மாதம்: செப்ரெம்பர் 2015

நூல் எட்டு – காண்டீபம் – 16

பகுதி இரண்டு : அலையுலகு – 8

மூன்று நாகர் குல முதியவர்கள் நாகபட முனை கொண்ட நீண்ட குலக்கோல்களுடன் முன்னால் வந்து அர்ஜுனனை கைபற்றி எழுப்பினர். ஒருவர் திரும்பி இரு கைகளையும் விரித்து கூட்டத்தை நோக்க நாகர்களின் சீறல் மொழியில் வாழ்த்தொலிகள் எழுந்தன. பெருமுரசம் மலை பேசத்தொடங்கியது போல முழங்கியது. குறுமுழவுகள் துடித்து பொங்கி யானைக்கு சுற்றும் துள்ளும் மான்கள் என அதனுடன் இணைந்து கொண்டன.

அர்ஜுனனை கைபற்றி அழைத்துச் சென்று கௌரவ்யரின் முன்னால் நிறுத்தினர். கர்க்கர் “மண்டியிடுங்கள் இளவரசே!” என்றார். அர்ஜுனன் இருகால்களையும் மடித்து மண்ணில் அமர்ந்து தலையை கௌரவ்யரின் கால்களில் வைத்து வணங்கினான். அவர் அவன் முடியைத் தொட்டு தன் நெற்றியில் மும்முறை வைத்து வாழ்த்தினார். எழுந்தபோது அவர் முகத்தில் புன்னகை இல்லை என்பதை அர்ஜுனன் கண்டான்.

அர்ஜுனன் திரும்பி அங்கு கூடியிருந்த நாகர்குலத்து மூதன்னையரின் பெண்கள் பிறரை வணங்கி நின்றான். தரையில் விழுந்த ஏழு அன்னையரையும் நாகர்குலப் பெண்கள் கைகளைப் பற்றித் தூக்கி அமரச் செய்தனர். அவர்களின் நீண்ட சடைக்கற்றைகளை தொகுத்துக் கட்டி தோலாடைகளை அணிவித்தனர். மூங்கில் குவளைகளில் கொண்டுவரப்பட்ட சூடான நீருணவை அளித்தனர். அவர்களில் சிலர் முற்றிலும் களைத்து தங்களை எழுப்பியவர்களின் தோளிலேயே முகம் புதைத்து, சடைத்திரிகள் சரிய, கை தொங்க துயிலத் தொடங்கினர். கால்கள் மண்ணில் தொட்டு இழுபட அவர்களை தூக்கிச் சென்று அப்பால் படுக்க வைத்தனர்.

கைமுழவை ஒலித்தபடி நாகர்குலப்பாணன் ஒருவன் நடமிட்டு முன்னால் வந்தான். தொடர்ந்து ஏழு நாகரிளம்பெண்கள் உலூபியை நடுவே நடக்கவிட்டு இருபக்கமும் தாங்கள் தொடர்ந்து வந்தனர். தலையில் இளம்பாளையாலான நாகபட முடியும், கழுத்தில் நாகாபரணமும் அணிந்த உலூபி தலைகுனிந்து நடந்து வந்தாள். அவளை வாழ்த்தி அவர்கள் குரலெழுப்புவதை அர்ஜுனன் நோக்கினான். அனைத்து முகங்களிலும் உவகையே நிறைந்திருந்தது.

உலூபி இடையில் ஆடையில் எதுவும் அணிந்திருக்கவில்லை. ஆடகப்பசும்பொன் நிறம் கொண்ட வெற்றுடலில் மெல்லிய தசையசைவுகளுடன் வந்து அவனருகே நின்றாள். அவளுடைய இளமுலைகள் நடையில் ததும்புவதை நோக்கிவிட்டு அவன் விழிதிருப்பிக்கொண்டான். குட்டி குதிரையின் இறுகிய தொடைகள் போன்ற இடை அசைவில் மேலும் இறுக்கம் காட்டியது. அவளருகே வந்து நின்றபோது தன் வாழ்வின் முதல் பெண் என உள்ளம் கிளர்ச்சி கொள்வதை உணர்ந்தான்.

குறுமுழவுகளின் துடிப்புகளுக்கு மேலாக தன் நெஞ்சில் ஒலியை கேட்டான். நின்ற இடத்தில் கால் பதியாது விழப்போவது போல் தோன்றியது. நானா என்று அவனே புன்னகைத்துக்கொண்டான். சிறுவனாக ஆகிக்கொண்டிருக்கிறேனா? பெரிய மரத்தாலத்தில் புதிய தோலாடைகளுடன் மூன்று நாக கன்னியர் வந்தனர். முதுமகள் சொல்காட்ட உலூபி அதிலிருந்த புலித்தோலாடையை எடுத்து அவனுக்கு அளித்தாள். அவன் அதை அணிந்துகொள்ள நாகர் இளைஞர் உதவினர். அவன் அதிலிருந்த மான் தோலாடையை எடுத்து அவளுக்கு அளித்தான்.

பிறிதொரு தாலத்தில் கோதையும் தாருமாகத் தொடுத்த மலர்கள் வந்தன. உலூபி தாரை எடுத்து அவனுக்கு அணிவிக்க அவன் கோதையை அவளுக்கு அணிவித்தான். குலமுதியவர் மூவர் சொல்காட்ட கௌரவ்யர் அவள் கையைப் பற்றி அவன் கையில் அளித்தார். அவன் கைபற்றிக் கொண்டதும் சீறல் ஒலியில் எழுந்த நாகர் வாழ்த்துகளால் அப்பகுதி நிறைந்தது. இருவரும் பணிந்து கௌரவ்யரின் வாழ்த்துகளை பெற்றனர். அவர் எழுந்து தன்னருகிருந்த நாகப்பெண்ணின் தாலத்திலிருந்து மலர்களை எடுத்து இருவர் தலையிலும் இட்டு வாழ்த்தினார்.

மூங்கில் குவளை ஒன்றில் குடிப்பதற்காக இளவெந்நீர் வந்தது. முதுமகள் உலூபியிடம் அதை நீட்டினாள். அவள் அதை வாங்கி மூன்று மிடறுகள் அருந்தியபின் அர்ஜுனனிடம் அளித்தாள். அதன் மணம் குடிப்பதற்குரியதென காட்டவில்லை. அர்ஜுனன் தயங்க கர்க்கர் “அருந்துங்கள் இளவரசே” என்றார். அவன் மீண்டும் முகர்ந்துவிட்டு ஒரே மூச்சில் அதை குடித்து முடித்தான். வாயிலிருந்து எழுந்த வெந்நீராவியில் குருதிமணம் இருந்தது. நாள்பட்டு சீழான குருதி.

கர்க்கர் “பதப்படுத்தப்பட்ட நாக நஞ்சு அது” என்றார். பின்பு புன்னகையுடன் “நஞ்சென உங்கள் குடல் அறிந்தது. ஆயினும் ஒரு கணமேனும் அச்சம் கொள்ளாமலிருந்தீர்” என்றார். அர்ஜுனன் மீசையை நீவியபடி “அச்சம் எதற்கு? நான் களத்தில் பலநூறு பேரை இதற்குள் கொன்றிருப்பேன். எனவே எக்கணமும் கொல்லப்படுவதற்கு சித்தமாக இருக்கவேண்டும் என்பதே முறை” என்றான். “என்னைக் கொல்லும் வாளுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என் கொலைகளை அது நிகர்செய்கிறது”

நாகர் குலத்தின் முதியவர்களும் பெண்களும் அவர்களை சூழ்ந்துகொண்டனர். “தாங்கள் விழைந்தால் எங்களுடன் இங்கு வாழலாம்” என்றார் கர்க்கர். “நான் எங்கும் நிலைத்து வாழ விழையவில்லை” என்றான் அர்ஜுனன். “தங்கள் நகருக்கு இவளை அழைத்துச் செல்ல இயலாது, இல்லையா பாண்டவரே?” என்று முதுநாகர் ஒருவர் சொன்னார். “நாங்கள் மானுடர் அல்ல. மானுட இல்லங்களிலும் தெருக்களிலும் எங்களால வாழ முடிவதில்லை. அவை நேரானவை. எங்கள் உடல்களோ நீரலைகள் போல் நெளிவுகொண்டவை.”

அர்ஜுனன் “ஆம், அதை அறிவேன்” என்றான். கௌரவ்யர் அவ்வுரையாடலை விரும்பாதவராக தனக்குப் பின்னால் நின்ற பெண்டிரை நோக்கி “மணநிகழ்வு முடிந்துள்ளது. பலிகொடை நிகழலாமே” என்றார். அவர்கள் தலைவணங்கி விலகினர். கர்க்கரிடம் “பலிகொடைகள் முடிந்தபின்னர்தான் ஊண்களி. இளையோர் எத்தனைநேரம்தான் காத்திருப்பார்கள்?” என்றபின் அர்ஜுனனை நோக்கி விழி மலராது உதடுகள் விரிய புன்னகைசெய்தார்.

ஏழு குகைவாயில்கள் எழுந்த மலைச்சரிவுக்கு முன்னால் பெரிய அரைவட்டமென நாகர்கள் இடம்விட்டு விலகி நின்றார்கள். அங்கு உயிர்ப்பலி நிகழப்போகிறது என்று அர்ஜுனன் எண்ணினான். ஆனால் பலிபீடம் எதுவும் அங்கிருக்கவில்லை. அடிமரம் தறித்த பலிபீடங்களைக் கொண்டுவந்து வைப்பார்கள் என்று எண்ணியிருக்க, இளையநாகர்கள் காட்டில் கண்ணியிட்டுப் பிடித்த ஆடுகளுடனும் மான்களுடனும் வரத்தொடங்கினர். இழுத்துவரப்பட்ட ஆடுகள் கால்களை ஊன்றி நின்று கழுத்தை பிதுங்க நீட்டி கமறலோசை இட்டன. மான்கள் விழியுருள திகைத்து நின்று கழுத்துச் சரடு இழுபடும்போது துள்ளி முன்னால் பாய்ந்து வட்டமடித்து மீண்டும் காலூன்றின. கால்களைப் பரப்பி நின்று உடல் சிலிர்த்து தும்மல் ஒலி எழுப்பின.

காதுகளைக் கோட்டி அங்கிருந்த கூட்டத்தையும் ஒலியையும் பார்த்த மானொன்று பாளை கிழிபடும் ஒலியில் கனைத்து துள்ளி தன்னைக் கட்டியிருந்த கொடிச்சரடை இழுத்தபடி காற்றில் எம்பிப் பாய்ந்து அவ்விசையில் நிலையழிந்து தலைகீழாகி உடல் அறைபட நிலத்தில் விழுந்தது. ஆடுகள் தங்கள் கழுத்துகள் சரடால் கட்டப்பட்டிருப்பதை புரிந்துகொண்டன. மான்கள் சரடு என்பதையே அறியாதவை என துள்ளிச் சுழன்றன.

அரைவட்ட வெளியில் ஏழு தறிகள் அறையப்பட்டு அவற்றில் ஆடுகள் கட்டப்பட்டன. அவை இழுத்து திரும்பி தாங்கள் வந்த வழியை நோக்கி குரலெழுப்பிக் கொண்டிருந்தன. கொண்டு சென்று கட்டப்பட்ட மான்கள் கால்பரப்பி நின்று கல்விழுந்த நீர்ப்படலம் என உடல் அதிர்ந்தன. அவற்றின் உடலில் முரசுமுழக்கத்தின் ஒவ்வொரு அதிர்வையும் காணமுடிந்தது. சட்டென்று அம்பு என மண்ணில் இருந்து தாவி எழுந்து கயிறு இழுக்க சுழன்று நிலம் அறைந்து விழுந்து குளம்புகளை உதைத்து திரும்பி எழுந்தது ஒரு மான். குறிய வாலை விடைத்தபடி சிறுநீர் கழித்தது.

அர்ஜுனன் அங்கு என்ன நிகழப் போகிறது என நோக்கிக் கொண்டிருந்தான். கூடி இருந்தவர்களின் முகங்களில் மெல்ல குடியேறிய அச்சத்தை கண்டான். கௌரவ்யர் கைகாட்ட முழவுகள் ஓய்ந்தன. பெருமுரசின் தோல் விம்மி மீட்டி மெல்ல ஒலியின்மையில் அமிழ்ந்தது. இரு வெள்ளாடுகள் குறுகிய வால்களை விரைந்து அசைத்தபடி சிறுநீர் கழித்தன. அதை நோக்கிய பிற ஆடுகளும் சிறுநீர் கழித்து புழுக்கை இட்டன. சில ஆடுகள் மூக்கை சுளித்து அந்த மணத்தை கூர்ந்தன. ஆடுகள் அச்சம் கொள்ளவில்லை, மான்கள் நுணுக்கமாக எதையோ உணர்ந்துகொண்டு கடுங்குளிரில் நிற்பவை போல சிலிர்த்து அசையாது நின்றன.

மான்களின் தலையில் இருந்த மாறுபாட்டை அப்போதுதான் அவன் நோக்கினான். அவற்றின் கொம்புகள் ஒட்ட வெட்டப்பட்டிருந்தன. ஆடுகளின் கொம்புகளும் சீவப்பட்டிருந்தன. பலிநிகழ்வு தொடங்குவதற்காக அவர்கள் காத்திருந்தார்கள் என்றும் தோன்றியது. பூசாரிக்காகவா, அல்லது நற்பொழுதுக்காகவா? அவன் மீண்டும் அந்த முகங்களை நோக்கினான். அவர்கள் அனைவரும் அங்கு நிகழப்போவதை அறிந்திருந்தனர்.

கைகளைக் கூப்பியபடி குகை வாயில்களை நோக்கி கௌவரவ்யர் நின்றிருந்தார். கர்க்கர் மறு எல்லையில் நின்ற எவருக்கோ கையசைத்து ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தார். கூடி நின்ற அனைவரும் எதிர்பார்ப்பின் திசையில் உடல் இறுகி காலம் செல்லச் செல்ல மெல்ல கைகள் தளர்ந்த இடைவளைத்து நின்றனர். அப்பால் நாணல் வெளியில் காற்று கடந்து செல்லும் நீரோசை கேட்டது. தொலைவில் காட்டுக்குள் கருமந்திகள் ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன.

மெல்லிய மின்னல் துடித்தணைய அத்தனை முகங்களும் ஒளிகொண்டன. கீழ்ச்சரிவில் எரிந்தணைந்த மரங்களுக்குப் பின்னால் இடியோசை அதிர்ந்தது. யாருக்காக காத்திருக்கிறார்கள்? அந்த மலைக்குவைகளுக்குள் இருந்து எவரோ வரப்போகிறார்கள் என்று அத்தனை நோக்குகளும் காட்டின. மலைக்குகைகளில் வாழும் முனிவர்களா?

பெரும் துருத்தி ஒன்றின் ஒலிபோல சீறல் ஓசை கேட்டு ஒட்டுமொத்த அச்ச ஒலியுடன் அனைவரும் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டனர். ஒற்றை உடற்சரடென ஆகி விழிகள் தெறித்துவிடுவதைப் போல குகைவாயிலை நோக்கினர். முதற்குகைக்குள் இரு மணிவிழிகளை அர்ஜுனன் கண்டான். நடுவே ஒரு முகம் உருவாகிவந்தது. வெண்பற்கள் வளைந்த வாயென ஆகியது. பழுத்த கலத்தில் நீர் சொரிந்தது போல் மூச்சொலி எழுந்தது.

அங்கு பேருருவ முதலை ஒன்று இருப்பதாக தோன்றியது. மெல்ல அம்முகம் குகையிலிருந்து நீண்டு வெளிவந்தபோது அது உடும்பு என்று தோன்றியது. அதன் நாக்கு இரட்டைச் சாட்டை என விசிறப்பட்டு காற்றில் துடிதுடித்து பின்னிழுக்கப்பட்டது. அத்தனை பெரிய உடும்பா என்று அவன் எண்ணியது முடிவடைவதற்குள்ளே அந்த முகம் கொண்டுவந்த உடல் வளைந்து தெரிந்தது. வெண்கலநாணயங்களை அடுக்கியதுபோல செதில்கள் பரவிய பாம்புடல்.

பொதியிழுபடும் ஒலியுடன் வாய் திறந்து நீரோடை என வளைந்து வந்த மாநாகம் அங்கே கட்டப்பட்டிருந்த முதல் ஆட்டை பாய்ந்து கவ்வியது. இழுத்து சரடை அறுத்து வாய்க்குள் தூக்கி இருமுறை உதறி தலைகீழாக்கி விழுங்கியது. கைக்குழந்தை போன்ற அலறல் ஒலியுடன் ஆட்டின் தலை பாம்பின் வாய்க்குள் நுழைய அதன் இரு பின்னங்கால்களும் உதைத்தபடி அதிர்ந்தன. சேற்றுக்குழியில் மூழ்கி மறைவது போல ஆடு அதன் வாய்க்குள் புகுந்தது.

வெறித்த நாகவிழிகள் அச்சுவை இன்பத்தில் மதம்கொண்டதுபோல் தோன்றின. பாம்பின் வாய்மூட நாவு வெளிவந்து அலையடித்து மீண்டது. அதன் உடல்நெளிவுக்குள் மெல்ல புடைத்து இறுகி அசைந்தபடி ஆடு உள்ளே செல்வதை காணமுடிந்தது. சினம் கொண்ட மல்லனின் புயம் என இறுகி வளைந்து அந்தப் பாம்பு திரும்புவதற்குள் இன்னொரு குகையிலிருந்து அதைவிடப் பெரிய நாகம் ஒன்று தலைநீட்டி சீறி பின்பு வளைந்தோடி வந்தது.

ஏழு குகைகளில் இருந்தும் மாநாகங்கள் எழுந்தன. மானுட உடலளவுக்கே பெரியவை. அடிமரங்களைப்போல, காளான் படர்ந்த கரும்பாறைகள் போல, பாசிவழுக்கும் அடிப்படகுகள் போல பேருடல்கள். மேலிருந்த குகைகளில் இருந்து கரிய அருவி போல வழிந்து ஓசையுடன் தரையை அறைந்து விழுந்து வாய் திறந்து வளைந்த பின்பற்களைக் காட்டி சீறியது ஒன்று. அது பாறையைக் கடக்கும் ஓடையின் சிற்றலை என எழுந்து மானை கவ்விக்கொண்டது. அதன் மேலேயே அடுத்த நாகம் வந்து விழ இரு பேருடல்களும் ஒன்றை ஒன்று பின்னி முறுக்கி மரத்தடிகள் உரசிக்கொள்ளும் ஒலியுடன் திளைத்தன.

நாக உடல்கள் சேற்றுச்சுழி என அசைந்தன. உருவி மேலே வந்து இன்னொரு ஆட்டை கவ்விக்கொண்டது கரிய மாநாகம். குகைக்குள்ளிருந்து மேலும் மேலும் என நாகங்கள் வந்துகொண்டிருந்தன. இருபக்கமும் நிரைவகுத்த நாகர் குலத்து இளைஞர்கள் மான்களையும் ஆடுகளையும் இழுத்துக்கொண்டு வந்தனர். அவற்றின் கால்களைப் பற்றித் தூக்கி நெளியும் நாகங்களின் உடல்களின் பரப்பை நோக்கி வீசினர். அவை நிலம் தொடுவதற்குள்ளே பொங்கிய தலைகளின் வாய்களால் கவ்வப்பட்டு மறைந்தன. கருந்தழல்களின் நெளிவை நோக்கி வீசப்படும் அவிப்பொருட்கள்.

ஏரி மதகு என திறந்த ஏழு குகைகளில் இருந்தும் மேலும் மேலும் கரிய நாகங்கள் பீரிட்டு வந்துகொண்டிருந்தன. உயிர்கொண்ட ஆலமரத்து வேர்களென, மலைவேழத்து துதிக்கைகள் என, உருகி வழியும் கரும்பாறைகளென. விழித்த நோக்கும் திறந்த செவ்வாய்களுமாக அவை இரைகளை நோக்கி வந்தன. மான்களும் ஆடுகளும் அவற்றுக்கு முன் செயலற்று அசையாது காலூன்றி நின்றன. அவற்றின் தோல் முடிப் பரப்புகள் மட்டும் விதிர்த்துக்கொண்டிருந்தன. பெரிய ஆட்டுக்கிடா ஒன்றை கவ்விய மாநாகம் ஒன்று அதைத் தூக்கி வானில் வீசி கவ்விப் பிடித்து ஒருமுறை உதறி விழுங்கியது.

நோக்கி நிற்கையில் மான்களும் ஆடுகளும் அஞ்சி வளைக்குள் ஓடி மறையும் எலிகள் போல அவ்வாய்களுக்குள் செல்வதாகத் தோன்றியது. இரு நிரைகளாக கொண்டுவரப்பட்ட ஆடுகளும் மான்களும் வரும் விரைவு குறைந்தபடி வந்தது. மறுபக்கம் குகைகளுக்குள்ளிருந்து அரவங்கள் எழுந்து வரும் விரைவு மேலும் கூடியது. ஒன்றன் மேல் ஒன்றென விழுந்து உடல்நெளித்து சீறி எழுந்து தலைதூக்கிய நாகங்கள் நூறு தலைகள் எழுந்த கால்களற்ற பாதாள விலங்கு என தோன்றின.

சினம் கொண்டு தலைசொடுக்கி நிலத்தை அறைந்து புரண்டது ஒரு நாகம். தன் மேலேறிய ஒரு நாகத்தை நோக்கி அது சீறித் திரும்பியபோது இரு நாகங்களும் ஒன்றை ஒன்று நோக்கி சீறி நாபறக்க மெல்ல அசைந்தாடின. பின்பு மத்தகம் முட்டும் களிறுகளின் சமர்முதல்கணம் போல ஓசையுடன் அவை ஒன்றை ஒன்று அறைந்து பின்னி முறுக்கி எழுந்து விழுந்தன. மேலிருந்து விழுந்த நாகங்கள் கீழே இருந்த நாகக் குவியலில் விழுந்து வளைந்து தலை தூக்கி ஆடின.

கௌரவ்யர் பதறும் கைகளுடன் “எங்கே?” என்று கேட்க, கர்க்கர் ஓடி முன்னால் சென்று எம்பிக் குதித்து கைவீசி “என்ன செய்கிறீர்கள்? கொண்டு வாருங்கள்” என்றார். மறு எல்லையில் இருந்து எவரோ “இனி இல்லை” என கூவினார்கள். கர்க்கர் “இனி கொடைவிலங்குகள் இல்லை அரசே” என்றார். கௌரவ்யர் தன் தலைமுடியை கைளால் பற்றியபடி “என்ன சொல்கிறீர்கள்?” என்றார். “இனி விலங்குகள் இல்லை” என்றார் கர்க்கர். “எஞ்சிய அனைத்தையும் கொண்டு வாருங்கள்” என்றார் கௌரவ்யர். மூன்று ஆடுகள் மட்டும் எஞ்சியிருக்கின்றன” என்று ஒருவன் கூவினான்.

இளையோர் மூன்று சிறிய ஆடுகளை கால்களைக் கட்டித் தூக்கிக் கொண்டு ஓடி வந்தனர். அதற்குள் கரிய நாகம் ஒன்று அங்கே நின்றவர்களை நோக்கி தன் நீர்த்துளிக்கண்களை விழித்து நாக்குசீறி வளைந்து நீண்டு வரத்தொடங்கியது. ஆவல் கொண்ட கை என அது அணுக அலறியபடி நாகர்கள் பின்னால் ஓடினர். ஆடுகளை நாகக்குவியலை நோக்கி வீசியபோது ஒரேசமயம் பல தலைகள் எழுந்து ஒன்றுடன் ஒன்று முட்டி விழுந்தன. ஆடுகளின் தலையையும் உடலையும் வெவ்வேறு நாகங்கள் கவ்வ அவை இரண்டாகக் கிழிந்து குருதியுடன் குடல் தெறிக்க குளம்புகள் அப்போதும் துடிதுடித்துக்கொண்டிருக்க வாய்களுக்குள் மறைந்தன.

தன்மேல் குவிந்த பெருநாகங்களை விலக்கி எழுந்த மாபெரும் நாகம் ஒன்று கடலலையென பத்தி விரித்தபடி சீறி அருகணைந்தது. நாகர்குல முதியவர் தங்கள் மொழியில் உரக்கக்கூவியபடி கைகளை விரித்து மறுபக்கம் ஓடினார். கௌரவ்யர் அவர்களை நோக்கி அச்சமும் சினமும் கொண்டு ஏதோ கூவி தன் கோலை அடிப்பதற்காக ஓங்கினார். அத்தனைபேரும் அஞ்சி கூச்சலிடத் தொடங்கினர். முதியவர் ஏதோ சொல்ல பெண்கள் அலறியபடி வேண்டாம் என்று கைநீட்டி கதறினர். குழந்தைகள் அவர்களைப்பற்றியபடி கதறியழுதன.

கைகளில் சிறிய கத்திகளுடன் ஏழு இளநாகர்கள் ஓடி முன்னால் வந்தனர். முதலில் வந்தவன் அவ்விரைவிலேயே சென்று நாகங்களுக்கு முன் முழந்தாளிட்டு அமர்ந்து தன் கையில் இருந்த கத்தியால் கழுத்துக் குழாயைக் கிழித்தான். மூச்சு குருதித்துளியுடன் சீறித் தெறிக்க கைகள் விடைத்து நீண்டு அதிர குப்புற மண்ணில் விழுந்தான். அவனுக்குப் பின்னால் வந்த நாகனும் தன் கழுத்தை அறுத்து அவனருகே விழுந்தான். நிரைநிரையாக எழுவரும் தங்களை கழுத்தறுத்துக்கொண்டு நாகங்களுக்கு முன் விழுந்தனர்.

நாகங்களின் நெளிவுகள் அசைவமைந்தன. பெருநாகம் எழுந்து வந்து அவர்களில் ஒருவனை கவ்வித் தூக்கி விழுங்கியது. அப்போதும் துடித்துக்கொண்டிருந்த கால்கள் நீண்டு முழங்கால்தசை இழுபட்டு கட்டைவிரல் காற்றில் சுழித்தது. எழுவரையும் ஏழு நாகங்கள் விழுங்கின. ஒரு நாகம் முன்னால் வந்து பத்தி எழுப்பி அசையாது நின்றது. அதன் பத்தியின் வளைவில் கூழாங்கற்கள் அடுக்கப்பட்டது போலிருந்த பரப்பில் பந்தங்களின் ஒளி தெரிந்தது. குனிந்து மூன்றுமுறை தரையை முத்தமிட்ட பின் அது திரும்பி குகை நோக்கிச் சென்றது.

ஒவ்வொரு நாகமாக எழுந்து நெளிந்து குகைக்குள் மறைந்தது. குகை வாயில்கள் பிறிதொரு பெருநாகத்தின் வாயிலென தெரிந்தன. இறுதியாக தரையில் கிடந்த நாகம் தலைதூக்கி பந்த ஒளி தெரிந்த விழிகளுடன் வாய்திறந்து நாக்கை பறக்கவிட்டது. உள்ளிருந்து ஒரு சரடால் கட்டி இழுக்கப்பட்டது போல மெல்ல திரும்பிச் சென்றது. அங்கு வந்ததிலேயே பெரிய நாகம் அதுதான் என அர்ஜுனன் எண்ணினான். சீரான காலடிகளுடன் கவசங்கள் மின்ன ஒரு காலாட்படை வளைந்து திரும்பிச் செல்வதுபோல் தோன்றியது.

அது குகைக்குள் ஏறி நுழைந்து மறைந்த அக்கணமே அங்கு நிகழ்ந்தவை நம்பமுடியாத சூதர்கதையாக மாறின. விழிமயக்காக கண்களுக்குள் எஞ்சின. இல்லை என்பதைப்போல் அதன் வால்நெளிவு இறுதியாக துடிதுடித்து உள்ளே சென்றது. வாயென மாறிய குகைகளின் நாக்கு போல அது தெரிந்து நிழலோ என ஆகி இல்லை என்று மறைந்தது. குகைகள் இருண்ட சுழிகளாக மாறி அமைதிகொண்டன.

கூடிநின்ற நாகர்கள் ஒவ்வொருவராக உடல் தளர்ந்தனர். பெருமூச்சுகள் ஒலித்தன. கௌரவ்யர் சினம்கொண்டவர்போல தலையசைத்து கர்க்கரிடம் ஏதோ சொல்லிவிட்டு திரும்பிச் சென்றார். கர்க்கர் அர்ஜுனனை நோக்கி “இம்முறை நாகங்கள் பெரும் சினம் கொண்டிருந்தன இளைய பாண்டவரே” என்றார். அர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. “பலிபூஜைக்கு இங்கு வரும்போதெல்லாம் எம் குலத்திலிருந்து ஒரு பலி வாங்காமல் அவை திரும்பியதில்லை. ஆனால் எழுவரை பலிகொள்வது இதுவே முதல்முறை” என்றார் கர்க்கர்.

கர்க்கர் அர்ஜுனனிடம் “மணநிறைவுக்குப்பின் புலரி எழுவதுவரை உண்டாட்டு எங்கள் மரபு. உணவும் நாகமதுவும் நீட்டும் கைகள் சோர்வது வரை முடிவின்றி கிடைக்க வேண்டும் என்பது முறைமை. தங்கள் உணவு இங்கில்லை. தாங்கள் தங்கள் துணைவியுடன் மந்தணம்கொள்ளச் செல்லலாம். அங்கே அவளுடன் உணவருந்தலாம்” என்றார். அர்ஜுனன் தலையசைத்தான்.

நாகர்குலப் பெண்கள் எழுவரும் குலமூத்தவர் எழுவருமாக வந்து கௌரவ்யரை வணங்கி அழைத்துச்சென்று உண்டாட்டிற்காக முதல் உணவுக் குவை அருகே அமர்த்தினர். அதற்குப்பின் அக்குலத்து மூத்தவர்களும் அவர்களைத் தொடர்ந்து அமர்ந்தனர். முதுபெண்டிரும் பெண்களும் குழந்தைகளும் இறுதியாக இளையோரும் உணவுக்கு முன் அமர்ந்தனர். அதுவரை இருந்த அச்சநிலையில் இருந்து உணவு அவர்களை விடுவித்தது. மெல்ல பேசிக்கொள்ளத்தொடங்கி பின்னர் உவகைக்கூச்சல்கள் எழுப்பி அவ்விடத்தை நிறைத்தனர்.

மூன்று நாகினியர் அர்ஜுனனை அணுகி தலைவணங்கினர். ஒருத்தியின் கையில் மரத்தாலத்தில் ஏழு அகல்சுடர்கள் எரிந்தன. அதிலிருந்த மலர்களை எடுத்து அவன் தலை மேல் இட்டு “இன்பம் விடியும்வரை தொடர்க!” என்று வாழ்த்தினாள். இரு நாகினியர் உலூபியின் கைகளை பற்றிக்கொண்டு “செல்வோம்” என்றனர். உண்டாட்டிற்கு அமர்ந்திருந்த நாகர்குலத்தவரின் நடுவே நிரைவகுத்த பந்தங்களின் ஒளியில் அவர்கள் நடந்துசென்றனர். இருபக்கமும் உணவுக்கு முன் அமர்ந்திருந்த நாகர்கள் கை தூக்கி அவர்களை வாழ்த்தினர்.

எரிகுளத்து விளக்கை மும்முறை சுற்றி வந்து வணங்கியபின் அங்கிருந்து விலகி நாணல் பூக்கள் இருளுக்குள் நுரை என அலையடித்த புல்வெளியில் நுழைந்தனர். சுடர் ஏந்திய பெண் முன்னால் நடக்க வழியில் அவர்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. இருளுக்குள் மரங்களில் சேக்கேறியிருந்த பறவைகள் சுடர் கண்டதும் எழுந்து ஓசையிட்டன. கருமந்திக் குலம் ஒன்று உறுமல் ஒலியுடன் துயில் கலைந்து கிளைகள் வழியாக தாவிச் சென்றது.

ஒரு பெரிய மின்னலில் அர்ஜுனன் அந்த நாணல்வெளியை நோக்கினான். அதன் இடைவெளிகளிலெல்லாம் பல்லாயிரம் நாகங்கள் நெளிவதைக் கண்ட இருண்ட விழிக்குள் இருளே நெளிவுகளென நிறைந்திருந்தது. இடியோசை நாகப்பெருக்கென நெளிந்தது. விண் என விரிந்த காலம் நெளிந்தது. அவர்கள் மேல் குளிர்க்கற்றைகள் என மழை கொட்டத்தொடங்கியது.

நூல் எட்டு – காண்டீபம் – 15

பகுதி இரண்டு : அலையுலகு – 7

நாகர் குலத்து முதுமகள்கள் இருவர் கொண்டு வந்து வாழை இலைவிரித்து பரிமாறிய ஏழுவகை கிழங்குகளையும் முயல் ஊனையும் மூன்று வகைக் கனிகளையும் தேன் கலந்த நன்னீரையும் அருந்தி அர்ஜுனன் எழுந்தான். நிழல் மரங்களின் நடுவே இழுத்துக் கட்டப்பட்ட காட்டெருதுத்தோல் தூளியில் அவனுக்கு படுக்கை ஒருக்கப்பட்டிருந்தது. அருகே புல் கனலும் புகை எழுந்து பூச்சிகளை அகற்றியது. அவன் படுத்துக் கொண்டபோது நாகர் குலக்குழந்தைகள் அவனைச்சூழ்ந்து நின்று விழி விரித்து நோக்கின.

ஒரு சிறு மகவை நோக்கி அவன் புன்னகை புரிந்தான். அது கை நீட்டி சிவந்த வாயில் நீர்வழிய தொடைகளை ஆட்டியபடி அக்கையின் இடையிலிருந்து எம்பியது. ‘அருகே வா’ என்றான் அர்ஜுனன். அவள் அக்குழந்தையை அருகே கொண்டு வர அப்பால் இரண்டு முதியவர்களில் ஒருவர் ’இளவரசே குழந்தைகளை தொட வேண்டியதில்லை’ என்றார். அர்ஜுனன் அவரை திரும்பி நோக்கினான். ’அவர்களின் வாய்நீரும் நகங்களும் உங்களுக்கு நஞ்சு’ என்றார். அர்ஜுனன் திரும்பி அக்குழந்தைகளின் விழிகளை நோக்கினான். அழகிய வெண்ணிறக்கற்கள் போல அவை தெரிந்தன. நடுவே நீல மையவிழிகள் அசைவின்றி நின்றன. இமையா விழிகள் உயிரற்ற பொருளென மாறிவிட்டிருந்தன.

ஒவ்வொரு விழியாக நோக்குகையில் அவை கொள்ளும் கூர்மை அவனை அச்சுறச்செய்தது. நீள்மூச்சுடன் விழிகளை மூடிக் கொண்டான். கால்களை நீட்டியபடி நெடுந்தொலைவு வந்துவிட்டேன் என்று எண்ணினான். அவ்வெண்ணம் அளித்த ஆறுதலை அவனே வியந்து சற்று புரண்டு படுத்தான். அந்த மரங்களின் வேர்கள் இறங்கிப்போய் ஒன்றுடன் ஒன்று பிணைந்து பெரும் படலமாக ஆன ஆழத்தை நினைத்தான். அவன் விழிகளுக்குள் வேர்களும் பாம்புகளும் என பெரும் நெளிவு வெளி ஒன்று எழுந்தது. ஒவ்வொரு நெளிவையாக தொட்டுச் சென்று எப்போதோ துயிலில் ஆழ்ந்தான்.

முழவொலி கொட்ட விழித்துக் கொண்டபோது எங்கிருக்கிறோம் என்ற உணர்வு சில கணங்களுக்குப் பின்புதான் அவன் மேல் ஏறிக் கொண்டது. எழுந்து நின்று இடைக்கச்சையை சீர் செய்து சுற்றும் நோக்கினான். அவிழ்ந்த தோல்நாடாவை எடுத்து கூந்தலை பின்னுக்குத்தள்ளி முடிந்து கொண்டான். காடு நன்கு இருட்டிவிட்டிருந்தது. நாகர்களின் புற்றில்லங்களுக்குள் இருந்து மென்மையான பொன்னிற ஒளி அவற்றின் சிறுவட்ட வாயில் வழியாக தெரிந்தது. இருளில் அது பூம்பொடித் தீற்றல்கள் போல் எழுந்திருந்தது. அங்கு பெண்டிரும் குழந்தைகளும் முதியவர்களும் விரைவு கொண்ட உடல்களுடன் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

கர்க்கர் அவன் அருகே வந்து ”இளவரசே தாங்கள் சித்தமாகலாம்” என்றார். அர்ஜுனன் அங்கு நிகழ்ந்தவற்றை விழிகளால் நோக்கி ”அனைவரும் எங்கு செல்கிறார்கள்?” என்றான். ”மூதன்னையரின் ஆலயத்திற்கு. இன்று அங்கு சொல்லீடு கேட்கும் பூசனை நிகழ்கிறது அல்லவா?”என்றார் கர்க்கர். ”எங்குளது அவ்வாலயம்?” என்றான் அர்ஜுனன். ”மும்முக மலையின் அடியில். அங்குதான் எங்கள் மூதன்னையர் வாழும் ஆழுலகுக்கு செல்லும் ஏழு குகை வாயில்கள் உள்ளன” என்றார் கர்க்கர்.

வானம் இரும்புப் பீப்பாயை அசைத்து வைத்தது போல் ஆழ்ந்த உறுமலை எழுப்பியது.சூழ்ந்திருந்த இலைத்தகடுகள் மிளிர்ந்து அணைந்தன. ”இன்றும் மழை வரும் போலும்” என்றான். “இங்கு அனைத்து இரவுகளிலும் மழை உண்டு” என்று கர்க்கர் சொன்னார். குழந்தைகளை இடையில் தூக்கியபடி பெண்கள் காட்டுக்குள் சென்ற பாதையில் நடந்தனர். மெல்லிய மூச்சுசீறும் குரலில் உரையாடிக் கொண்டனர். கைகளில் சிறிய மூட்டைகளுடன் முதியவர்களும் அவர்களுடன் தொடர்ந்து செல்ல அந்த நிரை நிழலுருவாக காடெனும் நிழல்குவைக்குள் மறைந்தது.

”நான் நீராட விழைகிறேன்” என்றான் அர்ஜுனன். ”இங்குள்ள ஓடையில் இரவில் எவரும் நீராடுவதில்லை ”என்று கர்க்கர் சொன்னார். ”நீர் மிகவும் குளிர்ந்திருக்கும். தாங்கள் காலையில் நீராடி இருப்பீர்களல்லவா?” அர்ஜுனன் “மூதன்னையரை நீராடாது சென்று காண்பது என் குடி நெறிகளுக்கு உகந்ததல்ல” என்றான். ”அவ்வண்ணமே ”என்று தலைவணங்கினார் கர்க்கர். புற்றுகளுக்குள் இருந்து எழுந்த பொன்னொளி அன்றி அப்பகுதியில் விளக்கென ஏதும் இருக்கவில்லை. விலகிச் செல்லும் தோறும் புற்றுகள் பொன்விழிகளைத் திறந்தது போல அத்துளைகள் தெரிந்தன. அவற்றிலிருந்து கண் விலக்கி காட்டை நோக்கியபோது பரு என ஏதுமெஞ்சாத மைக்குழம்பென இருள் தெரிந்தது.

பாதையை கூர்ந்து நடந்தான். ”இங்கு பாம்புகள் கடிப்பதில்லை. ஆனால் நீங்கள் மிதிப்பது அவற்றின் பத்தியை என்றால் தீண்டாமல் விலகிச்செல்ல அவற்றுக்கு நெறியில்லை” என்றார் கர்க்கர். அர்ஜுனன் தன் இரு கால்களிலுமே கண்களை ஊன்றி அடி மேல் அடி என நடந்தான். மரங்கள் சூழ்ந்த இருளுக்குள் பாறைகள் மேல் அலைசரியும் ஒலியுடன் சிற்றாறு சென்று கொண்டிருந்தது. அதன் நுரைத்தீற்றல்களை இருளுக்குள் தனிச்சிரிப்புகள் என காண முடிந்தது.” இங்கு நீங்கள் நீராடலாம்” என்றார் கர்க்கர்.

அர்ஜுனன் தன் தோலாடைகளை கழற்றி வெற்றுடலுடன் நடந்து நீர் விளிம்பை அடைந்தான். நூற்றுக் கணக்கான பாம்புகள் ஒன்றுடன் ஒன்று உடல் பின்னி செறிந்து நதியின் அலை விளிம்புக்கு கரை அமைத்திருந்ததை கண்டான். காற்றிலாடும் திரைச் சீலையின் கீழ்நுனித் தொங்கல்கள் என நெளிந்து கொண்டிருந்தன அவை. ஒரு கணம் தயங்கியபின் தாவி நீருக்குள் நின்ற பாறை ஒன்றின் மேல் ஏறிக் கொண்டான். பின்பு கால்களை நீட்டி நீரைத்தொட்டான். பனி உருகியதென உடலை நடுங்க வைத்தது நீர். ஒரு கணத் தயக்கத்திற்குப் பின் அதில் கை நீட்டி தாவி மூழ்கினான். ஒரு முறை மூழ்கி எழுந்து தலை மயிரைச் சிலுப்பி முடிந்து மீண்டும் மூழ்கியபோதுதான் நீருக்குள் மீன்களுக்கு நிகராக பாம்புடல்களும் நெளிவதைக் கண்டான். அவன் உடல் மேல் வழுக்கிச் சென்றன நெளிவுகள்.

எழுந்து பாறையில் தொற்றி ஏறி கையில் அள்ளி வந்த மணலால் உடலைத் தேய்த்து மீண்டும் நீரில் இறங்கி துழாவி ஆடினான். பாறையிலிருந்து கரை நோக்கி தாவி வந்து தனது ஆடைகளை ஈர உடல் மேல் அணிந்து கொண்டிருந்தபோது கர்க்கர் புன்னகைத்து ”தாங்கள் அரண்மனையில் வாழ்ந்தவரென்று தோன்றவில்லை இளவரசே” என்றார். ”அரண்மனையிலும் வாழ்ந்திருக்கிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். கர்க்கர் ”நான் காம்பில்யத்தின் அரண்மனையை கண்டிருக்கிறேன். அதற்குள் எப்படி மானுடர் வாழ முடியும் என்று எனக்கு புரிந்ததேயில்லை” என்றார். அர்ஜுனன் புன்னகைத்து ”ஆம், அங்கு மானுடர் வாழ்வதில்லைதான்” என்றான். “தாங்கள் உணவருந்தலாகாது. அங்கே மூதன்னையரின் பூசனை முடிந்து கிடைக்கும் பலியுணவை மட்டுமே உண்ண வேண்டும் என்று முறைமை” என்றார் கர்க்கர். ”ஆம் அவ்வாறே” என்றான் .

அர்ஜுனன் கர்க்கருடன் இருண்ட காட்டுக்குள் சென்ற சிறு பாதையில் நடந்தான். சற்று நேரத்திலேயே புதர்களால் ஆன குகை ஒன்றுக்குள் செல்வது போல் உணர்ந்தான். வானம் அதிர்ந்து ஒளி உள்ளே சிதறியபோதுதான் தன்னைச் சூழ்ந்திருந்த இலைத்தழைப்பின் வடிவை காண முடிந்தது. சுழன்று இறங்கி பின்பு மேலேறி மீண்டும் வளைந்து சென்ற அப்பாதையில் முடிவே இன்றி சென்று கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டான். பல்லாயிரம் முறை அப்பாதைகளில் சென்றிருந்ததாகத் தோன்றியது. எங்கு என வினவிக்கொண்டான். அறியா இளமையிலேயே இத்தகைய பாதையொன்றில் தனித்து உளம் பதைத்து ஓடி இருக்கிறான். அது கனவில். ஆனால் நினைவில் என்று பார்க்கையில் கனவுக்கும் நனவுக்கும் வேறுபாடென்ன?

எங்கிருக்கிறோம் என்று ஒவ்வொரு கணமும் வகுத்துக்கொள்ளத் துடிக்கும் உள்ளத்தின் தேவையென்ன? எங்கு சென்றாலும் மீளும் வழியொன்றை தனக்குள் குறித்திட அதுவிரும்புகிறது. எங்கிருந்தாலும் அங்கிருந்து கடந்து செல்ல விழைகிறது. அறியா இடம் ஒன்றில் அது கொள்ளும் பதற்றம் அங்கு அது உணரும் இருப்பின்மையாலா? இடமறியாத தன்மை இருப்பை அழிக்கிறதா? என்னென்ன எண்ணங்கள்! இவ்வெண்ணங்களை கோத்துச் சரடாக்கி அதைப் பற்றியபடி இந்நீண்ட இருள் பாதையை கடந்து செல்லவேண்டும். இதன் மறு எல்லையில் உள்ளது இங்கு முடிவாகும் என் ஊழின் ஒரு கணம். குலமகளா? நஞ்சா?அர்ஜுனன் புன்னகைத்தான். இவர்களின் குலமகள் நஞ்சு நிறைந்த ஒரு கோப்பை என்கிறார்கள். வென்றால் இன்றிரவு காதல் கொண்ட பொற்கோப்பையில் நஞ்சருந்துவேன். தோற்றால் நஞ்சுண்டு அழிவேன்.

தொலைவில் முழவுகளின் ஓசையை கேட்கத் தொடங்கினான். மறுகணமே அவனுக்குப் பின்னால் இருந்து அந்த ஒலி வந்தது. மரங்கள் அவ்வொலியை அவனை சூழப் பரப்பின. வானிலிருந்து இலைகளின் வழியாக ஒலி வழிந்தது. மீள மீள ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தது அது. முழவொலிகளை கேட்டுக்கொண்டு சென்றபோது வானில் எழுந்த இடிமுழக்கம் அவ்வொலியுடன் இயல்பாக ஒன்று கலந்ததை உணர்ந்தான். மின்னல் எழாது இடி ஓசை மட்டும் எழுந்தது. வியந்தபோது சூழ்ந்திருந்த மொத்தக் காடும் ஒரே கணமென தன்னைக் காட்டி இரு முறை அதிர்ந்து இருளாகியது. கண்களுக்குள் வெடித்த ஒளி நீலமாகி செம்மையாகி பொன்னிறமாகி சிறு குமிழ்களாக சிதறி சுருண்டு பரந்து அமைந்தது.

இலைத் தழைப்புகளுக்கு அப்பால் பந்தங்களின் ஒளியை காணத் தொடங்கினான். குருதி தீட்டிய வேல்நுனிகள் போல் இலைகளை கண்டான். நிழல்கள் எழுந்து இருளாகி நின்ற மரங்களின் மேல் அசைந்தன. அணுக அணுக இலைப்பரப்புகளின் பளபளப்பை, பாதியுடல் ஒளி கொண்டு நின்ற அடிமரங்களை, ஒளி வழிந்த பாறை வளைவுகளை கண்டான். பின்பு காடு பின்னகர்ந்து நாணல் வெளியொன்று அவர்களுக்குமுன் விரிந்தது. வானம் மின்னலொன்றால் கிழிபட்ட ஒளியில் அப்புல்வெளிக்கு அப்பால் மும்முகப்பெருமலை எழுந்து தெரிவதை அவன் கண்டான்.

கர்க்கர் “இப்புல்வெளி பாம்புகளின் ஈற்றறை எனப்படுகிறது. பகலில் பல்லாயிரம் பாம்புகள் இங்கு நெளிவதை காண முடியும். ஒவ்வொரு புல் நுனிக்கும் ஐந்து வீதம் இங்கு பாம்புக் குட்டிகள் விரிகின்றன என்பார்கள்” என்றார். பாம்பு என்னும் சொல்லை செவிக்கு முன்னரே கால்கள் அறியும் விந்தையை எண்ணி அர்ஜுனன் புன்னகைத்தான். கர்க்கர் ”இதை நான் கடந்து செல்கிறேன். என் கால்கள் படும் மண்ணில் மட்டும் தங்கள் கால்கள் பட வேண்டும். விழிகூர்ந்து வருக” என்றபடி தன் கைக்கோலுடன் முன்னால் நடந்தார். அவர் காலடி எழுந்ததுமே அங்கே தன் காலை வைத்து அர்ஜுனன் தொடர்ந்து சென்றான்.

மின்னல் ஒளியில் சுற்றிலும் அலையடித்த நாணல் பூக்களை கண்டான். அவற்றின் அடியில் பாம்பு முட்டைகள் விரிந்து கொண்டிருந்தன. கற்றாழைச் சோறு மணம், தேமல் விழுந்த உடல் வியர்க்கும் வாடை, பூசணம் பிடித்த அப்பங்களின் நாற்றம், உளுந்து வறுக்கும் மணம்… எண்ண எண்ண சித்தம் சேர்த்து வைத்திருந்த நினைவுகள் அனைத்தும் மணங்களாக எழுந்தன. ஊறி மட்கிய மரவுரி, பிறந்த குழந்தையின் கருநீர், குட்டிகளுக்கு பாலூட்டிக் கிடக்கும் அன்னை நாயின் சிறுநீர், தழைமட்கிய இளஞ்சேறு, புளித்த கோதுமை மாவு…. பிறிதொரு மின்னலில் மும்முகப்பெருமலை மிக அண்மையில் வந்து நின்று அதிர்ந்தது.

நாணல் வெளிக்கு அப்பால் பந்தங்கள் காட்டுத்தீ போல் எரிவதைக் கண்டான். அவ்வொளியை சூழ்ந்து நின்ற மனித உடல்களின் நிழல் உருவங்கள் எழுந்து மரக்கிளைகள் செறிந்த இலைத்திரைகள் மேல் ஆடின. அவர்களின் மூதாதையர் சூழ்ந்து பேருருவம் கொண்டு நடமிடுவது போல. அணுக அணுக மூச்சொலி என எழுந்த அவர்களின் கூர்குரல்கள் முட்புதர்களை கடந்து செல்லும் காற்று போல பல்லாயிரம் கிழிதல்களாக ஒலித்ததை கேட்டான். அவன் வருவதை அங்கு எவரோ அறிவித்தனர். பெருமுழவம் ஒன்று பிடியானை என ஒலி எழுப்பத் தொடங்கியது. சேர்ந்து நடமிடுவது போல் குறுமுழவுகள் வந்து இணைந்து கொண்டன. அவ்வோசைக்கு இயைய அங்கிருந்தவர்களின் உடல்கள் இணைந்து அலையாகி அசைந்தன.

அவன் அணுகியபோது ஒற்றைப்பெருங்குரலில் அவனை வரவேற்று கூச்சல் எழுப்பினர். அர்ஜுனனை நோக்கி வந்த நான்கு முதுமகள்கள் கைகளில் அனல் சட்டிகளை வைத்திருந்தனர். அதிலிருந்த புகையை அவனை சுற்றிப் பரப்பினர். அதில் சிவமூலிகை போடப்பட்டிருக்குமோ என அவன் ஐயுற்றான். ஆனால் அதற்குரிய மணம் ஏதும் தென்படவில்லை. அனல் சட்டிகளை ஏழுமுறை அவனைச் சுற்றி உழிந்தபின் முதுமகள் ”வருக” என்றாள். நடந்து அக்கூட்டத்தை அணுகி உடல்களால் ஆன வேலி மெல்ல விலகி விட்ட வழியினூடாக உள்ளே சென்றபோது தன் உடலெங்கும் மெல்லிய மிதப்பு ஒன்று ஏற்படுவதை அர்ஜுனன் உணர்ந்தான். ஒழுகிச்செல்லும் ஆற்றில் மணல் பறிந்து விலகும் கால்களுடன் நிற்பது போல் இருந்தது. விழாமல் இருக்க உடலை சற்று முன்னால் வளைத்து கைகளை விரித்துக் கொண்டான்.

மனித உடல்களால் ஆன அந்த வளையத்திற்கு நடுவே கற்களை அடுக்கி உருவாக்கிய வட்ட வடிவமான நெருப்புக்குழி இருந்தது. அதில் அரக்கும் விலங்குக் கொழுப்பும் விறகுகளுடன் போடப்பட்டு ஆளுயரத்திற்கு நெருப்பு எழுந்து கொழுந்து விட்டு ஆடியது. நெருப்புக் குழியிலிருந்து நிரையாக நூறு பந்தங்கள் மூங்கில் கழிகளில் நாட்டப்பட்டு ஊன்கொழுப்பு உருகி எரிய, ஊடே நீலச்சுடர் வெடிக்க தழலாடிக் கொண்டிருந்தன. அப்பந்தங்களுக்கு இருபக்கமும் விரிக்கப்பட்ட இலைகளில் ஊனும் கிழங்குகளும் கனிகளும் பரப்பப்பட்டிருந்தன.

பந்தநிரை சென்றுசேர்ந்த மறுமுனையில் மேலிருந்து வளைந்திறங்கி வந்த பாறைப்பரப்பில் மூன்று கரிய குகைகள் திறந்திருந்தன. ஒரு மனிதர் தவழ்ந்து உள்ளே செல்லுமளவுக்கே பெரியவை. அவன் புருவங்களைத் தூக்கி மேலும் கூர்ந்தபோது அப்பாறைகளுக்கு மேல் முதல் மடம்பில் மேலும் இரு குகைகளை பார்த்தான். அடுத்த மடம்பில் மேலும் இரு குகைகள் தெரிந்தன. முதுமகள்களில் ஒருத்தி “வருக இளவரசே” என்று அழைத்துச் சென்று அந்த எரிகுளம் அருகே நிறுத்தினாள். அங்கிருந்த பிறிதொரு முதுமகள் எரி குளத்திலிருந்து கொழுந்து எரியும் விறகுக் கொள்ளி ஒன்றை எடுத்து அவனை மும்முறை உழிந்து அதைச்சுற்றி வரும்படி கைகாட்டினாள்.

கூப்பிய கைகளுடன் அர்ஜுனன் அவ்வெரிகுளத்தை மும்முறை சுற்றி வந்தான். அவன் இடையிலிருந்த தோலாடையை முதுமகள் கழற்றி எரிகுளத்து நெருப்புத் தழலில் எரிந்தாள். ஒருத்தி அவன் தலையில் கட்டியிருந்த தோல் நாடாவை அவிழ்த்து தீயிலிட்டாள். அவன் உடலில் இருந்த அனைத்து அணிகலன்களையும் அறுத்து நெருப்பிலிட்டனர். கையிலிருந்த கணையாழியை ஒருத்தி கழற்றியபோது அறியாது ஒருகணம் அர்ஜுனன் கையை பின்னிழுத்தான். அவள் விழி தூக்கி “உம்’ என்று ஒலி எழுப்பினாள். கணையாழி எளிதில் கழன்று வரவில்லை. அவள் தன் இடையிலிருந்த குறுவாளொன்றை எடுத்து அதை வெட்டி விலக்கி நெருப்பிலிட்டாள்.

வெற்றுடலுடன் பந்தங்கள் வழியாக நடந்து அர்ஜுனன் அந்த குகைகளுக்கு அருகே சென்றான். அங்கே தரையில் போடப்பட்ட மணைப்பலகைகளின் மேல் ஏழு முதுமகள்கள அமர்ந்திருந்தனர். அவர்களை நாகர்களின் குடியில் முன்பு பார்த்ததில்லை என்று அர்ஜுனன் உணர்ந்தான். விழுதுகளென தரை தொட்ட பெரிய சடைத்திரிகள். உலர்ந்து பாம்புச்செதில் கொண்டிருந்த மெல்லிய உடல்கள். இமையா பழுத்த விழிகள். கால்களை மடித்து முழங்கால் மடிப்பின் மேல் கைகளை வைத்து யோக அமர்வில் எழுவரும் அசையாதிருந்தனர்.

அவர்களுக்கு முன் போடப்பட்டிருந்த மரப்பீடத்தில் கௌரவ்யர் அமர்ந்திருந்தார். பொன்னாலான நாகபட முடி மேல் பந்தங்களின் ஒளி செம்புள்ளிகளாக அசைந்தது. அவருக்குப்பின்னால் அக்குடியின் பெண்கள் நின்றனர். மறுபக்கம் குடிமூத்தோர் கைக்கோல்களுடன் நின்றிருந்தனர். அவர்களுக்கு நடுவே ஏழன்னையருக்கு நேர்முன்பாக போடப்பட்டிருந்த பெரிய மரப்பீடத்தில் அர்ஜுனனை முதுமகள் அமரச்செய்தாள். அவன் கையை மடிமீது விரிக்க வைத்து அதில் ஓர் இலையை வைத்தாள் பிறிதொரு முதுமகள் சிறிய கொப்பரைப் பேழை ஒன்றை கொண்டு வந்தாள். அதைத் திறந்து அதிலிருந்து மூன்று சிறிய வெண்ணிற உருளைகளை எடுத்து அதன் மேல் வைத்தனர்.

அர்ஜுனன் சில கணங்களுக்குப்பிறகே அவை பாம்பு முட்டைகள் என்று அறிந்தான். வழக்கமான முட்டைகளைவிட அவை பெரிதாக இருந்தன. அவற்றில் ஒன்று உள்ளிருந்து அழுத்தப்பட்டு சற்று புடைத்து அசைந்தது. புகை மூடிய அவன் சித்தத்தில் அதற்குப் பின்னரே அவை அரசப்பெரு நாகத்தின் முட்டைகள் என்பது உறைத்தது. ஓடுவிலக்கி எக்கணமும் வெளிவரும் நிலையில் இருந்தன அவை. கர்க்கர் ஏழன்னையரை நோக்கி தலைவணங்கி ”அன்னையர் அருளவேண்டும்” என்றார். சற்று அப்பால் பாறை ஒன்றுக்கு மேல் கட்டப்பட்டிருந்த பீடத்தில் அமர்ந்து தன் முன் பக்கவாட்டில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பெரு முரசை ஒருவன் அறைந்து கொண்டிருந்தான். அவ்வொலியில் மலைப்பாறைகள் தோல்பரப்புகளென அதிர்ந்தன. குறு முழவுகளுடன் நாகர்கள் வந்து அன்னையரை சூழ்ந்து கொண்டனர்.

பெருமுரசத்தின் சீரான இழைதாளத்தை குறுமுழவுகளின் துடிதாளங்கள் ஊடறுத்தன. ஒரு சொல் பல நூறு துண்டுகளாக்கப்பட்டது. ஒவ்வொரு துண்டும் துடிதுடித்தது. உடல்துண்டுகள் அதிர்ந்து எம்பிக் குதித்தன. குமிழிகளென வெடித்து எழுந்தன. தாளத்தை விழிகளால் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அர்ஜுனன் உணர்ந்தான். அவ்வுணர்வை அறிந்த ஒருவன் அப்பால் நின்று நோக்க தாளம் குருதிக் கொப்புளங்களாக வெடித்துச் சிதறி விழுந்து வழிந்தோடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தாளத்துடிப்பையும் கை நீட்டி தொட்டுவிடலாம் போலிருந்தது. வெட்டுண்ட சதை விதிர்ப்புகள். அனலில் விழுந்த புழுவின் உடற் சொடுக்குகள். உருகி விழுந்த அரக்கின் உறைவுகள். தாளம் அவன் உடலில் பல இடங்களில் தொட்டுச் சென்றது. முதுகில் குளிர்ந்த கற்களென. கன்னங்களில் கூரிய அனல் துளிகளென. உள்ளங்கால்களில் பிரம்பு வீச்சுகளென.

அர்ஜுனன் தன் முன் எழுந்த அரவு விழிகளை நோக்கிக் கொண்டிருந்தான். ஏழு கல்முகங்கள். அவற்றில் ஏழு வெண்கல் விழிகள். பாம்பின் விழிகளைப் போல பொருளின்மையால் ஆன நோக்கு கொண்ட ஏதுமில்லை. சுட்டுவிரல் தொட்டெடுக்கும் சிறு புழுவின் விழிகளில்கூட இருத்தலின் பெரும் பதைப்பு உள்ளது. யானையின் கண்களில் விலகு என்னும் ஆணை. விண்ணளந்து பறக்கும் கழுகின் கண்களில் மண்ணெனும் விழைவு. முற்றிலும் பொருளின்மை கொண்டவை பாம்பின் விழிகள். இங்கிருந்து முழுமையாக தன்னை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து நோக்குபவை. அவை விழிகளே அல்ல, வெண் கூழாங்கற்கள்.

பாம்பு விழிகளால் நோக்குவதில்லை. நோக்குவதற்கு பிறிதொரு புலனை அது கொண்டுள்ளது. ஒவ்வொரு அசைவையும் தன்னுடலால் அது எதிர்கொள்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் உடலால் எதிர்வினையாற்றுகிறது. அந்த நீள் உடல்தான் அதன் விழியா? அவ்வெண்ணங்களே ஓங்கி வெட்டி அறுத்து இரு துண்டாக்கிச் செல்வது போல் வீரிடல் எழுந்தது. ஏழன்னையரில் இறுதியில் இருந்தவள் எழுந்து இருகைகளையும் விரித்து உடல் துடித்து நின்றாள். அவ்வசைவு தொட்டு எழுந்தது போல அடுத்தவள் எழுந்தாள். எழுவரும் நிரையென எழுந்து கைகளை நீட்டி உடல் விதிர்க்கச்செய்யும் கூரொலியுடன் அலறியபடி உடல் அதிர்ந்து துடிதுடித்தனர். முதுமையில் தளர்ந்த அனைத்து தசைகளும் இழுபட்டு தெறித்து நின்றன. கழுத்துச் சரடுகள், புயத்தசைகள், இடைநரம்புகள் உச்ச விசையில் எக்கணமும் அறுந்து துடித்துவிடும்போல் தெரிந்தன.

அர்ஜுனன் அறியாது தன் கையை பின்னிழுக்க இலையிலிருந்த பாம்பு முட்டைகளில் ஒன்று உருண்டது. கர்க்கர் கை நீட்டி “அசையாதே” என்று ஆணையிட்டார். அலறிய முதுமகள்களில் ஒருத்தி கண்ணுக்குத்தெரியாத கையொன்றால் தூக்கி வீசப்பட்டவள் போல் மண்ணில் விழுந்தாள். அவள் உடல் பாம்பு போல் நெளியத்தொடங்கியது. மானுட உடலில் அத்தகைய முழுநெளிவுகள் கூடுமென்று எண்ணிப்பார்க்கவே இயலவில்லை. இரு கைகளையும் அரவுப்படம்போல் நீட்டி தரையில் இருந்து எழுந்து சொடுக்கி திரும்பி அதிர்ந்து பின் வளைந்து சினந்து சீறி முன் நீண்டு புரண்டெழுந்து நெளிந்து சுழன்றாள். ஏழன்னையரும் நிலத்தில் விழுந்து பாம்புகளாகி ஒருவரோடொருவர் பின்னி புரண்டனர். சீறி முத்தமிட்டு வளைந்து விலகினர். முழவோசை கேட்டு திரும்பி வாய் திறந்து சீறினர்.

சற்று நேரத்தில் விழியறிந்த அவர்களின் மானுட உடல்கள் மறைந்து அரவு நெளிவுகள் அன்றி பிறிதெதையும் காண முடியாமல் ஆயிற்று. பீடத்தில் அமர்ந்திருந்த கௌரவ்யர் எழுந்து இருகைகளையும் கூப்பி “மூதன்னையரே அருள்க! ஆணை இடுக!” என்றார். அச்சொற்கள் அவர்களை சென்றடைந்ததாக தெரியவில்லை. நெளியும் அரவுகளில் ஒன்று பிறிதொன்றின்மேல் எழுந்து பத்தி விரித்து திரும்பி அவர்களை நோக்கியது. ஓங்கி தரையை மும்முறை கொத்தி அது வாழ்த்தியபோது கூடி நின்ற நாகர் குடியினர் கைகூப்பி இணைந்த குரலெழுப்பி நாகங்களை வாழ்த்தினர். திறந்த இருட் குகைகளுக்குள் அக்குரல்கள் புகுந்து சென்று எங்கோ முழங்குவது போல் அர்ஜுனன் உணர்ந்தான்.

அரவுடல்களில் ஒன்று நெளிந்து அவனருகே வந்தது. அர்ஜுனன் அவ்விழிகளை நோக்க அவற்றின் மையத்தில் இருந்த ஊசி முனை ஒளி விரிந்து ஒரு வாயிலாவது போல் இருண்மை கொண்டது. அது சந்திரகர் என்று அர்ஜுனன் அறிந்தான். திகைத்து அவன் இன்னொரு நாகத்தை நோக்கினான். அறிந்த விழிகள். சதயன், ஜலஜன், ஊஷரன், குகன், ரிஷபன், மால்யவான். அவனை நோக்கி விழித்த இமையாமைகளில் புன்னகை தெரிந்து மறைந்ததென எண்ணினான்.

நாகங்கள் காற்றிலாடும் நாணல் நுனிகள் போல் மெல்ல அவனைச்சூழ்ந்து நடனமிட்டன. அவன் தன் உள்ளங்கையின் அசைவை உணர்ந்து திரும்பி நோக்கினான். முட்டைகளில் ஒன்றில் சிறிய விரிசல் விழுந்தது. உள்ளிருந்து அதைக் கொத்தி உடைத்து மலர் அல்லி போல் செந்நிற பாம்புக் குஞ்சு ஒன்று வெளிவந்தது. நெளிந்து உடல் இறுக்கி அசைந்து உள்திரவத்திலிருந்து வழுக்கி அவ்விழுதை வாலால் இழுத்தபடி வெளியே வழிந்தது. பின்பு தன் வாலை முற்றிலும் உருவிக் கொண்டது.

அவன் அசையாமல் நோக்கிக்கொண்டிருந்தான். அது அவன் கையிலிருந்த இலை மேல் விழுந்து சற்று புரண்டு தலை தூக்கி பத்தியை விரித்தது. எண்ணெய் வழிவது போல் வழிந்து அவன் முழங்கையை அடைந்தது. அதன் உடலில் இருந்த கொழும் திரவத்தால் வழுக்கி அவன் தொடையில் விழுந்தது. தொடை மடிப்புக்குள் முகம் புதைத்து உள்ளே சென்று வால் நெளிய உன்னி மறைந்தது. இரண்டாவது முட்டை உருள்வதை அர்ஜுனன் கண்டான். அதன் ஓட்டுப்பரப்பின் ஒரு துண்டு உடைந்து மேலெழ உள்ளிருந்து விதை முளைத்து தளிரெழுவது போல் வெளிவந்ததது அரசநாகக் குஞ்சு. வெளியே விழுந்த அதிர்வில் வால் நெளிய உடல் சுருட்டி சீறி பத்திவிரித்தது. அதன் சிறு செந்நா பறந்தது.

அதை நோக்கி இருக்கையிலே மூன்றாவது முட்டைக்குள்ளிருந்து ஓசையின்றி வழிந்து வெளிவந்து மெல்ல எழுந்து தலை தூக்கி அவனை நோக்கியது சிறு நாகம். இரண்டாவது நாகம் அவன் கட்டை விரலைச்சுற்றி மேலேறியது மூன்றாவது நாகம் அவன் உள்ளங்கையை அடைந்து மடிந்து மறுபக்கம் விழுந்து கால்களின் இடுக்குக்குள் புகுந்தது.

சுழன்றாடி இருந்த ஏழன்னையரில் ஒருத்தி அவன் முன் வந்து மும்முறை வளைந்து கைக்குவை நுனியால் நிலத்தை கொத்தியபின் பின்னால் தூக்கி வீசப்பட்டாள். அவள் உடலை தழுவியவர்கள் போல வந்து ஒவ்வொருவராக மண்ணைக் கொத்தியபின் மல்லாந்து விழுந்தனர். அவர்களின் கால்கள் விரைத்து மண்ணை உதைத்து கைகள் விரல் சொடுக்கி அதிர்ந்து பின்பு மெல்ல தளர்ந்தன. சூழ்ந்திருந்த முழவோசைகள் ஓய்ந்தன. பெருமுழவின் விம்மல் மட்டும் காற்றில் அஞ்சி கரைந்து அமைதியாகியது. கர்க்கர் அருகே வந்து தன் சுட்டுவிரலால் அந்த சிறு நாகக் குஞ்சுகளை எடுத்து சிறிய மரக்கொப்பரைக்குள் போட்டார். கௌரவ்யர் எழுந்து ”மூதன்னையர் அருள் உரைத்துவிட்டனர். பாண்டவரே, இனி தாங்கள் எங்கள் குலம்” என்றார்.

நூல் எட்டு – காண்டீபம் – 14

பகுதி இரண்டு : அலையுலகு – 6

இளவெயில் பூத்து இலைகளிலிருந்து சொட்டத் தொடங்கிய காலை. நாணம் கொண்டதென பசுமையில் மறைந்து எழுந்து உடல் வளைத்து சென்ற சிறு காலடிப்பாதையில் இருவரும் நடந்தனர். உலூபி அவன் வலக்கையை தன் இடக்கையால் வளைத்துப் பற்றி, விரல்களைக் கோத்து தன் முலை நடுவே வைத்து அழுத்தி கூந்தல் அவன் தோள்களில் சரிய தலைசாய்த்து உடன் நடந்துவந்தாள். அவர்களின் காலடியோசையை ஒலித்தது காடு. அவர்களைக் கண்டு எழுந்த பறவைகளின் ஒலியால் உவகை காட்டியது.

அஸ்தினபுரியிலோ இந்திரப்பிரஸ்தத்திலோ எந்தப் பெண்ணும் அப்படி ஆண்மகனோடு நிகரனெ நடப்பதில்லை. நாணில்லாது காதலை வெளிப்படுத்துவதும் இல்லை. அவளது வேட்கை அவனை நாணச்செய்தது. இருமுறை கையை விடுவித்துக் கொள்ளவும், சற்றே விலகி நடக்கவும் அவன் முயன்றான். அவ்வெண்ணம் எழுந்ததுமே அறிந்தவள் போல் அல்லது உளமறியாது உடல் மட்டுமே அறிந்தது போல அவள் மேலும் இறுக்கிக்கொண்டாள். மீண்டும் மீண்டும் அவன் தோள்களிலும் புயங்களிலும் தன் உருகும் உதடுகளால் முத்தமிட்டாள். மூக்கையும் வாயையும் ஆவல்கொண்ட நாய்க்குட்டியைப்போல அவன் மேல் வைத்து உரசினாள். அப்போது கொஞ்சும் பூனைபோல் மெல்ல ஒலியெழுப்பினாள்.

அவன் “இங்கு எவரேனும் பார்க்கக்கூடும்” என்றான். வியந்து புருவம் சுளித்து “பார்த்தால் என்ன?” என்றாள். “நாம் இன்னும் மணம் கொள்ளவில்லை” என்றான். உலூபி “நாகர்குல மணம் என்பது மணமக்களே முடிவெடுப்பது. அக்குலம் அதை ஏற்கிறதா இல்லையா என்பதே பின்னர் முடிவு செய்யப்படுகிறது” என்றாள். “என்வரையில் கங்கையின் அடியில் நீந்தி வந்து உங்கள் கால்களைப் பார்த்த கணம் என் மணம் முடிந்துவிட்டது. நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டபோது அது முழுமை அடைந்தது. என் தந்தை ஏற்றுக்கொள்ளும்போது நாளை பிறக்கும் என் மைந்தர்கள் அடையாளம் கொள்வார்கள், அவ்வளவே” என்றாள்.

அர்ஜுனன் திரும்பி அவளை பார்த்தான். காதல் கொண்ட முகம். இரு விளக்குகள் ஏற்றப்பட்ட பொற்தாலம். உருகி விடுகிறாற்போல் இருந்தன விழிகள். அக்கணம் ஏதோ இன்கனவு கண்டு எழுந்ததுபோல தெரிந்தாள். “என்ன?” என்று அவள் கேட்டாள். “பெண்களை கண்டிருக்கிறேன். இத்தகைய பெருங்காதல் எழுந்த முகம் இதுவரை கண்டதில்லை” என்றான். நாணிச்சிரித்து அவன் தோள்களில் முகம் அழுத்தினாள். கழுத்துகளும் நாணிச்சிவக்குமோ? தோள்கள் புன்னகைக்குமோ? அவளுடைய பறந்தலைந்த குழலை கையால் நீவி, மயிர்ப் பிசிறுகளை பின்னலில் சேர்த்தான். பின்பு அப்பின்னலை ஒரு கையால்பற்றி இழுத்து அவள் முகத்தைத் தூக்கி “உன் கண்களைப் பார்க்கப் பார்க்க தீரவில்லை” என்றான்.

“என்ன?” என்று அவள் தாழ்ந்த குரலில் கேட்டாள். “தெரியவில்லை. கள்ளையும் வேள்வியமுதான சோமத்தையும் வெறும் நீர் என மாற்றும் களிமயக்கு கொண்டவை இக்கண்கள். இதை அடைந்தபின் இவ்வுலகில் இனி அடைவதற்கேதுமில்லை.” அவள் “ம்?” என்றாள். அவன் சொற்கள் அவளுக்குப் புரியவில்லை என்று தோன்றியது. அவளை நெருங்கி “இத்தகைய பெரும் காதலை எழுப்பும் எது என்னிடம் உள்ளது என்று வியக்கிறேன்” என்றான். “நான் என்றும் இதே காதலுடன்தான் இருக்கிறேன். காதலுக்குரியவனை அறியாதிருந்தேன். மண்ணில் அவன் பெயர் என்ன, தோற்றமென்ன என்பது மட்டுமே எஞ்சியிருந்தது” என்றாள். “ஆம். இது உன்னுடனேயே பிறந்த காதலாகவே இருக்கவேண்டும். விதையில் உறைகின்றன மலரும் கனியும் என்று ஒரு சூதர் வாக்கு உண்டு” என்றான் அர்ஜுனன்.

அவள் விழிகள் சுருங்க தலைசரித்து “என் மேல் காதல் கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டாள். அர்ஜுனன் அந்த நேரடி வினாவுக்குமுன் சொல்லிழந்தான். மூடிய அறைக்குள் சிட்டுக்குருவி போல அவன் சித்தம் பதறி சுற்றி வந்தது. பின்பு தடுத்த சுவர்ப்பரப்பு ஒளித்திரையென மாற பீறிட்டு வானிலெழுந்தது புள். அக எழுச்சியுடன் அவள் இடையை வளைத்து அணைத்து “நேற்றிரவு இறந்து மீண்டும் பிறப்பதுபோல் ஒன்றை உணர்ந்தேன்” என்றான். “என்ன?” என்று அவள் மேலும் கேட்டாள்.

பிறிதெவர் குரலோ என தானே செவிகொண்டபடி “உன்னைக் கடந்து நான் செல்லமுடியாது. இன்று வரை பகிரப்படாத எதையும் நான் பெற்றதில்லை. ஐவரில் ஒருவன் என் அன்னைக்கு. அவ்வண்ணமே என் துணைவிக்கும். பிறிதொன்றில்லாத முழுமை ஒன்றுக்காக என் அகம் தேடிக்கொண்டிருந்தது. நிகர்வைக்கப்படாத ஓரிடம். நான் மட்டுமே அமரும் ஒரு பீடம்” என்றான் அர்ஜுனன்.

என்ன சொல்கிறோம் என்று சொன்னபின்னரே தெளிவடைந்தான். அவள் விழிகளை நோக்கி “ஆண்மகன் குடியின் செல்வத்தின் முடியின் புகழின் ஆணவத்திலிருந்து விடுபடமுடியும். மெய்ஞானத்தின் ஆணவமேகூட அவனை விட்டு நீங்கமுடியும். ஒரு பெண் நெஞ்சில் பிறிதொன்றில்லாது அமரவேண்டும் என்ற விழைவை, அதை எய்தியதன் ஆணவத்தை அவனால் துறக்க இயலாது” என்றான்.

அவன் சொற்களை புரிந்துகொள்ளாததுபோல் அவள் ஏறிட்டு நோக்கினாள். “திரௌபதியிடம் நான் இருக்கையில் அவளை அடைந்த பிற நால்வரையன்றி எதையும் என் நெஞ்சு எண்ணுவதில்லை. அவ்வெண்ணங்களை அள்ளி தவிர்க்கும் முயற்சியில் என்னுள்ளம் அலைபோல் கொந்தளித்துக்கொண்டிருக்கும். அவளுடன் கொள்ளும் காமம்கூட அக்கொந்தளிப்பின் சுவைதான்” என்றான். வியத்தகுமுறையில் அவள் அதைப்புரிந்துகொண்டு விழிமாற்றம் கொண்டாள்.

“இன்று உணர்கிறேன், துன்பத்தை இன்பமெனக்கொள்ளும் கணங்கள் அவை. தன்குருதி நாவில் அளிக்கும் சுவையை அறிந்தவன் அதிலிருந்து மீள்வதில்லை” என்றான் அர்ஜுனன். “என் உள்ளம் அறிந்து விதுரர் என்னிடம் சொன்னார், படித்துறைகள் தோறும் தழுவி வரும் கங்கை ஒவ்வொரு படித்துறைக்கும் புதியதே என்று. அச்சொற்களின் பொருள் முழுமையை என் சித்தம் உணர்ந்தது. சித்தத்தில் பற்றி எரியும் ஆணவம் அதை ஏற்க மறுத்தது.”

“அவள் உடலை பிறர் தொட்டதனாலா?” என்றாள். அவள் கண்களில் வந்துசென்ற மெல்லிய ஒளி மாறுபாட்டைக் கண்டு எத்தனை கூர்மையாக தன்னை பின் தொடருகிறாள் என்று எண்ணி வியந்தான். “இல்லை, உடலல்ல” என்று தனக்குத்தானே என சொல்லிக்கொண்டான். “பின்பு?” என்றாள். அப்போது அவள் காட்டுமகளாக தெரியவில்லை.

“அவள் உள்ளத்தில்” என்று சொன்னபின் “அங்கு ஐவருக்கும் இடமுள்ளது” என்றான். நோக்கு விலக்கி “அதிலென்ன, தாங்கள் அறிந்ததுதானே?” என்று அவள் கூறினாள். “ஆம், அறிந்ததுதான்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆயினும் நான் ஐந்தில் ஒன்று என்ற எண்ணத்தில் இருந்து என்னால் ஒரு கணமும் மீள முடிந்ததில்லை.”

திரும்பி அவள் விழிகளை நோக்கி “அதை நீ அறிவாய். உன் காதலை என்னிடம் சொன்னபோது நேராக அந்த நுண்ணிய நரம்பு முடிச்சில்தான் உன் விரலை வைத்தாய்” என்றான். “இல்லை” என்றாள் அவள். “பெண்களின் உள்ளத்தை நான் சற்று அறிவேன். இதுநாள்வரை அவர்களை வேட்கைகொண்ட நிழலாக தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன். சொல், நீ அறியாததா?” என்று அர்ஜுனன் கேட்டான். அவள் தலை குனிந்தாள். “என்னிடம் சொல். நீ அறிந்தே உரைத்ததுதானே. பிறிதொன்றில்லாமை எனும் சொல்? அது சினம்கொண்ட குளவி என என்னைத் தொடரும் என்று நீ அறிந்திருந்தாய்” என்றான்.

அவள் கழுத்தில் ஒரு நரம்பு அசைந்தது. நாவு நீண்டு வந்து கீழுதட்டை நீவி மறைந்தது. வாய்நீர் இறங்குவதை தொண்டை அசைவு காட்டியது. குனிந்து மேலும் ஆழ்ந்த குரலில் “அறிந்துதானே சொன்னாய்?” என்றான். “ஆம்” என்று அவள் மூச்சின் ஒலியில் சொன்னாள். “ஆனால் அத்திட்டம் எதுவும் என்னிடம் இருக்கவில்லை. ஏழுலுகங்களுக்கும் செல்லும் திறன் படைத்திருப்பவர் நீங்கள். பாரதவர்ஷத்தின் மாவீரர். உங்களுக்கு இச்சிறிய நாகர்குலத்தில் பிறந்த நான் அளிக்கக்கூடிய அரும்பொருள் எதுவுமில்லை.”

அவள் இளமுலைகள் எழுந்தமைந்தன. “இப்பிறவியில் உள்ளும் புறமும் பிறிதொன்றிலாத காதல். அதுவே என் படையல்.” அர்ஜுனன் மேல்மூச்செறிந்தான். “ஆம்” என்றபின் மேலும் ஏதோ சொல்ல வந்து அச்சொற்களை தானே உணர்ந்து கைவிட்டான். அக்கணம் அங்கிருந்து விலகியோட ஏன் தோன்றுகிறது என்று வியந்தான்.

குறைநீர் கலம் என உள்ளம் அலைந்து நடையை உலைத்தது. “உன் இல்லம் இன்னும் எத்தனை தொலைவில் உள்ளது?” என்றான். “ஐந்நூறு இல்லங்களாலானது எங்கள் ஊர். அதன் பெயர்தான் ஐராவதீகம்” என்று உலூபி சொன்னாள். அத்தருணத்தின் முள்காட்டிலிருந்து உடல் விலக்கி அவளும் விலகுவது போல் தோன்றியது. “உன் குலத்தில் பெண் கொள்வதற்கு முறைமைகள் ஏதும் உள்ளதா?” என்றான் அர்ஜுனன் “முன்பு எவரும் பெண் கொண்டதில்லை. எனவே முறைமை என ஏதும் உருவாகவுமில்லை. என்ன நிகழும் என்று என்னால் உய்த்தறியக் கூடவில்லை. ஆனால் இறுதியில் நீங்கள் வென்றெழுவீர்கள் என்று நன்கறிகிறேன்” என்று உலூபி சொன்னாள்.

பின்பு நெடுநேரம் இருவரும் உரையாடவேயில்லை. உலூபி தனக்குள் மெல்ல பேசியபடியும் முனகலாக பாடியபடியும் நடந்துவந்தாள். அவன் உடலுடன் ஒட்டிக்கொள்ள விழைபவள் போல சாய்ந்தும், கை தழுவியும் நடந்தாள். காற்றில் எழுந்த அவள் குழல் அவன் தோளை வருடி பறந்தது.

இலைத் தழைப்பின் இடைவெளி வழியாக வானம் தெரிந்தபோது அவன் நின்று அண்ணாந்து நோக்கினான். முந்தைய இரவின் அடரிருளை, அதைக்கிழித்தெழுந்த ஒளிப்பெருக்கை, முகில் அதிர்ந்த பேரோசையை நினைவு கூர்ந்தான். அவை அங்கு நிகழ்ந்தனவா என்றே ஐயம் எழுந்தது. பிறிதொரு வானில் அது நிகழ்ந்ததுபோல.

தலைகுனிந்து பாதையை நோக்கினான். அவன் நின்றதைக் கண்டு அவள் “என்ன?” என்றாள். “இப்பாதையில் கன்றுகள் ஏதும் நடப்பதில்லையா?” என்று கேட்டான். எண்ணியது பிறிதொன்று என்று அவ்வினாவிலேயே உணர்ந்துகொண்டு, “இல்லை. நாங்கள் விலங்குகள் எவற்றையும் வளர்ப்பதில்லை” என்றாள். “நீங்கள் பால் அருந்துவதில்லையா?” என்றாள். “இல்லை, நாங்கள் வேளாண்மை செய்வதும் இல்லை. இக்காடு எங்களுக்கான உணவால் நிறைந்துள்ளது.” “எப்படி என் மொழி அறிந்தாய்? பாரதவர்ஷத்தின் அரசியலைக்கூட அறிந்திருக்கிறாய்!” என்றான்.

“எங்கள் பாடகர்கள் பாம்பாட்டிகளாக நகர்களுக்குச் செல்வதுண்டு. மழைக்காலம் தொடங்குகையில் அவர்கள் திரும்பி வரும்போது கதைகளால் நிறைந்திருப்பார்கள். இங்கு மழை நின்று பெய்யும். மழைக்காலம் முழுவதும் எங்கள் இல்லங்களுக்குள் அமர்ந்து நெருப்பிட்டு குளிர்காய்ந்தபடியே கதைகளை சொல்லிக்கொண்டிருப்போம். அஸ்தினபுரி, இந்திரப்பிரஸ்தம், ராஜகிரகம், தாம்ரலிப்தி, விஜயபுரி, காஞ்சி, மதுரை என்று நாங்கள் அறியாத ஊர்களே இல்லை.” அர்ஜுனன் “கதைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது பாரதவர்ஷம்” என்றான்.

அவ்வெளிய உரையாடல் அதுவரை பேசிய எடையேறிய சொற்களை பின்னுக்குத்தள்ளியது. விழிகளை இயல்பாக்கி சூழ்ந்திருந்த காட்சிகளை துலக்கியது. அவன் திரும்பி அவள் முகத்தை நோக்கினான். பக்கவாட்டுப்பார்வையில் அவள் கன்னங்களின் வளைவில் விழுந்த ஒளி மென்மயிர்களை பொன்னாக்கியிருக்கக் கண்டான். கழுத்துக்கோடுகளில் வியர்வை பட்டுநூலென தெரிந்தது. எதையோ தன்னுள் பாடிக்கொள்பவள் போல அவள் விழிகளும் இதழ்களும் அசைந்தன.

பாதை வளைந்தபோது தொலைவில் மலைச்சிகரம் எழுந்து தெரிந்தது. அதன் மறுபக்கத்தைப் பார்த்த நினைவை அர்ஜுனன் அடைந்தான். “உங்கள் மொழியில் இதன் பெயர் என்ன?” என்று கேட்டான். “மூன்று தலையுள்ள பேருருவன்” என்று உலூபி சொன்னாள். அர்ஜுனன் வியப்புடன் “மூன்று தலையா?” என்றான். “ஆம், ஊழ்கத்தில் அமர்ந்து எங்கள் மூதாதையில் ஒருவர் இம்மலைக்கு அருகில் கண்ணுக்குத் தெரியாத இன்னும் இரு மலைகள் இருப்பதைக் கண்டார். அதனால் இதற்கு திரிசிரஸ் என்று பெயரிட்டார். பிற இரு தலைகளும் விண்ணுலகங்களில் எங்கோ விழுந்துள்ளன என்பது எங்கள் கதை” என்றாள்.

அர்ஜுனன் “இக்காட்டின் எல்லையில் நுழையும்போதே அதை நான் கண்டேன். அங்கிருந்து நோக்குகையில் இரு குகைகள் விழிகளாக மாறி என்னை நோக்கின” என்றான். “ஆம், அந்நோக்கு எங்கள் எல்லையைக் கடக்கலாகாது என்ற எச்சரிக்கை” என்றாள் உலூபி. “கடந்தவர்கள் திரும்பமுடியாதென்பது எவரும் அறிந்ததே. திரிசிரஸை வெல்ல மானுடரின் தெய்வங்களால் இயலாது.” நகைத்து “அதை அறைகூவல் என நான் எடுத்துக்கொள்வேன்” என்று அர்ஜுனன் சொன்னான்.

“அறைகூவலை நீங்கள் அங்கே எங்களூரில் சந்திப்பீர்கள்” என்றாள் உலூபி. “எங்கள் கதைகளில் திரிசிரஸ் என்னும் பேருருவனைப் பற்றிய சித்திரம் ஒன்று உள்ளது. ஒரு முகத்தால் கள்ளுண்டு களித்திருப்பான். பிறிதொரு முகத்தால் உலகறிந்து இயற்றுவான். மூன்றாம் முகத்தால் தன்னுள் மூழ்கி வேதம் அறிவான். ஒன்றையொன்று நோக்கும் திறன் கொண்ட மூவரில் எவரையும் தெய்வங்களும் வெல்ல முடியாது என்கின்றது தச பிராமணம் என்னும் தொன்மையான நூல்.”

“அதே கதை இங்குள்ளது” என்று உலூபி வியப்புடன் சொல்லி அவன் கையை அள்ளிச் சேர்த்தாள். “நேற்று உங்களைப் பார்த்ததுமே நான் எண்ணியதும் அதைத்தான். மூன்று முகம் கொண்டவர் நீங்கள். கள்ளுண்டு வில்லாண்டு மெய்தேர்ந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள்.”

அர்ஜுனன் அவளை நோக்கி புன்னகைத்து “ஆம், அன்று அப்பெருமுகத்தை நோக்கியபோது என்னிடம் அது ‘நான் நீ’ என்று சொல்வதுபோல் உணர்ந்தேன்” என்றான். உலூபி “அதிலென்ன ஐயம்? இதோ நான் சொல்கிறேன். அவர் நீங்களே” என்றாள். அர்ஜுனன் “மூன்று முகம்… நன்றாகத்தான் உள்ளது” என்றபின் “என் தோழன் ஒருவன் உள்ளான். யாதவன்” என்றான். “ஆம், அறிவேன்” என்றாள் உலூபி. “அவனுக்கு மூவாயிரம் முகம் என்று சொல்வேன்” என்றான் அர்ஜுனன்.

தொலைவிலேயே மானுடக் குரல்களை அர்ஜுனன் கேட்கத் தொடங்கினான். முதலில் கேட்டவை கைக்குழந்தைகளின் கூரிய அழுகுரல். பின்பு சிறுவர்கள் கூவி ஆர்த்து விளையாடும் ஓசை. உடன்கலந்த பெண்களின் ஓசை. படைக்கலன்கள் இல்லாமல் செல்கிறோம் என்ற எண்ணம் அவனில் எழுந்ததுமே உலூபி “படைக்கலன்கள் இல்லாமல் எங்கள் நகர் நுழைவதே உகந்தது. இதை அறியாது எல்லை கடந்து உயிர் துறந்தோர் பலர்” என்றாள். “அறியாத இடத்திற்கு படைக்கலன்களுடன் நுழைவது அல்லவா நல்லது?” என்று அவன் கேட்டான்.

“நாங்கள் கொண்டிருக்கும் படைக்கலன்கள் என்ன என்று அறியாதபோது உங்களிடம் இருக்கும் படைக்கலன்களால் என்ன பயன்?” என்று அவள் கேட்டாள். அர்ஜுனன் திரும்பி அவளை நோக்கி “உங்கள் படைக்கலன்கள் என்ன?” என்றான். “நஞ்சு” என்று அவள் சொன்னாள். “இப்பகுதிக் காடுகள் பாம்புகளால் நிறைந்தவை. நாக நஞ்செடுப்போம். அதை பிசினாக ஆக்கி பாதுகாக்கும் கலையை பல தலைமுறைகளாகவே நாங்கள் கற்றிருக்கிறோம்.”

“அம்புகளில் தீற்றிக் கொள்வீர்களா?” என்றான். “இல்லை. அம்புக்கலை எங்களிடம் இல்லை” என்றாள். “சிறிய முட்களை நாக நஞ்சில் ஊறவைத்து சேர்த்து வைத்திருப்போம். சிறிய மூங்கில் குழாய்க்குள் அவற்றை இட்டு வாயால் ஊதி பறக்கடிப்போம். கொசு ஒன்றின் கடி அளவுக்கே அந்த முட்கள் தீண்டும். ஒரு யானையை சரிக்கும் ஆற்றல் கொண்ட முட்களும் உண்டு. விழிகளால் அவை வருவதை பார்க்க முடியாது. அம்புகளால் தடுக்கவும் இயலாது” என்றாள் உலூபி.

அவர்கள் அணுகுவதை உயர்ந்த மரத்தின் மேலிருந்து நோக்கிய காவலன் ஒருவன் எழுப்பிய குறுமுழவோசையில் நாகர் குடி அமைதியாகி சிறுத்தை என பின்வாங்கி புதர்களுக்குள் முற்றிலும் பதுங்கிக்கொண்டது. எல்லையைக் கடந்து உலூபி தன் வாயில் கைவைத்து பறவை ஒலி ஒன்றை எழுப்பினாள். மரத்தின் மீதிருந்து கூகை குழறும் ஒலியில் அதற்கு மறுமொழி எழுந்தது. அவள் திரும்பி அர்ஜுனனை நோக்கி “நீங்கள் அஞ்ச மாட்டீர்கள் என்று அறிவேன். ஆனால் உடலிலும் விழியிலும் அனிச்சையாகக்கூட அச்சம் தெரியாது என்பதை இப்போதே காண்கிறேன்” என்றாள். “இதுவரையிலான வாழ்நாளில் கடந்தது அச்சத்தை மட்டுமே” என்றான் அர்ஜுனன்.

மூன்று நாகர்கள் அவர்களை நோக்கி எதிரே வந்தனர். புலித்தோல் ஆடை அணிந்து, உடலெங்கும் சாம்பல் பூசி, கழுத்தில் கமுகுப்பாளையாலான நாகபட ஆரம் அணிந்து, நெற்றியில் இறங்கிய நாகபடம் பொறித்த கொந்தை சூடியிருந்தனர். முதலில் வந்த முதியவரை நோக்கிய உலூபி நாகமொழியில் பேசினாள். குரலதிர்வுகளுக்கு மாறாக மூச்சுச் சீறல்களாலான மொழி அது என்று கண்டான். பாம்புகள் பேசுமென்றால் அது அம்மொழியாகவே இருக்கும். அவர்கள் நாகங்களுடன் உரையாடுவார்கள் போலும்.

மூவரும் அவனை நோக்கி தலை தாழ்த்தினர். முதியவர் சற்றுக் குழறலான மொழியில் “ஐராவதீகத்திற்கு நல்வரவு இளைய பாண்டவரே” என்றார். அர்ஜுனன் “நானும் என் மூதாதையரும் வாழ்த்தப்பட்டோம். இந்திரப்பிரஸ்தம் ஆளும் மன்னர் யுதிஷ்டிரரின் தூதனாக உங்கள் ஊருக்குள் நுழைகிறேன். உங்கள் ஊர் நெறிகளுக்கும் குலமுறைகளுக்கும் முற்றிலும் கட்டுப்படுகிறேன். உங்கள் நகரில் இருக்கும்வரை நாகர் குலத்து அரசனின் ஆணைகள் என்னை கட்டுப்படுத்தும்” என்றான்.

“ஆம், அதுவே முறை” என்று சொன்னார் முதியவர். “என் பெயர் கர்க்கன். உங்களை ஐராவதீகத்திற்குள் இட்டுச்செல்ல இளவரசியால் ஆணையிடப்பட்டுள்ளேன்” என்றார். அர்ஜுனன் அவருக்கு தலைவணங்கினான். “எங்கள் அரசர் குடிமூத்தவர் மட்டுமே. அன்னையர் அவையே இறுதிமுடிவெடுக்கிறது” என்றார் கர்க்கர். “வருக!” அவரது முகத்தில் அவன் அறியாத ஒன்றிருந்தது. அவரை அது மானுடரல்ல என்று காட்டியது.

புதர் வகுந்து வளைந்து சென்ற பாதை வேர்ப்பின்னல்களுக்குள் நுழைந்தது. உருளைப் பாறைகளை கவ்விப் பிடித்திருந்த வேர்களின் ஊடாக நோக்கி விழிகூர்ந்து காலெடுத்து வைத்து இறங்கிச் சென்றனர். மரங்கள் செறிந்து மேலும் மேலும் அவ்வழி இருட்டி வந்தது. இருள் அடர்ந்தபோது விழி மேலும் கூர்மைகொள்ள அவ்வேர்களுக்குள் உயிருள்ள வேர்கள் என பல்லாயிரம் பாம்புகளை அர்ஜுனன் கண்டான். துயிலில் என அவை ஒன்றுடன் ஒன்று பின்னி வழுக்கி உருவி தலைதூக்கி வால் நெளித்து அசைந்துகொண்டிருந்தன. பல்லாயிரம் கரிய சிற்றோடைகளென பாறைகளை வளைத்து சரிவிறங்கின.

பாறையொன்றின் மேல் நுனிக்கால் ஊன்றி நின்று அவன் சுற்றிலும் பார்த்தான். “உரகங்கள்” என்றார் கர்க்கர். “ஆனால் அவை எங்களை தீண்டுவதில்லை. எங்களுடன் வந்திருப்பதனால் தாங்களும் பாதுகாக்கப்பட்டவரே.” பாறையில் இருந்து பிறிதொரு பாறைக்குத் தாவி சமன்பெற்றுநின்ற அர்ஜுனன் “இவை உண்ணுவது எதை?” என்றான்.

“இந்தச் சிற்றாறு மீன்களாலும், தவளைகளாலும் நிறைந்தது. உணவு உண்பதற்காக காடுகளில் இருந்து இவை வந்தபடியே உள்ளன” என்றார் கர்க்கர். பாறைகளை அலைத்து நுரையோசையுடன் கடந்துசென்ற ஆற்றின் ஒலியில் இலைகளுக்கு அப்பால் அர்ஜுனன் பார்த்தான். நீர் விளிம்புகள் முழுக்க பாம்புகள் நெளிந்து இரை தேடின. நீரில் இறங்கி அலைகளுடன் வளைந்து நீந்திச் சென்றன. இருண்ட நீர்ப்பரப்பெங்கும் கருவூலத்தின் வெள்ளி நாணயப் பெட்டியைத் திறந்ததுபோல் மீன்கள் நீந்தின.

பாறைகளை இணைத்து போடப்பட்டிருந்த பெரிய தடிப்பாலம் வழியாக உலூபி முதலில் நடக்க அர்ஜுனன் தொடர்ந்தான். அவனுக்குப் பின்னால் கர்க்கர் வந்தார். மறுகரையின் சரிவுப் பாறைகளிலும் வேர்களுடன் கலந்து நெளிந்த பாம்புப்பரப்பே கண்ணுக்குப்பட்டது. அவை கொண்ட ஓசையின்மையே அவற்றை உயிர்களல்ல என்றாக்கியது. ஓசையே உலகம். ஓசையின்மையின் ஆழத்திலிருந்து ஊறிவந்தவை அவை. விண்ணின் இயல்பு ஓசை என்கின்றன நூல்கள். ஆகவேதான் இவை விண்ணொலியை அஞ்சுகின்றன போலும்.

சற்று ஏறிச்சென்ற பாதையின் முடிவில் கூடிநின்ற நாகர்குலச் சிறுவர்களை அர்ஜுனன் கண்டான். தோலாடை அணிந்து நாகபட ஆரம் கழுத்திலிட்டு கைகளில் மரப்பாவைகளை ஏந்தி விழிவிரித்து அவனை நோக்கி நின்றனர். “அவர்கள் மானுடரைக் கண்டதில்லை” என்றார் கர்க்கர். “மானுடர்களும் நாகர்களைப்போல் கை கால்களைக் கொண்டவர்களே என்று இப்போது அறிந்திருப்பார்கள்” என்றான் இன்னொருவன்.

அர்ஜுனன் உள்ளே நுழைந்தபோது விரல் தொட்ட சுனையின் மீன்கள்போல் குழந்தைகள் விலகி ஓடி புதர்களுக்குள் மறைந்தனர். அங்கு நின்று நோக்கியபோது ஐராவதீகத்தின் இல்லங்களை ஒற்றைநோக்கில் அவன் கண்டான். “இவையா இல்லங்கள்?” என்று திரும்பி கேட்டான். “இவை உங்களால் கட்டப்பட்டவையா?” மூன்றுஆள் உயரக் கரையான் புற்றுகள் போல எழுந்து நின்றன அவ்வில்லங்கள். கவர் விரித்துப் பரவிய உருளைக்கூம்புகள். மழை ஒழுகிய தடம் கொண்டவை. இறுகிய தொன்மையான மண் அவற்றை அடிமரமென்று மயங்கச்செய்தது.

“இல்லை, இவை உண்மையான சிதல் புற்றுகள். மானுடன் இத்தனை உறுதியுடனும் அழகுடனும் இவற்றை அமைக்க முடியாது என்றார்” கர்க்கர். “தலைமுறைகளுக்கு முன் எங்கள் மூதாதையர் இங்கு குடியேறியபோது இவற்றைக் கைக்கொண்டு இல்லங்களாக ஆக்கிக்கொண்டனர்.” அவற்றினுள்ளே எப்படி நுழைவது என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். “நாகர்கள் அவற்றுக்குள் நுழைந்து உள்ளறைகளுக்குள் வாழும் கலையை இளமையிலேயே அறிந்திருக்கிறோம். மானுடர் உள்ளே செல்லமுடியாது” என்று கர்க்கர் சொன்னார்.

“நடுவே உயர்ந்து நின்ற பெரிய புற்று பத்து ஆள் உயரமிருந்தது. “நூற்றெட்டு கரவுப்பாதைகளும் எண்பத்தேழு உள்ளறைகளும் கொண்டது அது. முன்பு இந்த ஒரு புற்றே இருந்தது. இன்று அது எங்கள் அரண்மனை” என்றார் கர்க்கர். புதர்களிலிருந்து குழந்தைகள் எழுந்து அர்ஜுனனை நோக்கின. அச்சம் தெளிந்த சில குழந்தைகள் மேலும் அணுகின. அக்கையரின் இடையிலிருந்து சில குழவியர் அவனை நோக்கி கைசுட்டி இனிய ஒலியெழுப்பின.

அர்ஜுனன் திரும்பி ஒரு குழந்தையை நோக்க அது நாணம்கொண்டு தனது அக்கையின் தோள்மேல் முகம் புதைத்தது. தோல் ஆடையால் முலைமறைத்த நாகர் குலப் பெண்கள் மரங்களிலிருந்தும் புற்றில்லங்களின் மறைவுகளிலிருந்தும் அவனைச் சூழ்ந்தனர். உலூபி “அரசரை சந்தித்து முறை செய்க!” என்றாள். அர்ஜுனன் “அவ்வண்ணமே” என்றான்.

நாகர்களில் ஒருவன் தன் இடையில் இருந்த மூங்கில் குழாய் ஒன்றை வாயில் வைத்து பேரொலி ஒன்றை மூம்முறை ஒலித்தான். அனைவரும் அந்த மையப்பெரும்புற்றை நோக்க, அதன் சிறிய வாய் வழியாக உடல் நெளித்து பசுவின் வாயிலிருந்து நாக்கு வெளிவருவதுபோல் முதியவர் வெளிவந்தார். அவர் அணிந்திருந்த பொன்னாலான நாகபட மணிமுடியைக் கண்டு அவரே நாகர்களின் அரசர் கௌரவ்யர் என்பதை அர்ஜுனன் உணர்ந்தான்.

“ஐராவதீகத்தின் தலைவரை இந்திரப்பிரஸ்தம் ஆளும் மாமன்னர் யுதிஷ்டிரரின் தம்பியும் அரச தூதனுமாகிய பார்த்தன் வணங்குகிறேன். தங்கள் நிலத்தில் தங்கள் ஆணைக்குப் பணிகிறேன்” என்றான். அவரது உடல் முதுமையில் சுருங்கியிருந்தது. பாம்புத்தோல் என செதில்கள் மின்னின. பழுத்த விழிகள் இமைப்பு ஒழிந்திருந்தன. அப்போதுதான் கர்க்கர் முதலிய நாகர் அனைவரிலும் இருந்த மானுடம்கடந்த தன்மை என்ன என்று அவன் அறிந்தான். அவர்கள் எவரும் இமைக்கவில்லை.

வெளிவந்த முதியவர் அவனை கைதூக்கி வாழ்த்தியபடி வந்து அங்கு போடப்பட்டிருந்த கற்பீடங்கள் ஒன்றில் அமர்ந்தார். அவரது குலத்தவரில் ஆண்கள் மட்டுமே அவருக்கு தலைவணங்கினர். குழந்தைகள் அவரை அணுகி இயல்பாக அவரது மடியில் ஏறியமர்ந்துகொண்டனர். பெண்கள் அவருக்குப்பின்னால் திரண்டு கூர்ந்த விழிகளுடன் அவனை நோக்கினர்.

“எங்கள் எல்லைக்குள் மானுடர் இதுவரை வந்ததில்லை” என்றார் கௌரவ்யர். “உன்னை என் மகள் கொண்டுவந்தாள் என்று அறிந்தேன். என்குடியில் மானுடர் மகற்கொடை கொள்ள மூதாதையர் ஒப்புதல் இல்லை” என்றார். அவருக்குப்பின்னால் நின்ற பெண்கள் ஆம் என முனகினர். “நீ அவளை கண்டிருப்பாய். மானுடராகிய உங்களைப்போல் அவள் இமைப்பதில்லை.”

அர்ஜுனன் திரும்பி நோக்க அவள் விழிகள் இமைப்பின்றி இருப்பதைக் கண்டான். ஆனால் அவள் விழிகள் முன்பு மானுடவிழிகளாகவே இருந்தன என நினைவுகூர்ந்தான். “அவள் எடுத்த முடிவு அது” என்றான். “மானுடனே, எங்கள் உடலின் குருதி நஞ்சாலானது. எங்கள் கைநகம் கீறினால் நீ நஞ்சுண்டு இறப்பாய்…” என்றார் கௌரவ்யர்.

“அதையும் அவளே முடிவெடுத்தாள். நான் அவள்பொருட்டு இறக்கவும் சித்தமாகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “மூடா, நீ அவளை கொள்வதென்பது அவள் முடிவல்ல. இக்குலம் காக்கும் மூதன்னையரின் முடிவு” என்று கௌரவ்யர் சினத்தால் நடுங்கும் தலையுடன் கைநீட்டி சொன்னார். சூழநின்றவர்களில் பாம்புகளின் அசைவென ஓரு நெளிவு ஓடுவதை அவன் கண்டான்.

அர்ஜுனன் “மூதன்னையர் ஒப்புதல்கொள்ள நான் இயற்ற வேண்டியது என்ன?” என்றான். “முன்பொருமுறையும் இவ்வண்ணம் நிகழ்ந்ததில்லை. எனவே எங்கள் மூதன்னையரை இங்கு வரவழைப்போம். அவர்களிடம் கேட்போம்” என்றார். “நான் அவர்களை சந்தித்து அடிபணிகிறேன்” என்றான் அர்ஜுனன். “அவர்கள் இங்கில்லை. இந்த மண்ணுக்கு அடியில் காட்டின் வேர்ப்பரப்புகளில் உடல் பின்னி தங்கள் உலகில் வாழ்கிறார்கள்” என்றார் கௌரவ்யர்.

“இன்று உணவுண்டு எங்களுடன் உறைக! இரவு இங்கே நாங்கள் நிகழ்த்தும் பெருங்கொடைக் களியாட்டில் எங்கள் மூதாதையர் எழுவார்கள். அவர்கள் ஆணையிடட்டும், உனக்குரியது எங்கள் நஞ்சா குலமகளா என்று.” அர்ஜுனன் “ஆணைக்குப் பணிகிறேன்” என்றான்.

நூல் எட்டு – காண்டீபம் – 13

பகுதி இரண்டு : அலையுலகு – 5

அணுகும்தோறும் விரிந்து வட்டச்சுழல் பாதையில் பெருவிசையுடன் சுழற்றி தன்னை உள்ளிழுத்த அக்கரிய பெருந்துளை ஒரு வாய் என அர்ஜுனன் எண்ணினான். அங்கு சென்றவை அனைத்தும் முடிவற்ற நீள் கோடென இழுபட்டன. அதன் நடுவே இறுகிச் செறிந்து ஒளியென்றே ஆன இருட்டு முனை கொண்டிருந்தது. மாமலைகளை அணுவென ஆக்கி தன்னுள் ஆழ்த்திக் கொண்டிருந்தது. ஒரு கணமோ நூறு கோடி யுகங்களோ என மயங்கும் காலம் அங்கே புல் நுனிப் பனித்துளி போல் சொட்டி நின்றிருந்தது.

அப்பால் மீண்டும் அப்பால் என அதை நோக்கி அணுகலோ விலகலோ இன்றி நின்றிருந்த இறுதிக் கணத்தை உணர்ந்தபின் அவன் விழித்துக் கொண்டபோது ஒரு காட்டின் சேற்று மண்ணில் மல்லாந்து படுத்திருந்தான். தலைக்கு மேல் மரக்கிளைகளின் இலையடர்வினூடாக வந்த ஒளி வெள்ளிச் சரடுகளென நீண்டு இளம்பச்சை வட்டங்களென புல்லிலும் இலையிலும் விழுந்து ஊன்றி நின்றிருந்தது. ஒளிக்கு கூசிய கண்கள் நீர்வழிய, எங்கிருக்கிறோம் என தேடித் தவிக்கும் மேல் மனம் ஒன்றன் மேல் ஒன்றென அலையடித்த ஆழ்மனத்து கனவுகளின் மீது தத்தளித்து தத்தளித்து பிடியொன்றை அடைந்து இங்கே இக்கணம் என்று தன்னை உணர்ந்தது.

அருகே ஓர் இருப்பை தன் உடலால் உணர்ந்தவனாக கை நீட்டி தன் வில்லுக்காகத் துழாவி அது இல்லையென்று அறிந்த கணமே நிகழ்ந்ததனைத்தையும் உணர்ந்து புரண்டெழுந்து கால் மடித்து அமர்ந்து எதிரே முழந்தாளிட்டு அமர்ந்திருந்த பெண்ணை நோக்கினான். மான்தோல் ஆடையை உடல் சுற்றி, கழுத்தில் கல்மணி மாலையும் காதுகளில் நாகபடத் தோடும் அணிந்து சிறிய கூரிய விழிகளால் அவனை நோக்கிக் கொண்டிருந்த அவள் அவ்வசைவில் சற்றும் திடுக்கிடவில்லை. பழுத்த மாவிலையின் பொன்னிறம் கொண்ட அவள் தோள்களில் நாக படங்கள் பச்சை குத்தப்பட்டிருந்தன. நாகச்சுருள்கள் புயங்களில் வளைந்து முழங்கையில் வால்நெளித்தன. நெற்றியில் நீள்பொட்டு என நாநீட்டி படம் விரித்த சிறு நாகம்.

“அஞ்சவேண்டியதில்லை இளவரசே” என்றாள் அவள். “யார் நீ?” என கேட்டபடி கை நீட்டி தரையில் கிடந்த சப்பையான கல்லொன்றை தொட்டான். “படைக்கலங்கள் தேவையில்லை. நான் உங்கள் எதிரி அல்ல” என்று அவள் சொன்னாள். “இக்காட்டை ஆளும் நாகர் குலத்தலைவன் கௌரவ்யரின் மகள் உலூபி நான்.” அர்ஜுனன் “நீருக்குள் வந்து என் கால் பற்றியவள் நீயா?” என்றான். “ஆம், தங்களை இங்கு கொண்டுவந்தேன்” என்றாள். அவள் விழிகளை நோக்கி “ஏன்?” என்றான். “நான் விழையும் ஆண்மகன் என உங்களை உணர்ந்தேன்” என்றாள் உலூபி.

“பெண்களால் சிறைபிடிக்கப்படுவதை நான் விரும்புவதில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். அவள் புன்னகைக்க சற்றே சினம்கொண்டு “நான் யார் என்று அறிவாயா?” என்றான். அவள் “நீங்கள் இக்காட்டிற்குள் நுழையும்போதே நான் பார்த்துவிட்டேன். இந்திரப்பிரஸ்தத்தின் இளைய பாண்டவர். எங்கள் குலப்பாடகரும் உங்கள் புகழை பாடுவதுண்டு. என் நெடுந்தவம் கனிந்தே இக்காட்டிற்குள் நீங்கள் கால் வைத்தீர்கள் என்றுணர்கிறேன்” என்றாள். அர்ஜுனன் திரும்பி அடர்காட்டை நோக்கினான். “இக்காட்டிற்குள் மானுடர் எவரும் இல்லை என்றல்லவா சொன்னார்கள்?”

அவள் “நாங்கள் மானுடரல்ல. பாரத வர்ஷம் என்று நீங்கள் சொல்லும் நிலத்தை நிறைத்துள்ள மானுடர் எவருடனும் நாங்கள் இல்லை” என்றாள். “இளையவளே, உன் விழைவை போற்றுகிறேன். ஆனால் இங்கு மணம் கொள்வதற்காக நான் வரவில்லை. என் உள்ளம் நிறைந்த பிறிதொருத்தி இருக்கிறாள்” என்றான். உலூபியின் கண்கள் சற்று மாறுபட்டன. “ஆம், அதையும் அறிவேன். ஐந்தில் ஒரு பங்கு” என்றாள். அர்ஜுனன் அக்கணம் தன்னுள் எழுந்த எரிசினம் எதற்காக என்று தானே வியந்தான். “நன்று! அரசியல் அறிந்துள்ளாய். என்றேனும் ஒரு நாள் இக்காட்டிற்குள் நாகர்கள் அரசமைப்பார்கள் என்றால் முடி சூடி அமரும் தகுதி கொண்டுள்ளாய். வாழ்க!” என்றபின் திரும்பி நடந்தான்.

அவள் அவன் பின்னால் வந்தாள். “நில்லுங்கள்! இக்காட்டிலிருந்து எனது துணையின்றி நீங்கள் மீள முடியாது. நீங்கள் வழியறியாதிருக்கவேண்டும் என்றே நீருள் வந்து கால் பற்றி இழுத்துக் கொண்டு வந்தேன்” என்றாள். அர்ஜுனன் புன்னகைத்து “எவ்விடத்திலேனும் சென்றடைய எண்ணுபவனே வழி பற்றி துயர் கொள்வான். சென்று கொண்டே இருப்பதை மட்டும் இலக்காகக் கொண்டவன் நான். என் கால்கள் செல்லுமிடமே என் வழி” என்றான். அவளை நோக்கி தலையசைத்தபின் இலைசெறிந்த கிளைகளை மெல்ல விலக்கி நடந்தான். அவனுக்குப் பின்னால் மீண்டும் வந்து இணைந்துகொண்டன அவை. அவன் காலடியோசை காட்டில் நாடித்துடிப்பு போல ஒலித்தது.

“இளைய பாண்டவரே, காதல் என்ற ஒன்றை இவ்வாழ்வில் நீங்கள் அறியவே போவதில்லையா என்ன?” என்று உலூபி கேட்டாள். எளிய காட்டுமகளின் கேள்வி அது என்று சித்தம் உணர்ந்த அக்கணமே தன் ஆழம் கோல் கொண்ட பெருமுரசென அதிர்வதை அர்ஜுனன் உணர்ந்தான். திரும்பி “என்ன சொன்னாய்?” என்றான். “இப்புவியில் அல்லது அவ்விண்ணில் பிறிதெவரையும் உங்களுக்கு நான் நிகர் வைக்கவில்லை. உடல் கொண்டு இங்கு வாழும்கணம் வரை நீரன்றி பிறிதெதுவும் என் உடல் நோக்கப்போவதில்லை. உயிர் நீத்தபின் நெருப்பு மட்டுமே அதை அறியும். உங்களுக்கு மட்டுமே என பூத்த ஓர் உள்ளத்தின் காதலை இதுவரை நீங்கள் அறிந்ததில்லை. இன்று உங்கள் முன் அது நின்றிருக்கையில் உதறி மேற்செல்ல முடியுமென்றால் அவ்வண்ணமே ஆகுக!”

கனிவும் உறுதியும் ஒருங்கே தெரிந்த அவ்விழிகளை நோக்கி சில கணங்கள் நின்றபின் ஏதோ சொல்ல வந்து அச்சொல் தன்னுள் அப்போதும் திரளாமையை உணர்ந்து தலையை அசைத்து அர்ஜுனன் திரும்பி நடந்தான். செறிந்த புதர்களை கைகளால் விலக்கி தலை தொட்ட விழுதுகளைப்பற்றி ஊசலாடி கிளைகளில் கால்களால் தொற்றி மறுபக்கம் தாவி சென்றான். பறவைகளின் ஓசையிலிருந்து பொழுதறிந்தான். ஒளி சாய்ந்த கோணத்தில் திசை தேர்ந்தான். கங்கை மேற்கே இருக்கும் என்று நிலம் சரியும் விதம் நோக்கி உய்த்தான். பொழுது இருளும்போது கங்கையின் கரைச்சதுப்பை அடைந்திருந்தான்.

கங்கை நோக்கி சென்றுகொண்டிருந்த சிற்றோடைகளின் நீர் இருண்டிருந்தது. பல்லாயிரம் தவளைக் குரல்களாக அந்தி எழுந்து வந்து சூழ்ந்தது. அவன் உடல் வெக்கை கொண்டு எரிந்தது. கழுத்திலும் விலாவிலும் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி சேற்று விளிம்பில் வந்து நின்றான். தெப்பமொன்றைக் கட்டி கங்கையில் இறங்கி கிளம்பிச் செல்வதென்று முடிவெடுத்தான். மரக்கிளைகளை வெட்டுதற்கோ கொடிகளை அறுத்து வடமாக்குவதற்கோ அவனிடம் உலோகம் ஏதும் இருக்கவில்லை என்றறிந்து நீர்க்கரையில் செயலற்று நின்றான்.

விடிந்தபின்பன்றி அங்கிருந்து செல்லமுடியாது என்று எண்ணியதுமே துரோணரின் குரல் நினைவிலெழுந்தது. ஒவ்வொருநாளும் விடியும் முதற்கணத்தில் அருகே வரும் தினி என்னும் தெய்வம் முடிவெடுக்கிறது ஒருவன் எங்கு மாலையில் உறங்கவேண்டும் என்று. நிசி என்னும் தெய்வத்திடம் அவனை கையளித்துவிட்டு மறைகிறது. தினி அறிவின் தெய்வம். நிசி உணர்வுகளுக்குரியவள். தினி வெண்மயில்மேல் ஏறியவள். நிசி கருநிறப் பருந்தில் அமர்ந்தவள். தினி மண்ணில் நடப்பவள். நிசி இருண்ட முகில்களின் மேல் ஏறி வான் முடிவின்மையை அளப்பவள்.

நீர் இருண்டபடியே வந்தது. காடு விழியில் இருந்து மறைந்து பல்லாயிரம் ஓசைகளின் பெருக்கென அவனை சூழ்ந்தது. கரையோரத்து ஆலமரமொன்றின் விழுதில் தொற்றி ஏறி கவண்கிளையொன்றில் கால் நீட்டி அமர்ந்தான். அவ்வழி நீள எதையும் உண்டிருக்கவில்லை என்று பசித்தபோதே உணர்ந்தான். கங்கையில் இறங்கி விடாய் தீர்க்கவும் மறந்திருந்தான். அருகிலேயே பலாப்பழம் பழுத்திருப்பதை நறுமணம் சொல்லியது. இறங்கிச்சென்று பசியாறவும், விடாய் தீர்க்கவும் உடல் விழைந்ததென்றாலும் உள்ளம் சலித்து விலகி நின்றது. தன் விடாயை பசியை பிறிதெவருடையதோ என நோக்கியபடி உடலருகே நின்றிருந்தான்.

எண்ணங்கள் பிசிறுகளென சுழன்று அமைந்து ஏதோ காற்றில் திகைத்து எழுந்து ஆறுதல் கொண்டு மீண்டும் அமைந்து எழுந்தன. நெடுந்தூரம் வந்துவிட்டதை உடற்களைப்பு காட்டியது. ஆனால் வந்த வழி ஒரு காட்சியெனக்கூட நினைவில் எஞ்சவில்லை என்றுணர்ந்தான். ஒரு கணத்திற்கு அப்பால் இருந்தது அவன் தொடங்கிய இடம். அங்கே அவள் நின்றிருந்தாள். ஒரு கணம். அங்கிருந்து இங்கு வரை அவனைக் கொண்டு வந்தது ஓர் எண்ணம் மட்டுமே. ஓர் எண்ணம் என்பது ஒரு கணம். என்ன எண்ணம்? விலகு விலகு என்னும் ஒற்றைச் சொல்லால் அன்றி அவ்வெண்ணத்தை மீட்க முடியவில்லை. நூறு நூறாயிரம் சொற்களில் இடைவிடாது பகலெங்கும் அலையடித்தது அவ்வொற்றைச் சொல் மட்டுமே.

உடல் சலித்து புரண்டு அமர்ந்தான். கண்களை மூடி தன் உள்ளத்தின் ஒவ்வொரு மூடிய கதவாக திறந்து நோக்கினான். எதை அஞ்சி ஓடி வந்தேன்? அஞ்சவில்லை. இங்கெனக்கு ஏதுமில்லை என்றுணர்ந்து திரும்பினேன். இல்லை, அஞ்சி ஓடினேன். புண்பட்ட விலங்கின் விரைவு கொண்டிருந்தேன். எதை அஞ்சினேன்? அஞ்சுவது நானா? அச்சமின்மை என்பதே முதல் மறை எனக்கொண்ட அஸ்தினபுரத்து பார்த்தன் நான். அஞ்சினேன் அஞ்சினேன் என்று அவனுள் பிறிதொருவன் சொல்லிக் கொண்டிருந்தான். சினந்து திரும்பி அவன் தோள்பற்றி “சொல்! எதை அஞ்சினாய்” என்றான் பிறிதொருவன். “நீ நன்கறிந்த ஒன்றையன்றி பிறிது எதை அஞ்ச முடியும்?” என்றான் பிறிதொருவன். நன்கறிந்த ஒன்றை, சொற்களில் நீ புதைத்து விட்ட ஒன்றை…

அவன் எழுந்து ஆலமரக்கிளையில் நின்றான். திமிறும் எண்ணங்களுடன் அமர்ந்திருக்கலாகாது. இக்கணம் தேவை ஒரு புரவி. மரக்கிளைகள் அறைந்து விலக, கூழாங்கற்கள் தெறித்து பின்னால் பாய, காற்று கிழிபட்டு இருபக்கமும் விலக, திசையற்ற வெளி ஒன்றை நோக்கி விரையவேண்டும். அல்லது ஒழியாத அம்பறாத்தூணியொன்று, நாணொலிக்கும் வில்லொன்று, விழிமுதல் கால்பெருவிரல் வரை உடல்விசை அனைத்தையும் ஒருங்கு குவிக்கும் இயலாஇலக்கு ஒன்று வேண்டும். எத்தனை ஆயிரம் இலக்குகளின் ஊடாக என்னை தொகுத்துக் கொண்டிருக்கிறேன்! சிதறிப்பரவும் சித்தம். வெண்பளிங்கில் விழுந்த நீர்த்துளி. குவித்து ஒன்றாக்கி மீண்டும் குவித்து துளியாக்கி அதை நோக்கி நின்றிருக்கிறேன்.

விண்மீன்களை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. கண் மூடி அமர்ந்தபோது இடைவெளியின்றி விண்மீன் செறிந்த வான் நினைவில் எழுந்தது. சில கணங்களுக்குள்ளேயே விண்மீனைப் பார்க்காமல் இருக்க முடியாது என்று தோன்றியது. விழுதுகளை பற்றிக்கொண்டு மரத்தின்மேல் ஏறினான். கிளைகளில் கூடணைந்த பறவைகள் கலைந்து எழுந்து இலைகளினூடாக சிறகுரச பறந்து குரலெழுப்பின. உச்சி மரக்கிளை ஒன்றை அடைந்து வானை ஏறிட்டு நோக்கினான். முற்றிலும் இருண்டிருந்தது. விழிகளை சுழற்றி இருளின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லைவரைக்கும் விழியோட்டினான். வெறும் இருள்.

அது வானல்ல என்று தோன்றியது. பல்லாயிரம் நாகங்கள் தலைகீழாக தொங்கும் ஒரு பெருவெளிநெளிவு இக்காடு. அவை உதிர்ந்து சென்றடையும் அடியிலா இருள் அவ்வானம். அவ்வெண்ணமே அவனை மூச்சுத்திணற வைத்தது. பிடி நழுவி கிளைகளிலிருந்து கீழே விழுந்துவிடுவோம் என்று எண்ணினான். விழுதொன்றை எடுத்து தன் உடலுடன் சுற்றி கட்டிக் கொள்ள வேண்டும். தொலைவில் என எழுந்து கொண்டிருந்த தவளையின் இரைச்சலை நினைவு கூர்ந்தான். வானம் முகில்மூடி இருக்கும். தவளைக் குரலை வைத்துப்பார்த்தால் பெருமழை பொழியப்போகிறது. பெருங்கடல்கள் எழுந்து வானமாகி அலையின்மையாகி அசைவின்மையாகி நின்றிருக்கின்றன.

அங்கு அமர்ந்தபடி கைகளை கட்டிக் கொண்டு மேலே நோக்கிக் கொண்டிருந்தான். எந்தையே, அங்கிருக்கிறீர்களா? நினைவறிந்த நாள் முதல் உங்களை என் தந்தை என்று எண்ணியிருக்கிறேன். உங்கள் கைவிரல் தொட்டு கண்மலர்ந்திருக்கிறேன். வெண்முகில்களிறு மேல் மின்னல் படைக்கலம் ஏந்தி செஞ்சுடர் மணிமுடி சூடி எழுகிறீர்களா? உங்கள் பெருமுரச முழக்கத்தை கேட்க விழைகிறேன். வான் கிழித்தொரு கணம் உங்கள் ஒளிர்படைக்கலம் எழக்காண வேண்டும் நான். எந்தையே எங்குளீர்?

இந்தத் தனிமையில் நான் எதை எண்ணி இங்கு காத்திருக்கிறேன்? எண்ணங்கள் ஊறி நிறைந்து உடல் எடை கொண்டது. அவ்வெடை தாளாது அமர்ந்திருந்த கிளை கூட தழைவதாக உளமயக்கெழுந்தது. நீர்வீங்கி உடையும் அணைக்கட்டை இரு கைகளாலும் உந்திப்பற்றி உடல் நெருக்கி நின்றிருக்கிறேன். ஒவ்வொரு கல்லாக பிளவுண்டு நெறிந்து இளகும் ஒலியை கேட்கிறேன். கணம் கணம் என அத்தருணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். இப்போது நான் செய்யக்கூடுவதொன்றே. என் கையை விலக்குவது. நிகழ்க என்றொரு ஒற்றைச்சொல்லுடன் நின்றிருப்பது. என் ஆணவம் என்னை தடுக்கிறது. அல்லது அச்சமா? இரண்டுமில்லை. உருவழிந்து இல்லாமல் ஆவதை எண்ணி அடையும் பதற்றம் அது.

இப்புவியில் உள்ளவை அனைத்தும் வானை அஞ்சுகின்றன. இவ்வனைத்தையும் அள்ளிப்பற்றி விளிம்புகளை கரைத்தழித்து தன்னுள் கரந்துகொள்ள விழையும் பேராற்றலுடன் கவிந்திருக்கிறது வானம். நான் நான் நான் என்று இங்குள்ள ஒவ்வொன்றும் ஓலமிடுகின்றன, அவ்வொற்றைச் சொல்லில் அனைத்தையும் அள்ளி இழுத்துக் குவித்து தானென்றாக்கி நின்றிருக்கின்றன. அச்சொல் பல்லாயிரம் சரடுகளின் ஒரு முடிச்சு. அது அவிழும் கணம் உருவழிகிறது. வான் விளிம்பென எழுந்த மெல்லிய கோடு கலைகிறது. குடவானம் மடவானம் என்றாகிறது.

இரு கைகளாலும் கண்களை அழுத்தி குனிந்து அமர்ந்திருந்தான். சில கணங்கள் மை நிற இருளை கைகளால் அள்ளி வழித்து விலக்கியபடி எங்கோ செல்வது போல் இருந்தது. எவரோ ஒருவர் தோள்தொட்டு அழைப்பது போல. பல்லாயிரம் கைகள் அவனை அள்ளித்தூக்கிக் காற்றில் வீசிப்பிடித்தன. மானுடக் குரல்களின் பேரோசை. அலையடிக்கும் கைகளின் காடு. எழுந்தமைந்து அதன்மேல் அலைக்கழிந்தான். விழித்தபோது கீழே காட்டுக்குள் கிளைகளை உலைத்து இலையோசை எழுப்பியபடி காற்று சுழன்றடிப்பதை உணர்ந்தான்.

மீண்டும் அக்கனவை நனவில் கண்டான். மதலையென சிறுகையில் வில்லெடுத்து அடைந்த முதல் இலக்கு. புகழ் என்னும் வெண்களிறு மீது ஏறி அமர்ந்த நாள். பின்பு ஒரு போதும் அவன் இறங்கியதில்லை. அன்று அரண்மனைக்கு மீளும்போது தேரில் தனித்து அமர்ந்து தலை குனிந்து எதையோ எண்ணிக் கொண்டிருந்தான். அருகே மாலினி அமர்ந்திருந்தாள். “வென்றீர் இளவரசே! இந்நகரை. இப்பாரதப் பெருநிலத்தை” என்றாள். “இந்திரனின் மைந்தர் நீங்கள். இப்புவியில் இன்று வில்லெடுத்து உங்கள் நிகர் நிற்க எவருமில்லை.”

அவன் தலைநிமிரவில்லை. குனிந்து அவனை நோக்கி “ஏன் துயருற்றிருக்கிறீர்கள்?” என்றாள். “விலகு” என்று சொல்லி அவள் கையை எடுத்து வீசினான். “ஏன் இளவரசே?” என்றாள். “என்னைத் தொடாதே” என்றான். “ஏன்?” என்றாள். “தொடாதே” என்று கூவியபடி எழுந்தான். “சரி, தொடவில்லை” என்று சொல்லி அவள் கையை விலக்கி தேரின் மறு எல்லைக்கு நகர்ந்தாள். சினத்துடன் அவளை நோக்கியபடி தேர்த்தூணைப்பற்றியபடி நின்றான். சகடங்களின் நகர்வில் அவன் உடல் அசைந்தது. கல்லொன்றில் ஆழி ஏறி ததும்ப சற்று நிலைதடுமாறினான். “அமருங்கள் இளவரசே” என்றாள். அவன் பார்வையை திருப்பிக் கொண்டான்.

“அமருங்கள் என் அரசே” என்றாள். மெல்ல அமர்ந்து கொண்டு தலை குனிந்தான். அவளுடைய நோக்கை தன்னுடலில் உணர்ந்தான். பின்பு “நீ வேறு எவரையாவது பெரிதென நினைப்பாயா?” என்றான். “என்ன கேட்கிறீர்கள்?” என்றாள் மாலினி. “எனக்கு நிகரென பிறிதெவரும் உண்டா உனக்கு?” என்றான். “இளவரசே, நான் உங்கள் செவிலி. உங்களை அன்றி பிறிதெவரையும் எண்ணாதிருக்க கடமைப்பட்டவள்.” அவன் தலைதூக்கி “நான் வளர்ந்தால்?” என்றான். அவ்வினாவை அவள் அதுவரை எதிர்கொண்டதில்லை. “சொல்! நான் வளர்ந்தால் நீ என்ன செய்வாய்? வேறொரு குழந்தையை வளர்ப்பாயா?”

மாலினியின் முகம் மாறியது. “இல்லை வளர்க்கமாட்டேன்” என்றாள். “வேறு எவரையாவது…” என்று சொன்னபின் அவன் சொல் சிக்கிக் கொண்டு நிறுத்தினான். “இல்லை இளவரசே” என்று சொன்னாள். இருவிழிகளும் தொட்டுக் கொண்டபோது அவன் எண்ணிய அனைத்தையும் அவள் பெற்றுக் கொண்டாள். “இளவரசே, இப்புவியில் நான் வாழும் காலம்வரை எவ்வடிவிலும் பிறிதொரு ஆண்மகன் எனக்கில்லை” என்றாள். அச்சொற்கள் மேலும் சினத்தை அவனுக்கு ஊட்டின. தலை திருப்பி பந்தங்கள் எரிந்த அஸ்தினபுரித் தெருக்களை நோக்கினான். அவள் கை நீண்டு வந்து அவன் தோளைத் தொட்டது. அப்போது அதை எதிர்க்கத் தோன்றவில்லை. மெல்ல அவனை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

நீள்தொலைவில் மெல்லிய செருமலோசை போல் இடி முழங்கியது. முகில் சரிவுகளில் உருண்டுருண்டு மேலும் நெடுந்தொலைவில் எங்கோ விழுந்து மறைந்தது. தன்னருகே இலைப்பரப்புகள் மெல்லிய ஒளி கொண்டு மறைந்ததை அர்ஜுனன் கண்டான். மான்விழிகள். மதலைஇதழ்கள். மீன்கள். குறுவாட்கள். அரவுச்சுருள்கள். மீண்டும் ஒருமுறை அவை மின்னி அணைந்தன. கன்றின் நாக்குகள். கனல்பட்ட வேல்முனைகள். திரும்பி கீழ்த்திசையை நோக்கினான். இருள்வெளி அசைவின்றி காத்திருந்தது. கணங்கள் ஒவ்வொன்றாக கடந்துசெல்ல ஒரு முகில்குவை ஒளிர சுடர் ஒன்றை எவரோ சுழற்றி அணைத்தனர். அப்பால் இடியோசை ஒன்று பிறிதொன்று என தொட்டு திசைச்சரிவில் இறங்கிச்செனறது.

‘பிறிதொன்றிலாத’ என்ற சொல்லை அவன் அடைந்தான். யார் சொன்னது? மிக அண்மையில் எவரோ அவனிடம் சொன்னார்கள். பிறிதொன்றிலாத, பிறிதொன்றிலாமை, பிறிதொன்று, பிறிது… பிறன் என்பதைப்போல் நச்சு நிறைந்த கோப்பை உண்டா என்ன? பிறிது என்னும் சொல்லைப்போல் இரக்கமற்றது எது? பிறிதொன்றிலாமை, பிறிதொன்றிலாமை. அவன் உடல் நடுங்கத்தொடங்கியது. கண்களை மூடிக் கொண்டான். இமைக்குள் செங்குருதி அனலென பற்றி ஒளிவிட்டு அணைந்தது. குருதி ஒளிரும் குளம் ஒன்றில் முழுகி எழுந்தது போல் இமைக்குள் ஒளிக் கொப்பளங்கள் மின்னிச் சுழன்று பறந்தன.

மறுகணம் அவன் தலைக்கு மேல் பேரொலியுடன் வானம் வெடித்துக் கொண்டது. ஒலியில் மரங்கள் அதிர முடியுமென்று அன்றறிந்தான். சிலிர்த்து அதிர்ந்த அவன் உடல் அடங்குவதற்குள் மொத்தக் காடும் ஒருகணம் ஓசையின்றி அவன்முன் தெரிந்தது. பின் முகிற்குவைகளனைத்தும் பெரும்பாறைகளென மாறி மண்ணுக்கு வந்து மண்ணை அறைந்து உருண்டு செல்வதைப் போல் இடியோசைகளால் அவன் சூழப்பட்டான். தன்னுணர்வு மீண்டபோது நெஞ்சில் கைவைத்து “எந்தையே!” என்று அவன் கூவினான். “எந்தையே! எந்தையே!” என்று அரற்றிக் கொண்டிருந்தான்.

அப்பால் இருளுக்குள் இலைகளின் மீது மழைத்துளிகள் அறையும் ஓசை கேட்டது. பறவைகள் உடல் இறுக்கி குஞ்சுகளை அணைத்துக் கொள்ளும் குறுகல்கள். மழை கொண்ட காடு ஓலமிட்டது. சூடுஏறும் அடுப்புக்கலத்து நீர் போல. பின்பு அம்புகளென அவனைச் சூழ்ந்து இலைகளனைத்தையும் தைத்து அதிரவைத்தபடி மழை கடந்து சென்றது. ஒரு கணத்தில் முற்றிலும் குளிர்ந்துவிட்டான். தாடியிலும் தலை முடியிலும் வழிந்த நீர் சொட்டுகளாகி பின்பு முறியாச் சரடுகளாகியது. வானம் கரிய பசுவென்று உருக்கொண்டு குனிந்து தன் கருணை நிறைந்த நாவால் நக்குவதுபோல் மழை காட்டை நீவியது. பின்பு அக்காட்டின் மேல் பற்றி ஏறி தண்தழல் விட்டு நின்றாடியது.

நீர் வடங்களாக உடலை வளைத்து ஒழுகி ஒழுகி கரைக்க முயன்றது. எண்ணங்களையும் நீர் கரைக்குமென்று அறிந்தான். இறுகிக் கொதித்துச் சிதைந்து கொப்பளித்து நின்ற அனைத்தும் அடங்கி மறைந்தன. உடல் நடுங்கத்தொடங்கியபோது அகம் விழித்துக் கிடந்தது. ஒரு சொல் மிச்சமில்லை. இப்புவியிலுள்ள அனைத்தையும் சொற்களென மாற்றி அள்ளி அங்கே நிறைக்கலாம். ஏதோ எண்ணம் எழுந்து அவன் கிளையில் எழுந்து நின்றான். பின்பு விழுதைத் தொற்றி கீழிறங்கினான். தரைக்கு வந்து இடையில் கைவைத்து நின்றான். கண்மூடி ஒரு கணம் தான் வந்த வழியை நினைவிலிருந்து மீட்க முயன்றான். ஒவ்வொரு இலையும், ஒவ்வொரு வேர்ப்பின்னலும் உள்ளே பதிந்திருப்பதை உணர்ந்தான்.

எங்கு செல்கிறோம்? அவள் அவனை கொண்டுசென்ற அத்திசையில் எங்கோதான் நாகர்களின் சிற்றூர் இருக்க வேண்டும். அங்கு செல்வது எளிது. அவ்விடத்தை முதலில் சென்றடைய வேண்டும். அங்கு நின்றிருக்கவேண்டும். அவளைத்தேடிச் செல்லலாகாது. அங்கு பாதையிருக்கும், அதை தொடரலாகாது. அவள் வருவதற்கான பாதை அது. இன்றிரவு தன் சிறு குடிலில் அவளும் ஒரு கணமும் துயின்றிருக்கப்போவதில்லை. அவன் விட்டுச் சென்று விடுவான் என்று அவள் எண்ணியிருக்கலாகாது. ஆம், விலகி விட்டான் என்று அவள் ஒரு கணமேனும் நம்பினாள் என்றால் அவள் அவனுக்குரியவள் அல்ல. பிறிதொன்றிலாமை என்னும் முள்முனையில் நின்றவளல்ல.

அவனை அறிந்திருந்தால் இரவு துயின்றிருக்கமாட்டாள். முதற்காலையில் மயங்கும் விழிகளும் நடுங்கும் உடலுமாக கால்பதற ஓடி அங்கு வருவாள். கண்ணீருடன் நெஞ்சில் கை சேர்த்து விம்மும் உதடுகளுடன் அவள் அங்கு வரும்போது விடியா இரவென்றே ஆகி நின்றிருக்கும் மழையில் சொட்டிச் சொட்டிக் கரைந்து கொண்டிருக்கும் பல்லாயிரம் மரங்களின் நடுவே அவனும் நின்றிருக்கக் காண்பாள். ஒரு சொல் தேவையிருக்காது ஓடி வந்து அவனை அள்ளி அணைத்து இறுக்கிக் கொள்ளுகையில அவளை அவன் அறிவான். பிறிதொன்றிலாமை என்ற சொல்லை இதழ்களில் வைத்த தேவியை.

மழை பிறிதொரு காடு போல் காட்டினூடாக படர்ந்து நின்றிருந்தது. தழைசெறிந்து, கிளைவிரித்து, தடிநிறுத்தி, அடிபெருத்து, வேர்பரப்பி. நூறு நூறாயிரம் முறை சென்ற வழியென அவன் கால்கள் திசை அறிந்திருந்தன. தழைக்கூரைக்கு மேல் மின்னல்கள் அதிர்ந்தபோது மழைச்சரடுகள் வழியாக அவ்வொளி இறங்கி வந்து அதிர்ந்தது. இலைப்பரப்புகளின்மேல் வழிந்த நீர் பளபளத்தது. துளிகள் மணிகளாகி மறைந்தன. இடியோசை மேல் பல்லாயிரம் பட்டுக்குவைகளை அள்ளிக்குவித்தது மழை.

அவன் மீண்டும் அவ்விடத்தை அடைந்தான். அதற்கு முன்னரே அறிந்திருந்தான் என்பதனால் மழையின் இளநீலத் திரைக்கு அப்பால் கரையும் மைத்தீற்றலென அவள் உருவம் அங்கு நின்றிருப்பதைக் கண்டபோது நெஞ்சு அதிரவில்லை. அவளல்ல அவளல்ல என்று சொல்லி அக்கணத்தின் பேருவகையை மேலும் சற்று ஒத்திப்போடவே அவன் உள்ளம் எழுந்தது. ஆனால் தொட்டுத் தொட்டு அறிமுகமான அனைத்தையும் கொண்டு அம்மைத்தீற்றலை அவளென வரைந்தெடுத்தது விழிகளில் உறைந்த சித்தம்.

நெஞ்சில் கை கோத்து நின்ற அவளுடைய தோள்களின் குறுகலை, புயங்களின் மேல் கோடுகளென பரவி இருந்த கூந்தலை, சற்றே குனிந்து நின்ற முகத்தில் இமை தழைந்திருந்த விழிகளை, ஒன்றோடொன்று ஒட்டிக் குவிந்திருந்த சிற்றுதடுகளை, கன்னப் பூமயிர்ப் பரவலை மணல்வரிகளென்றாக்கி வழிந்த நீரை, வாழைவளைவுகளிலென நீர்த்தாரைகள் வழுக்கி இறங்கிய மார்புக்குழியை அருகில் நின்றவன் போல் கண்டான்.

மிக அருகே அவன் அணைவது வரை அவள் அவனை அறியவில்லை. அவன் நின்றபிறகே உடலால் உணர்ந்து விழிதூக்கினாள். மார்பில் குவிந்த கைகள் உயிரற்றவை என இருபக்கமும் இழிந்தன. முலைகள் எழுந்தமைந்தன. உதடுகள் மெல்ல பிரிந்தன, மீண்டும் ஒட்டிக் கொண்டன. அதுவரை தனித்து பிரிந்து பறந்து தொடர்ந்து வந்தது போல் உடனிருந்த அச்சொல் சென்று கிளையமர்ந்து சிறகு கூப்பியது. பிறிதொன்றிலாமை.

நூல் எட்டு – காண்டீபம் – 12

பகுதி இரண்டு : அலையுலகு – 4

அரவு விழிகளுக்கு மட்டுமே காட்சியென மாறும் தகைமை கொண்டிருந்தது ஐராவதீகம் என்னும் ஆழ்நாக உலகம். மண்ணுலகின் ஆடிப்பாவையென நிலப்பரப்புக்கு அடியில் இருள்வானம் நோக்கி விரிந்து சென்றது. அங்கே மறுவிசும்பெனப் பரவிய வேறு படுகையில் உடல் சுற்றி தொங்கி நெளிந்தாடின முதல் உலகத்து நாகங்கள். அவற்றின் உடல் பற்றி நெளிந்தன இரண்டாம் உலகத்து நாகங்கள். அவற்றின் உடல் கவ்விச் சுற்றி மூன்றாம் உலகு நெளிந்தது. ஒன்றிலிருந்து ஒன்றென தொங்கிச்சென்ற அடுக்கில் ஏழாம் உலகத்து நாகங்கள் தொற்றியும் பற்றியும் நழுவியும் வளைந்து கவ்வியும் அடிநுனியென தவித்துக் கொண்டிருந்தன.

மேலே அமைந்த ஆறு உலகங்களின் கருணையால் அமைந்திருந்தது ஏழாம் உலகு. அங்கு அவ்வப்போது இறுதிப் பற்றும் விடுபட்டு உருகும் அரக்கின் துளியென இழுபட்டு நீண்டு பின் அறுந்து இருளாழம் நோக்கி விழுந்து மறைந்தன நாகங்கள். அவற்றின் இறுதிச்சீறல்களாலான அப்பேரிருளை நாகங்கள் அனைத்துமே அஞ்சின. தலைகீழ் கருந்தழல் விரிவென ஏழு நாக அடுக்குகளான பரப்பு நெளிந்தாடிக் கொண்டிருந்தது.

முதல் உலகிலிருந்து நழுவி அள்ளிப் பற்றி உதறப்பட்டு மீண்டும் நழுவி, மீண்டும் பற்றி ஏழாமுலகத்து எல்லைக்கு வந்த அர்ஜுனன் தன் நீண்ட அரவுடலால் மேலே தொங்கிய அரவொன்றின் இடையை வளைத்து இறுகப்பற்றிக்கொண்டு தலைகீழாக ஆடியபடி விழுந்து ஆழத்தின் தொலைவில் மறைந்த பிறிதொரு நாகத்தின் இறுதிக் கண சுருங்கலை நோக்கினான். அவன் பற்றியிருந்த நாகம் தன்னுடலை நெளித்து உருவிக் கொண்டு அவனை வீழ்த்த முயன்றது. கைகளை வீசி வளைந்தாடி எழுந்து பிறிதொரு நாகத்தையும் பற்றிக் கொண்டான். இரண்டு அரவுடல்களும் அலையிளகித் திமிறி அவனை உதற முயன்றன.

அவனருகே உடல் வளைத்து வந்த நாகம் அவன் விழிகளை நோக்கி “இங்கு நீ வாழ இயலாது மானுடனே. இங்கு உன்னை வாழவிடவும் மாட்டோம். உனக்குரியது அதலத்தின் பேரிருளே” என்றது. அர்ஜுனன் சிரித்து “கரியவனே, அங்கு மானுட உலகத்திலும் என்னிடம் இதையே சொன்னார்கள். நினைவறிந்த நாள் முதல் எனக்குரியதல்ல என்று உணரும் உலகிலேயே நான் வாழ்ந்துள்ளேன். இங்கு இருக்கும் பொருட்டல்ல, வெல்லும் பொருட்டும் கடந்து செல்லும் பொருட்டுமே ஒவ்வொரு கணமும் போர் புரிகிறேன்” என்றபடி தன் வாலை வளைத்து அவனை அறைந்தான்.

அலறியபடி தன் சுருள் பிடியிலிருந்து விலகி கீழே விழப்போன அந்நாகம் வால் சொடுக்கித் தாவி பிறிதொரு நாகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது. இரு நாகங்களும் நெளிந்து ஆடி விலகிச்சென்றன. “என் பெயர் காலகன்” என்றது துணைக்கு வந்த நாகம். “என் இளமை முதலே நான் விரும்பி வந்தவள் உலூபி. இன்று எங்கள் எல்லைக்கு அப்பால் சென்று மானுடன் ஒருவனை தன்னவன் என்று கொணர்ந்திருக்கிறாள்.” வஞ்சம் ஒளிவிட்ட அவன் கண்களை நோக்கி “அது என் பிழையல்ல” என்றான் அர்ஜுனன்.

“நோக்கு, இங்கு நெளியும் பல்லாயிரம் நாகங்களில் இளையோர் அனைவராலும் விரும்பப்படுபவள் அவள். அவளை நீ கொண்டுசெல்ல இங்கு எவரும் விழையார். உன் பாதைக்கு குறுக்காக பல்லாயிரம் நச்சுப்பற்கள் எழும் என்பதை உணர்க!” அர்ஜுனன் “காலகரே, இங்கு வருகையில் உங்கள் இளவரசியைக் கொள்ளும் எண்ணம் எனக்கிருக்கவில்லை. ஆனால் இவ்வறைகூவலுக்குப்பின் அவளை மணம் கொளாது இங்கிருந்து மீள என்னால் முடியாது” என்றான்.

சினந்து வாய் திறந்து நச்சுப்பற்களைக் காட்டி சீறிய காலகன் உடல் வளைத்து தன்னை ஓர் அம்பென ஏவி அர்ஜுனன் மேல் பாய்ந்தான். தசை மோதும் பேரோசையுடன் இரு உடல்களும் முட்டிக்கொண்டன. காலகனின் கரிய உடல் தன் உடலுடன் ஆயிரம் புரிகளாக இறுக முறுக்கிக் கொண்டதை அர்ஜுனன் உணர்ந்தான். விழித்த இமையா விழிகளுடன் சீறும் நச்சு வாயுடன் அவனைக் கவ்வ வந்தான் காலகன். இருகைகளாலும் அவன் தலையைப் பற்றி விலக்கியபடி அக்கணத்தின் முடிவின்மையின் விளிம்பில் நின்று அதிர்ந்தான்.

உடல் இறுகி ஒன்றை ஒன்று முறுக்கி அசைவின்மையின் இறுதிப்புள்ளியை அடைந்தபோது அவ்விழிகளைக் கூர்ந்து நோக்கி அங்கிருந்த விழைவைக் கண்டு அர்ஜுனன் சொன்னான். “நாமிருவரும் இணைந்து அவ்விருளை சென்றடைவோம் காலகரே, மீளமுடியாமையின் பெருவெளி. அது ஒரு பெண்ணுக்காகவா?”

அச்சொல்லில் அரைக்கணம் காலகனின் பிடி நெகிழ்ந்ததும் தன்னை உருவி மீட்டுக்கொண்டு அர்ஜுனன் அவனை அள்ளி தூக்கி வீசினான். சீறியபடி இருள் நோக்கி விழுந்த காலகனை அவனது தோழன் வீசப்பட்ட பாசச்சரடென நீண்டு சென்று சுழன்று பற்றிக் கொண்டான். தோழனின் உடலில் சுற்றிக் கொண்டு சுழன்று மேலேறி வந்த காலகன் “ஒரு கணம்” என்றான். “ஆம், ஒருகணம்! அந்த ஒரு கணத்தை தன்னுள்ளில் கொண்டவன் வெல்வதே இல்லை” என்று சொல்லி அர்ஜுனன் தனக்கு மேலிருந்த நாகத்தை நோக்கி சுழன்றேறினான்.

நீரலைகள் என கருநாக உடல்கள் அங்கே நெளிந்தன. ஒன்றுடன் ஒன்று பின்னி ஒரு பெருங்கருஞ்சுழியென அவன் தலைக்கு மேல் அவை குவிந்தன. அவற்றின் வால் நுனிகள் அவனை அறைந்து கீழே தள்ள முயன்றன. அச்சுழியின் மையத்தில் தன் தலையால் ஓங்கி முட்டினான். அத்துளைக்குள் தன்னை செலுத்திக் கொண்டபோது அது அவனை அள்ளிச் சுழற்றி மேலே உறிஞ்சிக்கொண்டது. பெருஞ்சுழலென சுற்றிக் கொண்டிருந்த நாகப்பேருடல்களுடன் முற்றிலும் தன்னை பிணைத்துக் கொண்டான்.

அவனருகே இருந்த நாகம் “என் பெயர் சந்திரகன். இத்தனை எளிதாக ஏழாம் உலகிலிருந்து ஒருவர் எங்கள் உலகுக்கு வந்ததில்லை” என்றான். அவன் உடலுடன் தன்னை பிணைத்துக் கொண்டு “நான் எப்போதும் முதல்வன்” என்றான் அர்ஜுனன். “முதல் உலகிலிருந்து உதிர்பவர்களால் ஆனது இரண்டாம் உலகு. அனைத்துலகிலிருந்தும் உதிர்ந்தவர்கள் ஏழாம் உலகை சமைக்கிறார்கள். அந்தகாரம் என்னும் அந்த உலகம் உக்ரமாலின்யம் என்றும் அழைக்கப்படுகிறது.”

“கீழிறங்குவது எளிது, மிக எளிது. மேல் வருவதற்கு பெரும் தவம் தேவை. ஏனெனில் இங்கு ஒவ்வொரு நாகமும் பிறிதொன்றை கீழே வீழ்த்தும் பொருட்டே நெளிந்து கொண்டிருக்கிறது. மேலேறி வரும் தனிநாகத்தை முந்தைய உலகின் நாகங்கள் அனைத்தும் கோட்டைச் சுவரென, ஆற்றல் மிக்க சுழியென மாறி தடுப்பது வழக்கம். இளையோனே, இங்கு ஒவ்வொரு நாகத்திற்கும் பிற அனைத்து நாகங்களும் எதிரியென ஆகும் அமைப்பே உள்ளது” என்றது பிறிதொரு நாகம். “என் பெயர் ஃபும்சலன். இங்கு நீ காணும் முடிவிலா நெளிதல்கள் அனைத்தும் இங்கிருக்கவும் மேலெழவும் பிறனை வீழ்த்தவும் உன்னும் அலைகளே.”

அவனருகே வந்த பிறிதொரு நாகம் “என் பெயர் சதயன். நீ ஆற்றல் மிக்கவன் என்றறிந்தேன். கீழே காலகனை நீ தூக்கி வீசியதை கண்டோம். ஆகவேதான் இவ்வல்லமை மிக்க பெருஞ்சுழியால் உன்னை தடுத்தோம். இதன் விளிம்பை நீ தொட்டிருந்தால் அக்கணமே தூக்கி பல்லாயிரம் யோசனை தூரத்திற்கு வீசப்பட்டிருப்பாய். ஆனால் அதன் மையப்புள்ளியை தொட்டாய். அது உன்னை உள்ளுக்கு இழுத்தது. எச்சரிக்கைகொண்டு அப்புள்ளியில் உன் வால்நுனியை வைத்து ஆழத்தை நோக்கியிருந்தால் அவ்விழு விசையில் அரைக்கப்பட்டு அணுவென்றாகி இருப்பாய். துணிந்து உன் தலையை இதனுள் நுழைத்ததனால் இவ்வுலகுக்குள் வந்து எங்களுடன் சுழல்கிறாய்” என்றது.

“என் வழி அது. எப்போதும் மையங்களையே நாடுகிறேன்” என்றான் அர்ஜுனன். அவனைச் சூழந்து பறந்து கொண்டிருந்த நாகங்களின் உடல்களின் அலை நெளிவுகள் வழியாக தன்னுடலை ஒழுகச்செய்து எழுந்து மேலே சென்றான். “இவ்வுலகம் தரளம் என அழைக்கப்படுகிறது. இங்கு நீ எதை அறிந்தாய்?” என்றது அவனைத் தொடர்ந்த நாகம். “எவ்வண்ணம் எங்களால் கடக்கமுடியாத இப்புரிப்பாதையை கடக்கிறாய்?” அர்ஜுனன் திரும்பி நோக்காமல் “பிறன் என ஏதுமற்றவனே பயணியாக முடியும்” என்றான்.

ஐந்தாம் உலகமான காளகம் ஒன்றுடன் ஒன்று பின்னி ஒரு மரவுரிப் பரப்பென மாறிய கருநாகங்களின் உடலால் ஆனதாக இருந்தது. அதன் இடுக்கு ஒன்றில் தன் வாலை நுழைத்து பற்றிக் கொண்டான். ஆடி வளைந்து சென்று அதை பிடிக்க முயன்றபோது அங்கிருந்த நாகங்கள் வால்சுழற்றி அவனை அறைந்து தெறிக்கச்செய்தன. பிடிவிட்டு அவன் ஆடியபோது ஏளன நகைப்புகள் மேலே ஒலித்தன.

அர்ஜுனன் ஏழுமுறை உடலை வீசி இருளில் நெளிந்தாடி வந்தான். ஒரு போதும் அவர்களை பற்ற முடியாதென்ற எண்ணம் எழுந்தபோது அவர்கள் விழிகளை ஒவ்வொன்றாக நோக்கினான். ஒரு விழியில் அவனுக்கான தனிநோக்கு ஒன்று இருந்தது. அவ்விழியை தன் விழிகளால் கூர்ந்தபடி மீண்டும் அதை நோக்கித்தாவினான். எழுந்து விசையென தன்னை ஆக்கி தாவி அதை பற்ற முயன்றான். பன்னிரண்டாவது முறை அந்த நாகம் அவனை பற்றிக் கொண்டது. அக்கணமே அதன் உடலுடன் தன் உடலைச்சுற்றி பற்றி இறுக்கிக் கொண்டான்.

அது நெளிந்து மேலேறுவதற்குள் முந்திச்சென்று இறுகிக் கொண்டான். அவனருகே பத்தி எழுந்து வந்த அந்த நாகம் “என் பெயர் ஜலஜன். இத்தனை ஆயிரம் நாகங்கள் பின்னிப் பரப்பென மாறி உன்னைத் தடுத்தபோது பற்றுவதற்கு என்னை மட்டும் தேர்ந்தெடுத்தாய், ஏன்?” என்றது. “உன் விழிகளை நோக்கினேன். என்னை அகலாது நோக்கி நிலைத்திருந்தன அவை. என்னை எதிரியென எண்ணுகிறாய். நம்மை ஒரு கணமும் மறக்காதவனே நம் எதிரி. முற்றெதிரி ஒரு போதும் நம்மை கைவிடுவதில்லை” என்றான் அர்ஜுனன். “ஏனென்றால் அவன் தன்னை வகுத்தமைக்கவும் பொருள்கொள்ளவும் நாமின்றி இயலாது.”

தழுவுதலுக்கென்று சமைக்கப்பட்டவை அரவுடல்கள். இரண்டின்மை உடலென உணரப்படுவதை அங்குதான் அர்ஜுனன் அறிந்தான். முட்டித் தழுவி இறுக்கி மேலும் இறுக்கி மேலும் இறுக்குவதற்காக மெல்ல நெகிழ்ந்து மீண்டும் இறுகி நடந்த அப்போரின் முடிவில் தன் வால் நுனியால் ஜலஜனின் வால் நுனியை ஊசி முனையை ஊசி முனையென குத்தி நின்று அசைவிழந்தான். முற்றிலும் நிகர் நிலை கொண்டபின் இரு உள்ளங்களும் ஒன்றாயின. எண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்தன. நதியொடு நதியென பொருந்தி முடிவிலா காலத்தில் அங்கிருந்தன.

இருள் வானில் பறந்து செல்லும் வௌவாலின் ஓசையென ஓர் எண்ணம் அவனுள்ளில் எழுந்து அடங்கியது. இவன் எனக்கு நிகரானவன், ஆயினும் அவள் என்னையே தேர்வு செய்தாள். அவ்வெண்ணம் அளித்த சோர்வில் ஜலஜனின் உள்ளம் அலை சுருண்டு ஒரு கணம் பின்னடைந்தது. அக்கணத்தில் ஊன்றிய வால் நுனி நழுவ உடல் வலு தளர அவன் தொய்ந்தான். மற்போரில் ஒரு கணம் என்பது ஒரு பிறப்பு, ஒரு முழு வாழ்வு. அதில் ஆயிரம் திட்டங்களுடன் விரிந்து பல்லாயிரம் கரங்களுடன் எழுந்த அர்ஜுனன் அவனை உடலால் சுழற்றி தூக்கி வீசினான். நீரில் பாறை விழும் ஓசையுடன் விழுந்த ஜலஜன் மரப்பட்டை பிளக்கும் ஒலியுடன் உரசி கீழே சரிய அவன் இரு தோழர்கள் நீண்டுசென்று பற்றிக் கொண்டனர்.

“வென்றேன்” என அர்ஜுனன் எண்ணியதை அங்கிருந்த அத்தனை நாகங்களும் கேட்டன. ஒவ்வொரு விழியாக நோக்கி “வென்றேன்! வென்றேன்! வென்றேன்!” என உரைத்தபடி விண்ணிலிருந்து இறங்கிய கரும்பனைக்கூட்டங்கள் போல் நின்ற நாகங்கள் உடலில் தொற்றி சுழன்று மேலேறினான்.

நான்காம் உலகமான தாம்ரம் குளிர்ந்திருந்தது. உடலை விரைக்கவைக்கும் அமைதி அங்கே நிலவியது. அசையா வளைவுகளென கிடந்த அரவுடல்களின்மேல் தவழ்ந்து அவன் அங்கே நுழைந்தபோது இழுபட்டு அதிர்ந்து உடற்தசைகளை அசைவிழக்கச்செய்யும் கடுங்குளிரை உணர்ந்தான். ஒவ்வொரு தசையாக எண்ணத்தால் தொட்டுத் தொட்டு உந்தி முன் செல்ல வேண்டியிருந்தது.

“இது உரகங்களின் உலகம்” என்றது அங்கே உறைந்ததெனக் கிடந்த பாம்பு. “நாங்கள் படம் எடுப்பதில்லை, நெளிவதுமில்லை. எங்களுக்குள் ஆலகாலத்தின் துளி ஒன்று உறைகிறது. அதன் தண்மையால் விரைத்து உடல் இறுகச்சுருட்டி எங்கள் உடல்களால் ஆன புதர்களுக்குள் நாங்களே ஒண்டிக் கொண்டிருக்கிறோம். இங்கு காலமில்லை. ஊழிகள் கணங்களென சொட்டி செல்கின்றன. இங்கு வந்தடைந்த நீ உன் மாற்றுலகங்களில் யுகயுகங்களை இழந்து கொண்டிருக்கிறாய். அங்கு நகரங்கள் நீர்க்குமிழிகள் போல் வெடித்து மறைகின்றன. பெருங்கடல்கள் நீர்ப்படலங்கள் போல் உலர்ந்து மறைகின்றன. கரைந்து மறைந்து வான்பனித்து துளித்து மீண்டும் பெருகிக் கொண்டிருக்கின்றன மாமலைகள். இங்கிருந்து நீ தப்ப முடியாது.”

ஒவ்வொரு தசையாக அசைத்து தன் உடலை நகர்த்தி உரகங்களின் உடல் சுற்றி மெல்ல வழிந்து மேலேறினான் அர்ஜுனன். “உன் ஆற்றல் எங்கிருந்து வருகிறது? உன் உடல் இயங்கும் வெம்மையை எங்கிருந்து பெறுகிறாய்?” என்றது அவன் மேலெழுந்த குகன் என்னும் நாகம். “உடல் குளிர்ந்து அசைவின்மைக்குச் சென்றவையென்றாலும் அனல் கொண்டவை உங்கள் கண்கள். அவற்றை அன்றி பிறிதெதையும் பார்க்காமலானேன். அக்கனலை தொட்டுத் தொட்டு என் வெம்மையை எடுத்துக் கொண்டேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “எச்சொல்லால் எங்களை கடந்துசெல்கிறாய்?” என்றான் குகன். “அசைவின்மையில் பெருகுகின்றது அகம்” என்றான் அர்ஜுனன்.

பனியலைகளின் மீதேறி மூன்றாவது அரவுலகத்தை அடைந்தான். பொன்னிற நாகங்களின் பரப்பாக இருந்தது சுவர்ணம். செம்மண் நீர்வழிந்தோடும் மழைக்காலச் சிற்றோடைகள் போல அங்கு அசைந்தன நாகங்கள். “இங்கு பொன்னுடல் கொண்டவர்களுக்கு மட்டுமே நுழைவு ஒப்புதல் உண்டு” என்று அவன் பற்றி ஏறிய பொன்னாகம் சொன்னது. “இழிவுடல் கொண்டு இங்கு வாழ்பவன் ஒளியணைந்து அழிவான்.” அந்நாக உடலைப் பற்றி உறுதியுடன் மேலேறியபடி அர்ஜுனன் சொன்னான் “நான் சென்றடையும் உலகம் இது அல்ல. நான் காண்பவை அனைத்தும் என் வழியம்பலங்கள் மட்டுமே. ஏழு விண்ணகங்களே ஆனாலும் அவை இறுதியாக நான் தங்குமிடங்களல்ல.”

புன்னகைத்து ரிஷபன் என்னும் அப்பெருநாகம் தன் உடல் வளைத்து அவனை மேலேற்றிக் கொண்டது. “நன்று சொன்னாய். இவ்வரவுவெளியை கடந்து செல். அதற்கு உன் உடலை பொன்மயமாக்கிக் கொள்.” அர்ஜுனன் “ஆம்” என்றான். “இளையோனே, உன்னை பொன்னாக்குவது எது? அதை எண்ணமென்றாக்கி உன்னில் நிறை.” .அவனருகே புன்னகையுடன் வளைந்து வந்த சுரபி என்னும் நாகம் சிரித்தபடி கேட்டது “உன் அருங்காதல்களா இளவரசே?”

அர்ஜுனன் “ஆம், அவை என்னை பொன்னாக்குகின்றன. அந்திச் செம்மையில் ஒளி கொள்ளும் மாடங்கள் போல்” என்றான். கிருதை என்னும் பிறிதொரு நாகம் அவனருகே நெளிந்து வந்து “உன் உள் கரந்த அன்னை என்னும் விழைவா?” என்றது. அர்ஜுனன் “ஆம். புலரி என என்னை பொன்னாக்குகிறது அது” என்றான். பொன் வெளிச்சம் கொண்டு அவன் துலங்கத் தொடங்கினான். அவனருகில் சூழ்ந்திருந்த நாகங்கள் அனைத்தும் ஒளி கொண்டன. “சொல், உன்னை பொன் ஆக்குவது எது? விழைந்ததெல்லாம் பெறும் உன் வெற்றியா? அவ்வெற்றியினால் உன்னுள் நிறைந்த ஆணவமா?” என்றது ஜாதன் என்னும் பொன்னிறப் பெருநாகம்.

அள்ளி அதன் கழுத்தைச் சுற்றி அதன் உடலின் ஊடாக சுழன்றேறி மேலே சென்ற அர்ஜுனன் திரும்பி “உச்சி வானில் நின்றெரியும் கதிரென என்னை பொன்னாக்குவது அதுவே” என்றான். அவனுடலைப் பற்றி சுற்றி மேலேறி அவனருகே வந்து இளைய பொன்னாகம் ஒன்று கேட்டது “பாண்டவரே சொல்லுங்கள், உங்களை அழியா பொன்னொளி கொள்ளச்செய்யும் அவ்வெண்ணம் எது?”

இரண்டாம் உலகின் எல்லையென மேலே வந்த வெண்ணிறமான அரவுடல்களின் பின்னல் நோக்கிச் சென்று அதன் உடல் வளையமொன்றில் தன் உடலை நுழைத்து சுற்றிக் கொண்டு தன்னை மேலிழுத்த அர்ஜுனன் இளையவன் கண்களை நோக்கி சொன்னான் “எனது விழைவு. அறிதல் அறிதல் என்று ஒவ்வொரு கணமும் என்னுள் இருக்கும் விடாய். இளையோனே, எங்கும் நில்லாதவன் என்பதால் ஒருபோதும் அழியா ஒளி கொண்டேன்.” பின்பு தன்னை வளைத்து மேலே சென்றான்.

சுஃப்ரம் என்றழைக்கப்பட்ட இரண்டாவது அரவுலகு வெண்முகில் வெளியென பரவிக்கிடந்தது. அங்கே பாற்கடல் அலையென நெளிந்து கொண்டிருந்தன வெண்ணிறப் பெருநாகங்கள். பொன்னுடல் கொண்டு எழுந்த அர்ஜுனன் கொண்ட ஒளி சென்ற பகுதியை சிவக்க வைக்க சினந்தவை போல நாகங்கள் அவனை நோக்கின. சீறி அருகே வந்த பெரு நாகம் ஒன்று “யார் நீ? இங்கு எவ்வண்ணம் வந்தாய்?” என்றது. “ஏழாவது அரவுலகில் இருந்து எழுந்து வந்திருக்கிறேன். என் பெயர் இளைய பாண்டவன்” என்றான் அர்ஜுனன்.

“என்னை மால்யவான் என்று அழைக்கிறார்கள்” என்றது அப்பெரு நாகம். பளிங்கு நிலப்பரப்பில் விழுந்த கொன்றைமலர்மொட்டு என தன்னை அர்ஜுனன் உணர்ந்தான். அவனைச்சுற்றி வெண்ணிய மலைமுடிகள் போல எழுந்தமைந்தன நாகங்களின் படங்கள். அலைகள் மேல் துரும்பென எழுந்து விழுந்து சென்ற அர்ஜுனன் பெருநாகத்தின் விழியருகே எழுந்து “இங்கு அனைவரும் இப்பேருடல் கொண்டிருக்கிறீர்களே, எங்ஙனம்?”என்றான்.

மால்யவான் “இளையோனே, ஏழாவது அரவுலகில் உள்ள ஒவ்வொன்றும் ஆறாவது உலகின் ஆயிரத்தில் ஒரு பங்குள்ளதே. ஆறாவது உலகில் ஐந்தாவது உலகின் ஆயிரத்தில் ஒன்று. ஏழாம் உலகிலிருந்து முந்தைய உலகங்களுக்கு இதுவரை எவரும் வந்ததில்லை. வந்தவர் உடல் சிறுத்து அணுவென ஆகி மறைவதே வழக்கம். முதல் முறையாக நீ இங்கு வந்திருக்கிறாய். இதை ஊழ் காட்டும் மாயம் என்றே கொள்கிறேன். இங்கு இச்சிறு உடலுடன் நீ வாழமுடியாது. உன் முந்தைய உலகிற்கே திரும்பு” என்றான்.

அர்ஜுனன் “இங்கு தங்க நான் விழையவில்லை. இவ்வுலகைக் கடந்து மறுபக்கம் செல்லவிருக்கிறேன்” என்றான். “உன்னைவிட பலலட்சம் மடங்கு பெரிய உடல்கள் நிறைந்த இங்கு நீ அசைவதும் உறைவதும் பறப்பதும் நிகரே. இப்பெருந்தொலைவு உன் சிற்றுடலுக்கெட்டாது” என்றது மால்யவான். “என் பெயர் பிரபாதரன்” என்று இடி முழங்க ஒலித்தபடி அவன் தலைக்கு மேல் எழுந்தது வெண்பெருநாகம் ஒன்று. அதன் சொற்களின் அதிர்வில் பறந்து சென்று மால்யவானின் வெண்பரப்பில் ஒட்டிக் கொண்டான் அர்ஜுனன். “உன் சிற்றுடல் நெளித்து எத்தனை தொலைவுதான் செல்வாய்? மூடா, விலகு” என்றான்.

“இப்பேருலகில் உங்கள் உடல் பேருருவம் கொள்வது எதனால்?” என்று அர்ஜுனன் கேட்டான். “எண்ணங்களால்” என்றான் மால்யவான். “இவ்வேழு உலகங்களும் எண்ணங்களால் ஆனவை என்றுணர்க! ஏழாம் உலகம் குரோதத்தால் ஆனது. காமத்தாலானது ஆறாம் உலகம். பேராசையால் ஆனது ஐந்தாம் உலகம். நான்காவது உலகம் தமோகுணத்தால் ஆனது. அன்பெனும் பொன்னொளி கொண்டது மூன்றாம் உலகம். ஞானம் கனிந்த எண்ணங்களால் ஆனது இவ்வுலகம்.”

“இங்கு உன்னில் மெய்யறிதல் ஒன்று எழுமென்றால் நீயும் வெண்ணிறப் பேருடல் பெறுவாய்” என்றது பிரபாதரன். “நானறிந்த மெய்மை ஒன்றை சூடுக என்னுடல். பல்லாயிரம் குறி பிழைக்காத அம்புகளால் நானறிந்த ஒன்று” என்று அர்ஜுனன் சொன்னான். தன் நெஞ்சில் கை வைத்து விழி மூடி “வெற்றி என ஒன்றில்லை எங்கும்” என்றான். விழி திறந்தபோது மால்யவான் அவனுக்கு நிகரான உடல் கொண்டு எதிரே நின்றான்.

“நீ சொன்ன சொற்களை நான் உணரவில்லை” என்றான் மால்யவான். “ஆனால் அதை உண்மை என எதிரொலிக்கின்றன இங்கு சூழ்ந்துள்ள வெண்முகில்வடிவ நாகப்பேருடல்கள். நீ அறிந்தது உனக்குத்துணையாகுக!” அவனைச்சூழ்ந்து “ஆம் அவ்வாறே ஆகுக!” என்று இடியோசை என எழுந்தது சுற்றத்தின் வாழ்த்து. திசை தொட்டு மறுதிசைவரை வளர்ந்த தன்பேருடலை அலைஅலையென நெளித்து எழுந்து அதற்கு மேலிருந்த ஒளியுலகின் முதல் நாகத்தின் வால் நுனியைப் பற்றி சுருண்டு மேலேறினான் அர்ஜுனன்.

சுதார்யம் என்றழைக்கப்பட்ட முதல் அரவுலகின் உள்ளே தான் பற்றிக் கவ்விய புருஷன் என்னும் பெருநாகத்தின் உடலில் சுற்றி மேலேறிச்சென்றான் அர்ஜுனன். ஒளிபட்ட நீரால் ஆனதென தோன்றியது அங்கிருந்த அரவுலகம். ஆடிப்பாவைகளென ஒன்றையொன்று எதிரொளித்துப் பெருகி நெளிந்து கொண்டிருந்தன அரவங்கள். ஏழுவண்ண ஒளிக்கீற்றுகளாக சிறகுகளை கொண்டிருந்த நாகங்கள் மைநாகம் மின்னும் படங்களை விரித்து அவனை திரும்பி நோக்கின. ஒளி பறக்கும் நாவுகளுடன் கூரிய பற்களைக் காட்டி அணுகின.

சிறகோசையுடன் அவனருகே வந்து நெளிந்தமைந்த ஹ்ருஸ்வன் என்னும் நாகம் “இங்கு ஒளியுடல் கொள்ளாத எவரும் அமைய முடியாது. மானுடனே திரும்பிச் செல்க! இல்லையேல் இவ்வுலகின் ஒளியால் உன் உடல் கரைந்தழியும்” என்றது. “சொல்லுங்கள் அரவங்களே, உங்களை ஒளியுடல் கொள்ளச்செய்வது எது?” என்றான் அர்ஜுனன். “ஊழ்கம்” என்றது தாம்ரை என்னும் பெரு நாகம். ஒலிவடிவெனச்சுருண்டு அவனருகே வந்தெழுந்து விழி நோக்கி புன்னகைத்து “அறிதல் கடந்த முதல் மெய்மையால் தீண்டப்பட்டவர்கள் மட்டுமே இங்குளோம். உன் மெய்மை ஒன்றால் உன்னை நிறைக்க முடிந்தால் இங்கிருப்பாய்.”

அர்ஜுனன் குனிந்து தன் காலடிக்குக் கீழே இருள்வானம் வரை நிறைந்த ஆறுலகங்களை நோக்கினான். மெய்மை ஞானம் என்றும் ஞானம் உணர்வு என்றும் உணர்வு விழைவு என்றும் விழைவு செயல் என்றும் செயல் ஆணவம் என்றும் ஆகி உதிர்ந்து கொண்டிருப்பதை கண்டான். “சொல், நீ அறிந்த மெய்மை எது?” என்றான் ஜ்வாலன் என்னும் பெருநாகம். நெஞ்சில் கை வைத்து விழி மூடி அர்ஜுனன் சொன்னான் “ஆவது என்றொன்றில்லை.”

விழிதிறந்தபோது தன் உடல் ஒளி வடிவாகி அங்கிருந்த பிற உடல்களின் ஒளி எதிரொளித்துக் கொண்டிருப்பதை கண்டான். “அரவு ஏகும் முழுமை இது மானுடனே. எய்தற்கரிய உச்சமொன்றை அடைந்தாய், இங்கிருப்பாய்” என்றது ஒளிப்பெரு நாகமான ஸ்ருதன். “கடந்து செல்வதற்கே இங்கு வந்தேன்” என்றான் அர்ஜுனன். “எங்கும் அமர்வதற்கு எனக்கு ஊழ் அமையவில்லை.”

“இங்கிருந்து செல்வதற்கு பிறிதொரு உலகம் இல்லை” என்றான் ஜாதன் என்னும் ஒளிநாகம். “இருக்கிறேன் என்னும் உணர்விருக்கும் எங்கும் இல்லையென்றாவதற்கு வாயிலிருக்கும்” என்றான் அர்ஜுனன். நெளிந்து அருகே வந்த பகன் என்னும் நாகம் “அதோ, எங்கள் ஒளியுலகின் நடுவே கரிய புள்ளி ஒன்றுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக அதை சுற்றி வந்து கொண்டிருக்கிறோம். ஒருவரும் அதை தொட்டதில்லை” என்றது.

“ஏன்?” என்றான் அர்ஜுனன். “அது கருமை கொண்டிருக்கிறது. முதல் உலகில் எஞ்சும் ஏழாம் உலகின் ஒரு துளி என்று அதை சொல்கின்றனர். இவ்வேழுலகங்களையும் முடிவிலா சுழலாக ஆக்குவது தலையை வந்து தொடும் நாகத்தின் வாலென இங்கிருக்கும் அதுதான்” என்றது பகன். “அதை அஞ்சியே அணுகாது சுற்றி வருகிறோம். இவ்வொளியுலகுநடுவே பிறிதொன்றிலாது நிற்கும் அதுவே வெளியேறுவதற்கான வழியாகும்.”

அர்ஜுனன் “ஆம்” என்றான். அரவுடல்களைத் தழுவி நெளிந்து அதை நோக்கி சென்றான். செல்லும் தோறும் விரிந்து பன்னிரு பேரிதழ் கொண்டு அலர்ந்து நூறிதழ் ஆயிரம் இதழ் கருந்தாமரை என விரிந்து வாயைத் திறந்து இருள் காட்டியது அச்சுருள். அதை அணுகி “இங்குளேன்” என்றான் அர்ஜுனன். உள்ளிருந்து மெல்லிய சிரிப்பொலி ஒன்று கேட்டது. காமத்தில் வென்று அல்லது கழுத்தறுத்துக் குருதியுண்டு வென்று சிரிக்கும் பெண்குரல் நகைப்பு. தன் உடலை ஒரு சிறு அம்பென ஆக்கி அவ்விருள் மையம் நோக்கி பாய்ந்தான்.

நூல் எட்டு – காண்டீபம் – 11

பகுதி இரண்டு : அலையுலகு – 3

ஐராவதீகக் காட்டினுள்ளே யானைக் கூட்டங்களும் காட்டெருமை மந்தைகளும் நுழைவதில்லை. புதர் குலையாது பாயும் மான்கணங்களும் இலை அசையாது செல்லும் புலிகளும் அன்றி அங்கு விலங்குகள் இல்லை. எனவே கால் வழி என ஏதுமின்றி ஐந்து திசைகளையும் நிறைத்த பசுமை பெருகி விரிந்த அலைவெளியென கிடந்தது அது. தழைந்த பெருங்கிளைகளில் ஒன்றில் இருந்து பிறிதுக்கு கால் வைத்து அர்ஜுனன் அக்காட்டுக்குள் சென்றான்.

காமம் கொண்டு கண்ணயர்ந்த பெண்ணின் தோளிலிழியும் பட்டு மேலாடை என மரங்களில் வழிந்தன மலைப்பாம்புகள். கீழே அவன் அசைவைக் கேட்டு செவி கோட்டி விழி ஒளிர உடல் சிலிர்த்தன மான்கள். உச்சி மரக்கிளையில் அமர்ந்த கருமந்தி ஒன்று அவன் வருகையை நாணொலி என கூவி அறிவித்தது. குறுங்காற்று கடந்து செல்வது போல் மந்திக்கூட்டம் கிளை வழியாக அகன்று சென்றது.

தொலைவில் எங்கோ பாறைகள் மேல் அறைந்து சிதறி அருவி ஒன்று விழும் ஓசை எழுந்தது. மேலும் மேலும் இருண்ட காடு பசுமை நீலமாகி நீலம் கருமையாகி தன்னை செறிவாக்கிக் கொண்டது. இலைநுனி மிளிர்வும் மான்கண் ஒளிர்வும் ஒன்றெனக் கலந்த இருளுக்குள் தன் உடல் எழுப்பும் ஒலியே சூழ்ந்து தொடர அர்ஜுனன் சென்றான். அவனை பறவையென எண்ணிய சிறுபுட்கள் உடன்பறந்து உவகைக்குரலெழுப்பி சிறகடித்தன.

செல்லச்செல்ல திசைகள் மயங்கி அப்பால் விலகின. வானும் மண்ணும் இல்லாமலாயின. அந்தர வெளியில் கருமுகில் குவையென அக்காடு நின்றிருப்பதாக தோன்றியது. ஆலவிழுதுகளில் பற்றி ஆடிப் பறந்து குறுமரக்கிளைகளில் அமர்ந்து வில்லென வளைந்து அம்பென்றாகி தாவி அவன் சென்றான். மறுபக்கமென ஒன்றிலாத ஆழுலகங்களில் ஒன்று அக்காடு என கற்பனை மயங்கியது. மரக்கிளை ஒன்றில் அமர்ந்து கனிந்த அத்திகளையும் இன்சாறு தேங்கிய மாங்கனிகளையும் பறித்து உண்டான்.

நீர் அருந்தும் எண்ணம் எழுந்தபோது அதுவரை தன்னுடன் மெல்லிய தவிப்பென உடன் வந்தது விடாயே என்றறிந்தான். கனன்ற விழைவே நீரிருக்கும் திசையை உணர்த்தியது. இருளுக்கு பழகிய விழிகள் வலப்பக்கம் காடு நீர் தேங்கிய இலை கொண்ட செடிகள் செறிந்து சற்று கீழிறங்கி செல்வதை உணர்ந்தன. கிளைவிட்டு கிளைதாவிச் சென்று சரிந்திறங்கிய நாணல் விளிம்பை அடைந்தான்.

இலைச்செறிவின் சிறுதுளைகள் வழியாக வந்த வெயில் ஆயிரம் பட்டுக்கதிர்களென மண்ணில் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. விரலோட்டி பேரியாழ் நரம்புகளென அவற்றை மீட்ட முடியுமென்று தோன்றியது. விண்ணென வளைந்த குடம் அந்த இசையை முழங்கும். மண்ணில் பசுமையென விரிந்த ஒவ்வொரு உயிர்த்துளியும் அச்சுதியை முன்னரே அறிந்திருக்கும். விண்ணவர் அறிந்த பண். உயிர்க்குலங்களை உண்ணும் உயிர்கள் மட்டும் அதை கேட்கமுடியாது.

ஒளிக்கதிர்களுக்குள் நுழைந்தான். ஒளித்தூண்களால் எழுப்பப்பட்ட மண்டபம். நூறு ஒளிவாட்கள் சுழலும் படைக்கருவியால் எண்ணற்ற துண்டுகளாக தன் உடல் சிதறுண்டதை கண்டான்.அவன் உடலின் நிழல்நிரைகள் எழுந்து இலைத்தழைப்புப் பசுந்திரையில் சுழன்றுவந்தன. எரிந்தும் அணைந்தும் சுடர்ந்தும் இருண்டும் கடந்து சென்றான். வெயில்வெளிக்குள் சென்றதும் எரிந்து தழலாகியது அவன் உடல். வெண்தழல்வெளியில் கரைந்தது.

பாறைகளில் அலைந்து நுரையுமிழும் அலைகளென வெண்பூக்குலைகள் சூடி காற்றில் கொந்தளித்தது நாணல்விரிவு. அதனூடே எழுந்து தெரிந்த கரும்பாறைகளில் ஒன்றிலிருந்து பிறிதொன்றுக்குத் தாவி கீழிறங்கிச் சென்றான். காலடிகள் கற்சிற்பத் தடங்களென பதிந்த உலர்சேற்றுப் பரப்புக்கு அப்பால் கங்கையின் நீர்ப்பெருக்கு அசைவற்றதென முதற்கணம் விழிமயக்காக தெரிந்தது. நீரலை நாவுகள் வெல்லக் கதுப்பென கிடந்த சேற்றுச் சரிவை நக்கி சுருண்டு மீண்டும் மீண்டும் நக்கி சுவையொலி எழுப்பிக் கொண்டிருந்தன.

காட்டில் கையால் எழுதப்பட்டவை என பல்லாயிரம் குளம்புச்சுவடு எழுத்துக்கள் பதிந்த சேற்றுவெளி தொன்மையான கன்றுத்தோல் ஏடு போலிருந்தது. பொருக்கு வெடித்து முதலைத் தோல் பரப்பெனக் கிடந்த சேற்றை நொறுக்கும் காலடிகளுடன் கடந்தான். களிச்சேற்றுப் பரப்பு மேல் தன் வில்லை ஊன்றி வழுக்காது குனிந்து நோக்கி நடந்தான். மட்கியமரங்களுடன் கலந்து சேற்றில் கிடந்த முதலைகளில் ஒன்றின் வால் மெல்ல வளைந்தது. இரண்டு முறை காலெடுத்துவைத்துவிட்டு அது மீண்டும் காலத்தைக் கடந்து சிலையென்றாகியது.

மென்சந்தனக் குழம்பென விரல்களை அளையவைத்த நொதிப்பில் கால்களை நீட்டி நீட்டி வைத்து இறங்கினான். நீரில் இறங்கி முழங்கால் வரை நடந்தபோது அடிமணலை விரல்கள் உணர்ந்தன. அவன் காலடிமணலை மெல்ல கரைத்துச்சென்றது நீர். நின்ற இடம் குழிந்து மெல்ல இறங்கிக்கொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்து வளைந்த நீர்ப்பளிங்கு மேல் அலையெழுந்து வந்த சருகு ஒன்று நாணித் தயங்கி அருகணைந்து மெல்ல தீண்டிச்சென்றது. பின்னர் சிறியமீன்கள் நகைப்பெட்டிக்குள் இருந்து இழுத்து எடுக்கப்படும் சரப்பொளி மாலை என நிரைவளைந்து நீண்டு வந்து அவனைச்சூழ்ந்தன. அணுகி முத்தமிட்டு முத்தமிட்டு சிமிட்டும் விழிகளென சொடுக்கி மறைந்தன.

ஒளியே புனலாயிற்றென அடிதெரியத் தெளிந்து மறுகரை கரந்து சென்றது கங்கை. விழிகூர்ந்து நோக்கியபோது பல்லாயிரம் மீன் விழிகள் அவனைச்சூழ்ந்து வியந்து நிற்பதைக் கண்டான். வில்லை தோளில் குறுக்காக மாட்டி அம்பறாத்தூணியை சரியாமல் பொருத்திவிட்டு குனிந்து இருகைகளாலும் நீரள்ளி முகம் கழுவினான். அடர்ந்த தாடியில் நீர்மணிகள் உருண்டன. கைக்குவளை நீரை மும்முறை அள்ளி குடித்துவிட்டு வாரி முதுகிலும் தோள்களிலும் தெளித்துக் கொண்டான். வெம்மை குளிர மென் சிலிர்ப்பை தன் உடலெங்கும் உணர்ந்தான். காதுகளில் அலைநெளிவு மேலிருந்து வந்த காற்று குளிரென முட்டியது.

மீன்களின் மிரண்ட விழிகளை அர்ஜுனன் சற்று கழித்துதான் அறிந்தான். இமையா விழிகளில் அசையாது துளிர்த்திருந்தது அச்சம். ஊன்றிய காலை மணலிலிருந்து விடுவித்து மெல்ல பின்னகர்ந்து அலைவளைவுக்கு அடியில் சிறகுகள் உலைய வால் விசிற நின்ற மாந்தளிர்நிற மீனை நோக்கி “என்ன?” என்றான். அவன் உள்ளத்துச் சொல்லை உணர்ந்து வாய் திறந்து முத்துக் குமிழிகள் என எழுந்த சொற்களால் “பிறிதொருவர்” என்றது. புரியாமல் மேலும் குனிந்து “என்ன?” என்று கேட்டபடி நோக்கிய அர்ஜுனன் நீல நீர்க்கீற்று ஒன்று முகில்வானில் புகை என நீருக்குள் வளைந்து தன்னை நோக்கி வருவதை கண்டான். திரும்பி அப்பகுதியில் சிற்றோடை ஏதேனும் கங்கையில் கலக்கிறதா என்று நோக்கினான். இல்லை எனக்கண்டு மீண்டும் அந்த நீர்விழுதை விழிகூர்ந்தான்.

நிறமற்ற வேர்ப்பின்னலென அது சிறு கிளைகளாகப் பிரிந்தது. பளிங்கில் விரிசலென ஒளிர்ந்தபடி அலைநெளிவில் தான் நெளிந்து அணுகி வந்தது. கனவுகண்டு கை நீட்டும் குழந்தையென அவன் காலை நோக்கி நீண்டது. அஞ்சி பின்னகரும் உயிரின் இயல்பான அசைவின்மேல் சித்தத்தை நாட்டி வைத்திருந்தமையால்தான் அவனை குடாகேசன் என்றனர். குளிர்ந்த தொடுகையென அவன் காலை தொட்டது அந்த நீர்வளையம். சுழித்துச் சுழன்றேறி அவன் முழங்கால்களை மேலும் சுற்றியது. இமையும் அசைக்காமல் இருகைகளையும் இடையில் வைத்து அதை குனிந்து நோக்கி நின்றான்.

மீன்களாக ஒவ்வொன்றாக ஓசையின்றி பின்னகர்ந்து நீரிருளுக்குள் அமிழ்ந்து மறைந்தன. நீர்ச்சுழல் பிடியானையின் துதிக்கை என அவனை அள்ளிக் கொண்டது. கால் தென்னி நிலையழிந்து அவன் நீரில் விழுந்தான். அவ்விசை அள்ளி இழுத்து நீருக்குள் கொண்டு சென்றபோது விழிகளை மூடி சாக்ஷுஷி மந்திரத்தை சொன்னான். அதன் மீட்டலுடன் விழி திறந்தபோது தன்னை உடல் சுற்றி இழுத்து உள்ளே கொண்டு செல்லும் நீர்நாகம் ஒன்றை கண்டான். அதை தன் கைகளால் இறுகப்பற்றி எதிர்விசை அளித்தபோதுதான் அதன் ஆற்றலை உணர்ந்தான்.

“யார் நீ?” என்று அவன் கேட்டான். “நான் எவரென்று அறிவாயா? உயிரை இழக்காதே!” தொலைவில் நீருக்குள் நெளிந்து சென்ற தலையை வளைத்து அவனை நோக்கி திரும்பி அணுகி வைரம் ஒளிரும் விழிகளுடன் நச்சுநீலம் பூசப்பட்ட குறுவாட்கள் என வளைந்த இரு கோரைப்பற்களைக் காட்டி வாய்திறந்து “என் பெயர் உலூபி” என்றது. “உங்களை சிறைகொண்டிருக்கிறேன் இளைய பாண்டவரே!” “எங்கு கொண்டு செல்கிறாய் என்னை?” என்றான் அர்ஜுனன். “இங்கே நீருக்கடியில் எங்கள் உலகுக்குச்செல்லும் மந்தணப் பாதை ஒன்று உள்ளது இளவரசே. சின்னாள் எங்கள் விருந்தினராகுக!” அர்ஜுனன் “இக்கணம் உன்னைக் கொன்று இப்பிடியிலிருந்து தப்ப இயலாதென்று எண்ணுகிறாயா?” என்றான். “ஆம் இயலாது” என்றாள் உலூபி. “எங்கள் நஞ்சு உங்களை மீள விடாது.” அர்ஜுனன் “அதை பார்ப்போம்” என்று சொல்லி தன் வில்லை தோளிலிருந்து எடுத்தான். அக்கணமே நாகத்தின் வால் பின்னாலிருந்து சுருண்டு எழுந்து அவன் கைகளைச்சுற்றி இறுக்கிக் கொண்டது. மறுகை அம்பை நோக்கி சென்றபோது வாலின் நுனி மேலும் நீண்டு வந்து அக்கையையும் சுற்றிக் கொண்டது.

அவன் கால்களையும் கைகளையும் இடையையும் முற்றிலுமாக சுற்றி இறுக்கி அசைவிழக்கச் செய்தது நாகம். அவன் முகத்தருகே வந்து அவன் விழிகளை இமையாது நோக்கி “அசைய வேண்டாம் இளவரசே. தங்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை” என்றாள். அர்ஜுனன் “எது வரினும் அஞ்சுவதில்லை என்ற ஆணையை என் ஆன்மாவுக்கு இளமையிலேயே அளித்துள்ளேன்” என்றான். “அஞ்சுவது உடல். அது ஆன்மாவுக்கு கட்டுப்பட்டதல்ல” என்று உலூபி நகைத்தாள்.

“நான் கடக்க விரைவது இவ்வுடலென என் கல்வியென அகத்துறையும் எண்ணங்களென எனக்கு வகுக்கப்பட்டுள்ள எல்லைகளையே” என்றான். “இப்போது மண்ணோ விண்ணோ ஆழுலகோ அல்லாத உலகொன்றை கடந்து வருக!” என்று அவள் சொன்னாள். அமிழும்தோறும் எடைமிகுந்து நீரின் அலைமடிப்புகளைக் கிழித்து சென்று கொண்டிருந்தனர். பெரும் குமிழிகளாக அவர்களின் அசைவு உருமாறி ஒளி மின்னி மேலெழுந்து சென்று கொண்டிருந்தது. தலைக்கு மேல் நீர்ப்பரப்பு பட்டுவிதானமாக மாறியது. சூரியனை மூடிய கருமுகில்பரவிய வானம். அங்கிருந்து ஊறி வந்த ஒளி நீரலைகள் மேல் பரவி நெளிநெளிந்து அவனை சூழ்ந்திருந்தது.

மூழ்கி ஒழுகிய காட்டுக்காய்கள் பொன்னுருளைகளாக சுழன்று சென்றன. சருகுகள் பொற்தகடுகளாக திரும்பி பளபளத்து மறைந்தன. பல்லாயிரம் சிறு மின்னல்களாக நெளியும் பொன்னூல்கள் அலைகளில் ஆடின. காலுக்குக் கீழே ஈயக்குழம்பென எடைகொண்டு குளிர்ந்திருந்த நீர் விசையுடன் அவர்களை இழுத்தது. நெஞ்சுக்குள் எஞ்சிய மூச்சு ஒரு நுரைக் குவையாக அதிர்ந்தது. பின்னர் அழுந்தி நீர்க்குடமாக மாறி நலுங்கியது. இறுகி இரும்புக் கோளாக மாறியது. வயிற்றை எக்கி அதை மேலெழுப்பினான். நெஞ்சை அடைத்து தசைகளை சிதைத்தபடி உருண்டு எழுந்தது. வாயை உப்பி அந்த இரும்புருளையை வெளியே உமிழ்ந்தான். வெடித்து மேலே சென்று சுழன்று பறந்து வான் நோக்கி எழுந்தது.

இறுதி மூச்சும் அகன்றபோது அதுவரை தவித்துக் கொண்டிருந்த உடல் துவண்டு முறுக்குகளை புரியவிழ்த்துக்கொண்டு எளிதாகியது. கைகால்களில் தெறித்த நரம்புகள் கட்டு தளர்ந்தன. உடையுமெனப் புடைத்த தொண்டக்குழி அமைந்தது. விழிகள் தெளிந்து சுற்றும் நிகழ்வனவற்றை நன்கு காண முடிந்தது. பல்லாயிரம் மீன் விழிகளால் சூழப்பட்டவனாக அவன் சென்று கொண்டிருந்தான். நீர்நாகத்தின் தலை முன்னால் நீந்தும் கையின் விரல்களென துழாவி அவனை இழுத்துச் செல்ல அவன் காலுக்கு அப்பால் அதன் வால்நுனி நெளிந்தது.

விரைவு கூடிவந்தபோது தலைமுடி மேலெழுந்து அலையடிக்க ஆடை அவிழ்ந்து சுருண்டு மேலே செல்ல வெற்றுடலுடன் விழத்தொடங்கினான். விழுதலின் விசையில் தலைகீழாக ஆனான். காதுகளை வருடியபடி நீர் மேலே செல்வதை உணர்ந்தான். சில கணங்களுக்குள் அலை அலையென படிந்த மென் சேற்றுப்படலத்தால் ஆன வானமொன்றை தலைக்குமேல் கண்டான். அதைநோக்கி எடை இழந்து எழுந்து கொண்டிருந்தான். அணுகுந்தோறும் நீர் தன் பளிங்குத்திரைகளை அகற்றி அவனை அள்ளி உள்ளிழுத்து மூடிக்கொண்டிருந்தது. செந்நிறவானம். அதிரும் முரசுத்தோல்.

சிறிய பூச்சிகளால் வரையப்பட்ட கோலங்கள் பரவி இருந்தது அடிச்சேற்று பரப்பு. தொய்யில் எழுதிய சந்தனமார்பு. பேற்றுவரிகள் பரவிய அடிவயிறு. உள்ளங்கை கோடுகளென மீன்கள் வரைந்திட்ட கோடுகள் தெரிந்தன. சேற்றுப்பரப்பை நீர் நாகத்தின் தலை தொட்டதும் அதிலொரு கோடு விரிசலாக மாறியது. வாயிலென மெல்லத்திறந்து அப்பால் எழுந்த பொன்னொளியை காட்டியது. நீர்நாகம் அவனை இழுத்து அவ்வாயிலுக்குள் நுழைந்தது. அவனுக்குப்பின்னால் சேற்றால் ஆன கதவு மூடிக் கொண்டது.

புன்னகை மறையும் இதழ்களென தனக்குப்பின்னால் சேற்றுப்பரப்பு மூடிக்கொண்டதை அர்ஜுனன் கண்டான். அங்கே நீர்மையென்றேயான அடர் இருள் நிறைந்திருந்தது. மேல் கீழற்ற கரியவெளியில் விழாது எழாது நின்றுகொண்டிருந்தான். “இது எங்கள் உலகம் இளைய பாண்டவரே. அதல, விதல, சுதல, ரசாதல, மகாதல, தராதல, பாதாளமென்னும் ஏழு ஆழுலகங்களுக்கும் மேலாக மண்ணுலகுக்கு அடியில் அமைந்துள்ளது இது. எங்கள் உலகுக்கு வரும் முதல் மானுடன் நீர்…” என்றாள் உலூபி.

நீர்நாகம் பட்டுச் சால்வை காற்றில் நழுவுவது போல அவன் உடலை விட்டு நீங்கியது. பாய்ந்து அதை அவன் அணைத்துப் பற்றிக் கொள்ள வாழைத்தண்டு என அவன் கைகளில் சிக்கி வழுக்கி விலகிச்சென்றது. சரிந்து கீழே விழுந்து இருளை அறைந்து மூழ்கி சென்று கொண்டிருந்தபோது தன் இடைக்குக் கீழே கால்கள் நீண்டு நீண்டு ஒரு பெருநாக வடிவத்தில் இருப்பதை அர்ஜுனன் கண்டான். சவுக்கென வாலை சொடுக்கி நீட்டி அருகே தொங்கிய பிறிதொரு நாகம் ஒன்றின் உடலைப் பற்றிச்சுருண்டு இறுக்கியபின் கைவீசி ஊசலாடி தலை வளைத்து எழுந்தான். அவன் கைகளில் எஞ்சியிருந்த ஒரே அணிகலனாகிய பாண்டவர்குலத்து முத்திரை பொறிக்கப்பட்ட கணையாழி கழன்று முடிவிலியாழத்தில் விழுந்து மறைந்தது.

சாக்ஷுஷி மந்திரத்தால் உள்ளொளி கொண்ட அவன் விழிகளில் தொலைதூரம் வரை விரிந்தது அவ்வுலகு. இருள்வானில் விண்மீன் கூட்டங்களென முன்பு தெரிந்தவை பல்லாயிரம் நாகங்களின் கண்மணிகள் என்று கண்டான். வானென விரிந்த பெரும் வலைப்பரப்பு ஒன்றில் உடல்கோத்து நெளிந்து கொண்டிருந்தன அவை. நீர்த்தாரைகளென, இருட்தழல்களென, தரைதேடும் விழுதுகளென அவை கண் தொடும் தொலைவுவரை ஆடின. அவற்றின் சீறலே அங்கே சூறாவளியென ஒலித்துக்கொண்டிருந்தது.

அவன் முன் நெளிந்து எழுந்து வந்த உலூபி “நாகருலகைக் காணும் விழிகொண்டிருக்கிறீர் இளவரசே” என்றாள். “எங்குளது இவ்விடம்? அதோ மேலே தெரியும் அந்த வான் எது?” என்று அர்ஜுனன் கேட்டான். “மேலே ஐராவதீகம் என பெயர் கொண்டு எழுந்து நின்றிருக்கும் பெருங்காட்டின் வேரடர்வுகளால் ஆனது எங்கள் நிலம். அதில் பின்னித் தொங்கிக்கொண்டிருப்பவர்கள் நாகங்கள். கால்களால் நீங்கள் மண்ணில் பற்றிக்கொண்டிருப்பதுபோல. அதோ தலைக்குக்கீழே விரிந்துள்ளது எங்கள் வானம். இங்கு இறப்பவர்கள் அங்கு விழுந்து மறைகிறார்கள். அவர்கள் சென்று மீளாத அவ்விருளுக்கு அப்பால் உள்ளன எங்கள் மூதாதையர் உலகங்கள். அங்கு வாழ்கின்றனர் எங்கள் தெய்வங்கள்.”

“இங்கு எனை ஏன் கொணர்ந்தாய்?” என்று கேட்டான் அர்ஜுனன். “ஐராவாதீகம் என்னும் இந்நாகர் உலகின் அரசர் ஐராவதி குலத்துதித்த எந்தை கௌரவ்யர். அவரது ஒரே மகள் உலூபி நான். ஒளிநீரில் நீந்தி விளையாட ஒவ்வொரு நாளும் உச்சிப்பொழுதில் கங்கையின் அடித்தட்டுக்கு செல்வது என் வழக்கம். இன்று நீராழத்தில் தொலைவில் ஐந்து மின்னும் விழிகள் கொண்ட இரு நாகங்கள் சேற்றிலாடி வருவதைக் கண்டேன். அணுகிய பின்புதான் அவை உங்கள் கால்கள் என அறிந்தேன். அவ்வழகை என்னுடையவை எனக்கொள்ள விழைந்தேன். என்னுடன் தாங்கள் இருக்க வேண்டுமென்று இங்கு கொணர்ந்தேன்.”

“நாகமங்கையே, இது மானுடர் வாழும் உலகல்ல. இங்கு நாகம் என வாழ்வது எனக்கும் ஒவ்வாததே, உணர்க!” என்றான் அர்ஜுனன். உலூபி நகைத்து “ஆம். அதை நானும் அறிவேன். அங்கு மானுடர் வாழும் உலகில் கால்களுடன் வாழ்வது எனக்கும் அரிதே. ஆனால் தனக்குரிய ஆண்மகனை தேடி அடைவது எப்பெண்ணும் விழைவதல்லவா? இன்று உங்கள் கால்களைக் கண்டதுமே அறிந்தேன், அவை என்னை ஆள்பவை” என்றாள். “நான் அஸ்தினபுரியின் இளவரசன். இந்திரப்பிரஸ்தத்தின் சக்ரவர்த்தினியின் இளைய துணைவன்” என்றான் அர்ஜுனன். “அதை அறிவேன். என் அறிவிழியால் தங்களைத் தொட்டதுமே யார் என்று உணர்ந்து கொண்டேன்” என்றாள் உலூபி.

“நான் இங்கிருக்க விழையவில்லை. மீளும் எண்ணம் கொண்ட எனக்கு நீ விரும்பத்தக்கவளும் அல்ல” என்றான் அர்ஜுனன். “இங்கு நீங்கள் விழைபவை என்ன என்று எண்ணுங்கள். அவை தேடி வரும். மண்ணுலகின் எளிய வாழ்க்கையை ஏன் நாட வேண்டும்?” என்றாள். “விழைவுகளால் இயக்கப்படும் ஆண்கள் இழிமகன்கள். கடமைகளால் ஆனவர்களையே தெய்வங்கள் விரும்புகின்றன” என்றான் அர்ஜுனன். “உங்கள் கால்களை என் விழிகள் தொட்டகணமே அறிந்தேன், நான் உங்கள் துணைவியன்றி பிறிதெவரும் அல்ல என்று. என் சொல்பெற்று நீங்கள் இங்கிருந்து திரும்பப்போவதில்லை” என்றாள் உலூபி.

“இங்குள நாகங்கள் எய்தாத எந்நிலையை என்னில் கண்டாய்? உன் மேல் காதல்கொண்டவர் இங்கே பல்லாயிரம்பேர் இருப்பார்கள். அவர்கள் என் மேல் சினம் கொள்ளலாகும்” என்றான் அர்ஜுனன். “இளைய பாண்டவரே, தவழும் நாளில் எந்தை எனக்குரைத்த கங்கையின் அவ்விளிம்பே நாகமென என் எல்லை. அதை உணர்ந்தபின் ஒவ்வொரு நாளும் அவ்வெல்லையையே சென்றடைகிறேன். அதை மீறும் கனவொன்றே என் நெஞ்சை இனிதாக்குகிறது. என்னை வெல்பவன் அவ்வெல்லைக்கு அப்பால் எழுபவன் என்றே எண்ணியிருந்தேன். அது நீங்களே” என்றாள் உலூபி. “இவ்வுலகின் சமர்களிலாடி வென்று என்னை அணைக!”

அவள் மேலேறிச்சென்ற பின்னர்தான் அர்ஜுனன் மேலே விரிந்த பரப்பை முழுதும் நோக்கினான். ஊடும்பாவுமென நாகநெளிவுகளால் ஆன கரியபெரும்பரப்பாக அது தெரிந்தது. உடல் வளைத்து மேலே நோக்கி வியந்தபோது தன் மூச்சும் நாகமென்றே ஒலிப்பதை கேட்டான். அவனருகே நான்குபக்கமிருந்தும் நாகமுகங்கள் நீண்டு வந்து சூழ்ந்துகொண்டன. “மானுடன்!” என்று ஒரு நாகம் சொன்னது. “ஏன் விழிகளை சிமிட்டிக்கொண்டிருக்கிறான்?” என்றது இளம்நாகம் ஒன்று. “அது மானுடரின் இயல்பு. அவர்கள் புடவியை முழுதும் காணும் ஆற்றலற்றவர்கள்” என்றது முதிய நாகம்.

“ஏன்?” என்று இன்னொரு இளம்நாகம் கேட்டபடி நெரித்து முன்னால் வந்தது. “இவர்கள் வாழும் மண்ணுலகம் மேலும் கீழுமுள்ள உலகங்கள் சந்தித்துக்கொள்ளும் பொதுவெளி. அங்கே விண்ணுளோரும் மண்ணகத்துளோரும் வந்து உலவுகின்றனர். இவர்கள் இமைமூடித்திறக்கும் காலத்திலேயே அவர்கள் வாழ்கிறார்கள்.” இளையநாகம் அருகே வந்து அவன் கண்களை நோக்கியது. “இவன் உடலில் இருந்து இரு நாகங்கள் எழுந்துள்ளன” என்றது. “ஆற்றல்மிக்க ஐந்து தலைகள் கொண்டவை. தலைநுனியில் கூர்விழிகள் எழுந்தவை.”

“அவை அவன் கைகள்” என்றது ஒரு முதுநாகம். “இவன் மூதாதையர் மண்ணில் மானுடரென உருவெடுப்பதற்கு முன் உளைசேற்றில் புழுக்களென நெளிந்தனர். அவர்களில் பூஜாதன் என்பவன் தன் தவத்தால் பிரஜாபதி என்றானான். மண்ணுக்கு அடியில் வாழும் மாநாகங்களை எண்ணி அவன் தவமிருந்தான். அழியாப் பெருநாகமான ஐராவதம் அவன் முன் எழுந்து எளியோனே நீ விழைவதென்ன என்று கேட்டது. இம்மண்ணில் எனக்குரிய உணவை உண்டுபண்ணும் ஆற்றலை அருள்க என்றான் பூஜாதன். அவ்வாறே ஆகுக என்றது ஐராவதம்.”

“ஐராவதத்தின் ஆணைப்படி வாமன் தட்சிணன் என்னும் இரு நாகங்கள் அவன் இருபக்கமும் தங்களை பொருத்திக்கொண்டன. அவையே கைகள் என்றாயின” என்றது முதியநாகம். “அருகே நின்றிருந்த குரங்கு எனக்கும் அருள்க பெருநாகமே என்றது. நான் கிளைவிட்டு கிளைதாவுகையில் கீழே விழாதிருக்கவேண்டும் என்று கோரியது. அவ்வாறே ஆகுக என்று அருளியது ஐராவதம். புச்சன் எனும் நாகம் அதன் நீண்ட வாலென்று ஆயிற்று. பெருமரங்களை முறித்து உன்னும் ஆற்றலை எனக்கருள்க என்றது அங்கு நின்றிருந்த யானை. நாசிகன் என்னும் பெருநாகம் அதன் துதிக்கை ஆனது. என்னைக் கடிக்கும் ஈக்களை ஓட்டவேண்டும் என்று கோரியது பசு. லூமன் என்னும் நாகம் அதன் வாலென்று ஆயிற்று.”

இளையநாகம் வந்து அர்ஜுனனின் கைகளைப் பற்றி சுற்றிக்கொண்டு மேலேறியது. “இவன் தோள்கள் நம்மைப்போலவே இறுகியிருக்கின்றன.” அவன் முகத்தருகே வந்து, “மூத்தவரே, இவன் விழிகள் ஒளிகொண்டவை” என்றது. மேலே இடியென பேரோசை எழுந்தது. பெரும்பாறை ஒன்று உருண்டு வருவதுபோல கரியநாகமொன்று சுருளவிழ்ந்து அணுகியது. பல்லாயிரம் யானைகள் சேர்ந்து பிளிறும் குரலில் “விலகுங்கள்… இவன் மானுடன். இங்கு இவன் வாழலாகாது” என்றது. “எல்லை கடந்து எங்ஙனம் இங்கு வந்தாய்?”

“நான் கொண்டுவரப்பட்டேன், உங்கள் இளவரசியால்” என்றான் அர்ஜுனன். “நீ அஞ்சியிருக்கவேண்டும். ஒருகணம் உன்னில் அச்சம் நிகழ்ந்திருந்தால் மானுட எல்லையை கடந்திருக்கமாட்டாய்” என்றது கரியபெருநாகம். “நான் அச்சத்தை உதறிவிட்டவன்” என்றான் அர்ஜுனன். “மூடா, அச்சமும் வலியுமே மானுடனுக்கு மாபெரும் காப்பென்பதை அறியாதவனா நீ?” என்று சீறியபடி பிறிதொரு பெருநாகம் அவனை அணுகியது. “வலியறியா உடல் பருப்பொருட்களில் முட்டிச்சிதையும். அச்சமறியா மானுடனை மேலுலகும் கீழுலகும் தாக்குகின்றன. ஏனென்றால் அச்சமற்றவன் தெய்வங்களுக்கு முன் ஓர் அறைகூவல்.”

அர்ஜுனன் “ஆம், நான் அறைகூவலே” என்றான். “ஆனால் நான் ஆணவத்தால் இவ்வச்சமின்மையை கொள்ளவில்லை. அறிய வேண்டுமென்னும் வேட்கையால் இதை சூடியிருக்கிறேன். மானுடம் இங்கு நிகழ்ந்தகாலம் முதல் இன்றுவரை அச்சத்தால் மூடிவைக்கப்பட்ட அனைத்து வாயில்களையும் திறந்து நோக்க விரும்புகிறேன்.” முதிய நாகம் அவனருகே வந்து கண்ணொடு கண் நட்டு “வேண்டாம்… அது மானுடருக்குரியதல்ல” என்றது. “தன் எல்லையை மீறிய விலங்கே மானுடன் என்றானது” என்றான் அர்ஜுனன்.

“நீ அறியவிழைவது எதை?” என்றது முதியநாகம். “எதை அறியாததனால் நான் மானுடன் என்று என்னை உணர்கிறேன்? நான் என்றும் எனதென்றும் வகுத்துக்கொள்கிறேன்?” என்று அர்ஜுனன் சொன்னான். “எந்நிலையில் என்னை கடந்துசெல்வேன்? ஒவ்வொன்றாய் கடந்து கடந்து நான் தேடுவது அதையே.” முதியநாகம் பெருமூச்சுடன் “அவ்வாயிலைக் கடந்தவர் மீண்டதில்லை” என்றது. “நான் மீளும் எண்ணத்துடன் எங்கும் நுழைவதில்லை” என்றான் அர்ஜுனன். “எதையும் மிச்சம் வைத்துவிட்டுச் செல்வதுமில்லை. இன்று என்னை செல்பவன் என்றே அடையாளப்படுத்துவேன். என்றோ ஒருநாள் நின்றவன் என்றாவேன்.” முதியநாகம் “ஆம், அது நிகழ்க!” என வாழ்த்தி பின்னகர்ந்தது.

நூல் எட்டு – காண்டீபம் – 10

பகுதி இரண்டு : அலையுலகு – 2

தன் ஒரு முகத்தை இன்னொரு முகத்தால் பார்க்கத் தெரிந்தவனை தெய்வங்கள் பார்க்கின்றன. மூன்று முகமுள்ள பேருருவனின் கதை இது. பிரம்மனின் உளம்கனிந்த மைந்தர்களில் முதல்வர் மரீசி. அவர் விண்பெருக்கில் ஒரு நீர்த்தீற்றலெனத் திகழ்ந்தார். அவர் பெற்ற மைந்தரான காசியபர் பெருநாகமான தட்சனின் மகள் அதிதியை மணந்து பெற்ற மைந்தர்களை ஆதித்யர்கள் என்றனர். ஆதித்யர்களில் முதலோன் இந்திரன். தாதா, ஆரியமா, மித்ரன், ருத்ரன், வருணன், சூரியன், பகன், விவஸ்வான், பூஷா, சவிதா, த்வஷ்டா, விஷ்ணு என்னும் பன்னிரு ஆதித்யர்களும் அவனுக்கு இளையோர்.

தம்பியரின்மேல் பேரன்பு கொண்டிருந்த இந்திரன் அவர்களில் மிக இளையவர்கள் என த்வஷ்டாவையும் விஷ்ணுவையும் எண்ணி அன்னையென உளம் கனிந்திருந்தான். இருபெருந்தோள்களில் சிறுவர் இருவரையும் எந்நேரமும் ஏற்றிக்கொண்டு விண்முகில் வெளியில் களித்தான். அவர்கள் உளம்கொண்டது சொல்கொள்வதற்கு முன்னரே அறிந்தான். அச்சொல் வெளிவரும் முன்னரே அதை அளித்தான். அவர்களின் விழிநீர்த்துளி எழுந்தால் ஈரேழு உலகையும் அழிக்க சித்தமாக இருந்தான்.

விஷ்ணுவுக்கு இசை தெய்வங்களால் அளிக்கப்பட்டது. த்வஷ்டா சிற்பியானான். எண்ணுவதை இயற்றும் விரல் கொண்டிருந்தான். அவனைச்சூழ்ந்து அவன் படைத்தவை நிறைந்தபோது அவற்றுக்கு அப்பாலிருந்த பேருலகங்களை அவன் மறந்தான். அங்கு அவ்வாறிருப்பதே உலகென்று எண்ணியபோது உலகியற்றிய இறைவனென தன்னை உணர்ந்தான். ஆம் ஆம் என்றன அவனைச் சூழ்ந்திருந்த அவன் படைத்த முகங்கள். அவன் கலைத்திறன் கண்டு உளம்விம்மிய இந்திரன் அவனை சிற்பியரில் முதல்வன் என கொண்டாடினான்.

தடையற்ற பேரன்பு பொழியப்படும் விசையில் நிறையும் கலமும் கவிழும் கலமும் தெய்வங்களின் ஆடலுக்கு களம் அமைக்கின்றன. விஷ்ணு தமையனின் உடலில் ஒரு சிற்றுறுப்பென தன்னை உணர்ந்தான். தனக்கென எண்ணமோ விழைவோ இன்றி கடலில் மீன் என அவனில் திளைத்து வாழ்ந்தான். த்வஷ்டாவோ தன் தமையனே தான் என ஒவ்வொரு கணமும் உணரலானான். எண்ணுவதெல்லாம் விலகுதலே என்றானான். விலகும்தோறும் தமையனின் வெல்லற்கரிய வல்லமையை அறிந்தான். தோற்கும்தோறும் கசப்பு கொண்டான். வெறுப்பு என்பது முடிவற்ற வல்லமையை அளிக்கும் ஊற்று என்று அறிந்தான்.

விஷ்ணு வெண்ணிற ஒளிகொண்டு கீழ்த்திசையில் மின்னி நின்றான். இங்கு காதலில் கனிந்தவர்கள், பேரன்பில் விரிந்தவர்கள் அவனை ஏறிட்டு நோக்கினர். அவனுடைய ஒளிவடிவம் அருமணியென மின்னி விழுந்து கிடந்த சுனைநீரை அள்ளி அருந்தி அகம் நிறைந்தனர். அவர்களின் குருதியின் பாதைகளில் மின்மினி போல அவன் ஒழுகிச்சென்றான். த்வஷ்டா செந்துளி என மேற்கே நின்றெரிந்தான். மண்ணில் வஞ்சமும் சினமும் ஆறாப்பெருந்துயரும் கொண்டவர்கள் அவனை நோக்கி நின்றனர். அவனைத் தவிர்த்து விழிதிருப்பிக்கொண்டு விலக முயன்றனர். அவர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் நீர்நிலைகளில் ஈரத்தரையில் இல்லத்து ஆடிகளில் அவன் தோன்றி உறுத்து விழித்தான். கனவுகளில் பட்டுக்குவியலில் விழுந்த கனல்பொட்டு போல எரிந்து இறங்கிச்சென்றான்.

வெறுப்பவனைப்போல அறிபவன் எவனுமில்லை. ஏழு ஊழிக்காலம் இந்திரனை அணுகியறிந்தபின் த்வஷ்டா இடதுகாலின் கட்டைவிரலை ஊன்றி மேற்குமூலையில் தவமிருந்தான். முதல் ஏழு ஊழிக்காலம் அவன் தமையன் மீதுகொண்ட கடும் கசப்பில் இருண்டிருந்தான். அடுத்த ஏழு ஊழிக்காலம் அவன் அக்கசப்பை தானே நோக்கி அறிந்துகொண்டிருந்தான். தன்னுடையது வெல்லவேண்டும் என்னும் விழைவே என உணர்ந்தான். மூன்றாவது ஏழு ஊழிக்காலத்தின் தொடக்கத்தில் அவன் அறிந்தான் தன்னுடையது தன்மேல்கொண்ட பேரன்பு என. அவ்வூழி நிறைந்தபோது அவன் தெளிந்தான், அவ்வன்பு என்பது அனைத்துமாகி நின்ற அதன்மேல் கொண்ட அன்பின் ஒரு முகமே என.

முகில் மழையென ஆகும் கணம் அமைந்தபோது விண்வடிவானது மேற்கில் ஒரு பேருருவக் கதிரவனாக எழுந்தது. அதன் ஒளிபட்டு அவன் உடல் பொன்னொளி கொண்டது. விழிகள் மணிச்சுடர் விட்டன. ‘கேள் மைந்தா, நீ வேண்டுவதென்ன?’ என்றது அது. ‘பகை முடித்தல்’ என்றான். அது நீலப்பேரொளி கொண்டது. ‘என் பெயர் என்றும் நிற்றல்’ என்று அவன் மேலும் சொன்னான். அது செந்நிறமாகியது. புன்னகைத்து இறுதியாக ‘நீயென நானும் ஆதல்’ என்றான். அது வெண்ணிறமாகச் சுடர்ந்தது. ‘முத்தொழில் ஆற்றும் பேருருவன் ஒருவன் எனக்கு மகனாக வேண்டும்’ என்றான் த்வஷ்டா. ‘அவ்வாறே ஆகுக’ என்று அருளியது ஒளியோசை.

வெண்மையும் செம்மையும் நீலமும் என நிறம் கொண்டு சுடர்ந்தணைந்த அதன் ஒளியில் த்வஷ்டாவின் பெருநிழல் கிழக்கே நீண்டு எழுந்து மும்முடிகள் எழுந்த மலையென ஆகியது. அம்மைந்தன் விஸ்வரூபன் எனப்பட்டான். அவனை திரிசிரஸ் என அழைத்தனர் வேதமுனிவர். ஒன்றுடன் ஒன்று இணைந்த மூன்று முகங்களால் நான்குதிசைகளையும் நோக்கினான். அவன் நீலமுகம் கள்ளில் பித்துகொண்டிருந்தது. ஊன்சுவைத்து மகிழ்ந்தது. இரண்டாவது முகம் சூழுலகை நோக்கி விழைவுகளை அறிந்தது. மூன்றாவது முகம் வேதமெய்ப்பொருளை உணர்ந்தோதிக்கொண்டிருந்தது.

கள்ளால் வேதத்தை அறிந்தவன் வேதத்தால் கள்ளையும் அறிந்தான். வேதமும் கள்ளும் துணைவர இங்கென இவையென திகழ்வன அனைத்தையும் அறிந்தான். வேதம் அவன் உண்ட கள்ளை சோமம் என ஆக்கியது. ஊனை அவியாக்கியது. கள் அவன் ஓதிய வேதத்தை இசையென மாற்றியது. அவன் விழிதொட்ட ஒவ்வொன்றும் பொருள் துலங்கின. அறிவென ஆகிய விழைவால் தொடப்பட்ட ஒவ்வொன்றும் அவனுடையதாயிற்று.

இங்குள்ள ஒவ்வொன்றும் தங்கள் உண்மையின்மேல் பொருண்மையை ஏற்றிவைத்து மூடிக்கொண்டிருக்கின்றன. பொருண்மையை விலக்கினால் இன்மையையே அறியமுடியும். பொருண்மையை அறிந்தால் உண்மை மறைந்துவிடும். சலிக்காத பெரும்பகடையாட்டத்தில் புன்னகைத்து அமர்ந்திருக்கிறது பிரம்மம். அவனோ பகடையின் மூன்று களமுகங்களிலும் தானே அமர்ந்தான். நான்காவதாக பிரம்மத்தை அமரச்செய்தான். பொருண்மையை அறிந்தது கள். பொருளை அறிந்தது வேதம். அறிந்ததை ஆண்டது விழைவு.

அவன் விழிதொட்டபோது கதிரவனும் நிலவும் விண்மீன்களும் அவனுக்கு விளக்குகளாயின. திசையானைகள் ஊர்திகளாயின. பாதாளநாகங்கள் பணியாட்களாயின. எட்டுதிசைத் தேவர்கள் வாயிற்காவலர்களாக வந்து நின்றனர். விண்முதல்வனின் ஐராவதம் அவனை எண்ணி மத்தகம் தாழ்த்தியது. உச்சைசிரவஸ் முன்னங்கால்தூக்கி பிடரி சிலிர்த்தது. மாதலி முகபீடத்தில் ஏறி அமர்ந்து வியோமயானத்தை கிளப்பியபோது அவனை எண்ணி நீள்மூச்செறிந்தான். அவனுக்காக அரிசந்தனமும் பாரிஜாதமும் மந்தாரமும் மணமெழுப்பி மலர்ந்த நந்தனத்தில் கற்பக மரம் அவனுக்காகக் கனிந்தது. காமதேனு அவனுக்காக சுரந்தது.

அஸ்வினிதேவர்கள் அவனுக்காக ஏடுகளுடன் எழுந்தனர். ரம்பையும் மேனகையும் திலோத்தமையும் கலைத்தோழியருடன் அவன் அண்மையை நாடினர். இனி அவனிருக்கும் இடமே சுதமை போலும் என தேவர் மயங்கினர். அமராவதியில் விழவுகள் ஓய்ந்து புள் அகன்ற காடு என அமைதி நிறைந்தது. தன் வைஜயந்த முகப்பில் அமர்ந்து நோக்கிய இந்திரன் தன் துணைவியும் மைந்தனும்கூட அவன் அமைந்த திசைநோக்கி விழிதிருப்பியிருப்பதை கண்டான். அவன் முகம் சுளிப்பதைக் கண்டு அருகிருந்த நாரதர் “ஆம் அரசே, இனி அமுதென்பது அங்குள்ள நீரே. கிழக்கென்பது அவன் திசையே” என்றார்.

சினந்தெழுந்த இந்திரன் “ஆயிரம் அஸ்மேதமும் நூறு ராஜசூயமும் செய்து நான் அடைந்த அரியணை இது. அரசனுக்குரிய அறங்களில் முதன்மையானது அரியணையை காத்துக்கொள்ளலே. அவனை அழித்து இதைக் காப்பேன். அருள்க என் தெய்வங்கள்!” என வஞ்சினம் உரைத்தான். “விண்ணவனே, விழைவுகொண்டவனுக்கு பிற எதிரிகள் தேவையில்லை. அவன் விழியால் தொட்டவை அவனை நாடுகின்றன. அவற்றையே அனுப்பி அவன் தவத்தை கலைக்கலாம். ஒருமுறை ஒருசொல்லில் அவன் வேதம்பிழைத்தான் என்றால் தன் அனைத்து வல்லமைகளையும் அவன் இழந்தவனாவான்” என்றார் நாரதர்.

“அது எவ்வண்ணம்?” என்று வியந்தான் இந்திரன். “மூன்று முகங்களால் தன்னை முற்றிலும் நிகர்நிலையில் வைத்து முள்முனையில் நெல்லிக்கனி என அமர்ந்திருக்கிறான் அவன். மூன்றும் ஒன்றையொன்று நிகர் செய்கையிலேயே அவன் வெல்லமுடியாதவனாகிறான். அம்மூன்றில் ஒன்று பிழை ஆனால் பிறஇரண்டும் அப்பிழையை எதிரொளிக்கும். ஆடிகள் முன் விளக்கென அப்பிழை முடிவிலாது பெருகும். அதை வெல்ல அவனால் முடியாது” என்றார் நாரதர்.

“அவன் மதுவுண்கிறான். உலகை எண்ணி ஊழ்விழைகிறான். அங்கு நாம் அவனை அணுகினாலென்ன?” என்றான் இந்திரன். நாரதர் நகைத்து “விண்ணவனே, உண்பவனும் விழைபவனும் தன்னை தோற்கடிக்க தானே முனைபவர்கள். எழுந்தபின் வேட்கை எரியென ஆகும். முழுதுண்டு அமையும் வரை நிற்காத தடையின்மையே அதன் இயல்பு. மாறாக மெய்நாடும் உள்ளமோ இறுதிச்சொல் வரை ஐயம் கொண்டது. மெய்மையென்பது சவரக்கத்திநுனிப்பாதை. பிடியானை அடிபிழைக்கும் சரிவு. அது. வரையாடு நிலைதவறும் ஏற்றம். அதில் ஒரு சொல் பிழைப்பது மிகமிக எளிதென்றறிக!” என்றார். இந்திரன் “ஆம், அதையே செய்கிறேன். என் அவைமங்கலங்கள் எழுக! அவன் முன் சூழ்ந்து அவனைக் கவர்ந்து வெல்க!” என ஆணையிட்டான்.

நந்தனத்தின் அரிசந்தனமும் பாரிஜாதமும் மந்தாரமும் கொண்டு தேவர் மும்முகனின் அருகணைந்து வணங்கி “இறைவ, இவை இனி உனக்கே” என்றனர். கற்பகமரத்தின் கனிகளையும் காமதேனுவின் இன்னமுதையும் கொண்டுவந்து படைத்து “உண்க தேவர்களுக்கரசே!” என்றனர். அவன் கள்முகம் வெறிகொண்டெழுந்து அவற்றைச் சூழ்ந்தது. தடையற்ற அதன் பசியை வேதமுகம் தடுக்கவில்லை. தன்னை பிறிதொன்றென ஆக்கி அது ஊழ்கத்திலிருந்தது.

இந்திரனின் அவைக்கன்னியரான ரம்பையும் ஊர்வசியும் மேனகையும் பொற்பட்டு ஆடைகளும் அருமணி அணிகளும் மின்ன அவன் முன் வந்தனர். “தீராத காமமே தேவர்கொள்ளும் களியாட்டம். கொள்க தேவர்க்கரசே!” என்றனர். மாயப்பூங்காக்களை அமைத்து அவற்றில் நடமிட்டனர். நீலநீர்ச்சுனைகளை சமைத்து அவற்றில் பொன்னுடல் பொலிய நீராடினர். அவன் பெருவிழைவுமுகம் எழுந்து தன்னை ஒன்றுநூறெனப் பெருக்கி அவர்களுடன் உறவாடியது. தன் மத்தத்தில் மூழ்கிய சுவைமுகம் அதை அறியவில்லை. வேதமெய் நாடிய முகமோ மறு எல்லையென எங்கோ இருந்தது.

“கள்ளில் ஆடுகையிலும் காமம் நாடுகையிலும் உள்ளுறைந்த அறம் வந்து வழிமறிக்காத உள்ளம் இல்லை தேவர்க்கரசே” என்றார் நாரதர். “ஆகவேதான் எங்கும் எவரும் அதில் முழுதும் திளைக்கக் கூடுவதில்லை. அச்சமும் ஐயமும் உட்கரந்துதான் அவர்கள் நுகர்கிறார்கள். கோட்டையின் பின்பக்கம் திறந்திருக்கும் அந்த வாயிலே அவர்களை வெல்லும் வழி. இவனோ முற்றிலும் தடையற்று புயலெனப்பெருகி சுவைமேல் படர்கிறான். காமத்தைச் சூழ்கிறான். இவ்வழியே இவனை வெல்லல் அரிது.”

“நானறிவேன் இவனை வெல்லும் வழி” என்று எழுந்தான் இந்திரன். இடியோசையை முரசொலியாக்கி தேவர்படை திரட்டிக்கொண்டான். மின்னல்களை வாள்களென ஏந்தி முகில்குவைகளை மதகளிறுகளென ஆக்கி திரண்டு கிளம்பினான். கிழக்கு எல்லையில் விண்நிறைத்து நின்றிருந்த மும்முகனைச் சூழ்ந்தான். சுவையில் திளைத்திருந்த முகம் ஒரு பெரும்பன்றியாகியது. விழைவில் சிவந்த முகம் சிம்மமென உறுமியது. வேதம் பெருகிய முகம் ஒரு வெண்பசுவென விழிதிறந்தது. பன்றியைக் கொல்லலாம். சிம்மத்தை வெல்லலாம். பசுவை வெல்லமுடியாதென்று அறிந்து இந்திரன் திகைத்தான்.

தன் பாடிவீட்டுக்கு மீண்டு துயருற்றுத் தனித்திருந்த இந்திரனை அணுகிய நாரதர் சொன்னார். “மின்னலுக்கரசே, சோர்வுறுதல் ஏன்? நீர் இந்திரன் என இவ்வரியணையில் அமர்ந்திருப்பதும் வழுவுதலும் விண்சமைத்த வெறுமையின் விழைவு என்றால் அதுவே நிகழும். உம் பணி போரிடுவதொன்றே. அதை இயற்றுக!” அவரை நோக்கி கைகூப்பிப் பணிந்து இந்திரன் கேட்டான் “தாங்கள் சொல்லுங்கள், மும்முகனை வெல்ல வழியென்ன? ஒருமுகத்தை பிறமுகம் காக்கும் இவன் வெல்லற்குரியவனா என்ன?”

“மெய்மைதேர் தவத்தை கலைக்கும் கரவு ஒன்றே. மெய்மையை முழுதறியவேண்டுமென்னும் விழைவு.” இந்திரன் “அவ்விழைவு இன்றி அதை எவர் இயற்றக்கூடும்?” என்றான். “மெய்மையைத் தேடும் விழைவையும் அதன்பாதையில் உதிர்த்து வழிதல் நீரின் இயல்பென்பதுபோல செல்பவன் மட்டிலுமே அதை அடைகிறான். விழைகிறேன் என்பது இருக்கிறேன் என்னும் சொல்லின் நிகரொலி மட்டுமே. இருக்கிறேன் என்பதோ நான் எனச்சுருங்கும். நான் என்பதோ நீ என உணரும். நீ என உணரப்படுவது அக்கணமே தன்னை உணர்பவனிலிருந்து விலக்கிக் கொள்கிறது. பின்பு துலாக்கோல்கள் நடுவே நின்றாடும் முள்ளென ஆகிறது அறிவு.”

தன் படைகளனைத்தையும் விட்டுவிட்டு தனித்து மும்முகப் பேருருவனுடன் போருக்கு வந்தான் இந்திரன். வேதமுரைத்த முகத்தின் முன் நின்று தானும் வேதம் ஓதலானான். அவன் சொற்களை இடியோசையென முகில்நிரைகள் எதிரொலித்தன. வேதச்சொல் கேட்டு மும்முகன் செவியளித்தான். அப்போது இந்திரனின் வெண்களிறு பிளிறியது. வேதத்தில் தானறியாத வரியா அது என திகைத்த மும்முகன் ஒருகணம் ஓதுவதையும் ஊழ்கத்தையும் நிறுத்தி உளம்கூர்த்தான். அக்கணத்தில் அவன் பசுமுகம் மறைந்து அரக்கப் பேருருவம் தோன்றியது. அதை எண்ணிய பன்றிமுகமும் சிம்மமுகமும் இருண்ட பெருமுகங்களாயின. இந்திரன் தன் வாளை எடுத்து அவன் நெஞ்சில் ஆழப்பாய்ச்சினான்.

விண்தொலைவுகளில் தனித்தலைந்த கோள்களில் மோதி எதிரொலிக்கும்வண்ணம் அலறியபடி மும்முகன் மாண்டான். அவன் குருதி எழுந்து வானில் பரவியபோது உச்சிவேளையில் அந்தியெழுந்த விந்தையென்ன எனத் திகைத்தனர் பொழுதிணைவு தொழும் முனிவர். இடியோசை முடிவிலாது நீளக்கேட்டு நாகங்கள் மண்ணாழத்தில் புதைந்து சுருண்டு இறுகி அதிர்ந்தன. அவன் சரிந்தபோது எழுந்த ஊழிக்காற்றில் மரங்கள் சருகுகள்போல் எழுந்து பறந்து சுழன்று சென்று மலைகளை அறைந்து விழுந்தன. மலையுச்சிகளில் காலத்தவம் செய்திருந்த பெரும்பாறைகள் உருண்டன. விண்ணில் மின்னல்கள் எழுந்தெழுந்து அணைந்தன. வானம் முகில்புதர்களில் ஒளிந்த நரிக்கூட்டமென ஊளையிட்டது.

மும்முகன் உயிர்துடித்துக்கொண்டிருந்ததைக் கண்டு இந்திரன் தன் சங்கை எடுத்து வெற்றிப்பேரொலி முழக்கியபடி திரும்பினான். அவனருகே வந்த நாரதர் “தேவர்க்கரசே, அவன் இறக்கமாட்டான். அவன் தலைகளில் ஒன்றை பிறிதொன்று வாழச்செய்யும். மது வேதத்தையும் வேதம் உலகத்தையும் உலகம் மதுவையும் ஓம்பும் என்பதை உணர்க! முற்றிலும் கொல்லாமல் இங்கிருந்து விலகினீர் என்றால் மேலும் பெரிய எதிரியை அடைந்தவராவீர்” என்றார்.

இந்திரன் திரும்பி தன்னருகே நின்ற காம்யகனை நோக்கினான். பெருஞ்சிற்பியாகிய த்வஷ்டாவின் முதல்மாணவன் அவன். “உன் ஆசிரியரால் உருவாக்கப்பட்டவன் இந்த மூன்றுமுகப் பேருருவன். இவனை வெல்லும் கலை உனக்குத் தெரியுமா?” என்றான். “ஆம் அறிவேன்” என்றான் காம்யகன். “அவ்வண்ணமெனில் இவனை கொல். நீ விழைவதை அளிப்பேன்” என்றான் இந்திரன். காம்யகன் தன் மழுவை எடுத்து முன்னால் சென்று மூன்றே வெட்டில் துடித்துக்கொண்டிருந்த மூன்று தலைகளையும் வெட்டி துண்டாக்கினான்.

மும்முகனின் குருதி சீறி தன் உடலில் வழிய காம்யகன் வேதம் நாடிய முதல்தலையை விண்ணுலகம் நோக்கி வீசினான். மது விரும்பிய இரண்டாவது தலையை பாதாளம் நோக்கி வீசினான். விழிவிரிந்த மூன்றாவது தலையை மண்ணுலகம் எறிந்தான். அவை பேரொலியுடன் சென்று விழும் ஓசையை இந்திரன் கேட்டான். அவ்வதிர்வில் முகில்கள் வெடித்துப்பிரிந்தன. மண்ணுலகில் அந்தத் தலை சென்று விழுந்தபோது மலைகளின் மீது அமர்ந்திருந்த உச்சிப்பாறைகள் உருண்டு சரிவிறங்கின. பூமியைச் சுமந்திருந்த திசையானைகள் ஒருகணம் உடல்சிலிர்த்தன. பாதாள நாகங்கள் சுருண்டு இறுகிக்கொண்டு சீறின.

“எவ்வண்ணம் இவனை வென்றாய்?” என்றான் இந்திரன். “அறியேன். எல்லா மலைகளையும் உடைப்பதுபோல இவனையும் அரிந்தேன்” என்றான் காம்யகன். நாரதர் “மூன்றெனப் பிரிந்து தன்னைப்பெருக்கிய இவனை வெல்லும் வழி ஒன்றென நின்றிருப்பதே. அரசே, இவன் முன் வருபவர்கள் எவரும் ஒரேசமயம் இம்முகங்களை நோக்கும்பொருட்டு தங்களையும் மூன்றென வகுத்துக்கொள்கின்றனர். ஆகவே அறிவும் உணர்வும் கொண்டவர்களால் வெல்லப்படமுடியாதவனாக இருந்தான். இந்த மூடன் தன் அறியாமையினாலேயே வெல்லமுடியாத ஒருமையை கொண்டிருந்தான்” என்றார்.

இந்திரன் மகிழ்ந்து காம்யகனை ஆரத்தழுவிக்கொண்டான். “தச்சனே, நீ விழைவதென்ன?” என்றான். “மிகப்பெரியது… எவரும் விழையாதது” என்றான் தச்சன். இந்திரன் “அதர்வ வேள்விகளில் பலியென அளிக்கப்படும் பசுவின் தலையை எவரும் விழைவதில்லை. அதைவிடப்பெரியது அவியாவதும் இல்லை. இனி அது உனக்கென்றே ஆகுக” என்று சொல்லளித்தான். காம்யகன் பற்களைக் காட்டி வணங்கி “அவை எனக்கு இனியவை அரசே” என்றான்.

மும்முகப்பேருருவனின் தலை வந்து விழுந்த இடம் கங்கைக்கரையில் நீலப்பசுமை இடைவெளியின்றி நிரம்பிய ஐராவதீகம் என்னும் பெருங்காடு. அங்கே அந்தப் பெருந்தலை தீர்க்கசிரஸ் என்னும் பெயரில் மலையென உயர்ந்து நின்றது. அதன் கிழக்குமுகப்பில் இரு குகைகள் விழிகளெனத் திறந்து உலகை நோக்கின. அந்தத்தலை அங்கு விழுந்த பலநூறு யுகங்களுக்குப்பின்பு அங்கே அர்ஜுனன் வந்து சேர்ந்தான்.

இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து முறைப்படி காடேகிய அர்ஜுனனுடன் பன்னிரு வேதியரும் உடன் வந்தனர். அவர்களுடன் காசிக்குச் சென்று மணிகர்ணிகா கட்டில் நீராடி பழிநீக்கினான். பின்னர் அங்கே சந்தித்த முனிவர்களுடன் கங்காத்வாரம் சென்று அங்கு நன்னீராடி அகத்தூய்மை கொண்டான். அங்கிருந்து தனியாக இமயமலை நோக்கி அவன் கிளம்பியபோது “இளவரசே, ஒருவருடம் நீங்கள் காட்டிலுறையவேண்டும் என்பதே ஆணை. இந்தக்காட்டில் எங்களுடன் இருந்தருளலாமே” என்றார் உடன்வந்த சபர முனிவர்.

“என் சொல் எல்லைமீறல் என்றால் பொறுத்தருள்க முனிவரே! உங்கள் உள்ளம் பெருவெளியின் எல்லையின்மையை ஒவ்வொரு கணமும் நாடுகிறது. அவ்வூழ்கம் தெய்வங்களுக்கு உகந்தது. நானோ என் அகவெளியின் எல்லைக்கு அப்பால் என்ன என்று ஒவ்வொரு கணமும் தேடிக்கொண்டிருப்பவன். இப்புவியில் நான் செல்லும் பயணங்களெல்லாம் என்னுள் நுழைந்து செல்பவை என்றே உணர்கிறேன். நான் காணும் ஒவ்வொரு எல்லையிலும் பாம்பு தன் உறையை என என்னை கழற்றிவிட்டு கடந்துசெல்கிறேன். செல்லச்செல்லப் பெருகும் என்னுள் பெருகாதிருப்பது ஒரு வினா மட்டுமே. என்னை முற்றிலும் கழற்றிவிட்டு அவ்வினா மட்டுமாக நான் எஞ்சும் ஒரு தருணம் வரும். அதுவரை எங்கும் அமர்ந்திருக்க என்னால் இயலாது.”

“அவ்வாறே ஆகுக!” என்று சபர முனிவர் வாழ்த்தினார். கங்கையின் தோழிகளால் புரக்கப்பட்ட பெருங்காட்டினூடாக யானைமந்தைகள் சென்று உருவான வழியில் அர்ஜுனன் நடந்தான். கங்கையின் பேரோசையை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தான். அது அவன் அகப்பேரோசையென்றாயிற்று. சொற்கள் மறைந்து ஒற்றை மீட்டலென அவனுள் ஒலித்தது. கோடானுகோடி இலைகள் அவ்வொலியை ரீங்கரித்தன. இருண்டமலைப்பாறைகள் அவ்வொலியாக அமர்ந்திருந்தன. முகில்நுரைத்த வானம் அவ்வொலியென கவிந்திருந்தது.

ஐராவதீகத்தின் எல்லையில் ஓங்கி நின்றிருந்த பெரும்பாறை ஒன்றைக் கண்டு அர்ஜுனன் வியந்தான். மூன்று கரும்பாறைகளுக்குமேல் நூறுயானை அளவுள்ள பெரும்பாறை ஒன்று தூக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை அணுகி சுற்றிவந்தான். இயற்கையாக அந்தப்பாறை மேலேறமுடியாதென்று உணர்ந்தான். மூன்று பாறைகளும் முற்றிலும் நிகராக எடைவாங்கும்படி அமைக்கப்பட்டிருந்தன. மேலே அமர்ந்திருந்த பெரும்பாறையின் குவியம் அம்மூன்றுபாறைகள் நடுவே கூர்ந்திருந்தது.

மும்முறை சுற்றிவந்த அவன் அப்பாறை விலாவில் குடைவுச்சிற்பமென வரையப்பட்டிருந்த ஐந்துதலை நாகத்தைக் கண்டான். அதை நன்கு நோக்கும்பொருட்டு விலகிச்சென்று பிறிதொரு பாறைமேல் ஏறிக்கொண்டான். ஐந்துதலைநாகம் தழல்நா பறக்க விழிகூர்ந்தது. நோக்க நோக்க அதன் கல்விழிகளில் நச்சு எழக்கண்டான். உடல்நெளித்து வளைந்திறங்கி பாறையிலிருந்து இழிந்து அருகணையும் என்பதுபோல உளமயக்கு எழுந்தது.

நாகத்தின் வால் ஏழுமுறை பின்னி உருவாக்கிய மந்தணச் சொல் என்ன என்று அவன் அறிந்தான். ஐராவதீகம் உருவான பின்பு அதன் எல்லை கடந்து உள்ளே நுழைந்த முதல் மானுடன் அவன். எல்லைகளை மீறிச்செல்லும் எவரும் முன்பிருந்ததுபோல் மீள்வது இயலாது. எல்லைகள் அனைத்துமே எச்சரிக்கைகள். எச்சரிக்கைகள் அனைத்துமே அறைகூவல்கள்.

விழிகளை மூடி சித்ரரதன் அளித்த சாக்ஷுஷி மந்திரத்தை மும்முறை உரைத்து ஓங்காரத்தில் நிறுத்தியபின் அவன் விழிதிறந்தான். எதிரே ஓங்கி நின்றிருந்த தீர்க்கசிரஸை நோக்கினான். அதன் விழிகள் ஒளிகொண்டு அவனை நோக்கின. அதன் இருபக்கமும் பிறதலைகளும் தோன்றின. மும்முகப்பேருருவன் அவனை நோக்கி புன்னகைத்தான். அர்ஜுனன் இரு கைகளையும் மார்பின்மேல் கட்டியபடி அதை நோக்கி நின்றான். பின்னர் பெருமூச்சுடன் ஐராவதீகத்தின் எல்லையைக் கடந்து உள்ளே சென்றான்.