மாதம்: மே 2016

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 60

[ 8 ]

இந்திரப்பிரஸ்தத்திற்கு மேற்கே யமுனைக்கு அப்பால் மரக்கூட்டங்களின் நிழற்கடலுக்குள் சூரியன் சிவந்து மூழ்கத்தொடங்கினான். நகரின் அனைத்து காவல்கோட்டங்களிலும் மாலையை அறிவிக்கும் முரசுகள் முழங்கின. சங்குகள் கடல் ஒரு பறவையெனக் குரல்கொண்டதுபோல் கூவி அமைந்தன. ராஜசூயப்பந்தலின் அருகே பெருங்கண்டாமணி ஓங்காரமெழுப்பி ரீங்கரித்து ஒடுங்கியது. வேள்வித்தீயிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட அனலால் நகரின் கொற்றவை ஆலயத்தில் முதல்விளக்கு ஏற்றப்பட்டது.

ஒன்றிலிருந்து ஒன்றென அந்நெருப்பு பரவி முக்கண்ணன் ஆலயத்திலும் முழுமுதலோன் ஆலயத்திலும் உச்சியிலமைந்த இந்திரனின் பேராலயத்திலும் விளக்குகளாக சுடர்கொண்டது. அரண்மனையிலும் தெருக்களிலும் இல்லங்களிலும் பரவி இந்திரப்பிரஸ்தத்தை செந்நிற ஒளியால் மலையின் அணியென ஆக்கியது.

அந்தியின் நீர்ச்செயல்கள் முடிந்து முனிவரும் அந்தணரும் நிரைவகுத்து வந்து வேள்விச்சாலையில் அமர்ந்தனர். அவியிடுவோர் இடம் மாறினர். புத்தாடை அணிந்து புதிய மாலைமலர்கள் தொடுத்த தார் சூடி தருமன் தன் அரசியுடன் வந்து அரியணையில் கோல்கொண்டு அமர்ந்தார். அவையெங்கும் அரசர்களும் குடிகளும் வணிகரும் நிறைந்தனர். தௌம்யர் ஆணையிட ராஜசூய வேள்வியின் அந்திக்கான சடங்குகள் தொடர்ந்தன. இரவரசியை வரவேற்கும் வேதப்பாடல் ஒலித்தது.

இரவரசி எழுகிறாள்

விழி திகழ நோக்குகிறாள்

மின்னும் அணிகள்  பூண்டு

மங்கலம் கொள்கிறாள்

முடிவிலா வெளியையும்

ஆழங்களையும் எழுச்சிகளையும்

நிறைத்துப்பரவுகிறாள்

தன் ஒளியால் இருளை விரட்டுகிறாள்

காக்கும்பணியை

காலையரசியிடமிருந்து பெற்றுக்கொள்கிறாள்

அஞ்சுகிறது சூழ்ந்த இருள்.

சேக்கேறும் பறவைகளென

உன்னருளால்  இல்லம் மீள்கிறோம்

குடிகள், கன்றுகள், புட்கள்

பெருஞ்சிறைப் பருந்துகள் கூட

குடி சேர்கின்றன

அலையலையென எழும்

இரவெனும் இறைவி

ஓநாய்களை விரட்டுக!

அஞ்சாது நாங்கள் பாதைதேரவேண்டும்

கரிய ஆடைபூண்டு

முற்கடனென வந்துசூழும்

இவ்விருளை அகற்றுக!

அன்னைதேரும் கன்றென

எளியோனின் வேண்டுதல்

உன்னைத் தேடிவரவில்லையா?

இரவெனும் செல்வி!

வெற்றிகொள்பவளே!

புகழ் மாலையென

இப்பாடலை அணியமாட்டாயா?

மும்முறை இரவுப்பாடல் முழங்கி ஓய்ந்ததும் அங்கிருந்த முனிவரும் வைதிகரும் “ஓம்! ஓம்! ஓம்!” என முழங்கினர். வேள்விச்சாலையின் அத்தனை நெய்விளக்குகளும் எரிகுளத்தின் ஆறுநெருப்புகளுடன் இணைந்து எழுந்தாடின. அனலால் சூழப்பட்டிருந்தவர்களின் உள்ளங்களிலிருந்து சிறுமைகள் மறைந்தன. ஒவ்வொரு எண்ணமும் சிறகு கொண்டது. அத்தருணத்தில் அனைவரும் தேவர்களென்றாயினர்.

தௌம்யர் வணங்கி  “அந்தி வேள்விக்கு பெண்டிர் சூழவேண்டுமென்பது தொல்நெறி. இந்திரப்பிரஸ்தத்தின் அரசி எழுந்தருள்க!” என்றார். வைதிகர் இருவர் அளித்த மண்ணகல்விளக்கில் நெய்ச்சுடரை ஏந்தி கற்சிலைமுகத்தில் செவ்வொளி ஒளிவிட திரௌபதி அரசமேடைவிட்டு இறங்கினாள். இந்திரப்பிரஸ்தத்தின் பிற அரசியரான சுபத்திரையும் விஜயையும் தேவிகையும் பலந்தரையும் கரேணுமதியும் கையில் ஒளி நின்ற அகல்களுடன் எழுந்து அவளுக்குப் பின்னால் நடந்தனர். அவர்கள் சென்று தௌம்யரை வணங்கி முதல் எரிகுளத்தருகே நின்றனர்.

பைலர் தர்ப்பையில் நீர்தொட்டு அவர்களை வாழ்த்த அவர்கள் அச்சுடர்களை எரிகுளத்தருகே நிரையாக வைத்துவிட்டு குனிந்து மலரும் அன்னமும் எடுத்து அவியளித்து எரியூட்டினர்.  முப்பத்தாறு எரிகுளங்களையும் மும்முறை சுற்றிவந்து வணங்கி அவற்றுக்கு இடப்பக்கமாக அமர்ந்தனர். பைலர் அவர்களின் நெற்றியில் மஞ்சள்பொடியிட்டு வாழ்த்தினார். அவர்களுக்கு முன்னால் ஆறு செங்கற்கள் கூட்டப்பட்ட அடுப்புகள் வைக்கப்பட்டன. அவற்றில் விறகு அடுக்கப்பட்டது. அவர்களின் இடப்பக்கம் சிறுவட்டில்களில் ஒன்பதுமணிகளின் கலவையும் யமுனைநீரும் வைக்கப்பட்டன.

“அவையோரே, அரசர்குலம் தோன்றுவதற்கு முன்னரே உருவான சடங்கு இது. அன்று இல்லத்தலைவரே வேள்விக்காவலர். இல்லத்தரசி வேள்வியின் அன்னத்துக்கிறைவி. இன்று அரசனும் அரசியுமென அவர்கள் உருமாறியிருக்கின்றனர். இல்லத்தரசி சமைத்தளிக்கும் அன்னத்தை அவியாக்கி இறையை எரியிலெழுப்பி நிறைவளித்த பின்னரே இன்றைய இரவுக்கொடை தொடங்கும்” என்றார் தௌம்யர்.

“வேள்விக்கு அவ்வேள்வியை நிகழ்த்தும் குடியின் தலைவர் வந்து அமர்ந்து முதல் கைப்பிடி தானியத்தை எடுத்து அளிக்கவேண்டும் என்றும் தலைமை வைதிகர் அவியெரியை எடுத்தளித்து அடுப்புமூட்டவேண்டும் என்றும் நெறியுள்ளது. அவரே வேள்விமுடிந்ததும் அவியன்னத்தை அவ்வேள்வி நடத்தும் குடிக்கு உரியமுறையில் பகிர்ந்தளிக்கவும் வேண்டும்” தௌம்யர் சொன்னார். “ராஜசூயம் போன்ற பெருவேள்விக்கு பாரதவர்ஷமே ஒற்றைக்குலமென்று கொள்கிறோம். அதன் குடித்தலைவரென அவ்வேள்விக்கு அமைந்தவர்களால் ஏற்கப்படும் அவைமூத்தவரை அழைத்து அமரச்செய்வது வழக்கம். இவ்வேள்வியின் அவைத்தலைவர் என நீங்கள் சுட்டும் ஒருவர் கைதொட்டு மணியள்ளி அளிக்க இங்கே ஆறு தேவியரால் அவிக்குரிய அன்னம் ஆக்கப்படும்.”

அவையின் தலைகளனைத்தும் திரும்பி பீஷ்மரை நோக்கின. பீஷ்மர் அந்நோக்கை உணராதவர் என வளையாத நீளுடலின் மேல் எழுந்த தலையும் மார்பில் காற்றிலாடிய வெண்ணிறதாடியுமாக  அமர்ந்திருந்தார். அவர் அருகே அமர்ந்திருந்த துரோணர் மெல்ல குனிந்து தௌம்யரின் சொற்களைச் சொல்ல அவர் சித்தம் மீண்டு எவருக்கென்றில்லாமல் கைகளை கூப்பினார்.

தருமன் “இங்கு எங்கள் குடித்தலைவரென இருப்பவர் பிதாமகர் பீஷ்மரே” என்றார். “ஆம்! ஆம்!” என்று அவையில் ரீங்காரமென ஒப்புதலோசை எழுந்தது. தௌம்யர் “அரசரின் சார்பில் இங்கு அவைநின்று வேள்விநடத்தும் இளையவரான சகதேவர் பிதாமகரை வரவேற்று அழைத்துவருக!” என்றார். சகதேவன் பீஷ்மரை நோக்கி சென்று தலைவணங்கினான்.

பீஷ்மர் கைகூப்பியபடியே எழுந்து “அவையமர்ந்தோருக்கு வணக்கம்.  எரியெழுந்து நம் தெய்வங்களை நாடும் வேளை. முன்னோரின் விழிகள் நம் மீது பதிந்திருக்கின்றன. இக்குடியின் மூத்தோன் என நான் வந்து இவ்வேள்வியன்னத்தை அள்ளி அளிப்பது குலமுறைப்படி சரியே. ஆனால் அவை என்னை பொறுத்தருளவேண்டும்” என்றார். “அதற்குரியவனல்ல நான் என்றே உணர்கிறேன். இத்தனை ஆண்டு கானகங்களிலும் அறியா நிலங்களிலும் தனித்தலைந்தும் அம்புகளாலும் சொற்களாலும் ஆழ்ந்து சென்று தவம்பயின்று நான் அறிந்த ஒன்றுண்டு. மரத்திலூறிய சாறு தேனென்றும் கனியென்றும் ஆகவேண்டும். அன்றேல் அது தன் வேரிலூறும் கசப்பையே தளிர்களிலும் நிறைத்துக்கொண்டிருக்கும்.”

அவர் என்ன சொல்கிறார் என்றறியாமல் அவை விழிதிகைத்து அமர்ந்திருந்தது. “தோகைமயில்கள் போல அழகிய மகளிர் இதோ சுடரேந்திச் சென்றனர். அழகாக கால்மடித்து அமர்ந்து தங்கள் மலர்க்கைகளால் அன்னம் சமைக்க காத்திருக்கின்றனர். எத்தனை யுகங்களாக அவர்கள் அமுது ஆக்கி நமக்கு ஊட்டியிருக்கின்றனர்! அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். மெலிந்து உலர்ந்த என் கைகளால் மணி அள்ளி அவர்களின் கலத்தில் இடுவேனென்றால் அது எவ்வகையிலும் மங்கலம் அல்ல.”

“மூப்போ தவமோ அல்ல வேதங்களில் முதன்மை கொள்வது. துளி கோடியாகப் பெருகும் பிரஜாபதிகளையே அது வாழ்த்துகிறது. அவையீரே, அவர்களே தேவர்களுக்கு உகந்தவர்கள். வாழ்வென்றானவர்கள்.  தென்கடல் பொங்கி வரும் மழைபோல செல்லுமிடமெல்லாம் செழிக்கவைப்பவர்கள். அணைத்து துயரழிப்பவர்கள். அடைக்கலம் அளித்து காத்து நிற்பவர்கள். அவர்களில் ஒருவர் அள்ளி அன்னமிட்டால் மட்டுமே மானுடத்தை ஆளும்  தேவர்கள் உவகையுடன் அவிகொள்வார்கள். அவர்களில் ஒருவர் எழுக!”

பீஷ்மர் உரக்க சொன்னார் “ஆயிரம் மனைவியர் கொண்டவர். பல்லாயிரம் மைந்தர் கொண்டவர். இளவேனிலில் எழும் முதற்புல்போல இப்புவியையே நிறைத்துச்சூழும் முடிவிலா பெருவிழைவு கொண்டவர். அத்தகைய பிரஜாபதி ஒருவர் இவ்வேள்விக்கு முதன்மை கொள்க!” அவையெங்கும் மெல்லிய கலைதலோசை எழுந்தது. தருமன் ஏதோ சொல்ல விழைபவர் போல உடலசைத்தார். அவருக்குப்பின் வாளேந்தி நின்றிருந்த அர்ஜுனன் விழிநீர் கனிந்தவன் போலிருந்தான்.

“நான் முதியோன். இங்கிருக்கும் அத்தனை பேரையும் கைக்குழந்தைகளென கண்டவன். உங்களனைவருக்கும் தந்தையென நின்றிருக்க காலத்தால் அருளப்பட்டவன். அவையோரே, சென்ற சிலநாட்களுக்கு முன் என் உளம்வெடிக்குமளவுக்கு பெருந்துயர் ஒன்றை அடைந்தேன். சென்று சொல்ல எனக்கொரு தந்தையில்லையே என எண்ணினேன். அன்றிரவு ஒரு கனவு கண்டேன். நான் துவாரகைக்குச் சென்று இளைய யாதவரைக் கண்டு என் குறையை சொல்வதைப்போல. அக்கனவில் அவர் என் தந்தையென்றிருந்தார். நான் ஆற்றவேண்டியதென்ன என்று எனக்கு அவரே உரைத்தார்.”

“ஏனென்று இங்கு என்னால் உரைக்கவியலாது. நான் மெய்யறிந்த முனிவனல்ல. மொழியறிந்த கவிஞனும் அல்ல. எளிய வீரன். ஆனால் அப்புன்னகை என் தந்தை சந்தனுவின் புன்னகை என அறிந்தேன். அவையோரே, வைதிகரே, முனிவரே, பிரஜாபதியாக இங்கு அவைமுதன்மை கொள்ளத்தக்கவர் அவரே. பிறிதொன்றும் எனக்கு சொல்வதற்கில்லை” என்றார்.

அவர் அமர்வதற்குள்ளாகவே தருமன்  எழுந்து “ஆம், நான் என் உள ஆழத்தில் எண்ணியதும் அதுவே. கணுதோறும் முளைக்கும் பெருமரம் என்று நான் எப்போதும் உணரும் இளைய யாதவரே என் குடித்தலைவரென இங்கமர்ந்து அன்னம் அளிக்கவேண்டியவர்… அவர் அருளவேண்டும்” என்றார்.  பீமன் உரக்க “ஆம், பிறிதொன்றும் பாண்டவர்களால் எண்ணப்படவில்லை” என்றான்.  “இது புவிவென்று அரியணை அமர்ந்து வேள்விக்கோல் கொண்டிருக்கும் இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசரின் ஆணை” என்றான் அர்ஜுனன்.

துரோணர் “அது நன்று. முடிவெடுக்க வேண்டியவர்கள் பாண்டவர்களே” என்றார். “குலமுறைப்படி மறுப்புரைக்க உரிமைகொண்டவர்கள் பீஷ்மரும் திருதராஷ்டிரரும் மட்டுமே. பீஷ்மர் சொல்லிவிட்டார். அஸ்தினபுரியின்  பேரரசர் தன் எண்ணத்தை உரைக்கட்டும்.” திருதராஷ்டிரர் கைகளைக் கூப்பியபடி எழுந்து “வேதம் மானுடருடன் முடிவிலாது விளையாடுகிறது என்கிறார்கள். அவ்வண்ணம் என்றால் பாரதவர்ஷத்தில் எவ்வேள்விக்கும் முதல்வராக இளைய யாதவர் மட்டுமே அமரத்தக்கவர்” என்றார்.

தௌம்யர் “முன்பு தேவபாக ஷ்ரௌதர் பிழையின்றி அவிபகுந்ததைப்போல இங்கு இளைய யாதவர் எழுந்தருளி வேள்வியை சிறப்பிக்கட்டும். முன்னோர் அருளும் தேவர்களின் அளியும் தெய்வங்களின் நோக்கும் இக்குடிமேல் நிறையட்டும்” என்றார்.

துரோணர் “இளைய பாண்டவரே, முறைப்படி இளைய யாதவரை வேள்விமுதன்மைகொள்ள அழையுங்கள்” என்றார். சகதேவன் கைகூப்பியபடி இளைய யாதவரை அணுகி “எங்கள் குடியின் மூத்தவராக அமர்ந்து இவ்வேள்விக்கு அன்னமளிக்க வேண்டுமென்று  இறைஞ்சுகிறேன், யாதவரே” என்றான்.  இளைய யாதவர் புன்னகையுடன் எழுந்து திரும்பி அவையமர்ந்த முனிவர்களையும் வைதிகரையும் அரசர்களையும் குடிகளையும் வணங்கி “ஆம், அது இனிய பொறுப்பு, இளையோனே” என்றார்.

சகதேவன் அவர் முன் தலைவணங்கி “வருக!” என்று அழைத்தான். அவனருகே வந்து நின்று “இவ்வழி” என்றான் பீமன். “இவ்வழியே” என்று அர்ஜுனன் அழைத்தான். மஞ்சள்பட்டாடை உலைய முடிசூடிய பீலி காற்றிலாட இளைய யாதவர் நடந்தார். “இவ்வழி” என்று தருமன் அரியணையிலிருந்து எழுந்து நின்று அவரை வேள்விமையம் நோக்கி வழிகாட்டினார்.

அரசரவையிலிருந்து “நில்லுங்கள்!” என்னும் குரலுடன் சிசுபாலன் எழுந்தான். “நில்லுங்கள்! நான் ஒரு வினாவுடன் உள்ளேன்.” அவை திகைத்து அவனை திரும்பி நோக்கியது. “இங்கு துவாரகையின் தலைவன் வேள்வித்தலைமை கொள்வதன் பொருள் என்ன? அவன் இந்திரப்பிரஸ்தத்தின் அரசகுலத்திற்கு முதல்வனா? அஸ்தினபுரியின் கொடிவழியினருக்கு முதல்வனா? இல்லை இங்கு அவைநிறைத்திருக்கும் அனைவருக்கும் முதல்வனா?”

பைலர் “அரசே, அவரை தங்கள் குலமுதல்வராக இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் அறிவித்திருப்பதனால் அவர் இந்திரப்பிரஸ்தத்தின் அரசகுலத்திற்கும் அஸ்தினபுரியின் கொடிவழியினருக்கும் முதல்வராகிறார். அவர் இங்கு அவையமர்ந்த அத்தனை அரசர்களிடமும் வில்பணிதலையும் ஆவளித்தலையும் கொண்டவர் என்பதனால் அவர்கள் அனைவருக்கும் இளைய யாதவரே முதல்வராகிறார்” என்றார்.

“நான் இந்திரப்பிரஸ்தத்திற்கு அடிபணியவில்லை!” என்றான் சிசுபாலன். “நான் அளித்தது ஆகொடை மட்டுமே.” சகதேவன் சினத்துடன் கையைத்தூக்கி ஏதோ சொல்ல அவனை அணுகியபோது பீஷ்மர் கையசைத்து அவனைத் தடுத்து “சேதிநாட்டரசே, ஆகொடை முடிந்துவிட்டது. உங்கள் கன்றும் இங்கே அளிக்கப்பட்டுவிட்டது. மாற்றிருந்தால் இவ்வேள்வி முடிந்தபின்னர் படைகொண்டுவந்து இந்திரப்பிரஸ்தத்தை வெல்லலாம். சூக்திமதியில் ஒரு ராஜசூயத்தை நிகழ்த்தலாம். அதுவே முறை” என்றார்.

“அதற்கு காலமிருக்கிறது. மகதத்தில் ஜராசந்தர் மறுபிறப்பு எடுத்து பதினெட்டு வயதாகி வரவேண்டும் அல்லவா?” என்றார் மச்சநாட்டு சூரசேனர். அவை நகைத்தது. குன்றாச்சீற்றத்துடன் சிசுபாலன் பீஷ்மரை  நோக்கி கைசுட்டி “வாயை மூடுக, முதியவரே! நீர் யார்? இது ஷத்ரியர் அவை. ஷத்ரியன் ஒருவன் கங்கத்துப்பெண்ணை புணர்ந்தான் என்பதற்காக நீர் ஷத்ரிய அவையில் நிற்கும் தகுதிகொள்வீரா என்ன? அப்படி பார்த்தால் நான் நீராடிய ஆற்றின் மீன்களெல்லாம் சேதிநாட்டுக்கு இளவரசர்களாவார்கள்” என்றான்.

“சேதிநாட்டரசே, நீர் எங்கள் விருந்தினர் என்பதனால்…” என்று சகதேவன் பற்களைக் கடித்தபடி சொல்ல அவனை மறித்து “விலகி நில், சிறுவனே! நான் உன்னிடம் பேச வரவில்லை. இங்கு யார் யாரை ஷத்ரியரவைக்கு முதல்வரென அழைத்தார்கள்? கங்கர்குலத்தான் யாதவனை சுட்டுகிறான். குலமேதென்றறியாத ஐவருக்குப் பிறந்தவரில் முதல்வன் அவனை அவையழைத்து பாரதவர்ஷத்தின் முதல்வன் என்கிறான். இனி இந்த யாதவன்தான் பாரதவர்ஷத்தின் அவை முதல்வனா? குடத்தில் பிறந்த அரைஅந்தணன் அதை சொல்லலாம். நாணிலாது ஏற்ற இங்குள்ள ஷத்ரியர் தங்கள் அன்னையின் கற்பினை ஐயுற்று அமர்ந்திருக்கிறார்களா? சொல்க!” என்றான்.

அவன் எல்லைமீறிவிட்டான் என்று அனைவருக்கும் தெரிந்தது. சினத்தில் உடல் வெறியாட்டெழுந்த வேலன் போல துள்ளித்துள்ளிவிழ முகம் கோணலாகி கழுத்துத்தசைகள் இழுபட சிசுபாலன் கூவினான்.  உடலுடன் தொடர்பற்றவை போல அவன் கைகள் இருபக்கமும் எழுந்து அதிர்ந்தன. “எங்கே குருதிகொண்ட ஷத்ரியர்? அஸ்தினபுரியின் அரசன் சொல்லிழந்து விட்டானா? சிந்து நாட்டரசனும் விதர்ப்பத்தின் அரசனும் அஞ்சி உடல்சுருட்டி அட்டைபோல் அமர்ந்திருக்கிறார்களா? கோசலனும் மிதிலனும் வங்கனும் கலிங்கனும் மாளவனும் கூர்ஜரனும் என்ன சொல்கிறார்கள்?”

“இந்த அவையில் இப்படி ஒரு வினா எழுந்தது என்பதை பதிவுசெய்யட்டும் சூதர் சொல். பாரதவர்ஷமெங்கும் பாடப்படட்டும் என் சினம். அவையோரே, இவன் யார்? மதுவனத்தில் கன்றோட்டும் சூரசேனரின் பெயரன். தாய்மாமனை கொன்ற பாவி. போரில் அடிபணிந்த படைவீரர்களைக் கொன்று அழித்த நெறியிலி. ஷத்ரியர்குலத்துப் பெண்களை ஏமாற்றி திருடிச்சென்ற பெண்கள்வன். கீழ்குருதிகொண்ட அயலோருடன் வணிகம் செய்து பொருளீட்டியதனால் இவன் அரசனாகிவிடுவானா?” கையைத் தட்டி அவன் அறைகூவினான். “எந்தப்போரில் இவன் எதிரியை நேர்நின்று வென்றிருக்கிறான்? நேர்போருக்கு படைகொண்டுவந்த ஹம்சனையும் டிம்பகனையும் பொய்சொல்லி கொன்றவன். மதுவனம் வரை படைகொண்டுவந்த மகதமன்னனை இளைய பாண்டவனை அனுப்பி காட்டுப்போரில் கொன்றவன். இவனை வீரனென்று ஒப்புக்கொண்ட ஷத்ரியன் நம்மில் எவன்? சொல்க! எவன்? அவன் முகத்தை நோக்கவிழைகிறேன், எவன்?”

வெறிகொண்டு முன்னால் சென்ற சிசுபாலன் “முதலில் இவனை முடிசூட ஒப்புக்கொண்டவர் எவர்?” என்று அருகே நின்றிருந்த தூணிலறைந்து குரலெழுப்பினான். “யாதவர் முடிசூடி ஆளலாமென்றால் ஷத்ரியர் இனி கன்றுமேய்க்கச் செல்வரா? ஷத்ரியர்களே, அரசர்களே, ஷத்ரியரன்றி பிறர் ஏன் நாடாளலாகாது என்று வகுத்தனர்? படைப்பவர்கள் அல்ல என்பதனால் ஷத்ரியர் ஒருபோதும் ஒருநாட்டிலும் பெரும்பாலானவர்களாக இருக்கலாகாது. காட்டில் புலி சிலவே இருந்தாகவேண்டும். அவர்களின் ஆட்சியுரிமை என்பது அக்குடியின் பொது ஒப்புதலால் வருவது.”

“ஒவ்வொரு குடியும் நாடாளவிரும்பும் நாட்டில் ஒவ்வொருநாளும் போரே நிகழும். யாதவர் நாடாளத்தொடங்கினால் வேளிர் வெறுமனே இருப்பார்களா? குயவரும் கொல்லரும் விழைவுகொள்ளமாட்டார்களா? அரசனாகும் விழைவுகொண்டு பிறிதொருவன் தன் நாட்டுக்குள் இருக்க அரசன் ஒப்பலாகாது. ஷத்ரியரல்லாத குடி அரசாள்வதை ஷத்ரியர் ஏற்கலாகாது. அவ்வாறு நிகழ்ந்தால் அது ஒவ்வொரு புல்லிதழும் வாளென்றாக வழிகோலும். அதன்பின் இம்மண்ணில் குருதி உலராது.”

“அரசர்களே, நீங்கள் கொண்டுள்ள இந்த வாள் குருதியை பெருக்குவதற்கானது என்று எண்ணவேண்டாம். இங்கு மண்ணை ஊறிச்சேறாக்கிய ஒழியாக் குருதியை நிறுத்தியது ஷத்ரியர்களின் வாளே என்றறிக! விளைநிலத்திற்கு இட்ட முள்வேலி இது! அரசர்களே, ஒவ்வொரு குடிக்கும் உரிய எல்லைகளை வகுக்க இங்கே முனிவர்கள் சொல்லெண்ணி தவம்செய்திருக்கிறார்கள். நம் முன்னோர் களம் நின்று உயிர்துறந்திருக்கிறார்கள். அவ்வெல்லைகள் இருக்கும் வரை மட்டுமே இங்கே மானுடர் வாழமுடியும் என்று உணர்க!”

“எவர் இவனுக்கு முடிசூட்டினர்? எந்த முனிவர்? பரசுராமரா? வசிட்டரா? விஸ்வாமித்திரரா? எவர்? நான் அறியவிழைகிறேன். வேடனையும் காடனையும் வேந்தராக்கும் வல்லமை கொண்டவர்கள் முனிவர்கள் மட்டுமே. வேதமே குடித்தலைவனை அரசனாக்குகிறது. இவனுக்கு அரிமலர் தூவி அரசிருத்தி நீராட்டு நிகழ்த்தியவர் எவர்? எச்சொல்லில் எழுந்தது இவன் உரிமை? இதோ, இந்த அவையில் அறியவிழைகிறேன்.”

“எல்லைமீறுபவர்களை கொல்வதற்கு உரிமைகொண்டவன் அரசன். தகுதியற்ற முடியெதையும் கொய்துவரவேண்டியவர் ஷத்ரியர். ஷத்ரியராகிய நம் படைகள் செல்லமுடியாத தொலைவில் நகரமைத்தமையால் மட்டுமே இவன் இன்றும் அரசனென நின்றிருக்கிறான். வளைக்குள் ஆழத்தில் அமர்ந்திருந்து உயிர் தப்புவதனால் மலையெலி சிம்மத்திற்கு நிகராக ஆகிவிடாது என்று இந்த வீணனுக்கு சொல்கிறேன்.”

அவையெங்கும் மெல்லிய ஓசைகளாக அவனுக்கு ஆதரவு எழுந்தது. “தேள் கொட்டத்தொடங்கிவிட்டது” என்றான் மாளவன். “முழுநஞ்சையும் கொட்டிவிட்ட தேள் உயிர்வாழமுடியாது என்பார்கள்” என்றான் அருகிருந்த கூர்ஜரன்.

“எப்படி இந்த அவையில் நின்றான் இவன்? எந்தத் தகுதியில்?” என்று சிசுபாலன் கூவினான். “இன்று வினவுகிறேன். இவன் அவையின் வைதிகர் எவர்? இதுவரை வேள்வியென எதை செய்திருக்கிறான்? ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக யாதவர் இந்திரனுக்கு அளித்துவந்த வேள்விக்கொடையை நிறுத்தியவன் எப்படி இந்திரனின் நகரில் மண்வேந்தன் விண்வேந்தனை  வேட்கும் நிகழ்வின் தலைவனாக ஆனான்? இந்திரனே மின்படையும் இடிமுரசும் பெருமழையுமாக எழுந்து இவன் குடிகளுடன் போரிட்டான் என்று இவன் குலக்கதைகளே சொல்கின்றன என்பதை அறியுங்கள்!”

“நாம் ஷத்ரியர். விண்ணாளும் இந்திரனின் மண்வடிவர் என நம்மை போற்றுகின்றன நூல்கள்.  அரசர்களே, அவையோரே, இவன் இத்தனைநாளும் போரிட்டது இந்திரனுடனும் நம்முடனும்தான் என்று அறியாத மூடர்களா நாம்?” பேசப்பேச மேலும் மேலுமென அவன் வெறிகொண்டான். அவன் உடலில் இருந்தா அத்தனை பெரிய ஓசை எழுகிறதென வியந்தனர் அவையோர். அவன் உடல் மையமுடிச்சு அவிழ்ந்த பாவை போல நாற்புறமும் தள்ளாடியது. வாயின் ஓரம் நுரை தள்ளியது. மூச்சு எழுந்து விலாக்கூடு அலையடித்தது.

“வேதவேள்விக்கு முதல்வனாக நிற்க இவனுக்கிருக்கும் உரிமைதான் என்ன? இங்கு எரியூட்டி அமர்ந்திருக்கும் வைதிகர் சொல்லட்டும். வேதம் ஓதும் முனிவர் சொல்லட்டும். மும்முதல் விழைவெனும் முப்பிரிக்கிளைகொண்ட வேதத்தை வெட்ட வந்த கோடரி அல்லவா இவன்? மரத்தை யானைகள் உண்ணட்டும், இலையை எருதுகள் உண்ணட்டும், கனியை மானுடர் உண்ணட்டும், மலர்த்தேனை  மெய்ஞானியர் உண்ணட்டும்  என்று இவன் உரைத்ததுண்டா இல்லையா?”

“இங்கு சொல்லட்டும் இவன், நான்கு வேதத்தையும் இவன் முழுதேற்கிறான் என்று. இங்கு நாவெடுத்து ஆணையிடட்டும் வேதச்சொல் என்பது மாறாமெய்மை என இவன் ஒப்புகிறான் என்று” என்றான் சிசுபாலன். “ஏன் இவன் ஜராசந்தனை கொன்றான்? ஏன் நாகவேதத்தை மண்ணிலிருந்து அழித்தான்? விழைவெனும் பெருநெருப்பு அது. அம்முதல் வேதத்திலிருந்தே நாம் ஆற்றல்கொண்டு எழுந்தோம். அதில் மொண்டு நாம் கொண்டுள்ள அனலே இதோ இந்த எரிகுளத்தில் நின்றாடுகிறது. இதையும் அழித்து  நம்மை மண்பாவைகளென ஆக்க விழைகிறான் இவன். இதற்கு இவனையே தலைவனென அமரச்செய்திருக்கும் நாம் மூடர்களா? பித்தர்களா? சொல்க!”

சகதேவன் “எங்கள் அவை நின்று பேச எவரிடமும் இளைய யாதவர் ஒப்புதல் கோரவேண்டியதில்லை, அறிவிலியே” என்றான். மாளவமன்னன் எழுந்து “சேதிநாட்டரசர் கேட்பதில் பொருளுள்ளது. இளைய யாதவரை அரசரென அமர்த்திய முனிவரோ வைதிகரோ எவரேனும் உள்ளனரா? அவர் அவையின் வைதிகர்தலைவர் எவர்? அங்கே துவாரகையில் இதுவரை நிகழ்ந்த வேள்விகள் எவை?” என்றான். “அதையே நானும் வினவ எண்ணுகிறேன்” என்று சுஸாமர் எழுந்து கூறினார். “இளைய யாதவர்  வேள்விகளை ஏற்கிறாரா? வேதங்களை ஒப்புகிறாரா? நானறிந்தவரையில் அவர் வேதமுடிவை மட்டுமே வலியுறுத்தும் சாந்தீபனி குருமரபை சேர்ந்தவர். உஜ்ஜைனியில் அங்கபாத  குருகுலத்தில் வேதம் கடந்த சொல்பயின்று எழுந்தவர் என்கிறார்கள்.  அவர் இந்த அவைக்கு சொல்லட்டும் அவர் எவரென்று.”

அவை அமைதியடைந்தது. பீஷ்மர் ஏதோ சொல்ல வாயெடுக்க அவரை கையசைவால் தடுத்து இளைய யாதவர் எழுந்தார். அவர் முகம் ஆயிரம்பேர் உணர்வுக் கொந்தளிப்புடன் கூவி வணங்கி கண்ணீர்விட்டு அரற்றுகையில் கருவறையொளியில் அப்பால் அப்பால் என நின்றிருக்கும் தெய்வச்சிலைகளுக்குரிய அழகை கொண்டிருந்தது. விழிகள் மட்டும் அவர் சொல்லுடன் இணைந்து ஒளிவிட்டன.

“மாளவரே, நான் என் குலத்து கார்த்தவீரியர் சூடிய முடியையே கொண்டிருக்கிறேன். அவர் ஏந்திய படைக்கலங்களும் மதுராவிலுள்ளன” என்றார். “ஆம், வைதிகரோ முனிவரோ நீராட்டி அமைத்தால் முடிகொண்டோர் ஷத்ரியராவார்கள் என்கின்றது பராசர ஸ்மிருதி. ஆனால் எனது நெறி நீங்கள் அறியாத நூலொன்றிலுள்ளது” என்றார்.

கை தூக்கி உரத்தகுரலில் அவர்  “நன்னீராட்டில்லை. காட்டில் சிம்மத்தை முடிசூட்டும் எச்சடங்குமில்லை. தன் ஆற்றலாலேயே அது அரசனாகிறது”  என்றபோது அவையமர்ந்திருந்த ஷத்ரியரல்லாத அரசர்கள் அனைவரும் கைகளைத் தூக்கி “ஆம்! ஆம்! அவ்வாறே ஆகுக!” என்று குரலெழுப்பினர்.

சுஸாமரை நோக்கி திரும்பி “முனிவரே, நீங்கள் உரைத்தது உண்மை. நான் அனைத்தையும் ஒளிகொள்ளச் செய்யும் சாந்தீபனி குருகுலத்தின் மாணவன். வேதமுடிவே மெய்மை என்றுரைக்கும் கொள்கை கொண்டவன். வேட்டும் வென்றும் கொண்டு எவரும் நிறையமுடியாதென்றும், அறிந்தும் ஆகியும் அவிந்துமே அமையமுடியும் என்றும் சொல்பவன். அழியாத வேதமுடிவெனும் மெய்ப்பொருளை இங்கும் நிலைநிறுத்தவே வந்தேன்” என்றார்.

“ஏன் இவ்வேள்விக்கு நான் தலைவனாகக் கூடாது? ஆம், நான் இங்கு அறைகிறேன். நான் வேதத்தை முழுதேற்பவன் அல்ல. பாலுண்பவன் பசுவின் ஊனையும் உண்டாகவேண்டும் என்பதில்லை.  பசுவுக்கு புல்லும் நீரும் ஊட்டிப் புரப்பவன் அதன் பாலைமட்டும் உண்ணும் மைந்தனென்றே ஆகமுடியும்” என்றார் இளைய யாதவர். “அவையோரே, கேளுங்கள்! வேதங்களுக்காக சொல்லாடி அதைவிட மேலானதென்று ஏதுமில்லை என்று சொல்லும் மணமுள்ள சொற்களுக்குரியவர்கள் யார்? இவ்வுலக இன்பங்களில் முடிவிலாது திளைத்து விண்ணுலகையும் விழைந்து அங்குமிங்குமாடும் முடிவிலா ஊசலில் ஆடி அழியும் சிறியோர் அல்லவா?  இவர்கள் விழைவதென்ன? இங்கும் அங்கும் இன்பம், பிறிதேது? இவர்களின் உள்ளம் எங்கு மையம் கொள்ளமுடியும்?”

“கேளுங்களிதை! வேதங்கள் நேர், எதிர், நிகர் என்னும் முக்குணங்களை பேசுபவை. மூன்று துலாக்களின் முடிவிலா ஆடல் கொண்டவை. அந்த முக்குணங்களை வென்று செல்பவனே யோகி என்றறிக! இருமையறுத்து தன்னொளியில் தான் விழிகொள்பவனே மெய்மைக்கு அணுக்கமானவன். அரசரே, எதை விழைகிறீர்? வைதிகரே, எதை வேட்கிறீர்? முனிவரே, எதை எண்ணி தவம் கொள்கிறீர்? இலைநுனிதொட்டு பெருவெள்ளம் பரந்தொழுகுகையில் உங்கள் கிணறுகளுக்கு என்ன பொருள்?”

“உயிரென்று வந்தமையால் இங்கு செயலாற்ற கடமை கொண்டிருக்கிறீர். தனக்கென்றில்லாது விளைவுகளில் சித்தமில்லாது விழைவிலாது ஆற்றும் செயலே தவம். ஆடும் துலாக்கோல்களின் நடுவே அசைவிலாது நின்றிருத்தலே யோகம்.”

“வேள்விகள் காமகுரோதமோகங்களெனும் முக்குணங்களால் ஆனவை. ஏனென்றால் அச்சரடுகளின் ஊடுபாவால் ஆனதே இப்புடவி.  அரசர்களே, இங்குள்ளவை அனைத்தும் நெறிநின்று நாடாளும் நல்லோர் பொருட்டே என்றுணர்க! எனவே வேட்டு அடைவது விழுப்பொருள் மட்டுமாகவே இருக்கவேண்டுமென்று இங்கே அறைகிறேன். அவையீரே, தன்னை வென்று பொதுநலனுக்கென ஆற்றப்படும் எச்செயலும் வேள்வியென்றே அறிக!”

“ஆம், மேழிபிடிப்பது வேள்வி. ஆழிகொண்டு கலம் வனைவதும் வேள்வியே. ஆபுரப்பது வேள்வி. மீன்பிடிப்பதும் வேள்வியே. செயலென்று தன்னை முழுதுணரும் அழிவிலா வேள்வியால் இனி இப்புவி தழைக்கட்டும். அனைவருக்குமென சமைக்கப்படும் அன்னமெல்லாம் வேள்விமிச்சமே.  வேள்வியென ஆற்றப்படும் செயல்களன்றி பிறவற்றால் சிலந்திவலையில் சிறகுள்ள பூச்சிகள் என சிக்கிக்கொண்டிருக்கின்றனர் மானுடர்.  எனவே வேள்வி நிகழ்க! நிகழ்வனவெல்லாம் வேள்வியென்றே ஆகுக!”

“அரசர்களே, முன்பு முதற்பிரஜாபதி இவையனைத்தையும் படைத்தது விழைவுடன் அல்ல. விளைவெண்ணியும் அல்ல. ஆகவே அது வேள்வியாயிற்று. அவர் ஒவ்வொரு உயிரிடமும் சொன்னார். நீங்கள் பெருகுவீராக! இங்கு உங்கள் விழைவுகள் நூறுமேனி எழுக! உங்கள் குலங்கள் முடிவிலாது வளர்க என்று. நாம் இங்கு உருவானோம்.  இங்கு நாமியற்றும் வேள்வி அதன்பொருட்டே அமைக! வெற்றிக்கோ புகழுக்கோ அல்ல. வெண்குடைக்கோ அரியணைக்கோ அல்ல. இங்கு அன்னம் பெருகுக என்று எரி மூளுக! அன்னம் சொல்லாகுக என்று அவிசொரிக! சொல் மெய்மையாகுக என்று முகிலெழுக! மெய்மை விண் தொடுக என்று சொல்இசை ஓங்குக!”

“எங்கும் வேள்விகள் எழுக! அடைவதற்கான வேள்விகளல்ல, அளிப்பதற்கான வேள்விகள். இங்கு நாம் கொண்டவற்றை எண்ணி இம்மண்ணை வாழ்த்துவோம். நம்மைச் சூழ்ந்து காத்தவற்றை எண்ணி திசைகளை வணங்குவோம். நம்மை கனிந்து நோக்குவதன்பொருட்டு   தெய்வங்களை வழுத்துவோம். இங்கு எழும் வேள்வி அதன்பொருட்டே. இந்த வேள்வியால் தேவர்கள் பெருகுக! அத்தேவர்கள் நம்மை பெருகச்செய்க! ஒருவரை ஒருவர் பெருகச்செய்து முழுமைகொள்வோம்.”

அனைத்து வாயில்களினூடாகவும் வேள்விக்கூடத்தில் புகுந்த காற்றில் முப்பத்தாறு எரிகுளங்களிலும் தழல் எழுந்து நின்றாடியது. எவரோ “ஆ!” என்று அலற அனைவரும் நோக்கியபோது வேள்விப்பந்தல்மேல் பற்றி ஏறி வெடித்துச் சீறி கிளைவிரித்து எழுந்து பறந்து பேருருவம் கொண்டது நெருப்பு.

கைகூப்பி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் சுஸாமர். “ஓம்! ஓம்! ஓம்!” என முழங்கியது வைதிகர் பெருநிரை. “ஓம்! ஓம்! ஓம்!” என்றனர் முனிவர்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 59

[ 6 ]

விறலியின் கதை முடிவடைந்தபோது கர்ணனும் ஜயத்ரதனும் அழுத்தமான தனிமை ஒன்றை அடைந்தனர். அவள் ஆடிக்கொண்டிருந்த கதையே தங்களின் நிலையழிவை உருவாக்கியதென்பதை அவர்கள் ஆழத்தில் உணர்ந்தனர். அது ஏன் ஏன் என எண்ணி முன்சென்ற சித்தம் சலித்து விட்டுவிட்டு அமைந்தது. அந்தச் சலிப்பு நெஞ்சை அமைதிகொள்ளச் செய்தது. விழிகள் எடைகொள்ள அவர்கள் துயிலத் தொடங்கினர். கர்ணன் தன் குறட்டையொலியைக் கேட்டு விழித்துக்கொண்டபோது அங்கிருந்த ஷத்ரியர் பலரும் துயில்கொண்டிருப்பதை கண்டான்.

அவன் விழித்தெழுந்து உடலை அசைத்த ஒலி கேட்டு ஜயத்ரதன் விழிப்பு கொண்டான். “நெடுநேரமாயிற்றா, மூத்தவரே?” என்றான். கர்ணன் “இல்லை” என்றான். அவர்கள் துயிலாது விழிகளை தொலைவில் நட்டு இறுகிய உடலுடன் படுத்திருந்த துரியோதனனை நோக்கினர். கர்ணன் “நான் சென்று முகம்கழுவி வரவேண்டும்…” என்றான். ஜயத்ரதன் “நானும் எதையாவது அருந்த விழைகிறேன். திரிகர்த்தநாட்டின் கடும் மதுவை அருந்தினேன். என் உடலெங்கும் அதன் மணம் நிறைந்திருக்கிறது” என்றான்.

கர்ணனின் உடலில் தெரிந்த அசைவைக்கண்டு ஜயத்ரதன் திரும்பி நோக்கியபோது எதிர் வாயிலினூடாக சிசுபாலன் உள்ளே வருவதை பார்த்தான். கர்ணனைத் தொட்டு “மூத்தவரே, அவரில் இருக்கும் தனிமையை பாருங்கள். விரும்பினாலும்கூட அவருடன் எவரும் இருக்க முடியாதென்பதைப்போல” என்றான். கர்ணன் “ஆம், இங்கு இருப்பவன் போல் அல்ல, எங்கோ சென்று கொண்டிருப்பவன் போலிருக்கிறான்” என்றான்.

அங்கிருந்த எவரையும் பார்க்காமல், நிமிர்ந்த தலையுடன், சொடுக்கிய உடலுடன், நீண்ட தாடியை கைகளால் நீவியபடி உள்ளே வந்த சிசுபாலன் தன்னை நோக்கி வந்து பணிந்த அக்கூடத்தின் ஸ்தானிகரிடம் தனக்கொரு மஞ்சம் ஒருக்கும்படி சொன்னதை அவர்கள் கண்டனர். அவனையே விழித்திருந்த அத்தனை ஷத்ரியர்களும் நோக்கினர். அவர்கள் கொண்ட அந்த உளக்கூர்மையை அரைத்துயிலில் உணர்ந்தவர்கள்போல பிறரும் விழிப்பு கொண்டனர். அவர்களும் உடல் உந்தி எழுந்து அவனை நோக்கினர்.

ஸ்தானிகர் சிசுபாலனை அழைத்துச் சென்று கர்ணனுக்கும் ஜயத்ரதனுக்கும் பின்னால் இருந்த ஒழிந்த பீடமொன்றில் அமரச்செய்தார். “இன்னீர் அருந்துகிறீர்களா, அரசே?” என்று அவர் கேட்க அவன் “செல்க!” என்பதுபோல கையசைத்துவிட்டு மஞ்சத்தில் படுத்து கால்களை நீட்டிக்கொண்டான். தன்னைச் சுற்றிலும் சிறகதிரும் பூச்சிகள்போல் மொய்த்த விழிகளுக்கு நடுவே அவன் படுத்திருந்தான்.

கண்களை மூடிக்கொண்டபோதுதான் முகம் எத்தனை ஒடுங்கியிருக்கிறது என்று தெரிந்தது. கண்ணுருளைகள் இரு எலும்புக்குழிக்குள் போடப்பட்டவை  போலிருந்தன. பல்நிரையுடன் முகவாய் முன்னால் உந்தியிருந்தது. கன்ன எலும்புகள் மேலெழுந்திருந்தன. கழுத்தின் நரம்புகள் புடைத்து, தொண்டை எலும்புகள் அடுக்கப்பட்ட வளையங்கள் போல புடைத்திருக்க கழுத்தெலும்புகளின் வளைவுக்குமேல் ஆழ்ந்த குழிகள் மூச்சில் எழுந்தமைந்தன. அவற்றில் இரு நரம்புகள் இழுபட்டிருந்தன. ஒடுங்கிய நெஞ்சப்பலகைகள் நடுவே மூச்சு அதிர்ந்த குழிக்கு இருபக்கமும் விலாநிரைகள் நரம்புகளால் இழுத்துக் கட்டப்பட்டிருந்தன.

ஜயத்ரதன் அவனை நோக்கிக் கொண்டிருக்க கர்ணன் அவன் தோளை தொட்டான். “உருகிக்கொண்டிருக்கிறார், அரசே” என்றான் ஜயத்ரதன். “ஆம்” என்றான் கர்ணன். “அவருள் எரிவது எது?” கர்ணன் “ஆழமான புண்கள் உடலில் இருந்து அனைத்து ஆற்றலையும் எடுத்துக்கொள்கின்றன என்பர் மருத்துவர்” என்றான். ஜயத்ரதன் நோக்க “வெளியே இருந்து உருவாகும் புண்களை உடல் நலப்படுத்திக்கொள்ளும், அதுவே உருவாக்கிக்கொள்ளும் புண்களே அதை கொல்பவை என்பார்கள்” என்று அவன் தொடர்ந்தான்.

சிசுபாலனுக்கு அப்பால் படுத்திருருந்த உலூகநாட்டு பிரகந்தன் கையூன்றி எழுந்து “சேதி நாட்டரசே, தாங்கள் இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக படை கொண்டு  வருவதாகவும், மகதரின் இறப்பிற்கு பழியீடு செய்யப்போவதாகவும் சூதர் பாடல்கள் உலவியதே? ஒருவேளை ராஜசூயத்திற்குப் பிறகு அப்படைப் புறப்பாடு நிகழுமோ?” என்றார். கண்கள் ஒளிர பல ஷத்ரியர் நோக்கினர். கோசலநாட்டு நக்னஜித் “அவர் தவம் செய்கிறார். படைக்கலம் கோரி தெய்வங்களை அழைக்கிறார்” என்றார்.

சிசுபாலன் எதையும் கேட்டதாகவே தெரியவில்லை. ஆனால் அவன் தாடை இறுகி அசைவதை கால்களின் இரு கட்டைவிரல்கள் இறுகி சுழல்வதை கர்ணன் பார்த்தான். “மூடர்கள்!” என்றான். “அது அரசர் இயல்பு, மூத்தவரே. ஒருவரை இழிவுபடுத்துவதனூடாக தங்கள் மேன்மையை அவர்கள் நிறுவிக்கொள்கிறார்கள். அவர்கள் இருவருமே தோற்றவர்கள்” என்றான் ஜயத்ரதன். “இவ்விளிவரலுக்கு சில உயர்குடி ஷத்ரியர்கள் புன்னகைப்பார்கள் என்றால் சிறுகுடியினர் அனைவரும் இதை தொடர்வார்கள்.”

கலிங்கனும் மாளவனும் தங்களுக்குள் ஏதோ சொல்லி சிரிக்க அவந்தியின் விந்தன் “அவர் படைதிரட்டிக் கொண்டிருக்கிறார். இளைய யாதவர் அவருக்கு உதவுவதாக சொல்லியிருக்கிறார் என்று அறிந்தேன். அவர்கள் ஒரு குலம் அல்லவா?” என்றான். அனுவிந்தன் உரக்க நகைத்தான். அவனுடன் மேலும் ஷத்ரியர் இணைந்துகொண்டனர். “ஆனால் இளைய யாதவர் தன் மாமனை கொன்றவர். இளைய யாதவர் இவருக்கு மாமன் மகன் அல்லவா? மாமன்குலத்தை அழிப்பது ஒரு அரசச் சடங்காகவே யாதவர்களில் மாறிவிட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.” மீண்டும் சிரிப்பொலி எழுந்தது.

கர்ணன் “எத்தனை பொருளற்ற சொற்கள்!” என்றான். “இளிவரல் என்றாலும்கூட அதில் ஒரு நுட்பமோ அழகோ இருக்கலாகாதா?” என்றான்.  ஜயத்ரதன் சிரித்து “அவர்கள் அருந்திய மதுவுக்குப் பிறகு அவர்கள் இத்தனை பேசுவதே வியப்புக்குரியதுதான்” என்றான்.

“ஆனால் சேதிநாடு ஷத்ரியர்களின் அரசாயிற்றே?” என்று கௌசிகி நாட்டு மஹௌஜசன் கேட்டான். “சேதி நாடு ஷத்ரியர்களைவிட மேம்பட்ட குலப்பெருமை கொண்டது. ஷத்ரியர்கள் என்னும் ஈயமும் யாதவர்கள் என்னும் செம்பும் கலந்துருவான வெண்கலம் அது” என்றான்  காஷ்மீரநாட்டு லோகிதன். “அவ்வாறென்றால் தேய்த்தால் பொன் போல் ஒளிரும்” என்றான் தென்னகத்து பௌரவன். “ஆம், நாளும் தேய்க்காவிட்டால் களிம்பேறும்” என்று அவனருகே அமர்ந்திருந்த வாதாதிபன் சொன்னான். நகைப்பு அந்தக்கூடமெங்கும் நிறைந்தது.

சிசுபாலன் எழுந்து அவர்களை நோக்காமல்  கூடத்திலிருந்து வெளியே சென்றான். அவன் எழுந்ததுமே சிரிப்புகள் அடங்கி இளிவரல் நிறைந்த முகங்களுடன் நஞ்சு ஒளிவிடும் கண்களுடன் அவர்கள் அவன் செல்வதை நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் வாயிலைக் கடந்ததும் மீண்டும் அக்கூடமே வெடித்துச் சிரித்தது.

[ 7 ]

மீண்டும் வேள்விக்கான அவை கூடுவதற்கான மணியோசை கோபுரத்தின் மேல் எழுந்தது. விண்ணில் முட்டி அங்கிருந்து பொழிந்து அனைவர் மேலும் வருடி வழிவது போலிருந்தது அதன் கார்வை. மரநிழல்களிலும் அணிப்பந்தல்களிலும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வைதிகர்களும், மாளிகைகளில் துயின்ற அரசர்களும் விழித்து முகமும் கைகால்களும் கழுவி மீண்டும் வேள்விக்கூடத்தை நிறைத்தனர்.

அதுவரை வேள்விக்கு அவியளித்தவர்கள் எழுந்து புதிய அணியினர் அமர்ந்தனர். ஓய்வெடுத்து மீண்ட தௌம்யர் எழுந்து அவையை வணங்கி “அவையீரே, வைதிகரே, முனிவரே, இந்த ராஜசூயப் பெருவேள்வியின் முதன்மைச் சடங்குகளாகிய வில்கூட்டலும் ரதமோட்டலும் ஆநிரை படைத்தலும் நடைபெறும்” என்று அறிவித்தார். பைலர் சென்று தருமனை வணங்கி வில்குலைக்கும் முதற்சடங்கு நிகழவிருப்பதாக அறிவித்தார். அவர் தலையசைத்து செங்கோலை அருகில் நின்ற ஏவலனிடம் அளித்துவிட்டு  எழுந்து அவைமுன் வந்து நின்றார். புதிய மஞ்சள்மூங்கிலால் ஆன வில் ஒன்றை மூன்று வைதிகர் அவர் கையில் அளித்தனர். அதில் மஞ்சள்கொடி சுற்றப்பட்டிருந்தது. பிரம்புக் கொடியால் ஆன நாணை இழுத்துப்பூட்டி மும்முறை மூங்கில் அம்பை தொடுத்து தௌம்யரின் முன் அதை தாழ்த்தி தலைசுண்டி நாணொலி எழுப்பினார் தருமன்.

அவர் சென்று தௌம்யரை வில்தாழ்த்தி வணங்க அவர் தர்ப்பையில் கங்கைநீர் தொட்டு தருமன் தலையில் தெளித்து வேதமோதி வாழ்த்தினார். வைதிகர்கள் அவர் மேல் மலர் தூவி வாழ்த்த வில்லுடன் வேள்விச்சாலைக்கு வெளியே சென்றார். அவருடன் நான்கு தம்பியரும் தொடர்ந்தனர். முதல் அம்பை குறிவைத்து மூன்றுமுறை தாழ்த்தி ஏற்றியபின் இந்திரனின் கிழக்குத்திசை நோக்கி எய்தார். கூடிநின்றவர்கள் கைதூக்கி “ஹோ! ஹோ! ஹோ!” என்று ஓசையிட்டனர்.

எட்டு திசைகளுக்கும் எட்டு அம்புகளை எய்தபின் வில்லுடன் நடந்து அங்கு நின்ற தேரை அடைந்தார். மென்மரத்தாலான சகடங்களும் மூங்கில்தட்டுகளும் கொண்ட அந்த எளிமையான தேர் மலைப்பழங்குடிகளின் வண்டி போலிருந்தது. சௌனகரும் இளைய பாண்டவர் நால்வரும் அவரை வழிநடத்திச் செல்ல, அத்தேரில் ஏறி வில்லுடன் நின்றார்.

மூன்று வெண்புரவிகள் பூட்டப்பட்ட தேர் வேள்விச்சாலையை மும்முறை சுற்றி வந்தது. தேரில் நின்றபடியே தருமன் ஒவ்வொரு மூலையிலும் அம்பு எய்தார். நான்காவது மூலையில் மரத்தில் கட்டப்பட்டிருந்த அத்தி, மா, வாழை எனும் மூன்றுவகை கனிகளை நோக்கி அவர் அம்புவிட அவற்றை அவிழ்த்து அவர் தேரில் வைத்தனர் ஏவலர்.

தேரிலிருந்து இறங்கி வில்லுடன் சென்று வேள்விச்சாலைக்கு இடப்பக்கமிருந்த திறந்த பெருமுற்றத்தை அடைந்தார். பாரதவர்ஷமெங்கிலுமிருந்து கவர்ந்துகொண்டு வரப்பட்ட ஆநிரைகள் அங்கே கட்டப்பட்டிருந்தன. மூன்று வீரர்கள் இடையில் புலித்தோலாடையும் உடம்பெங்கும் சாம்பலும் தலையில் பன்றிப்பல்லாலான பிறையும் அணிந்த காட்டாளர்களாக உருமாற்று கொண்டு அவரை எதிர்கொண்டனர். அவர்கள் மூன்று அம்புகளை தருமனை நோக்கி எய்தனர். அவர்கள் கையை வாயில் வைத்து குரவையொலி எழுப்பினர். தருமன் தன் இடையிலிருந்த சங்கை ஊதினார்.

தருமன் மூன்று அம்புகளை அவர்களை நோக்கி எய்தார். அச்சடங்குப்போர் முடிந்ததும் அவர்கள் மும்முறை நெற்றி நிலம்பட குனிந்து வணங்கி அந்த ஆநிரைகளிலிருந்து குற்றமற்ற சுழிகள் கொண்டதும், செந்நிற மூக்கும் கரிய காம்பும்  உடையதுமான பசு ஒன்றை அவரிடம் அளித்தனர். அப்பசுவை ஓட்டியபடி அவர் வேள்விச்சாலை நோக்கி வந்தார். அவருக்குப்பின் தம்பியர் தொடர்ந்தனர்.

வேள்விச்சாலையிலிருந்த மக்களைக் கண்டு பசு திகைத்து நிற்க ஏவலன் ஒருவன் அதன் கன்றை முன்னால் இழுத்துச் சென்றான். கன்றை நோக்கி நாநீட்டி மூச்செறிந்த பசு தலையைக் குலுக்கியபடி தொடர்ந்து சென்று வேள்விச்சாலைக்கு முன் வந்து நின்றது. அதன் கழுத்தில் வெண்மலர் மாலை சூட்டப்பட்டது. கொம்புகளுக்கு பொற்பூண் அணிவிக்கப்பட்டது. நெற்றியில் பொன்குமிழ் ஆரமும் கழுத்தில் ஒலிக்கும் சிறு மணிமாலையும் சூட்டினர்.

பசுவின் கன்று அதன் முன் காட்டப்பட்டபின் வேள்விச்சாலைக்குள் கொண்டு சென்று மறைக்கப்பட்டது. ஐயுற்று தயங்கி நின்றபின் பசு மெல்ல உடல் குலுங்க தொடை தசைகள் அதிர காலெடுத்துவைத்து கிழக்கு வாயிலினூடாக வேள்விச் சாலைக்குள் நுழைந்தது. அது உள்ளே நுழைந்ததும் அனைத்து வைதிகரும் வேதக்குரல் ஓங்கி முழங்க அதன் மேல் அரிமஞ்சள் தூவி வாழ்த்தினர். மஞ்சள் மழையில் நனைந்து உடல் சிலிர்த்தபடி பசு நடந்து வேள்விச்சாலை அருகே தயங்கி நின்று “அம்பே” என்றது. நற்தருணம் என்று வைதிகர் வாழ்த்தொலி எழுப்பினர்.

பசுவை பைலர் வந்து தர்ப்பையில் கங்கைநீர் தொட்டு நெற்றியில் வைத்து வாழ்த்தி அழைத்துச் சென்றார். முதல் எரிகுளத்தருகே நிறுத்தப்பட்ட பசுவின் நான்கு காம்புகளில் இருந்தும் பால் கறக்கப்பட்டு ஒரு  புதிய பாளைக்குடுவையில் சேர்த்து பின் ஆறு மூங்கில் குவளைகளில் பகிர்ந்தளிக்கப்பட்டு ஆறு தழல்களுக்கும் அவியாக்கப்பட்டது. கிழக்கு நோக்கி நிறுத்தப்பட்ட பசுவின் கருவறைவாயிலை  வைதிகர் பூசை செய்து வணங்கினர்.

அப்பசுவை மஞ்சள் கயிற்றால் கட்டி அரியணைக்கு முன் நின்ற தருமன் அருகே கொண்டுவந்து நிறுத்தினர். அவர் அதன் கயிற்றை வாங்கி கொண்டுசென்று தன் பீடத்தில் அமர்ந்திருந்த தௌம்யரின் அருகே காலடியில் வைத்தார். தௌம்யர் அப்பசுவை கொடையாக பெற்றுக்கொண்டு அவர் தலையில் மஞ்சளரிசி இட்டு வாழ்த்தினார்.

ஆநிரை கொள்ளலில் இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்துசேர்ந்த  அனைத்துப் பசுக்களும் அங்கிருந்த அந்தணர்களுக்கு வைதிகக்கொடையாக வழங்கப்பட்டன. முதல் நூற்றெட்டு பசுக்களும் தௌம்யரின் குருகுலத்திற்கு அளிக்கப்பட்டன. தௌம்யரின் சார்பில் அவற்றில் ஒரு பசுவின் கயிற்றை அவரது மாணவன் தருமனிடமிருந்து பெற்றுக் கொண்டான். ஒவ்வொரு வைதிகர் குலத்துக்கும் பசு நிரைகள் அளிக்கப்பட்டன. இந்திரப்பிரஸ்தத்தின் இருபத்து மூன்று பெருமுற்றங்களிலும், நகரைச்சூழ்ந்த பன்னிரண்டு குறுங்காடுகளிலுமாக கட்டப்பட்டிருந்த எழுபத்தெட்டாயிரம் பசுக்களும் அங்கிருந்த அந்தணர்களுக்கு கொடையளிக்கப்பட்டன. அந்தணர் எழுந்து தருமனை வாழ்த்தி அவர் குலம் சிறக்க நற்சொல் அளித்தனர்.

பைலரின் வழிகாட்டலின்படி  அன்னம்கொள்ளலுக்காக தருமன் அரியணையிலிருந்து எழுந்து அரசணிகோலத்தில் திரௌபதியுடன்  வேள்விப்பந்தலை விட்டு வெளியே வந்தார். அங்கு காத்திருந்த பன்னிரு வேளாண்குடித்தலைவர்கள் அவர்களை வழிநடத்தி அழைத்துச்சென்று வேள்விப்பந்தலுக்கு இடப்பக்கமாக செம்மைப்படுத்தப்பட்டிருந்த சிறிய வயல் அருகே கொண்டு சென்றனர். அங்கு தொல்குடிகள் பயன்படுத்துவது போன்ற ஒற்றைக்கணுவில் செதுக்கி எடுக்கப்பட்ட சிறிய கைமேழி மூங்கில் நுகமும் எருமையின் தொடை எலும்பால் ஆன  மண்கிளறியும் மூங்கில் கூடையும் இருந்தன.

பைலர் வயலருகே தருமனை நிறுத்தி “வளம் பெருகுக! விதைகளில் உறங்கும் பிரஜாபதிகள் இதழ்விரியும் காலத்தை கண்டு கொள்க! அன்னம் அன்னத்தை பிறப்பிக்கட்டும். அன்னம் அன்னத்தை உண்ணட்டும். அன்னம் அன்னத்தை அறியட்டும். அன்னத்தில் உறையும் பிரம்மம் தன் ஆடலை அதில் நிகழ்த்தட்டும். அன்னமென்று இங்கு வந்த அது நிறைவுறட்டும். ஓம்! அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தி திரும்பி வேள்விக்கூடத்திற்கு சென்றார்.

வேளிர்களால் அழைத்துச் செல்லப்பட்ட யுதிஷ்டிரர் தன் மிதியடிகளை கழற்றிவிட்டு மரத்தாலான கைமேழியை எடுத்து கிழக்கு நோக்கி மண்ணில் வைத்தார். அதன் சிறு நுகத்தை அர்ஜுனனும் பீமனும் பற்றிக் கொண்டனர். கரையில் நின்றிருந்த முன்று வைதிகர்கள் வேதச் சொல் உரைக்க அதைக் கேட்டு திரும்பச் சொன்னபடி அவர்கள் நுகத்தைப்பிடித்து இழுத்துச்சென்றனர். தருமன் அவ்வயலை உழுதார். நகுலனும் சகதேவனும் இருபக்கமும் மண் குத்திகளால் நிலத்தைக் கொத்தியபடி உடன் வந்தனர். திரௌபதி மூங்கில் கூடையை இடையில் ஏந்தி அதிலிருந்த  வஜ்ரதானிய விதைகளை அள்ளி வலக்கை மலரச்செய்து விதைத்தபடி பின் தொடர்ந்தாள்.

ஏழுமுறை உழுது சுற்றிவந்து விதைத்ததும் அவர்கள் கரையிலேறி ஓரிடத்தில் அமர்ந்தனர். வைதிகர் சொல்லெடுத்தளிக்க “விடாய் அணையாத அன்னையின் வயிறே! ஊற்று அணையாத முலைக்கண்களே! அளித்துச்சோராத அளிக்கைகளே! எங்களுக்கு அன்னமாகி வருக! எங்கள் சித்தங்களில் அறிவாகவும் எங்கள் குல வழிகளில் பணிவாகவும் இங்கு எழுக!” என்று வாழ்த்தினர். குலமுறை கூறுவோர் தருமனுக்கு முன்னால் வந்து யயாதியிலிருந்து தொடங்கும் அவரது குலமுறையை வாழ்த்தி ஒவ்வொருவருக்கும் உணவளித்த மண் அவர்களுக்கும் அமுதாகுக என்று வாழ்த்தினர்.

பன்னிரு ஏவலர் கதிர் முதிர்ந்த வஜ்ரதானியத்தின் செடிகளை அவ்வயலில் நட்டனர். தருமன் தன் துணைவியுடன் மண் கலங்களில் நீரேந்தி வயலுக்குள் இறங்கி அவற்றுக்கு வலக்கை மேல் இடக்கை வைத்து  நீர் பாய்ச்சினார். பின்னர் கிழக்கு நோக்கி திரும்பி நின்று “எழுகதிரே, இங்கு அன்னத்திற்கு உயிரூட்டுக! அமைந்துள்ள அனைத்திற்குள்ளும் அனலை நிறுத்தி அசைவூட்டுக! ஒவ்வொன்றிலும் எழும் தவம் உன்னால் நிறைவுறுக!” என்று வணங்கினார்.

தொன்மையான முறையில் எருதின் வளைந்த விலா எலும்புகளில் கல்லால் உரசி உருவாக்கப்பட்ட அரம் கொண்ட கதிர் அரிவாளை  வேதியரிடமிருந்து பெற்று வயலில் இறங்கி அதைக் கொண்டு அக்கதிர்களை கொய்தார். அவற்றை அவருக்குப் பின்னால் சென்ற திரௌபதி பெற்று தன் கூடையில் நிறைத்தாள். பத்தில் ஒரு பங்கு கதிரை பறவைகளுக்கென நிலத்திலேயே விட்டுவிட்டு கரையேறினர்.

வரப்பில் நின்று மண் தொட்டு சென்னி சூடி தருமன் “அன்னையே, உன்னிடமிருந்து இவ்வன்னத்தை எடுத்துக் கொள்கிறோம். பெற்றுக் கொண்டவற்றை இம்மண்ணுக்கே திருப்பி அளிப்போம். இங்கு உணவுண்ணும் பூச்சிகள் புழுக்கள் விலங்குகள் அனைவருக்கும் நீ அமுதாகி செல்க! உயிர்க்குலங்கள் அனைத்தும் உன்னால் பசியாறுக! உன்னை வணங்கும் என் சென்னி மீது உன் கருணை கொண்ட கால்கள் அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!”  என்று வேண்டி திரும்பி நடந்தார். அவர் தோளில் அந்த மேழியும் வலக்கையில் கதிர் அரிவாளும் இருந்தன. கொய்த கதிர்களுடன் திரௌபதி அவருக்குப் பின்னால் செல்ல இளைய பாண்டவர்கள் தொடர்ந்தனர்.

அவர்களை வேள்விப்பந்தலருகே எதிர்கொண்ட பைலரும் வைதிகரும் “நிறைகதிர்களுடன் இல்லம் மீளும் குலத்தலைவரே, பெற்றுக் கொண்டவர்கள் திருப்பி அளிக்க கடமைப்பட்டவர்கள். மண் அளிப்பவை அனைத்தும் விண்ணுக்குரியவை என்றுணர்க! விண்ணோக்கி எழுகிறது பசுமை. விண்ணோக்கி நா நீட்டி எழுகிறது அனல். விண்ணோக்கி பொருள் திரட்டி எழுகிறது சொல். விண்ணிலுறையும் தெய்வங்களுக்கு மண் அளித்த இவ்வுணவை அளிக்க வருக!” என்றனர்.

அவர்கள் வழிகாட்ட தருமனும் துணைவியும் பந்தலுக்குள் சென்று எரிகுளங்களுக்கு நடுவே அமர்ந்தனர். திரௌபதி அவ்வஜ்ரதானியங்களை மென்மரத்தாலான கட்டையாலடித்து உதிர்த்தாள். கையால் அம்மணிகளை கசக்கி பிரித்தெடுத்தாள். மூங்கில் முறத்தில் இட்டு விசிறி, பதரும் உமியும் களைந்து எடுத்த மணிகளை ஐந்து பிரிவாக பிரித்தாள். முதல் பிரிவை தனக்குரிய மூங்கில் நாழியில் இட்டாள். இரண்டாவது பிரிவை அவள் முன் வந்து வணங்கிய வேள்வி நிகழ்த்தும் அந்தணருக்கு அளித்தாள். மூன்றாவது பிரிவை கையில் முழவுடனும் கிணைப்பறையுடனும் விறலியுடன் வந்த பாணன் பெற்றுக்கொண்டான். நான்காவது பிரிவு தென்திசை நோக்கி விலக்கி வைக்கப்பட்டது. ஐந்தாவது பிரிவு தெய்வத்திற்கென சிறு கூடையில் இடப்பட்டது.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தானென்று ஐம்புலத்தாரும் ஓம்பி அமர்ந்த அவளை தௌம்யர் வாழ்த்தினார். வேள்விக்கென அளிக்கப்பட்ட வஜ்ரதானியம் முப்பத்தியாறு சிறு கூறுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு எரிகுளத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு அவியிடப்பட்டது. தௌம்யர் “ஆவும் மண்ணும் அன்னையும் என வந்து நம்மைச்சூழ்ந்து காக்கும் விண்கருணையே! இங்கு அனலென்றும் விளங்குக! இவை அனைத்தையும் உண்டு எங்கள் மூதாதையருக்கும் தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் அளிப்பாயாக! அவர்களின் சொற்கள் என்றும் எங்களுடன் நிறைந்திருக்கட்டும்! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினார். “ஓம் ஓம் ஓம்” என்று அவை முழங்கியது.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 58

[ 4 ]

உணவுக்குப்பின் வேள்விச்சாலையை சூழ்ந்திருந்த சோலைகளில் சென்று குழுமிய பெருவணிகரும், குடிமூத்தோரும், அயல்நாட்டினரும் மரங்களுக்கு அடியில் விரிக்கப்பட்ட ஈச்சையோலைப் பாய்களில் தங்கள் குடியும் சுற்றமும் சூழ அமர்ந்தனர். சிலர் படுத்து கண்ணயர்ந்தனர். சிலர் அவைநிகழ்வுகளையும் அவற்றின் அரசியல்விளைவுகளையும் குறித்து சொல்லாடினர். அவர்களை நாடிவந்த சூதரும், பாணரும், விறலியரும் பணிந்து “திருமகள் உடலை நிறைக்கையில் கலைமகள் உள்ளத்தில் அமரவேண்டும் என்கின்றன நூல்கள்… பெருங்குடியினரே, இத்தருணம் பாடலுக்கும் இசைக்கும் உரியது” என்றனர்.

அவர்களை முகமனுரைத்து அரசநிகழ்வுகளை பாடும்படி கோரினர் பெருவணிகர். குடித்தலைவர்கள் தங்கள் குடிப்பெருமைகளை பாடப்பணித்தனர். அவர்கள் முன் தங்கள் கோரைப்புல் பாயை விரித்து அமர்ந்து தண்ணுமையையும் மகரயாழையும் மீட்டி பாணர்கள் பாட விறலியர் உடன் இணைந்தனர். மண்மறைந்து பாடலில் வாழ்பவர்கள் அன்றுபிறந்தவர்கள் போல் எழுந்து வந்தனர். நாவிலிருந்து நாபற்றி அழியாது என்றுமிருக்கும் சொற்களில் அவர்கள் இறப்பெனும் நிழல்தொடா ஒளிகொண்டிருந்தனர். பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து வணிகர் தங்கள் கை கீழிருக்க பரிசில்களை அளித்தனர். குடித்தலைவர் தங்கள் கோல்களைத் தாழ்த்தி வாழ்த்தி பொன்னளித்தனர்.

மாமுனிவர் பராசரர் கங்கையில் மச்சகந்தியைக் கண்ட கதையை ஒருவன் பாடினான். ஐந்து பருவாக அமைந்த தெய்வங்கள் அமைத்த திரைக்குள் முனிவர் மீனவப்பெண்ணை மணந்தார். “அறிக அவையீரே, ஆன்றதவம் காமத்தை தொடுகையிலேயே முழுமைகொள்கிறது. அனைத்தையும் கடந்த மெய்யறிவு அடிமண்ணில் நிற்பவர்களிடமே தன்னை உணர்கிறது. தேவர்களின் இசை அசுரர்களின் தாளத்துடன் இணையாது இனிமைகொள்வதில்லை. விண் இறங்கி மண் தொடுகையிலேயே மழை உயிர் என்றாகிறது. அத்தருணத்தை நறுமணங்களால் வாழ்த்துகின்றன தெய்வங்கள்.”

விறலி சொன்னாள் “கிருஷ்ணதுவைபாயனன் என்று அவரை அழைத்தனர் மக்கள். அறிஞர் அவரை வியாசர் என்று அறிந்தனர். அவர் பராசரரை அறிந்தவர்களுக்கு கங்கையை கற்பித்தார். கங்கையிலிருந்து பராசர மெய்ஞானத்தை கற்றறிந்தார்.”  சூதன் நகைத்தான். “காட்டாளனின் குருதி கலக்காமல் கற்றறிந்த சொல் காவியமாவதில்லை, தோழி.”

புதுமழையின் மணம் கொண்டவளானாள் மச்சகந்தி. அஸ்தினபுரியின் சந்துனு அறிந்தது அந்தப் புதுமணத்தைத்தான். இளம்களிற்றேறு என அவன் சித்தத்தை களிவெறி கொள்ளச்செய்தது அது. அவள் தாள்பணிந்து தன் அரண்மனைக்கு அணிசெய்யக் கோரினான். அறுவடை முடிந்த புதுக்கதிரால் இல்லம் நிறைப்பதுபோல அவளை கொண்டுவந்து தன் அரண்மனையில் மங்கலம் பெருகச்செய்தான். அவள் வெயில்விரிந்த வயலின் உயிர்மணத்தை அந்த இருண்ட மாளிகைக்குள் நிறைத்தாள். அவன் பாலையில் அலைந்த களிறு குளிரூற்றின் அருகிலேயே தங்கிவிடுவதைப்போல அவளருகிலேயே இருந்தான்.

தேவவிரதன் தந்தைக்கென அழியா காமவிலக்கு நோன்பு பூண்ட கதையை பிறிதொரு இடத்தில் பாடிக்கொண்டிருந்தனர். “தந்தையின் காமம் பெருகுமென்றால் மைந்தர் ஈடுசெய்வார்கள் என்பதை யயாதியின் கதையிலிருந்தே அறிகிறோம் அல்லவா?” என்றான் சூதன். விறலி “ஆனால் காமம்கொண்டவன் உள்ளத்தில் உறையும் விலக்கையும் விலக்கு கொண்டவனுள் கரந்திருக்கும் காமத்தையும் எவரறிவார்?” என்றாள். “நாம் சொல்லாத சொல்லால்தான் இங்கு அனைத்தும் புரிந்துகொள்ளப்படுகின்றன, தோழி” என்றான் சூதன். அவையமர்ந்தோர் நகைத்தனர்.

இருமைந்தரை ஈன்று சத்யவதி அரியணை அமர்ந்ததும், முதல் மைந்தன் தன் ஆடிப்பாவையாக எழுந்த கந்தர்வனால் கொல்லப்பட்டதும், இரண்டாம் மைந்தன் மூன்றுமைந்தரை ஈன்று விண்புகுந்ததும் பன்னிரு பகுதிகள் கொண்ட பெருங்காவியமாக விஸ்வகர் என்னும் சூதரால் பாடப்பட்டிருந்தது. எரிமலர் என்னும் பெயரில் காசியின் அரசி அம்பை பீஷ்மரால் கவரப்பட்டு சால்வனால் ஈர்க்கப்பட்டு அவன் முன் சென்று சிறுமைகொண்டு மீண்டு அவர்முன் நின்று பெண்மை கொண்டு எழுந்து கொற்றவையென்றாகி கங்கைக் கரையில் கோயில் கொண்ட கதையை சூதர் பாடினர்.

தன்னந்தனி மரமாக பாலையில் நின்றிருந்த தாலிப்பனையொன்றின் கதையை அயல் சூதன் ஈச்சமரத்தணலில் அமர்ந்து பாடினான். அதிலிருந்து விரிந்த காந்தாரத்தின் பெருவிழைவின் கதை அங்கிருந்தவர்களை உணர்வெழுச்சி கொள்ளச்செய்தது. கதைகள் ஒவ்வொன்றாக எழுந்து கொடிச் சுருள்களென திசை தேர்ந்து ஒன்றோடொன்று பின்னி ஒற்றைப்பெரும்படலமாகி அவர்களை சூழ்ந்தது. தாங்களும் ஒரு சரடென அவற்றில் சேர்த்து பின்னப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர். குடித்தலைவர்களில் ஒருவர் கண்ணீருடன் “அன்று நானும் இருந்தேன். பேரரசி சத்யவதி தன் இரு மருகிகளுடன் தேரில் ஏறி இந்நகர்விட்டுச் சென்றபோது சிறுவனாக அத்தேருக்குப்பின்னால் கதறியழுதபடி நானும் ஓடினேன்” என்றார்.

பிறிதொருவர் “பாண்டு மாமன்னரின் எரிமிச்சத்துடன் யாதவ அரசி நகர்புகுந்தபோது முன்நிரையில் நின்றவன் நான்” என்றார். அவர்கள் அறிந்த ஒவ்வொன்றும் காலத்தால் மும்மடங்கு பெருக்கப்பட்டிருந்தன. ஐந்து மடங்கு உணர்வு கொண்டிருந்தன. நூறு மடங்கு பொருள் கொண்டிருந்தன. ஆயிரம் மடங்கு அழுத்தம் கொண்டிருந்தன. கதை என்பது மொழி வடிவான காலமே என்று அவர்கள் அறிந்தனர். காலம் என்பதோ தன்னை நிகழ்த்தி தான் நோக்கிக் கொண்டிருக்கும் பிரம்மம்.

வைதிகர் கூடிய சோலைகளில் பல்வேறு அறிவு முறைமைகளைச் சார்ந்த அந்தணர் அமர்ந்து நூல் தேர்ந்தனர். தங்கள் தொல் மரபில் திரட்டிய அறிவை முன் வைத்து நிகர் நாடினர். வசிஷ்ட குருகுலத்தின் முன் வந்து நின்ற கௌசிக குருகுலத்தின் பிரசண்ட மத்தர் என்னும் அறிஞர் தன் கையை மும்முறை தட்டி அனைவரையும் அழைத்தபின் வலக்கையிலிருந்த நுனி கூர்ந்த கோலை ஆழ நிலத்தில் நாட்டி உரக்க சொன்னார் “கேளுங்கள் வசிட்டமரபினரே, பிரம்மம் ஒருநிலையிலும் பிறிதொன்றாவதில்லை. பிறிதொன்றாகுமென்றால் இங்கிருப்பவை அனைத்தும் பிரம்மம், இவற்றுக்கு அப்பால் அங்கென ஏதுமில்லை என்றாகும். இங்குள்ள முக்குணமும் மும்மலமும் பிரம்மத்தின் குணங்களே என்றாகும். பிரம்மம் செயலுடையது குறையுடையது என்றால் அது முழுமையல்ல. ஏனென்றால் முதல்முழுமை என்றுணரப்படும் எட்டு இயல்புகளையே பிரம்மம் என்றனர் முன்னோர்” என்றார்.

“பிரம்மம் என்றும் அங்குள்ளது. இங்குள்ளது நம் அறிவினால் உருவாக்கப்படும் உருமயக்கங்களே” என்றார் பிரசண்ட மத்தர். “இச்சொல்லே மையமென கொண்டு என் கோலை இங்கு நாட்டுகிறேன். எதிர்கொள்க!” என்றபடி தனது தண்டத்தினருகே கைகட்டி நின்றார்.  வசிஷ்ட குருகுலத்தின் ஏழுமாணவர்கள் எழுந்து அவரருகே சென்றனர். முதல் மாணவராகிய பிரபாகரர் “அந்தணரே, தங்கள் ஆசிரிய மரபெது? முதன்மை நூல் எது? சொல்சூழ் முறைமை எது?” என்றார். பிரசண்ட மத்தர் “மாமுனிவர் கௌசிகரின் மரபில் வந்தவன் நான். இன்று அமர்ந்துள்ள நூற்றேழாவது கௌசிகரே எனது ஆசிரியர். ஞானகௌசிகம் என்னும் எழுபத்துஎட்டு பாதங்கள் கொண்ட நூல் என்னுடையது. சப்தநியாயம் என்னும் சொல்சூழ் முறைமை நூலை ஒட்டி என் தரப்பை முன்வைக்கிறேன்” என்றார்.

“இங்குள்ளவற்றில் இருந்து அங்குள்ளவை நோக்கி செல்லும் முறைமை என்னுடையது. மண்ணை அறிந்தால் மண்ணென்றானதை அறிய முடியும் என்பதே அதன் முதல் சொல்லாகும்” என்றார் பிரசண்ட மத்தர்.  பிரபாகரர் “அந்தணரே, இங்குள்ளவை அனைத்தும் அறிவு மயக்கம் என்றால் இவற்றை ஆக்கிய அது அவ்வறிவு மயக்கத்திற்கு ஆளாவது என்றல்லவா பொருள்?  மூன்று இயல்புகளுடன் முடிவிலி எனப்பெருகி நிற்கும் இப்பெருவெளியை அறிவு மயங்கிய எளியோன் ஆக்கினான் என்றால் அதற்கப்பால் நின்றிருக்கும் அது ஆற்றுவதுதான் என்ன?” என்றார். பிரசண்ட மத்தர் உரக்க “அது ஆற்றுவதில்லை. ஆவதும் இல்லை. தன் உள்ளில் தானென நிறைந்து என்றுமென அங்குள்ளது” என்றார்.

“அதிலிருந்து முற்றிலும் அப்பாலுள்ளதோ இது?” என்றார் பிரபாகரர். “அல்ல. அதுவே என்றுமாகும் அதற்கப்பால் இவை ஏதுமில்லை. இவை அதிலிருந்து வேறுபட்டவை என்றால் அது குறைவுள்ளது என்று பொருள். அதில் இது குறைவுபடும் என்றால் அதை முதல் முழுமை என்று எப்படி சொல்லலாம்?  அதுவே அனைத்தும். அதுவன்றி பிறிதில்லை” என்றார் பிரசண்ட மத்தர். “அந்தணரே, அறிதலும் அறிபடுபொருளும் அறிவும் ஒன்றே. அவ்வண்ணமெனில் அறிவு மயக்கமும் அதுவே என்றாகும் அல்லவா?” என்றார் பிரபாகரர். அவர் செல்லும் திசையை அறிந்த பிரசண்ட மத்தர் “அது மயங்குதலற்றது” என்றார்.

உரக்க நகைத்து “ஊன்றிய கோலை நீரே சற்று அசைத்துவிட்டீர், பிரசண்டரே. தண்டமின்றி விதண்டாவாதம் செய்ய நீர் வந்திருக்கலாம்” என்றார் பிரபாகரர். “அறிக, ஐந்துவகை வேறுபாடுகளால் பிரம்மம் இவையனைத்தையும் ஆக்கியிருக்கிறது. பிரம்மமும் ஆத்மாவும் கொள்ளும் வேறுபாடு. பிரம்மமும் பருப்பிரபஞ்சமும் கொள்ளும் வேறுபாடு.  ஆத்மாவும் பருப்பிரபஞ்சமும் கொள்ளும் வேறுபாடு.  ஓர்  ஆத்மாவுக்கும் பிறிதுக்கும் உள்ள வேறுபாடு.  ஒரு பருப்பொருளும் பிறபருப்பொருளும் கொள்ளும் வேறுபாடு. இவ்வேறுபாடுகளில் ஒன்றை உடனே நீர் அறியலாம். நீர் வேறு நாங்கள் வேறு. அவ்வண்ணமே, நீர் வேறு மெய்யறிதல் வேறு” என்றார் பிரபாகரர். அவரது தோழர்கள் நகைத்தனர்.

“பிரம்மம் கடலென்றறிக! மழை பெருகி ஆறாகி மீண்டும் கடலாகிறது. அலகிலாது பிறப்பித்தாலும் துளிகுறையாது நின்றிருக்கும் முதல்முழுமை அது. உங்களைப் போன்றோர் அதை உணராது உங்கள் மடிச்சீலைப் பொன் என்றே எண்ணுகிறீர்கள். எண்ணி எண்ணிப் பார்த்து மனம் வெதும்புகிறீர்கள். உருமயக்க வாதமும், வளர்ச்சிநிலை வாதமும் எண்ணியறிவோர் கொள்ளும் மயக்கம். நுண்ணிதின் அறிந்தோர் அதை கடந்திருப்போர். அவர்கள் சொல்லுக்கு அப்பால் சென்று அறிவர். நெல்மணி கொத்தும் குருவிகள் அறிவதில்லை விண்மணி கொத்தி வந்து நம் முற்றத்து மரத்திலமரும் செம்பருந்தை.” அவரது மாணவர்கள் “ஆம்! ஆம்! ஆம்!’ என்றனர். பிரசண்ட மத்தர் தன் கோலை எடுத்துக்கொண்டு தலைகவிழ்ந்து சென்றார். “மீண்டும் வருக! மெய்மை என்பது எம்மரத்திலும் கனிவதென்கின்றன நூல்கள்” என்றார் பிரபாகரர்.

[ 5 ]

உணவு மயக்கத்தில் அரண்மனைப் பெருங்கூடங்களில் விருந்தினர்களாகிய அரசர்கள் சிறுமஞ்சங்களில் சாய்ந்தும் சாய்விருக்கைகளில் கால்நீட்டி தலைசரித்தும் ஓய்வெடுத்தனர். மேலே ஆடிய இழுவிசிறிகளின் குளிர்காற்றும் வெட்டிவேரின் ஈரமணமும் விறலியரும் பாணரும் இசைத்த பாடல்களும் அவர்களின் விழிகளை நனைந்த பஞ்சென எடைகொள்ளச்செய்தன. அரைத்துயிலில் ஒவ்வொருவரும் தாங்கள் இயற்றிய ராஜசூயத்தில் சத்ராஜித்துகளாக வெண்குடை சூடி அமர்ந்திருந்தனர். அம்மலர்வு அவர்களின் முகங்களை இனியதாக்கியது.

மஞ்சத்தில் இறகுச்சேக்கை தலையணைகளின் மேல் கைமடித்து கால்நீட்டி அமர்ந்து அரவென விறலிபாடிய இசையை விழிகளால் கேட்டுக் கொண்டிருந்தான் துரியோதனன். அவனருகே கர்ணனும் ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் அமர்ந்திருந்தனர். பின்னால் துச்சகனும் துச்சலனும் துர்மதனும் இருந்தனர்.

பர்ஜன்யபதத்தில் அர்ஜுனனை மண்ணுக்கு வரவேற்க எழுந்த பல்லாயிரம் விண்விற்களைப்பற்றி விறலி பாடிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு பனித்துளியும் ஏழு வண்ணம் சூடியது. ஒவ்வொரு மலரும் பனித்துளி சூடியது. வண்ணத்துப்பூச்சிகளின் இறகில் சிட்டுக்குருவிகளின் மென்தூவிகளில் ஏறி கந்தர்வர்கள் மண்ணில் பறந்தலைந்தனர். விண்ணிறங்கிய ஒளிநீர்ச் சரடுகளினூடாக தேவர்கள் மண்ணுக்கு வந்தபடி இருந்தனர். அவர்களின் உடலொளியால் வெயிலின்றியே அனைத்தும் மிளிர்ந்தன. அரை நாழிகை நீண்ட பேரிடி ஒன்று அப்பகுதியைச் சூழ்ந்து அனைத்துப் பாறைப்பரப்புகளையும் ஈயின் இறகுகள் போல் அதிர வைத்தது. அனைத்து விழிகளையும் வெண்குருடாக்கிய மின்னல் ஆயிரம் முறை துடித்தமைந்தது. பின்னர் செவிகளும் விழிகளும் மீண்டபோது அவர்கள் மண்ணுக்கு வந்த இந்திரமைந்தனின் அழுகையை கேட்டனர்.

கர்ணன் சற்றே சரிந்து துரியோதனனிடம் “கதைகளை உருவாக்குவதில் இவர்களுக்கு இணை எவருமில்லை. ஆயிரம் சரடுகளால் இடைவிடாது பின்னிக் கொண்டிருக்கிறார்கள். நம்மை அறியாமலேயே நாமும் கதைகளாகி விடுகிறோம்” என்றான். “இப்போது இவை எளிய முடைவுகள். நாளை நாமறியாமலேயே இறுகி இரும்புக்கோட்டைகளாகிவிடும்.” அஸ்வத்தாமன் புன்னகைத்து “மண் மறைந்தோர் கதைகளின் கோட்டைகளுக்குள் சிறையிடப்பட்டிருக்கிறார்கள் என்று சூதர் சொல்லுண்டு” என்றான்.

“இந்நகர் முழுக்க கேட்டேன். பாண்டவர் ஐவரின் திசைவெற்றிகளைப்பற்றிய பாடல்கள் மட்டுமே இங்கு ஒலிக்கின்றன. எளியோனாகிய நகுலன்கூட கிழக்கே சென்று நூற்றெட்டு கீழை நாடுகளை வென்று வந்ததாக சூதர் பாடிக்கொண்டிருந்தார். காமரூபத்தைச் சுற்றி நூற்றெட்டு நாடுகள் இருக்கும் செய்தியையே அப்போதுதான் அறிந்தேன்” என்றான் ஜயத்ரதன். “அவை வெற்றிகளல்ல. ராஜசூயத்தை ஒப்பி அளிக்கும் ஆகொடைகள் மட்டுமே” என்றான் துச்சகன். “ஆனால் அவை வெற்றிகளல்ல என்று இச்சூதர்களிடம் யார் சொல்வார்கள்? இவர்கள் சொல் என்றும் நிற்பது. அதை வெல்ல வாளால் இயலாது” என்றான் கர்ணன்.

“அர்ஜுனன் வடக்கே பனிமலை அடுக்குகளில் இருந்த நாடுகளை வென்றான். பீமன் நடுநாடுகள் அனைத்தையும் வென்று மேற்கு எல்லை வரை சென்றான். அபிமன்யுகூட மச்சர்நாடுகளை வென்று ஆநிரை கொண்டு வந்திருக்கிறான்” என்று ஜயத்ரதன் சொன்னான். “இப்பாடல்கள் அளிக்கும் செய்தி ஒன்றே. இந்திரப்பிரஸ்தம் பாரதத்தை வெல்லும் ஆற்றல் கொண்டது.” கர்ணன் “வெல்லக்கூடுமென்னும் அச்சம்போல வெல்லும்படைக்கலம் வேறில்லை. சூதர்கள் வாளும் வேலும் ஆக்கும் கொல்லர்களைவிட திறன்வாய்ந்தவர்கள்” என்றான்.

“சூதர்களை வெல்லும் வழி ஒன்றே, மேலும் சூதர்கள்” என்றான் அஸ்வத்தாமன். “நாம் அஸ்தினபுரியில் ஒரு அஸ்வமேதத்தை நிகழ்த்துவோம். பாரதவர்ஷத்தின் அரசர்களை அங்கு அணிவகுக்கச் செய்வோம். ஆயிரம் சூதர்கள் இதைப்பாடினர் என்றால் பத்தாயிரம் சூதர்கள் அதைப்பாட வைப்போம்.” ஜயத்ரதன் “அங்கு ஒரு ராஜசூயமென்றால் முதல் வில்லென வந்து நிற்க வேண்டியது இந்திரப்பிரஸ்தத்திலிருந்துதான் அல்லவா?” என்றான். “ஏன் வராது? எந்த மூதாதையர் ஆணையால் அஸ்தினபுரியின் அரசர் இங்கு வந்திருக்கிறாரோ அந்த மூதாதையர் அப்போதும் இருப்பார்களல்லவா? பீஷ்மர் வந்து ஆணையிடட்டும், தருமன் வருவார்” என்றான் அஸ்வத்தாமன்.

சினம்கொண்டு திரும்பி “வரவில்லை எனில் படைகொண்டு அவனை இழுத்து வருவோம். அஸ்தினபுரியில் ராஜசூயமும் அஸ்வமேதமும் நடக்கும், இது என் சொல்” என்றான் கர்ணன். ஜயத்ரதன் “அதை பீஷ்மர் மட்டும் முடிவெடுக்க முடியாது. இந்திரப்பிரஸ்தத்திற்கு இறைவன் இளைய யாதவன். இந்திரப்பிரஸ்தம்  அடைந்த இப்பெருவெற்றி இவர்கள் திரட்டி வைத்திருக்கும் இப்படைகளால் ஆனதல்ல, ஒழியா கருவூலமும் யவனர் படைக்கலமும் கொண்ட துவாரகையின் யாதவப் பெருந்திரள் அடைந்த வெற்றி இது” என்றான்.

“பாரதவர்ஷத்திற்கு மேல் தனது செங்கோலை நிறுத்த விழைகிறான் இளைய யாதவன்” என்று ஜயத்ரதன் தொடர்ந்தான். “அவன் ராஜசூயம் செய்தால் ஷத்ரியர்களை எதிராக ஒருங்கிணைக்கவே அது வழிகோலும் என்பதனால் தொல்புகழ் கொண்ட யயாதியின் கொடிவழி வந்த தருமனை இந்திரப்பிரஸ்தத்தில் அமர்த்தி இதை செய்ய வைக்கிறான். இங்குள்ள ஒவ்வொரு மன்னருக்கும் தெரியும், இது எவருடைய செங்கோல் என்று. தங்களுக்குத் தாங்களே இது ஷத்ரியர் நிகழ்த்தும் வேள்வி என்று சொல்லி ஏமாற்றிக் கொள்கிறார்கள்.”

அஸ்வத்தாமன் சிரித்து “அப்படி பலநூறு ஏமாற்றுகளினூடாக கடந்து செல்லும் ஒரு கலைக்கே அரசு சூழ்தல் என்று பெயர்” என்றான். “நான் வேடிக்கை சொல்ல விரும்பவில்லை. இளைய யாதவனின் ஒப்புதலின்றி அஸ்தினபுரியில் பெருவேள்வி எதுவும் நிகழாது, ஐயம் வேண்டாம்” என்றான் ஜயத்ரதன். கர்ணன் உரக்க “இளைய யாதவனை போரில் வெல்ல என்னால் இயலாது என்று எண்ணுகிறாயா?” என்றான். ஜயத்ரதன் ஏதோ சொல்வதற்கு முன் மறித்து “நாணில்லையா உனக்கு? பின் என்ன எண்ணத்தில் துவாரகைக்கு எதிராக அங்கு எல்லைகளில் படை நிறுத்தியிருக்கிறாய்?” என்று கர்ணன் கூவினான்.

“இதோ அஸ்வத்தாமன் இருக்கிறான். அர்ஜுனன் அவன் முன் நிற்க இயலுமா என்ன? யாதவனின் படையாழியை நான் வெல்கிறேன். இந்திரப்பிரஸ்தத்தை துரியோதனர் வெல்லட்டும். எவரையும் ஏமாற்றி நம் அரசர் வெண்குடை சூடவேண்டியதில்லை. வாளெடுத்து வென்று சூட முடியும். இதோ இங்கு நிகழ்வது ராஜசூயமல்ல, இது இவ்வரசர் அளிக்கும் ஒப்புதலின் மேல் நிகழும் ஒரு வெற்றுச் சடங்கு. வாள் கொண்டு வென்று செய்யப்படுவதே உண்மையான ராஜசூயம். அது அஸ்தினபுரியில் நிகழட்டும்” என்றான் கர்ணன்.

சிலகணங்கள் அங்கு பேச்சு அவிந்தது. அர்ஜுனனை வாழ்த்த வந்த திசைத்தேவர்களின் உருவை விறலி நடித்துக் காட்டிக் கொண்டிருந்தாள்  ஆயிரம் நாவுடன் அனலோனும், அலைக்கைகளுடன் ஆழியோனும் எழுந்து வந்தனர். கதிர்விரித்து சூரியன் வந்தான். அல்லி மலர் ஏந்தி சந்திரன் வந்தான். தென்திசை தலைவன் எருமையில் எழுந்தான். வடவன் பொருட்குவையுடன் வந்தான். இன்மதுவின் இறைவன் அமுதகலத்துடன் வந்தான். அவள் உடல் வழியாக அவர்கள் நிகழ்ந்து கொண்டிருந்தனர். இசை அவள் அணிந்த ஆடைபோல அவளைத் தழுவி சூழ்ந்திருந்தது.

பேச்சை மாற்றும் பொருட்டு உடலை அசைத்தமர்ந்த அஸ்வத்தாமன் ஜயத்ரதனிடம் “சிசுபாலன் எங்கே?” என்றான். அவ்விறுக்கத்தை கடந்து செல்ல விரும்பிய ஜயத்ரதன் மிகையான ஆர்வத்துடன் “நேற்றுமாலையே இங்கு வந்துவிட்டார். அவர் வந்த செய்தி அறிந்து நான் அவரைப் பார்க்கச் சென்றேன். அவர் ஓய்வெடுப்பதாகவும் எவரையும் பார்க்க விரும்பவில்லையென்றும் ஏவலர் சொன்னார்கள். இன்று காலை வேள்விச்சாலை புகுந்தபோது இளைய பாண்டவரை அன்றி பிற எவரையும் அவர் விழிநோக்கவில்லை. அவர்கள் தோள் தழுவிக்கொண்டார்கள். நான் அணுகி முகமன் உரைத்தபோது வெற்றுச் சொல் ஒன்று உரைத்து கடந்து சென்றார்” என்றான்.

“விதர்ப்பத்தின் ருக்மியும் இதையே சொன்னார்” என்று ஜயத்ரதன் தொடர்ந்தான். “அவரையும் அவர் தன்னருகே அணுகவிடவில்லை. அவர் அன்று சிந்துநாட்டில் என்னைப் பார்க்க வந்தபோது கொலைவஞ்சம் கொண்ட மலைநாட்டு முனிவர் போலிருந்தார். இன்று இங்கு களியாட்டுக்கு வந்தவர் போல ஆடையும் அணியும் புனைந்துள்ளார்.” அஸ்வத்தாமன் “ஜராசந்தனுக்கான வஞ்சத்திற்கு நாம் துணை நிற்கவில்லை என்று சினம் கொண்டிருக்கலாம்” என்றான். “சினம் கொண்டிருந்தால் ஜராசந்தனைக் கொன்ற இளைய பாண்டவனை ஏன் தழுவிக் கொள்கிறார்? உத்தர பாஞ்சாலரே, அவர் நோக்கம் வேறு. இங்கு வந்த பிறகுதான் அதை ஒவ்வொன்றாக புரிந்து கொள்கிறேன். அவர் ஜராசந்தனுக்காக வஞ்சத்திற்காக நம்மைத்தேடி வரவில்லை. அது சேதியின் அரசு சூழ்தலின் ஓர் அங்கம்” என்றான் ஜயத்ரதன்.

கர்ணன் புருவம் சுளித்து “என்ன?” என்றான். “ஜராசந்தனுக்காக சேதியின் தலைமையில் நாம் படைகொண்டிருந்தால் பழிநிகர் செய்த பெருமை அனைத்தும் சேதிக்கு சென்று சேரும். யாதவக்குருதி கலந்தவர் என்ற குலஇழிவு கொண்டிருப்பவருக்கு ஷத்ரியரின் முற்றாதரவு கிடைக்கும்” என்ற ஜயத்ரதன் புன்னகைத்து “என்ன இருந்தாலும் அவரும் அரசர். என்றோ ஒருநாள் சத்ராஜித் என ஒரு ராஜசூயப்பந்தலில் அமர்ந்திருக்கும் கனவு அவருக்கும் இருக்காதா என்ன?” என்றான். “மிகையாக சொல்கிறீர், சைந்தவரே. வெறுப்பைப் போல  நாம் ஒருவரை புரிந்து கொள்ளாமலிருக்கும் வழி பிறிதொன்றில்லை” என்றான் அஸ்வத்தாமன்.  சினத்துடன் “வேறென்ன? இது கீழ்மை அல்லது சிறுமை. பிறிதென்ன? எப்படி அவர் பீமனை தோள் தழுவலாகும்?” என்றான் ஜயத்ரதன். “அதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அனைத்து வழிகளும் மூடும்போது நேர்எதிர்திசையில் திரும்புகின்றன விலங்குகள். மானுடரும் அப்படித்தான்” என்றான் அஸ்வத்தாமன்.

“அத்தனை எளியவரென்று நான் சிசுபாலனை சொல்லமாட்டேன். அவரில் தொழில்படுவது பிறிதொன்று…” என்றான் ஜயத்ரதன். “இன்று அவர் உள்ளம் செல்வதெப்படி என்று அறிய நாம் நூறுமுறை அவையமர்ந்து சொல்சூழவேண்டியிருக்கும்.” கர்ணன் அஸ்வத்தாமனை நோக்கி “அரசுசூழ்தலில் அடிப்படை நெறியென ஒன்றை பரசுராமர் சொல்வதுண்டு, பாஞ்சாலரே. அரசுச் செயல்பாடுகளின் ஓர் எல்லையில் அரசர்களின் உள்ளாழம் உள்ளது. அவர்களின் விழைவுகளும், கனவுகளும், ஐயங்களும், அச்சங்களும் அவை முதிர்ந்தும் கனிந்தும் ஒருவரொடு கொள்ளும் மாளாத உறவுச் சிடுக்குகளும் அங்குள்ளன. அவற்றை எண்ணி அரசுசூழ்ந்து முடிவுதேர்வதென்பது ஒரு போதும் நிகழாது.”

“ஆகவே இந்த எல்லைக்கு வரவேண்டும். இங்குள்ளது அரசுகளின் வல்லமைகளும் விழைவுகளும் வாய்ப்புகளும் மட்டுமே. அவை பருவுருவானவை. கைக்கு சிக்குபவை. அவற்றைக் கொண்டு மட்டுமே புறவயமான அரசுசூழ்தலை நிகழ்த்த முடியும். நாம் அறியாதவற்றைப் பற்றி எண்ணி உளவிசையை வீணடிக்கவேண்டியதில்லை. அவ்வறியா ஆற்றல்கள் நாம் அறிந்தவற்றில் வெளிப்படுகையில் மட்டும் அவற்றை கையாள்வோம்” என்று கர்ணன் சொன்னான். “சிசுபாலனின் உள்ளம் எங்கு செயல்படுகிறது என இங்கிருந்து நாம் எண்ணி முடிவெடுக்க முடியாது என்றே நானும் உணர்கிறேன். இளைய யாதவனுக்கெதிரான சினமே அவனை இயக்குகிறது என்பது நாம் அறிந்தது. அதற்கான ஊற்றுமுகம் என்ன என்று அவனே அறிந்திருக்கமாட்டான்.”

ஜயத்ரதன் “ஆம், அதை நான் பல்முறை எண்ணியதுண்டு. உண்மையில் இளைய யாதவரின் உடனுறை உறவாகவும், வெற்றிகளில் பங்காளியாகவும் அமைந்திருக்கும் அனைத்து வாய்ப்புகளும் அவருக்குள்ளன. இருவரும் ஒரே குலம். ஒரே கொடிவழியினர். இருவரும் கைகோத்துக் கொள்வார்களென்றால் இளைய யாதவருக்கு பிறிதொரு ஷத்ரிய நாட்டின் உதவியே தேவையில்லை. சேதிக்கோ பாரதவர்ஷத்தையே ஆளும் பெருஞ்செல்வமும் படை வல்லமையும் கிடைக்கும். ஆம், அவர்கள் இணைந்திருப்பதற்கான அனைத்து வழிகளும் தெளிந்துள்ளன. வேற்றுமை கொள்வதற்கான ஓர் அடிப்படைகூட தென்படுவதில்லை” என்றான். அஸ்வத்தாமன் நகைத்து “நிகரற்ற பெருவஞ்சம் எப்போதும் அத்தகையோருக்கு இடையேதான் உள்ளது, அறிந்திருக்கிறீர்களா?” என்றான்.

ஜயத்ரதன் இயல்பாக “தங்களுக்கும் இளைய பாண்டவருக்கும் இடையே இருப்பது போலவா?” என்றான். வேல்குத்தியவன் போல திரும்பிய அஸ்வத்தாமன் முகம் சிவந்து எரிய “மூடா! என்ன சொல்லெடுக்கிறாய்? யாரிடம் பேசுகிறாய் என்று அறிந்திருக்கிறாயா?” என்றான். “தாங்கள் சொன்னதையே திருப்பிச் சொன்னேன்” என்றான் ஜயத்ரதன். “இச்சொல்லுக்காக உன்னை போருக்கு அழைக்கிறேன். என் எதிர்நின்று வில்லம்பால் மறுமொழி சொல். இல்லையேல் உன் நெஞ்சு பிளந்து குருதி அள்ளி என் முகத்தில் பூசிக் கொள்வேன், சிறுமையாளனே” என்றான் அஸ்வத்தாமன்.

துரியோதனன் எழுந்து “போதும் சொல்லாடல்! இது பூசலுக்கான இடமல்ல” என்றான். ஜயத்ரதன் தணிந்து “பொறுத்தருளுங்கள், உத்தரபாஞ்சாலரே! சூதர் சொல்லில் வந்த ஒன்றை சொன்னேன்” என்றான். அஸ்வத்தாமன் மெல்ல உறுமியபடி பார்வையை திருப்பிக் கொண்டான்.

மீண்டும் அங்கு சொல்லின்மை  ஊறி நிறைந்தது. கர்ணன் “இன்றென்ன நாமனைவருமே நிலையழிந்து அவைக்கு வந்திருக்கிறோமா? எதை பேசினாலும் உச்சத்திற்கு செல்கிறோம்?” என்றான். “நாம் பேசாமலிருப்பதே நன்று. எவருள் எவர் இருக்கிறார்கள் என்று தெரியாமல் எப்படி சொல்லாடுவது?” என்றான் ஜயத்ரதன். அஸ்வத்தாமன் எழுந்து நடந்து வெளியே சென்று மறைந்தான். அவன் செல்வதை அவர்கள் நோக்கியிருந்தனர். துரியோதனன் அதை அறிந்ததுபோலவே தோன்றவில்லை.

கர்ணன் ஜயத்ரதனிடம் “மனிதர்களை தெரிந்து கொள்வதில் முதன்மையானது இது. அவர்கள் முற்றிலும் வெறுக்கும் ஒன்று, ஒருபோதும் ஒப்பாத ஒன்று, தங்களுக்குத் தாங்களே கூட அவர்கள் சொல்லிக் கொள்ளாத ஒன்று அவர்களுக்குள் எங்கோ இருக்கும். அதை அறிந்து பின் முழுமையாக மறந்தால் மட்டுமே நாம் அவர்களிடம் அணுக முடியும்” என்றான். ஜயத்ரதன் சிரித்து “மூத்தவரே, தங்களிடம் அவ்வாறு  எது உள்ளதென்று தாங்களே சொல்லிவிடுங்கள். நானே எக்காலத்திலும் அதை கண்டறியப்போவதில்லை. தங்களுக்கு என்மேல் சினம் வர விழையவும் இல்லை” என்றான். கர்ணன் சிரித்து அவன் தோளை மெல்ல தட்டினான்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 57

[ 3 ]

இந்திரப்பிரஸ்த நகரின் வேள்விச்சாலையின் வலப்பக்கம் அமைந்திருந்த கோபுரத்தில் கண்டாமணி கீழிருந்து இளங்களிறொன்று இழுத்த வடத்தால் நாவசைக்கப்பட்டு “ஓம்! ஓம்! ஓம்!” என்று முழங்கியது. அவ்வோசையின் கார்வை நகரை நிறைத்தபோது  குடிகள் தெருக்களிலும் ஆலயமுற்றங்களிலும் கூடி கைகூப்பி விண்ணகத்தை நோக்கி “எந்தையரே, தெய்வங்களே, அருள்க!” என்று கூவினர். ஒற்றைக்குரலென திரண்ட அம்முழக்கம் எழுந்து வேள்விச்சாலையை சூழ்ந்தது.

பைலர் தருமனின் அருகே சென்று வணங்கி அவர் ஆணையை கோரினார். இந்திரப்பிரஸ்தத்தின் முடிசூடி வெண்குடை கவித்து கையில் செங்கோலுடன் அமர்ந்திருந்த தருமன் “தெய்வங்கள் அருள்க! வேள்வியில் எரியெழுக!” என்று ஆணையிட்டார். “அவ்வாறே” என்றபின் பைலர்  வைதிகர் நிரையின் முகப்பில் எழுந்த பன்னிரு இளையோரிடம் “இளைய வைதிகரே, வேள்விக்கென ஆறுவகை எரிகளை எழுப்புமாறு இந்திரப்பிரஸ்தத்தின் அரசரின் ஆணை வந்துள்ளது. ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

அவர்கள் தலைவணங்கி நிரை வகுத்துச்சென்று தௌம்யரை வணங்கினர். தௌம்யர் அளித்த உலர்ந்த தர்ப்பைச் சுருளை வாங்கிக்கொண்டு வந்து பைலருக்கு முன் நின்றனர். பைலர் எரி எழுப்புவதற்கான அரணிக்கட்டைகளை அவர்களுக்கு அளித்தார். அவற்றை கொண்டுவந்து ஆறு வரிகளாக அமைந்த முப்பத்து ஆறு எரிகுளங்களில் ஒவ்வொரு நிரையின்  தொடக்கத்திலும் நின்று வணங்கினர்.

எரிகுளங்களைச் சூழ்ந்து அமர்ந்திருந்த வைதிகர்கள் தர்ப்பை சுற்றிய கைகளைத்தூக்கி “ஆகவனீயம் எரி எழுக! கார்கபத்யம் எழுக! தட்சிணம் எழுக!” என்று வாழ்த்தினர். இளைய வைதிகர் இடக்கால் மடித்து நிலத்தில் அமர்ந்து அரணிக்கட்டையின் அடிக்குற்றியை தரையில் வைத்து உள்ளங்கைக் குழிவில் நிலைக்கழியை நாட்டி அவற்றில் சுற்றப்பட்ட கயிற்றை மத்துபோல விரைந்து இழுத்து சுழலச்செய்தனர். புறா குறுகும் ஒலி போல அரணிக்கட்டைகளின் ஒலி எழுந்தது.

குழிக்குள் சுழன்ற கட்டை வெம்மை கொள்ள அனைத்து விழிகளும் அவற்றையே நோக்கிக் கொண்டிருந்தன. முதல் எரி எது என்பது வேள்வியில் எழுந்து வரும் முதல் தெய்வம் எது என்பதன் அறிவிப்பு.  மூன்றாவது கட்டையில் தர்ப்பைச் சுருள் புகைந்து பற்றிக்கொண்டதும் வைதிகர்கள் தங்கள் வலக்கையைத் தூக்கி “வெற்றி கொள்பவனாகிய இந்திரனே இங்கெழுக! உன் இடியோசை எழுக! மின்கதிர் எழுக!” என்று வாழ்த்தினர். ஆறாவது கட்டை அடுத்ததாக பற்றிக்கொண்டது. நான்காவது கட்டையும் ஒன்றாவது கட்டையும் இரண்டாவது கட்டையும் ஐந்தாவது கட்டையும் இறுதியாக பற்றிக்கொள்ள ஆறு தீயிதழ்களுடன் வைதிக இளைஞர்கள் எழுந்தனர்.

பைலர்  முதலில் எரிந்த இந்திரனின் சுடரை எடுத்து முதல் எரிகுளத்தில் அடுக்கப்பட்டிருந்த பலாச விறகின் அடியில் வைத்தார். தர்ப்பையை உடன் வைத்து தர்ப்பையாலான விசிறியால் மெல்ல விசிறியபோது பலாசம் சிவந்து கருகி இதழ் இதழாக தீ எழுந்தது. சூழ்ந்தமர்ந்திருந்த அவியளிப்போர் உரக்க வேதம் முழங்கினர். நெய்விட்டு அத்தழலை எழுப்பி அதிலிருந்து அடுத்தடுத்த எரிகுளங்களை அனல் ஆக்கினர். ஆறு எரிகளும் முப்பத்தாறு எரிகுளங்களில் மூண்டெழுந்தபோது வேதப்பேரொலி உடன் எழுந்தது. வேதத்தின் சந்தத்திற்கு இயைந்தாடுபவைபோல நெளிந்தாடின செந்தழல்கள்.  ‘இங்கு!’ ‘இங்கு!’ என்றன. ‘இதோ!’ ‘இதோ!’ என்றன. ‘அளி!’ ‘அளி!’ என நா நீட்டின. ‘இன்னும்!’ ‘இன்னும்!’ என்று உவகை கொண்டன. ‘கொள்க!’ ‘கொள்க!’ என்று கையசைத்தன.

நெய்யும் மலர்களும் அரிமஞ்சளும் எண்மங்கலங்களும் முறை அவியாக்கி வேள்வித்தீயை நிறுத்தினர் வைதிகர். நறும்புகை எழுந்து குவைக்கூரைகளில் திரண்டு மெல்ல தயங்கி பிரிந்து கீழிறங்கி வேள்விச்சாலையை வெண்பட்டுத்திரையென மூடியது. வெளியிலிருந்து பதினெட்டு பெருவாயில்களினூடாகவும் உள்ளே வந்த காற்று வெண்பசுக்களை இடையன் என அப்புகையைச் சுழற்றி ஓட்டிச் சென்றது. காற்று வந்தபோது அசைவு கண்ட நாகமெனச் சீறி மேலெழுந்து நாநீட்டி நெளிந்தாடிய தழல்கள் காற்று மறைந்ததும் மீண்டும் அடங்கி பறந்து விறகில் வழிந்து நெய் உண்டு பொறி சிதற குவிந்து கிழிந்து பறந்து துடித்தாடின.

பைலர் தௌம்யரிடம் சென்று ஆணை பெற்று வைதிகர்களின் அவைக்கு வந்து வேதம் பிறந்த தொல்மொழியில் அங்கே சோமம் பிழியவிருப்பதை அறிவித்தார். வைதிகர் அனைவரும் வலக்கையை தூக்கி “ஆம்! ஆம்! ஆம்!” எனும் ஒலியெழுப்பி அதை ஏற்றனர். பதினெட்டு இளைய வைதிகர்கள் ஈரப்பசும்பாம்புக்குஞ்சுகளைப்போல சுருட்டப்பட்டிருந்த  சோமக் கொடிகளை மூங்கில்கூடைகளில் சுமந்துகொண்டு வந்தனர். அவற்றை தௌம்யரிடம் காட்டி வாழ்த்து பெற்ற பின்னர் அவையமர்ந்திருந்த முனிவர்களிடமும் வைதிகர்களிடமும் அவற்றைக்காட்ட ஒவ்வொருவரும் தங்கள் தர்ப்பை மோதிரம் அணிந்த வலக்கையால் அவற்றைத் தொட்டு வாழ்த்தினர். பதினெட்டு சோமக்கொடிச்சுருள் கூடைகளும் எரிகுளங்களுக்கு முன்னால் வைக்கப்பட்டன.

பைலர் தருமனை வணங்கி சோமச்சாறு எடுக்க அனுமதி கோரினார். “தேவர்களுக்கு இனியதும் தெய்வங்களுக்கு உரியதுமாகிய சோமச்சாறு இங்கு பிழியப்படுவதாக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று தருமன் ஆணையிட்டார். மரத்தாலான நூற்றெட்டு உரல்கள் அமைக்கப்பட்டன. வைதிகர்கள் எடுத்தளிக்க இளம் வைதிகர்கள் சோமக்கொடியை அவ்வுரல்களுக்குள் இட்டு வேதத்தின் சந்தத்திற்கு ஏற்ப மெல்லிய உலக்கைகளால் குத்தி நசுக்கினர். பின்னர் அப்பசும்விழுதை எடுத்து வலக்கை கீழிருக்க பிழிந்து மரக்கிண்ணங்களில் தேக்கினர். நூற்றெட்டு கிண்ணங்களில் சேர்க்கப்பட்ட சோமச்சாறு முப்பத்தாறு எரிகுளங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

தர்ப்பையால் சோமச்சாறை தொட்டு எரியில் எழுந்த தேவர்களுக்கு அளித்து வேதம் ஓதினர் வைதிகர். அதன்பின் அன்னம் ஆகுதியாக்கும் இடா அளிக்கையையும் நெய்யை அனலாக்கும் ஆஜ்யம் என்னும் அளிக்கையையும் தொடங்க தௌம்யரிடம் ஆணை பெற்று தருமனிடம் ஒப்புதல் பெற்று பைலர் அறிவித்தார். மரச்சக்கரங்கள் கொண்ட நூற்றெட்டு வண்டிகளில் அமைந்த மூங்கில் கூடைகளில் ஆவியெழும் அன்ன உருளைகள் கொண்டுவரப்பட்டன. எரிகுளங்களுக்கு அருகே அவை நிறுத்தப்பட்டு கூடைகள் இறக்கப்பட்டன.

ஒவ்வொரு கூடையிலிருந்தும் ஒரு கவளம் அன்னம் எடுத்து எரியில் எழுந்த தேவர்களுக்கு அளித்தனர். எண்திசை தேவர்களுக்கும் எட்டு முறை அன்னம் அளிக்கப்பட்டது. அதன்பின் தேனும் இன்கனிச்சாறும் பாலும் கலந்த மதுபர்க்கம் அவியாக்கப்பட்டது. சோமரசம் சிறு பொற்கிண்ணங்களில் பரிமாறப்பட்டு அவையமர்ந்திருந்த அரசர்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டது. முதலில் மதுபர்க்கமும் பின்னர் சோமமும் இறுதியாக அன்னமும் உண்ட அவர்கள்  கைகூப்பி எரிகுளத்தில் எழுந்த தேவர்களை வாழ்த்தி வணங்கினர். இந்திரப்பிரஸ்தத்தில் இருந்த பெருங்குடிகளும் வணிகர்களும் அமர்ந்த கிளையவைகளுக்கு மதுபர்க்கமும் சோமமும் அன்னமும் சென்றன. ஓசையின்றி அவை இறுதி வரை கைமாறி அளிக்கப்பட்டன.

அன்ன அளிக்கை முடிந்ததும் தௌம்யர் எழுந்து வந்து அவையை வணங்கி “இங்கு தேவர்கள் எழுந்தருளியுள்ளனர். இவ்வேள்வி நிகழும் பன்னிரு நாட்களும் இந்நகரை வாழ்த்தியபடி அவர்கள் இவ்வெளியில் நின்றிருப்பார்கள். தேவர்கள் எழுந்த மண் தீங்கற்றது. விண்ணுக்கு நிகரானது. இதில் நடமாடுபவர்கள் அனைவரும் தேவர்கள் என்றே கருதப்படுவார்கள். உவகை கொள்வோம். அன்பில் தோள் தழுவுவோம். மூதாதையரை எண்ணுவோம். தெய்வங்களுக்கு உகந்த உணவை உண்போம். தேவர்கள் மகிழும் சொற்களை பேசுவோம். ஓம், அவ்வாறே ஆகுக!” என்றார். அவையமர்ந்திருந்த வைதிகர்கள் வேதம் ஓதியபடி திரும்பி அரிமலரையும் கங்கைநீரையும் அரசர் மீதும் குடிகள் மீதும் தெளித்து வாழ்த்தினர்.

தருமன் எழுந்து அவையோரை வணங்கி “இங்கு அமர்ந்துள்ள ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உகந்த உணவு அனைத்தும் சித்தமாக உள்ளன. ஒவ்வொருவரின் கால்களையும் தொட்டு சென்னி சூடி உணவருந்தி மகிழ்க என்று யயாதியின், ஹஸ்தியின், குருவின், பிரதீபரின், சந்தனுவின், விசித்திரவீரியரின் பெயரால் நான் வேண்டிக்கொள்கிறேன். உங்கள் உணவுண்ட மிச்சில் என் மூதாதையருக்கு உகந்த பலியாக ஆகுக!” என்று வேண்டிக் கொண்டார். உணவுக்கூடத்தை நடத்திய யுயுத்ஸுவும் துச்சாதனனும் அவைக்கு வந்து வணங்கி அனைவரையும் உணவுண்ணும்படி அழைத்தனர்.

துச்சாதனன் உரத்தகுரலில் “அனல் தொடா உணவுண்ணும் முனிவர்களுக்கு கிழக்கு வாயிலினூடாக செல்லும் பாதையின் இறுதியில் அமைந்த சோலைக்குள் கனிகளும் தேனும் காய்களும் கிழங்குகளும் ஒருக்கப்பட்டுள்ளன” என்றான். “உயிர் கொல்லப்படாத உணவுண்ணும் வைதிகர்களுக்காக மேற்கு வாயிலின் வழியாக சென்றடையும் உணவுக்கூடத்தில் அறுசுவைப் பண்டங்கள் சித்தமாக உள்ளன. ஊனுணவு விழையும் ஷத்ரியர்களுக்காக பின்பக்கம் தெற்கு வாயிலினூடாக செல்லும் பாதை எட்டு உணவுப் பந்தல்களை சென்றடைகிறது.”

ஷத்ரியர் கைகளைத் தூக்கி ‘ஆஆஆ’ என கூவிச் சிரித்தனர். துச்சாதனன் “வடக்கே குளிர்நிலத்து அரசர்களுக்குரிய உணவு முதல் பந்தலிலும், மேற்கே பாலை நில அரசர்களுக்கு உரிய உணவு இரண்டாவது பந்தலிலும், காங்கேய நிலத்து அரசர்களுக்குரிய கோதுமை உணவு மூன்றாவது பந்தலிலும், காமரூபத்துக்கும் அப்பால் உள்ள கீழைநாட்டு அரசர்களுக்கான அரிசியுணவு நான்காவது பந்தலிலும், மச்சர்களுக்கும் நிஷாதர்களுக்கும் உரிய மீனுணவு ஐந்தாவது பந்தலிலும், விந்திய நிலத்தைச் சேர்ந்தவர்களுக்குரிய  உணவு ஆறாவது பந்தலிலும், எரியெழும் தென்னகத்து உணவுகள் ஏழாவது பந்தலிலும், பீதர் யவனர் நாட்டு உணவுகள் எட்டாவது பந்தலிலும் அமைந்துள்ளன. அனைத்துப் பந்தல்களிலும் உணவுண்ணும் மல்லர்களையே மூதாதையர் விழைவர்” என்றான்.  அவை சிரிப்பால் நிறைந்தது.

துச்சாதனன் “வணிகர்களுக்கும் பெருங்குடிமக்களுக்குமான உணவுச்சாலைகள் அவர்களின் பந்தல்களிலிருந்து பிரிந்து செல்லும் பாதைகளின் இறுதியில்  அமைந்துள்ளன. உணவுக் குறை ஏதும் சொல்ல விழைபவர்கள் தங்கள் மேலாடையை தலைக்கு மேல் தூக்க வேண்டுமென்றும், அடுமனையாளர்களும் அவர்களை அமைத்திருக்கும் நானும் யுயுத்ஸுவும் அவர்களை தேடிவந்து குறைகளைக் கேட்டு ஆவன செய்வோம் என்றும் அரசரின் சார்பில் அறிவிக்கிறோம்” என்றான்.

எரிகுளங்களின் முன் அமர்ந்திருந்த அவியளிப்போரின் முதல் நிரை நெய்யூற்றி வேதம் ஒலித்தபடியே எழ அவர்களுக்கு வலப்பக்கமாக வந்த அடுத்த நிரையினர் அணுகி அவர்களின் நெய்க்கரண்டியை  வாங்கி வேதமோதியபடியே அமர்ந்தனர். உணவுண்பதற்காக முனிவர்களும் வைதிகர்களும் அரசர்களும் குடிகளும் வணிகர்களும் ஓசையின்றி எழுந்து இயல்பாக அணிவகுத்து பாதைகளினூடாக மெல்ல வழிந்தோட சற்று நேரத்தில் எரியூட்டுபவர்கள் அன்றி பிறிதெவரும் இன்றி அம்மாபெரும் வேள்விக்கூடம் ஒழிந்தது. தருமன் திரௌபதியுடன் எழுந்து அவையை வணங்கி அரியணை மேடையிலிருந்து இறங்கினார்.

சௌனகர் வந்து அவரை வணங்கி “முறைப்படி இன்று தாங்கள் மூதாதையருக்கு உணவளித்து நிறைவூட்டிய பின்னரே விருந்துண்ணவேண்டும், அரசே” என்றார். இளைய பாண்டவர்கள் சூழ வேள்விக்கூடத்திலிருந்து தெற்கு வாயிலினூடாக வெளியே சென்ற தருமன் அங்கிருந்த சிறு மண்பாதை வழியாக சென்று  சோலைக்குள் ஓடிய சிற்றோடைக்கரையில் கூடிய வைதிகர் நடுவே தன் தேவியுடன் தர்ப்பை மேல் அமர்ந்தார். ஏழு கவளங்களாக பிடிக்கப்பட்ட அன்னத்தை  நுண்சொல் உரைத்து நீரில் இட்டு மூழ்கி விண்வாழ் மூதாதையருக்கு உணவளித்து வணங்கினார். ஈரத்துடன் கரையேறி தென்திசை நோக்கி மும்முறை வணங்கி உணவுண்டு அமையுமாறு தென்புலத்தாரை வேண்டினார்.

ஏவலர் வெண்திரை பிடிக்க உள்ளே சென்று ஆடை மாற்றி மீண்டும் அரச உடையணிந்து வெளிவந்து உணவுப்பந்தலை அடைந்தார். அங்கு பல்லாயிரம் நாவுகள் சுவையில் திளைத்த ஓசை பெருமுழக்கமென எழுந்து சூழ்ந்தது. “வேள்விக்கூடத்தைவிட மிகுதியான தேவர்கள் இங்குதான் இறங்கியிருப்பார்கள்!” என்றான் பீமன். தருமன் “இளிவரல் வேண்டாம், மந்தா. இது நம் மூதாதையர் உலவும் இடம்” என்றார். பீமன் “ஆம், வேறு எவர் இங்கு வந்திராவிட்டாலும் ஹஸ்தி வந்திருப்பார். அதை என்னால் உறுதிபட சொல்லமுடியும்” என்றான்.

தருமன் சினத்துடன் “பேசாதே! முன்னால் போ!” என்றார். பீமன் சிரித்தபடி முன்னால் செல்ல இடைப்பாதையினூடாக ஓடி வந்த துச்சாதனன் “அரசே, உணவுக்கூடங்கள் அனைத்தும் நிறைந்து நெரிபடுகின்றன. இதுவரை ஒரு மேலாடைகூட மேலெழவில்லை” என்றான். பீமன் “மேலாடை எழாதிருக்காது. இப்போதுதானே அனைவரும் மதுவருந்திக் கொண்டிருக்கிறார்கள்? மதுவை குறை சொல்வது எவருடைய இயல்பும் அல்ல. உணவு உண்டு முடிக்கையில் மேலாடைகள் எழும்” என்றான். துச்சாதனன் புரியாமல் “ஏன்?” என்றான்.  பீமன் “மேலும் உண்ணமுடியவில்லை என்னும் குறையை உணராத ஊண் விருப்புள்ளவர்கள் எவரிருக்கிறார்கள்?”  என்றான்.

துச்சாதனன் நகைத்தபடி “முனிவர்களையும் வைதிகர்களையும் இன்மொழி சொல்லி ஊட்டும் பொறுப்பை யுயுத்ஸுவிடம் ஒப்படைத்துள்ளேன்” என்றான். பீமன் “ஆம், அவன் அதற்குரியவன்தான். ஒவ்வொரு தலைமுறையிலும் அஸ்தினபுரியில் ஒரு விதுரர் இருக்கிறார்” என்றான். “மந்தா, உன் சொற்கள் எல்லை மீறுகின்றன” என்று தருமன் மீண்டும் முகம் சுளித்தார்.

“மூத்தவரே, நாம் ஏன் இங்கு வீண் சொல்லாட வேண்டும்? நாம் இருக்க வேண்டிய இடம் உணவுக்கூடம் அல்லவா?” என்றான் துச்சாதனன். அவர்கள் இருவரும் தோள் தழுவிச்செல்ல புன்னகையுடன் திரும்பிய தருமன் அர்ஜுனனிடம் “இளையவனே, நான் விழைந்த காட்சி இதுவே. நகர் நிறைவு நாளில் நிகழ்ந்தவற்றுக்குப் பிறகு இப்படி ஓர் தருணம் வாய்க்குமென்று எண்ணியிருக்கவே இல்லை”  என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான்.

அவன் முகத்தில் புன்னகை வரவில்லை என்பதைக் கண்டு “துரியோதனன் இருண்டிருக்கிறான். அருகே அங்கனும் அதே இருள் கொண்டிருக்கிறான். அதை நான் பார்த்தேன். ஆனால் இளைய கௌரவர்களும் அவர்களின் மைந்தர்களும் வந்த சற்று நேரத்திலேயே உவகை கொள்ளத்தொடங்கிவிட்டனர்” என்றார் தருமன். “அவர்கள் எளியவர்கள்” என்றான் அர்ஜுனன்.

தருமன் “ஆம், அவ்வெளிமையே அவர்கள்மேல் பெரும் அன்புகொள்ள வைக்கிறது” என்றார். “காட்டு விலங்குகளின் எளிமை” என்றான் அர்ஜுனன். தருமன் திரும்பி நோக்கி அவன் எப்பொருளில் அதை சொன்னான் என்று உணராமல் தலையை மட்டும் அசைத்தார். உணவுக்கூடத்திலிருந்து வெளிவந்த துர்மதனும் துச்சலனும் துச்சகனும் சுபாகுவும் பீமனை  அழைத்தபடி உள்ளே நுழைந்தனர்.

தருமன் முதலில் முனிவர்கள் உணவுண்ட சோலைக்கு சென்றார். திரௌபதி பெண்டிரின் உணவறைகளுக்கு சென்றாள். ஒவ்வொரு குருகுலத்தையும் சார்ந்த முனிவர்களை அணுகி தலைவணங்கி இன்சொல் உரைத்து உண்டு வாழ்த்தும்படி வேண்டினார் தருமன். அவர்கள் உணவுண்ட கையால் அவன் தலைக்கு மேல் விரல் குவித்து “வளம் சூழ்க! வெற்றியும் புகழும் நிறைக!” என்று வாழ்த்தினர். பின்னர் வைதிகர் உணவுண்ட கூடங்களுக்கு சென்றார். அங்கு காட்டுத்தீ பற்றி எரியும் குறுங்காடுபோல் ஓசையும் உடலசைவுகளும் நிறைந்திருந்தன. பரிமாறுபவர்களை வைதிகர்கள் பிடித்திழுத்து உணவை தங்கள் இலைகளில் அள்ளிக் கொட்ட வைத்தனர். ஒருவரை ஒருவர் கூவி அழைத்து உணவை பாராட்டியும், வசைபாடியும், வெடித்து நகைத்தும் உண்டனர்.

அர்ஜுனன் “இவர்களுக்கு உகந்த வேள்வி இதுதான் போலும்!” என்றான். “வேண்டாம்! அத்தகைய சொற்களை நான் கேட்க விழையவில்லை” என்றார் தருமன். “என் அரசில் உணவருந்தும் ஒலிக்கு இணையானது பிறிதில்லை, இளையோனே.” அர்ஜுனன்  ”வருந்துகிறேன், மூத்தவரே” என்றான். “நீங்கள் நால்வருமே பலநாட்களாக நிலையழிந்திருக்கிறீர்கள். தீயதென எதையோ எதிர்பார்க்கிறீர்கள்” என்றார் தருமன். “இதுவரை இவ்வேள்வி வந்துசேருமென எவர் எண்ணினீர்கள்? இது மூதாதையர் அருள். அது நம்மை இறுதிவரை கொண்டுசெல்லும்.” அர்ஜுனன் “ஆம்” என்று பெருமூச்சுவிடுவதைப்போல சொன்னான்.

தருமன் வைதிகர்களின் பந்திகளினூடாக கை கூப்பி நடந்து உணவிலமர்ந்த மூத்தவர்களிடம் குனிந்து இன்சொல் சொன்னார். “உண்ணுங்கள்! உவகை கொள்ளுங்கள்! உத்தமர்களே, உங்கள் சுவைநாவுகளால் என் குலம் வாழ வாழ்த்துங்கள்!” என்றார். “குறையேதும் உளதோ?” என்றொரு முதியவரிடம் கேட்டார். “ஒரு வாயும் இரு கைகளும் கொடுத்த இறைவனிடம் அன்றி பிறரிடம் சொல்ல குறைகள் ஏதும் இல்லை” என்றார் அவர். அருகிலிருந்த இன்னொரு முதியவர் “தன் வயிறைப்பற்றி அவருக்கு எந்தக் குறையும் இல்லை பார்த்தீர்களா?” என்றார். சூழ்ந்திருந்த வைதிகர்கள் உரக்க நகைத்தனர்.

அரசர்களின் உணவறையில் சிறுசிறு குழுக்களாகக் கூடி அமர்ந்து நகைத்தும் சொல்லாடியும் உணவுண்டு கொண்டிருந்தனர். மூங்கில் குவளைகளில் மதுவும் ஊனுணவும் அனைத்து திசைகளில் இருந்தும் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தன. பீமனும் கௌரவர்களும் அவர்கள் நடுவே உலவி ஒவ்வொருவரையும் நோக்கி பரிமாற வைத்துக்கொண்டிருந்தனர். “ஒரு நோக்கிலேயே பாரதவர்ஷத்தின் அரசியலை காணமுடிகிறது” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்று தருமன் புன்னகை செய்தார்.

தருமன் பீஷ்மரை அணுகி வணங்கி “இன்னுணவு கொள்ளுங்கள், பிதாமகரே” என்றார். பீஷ்மர் “நான் அரண்மனை உணவு உண்டு நெடுநாட்களாகிறது. நாவு சுவை மறந்துளதா என்று பார்த்தேன். இல்லை. சொல் மறந்தாலும் அது சுவை மறப்பதில்லை” என்றார்.  தருமன் “நாங்கள் உங்களை பிதாமகர் என எண்ணியிருப்பது வரை உங்கள் சுவை நாவில் அழியாமலிருக்கும், பிதாமகரே” என்றார். “அவ்வண்ணமென்றால் எனக்கு விடுதலையே இல்லை என்று பொருள்” என்று பீஷ்மர் சிரித்தார்.

திருதராஷ்டிரர் உணவுண்ட இடத்தை அணுகிய தருமன் தலைவணங்கி “உகந்த உணவு என்று எண்ணுகிறேன், தந்தையே” என்றார். இருபுறமும் இரு மடைப்பள்ளியர் நின்று உணவை அள்ளிப்பரிமாற இருகைகளாலும் கவந்தன் போல் பேருருளையை உருட்டி வாயிலிட்டு பற்கள் அரைபட மூச்சிரைக்க உண்டு கொண்டிருந்த திருதராஷ்டிரர் அவர் குரல் கேட்டு தலையை சற்றே சரித்து “உண்கையில் பேசுவது என் வழக்கமல்ல. இருப்பினும் இந்நல்லுணவுக்காக உன்னை வாழ்த்துகிறேன்” என்றபின் செல் என்பது போல கையசைத்தார்.

மீண்டும் தலைவணங்கி அகன்று புன்னகையுடன் தருமன் துரியோதனனை அணுகினார். அவன் அருகே அமர்ந்திருந்த கர்ணன் மெல்லிய குரலில் “அரசர்!” என்றான். துரியோதனன் திரும்பிப் பார்த்து மீசையை நீவியபடி புன்னகைத்தான். “அஸ்தினபுரியின் அரசே, இவ்வேள்வியில் தாங்களும் அன்னம் கொள்ள வந்தமைக்காக  பெருமை கொள்கிறேன்” என்றார் தருமன்.  துரியோதனன் “நன்று” என்று மட்டும் சொல்லி விழிதிருப்பிக் கொண்டான். கர்ணன் “நல்லுணவு, அரசே” என்றான். தருமன் அவர்கள் மேலும் ஒரு சொல்லேனும் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தவர் போல நின்றார். அவர்கள் விழிதிருப்பவில்லை.

தருணமறிந்த அர்ஜுனன் “பகதத்தர் அங்கு உணவுண்கிறார், மூத்தவரே” என்று தருமனை மெல்ல தொட்டு சொல்ல தருமன்  அவர்களிருவருக்கும் தலைவணங்கி பகதத்தரை நோக்கி சென்றார். திருதராஷ்டிரரைப் போலவே கால்விரித்தமர்ந்து இரு ஏவலரால் பரிமாறப்பட்டு படைக்கலப் பயிற்சி கொள்பவர் போல உணவுண்டுகொண்டிருந்த பகதத்தர் தொலைவிலிருந்தே அரசரை நோக்கி “இந்திரப்பிரஸ்தம் இனி முதன்மையாக உணவுக்கென்றே பேசப்படும், தருமா” என்றார். தருமன் “அவ்வாறே ஆகுக, மூத்தவரே! அன்னத்திலிருந்தே அனைத்தறங்களும் என்றல்லவா நூல்கள் சொல்கின்றன?” என்றார்.

கூடி அமர்ந்து உண்டுகொண்டிருந்த பலராமரையும் வசுதேவரையும் சல்யரையும் சென்று பார்த்து முகமன் சொன்னார். சௌனகர் வந்து அவரருகே நின்று ஒவ்வொரு அரசரையாக நினைவூட்டி அழைத்துச்சென்று ஊண்முகமன் சொல்ல வைத்தார். பின்னர் குடியவையிலும் வணிகர் அவையிலும் சென்று கைகூப்பி அனைவரையும் உண்டு மகிழும்படி வேண்டி முகமன் உரைத்தார்.

உணவு முதற்பந்தி முடிந்ததும் அனைவரும் எழுந்து கைகழுவச் சென்றனர். நீர்த் தொட்டி அருகே நின்று முதலில் வந்த வைதிகர் கைகழுவ தருமனே நீரூற்றி அளித்தார். பின்பு வைதிகர் உண்ட பந்தலுக்குள் நுழைந்து முதல் பன்னிரண்டு எச்சில் இலைகளை அவரே தன் கைப்பட எடுத்து வணங்கி தன்னைத் தொடர்ந்து வந்த ஏவலரின் கூடையிலிட்டு வணங்கினார். ஒவ்வொரு பந்தியிலும் சென்று முதல் பன்னிரு எச்சில் இலைகளை எடுத்து அகற்றினார். இரவலருக்கான பந்தியின் எச்சில்மீதாக ஓடிய ஒரு சிறு கீரியைக் கண்டு அவர் சற்று விலக “கீரி!” என்றான் அர்ஜுனன்.

ஏவலர் அதை ஓட்டுவதற்காக ஓடினர். “வேண்டாம்! அது தேவனோ தெய்வமோ நாமறியோம்” என்று தருமன் சொன்னார். “பழிசூழ்ந்த தேவனாக இருக்கும், அரசே. இரவலர் உணவுண்ட மிச்சிலில் புரள்வது பழிபோக்கும் என்று சொல்லுண்டு” என்றார் உடன் வந்த அடுமடையர். அவர் புன்னகையுடன் “இந்த அனைத்து மிச்சில் இலைகளிலும் மும்முறை புரளவிழைகிறேன், நாமரே” என்றார். அவர் “நல்லூழ் என்பது கருவூலச்செல்வம் போல. எத்தனை சேர்த்தாலும் பிழையில்லை” என்றார்.

எட்டு பந்திகளிலாக வேள்விக்கு வந்த பல்லாயிரம் பேரும் உணவுண்டு முடித்தனர். பீமன் வந்து தருமனிடம் “மூத்தவரே, இனி தாங்கள் உணவருந்தலாம்” என்றான். “நீ உணவருந்தினாயா?” என்று தருமன் கேட்டார். “இல்லை மூத்தவரே, தாங்கள் உணவருந்தாது நான் உண்ணலாகாது என்பது முறை” என்றான். தருமன் விழிகளைச் சுருக்கி “நீ உண்மையிலேயே உணவருந்தவில்லையா?” என்றார். “உணவருந்தவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஒவ்வொரு உணவும் உகந்த முறையில் அமைந்திருக்கிறதா என்று சுவை பார்த்தேன். அதை உணவுண்டதாகச் சொன்னால் அவ்வாறும் சொல்லலாம்” என்றான்.

தருமன் மெல்லிய புன்னகையுடன் “எத்தனை கலங்களில் சுவை பார்த்தாய்?” என்றார். பீமன் அவர் விழிகளைத் தவிர்த்து “இங்குதான் பல நூறு கலங்கள் உள்ளனவே?” என்றான். தருமன் புன்னகையுடன் அருகே நின்ற நகுலனை பார்க்க அவனும் புன்னகைத்தான். “அமரலாமே” என்றார் நாமர். “இல்லை, சென்று கேட்டுவருக! ஒருவரேனும் பசியுடனிருக்கலாகாது” என்றார் தருமன்.

இந்திரப்பிரஸ்தத்தின் ஏவலர்களும் அமைச்சர்களும் வேள்விச்சாலைச்சூழலின்  ஒவ்வொரு மூலையிலும் சென்று “எவரேனும் உணவுண்ண எஞ்சியிருக்கிறீர்களா?” என்று கூவி அலைந்தனர். நகரில் அனைவரும் உணவுண்டுவிட்டார்களா என்று அறிவதன் பொருட்டு ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு சிற்றமைச்சர் மேடையேறி “அனைவரும் உண்டு விட்டீர்களா?” என்று மும்முறை வினவினர். அனைவரும் உண்டாகிவிட்டது என்று அறிந்ததும் தம் இடையிலிருந்த கொம்பை எடுத்து ஊதினர். நகரெங்குமிருந்து கொம்போசைகள் ஒன்றோடொன்று தொடுத்துக்கொண்டு பறவைக்கூட்டங்கள் போல வேள்விச்சாலையை அடைந்தன.

அர்ஜுனன் “அரசே, நகரில் உணவுண்ணாதவர் எவரும் இல்லை” என்றான். “நன்று” என்று கைகூப்பியபடி தருமன் எழுந்து சென்று உணவுண்பதற்காக பந்தியில் அமர்ந்தார். திரௌபதியும் பிற அரசியரும் பெண்களுக்கான தனியறையில் உணவருந்த அமர்ந்தனர். தருமனுக்கு இருபக்கமும் அவன் உடன் பிறந்தோர் அமர துச்சாதனனே உணவு பரிமாறினான். முதல் உணவுக்கவளத்தை எடுத்து கண் மூடி “தெய்வங்களே, மூதாதையரே, நிறைவடைக!” என்றபின் தருமன் உண்டார்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 56

பகுதி ஒன்பது : மார்கழி

[ 1 ]

மார்கழித்திங்கள் முதல்நாள் இந்திரப்பிரஸ்தப் பெருநகரியில் ராஜசூய வேள்விக்கான அறிவிப்பு எழுந்தது. இருள் விலகா முதற்புலரியில் மயில்நடைத்தாளத்தில் ஒலித்த விடிமுரசின் ஓசை அடங்கி, நூற்றியெட்டு முறை பிளிறி பறவைகளை வணங்கிய கொம்புகள் அவிந்து, கார்வை நகருக்குள் முரசுக் கலத்திற்குள் ரீங்காரம் என நிறைந்திருக்க அரண்மனை முகப்பின் செண்டுவெளியில் அமைந்த ராஜசூயப்பந்தலின் அருகே மூங்கிலால் கட்டி உயர்த்தப்பட்ட கோபுரத்தின்மீது அமைந்த பெருங்கண்டாமணியின் நா அசைந்து உலோக வட்டத்தை முட்டி “இங்கே! இங்கே! இங்கே! இங்கே!” என்று முழங்கி வேள்வியை அறிவித்தது.

அன்று ராஜசூய வேள்வி தொடங்குவதை முன்னரே அறிந்திருந்தபோதிலும்கூட அந்த மணியோசை நகர்மக்களை உளஎழுச்சி கொள்ள வைத்தது. நீராடி, புத்தாடை அணிந்து, விழித்திருந்த நகர்மக்கள் கைகளைக் கூப்பியபடி இல்லங்களிலிருந்து வெளிவந்து முற்றங்களிலும் சாலையோரங்களிலும் கூடி ராஜசூயப்பந்தல் இருந்த திசை நோக்கி “எங்கோ வாழ் எந்தையே! மூதாதையரே! துணை நின்றருள்க! எண்ணிசை தேவர்களே சூழ்க! தெய்வங்களே மண்ணிறங்குக! சிறகொளிர் பூச்சிகளே, இன்குரல் புட்களே, விழிகனிந்த விலங்குகளே, ஐம்பெரும் ஆற்றல்களே இங்கு வந்தெங்களை அருள்க!” என்று வாழ்த்தினர்.

நகரெங்கும் வேள்வி அறிவிப்பை முழக்கியபடி பெருமுரசுகள் யானைநடைத் தாளத்தில் முழங்கின. கொம்புகளும் சங்குகளும் அவற்றுடன் இணைந்துகொண்டன. மார்கழியின் குளிர் எழத் தொடங்கியிருந்தமையால் கைக்குழந்தைகள் நடுங்கி தோள்சுற்றி அணைத்து அன்னையர் உடம்பில் ஒட்டிக்கொண்டன. முதியோர் மரவுரிச் சால்வைகளை உடலெங்கும் சுற்றிக்கொண்டு மெல்லிய நடுக்கத்துடன் நின்று இருளுக்குள் வாழ்மரங்களுக்கு திரும்பிக்கொண்டிருந்த வௌவால்களின் சிறகடிப்பை பார்த்தனர். கீழ்ச்சரிவில் வலசைநாரைகளின் மெல்லிய அசைவு தெரிந்தபோது “புலரிகொணரும் புட்களே எழுக! இரவாளும் புட்களே நிறைவுகொள்க!” என்று கூவினர்.

வானை முகில் மூடியிருந்ததனால் விடிவெள்ளி கண்ணுக்கு தென்படவில்லை. காற்று இல்லாதபோது மழை ஓய்ந்த துளிகளென மரங்களிலிருந்து பனி சொட்டும் தாளம் அவர்களை சூழ்ந்தது. உடல் சிலிர்க்க வடக்கிலிருந்து வீசிய குளிர்காற்று பனித்துளிகளை அள்ளி சுவர்கள் மேல் பொட்டுகள் வைத்து கடந்து சென்றபின் சற்று நேரம் செவிகளை வருடிச்செல்லும் அமைதி நிலவியது. அமைதிகேட்டு துயில் கலைந்த சிறுபறவை அன்னையை உசாவ ‘விடியவில்லையே’ என்று சொல்லி சிறகுகளால் மூடிக்கொண்டது அன்னை.

முந்தி எழுந்த காகங்கள் சில கருக்கிருட்டின் அலைகளின் மீது சிறகடித்து சுழலத்தொடங்கின. விண்ணில் மெல்ல தணிந்து திரண்ட விண்மீன்கள் குளிருக்கென நடுங்கி அதிர்ந்து இருளில் மீண்டும் புதைந்து மறைந்தன. தெற்கிலிருந்து முகில்நிரைகள் வடக்கு நோக்கி செல்லத் தொடங்கியிருந்ததனால் நகரெங்கும் மெல்லிய நீராவி நிறைந்திருந்தது. வெட்டவெளியில் குளிரையும் அறைகளுக்குள் நீர்வெம்மையையும் உணரமுடிந்தது. காலைக்குளிரை விரும்பிய காவல்புரவிகள் வால்சுழற்றி குளம்போசையுடன் கடந்துசென்றன.

இந்திரப்பிரஸ்தத்தின் அரண்மனைப்பெருவாயிலில் நூற்றெட்டு வைதிகர்கள் கங்கையும் யமுனையும் நிறைந்த பொற்கலங்களும், மஞ்சளரிசியும், பொன் மலர்களுமாக காத்து நின்றிருந்தனர். அவர்களுக்கு இருபக்கமும் இசைச்சூதர்களும் அணிச்சேடியரும் நிரை வகுத்து நின்றனர். அரண்மனைக்குள்ளிருந்து சிற்றமைச்சர் சுரேசர் வெளியே ஓடிவந்து கைகளை அசைக்க வெள்ளிக்கோலேந்திய நிமித்திகர் இருவர்
“ஓம்! ஓம்! ஓம்!” என்று கூவியபடி அவற்றைச் சுழற்றி வான் நோக்கி தூக்கினர். வேத ஒலி எழுந்தது. மங்கல இசை அதை சூழ்ந்தது. அனைத்து வீரர்களும் ஏவலர்களும் வாழ்த்தொலி எழுப்பத் தொடங்கினர். “விண்சுடர் சூடிய பெருநகர் ஆளும் வேந்தர் வாழ்க! மின்கதிர் நகர் வெல்க! எரியெழுந்த மங்கை ஒண்மலர் சூடுக! வில்திறல் விஜயனும் தோள்திறல் பீமனும் இணைதிறல் இளையரும் வாழ்க! இந்திரப்பிரஸ்தம் எழுக! விண்ணவர் இங்கு இறங்குக!”

நகரின் மாபெரும் முற்றம் மீனெண்ணெய் பந்தங்களால் எரியெழுந்த காடுபோல் செவ்வொளி அலைகொண்டிருந்தது. புரவிகளின் விழிகளில், தேர்களின் உலோகச்செதுக்குகளில், படைக்கலங்களில் பளிங்குத் தூண் வளைவுகளில் எல்லாம் சுடர்கள் எழுந்திருந்தன. அரண்மனையின்  உள்ளிருந்து வெள்ளிக் கோலேந்தியபடி நிமித்திகன் வெளியே வந்தான். மும்முறை அதைச் சுழற்றி மேலே தூக்கி “பாரதவர்ஷத்தின் முதன்மைப் பேரரசர்! இந்திரப்பிரஸ்தம் ஆளும் பாண்டவர்குடி மூத்தோர்!  யயாதியின் குருவின் ஹஸ்தியின் சந்தனுவின் விசித்திரவீரியனின் பாண்டுவின் கொடிவழி வந்த கோன்! அறம்வளர்ச்செல்வர், தென்திசை தெய்வத்தின் மைந்தர்  யுதிஷ்டிரர் எழுந்தருள்கிறார்!” என்று அறிவித்தான்.

அவனைத் தொடர்ந்து வந்த இரண்டாவது நிமித்திகன் “இந்திரப்பிரஸ்தத்தின் அரசி! எரியெழுந்த கொற்றவை! ஐங்குழல் கொண்ட அன்னை! பாஞ்சாலி, திரௌபதி எழுந்தருள்கிறார்!” என்று அறிவித்தான்.  அவனைத் தொடர்ந்து இசைச்சூதர்கள் முழங்கியபடி வர, நூற்றெட்டு அணிப்பரத்தையர் மங்கலத்தாலங்களில் நெய்யகல்கள் சுடர, பொன்னணிகள் பந்தங்களில் அனலுருவாகி வழிய, சீர்நடையிட்டு வந்தனர். அவர்களுக்குப் பின்னால் எட்டு வீரர்கள் வாளேந்தி வர நடுவே தருமனின் செங்கோலை படைத்தலைவன் ஒருவன் ஏந்தி வந்தான். அவர்களுக்கு அப்பால் இந்திரப்பிரஸ்தத்தின் மணிமுடியைச் சூடி தருமன் நடந்து வந்தார். அவர் இடக்கையை பற்றியபடி மணிமுடிசூடி திரௌபதி வந்தாள். அவர்களுக்கு மேல் வெண்குடை முத்துச்சரம் குலுங்க முகில்பிசிறு ஒளிர கவிந்த பிறை நிலவென வந்தது. தருமனுக்குப் பின்னால் அரசஉடையில் பீமனும் அர்ஜுனனும் வந்தனர். அவர்களுக்குப் பின்னால் நகுலனும் சகதேவனும் வாள்களை ஏந்தி நடந்து வந்தனர்.

செங்கோல் ஏந்திய வீரன் முற்றத்தில் இறங்கியதும் வாழ்த்தொலிகள் உச்சம் கொண்டன. முற்றத்தில் காத்து நின்ற வைதிகர்களின் தலைவர் சிரௌதர் முன்னால் சென்று அரசனையும் அரசியையும் அரிமலரிட்டு வாழ்த்தினார். வைதிகர்கள் கங்கைநீர் தெளித்து வேதம் ஓதினர். சுரேசர் அருகே வந்து “தேர்கள் சித்தமாக உள்ளன, அரசே” என்றார். தருமன் மெல்ல தலையசைத்தபின் காத்து நின்றிருந்த தன் அரசப்பொற்தேர் நோக்கி சென்றார்.  அவர்கள் தேரில் ஏறிக்கொண்ட அசைவை உணர்ந்ததும் நெடுநேரம் நின்றிருந்த அதன் ஏழு புரவிகளும் குளம்புகளை தூக்கிவைத்து உடலில் பொறுமையின்மையை காட்டின. மணிகளுடன் தேர் குலுங்கியது.

சுரேசர் கையசைக்க எழுந்த பீடத்தில் அமர்ந்திருந்த சூதன் ஏழு கடிவாளங்களையும் மெல்ல சுண்டினான். மணிகள் சலங்கைகள் ஒலிக்க நடனமங்கை அவையேறுவதுபோல இடையொசிந்து அசைய, கொண்டைச்சரங்கள் உலைந்தாட, செம்பட்டுத்திரைகள் அசைய தேர் மேட்டிலேறியது. எதிர்காற்றில் மின்கதிர்க் கொடி எழுந்து பறந்தது. பந்தங்களின் செவ்வொளியில் அனல் உருகி வழிவது போல தேர் முற்றத்தைக் கடந்து சாலையில் நுழைந்தது. அதைச்சூழ்ந்து வாழ்த்தொலிகளும் மங்கல இசையும் முழங்கின.

[ 2 ]

யுதிஷ்டிரரின் அரசத்தேர் வேள்விக்கூடத்தின் பெருமுற்றத்தை வந்தடைந்ததும் அங்கு நான்கு நிரைகளாக நின்ற வைதிகர்கள் வேதம் ஓதி, அரிமலர் தூவி, கங்கைநீர் தெளித்து அவரையும் அரசியையும் வரவேற்றனர். அமைச்சர் சௌனகர் முன்னால் வந்து அரசரையும் அரசியையும் முகமன் உரைத்து செய்கையால் வழிநடத்தி உள்ளே கொண்டு சென்றார். நிமித்திகர் குறித்த நற்தருணத்தில் மீனும் கோளும் நோக்கி நின்றிருந்த வானுக்குக் கீழ் தருமன் கைகளைக் கூப்பியபடி தேவியும் தம்பியரும் உடன் வர ராஜசூயப்பந்தலுக்குள் வலக்காலை வைத்து நுழைந்தார்.

ஆயிரத்தெட்டு பெருந்தூண்களின் மேல் நூற்றியெட்டு வெண்குடைக்கூரைகளாக கட்டப்பட்டிருந்த மையப்பந்தலுக்கு வலப்பக்கம் நகர்மக்களும் அயல்வணிகரும் அமர்ந்து வேள்வியை பார்ப்பதற்கான துணைவிரிவுப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இடப்பக்கம் படைவீரரும் அவர்களின் குடும்பங்களும் அமர்வதற்கான பந்தல் விரிந்திருந்தது. மையப்பெரும்பந்தலில் பாரதவர்ஷத்தின் அரசர்களும் இந்திரப்பிரஸ்தத்தின் இணை அரசர்களும் முறை அரசர்களும் அசுர குடித்தலைவர்களும் நிஷாத குடித்தலைவர்களும் நாகர் குடித்தலைவர்களும் அமர்வதற்கான பீடங்கள் ஒருக்கப்பட்டிருந்தன.

நீண்ட மையப்பந்தல் பருந்தின் உடல் போலவும், இரு இணைப்பந்தல்கள் அதன் விரிந்த சிறகுகள் போலவும், வேள்வி மரம் நின்ற முகப்பு அதன் கூர் அலகு போலவும் அமைக்கப்பட்டிருந்தது. அனைத்துத் தூண்களும் பசுந்தழைகளும் அன்றலர்ந்த மலர் தொடுத்த மாலைகளும் கொண்டு அணி செய்யப்பட்டிருந்தன. வேள்விப்பந்தலில் மலரும் தளிருமன்றி பிற தோரணங்களோ பாவட்டாக்களோ பட்டுத் திரைகளோ அமைக்க வைதிக முறைமை இல்லை என்பதால் அக்கூடம் இளவேனில் எழுந்த குறுங்காடென உயிர் வண்ணத்தால் நிறைந்திருந்தது. மலர் நாடி வந்த வண்டுகளும் பட்டாம் பூச்சிகளும் அங்கிருந்தவர்களின்  தலைக்குமேல் வண்ணச்சிறகடித்தும் யாழ் மீட்டியும் பறந்தலைந்தன. அவை வேள்விக்கு வந்த கந்தர்வர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் தேவர்களும் என்று நூல்கள் உரைத்தன.

சிறிய அரைவளையங்களாக அலைகளால் ஆன பேரலை என்னும் வடிவில் அமைக்கப்பட்டிருந்த அந்தப்பீடங்களில் காலை முதலே அரசர்களும் அவர்களின் அகம்படியினரும் வந்து அமர்ந்துகொண்டிருந்தனர். இந்திரப்பிரஸ்தத்தின் சார்பில் சௌனகர் முதலான அமைச்சர்களும் படைத்தலைவர்களும் துணைசெய்ய திருஷ்டத்யும்னனும் சஞ்சயனும் பூரிசிரவஸும் சாத்யகியும் வேள்விக்கூடத்தின் வாயில்களில் நின்று அரசர்களை வரவேற்று உரிய பீடங்களில் அமர்த்தினர். விதுரர் அவற்றை ஒருங்கிணைத்தார். வேள்விப்பந்தலாதலால் வாழ்த்தொலிகளோ வரவுரைகளோ எழவில்லை. வேதமன்றி பிற ஒலி ஏதும் அங்கு எழலாகாது என்ற நெறி இருந்தது.

உடை சரசரக்கும் ஒலிகளும் படைக்கலங்களின் மணியோசையுமாக மெல்லப் பெருகி நிறைந்துகொண்டிருந்தன வேள்விக்கூடத்தின் சிறகுகள். அரசர்களின் அவைகள் அனைத்தும் நிறைந்தன. ஒழிந்து கிடந்த ஒருசில பீடங்களை நோக்கி பிந்தி வந்தவர்களை வழிகாட்டி கொண்டு சென்றவர்கள் மிகமெல்ல ‘அரசே!’ என்றும் ‘உத்தமரே!’ என்றும் அழைத்தனர். அரசர்கள் அவையமர்ந்த பின்னரே வேள்விக்கு வந்த வைதிகரும் முனிவர்களும் முன்னணியில் அவை அமரத்தொடங்கினர். வைதிகர்களை அவையமரச்செய்வது அஸ்வத்தாமனின் தலைமையில் நடந்தது. அக்ரூரர் அவனுக்கு துணைநின்றார். வைதிகர்கள் தங்கள் குருகுலத்து அடையாளச் சால்வைகளை அணிந்தபடி வந்து அரிமஞ்சள் கூடைகளையும் மலர்க்குடலைகளையும் கைகளில் பெற்றுக் கொண்டு தங்கள் குருகுலத்து முறைப்படி சிறு குழுக்களாக அமர்ந்தனர்.

பல்வேறு குருகுலங்களைச் சேர்ந்த முனிவர்கள் தங்கள் மாணவர்கள் சூழ வந்தனர். அவர்களை வரவேற்க துரோணரும் கிருபரும் வேள்விக்கூட முகப்பில் தங்கள் மாணவர்களுடனும் துணைவருடனும் நின்றனர். முனிவர்கள் தங்களுக்கான பகுதிகளில் மாணவர்கள் சூழ  அரை வளையங்களாக எரி நோக்கி அமர்ந்தனர். தனஞ்சய கோத்திரத்தைச்சேர்ந்த முனிவரான சுஸாமர் தன் நூற்றெட்டு மாணவர்களுடன் வந்தார். யாக்ஞவல்கிய குருகுலத்தைச்சேர்ந்த பதினெட்டாவது யாக்ஞவல்கியரும் அவரது நூற்றெட்டு மாணவர்களும் தொடர்ந்து வந்தனர். வசிட்ட, வாமதேவ, கௌசிக, விஸ்வாமித்திர குருகுலங்களின் ஆசிரியர்களும் மாணவர்களும் வந்தனர்.

வேள்விச் செயலர்களான ஆயிரத்தெட்டு வைதிகர்கள் தங்கள் அவியூட்டுமுறைமைக்கான  தோல் போர்வைகளுடன் வலக்கையில் சமித்தும் இடக்கையில் நெய்க்குடமுமாக வந்து வேள்விக்கூட மையத்தில் அமைக்கப்பட்டிருந்த முப்பத்தாறு எரிகுளங்களைச் சுற்றிலும் அமர்ந்தனர். எரியூட்டுக்குத் தலைமைகொண்டிருந்த வசு மைந்தரான பைலர் அவர்களை வாழ்த்தி அமரச்செய்தார்.

பீமனாலும் அர்ஜுனனாலும் எதிர்கொண்டழைக்கப்பட்டு பீஷ்மர் அவைபுகுந்து பீடத்தில் அமர்ந்தார். திருதராஷ்டிரர் சஞ்சயனால் வழிநடத்தப்பட்டு அவைக்கு வந்தபோது பீமன் எதிர்கொண்டு அவையமரச் செய்தான். கர்ணனுடன் துரியோதனன் உள்ளே வந்தபோது நகுலனும் சகதேவனும் அவர்களை வரவேற்று கொண்டுசென்று அமரச்செய்தனர்.  காந்தாரத்தின் சுபலர் தன் மைந்தர்களுடன் வர பின்னால் சகுனி வந்தார். உடன் கணிகர் ஒரு வீரனால் தூக்கப்பட்டு மெல்ல வந்தார்.  சௌவீர பால்ஹிக சிபிநாட்டு அரசர்கள் அவைபுகுந்தனர். சல்யர் அவர்களுக்கு மேல் எழுந்த தோள்களுடன் நீண்ட கால்களை எடுத்துவைத்து உள்ளே வந்தார்.

மாளவனும் கூர்ஜரனும் ஜயத்ரதனுடன் இணைந்து அவைபுகுந்தனர். துருபதன் அவைபுகுந்தபோது அபிமன்யு அவரை வரவேற்று கொண்டுசென்றான். ஜராசந்தனின் மைந்தன் சகதேவன் தன் மாதுலமுறைகொண்ட பிரக்ஜ்யோதிஷத்தின் முதியமன்னர் பகதத்தருடன் அவைக்கு வந்தபோது அனைத்து விழிகளும் அவர்களை நோக்கின. பீமன் அவர்களை அவைக்கு கொண்டுவந்து அமரச்செய்தான். விதர்ப்பத்தின் ருக்மி தன் தந்தை பீஷ்மகர் உடன்வர அவைக்கு வந்தான். சேதியின் தமகோஷரை சகதேவன் அவையமரச் செய்தான். சிசுபாலன் தனியாக வந்தபோது பீமன் அவனை எதிர்கொண்டழைத்தான்.

அனிருத்தன், கங்கன், சாரணன், கதன், பிரத்யும்னன், சாம்பன், சாருதோஷ்ணன், உல்முகன், நிசடன், அங்காவகன் என்னும் பத்து யாதவக்குடியினருடன் மதுராவின் வசுதேவர் அவைக்கு வந்தார். பலராமர் வந்து முறைமைகளைத் தவிர்த்து துரியோதனன் அருகே அமர்ந்தார்.  அயோத்தி நாட்டரசனுடன் மச்சநாட்டு சூரசேனர் வந்தார். கௌசிகி நாட்டு மஹௌஜசனுடனும்  காசி நாட்டு சுபாகுவுடனும் கோசலத்தின் பிரகத்பலன் அவைபுகுந்தான். அர்ஜுனனால் வெல்லப்பட்ட உலூகநாட்டு பிரஹந்தனும் காஷ்மீரநாட்டு லோகிதனும் இணைந்து அவைபுகுந்தனர். அவர்களை அபிமன்யு வரவேற்று அவையிலமர்த்தினான். திரிகர்த்தர்களும் கிம்புருடர்களும் கின்னரர்களும் தங்கள் மலைநாட்டு மயிராடைகளுடன் அவைக்கு வந்தனர்.

சகதேவன் தன்னால் வெல்லப்பட்ட கோசிருங்கத்தின் சிரேணிமானை பணிந்து வரவேற்று அவையிலமர்த்தினான். அவனால்  தோற்கடிக்கப்பட்ட அவந்தியின் விந்தனும் அனுவிந்தனும் வந்தபோதும் அவனே சென்று தலைவணங்கி அவைக்கு கொண்டுவந்தான்.  தென்னகத்திலிருந்து சகதேவனால் வெல்லப்பட்ட வாதாதிபன், திரைபுரன், பௌரவன் என்னும் அரசர்கள் வந்தனர். அவை முழுமையாக நிறைந்ததும் முற்றிலும் ஓசையடங்கி வண்ணங்களும் ஒளிச்சிதறல்களும் மட்டுமானதாக ஆகியது.

இளைய யாதவர் அவைபுகுந்தபோது அர்ஜுனனும் பீமனும் நகுலசகதேவர்களும் அபிமன்யுவும் சாத்யகியும் அவரை நோக்கி சென்று வணங்கி முகமனுரைத்து அழைத்துவந்தனர். அவர் தன் முடியில் சூடிய பீலிவிழி வியந்தமைய புன்னகை மாறா கண்களுடன் அனைவரையும் தழுவி இன்சொல் பேசி அவைக்குள் வந்தார். அவையின் வலப்பக்க மூலையில் மென்பட்டுத்திரைக்கு அப்பால் அமர்ந்திருந்த அரசியர் நிரை நோக்கி சென்று அங்கே பொற்பீடத்தில் அமர்ந்திருந்த குந்தியிடமும் அருகே அமர்ந்திருந்த காந்தாரியிடமும் தலைவணங்கி மென்சொல் பேசினார்.

அவர்களைச் சூழ்ந்து காந்தார அரசியரும், பானுமதியும், துச்சளையும், அசலையும், சுபத்திரையும், தேவிகையும், பலந்தரையும், விஜயையும்,    கரேணுமதியும்  அமர்ந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் ஓரிரு சொல் பேசினார். அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்த கௌரவர்களின் துணைவியர் நூற்றுவரிடமும் அவர் ஒருசொல் தனியாக பேசினார் என்று அவர்கள் உணர்ந்தனர்.  திரும்பி வருகையில் பீஷ்மரையும் துரோணரையும் வணங்கிவிட்டு தன் தமையனருகே சென்று அமர்ந்தார்.

தர்ப்பைப் பீடத்தில் முதல் எரிகுளத்தின் வலப்பக்கமாக வேள்வித்தலைவர் தௌம்யர் அமர்ந்திருந்தார். இடப்பக்கம் சிறிய மேடைமேல் போடப்பட்டிருந்த இந்திரப்பிரஸ்தத்தின் அரியணைகளில் வெண்பட்டு மூடப்பட்டிருந்தது. சௌனகரால் அழைத்து வரப்பட்ட தருமனும் துணைவியும் வேள்விப்பந்தலின் நுழைவாயிலில் அமர்ந்து தங்கள் உடலை தூய்மை செய்துகொள்ளும்பொருட்டு அங்கு அமைந்த சிறிய எரிகுளத்தில் வைதிகர் மூவர் அமைத்த தென்னெரியில் பலாச இலைகளை அவியளித்து தர்வி ஹோமத்தை செய்தனர். புலனின்பத்தால் மாசடைந்த உடலை அப்புகையால் மீட்டனர். மூன்று அழுக்குகளையும் அவ்வெரியில் விட்டு சிவந்த விழிகளுடன் எழுந்தனர். அவர்களின் ஆடைகளை சேர்த்துக்கட்டினர் வைதிகர். அரசியின் கைபற்றி இடம் வரச்செய்து தருமன் வேள்விப்பந்தலுக்குள் நுழைந்தார்.

ஆரம்பனீயம், க்‌ஷத்ரம், திருதி, வியுஷ்டி, திவிராத்ரம், தசபேயம் என்னும் ஆறுவகை எரிகளுக்கான ஆறு எரிகுளங்களாக முப்பத்தாறு எரிகுளங்களைச்சூழ்ந்து அவியூட்டுநர் அமர்ந்திருந்தனர். தருமனும் அரசியும் அவர்களை வணங்கி முனிவர்களையும் அந்தணரையும் அரசர்களையும் குடிகளையும் தொழுது எரிகுளங்களை வலம்செய்து கூப்பிய கைகளுடன் தௌம்யரை நோக்கி சென்றனர். தருமன் நெற்றி நெஞ்சு இடை கால் கை என ஐந்துறுப்புகளும் நிலம் தொட விழுந்து தௌம்யரை வணங்கினார். அவர் “வேதச்சொல் துணை நிற்க! எரி அணையாதிருக்கட்டும்! கொடி என்றும் இறங்காதிருக்கட்டும்! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினார்.

அரசி கை நெற்றி முழங்கால் என மூன்று உறுப்புகள் நிலம் படிய தௌம்யரை வணங்கினாள். “அறம் வளர உடனுறைக! எரி என நெறி கொண்டிருக்க!  அன்னையென கொடிவழிகள் நினைவில் வாழ்க! ஓம், அவ்வாறே ஆகுக!” என்று தௌம்யர் வாழ்த்தினார். தௌம்யரின் மாணவராகிய பதினெட்டு வைதிகர்கள் வந்து தருமனை எதிர்கொண்டழைத்து வேள்வி மரத்தை நோக்கி கொண்டு சென்றனர். இளைய பாண்டவர்கள் நால்வரும் உருவிய வாட்களுடன் அவரைத் தொடர்ந்து சென்றனர்.

வேள்வியறிவிக்கப்பட்டதுமே இடம்பார்த்து வரையப்பட்ட வாஸ்துமண்டலத்தில் செம்பருந்தின் அலகில் நடப்பட்டு நீரூற்றி வளர்க்கப்பட்டு தளிரெழுந்த இரு மென்கிளை கொண்டிருந்த அத்தி மரத்தின் அருகே சென்று இருவரும் பணிந்தனர். பொற்குடங்களில் மும்முறை அதற்கு நீரூற்றினர். வைதிகர் அளித்த மஞ்சள் சரடை வேதம் ஒலிக்க அம்மரத்தில் கட்டி அதை அவ்வேள்விக்குரிய இறை எழவேண்டிய உயிர்ப்பீடமென ஆக்கினர்.

தருமன் அருகே அறத்துணையென நின்றிருந்த திரௌபதி தர்ப்பையால் கங்கை நீர் தொட்டு அதை வணங்கி அகல்சுடராட்டினாள். மலர்தூவி வணங்கி மீண்டாள். தம்பியர் புடை சூழ மும்முறை வேள்வி மரத்தைச் சுற்றி வணங்கி தனது அரியணை நோக்கி நடந்தார் தருமன். தௌம்யரும் பைலரும் அவரை வரவேற்று எதிர்கொண்டு அழைத்துச் சென்று அரியணை பீடத்தருகே நிறுத்தினர். ஐந்து ஏவலர் வந்து பட்டுத்திரையை விலக்க இந்திரப்பிரஸ்தத்தின் செவ்வொளிமணிகள் பதிக்கப்பட்ட அரியணை வேள்விக்கூடத்தின் பலநூறு பந்தங்களின் ஒளியில் கனல்குவையென ஒளியசைவுகொண்டது. தௌம்யர் அரியணைக்குமேல் கங்கைநீர் தெளித்து தூய்மை செய்து முறைப்படி தருமனை அழைத்தார். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசே! குருகுலத்து விசித்திரவீரியனின் வழித்தோன்றலே! சௌனக வேதமரபின் புரவலரே! பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் தலைவரே! இங்கு யயாதியின் பெயரால் ராஜசூய வேள்வி ஒன்று நிகழவிருக்கிறது. இவ்வேள்வியை முடித்து பாரதவர்ஷத்தின் சத்ராஜித் என அரியணை அமரும்படி சௌனக வேத மரபின் வசிஷ்ட குருகுலத்தின் வைதிகனாகிய தௌம்யன் என்னும் நான் உங்களை வாழ்த்தி கோருகிறேன்.”

தருமன் தன் உடைவாளை உருவி அவர் காலடியில் தாழ்த்தி “யயாதியின் வழிவந்தவனும் குருகுலத்தவனும் விசித்திரவீரியனின் வழித்தோன்றலும் யாதவப் பேரரசி குந்தியின் குருதியுமாகிய நான் இவ்வேள்வியை என் உடல் பொருள் உயிர் என மூன்றையும் அளித்து காப்பேன் என்று உறுதி கொள்கிறேன். துணை நிற்கட்டும் என் தெய்வங்கள்! அருளட்டும் என் மூதாதையர்! கனியட்டும் ஐம்பெரும் பருக்கள்! காக்கட்டும் எண்திசை தேவர்! அருகணைக என் ஆற்றலுக்கு உறைவிடமாகிய என் அறத்துணைவி! அருகமைக என்னிலிருந்து பிறிது அல்லாத என் இளையோர்!” என்றார். நான்கு பாண்டவர்களும் தங்கள் வாட்களை தௌம்யரின் காலடியில் தாழ்த்தி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றனர்.

உருவிய வாளுடன் தருமன் ராஜசூய காவலனாக அரியணை அமர்ந்தார். அவர் அருகே திரௌபதி அமர்ந்தாள். தௌம்யர் அரிமலரும் கங்கைநீரும் தூவி அவரை வாழ்த்தியபின் திரும்பி அவை நோக்கி இருகைகளையும் விரித்து “அவையோரே! இன்று இவ்வேள்விக்கூடத்தில் பாரதவர்ஷத்தின் நூற்றுப்பன்னிரண்டாவது ராஜசூய வேள்வி நிகழவிருக்கிறது. இதுவரை இவ்வேள்வியை இயற்றி சத்ராஜித் என அறியப்பட்ட நூற்றுப்பதினொரு அரசர்களும் விண்ணுலகில் எழுந்தருளி இவ்வேள்வியை வாழ்த்துவார்களாக! அவர்களின் பெயர்களை இங்கு அறிவித்து எரிகுளத்தில் அவியளித்து நிறைவு செய்வோம். யயாதியும், ஹஸ்தியும், குருவும், சந்தனுவும், பிரதீபரும், விசித்திரவீரியரும் என நீளும் அழியாத அரசநிரையின் பெயரால் இங்கு இவ்வேள்வி நிகழவிருக்கிறது” என்றார்.

“அவ்வரசர் அமர்ந்த அரியணையையும் முடியையும் பாரதவர்ஷத்தின் முதன்மை அரசென்று ஒப்புக் கொண்டு இங்கு வந்திருக்கும் ஐம்பத்துஐந்து தொல்குடி ஷத்ரியர்களையும் அவர்களுடன் வாள் கொண்டு நிகர் நிற்கும் நூற்றுஎட்டு சிறுகுடி ஷத்ரியர்களையும் மண் வென்றதனால் முடி கொண்ட பிற அரசர்கள் அனைவரையும் தலைவணங்கி வரவேற்கிறேன். இங்கு தேவர்கள் எழுக! அவி கொள்ள தெய்வங்கள் எழுக! அவர்கள் அருள் பெற்ற மூதாதையர் வருக! ஐம்பெரும்பருக்கள் நிறைக! எண்திசைக்காவலர் சூழ்க! அவர்கள் அனைவரையும் உணவூட்டிக் காக்கும் எரி ஓங்குக! ஓம், அவ்வாறே ஆகுக!” என்றார். வைதிகர்களும் முனிவர்களும் கைகளைத் தூக்கி “ஓம்! ஓம்! ஓம்!” என்று வாழ்த்தினர்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 55

[ 22 ]

சபரி சரிந்துவிட்டது என்ற செய்தி சுருதகீர்த்திக்கு அவள் கொற்றவை ஆலயத்திற்குச் சென்று அரசமுறைப் பூசெய்கைகளை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது வந்தது. அவள் புருவத்தை சற்றே சுருக்கி எந்த உணர்வும் இல்லாமல் “என்ன செய்கிறது?” என்றாள். “காலையில் ஏதோ எண்ணியதுபோல கிளம்பிச்சென்றிருக்கிறது. பத்தடி தொலைவில் சரிந்துவிழுந்திருக்கிறது. வயிற்றுக்குள் குடல்கள் நிலைபிறழ்ந்துவிட்டன. உயிர்பிழைப்பது அரிது என்கிறார்கள்” என்றாள் சேடி. அவள் தலையசைத்துவிட்டு நடந்தாள்.

சற்றுநேரத்திலேயே சபரியை முழுமையாக மறக்கமுடிந்ததை மீண்டும் நினைவுகூர்ந்தபோது உணர்ந்து வியந்தாள். அதன் ஒலி கேட்டுக்கொண்டிராததனால்தான் அது என்று எண்ணிக்கொண்டாள். அதைப்பற்றி கேட்கவேண்டுமென்று தோன்றினாலும் உடனே தவிர்த்தாள். காலையுணவுக்குப்பின் அவளுக்காக சூதப்பெண் ஒருத்தி யாழிசைக்க மஞ்சத்தில் படுத்தபடி அதை கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் உள்ளம் இசையில் படியவில்லை. எப்போதுமே அவள் இசையை செவிகொடுத்து கேட்டதில்லை. இளைப்பாறுதலுக்குரிய ஓர் ஒலி என்றே இசையை அறிந்திருந்தாள்.

விசிரையை வரச்சொல்லவேண்டுமென்று தோன்றியது. அவள் மாளிகை அரசமாளிகைத் தொகுதியிலிருந்து விலகியிருந்தது. அவளை எண்ணும்போதெல்லாம் அந்தத் தொலைவும் சேர்ந்தே எண்ணத்தில் எழுந்தது. சபரியை பார்ப்பதென்றால் விசிரையுடன் செல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். பார்க்கப் போகாமலிருக்கமுடியாது. அவள் அதை பார்க்கவருவாள் என்று அங்கே அனைவரும் எதிர்பார்த்திருப்பார்கள்.

தமகோஷர் அவளை பார்க்கவிழைவதாக சேடிவந்து சொன்னாள். “பேரரசர் வந்துகொண்டிருக்கிறார், பேரரசி” என்றாள். அவர் பெரும்பாலான நேரங்களில் சூக்திமதியில் இருப்பதில்லை. சூக்திமதியை வென்று முடிசூடி கொண்டாட்டங்கள் முடிந்தபின்னர் அந்நகரம் அவருக்கு ஒரு பொறுப்பு என்று பொருள் அளிக்கத் தொடங்கியது. அரசப்பணிகளுக்கு அப்பால் அங்கு அவர் ஆற்ற ஏதுமில்லையென்று உணர்ந்தார். களியாட்டும் ஓய்வும் கராளமதியில்தான் நிகழ்ந்தன. நாள் செல்லச்செல்ல அவர் பெரும்பாலான நாட்களில் கராளமதியிலேயே இருந்தார். சிசுபாலன் முடிசூட்டிக்கொண்டபின் அரிதாகவே தலைநகருக்கு வந்தார். கராளமதியில் அவரால் தன் இளமைக்குள் செல்ல முடிந்தது. அச்சமும் பதற்றமுமாக அரசிழந்திருந்த இளமைநாட்களின் துடிப்பையும் கனவையும் அங்கு மீட்டெடுத்தார்.

அவளறிந்த தமகோஷரின் முகம் கவலையும் நிலையின்மையும் கொண்டதாகவே இருந்தது. இளம்மனைவியாக அவள் அங்கே வந்தபோது அவர் நிலைகொள்ளாத அரசின் தலைவராக ஒவ்வொருநாளும் பதற்றம் கொண்டிருந்தார். யாதவர்களின் உதவியுடன் அவர் அரசை வென்றதை பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் ஏற்கவில்லை. அவர்கள் படைதிரள்வதைத் தடுத்தது மகதத்துடன் அவர் உறவுகொள்ளக்கூடுமென்ற ஐயம். மகதத்தின் புதிய அரசன் ஜராசந்தன் கம்சனுக்கு அணுக்கமானவனாக இருந்தான். கம்சனுக்கு யாதவர் மணம் மறுத்துத்தான் அவளை சேதிநாட்டுக்கு அரசியென்று அனுப்பியிருந்தனர்.

அந்த ஊடுபாவுகளில் ஒவ்வொரு கணமும் தமகோஷர் ஈடுபட்டிருந்தார். முதல் மந்தணஇரவில்கூட அவர் அரச ஓலைகளை கொண்டுவந்து இடைவிடாது வாசித்துக்கொண்டிருந்தார். “நீ துயில்கொள்க… நம் அரசுக்கு எதிராக வங்கமும் கலிங்கமும் படைகொண்டு எழக்கூடும் என்கிறார்கள். மாளவப்படைகள் முன்னரே கிளம்பி எல்லைவரை வந்துவிட்டன” என்றார். அவள் மஞ்சத்தில் சுருண்டு படுத்து நெய்யகலின் செவ்வொளியில் தெரிந்த அவர் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தாள். களைத்த விழிகளுக்குக் கீழே இருமடிப்புகளாக தசைவளையங்கள். உலர்ந்து சுருங்கிய கனிபோல கரியதடம். உதட்டைச்சுற்றி வெடிப்பு போல கன்னமடிப்பு. கண்கள் நீர்மைகொண்டிருந்தன. கராளமதியில் முடிவில்லாத காத்திருப்பில் தமகோஷரை ஆற்றுப்படுத்தியது மதுதான் என அவள் அறிந்திருந்தாள்.

ஏவலர் கதவைத்தட்டி புதியசெய்திகளை அளித்துக்கொண்டே இருந்தனர். அவள் எப்போதோ துயின்று அதில் கம்சனை கண்டாள். விழித்தபோது சாளரங்கள் ஒளிகொண்டிருந்தன. அருகே அவர் படுத்திருந்த சேக்கையின் குழி குளிர்ந்திருந்தது. அவள் எழுந்து நீராடி மகளிர்கோட்டத்திற்கு சென்றாள். மீண்டும் அவரை பதினெட்டு நாட்களுக்குப் பின்னர்தான் கண்டாள். அன்று அவர் அவளுடன் இருக்கையிலேயே பதற்றம் கொண்டிருந்தார். வாயிலிருந்து மட்டுமல்லாது வியர்வையிலும் யவனமதுவின் நாற்றம் எழுந்தது.

மூன்றுமாதங்களுக்குள் துலா நிகர்நிலைகொண்டது. தமகோஷர் அஸ்தினபுரியின் பாண்டுவிடம் உறவுகொள்ளக்கூடுமென்ற ஐயத்தை உருவாக்கினார். அதை பயன்படுத்தி மகதத்துடன் படைக்கூட்டு செய்துகொண்டார். ஜராசந்தனுக்கு பரிசில்கள் அனுப்பி பரிசில்கள் பெற்றார். அவள் தமகோஷருடன் அரசமுறைப்பயணமாக ராஜகிருஹத்திற்கு சென்றாள். முதல்முறையாக ஜராசந்தனை அப்போதுதான் பார்த்தாள். அவனை யாரோ அரசிளங்குமரன் என்றே எண்ணினாள். மீசையற்ற மஞ்சள்நிற முகமும் கரிய நீள்குழலும் விரிந்த பெருந்தோள்களுமாக அவன் சிறுவனைப் போலிருந்தான்.

“சிறுவர் போலிருக்கிறார், இத்தனை இளையோன் என்று நான் எண்ணவேயில்லை” என்றாள். “ஏன், அவனுக்கு அரசியென்றாக விழைவு எழுகிறதா?” என்றார் தமகோஷர். “இதென்ன கேள்வி? அரசர்களின் சொற்கள் மூதாதையரால் எண்ணப்படுகின்றன” என்றாள். “பெண்களின் எண்ணங்களை பாதாளமூர்த்திகள் ஆள்கின்றன” என்றார் தமகோஷர். “இழிமகனைப்போல பேசவேண்டாம்” என்று அவள் சொன்னதும் கையை ஓங்கியபடி எழுந்து “இழிமகள் நீதான். கன்றோட்டி வாழ்ந்த சிறுகுடிப்பெண். உன் குலத்தில் பசு சூல்கொள்வதுபோல பெண்கள் கருவுறுகிறார்கள் என உலகே அறியும்” என்றார்.

அவள் புன்னகைத்து “அந்தக் குடியின் வாளால்தான் உங்கள் முடி அமைந்தது” என்றாள். “சீ! வாயை மூடு. சிறுமகளே” என்றபடி அவர் அவளை அடிக்க கையோங்கினார். “அடிக்கலாம்… உபரிசிரவசுவின் குருதியில் ஒரு களிமகன் பிறந்ததை அவர் கொடிவழிமூதாதையர் விண்ணிலிருந்து நோக்கட்டும்” என்றாள். அவர் மூச்சிரைக்க கை தாழ்த்தி “உன்னை மணந்தது என் வாழ்வின் வீழ்ச்சி. அவ்விழிசெயலுக்கு தண்டனையாக அத்தனை ஷத்ரிய அவையிலும் கூசி நிற்கிறேன். இதோ இந்த அரக்கமைந்தன் முன் முடிதாழ்த்துகிறேன்…” என்றார். “வாள்கொண்டு வெல்லாத முடியை சூடலாகாது. அது பாறையென எடைகொள்ளும். கழுத்தெலும்பை முறிக்கும்” என்றாள் சுருதகீர்த்தி.

அவளை வெல்வதற்காக அவர் உள்ளம் பரபரத்தது. கிடைத்த நுனியைப்பற்றி உவகைகொண்டு எழுந்தது. “உன் உள்ளமுறையும் கரவுருவோனும் வருகிறான்… மகதத்தின் சிற்றரசனாக எனக்குப்பின்னால் அவையமர்கிறான்” என்றார். “இல்லை, மதுராவின் கம்சரின் பீடம் முன்னிரையில்தான். அவர் மகதத்தின் மணமுறையரசர்” என்றாள் சுருதகீர்த்தி.

ஒருகணம் பதைத்து என்ன செய்வதென்றறியாமல் திகைத்தபின் “முறையிலி, ஒருநாள் உன் கழுத்தில் வாள்பாய்ச்சுவேன். அன்றுதான் முழு ஆண்மகனாவேன்” என்றார். “ஆம்” என்று அவள் மெல்லிய புன்னகையுடன் அவர் விழிகளை நோக்கி சொல்ல உளம் நடுங்கி கைகள் பதற வெளியே செல்ல முயன்றவர் கைகால்கள் இழுத்துக்கொள்ள வலிப்பு வந்து பின்னால் சரிந்து மரத்தரையில் ஓசையுடன் விழுந்தார். அவர் உடல் அதிர வலிப்புகொண்டு கிடப்பதை அவள் அசையாமல் நோக்கிக்கொண்டிருந்தாள்.

அவர் நெற்றிமடிப்பில் ஒரு ஆழ்ந்த குழி விழுந்தது. கைகால்கள் உடலில் இருந்து விலகியவை போல திசையழிந்து அசைந்தன. ஏவலர் உள்ளே வந்து அவரை நோக்கி குனிந்து மெல்ல தலையைத்தூக்கி வாய்க்கோழை புரைக்கேறாமல் வெளியே வழியும்படி செய்தனர். அவரது விழிகள் செருகி உள்ளே சென்றன. களைத்த கைகள் இருபக்கமும் சரிய விரல்கள் இல்லையென விரிந்தன. முழுமையாக தோல்வி கண்டவரைப்போல.

முதல்முறையாக அன்று அவள்முன் வலிப்பு வந்தபின் அவர் அவளை தவிர்க்கத் தொடங்கினார். எப்போதாவது மகளிர்கோட்டத்திற்கு வரும்போதும் மூக்குவழியக் குடித்து ஏவலரால் தாங்கப்பட்டு வந்தார். அவளுடன் விலங்கென உறவுகொண்டார். அவளை அறைந்து வீழ்த்தி புணர்ந்து விலகியபின் “நீ இழிமகள்… உன் உள்ளத்தில் உறைபவனை அறிவேன்” என்று குழறிக்கொண்டிருப்பார். அவரது வன்முறைக்கு அப்போதுதான் அவளால் நிகரீடு செய்யமுடியும். புன்னகையுடன் ஒருசொல்லும் பேசாமல் படுத்திருப்பாள்.

“பேசு… இழிமகளே!” என்று அவர் அவளை அறைவார். “என்ன எண்ணுகிறாய்? எதற்காக சிரிக்கிறாய்? கீழ்பிறவியே!” என்று அவளை உதைப்பார். ஆனால் அவர் உடல் நான்குபக்கமும் முடிச்சவிழ்ந்து சரியும். அவரது அடிகளில் பெரும்பகுதி சேக்கைமேல்தான் விழும். மெல்ல தளர்ந்து “தெய்வங்களே! மூதாதையரே! இழிமகன் ஆனேன்! இழிவுசூடினேன்!” என்று அவர் அழத்தொடங்குவார். விம்மி அழுது மெல்ல ஓய்வார். ஒருமுறை அவ்வழுகையின் உச்சத்தில் அவருக்கு வலிப்பு வந்தது. அவள் அருகே படுத்தபடி அவ்வுடலை நோக்கிக்கொண்டிருந்தாள். நான்கு பக்கமும் கண்ணுக்குத்தெரியாத கந்தர்வர்கள் சூழ்ந்து அதை ஓங்கி ஓங்கி மிதிப்பதுபோலிருந்தது.

கம்சன் கொல்லப்பட்ட செய்தியை அவர்தான் அவளிடம் வந்து சொன்னார். அது பறவைத்தூதாக வந்ததுமே அவர் மகளிர்கோட்டத்திற்கு வந்தார். அவள் இசைகேட்டு அரைத்துயிலில் இருந்தாள். அரசர் வருவதை செவிலி அறிவிப்பதற்குள் அவர் உள்ளே வந்தார். “அரசச்செய்தி, உன்னிடம் அறிவித்தாகவேண்டும்” என்றார். அவள் எழுந்து புருவம் சுருக்கி நோக்க “இன்று உச்சிப்பொழுதில் மதுவனத்தின் யாதவ இளையோர் இருவரும் தங்கள் தாய்மாமனாகிய கம்சனை மற்போரில் கொன்றனர்” என்றார். அவள் அவரது உதடுகளையே நோக்கிக்கொண்டிருந்தாள்.

“யாதவர்களில் அது தந்தைக்கொலைக்கு நிகரானது. குங்குரர்களும் போஜர்களும் அந்தகர்களும் சினம் கொண்டிருக்கிறார்கள். இளையோர் மதுராவை கைப்பற்றி மதுவனத்தின் கொடியை கோட்டைமேல் ஏற்றிவிட்டிருக்கிறார்கள். விருஷ்ணிகள் அதை கொண்டாடுகிறார்கள். விருஷ்ணிகளும் பிறரும் போரிலிறங்கக்கூடும் என்று செய்தி வந்தது.” அவள் ஒரு பெருமூச்சில் தன்னுள் நிறைந்த அனைத்தையும் ஊதி வெளியே விட்டாள். ஏன் தன் உள்ளம் கொந்தளிக்கவில்லை, ஏன் சினமோ துயரோ எழவில்லை என்று வியந்துகொண்டாள்.

“நெஞ்சைப்பிளந்து குருதியாடியிருக்கிறார்கள்… அதிலும் யாதவ இளையோனை கார்த்தவீரியனுக்கு நிகரான கருணையின்மை கொண்டவன் என்கிறார்கள்.” அவள் முற்றிலும் தொடர்பில்லாமல் “நான் கருவுற்றிருக்கிறேன்” என்றாள். “என்ன?” என்றார் அவர் புரியாமல். “நான் கருவுற்றிருக்கிறேன். மருத்துவச்சி அது சேதியின் இளவரசன் என்கிறாள்” என்றாள். அவர் வாய் திறந்திருக்க அவளை அலையும் விழியிணைகளுடன் நோக்கினார். “நன்று” என்றார். “முறைமைச் சடங்குகளுக்கான அரசாணைகளை பிறப்பிக்கவேண்டும். நான் மருத்துவச்சியிடம் ஆணையிட்டிருக்கிறேன். அவள் நிஸ்ஸீமரிடம் சொல்வாள்” என்றாள்.

அன்று மாலையே திருமுகமறைவோர் சபரியின் மேலேறி இரட்டைமுரசை முழக்கி அவள் கருவுற்றிருக்கும் செய்தியை சூக்திமதிக்கு அறிவித்தனர். “உபரிசிரவசுவின் கொடிவழியில் ஒரு இன்மலர். சேதிக்கு ஓர் இளவரசர். தமகோஷ மாமன்னரின் அரியணைக்கு உரியோர். பாரதவர்ஷத்தின் பெருவீரர்!” என அவர்களின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. அவள் இருளசைவாகத் தெரிந்த சபரியின் உடலையே நோக்கிக்கொண்டிருந்தாள்.

தமகோஷர் களைத்த நடையுடன் வந்து அவருக்கான மந்தண அறைக்குள் செல்வதைக் கண்டபின்னரே அவள் எழுந்து அவ்வறைக்குள் சென்றாள். அவர் மஞ்சத்தில் அமர்ந்து மார்பின்மேல் கைகளை கட்டிக்கொண்டிருந்தார். அவள் உள்ளே நுழைந்து கதவை சாத்தியதும் “உன் மைந்தனை சந்தித்தாயா?” என்றார். “ஆம்” என்றபடி அவள் அருகே அமர்ந்தாள். “இப்போது அவன் மறுஎல்லைக்கு சென்றுவிட்டான். ராஜசூயவேள்விக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் நாட்கணக்காக நிகழ்கின்றன. கருவூலத்தையே கொண்டுசென்று அங்கே கவிழ்த்துவிட்டு மீள்வான் என அஞ்சுகிறேன்” என்றார்.

அவள் புன்னகை செய்தாள். “அவனைப்பற்றி பேசவே உன்னிடம் வந்தேன்” என்றார். “அவன் இருக்கும் நிலையை நீ அறியமாட்டாய். அந்நிலையிலிருந்து நான் மீண்டு கடந்து முதுமையை வந்தடைந்தேன்…” அவள் “அவன் உடல்நிலை உங்களைப் போன்றதே” என்றாள். “அது மட்டும் அல்ல…” என அவர் தடுமாறினார். “எந்தப் பெண்ணிடமும் உறவு சீரமையவில்லை” என்றார். அவள் புன்னகை புரிந்தாள். “எனென்றால் அவன் உடல் முழுமையாக இறுக்கி நரம்புகளால் கட்டப்பட்டிருக்கவில்லை… அவன்…” என்றபின் அவள் கையை எட்டி தொட்டு “நான் அஞ்சுகிறேன் சுருதை…” என்றார்.

“அவன் பாரதவர்ஷத்தின் மாவீரன்” என்றாள். “ஆம், ஆனால் அவன் வெற்றியை நோக்கி செல்லவில்லை. பலிபீடத்தை தேடிக்கொண்டிருக்கிறான். மண்டையை கற்பாறையில் முட்டி உடைத்து உதிரும் வரையாட்டின் வெறிகொண்டிருக்கிறான்.” அவள் “உங்கள் உளமயக்கு அது” என்றாள். “இருக்கலாம். நீ அவனிடம் பேசு. அவன் எல்லைகளைப்பற்றி சொல்.” அவள் முகம் இறுகியது. “எல்லை என்றால்?” என்றாள். “சுருதை, அவன் மாவீரன். ஆனால் இளைய யாதவனுக்கு எவ்வகையிலும் நிகரானவனல்ல.”

“அது உங்கள் எண்ணம்” என்று சுருதகீர்த்தி பற்களைக் கடித்தபடி சொன்னாள். “அவர்களிருவரும் ஒரே துலாவின் இருதட்டுகள். முள் எங்கு நிற்கவேண்டுமென ஊழ் முடிவுசெய்யட்டும்.” அவர் சலிப்புடன் “நான் பலமுறை உன்னிடம் சொன்னது இது. இளமைமுதலே அவன் உள்ளத்தில் இளைய யாதவன்மேல் காழ்ப்பை உருவாக்கிவிட்டாய். அவன் வாழ்க்கையையே அவ்வாறாக நீ வடித்தாய்” என்றார். சுருதகீர்த்தி “ஆம், ஆகவேதான் அவன் பாரதவர்ஷத்தின் முதன்மை வீரர்களில் ஒருவனானான். வீழ்ந்தாலும் அவ்வாறே எண்ணப்படுவான்” என்றாள்.

“சூதர் பாடுவதென்ன என்றறிவாயா?” என்றார் தமகோஷர். “உன் கோரிக்கைக்கு ஏற்ப இளைய யாதவன் உன் மைந்தனின் நூறுபிழைகளை பொறுத்தருள்வதாக வாக்களித்திருக்கிறானாம். ஒன்றுகுறைய நூறுபிழை ஆகிவிட்டது என்கிறார்கள்.” அவள் புன்னகைத்து “அந்த ஒன்று என்ன என்கிறார்கள்?” என்றாள். “சிரிப்பதற்குரியதல்ல இது. அப்பாடலைக் கேட்டபோது என் உள்ளம் நடுங்கிவிட்டது. எங்கோ என் அகம் அது உண்மை என்று சொன்னது.” அவர் மீண்டும் அவள் கையைப்பற்றி “அவன் சென்றுகொண்டிருப்பது அந்த நூறாவது பிழையை நோக்கித்தான்…” என்றார்.

“நான் என்ன செய்யவேண்டும்?” என்றாள். “அவன் ராஜசூயவேள்விக்கு செல்லவேண்டியதில்லை… நீ ஆணையிட்டால் மட்டுமே அவன் அதை கேட்பான். அவன் இளைய யாதவனை நேர்கொள்ளலாகாது.” அவள் “உங்கள் வீண் அச்சத்திற்காக…” என்று சொல்லப்போக அவர் தடுத்து “ஆம், வீண் அச்சம்தான். அப்படியே கொள். ஆனால் அதன்பொருட்டு நீயும் உன் மகனும் என்மேல் இரக்கம் கொள்ளலாம். முதிய வயதில் மைந்தர்துயர் போல பெருங்கொடுமை பிறிதில்லை. அதை எனக்கு அளிக்கவேண்டாமென அவனிடம் சொல்… நான் உன்னிடம் கோரும் ஒரே வேண்டுகோள்” என்றார்.

அவள் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். “சொல்” என்றார் தமகோஷர் “ஆம், சொல்கிறேன்” என்றாள். “எனக்கு ஆணையிட்டு உறுதிகொடு” என்றார். “ஆணையிடமாட்டேன். என் அன்னைதெய்வங்களின் விழைவுப்படியே என் நா எழும்” என்று அவள் சொன்னாள். அவர் பெருமூச்சுடன் தளர்ந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி அமர்ந்திருந்தனர். பின்னர் அவர் எழுந்து “நான் செல்கிறேன்… அங்கே அவை எனக்காக காத்திருக்கிறது” என்றார். அவளும் எழுந்தாள்.

வெளியே சபரியின் பிளிறல் கேட்டது. “அன்னைக்களிறு… அது இன்றிரவு விண்புகும் என்று மருத்துவர் சொன்னார்கள்” என்றார் தமகோஷர். அவள் “ஆம்” என்றாள்.

 

[ 23 ]

அந்தியில் அவள் அழைப்பை ஏற்று சிசுபாலன் அவளைப்பார்க்க மகளிர்கோட்டத்திற்கு வந்தான். அவள் தன் மஞ்சத்தறைக்குள் இருந்தாள். உச்சியுணவுக்குப்பின் அவளுக்கு கடும் உளச்சோர்வும் தலைவலியும் ஏற்பட்டிருந்தது. மருத்துவச்சியர் அளித்த மலைப்புல் தைலத்தை தேய்த்துக்கொண்டு படுத்திருந்தாள். வெளியே திறந்த சாளரம் வழியாக குளிர்ந்த ஒளி உள்ளே வந்து அலையடித்தது. சிசுபாலன் வாயிலில் வந்து வணங்கி “அன்னையே, நலம் அல்லவா?” என்றான். “வருக!” என்றாள். அவன் வந்து அவளருகே பீடத்தில் அமர்ந்தான்.

அவன் உடல்நிலை தேறியிருந்தான். தாடியும் தலைமுடியும் நீண்டு வளர்ந்திருந்தபோதிலும் கரியபளபளப்புடன் நெய்பூசப்பட்டு சீவி முடிச்சிட்டு கட்டப்பட்டிருந்தன. கழுத்தில் செம்மணி ஆரம் அணிந்து பட்டாலான இடைக்கச்சை கட்டியிருந்தான். அதில் முத்துக்கள் பதிக்கப்பட்ட பிடியும் சிப்பியாலான உறையும்கொண்ட குத்துவாள் இருந்தது. முகம் தெளிந்து கண்களில் சிரிப்பு கொண்டிருந்தான். “நீ உளம் தேறியிருப்பதை கண்டு மகிழ்கிறேன்” என்றாள். “ஆம், இப்போது என்னிடம் அல்லல்கள் ஏதுமில்லை” என்றான்.

“இளையவளை பார்த்தாயா?” என்றாள். “இல்லை, அதனால்தான் அல்லல்கள் இல்லையோ என்னவோ” என்றான். அவள் புன்னகைத்து “அவள் உள்ளத்தை புரிந்துகொள்… அவள் அஞ்சுவதும் முறையானதே” என்றாள். “ராஜசூயத்திற்கு கிளம்புவதற்குமுன்னர் அவள் மைந்தனை முறைப்படி பட்டத்திளவரசனாக சேதியின் எண்வகைக் குடிகளின் தலைவர்களுக்கும் அறிவித்து ஓலையளிப்பதாக ஒப்புக்கொண்டேன். ஓலைகள் நாளைக்கே சென்றுவிடும். விடைபெறும்போது புன்னகைப்பாள் என நினைக்கிறேன்” என்றான்.

“நீ ராஜசூயத்திற்கு செல்லக்கூடாதென்று ஆணைபெறும்படி உன் தந்தை என்னிடம் கோரினார்” என்றாள். “என்னிடம் முதலில் அதை சொன்னார். நான் மறுத்துவிட்டேன்” என்றான். “சூதர்கதை எதையோ கேட்டு நிலையழிந்திருக்கிறார்.” அவன் சிரித்து “துவாரகையின் யாதவன் என் நூறுபிழை பொறுப்பதாக வாக்களித்திருக்கிறான் என்னும் கதை அல்லவா?” என்றான். “ஆம்” என அவள் புன்னகை செய்தாள். “அதை அவன் அனுப்பிய சூதர்களே பாடியிருக்கலாம். அன்னையே, பாரதவர்ஷத்தை சூதர்கதைகள் வழியாக வெல்லமுடியுமென்றால் அவன் ஏழுமுறை வென்றுவிட்டான்” என்றான்.

“ஆனால் அது உண்மை” என்று அவள் சொன்னாள். “என்ன சொல்கிறீர்கள்?” என்று அவன் சிரிப்பு மாறாமலேயே கேட்டான். “அவன் கம்சரைக் கொன்ற அன்று காலைதான் மருத்துவச்சி நான் கருவுற்றிருப்பதை சொன்னாள். அச்செய்தியை அவள் சொன்னபோது நான் உவகைகொள்ளவில்லை. ஏதோ வரவிருப்பதான பதைப்பை அடைந்தேன். உள்ளம் ஓய்ந்தே கிடந்தது. உன் தந்தை வந்து கம்சர் கொலையுண்டதை சொன்னார். அதுவும் என்னை நிலையழிய வைக்கவில்லை. ஆனால் இருசெய்திகளும் ஒரு துலாவின் இருமுனைகளையும் நிகர்செய்வதாக ஓர் எண்ணம் எழுந்தது.”

“அன்று இரவு நான் துயிலவில்லை. தாளாவலிகொண்டவள் போல படுத்துப்புரண்டும் எழுந்து இருள்நோக்கி நின்றும் மீண்டும் படுத்தும் கங்குல்பெருக்கை நீந்திக்கடந்தேன். அன்றும் இன்றுபோல சபரியின் பிளிறல் எழுந்துகொண்டிருந்தது. இன்றைய பட்டத்துயானை காரகனை அவள் கருவுற்றிருந்த நாள் அது. இரவெல்லாம் அலறிக்கொண்டிருந்து காலையில் அவள் அவனை பெற்றாள். நம் நாட்டின் பெருங்கொம்பர்களில் அவனே தலையாயவன். அன்னை உடல்கிழித்தே பிறந்தான். பேரெடை கொண்டிருந்தான். அவன் விழுந்த ஓசையை அன்று விடியலில் இங்கிருந்தே கேட்டேன். அன்னையின் குருதி நின்று அவள் உணவு கொள்ள ஏழுநாட்களாயின.”

“உன் கருநாட்களில் கனவுகளால் சூழப்பட்டிருந்தேன். இன்று எக்கனவையும் என்னால் எண்ணமுடியவில்லை. இருளுக்குள் அலைந்துகொண்டிருப்பதைப்போல. சில சமயம் சில முகங்கள் மின்னி அணையும். மகதத்தில் முதல்முறையாகக் கண்ட கம்சரின் முகம். ஓவியத்தில் கண்ட இளைய யாதவனின் முகம். ஒவ்வொருமுறையும் கடும் சினத்துடன் விழித்துக்கொள்வேன். சினம் எவரிடம் என்று நான் அறிந்திருக்கவில்லை. எண்ணி எண்ணி நோக்கியும் ஏதும் புலப்படவில்லை. ஆனால் உச்சகட்ட சினத்தில் உடல்நடுங்கிக்கொண்டிருக்க எழுந்தமர்ந்து என்னை உணர்கையில் கைகள் இறுகி சுருண்டிருக்கும். பற்கள் கடிபட்டு அரையும் ஒலி எழும். முகம் இழுபட்டு வலிப்புகொண்டிருக்கும்…”

“அந்நாளில் எனக்கு வந்த கனவுகளில் இன்றும் நினைவிலிருப்பது ஒன்றே. இன்றும் அவ்வப்போது அக்கனவு மீள்வதுண்டு. ஒரு மென்மணல் பரப்பை நான் கையால் அள்ளி அள்ளி அகற்றுகிறேன். ஒரு கை கிடைக்கிறது. உயிருடன் அசையும் விரல்களுடன் வெம்மைகொண்ட குழவிக்கை. மீண்டும் அள்ளும்போது இன்னொரு கை. நான்கு கைகள். அவற்றை எடுத்து அருகே வைத்தபின் உன் உடலை காண்பேன். நெற்றியில் ஆழ்ந்த ஒற்றைவிழி திறந்து என்னை நோக்கிக்கொண்டிருப்பாய். பிற இரு விழிகளும் வெறும் தசைக்குழிகள்.”

“உன்னை அகழ்ந்தெடுப்பேன். உன் கால்கள் தனியாக அடியில் கிடக்கும்… அவற்றை உன் உடலுடன் பொருத்தி வைப்பேன். உன்னை என் கைகளால் தடவித்தடவி உலுக்குவேன். மைந்தா மைந்தா என்று அழைப்பேன். உன் உடல் நான்குபக்கமும் குழைந்து சரியும். நான் அலறியழுதுகொண்டே இருப்பேன். என் மேல் நிழல் விழும். நிமிர்ந்து நோக்கினால் நான்கு கைகளும் நுதல்விழியுமாக ஒரு தெய்வம் நின்றிருக்கும். அதை நான் அறிவேன். கருமுழுமைகொள்ளாது பிறக்கும் குழவிகளைக் காக்கும் தெய்வம் அது. சிசுபாலன் என்று அதை சொல்வார்கள்.”

“ருதுவனத்திற்கு அருகே உள்ள சப்தமம் என்னும் காட்டுக்குள் ஒரு கரும்பாறையில் புடைப்புச்சிற்பமாக அது செதுக்கப்பட்டிருக்கும். கருவிளையாத குழவியரை அங்கே கொண்டுசென்று தைலக்கிண்ணத்திலிட்டு உயிர்மீட்க முயல்வார்கள். உயிரிழந்தால் வாளால் நெடுகப்போழ்ந்து அத்தெய்வத்தின் காலடியிலேயே புதைத்துவிட்டு மீள்வார்கள்” என்றாள் சுருதகீர்த்தி. “முதல்கனவில் அத்தெய்வத்தைக் கண்டு நான் என் மூதாதையே, என் மைந்தனை எனக்களி என்று கூவினேன். தன்னைத் தொடரும்படி கைகாட்டிவிட்டு அவன் நடக்க நான் உன்னை கையிலேந்தியபடி உடன் சென்றேன். நீ நீர்நிறைந்த வடிவற்ற தோல்பை போல என் கையில் ததும்பினாய். புதர்களில் கால்கள் சிக்க தள்ளாடியபடி சென்றேன். காட்டுக்குள் செறிந்த இருளுக்குள் அவன் நுழைந்தான்.”

“அதன்பின் அவனை நான் கேட்கவில்லை. ஒரு குரல் மட்டும் என்னை வழிநடத்தியது. இவ்வழி இவ்வழியேதான் என அது என் காதருகே சொன்னது. செவிகூர்ந்தால் மிகத்தொலைவில் ஒலித்தது. இருளுக்குள் அப்பால் ஓர் வெள்ளி ஒளியை கண்டேன். அது ஒரு படையாழி. நான் அணுகியபோது அக்குரல் இங்கே இதுவரையில் என்றது. நான் விழித்துக்கொண்டேன்” என்று சுருதகீர்த்தி சொன்னாள். “நிமித்திகரிடம் கனவைப்பற்றி கேட்டேன். குழவி குறைமாதத்தில் பிறக்கக்கூடும் என்றார். ஆனால் தெய்வம் கனவில் வந்தமையால் நீ பிழைத்தெழுவாய் என்றும் சொன்னார்.”

“பிழைத்தெழுந்தால் உனக்கு சிசுபாலன் என்றே பெயரிடுவதாக வேண்டிக்கொண்டேன்” என்றாள் சுருதகீர்த்தி. “எண்ணியதுபோலவே நீ ஏழாம் மாதத்தில் பிறந்தாய். உன் உடல் என் கருவில் உருவாகிய சித்தத்தால் தொகுக்கப்பட்டிருக்கவில்லை. வலியே இல்லாமல் மிக எளிய ஓர் எண்ணம் போல வெளிப்பட்டுவிட்டாய். உன் உடல் பலபகுதிகளாக சிதறி தன் கைக்கு வந்ததாக வயற்றாட்டி சொன்னாள். உனக்கு மூன்று விழிகளும் நான்கு கைகளும் இருந்ததாக அவளுக்கு தோன்றியது. அலறியபடி உன்னை கீழே போடப்போனாள். செவிலி உன்னை பிடித்துக்கொண்டாள். வயற்றாட்டி வலிப்பு கொண்டவள்போல விழுந்துவிட்டாள். அவள் அந்த உளமழிவிலிருந்து மீளவேயில்லை.”

“உன் நெற்றியில் ஆழமான வடுபோல குழி ஒன்றிருந்தது. ஒரு வெட்டுப்புண் போல. தசை மடிப்பு போல. பார்வையற்ற விழி என. பிறந்த அன்று செவிலியின் கையிலிருந்தபோதே உனக்கு மூன்றுமுறை வலிப்பு வந்தது. கைகால்கள் அதிர கரைவந்த மீன்போல நீ வாய் குவித்து காற்றை உண்டு விக்கிக்கொண்டிருப்பதை கண்டபோது என் உடலில் இருந்து உதிர்ந்த புழு என்றே எண்ணினேன். அருவருப்புடன் விழிகளை விலக்கிக்கொண்டேன். நீ உயிர்வாழ வாய்ப்பே இல்லை என்றனர் மருத்துவர். ஆனால் முலைச்சேடியரின் பாலை நீ உண்ணும் விரைவை வைத்து நீ வாழ்வாய் என கணித்தனர் முதுசெவிலியர்.”

“நீ வளர்ந்தாய். ஆனால் வலிப்புநோய் எப்போதுமிருந்தது. உன் உடல் ஓராண்டுகாலம் வரை ஒருங்கிணையவே இல்லை. எதிரெதிர் திசைகளில் அமைத்து சேர்த்துக் கட்டி நிலத்திலிட்ட இரு தேள்களைப்போல நீ தோன்றினாய் என்று ஒரு செவிலி ஒருமுறை சொன்னாள். நீ எழுந்து நடப்பாய் என்றே நான் எண்ணவில்லை. உன் அழுகையொலியே மானுடக்குழவிக்குரியதாக இருக்கவில்லை. அது கழுதையின் ஒலி என இங்கே செவிலியர் நடுவே பேச்சு இருந்தது. பின்னர் அதை சூதர்கள் பாடலாயினர்.”

“குழவியென உன்னை நான் தொட்டதே இல்லை. உன்னை காணவும் அஞ்சினேன். உன் நினைவை அழிக்கவே முனைந்தேன். ஆனால் ஒவ்வொருகணமும் உன்னையே எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றாள் சுருதகீர்த்தி. “நீ இறந்தால் நான் விடுதலை பெறுவேன் என எண்ணினேன். அதற்கென தெய்வங்களை வேண்டினேன்.” சிசுபாலன் புன்னகைத்து “இவையனைத்தையும் முன்னரும் பலமுறை சொல்லிவிட்டீர்கள், அன்னையே” என்றான். “உங்கள் ஆழத்தில் உறையும் இருளொன்றின் சான்று நான்.”

அவள் விழிதூக்கி நோக்கி “ஆம்” என்றாள். பின்னர் “நீ ஒருங்கிணைந்தது உன் மாமன்மகனின் மடியமர்ந்தபோதுதான்” என்றாள். சிசுபாலன் “கதைகளை கேட்டுள்ளேன்” என்றான். “முதல்முறையாக இளைய யாதவனும் மூத்தவனும் சேதிநாட்டுக்கு வந்தது உன் ஓராண்டு நிறைவுநாளன்று. நாம் மகதத்தின் நட்புநாடானபோதே எனக்கும் என் குலத்திற்குமான உறவு முறிந்தது. யாதவர் அஸ்தினபுரிக்கு அணுக்கமாக ஆனபின்னர் அவர்கள் சேதிக்கு எதிரிகளென்றே ஆனார்கள். ஆனால் எந்தப் பகைக்கும் நடுவே குறுகிய நட்புக்காலங்கள் உண்டு. அத்தகைய காலத்தில் உன் முதல் ஆண்டுமங்கலம் வந்தது.”

“விழவு முழுக்க நீ தொட்டிலில்தான் கிடந்தாய். உன் உடலசைவைக்கொண்டு உன்னை தேள் என்றே சொன்னார்கள் அனைவரும். விருச்சிகன் என்று உன் தந்தையே உன்னை அழைத்தார். சிசுபாலன் என்று அழைத்தவள் நான் மட்டுமே. விழவில் உன் மேல் அரிமலரிட்டு வாழ்த்தியவர் அனைவருக்குள்ளும் எழுந்த இளிவரல் நகைப்பை நான் என் உள்ளத்தால் கேட்டுக்கொண்டிருந்தேன். எவரும் உன்னை குனிந்து தூக்கவில்லை. இளைய யாதவன் உன்னை கையிலெடுத்து தன் மடியில் வைத்தான். மைய முடிச்சு சரியாக கட்டப்படாத கூடைபோலிருக்கிறான் என்றான். அவையோர் நகைத்தனர்.”

“அவன் உன் கழுத்துக்குப்பின் ஏதோ எலும்புமுடிச்சை தன் சுட்டுவிரலால் ஓங்கி சுண்டினான். உன் உடல் துள்ளி அதிர்ந்து வலிப்புகொண்டது. உன் கைகளையும் கால்களையும் அவ்வலிப்பின்போதே பிடித்து அழுத்தி சேர்த்துவைத்தான். என்ன செய்கிறாய் இளையோனே என உன் தந்தை பதறினார். முடிச்சிடுகிறேன் என்று சிரித்தான். நான் அவனையே நோக்கிக்கொண்டிருந்தேன். உன்னை மீண்டும் அவன் தொட்டிலில் படுக்கவைத்தபோதே தெரிந்துவிட்டது, உன் நரம்புகள் சீராகிவிட்டன என்று. ஏழுமாதங்களில் நீ எழுந்து நடந்தாய்.”

“பதறும் நரம்புகள் கொண்டவன் என்று சிரித்தபடியே சொல்லி உன்னை படுக்கவைத்தான். தன் உடலைச் சுண்டி தெறித்துச்செல்லும் புல்புழு போன்றவன், அவ்விசையாலேயே மாவீரனாவான் என்று அவன் சொன்னபோது நான் சிரித்தபடி யாதவனே, இவன் யாதவர்களின் எதிரிநாட்டரசனாகப் போகிறவன். நாளை அவன் உனக்கு எதிர்வந்து நின்றால் என்ன செய்வாய் என்றேன். இந்த முடிச்சு நான் போட்டதென்பதனால் இவனை பொறுத்தருள்வேன் அத்தை என்றான். எத்தனை முறை பொறுப்பாய் என்றேன். நூறுமுறை பொறுப்பேன், போதுமா என்றான். மூத்த யாதவன் உரக்க நகைத்து பாவம், நூறு பிழை செய்ய இவன் மொத்த வாழ்க்கையையே செலவிடவேண்டுமே என்றான். அவையே சிரித்துக்குலுங்கியது அன்று.”

சிசுபாலன் அவளை நோக்கியபடி அமைதியாக அமர்ந்திருந்தான். “நீ வளர்ந்தபோது உன்னிடம் ஒருமுறை சொன்னேன், நீ இளைய யாதவனால் அமைக்கப்பட்ட உடல்கொண்டவன் என்று.” அவன் “ஆம்” என்றான். “பிறகு ஒருபோதும் நான் அவனைப்பற்றி உன்னிடம் பேசவில்லை” என்றாள் சுருதகீர்த்தி. சிசுபாலன் தலையசைத்தான். இருவரும் சொல்முடிந்த வெறுமையில் சற்றுநேரம் அமர்ந்திருந்தனர். வெளியே பறவைகளின் ஓசை கேட்டது. மிக அப்பாலென சபரியின் உறுமல் ஒலித்தது.

சிசுபாலன் “அன்னையே, அவ்வாறென்றால் ஏன் இளைய யாதவன் மேல் தீரா வஞ்சத்தை என்னுள் வளர்த்தீர்கள்?” என்றான். அவள் அவனை புரியாதவள் போல நோக்க உதடுகள் மட்டும் மெல்ல பிரிந்தன. “நீங்கள் ஊட்டிய நஞ்சு அது. என்னுள் இக்கணம் வரை அதுவே நொதிக்கிறது. சொல்க, அவ்வஞ்சத்தின் ஊற்றுக்கண் எது?” அவள் பெருமூச்சுவிட்டு “அறியேன்” என்றாள். பின்பு “ஒருவேளை இம்மண்ணில் வைத்து அதை புரிந்துகொள்ளவே முடியாதுபோலும்” என்றாள்.

“நான் நாளை முதற்புலரியில் இந்திரப்பிரஸ்தத்திற்கு கிளம்புகிறேன்” என்றான் சிசுபாலன். “தந்தையின் விழைவை சொன்னீர்கள். உங்கள் ஆணையை சொல்லுங்கள். நான் செல்லலாமா?” அவள் அவனை நடுங்கும் தலையுடன் நீர்மை மின்னிய விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தாள். பின்பு துரும்பு விழுந்த நீர்ப்பாவை என அசைவுகொண்டு “செல்க!” என்றாள். அவன் மறுமொழி ஏதும் சொல்லாமல் எழுந்து அவள் கால்களைத் தொட்டு சென்னி சூடி “வாழ்த்துங்கள், அன்னையே” என்றான். “நிறைவுறுக!” என்று அவள் அவன் தலைதொட்டு வாழ்த்தினாள்.

அவன் திரும்பி அறைக்கதவைத் திறந்து வெளியே சென்றான். கதவு மூடப்படவில்லை. இடைநாழியில் ஏற்றப்பட்டிருந்த சுடர்களின் ஒளியில் அதன் நீள்பிளவு செஞ்சதையால் ஆன தூண் போல தெரிந்தது. அவள் அதையே இமைகொட்டாமல் நோக்கிக்கொண்டிருந்தாள். நெஞ்சம் முற்றிலும் அமைதியாக இருந்தது. முதியசேடியின் முகம் அதில் எழுந்தபோது என்ன செய்தி என்று அவள் உணர்ந்துகொண்டாள்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 54

[ 20 ]

வழக்கமான கனவுடன் சுருதகீர்த்தி விழித்துக்கொண்டாள். நெடுந்தொலைவிலென ஒரு யானையின் பிளிறலை கேட்டாள். அது ஒரு மன்றாட்டுக்குரலென ஒலித்தது. கோட்டையின் மேற்குப் பக்கமிருந்த கொட்டிலில் இருந்து முதிய பிடியானையாகிய சபரி பிளிறுகிறது என்று மேலும் விழிப்புகொண்ட பின்னரே அவள் சித்தம் அறிந்தது.

நெடுநாட்களாகவே அது நோயுற்றிருந்தது. முதுமை உலர்ந்த சேற்றிலிருந்து புதைந்து மட்கிய மரத்தடிகள் எழுந்து வருவதுபோல அதன் உடலில் எலும்புகள் புடைத்தெழச்செய்தது. கன்ன எலும்புகள் எழுந்தபோது முகத்தில் இரு ஆழமான குழிகள் விழுந்தன. நெற்றிக்குவைகள் இரும்புக்கம்பிச்சுருள்கள் போன்ற முடிகளுடன் புடைத்தன. அமரமுடியாதபடி முதுகெலும்பு குவிந்தெழுந்தது. தொடையெலும்புகளும் மேலெழுந்து வந்தபோது அதன் கால்கள் வலுவிழந்தன. அது படுக்க விழைந்தது. “படுத்தால் அதன் எடை அப்பகுதியின் தோலை கிழிக்கும். புண் வந்து புழுசேரும். துயரமான இறப்பு அது” என்றார் யானைமருத்துவரான குந்தமர்.

அதன் கால்களுக்குக் கீழே மரத்தாலான பெரிய தூண் ஒன்று அமைக்கப்பட்டது. அதன்மேல் பரப்பப்பட்ட மரவுரிவளைவின் மேல் தன் வயிற்றை அழுத்தி எடையை கால்களிலும் அத்தூணிலுமாக பகிர்ந்து சபரி நின்றது. ஒவ்வொருநாளும் சூடான மூலிகைநீரை ஊற்றி அதன் சுருங்கிக்கொண்டிருந்த தசைகளை வெம்மையூட்டி மரவுரியால் நீவி உயிர்கொள்ளவைத்தனர் யானைப்பாகர். செக்கிலிட்டு ஆட்டிய பசுந்தழையுடன் கம்புசோறும் வெல்லமும் கலந்த கூழை சிறிய அளவில் இருமுறையாக அதற்கு ஊட்டினர்.

சபரி எப்போதும் தன்னருகே பாகர்கள் எவரேனும் இருக்கவேண்டுமென விரும்பியது. அதன் விழிகள் பார்வையை இழந்து வெண்சோழிகள் போல ஆகிவிட்டிருந்தன. மெல்ல அசைந்தும் நிலைத்துக்குவிந்து சிற்றொலிகளையும் தேரும் செவிகளாலும் நிலையற்று அலைந்து காற்றை துழாவித்தவிக்கும் சுருங்கிய துதிக்கையின் முனையாலும் அது தன் சூழலை உருவாக்கிக் கொண்டிருந்தது. எதன்பொருட்டேனும் அணுக்கப்பாகன் விலகிச்சென்று, அவன் ஓசையும் கேட்காமலானால் பெருமுரசில் துணிமுண்டுகொண்ட கோல் விழுந்ததுபோல மெல்ல அதிர்ந்து அழைத்தது. அவ்வழைப்புக்கு மறுமொழி உடனே எழாவிட்டால் அஞ்சி பிளிறத்தொடங்கியது.

“எதை அஞ்சுகிறது அது?” என்று ஒருமுறை சுருதகீர்த்தி குந்தமரிடம் கேட்டாள். “பிடியானை பெருங்குலத்தின் பேரரசி அல்லவா? காட்டில் அவளுக்கு தனிமையென ஒன்றில்லை, பேரரசி” என்றார் குந்தமர். “ஆனால் அவள் தனிமையில்தானே இறந்தாகவேண்டும்?” என்றாள் சுருதகீர்த்தி. குந்தமர் புன்னகைத்து “எவராயினும் தனிமையில்தான் இறக்கவேண்டும்” என்றார். சுருதகீர்த்தி புன்னகைத்து “ஆனால் பெருங்குடிபுரந்த அன்னைக்கு பேருருக்கொண்ட தனிமையாக வருகிறது சாவு” என்றாள்.

சூக்திமதியின் யானைக்கொட்டிலில் நின்றிருந்தவற்றில் இருபத்துமூன்று களிறுகளும் முப்பத்தாறு பிடிகளும் அவள் குருதிநிரையிலெழுந்தவர்கள் என்று அரண்மனைக் கணக்குகள் சொல்லின. அவையனைத்தும் அவளை வாசனையால் அறிந்திருந்தன. காலையில் தளையவிழ்க்கப்படுகையில் அவை அவளருகே வந்து துதிக்கை தூக்கி மூக்குவிரல் அசைய மூச்சு சீறி அவளை வாழ்த்திச் சென்றன. எப்போதாவது அன்னைப்பிடி மெல்ல உறுமி அவளிடம் ஒரு சொல் பேசியது.

மூதன்னை அவர்கள் வந்துசெல்வதை அறியாதவள்போல தன் இருண்ட தவிப்புக்குள் உழன்றுகொண்டிருப்பாள். அவள் அவர்களை அறியவேயில்லை என்று தோன்றும். ஆனால் எப்போதாவது இளங்கன்று ஒன்று உடல்நலமிழந்தால் முதலில் அதை அறிபவளும் மூதன்னையே. நிலையற்ற துதிக்கையுடன் உடலை அசைத்தபடி அவள் மெல்ல பிளிறிக்கொண்டே இருப்பாள். தன் கொடிவழிவந்த யானை இறந்ததென்றால் இருநாட்கள் உணவும் நீருமின்றி நிலத்தில் ஊன்றிய துதிக்கையுடன் செவியசைய இளங்காற்றில் ஆடும் மரம்போல நின்றுகொண்டிருப்பாள்.

அவள் குலத்தின் பெருங்களிறான அம்புஜன் துவாரகையுடனான ஓர் எல்லைப்போரில் நச்சுவாளி ஏற்று நோய்கொண்டு இறந்தான். அவள் அவ்விறப்பை அறியவேண்டாம் என்று நோயுற்ற அம்புஜனை அப்பால் கொண்டுசென்று சத்ரபாகம் என்னும் குறுங்காட்டில் கட்டியிருந்தனர். ஆனால் அம்புஜன் நோயுற்றிருப்பதை மூதன்னை அறிந்திருந்தாள். அவன் இறந்த செய்தியை அவன் அருகே இருந்த பாகன் அறிந்த கணமே நெடுந்தொலைவிலிருந்த மூதன்னையும் அறிந்தாள். துதிக்கையை தூக்கி தொங்கிய வாய்க்குள் எஞ்சிய கரிய ஒற்றைப்பல் தெரிய பிளிறிக்கொண்டே இருந்தாள்.

“களிறுகள் அவற்றுக்குரிய காணாத்தேவர்களால் ஆளப்படுபவை, அரசி… அத்தெய்வங்கள் சொல்லியிருக்கும்” என்றான் பாகன். “அவை தங்கள் நுண்மணங்களால் இணைக்கப்பட்டவை” என்றார் குந்தமர். அவள் பழுத்து அழுகிய கனிபோல தெரிந்த முதியவளின் கண்களை நோக்கிக்கொண்டு நின்றாள். அதிலூறிய விழிநீர் வெண்பீளையுடன் உருகிவழிவதுபோல வெடித்த சேற்று நிலமெனத் தெரிந்த கன்னங்களில் தயங்கிப்பிரிந்து வழிந்தது. ஒருகணம் அந்த இருட்குவைக்குள் நுழைந்து வெளிவரமுடியாமல் சிக்கிக்கொண்ட உணர்வு எழ அவள் அஞ்சி திரும்பி ஓடினாள். அதன் பின் அவள் சபரியை நேரில் காணவே இல்லை.

ஆனால் ஒவ்வொருநாளும் அவள் குரலைக் கேட்டே விழித்தாள். எங்கோ அந்நகரின் ஒலிப்பெருக்கின் அடியில் அக்குரல் ஒலித்துக்கொண்டே இருப்பதை எப்போதும் அவள் சித்தம் உணர்ந்திருந்தது. மெல்ல அதை அவள் தவிர்க்கத் தொடங்கினாள். தவிர்க்கத்தவிர்க்க அது பெருகியதென்றாலும் ஒரு கட்டத்தில் பொருளிழந்தது. பொருளற்றவற்றை சித்தம் அறிவதேயில்லை.

அன்று ஏன் அதை கேட்டோம் என எண்ணியபடி அவள் நீராட்டறைக்குச் சென்றாள். “சபரி மேலும் நோயுற்றிருக்கிறதா?” என்று அணுக்கச்சேடி ரம்யையிடம் கேட்டாள். “ஆம் பேரரசி, சென்ற ஒருவாரமாகவே அதன் நோய் முதிர்ந்துள்ளது. பின்காலில் பெரிய நெறிகட்டியிருக்கிறது. நகவளையங்களுக்குமேலாக பெரிய புண் உருவாகி வளர்ந்துகொண்டிருக்கிறது. அது மேலும் ஒரு வாரம் உயிர்வாழலாமென்று சொல்கிறார்கள்” என்றாள் ரம்யை. அதன் பின் மேற்கொண்டு கேட்க ஆர்வமில்லாதவளாக அவள் விழிகளை மூடிக்கொண்டாள்.

ஆனால் அவள் எண்ணங்கள் அந்தப்புள்ளியிலேயே முளைகட்டப்பட்டிருந்தன. அதை தவிர்க்கமுடியாதென உணர்ந்ததும் அதையே எண்ணத்தொடங்கினாள். அவள் மணமுடித்து சூக்திமதியில் நகர்நுழைந்தபோது கோட்டைமுகப்பில் பொன்முகபடாமணிந்து சிறுகொம்புகளில் பொற்பூண் மின்ன பட்டுத்திரை நலுங்க வந்து மாலைசூட்டி வரவேற்றவள் சபரிதான். அத்தனை பெரிய பிடியானையை அவள் அதற்கு முன் பார்த்ததில்லை என்பதனால் அது அணுகும்தோறும் அச்சம் எழ தேரின் பீடத்திலிருந்து அறியாது எழுந்துவிட்டாள்.

கல்மண்டபம் போல அவள் பார்வையை முழுமையாக மறைத்து அது அருகணைந்தது. அஞ்சி அமர்ந்த அவள் விழிகளுக்கு நேராக யானையின் தலை வந்தபோது தேர்வாயிலை அதன் கன்னம் மட்டுமே முழுமையாக மறைத்துவிட்டிருந்தது. கற்பாறை வைத்து குகைவாயிலை மூடியதுபோல. தோலின் விரிசல்களின் சந்திப்பில் மின்னும் ஒற்றைவிழி ஏதோ கனவில் ஆழ்ந்தது என தெரிந்தது.

“எழுந்திருங்கள், அரசி” என்று அணுக்கச்சேடி ரம்யை சொன்னாள். அவள் எழுந்து தேர்த்தூணை பிடித்துக்கொண்டாள். “வலக்காலெடுத்து வைத்து இறங்குங்கள்… இனி இது உங்கள் மண்” என்று சொன்ன ரம்யை அருகிலிருந்த பொற்குடத்து நீர்மேல் ஒரு செந்தாமரையை வைத்து அவளிடம் அளித்தாள். அதை இரு கைகளாலும் வாங்கிக்கொண்டு அவள் வலக்கால் எடுத்து வைத்து தேரிலிருந்து இறங்கினாள். சபரியின் துதிக்கை அவள் தலைக்குமேல் ஆலமரக்கிளை என எழுந்தது. அது தாழ்ந்து வந்து அவள் கழுத்தில் ஓர் வெண்மலர் மாலையை சூட்டியது. அதன் தண்மையும் ஈரமும் எடையும் அதை ஒரு நாகம் என அவள் உடல் எண்ணி சிலிர்க்கவைத்தது.

“ஏறிக்கொள்ளுங்கள், அரசி” என்றாள் ரம்யை. அவள் தயங்க சபரி அவள் இடையை வளைத்துத் தூக்கி தன் மத்தகத்தின்மேல் அமர்த்திக்கொண்டது. அவள் பதறி அதன் கழுத்தைச்சுற்றி கட்டப்பட்டிருந்த பட்டுவடத்தை கால்களால் பற்றிக்கொண்டாள். கையில் பொற்குடத்துடன் அவளைக்கண்டதும் சூக்திமதியின் படைவீரர்களும் குடிகளும் எழுப்பிய வாழ்த்தொலி பொங்கி வந்து அவளைச் சூழ்ந்தது. அப்போதுதான் அவள் முதல்முறையாக தன்னை அரசியென உணர்ந்தாள்.

 

[ 21 ]

மதுவனத்தின் ஹ்ருதீகரின் கொடிவழிவந்த இளவரசி அவள் என இளமையிலேயே சொல்லப்பட்டிருந்தாலும் சுருதகீர்த்தி வாழ்ந்த ருதுவனம் என்னும் ஆயர்பாடியில் காடுகளில் கன்றோட்டியும் பால்கறந்தும் வெண்ணைதிரட்டி நெய்யுருக்கியும்தான் அவள் வளர்ந்தாள். இளவரசி என்னும் அழைப்பை ஒரு பெயர் என்றே அவள் உணர்ந்திருந்தாள். ஆயர்குல முறைமைகளுக்கு அப்பால் அரசச்சடங்குகளையோ அரண்மனைநடத்தைகளையோ அவள் அறிந்திருக்கவில்லை.

அவள் பெரிய தந்தையரான தேவவாகரும் கதாதன்வரும் ருதுவனத்தின் இளவேனில் விழவுக்கு வந்து உணவுக்குப் பின்னர் குடிமன்றின் சாணிமெழுகிய பெரிய திண்ணையில் படுத்து பனையோலை விசிறிகள் ஒலிக்க தளர்ந்த அரைத்துயில் குரலில் சொல்லாடிக்கொண்டிருக்கையில் அவள் முதல்முறையாக தான் ஓர் எளியபெண் அல்ல என்றும் தன்னைச்சூழ்ந்து அரசியல் அலையடிப்பதையும் அறிந்தாள்.

அவள் அருகிருந்த சிறிய வைப்பறைக்குள் ஒளிந்திருந்தாள். கண்டுபிடியாட்டத்தில் அவள் தோழிகள் அவளை அங்குள்ள புதர்களிலும் மரக்கிளைகளிலும் இல்லங்களிலும் தேடிக்கொண்டிருந்தனர். ஒலிகேட்டு அவள் எட்டிப்பார்த்து தந்தையர் படுத்திருப்பதை உணர்ந்து பின்னடைந்தாள். புரண்டு படுத்த தேவவாகர் “எளிதில் முடிவெடுக்கக் கூடியதல்ல அது, இளையோனே. நீ பெற்றிருப்பது ஒற்றை மகளை. உனக்கு மைந்தருமில்லை. யாதவமுறைப்படி மகளூடாகச் செல்வது கொடிவழி என்பதனால் அவளை கொள்பவன் உன் குடியை அடைகிறான்” என்றார்.

கிருதபர்வர் “ஆம், அதைத்தான் அத்தனைபேரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள அரசியலோ நாளும் மாறிக்கொண்டிருக்கிறது. நான் எம்முடிவையும் எடுப்பதாக இல்லை. நீங்களிருவரும் சொல்லுங்கள், செய்வோம்” என்றார். “பத்மாவதியின் மைந்தன் கம்சனைப்பற்றி கேள்விப்படுவன எவையும் நன்றாக இல்லை” என்று தொடர்பில்லாமல் கதாதன்வர் சொன்னார். “அவன் ஒரு விழியற்ற காட்டெருமை என்று ஒரு சூதன் சொன்னான். மிகச்சரியான சொல்லாட்சி அது. அவனுக்கு இருப்பது விழியின்மை மட்டுமே அளிக்கும் பேராற்றல்.”

கிருதபர்வர் “ஆம்” என்றார். கதாதன்வர் தொடர்ந்து “விழியற்ற காட்டெருமை பாறையை எதிரியென எண்ணி தன் தலையுடைத்துச் சாகும் என்றான் சூதன்” என்றார். “ஆனால் நாம் என்னதான் சொன்னாலும் இன்று யாதவர்களிடமிருக்கும் வலுவான அரசென்பது மதுரா மட்டுமே. மகதத்தின் படைக்கூட்டு இருக்கும் வரை ஷத்ரியர் எவராலும் வெல்லப்பட முடியாததாகவே அது நீடிக்கும்” என்றார் தேவவாகர். “ஆனால்…” என்று சொன்னபின் “ஒன்றுமில்லை” என்று கதாதன்வர் கையை வீசினார்.

“அதையெல்லாம் நாம் பார்க்கவேண்டியதில்லை. நாம் எளிய யாதவக்குடி அல்ல இன்று. அரசு என்று வந்துவிட்டால் பிறகெல்லாமே அரசுசூழ்தல்தான். நம் பெண்டிரின் மணம் என்பது இனி அவர்களின் நலனுக்குரியது அல்ல, நம் குடியின் நலம் சார்ந்தது மட்டுமே. அதை அவர்களும் உணர்ந்தாக வேண்டும்.” ஏதோ சொல்லவந்த தந்தையை தடுத்து “உண்மை, அவன் கொடியவன். ஆனால் வல்லமை மிக்கவன்” என்றார் தேவவாகர். கிருதபர்வர் “நான் சொல்லவருவது அதுவல்ல, மூத்தவரே, குந்திபோஜனின் எடுப்புமகள் பிருதையை கம்சன் மணக்கக்கூடும் என சொல்கிறார்களே?” என்றார்.

“அவன் அவ்வாறு விழைகிறான் என்கிறார்கள். அவன் கணக்குகள் அப்படிப்பட்டவை. அவனுடன் அமைச்சனாகவும் தோழனாகவும் இருப்பவன் பிருதையின் தமையன் வசுதேவன். யாதவர்களுக்கு இன்றிருக்கும் பிற மூன்று அரசுகள் உத்தரமதுராவின் தேவகனின் அரசு. குந்திபோஜனின் மார்த்திகாவதி. சூரசேனரின் மதுவனம். குந்திபோஜன் மகளை மணந்து வசுதேவனுக்கு தேவகன் மகளை மணம்புரிந்து உடன் வைத்துக்கொண்டால் நான்கு யாதவ அரசுகளும் இணையும் என்பது அவன் கணக்கு.”

“அவனுக்கு மகதமன்னன் பிருஹத்ரதரின் தங்கைமகளின் புதல்விகளை மணம்புரிந்து வைக்கப்போவதாக செய்தி உள்ளது” என்று தேவவாகர் சொன்னார். “ஆம், அது ஒரு அழியா முடிச்சு. ஆனால் அப்பெண்கள் அரசரின் நேரடிக்குருதியினர் அல்ல. பிருஹத்ரதரின் தந்தைக்கு சூத்திரப்பெண்ணில் பிறந்த மகளின் புதல்விகள். ஆஸ்தி, பிராப்தி என அவர்களுக்கு பெயர்.” கிருதபர்வர் “மகளை கம்சனுக்கு அளிக்க குந்திபோஜனுக்கு எண்ணமிருக்குமா?” என்றார்.

“கம்சனைப்பற்றி அவனும் அறிவான். அவன் மகள் அவனைவிட நன்கறிந்தவள்” என்றார் தேவவாகர். “அவள் ஒருநாள் பாரதவர்ஷத்தை முழுதாளும் பேரரசி ஆவாள் என நிமித்திகர் குறியுரைத்துள்ளனர். இந்த யாதவச்சிற்றரசனை மணந்து அவள் எப்படி பேரரசி ஆகமுடியும்?” கிருதபர்வர் “அவள் வயிற்றில் இன்னொரு கார்த்தவீரியன் பிறக்கலாகுமே? அவன் பாரதவர்ஷத்தை வென்று மணிமுடியை அவள் தலையில் கொண்டுவந்து வைக்கக்கூடும் அல்லவா?” என்றார்.

அச்சொற்கள் தலையைச்சுற்றி ரீங்கரிக்க அதன்பின் அவள் நிழலென உலவினாள். தோழியரிடமிருந்து விலகி தனிமையிலமர்ந்து கனவுகண்டாள். அக்கனவில் மதுராவின் கம்சன் முகமும் விழிகளும் நகைப்பும் குரலும் கனிவும் காதலும் கொண்டு எழுந்துவந்தான். அவனுடைய கொடுமைகுறித்த செய்திகளெல்லாம் ஆற்றல்குறித்தவை என அவளுக்குத் தெரிந்தன. அவனுடைய அறிவின்மை குறித்தவை வேடிக்கைகளென்றாயின. சின்னாட்களிலேயே அவள் அவனுக்கு மணமகளென்றாகி அகத்தே வாழ்ந்துகொண்டிருந்தாள்.

மார்த்திகாவதியில் பிருதையின் தன்மண நிகழ்வுக்கான செய்தி அறிந்ததும் அவள் கைகள் குளிர்ந்து நடுங்க கால்கள் தளர சுவருடன் சாய்ந்து நின்றாள். பேசிக்கொண்டிருந்த ஆய்ச்சியர் மேலும் மேலும் அக எழுச்சி கொண்டனர். பத்மை அத்தை “வேறெவர் வருவார்? சிறுகுடி ஷத்ரியர் வரக்கூடும். அவர்களில் கம்சரின் ஒரு கைக்கு இணையானவர் எவருமில்லை” என்றாள். “பிருதையை அவர் மணந்தால் மகதத்துடன் போர் வரும்… ஐயமில்லை” என்றாள் சுருதை மாமி. “போரில் கம்சர் வெல்வார்… அவர் கார்த்தவீரியனின் பிறப்பு” என்று முதுமகளாகிய தாரிணி சொன்னாள்.

கண்ணீருடன் சென்று தனித்தமர்ந்து தானறிந்த தெய்வங்களை எல்லாம் எண்ணி எண்ணி வேண்டிக்கொண்டாள். “அன்னையரே! அன்னையரே!” என அரற்றிக்கொண்டே இருந்தது உள்ளம். இரவெல்லாம் துயிலழிந்து மறுநாள் உலர்ந்த உதடுகளும் நிழல்பரவிய விழிகளுமாக எழுந்தாள். அவளுக்கு வெம்மைநோய் என்று அன்னை எண்ணி சுக்குநீர் செய்து அளித்தாள். இருளுக்குள் உடல்சுருட்டி படுத்துக்கொண்டு ஓசையின்றி கண்ணீர் விட்டாள். உள்நிறைந்த எடைமிக்க ஒன்று உருகி கண்ணீராக சேக்கையை நனைத்தது. மறுநாள் அவளால் எழவே முடியவில்லை. தன்னினைவில்லாது அவள் “காட்டெருமை! கொம்புகள்!” என்று பிதற்றிக்கொண்டிருந்தாள்.

அவளைச்சூழ்ந்து பெண்கள் நிறைந்திருந்தபோதிலும் தமையன் சக்ரகீர்த்திதான் அவள் உள்ளத்தை புரிந்துகொண்டான். அவளருகே அமர்ந்து அவள் கால்களின் சிலம்பை கையால் அசைத்து ஓசையெழுப்பியபடி மெல்லியகுரலில் “எதன்பொருட்டு துயருறுகிறாய் இளையோளே?” என்றான். யாதவரில் என்றுமே பெண்ணுக்கு அணுக்கமானவன் தமையனே. அவள் உளமுருகி அழத்தொடங்கினாள். “நீ கம்சரை எண்ணுகிறாயா?” என்றான். அவள் தன் ஆழம் வரை வந்த அவன் உள்ளத்தை உணர்ந்து திடுக்கிட்டாள். மறுகணமே ஆறுதல் கொண்டாள். ஆம் என தலையசைத்து சுருண்டு படுத்தாள்.

“அஞ்சாதே… நான் அனைத்தையும் ஒழுங்குசெய்கிறேன். அவளை கம்சர் மணந்தால்கூட நீ அவரை மணக்கலாம். பிருதை உன் தமக்கைதான்” என்றான். சீறி எழுந்து “சீ” என்றாள். அவள் உதடுகள் துடித்தன. “வேண்டாம்” என்று சொல்லி படுத்துக்கொண்டாள். அவன் அந்த எல்லைக்கும் அவளுடன் வந்து “ஆம், அதை உன்னால் ஏற்கமுடியாது. வேண்டியதில்லை. கம்சர் பிருதையை மணக்காமல் போனால் நீ மதுராவின் அரசியாவாய்” என்றான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. மீண்டும் அவள் கால்சிலம்பை அசைத்துவிட்டு அவன் எழுந்து அகன்றான்.

நான்காம்நாள் செய்திவந்தது, பிருதை அஸ்தினபுரிக்கு அரசியென சென்றுவிட்டாள் என்று. முதலில் அதை ஆய்ச்சியர் நம்பவில்லை. “யார்? அஸ்தினபுரியின் இளவரசனா?” என்று மாறிமாறி கேட்டுக்கொண்டிருந்தனர். பின்னர் அவனைப்பற்றிய செய்திகள் வரத்தொடங்கின. வெண்சுண்ணநிறமானவன் என்றனர். “அவ்வண்ணமென்றால் அவனால் தந்தையென்றாக முடியாது” என்றாள் மருத்துவச்சியான காரகை. “ஏன்?” என்று கேட்ட இளம்பெண்ணிடம் “எழுந்து போடி” என்று அவள் அத்தை சீறி அடிக்க கையோங்கினாள்.

“ஏன் அவனை தெரிவுசெய்தாள் பிருதை? மூடச்சிறுமகள்!” என்றாள் அவள் அன்னை. “சாத்வி, உனக்கு அவளை தெரியாது. அவள் எட்டுகைகளும் நூறுவிழிகளும் கொண்டவள், பிறவியிலேயே பேரரசி என்று சூதர்கள் பாடுகிறார்கள். அவள் பிறவிநூலில் பாரதவர்ஷத்தின் பேரரசியென முடிசூடுவாள் என்று எழுதப்பட்டுள்ளது என்கிறார்கள்.” யாரோ சிலர் சிரித்தனர். “அதை நம்பி இம்முடிவை எடுத்துவிட்டாள் போலும்… சூதர்கள் எழுதியபடி மானுடர் வாழ்கிறார்கள். மானுடர் வாழ்வதை சூதர் பாடுகிறார்கள்” என்றாள் பத்மை அத்தை. மீண்டும் சிரிப்பு எழுந்தது.

ஒரு முதுமகள் “உண்மைதானோ?” என்றாள். அனைவரும் அவளை திரும்பி நோக்கினர். “மூத்த இளவரசர் திருதராஷ்டிரர் விழியற்றவர். அப்படியென்றால் இப்பாண்டுவே அரசன். எண்ணிநோக்குக, யயாதியின் குலத்திற்கு யாதவப்பெண் அரசியாக செல்கிறாள். தேவயானியும் சத்யவதியும் அமர்ந்த அரியணையில் அமரவிருக்கிறாள். அவள் மைந்தர்கள் ஹஸ்தியும் குருவும் பிரதீபரும் சந்தனுவும் அமைந்த அரசநிரையில் எழுவார்கள். யாரறிவார், பரதனைப்போன்ற சக்ரவர்த்தி அவள் கருவில் விதையென உறங்கிக்கொண்டிருக்கக் கூடும்.” ஆய்ச்சியர் சொல்லிழந்து அமர்ந்திருந்தனர்.

அவள் அரையிருளில் மூலையில் அமர்ந்து அவ்விழிகளின் ஒளிப்புள்ளிகளை நோக்கிக்கொண்டிருந்தாள். மெல்லிய தசைநூல் ஒன்று அவளுக்குள் அறுபடுவது போல உணர்ந்தாள். வலியும் ஆறுதலும் கலந்த ஒன்று. அதன்பின் அவள் கம்சனைப்பற்றி எண்ணவில்லை. கம்சனைக் கடந்து மாலையுடன் செல்லும் பிருதையின் காட்சியை தன்னுள் எழுப்பிக்கொண்டாள். ஒவ்வொரு முறையும் மேலும் மேலும் தெளிவடைந்து நுணுக்கமாகியது அது. முதலில் படபடப்பை அளிப்பதாக இருந்தது மெல்ல மெல்ல உருமாறி உள்ளாழத்தில் இனிய சிலிர்ப்பை நிறைப்பதாக மாறியது.

சக்ரகீர்த்தி தந்தையிடம் பேசி கம்சருக்கு மணத்தூதனுப்ப அவரை ஒப்பவைத்ததையும் அச்செய்தியை அவர் யாதவர்களின் குடியவையில் முன்வைத்ததையும் மதுவனத்தின் சூரசேனர் அதை கடுமையாக எதிர்த்து கொந்தளித்ததையும் அவள் பின்னர்தான் அறிந்தாள். “தந்தையைச் சிறையிட்டு முடிசூடிய இழிமகனுக்கு மகள்கொடையளித்துத்தான் முடிப்பெருமை கொள்ளவேண்டுமா கிருதபர்வரே? நாணில்லையா  உமக்கு?” என்று அவர் கூவியபோது குங்குரர்களும் அந்தகர்களும் போஜர்களும் விருஷ்ணிகளும் “ஆம்! கீழ்மை!” என்று கூவியபடி எழுந்தனர்.

தேவவாகர் “பொறுங்கள்… இளையோனே பொறு. இது பெண்ணின் விழைவு. நம் யாதவக்குடிகளின் நெறிப்படி பெண்ணின் விழைவை எவரும் விலக்க இயலாது” என்றார். “மூத்தவரே, பெண் தன் குடிக்கு உரிமையானவள் என்றும் சொல்கிறார்கள்” என்றார் சூரசேனர்.  “எதற்கு வீண் சொல்லாடல்? அவள் வந்து இந்த அவைநின்று சொல்லட்டும், மதுராவின் அரசனுக்கு மணமகளாக விழைகிறாள் என்று…” என்றான் சக்ரகீர்த்தி. “ஆம், அதுவே முறை” என்றார் தேவவாகர்.

சக்ரகீர்த்தி அவள் இருந்த அறைக்குள் வந்து “இளையோளே, அவைபுகுந்து உன் விழைவை சொல். நீ யாதவப்பெண். உன் விழைவை மறுக்க பன்னிரு  யாதவரும் ஒருங்கே எண்ணினாலும் இயலாது” என்றான். அவள் பெருமூச்சுடன் ஆடைதிருத்தி எழுந்தாள். அவன் அவள் அருகே வந்தபடி “முன்பு பிருதை இதேபோன்ற தருணத்தில் எடுத்த முடிவால்தான் அவள் குந்திபோஜருக்கு மகளானாள்” என்றான்.

யாதவமன்று நடுவே சென்றுநின்ற கணம் வரை அவள் எம்முடிவும் எடுக்கவில்லை. கம்சனைப்பற்றிய எண்ணமேகூட அப்போதுதான் எழுந்தது. உடனே உடல் அருவருப்புடன் உலுக்கிக்கொண்டது. குனிந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த ஆழியைத் தொட்டு “நான் யாதவப்பெண். யாதவக்குலமன்றுக்கு முழுமையாக கட்டுப்பட்டவள். கம்சரை விலக்குகிறது இந்த அவையென்றால் அது என் கடமை” என்றாள். திரும்பி தந்தையரையும்  சூரசேனரையும்  அக்ரூரரையும் வணங்கிவிட்டு தமையனின் கண்களை நோக்கினாள். அதில் தெரிந்த திகைப்பைக் கடந்து அப்பால் சென்றாள். அவன் அவளை தொடர்ந்து வரவில்லை. அவள் மெல்ல தனக்குள் புன்னகைத்துக்கொண்டாள்.

சிலநாட்களிலேயே கம்சன் மகதத்தின் ஜராசந்தனின் இரு குலமுறை மகள்களை மணந்துகொண்ட செய்தி வந்தது. மகதத்தின் முடிசூடி அமர்ந்த பிருஹத்ரதரின் மைந்தன் ஜராசந்தன் போரில் கணவனை இழந்த தன் முறைப்பெண்ணின் புதல்வியரை குலமுறைப்படி புதல்வியராக ஏற்றான். அவர்கள் சூத்திரக்குருதிகொண்டவர்கள் என்றாலும் ஜராசந்தன் பிராப்தியையும் ஆஸ்தியையும் மகதத்தின் முதன்மை இளவரசிகளாக அறிவித்தான். அரசமுறைமைப்படி நிகழ்ந்த மணம் கம்சனை மகதத்தின் மணவுறவுநாட்டின் அரசனென நிலைநிறுத்தியது.

அதன்பின் அவள் அவ்வெண்ணங்களை முழுமையாகவே தன் உள்ளத்திலிருந்து விலக்கிக்கொண்டாள். மீண்டும் இடைச்சியென்றாக முயன்றாள். பால்கறக்கவும் சாணியள்ளவும் கன்றுமேய்க்கவும் புல்லரியவும் சென்றாள். செயல்கள் மெல்ல உள்ளத்தை மாற்றும் விந்தையை உணர்ந்தாள். சிலநாட்களிலேயே அவையெல்லாம் பொய்க்கதையாய் பழையநினைவாய் மாறின. அவள் உலகில் அன்றைய ஆபுரத்தல் மட்டுமே எஞ்சியது. உடல் மீண்டும் உரம் கொண்டது. உள்ளம் அதில் செழித்து அமைந்தது.

தமகோஷரின் மண ஓலை அவள் தந்தையை வந்தடைந்த செய்தி அவளுக்கு எந்த எழுச்சியையும் உருவாக்கவில்லை. தேவவாகர் “அவன் அரசனே அல்ல. அவனிடமிருப்பவர்கள் நாநூறு படைவீரர்கள். அவன் வாழ்வது நூற்றியெட்டு வீடுகள் கொண்ட மண்கோட்டைக்குள். முடிகொண்டு ஆண்ட அரசனின் மைந்தன் என்பதற்கு அப்பால் அவனிடம் நாம் கருதுவதொன்றுமில்லை” என்றார். கதாதன்வர் “நாம் படையளிப்போம். நம் மூவரின் படைகள் சென்றால் சூக்திமதியை வெல்லமுடியும்… ஆனால் அவன் வாக்களிக்கவேண்டும், நம் குலமகள் அரசியாகவேண்டும்” என்றார்.

அரசி என்னும் சொல் அப்போது அவளுக்குள் முற்றிலும் பொருளிழந்திருந்தது. மணமாகிப்போனால் தன் கன்றுகளை பிரியவேண்டுமே என்னும் எண்ணமே எழுந்தது. அவளுடைய பசு ஆதிரை தன் முதல் கன்றை ஈனும் நிலையிலிருந்தது. அதைப்பற்றியன்றி அவள் எதையும் எண்ணவில்லை. ஓரிருநாட்களிலேயே அனைத்தும் முடிவாயின. சிறியதொரு குழுவுடன் வந்த தமகோஷர் அவளுக்கு மலராடை அளித்து கருகுமணி சூட்டி மாலையிட்டு மணமகளாக்கிக்கொண்டார். அவர் தன்னைவிட இருமடங்கு வயதானவர் என்பதை அவள் அந்த மலராடையை பெறும்போதுதான் பார்த்தாள். அப்போதிருந்த பதற்றத்தில் அது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

ஒரே வாரத்தில் யாதவப்படை கிளர்ந்துசென்று சூக்திமதியை கைப்பற்றியது. தமகோஷர் அதன் அரசராக முடிகொண்டார். அவளை அழைத்துச்செல்ல சூக்திமதியிலிருந்து அகம்படிப்படையும் பல்லக்குகளும் வந்தன. ருதுவனத்தை நீங்கும்போது ஆதிரையின் உடல்நிலை குறித்து மட்டுமே பேசிக்கொண்டிருந்தாள். “அன்னையே, அவள் எப்படி இருக்கிறாள் என எனக்கு செய்தியறிவியுங்கள்” என்று சொன்னபோது “போடி, கன்றுகளை கட்டிக்கொண்டு வாழ்ந்த வாழ்க்கை போதும். இனி நீ அரசி” என்றாள் அன்னை. அவள் “அன்னையே, அவளைப்பற்றி சொல்லியனுப்புங்கள்… மறந்துவிடாதீர்கள்” என்று பல்லக்கிலேறி திரைமூடும் கணம் வரை சொல்லிக்கொண்டிருந்தாள்.

சூக்திமதியின் தெருக்களினூடாக பிடியானை மேல் அமர்ந்து கையில் மலர்நீர்க் குடத்துடன் சென்றுகொண்டிருக்கையில் மெல்ல மெல்ல அவள் வளர்ந்துகொண்டிருந்தாள். மிகத்தொலைவில் ஒரு சிறுபுள்ளியெனத் தெரிந்த பறவை சிறகும் அலகும் உகிரும் கொண்டு பெருகியணுகுவதுபோல. பிறகு பலநூறுமுறை அந்தப் பயணத்தை அவள் கணம் கணமாக நினைத்ததுண்டு. அன்று யானை எடுத்துவைத்த ஒவ்வொரு காலடியையும் அவளால் தன் உடலதிர்வாக அப்போது உணரமுடியும். சூழ்ந்தொலித்த வாழ்த்துக்களை, மங்கல இசையை, சிரிக்கும் முகங்களை சித்தத்திலிருந்து முடிவிலாது சுருளவிழ்த்து நீட்டிக்கொண்டே இருக்கமுடியும்.

அப்போது அவள் உள்ளத்தில் தமகோஷர் ஒரு கணமும் எழவில்லை. அன்னையோ தந்தையோ அவள் விட்டுவந்த ருதுவனமோ கிளம்பும் கணம் வரை பதைப்புடன் எண்ணிக்கொண்ட பசுவோ அவளுக்குள் இருக்கவில்லை. அவள் குந்தியையும் கம்சனையும் மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தாள். அக்கூட்டத்தில் மின்னிய ஒரு முகம் குந்தியாகியது. நெஞ்சு அதிர விழி சலித்தபோது கம்சனை கண்டாள். பின்னர் மீண்டும் மீண்டும் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தாள். இருவரையும் நேரில் கண்டதேயில்லை என்னும் எண்ணம் பின்னர் எழ சிரித்துக்கொண்டாள்.

அரண்மனை முற்றத்தில் சென்றிறங்கியபோது அவள் நோக்கும் உடலசைவும் முழுமையாக மாறிவிட்டிருந்தன. சபரி துதிக்கையை மேலே சுழற்றித்தூக்க அதன் மீது காலெடுத்துவைத்து இறங்கி தரையில் நின்று அதன் சிறிய கொம்பைப் பற்றியபடி நடந்து அரண்மனைமுகப்பில் நின்ற அணிச்சேடியரை நோக்கி சென்றாள்.

மங்கல இசை அவளைச்சூழ்ந்து எழுந்தது. தமகோஷரின் தமக்கையான பார்வதி அவள் நெற்றியில் செம்மஞ்சள் குறியிட்டு அரிமலர்தூவி வாழ்த்தினாள். மஞ்சள்நீரில் காலாடி அவர்கள் அளித்த நிறைநாழியும் குத்துவிளக்கும் ஏந்தி அரண்மனைவாயிலைக் கடந்தபோது தனக்குப்பின்னால் சபரி மட்டுமே காதசைய நின்றிருப்பதாக உணர்ந்தாள். அது அகன்று பரவி இருட்டாகி இரவாகி நகரை மூடியது.