான் கேட்டிருக்கிறேன் என்பதை நான் அறியவில்லை. ஆனால் நீ இருக்கிறாய் என்னும் உணர்வு இசை முழுமையடைந்ததும் எஞ்சியது” என்றார். “அரசர் தங்களைப் பார்க்க வந்துகொண்டிருக்கிறார்” என்றார் விதுரர்.

முகம் சுளிக்க தலைசரித்து “அவனிடம் நான் சொல்வதற்கொன்றுமில்லை. சொல்லும் அனைத்தையும் முன்னரே வகுத்துரைத்துவிட்டேன்” என்றார் திருதராஷ்டிரர். “நான் அவற்றை மும்முறைக்கு மேல் அரசரிடம் சொன்னேன். மதமெழுந்த களிற்றேறு போல விழிதொடாத முகம் கொண்டிருக்கிறார். அவருடன் உரையாட வாயில்கள் ஏதுமில்லை” என்று விதுரர் சொன்னார். “அங்கன் என்ன செய்கிறான்? அவனை வரச்சொல்! அவனிடம் சொல்கிறேன்” என்றார் திருதராஷ்டிரர். “அவர்கள் இருவரும் உருகி ஒன்றாகிவிட்டதுபோல் இருக்கிறார்கள். அரசர் முகத்தையே அங்கரிடம் காண்கிறேன்” என்றார் விதுரர்.

“மூத்தவன் கற்றறிந்தவன். பரசுராமனின் மாணவன் அவன். அவன் எங்ஙனம் இப்படி ஆனான்?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “அறியேன். அன்று மருத்துவ நீராட்டில் கரிய காகங்கள் அனைத்தும் அரசரின் உடலில் புகுந்துகொண்டன என்று இங்கே சூதர்கள் பாடுகிறார்கள். அத்தெய்வங்களை நாமறியோம். அவை இந்நகரத்தை எங்கு எடுத்துச் செல்கின்றன என்றறியாது அஞ்சுகிறேன்” என்றபடி விதுரர் அருகே வந்து அமர்ந்தார்.

“மூடா, நான் இங்கிருக்கும்வரை இந்நகரம் எங்கும் செல்லப்போவதில்லை. யயாதியின் ஹஸ்தியின் குருவின் பிரதீபரின் சந்தனுவின் விசித்திரவீரியனின் நகரமாக மட்டுமே இது இங்கு இருக்கும். இளையோனே, நடுவயது வரை ஒவ்வொருவரும் தானென உணர்கிறார்கள். நடுவயது கடந்ததும் தங்களை மூதாதையரின் தரப்பிற்கு மாற்றிக்கொள்கிறார்கள். இங்கு இப்பீடத்தில் அமர்ந்திருப்பது திருதராஷ்டிரன் அல்ல. இம்மண்ணில் எஞ்சும் மூதாதையர்களின் ஊன் சிறு துளி மட்டுமே. எனக்குக் கடன்கள் இப்புவியில் எவரிடமும் இல்லை. இங்கு எவரிடமும் நான் கேட்டறிய ஏதுமில்லை. விண்ணமைந்த மூதாதையர் சொல் ஒன்று என்னில் உள்ளது. அதுவே நான்.”

விதுரர் பெருமூச்சுவிட்டு “நான் அதை அறிவேன்” என்றபின் “பிதாமகர் பீஷ்மரின் ஓலை வந்தது” என்றார். “பிறிதொன்றையும் பிதாமகர் சொல்லியிருக்க வாய்ப்பில்லை” என்றார் திருதராஷ்டிரர். “ஆம்” என்றார் விதுரர். “அஸ்தினபுரியின் பிதாமகராக நின்று நம்மனைவருக்கும் அவர் ஆணையிட்டிருக்கிறார். குருவின் கொடிவழியினர் நடத்தும் ராஜசூயத்தை அவர் ஏற்றிருக்கிறார். இந்நகரும் அரசரும் குடிகளும் அந்த வேள்வியில் பங்கெடுத்து மகிழவேண்டுமென்று விழைகிறார்.” திருதராஷ்டிரர் “ஆம், அது எனது ஆணையும் கூட” என்று தலைவணங்கினார்.

ஏவலன் உள்ளே வந்து தலைவணங்கினான். விதுரர் திரும்பியதும் மெல்லிய குரலில் “அரசரும் இளையோரும் அங்கரும் சேதிநாட்டரசரும்” என்றான். விதுரர் “வரட்டும்” என்று சொன்னபின் திருதராஷ்டிரரிடம் “அரசர் பார்க்க வந்திருக்கிறார்” என்றார். திருதராஷ்டிரர் தாடியை நீவியபடி மெல்ல உறுமினார். தன் உடலில் ஏன் பதற்றம் கூடவில்லை, ஏன் நெஞ்சு பொங்கி எழவில்லை என்று விதுரர் வியந்தார். ஒவ்வொன்றும் பலமுறை படித்த காவியத்தில் நிகழ்வதுபோல தெளிவாக வேறெங்கோ நிகழ, துளித்துளியாக அவற்றை அறிந்தபடி அவர் அங்கு நின்றிருந்தார்.

கதவு திறக்கும் ஒலி கேட்டபோது ஒரு கணமென அதே நிகழ்வு முன்பு நிகழ அவர் கண்டதுபோல் உணர்ந்தார். அல்லது தொல்காவியம் ஒன்றில் படித்ததைப்போல. பாரதவர்ஷத்தில் நிகழ்வன அனைத்தையும் வியாசர் பாடல்களாக எழுதிக் கொண்டிருப்பதாகவும் அவற்றையே தாங்கள் பாடுவதாகவும் சூதர்கள் சொல்வதுண்டு. இந்நிகழ்வை மூதாதைக்கவிஞர் முன்னதாகவே எழுதிவிட்டாரா என்று எண்ணியபோது விதுரர் இதழ் வளைய புன்னகை செய்தார்.

துரியோதனன் அரச உடையணிந்திருந்தான். அவனுக்குப் பின்னால் துச்சாதனனும் துச்சகனும் துர்மதனும் ஓசையற்ற நிழல்கள் போல் வந்தனர். கர்ணனும் சிசுபாலனும் சற்று விலகி பின்னால் வந்தனர். துரியோதனன் தந்தையை அணுகி முழந்தாள் மடித்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடி “வணங்குகிறேன், தந்தையே” என்றான். திருதராஷ்டிரர் தன் படர்ந்த கைகளை அவன் தலைமேல் வைத்து “நன்று சூழ்க!” என்று வாழ்த்தினார். பிற கௌரவரும் தந்தை காலடியைத் தொட்டு வாழ்த்து பெற்று விலகி நின்றனர். துரியோதனன் திரும்பி கர்ணனை அருகே வரும்படி அழைத்துவிட்டு “என்னுடன் அங்கரும் சேதி நாட்டரசரும் வந்துள்ளனர்” என்றான்.

திருதராஷ்டிரர் அதற்கும் தலையசைத்து உறுமினார். கர்ணன் அவர் கால்தொட்டு சென்னி சூடி “வாழ்த்துங்கள், தந்தையே” என்றான். சினம் பற்றிக்கொள்ள அவர் உறுமியபடி அவன் தலைமயிரை தன் கைகளால் பற்றி “நான் உன்னை நம்பியிருக்கிறேன், கர்ணா” என்றார். கர்ணன் “எந்நிலையிலும் தங்கள் மைந்தருடன் இருப்பேன் அரசே” என்றான். சிசுபாலன் வணங்கியபோது அவன் தலைமேல் கைவைத்த திருதராஷ்டிரர் விழிகள் அதிர சுட்டவர் போல உடனே கையை திரும்ப எடுத்துக்கொண்டார். “உன் தலை அதிர்கிறது” என்றார்.

“அரசே!” என்றான் சேதிநாட்டான். “உன் தலை தொடுகையில் வெட்டுக்கிளியை தொடுவதுபோல் உணர்கிறேன். அதிர்ந்துகொண்டிருக்கிறது” என்றார் திருதராஷ்டிரர். “ஏற்கெனவே உதிர்ந்து சிலந்தியிழையில் தவிக்கும் இறகு என்று தோன்றுகிறது…” சிசுபாலன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். “உனக்கு உடல் நலமில்லையா என்ன?” சிசுபாலன் “இல்லை, நன்றாக இருக்கிறேன்” என்றான் குழப்பத்துடன். “கனவுகள் காண்கிறாயா?” என்றார் திருதராஷ்டிரர். “ஆம், நான் எப்போதும் கனவுகளில் உழல்கிறேன்.” திருதராஷ்டிரர் “அறியேன். நீ நலமாக இல்லை. உன்னுள் ஏதோ நிகழ்கிறது. நீ அதிர்ந்து கொண்டிருக்கிறாய்” என்றார்.

சிசுபாலனை அகன்று போகும்படி துரியோதனன் விழிகாட்டினான். பின்னர் “தந்தையே, தாங்கள் அறிந்திருப்பீர்கள், இன்று மாலை அஸ்தினபுரியின் படைகளுடன் இந்திரப்பிரஸ்தத்தின்மேல் எழுகிறேன். என் தோள்தோழர் ஜராசந்தரின் இறப்புக்கு ஈடுசெய்யாமல் இங்கு அமர்ந்திருப்பது குருகுலத்தோன்றல் என்றும், தங்கள் மைந்தன் என்றும் நான் கொண்டுள்ள நிமிர்வுக்கு இழுக்கு. தங்கள் ஆணை பெற்றுச் செல்ல வந்தேன்” என்றான்.

முகவாயை நீவியபடி “எனது ஆணையை முன்னரே அளித்துவிட்டேன்” என்றார் திருதராஷ்டிரர். “ஆம், அது போர் அறியாத சூதர்களால் அளிக்கப்பட்டது” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் “மூடா!” என்று கூவியபடி எழுந்த திருதராஷ்டிரர் தன் பெருங்கையைச் சுழற்றி ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தார். அவ்வோசை இசைக்கூடத்தை அதிரச்செய்தது. தரை அதிரும் ஒலியுடன் மண்ணில் விழுந்த துரியோதனனை நோக்கி காலடி எடுத்து வைத்து முன்னால்சென்று ஓங்கி மிதித்தார் திருதராஷ்டிரர். அவன் மேலும் சுருண்டு விலகிச்சறுக்கி தூணில் முட்டி கையூன்றி எழுந்தான்.

“மூத்தவரே…” என்றபடி திருதராஷ்டிரரின் கையை சென்று பிடித்துக்கொண்டார் விதுரர். “பேரரசே, நிறுத்துங்கள்” என்று கர்ணன் அவரது வலது கையை பிடித்தான். அவர்களைத் தூக்கி இருபக்கமும் வீசிவிட்டு அவர் சினம்கொண்ட களிறென முழக்கமிட்டு முன்னால் செல்ல துரியோதனனை தம்பியர் தூக்கி அகற்றினர். “எவர் முன் நின்று அச்சொல்லை எடுத்தாய்? இழிமகனே! என் இளையோன் கால்களைத் தொட்டு வணங்கி பிழைபொறுக்கக் கோரிவிட்டு அதன் பின் அடுத்த சொல் எடு! அதுவரைக்கும் நீ என் மைந்தன் அல்ல” என்றார் திருதராஷ்டிரன். பதறும் கைகளுடன் யானை என ததும்பினார். “எந்தத் துணிவில் என் முன் அச்சொல்லை எடுத்தாய்? இன்றுவரை எவரும் அதைச் சொல்ல நான் ஒப்புக் கொண்டதில்லை. இந்நகரில் நான் வாழும்வரை எவரும் அதை சொல்லப்போவதில்லை.”

“பொறுத்தருள்க, சிறிய தந்தையே!” என்று துரியோதனன் விதுரரிடம் சொன்னான். “என்ன இது, அரசே? இச்சொற்கள் வேண்டியதில்லை. அவர் உணர்வுகள் வேறு. தாங்கள் இந்நாட்டு அரசர்” என்றார் விதுரர். “அவன் என் இளையோன். என் தந்தையின் எஞ்சிய மண்வடிவம்… இப்புவியில் எவரும் எனக்கு ஒரு பொருட்டல்ல” என்று கைகளை ஒன்றுடன் ஒன்று அறைந்து திருதராஷ்டிரர் கூவினார். “பொறுத்தருளுங்கள், தந்தையே! என் உடலெங்கும் நிறைந்திருக்கும் சினம் சொற்களை சிதறடிக்கிறது. ஆனால் நான் சொன்னதில் எந்த மாறுதலும் இல்லை. இங்கு இனிமேலும் தொட்டில் குழந்தையென சுருண்டிருக்க என்னால் இயலாது. மகதரின் இறப்புக்கு நிகரீடு செய்தாகவேண்டும். இல்லாமல் நான் ஆணென அமையமுடியாது” என்றான் துரியோதனன்.

“ஆம், அவனுக்கு ஒரு வாக்களித்திருந்தாய் என்றால் அதைச் செய்வதே முறை. ஆனால் குருகுலத்துத் தோன்றல்களிடையே ஒருபோதும் போர் நிகழாது. அதன் பின் இங்கிருந்து விண்ணேறிச்சென்று நான் என் மூதாதையர் முகத்தை நோக்க இயலாது. அவ்வெண்ணத்தை ஒழி. இதோ பிதாமகரின் ஆணை வந்துள்ளது. இந்திரப்பிரஸ்தத்தின் ராஜசூயத்தில் அஸ்தினபுரியின் அரசரும் குடிகளும் அந்தணரும் கலந்துகொள்வார்கள். அதுவே என் சொல்” என்றார் திருதராஷ்டிரர். உரக்க இடைமறித்து “அது நிகழாது. ஒரு தருணத்திலும் அதற்கு நான் ஒப்பேன்” என்றான் துரியோதனன்.

“என் எதிர் நின்று சொல்லெடுக்கிறாயா, மூடா?” என்றபடி திருதராஷ்டிரர் தன் இரு கைகளையும் ஓங்கி அறைந்தார். மீண்டும் அவரைப்பற்ற வந்த கர்ணனை ஒற்றைக்கையால் தூக்கி விலக்கிவிட்டு மற்போருக்கென விரித்த கைகளுடன் துரியோதனனை நோக்கி சென்றார். துரியோதனன் அதேவிரைவில் முன்னால் வர இருவர் கைகளும் மரக்கட்டைகள் உரசும் ஒலியுடன் பிணைந்து கொண்டன. இருவர் தோள்களும் இறுகிப்பிணைய முகங்களில் தந்தையென்றும் மைந்தனென்றுமிருந்தவை அகன்று இரு கொலைவிலங்குகள் எழுந்தன.

கர்ணனும் துச்சாதனனும் துர்மதனும் துச்சகனும் இருவரையும் பிடித்து இழுத்தனர். விதுரர் “அரசே! அரசே!” என்று கூவியபடி பதைத்து சுற்றிவந்தார். துச்சாதனன் திருதராஷ்டிரரின் உதைபட்டு தெறித்துவிழுந்தான். துர்மதன் பின்னால் சரிய கர்ணன் மட்டும் அவர்களுடன் சுற்றினான். விதுரர் “அரசே, நிறுத்துங்கள்! இக்கணம் உங்கள் கை தளரவில்லை என்றால் என் கழுத்தில் கத்தியை பாய்ச்சிக்கொள்வேன்” என்று கூவினார். திருதராஷ்டிரரின் தசைகள் மெல்ல தளர்ந்தன. உறுமலுடன் அவர் துரியோதனனை தூக்கி வீசிவிட்டு திரும்பி “எல்லாம் உன்னால்தான், மூடா! இவ்விழிமகன்களை இப்படி வளர்த்தவன் நீ. அடேய், நான் விழியற்றவன். நீ நூல்கற்றவன் அல்லவா? உன் முன் உன் மைந்தர் ஏன் இப்படி வளர்ந்தனர்? கீழ்மகனே, முதலில் உன் மண்டையை உடைக்கவேண்டும்” என்றார்.

மூச்சிரைக்க எழுந்து தள்ளாடி நின்று “தந்தையே, நான் செய்வதற்கொன்றே உள்ளது. என் சொல் மாறாது” என்றான் துரியோதனன். திரும்பி வெண்பற்கள் தெரிய முகம் சுளிக்கச் சீறி “வா! என்னுடன் களம்நின்று பொருது. என்னைக் கொன்று நெஞ்சை மிதித்து நின்று கூவி இந்த மக்களுக்கு சொல் நீ என் அரசன் என்று! அதன் பின் உன்னைத்தடுக்க தெய்வங்கள் இல்லை. உன்னைத் துணைக்க பாதாளத்திலிருந்து மண்மறைந்த அரக்கர் அனைவரும் எழுந்து வருவார்கள்” என்றார் திருதராஷ்டிரர்.

“அவ்வண்ணமெனில் அதுவே ஆகுக! நாள் குறியுங்கள்” என்றான் துரியோதனன். “என்ன சொல்கிறாய், மூடா?” என்று மீண்டும் எட்டு வைத்து ஓங்கி அவனை அறைந்தார் திருதராஷ்டிரர். அவன் அவர் கைகளைப்பற்றி உடலெங்கும் தசைகள் புடைக்க வளைத்து தாழ்த்தி “ஆம், அவ்வாறெனில் அவ்வாறே! நானறிவேன், அரைப்பொழுதுக்குமேல் உங்கள் முன் நிற்கும் ஆற்றல் கொண்டவன் அல்ல நான். களத்தில் என் நெஞ்சு பிளந்தெடுங்கள். என் குருதி பூசி வந்து உங்கள் மூதாதையரின் பீடத்தில் அமருங்கள். நண்பனின் குருதிக்குப் பழியீடு செய்யாமல் அஞ்சி அரண்மனையில் அமர்ந்திருந்தேன் என்ற இழிசொல்லில் இருந்து நான் விடுபடுவேன். உங்கள் கையால் இறந்தால் எத்தயக்கமும் இன்றி சென்று சந்தனுவும் விசித்திரவீரியனும் அமர்ந்திருக்கும் நிரையில் நானும் அமர்வேன்” என்று அவன் கூவினான். தொண்டை நரம்புகள் புடைத்து குரல் உடைந்து ஒலித்தது. விழிகள் சுரந்து இமைகளில் சிதறி நின்றன.

திருதராஷ்டிரர் தளர்ந்து அவன் கையை விட்டார். மெல்ல பின்னடைந்து “விதுரா, மூடா, பிடி என்னை!” என்றார். சஞ்சயன் எழுந்து அவரை பற்றிக்கொண்டான். அவர் தளர்ந்த கால்களும் உடலும் நடுங்க பேரெடை அழுந்த பீடத்தில் விழுந்தார். “என்ன சொல்கிறான் இந்த அறிவிலி?” என்று தலையை அசைத்தார். “ஒன்று என்னை கொல்லுங்கள், தந்தையே. அல்லது ஆணையிடுங்கள். இன்று இரண்டில் ஒன்று நிகழாது இப்பகல் தாண்டிச் செல்லாது” என்றான் துரியோதனன். “இன்று மாலை நான் உயிருடன் இருந்தேன் என்றால் இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக நம் படைகள் எழும்.”

திருதராஷ்டிரர் விண்ணுக்கென இரு கைகளையும் விரித்து “மூதாதையரே, இங்கு நான் என்ன செய்யவேண்டும்? நான் என்ன செய்யவேண்டும்?” என்று ஓலமிட்டார். “விதுரா! மூடா!” என்று பெரும் சினத்துடன் அழைத்தபடி பீடத்தை தன் இரு கைகளாலும் அறைந்தார். “சொல், உன் நெறி நூலில் என்ன சொல்லப்பட்டுள்ளது? சொல், இழிமகனே!” என்றார். விதுரர் “என் சொற்கள் அனைத்தும் சொல்லப்பட்டுவிட்டன, அரசே. இறுதி நிலைப்பாடொன்றை ஒருவர் எடுத்துவிட்டால் அதற்கப்பால் இருப்பது இறப்பொன்றே” என்றார்.

“ஒன்று செய்கிறேன், நான் இறக்கிறேன்” என்றபடி பீடத்தில் கையூன்றி திருதராஷ்டிரர் எழுந்தார். “நான் இறக்கிறேன். அதன்பின் இந்நகருக்கான பொறுப்பை நான் சுமக்க வேண்டியதில்லை. மூதாதையருக்கு நான் மறுமொழி சொல்லவேண்டியதில்லை” என்று உடைந்த குரலில் கூவி திரும்பி “விப்ரா!” என்று அழைத்தார். தன் பீடத்திலிருந்து மெதுவாக எழுந்து வந்த விப்ரர் “அரசே, எந்தத் தந்தையும் வாழ்நாளில் ஒருமுறை மைந்தனிடமிருந்து எதிர்கொள்ளவேண்டிய தருணம் இது. இதைக் கடந்து செல்லாமல் எவரும் வாழ்க்கை முதிர்ந்து சிதையேற இயலாது” என்றார். “நான் என்ன செய்ய வேண்டும் சொல்! அறிவிலியே, சொல்! நான் என்ன செய்யவேண்டும்?”

“தாங்கள் சொன்னதுதான் முறை. அந்த அரசணிகளை கழற்றி வையுங்கள். தேர் ஒருக்கச் சொல்கிறேன். நாம் இருவரும் இந்நகர் உதிர்ந்து கிளம்புவோம். பேரரசி சத்யவதியும் தங்கள் அன்னையரும் எரிந்த காட்டுத்தீ இன்னும் அக்காடுகளுக்குள் இருந்து கொண்டிருக்கும். அங்கே சேர்ந்து எரிவோம்” என்றார் விப்ரர். “ஆம், அது அணையாது” என்றார் திருதராஷ்டிரர். “அதுவே வழி. அந்தச் சிதையே எனக்குரியது…”

துரியோதனன் உரக்க “அவ்வண்ணமெனில் அதுவே ஆகுக! இனி எந்த உணர்வுகளுக்கும் நான் உளம் மடியப்போவதில்லை. தந்தை இறப்பதென்றால் அப்பழியை என் தலை அணியட்டும். என் குடிகள் இழிவு சூடட்டும். மூத்தார் சொல் கேட்டு உகந்தவை ஆற்றாது அரண்மனைக்குள் குறுகி அமர்ந்திருந்தேன் என்னும் சிறுமைக்கு அதுமேல்” என்றான். “தந்தையே, தங்கள் மைந்தன் என்று நான் இதுகாறும் இங்கு பணிந்திருந்தேன். என் தந்தையென்று தாங்கள் சற்றேனும் செருக்கி இருந்தால் பாஞ்சாலத்து இழிமகளின் காலடியில் நான் விழுந்து நகைப்புக்கிடமானபோது அக்கணமே கிளர்ந்தெழுந்து படைகொண்டு எழ நீங்கள் ஆணையிட்டிருப்பீர்கள். இந்திரப்பிரஸ்தத்தின் ஐவரையும் தமது துணைவியுடன் இங்கு வந்து என்னிடம் பிழைபொறுக்கும்படி கோர பணித்திருப்பீர்கள்.”

“அவர்கள் என் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல” என்றார் திருதராஷ்டிரர் தணிந்த குரலில். “அப்படியென்றால் அவர்களை எதிரியென்று கருதுங்கள். உங்களை தந்தையென்று கருதாதவர்களிடம் உங்களுக்கென்ன கடன்?” என்றான் துரியோதனன். “எனது கடன் எனது இளையோனிடம். மைந்தா, நீத்தவருக்கு இருப்போர் ஆற்றும் கடனுக்கு மாற்றே இல்லை. அவர்கள் நம்மிடம் ஆணையிடமுடியும், நாம் அவர்களிடம் பிறிதொரு சொல் சொல்ல இயலாது.”

“இழிவுகளைத் தாங்கி சிறுத்துவிட்டேன், தந்தையே. நெறிமீறியவனாக என்னை உலகு அறியட்டும். அரக்கனாக அசுரனாக என்னை சூதர் பாடுக! கோழையாக கீழ்மகனாக ஒருபோதும் சொல்லலாகாது” என்று துரியோதனன் சொன்னான். “ஒருபோதும் நடவாது… நான் இருக்கும் வரை… நான் இருக்கும் வரை…” தனக்குள் என திருதராஷ்டிரர் சொல்லிக்கொண்டார். காற்று தடித்து குளிர்ந்து நனைந்த மெத்தை என அவர்களை மூடிக்கொண்டது. பற்களைக் கடித்தபடி துரியோதனன் தலைதாழ்த்தி நின்றான்.

விப்ரர் அங்கிருந்தே “பேரரசி வந்திருக்கிறார்” என்றார். “வசுமதியா? இங்கா?” என்றார் திருதராஷ்டிரர் திகைப்புடன். “ஆம் அரசே, நான் அவர்களை இங்கு வரச்சொன்னேன்” என்றார் விதுரர். “இங்குவந்து இவை அனைத்தையும் அவள் ஏன் அறியவேண்டும்?” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் “அன்னையர் மேலும் நுட்பமாக அறிகிறார்கள் என்று இன்று காலை எனக்கு சொல்லப்பட்டது” என்றார் விதுரர். “சுருதையா சொன்னாள்? அவள் அறிவுடையவள்” என்றார் திருதராஷ்டிரர். திரும்பி விப்ரரிடம் “வரச்சொல்லும், விப்ரரே” என்றார். வாயில் திறக்க காந்தாரி பானுமதியின் கைகளைப் பற்றியபடி வந்தாள். அவளுக்குப்பின் அசலையும் சத்யசேனையும் வந்தனர்.

துரியோதனன் ஒருகணம் என்ன செய்வதென்றறியாமல் தவித்து பின்பு மெல்ல தணிந்து உடல் இயல்பாகி முன்னால் சென்று குனிந்து அவள் தாள் தொட்டு வணங்கி “வணங்குகிறேன், அன்னையே” என்றான். அவன் தலையில் கைவைத்து “நிறைவடைக!” என்று வாழ்த்தினாள் காந்தாரி. “விதுரர் என்னை வரச்சொன்னார்” என்று சொன்னாள். அது திருதராஷ்டிரரிடம் சொல்லப்பட்டதென்பது அதன் ஒலியாலேயே தெரிந்தது. அவர் “ம்” என்றார். அவள் துரியோதனனிடம் “மைந்தா, இங்கு நிகழ்வன அனைத்தையும் அறிந்துகொண்டுதான் இருந்தேன். என் சொல்லை வைக்கும் ஒரு தருணம் இது என உணர்கிறேன்” என்றாள்.

துரியோதனன் தவிப்புடன் பானுமதியை நோக்கியபின் அவள் கைகளைப்பற்றி “அன்னையே, தாங்களும் என்னை சிறுமை கொள்ளச் செய்யாதீர்கள். கல்லா இளஞ்சிறுவனாக அரண்மனையில் ஒடுங்க ஆணையிடாதீர்கள். அதுவன்றி தங்கள் மைந்தனாக நான் கோர ஏதுமில்லை” என்றான். அவள் அவன் கைகள்மேல் கையை வைத்து “சுயோதனா, இங்கு நான் வந்தது அதற்கே. இப்படை நகர்வை நீ நிகழ்த்தலாகாது” என்றாள்.

“அன்னையே, என் இறப்புக்கு ஆணையிடுகிறீர்கள்” என்றான் துரியோதனன். “நான் பெண். இங்குள்ள பிறரைப்போல் சொல்லடுக்கி என் உள்ளத்தை முன் வைக்க அறியாதவள். இதுவன்றி இப்போது பிறிதெதுவும் சொல்வதற்கில்லை. இன்று நீ வாளாவிருந்தே ஆகவேண்டும்” என்றாள் காந்தாரி. “ஏன்?” என்றான் துரியோதனன். “என் சொல்லை மீறி நீ செல்வதாக இருந்தால் செல்லலாம். உன் முன் எதிர்நிற்பவர் எவர் என்று நான் அறிவேன். மைந்தா, எவரும் அவனை வெல்ல முடியாது.”

துரியோதனன் புரியாதவன் போல கர்ணனைப் பார்க்க கர்ணன் “அன்னையே, களத்தில் வெல்வோமென்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்றான். காந்தாரி அதுவரை இருந்த கனிவு மாறி முகம் சிவக்க “சீ, மூடா! மூத்தவன் என்று உன்னை இவன் கைபற்றச் சொன்னேன். இழுத்து பெருவெள்ளத்திலா விடுகிறாய்? அறிவிலியே!” என்றபடி கையை ஒங்கினாள். கர்ணன் கைகூப்பி “நான் தங்கள் மைந்தனன்றி பிறனல்ல” என்றான். “அவனுக்கிடும் ஆணையே உனக்கும். இங்கே இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக படை எழலாகாது. எந்நிலையிலும் இருதரப்பும் எதிர்நிற்கலாகாது. அவர்கள் இயற்றும் ராஜசூயவேள்வியில் நான் பேரரசருடன் சென்று அமர்வேன். என் மைந்தர்களும் அங்கு வருவார்கள்” என்றபின் கைநீட்ட அதை பானுமதி பற்றிக்கொண்டாள்.

“இதற்கப்பால் ஒன்றும் சொல்வதற்கில்லை. இவ்வவைக்கு வந்து அதை சொல்லவேண்டும் என்பதற்காகவே இத்தனை தொலைவு நடந்தேன். என் மைந்தன் நீ என்றால் நான் எதையும் உனக்கு விளக்கவேண்டியதில்லை, என் ஆணையே போதும்” என்றபின் செல்லலாம் என்று தலையசைத்தாள். பானுமதி அவள் கைகளைப்பற்ற சிறிய வெண்ணிற அடிகள் மரத்தரையை ஓசையில்லாது ஒற்ற, எடைமிக்க உடல் ததும்ப, திரும்பிச் சென்றாள்.

அங்கிருந்த அனைவரும் காற்று விலக திரைகள் அடங்குவதுபோல் உடல் தணிந்தனர். திருதராஷ்டிரரும் “ஆம், அதுவே உகந்த வழி. எவ்வில்லத்திலும் இறுதி முடிவை அன்னையர் வந்து எடுப்பதே நன்று” என்றார். கர்ணன் “அரசே, நீங்கள் துணிந்து முடிவெடுத்துவிட்டீர்கள். உங்களுடன் நான் இருப்பேன். பிறிதெவரும் என்னவர் அல்ல” என்றான். துச்சாதனன் “ஆம் மூத்தவரே, நாங்களும் உங்களுடையவர்களே” என்றான். துர்மதனும் துச்சகனும் “ஆம்” என்றனர்.

திருதராஷ்டிரர் உரத்த குரலில் கை நீட்டி “இன்னமும் விளங்கவில்லை என்றால் நீ அரசன் என்று அமர்ந்திருக்கத் தகுதியற்றவன். இது ஆற்றியழிக்கும் அன்னையரின் ஆடல். நீயும் நானும் அவ்விசைகளுக்கு நடுவே ஆடும் துகள்கள்” என்றார். துரியோதனன் அவரை தளர்ந்த விழிகளால் நோக்கியபின் “படை எழவேண்டியதில்லை, அங்கரே. அன்னையின் சொல் நிற்கட்டும்” என்றான். கால்குழைய கர்ணனின் தோளைப் பற்றியபடி “செல்வோம்” என்றான். சொல்லில்லாது தலைவணங்கி கர்ணன் திருதராஷ்டிரரிடம் விடைபெற்றான். விடைபெறாது தன் உடல் எடை முழுக்க அவன் மேல் சுமத்தி துரியோதனன் நடந்தான்.

அவர்கள் ஒவ்வொருவராக அறைவிட்டு நீங்குவதை விதுரர் நோக்கி நின்றார். தன் முகத்தில் புன்னகை இருக்கிறதா என்ற எண்ணம் அதன் பின்னரே அவருக்கு எழுந்தது. அப்பால் நின்றிருந்த விப்ரரின் விழிகளை சந்தித்தார். “விப்ரரே!” என்று திருதராஷ்டிரர் கைநீட்டினார். “என்னை அழைத்துச் செல்லும். என்னுடன் இரும். இந்நாளை ஒவ்வொரு கணமாக நான் கடந்து செல்ல வேண்டும்” என்றார். விப்ரர் அணுகி திருதராஷ்டிரரின் கைகளை பற்றினார். “வணங்குகிறேன், மூத்தவரே” என்றபின் விதுரர் வெளியே நடந்தார்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 46

[ 4 ]

இரவு முழுக்க மஞ்சத்தில் துயிலாதிருந்து மறுநாள் காலையை கசந்த வாயுடனும் எரியும் விழிகளுடனும் சோர்ந்த உடலுடனும் எதிர்கொண்ட விதுரர் முதல் புள் குரல் கேட்டதுமே நீராட்டறை நோக்கி சென்றார். ஆடையணிந்து கொண்டிருக்கையில் சுருதை அவர் அறைவாயிலில் வந்து நின்றாள். அவர் திரும்பாமல் “இன்று அவை கூடுகிறது” என்றார்.

காமம் அணைந்த பின்னர் அவர்களுக்குள் விழிநோக்கிப் பேசுதலும் உடல்தொடுதலும் மிகவும் குறைந்துவிட்டிருந்தது. இருவரும் இரு தனியர்களென ஆகிவிட்டதுபோல. விழிமுட்டுகையில் ஒருவர் அறிந்த பிறரது ஆழம் எழுந்து வந்து நிற்பதுபோல. தொடும்போது ஏதோ ஒன்று உள்ளே திடுக்கிட்டது. அரிதான தருணங்களில் சினந்தோ கனிந்தோ விழிகோக்கையில் பிறிதொன்றிலாது இணையவும் முடிந்தது. அத்தருணங்களில் முன்பு திரையென்றான காமம் அப்போது இல்லாமலிருந்தது. உடல்தொடுகை உடலுக்கு அப்பாலிருப்பதனால் அறியப்பட்டது.

அவர் சுருதையிடம் முந்தைய நாளே அனைத்தையும் சொல்லியிருந்தார். அவரது அலைக்கழிப்புடன் உடனமர்ந்து இரவுகளை கழித்தவள். முதியவளானபோது இயல்பாக அவரை அவர் நெஞ்சுடன் தனித்திருக்கவிட்டு எழுந்து சென்று தன் மஞ்சத்தறையில் துயின்றாள். இளமையில் ஆண்களின் உலகுக்குள் நுழைந்துவிடலாம் என்னும் விழைவு அவளை செலுத்தியது. முதுமையில் அது இயலாதென்ற அறிதல் அவளை இயல்பமையச் செய்தது. அனைத்துக்கும் அப்பால் பகலெல்லாம் அம்மாளிகையின் அத்தனை அலுவல்களையும் இயற்றிய முதிய உடல் துயிலை நாடியது.

அவள் முகத்தை அவர் அகத்தால் நோக்கிக்கொண்டிருந்தார். அவள் எதையோ சொல்லப்போகிறாள் என்று அவரது செவிகள் கூர்ந்தன. அவர் மேலாடையை அணிந்துவிட்டுத் திரும்பியபோது அவள் “இது மைந்தனுக்கும் தந்தைக்குமான போர். என்றோ ஒருநாள் அது நிகழ்ந்துதானே ஆகவேண்டும்?” என்றாள். ஒவ்வொருமுறையும் தன் உச்சகட்ட இக்கட்டுகளை அவள் எளிதாக எடுத்துக்கொள்கிறாள் என்றெண்ணி கடும்சினம் கொள்வது அவரது வழக்கம். எரிச்சலுடன் “இது ஒரு குலப்பேரழிவுக்குச் செல்லும் பாதை” என்றார்.

“ஆம், அவ்வாறெனில்கூட அது அவர்களின் வாழ்க்கை” என்றாள் சுருதை. “எனது வாழ்க்கை தமையனின் வாழ்க்கையிலிருந்து பிறிதொன்றல்ல. இங்கு அவர் உயிர்வாழும் நாள் வரை மைந்தர் பூசலிடுவதை விரும்பமாட்டார். நானும் அதை ஒப்பப்போவதில்லை” என்றார். அவளை முன்னிறுத்தி எவரிடமோ அறைகூவுவதுபோல “அதன் பொருட்டு நிலை கொள்வதே என் கடமை” என்றபின் மூச்சிரைத்தார். “வருவது வந்தே தீரும்” என்றாள். அவர் “அப்படியென்றால் எதற்கு அமைச்சு? எதன்பொருட்டு அரசு சூழ்தல்? இந்தக் கிழட்டுச்சொற்கள் செயலின்றி  ஓய்ந்தவர்களுக்குரியவை” என்றார்.

சுருதை “மைந்தனுக்கும் தந்தைக்குமான இப்பூசலில் எவரும் ஏன் காந்தாரப் பேரரசியை கருத்தில் கொள்ளமாட்டேன் என்கிறீர்கள்?” என்றாள். விதுரர் தயங்கி “பேரரசி என்ன செய்ய முடியும்?” என்றார். “மைந்தனுக்கும் தந்தைக்குமான போரில் எப்போதும் இடைநிற்கும் ஆற்றல் கொண்டவர் அன்னை மட்டுமே” என்றாள் சுருதை. “இது அரசியல், நீ அறிந்த அடுமனைப்பூசல் அல்ல” என்றார் விதுரர். “அடுமனைப்பூசலும்கூட” என்று அவள் சொன்னாள். “அப்படி எண்ணி அதை அணுகும்போது எளிதாகிறது. எதையும் அதன் மிக எளிய பக்கத்திலிருந்து தொடங்குவதே நல்லது.”

தலையை அசைத்த விதுரர் “பேரரசி அரசியலுக்கு முற்றிலும் அப்பால் நின்றுகொண்டிருக்கிறார். இவற்றை அவரிடம் முதலில் விரிவாக விளக்கவேண்டும். தந்தைக்கெதிராக மகன் சினந்தெழுந்தான் என்று கேட்டால் அதுவே அவருக்கு நம்ப முடியாததாக இருக்கலாம்” என்றார். சுருதை புன்னகைத்து “நீங்கள் எவரும் சொல்லாமலேயே அவர் இத்தருணத்தை உணர்ந்திருப்பார், உண்மையில் நெடுங்காலமாக எதிர்நோக்கியும் இருந்திருப்பார்” என்றாள்.

விதுரர் இடைக்கச்சையை கட்டிய கை செயலற்று நிற்க சற்றுநேரம் தலைகுனிந்து எண்ணம்சூழ்ந்து மீண்டு “ஆம், அதை நானும் உணர்கிறேன். ஒரு முறை முயன்று பார்ப்பதில் பிழையில்லை” என்றார். சுருதை “அவரும் உள்ளே வரட்டும். எது நிகழ்ந்தாலும் அவருக்கும் ஒரு சொல் இருக்கட்டும் அதில்” என்றாள். பெருமூச்சுடன் “நன்று சொன்னாய்” என்றார். “இப்பூசல்கள் அனைத்திற்கும் முதல்வேர் என்பது காந்தாரத்து அரசியின் மண்விழைவு அல்லவா?” என்றாள் சுருதை.

“அவரா? அவரில் எப்பற்றையும் நான் காணவில்லை” என்றார் விதுரர். “விழைவையும் வஞ்சத்தையும் அச்சத்தையும் நம்பொருட்டு நமக்கு அணுக்கமான ஒருவர் அடைவாரென்றால் நம் நனவுள்ளம் விடுதலை கொள்கிறது” என்று சுருதை சொன்னாள். “நம் கனவுள்ளம்  நம்மிலிருந்து பிரிந்து தனியாகச் செயல்படுவதைப்போல இனியது பிறிதென்ன?”

அவர் அவளை விழிதூக்கி நோக்கினார். அவள் விழிகளும் அவரை சந்தித்தன. அவள் உதடுகளில் மெல்லிய புன்னகை எழுந்தது. அவர் அருகே வந்து அவள் தோளை மெல்ல தொட்டு “முப்பதாண்டுகாலமாக இந்நகரின் அரசியலில் முதன்மை முடிவுகள் அனைத்தையும் இச்சிறுமாளிகைக்குள் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறாய். என்றேனும் சூதர் உன்னை அறிவாரா? ஒரு சொல்லிலேனும் உன் பெயர் உரைக்கப்படுமா?” என்றார்.

அவள் சிரித்து “சூதர்கள் உரைக்காதவற்றால்தானே நாடும் நகரங்களும் ஆட்டிவைக்கப்படுகின்றன?” என்றாள். விழிகள் தொட்டபோது அவர்கள் மிக அணுகியமையால் அவர்களுக்குள் மட்டுமே பரிமாறப்படும் மிகக்கூரிய முள் ஒன்று அதில் இருப்பதை உணர்ந்த விதுரர் விழிகளை திருப்பிக் கொண்டார். சுருதை “நன்று, தாங்கள் அரசி ஆலயவழிபாட்டை முடித்துவருவதற்குள் அவரை சந்திக்கலாம்” என்றாள்.

“ஆம்” என்றபோது அவர் அச்சிறு அகவிலக்கத்திற்காக வருந்தினார். மீண்டும் அவள் தோளைத் தொட்டு கைவழியாக விரலோட்டி நீல நரம்புகள் புடைத்து மெலிந்த கையை தன் விரல்களுக்குள் எடுத்து “என்றும் என் எண்ணத்திற்கும் உணர்வுக்கும் துணையாக இருக்கிறாய்” என்றபின் உடனே அச்சொல்லின் நெகிழ்வை உணர்ந்து நாணி விழிவிலக்கி அவளைக் கடந்து வெளியே சென்றார்.

[ 5 ]

அரண்மனை வளாகத்தை அவரது தேர் அடைந்தபோது கனகர் அவருக்காக காத்து நின்றார். அவர் இறங்கியதுமே அருகே வந்து “பீஷ்மரின் முறைசார் ஆணை வந்துள்ளது” என்றார். திகைப்புடன் விதுரர் “எப்போது?” என்றார். கனகர் “சற்றுமுன். சுவடியுடன் தங்களை தேடி வரவேண்டும் என்று எண்ணினேன். தாங்கள் கிளம்பிவிட்டதாகத் தோன்றியது. ஆகவே காத்திருந்தேன்” என்றார். விதுரர் கைநீட்ட மெல்லிய தோல்சுருளை கனகர் அளித்தார். அதை நீவி மந்தணச் சொற்களில் எழுதப்பட்டிருந்தவற்றை வாசித்த விதுரர் “இது போதும். இதற்கப்பால் என்ன?” என்றார்.

சொல்லுங்கள் என்பதுபோல கனகர் நோக்கினார்.  விதுரர் அவரைத் தவிர்த்து “அரசர் எங்கிருக்கிறார்?” என்றார். கனகர் “அவர்கள் நேற்றிரவு துயில் நீத்திருக்கிறார்கள். பின்னிரவில் அரசர் கிளம்பி படைநிலைகள் அனைத்தையும் பார்த்துவிட்டு சற்றுமுன்தான் மீண்டார். இந்நேரம் நீராடி மீண்டும் தன் சொல்சூழ் அறைக்கு வந்திருப்பார்” என்றார். அதைக் கேட்டபடியே விதுரர் படிகளில் ஏறி மேலே சென்றார்.

அவர் எண்ணியது போலவே துரியோதனன் அறையில் கர்ணனும் இருந்தான். ஏவலன் அறிவிப்பு அளித்து கதவைத் திறந்ததும் மூச்சிழுத்து நிமிர்வை உருவாக்கிக்கொண்டு உள்ளே சென்று தலைவணங்கினார். இருவர் விழிகளும் அவர்மேல் படிந்தன.  அவர் துரியோதனன்மேல் விழிநிறுத்தி “பிதாமகரின் ஓலை வந்துள்ளது” என்றார். கர்ணன் “ம்?” என்றான். அவர் அவனை நோக்காமல் “பிதாமகர் இந்திரப்பிரஸ்தத்தின் ராஜசூய விழவை முறைப்படி ஒப்புக்கொண்டு தன் அரசாணையை அதன்படி அனுப்பியிருக்கிறார்” என்றார்.

“என்ன?” என்றான் துரியோதனன் உரக்க. “அஸ்தினபுரியின் பிதாமகராக இந்நகரின் அனைத்துக் குடிகளும் ராஜசூய விழவில் பங்கெடுக்க வேண்டுமென்று அவர் விழைகிறார். பேரரசரும் அரசரும் துணையரசர்களும் உறவரசர்களும் தங்கள் அரசியருடன் அதில் அவை அமரவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறார்.” சில கணங்கள் கர்ணனும் துரியோதனனும் அமைதியாக இருந்தனர். கர்ணனின் பீடம் முனகியது. விதுரரின் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. எண்ணியிரா கணத்தில் கர்ணன் பேரோசையுடன் பீடம் பின்னகர எழுந்து “இச்சொற்களை அவர் எழுதியிருக்க வாய்ப்பில்லை. இதை நீங்கள் அவருக்கு அனுப்பினீர்கள்… இது உங்கள் சொற்கள்” என்றான்.

அவன் சினம் விதுரரை எளிதாக்கியது. “அவ்வண்ணமெனில் ஆமென்றுரைக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் சற்றுமுன்னர்தான் இவ்வாணை என் கைக்கு வந்தது. இது அவரது கை ஒற்று எழுத்தா இல்லையா என்பதை நீங்களே உறுதி செய்துகொள்ளலாம்” என்றார். துரியோதனன் “இவ்வாணைக்கு நான் ஏன் கட்டுப்படவேண்டும்? எங்கோ காட்டிலிருந்து ஒருவர் இந்நகரை ஆள நான் ஒப்ப வேண்டுமா என்ன?” என்றான். “ஒப்ப வேண்டியதில்லை. ஆனால் இந்நகரின் தொல்குடிகள் அனைத்தும் பீஷ்மரின் சொல்லுக்கே நின்றிருக்கும். இந்நகரில் வாழும் மூதாதை இன்று அவர்தான். நீத்தோருக்கான நீர்க்கடன்களில் முதல் கைப்பிடி அவருடையதுதான். அவர் வாழும் வரை இங்கெவரும் அச்சொல்லை மீறமுடியாது” என்றார் விதுரர்.

“எவர் சொல்லுக்கும் நான் கட்டுப்பட்டவன் அல்ல. இன்று மாலை என் படை எழும். அதில் எந்த ஐயமும் இல்லை” என்றான் துரியோதனன். விதுரர் அச்சினவெளிப்பாடுகளால் மேலும் மேலுமென உளச்சீர்மை அடைந்தார். அது அவருள்ளத்தில் கூரிய படைக்கலன்கள் எழச்செய்தது. “அவ்வண்ணமெனில் நீங்கள் பீஷ்மரைக் கடந்து செல்கிறீர்கள்” என்றார். “சினம்கொண்டு அவர் இந்திரப்பிரஸ்தத்தின் படைகளுடன் தானும் வில்லேந்தி நின்றால் அங்கர் ஒருவரை நம்பியா நீங்கள் களம் நிற்கப்போகிறீர்கள்?” என்றார்.

துரியோதனன் உணர்வெழுச்சியால் இழுபட்ட முகத்துடன் “வரட்டும், களத்தில் அவருக்கு எதிர்நிற்கிறேன். பீஷ்மர் கையால் இறக்கிறேன். இன்று எந்தை ஒப்பவில்லை என்றால் அவர் கையாலேயே இறப்பேன்.  இனி இம்முதியவர்களுக்கு கட்டுப்பட்டு சிறுமை சேர்ந்த ஊன்தடியாக வாழும் எண்ணமில்லை எனக்கு. வெல்வேன், அன்றி என் தலையை இவர்களின் இரும்புக்கோட்டைகளில் முட்டி சிதறடிப்பேன். அதுவொன்றே என் வழி” என்றான்.

கர்ணன் “எவராயினும் அவர்கள் முற்றாணைகளை இடும் காலம் கடந்துவிட்டது, அமைச்சரே. ஜராசந்தரின் மறைவுக்குப்பின் அஸ்தினபுரியின் அரசர் வாளாவிருப்பார் என்றால் அதன் பின் பாரதவர்ஷத்தின் அரசரவைகளில் அவருக்கென தன்மதிப்பேதும் இருக்காது. இத்தருணம் ஷத்ரியர் அனைவரும் ஒருங்கு திரள்வதற்கு உகந்தது. இது மீண்டும் அமையாது” என்றான்.

“உடன்பிறந்தார் மோதி குருதி சிந்துவதை ஒருபோதும் நான் அனுமதியேன்” என்றார் விதுரர். “ஏனெனில் இருவருக்கு மறுமொழி சொல்லக் கடமைப்பட்டவன் நான். இங்கு ஒருவர் இருக்கிறார். விழியிழந்தவர். அவர்முன் சென்று நின்று நீங்கள் சொல்லெடுக்கலாம். விழிநீர் சிந்தலாம். ஒருவேளை உளமிரங்கி அவர் ஒப்பவும் கூடும். பிறிதொருவர் இங்கில்லை. நம் சொற்கள் சென்று எட்டாத பொன்னுலகொன்றில் வாழ்கிறார். அங்கிருந்து உளம் கனிந்து நம்மை நோக்கிக் கொண்டிருக்கிறார். அவ்வெண்ணத்தை விலக்குக! எத்தருணத்திலும் இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக அஸ்தினபுரியின் படை எழாது” என்றார்.

“நான் உயிர் துறக்கிறேன். நான் உயிர் துறந்தபின் அம்முடிவை எடுங்கள். இன்று இதோ, கிளம்பிச்செல்கிறேன். எந்தையின் முன் சென்று நிற்கிறேன். அவர் என் நெஞ்சு பிளந்து தன் காலடியில் இடட்டும்.  அதன்பிறகு இப்பாழ்முடியைச்சூடி  இங்கு அமர்ந்து இந்நகரத்தை ஆளட்டும்” என்றான் துரியோதனன். விதுரர் “அரசே, ஒரு தந்தையென அவ்வுள்ளத்தை புரிந்துகொள்ளுங்கள். பல்லாயிரம் வௌவால்கள் குழந்தை முகத்துடன் தொங்கும் கனிமரம் போல் இதுகாறும் வாழ்ந்தவர் அவர். நாளை அம்மைந்தரின் குருதியை உடலெங்கும் அணிந்து இங்கே அவர் நின்றிருக்க வேண்டுமா? உளம் உடைந்து அவர் இறப்பாரென்றால் அவர் விட்டுச் செல்லும் இறுதிச் சொல்லின் பழிச்சுமையைத் தாங்குமா உமது கொடி வழிகள்?” என்றார்.

“வேண்டியதில்லை. என் குலம் அழியட்டும். காலமுனைவரை என் கொடி வழி பழிசுமக்கட்டும். இத்தருணத்தில் பிறிதொரு முடிவை நான் எடுக்கப்போவதில்லை” என்றான் துரியோதனன். “அங்கரே!” என்று துயர்மிகுந்த குரலில் கர்ணனை நோக்கினார் விதுரர். “இனி பிறிதொரு எண்ணமில்லை. எது அஸ்தினபுரி அரசரின் எண்ணமோ அதுவே என் எண்ணமும். எது அவரது விழைவோ அதன் பொருட்டு உயிர் துறப்பது என் கடன்” என்றான் கர்ணன்.

விதுரர் உளம்விம்ம “எந்தையரே!” என்றார். கர்ணன் “இதுவே ஒரே வழி. படைஎழுதல், அல்லது எங்களிருவரின் குருதியையும் அவர் சூடட்டும்… இதையே என் சொல்லென அஸ்தினபுரியின் பேரரசரிடம் சொல்லுங்கள். குருகுலத்து பிதாமகரிடம் தெரிவியுங்கள்” என்றான்.

[ 6 ]

விதுரர் வெளியே வந்ததும் கனகர் பின்னால் வந்து “என்ன நிகழ்ந்தது?” என்றார். “இது மானுடரின் ஆடல் அல்ல. நாமறியா தெய்வமொன்று அரசரில் குடியேறிவிட்டது. இனி செய்வதொன்றே உள்ளது, நம் தெய்வங்களை வணங்குவோம். நம்மால் இயன்றதைச் செய்வோம். பெருங்களத்தில் குருதி கண்டு உளமுடைந்து அழிவதுதான் நமது ஊழென்றால் அவ்வாறே ஆகுக!” என்றார் விதுரர். “நான் பேரரசரின் அவைக்குச் செல்கிறேன். அதற்கு முன் நான் அளிக்கும் ஓலையுடன் பேரரசியைச் சென்று பாரும்.”

“ஓலையால் சொல்லப்படுவது அல்ல இங்கு நிகழ்வது” என்றார் கனகர். “அரசி தன் விழியின்மையின் உலகில் வாழ்கிறார். இங்குள்ள எவையும் அவர் அறிந்தவையல்ல.” விதுரர் “ஒற்றை வரிக்கு அப்பால் அவருக்கு சொல்லவேண்டியதில்லை என்று இன்று காலை சுருதை சொன்னாள்” என்றார். கனகர் ஏதோ சொல்ல வாயெடுத்து அடக்கிக் கொண்டார்.

விதுரர் தன் அறைக்குச் சென்று ஓலை ஒன்றை எடுத்து ஒற்றை வரி ஒன்றை எழுதிச் சுருட்டி மூங்கில் குழாயில் இட்டு “அரசிக்கு” என்றார். தலைவணங்கி அதை கனகர் பெற்றுக்கொண்டார். பீடத்தில் சாய்ந்தமர்ந்த விதுரர் சிரித்த ஓசையைக் கேட்டு திரும்பிப்பார்த்தார். விதுரர் உடல்குலுங்க தலையை அசைத்தபடி சிரித்துக்கொண்டிருந்தார். கனகர் நின்று “அமைச்சரே…” என்றார். விதுரர் விழிகள் நனைந்திருக்க “ஒன்றுமில்லை” என்றபின் மீண்டும் சிரித்தார். வாயில் நோக்கி அடிவைத்த கனகர் திரும்பிவந்தார்.

“எனக்கு சித்தம் கலங்கவில்லை” என்றார் விதுரர். அடக்கமுயன்று மேலும் சிரித்தபடி “நினைத்துப்பார்த்தேன். மேலிருந்து நம்மை குனிந்து நோக்கும் மூதாதையர் எப்படி திகைப்பார்கள், எப்படி நகைப்பார்கள் என்று! ஒருவேளை விண்ணுலகில் அவர்களுக்கிருக்கும் பேரின்பமே இதுதானோ என்னவோ?” என்றார். கனகர் திகைப்பு மாறாத விழிகளுடன் நோக்கி நின்றார். “நீர் செல்லும்… ஓலை உடனே பேரரசியின் கைக்கு செல்லவேண்டும்” என்றார் விதுரர்.

கனகர் அமைச்சுநிலையில் வேறு எவரேனும் இருக்கிறார்களா என்று திரும்பி நோக்கினார். “எனக்கு சித்தம் நிலையாகவே உள்ளது. அஞ்சவேண்டாம்” என்றார் விதுரர். “இங்கே நாம் ஆடும் இந்த இளிவரல் நாடகமே அவர்களுக்காகத்தான் போலும். அவ்வண்ணமென்றால் மேலே நோக்கியிருக்கும் அன்னை சத்யவதி இப்போது அடிவயிற்றில் கைதாங்கி நகைத்துக்கொண்டிருப்பார்.” கனகர் ஆறுதல் கொண்டு “ஏன்?” என்றார். விதுரர் “இதே அரண்மனையில் என் இளமையில் அன்னையிடம் நான் சொன்னேன், பாரதவர்ஷத்தில் ஒரு பெரும்போர் நிகழவேண்டும் என்று. பல்லாயிரம் பேர் மடியவேண்டும் என்று” என்றார்.

விதுரரின் முகம் நகைமறைந்து இறுகியது. “ஒரு குருதிப்பெருக்கில்லாமல் பாரதவர்ஷம் இனி அடுத்த கட்டத்தை நோக்கி செல்லமுடியாது என்று அன்னையிடம் சொன்னேன். காட்டுத்தீ எழுந்து பெருமரங்கள் மண்படாமல் புதுமுளைகள் எழாது என்று சொல்லாடினேன். இளமையின் துடுக்கில் அனைத்தும் என் பத்துவிரல்களால் தொட்டெண்ணிவிடக்கூடியவை என்று தோன்றின. அப்போது என்னைச் சூழ்ந்தமர்ந்து தெய்வங்கள் புன்னகை புரிந்ததை இப்போது காண்கிறேன்.” மீண்டும் கசப்புடன் நகைத்து “இதோ, இருபதாண்டுகாலமாக என் முன் ஒவ்வொருகணமும் போர் முற்றிப்பழுத்துக்கொண்டிருக்கிறது. அதைத் தவிர்க்கும்பொருட்டு இறுதியாற்றலையும் கொண்டு முயல்கிறேன்” என்றார்.

கனகர் “அதைத்தான் முந்தையோர் ஊழ் என்னும் சொல்லால் விளக்கினர். கடமையை ஆற்றுவோம். ஊழுக்கு முன் பணிவோம்” என்றார். “இதைச் சொல்லாத எவரும் இல்லை. மானுடர் எவரேனும் ஊழ்முன் விழிநீரின்றி உளக்குமுறலின்றி அடிபணிந்ததை கண்டிருக்கிறீரா?” என்றார். “நான் கண்டதெல்லாமே இவ்வரண்மனைக்குள்தான். இங்கே ஊழுக்கு எதிராக வாளேந்தி நின்றிருப்பவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்” என்றபின் கனகர் கிளம்பிச்சென்றார்.

விதுரர் சற்றுநேரம் சாளரம் வழியாக ஆடும் மரக்கிளைகளை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். மரங்கள் எக்கவலையும் அற்றவை என்ற எண்ணம் வந்தது. அக்கிளைகளில் இருக்கும் சொல் கவலையின்மை என்பதுதான். அப்பால் காற்றில் பறக்கும் பறவைகளும் கவலையில்லை கவலையில்லை என்றே சிறகசைக்கின்றன. அல்லது காலமில்லை என்றா? கவலையும் காலமும் ஒன்றா? இவ்வீண் எண்ணங்களை ஏன் அடைகிறேன் என்று அவர் தன்னுணர்வுகொண்டார். ஆனால் அவ்வெண்ணங்கள் வழியாக அவர் நெடுந்தொலைவு கடந்து வந்துவிட்டிருந்தார்.

பெருமூச்சுடன் எழுந்து புஷ்பகோஷ்டத்தை நோக்கி சென்றார். தன் காலடிகளையே கேட்டுக்கொண்டிருந்தார்.  இந்த இடைநாழியில் எத்தனை விதமான அச்சங்களுடனும், பதற்றங்களுடனும், உவகைகளுடனும் உள எழுச்சியுடனும் கடந்து சென்றிருக்கிறோம் என்று ஓர் எண்ணம் உள்கடந்து சென்றது. அனைத்தும் ஒற்றைக் கணத்தில் கண்டு கலைந்த கனவுபோல் இருந்தது. காற்றில் ஆடும் அக்கிளை போல வானிலெழுந்து மண்ணுக்கு மீண்டும் ஆடி ஆடிச் சலித்து ஓய்வதுதானா தன் வாழ்வு?

படிகளில் ஏறும்போது எங்கோ ஒரு புள்ளியில் அவர் உள்ளம் அனைத்திலிருந்தும் முற்றும் விலகியது. அவர் உடலெங்கும் இனிய உவகையொன்று பரவியது. இவை அனைத்தும் கனவே. நான் எங்கோ அமர்ந்து இவற்றை கண்டு கொண்டிருக்கிறேன். கனவில் எழும் துயர் துயரல்ல. வலி வலியல்ல. கனவில் இழப்புகள் பிரிவுகள் ஏதுமில்லை. புஷ்பகோஷ்டத்தின் வாயிலை சென்றடைந்தபோது அவர் சீரான காலடிகளுடன் இயல்பான முகத்துடன் இருந்தார். வாயிற்காவலனிடம் “பேரரசரைப் பார்க்க விழைகிறேன்” என்றார்.

“அவர் இசை கேட்டுக்கொண்டிருக்கிறார். அருகே சஞ்சயனும் அமர்ந்திருக்கிறார்” என்றான் காவலன். “நன்று, விப்ரரிடம் ஒப்புதல் பெற்று வருக!” என்றார் விதுரர். உள்ளே சென்று மீண்ட ஏவலன் “வருக!” என்றான். கதவைக் கடந்து உள்ளே சென்று அங்கே குறுபீடத்தில் உடல் குறுக்கி பஞ்சடைந்த விழிகளுடன் அமர்ந்திருந்த விப்ரரிடம் “வணங்குகிறேன், விப்ரரே” என்று தலைவணங்கினார். விப்ரர் “ம்” என்று முனகினார். அனைத்திலிருந்தும் விலகி பிறிதொரு உலகில் அவர் வாழ்ந்துகொண்டிருப்பதுபோல் தோன்றியது.

விதுரர் உள்ளே சென்று  இசைக்கூடத்தில் ஏழு இசைச்சூதர் மிழற்றிக் கொண்டிருந்த யாழ் இசையைக் கேட்டபடி கையைக் கட்டி நின்றார். திருதராஷ்டிரர் தன் பெரிய உடலை பீடத்தில் விரித்து கால்களைப் பரப்பி கைகளை மார்புடன் கட்டி குழல்சுருள்கள் முகத்தில் சரிய தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் முன் இருந்த நீர் நிறைந்த தடாகம் அவரைப்போலவே அவ்விசைக்கேற்ப அதிர்வு கொண்டிருந்தது. ஒருகணத்தில் விதுரர் அனைத்தையும் கண்டார். அவர் உடலே விம்மி வெடிக்கும்படி பெருந்துயர் எழுந்து முழுக்க நிறைந்தது.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 45

பகுதி எட்டு : கார்த்திகை

[ 1 ]

சேதி நாட்டிலிருந்து புரவியிலேயே கிளம்பிய சிசுபாலன் அஸ்தினபுரியை அடைந்து கோட்டை வாயிலில் தன் முத்திரைக் கணையாழியை காட்டியபோதுதான் அவனது வருகையை நகரம் அறிந்தது. அச்செய்தியைக் கொண்டு பறந்து சென்ற புறா அரண்மனையை அடைந்து, தோல்சுருள் விதுரரின் கைகளுக்குச் சென்றபோது அரண்மனை முற்றத்தில் குளம்புகள் ஒலிக்க சிசுபாலன் புரவியில் வந்து நின்றான். தாவி இறங்கி தனது கடிவாளத்தை சூதனிடம் வீசிவிட்டு குறடுகள் ஒலிக்க படிக்கட்டில் ஏறி இடைநாழியில் நடந்து அவன் வருவதைக் கண்ட விதுரர் முகமன் உரைத்து வணங்கியபடி எதிரே வந்தார்.

“நான் அரசரை காண விழைகிறேன்” என்று சிசுபாலன் உரக்க சொன்னான். “அரசர் மேலே சொல்சூழ் அறையில் இருக்கிறார்” என்றார் விதுரர். “தாங்கள் இளைப்பாறி…” என்று அவர் சொன்னதை கையசைத்து தடுத்தபின் படிகளில் ஓசையுடன் ஏறி இடைநாழியில் விரைந்த சிசுபாலன் துரியோதனன் அறை வாயிலில் காவலுக்கு நின்ற துர்மதனின் தோளைத்தட்டிவிட்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.

அறைக்குள் துரியோதனனைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்கள் திகைப்புடன் அவனை நோக்க உரத்த குரலில் “அஸ்தினபுரியின் அரசரை வணங்குகிறேன். செய்தி வந்திருக்கும். அரசே, நாம் நம் வீண் திட்டங்களால் அதற்குப் பின்னிருந்த பொருளற்ற தயக்கங்களால் இணையற்ற தோழர் ஒருவரை இழந்துவிட்டோம்” என்று கூவினான். கர்ணன் எழுந்து சிசுபாலன் அருகே வந்து தோளில் கைவைத்து “பொறுங்கள், அரசே” என்றான். அவன் கையை விசையுடன் தட்டிவிட்டு “பொறுப்பதா? என்ன நிகழ்ந்திருக்கிறது என முழுக்க உணர்ந்திருக்கிறீர்களா எவரேனும்? நமது ஒரு பாதி வெட்டப்பட்டுவிட்டது. என்றேனும் ஒரு நாள் இதன் பொருட்டு நாம் நம் மூதாதையரின் ஏளனத்தை காண்போம்” என்றான்.

“அமருங்கள். நிகழ்ந்ததன் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். பொறுங்கள்” என்றான் கர்ணன். பெரும் சினத்துடன் திரும்பி “பொறுப்பை ஏற்றுக் கொள்ள நீ யார்? சவுக்கேந்தி குதிரையில் நிற்க வேண்டிய சூதன். துணிந்து களமிறங்குதல் ஷத்ரியனின் இயல்பு. உன் சொற்களைக் கேட்டு தயங்கியமையால் நாங்களும் இன்று இழிமக்களாக நிற்கிறோம்” என்றான் சிசுபாலன். கர்ணன் ஏதோ சொல்லவந்தபின் பின்னடைந்தான்.

சிசுபாலன் துரியோதனனை நோக்கி சென்று “அரசே, இனியும் ஒரு கணம் மாற்று எண்ணம் நம்மில் எழுந்தால் நாம் ஷத்ரியர்கள் அல்ல என்றே பொருள். சூதரோ அந்தணரோ சொல்கொண்டு இனி நம் முன் வரவேண்டியதில்லை.  என்ன நிகழ்ந்ததென்று அறிந்திருப்பீர்கள். படை கொண்டு சென்று மகதத்தை அவர்கள் வென்றிருந்தால்கூட அது ஷத்ரியர்களின் அறம் என்று எண்ணி ஆற்றியிருக்கலாம். இழிமக்கள் போல மாறுதோற்றம் கொண்டு நகர் நுழைந்து களத்திற்கு அவரை இழுத்து பிழையான போரில் அவரைக் கொன்று மீண்டிருக்கிறார்கள் அவ்விழிமகன் கிருஷ்ணனும் பாண்டவர்களும்” என்றான்.

அக்காட்சியை உளவிழியால் கண்டு சிசுபாலன் தளர்ந்தான்.  துச்சலன் எழுந்து அளித்த இருக்கை நோக்கி சென்று எடையுடன் அதில் விழுந்து பெருமூச்சுவிட்டு தலைதாழ்த்தி “எண்ணக்கூடவில்லை. எண்ணி ஓரிடத்தில் அமரமுடியவில்லை.  சேதி நாட்டிலிருந்து புரவியிலேயே இத்தனை தொலைவு வந்தேன். உடல் புரவிமேல் பறந்து கொண்டிருந்ததனால் மட்டுமே உள்ளத்தின் எடை வீங்கி உடையாது இருந்தேன்” என்றான்.

கையை வீசி தனக்குத்தானே என “என்ன நிகழ்கிறதென்றே புரியவில்லை. ஒவ்வொரு நாளும் நாம் எள்ளிநகையாடிய சிறியோர் இதோ கைமுளைத்து தலை எழுந்து பேருருவம் கொண்டு வான் தொட்டு நிற்கிறார்கள். ஷத்ரியக் குடி பிறந்து சிறுமை கொண்டு அவர்களின் காலடியில் நாம் நின்றிருக்கிறோம்” என்றான். உடனே வெறிகொண்டு உரக்க தொடையில் அறைந்து “இதை நீங்கள் எவரும் உணரவில்லையா? இவ்வுணர்ச்சி எனக்கு மட்டும்தான் எழுகிறதா?” என்றான்.

துரியோதனன் மீசையை முறுக்கியபடி ஒளிநின்ற விழிகளுடன் அசைவின்றி நோக்கிக் கொண்டிருந்தான். சகுனி தன் புண்காலை சற்றே அசைத்து மெல்ல எழுந்தமர்ந்து “சேதி நாட்டரசே, உங்கள் உணர்வுகள் அனைத்தையும் நாங்களும் அடைந்தோம். ஷத்ரிய தந்தைக்குப் பிறந்த அரசன் ஒருவன் அவ்வாறு கொல்லப்பட்டது நம் அனைவருக்கும் இழிவே” என்றார். “ஆனால் அன்று உடனே படைகொண்டு சென்று மகதத்தை துணைக்கவேண்டாம் என்று சொன்னது கர்ணனல்ல, நான். இன்றும் அது சரியான முடிவென்றே எண்ணுகிறேன்” என்றார்.

சிசுபாலன் “இன்று இதோ மகதம் முறிந்துவிட்டது. மகதத்தின் அரசனுக்கு தன் கையாலேயே முடிசூட்டிவிட்டு திரும்பியிருக்கிறான் உங்கள் இளைய யாதவன். என்றேனும் நாம் இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக படைதிரண்டு நிற்போமென்றால் நம்முடன் இருந்திருக்கக்கூடிய படைகளில் பாதி அழிந்துவிட்டது. நெஞ்சு திறந்து நம்மை தோள் தழுவிய தோழன்  மண் புகுந்துவிட்டான்” என்றான்.

மெல்ல அசைந்து முனகி சொல்லெடுத்து “உண்மை. நாம் மிகப்பெரிய நட்பையும் படைத்துணையையும் இழந்திருக்கிறோம். ஆனால் மகதத்துடன் அஸ்தினபுரி உறவு வைத்திருந்தால் என்ன ஆகும் என்பதை மட்டும் எண்ணிப்பார்க்கவேண்டும்” என்றார் கணிகர். “அரசே, அவன் ஷத்ரிய அரசனல்ல. ஜரை மைந்தன். அவன் தந்தை அவனுக்கிட்ட பெயர் பிருஹத்பாகு. ஒருமுறையேனும் அப்பெயர் சூதர்களால் சொல்லப்பட அவன் ஒப்புக் கொண்டதில்லை. ஒரு நூலிலும் அது பொறிக்கப்பட்டதில்லை. ஜராசந்தன் என்றே தன் பெயர் வாழவேண்டும் என்ற அவன் ஆணையிட்டிருந்தான். ஏனெனில் தன்னை அரக்கர் குடியினனாகவே அவன் முன்வைத்தான்.”

“அங்கு நிகழ்ந்ததென்ன என்றும் அறிந்திருப்பீர்” என்று கணிகர் தொடர்ந்தார். “நாக வேள்வி! அதன் பொருட்டு மண்மறைந்த நாகவேதம் மீட்டெடுக்கப்பட்டது.” சிசுபாலன் பற்களைக் கடித்தபடி “நன்று! தொல்வேதம் கட்டற்ற பேராற்றல் கொண்டது. அதில் பறந்து அவன் தன் விசையனைத்தும் அடைந்தான்” என்றான். “ஆம், அவ்வண்ணமே விசையடைந்தவர் பலர் இருந்தனர் நமது தொல்கதைகளில். ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு, ராவணன் என பெருநிரை அது. அரசே, அரக்க வேதத்தை முழுதறிந்து உருத்திரனை அணுகிக் கண்டவன் இலங்கைவேந்தன் என்கின்றன நூல்கள்” என்றார் கணிகர். “எனில் ஏன் அவர்கள் அழிந்தனர்?”

அவரது மெல்லிய குரலில் பிறிது எண்ணவிடாது கவ்வும் ஒன்று இருந்தது. “ஏனெனில் அது இக்காலத்துக்குரிய வேதம் அல்ல. இங்கு வாழும் மாந்தர் அதிலிருந்து விலகி வந்து நெடுநாட்களாகின்றன. அதை இங்கு நிலை நிறுத்த முடியாது. படைக்களத்தின் சிறிய கணக்குகளுக்குள் மேன்மைகள் சில இருக்கலாம். ஆனால் அவனுடன் துணை கொண்டிருந்தால் பாரதவர்ஷத்தின் அனைத்து அரசர்களையும் நாம் எதிரிகளாக்கிக் கொண்டிருப்போம். அவ்வெதிர்ப்பு எளிதல்ல. ஒவ்வொரு நாளும் கணுக்கணுவாக முளைத்து வளர்வது அது. அஸ்தினபுரி என்றல்ல எந்த அரசனும் அதை எதிர்கொண்டிருக்க முடியாது. இளைய யாதவர் மிக எளிதாக நால்வேதத்திற்கும் தொல்வேதத்திற்கும் இடையேயான போரென அதை காட்டியிருப்பார்.”

அவையில் மெல்ல ஒரு உளத்தளர்வு ஏற்பட்டது. சிசுபாலன் கைகளை அசைத்து “நானறியேன். எதையும் நீண்டகாலத்தை வளைத்து எண்ணப்புகுந்தால் செயலின்மை ஒன்றே எஞ்சும். செய்யக்கூடுவன ஒருபோதும் செய்யப்படமாட்டாது. நான் ஷத்ரியன். அக்கணம் உளம் எதை சொல்கிறதோ அதை ஏற்பதும் ஏற்றதன் பொருட்டு வாளேந்தி களம் காண்பதும் மட்டுமே எனக்குரியது. இக்கணக்குகள் அல்ல. இவற்றை என்னிடம் சொல்லவேண்டியதில்லை” என்றான்.

கர்ணன் “இக்கணக்குகளை நானும் சொல்ல வரவில்லை, சேதி நாட்டரசே” என்றான். “மகதத்தின் தலைவனின் இறப்புக்கு நானே பொறுப்பென்று எண்ணி நான் உறக்கிழந்தேன். அன்று படைகிளம்பும்போது வந்த செய்தியால் இளைய யாதவன் கணக்கென்ன என்று அறியாமலே ஒருகணம் தயங்கினேன். பௌண்டரிக வாசுதேவன் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல் மகதனை அச்சுறுத்துவதற்கல்ல, நம்மை திசைமாற்றி அஸ்தினபுரிமேல் படைகொண்டு வருவதற்கான சூழ்ச்சி என்னும் ஐயம் எனக்கெழுந்தது. அது வீண் ஐயமென்று இப்போதும் நான் எண்ணவில்லை.”

“மகதத்தின் படை வல்லமையை இந்திரப்பிரஸ்தம் அறியும் என்பதனால் எளிதில் ஒரு போர் நிகழும் என்று நான் எண்ணவில்லை. நமது ஒற்றர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் படைக்கூட்டு நிகழும் செய்தியை நமக்கு அனுப்பவும் இல்லை” என்று கர்ணன் தொடர்ந்தான். உளத்தளர்வுடன் “ஆனால் இவ்வண்ணம் ஒன்று நிகழுமென்று நான் ஒருபோதும் கணித்ததில்லை. நிகரற்ற சூழ்ச்சியாளராகிய ஜராசந்தர் எப்படி இதில் சிக்கிக்கொண்டார் என்பதை எத்தனை எண்ணியும் என்னால் தொட்டறிய இயலவில்லை. இளைய யாதவனின் எண்ணத்தைத் தொடரமுயன்று தோற்றேன்” என்றான்.

சிசுபாலன் “அவன் செய்கைகள் எதையாவது முன்னரே கணித்திருக்கிறீர்களா?” என்றான். “ஆம், அவர் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டவர்” என்றார் கணிகர். “ஏன்?” என்று சிசுபாலன் உரக்க கூவினான். “ஏன் அவன் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டவன் தெரியுமா? நாம் ஷத்ரியர்களைப்போல் எண்ணுகிறோம். அரசர்களைப்போல் மதிசூழ்கிறோம். அவன் கீழ்மகனைப்போல் எண்ணுகிறான். தெருவில் விளையாடும் சிறுவனைப்போல் செயல்சூழ்கிறான்.”

“ஆம்” என்றார் கணிகர் சிரித்தபடி. “நேற்றிருந்த எனக்கும் இன்றிருக்கும் எனக்கும் இடையே இன்றியமையாத ஒரு தொடர்ச்சி உள்ளது. அவனோ ஒவ்வொரு நாளும் புதிதெனப் பிறந்து அழிகிறான். ஒவ்வொரு கணமும் பிறிதொருவனாக மாறிக்கொண்டிருக்கிறான். ஒன்று மட்டும் உணருங்கள். நான் நன்கறிந்தது இது. அவனை ஒரு மனிதன் எனக்காட்டுவது அவன் உடல் மட்டுமே. அவன் ஒரு சிறு துளையினூடே மறுபக்கம் தெரியும் காட்சி. துளை என்பது ஒரு பொருளல்ல, ஒரு நிகழ்வு அது.”

சகுனி “தங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன், சிசுபாலரே. இனி நாம் செய்வதற்கேதும் இல்லை. மகத நாட்டரசன் சகதேவன் இந்திரப்பிரஸ்தத்துடன் நட்பு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டிருக்கிறான்” என்றார். “எப்போது?” என்றான் சிசுபாலன். “நேற்று அச்செய்தியுடன் மகதத்தின் அமைச்சர் காமிகர் இந்திரப்பிரஸ்தத்திற்கு கிளம்பியிருக்கிறார்.” சிசுபாலன் “அது அவன் சூழ்ச்சி” என்றான். கர்ணன் “இனி போர் நமக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் மட்டும்தான். ஒருவகையில் அது நன்று. இருமுனைகளும் கூர்கொண்டுவிட்டன” என்றான்.

“ஷத்ரியர்களை சிறைமீட்ட இளைய யாதவன் என்று சூதர்கள் பாரதவர்ஷமெங்கும் பாடத்தொடங்கிவிட்டார்கள். அக்குலமிலியின் பின்னால் ஷத்ரியர்கள் அணி திரள்வார்கள் என்றால் அதன்பின் என்றோ ஒருநாள் நானும் சென்று அங்கு முடி தாழ்த்த வேண்டியிருக்கும். அஸ்தினபுரிக்கரசே, உங்கள் மணிமுடியும்…” என்று சிசுபாலன் சொல்வதற்குள் கைநீட்டி “நிறுத்துக!” என்றான் துரியோதனன். சிசுபாலன் திறந்த வாயுடன் அசைவிழந்தான். துரியோதனன் எழுந்து “அங்கரே, நமது படைகள் எழட்டும் இப்பொழுதே” என்றான்.

சகுனி சற்று திகைத்து “மருகனே…” என்று அழைக்க துரியோதனன் உரக்க “நான் இனி தயங்கி பழிகொள்ளப்போவதில்லை. வேறு எதன்பொருட்டும் இல்லையென்றாலும் என் தோழன் ஜராசந்தன் பொருட்டு அவ்விழிமகனின் குருதியை என் கைகளில் பூசிக்கொண்டாக வேண்டும். ஆம். இது என் ஆணை! படை எழுக!” என்றான். சகுனி சலிப்புடன் தலையை அசைத்தபடி மெல்ல சாய்ந்து அமர்ந்தார்.

[ 2 ]

அன்று மாலையே படை எழுச்சிக்கான முரசுகள் அஸ்தினபுரியின் அனைத்து காவல் மாடங்களிலும் முழங்கின. நகரமெங்கும் போர்அழைப்பு பரவ படைவீரர்களின் நடைகளும் விழிகளும் மாறுபட்டன. தெருவில் சென்றுகொண்டிருந்தவர்களை அவர்கள் அதட்டி வழிவிலக ஆணையிட்டனர். வணிகர்கள் படைவீரர்களைக் கண்டதும் பணிந்து விலகினர். எளிய காவல்குழு சாலையில் சென்றபோதுகூட மக்கள் திண்ணைகளுக்கு வந்து அவர்களை நோக்கி நின்றனர். அந்நோக்குகள் அவர்களின் மிடுக்கை கூட்டின. அனைத்துப் படைக்கலமுனைகளும் ஒளிகொண்டுவிட்டதைப்போல் தோன்றியது.

தெற்குக் கோட்டைக்கு அப்பால் புராணகங்கைக்குள் உருவாகியிருந்த காந்தாரக் குடியிருப்புகளில் வீரர்கள் படைக்கலங்களுடன் எழுந்து போர்க்குரலுடன் அணிவகுத்து நகருக்குள் நுழைந்து செண்டுவெளிகளிலும் குதிரைவெளிகளிலும் அணிநிரைத்தனர். மேற்குக் குறுங்காட்டுக்கு அப்பால் நிலை கொண்டிருந்த அஸ்தினபுரியின் காலாள் படைகளும் கங்கைக் கரையோரமாக நூற்றியெட்டு படைநிலைகளில் இருந்த அஸ்தினபுரியின் விற்படைகளும் வெவ்வேறு படைசூழ்கைகளாக தங்களை தொகுத்துக் கொண்டன. கர்ணன் சிசுபாலனுடன் புரவியில் படைநிலைகள்தோறும் சென்று அணிகள் ஒருங்கு திரள்வதை பார்வையிட்டான்.

ஒவ்வொரு படையணிக்கும் அதற்குரிய வண்ணக்கொடிகளும் கொம்பொலி முறைமைகளும் முரசுத்தாளமும் இருந்தன. அவை விண்ணிலிருந்து எழும் ஆணைகள் போல காற்றில் பரவி ஒவ்வொரு வீரனையும் தொட்டு பேசின. அவர்கள் அறியாத கைகளால் நகர்த்தப்படும் நாற்களக்காய்கள் போல விலகியும் இணைந்தும்  திரண்டு ஒற்றை உடலென ஆனார்கள். கோட்டைக் காவல் மேடையில் மேலிருந்து நோக்கிய கர்ணன் ஆணைகளை இட அருகே நின்றிருந்த வீரர்கள் அவ்வாணைகளைப் பொறித்து புறாக்களில் கட்டி அனுப்பினார்கள். புறாக்கள் விண்ணிலெழுந்து காற்றுக்கு அப்பால் மறைந்த சற்று நேரத்திலேயே அந்தப்படைகள் ஆணைக்கு ஏற்ப உருமாறுவதை காணமுடிந்தது.

சிசுபாலன்  ”தெய்வங்கள் மானுடரை வைத்து விளையாடுவதுபோல” என்றான். கர்ணன் தொலைவில் இருதலை ராஜாளியென உருக்கொண்ட படைப்பிரிவின் வலச்சிறகு தொய்வாக இருப்பதைக்கண்டு “இருதலை ராஜாளியின் வலச்சிறகு விரைவில்லை” என்றான். அச்செய்தி உடனே புறாவின் கால்களில் ஏற புறா சிறகோசையுடன் காற்றில் ஏறியது. “இந்திரப்பிரஸ்தத்தின் படைகளை எதிர்கொள்ள இவர்களால் இயலுமா?” என்றான் சிசுபாலன். கர்ணன் திரும்பி நோக்க “போரென்று ஒன்றை அஸ்தினபுரி கண்டு ஒரு தலைமுறை கடந்துள்ளது, அங்கரே. யாதவப் படைகளோ மகதத்துடனும் கூர்ஜரத்துடனும் கிழக்கே மாளவத்துடனும் ஆண்டுக்கு ஒருமுறை போர் புரிந்து கொண்டிருக்கின்றன” என்றான்.

கர்ணன் மீசையை கைகளால் நீவியபடி “ஆயினும் அவர்கள் யாதவர்” என்றான். “ஆம், ஆனால் அவர்களை நடத்துபவன் வெற்றிக்கென எதையும் செய்யும் தயங்காமை கொண்டவன்” என்றான் சிசுபாலன். கர்ணன்  எரிச்சலுடன் கையை வீசி  “போர்க்களத்தில் நாம் எவரும் இன்னும் அவனை சந்தித்ததில்லை. சூதர் கதைகளிலிருந்து சித்திரங்களை உருவாக்கிக் கொள்ள நான் விழையவில்லை. பரசுராமரின் வில் என் கையில் இருக்கும் வரை பாரதவர்ஷத்தில் எவர் முன்னும் நான் தோற்கப்போவதில்லை” என்றான்.

சிசுபாலன் மேலும் ஏதோ சொல்ல வந்தபின் அதைத் தவிர்த்து கீழே விழிதொட்ட இடமெங்கும் நண்டாகவும் தேளாகவும் பூரானாகவும் இருதலைப்பாம்பாகவும் மூன்று தலைப்பாம்பாகவும் உடல் கொண்டு உருண்டு கொண்டிருந்த அஸ்தினபுரியின் படைகளை நோக்கினான். அப்பெருக்கு தன் சோர்வை மிகச்செய்வது ஏன் என அவனே வியந்தான். கர்ணன் “நாளை அந்திக்குள் படை எழும். இந்திரப்பிரஸ்தத்தை தரை வழியாக படைகள் சென்றணையட்டும்” என்றான். சிசுபாலன் “தரைவழியாக என்றால் பத்து நாட்கள் ஆகும். ஊடாக  மூன்று சிற்றாறுகள் ஓடுகின்றன” என்றான்.

“ஆம், சிற்றாறுகளின் மேல் படகுப்பாலம் அமைக்கலாம் ஊர்கள் வழியாகச் செல்வது நன்று. அஸ்தினபுரியின் எல்லை கடந்தால் அனைத்து ஊர்களும் இந்திரப்பிரஸ்தத்திற்குரியவை. செல்லும் வழியிலேயே நம் படைகளுக்குத் தேவையான அனைத்தையும் திரட்டிக் கொள்ளலாம். நாம் உருவாக்கும் எரிபரந்தெடுத்தலின் புகை இந்திரப்பிரஸ்தத்தை சென்று மூடியபின் நம் படைகள் அங்கு சென்றால் போதும்” என்றான்.

சிசுபாலன் “ஜராசந்தனின் பொருட்டு நாம் படைகொண்டு எழுகிறோம் என்றால் பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்களுக்கு வேறு வழியில்லை. இளைய யாதவனால் உயிர்மீண்ட சிறுகுடி ஷத்ரியர்கள் இந்திரப்பிரஸ்தத்துடன் நிற்கலாம். பெருங்குடியினர் நம்மை ஆதரித்தே ஆகவேண்டும். வங்கமும், கலிங்கமும், கூர்ஜரமும், உசிநாரமும், திரிகர்த்தமும், கோசலமும், கேகயமும், மாளவமும், விதர்ப்பமும் நம்முடன் நிற்குமென்றால் இந்திரப்பிரஸ்தத்தை சூழ்ந்து நொறுக்கமுடியும்” என்றான்.

படிகளில் இறங்கிய கர்ணனுடன் நடந்தபடி “அனைத்து அரசர்களுக்கும் ஓலை சென்று விட்டது. சிந்துவிலிருந்து ஜயத்ரதனின் படைகள் நாளையே கிளம்பும் என்று எதிர்பார்க்கிறேன். நான் நாளை காலை கிளம்பி சேதி நாடு சென்று என் படைகளுடன் எழுந்து ருக்மியின் தலைமையில் திரளும் விதர்ப்பத்தின் படைகளுடன் இணைந்து கொள்கிறேன்” என்றான். “காட்டுநெருப்பை தொடக்கத்திலேயே அழிப்பது நன்று. எண்ணிப்பார்க்கையில் இதுவன்றி பிறிதொரு தருணம் அமையாதென்று தோன்றுகிறது” என்றான்.

கர்ணன் “நீர் அஞ்சுவது எதை?” என்றான். “யார் அஞ்சுகிறார்கள்?” என்றான் சிசுபாலன் விழிகளில் சினத்துடன். “பாரதவர்ஷத்தின் ஷத்ரிய நாடுகள் அனைத்தும் நம் அணியில் திரளும் என்று உமது வாயால் சொன்னீர். ஆனால் ஐயமும் கொண்டிருக்கிறீர்” என்றான் கர்ணன். சிசுபாலன் விழிகளைத் தாழ்த்தி “ஆம், அஞ்சுகிறேன். படைகளை அல்ல. பாண்டவர்களின் படைக்கலன்களையும் அல்ல. அவன் ஒருவனை” என்றான்.

“சிசுபாலரே, வரலாற்றில் எப்போதும் நிகழ்வது இது. சிறுவிரிசல் வழியாகப் பீறிடும் ஆறு கீழிறங்கும் விசையாலேயே பாறையைப் பிளந்து பிலம் ஒன்றை உருவாக்கி வழிகண்டுபிடிப்பது போல எளிய குடிப்பிறந்த ஒரு வீரன் சிலதருணங்களின் வழியாக எழுந்து அரசொன்றை அமைப்பது பலமுறை பாரதவர்ஷத்தில் நடந்துள்ளது. அவன் அவ்வாறு எதிர்பாராது எழுவதனாலேயே மாமனிதனாகவும் மாயங்கள் அறிந்தவனாகவும் எளிய மனிதரால் எண்ணப்படுவான். அவ்வெண்ணமே அவனை மேலும் அச்சத்திற்குரியவனாக்கும். அச்சம் அவனது படைக்கலமாகி வெற்றிகள் அவனைத் தொடரும்” என்றான் கர்ணன்.

“ஆனால் எங்கோ ஓர் இடத்தில் தன்னைப் பற்றி பிறர் சொல்வதை அவன் நம்பத்தொடங்குவான். அந்த இடத்தில் இருந்து அவனது சரிவு தொடங்கும். ஜராசந்தரின் கதையும் வேறல்ல” என அவன் தொடர்ந்தான். “இளைய யாதவன் இன்று தன்னை மண்வந்த தெய்வம் என்று சூதர் பாடுவதை ஏற்கிறான். தெய்வம் என தன்னை எண்ணத்தலைப்பட்டவன்  தெய்வங்களின் பகையை ஈட்டிவிட்டான் என்றே பொருள். உறுதி கொள்ளுங்கள், இப்போரில் அவன் வீழ்வான். அவன் தலை அணிந்த பீலியை கொண்டுவந்து அஸ்தினபுரியின அரசரின் பாதக்குறடுகளில் நாம் வைப்போம்” என்றான்.  “ஆம். அது நிகழவேண்டும்” என்றான் சிசுபாலன்.

படை எழுச்சிகளுக்கான ஆணைகளை முழுமை செய்துவிட்டு இறுதியாக யானைக் கொட்டிலுக்குச் சென்று போர்யானைகளின் கவசங்களையும் அவற்றுக்குரிய சங்கிலியுருளைகளையும் பூண்தண்டுகளையும் பார்வையிட்டுவிட்டு கர்ணன் தன் மாளிகைக்குச் சென்றான். நீராடி அவைக்குரிய ஆடைகளை அணிந்து அரண்மனையை அடைந்தபோது  விதுரர் அவனை இடைநாழியிலேயே எதிர் கொண்டார். முகம் கவலையால் நிறைந்திருக்க “அங்கரே, தங்களிடமிருந்தேனும் சற்று எண்ணி செய்யும் பொறுப்பை எதிர்பார்த்தேன்” என்றார்.

கர்ணன் நில்லாமல் அவரை கடந்துசென்றபடி “சற்றே எண்ணி நின்றதன் சிறுமையை அவையில் நான் அடைந்துவிட்டேன், விதுரரே. உண்மையில் தங்கள் சொற்களால் என் சித்தம் திரிபடைந்தது. உங்கள் அச்சத்தை நான் பொறுமையென புரிந்துகொண்டேன். இனி பொறுப்பது பிழை. ஜராசந்தரின் தோளணைத்த தொடுகையும் என் உடலில் இன்னும் உள்ளது. குருதியால் அதைக் கழுவாது நிறைவு கொள்ளமாட்டேன்” என்றான்.

விதுரர் அவனுக்குப் பின்னால் ஓடி வந்தபடி “இத்தருணத்தில் ஒரு போர் என்றால்  அஸ்தினபுரி தாங்காது. அஸ்தினபுரி பெரும்போர் என எதையும் இதுவரை கண்டதில்லை” என்றார். கர்ணன் கசப்புடன் நகைத்து “அதனாலேயே ஒரு போர் இன்றியமையாதது. இளமையில் வேல் தூக்கிய வீரர்கள் மீசை பழுத்த பின்னும் உயிரோடிருக்கிறார்கள். காட்டில் முதிய விலங்குகள் கொல்லப்படவேண்டும். இல்லையேல் காடு நோயுறும்” என்றான்.

அவன் படிகளில் ஏற உடன் மூச்சிரைத்தபடி ஏறி “படையெழுச்சிக்கு  காந்தாரர் அவையில் ஒப்புதல் அளிக்கவில்லை. மகதத்தின் பொருட்டு படை எழவேண்டாம் என்று அவர்தான் முன்பு சொன்னார்” என்றார். “ஆம், ஆனால் அஸ்தினபுரியின் அரசரின் ஆணைக்குமுன் தலைவணங்குவதாக அவையில் நேற்றே அறிவித்துவிட்டார்” என்றான் கர்ணன். “கணிகரும் போரை தவிர்க்கும்படி பலமுறை சொன்னார் என்று அறிந்தேன்” என்றார் விதுரர். “அமைச்சரே, தாங்களும் கணிகரும் போரை அறிந்தவர்கள் அல்ல. வாளேந்தத் தெரிந்தவர்கள் போர் குறித்து பேசிக் கொள்கிறோம்” என்றபின் நழுவிய சால்வையை இழுத்து போட்டுக்கொண்டு தலைதூக்கி நீண்டகால்களை எடுத்துவைத்து இடைநாழியில்  கர்ணன் நடந்தான்.

விதுரர் கண்களில் சினத்துடன் “அங்கரே, இன்னமும் இவ்வரசின் மணிமுடி என் தமையனின் தலையில்தான் உள்ளது” என்றார். கர்ணன் நின்று இடையில் கைவைத்து திரும்பிப் பார்த்தான். “தன் மைந்தர் களத்தில் போரிட்டு அழிவதை ஒருபோதும் அவர் ஒப்பமாட்டார்.” கர்ணன் “நான் அவரிடம் பேசுகிறேன். அஸ்தினபுரியின் அரசனுக்கெதிராக அவர் என்ன சொல்கிறாரென்பதை கேட்கிறேன்” என்றான்.  விதுரர் சீறிய முகத்துடன் ஓரடி முன்னால் எடுத்து வைத்து “கேட்பதற்கொன்றுமில்லை. என் தமையன் வாழும்வரை இந்நகரில் என் சொல்லே ஆளும். அஸ்தினபுரியின் படைகள் இந்நகர்விட்டெழாது” என்றபின் விசையுடன் தன் சால்வையை அள்ளித்தோளிலிட்டு திரும்பி படிகளில் இறங்கி நடந்தார்.

[ 3 ]

கர்ணன் துரியோதனனின் அறைக்குள் நுழைந்தபோது அங்கு சகுனியும் கணிகரும் துச்சாதனனும் மட்டுமே இருந்தனர். துரியோதனன் சாளரத்தில் கையூன்றி வெளியே சாலையை நோக்கிக் கொண்டிருந்தான். அங்கிருந்து பார்க்கையில் மேற்குச்சாலை வழியாக  ஏரியில் நீராடி அணிவகுத்து கோட்டை முகப்புக்கு சென்று கொண்டிருந்த களிற்றுநிரையை காணமுடிந்தது. கர்ணன் நுழைந்ததை அவன் அறிந்தது உடலில் தெரிந்தது. துச்சாதனன் தலைவணங்கி அமரும்படி கைகாட்டினான். கர்ணன் சகுனிக்கும் கணிகருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு பீடத்தில் அமர்ந்தான்.

“நாளை அந்தியில் கொற்றவை ஆலயத்தில் பூசனைமுடித்து அரசரும் படையுடன் கிளம்புகிறார்” என்றான் துச்சாதனன். கர்ணன் “படைகள் சென்று சேர நாளாகும். அதற்குள் நமது தூதர்களும் எச்சரிக்கைச் செய்திகளுடன் இந்திரப்பிரஸ்தத்தை அணுகுவார்கள். படைகள் யமுனைக் கரையை அடைந்தபின் அரசர் படகு வழியாகச் சென்று இணைந்து கொள்வதே நன்று” என்றான் சகுனியை நோக்கி. “அவ்வாறுதான் இதுவரை திட்டமிடப்பட்டது.”

துரியோதனன் திரும்பி “நான் அந்தியில் இந்நகர் மாந்தர் வாழ்த்துக்களைப் பெற்று நகர்நீங்கவும்  ஊர்களினூடாக களிறு மேல் அமர்ந்து செல்லவும் விழைகிறேன். நாளை காலை நம் எல்லைக்கு அப்பால் முதல் ஊரை சென்றடையவேண்டும். நான் இழந்த நிலங்கள் வழியாக முடிசூடியமர்ந்து அரசன் என்று கடந்து செல்வேன். குறுகிய காலம் பிறிதொரு அரசின் குடிகளாக இருந்த மக்கள் அறியட்டும் அவர்களை ஆளும் மணிமுடி எவருடையதென்று” என்றான்.

கர்ணன் “ஆனால்…” என்று தொடங்க கணிகர் “அரசர் சொல்வது நன்று. படை எழுந்து செல்லும்போது அரசர் உடன் சென்றால் வீரர்களின் விரைவு கூடும். வெற்றி உறுதி என்ற நம்பிக்கை வெற்றிக்குரிய முதன்மை படைக்கலம். வெற்றிக் கூச்சலுடன் களியாடிச் செல்லும் அஸ்தினபுரியின் படை யாதவ குடிகளை அச்சுறுத்தும். அவர்கள் படையெனத் திரள அஞ்சுவர். ஆனால் நாம் செல்லும் வழியில் யாதவரல்லாதவர் அனைவரும் நம்முடன் இணைந்து கொள்வர். அவர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் யாதவர்கள் அடைந்துள்ள முன் தூக்கத்தைக் குறித்து ஒவ்வாமை கொண்டிருப்பார்கள். நமது படைகள் இந்திரப்பிரஸ்தத்தை அணுகும்போது இருமடங்கு பெருகியிருக்கும்” என்றார்.

சகுனி “ஆம், இன்றிருக்கும் நிலையில் நம் அரசர் தன்முன் வரும் எவர் மேலும் மறுக்கமுடியாத ஆணையை செலுத்தக்கூடியவர். பணிக என்னும் சொல்லுடன் அவர் நகர்களின் மேல் ஊர்ந்து செல்வது நன்றே” என்றார். கர்ணன் “செல்லும் வழியை வரைபடத்தில் ஒருமுறை உறுதிசெய்துகொண்டு இறுதியாக என் முடிவை தெரிவிக்கிறேன்” என்றான். துரியோதனன் “என் முடிவுகள் இறுதியானவை” என்றான். விழிகள் ஒருகணம் திகைத்து பின் இயல்பாக கர்ணன் “ஆம், அரசே” என்று தலைவணங்கினான்.

ஏவலன் வந்து விதுரர் பார்க்கவிழைவதாக சொன்னான். துரியோதனன் உள்ளே வரும்படி கை அசைத்தான். கர்ணன் மெல்லிய பதட்டத்தோடு துரியோதனனிடம் விதுரரை இப்போது பார்க்கவேண்டாம் என்று சொல்ல வாயெடுத்தபின் அது நிகழப்போவதில்லை என உணர்ந்து தனக்குள்ளேயே தலையசைத்தான். கதவு திறந்து உள்ளே வந்த விதுரர் தலைவணங்கி “அஸ்தினபுரியின் அரசருக்கும் மாதுலருக்கும் அங்கருக்கும் வணக்கம். அஸ்தினபுரியின் பேரரசரும் மூதாதை வடிவமென அமர்ந்திருப்பவருமான திருதராஷ்டிர மாமன்னரின் ஆணையுடன் இங்கு வந்துள்ளேன். அஸ்தினபுரியின் படைநகர்வு அனைத்தையும் நிறுத்தி வைக்க அவர் ஆணையிட்டுள்ளார்” என்றார்.

“யார்? யார் அந்த ஆணையிட்டது?” என்றபடி கைகளை விரித்து தரையை அறைந்த  கால்களின் ஓசையெழ துரியோதனன் நெருங்கி வந்தான். விதுரர் நிமிர்ந்த தலையுடன் “உங்கள் தந்தை. அவரது கொடையாக அஸ்தினபுரியின் மணிமுடி தங்கள் தலைமேல் உள்ளது. இது அவரது ஆணை” என்றார்.

துரியோதனன் இடக்கை விரல்களைச் சுருட்டி அடிப்பதுபோல ஆட்டி  உரத்த குரலில் “என் மீது எவரது ஆணையையும் ஏற்கமுடியாது. அஸ்தினபுரியின் படைகள் நாளை எழும். எவர் மறுப்பதென்பதை பார்க்கிறேன். இப்போதே சென்று அவரை சந்திக்கிறேன்” என்றான். “படைகள் இன்றே நிலைதிரும்ப பேரரசர் ஆணையிட்டிருக்கிறார். அவர் இதைப்பற்றி சொல்லாட விழையவில்லை” என்றார் விதுரர்.

கடும்சினத்தால் தோள்கள் திமிற நின்று ஒருகணம் தவித்த துரியோதனன் திரும்பி கணிகரிடம் “சொல்லுங்கள் கணிகரே, நான் இவ்வாணையை மீற முடியுமா?” என்றான். கணிகர் மெல்ல உடலை அசைத்து வலியுடன் முனகி, பிறிதொரு வகையில் கால்களை மடித்து அமர்ந்தபின் “நெறிப்படி தாங்கள் தங்கள் தந்தையை மீறல் இயலாது. இம்மணிமுடி அவருக்கே உரித்தானது. அதை பிறிதொருவருக்கு அளிக்கும் உரிமையும் அவருக்கு இன்று உண்டு” என்றார். “அதைப்பெற நான் என்ன செய்ய வேண்டும்? என் மணிமுடிக்கு அப்பால் ஒரு சொல்லில்லாமல் செய்ய நான் என்ன செய்யவேண்டும்?” என்றான் துரியோதனன்.

“ஷத்ரிய நெறிகளின்படி ஒன்றும் செய்யமுடியாது. லகிமாதேவியின் ஸ்மிருதி மட்டும் பிறிதொரு விதியை சொல்கிறது. ஆனால் அது காட்டுக் களிறுகளுக்குரியது. அதை அசுரர்களும் அரக்கர்களும் மட்டுமே கடைபிடிப்பார்கள் என்கிறது” என்றார் கணிகர். நெஞ்சில் அறைந்து அவரை நோக்கி சென்றபடி “நான் அரக்கன். நான் அசுரன்.  நான் கீழ்மகனாகிய நாகன். நான் ஷத்ரியனோ அரசனோ அல்ல, மதம்கொண்ட காட்டுக்களிறு. சொல்லுங்கள், என்ன வழி?” என்றான் துரியோதனன்.

“அவரை தாங்கள் போருக்கு அழைக்கவேண்டும். ஒற்றைக்கொருவர் தோள்பொருதி களத்தில் கொன்று அவரை நெஞ்சில் மிதித்து நின்று நீங்கள் அரசர் என்று அறிவிக்கவேண்டும். இந்நகரில் பிறிதெவரும் உங்களை வெல்ல இயலாதென்றால் நீங்களே அரசர். பிறிதொருவர் எழுந்து உங்கள் தோள்களுக்கு அறைகூவல் விடும்வரை மணிமுடி உங்களுடையதே” என்றார் கணிகர்.

“ஆம், இப்போதே அதை செய்கிறேன். அதுதான் வழியென்றால் அதற்கும் நான் ஒருக்கமே” என்றபடி துரியோதனன் திரும்பினான். “சொல்லுங்கள் அரசரிடம்! நான் அவருடன் போருக்கெழுகிறேன்.” கர்ணன் “அரசே!” என்று பதறி எழுந்தான். “விலகும்! எவரும் எச்சொல்லும் எனக்களிக்க வேண்டியதில்லை. நாளை இப்படை எழும். இல்லையேல் முதியவரின் காலடியில் நான் இறந்துகிடப்பேன்…” என்றான் துர்யோதனன்.   விதுரர் நடுங்கும் உடலுடன் பின்காலெடுத்து வைத்து சுவர் சேர்ந்து நின்றார். கைகளை மார்பில் கட்டியபடி விழியசையாது சகுனி நோக்கி அமர்ந்திருந்தார்.

கர்ணன் உரக்க “அதை நான் ஒப்பப்போவதில்லை” என்றான். அவனை நோக்கி சீறித்திரும்பி அணுகிய துரியோதனன் “நீர் யார் இங்கு ஒப்புவதற்கு? விலகும்!” என்றான். “நெறிப்படி நான் உங்களை என்னுடன் தோள்கோக்க அறைகூவுவேன். எவருக்கும் அவ்வுரிமை உண்டு.  ஐயமே தேவையில்லை துரியோதனரே, உங்களை களத்தில் அடித்து வீழ்த்த என்னால் இயலும்” என்று கர்ணன் அருகே வந்தான். “களம் எதற்கு? என் கைகளைக் கடந்து இவ்வறைவிட்டு நீங்கள் வெளியே செல்லப்போவதில்லை.”

துரியோதனன் சினத்துடன் முன்னால் பாய்ந்து கர்ணனை ஓங்கி அறைய வெடிப்பொலியுடன் அதைத் தடுத்து அவன் கையைப்பற்றித் திருப்பி வளைத்து கைபின்னிக்கொண்டான் கர்ணன். அவர்கள் இருவரும் உறுமியபடி சுழல  துச்சாதனன் “அங்கரே!” என்று கூவியபடி அவர்கள் இருவருக்கும் நடுவே கைநுழைத்தான். “அங்கரே… நிறுத்துங்கள்… வேண்டாம்” என்றான். கர்ணன் திருணபீடத்தை தளர்த்தி கையை உதற துரியோதனன் கால்கள் தரையில் மிதிபட்டு ஒலிக்க பின்னால் நகர்ந்தான்.

இருவரும் ஓடி நின்ற யானைகள்போல் மூச்சிரைத்தனர். இருவருக்கும் நடுவே நின்ற துச்சாதனன் “வேண்டாம், அங்கரே… மூத்தவரே, வேண்டாம்…” என்றான். சகுனியை நோக்கி “மாதுலரே, என்ன நிகழ்கிறது இங்கே? எனக்கொன்றும் புரியவில்லை” என்றான். சகுனி “மருகனே, இன்று சொல்லாடுவதில் பொருளில்லை. புலரட்டும். நாளை காலை திருதராஷ்டிரப் பேரரசரின் அவைக்கு செல்வோம். என்ன நிகழ்கிறது என்று விளக்கிச் சொல்வோம். அமைச்சரின் சொல்கேட்டு அவர் எடுத்த முடிவென்றால் அதை மாற்ற நம்மால் முடியும்” என்றார்.

“எவர் முன்னிலையிலும் கையேந்தி நிற்க நான் விழையவில்லை. அஸ்தினபுரியின் படைகள் நாளை இங்கிருந்து எழும்” என்றான் துரியோதனன். கர்ணன் “எழும், அவ்வுறுதியை நான் பேரரசரிடமிருந்து பெற்றுத்தருகிறேன்” என்றான். “நாளை அவரிடம் செல்வோம்… பொறுங்கள்” என்று துரியோதனனின் அருகே சென்று அவன் கைகளை பற்றினான். அவன் கைகளை உதறிவிட்டு துரியோதனன் திரும்பிச் சென்று தன் பீடத்தில் அமர்ந்தான். “அவ்வண்ணமெனில் என் ஆணை அது. நாளை பேரரசர் ஏற்றாகவேண்டும்” என்றான்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 44

[ 17 ]

ஜராசந்தனும் பீமனும் காற்றில் சறுக்கி நழுவியிறங்குபவர்கள் போல மிகமெல்ல மற்களத்திற்குள் புகுந்து கால்களை நிலைமண்டியில் ஊன்றி கைகளை கடகபாகமாக விரித்து ஒருவர் உடல்மேல் ஒருவர் விழி ஊன்றியிருக்க அசையாமல் நின்றனர்.

புழுதியில் அடிமரம்போல் ஊன்றியிருந்தன நரம்போடிய கால்கள். இரையை முறுகப்பற்றி இறுக்கிக் கொண்டிருக்கும் மலைப்பாம்பு போலிருந்தன தசைகள். களிற்றேறின் முற்றிய திமில் என தோள்கள் சிலிர்த்தசைந்தன. காற்றில் இரைநோக்கும் நாகமுகங்கள் போல கைகள் மெல்ல துழாவின. தொடைகளில் இழுபட்ட வில்நாண். இடையில் இழுத்து இறுக்கப்பட்ட முரசுப்பட்டைகள். விரிந்த மார்பின் பாறைமேல் பற்றி கிளைவிரித்த மாணைக்கொடிகள். சின்னஞ்சிறிய விழிகள். குவிந்த உதடுகள். கருப்பசுவின் வயிற்றின் அசைவென தாடை.

அங்கிருந்தவர்கள் இருவரையும் தனித்தனியான மானுடராக பார்க்கவில்லை. உறுப்புகள்தோறும் தாவிய விழிகள் தசையென, நரம்பென, எலும்பென, கையென, காலென, மார்பென, தோளென அறியாத்தெய்வங்கள் உருக்கொண்டு வந்து திரண்டு எதிர்நிற்பதாகவே உணர்ந்தனர்.

மெல்ல பீமன் வலக்காலை எடுத்துவைத்து அசைய அதே அசைவை ஜராசந்தன் இடக்கால் இயற்றியது. ஆடிப்பாவைகள் என ஒருவரை ஒருவர் நோக்கியபடி அவர்கள் ஒற்றைச்சுழியின் விளிம்புவட்டத்திலென களத்தின் மையத்தை சுற்றிவந்தனர். கணங்கள் எடைகொண்டு எடைகொண்டு அசைவிழந்தன. பார்த்து நின்ற ஒவ்வொருவரின் நரம்புகளும் இறுகி உச்சம்கொண்டு உடையத் துடித்தன.

அக்கணம் பீமன் களிறெனப் பிளிறியபடி பாய்ந்து வலக்கையால் ஜராசந்தனை அறைந்தான். ஜராசந்தன் கை அவ்வறையைத் தடுத்த ஒலியின் அறைதலை அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்கள் மேல் என உணர்ந்தனர். இரு உடல்களும் தழுவிக்கொண்டன. கைகள் கைகளை கால்கள் கால்களை மார்பு மார்பை. பாகுபாசமெனும் கைசூழ்கையின் முழுநிலை. விசைநிகரின் உச்சிப்புள்ளியில் இருவரும் அங்கு உருவான சுழியொன்றின் மையத்தில் மெல்ல சுற்றிவந்தனர்.

கணம் கணம் கணம். காமிகர் நோக்க முடியாதவராக விழிகளை விலக்கிக்கொண்டார். இத்தனை விரைவானதா இப்புடவிக்காலம்? அங்கு நின்றிருக்கும் அசைவிலா காலத்தில் இது சென்று விழுந்து மறைகிறதா? ‘ஆ’ என்னும் பேரொலி கேட்டு காமிகர் விழிதிடுக்கிட்டார். ஜராசந்தன் பீமனைத் தூக்கி வீசிவிட்டு கைகளை விரித்து நின்றான்.

பீமன் புழுதியில் விழுந்து உருண்டு எழுந்து தன் தொடைகளையும் தோள்களையும் ஓசையெழத் தட்டிக்கொண்டு உறுமலுடன் பாய்ந்து மீண்டும் ஜராசந்தனை நோக்கி வந்தான். ஜராசந்தனின் வலக்கையின் அறை அவன் தலைமேல் வெடித்தது. நிலைதடுமாறி விழப்போய் காலை ஊன்றி நிலைகொண்டு பின்னால் சென்றான். தலையை உலுக்கியபடி விடுபட்டு கால்களை ஊன்றிக்கொண்டு நின்றான். எதிரியின் ஆற்றலை உணர்ந்தவனாக அவன் மெல்ல உடல் பின்னடைந்து சித்தம் நிலைகொள்வதை கண்டார்.

சிட்டுக்குருவிச் சிறகுபோல விரல்களை அசைத்தபடி மீன்சிறகுகள் போல கைகளை வீசியபடி பீமன் ஜராசந்தனின் விழிகளை தன் மேல் கவர்ந்து நிறுத்தி அவனை எடைபோட்டான். கழுகின் இறகென கைகளை வீசினான். கலைமானின் கொம்புகள்போல் திருப்பினான். யானைத்துதிக்கைபோல தூக்கித் துழாவியமைந்தான்.

சித்ரஹஸ்தங்கள் எதிரியின் கைகளுக்கும் விழிகளுக்குமான ஒத்திசைவையும் உடலின் நிகர்நிலையையும் மதிப்பிடுவதற்கானவை என்று அறிந்திருந்த சூழிருந்தோர் அந்நோக்கில் ஜராசந்தனை பார்த்தனர். அவன் இடமும் வலமும் இரு வேறு மானுடர் என்பதை கதைகளினூடாக அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் எவ்வேறுபாட்டையும் அவர்கள் காணவில்லை. அதேநேரம் ஏதோ வேறுபாடொன்றைக் கண்டதாக உள்ளாழம் உணர்ந்தும் கொண்டது.

நினைத்திருக்காத கணத்தில் இருமல்லர்களும் மீண்டும் தோள் பின்னி கைதூக்கிப் பிணைத்து ஒற்றைக்கூம்பென ஆனார்கள். கால்களை மண்ணிலூன்றி மாறிமாறி உந்தி வீழ்த்தமுயன்றபடி களத்தை சுற்றிவந்தனர். பூர்ணகும்பமெனும் ஆடல் மற்போரை நிகழ்த்தும் அடிக்கூறுகளில் ஒன்றான கெண்டைக்கால் தசைகளையும் தொடைத்தசைகளையும் அளவிடுவது. இருவரும் முற்றிலும் நிகர்நிலையில் நின்று சுற்றி உச்சம்கொண்ட கணத்தில் பீமனை ஜராசந்தன் தூக்கி தலைக்குமேல் உருட்டி முதுகு பட நிலத்திலறைந்தான்.

ஓங்கி மிதித்த அவன் காலில் இருந்து புரண்டு தப்பி கையூன்றி எழுந்து வெட்டுக்கிளி என தாவி அப்பால் விலகி நின்று பீமன் மூச்சிளைத்தான். பிருஷ்டபங்கம் அடைந்த மல்லன் பாதி தோற்றுவிட்டவன் என்பதனால் மகதத்தின் வீரர்கள் கைதூக்கி கூச்சலிட்டனர். சிலர் வேல்களைத் தூக்கி வீசிப்பிடித்தனர். ஆனால் சூழிருந்த மக்கள் குரலெழுப்பவில்லை. அவர்கள் பீமனில் விழிநட்டு வியர்த்து துளித்த புருவங்களை வழித்தபடி ஒளிக்கு கண்சுருக்கி நின்றனர்.

அர்ஜுனன் நிலையழிவதை காமிகர் கண்டார். அவன் முகம்திருப்பாமல் கிருஷ்ணனை நோக்க அவர் இயல்பாக மார்பில் கைகளைக் கட்டியபடி இசைகேட்டு அமர்ந்திருக்கும் முகத்துடன் அமர்ந்திருந்தார். பீமன் மிகுந்த எச்சரிக்கை கொண்டுவிட்டான் என்று தெரிந்தது. ஜராசந்தன் புன்னகையுடன் கைகளை நண்டுபோல அசைத்தபடி சுற்றிவந்தான். பீமன் அவனிடமிருந்து விழிகளை விலக்காமல் அகன்றே சுற்றினான்.

மீண்டும் இருவரும் கைகளை கோத்துக்கொண்டனர். கைகள் முற்றிலும் பின்னி இறுகி புல்முடைந்த கயிறுபோல ஆயின. “திருணபீடம்… நிகர்வல்லமை அற்றவர்களின் கைகளை உடைக்கும்” என்றார் அருகே நின்ற சக்ரஹஸ்தர். காமிகர் திரும்பி நோக்கிவிட்டு பெருமூச்சுடன் அவர்கள் சுற்றிவருவதை நோக்கினார். சட்டென்று பீமன் முழுவிரைவுடன் ஜராசந்தனை உந்தி பின்னுக்குத்தள்ளி மலர்ந்துவிழச்செய்தான். ஜராசந்தன் மேல் பின்னிய கைகளுடன் அவனும் விழுந்தான்.

இருவரும் கால்கள் புழுதியளைய உருண்டு சுடுமண்சிற்பங்கள் போலாயினர். பிணைநாகங்கள் என நெளிந்து புரண்டு ஒருவர் உடலை ஒருவர் முற்றிலும் கவ்வி அசைவிழந்தனர். கூட்டம் காத்திருந்தது. அவர்களிடம் அசைவே எழவில்லை. காமிகர் ஒவ்வொரு நெஞ்சத்துடிப்பையும் தனித்தனியாக கேட்டபடி காத்திருந்தார். உடலெங்கும் ஓடிய குருதிக்குழாய்த் துடிப்புகளை வெவ்வேறென கேட்டார். தொண்டையிலிருந்து பரவி உடலை எரித்தது விடாய்.

“பூர்ணமூர்ச்சை…” என்றார் சக்ரஹஸ்தர். “பல மல்லர்கள் மூச்சிழந்திருக்கிறார்கள். ஒருமுறை இருவரும் சேர்ந்து மூச்சிழந்ததும் உண்டு. இருவர் உடலையும் பிரிக்கவே முடியவில்லை. சேர்ந்தே சிதையேறினர்.” காமிகர் அங்கிருந்து அகன்றுசெல்ல விரும்பினார். தன்னைத்தவிர அங்கே நோக்கி நின்றிருந்த அனைவரும் அப்போரில் தாங்களும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. நடுவர்கள் இருபக்கமிருந்தும் ஓடிச்சென்று ஜராசந்தனையும் பீமனையும் பிரித்து விலக்கினர். இருவரும் மூச்சிரைக்க கைகளும் கால்களும் தளர்ந்து அவர்களின் கைகளில் இழுபட்டபடி விலகினர்.

இருவரையும் பீடங்களில் அமரச்செய்து ஈச்சமரச்சாறைக் காய்ச்சிய இன்னீர் அளித்தனர். வாய் நிறைந்து உடல்வழிய குடித்து குடம்நிறையும் ஒலியுடன் மூச்சு சீறி கலத்தை அப்பால் இட்டான் பீமன். அர்ஜுனன் அவன் உடல்வியர்வையை மரவுரியால் ஒற்றினான். மகதத்தின் இரு ஏவலர்கள் பீமனின் தோள்களையும் கைகளையும் முயல்தோலின் மென்மயிரால் நீவி இழுத்து தசைகளை சீரமைத்தனர். அவன் மார்பிலும் தோளிலும் தொடையிலும் அடிபட்டுக் கன்றிய தசைகள் சிவந்தும் நீலம்கொண்டும் தடித்தும் இருந்தன. அர்ஜுனன் இளைய யாதவரை நோக்க அவர் புன்னகை செய்தார்.

கூட்டம் தங்கள் இடத்தையும் இருப்பையும் உணர்ந்து தளர்ந்து முழங்கத் தொடங்கியது. நீர்க்குடங்கள் தலைப்பரப்புக்கு மேல் மிதந்து தளும்பி அலைந்தன. “நீர்! இங்கே!” என்னும் கூச்சல்கள். வெயில் நன்றாக ஏறி மண்ணில்பரவ ஈரநிலம் சூடான அப்பமென ஆவியுமிழத் தொடங்கியது. புல் வேகும் மணம் எழுந்தது. பாசிபடிந்த கோட்டைச்சுவர்களில் இருந்து தேமல் விழுந்த உடலின் வாடை வந்தது. நெடுநாள் வெயிலறியாது நின்றிருந்த புரவிகள் அவ்வெக்கையால் நுரைச்சல்லடை தொங்கும் வாயுடன் தலைதாழ்த்தி மூச்செறிந்தன.

மீண்டும் முரசுகள் ஒலித்தன. கொம்புகள் பிளிறியபோது அனைவரும் எழுந்து ஒருவர் தோளை ஒருவர் பற்றிக்கொண்டு புத்தார்வத்துடன் நோக்கத் தொடங்கினர். இம்முறை பீமன் பாய்ந்து முழுவிரைவில் ஜராசந்தனை குத்தினான். முதலில் தாக்கத்தொடங்கியது முஷ்டிகத்தில் முன்னிலையை அவனுக்களித்தது. விழிகளை ஏமாற்றி கைகளைச் சுழற்றி ஜராசந்தனின் விலாவிலும் காதிலும் தாடையிலும் அடிவயிற்றிலும் அடித்தான். அடிதாளாது பின்னால் நகர்ந்த ஜராசந்தன் குருதிக்கோழையுடன் இரு பற்களை துப்பினான். பீமன் புன்னகையுடன் முழங்கையால் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டான்.

மீண்டும் இருவரும் மோதிக்கொண்டபோது பீமன் ஜராசந்தனை இடக்காலைத் தூக்கி உதைக்க அதை தன் வலத்தொடையால் அவன் தடுத்தான். இருவரின் குதிரைகள் போரிடுவது போல கால்கள் மாறிமாறி உதைத்தன. முழங்காலால் ஜராசந்தனின் வயிற்றை உதைத்த பீமனைத் தடுத்து எம்பி தன் குதிகாலால் அவன் அடிவயிற்றை உதைத்தான். இரண்டாக மடிந்து முன்னால் விழுந்த பீமன் வயிற்றை அழுத்தியபடி புழுதியில் புரண்டான். ஜராசந்தன் அவனை மேலுமொருமுறை ஓங்கி அடிவயிற்றில் மிதிக்க அக்காலைப்பற்றிச் சுழற்றி அவனை மண்ணில் வீழ்த்தி அவன் கைகளை பற்றிக்கொண்டான் பீமன். ஜராசந்தன் திமிற பீமன் அவனைப் பற்றியபடி மண்ணில் எடையுடன் இழுபட்டான்.

நடுவர்கள் வந்து ஜராசந்தனை இழுத்து விலக்கினர். பீமன் தரையில் மயங்கிக்கிடந்தான். அர்ஜுனன் எழுந்துவந்து பீமனின் தலையை அசைத்தான். இரு ஏவலர் பீமனைத் தூக்கி இழுத்துக்கொண்டு சென்று பீடத்தில் அமர்த்தி முகத்தில் நீரள்ளி அறைந்தனர். அவன் விழித்துக்கொண்டு தலையை உதறினான். அருகே அமர்ந்திருந்த இளைய யாதவர் “ஈரலில் அடிபட்டு வரும் மயக்கம். அதை பூர்ணயோகம் என்கின்றனர்” என்றார். “அது ஒரு சிறிய துயில். அதன் கனவுகள் மிக உதவியானவை…”

பீமன் “நான் கனவுகாணவில்லை” என்றான். “என்ன கண்டீர்கள், இளைய பாண்டவரே?” என்றார் இளைய யாதவர். “நான் என்னுடன் இருவர் போரிடுவதை கண்டேன்” என்றான் பீமன். “ஆனால் அது கனவல்ல… நான் என் விழிகளால் கண்டேன். அவர்களில் ஒருவன் போரிடுகையில் இன்னொருவன் என்னை கூர்ந்துநோக்கி பயின்றான். ஒருவன் சினந்து அடிக்கையில் இன்னொருவன் புன்னகைசெய்தான்.” இளைய யாதவர் “ஆம், நான் கேட்டது அதையே” என்றார். “அவர்கள் எப்படி ஒன்றாக இருந்தனர்?”

“அவர்கள் கைகோத்து தோள்தழுவியிருந்தனர்” என்றான் பீமன். “அந்த இணைவிடமே அவர்களின் வழுமுனை. அங்கே அடியுங்கள்.”  பீமன் “ஆனால்…” என்றான். “அதை இங்கிருக்கையில் காணமுடியாது. அவன் முன் மல்லாடுகையில் காண்பீர்கள். பாண்டவரே, போரில் அச்சம் நன்று. அது சிறந்த வழிகாட்டியும் துணையுமாகும்” என்றார். பீமன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். மீண்டும் நீர் வாங்கி குடித்தான்.

“அவனிடமிருக்கும் நிலையழியாமை அச்சுறுத்துகிறது, யாதவரே” என்றான் அர்ஜுனன். “ஆம், அவன் முற்றிலும் நிகர்நிலை கொண்டிருக்கிறான்” என்றார் இளைய யாதவர். “ஆனால் அது அவன் பயின்று அடைந்தது. பயின்றவை அனைத்தும் விலகிச்செல்லும் தருணங்களுண்டு மானுடர்களுக்கு.” பீமனை நோக்கித் திரும்பி “சினமும் காமமும் அச்சமும் கொள்கையில் மானுடர் விலங்குகளாகிறார்கள்” என்றார். பீமனின் விழிகள் அவர் விழிகளை ஒருகணம் தொட்டுமீண்டன.

மீண்டும் இருவரும் எதிரெதிர் நின்றபோது கூடிநின்றவர்கள் மெல்லிய சலிப்பு கொண்டிருந்தனர். பலர் அவர்களை நோக்கியபடி தங்களுக்குள் மெல்லியகுரலில் பேசிக்கொண்டிருக்க படைவீரர்கள் ஈட்டிகளை ஊன்றி அதன் மேல் உடல் எடையை சேர்த்து கால் தளர்த்தி நின்றனர். சக்ரஹஸ்தர் “இருவரும் நிகர்நிலை கொண்டவர்கள். எளிதில் களைப்பும் அடையாதவர்கள். இப்போர் இன்று முழுக்க நீளுமென நினைக்கிறேன்” என்றார்.

காமிகர் மேலே எழுந்து முகில்விலகிய வெளியில் முழுமையாக நின்றிருந்த சூரியனை நோக்கியபின் மேலாடையால் வியர்வையை துடைத்தார். பலர் தங்கள் மேலாடையை தலைக்குமேல் குடைபோல விரித்துப் பிடித்திருந்தனர். கூட்டத்திற்குள்ளேயே பலர் குந்தி அமர்ந்துவிட்டிருந்தனர். சிலர் மேலும் நீர் கோரி கைகளை வீசினர். நீர்க்குடங்கள் கைகளுக்கு மேல் அலையமைந்து எழுந்து கடந்துசென்றன. பொறுமையிழந்த புரவி ஒன்று எள்ளல் நகைப்பு போல கனைத்தது.

பீமனும் ஜராசந்தனும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி சுற்றிவந்தனர். பாய்ந்து கைகளால் அறைந்து பின்னிக்கொண்டனர். துதிக்கை பின்னிய வேழங்கள் மத்தகங்களால் உந்திக்கொண்டன. பின்பு உருவி விலகி வரையாடுகள் என மண்டை தெறிக்க முட்டினர். கழுத்தால் அறைந்துகொள்ளும் புரவிகள். உதைத்து சுழலும் கழுதைகள். தலைகளில் கைகளைச் சுருட்டி அறையும் குரங்குகள். முகத்தால் முட்டி உந்திச்சென்றன பன்றிகள். கைநகங்களால் கிழித்தன கரடிகள்.

அங்கிருந்த இரு மானுடரும் அகன்றனர். உறுமல்கள். முழக்கங்கள். பிளிறல்கள். செருமல்கள். அறைதல்கள். எங்கு எவர் என்ன செய்கிறார்கள் என்றறியாமல் கைகளும் கால்களுமான ஒற்றைத்தசையிருப்பு அங்கு நின்று தன்னுள் தான் ததும்பியது. போரின் நெறிகளனைத்தும் சிதறின. இருமுறை நடுவர்கள் அவர்களை நெருங்கி விலக்க முயல பீமன் ஒரு நடுவரை காலால் உதைத்து தெறிக்கச்செய்தான். மீண்டும் அணுகிய இன்னொரு நடுவரை ஜராசந்தன் ஓங்கி அறைந்து வீழ்த்தி அவர் மேல் மிதித்து பிளிறியபடி பாய்ந்தான்.

பீமன் ஜராசந்தனின் தலைமயிரைப்பற்றிச் சுழற்றி இழுக்க அவன் இடையை ஓங்கி அறைந்தான் ஜராசந்தன். வலியலறலுடன் பீமன் சுருள அவனை அள்ளி தோளிலேற்றி காவடியென சுழற்றினான் ஜராசந்தன். அவனை நிலத்தில் அறையும்பொருட்டு அவன் தூக்கிச்சுழற்ற தன்னைச்சூழ்ந்து பறந்து ஒற்றை வரம்பென உருகி இணைந்து ஓடிய உடல்களாலான வண்ணத்தீற்றலில் பீமன் இளைய யாதவரின் முகத்தைக் கண்டான். அவ்விரைவிலும் அவர் விழிகளை சந்தித்துச் சென்றான். மீண்டும் வருகையில் அவர் தன் கையிலிருந்த தர்ப்பையை இரண்டாகக் கிழிப்பதை கண்டான்.

தன்னை தலைக்குமேல் தூக்கி வெறியுடன் ஆர்ப்பரித்தபடி சுற்றி நிலத்திலறையப்போன ஜராசந்தனின் புறங்கழுத்தில் ஓங்கி அறைந்தான் பீமன். அனல்பட்டது போல துடித்து கால்தடுமாறி ஜராசந்தன் பேரோசையுடன் விழுந்தான். அவன் மேல் விழுந்த பீமன் அவனைப்புரட்டி மீண்டும் அதே இடத்தில் ஓங்கி அறைந்தான். அங்கிருந்த பல்லாயிரம்பேரும் அவ்வோசையை தங்கள் மேல் விழுந்ததெனக் கேட்டு பல்கூசி கண்ணீரம் கொண்டனர்.

ஜராசந்தனின் கைகளும் கால்களும் இருவேறு திசைகளில் ஒன்றுடனொன்று இசைவிலாது துடித்துத் தவித்தன. அவன் விழிகளும் இருதிசைகள் நோக்கி உருண்டன. வெட்டுண்ட பலிவிலங்கின் உடல்போல பூழியில் கிடந்து அவன் இழுபட்டு விதிர்த்து வலிப்புகொண்டான்.

பீமன் தள்ளாடியபடி எழுந்தான். கண்களில் ஒளிதிரண்டு நோக்குமறைய காதுகளில் முழக்கம் எழ அவன் நிலையழிந்து பின்னடி எடுத்து வைத்து சரிந்து பூழியில் பின்எடை அறைபட விழுந்தான். கூட்டம் “ஹோ” என ஓசையிட்டது. கையை பூழியில் ஊன்றி உந்தி எழுந்து மீண்டும் விழுந்தான். பின் இருகைகளையும் ஊன்றி எழுந்து கால்களை விரித்து கை நீட்டி நின்றான்.

சிதறியலைந்த தன் கைகால்களை திரட்டியபடி ஜராசந்தன் எழுவதை காமிகர் கண்டார். அவன் பூழியில்கிடந்து தவித்தபோது முகம்நோக்க அறியாத கைக்குழந்தைபோல் தோன்றியதை நினைவுகூர்ந்தார். குழந்தைகள் அனைத்துமே வலமும் இடமும் இசையாத ஊன்திரள்களாகத்தான் பிறக்கின்றன என்று எண்ணினார். அவை நான் என உணர்ந்து அகமென்று ஆகி திரட்டிக்கொண்ட ஒன்றால் தொடுக்கப்பட்டவை கைகளும் கால்களும் விழிகளும் செவிகளும்.

ஜராசந்தன் திரண்டு எழுந்து பெருஞ்சினத்துடன் அலறிப்பாய்ந்து பீமனை ஓங்கி அறைந்தான். அவன் தோற்கத்தொடங்கிவிட்டான் என்பதை காமிகர் கண்டார். அவன் இடத்தோள் துடித்து மேலெழ வலப்பக்கம் வலுவிழந்து இடப்பக்கத்தால் இழுத்துச்செல்லப்பட்டது. பீமன் அவன் அறையை விலக்கி உடல் சுழற்றிப்பாய்ந்தான். அவன் அறைந்ததை தன் இடக்கையால் பற்றிய ஜராசந்தன் அவனைத் தூக்கி வீசினான். பீமன் விழுந்து புரள்வதற்குள் ஜராசந்தன் அவன் உடல்மேல் பாய்ந்தான். ஆனால் உடல்நிகர் அழிந்தமையால் இலக்குவிலக பீமனருகே மண்ணில் விழுந்தான். பூழிபறக்க புரண்டவன் மேல் ஏறி அவனை ஓங்கி அறைந்தான் பீமன். ஜராசந்தன் வலியுடன் அமறினான். அவன் தலைமயிரைப்பற்றி பிடரியில் மீண்டும் ஓங்கி அறைந்தான்.

இடக்கையை மண்ணிலறைந்து உடலை உந்திப்புரண்டு அப்பால் சென்று விழுந்த ஜராசந்தன் மீண்டும் கைகால்களின் இசைவழிந்து நெளிந்து துடித்தான். பீமன் கைகளை விரித்து இறந்தவன்போல பூழியில் கிடந்தான். நடுவர்கள் இருவரையும் நோக்கியபடி செயலற்று நின்றனர். ஜராசந்தனின் உறுமல் கழுத்தறுபட்ட புரவியின் எஞ்சும் மூச்சிலிருந்து எழும் பாழ்கனைப்பு போன்றிருந்தது. பீமன் அவ்வொலி கேட்டு உடலதிர்வதை காணமுடிந்தது. அவன் கால்களை மடித்து உடலைப்புரட்டி எழுந்து அமர்ந்தான். இளைய யாதவர் கைகளால் ‘கொல்… கொல் அவனை!’ என்று செய்கை காட்டி ஊக்கினார். அதை புரிந்துகொள்ளாதவன் போல பீமன் நோக்கி அமர்ந்திருந்தான்.

ஜராசந்தன் தலையறுபட்ட விலங்கின் அசைவுகளுடன் இடக்கையை ஊன்றி இழுத்து இழுத்து களத்தின் எல்லைநோக்கி சென்றான். இடக்கையால் செயலற்றிருந்த வலக்கையைத் தூக்கி அதன் எடைதாளாமல் விட்டான். இடக்காலை ஊன்றி எழுந்து இடக்கையை முழங்காலில் தாங்கி நின்றான். ‘அடி அவனை’ என்று இளைய யாதவர் கையசைத்தார். அதற்குள் ஜராசந்தன் முழுவிரைவுடன் பாய்ந்து பீமன் மேல் முட்டி அவனை களத்திற்கு அப்பால் தெறிக்கச்செய்தான். அவன் சினம்கொண்ட களிறென ஓசையிட்டு காலால் மண்ணை உந்தி புழுதிகிளப்பி மீண்டும் பாய்வதற்குள் பகடைக்காய் என பீமன் உருண்டு அப்பால் நகர்ந்து கையூன்றி எழுந்தான். விலா எலும்பு உடைந்து இடப்பக்கம் தளர நிற்கமுடியாமல் உடல்குழைந்தான். அவன் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் குருதி வழிந்து மூச்சில் தெறித்தது. புறங்கையால் அவன் மூக்கைத் துடைத்தபோது விரல்களில் பரவி அவன் கையை உதறியபோது புழுதியில் உதிர்ந்தது.

ஒற்றைக்கையுடன் பாய்ந்து பீமனை நோக்கிச்சென்ற ஜராசந்தன் அவ்விரைவிலேயே வலக்காலின் இசைவை அடைந்தான்.  வலக்கையும் செயல்கொண்டு எழ பீமனை அணுகி அவனை அறைந்தான். பீமன் அவ்வடிகளை தோளில் ஏற்றபடி திரும்பி உடல்காட்டி பின்னகர்ந்தான். பீமனை ஓங்கி அறைந்து அவ்விசையாலேயே தூக்கி தரையிலடித்து அவன் நெஞ்சை மிதித்தான் ஜராசந்தன்.

பீமன் அக்காலை பிடித்துக்கொள்ள அவன் மேல் அழுந்திய காலின் எடையால் நெஞ்செலும்புகள் தெறித்தன. மூச்சில் சிதறிய குருதி ஜராசந்தனின் கால்களில் பட்டு வழிந்தது. ஜராசந்தன் வெறிகொண்டு அலறினான். தெய்வமெழுந்த அரக்கர்குலத்துப் பூசகன் போல கழுத்து நரம்புகள் புடைக்க உடல் அதிர கூச்சலிட்டான். பீமன் அக்காலைப் பற்றிபயடி தன் இறுதியாற்றலைத் திரட்டிச் சுழற்ற ஜராசந்தன் கீழே விழுந்தான். பாய்ந்து அவன் மேலேறி அவன் பிடரியில் மீண்டும் ஓங்கி அறைந்தான் பீமன்.

கைகளும் கால்களும் இசைவழிந்து புழுதியில் திளைத்த ஜராசந்தனை நோக்கியபடி பூழியில் கையூன்றி கால்கள் தளர்ந்து நீண்டு கிடக்க தலை நடுநடுங்க வியர்வை உதிர பீமன் அமர்ந்திருந்தான். தன் தொடையில் இளைய யாதவர் ஓங்கியறைந்துகொண்ட ஒலி கேட்டு அவன் விழிதிருப்ப அவர் தர்ப்பையைக் கிழித்து இருபகுதிகளையும் திசை மாற்றியதை கண்டான். அதை அக்கணமே உணர்ந்த காமிகர் அச்சத்துடன் சக்ரஹஸ்தரை நோக்கினார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை என்று கண்டார். எவரும் அதை கண்தொட்டிருக்கவில்லை.

அர்ஜுனன் “வேண்டாம், மூத்தவரே” என கை நீட்டியபடி எழ இளைய யாதவர் அவன் தோளைப்பற்றி அழுத்தினார். பீமன் திரும்பி அர்ஜுனனை நோக்கினான். அவன் தாடை இறுகியது. உறுமலுடன் பாய்ந்து சென்று கீழே விழுந்துகிடந்த ஜராசந்தன் மேல் விழுந்து அவன் இடக்கையைப்பற்றி முறுக்கி வளைத்து காலால் ஓங்கி உதைத்து முறித்தான். “கூடாது! நெறியில்லை இதற்கு!” என்று கூவியபடி ஓடிவந்த நடுவரை இடக்கையால் அறைந்து தன் காலடியில் வீழ்த்தினான். பின்பு வலக்கையைப் பிடித்து முறுக்கி எலும்பு உடையும் ஒலி நீருக்குள் பாறைபிளப்பதுபோல் எழ முறித்தான்.

அவன் ஜராசந்தனின் கால்களை பற்றித் தூக்கி பாதத்தைப் பிடித்து சுழற்றி இடுப்புப்பொருத்தில் உதைத்து மறுபக்கமாகத் திருப்பி உடைப்பதை கூட்டம் அதிர்வுகளுடன் நோக்கி நின்றது. அவ்வுடலைத் தூக்கி தலைக்குமேல் சுழற்றி நிலத்தில் அறைந்தான். கைகால்கள் தனித்தனியாக போழ்ந்திடப்பட்டதுபோல ஜராசந்தனின் உடல் துள்ளிக்கொண்டிருந்தது.

எழுந்து சற்றே தலைகுனிந்து அதை நோக்கியபடி பீமன் நின்றான். கால்தளர்ந்து அவ்வுடல் மேலேயே விழப்போகிறவன் போல ஆடினான். ஜராசந்தனின் வலப்பக்கம் முற்றடங்க இடப்பகுதி மட்டும் மெல்லிய துடிப்புடன் இருந்தது.

காமிகர் ஓடிச்சென்று கால்மடித்து குனிந்து அமர்ந்து “அரசே” என்றார். ஜராசந்தனின் முகம் அவர் அதுவரை கண்டிராத பேரழகுடன் இருந்தது. விழிகளில் ஒளியுடன் புன்னகைத்து இதழ்களை அசைத்து ஏதோ சொன்னான். காமிகர் “அரசே! அரசே!” என கண்ணீருடன் கூவி அவன் உடலை உலுக்கி அசைத்தார்.

நிலமதிர அணுகி அவர் தோளை கையால் உந்தி அப்பால் விலக்கிய பீமன் ஜராசந்தனின் நெஞ்சுக்குழியில் ஓங்கி மிதித்தான். நீருக்குள் பாறைமேல் பாறை விழுவதுபோல் அவன் உள்ளுடையும் ஓசை கேட்டது. கொப்புளங்களாக குருதி வெடித்து மூக்கிலும் வாயிலுமாக பீரிட்டுத் தெறித்தது. உடன் எழுந்து சிதறியது “அன்னையே!” என்னும் சொல்.

காமிகர் “அரசே! அரசே!” என்று வீரிட்டபடி தன் தலையை கைகளால் அறைந்துகொண்டு அலறி மயங்கிச் சரிந்தார். பீமன் குனிந்து ஜராசந்தனின் உடலைத் தூக்கி தலைக்குமேல் எழுப்பி நாற்புறமும் சுற்றிக்காட்டினான். ஜராசந்தனின் கால்விரல்கள் அப்போதும் எஞ்சிய உயிருடன் நாகவால் என நெளிந்துகொண்டிருந்தன. விரல்கள் ஏதோ செய்கையால் சொல்லின. சடலத்தைத் தூக்கி பூழிமேல் அறைந்து வீழ்த்தியபின் பீமன் எவரையும் நோக்காமல் திரும்பி களம்விட்டு விலகிச்சென்றான்.

பூர்வகௌசிக குலத்து அந்தணர்கள் தங்கள் கைகளைத் தூக்கி பீமனை வாழ்த்தி வேதமொழி எழுப்பினர். அவர்களில் இளையோர் சிலர் உவகையுடன் “அழியாச் சொல் ஆக்காச் சொல் ஆழத்துச் சொல் என்றும் வாழ்க!” என்று கூவினர். மகதமக்கள் காற்றில்லாத காட்டின் மரங்களென இமைகளும் அசையாமல் சூழ்ந்து நின்றிருந்தனர். ஜராசந்தனின் மைந்தர் மூவரும் உடலிலோ விழியிலோ எவ்வசைவும் காட்டாமல் நின்றிருக்க நாகர்படைத்தலைவர்கள் தங்கள் வாள்களை உருவியபடி அவர்களருகே சென்றனர். சோமன் இதழசையாது சொல்லிய ஒற்றைச்சொல்லால் கட்டுண்டு தோள்பதைக்க நின்றனர்.

கூட்டத்தை திரும்பி நோக்கியபடி எழுந்த இளைய யாதவர் “செல்வோம், பார்த்தா. நம் பணி முடிந்தது” என்றார். அர்ஜுனன் கண்ணீருடன் உதட்டை அழுத்தியபடி அமர்ந்திருந்தான். அவன் தோளைத்தொட்டு “வருக!” என்றார் இளைய யாதவர். “எந்த வீரனின் இறப்பும் துயருக்குரியதே. ஆனால் இருப்போர் இறப்போர் எவர் பொருட்டும் துயருறாதவனே வீரன் எனப்படுகிறான். மெய்மை வீரர்களுக்கு மட்டுமே கைப்படுவது.”

அர்ஜுனன் எழுந்து இளைய யாதவரிடம் ஒரு சொல்லும் சொல்லாமல் நடந்து தேரை நோக்கி சென்றான். கூடிநின்ற மகதமக்களை இளைய யாதவர் நோக்கினார். அவர்கள் அங்கிலாதவர் போலிருந்தனர். சோமனும் இளையோரும் வந்து ஜராசந்தனை அணுகி குனிந்து அவனை தூக்கியபோது அவர்களும் காற்றுபட்ட காட்டின் மழைத்துளிகள் போல கலைந்து உதிர்ந்து பேரொலி எழுப்பியபடி பெருகியோடி ஜராசந்தனை சூழ்ந்துகொண்டனர்.

வானில் ஒளியுடன் நின்றிருந்த முகில்மலை மெல்ல அணையத்தொடங்கியது. விழியிருண்டதுபோல எங்கும் இருள் பரவியது. கோட்டைச்சுவர்கள் கருமைகொண்டு குளிர்ந்தன. இலைகள் பளபளத்து காற்றிலாடின. வண்ணங்கள் ஆழ்ந்தன. மென்காற்று காதுமடல்களை குளிரச்செய்தது. பிடரி சிலிர்த்தது.

மக்கள் ஜராசந்தனைச் சூழ்ந்து செறிந்து அடர்ந்தனர். ஒருவரோடொருவர் முட்டி மோதி எம்பித்தாவினர். எவரோ எங்கோ விம்மியழத்தொடங்க சற்றுநேரத்தில் அப்பெருங்கூட்டமே கதறி அழுதது. “எந்தையே, மகதத்தின் தலைவனே! நாகர்களுக்கு முதல்வனே!” என்றது சூதர் ஒருவரின் பெருங்குரல். “நிகரற்றவனே, அன்னைசொல் நின்றமையால் நீ மானுடன்! அஞ்சாமையால் நீ வீரன்! அளியால் நீ அரசன்! அறிவால் நீ முனிவன்! தன்வழியை தான் வகுத்தமையால் நீ இறைவன்!” நெஞ்ச விம்மலென அவரது கைத்தாளம் முழங்கியது.

அவர்கள் களம் நீங்கும்போது பல முனைகளில் சூதர்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருப்பதை கேட்டனர். “வென்றவர் எவர்? இப்புவியில் நின்றவர்தான் எவர்? பிழையென்றும் நேரென்றும் வகுத்தவர் எவர்? நன்றென்றும் தீதென்றும் முற்றறிந்தவர்தான் எவர்? முடிசூடி அமர்ந்த உன் முழுதணிக்கோலம் காட்டியது உன்னை. உன் விழியணிந்த ஒளி காட்டியது உன்னை. எந்தையே, எம் குலத்தோர் சொற்களில் வாழ்க நீ! இறைவனே, என் மகளிர் கருவில் மீண்டும் எழுக நீ!”

அரண்மனை முகப்பில் சகதேவன் அமைச்சர்களான சித்ரரதரும் கௌசிகரும் துணையமைக்க அவர்களைக் காத்து நின்றிருந்தான். தேர் அணைந்து பீமன் அவன் அருகே சென்றதும் நிமிர்ந்த தலையுடன் நின்றான். அருகே இளைய யாதவர் சென்று நிற்க அர்ஜுனன் தயங்கி பின்னால் நின்றான்.

சகதேவன் அணுகி வந்து கைகூப்பி “இளைய பாண்டவரே, நீங்கள் வெற்றிகொண்டு வரும்போது மகதத்தின் அரசத்தேரை உங்களுக்கு அளிக்கவேண்டுமென எந்தை ஆணையிட்டிருந்தார். சைத்ரம் என்னும் பெயருள்ள அந்தப் பொற்தேர் இந்திரனுக்குரியதென்றும் எங்கள் மூதாதையான பிருகத்ஷத்ரரால் வெல்லப்பட்டதென்றும் சூதர்கள் பாடுகிறார்கள். அதை ஏற்று அருள்க!” என்றான்.

அருகே நின்றிருந்த ஏவலன் கெண்டியில் நீரை ஊற்ற சகதேவன் அதை அளிக்கும்பொருட்டு வாழைக்கூம்பென கைகுவித்து நீட்டினான். பீமன் அவன் நீட்டிய கைக்குக் கீழே தன் கையை வைத்து நீரூற்றி அளிக்கப்பட்ட தேரை பெற்றுக்கொண்டான். சகதேவன் “பாண்டவரே, முறைப்படி இந்நகரும் முடியும் தங்களுக்குரியவை. நான் எந்தைக்குரிய எரிசடங்குகளை செய்யவேண்டும். அதற்கு மட்டும் தங்கள் ஒப்புதலை கோருகிறேன்” என்றான்.

பீமன் அவன் தோளைத் தொட்டு “மைந்தா, நான் மானுடனல்ல. வெறும் காட்டுவிலங்கு. காட்டுவிலங்குகள் மேல் மானுடர் பகைகொள்வதில்லை என்று மட்டும் உன்னிடம் சொல்ல விழைகிறேன்” என்றான். “என்னைக் கொல்ல எவரும் எவ்வறமும் பேணவேண்டியதில்லை. நஞ்சூட்டியும் சதிக்குழியமைத்தும் எரியிட்டும் அழிக்கலாம்.  என்றேனும் ஒருநாள் அவ்வாறு நான் கொல்லப்படுவேன் என்றால் என்னைக் கொல்பவன்மேல் முழு அன்புடன் இறப்பேன் என்பது மட்டுமே நான் சொல்லக்கூடுவது.”

கசப்புடன் மெல்ல சிரித்து திரும்பி இளைய யாதவரை நோக்கியபின் “இம்மணிமுடி அல்ல, எந்த முடியையும் காட்டாளன் சூடுதல் தகாது. என் தலைமேல் மானுடரின் எச்சிறப்பும் எப்போதும் அமையலாகாது. எனவே ஒருகணம் உன் முடியை கொள்வதும் எனக்கு உகந்ததல்ல. அனைத்தையும் நிகழ்த்தி அறியாதவராக நின்றிருக்கும் இளைய யாதவரே அதை உனக்களிக்கட்டும்” என்றான்.

இளைய யாதவர் புன்னகையுடன் அருகே வந்து “வெற்றிகொண்டவர் பொருட்டு நான் இந்நாட்டை அடைகிறேன். அவர் பொருட்டு உன்னை இந்நாட்டின் அரசனென அமர்த்துகிறேன். அறம் உன்னைச் சூழ்ந்து காக்கட்டும்” என்றார். அதுவரை காத்திருந்த கண்ணீர் விழிமீற இதழ்களை இறுக்கியபடி சகதேவன் திரும்பிக்கொண்டான். அவன் தோள் குலுங்க அமைச்சர் அவனைப்பற்றி அழைத்துச்சென்றனர்.

அவர்கள் மகதத்தின் அரசத்தேரில் நகர்நீங்கும்போது மழை நகரை மீண்டும் மூடியிருந்தது. திரைதிரையெனக் கிழித்து அவர்கள் சென்றனர். கோட்டைமுகப்புக் காவல்கோட்டத்தில் வேல்தாழ்த்தி கண்ணீருடன் அமர்ந்திருந்த படைவீரர்களை சூழ அமர்த்தி சூதன் பாடிக்கொண்டிருந்தான் “ஜரைமைந்தா, நீ விண்ணேகவில்லை. இந்த மண்புகுந்து வேர்ப்பரப்பில் கலந்தாய். எங்கள் காலடியில் உள்ளங்கையென விரிந்து தாங்குகிறாய். என்றுருமிருப்பாய்…”

தொண்டையைச் செருமிய அர்ஜுனன் அடைத்த குரலில் “யாதவரே, எப்பழியின் பொருட்டு ஜராசந்தன் கொல்லப்பட்டான்?” என்றான். “பழியின் பொருட்டா மானுடர் கொல்லப்படுகிறார்கள்? ஊழ் என்று அதை சொல்கிறார்கள்” என்றபின் நகைத்து “பாழ் என்று சொல்ல அஞ்சி ஊழ் என்கிறார்கள்” என்றார் இளைய யாதவர்.

அர்ஜுனன் “இப்பெருவீரன் மேல் நாம் கொண்ட இச்சிறுவெற்றியின் பொருளென்ன என்று கேட்டேன்” என்றான். “அப்பொருள் மிகமிக விரிந்தது, பார்த்தா. பொருளின்மை என்றாகும் அளவுக்கு விரிந்தது” என்றார் இளைய யாதவர் மீண்டும் நகைத்தபடி.

தேர் முன்னகர்ந்தபோது சூதனின் வரி பின்னால் ஒலித்தது “இறப்பென்பதுதான் என்ன? இறவாமையின் அலைகடல் கரையில் ஒரு நீர்க்குமிழி!”

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 43

[ 16 ]

புலரி எழும் முதற்பொழுதிலேயே மகதமக்கள் ராஜகிருஹத்தின் பெரிய செண்டுவெளி நோக்கி வரத்தொடங்கினர். அன்று கருக்கிருட்டிலேயே பன்னிருநாட்களாக சரடறாது பெய்த மழை ஓய்ந்து காற்று வீசத்தொடங்கியது. கிளை சுழன்ற மரங்கள் இறுதித் துளிகளையும் உதிர்த்து தழைகொப்பளிக்க சீறின. விடியலில் இறுதிக் காற்றொன்று வந்து நகரை சுழற்றி எஞ்சிய நீர்த்துளிகளையும் அள்ளிச் சென்றது. தேன் நிறத்தில் விடிந்தது. நெடுநாட்களுக்குப்பிறகு பறவை ஒலிகளால் காலை விழவு கொண்டது.

மழை நின்றபோது தாங்கள் இருந்த கனவிலிருந்து அறுபட்டு ஒவ்வொருவரும் நகரின் ஒவ்வொரு இடத்தில் உதிர்ந்து விழுந்தவர்கள்போல் திடுக்கிட்டு விழித்துக் கொண்டார்கள். எங்கிருக்கிறோம், என்ன செய்தோம் என்பதை நினைவுகூர முயன்று சலித்தனர். தலை எடை கொள்ள, கால்கள் குழைய, உடலில் அழியாதிருந்த நினைவால் தங்கள் இல்லம் மீண்டனர். அரைத்துயிலில் திண்ணைகளிலும் இடைநாழிகளிலும் அறைகளிலும் படுத்து ராஜகிருஹத்தின் கோட்டைமுரசுகளையும் புலரிமணிகளையும் வானைக்கூவி அழைத்த சங்குகளின் முழக்கங்களையும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இருத்தலென இயல்பென தொகுத்துக்கொண்ட ஒவ்வொன்றும் சிதறிப்பரவ எஞ்சிய வெறுமையை உணர்ந்து அவர்களின் கண்களிலிருந்து தடையின்றி கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. உதடுகளை இறுக்கி ஏறி இறங்கும் தொண்டையுடன் இருளில் முழுமுற்றான தனிமையில் கிடந்தனர். அவர்களுக்கு மேல் முடிவிலி வரை இருண்ட வானம் ஏறி அமர்ந்திருந்தது. பின்னர் சாளரங்களின் பிளவுகளினூடாக தீட்டிய வாள் என, திறந்த வாயிலுக்கு அப்பால் அழுக்குவெண்திரை என புலரியை அவர்கள் உணர்ந்தனர்.

புலரி என்பது ஓர் அறிதலாக இருந்தபோது பொருளற்றதாக எங்கோ நிகழ்ந்தது. அவ்வறிதலை புலரியெனும் சொல் சென்று தொட்டபோது அவர்களின் உடல் விதிர்க்க உவகை எழுந்தது. “புலரி! புலரி! ஆம் புலரி!” என்று நெஞ்சுக்குள் கூவினர். உடல் திறக்குமளவுக்கு விசை கொண்டு விம்மினர். ‘புலரி! புலரி!’ என்று உள்ளம் உழற்றிக்கொண்டிருக்க எழுந்து நீராடி ஆடை மாற்றி புதியவர்களென பிறந்து வந்தனர். அவர்களுக்காக கழுவப்பட்டு எடுத்துப் பரப்பப்பட்டிருந்தது நகரம்.

எழுந்தமர்ந்தபோது கலங்கியஒளி நின்றிருந்த தெருவில் அடிவயிற்றின் பேற்றுவரிகள் போல நீர்த்தடங்கள் விரிந்த மென்மையான செம்மணல் பரவியிருக்க அதன்மேல் மெல்லிய சிறுகால்களால் அழுத்தி அழுத்தி நடந்து கொண்டைகளை ஆட்டி மேய்ந்த சிறுகுருவிகள் கத்தி தீட்டும் ஒலியில் பேசிக்கொண்டன. சுவர்களில் ஈரத்தின்மேல் ஒளி வழிந்தது. அனைத்து இலைகளும் தளிர்மெருகு கொண்டிருந்தன. சேற்றுப்பரப்புகளில் ஒளி உருகி வழிந்தது.

அப்போதுதான் நகர் மையங்கள் அனைத்திலும் அன்று நிகழவிருக்கும் இரட்டையர் மற்போர் குறித்த அறிவிப்பு ஒலித்தது. அறிவிப்பாளனின் குரல் மழையை விரட்டிய காற்றில் தெறித்துச்சுழன்ற நீர்ப்பிசிர்களுடன் கலந்து ஒலித்தது. தெருவிலிருந்து பாய்ந்து இல்லத்திற்குள் நுழைந்த சங்குகர்ணர் உரத்த குரலில் “மற்போர்! அரசருக்கும் அயல்நாட்டிலிருந்து வந்த ஸ்நாதக பிராமணருக்கும் மற்போர்” என்றார். “அரசருடனா? மற்போரா?” என்று அதிர்ந்து கேட்டபடி அங்கிருந்தவர்கள் எழுந்து வந்தனர். “ஆம், இறப்பு வரை போர்!” என்ற சங்குகர்ணர் உரக்க நகைத்து “எவருடைய இறப்பு என்பதில் என்ன ஐயம்? ஜராசந்தர் எப்படி அபிமன்யூவை நெரித்துக்கொன்றார் என்று பார்க்கப்போகிறோம்” என்றார்.

இளையவனாகிய பால்குனன் “இல்லை, பொதுமன்றில் ஓர் எளிய ஸ்நாதக பிராமணனுடன் தோள்கோக்க அரசர் ஒப்பமாட்டார். இறப்பு வரை போர் என்றால் எதிர்நிற்பவன் இறக்கும் கணம் வரை போரிடுபவன் என்றே பொருள்” என்றான். உரக்க “ஐயமென்ன, அவன் பீமன்!” என்றான். சங்குகர்ணர் அக்கணமே அதை உண்மையென உணர்ந்து விழிநிலைக்க வாய்திறந்தார். “பீமனும் அர்ஜுனனும் நகர்நுழைந்துள்ளனர் என்று சொன்னார்கள். ஏழுமுரசுகளை அவர்கள் கிழித்தனர். நாகவேள்விச்சாலையை உடைத்தனர்… போருக்கென்றே இங்கு வந்துள்ளனர்” என்றார் முதியவராகிய தாம்ரர்.

நகரெங்கும் பீமன் என்ற பேச்சே இருந்தது. தெருவில் இயல்பாக நடந்து செல்கையிலேயே அச்சொல் காதில் மீளமீள விழுந்து கொண்டிருந்தது. “முற்றிலும் நிகரானவர் போரிடுகையில் தெய்வங்கள் இறங்கிவருகின்றன என்கிறார்கள். அதன் பொருட்டே மழை நின்றுள்ளது” என்றான் சாலையில் நின்றிருந்த நிமித்திகன் ஒருவன். “இந்தப் பொன்னொளியும் இளங்காற்றும் அவர்களுக்குரிய ஊர்திகள். மூக்கு கூருங்கள், மலர்களின் நறுமணம். இச்சிறுபறவைகளில் எவை விண்புரக்கும் தேவர்கள் என நாமறிய முடியாது. இச்சிறகுகளில் எவை விசும்பை அறிந்தவை என எவரும் சொல்லிவிட முடியாது.”
ஒவ்வொருவரும் வானை நோக்கிக் கொண்டிருந்தனர். மலைத்தொடர்கள் போல, பாறைக் குவியல்கள் போல, கருகிய காடுகள் போல, உறைந்த கடலலைகள் போல வானில் நிறைந்திருந்த முகில்குவைகளுக்கு அப்பால் இருந்து நாளவன் கதிர்கள் கிழித்துப் பீரிடத்தொடங்கின. அவை எரித்து எரித்துத் திறந்த வழிகளினூடாக மேலும் கதிரொளி மண்ணில் சரிந்தது. “விண்ணவர் எழும் தருணம்” என்ற முதியோர் முற்றங்களுக்கு இறங்கி நின்று கைகூப்பி கதிரவனை வணங்கினர்.

‘எங்கோ வாழ்!’ என்றன நாகணவாய்கள். ‘இளங்கதிரே, இங்கெழுகவே!’ என்றன கூரையேறி நின்ற சேவல்கள். ‘ஒளி நீயே!’ என்றன குயில்கள். ‘ஒளி! பொன் ஒளி!’ என்றன சிட்டுக்கள். ‘எந்தையே போற்றி! எழுகதிரே போற்றி! முந்தை வினைகள் அழிக்க மூண்டெழும் அனலே போற்றி!’ என்று வான் நோக்கி வணங்கி வாழ்த்தினர் பூசகர். ஒன்றிலிருந்து ஒன்றென முகில்திரள்கள் பற்றிக் கொண்டன. நகருக்கு மேல் சூட்டப்பட்ட மாபெரும் மணிமுடியென பெருமுகில் குவை ஒன்று வந்தமர்ந்தது. “அது விண்தேர். மற்களத்தில் மாள்பவரை பொன்னுலகுக்கு அழைத்துச்செல்ல தேவர்களும் கந்தர்வகன்னியரும் அதில் அமர்ந்துள்ளனர்” என்றார் முச்சந்தியில் முழவிசைத்துப் பாடிய சூதர் ஒருவர்.

ஒளிகொண்ட முகில்களிலிருந்து தைல மழையென இளஞ்செந்நிற ஒளி கசிந்து நகரெங்கும் பரவியது. நனைந்து ஊறியிருந்த கூரைகள் அனைத்தும் எண்ணெய் மெருகுடன் மின்னத்தொடங்கின. ஈரம்சுமந்து துவண்டிருந்த கொடிகள் காய்ந்து எழுந்த காற்றில் உதறிக்கொண்டன. ஒளியில் எழுந்து சிறகுதறி சுழன்று பறந்த பறவைகளின் இறகுகளின் பிசிர்கள் விலகி தெரியத்தொடங்கின. நகரம் ஓசை கொண்டது. மெல்லத் தொட்டு மீட்டி, பின் தட்டி அதிரச்செய்து, அறைந்தறைந்து முரசை அதிரச்செய்யும் கோல் போல கதிரவன் ராஜகிருஹத்தை முழங்க வைத்தான்.

அனைத்து தெருக்களிலிருந்தும் பெருகிய வண்ண உடைகள் அணிந்த மக்கள்திரள் செண்டுவெளிக்குள் நுழைந்து பெருஞ்சுழற்சியாக மாறியது. அதன் நடுவே மற்போருக்கென வைக்கப்பட்ட களம் கங்கையின் செந்நிறப் பூழி நிரப்பப்பட்டு சிறியதோர் சுனை போல காத்திருந்தது. அதை ஒருக்கிய வீரர்கள் சிறிய கூழாங்கற்கள் எங்கேனும் இருக்கிறதா என்று மீண்டும் மீண்டும் அப்பூழியைக் கிளறி அரித்து நோக்கிக் கொண்டிருந்தனர். மற்களத்தின் இருபக்கமும் மல்லர்கள் அமர்வதற்கான பீடமும் அருகே அவர்களின் களத்துணைவர்கள் அமர்வதற்கான இருக்கைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
போரை நடத்தும் நடுவர்கள் அமர்வதற்கென சிறிய மேடை களத்தின் இருபக்கமும் அமைந்திருந்தது. அப்பால் அரசமேடையில் மகதத்தின் கொடி பொன்மூங்கிலின் மேல் பறந்தது. அதனருகே மகதத்தின் யானைமுத்திரை வரையப்பட்ட வெண்திரை மூடிய பீடம் ஒன்றிருக்க இருபக்கமும் வீரர்கள் ஒளிவிட்ட வேல்முனைகளுடன் அதற்கு காவல் நின்றனர்.

மெல்ல நிறைந்த அவை கிளர்ச்சி கொண்ட குரல்களால் ததும்பி முழங்கியது. வியர்வையின் ஆவி எழுந்து மூச்சை நிறைத்தது. களமெழுந்த முழக்கத்தின் கார்வையை ஒவ்வொருவரும் உள்ளத்தில் உணர அவர்கள் விழிகளைச் சுருக்கி சொல்லிழந்தனர். சற்று நேரத்தில் பல்லாயிரம் தலைகள் நிறைந்த அந்தச் செண்டுவெளி முற்றிலும் அமைதி கொண்டதாக ஆகியது. அதன் நடுவே சிவந்த விழி போல மற்களம் காத்திருந்தது.

மகதத்தின் அரண்மனையிலிருந்து ஜராசந்தன் கிளம்பியபோது எழுந்த முரசொலி தொடர்முரசுகளால் செண்டுவெளியை வந்தடைந்து அவர்களைச் சூழ்ந்து நின்று அதிர்ந்தது. எவரும் வாழ்த்தொலி எழுப்பவில்லை. அரசன் எழும் முரசு செவியில் விழுந்ததுமே அறியாது நா வாழ்த்துரைக்கும்படி குரலெழுந்த நாள் முதல் பழகியவர்கள் தாங்கள் வாழ்த்தொலி எழுப்பவில்லை என்பதை முன்னணியில் நின்றிருந்த சிற்றமைச்சர் இருகைகளையும் விரித்து “மகதப் பேரரசர் ஜராசந்தர் வாழ்க! வெற்றிகொள் திறல்வீரர் வாழ்க! பிருகத்ரதர் மைந்தர் வாழ்க!” என்று கூவியபோதே உணர்ந்தனர்.

திடுக்கிட்டு விழித்துக்கொண்டு கூட்டம் கைகளைத்தூக்கி ஒரே குரலில் அவ்வொலியை திருப்பி எழுப்பியது. ஆனால் ஒரு விளியிலிருந்து பிறிதொரு விளிக்கு தொற்றி ஏறி மேலே செல்லும் வழக்கமான உளப்பெருக்கமின்றி மெல்ல தழைந்து சரிந்து ஆங்காங்கே ஒலித்த உதிரிக் குரல்களாக மாறி அது அவிந்தது. படைவீரர்கள் மட்டுமே அவ்வாழ்த்தொலியை தொடர்ந்து எழுப்பினர்.

செறிந்து நின்றவர்கள் காலை வெயிலில் மண் உமிழ்ந்த நீராவியால் உடல் புழுங்கி வியர்வை பெருக கால்மாற்றிக் கொண்டனர். விடாய் உடலெங்கும் நிறைய எச்சில் கூட்டி விழுங்கினர். நீர் எங்கேனும் உண்டா என்று தலைதிருப்பி நோக்கினர். ஒருவர் உடலை ஒருவர் செறுக்க இறுகி உருவான அந்த ஒற்றைத் தசைப்படலத்தில் எவரும் எங்கும் நகரமுடியாதபடி சேர்த்து பின்னப்பட்டிருந்தனர்.

மழையால் தூசியறக் கழுவி துடைக்கப்பட்ட காற்றில் ஊடுருவி எழுந்த வெயில் தோலை பொசுக்கியது. கண்களைக் கூசி பார்வையை அழித்தது. ஜராசந்தன் அரசப்பொற்தேரில் செண்டுவெளிக்குள் நுழைந்தபோது காவல்கோட்டங்களில் எழுந்த முரசொலியுடன் படைவீரர்கள் இணைந்துகொண்ட வாழ்த்தொலியும் எழுந்தது. மங்கல இசை முழங்கியது. அதன் பின்னே சூழ்ந்திருந்த கூட்டம் மகதனை வாழ்த்தி குரலெழுப்பியது.

முன்பு இந்திரனால் பிருகத்ஷத்ரருக்கு அளிக்கப்பட்டதென புராணங்கள் சொன்ன மகதத்தின் அரசப்பொற்தேரான சைத்ரம் மகதத்தின் களிற்றுக்கொடி பறக்க அந்திமுகில் போல ஒளிவிட்டு, கன்னியிடை போல தட்டு உலைய, அவள் இணைமுலைகள் போல் குவைமுகடுகள் நெகிழ சாலையிலிருந்து செண்டுவெளிமேல் ஏறிவந்து நின்றது. களத்தில் நின்றிருந்த அமைச்சர் காமிகரும் படைத்தலைவர்களான சக்ரஹஸ்தரும் ரிஷபரும் தமாலரும் மகாவீர்யரும் அத்தேரை நோக்கி சென்றனர். அவர்கள் பணிந்து முகமன் உரைக்க ஜராசந்தன் உள்ளிருந்து தன் இளைய மைந்தர்களான சோமன், துரியன், சுருதஸ்ரூ ஆகியவர்களுடன் இறங்கினான்.

இருமைந்தர்களின் தோளில் கைகளை இட்டபடி வந்த ஜராசந்தன் மகதத்தின் அரச உடையணிந்திருந்தான். சிம்மமுகம் கொண்ட பொற்பாதக்குறடுகள். முழங்கால் வரை எழுந்த இரும்பு உறைகளின் மேல் பொன்பூச்சுப்பணிகள் மின்னின. இடைக்கச்சைக்குமேல் ஒளிரும் வைரங்கள் பதிக்கப்பட்ட சல்லடத்தில் உடைவாள் தொங்கியது. அதன் பொன்னுறைமேல் நாகங்கள் செவ்வைரங்கள் மின்னும் விழிகளுடன் உடல்பிணைத்து பரவியிருந்தன. செம்பட்டுக் கீழாடைக்கு மேல் அலையலையென வளைந்து தொங்கிய முத்தாரங்களின் படலம்.

மார்பிலணிந்த பொற்கவசம். தாமரையிதழென நீண்டு மலர்ந்த தோள்வளைகள். நாகமுடிச்சு கொண்ட கங்கணங்கள். விழிகள் எழுந்த கணையாழிகள். தலையில் சுதேஜஸ் என்று அறியப்பட்ட மகதத்தின் மணிமுடியை அணிந்திருந்தான். தேரில் அவனுக்குப்பின் இருவீரர் வெண்குடையை பிடித்திருந்தனர். அவன் இறங்கியதும் அவர்கள் அவன் பின்னால் அக்குடை சுமந்து வந்தனர். மிதப்பவன் போல சீராக கால் வைத்து நடந்து மற்களத்தை வந்தடைந்தான்.

மகதர் வெறிகொண்டவர்கள் போல வாழ்த்தி கூச்சலிட்டனர். நெஞ்சில் அறைந்தும் கைகளை வீசி துள்ளிக்குதித்தும் மேலாடைகளையும் தலைப்பாகைகளையும் எடுத்து வீசியும் கண்ணீர் வழிய தொண்டை நரம்புகள் இறுகித் தெறிக்க கூவினர். ஒற்றைமுழக்கமென்றாகிச் சூழ்ந்த மக்கள் வாழ்த்தொலிகள் நடுவே நடந்து அவன் வந்ததும் வெண்திரை விலக்கப்பட்டது. அங்கே மகதத்தின் மகாஜோதிஷ் என்னும் அரியணை இருந்தது. நான்குசிம்மங்கள் முதுகொட்டி ஓருடல்கொண்டு நின்று விழிவைரங்கள் ஒளிர வாய்திறந்து உறுமி நிற்கும் கால்களுக்குமேல் எழுந்து வளைந்த சுடர்வளையத்தில் மகதத்தின் குடித்தெய்வங்களான ஏழன்னையரின் முகங்கள் செங்கனல்துளியெனச் சுடரிட்ட விழிகளுடன் பொறிக்கப்பட்டிருந்தன. மையத்தில் அரசனின் மணிமுடிக்குமேல் அமையும்படி மூவிழியனின் யோகத்திலமர்ந்த சிலை இருந்தது.

ஜராசந்தன் அரியணை அமர்ந்ததும் அவன் மணிமுடிக்குமேல் சிவனின் கால்கள் அமைந்தன. சக்ரஹஸ்தரும் காமிகரும் இணைந்து கொண்டுவந்தளித்த செங்கோலை வலக்கையில் வாங்கினான். அவனுக்குப் பின்னால் மகதத்தின் மகாசத்ரம் நிலவென எழுந்தது. இருபுறமும் சேடியர் அலைநுரைபோல் கவரிகளை வீசினர். அவனுக்கு இருபக்கமும் மைந்தர்கள் அரசணிக்கோலத்தில் வைரம்பதித்த தலைப்பாகைகளுடன் நின்றனர். மங்கல இசை எழ நாகவைதிகர் பன்னிருவர் நிரைகொண்டு வந்து அவன் மீது மஞ்சளரிசியும் மலரும் வீசி நாகவேதம் ஓதி வாழ்த்தினர். அதன்பின்னர் மகதத்தின் பூர்வகௌசிக அந்தணர் நிரைவகுத்துச் சென்று அவனுக்கு அரிமலர் தூவி கங்கைநீரால் வாழ்த்தளித்தனர்.

மெல்ல அக்கூட்டம் விழிநிலைத்து ஒலியமைந்தது. “இளங்கதிரவன் போல” என எவரோ அவர்களனைவரும் கொண்ட எண்ணத்தை சொன்னார்கள். அவனையன்றி பிறரை அங்கு எவரும் உணரவில்லை. அவன் தலைக்குமேல் எழுந்த முகில் ஒன்று ஒளிகொண்டு பொற்புகை என மாறியது. அதிலிருந்து திரண்டு உதிர்ந்த துளியென அவன் அங்கிருந்தான். காமிகர் திரும்பி இரு கைகளையும் காட்ட படைவீரர்கள் “மகதர் வாழ்க! வென்றெழும் திறல் வீரர் வாழ்க! ஜராசந்தர் வாழ்க! மெய்வேதக்காவலர் வாழ்க!” என்று குரலெழுப்பினர்.

மக்கள்திரளிலிருந்து எவரோ ஒருவர் “மற்போருக்கு அரச உடையில் வரும் மரபில்லையே?” என்றார். அங்கிருந்த ஒவ்வொருவரும் எண்ணிக்கொண்டிருந்த சொல்லாகையால் அனைவரும் அவரை திரும்பி நோக்கினர். பிழையொன்றை சொல்லிவிட்டதைப்போல் அவர் முகங்களுக்கிடையில் தன்னை இழுத்துக் கொண்டார். அப்பால் எவரோ ஒருவர் “பட்டத்து இளவரசர் எங்கே?” என்றார். அனைவரும் விழிகளால் சகதேவனை தேடினர். “ஆம், பட்டத்து இளவரசர் வந்தாகவேண்டுமே?” என்றார் ஒரு முதியவர். “ஏன்?” என்று அருகில் நின்றவர் கேட்டார். முதியவர் “ஒருவேளை அரசர் களம்படுவார் என்றால் மணிமுடி சூடவேண்டியவர் அல்லவா?” என்றார். “என்ன சொல்கிறீர்? இங்கு களத்திலா மணிமுடி சூட்டப்படுகிறது?” என்றான் அப்பால் நின்ற ஒருவன்.

மெல்லிய உரையாடல்கள் கலந்த ரீங்காரமாக செண்டுவெளி நிறைந்து மற்களத்தைச் சூழ்ந்து அவர்கள் காத்திருந்தனர். “பீமன் எவ்வடிவில் வரவிருக்கிறான்? இளைய பாண்டவனாக இம்மற்களத்துக்குள் அவன் நுழைய வாய்ப்பில்லை” என்றார் முதிய படைவீரர் ஒருவர். “ஸ்நாதக பிராமணனுடன் போர் என்றுதானே அரசு அறிவித்துள்ளது? அவ்வடிவிலேயே அவர்கள் வருவார்கள்” என்றார் பிறிதொரு முதிய குடித்தலைவர்.

பீமன் வருவதைக் குறிக்கும் முரசு கோட்டை முகப்பில் எழுந்தது. அவ்வொலியின் கார்வையென கூட்டத்திலிருந்து எழுந்த முழக்கம் மேலும் மேலும் பெருகியது. ஒருவர் தோளை ஒருவர் பற்றி எட்டிப்பார்த்தனர். மகதத்தின் கொடி பறந்த அரண்மனைத் தேரில் பீமனும் அர்ஜுனனும் கிருஷ்ணனும் செண்டுவெளிக்குள் புகுந்தனர். மூவரும் ஸ்நாதக பிராமணர்களின் வெண்ணிற ஆடை அணிந்து தர்ப்பை திரித்த புரிநூல் அணிந்திருந்தனர். அவர்களை வரவேற்று மகதத்தின் மங்கல இசைச்சூதர் இசைக்க, சங்குகள் முழங்கின.

செண்டுவெளியில் இருந்த அத்தனை விழிகளுக்கும் அவர்கள் எவரென தெரிந்திருந்தது. எனவே அவர்களை எவ்வாறு வரவேற்பது என்றறியாமல் கலைந்த ஓசைகளாக கூட்டம் தயங்கியது. முன்நிரையில் நின்றிருந்த வைதிகர்கள் வலக்கையைத் தூக்கி வேதக்குரல் எழுப்பி அரிமஞ்சள் அள்ளி அவர்கள் மேல் வீசி வாழ்த்தினர். அவ்வொலி கேட்ட பின்னரே “களம் நிற்கும் அந்தணர் வாழ்க! பெருமல்லர் வாழ்க!” என்று நிமித்திகன் ஒருவன் தன் கோலைத் தூக்கி மக்களை நோக்கி கூவினான். அவர்கள் தயங்கி கலைந்தபடி அவ்வாழ்த்தொலியை திருப்பி கூவினர்.

பீமன் தேரிலிருந்து இறங்கி தன்னை வரவேற்ற காமிகரின் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். அவர் அவன் தலையில் கை வைத்து “நன்று சூழ்க!” என்று வாழ்த்தினார். நிரைநின்ற பூர்வகௌசிக அந்தணரை வணங்கி மலர்கொண்டபடி அவன் களம் நடுவே சென்றான். அர்ஜுனனும் இளைய யாதவரும் இறங்கியதும் கூடி நின்ற மகதத்தின் மக்களை நோக்கி கை கூப்பியபின் அரியணையில் அமர்ந்திருந்த ஜராசந்தனை அணுகி தலைவணங்கினர். ஜராசந்தன் அவர்களை கை தூக்கி வாழ்த்தினான்.

மக்களை நோக்கி தலைவணங்கிவிட்டு பீமன் தன் பீடத்தில் வந்து அமர்ந்தான். அர்ஜுனனும் கிருஷ்ணனும் அவன் பீடத்தின் இருபக்கங்களிலும் சென்று அமர்ந்தனர். கூடி நின்றவர்கள் இருபெருந்தோளர்களையும் மாறி மாறி நோக்கினர். “யாதவரே, இவன் யார்?” என்று அர்ஜுனன் கேட்டான். “பண்டு பாரதவர்ஷத்தை ஒருங்காண்ட மாபெரும் அசுர சக்ரவர்த்திகளுக்கு நிகரான ஒளி கொண்டிருக்கிறான்.” பீமன் “ஆம், ஹிரண்யாக்ஷனும் ஹிரண்யகசிபுவும் மகாபலியும் நரகாசுரனும் நினைவில் எழுகிறார்கள்” என்றான். கிருஷ்ணன் புன்னகைத்து “உண்மை, என் மூதாதை கார்த்தவீரியனும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்” என்றார்.

ஒரு சூதர் “இளைய யாதவன் இத்தனை எளிய தோற்றம் கொண்டவனென நான் எண்ணியிருக்கவில்லை. கன்றோட்டும் ஆயர்மகன் போலிருக்கிறான்” என்றான். “இளைய பாண்டவனும் எளியவன் போலிருக்கிறான்” என்றான் ஒருவன். ஒரு சூதர் “பீமன் பெருந்தோளராகிய பலாஹாஸ்வமுனிவர் போலிருக்கிறான்” என்றார். மிக மெல்லவே அவர் சொன்னாலும் சற்று நேரத்தில் செவிகளினூடாக அச்சொல் அனைவரையும் சென்றடைந்தது. “ஆம், பலாஹாஸ்வர்! அவரேதான்!” என்றார் ஒரு முதியவர்.

“பலாஹாஸ்வர் ரிக்வேதி அல்லவா?” என்று எவரோ கேட்டார். “மூன்று முதன்மைவேதங்களிலும் முற்றறிவு கொண்டவர்.” கூட்டத்திற்குள் இருந்து “இவர் எந்த வேத குலம்?” என்றார் எவரோ. “இவர் அடுமனையில் எரிவளர்ப்பவர். இவரது வேதத்தில் சொல் இல்லை, ஏப்பம் மட்டுமே” என்றார் ஒரு இளிவரல்சூதர். அவரைச் சுற்றி கூடி நின்றவர்கள் நகைத்தனர்.

ஜராசந்தன் தன்னைச்சூழ்ந்து நின்ற குடிகள் ஒவ்வொருவரையும் தன் விழிகளால் தொட விழைபவன் போல சுற்றி நோக்கை ஓட்டிக் கொண்டிருந்தான். அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அவனுக்கு இருபக்கமும் சென்று நிரைவகுத்தனர். காமிகர் வாய்பொத்தி “தங்கள் ஆணைக்காக காத்திருக்கிறோம், அரசே” என்றார்.

“எனது ஆணைகளை முன்னரே பிறப்பித்துவிட்டேன், காமிகரே” என்றான் ஜராசந்தன். “இங்கு என் மக்கள் முன்னிலையில் களமிறங்கி வென்று செல்லப்போகிறேன்.” காமிகர் “அவை இறையாணையென கொள்ளப்படும்” என்றார். “அறிவிப்பு எழட்டும்” என்றான் ஜராசந்தன். காமிகர் கைகாட்ட அரசநிமித்திகன் அறிவிப்பு மேடையிலேறி தன் வெள்ளிக்கோலை மும்முறை சுழற்றியதும் களம் முற்றாக ஓசை அவிந்தது. அக்களத்தின் வெவ்வேறு இடங்களில் அறிவிப்பு மேடைகளில் எழுந்த துணை நிமித்திகர்கள் தங்கள் கோல்களை சுழற்றினர்.

நிமித்திகர் உரத்த குரலில் “மாகதரே! குடித்தலைவரே! அந்தணரே! முனிவரே! விண்ணிழிந்து சூழ்ந்துள்ள தேவர்களே! விண்ணமர்ந்து நோக்கும் மூதாதையரே! உங்கள் அனைவரையும் மகதத்தின் பேரரசரின் கோலின் நிழலென இங்கு நின்று வணங்குகிறேன். தொன்மையான நாகர் குடி வழிவந்த மழைவிழவு இங்கு நிகழ்கிறது. மழை கொணரும் தவளைகள் பெருகவும் நாகங்கள் செழிப்புற்று எழவும் இவ்வேள்வி நெடுங்காலமாக நடந்து வந்தது. இன்று பாரதவர்ஷத்தின் நலன் பொருட்டு அவ்விழவை இங்கு மீண்டும் எழச்செய்தோம். அது என்றும் தொடர்க!” என்றார்.

“ஆம்! ஆம்! ஆம்!” என மக்கள் குரலெழுப்பினர். “மழைவிழவின் மையமென இங்கே நிகழ்ந்த நாகவேத வேள்வி நேற்று இங்கெழுந்த இம்மூன்று ஸ்நாதக பிராமணர்களால் நிறுத்தப்பட்டது. வேள்வி முறையின்படி வேள்விக்காவலராகிய மகதப்பேரரசர் அம்மூவரையும் வென்றபின்னரே அவ்வேள்வியை மீண்டும் தொடங்க முடியும். அவர்கள் மகதரின் அவை புகுந்து தனிப்போருக்கு அறைகூவினர். அதன்பொருட்டு அவர்களில் பெருமல்லரை இன்று இக்களத்தில் மகதப்பெருங்குடிகள் மத்தியில் பேரரசர் ஜராசந்தர் எதிர்கொள்ளவிருக்கிறார்” என்றார் நிமித்திகர்.

அவர் குரல் எதிரொலிகள் போல கூட்டமெங்கும் மீண்டும் மீண்டும் ஒலித்தபடி கடந்துசென்றது. “இங்கு நிகழும் இப்போரில் ஷத்ரிய குலங்களுக்கிடையே கடைபிடிக்கப்படும் மற்போர் நெறிகள் அனைத்தும் பேணப்படும். இருவரில் ஒருவர் மடியும் வரை இப்போர் நீடிக்கும். இது இங்கு எவ்வேள்வி நிகழவேண்டுமென்பதை முடிவு செய்யும் போருமாகும். தெய்வங்கள் இதன் வெற்றியையும் தோல்வியையும் முடிவெடுக்கட்டும். ஊழெனச் சூழும் காலம் நின்று நோக்கட்டும். ஓம்! அவ்வாறே ஆகுக!” என்றார். துணை நிமித்திகர்களால் அவ்வறிவிப்பு மீண்டும் மீண்டும் கூவப்பட்டு அங்கிருந்த அனைவரையும் சென்றடைந்தது.

மகத மக்கள் அனைவரும் அவர்களைத் தாங்கி நின்ற விசைகளால் கைவிடப்பட்டு உடல் தளர்வது போல ஒருமித்த அசைவொன்றை ஏற்படுத்தினர். களமாடலை அறிவிக்கும் முரசுகள் ஒலித்தன. கொம்புகள் இளங்களிறுகள் போல மும்முறை முழங்கி அமைந்தன. ஜராசந்தன் எழுந்து தன் மக்களை நோக்கி கைகூப்பினான். அவர்கள் அமைதியாக அவனை நோக்கி நின்றனர். அறியாத ஏதோ உணர்வால் அவர்களில் பலர் விழி ததும்பினர். ஜராசந்தன் திரும்பி தன் ஏவலரை நோக்கி விழியசைக்க அவர்கள் அருகணைந்து அவன் மணிமுடியை எடுத்து அரியணை மேல் வைத்தனர். அதன் குறுக்காக செங்கோலை சாய்த்தனர். அவன் ஆடைகளை ஒவ்வொன்றாக அவர்கள் களைந்தனர். அவன் மைந்தர் நோக்கி அசையாது நின்றனர்.

ஜராசந்தன் இடைக்கச்சையை அவிழ்த்துவிட்டு இறுகிய தோல் ஆடையை அணிந்தான். வலக்கையின் ஆழிவிரலில் அரசுமுறைக் கணையாழியன்றி பிறிதொரு அணியுமின்றி தோளில் புடைத்த பெருந்தசைகளும் விரிந்தமார்பின் கற்பலகைகளும் கைகளிலோடிய கொடிவேர்களுமாக தன் மைந்தர்களின் தோள்களைத் தொட்டு புன்னகையுடன் ஓரிரு சொற்கள் சொன்னான். இளையவனாகிய சுருதஸ்ரூ அழுகை வந்தவன் போல விழிகளைத் தாழ்த்த அவன் காதைப்பிடித்து இழுத்து ஏதோ சொன்னான். அவன் நாணத்துடன் நகைக்க மீண்டும் தோளைத்தட்டியபின் திரும்பி நடந்தான்.

ஜராசந்தன் வந்து தன் மல்லர் பீடத்தில் அமர்ந்ததும் அவனைச்சுற்றி நாகர்குல படைத்தலைவர் மூவரும் நின்றனர். அவன் குழலை ஏவலன் ஒருவன் கொம்புச் சீப்பால் சீவி பின்னால் கொண்டு சென்று தோல்பட்டையால் இறுகக்கட்டி முடிந்து முதுகில் இட்டான். களநிகழ்வு நடத்துவதற்கென இருபுறமும் நடுவர்கள் கைகளில் வெண்ணிறக்கொடியும் செந்நிறக்கொடியுமாக வந்து நின்றனர். காமிகர் நிமித்திகனை நோக்கி கையசைக்க அவன் தன் கோலைச் சுழற்றி இடுப்பிலிருந்த சிறிய கொம்பை எடுத்தூதினான். வானத்தில் அலறியபடி ஒரு பறவை சென்று கடந்தது போல அக்கொம்பொலி எழுந்து ஓய்ந்தது.

ஜராசந்தன் எழுந்து களத்தை அணுகி குனிந்து அப்புழுதியைத் தொட்டு தன் சென்னியில் சூடிவிட்டு செந்நிற பூழியில் கால்புதைய நின்றான். பீமன் இளைய யாதவரை நோக்கி தலைவணங்கிவிட்டு அர்ஜுனனின் தோளை மெல்லத்தட்டியபடி கூர்ந்த விழிகளுடன் ஜராசந்தனை பார்த்துக்கொண்டு நடந்து களவிளிம்பை அடைந்து பணிந்து அம்மண்ணைத் தொட்டு சென்னி சூடி பூழியில் இறங்கி நின்றான்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 42

[ 14 ]

பீமனும் அர்ஜுனனும் இளைய யாதவரும் தங்கியிருந்த மாளிகை ஸ்நாதக பிராமணர்களுக்குரியது. அவர்கள் காலையிலும் மாலையிலும் பூசனைகள் செய்வதற்குரிய மலர்ச்சோலைகள் சூழ்ந்து, அவர்களின் பொழுதிணைவு நீர்வணக்கங்களுக்கு உகந்த முறையில் சிற்றாறு ஒன்றின் கரையில் அமைக்கப்பட்டிருந்தது. மகத அரசவையிலிருந்து திரும்பியதுமே இளைய யாதவர் அந்த ஓடைக்கரையில் மரத்தடி நிழலில் சென்று கால் நீட்டி அமர்ந்து கொண்டார். பீமன் அடுமனைக்குச் சென்று அங்குள்ள மடைப்பணியாளர்களிடம் உரையாடத் தொடங்க அர்ஜுனன் அம்மாளிகையின் தனியறைக்குள் சென்று மஞ்சத்தில் கண்மூடி படுத்தான்.

உணவுண்டு உடல் மதர்க்க திரும்பிவந்த பீமன் அவன் அறையின் வாசலைத் தட்டி ஓசையிட்டபின் அது மூடப்படவில்லை என்று உணர்ந்து உள்ளே வந்தான். அர்ஜுனன் எழுந்து அமர்ந்ததும் அவன் அருகே நின்றபடி “நல்ல உணவு, பார்த்தா. இங்குள்ள அடுமனையாளர்கள் சிலரை நாம் இந்திரப்பிரஸ்தத்துக்கு அழைத்துச் செல்லலாம். நல்லவர்கள்” என்றான். அர்ஜுனன் புன்னகைத்தான். “நாளை என்ன சமைப்பதென்று அவர்களிடன் உரைத்துவிட்டேன்” என்றான் பீமன்.

அர்ஜுனன் “நன்று” என்றான். பீமன் ஒரு பீடத்தை ஓசையுடன் இழுத்துப்போட்டு அமர்ந்து தன் பெரிய கைகளை கோத்தபடி “இளைய யாதவர் எங்கே?” என்றான். அர்ஜுனன் “அவர் சோலைக்குள் சென்றிருக்கிறார். நீரோடைக்கரையில் இருக்க வாய்ப்பு” என்றான். “அங்கு செல்வோம். பகலில் இங்கு ஏன் படுத்திருக்கிறாய்?” என்றான் பீமன். அர்ஜுனன் புன்னகைத்தான். “இங்கு கிளம்பி வருகையிலேயே உன் முகத்தை பார்த்தேன். நீ உளம்சோர்ந்திருக்கிறாய்” என்றான் பீமன். அர்ஜுனன் “ஆம்” என்றான். “ஏன்?” என்றான் பீமன்.

அர்ஜுனன் இருமுறை எடுத்த சொல்லை இதழசைவாக மாற்றிவிட்டு “ஒன்றுமில்லை” என்றான். “ஏன் என்று என்னால் எளிதில் உய்த்துணர முடியும்” என்றான் பீமன். அர்ஜுனன் விழிதூக்கினான். “இங்கு இவ்வாறு ஒரு குறுக்குவழியை தேர்ந்தெடுத்தது பிழை என்று எண்ணுகிறாய்” என்றான். “ஆம், மகதம் நம் தந்தையின் காலம்முதல் அஸ்தினபுரிக்கு முதல் எதிரி. அதை நாம் வென்றுகாட்டுவதே தந்தைக்கும் பெருமை. நாம் இந்திரப்பிரஸ்தம் அமைத்தபோது எதிர்கொண்ட மிகப்பெரிய மறுவிசை இதுவே. இதை எளிய சூழ்ச்சியினால் நாம் வென்றோமென்றால் என்றும் அது சூதர் பாடல்களில் வாழும்” என்றான் அர்ஜுனன். “மூத்தவரே, படை கொண்டு வந்து நாம் மகதத்தின் வாயிலில் நின்றிருக்க வேண்டாமா? இந்நகரை நம் ஆற்றலால் அல்லவா அடைந்திருக்க வேண்டும்? பாரதவர்ஷம் முழுக்க அது நம்மைப் பற்றிய செய்தியை அடையச் செய்யுமல்லவா?”

பீமன் “நான் அதை இளைய யாதவரிடம் கேட்கலாம் என்று எண்ணினேன்” என்றான். “ஆனால் அவர் உள்ளம் எப்படி செல்கிறது என்று என்னால் அறிய முடிகிறது.” அர்ஜுனன் “அது மிக எளிது” என்றான். “மகதன் ஷத்ரிய அரசர்களை இங்கே கொண்டு வந்து சிறையிட்டிருக்கிறான். அவர்களை நாகருத்திரனுக்கு பலியிடப் போவதாக அறிவித்திருக்கிறான். நாம் ஜராசந்தனை எப்படி தோற்கடித்தாலும் சிறுகுடி ஷத்ரியர்கள் நம்மை கொண்டாடுவார்கள். ஷத்ரியர்களை காக்கும் பொருட்டே நாம் படை திரட்டவும் நேரமின்றி மாறு தோற்றத்தில் இங்கு வந்தோம் என்று கூட சொல்ல முடியும்.”

பீமன் புன்னகைத்து “அதுவே உண்மை என்று நம்பத் துவங்குவோம்” என்றான். “உண்மையென்பது என்ன என்று அனைவருக்கும் தெரியும், மூத்தவரே. நாம் உச்சியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். கூர் அணுகும்தோறும் குறுகுவது. அங்கு அறங்களும் நெறிகளும் மயிரிழை வேறுபாட்டிலேயே முடிவு செய்யப்படுகின்றன. ஷத்ரியர் அறிவர், என்ன நிகழ்ந்ததென்று. அதை அவர்கள் ஒருபோதும் சொல்லாமலும் இருக்க மாட்டார்கள். வென்றவனின் குறைகளை சொல்ல விழைவதே மக்களின் இயல்பும்” என்றான்.

பீமன் “என்னை சோர்வுறுத்துவது அதுவல்ல. இன்று நான் பாரதவர்ஷத்தின் மாபெரும் மல்லனிடமிருந்து அவனைக் கொல்லும் ஒப்புதலை பெற்றிருக்கிறேன்” என்றான். உடனே சிரித்து “உளச்சோர்வெழுகையில் விலா புடைக்க உண்பது சிறந்த விடுதலைவழி என்று அறிந்திருக்கிறேன். பார்த்தா, உனக்கும் அதையே சொல்வேன்” என்றான். அர்ஜுனன் “உளச்சோர்வை வெல்லும் வழியொன்று எனக்கும் உண்டு. நாம் ஐவரும் ஒன்றை கண்டடைந்துள்ளோம்” என்றான். பீமன் தொடைகளில் அறைந்தபடி சிரித்தான்.

வாயிலில் ஏவலன் வந்து பதற்றத்துடன் தலைவணங்கி “அரசர் வந்துளார்” என்றான். அர்ஜுனன் எழுந்து “யார்?” என்றான் திகைப்புடன். “மகதப்பேரரசர் ஜராசந்தர்! நம் மாளிகைக்குள் நுழைந்துவிட்டார்” என்றான் ஏவலன். பீமன் “எங்கு செல்கிறார்?” என்றான். “தேர் இறங்கியதுமே இளைய யாதவரை பார்க்க வேண்டுமென்றார். ஒரு ஏவலன் வழிகாட்ட தோட்டத்திற்குள் சென்றார். நான் இங்கே ஓடிவந்தேன்” என்றான். “வா” என்றபடி பீமன் விரைய அர்ஜுனன் சால்வையை எடுத்து தோளிலிட்டு குழல்கற்றைகளை அள்ளி பின்னால் முடிந்தபடி அவனைத் தொடர்ந்து சென்றான்.

அவர்கள் மலர்ச்சோலையின் ஓடைக்கரையை அடைந்தபோது ஜராசந்தன் இடையில் கைவைத்து நின்று அங்கே கடம்பமரத்தடியில் கால் நீட்டி அமர்ந்திருக்கும் இளைய யாதவரிடம் உரத்த குரலில் பேசிக் கொண்டிருப்பதை கண்டார்கள். “பூசலா?” என்றான் பீமன். “அவர் பிறிதொருவராகத் தெரிகிறார்” என்றான் அர்ஜுனன்.

 

[ 15 ]

ஜராசந்தன் உரத்த குரலில் கைகளை வீசி “இப்போதே அதை முடிவு செய்வோம், இளைய யாதவரே. சொற்களை உண்மையை அறிவதற்கென்று பயன்படுத்த நீங்கள் ஒப்புவீர்கள் என்றால், இத்தருணத்திலேயே நாம் இறுதியை வகுத்துவிடலாம்” என்றான். இளைய யாதவர் புன்னகையுடன் அண்ணாந்து “சொற்கள் ஒருபோதும் இறுதியை அடைவதில்லை, மகதரே” என்றார். “தொடங்கிவிட்டீர்கள் உங்கள் வீண் பசப்புரையை” என்று கசப்புடன் ஜராசந்தன் நகைத்தான். சற்றே குனிந்து வெறுப்புடன் “சொல்லுங்கள், இங்கு பாண்டவர் இருவருடன் நீங்கள் வந்தது நாகவேதத்தை நிறுத்தும்பொருட்டு அல்லவா?” என்றான்.

இளைய யாதவர் திரும்பி பீமனையும் அர்ஜுனனையும் பார்த்தார். ஜராசந்தன் அவர்களை பொருட்டாக எண்ணவில்லை. “யாதவரே, உங்களுக்கும் எனக்குமான பூசல் என்பது மண்ணுக்காக அல்ல. மணிமுடிக்காகவும் அல்ல. இருவரின் ஆணவத்திற்காகவும் அல்ல. நம் எல்லைப்பூசல்கள் மிகச்சிறியவை. யாதவம் மகதத்திற்கு இனி அடிபணியப்போவதில்லை என நானும் அறிவேன். மகதத்தை ஆளவியலாதென்று நீங்களும் அறிவீர்கள்.”

“நாம் கொண்டுள்ள வேதத்துக்காகவே இப்போர்” என்று ஜராசந்தன் சொன்னான். “என் வேதத்தை வெல்லவே வந்திருக்கிறீர்கள். அங்கே நாகவேள்வியை குலைத்து அதை எனக்கு அறிவுறுத்தவும் செய்தீர்கள்.” இளைய யாதவர் “ஆம், உம் வேதம் அழிவுக்குரியது” என்றார். “வேதம் என்பது என்ன?” என்றான் ஜராசந்தன் உரக்க. “நீர் கொண்டிருப்பதே மெய்வேதமென எவர் சொன்னார்கள்? வேதமறிந்தோர் வரட்டும், அவர்களிடம் நான் பேச சித்தமாக உள்ளேன். எவர் வேதம் மெய்யென்று மன்றுகூடி மெய்ப்பிப்போம்.”

இளைய யாதவர் “மானுடர் எவரும் வேதத்தை முற்றறிந்துவிட முடியாது. இங்குள்ள நம்மைச் சூழ்ந்துள்ள ஒலி அனைத்தையும் கேட்டுவிட முடியும் என்றால் மட்டுமே அது இயல்வது. அறிவு அறியப்படுவது என்பதனாலேயே அறியும் தரப்பின் இயல்பின் எல்லைக்குட்பட்டது. பேரறிவு என்பது அறியப்படாத ஒன்றாகவே இருக்க முடியும்” என்றார். “அறியமுடியாமையைப்பற்றி விவாதிப்பதில் பொருளேதுமில்லை.”

உரக்க உறுமியபடி ஜராசந்தன் இளைய யாதவரை அறைபவன் போல அணுகினான். “நான் அறிந்தேன் மெய்வேதம் எதுவென்று. யாதவரே, நான் வந்தபோது அறிந்தேன், ஒவ்வொரு நாளும் வேதமோதப்படும் இந்நகரில் ஒருவராலும் உச்சரிக்கப்படாமல், ஒவ்வொரு சொல்லிலும் ததும்பி நிற்கும் அறியப்படாத வேதம் ஒன்றுள்ளது என்று. பலநூறுமுறை அதை கனவில் கேட்டேன். விழித்தெழுந்து அச்சொற்களை எங்கு கேட்டேன் என்று என் நெஞ்சை துழாவினேன். பின்பு ஒருநாள் உணர்ந்தேன், என் அன்னை ஜரை சென்று மறைந்த அக்குகைக்குள் இளமையில் நுழைந்து இருளில் அலைந்தபோது அதை கேட்டிருக்கிறேன். அக்குகை இருள்முன் வெறியாட்டெழும் என்குலத்து பூசகர் மொழியில் அதன் சொற்கள் எழுந்ததை நினைவுகூர்ந்தேன்.”

அவன் குரல் தாழ்ந்தது. “அழியாத ஒன்று. இங்கெங்கும் உளது. அதன்மேல் அமைந்துள்ளன நம்மால் அறியப்படும் அனைத்தும். அதை உணர்ந்தபின் ஒருபோதும் நான் எளிதமையவில்லை. யாதவரே, அதன் பொருட்டே பாரதவர்ஷத்தின் அனைத்து வைதிகர்களையும் இங்கு வரவழைத்தேன். அத்தனை சூதர்களையும் இங்கு வந்து பாடவைத்தேன். அத்தனை பூசகர்களையும் இங்கு வெறியாட்டெழச்செய்தேன். வீண்முயற்சி என்று எப்போதும் தோன்றினாலும்கூட என் தவம் எங்கோ திரண்டுகொண்டிருந்தது. அதுவே என் குலத்துப் பூசகனாக வெறியாட்டெழுந்து வந்து என் முன் நின்று உரைத்தது.”

“பூசகன் வெறியாட்டு கொண்டு மிழற்றிய குரலில் மூன்று நாகவேதச் சொற்களை கேட்டேன். ஸ்வம், ஸ்ரீம், ஹம். அவை வேதமொழியில் என்ன பொருள் கொள்கின்றன என்று வைதிகரிடம் கேட்டேன். வேதங்கள் அனைத்திலும் அச்சொற்கள் ஒலித்துக்கொண்டே உள்ளன. ஆனால் வேறெங்கிலோ இருந்து வேதத்துக்குள் கலந்தவை போலும் உள்ளன. அவற்றை வழிகாட்டு பறவைகளெனக்கொண்டு பாரதமெங்கும் என் சித்தத்தால் அலைந்து திரிந்தேன். என் ஒற்றர்கள் கொண்டு வந்த ஒவ்வொரு வேதத்தையும் அவற்றைக் கொண்டு ஆராய்ந்தறிந்தேன். பின்பு கிழக்கே மேருவின் கரையில் இருந்து மறைந்த நாகவேதத்தை இங்கு கொண்டு வந்தேன். அதை இங்கு முளைத்தெழச்செய்தேன்.”

“மண்ணுக்குள் உப்பென நிறைந்து கரந்த வேதம். அதன் சொற்களிலிருந்து மறைந்த குலங்களனைத்தும் எழுந்துவரக் கண்டேன். துயர்விழிகளுடன் மறக்கப்பட்ட மூதாதையர் எழுந்தனர். அழிந்த நகரங்கள், புதைந்து மறைந்த நாடுகள், துளியும் எஞ்சாதொழிந்த நூல்கள், சொல் சொல்லென சிதறிப் பரவிய மொழிகள் மீண்டு வந்தன. அது இங்கு வாழும் என்று உறுதி கொள்ளவே கோலுடன் இங்கு அமர்ந்தேன். அழியாத முழுமை வேதமொன்றின் காவல் அமர்ந்திருக்கும் அரசன் நான்.”

“நீர் யார்? நீர் விழைவதென்ன? ஓடும் பெருநதியில் அள்ளி கையில் தேக்கிய நீரை வேதம் என்கிறார்கள் பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள். அதன்பொருட்டு அரியணை அமர்ந்து கொன்றும் கவர்ந்தும் கொடுத்தும் குலம் வளர்க்கிறார்கள். அந்நிரையில் ஒரு பெயரென அமைவதற்கு அப்பால் நீர் கொண்டிருக்கும் விழைவுதான் என்ன?” என்று ஜராசந்தன் கேட்டான். “ஆம், நான் குலங்களை அழித்திருக்கிறேன். குருதியில் ஆடியிருக்கிறேன். ஆனால் தலைமுறை தலைமுறையாக இந்த ஷத்ரியர் ஆடாத குருதியா? இங்கு இவர் கொள்ளாத பழியா? எவ்வகையில் இவர்களிடமிருந்து நான் இழிந்தவன் ஆனேன்? சொல்க!”

இளைய யாதவர் ஜராசந்தனின் உணர்வெழுச்சியை மாறாமுகத்துடன் நோக்கி “மகதரே, மறைந்த தொல்வேதமொன்றை மீட்பதனூடாக நீங்கள் அடைவதென்ன?” என்றார். “அது முதன்மைவிழைவுகளின் கட்டற்றப் பெருக்கென்பதை இந்நகரைப் பார்க்கும் எவரும் உணரமுடியும். அனைத்துக் கட்டுகளையும் அவிழ்த்து இம்மானுடரை விலங்குகளென திளைக்கவிட்டு நீங்கள் அடையும் வெற்றிதான் என்ன?” என்றார்.

“அறியேன். அதை நான் அறிவதற்கு இன்னமும் தருணமும் கூடவில்லை” என்றான் ஜராசந்தன். “ஆனால் அது தோற்கடிக்கப்பட்டதென்பதனாலேயே வெல்வதற்குரியது. அழிக்கப்பட்டதென்பதனாலேயே வாழவேண்டியது.” அவன் வலத்தோளும் காலும் பிறிதொருவனாக பிரிந்துசெல்ல விழைவதுபோல துடித்தன. அவன் உடலுக்குள்ளேயே அவன் நின்று கொப்பளித்து ததும்பி எழுந்துகொண்டிருந்தான்.

“என் முன் இரு வாய்ப்புகள் வந்தன. மானுடர் சேர்த்த எளிய நால்வேதத்தை ஏற்றிருந்தேன் என்றால் ஷத்ரியர்களின் தலைமையை நான் அடைந்திருக்கக்கூடும். இந்த அரியணையில் என் கொடிவழியினர் நெடுந்தூரம் நிரை வகுத்திருக்கவும் கூடும். ஆனால் என் அறையிருளில் மஞ்சத்தில் தனித்து படுத்திருக்கையில் நான் ஜரை அன்னையின் மைந்தன் மட்டுமே என்றறிந்தேன். என் அன்னை புகுந்துமறைந்த அக்குகைப் பாதையின் குரல்களே என்னை ஆள்கின்றன. இங்கிருக்கும் அத்தனை சொற்களாலும் தள்ளி அக்குகைக்குள் செலுத்தி இருளில் ஆழ்த்தப்பட்டவை அவை. பெருமொழி ஒன்றிலிருந்து ததும்பும் சில துளிகளாகவே அவற்றை அறிந்துள்ளேன். நெஞ்சுருகி எங்கள் அன்னையர் ஒப்பாரி பாடும்போது எழுகிறது அது. எங்கள் பூசகரின் வெறியாட்டில் ஒலிக்கிறது. அந்த மொழியின் மைந்தன் நான். என் கடன் அன்னைக்கு மட்டுமே என்று என்றோ ஒரு நாள் இரவில் உறுதி பூண்டேன். அதன் விளைவுகளை நான் எண்ணவேண்டியதில்லை. அதன் பொருட்டு களம் படுவேன் என்றால் என் அன்னையின் கடன் தீர்த்தவன் ஆவேன்.”

“நீங்கள் ஓதும் நாகவேதம் கட்டற்றது என்பதனாலேயே பயனற்றது” என்றார் இளைய யாதவர். “தொல்வேதங்கள் இங்கே மானுடரை உள்ளங்கை புழுதியென வைத்து மூச்சுக்காற்றால் ஆட்டுவிக்கும் பெருந்தெய்வங்கள் போல் இறங்கி வந்தவை. அன்று மானுடத்தின்மேல் பிரம்மத்தின் முதல் ஆணை வளர்க, பெருகுக என்பது மட்டும்தான். அவ்விரிவுக்குரியவை அவை. மகதரே, நிற்க, அமர்க, நிலைக்க என்னும் ஆணைகளாக மானுடர் பிரம்மத்தை உணரத்தொடங்கியபின் அவ்வேதங்கள் பொருளிழந்து புறம்சென்றன.”

“எண்ணிப்பாருங்கள், என்றோ ஒருநாள் வேதத்தைக் கட்ட வேண்டுமென்றும், வகுக்க வேண்டுமென்றும், விளக்க வேண்டுமென்றும் ஏன் முன்னோருக்குத் தோன்றியது? தொல்வியாசனின் அவையிலமர்ந்த ஆயிரத்தெட்டு மாமுனிவர் எதை அஞ்சினர்? எதை விலக்கினர்? வேதத்தில் எதை அவர்கள் அளித்தனர் என்பது முதலறிதல். எதன்பொருட்டு பிறவற்றை விலக்கினர் என்பதை எஞ்சுவதிலிருந்து அறிவதே முழுமையறிதல்.”

காட்டுக்குரிய கீழ்வசைகளை கூவியபடி ஜராசந்தன் கடம்பமரத்தை ஓங்கி அறைந்தான். “விலக்குவதற்கும் சுருக்குவதற்கும் அவர்கள் யார்? எளிய மானுடர். தோள்மெலிந்த வயிறொட்டிய சொல்குழறும் முதியவர். மானுடத்தின் பாதையை அவர்களா முடிவுசெய்வது?” அவன் கைகளைச் சுருட்டி போரிலென ஆட்டி கூவினான். “ஏன் குறுக்க வேண்டும்? இங்கு விண்ணிலிருந்து வந்த மாமழை அது. இங்குள்ள ஒவ்வொரு புல்வேரையும் தளிர்க்க வைப்பது. புழுவுக்கும் பூச்சிக்கும் புள்ளுக்கும் உரிய பெருக்கு அது. அதைக் குறுக்கி அமைக்கும் உரிமையை இவர்களுக்கு அளித்த தெய்வம் எது?”

“எது இங்கு அவர்கள் வாழவேண்டுமென்று விழைகிறதோ அது” என்றார் இளைய யாதவர். “குறுக்குவதல்ல அது, கூர்மையாக்குவது. அலகிலாதது அறியக்கூடுவதே அல்ல. அறிபடுவது எல்லைக்குட்பட்டது. மகதரே, நீர் சொல்லும் அரக்கவேதமும் அசுரவேதமும் நாகவேதமும் கூட முடிவிலாப்பெருக்கிலிருந்து அள்ளி வைக்கப்பட்டவைதான். அவற்றிலிருந்து அள்ளப்பட்டது முறைகொண்ட நால்வேதம். அதுவே முழுதும் மானுடர்க்குரியதல்ல. அதுவும் மீண்டும் செதுக்கி கூராக்கப்படவேண்டும். அதிலிருந்து அதன் இறுதி பிரித்தெடுக்கப்படவேண்டும்.”

“ஜராசந்தரே, இன்று நால்வேதமென திரண்டிருப்பது சென்றகாலத்தின் சித்தப்பெருக்கு. அதன் கர்ம காண்டம் எனப்படுவது முக்குணங்களுடனும் கிளைபிரிந்து நின்றிருக்கும் ஒன்று. வெற்று விழைவின் மூன்று கிளைகள். அதை வேருடன் கெல்லிச் சரித்து வென்று செல்லாது மானுடருக்கு விடுதலை இல்லை. அது தொல்விழைவுகளின் சித்தம் தெறித்துச் சிதறும் பெருவிசை. அதில் ஏறிச்சென்று தொல்முனிவர் அடைந்த உச்சமே அதன் சாரம். அம்மெய்யையே வேதாந்தம் என்கின்றனர் முனிவர்.”

“இந்திரனுக்குரிய வேதத்தை என் மக்களிடமிருந்து விலக்கினேன். அதன் பலிக்கொடைகளையும் சடங்குகளையும் ஒறுத்தேன். ஆம், இன்றிருக்கும் வேதமும் முனை கொள்ளவேண்டுமென்று உரைப்பவன் நான். நீரோ வேதத்தில் இருந்தும் பின்னகர்ந்து சென்று முந்தைய விரிவை நாடுபவர். நமது திசைகள் வேறு. இன்று இரண்டிலொன்றென முடிவாக வேண்டும்.”

பெருங்குரலில் “ஏன்?” என்றான் ஜராசந்தன். “ஏன் நீங்கள் அதை செய்ய வேண்டும்? கானகத்தில் கன்றோட்டி வாழும் யாதவன் எதன் பொருட்டு வேதத்திற்கும் வேதமுடிவுக்கும் காவலென படையாழி ஏந்தி நின்றிருக்க வேண்டும்? யாதவரே, நீர் அறியாதவர் அல்ல. இம்மண்ணில் வாழ்ந்த எத்தனை அரக்கர் குடிகள் கொன்றொழிக்கப்பட்டன? எத்தனை அசுரப் பேரரசுகள் சிதைந்தன? நாகர்கள் சுவடின்றி மண்ணுக்குள் அழுத்தப்பட்டதன் மேல் அல்லவா நின்றிருக்கிறோம் நாம்? எத்தனை குலங்கள்! எத்தனை கொடி வழிகள்! எத்தனை மொழிகள்! எத்தனை பண்பாடுகள்! வென்று நின்றிருப்பதனாலேயே இவை சரியானவை என்று ஆகிவிடுமா என்ன? தோற்றவை என்பதனாலேயே அவை பிழையானவையா? அழிந்தவை என்பதனாலேயே அவை மறக்கப்படவேண்டுமா?”

“யாதவரே, அறமென ஒன்றுண்டென்றால் அது வீழ்ந்தவரின் விழிநீரையல்லவா பொருட்படுத்தவேண்டும்? நான் விழிநீர் கண்டு வளர்ந்தவன். அதன் பொருட்டு மட்டுமே என்னால் வாளேந்த முடியும். என் கைகள் குருதி படிந்தவை என்கின்றனர் உங்கள் சூதர். ஆம், என் ஆத்மா பழியின் களிம்பு படிந்தது. என் அன்னையின் ஆணையின்படி மேலும் மேலும் பழி கொள்ளவே என் காட்டிலிருந்து உங்கள் நகர்களுக்கு வந்தேன். என் பழி மண்மறைந்த குலங்களின் வஞ்சத்திலிருந்து எழுந்தது. அவர்களின் கண்ணீரிலிருந்து அனல்கொண்டது. ஆளவரவில்லை, இக்காட்டில் எரிமூட்டிவிட்டுப் போகவே வந்தேன்.”

“அது நிகழப்போவதில்லை” என்றார் இளைய யாதவர். “இங்கு தூய அறிதலின் வேதமே வாழும். விழைவுப்பெருக்கின் தொல்வேதங்கள் அழியும். அவை கவிஞரின் கனவுகளில் சொற்சிதறல்களாக மட்டுமே இனி எழும். அதற்குத் தடைநிற்பவர் பலியாவார்கள்.” ஜராசந்தன் கைகளைத் தட்டி வெறியுடன் நகைத்து “அச்சுறுத்துகிறீரா? நான் அறிவேன் என்னை எதிர்கொள்வதென்ன என்று. இளைய யாதவரே, நான் பிரலம்பனோ பாணாசுரனோ முஷ்டிகனோ நரகாசுரனோ அல்ல. இந்திரதபனோ, கேசியோ, காலயவனனோ, கம்சனோ அல்ல” என்றான்.

புன்னகையுடன் “ஆம், ஹிரண்யகசிபுவோ, ஹிரண்யாக்‌ஷனோ, ராவணனோ கூட அல்ல. ஆனால் அந்நிரையில் வருபவன்” என்றார் இளைய யாதவர். “அவர்களனைவருமே மானுடம் கட்டுப்படுத்தி மேலேறியவற்றை கட்டவிழ்க்க முயன்றவர்கள். ஒவ்வொரு யுகத்திலும் அவர்கள் எழுந்தபடியேதான் இருப்பார்கள். ஏனென்றால் புதையுண்ட மரம்போல தொல்வேதம் மானுடனுக்குள் உயிர்திமிறிக்கொண்டேதான் இருக்கும். அதற்கு முடிவிலாத முளைக்கணுக்கள். என்றேனும் ஒருநாள் அது எழுந்து புடவியை மூடக்கூடும். அன்று இங்கே அனைத்தும் அழியும். ஊழி எழும்.”

இளைய யாதவர் எழுந்து அணுகிவந்து மிகமெல்ல ஜராசந்தனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் “மகதரே, நான் அரக்கர்களிலோ அசுரர்களிலோ நாகர்களிலோ ஒருவனாகக் கூட பிறந்திருக்கலாம். அப்போதும் இச்சொற்களையே சொல்வேன் என்று உமக்கு உறுதியளிக்கிறேன். ஆம், உண்மை அதுவே. வெல்வது வெல்வதனாலேயே வெல்லும் தகுதி கொண்டது. காலத்தை இடத்தைக் கடந்து விண்ணிலென நின்று நோக்குபவர் அறிவது அதையே. இப்புடவி வல்லமைகளின் முடிவற்ற மோதலால் தன்னை நிகழ்த்துகிறது.”

“எது அரக்கர்களை வீழ்த்தியதோ அரக்கர்களுடன் அது மண்ணிலிருந்து மறைவதாக! எது அசுரர்களை அழித்ததோ அது அவர்களுடனேயே பழங்கதையாக மாறக்கடவதாக! எது நாகர்களை அழுத்தியதோ அது என்றென்றும் நம்முள் ஆழ்ந்தே கிடப்பதாக!” அவர் குரல் எங்கோ எவரோ செவிகொள்வதற்காக ஒலிப்பது போலிருந்தது. “இப்புவியில் மானுடம் வாழவேண்டும் என்றால் எது வெல்லத்தக்கதோ அது வென்றாக வேண்டும். கட்டின்றி விரியும் எதன் பொருட்டும் இப்புவியை ஒப்படைக்கலாகாது. ஏனெனில் இது மானுடர்க்கோ அரக்கர்க்கோ அசுரருக்கோ நாகருக்கோ உரித்தானதல்ல. புல்லுக்கும் புழுவுக்கும் புள்ளுக்கும் விலங்குக்கும் உரியது.”

அவர் பேசுகிறாரா, அல்லது அச்சொற்களை தன் உள்ளமே உருவாக்குகிறதா என ஜராசந்தன் வியந்தான். அவர் மிக அணுகி வரும்தோறும் அவர் முகமே காட்சியிலிருந்து மறைந்து சிவந்த இதழ்கள் மட்டுமே தெரிந்தன. திரும்பி பாண்டவர்களை நோக்கினான். அவர்கள் மிக அப்பால் நின்றிருந்தனர்.

இளைய யாதவரின் விழிகளில் சினமா வஞ்சமா களியாடலா என்றறியா ஒளி ஒன்று வந்தது. “இந்த எளிய மானுடர்களை மட்டும் எண்ணுவேன் என்று கருதினீரா? இதோ நெளியும் புழுக்களிலிருந்து எவ்வகையில் மானுடர் மேம்பட்டவர்? இங்கு ஒரு காலடிபட்டு அழியும் பல்லாயிரம் புழுக்களைக் கண்டு ஒருகணமும் துயருறாத மூடர்களே போர்க்களத்தில் மாயும் வீரர்களுக்காக காவியம் எழுதுகிறார்கள். எனக்கு உயிர்கள் எல்லாம் நிகரே. எவர் மீதும் அன்பும் வெறுப்பும் இல்லை. கருணையும் காழ்ப்பும் இல்லை. எவர் வெல்லவும் நான் நின்றிருக்கவில்லை. பிறந்து இறந்து கொன்று நின்று ஆடிமறையும் உயிர்களென்பவை வெறும் ஒற்றைப்பெருக்கு. இப்பெரும்சுழியின் மையத்தில் விரலிட்டு படையாழி என ஏந்தி நின்றிருக்கிறேன்.”

ஜராசந்தன் “நீங்கள்…” என்று கைசுட்டினான். பின்பு நடுங்கும் குரலில் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். அவன் செவிகளுக்குள் ஒலித்த குரலில் “எடைமாறி ஊசலாடும் பல்லாயிரம் கோடி துலாத்தட்டுகள் நடுவே அசைவுறாது நின்றிருக்கும் முள் ஒன்றுண்டு ஜரைமைந்தா” என்றார் இளைய யாதவர். ஜராசந்தனின் இரு தோள்களும் துடித்தன. கால்களை முன்னெடுத்து வைத்து “தாங்கள்…” என்றபின் திகைத்தவன்போல பின்னுக்கு வந்தான்.

கால்கள் வலுவிழக்க முழந்தாள் மடித்து மண்ணில் விழுந்து தலை ஊன்றி சரிந்தான். அவன் இரு கால்களும் கைகளும் துடித்து இழுத்துக்கொண்டன. பீமன் ஓடிவந்து அவனைத் தூக்கி எடுத்தான். அர்ஜுனன் ஓடையில் இருந்து இலையில் நீர்மொண்டு வந்து அவன் முகத்தில் அறைந்தான். ஜராசந்தனின் இரு கைகளும் வலிப்பு கொண்டு இழுபட்டன. பற்கள் கிட்டித்திருக்க இதழ்கள் கோணலாகி அதிர்ந்து கொண்டிருந்தன. வாயோரம் எச்சில் நுரை கொப்பளித்து வழிந்தது.

நீரை மும்முறை அறைந்தபோது இமைகள் துடித்து கண்கள் திறந்தன. விழிகளுக்குள் மறைந்திருந்த கருவிழிகள் மேலே எழுந்து வந்தன. மெல்ல கைகள் தளர உடல் குழைந்தது. இலையில் இருந்த நீரை அர்ஜுனன் அவனுக்கு ஊட்டினான். சில மிடறுகள் நீர் அருந்தியபின் கண்களை மூடி உடலெங்கும் பொடித்த வியர்வையுடன் ஜராசந்தன் படுத்திருந்தான். “மகதரே! மகதரே!” என்று பீமன் அழைத்தான். “என்ன நிகழ்ந்தது, யாதவரே? அவர் நிலைகுலையும்படி எதை சொன்னீர்கள்?” இளைய யாதவர் புன்னகை செய்தார்.

ஜராசந்தன் கண்களைத் திறந்து அவர்களை மாறி மாறி நோக்கியபின் “அவன்! அவன்!” என்றான். “மகதரே!” என்றான் அர்ஜுனன். “அவன்…” என்றபின் திரும்பி இளைய யாதவரை பார்த்தான். மெல்ல முழுமையாகத் தளர்ந்து கண்களை மூடினான். “ஜரையன்னையால் இணைக்கப்பட்டமையால் வலுவற்ற நரம்புகள் கொண்டவர். அவருக்கு வலிப்பு வருவதுண்டு என்று ஒற்றர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்றான் பீமன். “வலிப்பு வலுவான உளமயக்குகளை உருவாக்கும்” என்ற இளைய யாதவர் அர்ஜுனனிடம் “ஏவலரை அழையுங்கள். அரசரை மஞ்சத்திற்கு கொண்டுசெல்வோம்” என்றார்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 41

[ 12 ]

நாகவேதம் முழங்கிக்கொண்டிருந்த வேள்விச்சாலையிலிருந்து பிறர் நோக்கை கலைக்காது எழுந்து வெளியே சென்ற ஜராசந்தனின் நடை மாறுபட்டிருப்பதை அனைவரும் கண்டனர். காமிகர் அவனுடன் பணிந்தபடியே ஓடி அருகணையாமல் ஆணைகளுக்காக செவி காத்தார். ஜராசந்தனின் வலத்தோள் எழுந்து வலக்கால் சேற்றில் அழுந்தப்பதிந்திருந்தது. குடைக்காரன் அவனை அணுக அஞ்சி அகலே நின்று தயங்க அவன் மழைப்பீலிகளை ஊடுருவி நடந்தான்.

சைத்யகத்தின் நாகதெய்வமான அர்ப்புதனின் ஆலயத்தின் முகப்பில் அவன் நின்று மூன்றுதலை நாகம் படமெடுத்த முடிசூடி நின்றிருந்த நாகதேவனை கண்களைச் சுருக்கி நோக்கினான். அப்போதுதான் அவ்வாலயத்தை நோக்குபவன் போல. உள்ளிருக்கும் தெய்வத்துடன் விழிகளால் உரையாடுவதுபோல. அவன் திரும்பியபோது விழிகளில் பிறிதொருவன் எழுந்திருந்தான்.

அணுகி வணங்கிய காமிகரிடம் “ரிஷபரையும் தமாலரையும் மகாவீர்யரையும் உடனே என் அவைக்கு வரச்சொல்க!” என்றான். நெஞ்சு படபடக்க “ஆணை” என்றார் காமிகர். ஜராசந்தன் தேர்நிலை நோக்கி செல்லக்கூடுமென எதிர்பார்த்தார். அவன் அடுத்த நாகதெய்வத்தின் ஆலயம் நோக்கிச் செல்ல அவர் தேர்நிலை நோக்கி சென்று அங்கிருந்த வீரர்களிடம் அரசர் அவை புகவிருக்கிறார் என்றும், மூன்று நாகர்குலப் படைத்தலைவர்களும் எங்கிருந்தாலும் அவைக்கு வரவேண்டும் என்றும் ஆணையிட்டார். “விரைவில்… அவர்கள் எல்லை மலைகளில்தான் இருப்பார்கள். உடனே…” என்றார்.

ஜராசந்தன் சக்ரவாபி, ஸ்வஸ்திகன், மணிநாகன், கௌசிகன், மணிமான் ஆகியோரின் ஆலயங்கள் ஒவ்வொன்றிலும் நின்று வணங்கி மலர்கொண்டான். அவனிடம் எந்த விரைவும் வெளிப்படவில்லை. தலைநிமிர்ந்திருக்க குழல்சுருள்களிலிருந்து நீர்த்துளிகள் முகத்திலுதிர கைகளை வீசியபடி நடந்தான். தேர் வந்து நின்றதும் எடைமிக்க உடலை எளிதாக ஏற்றி தேர்த்தட்டில் கைகளை கட்டியபடி நிலைத்த விழிகளுடன் அசையாமல் நின்றான்.

நகர் வழியாக தேர் சென்றபோது அவன் மெழுகுடல்கள் நீர்ப்பெருக்குக்குள் திளைத்த தெருக்களை விழிகளால் தொட்டுத்தொட்டு சென்றான். அரண்மனை முகப்பில் தேர் நின்றபோது அக்குலுக்கலால் விழிப்படைந்து இறங்கி இளைப்பாறவோ உடைமாற்றவோ செய்யாமல் நேராக மந்தணஅவை நோக்கி சென்றான். அவனுடன் விரைந்து நடந்தபடி பெரும்படைத்தலைவனாகிய சக்ரஹஸ்தன் “ஏழுமுரசுகளை கிழித்தவர்களை பிடிக்க நகரெங்கும் படைகள் சென்றுள்ளன அரசே. நகரம் மழைவிழவில் பித்தெடுத்திருக்கிறது. அனைவரும் நெய்மெழுகுப்பூச்சுக்குள் இருக்கிறார்கள். இங்கே மானுடரை பிரித்தறிவது கடினம். அரண்மனை நோக்கிய அனைத்து வாயில்களிலும் கடுமையான காவலுக்கு ஆணையிட்டிருக்கிறேன். ஒற்றர்கள் நாழிகைக்கு ஒருமுறை அறிக்கையளிக்கிறார்கள்” என்றான். துணைப்படைத்தலைவர்களான சித்ரசேனரும் கௌசிகரும் உடன்சென்றனர்.

ஜராசந்தன் தன் பீடத்தில் அமர்ந்ததும் நீள்மூச்சுவிட்டு உடலை சற்றே சரித்து “நாகர்கள் எங்கே?” என்றான். காமிகர் மூச்சிரைக்க உள்ளே வந்து “வந்துகொண்டிருக்கிறார்கள் அரசே” என்றார். ஜராசந்தன் “இங்கு நிகழ்வன அனைத்தும் முறையாக அஸ்தினபுரியின் அரசருக்கும் சேதிநாட்டு சிசுபாலனுக்கும் சைந்தவனாகிய ஜயத்ரதனுக்கும் தெரிவிக்கப்பட்டாகவேண்டும். இது என் ஆணை!” என்றான்.

அவன் சொல்வதென்ன என்று புரியாமல் திகைத்தாலும் காமிகர் “ஆம், அரசே” என்றார். “எனக்குப்பின் என் மைந்தனுக்கு சித்ரசேனரும் கௌசிகரும் படைத்துணையாக அமையட்டும்” என்றான். காமிகர் தலைவணங்க “நான் இல்லை என்றாலும் அவ்வாணை உம்மை கட்டுப்படுத்தும் காமிகரே” என்றான்.

அறியாதெழுந்த உணர்ச்சியால் காமிகர் கண்ணீர் மல்கினார். “ஆம், அரசே. என் வாழ்க்கை உங்களுக்குரியது” என்றார். ஜராசந்தன் அவரை நோக்கவில்லை. காமிகர் வெளியே ஓடி இடைநாழியில் நின்றிருந்த ஏவலர்களிடம் “எங்கே நாகர்கள்?” என்று அதட்டினார். தன் உள்ளம் நெகிழ்ந்திருப்பதை மறைக்கவே அந்தச் சீற்றம் என உணர்ந்ததும் அந்த உளக்குழைவு எதற்காக என எண்ணிக்கொண்டார். அரக்கன் என்றல்லாது ஒருபோதும் அவர் ஜராசந்தனைப்பற்றி எண்ணியதில்லை.

‘அவன் செய்த அனைத்துப் பழிகளிலும் பங்கெடுத்திருக்கிறேன், அதனால்தான்’ என தன்பழிப்புடன் எண்ணிக்கொண்டார். ஆனால் உடனே தெரிந்தது அதனால் அல்ல என்று. அவன் முழுமையாக அவர் உள்ளத்தையும் கனவுகளையும் நிறைத்தவன். பல்லாண்டுகாலமாக அவனுடன் பிறிதிலாதிருந்தது அவர் வாழ்க்கை. உடனே உளம் அதிர அதை உணர்ந்தார். அவர் அவனாக ஒவ்வொரு கணமும் நடித்துக்கொண்டிருந்தார். கனவுக்கும் அப்பால் அவனாக இருந்தார்.

‘வல்லமை பெரும் ஈர்ப்புகொண்டது’ என்று அவருள் ஒரு சொல்தொகை எழுந்தது. அது எவ்வல்லமை என்றாலும் பெருவிசையுடன் மானுடரை ஈர்க்கிறது. இளைய யாதவனைச் சுற்றி எப்படி மானுடர் செறிந்திருக்கிறார்களோ அப்படித்தான் இந்த அரக்கனைச் சுற்றிலும் மானுடர் சேர்ந்திருக்கிறார்கள். அவன் ஆற்றல் அதனால் மேலும் வளர்ந்து மேலும் மக்களை ஈர்க்கிறது.

உடலெங்கும் பிழையாக நகையணிந்து சொல்திரளா நாவுடன் நகர்புகுந்த நாள்முதல் அவன் ஆற்றல் ஒருநாளும் குறைந்ததில்லை. அவன் ஆற்றிய ஒவ்வொரு பழிச்செயலும் அவனை நோக்கி மேலும் மக்களை ஈர்த்தன. அவன் ஆற்றல்கொண்டவனாக ஆகும்தோறும் பாதுகாவலன் என்னும் அவனுடைய தோற்றம் வலுப்பட்டது. மேலும் அவனை நம்பினர். மேலும் அவனை சார்ந்தனர்.

‘தந்தையும் தலைவனும் தண்டிக்கையில் மேலும் அன்பை பெறுகிறார்கள்’ என்று காமிகர் மேலுமொரு சொல்லை வந்தடைந்தார். அச்சொல்லாட்சிகளை எங்கேனும் சொல்லத்தான் வகுத்துக்கொள்கிறோமா என எண்ணியதும் புன்னகைத்தார். அப்புன்னகை வழியாக அந்த நெகிழ்வை கடந்துவந்தார்.

கொம்பொலிகள் எழுந்தன. ரிஷபர் தன் புரவியில் பாய்ந்து வந்து தாவி இறங்கி கடிவாளத்தை சூதனிடம் வீசிவிட்டு இடைநாழியில் ஏறியபோது பின்பக்கம் மேலும் இரு கொம்பொலிகள் எழுந்தன. தமாலரும் மகாவீர்யரும் இணைந்தே வந்தனர். “உங்களை அரசர் எதிர்நோக்கியிருக்கிறார் நாகர்களே” என்றார் காமிகர். ரிஷபர் மறுமொழி சொல்லாமல் அவைக்குள் சென்றார். தமாலரும் மகாவீர்யரும் வந்ததும் காமிகர் “வலப்பக்கம்” என்றார். அவர்கள் விழியசைவால் அதை ஏற்றனர்.

அவைநுழைந்த ரிஷபரிடம் ஜராசந்தன் “நம் நகருக்குள் அவர்கள் புகுந்துவிட்டனர்” என்றான். தொடர்ந்து வந்த தமாலர் “நான் அதை உணர்ந்தேன். நானே சென்று தேடினேன்” என்றார். மகாவீர்யர் “அவர்கள் தங்கள் வருகையை நமக்கு அறிவிக்க விழைந்துள்ளனர்” என்றார். காமிகர் கதவருகே நின்று கேட்டுக்கொண்டிருந்தார். தமாலர் “நாம் அவர்களை இங்கே எளிதில் பிடிக்கமுடியாது… இவ்விழவு நாம் நம் எதிரிகளுக்கு அளிக்கும் வாய்ப்பு. நம் படைத்திறன் மீதான நம்பிக்கையால் அனைத்து வாயில்களையும் திறந்து விட்டிருக்கிறோம்” என்றார். மகாவீர்யர் “நம் கோட்டையும் காமம் கொண்டிருக்கிறது என்பார்கள்” என்றார்.

வெளியே ஒற்றன் வந்து தயங்கினான். கதவிடுக்கின் ஒளியசைவாக அவனைக்கண்டு வெளியே சென்ற காமிகர் “என்ன?” என்றார். “சைத்யகத்தில் நுழைந்திருக்கிறார்கள்” என்றான் ஒற்றன். “யார்?” என அவர் அறியாது கேட்டுவிட்டார். “இப்போது அனைவருக்கும் தெரிந்துவிட்டது அமைச்சரே. இளைய பாண்டவர்களும் யாதவனும். அவர்கள் சைத்யகத்தின் நுழைவாயிலில் இரு காவல்நிலைகளை உடைத்தனர். வேள்விக்கூடத்திற்குள் புகுந்து அதன் கூரையை நொறுக்கினர். எரிகுளங்கள்மேல் மழை விழுந்து அனல்கருத்தது. நாகவைதிகரை அறைந்து சிதறடித்தான் பீமன். அர்ஜுனனின் அம்புகளால் நம் வீரர்கள் விழுந்துகொண்டே இருந்தனர். அப்பால் ஒரு மரத்தடியில் கைகளைக்கட்டியபடி யாதவன் நோக்கி நின்றிருந்தான்.”

“எதிர்நிற்க இயலாமல் நம் வீரர்கள் இளவரசரை இழுத்துக்கொண்டுசென்று காட்டுக்குள் ஓடி தப்பினர்” என்று ஒற்றன் தொடர்ந்தான். “வேள்வி நிறுத்தப்பட்ட செய்தியை இன்னமும் நகரம் அறியவில்லை. ஆனால் அங்கே ஏராளமான வீரர்கள் இருந்தனர். அவர்கள் நாவை எவரும் அடக்கமுடியாது. நாளை காலை நகரமே செய்தியை அறியும். பாரதவர்ஷமே ஒருநாளைக்குள் அதை பேசவும் தொடங்கும்.”

காமிகர் “அவர்கள் எங்கே?” என்றார். “அங்கிருந்து மறைந்துவிட்டனர். காட்டுக்குள் பெருமழை இறங்கிக்கொண்டிருக்கிறது. கைநீட்டும் தொலைவுக்கு அப்பால் ஏதும் தெரியவில்லை” என்றான் ஒற்றன். காமிகர் பெருமூச்சுவிட்டார். சரி என கையசைத்து அவனை அனுப்பிவிட்டு உள்ளே சென்றார்.

அவர் முகத்தை நோக்கியதுமே ஜராசந்தன் இயல்பான முகத்துடன் “சைத்யகத்திற்கா சென்றார்கள்?” என்றான். அவன் இயல்புநிலையை அறிந்திருந்தமையால் “ஆம்” என்றார் காமிகர். “இளவரசர் பாதுகாப்பாக இருக்கிறார்” என்று உடனடியாக சேர்த்துக்கொண்டார். ஜராசந்தனின் பற்கள் அரைபடும் ஒலியை உடல்கூசும்படி கேட்டார். கைகளை இறுக்கி தன் பீடத்தில் அறைந்து தலையை அசைத்தான். சிவந்த விழிகளுடன் நிமிர்ந்து “ஷத்ரிய அரசர்களில் ஐவரை கோட்டை முகப்பில் கொண்டுசென்று தலைகொய்யுங்கள்” என்றான்.

“ஆணை!” என்றார் தமாலர். “அவர்களின் தலைகள் நம் கோட்டைமேல் ஈட்டிகளில் குத்தி வைக்கப்படட்டும்” என்றபடி எழுந்துகொண்டான். புன்னகையுடன் ஒருவரையொருவர் விழிநோக்கியபடி நாகர்கள் திரும்பினர். காமிகர் பதைப்புடன் “அரசே…” என்றார். கடும் வலிகொண்டவனுடையவை போலிருந்தன ஜராசந்தனின் விழிகள். “என்ன?” என்றான். “அரசே, அவர்கள் நம் சிற்றரசர்கள்.” ஜராசந்தன் “நம்மை எதிர்க்க எண்ணியபோதே அவர்களை நான் கொல்வது உறுதியாகிவிட்டது” என்றபின் நாகர்களிடம் “நாளை சைத்யகத்தில் எஞ்சிய ஷத்ரியர்களை தலைகொய்து பலியிடுவோம் என்று முரசுகள் அறையப்படட்டும்” என்றான்.

[ 13 ]

தன் மஞ்சத்தறை நோக்கி செல்லச்செல்ல ஜராசந்தன் உடல்தளர்ந்து களைப்படைந்தான். கதவைத் திறந்த ஏவலன் வழிவிட உள்ளே சென்று மஞ்சத்தின் கால்கள் ஓசையிட சேக்கைமேல் விழுந்து கைகளை விரித்து மேல்மச்சின் பலகைப்பரப்பை நோக்கியபடி படுத்திருந்தான். ஏவலன் ஆணைக்காகக் காத்திருந்தபின் மெல்ல கதவை மூடி பின்னகர்ந்தான்.

துயிலுக்கும் அரைவிழிப்புக்கும் நடுவே இமை சரியாமல் விழி அசையாமல் படுத்திருந்தான். வெளியே மரப்பட்டைக்கூரையை அறைந்து விளிம்புகளில் சொரிந்துகொண்டிருந்தது மழை. அதை கேட்கக் கேட்க அணுகி வந்து அவனைச் சூழ்ந்தது. அதை மட்டுமே கேட்கத்தொடங்கி அதையன்றி பிறிதை உளமறியாதாகி அதுவென்றே ஆகி மயங்கிச்சென்ற ஒரு கணத்தில் அவன் அம்மழையின் ஒவ்வொரு துளியொலியையும் தாரொலியையும் தனித்தனியாக கேட்டான்.

பின்பு விழித்தெழுந்தபோது அவன் உடல் முற்றிலும் இளைப்பாறியிருந்தது. உள்ளம் அப்போது கழுவப்பட்ட பளிங்காடி என அனைத்தையும் உள்வாங்கி தானாகி தானற்றிருந்தது. அவன் புன்னகை நிறைந்த முகத்துடன் எழுந்து வெளியே வந்தான். அங்கே காமிகர் நின்றிருந்தார். “ம்” என்றான். “சுபலநாட்டரசர் பிரபோதரையும், மச்சநாட்டு சூரசேனரையும், மல்லநாட்டரசர் சுதேவரையும், விபூத நாட்டு விஸ்வசேனரையும், பூகர்த்த நாட்டு பார்ஸ்வசேனரையும் கோட்டைச்சதுக்கத்தில் வைத்து தலையரிந்தார்கள். அவர்களின் தலைகள் கோட்டைமுகப்பில் நிரையாக ஈட்டிமுனைகளில் நின்றுள்ளன.”

காமிகரின் விழிகளை நோக்கி புன்னகைசெய்து “நன்று” என்றான் ஜராசந்தன். காமிகர் தலைவணங்கி “பிறிதொரு செய்தி அரசே. நம் அரண்மனையின் அயலக பிராமணர்களுக்குரிய மாளிகைக்கு மூன்று ஸ்நாதகர் வந்துள்ளனர். ஒருவர் பேருடலர். இருவர் கரியவர்” என்றார். காமிகரின் விழிகளை சந்தித்தபின் அதே புன்னகையுடன் “நள்ளிரவிலா?” என்றான். காமிகர் “ஸ்நாதகர் எப்போதும் வரலாமென்று நெறியுள்ளது” என்றார். “ஆம். அவர்களுக்குரிய அனைத்து முறைமைகளையும் செய்க!” என்று ஜராசந்தன் சொன்னான்.

இருளில் சென்று கைப்பிடியை பற்றியபடி உப்பரிகையில் நின்று நகரை நோக்கிக்கொண்டிருந்தான். நீராலான காட்டுக்குள் எங்கிருந்தென அறியாமல் ஒளி பரவியது. கோட்டையின் முகப்பிலிருந்த காவல்மாடத்தில் புலரிமுரசுகள் மிகமெல்ல முழங்கின. கொம்பொலி பலவகையில் சிதறி திசைசுழன்று வந்தது. அரண்மனையில் இருந்த சிற்றாலயங்களிலெல்லாம் கொம்புகளும் முழவுகளும் மணிகளும் ஒலிக்கத்தொடங்கின.

ஏவலன் வந்து அருகே நின்றிருந்ததைக் கண்டு விழி திருப்பினான். நீராட்டறைக்குச் சென்று காலையாடி அரசணிக்கோலத்தில் அவன் தன் பேரவைக்கு வந்தபோது அங்கே அமைச்சர்களும் படைத்தலைவர்களும் மட்டும் காத்திருந்தனர். விழவு எழுந்துவிட்டிருந்தமையால் குடிமக்களிலிருந்து எவரும் வந்திருக்கவில்லை.

சகதேவன் அவைக்கு வந்தபோது அனைவரும் அவனை நோக்கியபின் விழியகற்றினர். அவன் ஒரேநாளில் பல ஆண்டு முதுமைகொண்டவன் போலிருந்தான். கண்கள் சோர்ந்து முகம் வெளுத்திருந்தது. “தந்தையே, வணங்குகிறேன்” என்று அவன் சொன்னதும் ஜராசந்தன் அவனை அருகே வரும்படி கைநீட்டி அழைத்தான். அவன் அருகணைந்ததும் அவன் தோள்களைத் தழுவி “அஞ்சிவிட்டாயா?” என்றான். அவன் ஒன்றும் சொல்லவில்லை.

“அஞ்சவேண்டியதில்லை. என் மைந்தன் நீ” என்றான் ஜராசந்தன். சகதேவன் தலைகுனிந்து “நேற்று அன்னை சொன்னார், அதனால்தான் நான் அஞ்சவேண்டும் என்று. பாரதவர்ஷத்தில் பெருவீரர் அனைவருமே என்னைக் கொல்லும் வஞ்சினம் உரைத்திருக்கிறார்கள் என்றார்” என்றான். ஜராசந்தன் உரக்க நகைத்தான். “அதுவே ஒரு சிறப்பல்லவா அரசனுக்கு?” என்றான்.

“தந்தையே, நான் நேற்று கோட்டை முகப்பில் ஐந்து அரசர்களின் தலைகளை கண்டேன்” என்றான் சகதேவன். “முடிசூடி அரியணை அமர்ந்தவர்கள்தான் அவர்களும். என் தலையும் அதைப்போல ஏதோ கோட்டைமேல் அமர்வது உறுதி என நினைத்தேன். நான் எளியவன். படைநடத்தவோ களம்நின்று போரிடவோ ஆற்றலற்றவன். அரசுசூழ்தலறியாதவன்.”

அவன் குரல் சற்றே சீற்றம் கொண்டெழுந்தது. “நீங்கள் எனக்கு அரசைமட்டும் அளித்துச்செல்லவில்லை, தந்தையே. நீங்கள் ஈட்டிய பகைகள் அனைத்தையும் அளித்துச்செல்கிறீர்கள்…” அவன் உடனே தளர்ந்து பெருமூச்சுவிட்டான். “பெரும்பழிகளை எனக்கென விட்டுச்செல்கிறீர்கள். ஆனால் அதை நான் பெற்றுக்கொள்வதே முறை. ஏனென்றால் நான் உங்கள் குருதியிலிருந்து முளைத்தவன்.”

“நான் அனைத்துக்கும் ஈடுசெய்கிறேன். நீங்கள் தோற்காத களங்களில் எல்லாம் நான் தோற்கிறேன். உங்களுக்காக குருதியும் கண்ணீரும் கொடுக்கிறேன். மைந்தன் என உங்களுக்குப் புகழும் பெருமிதமும் ஈட்டியளிக்க இயலாதவன். உங்களுக்கென இதைமட்டும் நான் அளிக்க இயலும். இளமையிலேயே நோயில் விழுந்து உடலும் உள்ளமும் உரம்பெறாது நான் வளர்ந்தமை இதற்காகத்தான்போலும்.”

காமிகர் ஏதோ சொல்ல வாயெடுக்க ஜராசந்தன் கையசைத்து அவரைத் தடுத்து “உன் சொற்கள் அனைத்தும் உண்மைதான், மைந்தா. வல்லமை வாய்ந்த தந்தையர் எளிய மைந்தரையே விட்டுச்செல்கிறார்கள்” என்றான். “முளைஎழும் செடிமேல் பாறை என உன்மேல் படிந்திருந்தேன் போலும். நீ என் பிழைகளில் முதன்மையானது போலும்…”

ஜராசந்தன் தலைகுனிந்தான். கடுமையாக ஏதோ சொல்லிவிட்டோமோ என எண்ணி சகதேவன் பேசத் தொடங்குவதற்குள் “ஆனால் நான் அறிந்து உனக்கு ஏதும் பிழை செய்யவில்லை. உன்னிடம் முற்றிலும் கனிவதன் வழியாகவே நான் அனைத்துக் கொடுமைகளையும் ஈடுசெய்தேன். உன்னை அணைக்கும்போது மட்டுமே அன்னையென்று உணர்ந்தேன். முலையூற முற்படும் கணமே ஆணுக்கு மண்ணில் பேரின்பம் அமைகிறது. உன் மைந்தனை கையிலெடுக்கையில் அதை அறிவாய்” என்றான்.

காமிகர் அவையினரை மாறிமாறி பார்த்தார். அச்சொல்லாடல் அங்கே நிகழ்வதை அவர் விரும்பவில்லை. அக்கண்களில் எவற்றிலேனும் இளிவரலோ நகையோ தெரிகிறதா என்று அவர் உள்ளம் பதைத்தது. ஜராசந்தன் மீண்டும் மைந்தனின் தோளை தழுவிவிட்டு கை எடுத்த தருணத்தை பயன்படுத்தி உள்ளே நுழைந்து “அரசே, இன்று நமக்கு அலுவல்கள் மிகுதி. விழவின் பதின்மூன்றாவது நாள் இது. நாளை சதுர்த்தசியில் விழவு நிறைவு…” என்றார்.

“ஆம், அவை நிகழ்க!” என்றான் ஜராசந்தன். அவைமுகமன்கள் முடிந்ததும் காமிகர் நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளைப்பற்றி சொன்னார். “மகதத்தின் வரலாற்றில் முதன்முறையாக குலமுரசு கிழிக்கப்பட்டுள்ளது, வேள்வி தடைபட்டிருக்கிறது. அதைச் செய்தவர்களைப் பிடிக்க நம் படைகள் நகரை சூழ்ந்துள்ளன. பிடித்து அரசர் முன் கொண்டுவந்து நிறுத்த அனைத்துப் படைகளுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது” என்றார் காமிகர். தலைமைப்படைத்தலைவர் சக்ரஹஸ்தனும் நாகர்படைத்தலைவர்களான ரிஷபரும் தமாலரும் மகாவீர்யரும் கைகள் கட்டி தோள் தணிந்து நின்றனர். அனைவருக்கும் அனைத்தும் தெரிந்திருந்தது. அனைவரும் காத்திருந்தனர்.

சாளரத்துக்கு அப்பால் மழைச்சரடுகள் பளிங்கொளி கொண்டிருந்தன. கூரையின் ஓசை செவிகளை சூழ்ந்திருந்தது. தொடர்மழையால் அனைத்து சுவர்ப்பரப்புகளும் ஈரம்படர்ந்து சிலிர்த்து குளிரை உமிழ்ந்தன. அனைவரும் சால்வைகளை நன்றாகப் போர்த்தியிருந்தாலும் காற்றில் பிடரியும் தோளும் சிலிர்த்துக்கொண்டிருந்தன.

ஏவலன் வந்து சிற்றமைச்சர் புராவதரிடம் ஸ்நாதக பிராமணர்கள் அரசரை பார்க்கவிழைவதை அறிவித்தான். அவர் காமிகரிடம் ஓடிவந்து மெல்ல அதைச்சொல்ல அவர் ஜராசந்தனை பார்த்தார். அவர் சொல்லவா வேண்டாமா என்று உளம் ஊசலாடும்போதே சிறிய விழியசைவால் ஜராசந்தன் ஆணையிட்டான். “வரச்சொல்க!” என்றார் காமிகர்.

முப்பத்தெட்டு ஸ்நாதக பிராமணர்கள் வரிசையாக வேதம் முழங்கியபடி அவை நுழைந்தனர். அவர்களில் முன்னால் வந்தவர் “மகதத்தில் வேதம் தழைக்கட்டும். மன்னன் கோல் அதற்கு காவல் நிற்கட்டும். மழைபொழிந்து நிலம் செழிக்கட்டும். அவன் முடி ஒளிகொள்க! அவன் கருவூலம் மறுகால் பெருகுக! அவன் புகழ் பொன்னெழுத்தாகுக! ஓம் அவ்வாறே ஆகுக!” என்றார்.

ஜராசந்தன் எழுந்து கைகூப்பி அவர்களை வணங்கி “ஸ்நாதக பிராமணர்களை மகதத்தின் அரசும் அவையும் குடிநான்கும் தலைவணங்குகின்றன. தங்கள் சொற்கள் இந்நகரில் பொன்விதைகளாக விழுக!” என்று முகமன் உரைத்தான். அவர்கள் அரிமலரிட்டு வேதமோதி அவனை வாழ்த்தினர். ஜராசந்தன் “நீங்கள் அயலக பிராமணர் என உய்த்தறிகிறேன். ஆரியவர்த்த அந்தணர் இந்நகருக்கு அருள்வதில்லை” என்றான்.

முதல் ஸ்நாதக பிராமணர் “ஆம், அதை இங்கே வந்தபின் அறிந்தோம். ஆனால் ஸ்நாதக பிராமணர்களுக்கு ஏதும் விலக்கல்ல. நாங்கள் வேள்வித்தொழில் செய்ய இங்கே வரவில்லை. குருகுலக்கல்வி முடித்தபின் இல்லறம் கொள்வதற்கு முன் வாழ்க்கை என்றாலென்ன என்று காணும்பொருட்டு பயணம் செய்பவர்கள் நாங்கள். அறிவு என்பது எவ்வகையிலும் நன்றே” என்றார். இரண்டாவது ஸ்நாதக பிராமணர் “நாங்கள் வேதங்களால் அனைத்தையும் எரித்துக் கடக்கமுடியும் அரசே” என்றார்.

“நன்று நன்று” என ஜராசந்தன் உரக்க நகைத்தான். “இங்கே நீங்கள் அறியவேண்டுவனவும் கடக்கவேண்டுவனவும் பேருருக்கொண்டு நின்றிருக்கக் காண்பீர்கள். மானுட நால்வேதத்தைப் பயின்றவர் எவராயினும் இங்கு வந்து வேதமென்பதன் வியனுருவைக் கண்டு தெளிந்தாலன்றி மெய்மையை நோக்கி செல்லவியலாது.” மேலும் சிரித்து “அதை நான் வேதத்தின் விழைவுருவம் என்றும் சொல்லத்துணிவேன்” என்றான்.

ஜராசந்தன் கைகாட்ட ஏவலர் பரிசில் தட்டுகளுடன் வந்து நிரைவகுத்து நின்றனர். ஜராசந்தன் எழுந்து நின்று அணுகிவந்த ஸ்நாதக பிராமணர்களை முடிதாழ்த்தி வணங்கி கையில் தர்ப்பைப்புல் கணையாழி அணிந்து பரிசில் தட்டை கீழே வைத்து அவர்களின் கை மேலிருக்கும்படி அளித்தான். அவர்கள் வேதச்சொல்லுடன் அதை பெற்றுக்கொண்டனர். அவை முறைமைக்குரிய வாழ்த்தொலிகளை எழுப்பியது.

அனைவர் விழிகளும் ஸ்நாதக பிராமணர் தோற்றத்தில் பின்னால் வந்த பீமனையும் அர்ஜுனனையும் இளைய யாதவரையுமே நோக்கிக்கொண்டிருந்தன. ஸ்நாதக பிராமணர்கள் மட்டுமே அங்கு நிகழ்வதை அறியவில்லை. ஒவ்வொருவராக வந்து பரிசில் பெற்றுச்செல்ல அவர்கள் மூவர் மட்டும் எஞ்சினர். முதலில் வந்த இளைய யாதவர் “ஓ மகதரே, உம் அரசை நான் வாழ்த்துகிறேன்” என்றார். ஜராசந்தன் புன்னகையுடன் “முழுவாழ்வுக்கு சொல்லளிப்பது அந்தணர் முறைமை” என்றான். “அறம் ஒன்றே முழுவாழ்வுக்கு உறுதியளிக்கமுடியும். வேதமும் அறத்திற்குக் கட்டுப்பட்டதே” என்றார் இளைய யாதவர்.

ஜராசந்தன் ஏவலனிடமிருந்து தாலத்தை வாங்கி இளைய யாதவருக்கு அளித்தான். இளைய யாதவர் அதிலிருந்து வெற்றிலைபாக்கை மட்டும் எடுத்துக்கொண்டு “நாங்கள் நகர்நோக்க வந்தவர்கள். பரிசில்கொள்வது எங்கள் குருமரபால் ஏற்கப்படவில்லை” என்றார்.

ஜராசந்தன் புன்னகைத்து “நன்று. அறம்நிற்கும் அந்தணர் எந்நகருக்கும் அணிகளே” என்றான். “நீங்கள் நள்ளிரவில் வந்ததை ஏவலர் சொல்லி அறிந்தேன். ஸ்நாதக பிராமணர் எவரும் இன்றுவரை நீங்கள் வந்த கோலத்தில் நகர்புகுந்ததில்லை. உடலெங்கும் தைலப்பூச்சு பூசியிருந்தீர்கள் என்றும் கழுத்தில் மலர்மாலைகளை அணிந்திருந்தீர்கள் என்றும் சொன்னார்கள்” என்றான். “ஒருவர் தலையில் மயிற்பீலி சூடியிருந்தால் மேலும் பொருத்தமாக இருந்திருக்கும். அது களியாட்டின் அடையாளம் அல்லவா?”

இளைய யாதவர் மாறா புன்னகையுடன் “அரசே, ஸ்நாதக பிராமணர் என்பவர்கள் குருகுல நெறிகளிலிருந்து விடுபட்டவர்கள். வைதிகநெறிகளுக்குள் நுழையாதவர்கள்” என்றார். “அவர்கள் போர்த்தொழிலும் பழகலாமென எண்ணுகிறேன்” என்று சொன்ன ஜராசந்தன் கைசுட்டி அர்ஜுனனின் தோளின் தழும்புகளை சுட்டிக்காட்டி “அந்தணர்களில் விற்தொழிலர் குறைவென்பது சூதர்களின் கூற்று. துரோணருக்கும் கிருபருக்கும் பின்பு ஒரு பெரும்வில்லவர் எழுந்திருப்பதை இன்னமும் அவர்கள் அறியவில்லை” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் “விற்கலையும் வேதமே” என்றான்.

“நன்று, நான் தங்களுக்கு அளிக்கவேண்டிய கொடை என ஏதும் உள்ளதா?” என்று ஜராசந்தன் கேட்டான். “நீங்கள் எண்ணியதுபோல எங்கள் வேதக்கல்வியில் போர்க்கலையும் உண்டு. எங்களில் ஒருவருடன் நீங்கள் போர்புரியவேண்டும். வில்லோ படையாழியோ கதையோ நீங்கள் தெரிவுசெய்யலாம்” என்றார் இளைய யாதவர். “மகதரிடம் போரிட்டோமெனும் நற்பெயர் எங்களுக்கு பாரதவர்ஷமெங்கும் அடையாளமாகட்டும்.”

“நான் மற்போரையே விரும்புகிறேன். தோள்களைப்போல அணுக்கமான படைக்கலங்கள் பிறிதில்லை. ஏனென்றால் அவற்றுக்குள் நம் குருதி பாய்கிறது” என்றான் ஜராசந்தன். “எங்களில் மற்கலை வீரர் இவர். கஜபாகு என அழைக்கப்படுகிறார்” என்றார் இளைய யாதவர். விழிகளில் சிரிப்பு ஒளியாக நின்றிருக்க “அவர் தோள்களில் அவ்விழைவு தெரிகிறது” என்றான் ஜராசந்தன். “ஆம், இங்கே மழைவிழவின் பெருங்களியாட்டிலாட எண்ணுகிறார்” என்று இளைய யாதவர் சொன்னார்.

ஜராசந்தன் “நான் களியாட்டுகளில் மக்கள் நடுவே வெறுமனே நகையாட்டுக்கென தோள்கோப்பதில்லை. இறப்புவரை போர் என்றால் மட்டுமே இறங்குவேன்” என்றான். “ஆம், அதன்பொருட்டே வந்துள்ளோம்” என்றார் இளைய யாதவர். ஜராசந்தன் மேலும் பேசுவதற்குள் காமிகர் உள்நுழைந்து “ஸ்நாதக பிராமணர்களே, இங்கல்ல, எங்குமுள்ள மற்போர்நெறி ஒன்றே. களியாட்டில் நிகழும்போர்களில் வஞ்சமும் சினமும் சற்றும் இருக்கலாகாது” என்றார். “வஞ்சம் போர்க்களங்களில் மட்டுமே ஒப்பப்படுகிறது. இவ்விழாநகர் தேவர்கள் விளையாடும் நிலம்.”

“ஆம், அது உண்மை” என்றார் இளைய யாதவர். “அதை இப்போதே நோக்கிவிடுவோம்” என்ற காமிகர் திரும்பி ஓர் ஏவலனை நோக்கி சென்று அவனிடம் ஆணையிட்டார். அகன்ற யானம் ஒன்று கொண்டுவரப்பட்டு அதில் நுனிததும்ப நீரூற்றப்பட்டது. “தரங்கபிரஸ்னம் என இதை நூலோர் அழைக்கிறார்கள். இதைத் தொடுபவர் சினமற்றவர், வஞ்சம் அறியாதவர் என்றால் இது அவரது உள்ளம்போலாகும். இதன் நீர் ஒருதுளியும் ததும்பாது” என்றார். “முதலில் அறைகூவல் விடுக்கும் மல்லர் இதை தொடுக!”

புன்னகையுடன் பீமன் எழுந்து வந்து அணுகி யானத்தின் அலையற்ற நீர்வட்டத்தின் நடுப்புள்ளியை தொட்டான். நீர் அசைவற்று பளிங்குபோலிருந்தது. அமைச்சர் இருவர் குனிந்து நீர் ததும்புகிறதா என்று நோக்கினர். “நீர் சினமும் வஞ்சமும் அற்றவர், வீரரே. நன்று. உமது அழைப்புக்கு அரசரும் அவையும் செவிசாய்க்கிறது” என்றார் காமிகர்.

இளைய யாதவர் “அந்நீர்ப்பரப்பை அரசரின் விரலும் தொடக்காண விழைகிறேன்” என்றார். அனைவரும் ஜராசந்தனை நோக்க அவன் வணங்கி எழுந்து அணுகி வந்தான். அவை முழுக்க மெல்லிய உடலசைவு உருவாகியது. ஜராசந்தன் குனிந்து இடக்கையை நீட்டி நீர்மையத்தை தொட்டான். நீர்ப்பரப்பு சுடர்கதிர் விழுந்ததுபோல மெல்ல ஒளிகொண்டது. அறியாது அனைவரும் மேலிருந்து அதில் ஒளிபடுகிறதா என்று அண்ணாந்து நோக்கினர். ஜராசந்தன் கையை எடுத்துக்கொண்டதும் நீர்ப்பரப்பு அணைந்தது. புன்னகையுடன் அவன் பீமனை நோக்கி “நான் சினமோ வஞ்சமோ கொண்டிருக்கவில்லை, அந்தணரே. மாறாக, உங்கள்மேல் பெருங்காதலே கொண்டிருக்கிறேன்” என்றான்.

இளைய யாதவர் புன்னகையுடன் “ஆம், அதை அறிந்தே இந்நகருக்கு வந்தோம். அரசே, பருப்பொருட்கள் பிரம்மத்தால் பொருளேற்றம் செய்யப்பட்டவை. மானுடன் அறிந்தும் அறியாமலும் அவற்றின் சாரமென உறைவது அதுவே. மானுடன் தன் உள்ளமைந்த சாரத்தால் பருப்பொருட்களின் சாரத்தை சற்றே அறிகிறான். அவ்வறிவால் மீண்டும் அறியமுயன்று அறிவு அளிக்கும் பொய்த்தோற்றத்தையே அப்பொருட்களென அறியத் தொடங்குகிறான்” என்றார். “தசை என்னும் பொருளின் சாரம் அதை ஏந்தும் மானுடனுக்குரியதல்ல. அப்பொருளில் உறையும் அது இணையவும் தழுவவுமே விழைகிறது.”

ஜராசந்தன் இரு கைகளையும் விரித்து பீமனை அழைத்தான். பீமனும் இருகைகளையும் விரித்து அருகே சென்றான். இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக்கொண்டனர். ஜராசந்தன் பெருமூச்சுடன் “நிகரென அமைந்த தோளொன்றைத் தழுவுகையில் முழுமைகொள்கிறேன், வீரரே. முன்பு அஸ்தினபுரியின் அரசரை புல்கியபோது அப்பேறைப் பெற்றேன். இன்று மீண்டும் ததும்புமளவுக்கு நிறைந்தேன்” என்றான்.

பீமன் குனிந்து ஜராசந்தன் கால்களைத் தொட்டு “அரசே, மூத்த மல்லர் என்னும் நிலையில் உங்கள் வாழ்த்துக்களை கோருகிறேன்” என்றான். ஜராசந்தன் முகம் கனிந்தது. குனிந்து அவன் தலையைத் தொட்டு “நலம் திகழ்க!” என்றான். அடுத்த சொல் அவனை மீறியதென வெளிவந்தது. “வெற்றி கொள்க!”

மகதத்தின் அவை நின்ற அனைவருமே அவர்கள் மீது அச்சொல் விசையுடன் விழுந்ததுபோல் உணர்ந்து உடலதிர்ந்தனர். காமிகர் அறியாது இருகைகளையும் கூப்புவதுபோல நெஞ்சோடு சேர்த்துக்கொண்டார். சகதேவன் சக்ரஹஸ்தரை அணுகி அவர் தோளை நடுங்கும் கையால் பற்றிக்கொண்டான்.

ஜராசந்தன் “வைதிகரே, என் மைந்தனை நீங்கள் வாழ்த்தியருள வேண்டும்” என்றான். அவன் திரும்பி கைநீட்ட சகதேவன் கைகூப்பியபடி வந்து இளைய யாதவர் முன் நின்றான். “மைந்தா, நிகரற்ற ஆற்றல் கொண்டவர்களும் அறம் அறிந்தவர்களும் சொல்லில் வாழ்பவர்களுமான இந்த ஸ்நாதக பிராமணரை வணங்கி அருள்பெறுக!” என்றான் ஜராசந்தன்.

சகதேவன் குனிந்து இளைய யாதவர் கால்களைத் தொட்டு வணங்கினான். “எந்நிலையிலும் உங்களுடன் என் அருள் திகழும் இளவரசே” என்றார் இளைய யாதவர். ஜராசந்தன் புன்னகைத்து “அது போதும். அது பேரரசுகளும் பெருவீரர்களும் துணைநிற்பதற்கு நிகர்” என்றான். சகதேவன் பீமனை வணங்க அவன் மைந்தனைத் தூக்கி நெஞ்சோடணைத்து “நீடு வாழ்க!” என்றான். அர்ஜுனன் அவன் குழலை கைகளால் வருடி “அரசச் சிறப்புறுக!” என்றான்.

ஜராசந்தன் காமிகரிடம் “முறையறிவிப்பு எழட்டும் அமைச்சரே. நாளை ஊர்மன்றில் இந்த ஸ்நாதக பிராமணருடன் நான் தோள்கோக்கிறேன். இறப்புவரை போர் நிகழும்” என்றான். காமிகர் தலையசைத்தார்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 40

[ 10 ]

ஜராசந்தன் மகதத்தின் செங்கோலை  ஏந்தி அருகமைந்த நாடுகள்மேல் மேல்கோன்மை கொண்டபின்னர் ஒருநாள் தன் படைக்கலப்பயிற்சிநிலையில் அரசுத்துணைவர்களான விதர்பத்தின் ருக்மியும், சேதியின் சிசுபாலனும், பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தனும்,  புண்டரத்தின் வாசுதேவனும் சூழ கதை சுழற்றிக்கொண்டிருக்கையில் பெருந்தோளராகிய பகதத்தன் தன் கதையைச் சுழற்றி நெடுந்தொலைவுக்கு வீசினார். பின் ஒவ்வொருவரும் கதையை சுழற்றிவீசி விளையாடினர். “உங்கள் முறை மகதரே” என்றான் சிசுபாலன். ஜராசந்தன் தன் கதையைத் தூக்கி வீச அது பெருமதிலைக் கடந்து அப்பால் சென்று குறுங்காட்டில் விழுந்தது.

அச்செய்தியை அன்று அவையில் பாடிய சூதராகிய வராகர் “ஆரியவர்தத்தின் ஐம்பத்தாறு நாடுகளிலும் சென்று விழுந்தது அந்த கதாயுதம். அதை அசைத்து எடுத்து திருப்பிவீசும் வல்லமை எவருக்குமிருக்கவில்லை” என்று பாடினார். அவையிலிருந்த அரசர்கள் நகைத்தனர். அந்நகைப்பில் கலந்துகொண்டு தானும் நகைத்த ஜராசந்தனின் சிறியவிழிகள் சற்றே சுருங்கின. அன்று மாலையே தன் படைத்தலைவர்களான ஹம்சனையும் டிம்பகனையும் அழைத்து அந்த கதாயுதத்தை தேரிலேற்றி படைகளுடன் தன்னைச் சூழ்ந்த நாடுகளுக்கெல்லாம் கொண்டுசெல்ல ஆணையிட்டான்.

கதாயனம் என்று புலவர் அழைத்த அப்பயணம் நான்காண்டுகாலம் நடைபெற்றது. அதன் பொருளென்ன என்று அனைவரும் அறிந்திருந்தாலும் அது ஒரு விளையாட்டு எனக் கொண்டு நகையாடியபடி திறைசெலுத்தி திருப்பியனுப்பினர். சூழ்ந்திருந்த நாடனைத்தும் மகதத்திற்கு அடிப்படுவதை பிற ஷத்ரியர் திகைப்புடன் நோக்கியிருந்தனர். முதலில் மகதம் நுழைந்த நாட்டில் அரசமாளிகை எரிக்கப்பட்டது. அரசகுலத்தவர் முற்றாக கொன்றொழிக்கப்பட்டனர். கோட்டைகள் யானைகளால் இடித்து அழிக்கப்பட்டன. கருவூலம் சூறையாடப்பட்டது. பன்னிருநாட்கள் நடந்த எரிபரந்தெடுத்தலில் முனிவரும் அந்தணரும் கவிஞரும் சூதரும் சிற்பியரும் மட்டுமே உயிரும் மதிப்பும் அளிக்கப்பட்டனர். பெண்டிருக்கு சிறுதீங்கும் நிகழலாகாதென்று ஜராசந்தனின் ஆணை இருந்தது.

மழைக்குமுன் குளிர் என அச்சம் ஜராசந்தனின் படைகளுக்கு முன் சென்றது. உள்ளம் தோற்கடிக்கப்பட்ட படைகளின் உடல்களை அரிந்து வீழ்த்தினர் ஹம்சனும் டிம்பகனும். ஒவ்வொருநாளும் பலநூறுபேர் கழுவிலேற்றப்பட்டனர். கழுவிலமர்ந்து கதறுபவர்களின் நடுவே மஞ்சம் அமைத்துத் துயில்பவர்கள் அவர்கள் என்று சூதர்களின் சொல் பரவியது. மனித உடல்களை நெடுகப்போழ்வதில் அவர்களுக்கு பேருவகை இருந்தது. எடைமிக்க பெருவாளால் இரண்டாக வெட்டப்பட்டனர் எதிரிகள். யானைகளிலும் குதிரைகளிலும் இருகால்களும் விரித்துக்கட்டப்பட்டு இரண்டாக கிழிக்கப்பட்டனர். விசைமிக்க ஆழிகளால் நடுவே உடைத்து அகற்றப்பட்டனர். அவர்களை எண்ணியபோதே உடல்பிளக்கும் உணர்வை அடைந்தனர் அரசர்கள்.

ஒற்றைவீழ்வென ஷத்ரியகுலங்கள் மகதத்தின் முன் தாள்மடிந்ததை எண்ணி திகைத்தனர் பிற பேரரசர்கள். “அரசே, இடிந்துவிழுவது பெரிய கட்டடம் என்றால் இடிதலே மேலும் இடித்தலை நிகழ்த்தும். பெரிய அமைப்புகள் தங்களை உடைத்துக்கொள்ளும் விழைவு கொண்டவை. ஏனென்றால் பிரிதலே பருப்பொருளின் தன்னியல்பு” என்றார் கோசல மன்னனின் அவையில் கௌசிக குலத்து அந்தணராகிய பிரபாகரர்.

எதையும் செய்யக்கூடியவன் என்று அறியப்பட்ட அரக்கிமகனிடம் போர் தொடுக்கலாகாது என அவர்களின் அமைச்சர்கள் அவர்களை எச்சரித்தனர். “ஒவ்வொரு நிலமும் ஒவ்வொரு காலமும் தனக்கென ஓர் அரக்கனை உருவாக்கி எடுக்கிறது அரசே. அது மண்ணிலுள்ள ஒரு நிலையியல்பு. அதன் வெளிப்பாடென ஒரு மனிதனை அது கண்டடைகிறது” என்றனர். “அவ்வரக்கன் தன் அரக்கத்தன்மையாலேயே பிற அரக்கர்களை கவர்கிறான். அரக்கர்களுக்கு அமைவதுபோல் அர்ப்பணிப்புள்ள அணுக்கரும் அடிப்படையினரும் பிறருக்கு அமைவதில்லை.”

“அப்படியென்றால் என்னதான் செய்வது? வெல்லட்டும் அவன் என இங்கு வாளாவிருப்பதா?” என்றான் பாஞ்சால மன்னன் துருபதன். “எழுவதுபோல் அது அடங்கவேண்டும் என்பதே புடவியின் நெறி. எழுவது அடிப்படைவிசை என்பதனால் அதனுடன் போர்புரிபவன் அழிவான். அது விழுவதும் அடிப்படைநெறி என்பதனால் அதைத் தடுக்க தெய்வங்களாலும் ஆகாது” என்றார் துர்வாசர். “முட்டக்கொழுக்கும் விலங்கு தெய்வங்களுக்குரிய இனிய பலி என்று சொல்லப்படுவதுண்டு. அக்காளை அன்னைக்குரிய கொடை.”

ஜராசந்தனின் கதாயுதம் நாடுகள்தோறும் சென்றுகொண்டிருந்தபோதுதான் மதுராவில் கம்சனை மதுவனத்து யாதவர் இருவரும் மற்போரில் கொன்றனர். கம்சனின்  துணைவியரான ஆஸ்தியும் பிராப்தியும் கண்ணீருடன் ராஜகிருஹத்தை வந்தடைந்தனர். தன் மகள்கள் அடைந்த சிறுமையால் கொந்தளித்த ஜராசந்தன் ஹம்சனுக்கும் டிம்பகனுக்கும் மதுராவை வெல்லும்படி ஆணையிட்டான். அவர்களின் படைத்துணைவனாகிய ஏகலவ்யன் படைகொண்டுசென்று மதுராவை அழித்தான். யமுனையை கடந்துசென்று மதுவனத்தையும் எரித்தான்.

ஆனால் யாதவகுடிகளைத் திரட்டி அஸ்தினபுரியின் படைத்துணைகொண்டு வந்த இளைய யாதவர் மீண்டும் மதுராவை வென்றார். அவர் தந்தை வசுதேவர் மதுராவின் அரசனானார். ஜராசந்தனின் கதை மீண்டும் மதுரா நோக்கி சென்றது. படைகொண்டு வந்த பலராமர் அதை யமுனைக்கரையின் கோமஸ்தகம் என்னும் குன்றருகே தடுத்து சிதறடித்தார். பதினைந்து முறை மதுராவின் எல்லைகளைத் தாக்கிய கதாயுதம் தடுக்கப்பட்டது. ஜராசந்தன் வெறிகொண்டு ஹம்சனை அறைந்தான். டிம்பகனை எட்டி உதைத்தான். “இழிமகன்களே, உங்களால் இயலாதென்றால் உரையுங்கள். நான் வெல்கிறேன்” என்றான். “எளிய யாதவர். கன்றோட்டி காட்டில் வாழும் கீழ்மக்கள். அவர்களிடம் தோற்குமென்றால் மகதம் அழிவதே மேல்.”

“அரசே, இம்முறை வென்று மீள்வோம். இல்லையேல் திரும்பமாட்டோம்” என்று வஞ்சினம் உரைத்து ஹம்சனும் டிம்பகனும் கிளம்பிச்சென்றனர். பன்னிரு கால்படைப்பிரிவுகளும் எட்டு புரவியணிகளும் ஏழு களிற்றுநிரைகளும் வில்லவர் தேர்களும் மதுரா நோக்கி சென்றன. மதுராவின் எல்லையில் அப்படைகளை பலராமர் சந்தித்தார். போரில் யாதவர் சிதறியோடினர். நெய்யூற்றி காடுகளை எரித்து புகைசூழச்செய்து நீர்நிலைகளில் நஞ்சுகலக்கி கடக்கமுடியாததாக ஆக்கி மதுராவுக்கு மீண்டார்.

வசுதேவரின் அச்சம் நிறைந்த  ஓலை கண்டு துவாரகையிலிருந்து இருந்து இளைய யாதவர் மதுராவுக்கு வந்தார். “நாம் எண்ணமுடியா பெரும்படை, இளையவனே. மதுராவை கல்மேல் கல்லின்றி அழிக்கும் வஞ்சினம் உரைத்து வந்துள்ளது” என்றார் பலராமர். “நாம் இயற்றக்கூடுவது ஒன்றே. அஸ்தினபுரியின் படைத்துணை இன்றி நாம் இவர்களை வெல்லல் இயலாது.”

தன் கைகளை கட்டியபடி யமுனையை நோக்கி நின்ற இளைய யாதவர் “அஸ்தினபுரியில் அத்தையும் பாண்டவரும் இல்லை, மூத்தவரே” என்றார். “அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றும் எவரும் அறியக்கூடவில்லை. அவர்களை கண்டடைந்தாலும் அவர்களால் ஆகக்கூடுவதொன்றில்லை.” பலராமர் “நான் சென்று துரியோதனனிடம் கோருகிறேன். என் சொல்லை அவனால் தட்டமுடியாது” என்றார். “மூத்தவரே, அரசு துரியோதனரிடம் இல்லை. விழியிழந்த அரசரிடம் உள்ளது.” சற்றுநேரம் விழியிமைக்காமல் நோக்கியபின் “ஆம், பிறர்காலில் நாம் நடக்கமுடியாது” என்றார் பலராமர். “போரிடுவோம், மடிவதும் வீரருக்கு உகந்ததே.”

“மடிவதற்காக நாம் நம் குடிகளை இத்தனை தொலைவுக்கு இழுத்துவரவில்லை” என்றார் இளைய யாதவர். “எளிய கன்றோட்டிகளாக அவர்கள் வாழ்ந்திருக்கலாம். அரசக்கனவை அவர்களுக்கு ஊட்டினோம். இனி பின்னகர்வதற்கு இடமில்லை. நாம் வென்றே ஆகவேண்டும்.” அவர் குரல் உணர்வெழுச்சி கொண்டது. “மூத்தவரே, கார்த்தவீரியர் தோற்ற இடம். காலமெல்லாம் நாம் தோற்றுக்கொண்டே இருக்கும் இடம். நாம் வெறும் யாதவர் அல்ல. ஏணியில்  முதலில் செல்பவர். நாம் விழுந்தால் பின்ஏறுபவர் அனைவரையும் சரித்துவிடுவோம்.” பலராமர் தோள்தளர்ந்து “ஆம்” என்றார். “நாம் வெல்வோம். ஏனென்றால் வென்றேயாகவேண்டும்” என்றார் இளைய யாதவர்.

“இன்று நாம் வெல்லவேண்டியவர்கள் ஹம்சனும் டிம்பகனும்தான், இளையோனே” என்றார் பலராமர். “வற்றாத கொலைவெறியால் நிகரற்ற வல்லமை கொண்டவர்கள். கொலையை விரும்பத்தொடங்குபவனை நோக்கி பாதாள தெய்வங்கள் வந்து சூழ்கின்றன. அவன் படைக்கலங்கள் ஒளிகொள்கின்றன. நான் கம்சனின் வாளை ஒருநாள் கையிலெடுத்துப் பார்த்தேன். அதன் ஒளி என்னை அச்சுறுத்தியது. அது உருவற்று நின்றிருக்கும் குருதிவிடாய்கொண்ட விலங்கொன்றின் நெளிநாக்கு என்று தோன்றியது.” இளைய யாதவர்  “இரண்டியல்புகளால் ஆனவன் அரசன். அவன் தன் ஒற்றை இயல்பை மட்டும் எடுத்து இவர்களை அமைத்துள்ளான்” என்றார்.

கிரிவிரஜத்தின் முதல்மலையான விபுலத்தில் பிறந்தவன் ஹம்சன். வராகமலையில் டிம்பகன் பிறந்தான். ஹம்சன் பிறப்பிலேயே வலதுகையும் காலும் மட்டும் செயல்கொண்டவனாக இருந்தான். சொல்லிலும் சித்தத்திலும் வலப்பக்கம் மட்டுமே அவனுக்கிருந்தது. டிம்பகன் இடப்பக்கம் மட்டும் கொண்டிருந்தான். போர்த்தொழில் பயின்று படைநடத்தும் குடியில் பிறந்த அவ்விருவருமே பிறர் உதவியின்றி நடக்கவும் முடியாதவர்களாக இருந்தனர். செயலற்ற ஊன் தடிகள் என்றே அக்குடிகளால் எண்ணப்பட்டனர். அன்னையரின் கருணையால் அவர்கள் உணவுண்டு உயிர்வாழ்ந்தனர்.

மகதத்தின் இளவேனில் விழவொன்றில் அன்னையால் அழைத்துச்செல்லப்பட்ட சிறுவனாகிய ஹம்சன் அங்கிருந்த காளிகோயில் ஒன்றின் திண்ணையில் விடப்பட்டான். அருகே டிம்பகனின் அன்னையும் அவனை விட்டுச்சென்றிருந்தாள். இரு உடல்களும் ஒன்றை ஒன்று கண்டுகொண்டன. அன்னையர் மீண்டு வந்தபோது தோள்கோத்து ஒற்றை உடலென்றாகி துள்ளி அலைந்து விளையாடிக்கொண்டிருந்த ஹம்சடிம்பகர்களை கண்டனர். அன்னையர் அவர்களக் கண்டு அறியாத அச்சமொன்றால் பீடிக்கப்பட்டு நெஞ்சை அழுத்தி விழீநீர் விட்டனர். பின்னர் பேருவகை ஒன்றால்  கிளர்ந்தெழுந்து ஓடிச்சென்று அவர்களை தழுவிக்கொண்டனர்.

அவர்கள் ரம்பகரம்பர்களின் மறுபிறப்பென்று நிமித்திகர் சொன்னார்கள். அவர்களின் தந்தை ஒருவரே என்று குலம் கண்டடைந்தது. ஓருடலான இருவர் அதன்பின் ஒவ்வொருநாளும் படைக்கலப்பயிற்சிகொண்டு மேலேறினர். அவர்கள் முன் நின்று வில்குலைக்கும் திறன் கொண்ட எவரும் மகதப்பெருங்குடிகளில் இருக்கவில்லை. ராஜகிருஹத்தை ஜராசந்தன் வென்றபோது அவர்கள் அவனுடன் சேர்ந்துகொண்டனர். அவன் முதன்மைப்படைத்தலைவர்கள் ஆனார்கள். பாரதவர்ஷத்தின் நாடுகளை அவன் பொருட்டு அவர்களே படைநடத்தி வென்றனர்.

யாதவகுடிகளின் எல்லையைச் சூழ்ந்திருந்த மகதத்தின் படைகளுடன் மதுராவின் படைகள் நாளும் சிறுபூசல்களில் ஈடுபட்டிருந்தனர். அஸ்தினபுரியின் படைத்துணை வருமா என்றறிய ஹம்சடிம்பகர் காத்திருந்தார்கள். யாதவர்களின் குடிகளைத்திரட்ட முடியாமையை மறைத்துக்கொண்டு அஞ்சிய விலங்கின் சிலிர்த்த மயிரும் சீற்றமும் காட்டி மதுரா பதுங்கியிருந்தது.

ஒருநாள் எல்லையில் நிகழ்ந்த போரில் மகதத்தின் சிறுபடைத்தலைவனாகிய ஹம்சனை பலராமர் கொன்றார். அவரது கதைபட்டு தலைசிதறிக்கிடந்தவன்  எவன் என்று அறியாத பலராமர் படைக்களச்சூதன் ஒருவனிடம் அவனைப்பற்றி கேட்டார். “பிருங்கபேரத்தின் சிற்றரசனும் வீதபயன் மைந்தனுமாகிய இவன் பெயர் ஹம்சன்” என்றார் சூதர். “சிறுகுடி  ஷத்ரியன். கோசலத்தின் சிற்றரசன். மகதத்துடன் இணைந்துகொண்டவன்.”

அதைக் கேட்டுநின்ற இளைய யாதவர் வேதம் திகழும் பொய்யற்ற நாவுகொண்டவரான சாம்யகர் என்னும் வைதிகரை களத்திற்கு அழைத்துவந்தார். இறந்தவனுக்குரிய ஈமக்கடன்களை கூட்டிக்கொண்டிருந்தனர் எரிகூட்டுநர். அப்போது சூதன் ஹம்சனின் போர்த்திறனை பாடிக்கொண்டிருந்தான். “வைதிகரே, நீர் ஹம்சனின் உடலை கண்களால் பார்த்தீர் அல்லவா?” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்று அவர் சொன்னார். “அங்கே யமுனாமுகத்தில் படைநிலைகொண்டிருக்கும் டிம்பகன் என்னும் படைத்தலைவனிடம் இச்செய்தியை சொல்லும்” என்று சொல்லி இளைய யாதவர் அவரை அனுப்பிவைத்தார்.

யமுனாமுகத்தில் ஆற்றின் கரையில் படைநிலைகொண்டிருந்த டிம்பகனை புலரிப்பொழுதில் சென்றடைந்தார் சாம்யகர். வணங்கி முகமனுரைத்து செய்தி என்ன என்று வினவிய டிம்பகனிடம் “படைத்தலைவரே, ஹம்சன் மறைந்த செய்தியை சொல்லும்படி வந்த அந்தணன் நான்” என்றார். திகைத்து நின்ற டிம்பகன் உரக்கக் கூவியபடி அவரை அணுகினான். “இந்த நீரைத் தொட்டு ஆணையிடுக” என்றான்.

கள்ளமற்ற முகத்துடன் சாம்யகர் “ஆணை! நான் ஹம்சனின் உடலை கண்டேன்” என்றார். நரம்பொன்று சுண்டி இழுக்கப்பட்டு துடித்து டிம்பகனின் வலதுகையும் காலும் தளர்ந்தன. அவன் உடல் நடுங்கி அதிர்ந்தது. வாய் கோணலாகி உமிழ்நீர் வழிய, விழிகள் திசைவிலகி நோக்கு குலைய அவன் தள்ளாடினான். இருமுறை கைகளை ஆட்டி ஏதோ சொல்லவந்தபின் திரும்பி இடக்காலால் உந்தி தாவி யமுனையில் விழுந்து நீர்க்குமிழிகள் கொப்பளித்தெழ மூழ்கி மறைந்தான். ஓடிவந்த படைத்துணைவர் கூச்சலிட்டபடி நீரில் பாய்ந்து மூழ்கி அவனை துழாவினர். அடிப்பெருக்கு நிறைந்த யமுனை அவனை திருப்பியளிக்கவில்லை.

கோபுச்சம் என்னும் யாதவச்சிற்றூரில் படையுலா சென்றிருந்த ஹம்சன் டிம்பகன் இறந்த செய்தியை தூதன் சொல்லி அறிந்ததுமே இடப்பக்கம் இடிந்து சரிந்து விழுந்தான். வாய்கோணலாகி கைகள் இழுத்தசைந்துகொண்டிருந்த அவனை பல்லக்கிலேற்றி யமுனை கரைக்கு கொண்டுவந்தனர். “எங்கே?” என்று ஹம்சன் கேட்டான். “இங்கேதான், படைத்தலைவரே” என்றனர் படைத்துணைவர். குளிர்கொண்டவன் போல நடுங்கியபடி கிட்டித்த பற்களுடன் அங்கே தன்னையும் வீசும்படி ஹம்சன் செய்கையால் ஆணையிட்டான்.

அவர்கள் கண்ணீருடன் தயங்கி நிற்க “வேறுவழியில்லை. இது என் ஆணை!” என்றான். அவர்கள் அவ்விணையை நன்கறிந்திருந்தனர். ஒருவரின்றி ஒருவர் வாழமுடியாதவர்கள். அவ்விரு உடல்நடுவே பெண்ணென்றோ மைந்தென்றோ எவரும் நுழைந்ததில்லை. அவ்விரு உள்ளத்தினூடாக தெய்வம் கடந்ததில்லை. ஒருபாதி துயில மறுபாதி விழித்திருக்க எப்போதும் படுக்காது வாழ்ந்த உடல். ஒருபாதி சினக்க மறுபாதி சிரிக்க உணர்வுகளை வென்ற உள்ளம். ஒருபாதி பேச மறுபாதி நோக்க எதிர்நிற்கமுடியாத சித்தம்.

அவர்கள் அவனை அதே இடத்தில் யமுனையில் வீசினர். மூன்றுநாட்களுக்குப்பின் ஹம்சனின் உடலுடன் பிணைந்த டிம்பகனின் உடல் நாணல்புதர் ஒன்றில் மகதவீரர்களால் கண்டெடுக்கப்பட்டது. தயங்கிக்குழம்பிய மகதத்தின் படைகளை மூன்று திசைகளிலிருந்தும் இளைய யாதவரும் பலராமரும் வசுதேவரும் சூழ்ந்து தாக்கினர். சிதறி ஓடிய மகதப்படைகள் பின்பு மீளவில்லை. கதைப்படை நின்று திரும்பிய ஊரை கதாவசானம் என்று யாதவர் அழைத்தனர். அங்கே யாதவர்களின் காவல்கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டது.

படைகொண்டு மீண்டு வந்து யாதவரை வெல்ல ஜராசந்தன் வஞ்சினம் உரைத்து நாகருத்திரனின் ஆலயத்தில் வைத்து பூசெய்து எடுத்த கங்கணம் ஒன்றை கட்டிக்கொண்டான். ஆனால் அஸ்தினபுரியில் பாண்டவர் மீண்டுவந்தனர். மதுரா விரிந்து பரவியது. துவாரகை பெருகி எழுந்தது. ஆயினும் ஆண்டுதோறும் தன் கங்கணத்தை மீளுறுதிசெய்து ஜராசந்தன்  கட்டிக்கொண்டிருந்தான்.

யாதவநிலமும் அஸ்தினபுரியும் அதன் துணைநிலங்களும் அன்றி பிற நாடுகளனைத்தும் ஜராசந்தனுக்கு அடங்கியவை ஆகின. எழுபத்தெட்டு நாட்டின் குருதி படிந்த அரசக் கொடியுடன் கதாயுதம் மகதத்திற்கு திரும்பி வந்தது. அதை தன் கோட்டைவாயிலில் கட்டப்பட்ட சிற்றாலயத்தில் பீடத்தில் நிறுத்தி மக்கள் வழிபடவேண்டுமென ஆணையிட்டான். ‘மகாபுஜம்’ என்ற தெய்வமாக அது ஆகியது. அதை மகதத்தின் காவல்தெய்வம் என்று ஏத்தினர் சூதர்.

[ 11 ]

மகதத்திலிருந்து கிளம்பிய பூர்வகௌசிககுலத்து வைதிகர் நாடெங்கும் சென்று நாகவேள்வியின் செய்தியை பரப்பினர். “நஞ்சென்பது சீர்கெட்ட உணவே. அரசர்களே, சிதைந்த வேதம் இருளின் ஒலி” என்றனர். மகதத்தின் சிற்றரசர்கள் நடுவே சினமெழுந்தது. அவர்களில்  ஷத்ரியர் அதை தங்களுக்குள் சொல்லிச்சொல்லி குமுறினர். ஷத்ரியர் அல்லாதோர் மேலும் ஷத்ரியத்தன்மைக்கென நோற்பவர்கள் என்பதனால் அவர்கள் மேலும் குமுறினர். மண்ணுக்கடியில்  அனல் என அச்சினம் அவர்களுக்குள்ளேயே வாழ்ந்தது.

ஜராசந்தன் மீதான அச்சம் அவர்களை கட்டுக்குள் நிறுத்தியது. ஒவ்வொரு மழைவிழவுக்கும் அவர்கள் தங்கள் அரச உடையணிந்து வாளேந்தி அடையாளவில்லை பல்லக்கிலேற்றி ஊர்வலமாக மகதத்திற்கு கொண்டுவந்தனர். ராஜகிருஹத்தின் வாயிலில் அமைந்த மகாபுஜத்தின் முன்னால் அவ்விற்களை வைத்து தலைவணங்கி வாள் உருவி நிலம்தொட்டு வஞ்சினம் உரைத்தனர். நாகருத்திரனின் ஆலயமுகப்பில் நிகழும் நாகவேள்வியில் அமர்ந்து அனல் வணங்கி அவிமிச்சம் உண்டனர். பன்னிரண்டாவது நாள் ஜராசந்தனின் அவையில் அமர்ந்து அவன் அளிக்கும் முறைவரிசைகளையும் பரிசில்களையும் பெற்று மீண்டனர்.

இந்திரப்பிரஸ்தத்தின் எழுச்சி அவர்களை மீண்டும் ஷத்ரியர்களென உணரச்செய்தது. பதினெட்டு ஆண்டுகாலம் நிகழ்ந்தவை அனைத்தையும் அவர்களில் எவருமே அறியாதவர்கள்போல அன்று நிகழ்ந்ததை அறிந்தவர் என சினம் கொண்டனர். “வேதம் அமுதாலானது. நாகவேதம் நஞ்சாலானது” என்றார் பாண்டர நாட்டு அரசர் வக்ரதந்தர். “அது ஒலித்தால் நம் நகரங்களுக்கு அடியில் இருந்து நச்சுச்சுருள்கள் படம்கொண்டு எழும்.”

“ஆம், நம் நாடும் நகரும் மாநாகங்களுக்கு மேல் இருக்கும் சிறு பொருக்குகளே என்றறிக! துயிலும் நஞ்சை நாகவேதமெனும் மகுடி ஊதி எழுப்புகிறான் மகதத்தின் அரக்கன். நாம் அழிவது திண்ணம்” என்றார் மிதிலையின் அரசராகிய பிரபாதத்தர். மகதத்தின் சிற்றரசர்கள் திரிகர்த்த நாட்டின் எல்லையில் அமைந்த சாரதாசலம்  என்னும் சிறுமலையில் எவரும் அறியாது ஒன்று கூடியிருந்தனர். “ஷத்ரிய மன்னர்களுக்கு கப்பம் அளித்தபோது நமக்கு குலமும் புகழும்  எஞ்சியிருந்தது. நாகவேதம் ஒலிக்கும் மண்ணில் இனி நம் மூதாதையரும் வாழமாட்டார்கள்” என்றார் மச்சநாட்டு சூரசேனர்.

“அதை நாம் அரசரிடம் சொல்லியாகவேண்டும்” என்றார் சால்வசேனர். “அரசன் அல்ல, இனி நம் எதிரி” என்று உரக்க குரல்கொடுத்தான் நாசிகேயநாட்டின் அபிமன்யூ. அக்குரல் அனைவரையும் அச்சுறுத்தி அமைதியடையச் செய்தது. சில பீடங்கள் மெல்ல முனகின. “நாம் சொல்லெடுப்பது எளிது” என எவரோ சொல்ல அது யாரென விழிகள் திரும்பி நோக்கின. சொன்னவர் முகக்குறி காட்டவில்லை. எனவே அச்சொற்கள் தெய்வச்சொற்கள் என எடைகொண்டன.

“நம் வில் செல்லாது அங்கே வேள்வி எழமுடியாது” என்று அபிமன்யூ மீண்டும் குரலெழுப்பினான். “என் வில் செல்லாது. ஆண்மைகொண்டவர் இருப்பின் என்னுடன் இணைக!” சற்று நேரம் கழித்து மல்லநாட்டரசன் சுதேவன் “நாம் எத்தனைபேர்?” என்றான். அபிமன்யூ “ஷத்ரியர்கள் மட்டும் எழுபத்திரண்டு பேர். கிராதர்களும் அசுரர்களுமாக மேலும் எண்பது பேர் உள்ளனர்” என்றான். சூரசேனர் “அவர்கள் நம்முடன் இணைவார்களா?” என்றார். “இங்கேயே அறுபத்தேழுபேர் இருக்கிறோம். நாம் இணைந்தால் அவர்கள் இணைந்தாகவேண்டும்.”

சற்று நேரம் அமைதி நிலவியது. “ஆம்” என பெருமூச்சுடன் சொன்ன சூரசேனர் “நான் இணைகிறேன்” என்றார். சுதேவன் “நானும்” என்றான். மெல்ல ஒவ்வொருவராக இணைந்துகொண்டனர். கைகளைத்தட்டியபடி “பிந்தி எழும் பறவைகளும் குரலெழுப்புக!” என்றான் அபிமன்யூ. “இல்லையேல் நாகம் கிளையிலேறி உங்களை கவ்வும்.” சிரித்தபடி எஞ்சியவர்களும் ஒப்புதல் சொன்னார்கள்.

“நாம் இந்திரப்பிரஸ்தத்தை ஏற்போம். நமக்குப்பின் யாதவப்படைகளும் எழுமென்றால் அவ்வரக்கனின் தலைகொய்து கொண்டுசென்று  பாஞ்சாலத்து அரசியின் கால்களில் வைப்போம்” என்று அபிமன்யூ சொன்னான். இந்திரப்பிரஸ்தம் என்னும் சொல் அவர்களை எளிதாக்கியது. அதையே அத்தனைபேரும் எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் அச்சொல் காதில் கேட்டபோது அதை புதிதென உணர்ந்தனர். அவர்களின் முகங்கள் மலர்ந்தன.

“பீமனின் தோள்களால் அவ்வரக்கன் கிழிக்கப்படுவான்” என்றார் சூரசேனர். “என் நிமித்திகர் அதை ஏழாண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டார்.” சுதேவன் “ஆம், என் நிமித்திகரும் அதை சொன்னார்” என்றான். பின்னர் அனைவரும் அதையே சொல்லத்தொடங்கினர்.  சொல்லச்சொல்ல ஒவ்வொருவர் கண்களும் ஒளிகொண்டன.  சொற்களினூடாக அவர்கள் அதை வளர்த்து எடுத்துக்கொண்டனர். ஒருகட்டத்தில் போரே முடிந்துவிட்டது என்னும் நிறைவை அடைந்தனர். இந்திரப்பிரஸ்தத்துடன் இணைந்துகொண்டபின் அடையப்போகும் நலன்களைப்பற்றி உள்ளூர கனவுகாணத்தொடங்கினர்.

“நாம் இம்முறை நம் விற்களை அனுப்புவதில்லை என முடிவெடுப்போம். நாகவேதத்தையும் வேள்வியையும் நம்மால் ஒப்பமுடியாது என்று அறிவிப்போம்” என்று அபிமன்யூ சொன்னான். “அது ஓர் அறிவிப்பு. ஜராசந்தனிடம் நாம் போர் தொடுக்கிறோம், ஆனால் போரை அவன் தொடங்கியாகவேண்டும். அவன் நம் மீது சினம் கொள்வான். மகதப்படைகளைப் பிரித்து நம் மீது அனுப்புவான். அவன் படை சிதறுவதென்பது இந்திரப்பிரஸ்தம் ராஜகிருஹம் மீது பாய்வதற்குரிய நற்தருணம்.”

புரியாது நோக்கிய அரசர்களை நோக்கி சூரசேனர் “நாம் இத்தனைபேர் இருக்கிறோம் ஷத்ரியர்களே. நம்மை வெல்ல அவன் எழுபத்திரண்டு படைப்பிரிவுகளை அனுப்பியாகவேண்டும்” என்றார். அப்போதுதான் அனைத்தையும் புரிந்துகொண்ட சுதேவன் “படைகள் வரட்டும். அவற்றை களத்தில் வெல்வோம். நம் அரசை நாமே காத்தோம் எனும் புகழும் நமக்கு எஞ்சும்” என்றான். “ஆம், மகதப்படைகளுக்கு நான் சொல்லவேண்டிய மறுமொழி ஒன்றுள்ளது” என்றார் பாண்டரத்தின் வக்ரதந்தர்.

சீற்றம் கொண்டு தன் உடைவாளை ஒலியுடன் உருவி தூக்கி ஆட்டி “அவர்களுக்கு நாம் குருதியை திருப்பியளித்தாகவேண்டும்” என்றார் அஸ்மாகநாட்டின் இளைய அரசன் சௌதாசன். “ஹம்சனும் டிம்பகனும் நடத்திய காலம்வரைதான் மகதம் வெற்றிகளை அடைந்தது கூட்டரே. அவர்கள் மறைந்த பின்பு மகதம் அடைந்த வெற்றி என்ன?” என்றார் சூரசேனர். “ஆம்! உண்மை!” என்றான் சுதேவன். “இவன் வெறும் காட்டாளன். கொடுமைசெய்யத் தயங்காதவன். ஆனால் களம் நின்று படைநடத்துவதற்கு ஷத்ரியக்குருதி தேவை…” என்றார் தசார்ண அரசராகிய சுதர்மன்.

அனைவரின் உள்ளமும் கற்பனைகளில் விரிந்து எழ அப்போரின் இயல்தகவுகளைப்பற்றி பேசத் தொடங்கினர். “இக்கட்டான நேரத்தில் உடன்நின்றதை இந்திரப்பிரஸ்தம் மறக்கப்போவதில்லை. அங்கே நம் இடம் மேலும் சிறந்ததாகவே இருக்கும்” என்றார் ரிசிக அரசர் திவோதாசர். “அவர்கள் முழுமைகொண்ட ஷத்ரியர்கள் அல்ல. நம்மைப்போன்றவர்களின் உறவு அவர்களுக்கு நிறையளிக்கும்” என்றார் ஆஃபிர நாட்டின் உக்ரதண்டன். பல ஷத்ரியர்கள் உதடுகளை இறுக்கி புன்னகைசெய்தனர். ஆஃபிர அரசகுலம் வழிப்பறித்திருடர்களில் இருந்து உருவாகி வந்தது என அனைவரும் அறிந்திருந்தனர்.

அவர்கள் எண்ணியதற்கு மாறாக விற்கள் சென்று சேராதது ஜராசந்தனை சினம் கொள்ளச் செய்யவில்லை. மகதம் இந்திரப்பிரஸ்தத்தை அஞ்சி அமைந்துள்ளது என்று அனைவரும் தெரிந்துகொண்டனர். வில் அனுப்பப்படமாட்டாது என்னும் செய்தி சென்றதுமே ஒவ்வொரு ஷத்ரிய அரசருக்கும் ஜராசந்தனின் நேரடி ஓலையுடன் தூது வந்தது. நாகவேதத்தை ஏற்கவேண்டும் என எவரும் கோரப்படமாட்டாகள் என்று அவன் வாக்களித்தான். இந்திரப்பிரஸ்தத்துடன் போர் எழலாம் என்றும் அப்போரில் மகதத்தை துணைப்பவர்கள் அனைவருக்கும் கப்பவிலக்கு அளிக்கப்படும் என்றும் அவர்கள் நட்புநாடுகளாக கருதப்பட்டு திருச்சாத்து செய்யப்படுவார்கள் என்றும் ஜராசந்தன் வாக்களித்தான். அவர்கள் அப்படைக்கூட்டை விரும்பினால் வில்லின்றி நட்புநாட்டரசர்களாகவே மகதத்திற்கு வந்து நாகவேள்வி முடிந்தபின் கூடும் அவையில் முடிசூடி கோல்கொண்டு அமர்ந்திருக்கலாம் என்றான்.

மகதம் பணிந்துவிட்டதை அறிந்ததும் ஷத்ரியர் மகிழ்வுகொண்டாடினர். அவர்கள் வில்லனுப்பப் போவதில்லை என்ற செய்தியை இந்திரப்பிரஸ்தத்திற்கும் அனுப்பியிருந்தனர். நிகழவிருக்கும் போரில் இந்திரப்பிரஸ்தத்துடன் இணையலாகுமா என்று கோரி  அனைவருக்கும் சௌனகரின் ஓலை வந்திருந்தது. “இங்கு நாம் நட்புநாடுகள். முடிசூடி அமர்ந்தால் ஜராசந்தனைவிட குலமேன்மை கொண்டவர்கள். நாளை நம் மகளிர் மகத அரியணை அமரலுமாகும்” என்றார் சூரசேனர். “இந்திரப்பிரஸ்தத்தில் நாம் என்றும் யாதவர்களுக்கு கீழேதான் இருப்போம். அதை மறக்கலாகாது.”

அறுபத்திமூன்று ஷத்ரியர்கள் நட்பரசர்களாக ராஜகிருஹத்திற்கு ஓலை அனுப்பியபின் அகம்படிப்படையுடன் கொடியும் கோலும் கொண்டு முடிசூடி  யானைமேல் அமர்ந்து ராஜகிருஹத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் அனைவரையும் ஜராசந்தனே கோட்டைமுகப்புக்கு வந்து வணங்கி வரவேற்றான். அரசமுறைப்படி அவர்கள் அரண்மனைகளில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஜராசந்தனே அரண்மனையில் விருந்தளித்தான். தன் கைகளாலேயே அவர்களுக்கு உணவு பரிமாறினான். யவன மதுவை பொற்கிண்ணங்களில் ஊற்றி அளித்தான். அவனுடைய பேச்சுவன்மையில் அவர்கள் திளைத்தனர். காவியநுட்பங்களில் இருந்து கீழ்மைநிறைந்த இளிவரல்களுக்கு தாவும் அவனை அனுமனுக்கு நிகரானவன் என்றார் சூரசேனர். “தோள்விரிந்தோர் பேச்சு அமையாதவர் என்பார்கள். இவன் யார்? ஒருவனே மல்லனும் சொல்வலனும் ஆவது எப்படி இயலும்?”

ஜராசந்தன் களிமயக்கில் இளையவனாகிய அபிமன்யூவை  இழுத்து தன் இடதுமடியில் அமரச்செய்து முத்தமிட்டான். “நீ என் மைந்தன்! உனக்கு வேண்டியதென்ன? மகதத்தின் மணிமுடியா? இதோ” என்று கூவினான். “அடேய், எடுத்துவாடா என் மணிமுடியை. என் மைந்தனுக்கு இப்போதே சூட்டுகிறேன். மைந்தா, என் கோல் உனக்கு. இனி நீயே மகதத்தின் அரசன்” என அவன் தோள்களை அறைந்து உரக்க நகைத்தான். கண்ணீர் மல்க கைகூப்பி அதை ஏற்றுக்கொண்டான். “ஆனால் நாங்கள் அவனை ஏற்கமாட்டோம்” என்றான் சுதேவன் “எங்களுக்கு அரசனாக அரக்கனே வேண்டும்.” மற்ற ஷத்ரியர்கள் உரக்க நகைத்தனர்.

இரவெல்லாம் குடித்துக்குழைந்தும் சிரித்துக்கூத்தாடியும் அவர்கள் அவன் அவையிலிருந்தனர். “நான் உங்கள் அடிமை. உங்கள் கால்களுக்கு பணிவிடைசெய்யும் அரக்கன். ஷத்ரியர்களே, உங்கள் கால்கள் எங்கே? உங்கள் கால்களை காட்டுங்கள்” என்று ஜராசந்தன் குழறினான். தள்ளாடியபடி எழுந்து சூரசேனரின் கால்களை பற்றிக்கொண்டான். “பிழைசெய்துவிட்டேன் ஷத்ரியர்களே. சூரசேனரே, நீங்கள் என் தந்தைக்கு நிகரானவர், நான் எளிய அரக்கன்… இழிமகன்” அவன் இடக்கண்ணிலிருந்து மட்டும் விழிநீர் வழிந்தது. விம்மியழுதபடி ஒவ்வொரு ஷத்ரிய அரசர்களின் கால்களையும் தொட்டுத் தொட்டு சென்னி சூடினான்.

“அரசே, என்ன இது?” என்று பதறிய சுதேவனிடம் “நான் மகதத்தை துறந்து கானேகிறேன். என் ஜரையன்னையின் குகைக்குள் புகுந்து இருளாழத்தில் மறைகிறேன். என் மைந்தன் முடிசூடட்டும். அரசர்களே, நான் அவனை உங்களுக்கு அளிக்கிறேன். அவனை கைக்குழவி என்றே இதுநாள் வரை வளர்த்துவிட்டேன். என் வல்லமைகொண்ட தோள்களில் இருந்து அவனை இறக்கியதே இல்லை. தொட்டியில் வளர்ந்த மீன் அவன். அவனை நீங்கள் உங்கள் திண்ணைகளில் தவழவிடுங்கள். அவனுக்கு உணவூட்டுங்கள். அவனை கைபொத்தி காத்துநில்லுங்கள்” என்று கைகூப்பி கேட்டபடி அழுது தளர்ந்து தரையில் அமர்ந்தான். கால்நீட்டிப் படுத்து “எதை வென்றேன்? எதை அடைந்தேன்? எல்லாம் வீண். என் காடு என்னை கைவிட்டது. என் காட்டில் எனக்கு இடமில்லை. அன்னையே, உன் காட்டுக்கு நான் அயலவன் ஆனேன்” என்று அழுதான்.

கள்மயக்கில் பிற அரசரும் அழுது அவனை தழுவிக்கொண்டனர். “அரசே, நான் உங்களுக்காக உயிர்துறப்பேன்!” என்று கூவியபடி அபிமன்யூ அவன் கால்களில் விழுந்தான். சுதேவன் “நான் வாள்தொட்டு ஆணையிடுகிறேன். இந்திரப்பிரஸ்தத்தின் இழிமகனாகிய யுதிஷ்டிரனை என் வாளால் போழ்ந்து உங்கள் கால்களில் போடுவேன்” என்றான். சூரசேனர் “நான் யாதவனை கொல்வேன். கன்றோட்டும் இழிமகன். முடிசூடி அரியணை அமர்கிறானா அவன்? மூடன்” என்றார். வக்ரதந்தர் “சத்ராஜித்தாக யாதவகுருதிகொண்டவன் அமர ஒருபோதும் ஒப்பமாட்டோம்” என்று கூவியபடி எழுந்து பற்களைக் கடித்து “ஒப்பமாட்டேன்! நான் என் இறுதிக்குருதிவரை ஒப்பமாட்டேன்” என்றார்.

அழுகைவழியாக அவர்கள் சிரிப்பை சென்றடைந்தனர். “இரண்டு பகுதிகளாகப்பிரிந்த ஓர் அரசர்… அரசே, நான் உங்கள் உடலை தொட்டுப்பார்க்கலாமா?” என்றான் அபிமன்யூ. “தொட்டுப்பார்… என் மைந்தன் நீ… வா!” என்று ஜராசந்தன் அவன் கையை எடுத்து தன் தலையில் வைத்தான். “துலாக்கோலின் முள் இந்தத்தலை ஆஹ்ஹாஹாஹா!” என்று அபிமன்யூ நகைத்தான். “நம் அரசர் துலா என்றால் சேதிநாட்டுச் சிசுபாலன் ஒரு தேள். சைந்தவனாகிய ஜயத்ரதன் நழுவும் மீன்” என்றார் சூரசேனர். “அரக்கி ஒன்றாகச்சேர்த்த உடல். அவள் கண் தெரியாமல் நம் அரசரைக் கிழித்து கால்மாற்றி கைமாற்றிப் போட்டிருந்தால் என்ன ஆகும்? இப்படி…” அபிமன்யூ கைகால்கள் நான்குபக்கமும் விரிந்து தத்தளிக்க தரையில் தவழ்ந்து காட்டினான். ஷத்ரியர் வெடித்துச்சிரித்தனர். சிரித்து களைத்து உருண்டனர். சிரிப்பை நிறுத்தமுடியாமல் மீண்டும் மீண்டும் சிரித்து கண்ணீர்வழிய களைத்து அறியாது துயின்றனர். காலையில் உடற்குவியலாகக் கிடந்த அவர்கள் நடுவே ஜராசந்தனும் கலந்திருந்தான்.

மறுநாள் அவையில் அனைவரும் வந்தமர்ந்தபோது ஜராசந்தன் எழுந்து அவையமர்ந்த அரசர்கள் அனைவரையும் வரவேற்று முறைமைச்சொல் உரைத்தான். அவர்கள் நட்பரசர்களுக்குரிய முறைமைப்படி மணிமுடி சூடி செங்கோல் கொண்டு அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரின் குடியையும் புகழையும் நிமித்திகர் அறிவித்தனர். சூரசேனரையும் சுதேவனையும் வக்ரதந்தரையும் வணங்கி முறைமைசொல்லி பரிசிலளித்து அவையமரச்செய்தான் ஜராசந்தன். மலர்ந்த புன்னகையுடன் அபிமன்யூ அருகே வந்தபோது உரக்க நகைத்தபடி “வருக, இளையோரே வருக!” என இரு கைகளையும் விரித்து அள்ளி நெஞ்சோடணைத்தான்.

அவன் இடக்கால் சற்றே தடுக்குவதுபோலிருந்தது. அவர்கள் நிலைதடுமாற காமிகர் திகைத்து பின்னடைந்தார். ஜராசந்தனின் பற்கள் கிட்டித்தன. தோள்களின் தசைகள் இறுகி உடல் விம்மிப்பெருத்தது. அபிமன்யூ கழுத்தறுபட்ட விலங்குபோல கூச்சலிட்டான். அவன் கால்கள் துடித்து நிலத்தைவிட்டு மேலெழுந்தன. கைகளால் ஜராசந்தனின் பெரிய தோள்களில் ஓங்கி ஓங்கி அறைந்தான். முதலில் சிரித்துக்கொண்டிருந்த அரசர்கள் ஏதோ ஒரு கணத்தில் நிகழ்வதை உணர்ந்து பதைப்புடன்  எழுந்தபோது மகதத்தின் காவல்படை அவையை படைக்கலங்களுடன் சூழ்ந்திருப்பதை கண்டனர்.

மூக்கிலும் வாயிலும் குருதி மூச்சுடன் கொப்பளித்து வழிய அபிமன்யூ துவண்டான். அவன் தலை சொடுக்கி இழுக்க கால்கள் நீண்டு அதிர்ந்து மெல்ல ஓய்ந்தன.  தலை தொய்ந்து ஜராசந்தனின் தோளில் கைக்குழந்தை போல விழுந்தான். அவனைத் தூக்கி அருகே இருந்த தூணில் ஓங்கி அறைந்த ஜராசந்தன் இரு தோள்களையும் மாறி மாறி அறைந்தபடி மதகளிறுபோல முழக்கமிட்டான். அவையமர்ந்த அரசர்கள் கால்கள் நடுங்க பீடங்களில் ஒண்டி அமர்ந்தனர். சிலர் கைகளால் முகம் பொத்தி உடல்குறுக்கினர். “சிறையிலடையுங்கள்… இந்த இழிமகன்களை இருட்டுக்குள் தள்ளுங்கள்” என்று ஜராசந்தன் கூச்சலிட்டான்.

படைகள் ஷத்ரிய மன்னர்கள் மேல் பாய்ந்து அறைந்து இழுத்து கைகள் பிணைத்தன. அனைவரும் இழுத்துச்செல்லப்பட்டு ராஜகிருஹத்தின் மண்ணுக்கு அடியில் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட இருண்ட சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர். “நாகவேதத்தின் அவியை அவர்களுக்கு நானே ஊட்டுகிறேன். உண்ணாதவர்களுக்கு அவர்களின் மைந்தர்களின் பச்சை ஊனை ஊட்டுவேன்” என்றான் ஜராசந்தன். தன் உடலை கைகளால் அறைந்தபடி “எப்போது இந்திரப்பிரஸ்தத்துடன் சொல்லாடினார்களோ அப்போதே அவர்கள் சாகவேண்டுமென்ற ஆணையை என் தெய்வம் பிறப்பித்துவிட்டது” என்று வெறியுடன் கூவினான். உடல்பற்றி எரிபவன் போல அரசவையில் நின்று உடல் கொப்பளித்தான். வெறிச்சிரிப்பும் பிளிறலுமாக ஆர்ப்பரித்தான்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 39

[ 8 ] 

சைத்யகத்தின் உச்சியில் நாகருத்திரனின் சிற்றாலயத்தின் முகப்பில் அமைந்த வேள்விக்கூடத்தின் ஈச்சையோலைக்கூரையில் இருந்து ஊறி சுருண்டு எழுந்த புகை மழைபெருக்கால் கரைக்கப்பட்டு, நறுமணங்களாக மாறி அங்கு சூழ்ந்திருந்த காட்டின் இலைகளின் மேல் பரவியது. வேதஒலியைச் சூழ்ந்து மழை ஒலிபெய்தது. வேள்விப்பந்தலில் சகதேவனைச்சூழ்ந்து மகதத்தின் பன்னிரு குலத்தலைவர்களும் நகரின் மூத்தகுடியினரும்  அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அமர்ந்திருந்தனர். ஆறு எரிகுளங்களில் நூற்றெட்டு நாகவைதிகர் ஓநாய்த்தோல் போர்த்தி அமர்ந்து வேதமோதியபடி மரக்கரண்டியால் நெய்யை அள்ளி ஊற்றி அவியிட்டு வேள்வி இயற்றினர். வேள்வித்தலைவர் அப்பால் தாமரைபீடத்தில் அமர்ந்திருந்தார்.

அவியளிப்பதற்கென்று கொண்டுவரப்பட்ட தேர்வுசெய்யப்பட்ட நூற்றெட்டு ஆடுகளின் நிரை வெண்மலர்ச் சரமென வேள்விப்பந்தலுக்குள் நுழைந்தது. மலர்மாலை அணிவிக்கப்பட்டு மஞ்சள் மங்கலம் பூசப்பட்ட முதல் வெள்ளாடு எரிகுளத்தின் அருகே வந்ததும் வேள்விபடைப்பவர் அதன் சிறு கொம்புகளை கையால்பற்றி கழுத்தை வளைத்தார். புடைத்த குருதிக்குழாயை சிறிய கத்தியால் கிழித்து பீரிட்ட குருதியை நேரடியாகவே எரிகுளத்தில் வீழ்த்தினார். காலுதறி திமிறிய ஆட்டின் மூச்சு குருதியுடன் தெறித்தது. குருதியை மும்முறை பொழிந்தபின் அதைத்தூக்கி மறுபக்கம் விட்டனர் இருவர். அங்கு நின்றவர்கள் அதைத் தூக்கி வெளியே போட்டனர்.

வேள்விச்சாலையில் நிறைந்திருந்த புகையில் விழிமயங்கிய ஆடுகள் பின்னால்வந்த நிரையால் முட்டிச்செலுத்தப்பட்டு அறியாத தெய்வங்களால் கைநீட்டி அழைக்கப்பட்டவைபோல  சீராக காலெடுத்து வைத்து எரிகுளங்களை அணுகி கழுத்து நீட்டி குருதி அளித்து கால் துடித்து சரிந்தன. குருதிஅவி உண்ட தழல் தளர்ந்து பரவி சமித்துகளில் வழிந்து, பின்  தளிர்விட்டு எழுந்து தயங்கியது. அதன்மேல் நெய் ஊற்றப்பட்டதும் தவிப்புடன் தாவி நக்கி, சீறி சுடர்கொண்டு, கிளைவிட்டு எழுந்து, இதழ்களாக விரிந்து நின்றாடியது.

நாகவைதிகர் ஓதிய தொன்மையான நாகவேதம் பாதாள நாகங்களின் சீறல்மொழியில் அமைந்திருந்தது. அறிந்த சொல் என சித்தத்தை தொட்டுத் துடிக்க வைத்து, அகமொழி அதை பொருள் தேடி தவிக்கையில் அறியா ஒலியென்றாகி விலகி, மீண்டும் மயங்குகையில் அணுகி தொட்டுச் சீண்டியது. செவியறியாது சித்தமறியாது ஆழத்தைச் சென்றடைந்து ஒவ்வொருவர் விழிகளையும் சுடர்கொள்ளச் செய்தது அது. அவர்களினூடாக மண்மறைந்த முன்னோர் பிறக்காத கொடிவழியினரிடம் உரையாடிக்கொண்டிருந்தனர்.

பாரதவர்ஷத்தின் தொல்குடிகள் அனைத்திற்கும் விண்ணிலிருந்து வேதங்கள் இறங்கி வந்தன என்றனர் குடிப்பாடகர். அரக்கர்களும், அசுரர்களும், நாகர்களும், மானுடரும் அவர்கள் குடியில் பிறந்த முனிவர்களின் உள்ளம் தொட்ட முடிவிலியில் இருந்து வேதங்களை பெற்றுக்கொண்டனர். அரக்கர்களின் வேதம் கைவிரித்து உலகை வெல்லும் பெருவிழைவு கொண்டது. அசுரர் வேதமோ தன்னை வென்று கடந்து செல்லும் அகத்தவிப்பு கொண்டிருந்தது. நாகர்வேதம் தன் வாலை தான் கவ்வி சுருண்டு முழுமை கொள்ளும் விடாய் கொண்டது. மானுடர் வேதமோ மண்ணிலிருந்து விண்ணுக்குச் செல்லும் கனவாய் அமைந்திருந்தது.

அந்நான்கு வேதங்களிலிருந்தும் வேதமாமுனிவர் தொட்டெடுத்து நினைவில் தொகுத்த வேதப் பெருவெளி யுகங்கள் தோறும் மறக்கப்பட்டபடியே வந்தது. வேதங்களைவிட நாளும் சிறியதாகின உள்ளங்கள். குடிபெருத்து நாடாகி, முடியாகி, போராகி, அழிவாகி, கதையாகி வாழ்வு விரிந்தபோது வேதங்களை நினைவில்கொள்ளும் திறன் அழிவதைக்கண்ட தொல்வியாசர் எண்ணித் தொட்டெடுத்து அமைத்த வேதங்கள் ரிக், யஜுர், சாம, அதர்வம் என நான்கு. அவற்றுக்கு நெறியமைவும் கான்முறையும் அமைத்து சொல்மரபும் ஒலியிசைவும் வகுத்தனர் பிறகுவந்த வியாசர்கள். குருநிரைகளும் பயிற்றுநெறிகளும் வைதிகக் கொடி வழிகளும் பின்னர் உருவாகின.

பாரதவர்ஷமெங்கும் அரசவைகளில் ஓதப்படுவதும், வேள்விகளில் முழங்குவதும், ஆலயங்களில் அளிக்கப்படுவதுமான எல்லை வகுக்கப்பட்ட நான்கு மானுட வேதங்களுக்கு அப்பால் கடல் விரிவென, காற்று வெளியென சொல்லெனப் பிறிதிலாத முழுமுதல் வேதம் விரிந்துகிடந்தது. அனைவருக்கும் அளிக்கப்பட்ட ஒற்றைவேதம். கேட்கப்படாமையால் குறையற்ற தூய்மை கொண்டது. ஒவ்வொரு துளியிலும் முழுமை கொண்டு ஒவ்வொரு கணமும் பெருகியது அது.

வகுக்கப்பட்ட மானுடவேதம் வைதிகர் சொல்லென எங்கும் பரவி பிறகுடிகளின் தொல் வேதங்களை அவர்களின் சித்தத்திலிருந்து கனவுக்குத் தள்ளியது. அங்கிருந்து ஆழிருப்புக்கும் அப்பாலுள்ள இன்மைக்கும் செலுத்தியது. வேதச்சொல்லிணைவுகளுக்கு அடியில் அறியப்படாத வெளியென அவ்வேதம் இருந்தது. தழலாட்டத்தில் கண்மாயமோ உளமாயமோ என்று திகைக்க வைத்து தோன்றி மறையும் தெய்வமுகங்கள் போல நான்கு நூல் வேதங்கள் ஓதப்படுகையில் மறைந்த வேதங்கள் தெரிந்து மறைவதுண்டு என்றனர்.

கூவும் கிள்ளைகளில் சில சொற்சாயல்களாவும், பிள்ளைமொழியில் எழும் புதுச்சொற்களாகவும், கைபட்ட யாழோ காற்றுதொட்ட குழலோ உதிர்க்கும் இசைத்துளியாகவும், உணர்வெழுந்த நா அறியாது தொட்டுச்செல்லும் உதிரிவரிகளாகவும், வெறியாட்டெழும் பூசகனின் குரலில் வரும் மிழற்றல்களாகவும், கனவுகளில் ஒலித்து திடுக்கிட்டு விழிக்க வைக்கும் தெய்வக்குரல்களாகவும் அந்த ஆழ்வேதங்கள் வாழ்ந்தன. அவையே மறைகள் என்று அறியப்பட்டன.

மழைவிழவையும் நாகவேள்வியையும் தொடங்க முடிவெடுத்தபோது ஜராசந்தன் நாகவேதம் அறிந்தவர்களைத் தேடி பாரதவர்ஷமெங்கும் தன் ஒற்றர்களை அனுப்பினான். நாக நாடுகள் அனைத்திலும் அரசர்களுக்காகவும் குடியவைகளுக்காகவும் பூதவேள்விகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவர்கள் நாகவேதத்திலிருந்து எடுத்து அதர்வவேதத்தில் சேர்க்கப்பட்ட பகுதிகளை மட்டுமே கொண்டு அதர்வமுறைப்படி அவ்வேள்விகளை செய்து வந்தனர். அவற்றைச் செய்பவர் நாகர்குலத்து அந்தணர் என்று அறியப்பட்டனர். அவர்களுக்குரிய குருமுறையும் சடங்குகளும் உருவாகியிருந்தன. ஒவ்வொரு குடிக்கும் அதர்வ வேதத்தின் எப்பகுதி அவர்களுக்குரியதென்று தெரிந்திருந்தது.

அவை ஒவ்வொன்றையும் தவிர்த்து தவிர்த்து தேடி இறுதியில் காமரூபத்திற்கும் அப்பால், மணிபுரத்தையும் கடந்து, கீழைநாகர்களின் கொடுங்காட்டுக்குள் மொழியும் நூலும் அறியாது  மறைந்துவிட்டிருந்த நாகர்குலமொன்றை கண்டடைந்தனர். அங்கு நிகழ்ந்த நாகவேள்வியில் மறைந்த நாகவேதத்தின் ஒரு பகுதி அம்மொழியில் அச்செய்கைகளுடன் அந்த நடையில் அதற்குரிய சடங்குமுறைமைகளுடன் நாகவைதிகர்களால் ஓதப்படுவதை கண்டனர். மகதத்தின் நாகர்களை அங்கே அனுப்பி அவர்களிடமிருந்து அவ்வேதத்தை கற்றுவரச்செய்தான் ஜராசந்தன். நூறு தலைமுறைகளில் ஒவ்வொரு தலைமுறையும் இழந்தவைபோக எஞ்சிய அவ்வேதம் பன்னிரு நாட்கள் இடைவிடாது ஓதி முடியுமளவுக்கு நீளம் கொண்டிருந்தது.

[  9 ]

கதிரெழுநிலத்தில் நாகவேதம் பயின்று மீண்ட நாகவைதிகர்கள்  சைத்யக மலையின் உச்சியில் நாகருத்திரனின் ஆலயத்திற்கு முன்பு வேள்விக்கூடம் எழுப்பி எரிகுளம் அமைத்து முதல் நாகவேள்வியை நடத்தினர். ஆனால் மகதத்தின் பன்னிருகுடிகளும் அவ்வேள்வியை ஏற்க மறுத்துவிட்டனர். ஜராசந்தனுக்கு குலப்பூசகர் சொன்ன குறியுரையை முன்னரே அவர்கள் அறிந்திருந்தனர். முதலில் அவ்வேள்வி நாகபூசகர் நிகழ்த்தும் வழக்கமான அதர்வவேத வேள்வி என்று எண்ணியிருந்தனர். அதை நிகழ்த்துவதேகூட நாட்டுக்கு நலம்பயப்பதல்ல என்ற பேச்சு வெளிக்கிளம்பாமல் சுழன்றுவந்தது. மழைவிழவுடன் முழுமையான நாகவேள்வி நிகழவிருப்பதை மகதத்தின் வைதிகர்கள் வழியாக அறிந்ததும் அவர்கள் உளக்கொதிப்படைந்தனர்.

“வேதமென்பது ஒன்றே. பலவென பிரிந்துகொண்டிருப்பதே புடவியின் பருப்பொருளின் இயல்பு. ஒன்றென மையம்கொண்டிருப்பது அதன் சாரமென அமைந்த கரு. அது ஓங்காரம். அதன் அலகிலா முழுமையை மானுடர் அறியவியலாது. மானுடர் அறியக்கூடுவது அக்கடலின் துளி. அறிகையிலேயே கலையும் ஓரம். அதில் அள்ளி அதற்கே படைக்கப்படுவதனால் படையல் எனும் பொருளில் அதை வேதம் என்றனர் முன்னோர். அறிபடுவதிலிருந்து அறியத்தருவதை நோக்கிய பயணமே வேதம்.  ஓங்காரத்திலிருந்து ஓங்காரம் வரையிலான பெருவெளி என அதை மொழியிலாக்கினர்” என்றார் பூர்வகௌசிக குலத்து முதுவைதிகரான சந்திரசன்மர்.

“இங்குள்ள புடவிப்பொருட்கள் நம் அறிவால் நமக்கென கோக்கப்பட்டவை குலத்தோரே. வேதமெனும் மையம் சிதையுமென்றால் புடவியை அறிவென ஆக்கும் தொடர்பு அழிகிறதென்றே பொருள். பொருண்மைக்கும் நுண்மைக்கும் இடையே ஒத்திசைவு அழிந்தால் இங்குள்ள ஒவ்வொன்றும் அறியப்படாததாக ஆகும். அந்தப் பானை பானையெனும் அறிவிலிருந்து விடுபடுமென்றால் அது என்ன? இந்த மரம் மரமெனும் இயல்பை இழக்குமென்றால் அதன் கனி நஞ்சா அமுதா? வேதம் அறிவின் மையமுடிச்சு. அதை அவிழ்ப்பதென்பது நாம் நிழல்தங்கி, குடியமைத்து, குலம்பெருக்கி வாழும் கூரையின் மையக்குடத்தை உடைத்து நம் தலைமேல் வீழ்த்துவதேயாகும்.”

“ஆம்” என்று முதுகுலத்தலைவர் மூஷிகர் சொன்னார். “நாம் இங்கு எதை நம்பி வாழ்கிறோமோ அதை அழிப்பவனை அரசனென ஏற்றுக்கொண்டால் நாம் நம் மூதாதையருக்கு பழி சமைக்கிறோம். நம் மைந்தர்நிரைக்கு தீங்கை கையளிக்கிறோம்.” அத்தனை குடித்தலைவர்களும் அதை ஏற்றனர். சிலர் பெருமூச்சுவிட்டனர். சிலர் கைகளால் ஆடைகளை நெருடினர்.

“அழிவும் ஆக்கமும் இனி உங்கள் முடிவில்” என்றபின் சந்திரசன்மர் தன்னுடன் வந்த வைதிகருடன் எழுந்துகொண்டார். “இந்நகரில் நாகவேதம் எழும் என்றால் இதை உதறி நாங்கள் செல்வதைத்தவிர வேறு வழி இல்லை. முன்பு நூற்றெட்டு தொல்குடியினர் இங்கே எரிபுகுந்தபின்னர் மழை பொய்க்காமலிருக்கும்பொருட்டு எங்களை கொண்டுவந்தார் உங்கள் அரசர். எங்கள் சொல்லில் வாழ்ந்தது உங்கள் குடி. அச்சொல்லை எங்கள் நாவுடன் எடுத்துச்செல்வோம். நாகவேதம் உங்களுக்கு மழையும் விளையும் பொன்னும் அறமும் ஆகுமென்றால் அதை நம்பி வாழுங்கள்.”

முன்பு  மகதத்தை தொல்குடிவைதிகர் கைவிட்டபோது ஜராசந்தன் வைதிகச்சடங்குகளுக்கு வரும் அந்தணர்களுக்கு பத்துமடங்கு பொன் பரிசளித்தான். ஆரியவர்த்தத்தின் வைதிகர் மகதத்தை புறக்கணித்தாலும் அங்கே கிடைத்த பெரும்பொருள் நாடி தெற்கே விந்தியனுக்கு அப்பாலிருந்து சிறுகுடி வைதிகர் வந்துகொண்டிருந்தனர். மெல்ல அவர்களில் பலர் அங்கேயே தங்கினர். அவர்களின் குலங்கள் பெருகின. அன்றாட வாழ்க்கை ஒவ்வொன்றையும் இயல்பாக்குவதையே நெறியென கொண்டிருக்கிறது, கற்கள் அனைத்தையும் உருளைகளாக மாற்றவிரும்பும் நதிப்பெருக்கைப்போல. முன்பு அந்நகரில் வைதிகருக்கு இழைக்கப்பட்ட பழியை மக்கள் மறந்தனர்.

ஆரியவர்த்தத்தின் வைதிககுடிகள் மட்டுமே அதை நினைவில் வைத்திருந்தனர். ஒவ்வொருநாளும் ஆரியவர்த்தத்தின் ஐம்பத்தாறுநாடுகளின் பெயர்களை அவர்கள் சொல்லி அவியிடுகையில் மகதத்தின் பெயர் மட்டும் தவிர்க்கப்பட்டது. ஆனால் தேவர்கள் மகதத்திலேயே மண்ணிறங்குகிறார்கள் என்று ஜராசந்தனின் பொன்பெற்ற சூதர்கள் பாடினர். பிறந்துவந்த ஒருதலைமுறை அச்சொல்லிலேயே வளர்ந்தது.

பொருள்கொண்டு பெருகி, வேதக்கல்விபெருக்கிய மகதத்தின் சிறுகுடிவைதிகர் தங்களை மூத்தமுதல்குடி என சொல்லத்தலைப்பட்டனர். தங்கள் இழிவுணர்வால் அதை ஐந்துமடங்கு மிகைப்படுத்தினர். அதில் பாதி நம்பப்பட்டது. கௌசிகராகிய விஸ்வாமித்ரரால் உருவாக்கப்பட்டு விந்தியனுக்கு அப்பால் வேதம் பெருகும்பொருட்டு நிறுத்தப்பட்டவர்கள் தாங்கள் என்றனர். பூர்வகௌசிககுல அந்தணர் பிறரை நிகரென கொள்ளலாகாது என்றனர். மகதம் அவர்களின் நகரென்று ஆகியது. பூர்வகௌசிக அந்தணர் சொல்லை மக்கள் இறையாணை என எண்ணினர்.

“இதை நாம் ஒப்பலாகாது. நம் குழந்தைகளுக்கு நாமே நஞ்சூட்டுவதற்கு நிகர் இது” என சிறுமன்றுகள் தோறும் மகதக்குடியினர் உள்ளம் குமுறினர். ஆனால் ஜராசந்தனிடம் எவர் சொல்வதென்று அவர்கள் குழம்பினர். இறுதியில் பேரன்னை ஆலயத்தில் கூடிய முழுமன்றில் மூத்த குலத்தலைவர் மூஷிகர் ஜராசந்தனின் அவையில் அதை சொல்லலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. முதியவரான மூஷிகர் “அவன் அரக்கியின் மைந்தன். நாமறிவோம் அவன் இயல்பென்ன என்று” என்றார். அவர்கள் அமைதியாக ஒருவரை ஒருவர் நோக்கினர். “நான் அச்சொல்லைச் சொல்லி அங்கேயே இறக்கக்கூடும்” என்றார் அவர்.

“அதை நாம் மென்மையாக சொல்வோம். அவர் உள்ளம் குளிரும்படி சொல்வோம்” என்றார் சந்திரசன்மர். “அவரது வெற்றியின்பொருட்டும் அவர் மைந்தனின் வாழ்வின்பொருட்டும் பெருவேள்வி ஒன்றைச்செய்ய ஒப்புதல் கோருவோம். அவ்வேள்வி அன்றி பிற வேள்வியை இங்கே நாம் ஒப்பமாட்டோம் என்றும் அறிவிப்போம்.” அவை முகம் மலர்ந்து “ஆம், ஆம், அதுவே நல்ல சொல்” என்றது. “இனிய சொல். அதுவே நல்ல படைக்கலம்” என்றார் குலத்தலைவராகிய அச்சுதர்.

அச்சுதரும் பிறரும் துணைவர பெரும் காணிக்கைகளுடன் குலத்தலைவர்களின் குழு ஒன்று ஜராசந்தனை காணச்சென்றது. அவையிலமர்ந்திருந்த அரசனின் முன் நிரை நின்று முகமனும் வாழ்த்தும் சொன்னபின் அனைவரும் மூஷிகரை நோக்கினர். அவர் இருண்ட முகமும் தளர்ந்த தோள்களுமாக நடைதடுமாற வந்துகொண்டிருந்தார். அவைபுகுந்தபின்னர் அவர் சித்தப்பெருக்கு விழிகளையும் காதுகளையும் முற்றாக மறைத்துவிட்டிருந்தது. ஆனால் அமைதியை அவர் திடீரென்று கேட்டார். விழிகளை உணர்ந்தார். பதறும் கைகளை கூப்பியபடி எச்சில் விழுங்கினார். சொல்லெழாமல் உதடுகளை அசைத்தார்.

அத்தருணம் எத்தனை கூரிய முனை என அப்போதுதான் அவர் முழுதுணர்ந்தார். ஆயிரம் முறை ஒத்திகை செய்த அனைத்துச்சொற்களும் அவரை விட்டு அகன்றன. முதிய குலத்தலைவராக, கற்றறிந்த சான்றோனாக, தந்தையாக, அரசுசூழ் திறனாளனாக, எளிய குடிமகனாக அவர் நின்றுநடித்த அத்தருணத்தை முற்றிலும் புதியதென உணர்ந்தார்.

“நாங்கள் ஒருபோதும் நாகவேள்வியை ஒப்பமாட்டோம்” என்றார் மூஷிகர். அச்சொற்களைக்கேட்டு அவரே திகைத்தார். யார் இதைச் சொல்வது? “அரசர் குடித்தலைமையை மீறி முடிவெடுக்க உரிமைகொண்டவர் அல்ல. முறைமைகளை கைவிட்ட அரசரை எங்களால் ஏற்கமுடியாது.” யார் சொல்வது? நானா? “நீங்கள் அரக்கியின் மைந்தராக இருக்கலாம். நாங்கள் மூதாதையருக்கு நீரளிக்கும் தொல்குடிகள்.” நிறுத்து! நிறுத்து! நிறுத்து! “இந்நகரையும் எங்கள் குடியையும் நீங்கள் அழிப்பதை நாங்கள் நோக்கி வாளாவிருக்க இயலாது.”

சொல்லிமுடித்ததுமே மூஷிகர் உடல்தளர, உள்ளம் தென்றலை உணர, இயல்பானார். பலநாட்களாக அவர் சுமந்திருந்த பேரெடை விலக தோள்கள் எளிதாயின. புன்னகையுடன் ஜராசந்தனின் முகத்தை நோக்கியபடி நின்றார். ஜராசந்தன் புன்னகை செய்தான். “நன்று. உங்கள் நிலைபாட்டை அறிய முடிந்தது உவகை அளிக்கிறது” என்றான். “முறைமைகள் முதன்மையானவை. குடிகளை உருவாக்கி நிறுத்துபவை அவையே. அவற்றைக் காப்பதே அரசனின் கடன்” என்றான். அவர்கள் ஒருவர் விழிகளை ஒருவர் நோக்கினர்.

ஜராசந்தன் “ஆனால் அந்த முறைமைகள் இங்கே முன்னரே மீறப்பட்டுள்ளன முதியவர்களே. முன்பு இந்நகரை நான் வென்று அரசை கைப்பற்றியபோது இங்குள்ள குடித்தலைவர்கள் என்னை ஏற்கவில்லை. முறைமைமீறல் என்றனர். அவர்களை ஒறுத்து அக்குடியில் இருந்து உங்களை தெரிவுசெய்து குலத்தலைமையின் கோல்களை அளித்தேன். அது முதல் நெறிமீறல். அதற்கென இப்போது உங்களை தண்டிப்பதே அரசமுறை என எண்ணுகிறேன்” என்றான். அவர்கள் பெருமூச்சு விட்டனர். ஒவ்வொருவரும் அத்தருணத்தில் அதிலிருந்த  தவிர்க்கவியலாமையை உணர்ந்தனர். அச்சுதர் “ஆம், நாங்கள் அதை உணர்கிறோம் அரசே. இளமையில் நாங்கள் கொண்ட பொருந்தா விழைவுக்காக இப்போது கழுவிலேறியாகவேண்டும். அது மட்டுமே எங்களை நிறைவுசெய்யும்” என்றார்.

பன்னிரு குடித்தலைவர்களும் அன்றே சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களின் மைந்தர்களையும் கொடி வழியினரையும் சிறையில் அடைத்து நாகவேள்வி ஏற்றுக்கொள்பவர்களை குடித்தலைவர்களாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தான். குலத்தலைவர்களின் மூத்தமைந்தர் எவரும் அதற்கு ஒப்பவில்லை, அவர்கள் குலத்தலைவர்களாக முன்னரே உள்ளத்தால் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் ஒவ்வொரு குலத்திலும் இளையவர் ஒருவர் அதற்கு முன்வந்தார். முன்பு அவனிடம் கோல்பெற்று குலத்தலைமை ஏற்றவர்களும் அதைத்தான் செய்தனர். அவர்கள் எப்போதும் எழுந்துவருவார்கள் என ஜராசந்தன் அறிந்திருந்தான்.

அவர்கள் தனித்தவர்கள். உயர்ந்தவர் விழிதொட்டு பேச முடியா தாழ்வுணர்வு கொண்டவர்கள். இளையவரானமையால் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு. அச்சிறுமையை வெல்ல அகக்கனவுகளில் வீங்கிப்பருத்து, அதை உள்கரந்தமையால் மேலும் சிறுமைகொண்டவர்கள் அவர்கள். ஒருபோதும் அவை நிகழாதென அறியும்தோறும் அக்கனவுகளை மேலும் இழிவாக்கிக்கொண்டவர்கள். அவ்வாய்ப்பு அவர்களுக்கு அக்கற்பனைகள் அனைத்தும் நனவாகும் ஒரு இறையாணை என்றே தோன்றியது. தங்கள் பகற்கனவுகளில் தாங்கள் எடுத்த பேருருவத்தை ஊழ் ஒப்புகிறதென்றே அதை உணர்ந்தனர்.

தங்கள் மூத்தாரை மறுதலித்து கோல்கொண்ட சிலநாட்களிலேயே அவர்கள் தாங்கள் அப்பேருருவே என நம்பத்தலைப்பட்டனர். பேருருவை நம்புகிறவர்களிடம் அப்பாவனைகள் அமைகின்றன. நம்பி நிகழ்த்தப்படும் பாவனைகள் நம்பப்படுகின்றன. அவர்கள் குடித்தலைவர்களாக உருமாறினர். அவர்களை தகைமைசார் குடித்தலைவர்கள் என குடிகளும் நம்பினர். தங்கள் புறநிமிர்வாலும் அதை ஐயுற்றுத்தவித்த அகக்குனிவாலும் அவர்கள் குடிகளுக்கு நன்மைகளை செய்தனர். காலப்போக்கில் நற்பெயர் ஈட்டினர். அடுத்த தலைமுறையினரால் வாழ்த்தப்பட்டனர்.

புதிய குடித்தலைவர்களின் ஒப்புதலோடு முதல் நாகவேள்வி சைத்யக மலையில் நடைபெற்றது. மகதத்தின் குடிமக்கள் அவ்வேள்வி அங்கு நிகழ்வதை அறிந்திருந்தனர். சைத்யக மலைக்குள் செல்லவோ வேள்வியை பார்க்கவோ எவருக்கும் ஒப்புதல் இருக்கவில்லை. கண்களால் பார்க்கப்படாத ஒன்றை நினைவில் நெடுநாள் நிறுத்திக்கொள்ள மக்களால் இயல்வதில்லை. அவை வெறும் கற்பனைகளென ஆகி பிற கற்பனைகளுடன் கலந்து கதைளாகி அகன்று செல்லும். கதைகள் ஆர்வமூட்டும்படி வளர்க்கப்பட்டால் மட்டுமே வாழக்கூடியவை. மகதத்தில் நாகவேள்வி குறித்த பலநூறு கதைகள் இருந்தன. அங்கே ஆயிரத்தெட்டு கன்றுகள் கொல்லப்படுவதாக சொன்னார்கள். அது ஆயிரம் மானுடர் என்றாகியது. அடங்காத   ஷத்ரிய அரசர்களை கொண்டுவந்து சிறையிட்டு பலிகொடுக்கிறார் அரசர் என்று ஒரு சூதர் சொன்னதும் அதன் நம்பமுடியாமையே அதை அனைவர் நினைவிலும் நிறுத்தியது. நினைவில் நின்றமையால் அது நிலைபெற்றது.

மழைவிழவை பெருநிகழ்வாக மகத அரசு ஆக்கியது. அப்பன்னிருநாளும் நகரில் கொலையன்றி அனைத்தும் குற்றமே அல்ல என்றாகியது. அன்று ஆற்றுபவை அனைத்தும் இறுதிமழைத்துளி ஓய்ந்ததும் நினைவிலிருந்தும் அகன்றாகவேண்டும் என்று பூசகர் ஆணையிட்டனர். நினைவுகூர்தலே மானுடருக்கு கடினம். கணந்தோறும் வளர்ந்து பிறிதொன்றாகும் மானுட உடலோ மறப்பதையே இயல்பாகக் கொண்டது. அனைத்தும் மறக்கப்பட்டுவிடும் என்பதே ஓர் பெருந்தூண்டுதலாகியது. அனைவரும் ஆற்றுகிறார்கள் என்பதே பிழையும் பழியும் இல்லையென்றாக்கியது. அவர்களுக்குமேல் பெய்து நின்றிருந்த பெருமழை தெய்வங்கள் அமைத்த திரையாகியது.

பன்னிருநாட்களும் இழிபெருங்கனவொன்றிலாடினர் மகதர். மழை மகதத்தின் குடிகள் அனைவரையும் தழுவி பிறிதொருவராக ஆக்கியது. களிமகன்களும் படைவீரர்களும் வணிகர்களும் மட்டுமன்றி இல்லறத்தாரும் பெண்டிரும் குழந்தைகளும் அதில் திளைத்தனர். அவர்களின் முதலியல்பே அதுவென்பதுபோல. அவ்விழவின் கட்டின்மைக்காக ஆண்டு முழுக்க ஒவ்வொரு நாளும் அன்றாடக் கட்டுகளுக்குள் பொறுத்தமைந்து அவர்கள் காத்திருந்தனர். அவர்களின் அகக்குகைஇருளில் விழிமட்டுமே மின்னும் விலங்கொன்று நாசுழற்றி வெம்மூச்சு விட்டு  ‘இந்நாள்! இனியொரு நாள்! இனியொரு நாள்!’ என்று பொறுமை இழந்து கால்மாற்றி செவிசாய்த்து அமர்ந்திருந்தது.

வேனில் முதிர்ந்து மழைவிழவுக்கான முரசறையப்படும்போது ஒவ்வொருவரும் அவ்வொலியை தங்கள் நெஞ்சறைதல் என உணர்ந்தனர். அவ்வொலி கேட்டு அவர்கள் கொந்தளித்து கூச்சலிடுவதில்லை. அச்சமூட்டும் ஒன்றை கேட்டதுபோல் அம்முரசுமேடைகளில் இருந்து  விலகிச் சென்று அதை கேட்காதவர்கள்போல நடித்தனர். பொருள்களை விலைபேசினர். கன்றுகளை ஓட்டிச்சென்றனர். அருகிருப்பவருடன் நகையாடினர். உள்ளத்தை ஒருபோதும் பிறருடன் பகிர்ந்து கொள்ளாது கரந்தனர். கரந்தவை கொள்ளும் குளிர்ந்த கூர்மையை உள்ளூர உணர்ந்தனர். கூர்முனையை வருடும் கூச்சத்தை அறிந்து சிலிர்த்தனர். முரசறைவு முடிந்தபின் நகரில் ஆழ்ந்த அமைதி நிலவியது.  ஒவ்வொருவரும் தனித்துச் சென்று நீள்மூச்செறிந்தனர்.

துணைவியரின் முகங்களை இல்லறத்தார் நோக்கவில்லை. துணைவியரும் விழிதூக்காது தங்களுக்குள் அமைந்து கனவிலென உலவினர். அவ்வறிவிப்பு நிகழவேயில்லை என்ற நடிப்பு அனைவரும் நடித்தமையால் இயல்பென்றாகியது. இரவில் அணுகும்  மழையின் புழுக்கத்தில் வியர்வை வழிய படுத்திருந்தவர்கள் கைவிசிறிகளால் விசிறியபடி பெருமூச்சுவிட்டு விடியும்வரை புரண்டு படுத்தனர். விடியலின் கனவில் திகைத்தெழுந்து கூசிச்சிலிர்த்தனர். துயிலிழந்த கண்கள் உறுத்த காலையில் எழுந்து உலர்ந்த வாயுடன் தெருக்களில் விழிநட்டு அமர்ந்திருந்தனர். மழை வருகிறதா என்று விண்ணைப்பார்ப்பதுகூட பிறிதெவரேனும் அறியலாகும் என்பதற்காக புழுதி படிந்த தெருக்களையே நோக்கினர்.

ஒரு சொல்லும் ஒருவரும் உரைக்கவில்லையென்றாலும் ஒவ்வொருவரும் தன்னியல்பிலேயே அதற்கென ஒருங்கினர். இல்லங்களில் மழைவிழவுக்கான பொடியும் பூச்சும் சாந்தும் சாறும் சமைக்கப்பட்டன. மழை விழவுக்கென அமைந்த தேன்மெழுகு பூசப்பட்ட ஆடைகள் இருண்ட பெட்டிகளிலிருந்து வெளியே எடுத்து புதுக்கப்பட்டன.  மழை விழவு தொடங்குவதற்கான கொம்பு காலையில் ஒலித்தபோது பறக்கத்தயங்கி கூண்டில் அமர்ந்து சிறகதிரும் குஞ்சுப்பறவைபோல  தங்கள் இல்லங்களுக்குள்ளேயே இருந்தனர்.

முதல்கார் வியர்வைபெருக்கென வான்நிறைந்து குளிர்காற்றென ஆகி இருட்டென மின்னல் அதிர்வென இடிமுழக்கென சூழ்ந்தது. முதல்மழை அம்புப்பெருக்கென சாய்ந்து வந்தறைந்தது. நகரம் “மழை! மழை!” என ஓலமிடத் தொடங்கியது. கூரைவிளிம்புகள் சொட்டி விழுதாகி அருவிநிரைகளென மாறின. தெருக்களெங்கும் புழுதி கரைந்து செங்குருதி போல நீர் வழிந்தது. கோட்டைச் சுவர்கள் ஈரத்தில் கருகி, குவைமாடங்கள் ஒளிவழிந்து மெருகேறி, உச்சிக் கொடிகள் நனைந்து கம்பங்களில் சுற்றிக்கொள்ள மழை மூடியிருந்தது விண்முதல் மண்வரையிலான வெளியை. அனைத்து ஓசைகளுக்கும் மேல் மழையின் ஓசை அழியாச்சொல்லொன்றை சொல்லிக் கொண்டிருந்தது.

முதலில்  நாணிழப்பவை கன்றுகளும் குதிரைகளும். புதுமழை மணத்தை முகர்ந்து கட்டுகளிலிருந்து துள்ளி கால் உதறி கனைத்தன. அறுத்துக்கொண்டு தெருவில் இறங்கி வயிறதிரப்பாய்ந்தன. பின்னர் தெருநாய்கள் வாலைத்தூக்கிச் சுழற்றி மழையில் பாய்ந்திறங்கி தங்களைத் தாங்களே சுற்றிக் கொண்டன. சங்கிலியை அறுத்துக்கொண்ட களிறுகள் தெருக்களில் பிளிறியோடின. பின்பு எப்போதோ எங்கோ களியாட்டின் மெல்லிய ஓசை ஒன்று எழுந்தது. ஒவ்வொரு முறையும் நகரின் எப்பகுதியிலிருந்து அது எழுகிறது என்பது முன்பு உய்த்துணரமுடியாததாகவே இருந்தது.

அவ்வொலி கேட்டு கல்விழுந்து திடுக்கிட்டு துயில் கலையும் புரவிபோல நகரம் எழுந்தது. சற்று நேரத்தில் அனைத்து இல்லங்களிலிருந்தும் அனைவரும் தெருக்களுக்கு இறங்கினர். லேபனங்கள் பூசப்பட்ட உடலும் நீர் ஒட்டா ஆடையுமாக மழையில் புகுந்து தனித்தனர். கள்ளுண்டனர். காமம் கொண்டனர். கட்டின்றி அலைந்தனர். தினவெடுத்து மற்போரிட்டு சேற்றில் படுத்துருண்டனர். புழுக்களுக்கு மட்டுமே தெய்வங்களால் அளிக்கப்பட்டுள்ள உடலொன்றேயான முழுதிருப்பில் திளைத்தனர்.

உடல் நலிந்து மழைக்கு அப்பால் திண்ணையில் அமர்ந்து நைந்த விழிகளால் நோக்கியிருந்த முதியவர் கைத்தடிகளால் தரையைத்தட்டி நிலையழிந்தனர். “உங்கள் நகருக்கு நடுவே அங்கே நாகவேள்வி நடந்துகொண்டிருக்கிறது மூடர்களே” என்று கூவினர். “இங்கு கட்டவிழ்ந்திருக்கும் களியாட்டின் ஊற்று அங்கே சுருளழியும் நாகங்கள். வானிழிவது  மழையல்ல, நாக நஞ்சென்று அறியுங்கள். உங்கள் உடல்களில் நெளிவது கைகளும் கால்களும் அல்ல, நாகவளைவுகள். அத்தனைபேரும்  நாகங்களாகிறீர்கள்.  நாகங்களே! இளநஞ்சுகளே! இமையா வேட்கை விழிகளே!” என்று கூவினர்.

அவர்களின் சொற்களுக்கு மேல் அடைத்து நின்று பெய்தது மழை. முதல் நாகவேள்வி நிகழ்ந்து அதன் விளைவென அரசனுக்கு மைந்தன் பிறந்தபோது மகதத்தின் வைதிக அந்தணரும் அதைப்பற்றி பேசாதாயினர். சிறைகளில் அடைக்கப்பட்ட குலமூத்தோர் விடுதலை செய்யப்பட்டனர். உடல் நலிந்து முதுமை சூடி வந்த அவர்கள் சித்தம் கலங்கியபடி நகரை வெறித்து நோக்கினர். தோல்பையை இழுத்து புறம் திருப்புவது போல உள்ளிருந்து பிறிதொருவர் எழக்கூடுவதெப்படி? நாமறியாத ஒன்று இந்நகருக்குள் இருந்திருக்கிறது. இவ்வரக்கன் அதை தொட்டு எழுப்பியிருக்கிறான். நாமறியாத நஞ்சொன்றை ஒவ்வொரு நாளும் உண்டு கொண்டிருக்கிறோம். கூட்டரே, நாம் நாமல்ல. நம்முள் வாழ்வது நம்மை ஊர்தி என படையல் என கொண்டு இங்கு வாழும் தெய்வங்களின் வாழ்க்கை. சில ஆண்டுகளிலேயே தங்களால் அறிந்து கொள்ள முடியாத உலகிலிருந்து உதிர்ந்து மறைந்தனர்.

மழை எழுந்தபின்னர் மகதர் மானுடரல்ல என்று சூதர் பாடினர். அவர்களின் விழிகள் மெல்ல மெல்ல இமையாதாயின. உடல்கள் நெளிவுகொண்டன. மூச்சு சீறலாகியது. அவர்கள் குரலில் அழிந்து மறைந்த தொல்நாக மொழி எழுந்துவந்தது. நாகவேள்வியின் அவிகொள்ள தட்சனும் கார்க்கோடகனும் வாசுகியும் பாதாளங்களிலிருந்து எழுந்து வந்தனர். இருளுக்குள் நெளிவென அவர்கள் அந்நகருக்குள் பரவினர். அவர்களுக்கு மேல் கொடுநாகக் கோதை அணிந்து ஆடினான் ஒருவன். அவனுடன் காலிணைந்து கையிணைந்து ஆடினாள் நச்சரவக் கங்கணம் அணிந்த கரியபேரன்னை.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 38

[ 6 ]

ஜராசந்தன் மழைவிழவுக்கென முழுதணிக்கோலத்தில் கிளம்பும்போதே நகர் ஒற்றன் ஏழு முரசுகளும் கிழிக்கப்பட்ட செய்தியுடன் அரண்மனையை வந்தடைந்திருந்தான். அமைச்சர் காமிகர் அதை அவனிடம் அறிவிப்பதற்காக அணுகி சற்று அப்பால் நின்றபடி தலைவணங்கினார். அவர் முகக்குறியிலிருந்தே தீய செய்தி என்று அறிந்து கொண்ட ஜராசந்தன் “ம்” என்றான். அவர் மேலும் தயங்கி அவன் உடலை நோக்கினார். பின்பு துணிந்து “அரசே, நம் குலத்தின் பெருமைக்குறிகளான ஏழு ஏறுமுரசுகளும் இன்று அயலவர் இருவரால் கிழிக்கப்பட்டுள்ளன” என்றார்.

ஜராசந்தன் முகத்தில் எந்த உணர்வும் வெளிப்படவில்லை. “இன்று காலை” என்று அவர் மேலும் சொன்னார். ஒரு சினப்பெருங்குரலை எதிர்பார்த்துவிட்டிருந்தமையால் அவருக்கு ஏமாற்றமாக இருந்தது.  மெல்லிய குரலில் ஜராசந்தன் “இருவரா?” என்றான். “ஆம்” என்றார். இக்கணம் இதோ என அவர் அகம் தவித்தது. ஜராசந்தன் இருபுருவங்களும் சுருங்க ஆம் என்பதுபோல தானே தலையை அசைத்தான். “வில்லவன் ஒருவன் வில்லுடன் கீழே நிற்க பேருருக் கொண்ட ஒருவன் கோட்டையில் தொற்றி ஏறி வென்று முரசுத்தோல்களை கிழித்திருக்கிறான்” என்றார் காமிகர். அச்சொற்கள் அரசனை பற்றி எரிந்தேறச்செய்யும் என அவர் உள்ளம் நம்பியது.

மேலும் குளிர்ந்த குரலில் “நம் வீரர்கள் எத்தனை பேர் அங்கிருந்தனர்?” என்றான் ஜராசந்தன். “நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள். பொதுவான காவலர்கள்தான். நாம் அம்முரசுகளுக்கு வழக்கமான காவலுக்கு அப்பால் ஏதும் அமைப்பதில்லை” என்றார் காமிகர். “அவர்களில் எட்டுபேர் இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் அனைவருமே புண்பட்டுள்ளனர்.” ஜராசந்தனின் முகம் இயல்படைந்தது. புன்னகையுடன் “நன்று” என்றான். திரும்பி தன்னை நோக்கி வந்த மைந்தனிடம் “வருக இளையவனே, நல்ல நேரம் நெருங்கிவிட்டது என்று நிமித்திகர் மும்முறை சொல்லிவிட்டனர்” என்றான்.

பட்டத்து இளவரசனாகிய சகதேவன் அவனை அணுகி வணங்கி “எந்தையே, நான் முன்னரே கிளம்பிவிட்டேன்” என்றான். அவன் முகக்குறியை பார்த்து “அன்னை பிந்தச்சொன்னாளா?” என்றான் ஜராசந்தன். “ஆம், மகளிர் அறையில் ஏதோ தீய நிமித்தம் ஒன்றை அவர் கண்டிருக்கிறார்” என்றான் சகதேவன். ஜராசந்தன் கண்களில் சிரிப்புடன் “அவள் ஒவ்வொருநாளும் அதை காண்கிறாள். அச்சம் நம்மைச் சூழ்ந்துள்ள பொருட்கள் மேலும் படிகிறது” என்றபின் திரும்பி காமிகரிடம் “சூக்தரின் வேதாந்த மஞ்சரியில் ஒரு வரி வருகிறது. ஆத்மாவின் இருப்பைப்பற்றி பேசும்போது அனைத்துப் பொருள்களிலும் அது உட்பொருளாக விளங்குகிறது என்கிறார். புறப்பொருட்களில் எப்படி ஆன்மா உட்பொருளாக விளங்கமுடியும் என்று சென்ற வாரம் அவையில் இரவு வரை பேசிக்கொண்டிருந்தோம்” என்றான்.

“அரைநாழிகை பிந்தும்படி அன்னை ஆணையிட்டார்” என்றான் சகதேவன். வேதாந்தப் பொருள் அவனுக்கு புரியவில்லை. ஜராசந்தன் “தெய்வங்கள் அமைத்த தீயூழை காலத்தை சற்று இழுத்து விலக்கிவிட்டாள் அல்லவா?” என்றான். சகதேவன் சிரித்து “ஆம், அப்படித்தான் நம்புகிறார். ஆகவே சற்று பிந்தினேன்” என்றான். “செல்வோம்” என்று அவன் தோளை மெல்ல அணைத்தபடி ஜராசந்தன் நடந்தான். சகதேவன் பூமீசை கருக்க வளர்ந்திருந்தாலும் சற்றே ஒடுங்கிய தோள்களும் மெலிந்த மார்பும் சிறுவர்களுக்குரிய சிரிப்பும் கொண்டிருந்தான். முதிரா இளைஞனுக்குரிய உடைந்த குரலில் “மழையில் நெடுநேரம் ஆடவேண்டாம் என்று சொல்லிக்கொண்டு என் பின்னால் வந்தார் அன்னை” என்றான்.

“உன்னை ஏதோ தீயூழ் வந்து பற்றப்போகிறது என்னும் அச்சம் நீ கருவிலிருந்தபோதே அவளில் எழுந்துவிட்டது” என்றான் ஜராசந்தன். “அன்றுமுதல் உன்னை இரு கைகளாலும் பொத்தித்தான் வளர்க்கிறாள். உனக்கு இங்கு இளிவரல்சூதர் பிறைவிளக்கு என்றே பெயரிட்டிருக்கிறார்கள்” என்றபின் உரக்கச் சிரித்து “காட்டுத்தீயில் கொளுத்திய பிறைவிளக்கு என்கிறார்கள்” என்றான். காமிகர் சிரிப்பதுபோல உதடைக் குவித்து தலைவணங்கினார்.

பெருவாயிலைக் கடந்து அரண்மனையின் இடைநாழியில் அவர்கள் தோன்றியதும் கூடி நின்றிருந்த குலத்தலைவர்கள் அனைவரும் வாழ்த்தொலி எழுப்பினர். மங்கல இசை எழுந்து மழைக்குள் படர்ந்தது. மழை நின்றுபெய்த பெருமுற்றத்தில் பலநூறு ஓலைக்குடைகள் யானைக்கூட்டங்கள் போல செறிந்து நிறைந்தன. தேன்மெழுகு பூசப்பட்ட மூங்கில்முடைவால் ஆன மடிப்புக்கூரை ஒன்றை ஒன்றிலிருந்து ஒன்றாக நீட்டி அரண்மனை வாயிலில் இருந்து தேர்த்தட்டு வரை கொண்டு சென்று மெல்லிய மூங்கில் கால்களில் நிறுத்தி பற்றிக் கொண்டனர் ஏவலர். மைந்தனின் தோளில் இருந்து கையெடுக்காமல் இருபக்கமும் நோக்கி தலையசைத்து முதிய குலத்தலைவர்களிடம் ஓரிரு வார்த்தைகள் முகமன் சொல்லி ஜராசந்தன் தேர்த்தட்டு நோக்கி சென்றான்.

காமிகர் பின்னால் வந்து “இளவரசருக்குரிய தேர் பின்புறம் சித்தமாகி நிற்கிறது” என்று சொன்னார். “அவன் என்னுடன் வரட்டும்” என்று சொன்னபடி ஜராசந்தன் தேரிலேறிக் கொண்டு கைநீட்டினான். சகதேவன் அக்கையை பற்றியவுடன் தூக்கி தன் அருகே அமரவைத்தான். பெருமூச்சுவிடும் ஒலியில் “செல்க!” என்றான். தேர் ஒருமுறை குலுங்கியபின் மழையில் புகுந்தது. சூழ்ந்து ஒலித்த படைவீரர்களின் வாழ்த்தொலிகள் நீர்சவுக்குகளின் உள்ளே சிதறிப்பரவின. ஈரமான கற்சாலையில் குளம்புகள் ஒலிக்கத்தொடங்கின. மழைக்கு அப்பால் நகரம் கரைந்து வழிந்துகொண்டிருப்பதுபோல தெரிந்தது.

ஜராசந்தன் “நீ மிகவும் இளையோன் என்ற எண்ணம் இன்று காலை வரை எனக்கிருந்தது. எனவேதான் எந்த அரசலுவலிலும் உன்னை நான் இணைத்துக்கொள்ளவில்லை” என்றான். சகதேவன் புன்னகைத்தான். “இங்கு நீ இவ்வணிக்கோலத்தில் அங்கிருந்து வரக்கண்டதும் அரசனாகிவிட்டாய் என்ற எண்ணம் வந்தது. ஏனென்று தெரியவில்லை. அன்னையின் அச்சத்தைப்பற்றி சொல்லி நீ புன்னகைத்ததனால்தான் அது என தேரில் ஏறியபின் தோன்றியது.”

சகதேவன் “தந்தையே, நான் பட்டத்து இளவரசனாகும்போதே அரசனாவது முடிவாகிவிட்டதல்லவா?” என்றான். அந்த வெள்ளையான சொற்கள் ஜராசந்தனை எங்கோ சற்று உளம்சுளிக்கவைத்தன. அதைக்கடந்து வந்து “ஆம். ஆனால் இப்போது நீ அரசனாகவே ஆகிவிட்டாய்” என்றான். அச்சொற்கள் புரியாமல் சகதேவன் நோக்கினான். “நான் இந்நகருக்குள் புகுந்தபோது உன் வயதே இருந்தேன். உன்னைவிட இருமடங்கு பெரிய உடல் கொண்டிருந்தேன். நீ கற்ற நூலறிவோ அடைந்த அவைப்பழக்கமோ தேறிய படைக்கலப் பயிற்சியோ எனக்கிருக்கவில்லை. ஆனால் இந்நகர் என்னுடையது என்ற உறுதியும் இம்மண்ணை நான் ஆள்வேன் என்ற கனவும் பிறிதொன்றையும் எண்ணாது அதை நோக்கிச்செல்லும் ஒருமுனைப்பும் கொண்டிருந்தேன். எண்ணியபடி எழுந்து வந்தேன்” என்றான்.

அவன் உள்ளம் எங்கோ ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்த சகதேவன் மறுசொல்லின்றி கேட்டுக்கொண்டிருந்தான். “உன் அன்னைக்கு முன் இங்குள்ள குலமுறைப்படி நான் ஏழு மனைவியரை கொண்டேன். அவர்களில் பிறந்த நாற்பத்தெட்டு மகள்களும் வளர்ந்து மைந்தரை பெற்றிருக்கிறார்கள். ஆனால் என் குருதியில் எழுந்து இந்நகரை நான் என அமர்ந்து ஆள மைந்தரில்லை என்று என் ஆழுளமும் குடிமக்களும் துயருறத்தொடங்கிய பின்னர்தான் முதல்முறையாக வாழ்வு என்றால் என்ன என்று எண்ணத்தலைப்பட்டேன். அதில் இறுதிவெற்றி என்பது ஊழால் அமைவதே என்று தெளிந்தேன்.”

“வைதிகர் சொற்படி பெருவேள்விகளை நிகழ்த்தினேன். கொடைகள் ஆற்றினேன். பயனில்லை என்று கண்டபோதுதான் உன் அன்னையர் சொல்லத்தொடங்கினர், நான் செய்த கொடுஞ்செயல்களின் பழி என்னை சூழ்ந்துள்ளது என்று. காட்டில் ஒரு சிம்மம் செய்யும் கொடுஞ்செயல்களில் ஒருபகுதியையேனும் நான் செய்யவில்லை என்று அதற்கு நான் மறுமொழி சொன்னேன்” என்றான் ஜராசந்தன். “அந்நாளில் ஒருமுறை நம் குலத்தின் முதுபூசகர் சர்மர் வெறியாட்டு கொண்டு எழுந்து கோலுடன் சுழன்றாடி என்னருகே வந்தார். அவரில் பீடம்கொண்டிருந்த அறியா மலைத்தெய்வம் எனக்கு ஆணையிட்டது. இம்மழைவிழவை இங்கு தொடங்கும்படி.”

“இது ஒரு வேள்விச்சடங்கு இளையோனே. வைதிக வேள்வி அல்ல, நாகர் குலத்து பூசகர்களை கொண்டுவந்து நாகர் வேதங்களை ஓதி செய்யப்படும் நாகவேள்வி இது…” என்றான் ஜராசந்தன். மழை பரவிய தெருக்களில் நீர்த்துளிகளை சிதறடித்துக்கொண்டு சென்ற தேரில் ஜராசந்தனின் உடலுடன் தோள் ஒட்டி வெம்மையை உணர்ந்தபடி சகதேவன் அமர்ந்திருந்தான். எப்போதுமே கைவெள்ளையின் வெம்மைக்குள் ஒடுங்கும் புறாக்குஞ்சுபோல தந்தையுடன் ஒண்டிக்கொள்வதே அவன் வழக்கம். அவனுக்குப்பின் மைந்தர் பிறந்தும்கூட அவனிடம் மட்டும் பேசுவதற்கென்று ஒருகுரல் ஜராசந்தனிடம் இருந்தது. கனிந்து மென்மையாகி செவியறியாமலேயே நெஞ்சுக்குள் ஒலிப்பதாக அது ஆகிவிடும். ஒற்றைக் கனவில் இருவரும் சென்றுகொண்டிருப்பார்கள். ஒரே உணர்வுநிலையின் உச்சத்தில் விழித்தெழுந்து ஒருவரை ஒருவர் உணர்வார்கள். அப்போது அணையும் விலக்கத்தை வெல்ல சகதேவன் தந்தையின் கைகளை எடுத்து தன் மடியில் வைத்து தோளுடன் சாய்ந்துகொள்வான்.

“இங்குள்ள ஒவ்வொரு நகரமும் நாகர்களுக்கோ, அரக்கர்களுக்கோ, அசுரர்களுக்கோ உரியதாக இருந்திருக்கிறது இளையோனே” என்றான் ஜராசந்தன். “அவர்களே இன்றும் இந்நகர்கள் அனைத்திலும் அடிமண்ணாக, வேர்ப்பற்றாக விழிதெரியாது மறைந்திருக்கிறார்கள். சைத்யகம் எனும் இக்குன்று மகதர்களிடம் வருவதற்கு முன்பு நாகர்குடியினருக்கு உரியதாக இருந்தது. அவர்கள் இங்கே தங்களுக்கென ஓர் அரணை உருவாக்கிக் கொண்டு பிற உலகுடன் தொடர்பற்று வாழ்ந்தார்கள். மந்தணப் பாதைகளினுடாக பாதாளங்களுக்கு செல்லவும் தங்கள் குடி தெய்வமான வாசுகியுடன் தொடர்பு கொள்ளவும் அவர்களால் முடிந்தது என்கின்றன குலக்கதைகள்.”

“மகதம் என்று இன்று அழைக்கப்படும் பன்னிரு பெருங்குடிகளும் அன்று காட்டில் கன்று மேய்த்தும் வேட்டையாடியும் மீன்பிடித்தும் வாழ்ந்தனர். பெண் கொடுத்தும் மைந்தரை பெற்றுக்கொண்டும் அக்குடிகள் ஒன்றாயின. கங்கையின் இந்தப்பகுதி அன்று அரைச்சதுப்பும் குன்றுகளும் கொண்டது. இவர்கள் இவ்வெல்லைக்கு அப்பால் எங்கும் செல்லாதவர் என்பதனால் அயல்வணிகர் இவர்களை அகதர் என்று அழைத்தனர். பின்னர் அச்சொல்லை இவர்கள் மாகதர் என்று மாற்றிக்கொண்டனர்.”

“இப்பகுதி வற்றாது சுரக்கும் புல்பெருக்கு கொண்டது என்பதனால் ஆபுரத்தல் பெருந்தொழிலாயிற்று. ஆனால் கன்று பெருகியபோது இங்கு துலாமாதத்தில் பெய்து நிறையும் மழை அதற்கு பெருந்தடையாக மாறியது. எனவே விண்ணவர்கோனை விரட்டி வெயிலைக் கொண்டுவரும் பொருட்டு கதிரவனுக்குரிய கொடைச்சடங்குகளைத்தான் அவர்கள் செய்து வந்தனர். அவர்களின் கன்றுகள் பெருகின. கலங்களில் நெய் நிறைந்து கருவூலங்களில் பொன் முளைக்கத்தொடங்கியது. அவர்கள் வாழ்வதை பிறர் அறிந்தனர். கீழே வங்கத்திலிருந்தும் மேலே கோசலம், பாஞ்சாலம் முதலிய நாடுகளிலிருந்தும் சிறுகுடி அரசர்கள் ஆநிரை கவரும்பொருட்டு அவர்களின் ஊர்களுக்கு வந்தனர். அவர்களின் இளமைந்தரைக் கொன்று பெண்டிரையும் கன்றுகளையும் கவர்ந்து சென்றனர். அக்கள்வர்களுக்கு எதிராகவே இப்பன்னிரண்டு குடிகளும் மூதரசர் அம்வுவிச்சரின் கோலின்கீழ் ஒன்றாகி ஒரு நாடென்று ஆயின. அவரது வல்லமை வாய்ந்த அமைச்சர் மகாகர்ணி குடிகளை ஒன்றாக்கி மகத அவையை அமைத்து நாட்டின் எல்லைகளை புரந்தார்.”

“மகதம் கொடியும் முடியும் கொண்டு கோல் நிறுத்தியபோது அருகில் இருந்த நாடுகளில் இருந்து பெருங்குடி அரசர்கள் வெற்றிச்சிறப்புக்கென ஆநிரை கவர வந்தனர். பெரும்படைகளுடன் வந்த அரசர்களை வெல்ல மகதர்களால் இயலவில்லை. அவர்களில் ஒருவருக்கு கப்பம் கட்டினால் பிறிதொருவர் படைகொண்டுவந்தனர். அவர்களை அஞ்சி மேலும் மேலும் காடுகளுக்குள் புகுந்து கொள்வதே அவர்களுக்கு எஞ்சிய வழியாக இருந்தது” என்றான் ஜராசந்தன். “இங்கே கன்றுகள் பெருகும் வேனிற்காலத்தில் ஆநிரை கவர்தல் நிகழ்வதில்லை. அவை காடெங்கும் ஒன்றிரண்டு என பரவியிருக்கும். அவற்றை ஓரிடத்தில் சேர்க்கும் மழைக்காலமே ஆநிரை கவர்வதற்குரியது. குன்றுகளில் கன்றுகளைச்சேர்த்து சுற்றிலும் குடிலமைத்து காவலிருப்பதே மகதர்களின் வழக்கம். மேலும் மேலும் உள்காடுகளின் குன்றுகளை நோக்கி அவர்கள் சென்றனர்.”

“அவ்வாறுதான் சைத்யகம் என்னும் இந்தக்குன்றை அவர்கள் கண்டு கொண்டனர். நான்கு நீர்நிறை ஆறுகளால் சூழப்பட்ட சைத்யகத்தை எதிரிமன்னர்கள் மழைக்காலத்தில் அணுக முடியாதென்றறிந்தனர்” ஜராசந்தன் சொன்னான். “கோசலத்தின் பெரும்படையை அஞ்சி மகதர் காடுகளுக்குள் புகுந்து இக்குன்றைக் கண்டு இதை நோக்கி கன்றுகளுடன் வரும்போது இங்கிருந்த நாகர்கள் சினந்து அவர்களிடம் போர் புரிந்தனர். மூன்று முறை கடும் போரிட்டும் மகதர்களால் நாகர்களை வெல்ல முடியவில்லை. மறுபக்கம் கோசல மன்னன் பிரஸ்னஜித்தின் படைகள் வலையென இறுகிக்கொண்டிருதன. காடுகளுக்குள்ளிருந்து நஞ்சு நிறைந்த நாணல் அம்புகளுடன் நாகர்கள் அலையலையாக எழுந்தனர். எங்கு செல்வதென்றறியாது திகைத்து நின்றழுத மகதர்களில் மூதன்னையொருத்தி தன் கையில் இரு குழந்தைகளை எடுத்தபடி அழுதுகொண்டு நாகர்களை நோக்கி சென்றாள்.”

“அன்று இங்கிருந்த சைத்யர் என்னும் நாகர்கள் ஆறு பெருங்குடிகளாக பிரிந்திருந்தனர். அர்ப்புதன், சக்ரவாபி, ஸ்வஸ்திகன், மணிநாகன், கௌசிகன், மணிமான் என்னும் ஆறு நாகர்தலைவர்களால் அவர்கள் ஆளப்பட்டனர். தொலைவில் கையில் மைந்தருடன் ஓடிவந்த முதுமகளைக்கண்ட படைத்தலைவனாகிய ஸ்வஸ்திகன் அம்புதாழ்த்தும்படி ஆணையிட்டான். நாகர்களின் அம்புகள் முதல் முறையாக அயலவரிடம் தணிந்தன. அவ்வாறுதான் சைத்யகம் மகதர்களுக்குரியதாயிற்று. நாகர் குடியினர் மகதர்களிடம் மண உறவு கொண்டனர். முதல் அரசியாக நாகர் குலத்துப் பெண்களையே நெடுங்காலம் மகத மன்னர்கள் மணக்க வேண்டுமென்று நெறியிருந்தது. அவர்களின் குருதியிலேயே மகதமன்னர்களின் நிரை எழுந்தது.”

“இங்கு சைத்யகத்தில் ஆறு மூதாதைநாகர்களும் கோயில்கொண்டு அருள்கிறார்கள். அவ்வாலயங்களுக்கு நடுவே கண்டநாகனாகிய சிவனும் கங்கணநாகினியாகிய கொற்றவையும் கோயில் கொண்டிருக்கிறார்கள்” என்றான் ஜராசந்தன். “மைந்தனின்றி துயருற்றிருந்த நான் சொல்பெறாது மீள்வதில்லை என உறுதிகொண்டு இங்குவந்தேன். உண்ணாது துயிலாது பதினெட்டு நாட்கள் இங்கே தவமியற்றினேன். என் பூசையில் வெறியாட்டு கொண்டெழுந்த பூசகர் மகதத்தின் அரியணை அமர்ந்த எனக்கு நாகப்பிழை இருப்பதாக சொன்னார். நான் அப்பிழை தீர்த்தாலொழிய மைந்தனை அடையமாட்டேன் என்றார். அதன்பின்னரே நான் தொல்நிமித்திகரை அழைத்து இக்குன்றின் புதர்களுக்குள் கைவிடப்பட்டு மறைந்து கிடந்த நாகர்களின் ஆலயங்களை மீட்டெடுத்தேன். அவர்களுக்கு நாளும் மலரும் நீரும் சுடரும் காட்ட ஏற்பாடு செய்தேன் ஒவ்வொரு கருநிலவு நாளிலும் நானே வந்து இங்கு வழிபடத் தொடங்கினேன்.”

“இது நாகர்களின் விழவு இளையவனே. நாகர்களுக்கு பெருமழை என்பது தவளைகளைப் பெருக்கும் அருள். நாகங்கள் அத்தவளைகளை உண்டு பெருகி வேனிலில் முட்டையிடுகின்றன. தவளைகள் பெருகும் பொருட்டு நாகர்கள் இங்கு ஆற்றும் வேள்வியே மாண்டூக்யம் எனப்படுகிறது. அவ்வேள்வியில் அளிக்கப்படும் குருதி விண்ணுக்குச் சென்று நீராக மாறி மண்ணுக்கு மழையென வருகிறது” என்று ஜராசந்தன் சொன்னான். “இவ்விழவை நான் மீட்டெடுத்தபோது என் அமைச்சர்கள் அதற்கு ஒப்பவில்லை. ஏனென்றால் பலநூறாண்டுகளுக்கு முன்னரே மகதத்தின் அரசர் தங்கள் நாகர் குலக் குருதியை முற்றிலும் மறைத்துவிட்டிருந்தனர். தொடர்ந்து பாரதவர்ஷத்தின் பல்வேறு தொன்மையான குடிகளிலிருந்து பெண்கொண்டும் பெண்கொடுத்தும் அவ்வரலாறு மொழிக்குள்ளும் மண்ணுக்குள்ளும் புதைக்கப்பட்டுள்ளது.”

“நாகர்களின் குருதிவழி என்பது இன்று அரசர்களுக்கு குடியிழிவு. நாகர்களின் விழவை மீட்டெடுப்பதென்பது நான் என்னை ஷத்ரியனல்ல என்றும், என் மைந்தனாகிய நீ நாகர் குலத்தவனென்றும் அறிவிப்பதுமாகும் என்றனர் அமைச்சர். நான் அவ்வண்ணமே ஆகுக என்று ஆணையிட்டேன்” என்று ஜராசந்தன் சொன்னான். “உன் அன்னை என் காலில் விழுந்து மன்றாடினாள். மைந்தரின்றி இறந்தாலும் குடியிலி ஒருவனுக்கு அன்னையாவதை அவள் விழையவில்லை என்றாள். மகதம் தன் அடையாளத்தை இழக்குமென்றால் அதைச் சூழ்ந்துள்ள ஷத்ரிய அரசர்களால் தலைமுறைகள் தோறும் அது வேட்டையாடப்படும் என்றார்கள் அமைச்சர். என் முன் இருந்தது இரண்டு வழிகள். மைந்தனின்றி இந்நகரை அழியவிடுவது. நாகர்குல மைந்தனென்னும் கொடி அடையாளத்துடன் மைந்தனை அமரவிடுவது. நாகர்கள் இல்லையேல் மகதம் உருவாகியிருக்காது. தலைமுறை தலைமுறையாக மகதர் இழைத்த பிழைக்கு ஈடு செய்யும் வாய்ப்பு என்றே நான் எண்ணினேன். அதன்பொருட்டு மைந்தன் பரிசென்றும் வருவான் என்றால் அதைவிட சிறப்பு ஏது?”

“ஒருவேளை இவ்விழவுக்குப்பிறகு நீ முடிசூடக்கூடும்” என்றான் ஜராசந்தன். “இவ்விழவுக்குப் பிறகா? தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்றான் சகதேவன். “அறியேன் அவ்வண்ணமாயின் உன் கழுத்தில் நீ பிறந்த அன்று நான் அணிவித்த நாகபடத்தாலியையோ உன் கையில் நீ அணிந்திருக்கும் நாகநெளிக் கணையாழியையோ ஒருபோதும் கழற்றலாகாது. நாகன் என்று ஷத்ரியர் இகழட்டும் உன்னை. ஒவ்வொரு கணமும் அவர்களின் பகைமை உன்னை சூழட்டும். ஆனால் நாகர்களின் கருணையே இந்நாடு. அவர்களின் அருளே நீ. அந்த அடையாளம் நமக்குச் சிறப்பே” என்றான் ஜராசந்தன். “ஆம் தந்தையே, தங்கள் ஆணை” என்றான் சகதேவன்.

[ 7 ]

சைத்யகத்தின் அடர்ந்த குறுங்காட்டைச்சூழ்ந்து அமைக்கப்பட்டிருந்த மரத்தாலான உயரமற்ற முரசுமேடைகளில் மழை பெருகி வழிந்த கூரைகளுக்குள் நிறுத்தப்பட்டிருந்த பெருமுரசுகள் முழங்கிக்கொண்டிருந்தன. ஜராசந்தனின் தேர் அணுகியபோது முதற்கொம்பொலி எழுந்தது. தொடர்ந்து அனைத்து கொம்புகளும் முரசுகளும் மணிகளும் சேர்ந்து முழங்கின. வாழ்த்தொலிகள் மழையினூடாக வந்து சூழ தேர் உள்ளே நுழைந்தது.

சைத்யகத்தின் மலைச்சரிவுப்பாதையில் தேரும் புரவிகளும் செல்லும்பொருட்டு மரப்பட்டைகளைப் பதித்து பாதையமைத்திருந்தனர். தேர்ச்சகடங்கள் அதில் நுழைந்ததும் கூழாங்கற்கள் உருளும் ஓசை எழுந்தது. பாதையின் இருபக்கங்களிலும் மரத்தாலான நீரோடைகளில் மழைநீர் மிகவிரைவாக சுழித்தும் முறுகியும் நெளிந்தும் ஓடியது. ஓயாமழை தொடங்கி சிலநாள் ஆகிவிட்டிருந்தமையால் நீர் தெளிந்து, சருகுகளும் குப்பைகளும் இன்றி தெரிந்தது.

ஜராசந்தனும் சகதேவனும் இறங்கியதும் மகதத்தின் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் வந்து பணிந்து வரவேற்றனர். அவர்களுக்குமேல் விரிந்த பச்சையிலைத்தழைப்பின் கூரையிலிருந்து மழை பெரிய துளிகளாக அவர்கள் மேல் பொழிந்தது. காற்று வீசுகையில் சாமரக்குவைகளாக அவர்களை அறைந்தது. அவர்கள் மழையில் நனைந்து ஒளிகொண்ட தோள்களும் தளிரிலை என சுருக்கங்கள் பரவிய விரல்களும் நடுங்கும் கால்களுமாக நின்றனர். ஜராசந்தன் நீர் பெருகி சொட்டிய தன் குழலை கையால் அள்ளி பின்னால் தள்ளிவிட்டான். உடலுடன் ஒட்டி குமிழிகள் கொண்ட பட்டுச்சால்வையை உரித்தெடுத்து அகம்படியினரிடம் அளித்தான்.

அங்கு நின்றிருந்த ஒவ்வொருவரும் ஜராசந்தனின் உடலையே நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் அவர்களின் வணக்கங்களையும் முகமன்களையும் ஏற்று நடந்து சென்றபோது அவன் காலடிகளை நோக்கினர். அரசனின் உடல் இருபகுதிகளாக இருந்து ஜரையன்னையால் இணைக்கப்பட்டது என்பதை சூதர்கள் பாடிப்பாடி குழந்தைகளும் அறிந்திருந்தனர். உடற்குறி நோக்கும் நிமித்திகர் அவன் இரு முற்றிலும் வேறுபட்ட ஆளுமைகளின் இணைப்பு என்றனர். நூலறியும் நுண்மையும் உணர்வுகளை ஆளும் வல்லமையும் கொண்டவன் அவன் இடப்பகுதியில் இருந்தான். அவனை வாமன் என்றனர். கட்டற்ற சினமும் அணையா வஞ்சமும் கொண்ட தட்சிணன் ஜரர்களின் கொடுங்காட்டிலிருந்து நேரடியாக வந்தவன்.

அரசனை நுணுகியறிந்திருந்த ஏவலர் அவர்களின் கூற்று உண்மை என்றறிந்திருந்தனர். அவன் இடத்தோள் நிமிர்ந்து, இடக்கால் அழுந்தியிருந்தால் மட்டுமே அணுகி சொல்லளித்தனர். வலப்பக்கம் நிமிர்ந்த ஜராசந்தன் குருதிவிடாய்கொண்ட கொடுந்தெய்வம். ஜராசந்தனின் இடக்கால் அழுந்தியிருப்பதைக் கண்ட அமைச்சர் காமிகர் ஆறுதலுடன் படைத்தலைவர் பத்ரசேனரை பார்த்தார். அவர் விழிகளாலேயே புன்னகைசெய்தார். ஜராசந்தன் மைந்தனின் தோளிலிருந்து அகலாத கையுடன் தலைகுனிந்து நடந்தான். காமிகர் “அனைவரும் சித்தமாக உள்ளனர் அரசே. அரவரசர்களின் ஆலயங்களில் குருதிகொடைக்குரிய எருதுகள் வந்தணைந்துவிட்டன” என்றார். அவன் என்ன எதிர்வினை ஆற்றப்போகிறான் என்பதற்காகவே அவர் அதை சொன்னார். அவன் “நன்று” என்றான்.

மகதத்தின் பன்னிரு குலங்களின் தலைவர்கள் பருந்திறகு சூடிய மரமுடி சூடி கல்மாலை அணிந்து தங்கள் குலக்குறி பொறிக்கப்பட்ட கைக்கோல்களை ஏந்தி நிரை வகுத்து நின்று அவனை வரவேற்றனர். முதற்குடித்தலைவர் அவன் அருகே வந்து கோல்தாழ்த்தி பீடம் கொண்டு அருளவேண்டும் என்று கோரினார். அவன் முறைமைச்சொற்களில் அதை ஏற்றுக்கொண்டதும் அவர்கள் தங்கள் கொம்புகளை எடுத்து மும்முறை ஊதி கோல்தூக்கி தெய்வங்களிடம் அவன் வருகையை அறிவித்தனர். பன்னிரு குலத்தலைவர்களும் இணைந்து அவனுக்குரிய கோலை அளிக்க அதை பெற்றுக்கொண்டு அவன் அவர்களை தொடர்ந்தான். அவனை அழைத்துச்சென்று குன்றின் உச்சிமையத்தில் அமைந்திருந்த உருத்திரனின் சிற்றாலயத்தின் முற்றத்தை அடைந்தனர்.

ஆலயமுற்றத்தில் நூற்றுக்கால் பந்தலிடப்பட்டு ஆறு எரிகுளங்கள் அமைக்கப்பட்டு மகாநாகவேள்வி நடந்துகொண்டிருந்தது. நாகர் குலத்துப்பூசகர் நூற்றுவர் நாகவேதம் ஓதி அவியளிக்க எரியெழுந்து புகைசூடி நடமிட்டது. ஜராசந்தன் குலத்தலைவர்களுடன் சென்று வேள்விக்காவலனுக்குரிய கல்பீடத்தை அணுகியதும் ஒருகணம் தயங்கி நின்று திரும்பி சகதேவனை நோக்கி “மைந்தா, நீ அதில் அமர்க!” என்றான். “தந்தையே” என்றான் சகதேவன் திகைப்புடன். “இம்முறை நீயே வேள்விக்காவலனாகுக!” என்றான் ஜராசந்தன்.

“அரசே, பன்னிருகுடிகளுக்கும் தலைவனும் மகதத்தின் அரியணைக்கு உரியவனுமாகிய வீரன் அமரவேண்டிய பீடம் அது” என்றார் குலத்தலைவர். “ஆம், அப்பீடம் இனி என் மைந்தனுக்குரியது” என்ற ஜராசந்தன் கோலை சகதேவனிடம் அளித்தான். “மகதத்தின் செங்கோல் அவனால் சிறப்புறுக!” குடித்தலைவர்களும் அமைச்சர்களும் திகைப்படைந்திருந்தாலும் எதுவும் பேசவில்லை. அவனிடம் எதிர்ச்சொல் எடுக்கும் வழக்கம் அவர்களிடமிருக்கவில்லை. சகதேவன் கோலை பெற்றுக்கொண்டு கல்லிருக்கையில் அமர்ந்தான். நாகபடம் பொறிக்கப்பட்ட மரத்தாலான முடியை அவன் தலையில் முதுகுடித்தலைவர் அணிவித்தார்.

மகதத்தின் பன்னிரு குலத்தலைவர்கள் நிரை நின்று கோல்தாழ்த்தி அவனை வணங்கினர். அவர்களில் ஒருவர் தன் இடையில் அணிந்திருந்த கொம்பை எடுத்து ஊதியதும் எங்கும் வாழ்த்தொலிகள் எழுந்தன. முரசுகளும் கொம்புகளும் முழவுகளும் சங்கும் அதில் கலந்து ஓங்கின.