மாதம்: மே 2016

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 67

[ 8 ]

துரியோதனன் கர்ணனுடன் தனியாக வருவதை படகில் ஏறியபின்னரே  விதுரர் அறிந்தார். பறவைச்செய்திகள் வழியாக ஒற்றர்களுக்கு செய்தி அறிவித்து இருவரும் வரும் பாதையை கண்காணிக்க வைத்தார். புறாக்கள் படகிலேயே திரும்பி வந்து அவர்களின் பயணத்தை காட்டின. விரித்த தோல்வரைபடத்தில் செந்நிற மையால் இருவரும் வரும் வழியை அவர் அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார்.

கௌரவர்கள் படகில் ஏறிய போதே தனிமையும்  துயரும் கொண்டிருந்தனர். இந்திரப்பிரஸ்தத்திற்குள் நுழைந்த போதும் ராஜசூய வேள்வியின் போதும் இருந்த கொண்டாட்டமும் சிரிப்பும் முழுமையாக மறைந்திருந்தன. சிசுபாலனின் இறப்புக்கு என்ன பொருள் என்று அவர்கள் அனைவருமே அறிந்திருந்தனர்.

துச்சாதனன் விதுரரின் அருகிலேயே  இருந்தான். “தனித்து வருகிறார்கள், அமைச்சரே. நான் அரசரை விட்டுவிட்டு வந்திருக்கக்கூடாது” என்று அவன் நிலையழிந்தவனாக சொன்னான். படகின் வடங்களைப் பற்றியபடி  இருமுனைகளுக்கும் பதற்றத்துடன் நடந்து கொண்டிருந்தான். பெரிய கைகளை ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டு “அவர்கள் உடலை எவரும் மறைக்க முடியாது. அவரை அறியாத எவரும் அப்பாதையில் இருக்க வாய்ப்பில்லை” என்றான்.

விதுரர் “அவர்களை எவரும் ஒன்றும் செய்துவிட முடியாது” என்றார். “வேண்டுமென்றால் செய்யலாம்” என்று உரக்கச் சொன்னபடி அவர் அருகே வந்தான். “எதிரிப்படை ஒன்று அவர்களை சிறையெடுத்தால் என்ன செய்வோம்?” என்றான். விதுரர் “அவ்வாறு செய்வதற்கு பாரதவர்ஷத்தில் முறைமை ஒப்புதல் இல்லை” என்றார். “முறைமைப்படியா இங்கு அனைத்தும் நடைபெறுகின்றன?” என்று துச்சாதனன் சினத்துடன் சொன்னான். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசரே அதை செய்யக்கூடும் என்று நான் ஐயுறுகிறேன். அவர்களை நச்சு அம்பு எய்து கொன்றுவிட்டு அப்பழியை நிஷாதர்கள் மேல் போடலாம். நெருப்பு வைத்து எரித்துவிட்டு நான்கு வேடர்களைக் கழுவேற்றி முடித்துக் கொள்ளலாம்.”

விதுரர் சினத்துடன் “இதை என்னிடம் பேசவேண்டியதில்லை” என்றார். “நான் அப்படி எண்ணுகிறேன். அதைப் பேசுவதிலிருந்து தடுக்க எவராலும் முடியாது” என்று துச்சாதனன் கூவினான். “அங்கு அவையில் ஒன்று தெரிந்தது. இந்திரப்பிரஸ்தத்திற்கு இனி பாரதவர்ஷத்தில் தடை என்பது அஸ்தினபுரி மட்டுமே. எங்களை அகற்ற அவர்கள் எதுவும் செய்வார்கள்…” விதுரர் ஒன்றும் சொல்லாமல் தன் வரைபடத்தை சுருட்டிக் கொண்டு உள்ளே சென்றார். அவருக்குப் பின்னால் துச்சாதனன் சினம் கொண்டு உறுமுவது கேட்டது.

அஸ்தினபுரி படித்துறையில் படகுகள் நின்றபோது கௌரவர்கள் ஒவ்வொருவராக இறங்கி தலைகுனிந்து ஒருவருக்கொருவர் ஒரு சொல்லும் உரைக்காமல் தேர்களை நோக்கி சென்றனர். விதுரர் இறங்கி  ஒருகணம்  திரும்பி அம்பையின் ஆலயத்தை பார்த்தார். அன்று காலை அணிவிக்கப்பட்ட செந்நிற மலர் ஆரம் சூட்டப்பட்டு நெய்யகல் சுடரின் ஒளியில் பெரிய விழிகளுடன் அன்னை அமர்ந்திருந்தாள். அவர் திரும்பி ஆலயத்தை நோக்கி நடக்க கனகர் அவருக்குப் பின்னால் வந்து “சொல்லியிருந்தால் பூசகரை நிற்கச் சொல்லியிருப்பேன்” என்றார். விதுரர் வேண்டாம் என்பது போல் கையசைத்துவிட்டு ஆலயத்திற்கு முன் சென்று நின்றார்.

காவல்நிலையிலிருந்து காவல்நாயகம் ஓடி வந்து பணிந்து  “பூசகர் காலையிலேயே சென்றுவிட்டார். இங்கே குகர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் பூசை செய்கிறார்கள். முதிய பூசகன் ஒருவன் படகில் இருக்கிறான். தாங்கள் விரும்பினால் அவனை வரவழைத்து மலரும் நீரும் சுடரும் காட்டச் சொல்கிறேன்” என்றார். விதுரர் சரி என்று தலையசைத்தார். காவல்நாயகம் இடைகழியினூடாக  ஓடினார்.

சிறிது நேரத்திலேயே நீண்ட புரிகுழல்கள் தோள்களில் பரவியிருக்க சிவந்த பெரிய விழிகளும் நரம்புகள் இறுக்கிக் கட்டப்பட்ட எலும்புக்குவை போல மெலிந்த உடலும் கொண்ட முதியகுகன் வந்து நின்றார். விதுரரை அவர் வணங்கவில்லை. “நிருதரின் குலத்தின் முதன்மைப்பூசகர் இவர். இன்று முதற்கலமொன்று நீரில் இறங்குவதனால் அதில் ஏறி வந்திருக்கிறார்” என்றார் காவல்நாயகம். விதுரர் “பூசகரே, அன்னைக்கு மலர் நீராட்டு காட்டுங்கள்” என்றார்.

பூசகர் கால் வைத்து ஆலயத்திற்குள் ஏறியபோது மெலிந்திருந்தாலும் அவர் உடல் மிகுந்த ஆற்றல் கொண்டது என்று தெரிந்தது. கைகள் தோல்வார் முறுக்கி முடையப்பட்டவை போலிருந்தன. தண்டு வலித்து காய்த்த பெரிய விரல்கள். காகங்களின் அலகு போல நீண்ட நகங்கள். குகன் கங்கைக்கரையோரமாகவே சென்று காட்டு மலர்களை ஒரு குடலையில் பறித்துக்கொண்டு வந்தார். மரக்கெண்டி எடுத்து சிறிது கங்கை நீரை அள்ளி வந்தார். நெய்யகலில் இருந்து சுற்றி விளக்கொன்றை பற்றவைத்துக் கொண்டு மலரிட்டு நீர் தெளித்து சுடர் சுழற்றி அவர் பூசனை செய்வதை கூப்பிய கைகளுடன் விதுரர் நோக்கி நின்றார். அன்னையே என்று எண்ணியபோது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழியத்தொடங்கியது. கனகர் அவர் முகத்தை நோக்கியபடி சற்று தள்ளி கைகூப்பி நின்றார்.

சுடரை குகன் தன் முன் நீட்டியபோது தன்னால் கைநீட்டி அதை தொட முடியாது என்று விதுரர் உணர்ந்தார். “சுடர், அமைச்சரே!” என்றார் கனகர். “ஆம்” என்றபடி விழித்தெழுந்து கைநீட்டி சுடரைத் தொட்டு கண்களிலும் நெற்றியிலும் சூடினார். பூசகர் அளித்த மலரை வாங்கி தன் சென்னியில் வைத்தபின் மீண்டும் அன்னையை தலைவணங்கிவிட்டு திரும்பி நடந்தார். சுடர் வணங்கி மலர் கொண்டு கனகர் அவருக்குப் பின்னால் வந்தார்.

நகர் நுழைந்து அரண்மனைக்கு வரும்வரை விதுரர் தேரில் உடல் ஒடுக்கி கலங்கிய கண்களுடன் சொல்லின்றி அமர்ந்திருந்தார். நகரமே அவர்களின் உணர்வுகளை அறிந்துகொண்டதுபோல் இருந்தது. எங்கும் வாழ்த்தொலிகள் எழவில்லை. கௌரவர்களின் நகர்நுழைவை அறிவிப்பதற்காக முரசொலி மட்டும் முழங்கி அமைய வீரர்களின் முறைமைசார்ந்த வாழ்த்துக்குரல்கள் மட்டும் ஒலித்து ஓய்ந்தன. அரண்மனைக்குச் சென்றதுமே அமைச்சுநிலைக்குச் சென்று அதுவரை வந்து சேர்ந்த அனைத்து ஓலைகளையும் அடுக்கிப் பார்த்தார்.

கனகர் “பாதிவழி வந்துவிட்டனர்” என்றார். விதுரர் ஆம் என தலையசைத்தார். கனகர் “ஏன் புரவியில் வரவேண்டும் அத்தனை தொலைவு?” என்றார். விதுரர் “புரவி அவர்களுக்கு தேவைப்படுகிறது போலும்” என்றார். அவர் சொல்வது புரியாமல் கனகர் “நெடுந்தூரம். புரவியில் வருவது பெரும் அலுப்பு” என்றார். “அவர்களின் உடல் களைத்து சலிக்கட்டும். அப்போதுதான் உளம் சற்றேனும் அடங்கும்” என்றார் விதுரர். “அவர்களின் வருகை பற்றிய செய்தியைப் பெற்று அடுக்கி வையுங்கள். நான் இல்லத்திற்கு சென்றுவிட்டு வருகிறேன்” என்றார்.

அவரது இல்லத்தில் நுழையும்போதே முதன்மைச்சேடி அருகணைந்து “அன்னை நோயுற்றிருக்கிறார்” என்றாள். அவள் அவருக்காக காத்திருந்தாள் என்று தெரிந்தது. “என்ன நோய்?” என்று விதுரர் கேட்டார். “நேற்றிலிருந்து தலைவலி உள்ளது” என்றாள். விதுரர் “மருத்துவச்சி வந்து பார்த்தாளா?” என்று கேட்டார். “ஆம். இருமுறை வந்து பார்த்தார்கள்” என்று சொன்னபடி அவருக்குப் பின்னால் சேடி வந்தாள். “அரசர் இன்னும் நகர்புகவில்லை. நான் இன்றிரவு அமைச்சுநிலையில்தான் இருப்பேன்” என்றபடி அவர் தன் அறைக்கு சென்றார்.

விரைந்து நீராடி உடை மாற்றி அமைச்சுநிலைக்கே மீண்டார். வீட்டிலிருந்து கிளம்புகையில் அவர் பின்னால் வந்த சேடியிடம் “மருத்துவச்சி என்ன சொன்னாள் என்பதை அமைச்சுநிலைக்கு வந்து என்னிடம் சொல்” என்று திரும்பிப் பாராமலே சொல்லிவிட்டு தேர் நோக்கி நடந்தார். துச்சாதனன் அவருக்காக அமைச்சுநிலையில் காத்திருந்தான். “அவர்களுக்கு ஏதாவது படைபாதுகாப்பு செய்யப்பட்டிருக்கிறதா, அமைச்சரே?” என்றான். “படைபாதுகாப்பு செய்வதுதான் பிழை. அரசருக்கு அது தெரிந்தால் சினம் கொள்வார்” என்றார் விதுரர்.

துச்சாதனன்  “அவர்கள் தனித்து வருகிறார்கள் என்பதை எண்ணாது ஒருகணம்கூட இருக்கமுடியவில்லை. எங்கும் அமரமுடியவில்லை” என்றான். கைகளை முறுக்கியபடி அறைக்குள் எட்டுவைத்து  “நான் வேண்டுமென்றால் சென்று அவர்களுடன் வருகிறேனே” என்றான்.  “நீங்கள் செல்வதற்குள் அவர்கள் அஸ்தினபுரியை அணுகிவிடுவார்கள்” என்றார் விதுரர். “என்ன செய்வது? ஏதாவது ஒன்று நிகழ்ந்துவிட்டால்…” என்று துச்சாதனன் முனகினான். “நான் பாரதவர்ஷத்தின் அரசர்களை நம்புகிறேன். அஸ்தினபுரியின் அரசரையும் அங்கரையும் அதைவிட நம்புகிறேன்” என்றபின் விதுரர் சுவடிகளை பார்க்கத் துவங்கினார்.

அன்றிரவு அமைச்சுநிலையிலேயே சாய்ந்த பீடத்தில் அமர்ந்து சற்று துயின்றார். காலையில் அஸ்தினபுரியின் எல்லைக்குள் இருவரும் நுழைந்துவிட்ட செய்தி வந்து அவரை சற்று எளிதாக்கியது.  சுருதையின் நிலை பற்றி சேடி வந்து சொன்ன செய்தியை அவர் நினைவுறவேயில்லை. மீண்டும் தன் இல்லத்திற்கு ச்சென்றபோது அவரைக் காத்து சேடி வாயிலில் நின்றிருந்தாள். “உடல்நிலை எப்படி இருக்கிறது?” என்றார் விதுரர். “தலைவலி நீடிக்கிறது” என்றாள் அவள் சற்று சலிப்புடன்.

அதை உணராமல் “உடல் வெம்மை இருக்கிறதா?” என்றார். “சற்று இருக்கிறது” என்றாள். “நான் வந்து பார்க்கிறேன்” என்றபின் தன் அறைக்கு சென்றார். மஞ்சத்தில் அமர்ந்து இந்திரப்பிரஸ்தத்திற்குச் சென்ற நிகழ்வுகளை விழிகளுக்குள் ஓட்டினார். பின்பு எழுந்து சுவடி அறைக்குள் சென்று சுவடிகளை எடுத்துவந்து குந்திக்கும் சௌனகருக்கும் இரு நீண்ட ஓலைகளை எழுதினார். அவற்றை குழலிலிட்டு தன் ஏவலனிடம் கொடுத்தார். “இவை இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்ல வேண்டும். மந்தணச்செய்திகள். கனகரிடம் சொல்” என்றார்.

அச்செய்திகளை சீராக எழுதி முடித்ததுமே தன் உளக்கொந்தளிப்புகள் அனைத்தும் ஒழுங்கு கொண்டுவிட்டன என்று தோன்றியது. உடல் துயிலை நாடியது. மஞ்சத்தில் படுத்ததுமே துயின்றார். உச்சிவெயில் ஆனபிறகுதான் விழித்துக் கொண்டார். அப்போது கனகர் அவரைத் தேடி வந்திருந்தார். “அரசர் அணுகிக் கொண்டிருக்கிறார்” என்று சொன்னார்.

துயிலில் இருந்து எழுந்து அமர்ந்தபோது அதுவரை நிகழ்ந்த எவற்றையும் அவரால் தொகுத்துக்கொள்ள முடியவில்லை. துயிலுக்குள் அவர் சத்யவதியின் அவையில் அமர்ந்திருந்தார். சத்யவதி மகத அரசைப்பற்றி கவலையுடன் பேசிக்கொண்டிருக்க தாடியை நீவியபடி புன்னகையுடன் அவள் உணர்ச்சிகளை நோக்கிக் கொண்டிருந்தார். கனகரை அவ்வுலகுக்குள் கொண்டு செல்ல முடியாமல் திகைத்தபின் எழுந்து சால்வையை தோளில் இட்டபடி “என்ன செய்தி?” என்றார்.

“தங்களை பேரரசர் சந்திக்க விழைகிறார். தாங்கள் வந்துவிட்டீர்களா என்று கேட்டு இருமுறை செய்தி வந்தது” என்றார் கனகர். விதுரர் “அரசர் இன்னும் நகர்புகவில்லை என்று அவருக்குத் தெரியுமா?” என்றார். “தெரியும். அதை சஞ்சயனிடமே கேட்டு அறிந்துவிட்டார்” என்றார். “பீஷ்மபிதாமகர் படைக்கலச் சாலையிலேயே இருக்கிறார். அவரும் இன்று காலை அரசர் நகர் புகுந்துவிட்டாரா என்று இருமுறை தன் மாணவனை அனுப்பி கேட்டார்” என்றார்.

விதுரர் நிலையழிந்தவராக “என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை” என்றார். பின்பு “காந்தார அரசரும் கணிகரும் என்ன செய்கிறார்கள்?” என்றார். “அவர்கள் இருவரும் வழக்கம்போல நாற்களத்தின் இருபக்கங்களிலாக அமர்ந்துவிட்டார்கள்” என்றார் கனகர். “இங்கு என்ன நிகழ்கிறது என்று அறிய அந்நாற்களத்தைத்தான் சென்று நோக்கவேண்டும்” என்று விதுரர் சொன்னார். அவர் சொன்னது விளங்காமல் கனகர் நோக்க “நான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். பேரரசரிடம் சென்று சொல்லுங்கள்” என்றார்.

விதுரர் நீராடி ஆடையணிந்து அரண்மனையை சென்றடைந்தபோது அவருக்காக கனகர் காத்து நின்றிருந்தார். “தாங்கள் வந்ததும் அழைத்து வரும்படி பேரரசர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார். “எதற்காக என்று உணரமுடிகிறதா?” என்றார் விதுரர். “சினம் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. கடும் சினம் கொண்டால் இசை கேட்காமல் முற்றிலும் அசைவின்றி அமைந்துவிடுவார். அதை அறிந்தவர்கள்போல சூதர்களும் பிறரும் அவரை அணுகுவதில்லை. சஞ்சயன் கூட அவர் கைக்கு எட்டாத தொலைவில் நின்று கொண்டிருக்கிறான். விப்ரர் ஒருவரே அவரை அணுக முடிகிறது” என்றார் கனகர்.

[ 9 ]

திருதராஷ்டிரரின் இசையவைக்குள் நுழையும்போதே விதுரர் தன் நடையை எளிதாக்கி முகத்தை இயல்பாக்கிக் கொண்டார். உள்ளம் உடல் அசைவுகளில் வெளிப்படுகிறது என்றும், உடல் அசைவுகள் காலடி ஓசையில் ஒலிக்கின்றன என்றும், ஒலியினூடாக உணர்வுகளை திருதராஷ்டிரரால் அறிந்துவிட முடியும் என்றும் அவர் பலமுறை அறிந்திருக்கிறார். முகத்தில் ஒரு புன்னகையை செயற்கையாக உருவாக்கிக் கொண்டால் சற்று நேரத்திலேயே உள்ளம் அதை நம்பி நடிக்கத் தொடங்கிவிடும் என்பதையும், அது உடலை ஏமாற்றிவிடும் என்பதையும் கற்றிருந்தார்.

ஓசைகள் ஒவ்வொன்றும் துல்லியமாக ஒலிக்கும் வகையில் அமைந்திருந்த திருதராஷ்டிரரின் இசைக்கூடம் அவரது காலடியோசையை சுட்டு விரலால் குறுமுழவின் தோல்வட்டத்தை தொட்டது போல் எழச் செய்தது. எதிரொலிகளே இல்லாமல் தன் காலடி ஓசையை அவர் அங்குதான் கேட்பது வழக்கம். தன் வலக்காலைவிட இடக்கால் சற்று அதிகமாக ஊன்றுவதையே அவர் அங்குதான் முன்பு அறிந்திருந்தார். திருதராஷ்டிரரின் அருகே சென்று வணங்கி பேசாமல் நின்றார்.

யானை போல தன் உடலுக்குள்ளேயே உறுமல் ஒன்றை எழுப்பிய திருதராஷ்டிரர் மெல்ல அசைந்தபோது அவர் உடல் முழுக்க பரவி இழுபட்டு இறுகியிருந்த பெருந்தசைகள் மெல்ல இளகி அமைந்தன. அவர் மேல் சுனைநீர்ப் பரப்பில் இளங்காற்று போல அவ்வசைவு கடந்து சென்றது. விதுரர் “அரசர் நகரை அணுகிக் கொண்டிருக்கிறார்” என்றார். மீண்டும் திருதராஷ்டிரர் உறுமினார்.

“தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாமே? நீண்ட பயணத்திற்குப் பிறகு…” என்று விதுரர் சொல்லத்தொடங்க “அவன் அவையிலிருந்து கிளம்பும்போதே பார்த்தேன். அவனை நான் அறிவேன்” என்று திருதராஷ்டிரர் பேசத்தொடங்கினார். விதுரர் அவர் எதை சொல்லப்போகிறார் என்று அறியாமல் நிமிர்ந்து அவர் உடலை பார்த்தார். கழுத்தின் இருபக்கமும் இருபாம்புகள் போல நரம்புகள் புடைத்து நெளிந்தன. “அவன் காலடியோசையிலேயே அவன் உடலைக் கண்டேன். அவன் என்ன எண்ணுகிறான் என்று எனக்குத் தெரியும்.”

“அவர் வரட்டும், நாம் பேசிக் கொள்வோம்” என்றார் விதுரர். “அவனைக் கட்டுப்படுத்தும் மறுவிசையாக இருந்தவன் மூத்தவன். இன்று அவனும் இவனும் ஒன்றென இணைந்து கொண்டுள்ளனர். அவர்களை இன்று எவரும் கட்டுப்படுத்த முடியாது. நீயோ நானோ கூட” என்றார் திருதராஷ்டிரர். “பீஷ்மர் ஒருவரே அதை செய்ய முடியும். பிதாமகரிடம் சென்று சொல்…! அதற்காகவே உன்னை வரச்சொன்னேன்.”

விதுரர் “ஆம், நானும் அதையே எண்ணுகிறேன்” என்றார். “ஆனால் அவர் வரட்டும் என்று எண்ணுகிறேன்.” திருதராஷ்டிரர் “அவன் வரவேண்டியதில்லை. அவன் என்ன எண்ணிக்கொண்டு வருகிறான் என்று எனக்குத் தெரியும்” என்றார். அதுவரை தாழ்ந்திருந்த அவர் குரல் வெடித்ததுபோல் மேலோங்கியது. “என் விழிமுன் மைந்தருக்கிடையில் ஒரு பூசலை ஒருபோதும் ஒப்ப மாட்டேன். இங்கொரு ராஜசூயமோ அஸ்வமேதமோ நிகழ்த்த அவன் எண்ணுவானென்றால் அதில் பேரரசனாக நான் வந்து அமரப்போவதில்லை. என்னைத் தவிர்த்துவிட்டு அதை அவன் செய்யமுடியலாம். ஆனால் பீஷ்மரும் ஒப்பவில்லை என்றால் இங்கு அது நிகழாது” என்றார்.

“இப்போது அதற்கான எண்ணம் அவருக்கு இருக்கும் என்று நான் எண்ணவில்லை. அவர் உள்ளம் எதையேனும் எண்ணி கொந்தளித்துக் கொண்டிருக்கக்கூடும். சிலநாட்கள் இங்கு வந்து இங்குள்ள சூழ்நிலைகளை அறிந்துகொள்ளும்போது மெல்ல அடங்கும்” என்றார் விதுரர். திருதராஷ்டிரர் திரும்பி “இன்று முழுக்க அதைப்பற்றித்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஒருவேளை அவன் அன்னை அவனை கட்டுப்படுத்த முடியுமா அல்லது அவன் துணைவி அவனை கட்டுப்படுத்த முடியுமா என்று. முடியாதென்றே தோன்றுகிறது. அவனை உள்ளிருந்து எதுவும் இனி நிறுத்தாது” என்றார்.

“இன்று அவனுக்குத் தளையாக இருக்கக்கூடியது புறத்தடைகளே. இன்று அது ஒன்றே ஒன்றுதான். இந்நகரின் குடிகளின் மேல் முதல் ஆணையிடும் நிலையிலிருக்கும் பீஷ்மபிதாமகரின் சொல். அதுவுமில்லை எனில் அவன் பித்தன் கையில் வாள் போலத்தான்.” திருதராஷ்டிரர் இரு கைகளையும் விரித்தார். “விதுரா! மூடா! இன்று எனக்கு ஏனோ உள்ளம் நடுங்குகிறது. அவன் பிறந்தபோது நிமித்திகர் சொல்லெழுந்ததை நினைவுகூர்கிறாயா? அவன் இக்குலம் அழிக்கும் நஞ்சு என. பாதாள தெய்வங்களில் ஒன்று அவன் வடிவில் வந்து ஹஸ்தியின் நகரை எரித்தழிக்கப்போகிறது என. அவன் கலியின் வடிவம் என்றனர்.”

“நான் அதை அன்றே மறக்க விழைந்தேன். மறப்பதற்குரிய அனைத்தையும் செய்தேன். மறந்தும்விட்டேன். ஆனால் என் கனவுகளில் அவன் எப்போதும் அவ்வாறுதான் வந்து கொண்டிருந்தான்.” அவர் கைகாட்டி “இவ்வறைக்கு வெளியே உள்ள சோலைகளில் எங்கும் ஒரு காகம் கூட கரையலாகாது என்று ஆணையிட்டிருக்கிறேன். அறிந்திருப்பாய். காகத்தின் குரல் எனக்கு என்னில் எழும் இருண்ட கனவுகளை நினைவுறுத்துகிறது. நீ என்ன நினைக்கிறாய்? உண்மையிலேயே அவன் கலியின் வடிவம்தானா? சொல்…!” என்றார்.

விதுரர் “இனி அதைப்பற்றிப் பேசி என்ன?” என்றார். “அவன் கலியின் வடிவம் என்றால் கலியை உருவாக்கியவன் நான் அல்லவா? அப்படியென்றால் நான் யார்? ஹஸ்தியின் குலத்தை அழிக்கும் மைந்தனைப் பெற்றேனா? அவனைப் பெருக வைப்பதற்குத்தான் விழியிழந்தவனாக வந்தேனா?” விதுரர் “வீண் எண்ணங்களில் அலைய வேண்டாம், பேரரசே. நான் அரசரிடம் பேசுகிறேன். உண்மை நிலை என்னவென்று உணர்த்துகிறேன். அவர் அதைக் கடந்து வந்துவிட முடியும் என்று எண்ணுகிறேன்” என்றார்.

“நான் துயில் இழந்திருக்கிறேன், விதுரா! இசை கேட்க முடியவில்லை. இசை கேட்காத போது எனது ஒவ்வொரு நாளும் நீண்டு நீண்டு நூறு மடங்காகிவிடுகிறது. ஒவ்வொரு எண்ணமும் இரும்பென எடைகொண்டு என்மேல் அமர்ந்திருக்கிறது” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “நான் சூதர்களை வரச்சொல்கிறேன்” என்றார் விதுரர். “வேண்டாம். சற்று முன்னர்கூட ஒரு சூதன் இங்கு வந்து யாழ் மீட்டினான். அவ்வோசையை என்னால் செவி கொடுத்துக் கேட்கவே முடியவில்லை. உடல் கூசி உள்ளம் அதிர்கிறது” என்றார் திருதராஷ்டிரர்.

“தாங்கள் இவற்றை எண்ணி எண்ணி மிகைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. நான் அவரிடம் பேசுகிறேன்” என்றார் விதுரர். திருதராஷ்டிரர் “பானுமதியிடம் சொல். அவள் பெண் என்று கொண்ட அனைத்தையும் பயன்படுத்தும் தருணமென்று. காதலோ கனிவோ கடுமையோ எதுவாக இருப்பினும் அது எழட்டும் என்று. அவன் அன்னையிடம் சொல். இத்தருணத்தில் அவனை வெல்லாவிட்டால் பிறகொருபோதும் மைந்தனென அவன் எஞ்சமாட்டான் என்று” என்றார்.  “அவர்கள் அனைவரையும்விட தாங்களே சொல்லலாம் என்று எண்ணுகிறேன்” என்றார் விதுரர்.

திருதராஷ்டிரர் தன் இரு கைகளையும் ஓங்கித் தட்டியபடி பேரோசையுடன் பீடம் பின்னால் நகர்ந்து தரையில் அறைந்துவிழ எழுந்தார். “மூடா! மூடா! இதைக்கூட அறியாமலா நீ ஒரு தந்தையென்று இங்கிருக்கிறாய், மூடா!” என்றார். விதுரர் அறியாமலே சற்று பின்னகர்ந்து நின்றார். “தந்தைக்கும் மகனுக்கும் நடுவே ஒரு புள்ளி உள்ளது. அதை அடைந்ததும் தெரிந்துவிடுகிறது இனி அவ்வுறவு அவ்வாறு நீடிக்காதென்று. இன்று அவன் என் மைந்தனல்ல. எங்கு எப்போது முறிந்தது என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் முறிந்துவிட்டதை மிகத் தெளிவாக உணர்கிறேன். இனி அவன் நான் சொல்வதை கேட்க மாட்டான்” என்றார்.

“இவையனைத்தும் நாம் உருவாக்கிக் கொள்வதல்லவா? இன்பங்களை விழைவதைப் போலவே துன்பங்களை விழையும் தன்மை நமக்கிருக்கிறதல்லவா?” என்றார் விதுரர். “இருக்கலாம், இவையனைத்தும் என் வெற்று உளமயக்கென்றே இருக்கலாம். அவன் நாளை வரும்போது இவையனைத்தும் புகை என கலைந்து போகலாம். அறியேன். ஆனால்…” என்றபின் அவர் கைகளால் பீடத்திற்காக துழாவினார். அவருக்கு சற்றுப்பின்னால் நின்ற ஏவலன் வந்து அப்பீடத்தை தூக்கி வைக்க அதில் உடலை அமர்த்தி “அவ்வாறே இருக்கலாம். இருக்க வேண்டுமென்று விழைகிறேன். ஆனால் என்னால் ஒருகணமும் உறுதியுறச் சொல்ல முடியவில்லை. விப்ரா, மூடா!” என்று அழைத்தார்.

அறை வாசலில் சிறுபீடத்தில் கால்மடித்தமர்ந்திருந்த விப்ரர் விழியின்மை தெரிந்த நரைத்த கண்களுடன் எழுந்து வளைந்த உடலை மெல்லிய கால்களால் உந்தி முன் செலுத்தி வந்து “அரசே” என்றார். “நீ என்னடா எண்ணுகிறாய்? அவன் இப்போது என் மைந்தனா? இனி அவன் என் சொற்களை கேட்பானா? நீ என்ன எண்ணுகிறாய்? உண்மையைச் சொல்” என்றார். “அவர் உங்களிடமிருந்து முளைத்து எழுந்தவர். சுஷுப்தியில் நீங்கள் புதைத்திட்ட ஆலமரத்தின் விதையணு. அது வேரும் கிளையும் விழுதுமாக எழுந்துவிட்டது… நீங்கள் அமர்ந்திருப்பதே அதன் நிழலில்தான்” என்றார் விப்ரர்.

விதுரர் உளநடுக்கத்துடன் அவரைத் திரும்பிப் பார்த்தார்.  “இது பாறை வெடிப்பது போல, அரசே. இனி ஒருபோதும் இணையாது” என்றார் விப்ரர் மீண்டும். அனைத்து தசைகளும் தொய்ந்து திருதராஷ்டிரரின் பேருடல் மெல்ல தணியத் தொடங்கியது. அவரது கைகள் பீடத்தின் கைப்பிடியிலிருந்து நழுவி தரையைச் சென்று தொடும்படி விழுந்தன. தலையை பின்னுக்குச் சரித்து இருமுறை நீள்மூச்சுவிட்டு “ஆம், உண்மை. உண்மை” என்றார். விதுரர் தலைவணங்கி “நாம் காத்திருப்போம். பிறிதொன்றும் செய்வதற்கில்லை” என்றபின் வெளியே நடந்தார்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 66

[ 6 ]

துரியோதனனின் புரவி யமுனையை அடைந்ததும் நில்லாமல் பக்கவாட்டில் நீர்ப்பெருக்குக்கு இணையாகச் சென்ற பெருஞ்சாலையில் திரும்பி அங்கு கரைமுட்டி பெருகிச் சென்றுகொண்டிருந்த மக்கள்திரளில் மறைந்ததும் கர்ணன் தன் புரவியின் சேணத்தின்மேல் காலூன்றி எழுந்து தொலைவில் அவன் செல்வதை விழிகளால் குறித்துக் கொண்டு புரவியைத் தட்டி இருபக்கங்களிலும் அழுத்தி நெருக்கிய தோள்களையும் அத்திரிகளையும் விலக்கி தொடர்ந்தான்.

பல மாதங்களாக இந்திரப்பிரஸ்தத்தில் வந்து செறிந்திருந்த மக்கள் அனைவரும் அன்று ஒரு நாளிலேயே நகர்விட்டுச் செல்ல முயன்றமையால் விழிதொடும் இடமெங்கும் தலைகளும் ஆடைகளுமாக மக்கள் அலையடித்தனர். மன்னர்கள் செல்லும் பொருட்டு மூன்று நாள் பிறர் கலத்துறைகளை பயன்படுத்த தடை இருந்தது. ஈசல்புற்று வாயில்களைப்போல அனைத்துத் தெருக்களின் முனைகளும் திறந்து கொண்டன. எங்கும் வண்டிகளின் சகட ஓசைகளும் புரவிகளின் குளம்போசைகளும் மக்களின் குரலும் கலந்த இரைச்சல் மாமழை போல ஒலித்துச் சூழ்ந்து செவிகளை இன்மையென உணரவைத்தது.

படித்துறைகளில் நூற்றுக்கணக்கான வணிகப்படகுகளும் பயணியர் படகுகளும் மொய்த்திருந்தன. பலநூறு படகுகள் யமுனையின் பெருக்கில் அலைகளில் எழுந்தாடியபடி காத்து நின்றிருந்தன. தொலைவில் யமுனைக்கு குறுக்கே படகுகளை நிறுத்தி கட்டப்பட்டிருந்த பாலங்களினூடாக மக்கள் வண்ண ஒழுக்காக மறுகரைக்கு சென்று கொண்டிருந்தனர். கர்ணன் திரளினூடாக தன்னை வளைத்து வளைத்து செலுத்திக் கொண்டு தொலைவில் சென்று கொண்டிருந்த துரியோதனனின் புரவியின் மேல் விழிநட்டிருந்தான்.

காலைவெயில் நன்கு எழுந்த பின்னரே இந்திரகீலத்தின் பெருஞ்சிலையை அவர்களால் கடக்க முடிந்தது. அதன் பின் மையச்சாலை நான்கு கிளைகளாக பிரிந்தபோது கூட்டத்தின் நெரிசல் சற்று குறைந்தது. மேலும் நெடுந்தொலைவு சென்றபின்னர்தான் கர்ணனால் துரியோதனனை அணுக முடிந்தது. அங்கிருந்து நோக்கியபோது மரக்கிளைகளின் செறிவுக்கு ஊடாக இந்திரனின் தலை எழுந்து தெரிந்தது. அவன் கையிலிருந்த மின்கதிர் வானைத்தொடுவது போல் எழுந்திருந்தது.

கர்ணன் நெஞ்சு நிறைந்த அழுத்தத்துடன் ஒன்றை உணர்ந்தான், பிறகொருபோதும் அந்நகரத்தில் அவன் நுழையப்போவதில்லை. அவ்வுணர்வு ஏன் எழுகிறது என்று உடனே அவன் அகம் வியந்தது. ஆனால் அழுத்தம் கொண்ட எண்ணங்கள் காலத்திற்கிணையாகத் தாவுகையில் மிகுவிரைவு கொண்டு காலத்தையும் கடந்து சென்றுவிடுகின்றன. நாளையும் நாளைக்கு அப்பாலும் சென்றடைந்துவிடுகின்றன. “ஆம்” என்று அவன் எவரிடமோ தலையசைத்தான்.

நெஞ்சில் அந்த அழுத்தம் ஏன் நிறைந்துள்ளது என்று அவனுக்குத் தெரியவில்லை. தன் உடலில் திமிறியெழுந்த அறியாத சினம் ஒன்றால் உந்தப்பட்டு சம்மட்டியால் புரவியை அடித்து குதிமுள்ளால் அதை குத்தினான். வெருண்டு கால்தூக்கிக் கனைத்தபடி அது அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த இரு அத்திரிகளையும் ஒரு பொதி வண்டியையும் முந்தி முன்னால் பாய்ந்தது. அதன் விரைந்த குளம்படி கேட்டு இருபக்கமும் மக்கள் பிளந்து வழிவிட அவன் மூச்சிரைக்க இடை புரவியின் முதுகில் படாமல் நின்று காற்றில் பாய்ந்தான்.

துரியோதனனை அணுகி அவனுக்கிணையாக புரவியை செலுத்தி மூச்சிரைத்தபடி அமர்ந்தான். துரியோதனனும் விரைந்து வந்தமையால் மூச்சிரைத்துக் கொண்டிருந்தான். அவன் எடை அப்புரவியை களைப்படையச்செய்து அதன் உடலெங்கும் வியர்வை ஊறி உருளச்செய்தது. ஆனால் அவன் கர்ணன் வருவதை அறிந்ததுபோல் தெரியவில்லை. கர்ணன் அவனை அழைக்கவும் இல்லை. இணையான விரைவில் இருவரும் அச்சாலையினூடாகச் சென்றனர்.

உச்சிப் பொழுதுக்குள் மேலும் ஆறேழு இடங்களில் சாலைகள் பிரிய கூட்டம் குறைந்தது. கூட்டம் குறையக்குறைய அவர்களின் விரைவும் குறைந்தது. தண்ணீர் பந்தலொன்று வழியோரமாக தென்பட கர்ணன் “அரசே, நீரருந்திவிட்டுச் செல்லலாம்” என்றான். அவன் யார் என்பதைப்போல துரியோதனன் திரும்பிப் பார்த்தான். “இன்று நீரின்மையால்தான் நோயுற்றிருந்தீர்கள். நீரருந்திவிட்டுச் செல்லலாம்” என்றான் கர்ணன் மீண்டும்.

தலையசைத்து துரியோதனன் புரவியை இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்கொடி பறந்த தண்ணீர்பந்தலை நோக்கி செலுத்தினான். அதன் பெருமுற்றத்தில் இறங்கி புரவிகளை நீரருந்த விட்டனர். நீரைப்பார்த்ததும் பெருமூச்சுவிட்டு பிடரி சிலிர்த்து, தொடைத்தசைகள் விதிர்க்க, ஒற்றைப் பின்னங்காலைத் தூக்கி நின்று அவை நீரருந்தின. கர்ணன் இரு புரவிகளின் கடிவாளங்களையும் பற்றிக்கொண்டான். துரியோதனன் நீர்ப்பந்தலில் பெரிய பாளைத் தொன்னைகளில் அளிக்கப்பட்ட இன்நீரை வாங்கி அருந்தினான்.

நீரை கொண்டுபோக விரும்புபவர்களுக்காக பாளையால் செய்யப்பட்ட குடுவைகளில் நீரை அளித்தனர். கர்ணன் இரு குடுவைகளை வாங்கி தன் புரவியின் சேணத்தில் கட்டி தொங்கவிட்டான். புரவிகளை அங்கே நின்ற சாலமரத்தடியில் கொண்டு சென்று நிறுத்தி மரத்திலிருந்து தழைகளை பறித்துவந்து அவற்றின் கழுத்தையும் விலாவையும் பின்தொடைகளையும் வயிற்றையும் அழுத்தி நீவிவிட்டான். அவன் புரவிகளை நீவுவதைப் பார்த்தபடி அருகே இருந்த பாறையொன்றில் துரியோதனன் வந்து அமர்ந்தான்.

கர்ணன் சாலையைக் கடந்து மறுபக்கம் இறங்கிச் சென்று யமுனையின் நீர்க்கரை மணல் விளிம்பில் நின்று கைகளையும் முகத்தையும் கழுவிய பின்பு மேலே வந்தான். அவன் வருவதை துரியோதனன் எப்பொருளும் துலங்காத விழிகளால் நோக்கியிருந்தான். கர்ணன் வந்து துரியோதனன் அருகே இன்னொரு சிறு கல்லில் அமர்ந்தான். துரியோதனன் அவனிடமல்ல என்பது போல “படகில் செல்ல என்னால் இயலாதென்று தோன்றியது” என்றான். “அதன் அமைதியான ஒழுக்கு என் அகத்தை அலறச்செய்கிறது. வரும்போது பித்தெழுந்து நீரில் குதித்துவிடுவேன் என்றே அஞ்சினேன்.”

கர்ணன் “ஆம். புரவியில் வரும்போது நானும் அதை எண்ணிக் கொண்டேன்” என்றான். துரியோதனன் “ஆறு அசைவற்றிருப்பது போல் ஒரு உளச்சித்திரம் எழுகிறது படகில் இருக்கும்போது. எப்போதும் ‘விரைவு, மேலும் விரைவு’ என்று உள்ளம் கூவிக்கொண்டே இருக்கிறது. ஒருவகையில் புரவி படகைவிட விரைவு குறைவாகவே செல்கிறது. இருந்தாலும் புரவியில் செல்வது காலத்தில் விரைவதுபோல் தோன்றச்செய்கிறது” என்றான். கர்ணன் “ஆம்” என்றான்.

துரியோதனன் பேச விழைவது போல் தோன்றியது. நெடுநேரம் பேசாமல் இருப்பவர்களுக்கே உரிய முறையில் விரைவாக சொல்லடுக்கி ஆனால் கூரிய பொருளேதும் திரளாமல் அவன் பேசிக் கொண்டிருந்தான். “காலத்தில் நின்று கொண்டிருக்க விழைகின்றன அத்தனை பொருட்களும் என்று தோன்றுகிறது. இதோ இங்கிருக்கும் அத்தனை கற்களும் காலத்தில் நின்று கொண்டிருக்கின்றன. அவற்றுடன் ஒப்புநோக்குகையில் யமுனை விரைகிறது. ஆனால் அதுவும் காலத்தில் நின்று கொண்டுதான் இருக்கிறது.”

“அதன் விரைவு ஒரு பொய். அதன்மேல் பாய்விரித்து படகில் செல்பவன் தான் காலத்தில் நின்று கொண்டிருப்பதாக உணர்கிறான். அதுவும் பொய். நமது உடல்கள் காலத்தில் சென்றுகொண்டிருக்கின்றன… உடலில் குருதி ஓடுவது காலமே என்று ஒரு சூதர் சொல்லுண்டு. உள்ளமாக துடிப்பதும் உணவை எரிப்பதும் விழிகளாக அசைவதும் எண்ணங்களாக கொப்பளிப்பதும் காலமே என்பர். பொய்! காலத்தில் நாம் செல்வதில்லை. காலம் நம்மைச் சுற்றி பெரும்புயல்போல சுழன்றடித்துச் சென்று கொண்டிருக்கிறது. காலத்தில் செல்ல முடிந்தால் எந்தத் துயரும் இல்லை. காலப்பெருக்கின்முன் அசைவற்று நிற்பதுதான் துயர்.”

அவன் என்ன சொல்கிறான் என்று விளங்கிக்கொள்ள முயன்று பின் அதை சொற்களாகவே விட்டுவிட்டு கர்ணன் வெறுமனே நோக்கியிருந்தான். “நான் அஸ்தினபுரிக்கும் திரும்பிச்செல்ல விரும்பவில்லை, அங்கரே. உண்மையில் கிளம்பும்போது எங்காவது சென்றுவிட வேண்டுமென்று விழைந்தேன்” என்றான். கர்ணன் “இங்கு தங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று எனக்குத் தெரியும். ஆகவேதான் தங்களுடன் வரவேண்டுமென்று முடிவு செய்தேன்” என்றான்.

“எனக்குத் தெரியும் இங்கு என்ன நிகழுமென்று. இங்கே வந்து அனைத்தையும் தீர்த்துக் கொள்ளலாமென்று தாங்கள் சொன்னபோது ஒருதுளியும் என் உள்ளம் அதை நம்பவில்லை. ஆனால் உங்கள் உணர்வுகளை நான் புரிந்து கொண்டேன். அத்தனை நம்பிக்கையுடன் என் விழிகளை நோக்கி நீங்கள் சொல்லும்போது அதை மறுக்க என்னால் இயலவில்லை. ஆனால் நான் அஸ்தினபுரியிலிருந்து கிளம்பும்போது இன்னும் பெரிய ஒன்றை எதிர்கொள்ளப் போகிறேன் என்று எனக்குத் தோன்றியது.”

“அங்கரே, இது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. அன்று இச்சிறுமகள் முன் நிலைதவறி விழும்போது அது ஒரு தொடக்கம் என்று என்னுள் எங்கோ ஓர் எண்ணம் வந்தது” என்று துரியோதனன் தொடர்ந்தான். “அன்று இங்கிருந்து கிளம்பி அஸ்தினபுரிக்குச் செல்லும்போது ஒவ்வொரு கணமும் அது வளர்ந்து ஒரு பெரும் அச்சமாகியது. இதைவிடப் பெரிதாக ஒன்று, இன்னும் பெரிய ஒன்று வரவிருக்கிறது என்ற அச்சமே என்னை சினமும் வெறியும் கொள்ளவைத்தது. என் நகரம் நோயில் மூழ்கி அழியும்போது என்னுள் அச்சத்தைத் தவிர்க்கவே சினத்தை நிரப்பிக் கொண்டு அங்கிருந்தேன்.”

“ஜராசந்தனின் இறப்புச் செய்தி காதில் விழுந்தகணம் மீண்டும் தோன்றியது இன்னும் பெரிய ஒன்று அணுகுகிறது என. எனக்குத் தெரியவில்லை, அதை வந்து என் செவியில் மெல்ல சொல்லும் தெய்வம் எது என்று. அங்கரே, நான் அதை அஞ்சுகிறேன். உங்களுடன் இந்திரப்பிரஸ்தத்தை நோக்கி படகேறும்போதும் என் செவியில் அத்தெய்வம் சொன்னது இன்னும் பெரிய ஒன்று என்று” துரியோதனன் சொன்னான்.

“எதுவும் நம் கையில் இல்லை” என்று கர்ணன் தளர்ந்த குரலில் சொன்னான். “பானுமதி இந்திரப்பிரஸ்தத்தின் அரசிக்கு எழுதிய ஓலையை எனக்குக் காட்டினாள். உங்களை பழைய துரியோதனராக மீட்டு தனக்கு அளிக்கும்படி அவள் கோரியிருந்தாள். எனக்குத் தெரியும், இந்திரப்பிரஸ்தத்தின் அரசி யாரென்று. கோரப்பட்ட எதையும் மறுக்கக்கூடியவள் அல்ல அவள். பேரரசியரால் அது இயலாது. இந்திரப்பிரஸ்தத்தையேகூட கோரி பெற்றுவிட முடியுமென்று தோன்றியது. ஆகவே நான் கிளம்பும்போது முற்றிலும் நம்பிக்கையுடன் இருந்தேன்.”

“உண்மையில் படகில் ஒவ்வொரு கணமும் இந்திரப்பிரஸ்தம் அணுகுவதை காத்திருந்தேன். நீங்கள் தனிமையும் துயரும் கொண்டிருப்பதையும் நிலைகொள்ளாது படகில் உலாவிக்கொண்டிருப்பதையும் பார்த்தேன். இன்னும் சற்று நேரம், இதோ அணுகிவிட்டது அனைத்தும் முடியும் மையம் என்றே என் உள்ளம் தாவிக் கொண்டிருந்தது” என்று கர்ணன் தொடர்ந்தான். “இப்போது எண்ணும்போது ஏக்கம் நிறைகிறது. எவ்வளவு எதிர்பார்ப்பு! எவ்வளவு நம்பிக்கை!”

அவன் பேச்சை நிறுத்தி கீழே கிடந்த சிறு குச்சியை எடுத்து தரையில் கோடுகளை இழுத்துக் கொண்டிருந்தான். துரியோதனன் அவன் சொல்வதை செவி கொள்ளாதவன் போல தொலைவில் ஓடிய யமுனையின் ஒளிமிக்க நீர்ப்பரப்பை நோக்கிக் கொண்டிருந்தான். “நான் எதிர்பார்த்தவை அனைத்தும் நடந்தன” என்று கர்ணன் தொடர்ந்தான். “பாண்டவர் ஐவரும் தங்கள் அரசியுடன் படித்துறைக்கு வந்து உங்களை வணங்கி எதிர்கொண்டனர். அவர்களின் ஐந்து மைந்தரும் வந்து உங்கள் கால்களைத் தொட்டு வணங்கி நகருக்குள் வரவேற்றனர். இந்திரப்பிரஸ்தத்தின் அரசி உங்களிடம் வந்து வணங்கி முகமன் உரைத்து இந்திரப்பிரஸ்தத்தை வாழ்த்தும்படி கோரினாள். உங்கள் முகமும் மலர்ந்ததை பார்த்தேன். உங்கள் தம்பியர் அனைவரும் விழிநீர் மல்கினர்.”

“தருமன் என்னிடம் அங்கரே தங்களால் எங்கள் குடி செழிக்க வேண்டுமென்று சொன்னபோது அக்கணம் எப்படி விழிநீரை கட்டுப்படுத்தினேன் என்பதே எனக்குத் தெரியவில்லை. பொற்தேர்களில் ஏறி இந்திரப்பிரஸ்தத்தின் சுழல்பாதைகளினூடாக மேலே சென்று கொண்டிருந்தபோது வான் நோக்கி பறந்தெழும் உணர்வையே அடைந்தேன். அரசே, அனைத்தும் எத்தனை எளிதாக முடிந்துவிட்டன என்று வியந்தேன். அனைத்தும் அத்தனை எளிதானவைதானா என்று எண்ணிக் கொண்டேன். உண்மையில் அவை அனைத்தும் எளிதானவைதான். இவற்றை தெய்வங்கள் தலையிடவில்லை என்றால் மனிதர்கள் மிக எளிதாக முடித்துக்கொள்ள முடியும்.”

“நம் அணிநிரை சென்று அரண்மனையின் வாயிலில் நிறைவுற்றபோது அங்கு உங்களை வரவேற்க இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி தன் பிறநான்கு மருகிகளுடன் காத்திருந்ததைக் கண்டபோது இதற்குமேல் ஒன்றுமில்லை என்று எண்ணினேன். அவர் உங்கள் அருகே வந்து கைகூப்பி அவரோ, அவரது ஐந்து மைந்தர்களோ, மைந்தரின் துணைவியரோ, இந்திரப்பிரஸ்தத்தின் பிறிதெவருமோ உங்கள் உள்ளம் வருந்தும்படி எதையேனும் செய்திருந்தால் அன்னையென உங்கள் கைகளை பற்றிக்கொண்டு பொறுத்தருளும்படி கோருவதாகக் கூறினார். உணர்வெழுச்சியுடன் நீங்கள் குனிந்து அவர் கால்களைத் தொட்டு இச்சொற்களுக்காகவே மும்முறை உங்கள் கால் தூசியை தலையணிகிறேன் அன்னையே. தாங்கள் இதை சொல்லலாகாது என்று சொன்னீர்கள்.”

“உங்கள் விழிநீரை அன்று நான் பார்த்தேன். உங்கள் உடன்பிறந்தார் அனைவரும் விழிநீர் வழிய கைகூப்பி நின்றிருப்பதை கண்டேன். தருமன் மீண்டும் உங்கள் கைகளை பற்றிக்கொண்டு அறியாது நிகழ்ந்த பிழை. அப்பிழைக்கு இந்திரப்பிரஸ்தம் எவ்வகையிலும் ஈடு செய்யும் அரசே என்றபோது இருகைகளையும் விரித்து நீங்கள் அவரை ஆரத்தழுவிக்கொண்டீர்கள்” என்றான் கர்ணன். “அதற்கப்பால் ஒன்றும் சொல்வதற்கில்லை. அரசே, அதன் பின் அதைப்பற்றி ஒரு சொல் பேசக்கூடாதென எண்ணினேன். நீங்களும் பாண்டவரும் இணைந்து உரையாட வேண்டுமென்பதற்காகவே நான் உங்கள் தம்பியரை அழைத்துக்கொண்டு விலகிச்சென்றேன். உங்களை முழுமையாக தனிமையில் விட்டேன். உங்கள் உளமுருகட்டும் என துச்சாதனனிடம் சொன்னேன்.”

வேண்டாம் என்பது போல் துரியோதனன் கையை அசைத்தான். “பிறகென்ன நடந்தது?” என்று கர்ணன் மீண்டும் தொடங்கினான். “நூறுமுறை எனக்குள் ஓட்டிப்பார்த்துக் கொண்டேன். பிறகென்ன நடந்தது? ஒவ்வொன்றும் உகந்த முறையிலேயே அமைந்தது. வேள்விக்கான பணிகள் தொடங்கியபோது யுயுத்ஸுவையும் துச்சாதனனையும் அடுமனைப்பணிக்கு தருமன் அனுப்பினார். கௌரவ நூற்றுவரையும் அரசர்களை அரியணை அமர்த்தும் பணிகளுக்கு அனுப்பினார். விசித்திரவீரியரின் பெயரர்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு நிகழ்ந்த பெருவிழாவாக அமைந்தது இந்த ராஜசூயம்.”

“அரசே, தாங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். நாம் வந்த மறுநாள் பீஷ்மபிதாமகரும் பேரரசரும் அஸ்தினபுரியிலிருந்து அணிப்படகுகளில் இங்கு வந்தனர். அவர்களை வரவேற்க நானும் துர்மதனும் துச்சகனும் சுபாகுவும் சுஜாதனும் விகர்ணனும் சென்றிருந்தோம். படகிலிருந்து இறங்கிய பீஷ்மபிதாமகர் எங்களைக் கண்டு தொலைவிலிருந்தே இரு கைகளையும் விரித்தார். நாங்கள் அருகே சென்றதும் அவர் கண்களில் கண்ணீரை பார்த்தோம். நெடுநாட்களுக்கு முன்னரே இவை அனைத்திலிருந்தும் உதறி தன்னைப்பிரித்து உதிர்ந்துவிட்டவர் அவர் என்று எண்ணியிருந்தேன். இப்பிறவியில் அவருக்கு மைந்தர்ப் பெருந்திரளிலிருந்து விடுதலையே இல்லையென்று அப்போது அறிந்து கொண்டேன்.”

“கண்ணீருடன் தன் பெயர்மைந்தர்களை மாறிமாறி நெஞ்சோடணைத்துக் கொண்டார். பீமனையும் துச்சாதனனையும் இரு தோள்களையும் கைகளால் வளைத்து சுற்றித் தூக்கிச் சுழற்றி நிலத்திலிட்டார். உரக்க நகைத்தபோது அவர் முகத்தில் தெரிந்த அந்த உவகை நெளிவை வாழ்நாளில் எப்போதும் என்னால் மறக்க முடியாது” என்றான் கர்ணன். “அர்ஜுனனையும் நகுலனையும் தோள் தழுவினார். யுயுத்ஸுவையும் சகதேவனையும் இணைத்துப்பற்றி மாறி மாறி முத்தமிட்டார். அபிமன்யுவையும் விகர்ணனையும் சுபாகுவையும் தோளில் தூக்கிக்கொண்டு குதித்தார். ஒரு சொல் இல்லை. ஓர் அரிய நடனம் போலிருந்தது அக்காட்சி. அல்லது காட்டில் விலங்குகள் குட்டிகளுடன் களிகூர்வது போல.”

“நான் சுற்றிலும் பார்த்தபோது இந்திரப்பிரஸ்தத்தின் படகுத்துறைகளில் அனைத்துப் படைவீரர்களும் வணிகர்களும் குடிகளும் பெருந்திரளென வட்டமிட்டு அதை நோக்கக் கண்டேன். அனைவர் விழிகளிலிருந்தும் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. முதியோர் பலர் தலைக்கு மேல் கைகளைக் கூப்பி அழுதுகொண்டிருந்தனர். இவ்விரு நாடுகளின் ஒவ்வொரு குடியும் விழைவது அத்தருணம். நாம் சென்றடையும் உச்சம் அது. பீஷ்மர் துர்மதனையும் துச்சலனையும் அழைத்தபடி தேரில் நகர் நோக்கி சென்றார். நாங்கள் படகுக்குள்ளிருந்து சஞ்சயனால் அழைத்துக் கொண்டுவரப்பட்ட பேரரசரை அணுகினோம்.”

“பீமன் சென்று அவர் காலைத்தொட்டு வணங்கியபோது பெருங்குரலில் மந்தா என்றழைத்தபடி அவர் அவனை தழுவிக்கொண்டார். நகுலனும் சகதேவனும் அர்ஜுனனும் தருமனும் துச்சாதனனும் பிற கௌரவர்களும் அவரைச் சூழ்ந்தனர். ஒவ்வொருவரையாக தலையையும் தோளையும் காதுகளையும் தொட்டுத் தொட்டு வருடி அவர் நகைத்தார். விழிநீர் வழிய எழும் நகைப்புக்கிணையாக பேரருள் கொண்ட ஒரு முகத்தை தெய்வங்கள்கூட சூட முடியாது.”

“தன்னை தூக்கிக் கொண்டு செல்லும்படி பீமனிடம் சொன்னார். பீமனும் துச்சாதனனும் துச்சகனும் அர்ஜுனனுமாக அவரை தங்களது தோள்களில் தூக்கிக் கொண்டு தேர் நோக்கி சென்றனர். பிறர் கூவி நகைத்தபடி அவர்களை தொடர்ந்தனர். அப்பெருக்கிலிருந்து சற்றே பிரிந்து என் அருகே வந்த தருமன் என் இரு கைகளையும் பற்றிக்கொண்டு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் அங்கரே, தங்கள் தாள் தோய என் தலையை தாழ்த்துகிறேன். இத்தருணத்தை நீங்களே எனக்களித்தீர்கள் என்றார். இல்லை நாமனைவரும் விழைவது இது. விண்ணிலிருந்து நமது மூதாதையர் இவற்றை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்றேன். ஆம் என்றபின் இருகைகளாலும் தன் கண்களைத் துடைத்தபடி அவர் தன் தேர் நோக்கி சென்றார்.”

“அன்று நகர் வழியாக செல்லும்போது ஒவ்வொரு இலையும் மலராக மாறிவிட்டன என்று தோன்றியது. ஒவ்வொரு மாளிகையும் நிலவு பட்டது போல் ஒளி கொண்டிருந்தது. புன்னகை அற்ற ஒரு முகம் கூட என் கண்களில் படவில்லை. சில தருணங்களில்தான் மானுடனாக இருப்பதற்கு பேருவகையும் பெருமிதமும் கொள்கிறேன். அத்தகைய ஒரு தருணம்” என்றான் கர்ணன். “கொடியவை தெய்வங்கள். இருளுக்கு முன் பேரொளியை நம் விழிகளுக்குக் காட்டி விளையாடுகின்றன அவை.”

[ 7 ]

துரியோதனன் அச்சொற்களை செவிகொள்ளாதவன் போலவே அமர்ந்திருந்தான். முகத்தில் யமுனைநீரொளியும் அதிலாடும் மக்கள்நிரையின் நிழல்களும் ஆடிக்கொண்டிருந்தன. குதிரை செருக்கடித்தது. எங்கோ ஒரு சகடம் கல்லில் ஏறி அமைந்தது. பின்பு அவன் பெருமூச்சுடன் கலைந்தான். நிலத்தை நோக்கியபடி “ஆனால் அன்று அவ்வுணர்ச்சிக்கும் விழிநீருக்கும் அடியில் நான் மேலும் மேலும் உறைந்து குளிர்ந்து கொண்டிருந்தேன். இன்னும் பெரிதாக என்று அந்தக் குரல் என் செவியில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதையே அவர்கள் ஒவ்வொருவரும் தாங்களும் கேட்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. அவர்கள் கொண்ட உணர்ச்சிப்பெருக்கு அதன்பின் நிகழவிருக்கும் ஏதோ ஒன்று அவர்களை அச்சுறுத்துவதனால்தான் என்று எண்ணிக்கொண்டேன்” என்றான்.

“தேரிலேறி அரண்மனை வரை செல்லும் ஒவ்வொரு கணமும் அவ்வெண்ணத்தைக் கடந்து உவகைகொள்ள நான் முயன்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு தருணமும் என்னை கண்கரையச் செய்தது. மறுகணமே மேலும் பெரிதாக என்னும் சொல்லில் சென்று தலையறைந்து நின்றேன். பேரரசியைக் கண்டு வணங்கியபோது ஏதோ ஒன்று நிகழ்ந்து அனைத்தும் பொய்யென ஆகிவிடவேண்டும் என்று விழைவெழுந்தது. அதுவே விழிநீராக என்னில் வழிந்தது. ஆனால் அன்று மாலை என் அரண்மனைக்குச் சென்றபோது உணர்ந்தேன், ஒருகணமும் என்னுள் வாழும் அத்தெய்வம் அடங்கவில்லை என்று.”

“அங்கரே, அன்று படகுத்துறையில் இருகைகளையும் விரித்தபடி பீமன் என்னை நோக்கி வந்தபோது அத்தெய்வம் என் உடலென்னும் கவசத்திற்குள் உருதிமிறி போருக்கெழுந்தது. போரில் தோள்கோக்கும்போது நட்பு விழையும் இரு தெய்வங்கள் உள்ளே தழுவிக் கொள்கின்றன என்பதை உணர்ந்திருக்கிறேன். நட்புடன் தழுவிக் கொள்கையில் உள்ளே இரு தெய்வங்கள் போருக்கு சினந்தெழுவதை அங்கே கண்டேன். அவனும் அதை உணர்ந்திருப்பான். அன்று இரவு ஆடி முன் சென்று என் தோள்களை பார்த்துக் கொண்டேன், அவன் தோள்களுக்குச் சற்றேனும் ஆற்றல் குறைந்தவையா என்று. என்றேனும் ஒரு நாள் போர்க்கலையில் அவன் நெஞ்சைப்பிளந்து உயிர்க்குலையை எடுக்கும் ஆற்றல் என் கைகளுக்கு உண்டா என்று. அவ்வெண்ணமே என்னை வெறி கொள்ளச்செய்தது. உயர்ந்த யவன மது அளிக்கும் மிதப்பு தசைகளில் ஓடியது.”

“என் தோள்கள் ஜராசந்தனின் தோள்களைவிடப் பெரியவை என்று எண்ணிக் கொண்டேன். அவற்றை அவன் எளிதில் வெல்ல முடியாது. என் பயிற்சி அவனிடமில்லை. கதையுடன் அவனை எதிர்கொண்டேன் என்றால் அவன் தலையை ஒருநாள் கோழிமுட்டை போல் உடைப்பேன். மூளை வெண்நுரை போல் வழிந்தெங்கும் சிதற அவன் நெஞ்சை மிதித்து உடைத்து திறப்பேன். அவனைக் கொன்று குருதி அருந்துவதைப்பற்றி எண்ணி உடல் கிளற உள்ளம் கொந்தளிக்க அன்றிரவெல்லாம் அரண்மனைக்குள் சுற்றி வந்தேன்.”

கர்ணன் பெருமூச்சுடன் “எப்போதும் அப்படித்தான். சற்றே முன் நகர்ந்தால் பல மடங்கு பின்னகர்ந்துவிடுவோம்” என்றான். துரியோதனன் “ஏனெனில் அந்நெகிழ்வு பொய். அது என் உறுதியை சீர்நோக்க என் தெய்வம் செய்த ஆடல். அதில் நான் தோற்றுவிட்டேன். அவ்விழிமகன்கள் முன் விழிநீரும் விட்டுவிட்டேன். அதை செய்திருக்கலாகாது. அதற்காக அதன்பின் நூறுமுறை நாணினேன். ஆகவேதான் என் சினத்தை எண்ணி எண்ணி பெருக்கிக் கொண்டேன். மறுநாள் அவன் அவையில் அஸ்தினபுரியின் முடியணிந்து வந்து அரச நிரைகளில் அமர்ந்திருந்தபோது சினமே என் உடலாக இருந்தது. என் அருகில் அமர்ந்திருந்த ஒவ்வொருவரும் என் உடலில் அச்சினம் எரிவதை உணர்ந்திருக்க முடியும். எவ்வண்ணமோ அதை உணர்ந்தவர்கள்போல் ஐந்து பாண்டவர்களும் விலகிச் சென்றுவிட்டனர்” என்றான்.

துரியோதனன் பற்களைக் கடித்து தன் நெற்றியை தட்டிக்கொண்டான். “அந்தப் பெரிய ஒன்று என்ன என்பதை அப்போதே என் அகம் உணர்ந்துகொண்டிருந்தது. சிசுபாலனைக் கண்டபோது என் உள்ளத்துக்குள் ஒரு பதற்றம் ஏற்பட்டது. அவனை எதிர்கொண்டு சென்று முகமன் உரைத்திருக்கவேண்டும் நான். ஆனால் நான் திரும்பிக் கொண்டேன். அவன் என்னை அறியவே இல்லை என்பதைக்கண்டு ஆறுதல்கொண்டேன். பாண்டவ இளையோரும் தம்பியரும் நீங்களும் அவனை வரவேற்றபோது நான் அறியாதவன் போல் அமர்ந்திருந்தேன். அவன் என்னைக் கடந்து சென்றபோது என் காலும் கையும் மெல்லத்துடித்தன. அது ஏன் என்று அவன் கொல்லப்பட்ட பிறகுதான் அறிந்தேன்.”

“இப்போது அவனுடைய ஒவ்வொரு அசைவையும் நினைவில் என்னால் தீட்டிக் கொள்ள முடிகிறது. அப்படியென்றால் அவனை எனது விழிகளின் ஓரம் ஒவ்வொரு கணமும் நோக்கிக் கொண்டிருந்திருக்கிறது. அவனைச் சூழ்ந்தே நான் உளம் ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறேன்” என்றான் துரியோதனன். “ஏன்? இதெல்லாம் எதன்பொருட்டு நிகழ்கின்றன? ஜராசந்தன் இறந்ததை நான் காணவில்லை. இவன் என் கண்முன் தலையறுந்து விழுந்தான்.”

“நாம் செல்வோம்” என்று கர்ணன் அவன் தோளை தட்டினான். “ஆமாம், செல்ல வேண்டியதுதான்” என்றபடி துரியோதனன் எழுந்தான். புரவியின் அருகே சென்று கடிவாளத்தை அழுத்தி கால் சுழற்றி ஏறி அமர்ந்தான் கர்ணன். “புரவியிலேயே அஸ்தினபுரிக்கு சென்றுவிடலாம்” என்றான். “தெரியவில்லை. நான் அஸ்தினபுரிக்குதான் செல்வேனா என்றுகூட என்னால் இப்போது சொல்ல முடியாது” என்றான் துரியோதனன். “நாம் அங்குதான் செல்கிறோம்” என்று கர்ணன் உறுதியாகச் சொன்னான். துரியோதனன் புரவியின் கடிவாளத்தைப் பற்றியபடி தலைகுனிந்து எண்ணத்தில் ஆழ்ந்தபடி இருந்தான்.

“செல்வோம், அரசே” என்றான் கர்ணன். துரியோதனன் சேணத்தின் வளையத்தில் காலை வைத்து உடலைத்தூக்கி தாவி அமர்ந்தான். அவன் எடையில் புரவி சற்றே வளைந்து முன் நகர்ந்தது. “சிசுபாலன் எழுந்து குரலெடுத்தபோதே நான் அவன் தலை அறுபட்டுக் கிடப்பதை பார்த்துவிட்டேன்” என்றான் துரியோதனன். “முதலில் செயலற்று அமர்ந்திருந்தேன். பிறகு அப்படி அமர்வதே கோழைத்தனத்தால்தானோ என்று எண்ணியே அவனை துணை நிற்கவேண்டுமென்று பீஷ்மரிடம் மன்றாடினேன். அது ஒருபோதும் நிகழப்போவதில்லை என்று அறிந்திருந்தேன். என் கண்ணெதிரில் அவன் தலையற்று துடித்தான். அவன் தந்தை அவன் உடலுக்காக மன்றாடி கேட்டார். அப்போது உணர்ந்தேன், இருமுறை நான் இறந்து பிறந்துவிட்டேன் என்று. ஒருமுறை ஜராசந்தனாக, இன்னொருமுறை சிசுபாலனாக.”

“நாம் இவற்றை இனி அஸ்தினபுரிக்குச் சென்று பேசுவோமே” என்றான் கர்ணன். “ஆம். இப்போது இப்பேச்சை விடுவோம். இனி அஸ்தினபுரி வரை நாம் ஒரு சொல்லும் பேசவேண்டியதில்லை” என்றான் துரியோதனன். “ஆம், அதுவே நன்று” என்று கர்ணன் சொன்னான். துரியோதனன் தன் புரவியை இழுத்து நிறுத்தி திரும்பி கர்ணனிடம் “அனைத்து இலைகளையும் உதிர்த்தபின் எஞ்சும் தளிரிலை போல் ஒன்றே ஒன்று எஞ்சி நிற்கிறது, அங்கரே” என்றான். கர்ணன் அவனை நோக்கினான். “நான் இந்திரப்பிரஸ்தத்தை வென்றாக வேண்டும். அவர்கள் மணிமுடியை என் காலில் வைத்தாக வேண்டும். அவள் வந்து என் அவையில் நின்றாக வேண்டும். அன்றி ஒருபோதும் இது முடியாது” என்றான்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 65

[ 4 ]

எதிர்ப்படும் அனைத்தின் மீதும் கடும் சினத்துடன் கர்ணன் தன் அரண்மனைக்கு சென்றான். அவனால் அமரமுடியவில்லை. நிலையழிந்து சுற்றிக்கொண்டிருந்தான். ஏவலனை அனுப்பி திரிகர்த்த நாட்டு கடும் மதுவை வரவழைத்து அருந்தினான். மது உள்ளே சென்று அங்கிருந்த எண்ணங்களின் மீது நெய்யாக விழுந்து மேலும் பற்றிக்கொண்டது. உடல் தளர்ந்து கால்கள் தள்ளாடியபோதும் உள்ளம் எரிந்துகொண்டிருந்தது. ஏவலனை அனுப்பி இளைய அரசியின் அரண்மனையில் அரசர் இருக்கிறாரா என்று பார்க்கச் சொன்னான்.

அவன் திரும்பி வந்து அங்கு அரசர் சென்றபோது இளைய அரசி ஓடிச்சென்று உள்ளே தன் அறைக்குள் புகுந்து கதவை சார்த்திக்கொண்டதாகவும் அரசர் அங்கிருந்த வாசல்களை உடைத்து தூண்களை உதைத்து விரிசலிடச்செய்து கூச்சலிட்டபின் திரும்பி தன் அரண்மனைக்கே சென்றுவிட்டதாகவும் சொன்னான். சற்று நேரத்தில் இளைய அரசியின் செய்தியே வந்தது. அவள் கலிங்கத்துக்கே மீள விழைவதாக சொல்லியிருந்தாள்.

சற்று நேரத்தில் துர்மதன் ஓடிவந்து “மூத்தவரே, தாங்கள் வரவேண்டும். அரசரை தாங்கள்தான் கட்டுக்குள் நிறுத்தவேண்டும். துச்சாதனரையும் துர்முகரையும் சுபாகுவையும் அறைந்துவிட்டார். பீமபலன் அடிவாங்கி விழுந்து நினைவிழந்துவிட்டான். அவரை மருத்துவ அறைக்கு கொண்டு சென்றிருக்கிறோம்” என்றான். கர்ணன் சற்று நேரம் தன் தலையை தாங்கி அமர்ந்திருந்தபின் “என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை” என்றான். “குறைந்தது தாங்கள் அவரைப்பிடித்து நிறுத்தமுடியும். இழுத்துச் சென்று இன்றிரவுக்கு மட்டுமாவது எங்காவது அறைக்குள் அடைத்துவிட முடியும்” என்றான்.

“இத்தருணத்தில் நான் அவரை எதிர்கொள்ள விரும்பவில்லை” என்றான் கர்ணன். “இத்தருணத்தில்தான் தாங்கள் எங்களுக்குத் தேவை, மூத்தவரே” என்றான் துச்சலன். உரத்த குரலில் “அவரைப்போலவே நானும் இருக்கிறேன், மூடா. அதே நிலையில்தான் நானும் இருக்கிறேன். புரிகிறதா? செல்!” என்றான் கர்ணன். திகைத்து பார்த்த துச்சலன் வெளியே சென்ற சற்று நேரத்திலேயே துர்முகனும் விகர்ணனும் ஓடிவந்தனர். “மூத்தவரே, தாங்கள் வந்தாகவேண்டும். இல்லையேல் இன்றிரவு என்ன நடக்குமென்றே தெரியாது” என்றனர்.

கர்ணன் “என்ன சொல்கிறார்?” என்றான். “தந்தைக்குமுன் சென்று போருக்கு அறைகூவப்போவதாக சொல்கிறார். கதாயுதத்தை எடுப்பதற்காக பயிற்சிக்கூடத்திற்கு ஓடினார். அங்கே அவரைத் தடுத்த வீரர்களை அறைந்து வீழ்த்தினார்.” தலையை அசைத்து “அவர் செல்ல மாட்டார்” என்றான் கர்ணன். “செல்வார். இன்றிருக்கும் நிலையில் தந்தைக்கு முன் அவர் உறுதியாக சென்று நிற்பார். இப்போதிருக்கும் சொற்களுடன் அவர் சென்றால் தந்தையின் ஓர் அறையிலேயே உயிர்விடுவார். வாருங்கள் மூத்தவரே, இத்தருணத்தில் வராவிட்டால் பிறகு அவரை பார்க்கவே முடியாது போகலாம்” என்றான் விகர்ணன்.

கர்ணன் எழுந்து தன் சால்வையை எடுத்துப் போட்டபடி நடந்தான். அறைக்கு வெளியே வந்தவுடன் “இன்னும் சற்று மது கொண்டு வரச்சொல்” என்றான். “போதும், மூத்தவரே. தாங்கள் இப்போதே கால் தள்ளாடிக் கொண்டிருக்கிறீர்கள். தங்களால் நடக்க முடியாது” என்றான். “நீ எனக்கு சொல் சூழ வேண்டியதில்லை. விலகு, மூடா!” என்று கர்ணன் கையை ஓங்கினான். விகர்ணன் சற்று பின்னடைந்தான். கர்ணன் விகர்ணனைப் பார்த்து “உன்னை தோளில் தூக்கி நான் வளர்த்திருக்கிறேன். என் முன் சிறுவனாக அன்றி நீ நின்றதில்லை. நான் நடக்க முடியுமா இல்லையா என்று சொல்வதற்கு நீ யார்?” என்றான். விகர்ணன் “பிழைதான். பொறுத்தருளுங்கள், மூத்தவரே! விரைவில் வாருங்கள்! அரசர் எந்நிலையில் இருக்கிறாரென்றே தெரியவில்லை” என்றான்.

துரியோதனனின் மாளிகை முகப்பில் கௌரவர்கள் அனைவருமே நின்றிருந்தனர். கர்ணனைக் கண்டதும் அவர்களில் சிலர் அவனை நோக்கி ஓடி வந்தனர். சுஜாதன் கர்ணனின் கையை பற்றிக்கொண்டு “மூத்தவரே…” என்று  அழுதான். “என்ன? என்ன?” என்றான் கர்ணன். “அவர் பிறிதொருவராக ஆகிவிட்டார். அவர் எங்கள் மூத்தவரே அல்ல. வேறு ஏதோ தெய்வம் அவருக்குள் குடியேறிவிட்டது” என்றான் சுஜாதன். கர்ணன் “பொறு பொறு” என்று அவன் தோளை தட்டியபடி முன்னால் நடந்தான். துர்மதன் “எதிர்ப்படும் அத்தனை பேரையும் அறைகிறார். தந்தையிடம் போர் புரியப்போவதாக அறைகூவுகிறார்” என்றான்.

“எங்கிருக்கிறார்?” என்றான் கர்ணன். துச்சாதனன் “படைக்கலச்சாலையில் கதை சுழற்றிக் கொண்டிருக்கிறார். தந்தையை போருக்கு அறைகூவுவதாகச் சொல்லி நான்கு வீரர்களை தூதனுப்பிவிட்டார். நால்வரையும் நாங்கள் தடுத்துவிட்டோம். தந்தை வரவில்லை என்று கண்டால் அவரே கதையுடன் கிளம்பி புஷ்பகோஷ்டத்துக்கு செல்லக்கூடும்” என்றான். கர்ணன் நின்று ஒரே கணத்தில் அந்தப்போரை கண்ணுக்குள் கண்டான். “ஆம், அவர் போருக்குத்தான் சித்தமாகிவிட்டிருக்கிறார்” என்றான். தம்பியர் உடல்தளர்வதை அவன் ஓரக்கண் கண்டது.

கர்ணன் வலச்சுற்றைக் கடந்து படைக்கலப் பயிற்சிசாலைக்கு சென்றான். நான்குபக்கமும் கதைப்பயிற்சிக்களத்தில்  நிழல்களாடுவது சூழ்ந்திருந்த வலச்சுற்றின் சுதைத்தூண்களில் ஒளியாடலாகத் தெரிந்தது. அவன் படைக்கலப் பயிற்சிசாலைக்குள் நுழைந்தபோதே சாயும் வெயிலில் கதை சுழற்றிக் கொண்டிருந்த துரியோதனனை கண்டான். கதை காற்றில் உறுமியபடி சுழன்று காட்சியில் உருகி இரும்பாலான ஒரு நீள் சுழலாக மாறியது. விண்ணிலிருந்து ஒரு பாம்பு துரியோதனனைச் சுற்றி பிணைந்து சீறுவது போலிருந்தது. பெருக்கெடுத்தெழுந்த ஓடை ஒன்று அவனை அள்ளிச் சுழற்றிச் சென்றது போல.

அவனைப் பார்த்தபடி கர்ணன் செய்வதறியாது நின்றான். துர்மதன் “அருகே செல்ல வேண்டாம், மூத்தவரே” என்றான். “செல்வதென்றால் ஒரு கதையுடன் செல்லுங்கள்” என்றான் துர்முகன். கர்ணன் அவர்கள் இருவரையும் தட்டி விலக்கிவிட்டு களமுற்றத்தில் இறங்கினான். “வேண்டாம், மூத்தவரே” என்று சொன்னபடி விகர்ணன் மேலும் சற்று அணுக அப்பால் செல் என்பது போல் விழிகளை அசைத்து “ம்” என்றான். அவன் நின்றுவிட்டான். கர்ணன் துரியோதனனை நெருங்கினான்.

துரியோதனன் அவன் வந்ததை முதலில் பார்க்கவில்லை என்று தோன்றியது. பின்பு ஒரு கணம் அவன் நோக்கு வந்து தொட்டுச் சென்றது. அவன் கண்களில் இருந்த வெறி எந்த மனிதரையும் அடையாளம் காண்பதல்ல என்று புரிந்தது. சீரான காலடிகளுடன் கர்ணன் அவனை நெருங்கிச் சென்றான். அவனுக்குப் பின்னால் படைக்கலச்சாலையில் கௌரவர்கள் அனைவரும் கூடி உடல் விரைப்பு கொள்ள நின்றனர். துச்சாதனன் கர்ணனுக்குப் பின்னால் காலெடுத்து வைக்க துர்மதன் அவன் தோளை பற்றினான். அவன் கையை தட்டியபடி துச்சாதனன் கர்ணனுக்குப் பின்னால்  சென்றான்.

கர்ணன் துரியோதனனின் கதை உருவாக்கிய சுழல் வளையத்தை ஒரு கணத்தில் கடந்து அவன் கையைப்பற்றி நிறுத்தினான். காலை அவன் இருகால்களுக்கு நடுவே கொண்டு வந்து உந்தி நிலையழியச் செய்து இன்னொரு கையால் அவன் இடைக்கச்சையைப் பற்றி தலைக்குமேல் தூக்கிச் சுழற்றி தரையில் ஓங்கி அறைந்தான். துரியோதனனின் கையிலிருந்த கதை உருண்டு தெறித்து அப்பால் சென்றது. இருகால்களையும் மடித்து துரியோதனனின் இரு தொடைகள் மேல் அழுத்தி மண்ணோடு பற்றிக்கொண்டு தன் இருகைகளாலும் அவன் இரு தோள்களையும் பற்றி நிலத்தில் அழுத்தி அசையாது நிறுத்தினான்.

வெறிகொண்ட பன்றி போல் உறுமியபடி துரியோதனன் கர்ணனின் பிடியிலிருந்து தப்பமுடியாமல் திமிறி நெளிந்தான். கர்ணன் குனிந்து அவன் விழிகளைப் பார்த்து “அஸ்தினபுரியின் அரசே! என் சொற்களை கேளுங்கள். நாம் இந்திரப்பிரஸ்தம் செல்வோம்” என்றான். அச்சொற்கள் புரியாதது போல் துரியோதனன்  உறுமினான். “நாம் இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்வோம். அவளை பார்ப்போம். எதையும் பொறுத்தருளுவதற்காக நாம் செல்லவில்லை. அங்கு நாம் அடைந்த சிறுமைக்கு நிகர் செய்வோம்” என்றான். உச்ச இறுக்கத்தில் என நின்றிருந்த துரியோதனன் தசைகள் மெல்ல அசைந்தன. “ஆம், அதற்காகவே சொல்கிறேன். நாம் அங்கு செல்வோம். அவள் விழிகளைப் பார்த்து பேசுவோம், அதற்காக” என்றான் கர்ணன்.

[ 5 ]

கதவு மெல்லிய புறாக்குறுகலோசையுடன் திறக்க மருத்துவர் வெளியே வந்து “சீரடைந்து வருகிறார். ஏழுமுறை நீரருந்திவிட்டார், ஒருமுறை நீர் பிரிந்துவிட்டது” என்றார். “மேலும் இருமுறை உடல்நீர் பிரிந்துவிட்டால் வெம்மை குறையத்தொடங்கிவிடும். ஆனால் விழித்தெழுந்து மீண்டும் மதுவை கோரினாரென்றால் எதன் பொருட்டும் ஒரு துளிகூட உள்ளே அது செல்லக்கூடாது. அது என்னால் ஆகக்கூடியதல்ல. தாங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்” என்றார். கர்ணன் தலையசைத்தான்.

துச்சாதனன் “என்ன செய்வதென்று தெரியவில்லை, மூத்தவரே. நானோ நீங்களோ அவர் மது அருந்துவதை தடுக்க முடியுமா?” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. கீழே தேர்கள் வந்து நிற்கும் ஓசை கேட்டது. “அவர்கள்தான்” என்றான் துச்சாதனன். கர்ணன் தன் அனைத்து உளச்சொற்களையும் திரட்டிக்கொண்டான். உடலை எளிதாக்குவதனூடாக உள்ளத்தையும் நிகர் நிலைப்படுத்தினான். ஆனால் அவனால் தன்னை முன்செலுத்த முடியவில்லை.

“நீ சென்று அவர்களை வரச்சொல்! நான் தொடர்ந்து வருகிறேன்” என்றான். துச்சாதனன் “இல்லை மூத்தவரே, என்னால் அவர்களை எதிர்கொள்ள முடியாது. தாங்கள் வாருங்கள்” என்றான். “நான் அரசரை ஒருமுறை பார்த்துவிட்டு வருகிறேன். நீ செல்! முகமன்கள் அனைத்தையும் சொல்!” என்று துச்சாதனின் தோளைத்தட்டி அனுப்பிவிட்டு அவன் துரியோதனன் அறைக்குள் நுழைந்தான்.

துரியோதனன் அப்போதும் கண்களை மூடி படுத்திருந்தான். அவன் அருகே இரு மருத்துவ உதவியாளர்களும் கையில் நீள்மூக்குக் கெண்டிகளுடன் நின்றிருந்தனர். துரியோதனன் வாயுமிழ்வது போல் சற்று ஓசை எழுப்ப “நெஞ்சை தடவுங்கள்” என்றார் மருத்துவர். அவன் நெஞ்சை தடவினான். மருத்துவர் அவன் இருகைகளையும் பிரித்துப்பார்த்து “உள்ளங்கைகளில் நீர்மை சற்று கூடியிருக்கிறது” என்றார்.

சுரைக்காய் குடுக்கை ஒன்று துரியோதனனின் இரு கால்களுக்கு நடுவே வைக்கப்பட்டிருந்தது. “நினைவு மீண்டுவிட்டாரா?” என்றான் கர்ணன். “நினைவு மீளவேண்டுமென்றால் உடல் வெம்மை குறைய வேண்டும். குறைந்து வருகிறது” என்றார் மருத்துவர். கர்ணன் இடையில் கைவைத்து துரியோதனனை நோக்கி நின்றான். இரு மருத்துவ உதவியாளர்களும் துரியோதனனை மெல்லத்தூக்கி அமர்வது போல நகர்த்தி மீண்டும் குடுவையை அவன் இடைநடுவே வைத்தனர்.

ஓங்கரித்து உடல் எம்பி எழுந்து துரியோதனன் குமட்டி குடித்தநீரை வாயுமிழ்ந்தான். “ஏன் நீர் வெளிவருகிறது?” என்று கர்ணன் கேட்டான். மருத்துவர் “உடல்நீர் பிரியவில்லை. உடல்நீர் பிரியாவிடில் குடிநீர் குமட்டும்” என்றார்.

“இத்தருணத்தில் அவரால் ஒரு பயணத்தை மேற்கொள்ள முடியுமா?” என்று கர்ணன் கேட்டான். “இருமுறை உடல் நீர் பிரிந்தால் எழுந்து நடக்கவே முடியும். சோர்விருக்கும், ஆனால் நடக்க முடியும்” என்றார் மருத்துவர். கர்ணன் “அவர் சித்தமானதும் எனக்கு தெரிவியுங்கள்” என்றபின் அறையைவிட்டு வெளியே வந்து படிகளில் இறங்கினான்.

கீழே கூடத்தில் அரசணிக்கோலத்தில் தருமனும் அணியாடையில் நான்கு தம்பியரும் நின்றிருந்தனர். கர்ணனைப் பார்த்ததும் தருமன் முன்னால் வந்து “எப்படி இருக்கிறார்?” என்றார். “சீரடைந்து வருகிறார்” என்றான் கர்ணன். “மதுவை சற்று மிகுதியாகக் குடித்துவிட்டார் என்று இளையவன் சொன்னான். இத்தனை நாள் இங்கு மதுக் களியாட்டு நடந்தது. அப்போதெல்லாம் அஸ்தினபுரி அரசர் மிகையாக அருந்தவில்லை. நேற்றென்ன நடந்தது?” என்றார் தருமன்.

“நேற்று தனிமையில் இருந்தார். சற்று களைப்பாக இருந்ததனால் நான் என் அரண்மனைக்குச் சென்று துயின்றுவிட்டேன்” என்றான் கர்ணன். “ஆம், தனிமை மதுவை மிகச்செய்கிறது” என்றார் தருமன். “எவராவது ஒருவர் இருந்திருக்கலாம். தாழ்வில்லை, மது அருந்தியதுதான் நோய்முதல் என்றால் ஒருநாழிகைக்குள் சரியாகிவிடுவார். மருத்துவர் இருக்கிறாரல்லவா?”

“ஆம்” என்றான் கர்ணன். தருமன் “இன்று அஸ்தினபுரியின் அரசர் கிளம்புவதாக சொன்னார்கள். மதுபர்க்கம் அளித்து அனைவருக்கும் விடைகொடுப்பதற்காக வந்தோம். இளையோர் அனைவரும் கிளம்பிச் சென்றுவிட்டதாக சொன்னார்கள்” என்றார். “ஆம். ஒரு விரிவான மதுபர்க்கச் சடங்கு நிகழ்த்துவதற்கு அரசரின் உடல் நிலை ஒத்துழைக்காதென்பதால் அவர்களை நான்தான் அனுப்பினேன்” என்றான் கர்ணன்.

“அவர்களுக்கு மதுபர்க்கம் அளித்திருக்கலாமே? அஸ்தினபுரியின் அரசர் தம்பியருடனும் மைந்தருடனும் துணைவியருடனும் இங்கு வந்திருப்பதுதான் உண்மையில் என்னை சத்ராஜித்தாக உணரச்செய்தது. பிறிதொருவருக்காக அல்ல. என் மூதாதையருக்காகவும் உடன் பிறந்தாருக்காகவும் இச்செங்கோலை ஏந்துகிறேன் என்று எண்ணிக் கொண்டேன்” என்று தருமன் சொன்னார்.

அவர் விழிகளைத் தவிர்த்து “வருக அரசே, அமர்வோம்!” என்றபடி கர்ணன் சென்று பீடத்தில் அமர தருமன் அவனருகே அமர்ந்தார். அர்ஜுனனும் பீமனும் நகுலனும் சகதேவனும் சற்று பின்னால் நின்றுகொண்டனர். துச்சாதனன் போய் அவர்களோடு இணைந்து நின்றான். பீமனின் விழிகள் அவன் விழிகளுடன் உரையாடுவதை கர்ணன் ஒரு கண விழியசைவில் கண்டான்.

தருமன் நீள்மூச்சுடன் “உண்மையில் அஸ்தினபுரியின் அரசர் வரக்கூடும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் விரும்பவில்லை என்றும் பிதாமகரின் ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அதை அவர் மீறக்கூடும் என்றும் எனக்குச் செய்தி வந்தது. அவர் வரவேண்டுமென்று என்னுடைய தெய்வங்களையும் மூதாதையரையும் வேண்டிக்கொண்டேன். அவரை அழைக்கும்பொருட்டு நானே தம்பியருடன் அஸ்தினபுரிக்கு வந்து பணிந்தால் என்ன என்றுகூட கேட்டேன். அது முறையல்ல. பிற அரசர்களும் அம்முறைமைகளை எதிர்ப்பார்க்கத் தொடங்கினால் நம்மால் அதை ஈடேற்ற முடியாது என்று அமைச்சர் சௌனகர் சொன்னார்” என்றார்.

“அப்படியென்றால் தனிப்பட்ட முறையில் ஓர் ஓலை அனுப்பலாம் என்று எண்ணினேன். அதற்குள் அவர் வர முடிவெடுத்துவிட்டதாக சொன்னார்கள். உண்மையில் அஸ்தினபுரியின் அரசப் படகு வந்து இங்கே படித்துறையில் நிற்பது வரைக்கும் நான் முள்முனையில் இருந்தேன். படகிலிருந்து அரசணிக்கோலத்தில் அஸ்தினபுரியின் அரசர் தோன்றியபோது என் நெஞ்சு நிறைந்தது. விழிநிறைய தெய்வங்களே என்று எனக்குள் கூவிவிட்டேன்” என்று தருமன் தொடர்ந்தார்.

“இங்கு அவர் வந்தது ஒவ்வொரு அரசரிடமும் உருவாக்கிய மாறுதலை பார்த்தேன். அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் நடுவே ஒரு பூசல் நிகழும் என்பதே அவர்கள் இறுதி எதிர்பார்ப்பாக இருந்தது. நாம் போரிட்டு அழிவோம் என்றால் அதிலிருந்து தங்கள் வெற்றியை ஈட்டலாம் என்று அவர்கள் எண்ணியிருக்கிறார்கள் என்பதை ஒற்றர் செய்திகள் மூலம் நான் உணர்ந்தேன். வேள்விப்பந்தலின் முதல் அவையில் பீஷ்மபிதாமகரும் தந்தை திருதராஷ்டிரரும் இளையவர் துரியோதனனும் நூற்றுவரும் அமர்ந்திருக்கக் காண்கையில் அவர்களின் முகங்கள் இறுகின. பிறகு என்னிடம் பேசும் ஒவ்வொருவருடைய மொழியிலும் மாறுதல் வந்தது.”

அவர் உள்ளத்தினூடாக ஒரு நிழல் கடந்துசெல்வதை கர்ணன் அவர் முகத்தில் கண்டான். விழிகளை சரித்து “சிசுபாலரின் இறப்பு பிறிதொரு தருணத்தில் என்றால் ஷத்ரியர்களை கொதித்தெழச் செய்திருக்கும். அஸ்தினபுரியே எனக்கு அருகில் அரணாக அமர்ந்திருக்கையில் ஒரு சொல்லெடுக்கும் துணிவு எந்த ஷத்ரியருக்கும் வரவில்லை. இனி எப்போதும் எழப்போவதுமில்லை” என்றார் தருமன்.

“ஆம்” என்றான் கர்ணன். தருமன் முகம் மலர்ந்து திரும்பி துச்சாதனனின் கைகளைப் பற்றியபடி “உணவுச்சாலைக்குப் பொறுப்பேற்று இளையவன் துச்சாதனன் பணியாற்றியதைக்கண்டு நானடைந்த நிறைவுக்கு அளவே இல்லை” என்றார். உடனே அக்காட்சியை உளக்கண்ணில் கண்டு வாய்விட்டுச் சிரித்து “இந்த மல்லர்கள் அனைவரும் உள அளவில் நிகரானவர்கள். இவ்வேள்விச்சடங்கில் பெரும்பாலான நேரம் பீமனும் துச்சாதனனுடன் உணவறையில்தான் இருந்தான்” என்றார். கர்ணன் புன்னகைத்தான்.

மேலிருந்து இறங்கி வந்த மருத்துவ உதவியாளன் “விழித்துக் கொண்டார்” என்றான். “நான் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கர்ணன் எழுந்தான். “நானும் வருகிறேனே?” என்றார் தருமன். “நான் பார்த்துவிட்டு அவர் விரும்பினால் மறுகணம் தங்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்றபடி கர்ணன் மேலே சென்றான்.

துரியோதனன் எழுந்து அமர்ந்திருந்தான். அவன் நீர் வெளியேற்றியிருப்பது குடுவையில் தெரிந்தது. மீண்டும் அவன் நீரருந்த வேண்டுமென்று குடுவையை நீட்டிய மருத்துவ உதவியாளரை விலகிச் செல்லும்படி சொல்லிவிட்டு “நாம் கிளம்ப வேண்டும், அங்கரே” என்றான். கர்ணன் “கீழே மதுபர்க்கச் சடங்கிற்காக வந்திருக்கிறார்கள்” என்றான். “ஆம். அறிந்தேன். ஆனால் அச்சடங்குக்கு நான் நிற்கப்போவதில்லை” என்றான்.

கர்ணன் “அரசரே வந்திருக்கிறார்” என்றான். “அவன் எனக்கு அரசனல்ல” என்று உரத்தகுரலில் துரியோதனன் சொன்னான். “ஆம், அதை நானும் அறிவேன். ஆயினும் இங்கு இவ்வளவு தொலைவுக்கு வந்திருக்கிறார். இளையவர் நால்வருடன் வந்திருக்கிறார்” என்றான் கர்ணன்.

“மதுபர்க்கச் சடங்கை புறக்கணித்து தம்பியர் சென்றதே அவருக்கு துயரளித்திருக்கிறது. நாம் இங்கு வந்ததே தனக்களிக்கப்பட்ட பெருமதிப்பாக எண்ணுகிறார். எளிய மனிதர்… அவரை நாம் துயருறச்செய்ய வேண்டியதில்லை. மிக எளிமையானது மதுபர்க்கச் சடங்கு. அரைநாழிகை நேரம் கூட ஆகாது. அவரளிக்கும் தேன்பாலமுதை உண்டு முறைப்படி விடைபெற்று நாம் கிளம்புகிறோம்” என்றான்.

துரியோதனன் உறுதியான குரலில் “இல்லை, நான் எவரையும் சந்திப்பதாக இல்லை” என்றான். “அது அலருக்கு இடமாகும். இப்போதுதான் அவர் சொல்லிக் கொண்டிருந்தார், அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் இணைந்திருப்பது ஷத்ரியர்களில் உருவாக்கிய அச்சத்தைப்பற்றி. இரு அரசுகளும் பூசலிடுவதை அனைவரும் எதிர்நோக்கியிருக்கிறார்கள்” என்றான் கர்ணன்.

சினத்துடன் “பூசல் தொடங்கிவிட்டதென்று அனைவருக்கும் தெரியட்டும்” என்று கூவி “போய் சொல்லுங்கள், அவர்களை திரும்பிப் போகும்படி! இன்னும் சற்று நேரத்தில் நான் இந்நகரில் இருந்து கிளம்புகிறேன். இங்கு நானிருக்கப்போவதில்லை ஒருகணமும்” என்றான். ஏவலரை அழைத்து “என் உடைகளை சித்தமாக்குங்கள். இன்னும் சற்று நேரத்தில் நான் கிளம்பவேண்டும்” என்றான்.

கர்ணன் “அரசே…” என்று சொல்லத்தொடங்க போதும் என்று கைகாட்டி “அவர்களிடம் சொல்லுங்கள்” என்றான். கர்ணன் “நன்று” என்று தலைதாழ்த்தி கீழே வந்தான். எப்படி எச்சொற்களில் அதை முன்னெடுப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் வருவதைக் கண்டதுமே தருமன் எழுந்து “என்ன சொல்கிறார்? நினைவு மீண்டுவிட்டதா?” என்றார். “நினைவு மீண்டுவிட்டது” என்றான் கர்ணன். “உடைமாற்றி வர சற்று பிந்தும்.”

“நான் காத்திருக்கிறேன். இன்று மதுபர்க்கச் சடங்குகள் பிறிதேதுமில்லை. இறுதியாக கிளம்பிச் செல்பவர்கள் இவர்களே” என்றார் தருமன். திரும்பி நகுலனிடம் “இளையோனே, மதுபர்க்கத்துக்குரிய அனைத்தும் அங்கு சித்தமாகட்டும். இசைச்சூதரும் மங்கலச்சேடியரும் ஒருங்குக!” என்றார்.

கர்ணன் அப்போதுதான் வெளிமுற்றத்தில் இசைச்சூதரும் மங்கலச்சேடியரும் வைதிகர்களும் அரசவைக்காவலரும் அகம்படியினரும் திரண்டிருப்பதை கண்டான். தயங்கியபிறகு “ஒரு பெரிய சடங்கிற்கு அவர் சித்தமாக இல்லை. அவர் உடல்நிலை சீர்கெட்டிருக்கிறது. தன் உடல்நிலை சீர்கெட்டிருப்பதை அனைவரும் பார்க்கவேண்டுமா என்று நினைக்கிறார். இங்கு இந்தக் கூடத்திலேயே எளிய முறையில் விடைபெறும் சடங்கை முடிப்போம்” என்றான்.

“இனியோர் வருகையிலும் செல்கையிலும் மதுபர்க்கம் நிகழவேண்டுமென்பது ஒரு முறைமை அல்லவா? ராஜசூயம் நிகழ்ந்தபிறகு மதுபர்க்கம் இன்றி அவர்கள் கிளம்பிச்சென்றால் அது எனக்கு மதிப்பு அளிப்பதல்ல” என்றார் தருமன். “மதுபர்க்கம் நிகழட்டும். தாங்கள் தேன்பழக்கூழை அவருக்கு அளியுங்கள். அவர் உண்டு ஐவரிடமும் விடைபெற்று வெளியே செல்வார்.”

பீமன் “அவர் நம் மூத்தவர். மங்கல வாழ்த்தும் இசையும் இன்றி அவர் எப்படி செல்லமுடியும்?” என்றான். கர்ணன் ஏதோ சொல்ல வாயெடுக்க அர்ஜுனன் “இவ்வழியாகத்தானே அவர் வெளியே செல்வார். செல்லும் வழியில் மங்கல இசையும் வாழ்த்துக்களும் எழட்டுமே!” என்றான். கர்ணன் அவன் விழிகளைப் பார்த்து பார்வையை திருப்பிக்கொண்டு “ஆம்” என்றான்.

மேலே சென்று துரியோதனனிடம் என்ன சொல்வது என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கையிலேயே படிகளில் துரியோதனன் விரைந்திறங்கி வரும் ஓசை கேட்டது. “அவர்தான் இளையோரே, துரியோதனர். பீமனின் காலடியோசை போன்றது அவரது காலடியோசை” என்றபடி தருமன் எழுந்தார். விரைந்த ஓசையுடன் படிகளில் இறங்கி வெளியே வந்த துரியோதனன் அவர்களை அணுகாமல் இடைநாழி வழியாகவே நடந்து கூடத்தை அடைந்து வெளியே சென்றான்.

“வெளியே செல்கிறார். வழி தவறிவிட்டார் போல” என்று சொல்லியபடி தருமன் எழுந்து அவனுக்குப் பின்னால் ஓடினார். “மூத்தவரே!” என்று பீமன் உரத்த குரலில் அழைத்தான். தருமன் நின்று “இங்கு உள்ளே வராமல் செல்கிறார். நாமிருப்பது தெரியாது போலிருக்கிறது” என்றார். “நில்லுங்கள், மூத்தவரே! தாங்கள் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி. எவர் பின்னாலும் தாங்கள் ஓட வேண்டியதில்லை” என்றான் பீமன் உரத்த குரலில். தருமன் “என்ன சொல்கிறாய்? அவர் வெளியே போய்விட்டார்” என்றார். “நில்லுங்கள், மூத்தவரே” என்றான் அர்ஜுனன்.

துரியோதனன் வெளியே சென்றதும் அங்கிருந்தவர்கள் என்ன செய்வது என்றறியாமல் குழம்பி எழுப்பிய ஒலிகள் கேட்டன. கர்ணன் அவருக்குப் பின்னால் செல்ல முயல தருமன் “அவரை நிற்கச் சொல்லுங்கள், அங்கரே! என்ன பிழை என்றாலும் நான் பொறுத்தருளும்படி கோருகிறேன் என்று சொல்லுங்கள்! மதுபர்க்கம் நிகழாது செல்லவேண்டாம் என்று சொல்லுங்கள், அங்கரே!” என்றபடி பின்னால் வந்தார்.

கர்ணன் வெளியே சென்றபோது துரியோதனன் மங்கல இசைச்சூதரைக் கடந்து அப்பால் சென்று அங்கு நின்றிருந்த புரவி மேல் ஏறிக்கொண்டதை கண்டான். அவன் பின்னால் செல்லப்போகும் போது யாரோ கைகாட்ட மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் வெடித்தன. கர்ணன் ஓடிச்சென்று இன்னொரு புரவியை அணுகி அதன் கடிவாளத்தைப்பற்றி ஏறி முன்னால் சென்ற துரியோதனனைத் தொடர்ந்து சென்றான்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 64

[ 3 ]

அரசியின் அரண்மனையில் இருந்து ஏவல்பெண்டு ஒருத்தி வந்து அறைவாயிலில் நின்றாள். துச்சலன் “வருக!” என்றதும் அவள் வந்து கர்ணனை வணங்கி “தங்களை மகளிரறைக்கு வரும்படி காசிநாட்டரசி கோரியிருக்கிறார், அரசே” என்றாள். கர்ணன் எழுந்து “நான் சென்று அவளை பார்த்துவிட்டு வருகிறேன்” என்றான். “நானும் உடன் வரவா?” என்றான் துச்சாதனன். “வேண்டாம்” என்றபின் கர்ணன் நடந்தான்.

செல்லும் வழியில் ஏவல்பெண்டிடம் “அரசர் அங்கு இருக்கிறாரா?” என்றான். “இருந்தார். இப்போது கிளம்பிச் சென்றுவிட்டார்” என்றாள். “எங்கு?” என்றான். “இளைய அரசியின் அரண்மனைக்கு என்று தோன்றுகிறது” என்றாள். அவள் முகத்தில் மீண்டும் ஏதோ எஞ்சியிருக்கக்கண்டு கர்ணன் “என்ன நிகழ்ந்தது?” என்றான். அவள் “அரசியிடமே தாங்கள் பேசிக் கொள்ளலாம்” என்றாள்.  அந்தக்கடுமை அவனை திகைக்கச்செய்தது.

மகளிர் மாளிகையை சென்றடைந்ததும் முதல் முறையாக அங்கு வந்திருக்கக்கூடாதோ என்னும் உணர்வை கர்ணன் அடைந்தான். அவ்வுணர்வு ஏன் எழுந்தது என்னும் எண்ணமே அவனை குழம்பச் செய்தது. நடையில் அந்தத் தயக்கம் தெரிய, தன்னை அணுகிய சேடிப்பெண்ணிடம் தன் வரவை அறிவிக்கும்படி கைகாட்டினான். அவள் உள்ளே செல்ல சற்று நேரத்தில் மேலிருந்து செவிலி வந்து ஒருசொல்லும் இல்லாமல் தலைவணங்கி “வருக!” என்றாள். உள்ளறைக்குள் அவன் சென்று அமர்ந்ததும் செவிலி தலைவணங்கி வெளியேறினாள்.

பீடத்தில் அமர்ந்து இரு கைகளையும் தொடைமேல் வைத்து சற்றே தலைகுனிந்து மீசையை நீவியபடி கர்ணன் அமர்ந்திருந்தான். உடையசைவின் ஒலி அவனை கலைத்தது. உள்ளே வந்த பானுமதி முகத்தின் மேல் மேலாடையை முழுக்க இழுத்து மூடியிருந்தாள். சற்றே தளர்ந்த காலடிகளுடன் பட்டாடைகளும் அணிகளும் ஒலிக்க அவன் முன் வந்து தலைவணங்கி “அங்க நாட்டரசருக்கு வணக்கம்” என்று முகமன் உரைத்தாள். “நன்று!” என்று சொல்லி அவன் அமரும்படி கைகாட்ட ஆடையை ஒதுக்கி அமர்ந்தாள்.

அவன் முன் அவள் முகத்தை மூடுவதில்லை என்பதனால் அவள் விழிகளை சந்திக்காமல் கர்ணன் சற்று தத்தளித்தான். முதலில் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. பொருத்தமான ஒரு பொது வினாவை எழுப்பவேண்டுமென்று எண்ணிக்கொண்டிருக்கையிலேயே அவன் எண்ணியே இராத வினாவாகிய “அரசர் இங்கில்லையா?” என்பதை கேட்டுவிட்டான். “இல்லை” என்று அவள் சொன்னாள். “இங்கு வந்தாரல்லவா?” என்றன அவன் உதடுகள். அவள் “ஆம்” என்றாள்.

“நிகழ்ந்ததை அறிந்திருப்பாய்…” என்று கர்ணன் தொடங்கினான். “அனைத்தையும் அவரே சொன்னார்” என்றாள் பானுமதி. “இங்கு வந்தால் சற்று அமைதி கொள்வார் என்று எனக்குத் தோன்றியது” என்றான். “இங்கு வந்து என்ன நிகழ்ந்தது என்பதை சொல்லும்போதே அவருக்குள் உணர்வுகள் மட்டுப்படத் தொடங்கிவிடும் என்று எண்ணினேன்… வேறெங்கும் அவர் தன் முடிச்சுகளை அவிழ்ப்பதில்லை.”

“இங்கு வந்து அவை மேலும் பற்றிக் கொண்டன” என்று அவள் சொன்னாள்.  கேட்கலாமா என தயங்கி “என்ன நிகழ்ந்தது?” என்று அவன் கேட்டான். சற்று நேரம் தலைகுனிந்து விரல்களைக் கோத்து அமைதியாக இருந்தபின் அவள் நிமிர தலையிலிருந்து மேலாடை நழுவி முகம் தெரிந்தது. கர்ணன் அவள் விழிகள் அழுதவை போல வீங்கிச் சிவந்திருப்பதை கண்டான். கன்னம் இருபுறமும் சிவந்திருந்தது. ஒருகணத்திற்குப் பிறகுதான் அவை அடிபட்டதன் வீக்கங்கள் என்று தெரிந்து திகைத்து எழுந்து “என்ன நடந்தது? என்ன நடந்தது?” என்றான். “யார்? அவரா?” என்று மறுபடியும் கேட்டான். “ஆம்” என்று அவள் சொன்னாள்.

அவனால் மேற்கொண்டு சொல்லெடுக்க இயலவில்லை. மெல்ல சென்று சாளரத்தருகே நின்று நோக்கியபடி “நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒருபோதும் இதை அவர் செய்வாரென்று எதிர்பார்க்கவில்லை” என்றான். “நானும் எண்ணியிருக்கவில்லை. நாளை ஒருவேளை இதற்கு அவர் மிக வருந்தக்கூடும் என்பதே மேலும் துயரை அளிக்கிறது” என்றாள் பானுமதி.   “ஆனால் இது அவரது எல்லை. இதுவே கீழ்மையின் இறுதி எல்லை” என்றான் கர்ணன். அதற்குள் அவள் உணர்வுகள் மீதூர தொண்டை ஏறியிறங்கி கண்கள் கலங்கின. “எப்படி இதை அவரால் செய்ய முடிந்தது?” என்றான்.

“இங்கு வந்தபோது அவரில் ஏறி பிறிதொரு இருள்தெய்வம் அணுகியதாக உணர்ந்தேன். வந்ததுமே என்னிடம் உரத்தகுரலில்  நகைகள் அனைத்தையும் கழற்றி வீசி மரவுரி ஆடை உடுத்து கிளம்பும்படி சொன்னார். என்ன நிகழ்ந்தது என்று கேட்டேன். தன் அணிகளையும் ஆடைகளையும் கழற்றி அறைமூலையில் வீசிவிட்டு கிளம்பு என்னுடன் என்றார். என்னை பேசவே விடவில்லை. வேறு எதுவும் கேட்காதே, ஒருசொல்லும் கேட்காதே, கிளம்பு என்று கூவினார்.”

“என்ன நிகழ்ந்தது சொல்லுங்கள் என்று நான் கேட்டேன். மணிமுடி துறக்கத் தயங்குகிறாயா இழிமகளே என கூவினார். நாம் கிளம்புகிறோம். அஸ்தினபுரி இனிமேல் உனக்கும் உரியதல்ல எனக்கும் உரியதல்ல. என்னுடன் காட்டில் விறகு பொறுக்கி வாழ். நான் கொண்டு வரும் ஊனை சமைத்துக் கொடு. எங்காவது குகைகளில் ஒடுங்கிக் கொள்வோம். அஸ்தினபுரியின் அரசன் இன்றோடு இறந்துவிட்டான். காட்டுவிலங்குகளுக்குமுன் செத்துவிழுவது இங்கே சிறுமைகொண்டு புழுவாக வாழ்வதற்கு மேல் என்றார்.”

“அவரைப் பற்றி அமரச்செய்தேன். மது அளித்தபோது மீண்டும் மீண்டும் குடித்தார். சற்றே தணிந்தபோது என்ன நிகழ்ந்தது என்று சொல்லுங்கள் என்று மீண்டும் கேட்டேன். ஹஸ்தியின் மணிமுடியுடனும் குருவின் செங்கோலுடனும் அந்தச் சிறுமகளின் முன் மீண்டும் சென்று வணங்கி நிற்கும்படி உனது பிதாமகர் எனக்கு ஆணையிட்டிருக்கிறார் என்றார். மறுகணம் அத்தனை மதுவும் தீயாக பற்றிக்கொண்டது போலிருந்தது. எங்கிருந்து முளைத்தன என்று தெரியவில்லை.  மிகக்கீழ்மையான சொற்களில் பீஷ்மபிதாமகரையும் தன் தந்தையையும் வசை பாடினார். கதவுகளை ஓங்கி உதைத்தார். தூண்களை அறைந்தார்” என்றாள் பானுமதி.

கர்ணன் அவளை நோக்கிக் கொண்டிருந்தான். அவள் ஏதோ சொல்லத்தயங்கியவள் போல ஆனால் நெஞ்சுக்குள்ளிருந்து அது எழுந்து வந்து உதடுகளை முட்டுவது போல தோன்றியது. பற்களைக் கடித்து தலைகுனிந்து இருமுறை இல்லையென்பது போல ஆட்டிவிட்டு ஒருகணத்தில் பிறிதொருவளாக ஆகி சீற்றத்துடன் “என் முன் நின்று அவர் ஒரு சொல் சொன்னார். அதை நான் மறுத்தேன்” என்றாள். கர்ணன் என்ன என்று கேட்கவில்லை. ஆனால் அவன் நெஞ்சு படபடத்தது “பீஷ்மபிதாமகரின் பிறப்பையும் தன் தந்தையின் பிறப்பையும் இழித்துரைத்தார்” என்றாள்.

அதை துரியோதனன் சொல்லியிருப்பான் என்பதை அக்கணமே தன் உள்ளம் ஏற்றுக்கொள்வது எப்படி என்று கர்ணன் வியந்தான். சினம் மீறும்போது தானும் அப்படித்தான் சொல்லக்கூடுமோ? பிறப்பை வசையாக்குவதே ஆணவம்கொண்ட ஆணின் இயல்பான வழியாக இருக்குமோ? பானுமதி “என் முன் நின்று அவற்றை சொல்லவேண்டாம் என்றேன். அவரது தந்தையின் பிறப்பு பிழையானதென்றால் அவரும் பிழைப்பிறவிதானே, அரசன் என்று அமர்ந்திருக்க அவருக்கென்ன உரிமை என்று கேட்டேன்” என்றபின் தணிந்த குரலில் “ஆனால் நான் அப்படி கேட்டிருக்கக்கூடாதென்று இப்போது உணர்கிறேன்” என்றாள்.

உடனே சீற்றம் கொண்டு “ஆனால் இனி என் முன் நின்று மீண்டும் அதை சொன்னால் அங்கேயே கத்தியை எடுத்து என் குரல்வளையை அறுத்துக்கொள்வேன்” என்றாள். கர்ணன் “அப்போதுதானா…?” என்றான். “ஆம், நான் சொல்லி முடித்ததும் என்னை அறைய ஆரம்பித்தார். இரண்டு முறை அடிவாங்குவதற்குள் நான் சுருண்டு கீழே விழுந்துவிட்டேன். விழுந்த என்னை உதைத்தார். நான் தெறித்து சுவரில் முட்டி சுருண்டேன். அதற்குள் அனைத்து ஏவல்பெண்டிரும் வந்து அவர் கைகளையும் கால்களையும் பற்றிக் கொண்டனர். இரு செவிலியர் என்னை இழுத்து இன்னொரு அறைக்கு கொண்டு சென்றனர்” என்றாள்.

“எவரையாவது அடித்துக் கொன்றுவிடுவார் என்றால் நாம் நகர் மக்களிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது” என்றான் கர்ணன். “ஏன் மறைக்கவேண்டும்?” என்று பானுமதி சினத்துடன் கேட்டாள். “இவர் இப்படி இருப்பது தெரியட்டுமே அனைவருக்கும்” என்றாள். “எண்ணித்தான் சொல்லெடுக்கிறாயா பானுமதி?” என்று கர்ணன் சினத்துடன் கேட்டான். “அஸ்தினபுரியின் அரசர் இவர். இவர் உளநிலை சீராக இல்லையென்று மக்களுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்? முன்னரே இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் யுதிஷ்டிரனின் புகழ்பாடத் தொடங்கியுள்ளனர்.”

பானுமதி மெல்ல அடங்கி “என்ன ஆயிற்று இவருக்கு? தங்களுக்கும் தெரிந்திருக்கும், கணவராக நான் இவரை அணுகி விழிநோக்கி இன்சொல் பேசியது இந்திரப்பிரஸ்தத்தின் அணையா விளக்கு விழவுக்கு இவர் கிளம்பிச் செல்வதற்கு முந்தைய நாள். திரும்பி வந்தவர் பிறிதொருவர்” என்றாள். “ஆம், மெய்யாகவே திரும்பி வந்தவர் பிறிதொருவர்” என்றான் கர்ணன். “இங்கு வந்த நச்சு நோயினால் அவர் மாறிவிட்டாரா?” என்றாள். “அந்த நோயே அவர் கொண்டு வந்ததுதான்” என்றான் கர்ணன். அவன் சொல்வதென்ன என்று அறியாததுபோல் அவள் பார்த்தாள்.

கண்ணீர் பெருகிய அவள் விழிகளை பார்த்தபின் அவன் மெல்ல தணிந்து “அங்கு அவர் சிறுமை செய்யப்பட்டார், பானுமதி” என்றான். “அதை பலமுறை பலரும் சொல்லிவிட்டீர்கள். அப்படியென்ன சிறுமை நிகழ்ந்தது? நானும் அங்கு  இருந்தேனே. கால் இடறி விழுந்தது இவரது பிழை. மதுமயக்கிலிருந்த  சில அரசர்கள் நகைத்தனர்.” கர்ணன் “அவள் நகைத்தாள்” என்றான். “அவள் நகைக்கவில்லை. அவளுக்கு மிக அருகே நான் இருந்தேன். அவள் விழிகளையும் உதடுகளையும் நான் பார்த்தேன்.  உறுதியாக அவள் நகைக்கவில்லை. இயல்பாக ஒரு கணம் திரும்பிப் பார்த்துவிட்டு அவ்வாறு பார்க்காததுபோல் திரும்பிக்கொண்டாள்” என்றாள்.

“இல்லை, அவள் நகைத்தாள். அவ்விழிகளை நானும் பார்த்தேன்” என்றான் கர்ணன் சீற்றத்துடன். “அது உங்கள் உளமயக்கு” என்றாள் பானுமதி. “இருக்கலாம். ஆனால் ஆண்கள் மட்டும் பார்க்கும் ஒரு நகைப்பு அது. அதை நான் பார்த்தேன். அஸ்தினபுரியின் அரசரும் பார்த்தார்” என்றான் கர்ணன். “உங்கள் உளமயக்கினால் அனைத்தையும் பெரிதாக்கிக் கொள்கிறீர்கள்” என்று அவள் சொன்னாள்.

கர்ணன் தன் தலையை கையால் தட்டி “இல்லை, ஒவ்வொரு கணமும் அதை சிறிதாக்கி கடந்துசெல்ல முயல்கிறேன்.  முயல முயல அது வளர்கிறது. அந்த நாளிலிருந்து ஒரு கணம்கூட நான் விலகவில்லை, அதை எண்ணாது ஓர் இரவும் துயின்றதில்லை. ஒருகாலையும் அந்நினைப்பில்லாது விடிந்ததும் இல்லை. அரசர் நிலையை என்னால் எண்ணிப்பார்க்கவே கூடவில்லை” என்றான்.

“அதன் பொருட்டு இவ்வளவு வஞ்சமா? ஒரு நகரத்தையே நஞ்சூட்டி, தன் ஆன்மாவையே கடுங்கசப்பால் நிறைத்து மூதாதையருக்கு அளிக்கும் அன்னத்தில்கூட அதைக்கலந்து… அந்த அளவுக்கு இதில் என்ன உள்ளது? உண்மையிலேயே என்ன வெறி இது என்று எனக்குப் புரியவில்லை” என்றாள். “நீ பெண். உன்னால் உணரமுடியாது” என்றான் கர்ணன்.

“அவர் இருக்கும் அறைக்குள் எட்டிப்பார்ப்பேன். தன் மூச்சுக்காற்றால் அவ்வறையை நச்சால் நிரப்பி அதையே திரும்ப மூச்சாக இழுத்துக்கொண்டிருக்கிறார் என்று தோன்றும். சற்று நேரம்கூட அவரருகே என்னால் இருக்க முடிந்ததில்லை. அவர் அறைக்குள் சென்றதுமே அந்நச்சுக்காற்று என் நெஞ்சை நிரப்ப மூச்சுத் திணறத்தொடங்கிவிடும். அவரும் ஓரிரு சொற்களுக்கு அப்பால் என்னிடம் பேசுவதில்லை. அச்சொற்கள் எதுவுமே நான் அறிந்த அஸ்தினபுரியின் அரசருக்குரியதல்ல.”

“எப்போதாவது அவர் என்னை தொட்டால்…” என்று இயல்பாக சொல்லிவந்தவள் உதடுகளை அழுந்தக் கடித்து தலைகுனிந்தாள். இமைப்பீலிகளிலிருந்து கண்ணீர் அவள் மடியில் விழுந்தது. “அங்கரே, அவர் என்னைத் தொடுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நானறியாத பிறிதெவரோ என்னைத் தொடுவதுபோல் உணர்கிறேன். என் உடம்பு கூசி அதிர்கிறது.”

கர்ணன் பெருமூச்சுவிட்டான். அவள் விழிதூக்கி “உண்மையிலேயே இவ்வுடலுக்குள் பிறிதொருவர் குடியேறிவிட்டாரா? கூடு பாய்ந்து  பிறிதொன்று வந்து இதற்குள் வாழ்வதற்கு வழியுள்ளதா?” என்றாள். பதைப்பு தெரிந்த விழிகளுடன் “என் நெஞ்சின் ஆழம் நன்கு அறிகிறது, இது அவரல்ல. அவரில் குடியேறிய பிறிதெவரோ, ஐயமில்லை” என்றாள். கர்ணன் சிரித்து “கூடு ஒன்றுதான், பானுமதி. உள்ளே அனைத்து மானுடரும் மாறிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அவ்வாறு முற்றிலும் மாறுவது என் வாழ்க்கையிலும் இது இரண்டாவது முறை” என்றான்.

அவன் என்ன சொல்கிறான் என்பது போல அவள் அவனையே நோக்கிக் கொண்டிருந்தாள். “பல ஆண்டுகளுக்கு முன்பு துரோணரின் கல்விநிலையிலிருந்து சிறுமைப்பட்டு நான் ஓடினேன். அன்று இந்த உடலைத் திறந்து வெளியேறிவிட விழைந்தேன். மண்ணோடு மண்ணாகப் படுத்து புதைந்துவிடவேண்டும் என்று துடித்தேன். பெரும் சிறுமைகளின் முன் நாம் நமது உடலை அத்தனை அழுக்கானதாக, எடை மிக்கதாக, சீரற்றதாக உணர்கிறோம். கிழித்து அதிலிருந்து வெளியேறிவிட வேண்டுமென்று தவிக்கிறோம். நம் முதுகெலும்பு கரைந்து நாம் புழுவாகிவிடுகிறோம்…”

“அந்தப் பதினெட்டு நாட்களைக் கொண்டு அஸ்தினபுரியின் அரசரின் இந்த ஒரு கணத்தை நான் புரிந்து கொள்கிறேன். அக்கணத்தில் நான் முடிவிலாது வாழ்கிறேன்” என்றான். அவள் அவனையே நோக்கிக் கொண்டிருந்தாள். “சிறுமை என்பதே ஆண் கொள்ளும் உச்ச துயரம்” என்றான் கர்ணன். “இறப்பல்ல, இழப்புகள் அல்ல.”

தணிந்த குரலில் “சிறுமை அனைவருக்கும் உரியதே” என்று பானுமதி சொன்னாள். “இல்லை, அன்னையர் என்றே மண்ணில் பிறக்கும் பெண்கள்  ஆணவத்தைச் சுருக்கவும் சிறுமைகளை  கடக்கவும் இயல்பிலேயே கற்றிருக்கிறார்கள். சிறுமையை மாறா வஞ்சமென ஆக்கிக்கொண்ட பெண்கள் எவரையும் நான் இதுவரை கண்டதில்லை” என்றான் கர்ணன்.

பானுமதி “இதே நகர் முற்றத்தில்தான் ஒருத்தி சிறுமையின் உச்சத்தை அடைந்தாள். அதை வஞ்சமென மாற்றிக்கொண்டு இந்நகர் மேல் தன் கண்ணீரை நெருப்புத்துளியாக்கி எறிந்துவிட்டுச் சென்றாள்” என்றாள். “ஆம், பற்றி எரிந்து புரமழிக்கும் கொற்றவைகள் உண்டு. ஆனால் அம்பை உயிர் வாழ்ந்திருந்தால் ஒரு கைக்குழந்தையை அவர் தன் கையில் எடுத்திருந்தால் முலைப்பாலின் தண்மையால் அந்த அனலை கடந்து சென்றிருப்பார். ஆணுக்கு முலையூற்றுக்கள் இல்லை. சில அனல்களை ஆண்களால் ஒருபோதும் அணைக்கமுடியாது” என்றான்.

“அவரால் மீளவே முடியாதா?” என்று தாழ்ந்த குரலில் பானுமதி கேட்டாள். “முடியும். அச்சிறுமைக்கு நிகரான வஞ்சமொன்றை அவர் இழைக்கும்போது. ஒருகணமெனில் ஒருகணம் இந்திரப்பிரஸ்தத்தின் அச்சிறுமகள் வந்து அவர் முன் தலை பணிந்தாள் என்றால் அன்று அவர் வெல்வார். அவ்வனலை அணைக்கும் குளிர்நீர் அது மட்டுமே” என்றான் கர்ணன். பானுமதி “என்ன சொல்கிறீர்கள்? நீங்களே உருவாக்கிக்கொண்ட வஞ்சத்திற்காக இந்திரப்பிரஸ்தத்தின் அரசி எதற்கு சிறுமை கொள்ள வேண்டும்?” என்றாள். “இது எவரும் உருவாக்கியதல்ல. வேண்டுமென்றால் தெய்வங்கள் உருவாக்கியதென்று சொல்லலாம்” என்றான் கர்ணன்.

இருவரும் நினைத்த சொற்களை இழந்து ஒருவருக்குள் ஒருவர் மறந்து அசையாதிருந்தனர். தோட்டத்தில் தொலைவில் ஆடிய மரக்கிளை ஒன்றில் விழிநட்டு நின்றிருந்த கர்ணனை பானுமதியின் நீள்மூச்சு கலைத்தது. “இங்கிருந்து அதே வெறியுடன் இறங்கி இளைய அரசியின் அரண்மனைக்குச் சென்றார்” என்றாள். “நான் பார்க்கிறேன்” என்றான் கர்ணன்.

உலுக்கப்பட்ட மரத்திலிருந்து பனித்துளிகள் கொட்டுவது போல ஒரு விசும்பலோசையுடன் பானுமதி அழத்தொடங்கினாள். அவன் ஒரு  சொல்லுமின்றி அவளை பார்த்துக்கொண்டிருந்தான். பலமுறை தன் அழுகையை அடக்க அவள் முயன்றாலும் அவள் உடலை மீறி அது வந்து கொண்டிருந்தது. கண்களை அழுந்தத் துடைத்து மூக்கையும் வாயையும் பொத்தி சின்ன விசும்பலுடன் மீண்டு மீண்டும் அழுகை பீரிட அதன் ஒழுக்கில் சென்றாள். மெல்ல அடங்கி நீள்மூச்சுடன் மீண்டாள்.

கண்களை அழுந்தத் துடைத்தபடி “அழக்கூடாது என்று எண்ணும்தோறும் அழுகை பெருகுகிறது” என்றாள். கர்ணன் “ஆம், இச்சிறுமையை நீ கடந்து சென்றே ஆகவேண்டும்” என்றான். “சிறுமையா? என்ன சிறுமை?” என்று கண்களைச் சுருக்கியபடி பானுமதி கேட்டாள். “அஸ்தினபுரியின் அரசர்களில் எவரும் பட்டத்தரசியை அறைந்திருக்கமாட்டார்கள்” என்றான்.

பானுமதி “அங்கரே, நான் அழுதது காசிநாட்டரசியாகிய என்னை அஸ்தினபுரியின் அரசர் அறைந்தார் என்பதற்காக அல்ல. இங்கு நான் வந்தபோது என் நெஞ்சை தகழியாக்கி ஏற்றிவைத்த சுடர் ஒன்று இருந்தது. நானறிந்த அரசரை முழுமையாக இழந்துவிட்டேன் என்று என் உள்ளம் சொல்கிறது” என்றாள்.

கர்ணன் “அவ்வாறல்ல. இது சில நாட்கள் நீடிக்கும் ஒரு வஞ்சம் மட்டுமே. நானும் இதைப்போன்ற வஞ்சங்களின் ஊடாக சென்றிருக்கிறேன். அவை மெல்ல அணைந்து குளிரும்” என்றான். “அழியுமா?” என்று அவள் கேட்டாள். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “இவ்வஞ்சம் அனைத்தையும் சினமாக அன்றி வெறுப்பாகவோ காழ்ப்பாகவோ மாற்றி தனக்குள் கரந்துகொண்டிருந்தாலும்கூட அவர் நானறிந்த துரியோதனர் அல்ல. மணமுடித்து நான் வருகையில் நான் கண்ட அவ்வரசரை மீண்டும் பெறுவேன் என தோன்றவில்லை” என்றாள். “நான் என் மைந்தனைப் பெற்றது அந்த அரசரிடம்தான். இன்று அவ்வுடலேறி நின்றிருக்கும் வஞ்சத்தெய்வத்திற்கு அல்ல.”

“அனைத்தும் மீளும். அதற்கு வழியுள்ளது. அதற்கென்றே என் உயிர். அதற்கப்பால் நான் சொல்ல ஒன்றுமில்லை” என்றான் கர்ணன். “மீளுமெனில் நன்று. ஆனால் இப்போது அழுதுகொண்டிருக்கையில் என்னுள் ஒன்றை கண்டுகொண்டேன்” என்றாள். “என்ன?” என்றான் கர்ணன். “நான் என் முழு உள்ளத்தாலும் விரும்பிய அந்த அரசரைத்தான் மைந்தனாகப் பெற்றிருக்கிறேன். அவரை இழந்தாலும் நான் விரும்பிய அந்த அரசர் என் மடியில் மைந்தனாக இருக்கிறார். அவன் காலடி தொடர்ந்து எஞ்சிய வாழ்நாளை நான் கடந்துவிட முடியும்” என்றபின் அவள் எழுந்தாள்.

“நான் உங்களை அழைத்தது ஒன்று சொல்வதற்காகவே” என்றாள். கர்ணன் அவளை வெறுமனே நோக்கினான். “அவரை நீங்கள் இந்திரப்பிரஸ்தத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும்” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்றான் கர்ணன். “நீங்கள் அழைத்துச் சென்றாக வேண்டும். இது என் ஆணை. நீங்கள் என் தமையன் என்ற வகையில் இதை கூறுகிறேன்” என்றாள். கர்ணன் “நீ எண்ணிச் சொல்லவில்லை” என்றான். “அனைத்துச் சொற்களையும் எண்ணியே சொல்கிறேன். நீங்கள் அழைத்துச் சென்றாகவேண்டும்.”

கர்ணன் உரக்க “அவன் அங்கு அடைந்த சிறுமையை நீ அறிவாயா? மீண்டும் ஒருமுறை…” என்று சொல்லத் துவங்க அவள் கைநீட்டித் தடுத்து “அது ஒரு சிறு தற்செயல். உங்கள் உளம் உறைந்த கசப்பால் அதை பெரிதுபடுத்திக் கொண்டீர்கள். இந்திரப்பிரஸ்தத்தின் அரசிக்கு நான் ஓர் ஓலை அனுப்புகிறேன். இவர் விழைவதென்ன? அவள் வந்து இவர் முன் முடிதாழ்த்த வேண்டும் என்பதுதானே? அதை அவள் செய்வாள். பொறுத்தருளும்படி கோருவாள். அவையில் முதன்மையாக அமர்த்துவாள். போதுமல்லவா?” என்றாள்.

கர்ணன் இல்லை என்பது போல் தலையசைத்தான். “நான் கூறுகிறேன். என் சொல்லை அவள் தட்டமாட்டாள்” என்றாள் பானுமதி. “இனி இவரது அனல் அணைந்து பழையவராக மீளக்கூடுமென்றால் அதற்கொரு வாய்ப்பு இது மட்டுமே.” கர்ணன் “நீ உன்னால் அறிந்துகொள்ள முடியாதவற்றுடன் போரிடத் திட்டமிடுகிறாய்” என்றான். “என் மேல் கருணை கூருங்கள். எனக்கென இதை மட்டும் செய்யுங்கள். இந்த ஒருமுறை எவ்வண்ணமேனும் இவரை அங்கு அழைத்துச் செல்லுங்கள்” என்றாள் பானுமதி. நெடுமூச்சுடன் “பார்ப்போம்” என்றான் கர்ணன்.

அவர்கள் சொல்லவேண்டியதை முழுக்க சொல்லிவிட்டதாக உணர்ந்தனர்.  கர்ணன் எழுந்தான். அவளிடம் ஆறுதலாக எதையேனும் சொல்லவேண்டும் என்று விரும்பினான். ஆனால் ஒருசொல்லும் தன்னிடம் மிஞ்சியிருக்கவில்லை என்று தோன்றியது. தலைவணங்கி அமைதியாக விடைபெற்றான். ஆனால் மறுபக்கக் கதவை அணுகி கையை வைத்ததும் “மூத்தவரே!” என்று மெல்லிய குரலில் அவள் அழைத்தாள். கர்ணன் திரும்பி நோக்க “இரண்டாவது சிறுமை எதுவென்று தாங்கள் சொல்லவில்லை. ஆனால் என்னால் உணரமுடிகிறது” என்றாள். அவன் தன் உடலில் மெல்லிய துடிப்பை உணர்ந்தபடி விழிதிருப்பிக் கொண்டான்.

“உங்கள் துயருடன்தான் எப்போதும் நான் அணுக்கமாக இருக்கிறேன். அதிலிருந்து மீண்டு வாருங்கள். வஞ்சமோ கசப்போ கொண்டு மறைக்கும் அளவுக்கு எளியதல்ல இவ்வாழ்க்கை. எண்ணி முடிப்பதற்குள் ஆண்டுகள் கடந்துபோகும். முதுமை வந்து உங்களை மூடுகையில் இழந்தவற்றை எண்ணி ஏங்குவீர்கள் என்றால் அதுவே வாழ்வின் மிகப்பெரிய துயரமாகும்” என்றாள்.

ஒரே சமயம் அவள் மேலே பேசவேண்டும் என்றும் அச்சொற்களை தான் கேட்கக்கூடாதென்றும் எப்படி தோன்றுகிறதென்று அவன் வியந்து நின்றான். அவள் அணிகளும் ஆடைகளும் ஓசையிட சற்று முன்னால் வந்து “வேண்டாம், மூத்தவரே! கடந்து மறந்துவிடுங்கள். இவையெல்லாம் எளிமையானவை. ஒரு அடி எடுத்துவைத்தால் கடந்துவிடக்கூடிய அளவுக்கு சிறியவை. கனவிலிருந்து விழித்துக் கொள்வதைப்போலத்தான் அது. நான் சொல்வதை கேளுங்கள்” என்றாள். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை.

அவள் “இம்முறை இந்திரப்பிரஸ்தத்திற்கு நீங்கள் செல்லும்போது அவளிடம் சென்று பேசுங்கள்” என்றாள். கர்ணன் சீற்றத்துடன் திரும்பி “எவரிடம்?” என்றான். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசியிடம். என்னிடம் பேசுவது போல் பேசுங்கள்… விழிகளைப்பார்த்து.”

அவன் “அவள் பேரரசி, நான் அஸ்தினபுரியின் சிற்றரசன்” என்றான். “அல்ல. ஒருமுறை அணுகி அவள் விழிகளை நீங்கள் பார்த்தீர்களென்றால் உங்கள் இரண்டாவது வஞ்சத்தின் இறுதி முள்ளும் அகன்று போகும்” என்றாள். “என்ன சொல்கிறாய்?” அவளை நோக்காமலே  கர்ணன் கேட்டான். அவள் “நீங்கள் அறிவீர்கள்” என்றாள். “சரி” என்றபடி அவன் கதவை திறந்தான். அவள் மேலும் ஓரடி வைத்து “நான் சொல்வதை புரிந்து கொள்ளுங்கள். அவளிடம் அணுகி விழி நோக்கி பேசுங்கள். ஒரு சொல் போதும்” என்றாள்.

திடீரென்று தன்னை மீறிய சீற்றத்துடன் திரும்பிய கர்ணன் “போதும்! நீயே உருவாக்கிக்கொண்ட கீழ்மையை என்மேல் சுமத்த வேண்டியதில்லை” என்று கூவினான். “நான் என்ன சொல்கிறேன்…” என்று அவள் சொல்லத்தொடங்க “நீ ஒரு சொல்லும் சொல்ல வேண்டியதில்லை. உன் சொற்களைக் கேட்பதற்காக நான் இங்கு நிற்கவும் இல்லை. உன் கணவன் என் அரசன் என்பதனால் அவனைப்பற்றி பேசுவதற்காக இங்கு வந்தேன். எனது ஆழங்களை நீ கடந்து வர வேண்டியதில்லை” என்றான்.

“பின் எவர்தான் கடந்து வருவார்கள்?” என்று அவள் உரக்க கேட்டாள். “அங்கே அங்க நாட்டில் உங்களுக்கு இரு அரசிகள் இருக்கிறார்கள். இரு மைந்தர்கள் பிறந்திருக்கிறார்கள். அங்கே நீங்கள் சில நாட்கள்கூட இருக்கவில்லை. அங்கிருந்த நாட்களிலும் அரசியரின் அந்தப்புரத்திற்கு மிகச்சில நாட்களே சென்றிருக்கிறீர்கள். இருமைந்தரையும் தொட்டு தோள் தூக்கவில்லை. மார்பில் அணைக்கவில்லை. அங்கிருந்த போதெல்லாம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தீர்கள். இங்கு உங்களுக்கு அணுக்கமானவர் அரசர். அவரோ உங்களை முற்றிலும் புறக்கணித்து தன் உலகத்தில் இருக்கிறார். நானும் அணுகக்கூடாதென்றால் எவரும் கடந்து வராத இருட்டு அறையாகவா உங்கள் உள்ளத்தை வைத்திருக்கப்போகிறீர்கள்? ஒட்டடையும் தூசியும் படிந்து மூத்தவள் குடியிருக்கும் இல்லமாகவா?” என்றாள்.

கர்ணன் “ஆம், அது பாழடைந்துவிட்டது. உனக்கென்ன? நான் உன்னிடம் வந்து கோரவில்லை, எனக்குத் துணை கொடு ஆறுதல் கொடு என்று. என் அரசி நீ. அரசனின் துணைவி நீ. அதற்கப்பால் ஏதுமில்லை” என்றான். பானுமதி கன்னங்களில் குழிவிழ விழி ஒளிர புன்னகைத்து “அரசரின் துணைவியை ஏன் ஒருமையில் அழைக்கிறீர்கள்?” என்றாள். “அப்படியென்றால் இனி முறைமை சொல்லி அழைக்கிறேன். அரசி, பொறுத்தருளுங்கள்! தங்கள் எல்லைகளுக்குள் தாங்கள் அமையுங்கள். இந்தச் சிற்றரசனிடம் எது பேசவேண்டும் எது பேசக் கூடாதென்று எண்ணிக் கொள்ளுங்கள்!” என்றான்.

பானுமதி “அந்த எல்லையை நான் வகுத்துக் கொள்ளப்போவதில்லை. என்றும் என் மூத்தவராகவே உங்களை எண்ணுவேன்” என்றபின் “இறுதியாக ஒன்றை மட்டும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். உங்கள் வஞ்சத்தை அவர்மேல் ஏற்றவேண்டாம்” என்றாள். கர்ணன் சினத்துடன் அவளை நோக்க அவள் ஒருகணம் அவன் விழிகளை சந்தித்துவிட்டு அறைக்குள் சென்றாள்.

உடல் முழுக்க சினத்துடன் அவன் திரும்பி வந்தான். ஒவ்வொரு அடிக்கும் அவள் சொன்ன இறுதிச் சொற்களிலிருந்து அவன் உள்ளம் மேலும் மேலும் சொற்களை உருவாக்கி எரிந்தது. திரும்பி துரியோதனனின் அரண்மனைக்கு செல்லத்தோன்றவில்லை. காவலனிடம் புரவியை வாங்கிக்கொண்டு தன் அரண்மனைக்கு சென்றான்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 63

பகுதி பத்து : தை

[ 1 ]

இந்திரப்பிரஸ்தத்தின் அரசவிருந்தினர்களுக்கான மாளிகைநிரையின் இறுதியில் அமைந்திருந்த துரியோதனனின் மாளிகையின் முன்பு முதற்புலரியிலேயே  சகட ஒலி சூழ தேர்கள் வந்து நின்றன. துர்மதனும் துச்சலனும் துர்முகனும் இறங்கினர். அவர்களுக்குப் பின்னால் வந்து நின்ற தேர்களிலிருந்து பீமவேகனும் சுஜாதனும் விகர்ணனும் இறங்கினர். காத்து நின்ற ஸ்தானிகரிடம் “மூத்தவர் சித்தமாகிவிட்டாரா?” என்றான் துர்முகன். அவர் முகமனுரைத்து  “சற்று முன்னர்தான் இளையவர் வந்தார். மூத்தவரை அழைக்கும் பொருட்டு மேலே சென்றார்” என்றார்.

அவர்கள் கீழேயே காத்து நின்றனர். அடுத்து வந்த தேரிலிருந்து சுபாகுவும் சலனும்  இறங்கினர். அதற்கடுத்த தேரிலிருந்து இறங்கிய பிற கௌரவர்கள் அங்கேயே நின்று என்ன நிகழ்கிறது என்று பார்த்தார்கள். மேலிருந்து எடைமிக்க காலடிகளுடன் படியிறங்கி வந்த துச்சாதனன் காத்து நின்றிருந்த தம்பியரை அணுகி விழிசுருக்கி “அங்கநாட்டரசர் வரவில்லையா?” என்றான். “அவர் கிளம்பிக்கொண்டிருப்பதாக சொன்னார்கள்” என்றான் துர்மதன். “நீங்கள் படகுக்கு செல்லுங்கள்” என்றான் துச்சாதனன்.

“மூத்தவர் நகர்நீங்குவது ஒரு சடங்காக இங்கே கொண்டாடப்படுகிறது என்றார்கள்” என்றான் துர்மதன். “ஆம். மதுபர்க்க முறைமைகள் உள்ளன. வழியனுப்புவதற்கு பாண்டவர்களின் மூத்தவர் வருவாரென்று சொன்னார்கள்” என்று துச்சாதனன் சொன்னான். “அப்போது நாங்கள் உடனிருப்பதே முறைமை” என்றான் துச்சலன். “ஆம், ஆனால் இப்போது சடங்குகளை எளிமையாக்கி விடலாம் என்று மூத்தவர் எண்ணுகிறார். அவர் இன்னும் சித்தமாகவில்லை. நீங்கள் கிளம்புங்கள்” என்றான் துச்சாதனன்.

அவர்கள் குழப்பத்துடன் தலைவணங்கி ஒருவரை ஒருவர் நோக்கியபடி வெளியே சென்றனர். அவர்களிடம் இருந்து செய்தியை பெற்றுக்கொண்ட பிற கௌரவர்கள் தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியபடி தேர்களில் ஏறி யமுனைக்கரை நோக்கி சென்றனர். அவர்கள் செல்வதை இடையில் கைவைத்து நோக்கி நின்ற துச்சாதனன் ஸ்தானிகரிடம் “அங்கர் வந்தவுடன் மேலே அனுப்புங்கள்” என்று சொல்லிவிட்டு தளர்ந்தவன்போல படிகளின் கைப்பிடியை பற்றியபடி ஏறி மேலே சென்றான்.

கௌரவர்களின் தேர்நிரை முற்றத்துக்குள் புகுந்து மறுபக்கம் வழியாக வெளியேறி யமுனைக்குச் செல்லும் சரிந்த பாதையில் சகடங்கள் ஒலிக்க குளம்புத் தாளத்துடன் இறங்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்த ஒலி  தன்னைச்சூழ்ந்து ஒலித்துக்கொண்டிருக்க நின்ற ஸ்தானிகர் விளங்கிக்கொள்ள முடியாத அச்சமொன்றை அடைந்தார். துரியோதனனிடமிருந்து அவனுடைய ஆடிப்பாவைகள் ஒவ்வொன்றாகக் கிளம்பி விலகிச் செல்வதைப்போல் அவருக்குத் தோன்றியது. சென்றவர்களில் ஒருவராக துரியோதனனும் இருந்திருப்பாரா என்ற எண்ணம் எழுந்தவுடன் அவர் தனக்குத்தானே என தலையசைத்துக் கொண்டார்.

முற்றத்தில் இறங்கி கர்ணனின் தேர் வருகிறதா என்று நோக்கி நின்றார். தொலைவில் அங்கநாட்டின் யானைச்சங்கிலிக் கொடி பறந்த தேர் அணுகி வருவதை கண்டவுடன் ஏவலனை அழைத்து அதை எதிர்கொள்ளச் சொன்னார். தேர்வந்து முற்றத்தில் நிற்க அதன் படியில் கால்வைக்காமல் நேராகவே தரையில் காலூன்றி நிமிர்ந்த நீள் உடலுடன் முழு அரசகோலத்தில் கர்ணன் அவரை நோக்கி வந்தான். அருகே வந்ததும் தன் தலைக்கு மேல் சென்ற அவன் முகத்தை அண்ணாந்து நோக்கி கைகூப்பி “அங்க நாட்டரசருக்கு வணக்கம். தங்களை அரசர் அறைக்கு செல்லும்படி இளையவர் துச்சாதனர் சொன்னார்” என்றார்.

“இளையவர்களெல்லாம் இங்கு இருக்கிறார்களல்லவா?” என்றான் கர்ணன். “அவர்கள் படகுத்துறைக்குச் செல்லும்படி இளையவரின் ஆணை” என்றார். “மதுபர்க்கச் சடங்கு இங்குதானே?” என்று புருவத்தை சுளித்தபடி கர்ணன் கேட்டான். “தெரியவில்லை. அது இளையவருக்குத்தான் தெரியும். என்னிடம் செய்தி ஏதுமில்லை” என்றார் ஸ்தானிகர். ஒருகணம் கண்ணில் எழுந்த சினத்துடன் அவரை நோக்கி ஏதோ சொல்ல வாயெடுத்தபின் கைவீசி அதைத்தவிர்த்து கர்ணன் படியேறி மேலே சென்றான்.

துரியோதனனின் மஞ்சத்தறை வாயிலில் இரண்டு ஏவலர்கள் நின்றிருந்தனர். கர்ணனைப் பார்த்ததும் தலைவணங்கி விலகினர்.  கர்ணன் ஒப்புதல் கோராமல்  மஞ்சத்தறை வாயிலைத் திறந்து உள்ளே சென்றான். விரிந்த அரசமஞ்சத்தில் துரியோதனன் தலைக்கு இரு தலையணைகளை வைத்து சற்றே நிமிர்ந்ததுபோல் படுத்திருந்தான். கண்கள் மூடியிருந்தன. கைகள் மார்பில் கோக்கப்பட்டிருந்தன. அவன் அருகே நின்றிருந்த துச்சாதனன் கர்ணனைக் கண்டதும் உடலில் கூடிய விரைவுடன் அருகணைந்து “மூத்தவருக்கு கடும் காய்ச்சல் கண்டிருக்கிறது, மூத்தவரே” என்றான்.

கர்ணன் குனிந்து துரியோதனனை பார்த்தபின் “எப்போதிலிருந்து?” என்றான். துச்சாதனன் “நேற்று இரவு முழுக்க துயிலாமல் இருந்தார் என்று ஏவலர்கள் சொல்கிறார்கள். பொருளின்றி எதையோ கூவிக்கொண்டிருந்ததாகவும் அரண்மனை முழுக்க சுற்றி அலைந்ததாகவும்  ஏவலரை அறைந்ததாகவும் சொன்னார்கள். அதன் பிறகு வெளியே சென்று தோட்டத்தில் நெடுநேரம் நின்றிருக்கிறார்” என்றான்.

“மது அருந்தினாரா?” என்று கர்ணன் கேட்டான். “நேற்று இரவு முழுக்க மது அருந்திக்கொண்டே இருந்திருக்கிறார். மேலும் கடுமையான மது கேட்டிருக்கிறார். சற்றே பிந்தியபோதுதான் ஏவலரை அறைந்திருக்கிறார்” என்று துச்சாதனன் மிகத்தாழ்ந்த குரலில் சொன்னான். “முன்னரே இப்படித்தான் இருந்தார். இங்கு வந்த ஒருநாள் சற்றே மீண்டுவிட்டார் என்று எண்ணினேன். ஆனால்…”

கர்ணன் மீண்டும் திரும்பி துரியோதனனை பார்த்தான். இரவு முழுக்க அருந்திய மது அவனுடைய முகத்தை நீரில் ஊறிய நெற்று போலாக்கியிருந்தது. கண்களுக்குக் கீழே திரைச்சுருக்கங்கள்போல மூன்று மடிப்புகளாக தசைவளைவுகள். வாயைச் சுற்றி அழுத்தமான கோடுகள் விழ கன்னங்கள் தொய்ந்திருந்தன. கழுத்துக்குக் கீழிருந்த தசை தொய்ந்து சுருங்கியிருந்தது. ஓரிரு நாட்களுக்குள் பல்லாண்டு முதியவனாக அவன் ஆகிவிட்டது போல. கர்ணன் வெளியே சென்று ஏவலனிடம் “மருத்துவரை அழைத்து வா!” என்றான்.

துச்சாதனன் தொடர்ந்து  வெளியே வந்து கர்ணனிடம் “மருத்துவரை அழைத்துவர வேண்டுமா என்று கேட்பதற்காகவே நான் தயங்கினேன். மூத்தவர் இத்தருணத்தில் உடல் நலமில்லாமல் இருப்பது வெளியே தெரிய வேண்டுமா?” என்றான். “ஆம். அது முதன்மையானது. இன்று மதுபர்க்கம் கொண்டு அரசர் அஸ்தினபுரிக்கு செல்ல வேண்டும். மூத்தவராக அவர் தம்பியரையும் தருமனையும் வாழ்த்தி பரிசில் அளிக்கவேண்டும்.  அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை சொல்லாவிட்டால் நாம் அதை தவிர்த்தோம் என்றாகிவிடும்” என்றான்.

“மதுபர்க்கச் சடங்கு எங்கு நடக்கிறது?” என்று துச்சாதனன் கேட்டான். குழப்பம் கொண்டு உடனே சினம் எழ “இங்கு யாரும் தெரிவிக்கவில்லையா?” என்று கேட்டான் கர்ணன். “தங்களுக்குத் தெரியும் என்று நினைத்தேன்” என்றான் துச்சாதனன். கர்ணன் தலையசைத்து “மூன்று நாட்களாக ஒவ்வொரு நாளும் மதுபர்க்கம் நடந்துகொண்டே இருக்கிறது. அரசர்கள் விடைபெற்று சென்றுகொண்டே இருக்கிறார்கள்” என்றான்.

இறுதியாக செல்பவர்களாகத்தான் அஸ்தினபுரி அரசரும் இளவரசரும் இருக்கவேண்டுமென்று பீஷ்மர் ஆணையிட்டார். ஆகவே வேள்வி முடிந்து தருமன் அரியணை அமர்ந்து சத்ராஜித்தாக முடிசூட்டிக் கொண்ட நிகழ்வுக்குப்பின்னரும் மூன்று நாட்கள் அவர்கள் அங்கே தங்க வேண்டியிருந்தது. பேரரசர்கள் முதலிலும் சிற்றரசர்கள் பிறகுமாக கிளம்பிச்சென்றனர். அனைவரையும் பீஷ்மரும் திருதராஷ்டிரரும் துரியோதனனும் உடன் நின்று அனுப்பி வைத்தனர்.

மருத்துவர் இரு உதவியாளர்களுடன் வரும்வரை இருவரும் அறைக்கு வெளியே காத்திருந்தனர். துச்சாதனன் அடிக்கடி கதவைத் திறந்து உள்ளே நோக்கி “முற்றிலும் நினைவிழந்தவர் போல் இருக்கிறார். மூச்சு  அன்றி வேறு ஓசையில்லை. இருமுறை அவரை அழைத்தேன். மிக ஆழத்தில் இருந்து ஒரு சிறு முனகலாக  மறுமொழி வருகிறது” என்றான். கர்ணன் “மருத்துவர் பார்த்து சொல்லட்டும். அனேகமாக நீரிழப்பாக இருக்கும். மிதமிஞ்சி மது அருந்தினால் அவ்வாறு ஆவதுண்டு” என்றான்.

மருத்துவர் வந்ததும் தலைவணங்கி கர்ணன் சொல்வதை எதிர்பார்த்து நின்றார்.  கர்ணன் சுருக்கமாக “அரசர் மிதமிஞ்சிய உளக்கொந்தளிப்பில் இருக்கிறார். துயில் நீப்பு இருந்தது.  நேற்றிரவு சற்று கூடுதலாகவே மது அருந்திவிட்டார் என்று சொன்னார்கள்” என்றான். புரிந்துகொண்டு தலையசைத்தபின் மருத்துவர் உள்ளே சென்றார். அவர்கள் தொடர்ந்தனர்.

மருத்துவர் துரியோதனனின் அருகே மண்டியிட்டமர்ந்து அவன் கையைப்பற்றி நாடி பார்த்தார். விழிகளை இழுத்து கண்களுக்குள் குருதியோட்டத்தையும் உதடுகளை மெல்ல இழுத்து வாயின் ஈரத்தையும் தேர்ந்தார். உள்ளங்கையை தன் கையால் சற்று சுரண்டிப் பார்த்தபின் நிமிர்ந்து “மிகுதியான நீரிழப்பு” என்றார். “நீரே சேர்க்காமல் திரிகர்த்த நாட்டு கடும் மதுவை மிகையாக அருந்தியிருக்கிறார். அது நீரை எரிக்கும் அனல்.  நீர் அருந்த வைப்பதுதான் இப்போதைக்கு செய்யக்கூடுவது.”

“இன்நீர் கொண்டுவரச் சொல்கிறேன்” என்றான் துச்சாதனன். “இருங்கள். இன்நீரல்ல, எதுவும் கலக்கப்படாத குடிநீர் மட்டுமே” என்று சொன்ன மருத்துவர் தன் மாணவர்களிடம் ஆணையிட்டார். பெரிய குடுவையில் குளிர்ந்த குடிக்கும் நீர் கொண்டுவரப்பட்டது. துரியோதனனை சற்று மேலேறியதுபோல படுக்க வைத்து அவனது கழுத்தைச் சுற்றி மரவுரியை அமைத்து அதில் குளிர்நீர் ஊற்றினார்கள். அவன் வாயை மரக்கரண்டியால் மெல்ல நெம்பித் திறந்து செம்புக்கெண்டியின் கூரிய மூக்கு நுனியை உள்ளே நுழைத்து ஊற்றி நீரை குடிக்க வைத்தனர்.

முதலில் ஊற்றிய நீர் இருபக்கமும் வழிந்தது. அதன் பின்பு அரைத் துயிலிலேயே அவன் பாய்ந்து இருகைகளாலும் குடுவையை பற்றிக்கொண்டு நீரை அருந்தலானான். அந்த ஒலி பாலைவனத்தில் குதிரை நீர் அருந்துவதுபோல ஒலித்தது. அவன் உடலில் பல இடங்கள் புல்லரிப்பில் மயிர்ப்புள்ளிகளை அடைந்தன.

“காய்ச்சலுக்கு குளிர்நீர் கொடுப்பதில்லையே?” என்று துச்சாதனன் கேட்க “நீரிழப்பினால் வந்த வெம்மை இது. ஒருமுறை உடல் நீர் பிரிந்துவிட்டால் சீரடைந்துவிடுவார்” என்றார் மருத்துவர். நீரை அருந்திவிட்டு துரியோதனன் பின்னால் தளர்ந்தான். “சிறிது சிறிதாக நீர் கொடுத்துக் கொண்டிருப்போம். ஒரு நாழிகைக்கு மேல் ஆகும். தாங்கள் வெளியே காத்திருக்கலாம்” என்றார் மருத்துவர். கர்ணனும் துச்சாதனனும் வெளியே சென்றனர்.

“எப்போது மதுபர்க்கச் சடங்கு நிகழும் என்று கேட்டுப் பார்க்கலாம். அதற்கு முன் மூத்தவர் எழுவாரென்றால் நன்று” என்றான் துச்சாதனன். கர்ணன் கைவீசி அப்பேச்சை நிறுத்தும்படி சொல்லிவிட்டு சாளரத்தினூடாக வெளியே நோக்கி நின்றான். துச்சாதனன் பெருமூச்சுடன் விலகிச்சென்று நின்றான். பிறகு உடலை அசைத்து கைகள் உரசல் ஒலியுடன் சரிய “அனைத்தும் சீரமைந்துவிட்டதென எண்ணினேன்” என்றான். அதை கர்ணன் கேட்கவில்லையோ என எண்ணி “எவரோ திட்டமிட்டுச் செய்வதுபோல நிகழ்கின்றன ஒவ்வொன்றும், மூத்தவரே” என்றான்.

[ 2 ]

இந்திரப்பிரஸ்தத்தின் ராஜசூய விழவுக்கு கப்பத்துடனும் பரிசில்களுடனும் முன்னரே சென்று அங்கே தருமனுக்குக் கீழே அவைஅமரவேண்டும் என்றும், அஸ்தினபுரியின் மணிமுடியைச் சூடி செங்கோலுடன் செல்லவேண்டும் என்றும் துரியோதனனுக்கு பீஷ்மர் ஆணையிட்டார். மூத்தவனாகச் சென்று வெறுமே வாழ்த்து அளித்து மீள்வதற்கு அவன் காந்தாரியிடம் ஒப்புக்கொண்டிருந்தான். முடிசூடிச்செல்லவேண்டும் என்பதன் பொருளை அவன் முதலில் உணரவில்லை.

அது அவன் கற்பனையை தொட்டதும் அரியணையிலிருந்து உறுமலுடன் எழுந்து அந்த ஓலையைக் கிழித்து அதை அமைச்சரின்  முகத்தில் வீசிவிட்டு “அதைவிட நான் இறப்பேன். என் உடைவாளை கழுத்தில் பாய்ச்சிக் கொள்ள ஒருகணம் போதும் எனக்கு” என்று கூவியபடி  முன்னால் பாய்ந்தான். கர்ணன்  அவன் கைகளைப்பற்றி “அமருங்கள், அரசே! அமருங்கள். நான் சொல்கிறேன்” என்று அழுத்தி அமரவைத்தான்.

“என்ன சொல்கிறார்கள் மூத்தவர்கள்? மீண்டும் சிறுமை அடையச் சொல்கிறார்களா? ஹஸ்தியின் முடிசூடி அச்சிறுமகள் காலடியில் நான் சென்று அமரவேண்டுமா?” என்று துரியோதனன் கூவினான். என்ன செய்வதென்றறியாமல் தன் உடைவாளை எடுத்து அவை நடுவே வீசினான். அவையினர் அதிர்ந்து அமர்ந்திருந்தனர். விதுரர் அவையில் இல்லை. பின்நிரையிலிருந்து கனகர் எழுந்து அவரை அழைத்துவர ஓடினார்.

மூச்சிரைக்க தவித்து சற்றே அடங்கி “என்ன எண்ணுகிறார்கள் முதியவர்கள்?” என்றான். மீண்டும் சினம் தலைக்கேற கர்ணனை தள்ளிவிட்டு எழுந்து அருகே நின்றிருந்த வீரனை ஓங்கி அறைந்தான். பெருமல்லனின் அறை பட்டு எந்த ஓசையுமில்லாமல் சுருண்டு நிலத்தில் விழுந்து ஒருமுறை அதிர்ந்து அவன்  அடங்கினான். கைகளை ஒன்றுடன் ஒன்று அறைந்தபடி துரியோதனன் தத்தளித்தான். அப்போது அவன் திருதராஷ்டிரரைப் போலவே தோன்றினான்.

விழுந்தவனை அகற்றும்படி விழிகளால் அருகே நின்ற காவலருக்கு சொல்லிவிட்டு மீண்டும் அரசன் கைகளை பற்றிக்கொண்டான் கர்ணன். “அரசே, தாங்கள் இச்சினத்தில் எச்சொல்லையும் சொல்ல வேண்டியதில்லை. சற்று நேரமாகட்டும். இச்சினம் கடந்து போகட்டும். அதன் பிறகு முடிவெடுப்போம்” என்றான்.

“முடிவா? அஸ்தினபுரியின் முடியைத் துறக்கிறேன். விழியிழந்தவருக்கு  இனி நான் மகனல்ல என்று அறிவிக்கிறேன். எங்காவது அடர்காட்டில் சென்று வேடனாக வாழ்கிறேன். அப்போது இம்முதியவர்களின் ஆணை என்னை கட்டுப்படுத்தாது அல்லவா?” என்று துரியோதனன் கண்களில் ஒளியாகத்தெரிந்த நீருடன் கூறினான். “இச்சிறுமைக்குக் கீழே இனி நான் செல்ல இடமில்லை, அங்கரே” என்றபோது அவன் உடல் ஏதோ தடுக்கியதுபோல இடறியது. கைகால்கள் தளர்ந்தவன்போல அரியணையில் ஓசையுடன் அமர்ந்து தலையை இருகைகளாலும் தாங்கிக்கொண்டான்.

கர்ணன் அவன் அருகே அமர்ந்து அவன் கைகளை பற்றிக்கொண்டு “பிற அனைவரையும்விட தாங்கள் சொல்லும் ஒவ்வொன்றையும் புரிந்துகொள்பவன் நான். அரசே, தாங்கள் அடையும் அதே சிறுமையை நானும் அடைந்தேன். அங்கு சென்றால் அடையவும் இருக்கிறேன். ஆனால்…” என்றபின் ஆனால் என்ற சொல்லைக் கேட்டு சொடுக்கி தலைநிமிர்த்திய துரியோதனனின் தோளில் கைவைத்து அழுத்தி “இதை கடந்து செல்வோம். இச்சினத்தை வென்றபின் என்ன செய்வதென்று எண்ணுவோம்” என்றான்.

“எண்ணுவதற்கேதுமில்லை. இதற்கப்பால் ஒரு சிறுமை எனக்கில்லை. முடியாது… ஒருபோதும் முடியாது” என்றபின் துரியோதனன் எழுந்து தன் சால்வைக்காக கைநீட்டினான். ஏவலன் அதை அருகணைந்து நீட்டியதும் அவன் கைநடுங்கி அதன் மடிப்பு சரிந்து விழுந்தது. “மூடா” என்று கூவியபடி அவனை ஓங்கி அறைந்தான். மரத்தரையில் ஓசை எழ பதிந்து அவன் விழுந்தான்.

வெறியடங்காது ஓங்கி அருகே நின்ற தூணை மாறிமாறி மிதித்தான். அவன் வெறியை நோக்கியபடி அவை விழிவெறித்து நின்றிருந்தது. பலர் வெளியேறினர். துரியோதனன் ஓடியமைந்த புரவி என மூச்சிரைக்கச் சோர்ந்து “என் தலையை வரையாடுபோல பாறையில் முட்டிச் சிதறடிக்க வேண்டும் போல் இருக்கிறது. சிறுமை அடைந்து இழிமகனாக சாவதற்கென்றே பிறப்பெடுத்திருக்கிறேன்” என்றான்.

பெருங்குரல் உடைய “அங்கரே, கார்த்தவீரியனும் ஹிரண்யனும் இலங்கை ஆண்ட ராவணப்பிரபுவும் எத்தனை நல்லூழ் கொண்டவர்கள்? எங்கும் தலைவளையாது எதிரிமுன் நின்று சாகும் பேறுபெற்றவர்கள்! நானோ ஈ முன்னும் எறும்பின் முன்னும் குறுகிச் சிறுக்கிறேன். நான் அடைந்த சிறுமையின் பொருட்டே நாளை சூதர்களால் பாடப்படுவேன்” என்றான்.

கர்ணன் அவனை அணுகி “எண்ணி எண்ணி ஒவ்வொன்றையும் பெருக்கிக்கொள்வதில் எப்பொருளும் இல்லை அரசே.  தன்னிரக்கம் போல பற்றிக்கொள்ளும் தீ ஏதுமில்லை என்று சூதர் சொல் உண்டு” என்றான். மேலும் வெறியுடன் ஏதோ சொல்ல வந்த துரியோதனன் அனைத்துக் கட்டுகளையும் இழந்து தன்னிரு கைகளாலும் தலையை மாறி மாறி அறைந்து கொண்டான்.

கர்ணன் அவன் இருகைகளையும் பற்றி முறுக்கி பின்னால் அமைத்துப் பிடித்தான். “வேண்டாம்! இந்த அவைக்கு வெளியே தாங்கள் நிலையழிந்திருக்கும் ஒரு செய்தியும் எவருக்கும் தெரியக்கூடாது” என்றான். “நான் உயிர்வாழமாட்டேன்… இனி உயிர்வாழமாட்டேன்” என்று துரியோதனன் சொன்னான். “அவை நிகழட்டும், அரசே. வேறு அலுவல்களில் சித்தம் ஓட்டுக!” என்றான் கர்ணன்.

“இல்லை… இதன்மேல் மதுவூற்றி அணைக்கவிருக்கிறேன். இன்றிரவு முழுக்க மதுவில் துயில்கிறேன். நாளை காலை பார்ப்போம்” என்றபின் துரியோதனன் நடந்தான். “அப்படியென்றால் மகளிர் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு வரை நான் துணை வருகிறேன்” என்றான் கர்ணன். துரியோதனன் வெண்பற்கள் தெரிய நகைத்தான். விழிகளில் நீருடன் அந்நகைப்பு வெறியாட்டாளனின் மருள்முகம் போலிருந்தது. “மகளிரறை வரைக்கும் துணைவருவதற்கு நீங்கள் ஒன்றும் பாங்கன் அல்ல. அங்க நாட்டு அரசன்.” அவன் முகம் உடனே அழுவதுபோலாகியது. “நீங்களாவது ஆண் என வாழுங்கள். எச்சிறுமையும் அடையாமல் இருங்கள், அங்கரே!” என்றான்.

“நான் வருகிறேன்… பாங்கனாக அல்ல தோழனாக” என்று கர்ணன் உடன் நடந்தான். “அல்ல. அங்க நாட்டரசர் என் நண்பர் என்பதற்கு அப்பால் ஒரு அணுவும் கீழிறங்க வேண்டியதில்லை” என்றபின் துரியோதனன் வெளிச்செல்லும் கதவை காலால் உதைத்துத் திறந்து திடுக்கிட்டு தலைவணங்கிய ஏவலனிடம் “மகளிர் மாளிகைக்கு” என்றான். அவன் தலைவணங்கி முன்னால் செல்ல அவன் பின்னால் சென்றான். திரும்பி “நான் செய்ததில் பெரும்பிழை உங்களை அங்கே அழைத்துச்சென்றது. உங்களையும் சிறுமைகொள்ளச் செய்துவிட்டேன், அங்கரே… என்னை பொறுத்தருள்க!” என்றான்.

கர்ணன் அவன் செல்வதை விரித்த கைகளுடன் நோக்கி நின்றான். பின் உடல் சோர்ந்து அவைக்கு மீண்டு வந்து தலையை கைகளால் தாங்கிக்கொண்டு  தன் பீடத்தில் அமர்ந்திருந்தான். “அரசே…” என்று அணுகிய அவைநாயகத்திடம் அவை கலையட்டும் என்று கைகாட்டி ஆணையிட்டான். பின்பு நெடுநேரம் கழித்து தன்னை உணர்ந்து வெளியே சென்று அங்கிருந்த ஏவலனிடம் “அரசர் மகளிரறையில்தான் இருக்கிறாரா என்று நோக்கி என்னிடம் சொல்” என்றான்.

தன் அரண்மனைக்குத் திரும்பலாம் என்று எண்ணி அரண்மனை முற்றத்திற்கு வந்தான். ஆனால் அவன் தேர் வந்து அருகே நின்றபோது அதில் ஏறி தன் அரண்மனைக்கு செல்லத் தோன்றவில்லை. அதை திரும்பிச்செல்லும்படி ஆணையிட்டுவிட்டு மீண்டும் துரியோதனனின் அரண்மனைக்குள் வந்து மந்தண அவையில்  சென்று அமர்ந்தான்.

துச்சாதனன் துச்சலன் சுபாகு மூவரும் அவனுக்காக அங்கே காத்து  நின்றிருந்தனர். “என்ன நிகழ்கிறது, மூத்தவரே?” என்றான் துச்சாதனன். “ராஜசூயத்திற்கு அஸ்தினபுரியின் முடியைச் சூடிச் செல்லும்படி பிதாமகரின் ஆணை வந்திருக்கிறது” என்றான் கர்ணன். துச்சாதனன் உரக்க “என்ன சொல்கிறீர்கள்? ஹஸ்தியின் ம்டியைச்சூடி சென்று அவையமர்வதா? விழவுக்கு மூத்தவரெனச் சென்று அமர்வதாகவே சொல்லப்பட்டது… இன்று எவர் மாற்றினர் அதை?”

துச்சாதனன் அருகணைந்து  “அங்கு நிகழ்ந்தது அனைத்தும் முதியவருக்குத் தெரியும் அல்லவா? அதன்பிறகு அங்கு சென்று சிறுமை கொள்ளும்படி ஆணையிடுகிறார் என்றால் அவர் மூத்தவரை என்னவென்று எண்ணுகிறார்?” என்று கூவினான். நெஞ்சில் ஓங்கியறைந்து “போதும் சிறுமை… இனி சிறுமையென்றால் நாங்கள் ஆணென்று சொல்லி மண்ணில் வாழ்வதில் பொருளில்லை” என வீரிட்டான்.

சுபாகு வெறிக்குரலில் “தந்தையைக் கொன்றவன் என்ற பழி வந்தாலும் சரி. நான் சென்று அவர்முன் நிற்கிறேன். நான் கேட்கிறேன்…” என்றான். துச்சலன் “நான் செல்கிறேன், தந்தையின் கையால் கொல்லப்படுகிறேன். இதை ஒருபோதும் ஒப்புக் கொள்ளலாகாது” என்றான். அவன் தொண்டைநரம்பு பாம்புக்குஞ்சுகளைப்போல நெளிந்தது.  “அமருங்கள்” என்று கூரிய குரலில் கர்ணன் சொன்னதும் அவர்கள் அமர்ந்தனர்.

“என்ன நிகழ்கிறது, மூத்தவரே?” என்று துச்சலன் கேட்டான். சுபாகு “அவர்கள் நோக்கும் கோணமென்ன என்று எனக்குப் புரிகிறது. தற்செயலாக ஒரு இழிவு நிகழ்ந்துவிட்டது என எண்ணுகிறார்கள். அரசர் இந்திரப்பிரஸ்தத்திற்குச் செல்லும்போது பாண்டவர் ஐவரும் நீர்முகப்பிற்கு வந்து வரவேற்கும்படியும் வந்திருக்கும் அத்தனை அரசர்களுக்கும் நடுவே முதன்மை வரவேற்பு அளிக்கும்படியும் பீஷ்மர் அவர்களுக்கு ஆணையிட்டிருப்பார். அவர்களின் பணிவும் வரவேற்பும் முன்பு நிகழ்ந்த அச்சிறுமையை நிகர்செய்து அழித்துவிடும் என்று எண்ணுகிறார்”  என்றான்.

“அதெப்படி?” என்று துச்சாதனன் இரைந்தான். “அன்று அவள் சிரித்தாள். ஓராயிரம் வருடம் கண்ணீர் விட்டாலன்றி அச்சிரிப்பை அவள் கடந்து செல்லமுடியாது.” கர்ணன் கையசைத்து அவனை பேசாதிருக்கும்படி சொல்லிவிட்டு “தந்தையர் அப்படி மட்டுமே எண்ண முடியும். தன் தனயர்களுக்குள் நடக்கும் எந்தப்பூசலையும் ஒருவரை ஒருவர் தோள் தழுவினால் கடந்து செல்லக்கூடியது என்று மட்டுமே அவர்கள் எண்ணுவார்கள். பூசல் பெருகுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். பெருகக்கூடும் என்பதை கற்பனை செய்யவும் மாட்டார்கள்” என்றான்.

சுபாகு “ஆம், நான் சென்றவாரம்கூட தந்தையிடம் பேசினேன்” என்றான். “இந்திரப்பிரஸ்தத்தில் முன்பு நடந்ததை சொன்னபோது சிரித்து இவன் என்ன கதாயுதம் பயிலும்போது கால் தவறி விழுந்ததே இல்லையா என்றார். நான் சினந்து அவர் ஏன்  விழுந்தார் என்று தெரியாமல்தான் பேசுகிறீர்களா தந்தையே என்றேன்.  எது என்றார் புரியாமல். அசைவற்ற துலாபோல நிகர் நிலைகொண்ட அவர் உடலின் ஒருபகுதியை அடித்து சிதைத்தவர் நீங்கள். அனைத்துக்கும் நீங்களே பொறுப்பு என்றேன்.”

“அவர் வாய் திறந்து கேட்டிருந்தார். அன்று படுத்து எழுந்தபின்பு மூத்தவரின் கதாயுதப்பயிற்சியே மாறிவிட்டது என்றேன். அவரது அடிகள் இலக்கை அடையாமல் தவறின. கடும்பயிற்சியினூடாக அவர் தன்னை மீட்டுக்கொண்டாலும்கூட முன்பிருந்த நிகரற்ற கதாயுதவீரனாக பின்பு ஆகமுடியவில்லை. அவரை  நிலையழித்தது நீங்கள். அதனால்தான் அவர் அன்று வி்ழுந்து சிறுமை அடைந்தார். அது நீங்கள் அவருக்கு அளித்த சிறுமை என்றேன்” சுபாகு தொடர்ந்தான்.

“ஆனால் தந்தை சினத்துடன் கைவீசி என்னைத் தடுத்து நீ அவ்வாறு எண்ண விரும்பினால் ஆகுக! அவன் அதற்குப்பின் புதிய ஒருவனாக ஆனதைத்தான் நான் பார்க்கிறேன். தன் உடலின் நிகர்நிலை பற்றியும் கதாயுதத்தின் குறிதவறாமை பற்றியும் அவன் கொண்டிருந்த மிகையான நம்பிக்கைகளை இழந்திருப்பான் என்றால் அதுவும் நன்றே. அவன் அங்கு நிகர்நிலையழிந்ததற்கு தெய்வங்களையோ மானுடரையோ குறைசொல்ல வேண்டியதில்லை. அங்கு அளிக்கப்பட்ட உயர்காரமுள்ள மதுவை வரைமுறையில்லாமல் அருந்தியிருப்பான். அவன் எப்படி அருந்துவான் என்று எனக்குத் தெரியும் என்றார்.”

“பின்பு சிரித்தபடி விருந்துகளில் அரசர்கள் மதுவால் நிலைதவறி விழுவதும் வாய்தவறி உளறுவதும் ஒன்றும் புதிதல்ல. இந்த நகர் கட்டப்பட்டபோது அளிக்கப்பட்ட விருந்தில் மாமன்னர் ஹஸ்தியே ஒவ்வொரு வாயிலுக்கும் தவறி விழுந்தார் என்று ஒரு சூதன் பாடியிருக்கிறான். இந்த முறை அதே அளவுக்கு மதுவை பீமனுக்கு ஊற்றிக்கொடுங்கள். இவன் முன் அவனும் ஒரு முறை தவறி விழட்டும். நீங்கள் சிரியுங்கள், சரியாகப்போகும் என்றார். பிறகு அவர் சொன்னதை அவரே எண்ணி மகிழ்ந்து தன் இரு தொடைகளில் தட்டிக்கொண்டு வெடித்துச் சிரித்தார். அவரிடம் பேசிப்பயனில்லை என்று சொல்லி நான் எழுந்து வந்துவிட்டேன்” என்றான் சுபாகு.

“ஆம், அதுதான் முதியவர்களின் எண்ணம். அவர்களால் பிறிதொரு வகையில் எண்ணமுடியாது” என்றான் கர்ணன். அவர்கள் சற்றுநேரம் சொல்லெழாது இருந்தனர். சுபாகு “மூத்தவரே, நம்மை எதுவரை அவர்கள் மைந்தர்மட்டுமே என எண்ணுவார்கள்?” என்றான். கர்ணன் உதடுகள் வளைய புன்னகைத்து “அவர்கள் உயிருடன் இருக்கும்வரை” என்றான்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 62

[ 10 ]

ராஜசூயப்பந்தலுக்கு வடக்காக அமைந்த சிறுகளத்தில் அரசர்கள் தங்கள் அகம்படியினருடன் வந்து சூழ்ந்து நிற்பதற்குள்ளாகவே ஏவலர் விரைந்து நிலத்தை தூய்மைப்படுத்தி களம் அமைத்தனர். களத்தைச் சூழ்ந்தமைந்த தூண்களில் கட்டப்பட்ட பந்தங்களின் செவ்வொளியில் களம் ஏற்கெனவே குருதியாடியிருந்தது. அரசர்களுக்குப் பின்நிரையில் இந்திரப்பிரஸ்தத்தின் பெருங்குடிகளும் வணிகர்களும் சூழ்ந்தனர். சற்று நேரத்தில் முகங்களால் ஆன கரை கொண்ட நீள்வட்டவடிவ அணிச்சுனை போல அக்களம் மாறியது. அதன் தென்மேற்கு மூலையில் மண்பீடம் அமைக்கப்பட்டு அதில்  உருளைக்கல்லில் விழிகள் எழுதப்பட்ட கொற்றவை பதிட்டை செய்யப்பட்டாள். களத்தின் நான்கு எல்லைகளிலும் போருக்கான கொடிமரங்கள் நிறுத்தப்பட்டன.  தருமன்  அங்கே போடப்பட்ட பீடத்திலமர்ந்தார். பின்னால் தம்பியர் நின்றனர்.

இளைய யாதவருக்கு களத்துணையாக சாத்யகி வந்தான். அவர்களிருவரும் களத்தின் கிழக்கு மூலையில் இருந்த சிறு மரமேடைக்கு சென்று அமர்ந்தனர். சாத்யகி இளைய யாதவரின் அணிகலன்களையும் பொற்பட்டுக் கச்சையையும் கழற்றி ஒரு கூடையில் வைத்தான். இளைய யாதவர் புன்னகை படிந்த முகத்துடன் மிக இயல்பான அசைவுகளுடன் இருந்தார்.

மேற்கு மூலையில் களத்துணை இன்றி தனியாக சிசுபாலன் நடந்து வந்தான். அரசர்களிலிருந்து ருக்மி எழுந்து களத்துணையாகும்பொருட்டு அவன் பின்னால் செல்ல  சிசுபாலன் திரும்பி அவனை எவரென்றே அறியாத விழிகளுடன் “உம்!” என்று உறுமி விலகிச் செல்லும்படி அறிவுறுத்தினான். “சேதிநாட்டரசே, தங்கள் படைத்துணைவராக…” என்று அவன் சொல்ல காட்டுப்பன்றி என சிலிர்த்து சிவந்த மதம் கொண்ட விழிகளால் அவனை நோக்கி “உம்” என்றான் சிசுபாலன் மீண்டும்.

ருக்மி நின்றுவிட்டான். இறுக நாணேற்றிய வில்லெனத் தெறித்து நின்ற உடலுடன் களத்துக்கு வந்து தன் அணிகளையும் எழிற்கச்சையையும் இடக்கையால் அறுத்து அப்பால் வீசினான் சிசுபாலன். அடியிலணிந்திருந்த தோற்கச்சையை இழுத்து மீண்டும் கட்டி தோளில் புரண்ட குழல்களை கொண்டையாக்கி பின்னாலிட்டு தாடியை கையால் சுழற்றி முடிச்சிட்டான். தன் படையாழியை எடுத்து இயல்பாக ஒருமுறை மேலே சுழற்றி கையில் பிடித்தபடி கால் விரித்து களத்தில் நின்றான்.

அறைகூவலை சிசுபாலன் முன்னரே விடுத்துவிட்டதைக்கண்ட சாத்யகி குனிந்து கிருஷ்ணனிடம் மெல்ல ஏதோ சொல்ல அவர் புன்னகைத்து அவன் தோளில் தட்டிவிட்டு தன் படையாழியை எடுத்தபடி எழுந்தார். இருவருடைய படையாழியும் ஒரே அளவில் ஒரே ஒளியுடன் ஒன்றின் இருபக்கங்களென தோன்றின. களத்தில் இறங்கி பூழியில் காலூன்றி நிலைமண்டலத்தில் இளைய யாதவர் நிற்க களமையத்தில் நின்றிருந்த சல்யரும் கிருபரும் துரோணரும் எழுந்து கூட்டத்தை நோக்கி திரும்பி ஓசை அறும்படி கைகாட்டினர்.

துரோணர் உரத்த குரலில் “அவையீரே, இன்று இக்களத்தில் எதிர்நிற்கப்போகும் இருவரும் தாங்கள் தேர்ந்த படைக்கலங்களால் போரிடப்போகிறார்கள். பாரதவர்ஷத்தின் தொன்மையான போர்நெறிகளின்படி இப்போர் நிகழும். தோற்றுவிட்டேன் என்று அறிந்தபின்னரும் அடைக்கலம் புகுந்தபின்னரும் போர் நிகழலாகாது. படையாழியே படைக்கலம் என்பதால் பிறிதொரு படைக்கலம் பயன்படுத்தலாகாது. பூழியோ காற்றோ அல்லது பிற பொருட்களோ பார்வையை மறைக்கும்படி கையாளலாகாது. படைபொருதும் வீரரன்றி பிறர் களமிறங்கலாகாது. வென்றபின் தோற்றவனை வணங்கி அவனை விண்ணேற்றிவிட்டே வென்றவன் களம் விலகவேண்டும்” என்றார். “ஓம்! அவ்வாறே ஆகுக!” என்றார் கிருபர். “ஓம்! ஓம்! ஓம்!” என்று சூழ்ந்திருந்த ஷத்ரியர் முழங்கினர்.

களமூலைகளில்  நின்ற கொடிமரங்களில் போர் தொடங்குவதற்கான செங்குருதிக் கொடி ஏறியது. கூடிநின்றவர்கள் “மூதாதையரே! கொற்றவை அன்னையே! அருள்க தேவர்களே!” என்று கூவினர். செம்பட்டு உடுத்த முதியபூசகர் வந்து உடுக்கோசையுடன் தென்மேற்குமூலையில் அமைந்த கொற்றவைக்கு ஒரு சொட்டுக் குருதி அளித்து பூசனைசெய்தார்.  அவர் வணங்கி பின்னகர்ந்ததும் தருமனும் இளையோரும் அன்னையை வணங்கினர். துரோணர் தன் இடையிலிருந்த சங்கை எடுத்து முழக்கியதும் களம் ஒருங்கியது. பந்த ஒளியில் அக்காட்சி சற்றே நடுங்க அது தங்கள் கனவோ விழிமயக்கோ எனும் எண்ணத்தை கூடியிருந்தோர் அடைந்தனர்.

சிசுபாலன் தன் படையாழியை கையில் சுழற்றியபடி மூன்றடி முன்னெடுத்து வைத்து இளைய யாதவரை நோக்கி ஏளனப்பெருங்குரலில் நகைத்து “இழிமகனே, உன் தலையை துணிக்கப்போகும் படையாழி இது. இதன் நிழலையே இது நாள்வரை உன் இல்லத்தில் வைத்து வணங்கினாய்” என்றான். “மானுடர் ஒவ்வொருவரும் தங்கள் இறப்பையே முதன்மையாக வழிபடுகிறார்கள். நீ இதுநாள் வரை படைக்கலமெனப் பயின்றது உன் இறப்பையே!”

இளைய யாதவர் புன்னகைத்தார். சிசுபாலன் “உன் பயின்றமைந்த ஆணவப் புன்னகையை கடந்து செல்ல என்னால் இயலும், யாதவனே. உன் இல்லம் விட்டு கிளம்புகையில் உன் துணைவியரிடம் விடைபெற்று வந்தாய் அல்லவா? இங்கு நீ தலையற்று விழுந்து கிடக்கையில் என்னை எண்ணி இறும்பூது எய்தும் இருபெண்டிர் உனது துணைவியரின் ஆழங்களின் இருளுக்குள் விழியொளிர அமர்ந்திருக்கிறார்கள் என்பதை அறிவாயா? ஏனெனில் உனக்கு முன்னரே அவர்களை உளம் மணந்தவன் நான். என்னைக் கண்டபின்னே உன்னைத் தெரிவு செய்திருப்பவர்கள் அவர்கள். எனவே நீ திகழும் வெளியின் விரிசல்கள் அனைத்திலும் ஆழ்ந்திருப்பவன் நானே. நீ தோற்ற களங்கள்  அனைத்திலும் நான் வெல்வேன்” என்றான்.

உரக்க நகைத்து சிசுபாலன் சொன்னான் “நீ விண் வாழும் ஆழிவண்ணனின் மண் வடிவம் என்கின்றனர் சூதர். இழிமகனே, விண் தெய்வமே ஆனாலும் பெண் உளம் கடத்தல் இயலாது என்று அறிக!” இளைய யாதவர் நகைத்து “இதை எப்படி அறிந்தாய் சேதி நாட்டானே? உன் அரண்மனைப் பெண்டிர் உளம் புகுந்தாயா?” என்றார். “ஆம், உன் அரண்மனை வாழும் பெண்டிரின் நிழல்வடிவுகளையே நான் என் அரண்மனையில் வைத்துள்ளேன். நான் திகழும் மஞ்சங்களில் எப்போதும் நீ இருந்தாய் என்று அறிந்தேன். எனவே நீ திகழும் இடங்களில் எல்லாம் நான் இருப்பதையும் உறுதிசெய்துகொண்டேன்.”

“அடேய் கீழ்மகனே, இங்கு போரிடுவது நீயும் நானும் அல்ல. நீயென்றும் நானென்றும் வந்த ஒன்று” என்றான் சிசுபாலன். “உன் பெண்டிர் உள்ளத்தின் கறை நான். உன் அச்சங்களில் எழும் விழி நான். நீ குலைந்தமைந்த வடிவம் நான்.” இளைய யாதவர்  ”ஆம், நான் போரிடுவது எப்போதும் என்னுடன் மட்டுமே” என்றார்.

“வீண்சொல் வேண்டாம், எடு உன் படைக்கலப்பயிற்சியை” என்றான் சிசுபாலன். அவன் தன் படையாழியைச் சுழற்றி வீச அதே கணத்தில் எழுந்த இளைய யாதவரின் படையாழி அதை காற்றில் சந்தித்தது. இருபடையாழிகளும் ஒன்றுடன் ஒன்று உரசி திடுக்கிட்டுத் தெறித்து ரீங்கரித்து சுழன்று மீண்டும் அவற்றை ஏவியவர்களின் கைகளுக்குச் சென்று சேர்ந்தன. காற்றில் ஒன்றை ஒன்று போரிடும் பறவைகளென துரத்தித் துரத்தி, கொத்தி, சிறகுரசி, உகிர் கொண்டு கிழித்து மேலும் கீழுமென பறந்து எழுந்து அமைந்து போரிட்டன. அக்களத்தைச் சுற்றியும் கால்மடித்தெழுந்தும், கை சுழற்றி இடை வளைத்தும், தோள்வளைந்து எழுந்தும், தாவியும் இருவரும் அப்படையாழியை ஏவினர். பறந்து மரத்திற்கு வந்து மீளும் பறவைகள் போல அப்படையாழிகள் அவர்கள் கைகளுக்கு வந்தன.

இருவர் முகமும் ஒருவரை ஒருவர் மட்டுமே நோக்கி கனவில் ஆழ்ந்திருந்தன. “பெருங்காதல் கொண்ட இருவர் மட்டுமே இப்படி ஒருவரில் ஒருவர் ஆழ முடியும்” என்றான் ஜயத்ரதன். “பெருங்காதல் ஒருவரை பிறிதொருவர் உண்ணுவதில் முடியும்” என்று கைகளைக் கட்டியிருந்த கர்ணன் சொன்னான். படையாழிகள் சுழன்று மண்ணை சீவித் தெறித்து பறக்கவிட்டு மேலெழுந்தன. செங்குத்தாக பாய்ந்து மேழியென உழுது மேலேறின. அங்கு கூடி நின்றவர்களின் செவிகளில் காற்றின் ஓசை எழுப்பி மிக அருகே பறந்து சென்றன. அவற்றின் பரப்பு திரும்பிய கணங்களில் கண்ணை அடைத்து மறைந்த மின்னலைக் கண்டனர். சினந்த கழுகுகள் போல் அவற்றின் அகவலை கேட்டனர்.

இரண்டு படையாழிகளும் ஒன்றெனத் தோன்றின. “இதில் எது அவனுடையது?” என்றான் ருக்மி. அப்பால் நின்றிருந்த முதிய ஷத்ரியர் “இரண்டும் அவனுடையதே” என்றார். ருக்மி திரும்பி நோக்கி பல்லைக் கடித்தபடி சொல்லெடுக்காமல் முகம் திருப்பிக்கொண்டான். நத்தை நீட்டிய ஒளிக்கோடென சென்றது ஓர் ஆழி. அதைத் தொட்டு தெறிக்க வைத்து வானில் எழுப்பியது பிறிதொரு ஆழி. அனல்பொறிகள் பறக்க ஒன்றையொன்று தழுவியபடி வானில் எழுந்து சுழன்று மண்ணில் அமைந்தன. உருண்டு காற்றில் ஏறி மிதந்து தங்கள் உடையவன் கைகளை அடைந்தன.

இருவரும் முற்றிலும் இடம் மாறி இருப்பதை கர்ணன் கண்டான். இருவரும் அங்கிலாதிருப்பதை பின்பு உணர்ந்தான். படையாழிகள் மீள மீள ஒற்றைச் சொல்லை சொல்லிக் கொண்டிருந்தன. ஊழ்கத்தில் அமர்ந்த முனிவரின் உளத்தெழுந்த நுண்சொல் போல. சிறகுரீங்கரிக்கும் வண்டுகள். சிதறிச்சுழலும் நீர்வளையங்கள். இரும்பு ஒளியென்றாகியது. ஒளிகரைந்து வெளியாகியது. பொருளென்று அறிபவை அசைவின்மையின் தோற்றங்களே என்று கர்ணன் நினைத்தான். விரைவு அவற்றை இன்மையென்றாக்கிவிடுகிறது.

“இது வெறும்படைக்கலப் பயிற்சி அல்ல. பருப்பொருளொன்று எண்ணமென்றும் உள்ளமென்றும் ஊழ்கமென்றும் ஆவது” என்றான் தருமனின் அருகே நின்றிருந்த பீமன்.  களத்திலிட்ட மரத்தாலான பீடத்தின் நுனியில் உடல் அமைத்து கைபிணைத்து பதறிய உடலுடன் அமர்ந்திருந்த தருமன் “எத்தனை பொழுதாக நடைபெறுகிறது இந்தப்போர்? ஒன்றை ஒன்று ஒரு கணமும் வெல்லவில்லையென்றால் என்று முடியும் இது?” என்றார். நகுலன்  அவருக்குப் பின்னால் நின்றபடி “இது ஊழிப்போர், மூத்தவரே” என்றான். “முடிவற்றது. முடிவில் மீண்டும் முளைப்பது.”

பெண்டிர் அணிவகுத்த தென்மேற்குப் பகுதியின் மையத்திலிட்ட பீடங்களில் குந்தியும் திரௌபதியும் அருகருகே அமர்ந்திருந்தனர். குந்தி புன்னகை நிறைந்த விழிகளுடன்  இளைய யாதவரின் உடலில் மட்டுமே விழிநட்டு அமர்ந்திருந்தாள். மைந்தன் நடைபழகக் காணும் அன்னையைப்போல. அங்கு நிகழ்வதென்ன என்று முற்றிலும் அறியாதவள் போல் விழிநோக்கு மறைய முகம் கற்சிலையென இறுக நிகரமைந்த நெடுந்தோள்களுடன் அசைவற்று அமர்ந்திருந்தாள் திரௌபதி.

இருவீரர்கள் கால்களையும் ஜயத்ரதன் நோக்கிக் கொண்டிருந்தான். அவை முற்றிலும் தாளத்தில் அமைந்த மிக அழகிய நடனமொன்றை மண்ணில் நிகழ்த்திக் கொண்டிருந்தன. மெல்லிய சிலிர்ப்புடன் அவன் நிமிர்ந்து அவர்களின் கைகளை பார்த்தான். அவை காற்றில் நெளிந்தும், சுழித்தும், சுழன்றும் பறந்தன. விரல்கள் மலர்ந்தும், குவிந்தும் பேசும் உதடுகள் போல் முத்திரைகொண்டன. பெரும் உள எழுச்சியுடன் அவன் கர்ணனின் கையை பற்றினான். “இது போரல்ல, நடனம் மூத்தவரே!” என்றான். கர்ணன் திரும்பி அவனைப் பார்த்தபின் அவர்கள் செயல்களைப் பார்த்து  தானும் முகமலர்ந்து “ஆம், நடனம்!” என்றான். ஜயத்ரதன் உவகையுடன் “அந்த இசையைக்கூட கேட்க முடிகிறது” என்றான். கர்ணனும் அவனுக்குப் பின்னால் நின்றிருந்த துச்சாதனனும் துச்சலனும் ஒரே குரலில் “ஆம், இனிய இசை!” என்றார்கள்.

கர்ணன் “அவ்விரல்கள் சொல்லும் சொற்கள் என்ன? அவை இப்போருக்குரியவை அல்ல. விண்ணிழிந்து மண் நிகழ்ந்த வேறு ஏதோ தெய்வங்களால் அவை உரையாடிக் கொள்ளப்படுகின்றன” என்றான். “என்ன சொல்கிறீர்கள், மூத்தவரே?” என்றான் துச்சாதனன். கர்ணன் “அறியேன். ஆனால் அவை உரையாடிக் கொள்கின்றன” என்றான். இரு கைகளையும் சேர்த்தபடி சற்றே முன்னகர்ந்து அவன் அவ்விரு உடல்களிலும் எழுந்து நெளிந்து கொண்டிருந்த கைகளையே நோக்கினான். நடனக் கலை தேர்ந்த பெரும் சூதர்கள் ஆடும் நாடகக் காட்சி.

“சொல்!” என்றான். “என்ன சொல்கிறீர்?” என்றான் ஜயத்ரதன். கர்ணன் இருகைகளையும் மாறி மாறி நோக்கி தவித்தான். பின்பு ஏதோ ஒரு கணத்தில் சிசுபாலனின் இருகைகளையும் ஒரே கணத்தில் நோக்கினான். நெஞ்சு துடிக்க அமர்ந்திருந்தபோது எண்ணம் அழிய இருவரில் எழுந்த நான்கு கைகளையும் ஒரே தருணத்தில் கண்டான். அவ்வொற்றைச் சொல்லை அவன் விழிகள் கேட்டன. “நாம்!” ஜயத்ரதன் “என்ன சொல்கிறீர், மூத்தவரே?” என்றான். “நாம்!” என்று மீண்டும் கர்ணன் சொன்னான். பின் கனவிலென “ஒருவர்!” என்று ஓசையிலாது சொன்னான்.

இனிய பாடலென்றாகின அச்சொற்கள். இருமை என்பது ஒன்றில்லை.  இருவரென்றும் இங்கில்லை. ஒன்றெனப்படுவது நின்றருளும் வெளி. இருமையென்று ஆகி தன்னை நிகழ்த்தி ஆடி வீழ்ந்து புன்னகைத்து மீண்டும் கலைந்துகொள்கிறது. அது இதுவே. இதுவும் அதுவே. இது மெய்மை. இது மாயை. இது இருத்தல். இது இன்மை. இது அண்மை. இது சேய்மை. இது ஆதல். இது அழிதல். இரண்டின்மை. ஒருமையென எஞ்சும் அதன் என்றுமுள பேதைமை.

துரியோதனன் “ஹா!” என்று ஒரு ஒலியெழுப்ப கர்ணன் திரும்பிப்பார்த்தான். அவன் விழிகளைப் பார்த்த சிசுபாலனை பார்த்தபோது அவனும் “ஆம்!” என்றான். அவன் தோளைத் தொட்டு “என்ன?” என்றான் ஜயத்ரதன். “மஹத்!” என்றான் கர்ணன். ஜயத்ரதன் “புரியவில்லை, மூத்தவரே!” என்றான். “மஹத்திலிருந்து தன்மாத்ரைகள். தன்மாத்ரையிலிருந்து அகங்காரம். அகங்காரத்திலிருந்து அறிவு. அறிவிலிருந்து அறியாமை” என்று கர்ணன் சொன்னான். “இது வசிஷ்ட சம்ஹிதையின் வரி அல்லவா?” என்றான் ஜயத்ரதன்.

“ஒருகணம்” என்றான் கர்ணன். “புரியும்படி சொல்லுங்கள், மூத்தவரே” என்றான் ஜயத்ரதன். “ஒருகணம். ஒருமை இழந்து அனைத்தும் குலைந்துவிடுகிறது அப்போது. அவ்வொரு கணத்தில் காலம் பெருகி விரிந்து வெளி நிகழ்கிறது.” ஜயத்ரதன் திரும்பி நோக்கியபோது சிசுபாலனின் உடலசைவுகள் இளைய யாதவரின்  உடலசைவுகளிலிருந்து சற்றே மாறுபட்டிருப்பதை கண்டான். அது ஒரு விழிமயக்கா என்று ஐயம் எழுமளவுக்கு மெல்லியது. இல்லை விழிமயக்கே என்று அவன் உள்ளம் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவ்வேறுபாடு மேலும் தெரிந்தது.

நோக்கியிருக்கவே அவ்விரு உடல்களும் முற்றிலும் வேறுபட்டன. ஜயத்ரதன் கர்ணனின் கைகளைப்பற்றி “விழுந்து கொண்டிருக்கிறான்” என்றான். சிசுபாலன் உடலசைவின் ஒத்திசைவு குறைந்தபடியே வந்தது. சினம்கொண்ட அசைவுகள் அவன் கைகளில் எழுந்தன. அவன் கால்களின் தாளம் பிறழ்ந்தது. ஜயத்ரதன் “என்ன செய்கிறான்? அனைத்தும் பிழையாகிறது” என்றான். கர்ணன் “ஒரு பிழையசைவு போதும். படையாழி அவன் தலையை அறுத்துவீசிவிடும்” என்றான். அறியாது விழிதூக்கி பீடமருகே நின்ற அர்ஜுனனை பார்த்தான். இருவர் நோக்குகளும் ஒரு கணம் சந்தித்துக் கொண்டபோது அர்ஜுனன் புன்னகையுடன் மெல்ல இதழசைத்தான். அவன் சொன்னதென்ன என்று உணர்ந்ததும் திகைத்து கர்ணன் பார்வையை விலக்கிக்கொண்டான்.

பீமன் குனிந்து தருமனிடம் “முடிந்துவிட்டது, அரசே!” என்றான். தருமன் “இவனுக்கென்ன ஆயிற்று? அசைவுகள் அனைத்தும் சிதறிக் கொண்டிருக்கின்றன!” என்றார். பீமன் “மைய முடிச்சு அவிழ்ந்த தோல்பாவையைப்போல இருக்கிறான்” என்றான். சிசுபாலன் பூசனைகளில்லாது கைவிடப்பட்ட காட்டுத்தெய்வம்போல் இருந்தான். நெஞ்சை வலக்கையால் அறைந்து பேரோசையிட்டு பற்களைக் கடித்தபடி எருதென காலால் நிலத்தை உதைத்து புழுதி கிளப்பி முன்னால் பாய்ந்தான். தொடையை ஓங்கித்தட்டி கைதூக்கி ஆர்ப்பரித்தான். அவன் படையாழி கூகையென உறுமியபடி இளைய யாதவரின் படையாழியை அடித்து தெறிக்கவைத்தது. விம்மிச் சுழன்று அவனிடம் மீண்டு வந்தது.

சினத்தின் வெறியில் அவன் கைகளும் கால்களும் உடலிலிருந்து பிரிந்து தனித்தெழுந்து சுழன்றன. “அவன் உடலின் நான்கு சினங்கொண்ட நாகங்கள் எழுந்தது போல்” என்றான் நகுலன். சகதேவன் “அவனுக்கு வலிப்பு எழுகிறது போல் தோன்றுகிறது” என்றான். அவன் நெற்றியில் ஆழ்ந்த வெட்டுத்தடமென ஒன்று எழுவதை தருமன் கண்டார். “ஆ! நுதல்விழி” என்று திகைப்புடன் சொல்ல அனைவரும் அக்கணமே அதை கண்டனர். விரைந்து சுழன்ற கைகள் பெருகின. “நான்கு கைககள் போல!” நுதல்விழியும் நாற்கரமும் கொண்டு “இதோ! இதோ!” என்று கூவியபடி அவன் தன் படையாழியை வீசினான். அது குறிபிழைத்தது.

இளைய யாதவர் நகைத்து “இவ்வழி!” என்றார். “இவ்வழியே!” என்று தன் படையாழியை செலுத்தினார். “ஆம்!” என்று சிசுபாலன் அலறிய மறுகணம் படையாழி அவன் தலையை துணித்து மேலேறியது. குருதி செம்மொட்டு மாலையை சுழற்றி வீசியதுபோல் மண்ணில் விழுந்து மணிகளெனச் சிதறி புழுதிகவ்வி உருண்டது. குருதி சூடிய படையாழி ஒன்று பறந்து சென்று இளைய யாதவரின் வலக்கர சுட்டுவிரலில் அமைந்தது. ஒளிரும் புன்னகையுடன் பிறிதொரு ஆழி அதைத் தொடர்ந்து வந்து அதன் மேல் அமர்ந்தது. இரண்டும் இணைந்து ஒன்றென ஆயின.

சிசுபாலனின் தலை தாடியும் தலைமுடியும் சிதறிப்பரக்க விண்ணிலிருந்து மண்ணுக்கு விழுந்த விதை போல தெறித்து புழுதியில் உருண்டு கிடந்தது. அவன் தலையற்ற உடல் கால்களில் நின்று வலிப்பு கொண்டு இழுபட்டுச் சரிந்து துள்ளி வலப்பக்கமாக விழுந்து மண்ணில் நெளிந்தது. கட்டை விரல்கள் இறுகி பின்பு தணிந்தன. கைவிரல்கள் ஒவ்வொன்றாக சொடுக்கி நிமிர்ந்து அதிர்ந்து பின் அணைந்தன. இருகைகளிலும் சுட்டுவிரலும் கட்டைவிரலும் சின்முத்திரையென இணைந்து உறைந்தன. தருமன் பீமனைத் தொட்டு மூச்சுக்குரலில் “அவன் நெற்றியில் இப்போது அந்த மூவிழி இல்லை” என்றார். “அது ஒரு விழிமயக்குதான், மூத்தவரே” என்றான் பீமன்.

சுவரோவியம்போல் சமைந்து நின்ற கூட்டத்திலிருந்து தமகோஷர் இருகைகளையும் கூப்பியபடி முன்னால் வந்தார். “இளைய யாதவரே, சேதியின் அரசனை தனிப்போரில் கொன்றமையால் அந்நாட்டு முடியும் மண்ணும் தங்களுக்குரியதாயின. என் மைந்தனை இக்களம் விட்டு எடுத்துச்செல்லவும் அரசனுக்குரிய முறையில் சிதையேற்றவும் தங்கள் ஒப்புதலை கோருகிறேன்” என்றார். அவரது முதிய உடல் தோள் குறுகி மெல்ல அதிர்ந்து கொண்டிருந்தது. இடக்கால் தனித்து ஆடியது. கூப்பிய கைகள்  இறுகியிருந்தன.

இளைய யாதவர் தன் படையாழியை இடை செருகி அவர் அருகே வந்து கைகூப்பி “தந்தையின் துயரை நான் அறிவேன், மூத்தவரே. ஆனால் படைக்கலம் ஏந்துபவன் எவனும் குருதி கொடுக்கும் நாளுக்காக காத்திருப்பதையே வாழ்க்கையாகக் கொண்டுள்ளான். இருந்தவர்க்கோ இறந்தவர்க்கோ  துயருறார் அறிவுடையோர்” என்றார்.  “ஆம், உண்மை. நான் காத்திருந்த தருணம் இது. ஆகவே துயருறவில்லை. மண்ணிலிருந்து நூலுக்கு என் மைந்தன் இடம் பெயர்ந்துவிட்டான் என்றே கொள்கிறேன்” என்றார் தமகோஷர்.

“பட்டத்து இளவரசராக இவர் எவரை அறிவித்திருக்கிறார்?” என்றார் இளைய யாதவர். “விசால நாட்டு அரசி பத்ரையின் முதல் மைந்தன் தர்மபாலனை தன் வழித்தோன்றலாக அறிவித்துவிட்டு என் மைந்தன் நகர் நீங்கியிருக்கிறான்” என்றார். “அவனுக்கு சேதி நாட்டை என் அன்புக் கொடையாக அளிக்கிறேன். தமகோஷரே, மாவீரன் சிசுபாலனின் கொடிவழி என்றும் திகழ்வதாக! ஓம் அவ்வாறே ஆகுக!” என்றபின் திரும்பி கை நீட்டினார். ஏவலன் ஒருவன் தொலைவிலிருந்து மரக்கிண்டியில் நீருடன் அவர் அருகே ஓடிவந்தான். அதை வலக்கையில் விட்டு தமகோஷரின் கைகளுக்கு ஊற்றி சேதி நாட்டை அவருக்கு நீரளித்தார்.

“வணங்குகிறேன் யாதவரே, உம் நிகரழியாப் பெருநிலை மண்ணில் உள்ளோர் அனைவருக்கும் வழிகாட்டியாக அமையட்டும்!” என்றார் தமகோஷர். இளைய யாதவர் குனிந்து சிசுபாலனின் தலையை எடுத்து வீழ்ந்துகிடந்த அவன் உடல் கழுத்துப் பொருத்தில் வைத்தார். நான்கு பக்கங்களிலுமென முறுகித் திரும்பியிருந்த கைகளையும் கால்களையும் பற்றி மெல்லத்திருப்பி சீரமைத்தார். திறந்திருந்த அவன் விழிகளை கைகளால் தொட்டு மூடினார். துயிலும் குழந்தையை தந்தை என கனிந்து நோக்கி சிலகணங்கள் இருந்தார்.

அவன் நெற்றிமேல் கைவைத்து முடியை கோதி பின் செருகி “செல்க! வீரர் உலகில் எழுக! அங்கொருநாள் நாம் சந்திப்போம், இளையோனே! அப்போது தோள் தழுவுகையில் இருவருக்கும் நடுவே இவ்வுலகு சமைக்கும் பொய்மைகளும் பொய்மையைவிட துயர்மிகுந்த உண்மைகளும் இல்லாதிருப்பதாக! ஓம், அவ்வாறே ஆகுக!” என்றபின் எழுந்து எவரையும் நோக்காது அர்ஜுனனை அணுகி அவனையும் கடந்து சீரான காலடிகளுடன் வேள்விப்பந்தலை நோக்கி சென்றார்.

நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 61

[ 9 ]

பீஷ்மர் கைகூப்பியபடி எழுந்தபோது அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “அவையோரே, இதற்கு அப்பால் எளியவனாகிய இம்முதியவன் உங்களிடம் எதுவும் சொல்வதற்கில்லை. என் மைந்தரின் உருவாக இங்கு அமர்ந்துள்ள அரசர் அனைவரிடமும் நான் சொல்வதொன்றே. பல்லாயிரம் கைகளில் படைக்கலம் கொண்டு என்னுடன் நானே போரிட்டு நான் சென்றடைந்த வினாவிலிருந்து விடையென எழுந்தவை இங்கு ஒலிக்கக் கேட்டேன். வேத மெய்ப்பொருள் என்பது வேதம் கடந்த நிறைநிலையே என்ற உண்மை இவ்வவையில் நிலைபெறுவதாக!”

“சொல்லெண்ணித் தவமிருக்கும் கவிஞரும் ஐந்தவித்து ஆழ்ந்து செல்லும் முனிவரும் அடையாதவற்றை வீட்டு முற்றத்தில் சிறு செப்புடன் மண்ணில் விளையாடும் குழந்தை சொல்லிவிடுவதுண்டு என்று அறிந்திருக்கிறேன். இங்கு அறமெனத் திகழும் இப்பெரு வேள்வியில் குலமுதல்வராக அமர தகுதிகொண்டவர் இளைய யாதவர் ஒருவரே” என்று சொன்னபின் மேலும் சொல்ல உன்னுபவர்போல உதடு துடித்து முதுமையின் நடுக்கத்துடன் கண்ணீருடன் செயலற்று நின்று பின் அமர்ந்துகொண்டார்.

அச்சொல்லுக்கு அவையில் எங்கும் ஆழ்ந்த அமைதி எதிர்வினையாக எழுந்தது. சிசுபாலன் தன் எஞ்சிய சினத்தைத் திரட்டி “ஏன் இந்த அமைதி? இங்கு இவன் சொன்னதென்ன? வேதம் முக்குணம் கொண்டதென்றால் எரியூட்டி அம்முக்குணத்தை ஓம்பும் இச்செயலில் இவனுக்கு உரிய பங்கு எது? இயற்றுவதெல்லாம் வேள்வியே ஆகுமென்றால் இங்கு இயற்றப்படும் இவ்வேள்வியின் பொருளேது? வீண் சொற்கள்!” என்றான்.

சீற்றத்துடன்  திரும்பி அவையை நோக்கி “அரசர்களே, சூதரிடம் இருந்து சொல்கற்ற ஒருவன் தன்னை மெய்யறிந்தோன் என்றும் தவமுணர்ந்தோன் என்றும் முன்வைப்பான் என்றால் அதைக்கேட்டு ஆரியவர்த்தத்தின் அரசரும் முனிவரும் வைதிகரும் அவனுக்கு அவைமுதன்மை அளிப்பார்கள் என்றால் அதைவிட இளிவரல் பிறிதேது? இதை ஒப்ப இயலாது. இவன் இழிமகன். சொல்லாயிரம் எடுத்து சூடிக்கொண்டாலும் மாமனைக் கொன்றவன் இவன் என்பது இல்லாதாவதில்லை. எதிரிகளை ஒளிந்து ஒறுத்தவன் என்பது மறைவதில்லை. இவ்வேள்வி மறுப்பாளனை இங்கே அவை விலக்கம் செய்யவேண்டும். ஒருபோதும் நானிருக்கையில் இவன் அவைமுதன்மை கொள்ள முடியாது” என்றான்.

வெறிகொண்டவனாக சிசுபாலன் கூவினான் “இங்கிருக்கிறார் இவர்களின் குடிமூத்தவரான சல்யர். இதோ இருக்கிறார் விதர்ப்பத்தின் பீஷ்மகர். அவர் மைந்தன் ருக்மி இருக்கிறான். மூத்தவர் பகதத்தர் இருக்கிறார். அருந்தவத்தாரான முனிவர் அவைநிறைத்துள்ளார்கள். பெருவீரர்களான ஷத்ரிய அரசர்கள் அணிவகுத்திருக்கிறார்கள். இவனுக்களிக்கப்படும் ஒவ்வொரு மேன்மையும் ஷத்ரியர்கள் மேல் உமிழப்படும் வாய்நீரென்றே பொருள். எழுக! உண்மை ஷத்ரியனின் குருதியில் பிறந்த வீரன் இங்குண்டெனில் எழுக!”

சகதேவன் தன்னை விலக்க எழுந்த அர்ஜுனனின் கையை தட்டிவிட்டு முன்னால் வந்து “எழுபவர் எழுக! இது பாண்டவர்களின் அவை. யயாதியின் கொடிவழி வந்தோரின் அரச வேள்வி. இங்கு எவரையும் தலைவணங்கி அவையமரச் செய்யவில்லை. வென்று கொணர்ந்திருக்கிறோம். எழுபவர் ஒவ்வொருவரும் இந்திரப்பிரஸ்தத்தின் கோலுக்கு எதிராக எழுகிறீர்கள். அவர்களின் தலைக்கு மேல் திசை வென்று மீண்ட என் கால் இதோ அமர்ந்திருக்கிறது” என்று தூக்கிக் காட்டினான்.

சினந்தெழுந்த கலிங்கன் “இளைய பாண்டவா, வணங்கி வந்து என் வாயிலில் நின்றவன் நீ. இம்மாநிலத்தில் ஒரு போர் வேண்டாம் என்று ஆநிரை கொடுத்ததனால் உன் அடிபணியும் இழிமகனாக நான் இங்கு அமர்ந்திருக்கவில்லை” என்றான். ஷத்ரியர் பலர் எழுந்து கூவினர். மாளவன் “போர் நிகழலாகாதென்று வேள்விக்கு வந்தவர்கள் சிறுமை செய்யப்பட்டிருக்கிறார்கள். சிறுகுடி யாதவனுக்காக ஷத்ரியரை இழிமதிப்புடன் பேசிய இவன் நாவை அறுங்கள்” என்று கூவினான். “பொறுங்கள்… பொறுங்கள்” என்று பகதத்தர் கைதூக்கி எதிர்கூவினார்.

பீமன் சினத்துடன் நெஞ்சை உந்தி முன் வந்து “அடிபணிய விழையாதவர் எழுக! குருதியினால் இங்கு வேள்வி நிகழுமென்றால் அதுவே ஆகுக! கொள்வதற்கும் கொடுப்பதற்கும் குருதி நிறைய உள்ளது எங்களிடம்” என்றான். துரோணர் எழுந்து கைவிரித்து “அவையோரே, அமர்க! அமர்க, சான்றோரே! இது போர்க்களமல்ல, வேள்விப்பந்தல். இங்கு பூசல் நிகழவேண்டியதில்லை” என்றார். கிருபர் “அமர்க! ஷத்ரியர்களே, அந்தணர் முன் படைக்கலமெடுப்பதை ஒப்புகிறதா உங்கள் குடிநெறி? அமர்க!” என்று முறையிட்டார்.

சினந்த ஓநாய் என பற்கள் தெரிய சீறி “ஆசிரியரே, இங்கு நிகழ்வது ஆளொழிந்த பந்தியில் அமுதத்தை நாய் நக்கியதுபோல் ஓர் இழிமகன் முதன்மை கொள்ளும் நிகழ்வு. பூசலல்ல” என்றான் சிசுபாலன். பீஷ்மர் “இளையோனே, உன் நெஞ்சு எண்ணுவதுதான் என்ன? எதன்பொருட்டு இங்கெழுந்து நின்று எரிகிறாய்?” என்றார். “என்றோ எரியத்தொடங்கிய உலை இது, பிதாமகரே. எதையும் எதிர்நிற்காமல் ஒருவன் வென்று செல்லமுடியும் என்றால், எங்கும் சொல் நிகர் வைக்காமல் ஒருவன் அவைமுதன்மை கொள்ள முடியுமென்றால் எதை நம்பி நான் இதுவரை வாழ்ந்தேனோ அவையனைத்தும் அழிகின்றன என்றே பொருள்” என்று சிசுபாலன் சொன்னான்.

“இவனால் இங்குள்ள வேள்விகள் வீண் நடிப்பென்றாகின்றன. அறிஞர் அவைகள் வெறும் கூச்சல்களாகின்றன. போர்கள் இளிவரல் நடிப்புகளாகின்றன.  ஆயிரம் ஆண்டுகளாக இங்கு ஆன்றோர் அமைத்த அனைத்தையும் குலைத்து நிற்கும் இவ்விழிமகன் அவையிலிருந்து விழிநீருடன் இறங்கிச் சென்றாலொழிய என் நெஞ்சு அமையாது. மூத்தோரே, இவன் யார்? எதன் பொருட்டு துளித்துளியாக இங்கு சேர்க்கப்பட்ட அனைத்தையும் சிதறடிக்கிறான்? கூடாரத்தை அவிழ்த்து நிலம்படியச் செய்பவன்போல்  அனைத்தையும் முடிச்சறுத்து தாழ்த்தியபின் இவன் அமைக்கப்போவதுதான் என்ன?”

“அனைத்தையும் இங்கே ஆக்குவது என்ன மாயம் என்று நான் சொல்கிறேன். இவன் அழகு. அவையீரே, அழகை நன்றென்று நம்பும் பேதைமையை கடக்காமல் விடுதலை எவருக்குமில்லை. பாம்பும் அழகே. காட்டெரியும் அழகே. நச்சூறிய மதுவும் நற்குடுவையில் அழகே. இன்று என் நெஞ்சில் கைவைத்தறிகிறேன். நான் நின்றிருக்கும் மண்ணை நெருப்பாக்க வந்த கீழ்மகன் இவன். உயிருடன், தோள்களுடன், சொல்லுடன், அனலுடன் நான் எஞ்சும் வரை இவன் இங்கு அவைமுதன்மை கொள்ள முடியாது.”

“ஏன்? ஒற்றைச் சொல்லில் அதை சொல்க!” என்றான் அர்ஜுனன். “ஒற்றைச் சொல் வேண்டுமென்றால் இதோ, இவன் ஷத்ரியன் அல்ல. பிற அனைத்தையும் பேச வேறு களம் தேவை. இது சடங்குமுகப்பு. ஆகவே இதுவே என் சொல். இவன் ஷத்ரியனல்ல” என்றான் சிசுபாலன். “ஆம், இவன் ஷத்ரியனல்ல” என்றான் ருக்மி. இருகைகளையும் விரித்து “அவையீரே, கேளுங்கள்! விதர்ப்பம் வில்லனுப்பியது ஷத்ரியர் ஆள்கின்ற இந்திரப்பிரஸ்தத்தின் ராஜசூயத்திற்கு. விண்வேந்தன் இறங்கி அருளும் வேள்விப்பந்தலுக்கு. கன்றோட்டி காடளக்கும் கீழ்மகன் தலைமை கொள்ளும் அவைக்கு அல்ல. விதர்ப்பம் இதை ஏற்காது” என்றான்.

ஜயத்ரதனும் எழுந்து “ஆம், சிந்து நாட்டிற்கு சொல்லப்படவில்லை, இவ்வவையில் இவன் அவைத்தலைமை கொள்வான் என்று” என்றான். அவர்களிருவரும் எழுந்ததும் சிறுகுடி ஷத்ரியர்கள் பலர் ஆங்காங்கே எழுந்தனர். “ஆம், ஷத்ரியநெறிப்படி நாங்கள் வேதத்தால் அரியணை அமர்த்தப்படாத ஒருவனை எங்கள் தலைவன் என ஏற்கமுடியாது” என்றனர். “ஆம், இங்கு இந்த அவையில் களத்தில் எந்த ஷத்ரியனை இவன் எதிர்கொண்டிருக்கிறான் என்று அறிய விரும்புகிறேன்” என்று தன் கையைத்தூக்கியபடி எழுந்தான் மாளவன்.

கூர்ஜரன் “அதையே நானும் கேட்க விழைகிறேன். இவ்வவையில் இவன் முதன்மை கொண்டானென்றால் நாளை காடு தெளித்து கன்றுநிலை உருவாக்கி, குடித்தலைமை கொண்டு, வளைகோலேந்தி நிற்கும் ஒவ்வொரு யாதவனும் தன்னை அரசனென்று அறிவிப்பானல்லவா? சொல்லுங்கள், பாரதவர்ஷத்தில் இனி எத்தனை அரசர்கள்?” என்றான். வங்கன் “பீஷ்மர் இதற்கு விடை சொல்லட்டும். அவருக்கு சொல்லில்லை என்றால் வேதம் பழித்து வெறுஞ்சொல் எடுத்து நிற்கும் இந்த யாதவன் சொல்லட்டும். இனி எவர் வேண்டுமானாலும் அரசர் என்று தன்னை அறிவிக்கலாகுமா? அரசர் என்று அமைவதற்கான நெறிகள் என்ன?” என்றான்.

துரோணர் “இது கொள்கைசூழும் அறிஞரவையல்ல, வேள்விச்சாலை. இங்கு சொல்லெண்ணி முடிக்கும் வினாவல்ல நீங்கள் எழுப்புவது. அதை குருகுலங்களில் முனிவர் செய்யட்டும். வைதிகர் அவைகளில் வேதம் உணர்ந்தோர் செய்யட்டும். நாம் இங்கு ஆற்றுவது வேறு” என்றார். “அவ்வண்ணமெனில் இன்று இந்த அவை விட்டு இவன் இறங்கட்டும். பீஷ்மரோ சல்யரோ அல்லது தாங்களோ குடித்தலைமை கொள்வதில் எங்களுக்கு மாற்றில்லை. முனிவரும் வைதிகரும் புலவரும் கூடி முடிவெடுக்கட்டும், நிலம் வென்று நாடாளும் உரிமை எவருக்குண்டென்று. எவன் சூடும் முடி பிற அரசரால் ஏற்கப்படவேண்டுமென்று” என்றான் ருக்மி.

ஜயத்ரதன் “நாளை கிளைதோறும் தாவும் குரங்கொன்று தூங்கும் அரசனின் முடியொன்றை எடுத்துச்சூடி வந்தமர்ந்தாலும் வைதிக வேள்விகளில் பீடம் அமையுமா என்றறிய விழைகிறேன்” என்றான். ஷத்ரியர் அவையெங்கும் சிரிப்பலை எழுந்தது. “நிறுத்துங்கள்!” என்று சகதேவன் கூவினான். “இங்கு எழுந்து குரலெழுப்பும் ஒவ்வொருவரையும் என்னுடன் போருக்கழைக்கிறேன்” என்றபடி தன் வாளை உருவிக்கொண்டு முன்னால் பாய்ந்தான்.

இடையில் கைவைத்து நாடகமொன்றைப் பார்த்து மகிழ்ந்து நிற்பவர்போல தெரிந்த இளைய யாதவர் இரண்டு கைகளையும் தூக்கி “செவி கொடுங்கள்! ஓசையடங்கி செவி கொடுங்கள்!” என்று கூவினார்.  துரோணர் எழுந்து “அவர் சொல்வதை கேளுங்கள்!” என்று ஷத்ரியர்களை நோக்கி சொன்னார். கலைந்து ஓசையிட்டுக் கொண்டிருந்த ஷத்ரியர்கள் மெல்ல கைதாழ்த்தி அமைந்தனர். இளைய யாதவர் முகத்தில் முதன் முறையாக சினத்தை அனைவரும் கண்டனர். உரத்த குரலில் “அவையீரே, அரசர்களே, எந்த நெறிப்படி நான் துவாரகையின் முடி சூடிக் கொண்டேனோ, என்னை இங்கு அரசனென முன் வைத்தேனோ, அந்த நெறிப்படியே உங்கள் வினாக்களுக்கான விடையை சொல்கிறேன்” என்றார்.

உறுதியான குரலில் “அறிக, ஷத்ரியன் என்பவன் ஷத்ரியர்களை வெல்லும் ஆற்றல் கொண்டவன். கன்றோட்டி பால் கறந்து நெய்யெடுப்பவன் யாதவன் என்றால், உழுது அமுது விளைவிப்பவன் வேளிர் என்றால் வெல்லற்கரிய வாளை ஏந்துபவன் ஷத்ரியன்” என்றார். தன் படையாழியைத் தூக்கி அறைகூவினார் “இதோ, என் படைக்கலம். என்னை ஷத்ரியனல்ல என்றுரைக்க இவ்வவையில் துணிபவர் எவரேயாயினும் எழுக! ஆயிரம் செவிகள் மலர்ந்துள்ள இந்த அவையில் சொல்கிறேன், தெய்வங்கள் நுண்ணுருவாக எழுந்த இக்காற்றிலெழுக என் வஞ்சினம்! எவன் அவ்வண்ணம் இந்த அவையில் கைதூக்கி எழுகிறானோ அவன் குடியின் இறுதிக்குழந்தையின் தலையையும் அறுத்த பின்னரே இப்படையாழி அமையும். என் கொடிவழியின் இறுதி மைந்தன் எஞ்சுவதுவரை அவ்வஞ்சம் நீடிக்கும். அச்சமற்றவர் எவரேனும் இருந்தால் எழுக! ஐம்பத்தாறு ஷத்ரியர்களில் ஒருவர் துணிந்தால் எழுக!”

அக்குரல் கேட்டு அங்கிருந்த அனைவருமே உளம் நடுங்குவதை காணமுடிந்தது. அங்கு கவிந்த முற்றமைதியில் எரி எழுந்து படபடக்கும் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. “எவர்வேண்டுமென்றாலும் எழுக! ஆனால் எண்ணி எழுக! எழுந்தபின் உங்கள் மூதாதையர் பிறகொருபோதும் விண்ணில் அன்னமும் நீரும் கொள்ளப்போவதில்லை என்றுணர்க!” என்று அவைசூழ்ந்து முழங்கிய பெருங்குரலில் அவர் சொன்னார்.

“நான் அறைகூவுகிறேன்!” என்றபடி சிசுபாலன் முன்னே வந்தான். “நீ இழிமகன் என்றும் ஷத்ரியன் அல்ல என்றும் நான் உரைக்கிறேன். உனக்கிணையாக படையாழி ஏந்தி நின்று போரிட நான் சித்தமாக உள்ளேன்” என்றான். “இவனுடன் படைத்துணை கொள்ள இங்கெவரேனும் உளரா?” என்றார் இளைய யாதவர். சிசுபாலன் திரும்பி நோக்காமல் உரக்க நகைத்து “எவரும் இருக்க மாட்டார்கள் என்று நானறிவேன். யாதவனே, இந்நகரில் காலெடுத்துவைத்த முதற்கணமே உணர்ந்தேன் இத்தருணத்தை” என்றான்.

வங்கனும் மாளவனும் கலிங்கனும் சொல்லிழந்தவர்களாக பீடங்களில் ஒட்டி அமர்ந்திருந்தனர். ஜயத்ரதன் குனிந்து கர்ணனிடம் ஏதோ சொல்ல அவன் அதை கேளாதவன்போல் அமர்ந்திருந்தான். பீஷ்மர் சிசுபாலனை நோக்கி “மூடா! எங்கு செல்கிறாய் என்று அறிந்திருக்கிறாயா?  செல், இளமையில் உன்னை இத்தோள்களிலும் மடியிலும் ஏந்தியவன் என்ற உரிமையில் சொல்கிறேன், செல்! விலகிச் செல்!” என்றபின் “யாதவரே, மீண்டும் நீங்கள் பொறுத்தருளவேண்டும். இவன் ஆணவத்தால் அறியா சொல்லெடுத்தான்” என்றார். “என் குடியின் இளையோர் செய்த அனைத்துப் பிழைகளையும் பொறுத்தீர். இவனுக்கும் அளிகூர்க!” என்றார்.

இளைய யாதவர் “பொறுத்தருள்க, பிதாமகரே! இவன் என் அத்தை மகன். என் மடி அமர்ந்த சிறுவன். அன்று இவன் அன்னைக்கு ஒரு சொல்லளித்தேன், நூறு முறை இவன் பிழை பொறுப்பதாக. இது நூற்றொன்றாவது பிழை என்று உணர்கிறேன்” என்றார். “ஆம், நூறுமுறை உன்னை எதிர்கொண்டேன். ஏனெனில் ஒவ்வொரு முறையும் நான் ஆற்றல் பெற்றவனானேன்” என்று சிசுபாலன் சொன்னான். “இன்று எழுந்து நின்று உன் முன் இப்பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் எவரும் உரைக்கத் துணியாத சொல்லை உரைக்கிறேன். நீ கொண்டிருக்கும் முடி பொய். உன் குலம் இழிந்தது” என்றான் சிசுபாலன்.

“உன்னை நான் போருக்கு அழைக்கிறேன், இளையோனே” என்றார் இளைய யாதவர். “அழைத்தது நானென்பதால் விரும்பிய படைக்கலம் எடுக்க உனக்கு ஒப்புதல் அளிக்கிறேன். விரும்பிய இடத்தில் விரும்பிய படைத்துணையுடன் நீ போருக்கு வரலாம். ஆனால் போருக்கெழுந்துவிட்டபின் ஒரு தருணத்திலும் என் படையாழி உன்னை பொறுத்தருளாது என்றுணர்ந்துகொள்!” சிசுபாலன் பெருங்குரலில் “இங்கேயே இத்தருணத்திலேயே எதிர்கொள்கிறேன். இதைக்கடந்து சென்று முடிந்தால் நீ இவ்வேள்விக்கு தலைவனாக ஆகு” என்றான்.

“உன்னை கொல்வதைப்பற்றியே நாற்பதாண்டுகாலம் கனவுகண்டவன். நாற்பதாண்டு என் உயிரென எரிந்த சுடர் அவ்வஞ்சம்” என்று அவன் தொடர்ந்தான். “படைத்துணை தேடி சிந்துவுக்கும் மாளவத்துக்கும் கூர்ஜரத்துக்கும் விதர்ப்பத்துக்கும் சென்றிருந்தேன். இன்றறிந்தேன், தனித்து நிற்பவனே உன்னை எதிர்கொள்ள முடியுமென்று. ஏனெனில் பல்லாயிரம்பேர் சூழ நிற்கையிலும் நீ தனித்திருக்கிறாய். உனது தனிமையின் நிழலென இங்கு நின்றிருக்கிறேன். இது கருவில் முதல் துளி பெறுகையில் என் அன்னைக்கு கொடுத்த வாக்கென்றுணர்க! இழிமகனே, உன் படையாழி என் படையாழியை எதிர்கொள்ளட்டும்” என்றான் சிசுபாலன்.

துரோணர் அவை நோக்கி “அவ்வண்ணமெனில் இங்கு இரட்டையர் போருக்கு முடிவெடுப்போம். இணையாத பாதைகள் சென்று முட்டும் இறுதியிடம் அதுவே. போர்வீரர்களுக்கு உகந்தது என நூல்களால் கூறப்பட்டுள்ளதும், வீழ்ந்தாலும் வென்றாலும் புகழ் அளிப்பதும், களம்பட்டால் விண்ணுலகு சேர்ப்பதுமான இரட்டையர் போர் இங்கு நிகழ்வதாக!” என்றார். “ஆம், அது நிகழட்டும்” என்று பின்னிலிருந்து எவரோ குரல் எழுப்பினர். ஆனால் ஷத்ரியர்கள் திகைத்தவர்கள்போல் அசையாதிருந்தனர்.

அசுரகுடித் தலைவராகிய வஜ்ரநந்தர் “களம் அமையுங்கள். நடுநிற்போரை அறிவியுங்கள். இன்றே இங்கு இதற்கொரு முடிவு எழட்டும்” என்றார். தருமன் தன் அரியணையில் எழுந்து “இந்த அவையின் கோரிக்கைக்கு ஏற்ப வேள்விப்பந்தலுக்கு வடக்கே அமைந்துள்ள களத்தில் விருஷ்ணிகுலத்தவரும், மதுவனத்தின் சூரசேனரின் பெயரரும், மதுராவின் வசுதேவரின் மைந்தரும்,  துவாரகையின் அரசருமான வாசுதேவ கிருஷ்ணனுக்கும், ஷத்ரிய குடியில் உபரிசிரவசுவின் கொடி வழிவந்தவரும், சேதி நாட்டு தமகோஷரின் மைந்தரும், சேதிநாட்டரசருமாகிய சிசுபாலனுக்கும் நடுவே இரட்டையர் போரை நான் அறிவிக்கிறேன்” என்றார்.

போர் அறிவிப்புகளை கைதூக்கி ஓசையிட்டு வரவேற்கும் முறைமை இருந்தும் அவை அமைதியாகவே இருந்தது. தருமன் “இப்போருக்கு மூவரை நடுவராக இருக்க வேண்டுமென்று கோருகிறேன். வில்லவர்க்கு முதல்வராகிய சல்யரும், முதற்பெரும் ஆசிரியராகிய துரோணரும், போர்க்கலையறிந்த அந்தணராகிய கிருபரும் அப்பொறுப்பை  ஏற்றருள வேண்டுகிறேன்” என்றார். பீஷ்மர் “ஆம். அவர்களே உகந்தவர்கள்” என்றார். கிருபரும் சல்யரும் துரோணரும் எழுந்து தலைவணங்கி அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.

“போருக்கு நற்பொழுது குறிக்கும் வழக்கமுண்டு. ஆனால் வஞ்சினம் உரைத்தபின் எப்பொழுதும் நன்றே என்று நூல்கள் உரைக்கின்றன” என்றார் துரோணர். “இங்கு இப்போர் முடிந்தபின்னரே வேள்வி எழும் என்பதனால் உடனே போர் தொடங்குகிறது. போருக்கு களம் சென்று நிற்பது வரை போரிலிருந்து விலக இருவருக்கும் உரிமையுண்டு. களம் சென்று கச்சை கட்டிய பின்னர் தோல்வியை ஏற்காது விலகலாகாது” என்றார் கிருபர். “பார்த்துவிடுவோம். எங்கே சூதர்கள்? எங்கே புலவர்கள்? எங்கே விண்ணெழுந்த தேவர்கள்? மூதாதையர்கள்? நீங்கள் அறிக! இக்கணத்தின் உண்மை எதுவென்று அறிவீர்கள்” என்று சிசுபாலன் சொன்னான்.

நடுவர் மூவரும் எழுந்து அவை வணங்கி வடக்கு வாயிலினூடாக  களம் நோக்கி சென்றனர். அவர்களைத்  தொடர்ந்து அவர்கள் மாணவர்களும் பிற ஷத்ரியர்களும் செல்லத்தொடங்கினர். அரசர்கள் எழுந்து தங்களுக்குள் கலைந்து பேசிக்கொண்டு ஏவலர்களை அழைத்துக்கொண்டு களம் நோக்கி செல்ல கர்ணன் துரியோதனனிடம் “மூடன்! இவன் என்னதான் எண்ணுகிறான்?” என்றான். ஜயத்ரதன் “அவன் நம்பிக்கை இழந்துவிட்டான். களப்பலி ஆகி நூல்களில் புகழ்பெற விழைகிறான்” என்றான்.

கர்ணன் “இப்போது தெரிகிறது. அவனை முதற்கணம் பார்த்தபோதே அவனில் நிகழ்வதென்ன என்று என் உள்ளம் திகைத்தது. எங்கோ சென்று கொண்டிருப்பவனை இடைவெளியில் பார்த்ததுபோல் உணர்ந்தேன். இவன் எங்கு சென்று கொண்டிருக்கிறான் என்று இப்போதுதான் உணர்கிறேன்” என்றான்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே இருகைகளையும் முறுக்கி தன் பீடத்தின் மேல் ஓங்கி அறைந்தபடி துரியோதனன் எழுந்தான். “அரசே!” என்று அவன் தோளைத் தொட்ட கர்ணனின் கைகளை தட்டியபடி பலபீடங்களை காலால் தட்டி விலக்கியபடி திமிரெழுந்த யானைபோல முன் நிரையில் அமர்ந்திருந்த பீஷ்மரை நோக்கி சென்றான். உரத்த குரலில் “பிதாமகரே, இங்கு நிகழவிருப்பது என்னவென்று அறியவில்லையா? என் தோழன் இதோ களம்படவிருக்கிறான்” என்றான்.

பீஷ்மர் தன் தாடியை நீவியபடி “அவன் வீரத்தில் அவனுக்கிருக்கும் நம்பிக்கை உனக்கில்லை போலும்” என்றார். துரியோதனன் “அவன் வீரத்தை நம்புகிறேன். அதைவிட இவன் சூழ்ச்சியை அஞ்சுகிறேன்” என்றான். “தான் வெல்லமுடியும் என்று ஐயத்திற்கிடமின்றி தெரியவில்லை என்றால் இவன் களமிறங்கமாட்டான், பிதாமகரே.” பீஷ்மர் “போரில் வெல்வதும் வீழ்வதும் தெய்வங்களின் எண்ணம். இளையோனே, நீ படைக்கலம் பயின்றவன். நீ அறிந்திருப்பாய், எப்போரிலும் படைக்கலங்களின் எண்ணம் என ஒன்று உண்டு. பெருவீரர்களை அறியாச்சிறுவர் வீழ்த்தலாகும். எவரும் தங்கள் படைக்கலன்களைக் கடந்த சித்தம் கொண்டவர்கள் அல்ல. ஆழியில் உறையும் தெய்வம் முடிவெடுக்கட்டும்” என்றார்.

துரியோதனன் “இது ஒவ்வாதது. என்னால் உடன்பட ஒப்பாதவை இச்சொற்கள். இங்கு வெறும் விழிகொண்டவனாக நான் இருக்க இயலாது” என்றான். பீஷ்மர் “இதில் நீயோ நானோ செய்வதற்கொன்றுமில்லை” என்றார். “நான் களமிறங்குகிறேன். அவனுக்கு படைத்துணையாக நான் களமிறங்குகிறேன்” என்று துரியோதனன் சொன்னான். பீஷ்மரின் முகம் இறுகியது. “இறங்கலாம், ஆனால் அஸ்தினபுரியின் முடியை அகற்றிவிட்டு என் குலக்கொடி வழி என்பதை மறுத்துவிட்டுத்தான் அது நிகழவேண்டும்” என்றார்.

தளர்ந்த குரலில் “பிதாமகரே, ஒவ்வொரு தோழனும் களம்படும்போது கையறுநிலையில் நோக்கி நிற்கவா என்னை ஆணையிடுகிறீர்கள்?” என்றான் துரியோதனன். “இளையோனே, உன் களங்களை நீயே அமை. அதில் நின்றாடு.” அவர் குரல் கனிந்தது. “மைந்தா, அரசன் என்பவன் தன் குடிகளின் நலன் பொருட்டன்றி வேறெந்த நோக்கத்துடனும் படைக்கலம் ஏந்தும் உரிமையற்றவன். மலைவேடனுக்கு, ஏன் ஒரு காட்டுவிலங்குக்கு இருக்கும் உரிமைகூட ஓர் எளிய ஷத்ரியனுக்கு இல்லை என்பதை அறிக! அவர்கள் சினம்கொண்டு படைக்கலம் ஏந்தலாம். வஞ்சத்தில் களம் புகலாம். களியாட்டெனவும் கொல்லலாம். ஆனால் குடிநலனன்றி வேறு எந்த நோக்கத்துடனும் படைக்கலன் ஏந்தும் அரசன் இழிவை தன் மூதாதையருக்கு தேடிக் கொடுக்கிறான்.”

“ஏனெனில் அரசனாகிய நீ முறைப்படி தெய்வங்களை வணங்கி படைக்கலம் பயின்றவன். அக்கலையை உனக்களிக்கும் தெய்வங்கள் உனது நாட்டு மக்களின் காவலன் என்று மட்டுமே உன்னை காண்கின்றன. வேலியின் முள் பயிர்களின் ஏவலன் என்பதை மறவாதே.” துரியோதனன் பொறுமையிழந்து கையை வீசி “பிதாமகரே, என்றேனும் ஒரு நாள் உங்கள் முன் என் நெஞ்சை அரிந்து குருதியுடன் இறந்துவிழுவேன். நீங்களும் தந்தையும் அன்று அதை அள்ளி முகத்தில் பூசி கொண்டாடுங்கள்” என்றான்.

பீஷ்மர் ஏதோ சொல்ல வாயெடுக்க துரியோதனன் நெகிழ்ந்த குரலில் “பிதாமகரே, சங்கிலிகளால் தளைக்கப்பட்டு சிறையிடப்பட்ட யானை கைகளிலும் கால்களிலும் ஆறாப்புண்ணுடன் மட்டுமே வாழமுடியும் என்பதை நான் இறந்தபின் உணர்வீர்கள்” என்றபின் திரும்பிச் சென்றான்.

அவனுக்குப்பின்னால் வந்த கர்ணன் அவன் தோள்களில் கைவைத்து “அரசே, இத்தருணத்தில் நாம் செய்வதற்கொன்றுமில்லை. அவன் தன் இறப்பை தான் நாடிச்செல்கிறான். பலிபீடம் நோக்கி செல்லும் விலங்குகள் அங்கிருக்கும் தெய்வத்தின் விழி ஒளியால் விட்டில்கள் போல் ஈர்க்கப்படுகின்றன என்பார்கள். அவன் உடலைப் பாருங்கள்! அவன் நடையில் எழுந்திருக்கும் மிடுக்கே காட்டுகிறது, அவன் முற்றிலும் பிறிதொருவனாக ஆகிவிட்டான் என்று. அறியாதெய்வம் வெறியாட்டெழுந்த பூசகன்போல் தோன்றுகிறான்” என்றான்.

“இனி அவன் நம்மவன் அல்ல. அவன் தந்தைக்குரியவன் அல்ல. அவன் குடிகளுக்கு அவன் மேல் எந்த உரிமையும் இல்லை. அவன் செல்லும் வழி வேறொன்று. நம்மனைவரையும் கையிலிட்டு ஆட்டும் அறியாமெய்மையால் வழிநடத்தப்படுகிறான் அவன்” என்றான் கர்ணன். துரியோதனன் அவன் கையை விலக்கிவிட்டு கொந்தளிப்பான முகத்துடன் முன்னால் சென்றான். ஜயத்ரதனும் ருக்மியும் அவனருகே வந்து  நின்றனர். அவர்களுக்கப்பால் எவரையும் நோக்காதவனாக கையில் தன் படையாழியுடன் நிமிர்ந்த நெஞ்சுடன் எதிர்காற்றில் எழுந்து பறந்த குழல்களுடன் சிற்றலைகளாக நெளிந்த தாடியுடன் சிசுபாலன் வெளியே சென்றான்.