மாதம்: ஜூன் 2015

நூல் ஏழு – இந்திரநீலம் – 23

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 4

ஹரிணபதத்தில் மாலை இளமழையுடன் சேர்ந்து மயங்கத் தொடங்கியது. அஸ்வபாதமலைச்சரிவின் ஆயர்பாடிகளில் சித்திரை வைகாசி மாதங்களைத் தவிர்த்த பிற நாட்களில் மதியம் கடந்ததும் காற்று அவிந்து இலைகள் அசைவிழக்கும். தோல்மேல் பசையென வியர்வை பரவி சிறு பூச்சிகள் கடிக்கும். மூச்சு ஊதிப் படிந்தது என இலைகளின் அடியில் நீராவிப்படலம் எழும். புதர்களின் சுருண்ட சிலந்தி வலைகளில் மெல்லிய நீர்த்துளிகள் திரண்டு அதிரும். பறவைகள் இலைப்புதர்களுக்குள் சென்றமர்ந்து சிறகு கோதி ஒடுங்கும். ஓசைகள் அமைதியின் திரையொன்றால் மேலும் மேலும் மூடப்படும். ஒவ்வொன்றும் தங்கள் எடையை தாங்களே அறிந்து தங்கள் நிழல்கள் மேல் அழுந்திக்கொள்ளும். பசுக்கள் வெம்மூச்சு விட்டு கண்கள் கசிய தலை தாழ்த்தி காத்திருக்கும். ஆயர் கன்றுகளைத் திரட்டி பாடி சேர்ப்பதற்குள் மழைத்துளிகள் சரிந்து வந்து நிலத்தை தாக்கும். விரைந்த உடுக்கின் தாளத்துடன் மலை இறங்கி மழை வந்து ஆயர்பாடிகளை மூடி யமுனை மேல் படர்ந்து நீர்ப்பரப்பை புல்லரிக்கவைக்கும். எஞ்சியிருக்கும் வெயிலில் தொலைதூரம்வரை பீலி வருடியதுபோல மழை சிலிர்த்துச்செல்வதை காணமுடியும். ஒளி மிக்க நாணல் போல யமுனை மழையில் நின்றிருக்கும். மரங்கள் மழை அறையும் ஒலியுடன் மாலை ஆயர்பாடியைச் சூழ்ந்திருக்கும்.

மழையை ஆயர் விரும்பினர். ஒவ்வொரு நாளும் கன்றுகள் கடித்துண்ட புல்லின் எச்சம் கைகூப்பி வேண்டிக்கொள்வதனால் வானம் சுரந்து பெய்கிறது என்று அவர்கள் நம்பினர். ஆனால் அன்று மழை பெய்தபோது ஒவ்வொருவரும் அச்சமூட்டும் வருகையொன்று போல அதை உணர்ந்தனர். அறியாது எழுந்து நனையாத இடம் நோக்கி செல்ல முற்பட்டு பின் உணர்ந்து மீண்டும் வந்து அமர்ந்திருந்த பாமையை சுற்றி நின்றனர். அவர்களை அறைந்து தழுவி உடைகளை கொப்புளங்களுடன் ஒட்டவைத்து, முகம் கரைந்து வழிய, மூக்கு நுனிகளிலும் செவி மடல்களிலும் சொட்டி மழை கவிந்தது. நடுவே அவள் கருவறை நின்று நீராட்டு ஏற்கும் அன்னையின் சிறு சிலை போல் அமர்ந்திருந்தாள். குறுநுரைகள் எழுந்த நெற்றியில் விழுந்த மழை குறுமயிர்ப் பிசிறல்களை வெண்பளிங்கில் கீறல்கள் போல் படிய வைத்தது. கூர்மூக்கு நுனியில் ஒளிமணிகளாக சொட்டி உதிர்ந்தது. கன்னத்து நீலரேகைகள் வழியாக துளிகள் இறங்கி கழுத்து வளைவில் விரைந்து தோள்குழிகளில் தேங்கியது. அவள் ஆடை காற்றின் ஈரத்துடன் புடைத்து விசும்பும் உதடுகள் போல் துடித்து அமைந்தது.

விழிகள் ஒவ்வொன்றும் அவளை நோக்கி சிலைத்திருந்தன. ஒவ்வொருவரும் அங்கிருப்பவள் அங்கிலாது எங்கோ இருக்கும் ஏதோ ஒரு சிற்றுரு என அவளை உணர்ந்தனர். மழை மேலும் மேலும் வலுத்தபடியே சென்றது. மரங்கள் நீர் சவுக்குகளால் வீசப்பட்டு துடிதுடிக்கத் தொடங்கின. விண்ணின் சடைச்சரங்கள் மண்ணை அறைந்து அறைந்து சுழன்றன. மண் கரைந்து செங்குழம்பாகி, நாகமென வளைந்து, சுருண்டு மடிந்து ஓடிவந்து, அவர்கள் காலடிகளை அடைந்து மண்கரைத்துத் தழுவி இணைந்து ஓடையாகி சரிவுகளில் குதித்திறங்கி பட்டுமுந்தானையென பொழிந்து யமுனையின் கருநீர்ப்பெருக்கில் விழுந்து செம்முகில் குவைகளாக எழுந்து பின் கிளைகளாக பிரிந்து ஒழுக்கில் ஓடியது மழைப்பெருக்கு. அவளை கரைத்தழிக்க விழைந்ததுபோல. கைக்குழவியை முந்தானையால் மூடிக்கொள்ளும் அன்னை போல மழை.

மழைக்குள் கைகளால் மார்பை அணைத்து உடல் குறுக்கி நின்றிருந்த ஆயர் மகளிர் உடல்நடுங்கி அதிர உதடுகள் துடிக்க ஒவ்வொருவராக விலகி மரநீழலும் கூரைத்தாழ்வும் நாடி சென்றனர். மெல்ல அங்கிருந்த ஒவ்வொருவரும் விலகிச் செல்ல அவளருகே மாலினியும் ராகினியும் மஹதியும் மட்டுமே எஞ்சினர். மாலினி பாமையின் காலைப் பற்றி “என் தெய்வமே, நான் சொல்வதை கேள்… துவாரகைக்கு உன் கொழுநனுக்கு சேதி போய் விட்டது. ஆமென்று அவன் சொன்ன செய்தி நாளையே வந்து விடும். நீ நினைத்தது நடக்கும். வஞ்சினம் உரைத்ததை நீ வென்று விட்டாய் என்றே உணர்க! இவ்வெல்லைக்கு மேல் யாதவரை தண்டிக்காதே! எழுந்திரு என் கண்ணே” என்றாள். அவள் சொற்கள் உடலெனும் கற்சிலைக்கு அப்பால் குடியிருந்த அவளை சென்றடையவில்லை என்று தோன்றியது. “என் அன்னையே, என் மகளே, நான் சொல்வதை கேள். இங்கு இம்மழையை ஏற்று நீ இரவெல்லாம் அமர்ந்திருந்தாய் என்றால் அன்னை என்னாவேன்? அதையாவது எண்ணு” என்றாள். மழைகரைத்த கண்ணீருடன் கைகூப்பி “என் செல்லமே, என் முன் நீ இறக்க மாட்டாய், உன் முன் நான் இறப்பேன். பலிகொள்ளாதே, மூதன்னை வடிவமே” என்றாள்.

சொற்களுக்கு அப்பால் இருந்து அத்தொல்தெய்வம் அவளை நோக்கியது, பெண்ணே நீ யார் என்பது போல. அவளறிந்த சிறுகைகள். அவள் முத்தமிட்ட மென்பாதங்கள். அவள் நெஞ்சோடு அணைத்து முலையூட்டிய சிறு குமிழ் உதடுகள். அவள் கோதி கோதிச் சலித்த செழுநறுங் கூந்தல். அவள் பார்த்துப் பார்த்து கனவில் எழுப்பிய நீலக்கனல் விழிகள். அவையல்ல இவள். அந்த சமித்தில் பற்றியெறிந்த வேள்விச்சுடர். வேறேதோ அறியா அவி உண்டு அனலாகி எழுந்தாடுவது. சூழ்ந்திருக்கும் வேள்விச் சாலைக்கு அப்பால், நெய் அள்ளி நாதம் ஓதி அதைப் புரக்கும் வைதிகருக்கு அப்பால், ஒளிரும் காற்றுக்கு அப்பால், இப்புவி படைத்த முழுமையை நடித்து நின்றாடும் வேள்வித்தீ. விண்ணுடன் மட்டுமே தொடர்புடையது என அது தனித்திருக்கும் விந்தைதான் என்ன? அவள் அறியவில்லை தன் மகளை. மகளென வந்ததை. அங்கே திருமகளென அமர்ந்திருந்த அதை.

இருண்டு சூழ்ந்து பெய்து கொண்டிருந்த மழையில் சேற்றில் கால்களை மடித்து தன் மகளை வெறித்து நோக்கி பகலெல்லாம் அமர்ந்திருந்தாள் மாலினி. இரவென, நிசியென, கருக்கலென மழை வழிய அவள் உடல் நடுங்கி துள்ளி விழத்தொடங்கியது. மெல்லிய அதிர்வோடிய உடல் இழுபட முகம் கோண வலக்கை ஊன்றி நினைவழிந்து சரிந்த அவளை ஆய்ச்சியர் வந்து அள்ளி கொண்டுசென்று அறை சேர்த்தனர். ஆடை நீக்கி, உலர் ஆடை அணிவித்து, அகில் புகை காட்டி வெம்மை கொள்ளச் செய்தனர். அவர்கள் அளித்த இன்கடுநீரை இருகைகளாலும் பற்றி அமுதென அருந்தி விழித்து எங்கிருக்கிறோம் என்று அறியாமல் இருள் நோக்கி எழுந்து அவள் ஏங்கி அழுதாள். அவள் விழித்தெழாமல் இருக்க சிவமூலிப் புகையை அளித்து மீண்டும் படுக்கவைத்தனர். அரசில்ல முன்னறையில் சத்ராஜித் மீண்டும் மீண்டும் மதுவருந்தி தன்னிலை அழிந்து வெண்சேக்கையில் எச்சில் வழிய ஆடை குலைய விண்ணிலிருந்து விழுந்தது போல் கிடந்தார். நினைவு சிதறி எப்போதோ மெல்ல மீண்டு புரள்கையில் “இளையோனே, உன்னை நான் கொன்று விட்டேன். உன்னை கொன்று விட்டேன் என் செல்லமே” என்று சொல்லி நாக்குழறி உலர்ந்த உதடுகளால் ஓசையிட்டு அழுதார்.

அரசில்லத்திலும் ஊர்மன்றிலும் சூழ்ந்த சிற்றில்களிலும் எல்லாம் அந்தகக் குலத்து ஆயர்கள் நிறைந்து சாளரங்களின் ஊடாகவும் வாயிலின் ஊடாகவும் நீலக்கடம்பின் அடியில் அமர்ந்திருந்தவளை நோக்கி நின்று குளிர்நடுங்கினர். மறுநாள் காலையிலும் இருள்செழித்து மழை அறுபடாது நின்றபோது ராகினியும் எழுந்து கூரையின் அடியை நாடியபின் அவளருகே மஹதி மட்டும் எஞ்சியிருந்தாள். ஆயர்குடிகளில் அவளை நோக்கி ஒரு சொல்லும் சொல்லாதவள் அவளே என்று ஆய்ச்சியர் உணர்ந்தனர். கண்ணீர் விட்டவர், கை தொழுதவர், கால் பற்றி இறைஞ்சியவர் அனைவரும் விலக சொல்லற்று அருகே நின்றவள் மட்டுமே அங்கிருந்தாள். மொழியிலாது உணரக்கூடிய ஒன்றினால் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர் என. சொல்லின்மையால் மட்டுமே சொல்லிவிடக்கூடிய ஒன்று அங்கே நிகழ்ந்தது என. பின்னிரவில் எழுந்து நோக்கியவர் நீலக்கடம்பின் அடியில் நான்கு விழிகள் மின்னுவதை மட்டுமே கண்டனர். நிழல்களென சூழ்ந்திருந்தன தெய்வங்கள்.

விடியலில் இளநீலப் புலரிமழை யமுனையிலிருந்து எழுந்துவந்து அன்னைக்கோழி ஆயர்பாடி மேல் சிறகுசரித்து அமர்ந்திருக்கையில் இல்லங்களிலும் ஊர்மன்றிலும் அனைவரும் துயின்றிருந்தனர். நீலக்கடம்பின் அடிமரம் சாய்ந்து செவிலியன்னையும் மயங்கி இருந்தாள். அவளொருத்தி மட்டும் நீலம் நோக்கி விழி மலர்ந்து அமர்ந்திருந்தாள். மெல்லிய முடிவிலாச் சொல் என பெய்த மழையை அங்கு பிறர் எவரும் கேட்கவில்லை, காணவும் இல்லை. ஒவ்வொரு கதிர்வழியாகவும் விண்ணொளி இறங்கி மண்ணை வந்து தொட்டது. இளநீலம் புன்னகைத்து காலையொளியாகியது. காற்று ஒன்று கடந்துவந்து இலைகளனைத்தையும் தொட்டு உதறி ஈரம் சொட்டி வடியச் செய்தது. நரம்போடிய மென்மை மிளிர இலைகளெல்லாம் தளிர்களென்றாயின. கன்னத்தில் ஒட்டிய அவள் மயிர்ப் பிசிறுகள் எழுந்து சுருண்டன. புதுப்பால் படலம் என நெற்றி ஒளிகொண்டது. அன்னையைக் கவ்விப்பற்றி அடம்பிடிக்கும் குழவி போன்று படபடத்த அவள் ஆடை உலர்ந்து எழுந்து பறக்கத் தொடங்கியது. கன்று தேடும் அன்னைப் பசுவொன்று தொழுவத்தில் ஓங்கி குரலெழுப்பியது. அதைக் கேட்டு எழுந்த ராகினி நெஞ்சில் கைவைத்து எங்கிருக்கிறோம் என ஏங்கி முன்தினம் நடந்தவற்றை நினைவு கூர்ந்து பதறி எழுந்தோடி வெளிவந்து ஆயரில்லத்துப் புறக்கடையில் நின்று நோக்கியபோது இளவெயிலில் நீலக்கடம்பின் அடியில் பூத்திருந்த அவளைக் கண்டாள். ஒருபோதும் அதற்கு முன் அவளைக் கண்டதேயில்லை என்று உணர்ந்தாள்.

காலையில் செய்தி ஆயர்பாடி அனைத்திற்கும் சென்று சேர்ந்திருந்தது. யமுனைக்கரை வழியாக அஸ்வபாத மலைச்சரிவிலிருந்த எழுபத்திரெண்டு ஆயர்பாடிகளிலிருந்தும் ஆயர்குலங்கள் இசைக்கலம் ஏந்தி நடமிட்ட பாணர் தலைவர, சூழ்ந்த அவர்களின் பாடல் துணை வர, கண்ணீருடன் கைகூப்பி ஹரிணபதம் நோக்கி வரத்தொடங்கினர். வண்ண ஆடைகளும் தலைப்பாகையுமாக அவர்கள் மன்றடைந்து அங்கு எழுந்த நீலக்கடம்பை சூழ்ந்தனர். அவளிடம் ஒரு சொல்லேனும் சொல்லமுடியுமென்று எவரும் எண்ணவில்லை. தொலைவில் அவளைக் கண்டதுமே தலைக்கு மேல் கைகூப்பி “மூதன்னையே, யாதவர் குலத்து அரசியே, உன் பொற்பாதங்கள் அடைக்கலம் தாயே” என்று கூவி வழுத்தினர். கொண்டு வந்த அரிமலர்ப் பொரியையும் அருங்காணிக்கைகளையும் அவள் முன் படைத்து நிலம் தொட்டு தலை தாழ வணங்கினர். பெண்டிர் அவளைச் சூழ்ந்து அமர்ந்து கைகூப்பி கண்ணீர் வடித்தனர். ‘திருமகள் எழுந்த முற்றம் இது. இங்கு விண்ணாளும் பெருமகன் கால் எழும்’ என்று பாணர் கிணை மீட்டி பாடினர். சூழ்ந்தமர்ந்து ஆயர் குலத்து மூதன்னையரின் கதைகளை மூத்தபாணர் பாட பிறர் மெய் விதிர்க்க கேட்டிருந்தனர். பெண் குழந்தைகளை மடியமர்த்தி அவளைச் சுட்டி பெண்ணென்று ஆயர் குடியில் பூப்பது எது என்றுரைத்தனர்.

அவர்கள் அறிந்த ஒன்று, எப்போதும் அண்மையில் இருந்த ஒன்று, அறிவால் தொட முயல்கையில் சேய்மை காட்டும் ஒன்று கண் முன் அமர்ந்திருந்தது. அவள் பெயர் பாமை என்று மட்டுமே அப்போது அறியக்கூடியதாக இருந்தது. பிரமதவனத்தின் தலைவரான ஹரிணர் அமைச்சரிடம் செய்தி துவாரகைக்கு சென்றுவிட்டதா என்று கேட்டார். பறவைத்தூது துவாரகையைச் சென்றடைவதற்கே இரண்டு நாட்கள் ஆகும் என்றார் அமைச்சர். அங்கிருந்து மறுமொழி வருவதற்கு மேலும் இருநாட்கள் ஆகும். அவன் துவாரகையில் இருந்து கிளம்பி சியமந்தக மணி தேடி அடைந்து கை கொண்டு அங்கு வருவான் என்றால் கூட பதினைந்து நாட்கள் போதாது என்றார். “முழுநிலவு நாளுக்குள் கன்யாசுல்கமாக சியமந்தகத்துடன் அவன் வராவிட்டால் இவள் உயிர் துறப்பாள் என்றிருக்கிறாளே” என்றார் பிரகதர். “திருமகள் தன்னை அறிவாள். தன் சொல் அறிவாள்” என்றார் அந்தகக்குலத்தின் முதற்பூசகர் கிரீஷ்மர். “அச்சொல் இங்கு பூத்தது நம் மூதன்னையர் அருளால் என்றுணர்க! அது நிகழும். ஆயரே, கேளுங்கள்! மலரிதழ்கள் மாலையில் வாடும், வைரங்கள் காலத்தை வென்றவை” என்றார்.

அன்று மாலையும் மழை எழுந்தது. அதற்குள் அவளைச் சுற்றி தேன்மெழுகு பூசப்பட்ட ஈச்சைத் தட்டிகளால் கூரை அமைத்திருந்தனர். சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களும் நனையாமல் இருக்கும்பொருட்டு சிறு தோல்கூடாரங்கள் அமைக்கப்பட்டன. இரவில் கூரையிடப்பட்ட அனல் குழியில் நெருப்பு கனன்றது. அதன் செவ்வொளியில் உருகும் உலோகத்தால் ஆனவள் போல் அவள் அங்கிருந்தாள். அவள் விழியில் வெண்பரப்பில் தெரிந்த கனலை நோக்கி ஆயர் மகளிர் கைகூப்பி அமர்ந்திருந்தனர். இரவு மழை அவர்களின் மேல் விண்சரிந்தது போல கவிழ்ந்து பின் வழிந்து நெடுநேரம் சொட்டி மறைந்தபின் கீற்று நிலவு வானில் எழுந்தது. இருளில் ஈர இலைகளின் பளபளப்பை காற்று கொந்தளிக்கச்செய்தது. கோடிக் கூர்முனைப் படைக்கலங்கள் சுடரும் படை ஒன்று இருளுக்குள் நின்றிருப்பது போல காடு அவர்களை சூழ்ந்திருந்தது. துளி சொட்டும் ஒலியால் தனக்குள் பேசிக்கொண்ட இருள்வெளி. அதற்குள் எங்கோ ஓநாய்கள் எழுப்பிய ஓலம் ஒலித்தது. அதைக் கேட்டு அன்னைப்பசு தன் குட்டியை நோக்கி குரலெழுப்பியது.

ஒருநாளும் இரவை அதுபோல் உணர்ந்ததில்லை ஆய்ச்சியர். அத்தனை நீளமானதா அது? அத்தனை எடை மிக்கதா? அத்தனை தனிமை நிறைந்ததா? இரவெனப்படுவது அத்தனை எண்ணங்களால் ஆனதா? இப்பெரும் ஆழத்தின் விளிம்பில் நின்றா இதுநாள் வரை களித்தோம்? இனி இரவு என்ற சொல்லை அத்தனை எளிதாக கடந்து விட முடியாது என்பதை அவர்கள் அறிந்தனர். அருகே நின்றிருக்கும் கொலைமதவேழம். அப்பால் அனைத்தையும் விட்டு மூடியிருக்கும் கரியபெருவாயில். ஒவ்வொரு துளியாகச் சொட்டி உதிர்ந்து வெளுத்து தன்னை விரித்து காலையாகியது. கண்கூசும் ஒளியிலும் கூழாங்கற்களின் அருகே சிறுநிழல் தீற்றல்களாக சிதறிக்கிடந்தது.

மழை முடிந்த காலை மண்ணில் விரிந்த வரிகளால் ஆனது. மயில்கழுத்துச் சேலையிலிருந்து பிரிந்து விழுந்த பட்டு நூல் என ஒளிரும் நத்தைக்கோடுகளால் ஆனது. அதில் எழும் வானவில்லால் ஆனது. கூரை அடியில் மணிச்சரம் போல் விழுந்த குழித்தொடர்களால் ஆனது. குளித்த கருமையின் குருத்து ஒளியுடன் வந்தமர்ந்து கருமூக்கு தாழ்த்தி செவ்வாய் காட்டிக் கூவும் காகங்களால் ஆனது. பாதிகழுவப்பட்ட மலையுச்சிப்பாறைகளால், முழுக்க நீராடிய கூழாங்கற்களால் ஆனது. நான்காம் நாள் காலையிலும் அன்று அக்கணம் அங்கே பதிக்கப்பட்டது போல் அவள் அமர்ந்திருந்தாள். தலைமுறைகளுக்கு முன் எங்கோ எவராலோ பதிட்டை செய்யப்பட்ட கன்னி அம்மன் சிலை போல. கொடிவழிகள் குலமுறைகள் என அவள் விழிமுன் பிறந்து வந்தவர்களைப் போல் தங்களை அவர்கள் உணர்ந்தார்கள். அவள் முன் படைக்கப்பட்ட உணவில் மலர்கள் விழுந்திருந்தன. கைநீட்டி ஒரு குவளை நீரையும் அவள் கொள்ளவில்லை. காலடியில் வைக்கப்பட்ட காணிக்கைகளை நோக்கவும் இல்லை. மறுகணம் எழப்போகும் ஒன்றை நோக்க விழைபவள் போல் யமுனை அலைநீர்ப் பெருக்கை நோக்கி அமர்ந்திருந்தாள்.

அடுத்த நாள் பறவைத்தூது வந்தது என்று அமைச்சர் தன் அலுவல் அறையிலிருந்து இரு கைகளையும் விரித்து வெளியே ஓடி வந்து கூவிச் சொன்னார். அங்கிருந்த ஆயர் அச்சொல்லை என்னவென்று அறியாமலே எதிர்கொண்டு உவகைக் குரலெழுப்பி அவரை சூழ்ந்து கொண்டனர். “அவன் முன் சென்றது நம் தூது தோழரே!” என்று அமைச்சர் கூவினார். “அவன் அவை முன் சென்று நின்றது நம் சொல். நம் ஓலையை அவன் அவையில் படித்தான். அக்கணமே துவாரகையிலிருந்து கிளம்பி சியமந்தகத்தை தேடிச் செல்வதாக வஞ்சினம் உரைத்திருக்கிறான்.” இடக்கையால் உடுக்கை மீட்டி சொல்துடிக்க எழுந்து “அவன் மாயன். காலமும் தூரமும் அவன் முன் ஒடுங்கிச் சுருங்கும். இங்கு வந்து நம் தேவியை அவன் கொள்வான். ஐயமில்லை!” என்றார் ஒரு பாணர். “ஆம் அது நிகழ வேண்டும். அவ்விருமுனைகளும் ஒவ்வொருமுறையும் தவறாமல் சந்திக்கும் என்ற உறுதியின் பேரில் இயங்குகிறது இப்புடவி. அவ்வுறுதியின் மேல் நின்றிருக்கின்றன இந்த மலைகள். அவ்வுறுதியின் மேல் கவிழ்ந்திருக்கிறது இந்நீல வானம்” என்றான் இன்னொரு பாணன்.

“அத்தனை தொலைவில் உள்ளது துவாரகை!” என ஏங்கினாள் ஆய்ச்சி ஒருத்தி. “அதனை விட தொலைவில் உள்ளது வானம். ஒரு மழையினூடாக மண்ணை ஒவ்வொருநாளும் முத்தமிடுகிறது வானம்” என்றான் முதுபாணன் ஒருவன். அந்த நாளின் தேன் என மெல்லிய உவகை அங்கெலாம் சூழ்ந்தது. அவள்முன் சென்று மண் தொடப்பணிந்து “அன்னையே, உன் சொல் காக்க உன் தலைவன் எழுந்தான். அவன் வஞ்சினம் வந்துள்ளது அறிக!” என்றார் அமைச்சர். அச்சொற்களுக்கும் அப்பால் மாறா விழிமலர்வுடன் அவள் அமர்ந்திருந்தாள்.

எங்கிருக்கிறான்? என்ன செய்யப் போகிறான்? என்று அறிய ஒற்றர்களை ஏவுவதாக அமைச்சர் சொன்னார். குடித்தலைவர்கள் அவரைச் சூழ்ந்து நின்று “ஒவ்வொரு கணமும் ஒற்றுச்செய்தி வரவேண்டும். நம் குலம் வாழும் என்ற உறுதி ஒவ்வொரு முறையும் நம்மை வந்தடைய வேண்டும்” என்றனர். “யாதவரே, அவன் தன் நிழலும் அறியா தனி வழிகள் கொண்டவன். எங்ஙனம் அறிவோம் அவன் பயணத்தை?” என்றார் கிரீஷ்மர். “இங்கு முழுநிலவு எழுவதற்கு முன் அவன் நிகழ்வான் என்று நம் மூதன்னையரை வேண்டுவோம். நாம் செய்யக்கூடுவது அது ஒன்றே” என்றார் பிரகதர். ஒவ்வொரு நாளுமென அவர்கள் காத்திருந்தார்கள். அத்தனை மெதுவாகச் செல்வதா யமுனை என்று அவர்களின் அகம் வியந்தது. ஒவ்வொரு அலையாக அந்நதிப்பெருக்கை அதற்கு முன் அவர்கள் எவரும் உணர்ந்திருக்கவில்லை. காலை வெயில் ஒளியாகி உருகும் வெள்ளிக் குழம்பாகி பளிங்குத் தூணாகி நின்றிருக்கையில் மெல்லிய வலைபோல் ஆன நீலக்கடம்பின் நிழலுக்குக் கீழ் ஒளிச்சுடர்கள் பரவிய உடலுடன் அமர்ந்திருந்தவள் தன் அசைவை முன்பெங்கோ முற்றிலும் விடுத்திருந்தாள். காற்றில் ஆடிய குழலோ உடையோ மூச்சில் ஆடிய முலையோ அல்ல அவள். அவளுக்குள் இருந்து எழுந்து சூழ்ந்து அமைந்திருந்தது காலம் தொடா அசைவின்மை ஒன்று.

மாலையில் அந்தியில் மழை விழுந்த குளிர்ந்த இரவுகள். முகில் கிழித்த தனித்த பிறைநிலவு. கருக்கிருட்டைத் துளைத்த கரிச்சானின் தனிக்குரல். காலை எழுந்த சேவலின் அறைகூவல். வாசல் வந்து நிற்கும் முதல் காகத்தின் குரல். நீண்டு நிழலாகி முற்றத்தைக் கடக்கும் மரங்களின் பயணம். ஒவ்வொரு நாளென கடக்க மெல்லிய துயரொன்று ஆயர்பாடிகளை சூழ்ந்தது. கிளர்ந்து கண்ணீருடன் வந்தவர்கள் சோர்ந்து மீண்டனர். கண்ணெதிரில் அவள் உடல் உருகுவதை காண முடியாது கண்ணீர் விட்டு இல்லங்களுக்குள் சென்று அமைந்தனர். அவள் அமர்ந்த நீலக்கடம்பின் நிழலில் மீண்டும் அவளுடன் மஹதி மட்டுமே எஞ்சினாள். காலையில் அங்கு வந்து அடிவணங்கி மீளும் சிலரன்றி பிறர் அங்கு வரவில்லை. காற்று உதிர்த்த மலர்களும் பழுத்திலைகளும் அவளைச் சூழ்ந்து கிடந்தன. அவளுக்கிட்ட பந்தல் மாலைக்காற்றில் பிசிறி பின்பு கிழிந்து விலகியது. நிலவு ஒவ்வொருநாளும் மலர்ந்து பெருகியது, நாள்தோறும் கூர்மை கொள்ளும் இரக்கமற்ற படைக்கலம் போல.

செய்தி வந்ததா என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு நாளையும் நோக்கினர். வரவில்லை என்ற சோர்வுடன் ஒவ்வொரு மாலையும் அமைந்தனர். வாராது ஒழியுமோ என்ற ஏக்கத்துடன் முன்னிரவுகளை கடந்தனர். வராது என்ற துயருடன் இருண்ட கருக்கலை அறிந்தனர். ஆயர்பாடியில் எப்போதும் இல்லாத அமைதி நிறைந்தது. எடை மிக்க அமைதி நீர் ஆழத்துப் பாறைகள் போல் ஆயர் இல்லங்களை குளிர்ந்தமையச் செய்தது. நீரடியில் அழுத்தத்துடன் அசைந்தன மரங்கள். ஆயிரம் கோல் ஆழமுள்ள நீரின் எடை ஒவ்வொரு இலையிலும் அமர்ந்திருந்தது. ஒவ்வொரு கல்லையும் அதனிடத்தில் ஆழப்படுத்தியது. ஒவ்வொருவர் உடலிலும் மதயானைகளின் எடை கூடியது. ஒவ்வொரு எண்ணம் மேலும் இரும்புக் குவையென பதிந்திருந்தது.

நூல் ஏழு – இந்திரநீலம் – 22

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 3

மன்றுகூடியிருந்ததை பாமை அறியவில்லை. அவள் தன் இளங்கன்றுகளுடன் குறுங்காட்டில் இருந்தாள். பூத்த நீலக்கடம்பின் அடியில் அமர்ந்து பசுமைவழிந்து சரிந்துசென்று ஒளியென ஓடிய சிற்றோடையில் நாணல்களாக மாறி கரைசமைப்பதை, காற்றிலாடும் அவற்றின் வெண்ணுரைக்கொத்துப் பூக்களை, அவற்றிலிருந்து எழுந்து நீரில் பாய்ந்து சிறகு நனைத்து உதறிக்கொண்டு எழுந்து சுழன்று வந்தமரும் சாம்பல்நிறமான சிறுசிட்டுகளை நோக்கிக்கொண்டிருந்தாள். அருகே நின்ற அவளுடைய செல்லப்பசுவாகிய சியாமையின் கரிய தோல் நீர்ச்சறுக்கிப்பூச்சிகள் பரவிய சுனைநீர்ப்படலம் போல அசைந்துகொண்டிருந்தது. வால் குழைந்து குழைந்து சுருள காதுகள் முன்குவிந்து பின்மலர குளம்புகளை புல்மெத்தைமேல் வைத்து வைத்து முன்னகர்ந்து மூக்குமடிய கீழ்த்தாடை கூழாங்கற்பற்களுடன் நீண்டு அசைய அது புல் கடித்துச் சென்றது. பசு புல் கொய்யும்போது எழும் நறுக்கொலியில் உள்ள பசியும் சுவையும் ஆயர்கள் அனைவருக்கும் விருப்பமானது. குழவி முலைகுடிக்கும் ஓசைக்கு நிகரானது அது என்று ஆயர்குடிப்பாணர் சொல்வதுண்டு. பசு கடிக்கும் புல் வளர்கிறது. புல்வெளியாக தன்னை விரித்திருக்கும் அன்னை மகிழ்ந்து சுருள் விரிந்து அகன்று தன்னை காட்டிக்கொண்டிருக்கிறாள் அப்போது.

ராகினி சிற்றாடை பறக்க குழல் கூத்தாட ஓடிவருவதை அவள் சிந்தையின்றி நோக்கி நின்றாள். மூச்சிரைக்க அருகே வந்த அவள் குனிந்து முழங்காலில் கைவைத்து நின்று “இளவரசி, அங்கே மன்றுகூடியிருக்கிறது. அவர்கள் இளைய யாதவரை பழிக்கிறார்கள்” என்றாள். பாமை நிமிர்ந்து “என்னடி?” என்றாள். “இளையஅரசரின் இறப்பை குடிமூத்தார் ஆராய்கிறார்கள்…” என்று அவள் சொல்லத்தொடங்கியதுமே புரிந்துகொண்டு பாமை எழுந்து தன் இடையாடையை சீரமைத்து குழல்நீவி செருகிக்கொண்டாள். திரும்பி கன்றுகளை நோக்கி “இவற்றை நீ பார்த்துக்கொள்ளடி” என்று ஆணையிட்டபின் ஆயர்பாடி நோக்கி விரைவின்றி நடந்தாள். அவள் செல்வதை ராகினி திகைப்புடன் நோக்கி நின்றாள். நீள்குழல் பின்குவைமேல் மெல்லத்தொட்டு ஆடியது. இடை வளைந்து குழைய சிற்றாடை சூடிய மத்தகம் மெல்ல ததும்ப பொன்னாடை விரித்த அரசபாதையில் நடப்பவள் போல, சூழ ஒலிக்கும் பல்லாயிரம் தொண்டைகளின் வாழ்த்தொலிகளை ஏற்றுக்கொண்டவள் போல, அவள் சென்றாள். ராகினி கோலுடன் மரத்தடியில் அமர்ந்து பெருமூச்சுவிட்டாள்.

பாமை ஊர்மன்றுக்கு வந்தபோது அந்தகக்குலத்தின் முதற்பூசகர் கிரீஷ்மர் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு அப்பால் மரவுரி மூடிய பீடத்தில் அமர்ந்த சத்ராஜித் தன் கைகளில் தலையை தாங்கியிருந்தார். அவரது விழிகள் சேறுவற்றி ஓரம் காய்ந்த சேற்றுக்குழிகள் போலிருந்தன. உதடுகள் கரிய அட்டைகள் போல உலர்ந்திருக்க தொண்டையில் குரல்முழை ஏறியிறங்கியது. அந்தகர்கள் அனைவரும் புலிக்குரல் கேட்ட ஆநிரைகள் போல நடுங்கியும் கிளர்ந்தும் நிலையழிந்திருந்தனர். கிரீஷ்மர் உரக்க “எந்த ஐயமும் இல்லை. சொல்லப்பட்ட சான்றுகள் அனைத்தும் ஒன்றையே சுட்டுகின்றன. சியமந்தகத்திற்காக நடந்த கொலை இது. அதை எண்ணி காத்திருந்தவர்கள் அடைந்துவிட்டனர். நாம் நம் இளையவரை இழந்துவிட்டோம்” என்றார். அந்தகர்கள் அனைவரும் கைகளில் இருந்த வளைதடிகளைத் தூக்கி கூச்சலிட்டனர். “நாம் வெல்லப்படவில்லை, வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். நம் குலதெய்வம் இழிமுறையில் கவரப்பட்டிருக்கிறது. நாம் என்ன செய்யப்போகிறோம்?” என்றார்.

பிரமதவனத்தின் தலைவரான ஹரிணர் “கிரீஷ்மரே, நாம் என்ன செய்யமுடியும்? இன்று விருஷ்ணிகள் தனியர்கள் அல்ல. யாதவர்குடி முழுமையும் அவர்களுடன் நின்றிருக்கிறது. துவாரகையோ பேரரசரும் அஞ்சும் பெருநகர். நாம் எளிய மலையாதவர்” என்றார். சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் “ஆம், நாம் போருக்கு எழமுடியாது. நாம் அவர்களிடமிருந்து நமது குலமாணிக்கத்தை வென்றெடுக்க வழி ஏதுமில்லை. ஆனால் ஒன்றுசெய்யலாம்…” அவர் உள்ள எழுச்சியால் மேலும் சில அடிகள் முன்னால் வந்து “அந்தகரே, யாதவ குடிகளனைத்தும் விருஷ்ணிகளுடன் நின்றிருப்பது எதனால்? இளைய யாதவன் மீதுள்ள பெருமதிப்பால் மட்டுமே. அவனை யாதவர்களின் பேரரசன் என்றும் உலகுய்ய வந்த உத்தமன் என்றும் சொல்லிச் சொல்லி நிறுவியிருக்கிறார்கள் அவர்களின் பாணர். நாம் அதை வெல்வோம். அவன் செய்ததென்ன என்று யாதவர் அனைவரும் அறியட்டும்… நமது பாணர் நடந்தது என்ன என்பதை பாடட்டும்” என்றார்.

கிரீஷ்மர் உரக்க “ஆம், பாடினால் போதாது. அதை நாம் நிறுவவேண்டும். யாதவரே, ஒன்று அறியுங்கள். குருதியோ கண்ணீரோ கலக்காத சொற்கள் வாழ்வதில்லை. நமது பாணன் ஒருவன் அவன் மேல் அறம் பாடட்டும். அவன் தன் சொற்களுடன் எரிபுகட்டும். அச்சொற்களும் அவனுடன் நின்றெரியவேண்டும். அவை அழியாது. காய்ந்தபுல்வெளியில் கனலென விழுந்து பரவும்” என்றார். அவரது குரலை ஏற்று “ஆம்! ஆம்!” என்றனர் யாதவர். ஒரு பாணன் எழுந்து “நான் சொல்லெடுக்கிறேன் . இளையவர் எனக்களித்த ஊனுணவால் என்னுள் ஊறிய நெய் சிதையில் எரியட்டும்” என்று கூவினான். இன்னொரு பாணன் எழுந்து “நான்! என் சொற்கள் இங்கே எரியட்டும்… அவன் மேல் நான் அறச்சொல் விடுக்கிறேன்!” என்றான். மேலுமிரு பாணர் எழுந்து கைதூக்கி “நான்! என் சொற்கள்!” என்று கூவினர். கிரீஷ்மர் “எவர் சொற்கள் நிறையுள்ளவை என நாம் முடிவெடுப்போம். யாதவரே, எளியவரின் படைக்கலம் என்பது சொல்லே. நம் பழியின் நஞ்சு தடவிய சொல்லை அவன் மேல் ஏவுவோம்” என்றார். அவை அதை ஏற்று குரலெழுப்பியது.

பாமை அவைபுகுந்தபோது அனைவரும் திரும்பி நோக்கினர். அவள் இயல்பாக அவை ஓரத்திற்கு வந்து அங்கிருந்த மூங்கில்தூணில் சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டு நின்றாள். மூக்கில் தொங்கிய புல்லாக்கின் ஒளித்துளி அவள் இதழ்களில் விழுந்தாடியது. கன்னக்குழல் புரி ஒன்று காற்றில் நெளிந்தது. ஹரிணர் “தேவி, எங்கள் சொல்லை பொறுத்தருளவேண்டும். சியமந்தக மணி மறைந்ததைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். விருஷ்ணிகள் உங்களைத் தேடிவரவில்லை என இப்போது அறிந்தோம். அவர்கள் நாடியது எங்கள் குலமணியை மட்டுமே. அதை வஞ்சத்தால் அடைந்துவிட்டார்கள்…” என்றார். சத்ரர் “இளையவரைக் கொன்று மணியைக் கவர்ந்தவன் இளைய யாதவனேதான் இளவரசி. உறுதியான சான்றுகள் வந்துள்ளன” என்றார்.

பாமை “குலமூத்தாரே, இந்த அவையில் நான் அனைத்தையும் கேட்டறிய விழைகிறேன்” என்றாள். “எங்கள் சொற்கள்…” என சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் சொல்லத்தொடங்க “நான் அவற்றை ஏற்கவில்லை” என்றாள். அவர் சினத்துடன் “நான் குடிமூத்தவன். அவையில் என்னை இழிவுசெய்யும் இச்சொற்களை நான் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது…” என்று கூவ பாமை தாழ்ந்த குரலில் கூரிய விழிகளுடன் “அவையீரே, இங்கு என் கொழுநர் குறித்துச் சொல்லப்பட்ட சொற்களுக்காக இதை இக்கணமே எரித்தழிப்பேன்” என்று சொன்னாள். அவையமர்ந்திருந்தவர்கள் உடல் சிலிர்க்க, ஒரு முதியவர் “அன்னையே” என்று கைகூப்பினார். ஓரிருவர் “போதும்! அன்னை சொல்லே போதும்!” என்று கூவ ஒரு தனிக்குரல் “போதாது, அவை என்பது சான்றுகளுக்கானது. இது ஒன்றும் குலதெய்வம் சன்னதம் கொண்டெழும் ஆலயம் அல்ல” என்றது. “ஆம், அவையில் சான்றுகள் முன்வைக்கப்படட்டும்” என்றார் ஹரிணர்.

“என் பொருட்டல்ல, என் கொழுநர் பொருட்டும் அல்ல, உங்கள் பொருட்டு இங்குள்ள சான்றுகள் அனைத்தையும் கேட்க விழைகிறேன்…” என்று அவள் சொன்னாள். அச்சொற்கள் அவளிடமிருந்துதான் வருகின்றனவா என்று எண்ணத்தக்கவகையில் உணர்வுகள் அற்று சித்திரம்போலிருந்தது அவள் முகம். பிரமதவனத்தின் ஹரிணர் அவையை திரும்பி நோக்கிவிட்டு “இளவரசி அறிய என்ன நிகழ்ந்தது என மீண்டும் சொல்கிறேன்” என்றார். “ஊஷரகுலத்தவரின் கதிர்வணக்க விழாவில் அந்தகர்சார்பில் கலந்துகொள்ள பிரசேனர் அரசரின் ஆணையால் அனுப்பப்பட்டார். அவருக்கு சியமந்தக மணியை அரசரே மார்பில் அணிவித்து வழியனுப்பிவைத்தார். ஊஷரர் நம்மையும் கதிர்குலத்தார் என ஏற்கவும் அணுகவும் அது வழிவகுக்கும் என நம்பினோம்.” அவர் பாமைவை பார்த்தபோது அவள் நோக்குகிறாளா என்ற ஐயத்தை அடைந்தார். “இளையவர் சிருங்கசிலையின் தலைவர் சத்ரரும் நானும் துணைசெல்ல குலப்பூசகர் பத்ரரும் பாவகரும் தொடர இரு பாணரும் நூற்றெட்டு துணைவீரருமாக கான்புகுந்தார்.”

“நான்குநாட்கள் காட்டுக்குள் சென்றோம். அஸ்வபாதமலையின் அடியில் காளநீலத்தின் விளிம்பில் அமைந்த கஜத்ரயம் என்னும் மலைப்பாறைக்கு அருகே எங்களை ஊஷரர் சந்தித்து மேலே கொண்டுசெல்வதாக சொல்லப்பட்டிருந்தது. நான்காம் நாள் கஜத்ரயம் அரைநாள் நடையில் இருப்பதாக சொன்னார்கள். மாலையில் வரிக்கோங்கு மரத்தின் மேல் கட்டப்பட்ட பரண்குடிலில் அந்தியமைந்தோம். பிரசேனர் தங்கிய குடிலில் அவருடன் பாணர் இருவரும் நானும் சிருங்கசிலையின் தலைவர் சத்ரரும் துணையிருந்தோம். இரவு நெடுநேரம் அவர் சியமந்தக மணியை எடுத்து நோக்கி நெடுமூச்செறிந்துகொண்டிருப்பதை கண்டோம். இருளில் அந்த மணியின் நீல ஒளியில் அவர் முகம் விண்ணில் திகழும் முகில் என தெரிவதை மரவுரிக்குள் சுருண்டு குளிரில் நடுங்கியபடி நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அழுகிறார் என்று எண்ணினேன். கண்ணுக்குத்தெரியாத எவரிடமோ பேசுகிறார் என்று பட்டது.”

“காலையில் அவரை காணவில்லை” என்றார் சிருங்கசிலையின் சத்ரர். “ஹரிணர் எழுப்பிய குரலைக்கேட்டுத்தான் நான் விழிதிறந்தேன். குடிலுக்குள் பிரசேனர் இல்லை என்றதும் காலைக்கடனுக்காக சென்றிருப்பார் என எண்ணினேன். ஆனால் தனியாக காட்டுக்குள் செல்லக்கூடாதென்பது எங்கள் நெறி என்பதனால் ஏதோ பிழை இருக்கிறது என்று ஹரிணர் சொன்னார். வீரர்கள் புல்லை முகர்ந்து பிரசேனர் சென்ற பாதையை அறிந்தனர். அதைத் தொடர்ந்து சென்றபோது மலைச்சரிவின் இறுதியில் மரக்கூட்டம் சூழ்ந்த மென்சதுப்பில் பிரசேனரின் உடலை கண்டோம்.” சத்ராஜித் தேம்பியழுதபடி தன் கைகளில் முகம் புதைக்க அருகே நின்ற கிரீஷ்மர் அவர் தோளை தொட்டார். சத்ராஜித்தின் தோள்கள் குலுங்கிக்கொண்டிருந்தன. கிரீஷ்மர் திரும்பி ஏவலனிடம் மது கொண்டுவரும்படி ஆணையிட்டார். மது வந்ததும் சத்ராஜித் இருகைகளாலும் அதை வாங்கி ஓசையெழக்குடிப்பதை அவை பதைப்புடன் நோக்கியிருந்தது. கிரீஷ்மர் சத்ராஜித்திடம் அவர் சென்று ஓய்வெடுக்கலாம் என்றார். சத்ராஜித் இல்லை என்று தலையசைத்து மேலாடையால் வாயை துடைத்தார்.

ஹரிணர் “நாங்கள் கண்ட பிரசேனரின் உடல் கூருகிர்களால் நார் நாராக கிழிக்கப்பட்டிருந்தது. குடல் எழுந்து நீண்டு கொடிச்சுருள்போல குழம்பிக்கிடக்க குருதி ஏழு வளையங்களாகப் பரவி கருமைகொண்டு களிச்சேறென்றாகி சிற்றுயிர் மொய்த்துக் கிடந்தது . நெஞ்சக்குவை மட்டும் உண்ணப்பட்டிருக்கக் கண்டோம். அப்பகுதியெங்கும் அவர் உடைகள் கிழிபட்டுப் பறந்து புல்லில் சிக்கி காற்றில் தவித்தன. இளையவர் தன் இருகைகளையும் விரித்து ஏதுமில்லை எஞ்ச என்பதுபோல கிடந்தார். தேவி, அம்முகத்தில் தெரிந்த தெளிவின் ஒளியைக் கண்டு நாங்கள் திகைத்து நின்றோம். பின் ஒரேகுரலில் அலறி அழுதோம். ஊழ்கம் கனிந்த யோகியின் முகம் கொண்டிருந்தார் எம்மவர்.” சத்ராஜித் உரக்க அழுதபடி எழுந்தார். “இளையோனே, பிரசேனா, உன்னை நான் கொன்றுவிட்டேனே, என் செல்லமே, என் தெய்வமே” என்று கூவி தன் நெஞ்சை ஓங்கி ஓங்கி அறைந்தார். கிரீஷ்மர் அவரை பற்றிக்கொள்ள அப்படியே கால் தளர்ந்து மீண்டும் பீடத்தில் அமர்ந்து தோள் அதிர விசும்பி அழுதார்.

மெல்லிய குரலில் ஹரிணர் தொடர்ந்தார் “இளவரசி, எமது வீரர் அப்பகுதியெங்கும் கூர்ந்தனர். அங்கே சிம்மக்காலடியை கண்டனர். குருதிபடிந்த அக்காலடித்தடம் எழுந்து அஸ்வபாதமலை மேல் ஏறி மறைந்தது. தொடர்ந்துசென்றவர்கள் மலைச்சரிவின் எல்லைவரை நோக்கி மீண்டனர். ஆகவேதான் இளையவரை சிம்மம் கொன்றது என்று எண்ணினோம். அரசரிடம் முறையாக அதை அறிவித்தோம். சிம்மத்தால் கொல்லப்படும் யாதவர்களுக்குரிய கேஸரம் என்னும் பொன்னிறமான விண்ணுலகுக்கு அவர் சென்று சேர்வதற்கான சடங்குகளை முறைப்படி செய்தோம். அவரது முகம் சிதையிலும் புன்னகையுடன் இருந்தமையால் அவர் அங்கே சென்றிருக்கிறார் என்றே எண்ணினோம். அங்கு அவர் நிறைவுடனிருக்கிறார் என்றே குலப்பூசகர் நீத்தார்நீர்முறை செய்தபோதும் சொன்னார்கள். அவருக்காக வைத்த கள்குடம் நுரையெழுந்து பொலிந்தது. அவருக்குச் சூட்டிய செம்மலர்களில் ஓரிதழ்கூட உதிரவில்லை.”

பாமை தலையசைத்தாள். ஹரிணர் சொன்னார் “ஆனால் அனைத்தும் முடிந்தபின்னர் ஒரு வினா எஞ்சியது, சியமந்தகம் எங்கே சென்றது? சிம்மம் அவரை உண்டிருந்தால் அது சியமந்தகத்துடன் சென்றிருக்க வாய்ப்பே இல்லை. ஆகவே ஒற்றர்களை அனுப்பி அந்நிலம் முழுக்க தேடச்செய்தோம். புல்லைக் கோதி சேற்றைக் கிளறி நோக்கினோம். அந்த ஓடையை அரித்தோம். சியமந்தகம் அங்கு எங்குமில்லை என்பது உறுதியானதும் ஐயம் வலுத்தது. ஆனால் வேறேதும் செய்வதற்கில்லை என்பதனால் பொறுத்தோம். ஒவ்வொருநாளும் நம் தெய்வங்கள் அளிக்கப்போகும் செய்திக்காக காத்திருந்தோம். தெய்வங்கள் நம்மை கைவிடுவதில்லை தேவி.”

அவையில் அமைதி நிறைந்திருந்தது. சத்ராஜித் மூக்கை உறிஞ்சிய ஒலி மட்டும் கேட்டது. சத்ரர் “இளவரசி, நேற்றுமுன்தினம் இங்கே துறைமுகத்து மதுச்சாலையில் ஊஷரகுலத்தவன் ஒருவன் களிமயக்கில் உளறியதை நம்மவர் கேட்டனர். அவன் இளையவர் கொல்லப்படுவதை நேரில் கண்டதாகச் சொன்னான். அவனுக்கு பணமில்லாமல் மது அளிக்கப்படவில்லை என்றால் அக்கொலைகாரனை அழைத்து மூத்தவரையும் கொல்லும்படி சொல்லப்போவதாக சொல்லிழிந்தான். அக்கணமே அவனை கொண்டுவரும்படி ஆணையிட்டோம். அவனை இங்கே தெளியவைத்து சொல்லேவினோம். அவனும் ஏழு ஊஷரகுலத்து வீரர்களும் நாங்கள் கான் புகுந்த கணம் முதலே புதருக்குள் ஒளிந்து உடன் வந்திருக்கிறார்கள். நாங்கள் எங்கிருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.”

“அன்றுகாலை இளையவர் எழுந்து செல்வதை அவர்கள் புதர்மறைவில் அமர்ந்து கண்டனர். தலைவனின் ஆணைப்படி மூவர் அவருடன் சென்றனர். இளையவர் துயிலில் நடப்பதுபோல சென்றார் என்றார்கள். நடந்துசெல்லும்போது கால்களே அவரை கொண்டுசெல்வதை உணரமுடிந்ததாம். தன் வலக்கையில் சியமந்தக மணியை வைத்து அதை நோக்கிக்கொண்டு சென்றார். அவரது முகம் மட்டும் நீலமென்வெளிச்சத்தில் ஒரு பெரிய மின்மினி போல மிதந்துசெல்வதை கண்டிருக்கிறார்கள். சிம்ஹசாயா என்னும் மலைப்பாறை அருகே அவர் சென்றபோது சிம்மத்தைப்போல் விழுந்துகிடந்த அதன் நிழல் உருக்கொண்டு சிம்மமென்றே ஆகி எதிரில் வந்திருக்கிறது. இளையவர் சிம்மத்தை நோக்கி புன்னகைசெய்தபடி கைகளை விரித்து நின்றார். அவர் ஏதோ சொல்லிக்கொண்டிருப்பது போல தெரிந்தது என்று ஒருவன் சொன்னான். மிகப்பெரிய சிம்மம் என்றும் அத்தகைய சிம்மத்தை அவர்கள் எவரும் கண்டதில்லை என்றும் மூவருமே சொன்னார்கள்.”

“சிம்மம் அவரை அணுகுவதைக் கண்டு எச்சரிக்கை ஒலியெழுப்பலாம் என எண்ணியிருக்கிறார்கள். ஆனால் எந்நிலையிலும் அவர்களை எவரும் அறியலாகாது என்பது தலைவனின் ஆணை என்பதனால் வாளாவிருந்துவிட்டனர். சிம்மம் இரு கால்களில் எழுந்து முன்கால்களை விரித்து அவரை வரவேற்பது போல நின்றது. அவர் அருகணைந்தபோது அது அவரை அணைப்பதுபோல தன் கைகளில் எடுத்துக்கொண்டதையும் அவர் செவியில் பேசுவதுபோல குனிந்ததையும் கண்டதாக ஒருவன் சொன்னான். அவர் அதன் கைகளில் சரிந்ததை மூவருமே கண்டனர். அவர் அலறவோ துடிக்கவோ இல்லை. இருளில் எழுந்த குருதியின் வெம்மணத்தை அவர்கள் அறிந்தனர். அவர் கொல்லப்பட்டார் என்று தெரிந்ததும் அவர்களின் தலைவன் திரும்பிவிடலாம் என்று கைகாட்டியிருக்கிறான். அவர்கள் திரும்பும்போது ஒருவன் இறுதியாக திரும்பி நோக்கினான். அங்கே நீலமணியுடலும் ஒளிரும் விழிகளும் செந்நிற இதழ்களும் கொண்ட ஒருவனின் கைகளில் இளையவர் அமைந்திருப்பதை கண்டான். அவன் கையால் தொட்டு பிறரை அழைக்க மூவருமே அவனை கண்டனர். கணநேரத்தில் அக்காட்சி மறைந்தது. சிம்மம் சென்று மறைந்த இடத்தில் இளையவரின் உடல் கிடந்தது.”

ஹரிணர் கைகளைத்தூக்கி வீசியபடி முன்னால் வந்து உரத்த குரலில் “இளவரசி அவன் தன் கார்குழலில் ஒரு மயிற்பீலியை அணிந்திருக்கிறான் என்று அடையாளம் சொல்கிறார்கள். அதைவிடப்பெரிய சான்றை எவர் சொல்லிவிடமுடியும்? இன்று பாரதவர்ஷத்தில் அவன் ஒருவனே குழலில் பீலியணியும் இளைஞன்” என்றார். பாமையின் முகம் மாறவில்லை. “குடிமூத்தாரே, அந்நாளில் துவாரகையின் தலைவர் எங்கிருந்தார் என உசாவினீரா?” என்றாள். “ஆம் இளவரசி, கேட்டறிந்தோம். அன்று துவாரகையில் யவனர்களின் ஒரு கேளிக்கை நிகழ்வு. அதில் அவர் மேடையில் அமர்ந்திருந்திருக்கிறார்” என்றார் சிருங்கசிலையின் தலைவர் சத்ரர். “அவரேதான், ஐயமே இல்லை என்கிறார்கள்.” யாதவர் சிலர் வியப்பொலி எழுப்ப ஹரிணர் திரும்பி “ஆயரே, அவன் மாயன். வித்தைகள் அறிந்தவன். அங்கே மன்றமர்ந்திருந்தவன் அவனல்ல. அன்றி இங்கு வந்து நம் இளையவரைக் கொன்றவன் அவன்! மன்று மிகத்தொலைவில் உள்ளது. மக்கள் அவனை சேய்மையில் கண்டனர். ஆனால் இங்கு இவர்கள் அண்மையில் கண்டிருக்கின்றனர்” என்றார்.

“அத்துடன் நம் இளையவரைக் கொல்ல ஏனைய வீரரால் எளிதில் இயலாது. மலர்கொய்வது போல அவரை கொன்றிருக்கிறான் என்பதே அது இளைய யாதவன் என்பதற்கான சான்று” என்றார் மலையஜபுரியின் தலைவர் அச்சுதர். யாதவர் கிளர்ந்த குரலில் “வஞ்சம்… வஞ்சத்தால் கொல்லப்பட்டார் நம் அரசர்” என்று கூவ பாமை மெல்ல நடந்து அவை முன் வந்து நின்று தலைதூக்கி “அவையீரே, அனைவருக்குமென ஒரு சொல். இளைய யாதவர் நம் இளையவரை கொல்லவில்லை. சியமந்தகமும் அவரிடம் இல்லை. இது உங்கள் குலம் காக்கும் மூதன்னையர் சொல் என்றே கொள்க!” என்றாள். ஹரிணர் ஏதோ சொல்ல வாயெடுக்க “இச்சொல்லுக்குப்பின் உள்ளது என் உயிர். இளைய யாதவர் பழிகொண்டார் என்றால் அக்கணமே உயிர்துறப்பேன்” என்று அவள் சொன்னாள். ஹரிணர் “அன்னையே, உன் சொல் மூதன்னையரின் சொல்லே என்றறிவோம். ஆனால் நீ இத்தனை நாட்களாக எங்கிருக்கிறாய் என்றே உணராத பித்துகொண்டிருந்தாய். உன்னால் அரசு சூழ்தலை அறியமுடியாது. எங்கள் சொல் இதை நம்பு. இது துவாரகையின் வஞ்சவிளையாட்டுதான்” என்றார்.

சத்ரர் “சியமந்தகம் நம்மிடம் இருக்கும் வரை யாதவரின் முழுமுதல் தலைவராக எவரும் ஆகமுடியாது இளவரசி. அதை நாள்செல்லச்செல்ல அவர் உணர்ந்துகொண்டே இருந்தார் என நாம் அறிவோம். சியமந்தகத்தை கொள்ளும்பொருட்டே அவர் இதை செய்திருக்கிறார். ஐயமே இல்லை” என்றார். பாமை திரும்பி யாதவர்களை நோக்கி “மூத்தாரே, என் சொல்லை நீங்கள் ஏற்கவில்லையா?” என்றாள். அவள் அதை மிக இயல்பாகக் கேட்டது போலிருந்தமையால் யாதவ இளைஞன் ஒருவன் “காதல்கொண்டவளின் சொற்சான்றுக்கு அப்பால் நிலைச்சான்று என ஏதும் அவனுக்குள்ளதா?” என்றான். சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் “இளவரசி, இது உங்கள் மகளிர்மன்று அல்ல. இது யாதவரின் அரசுமன்று. இங்கு நின்று பேசவேண்டியவை நீட்டோலைகள் மட்டுமே” என்றார். பாமை தன் தந்தையிடம் “தந்தையே, இளையவர் அவர் விழைந்த நிறைவையே அடைந்தார் என்று கொள்க!” என்றாள். சத்ராஜித் எவரும் எண்ணியிராத விரைவுடன் எழுந்து அஞ்சியவர்போல கைகளை வீசி “போ… போய்விடு… இங்கு நில்லாதே. அவனைக்கொன்றது நானல்ல. நீ… நீதான்” என்று கூச்சலிட்டார். கால்கள் தளர பின்னால் சரிந்து கிரீஷ்மர் தோளை பற்றிக்கொண்டார். நெஞ்சில் கைவைத்து “பிரசேனா, இளையவனே” என்று அழுதபடி பீடத்தில் சரிந்தார்.

பாமை அவையை ஒருமுறை ஏறிட்டு நோக்கிவிட்டு சற்றும் மாறாத சித்திரமுகத்துடன் “மூத்தவர் அனைவரும் அறிக! இனி நான் இந்த அவை நிற்கவில்லை. அந்த நீலக்கடம்பின் அடியில் சென்று அமர்ந்திருக்கப்போகிறேன். என் சொல் இப்போதே இங்கிருந்து இளைய யாதவரை அடைவதாக! இன்றிலிருந்து பதிநான்காம்நாள் முழுநிலவு. அன்று நிறையிரவுக்குள் சியமந்தக மணியுடனும் அதைக் கவர்ந்தவனுடனும் இளைய யாதவர் என் தந்தையை அணுகவேண்டும். அந்த மணியையே கன்யாசுல்கமாகக் கொடுத்து என் கைப்பிடிக்கவேண்டும். அதுவரை ஊணுறக்கம் ஒழிவேன். அதற்குள் அவர் வரவில்லை என்றால் உயிர் துறப்பேன். இது கன்றுகள் மேல் குலம் காக்கும் அன்னையர் மேல் ஆணை” என்றாள். அவள் சொற்களை புரிந்துகொள்ளாதவர்கள் போல அனைவரும் விழிவெறித்து அமர்ந்திருக்க ஆடையை சுற்றிப்பிடித்துக்கொண்டு அவள் மன்றிலிருந்து முற்றத்திற்கு இறங்கினாள்.

மறுகணம் கொதிக்கும் நெய்க்கலம் நீர்பட்டதுபோல மன்று வெடிப்பொலியுடன் எழுந்தது. “இளவரசி, என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டபடி இரு முதியவர்கள் கைவிரித்து ஓடிவந்தனர். “நில்லுங்கள். எதற்கு இந்த வஞ்சினம்… நில்லுங்கள் இளவரசி!” அவள் சீரான நடையில் சென்று நீலக்கடம்பின் அடியில் யமுனையை நோக்கி அமர்ந்தாள். பின்னால் ஓடிவந்தவர்கள் “இளவரசி, வேண்டாம். நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்… உங்கள் சொற்கள் எங்கள் அன்னையரின் சொற்கள்… வீணர்களின் சொல்லுக்காக தாங்கள் உயிர்துறக்கவேண்டாம்…” என்று கூச்சலிட்டு அழுதனர். அவளுடைய முகத்திலிருந்த சித்திரத்தன்மை விரைவிலேயே அவர்களை சொல்லிழக்கச் செய்தது. அவர்கள் எவரையும் அவள் காணவே இல்லை என்பது போல, அச்சொற்கள் எதையும் கேட்கவே இல்லை என்பது போல, அவ்விடத்திலேயே அவள் இல்லை என்பதுபோல. அவள் அமர்ந்த இடத்தைச் சூழ்ந்து நின்ற யாதவர் என்ன செய்வதென்றறியாமல் ஒருவரை ஒருவர் தோள்பற்றிக்கொண்டனர்.

ஆயர்மன்றுகளில் இருந்து அழுகுரலுடன் ஆய்ச்சியர் ஓடிவந்து அவளை சூழ்ந்தனர். மாலினி நெஞ்சிலும் தலையிலும் அடித்து அழுதபடி வந்து அவள் முன் நின்று “வேண்டாமடி… என் செல்லம் அல்லவா? நான் சென்று அவன் கால்களில் விழுகிறேன். சியமந்தகத்துடன் வரச்சொல்கிறேன். நீ நினைத்ததெல்லாம் நிகழ வைக்கிறேன். என் செல்லமே. வேண்டாம்… எழுந்து வா” என்று அழுதாள். அவள் கைகளைப்பற்றி இழுத்தபின் தளர்ந்து அருகே அமர்ந்து கண்ணீர் பெருக்கினாள். தொழுவில் கன்றுகளை சேர்த்துவிட்டு ராகினி ஓடிவந்து அவள் அருகே அமர்ந்தாள். எந்த உணர்வெழுச்சியும் இல்லாமல் மஹதி வந்து அவளருகே ஈச்சையோலைகளை சாய்த்து வைத்து வெயில் படாது மறையமைத்தாள். கிரீஷ்மர் அச்செய்தியை ஒலையில் பொறிக்கச்செய்து துவாரகைக்கு பறவைத்தூதனுப்ப விரைந்தார். பாணர் அவளைச்சூழ்ந்து நின்று குலப்பாடல்களை பாடினர். அவள் எதையும் அறியாதவளாக நீலம்பெருகிச் சென்ற யமுனையை நோக்கி அமர்ந்திருந்தாள்.

நூல் ஏழு – இந்திரநீலம் – 21

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 2

அணுகமுடியாது எப்போதும் அருகே நிற்பதைச் சுட்ட அஸ்வபாதத்தை சொல்வது அந்தகர்குலத்தின் வழக்கமாக இருந்தது. ஹரிணபதத்தைச்சூழ்ந்த எழுபத்திரண்டு ஊர்களில் எங்கே நின்றாலும் வானை உதைக்க எழுந்த குதிரைக்குளம்பை காணமுடியும். ஆனால் அதில் ஏறிச்சென்ற யாதவர் எவருமில்லை. அதைச்சூழ்ந்திருந்த காளநீலம் என்னும் பெருங்காடு நீலக்கூந்தல் என்று யாதவ குலப்பாடகர்கள் பாடினர். காளநீலி மலைக்குடிகளின் தெய்வம். பன்னிரு முலைகளும் ஏழுவிழிகளும் கொண்டவள். இரவுகளில் கூந்தல்சுழற்றி ஓலமிடுபவள். விண்மீன்களை அள்ளி வானில் வீசிப்பிடித்து கழற்சியாடுபவள். கொன்றையும் வேங்கையும் சூடிய அக்கூந்தலின் பேன்களே யானைகள். அதில் பதித்த பொன்பில்லைகள் புலிகள். செவ்வைரங்கள் சிம்மங்கள்.

காளநீலி தன் உள்ளங்கையில் தூக்கிக் காட்டும் அஸ்வபாதம் அருகே செல்லமுயன்றால் விலகிவிலகிச்செல்லும். அதை விலக்கிக் கொண்டு அவள் புன்னகைப்பாள். ஆழத்திலிருந்து ஆழத்திற்கு இட்டுச்செல்வாள். ஒரு கட்டத்தில் அஸ்வபாதம் மண்ணுக்குள் புதைந்து முற்றிலும் மறைய நான்குபக்கமும் அலையென காடு மேலெழுந்து வானைத்தொட்டு சூழ்ந்திருக்கும். புயலோசை என காளநீலியின் நகைப்பு ஒலிக்கும். அஸ்வபாதத்தின் மேல் எப்போதும் நின்றிருக்கும் குளிர்ந்த நீலமுகில் காளநீலியின் மூடிய விழி என்பார்கள். அவ்விழியிமைகள் திறந்து அவள் ஒளிரும் செவ்விழிகள் தெரியும். அச்சத்தில் செயலிழந்து நின்று அதைப்பார்த்தவர்கள் மீள்வதில்லை.

காளநீலத்தில் வாழும் மலைக்குடிகள் கூட அஸ்வபாதத்தை அணுகியதில்லை. சேறுநிறைந்த தரையில் செழித்து எழுந்து கிளைபின்னி இலை கரைந்து ஒற்றைப்பசும்குவையென நிற்கும் காடு வழியாக ஊடுருவிச்சென்றால் அதன் அடிவாரத்தை மட்டுமே அடையமுடியும். அடிவாரத்தில் இருந்து எப்போதும் ஆயிரம் காதம் அப்பால் இருக்கிறது அஸ்வபாதம் என்று ஒரு பாணனின் பாடல் சொன்னது. ‘தேவியின் கையில் இருக்கும் களிப்பாவை. இந்திரநீலக் குவை. விண்ணுக்கெழுந்த மண்ணின் பாதம்…’ என்று அது விவரித்தது. அஸ்வபாதம் எப்போதுமே முகில்படலத்தால் மூடப்பட்டு இளநீலநிறமாகவே தெரிந்தது. முகில் திரை வெயிலில் ஒளிகொள்ளும்போது அது நீர்பட்டு அழிந்த ஓவியம்போலிருக்கும். காலையிலும் மாலையிலும் முகிலின் சவ்வு தடித்து நீலம் கொள்கையில் மடம்புகளும் முழைகளும் மடிப்புகளும் எழுந்துவர அண்மையில் வந்து முகத்தோடு முகம் நோக்கி நின்றது. அதன் குகைகள் அறியாச்சொல்லொன்றை உச்சரித்து நிற்கும் இதழ்கள் போல உறைந்திருந்தன.

அஸ்வபாத மலையை யாதவர் விழிதூக்கி நோக்குவதில்லை. அதை நேர்நின்று நோக்குபவர்களின் கனவில் அது புன்னகைக்கும் பெருமுகமாக எழுந்து வந்து குனிந்து மூடிய விழிகளின் மேல் மூச்சுவிட்டு நின்றிருக்கும். அப்போது விழிதிறக்கலாகாது. விழிதிறந்தவர்கள் நீலப்பெருக்கில் கனிந்து காம்பிறும் பழம் என உதிர்ந்து மறைவார்கள். அஸ்வபாதத்தைச்சுற்றி நின்றிருக்கும் நீலமுகில்படலம் அப்படி மறைந்தவர்களின் இறுதிமூச்சுக்களால் ஆனது என்றது யாதவ குலப்பாடல். அவர்களின் இறுதிச்சொற்களால் ஆனது அதில் எழும் இடி. அவர்களின் இறுதிப்புன்னகைகளால் ஆனது மின்னல். அவர்களின் இறுதி ஞானத்தால் ஆனது வானவில்.

காளநீலம் ஒரு மாபெரும் கரிய தாமரை. வெளிப்பக்கமாக விரிந்திருக்கும் இதழ்களை மட்டுமே யாதவர் அறிந்திருந்தனர். அங்குதான் அவர்களின் ஊர்கள் இருந்தன. தலைமுறைகளாக அவர்கள் அங்கேயே பிறந்து அங்கே ஆபுரந்து அங்கே மடிந்து அம்மண்ணில் உப்பாயினர். அவர்களின் அன்னையர்தெய்வங்களும் அங்கே கடம்ப மரத்தடிகளிலும் வேங்கைமரத்தடிகளிலும் மழைப்பாசி படிந்த உருளைக்கற்களாக விழியெழுதப்பட்டு பட்டு சுற்றப்பட்டு காய்ந்த மலர்மாலைசூடி அமர்ந்திருந்தனர். காளநீலத்திலிருந்து கனிந்து வந்த நீரோடைகளை அவர்கள் அருந்தினர். அன்னை தன் முலைப்பாலில் நஞ்சு கலந்தளிப்பதும் உண்டு. ஆக்களும் மைந்தரும் நோயுற்று இறக்கும் முன்மழைக்காலத்தில் இல்லங்களின் முன் நெய்விளக்கு ஏற்றிவைத்து இருளெனச் சூழ்ந்த காடு நோக்கி யாதவர் கைதொழுதனர். ‘அறியமுடியாதவளே, சூழ்ந்திருப்பவளே, உன் கருணையால் வாழ்கிறோம்.’

ஆழமற்ற சிறு சுனைகளும் புல்செறிந்த சரிவுகளும் ஊறிக்கனிந்து ஓடைகளாகும் சதுப்புகளும் குறுமரப்பரவலும் கொண்டு சரிந்து வரும் நிலத்தில் அவர்களின் கன்றுகள் மேய்ந்தன. பெருமரங்களுக்கு மேல் கட்டப்பட்ட பரண்வீடுகளில் அவர்கள் கீழே நெருப்பிட்டு எரிவெம்மையில் புகைசூழ மரவுரியும் கம்பளியும் போர்த்தி அமர்ந்து தாயமும் பகடையும் சொல்மாற்றும் விளையாடினர். கன்றுகளைச் சூழ்ந்த சிறுபூச்சிகளை பொற்துகள்களாக ஆக்கும் இளவெயில் நோக்கி அமர்ந்து கண்கனிய குழலிசைத்தனர். அந்திகளிலும் மழைமூடிய பகல்களிலும் காட்டுக்குள் இருந்து ஒளிரும் விழிகளுடன் சிறுத்தைகள் அவர்களின் கன்றுகளை தேடிவந்தன. இரவுகளில் ஓநாய்கள் மெல்லிய காலடிகளுடன் வந்து மந்தையை சூழ்ந்துகொண்டு சுவையை எண்ணி முனகியபடி எம்பி எம்பிக்குதித்தன. இருளாழத்தில் நரிகளின் ஊளை எப்போதும் இருந்தது. காலை விடியும் ஈரமண்ணில் புலிப்பாதத் தடத்தால் காடு ஓர் எச்சரிக்கையை எழுதிப்போட்டிருந்தது. யாதவர்களுக்கு ஆழ்கானகம் அச்சுறுத்தும் அயலவர் தெய்வம்.

பிரசேனர் அந்தகக் குலமூத்தார் இருவரும் பூசகர் இருவரும் இரு பாணரும் நூற்றெட்டு துணைவீரருமாக காளநீலத்திற்குள் நுழைந்தபோது ஒரே பகலுக்குள் அஸ்வபாதம் தலைக்குமேல் எழுந்து மறைந்தது. அவர்களைச்சூழ்ந்து அலையடித்த பசுந்தழைப்புக்குள் காட்டின் மூச்சுபோல காற்று ஓடிக்கொண்டே இருந்தது. பறவைக்குரல்களும், சிற்றுயிர்களின் ஓசையும், அருவிகளும் நீரோடைகளும் எழுப்பிய நீர்முழக்கமும் இணைந்து எழுந்த அறுபடா ஒலிப்பெருக்கு காற்றின் ஒலியை தன்மேல் ஏந்தியிருந்தது. கொடிகள் அடிமரத்தை அறைந்த விம்மலில் கிளைகள் உரசிக்கொள்ளும் உறுமலில் காடு எதையோ மீளமீள சொல்லிக்கொண்டிருப்பதாக பிரசேனர் எண்ணினார். அவர் உடல் அச்சத்தில் சிலிர்த்துக்கொண்டே இருந்தது. அவர்களை வழிகாட்டி அழைத்துச்சென்ற ஒற்றன் அம்மலைப்பகுதியை நன்கறிந்தவன். ஆயினும் அவர்கள் நடுங்கிக்கொண்டிருந்தனர். “இந்தக்காட்டில் பாதைகளே இல்லையா?” என்றார் பிரசேனர். “நாம் பாதையில்தான் செல்கிறோம் அரசே. ஆனால் இங்கு பாதை விழியாலறியப்படுவதல்ல, மூக்கால் உணரப்படுவது” என்றான் ஒற்றன்.

ஊஷர குலத்தலைவர் சிருங்ககாலரை ஒற்றர்கள் வழியாக அணுகுவதற்கே பலவார கால முயற்சி தேவைப்பட்டது. ஊஷரகுலத்தின் மூத்தோரவையில் அனைவருமே நிலமக்களின் உறவை முழுமையாகவே விலக்க விழைபவர்கள் என்றான் ஒற்றன். சிருங்ககாலரும் அவரது இருமைந்தர்களான கலிகனும் மோதனும் மட்டுமே யாதவர்நட்பை விழைந்தனர். தங்கள் குலத்தின் மூத்தோரவையில் பேச்சுவாக்கில் யமுனைக்கரையில் ஒரு வணிகமுனையை அமைப்பதைப்பற்றி சிருங்ககாலர் சொன்னதுமே விற்களுடனும் வேல்களுடனும் குடிமூத்தார் எழுந்து நின்று கைநீட்டிக் கூச்சலிட்டு வசைமொழியத் தொடங்கினர். “நாம் உண்டு கழித்த நீராலானது யமுனை. நமது கழிவில் நாமே கால்நனைக்க விழைகிறோம். நம் குலதெய்வங்களை இழிவுசெய்கிறோம். அவர்களின் நச்சு இக்காடெங்கும் நிறைந்திருக்கிறது என்பதை மறவாதீர். நம் குழவிகள் விழியடங்கி மண்மறையும். நம் இல்லங்கள் மேல் நெருப்பு ஏறும். நாம் நடக்கும் பாதையில் நாகம் படுத்திருக்கும்” என்று முதற்பூசகர் சொன்னார். ஹரிணபதத்தின் ஒற்றர்கள் மீண்டும் மீண்டும் சென்று வந்தனர். ஊஷரர் எவருக்குமே எழுத்துமொழி தெரியாதென்பதனால் நேரடியாக சொல்லனுப்பமுடியாது. சொல்லியனுப்பப்பட்ட வார்த்தைகளைவிட பரிசுப்பொருட்கள் மேலும் பயனளிக்கின்றன என்று பிரசேனர் நான்காவது தூதுக்குப்பின்புதான் கண்டுகொண்டார். பரிசுப்பொருட்களில் யவனமது மிக விரும்பப்படுகிறது என்றும்.

பன்னிரண்டு தூதுக்குப்பின் அவர்களே யவனமதுவை கோரி தங்கள் தூதனை அனுப்பத் தொடங்கினர். சிருங்ககாலர் யவனமதுவை தங்கள் குடிச்சபையில் மூத்தாருக்கு ஊனுணவுடனும் தேனுணவுடனும் இணைத்து அளித்தார். யவனமதுவில் உறைந்த மும்முனை வேல் ஏந்திய நீலவிழிகள் கொண்ட யவனநாட்டுத் தேவன் அவர்களை வென்றான். அதை அருந்தும்போது நீலம் விரிந்த நீர்வெளி கண்ணுக்குத்தெரிவதாக முதுபூசகர் சொன்னார். அதன்மேல் செந்நிறச் சிறகுகளை விரித்துச்செல்லும் கலங்களை அவர் கண்டார். செந்தழலையே தாடியாகக் கொண்ட முதியவர்களை. அவர்கள் பச்சைநிற விழிகளை. “அவர்களின் கனவு இந்த மதுவில் வாழ்கிறது” என்றார். கனவுநீர் என அதை அழைத்தனர். அதற்காக ஒவ்வொருநாளும் சிருங்ககாலரின் இல்லத்திற்கு முன் வந்து நின்றனர். ஆவணிமாதம் முழுநிலவுநாளில் காட்டுக்குள் கூடிய ஊஷரர்களின் குடிமூத்தார் அவைக்கூடலுக்கு வந்து அவர்களின் கதிர்தெய்வத்தைத் தொழுவதற்கான அழைப்பு பிரசேனருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவ்வழைப்பை பிற மலைக்குடியினர் அறியவேண்டியதில்லை என்று சிருங்ககாலர் சொன்னார். கதிர்தெய்வத்தின் அருள் பிரசேனருக்கு இருக்கும் என்றால் அவரை குடிச்சபை ஏற்கக்கூடும். அதன்பின் அவரை ஊஷரர் தமராக ஏற்று படையிணைவுக்கும் வணிகஉறவுக்கும் ஒப்பக்கூடும். அவ்வொப்புதல் நிகழ்ந்தபின்னரே அதை பிற கானகத்தார் அறியவேண்டும்.

அப்படையுடன் சென்று நான்கு கானகக் குலங்களை வெல்ல முடியும் என்றார் சிருங்ககாலர். தசமுகர்களிடம் கலிகனும் மோதனும் முன்னரே பேசத் தொடங்கியிருந்தனர். கனவுநீர் அவர்களை வென்றிருந்தது. சியாமரையும் பிங்கலரையும் படைகாட்டி அச்சுறுத்தி எளிதில் இணைக்கமுடியும். யாதவரின் படையும் கலங்கள்கொண்டுவரும் அம்புகளும் இருந்தால் கன்னரையும் கராளரையும் வெல்லமுடியும். அறுவரும் இணைந்தபின் ஜாம்பவர்கள் எதிர்நிற்கமுடியாதொழிவர். “அவர்களின் காடு பாலுக்குள் உறைந்த நெய் போல காட்டுக்குள் உள்ள அடர்வு. அங்கே மழைத்தெய்வம் நின்றிருக்கிறது. அவள் நீல ஆடையின் சுருளுக்குள் வாழ்பவர்கள் அவர்கள். கரடிமுகம் கொண்ட கொடியவர்கள். காட்டின் ஆழத்தில் அவர்கள் என்றும் கனவுக்குள் வாழும் வஞ்சத்தெய்வம்போல் இருந்துகொண்டுதான் இருப்பார்க்ள். ஆனால் நாம் காட்டுக்குள் கோட்டைகளைக் கட்டி யமுனைவழியாக வரும் படைக்கலங்களை அங்கே நிறுத்தினால் காலம் செல்லச்செல்ல அவர்களை வென்று புறம்காணமுடியும்” என்றார்.

கிளம்பும்போது அரசரில்லத்தின் பெருங்கூடத்தில் பீடத்திலமர்ந்திருந்த சத்ராஜித்தை குனிந்து தாள்தொட்டு வணங்கினார் பிரசேனர். மதுமயக்கால் அடைத்த குரலுடன் “வென்றுவருக இளையோனே” என்றார் சத்ராஜித். “செல்லும் வழி கடினமானது. ஆழ்கானகத்தில் நுழையும் முதல் யாதவன் நீ. காட்டுமக்கள் கரந்துதாக்கும் வஞ்சம் நிறைந்தவர்கள் என்பது நம் மூதாதையர் சொல். மலைமக்களின் சொற்களை ஒருபோதும் முதல்மதிப்புக்கு கொள்ளாதே. நான்கும் எண்ணி நன்று தேர்ந்து துணிக!” பிரசேனர் “என் நெஞ்சு சொல்கிறது, இம்முறை வெல்வோம் என” என்றார். “ஊஷரரின் பொருள் விழைவு நமக்கு உதவும் விசை. அவர்களை அணுக்கராக்கினோம் என்றால் நாம் காட்டை வென்றவர்களாவோம். மூத்தவரே, இந்த மலைக்குடிகள் அறுவரும் நம்முடனிருக்க காட்டுக்குள் ஏழு கோட்டைகளையும் அமைத்துவிட்டோம் என்றால் நாம் துவாரகைக்கோ மதுரைக்கோ அடிகொள்ள வேண்டியதில்லை. ஒருதலைமுறைக்காலம் தலைதாழாது நின்றுவிட்டோம் என்றால் நாமே ஒரு முடியரசாக ஆகமுடியும்.”

சத்ராஜித் புன்னகைத்து “மீண்டும் கனவு காண்கிறாய் இளையோனே” என்றார். பிரசேனர் சற்றே நாணிய முகத்துடன் “ஆம், என் உள்ளம் கனவுகளால் நிறைந்துள்ளது மூத்தவரே. பாரதவர்ஷத்தின் தலைமகனாக நீங்கள் அமரவிருக்கும் அரியணையை எண்ணியே நான் ஒவ்வொரு நாளும் விழித்தெழுகிறேன். சொல்தேரா வயதில் என் நெஞ்சில் ஊறிய எண்ணம் அது. அதிலிருந்து நான் விடுபட்டதேயில்லை” என்றார். சத்ராஜித் சிரித்தபடி அவர் தோளில் தட்டி “நன்று, அக்கனவுகள் உன்னை இட்டுச்செல்லட்டும்” என்றார். அவர் திரும்பிநோக்க ஏவலன் பொற்பேழைக்குள் செம்பட்டில் வைக்கப்பட்ட சியமந்தகமணியை கொண்டுவந்து நீட்டினான். அவர் அதை வாங்கி பொற்சங்கிலியில் கோர்த்த நீள்வட்டப் பதக்கத்தின் நடுவே பொறிக்கப்பட்ட இளநீல மணியை தன் முன் தூக்கி நோக்கி “சூரியனின் விழி” என்றார். “இதன் வழியாக நம்மை அவன் எப்போதும் நோக்கிக்கொண்டிருக்கிறான் என்று தந்தை சொல்வார். இதனூடாக நாம் அவனையும் நோக்கமுடியும், ஆனால் அக்கணத்தை அவனே முடிவுசெய்யவேண்டும் என்பார். இன்றுவரை நான் அவனை நோக்கியதில்லை” என்றபின் அதை பிரசேனரின் கழுத்தில் அணிவித்து “நம் குலம் புரக்கும் இளங்கதிர் உன்னுடன் இருக்கட்டும்” என்றார்.

பிரசேனர் “மூத்தவரே, இது…” என்று தயங்கினார். “இது என்னுடையதென்றால் உன்னுடையதும் அல்லவா?” என்றார் சத்ராஜித். “அணிந்துகொள். சூரியவிழியுடன் உன்னை அவர்கள் பார்க்கட்டும்.” பிரசேனர் நடுங்கும் விரல்களுடன் உடனே அதை கழற்றப்போக சத்ராஜித் அவர் கையைப்பிடித்தார். “காட்டுக்குள் செல்வதுவரை இதை அணிந்துகொள். இது உன் மார்புக்கு இத்தனை அழகூட்டுமென நான் இதுவரை அறிந்ததில்லை.” பிரசேனர் தத்தளிப்புடன் “மூத்தவரே, நம் குடிநெறிப்படி சியமந்தகத்தை மூத்தவர் மட்டுமே அணியவேண்டும்…” என்றார். சத்ராஜித் “அதற்கென்ன, நான் உன்னை மூத்தவனாக கொள்கிறேன்” என்றார். “வேண்டாம் மூத்தவரே, குடிமூத்தார் எவரேனும் இதைக் கண்டால் அறப்பிழையென ஆகும்…” என்று பிரசேனர் தவித்தார். “இளையவனே, அனைவரும் அறிந்த ஒன்றுண்டு” என்றார் சத்ராஜித். கைகள் நடுங்க “மூத்தவரே…” என்றார் பிரசேனர். “மிக இளமையில் ஒருமுறை தந்தை அறியாமல் நீ இந்த மணியை எடுத்து உன் மார்பில் அணிந்துகொண்டு காட்டுக்குள் ஓடிவிட்டாய். உன்னை பகல்முழுக்கத் தேடி மலைக்குகை ஒன்றுக்குள் கண்டுகொண்டோம். அங்கே இந்த மணியை நெஞ்சோடணைத்துக்கொண்டு பதுங்கி இருந்தாய்.”

பிரசேனர் “ஆம், நினைவுகூர்கிறேன். அதன்பொருட்டு எந்தை எனக்கு நூறு பிரம்படிகளை அளித்தார். ஒருமாதம் ஊன்விலக்கு நோன்பிருக்க ஆணையிட்டார்” என்றார். “இளையோனே, அன்று நான் என் தந்தையிடம் சொன்னேன், நான் இளையோனாக ஆகிறேன். சியமந்தகத்தை அவனுக்கே அளித்துவிடுங்கள் என்று. தந்தை பிரம்பை ஓங்கியபடி நீ இளையோனாகவேண்டும் என்றால் தெய்வங்களே அதை முடிவுசெய்திருக்கும் மூடா என்றார்.” சத்ராஜித் புன்னகைத்து “இன்று தெய்வங்களின் ஆணை இது என்று கொள்கிறேன். நீ இந்த மணியை அணியாமல் உன்னை மலைக்குடிகள் ஏற்கமாட்டார்கள் என்று நம் குடிகளிடமும் மூத்தாரிடமும் சொல்கிறேன். அவர்களுக்கு மறு சொல் இருக்காது” என்றார். பிரசேனர் “மூத்தவரே, ஆனால்…” என்றார். “அது பொய்யும் அல்ல இளையோனே, நீ இதை அணிந்துகொண்டு அவர்களின் அவையில் அமர்ந்தால் மட்டுமே உன்னை கதிர்குலத்து அரசன் என்று மலைக்குடிகள் ஏற்பார்கள். வேறு வழியே இல்லை.”

பிரசேனர் சியமந்தகத்தை மெல்ல தொட்டார். குளிர்ந்திருந்தது. அதைப் பிடித்து தன் நெஞ்சில் அமைத்தார். இதயத்தில் ஒரு விழி திறந்ததுபோல. “உன் நெஞ்சுக்கு மிகப்பொருத்தமாக உள்ளது இளையோனே. அந்த மணி சென்றமையும் பொற்பதக்கக் குழி ஒன்று உன் உள்ளத்தில் உள்ளது என்று எண்ணுகிறேன்” என்றார் சத்ராஜித். பிரசேனர் பெருமூச்சுவிட “நலம் சூழ்க! நம் மூதன்னையரும் நீத்தோரும் உன் மேல் அருள்பொழியட்டும்” என்று சத்ராஜித் மீண்டும் வாழ்த்தினார். சியமந்தக மணியை அணிந்த பிரசேனரின் தோளை அணைத்தபடி சத்ராஜித் அரசரில்லத்தின் வெளிமுற்றத்துக்கு வந்தபோது அங்கே கூடியிருந்த யாதவகுலமூத்தார் திகைத்தனர். மூத்தபூசகர் ஏதோ சொல்ல வாயெடுக்க சத்ராஜித் “மூத்தோரே, நம் குடிமுதல்வனாக இந்த மணிசூடிச்சென்றாலொழிய மலைக்குடிகள் இளையவனை ஏற்க மாட்டார்கள். நாம் அனுப்பும் தூதையும் ஒப்பமாட்டார்கள் என்றறிக!” என்றார். குடிமூத்தார் ஒருவரை ஒருவர் நோக்க இளைஞர் ஒருவர் “ஆம், அதுவே உண்மை” என்றார். தயக்கத்துடன் அந்தகக்குடியினர் தங்கள் வளைதடிகளைத் தூக்கி வாழ்த்தொலி எழுப்பினர். குலப்பூசகர் முன்னால் வந்து பிரசேனரின் நெற்றிமேல் தங்கள் கைகளை வைத்து தெய்வங்களின் சொல்லை வழங்கினர். “கதிரவன் வெற்றிபெற்றாகவேண்டும் குலத்தவரே. இளையோன் நற்செய்தியுடன் மட்டுமே வருவான் என்றறிக!” என்றார் சத்ராஜித். “ஆம் ஆம் ஆம்” என்றனர் அந்தகர்.

காடு அவர்களை சுழற்றிச் சுழற்றி உள்ளிழுத்தது. பகலொளி முழுமையாகவே மறைந்து பசுமையே இருளாக சூழ்ந்துகொண்டது. காடு என்பது இலைத்தழைப்பு என பிரசேனர் எண்ணியிருந்தார். கிளைச்செறிவு என முதல்நாளில் அறிந்தார். இலைப்பெருக்கு என அன்றுமாலைக்குள் உணர்ந்தார். உள்ளே செல்லும்தோறும் அது வேர்க்குவை என்று தெளிந்தார். பல்லாயிரம் கோடி நரம்புகளால் பற்றி இறுக்கப்பட்டிருந்தது மண். வேர்களிலிருந்து எழுந்த முளைகளே செடிகளும் மரங்களும் கிளைகளும் இலைகளுமாக இருந்தன. விடிவது முதல் இருள்வது வரை நாள் முழுக்க நடந்தும் இரண்டுகாதம்கூட கடக்கமுடியவில்லை. அந்தியில் வேங்கைமரம் ஒன்றின் கவர்மேல் கட்டப்பட்ட பரண்வீட்டில் கீழே மூட்டப்பட்ட அனலின் வெம்மையை அறிந்தபடி உடலொடுக்கி மரவுரிக்குள் அமர்ந்து உறங்கினர். மறுநாள் இளவெயில் பச்சைக்குழாய்களாக காட்டுக்குள் இறங்கி தூண்களென ஊன்றி எழுந்த பச்சைப்பளிங்கு மாளிகைக்குள் சருகில் பொன்னென பாறையில் வெள்ளியென இலைகளில் மரகதம் என விழுந்துகிடந்த காசுகளின் மேல் கால்வைத்து நடந்தனர்.

கிளம்பும்போதிருந்த நம்பிக்கையை காட்டுக்குள் நுழைந்ததுமே பிரசேனர் இழந்தார். அறியாத ஆழம். அறிந்திராத மக்கள். ஒவ்வொரு முறையும் வெற்றுக் கற்பனையை வளர்த்துக்கொண்டு எண்ணாமல் துணிகிறோம் என்று நினைத்துக்கொண்டார். செலுத்தும் விசையென்றிருப்பது ஆணவமே என அவர் உள்ளறிந்திருந்தார். ஒவ்வொரு பிழையும் மேலும் பிழைகளை நோக்கி செலுத்துகிறது. பிழைகளை ஒப்புக்கொள்ளமுடியாத உளநிலையால் மேலும் பிழைகள். துயில்கலையும் இரவுகளில் இருளின் தனிமையில் அதை எண்ணி பெரூமூச்சுடன் புரண்டுபுரண்டு படுப்பார். எண்ணிச் சலித்து ஒரு கணத்தில் ‘ஆம், அவ்வாறுதான் செய்தேன், அதற்கென்ன?’ என்ற வீம்பை அடைவார். ‘அரசுசூழ்தல் என்பது பிழைகளும் கலந்ததே. அனைத்துப் பிழைகளையும் இறுதிவெற்றி நிகர் செய்துவிடும்’ என்று சொல்லிக்கொள்வார். ‘இறுதிவெற்றி!’ அச்சொல் மாயம் கொண்டது. இனிய மதுவைப்போல் உளமயக்களிப்பது. அதை சொல்லிச் சொல்லி உயிர்கொடுக்கமுடியும். விழிசுடரும் தெய்வம் போல அது எழுந்து வந்து கைநீட்டும். அழைத்துச்சென்று அத்தனை சிக்கல்களுக்கும் வெளியே ஒளிமிக்க மேடை ஒன்றின் மேல் கொண்டு நிறுத்தும். அங்கே நின்றிருக்கையில் அனைத்தும் எளிதாகிவிட்டிருக்கும். இறுதிவெற்றி என்பது மிக அருகே மிகத்தெளிவாகத் தெரியும். அவருக்குரியது என முன்னரே முடிவானது.

நெஞ்சைச் சுற்றிக்கட்டிய தோலுறைக்குள் சியமந்தகம் இருந்தது. ஒவ்வொரு எண்ணத்துடனும் அதன் இருப்பும் சேர்ந்துகொண்டது. அவரில் ஏறி சியமந்தகமே காட்டுக்குள் செல்வதுபோல தோன்றியது. இரவில் காட்டுக்குள் பரண்மேல் அமர்ந்திருக்கையில் சியமந்தக மணியை எடுத்து நோக்கி தன் நம்பிக்கையை மீட்டுக்கொள்ள முயன்றார். மின்னும் ஒற்றைக்கருவிழியை நோக்கி வினவினார் ‘என் குலதெய்வமே, என்னை அறிவாயா? ஏன் நான் அலைக்கழிகிறேன்? ஏன் அமைதியற்றிருக்கிறேன்? என் தேவனே, ஏன் ஒவ்வொருமுறையும் நிறைவின்மைக்குமேல் சென்று விழுந்துகொண்டிருக்கிறேன்?’ விளங்காத சொல் ஒன்று திகழ அவ்விழி அவரை உறுத்து நோக்கியது. ‘என்னை அறிகிறாய் என் இறைவனே, நான் உன்னை அறிவது எப்போது?’ பெருமூச்சுடன் அதைவிட்டு விழிவிலக்கி காட்டை நோக்கினார். அப்போது உடலில் அதன் நோக்கின் கூர்மையை உணரமுடிந்தது. நோய்கொண்ட பசு என மெய்சிலிர்த்தபடியே இருந்தது. அதன் கூர்மை கூடிக்கூடி வந்து ஒரு சொல்லென கனிந்துவிட்டதென்று தோன்றும் கணம் திரும்பிப்பார்க்கையில் அது அணைந்து வெற்றொளி கொண்டிருந்தது. விழிமட்டுமேயான தந்தை. விழியாகி வந்த பேரன்பு. விழியொளி மட்டுமேயான நகைப்பு. விழியென்றான நஞ்சு. ‘எந்தையே, என்னை அறிந்தவன் நீ. சொல், நான் யார்?’

சலிப்புடன் மீண்டும் அதை பேழையிலிட்டு படுத்துக்கொண்டார். இந்திரநீலம் விளங்கும் ஒரு மலைச்சரிவில் நடந்துகொண்டிருந்தார். வானில் குளிர்ந்த மெல்லொளியுடன் சுடரென திகழ்ந்துகொண்டிருந்தது சூரியனல்ல சியமந்தகம். நிழல்களற்ற ஒளி. ஓசைகளற்ற காடு. பின்னிப்பின்னி புழுக்குவைகளாக நாகச்செறிவாக மலைப்பாம்புத்தொகைகளாக நிலமென்றான வேர்களில் கால்தடுமாறி நடந்து நடந்து விழுந்து எழுந்து சென்றுகொண்டிருந்தார். குதிரைக்குளம்பு விலகிவிலகிச் சென்றது. பசித்த ஓநாய்க்கூட்டம் போல ஓசையற்ற காலடிகளுடன் காடு அவரை சூழ்ந்துகொண்டிருப்பதை அவர் அறிந்திருந்தாலும் குதிரைக்குளம்பிலிருந்து விழிநீக்க முடியவில்லை. சென்று சென்று ஒரு கணத்தில் குதிரைக்குளம்பு முழுமையாகவே புதைந்து மறைந்ததை அறிந்து திகைத்து நின்ற கணத்தில்தான் சிலந்தி வலை என காடு தன்னை வளைத்துக்கொண்டுவிட்டதை கண்டார்.

சொல்லிழந்து விழிமட்டுமே என்றாகி நின்றார். நச்சுவெளியென கொந்தளித்த காட்டின் கிழக்கில் இலைநுனிநீர்த்துளி என கனிந்து உருக்கொள்வது என்ன என்று பார்த்தார். நீலம் திரண்டு மெல்ல ஒளிகொண்டது. வலைமுனையிலிருந்து இரையை அணுகும் சிலந்தி. பொன்னிறமாகியது. பூமயிர் சிலிர்த்தது. அரியதோர் அணிநகை என நுணுக்க அழகுகொண்டது. அணுக அணுக தெளிந்து வந்தது, அது பிடரிசிலிர்த்த ஒரு சிம்மம். அச்சம் கால்களை குளிர்ந்து எடைகொள்ளச்செய்தாலும் அகம் எழுந்த விசை ஒன்றால் முன்செலுத்தப்பட்டார். மேலும் அருகே சென்றபோது அது பொற்தழலென தாடியும் குழலும் பெருகி காற்றில் பிசிறி நிற்க இடையில் கைவைத்து மின்னும் கனல்விழிகளுடன் நின்றிருக்கும் இளமுனிவர் என தெளிந்தார்.

அருகே சென்றதும் சிம்மர் திரும்பி பிரசேனரை நோக்கினார். “நெடுநாள் பயணம்” என்றார். “ஆம், செந்தழல்வடிவரே. நெடுநாள்” என்றார் பிரசேனர். “நத்தை தன் ஓடை என விழைவு மானுடனை கொண்டுசெல்கிறது” என்றார் அவர். பிரசேனர் அவரை நோக்கி நின்றார். “நெடுந்தொலைவு வந்துவிட்டாய்…” என்றார் அவர் மீண்டும். “தொலைவு எப்போதுமே இடர் மிக்கது. பிழைகளை அது கணம்தோறும் பெரிதாக்கிக்கொண்டே செல்கிறது.” பிரசேனர் “நான் திரும்ப முடியாதா?” என்றார். “விழைவிலிருந்து திரும்பியவர்களை முன்பு அறிந்திருக்கிறாயா?” என்றார் அவர். “இல்லை.” அவரது புன்னகை பெரிதாகியபோது வாயின் இருபக்கமும் இரு கோரைப்பற்களை கண்டார். நாக்கு குருதியாலானதுபோல அசைந்தது. “மலையுச்சியில் நான் யோகத்தில் அமர்ந்த குகை” என்றார் அவர். “அந்த மணியை நீ நெஞ்சில் அணிந்த கணத்தில் மலையிலிருந்து இறங்கத் தொடங்கினேன்.” பிரசேனர் தலைவணங்கி “தங்கள் அடியவன்” என்றார்.

“அமர்ந்துகொள், இது நீ என்னைக் காணும் கணம்” என்றார் முனிவர். பிரசேனர் நடுங்கும் உடலுடன் அவர்முன் சென்று சியமந்தகத்தை நெஞ்சோடணைத்தபடி விழிகளை மூடி அமர்ந்தார். சிம்மர் தன் இருகைகளையும் விரித்தபோது மின்னும் குறுவாட்களென உகிர்கள் பிதுங்கி வந்தன. “விழைவு ஓடும் குருதி என வெம்மைகொண்டது ஏதுமில்லை” என்று அவர் சொன்னார். அவரது மூச்சை தன் உடலில் பிரசேனர் அறிந்தார். “ஆணவம் அதில் கொழுநெய்ச் சுவையாகிறது. இனியது, சீறி எழுவது, குமிழியிடுவது.” அவரது தாடியின் மயிர்ச்செறிவு பிரசேனரை மூடிக்கொண்டது. “முன்பொருமுறை இத்தகைய நறுங்குருதியை உண்டேன்…” என்று அவர் சொன்னதை பிரசேனர் தன் உள்ளத்தால் கேட்டார். கண்களை மூடிக்கொண்டிருந்தபோதும் அவரது விழிகளை மிக அண்மையில் காணமுடிந்தது. சியமந்தகமே விழியாக அவரை நோக்கிக்கொண்டிருக்கிறோம் என அறிந்தார்.

மிகமிக அப்பால் இருந்தன விழிகள். ஆயிரம்கோடி காதத்துக்கு அகலே இரு விண்மீன்களென சுடர்ந்தன. மாலையொளி விரிந்த முகில்கள் சூழ வானில் நின்றன. இடியோசை போல சிம்மக்குரல் எழுந்தது. கீழ்வான் சரிவில் அது முழங்கி முழங்கிச்சென்றது. செல்லம் கொஞ்சும் குழந்தையை அன்னை என அவரை அள்ளி மடியில் விரித்தார் சிம்மர். உகிர்கள் குளிர்ந்த மெல்லிய இறகுகள் போல தன் உடல்மேல் பதிவதை பிரசேனர் உணர்ந்தார். மெல்லக் கவ்வி குருளையை கொண்டுசெல்லும் அன்னைப்புலி என அவர் மேல் பற்கள் பதிந்தன. முல்லைமலர் நிரை போன்ற மென் பற்கள். அவருக்கு மட்டுமேயான குரல் ஒன்று சொன்னது ‘அனைத்தறங்களையும் கைவிடுக! என்னையே அடைக்கலம் கொள்க!’

நூல் ஏழு – இந்திரநீலம் – 20

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 1

குதிரைக்குளம்புப்பாறைக்குக் கீழே இருந்த குகைமுகப்பில் வைகாசிமாத ஏழாம் வளர்பிறைநாள் இரவில் அந்தகக்குலத்து யாதவர்களின் எழுபத்தெட்டு ஊர்களில் இருந்தும் வந்த குடித்தலைவர்கள் எரிகுளத்தைச் சூழ்ந்து அமர்ந்து அரசியல் தேர்ந்தனர். அந்தகக்குலத்தின் பன்னிரு பெருங்குடிகளில் இருந்தும் மூத்த யாதவர்கள் வந்திருந்தனர். கன்றுநலம்சூழும் மருத்துவர் எழுவரும் வான்குறியும் மண்குறியும் தேரும் நிமித்திகர் மூவரும் மூதன்னையருக்கு பலியும் பூசையும் ஆற்றும் பூசகர் பதின்மரும் அமர்ந்திருந்தனர். பிறை நிலவு பட்டுத்திரையை கிழிக்கும் வாள் என சென்றுகொண்டிருக்க காட்டிலிருந்து எழுந்த ஓசை அறுபடாதொலிக்கும் ஒற்றைச் சொல் என அவர்களை சூழ்ந்திருந்தது.

அவர்கள் சத்ராஜித்தும் பிரசேனரும் வருவதற்காக காத்திருந்தனர். ஒவ்வொருவரும் சற்று நிலையழிந்தது போலிருந்தமையால் உரையாடல் ஏதும் நிகழவில்லை. மைத்ரிவனத்தின் குடிப்பூசகர் தருமர் உறைந்த பசுநெய் நிறைந்த சிமிழை அனலருகே கொண்டுசென்று உருகச்செய்து அதை தன் கையில் இருந்த அப்பத்தில் பூசினார். “உணவருந்தாமலா வந்தீர்?” என்று பிரமதவனத்தின் தலைவரான ஹரிணர் கேட்டார். “ஆம், மலைமேல் அன்னையர் ஆலயத்தில் பூசனைசெய்ய சென்றிருந்தேன். கலமனின் பசுக்கள் சென்ற நாலைந்து நாளாக இறந்துகொண்டிருந்தன. ஆகவே ஒரு பிழைநீக்குபலி செய்யவேண்டுமென்றான். அங்கிருக்கையில்தான் முழவொலி கேட்டேன். ஊருக்குச் சென்று மீண்டுவர நேரமில்லை…” என்றார். அவரது தாழ்ந்தகுரலிலான பேச்சு அங்கே அனைவருக்கும் கேட்டது. ஆனால் எவரும் திரும்பி நோக்கவில்லை.

காட்டுக்குள் குறுமுழவின் ஒலி எழுந்ததும் அனைவரும் அசைந்து அமர்ந்தனர். சிலர் பெருமூச்சுவிட்டனர். ஒருவர் “இத்தனை பிந்திவருகிறார்கள்” என்று முணுமுணுத்தபோது அனைவரும் திரும்பி அவரை வெற்றுவிழிகளுடன் நோக்கினர். முழவோசை சற்று கழித்து அருகே கேட்டது. பின்னர் பந்த ஒளியில் எழுந்த நிழல்கள் அவர்கள் மேல் படர்ந்து சுழன்றுசென்றன. மலையஜபுரியின் தலைவர் அச்சுதர் “அவர்கள் மட்டும்தான் வருகிறார்களா?” என்றார். ரிஷபபதத்தின் தலைவரான பிங்கலர் “ஆம், அப்படித்தான் சொன்னார்கள்” என்றார். யாரோ பெருமூச்சு விட்டு “விடாய்நீர்” என்று கேட்டார். ஏவலர்களில் ஒருவன் குடுவையில் நீருடன் அவர் அருகே சென்றான்.

பந்தங்களின் ஒளி காட்டுக்குள் இருந்து பெரிய சட்டங்களாக எழுந்து சுழன்றது. பின்னர் இலைகளுக்கு அப்பாலிருந்து செந்நிறப்பெருக்காக எழுந்தது. இலைநிழல்கள் அதில் அசைந்தன. ஒளிபட்டு அஞ்சிய பறவைகள் ஓசையிட்டபடி கலைந்து எழுந்து இலைத்தழைப்புக்குள் சிறகுரச பறந்தன. புதர்களைக் கலைத்தபடி ஏதோ விலங்கு ஓடிச்செல்லும் ஒலி கேட்டது. நீருக்குள் என குரல்கள் கசங்கி கேட்டன. காலடி பட்டு உருளும் ஒரு கல்லின் ஓசையுடன் ஒருவன் மேலேறிவந்து தன் கையிலிருந்த பந்தத்தை தூக்கிக் காட்டினான். நீலநிற மரவுரியாடை அணிந்து பெரிய தலைப்பாகை சூடிய சத்ராஜித் ஆடையை ஒருகையால் பற்றியபடி மேலேறிவந்தார். பின்னால் பிரசேனர் திரும்பி நோக்கி ஏதோ ஆணையிட்டபடி வந்தார்.

அவர்கள் அருகே வந்ததும் அனைவரும் எழுந்து தலைவணங்கினர். சத்ராஜித் கைகூப்பியபடி வந்தபோது அவர்களில் முன்னால் நின்றிருந்த முதுபூசகர் “அந்தகக்குலம் வெல்க!” என்று சொல்லி தலைவணங்கினார். சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் கைகாட்டி சத்ராஜித்தை அங்கிருந்த மூங்கில்பீடத்தில் அமரச்செய்தார். பிரசேனர் அருகே இருந்த இன்னொரு பீடத்தில் அமர்ந்தார். ஏவலன் அவர்களுக்கு இன்கடும்நீர் கொண்டுவந்து கொடுத்தான். பிரசேனர் குவளையை வாங்கியபடி “இன்று காலை யமுனையில் ஒருவனை பிடித்தோம். அவனை உசாவியபோதுதான் சேதிநாட்டின் ஒற்றன் என்று தெரிந்தது” என்றார். “இத்தனை பெரிய ஒற்றர்வலை நம்மைச்சூழ்ந்திருக்குமென நான் எண்ணவில்லை. ஆகவே நன்றாக இருள் படிந்தபின்னர் கிளம்பலாமென முடிவெடுத்தோம்” என்றார்.

“இந்த மன்றுகூடலை நாம் மறைக்கமுடியாது. இங்கே அத்தனை குடித்தலைவர்களும் பூசகர்களும் வந்திருக்கிறோம்” என்றார் கிருஷ்ணசிலையின் தலைவரான பிரகதர். “ஆம், ஆனால் நாம் பேசுவதை அவர்கள் ஏதேனும் செய்து தடுக்காமலிருக்கலாம்” என்று பிரசேனர் சொன்னார். “இப்போதுகூட நம் சொற்கள் ஒவ்வொன்றும் அவர்கள் செவிகளுக்கும் செல்கின்றன என்பதை நாம் உணர்ந்திருப்பது நன்று” என்றார் பிரமதவனத்தின் தலைவரான ஹரிணர். சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் சற்று சினத்துடன் “அந்தகர்கள் எவரும் இரண்டகம் செய்பவர்கள் அல்ல. ஏனென்றால் அழிவது அனைவரும்தான்” என்றார். “நாம் ஏன் அழியவேண்டும்?” என்று கிருஷ்ணசிலையின் தலைவரான பிரகதர் கேட்டார். “அழிவோம் என்றால் அது எவரது பிழை? நம் இளவரசி இந்நேரம் துவாரகையில் அரசாண்டுகொண்டிருந்திருப்பாள்… நம் குலம் அப்பெருநகரில் வணிக உரிமைகளை பெற்றிருக்கும். கருடக்கொடியுடன் நம் நாவாய்கள் கடல்மீது ஏறியிருக்கும். இன்று இதோ இருண்டகாட்டில் கள்வர்கள் போல அமர்ந்திருக்கிறோம்.”

“இனி அதைப்பற்றி பேசிப்பயனில்லை” என்றார் பிரசேனர். “ஏன் பேசக்கூடாது? இதுவரை நிகழ்ந்ததெல்லாம் எவருடைய பிழை?” என்று பிரகதர் கூவியபடி எழுந்தார். பிரசேனர் எழுந்து கைகூப்பி “என் பிழை… என் பிழை மட்டுமே. நான் அனைத்தையும் பிழையாக கணித்தேன். என் பிழைகளில் முதன்மையானது என் தமையனைவிடப் பெரியவராக எவரையும் எண்ணாததுதான். அவையில் அவர் ஒருபடி மேலென நிற்கவேண்டுமென விழைந்தேன். அந்த மடமைக்கு விலையாக என் தமையன் சேதிநாட்டின் சிறுமதியாளன் முன் தலைகுனிந்து நிற்கச்செய்தேன்… இந்த அவையில் என் தலையை மண்மேல் வைக்கிறேன். குலமூத்தாரின் கால்கள் அதை மிதிக்கட்டும்” என்றார். பிரகதர் உரக்க “இச்சொற்களுக்கு எப்பொருளும் இல்லை பிரசேனரே. உமது ஆணவத்தின் விளைவை அந்தகக்குலம் சுமக்கிறது” என்றார்.

ஹரிணர் ஏதோ சொல்வதற்குள் சத்ராஜித் கைதூக்கி “இந்த அவையில் என் இளையோனைப்பற்றி சொல்லும் ஒவ்வொரு சொல்லும் என்னைக்குறித்தே. நான் அவனன்றி பிறனல்ல” என்றார். சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் “ஆம், நாம் இனிமேல் பேசிப்பயனில்லை. நிகழ்வதை பேசுவோம்” என்றார். சத்ராஜித் “என் தனயனை அன்னையிடமிருந்து நான் கைபற்றி ஆட்கொண்டது ஐம்பதாண்டுகளுக்கு முன். என் வாழ்க்கை என்பது அவனே. அவனுக்கு நானளிக்கக் கூடாதது என ஏதுமில்லை இப்புவியில். என் உயிர், அரசு, குடி, குலம் அனைத்தும் அவனுடையதே” என்றார். “அவனை விலக்கவேண்டுமென எண்ணுபவர்கள் எழலாம். என்னையும் விலக்கி அந்தகர்களுக்கு பிறிதொரு அரசனை தேரலாம்… நான் தடைநிற்கப்போவதில்லை.”

அச்சொற்கள் பிரகதரை தளர்த்தின. “நான் சொன்னது நம் இளவரசியைப்பற்றிதான் அரசே” என்றார். “என் இளையோன் சொன்னால் இக்கணமே அவளை குலமொழிவு செய்யவும் தயங்கமாட்டேன்…” என்று சத்ராஜித் உரத்தகுரலில் சொல்ல பிரகதர் ‘நான் என்ன சொல்ல?’ என்பதுபோல கைகளை விரித்தபின் அமர்ந்தார். யாதவர்கள் அவரது குரலைத்தான் விரும்பினர் என்பது முகங்களில் தெரிந்தது.

சுவனத்தின் தலைவரான அஸ்வகர் “என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்று பிரசேனர் சொல்லட்டும். நாம் எதற்காகக் கூடினோமோ அதைப்பற்றி பேசுவோம்” என்றார். “ஆம், அதை பேசுவோம்” என்று கூட்டத்தில் குரல்கள் எழுந்தன. சத்ராஜித் இளையவரை நோக்க அவர் சற்றுநேரம் தயங்கியபின் “….எங்கே தொடங்குவதென்று தெரியவில்லை மூத்தாரே. நேற்று வந்த செய்தியை சொல்கிறேன். சிசுபாலருக்கு நேற்று மீண்டும் உடல்நிலை சீர்குலைந்துள்ளது. தட்சிணநாட்டு மருத்துவர்கள் வந்திருக்கிறார்கள்” என்றார். யாதவர்கள் எழுப்பிய வியப்பும் சலிப்பும் கலந்த ஒலியைக் கேட்டு என்ன செய்வது என்பதுபோல கையை விரித்தார். “என்ன ஆயிற்று அவனுக்கு? இளைஞன். இங்கு வந்தபோது இளம்புரவிபோலத்தான் இருந்தான்” என்றார் சிருங்கசிலையின் தலைவர் சத்ரர்.

பிரசேனர் “ஆம், இங்கு வரும்வரை அவருக்கு எந்த நோயும் இல்லை என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள். இங்கு அவர் நம்மை சற்று இளக்காரமாக நடத்த நானும் யாதவரும் சினம்கொண்டோம் என்று அவரது அமைச்சர்கள் சான்றுரைக்கிறார்கள். அவருக்கு ஒரு குவளை பாலமுது வழங்கப்பட்டது. அது சற்று மாறுபட்ட சுவைகொண்டிருந்தது என்று அவர் சொன்னதையும் அனைவரும் கேட்டிருக்கிறார்கள். இளவரசி வந்ததும் முறைப்படி எழுந்து அவளைப்பார்த்தபோது தலைசுழன்று கீழே விழுந்திருக்கிறார். வலிப்பு வந்துள்ளது. நினைவு மீண்டபோதும் சித்தம் தெளியவில்லை. கலங்கியநிலையிலேயே அவரை மகதத்தின் காவலரணுக்கும் அங்கிருந்து சேதிநாட்டுக்கும் கொண்டுசென்றிருக்கிறார்கள். அவரது உளநிலை தெளிவடையவேயில்லை…” என்றார். “நாம் பாலமுதில் ஏதோ பச்சிலையை கலந்துவிட்டோம் என்பது அவர்களின் மருத்துவர்களின் குற்றச்சாட்டு. அவர்களின் குலப்பூசகர்கள் ஏதோ அணங்கை ஏவிவிட்டிருக்கிறோம் என்கிறார்கள்.”

யாதவர்கள் சலிப்பின் ஒலிகளுடன் உடல்தளர்ந்தனர். சுவனத்தின் தலைவரான அஸ்வகர் “அப்படி குற்றம்சாட்டலாயிற்றா? முதலில் ஏதேனும் திடச்சான்றை அவர்கள் காட்டியாகவேண்டும் அல்லவா?” என்றார். “காட்டியாகவேண்டும், நாம் அவர்களுக்கு நிகரான வல்லமை கொண்ட அரசாக இருந்தால். இன்றையநிலையில் நம்மை வேருடன் பிடுங்கி உண்ண அவர்களுக்கு இது ஒரு நல்ல முன்விளக்கம்” என்று சொன்ன பிரமதவனத்தின் தலைவரான ஹரிணர் சலிப்புடன் கையை வீசி “நாம் தனித்துவிடப்பட்டிருக்கிறோம். இன்று யாதவகுலங்கள் நம்முடன் இல்லை. அதுதான் வெளிப்படையான உண்மை. பிறிதெல்லாம் அரசு சூழ்தலின் நாடகங்கள் மட்டுமே” என்றார். யாதவர் அதை ஏற்பது போல ஓசை எழுப்பினர். ஒருவர் “நாம் சேதிநாட்டுக்கு கப்பம் கட்டுவோம். எப்படியானாலும் கப்பம் கட்டுபவர்கள் அல்லவா?” என்றார். “கப்பம் கட்டும்படி கோரினால் அத்துடன் நம் இடர் நீங்கியது. ஆனால் அதற்கு அவர்கள் நம்மை சிற்றரசர்களாக ஏற்கவேண்டும். அப்படி ஏற்பதற்கு எண்ணமிருந்தால் ஏன் இந்தப்பகைமை?”

“அவனுக்கு உண்மையிலேயே சித்தம் பிசகிவிட்டதா, இல்லை அதுவும் வெறும்கூற்றுதானா?” என்று பிரகதர் கேட்டார். பிரசேனர் “நான் அதை ஒற்றர்கள் வழியாக முற்றாக உசாவியறிந்தேன். இங்கிருந்து செல்லும்போது இருந்த நிலையிலேயே இப்போதும் இருக்கிறார்” என்றார். பிரகதர் குரல்தாழ்த்தி “முழுமையாகவே பித்தாகிவிட்டானா என்ன?” என்றார். “அதை பித்து என்றும் சொல்லமுடியாது. அணங்கு கூடிய நிலைபோலத்தான் தெரிகிறது. மானுடர் எவரையும் விழிநோக்குவதில்லை. கண்கள் விரிந்து மலைத்தவை போலிருக்கின்றன. விழித்திருக்கும்போதும் துயிலும்போதும் பேருவகையில் மலர்ந்ததுபோலிருக்கிறது முகம். அது ஏதோ மலையணங்கு என்று முதலில் எண்ணி பூசெய்கைகள் நிகழ்ந்தன. இசையிலும் மலர்களிலும் இடைவெளியில்லாமல் உள்ளம் தோய்வதைக் கண்டு அது கந்தர்வன் என்று பின்பு கணித்தனர். பேசும் சொற்களைத் தேர்ந்து ஆராய்ந்த நிமித்திகர் அவர் பெருமங்கலம் திகழும் தெய்வமொன்றை கண்டிருக்கிறார் என்றனர். எனவே பதினெட்டுநாட்களாக திருவாழும் ஆலயமொன்றில் வைத்து வழிபாடுகள் செய்தனர். மீண்டு வந்த இரண்டுநாள் தொடர்ந்து துயின்றபின் விழித்து மீண்டும் முன்பு என ஆகிவிட்டிருக்கிறார்.”

“அணங்கேதான்” என்றார் குலப்பூசகரான வராகர். “அணங்குகள் பல உண்டு யாதவரே. அணங்குகள் முப்பெரும் தேவியரில் ஒருவருக்கு அகம்படி செய்பவை. வெண்கலையன்னைக்குரிய அணங்குகள் காவியங்களிலும் இசையிலும் வாழ்கின்றன. அவை பற்றிய மானுடர் ஒருநூலை ஒருபாடலை ஓர் இசையை மீளமீளக் கேட்டு அவற்றில் ஆழ்ந்து பித்தென்றாகி அமர்ந்திருப்பர். பாய்கலைப்பாவைக்குரிய அணங்குகள் படைக்கலங்களில், பசுங்குருதியில் வாழ்பவை. அவை தொட்ட மானுடர் பெருஞ்சினம் கொண்டிருப்பர். படைக்கலத்தை துயிலிலும் கைவிடாதிருப்பர். வெண்ணிறம் மீது பற்றுகொண்டிருந்தால் கலைமகளின் அணங்கு அது. செங்குருதிநிறம் மீது பித்தெழுந்தால் அது கொற்றவையின் அணங்கு எனலாம்.”

“திருமகளின் அணங்குகள் அழகுள்ள அனைத்திலும் வாழ்பவை. மலர்களில், பட்டில், அணிகளில், ஓவியங்களில், அழகிய பெண்ணுடல்களில், மலர்க்காடுகளில், வெண்முகில்களில். எங்கிருந்தும் அவை மானுடரை பற்றக்கூடும். நாம் நடந்துசெல்லும் இந்த மண்ணில் விரிந்துள்ள கோடிகோடி கூழாங்கற்களில் சில கற்கள் பேரழகுகொண்ட சிற்பங்கள். ஊழ் வகுத்த ஒரு கணத்தில் அவற்றில் ஒன்றை எடுத்து நோக்குபவன் அவ்வணங்கால் பற்றப்படுகிறான். நம்மைச்சூழ்ந்துள்ள இந்த மலர்ப்பெருக்கில் சில மலர்கள் மட்டும் கொல்லும் பேரழகுடன் அணங்கு கொண்டு அலர்ந்திருக்கின்றன. நாமறிந்த பெண்களிலேயேகூட அவள் உடலசைவுகளின் பெருக்கின் ஏதோ ஒரு கணத்தில் அணங்கு எழுந்து வரக்கூடும். அக்கணத்தில் அகம் விழியாக அவளை காண்பவன் பித்தெழுந்து அழிகிறான். முன்பு பிரதீபன் என்னும் அரசன் தன் அரசி சத்யை என்பவள் கூந்தல்கோதி திரும்பும் ஓர் அசைவைக் கண்டு அணங்குகொண்டான். அதன்பின் அவன் சத்யையையும் நோக்கவில்லை. மானுடவெளிக்கு அப்பால் எழுந்த பேரழகைக் கண்டு பித்தேறி ஊணுறக்கம் மறந்து மெலிந்து அழிந்தான்.”

“அவன் நம் இளவரசியில் அணங்கை கண்டிருக்கிறான்” என்று சத்ரகுடியின் பூசகரான பாவகர் சொன்னார். “அப்போது நான் வாயிலில் நின்றிருந்தேன். அவன் அவளை முதலில் எதிர்ச்சுவரில் எழுந்த நிழலில் நோக்கினான். அவன் விழிகள் அஞ்சியவை போலவும் பேருவகைகொண்டவை போலவும் விரிந்தன. உதடுகள் துடித்து உடல் அதிர்வதை கண்டேன். தோள்தொடப்பட்டவனைப்போல திடுக்கிட்டுத் திரும்பி அவளை நோக்கினான். அக்கணமே உடல் உதறிக்கொள்ள மண்ணில் சரிந்தான். இளவரசி அப்போது முழுதணிக்கோலத்தில் கருணைநிறை விழிகளுடன் கைகளில் பாலமுதும் மலர்த்தாலமும் ஏந்தி மார்பிலணிந்த சியமந்தக மணியுடன் நிலைவாயிலில் நின்றிருந்தாள். கருவறை நின்ற திருமகள் போலத்தான் தெரிந்தாள்.”

“சியமந்தகம்தான்… அதைத்தான் அவன் கண்டிருக்கிறான்” என்று சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் சொன்னார். “அவனைப் பித்தாக்கிய திருமகள் எழுந்தது அதிலிருந்துதான்” என்றார் மலையஜபுரியின் தலைவர் அச்சுதர். அதை முன்னரே அவர்கள் பேசியிருக்கக்கூடும் என்பதைப்போல யாதவர் சொல்லின்றி அமர்ந்திருந்தனர். ஒருகுரல் “அதிலுள்ளது நம் நல்லூழா தீயூழா  என்று தெரியவில்லை” என்றது. அனைவரும் திரும்பி நோக்க அதைச்சொன்னது எவரென காணமுடியவில்லை. சத்ராஜித் பெருமூச்சுடன் “நாம் வீண்சொற்கள் பேசிக்கொண்டிருக்கவேண்டியதில்லை. சேதிநாட்டின் பகைமையை எப்படி வெல்லப்போகிறோம்? அதைமட்டும் நாம் முடிவுசெய்தால்போதும்” என்றார். யாதவர்கள் பெருமூச்சுகளுடன் மீண்டுவந்தனர். மலையஜபுரியின் தலைவர் அச்சுதர் “மீள்வதற்கு என்ன பல வழிகளா உள்ளன? வல்லமையுள்ளவன் கால்களில் சென்று விழுவது ஒன்றே நாம் செய்யக்கூடுவது” என்றார்.

“நாம் சென்று பணியவேண்டிய கால்கள் இளைய யாதவனுக்குரியவை மட்டுமே” என்றார் சுஃப்ரகுலப்பூசகரான சபரர். “துவாரகையின் கால்கோள்நாட்டுவிழாவில் நாம் சொன்ன சொற்களுக்கான கழுவாயை செய்வோம். அங்கிருந்து அனைத்தும் சீரமைவதை காண்போம்.” யாதவர்கள் அதை ஏற்று ஒலியெழுப்பினர். சத்ராஜித் பிரசேனரை நோக்கினார். பிரகதர் “மூத்தாரே, இன்று நாம் மீண்டும் துவாரகைக்கு செல்வோம் என்றால் நமக்கு அங்குள்ள இடமென்ன? நாமிருந்த அரசமேடை நமக்கு மீண்டும் அளிக்கப்படுமா?” என்றார். மலையஜபுரியின் தலைவர் அச்சுதர் “அதை இழந்தது எவரது பிழை?” என்றார். சத்ராஜித் “நாம் பழையவற்றை எண்ணவேண்டியதில்லை… இன்று என்ன செய்யப்போகிறோம்?” என்றார். சிருங்கசிலையின் சத்ரர் “பழையவற்றை நாம் மீண்டும் செய்யத்தொடங்கியிருக்கிறோம். நான் சொன்னது அதை மட்டுமே” என்றார். “செய்யவேண்டியதை பேசுவோம்” என்று சத்ராஜித் உரக்க கைதூக்கி சொன்னார்.

பிரசேனர் “என் எண்ணங்களை சொல்லிவிடுகிறேன்… இன்றையநிலையில் நாம் செய்யக்கூடுவது அதை மட்டுமே” என்றார். “நாம் சேதிநாட்டின் பகையிலிருந்து தப்ப இரு வழிகள் மட்டுமே உள்ளன. துவாரகைக்குச் சென்று நாமிருந்த இடத்தை இழந்தவர்களாக கடைக்குடி யாதவர்களாக அமையலாம். மகதத்துக்கு கப்பம் கட்டி படைத்துணை கோரலாம்.” மலையஜபுரியின் தலைவர் அச்சுதர் எரிச்சலுடன் “இதைத்தான் பலநாட்களாக பேசிக்கொண்டிருக்கிறோம். மகதம் நம்மை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை… நாம் கப்பம் கட்ட சித்தமாக இருக்கிறோம் என அவர்களுக்குத் தெரியாதா என்ன? அவர்கள் நம்மை சிற்றரசாக ஏற்கவேண்டும். கோல்கொண்டு முடிசூட ஒப்பவேண்டும்… இன்றுவரை நம்மை சிற்றரசாக ஏற்றது மதுராபுரியின் உக்ரசேனரும் கம்சரும் மட்டுமே” என்றார்.

பிரசேனர் “எந்தப் பெரிய அரசும் சிற்றரசுகளின் எண்ணிக்கையை பெருக்க எண்ணாது. அது குடித்தலைவர்கள் தம்மை அரசர்களென எண்ணச்செய்யும். நாட்டில் ஒழுங்கு சிதையும். ஆகவே மகதத்தின் நிலை சரியானதே” என்றார். “மகதம் நம்மை சிற்றரசாக எண்ணவேண்டுமென்றால் நம் வலிமை இன்னும் சற்று மிகவேண்டும். நம் படைவல்லமையும் துணைவல்லமையும் பெருகினால் நம்மை அருகணைத்தாகவேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. அப்போது நாம் அவர்களிடம் நின்று பேசமுடியும்.” சில கணங்கள் நிறுத்தி அவர்களை நோக்கிவிட்டு “சிற்றரசாக நம்மை மகதம் ஏற்கும் நிலை வருமென்றால் நாம் துவாரகையிடமும் பேசமுடியும்.”

சத்ராஜித் பெருமூச்சுடன் சற்று உடலை அசைக்க அனைவரும் அவரை நோக்கினர். பிரகதர் “நம் இளவரசியை மீண்டும் இளைய யாதவர் கொள்வாரா?” என்றார். பிரசேனர் திகைத்து விழிகளை விலக்கி “அவ்வாறு நிகழுமென்றால் நன்று…” என்றார். பிரகதர் “மீண்டும் பட்டத்தரசியாக ஆகாவிட்டாலும் யாதவருடன் அவள் சேர்ந்தாள் என்றால் அதைவிட நம் குடிக்கு நன்மை என பிறிதில்லை” என்றார். சத்ராஜித் “நாம் அதைப்பற்றி பிறகு பேசுவோம்… நம் இக்கட்டு அதுவல்ல” என்றார். பிரகதர் உரக்க “நம் இக்கட்டைப்பற்றி நான் பொருட்படுத்தவில்லை. நம் குலவிளக்கு இங்கே தன் உளம்கொண்டவனுக்காக காத்திருக்கிறாள்… அவள் நெஞ்சுலைந்து நெடுமூச்செறிந்தால் நம் குலம் பற்றி எரியும். நான் எண்ணுவது அதைப்பற்றியே” என்றார்.

பிரசேனர் “நாம் அதையும் அவரிடம் பேசமுடியும் மூத்தாரே” என்றார். சிருங்கசிலையின் சத்ரர் “அதற்கு என்னசெய்யப்போகிறோம்? நாம் படைதிரட்டவிருக்கிறோமா? யாதவகுலங்கள் அனைத்தாலும் விலக்கப்பட்டிருக்கிறோம். இந்தப் பெருங்காட்டின் விளிம்பில் மலைக்குடிகளென வாழ்கிறோம்…” என்றார். “நான் சொல்லவந்ததும் அதுவே. நமக்கு வடக்கே பெருகி பரவியிருக்கும் இப்பெருங்காடு நமக்கு அரண். யமுனைக்கரை வணிகத்துக்காக மட்டுமே நாம் இங்கிருக்கிறோம். களிந்தகத்துக்கு நிகராக ஒரு கோட்டையை நாம் உள்காட்டில் அமைப்போம். மகதமோ பிறரோ நம்மை தாக்குவார்களென்றால் அங்குசென்று அமைவோம். வெல்லமுடியாதவர்கள் என்பதே நம்மை விரும்பத்தக்கவர்களாக ஆக்கும்… இன்று நமக்குத்தேவை அந்த வடிவம்தான். நாம் துவாரகையை பகைத்துக்கொண்டிருக்கிறோம். சேதிநாட்டை விலக்கியிருக்கிறோம். ஆரியவர்த்தமே இன்று நம்மை நோக்குகிறது. ஏதோ ஒரு அறியாவல்லமையால்தான் நாம் இத்தனை நிமிர்வுடனிருக்கிறோம் என அரசர்கள் எண்ணுகிறார்கள். காட்டுக்குள் ஒரு கோட்டை அவ்வென்ணத்தை வலுப்படுத்தும்.”

“ஆனால்…” என்று அச்சுதர் சொல்லத்தொடங்க “அஸ்வபதத்தின் மலைக்குடிகளுக்கும் நமக்கும் நெடுங்காலப் பூசல்கள் உள்ளன என்பது உண்மை. ஆனால் மிக எளிதில் அவர்களை நாம் நம் நண்பர்களாக்கிக் கொள்ளமுடியும்” என்றார் பிரசேனர். “ஏனென்றால் மலைக்குடிகள் இன்று மாறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வணிகப்பொருட்கள் தேவைப்படுகின்றன. உப்பும் மரவுரியும் படைக்கலங்களும் அவர்களால் விரும்பப்படுகின்றன. அவர்கள் நமக்கு மலையில் இடமளித்தால் அவர்களுக்கு யமுனையில் துறையமைத்துக் கொடுப்போம். உரிய வணிக ஒப்பந்தங்களை போட்டுக்கொள்வோம்.” யாதவர் நடுவே எந்த எதிர்வினையும் எழவில்லை.

பிரசேனர் ஒருகணம் பொறுத்துவிட்டு “அஸ்வபாதமலைக்கு அப்பால் களிந்தசிருங்கம் வரை ஊஷரர், பிங்கலர், சியாமர், கராளர், கன்னர், தசமுகர், ஜாம்பவர் என ஏழு மலைக்குடிகள் உள்ளன. அவர்களில் ஒருவரையாவது நம்மால் வென்றெடுக்க முடியும். ஒற்றர்கள் வழியாக விரிவாகவே செய்தி சேர்த்திருக்கிறேன். கன்னரும் கராளரும் பகைமை நிறைந்தவர்கள். அனைவருக்கும் முதல்குடிகளான ஜாம்பவர் எவ்வகையிலும் அணுகமுடியாதவர்கள். உள்காட்டின் இருளுக்குள் வாழ்பவர்கள். சியாமரும் பிங்கலரும் தயக்கம் கொண்டவர்கள். ஊஷரரும் தசமுகரும் இப்போதே யமுனைக்கரைத் துறைகளுக்கு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஊஷரகுடித்தலைவர் சிருங்ககாலர் பிறகுடிகளை வென்று பெருங்குடித்தலைவராகும் இலக்கு கொண்டிருக்கிறார். அவருக்கு நம் நட்பு உகந்ததாகவே இருக்கும்… அவரை அணுகலாமென நினைக்கிறேன்” என்றார்.

யாதவர்கள் செந்தழல் அலையடித்த முகங்களுடன் வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தனர். “இந்த அவை ஒப்புதல் அளித்தால் முறையான தூதை அனுப்புவேன். நானே நேரில் சென்று அவர்களிடம் பேசி நட்புறுதி செய்வேன்” என்று பிரசேனர் தொடர்ந்தார். “சிருங்ககாலரை இங்கே நம் இல்லத்திற்கு அழைத்து நம் குலமுறைப்படி வரவேற்பும் வாழ்த்தும் அளித்து ஓர் இருகுல உண்டாட்டை நிகழ்த்தினால் நட்புறவு உறுதியாகும். மூத்தாரே, ஊஷரர் நம்முடன் இருந்தால் சியாமரையும் பிங்கலரையும் தசமுகரையும் எளிதில் நம்முடன் சேர்த்துக்கொள்ளமுடியும். நான்கு மலைக்குடிகளின் துணையிருந்தால் அஸ்வபாத மலைச்சரிவில் மரத்தாலான ஒரு கோட்டையை அமைப்பதற்கு ஏழுமாதகாலம் போதும். மலைக்குடிகளைக் கடந்து காட்டுக்குள் வந்து நம்மை வெல்ல மகதத்தாலும் துவாரகையாலும் முடியாது.”

“இப்போது இவை எல்லாம் வெறும் கனவுகள்” என்றார் பிரகதர். “ஊஷரர் நம்மை ஏற்பார்கள் என நம்பி இச்சொற்களை சொல்கிறீர்கள். அவர்கள் நம்மை ஏற்பார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இன்றில்லை. மலைக்குடிகள் அரசு சூழ்தல் அறியாதவர்கள். அவர்களின் எண்ணங்களை அவர்கள் வழிபடும் மலைத்தெய்வங்கள் முடிவுசெய்கின்றன. அவை இன்றுவரை அயலவரை ஏற்றதில்லை.” பிரசேனர் “அதையும் எண்ணியபின்னரே இங்கு வந்தேன் மூத்தாரே. ஏழு மலைக்குடிகளில் ஊஷரர் சூரியனை வழிபடுகிறார்கள். அவர்கள் வாழும் கஜமுகம் என்னும் மலைச்சரிவில் உள்ள மூன்று குகைகளில் நடுவே உள்ள குகையில் வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் மீனநாளின் உச்சிப்பொழுதில் நான்கு கணிகை நேரம் மட்டும் அங்குள்ள இருண்ட சிறிய சுனைக்குள் சுடர்மணியாக எழுந்தருளும் சூரியனே அவர்களின் தெய்வம்.”

அவர் சொல்லவருவதை யாதவர்கள் ஒரேகணத்தில் புரிந்துகொண்டனர். பலர் எழுந்து விட்டனர். பிரமதவனத்தின் தலைவரான ஹரிணர் “உண்மையாகவா?” என்றார். “ஆம், நாம் இங்கு வந்து நூறாண்டுகளாகின்றன. இன்றுவரை நாம் இந்த மலைக்குடிகளை அறிய முயன்றதே இல்லை. அவர்களை எதிரிகளென மட்டுமே எண்ணியிருக்கிறோம்… இப்புவியில் நமக்கு மிக அண்மையான எவரேனும் இருக்கமுடியும் என்றால் அது ஊஷரர்களே” என்றார். கிருஷ்ணசிலையின் தலைவரான பிரகதர் “அவர்கள் சூரியனை எப்படி வழிபடுகிறார்கள்?” என்றார். “சூரியன் குடியிருக்கும் ஏழு மணிகள் அவர்களிடமுள்ளன. அவற்றை தங்கள் ஊர்நடுவே உள்ள ஆலயத்தில் வைத்து முதல்கதிர் எழும் வேளையில் புதுமலர் அளித்து வழிபடுகிறார்கள்.” யாதவர்கள் உள எழுச்சியால் பெருமூச்சு விட்ட ஒலிகள் எழுந்தன. சுவனத்தின் தலைவரான அஸ்வகர் “அந்த மணிகள் எப்படி உள்ளன?” என்றார். பிரசேனர் புன்னகையுடன் “வானவில்லின் ஏழுநிறங்கள் கொண்டவை” என்றார். “ஆனால் சியமந்தகம் அவற்றை விட ஏழுமடங்கு பெரியது.”

பேசவேண்டிய அனைத்தையும் பேசிவிட்ட உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது போல மெல்ல உடல் தளர்ந்து அமைந்தனர். ஒருவர் எழுந்துசென்று இன்கடுநீர் கோப்பையை எடுத்துக்கொண்டார். இன்னொருவர் அதற்காக கைநீட்டினார். “மூத்தாரே, சியமந்தக மணியை கழுத்தில் அணிந்துகொண்டு அவர்களின் மன்றில் சென்று அமர்ந்தேன் என்றால் நான் ஒரு சொல்லைக்கூட உச்சரிக்கவேண்டியதில்லை” என்றார் பிரசேனர். “நான் கோருவது இந்த அவையின் ஒப்புதலை மட்டுமே.” யாதவர்கள் அனைவரும் தங்கள் வளைதடிகளைத் தூக்கி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று குரலெழுப்பி வாழ்த்தினர்.

நூல் ஏழு – இந்திரநீலம் – 19

பகுதி நான்கு : எழுமுகம் – 3

மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் சூழ, சிசுபாலனும் அவன் அமைச்சர்கள் நால்வரும் சித்ரகர்ணனும் சத்ராஜித்தாலும் பிரசேனராலும் யாதவர்களின் அரசரில்லம் நோக்கி அழைத்துச்செல்லப்பட்டனர். சத்ராஜித் பணிந்த மொழியுடன் “இவ்வழி” என்று கைகாட்டினார். சிசுபாலன் நிமிர்ந்து தொலைவில் மூங்கில்கழிகள் மேல் எழுந்த உயர்ந்த கூரையை நோக்கி புருவம் சுருக்கி “இதுவா அரசரில்லம்?” என்றான். “இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது” என்றார். “இங்கா இளவரசி இருக்கிறாள்? இங்கு அவள் என்ன செய்கிறாள்?” என்றான் சிசுபாலன். சத்ராஜித் தயங்கி “இங்கு அவளுக்குரிய அனைத்தும் உள்ளது” என்றார். சிசுபாலனின் இதழ்கள் இளநகையில் வளைந்தன. “இங்கு அவள் என்ன செய்கிறாள்? பசுபுரக்கிறாளா?” என்றபடி சித்ரகர்ணனை நோக்கினான். அவன் புன்னகைசெய்தான்.

கண்களில் சினம் மின்னி மறைய பிரசேனர் “ஆம் அரசே, பசுபுரத்தல் யாதவர்களின் தொழில்” என்றார். சிசுபாலன் திரும்பி அவரை நோக்கிவிட்டு “அவள் என் மாளிகையில் பசு புரக்க முடியாது. சேதிநாட்டு அரசியர் செய்ய வேறுபல பணிகள் உள்ளன” என்றான். சித்ரகர்ணன் உரக்க சிரித்தான். பிரசேனர் ஏதோ சொல்ல வாயெடுக்க சத்ராஜித் வேண்டாம் என்பதுபோல கண்களை விழித்தார். படித்துறையில் இருந்து இல்லம் வரை மரவுரி விரிக்கப்பட்ட மலர்ப்பாதை அமைக்கப்பட்டிருந்தது. தோரணங்களும் கொடிகளும் அணிசெய்த வெண்பாதையின் இருபக்கமும் யாதவ வீரர்கள் வேல்களுடன் அணிநிற்க அப்பால் கூடி நின்ற யாதவகுடிகள் சிசுபாலனை வாழ்த்தினர்.

சிசுபாலனின் நடையிலும் நோக்கிலும் இருந்த ஒன்று அனைவரையும் அவனிடமிருந்து உளவிலகல் கொள்ளச்செய்தது. அவன் கால்களை நீட்டி வைத்து தோள்களை அசைத்து காற்றில் நீந்துபவன் போல நடந்தான். ஏளனம் நிறைந்த புன்னகையுடன் அனைத்தையும் நோக்கினான். அவனை வணங்கியவர்கள் வாழ்த்தியவர்கள் எவரையும் நோக்கவில்லை. அவனருகே நடந்தவர்கள்கூட இல்லையென்றானார்கள். ஓரிருவராக இயல்பாக நடைவிரைவை இழந்து பின்னடைய சிசுபாலனும் சித்ரகர்ணனும் சத்ராஜித்தும் பிரசேனரும் மட்டும் நடந்தனர். அவர்களுக்கு முன்னால் சேதிநாட்டின் கொடியையும் அந்தகர்களின் கொடியையும் ஏந்திய வீரர்கள் மட்டும் சென்றனர். பின்னால் மங்கல இசையுடன் சூதர்கள் தொடர்ந்தனர். யாதவர்கள் கொண்ட உள்ளத்தளர்ச்சியை வாழ்த்தொலிகளில் மட்டுமல்லாமல் மங்கல இசையிலும் வந்த தளர்வு வெளிப்படுத்தியது.

இல்லத்தின் வாயிலில் சித்ரையும் பத்மையும் சேடியர் சூழ அணிக்கோலத்தில் வந்து நின்று சிசுபாலனை வரவேற்றனர். “தங்கள் வருகையால் ஆயர்பாடி பெருமைகொண்டது அரசே” என்றாள் பத்மை. “இக்குடியின் மூதன்னையர் தங்களை வரவேற்கிறார்கள்” என்று சித்ரை சொன்னாள். சிசுபாலன் அவர்களை நோக்கியபின் தயங்க சத்ராஜித் “இவர்கள் என் அரசியர்” என்றார். “இவர்களும் இங்கே கன்றுமேய்க்கிறார்களா?” என்று அவன் கேட்டான். சித்ரகர்ணன் அதற்கு சிரிப்பதா என்று தெரியாமல் சத்ராஜித்தை நோக்க அவர் “இல்லை, அவர்கள் என்னுடன் களிந்தகத்தில் இருக்கிறார்கள்” என்றார்.

இருசேடியர் ஐந்து ஆமங்கலங்கள் கரைக்கப்பட்ட நீரை எதிர்காட்டி அவனை வரவேற்க அதன் மணத்திற்கு மூக்கைச்சுளித்து பொறுமையிழந்து நின்றான். அவர்கள் அவன் கால்களை நறுமணநீரூற்றி கழுவினர். அரிமலரிட்டு வணங்கி ‘அகம் சேர்க அரசே!’ என்று இன்மொழி சொல்லி உள்ளே அழைத்துச்சென்றனர். அமைச்சர்களும் பிறரும் உள்ளே அழைத்துச்செல்லப்பட்டபோது அவ்வறைக்குள் இடமில்லாமல் ஆக முதிய யாதவர் சிலர் வெளியே நின்றுகொண்டனர்.

சிசுபாலனை வெண்பட்டு விரிக்கப்பட்ட பீடத்தில் அமரச்செய்து சத்ராஜித் தன் பீடத்தில் அமர்ந்தார். பிரசேனர் அருகே அமர அவருக்குப்பின்னால் அந்தக குடிமூத்தார் எழுவர் அமர்ந்தனர். சிசுபாலனுக்கு அருகே சித்ரகர்ணன் அமர பின்னால் அமைச்சர்கள் அமர்ந்தனர். கருவூல அமைச்சர் கிருபாகரர் வெளியே நின்று கைகளை வீசி செய்கையால் ஆணையிட்டுக்கொண்டிருந்தார். சிசுபாலன் அவரை திரும்பிப்பார்த்தபின் “நீங்கள் யாதவ அரசர் என்று என்னிடம் சொன்னார்கள். நீங்கள் கன்றுமேய்க்கும் சிறுகுடியின் தலைவர்தான் என்று எவரும் சொல்லவில்லை” என்றான். சத்ராஜித் “எங்கள் குலமூதாதை வீரசேனர் அமைத்த ஆயர்பதம் இது. இங்குள்ள அந்தகர்களுக்கு நானே அரசன். எனக்கு மதுராபுரி சிற்றரசர்களுக்குரிய உடைவாளும் கங்கணமும் முடியும் அளித்திருந்தது” என்றார்.

பிரசேனர் “எங்களிடம் சியமந்தகமணி இருப்பதனால் ஆயர்குடிகளில் நாங்களே முதன்மையானவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. விருஷ்ணிகளைவிடவும் அந்தகர்களே மேலானவர்கள். ஆயர்குலப்பாடகர்கள் அதைப்பாடுவதை நீங்கள் கேட்கலாம்” என்றார். சிசுபாலன் “பாடகர்களுக்கென்ன?” என்றபடி திரும்பி கிருபாகரரை நோக்கினான். கிருபாகரர் உள்ளே வர அவரைத் தொடர்ந்து நான்கு வீரர்கள் பெரிய மரப்பெட்டிகளை கொண்டுவந்து வைத்தனர். சிசுபாலன் கைகாட்ட அவர்கள் அதை திறந்தனர். முதல்பெட்டியில் பீதர்நாட்டிலிருந்தும் கலிங்கநாட்டிலிருந்தும் கொண்டுவரப்பட்ட பட்டுகளும் பொன்னூல் பின்னலிட்ட பருத்தியாடைகளும் குதிரைமுடி என மின்னிய மரநூல் ஆடைகளும் இருந்தன. இரண்டாவது பெட்டியில் மணிகள் பதிக்கப்பட்ட பொன்னணிகள் செந்நிறமான மென்மயிர்மெத்தைக்குமேல் அடுக்கப்பட்டிருந்தன. மூன்றாவது பெட்டியில் யவனர்நாட்டு நீலநிற மதுப்புட்டிகளும், நறுமணதைலங்கள் கொண்ட சிமிழ்களும் இருந்தன. நான்காவது பெட்டியில் வெள்ளியாலும் பொன்னாலுமான பலவகை கலங்கள்.

“கன்யாசுல்கமாக கொண்டுவரப்படும் பொருட்கள் பெறுபவரின் தகுதியை அல்ல கொடுப்பவரின் தகுதியை காட்டுகின்றன என்பார்கள்” என்றான் சிசுபாலன். “ஆகவே எதிலும் குறைவைக்கவேண்டியதில்லை என்று சொன்னேன். மாளவனின் மகளை மணம்கொள்ளச்சென்றபோது என்னென்ன கொண்டுசென்றேனோ அதில் பாதியை இங்கும் கொண்டுவந்திருக்கிறேன்.” அமைச்சரை நோக்கி சிரித்தபின் “எளிய யாதவப்பெண்ணுக்கு இவ்வளவு தேவையில்லை என்பதுதான் கிருபாகரரின் தரப்பு. ஆனால் அவளுக்குத்தான் இதெல்லாம் தேவை என்றேன். அணிகளும் ஆடைகளும் இல்லையேல் எப்படி அவள் அரசியாவது?” என்று சொன்னான். கிருபாகரர் சிரிக்க பிற அமைச்சர்கள் புன்னகைசெய்தனர்.

பிரசேனர் ஏதோ சொல்ல நாவெடுக்க சத்ராஜித் விழிகளால் தடுத்தார். அதற்குள் யாதவ முதியவர் ஒருவர் “இதற்கிணையான ஆடையணிகளை இளவரசியும் கொண்டிருக்கிறாள். எங்கள் விழவுகளில் வைரங்கள் அணிந்து இளவரசி எழுந்தருளுகையில் திருமகள் தோன்றியதுபோல உளமயக்கு எழும்” என்றார். இன்னொருவர் “இளவரசி அணிகையில் வைரங்கள் ஒளிகுன்றுவதை கண்டிருக்கிறோம். தன்னெழில் அற்றவர்களுக்குத்தான் அணியெழில்” என்றார். சத்ராஜித் பிரசேனரிடம் “இளவரசியை வரச்சொல். சியமந்தக மணி அணிந்த அவள் கோலத்தை சேதிநாட்டார் நோக்கட்டும்” என்றார். இருவர் விழிகளும் சந்தித்துக்கொண்டன. பிரசேனர் எழுந்து தலைவணங்கி உள்ளே சென்றார்.

சேடிப்பெண்கள் சித்திரக் கலங்களில் கைகளைக் கழுவ நறுமணநீர் கொண்டுவந்தனர். இருவர் அவன் கால்களிலும் கைகளிலும் செங்குழம்பை பூசினர். அவன் கைகழுவிக்கொண்டதும் பொற்குவளையில் பாலமுது கொண்டுவரப்பட்டது. சத்ராஜித் “சுக்கும் மஞ்சளுமிட்ட பாலமுது. யாதவர்களின் வழக்கம்” என்றார். சிசுபாலன் “இனிமேல் விருந்தினருக்கு யவன மதுவையே அளிக்கலாம். ஓரிரு வருடங்களுக்கான மது அந்தப்பெட்டியில் உள்ளது” என்றபடி பாலை வாங்கி ஒரே ஒரு மிடறு மட்டும் அருந்திவிட்டு திரும்ப அளித்தான்.

உள்ளறை வாயிலில் அசைவு தெரிந்ததும் அத்தனைபேரும் தம்மை அறியாமலேயே திரும்பினர். சிசுபாலன் அதை உணர்ந்தாலும் விழிகளை அசைக்காமல் அதே முகத்துடன் “…இங்குள்ள பசுக்கள் காடுகளில் மேய்கின்றன போலும். வேட்டைக்குச் செல்லும் இடங்களில் உண்ணும் பாலில் உள்ள புல்வாடை உள்ளது” என்றான். திரையசைவுபோல நிழல் ஒன்று சிசுபாலனின் முன்னால் ஆடியது. அமைச்சர்கள் விழிமலர்ந்து நோக்குவதை அவன் கண்டான். ஆனால் திரும்பி நோக்காமல் “தென்னிலத்துப் பசுக்கள் மேலும் இனிய பால்கொடுப்பவை. சேதிநாட்டுக்கு அங்கிருந்து கன்றுகளை கொண்டுவரும்படி ஆணையிட்டிருக்கிறேன்” என்றான். அவன் சொற்களில் சித்தம் அலைவதன் தயக்கம் வெளிப்பட்டது. “அவை அளிக்கும் நெய்யின் நறுமணமே வேறு.”

அமைச்சர்களின் முகங்கள் மலர்ந்ததை அவன் அறிந்தான். சித்ரகர்ணன் சற்றே சாய்ந்து “அரசே, இளவரசி…” என்றான். சிசுபாலன் திரும்புவதா என ஒரு கணம் எண்ணி மேலும் ஒத்திப்போட விழைந்து விழிகளை விலக்கியபோது புறக்கடை ஒளியில் வாயிலின் நிழல் நீண்டு அறைக்குள் விழுந்து எதிர்ச்சுவரில் எழுவதை கண்டான். மூன்று பெண்கள் வாயிலை மூடியதுபோல நின்றனர். ஒருத்தி முதுமகள் என தெரிந்தது. அவள் இளையவள் ஒருத்தியை பின்னால் இழுத்துவிலக வாயிலில் நின்றவள் சற்றே திரும்பி தன் குழலை சீரமைத்தாள். ஒரு கணம் அவளை பக்கவாட்டில் நோக்கிய சிசுபாலன் நெஞ்சில் குளிர்ந்த ஈட்டி துளைத்ததுபோல் உணர்ந்தான்.

நடுங்கும் விரல்களுடன் அவன் திரும்புவதற்குள் அந்த நிழல் எதிர்ச்சுவரில் பேருருவத்துடன் எழுந்து மெல்ல உறுமியது. கன்னங்கரிய உடல். பன்றிமுகத்தில் மின்னும் மதங்கொண்ட சிறியகண்கள். அறைக்குள் கடுங்குளிரும் அழுகல் நாற்றமும் நிறைந்தது. வலக்கையில் மேழியும் இடக்கையில் முசலமும் அசைந்தன. “தேவி!” என்று அவன் கைகூப்பினான். “சேதி நாட்டு தமகோஷனின் மகனாக சுருதமதியின் கருவில் நீ பிறந்த அவ்வறையில் எழுந்த தெய்வம் நான். காற்றில் வீசிய கடும்நாற்றமாகவும் திரையசைவில் தெரிந்த நிழலுருவாகவும் என்னை உன் அன்னைமட்டுமே அறிந்தாள். பிறர் அறியாத மந்தணமாக அதை தன்னுள் மறைத்துக்கொண்டாள்.”

“கேள் இளையோனே, மண்ணில் புதைந்தவை அனைத்தும் சென்றுசேரும் அதலம் என்னும் அடியுலகில் வாழ்ந்த திரயம்பகன் என்னும் முக்கண் தெய்வம் உன் வடிவில் மண்ணில் எழுந்தது. நீ மாளாத பொறாமையால் ஆனவன். எனவே ஒவ்வொரு அங்கமும் உள்ளூர அழுகிக்கொண்டிருப்பவன்” என்றாள் வராஹி. “சத்திய யுகத்தில் ஹிரண்யாக்‌ஷன் என்னும் அரக்கன் புவியை தன் கைப்பந்தென எடுத்துக்கொண்டு இருண்ட அடியிலியில் சென்று மறைந்தான். தேவர்குரல் கேட்டு விழிமலர்ந்த விண்ணவன் புவியன்னையை காக்க பேருருவம் கொண்டு எழுந்தார். இருள்நிற மேனியும் ஒளிரும் செவ்விழிகளும் நீர்நிழலில் இணைந்த நிலவு என எழுந்த வெண்தேற்றைகளுமாக உருக்கொண்டு இருளாழத்திற்கு இறங்கினார்.”

“இருளில் உடல்கரைந்த ஹிரண்யாக்‌ஷனை அவன் நெற்றிமையத்து ஆயிரத்தாமரையின் பொன்னிற ஒளியால் மட்டுமே காணமுடிந்தது. இருளலைக்கு அடியில் ஒற்றைமீன் என நின்றிருந்த அவனை அணுகி தன் முகக்கொம்பால் குத்திக்கிழித்தார் இறைவன். புவிமகளை தன் நீள்முகத்தில் ஏந்தி மேலே வந்தார். புவிமகளின் உடலொளியில் அவரது நிழல் இருளின் திரையில் விழுந்து உருவானவள் நான்” என்றாள் வராஹி. “ஆழிசங்கு கைகொண்டு விண்ணெழுந்த அவன் அணிந்திருந்த கழல்மணியை மட்டுமே ஹிரண்யாக்‌ஷன் கண்டான். அதை இறுதியாகக் கண்டு தவித்து காட்சி முடியாமலேயே உயிர்துறந்தான. அவ்விழைவின் எச்சம் விதையென இருளில் முளைத்து திரயம்பகனாக உருக்கொண்டது. இறைவனே உன்னை முழுதறிய எனக்கு ஒரு பிறவி தேவை என்றான். முக்கண்ணனே, என் பேருரு கண்டு நீ பொறாமைகொண்டாய். உன்னை ஆக்கி நிறுத்தி அழித்து நிறைவுசெய்யும் முதல்விசை அதுவாகவே அமையட்டும் என்று ஆழியன் அருள்செய்தார். நிகரற்ற பொறாமை ஒன்று நிகழும் அக்கணம் நீ மண்நிகழ்வதாக என்று வாழ்த்தி மறைந்தார். அப்போது அவனைக் கண்டு புன்னகைத்து அவ்விருளில் நான் மலர்ந்திருந்தேன்.”

“சேதிநாட்டரசன் தமகோஷன் தன் துணைவி சுருதமதியுடன் வந்து மாலினியாற்றில் காமநீராடிக்கொண்டிருந்தபோது விண்ணில் ஒரு கந்தர்வப்பெண் பறந்துசெல்ல அவள் நிழல் நீரில் விழுந்தது. மூழ்கி நீந்திய தமகோஷன் அது தன் துணைவி என எண்ணி கைகளால் பற்ற முயன்று ஏமாந்து நகைத்தான். அவள் அழகில் அவன் மகிழ்ந்ததை அறிந்து பொறாமையால் உடல் எரிந்த சுருதமதி நீரை கனல்கொள்ளச்செய்தாள். அக்கனல் சென்று இருளாழத்தை அடைந்தபோது மண்ணில் எழுந்த திரயம்பகன் மன்னன் உடலில் புகுந்து அவள் கருவறைக்குள் எழுந்து மானுடனானான். பதின்மூன்றுமாத காலம் கருவில் வளர்ந்து நான்கு கைகளுடன் நெற்றியில் விழியுடன் பிறந்தான். அவனை சிசுபாலன் என்று பெயரிட்டு வளர்த்தனர் சேதிநாட்டு அரசனும் அரசியும்” என்றாள் வராஹி. “இங்கு பிறந்ததை நீ எய்துவாய் என்றறிக! ஆகவே வேள்விமுடிவில் எரியேறும் தூண் என நின்றெரிக! ஓம் அவ்வாறே ஆகுக!” என்று அருள்புரிந்து மறைந்தாள்.

அந்நிழல் செவ்வொளி கொண்டு தழலென ஆட எழுந்தவள் சாமுண்டி. விழியகல்கள் இரண்டு ஏந்திய ஒரு தழல் என நுதல்விழி. புயல்பட்டெழுந்த கிளைகள் என தடக்கைகள் எட்டிலும் படைக்கலங்கள். இருளருவியென இழிந்த சடைப்பெருக்கு. “கேள் மைந்தா, ஏழுமண்ணையும் ஏழு விண்ணையும் வென்றெழுந்த ஹிரண்யகசிபுவை வெல்ல சிம்மமுகமும் திசையெரி என பெருகிச்சிலிர்த்த செஞ்சடையும் கூருகிர் குவை பத்தும் கொண்டு வந்த அரிமுகத்தான் அவனை அள்ளி தன் மடியிலிட்டு உடல்கிழித்து குடல் எடுத்தபோது அவன் கால்களில் அணிந்திருந்த கழல்மணி ஒன்று உருண்டு அந்தத் தூண்பிளவுக்குள் சென்றது. இருண்ட ஆழத்தில் விழுந்து இரண்டாவது இருளடுக்கான விதலத்தில் மறைந்தது” என்றாள் அன்னை.

“அங்கே ஒரு தூங்காவிழியாகக் கிடந்த கழல்மணி ஆற்றிய தவத்தால் அதன் முன் எழுந்தான் ஆழிவண்ணன். எந்தையே கணநேரம் நான் உன் மடியில் கிடக்கும் பேறடைந்தேன். என் உள்ளம் நிறையவில்லை. உன் மடிதிகழ என்னை வாழ்த்துக என்றது அந்த மணி. இனியவனே, நீ மண்ணில் பிறப்பாய், ஆழிவண்ணன் என நான் வந்தமர்ந்து உன்னை மடியிலமர்த்துவேன். அன்று உன் அகம்நின்ற அனல் அழியும். உன் நுதலெழுந்த விழியும் மறையும் என்று இறையோன் சொல்லளித்தான்” என்றாள் அனலுருவத்தாள். “உன் அரண்மனைக்கு தன் தமையனுடன் வந்த அவன் இளையோனாகிய உன்னை அள்ளி தன் மடியிலமர்த்தி உச்சி முகர்ந்து குழல் அளைந்து விளையாடினான். உன் மென்வயிற்றை தன் செவ்விதழால் கவ்வி உன்னை சிரிக்கவைத்தான். அன்று நீ முழுமையானாய். வாழ்க!”

செந்நிழலாட்டமாக கருடன் மேலேறி சங்குசக்கரமேந்திய கைகளுடன் வைஷ்ணவி அவன் முன் தோன்றினாள். “இனியவனே, முன்பொருமுறை நீ இப்புவியில் மாபலி என்னும் மன்னனென பிறந்தாய். விண்ணவர் அஞ்ச மண்புரந்தாய். உன்னை வெல்ல மூன்றடி மண்கோரிவந்த வாமனன் அவன். விண்ணளந்த கால்தூக்கி உன் தலைமேல் வைத்தான். நீ மூன்றாவது அடியுலகாகிய சுதலத்தை அடைந்தாய். அங்கே மாபெரும் வேர்ப்பின்னலாக விரிந்து நிறைந்தாய். உன் வேர்களில் ஒன்று கவ்வியது மண்ணிலெழுந்து நின்ற கடம்பமரம் ஒன்றை. அதன்மேல் சாய்ந்து நின்று குழலூதினான் ஒரு சிறுவன். சுதி விலகியதால் சினந்தெழுந்து குழல்தாழ்த்தி என்னை எவரென்றறிவாயா என்றான் நீலன். ஆம் அறிவேன், ஆனால் நீ விண்ணளந்து எழுந்தபோதும் நான் அஞ்சவில்லை, இன்று மீண்டும் சிற்றுருவம் விரித்து விண் நிறைத்தாலும் அஞ்சேன் என்றாய்.”

“அந்த அச்சமின்மையை எண்ணி மகிழ்ந்த அவன் மண்நிறைந்தவனே நீ மேலெழுந்து வருக! நூறுமுறை என் முன் அச்சமின்றி விழிதூக்கி நிற்கும் வல்லமையை உனக்களித்தேன், வாழ்க என்றான். அவ்வாறு அவன் முன் நீயும் ஒரு மைந்தனாக இப்புவியை வந்தடைந்தாய். நூறு முறை நீ அவன் முன் நிகரென எழுந்து நிற்பாய். நூறுமுறை அவனை இழித்துரைத்து உன் சொல் தருக்கி எழும். அவனை எவ்வண்ணம் எவர் சொன்னாலும் பொருத்தமே என்பதனால் நீயும் அவனை பாடியவனாவாய். என்றும் அவன் பெயருடன் இணைந்து நீயும் வாழ்வாய். ஓம் அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி வைஷ்ணவி மறைந்தாள்.

எருதின் இளஞ்சீறல் ஒலியுடன் எழுந்து வந்தாள் மகேஸ்வரி. “மைந்தா, நீ முன்பொருமுறை இங்கே பத்துதலைகொண்ட இலங்கைவேந்தனாக பிறந்தாய். அவன் நெஞ்சமைந்த திருவை கவர்ந்துசென்று சிறைவைத்தாய். அவன் குரங்குப்படைசூழ வந்து உன் கோட்டையை வென்றான். அருள்கொண்டு அவனிட்ட வாளி உன் நெஞ்சை துளைத்தது. உன் விழிநிறைத்து அகம்புரந்த அத்திருமகளை மறுமுறைகாணலாகுமா என்று எண்ணி ஏங்கி உயிர்துறந்தாய்” என்றாள் தேவி. “தணியாத பெருங்காமம் தலாதலம் என்னும் அடியுலகில் விதைகளாகின்றது என்றறிக! அங்கே யுகங்களாக நீ செய்த தவத்தால் இன்று இவ்வடிவம் கொண்டாய். இவ்வில்லத்தில் அத்திருமகளை நாடி வந்து அமர்ந்திருக்கிறாய். உன் விழிநிறைத்து அவள் எழுவாள். நீ நிறைவாய்!”

கைகூப்பி நின்றிருந்த அவன் முன் மின்னலென அதிர்ந்த நிழலொளியுருவாக வந்து நின்ற இந்திராணி சொன்னாள் “நீ ஆயிரம் கைகொண்டு அவன் முன் செருநின்ற கார்த்தவீரியன் என்றறிக! உன் புரம் அழிக்க அவன் மழுவேந்தி வந்து நின்றான். கோட்டைகளை இடித்தான். உன் கோபுரங்கள்மேல் அனலென எழுந்தான். உன் கைகளை துணித்துக் குவித்தான். உன் தலைகொய்ய மழுவேந்தியபோது நீ விழைந்த ஒன்றுண்டு. யாதவனாகப்பிறந்தேன், நிகரான ஓர் யாதவன் கையால் இறந்திருக்கலாகாதா என்று. இளையோனே, அழியாத ஆணவம் சென்றடையும் ஆழமே ரசாதலம். ஒவ்வொன்றிலும் உறையும் சாரங்கள் ஊறித்தேங்கிய நீர்வெளி அது. அதிலொரு குமிழியென எழுந்தவன் நீ. இப்பிறவியில் யாதவனின் வளைசக்கரத்தால் வெல்லப்படுவாய். ஆம், அவ்வாறே ஆகுக!”

அவன் முன் இளநகை விரிந்த எழில்முகத்துடன் கன்னியுருக்கொண்டு வந்து நின்றாள் கௌமாரி. “உன் முற்பிறவியில் நீ ஒரு இளமைந்தனை நெஞ்சிலேற்ற எண்ணி ஏங்கி ஏங்கி அழிந்தாய். அவன் சிறுகால்களையும் கைகளையும் முத்தமிட்டு முத்தமிட்டு உயிர்துறந்தாய். சிறியவனே அன்று உன்பெயர் கம்சன். மகாதலத்தில் ஒரு கண்காணா நதிப்பெருக்கென நீ ஓடிக்கொண்டிருந்தாய். அதன் ஒருதுளி எனத்தெறித்து இங்கு வந்துள்ளாய். இப்பிறவியில் நீ எண்ணியதை எல்லாம் அவனுடன் ஆடுவாய். வாழ்க!” என்றாள்.

வெள்ளை நிழலென ஆடிய பிராமியை அவன் கண்டான். அருள்நிறைந்த புன்னகையுடன் அன்னை சொன்னாள் “எஞ்சியவை எல்லாம் சென்றுசேரும் பாதாளத்தில் இருளின் மையச்சுழியை அளைந்துகொண்டிருக்கிறது மேலே விண்ணுலகின் பாற்கடலில் சுருண்டிருக்கும் ஆயிரம் நா கொண்ட அரவின் வால்நுனி. அந்நுனி தொட்டு எழுப்பப்பட்டவன் நீ. எஞ்சிய அத்தனை விழைவுகளும் வஞ்சங்களும் சினங்களும் கனவுகளும் திரண்டு இங்கு வந்திருக்கிறாய். உன்னை சிசுபாலா என்று அவன் தன் மணிநாவால் அழைப்பதை இறுதியாகக் கேட்பாய். இங்கு மறைந்து அங்கு ஒளியுடன் எழுவாய். அவ்வாறே ஆகுக!”

சிசுபாலன் மெல்லிய ஒலி ஒன்றை எழுப்பினான். விக்கல் போலவோ விம்மல் போலவோ. அவன் கால்தளர்ந்து விழப்போகிறவன் போல ஆட சித்ரகர்ணன் எழுந்து அவனை பற்றப்போனான். சிசுபாலன் திரும்பி வாயிலில் நின்ற சத்யபாமாவை ஒருகணம்தான் நோக்கினான். அரசே என நெடுந்தொலைவில் சித்ரகர்ணனின் குரலை கேட்டான். ‘அரசே’ என்று அக்குரல் மீண்டும் விலகிச்சென்றது. மிகத்தொலைவில் எங்கோ அது விழுந்து மறைந்தது.

முலையுண்டு மகிழ்ந்த மகவின் இளநகை என செவ்விதழ் விரிந்த தாமரை மேல் பூத்திருந்தாள். செம்பொன்னிறப் பாதங்களில் பத்து விழிமணிகள் சுடர்ந்தன. பொற்பட்டாடையின் அலைகளுக்குமேல் எழுந்தன பொற்றாமரைக் குவைகள். வலதுமேல்கையில் வெண்தாமரை விரிந்திருந்தது. இடதுமேற்கையில் அமுதக்கலம். அருளி அணைக்கும் இரு மலர்ச்செங்கைகள். முலையூட்டி முடித்து குனிந்து மகவை முத்தமிடும் அன்னையின் கனிந்த விழிகள். அது சிரிப்பதைக் கண்டு மலரும் சிரிப்பு. செம்பொன் உருகியது போல் ஒளிவிடும் மேருமுடிகள் நடுவே சூரியன் என அவள் முலைகளுக்கு மேல் சியமந்தகம் நின்றது. அவன் ‘அன்னை’ என்றான். அச்சொல் எஞ்சியிருக்க நினைவழிந்து நிலத்தில் விழுந்தான்.

நூல் ஏழு – இந்திரநீலம் – 18

பகுதி நான்கு : எழுமுகம் – 2

பிரசேனர் தன் தமையன் அறியாமல் அத்தனை நாடுகளுக்கும் மணத்தூது அனுப்பிக்கொண்டிருந்தார். நேரடியாகவே ஜராசந்தர் வரை செய்தியை கொண்டு சேர்த்தபோதும் மகதம் அவரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. யாதவப்பெண்ணை ஜராசந்தர் மணப்பதில் அமைச்சர்களுக்கு உடன்பாடில்லை என்று ஒற்றர்செய்தி வந்தது. கலிங்கமும் மாளவமும் வங்கமும் பாமா அந்தப்புரத்துப் பெண்ணாக வரலாம் என்றும் யாதவப்பெண்ணுக்கு அரசிநிலை அளிக்க இயலாதென்றும் செய்தி அனுப்பின. கோசலம் அவளை ஆயிரம் பொன் கன்யாசுல்கம் அளித்து மகள்கொள்ள சித்தமாக இருந்தது. ஆனால் மணம் கொள்ள விழையும் மூத்த இளவரசனுக்கு விழியில்லை என்றும் ஆகவே இளவரசுப்பட்டமே இல்லை என்றும் தெரியவந்தது.

நாள்செல்லச்செல்ல பிரசேனர் சோர்ந்து தமையனை சந்திப்பதையே தவிர்க்கத் தொடங்கினார். அரசுநடத்துவதை மட்டும் தன் அரண்மனையில் அமர்ந்து முடித்துவிட்டு மாலையில் யமுனைக்குள் ஓடும் ஏதேனும் படகில் தாசியருடன் சென்று செலவிட்டார். சத்ராஜித் பகலிலும் குடிக்கத்தொடங்கினார். எவரையும் சந்திக்கமுடியாமலானபோது தனிமையில் இருந்தார். தனிமையில் எண்ணங்கள் சுழன்று சுழன்று வதைத்தபோது மது இனிய புகலிடமாகியது. பிற்பகலில் குடிக்கத்தொடங்கிய ஒரு மாதத்திற்குள் காலையில் எழுந்ததுமே அவருக்கு மது தேவைப்பட்டது. பின்னர் மதுவை எண்ணியதுமே உடல் பதறத்தொடங்கியது. எளிமையானவை கூட சித்தத்தை சென்றடையவில்லை. கைகால்கள் நடுங்கத் தொடங்கவே அதற்குரிய உடல்மொழி அமைந்தது. இருகைகளையும் விரல்கோத்து மோவாயை அதன் மேல் வைத்து பற்களை இறுகக் கடித்து பழுத்த இலைபோல் ஆன விழிகளால் நோக்கியபடி பேச்சுகளை கேட்டிருப்பார். விழிகள் அலைமோதிக்கொண்டிருக்கும். ஓரிருமுறை உடல் துயிலில் தளர்வது போல அசைந்ததும் திரும்பி ஏவலனிடம் மது கொண்டுவரும்படி கைகாட்டுவார்.

எட்டாவது மாதம் சேதிநாட்டில் இருந்து ஒரு செய்தி வந்தது. சேதிநாட்டு சிசுபாலருக்கு பாமாவை மணம் முடித்து வைக்கும் பொறுப்பை அவரது அமைச்சர் சத்யசீலர் ஏற்றுக்கொண்டார். அதற்கு நிகரியாக அவருக்கு பன்னிரண்டாயிரம் பொன்னை களிந்தகம் மறைமுக ஊதியமாக அளிக்கவேண்டும். அதை சத்ராஜித்திடம் கலக்காமலேயே பிரசேனர் ஏற்றுக்கொண்டதும் சத்யசீலர் சிசுபாலரிடம் பேசிவிட்டு விரிவான முற்கோரிக்கைகளை அனுப்பினார். பாமாவுக்கு மகள்செல்வமாக சியமந்தக மணியை சிசுபாலருக்கு அளிக்க வேண்டும். அவ்வுறுதி அளிக்கப்பட்டால் மகள்கொடை கேட்டு சிசுபாலரே ஹரிணபதத்திற்கு வருவார். சிசுபாலரின் ஏழாவது துணைவியாக பாமாவை ஏற்று அரச அகம்படியுடன் அணிப்படகுகளில் சேதிநாட்டுக்கு கொண்டுசெல்வார். அவளுக்கு சேதிநாட்டின் யாதவகுலத்து அவைகளில் மட்டும் அரசியாக அமரும் இடம் அளிக்கப்படும். அரண்மனையும் கொடியும் முரசும் கிடைக்கும். அவளை சேதிநாட்டு யாதவ அரசி என்று சொல்லிக்கொள்ளலாம்.

சத்ராஜித் பிரசேனரின் சொற்களை சித்தத்தில் வாங்காமல் விழித்து நோக்கி அமர்ந்திருந்தார். “இதுவே இன்று நம் முன் உள்ள சிறந்த வழி மூத்தவரே…” என்று பிரசேனர் முடித்ததும் சிறிய ஏப்பத்துடன் அவர் மதுகொண்டுவரும்படி ஏவலனை நோக்கினார். “சியமந்தக மணியை அளிப்பதென்றால்…” என்று அமைச்சர் லட்சுமணர் மெல்ல சொல்லத்தொடங்கியதுமே பிரசேனர் “நாம் அந்த மணியை இனிமேலும் பேணமுடியாது அமைச்சரே. அதை அடைய துவாரகையின் அரசன் முயல்கிறான். நான் ஒவ்வொருநாளும் அதற்கான முயற்சிகளை ஒற்றர்கள் வழியாக வென்றுகொண்டிருக்கிறேன். அது நம் கைமீறி துவாரகைக்கு சென்றுவிட்டதென்றால் இன்றைய நிலையில் நாம் போர் புரிந்து அதை மீட்கமுடியாது. அந்தகர்களின் பொருளை விருஷ்ணிகுலத்தான் சூடுவதுபோல அவமதிப்பென ஏதுமில்லை” என்றார்.

“அதை சேதிநாட்டான் சூடலாமா?” என்றார் லட்சுமணர். சினத்துடன் “சேதிநாட்டரசன் யார்? யாதவக்குருதியில் வந்த ஷத்ரியன். அவன் அதைச் சூடுவது நமது இளவரசி சூடுவதற்கு நிகர்” என்றார். “நாம் இன்று கோருவது களிந்தகத்துக்கு வல்லமை கொண்ட அரசன் ஒருவனின் காவலை மட்டுமே…” சத்ராஜித் “சிசுபாலர் நம் அரசியை மணமகளாக ஏற்பது உறுதியா?” என்றார். “ஆம், சொல்கொடுத்துவிட்டார்” என்றார் பிரசேனர். “அரசியாக அல்ல, அரசியரில் கடைநிலையளாக” என்றார் லட்சுமணர். “அரசனின் துணைவியே அரசி எனப்படுகிறாள்” என்று பிரசேனர் சொல்ல சத்ராஜித் அதை நோக்காமல் மதுகொண்டுவரும் ஏவலனையே நோக்கிக்கொண்டிருந்தார்.

லட்சுமணர் “சியமந்தகமணிக்காகத்தானே நாம்…” என்று தொடங்க மதுவை அருந்திவிட்டு மேலாடையால் வாயைத்துடைத்து நிமிர்ந்த சத்ராஜித் உரக்க “சியமந்தக மணியை மட்டும் அல்ல, களிந்தகத்தையே சேதிநாட்டான் காலடியில் வைக்கிறேன். அவன் அரண்மனைத் தொழுவத்தில் சாணியள்ளுகிறேன். அவன் காலடியில் அமர்ந்து மிதியடிகளை துடைக்கிறேன். ஏதும் தடையில்லை. என் மகள் முடிசூடி அரசப்படகில் ஹரிணபதம் விட்டு செல்வதை நான் காணவேண்டும். இனி அவள் தன் கைகளில் புல்லரிவாளும் மத்தும் ஏந்தக்கூடாது…” என்றார். அவரது உடலை உலுக்கியபடி ஓர் ஏப்பம் வந்தது. உதடுகள் வளைய கழுத்தின் தொய்ந்த தசைகள் இழுபட்டு நெளிய சத்ராஜித் கண்ணிர் விட்டு அழுதார். “இனிமேலும் என்னால் தாள முடியாது இளையோனே. நான் இப்படியே இறந்துவிட்டேன் என்றால் என் குலமூத்தாருக்கு என்ன மறுமொழி சொல்வேன்? எப்படி அவர் முன் சென்று நிற்பேன்?”

பிரசேனர் பார்வையை திருப்பிக்கொண்டு “இன்றே ஒப்புதல்செய்தியை அனுப்பிவிடுகிறேன் மூத்தவரே” என்றார். சத்ராஜித் “ஹரிணபதத்திற்கும் செய்திபோகட்டும்” என்று சொல்லி எஞ்சிய மதுவை விழுங்கினார். பிரசேனர் தலைவணங்கி அவை நீங்கும்போது அவருக்குபின்னால் வந்த லட்சுமணர் வெறுப்பால் மின்னிய சிறிய விழிகளுடன் “நானறிந்த அரசியலாடல்களில் இதைப்போல இழிந்த ஒன்று இல்லை. என்ன செய்துகொண்டிருக்கிறோம்? எதன்பொருட்டு நாம் இளைய யாதவரின் உறவை மறுத்தோம்? இப்போது சியமந்தக மணியையும் இழந்து இவனுடைய அரண்மனைச்சேடியாக நம் இளவரசியை அளித்து…” என்றதுமே பிரசேனர் திரும்பி உடைவாளில் கையை வைத்தபடி “வாயை மூடும். இல்லையேல் இக்கணமே…” என்று கிட்டித்த தாடையுடன் சொன்னார்.

“என்ன செய்வீர்? பிராமணனை கொல்வீரா? கொல்லும்… உம் தலைமுறைகளை பிரம்மஹத்தி என தொடர்ந்து வருகிறேன்” என்றார் லட்சுமணர். மூச்சிரைக்க பிரசேனர் உடல் தளர்ந்தார். பற்கள் இறுக, கண்களை சுருக்கியபடி “நீர் இதற்காக வருந்துவீர்” என்றார் . “உண்மையை சொல்லும்பொருட்டே பிராமணன் மண்ணில் பிறக்கிறான். நெறிநூல்கள் நால்வருணத்தின் தலைமேல் எங்களை அமரச்செய்வது அதற்காகவே” என்றார் லட்சுமணர். “என்ன உண்மை? சொல்லும் என்ன உண்மை?” என்று பிரசேனர் மீண்டும் குரலெழுப்பினார். “உம் நெஞ்சறிவது…” என்று லட்சுமணர் சொன்னதும் “சொல்லும் என்ன உண்மை?” என்று பிரசேனர் தொண்டை உடையும்படி கூவினார்.

“உங்கள் உணர்ச்சிகளை புரிந்துகொள்கிறேன் பிரசேனரே…” என்றார் லட்சுமணர். “ஆனால் ஒன்றை உணருங்கள். ஒருபோதும் களிந்தகத்தின் அரியணையில் நீங்கள் அமரமுடியாது.” ஒரு கணம் உறைந்த பிரசேனர் துடித்து முன்னால் பாய்ந்து அவர் தோளைப்பிடித்து இழுத்து சுவருடன் சாய்த்து “இழிமகனே, என்ன சொல் சொல்கிறாய்? என்ன சொல்லிவிட்டாய்?” என்று கூவினார். மறுகணம் மூச்செல்லாம் வெளியேற “பாவி, பெரும்பாவி… எப்படி சொன்னாய் அதை?” என்று ஈரத்துணி காற்றில் படபடக்கும் ஒலியில் கேட்டார். “இழிமகனே… இழிமகனே, என்னை என்னவென்று நினைத்தாய்? என் தமையனையா? நானா? அடேய், இழிமகனே!” அவரது கழுத்திலும் சென்னியிலும் நீலநரம்புகள் புடைத்தன.

லட்சுமணர் “புற்றரவு மிகமிக ஓசையற்றது இளையவரே. அது அங்கிருப்பதை அது மட்டுமே அறியும்” என்றபின் பிரசேனரின் கையை தட்டிவிட்டுவிட்டு திரும்பி நடந்து சென்றார். விழுந்து விடுபவர் போல அசைந்த பிரசேனர் அவருக்குப் பின்னால் ஓடிச்சென்று தோளை மீண்டும் பிடித்து முரட்டுத்தனமாகத் திருப்பி “நில்லும்… என்ன சொன்னீர்? நான் என் தமையனின் அரியணைக்கு விழைவுகொண்டிருக்கிறேன் என்றா? பார்த்துக்கொண்டிரும்… சேதிநாட்டுக்கு இளவரசி சென்று மணிமுடிசூடி அமர்வாள். களிந்தகம் துவாரகைக்கு நிகராக யாதவர்கள் நடுவே நிமிர்ந்து நின்றிருக்கும். அதை நீர் பார்ப்பீர்” என்றார்.

லட்சுமணர் சற்றே வளைந்த இதழ்களுடன் வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றார். பிரசேனர் தளர்ந்து பிடியை விட்டு உடைந்த குரலில் “என்னால் தமையனை விட மேலாக ஒருவனை எண்ணமுடியவில்லை லட்சுமணரே. அந்த அவையில் அவர் எளிய ஒருவராக அமர்ந்திருப்பதை என்னால் தாளமுடியவில்லை. அந்த எண்ணத்தால் நான் ஆற்றிய பிழை இது… அது மட்டுமே நான் கொண்ட ஆணவம். ஆம் நான் அத்துமீறிவிட்டேன். அது என் பிழை… பெரும்பிழை ” என்றார். அவர் கண்களில் இருந்து நீர் வழிந்தது. துடிக்கும் உதடுகளுடன் “வேண்டுமென்றால் என் ஆணவம் அனைத்தையும் உதறிவிட்டு சென்று யாதவன் காலிலும் விழுகிறேன். சேதிநாட்டுச் செய்தி வருவதுவரை அதைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். உண்மையில் பலமுறை கிளம்பிவிட்டேன். பல்லாயிரம் முறை உள்ளூர அவனிடம் மன்றாடிவிட்டேன். என் தமையனின் மதிப்பை எண்ணி மட்டுமே தயங்கினேன்…”

லட்சுமணர் வெற்றுவிழிகளுடன் அசையாமல் நின்றார். பிரசேனர் இறைஞ்சும் குரலில் “என்னை நீர் நம்பவில்லையா? சொல்லும். என் முகம் நோக்கி ஆலகாலம் தடவிய சொற்களைச் சொன்னீர். ஒருபோதும் அச்சொற்களுடன் என் உடல் சிதையேற முடியாது… அப்பழியுடன் என்னால் என் மூதாதையர் முன்னால் சென்று நிற்கமுடியாது. சொல்லும்…” என்றார். லட்சுமணர் “நான் அந்த நச்சரவை எண்ணிக்கொண்டிருக்கிறேன். அதற்குநிகரான ஆற்றல் கொண்ட ஒன்றை பிரம்மம் படைக்கவில்லை” என்றபின் திரும்பி நடந்தார். பிரசேனர் அறியாமல் நெஞ்சைத்தொட்ட கையுடன் வெறுமே நோக்கி நின்றார்.

சிசுபாலனின் வருகையறிவிப்பு பன்னிருநாட்களுக்குப்பின் வந்துசேர்ந்தது. களிந்தகத்தின் அரண்மனை முழுக்க அது நிறைவின்மை கலந்த ஆறுதலைத்தான் உருவாக்கியது. செய்தி வந்ததும் மாலினி பாய்ந்து புறக்கடைக்கு ஓடி அங்கே தயிர் கடைந்துகொண்டிருந்த ஆய்ச்சியர் நடுவே நின்ற மஹதியை அணுகி “சேதிநாட்டு சிசுபாலர் வருகிறாரடீ… அடுத்த வளர்பிறை நான்காம்நாளில் அவரே மகள்கொடை கோரி இங்கே வருகிறார். இப்போதுதான் அறிந்தேன். ஹரிணபதத்தையும் அத்தனை ஆயர்பாடிகளையும் அணிசெய்யும்படி அரசரின் ஆணை…” என்று மூச்சிரைத்தபடி கூவினாள். “பார்த்தாயா, நான் முன்னரே ஒருமுறை சொன்னேன். சிசுபாலர்தான் அவளுக்குரிய அரசர் என்று. அவர் இளைஞர், இளைய யாதவருக்கு நிகரான வீரர். அவர் போர்க்களத்தில் இளைய யாதவரின் தலையை அறுப்பார் என்று குறி சொல்லப்பட்டிருக்கிறது தெரியுமா?”

மஹதி வெற்றுப் புன்னகையுடன் “அவர் வரட்டும் அரசி” என்றாள். “நினைத்துப்பார். சேதிநாடு என்பது எவ்வளவு தொன்மையானது? என் குலத்தின் மூத்தவர் ஒருவர் சேதிநாட்டு தமகோஷரின் அவையில் எளிய கணக்கராக பணியாற்றினார். இன்று அந்த அரியணையில் என் மகள் அமரப்போகிறாள். சேதிநாட்டுக்கு அவள் உரிமையானவள் என்று பிறவிநூலில் எழுதப்பட்டிருந்தால் அவளை எப்படி துவாரகைக்கு மணம்பேச முடியும்? இது தெரியாமல் இங்கே சில பெண்கள் வீண்பேச்சு பேசினார்கள். கேட்கிறேன், ஒவ்வொருவரிடமாக கேட்கத்தான் போகிறேன், இப்போது என்ன சொல்லப்போகிறார்கள் என்று.”

ராகினி திரும்பி வெண்ணை திரட்டி உருட்டிக்கொண்டிருந்த பாமாவை பார்த்தாள். அவளுக்கு எல்லாம் கேட்டிருந்தது என்பதை முகமே காட்டியது. ஆனால் புன்னகை சற்றும் மாறவில்லை. கைக்குழந்தையை என வெண்ணையை உருட்டி மென்மையாகத் தூக்கி கலத்தில் வைத்து வாழையிலையால் மூடியபின் கைகளை சிகைக்காய் நீரில் விட்டு கழுவிக்கொண்டாள். அவளுக்கும் சிசுபாலன் மேல் விருப்பு எழுந்துவிட்டதா என்ற ஐயம் ராகினிக்கு ஏற்பட்டது. புன்னகையுடன் அவளை நோக்கிய பாமா “வருகிறாயாடி? நீராடச்செல்கிறேன்” என்றாள்.

பாமாவுடன் செல்லும்போது ராகினி அவள் முகத்தையே ஓரக்கண்ணால் நோக்கிக்கொண்டிருந்தாள். மெல்ல தனக்குள் ஏதோ பாடிக்கொண்டும் அவ்வப்போது புன்னகைசெய்துகொண்டும் அவள் வந்தாள். காலால் தரையில் கிடந்த சருகை எற்றினாள். உதிர்ந்துகிடந்த மலர் ஒன்றை பொறுக்கி முகர்ந்துவிட்டு தலையில் வைத்துக்கொண்டாள். “சிசுபாலர் வரவிருக்கிறார் இளவரசி” என்றாள் ராகினி. “வரட்டுமே” என்றாள் பாமா. “அவர் இளைய யாதவரின் எதிரி” என்றபின் மீண்டும் ஓரக்கண்ணால் பார்த்தாள். “அப்படியா?” என்றாள் பாமா. “ஆணவம் கொண்டவர் என்கிறார்கள். துவாரகைமேல் பொறாமை கொண்டிருக்கிறார். சேதிநாடு துவாரகையைவிட தொன்மையானது. படைபலம் மிக்கது. ஆகவே அவர் துவாரகையை அழிக்கக்கூடும் என்கிறார்கள்.”

பாமா விழிகளைத் தூக்கி “நீலக்கடம்பில் இன்றைக்கு நிறைய புதியமலர்கள்!” என்று கைநீட்டினாள். “இளவரசி, சிசுபாலருக்கு உங்களை பிடித்திருந்தால் என்ன செய்வீர்கள்?” என்றாள். பாமா “நான் அதைப்பற்றி சிந்திக்கவில்லை. சிந்திப்பது என் வேலையும் இல்லை” என்றாள். ராகினி தன்னுள் சற்றே நஞ்சை உணர்ந்து அதை சொல்லில் தீட்டி “இளவரசி, உங்களுக்கும் அரசியாகும் விழைவு வந்துவிட்டது அல்லவா?” என்றாள். கேட்டதுமே அவளுக்குள் பதற்றம் எழுந்தது. நா நீட்டிய நாகம் விழி சுடர உடல் சுருட்டிப்பின்னடைந்தது. ஆனால் யமுனையை சுட்டிக்காட்டி பாமா “நான் சொன்னேனே, இன்றைக்கு நீர்விளிம்பு மூன்றாம் படியை தீண்டும் என்று… பார்” என்றாள். “நேற்றே நீருக்குள் நல்ல குளிர்” என்றபடி யமுனையை நோக்கி சென்றாள். ராகினி முலைகள் விம்மி அமைய பெருமூச்சுவிட்டபின் அவளை பின்தொடர்ந்தாள்.

களிந்தகமும் அஸ்வபதத்தின் அந்தகச்சிற்றூர்களும் சேதிநாட்டு அரசரின் வரவுக்காக காத்திருந்தன. சேதி நாட்டின் வல்லூறு கொடியுடன் முதல் அணிப்படகு யமுனையில் தென்பட்டதுமே ஹரிணபதத்தின் எல்லையில் இருந்த யாதவச்சிற்றூரான தட்சிணவனத்தின் உயரமான மரத்தின்மீது கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தில் அமர்ந்திருந்த இரு காவலர்களும் களிவெறி கொண்டு குறுமுழவை ஒலிக்கத் தொடங்கினர். கல் பட்டு பறவைக்கூட்டம் கலைவது போல யாதவர் ஊர்கள் ஓசையுடன் எழுந்தன. ‘சேதிநாட்டு மன்னர் மணம்கோரி வந்துகொண்டிருக்கிறார்’ என்று கூவியபடி இளம் பாணன் ஒருவன் ஊர்த்தெருக்களில் ஓடினான்.

யாதவர்கள் கூட்டமாக ஓடிவந்து யமுனைக்கரையின் மேடுகளில் ஏறி நின்று நீர்ப்பரப்பில் சென்றுகொண்டிருந்த ஏழு படகுகளை நோக்கினர். அவற்றில் ஆறு காவலுக்குச் செல்லும் சிறுபடகுகள். ஒன்று மட்டுமே பெரிய அணிப்படகு. “அதுதான் சிசுபாலரின் படகு…” என்று ஒருவன் சொன்னான். “மூடா, அகம்படி இல்லாமலா சேதிநாட்டரசர் வருவார்?” என்று களிந்தகத்தில் காவல்பணியில் இருந்து முதிர்ந்து விலகிவந்த ஒருவர் சொன்னார். “அது தூதுப்படகு. அரசரும் அகம்படியும் வருவதை முறைப்படி அறிவிப்பார்கள். இங்கே அனைத்தும் சித்தமாக இருக்கிறதா என்று தெரிவிப்பார்கள்…” யாதவர்கள் திகைப்புடன் “இதற்கே இவ்வளவு பெரிய படகா?” என்றனர். “சேதிநாடு என்றால் என்னவென்று எண்ணினாய்? அடேய், பாரதவர்ஷத்தின் தொன்மையான நாடுகளில் ஒன்று அது. சேதிநாட்டு அரசகுலம் மாமுனிவர் தீர்க்கதமஸின் குருதியில் இருந்து எழுந்தது. தெரிந்துகொள்” என்றார் முதியவர்.

அணிப்படகுக்கு நிகரான விரைவில் கரையில் யாதவர்கள் ஓடியே வந்தனர். ஹரிணபதத்தை படகுகள் அடைந்தபோது கரைமுழுக்க விழவுக்கூட்டம் போல மக்கள் நிறைந்திருந்தனர். படகிலிருந்து சேதிநாட்டு அரசமுத்திரை பொறித்த தலைப்பாகைகளுடனும் உருவிய வாள்களுடனும் இறங்கிய வீரர்கள் படகுத்துறையில் அணிநிரக்க தொடர்ந்து சேதிநாட்டின் கொடியுடன் ஒரு வீரன் வந்தான். அவனைத்தொடர்ந்து செம்மணியாரமும் செவ்வைரக்குண்டலங்களும் அணிந்து இறங்கிவந்தவன் சிசுபாலனா என்று ஹரிணபதத்தினர் மீண்டும் ஐயம் கொண்டனர். அவனை வரவேற்க சத்ராஜித் வராமல் பிரசேனர் வந்ததிலிருந்து அவன் சிசுபாலனல்ல என்று தெரிகிறது என்றான் முதுபாணன் ஒருவன். சற்றுநேரத்திலேயே அவன் பெயர் சித்ரகர்ணன் என்றும் சேதிநாட்டின் முதன்மை படைத்தலைவன் என்றும் செய்தி கிசுகிசுப்பாக பரவியது.

சித்ரகர்ணனை பிரசேனர் முறைப்படி வரவேற்று அழைத்துச்சென்றார். அவர்கள் சத்ராஜித்தின் இல்லத்திற்கு சென்று நெடுநேரமாகியும் ஒன்றும் நிகழாதது கண்ட யாதவ குலப்பாடகன் ஒருவன் “சத்ராஜித் மீண்டும் மகற்கொடை மறுத்துவிட்டார்” என்றான். வியப்புடன் யாதவர் தங்களுக்குள் பேசிக்கொண்ட முழக்கம் எழுந்தது. ‘அவருக்கென்ன, பித்து பிடித்துள்ளதா?’ என்றும் ‘சியமந்தக மணியை இழக்க விரும்பவில்லை அவர். மூட மன்னர்!’ என்றும் பேசிக்கொண்டவர்கள் சற்று நேரத்திலேயே பேசிப்பேசிச்சென்று ‘அந்தகர்களிடம் பெண்கொள்ளும் தகுதி அரசர்களுக்கில்லை’ என்று பேசத்தொடங்கினர். இந்த மணப்பேச்சும் முறியும் என்றால் அதை எப்படி தங்கள் தன்முனைப்பைக்கொண்டு எதிர்கொள்வது என அவர்களின் உள்ளம் திட்டமிட்டது. “அந்தகர்கள் சியமந்தகமணியை ஒருபோதும் பிரிவதில்லை. அது உடலை உயிர்பிரிவதற்கு நிகர்” என்றார் ஒரு முதியயாதவர். “அந்தகர்கள் ஒருநாள் பாரதவர்ஷத்தை ஆள்வார்கள். அன்று அந்த சக்ரவர்த்தியின் மார்பில் சியமந்தகம் அணிசெய்யும்” என்றார் இன்னொருவர். “சியமந்தகம் முடிவெடுக்கிறது. சத்ராஜித் என்னசெய்வார்?” என்று ஒரு முதுபாணன் சொன்னான்.

அப்போது சத்ராஜித்தின் இல்லத்தின் மேல் நின்ற மூங்கில் கொடிமரத்தில் சேதிநாட்டின் வல்லூறு கொடி ஏறியது. முரசொலி கேட்டு திரும்பிப்பார்த்த சிலர் “சேதிநாட்டுக் கொடி!” என்று கூவுவதைக்கேட்டு அனைவரும் விழிதூக்கி நோக்கினர். “சேதிநாட்டுக்கொடி! அவ்வண்ணமென்றால் மணத்தூது ஏற்கப்பட்டுவிட்டது” என்று ஒருவன் கூவினான். “சேதிநாட்டுப் பட்டத்தரசி நம் யாதவகுலப்பெண்!” என்று ஒரு பாணன் கைவிரித்துக்கூவ யாதவர்கள் வாழ்த்தொலி எழுப்பி யமுனைக்கரையை நிறைத்தனர். யமுனைக்கரையிலிருந்த அனைத்து காவல்மாடங்களிலும் சேதிநாட்டின் கொடி ஏறியது.

சத்ராஜித்தின் படைவீரர்கள் வந்து யமுனைப்படித்துறையை வளைத்து கூட்டத்தை விலக்கினர். மங்கல இசைக்குழுவினர் வந்து இடப்பக்கத்தில் அணிநிரக்க வலப்பக்கத்தில் அந்தகக்குலத்தின் பூசகர்கள் மான் தோல் ஆடையும் சடைமுடியும் மலர்மாலைச்சுருளும் வளைதடியும் கங்கணமுமாக வந்து நின்றனர். சற்றுநேரத்தில் அரச அணித்தோற்றத்தில் சத்ராஜித் இருபக்கமும் ஒரு காவல் வீரர் உருவிய வாளுடன் அகம்படிசெய்ய நடந்துவந்தார். அவரைத்தொடர்ந்து அந்தகக் குலத்து மூத்தார் எழுவர் வளைதடிகளும் பெரியதலைப்பாகைகளும் குண்டலங்களும் வெண்ணிற ஆடையும் அணிந்து நடந்து வந்தனர். யாதவர்கள் அரசரையும் மூத்தாரையும் வாழ்த்தி குரலெழுப்பினர்.

சத்ராஜித் படித்துறையில் நின்றுகொள்ள சித்ரகர்ணன் பிரசேனர் இருவரும் களிந்தகத்தின் கொடிபறந்த அணிப்படகில் ஏறி யமுனையில் சென்றனர். “எதிரேற்கச் செல்கிறார்கள். அது அரசமுறை” என்று முதிய வீரர் சொன்னார். அனைவரும் நீர்வெளியின் வான்விளிம்பை நோக்கிக்கொண்டிருந்தனர். சிறிய பறவை ஒன்றின் குஞ்சித்தூவி தெரிவதுபோல சேதிநாட்டின் கொடி தெரிந்ததும் முரசுகளும் முழவுகளும் வாழ்த்தொலிகளும் முழங்கத்தொடங்கின. மெல்ல தொடுவான்கோட்டில் படகுகள் எழுந்து வந்தன. ஏழு அணிப்படகுகள் அறுபது காவல்படகுகள் சூழ வந்தன. “படையெடுப்பு போலல்லவா இருக்கிறது!” என்று முதிய யாதவர் ஒருவர் வியந்தார்.

“சியமந்தக மணியை பெண்செல்வமாக கேட்டிருக்கிறார்” என்றார் ஒருவர். “பெண்ணையே கொடுக்கிறோம்… மணியை கொடுத்தாலென்ன? அவர் முடியில் இருக்கவேண்டியதுதான் அது” என்றார் முதிய யாதவர். “சேதிநாட்டரசர் பாரதவர்ஷத்தை ஆளும் ஆற்றல் கொண்டவர்… இளைய யாதவர் அவரை அஞ்சித்தான் கடல் எல்லைக்குச் சென்று நகர் அமைத்திருக்கிறார்.” இளம்பாணன் உரக்க “சேதிநாட்டில் எழவிருக்கிறது அந்தகர்களின் கொடி. இளவரசியின் கருவில் பிறக்கும் மைந்தர் சியமந்தக மணியை அணியும் சக்ரவர்த்தி” என்று கூவ யாதவர் தங்கள் வளைதடிகளைத் தூக்கி ஓசையிட்டனர்.

அணுகிவந்த படகுகளில் இருந்து எரியம்புகள் எழுந்து வானில் வெடித்து அணைந்தன. அவை வர வர அவற்றில் இருந்து எழுந்த முரசுமுழக்கமும் கொம்பொலியும் கரையை அடைந்தன. அவற்றிலிருந்த வீரர்கள் கொடிகளை வீசிக்கொண்டிருந்தனர். அணிப்படகுகளின் பாய்கள் நீரில் இறங்கும் நாரைக்கூட்டத்தின் சிறகுகள் போல ஒரேசமயம் அணைந்தன. முதல்படகு பெரிதாகி வந்தது “பெரிய படகு!” என்று யாரோ சொன்னார்கள். “யமுனைக்காக இந்தப்படகில் வந்திருக்கிறார். கங்கை என்றால் நாவாயில் அல்லவா வருவார்” என்றது இன்னொரு குரல். முதல்படகு துறையணைந்ததும் அதிலிருந்து வீரர்கள் இறங்கி துறைமேடையில் அணிவகுத்தனர். காவல்படகுகள் யமுனையின் கரையில் ஒதுங்க அதிலிருந்து கயிறுகள் வழியாக இறங்கிய வீரர்கள் யமுனைக்கரையை முழுமையாகவே சூழ்ந்து கொண்டனர்.

ஆறாவது படகில் மிகப்பெரிய கொடிமரமும் அதில் முகில்துண்டு என மெல்ல நெளிந்த பெரிய கொடியும் இருந்தன. அதன் நடைபாலம் கரையை தொட்டதும் சத்ராஜித் கைகூப்பியபடி துறைவிளிம்பை நோக்கி சென்றார். அந்தகக் குலத்து மூத்தார் மலர்த்தாலம் ஏந்திய சேடியர் தொடர அவருடன் சென்றனர். உள்ளிருந்து பிரசேனரால் வழிநடத்தப்பட்டு சிசுபாலன் மெல்ல இறங்கி வந்தான். செவ்வைரங்கள் மின்னும் சிறிய மணிமுடியும் செங்கனல்குண்டலங்களும் செம்மணியாரமும் அணிந்து பொற்பின்னல் செய்த வெண்பட்டாடை அணிந்திருந்தான். பொன்னாலான காலணியை தூக்கி அவன் ஹரிணபதத்தின் கரையில் வைத்ததும் பெருமுரசம் முழங்கியது. அந்தகக் குலத்து மூத்தார் “வருக! ஹரிணபதம் வாழ்த்தப்பட்டது. குலமூத்தார் மகிழ்ந்தனர். மூதன்னையர் அருள் புரியட்டும்” என்று கூவி மலர்தூவி வாழ்த்தினர். யாதவர் “சேதிநாட்டரசர் சிசுபாலருக்கு நல்வரவு…” என்று கூவி வாழ்த்தி அரிமலர் வீசினர்.

சிசுபாலன் நின்றவர்களை ஒருமுறை நோக்கிவிட்டு தன்னை வணங்கி “ஹரிணபதம் பெருமை கொள்கிறது. இன்று அதன் வரலாறு முதிர்ச்சி அடைந்தது. இனி அதற்கு பெருமைகள் மட்டுமே” என்று முகமன் சொன்ன சத்ராஜித்தை நோக்கி மெல்ல தலையசைத்தான். அவர் வணங்கியதற்கு மறுவணக்கம் செய்யவில்லை, முகமனும் சொல்லவில்லை என்பதை அனைத்து யாதவரும் உணர்ந்தனர். பிரசேனர் பணிவுடன் தலைசாய்த்து தன் தமையனை சுட்டிக்காட்டி “தமையனார் தங்கள் வருகைக்காக காத்திருந்தார். தங்கள் கருணையால் களிந்தகம் வெல்லவேண்டுமென கனவு காண்பதாக சொன்னார்” என்று சொல்ல சிசுபாலன் மீண்டும் சற்று தலையசைத்துவிட்டு திரும்பி சித்ரகர்ணனிடம் “படகுகளை நிரைவகுக்கச் சொல். நாம் இங்கே நெடுநேரம் தங்க முடியாது என நினைக்கிறேன்” என்றான்.

“தாங்கள் தங்கி இளைப்பாற அனைத்து ஒருக்கங்களும் செய்யப்பட்டுள்ளன” என்றார் சத்ராஜித். “ஆனால் இங்கே அரண்மனை ஏதுமில்லை, புல்வீடுகள்தான் என்று செய்தி வந்ததே?” என்றான் சிசுபாலன். சத்ராஜித் தலைவணங்கி “களிந்தகத்தில் அரண்மனை உள்ளது திரும்பும்போது அங்கு தங்கலாம். குலமூத்தார் இங்கிருப்பதனால்…” என்று சொல்லத்தொடங்க இடைமறித்து “நான் செல்லும் வழியில் மகதத்தின் மாளிகையில் தங்கலாமென எண்ணுகிறேன்… களிந்தகத்தின் கோட்டையை வரும்போது பார்த்தேன். மண்சுவர் என்று தோன்றியது” என்றபின் “செல்வோம்” என்றான். சத்ராஜித் தலைவணங்கி “ஆம்” என்று சொல்லி அவன் பின்னால் நடந்தார்.

அந்தகக் குலப்பூசகர் தங்கள் கோல்களை தூக்கியபடி அருகே வந்தனர். “இது எங்கள் குலவழக்கப்படி வரவேற்பு. தங்கள் வருகையால் எங்கள் கன்றுகள் செழிக்கவேண்டும் என்பதற்காக” என்றார் சத்ராஜித். எரிச்சலுடன் திரும்பிய சிசுபாலன் கையசைத்து “எனக்கு நேரமில்லை… செல்வோம்” என்று சித்ரகர்ணனிடம் சொல்லிவிட்டு நடந்தான். சத்ராஜித் பிரசேனரை பார்க்க அவர் செல்லவேண்டியதுதான் என்று விழியசைத்தார்.

மாலினி சுவர்மேல் சாய்க்கப்பட்ட ஏணிமேல் ஏறி நின்று நோக்கிக்கொண்டிருந்தாள். அவளிடம் ஓடிவந்த சேடிப்பெண் “அரசருக்கு சேதிநாட்டரசர் முகமன் சொல்லவில்லை. குலப்பூசகர் அணுகவும் அனுமதிக்கவில்லை” என்று சொல்லி மூச்சிரைத்தாள். “ஏனடி?” என்றாள் மாலினி. முதுமகள் ஒருத்தி “ஷத்ரியர் எந்தக்காலத்தில் யாதவர்களை ஒரு பொருட்டாக எண்ணியிருக்கிறார்கள்? அவர்கள் அஞ்சிய ஒரே யாதவர் கார்த்தவீரியர்தான். அவரையும் பரசுராமர் கொன்று ஆயிரம் துண்டுகளாக வெட்டிக் குவித்தார்” என்றாள். “வாயை மூடு கிழமே. நல்லவேளையில் அமங்கலமாக சொல்லெடுக்கிறயா?” என்றாள் மாலினி சினத்துடன்.

நூல் ஏழு – இந்திரநீலம் – 17

பகுதி நான்கு : எழுமுகம் – 1

அஸ்வபாதத்தின் பிளவுண்ட முடிப்பாறையை தொலைவிலேயே பாமா பார்த்துவிட்டாள். குகர்களில் ஒருவன் மெல்லிய குரலில் மலைமுடி தெரிவதைப்பற்றி சொன்னான். முதியகுகன் அவ்வழியில் உள்ள சுழல்களைப் பற்றி சொல்லி சிறிய கயிறு ஒன்றில் கட்டப்பட்ட தக்கையை நீரில் வீசி அதன் அசைவை கணித்து வழியை வகுத்தான். பிற படகுகள் அனைத்தும் பின்னால் வந்துகொண்டிருந்தன. இறுதியாகத்தான் சத்ராஜித்தும் பிரசேனரும் இருந்த படகு வந்தது. செல்லும்போதிருந்த முறைநிரை திரும்பும்போது இருக்கவில்லை. துவாரகையில் இருந்து கிளம்பும்போது கல்லெறிபட்ட மரத்துப்பறவைகள் போலத்தான் கிளம்பினர். அந்தியில் கூடணைவதுபோல தளர்ந்து கரையணைந்தனர்.

துவாரகையில் விழவு கலைந்து இல்லத்திற்கு வந்ததும் சத்ராஜித் சோர்ந்து பீடத்தில் அமர்ந்துவிட்டார். பிரசேனர் “என்ன சோர்ந்திருக்கிறீர்கள் மூத்தவரே? எது நம் மூதன்னையருக்கு உகந்ததோ அதையே செய்திருக்கிறோம். இன்று ஒரு சிறுவெற்றிக்காக நாம் நம் குலத்தை இழந்தோமென்றால் நாம் மறுமொழி சொல்லவேண்டியது நம் வழித்தோன்றல்களிடம். அதை மறக்கவேண்டாம்” என்றார். சத்ராஜித் “ஆம், அதை உணர்கிறேன் இளையோனே. ஆனால் பிழைசெய்துவிட்டேனா என்ற ஐயம் என்னை அலைக்கழிக்கிறது. என் மகள் இந்நகரில் முடிசூடி அமர்ந்திருப்பாள் அல்லவா?” என்றார். “ஆம், உண்மை. ஆனால் விருஷ்ணிகுலத்துக்கு அடிமையாக குடியையும் குலத்தையும் இழந்து நாம் வாழவேண்டியிருக்கும். மூத்தவரே, ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். கயிற்றை பிடித்திருக்கும் கையை முதல் இழுப்பிலேயே பசு அறிந்துகொள்கிறது. முதல் பிடியை விட்டுவிட்டவர்கள் ஒருபோதும் பசுவை கட்டுக்குள் வைக்கமுடியாது.”

சத்ராஜித் பெருமூச்சு விட்டுக்கொண்டு பேசாமலிருந்தார். பிரசேனர் “ஆம், எனக்கும் துயரம் உள்ளது. நீங்கள் அவளை தோளிலும் மார்பிலும் சூடியதில்லை. நான் சூடியிருக்கிறேன். ஆனால் அவளே ஒருநாள் நம்மிடம் குலத்தை இழந்து அரசியாகியிருக்கவேண்டாம் தந்தையரே என்று சொல்வாள். என்னால் உறுதியாக அதை சொல்லமுடியும். இன்று அந்த அவையிலேயே விருஷ்ணிகளின் சொற்கள் எப்படி ஒலித்தன என்று பார்த்தீர்கள் அல்லவா?” என்றார். சத்ராஜித் தலையசைத்தார். “நாம் நம் மகளை துவாரகைக்குக் கொடுத்திருந்தால் மதிப்பு கொண்டிருப்போம். ஆனால் துவாரகைக்கே மகள்கொடை மறுத்தமையால் இப்போது மேலும் மதிப்பு கொண்டிருக்கிறோம். குலத்தால் யாதவர்களில் முதன்மையானவர்கள் நாமே என்று இதோ இன்று உறுதியாகிவிட்டிருக்கிறது. எண்ணிக்கொள்ளுங்கள், நாளையே நம் இல்லத்து முற்றத்தில் பாரதவர்ஷத்தின் அரசர்கள் வந்து மகள்கேட்டு நின்றிருப்பார்கள்…”

சத்ராஜித் பெருமூச்சுடன் “நல்லது நடக்கவேண்டும். இன்று என் மகள் அவையில் சுடரென நின்றபோது நான் உள்ளூர சிறுத்துவிட்டேன். அவளை வாழ்த்தி துவாரகையின் குடிகள் எழுப்பிய குரல் என் மேல் தீச்சொல் மழை என பொழிந்தது… ” என்றார். “எண்ணி எண்ணி பெரிதாக்கவேண்டாம். நாம் நம் குடியை இழக்க ஒப்பவில்லை… அதில் நமக்கு பெருமையே. அதை மட்டும் நெஞ்சில் வையுங்கள்” என்ற பிரசேனர் திரும்பி ஏவலர்களிடம் “இன்னும் ஒருநாழிகையில் நாம் இந்நகர் நீங்கவேண்டும். அத்திரிகளும் புரவிகளும் சித்தமாகட்டும். பொருட்களை வண்டிகளில் ஏற்றத்தொடங்குங்கள். அரசியர் நீராடி அணிசெய்யவேண்டியதில்லை. முழுதணிக்கோலத்தை மட்டும் களைந்து பயண உடை அணிந்தால் போதும்…” என்று ஆணையிட்டார்.

மாலினிக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன் நாம் கிளம்புகிறோம்? எப்போது மீண்டும் துவாரகைக்கு வருவோம்?” என்றாள். “தெரியவில்லை” என்றாள் மஹதி. “அவர்கள் மணச்சடங்குக்காக ஹரிணபதம் வருவார்களா என்ன? அதற்கான செய்தியை அளித்துவிட்டார்களா?” என்றாள். மஹதி ஒன்றும் சொல்லவில்லை. ஆடைகளை மரப்பெட்டிகளில் அடுக்கத் தொடங்கினாள். “அணிகளை கழற்றிக் கொடுங்கள் அரசி…” என்றாள். அணிகளைக் கழற்றியபடி மாலினி “அவையில் மற்ற யாதவ அரசிகள் அணிந்திருந்த அணிகளைக் கண்டு நான் கூசிப்போனேன். அள்ளிப்போட்டுக்கொண்டு வந்திருக்கிறார்கள். தேர் போல” என்றபடி சிரித்து “ஆனால் சியமந்தக மணி இருக்கும்வரை நமக்கும் அவர்களுக்கும் நிகரே இல்லை” என்றாள்.

ராகினி அவளை நோக்கிவிட்டு திரும்பி மஹதியிடம் “என்னால் தாளவே முடியவில்லை அன்னையே. நான் எண்ணியதெல்லாம் நிகழ்கிறதென்று நினைத்தேன்” என்றாள். “எண்ணியது முறை என்றால் நிகழும்” என்றாள் மஹதி. “இது நம் இளவரசியின் நகர்… இந்த மூட யாதவர்களா அதை இல்லை என்பது?” என்று ராகினி கண்ணீருடன் கேட்டாள். “இவர்களால் என்ன செய்ய முடியும்? ஆறு கடல்நோக்கித்தான் சென்றாகவேண்டும். நம் இளவரசியும் இளைய யாதவரை அடைவாள். சியமந்தக மணிக்கு ஒரு பாதை உள்ளது. அதன் நீரோட்டங்களில் அது பொறிக்கப்பட்டுள்ளது” என்றாள் மஹதி. ராகினி பெருமூச்சுடன் “எல்லாம் இளையவரின் பொறாமையின் விளையாட்டு. இந்த இரு மூடர்களுக்கும் அது புரியவில்லை” என்றாள். “உன் சொற்களை கட்டுக்குள் வை. அரசர்களை அவமதிக்க நீ இன்னும் அரசியாகவில்லை” என்றாள் மஹதி. “ஆம், ஆனால் இச்சொற்களை சொல்வதன்பொருட்டு கழுவேறவும் நான் சித்தமாக இருக்கிறேன்” என்றாள் ராகினி.

துவாரகையை விட்டு அவர்கள் நள்ளிரவின் இருளுக்குள் கிளம்பினார்கள். பந்தங்களோ வாழ்த்தொலிகளோ இருக்கலாகாது என்று பிரசேனர் சொல்லியிருந்தாலும் பாமா செல்லும் செய்தி எப்படியோ பரவி சாலையின் இருமருங்கும் துவாரகை மக்கள் கூடியிருந்தனர். அவள் வண்டிக்குள் அமர்ந்து சாளரம் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். அருகே அமர்ந்திருந்த ராகினி “சாலையின் இருகரையிலும் மக்கள் இளவரசி” என்றாள். திரும்பி மெல்லிய புன்னகையுடன் “ஆம்” என்றாள் பாமா. ராகினியின் கண்கள் நிறைந்துவிட்டன. “என்னடி இது? நான் ஹரிணபதத்தில் கன்றுமேய்த்தாலும் துவாரகையின் அரசிதான். துவாரகை என்று ஒன்றை இளைய யாதவர் எண்ணும்போதே நான் அதன் அரசியாகிவிட்டேன். நான் அதன் அரசியென்பதை அவர் அறிந்ததே அதற்குப்பின்னர்தான்” என்றாள் பாமா. ராகினி உதட்டை அழுத்தியபடி பார்வையை திருப்பிக்கொண்டாள்.

குதிரைக்குளம்பெழுந்த மலைமுடி அணுகி வந்தபோது மஹதி வெளியே வந்து “மீண்டும் நம் இடம்” என்று பாமாவிடம் சொன்னாள். பாமா புன்னகைத்து “நம் கன்றுகள் நம்மை தேடும்” என்றாள். மஹதி அவளை நோக்கி “ஆம், மீண்டும் துவாரகைக்குச் செல்லும்போது அவற்றையும் கொண்டுசெல்லவேண்டும்” என்றாள். பாமா புன்னகையுடன் “ஆம்” என்று சொன்னபின் கரையோரக்காட்டை பார்க்கத்தொடங்கினாள். எதிர்த்திசைக்கு ஒழுகும் பச்சைநிற நதிபோல கரையோரக்காடு சென்றுகொண்டிருந்தது. பச்சைநிற வில் எய்த வெண்கொக்கு அம்புகள் வானில் எழுந்து வளைந்து நீரில் சரிந்தன. அவற்றின் நிழல்கள் எழுந்து வந்து அவற்றுடன் இணைந்தன.

ஹரிணபதத்தின் படித்துறையில் அவர்களுக்காக யாதவர்கள் காத்து நின்றிருந்தனர். அக்ரூரரின் மணஓலை வந்த செய்தி பறவை வழியாக அவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. உடனே ஹரிணபதத்திலும் அதைச்சூழ்ந்த அனைத்து யாதவ ஊர்களிலும் விழவுக்களியாட்டு தொடங்கிவிட்டிருந்தது. உயர்ந்த மரத்தின் மேல் எழுப்பிக் கட்டப்பட்ட மூங்கிலில் விழவாடலுக்குரிய செந்நிறமான கொடி நாற்பத்தெட்டு கதிர் கொண்ட சூரியச் சின்னத்துடன் பறந்துகொண்டிருந்தது. அவர்களின் படகுகள் வருவதை மரங்களின் மேல் காவல்பரணில் இருந்த யாதவன் கண்டதுமே முழவுச்செய்தி அறிவிக்க யமுனைக்கரை முழுக்க யாதவர்கள் வண்ணக்கொடிகளுடனும் மலர்களுடனும் வந்து செறிந்து நின்று படகுகளை நோக்கி வாழ்த்தொலி எழுப்பினர்.

ராகினி அதைக்கண்டு அழுதபடி எழுந்து படகறைக்குள் ஓடினாள். அங்கிருந்த மஹதி “உனக்கென்னடி துயரம்? மலர் அரும்பாவதற்கு முன்னரே அதைச் சூடும் மார்பு பிறந்துவிட்டது” என்றாள். ராகினியை அச்சொற்கள் மேலும் அழச்செய்தன. விசும்பியபடி அவள் புலித்தோல் மஞ்சத்தில் படுத்துவிட்டாள். “நீ அழுகிறாய், ஆனால் சென்றபோதிருந்த அதே முகத்துடன் இப்போதுமிருக்கிறாள். அவள் யாரென்றும் அவளைக் கொள்பவர் எவரென்றும் நன்கறிந்திருக்கிறாள்” என்றாள் மஹதி. “நாளையே பாரதவர்ஷத்தின் மன்னர்கள் வருவார்கள் என்று இளையவர் சொல்வதை நானே கேட்டேன்” என்றாள் ராகினி. “வரட்டும்… யாதவப்பெண் களஞ்சியப்பொன் அல்ல. அவள் காமதேனு. கனியாமல் அமுது கொள்ள எவராலும் இயலாது” என்றாள் மஹதி.

படகுகள் ஹரிணபதத்தை அடைந்த முறையை மட்டும் கொண்டே யாதவர்கள் என்ன நிகழ்ந்திருக்குமென உய்த்தறிந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்குள்ளும் மெல்லிய அச்சம் இருந்தது. அந்த அச்சம் அதற்குரிய சான்றுகளை தேடிக்கொண்டே இருந்தது. மிக நுண்மையான கைகளால் அது தொட்டறிந்துவிட்டது. படகுகள் படித்துறையை தொட்டபோது மலர்களுடனும் மங்கலப்பொருட்களுடனும் நின்றிருந்த யாதவர்கள் எவரும் அணுகி வரவிலை. படகுத்துறை ஏவலர் மட்டும் அருகே வந்து வடம் பற்றித் தளைத்து படகை நிறுத்தினர். நடைபாலம் நீண்டு படகின்மேல் அமைய உள்ளிருந்து மஹதி வெளியே வந்ததை எவரும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து பாமா ராகினி துணையுடன் படகுமேடைக்கு வந்து பாலம் வழியாக கரைக்கு வந்தாள்.

நிமிர்ந்த நோக்கும் இதழ்களில் மலர்ந்த புன்னகையும் அருள்நிறைந்த விழிகளுமாக அவள் இறங்கி நடந்தபோது யாதவர் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டனர். பின்னால் வந்த படகு நின்று அதிலிருந்து மாலினியும் சேடியரும் தளர்ந்த தோள்களும் தாழ்ந்த முகமுமாக இறங்கத் தொடங்கியபோது அவர்கள் எண்ணியது உறுதியாயிற்று. அவர்கள் மேலும் குழப்பத்துடன் அவளையே நோக்கினர். நூபுரம் தாளத்துடன் ஒலிக்க சிவந்த காலடிகளை மண்ணில் ஒற்றி ஒற்றி அவள் நடந்து அருகணைந்தபோது அங்கே நின்றிருந்த முதியபாணன் ஒரு கணநேரத்து மெய்சிலிர்ப்பாக அனைத்தையும் அறிந்துகொண்டான். உரத்த குரலில் “யாதவர்குலத்தின் அரசி வாழ்க! துவாரகைக்கு அரசி வாழ்க!” என்று கூவி அருகே நின்ற பெண்ணின் அணித்தாலத்தில் இருந்த மலர்களை அள்ளி அள்ளி அவள் மேல் வீசினான்.

எண்ணை பற்றிக்கொள்வதுபோல அந்த உணர்ச்சி யாதவர்களில் படர்ந்தது. கண்ணீருடன் கைகளை விரித்து துள்ளி எழுந்து வாழ்த்தொலிகளைக் கூவியபடி அவர்கள் அவளை எதிர்கொண்டார்கள். முதியவர்கள் இன்னதென்றில்லாத உணர்வெழுச்சியால் கண்ணீர்விட்டு அழுதார்கள். வயதான பெண்கள் அவளை நோக்கி கைநீட்டி கண்ணேறு கழிக்கும் அசைவுகளைக் காட்டி கூச்சலிட்டனர்.

அந்த உணர்ச்சிமிக்க அசைவுகளுக்கு நடுவே அவள் தென்றலில் ஆடும் மலர்ப்புதர்களை கடந்து செல்பவள் போன்ற புன்னகையுடன் மெல்ல நடந்து சென்றாள். அவளுக்குப்பின்னால் யாதவர்கள் திரண்டு வாழ்த்தி முழக்கமிட்டபடி வந்தனர். கண்ணீருடன் ‘துவாரகையின் அரசி! யாதவர்களின் தலைவி’ என்று கைவீசி கூவினர். அவள் நடந்த மண்ணை அள்ளி சென்னியில் சூடினர். உணர்வெழுச்சியால் கைதூக்கி நடனமிட்டனர். முழவும் துடியுமாக உடனே பாணர்கள் பாடத்தொடங்கினர். ‘நீலவண்ண மார்பின் ஆரம்! மயிற்பீலி சூடிய சென்னியின் வைரம்.’

இறுதியாக வந்து நின்ற படகிலிருந்து இறங்கிய சத்ராஜித் அந்தக் களியாட்டை நோக்கி புரியாமல் திகைத்தார். என்ன நடந்துகொண்டிருக்கிறது என அவர் உணர சற்று நேரமாகியது. திகைத்து பெருமூச்சு விட்டபடி படித்துறையிலேயே நின்றுவிட்டார். “இறங்குங்கள் மூத்தவரே” என்றார் பிரசேனர். “இளையோனே, அவளை அவர்கள் துவாரகை அரசி என்றல்லவா கூவுகிறார்கள்?” என்றார் சத்ராஜித். பிரசேனர் “அவர்கள் தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்கள் மூத்தவரே. பாருங்கள் நாளையே இன்னொரு அரசர் நம் வாயில்முன் வந்து நிற்கையில் என்ன சொல்லப்போகிறார்கள் என்று” என்றார். “எனக்கு ஐயமாக இருக்கிறது இளையோனே. அவர்கள் அவளை யாதவர்களின் தலைவி என ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.”

பிரசேனர் சலிப்புடன் “மக்கள் உணர்வெழுச்சி கொள்ள விழைகிறார்கள் மூத்தவரே. அதற்கான தருணங்களை அவர்கள் எப்படியும் கண்டடைவார்கள். அது அவர்களுக்கு விருப்பமான கேளிக்கை மட்டுமே” என்றார். திரும்பி கொந்தளிக்கும் யாதவர்கூட்டத்தை நோக்கிவிட்டு சத்ராஜித் “இது அங்கே துவாரகையில் அந்த மக்கள் கொண்ட அதே உளஎழுச்சி” என்றார். “ஆம், ஆனால் இப்போது அங்குள்ளவர்கள் நம் இளவரசியை வெறுக்கத் தொடங்கியிருப்பார்கள். அவர்களின் அரசனை அவமதித்து கிளம்பிச்சென்ற அந்தககுலத்து பெண் என அவளை இதற்குள் வகுத்துவிட்டிருப்பார்கள். வெறுப்பும் மக்களுக்கு விருப்பமான கேளிக்கைதான்” என்றார் பிரசேனர். சத்ராஜித் சினத்துடன் “இளையோனே, அங்கே பல்லாயிரம் பேர் நடுவே அவள் சொன்ன சொல்லை மறந்துவிட்டாய், இப்பிறவியில் இனி ஒரு தோள் தனக்கில்லை என்றாள்…” என்றார்.

பிரசேனர் “அந்த அவையில் அச்சொற்களை அவள் சொல்லாமலிருந்தால்தான் வியப்பு. மூத்தவரே, கன்னியின் உள்ளம் அத்தகையது. அது காதலில் தன்னை முழுமையாகவே ஒப்புக்கொடுக்கிறது. அச்சொற்களை சொல்லும்போது அவள் இளைய யாதவனின் காதலி மட்டுமே. பிறிதென ஏதுமற்ற நிலையில்தான் இருந்தாள். ஆனால் இப்போது இதோ ஹரிணபதம் வந்துவிட்டாள். இங்கே இருந்த எளிய யாதவப்பெண்ணாக இன்னும் சிலநாட்களில் மாறிவிடுவாள். துவாரகைக்குச் சென்றதும் இளைய யாதவனின் மணமாலை வந்ததும் அவளுக்கு கனவென ஆகிவிடும். அடுத்த காதலுக்காக அவள் அகம் ஏங்கும்” என்றார். சத்ராஜித் “இளையோனே…” என்று சொல்லத்தொடங்க பிரசேனர் “பார்த்துக்கொண்டே இருங்கள் மூத்தவரே. பெண்கள் ஆறுகளைப்போல. ஒழுகும் மண்ணின் சுவையும் மணமும் நிறமும் அவர்களுடையதென ஆகும்” என்றார்.

சத்ராஜித் தலையை மட்டும் அசைத்தார். “எண்ணிப்பாருங்கள் மூத்தவரே, இவன் உன் கொழுநன் என ஒருவனைக் காட்டியதுமே உள்ளம் இழக்கிறார்கள். முழுதளிக்கிறார்கள். அது முடியும் என்றால் அதைப்போலவே அதைக் கடந்து இன்னொருவரை ஏற்கவும் அவர்களால் முடியும்” என்றார் பிரசேனர். “குலமகளை திருமகள் என்கிறார்கள் மூத்தோர். பொன்னையும் பசுவையும் மண்ணையும் போல வெல்பவன் கைகளை சென்றடைந்து வாழ்பவர்கள் அவர்கள்.”

அரைநாழிகைக்குள் துவாரகையில் நிகழ்ந்தது என்ன என்ற செய்தி அனைவருக்கும் சென்றுவிட்டது. ஆனால் அவர்கள் அந்நிகழ்ச்சிகளை உள்ளூர உணர்ச்சிகரமாக நடித்துவிட்டிருந்தமையால் அதை என்றோ நடந்த புராணமாக அதற்குள் ஆக்கிக்கொண்டிருந்தனர். அவளுடைய பெருமையை நிலைநிறுத்த நடந்த ஒரு நாடகம் என்றே அவர்களுக்கு அது பொருள்பட்டது. அவ்வுணர்ச்சி யாதவர்களிடையே பரவிப்பரவி சிலநாட்களிலேயே அவர்களின் பொது உளநிலையென நிலைகொண்டது. அதன் பின் அவளை மூதன்னையர் கூட பாமா என்று அழைக்கவில்லை, யாதவப்பேரரசி என்ற சொல்லையன்றி எதையும் அவர்களால் எண்ண முடியவில்லை. மாலினி மட்டும் “அவளை யாதவப்பேரரசி என்கிறார்கள்… அப்படியென்றால் துவாரகையில் இருந்து செய்தி வரும் என அறிந்திருக்கிறார்கள்…” என்றாள். மஹதி இதழ் விரியாமல் புன்னகைசெய்தாள்.

அச்சொல் சத்ராஜித்தை உள்ளூர மகிழ்வித்தது. சிறுவர்களோ முதியவரோ அவரிடமே ‘துவாரகையரசி’ என்று சொல்லிவிடும்போது அவர் விழிகளைத் தவிர்த்து நடந்து விலகினார். ஆனால் பிரசேனர் அச்சொல்லைக்கேட்டதும் கொதிப்படைந்தார். “அவள் ஹரிணபதத்தின் இளவரசி. நாளை பாரதவர்ஷத்தின் அரசி…” என்று கூவி அப்படி சொன்னவர்களை நோக்கி வாளை உருவிக்கொண்டு பாய்ந்தார். “அவளைத்தேடி மகத மன்னர் வரவிருக்கிறார். அவள் மகதத்தின் பேரரசி. உங்கள் இளைய யாதவனின் தலையை அவள் காலடியில் வைப்பார் ஜராசந்தர்” என்று கூவினார். அவர்கள் திகைப்புடன் விலகிச்சென்று அவரை நோக்கினாலும் சிலநாட்களில் அச்சொல்லும் பரவியது. ‘அவளை அடைய மகதரும் எண்ணுகிறார். யாதவருக்கும் மகதருக்கும் அவள் பொருட்டு பூசல் என்றார்கள்’ என்று சொன்னார்கள்.

நாளடைவில் அவளுக்கு ஜராசந்தனா கிருஷ்ணனா யார் பொருத்தமானவன் என்று பேசிக்கொண்டனர். சிலநாட்களுக்குள் ஜராசந்தனே பொருத்தமானவன் என்று வாதிடும் ஒரு தரப்பு உருவானது. அவர்கள் சிறுபான்மையினர் என்பதனாலேயே மிகுந்த ஊக்கத்துடன் இருந்தனர். அனைத்து இடங்களிலும் பலகோணங்களில் சொல்நிலைகளை உருவாக்கி சலிக்காது நின்று பேசினர். மெல்ல ஜராசந்தர் அவளை மணக்க வரப்போகிறார் என்ற எண்ணம் வலுப்பெற்றது. ஜராசந்தர் வருவதை துவாரகையின் படைகள் தடுக்கின்றன என்று சொல்லப்பட்டது. “இளைய யாதவரால் ஜராசந்தரை தடுக்க முடியுமா என்ன? துவாரகை நேற்று முளைத்தது. மகதம் தொன்மையான ஆலமரம்” என்றனர்.

எண்ணங்களும் உணர்ச்சிகளும் நீர்ப்பாசிப்படலம் போல ஒவ்வொரு நாளும் வளர்ந்து மூடின. பாமாவை மகதப்பேரரசியாக ஆக்க தடையாக இருப்பவன் என்ற சித்திரம் மிகவிரைவிலேயே இளைய யாதவனைப்பற்றி உருவாகி வந்தது. ‘கோழை… அவனால் ஒருபோதும் வெல்லமுடியாது’ என்று மகதத்தை ஆதரித்த யாதவர் கைதூக்கி கூச்சலிட்டனர். ‘அவன் என்ன செய்தான்?’ என்று எவரோ கேட்க “சியமந்தக மணியை பெண்செல்வமாகக் கேட்டான். அந்தகர்களின் குலமணியைக் கேட்க அவனுக்கென்ன உரிமை? முடியாது என்று நம் அரசர் வந்துவிட்டார்” என்றார் மகதத்தின் ஆதரவாளர். எவர் எங்கு பேச்சின் பெருக்கில் எதை சொன்னாலும் சிலநாட்களுக்குள் அது யாதவச்சிற்றூர்களெங்கும் பேசப்பட்டது. ஓரிரு மாதங்களுக்குள் பாமா வந்திறங்கியபோதிருந்த உணர்வெழுச்சிகள் எல்லாம் எங்கோ நினைவாக மாறி மறைந்தன.

ஊரில் நிகழும் பேச்சுகள் நாளும் சத்ராஜித்திற்கும் பிரசேனருக்கும் வந்துகொண்டிருந்தன. ஒருகட்டத்தில் என்னதான் பேசப்படுகிறதென்பதே விளங்காத அளவுக்கு பல தரப்புகள் உருவாகி ஒவ்வொன்றும் நாள் தோறும் உருமாறின. மாலினி நாள் தோறும் மாறிக்கொண்டிருந்தாள். “அவளுக்கு ஜராசந்தர்தான் சிறந்த கணவர் என்று நிமித்திகரும் சொல்லிவிட்டார்களடி…” என்றாள். “நாம் என்ன செய்ய முடியும்? இறையாணை அப்படி இருக்கிறது.” மறுநாளே “மகதரை யாதவர் வெல்லமுடியாதென்றே நினைக்கிறேன். நீ என்னடி நினைக்கிறாய்?” என்று கேட்டாள்.

ராகினி எரிச்சலுடன் “மகதம் இங்கிருந்து நெடுந்தொலைவில் இருக்கிறது அரசி” என்றாள். சினத்துடன் கையை அசைத்து “அதெல்லாம் எனக்குத்தெரியும். ஆனால் மகத மன்னர் ஜராசந்தர் முன்னரே யாதவர்களுடன் மண உறவுள்ளவர். கம்சரின் அரசிகள் அவரது முறைமகள்கள். அவர்களை இளைய யாதவர் திருப்பியனுப்பிய சினம் அவருக்கிருக்கிறது. விருஷ்ணிகளை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தியை இதற்குள் அவர் அறிந்திருப்பார். இன்னும் சில நாட்களில் என் மகளைத்தேடி கன்யாசுல்கத்துடன் மகதத்தின் பொற்தேர் வரும்” என்றாள் மாலினி. அது அவளுடைய சொற்கள் அல்ல என்று தெரிந்த மஹதி வியப்புடன் நோக்கிவிட்டு ஒன்றும் சொல்லாமல் விலகிச்சென்றாள்.

யமுனையின் நீராட்டுத்துறைகளில் மகதத்தின் பொற்தேர் வருவதைப்பற்றிய கதைகள் பரவின. முதலில் அது சினமும் நகைப்பும் கொள்ளச்செய்தது. “துவாரகையின் அரசருக்கு பேசப்பட்ட மகளை மகதர் கொள்வதா? விட்டுவிடுவாரா என்ன?” என்று இளையவர் கொதித்தனர். “யாதவர் அரசி அவள்… தெய்வங்கள் எழுந்து வந்து அதை சொல்லிவிட்டன” என்றனர் மூத்தோர். ஆனால் அதையே எண்ணிக்கொண்டிருந்தமையால் அதை ஏற்கும் உளநிலை உருவானது. சிலநாட்களுக்குப்பின் மகதத்தின் தூதை எதிர்நோக்கத் தொடங்கிவிட்டனர். துவாரகையின் அரசி என்பது சலித்து புதியதாக ஏதேனும் நிகழவேண்டுமென்ற விருப்பு மேலெழத்தொடங்கியது. மகத மன்னர் துவாரகையின் அரசியை மணந்தால் என்ன ஆகும் என்ற ஆவல் உருவாகி அதன் பல தளங்கள் பன்னிப்பன்னிப்பேசுவதற்கு உரியவை என்பது கண்டடையப்பட்டது. ஒவ்வொருநாளும் ஹரிணபதத்தின் படித்துறையில் மகதத்தின் அணிப்படகு அணுகுவதை எதிர்நோக்கினர் யாதவர். உள்ளூர அதைத்தடுக்க துவாரகையின் வாளேந்திய படை வந்து இறங்குவதையும் எதிர்நோக்கினர்.

ஆனால் மேலும் சிலநாட்கள் சென்றபோது அந்த எதிர்பார்ப்பும் அணைந்தது. எதிர்பார்ப்பின் எழுச்சியே ஒவ்வொருநாளையும் நீண்டு நீண்டு விரியச்செய்து ஏமாற்றத்தையும் பெரியதாக்கியது. ஏமாற்றம் வெறுமையை உருவாக்கி முற்றான நம்பிக்கையிழப்பை நோக்கி கொண்டு செல்ல “மகதத்தின் பொற்தேரில் சக்கரங்கள் இல்லை” என்ற கேலிச்சொல் பரவியது. அந்த வெறுமையை கேலியினூடாக கடக்கமுடியும் என்று கண்டதும் அதை பிடித்துக்கொண்டனர். அதுவரை இருந்த அனைத்து உணர்வெழுச்சிகளையும் வேடிக்கையாக மாற்றிக்கொண்டனர். “நூறு பசுக்களை இளைய யாதவர் பெண்செல்வமாக கேட்டிருக்கிறார். ஒவ்வொன்றுக்கும் இரண்டு அகிடுகள் இருக்கவேண்டுமாம்” என்றான் பாணன் ஒருவன். “இரண்டு அகிடுள்ள பசுக்கள் இங்கே நிறையவே உள்ளனவே” என்றான் அவன் நண்பன். பாணன் சொன்ன மறுமொழி கேட்டு மன்றிலிருந்தவர்கள் சிரித்தபடி அவனை அடிக்கப்பாய்ந்தனர்.

பாமா அனைத்துச் சொற்களுக்கும் அப்பாலிருந்தாள். ஹரிணபதம் மீண்டதுமே அவள் மீண்டும் பழைய யாதவ வாழ்க்கைக்கு திரும்பினாள். தொழுவத்தில் பசுக்களுக்கு புகையிட்டும் புல்லும் மாவும் ஊட்டியும் பணி செய்தாள். பால்கறந்து கலம் சேர்த்து பிற ஆய்ச்சியருடன் அமர்ந்து வெண்ணை கடைந்தாள். முதலில் ராகினியோ பிற ஆய்ச்சியரோ பதறி வந்து “வேண்டாம் அரசி” என்று தடுத்தனர். மாலினியே “நீ எதற்கு இதையெல்லாம் செய்கிறாய்? உன் கைகள் முரடாகிவிடும்” என்றாள். ஆனால் மஹதி “இது அவள் இல்லம். பசுப்பணி செய்யாத ஆயர்ப்பெண் எங்குள்ளாள்?” என்றாள்.

சிலநாட்களிலேயே அவள் பணியாற்றுவது பிழையெனத் தோன்றாமலாயிற்று. அவள் பால்குடம் சுமந்து செல்வதும் புல் வெட்டிக்குவிப்பதும் கண்ணில் படும்தோறும் யாதவப்பேரரசி என்ற சொல் பொருளிழந்து கேலிச்சொல்லாயிற்று. அவளை இளையவர்கள் “யாதவப் பேரரசி, பால் கறந்துவிட்டாயா?” என்று கேட்கும்போது அவள் புன்னகையுடன் “ஆம், இளையோனே” என்று சொல்லி கடந்துசென்றாள். “துவாரகையின் அரசியைப்போல புல்வெட்ட எவரால் முடியும்? அவளைப்போல் பால்கறக்க எவரால் முடியும்?” என்று யாதவக்குலப்பாடகனாகிய பார்க்கவன் பாடிய கேலிப்பாடல் சிறுவர் நாவுகளில் ஒலிக்கலாயிற்று. தொடக்கத்தில் மாலினி அதைக்கேட்டு சினந்து அச்சிறுவர்களை வசைபாடினாள். பின்னர் அவளும் சிரிக்கத் தொடங்கினாள்

சத்ராஜித் களிந்தகத்திற்கு சென்றபின்னர் ஓரிருமுறை மட்டுமே மீண்டுவந்தார். ஒருமுறை படகிறங்கியபோது பாமா இரண்டு பசுக்களை யமுனையில் நீராட்டிவிட்டு கொண்டுசெல்லும் காட்சியைக் கண்டு படகுக்குள்ளேயே இருந்துவிட்டார். பிரசேனர் வந்து “மூத்தவரே ஹரிணபதம்…” என்று சொன்னதும் வெறுப்புடன் முகம்தூக்கி “மூடா, அதோ இளைய யாதவன் மணம் கோரிய பெண் பசுபுரந்து செல்கிறாள். அவள் சூடவிருந்த மணிமுடியை உன் சொல்கேட்டு தடுத்தவன் நான். அவள் முன் எப்படி சென்று நிற்பேன்?” என்றார். “அவள் விழிகளை சந்தித்தால் என் உடல் சிறுத்துவிடுகிறது. இறப்புக்கு நிகரான தருணம் அது” என்றார். தலையை அறைந்து “மூடன்… முழுமூடன்…” என்று சொல்லி கண்ணீர் மல்கினார்.

பிரசேனர் “மூத்தவரே, நாம் பொறுத்திருப்போம்… மகதத்தில் இருந்து…” என்று தொடங்க சத்ராஜித் “இளையவனே, நான் அறிவேன். மகதம் நம்மை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. நாமே நாணிழந்து மகதத்திற்கு அனுப்பிய மணத்தூதை ஜராசந்தரின் நான்காம்நிலை அமைச்சர் கேட்டுவிட்டு திருப்பியனுப்பிவிட்டார்…” என்றார். “யாதவர்களில் முதன்மையானவர்கள் நாம் என நீ சொன்னபோது அது உண்மையென எனக்குப்பட்டது. ஆனால் அத்தனை யாதவகுலங்களும் அவ்வெண்ணத்தையே கொண்டிருக்கின்றன. நம்மை எவ்வகையில் நாம் யாதவரில் முதல்வர் என எண்ணவேண்டும்? நம் மூதாதை ஒரு மணியை அடைந்தார் என்பதற்காக நாம் விருஷ்ணிகளைவிட எப்படி மேலானவர்களாவோம்? என்றார்.

பிரசேனர் “நாம் சூரியவழிபாடு செய்பவர்கள்… நம்முடைய தெய்வம்….” என்று தொடங்க சத்ராஜித் இடைமறித்து “சூரியனை வழிபட்டு நாம் எதை அடைந்தோம்? வெயில்பட்டால் ஒளிவிடும் இந்தக்கல்லை மட்டும்தானே? இதை வைத்துக்கொண்டு என்ன சிறப்பு வந்தது நமக்கு? நாய்பெற்ற தெங்கம்பழம், வேறென்ன? விருஷ்ணிகளின் குலம் இன்று பல்லாயிரம் ஊர்களாகப்பிரிந்து பரவியிருக்கிறது. அவர்களின் குலத்தில் இரு மாவீரர்கள் பிறந்திருக்கிறார்கள். அதற்குமுன் ஒரு பேரரசி பிறந்து அஸ்தினபுரியின் அரியணையை அடைந்திருக்கிறாள். இன்று அவர்களே யாதவர்களின் தலைவர்கள். நாம் யார்? சிப்பி மூடியில் அள்ளிய மண்ணளவுக்கு ஒரு நகர். சில மேய்ச்சல் சிற்றூர்கள். பன்னிரண்டு ஆண்டுகளாக ஒரு துறைமேடை அமைக்க எண்ணி நிதியில்லாது திணறும் சிற்றரசு நாம்… நமக்கு எதற்காக இந்த ஆணவம்?” என்றார்.

“மூத்தவரே, சியமந்தகமணியைப்பற்றி தாங்கள் சொன்ன இச்சொற்களுக்காக நம் மூதாதையர் நம்மை பொறுத்தருளவேண்டும்” என்றார் பிரசேனர். “எளிமையாக ஒன்று மட்டும் கேட்கிறேன். நாளையே மகதமோ இல்லை இன்னொரு பேரரசோ நம்மிடம் மணத்தூதுடன் வந்தால் என்ன சொல்வீர்கள்? நம் இளவரசி ஓர் அரியணையில் அமர்ந்து செங்கோல் ஏந்தினாளென்றால் என்ன சொல்வீர்கள்? அப்போது நான் சொன்னதெல்லாம் உண்மை என்றும் இந்த உணர்ச்சிகளனைத்தும் பொய்யென்றும் ஆகிவிடுமல்லவா?” சத்ராஜித் “ஆனால்…” என்றார். “அவ்வண்ணமே எண்ணுங்கள் மூத்தவரே, இவ்வுணர்ச்சிகள் அனைத்துமே பொய்யானவை. பொருளற்றவை. இன்றைய நிலையில் இருள்தெய்வங்கள் நம் நெஞ்சில் நிறைக்கும் வீண் உணர்ச்சிகள் இவை. நம்மை அவை மதிப்பிட்டு நோக்குகின்றன. அவற்றின் ஆடலை கடந்து செல்வோம்…” சத்ராஜித் பெருமூச்சுடன் தலையசைத்தார்.

அதன்பின் சத்ராஜித் ஹரிணபதத்திற்கு வருவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். பாமா சிறுமியாக இருந்தபோதிருந்த நிலையே திரும்பிவந்தது. அவள் பசுமேய்த்து காடுகளில் அலைந்தும் வெண்ணை கடைந்தும் யமுனையில் நீராடியும் வாழ்ந்தாள். அவளிடம் துயரமென ஏதுமிருந்ததாக தெரியவில்லை. சிறுமியென இருந்தபோதிருந்த அதே முகமலர்வும் உடல்துடிப்பும் இன்குரலும் கொண்டிருந்தாள். ஒவ்வொருநாளும் இல்லத்தின் மேல் எழுந்த கன்று நோக்கும் மேடையில் ஏறி நின்று புலரியின் இளநீலத்தை வெயில் எழுவது வரை நோக்கினாள். காலைமழை பெய்யும்போது மட்டும் முழுமையாகவே இவ்வுலகிலிருந்து அகன்று விழிவிரித்து உடல் மெய்ப்புகொண்டு அமர்ந்திருந்தாள். அப்போது மலர் உதிர்ந்தாலும் அவள் உடல் அதிர்ந்தது. நூறுமுறை பெயர்சொல்லி அழைத்தாலும் அவள் அறியவில்லை.