மாதம்: மார்ச் 2014

நூல் இரண்டு – மழைப்பாடல் – 29

இமயம்முதல் குமரிவரை காந்தாரம் முதல் காமரூபம் வரை விரிந்து கிடந்த பாரதவர்ஷத்தில் நூற்றியெட்டு ஆயர்குலங்கள் இருந்தன. இந்திரனால் வானம் மழையாக ஆக்கப்பட்டது. மழை புல்லாக ஆகியது. புல்லை அமுதமாக ஆக்கியவை பசுக்கள். மண்ணில் மனிதர்களை ஊட்டி வளர்ப்பதற்காக பூமியன்னையே பசுக்களின் வடிவெடுத்து வந்தாள் என்றனர் முனிவர்கள். பசுக்களை மேய்க்கும் ஆயர்குலமே குலங்களில் முதன்மையானது என்றனர். ஆயர்களிலிருந்தே பிற அனைத்துக்குலங்களும் உருவாகி வந்தன என்று புராணங்கள் சொல்லின.

ஆரியவர்த்தத்தின் ஆயர்குலங்களை யாதவர்கள் என்றனர். அவர்கள் யயாதியின் மைந்தனான யதுவின் வம்சத்தில் பிறந்தவர்கள் என்று யாதவபுராணங்கள் வகுத்தன. அத்ரி பிரஜாபதிக்கும் அனசூயைக்கும் சந்திரன், துர்வாசர், தத்தாத்ரேயர் என்னும் மூன்று குழந்தைகள் பிறந்தன. சந்திரனிலிருந்து புதன் பிறந்தான். புதனிலிருந்து புரூரவஸ் ஆயுஷ் நகுஷன் யயாதி என்று குலமுறை தொடர்ந்தது.

யயாதிக்கு தேவயானியில் யது என்றும் துர்வசு என்றும் இரு மைந்தர்கள் பிறந்தனர். யயாதி சுக்கிர முனிவரின் சாபத்தால் முதுமையை அடைந்தபோது தன் மைந்தர்களிடம் அம்முதுமையை ஏற்றுக்கொள்ளும்படி கோரினான். பிற மைந்தர் தயங்கியபோது யயாதியின் இரண்டாவது மனைவியும் அசுரகுலத்தோன்றலுமான சர்மிஷ்டையின் மைந்தன் புரு முதுமையை ஏற்றுக்கொண்டான்.

தந்தையால் தீச்சொல்லிடப்பட்டு நாடு மறுக்கப்பட்ட துர்வசு வடதிசையில் காந்தார நாட்டைநோக்கிச் சென்றான். யது தனக்குரிய நிலம்தேடி தன் படைகளுடன் தென்றிசை நோக்கி வந்தான். அஸ்தினபுரியின் கங்கையைக் கடந்து, மச்சர்கள் ஆண்ட யமுனையைக் கடந்து, மாலவத்தையும், கிகடர்களின் தேவபுரியையும் தாண்டி தென்மேற்காகச் சென்றான். ஒவ்வொருநாட்டிலும் அந்நாட்டுப்படைகள் வந்து அவனை எதிர்கொண்டு உணவும் நீரும் அளித்து அவர்களின் நிலத்தில் தங்காமல் கடந்துபோகச் செய்தன. இறுதியாக நிஷாதர்களின் நாட்டில் தோலூறிய கழிவுநீர் ஓடிய சர்மாவதி நதியை அடைந்தான். நிஷாதர்கள் அவர்களை மூன்றுநாட்களுக்குள் நாட்டைக்கடந்துபோகும்படி ஆணையிட்டனர்.

யதுவும் அவன் படையினரும் மேலும் சென்று மனிதர்கள் வாழாது வெயில் பரவி வீண்நிலமாகக் கிடந்த பர்ணஸா என்னும் ஆற்றின் படுகையை அடைந்தனர். அங்கே யது கடந்துசென்ற காற்றில் ‘ஆம்’ என்ற ஒலியைக் கேட்டான். அங்கேயே தங்கும்படி படைகளுக்கு ஆணையிட்டான். அவனுடன் வந்த ஆயிரம் வீரர்கள் பர்ணஸாவின் வெற்று மணற்பரப்பில் ஊற்று தோண்டி நீர் அருந்திவிட்டு அங்கே ஒரு சிறிய பிலுமரச்சோலையில் ஓய்வெடுத்தனர். யதுவின் அமைச்சரான லோமரூஹர் நிமித்தங்களைக் கணித்து மேற்கொண்டு பயணம்செய்யலாமா என நோக்கினார்.

அச்சோலையில் இருந்து எந்தப்பறவையும் மேலும் தென்மேற்காகப் பயணம் செய்யவில்லை என்பதையும் தென்மேற்கிலிருந்து எப்பறவையும் சோலைக்கு வரவுமில்லை என்பதையும் அவர்கள் கண்டனர். எலும்புதின்னும் கருஞ்சிறகுப் பருந்தான ஊர்த்துவபக்‌ஷன் தொலைவில் வானில் சுற்றிக்கொண்டிருந்தது. “இளவரசே, இந்நிலத்துக்கு அப்பால் வெறும்பாலை. அங்கே பறவைகள்கூட வாழமுடியாது. அது ஊர்த்துவபக்‌ஷனுக்கு மட்டுமே உணவூட்டும்” என்ற லோமரூஹர் “இங்கு நீரே இல்லை. செடிகளேதும் இங்கு வளர்வதுமில்லை. ஆகவேதான் இங்கு ஜனபதங்கள் உருவாகவில்லை. நாம் மேலும் தென்கிழக்குத் திசை நோக்கிச் செல்வதே சரியாக இருக்கும்” என்றார்.

அவரது சொல்லைக் கேட்ட யது “அமைச்சரே, தாங்கள் சொல்வதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இந்தச் சிற்றாறை நான் அடைந்தபோதே நான் விரும்பும் மண்ணுக்கு வந்துவிட்டேன் என்ற உணர்வை அடைந்தேன். இங்கேயே நான்குநாழிகை நேரம் நான் காத்திருக்கப்போகிறேன். நான் வழிபடும் பூமியன்னை என்னை வழிகாட்டி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மேலும் தென்மேற்காகச் சென்று பாலையில் ஊர்த்துவபக்‌ஷனுக்கு உணவாக ஆவதையே நாடுவேன்” என்றான். அரசனின் ஆணையை அமைச்சர் தலைவணங்கி ஏற்றுக்கொண்டு “அவ்வண்ணமே ஆகுக அரசே. தங்களுடன் நாங்கள் ஆயிரம்பேரும் பாலைபுகுவதற்கு சித்தமாக உள்ளோம்” என்றார்.

அவர்கள் அங்கே நான்கு நாழிகை நேரம் காத்திருந்தனர். வெயில் அனலாகி பின்பு அடங்கத் தொடங்கியது. விண்மீன்கள் செந்நிற வானிலேயே தெளிவாக முளைத்து வந்து அதிர்ந்தன. மாலையானதும் அந்த பாலைப்பொழிலில் குறுமொழிபேசும் சிறுபறவைகள் வந்து சேர்ந்தன. அவர்கள் தோண்டிய ஊற்று நீரில் நீராடிய சிறிய தவிட்டுக்குருவி ஒன்று தன் குலத்தையே அழைத்துவந்தது. அவற்றைக் கண்டு பிற பறவைகள் தங்கள் குலங்களைக் கூவி அழைத்து அங்கே வந்துசேர்ந்தன. ஆற்றங்கரையில் பறவைகளின் சிறகுகள் நிறைந்திருப்பதை யது பார்த்துக்கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் பறவைக்குரல் கேட்டு அங்கு நீர் இருப்பதை அறிந்த காட்டுப்பசு ஒன்று கனத்த காலடிகளுடன் அங்கே வந்தது. தலையைத் தாழ்த்தி கொம்புகளை உதறியபடி அந்த வெண்பசு ஆற்றுக்குள் இறங்கி ஊற்றுநீரை அருந்தியது. அனைத்துப்பறவைகளும் பசுவை சுற்றிப்பறந்தும் அதன் முதுகில் அமர்ந்தும் குரலெழுப்பின. யது எழுந்து கண்ணீருடன் கைகூப்பி அந்தப் பசுவை வணங்கினான். “அன்னையே, தங்கள் ஆணை. இந்த நிலத்தில் நான் என் அரசை அமைப்பேன்” என்றான்.

அவ்வாறு அங்கே முதல் யாதவ அரசு அமைந்தது. யதுவின் படையினர் அந்தப்பசுவை போகவிட்டு காத்திருந்தனர். மறுநாள் அது இருபது காட்டுப்பசுக்களுடன் அங்கே வந்தது. மூன்றாம்நாள் ஐம்பது பசுக்கள் அங்கே நீருண்ண வந்தன. யது அந்தப்பசுக்களை உரிமைகொண்டான். அவற்றைச் சோலைகளில் மேயவிட்டு பேணி வளர்த்தனர் அவன் படையினர். மெல்ல அவை பெருகின. ஆயிரம் பல்லாயிரமாக ஆயின. அவர்கள் அங்கே பாலைநிலப்பெண்டிரை மணந்து மைந்தரைப்பெற்று நூறு கணங்களாக ஆனார்கள். அந்த நூறு கணங்களும் பதினெட்டு ஜனபதங்களாக விரிந்தன. பதினெட்டு ஜனபதங்களும் இணைந்து யாதவகுலமாக மாறியது.

யதுவுக்கு சஹஸ்ரஜித், குரோஷ்டன், நளன், ரிபு என நான்கு புதல்வர்கள் பிறந்தனர். சஹஸ்ரஜித்துக்கு சதஜித் என்னும் மைந்தன் பிறந்தான். சதஜித்துக்கு மகாபயன், வேணுஹயன், ஹேகயன் என்ற மூன்று மைந்தர்கள் பிறந்தனர். ஹேகயன் ஏகவீரன் என்ற பேரில் பெரும்புகழ்பெற்றான். ஹேகயனின் வம்சம் பாரதத்தில் அரசகுலமாக புகழ்பெற்றது. ஹேகய வம்சத்தில் கார்த்தவீரியன் பிறந்தான். கார்த்தவீரியனின் வல்லமையால் புதியநிலங்களில் பரவி யதுவம்சம் வடக்கே யமுனையிலும் கங்கையிலும் நிறைந்தது. அவர்களனைவரும் யாதவர்கள் என்றழைக்கப்பட்டனர்.

ஹேகயப் பெருங்குலம் ஐந்து ஜனபதங்களாகப் பிரிந்தது. விதிஹோத்ரர்கள், ஷார்யதர்கள், போஜர்கள், அவந்தியர், துண்டிகேரர்கள் என்னும் ஐந்து குலங்களும் ஐந்து அரசுகளாயின. அவர்களில் போஜர்கள் மார்த்திகாவதியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சிசெய்தார்கள். கார்த்தவீரியனுக்கு ஜயதுவஜன், சூரசேனன், விருஷபன், மது, ஊர்ஜிதன் என ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். மதுவுக்கு விருஷ்ணி என்னும் மைந்தன் பிறந்தான். விருஷ்ணியின் மைந்தர்கள் விருஷ்ணிகுலமாக வளர்ந்தனர்.

விருஷ்ணிக்கு சுமித்ரன், யுதாஜித், வசு, சார்வபௌமன் என்னும் நான்கு மைந்தர்கள் பிறந்தனர். விருஷ்ணிகுலம் யுதாஜித்தில் இருந்து வளர்ந்து நிலைகொண்டது. ஸினி, சத்யகன், சாத்யகி, ஜயன், குணி, அனமித்ரன், பிருஸ்னி, சித்ரரதன், விடூரதன், சூரன், ஸினி, போஜன் என விருஷ்ணிகுலம் வளர்ந்தது. அவர்கள் யமுனைக்கரைகளெங்கும் பரவி நூற்றுக்கணக்கான ஜனபதங்களை அமைத்தனர். அங்கே கன்றுகள் பெருகப்பெருக ஆயர்குலமும் பெருகியது. நீர்நிறைந்த ஏரி கரைகளை முட்டுவதுபோல அவர்கள் தங்கள் நாடுகளின் நான்கு எல்லைகளிலும் அழுந்தினர். மடைஉடைத்து பெருகும் நீர் வழிகண்டடைவதைப்போல அவர்கள் சிறிய குழுக்களாக தங்கள் ஆநிரைகளுடன் கிளம்பிச்சென்று புதிய நிலங்களைக் கண்டடைந்தனர்.

யமுனைக்கரையில் இருந்த தசபதம் காட்டுக்குள் சென்று நுழைந்து மறுபக்கம் செல்லும் பத்து கால்நடைப் பாதைகளின் தொகையாக இருந்தது. அங்கே வருடம்முழுக்க புல்லிருந்தாலும் ஆநிரைகளை புலிகளும் சிம்மங்களும் கவர்ந்துசெல்வதும் அதிகம். ஆகவே மழைபெய்யத் தொடங்கிய காலமுதலே அது மனிதர்வாழாத காடாகவே இருந்தது. கார்த்தவீரியனின் காலகட்டத்தில்தான் அங்கே எட்டு காவல்நிலைகள் உருவாக்கப்பட்டு நிலையான வில்வேட்டைக்குழு ஒன்று அமர்த்தப்பட்டு ஊனுண்ணிகள் தடுக்கப்பட்டன. அதன் பின்னர் அங்கே சிறிதுசிறிதாக யாதவர்கள் குடியேறினர்.

தசபதம் உருவான தகவலறிந்து கன்றுகாலிகளை ஓட்டியபடி தோள்களில் குழந்தைகளுடன், காளைகளின் மேல் கூடைக்குடில்களுடன் கிழக்கே இருந்து அவர்கள் வந்தபடியே இருந்தனர். காடுகளில் வட்டவடிவமாக குடில்களை அமைத்து சுற்றிலும் மரம்நட்டு வேலியிட்டு நடுவே தங்கள் கன்றுகாலிகளைக் கட்டி அவர்கள் தங்கள் ஊர்களை அமைத்தனர். அவ்வாறு நூறு இடையர்கிராமங்கள் உருவானதும் அப்பகுதி தசபதம் என்றழைக்கப்பட்டது. அதன் தலைவராக விருஷ்ணிகளின் குலத்தைச்சேர்ந்த ஹ்ருதீகர் நூறு கிராமங்களின் தலைவர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

VENMURASU_EPI_79

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

விருஷ்ணிகுலத்தைச் சேர்ந்த பிருஸ்னிக்கு சித்ரரதன், ஸ்வபல்கன் என்னும் இரு மைந்தர்கள் இருந்தனர். சித்ரரதனின் மைந்தன் விடூரதன். விடூரதனின் குருதிவரியில்தான் ஹ்ருதீகரும் சூரசேனரும் வசுதேவனும் பிறந்தனர். விடூரதனின் தம்பியான குங்குரனின் குருதிவரி வஹ்னி, புலோமன், கபோதரோமன், தும்புரு, துந்துபி, தரித்ரன், வசு, நாகுகன், ஆகுகன் என வளர்ந்தது. ஆகுகனுக்கு தேவகன், உக்ரசேனன் என இரு மைந்தர்கள் பிறந்தனர். உக்ரசேனன் யமுனைக்கரையில் இருந்த யாதவர்களின் தலைமையிடமான மதுபுரத்தை ஆண்டான்.

ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான படகுகளில் நெய்ப்பானைகள் வந்துசேருமிடமாக இருந்த மதுபுரம் விரைவிலேயே ஒரு நகரமாக ஆகியது. நெய்கொள்வதற்காக பல்லாயிரம் வண்டிகள் மதுபுரத்துக்கு வரத்தொடங்கின. ஆக்னேயபதங்கள் என்றழைக்கப்பட்ட எட்டு வண்டிச்சாலைகள் அங்கே வந்துசேர்ந்தன. பாரதவர்ஷத்தின் பன்னிரண்டு நாடுகள் நெய்க்காக மதுபுரத்தை நம்பியிருந்தன. நெய் யமுனைவழியாக கங்கைக்குச்சென்று நாவாய்கள் வழியாக மகதத்துக்கும் வங்கத்துக்கும்கூடச் சென்றது.

நெய்ச்சந்தையாக இருந்த மதுபுரத்தை யமுனைவழியாக படகுகளில் வந்து தாக்கிக் கொள்ளையடித்துவந்த லவணர்களை கோசலத்தை ஆண்ட இக்ஷுவாகு வம்சத்து மன்னனான சத்ருக்னன் தோற்கடித்து துரத்தி அங்கே ஓர் அரண்மனையையும் சிறிய மண்கோட்டையையும் நிறுவி சுங்கம்பெறுவதற்காக கோசல அரசகுலத்தைச்சேர்ந்த ஓர் இளவரசனை அதிகாரியாக அமைத்தார். படையும் காவலும் மதுபுரத்தை விரைவிலேயே வளரச்செய்தன. ஹேகயமன்னரின் ஆட்சிக்காலத்தில் கோசலத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு மதுபுரம் தனி அரசாகியது.

விருஷ்ணிகுலத்தைச்சேர்ந்த விடூரதன் மதுபுரத்தை ஆண்டதாக குலக்கதைகள் பாடின. விடூரதனின் மைந்தனான சூரசேனன் அந்நகரை தலைமையாக்கி ஆண்ட சுற்றுநிலம் சூரசேனம் என்றழைக்கப்பட்டது. ஆனால் விடூரதனின் தம்பியான குங்குரன் விடூரதனின் குலத்தை மதுபுரத்தில் இருந்து துரத்திவிட்டு நகரைக் கைப்பற்றிக்கொண்டான். சூரசேனனின் மைந்தன் ஸினி தன் மகன் போஜனுடன் வடக்கே சென்று மார்த்திகாவதி என்ற ஊரை அமைத்துக்கொண்டான். போஜனின் குருதிவரியில் வந்த குந்திபோஜனால் ஆளப்பட்டுவந்த மார்த்திகாவதி முந்நூறு வீடுகளும் சிறிய அரண்மனையும் கொண்ட சிறியநகரமாக வளர்ந்து தனியரசாக நீடித்தது.

குங்குரனுக்குப்பின் வஹ்னியும் அவன் மைந்தர்களும் சூரசேனநாட்டையும் மதுபுரத்தையும் ஆண்டனர். ஹேகயனால் கட்டப்பட்ட மதுபுரத்தின் மண்கோட்டையை ஆகுகன் கல்கோட்டையாக எடுத்துக்கட்டி கலிங்கத்திலிருந்து காவல்படைகளையும் கொண்டுவந்து நிறுத்தினான். ஆக்னேயபதங்களின் வண்டிகளும் யமுனையின் படகுகளும் கொண்டுவந்து குவித்த சுங்கத்தால் மதுபுரம் நெய்கொட்டப்படும் வேள்வித்தீ என வளர்ந்தது.

தங்கள் மூதாதையரை துரத்தியடித்த மதுபுரத்தின் மன்னன் மீது போஜர்களும் விருஷ்ணிகளும் ஆறாச்சினம் கொண்டிருந்தனர். மதுபுரத்தின் மன்னனை நூற்றியெட்டு யாதவர்குலங்களும் தங்களவனல்ல என நிராகரித்தன. யாதவர்களின் பெருங்கூடல்விழவுகள் எதற்கும் மதுபுரத்து மன்னன் அழைக்கப்படவில்லை. யாதவர்கள் அனைவரும் மதுபுரத்தின் படைவல்லமையை அஞ்சினர். மதுபுரத்து மன்னன் உக்ரசேனன் போஜர்களின் மார்த்திகாவதியை வென்று தன் அரசை விரிவுபடுத்தும் வேட்கைகொண்டிருந்தான். வல்லூறை அஞ்சும் காக்கைகள் போல அனைத்து யாதவர்குடிகளும் சிற்றரசுகளும் ஒன்றாகி மதுபுரத்தைச் சூழ்ந்து நின்றதனால் அவன் காத்திருந்தான்.

மதுபுரத்தின் சுங்கச்செல்வத்தைப்பற்றி மகதனும் அங்கனும் வங்கனும் பொறாமைகொண்டிருந்தனர். மூன்றுமுறை மகதம் ஆக்னேயபதங்களைக் கைப்பற்ற முயன்றது. தன்னிடமிருந்த செல்வத்தைக்கொண்டு கலிங்கத்தில் இருந்து படைகளைக்கொண்டுவந்து ஆக்னேயபதம் முழுக்க நூற்றுக்கணக்கான காவல்சாவடிகளை அமைத்தான் உக்ரசேனன். ஒருகட்டத்தில் சுங்கச்செல்வத்தில் பெரும்பகுதி படைகளுக்கான ஊதியமாகவே செலவழிந்துகொண்டிருந்தது. மகதம் படைகொண்டுவருமென்றால் அதைத் தடுக்க தன் கருவூலத்தை முழுக்கச் செலவிட்டு படைதிரட்டவேண்டுமென உக்ரசேனன் அஞ்சினான்.

குடிகளே மன்னனின் முதற்பெரும் செல்வம் என்று அவன் உணரத்தொடங்கினான். யாதவக்குடிகளை நல்லெண்ணம் மூலம் தன்னை ஏற்கும்படிச் செய்யமுடியுமா என்று அவன் திட்டமிட்டான். அவனுடைய தூதர்கள் யாதவர்களின் ஜனபதங்கள்தோறும் சென்று மதுபுரத்தின் தலைமையை அவர்கள் ஏற்கும்படி செய்வதற்காக முயன்றனர். அவர்களுக்கு அரசகாவலும் ஆட்சியுரிமைகளும் அளிக்கப்படும் என்றும் அவர்களின் ஜனபதமுறைகளை மதுபுரம் முழுமையாக ஏற்கும் என்றும் தூதர்கள் சொன்னார்கள்.

மதுபுரத்தின் முயற்சிகளுக்கு முதற்பெரும் எதிரியாக இருந்தவர் தசபதத்தின் தலைவரான விருஷ்ணிகுலத்து சூரசேனர். ஹ்ருதீகரின் மைந்தரான அவரை அனைத்துயாதவக்குடிகளும் ஏற்றுக்கொண்டன. சூரசேனரின் நட்புக்காக பதினெட்டுமுறை தூதர்களை அனுப்பினார் உக்ரசேனர். ஒவ்வொருமுறையும் மரியாதையான ஒற்றை மறுப்புச்சொல்லை மட்டுமே பதிலாகப் பெற்று அவர்கள் மீண்டனர். தன்னுடைய அச்சுறுத்தலால்தான் மார்த்திகாவதியின் குந்திபோஜன் சூரசேனரின் மகளான பிருதையை மகளேற்பு செய்ய முயல்கிறான் என்று உக்ரசேனர் அறிந்திருந்தார்.

ஒற்றர்கள் வழியாக குந்திபோஜன் பிருதையை மகளேற்பு செய்து மார்த்திகாவதிக்குக் கொண்டுசென்றுவிட்டான் என்ற செய்தியை அறிந்து உக்ரசேனர் தன் அமைச்சர்களுடன் மதியூழ்ந்தார். மார்திகாவதியின் குந்திபோஜனின் அரசு இன்று யாதவர்களின் நூற்றெட்டு ஜனபதங்களின் பின்புலவல்லமையைப் பெற்றுவிட்டது என்று பேரமைச்சரான கிருதர் சொன்னார். அதை படைகொண்டு வெல்வது யாதவர்களின் முழு எதிர்ப்பையும் அடைவதாகவே முடியும். மார்த்திகாவதியை மதுபுரத்தின் நட்புநாடாக ஆக்கமுடியுமா என்பதே இனி எண்ணவேண்டியதாகும் என்றார்.

அதற்கான வழிகளை பலதிசைகளில் மதுபுரத்தின் மதியூகிகள் சூழ்ந்துகொண்டிருக்கையில்தான் சூரசேனரின் ஓலையுடன் வசு தன் கடையிளவல் வசுதேவனின் கையைப் பற்றிக்கொண்டு மதுபுரத்தை வந்தடைந்தான். சிறுபடகில் வந்த அவர்கள் மதுபுரத்தின் பெரிய படகுத்துறையில் இறங்கினர். பெரும் வெண்கலத்தாழிகளை ஏற்றிக்கொண்ட சிறுபடகுகள் நத்தைகள் போல மெல்ல ஊர்ந்து அணைந்துகொண்டிருந்த மதுபுரத்தின் படித்துறையில் யாதவர்களின் அனைத்துக்குடிகளும் வந்திறங்கியபடியிருந்தனர். அனைவரின் கொடிகளும் அங்கே பறந்துகொண்டிருந்தன.

தமையனின் கையைப்பற்றிக்கொண்டு விழித்த கண்களுடன் வசுதேவன் மதுபுரத்தின் தெருக்களில் நடந்தான். மக்கள் வழக்கில் அது மதுராபுரி என்றும் மதுரா என்றும் அழைக்கப்படுவதைக் கேட்டான். ஊரெங்கும் வெயிலில் உருகும் நெய்யும் நாள்பட்டு மட்கிய நெய்யும் கலந்த வாசனையே நிறைந்திருந்தது. வசு அங்கே பெரிய வெண்கலக் கலன்களில் நிறைக்கப்பட்ட நெய்யைக் கண்டதும் பல்லைக் கடித்தபடி “எளிதில் கொளுத்தமுடியும் நகரம்” என்று சொன்னான். அதன்பின் வசுதேவன் அந்நகரை இன்னமும் எரியேற்றப்படாத வேள்விக்குளமாக மட்டுமே பார்த்தான்.

மதுபுரத்தின் நடுவே செந்நிறக் கற்களால் கட்டப்பட்ட பெரிய அரண்மனை இருந்தது. உள்கோட்டைவாயிலில் காவலுக்கு நின்றிருந்த கலிங்கவீரர்கள் வசுவின் கையில் இருந்த ஓலையின் இலச்சினையை யாதவகுலத்தைச்சேர்ந்த மூத்த வீரனிடம் அளித்து சரிபார்த்தபின் உள்ளே அனுப்பினார்கள். ஒளிவிடும் வேல்முனைகளும் ஆமையோட்டுக் கவசங்களும் அணிந்த அவ்வீரர்களை கூரிய அலகுகள் கொண்ட கழுகுகளாக வசுதேவன் எண்ணிக்கொண்டான். அந்நகரம் செத்துக்கிடக்கும் யானை என்று தோன்றியது.

சூரசேனரின் ஓலையைக் கண்டதுமே உக்ரசேனர் மகிழ்ந்து தன் அமைச்சரான கிருதரை வரவழைத்தார். “ஆம் அரசே, மதுபுரத்தின் வரலாற்றில் ஒரு புதிய கட்டம் தொடங்கியிருக்கிறது. யாதவகுலத்துடன் நம் உறவுகள் வலுப்பெறவிருக்கின்றன. அத்துடன் மார்த்திகாவதியும் நம் அண்மைக்கு வரப்போகிறது” என்றார் கிருதர். உக்ரசேனர் வசுவை தன் அவைக்கு வரவழைத்தார்.

ஓர் இளவரசனுக்குரிய அரசமரியாதையுடன் மதுபுரத்து சபாமண்டபத்துக்குள் நுழைந்த வசு அங்கே இருந்த அமைச்சர்களும் தளகர்த்தர்களும் தன்னை எழுந்து நின்று குலமுறைகிளத்தி வாழ்த்தியதைக் கண்டு திகைத்தான். அவனுக்கு அரசமுறைமைகளும் அதற்கான சொற்களும் தெரியவில்லை. வனத்தில்வாழும் யாதவர்களுக்குரிய முறையில் இடத்தோள்கச்சாக தோலாடை உடுத்தி காதில் மரக்குழைகள் அணிந்திருந்தான். அங்கே ஆடையின்றி நிற்பதுபோல உணர்ந்த அவன் ஓரிரு சொற்கள் சொல்வதற்குள் திணறி கண்ணீர்மல்கினான்.

வசுதேவனை அங்கேயே விட்டுவிட்டு வசு திரும்பிச்சென்றான். அவனுக்கு விலைமதிப்புமிக்க பொன்னணிகளையும் பட்டாடைகளையும் பரிசாக அளித்து அரசமுறைப்படி வழியனுப்பியது மதுபுரம். வசுதேவனை தன் மைந்தன் கம்சனின் துணைவனாக அரண்மனையில் தங்கச்செய்தான் உக்ரசேனன். அவனுக்கு செம்மொழியும் அரசுநூலும் பொருள்நூலும் கற்பிக்க ஆணையிட்டான்.

அரண்மனை உள்ளறைக்கு சேவகர்களால் இட்டுச்செல்லப்பட்ட வசுதேவன் தன்னைவிட இரண்டடி உயரமான தன்னைவிட இருமடங்கு எடைகொண்ட சிறுவனாகிய கம்சனை முதல்முறையாகப் பார்த்தான். அவனுக்கும் தனக்கும் ஒரே வயது என்று சொல்லப்பட்டிருந்த வசுதேவன் அவன் உருவத்தைப்பார்த்து வியந்து நின்றுவிட்டான். சிரித்தபடி வந்த கம்சன் வசுதேவனை ஆரத்தழுவிக்கொண்டான். “இந்த அரண்மனையில் உனக்கு எது தேவை என்று சொல்…அனைத்தும் உன்னுடையதே” என்று சொன்னான். அக்கணம் முதல் வசுதேவனின் உயிர்நண்பனாக ஆனான்.

கம்சனுடன் சேர்ந்து மதுராபுரியில் வளர்ந்தான் வசுதேவன். கம்சன் ஆயுதவித்தையைக் கற்றபோது அவன் நூல்களைக் கற்றான். “நான் நூல்களைக் கற்கவேண்டியதில்லை….எனக்கான ஞானம் முழுக்க என் மைத்துனன் உள்ளத்தில் இருக்கிறது” என்று கம்சன் சொல்வான். வசுதேவனின் தோற்றம் மாறியது. பட்டாடைகளும் பொற்குண்டலங்களும் மணியாரமும் அணிந்தான். சந்தன மிதியடியுடன் நடந்தான். அரண்மனையின் உணவில் அவன் மேனி தளிர்ப்பொலிவு கொண்டது. அவனுடைய பேச்சுமொழியும் பாவனையும் முழுமையாக மாறின.

மதுராபுரிக்கு வந்தபின் அவன் ஓரிருமுறை மட்டுமே மதுவனத்துக்குச் சென்றான். அவனை அவன் தமையன்கள் முற்றிலும் அன்னியனாகவே எண்ணினார்கள். அவனை முதலில் கண்டதும் வசு மரியாதையுடன் எழுந்து நின்றான். அதன்பின்னர்தான் அவன் தன் இளவலென்று அவன் அகம் உணர்ந்தது. ஆனாலும் அவன் தமையன்கள் எவரும் அவன்முன்னால் ஒலிஎழுப்பிப் பேசவில்லை. அவன் கண்களை அவர்களின் கண்கள் தொட்டுக்கொள்ளவேயில்லை. சூரசேனர் அவனை ஒருகணம்தான் நோக்கினார். “நீ உன் வழியை அடைந்துவிட்டாய். உனக்கு நன்மை நிகழட்டும்” என்று மட்டும் சொன்னார்.

அவன் அன்னை மட்டும்தான் எந்த மாற்றமும் இல்லாதவளாக இருந்தாள். அவளுடைய சுருண்டதலைமயிர் நரைத்து பால்நுரைபோலிருந்தது. முகத்தில் சுருக்கங்கள் பரவியிருந்தன. ஆயினும் அவள் ஆற்றல்கொண்ட தோள்களுடன் இல்லத்தின் அனைத்துப்பணிகளையும் செய்பவளாக இருந்தாள். வெண்ணிற ஒளிகொண்ட அவளுடைய சிரிப்பு அப்படியே இருந்தது. அவனைக் கண்டதும் சிரித்தபடி ஓடிவந்து அவன் தோள்களையும் தலையையும் தொட்டாள். அவன் மதுராபுரியில் என்னசெய்கிறான் என்று அவள் ஒருமுறைகூட கேட்கவில்லை. மதுவனத்தில் அவனுக்கு தேவையானவற்றை செய்துகொடுப்பதில்தான் அவளுடைய ஆர்வமிருந்தது.

மார்த்திகாவதியில் பிருதையுடன் வசுதேவன் எப்போதும் தொடர்பில் இருந்தான். அவளைக்காண்பதற்காக இரண்டுமாதங்களுக்கொருமுறை அவன் மார்த்திகாவதிக்குச் சென்றான். அவனுடைய முயற்சியால் மதுராபுரிக்கும் மார்த்திகாவதிக்கும் நல்லுறவு உருவானது. இரு மன்னர்களும் காளிந்தியின் கரையில் இருந்த ஷீரவனம் என்னும் சோலையில் சந்தித்து ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டார்கள். அதன்படி மார்த்திகாவதியும் மதுராபுரியும் ஒன்றையொன்று தாக்குவதில்லை என்று முடிவெடுத்து எல்லையை வகுத்துக்கொண்டனர். ஒருவருக்கொருவர் படைத்துணையும் நிதித்துணையும் அளிப்பதாக முடிவுகொண்டனர்.

நெடுநாட்களாக மதுராபுரி எதிர்கொண்டுவந்த அனைத்து அரசியல் இக்கட்டுகளும் வசுதேவனால் முடிவுக்கு வந்தன. யாதவர்குலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம்பேர்கொண்ட படை ஒன்று மதுராவில் அமைந்தது. மதுராபுரியின் மன்னனான உக்ரசேனரைத் தொடர்ந்து கம்சன் மன்னனானான். கம்சனுக்கு வசுதேவன் அமைச்சனானான். அவன் சொல்லில்தான் யாதவகுலத்தின் முதன்மை அரசு சுழல்கிறது என்று சூதர்கள் பாடினர்.

மழைபெய்துகொண்டிருந்த இரவொன்றில் படகில் மார்த்திகாவதியில் இருந்து கிளம்பி யமுனையின் பெருவெள்ளத்தில் சுழித்தும் சுழன்றும் விரைந்து படித்துறையை அடைந்த பிருதையின் அணுக்கத்தோழியான அனகை தன் முத்திரைமோதிரத்தைக் காட்டி காவலைத் தாண்டி அரண்மனைக்கு வந்து வசுதேவனின் மாளிகையை அடைந்தாள். வசுதேவன் மஞ்சத்துக்குச் சென்றுவிட்டிருந்தான். சேவகன் சொன்னதைக்கேட்டு அவன் சால்வையை எடுத்துப்போட்டபடி வெளியே வந்தபோது மழைசொட்டும் உடலுடன் நடுங்கிக்கொண்டு நின்றிருந்த அனகையைக் கண்டான்.

நூல் இரண்டு – மழைப்பாடல் – 28

பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்

[ 3 ]

யாதவர்களின் தொழிலைச் செய்வதில்லை என்ற முடிவை இளமையிலேயே வசுதேவன் எடுத்தான். அவனுடைய குலத்தின் மந்தைகளுடன் அவனுக்கு தொடர்பே இருக்கவில்லை. பாட்டி இறந்தபின்னரும் அவன் மதுவனத்திலேயே வாழ்ந்தான். ஏழுவயதில்தான் அவன் முதல்முறையாக அடிக்காட்டுக்குச் சென்று பட்டியில் ஏரிநீர் போல நிறைந்திருந்த பசுக்களைப் பார்த்தான். அங்கே நிறைந்திருந்த சாணியும் சிறுநீரும் கலந்த வீச்சமும், பசுக்கூட்டத்தின் உடல்களில் இருந்து எழுந்து காற்றில் சுழன்ற சிற்றுயிர்களும் அது கலங்கிய அழுக்குநீர் ஏரி என்று எண்ணச்செய்தன.

மந்தைமுழுக்க மாடுகளின் கனைப்புகளும் காதுகள் அடிபடும் ஒலிகளும் குளம்புகள் மண்ணில் மிதிபடும் ஓசையும் நிறைந்திருந்தன. ஆயிரக்கணக்கான காகங்கள் பசுக்கள் மேல் எழுந்தும் அமர்ந்தும் குருதியுண்ணிகளைப் பொறுக்கி உண்டன. சிறிய குருவிகள் காற்றிலேயே தாவிப்பறந்து சிற்றுயிர்களைப்பிடித்தன. பட்டியைச்சுற்றி கட்டப்பட்டிருந்த நூற்றுக்குமேற்பட்ட காவல்மாடங்களில் கம்பிளிகளைப் போர்த்தியபடி ஆயர்கள் களைத்த கண்களுடனும் புல்லாங்குழல்களுடனும் அமர்ந்திருந்தனர். மாடங்களுக்குக் கீழே புல்லையும் சருகையும் கூட்டி தீயிட்டு அதில் பலாக்கொட்டைகளையும் காட்டுக்கிழங்குகளையும் சுட்டு மேலே கொண்டுசென்று கொறித்துக்கொண்டிருந்தனர். கீழே இருந்த தணலில் எழுந்த புகை மாடங்களின் அடியில் தயங்கி பிரிந்து எழுந்து சூழ்ந்து மேலே சென்றது.

வசுதேவனின் தமையன்கள் அனைவருமே அடிக்காட்டில்தான் இருந்தனர். அவர்கள் வீட்டுக்கு வருவதேயில்லை. மூத்த தமையனான வசு வசுதேவனைவிட முப்பது வயது மூத்தவர். கடைசித்தமையனான காவுகன் பதினைந்து வயது மூத்தவர். அவர்களிடம் வசுதேவன் சிலசொற்களுக்கு அப்பால் பேசியதுமில்லை. அவனை சூரசேனர் மதுவனத்தை விட்டு அழைத்துச்சென்று அடிக்காட்டில் மந்தைக்குக் கொண்டு சென்றபோதுதான் அவன் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையே அறிந்தான்.

அவர்களின் கிராமமான மதுவனத்தில் மழைக்காலத்தைத் தவிர எப்போதும் பெண்கள் மட்டுமே இருந்தனர். முந்நூறு குடும்பங்கள் கொண்ட மதுவனத்தின் அனைத்து மந்தைகளுமே ஊரிலிருந்து நாற்பது நாழிகை தொலைவிலிருந்த அடிவனத்தில்தான் பட்டியிடப்பட்டன. காலையில் பட்டி பிரிக்கப்பட்டு தனித்தனிக் குழுக்களாக அவை காடுகளுக்குள் மேய்வதற்காக அனுப்பப்படும். பகல் முழுக்க அவை பசுமைசெழித்த காட்டுக்குள் கழுத்துமணிகள் ஓசையிட வால்கள் வீசிப்பறக்க மேய்ந்துகொண்டிருக்கும். அவற்றைக் கண்காணித்தபடி காவல்நாய்கள் அருகே நின்றுகொண்டிருக்கும்.

பசுக்கள் மேயும்போது ஆயர்கள் உயரமான மரங்களின் மீதோ பாறைகள் மீதோ ஏறி அமர்ந்து அவற்றை கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். புல்லாங்குழல் இசைத்தபடியும் இடையை மரக்கிளைகளுடன் கொடிகளால் சேர்த்துக்கட்டிக்கொண்டு துயின்றபடியும் பகலெல்லாம் மேலேயே காலத்தை துழாவுவார்கள். ஆயர்களுக்கு புலிகளின் வரவை அறிவிக்கும் பறவை ஒலிகள் நன்றாகவே தெரிந்திருந்தது. நாய்களுக்கு வெகுதொலைவிலேயே புலிகளின் வாசனைகிடைத்துவிடும். புலிகள் தென்பட்டதுமே அவர்கள் தங்கள் இடைகளில் தொங்கும் குறுமுழவுகளை அடிக்கத் தொடங்க அப்பகுதி நோக்கி மற்ற அத்தனை ஆயர்களும் கூச்சலிட்டபடியும் பெருமுழவுகளை அடித்து ஓசையிட்டபடியும் திரண்டு வருவார்கள்.

மாலையில் வெயில் அணையத்தொடங்கியதுமே ஆயர்கள் கொம்புகளை ஊதி பசுக்களை திரட்டத்தொடங்குவார்கள். மழைநீர் சிற்றோடைகளாகத் திரண்டு பேரோடைகளாகி, ஆறாகி, அருவியாகி மலையிறங்குவதுபோல பசுக்கூட்டங்கள் முடிவில்லாமல் மலைமடம்புகள் வழியாக கீழே இறங்கிக்கொண்டிருக்கும். ஆயிரக்கணக்கான பசுக்களை ஒன்றாகத் திரட்டி ஒற்றைப்பட்டியாக ஆக்குவார்கள். பட்டியைச்சுற்றி மூங்கில்கழிகளை அமைத்து நாய்களைக் காவல் வைத்தபின் மூங்கில் கால்கள் மேல் அமைக்கப்பட்டிருக்கும் மாடங்களில் இரவுறங்குவார்கள்.

இரவில் ஒன்றுவிட்ட மாடங்களில் உள்ளவர்கள் விழித்திருக்கவேண்டுமென முறைவைத்திருந்தனர். இரண்டாம்ஜாமம் வரை விழித்திருப்பவர்கள் அதற்குமேல் அடுத்த மாடத்தில் இருப்பவர்களை துயிலெழுப்பிவிட்டு தாங்கள் படுத்துக்கொள்வார்கள். ஆயர்கள் நடுவே கதைசொல்பவர்களுக்கும் பாடுபவர்களுக்கும் பெருமதிப்பிருந்தது. புல்மெத்தைமேல் மான்தோலை விரித்து சாய்ந்துகொண்டு கதைசொல்லியை அமரச்செய்வார்கள். அவன் தன் சிறு கைத்தாளத்தை மீட்டி பழங்கதைகளையும் புராணங்களையும் சொல்வான். சந்திரவம்சத்து யயாதியின் மைந்தனின் கதையையும் கார்த்தவீரியனின் வெற்றிகளையும் பாடுவான். ஆயர்குடிகளில் புலியிறங்கிய நிகழ்வுகளையும் திமிறும் ஏறுகளை அடக்கி பெண்கொண்ட வீரர்களின் வரலாறுகளையும் விவரிப்பான்.

விடிந்ததும் பால்கறக்காத மாடுகள் முன்னதாகவே மலை ஏறிவிடும். பால்கறக்கப்பட்ட மாடுகள் தினையும் மாவும் உண்ட பின்னர் கன்றுடன் தனியாக மலைக்குக் கொண்டுசெல்லப்படும். கறந்தபால் காலையிலும் மாலையிலும் பெரிய கலங்களில் நிறைக்கப்பட்டு மாட்டுவண்டிகளில் கிராமத்துக்கு வந்துசேரும். இரவில் வந்துசேரும் பாலைக் காய்ச்சி உறைகுத்திவிட்டு ஆயர்குலப்பெண்கள் உறங்குவார்கள். காலையில் வரும்பால் ஊரிலிருந்து அப்படியே சிற்றாறுகளில் செல்லும் படகுகள் வழியாக ஊர்களுக்குக் கொண்டுசெல்லப்படும். ஆயர்குடிகள் முழுக்க பகலெல்லாம் பெரிய மத்துகள் ஓடும் ஒலிகேட்டுக்கொண்டிருக்கும். ஊரெங்கும் பால்வற்றும் வாசனையும் நெய்குறுகும் மணமும் மோர்புளித்தவாடையும் சாணிவீச்சத்துடன் கலந்திருக்கும். ஆயர்குடியில் பிறந்தவர்களால் அந்த நெடியில்லாமல் வாழமுடியாது.

பட்டிக்கு வந்த அன்றே வசுதேவன் திரும்பவும் மதுவனத்துக்கு ஓடிப்போவதைப்பற்றி எண்ணலானான். காலையில் தமையன்களுடன் காட்டுக்குள் சென்றது அவனுக்கு இடர்மிக்கதாக இருந்தது. கால்களை அறுக்கும் கூரியவிளிம்புள்ள புற்களும் பாதங்களைப்புரட்டும் கூழாங்கற்களும் ஆணிகளைப்போன்ற முட்களும் அடிக்கொருதரம் வளைந்து பாய்ந்து இலைத்தழைப்புக்குள் மறையும் பாம்புகளும் கொண்ட காடு அவன் புலன்களை பதற்றநிலையிலேயே வைத்திருந்தது. பிற ஆயர்களின் பார்வையில் அவன் கேலிக்குரியவனாக இருந்தான். அந்தக்கேலி அவனை எரியச்செய்தது.

அவன் காட்டுக்குள் சென்ற அன்று முழுக்க மழைபெய்தது. விடாமல் தொடர்ந்து சொட்டிக்கொண்டே இருந்த இலைகளாலான காட்டுக்குள் மரத்தின் மேல் பனையோலை குடைமறையை அணிந்தபடி ஒண்டிக்கொண்டு பகலெல்லாம் அமர்ந்திருர்ந்தான். கைகால்கள் ஈரத்தில் நடுங்கி வெளுத்து பின் மரத்தன. மாலையில் மரத்தில் இருந்து இறங்கும்போது கைவழுக்கி ஈரமான மரப்பட்டையில் உரசியபடி கீழிறங்கி மார்பும் முழங்கையும் உராய்ந்து தோலுரிந்தன. அந்த ரணம்மீது மழையின் ஈரம் பட்டு எரிந்தது.

அன்றிரவு கையும் மார்பும் நெருப்புபட்டதுபோல எரிய அவன் மாடத்தில் அமர்ந்திருந்தான். இடையர்கள் எட்டுபேர் சிறிய மாடத்துக்குள் ஒண்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். கீழிருந்து வந்த புகையில் மூச்சுத்திணறியது. அதில் தைலப்புல்லைப் போட்டிருந்தமையால் அந்த வாசனை தலையை கிறுகிறுக்கச்செய்தது. சுட்ட பலாக்கொட்டைகளை உரித்துத் தின்றபடி அவர்கள் ஊரில் எவருக்கு எவருடன் என்னென்ன கள்ளத்தொடர்புகள் உள்ளன என்று பேசிக்கொண்டிருந்தனர். அன்று அவர்களின் துயில்முறை வந்தபோது பக்கத்து மாடத்துக்கு சைகைகாட்டிவிட்டு அனைவரும் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொண்டு படுத்து மரவுரிப்போர்வையையும் தோலாடைகளையும் போர்த்திக்கொண்டு துயின்றனர்.

வசுதேவன் கயிற்றேணி வழியாக இறங்கி பட்டியை அடைந்தான். மழைபெய்துகொண்டிருக்க பசுக்கள் முதுகோடு முதுகொட்டி அசையாமல் நின்றுகொண்டிருந்தன. இருளில் அவற்றின் கண்களின் ஒளியால் கரிய திரவத்தாலான ஏரி ஒன்று அங்கே மின்னிக்கிடப்பதுபோலத் தோன்றியது. மழையில் பட்டியைச் சுற்றிக்கொண்டு வசுதேவன் ஓடத்தொடங்கினான். அவனைத் தொடர்ந்து ஆர்வமாக வால்சுழற்றி ஓடிவந்த பட்டிநாய்கள் அவன் பட்டியைத் தாண்டியதும் மெல்லக்குரைத்து எம்பிக்குதித்தபடி நின்றுவிட்டன. இருளில் சரிவரத் தெரியாத பாதை வழியாக ஊருக்குச் செல்வதைப்பற்றி அவன் எண்ணிப்பார்த்திருக்கவேயில்லை. ஆனால் ஓடத்தொடங்கியதும் வழியின் ஒவ்வொரு மரமும் பாறையும் துல்லியமாக நினைவுக்கு மீண்டுவந்தன.

VENMURASU_EPI_78

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

விடியற்காலையிலேயே அவன் மதுவனத்துக்கு வந்துவிட்டான். கிராமத்துக்குள் இருந்து பசுக்களின் கழுத்துமணி ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. வாயிலை மூடியிருந்த மூங்கில்படலை அவன் தொட்டதும் குரைத்தபடி காவல்நாய்கள் ஓடிவந்தன. அவன் வாசனையை அறிந்ததும் முனகியபடி வாலைவீசி எம்பிக்குதித்தன. வசுதேவன் தன் இல்லத்துத் திண்ணையை அடைந்து முழந்தாளிட்டு அமர்ந்துகொண்டான். கதவைத்தட்ட அவனுக்கு மனம் வரவில்லை. அப்படியே சரிந்து துயில்கொண்டிருந்த அவனை அவன் அன்னைதான் காலையில் எழுப்பினாள். அப்போதும் மழை தூறலிட்டுக்கொண்டிருந்தது. ஊரில் முதலில் எழுபவள் அவள்தான். உள்ளே சென்று படுக்கும்படிச் சொல்லி கறந்த பாலை சூடாக குடிக்கத் தந்தாள்.

அவனைக் காலையில் பார்த்ததும் பிருதை ஓடிவந்து கைகளைப்பற்றிக்கொண்டாள். அவளைக் கண்டதும் அவன் அழத்தொடங்கினான். அவள் அவனருகே அமர்ந்துகொண்டாள். “நான் காட்டுக்குச் செல்லமாட்டேன். என்னால் இடையனாக வாழமுடியாது” என்று வசுதேவன் அழுதான். பிருதை அவனிடம் “தந்தை உன்னை இடையனாக ஆக்கத்தானே கூட்டிச்சென்றார்?” என்றாள். “நான் கல்விகற்பேன். அரண்மனையில் வேலைபார்ப்பேன். இடையனாக ஆகவேண்டுமென்று சொன்னால் யமுனையில் குதித்து உயிர்விடுவேன்” என்றான் வசுதேவன்.

பிருதை அவன் தோளை மெதுவாகத் தொட்டாள். அவன் குலத்திலேயே அவனுக்கு நெருக்கமாக இருந்தவள் அவள் மட்டும்தான். அவளிடம்தான் அவன் தன்னுடைய கனவுகள் அனைத்தையும் சொல்லியிருந்தான். அதைவிட தன்னுடைய வெறுப்புகளையும் கசப்புகளையும் பகிர்ந்திருந்தான். அவன் சொல்வதற்குள்ளேயே அனைத்தையும் புரிந்துகொள்பவளாக அவளிருந்தாள். அவனுடைய எண்ணங்களை அவன் அவளில் ஆடியில் முகம்பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனைத்தேடிவந்த சூரசேனர் அவன் வீடுதிரும்பியதை அறிந்தபின் அமைதியானார். மாலையில் கிளம்புவதற்கு முன்னால் தோலாடையை தோளில் சுற்றிக்கொண்டு வீட்டு வாசலில் நின்று “அவனிடம் கிளம்பச்சொல்” என்று மனைவியிடம் ஆணையிட்டார். வசுதேவன் பின்பக்கம் தொழுவருகே அமர்ந்திருந்தான். அன்னை வந்து தந்தை அழைப்பதைச் சொன்னபோது “நான் போகமாட்டேன்” என்றான். “முதலில் தந்தை சொல்வதற்கு அடிபணி…” என்று அன்னை கடுமையாகச் சொன்னபோது வசுதேவன் அருகே இருந்த தூணை இறுகப்பிடித்துக்கொண்டான்.

சற்றுநேரத்தில் சூரசேனர் அங்கே வந்தார். அவனைப்பார்க்காமல் திரும்பி நின்றபடி கடுமையான குரலில் “நான் உன்னிடம் கிளம்பும்படிச் சொன்னேன்” என்றார். “நான் வரப்போவதில்லை…” என்றான் வசுதேவன். “ஏன்?” என்று அவர் அவனை நோக்கி அறியாமல் திரும்பி கேட்டார். அவனுக்கென ஒரு குரலும் மொழியும் இருப்பதை அப்போதுதான் அவர் உணர்ந்தார். அவர் உடல் நடுங்க கைகள் பதறத்தொடங்கின. “நான் மாடுமேய்க்க விரும்பவில்லை” என்றான் வசுதேவன். “ஏன்? அதுதான் உன் குலத்தொழில். உன் தந்தையும் தாதையும் மூதாதையரும் செய்த தொழில் அது” என்றார் சூரசேனர்.

“நான் அதைச் செய்யவிரும்பவில்லை” என்றான் வசுதேவன். மெதுவாக தன் சமநிலையை வரவழைத்துக்கொண்ட சூரசேனர் “அப்படியென்றால் என்னசெய்யப்போகிறாய்?” என்றார். “நான் படிக்கிறேன்” என்றான் வசுதேவன். “படித்து?” என அவர் தாழ்ந்த குரலில் கேட்டார். “அரண்மனை ஊழியனாக ஆகிறேன்.” சூரசேனர் தாடை இறுக “எந்த அரண்மனையில்?” என்றார். “மதுராவில்” என்று வசுதேவன் சொல்லிமுடிப்பதற்குள் சூரசேனர் ஓங்கி அவனை உதைத்தார். அவன் தெறித்து தொழுவத்து மூங்கிலை மோதி விழுந்தான். அவர் கூரையிலிருந்த கழியை உருவி அவனை சுழற்றிச் சுழற்றி அடித்தார். விதவிதமான உதிரிச்சொற்களும் உறுமல்களும் அவர் வாயிலிருந்து வெளிவந்தன.

பின்பு மூச்சிரைக்க அவர் நிறுத்திக்கொண்டார். நுனி ஒடிந்திருந்த கழியை வீசிவிட்டு தொழுவத்தின் சாணிப்புழுதியில் கிடந்த மகனைப்பார்த்தார். அவன் உடம்பெங்கும் குருதித்தீற்றல்களும் தடிப்புகளுமாக அடியின் வடுக்கள் தெளியத் தொடங்கியிருந்தன. “இனி அச்சொல் உன் நாவில் எழுந்தால் உன்னைக் கொல்லவும் தயங்கமாட்டேன்” என்றார் சூரசேனர். விசும்பியபடி எழுந்து அமர்ந்த வசுதேவன் தன் உடலைக் குறுக்கி தொழுவத்தின் மூங்கிலை மீண்டும் பற்றியபடி “நான் இடையனாக மாட்டேன்… என்னை அழைத்துக்கொண்டுசென்றால் பாம்பிடம் கையை நீட்டுவேன்” என்றான்.

தலைநடுங்க அவனையே பார்த்துக்கொண்டு நின்ற சூரசேனர் ஏதும் பேசாமல் திரும்பி நடந்து மறைந்தார். அன்னை அவனைக் கூப்பிட்டு உடலுக்கு நெய்யிடுவதற்காக வந்தாள். அவள் கையைத் தட்டிவிட்டுக்கொண்டு அவன் ஓடிச்சென்று ஊர்மன்றில் நின்ற அரசமரத்தில் ஏறி உயர்ந்த கிளையில் அமர்ந்துகொண்டான். பசித்தபோது அரசமரத்தின் உலர்ந்த பிசினை கிள்ளி உருட்டி எடுத்து வாயிலிட்டு மென்றான். தேடிவந்த பிருதை அவன் மேலே இருப்பதைக் கண்டுபிடித்தாள். கீழே வந்து நின்று “அண்ணா இறங்கி வா” என்று அழைத்தாள்.

அவன் இறங்கிவந்து அவளுடன் நடந்தான். அவள் அவனுக்கு பால்கஞ்சி கொண்டுவந்து தந்தாள். “நான் இங்கிருந்து மதுராவுக்கே ஓடிவிடுவதாக இருக்கிறேன்” என்றான் வசுதேவன். “மதுராவின் அரசர் உக்ரசேனர் நமக்கு பெரியதந்தை. அவரிடம் சென்றால் என்னை அங்கேயே வைத்துக்கொள்வார். எனக்கு கல்வியும் அரசுப்பொறுப்பும் அளிப்பார்.” பிருதை “நான் எங்கே செல்வது?” என்றாள். வசுதேவன் சற்று சிந்தித்தபின் “நான் அங்கே சென்றபின் உன்னை வந்துகூட்டிச்செல்கிறேன்” என்றான்.

ஆனால் அவள்தான் முதலில் மதுவனத்தைவிட்டுச் சென்றாள். சூரசேனரின் தந்தை ஹ்ருதீகரின் தங்கை மாதவியை மார்த்திகாவதியை ஆண்ட போஜன் மணம்புரிந்துகொண்டான். அவர்களுக்குப் பிறந்த குந்திபோஜன் மார்த்திகாவதியின் அரசனானான். ஏழுமாதரை மணந்து பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருந்தபின்னரும் குந்திபோஜனுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. எட்டாண்டுகளுக்கு முன்பு யாதவர்களின் காளிந்திபோஜனம் என்னும் குலவிருந்து நிகழ்ச்சியில் குந்திபோஜனும் சூரசேனரும் பங்கெடுத்தனர். உணவுக்குப்பின் வெற்றிலைமென்ற சூரசேனர் தவறுதலாக அதை உமிழ்ந்தபோது அது குந்திபோஜனின் ஆடையில் பட்டுவிட்டது.

சூரசேனர் கைகூப்பி பொறுக்கும்படி கோரி, தானே அதை நீரள்ளி கழுவிவிடுவதாகச் சொன்னார். குந்திபோஜன் “சூரசேனரே, நீர் என்னுடைய முறைத்தமையன் அல்லவா? இதை அன்பின் அடையாளமாகவே கொள்கிறேன்” என்றான். முகம் மலர்ந்த சூரசேனர் “இந்தச் சொற்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்” என்றார். குந்திபோஜன் “விருஷ்ணிகுலம் அளித்த அன்னைக்காக போஜர்குலமும் கடன்பட்டிருக்கிறது” என பதில் சொன்னான்.

அன்று மாலை யமுனைக்கரையில் அவர்களனைவரும் மதுவருந்தி உரையாடிக்கொண்டிருக்கையில் குந்திபோஜன் தனக்கு குழந்தைகளில்லாமையால் அரசுதுறந்து வனம்புகவிருப்பதாகச் சொன்னான். அவனைச்சுற்றி யாதவகுலத்தின் அனைத்து குலத்தலைவர்களும் அமர்ந்திருந்தனர். மதுவின் மயக்கிலிருந்த சூரசேனர் உணர்வெழுச்சியுடன் எழுந்து “போஜர்களுக்கு விருஷ்ணிகள் மேலுமொரு அன்னையை அளிப்பார்கள். இப்போது என் மனைவி கருவுற்றிருக்கிறாள். அதில் பிறக்கும் பெண்குழந்தையை முறைப்படி உங்களுக்கு அளிக்கிறேன். அவள் உதரத்தில் உன் குலம்பெருகட்டும்” என்றான். மனம் மகிழ்ந்த குந்திபோஜன் “இது ஆணை அல்லவா?” என்றான். “ஆணை ஆணை ஆணை” என மும்முறை கையடித்து சொன்னார் சூரசேனர்.

ஆனால் செந்நிறப் பேரழகுடன் பிருதை பிறந்தபோது அவளை கையளிக்க முடியாது என்று சூரசேனரின் தாய் பத்மை உறுதியாக மறுத்துவிட்டாள். ஹ்ருதீகரின் குலத்தின் நீட்சியாக அவள் ஒருத்தியே இருக்கிறாள் என்றாள். குலநீட்சியாக பெண்மகவு அமையவில்லை என்றால் நீத்தாரன்னையரின் சினம் வந்துசேரும் என்று அச்சுறுத்தினாள். மும்முறை குந்திபோஜன் தன் தூதர்களை அனுப்பியும் சூரசேனரால் முடிவைச் சொல்லமுடியவில்லை. பத்மை மறைந்தபின்பு அவ்வாறு மகளை அளிப்பதை அவள் நீத்தாருலகிலிருந்து தடுப்பாள் என்ற எண்ணம் அவருள் வலுவாக எழுந்தது. ஆகவே மகளை அளிக்கவியலாது என்று பதிலிறுத்தார்.

குந்திபோஜன் அடுத்த காளிந்திவிருந்தில் குலமூதாதையர் முன்னால் சூரசேனரின் வாக்குறுதியை முன்வைத்து அறமுரைக்கும்படி கோரப்போவதாக சூரசேனர் அறிந்தார். நிலைகொள்ளாத உள்ளத்துடன் அவர் ஆயர்குலத்தின் மூத்தவர் சிலரிடம் அதைப்பற்றி வினவினார். சூரசேனர் வாக்குறுதியளித்தமைக்கு குலமூதாதையர் சான்றென்பதனால் அதை மறுக்க முடியாது. மகள்கொடை மறுத்தால் குந்திபோஜன் சூரசேனரை யாதவர்குலம் விலக்கிவைக்கவேண்டுமென்று வருணன் மேல் ஆணையாகக் கோருவான். அதற்கு அனைவரும் கட்டுப்பட்டாகவேண்டும்.

அதைத் தவிர்க்கும் வழி ஒன்றே என்றார் ஒரு முதியவர். யாதவர்குலம் பெண் குரல் கேட்காமல் எம்முடிவையும் எடுக்கமுடியாது. அதை மூதன்னையர் ஏற்கமாட்டார்கள். சபைமுன்னிலையில் பிருதை குந்திபோஜனுக்கு மகளாகச் செல்ல மறுத்தால் மூன்றுவருடத்துக்கு அம்முடிவை ஒத்திப்போட குலச்சபை ஒப்புதலளிக்கும். அப்படி மும்முறை ஒத்திப்போடமுடியும். அதற்குள் பிருதைக்கு பதினான்கு வயதாகிவிடும். அதன்பின் அவள் முடிவெடுக்கலாம். அவள் விரும்பவில்லை என்றால் அவளை கோர குந்திபோஜனுக்கு உரிமையில்லாதாகும்.

சூரசேனர் பிருதையை அழைத்து குந்திபோஜனின் நாட்டுக்குச் செல்ல விருப்பமில்லை என்பதை குலமன்றில் சொல்லும்படி கோரினார். மூன்று தமக்கையரையும் லவணர்குலத்துக்கு அளித்துவிட்ட நிலையில் விருஷ்ணிகுலத்தில் ஹ்ருதீகரின் குருதியாக எஞ்சியிருக்கும் கருவறை அவளுடையதே என்றார். கடைமகவாகிய அவளையே பத்து தமையன்களும் நம்பியிருப்பதைச் சொல்லி எவ்வண்ணம் சபையேறி எச்சொற்களைச் சொல்லி மறுப்பை வெளியிடவேண்டும் என்று பயிற்றுவித்தார். பிருதை அவரது சொற்களை நன்கு உளம்கொண்டு மீட்டுச் சொல்லவும் செய்தாள்.

யமுனைக்கரையில் குலக்கூடல் விழவு தொடங்கியது. ஆயர்குடிகள் கூடி கள்விருந்தும் ஊன்விருந்தும் மலர்சூழாட்டும் நீர்விளையாட்டும் ஆகோளாடலும் ஏறுகோளாடலும் செய்து மகிழ்ந்தனர். நாளிருண்டபின்னர் யமுனையின் கரையில் புல்வெளியில் அனைவரும் குழுமியபோது நறுவெற்றிலை கைமாறி மகிழ்ந்திருக்கையில் குந்திபோஜன் எழுந்து தன்குலத்துக்கு வாக்களிக்கப்பட்ட மகள்கொடையை சூரசேனர் நிகழ்த்தவேண்டுமென்று கோரினார். சூரசேனர் தன் மகள் பிருதை குந்திபோஜனின் அரண்மனைக்குச் செல்வதை விரும்பவில்லை என்று பதிலுரைத்தார். “அவளுடைய விருப்பே இக்குடியின் கொள்கையாகும்” என்றனர் மூத்தோர்.

பிருதையை அவைக்கு அழைத்தனர். அவள் வசுதேவனுடன் நடந்து வந்து மன்றமைந்திருந்த அரசமரமேடைக்குக் கீழே மேடைக்கல்லைப் பிடித்தபடி தலைகுனிந்து நின்றாள். அருகே வசுதேவன் நின்று மேடையிலமர்ந்திருந்தவர்களை தன் தெளிந்த விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தான். குலமூத்தாரான முதியவர் ஒருவர் “அன்னையே, இந்த மன்றுக்கு வருக” என்று அழைத்ததும் அவள் மேடையேறி முதியவர்கள் நடுவே நின்றாள்.

மலர்விளையாடலுக்காக அணிந்திருந்த வெண்ணிற ஆடையெங்கும் பலவகையான வண்ணங்கள் படிந்து பெரியதொரு மலர் போல நின்ற பிருதையிடம் முதியவர் “அன்னையே, தங்களை தங்கள் தந்தை தன் முறையிளவலாகிய குந்திபோஜருக்கு மகள்கொடையாக அளிப்பதாக வாக்குகொடுத்திருக்கிறார். அந்த வாக்குக்கு நாங்களனைவரும் சான்று. தங்களுக்கு குந்திபோஜரின் மகளாகச் செல்வதற்கு உடன்பாடுள்ளதா என்று தெரிவியுங்கள்” என்றார்.

பிருதை தலையைத் தூக்கி தெளிந்த விரிவிழிகளால் அவையை நோக்கி “குலமூத்தாரே, நான் என் தந்தையின் வாக்கின்படி குந்திபோஜருக்கு மகளாகச் செல்ல முழு விருப்பு கொண்டுள்ளேன்” என்றாள். அவளுடைய இனிய கூரிய குரலை அங்கிருந்த அனைவரும் கேட்டனர். சூரசேனர் அவளுடைய அக்குரலை அதற்கு முன்னர் கேட்டதே இல்லை. அவள் அவரிடம் தலையசைப்பாலும் ஓரிரு உதிரிச்சொற்களாலும் மட்டுமே அதுவரை உரையாடியிருந்தாள். தன்னை மறந்து பீடத்தை விட்டு எழுந்து “மகளே பிருதை!” என்றார்.

முதியவர் “அன்னையே, நம் குலவழக்கத்தையும் தாங்களறிந்திருக்கவேண்டும்… தங்கள் தந்தை தங்களை முறைப்படி நீர்வார்த்து குந்திபோஜருக்குக் கையளிப்பார். அதன்பின் உங்களுக்கும் நீங்கள் பிறந்த குலத்துக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இக்குலத்தின் பெயரையோ சின்னங்களையோ உறவுகளையோ நீங்கள் தொடர முடியாது. இங்குள்ள பிறப்பிலும் இறப்பிலும் உங்களுக்கு செய்தி இல்லை. விழவுகளில் உரிமையும் உடைமைகளில் பங்கும் இல்லை. பிடுங்கிநடப்படும் நாற்றுபோல குந்திபோஜரின் நாட்டில் நீங்கள் வேரூன்றவேண்டும். உங்கள் குலம் குந்திபோஜரின் குலம். நீங்கள் போஜவம்சத்தைச் சேர்ந்தவரென்றே அறியப்படுவீர்கள்” என்றார். “ஆம் தெரியும்” என்று பிருதை தலையசைத்தாள். “நான் குந்திபோஜரின் மகளாகவே செல்லவிழைகிறேன்” என்று மீண்டும் சொன்னாள்.

குந்திபோஜன் மலர்ந்த முகத்துடன் எழுந்து கைகளைக் கூப்பியபடி “என் மூதாதையர் என் மீது கருணையுடன் இருக்கிறார்கள். எனக்கு மறுக்கப்பட்ட மகவுகளை எல்லாம் இதோ ஒரு பெண்ணுருவில் எனக்களிக்கிறார்கள் என் குலதெய்வங்கள்” என்றான். “அன்னையே, என் குலத்துக்கு வருக….உன் உதரத்தில் என் மூதாதையர் பிறந்தெழுக” என்று சொன்னபோது அவன் மனம் விம்மி கண்ணீர் விட்டு அழத்தொடங்கினான். கும்பிட்ட கைகளை நெற்றியிலமர்த்தி அழும் அவனை அவன் தோழனான பகன் தோளணைத்து ஆறுதல்படுத்தினான்.

அங்கேயே யமுனையின் நீரை மரக்குவளையில் அள்ளிக்கொண்டுவந்து பிருதையை குந்திபோஜனுக்கு நீரளிப்பு நிகழ்த்தினார் சூரசேனர். அவளுடைய சிவந்த சிறிய கையைப் பற்றி குந்திபோஜனின் கொழுத்தபெரிய கைகளுக்குள் வைத்து ‘அளித்தேன் அளித்தேன் அளித்தேன்’ என்று மும்முறை சொல்லி விலகியதும் அவருடைய அணைகளும் உடைய கண்ணீர் விடத்தொடங்கினார். அங்கிருந்த விருஷ்ணிகள் மட்டுமல்ல போஜர்களும் கண்கலங்கினர். பிருதை மட்டும் தெய்வச்சிலைகளுக்குரிய அலையற்ற முகத்துடன் நின்றாள்.

மேடைவிட்டிறங்கிய சூரசேனரின் கைகளைப் பற்றிக்கொண்டு விருஷ்ணிகுலத்திலேயே மூத்தவரான கார்கிகர் “என்ன செய்துவிட்டாய்! எதை இழந்துவிட்டாய்! அதோ மன்றில் அவள் நிற்கும் நிமிர்வைப்பார். அவள் எளிய ஆயர்குலத்துப்பெண் அல்ல. மண்ணில் வந்த பேரரசிகளில் ஒருத்தி. என்றோ ஜனபதங்களை அவள் ஆளப்போகிறாள். சதலட்சம் மானுடர்களின் விதியை அவள் வரையப்போகிறாள்” என்றார். “அவள் இறந்திருந்தால்?” என வெறுப்பில் கோணலாகிய முகத்துடன் ஈரம் நிறைந்த கண்களுடன் கேட்டார் சூரசேனர். “அவள் இறந்ததாக எண்ணிக்கொள்கிறேன்… ஆம் அவள் இறந்துவிட்டாள்.”

மன்றில் எழுந்த குலமூத்தாரான சோமகர் “இதோ இக்கணம் முதல் இந்த மகளை குந்திபோஜரின் குருதி என அறிவிக்கிறேன். இவள் இனி குந்தி என அறியப்படட்டும்” என்றார். ‘ஓம் அவ்வாறே ஆகுக!’ என அங்கிருந்த அனைவரும் வாழ்த்தி மலரை வீசினர்.

அங்கிருந்தே பிருதை குந்திபோஜனின் நகரான மார்த்திகாவதிக்குக் கிளம்பிச்சென்றாள். மார்த்திகாவதியில் இருந்து குந்திபோஜனின் அரசியான தேவவதியும் அவள் சேடிகளும் வந்த பெரிய கூண்டுவண்டி சாளரங்களில் செந்நிறத்திரைகள் நெளிய மார்த்திகாவதியின் சிம்மக்கொடி படபடக்க நின்றுகொண்டிருந்தது. காவலரும் சேவகரும் காத்து நின்றிருந்தனர்.

மன்றில் இருந்து இறங்கிய பிருதை தன் தாயிடம் சென்று தாள்பணிந்து வணங்கினாள். மரீஷையின் முகத்தில் அப்போதும் துயரம் தெரியவில்லை என்பதை அப்பால் நின்ற சூரசேனர் கண்டார். மரீஷை பிருதையின் தலையில் கைவைத்து ஆசியளித்தபின் அவள் கையைப்பற்றி சூரசேனரைநோக்கி கொண்டுவந்தாள்.

தன் ஒன்பது மைந்தர்களுடன் ஒரு சாலமரத்தடியில் நின்றிருந்த சூரசேனர் தணிந்த குரலில் மூத்தவனாகிய வசுவிடம் “நான் அவளை வாழ்த்தப்போவதில்லை. உங்கள் வாழ்த்துக்களும் அவளுக்கு கொடுக்கப்படலாகாது. நமது வாழ்த்துக்களின்றி அவள் சென்றாள் என்பது குலநினைவில் வாழட்டும். இது என் ஆணை” என்றார். அவர் என்னசெய்யப்போகிறார் என்பதை அவரது குலத்தவரின் ஆயிரம் விழிகள் அங்கே சூழ்ந்து கவனித்துக்கொண்டிருந்தன என அவர் அறிந்திருந்தார்.

திடமான காலடிகளுடன் நிமிர்ந்த தலையுடன் அவர்களை நெருங்கி வந்த மரீஷை முதலில் தன் மைந்தர்களை நோக்கி “மைந்தர்களே, உங்கள் தங்கையை வாழ்த்தி வழியனுப்புங்கள். உங்கள் ஒவ்வொருவரின் குருதியும் அவளுடன் எப்போதுமிருக்கவேண்டும்” என்று திடமான குரலில் ஆணையிட்டாள். அவளைப்போன்றே கரிய நிறத்துடன் பெரிய பற்களும் வெண்விழிகளுமாக நின்றிருந்த மூத்த மகன் வசு முன்னால் நகர்ந்து தலைவணங்கி “ஆணை அன்னையே” என்றான். அச்சொல்லை ஒருபோதும் அவன் தன்னிடம் சொன்னதில்லை என்பதை அக்கணத்தில்தான் சூரசேனர் அறிந்தார்.

தன் ஒன்பது மைந்தர்களும் நிரையாக நின்று தங்கள் காலை பணிந்து எழுந்த பிருதையை வாழ்த்துவதை சூரசேனர் திகைத்த விழிகளுடன் பார்த்து நின்றார். மரீஷை அவரிடம் “விருஷ்ணிகுலத்தவரே தங்கள் வாழ்த்துக்களை மகளுக்கு அளியுங்கள்” என கனத்த குரலில் ஆணையிட்டாள். அவளுடைய அந்தக்குரலையும் அதுவரை அவர் கேட்டதேயில்லை என்று சூரசேனர் உணர்ந்தார். அதை அவரால் மீறமுடியாதென்றும் அறிந்தார். குனிந்து வணங்கிய மகளின் தலையில் கைவைத்து “நன்மக்களைப் பெறு. உன் குலம் தழைக்கட்டும்” என நற்சொல்லிட்டார்.

அந்த ஒருநாளில் சூரசேனர் அவர் எழுபதாண்டுகளாக வாழ்ந்து வந்த வாழ்க்கையை அறிந்துகொண்டார். எவற்றின் மேல் நடந்தோமென்றும் எங்கே அமர்ந்திருந்தோம் என்றும் எதை உண்டோம் என்றும் உணர்ந்ததாக அவர் கார்கிகரிடம் பின்னர் சொன்னார். “என்னைக் கட்டியிருந்த அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்துவிட்டேன் மாமனே. நான் இன்று மீண்டும் சிறுமகவாகி அன்னையின் கைகளில் வாழ்கிறேன்” என்றார்.

பிருதை குந்திபோஜனுடன் மார்த்திகாவதிக்கு கிளம்பிச்சென்றபின் மூன்றுமாதம் கழித்து வசு தன் தந்தையின் ஓலையுடன் தன் கடையிளவல் வசுதேவனை அழைத்துக்கொண்டு மதுராவுக்குச் சென்று அங்கே ஆட்சிசெய்திருந்த உக்கிரசேனரின் அரண்மனையில் கல்வி கற்பதற்காகச் சேர்த்தான். வசுதேவன் கிளம்பும்போது சூரசேனரின் கால்களில் விழுந்து வாழ்த்துபெற்றான். அவன் தலையில் கையை வைத்து சூரசேனர் சொன்னார் “நீ உன் அறத்தை தேடிச் செல்கிறாய். அரசியல் உனக்கானதென்றால் அவ்வாறே ஆகுக. ஆனால்…”

சற்று தயங்கியபின் அவர் தொடர்ந்தார் “கண்ணீரினாலும் குருதியினாலும்தான் எப்போதும் அரசியல் ஆடப்படுகிறது. பிறருடைய கண்ணீரும் குருதியும் என்றே நாம் நினைப்போம். அவை நம் கண்ணீரும் குருதியும் என அறியும் கணம் ஒன்று வரும்…” அச்சொற்களை அப்போது புரிந்துகொள்ளவில்லை என்றாலும் அதன் ஒவ்வொரு ஒலியையும் வசுதேவன் வாழ்நாளெல்லாம் நினைவில் வைத்திருந்தான்.

நூல் இரண்டு – மழைப்பாடல் – 27

பகுதி ஆறு: தூரத்துச் சூரியன்

[ 2 ]

தசபதம் என்றழைக்கப்பட்ட அடிக்காட்டுப்பகுதியின் யாதவர்குலத்தலைவராக இருந்த சூரசேனரின் கடைசிமைந்தனாகிய வசுதேவன் இளமையிலேயே தங்கை பிருதையிடம்தான் நெருக்கமானவனாக இருந்தான். அவன் பிறக்கும்போதே அவன் தந்தைக்கு வயதாகிவிட்டிருந்தது. நீண்ட நரைத்த தாடியும் வெண்ணிறமான தலைப்பாகையும் தோள்களில் போடப்பட்ட கனத்த கம்பிளிச்சால்வையும் காதுகளில் குலத்தலைமையின் அடையாளமான பொற்குண்டலங்களும் கொண்ட முதியவரைத்தான் அவன் தந்தையாக அறிந்திருந்தான். அவர் அவனிடம் பெரும்பாலும் பேசியதேயில்லை. அவர் பொதுவாக எவரிடமும் பேசுவதேயில்லை. யாதவர்கள் இளமையிலேயே சொல்லவிதலையும் விழைவவிதலையும் பழகி தங்கள் இயல்பாகக் கொண்டிருந்தனர்.

தசபதத்தின் தலைவராக இருந்த ஹேகயவம்சத்து ஹ்ருதீகர் மறைந்தபோது சூரசேனருக்கு பதினாறு வயது. அவர்களின் கிராமமான மதுவனம் தசபதத்தின் வடக்கு எல்லையில் இருந்தது. தசபதத்திலேயே அதுதான் பெரிய ஊர். பெரிய பிலக்‌ஷ மரங்களாலான வேலிக்குள் வட்டமாக அமைந்த இருநூறு இல்லங்களும் நடுவே அரசமரத்தடியில் ஊர்மன்றும் கொண்ட இடையர்கிராமமான மதுவனத்தின் நடுவே கனத்தமரங்களால் அடித்தளமிடப்பட்டு மரச்சுவர்கள்மேல் மரப்பட்டைக்கூரையிடப்பட்ட ஊர்த்தலைவரின் மாளிகை இருந்தது. முன்பொருகாலத்தில் கோசலமன்னரான சத்ருக்னன் வந்து தங்கிய மாளிகை அது என புகழ்பெற்றிருந்தது.

யாதவர்களில் முதன்மைக்குலமான விருஷ்ணிகளில் பிறந்த ஹ்ருதீகரின் மைந்தரான சூரசேனரை தசபதத்தின் நூற்றியாறு யாதவக்கிராமங்களில் வாழ்ந்த எட்டு குடிகள் இணைந்த அவையில் குடிச்சபைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவருக்கு அக்குடிகளில் இளமையானதான லவண குலத்தைச்சேர்ந்த மரீஷையை மணம்புரிந்து வைத்தனர்.

லவணர்கள் பத்து தலைமுறைக்கு முன்புவரை தசபதத்துக்கு அப்பாலிருந்த சிலாமுகம் என்னும் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும் யாதவர்களுக்கும் தலைமுறைதலைமுறையாக போர் நடந்துகொண்டிருந்தது. காட்டுக்குள் மேய்ச்சலுக்குச் செல்லும் கன்றுகளை லவணர் கவர்ந்துசெல்வதும் அதைத்தடுக்கமுயலும் யாதவர்களைக் கொல்வதும் அன்றாட நிகழ்ச்சியாக இருந்தது. லவணர்கள் காட்டை நன்கறிந்திருந்தார்கள். அவர்களின் விற்கள் திறம்கொண்டவையாகவும் அவர்களின் உள்ளம் இரக்கமற்றதாகவும் இருந்தது. அவர்களின் தலைவனாகிய மதூகன் யாதவர்களை விரும்பாதவனாக இருந்தான்.

சூரசேனரின் மூதாதையான கிருதவீரியனின் காலகட்டத்தில் அன்று யமுனைப்பகுதியை ஆட்சி செய்திருந்த கோசலநாட்டின் இக்‌ஷுவாகு வம்சத்து அரசர்களில் இளையவனும் பெரும்புகழ்ராமனின் இளவலுமாகிய சத்ருக்னனிடம் சென்று முறையிட்டனர். அவன் படையுடன் வந்து தசபதத்தை அடைந்தான். அவனுடைய படைகள் மலைஏறிச்சென்று லவணர்களை வென்றன. மதூகனை சத்ருக்னன் கொன்றான். மதூகனின் மகனாகிய மாஹன் தசபதத்தின் யாதவர்களுடன் ஒத்துச்செல்லவும் அங்கிருந்த ஏழு குடிகளுடன் எட்டாவதாக இணைந்துகொள்ளவும் ஒப்புக்கொண்டான்.

லவணகுலம் அவ்வாறாக அடிக்காட்டுக்கு இடம்பெயர்ந்தது. வேட்டையை விட்டுவிட்டு மேய்ச்சலுக்கு வந்தது. ஆனால் யாதவர்கள் லவணர்களை தங்களுக்கு நிகரானவர்களாக நினைக்கவில்லை. லவணர்கள் அப்போதும் வேட்டைக்காரர்களின் மனநிலையையும் வாழ்க்கையையுமே கொண்டிருந்தனர். காட்டுவேடர்களின் வழக்கப்படி அவர்கள் வருடத்தில் ஒருமுறை சித்திரைமுழுநிலவின் குலதெய்வபூசைநாளில் மட்டுமே நீராடினர். நீராடாமலிருப்பது காடுகளுக்குள் பிற விலங்குகளின் மோப்பத்துக்குச் சிக்காமல் உலவுவதற்குரிய வழிமுறையாக அவர்களால் நெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த வழக்கம். அவர்கள் பிறர் தொட்ட உணவை உண்ணுவதோ பிறரை தங்கள் இல்லத்துக்கு அழைப்பதோ இல்லை. ஆகவே பிறரும் அவர்களை அப்படியே நடத்தினர்.

அவர்கள் தங்களுக்குள் மட்டும் லாவணம் என்னும் மொழியில் பேசிக்கொண்டனர். அவர்களின் பெண்களும் குழந்தைகளும் யாதவர்கள் பேசிய யாதகி மொழியை கற்றுக்கொள்ளவேயில்லை. குலத்தலைவர்கள் மட்டும் பொதுச்சபைகளில் மழலையில் யாதகி மொழியைப் பேசினார்கள். அவர்களின் மொழியே அவர்களை நகைப்புக்குள்ளானவர்களாக ஆக்கியிருந்தது. காட்டைவென்ற லவணர்களால் மொழியை வெல்லமுடியவில்லை. மொழியால் ஆன சமநிலத்தில் அவர்கள் அன்னியர்களாகவே இருந்தனர்.

யாதவர்களின் வழக்கப்படி குலத்தலைவராக அமர்பவர் எட்டு யாதவகுலங்களில் ஒன்றிலிருந்து மணம்கொள்ளவேண்டும். ஹ்ருதீகர் சிரு குடியில் இருந்தும் வைரி குடியில் இருந்தும் இரு மகளிரை மணம்புரிந்துகொண்டிருந்தார். அவர்களில் சிரு குடியைச் சேர்ந்த சம்பைக்கு தேவவாஹன் கதாதனன் என்னும் இருமைந்தர்கள் பிறந்தனர். வைரி குடியைச் சேர்ந்த பத்மைக்கு கிருதபர்வன் சூரசேனன் என்னும் இரு மைந்தர்கள் பிறந்தனர். யாதவர்களின் வழக்கப்படி இளமையிலேயே தேவவாஹனும் கதாதனனும் கிருதபர்வனும் தந்தையின் மந்தையைப்பிரித்து தங்கள் பங்குகளைப் பெற்றுக்கொண்டு புதிய மேய்ச்சல்நிலங்களை நோக்கிச்சென்றனர். அவர்கள் கங்கைக்கரையிலும் இமயத்தின் அடிவாரத்திலும் புதிய யாதவநிலங்களை அமைத்துக்கொண்டனர். சூரசேனர் தந்தையின் எஞ்சிய மந்தைகளுக்கு உரிமையாளராக தசபதத்திலேயே இருந்தார்.

குடிமூதாதையர் கூடிய சபையில் அடுத்ததாக சூரசேனர் லவணகுலத்தைச்சேர்ந்த பெண்ணை மணந்துகொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டது. லவணர்களை பிற யாதவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு அது இன்றியமையாதது என்றனர் குடிமூத்தார். ஹ்ருதீகரின் இரண்டாவது மனைவியும் சூரசேனரின் அன்னையுமான வைரிகுடியைச் சேர்ந்த பத்மை அதைக்கேட்டு கடும்சினமடைந்து கண்ணீருடன் கைதூக்கி அவச்சொல்லிட்டவளாக சபையில் இருந்து வெளியேறினாள். என் மைந்தனுக்கு பச்சைஊன் உண்ணும் குடியில் பெண்கொள்வதை விட நான் உயிர்விடுவேன் என்று சொல்லி இல்லத்தில் தன் அறைக்குள் சென்று கதவைமூடிக்கொண்டாள்.

பதினாறு வயதான சூரசேனர் கதவைத் தட்டி “நான் ஹ்ருதீகரின் மைந்தன் அன்னையே. நான் எனக்கென எதையும் செய்துகொள்ளமுடியாது. எந்தையின் ஆணையை மட்டுமே நான் நிறைவேற்றமுடியும். சபையில் வந்தமர்ந்திருக்கும் குண்டலதாரிகளான மூதாதையர் அனைவரும் என் தந்தைவடிவமேயாவர்” என்றார். “என் அன்னையாகிய நீ ஹ்ருதீகரின் துணைவி. அவரது ஆணையை நீயும் ஏற்றுக்கொள்ளவேண்டியவளே” என்றார். பத்மை உள்ளே பதில் சொல்லாமல் அழுதுகொண்டிருந்தாள். “நான் இந்தக் கதவுக்கு முன் உன் காலடியில் என அமர்ந்துகொள்கிறேன். நீ வாயில் திறந்தால் என் தந்தையின் மைந்தனாக வாழ்கிறேன். வாயில் திறக்கவில்லை என்றால் உள்ளே நீயும் வெளியே நானுமாக உயிர்துறந்து தந்தையை அடைவோம்” என்று சொல்லி சூரசேனர் வாயிலிலேயே அமர்ந்துகொண்டார்.

அன்னை வாயிலைத் திறக்கவேயில்லை. மைந்தன் கதவைவிட்டு நீங்கவுமில்லை. அந்த ஊண்துயில்நீப்பு நோன்பை சாளரங்கள் வழியாக நோக்கியபடி சூரசேனரின் விருஷ்ணிகுலத்து யாதவர்கள் முழுக்க அங்கேயே நின்றிருந்தனர். நான்காம் நாள் அன்னை உள்ளிருந்து மெல்ல “சூரசேனா சூரசேனா” என அழைத்தாள். மைந்தனின் ஒலி கேட்கவில்லை என்பதை உய்த்து மெல்ல கதவைச் சற்றே திறந்து நோக்கினாள். மயங்கி கதவில் சாய்ந்துகிடந்த மைந்தனைக் கண்டு அலறியபடி அள்ளி அணைத்துக்கொண்டாள். “நீ நினைப்பதே ஆகட்டும்….நீயன்றி நான் வேறுலகை அறியேன்” என்று அவள் கூவியழுதாள்.

அவ்வாறாக சூரசேனர் லவணகுலத்தைச்சேர்ந்த மரீஷையை மணந்தார். மரீஷை அவரைவிட மூன்றுவயது குறைந்தவள். ஆனால் அவள் அவரைவிட ஓரடி உயரம் கொண்டவளாகவும் இருமடங்கு எடைகொண்டவளாகவும் இருந்தாள். கன்னங்கரிய நிறமும் நதிநுரைபோல சுருண்டகூந்தலும் பெரிய பற்களும் கொண்டவளாக இருந்தாள். குடிச்சபையில் லவணர்களின் தலைவனாகிய கலன் தன் மூத்தமகளை சூரசேனருக்கு அறத்துணைவியாக அளிக்கவிருப்பதாகச் சொன்னபோதுதான் தந்தையின் பின்னால் இடையில் அணிந்த ஆட்டுத்தோல் ஆடையை முலைகளுக்குமேல் தூக்கி தோளில் முடிச்சுபோட்டு தலையில் சிவந்த காட்டுமலர் சூடி கழுத்தில் செந்நிறமான கல்மாலை அணிந்து நின்றிருந்த மரீஷையை சூரசேனர் கண்டார். இருளுக்குள் கிடக்கும் வெள்ளிக்காசுகள் போல அவள் கண்வெள்ளைகள் தெரிந்தன.

அவளைக் கண்டதுமே குடிச்சபையில் ஓர் அமைதி பரவியது. குடிமூத்தாரான காளிகர் தயங்கியபடி சூரசேனரிடம் மணம் கொள்ள அவருக்குத் தடையில்லை அல்லவா என்று கேட்டபோது “இல்லை, குடிமுறையே என் வழி” என்று அவர் சொன்னார். யாதவமுறைப்படி சூரசேனர் ஏழு கன்றுள்ள வெண்பசுக்களை மரீஷையின் தந்தையான கலனுக்கு கையளித்து அவர் மகளை கன்னிக்கொடையாகப் பெற்றுக்கொண்டார். அவள் கழுத்தில் விருஷ்ணிகுலத்தின் இலச்சினையான அக்னிவர்ண கருடனின் சின்னத்தைப் பொறித்த மங்கலத்தாலியை சூரசேனர் கட்டினார். மணமகள் அப்போது வழக்கப்படி நாணித்தலைகுனியாமல் திகைத்த வெண்விழிகளுடன் அனைவரையும் மாறிமாறி நோக்கியபடி நின்றிருந்தாள்.

மரீஷை விரல் தொட்ட அனைத்து பால்குடங்களும் திரிந்தன என்றாள் பத்மை. அவள் நடந்தபோது மரத்தாலான இல்லம் அதிர்ந்தது என்றனர் முதுபெண்டிர். அவளுக்கு நீராடும் வழக்கமோ பற்களைத் தீட்டும் முறையோ இல்லை என்றனர் ஆயர்மகளிர். அவளுக்கு யாதகி மொழியே தெரியவில்லை என்று சூரசேனர் கண்டுகொண்டார். செம்மொழியிலோ ஒருசொல்லும் அவளறிந்திருக்கவில்லை. அவளிடம் அவர் பேசிய சொற்களெல்லாம் பாறைமேல் மழை என வழிந்தோடின. செவியிழந்த பசுவை மேய்ப்பதுபோன்றது அவளுடனான காதலென அவர் அறிந்தார். அவர் அவளைப்பற்றி எவரிடமும் ஒரு குறைச்சொல்லும் சொல்லவில்லை. அவளிடம் பேசுவதற்கு கண்களாலும் கைகளாலும் ஒரு மொழியை அவரே உருவாக்கிக் கொண்டார்.

ஆனால் அவளை அவரது உடல் அறிந்திருந்தது. அவளுடைய உடலின் திடத்தையும் ஆற்றலையும் அவருடைய உடல் வழிபட்டது. காலம் செல்லச்செல்ல அவளுடைய நிறமும் வாசனையும் ஒலிகளும் அவருக்குள் பெரும் மனக்கிளர்ச்சியை நிறைத்தன. அந்த ஈர்ப்பை அவரே அஞ்சினார். அன்னையும் பிற விருஷ்ணிகுலத்தவரும் அதை அறிந்துகொள்ளலாகாது என்று அவர் நினைத்தார். ஆனால் அவரது கண்களைக் கண்டதுமே மூதன்னையர்கூட அதைத் துல்லியமாக அறிந்துகொண்டனர். அவர் அவர்களின் கண்களைச் சந்திக்காமலிருக்கையில் அவரது உடலின் அசைவுகள் வழியாகவே அறிந்துகொண்டனர்.

அதை அறிந்ததுமே பத்மை உரத்தகுரலில் வேறு எதையோ குறிப்பிட்டு கூச்சலிடுவாள். கண்ணீர் மல்கி மனக்குறைகளைச் சொல்லி அழுவாள். தன்னையே எண்ணி வருந்தி தன் நெஞ்சிலேயே அறைந்துகொள்வாள். சூரசேனர் அப்போது தலைகுனிந்து வெளியேறி தொழுவங்களுக்கோ பட்டிக்கோ ஊர்மன்றுக்கோ சென்றுவிடுவார். அவரைச் சந்திக்கும் விருஷ்ணிகுலத்துப் பெண்களெல்லாம் அவளைப்பற்றி இழித்துரைத்தனர். அந்த இழிவுரைகள் நாள்செல்லச்செல்ல மிகுந்தபடியே வந்தன. அதை உணர்ந்தபோதுதான் அவருக்கு அவள்மேலிருந்த பெருங்காதலை அறியாத எந்தப்பெண்ணும் அக்குடியில் இல்லை என அவர் புரிந்துகொண்டார்.

அவளுக்கும் அது தெரிந்திருந்தது. அவருடன் இருக்கையில் அவள் எப்போதும் மெல்லியகுரலில் பெரிய உடலில் இறுகிய கரிய தசைகள் அதிர சிரித்துக்கொண்டிருப்பாள். அவளுக்கு என்னவேண்டும் என்று அவர் எப்போது கேட்டாலும் அவரது மார்பில் தன் சுட்டுவிரலை ஊன்றி அவள் வாய்பொத்திச் சிரிப்பாள். ‘நீ அழகாக இருக்கிறாய்’ என்று அவளுடைய மொழியில் சொல்வதெப்படி என்று அவர் கற்றுக்கொண்டார். ஆனால் அச்சொற்கள் அவளுக்கு எந்தப் பொருளையும் அளிக்கவில்லை. பின்னர் நீ வலிமையானவள் என்று சொல்லத்தொடங்கினார். அதுவும் அவளுக்கு உவப்பளிக்கவில்லை. அவளிடம் ஒருமுறை நான் உன் குழந்தை என்று சொன்னார். அவள் பெருங்காதலுடன் அவரை தன் பெரிய மார்புக்குவைகளுக்குள் அணைத்து இறுக்கிக்கொண்டு லாவணமொழியில் எதையோ பாடுவதுபோலச் சொன்னாள்.

தன்காதலே மரீஷையை பிறரது வெறுப்புக்குள்ளாக்குகிறது என்றறிந்தபின்னர் சூரசேனர் காட்டிலேயே தங்கத் தொடங்கினார். மாதத்தில் இரண்டுமுறை மட்டும் மதுவனத்துக்கு வந்து அவளுடன் இருப்பார். அப்போதுகூட அவளை எருமை சேற்றுக்குழியில் விழுந்துவிட்டது என்றோ பசுவின் கால் ஒடிந்துவிட்டது என்றோ ஏதேனும் சொல்லி அருகே இருக்கும் காட்டுக்குக் கூட்டிச்சென்றுவிடுவார். அங்கே மரத்தின்மேல் கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தில்தான் அவளுடன் குலவினார். அவள் அவரிடம் எந்த மனக்குறையையும் சொல்லவில்லை. அவருடனிருக்கும்போதெல்லாம் அவளுடைய உடல் வழியாகவே அகம் தன்னை வந்தடைகிறது என அவர் அறிந்தார்.

VENMURASU_EPI_77_

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

மரீஷை விருஷ்ணிகளின் குடியில் தன்னந்தனியாக வாழ்ந்தாள். சிலநாட்களிலேயே அவளுடைய இணையற்ற புயவல்லமையை பத்மை கண்டுகொண்டாள். அவள் கறந்தால் அனைத்துப்பசுக்களும் இருமடங்கு பால்கொடுத்தன. அவளால் ஒருநாளில் முந்நூறுபசுக்களுக்கு பால்கறக்க முடிந்தது. விழித்திருக்கும் நேரமெல்லாம் ஒருகணம்கூட நிலைக்காமல் மத்துச்சக்கரத்தைச் சுழற்றமுடிந்தது. அத்தனை வேலைகளையும் முடித்தபின் அவள் புறந்திண்ணையில் அருகே நின்றிருந்த மூத்த சாலமரத்தை அண்ணாந்து நோக்கி அதன் கிளைகளிலும் இலைகளிலும் ஆடும் அணில்களை கவனித்தபடி கனவுநிறைந்த கண்களுடன் அமர்ந்திருப்பாள். அப்போது சிலசமயம் மெல்லிய குரலில் லாவணமொழியில் எதையோ பாடிக்கொள்வாள்.

அவள் அழுவதையோ முகம்சுளிப்பதையோ ஆயர்மகளிர் கண்டதேயில்லை. அவள் முகத்தின் பெரியபற்கள் அவளுக்கு எப்போதும் புன்னகை நிறைந்த முகத்தை அளித்தன. சிறிய மூக்கும் கொழுத்துருண்ட கன்னங்களும் குழந்தைத்தன்மையைக் காட்டின. அவள்மேல் கனிவுகொண்ட ஆயர்மகளிரும் சிலர் இருந்தனர். அவர்களின் கன்றுகள் திமிறிக்கொண்டு செல்லும்போதோ எருமைகள் எழாமல் அடம்பிடிக்கும்போதோ மரீஷையைத்தான் அவர்கள் அழைக்கவந்தனர். அவர்களின் குழந்தைகளுக்கு அவளுடைய ஆற்றல்மிக்க உடல்மேல் வியப்பிருந்தது.

ஆனால் கண்மூடும் நாள்வரை பத்மை தன் மருகியை வெறுத்தாள். அவளை முகம்சுளிக்காமல் ஒருகணமேனும் பார்க்கவில்லை. கசப்புஇல்லாத ஒரு சொல்லையேனும் அவளிடம் சொல்லவில்லை. அவள் மணமுடித்துவந்த முதல்வருடமே முதல்குழந்தையைப் பெற்றாள். அவளைப்போலவே கனத்த பெரிய கரிய உடலுள்ள ஆண்குழந்தையை பத்மை தொட்டுப்பார்க்கவேயில்லை. ஆகவே பிற யாதவமகளிரும் அக்குழந்தையைத் தொடவில்லை. வசு அன்னையின் இடையிலேயே வளர்ந்தான். அடுத்தகுழந்தையை மரீஷை பெற்றபோது வசுவை சூரசேனர் காட்டுக்குக் கொண்டுசென்று அங்கே தன்னுடன் வைத்துக்கொண்டார்.

மரீஷை தொடர்ந்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டே இருந்தாள். தேவபாகன், தேவசிரவஸ், ஆனகன், சிருஞ்சயன், காகானீகன், சியாமகன், வத்ஸன், காவுகன் என அனைத்துக்குழந்தைகளும் மரீஷையைப்போலவே கன்னங்கரியவையாக, ஆற்றல்மிக்கவையாக இருந்தன. விருஷ்ணிகுலத்து யாதவர்கள் அனைவருமே வெண்ணிறமானவர்கள். காராம்பசுக்குட்டிகளைப் போன்ற குழந்தைகளைக் காண விருஷ்ணிகுலப்பெண்கள் திரண்டு வந்தனர். வாயில் கைவைத்து விழித்த கண்களுடன் குழந்தைகளை நோக்கி நின்றபின் தங்களுக்குள் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டனர். ஒருவரும் குழந்தைகளை கையால் தொட்டு எடுக்க குனியவில்லை.

முதல்மூன்று குழந்தைகளுக்கும் விருஷ்ணிகளின் குலவழக்கப்படி செம்மொழிப்பெயர்கள் வைக்கப்பட்டனர். அதன்பின் பத்மை அக்குழந்தைகளுக்கு அவர்களின் நிறத்தையே பெயராக வைத்தாள். ஒருகுழந்தைகூட அவள் மடியில் ஒருமுறையும் அமரவில்லை. பெயர்சூட்டுவிழாவின்போதுகூட அவை அன்னையின் மடியிலேயே அமர்ந்திருந்தன. பெயரிட்ட மறுநாளே அவை தந்தையுடன் காட்டுக்குச் சென்றன. மரீஷை அதன்பின் மூன்று பெண்குழந்தைகளைப் பெற்றாள். கரிணி, சிக்ஷை, சியாமை என்னும் மூவரும் அன்னையைப்போலவே கன்னங்கரிய நிறம்கொண்டவர்களாக இருந்தனர். அவர்களுக்கு நாமகரணம் முடிந்ததுமே அன்னையின் லவணகுலத்துக்கு அனுப்பப்பட்டனர்.

பதின்மூன்றாவது குழந்தையாக வசுதேவன் பிறந்தபோது பத்மை முதுமையடைந்திருந்தாள். மருகி கருவுற்றபோது அவள் அக்கருவையே வெறுத்தாள். பன்னிரு குழந்தைகளுக்குப் பின்னரும் மரீஷை எந்த மாறுதலுமில்லாமல் லவணர்குலத்திலிருந்து தோல்கூடையில் சீர்ப்பொருட்களை சுமந்து, தயங்கியகாலடிகளுடன் இல்லத்தில் நுழைந்தபோதிருந்ததைப் போலவே இருந்தாள். அவள் வயிறு கருமையாக வீங்கி மெருகு கொண்டபோது “இன்னொரு எருமைக்குட்டி உள்ளே வாழ்கிறது…” என்று பத்மை சொன்னாள். “விருஷ்ணிகுலத்து ஹ்ருதீகரின் குருதிக்கு தொடர்ச்சியில்லை என விதி எண்ணுகிறது போலும்” என்றாள்.

ஆகவே மகவுபிறந்த செய்தியை வயற்றாட்டி வந்து சொன்னபோது புறவாயிலில் கன்றுக்குட்டிக்கு கழுத்துநார் பின்னிக்கொண்டு அமர்ந்திருந்த அவள் எழுந்துகூட பார்க்க முனையவில்லை. “சரி, அதற்கென்ன? என் முத்திரைமோதிரத்தை அளிக்கிறேன். அதை நீரிலும் பாலிலும் தொட்டு நீயே அதன் உதடுகளில் வைத்துவிடு” என்று வயற்றாட்டியிடம் சொன்னாள். “பிராட்டி, குழந்தை செந்நிறமாக இருக்கிறது” என்று வயற்றாட்டி சொன்னபோது விளங்காதவள்போல ஏறிட்டு தன் முதிய விழிகளால் பார்த்தாள். அதன்பின் தீப்பிடித்துக்கொண்டவள் போல எழுந்து ஈற்றறை நோக்கி ஓடினாள்.

உள்ளே மூங்கில்கட்டிலில் தோல்மெத்தைமேல் மரீஷை கிடந்தாள். அவள் ஓடிவந்து குழந்தைமேல் இருந்த மரீஷையின் கரிய கையைத் தட்டி அகற்றிவிட்டு குனிந்து குழந்தையை நோக்கினாள். தாமரையிதழ்போலிருந்தது அது. “குளிப்பாட்டுங்கள்… குளிப்பாட்டி என்னிடம் அளியுங்கள்” என்று பத்மை பதறியகுரலில் கூவினாள். “இதோ விருஷ்ணிகுலத்து ஹ்ருதீகருக்கு கொடித்தோன்றல் பிறந்திருக்கிறது.”

வயற்றாட்டிகளில் ஒருத்தி “வழக்கத்துக்கு மாறாக குழந்தை மிகச்சிறியதாக இருக்கிறது பிராட்டி. அத்துடன் போதிய அளவு துடிப்புடனும் இல்லை. அன்னையின் உடலும் குளிர்ந்து வருகிறது” என்றாள். “குழந்தை வாழவேண்டும்… அதற்காக நீங்கள் எதைவேண்டுமென்றாலும் செய்யலாம்” என்று பத்மை சொன்னாள். அதற்குள் மயக்கத்தில் குருதி வழியக் கிடந்த மரீஷை லாவண மொழியில் ஏதோ முனகியபடி புரண்டுபடுத்தாள். அவள் உடல் அதிரத்தொடங்கியது. கைகால்கள் இருபக்கமும் விரிய எருமைபோல அவள் உறுமல் ஒலியை எழுப்பினாள்.

“மீண்டும் வலி வந்திருக்கிறது பிராட்டி” என்றாள் வயற்றாட்டி. பத்மை “அந்தக்குழந்தையை என்னிடம் கொடு… நீங்கள் அவளைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றாள். வயற்றாட்டி தோலாடையில் பொதிந்து கையில் கொண்டு வந்து கொடுத்த குழந்தையை மார்போடணைத்து அவள் கண்ணீர்விட்டாள். சற்று நேரத்தில் வயற்றாட்டி வந்து இன்னொரு பெண்குழந்தையும் பிறந்திருக்கிறது என்றாள். “குழந்தை என்ன நிறம்?” என்றுதான் பத்மை கேட்டாள். “இதே நிறம்தான் பிராட்டியே…நல்ல செந்நிறம்.” பத்மை கண்ணீர் வழிய மார்போடணைத்த குழந்தையுடன் மீண்டும் ஈற்றறை நோக்கி ஓடினாள்.

இருகுழந்தைகளும் பத்மையின் நெஞ்சிலேயே வளர்ந்தன. பாலூட்டும் நேரம் தவிர அவற்றைத் தீண்டுவதற்கு மரீஷை அனுமதிக்கப்படவேயில்லை. அவள் இல்லத்தின் அனைத்துப்பணிகளையும் செய்ய பத்மை இரவும் பகலும் குழந்தைகளுடன் இருந்தாள். மூத்தவனாகிய வசுதேவனும் தங்கை பிருதையும் பாட்டியையே அன்னை என்று அழைத்தனர். எப்போதேனும் வந்துசெல்லும் தந்தையை அவர்கள் அறியவேயில்லை. தந்தையுடன் காட்டில் வாழ்ந்த தமையன்களையும் லவணர்களின் ஊரில் வாழ்ந்த தமக்கையரையும் ஓரிருமுறைக்குமேல் அவர்கள் கண்டிருக்கவுமில்லை. அவர்கள் அறிந்த உலகம் பாட்டியால் சமைக்கப்பட்டிருந்தது. அதில் கருமையைப்பற்றிய கடும் வெறுப்பு நிறைந்திருந்தது.

வசுதேவன் இளமையிலேயே அன்னையை வெறுத்தான். அவள் தூய்மையற்ற மிருகம் என்றும் அவளருகே செல்வதும் தீண்டுவதும் இழிவானவை என்றும் நினைவறிந்த நாள்முதலே எண்ணத்தொடங்கினான். அவன் தனித்து நிற்கும்போது சுற்றுமுற்றும் பார்த்தபடி அருகே வரும் அன்னை அவனை அள்ளி அணைத்துக்கொண்டால் அவன் திமிறி கைகால்களை உதறி கதறியழுவான். அவள் கொண்டுவந்துகொடுக்கும் உணவுப்பண்டங்களை அவள் முன்னாலேயே வீசி எறிவான். அவள் தன்னை தொட்டுவிட்டால் ஓடிச்சென்று பாட்டியிடம் அதைச் சொல்வான். அவள் உடனே அவனைக் குளிப்பாட்டி மாற்றுடை அணிவிப்பாள்.

தன் நிழலாக கூடவே வந்துகொண்டிருக்கும் பிருதையிடம் “அவள் கரியவள். அசுரர்களின் குலத்தில் உதித்தவள்” என்று வசுதேவன் சொன்னான். “அசுரர்கள் மனிதர்களைக் கொன்று ஊனை உண்பவர்கள். ஆகவேதான் அவர்களின் பற்கள் பெரியதாக இருக்கின்றன. அவர்களின் வாயில் குருதிநாற்றம் வீசுகிறது. அவர்கள் இருட்டில் நம்மை பார்ப்பார்கள். அவர்களின் கண்கள் இருளில் வெண்மையாக ஒளிவிடுபவை.” இரவில் கொடுங்கனவுகண்டு பிருதை எழுந்து அலறி அழுவாள். பாட்டி அவளை அணைத்து தன் மரவுரிப்போர்வைக்குள் இழுத்துக்கொள்வாள்.

வசுதேவனுக்கு மூன்றுவயதிருக்கையில் பத்மை மறைந்தாள். மழை பெய்துகொண்டிருக்கையில் தொழுவத்தில் கட்டை அவிழ்த்துவிட்டு ஓடிய காராம்பசுவைப் பிடிப்பதற்காக அவள் வெளியே சென்றாள். கன்னங்கரிய நிறமும் வெள்ளிக்கண்களும் கொண்ட அந்தப்பசு கரியநிற அகிடுகள் கொண்டதாகையால் அதன் பால் பூசைக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்பட்டு தனியாக தொழுவத்தில் கட்டப்பட்டு வளர்க்கப்பட்டது. ஒளிக்குக் கூசும் தன்மை கொண்ட அதன் வெள்ளிக்கண்களில் மின்னல் ஒளி பட்டபோது அது மிரண்டு சுழன்று கால்களை நிலத்தில் ஊன்றி முழு எடையையும் கொண்டு இழுத்து கயிற்றை அவிழ்த்துக்கொண்டு மழைத்தாரைகளுக்குள் பாய்ந்தது. மழைநீர் முதுகில் பட்டதும் திகைத்து சருமம் சிலிர்த்து அசையாமல் தலைதாழ்த்தி நின்றது.

குளம்படிச் சத்தம்கேட்டு புறந்திண்ணையில் வசுதேவனையும் பிருதையையும் மடியில் வைத்துக்கொண்டிருந்த பத்மை அவர்களை இறக்கிவிட்டு இறங்கி ஓடிச்சென்று சேற்றில் இழுபட்ட அறுந்த கயிற்றைப் பற்றி இழுத்தாள். இழுபட்ட தலையை பக்கவாட்டில் தாழ்த்தி மூச்சு சீறி முன்னங்காலால் தரைச்சேற்றை கிளறியபடி கண்களை உருட்டிப்பார்த்தது. பத்மை கீழே கிடந்த தார்க்கோலை எடுப்பதற்காகக் குனிந்ததும் அது பாய்ந்து அவள் விலாவைமுட்டி தூக்கி வீசியது. வசுதேவன் அலறியபடி உள்ளே ஓடினான். வீட்டில் ஏவலர்கள் எவரும் இருக்கவில்லை. அவன் அறைகள்தோறும் ஓடியபோது தன்னையறியாமலேயே ‘அம்மா அம்மா’ என அலறிக்கொண்டிருந்தான்.

அவன்குரல் கேட்டு மத்துசுழற்றிக்கொண்டிருந்த மரீஷை அனைத்தையும் உணர்ந்துகொண்டு வெளியே ஓடினாள். மழையில் குனிந்து மூச்சுசீறி மிரண்டு நின்ற பசுவை அணுகி அதை கையாலேயே ஓங்கி அறைந்து கொம்புகளைப்பிடித்து வளைத்து துரத்திவிட்டு கீழே கிடந்த பத்மையை அணுகினாள். மீண்டும் முட்டுவதற்காகக் குனிந்த பசுவைநோக்கி வலக்கையை வீசியபடி கால்கள் சேற்றில் குழைந்து இழுபட மண்ணில் தவழ்ந்த பத்மை மருகியை நோக்கி கைநீட்டி தன்னை மீட்கும்படி ஓசையில்லாமல் மன்றாடினாள்.

பத்மையை சிறுகுழந்தைபோல மென்மையாக இருகைகளிலும் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் ஓடிவந்தாள் மரீஷை. அவளை உள்ளறையில் தோல்மெத்தையில் மெல்லப் படுக்கச்செய்தபின் மழையில் ஓடி மருத்துவச்சியை அழைத்துவந்தாள். வெளியே காயங்களேதும் இல்லை என்றாலும் பத்மையின் விலா எலும்புகள் ஒடிந்துவிட்டன என்றாள் அவள். சூரசேனருக்குச் செய்தியனுப்புவதே செய்யக்கூடியது என்றாள்.

மூச்சுவாங்கிக்கொண்டிருந்த பத்மை தன் உடைகளை மாற்றும்படி சொன்னாள். மருத்துவச்சியும் மரீஷையும் சேர்ந்து உடைகளை மாற்றி உலர்ந்தவற்றை அணிவித்தனர். பத்மையின் மூச்சுத்திணறல் ஏறியது. அவள் கண்கள் குழந்தைகளைத் தேடின. மரீஷை குழந்தைகளை அழைத்துச்சென்று அருகே நிறுத்தினாள். பத்மையின் வலக்கை செயலிழந்திருந்தது. இடக்கையால் இருகுழந்தைகளையும் வளைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டபோது இடக்கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கன்னத்தில் ஓடியது.

பத்மை தன் தொண்டையைத் தொட்டு குடிக்க நீர் கேட்டாள். மரீஷை உள்ளே ஓடி இளஞ்சூடான பாலை மூங்கில்குவளையில் எடுத்துவந்தாள். அதை பத்மையின் அருகே கொண்டுவந்து வாயருகே நீட்டியபோது பத்மையின் கண்களுக்குள் கூரிய கத்தி திரும்புவதுபோல வெறுப்பின் ஒளியை வசுதேவன் கண்டான். பத்மை அந்தக்குவளையை வாங்கி ஊட்டும்படி மருத்துவச்சியிடம் சைகைகாட்டினாள். மரீஷை குவளயை மருத்துவச்சியிடம் கொடுத்தாள். அதை வாங்கி மருத்துவச்சி மெதுவாக ஊட்ட இரண்டு வாய்குடித்து மூன்றாம் வாயை வழியவிட்டு பத்மை இறந்துபோனாள்.

அன்று இரவு வீட்டு அறைகளெல்லாம் யாதவகுலத்து மகளிர் நிறைந்திருக்க முற்றத்தில் போடப்பட்ட ஓலைப்பந்தலுக்குள் முதியவர்கள் கூடி நிற்க நீப்புச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது பிருதையை கொல்லைப்பக்கம் சாம்பல்குழி அருகே அழைத்துக்கொண்டுசென்று வசுதேவன் சொன்னான் “நாம் பாட்டிக்காக அழக்கூடாது. அவள் தீயவள். ஆகவேதான் அவளை காராம்பசு முட்டிக்கொன்றது.” பிருதை பெரிய விழிகளை விழித்து அவனைப்பார்த்தாள். “நீ அழவேகூடாது” என்றான் வசுதேவன். சரி என்று அவள் தலையாட்டினாள்.

அவர்கள் வீடுமுழுக்க நிறைந்திருந்த கால்களினூடாக கைகளைப்பற்றிக்கொண்டு நடந்தனர். முற்றத்தில் பீடத்தில் தனியாக நரைத்த தாடியை நீவியபடி அமர்ந்திருந்த சூரசேனரை சுவர் மறைவிலிருந்து வசுதேவன் பார்த்துக்கொண்டே நின்றான். அவரிடம் துயரமேயில்லை என்பது நன்றாகவே தெரிந்தது. அது பாட்டியைப்பற்றிய அவனுடைய எண்ணம் பிழையல்ல என்று உறுதிப்படுத்தியது. அருகே சென்று ஏதோ சொன்ன அன்னையை நோக்கி அவர் புன்னகைபுரிவதை வசுதேவன் கண்டான். அன்னையை அவர் நேரடியாக நோக்குவதை அப்போதுதான் அவன் காண்கிறான். அக்கணமே அவரும் நல்லவரல்ல என்ற எண்ணத்தை அடைந்தான்.

நூல் இரண்டு – மழைப்பாடல் – 26

பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்

[ 1 ]

மார்த்திகாவதியை ஆண்ட குந்திபோஜனுக்கு உரிய கௌந்தவனம் என்ற பெயர்கொண்ட மலையடிவாரக் குறுங்காடு பர்ணஸா நதியின் கரையில் இருந்தது. சுற்றிலும் வெட்டப்பட்ட பெரிய அகழியால் உள்ளே வனமிருகங்கள் வரமுடியாதபடி செய்யப்பட்டு தவநிலையாக மாற்றப்பட்டிருந்தது. பதினைந்துநாட்களுக்கும் மேலாக பெய்துகொண்டிருந்த மழையால் அகழியில் சிவந்த மழைநீர் நிறைந்து இலைகள் சொட்டும் துளிகளாலும் சிற்றோடைகள் கொட்டும் நீராலும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அகழிக்குமேல் போடப்பட்டிருந்த ஒற்றைமரம் வழியாக குந்திபோஜனின் அறப்புதல்வி பிருதையின் சேடியான அனகை வயதான மருத்துவச்சியை அந்தி இருளில் கொட்டும் மழைத்திரைக்குள் அழைத்துவந்துகொண்டிருந்தாள்.

கௌந்தவனத்தின் வலப்பக்கமாக ஓடி மலையிடுக்குவழியாகச் செல்லும் பெருங்குடிப்பாதையிலிருந்து பிரியும் கால்வழிகளின் முடிவில் ஏராளமான சிறிய ஆயர்குடிகள் இருந்தன. அவற்றில் ஒன்றைச்சேர்ந்த சுருதை என்ற கிழ மருத்துவச்சியை அனகை ஒரேஒருமுறைதான் கண்டிருந்தாள். அவள் சிறுமியாக இருந்தபோது சேடியான சூதப்பெண் ஒருத்திக்காக அவளைக் கூட்டிவந்திருந்தனர். அவள் இடைநாழிவழியாக தோலாடை அணிந்து, கையில் விளக்குடன் குனிந்து நடந்து செல்லும் காட்சியை கதவிடுக்குவழியாக அரைக்கணநேரம்தான் அனகை அப்போது பார்த்தாள். ஆனால் அவளுடைய ஊரின் பெயர் சாலவனம் என்பது அப்போது அவள் நினைவில்பதிந்திருந்தது என்பதை தேவை ஏற்பட்டபோது அது நினைவில் வந்தபோதுதான் அவள் அறிந்தாள்.

சாலவனம் மந்தைகள் நடந்து உருவாக்கிய காட்டுப்பாதையின் இறுதியில் இருந்தது. மதியம் சென்றால் அந்த இடையர்குடியில் எவருமிருக்கமாட்டார்கள் என்று அனகை அறிந்திருந்தாள். பதினைந்துநாட்களாக சரடறாமல் பொழிந்துகொண்டிருந்த மழை அன்றுகாலையில்தான் சற்று ஓய்ந்திருந்தது. மேயாமல் அடைந்திருந்த பசுக்களை காட்டுக்குள் கொண்டுசென்றே ஆகவேண்டும். அவள் வரும்போதே உள்காடுகளில்கூட மாடுகளின் கழுத்துமணி ஓசையைக் கேட்டாள்.

வானில் மேகக்கூட்டங்கள் பட்டி திறந்து வெளியேறும் ஆநிரைகளென ஒன்றை ஒன்று முட்டித்தள்ளிக்கொண்டு வடகிழக்காக நகர்ந்துகொண்டிருந்தபோதிலும் ஆங்காங்கே அவற்றில் விழுந்திருந்த இடைவெளிகள் வழியாக ஒளி கசிந்து காற்றில் பரவியிருந்தது. ஈரமான இலைப்பரப்புகள் ஒளியுடன் மென்காற்றில் அசைந்தன. மழைநீர் ஓடிய மணல்தடம் முறுக்கி விரித்த சேலைபோலத் தெரிந்த பாதை வழியாக அவள் பனையோலையாலான குடைமறையால் தன்னை மறைத்துக்கொண்டு நடந்தாள்.

சாலவனம் என்பது ஓங்கிய பெரிய மரங்கள் சூழ்ந்த ஒரு சோலைக்கு அப்பாலிருந்த ஐம்பது புல்வேய்ந்த குடில்கள்தான் என்பது அனகைக்கு ஆறுதலளித்தது. அந்த ஊரிலிருந்து எவரும் வெளியுலகைக் கண்டிருக்கப்போவதில்லை. அவளைக் கண்டாலும் அறிந்துகொள்ள மாட்டார்கள். ஊரைச்சுற்றி உயரமில்லாத புங்கமரங்களை நட்டு அவற்றை இணைத்து மூங்கிலால் வேலிபோட்டிருந்தார்கள். ஊருக்குள் நுழைவதற்கான பாதையை ஒரு பெரிய மூங்கில் தடுத்திருந்தது. அவள் அங்கே நின்று உள்ளே எட்டிப்பார்த்தாள்.

சுரைக்காய்க்கொடி படர்ந்த கூரைகொண்ட புற்குடில்களில் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. வட்டமாக அமைந்திருந்த குடில்களுக்கு நடுவே இருந்த முற்றத்தின் மையத்தில் நின்ற பெரிய அரசமரத்தடியில் கல்லாலான மேடையும் அருகே இருந்த பெரிய மரத்தொட்டிகளும் அமைதியில் மூழ்கிக்கிடந்தன. நூற்றுக்கணக்கான கட்டுத்தறிகள் அறையப்பட்டு அவற்றைச்சுற்றி மாடுகள் சுற்றிநடந்த வட்டத்தடங்கள் ஒன்றையொன்று வெட்டிக்கலந்து பரவியிருந்த முற்றத்தில் உடைந்த வண்டிச்சக்கரங்களும் நுகங்களும் ஓரமாகக் குவிக்கப்பட்டிருந்தன.

உள்ளே செல்வதா, அழைப்பதா என்று அவள் தயங்கிக் கொண்டிருந்தபோது அவளை நோக்கி ஒரு கிழவி குனிந்தபடி வறுமுலைகள் ஊசலாட வந்தாள். நரைத்த பெரிய கூந்தலை கொண்டையாக முடிந்து காதுகளில் மரத்தாலான குழைகள் அணிந்திருந்தாள். கழுத்தில் செந்நிறக் கற்களாலான மாலை. இடையில் ஆட்டுத்தோல் பின்னிய குறுகிய ஆடை. மூங்கிலுக்கு அப்பால் நின்றுகொண்டு கண்களுக்குமேல் கையை வைத்து அவளை நோக்கி “நீ யார்?” என்று கேட்டாள்.

அனகை “நான்…” என தயக்கமாகத் தொடங்குவதற்குள் “மருத்துவச்சியைத் தேடிவந்தாயா?” என்றாள். அனகை “ஆம்” என்றாள். “யாருக்காக?” என்றாள் கிழவி. “என் தோழிக்காக” என்றபோது அனகை தன் குரல் தடுக்குவதை உணர்ந்தாள். கிழவி தலையை ஆட்டினாள். “வேறு எதற்காக இங்கே தேடிவரப்போகிறாய்? வாசலில் இருந்து எட்டிப்பார்ப்பதைக் கண்டாலே தெரிகிறதே…” என தனக்குத்தானே முனகிக்கொண்டு “எங்கே இருக்கிறாள் அவள்?” என்றாள் கிழவி.

“இங்கிருந்து நான்குகாதம் தொலைவில்…” என அனகை சொல்வதற்குள் கிழவி “இந்தமழையில் அத்தனைதூரம் என்னால் வரமுடியாது. அவளை இங்கே கொண்டுவாருங்கள்” என்றபின் திரும்பிவிட்டாள். அனகை பதறி மூங்கிலைப்பிடித்தபடி “அய்யோ…இருங்கள்…நான் சொல்கிறேன்” என்றாள். “அவர்கள் இங்கெல்லாம் வரமுடியாது…”

கிழவியின் கண்கள் மாறுபட்டன. “அவர்கள் என்றால்?” என்றபடி மேலும் அருகே வந்தாள். அவளுடைய உடற்தோலில் இருந்து முடியுள்ள மிருகங்கள் படுக்குமிடத்தில் எழும் மட்கிய வாடை வந்தது. “யாரவள்? அரசகுலமா?” அனகை தலையை அசைத்தாள். கிழவி “அரசகுலமென்றால் இக்கட்டுகளும் அதிகம்… நாளை என்னை அரசன் கூட்டிக்கொண்டுசென்று கழுவில் ஏற்றிவிடுவான்” என்றாள்.

அனகை கைகூப்பி “என் தலைவி அரசிளங்குமரி… தங்களை எப்படியாவது அழைத்துவருகிறேன் என்று சொல்லி தேடிவந்தேன். வந்து உதவவேண்டும்” என்றாள். “இந்தமழையில் நான் அவ்வளவு தொலைவு வருவதென்றால்…” என கிழவி தொடங்கியதுமே “அதற்கு என்ன தேவையோ அதை இளவரசி அளிப்பார்கள்” என்றாள் அனகை. கிழவியின் கருகிய உதடுகள் புன்னகையில் மெல்ல வளைந்தன. “இரு, நான் சென்று என்னுடைய பெட்டியை எடுத்துவருகிறேன்” என்று திரும்பி ஊருக்குள் சென்றாள்.

கிழவி மான்தோலால் ஆன ஒரு சால்வையை எடுத்து தன்மேல் போர்த்தி, கையில் சிறிய மரப்பெட்டியுடன் வந்து மூங்கிலில் காய்வதற்காக மாட்டியிருந்த பனையோலையாலான குடைமறையை எடுத்து மடித்து தோளில் மாட்டிக்கொண்டு “போவோம்” என்றாள். அனகை அவளை பின் தொடர்ந்தாள். அந்த ஊரில் கிழவியைத்தவிர வேறு எவரும் இருப்பதுபோலத் தெரியவில்லை. ஒரு பெரிய கருவண்டு ரீங்கரித்தபடி மூங்கிலில் முட்டிக்கொண்டிருந்த ஒலியன்றி அமைதி நிறைந்திருந்தது.

கிழவி தொங்கிய தாடையைச் சுழற்றி இரண்டு பற்கள் மட்டுமே இருந்த வாயை மென்றபடி கூர்ந்த கண்களுடன் வேகமாக நடந்தாள். பசுவைப்போல கூனியபடி அவள் நடந்தபோது அனகை கூடவே ஓடவேண்டியிருந்தது. மையப்பாதைக்கு வந்ததும் “இந்தவழியாக சிறு வணிகர்கள் சிலர் வருவது வழக்கம்… நாம் காட்டுப்பாதையிலேயே செல்வோம்” என்று சொல்லி அவளே புதர்களுக்குள் சிவந்த மாணைக்கொடி போல மறைந்துகிடந்த ஒற்றையடிப்பாதைக்குள் நுழைந்தாள்.

காட்டுக்குள் சென்றதும் கிழவி சற்று நிதானமடைந்தாள். அனகையைப் பார்க்காமலேயே “இளவரசியின் பெயர் என்ன?” என்று கேட்டாள். “பிருதை…” என்று மெல்லியகுரலில் சொன்னாள் அனகை. “அவளா… குந்திபோஜர் தெற்கே மதுவனத்து விருஷ்ணிகளின் குலத்தில் இருந்து மகள்கொடை கொண்டு வந்த பெண், இல்லையா?” அனகை தலையை அசைத்தாள். “இளவரசி குந்தி… அவளை நான் முன்பொருமுறை பார்த்திருக்கிறேன். அவளுக்கென்ன?”

அனகை மெல்லியகுரலில் “நாட்கள் பிந்திவிட்டன” என்றாள். “ஆண் யார்?” என்றாள் கிழவி. அனகை ஒன்றும் சொல்லவில்லை. கிழவி திரும்பி மோவாயை முன்னால் நீட்டி உள்நோக்கி மடிந்து குவிந்திருந்த வாயால் புன்னகை செய்தாள். “யாதவப்பெண்களுக்கு எவ்வகை உறவும் ஒப்பளிக்கப்பட்டுள்ளதே” என்றாள். அனகை “இளவரசி இக்கருவை அஞ்சுகிறார்கள்” என்றாள்.

“ஆம், அஞ்சவேண்டிய இடத்தில் ஐம்புலன்களும் மயங்கும். அந்த லீலையால்தான் எங்கள் பிழைப்பு செல்கிறது” என உதடுகள் வாய்க்குழிக்குள் சென்று துடிக்க கிழவி சிரித்தாள். “வா…இன்னும் சற்று நேரத்தில் மழை வரும். அதன்பின் இக்காட்டில் நடக்கமுடியாது.” அனகை கிழவியின் உடலில் ஏறியபடியே வந்த விரைவைக் கண்டாள். அவளுக்கு கிழவியுடன் அந்தக்காட்டில் தனியாகச் செல்வதே அச்சமூட்டுவதாக இருந்தது.

காட்டுக்குள் நீராவி நிறைந்திருந்தது. களைப்பில் குளிர்ந்தெழுந்த வியர்வை காதோரத்திலும் முதுகிலும் வழிந்தது. காட்டுப்பசுமை அவள் மேல் ஈரமான பச்சைப் போர்வைகளை மேலும் மேலும் போர்த்தியடுக்கி மூடியது போல மூச்சுத்திணறலை அளித்தது. நனைந்த புதர்களுக்குள் பறவைகள் ஒலிஎழுப்பியபடி எழுந்து எழுந்து அமர்ந்தன. பிறகு மெல்லிய குளிர்காற்று வீசி வியர்வையை பனி போல உணரச்செய்தது. இலைகளெல்லாம் மடிந்து பின் நிமிர்ந்து காற்றில் படபடத்தன. தொலைவில் இலைகளில் நீர் பொழியும் ஒலி கேட்டது. சற்று நேரத்தில் மழை இறங்கத் தொடங்கியது.

கிழவி தன் தோளில் மடித்துப் போட்டிருந்த குடைமறையை விரித்து தலையில் அணிந்துகொண்டு பெட்டியை அனகையிடம் அளித்தாள். “இதை வைத்துக்கொள்… கீழே போட்டுவிடாதே. மரங்களில் முட்டவும்கூடாது” என்றபின் இருகைகளாலும் புதர்களை விலக்கிக்கொண்டு நடந்தாள். அனகை தன் குடைமறையை தலைமேல் போட்டுக்கொண்டு பெட்டியை மார்பில் சேர்த்து வைத்துக்கொண்டு நடந்தாள்.

மரங்களின் அடர்ந்த இலைக்கூரைக்குமேல் மழை ஓலமிட்டது. அடிமரங்கள் வழியாக நீர் வழிந்திறங்கியபோது அவை ஊர்ந்து செல்லும் பாம்புகளின் உடல்போலத் தோன்றின. நாகங்களாலான காடு வழியாக சென்றுகொண்டிருந்தாள். புதர்களுக்கு அடியில் கனத்த நாகங்கள் ஓடுவதுபோல மழைநீரோடைகள் சலசலத்தோடின. நூற்றுக்கணக்கான சிற்றருவிகள் காடெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தன. புதர்களுக்கு அப்பால் இருள்கருமைக்குள் நிற்கும் யானைத் தந்தங்கள் என அவ்வருவிகளைக் கண்டாள். கால்கள் நீரில் விரைத்து நீலநரம்புகள் தெரியத்தொடங்கின. அவளுக்கு ஒரு மங்கலான தன்னுணர்வு உருவானது, அவளை ஒரு நாகம் பார்த்துக்கொண்டிருப்பதுபோல. ஓசையில்லாமல் புதர்கள் வழியாகப் பின்தொடர்வதுபோல.

மழை நல்லதுதான் என அனகை எண்ணிக்கொண்டாள். மழையின் திரை அவர்களை முழுமையாகவே மூடி கண்ணுக்குத்தெரியாத மாயாவிகளாக ஆக்கியது. கௌந்தவனத்தின் அகழிக்கரையை அடைந்தபோதுதான் அவளுக்கு மனம் படபடக்கத் தொடங்கியது. தவநிலையின் முகப்பில் ரதங்கள் செல்லக்கூடிய பெரிய மரப்பாலம் உண்டு. பின்பக்கம் ஒற்றைமரம் ஒன்று அகழிக்குக் குறுக்காக விழுந்து கிடப்பதை ஆறுமாதங்களுக்கு முன்பு பிருதைதான் கண்டுபிடித்தாள். அதை சரியாக உருட்டிப்போட்டு ஒரு பாலமாக ஆக்கியவள் அவள்தான். அதன் வழியாகவே அவள் தவநிலையில் இருந்து காட்டுக்குள் சென்று வந்தாள்.

கிழவி “இதன் வழியாகவா?” என்று தயங்கினாள். “நான் பிடித்துக்கொள்கிறேன்” என்றாள் அனகை. கிழவி ஒன்றும் சொல்லாமல் வேகமாக நடந்து மறுபக்கம் சென்றுவிட்டாள். கையில் பெட்டியுடன் அனகைதான் சற்று தடுமாறினாள். அப்பால் கௌந்தவனத்தின் மரங்களெல்லாம் மழைநீராடி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. மான்கூட்டங்கள் மழையில் உடலைக் குறுக்கி பெரிய பலாசமரத்தின் அடியில் கூடிநின்றிருந்தன. காலடியோசை கேட்டு அவை திரும்பி காதுகளை விடைத்து பெரிய கண்களால் பார்த்தன. அனகையை அடையாளம் கண்டுகொண்டதும் நாலைந்து மான்கள் ஆர்வமிழந்து உடலை நடுக்கி காதுகளை அடித்துக்கொண்டபடி விலகி நின்றன.

அவர்கள் கடந்துசென்றபோது பின்பக்கம் மான்கள் மருண்டு ஓசையிட்டபடி கலைவதை அனகை கவனித்தாள். “என்ன?” என்றாள் கிழவி. அனகை தலையசைத்தாள். “காட்டுப்பூனையாக இருக்கும்” என்று கிழவி சொன்னாள். “அவை மழையில் பொதுவாக வெளியே வருவதில்லை. ஆனால் இப்படி நாட்கணக்கில் மழைபெய்தால் என்ன செய்யமுடியும்? பட்டினி கிடக்கமுடியாதல்லவா?”

தவநிலையின் குடில்கள் அனைத்தும் இருண்டு கிடந்தன. பிருதை இருந்த குடில் வாயிலில் மட்டும் மரவுரியாலான கனத்த திரை தொங்கியது. வாசலில் காலடியோசை கேட்டதும் உள்ளிருந்து பிருதை எட்டிப்பார்த்தாள். அனகை “கூட்டிவந்துவிட்டேன் இளவரசி” என்றாள். பிருதை அகல்விளக்கைக் கொளுத்தி கையில் எடுத்துக்கொண்டு வந்து கதவைத் திறந்தாள். வெளியே இருந்து வந்த பாவனையில் பார்க்கையில் பிருதையை முற்றிலும் புதியவளாகக் காணமுடிந்தது. வெளிறிய சிறியமுகத்தின் இருபக்கமும் கூந்தல் கலைந்து நின்றிருந்தது. வீங்கியதுபோன்றிருந்த முகத்தில் மெல்லிய சிறிய பருக்கள். கண்ணிமைகள் கனத்து சற்று சிவந்திருந்தன.

கிழவி வாசலில் நின்று தன் தோலாடைகள் இரண்டையும் களைந்தாள். அவளுடைய வற்றிச்சுருங்கி வளைந்த உடலை ஆடையின்றிப்பார்த்தபோது எழுந்து நிற்கும் பல்லி எனத்தெரிந்தாள். பிருதை சற்றே சுருங்கிய கண்களுடன் பார்த்துக்கொண்டு நின்றாள். ஆடைகளை நன்றாக உதறி கூரைக்குக் கீழே தொங்கவிட்டபின் கிழவி “எனக்கு ஈரமில்லாத ஓர் ஆடை வேண்டும்” என்றாள்.

“இதோ” என்று அனகை தன் ஆடையின் ஈரத்தைப் பிழிந்துகொண்டு உள்ளே சென்று ஒரு மரவுரியாடையைக் கொண்டுவந்து தந்தாள். கிழவி அதை அணிந்துகொண்டு பிருதையை நோக்கி “இவள்தான் இளவரசியா?” என்று கேட்டபின் உதடுகள் கோண சிரித்தாள். பிருதை கிழவியை வெறுப்பது அவள் புருவச்சுளிப்பில் இருந்தே தெரிந்தது. “அரசிக்குரிய அழகுடன் இருக்கிறாள். அரசிகளுக்குரிய ரகசியங்களும் கொண்டிருக்கிறாள்” என்று சொல்லி கிழவி மாடுகள் இருமுவதுபோலச் சிரித்தாள். “வா, உன்னை சோதனையிடுகிறேன்.”

பிருதை கண்களில் கூர்மையுடன் “உன் பெயரென்ன?” என்றாள். “சாலவனத்தின் யாதவர்களின் மருத்துவச்சி நான். என்பெயர் சுருதை” என்றாள் கிழவி. “உன்னை நான் அரண்மனையில் பார்த்திருக்கிறேன்…. உன்னை குந்தியாக தத்தெடுத்துக் கொண்டுவந்தபோது. அப்போது நீ சிறுமி…”

பிருதை “என்னிடம் பேசும்போது இன்னும் சற்று சொற்களை எண்ணிப்பேசவேண்டும் நீ” என்றாள். “இளவரசிக்குரிய மதிப்பு உன் சொற்களில் தெரிந்தாகவேண்டும்.” கிழவி கண்களில் நகைப்புடன் “என்னிடம் ரகசியங்கள் இல்லை… ரகசியங்கள் இருப்பது உன்னிடம்” என்றாள். பிருதை தணிந்த குரலில் “ஆம், என் ரகசியத்தை நீ அறிந்துகொண்டுவிட்டாய். அதுவே நீயும் உன் குலமும் ஆபத்தில் இருப்பதற்கான காரணம். நீ உயிர்வாழ்வதைப்பற்றி இனிமேல் நான்தான் முடிவெடுக்கவேண்டும்” என்றாள்.

VENMURASU_EPI_76

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

கிழவி திகைத்துப்போனவளாக தாடை விழுந்து குகைபோலத்திறந்த வாயுடன் பார்த்துக்கொண்டு சிலகணங்கள் நின்றாள். பின்பு “ஆணை இளவரசி” என்றாள். கைகளை மெல்லக் கூப்பி “நாங்கள் எளிய இடையர்கள்” என்றாள். “அந்நினைப்பை எப்போதும் நெஞ்சில் வைத்துக்கொள்” என்றாள் பிருதை திரும்பி உள்ளே சென்றபடி. கைகளை மாட்டின் கால்கள் போல முன்பக்கம் வீசி வைத்து கிழவி பின்னால் சென்றாள்.

புலித்தோலிட்ட மஞ்சத்தில் பிருதை அமர்ந்துகொண்டாள். “எனக்கு விலக்கு ஆகி மூன்றுமாதங்களாகின்றன. அது கருவா என்று நீ பார்த்துச் சொல்லவேண்டும்” என்றாள். கிழவி “ஆணை” என்றபின் பிருதையின் இடக்கையைப் பிடித்து நாடியில் தன் நான்கு விரல்களையும் வைத்தாள். “கண்களைக் காட்டுங்கள் இளவரசி… இமைகளை மூடவேண்டாம்” என்றாள். அவள் கண்களுக்குள் உற்று நோக்கியபடி வாயைமெல்வதுபோல அசைத்துக்கொண்டு நாடியைக் கணித்தாள். பெருமூச்சுடன் கையை விட்டுவிட்டு “கரு என்றுதான் எண்ணுகிறேன்” என்றாள். “ஆனால் சோதனையிட்டுத்தான் உறுதியாகச் சொல்லமுடியும்.”

அனகை படபடப்புடன் பிருதையைப் பார்த்தாள். அவளிடம் பெரிய முகமாற்றம் ஏதும் தெரியவில்லை. உதடுகள் மட்டும் இறுகி கன்னங்களில் குழிவிழுந்திருந்தது. கிழவி “கொதிக்கவைத்த வெந்நீர் தேவை” என்றாள். அனகை உள்ளே சென்று பின்பக்கம் உபசாலையில் விறகடுப்பின்மீது சிவந்து அனல்விட்டுக்கொண்டிருந்த செம்புப்பாத்திரத்தில் இருந்து நீரை அள்ளிக் கொண்டுவந்தாள். கிழவி தன் பெட்டியைத் தூக்கி அருகே வைத்து அதைத்திறந்து உள்ளிருந்து சிறிய உலோகப்புட்டிகளை எடுத்துப்பரப்பினாள். படிகக்கல்லால் ஆன பலவகைக் கத்திகளும் தங்கத்தாலான சிறிய ஊசிகளும் குதிரைவால் முடிச்சுருள்களும் பச்சிலைமருந்துகள் கலந்த படிகாரக்கட்டியும் அதனுள் இருந்தன. அனகை நிற்பதைக் கண்டு வெளியே செல்லும்படி கிழவி சைகை காட்டினாள்.

கிழவி திரும்ப அழைத்தபோது அனகை உள்ளே சென்றாள். கிழவி கைகளைக் கழுவியபடி “கருதான்” என்றாள். அனகை கால்கள் தளர்ந்து மெல்ல பின்னால் நகர்ந்து தூணைப்பற்றிக்கொண்டாள். அதை அவளும் கிட்டத்தட்ட உறுதியாகவே அறிந்திருந்தாள் என்றாலும் அதுவரைக்கும் அவ்வெண்ணத்தை சொற்களாக மாற்றாமல் இருந்தாள். காதில் அச்சொற்கள் விழுந்ததும் உடல்பதறி கால்கள் தள்ளாடத் தொடங்கின. ஓரக்கண்ணால் பிருதையைப் பார்த்தாள். சற்று சரிந்த இமைகளுடன் அவள் ஏதோ எண்ணத்தில் மூழ்கி அமர்ந்திருந்தாள். கிழவி “கரு தொண்ணூறுநாள் தாண்டியிருக்கிறது” என்றாள்.

“என்னசெய்வது இளவரசி?” என்று தொண்டை அடைத்து கிசுகிசுப்பாக மாறிய குரலில் அனகை கேட்டாள். “நாம் பேசாமல் திரும்பி அரண்மனைக்கே சென்றுவிடுவோம். எனக்கு இங்கே மிகவும் அச்சமாக இருக்கிறது… இங்கே…” அவளை பேசாமலிருக்க கைகாட்டியபின் பிருதை “இந்தக்கருவை அழித்துவிடமுடியுமா?” என்றாள். கிழவி “அழிப்பதுண்டு…ஆனால் அது சாஸ்திரவிதிப்படி பெரிய பாவம்” என்றாள். பிருதை “ஆம்….ஆனால் போரிலும் வேட்டையிலும் கொலைசெய்கிறோமே” என்றாள். கிழவி பணிந்து “தாங்கள் ஆணையிட்டால் செய்கிறேன்…ஆனால்…”

பிருதை தன் விழிகளைத் தூக்கி கிழவியைப் பார்த்தாள். “அரசகுலத்தில் நான் இதைச்செய்தேன் என வெளியே தெரிந்தால் என் உயிருக்கும் ஆபத்து நிகழலாம்” என்றாள் கிழவி. பிருதை கண்களைத் திருப்பி “நூறு பொற்காசுகளைப் பெற்றுக்கொள்” என்றாள். கிழவி பதற்றத்தில் “நூறு…” என தொடங்கி உடனே புரிந்துகொண்டு “…ஆம் இளவரசி… அவ்வண்ணமே செய்கிறேன். என்னிடம் மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. கரு இன்னும்கூட மிக இளமையான நிலையிலேயே உள்ளது. என்னிடம் உயர்ந்த சிட்டுக்குருவி இறகாலான பஞ்சு உள்ளது. அதில் இந்த நாக ரசாயனத்தை வைத்து…” என்று ஆரம்பித்தாள். “செய்!” என்று பிருதை சுருக்கமாக ஆணையிட்டாள்.

“படுத்துக்கொள்ளுங்கள் இளவரசி” என்றாள் கிழவி. அனகை தன் அதிரும் மார்பைப் பற்றிக்கொண்டு பற்களைக் கிட்டித்தபடி நின்றாள். கீழே விழுந்துவிடுவோமா என்ற அச்சம் அவளுக்கு ஏற்பட்டது. கிழவி தன் கைகளை நீரால் மீண்டும் கழுவிக்கொண்டாள். பெட்டிக்குள் இருந்து நீளமான மெல்லிய வெண்கலக்கம்பி ஒன்றை எடுத்து அதை சிறு வெண்கலப்புட்டியில் இருந்து எடுத்த இளஞ்செந்நிறமான திரவத்தில் முக்கிய துணிச்சுருளால் துடைத்தாள்.

“இளவரசி… இது சற்றே வலிமிக்கது. தாங்கள் விரும்பினால் அஹிபீனாவின் புகையை அளிக்கிறேன். அது வலியை முழுமையாகவே இல்லாமலாக்கிவிடும்” என்றாள் கிழவி. பிருதை “இல்லை… நான் வலிக்கு அஞ்சவில்லை” என்றாள். “அத்துடன் நான் இந்த வலியை அடையவும் வேண்டும். அதுதான் முறை” என்றாள். கிழவி தயங்கி “மிகவும் வலிக்கும்…” என்றாள். “வலிக்கட்டும்” என்றாள் பிருதை. கிழவி அனகையிடம் “நீ இளவரசியின் இரு கைகளையும் தோள்களையும் மஞ்சத்துடன் சேர்த்துப் பற்றிக்கொள்ளவேண்டும். வலியில் அவர்கள் தன்னையறியாமல் கையை வைத்து தட்டிவிட்டால் ஆபத்து.”

“தேவையில்லை” என்றாள் பிருதை. கிழவி இமைக்காமல் சிலகணங்கள் பார்த்துவிட்டு “பொறுத்தருளவேண்டும் அரசியே, நாங்கள் அஹிபீனா அளித்தபிறகும்கூட கைகால்களை இறுக்கமாகக் கட்டியபின்னரே இதைச்செய்வது வழக்கம்” என்றாள். “அஞ்சவேண்டியதில்லை…செய்!” என்று பிருதை சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டாள். அங்கிருந்து விலகிச்சென்றால்போதும் என்று அனகை எண்ணினாள். தொண்டை வறண்டு வாய் தோலால் ஆனதுபோலத் தோன்றியது.

கிழவி சிறிய வெண்கலப்புட்டியைத் திறந்தாள். அதற்குள் நீலநிறமான நாகரசாயனம் இருந்தது. இன்னொரு மரச்சம்புடத்திலிருந்து மெல்லிய சுருளாக இருந்த சாம்பல்நிறமான சிட்டுக்குருவியின் இறகுச்சுருளை எடுத்து அதை அந்தப் புட்டியில் இருந்த ரசாயனத்தில் நனைத்தாள். சாதாரணமாக உதறிக்கொண்டிருக்கும் கிழவியின் மெலிந்துசுருங்கிய கைகள் அப்போது நடுங்கவில்லை என்பதை அனகை கவனித்தாள். அதைச்செய்யும்போது கிழவியின் அனைத்துப் புலன்களும் சித்தமும் ஒன்றுகுவிகின்றன என்றும் அப்போதுதான் அவள் தன்னுடைய உச்சநிலையில் இருக்கிறாள் என்றும் தோன்றியது.

கிழவி அந்தச் சுருளை கம்பியின் நுனியில் வைத்து கவனமாகச் சுருட்டினாள். அது ஒரு சிறு எரியம்பு போல ஆகியது. அதன் நுனி ஓவியத்தூரிகைபோல கூர்ந்திருந்தது. அந்த நுனியில் மேலும் நாகரசாயனத்தைத் தொட்டாள். அதை முகத்தருகே கொண்டுவந்து கவனித்தாள். அப்போது அவள்முகத்தில் ஒரு தியானபாவனை கூடியது. உதடுகள் உள்ளே மடிந்து மெல்ல அதிர வாய் சேற்றுக்குழிபோலத் தெரிந்தது. வளைந்த நாசி நுனி மேலுதட்டுக்குமேல் நிழலை வீழ்த்தியது. அவள் கண்களில் தெரிவது ஒரு வெறுப்பு என அனகை எண்ணிக்கொண்டாள். யாரிடம்? ஆனால் யாரிடமென்று இல்லாமல் விரியும் வெறுப்புக்குத்தான் அத்தனை அழுத்தம் இருக்கமுடியும்.

கிழவியின் வாய் புன்னகை போல் கோணலாகியது. கம்பியை கையிலெடுத்துக்கொண்டு அவள் முன்னால் நகர்ந்தாள். தன் முழங்காலை மெத்தென ஊன்றுவதற்காக மஞ்சத்துக்குக் கீழே கிடந்த பழைய மரவுரியை இடதுகையால் அவள் இழுத்தபோது அதற்குள் இருந்து சுருள் மூங்கில் புரியவிழ்ந்தது போல மிகப்பெரிய பாம்பு ஒன்று சீறி எழுந்து தலைசொடுக்கி அவள் கன்னத்தைத் தீண்டியது. அவள் திடுக்கிட்டு கம்பியை உதறி கன்னத்தைப்பற்றியபடி அலறிக்கொண்டு பின்னால் சரிந்தாள். பாம்பு நிழல்நெளிந்தோடும் வேகத்தில் அவளுடைய கால்கள் மேலேறி வளைந்தோடி அறையின் மூலையிலிருந்த மரப்பெட்டியை அணுகி அதன் இடுக்கில் தலை வைத்து வால் நெளிய உடலை சுருட்டி உள்ளே இழுத்து பதுங்கிக்கொண்டது.

பிருதை மஞ்சத்தில் எழுந்தமர்ந்து உடைகளை சீர்திருத்திக்கொண்டு பாம்பைப்பார்த்தாள். நாகம் இரண்டரை வாரை நீளமிருந்தது. கருமையான பசுஞ்சாணியின் நிறம். அதன் பத்தியில் மஞ்சள்நிறமான வரிகள் பத்தி விரிவதற்கு ஏற்ப அசைந்தன. பத்தியின் அடிப்பகுதி வெண்பழுப்பு கூழாங்கல்மணிகளை நெருக்கமாகக் கோர்த்ததுபோல திரிசூல வடிவத்துடன் நெளிந்தது. குட்டியானையின் துதிக்கையளவுக்கு கனமிருந்தது அது.

பிருதை அப்போதும் நிதானமிழக்கவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தபின் பாம்பின் மீதிருந்த விழிகளை விலக்காமலேயே மெல்ல கையை நீட்டி அறைமூலையில் இருந்த கழியைக் கையிலெடுத்தபடி எழுந்தாள். அவளுடைய அசைவைக் கண்டு அதற்கேற்ப தலையை அசைத்துப்பார்த்துக்கொண்டிருந்த நாகம் சிவந்த நாக்கு பறக்க தலையை தரையில் வைத்தது. அதன் மணிக்கண்களில் சுடரொளி மின்னுவதுபோலிருந்தது.

பிருதை ஓரடி எடுத்துவைத்ததும் சட்டென்று அவள் இடுப்பளவு உயரத்துக்கு எழுந்து பத்தியை விரித்து உடல் வீங்கி புடைத்து சீறியது நாகம். அனல்கதி செந்நாக்கு துடிக்க தலையை அசையாமல் நிறுத்தி அவளைப் பார்த்தது. கழியின் நுனி சற்றே அசைந்தபோது அவ்வசைவை அந்த நாகத்தின் தலையும் பிரதிபலித்தது. அதன்பின்பக்கம் கரிய உடலின் சுருள்கள் வெவ்வேறு திசையிலான அசைவுகளின் குவியலாகத் தெரிந்தன. இருண்ட ஒரு நீர்ச்சுனையின் சுழிப்புபோல.

“ராஜநாகம்” என்று பிருதை சொன்னாள். “இங்கே உள்ளது அல்ல. இங்கே இவ்வளவு மயில்கள் இருக்கின்றன. இது அங்கே காட்டிலிருந்து வந்திருக்கிறது…” அனகை கிசுகிசுப்பான குரலில் “எப்படி?” என்றாள். “நீ வரும்போது உன் பின்னால் வந்திருக்கிறது…” அனகை மெதுவாக பின்னால்நகர்ந்தாள். பிருதை கழியை நாகத்தின் முன்னால் தரையில் நாலைந்துமுறை தட்டினாள். நாகம் தலையை பின்னுக்கிழுத்துக்கொண்டு சட்டென்று ஒருமுறை நிலத்தைக் கொத்தியது. அந்த தட் ஒலியை அனகை தன் நெஞ்சுக்குள் கேட்டாள்.

பிருதை கழியை பின்னால் இழுத்துக்கொண்டு “அது நம்மை ஒன்றும் செய்யவிரும்பவில்லை” என்றாள். நாகம் மெல்ல பத்தியைச் சுருக்கி தரையில் தலையை அசையாமல் வைத்துக்கொண்டு உடலை மட்டும் சுருள்களாகச் சுழற்றி இழுத்துக்கொண்டது. நெளியும் வால் மரப்பெட்டியின் இடுக்கிலிருந்து வெளிவந்ததும் எய்யப்பட்ட அம்புபோல சீறி கதவுவழியாக வெளியே பாய்ந்தது. வெளியே முற்றத்தில் பரவியிருந்த சேற்றில் சிதறிக்கிடந்த அறைவெளிச்சத்தைக் கலைத்தபடி வளைந்து ஓடி இருளுக்குள் மறைந்தது. அது சென்ற தடம் சேற்றில் சிறிய அலைவடிவம்போலத் தெரிந்தது.

கீழே கிழவி மல்லாந்து நெளிந்துகொண்டிருந்தாள். வாயைத்திறந்து நாக்கு வெளியே நீள கையை வேகமாக அசைத்தபடி ஏதோ சொல்லமுயன்றாள். அவளுடைய வலதுகாலும் வலது தோளும் வலிப்புவந்தவைபோல அசைந்தன. பிருதை குனிந்து கிழவியின் முகத்தைப்பார்த்தாள். “முகத்திலேயே கொத்திவிட்டது. ஒன்றும் செய்வதற்கில்லை” என்றாள். கிழவியின் கழுத்தில் தசைநார்கள் அதிர்ந்தன. வாய் ஒருபக்கமாகக் கோணி இழுத்துக்கொள்ள எச்சில் நுரை கன்னம் வழியாக வழிந்தது. குருதிக்குழாய்கள் நீலநிறமாக உடலெங்கும் புடைத்தெழத் தொடங்கியிருந்தன.

பிருதை அவள் கையைப்பிடித்துக்கொண்டாள். “அந்தக் குழந்தை…அதற்கு நாகம் துணை” என்றாள் கிழவி. அவள் கண்கள் புறாமுட்டைகள் போல வெண்மையாக பிதுங்கி நின்றன. “நாகவிஷத்தை நான் எடுத்தபோது அந்தக் குழந்தை சிரித்தது… நான் அதைக்கேட்டேன்…” அவள் கைகள் பிருதையின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டன. நீரில் நீந்துபவள் போல வலதுகாலை இருமுறை அடித்து மார்பை மேலேதூக்கினாள். பின்பு கைப்பிடி தளர கண்கள் மேலே செருகிக்கொண்டன. மார்பும் மெதுவாகக் கீழிறங்கி முதுகு நிலத்தில் படிந்தது.

பிருதை எழுந்து “வீரர்களைக் கூப்பிட்டு இவளை அகற்று… உடனே நீயே மதுராவுக்குச் சென்று என் மூத்தவரை வரச்சொல்!” என்று ஆணையிட்டாள். அவளிடம் மேலும் தற்சமன் கைகூடியிருப்பதைப்போல அனகை எண்ணிக்கொண்டாள்.

நூல் இரண்டு – மழைப்பாடல் – 25

பகுதி ஐந்து : முதல்மழை

[ 4 ]

அஸ்தினபுரியின் அரண்மனை மேல்மாடத்தில் தன் மஞ்சத்தில் சத்யவதி கண்விழித்தாள். அறைக்குள் வேதுநீர் அறை என நீர்வெம்மை நிறைந்திருந்தது. உடல் வியர்வையால் நனைந்து ஆடைகள் உடலுடன் ஒட்டியிருக்க அவள் உடல்பட்ட மஞ்சத்திலும் வெய்யநீர் நனைவு இருந்தது. விடாயறிந்து எழுந்து சென்று மண்ணாலான நீர்க்குடுவையில் இருந்து நீரை மொண்டு குடித்தாள். கதவு மெல்ல ஓசையிட்டது. “வா” என்றாள். சியாமை உள்ளே வந்தாள்.

“வெப்பம் திடீரென்று அதிகரித்ததுபோல இருந்தது” என்றாள் சத்யவதி. “நான் வெயில் தகிக்கும் பெரும்பாலை ஒன்றில் நின்றிருப்பதுபோல கனவுகண்டேன்.” சியாமை “படுத்துக்கொள்ளுங்கள் அரசி… நான் விசிறுகிறேன்” என்றபடி அருகே இருந்த மயிலிறகு விசிறியை எடுத்துக்கொண்டாள்.

சத்யவதி படுத்துக்கொண்டாள். கீழே காவல்வீரர்கள் இரும்புக்குறடுகள் ஒலிக்க நடைபழகும் ஒலியும் அவ்வப்போது அவர்களின் ஆயுதங்களின் உலோக ஒலிகளும் கேட்டுக்கொண்டிருந்தன. சியாமை மெல்ல விசிறிய காற்று அவ்வளவு குளுமையாக இருந்தமைக்கு உடல் நன்றாக வியர்த்திருந்ததுதான் காரணம் என்று சத்யவதி உணர்ந்தாள். உள்ளே சென்ற நீர் குடல்களை குளிரச்செய்தது. நன்றாக உடலை விரித்துக்கொண்டபடி பெருமூச்சு விட்டாள்.

இரவில் விழிப்புவந்தால் மீண்டும் துயில்வரும் காலத்தை அவள் கடந்திருந்தாள். கண்களை மூடியிருக்கையில் இமைக்குள் விழிகள் ஓடிக்கொண்டே இருந்தன. கண்களைத் திறக்காமலேயே “அவர்கள் நேற்று அதிகாலையிலேயே சுதுத்ரியைக் கடந்துவிட்டார்கள்” என்றாள். “ஆம்… இரவெல்லாம் பயணம் செய்கிறார்கள். அனேகமாக இன்றுமாலையில் திரஸத்வதியையும் கடந்துவந்திருப்பார்கள்.”

“எல்லையைத் தாண்டியதுமே தூதுப்புறாவை அனுப்பும்படி பலபத்ரரிடம் சொல்லியிருந்தேன். இந்நேரம் வந்திருக்கவேண்டுமே” என்றாள் சத்யவதி. சியாமை புன்னகைசெய்தபடி “பயணத்தின் தாமதங்கள் எப்போதும் இருப்பவை அல்லவா?” என்று பொதுவாகச் சொன்னாள். “ஆம்…எல்லாம் சிறப்பாகவே முடிந்தன என்று செய்திவந்தபோது எனக்கு நிறைவே எழவில்லை. இன்னும் சற்று பதற்றம்தான் ஏற்பட்டது. எனக்கு வயதாகிவிட்டது என்று நினைக்கிறேன்” என்றாள் சத்யவதி.

“விதுரர் வந்து உங்களிடம் பேசும்வரை அந்தப்பதற்றம் நீடிக்கும் பேரரசி” என்றாள் சியாமை. சத்யவதி “ஆம் அது உண்மை. அனைத்துக்குள்ளும் அறியமுடியாத ஒன்று பொதிந்திருக்கிறது என்ற அச்சமே என்னைப்போன்ற அரசியல் மதியூகிகளின் நரகம். அவன் வந்து அனைத்தையும் தெளிவாக்கும் வரை நான் விதவிதமாக வெறும் கையால் கம்பளம் பின்னிக்கொண்டிருப்பேன்.”

“இந்த வெம்மை… ஏன் இத்தனைநாள் மழை தாமதமாகிறது….மண் மழையை அறிந்து நூறுநாட்கள் கடந்துவிட்டன” என்று சொல்லி சத்யவதி மெல்லப்புரண்டாள். “நூறாண்டுகால வரலாற்றில் இதுவே மழை இத்தனை தாமதிக்கும் வருடம் என்று வானூலாளர் சொன்னார்கள்” என்றாள் சியாமை. “காற்று மாலைமுதலே அசைவை இழந்துள்ளது. கொடிகள் அசைந்து இருநாழிகைகளாகின்றன” சத்யவதி பெருமூச்செறிந்தாள்.

சடசடவென ஏதோ முறியும் ஒலி கேட்டது. மரக்கிளை முறிந்துவிழுகிறது என்று முதலில் சத்யவதி நினைத்தாள். மரங்களின் இலைகள் வழியாக நூற்றுக்கணக்கான குரங்குகள் கூட்டமாகத் தாவிவருவதுபோன்ற மனச்சித்திரம் எழுந்து உடனே என்ன அசட்டுக்கற்பனை என்ற மறு எண்ணமும் எழுந்தது. அதற்குள் கனத்த நீர்த்துளிகள் சாளரக்கதவுகளை அறைந்தன. திறந்திருந்த சாளரம் வழியாக புற்சரங்கள் போல பாய்ந்துவந்து தரையில் சிதறின. அவற்றை ஏற்றிவந்த காற்று சாளரக்கதவுகளை ஓங்கி அறைந்து, தீபச்சுடர்களை அணைத்து, மறுபக்கக் கதவைத் தள்ளி உள்ளே சென்றது. அரண்மனையின் அனைத்து கதவுகளும் படபடவென அடித்துக்கொண்டன.

“மழையா?” என்று சொன்னபடி சத்யவதி எழுந்துகொண்டாள். “ஆம் பேரரசி, மழைதான்” என்றாள் சியாமை. “அதுதான் இத்தனை வெந்நீர்மையா?” குளிர்ந்த காற்று நீர்ச்சிதர்களுடன் அறைக்குள் சுழன்றடித்தது. சியாமை எழுந்து சென்று சாளரக்கதவுகளை மூடினாள். கதவுகளை அவளால் இழுக்கமுடியவில்லை. ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு வெறியாட்டெழுந்த தெய்வதம் குடியேறியதுபோலிருந்தது. அப்பால் மரங்களின் கிளைகள் மிரண்ட புரவிகளென எழுந்து கொப்பளித்தன. ஒரு சாளரக்கதவு கையை மீறி திறந்து அவளை பின்னுக்குத் தள்ளியது. அதன் வழியாகவந்த நீர்த்துளிகள் கூழாங்கற்கள் போல எதிர்ச்சுவரை அறைந்தன.

“விட்டுவிடு” என்று சத்யவதி சொன்னாள். “அறை நனையட்டும்…நான் வேறு மஞ்சத்துக்குச் சென்றுவிடுகிறேன்.” சியாமை பின்னகர்ந்து வந்து அமர்ந்துகொண்டாள். சிலகணங்களில் சாளரம் வழியாக மழை நீர்நிறை ஏரியின் மதகுதிறந்தது போல பொழியலாயிற்று. மரத்தாலான தரையில் நீர் பெருகி வெளியே படிகளில் வழிந்தது. சத்யவதியின் ஆடைகள் நனைந்து உடலுடன் ஒட்டிக்கொண்டன. கூந்தல் கன்னத்தில் ஒட்டிப்பரவ அவள் விரலால் கோதி பின்னால் செருகிக்கொண்டாள்.

இடியோசைக்குப்பின் மின்னல் அதிர்ந்து மரங்கள் ஒளியுடன் அதிர்ந்து மறைந்தன. அடுத்த இடியோசைக்குப்பின் சாளரங்கள் மின்னி அணைவதைக் கண்டாள். அடுத்த இடியோசைக்குப்பின் அறையின் அனைத்து உலோகவளைவுகளிலும் செவ்வொளி மின்னும் விழிகள் திறந்ததைக் கண்டாள். பிறிதொரு இடியோசை அணைந்தகணத்தில் மேகக்குவியல்களில் இந்திர வஜ்ரம் எழுந்ததைக் கண்டாள்.

“அப்படியென்றால் அவள் உள்ளே நுழைந்ததும் மழைபெய்திருக்கிறது” என்றாள் சத்யவதி. “ஆம் பேரரசி, அரசி மழையுடன் வருகிறார்கள். அனேகமாக அவர்கள் நேற்றுமாலையே திரஸத்வதியை கடந்திருப்பார்கள்” என்றாள் சியாமை. “மழைபெய்தால் அதில் மலைவெள்ளம் இறங்கும். வானம் மூட்டமாக இருந்திருக்கும், பீஷ்மர் உடனே நதியைக் கடக்க முடிவெடுத்திருப்பார்.”

சத்யவதி புன்னகையுடன் “திரஸத்வதிக்கு இப்பால் நம்முடைய எல்லை. யோசித்துப்பார், அவள் நதியைக் கடந்து மண்ணில் கால் வைத்ததும் பெருமழை கொட்டத் தொடங்கியிருக்கிறது.” சியாமை சிரித்தபடி “சூதர்களுக்கு நாமே கதைகளை உருவாக்கிக் கொடுத்துவிடலாம்” என்றாள்.

இரவு மழையாலானதாக இருந்தது. மழையோ ஒற்றைப்பெரும்பொழிவென திகழ்ந்தது. மழையோசை ஒன்றையே சொல்லும் முதல்மந்திரம். ஆயிரம் இலைநாவுகள் சுழித்தெழும் நாதம். பல்லாயிரம் நீர்த்தந்திகள் அதிர்ந்தெழும் நாதம். நிலமுரசின் விம்மல். நதியாழின் மீட்டல். மேகச்சல்லரியின் குமுறல். மழைத்தலின் பேரிசை.

விடியற்காலையில் மழை சற்றே ஓய்ந்தது. சத்யவதி கீழே சென்று வெந்நீரில் நீராடி வெள்ளை ஆடைகளும் ஒரே ஒரு வைர ஆரமும் அணிந்து சபாமண்டபத்துக்கு வந்தாள். அரண்மனையில் சாளரத்தை ஒட்டிய பகுதிகளெல்லாம் நனைந்திருக்க அவற்றை சேவகர்கள் மரவுரிகளால் துடைத்துக் கொண்டிருந்தனர். வடக்கு வாயிலில் இருந்து யானைகளின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. அவை மழையை விரும்பி எழுப்பும் குரல் என நினைத்ததும் சத்யவதி புன்னகை புரிந்துகொண்டாள். உள் அங்கண முற்றத்தில் மரக்கூரையின் விளிம்பிலிருந்து நீர் கசிந்து சொட்டிக்கொண்டிருந்தது.

சபாமண்டபத்திற்குச் செல்லும் நீண்ட இடைநாழியின் பக்கவாட்டுத் திறப்புக்கு அப்பால் தெரிந்த அரண்மனைத் தோட்டத்தின் அனைத்து மரங்களும் புதியதாகப் பிறந்துவந்தவை போலிருந்தன. நேற்றுவரை புழுதிபடிந்து சோர்ந்திருந்த மரங்கள் எப்படி ஒரே இரவில் புத்துயிர் கொள்ளமுடியும்? அவை காத்திருந்த கணம் போலும் அது. அதற்காக அவை தங்கள் உயிரனைத்தையும் இலைகளில் தேக்கியிருந்திருக்கவேண்டும்.

சபாமண்டபத்தில் அவளுக்காக அமைச்சர்கள் காத்திருந்தனர். கவரியும் மங்கலத்தாலமும் ஏந்திய சேவகர்களின் நடுவே நடந்து அவள் உள்ளே சென்றபோது அமைச்சர்கள் எழுந்து வாழ்த்தொலித்தனர். அவள் அமர்ந்ததும் அமைச்சர்களின் முகங்களை கவனித்தாள்.  மழை அவர்களனைவரையும் மகிழ்வித்திருப்பதாகப் பட்டது.

காலை விடியத்தொடங்கியிருந்தாலும் வானம் இருண்டிருந்தமையால் இருள் இருந்தது. மண்டபத்தில் அடுக்குநெய்விளக்குகளில் சுடர்கள் எரிந்தன. அது அந்திவேளை என்ற பிரமையை அகத்துக்கு அளித்துக்கொண்டே இருந்தன அவை.

அவள் அரியணையில் அமர்ந்தபின்னும் வெளியே தெரிந்த ஒளிமங்கலையே பார்த்துக்கொண்டிருந்தாள். கருமேகக்குவியல் மெதுவாக மிக அப்பால் எங்கோ ஓசையிட்டது. அதைக்கேட்டு வடக்குவாயில் யானைகள் இரண்டு சின்னம் விளித்தன. மண்ணில் காலூன்றிய கருமேகங்கள்.

“மழை தொடங்கிவிட்டது பேரரசி” என்றார் எல்லைக்காவலர் தலைவரான விப்ரர். வரிகளுக்குப் பொறுப்பாளராகிய சோமரும் யானைக்கொட்டடிக்கு அதிபராகிய வைராடரும் அங்கிருந்தனர். தளகர்த்தர்களான உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் இருந்தனர். சத்யவதி “செய்தி வந்ததா?” என்றாள்.

“மழையில் செய்திப்புறாக்கள் தாமதமாகும்…அனேகமாக சற்றுநேரத்தில் வந்துவிடும். ஆனால் நேற்றே அவர்கள் நம் எல்லை நதியைக் கடந்திருப்பார்கள்” என்றார் விப்ரர். “திரஸத்வதியில் வெள்ளம் வர வாய்ப்புள்ளதா?” என்று சத்யவதி கேட்டாள். “இந்த மழை இன்னும் நான்குநாட்களில் இமயத்தைச் சென்று முட்டும். அதன்பின்னர்தான் திரஸத்வதி பெருகிவரும்” என்றார் விப்ரர்.

“வருவது நம் தேசத்தின் அரசி” என்றாள் சத்யவதி. “ஆகவே மழையாக இருந்தாலும் வெள்ளமாக இருந்தாலும் நம் நகரமக்கள் அனைவரும் வாயிலில் திரண்டாகவேண்டும். அனைத்து மங்கலமுரசுகளும் ஒலிக்கவேண்டும். வேதியரும் சூதரும் வாழ்த்தவேண்டும்.” வைராடர் “நூறு யானைகள் தலைமையில் பட்டத்துயானையே சென்று அவர்களை வரவேற்க ஆணையிட்டிருக்கிறேன் பேரரசி. யானைகளுக்கான அணியலங்காரங்கள் இப்போதே தொடங்கிவிட்டன” என்றார். சோமர் “சூதர்களுக்கும் வைதிகர்களுக்கும் ஆணைகள் சென்றுவிட்டன” என்றார்.

அவள் மனக்குறிப்பை உணர்ந்ததுபோல விப்ரர் “நல்லநிமித்தம் பேரரசி… மழையுடன் நகர்நுழைகிறார்கள்” என்றார். உக்ரசேனர் “இம்முறை மழை மூன்றுமாதம் காக்கவைத்துவிட்டது” என்றார். சத்யவதி அவரைப்பார்த்ததும் “நகரே விடாய்கொண்டிருந்தது” என்றார். விப்ரர் “நகரெங்கும் புதிய அரசியைப்பற்றியே பேச்சு நிகழ்கிறது. நம் அரசருக்காக தன் கண்களையும் இருட்டாக்கிக்கொண்டார் என்றும் புராணநாயகியரான சாவித்ரியையும் அனசூயையையும் நிகர்த்தவர் என்றும் சொல்கிறார்கள்” என்றார். உக்ரசேனர் “ஆம், நகர்மக்கள் அதைப்பற்றி பெருமிதம்கொண்டு கண்ணீருடன் கைகூப்புகிறார்கள்” என்றார்.

சத்யவதி “அரச ஊழியர்கள் என்ன சொல்லிக்கொள்கிறார்கள் உக்ரசேனரே?” என்றாள். “அரச ஊழியர்களில் பலவகையினர் உண்டு பேரரசி. ஒற்றர்கள் போன்றவர்கள் பலநாடுகளையும் அரசியலின் பல முகங்களையும் கண்டவர்கள். அவர்கள் சொல்வது வேறாக இருக்கிறது. காந்தார அரசியின் செயல் ஒரு சிறந்த அரசிக்குரியதல்ல என்றும் உணர்ச்சிமேலீட்டில் முடிவுகளை எடுப்பவர் அவர் என்பதைக் காட்டுகிறது என்றும் சொல்கிறார்கள். அரசருக்கு விழியில்லை என்றிருக்கையில் அரசி அவருக்கும் விழியாக இருப்பதே சிறந்த வழியாக இருந்திருக்கும் என்கிறார்கள்.”

“ஆம் அப்படியும் சிந்திக்கலாம்தான்” என்றாள் சத்யவதி. உக்ரசேனர் “அது காந்தார இளவரசி அங்குள்ள முறைப்படி வளர்க்கப்பட்டிருக்கிறார் என்பதற்கான சான்று என்கிறார்கள். அங்கே இளவரசியருக்கும் பிறருக்கும் வேறுபாடில்லை. அவர்கள் குதிரைகளில் பெருநிலவிரிவுகளில் அலைபவர்கள். ஆயுதப்பயிற்சி எடுப்பவர்கள். அரசாள்வதற்கான சிறப்புப் பயிற்சி ஏதும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதில்லை…” என்றார். உக்ரசேனர் தணிந்த குரலில் “அதனால் தாழ்வில்லை. நாம் இங்கே பேரரசியின் தலைமையில் அப்பயிற்சியை அளித்துவிடமுடியும்…ஆனால் விழிகளை மூடிக்கொண்டசெயல் அதற்கும் தடையாக அமைந்துவிட்டிருக்கிறது.”

விப்ரர் “ஆம், அது உண்மை” என்றார். “ஆனால் விழியின்மையால் என்ன ஆகப்போகிறது? இவ்வரசை நடத்தப்போவது விதுரர். அவருக்கு பல்லாயிரம் விழிகள். காந்தார இளவரசியை நம் அரசியாக ஏற்பதில் இங்கே பிராமணர்களுக்கும் ஷத்ரியர்களுக்கும் தயக்கமிருந்தது. அவர் முறையான ஷத்ரியகுடியில் பிறந்தவரல்ல என்று பலரும் பேசிக்கேட்டேன்.”

விப்ரர் தொடர்ந்தார் “பேரரசியாரின் கவனத்துக்கு வந்திருக்கும். ஒரு யானை குட்டி போட்டாலே கவிதை புனைந்து பாடத்தொடங்கிவிடும் நம் சூதர்கள் காந்தார இளவரசியை நம் மன்னர் மணக்கவிருக்கும் செய்தி பரவிய பின்னரும்கூட ஒரு பாடலேனும் புனையவில்லை. ஆனால் அரசி தன் விழிகளை கட்டிக்கொண்டது அனைத்தையும் மாற்றிவிட்டது. இன்று அவர் இந்நகரத்தின் காவலன்னையாகவே மக்களால் எண்ணப்படுகிறார். சூதர்பாடல்கள் பால்கலம் பொங்குவதுபோல இந்நகரை மூடி எழுகின்றன… இப்போது இந்த மழையும் இணைந்துகொண்டிருக்கிறது.”

“ஆம், மக்களின் ஏற்பே முக்கியமானது” என்று சத்யவதி சொன்னாள். “நான் இவ்வரியணையில் அமர்ந்து இருபதாண்டுகளாகின்றன. இன்றுவரை என்னை இந்நகர மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.” விப்ரர் “இல்லை பேரரசி…” என சொல்லத் தொடங்க “ஆம், அதை நானறிவேன். என் உடலில் இருந்து மச்சர்களின் வாசனை விலகவில்லை. காந்தாரியின் லாஷ்கரப் பாலைநில வாசத்தை இந்த மழையே கழுவிவிடும்” என்றாள் சத்யவதி.

உக்ரசேனர் பேச்சை மாற்றும்பொருட்டு “பேரரசி, நாம் அனைத்து ஷத்ரியர்களுக்கும் மணநிறைவுச்செய்தியை அனுப்பவேண்டும்…” என்றார். “ஆம், அதுதான் திருதராஷ்டிரன் முடிச்சூடப்போகும் செய்தியாகவும் அமையும்” என்றாள் சத்யவதி. “விப்ரரே, ஓலைகளை எழுத ஆணையிடும். ஐம்பத்தைந்து மன்னர்களுக்கு மட்டுமல்ல, ஆரியவர்த்தத்திற்கு அப்பாலுள்ள நிஷாதமன்னர்கள் கிராதமன்னர்கள் அனைவருக்கும் செய்தி செல்லவேண்டும்” என்றாள்.

VENMURASU_EPI_75_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

வானத்தின் இடியதிர்வுகள் நெருங்கி வந்தன. மின்னல்கள் சபாமண்டபத்தையே ஒளிகொண்டு துடிக்கச் செய்தன. சிலகணங்களில் மழை அரண்மனைவளாகம் மீது பாய்ந்தேறியது. பளிங்குச் சரங்களாக பெருகிக்கொட்டத் தொடங்கின மழைத்தாரைகள். அங்கணமுற்றம் குளமாக நிறைந்து மடைகளருகே சுழித்தது. மழையின் பேரோசையால் மூடப்பட்ட அறைகளுக்குள் இருளும் நீராவியும் நிறைந்து மூச்சுத்திணறச்செய்தன. வீரர்களும் சேடிகளும் சேவகர்களும் எங்கேனும் நின்று மழையைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அமைச்சர்கள் ஓலைகளை வாசித்துச்சொல்ல மழையைப் பார்த்தபடி சத்யவதி ஆணைகளைப் பிறப்பித்தாள்.

சத்யவதி இடைநாழி வழியாக சென்றபோது சியாமை எதிரே வந்து பணிந்தாள். சத்யவதி நோக்கியதும் “புறா வந்துவிட்டது. அவர்கள் நேற்று நள்ளிரவில் திரஸத்வதியைக் கடந்திருக்கிறார்கள்” என்றாள். சத்யவதி “அப்படியென்றால் இன்று மாலையே அவர்கள் நகர்நுழைவார்கள். அந்தியில் நல்லநேரமிருக்கிறதா என்று நிமித்திகரிடம் கேட்டு சொல்லச்சொல்” என்றாள். “நானே கேட்டுவிட்டேன். இன்றைய அந்தி மிகமிக புனிதமானது என்றார்கள். அனசூயாதேவிக்குரியது.” சத்யவதி புன்னகையுடன் தலையசைத்தாள்.

சத்யவதியின் பாதங்கள் பலகைத்தரையில் பதிந்த இடங்களில் அவளுடைய சந்தனப்பாதுகையின் வடிவம் நீர்த்தடமாகப் படிந்து சென்றது. அவள் திரும்பி அந்தப்பாதத்தடம் மெல்ல நீர்த்துளிகள் பரவி மறைவதைப் பார்த்தாள். மழை தன்னை சிறுமியாக்கிவிட்டது என நினைத்துக்கொண்டாள். கற்ற கவிதைகளெல்லாம் நினைவிலூறுகின்றன. நீரில் மட்டுமே அவள் அடையும் விடுதலை. அப்போது யமுனையின் நீர்வெளிமேல் மழை வானைத்தொட எழுந்த நிறமில்லா நாணல்காடுபோல நிற்பதை அவள் கண்ணுக்குள் காணமுடிந்தது.

சியாமை மெல்ல “சிறிய அரசிக்கு உடல்நலமில்லை” என்றாள். “ஏன்?” என்று கவனமில்லாதவள்போல சத்யவதி கேட்டாள். “கடுமையான தலைவலியும் உடல்வெம்மையும் இருக்கிறது என்று அவர்களுடைய சேடி வந்து சொன்னாள். ஆதுரசாலையில் இருந்து இரண்டு வைத்தியர்கள் சென்று லேபனமும் ரஸக்கலவையும் கொடுத்திருக்கிறார்கள்.” சத்யவதி “உம்” என்று மட்டும் சொன்னாள். “அந்தச் சேடியையோ வைத்தியர்களையோ கூப்பிட்டு விசாரிக்கலாம்” என்று சியாமை சொன்னதுமே சத்யவதி திரும்பிப்பாராமல் “வேண்டாம்” என கைகாட்டினாள்.

மழை பகலெல்லாம் இடைவெளியே இல்லாமல் பொழிந்தது. பிற்பகலில் மெதுவாகக் குறைந்து இடியோசைகளும் மின்னல்களுமாக எஞ்சியது. கூரைகளும் இலைநுனிகளும் மட்டும் சொட்டிக்கொண்டிருந்தன. காற்றுடன் வீசிய மழையாதலால் பெரும்பாலான சுவர்களும் நனைந்து அரண்மனையே நீருக்குள் இருப்பதுபோல குளிர்ந்துவிட்டிருந்தது. சுவர்களின் வெண்சுண்ணப்பூச்சுகள் நீரில் ஊறி இளநீலவண்ணம் கொண்டன.

சத்யவதி மதிய உணவுக்குப்பின் கீழே இருந்த இரண்டாவது மஞ்சஅறையில் சிறிது துயின்றாள். சியாமை வந்து அவள் கட்டிலருகே நின்று மெல்ல “பேரரசி” என்று சொன்னதும் கண்விழித்தாள். சிவந்த விழிகளால் சியாமையையே பார்த்தாள். “ரதங்கள் இன்னும் ஒருநாழிகையில் கோட்டைவாயிலை அணுகும் பேரரசி” என்றாள் சியாமை.

சத்யவதி எழுந்து விரைவாகச் சென்று நீராடி அந்நிகழ்வுக்கென்றே சியாமை எடுத்துவைத்த பொன்னூல் பின்னல்கள் கொண்ட கலிங்கத்துப் பட்டாடையைச் சுற்றி அரசிக்குரிய அனைத்து அணிகலன்களையும் அணிந்துகொண்டாள். சியாமை அவளை அணிவிக்கையில் அவள் அவ்வாறு விரும்பி அணிகொண்டு நெடுநாளாயிற்று என எண்ணிக்கொண்டாள்.

அந்தப்புரத்தின் முற்றத்துக்கு அவள் வந்தபோது ரதம் காத்து நின்றது. அதன் தேன்மெழுகுப் பாய்க்கூரை நன்றாக முன்னாலிழுத்து விடப்பட்டிருந்தது. மழைமுற்றிலும் நின்றிருந்தாலும் வானம் முழுமையாகவே இருண்டு காற்றில் நீர்த்துளிகள் பறந்துகொண்டிருந்தன. சத்யவதி “அம்பிகை எங்கே?” என்றாள். “அரசி ஒருநாழிகைக்கு முன்னதாகவே கோட்டைவாயிலுக்குச் சென்றுவிட்டார்கள் பேரரசி” என்றாள் சியாமை. சியாமையும் ஏறிக்கொண்டதும் ரத ஓட்டி கடிவாளங்களைச் சுண்ட சற்று அதிர்ந்து ரதம் முன்னகர்ந்தது. முன்னும் பின்னும் அவளுடைய அணியாளர்கள் ஏறிய ரதங்கள் கிளம்பிச்சென்றன.

நகரம் முழுக்க மக்கள் தலையில் ஓலையாலோ பாளையாலோ தோலாலோ ஆன குடைகளை அணிந்தபடி நிறைந்திருந்தனர். ரதத்தின் மேலிருந்து பார்க்கையில் நகரமெங்கும் பளபளக்கும் தோல்கொண்ட பசுக்களும் எருமைகளும் முட்டி மோதுவதாகத் தோன்றியது. கடைத்தெருவில் பெரிய ஓலைக்குடைகளை விரித்து அதன்கீழே மரத்தட்டுகளில் பொருட்களைப்போட்டு விற்றுக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் சுண்ணம், புனுகு, கஸ்தூரி, சந்தனம் போன்ற அணிப்பொருட்கள். விளக்கேற்றுவதற்கான நெய்ப்பொருட்கள். மக்களின் குரல்கள் மழைமூடிய வானத்துக்குக் கீழே பெரிய கூடத்துக்குள் ஒலிப்பவைபோல கேட்டன. அவர்களது ஆடைகளின் வண்ணங்கள் மேலும் அடர்ந்து தெரிந்தன.

வானம் இடியாலும் மின்னலாலும் அதிர்ந்தபடியே இருந்தது. மின்னல்கணங்களில் தொலைதூரத்தின் கோட்டைமீதிருந்த காவல்மாடங்கள் தெரிந்தன. முரசுகளை எல்லாம் தேன்மெழுகு பூசப்பட்ட மூங்கில்தட்டிகளால் மழைச்சாரல் படாமல் மூடிவைத்திருந்தனர். கருக்கிருட்டில் படைக்கலங்களின் உலோகமுனைகள் மேலும் ஒளிகொண்டிருந்தன. ரதவீதியின் கல்பாவப்பட்ட பரப்பின் இடுக்குகளில் சிவப்புநிறமாக மழைநீர் தேங்கி ஒளியை பிரதிபலித்து சதுரக்கட்டங்கள் கொண்ட மின்னும் சிலந்திவலைபோலத் தெரிந்தது.

கோட்டைமுகப்பில் குடைவிளிம்புகள் ஒன்றுடனொன்று மோத மக்கள் கூடி நிறைந்திருந்தனர். கரிய மழைநீர் சேர்ந்த ஏரி போலிருந்தது கோட்டைமுற்றம். ரதத்துக்காக முன்னால்சென்ற காவல்வீரர்கள் கூச்சலிட்டு மக்களை விலக்கவேண்டியிருந்தது. கோட்டைக்குமேல் வீரர்கள் கவச உடைகளுடன் பறவைக்கூட்டம்போலச் செறிந்து தெரிந்தனர். சத்யவதியின் ரதம் கோட்டைவாசலை அடைந்ததும் அவளை வரவேற்று குறுமுழவு முழங்க கொம்பு பிளிறலோசை எழுப்பியது. அவள் இறங்கி வெள்ளை ஆடையை கொண்டைமேல் சரிசெய்துகொண்டாள். அவளைச்சுற்றி வாழ்த்தொலிகள் எழுந்தன.

முன் ரதத்தில் இருந்து கட்டியங்காரன் இறங்கி கொம்பு தூக்கி ஊதியபடி அவள் வருகையை அறிவித்து முன் செல்ல பின்னால் வந்த ரதத்தில் இருந்து இறங்கிய வீரர்கள் கவரியும் குடையுமாக அவளைத் தொடர்ந்து வந்தனர். அவளுடைய நறுஞ்சுண்ணத்தையும் நீரையும் கொண்டு இடப்பக்கம் சியாமை வந்தாள். வலப்பக்கம் அணிமங்கலப்பொருட்கள் அடங்கிய தாலத்துடன் மூன்று சேடிகள் வந்தனர். வாழ்த்தொலிகள் பட்டுத்திரைச்சீலைகள்போலத் தொங்குவதாகவும் அவற்றை விலக்கி விலக்கி முன்னேறிச்செல்வதாகவும் அவளுக்குத் தோன்றியது.

ரதங்கள் ஓடி வழவழப்பான பாதைக்கற்களில் ஈரம் படிந்து அவை நீர்விட்டெழுந்த எருமையுடல் போல மின்னிக்கொண்டிருந்தன. கோட்டைவாயிலுக்கு வெளியே நகரத்தின் முகப்பில் சிறிய மணிப்பந்தல் போடப்பட்டிருந்தது. தேன்மெழுகு பூசப்பட்ட பாயை மூங்கில்கள் மேல் பரப்பி எழுப்பப்பட்ட பந்தலில் அரசியர் அமர்வதற்காக பீடங்கள் வெண்பட்டு மூடி காத்திருந்தன. பெரிய ஏழடுக்கு நெய்விளக்கு அங்கே செவ்வரளி பூத்ததுபோல நின்றது. முன்னரே வந்த அம்பிகை அங்கே வெண்பட்டாடையும் அணிகலன்களுமாக நின்றிருந்தாள். அருகே அம்பிகையின் சேடியான ஊர்ணை நின்றாள்.

பந்தலில் சத்யவதி ஏறியதும் அம்பிகை கைகூப்பி முகமன் சொல்லி வரவேற்றாள். அவள் முகத்தைப் பார்த்தபோது சத்யவதி சற்று அகக்கலக்கத்தை அடைந்தாள். வெற்றியின் நிறைவை இன்னும் சற்று மறைத்துக்கொள்ளலாகாதா இவள் என எண்ணினாள். அதைப்போல எதிரிகளை உருவாக்குவது பிறிதொன்றில்லை. ஆனால் அது அம்பிகை அவளுடைய வாழ்க்கையில் கண்ட முதல் வெற்றியாக இருக்கலாம் என்றும் தோன்றியது.

மூன்று குதிரைகள் பின்கால்களில் சேறு சிதறித் தெறிக்க கோட்டையை நோக்கி வந்தன. அவற்றில் இருந்த வீரர்கள் கைகளால் சைகைசெய்தபடியே வந்தனர். மணக்குழு வந்துவிட்டது என்பது அதன்பொருள் என்று உணர்ந்த கூட்டம் வாழ்த்தொலிகளை கூவத்தொடங்கியது. அம்பிகை நிலையழிந்து பந்தலின் கால் ஒன்றைப் பற்றிக்கொண்டாள். அக்கணம் வானில் ஒரு பெருநதியின் மதகுகளைத் திறந்துவிட்டதுபோல செங்குத்தாக மழை வீழத் தொடங்கியது. சிலகணங்களுக்குள் அப்பகுதியில் மழைத்தாரைகள் அன்றி ஏதும் தெரியவில்லை.

மழைத்திரைக்குள் ஆடும் நிழல்களைப்போல மணக்குழுவின் வண்டிகள் தெரிந்தன. முன்னால் வந்த காவல்வீரர்களின் குதிரைகள் மழைக்காக முகத்தை நன்றாகக் கீழே தாழ்த்தியிருந்தன. ஒவ்வொரு வரிசையாகவே மழையைக் கிழித்துத் தோன்றமுடிந்தது. மழை அறைந்து தெறித்துக்கொண்டிருந்த மரக்கூரையுடன் பீஷ்மரின் ரதம் வந்தது. தொடர்ந்து விதுரனின் ரதம். கூர்ந்து கவனித்தால் மட்டுமே அது எவருடைய கொடி என்பதைக் காணமுடிந்தது.

கோட்டைக்குமேல் பாய்மூடிகளை எடுத்து பெருமுரசுகளை ஒலித்தனர். ஆனால் மழை ஈரத்தில் தொய்ந்த முரசின் தோல்வட்டங்கள் எழுப்பிய ஒலி நீர்ப்பரப்பில் கையால் அறைவதுபோலக் கேட்டது. கோட்டைமேல் ஏறிய பீஷ்மர், திருதராஷ்டிரன், விதுரன் மற்றும் அமைச்சர்களின் கொடிகள் கம்பங்களில் ஒட்டிக்கொண்டன. காந்தாரத்தின் கொடி ஏறியபோது மக்கள் அதை உணரவேயில்லை. எவரோ ஆணையிட மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர். அந்த ஒலி மழைக்குள் நெடுந்தொலைவில் என ஒலித்தது.

உச்சஒலியில் முழங்கிய மழை அங்கிருந்தே மேலும் உச்சத்துக்குச் சென்றது. மழைத்தாரைகள் வெண்தழல் என வெடித்துச் சிதறிக்கொண்டிருந்த கூரையுடன் அரசியரின் கூண்டுவண்டி வந்து நின்றது. பேரோசையுடன் வீசிய காற்று எதிர்த்திசை நோக்கிச் சென்று ஏதோ எண்ணிக்கொண்டு சுழன்று திரும்பிவந்து சத்யவதி அம்பிகை சேடிகள் அனைவரின் ஆடைகளையும் அள்ளிப்பறக்கச் செய்து பந்தலை அப்படியே தூக்கி பின்பக்கம் சரித்தது. அவர்கள்மேல் மழை அருவிபோல இறங்கியது.

சேடியர் குடைகளை நோக்கி ஓடமுயல சத்யவதி அவர்களை சைகையால் தடுத்தாள். அவளும் அம்பிகையும் கொந்தளித்த சேற்றுப்பரப்பில் ஆடையை முழங்கால்மேல் தூக்கியபடி கால்வைத்துத் தாவி நடந்து அரசியரின் கூண்டு வண்டியை அடைந்தனர். அதன் குதிரைகள் நீர் வழிந்த தசைகளை உதறி சிலிர்த்துக்கொண்டு, பிடரிமயிர்கள் ஒட்டிக்கிடக்க அடிவயிற்றில் நீர்த்தாரைகள் சொட்டி சரமாக வடிய நின்றிருந்தன.

பலபத்ரர் கை காட்ட நனைந்துகொண்டே சென்ற சேடி ஒருத்தி வண்டியின் பின்பக்க வாயிலைத் திறந்தாள். செவ்வண்ணத் திரைச்சீலை விலகி வெண்ணிறமான கால் வெளியே வருவதை சத்யவதி கண்டாள். கருப்பையில் இருந்து குழவி எழுவதைப்போல! அரசியரின் வெண்கால்கள் நனைந்த செம்பட்டுத் திரை திறந்து வந்தன. செவ்விதழில் வெண்பற்களெழுந்த இளநகை என.

நீலப்பட்டுத்துணியால் கண்களை கட்டிக்கொண்டு காந்தாரி இறங்கி கைகளைக் கூப்பியபடி நின்றாள். சத்யவதி ஒரு கணம் அவளைக் கண்டதும் மறுகணம் நீரலை அவளை அறைந்துமூடியது. மீண்டும் காற்றில் மழைச்சரடுகள் விலக அவள் தெரிந்து மீண்டும் மறைந்தாள். அவளைத் தொடர்ந்து பத்து இளவரசிகளும் மழைக்குள் கைகூப்பி நின்றனர். அவர்களின் ஆடைகள் நனைந்து உடலோடு ஒட்ட கூந்தல் கன்னங்களில் வழிய அணிமுழுக்காட்டியது பெருமழை.

சத்யவதி சியாமையிடம் “அவர்கள் அரண்மனையில் விளக்குடன் நுழையட்டும்… இப்போது அவர்களின் கைகளில் மலர்களைக் கொடு. மலரும் சுடரும் ஒன்றே” என்றாள். சியாமையும் ஊர்ணையும் ஒடிச்சென்று மலர்களை இளவரசியர் கைகளில் அளித்தனர். காந்தாரியின் கைகளுக்கு மலரை சத்யசேனை வாங்கி அளித்தாள். சம்படை தசார்ணைக்கு மலரை வாங்கிக்கொடுத்தாள்.

சத்யவதி முன்னால் சென்று “காந்தாரநாட்டு இளவரசியை அஸ்தினபுரியின் அரசியாக வரவேற்கிறேன்” என்றாள். காந்தாரி தலைவணங்கி தன்கையில் இருந்த செந்நிற மலருடன் சத்யவதியின் கையைப்பற்றிக்கொண்டு காலெடுத்துவைத்தாள். மழைச்சாட்டைகளால் அறைபட்டு சேற்றுவெளி துடித்துக்கொண்டிருந்த ஹஸ்தியின் மண்ணில் அவளுடைய கால்கள் பதிந்து கோட்டைக்குள் நுழைந்தன.

நூல் இரண்டு – மழைப்பாடல் – 24

பகுதி ஐந்து : முதல்மழை

[ 3 ]

புடவியையும் அதன் அலைகளாக காலத்தையும் அவ்வலைகளின் ஒளியாக எண்ணங்களையும் பிரம்மன் படைப்பதற்கு முன்பு அவன் சனந்தன், சனகன், சனாதனன், சனத்குமாரன் என்னும் நான்கு முனிவர்களை படைத்தான். தன் படைப்பின் முதற்கணங்களாகிய அப்பிரஜாபதிகளை நோக்கி பிரம்மன் ‘நீங்கள் விதைகளாகுக’ என்று ஆணையிட்டான்.

“தந்தையே, நான் என் முழுமையை இழக்க விரும்பவில்லை. சிதையாத விதைகள் முளைப்பதுமில்லை” என்றார் சனகர். “நான் என் அமைதியை இழக்க ஒப்பமாட்டேன். படைப்பென்பது நிலைகுலைவேயாகும்” என்றார் சனந்தர். சனாதனர் “படைப்பவனைவிட மேலான படைப்பு பொருளற்றது. தோற்கடிக்கப்படுவதை என் அகம் விழையவுமில்லை” என்றார். சனத்குமாரர் “படைப்பவன் பிறபடைப்பாளிகளுடன் ஒத்துப்போகமுடியாது. நான் என் தமையன்களுடன் முரண்கொள்ளமாட்டேன்” என்றார்.

சினம்கொண்டு எழுந்த முதல்தாதையின் நெரிந்த புருவங்களுக்கு அடியில் எரிந்த விழிகளிலிருந்து நெருப்புருவாக குழந்தை ஒன்று பிறந்தது. அதன் கைகால்கள் அனலாறுகளாக விண்ணில் ஓடின. அதன் தலைமுடி தழலாட்டமாக திசைகளில் பரவியது. அதன் விழிகள் ஆதித்யர்களாக சுடர்விட்டன. திசைகள் இடிபட பெருங்குரலில் அழுத அந்த மைந்தனைக் கண்டு பிரம்மனே அஞ்சி பின்னடைந்தான். அதன் தழலெரிவை விண்ணகமும் தாங்காதென்று எண்ணியதும் அவன் ‘இம்மகவு இரண்டாக ஆகக் கடவது’ என்றான்.

அந்த அனல்மகவு ஆண் பெண் என இரண்டாகப்பிரிந்தது. பிரிந்த இரு குழவிகளில் ஒன்று கீழ்த்திசையையும் இன்னொன்று மேல்திசையையும் முற்றாக நிறைத்திருந்தது. வானகமே எரிவெளியாக இருந்ததைக் கண்டு பிரம்மன் அந்த ஆண்மகவை பதினொரு சிறுமகவுகளாகப் பிரித்தான். பதினொரு தழல்மைந்தர்களும் செங்கதிர் விரியும் உடலும் கருங்கதிரென அலையும் குழல்களும் கொண்டிருந்தனர். அவர்கள் பதினொரு ருத்ரர்கள் என்று பிரம்மனால் அழைக்கப்பட்டனர். அவர்கள் பருவுலகுக்கு அனுப்பப்பட்டனர்.

அவர்களில் மன்யூ பருப்பொருளுக்குள் எரியும் அனலானான். மனு மானுடத்துக்குள் கனலும் உயிரானான். மகினசன் அறிவிலும் மகான் ஞானத்திலும் எரிந்தனர். சிவன் யோகத்தின் கனல். ருதுத்வஜன் தாவரங்களில் தளிராக எழுபவன். உக்ரரேதஸ் விலங்குகளின் விந்துவின் வெம்மை. பவன் வேர்களின் வெப்பம். காமன் வசந்தத்தின் தழல். வாமதேவன் மரணத்தின் தீ. திருதவிருதன் அழிவின்மையின் எரி.

பிரிந்தெழுந்த அனல்மகளில் இருந்து பதினொரு ருத்ரைகள் உருவானார்கள். தீகை, விருத்தி, உசனை, உமை, நியுதை, சர்ப்பிஸ், இளை, அம்பிகை, இராவதி, சுதை, தீக்‌ஷை என்னும் அவர்கள் ருத்ரர்களின் துணைவிகளாயினர். பதினொரு ருத்ரர்களும் பருவெளியின் பதினொரு மூலைகளிலும் நின்றெரியும் தழல்களாயினர். வான்வெளியை முழுமையாகக் காணும் கண்கள் கொண்டவர்கள் மட்டுமே அவர்களனைவரையும் ஒரேசமயம் காணமுடியும்.

பாலைநிலத்துப் பாறை ஒன்றில் அமர்ந்து யோகத்தில் தன் அகக்குகைக்குள் ஆகாயத்தை எழுப்பிய மாமுனிவரான பிரகஸ்பதி பதினொரு ருத்ரர்களையும் அவர்களின் ருத்ரைகளுடன் கண்டார். பெருந்தழலை அறிந்த அவரது அகம் அமர்ந்திருந்த மானுட உடல் வெம்மைகொண்டு எரிந்து பொசுங்கியது. சாம்பல்குவையாக அவர் கிடந்தார். ஆயிரமாண்டுகாலம் அந்தச்சாம்பல் அங்கே கிடந்தது. பின்பு அங்கே பெய்த மழையால் அச்சாம்பல் கரைந்தோடி ஒரு சிறிய தடாகத்தை அடைந்தது.

அந்தத் தடாகத்தின் கரையோரமாக அவரது தலையின் நெற்றியோட்டின் மணி ஒரு விதையாக பதிந்து முளைத்தெழுந்தது. பிரகஸ்பதி மீண்டும் மானுட உடலைப்பெற்று நடந்து மறைந்தார். அச்சுனையின் கரைகளில் அவரது சாம்பல்துளிகள் நூற்றியெட்டு மரங்களாக முளைத்தெழுந்தன. அவை ருத்ராக்‌ஷ மரங்களாக மாறி அச்சுனையை சூழ்ந்து நின்றிருந்தன. அந்தச்சோலை ருத்ராணிருத்ரம் என்று அழைக்கப்பட்டது. அஷ்டவக்ரமாமுனிவர் அங்கே வந்து தவம் செய்தபோது அங்கே சுனைக்கரையில் நிறுவிய சிவக்குறி பயணிகளால் வணங்கப்பட்டது.

சமநிலத்தில் ருத்ராக்‌ஷமரங்கள் நிற்கும் ஒரே இடம் என்று அந்தச்சோலை அறியப்பட்டது. அங்கே ஒரே ஒரு மரம் ஒற்றைமுகமுள்ள சிவரூபமான ருத்ராக்‌ஷமணிகளைக் காய்த்தது. அம்மையப்பனின் வடிவமான இரட்டைமுகம் கொண்ட ருத்ராக்‌ஷங்கள் விளையும் மூன்று மரங்கள் அங்கே நின்றன. அக்னிவடிவமான மூன்றுமுக ருத்ராக்‌ஷங்களும் பிரம்மவடிவான நான்முக ருத்ராக்‌ஷங்களும் காலாக்னியின் வடிவமான ஐந்துமுக ருத்ராக்‌ஷங்களும் அறுமுகனின் ருத்ராக்‌ஷங்களும் ஏழுமுகம்கொண்ட காமதேவ ருத்ராக்‌ஷங்களும் எட்டுமுகம்கொண்ட கணபதிக்குரிய ருத்ராக்‌ஷங்களும் ஒன்பதுமுகம் கொண்ட பைரவனுக்குரிய ருத்ராக்‌ஷங்களும் அங்கே விளைந்தன.

பெரும்பாலை நிலத்தைத் தாண்டி அஸ்தினபுரியின் மணக்குழு ருத்ராணிருத்ரத்தை அடைந்ததும் பலபத்ரர் வந்து காந்தாரி இருந்த வண்டியை அணுகி வணங்கினார். “அரசி, இந்தச் சோலையில் பாலைநிலத்தின் வெம்மையின் அதிபர்களான பதினொரு ருத்ரர்களும் குடிகொள்வதாக புராணங்கள் சொல்கின்றன. இங்கே அவர்களுக்கு பலிகொடுத்து வணங்கி நாம் முன்னே செல்லலாம்” என்றார். காந்தாரி “அவ்வாறே ஆகுக” என்றபின் தன் தங்கையருடன் இறங்கினாள்.

சிறிய இலைகளும் கனத்த அடிமரங்களும் கொண்ட ருத்ராக்‌ஷமரங்களின் வேர்கள் பாறைகளைக் கவ்வி உடைத்து மண்ணைத்துளைத்து நின்றிருந்த சோலைக்கு நடுவே வெண்மணல் குழிக்குள் சற்றே நீர் ஊறித்தேங்கிய சுனை கிடந்தது. ருத்ராக்‌ஷமரங்கள் இலைகளைப் பெரும்பாலும் உதிர்த்து வெற்றுக்கிளைகளை விரித்து நின்றன. கிளைநுனிகளில் மட்டுமே சற்றேனும் பசுமை இருந்தது. பலபத்ரர் “இவ்வருடம் கோடை சற்று கடுமை” என்று சொன்னார்.

விதுரன் “இங்கே மழை பெய்வதில்லையா?” என்றான். “பாலைநிலத்தில் மழை பெய்யப்போவதுபோன்று காற்று கனிந்து வரும். ஆனால் நுண்வடிவ நீரை மழைத்துளியாக்கும் கனிவு வானுக்கு இருப்பதில்லை. இங்குள்ள வானம் அடங்கா விடாய்கொண்டது. நீர்த்துளிகளை அதுவே உறிஞ்சி மேலே எடுத்துக்கொள்கிறது” என்றபின் அங்கே வண்டிகளில் இருந்து குதிரைகளை அவிழ்த்துக்கொண்டிருந்த பணியாளிடம் “இங்கே மழைபெய்து எவ்வளவு காலமாகிறது?” என்றார். விழித்த வெண்விழிகளுடன் அவன் திகைத்து நோக்க பலபத்ரர் மீண்டும் கேட்டார்.

அவன் உலர்ந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்திவிட்டு “நெடுங்காலம்…” என்றபின் “என் மனைவியை நான் மணம்செய்துகொண்டதற்கு முந்தையவருடம் மழை இருந்தது. என் மகனுக்கு ஏழு வயதாகிறது” என்றான். பலபத்ரர் புன்னகையுடன் அவனை போகும்படி சைகை காட்டிவிட்டு “பார்த்தீர்களல்லவா? எட்டுவருடங்களுக்கும் மேலாக இங்கே மழை இல்லை” என்றார். விதுரன் திகைப்புடன் அந்த மரங்களை நோக்கியபின் “அப்படியென்றால் இந்தச்சுனைநீர் எங்கிருந்து வருகிறது?” என்றான்.

“வடக்கே உயர்ந்திருக்கும் இமயத்தின் தொடர்ச்சியான பாறை இந்த மணல்வெளிக்கு அடியில் சரிந்து கூர்ஜரக் கடற்கரை நோக்கிச் செல்கிறது. அந்தப்பாறையின் பரப்பில் எங்கோ பெரிய விரிசல் ஒன்று இருக்கலாம். மலைநீர் அதன் வழியாக ஊறிவரக்கூடும். மண்ணுக்குள் நரம்புகள் போல கண்காணாநதிகள் ஓடுகின்றன. அவற்றைப்பற்றி நீர்நூல்கள் விரிவாகவே பேசுகின்றன” என்றார் வழிகாட்டியான சூதப்பாடகர். “இமயத்தின் அடிவாரத்தில் மழை பெய்யும்போது இச்சுனை நிறையும் என நினைக்கிறேன். அந்த நீரை நம்பித்தான் இந்த மரங்கள் வாழ்கின்றன.”

சுனைக்கு வடக்காக கிழக்குநோக்கிய நிலையில் நீளமான கல்பீடத்தின் குழிகளில் பதினொரு ருத்ரர்களும் சிவந்த நீள்கற்களாக பதிட்டை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் ருத்ரைகள் நீலநிறக்கற்களாக அவர்களுக்குக் கீழே கிடைமட்டமாக பதிக்கப்பட்டிருந்தனர். ருத்ரர்களுக்கு மேல் பெரிய வெண்ணிறக் கல்லால் ஆன சிவக்குறி இருந்தது. சோலை முழுக்க சருகுகள் உதிர்ந்து காற்றால் அள்ளிக் குவிக்கப்பட்டு மரத்தடிகளிலும் பாறைக்குவைகளிலும் குவிந்துகிடந்தன. அவற்றின் மேல் மெல்லிய மணல் பொழியும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

VENMURASU_EPI__74_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அங்கேயே தங்கியிருந்த பூசகராகிய முதியசூதர் பித்து நிறைந்த கண்களும் சடைமுடிக்கற்றைகளும் மண்படிந்த உடலும் கொண்டிருந்தார். அவர் பீஷ்மரையோ பிறரையோ வணங்காமல் காய்ந்த புல்வரம்பு போலிருந்த புருவங்களுக்குக் கீழே வெந்த செங்கல் போன்றிருந்த கண்களால் ஏறிட்டுப்பார்த்து “மகாருத்ரர்கள் தங்கும் இடம் இது. அவர்கள் அனலுருவானவர்கள். காய்சினத்து தாதையர். கானகத்தை ஆள்பவர்கள்” என்றார். அவருடைய நகங்கள் காகங்களின் அலகுகள் போல கருமையாக நீண்டிருந்தன. பலபத்ரர் “பூசனைநிகழட்டும் சூதரே” என்றார்.

முதுசூதர் ருத்ரபீடங்கள் மேல் பரவியிருந்த சருகுகளையும் மண்ணையும் அள்ளி அகற்றி தூய்மை செய்தார். சுனைநீரை அள்ளிவந்து கல்நிலைகளைக் கழுவினார். வண்டிக்குள் இருந்த மரப்பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட உலர்ந்த துளசி இலைகளையும் ஈச்சைப்பழங்களையும் படைத்தார். “குருதிபலி வழக்கம் உண்டு” என்று முதுசூதர் பலபத்ரரிடம் சொன்னார். பலபத்ரர் பீஷ்மரை நோக்க “இப்போது நம்மிடம் குருதி இல்லை” என்று பீஷ்மர் சொன்னார்.

பலபத்ரர் “ஆம்… இப்போது மலரும் பழங்களும் போதும்… மீண்டும் வரும்போது ருத்ரர்களுக்கு குருதியளிப்போம்” என்றார். முதியசூதர் ஏதோ சொல்ல வந்தபின் சடைக்கற்றைகள் அசைய தலையை அசைத்து “அவ்வாறே ஆகுக” என்றார். கிருஷ்ண யஜுர்வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையில் உள்ள ஸ்ரீருத்ரமந்திரத்தைச் சொன்னார். அதன் இருபகுதிகளான நமகம் மற்றும் சமகத்தை அவர் தன் ஓநாய்க்குரலில் சொல்லி முடித்ததும் பீஷ்மரும் விதுரரும் பிறரும் தங்கள் ஆயுதங்களை ருத்ரர்கள் முன் வைத்து வணங்கினர்.

திருதராஷ்டிரன் ஒரு வீரன் தோளைப்பற்றியபடி வந்து ருத்ரர்கள் முன் விழுந்து வணங்கினான். சம்படையின் தோளைப்பற்றியபடி வந்த காந்தாரி வணங்கி சூதர் அளித்த துளசி இதழை வாங்கி தன் தலையில் சூடிக்கொண்டு பின்னால் நகர்ந்தாள். அவளுக்குப்பின்னால் நின்றிருந்த சத்யசேனை மேலும் பின்னால்நகர அவள் மேல் தன் உடல் படக்கூடாதென்பதற்காக காவலன் விலகி மேலும் பின்னால் பாய்ந்தான். அவனுக்குப்பின்னால் நின்றிருந்த காவலன் அதே கணம் பீஷ்மர் செல்வதற்காக தன் வேலைத் தாழ்த்த அதன் கூரிய நுனி வீரனின் தோளைக் கிழித்தது. அவன் கைகளால் பொத்திக்கொள்ள விரலிடுக்கை மீறி குருதி ஊறியது.

பலபத்ரர் புருவம் தூக்கி “என்ன?” என்றார். அவன் “இல்லை” என்று சொல்லி பின்னகர்ந்து மற்ற வீரர்களுக்கு இடையே சென்றான். இன்னொரு வீரன் தலைப்பாகையைக் கிழித்து அவன் காயத்தைக் கட்ட அவன் தன் கையை விரித்துத் தொங்கவிட்டபோது விரலில் இருந்து மூன்று குருதிச்சொட்டுகள் உதிர்ந்து மணலில் விழுந்தன. காய்ந்த மணல் அவற்றை உடனடியாக உறிஞ்சி செம்புள்ளிகளாக ஆக்கிக்கொண்டது.

அனைவரும் மீண்டும் வண்டிகளிலும் ரதங்களிலும் ஏறிக்கொண்டனர். முதல் குதிரை அருகே கொடியுடன் நின்ற காவலன் திரும்பி பலபத்ரரைப் பார்த்தான். அவர் தலையசைத்ததும் தன் சங்கத்தை ஊதிக்கொண்டு புரவியில் ஏறிக்கொண்டான். கடைசியில் நின்ற காவலனும் சங்கை ஊதியதும் புரவிகள் கடிவாளம் இழுபட்டு கால்களைத் தூக்கி வைத்தன. வண்டிகளின் சக்கரங்கள் கூழாங்கற்களை அரைத்தபடி அசைந்து முன்னகர்ந்தன.

அவர்கள் சென்ற தடம் செம்புழுதியில் நீண்டு கிடந்தது. ஓசைகள் திசைவிளிம்பில் மறைந்தன. சோலைக்குள் சருகுகளின் அசைவாக ஒரு காற்று நுழைந்தது. முதுசூதர் மணலில் குனிந்து கூர்ந்து நோக்கி மூன்றுதுளி குருதி விழுந்த இடத்தைக் கண்டடைந்தார். அந்த இடத்தை தன் சுட்டுவிரலால் தொட்டார். குருதி உலர்ந்து கருகி கரும்புள்ளிகளாக இருந்தது. ஒரு சருகை எடுத்து அந்த மணலை மெல்ல அள்ளினார். அதை கொண்டுசென்று ருத்ரர்களின் முன்னால் வைத்தார். அதை தன் கைகளால் தொட்டு ஒவ்வொரு ருத்ரரின் மீதும் வைத்தார்.

ருத்ரர்களின் முன் அமர்ந்துகொண்டு தன் தலையை ஆட்டியபடி அவர் அக்கற்களை நோக்கிக்கொண்டிருந்தார். கற்களில் கண்விழித்தெழுந்த ருத்ரர்கள் அவரை நோக்கினர். தொலைதூரப்புயல் எழுந்து வருவதுபோல அவரிலிருந்து வேதமந்திரம் வெளிப்பட்டது.

‘ஊதப்பட்ட அனல்போல் ஒளிர்பவர்களே
இருமடங்கு மும்மடங்கு என
வீசுந்தோறும் பெருகுபவர்களே
புழுதிபடியா பொற்தேர்கொண்டவர்களே
மருத்துக்களே
செல்வங்களுடனும் ஆற்றல்களுடனும் எழுக!

குருதிபொழியும் ருத்ரர்களின் மைந்தர்களே
அனைத்தையும் அடக்கிய விண்ணகத்தால்
ஆளப்படுபவர்களே
மகத்தானவர்களே மருத்துக்களே வருக!
அன்னை பிருஷ்னியால்
மானுடர்களுக்காக கருவுறப்பட்டவர்களே
விரைந்து வருக!

வடமேற்கே வான்விளிம்பின் ஒளியாலான வில்வட்டத்தில் சிவந்த அலைகள் எழுவதுபோல ருத்ரர்களின் மைந்தர்களான மருத்துக்கள் தோன்றினர். செம்பிடரி பறக்கும் ஆயிரத்தெட்டு பொன்னிறப்புரவிகளின் வடிவில் அவர்கள் பறந்து வந்தனர். அவர்களின் ஓசைகேட்டு அடிமரங்கள் நடுங்கின. செம்புழுதிக்கடல் பெருகிவந்து திசைகளை முழுமையாக மூடிக்கொண்டது. மலையடுக்குகள் பாறைகள் மணல்சரிவுகள் மரங்கள் இலைகள் என அனைத்தும் செம்புழுதிப்பரப்புள் புதைந்தழிந்தன. விழிதிறந்தாலும் மூடினாலும் செந்நிறமன்றி ஏதும் தெரியவில்லை.

வானில் நெடுந்தொலைவில் இடி ஒலித்தது. தூசுக்குள் அந்த ஓசை நீருக்குள் என ஒலித்தது. மின்னல் வெட்டிய ஒளி பட்டுத்திரைக்கு அப்பால் என தெரிந்து மறைந்தது. இடியோசை யானை வயிற்றுக்குள் உறுமலோசை போல ஒலித்து நீண்டு நெடுந்தொலைவில் நுனி நெளிந்து அடங்கியது. முதுசூதர் செம்புழுதியால் மூடப்பட்டவராக அசையாமல் அமர்ந்திருந்தார். அவர் சற்று அப்பால் சிறு அம்பு ஒன்று மண்ணைத் தைத்த ஒலியைக் கேட்டார். இன்னொரு அம்பு எனஅருகே விழுந்தது நீர்த்துளி. இன்னுமொரு இன்னுமொரு அம்பு என நீர்த்துளிகள். நீரில் விழும் மீன்கொத்திகள் என அவை மண்ணை அறைந்து நிறைந்தன.

அவர் தன் இடத்தோளில் கூழாங்கல் விழுந்ததுபோல பெரிய மழைத்துளி அறைந்தது உணர்ந்து திரும்பி நோக்கியபோது கொழுத்த குருதிபோல செம்புழுதியில் கரைந்து அது வழிந்தது கண்டார். இன்னொரு துளி அவர் முகத்தில் விழுந்தது. சடசடவென நீர்த்துளிகள் விழுந்து பரவ மரங்களில் இலைகளில் இருந்து செங்குருதி சொட்டியது. அடிமரங்களில் ரத்தம் அலையலையாக வழிந்திறங்கியது. பாறைகள் செந்நிற ரத்தம் பரவி ஊன்துண்டுகள் போலத் தெரிந்தன.

ருத்ரர்களின் மீது குருதிமழை பொழிந்தது. கல்மழுங்கிய தலைகளில் விழுந்த செம்புனல் சிறிய மலர்கள் போல மலர்ந்து மலர்ந்து தெறித்து மறைய கல்லுடல் வளைவில் செவ்வலைகள் இறங்கின. பீடத்தில் செந்நிணம்போல அதிர்ந்து சுழித்து வளைந்தோடி விளிம்பிலிருந்து செவ்விழுதாகக் கொட்டியது நீர். முதுசூதர் எழுந்து சோலைவிட்டு வெளியே வந்து அங்கிருந்த பாறைமேலேறி பார்த்தார். நான்குதிசைகளையும் மூடி குருதிமழை பொழிந்து கொண்டிருந்தது.

பதினொரு ருத்ரர்களும் மருத்துக்கள் மீது ஏறி செஞ்சடைகளில் இருந்து குருதித்துளிகள் தெறிக்க பறந்துவந்து அஸ்தினபுரியின் கோட்டைவாயிலை அடைந்தனர். நள்ளிரவில் காவல்மாறியபின் புதிய காவலர்கள் வந்து வேல்களை தங்கள் கால்களுக்கு நடுவே நட்டு அமர்ந்திருந்த நேரம் அது. தாளமுடியாத புழுக்கத்தால் அவர்கள் தங்கள் தோலாடைகளைக் கழற்றி அப்பால் வீசியிருந்தனர். அவர்களைச் சுற்றி வென்னீர்க்குளம் போல அசைவே இல்லாமல் காற்று தேங்கி நின்றது. உடலை அசைத்தும் மூச்சை ஊதியும் விசிறிகளாலும் ஆடைகளாலும் வீசியும் அவர்கள் அக்காற்றை அசைக்க முயன்றனர். இருண்ட காற்று கோட்டைச்சுவர் போல திடம்கொண்டிருந்தது.

வியர்வை வழிய காவல்மாடத்தில் நின்றிருந்த வீரன் புரவிப்படை ஒன்று வரும் ஒலியை கேட்டான். அப்பால் தெரிந்த குறுங்காட்டுக்குள் மரங்கள் அசைவதைக் கண்டு எழுந்து நின்று பார்த்தான். மரங்களை அசைத்துக்குலைத்தபடி இரைச்சலுடன் கோட்டைமேல் மோதி மேலெழுந்து சுழித்து மறுபக்கம் பொழிந்தது காற்று. “காற்றா?” என்று வாய் வழிய தூங்கிக்கொண்டிருந்த வீரன் கேட்டான். “ஆம்…” என்றான் முதல்வீரன்.

“காற்று இப்படி காட்டாறு போல வருமா என்ன?” என்று அவன் கேட்டான். மறுபக்கம் சென்ற காற்றில் மரங்கள் இலைளை திருப்பிக்கொண்டு ஓலமிட்டன. நூற்றுக்கணக்கான சாளரங்கள் அறைபட்டு ஓசையிட்டன. முதல் வீரன் தன் தோள்களிலும் மார்பிலும் நீர்த்துளிகள் அழுகியபழங்கள் போல வீசப்பட்டதை உணர்ந்தான். கையைவைத்து திகைத்து எடுத்துப் பார்த்தான். “ரத்தம்” என்றான்.

இரண்டாவது வீரன் “ரத்தமா? முதல்மழை… வானின் புழுதிகலந்திருக்கிறது” என்றபடி எழுந்தான். அதற்குள் அவர்கள் அந்த மழையில் முழுமையாகவே நனைந்திருந்தார்கள். அறைக்குள் பேசிக்கொண்டிருந்த வீரர்கள் அணைந்த எண்ணைக்குடுவை விளக்கை பற்றவைத்தனர். ஈரம் சொட்ட உள்ளே வந்த வீரனைக் கண்டு அரைத்தூக்கத்தில் விழித்த ஒருவன் அலறியபடி எழுந்து சுவரோடு ஒட்டிக்கொண்டான். உள்ளே வந்தவனின் உடல் செங்குருதியால் மூடப்பட்டிருந்தது.

“செந்நிற மழை” என்றான் காவலன். அனைவரும் வெளியே முண்டியடித்தனர். கோட்டைக்குமேலிருந்தும் கீழிருந்தும் பலர் “மழையா..? மழையா பெய்தது?” என்று கேட்டுக்கொண்டிருந்தனர். யாரோ “சேற்றுமழை!” என்றனர். “செங்குருதி போல…” “இதுவரை இதைப்போல பெய்ததே இல்லை.” “முன்னொருகாலத்தில் தவளைமழை பெய்ததாக என் தாத்தா சொன்னார்.” “சென்றமுறை பனிக்கட்டி மழை பெய்தது.” குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. நனைந்தவர்கள் உள்ளே சென்று தங்கள் உடல்களை தாங்களே பார்த்துக்கொண்டனர்.

“போர்க்களத்தில் இருந்து வருவதைப்போலிருக்கிறான்” என்று ஒருவன் சொன்னான். “பிறந்த குழந்தைகூட இப்படித்தான் இருக்கும்” என்றான் இன்னொருவன். காவலர்கள் வெளியே சென்று பார்த்தனர். மொத்தக்காற்றும் ஏதும் நிகழாதது போல அசைவற்று இருளை ஏந்தி நின்றிருந்தது. வானில் நிறைந்திருந்த விண்மீன்கள் முற்றிலும் மறைந்திருந்தன.

அவர்கள் உள்ளே சென்று மீன்நெய் விட்ட அறுமுனைப் பந்தங்களைக் கொளுத்தி வெளியே கொண்டுவந்தார்கள். அந்த ஒளியில் கோட்டைக்குமேலும் கீழும் இருந்த நூற்றுக்கணக்கான கைவிடுபடைக்கலங்களின் அம்புநுனிகளில் குருதி துளித்துச் சொட்டிக்கொண்டிருப்பதைக் கண்டனர்.

நூல் இரண்டு – மழைப்பாடல் – 23

பகுதி ஐந்து : முதல்மழை

[ 2 ]

இளஞ்சிவப்புத்திரைகள் போடப்பட்ட பன்னிரண்டு சாளரங்களைக் கொண்டதும் மெல்லிய மரப்பட்டைகளாலும் கழுதைத்தோலாலும் கூரையிடப்பட்டதும் பன்னிரு சக்கரங்கள் கொண்டதும் நான்கு குதிரைகளால் இழுக்கப்பட்டதுமான கூண்டுவண்டியில் பத்து இளவரசிகளுடன் காந்தாரி அஸ்தினபுரிக்குப் பயணமானாள். இளமையிலேயே வளைத்துக் கட்டப்பட்டு அவ்வண்ணமே வளர்ந்து முழுமைபெற்ற எட்டு மூங்கில்விற்களின் மேல் அந்த வண்டியின் உடல் அமைக்கப்பட்டிருந்தமையால் சாலையில் சக்கரங்கள் அறிந்த அதிர்வுகள் வண்டியை அடையவில்லை. வண்டியின் மேல் அஸ்தினபுரியின் கொடி பறந்துகொண்டிருந்தது.

வண்டியைச்சுற்றி காவல்வீரர்கள் விற்களுடனும் வேல்களுடனும் சென்றனர். முன்பக்கம் பீஷ்மரின் ரதமும் திருதராஷ்டிரனின் ரதமும் செல்ல பின்னால் விதுரனின் ரதமும் அமைச்சர்களின் ரதங்களும் சென்றன. கடைசியாக பிறவண்டிகளும் காவலர் அணிகளும் வந்தன. காந்தாரநகரியில் இருந்து தந்தையிடமும் அன்னையரிடமும் உடன்பிறந்தவர்களிடமும் வாழ்த்து கொண்டு விடைபெற்றுக் கிளம்பும்போது சத்யவிரதையும் சத்யசேனையும் தலைகுனிந்து குளிர்ந்தவர்களாக இருந்தனர். சுதேஷ்ணை, சம்ஹிதை, தேஸ்ரவை, சுஸ்ரவை, நிகுதி ஆகியோர் அழுதுகொண்டிருக்க விளையாடிக்கொண்டிருந்த சுபையும் சம்படையும் அதைக்கண்டு தாங்களும் அழத்தொடங்கினர். தசார்ணை அவளுடைய பொற்பூவாடையைப் பற்றி சுற்றிச் சுற்றி அப்படியே அமர்ந்து அது குடையாக அமைவதை ரசித்துக்கொண்டிருந்தாள். காந்தாரி மட்டும் புன்னகையுடன் அமைதியாக விடைபெற்றாள்.

அவள் தன் கண்களைக் கட்டிக்கொண்ட செய்தியை அதற்குள் காந்தாரபுரியே அறிந்திருந்தது. மங்கல இரவுக்குப்பின் காலையில் அவள் கண்களில் துணிக்கட்டுடன் வெளியே சென்றபோது அவளைக்கண்ட முதியசேடி திகைத்து “அரசி” என்றாள். “என்னை வழிநடத்து… நான் சற்று கால்பழகும்வரை” என்றாள் காந்தாரி. அந்தப்புரத்தில் சத்யசேனை அவளை அணுகி அவள் கண்களில் கட்டைப் பார்த்து நெஞ்சில் கைவைத்து நின்று “அக்கா” என்றாள். “நான் இனி இந்த விழிக்கட்டை அவிழ்க்கவே போவதில்லை” என்று காந்தாரி சொன்னாள். “அக்கா” என்றபடி அவள் ஓடிவந்து கைகளைப் பற்றிக்கொண்டாள்.

முதலில் அவள் அன்னை சுகர்ணை அதை அவளுடைய மனக்கசப்பின் விளைவென்றே புரிந்துகொண்டாள். ஆனால் அவள் புன்னகையுடன் “நான் அவருடன் அவர் வாழும் உலகில் வாழ விரும்புகிறேன். பிறர் உலகில் எனக்கு ஏதும் தேவையில்லை” என்று சொன்னபோது அந்த உணர்ச்சிகளை அங்கிருந்த ஒவ்வொரு பெண்ணும் உடனே புரிந்துகொண்டனர். அச்செய்தி மதியத்துக்குள் நகரம் முழுக்க பரவியபோது அனைத்து நகர்ப்பெண்களும் அதை உணர்ந்துகொண்டனர்.

அஸ்தினபுரிக்குக் கிளம்பும் நாளில் அரண்மனை முகப்பில் காந்தாரி வணங்கி வண்டியில் ஏறும்போது சுபலர் கண்ணீருடன் “வசுமதி” என்றார். அவரால் ஏதும் பேசமுடியவில்லை. அசலனும் விருஷகனும்கூட கலங்கிய முகங்களுடன் நின்றனர். சுகர்ணை “நான் சொல்வதற்கொன்றும் இல்லை மகளே. நீ அனைத்தும் அறிந்தவள்” என்று சொன்னாள். காந்தாரி கடைசியாக சகுனியிடம் “தம்பி” என்றபின் வண்டிக்குள் ஏறிக்கொண்டாள். அதன் சகடங்கள் ஒருமுறை சுழன்றதும் அரண்மனைச்சேவகரும் சேடியரும் அறியாமல் ஓரடி முன்னாலெடுத்து வைத்து மனம் விம்ம நின்றனர்.

வண்டி கோட்டைவாயிலை நெருங்கியபோது குதிரையில் சகுனி பின்னால் வந்தான். வண்டியுடன் இணையாக வந்தபடி “அக்கா, சிலநாட்களில் நானும் அஸ்தினபுரிக்கு வருவேன்” என்றான். காந்தாரி புன்னகை செய்தாள். “இனிமேல்தான் என் கடமைகள் தொடங்குகின்றன அக்கா. நான் சொன்ன சொற்கள் வெறும் மனஎழுச்சியின் விளைவல்ல. பாரதவர்ஷமே உன் பாதங்களில் விழவேண்டும்” என்றான். அவள் மீண்டும் புன்னகைசெய்தாள். நான் வெல்லவேண்டிய அனைத்தையும் வென்றுவிட்டேன் என நினைத்துக்கொண்டாள். அதை எந்த ஆணிடமும் சொல்லிப்புரியவைக்கவும் இயலாதென்று தோன்றியது.

நகரை விட்டு நீங்கும்போது இளவரசிகள் சாளரங்கள் வழியாக விலகிச்சென்றுகொண்டிருந்த அரண்மனையையும் அரசவீதியையும் கோட்டைமுகப்பையும் எட்டிப்பார்த்து கண்ணீர்விட்டு விசும்பினர். தாரநாகத்தின் மணலில் வண்டி இறங்கியபோது தசார்ணை “அக்கா, இதுவா தாரநாகம்? இதுவா அக்கா?” என்றாள். சத்யசேனை அவள் கையை அடித்து “பேசாமலிருடீ” என்றாள். தசார்ணை மிகமெல்ல சம்படையிடம் “இதுதான் தெரியுமா?” என்றாள். சம்படையின் கண்களில் இருந்து கண்மை வழிந்து கன்னங்களில் பரவியிருந்தது. “அக்கா உன் கன்னங்களில் மை” என்றாள் தசார்ணை. சம்படை தன் மேலாடையால் கன்னங்களைத் துடைத்துக்கொண்டாள்.

தாரநாகத்தின் மறுகரையை அடைந்ததும் பாலைநிலம் முழுமையாகவே அவர்களை சூழ்ந்துகொண்டது. தசார்ணை சாளரம் வழியாகப் பார்த்து “ஒரே மணல்… சிவப்பாக இருக்கிறது…” என்றாள். “ஆனால் தொலைவில் நீர் இருக்கிறது” என்றாள் தசார்ணை. அழுகையை மறந்து சம்படை எட்டிப்பார்த்து “அதெல்லாம் கானல்… என் குருபத்னி சொன்னார்” என்றாள். “கானல் என்றால்? அதைக்குடிக்கமுடியாதா?” என்றாள் தசார்ணை. சம்படை “அது வெறும் தோற்றம்…” என்றாள். “ஏன் குடிக்கமுடியாது?” என்று தசார்ணை மீண்டும் கேட்டாள். “குடிக்கமுடியாது அவ்வளவுதான்” என்றாள் சம்படை. “விலங்குகள் குடிக்குமா?” என்றாள் தசார்ணை. “யாருமே குடிக்கமுடியாது” என்றாள் சம்படை. தசார்ணை ஐயத்துடன் சுதேஷ்ணையிடம் “அக்கா, குடிக்கமுடியாதா?” என்றாள். சுதேஷ்ணை “சும்மா இருக்கப்போகிறாயா அடிவேண்டுமா?” என்றாள்.

தசார்ணை மெல்ல “குடிக்கமுடியாத தண்ணீரை எதற்காக பிரம்மா படைத்தார்?” என்றாள். காந்தாரி அதைக்கேட்டு புன்னகை புரிந்து கையை நீட்டினாள். சத்யவிரதை தசார்ணையை அவளை நோக்கி உந்த அருகே வந்த சிறுமியின் தலையைத் தொட்டு “வறண்டநிலத்தில் திருஷை என்று ஒரு தெய்வம் வாழ்கிறது குழந்தை. அவள்தான் தாகத்தின் இறைவி. அவளுடைய வாகனம்தான் மரீசி. நீலமயிலின் வடிவில் இருக்கும் மரீசியின் மீது ஏறித்தான் திருஷை பாலைவனத்தில் உலவுவாள். மரீசியைத்தான் நாம் கானல்நீராகப் பார்க்கிறோம்.” தசார்ணை விரிந்த விழிகளுடன் தலையை ஆட்டினாள்.

“உடலற்றவளின் விடாயை நீரின்மைதானே தீர்க்கமுடியும்? என்னடி?” என்றாள் காந்தாரி. சத்யவிரதை “ஆம் அக்கா” என்றாள். “ஆனால் நான் கானலைத்தான் விரும்புவேன். நீரழகு விடாய் முடிவதுவரைதான். கானலோ இறப்புக்கணம் வரை கொண்டு செல்லும் பேரழகு கொண்டது” காந்தாரி சொல்லி மீண்டும் புன்னகைசெய்தாள். கண்களைக் கட்டிக்கொண்டதுமே அவள் புன்னகையில் தெய்வங்களின் சாயல் வந்துவிட்டதென சத்யசேனை எண்ணினாள்.

மான்தோலின் ரோம வாசனையும் வெயிலில் வெம்மைகொண்ட பதப்படுத்திய கூரைத்தோலின் வாசனையும் கொண்ட அந்த வண்டி அவளிடம் மெதுவாகப் பேசத்தொட்ங்கியது. கூண்டுக்கு அப்பால் அமரத்தில் அமர்ந்திருந்த வண்டியோட்டிகளின் மெல்லிய உரையாடலை அவள் கேட்டாள். சக்கரங்களில் ஒன்று மேலும் எளிதாகச் சுழல்வதை அறிந்தாள். வலப்பக்கச் சக்கரத்தின் குடத்தில் அடித்துக்கொள்ளும் அச்சின் உரசலை, கீழே அழுந்தி அழுந்தி மீளும் விற்களின் விம்மல் ஒலியை, நான்குபுரவிகளின் குளம்படிகளை, மூச்சொலிகளை, வால்சுழலும் ஒலியை அறிந்தாள். சிறிதுநேரத்தில் அந்த வண்டியை தன் உடலைப்போல உணர்ந்தாள். அவ்வுடலால் பாலையை அறிந்தாள். அங்கிருந்தவர்களில் அவள் மட்டுமே பாலையில் சென்றுகொண்டிருந்தாள்.

வெயில் ஏறியதும் அவர்கள் ஒரு சோலையில் ஓய்வெடுத்தனர். பாலையூருணியில் இருந்து நீர்கொண்டுவந்து மரவுரியை நனைத்து முகத்தையும் உடலையும் துடைத்தபின் குளிர் நீரருந்தி பாலைமரங்களுக்குக் கீழே விரிக்கப்பட்ட ஈச்சம்பாயில் படுத்துக்கொண்டனர். நெடுமூச்சுடன் புரண்டு படுத்துக்கொண்டிருந்த இளவரசிகள் விரைவிலேயே இயல்பாகவே துயில்கொண்ட மெல்லிய ஒலிகளை காந்தாரி புன்னகையுடன் கவனித்துக்கொண்டிருந்தாள். காலாட்டியபடி மரத்தின்மேலிருந்த கிளைகளை விரல்விட்டு எண்ணிக்கொண்டிருந்த தசார்ணை அவ்விரலை அப்படியே வைத்தபடி துயின்றிருந்தாள். அவள் மனம் துயிலை நாடவில்லை. அதில் பரபரப்பும் இல்லை. இறுக நீர் நிறைத்து மூடப்பட்ட தோல்பை போல அவள் அகத்தை உணர்ந்தாள். தளும்பாமல் சிந்தாமல் ஏங்காமல் தன் இருப்பை மட்டுமே உணர்ந்தவாறு அவளுடன் அது இருந்தது.

வெயிலில் வெந்த மணலின் மணம் ஏறி ஏறி வந்தது. அதுவரை காதுகளிலும் கன்னங்களிலும் பட்ட வெக்கையை அப்போது மூக்குக்குள் உணரமுடிந்தது. மாலை வெயில் முறுகியபின் அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். தூங்கி எழுந்த இளவரசியர் ஊர்நீங்கும் ஏக்கத்தை இழந்து புதுநிலம் காணும் ஆர்வம் கொண்டிருப்பதை காந்தாரி கவனித்தாள். அவர்கள் கிளர்ச்சியுடன் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு ஆடைகளை திருத்திக்கொண்டனர். முகத்தைக் கழுவி திலகமும் கண்மையும் அணிந்தபடி ஒருவருக்கொருவர் முகத்தைக் காட்டி நன்றாக உள்ளதா என்று வினவிக்கொண்டனர். சிறிய சிரிப்பொலிகளும் ஒருவரை ஒருவர் கடிந்துகொள்ளும் மென்குரல்களும் கேட்டுக்கொண்டிருந்தன. தசார்ணை உரக்க “அவள் மட்டும் ஏன் சிவப்பு வளையல்கள் அணிகிறாள்?” என்று கேட்க சத்யவிரதை ரகசியமாக அவளை அதட்டி அடக்கும் ஒலி கேட்டது. “அப்படியானால் எனக்கு?” என தசார்ணை மெல்லக்கேட்டாள்.

மீண்டும் வண்டியில் ஏறிக்கொண்டபோது இளவரசிகள் உவகைத்ததும்பலுடன் இருந்தனர். சாளரங்களின் அருகே அமர்ந்துகொள்வதற்காக முண்டியடித்தனர். சாளரத் திரைச்சீலைகளை நன்றாக விலக்கி வெளியே பார்த்தனர். தசார்ணை முழந்தாளிட்டு அமர்ந்து வெளியே பார்த்து “மரங்களே இல்லை” என்றாள். “பாலையில் எப்படியடி மரம் இருக்கும்?” என்றாள் சம்படை. “சத்தம்போடாமல் வாருங்கள்” என்று சத்யசேனை அவர்களை நோக்கி முகம் சுளித்தாள்.

“இந்த வண்டி படகுபோலச் செல்கிறதே” என்று சம்படை குரலைத்தாழ்த்திச் சொல்ல சுதேஷ்ணை “இதற்கு அடியில் வில் இருக்கிறதல்லவா? அதுதான் எல்லா அசைவுகளையும் வாங்கிக்கொள்கிறது” என்றாள். தசார்ணை உற்சாகமாக “அந்த வில்லிலே நாணே இல்லை” என்றாள். “நான் பார்த்தேன்…அந்த விற்களை போர் வந்தால் எடுத்து நாணேற்றுவார்கள்” என்று சம்படையின் கையைப்பிடித்து உலுக்கினாள் சத்யசேனை. “அவை மூங்கில்கள்…கங்கைக்கரையில் அவை ஏராளமாக மண்டிக்கிடக்கின்றன என்கிறார்கள்.” சுதேஷ்ணை “அவற்றை வெட்டித்தான் குழல் செய்கிறார்கள்…இனிய இசையை வாசிக்கிறார்கள்” என்றாள்.

பாலைவனத்தைச் சூழ்ந்து மேகமற்ற வானம் செந்நிறமாக கவிந்தது. பின்பு இருண்டு கருந்திரைக்கு அப்பாலிருந்து விண்மீன்களை ஒவ்வொன்றாக வெளியே கொண்டுவந்து பரப்பியது. வெம்மைநிறைந்த காற்று மெல்லமெல்லக் குளிர்ந்து உடலை நடுக்குறச்செய்யும்படி வீசியது. இளவரசியர் மரவுரிப்போர்வைகளை போர்த்திக்கொண்டனர். விண்மீன்கள் பெருகியபடியே வந்த வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த சத்யசேனை “எவ்வளவு விண்மீன்கள்” என்றாள். நன்றாக நிலம் இருண்டபோது மிக அருகே விண்மீன்களாலான பந்தலாக வானம் தெரிய அனைவரும் விண்மீன்களை நோக்கினர். “பொன்னாலான நகைக்குண்டு போலத் தெரிகிறது ஒவ்வொன்றும்” என்றாள் சத்யவிரதை. சுதேஷ்ணை “கையெட்டினால் பறித்து விடும் கனிகள்” என்றாள்.

VENMURASU_EPI_73
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

சூதப்பெண்கள் மூவர் வண்டிக்குள் ஏறினர். மூத்தவள் வணங்கி “அரசியரை பணிகிறேன். இரவுநேரக் கதைப்பாடலுக்காக வந்திருக்கிறோம்” என்றாள். காந்தாரி புன்னகையுடன் “அமர்க!” என்றாள். அவள் தன் கையில் இருந்த சுவடிகளை ஏழாகப் பகுத்து கலைத்து மீண்டும் ஏழாகப் பகுத்தாள். அதில் ஏழாவது சுவடியை எடுத்தாள். புன்னகையுடன் “சதி அனசூயையின் கதை வந்துள்ளது அரசி” என்றாள். “சொல்க!” என்று காந்தாரி ஆணையிட்டாள். சூதப்பெண்கள் தங்கள் கையில் இருந்த உலோகத்தாலான தாளக்கருவியை சிறிய ஆணியால் மெல்ல மீட்டியபடி பாடத்தொடங்கினர்.

அத்ரி, பிருகு, குப்தர், வசிஷ்டர், கௌதமர், காஸ்யபர், அங்கீரஸர் என்னும் ஏழு வான்முனிவர்களையும் வாழ்த்துவோம். அவர்களில் முதன்மையானவரான அத்ரி மாமுனிவரின் புகழைப் பாடுவோம். அவரது அறத்துணைவி அனசூயையின் மங்கா பெரும் கற்பைப் போற்றுவோம். அரசியரே, அனசூயை என்றால் பொறாமையே அற்றவள் என்று பொருள். பெண் தன்னை நினைக்கும் காலம் வரை பொறாமையை வெல்லமுடிவதில்லை. தன்னைக் கடந்து தாயாக ஆகும்போது மட்டுமே அவள் பொறாமையைக் கடந்துசெல்கிறாள். அவளையே கற்பரசி என்கின்றன நூல்கள்.

விஷ்ணுவில் இருந்து பிரம்மன். பிரம்மனில் இருந்து சுயம்புமனு பிறந்தார். சுயம்புமனுவுக்கு அவரது துணைவியான சரரூபையில் உத்தானபாதன், பிரியவிரதன், ஆஹுதி, தேவாஹுதி, பிரசூதி என்னும் ஐந்து குழந்தைகள் பிறந்தன. அவர்களில் அழகுமிக்கவளான தேவாஹுதியை கர்த்தம பிரஜாபதி மணம் புரிந்தார். தேவாஹுதிக்கு கர்த்தம பிரஜாபதியில் கலை, அனசூயை என்னும் இரண்டு பெண்கள் பிறந்தனர். கலையை மரீசியும், அனசூயையை அத்ரியும் மணந்துகொண்டனர்.

அரசியரே, கலையுடன் இணைந்தது பொறாமை என்றறிக. பொறாமையை வெல்லும் பொறைநிலையோ கலையின் முதிர்நிலையே ஆகும். அனசூயை வாழும் பிரஜாபதியின் துணைவியாக பல்லாயிரம் மண்ணகங்களை தன் மடியில் தவழும் குழந்தைகளைப்போல காத்துவந்தாள். அன்றொருநாள் பூமி மீது இந்திரன் சினம் கொண்டான். வானில் அவன் வில் தோன்றாமலாயிற்று. தன் வஜ்ராயுதத்தை வளைதடியாக்கி மேகக்கூட்டங்களை வெள்ளாடுகளைப்போல அவன் ஓட்டிச்சென்று மேற்குத்திசையின் இருண்ட மடிப்பு ஒன்றுக்குள் ஒளித்துவைத்தான். மழையின்மையால் பூமி வெந்து வறண்டது. தாவரங்கள் பட்டு கருகின. கங்கை மணல்வரியாக மாறியது.

வைதிகர் தேவர்களுக்கு அவியிட்டு மும்மூர்த்திகளையும் வணங்கி காக்கும்படி மன்றாடினர். நாகர்கள் தங்கள் முதுநாகத்தெய்வங்களுக்கு பலிகொடுத்து வெறியாட்டாடி வணங்கினர். மானுடர் தங்கள் தேவர்களை வணங்க ஊர்வனவும் பறப்பனவும் நடப்பனவும் நீந்துவனவும் தங்கள் தெய்வங்களை வணங்கி மன்றாடின. மும்மூர்த்தியரும் தேவர்களும் இந்திரனைத் தேடி அலைந்தனர். அவனோ விண்ணக இருளுக்குள் ஒளிந்திருந்தான்.

நெய்யகன்ற அகலென பூமி தன் ஒளியவிந்து அணையும் நாளில் மண்ணில் வாழ்ந்த எளிய புழு ஒன்று தான் புழுவென்றறிந்தமையால் பொறாமையை வென்றது. அது தாகத்தால் வாடி இறக்கும் கணத்தில் அனசூயையை வேண்டியது. அன்னையே நான் இறப்பினும் என்குலம் அழியாது காத்தருள்க என்றது.

அதன் கோரிக்கையை அன்னை ஏற்றாள். அவள் கருணை மண்மீது மழையாகப் பொழிந்தது. மண்ணில் அனைத்துத் தாவரங்களும் எழுந்து விரிந்து தழைத்து மலர்ந்து கனிந்து பொலிந்தன. தேவர்கள் கோர அன்னை கருணைகொண்டாள். அவள் தவத்தாணையால் விண்ணிலும் மண்ணிலும் பத்து வெளியக நாட்கள் இருள் நிறைந்தது. விண்ணகம் இருளானபோது ஒளிந்திருந்த இந்திரன் தன் வஜ்ராயுதத்துடன் வெளியே வந்தான். அவனை தேவர்கள் கண்டடைந்தனர். தேவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்திரன் கனிந்து மழைமுகில்களை விடுவித்தான்.

அந்நாளில் கைலாயத்துக்குச் சென்ற நாரதர் முக்கண்முதல்வனை வணங்குவதற்கு முன்பு அனசூயையை எண்ணி வணங்கினார். அதற்குக் காரணம் என்ன என்று சிவன் கேட்டபோது மும்மூர்த்திகளும் தோற்ற இடத்தில் வென்றவள் அனசூயை அல்லவா, அவள் வல்லமையே முதன்மையானது என்றார் நாரதர். அவ்வண்ணமே சொல்லி மும்மூர்த்திகளையும் யோகத்திலிருந்தும் துயிலிலில் இருந்தும் மோனத்திலிருந்தும் எழச்செய்தார். அனசூயையின் வல்லமையை அறிவதற்காக மும்மூர்த்திகளும் அத்ரி முனிவரின் தவச்சாலைக்கு மூன்று வைதிகர்களாக வந்தனர். தங்களுக்கு தாங்கள் விரும்பியவண்ணமே உணவளிக்கவேண்டுமென்று கோரினர். அவ்வண்ணமே ஆகுக என்று சொன்ன அத்ரி பிரஜாபதி தன் துணைவியிடம் அவர்கள் கோரும்படி உணவளிக்க ஆணையிட்டார்.

வான்கங்கையாடி உணவுண்ண வந்தமர்ந்த மூன்றுவைதிகர்களும் அனசூயையிடம் தங்களுக்கு குலப்பெண் ஆடையின்றி வந்து அன்னமிடுவதே நெறி என்றனர். கணவனின் ஆணையையும் கற்பின் நெறியையும் ஒரேசமயம் அவள் எப்படி காத்துக்கொள்கிறாளென்று அறிய அவர்கள் விழைந்தனர். அனசூயை அவர்கள் மூவரையும் தன் புல்லை அமுதாக்கும் காமதேனுவின் கைநீட்டி நெஞ்சுடன் அணைத்துக்கொண்டாள். அவர்கள் கண்களில் பால்படலம் மறையாத கைக்குழந்தைகளாக மாறி அவள் மடியில் தவழ்ந்தனர். அவள் ஆடையின்றி வந்து மூவருக்கும் முலையமுதூட்டினாள்.

அவர்கள் அவள் மடியில் மதலைகளாக வாழ்ந்தனர். முதல்பொருளின்றிப் பிறந்த மூலவர்கள் அவள் வழியாகவே அன்னையின் பேரன்பை அறிந்து களித்தனர். முத்தொழிலை ஆற்றும்பொருட்டு அவர்கள் மீண்டும் தங்களுருக்கொண்டபோதிலும் அன்னையின் அன்பை முழுதறியும் பொருட்டு அவள் உதரத்திலேயே ஒரேகுழந்தையாகப் பிறந்தனர். அந்த மகவு தத்தாத்ரேயன் என்றழைக்கப்பட்டது.

மும்மூர்த்திகளையும் மூன்று முகங்களாகக்கொண்டு ஆறுகரங்களுடன் பிறந்த தத்தாத்ரேயர் இளமையிலேயே நான்கு அறங்களையும் துறந்தார். ஐம்புலன்களையும் வென்றார். களைவதொன்றுமில்லாத நெஞ்சுகொண்டிருந்தமையால் அவர் அறியவேண்டியதென்று ஏதுமிருக்கவில்லை. ஞானங்களின் கொடுமுடியான வேதங்களைக் கற்கும்பொருட்டு தன் தந்தையான பிரம்மதேவனைத் தேடிச்சென்றார் தத்தாத்ரேயர். அவரைக்கண்டதும் பிரம்மனின் கையில் வாடாததாமரைகளாக மலர்ந்திருந்த நான்கு வேதங்களும் தத்தாத்ரேயரின் உடலில் வீசிய அன்னையின் முலைப்பால் வாசனையை உணர்ந்து நான்கு நாய்களாக மாறி அவரைத் தொடர்ந்தன.

“மும்மூர்த்திகளையும் முலையூட்டி வளர்த்தவளை வாழ்த்துவோம். பிரம்மத்தை ஞானமாக பெற்றெடுத்தவளை வாழ்த்துவோம். பிறிதொன்றிலாத பார்வை கொண்ட அனசூயை அன்னையை வாழ்த்துவோம். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று சூதப்பெண் பாடிமுடித்தாள். காந்தாரி அவளுக்கு பரிசில் அளித்து அனுப்பி வைத்தாள். அரசிகள் கதையால் அமைதிகொண்டுவிட்டதை அவள் கவனித்தாள். கதை என எது சொல்லப்பட்டாலும் உடனே தூங்கத் தொடங்கிவிடும் தசார்ணையும் சம்படையும் சத்யசேனையின் மடியிலும் சத்யவிரதையின் மடியிலும் கிடந்து மெல்லிய குறட்டை விட்டனர்.

சற்று நேரம் ஓய்வெடுத்தபின் மீண்டும் கிளம்புவதாகவும் இரவெல்லாம் பயணம் செய்யவிருப்பதாகவும் படைத்தலைவன் வந்து காந்தாரியிடம் சொன்னான். “நாளையும் மறுநாளும் வெப்பம் உச்சத்தில் இருக்கும் என்று கணிகர் சொல்கிறார்கள் அரசி. பகலில் பயணம்செய்யமுடியாது. நாம் நாளைக்காலைக்குள் ஸ்ரீகுண்டம் என்னும் சோலைக்குச் சென்று சேர்ந்தாகவேண்டும்.”

அவர்கள் வண்டிக்குள்ளேயே படுத்துக்கொண்டனர். வண்டியின் ஆட்டம் தொட்டில் போலத் தோன்றியது. காந்தாரி தூங்காமல் செவ்விதழ் இமை மூடிய கண்களுக்குள் நெளிந்து நெளிந்து சென்றுகொண்டிருந்த ஒரு செந்நிற நூலையே பார்த்துக்கொண்டிருந்தாள். வண்டிக்குள் இருந்த சிறிய நெய்விளக்கை சத்யசேனை ஊதி அணைத்ததை மூடிய கண்களுக்குள் ஒளி அவிவதாக உணர்ந்தாள். காற்று மணலை அள்ளி கூரைமேல் கொட்டும் மெல்லிய ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. வண்டி மெல்லிய மணலில் சகடங்கள் ஒலிக்க சென்றுகொண்டிருந்தது.

“அக்கா” என்று சத்யவிரதை அழைத்தாள். “என்ன?” என்றாள் காந்தாரி. “நீங்கள் முற்றிலும் மாறிவிட்டிருக்கிறீர்கள்… உங்கள் பேச்சும் சிரிப்பும் எல்லாம் வேறுயாரோ போலிருக்கின்றன” என்றாள். காந்தாரி புன்னகை புரிந்தாள். “நீங்கள் ஏன் கண்களைக் கட்டிக்கொள்ளவேண்டும்?” என்றாள் சத்யவிரதை. “எனக்கு இருபது விழிகள் இருக்கின்றன…” என்று காந்தாரி சொன்னாள். “ஒவ்வொரு விழியும் ஒவ்வொரு பருவத்தைச் சேர்ந்தவை… உலகையே அறியாத பேதையின் விழிகள்கூட நான்கு உள்ளன.”

“ஒரு கணவனுக்காக நாம் ஏன் வாழவேண்டும் அக்கா?” என்றாள் சத்யவிரதை. “நிஷாதர்களின் பெண்கள் அப்படியல்ல என்றார்கள் சூதர்கள். அவர்கள் அனைத்தையும் தங்களுக்காகவே செய்கிறார்கள். அவர்கள் வாழும் வாழ்க்கைதான் பொருள் உடையது” என்றாள். காந்தாரி புன்னகைத்தபடி “தெரியவில்லையடி…நான் எனக்கு எது மகிழ்வளிக்கிறதோ அதைச் செய்தேன். என்னிடமிருந்த அனைத்தையும் உதறாமல் நான் அவருடைய உலகுக்குள் நுழையமுடியாதென்று தோன்றியது. அதற்குமேல் ஒன்றுமே நான் சிந்திக்கவில்லை” என்றாள்.

“நீங்கள் என்னை என்ன சொன்னாலும் சரி, இதை பேதைத்தனம் என்றுமட்டும்தான் என்னால் சொல்லமுடியும்” என்றாள் சத்யவிரதை. “இருக்கலாம். ஆனால் பித்தியாகவும் பேதையாகவும் இருப்பதில் பேரின்பம் ஒன்று இருக்கிறது” என்றாள் காந்தாரி. இன்சிரிப்புடன் “நான் அதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். இன்று அந்த சூதப்பெண் பாடியபோது எனக்கு விடை கிடைத்தது. தாய்மை என்பதும் பேதைத்தனம்தானே? அந்தப்பேதைத்தனத்தை அடையும்போதுதானே பெண்ணுக்கு இன்பமும் ஆற்றலும் முழுமையும் எல்லாமே கிடைக்கின்றன?”

“அதுவும் இதுவும் ஒன்றா?” என்றாள் சத்யவிரதை சலிப்புடன். “ஒன்றுதானடி. நான் மனைவியானேனா அன்னையானேனா என்று என்னாலேயே அறியமுடியவில்லை” என்றாள் காந்தாரி. சத்யவிரதை இறங்கியகுரலில் “வேண்டாம் அக்கா” என்றாள். “தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்….வேண்டாம். நீங்கள் இந்தக் கண்கட்டுடன் அஸ்தினபுரிக்குச் சென்றால் இதையே ஒரு பெரிய புராணமாக சூதர்கள் ஆக்கிவிடுவார்கள். விரும்பினாலும்கூட உங்களால் கண்களை திறக்கமுடியாது…”

காந்தாரி “நான் இப்போதிருக்கும் இந்த நிலையில் இருந்து ஒருபோதும் விழித்தெழவில்லை என்றால் அதைவிட ஏதும் எனக்குத் தேவையில்லையடி” என்றாள். சத்யவிரதை அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை. பெருமூச்சுடன் திரும்பப்படுத்துக்கொண்டாள்.

அந்த உரையாடலை மற்ற தங்கையரும் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் விட்ட பெருமூச்சுகள் இருளில் ஒலிப்பதை காந்தாரி கேட்டாள். அதன்பின் அஸ்தினபுரியை அடையும் வரை அவர்கள் அதைப்பற்றி ஏதும் பேசவில்லை.

சிறிதுநேரத்தில் காந்தாரி தூங்கிவிட்டாள். ஆனால் வண்டியின் அசைவும் ஓசையும் நீடித்தன. அவள் வண்டியில் இருந்தபடியே தொலைவில் தெரிந்த ஒரு மரத்தைப்பார்த்தாள். வண்டியில் அவளைத்தவிர எவருமில்லை. அவள் இறங்கி அந்த மரத்தை நோக்கி ஓடினாள்.

செல்லச்செல்ல அந்த மரம் தொலைவிலிருப்பதாகத் தோன்றியது. நெடுநேரம் கழித்து அதை நெருங்கினாள். அது தாலிப்பனை. அதன் பூ செம்மஞ்சளாக விரிந்து காற்றில் உலைந்தாடியது. அவளருகே அந்த சூதப்பெண் நின்றிருந்தாள். “இவ்வளவு பெரிய பூவா?” என்று காந்தாரி கேட்டாள். சூதப்பெண் சிரித்துக்கொண்டு “இந்த மலர் ஒரு நுண்வடிவக் காடு” என்றாள். காந்தாரி “ஏன் அது தனித்தே நிற்கிறது?” என்றாள். “காட்டை கருவிலேந்திய மரம் தனித்துத்தானே நிற்கமுடியும்?” என்றாள் சூதப்பெண்.