மாதம்: மார்ச் 2014

நூல் இரண்டு – மழைப்பாடல் – 36

கூண்டுவண்டியில் ஏறியதும் பிருதை வேறுபாட்டை உணர்ந்தாள். கண்ணாலோ கருத்தாலோ அல்ல, உடலால். குழந்தையை மடிமீது அமர்த்திக்கொண்டபோது அவள் உடல் மெல்லச் சிலிர்த்தது. அது தன் வயிற்றுக்குள் வந்த கணம் முதல் ஒவ்வொரு அசைவையும் வயிற்றின் பாதுகாப்பு பற்றிய எச்சரிக்கையாகவே உடல் அறிந்துகொண்டிருந்தது. அந்த உணர்வு இப்போது கைகளுக்கும் மடிக்கும் வந்துவிட்டது. உடல் அனைத்தையும் கவனிப்பதாக அனைத்துக்கும் அப்பால் சென்று அறிவதாக ஆகிவிட்டிருந்தது.

அவள் அவ்வுணர்வுகளை தன் சிந்தையால் அளைந்தாள். அது அனைத்து அன்னையருக்கும் எழும் சாதாரணமான அச்சவுணர்வுதானா? அனைத்து அரசுசூழ் கல்வியையும் அரசபதவியையும் உதறி அவளுக்குள் இருந்து அன்னை என்னும் தூயமிருகம் வெளிவந்து நாசியையும் செவிகளையும் கண்களையும் மட்டும் தீட்டிக்கொள்கிறதா? சில கணங்களுக்குள்ளேயே அந்த அச்சம் விலகக்கூடியதாக இல்லை என்று அவளுக்குத் தெரிந்தது. திடமான பொருளாக அவள் எண்ணங்கள் மேல் அது அமர்ந்திருந்தது.

அவள் சென்ற வண்டிக்குப்பின்னால் தளகர்த்தரின் ரதம் வந்துகொண்டிருந்தது. அதற்குப்பின்னால் எட்டு வீரர்களும் முன்னால் நான்கு வீரர்களும் வாட்களும் விற்களுமாகச் சென்றனர். வசுதேவன் அழைத்துவரச்சொன்னதாகச் சொல்லி அவனுடைய இலச்சினை கொண்ட ஓலையைக் காட்டி தேவகி சொன்னபோது அவள் அவனே வந்துவிட்டதாகவே எண்ணினாள். கீழிறங்கி வந்து குழந்தையுடன் கன்னிமாடத்து முற்றத்துக்கு வந்தபோதுதான் அவனுக்குப்பதில் தளகர்த்தர் சுபூதர் வந்திருப்பதாகச் சொல்லப்பட்டது.

சுபூதர் தலைவணங்கி “மார்த்திகாவதியின் இளவரசியை வணங்குகிறேன். தங்களை உடனடியாக மதுராபுரிக்குக் கொண்டுசெல்லும்படி பேரமைச்சரின் ஆணை” என்றார். “அவர் என்னிடம் சொல்லவில்லையே” என்று பிருதை கேட்டாள். “அவர் அரசருடன் இருக்கிறார். தங்களை மதுராபுரியின் படித்துறைக்கே நேரடியாகக் கொண்டுசெல்லும்படிச் சொன்னார். அங்கிருந்து நேராக மார்த்திகாவதிக்கு படகில் அனுப்பி வைக்கும்படி ஆணை. துறையில் பேரமைச்சர் இருப்பார்.” அது அவள் கிளம்பும்போது வந்த புறாச்செய்தியுடன் ஒத்துப்போயிற்று. அவள் வண்டியில் ஏறிக்கொண்டாள்.

வண்டிக்குள் இருந்த சேடி “குழந்தையை என்னிடம் கொடுங்கள் இளவரசி” என்றாள். “இல்லை… குழந்தையின் உடல் சற்று குளிர்ந்திருக்கிறது” என்று பிருதை சொன்னாள். அதைமூடியிருந்த மான்தோல் போர்வையை விலக்கி உள்ளே நோக்கினாள். வேசரத்தின் கரியவைரம் போலிருந்தது குழந்தை. கருமுத்துக்கள் கரியவைரங்கள் மேல் என்றுமே அவள் பெரும் காதல்கொண்டிருந்தாள். கூர்முனைகள் கைகளை அறுத்துவிடுமோ என்பதுபோல. ஒளி அனைத்தையும் தன்னுள் வாங்கிக்கொள்வதுபோல. ஆனால் ஒளியில்லாத இடத்தில் கருவைரம் தன்னுள் இருந்து ஒளியை வெளியே எடுக்கும். கருமை ஒளியாக ஆவதன் விந்தை.

யார் இவன்? பிறந்த பத்து நாட்களுக்குள் அவன் ஒரு புராணக்கதை போல ஆகிவிட்டான். அவனைப்பார்க்க கன்னிமாடத்தின் அனைத்துப் பெண்களும் வந்துகொண்டிருந்தனர். மறைந்திருந்து கண்கள் மலர நோக்கியபின் பெருமூச்சுடன் திரும்பிச் சென்றனர். தேவகி சொன்னாள் “என்றோ ஒருநாள் நானும் இப்படி கருஞ்சுடர் போல ஒரு மைந்தனைப் பெற்றெடுப்பேன் அக்கா. என் வயிறு அதைச் சொல்கிறது.” சிரித்தபடி அவள் தலைமுடியைத் தொட்டு “அவ்வண்ணமே ஆகுக!” என்று பிருதை வாழ்த்தினாள்.

சேடி கூண்டுக்குள் தலையைச் சாய்த்து கண்மூடியதும் பிருதை கூண்டின் மூங்கில்சுவரை தன் சுட்டுவிரலால் கிழித்து துளை வழியாக வெளியே நோக்கினாள். சுபூதர் நிலைகொள்ளாமல் ரதத்தில் இருப்பதையும் இருபக்கங்களையும் நோக்கிக்கொண்டிருப்பதையும் கண்டாள். கவலையும் எரிச்சலுமாக அவர் கைகளை வீசி ஆணைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். அவரைத்தொடர்ந்து வந்த வீரர்களில் ஒருவன் குறைவதை கவனித்தாள். அவன் அவர் பேசிக்கொண்டிருந்தபோது சற்று தள்ளி நின்று கவனித்துக் கொண்டிருந்தவன் என்றும் உணர்ந்தாள். அத்துடன் அவளுக்கு அனைத்தும் உறுதியாகியது.

மதுராபுரியின் இளவரசனைப்பற்றி அவள் நன்றாகவே அறிந்திருந்தாள். அவனைப்பற்றிய அச்சமே மார்த்திகாவதியின் அன்றாட அரசியல் பேசுபொருளாக இருந்தது. அவனுடைய விருப்பங்களின் எல்லை என்ன என்பதை அறியாத யாதவர்கள் இல்லை. வசுதேவன் அவனைப்பற்றி அறிந்துகொண்டிருந்ததை விடவும் பிருதை அறிந்துகொண்டிருந்தாள். அல்லது வசுதேவனையே அவள் அவனைவிட நன்றாக அறிந்திருந்தாள்.

ஒருமுறை மார்த்திகாவதியில் யமுனைக்கரையில் உரையாடிக்கொண்டிருந்தபோது வசுதேவன் கம்சனைப்பற்றிச் சொல்லிச் சிரித்தான். பீஷ்மர் வனம்புகுந்த காலம் அது. பீஷ்மர் திரும்பப்போவதில்லை, அவர் துறவியாகிவிட்டார், முன்னரே நைஷ்டிகபிரம்மசாரியாக இருந்தார் என்கிறார்கள், இப்போது நாம் ஒரு படையுடன் கிளம்பிச்சென்றால் ஒரேநாளில் அஸ்தினபுரியை பிடித்துவிடலாம் என்று கம்சன் சொன்னான். யமுனைவழியாக கங்கையை அடைந்து கரையிறங்கி அஸ்தினபுரியை கைப்பற்றுவதற்கான வழிமுறையை அவன் மண்ணில் வரைந்து காட்டினான். புன்னகையுடன் வசுதேவன் கேட்டான், அந்த எண்ணம் ஏன் அஸ்தினபுரியை அஞ்சிக்கொண்டிருக்கும் பெரிய ஷத்ரிய அரசான மகதத்துக்குத் தோன்றவில்லை? அவர்களின் எல்லையோ அஸ்தினபுரிக்கு மிக அருகிலும் இருக்கிறதே?

அதற்கு கம்சன் மீசையை நீவியபடி பெரிய எண்ணங்கள் பேரரசர்களுக்கு மட்டுமே தோன்றும் என்று நீர் கற்றதில்லையா வசுதேவரே என்றான் என்று சொல்லி வசுதேவன் சிரித்தான். ’நீங்கள் என்ன சொன்னீர்கள்?’ என்று பிருதை புன்னகையுடன் கேட்டாள். ‘உங்கள் கரங்கள் அஸ்தினபுரியைத் தீண்டினால் மகதன் எச்சரிக்கையாகிவிடுவான். நாம் முதலில் மகதத்தைத் தாக்குவோம் என்று சொன்னேன். உடனே மகதத்தைத் தாக்குவதற்கு எத்தனை படகுகள்தேவை என்று கணக்கிடத் தொடங்கிவிட்டான்’ என்று சொல்லி வசுதேவன் மீண்டும் சிரித்தான்.

‘மூத்தவரே நீங்கள் அந்த மூடனின் அமைச்சனாக இருக்க என்ன காரணம்?’ என்று பிருதை அவனைப்பாராமல் அலைகளை நோக்கி கண்களைத் திருப்பியபடி கேட்டாள். ‘இதென்ன வினா? மதுராபுரியின் இளவரசர் அவர். யாதவர்களின் பெரிய அரசே இன்று அதுதான்’ என்று அவன் பதில் சொன்னான். அந்தப்பதிலை உடனடியாக அவன் சொன்னபோதே அவள் அவன் உள்ளத்தை அறிந்துகொண்டாள். அந்தப்பதிலை அவன் கேட்கப்படாத பல வினாக்களுக்காக முன்னரே உள்ளூரச் சொல்லிக்கொண்டிருந்தான் என்று.

வெளியே நோக்கியபடியே வந்த பிருதை யமுனையைக் கண்டாள். மரக்கூட்டங்களுக்கு அப்பால் அதன் நீர்ப்பரப்பு பளபளத்துக்கொண்டிருந்தது. மழைக்காலத்துக்குரிய ஈரப்பாசி படிந்த கூரையுடன் கூடிய நான்கு சிறிய கட்டிடங்கள் கொண்ட ஒரு படித்துறையைப் பார்த்தாள். அதில் ஏழெட்டு சிறிய படகுகள் கட்டுத்தறிகளில் துள்ளவிரும்பும் கன்றுக்குட்டிகள் போல கயிற்றை இழுத்துக்கொண்டு நின்றிருந்தன.

“வண்டியை நிறுத்தச் சொல். நான் என் மைந்தனுக்கு ஆடையை மாற்றவேண்டும்” என்று பிருதை சேடியிடம் ஆணையிட்டாள். சேடியின் கண்களைச் சந்தித்தபோது அவள் சேடி மட்டும் அல்ல என்று புரிந்தது. “குழந்தையை என்னிடம் கொடுங்கள் இளவரசி, நான் ஆடையை மாற்றித்தருகிறேன்” என்றாள் அவள். பிருதை “நான் குழந்தையை இன்னொருவரிடம் அளிப்பதில்லை. கருவறை விஷம் நீங்காத குழந்தை இது”’ என்றாள். இருவர் விழிகளும் இன்னொரு முறை தொட்டுக்கொண்டபின் சேடி திரையை விலக்கி கைகாட்டினாள். வண்டி இழுதடி சக்கரங்களில் உரசி ஒலிக்க குதிரைக்குளம்புகள் மண்ணில் மிதிபட்டுத் தாளமிட சக்கரங்களின் முனகலுடன் நின்று குதிரை சற்று பின்னகர்ந்ததனால் அதிர்ந்தது.

குழந்தையை அணைத்துக்கொண்டு பிருதை இறங்கிக்கொண்டாள். கூடவே சேடியும் வந்தாள். சேடியின் விழிகள் மிகவிரைவாக சுபூதரை சந்தித்து மீள்வதை பிருதை கண்டாள். சாலையின் இருபக்கமும் உயரமில்லாத கொன்றையும் மஞ்சணத்தியும் செறிந்திருந்தன. மழைக்காலத்துக்குரிய இலைத்தழைப்பு பசுந்திரைபோல மூடியிருந்தது. அவள் சாலையின் ஓரத்திற்குச் சென்று அங்கிருந்த பெரிய மருதமரத்தின் மறுபக்கம் சென்றாள். சேடியும் துணைக்கு வந்தாள். பிருதை திரும்பி “நீ அப்பக்கமாக விலகி நில்… நான்…” என தொடங்குவதற்குள் அவள் “நானும் உடனிருப்பது தளகர்த்தரின் ஆணை இளவரசி” என்றாள். மிகநுணுக்கமாக அவள் கண்களில் ஒரு கடுமை வந்துசென்றது.

“ஏன்?” என்று பிருதை கேட்டாள். அவள் ஓரக்கண்கள் அப்பகுதியை கண்காணித்துக்கொண்டிருந்தன. “இங்கே நாகங்கள் அதிகம். நான் தங்களைக் காவல்காக்கவேண்டிய பொறுப்பில் இருப்பவள்.” பிருதை “ஆனால் என்னுடைய மறைவுச்செயல் இது” என்றாள். “நான் இங்கே இலைகளுக்கு அப்பால் நின்றுகொள்வேன் இளவரசி” என்றாள் சேடி. பேசியபடியே நடந்து விலகி வந்த பிருதை அந்த இடத்தைப் பார்த்துவிட்டு அது மறைவாக இல்லை என்பதுபோல பாவனைகாட்டி மேலும் சென்றாள். “மிக விலகிச் செல்லவேண்டியதில்லை இளவரசி” என்று சொல்லிக்கொண்டு இலைகளை வளைத்து ஒடித்தபடி சேடியும் பின்னால் வந்தாள்.

“இந்த இடமே திறந்து கிடக்கிறதே” என்று சொல்லிக்கொண்டு பிருதை மேலும் முன்னகர்ந்தாள். இலைகள் முழுமையாகவே அவர்களை சாலையில் நின்றவர்களிடமிருந்து மறைத்தன. குதிரைகளின் செருக்கடிப்பும் காதடிப்பும் குளம்புமிதியும் கேட்டன. கூடவே மெல்லிய முனகல்களாக அவர்கள் பேசிக்கொள்வதும் வண்டிச்சக்கரங்கள் அசைந்து முனகுவதும் ஒலித்தது. சுபூதர் உரக்க கனைத்தபோது சேடி “இளவரசி இந்த இடம் சரியானது” என தேவைக்குமேல் உரக்க பதில் சொன்னாள். பிருதை மேலும் சற்று முன்னகர்ந்து “இந்தப் பள்ளத்தில் சேறு இருக்காதல்லவா?” என்றாள். “இல்லை, இங்கே நீர் தங்குவதில்லை. யமுனை மிக அருகே உள்ளது” என்றாள் சேடி.

சேடி கால்களை முட்செடி ஒன்றின் மேல் தூக்கிவைத்து ஒரு கொடியை விலக்கி வந்த கணத்தில் இடக்கையால் குழந்தையை மார்போடணைத்தபடி வலக்கையால் தன் ஆடைக்குள் இருந்த சிறிய குறுவாளை எடுத்து ஒரேவீச்சில் சேடியின் கழுத்துக் குழாயை துண்டித்தாள் பிருதை. சேடி சிறுதுளைக் குடுவையில் நீர் புகும் ஒலியை எழுப்பியபடி கைகளால் கழுத்தைப்பற்றிக்கொண்டு பக்கவாட்டில் சரிந்து விழுந்து கைகால்களை உதறிக்கொள்ளத்தொடங்கினாள். மண்ணில் அவளுடைய கைகால்கள் உரசி ஒலிக்கும் ஒலி மட்டும் கேட்டது.

கழுத்தின் வெட்டிலிருந்து எழுந்த குருதி செம்மண்ணில் நிறமில்லாததுபோல ஊறி வற்றியது. அவள் கண்களின் கருவிழிகள் மேலேறி பாம்புமுட்டைகள் போல செவ்வரி ஓடிய வெண்ணிறத்தில் விழிகள் தெரிந்தன. கடைசியாக அவள் வலதுகால் மட்டும் மண்ணை மிதித்து மிதித்து உரசி ஓய முறுகப்பற்றப்பட்டிருந்த கைவிரல்கள் பிடியை நெகிழச்செய்தபடி பக்கவாட்டில் தளர்ந்து சரிந்தன. குழந்தையை கீழே வைத்துவிட்டு பிருதை அவளைத் தூக்கி மருதமரத்தின் வேர்ப்புடைப்புக்குள் மரப்பட்டையின் மடிப்புகளுக்குள் நிற்கச்செய்தாள். அவள் உடல் தொய்ந்தாலும் மரத்தில் சாய்ந்து நின்றுகொண்டது. பிருதை குழந்தையை எடுத்துக்கொண்டு புதர்கள் வழியாக ஓடத்தொடங்கினாள்.

அவள் படித்துறைக்கு ஓடிவந்து சேர்ந்தாள். அங்கிருந்தவை அனைத்துமே சிறிய மீன்பிடிப்படகுகள். அதிகாலையில் மீன்பிடித்துவிட்டு வந்த செம்படவர்கள் அவற்றை கட்டிவிட்டுச் சென்றிருந்தனர். படகுகளிலும் கரையில் பூட்டப்பட்ட கதவுகளுடன் இருந்த கட்டடங்களிலும் எவரும் இருக்கவில்லை. பிருதை மூச்சிரைக்க அப்பகுதியை சுற்றிப்பார்த்தாள். எவரும் கண்ணுக்குப்படவில்லை. தன் கத்தியால் கட்டுக்கயிறுகளை வெட்டி படகுகள் அனைத்தையும் நீரோட்டத்தில் விட்டுவிட்டு ஒரு படகில் ஏறிக்கொண்டாள். மான்தோல் போர்வையை நன்றாக விரித்து அதில் குழந்தையை படுக்கவைத்துவிட்டு அமரத்தில் அமர்ந்து துடுப்பால் ஒரே உந்தலில் படகை நீரோட்டத்துக்கு நடுவே கொண்டுசென்றாள்.

அவள் அவிழ்த்துவிட்ட படகுகள் நீரில் பலதிசைகளிலாகப் பிரிந்து அலைபாய்ந்தும் சுழித்தும் சென்றுகொண்டிருந்தன. அவள் கரையையே பார்த்துக்கொண்டிருந்தாள். கரையில் முதல் வீரனின் தலை தெரிந்ததும் மறுபக்கமாக நீரில் இறங்கிக்கொண்டாள். படகைக் கையால் பற்றியபடி நீந்தத் தொடங்கினாள். நீரின் விசை அவள் எண்ணியதைவிட அதிகமாக இருந்தது. அவளுடைய அரச உடைகள் கால்களில் சிக்கி நீந்துவதைத் தடை செய்தன. ஆயினும் படகிற்கு மறுபக்கம் அவ்வப்போது தலையைத் தூக்கி மூச்சுவிட்டபடி கால்களால் நீரை உதைத்தும் வலக்கையால் துழாவியும் முன்னகர்ந்தாள்.

யமுனையின் நடுப்பகுதிக்கு வந்துவிட்டதை அவள் உணர்ந்தாள். மறுகரையில் சுபூதரின் தலைமையில் அவருடைய காவலர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் தன் சங்கை உரக்க முழக்கிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அப்பால் மெலிதாக இன்னொரு சங்கொலி கேட்டது. அதைத்தொடர்ந்து மிகமெலிதாக இன்னொரு சங்கொலி எழுந்தது. விரைவான பாய்மரப்படகுகளில் அவர்கள் சற்றுநேரத்தில் யமுனையில் இறங்கிவிடுவார்கள் என்று அவள் உணர்ந்தாள். யமுனையின் கரையோரங்களில் தேடுவதற்கும் அதுவே எளியவழி. நீர் வழியாக அவள் தப்ப முடியாது.

அவள் கட்டறுத்துவிட்ட படகுகளில் இரு படகுகள் நீரில் மிதந்துசென்றன. மூன்று படகுகள் கரையை அணுகிக்கொண்டிருந்தன. அங்கே யமுனையின் வளைவு காரணமாக நீரோட்டம் நேராக வளைவை ஒட்டியிருந்த வெவ்வேறுபடித்துறைகளைத்தான் சென்று முட்டிக்கொண்டிருந்தது. அவள் இருமுறை தலைதூக்கி அந்த படித்துறைகளைப் பார்த்தாள். பின்பு படகின் மீதான பிடியை விட்டுவிட்டு நீரில் மூழ்கி நீந்தி விலகினாள்.

பிருதை தலைதூக்கியபோது குழந்தையுடன் அந்தப்படகு அலைகளில் மெல்ல தாவியும் அழுந்தியும் விலகிச்சென்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள். திரும்பிப்பாய்ந்து அந்தப்படகைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்று எண்ணினாள். அவ்வெண்ணத்தை வெல்ல உடனே மீண்டும் மூழ்கி நீந்தி அப்பால் எழுந்தாள். படகு நெடுந்தூரம் சென்றுவிட்டிருந்தது. அவள் நினைத்தால்கூட அதைப்பிடிக்க முடியாது. நெஞ்சில் நிறைந்த ஏமாற்றத்துடன் அவள் மீண்டும் நீருக்குள் மூழ்கினாள். மழைக்காலமாதலால் நீரில் மண்மணம் நிறைந்திருந்தது. சருகுகளும் சுள்ளிகளும் பொன்னிறமாக ஒளிவிட்டபடி ஓசையின்றிச் சுழன்று சென்றன. மீண்டும் எழுந்து நோக்கியபோது மறுகரை மிக விலகிச் சென்றிருப்பதை காணமுடிந்தது. அங்கிருந்து அவள் தலையை அவர்கள் காண முடியாது.

VENMURASU_DAY_86 _

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அவள் நீந்திச் சென்று மறுகரையை அடைந்தாள். கிளைகளை நீருக்குள் முக்கி இலைகளால் நீரோட்டத்தை வருடியபடி வேங்கை மரங்கள் நின்றன. அவள் தாழ்ந்த கிளை ஒன்றைப்பற்றி மூச்சை சமன்செய்துகொண்டபின் இலைகளுக்குள் புகுந்து கரையை அடைந்தாள். தன் ஆடையைப் பிழிந்து திரும்ப அணிந்தபின்பு புதர்கள் வழியாகவே சென்றாள். யமுனையின் அப்பகுதி கைவிடப்பட்ட குறுங்காடாக கிடந்தது. ஆநிரைகள் செல்லும் பாதை ஈரமான சேற்றுத்தடமாகத் தெரிந்தது. இருபக்கமும் விரிந்த புல்பரப்புகளில் இருந்து கடந்துசென்ற நத்தைகளின் ஒளிவிடும் வண்ணத்தடங்கள் சிறிய வானவிற்கள் போல கிடந்தன.

பிருதை இருபக்கமும் கண்களைப் பரப்பியபடி மெதுவாக நடந்தாள். ஆயர்களின் பேச்சொலிகள் மிக அப்பால் எங்கோ கேட்டுக்கொண்டிருந்தன. காகக்கூட்டங்களைச் சுமந்தபடி ஏழெட்டு பசுக்கள் அவளைக் கடந்துசென்றன. அவற்றில் ஒன்று அவளை நோக்கி தலையை அசைத்து ’ம்பே’ என கத்தியது. மற்றபசுக்களும் திரும்பிநோக்கி கத்தின. தொலைவில் எங்கோ ஒரு மெல்லிய நாய்க்குரைப்பு கேட்டது. பசுக்களின் கத்தலைக் கேட்டு நாய் அங்கே வரக்கூடுமென அவள் நினைத்தாள். ஆனால் நாய் அங்கிருந்தே விசாரித்துவிட்டு முனகியபடி அமைதியானது.

அவள் தொலைவில் ஒரு சிறிய மரக்கூரையிட்ட கட்டடத்தைக் கண்டாள். அதன்மேல் மதுராபுரியின் கருட இலச்சினைக்கொடி பறந்துகொண்டிருந்தது. அவள் இலைகளின் மறைவில் அசையாமல் நின்றாள். அந்தக்கட்டடத்துக்குள் பேச்சொலிகள் கேட்டன. அது மதுராபுரியின் சுங்கச்சாவடி என்று தெரிந்தது. அதற்கப்பால் ஆயர்களின் காலடிப்பாதை சரிந்து ஆற்றில் இறங்கும் படித்துறை இருக்கலாம். அவள் அப்பகுதியைக் கூர்ந்து நோக்கியபோது புதர்களுக்கு அப்பால் குதிரை ஒன்றின் தலை அசைவதைக் கண்டாள். நெருங்கி அருகே சென்றபோது அது சேணம் போடப்பட்ட செங்குதிரை என்று தெரிந்தது.

பிருதை அருகே சென்று குதிரையின் கழுத்தைத் தொட்டாள். அதன் நாசிகளில் கையைவைத்து அழுத்தி மூடித் திறந்தாள். குதிரை நட்புடன் தன் கருநீலம் பரவிய நாக்கை நீட்டி அவளை நக்குவதற்கு முனைந்தது. கண்களை உருட்டி நீள்மூச்செறிந்தபடி குஞ்சிமயிரைச் சிலிர்த்தது. அவள் அதை மரத்தில் இருந்து அவிழ்த்து மெல்ல நடக்கச்செய்து அழைத்துச்சென்றாள். காட்டுக்குள் விலகிச்சென்றதும் கால்வளையத்தை மிதித்து தாவி அதன்மேல் ஏறிக்கொண்டு அதை பெரும்பாய்ச்சலாக ஓடச்செய்தாள். நெடுநேரமாக நின்றுகொண்டிருந்த குதிரை சிறிய காதுகளைத் தூக்கியபடி கனத்தகுளம்படியோசை காட்டுக்குள் பல இடங்களில் எதிரொலிக்க விரைந்தோடியது.

குதிரையின் உடலில் இருந்து உப்புவீச்சம் கொண்ட வியர்வை எழத்தொடங்கிய நேரத்தில் அவள் மார்த்திகாவதியின் முதல் சுங்கச்சாவடியை சென்றடைந்தாள். அவளைக்கண்டதுமே அங்கிருந்த வீரர்கள் ஓடிவந்தனர். குதிரையை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு உடனடியாக பாய்மரப்படகு ஒன்றை சித்தமாக்கும்படி ஆணையிட்டாள். அவள் ஆடைகள் அதற்குள் உலர்ந்துவிட்டன. சாவடியில் இருந்து ஒரு தூதனை மதுராபுரிக்கு அனுப்பி வசுதேவனிடம் குழந்தை படகில் படித்துறைக்குச் சென்று சேர்ந்திருக்கும் என்றும் அதை அங்கே விசாரித்து உடனே மீட்டுக்கொள்ளும்படியும் தெரிவிக்கச் சொன்னாள்.

அன்றுமாலையே அவள் மார்த்திகாவதிக்குச் சென்று சேர்ந்தாள். அவளுடைய படகு படித்துறையை அணுகும்போது அவளுக்காக அமைச்சர் சந்திரசன்மர் காத்திருந்தார். அவளிடம் என்ன ஆயிற்று என எதையும் வினவுவதற்கு முன்னரே அரசர் அவளைப் பார்க்கவிழைவதாகச் சொன்னார். “நான் அந்தப்புரம் சென்றுவிட்டு மன்னரை அவரது மந்திரசாலையில் சந்திக்கிறேன்” என்று பிருதை சொன்னாள்.

சந்திரசன்மர் “அரசர் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறார். அஸ்தினபுரியின் தூது என்பது நமக்கு அளிக்கப்படும் பெரிய வாய்ப்பு. மதுராபுரியின் மன்னர் மரணப்படுக்கையில் இருக்கிறார் என்றார்கள். அதன்பின் அந்த அறிவிலி பதவி ஏற்கவிருக்கிறான். அவனிடமிருந்து நாம் தப்புவதற்கான வழி அஸ்தினபுரியை இறுகப்பற்றிக்கொள்வது மட்டுமே” என்றார்.

பிருதை தலையை அசைத்தாள். அவளுக்கான ரதம் வந்து நின்றது. சந்திரசன்மர் அவளிடம் “நான் ரிஷபரை நேரில் சென்று வசுதேவரைப் பார்க்கும்படி அனுப்பியது இதனால்தான். அவர் இன்னும் வந்துசேரவில்லை. வசுதேவரின் புறாஓலை வந்தது. அவரே தங்களை அழைத்துக்கொண்டு இன்று மாலைக்குள் வந்துசேர்வதாகச் சொல்லியிருந்தார்” என்றார். பிருதை “நான் விரிவாக மந்திரசாலையில் அனைத்தையும் விளக்குகிறேன்” என்றபின் ரதத்தில் ஏறிக்கொண்டாள்.

அவள் அந்தப்புரத்தில் நுழைந்து தன்னுடைய மஞ்சத்தறை நோக்கிச் செல்லும்போது சேடி சுஷமை அவள் பின்னால் வந்து “இளவரசி, தங்களுக்காக அரசி காத்திருக்கிறார். தங்கள் வருகைபற்றிய புறாச்செய்தி வந்ததை அமைச்சர் அரசியிடம் சொன்னார்” என்றாள். “வருகிறேன்” என்று சொன்னபடி அவள் மஞ்சத்தறையைத் திறந்தாள். அவள் விட்டுசென்ற அதே வடிவில் தூய்மையாக வைக்கப்பட்டிருந்தது மஞ்சம். அவள் சாளரத்துக்கு வெளியே இருந்த மரப்பட்டைக்கூண்டை நோக்கிச் சென்றாள். சிவந்த பாதங்களும் நகங்கள் போன்ற அலகும்கொண்ட வெண்புறா அதற்குள் அமர்ந்திருந்தது.

பிருதை தன் நெஞ்சைப்பற்றிக்கொண்டு சிலகணங்கள் நின்றாள். அந்தப்புறாவைப் பற்றி அதன் கால்களில் இருந்த செய்தியை நோக்க அவள் அகம் துணியவில்லை. கால்கள் வலுவிழப்பதுபோல தொண்டை வறண்டு விடாய் எரிவதுபோல கண்களில் பார்வை அலையடித்து ஒளியிழப்பதுபோலத் தோன்றியது. மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள். தன் ஆடையை இழுத்துச் சரிசெய்து, கூந்தலை கைகளால் நீவி பின்னால் கொண்டுசென்று செருகிக்கொண்டாள். அச்செயல் அவள் அகத்தையும் சீராக்கியது. சாளரத்தின் வழியாக கையை நீட்டி அந்தப் புறாவைப் பற்றி அதன் இறகுகளுக்குள் மெல்லிய கம்பியால் கட்டப்பட்டிருந்த ஓலைச்சுருளை எடுத்தாள்.

அவள் ஏன் அத்தனை பதறினாள் என்பதை அதை வாசித்தபோது உணர்ந்துகொண்டாள். ஏனெனில் புலன்களுக்கு அப்பால் ஆன்மா அதை முன்னரே உணர்ந்துவிட்டிருந்தது. யமுனையின் படித்துறையில் குழந்தை ஏதும் வந்துசேரவில்லை என்றும் தேடிக்கொண்டிருப்பதாகவும் வசுதேவன் எழுதியிருந்தான். பெருமூச்சுடன் அவள் மஞ்சத்தில் அமர்ந்துகொண்டாள். அப்போது ஓர் எண்ணம் எழுந்தது. அதுதான் அந்நிகழ்வுகளின் இயல்பான உச்சம். அதைச் சென்றடைவதற்காகவே அதற்கு முன்னால் நிகழ்ந்தவை அனைத்தும் நிரைவகுத்தன. அந்த ஒருநாளில் அவள் மொத்த வாழ்க்கையும் இரண்டாகப் பகுக்கப்பட்டுவிட்டது.

நூல் இரண்டு – மழைப்பாடல் – 35

அரண்மனைக்குச் சென்று மன்னரின் உடல்நிலை பற்றி ஆராய்ந்தான் வசுதேவன். உக்ரசேனரின் உடல்நிலை கம்சன் சொன்னதுபோல அணையும் தருவாயில் இருக்கவில்லை. அவன் அரண்மனைக்கூடத்துக்குச் சென்றபோது கலிங்கத்தில் இருந்து வந்திருந்த வைத்தியர்குழுவின் தலைவரான பிரபாகரர் வந்து வணங்கி வழக்கம்போல மன்னரின் உடல்நிலை பற்றிய அன்றைய செய்திஓலையை அளித்தார்.

வசுதேவன் அதை வாங்கி வாசித்துவிட்டு புருவங்கள் முடிச்சிட பிரபாகரரை ஏறிட்டுப்பார்த்தான். “மன்னரின் உடல்நிலையில் இக்கட்டு இருப்பது உண்மை. ஆனால்…” என அவர் இழுத்தார். அவன் நோக்கியதும் கண்களை தாழ்த்திக்கொண்டார். “சொல்லுங்கள்” என்றான் வசுதேவன்.

“இளவரசர் அவசரமுடிவுகளுக்குச் செல்கிறார் அமைச்சரே. மன்னர் உடனடியாக உயிர்துறக்கும் நிலை இல்லை. அவருக்கு இளைப்புநோய் இருக்கிறது. நேற்று அது சற்றே கூடுதலாக ஆகி நுரையீரல் வழியாக குருதி வந்திருக்கிறது. அதை நஸ்யங்கள் வழியாக இன்று கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம். பொதுவாக மூச்சுநோய்கள் எவரையும் உடனே கொல்வதில்லை. அவை வதைக்கும், படுக்கவைக்கும், ஆனால் உயிரை பாதிப்பதில்லை.”

அதை தான் எதிர்பார்த்திருந்ததை வசுதேவன் உணர்ந்தான். தன் உடலசைவுகளில் உள்ளத்தில் ஓடிய அமைதியின்மை தெரியாமலிருக்க இரு கைகளின் கட்டைவிரலையும் சுட்டுவிரலையும் சேர்த்து அழுத்திக்கொண்டு எதிரே நின்ற பிரபாகரரின் முகத்தையே நோக்கினான்.

“இறந்துவிடுவாரா என்று இளவரசர் நேற்று ஏழெட்டுமுறை கேட்டார். இன்றுகாலை இறந்துவிட்டாரா என்று கேட்டு தூதன் வந்தான். சற்று முன் இறந்ததுமே செய்தியை அறிவிக்கும்படிச் சொல்லி தூதன் வந்திருக்கிறான்” என்றார் பிரபாகரர். “கேலிக்குரியதாகத் தோன்றுகிறது அனைத்தும்…இங்கே எல்லா சேவகர்களும் இதையெல்லாம் அறிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.”

“அது இளவரசரின் பதற்றத்தையே காட்டுகிறது” என்றான் வசுதேவன். “இல்லை அமைச்சரே. அதே வினாவுடன் அமைச்சர் கிருதசோமரின் தூதர்களும் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றார் பிரபாகரர். “நீங்கள் கிருதசோமரின் சொற்களுக்கு கட்டுப்பட்டவரல்ல. அதை அவருக்குச் சொல்லுங்கள்” என்றான் வசுதேவன். பிரபாகரர் “அதை நான் அவரிடம் சொல்லமுடியாது அமைச்சரே. கிருதசோமர் இப்போது இளவரசரின் அருகிலேயே இருந்துகொண்டிருக்கிறார்” என்றார்.

“மன்னரின் உடல்நிலையை நாழிகைக்கு ஒருமுறை எனக்குத் தெரிவியுங்கள்” என்று சொல்லிவிட்டு வசுதேவன் கிளம்பியபோது பிரபாகரர் பின்னால் வந்தார். “சொல்லுங்கள்” என்றான் வசுதேவன். “எனக்கு ஐயமாக இருக்கிறது” என்றார் அவர். “என்ன ஐயம்?” என்று கேட்டபோது தன் முதுகில் ஏதோ ஊர்வதுபோல ஓர் நரம்பசைவை வசுதேவன் உணர்ந்தான். “இல்லை… நீங்கள் அரசரிடம் சொல்லுங்கள் அமைச்சரே…” என்று பிரபாகரர் சொல்லி கண்களைத் தாழ்த்திக்கொண்டார்.

“என்ன?” என்றான் வசுதேவன். “இளவரசர் காட்டும் இந்த அவசரம் அவப்பெயரை உருவாக்கிவிடும்…அவரிடம் சொல்லுங்கள்.” வசுதேவன் “சொல்கிறேன்… நீங்கள் உங்கள் கடமையை முறைப்படிச் செய்யுங்கள்” என்றான். கடமையை என்ற சொல்லில் அவன் கொடுத்த அழுத்தத்தை பிரபாகரர் புரிந்துகொண்டதை அவரது இமைச்சுருக்கம் காட்டியது.

திரும்பும் வழியில் வசுதேவன் கிருதசோமனைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான். மறைந்த பேரமைச்சர் கிருதரின் மைந்தர். அவரது முன்னோர்கள் குங்குரரின் காலம் முதலே மதுராபுரியின் பேரமைச்சர்கள். கிருதரின் மூதாதையான சோமகர்தான் குங்குரருக்கு தன் தமையன் விடூரதன் குலத்தை வீழ்த்தி மதுராபுரியின் அரசுரிமையை கைப்பற்றும் வழிகளைக் கற்பித்தவர். யாதவகுலத்தில் எதிர்ப்பை வெல்ல மகதத்துக்கு பெருந்தொகையை கப்பமாகக் கொடுக்கவும் கலிங்கத்து படைகளை ஊதியத்துக்கு அழைத்துவரவும் அவரே வழிகாட்டினார். அன்றுமுதல் மதுராபுரி அவர்களின் ஆணைக்குள்தான் இருந்தது.

உக்ரசேனரின் அவைக்கு வந்த வசுதேவன் அரசு நூல்களை கிருதரிடம்தான் கற்றுக்கொண்டான். அவனுடன் இணைமாணாக்கனாகவே கிருதரின் மைந்தன் கிருதசோமன் இருந்தான். கம்சனின் அன்பைப்பெற்று வசுதேவன் வளர்ந்தபோது அதை கிருதர் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் அவரது மறைவுக்குப்பின் வசுதேவன் பேரமைச்சனாக ஆகவேண்டுமென கம்சன் சொல்ல உக்ரசேனர் அதை ஏற்றுக்கொண்டபோது கிருதசோமன் சினம் கொண்டான். மதுராபுரிக்கு முதல்முறையாக பிராமணரல்லாத ஒருவர் அமைச்சரானதை அவையின் பிராமணர்கள் அனைவருமே உள்ளூர விரும்பவில்லை என்பதை வசுதேவன் அறிந்திருந்தான். அந்த வெறுப்பும் அச்சமும் நாள்செல்லச்செல்ல கிருதசோமனிடம் முனைகொள்வதையும் கண்டான்.

உக்ரசேனர் நோயில் விழுந்ததும் கம்சனின் உள்ளத்தை ஐயங்களால் நிறைத்து அந்த வழியினூடாக உள்ளே சென்று நிலைகொள்ள கிருதசோமனால் முடிந்திருக்கிறது. அது அவனது முயற்சி மட்டும் அல்ல. அவையின் பிராமணர்கள் அனைவருமே ஏதேனும் வகையில் அதனுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள். அவையில் வசுதேவன் பேரமைச்சனாக இருந்தாலும் கருவூலமும் கோட்டைக்காவலும் சுங்கமும் சாலைச்சாவடிகளும் அரண்மனையாட்சியும் கிருதரின் குலத்தைச்சேர்ந்த பிராமணர்களிடமே இருந்தது. அரச சபையில் வசுதேவன் எப்போதும் தனிமைப்படுத்தப்பட்டவனாகவே இருந்தான். மென்மையான இனிய முகமன்களுக்கும் முறைமைச்சொற்களுக்கும் அடியில் பட்டில்பொதிந்த உடைவாள் போல பிறிதொன்று இருந்துகொண்டே இருந்தது.

வசுதேவன் தன் மாளிகைக்கு வந்ததுமே சேவகனிடம் “நான் உடனடியாக உத்தரமதுராபுரிக்குச் செல்லவேண்டும், ரதங்களைப் பூட்டுக” என்று ஆணையிட்டான். தன் அறைக்குள் சென்று ஓலையில் அன்றைய நிகழ்வுகளை எழுதி புறாவின் கால்களில் கட்டி பிருதைக்கு அனுப்பிவிட்டு கீழே வந்தான். அவன் சேவகன் “தங்கள் காலையுணவு” என்று சொன்னதும் அங்கேயே நின்றபடி அவன் தந்த தேனையும் அப்பத்தையும் பழங்களையும் உண்டான். அப்போது வாசலில் வந்து தலைவணங்கிய சேவகன் மார்த்திகாவதியில் இருந்து தூதன் வந்திருப்பதைச் சொன்னான்.

மார்த்திகாவதியில் இருந்து தூதனாக வந்திருந்தவர் துணைஅமைச்சர் ரிஷபர் என்பதைக் கண்டதுமே வசுதேவன் எச்சரிக்கை கொண்டான். அவரை அவன் தலைவணங்குவதை காணாமலிருக்கும்பொருட்டு இருசேவகர்களையும் வெளியே அனுப்பிவிட்டு அவரை வணங்கி முகமன் சொன்னான். அவர் அவனுக்கு ஆசியளித்துவிட்டு “இங்கே பேசலாமா?” என்றார். வசுதேவன் ஆம் என தலையை அசைத்தான்.

“மாமன்னர் குந்திபோஜர் உடனடியாக மார்த்திகாவதியின் இளவரசி குந்தியை அவரது அரண்மனையில் கொண்டுசேர்க்கும்படி ஆணையிட்டிருக்கிறார்” என்றார். வசுதேவன் கண்களுக்குள் நிகழ்ந்த சிறிய அசைவை அக்கணமே வென்று “அவ்வண்ணமே செய்கிறேன்” என்றான். “பிருதை…” என அவன் தொடங்குவதற்குள் ரிஷபர் “அவர் மதுவனத்தில் இல்லை என எனக்குத்தெரியும்” என்றார்.

“ஆம் உத்தமரே, அவள் இப்போது உத்தரமதுராபுரியில் தேவகரின் மகள் தேவகியின் கன்னிமாடத்தில் இருக்கிறாள்” என்றான் வசுதேவன். அது உண்மை என ரிஷபர் உடனே புரிந்துகொள்வார் என்றும் உண்மையுடன் பொய்யை அவன் எப்படிக் கலக்கப்போகிறான் என்பதையே அவர் ஆராய்வாரென்றும் அவன் உணர்ந்தான். “நான் தேவகியிடம் அணுக்கமான உறவுடன் இருக்கிறேன் ரிஷபரே, அவள் பெறும் குழந்தையை பிருதை பேணவேண்டுமென்பதற்காகவே அவளை கன்னிமாடத்துக்குக் கொண்டுவந்தேன்.”

சொன்னதுமே ரிஷபர் அதை ஏற்றுக்கொண்டுவிட்டார் என வசுதேவன் உணர்ந்தான். அவர் அறிந்த செய்திகளுடன் அது சரியாகவே இணைந்துகொண்டுவிட்டது. “சேய் நலமாக உள்ளதல்லவா?” என்ற வினா அவரில் இருந்து எழுந்ததுமே அவர் அங்கே மருத்துவச்சிகள் வந்துசென்றதை அறிந்திருக்கிறார் என்று அவன் அறிந்தான். “ஆம் நலம்” என்று பதில்சொன்னான்.

“அஸ்தினபுரியில் இருந்து ஒரு தூதுவந்திருக்கிறது” என்று ரிஷபர் சொன்னார். அவன் கண்களை பார்த்தபடி “பிருதையை பெண்கேட்டிருக்கிறார்கள்.” வசுதேவன் அச்சொற்களை ஒவ்வொன்றாக தன்னுள்ளே மீண்டும் சொல்லிக்கொண்டபின் “யாருக்காக?” என்றான். “அஸ்தினபுரியின் மருமகளாக பிருதையை அளிக்க நாம் ஒப்புக்கொள்கிறோமா என்று மட்டும்தான் கேட்டிருந்தார்கள்” என்றார் ரிஷபர். “அங்குள்ள நிலைமையை வைத்துப்பார்த்தால் அவர்கள் விசித்திரவீரியரின் மைந்தரும் அவர்களின் பேரமைச்சருமான விதுரருக்காகவே நம் பெண்ணைக் கேட்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.”

“குந்திபோஜர் என்ன நினைக்கிறார்?” என்றான் வசுதேவன். “அவர் மகிழ்ச்சியில் திளைக்கிறார். மார்த்திகாவதியின் நலனுக்கு இதைவிடச்சிறந்த வாய்ப்பென ஏதும் வரப்போவதில்லை என எண்ணுகிறார்” என்றார் ரிஷபர். வசுதேவன் “ஆனால் விதுரர் சூதகுலத்தவர் அல்லவா?” என்றான்.

“ஆம். ஆனால் ஷத்ரியர்களின் கண்ணில் நாம் இன்னும் சூத்திரர்கள்தான்” என்றார் ரிஷபர். “நாம் விதுரரின் உதவியுடன் மார்த்திகாவதியை ஒரு வலுவான அரசாக நிலைநாட்டுவோமென்றால் அடுத்த தலைமுறை எவருடைய உதவியுமில்லாமல் ஷத்ரிய பதவியை அடையும். யார் மண்ணைவென்று அதை வைத்துக்கொள்ளவும் வல்லமைகொண்டிருக்கிறானோ அவனே ஷத்ரியன் என்பதே நியதி.” அவர் அதைச் சொன்னபாவனையிலேயே அனைத்தையும் இயக்குவது அவரது திட்டங்களே என்று வசுதேவன் உணர்ந்துகொண்டான்.

“குந்திபோஜர் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்” என்றார் ரிஷபர். “யாதவர்கள் இன்று பலகுலங்களாகப் பிரிந்து பல அரசுகளாக சிதறிக்கிடப்பதனால்தான் பாரதவர்ஷத்தில் அவர்களுக்கான இடம் உருவாகாமல் இருக்கிறது. அவர்களை ஒருங்கிணைப்பவர் எவரோ அவர் ஐம்பத்தாறு ஷத்ரியமன்னர்களும் ஒதுக்கிவிடமுடியாத வல்லமைகொண்ட ஷத்ரியசக்தியாக எழுவது உறுதி…”

“ஆம்” என்று வசுதேவன் சொன்னான். “ஆனால் அதிலுள்ள இக்கட்டு என்னவென்றால் அப்படி ஒரு புதிய ஷத்ரிய சக்தி எழுவதை ஷத்ரியமன்னர்கள் விரும்புவதில்லை. அதை கட்டுப்படுத்தவும் ஒழிக்கவும்தான் முயல்வார்கள். அதில் பிழையும் இல்லை. அதுதான் அவர்களுக்குரிய அறம். அதை மீறி எழவேண்டியதே புதிய ஷத்ரிய சக்தியின் அறம். இந்தப்போட்டியை தகுதியுடையது மட்டும் எழுந்துவருவதற்கான ஒரு தேர்வாக வைத்துள்ளது விதி என்று கொள்வதே விவேகமாகும்” என்று ரிஷபர்சொன்னார்.

VENMURASU_EPI_86

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அவரது கண்களையே வசுதேவன் நோக்கிக்கொண்டிருந்தான். ஒரு யாதவ சிற்றரசின் அமைச்சராக இருக்கும் பிராமணனுக்கு என்ன திட்டம் இருக்கமுடியும்? அதை உடனே உய்த்தறிந்து புன்னகையுடன் ரிஷபர் சொன்னார் “நான் பிராமணன். ஷத்ரியர்களின் மோதலும் வெற்றியும் எனக்குரிய களமல்ல. ஆனால் நான் எவருக்காக பணிபுரிகிறேனோ அவர்களுக்காக என் அறிவையும் விவேகத்தையும் முற்றிலுமாகச் செயல்படுத்துவது என் கடமை… அதையே செய்கிறேன்.” அவரது புன்னகை விரிந்தது “ஆம், அதன் வழியாக நான் வளர்வேன். என் குலம் வல்லமை பெறும். அதுவும் என் அறமேயாகும்.”

வசுதேவன் “அவ்வாறே ஆகுக” என்று வாழ்த்தினான். ரிஷபர் சற்று குனிந்து அவனை நோக்கி “ஒருபோதும் மதுராபுரியை இப்போதிருக்கும் எல்லைகளுக்கு அப்பால் வளர்வதற்கு ஷத்ரியர்கள் விடப்போவதில்லை. அதை உக்ரசேனர் அறிந்திருந்தார். ஆகவேதான் அவர் விருஷ்ணிகளையும் போஜர்களையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள முயன்றார். அவரால் அது முடியவில்லை என்றாலும் மோதல் இல்லாமல் இருக்க முடிந்தது. ஆனால் இனி மதுராபுரியை ஆளப்போகும் மன்னன் மூடன். அவனால் அந்தச் சமநிலையை ஒருபோதும் பேணமுடியாது” என்றார்.

அச்சொற்களை கேளாதவன் போல முகத்தை வைத்துக்கொண்டான் வசுதேவன் . ரிஷபர் “மார்த்திகாவதி அஸ்தினபுரியின் பின்பலத்தை அடையுமென்றால் மதுராபுரியை ஒரேநாளில் வென்றுவிடமுடியும்….” என்றபோது அவர் குரல் தாழ்ந்தது. “மதுராபுரியில் மார்த்திகாவதியுடன் குருதியுறவுள்ள ஒரு விருஷ்ணிகுலத்தவர் ஆட்சி செய்யமுடியும் என்றால் யாதவர்களின் வல்லமைகொண்ட முக்குலங்களும் ஒன்றாகிவிடுகின்றன. அடுத்த தலைமுறையில் நாம் நமது நிலங்களை எவர் துணையும் இல்லாமல் ஆட்சிசெய்ய முடியும்.”

மெல்லிய குரலில் ரிஷபர் தொடர்ந்தார் “ஒருதலைமுறைக்காலம் நாம் எவருக்கும் கப்பம் கட்டாமலிருந்தால் நம்முடைய படைபலமும் செல்வமும் பெருகும்….யாதவமன்னன் ஒருவன் அதற்கடுத்த தலைமுறையில் ஒரு ராஜசூய வேள்வியும் ஒரு அஸ்வமேதவேள்வியும் செய்வானென்றால் பாரதவர்ஷத்தின் அத்தனை ஷத்ரியர்களும் அவனை ஏற்றுக்கொண்டாகவேண்டும்… யார் கண்டார்கள், பெருநியதிகள் ஆணையிடுமென்றால் யாதவர்குலத்துச் சக்கரவர்த்தி ஒருவர் இந்த பாரதவர்ஷத்தை ஒருகுடைக்கீழ் ஆளவும் முடியும்….ஓம் அவ்வாறே ஆகுக .”

ஓடைநீரில் குருதித்துளி கோடாக நீள்வது போல அந்த நீளமான சொற்றொடர்களுக்குள் ஓடிச்சென்ற உட்குறிப்பை வசுதேவன் புரிந்துகொண்டான். அவன் உடலில் மெல்லிய நடுக்கம் ஓடியது. மூச்சு கோசங்களுக்குள் அசையாமல் நின்றது. அவன் அதை அழுத்தி வெளிவிடவேண்டியிருந்தது. ஆனால் கண்களை அசைக்காமல் வைத்திருந்தான்.

“அரசுகளும் மன்னர்களும் எப்போதும் விதியால் முடிவெடுக்கப்படுகின்றன யாதவரே. ஆனால் விதி அதை ஒருபோதும் எவர் மடியிலும் கொண்டுசென்று போடுவதில்லை தாவினால் கையெட்டும் தொலைவிலேயே நிற்கச்செய்கிறது. தானிருக்கும் இடத்தில் இருந்து எழுந்து தாவாதவர்கள் அதை அடைவதேயில்லை” என்று ரிஷபர் பொதுவாகச் போலச் சொன்னார்.

இயல்பாக வசுதேவன் சிந்தைக்குள் கிருதசோமனின் முகம் மின்னிச்சென்றது. அமைச்சுத்திறனில் அந்தணரை ஒருபோதும் விஞ்சிவிடமுடியாது என்ற எண்ணம் எழுந்தது. ரிஷபர் அங்கே வரும்போது அவர் சொல்லவேண்டிய சொற்களை உருவாக்கிக்கொண்டிருக்கவில்லை. அவனுடைய முகத்தை நோக்கி அக்கணங்களில் அச்சொற்களை சமைத்துக்கொள்கிறார். ஆனால் அவை எங்கே தொடங்கவேண்டுமோ அங்கே தொடங்கின. எங்கே முடியவேண்டுமோ அங்கே முடிந்தன. நேரடியாக முகத்திலறையவில்லை, சுற்றி வளைக்கவுமில்லை. ஆனால் ஆயிரம் பட்டுத்துணிகளுக்கு அப்பால் அவன் அகத்தில் மறைந்துகிடக்கும் வாளை அவர் தொட்டுப்பார்த்துவிட்டார். அவன் பெருமூச்சுவிட்டான்.

“நல்லது உத்தமரே. நான் இன்றே பிருதையை மார்த்திகாவதிக்கு அனுப்புகிறேன்” என்றான் வசுதேவன். “தேவகியை நீங்கள் மணம்கொள்வதும் உகந்ததே” என்று புன்னகையுடன் ரிஷபர் சொன்னார். “ஏனென்றால் உத்தரமதுராவுக்கும் இங்கே ஆட்சியுரிமையில் ஒரு குரல் உள்ளது. உக்ரசேனரின் தங்கைமகன் அஜன் அங்கேதான் இருக்கிறான். உக்ரசேனரின் மகள் ரஜதகீர்த்தியை அவன் மணம்கொண்டிருக்கிறான். தேவகருடைய ஒத்துழைப்பும் நமக்குத்தேவை.” வசுதேவன் அவர் கண்களைச் சந்திப்பதை விலக்கி “ஆம்…” என்றான்.

ரிஷபர் வணங்கி வெளியேறினார். வாயில் திறந்ததும் எளிய சூதனைப்போல அவனை வணங்கினார். அவனும் சூதர்களுக்குரிய பரிசிலை அவருக்கு அளித்து வழியனுப்பினான். அவன் தன் உடல் பதறிக்கொண்டே இருப்பதையும் சொற்களனைத்தும் புற்றிலிருந்து எழுந்த ஈசல்கூட்டம் போல சுழன்றுகொண்டே இருப்பதையும் உணர்ந்தான். நிலைகொள்ளாமல் தன் அரண்மனைக்குள் அங்குமிங்கும் நடந்தான். மதுராபுரியின் அரசு. ஏன் கூடாது? இது இன்றும் சூரசேனம் என்றே அழைக்கப்படுகிறது. வரலாற்றின் வளையம் திரும்பி வருகிறதா என்ன? வரலாறு ஒரு வனமிருகம். அது பழகிய பாதைகளை விட்டு விலகாது. ஆனால்…

சேவகன் வணங்கி “தேர் ஒருங்கிவிட்டது” என்றான். தலையை அசைத்துவிட்டு தன் அறைக்குள் சென்றான் வசுதேவன். ஆட்டுமஞ்சத்தில் அமர்ந்துகொண்டு காலால் அதை மெல்ல ஆட்டியபடி வெளியே தெரிந்த மரங்களின் இலையசைவுகளை பார்த்துக்கொண்டிருந்தான். ஆம். சூரசேனம், சூரசேனம் மீண்டு எழுமென்றால் அது நிகழலாம். ‘அது’. அவனுடைய எளிய உடலால் அந்த எழுச்சியைத் தாளமுடியவில்லை. ‘அது..’ வேண்டாம். வேண்டாம். இப்போதே எண்ணவேண்டுமென்பதில்லை…ஆனால்…

வசுதேவன் எழுந்து சேவகனை அழைத்து மது கொண்டுவரச்சொன்னான். கலிங்கம் வழியாக வரும் யவனமது எப்போதும் அவன் மாளிகையில் இருக்கும் என்றாலும் அவன் அதை பெரும்பாலும் அருந்துவதில்லை. அதன் வாசனை அழுகிய பூக்களுடையதுபோலத் தோன்றியது. கண்களைமூடிக்கொண்டு அதை முகர்ந்தால் அவனுடைய அகக்கண்ணில் புழுக்களின் நெளிவு தெரியும். ஏதேனும் நிகழ்வுகளால் அகம் கலைந்து இரவில் நெடுநேரம் துயில் வராதிருக்கையில் மட்டும் அவன் அதை அருந்துவான்.

சேவகன் தேன்கலந்த பொன்னிற மதுவை வெள்ளிக்கோப்பையில் கொண்டுவந்தான். அதை ஒரே மிடறாகக் குடித்துவிட்டு சால்வையால் உதடுகளை துடைத்துக்கொண்டான். இருமுறை குமட்டியபோது போதாதென்று தோன்றியது. இன்னொரு முறை கொண்டுவரச்சொல்லி குடித்துவிட்டு ஆட்டுகட்டிலிலேயே அமர்ந்து ஆடிக்கொண்டிருந்தான். ஆம், சிலதருணங்களில் வரலாறு என்பது வெறும் வாய்ப்புகளின் விளையாட்டு. வெறும் வாய்ப்புகள். அதை அளிப்பவை மனிதர்களை பகடைகளாக ஆடவைக்கும் விண்கோள்கள்.

விடூரதன் பெண்களில் ஈடுபட்டிருந்தார். அந்தப்புரத்திலேயே வாழ்ந்தார். மகதத்துக்கான கப்பத்தை ஒவ்வொருமுறையும் தம்பி குங்குரர்தான் முத்திரையிட்டு அனுப்பினார். மகத மன்னனின் அரண்மனைக் கொலுவிழவுக்குச் சென்றிருந்தபோது மகதமன்னன் குங்குரரை ‘மதுராபுரியின் அரசரே’ என்று சபையில் அழைத்தான். அது வரலாற்றின் வாய்ப்பு. வெறும் வாய்ப்பு அது. ‘ஆம், சக்கரவர்த்தி’ என்றார் குங்குரர். வரும் வழியிலேயே விடூரதன் குலம் அரசை இழப்பது முடிவுசெய்யப்பட்டுவிட்டது.  அக்குலம் யமுனைக்கரை காடுகளில் மாடுமேய்த்து அலையும் விதியும்… வாய்ப்புகள் வந்து நிற்கின்றன. ஆனால்…

பளிங்குமீது நீராவி வியர்ப்பதுபோல அவன் சிந்தைகள் ஈரமாகி குளிர்ந்து திரண்டு தயங்கி வழியத்தொடங்கின. அதுவரை நிகழ்ந்தவற்றை ஒவ்வொன்றாக எண்ணித் திரட்டத் தொடங்கினான். ஒன்று அவன் கையில் நின்றபோது நூறு நழுவி வழிந்தன. சரி ஏதாவது ஆகட்டும் என ஆட்டுகட்டிலிலேயே படுத்துத் தூங்கிவிட்டான்.

அவன் ஒரு கொந்தளிக்கும் கரிய நதி வழியாகச் சென்றுகொண்டிருந்தான். அவனுடைய படகு மிகச்சிறியதாக ஒரு மரக்கோப்பை அளவுக்கே இருந்தது. அதை அலைகள் தூக்கி வீசிப்பிடித்து விளையாடின. கன்னங்கரிய அலைகள். பளபளக்கும் நீர்ப்பரப்பு. அது நீரல்ல என்று அவன் அறிந்தான். அவை நாகங்களின் உடல்கள். லட்சக்கணக்கான நாகங்கள் அங்கே நதிபோல பின்னி நெளிந்து ஓடிக்கொண்டிருந்தன. அவற்றின் பத்திகள்தான் அலைகளாக எழுந்துகொண்டிருந்தன. அவற்றின் நாநுனிகள் செந்நிறத்துமிகளாகத் தெறித்தன. அவன் அச்சத்துடன் படகின் விளிம்பைப்பற்றிக்கொண்டான். துடுப்பு போடுவதை நிறுத்திவிட்டான்.

கரையில் ஓர் ஆலமரம் தெரிந்தது. அதன் கீழே அவன் அன்னை நின்றுகொண்டிருந்தாள். அவள் கைநீட்டி அவனை அழைத்தாள். அவளருகே சென்று விட அவன் விரும்பினான். ஆனால் அலைகள் அவனை விலக்கி விலக்கிக் கொண்டு சென்றன. அவனுக்கு தாகமெடுத்தது. ஆனல் நதியில் நீரே இல்லை. நாகங்கள். நாகங்களைக் குடிக்கமுடியுமா என அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். நாகங்களாலான நதியா? இதென்ன, மண்ணுலகா வானுலகா பாதாளமா? இல்லை இது கனவு. நான் கனவைத்தான் கண்டுகொண்டிருக்கிறேன். வெறும்கனவு… கனவென்றால் நான் இப்போது விழித்துக்கொள்ளமுடியும். நீர் அருந்த முடியும். ஆனால் என் அன்னை மறைந்துவிடுவாள். தாகம்…

தாகம் என்ற சொல்லுடன் வசுதேவன் விழித்துக்கொண்டான். ஆட்டுகட்டிலில் அவன் கிடப்பதை அப்போதுதான் உணர்ந்தான். உடல் வியர்வையில் நனைந்திருந்தது. எழுந்து சென்று மண்குடுவையில் இருந்த நீரை எடுத்து குடித்தான். அது யவன மதுவின் இயல்பு. அதை எப்போதெல்லாம் அருந்தினானோ அப்போதெல்லாம் தாகம் தாகம் என்று அவன் அகம் தவித்திருக்கிறது. மீண்டும் ஆட்டுகட்டிலில் அமர்ந்தபோதுதான் என்ன செய்கிறோம் என்ற எண்ணம் வந்தது. உடனே திகைத்து எழுந்து நின்றுவிட்டான்.

சால்வையை அள்ளிப்போட்டுக்கொண்டு ஓடிச்சென்று ரதத்தில் ஏறிக்கொண்டான். சாரதியிடம் உத்தரமதுராவுக்குச் செல்ல ஆணையிட்டபின் இருக்கையில் தலையைப்பற்றியபடி அமர்ந்துவிட்டான். தலையின் இருபக்கமும் வலித்தது. இருமுறை ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டன். நான் ஒரு எளிய யாதவன். நூல்களைக் கற்றால் மதியூகி ஆகிவிடலாமென எண்ணிக்கொண்ட மூடன். நான் மதியூகி அல்ல. மதியூகியின் அகம் இக்கட்டுகளை உவக்கிறது. இதோ என் களம் என எம்புகிறது. மேலும் மேலும் இக்கட்டுகளுக்காக ஏங்குகிறது. நான் நூல்களில் அனைத்தையும் கற்றவன். உண்மையான இக்கட்டுகளில் என் அகம் திகைத்துவிடுகிறது.

ரதம் கன்னிமாடத்துக்கான சாலையில் ஓடத்தொடங்கியதும் வசுதேவன் அமர்ந்திருக்கமுடியாமல் எழுந்து நின்றுவிட்டான். ஏதோ உள்ளுணர்வால் அவனுக்கு எங்கோ பிழை நிகழ்ந்திருப்பதை அறியமுடிந்தது. பிழை நிகழுமென அறிந்தேதான் மதுவை அருந்தி நேரத்தை கடத்தினேனா என்று கேட்டுக்கொண்டதும் தலையை மீண்டும் அறைந்துகொண்டான். ஒன்றுமில்லை, எல்லாம் என் வீண்சிந்தைகள். ஒன்றும் நிகழ்ந்திருக்காது… ஆனால் …

கன்னிமாடத்தை அணுகியதுமே அவனுடைய அகம் நீர்பட்ட பால்நுரைபோல அடங்கியது. தன்னைப்பழித்த உள்ளத்துடன் ரதத்தை விட்டு இறங்கி காவலர்கள் முன்பு நின்றான். காவலர்தலைவனிடம் உள்ளே சென்று தேவகியை அவன் பார்க்க விழைவதாகச் சொன்னான். காவலர்தலைவன் முகத்தில் இருந்த ஐயத்தை அவன் தெளிவாகவே கண்டுகொண்டான். “இங்கே யாராவது வந்தார்களா?” என்று அவன் கேட்டான்.

காவலர்தலைவன் தயக்கத்துடன் “ஆம் அமைச்சரே. சற்றுமுன்புதான் தங்கள் ஆணையை தாங்கிவந்த மதுராபுரியின் காவலர் மார்த்திகாவதியின் இளவரசியை அழைத்துச்சென்றார்கள்” என்றான். “மதுராபுரியின் காவலர்களா?” என்று வசுதேவன் கேட்டான். “ஆம், தளகர்த்தர் சுபூதரே நேரில் வந்திருந்தார்.” வசுதேவன் தன் கால்கள் தளர்வதை உணர்ந்தான். அவனுக்கு அந்த உள்ளுணர்வை அளித்தது எது என அப்போதுதான் புரிந்தது. அரண்மனை முகப்பில் சேற்றுப்பரப்பில் பெரிய வண்டி ஒன்று வந்து சென்ற சக்கரத்தடம் தெரிந்தது. அந்தத் தடம் மதுராபுரியில் இருந்தே பாதையில் இருந்துகொண்டிருந்தது.

நூல் இரண்டு – மழைப்பாடல் – 34

மதுராபுரியில் வசுதேவன் காலையில் நீராடி ஆயர்குலத்துக்குரிய பசுவின் கொம்புகள் போன்ற செந்நிறத் திலகத்தை அணிந்து வெண்பட்டுச்சால்வையுடன் தன் மாளிகையின் முகமண்டபத்தை அடைந்தபோது தவிர்க்கவியலாத செய்திகளை மட்டும் கேட்டு ஆணைகளை விடுத்துவிட்டு உத்தரமதுராவுக்குச் செல்வதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தான். ஆனால் அவனுக்காக கம்சனின் தூதன் காத்திருந்தான். “இளையமன்னர் உடனடியாக தங்களை சந்திக்கவிரும்புகிறார்” என்றான் தூதன். “அனைத்துப்பணிகளையும் விட்டுவிட்டு அரண்மனைக்கு வரும்படி ஆணை.”

உத்தரமதுராவில் பிருதை இருப்பது கம்சனுக்குத் தெரிந்துவிட்டது என்று உடனடியாக வசுதேவன் எண்ணிக் கொண்டான். இளவரசனிடம் சொல்லவேண்டிய சொற்களை கோர்த்தபடி ரதத்தில் கம்சனின் மாளிகையான தருணவனத்துக்குச் சென்றான். அடர்ந்த மரங்களுக்கு நடுவே செவ்வண்ணக் கற்களால் கட்டப்பட்ட மரப்பட்டைக்கூரைகொண்ட மாளிகை கலிங்க யவன வீரர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தது. மாளிகை வாயிலிலேயே கம்சன் வசுதேவனை எதிர்கொண்டான். கொழுத்த பெரிய கரங்களை விரித்தபடி ஓடிவந்து அவனை எதிர்கொண்டான். அவன் கைகளைப்பற்றியபடி ‘வருக’ என்று அழைத்துச்சென்றான்.

தன் மதிசூழறையில் கதவுகளை மூடிவிட்டு வசுதேவனை சாய்வு மஞ்சத்தில் அமர்த்தி எதிரே அமர்ந்துகொண்டான் கம்சன். “வசுதேவரே…தாங்கள் இதற்குள் அறிந்திருப்பீர்கள்” என்று நேரடியாகவே தொடங்கினான். “சென்ற சிலநாட்களாகவே தந்தையின் உடல்நிலை சீர்கெட்டு வருகிறது. நேற்று அவர் குருதி உமிழ்ந்திருக்கிறார். அவரது மூச்சுப்பைகளுக்குள் குருதி இருக்கிறது என்று மருத்துவர்கள் சொன்னார்கள்” என்றான். பரபரப்புடன் தன் தொடைகளைத் தட்டியபடி “அவருக்கு முதுமைவந்துவிட்டது. சென்ற சில ஆண்டுகளாகவே அவரால் நடமாடவும் முடியவில்லை” என்றான்.

உக்ரசேனர் நோயுற்றிருப்பதை வசுதேவன் அறிந்திருந்தான். முந்தையநாள் மதியம்கூட அரண்மனைக்குச் சென்று நோயின் செய்திகளை மருத்துவர்கள் குறித்து அளித்த ஓலைகளை வாசித்து தன் ஆணைகளுடன் ஓலைநாயகத்திடம் அளித்து அரண்மனை ஓலைக்காப்புகளில் வைக்கச்சொல்லிவிட்டு வந்திருந்தான். ஆனால் மாலையானதும் பிருதை ஈற்றுநோவு கொண்டிருப்பதை புறா வழியாக அறிந்தான். இரவெல்லாம் அதைப்பற்றியே எண்ணி அக்கவலையிலேயே மூழ்கியிருந்தான். புறாக்கள் அவன் அரண்மனைக்கும் உத்தரமதுராவுக்கும் பறந்துகொண்டிருந்தன. குழந்தைபிறந்த செய்தி விடியலில் வந்ததுமே நிமித்திகரை கூட்டிவரச்சொல்லி பிறப்புநிமித்தங்களைக் கேட்டறிந்தான். அதன்பின்னரே குளிக்கச்சென்றான்.

கம்சன் “நான் அரண்மனையில் இருந்தேன். நேற்று மாலையிலேயே எனக்கு செய்திவந்துவிட்டது. அரண்மனையில் உங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் பிறகு உணர்ந்துகொண்டேன். அரசனின் இறுதிக்காலத்தில் அமைச்சனின் பணிகள் மிகுந்துவிடுகின்றன என்று. நீங்கள் இரவெல்லாம் புறாக்களை அனுப்பிக்கொண்டிருந்ததையும் துயிலாமல் அறைக்குள் உலவிக்கொண்டிருந்ததையும் என் ஒற்றன் சொன்னான். ஆவன அனைத்தையும் செய்துவிட்டீர்கள் என நான் அமைதிகொண்டேன்” என்றான். “நான் அரசு ஏற்கும் நாள் நெருங்கிவிட்டதென்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள். தந்தை இன்று மதியத்தைத் தாண்டுவது கடினம்.”

“ஆம் அதை நான் நேற்றே அறிந்தேன்” என்றான் வசுதேவன். கம்சன் தன் தொடைகளைத் தட்டியபடி “நேற்று என் ஒற்றர்கள் இன்னொரு செய்தியையும் அளித்தனர். நேற்றிரவெல்லாம் உத்தரமதுராவின் அரண்மனையில் இருந்து புறாக்கள் சென்றுகொண்டே இருந்திருக்கின்றன. நள்ளிரவுக்குமேல் பத்துமுறை புரவிகளும் ரதங்களும் அரண்மனைக்கு வந்திருக்கின்றன. அங்கே என்ன நடக்கிறது?” என்றான். வசுதேவன் இமைக்காத விழிகளுடன் அவன் சொல்லப்போவதைக் காத்துநின்றான்.

கம்சன் “வசுதேவரே, எனக்கும் என் சிறியதந்தைக்கும் நல்லுறவில்லை என நீங்கள் அறிவீர்கள். தேவகர் என்னை கல்வியறிவற்ற மூடன் என்றும் முரடன் என்றும் எண்ணுகிறார். தன் சபையில் பலமுறை அதைச் சொல்லியிருக்கிறார் என்றும் நானறிவேன். அவர் சென்ற முப்பதாண்டுகளாக உத்தரமதுராபுரியை ஆட்சி செய்துவருகிறார். மதுராபுரியின் அரசை ஆள என்னை விட அவருக்கே ஆற்றல் உள்ளது என்ற எண்ணமும் கொண்டிருக்கிறார்” என்றான். “என் தந்தையின் மறைவுக்குப்பின் மதுராபுரியை வென்று யாதவ அரசைக் கைப்பற்ற அவர் முயலப்போகிறாரா என்ற ஐயம் எனக்கிருக்கிறது.”

“அவர் அப்படி எண்ணக்கூடுமென நான் நினைக்கவில்லை. மதுராபுரியின் இளவரசராக நீங்கள் மாமன்னர் உக்ரசேனராலேயே பட்டம்கட்டப்பட்டிருக்கிறீர்கள். அந்த பட்டம்சூட்டுவிழாவிலும் கூட தேவகர் கலந்துகொண்டிருக்கிறார்” என்று வசுதேவன் சொன்னான். ஆனால் கம்சன் சொல்லும்போதே தேவகருக்கு அந்த எண்ணம் இருக்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டிருந்தது.

“நீங்கள் என் சிறியதந்தையின் அறவுணர்ச்சியை நம்புகிறீர்கள் அமைச்சரே. நான் அவரது இரு தம்பியருடைய அதிகார விருப்பை ஐயுறுகிறேன். உபதேவனும் சுதேவனும் இந்தச்சின்னஞ்சிறிய உத்தரமதுராபுரியின் ஆட்சிக்குள் அடங்குபவர்கள் அல்ல. அவர்களுக்கு இன்றிருப்பது ஆக்னேயபதத்தின் சாலைகளில் ஒன்றின்மீதான ஆட்சியுரிமை மட்டுமே. தேவகர் மதுராபுரியை கைப்பற்றினாரென்றால் அவர்கள் சிற்றரசர்களாக எழமுடியும்.”

“ஆம், அந்த வாய்ப்பும் உள்ளது” என்றான் வசுதேவன். “நான் சொல்கிறேன்… தேவகரின் திட்டங்கள் என்னவென்று நான் சொல்கிறேன்” என கைகளை விரித்துக்கூவினான் கம்சன். “வசுதேவரே, நாம் தொன்மையான யாதவர் குடி. நமக்கிருப்பது தாய்முறை மரபுரிமை. இங்கே அரசு என்பது உண்மையில் பெண்களுக்குரியது. ஹேகய மன்னரின் காலகட்டம் வரை அவ்வழக்கமே இருந்தது. பெண்ணின் காவலனாக பெண்ணின் மூத்த தமையன் நடைமுறை ஆட்சியை நடத்துவான். கார்த்தவீரியர் காலகட்டத்தில் அவர் ஆட்சியின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். தன்னை ஷத்ரிய மன்னராக அறிவித்துக்கொண்டார். அதன்பின் மதுராபுரி மட்டும் தன்னை ஷத்ரிய அரசாக அறிவித்துக்கொண்டு ஷத்ரிய முறையை கடைப்பிடிக்கிறது. மார்த்திகாவதியில் இன்னமும்கூட பெண்முறை அரசுரிமைதான். ஆகவேதான் அவர்கள் பெண்ணை தத்தெடுத்தார்கள்.”

அச்செய்திகள் அனேகமாக முந்தையநாள் இரவில்தான் கம்சனின் மனதுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் என வசுதேவன் உய்த்துக்கொண்டான். அது யாரால் செய்யப்பட்டதென்றும் அவனுக்குத் தெரிந்தது. பெருமூச்சுடன் “இதெல்லாம் நானறிந்தவையே” என்றான். “ஆம் அதை நானும் அறிவேன். ஒரு தெளிவுக்காக சொல்லிக்கொள்கிறேன்” என்றான் கம்சன். “இன்னமும் கூட யாதவர்குடிகளில் சடங்குகளுக்கு அன்னையரையே அரசிகளாக முன்னிறுத்துகிறார்கள். அவர்களின் வழியையே மரபுரிமைக்கு கணக்கிடுகிறார்கள்.”

“ஆம்” என்றபோது அவனை அறியாமலேயே வசுதேவன் குரலில் சலிப்பைக் காட்டிவிட்டான். கம்சன் அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை. எழுச்சியுடன் உரத்த குரலில் “நன்றாக சிந்தித்துப்பாருங்கள் வசுதேவரே. என் தந்தைக்கு ஒரு தமக்கை இருந்தாள். அவள் பெயர் காளிகை. அவளுக்குத்தான் யாதவ முறைப்படி இவ்வரசுக்கு உரிமை. அவள் இளமையிலேயே மறைந்தபோது அவள் மைந்தன் அஜனுக்கு என் தங்கை ரஜதகீர்த்தியை மணம் புரிந்துகொடுத்தார் என் தந்தை…ஏன் தெரியுமல்லவா?”

வசுதேவன் தலையை அசைத்தான். கம்சனின் மனம் ஓடும் வழி அவனுக்குத் தெளிவாகிவிட்டது. “ஏனென்றால் என் தந்தை அறிந்திருந்தார். இவ்வரசு உண்மையில் அவரது மருகனான அஜனுக்குரியது. அஜன் அரசைக்கோரி யாதவர்களை திரட்டமுடியும். ஆகவேதான் அவனுக்கு என் தங்கையை மணம் முடித்துக்கொடுத்தார்.”

கம்சன் சொன்னான் “அஜன் சிறுவயதிலிருந்தே என் சிறியதந்தையின் வளர்ப்பில் உத்தரமதுராபுரியில் வாழ்கிறான். இளமையிலேயே அவனை நான் வெறுத்தேன். அவனுடைய கோழைத்தனம் எனக்குப்பிடிக்கவில்லை. வாழைபோல வெளுத்து குளிர்ந்த அவன் உடல் எனக்கு குமட்டலை உருவாக்கியது. அவனை இளவயதில் ஓடும்ரதத்தில் இருந்து நான் கீழே தள்ளிவிட்டேன். தேர்ச்சக்கரத்தில் விழுந்து அவன் இறப்பான் என எண்ணினேன். ஆனால் கால் முறிந்ததுடன் தப்பிவிட்டான். ஊனமுற்ற அவனை என் சிறிய தந்தை அழைத்துக்கொண்டு சென்றார். அவனுக்கு என் மேல் வெறுப்பு இருக்கும். இந்த அரசு முறைப்படி அவனுக்குரியது என்று அவனிடம் சொல்லப்பட்டிருக்கும்…ஐயமே இல்லை.”

“ஆனால் சென்ற ஏழு தலைமுறைக்கும் மேலாக மதுராபுரியின் முறைமைகள் எல்லாமே ஷத்ரியர்களுக்குரியவை. தந்தைமுறையில்தான் இங்கே அரசுரிமை கைமாறுகிறது” என்று வசுதேவன் சலிப்புடன் சொன்னான். கம்சனின் உடலசைவுகளை அவன் உள்ளம் முதல்முறையாக அகவிலக்குடன் பார்த்தது. கொழுத்த பெரிய உடல். தசையுருளை போன்று அசையும் கைகள். ஒவ்வொரு எண்ணம் உருவாகும்போதும் எழுந்தும் அமர்ந்தும், தொடைகளை வேகமாக ஆட்டியும், ஏளனத்துடன் வாயைக்கோணலாக்கி சிரித்தும், உதட்டோரங்களில் எச்சில் நுரைக்க அவன் பேசும் முறை.

“ஆம், ஆனால் இதுவரை மதுராபுரி யாதவர்களை நம்பி இல்லை. சுங்கச்செல்வத்தையும் கலிங்கப்படைகளையும் நம்பி இருந்தது. மகதத்துக்கு நாம் அளிக்கும் கப்பமே நம்மை நிலைநிறுத்திவந்தது. இதுவரை மதுராபுரிக்குள் உரிமைக்கான பூசலும் எழுந்ததில்லை. இன்று அப்படி அல்ல. இன்று நாம் யாதவகுலங்களால் சூழப்பட்டிருக்கிறோம். அவர்களின் விருப்பு நம் அரசியலை முடிவுசெய்யும் இடத்தில் இருக்கிறோம்.” கம்சன் மீண்டும் தொடையைத் தட்டியபடி உரக்கக் கூவினான். “யாதவமுறைப்படி இவ்வரசு எவருடையது? காளிகைக்கும் அஜனுக்கும் உரியது. அவர்களைக் கொண்டுவந்து நிறுத்தி என் சிறியதந்தை அரசைக்கோரினால் நான் என்ன செய்யமுடியும்?”

வசுதேவன் பேசுவதற்குள் கம்சன் தொடர்ந்தான். “என் சிறியதந்தைக்கு ஏழு மகள்கள். தேவகி, சிருததேவி, சாந்திதேவி, உபதேவி, ஸ்ரீதேவி, தேவரக்ஷிதை, சகதேவி என்னும் ஏழு பெண்களையும் சப்தகன்னியர் என்று சூதர்கள் பாடிப்பாடி பாரதவர்ஷம் எங்கும் புகழ்பரப்பியிருக்கிறார்கள். தேவகியை மகதத்தின் பிருகத்ரதனுக்கு மனைவியாகக் கொடுக்க தேவகர் தூதனுப்பியிருக்கிறார். அந்தச் செய்தியை ஒற்றர்கள் கொண்டுவந்தனர். பிறபெண்களை வங்கனுக்கும் அங்கனுக்கும் கோசலனுக்கும் கேகயனுக்கும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஏதேனும் இரண்டு மணம் நிகழ்ந்தால்கூட தேவகரின் அரசியல் விருப்பங்களை எவராலும் கட்டுப்படுத்த இயலாது.”

கம்சன் அந்தச்செய்திகளால் கவலைகொண்டிருப்பதாக அப்போது வசுதேவனுக்குத் தோன்றவில்லை. அச்செய்திகளை தன்னால் தொகுத்துப் புரிந்துகொண்டு முன்வைக்கமுடிவதைப்பற்றிய அக எழுச்சியே அவனிடமிருந்தது. சொல்வது வழியாக அவன் அவ்வெண்ணங்களை மேலும் தெளிவாக்கிக் கொள்கிறான் என்று பட்டது. அத்துடன் அத்தகைய ஓர் இக்கட்டு அவனுள் தெளிவில்லாத ஒரு உவகையை நிறைப்பதாகவும் தோன்றியது.

இக்கட்டுகள் மனிதர்களின் அறியாத ஆற்றல்களை வெளிக்கொண்டு வருகின்றன. அவ்வாற்றல்களை தங்களில் தாங்களே உணரும்போது அவர்கள் களிப்படைகிறார்கள். ஆகவேதான் மனிதர்கள் வீரச்செயல்களில் இறங்குகிறார்கள். இடுக்கண்களை விரும்புகிறார்கள். கம்சனின் உள்ளம் இந்த இக்கட்டில் அவனுடைய சூழ்ச்சித்திறனை கண்டுகொண்டிருக்கிறது. ஆனால் அதுமட்டும் அல்ல. அவனில் தெரிவது வேறொன்று.

VENMURASU_EPI_84

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“அத்துடன் இன்னொரு செய்தியும் உள்ளது” என்று கம்சன் சொன்னான். “தேவகர் தன் தம்பி சுதேவனுக்கு உங்கள் தங்கை பிருதையை மணமகளாகக் கோரியிருக்கிறார். குந்திபோஜனுக்கு தூது அனுப்பப்பட்டிருக்கிறது.” கம்சனின் சிறிய கண்கள் ஒளியுடன் இடுங்கின. “அதை உடனடியாக என் ஒற்றர்கள் என்னிடம் வந்து சொல்லிவிட்டார்கள்.” பிருதை என்ற சொல் காதில் விழுந்ததும் தன் உடலில் உருவான மிகச்சிறிய அசைவை அது நிகழ்ந்ததுமே உணர்ந்தான் வசுதேவன்.

அதைவெல்ல உருவாக்கிக் கொண்ட சலிப்புடன் “இளவரசே, இவையனைத்துமே பழைய செய்திகள். இவற்றை நான் நன்கறிவேன். மகள்களைப் பெற்ற அரசன் அவர்களுக்கு மணமகன் தேடுவதும் சரி இளவரசியர் இருக்கும் செய்தியறிந்து மகள்கொடைகேட்டு செய்தியனுப்புவதும் சரி ஒவ்வொருநாளும் இங்கே நிகழ்ந்துகொண்டிருப்பவை” என்றான். “நாம் ஐயங்களை உருவாக்கிக்கொண்டால் நம்மைச்சுற்றி வெறும் சதிகளை மட்டுமே காண்போம். அரசன் தேவையற்ற ஐயங்களை உருவாக்கலாகாது. அரசன் நம்பவேண்டும், அமைச்சன் ஐயப்படவேண்டும், அதுவே அரசமுறை என்கிறது சுக்ரதர்மம்.”

“நான் மூடன் அல்ல” என்றான் கம்சன். உரத்தகுரலில் “நான் அறிவேன்…இங்கே நிகழ்ந்துகொண்டிருப்பவற்றை நான் நன்றாகவே அறிவேன். தேவகரின் எண்ணம் இதுதான். அவர் குந்திபோஜரின் உறவையும் பிற யாதவர்களின் ஆதரவையும் நாடுகிறார். அவற்றைக்கொண்டு மதுராபுரியைக் கைப்பற்ற எண்ணுகிறார். அதை நான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை” என்றான்.

அப்போது கம்சனின் விழிகளைப்பார்த்தபோது தன் நெஞ்சுக்குள் ஓர் அசைவை உணர்ந்தான் வசுதேவன். ஆலமரத்தை விதையாகக் காண்பதுபோல ஏதோ அங்கே தெரிந்தது. ஒரு பித்தின் விதையா அது? ஆம். அதுதான். ஆனால் மதுராபுரியின் அரசர்கள் அந்த ஐயத்தையே மஞ்சமாகக் கொண்டுதான் துயிலமுடியும். பன்னிரு தலைமுறைகளுக்கு முன்பு குங்குரர் தன் தமையன் விடூரதன் குலத்தை துரோகத்தால் அகற்றி அந்நகரைக் கைப்பற்றியதுதான் அவர்களில் எந்தக்குழந்தையும் அறியும் முதல் செய்தி. அதிலிருந்து அவர்களுக்கு விடுதலையே இருப்பதில்லை.

உக்ரசேனர் ஒவ்வொருநாளும் தேவகரை அஞ்சிக்கொண்டிருந்தார் என வசுதேவன் அறிந்திருந்தான். உத்தரமதுராபுரியைச் சுற்றி மாபெரும் உளவுவலை ஒன்றை அவர் அமைத்திருந்தார். அது அளித்த செய்திகளைத்தான் கம்சன் சொல்லிக்கொண்டிருக்கிறான். ஆனால் மதியூழ்கை அறியாதவனுக்கு உளவுச்செய்திகளால் எப்பயனும் இல்லை. அவனுடைய அச்சங்களையும் ஐயங்களையும் அவை வளர்க்கும். அவனை மேலும் தனித்தவனாகவும் சமநிலையிழந்தவனாகவும் ஆற்றலற்றவனாகவும் ஆக்கும்.

“ஒரே வழிதான் உள்ளது” என்று கம்சன் சொன்னான். “நான் நேற்றே இதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். தந்தையின் உடல்நிலை இழியும்தோறும் என் திட்டங்கள் தெளிவடைந்தபடியே வந்தன.” வசுதேவன் “சொல்லுங்கள்” என்றான். கம்சன் “வசுதேவரே, மார்த்திகாவதியின் இளவரசியான பிருதை உங்கள் தங்கை. அவளை நான் மணம் செய்துகொண்டால் அனைத்தும் சீரடைந்துவிடும்” என்றான்.

பிறிதொரு தருணத்தில் என்றால் அவன் வந்துகொண்டிருக்கும் வழியை வசுதேவன் எளிதில் உய்த்துணர்ந்திருப்பான். அப்போது இருந்த அகக்குழைவில் பிருதை உத்தரமதுராபுரியில் இருப்பதை கம்சன் அறிந்துவிட்டானா என்ற துணுக்குறலையே அவன் அடைந்தான். உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமலிருப்பதற்காக தன்முன் பேசிக்கொண்டிருப்பவனின் முகத்தில் ஏதேனும் ஒரு புள்ளியில் பார்வையை ஊன்றிக்கொள்ளும் பயிற்சியை மேற்கொள்வது வசுதேவனின் வழக்கம். விழிகளை கம்சனின் இடக்கன்னத்தில் இருந்த கரிய மச்சத்தைவிட்டு விலக்காமல் தலையை அசைத்தான்.

“சிந்தித்துப்பாருங்கள் வசுதேவரே… எல்லாமே முறைப்பட்டுவிடும். மார்த்திகாவதியின் பகைமை அகலும். விருஷ்ணிகளின் நூற்றெட்டுகுலங்களும் என்னை ஆதரிக்கும். விருஷ்ணிகளும் போஜர்களும் என்னை அரசனாக ஏற்பார்களென்றால் நான் எதற்காக அஞ்சவேண்டும்? சிறியதந்தையும் அவரது மூன்று மைந்தர்களும் என்னைத்தான் அஞ்சவேண்டும்…” அவன் கண்களில் மீண்டும் அந்த அனல் வந்து சென்றது. “அஞ்சியாகவேண்டுமே” என்று சொல்லி நகைத்தான்.

வசுதேவன் தன் சொற்களை அகத்தில் ஓடிய எண்ணங்களின் சிடுக்கில் இருந்து மெல்ல மீட்டு திரட்டிக்கொண்டான். மெல்ல கனைத்தபடி “ஆனால் நாம் மிஞ்சிச்செல்லவேண்டியதில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது இளவரசே” என்றான். “உங்கள் சிறியதந்தையார் என்ன நினைக்கிறார் என்று நாம் இன்னும் அறியவில்லை. நமது ஐயத்தால் நாம் அவரை எதிரியாக்கிக் கொள்ளவேண்டியதில்லை. பொறுத்திருப்போம்…”

“பொறுத்திருந்தால் என் அரசை நான் இழப்பேன். நான் இன்று மாலைக்குள் மார்த்திகாவதியின் முடிவை அறிந்தாகவேண்டும். ஆகவேதான் நான் அதிகாலையிலேயே என் தூதனை மார்த்திகாவதிக்கு அனுப்பிவிட்டேன். அவன் இந்நேரம் குந்திபோஜனை சந்தித்திருப்பான்” என்றான் கம்சன். “உங்களிடம் ஒரு சொல் கேட்கவேண்டுமென எண்ணினேன். ஆனால் நீங்கள் பிற பணிகளில் ஈடுபட்டிருந்தீர்கள். மேலும் நீங்கள் இவ்வெண்ணத்தைக் கேட்டு உவகையை அடைவீர்கள் என்றும் நானறிவேன்” என்றான்.

வசுதேவன் சில கணங்கள் சிந்தித்துவிட்டு முடிவெடுத்து மெல்லியகுரலில் “இளவரசே, நான் தங்களிடம் சிலவற்றைச் சொல்லவேண்டும். தந்தை உடல்நலமில்லாமல் இருக்கையில் தங்கள் வரை அச்செய்தி வரவேண்டியதில்லை என எண்ணினேன்” என்றான். கம்சன் உரக்க “என்னிடம் எதையும் நீங்கள் மறைக்கவேண்டியதில்லை வசுதேவரே” என்றான்.

“பிருதை இங்குதான் இருக்கிறாள்” என்றான் வசுதேவன். “இங்கு என்றால்?” என கம்சன் திகைப்புடன் கேட்டான். “உத்தர மதுராபுரியில்.” சிலகணங்கள் இமையாமல் இருந்த கம்சன் பாய்ந்து எழுந்து “என்ன சொல்கிறீர்கள்? உத்தர மதுராபுரியிலா? அப்படியென்றால் தேவகர் மார்த்திகாவதியின் இளவரசியை சிறையெடுத்துக்கொண்டுவந்துவிட்டார் இல்லையா? தன் தம்பிக்கு அவளை மணமுடிக்கவிருக்கிறார். யாதவர்களின் பின்துணையை அடைந்து விட்டார். அடுத்ததாக அவர் என் நாட்டைக்கோரப்போகிறார்… வசுதேவரே, இனிமேலும் நாம் வெறுமே இருக்கமுடியாது” என்று கூவினான். “இப்போதே நம் படைகள் கிளம்பட்டும்…”

“மீண்டும் மிஞ்சிச் செல்கிறீர்கள் இளவரசே. பிருதை அங்கே இருப்பது தேவகருக்குத் தெரியாது” என்று வசுதேவன் சொன்னான். “அவளை நான் தேவகரின் முதல்மகளின் கன்னிமாடத்தில் சேர்த்திருக்கிறேன்.” கம்சனின் உய்த்துணரும் திறனின் எல்லை தாண்டிவிட்டது என்று வசுதேவன் புரிந்துகொண்டான். அவன் சற்றே திறந்த வாயுடன் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

வசுதேவன் விளக்கினான். கம்சன் மெல்ல காற்று பட்ட புதர்போல அசைவு கொண்டு தலையை அசைத்து “நான் ஒன்றுமட்டும் கேட்க விழைகிறேன் வசுதேவரே…. தேவகிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?” என்றான். “தாங்கள் உய்த்துணர்ந்ததுதான் இளவரசே” என்றான் வசுதேவன். கம்சன் அப்போதும் அதை உள்வாங்கிக்கொள்ளவில்லை. வசுதேவன் “இளவரசே, நான் தேவகரின் மகளை மணக்க விழைகிறேன். அவளும் அவ்வண்ணமே எண்ணுகிறாள். அந்த மணம் நிகழ்வது நம் அரசுக்கு மிகவும் நல்லது” என்றான்.

“எப்படி?” என்றான் கம்சன் தலையை சற்றே சரித்து. வசுதேவன் “இளவரசே, அவளை அங்கனுக்கோ கலிங்கனுக்கோ மகதனுக்கோ மணக்கொடை அளிக்கும் அவரது திட்டம் நிகழாதுபோகும். நான் தங்கள் அரசின் அமைச்சனாதலால் அவர் நமக்கு கட்டுப்பட்டாகவேண்டும். தங்கள் அரசின் அமைச்சனான நான் அவளை மணந்தபின்னர் அவள் இளையவர்களை மணக்க ஷத்ரியர்களும் எண்ண மாட்டார்கள்” என்றான்.

கம்சன் முகம் மலர்ந்தது. “ஆம். சிறந்த திட்டம். வசுதேவரே நீங்கள் என் தங்கையை மணக்கவேண்டும். நான் உங்களுடன் இருப்பேன். மதுராபுரியின் அனைத்துப்படைகளும் செல்வமும் உங்களைத் துணைக்கும்” என்றான். சிரித்தபடி தன் தொடையை அறைந்து “அத்துடன் என் தங்கையை நீங்கள் மணப்பதுபோல உங்கள் தங்கையை நானும் மணந்துகொள்வது நம்மிடையே ஆழ்ந்த உறவை உருவாக்கும்…அதன்பின் மதுராபுரியை எவரும் நெருங்கமுடியாது.”

“ஆனால் என் தங்கை பிருதைக்கு ஒரு மைந்தன் இருக்கிறான்” என்றான் வசுதேவன். கம்சன் உரத்த குரலில் “ஆம், அது சிறந்த செய்தி அல்லவா? யாதவர்களுக்கு மகவுடன் கூடிய பசுவைப்போல மங்கலமானது ஏதுள்ளது? அவனை நான் என் குருதியாக அறிவிக்கிறேன். அவன் என் மைந்தனாக இந்நாட்டை ஆளட்டும்” என்றான்.

வசுதேவன் “இளவரசே நம் குலத்தில் பெண்களின் முடிவே இறுதியானது. நான் பிருதையிடம் அவள் விருப்பமென்ன என்று வினவுகிறேன்” என்றான். “ஆம், அவளிடம் என் சிறப்புகளைச் சொல்லுங்கள். நான் அவளை மதுராபுரியின் அரசியாக்குவேன் என்றும் அவள் புதல்வன் இந்நகரை ஆள்வான் என்றும் சொல்லுங்கள். அத்துடன் உங்கள் நண்பனும் மைத்துனனும் நானே என்று சொல்லுங்கள். அவளால் மறுக்கவியலாது.”

வசுதேவன் “ஆம், நானும் அவ்வண்னமே எண்ணுகிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்தான். அவனை வாயில் வரை வந்து வழியனுப்பிய கம்சன் “வசுதேவரே, பிருதை அங்கே உத்தரமதுராபுரியில் இருப்பது நல்லதல்ல. அவர்கள் எந்நேரமும் அறியக்கூடும். அவர்கள் அவள் மதிப்பை அறிவார்கள்” என்றான். “இன்று யாதவக்குடிகளிலேயே விலைமதிப்புள்ள பொருள் என்றால் அவள்தான்…”

“ஆம். நான் அவளிடம் பேசுகிறேன்” என்று சொல்லி வசுதேவன் கிளம்பினான். கம்சன் மேலும் சில அடி நடந்து வசுதேவனின் தோளைப்பற்றிக்கொண்டான். “நீங்கள் என்னுடன் இருக்கையில் எனக்கு அச்சமே இல்லை வசுதேவரே…” என்றான். அவன் கண்கள் இடுங்க மீண்டும் அந்த ஒளி வந்தது. “நாம் அந்த நாய்களுக்கு ஷத்ரிய வல்லமை என்றால் என்ன என்று கற்பிப்போம்…”

காலில் சிக்கியது கயிறல்ல பாம்புதான் என்று அறியும் கணம் போல வசுதேவனின் சித்தம் சிலிர்த்தது. கம்சனுக்குள் கொப்பளித்துக்கொண்டிருப்பது உவகைதான் என்று அவன் உணர்ந்தான். கொலைக்காகவும் வதைக்காகவும் அவன் உள்ளம் ஏங்குகிறது!

எத்தனை ஆழத்து உணர்ச்சி அது. அது எழுகையில் மற்ற அனைத்து மானுட உணர்வுகளும் மிகமிக அற்பமானவையாக ஆகிவிடுகின்றன. அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட எவரும் அதை முழுமையாக வென்றுவிடமுடியாது. குலஅறம் அரசஅறம் பேரறம் என்றெல்லாம் அதை கட்டிப்போடலாம். மதவேழத்துக்குச் சங்கிலியிடுவதுபோல. ஆனால் மீறும்போதே வேழம் தன்னை உணர்கிறது, முற்றிலும் வேழமாகிறது. “ஆம் இளவரசே” என்றபடி வசுதேவன் படியிறங்கினான்.

நூல் இரண்டு – மழைப்பாடல் – 33

பிருதை சைத்ரமாதம் விஷுவராசியில் குழந்தையைப் பெற்றாள். தேவகியின் கன்னிமாடத்தில் அவள் கருமுதிர்ந்து குழந்தைக்கு அன்னையானசெய்தி அரண்மனை மந்தணமாகவே இருந்தது. வசுதேவனின் கோரிக்கையை ஏற்று பிருதைக்கு கருநோக்கு மருத்துவம் செய்ய நான்கு மருத்துவச்சிகளை தேவகர் அனுப்பிவைத்தார். அந்நான்குபேரும் வந்த சில நாட்களிலேயே தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பின்னர் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவர்கள் ஊர் திரும்பவில்லை என்று ஊரார் சொன்னதை ஒற்றர்கள் வந்து சொன்னபோது வசுதேவன் ஐயம்கொண்டான். அடுத்து வந்த மருத்துவச்சி வந்த அன்றே இரவில் தன் ஆடைகளை தோல்மூட்டையாகக்கட்டி எடுத்துக்கொண்டு கிளம்பியபோது ஒற்றர்கள் அவளைப் பிடித்து வசுதேவனிடம் கொண்டுவந்தனர்.

அந்த மருத்துவச்சி அழுதுகொண்டிருந்தாள். அவள் கண்களில் தெரிந்த அச்சம் வசுதேவனை குழப்பியது. அவளிடம் “அன்னையே, நீ அஞ்சவேண்டியதில்லை. நீ இளவரசியை விட்டுச்செல்வதற்கான காரணத்தை மட்டும் சொல்வாயாக” என்றான். அவள் கைகூப்பி “அந்தக்கரு விஷம் கொண்டது. அது மருத்துவச்சிக்கு உயிராபத்தை விளைவிக்கும்” என்றாள். “ஏன்? அதன் இலக்கணங்களைச் சொல்” என்றான் வசுதேவன்.

மருத்துவச்சி மீண்டும் கைகூப்பியபடி சொன்னாள். “அமைச்சரே, நான் இங்கே வரும் வழியிலேயே தீக்குறிகளைக் கண்டேன். என் இல்லம்விட்டு வெளியே வருகையில் காகம் ஒன்று கரைந்து என்னை விலக்கியது. மூன்று வௌவால்கள் பகலில் என் பாதையின் குறுக்கே பறந்து சென்றன. கன்னிமாடத்தில் நான் நுழைந்தபோது ஒருசேடி கொதிக்கும் நீரை தன் காலில் ஊற்றிக்கொண்டு கதறினாள். நான் கன்னிமாடத்துக்குள் நுழைந்த கணமே என்னை எவரோ பார்க்கும் உணர்வை அடைந்தேன். இமையாத வல்லமைகொண்ட விழிகள் அவை. இளவரசியின் அறைக்குள் செல்வதற்கு முன்னரே நான் அந்த வாசனையை அடையாளம் கண்டேன்.”

மருத்துவச்சி சொன்னாள். கருவின் வாசனை என்று பொதுவாக பிறர் சொன்னாலும் மருத்துவச்சிகளுக்கு அந்த வாசனையின் வேறுபாடுகள் தெரியும். குருதியின் உப்புவீச்சம் இருந்தாலும் ஒவ்வொன்றிலும் கருவின் இயல்புக்கேற்ப வெவ்வேறு வாசனைகள் கலந்திருக்கும். புதிய பறவைமுட்டைகளின் வெண்கருவின் வாசனையும், மூன்றாம்நாள் காயத்தின் சீழ்வாசனையும் கலந்திருந்தால் அது இயல்பான கரு என்போம். புளித்த பசும்பாலின் வாசனை வருமென்றால் அன்னையின் உடலில் பித்தம் ஏறியிருக்கிறதென்று பொருள். மட்கிய தோலின் வாசனை வருமென்றால் அன்னையில் வாதம் ஏறியிருக்கிறது. அழுகிய இறைச்சியின் மெல்லிய வாசனை வருமென்றால் அவளில் கபம் ஏறியிருக்கிறது.

ஆனால் நானறிந்த வாசனையே வேறு. அது என்ன வாசனை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அச்சத்தில் நிலையழிந்து போயிருந்தேன். வந்த கணம் முதல் அக்கன்னிமாடத்தின் அனைத்து அறைகளையும் சுற்றிச்சுற்றிவந்து நுணுகிப்பார்த்தேன். அவ்வாசனை அவள் அறையில் மட்டுமே நிறைந்திருந்தது. அந்த வாசனையை நான் நன்கறிந்திருந்தேன். ஆனால் அதை என்னிடமே சொல்ல என் அகம் அஞ்சியது.

இளவரசியின் கைகளைப்பற்றி ஆய்வெடுத்தேன். அவள் நாடி ரதசாலைப்புரவி போல சீரான நடையில் சென்றது. அவள் குருதி வசந்தகால நீரோடைகள் போல இனிய ஒலிகளுடன் ஒலித்தது. திரைச்சீலைகளுடன் விளையாடும் தென்றல் போல மூச்சு அவள் நுரையீரலில் ஆடியது. அவளுடைய வயிற்றில் ஆகவனீய நெருப்பு போல சீராக பொசி எரிந்தது. அவள் சித்தத்தில் மழைத்துளிகள் சொட்டும் தாளத்தில் காலம் நிகழ்ந்தது. அவளுடைய இதயத்தில் உயிர் கருவறைச்சுடர் போல அசையாமல் ஒளிவிட்டது.

அப்படியென்றால் தாமரைமொட்டுக்குள் இருக்கும் வாசனை அவள் வாயில் வரவேண்டும். அவள் கண்கள் செவ்வரி ஓடும் கங்கையின் சாளக்கிராமம் போலிருக்கவேண்டும். அவளுடைய உள்ளங்கைகள் அல்லிபோல வெளுத்திருக்கவேண்டும். அவள் கழுத்து பனம்பாளைபோல மென்மையான வரிகளுடன் இருக்கவேண்டும். அவள் வயிறு பீதர்களின் அழகிய வெண்களிமண் பானைபோல சீரான உருண்டையாக இருக்கவேண்டும். அவள் கனவில் நீரோடைகளும் மேகங்களும் மலர்களும் வரவேண்டும்.

ஆனால் அவையனைத்துமே நேர் மாறாக இருந்தன. அவள் கண்களின் வெண்பரப்பில் செண்பகம் போல நீலவரிகள் ஓடின. அவளுடைய உள்ளங்கைகள் ஊமத்தை மலரிதழ்கள் போல ஊதாநிறம் கலந்த செவ்வெண்ணிறம் கொண்டிருந்தன. அவள் கழுத்தில் செம்புக்கலங்களில் களிம்புத்தீற்றல் போல பச்சை படர்ந்திருந்தது. அவள் வயிறு கணம்தோறும் உருமாறிக்கொண்டிருந்தது. விளையாடும் முயல்களுக்குமேல் பட்டுத்துணியைப்போட்டு மூடியது போல அது அசைந்தது. நான் அவள் வாயை முகர்ந்தபோது அங்கு நான் வந்ததுமுதலே அறிந்த அந்த வாசனையை உணர்ந்தேன். அவள் கருவறை வாயிலிலும் அவ்வாசனையே திகழும்.

நான் துயிலவேயில்லை. எண்ணங்களை ஓட்டி அங்கே நானறிந்தவை என்ன என்று ஆராய்ந்தேன். ஒரு கணத்தில் என் உடல் அதிர எழுந்து அமர்ந்துவிட்டேன். அவ்வறையில் அவளுடன் நானிருக்கையில் என்னை எவரோ கூர்ந்து நோக்கியபடி உடனிருக்கும் உணர்வை என் உடலும் சித்தமும் அறிந்தது. என்னை அந்த தேவன் நோக்கிக்கொண்டிருந்தான். என் ஒவ்வொரு அசைவையும் அவன் கணக்கிட்டுக்கொண்டிருந்தான்.

மெல்ல எழுந்து மீண்டும் இளவரசியின் அறைக்குள் சென்றேன். இளவரசியின் அறைக்கு வெளியே ஏவலுக்கிருந்த சேடி துயின்று சரிந்திருந்தாள். அறைக்குள் மஞ்சத்தில் கிடந்த இளவரசியின் துயிலின் ஓசை கேட்டது. அமைச்சரே, துயிலோசையிலே கருவின் இலக்கணம் உள்ளது. சத்வகர்ப்பம் கொண்டவர்கள் பசுபோலவும் மூங்கில்காற்று போலவும் மூச்சுவிடுவார்கள். ரஜோகர்ப்பம் கொண்டவர்கள் குதிரை போலவும் நீரோடுவது போலவும் மூச்சொலிப்பார்கள். தமோ கர்ப்பம் கொண்டவர்கள் யானைபோலவும் காட்டுத் தீ எரிவதுபோலவும் ஒலிப்பார்கள். ஆனால் இளவரசியின் மூச்சு நாகத்தின் சீறல் என ஒலித்தது.

நான் அந்த அறைக்குள் சென்றபோது அங்கே இன்னொருவர் இருப்பதை என் உடல்சருமத்தால் கண்டேன். இரு கணங்களுக்குப்பின்னரே என் கண்கள் அதைக் கண்டன. அறைமூலையில் என் இடையளவுக்கு பத்தி தூக்கி ஒரு ராஜநாகம் நின்றிருந்தது. அதன் கண்களில் அறையில் எரிந்த சுடர் சிறுதுளியாகத் தெரிந்தது. நான் அஞ்சி மெய்சிலிர்த்து நின்றுவிட்டேன். கைகளைக் கூப்பியபடி காலெடுத்து பின்னால் வைத்து மெதுவாக வெளியே வந்து என் அறைக்கு ஓடிச்சென்று என் ஆடைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

அமைச்சரே, இளவரசியின் கருவில் இருந்த வாசனையும் நாகங்களின் வாசனையே. நாகமுட்டைகள் விரியும்போது வரும் வாசனை அது. புதுமழை பெய்த பாலைமண்ணின் வாசனையும் எண்ணையில் வேகும் அப்பத்தின் வாசனையும் கலந்திருக்கும். அவள் கருவில் இருப்பது நாகங்களின் அரசனான குழந்தை. அவனைக் காக்கவே ராஜநாகம் அவ்வறைக்குள் குடியிருக்கிறது. அவள் கருவை எடுக்கையில் சற்றேனும் பிழை நிகழ்ந்தால் மருத்துவச்சி உயிர்துறப்பாள் என்றாள் மருத்துவச்சி.

“அன்னையின் உயிருக்கு இடுக்கண் உண்டா?” என்றான் வசுதேவன். மருத்துவச்சி தயங்கியபின் “இவ்வகை கருக்களை நான் நூலிலேயே கற்றிருக்கிறேன். குழந்தை வாழும், அன்னையை மீட்கவே முடியாது. அவளது உயிரை உண்டுதான் அது வெளியே வரும்” என்றாள் மருத்துவச்சி. வசுதேவன் அவளுக்குப் பரிசில் கொடுத்து அச்செய்தியை அரசமந்தணமாகவே காக்கவேண்டுமென்று ஆணையிட்டு அனுப்பினான்.

மருத்துவர் கூற்றின்படி வசுதேவன் தன் தூதனை அனுப்பி கங்கையின் கரையில் வாழ்ந்த நாகர்குடிகளில் இருந்து முதுநாகினியை வரவழைத்து அவளிடம் பிருதையைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்தான். ஆறுமாதக் கருவுடன் அவளை மறுமுறை பார்த்தபோது வசுதேவன் திகைத்துவிட்டான். அவள் உடலெங்கும் பச்சைபடர்ந்து தொன்மையான செப்புச்சிலை போலிருந்தாள். வசுதேவன் அவளருகே சென்று “பிருதை, நீ நலமாக இருக்கிறாயா?” என்றான். “ஆம்…” என அவள் சொன்னாள். “நான் நாகங்களுடன் எங்கோ வாழ்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது…எப்போதாவதுதான் இந்த அரண்மனைக் கன்னிமாடத்தில் நானிருப்பதை உணர்கிறேன்” என்றாள்.

அவளுடைய பேச்சும் புன்னகையும் எல்லாம் பித்திகளுடையது போலிருக்கின்றன என்று தேவகி சொன்னாள். பொருளாக மாறாத சொற்களையே அவள் பேசினாள். விண்ணில் பறக்கும் நீர்களைப் பற்றியும் மண்ணுக்கு அடியில் எரியும் நெருப்பைப்பற்றியும் நாகங்கள் புல்நுனிகளாக நெளியும் பெரும்புல்வெளிகளைப்பற்றியும் சொன்னாள். அவள் சொல்வனவற்றை நாகினி மட்டுமே புரிந்துகொண்டாள். நாகினியும் அவளும் ஒருவரை ஒருவர் கண்ணுடன்கண் நோக்கியபடி பகலெல்லாம் அமர்ந்திருப்பதைக் கண்டு தான் திகைத்ததாக தேவகி சொன்னாள்.

“அவள் உடல் நீலமாகிவிட்டது. நகங்கள் நீலத்துத்தம்போல ஒளிவிடுகின்றன” என்றாள் தேவகி. “அவளுடைய குருதியில் நீலம் கலந்திருப்பதாக சேடிகள் சொல்கிறார்கள். துவைத்து காயப்போடப்பட்ட அவளுடைய மேலாடை ஒன்று கீழே விழுந்து கிடந்தது. அதை எடுத்தபோது உள்ளே மூன்று நாகப்பிஞ்சுகள் சுருண்டு கிடப்பதைக் கண்டு சேடிகள் அலறினர்.” வசுதேவனின் கைகளைப்பற்றிக்கொண்டு அவள் சொன்னாள் “தமக்கை இந்தக் கருவை ஈன்று உயிர்தரிப்பாளென நான் நினைக்கவில்லை.”

கொடிமண்டபத்தில் அவளுடன் இருந்த வசுதேவன் பெருமூச்சுவிட்டான். “ஆம் நானும் அவ்வண்ணமே அஞ்சுகிறேன். ஆனால் நாகினி அவளை உயிருடன் மீட்டு எனக்களிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறாள்” என்றான். “அவளே இவள் உயிருடன் சென்றுவிடுவாளென நான் அஞ்சுகிறேன். அவளுடைய நீலமணி விழிகளை என்னால் ஏறிட்டு நோக்கவே இயலவில்லை. அவள் மானுடப்பெண்தானா என்றே நான் அஞ்சுகிறேன்.”

VENMURASU_EPI_83_

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

கரு முதிரமுதிர பிருதை தன் குழந்தையைப்பற்றியே பேசத்தொடங்கினாள். நீலமோடிய விழிகளை விழித்து நீலம்பரவிய உதடுகள் துடிக்க அவள் அவன் சூரியனின் மைந்தன் என்றாள். நான் தாமரை. சூரியனைக் கண்டதும் நான் மலர்ந்தேன். அவன் என் புல்லிவட்டத்தில் வந்து அமர்ந்துகொண்டான். இளஞ்சூரியனின் வெம்மையை நான் அறிகிறேன். இந்த பாரதவர்ஷத்தின் அதிபனை நான் கருவுற்றிருக்கிறேன். முத்து கருக்கொண்ட சிப்பியின் வலியை நான் அறிகிறேன். அனலை துப்பப்போகும் எரிமலை என நான் புகைந்து விம்மிக்கொண்டிருக்கிறேன் என்று அவள் சொன்னாள்.

பத்துமாதம் தாண்டியும் கரு வெளியே வரவில்லை. “அது ராஜஸகுணம் நிறைந்த தேவபீஜம். வளர்ச்சி முழுமையடைந்த பின்னரே கண்விழிக்கும்” என்று நாகினி சொன்னாள். தேவகி நாகினியிடம் கவலையுடன் “இன்னொரு மருத்துவரை அழைத்து கேட்கலாமா?” என்றாள். “தேவையில்லை. இந்தக்குழந்தை பன்னிரண்டு மாதங்கள் கருவில் இருக்கும். வரும் சித்திரை மாதம் விஷுவ ராசியில் இவன் கருவுற்று முந்நூற்றி அறுபத்தாறுநாட்கள் முழுமையடையும். அன்றே இவன் பிறப்பான்” என்றாள் நாகினி.

நாகபுராணங்களின்படி அனைத்து தேவர்களுக்கும் நாகங்கள் பிறந்தன. வருணனுக்கு கருணைகொண்ட நீர்ப்பாம்புகளும், அக்னிக்கு எரிதழல்போன்ற கோதுமைநாகங்களும், இந்திரனுக்கு பல்கிப்பெருகும் கருநாகங்களும், வாயுவுக்கு வல்லமைகொண்ட மலைப்பாம்புகளும் பிறந்தன. யமனுக்கு காத்துக்கிடக்கும் கட்டு விரியன்கள் பிறந்தன. விருஷ்டி தேவிக்கு பச்சைப்பாம்புகள் பிறந்தன. பூமாதேவிக்கு மண்ணுள்ளிப்பாம்புகள் பிறந்தன. விண்ணகதேவர்களின் அரசனான சூரியனுக்குப் பிறந்தது ராஜநாகம்.

சூரியன் பிறதேவர்களின் ஆற்றல்களை எல்லாம் தனக்கென எடுத்துக்கொள்பவன். வருணனின் கடல்களை அவன் உண்கிறான். அக்னியின் வெந்நெருப்பை தன் தழல்களாக்கிக் கொள்கிறான். இந்திரனின் மேகங்களை தன் சாமரங்களாகக் கொண்டிருக்கிறான். வாயுவின் ஆற்றலை தன் விளையாட்டுக்கருவியாக கையாள்கிறான். பூமியில் தன் கருவைப் பொழிந்து வளர்க்கிறான். சூரியனின் மைந்தனான ராஜநாகமும் தனக்கு எந்த ஆற்றல் தேவையோ அந்தப் பாம்பைப் பிடித்து உண்கிறது. ஆகவே அதை நாகசூரியன் என்று வழிபடுகின்றனர் நாகர்கள் என்றாள் நாகினி.

பிறக்கவிருக்கும் சூரியனின் மைந்தனுக்காக நாகங்களின் அரசன் காவலிருக்கிறான். என்றும் சூரியமைந்தனின் பின்னால் நாகங்களின் காவல் இருந்துகொண்டே இருக்கும். அவன் கண்களில் கூர்மையாகவும் அவன் கைகளில் விரைவாகவும் அவன் நாவில் விஷமாகவும் அவை திகழும். போர்களில் அவன் இடக்கையில் வில்லாகவும் வலக்கையில் அம்பாகவும் அவை இருக்கும். நாகபாசன் என்றே அவன் அழைக்கப்படுவான் என்று நாகினி குறியுரைசெய்தாள்.

அவள் சொன்னதைப்போலவே பன்னிரண்டுமாதங்கள் நிறைந்தபின் சித்திரை மாதம் வளர்பிறை முதல்நாள் மகம் விண்ணொளிநாளில் அதிகாலை முதல்கதிர் எழும் நேரத்தில் பிருதை மைந்தனைப்பெற்றாள். முந்தையநாள் மாலையே பிருதைக்கு கருவலி கண்டது. அவள் தன் வயிற்றுக்குள் நெருப்புத்தழல்கள் கொந்தளிப்பதாக உணர்ந்தாள். வேல்கள் தன் தசைகளைக் கிழிப்பதையும் பாறைகள் ஒன்றுடன் ஒன்று முட்டி உரசிக்கொள்வதையும் அறிந்தாள். வலி தாளாமல் அவள் கைகளால் மஞ்சத்தை அறைந்துகொண்டு கழுத்துநரம்புகள் புடைக்க வீரிட்டலறினாள். அவளுடைய கண்ணீர் தோள்களிலும் முலைகளிலும் சொட்டியது.

இரவெல்லாம் அவளுடைய அலறல் கன்னிமாடத்தை நிறைத்திருந்தது. அவள் இறப்பது உறுதி என எண்ணிய அரண்மனை மகளிர் அதை இறப்பின் ஓலமென்றே எண்ணினர். ஆகவே அவள் அழுகை நின்றபோது அவள் இறந்துவிட்டாளென எண்ணி வாய்பொத்தி கண்ணீர் விட்டனர். குழந்தையின் அழுகையும் ஒலிக்கவில்லை. தேவகி அழுதபடி ஈற்றறைக்கு வெளியே நிலத்தில் அமர்ந்துவிட்டாள்.

முதுநாகினி மட்டுமே ஈற்றறைக்குள் இருந்தாள். கரியநிறமும் சுருள்குழலும் கொண்ட குழந்தை இரண்டு முழநீளமிருந்தது. அதை நாகினியே கையில் எடுத்து பிருதைக்குக் காட்டினாள். வலியால் சித்தமழிந்து கிடந்த பிருதை மயக்கு நிறைந்த விழிகளால் குழந்தையை நோக்கி மெல்லிய குரலில் “ஏன் இவ்வளவு நீளமாக இருக்கிறான்?” என்று மட்டும் கேட்டாள். அவள்மேல் குளிர்ந்த நீல நீரலைகள் பரவிச்செல்வதாக உணர்ந்தாள். அதில் மூழ்கி மூழ்கி தன்னை இழந்தாள்.

குழந்தை அழவில்லை. ஆனால் நெய்யில் எரியும் தழல்போல உயிர்த்துடிப்புடன் நெளிந்தது. தன் சிவந்த சிறிய கைகளை இறுகப்பற்றி ஆட்டிக்கொண்டு கருவிழிகளை விழித்து உதடுகளைக் குவித்து அவளைப்பார்த்தது. நாகினி அந்தக் குழந்தையை கீழே தாழ்த்தியபோது தரையில் அவளுடைய இடையளவு உயரத்துக்கு பத்தி விரித்து நின்றிருந்த ராஜநாகம் தெரிந்தது என்றும் அவள் குழந்தையை அதற்குக் காட்டினாள் என்றும் ஒளிந்து நோக்கிய தாதி சொன்னாள். நாகம் மும்முறை நிலத்தைக் கொத்தி ஆணையிட்டபின் திரும்பி எண்ணை ஓடை போல வழிந்து மறைந்தது என்றாள்.

தன் முலையுண்டுகொண்டிருந்த குழந்தையை பிருதை உணரவேயில்லை. அவள் ஈன்றதன் சோர்வில் மூன்றுநாட்கள் துயின்றபடியே இருந்தாள். அவள் உடலில் இருந்த நீலத்தை முழுக்க குழந்தை உறிஞ்சி உண்டது என்றனர் சேடிகள். அவன் முலையுண்ணும்தோறும் பிருதை வெளுத்து உயிர்க்குருதியின் நிறத்தை அடைந்தாள். நாகினி அவளுடைய விழுத்துணிகளை கொண்டுசென்று நாகதிசையில் எரித்துவிடவேண்டுமென ஆணையிட்டிருந்தாள். அந்தத் துணிகளுடன் எரிக்கச்சென்ற சேடியர் புதர்களின் அடியில் நீரோடைகள் ஓடிவரும் ஒலியைக் கேட்டனர். துணிகள் எரியும்போது புதர்களின் அடியிலும் இலைகளிலும் மரங்கள்மேலும் நீரோடைகளிலும் அனைத்து குலங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான பாம்புகள் தலைதூக்கி அவ்வெரிதலை நோக்கியிருக்கக் கண்டதாகச் சொன்னார்கள்.

குழந்தை பிறந்த செய்தியை வசுதேவனுக்கு தூதர்கள் அறிவித்தனர். வசுதேவன் அஷ்டவிருட்சம் என்னும் கிராமத்தில் இருந்த சதானீகர் என்ற மூத்த நிமித்திகரை தூதர்களை அனுப்பி வரவழைத்தான். அரண்மனைக்கு வந்த சதானீகரை தன் அறைக்குள் அமரச்செய்து கதவை மூடிவிட்டு குழந்தை பிறந்த வேளையையும் குழந்தையின் உடலில் இருந்து எடுத்த மூன்று இழை முடியையும் நிமித்திகரிடம் அளித்தான். பல்லாயிரம் பிறக்குநிமித்தங்களைக் கண்டு சலித்த முதியவிழிகளுடன் வேளை குறிக்கப்பட்ட ஓலையை நோக்கிய சதானீகர் திடுக்கிட்டு எழுந்தார்.

“இந்த வேளையா? இதுவேதானா?” என்றார். “ஆம்… இதுதான்” என்றான் வசுதேவன். சதானீகர் திகைப்புடன் அந்த ஓலையை மீண்டும் மீண்டும் பார்த்தார். பிறகு நடுங்கும் கைகளுடன் அந்த முடிச்சுருளை எடுத்து தன் கண்ணருகே கொண்டுசென்று நோக்கினார். அதை தன் நெஞ்சுடன் சேர்த்துவைத்து கண்களை மூடி நடுங்கும் உதடுகளும் அதிரும் இமைகளுமாக சிலகணங்கள் அமர்ந்திருந்தார். விழித்து பரவசத்துடன் எழுந்துகொண்டு அகவிரைவு கூடிய சொற்களில் சொன்னார்.

”அமைச்சரே, இவன் கதிரவன்மைந்தன். பரிதிதெய்வம் சித்திரை விஷுவராசியில் அதிஉச்சத்தில் இருக்கும்போது மிகச்சரியாக புலரிக்கணத்தில் பிறந்திருக்கிறான்… இப்படி ஒரு பிறப்பு அரிதிலும் அரிதென்று நிமித்திகநூல் சொல்கிறது. நூல்வகுத்தபடி நோக்கினால் இவனை சூரியனின் நேர்மைந்தன் என்றே சொல்லவேண்டும்… கதிரோன்ஒளி இவனிடம் இருக்கும்… வெய்யோன்மறம் இவன் தோள்களில் இருக்கும்… இவன் மாமனிதன்… வரலாறே இவனைப்பற்றி பேசும்.. யாதவரே, மானுடகுலங்கள் பிறந்து பிறந்து அழியும்…பேரரசுகள் துகள்களாக தூசாகி மறையும். நாம் காணும் இந்த மலைகள்கூட ஒருவேளை கரைந்து காற்றாகலாம்…இவன் புகழ் அழியாமல் நிற்கும்…தலைமுறை தலைமுறையாகப் பிறந்துவரும் இந்த மண்ணின் குடிகளெல்லாம் இவனை அறிந்திருப்பார்கள். இவனையறியாதோர் இனி பாரதவர்ஷத்தில் வாழப்போவதில்லை.”

வசுதேவன் அதைக்கேட்டு திகைப்பையும் பின்பு ஆழ்ந்த அச்சத்தையும்தான் அடைந்தான். “சதானீகரே, தாங்கள் சொல்வது மிகையாக உள்ளது. இவன் பிறந்திருப்பது எளிய யாதவகுலத்தில். எங்கள் குலமோ இன்று மல்லிடும் மதயானைகள் நடுவே வாழும் மான்கூட்டம் போல அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறது” என்றான்.

சதானீகர் “அமைச்சரே, நான் சொல்வதை விளங்கிக்கொள்ளுங்கள். நிமித்திக நூல்களின்படி சூரியன் புஷ்கரத்தீவுக்கு நடுவே வானத்தில் ஏழுவண்ணமுள்ள ஒளியாலான குதிரைகள் இழுக்க ரதமோட்டிச் செல்கிறான். அப்போது இந்த பூமியின் மூன்றில் ஒருபங்கை அவன் ஒளியால் நிறைக்கிறான். மூன்றில் ஒருபங்கில் அந்தியும் காலையும் நிகழ்கிறது. மூன்றில் ஒருபங்கு இருளில் இருக்கிறது. இந்த மூன்று பங்கும் ஒருபோதும் சமமாக இருப்பதில்லை…” என்றார்.

தன் கையிலிருந்த வெண்சுண்ணக்கட்டியால் தரையில் கோடிழுத்து சதானீகர் விளக்கினார் “உத்தராயணத்தில் வடக்குப்பகுதியில் பகல் அதிகம். தட்சிணாயணத்தில் தெற்குப்பகுதியில் பகல் அதிகம். நடுவே விஷுவராசியில் சூரியன் வரும்போது மட்டும்தான் இவை மூன்றும் சரிசமமாக இருக்கின்றன… கணக்குப்படி பார்த்தால் அந்தச் சமநிலை அரைக்கால் கணம்தான் நீடிக்கும். நிகழ்ந்ததுமே அச்சமநிலை தவற ஆரம்பித்துவிடும். கதிரோன் தன் நிலைகோட்டில் இருந்து விலகிவிடுவான்… அந்தச் சரியான கணத்தில் இவன் பிறப்பு நிகழ்ந்திருக்கிறது…”

கைகளை விரித்து கண்கள் வியப்பில் உறைந்திருக்க உரத்தகுரலில் சதானீகர் கூவினார் “இது அற்புதம்… நினைக்கமுடியாத அற்புதம்… இவன் சூரியனின் நெஞ்சுக்குரிய மைந்தன்… ஐயமே இல்லை.”

நூல் இரண்டு – மழைப்பாடல் – 32

உத்தரமதுராபுரியின் கொடிமண்டபத்தில் அமர்ந்து தேவகி பிருதை சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். தயங்கிய சொற்களால் சொல்லத்தொடங்கிய பிருதை அச்சொற்கள் வழியாகவே அந்த வாழ்க்கையை உருவாக்கத் தொடங்கினாள். பின்னர் அந்த வாழ்க்கைக்குள் இறங்கி அதில் அங்கிருந்தாள். அவை அவளுடைய சொற்களென்பதனாலேயே அவளுக்கு மிக அண்மையனவாக இருந்தன. வாழ்க்கையைவிட பொருள் கொண்டவையாக இருந்தன. அவளால் சொற்களை நிறுத்தவே முடியவில்லை.

அவை வாழ்க்கை அல்ல என்று தேவகி அறிந்திருந்தாள். அவை சொற்கள். சொற்களென்பவை மூதாதையரின் மூச்சுக்காற்றாக மனிதர்களைச் சூழ்ந்திருப்பவை. நூல்களில் வாழ்பவை. பிருதை சொல்லிக்கொண்டிருப்பனவற்றில் அவள் வாழ்ந்தவை எவை, அடைந்தவை எவை என அவளாலேயே சொல்லிவிடமுடியுமா என தேவகி ஐயுற்றாள். ஆனால் வாழும் அக்கணங்கள் தவிர அனைத்துமே சொல்லாகவல்லவா எஞ்சுகின்றன! கடந்தவையும் பதிந்தவையும் சொற்கள் மட்டுமே. அவ்வகையில் வாழ்க்கை என ஒன்று உண்டா என்ன! மின்னலை அக்கணம் கைப்பற்ற எவர் விழிகளால் இயலும்?

பிருதை சொன்னாள் “ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் தருணம் ஒன்று இளமையில் நிகழும். அவ்வண்ணம் இளமையில் நிகழாதவர்களுக்கு வாழ்க்கையே இல்லை என்பார்கள். நிகழ்பவர்களோ பெருமழையை ஏற்கும் சிறுசெடிபோல அதன் அடியில் துடிக்கிறார்கள். வேர்கள் பறிந்து செல்லாமலிருக்க தவிக்கிறார்கள். என் வாழ்க்கையின் முதன்மைப்பெருநிகழ்வு அது என இப்போது ஐயமில்லாமல் உணர்கிறேன்.”

நான் விழித்துக்கொண்டபோது என்னருகே அந்தக் கரிய இளைஞன் மயக்கில் கிடப்பதைக் கண்டேன். எங்கள் புரவிகள் அப்பால் களைத்து தனித்து நின்றிருந்தன. ஆடையின்றி இருப்பதை அறிந்ததுமே நான் வானத்தை உணர்ந்து வெட்கினேன். என் ஆடையை அணிந்துகொண்டு அவனைத் திரும்பிப்பாராமல் என் புரவியில் ஏறிக்கொண்டேன். அது என்னை காட்டுவழியாகச் சுமந்து சென்றது.

என் குதிரை கால்களை உதைத்து மெல்லக் கனைத்து கிளம்பும்போது திரும்பி இறுதியாக அவனைப் பார்த்தேன். வேள்வியில் எரிந்து சுடரானபின்னர் கரியாக எஞ்சிய விறகுபோலக் கிடந்தான். எளிய உடல். மானுட உடல். பிறப்பெனும் கசடுகொண்ட உடல். இறப்பெனும் இருள் நிறைந்த உடல். சிறுமதிப்புன்மையால் நான் நானென எண்ணும் சிற்றுடல். சிறுமையால் என் உடல் உலுக்கிக் கொண்டது. குதிரையின் தோளில் முகம்புதைத்தபோது கண்களை மீறி கண்ணீர் வழியத் தொடங்கியது. குதிரை சென்றவழியெங்கும் என் கண்ணீர் சொட்டியது.

அரண்மனைக்கு நான் நள்ளிரவில் திரும்பிவந்தேன். அவ்வாறு நான் பிந்துவது வழக்கமென்பதனால் எவரிடமும் சொல்லாவிட்டாலும் அனகை அஞ்சிக்கொண்டிருந்தாள். “இனி இப்படிச் செல்லாதீர்கள் இளவரசி” என என் கைகளைப்பற்றிக்கொண்டு அழுதாள். அன்றிரவு நான் துயிலவில்லை. மஞ்சத்தில் படுத்து இருளைப்பார்த்தபடி அந்த நிகழ்வையே மீளமீள எண்ணிக்கொண்டிருந்தேன். என்ன நிகழ்ந்ததென்று என் அளவையறிவைக் கொண்டு உய்த்தறிய முயன்றேன். துர்வாசரின் மந்திரத்தால் நான் அவனை மயக்கி என்னருகே கொண்டுவந்துவிட்டேன். அதைவிட நான் என்னையே மயக்கி ஒரு கனவாக அதை ஆக்கிக்கொண்டேன்.

ஆம் அதுதான் நிகழ்ந்தது, வேறொன்றுமில்லை. அதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேன். நான் அரசுநூல் பயின்றவள். மதிசூழ்கை கற்றவள். நான் அனைத்தையும் இம்மண்ணில், இத்தருணத்தில் வைத்து புரிந்துகொண்டாகவேண்டும். மறுநாள் நிமித்திகர்களையும் கணிகர்களையும் அழைத்து முந்தையநாளின் விண்நிகழ்வுகளைப் பற்றிக் கேட்டேன். சூரியனின் பசுங்கதிர் வெளிப்படுவது மிக இயல்பான ஓர் நிகழ்வு என்று அவர்கள் சொன்னார்கள். சூரியவட்டம் வான்விளிம்பில் மறையத்தொடங்குகையில் நீர்நிலைகளின் அருகிலோ மலைகளின் விளிம்புகளிலோ சற்று நேரத்துக்கு ஒளி முற்றிலும் பச்சைநிறமாக வெளிப்படக்கூடும் என்று வரைபடங்களுடன் விளக்கினர். என்னுள் வாழ்ந்த மதியூகி வென்றாள்.

ஆனால் முதல்மாதம் என் குருதிநாள் தவறியபோது என்னுள் அச்சம் எழுந்தது. நான் கற்றவையெல்லாம் என்னுள் இருந்து ஒழுகிச்செல்ல அச்சமும் தனிமையும் குழப்பங்களும் கொண்ட எளிய பெண்ணாக ஆனேன். அனைத்துப் பெண்களையும் போல அது ஏதோ உடற்பிறழ்வு என்று எண்ணிக்கொண்டேன். ஒவ்வொருநாளும் அதன் வருகைக்காகக் காத்திருந்தேன். ஒவ்வொரு இரவும் ஏமாற்றம் தாளாமல் தனிமையில் கண்ணீர் உகுத்தேன். என் துயருக்குக் காரணமான அந்த வயிற்றை வெறுத்தேன். என் உடலில் இருக்கும் நானல்லாத ஒன்று என என் வயிற்றை எண்ணினேன். என் வேண்டுதல்களைக் கேளாத தெய்வம்.

என்னை ஒரு பெரிய குருதிஅட்டை கவ்விக்கொண்டு உறிஞ்சி வளர்வதுபோல வயிறு வளர்வதை உணர்ந்தேன். அனைத்து பேதைப்பெண்களையும்போல அதைக் கலைப்பதற்கு என்னென்ன செய்யமுடியுமென நானே சிந்தித்தேன். எங்கோ எவரோ சொல்லிக் கேட்டவற்றை எல்லாம் நினைவில்கொண்டுவந்து செய்துபார்த்தேன். புளிக்கீரையையும் அத்திப்பழங்களையும் கலந்து உண்டேன். படிகாரத்துண்டை விழுங்கினேன். கொம்பரக்கையும் அதிமதுரத்தையும் கலந்து மூன்றுநாட்கள் குடித்தேன்.

ஒவ்வொன்றுக்குப்பின்னும் என் வெறுப்பு கூடியே வந்தது. என் வயிற்றில் வாளைப்பாய்ச்சவேண்டும் என்றும் கதையின் முகப்பால் அறையவேண்டும் என்றும் எண்ணினேன். என் வயிறு தரையில் அறையும்படி அரண்மனை முகடிலிருந்து கீழே பாய்வதைப்பற்றி பகற்கனவுகள் கண்டு அந்தத்துயரில் நானே மனம்கலங்கி அழுவேன். ஒவ்வொன்றின் மேலும் வெறுப்புகொண்டேன். ஒவ்வொருவரையும் கசந்தேன்.

மேலும் ஒருமாதமாகியபோது என்னுள் அச்சம் இருண்ட கனத்த உலோகம் போல உருண்டு எப்போதும் நிற்பதை உணர்ந்தேன். அது கருவேதான். அதை என்னால் அழிக்கவே முடியாது. அந்தப் பேய்த்தெய்வம் தன் பீடத்தைக் கண்டடைந்துவிட்டது. என்னுள் என்னை உண்டு அது வளரும். என்னைப்பிளந்து வெளிவந்து குருதி வழிய கிளம்பி தன் பலிகளை நோக்கிச்செல்லும். அதன் முதற்பலியாக என்னை அது ஏற்றுக்கொண்டுவிட்டது. நான் அதன் அடிமை மட்டுமே. நான் எண்ணிக்கொண்டிருக்கும் எண்ணங்களேகூட அந்த தெய்வத்தால் உருவாக்கப்படுபவைதான்.

இன்று எண்ணிப்பார்க்கையில் வியப்பு நிறைகிறது. இந்நாட்களில் ஒருமுறையேனும் நான் என் காமத்தைப்பற்றி குற்றவுணர்வடையவில்லை. அந்த இக்கட்டுக்கு என் கட்டற்ற விழைவே காரணமென்று ஒருகணம்கூட எண்ணவில்லை. என் எண்ணங்கள் அனைத்தும் அந்நிலைக்கு நானல்லாத பிறகாரணங்களைக் கண்டடைவதிலேயே இருந்தன. அதற்காக என்னை கைவிடப்பட்ட அபலை என்று கற்பனைசெய்துகொண்டேன். என் குலத்தால் கைவிடப்பட்டவள். வந்த இடத்தில் ஏற்றுக்கொள்ளப்படாதவள். அன்னையும் தந்தையும் குலமும் அரசும் அற்ற தனியள்.

அந்த எண்ணத்தைப் பெருக்கிப்பெருக்கி தன்னிலை கரைந்து கண்ணீர் விடுவதே என் நாட்களை எடுத்துக்கொண்டது. அங்கே நான் எவ்வளவு தனித்திருக்கிறேன் என்பதை நானே உணரும்போது திகைத்து சொல்லிழந்துபோனேன். நானறிந்த அதை அங்கே ஒருவர் கூட அறியவில்லை. நான் நினைவறிந்த நாள்முதல் என் தமையனை மட்டுமே என் அகத்துள் அனுமதித்தவள். அக்கணம் என்னுள் நிறைந்திருந்ததோ அவருடன் ஒருதுளியேனும் பகிரமுடியாத பெருங்கடல்.

மூன்றாம் மாதமாகியபோது எனக்கு வயிற்றுப்புரட்டலும் தலைசுழற்சியும் உருவானது. மூன்றுநாட்கள் என்னைக் கூர்ந்து கவனித்துவிட்டு அனகை மெதுவாக அதைப்பற்றிக் கேட்டுவிட்டாள். சினம்கொண்டு அவளை அறைந்து கூச்சலிட்டேன். அவள் என்னை அவமதிப்பதாகச் சொல்லி அவளை சாட்டையடிக்காக அனுப்புவேன் என கூவினேன். அதன்பின் அதற்காக வருந்தி கண்ணீர்விட்டு என் மஞ்சத்தில் சென்று படுத்துக்கொண்டேன்.

அனகை வந்து என்னருகே அமர்ந்து “இளவரசி, தாங்கள் வருந்துவதில் பொருளே இல்லை. இது கருவா என மருத்துவச்சியைக்கொண்டு ஆய்ந்தறிவோம். கருவாக இருந்தால்தான் என்ன? நம் ஆயர்குடிகள் அன்னைவழிக் குலமுறை கொண்டவை. நமக்குகந்த ஆணிடம் கருவுற நமக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. நம் குலம் கருவை மூதாதையர் மண்ணிறங்கும் வழி என்றே எண்ணும். இங்கே இந்த அரண்மனையில் அது இழிவாக இருக்கலாம். இந்த அரண்மனை வாழ்வை உதறிவிட்டு நம் ஆயர்குடிக்குத் திரும்புவோம். உங்கள் குலம் உங்களை இருகரங்களையும் நீட்டி எதிர்கொள்ளும்” என்றாள்.

மிக எளிய உண்மை அது. நானே நன்கறிந்தது. ஆனால் அரசியல் மதியூகியான எனக்கு எளிய சேடி அதைச் சொல்லவேண்டியிருந்தது. அவள் சொல்லத்தொடங்கியதுமே நான் அனைத்தையும் கடந்து தெளிவடைந்தவளானேன். அவள் கைகளைப் பற்றிக்கொண்டு “ஆம் அனகை. நீ சொல்வது உண்மை. நான் குந்தியல்ல, யாதவப்பெண்ணான பிருதை. நான் விழைந்த ஆணின் கருவை ஏந்தியிருக்கிறேன். மலர்கள் மகரந்தங்களை ஏந்துவது போன்றது மங்கையரின் கரு என இளமையிலேயே கேட்டு வளர்ந்தவள் நான். எதற்காக நான் அஞ்சவேண்டும்?” என்றேன்.

குந்திபோஜரின் அரண்மனையில் இருந்து மீண்டும் துர்வாசரின் அறச்சாலைக்கு வந்தேன். துர்வாசர் சில தவமுறைமைகளைக் கற்றுத்தந்திருப்பதாகவும் அவற்றைச் செய்யவேண்டுமென்றும் அன்னையிடம் சொன்னோம். அனகை சிறந்த மருத்துவச்சிகளுக்காக தேடத் தொடங்கினாள். நான் என் எண்ணங்களுடன் மழையோசை நிறைந்த பகல்களையும் இரவுகளையும் என் குடிலிலேயே கழித்தேன். நான் அலைந்து திரிவதை குதிரைகளில் பயணம்செய்வதை விரும்புபவள். ஆனால் முழுநாளும் படுத்தே கிடக்கத்தான் என் உடல் சொன்னது.

VENMURASU_EPi_82

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

என்னுள் நாகங்களின் உடலசைவுகள் நிகழ்ந்துகொண்டே இருப்பது போல உணர்ந்தேன். என் உடலையே ஒரு பெரும் நாகக்குகையாக எண்ணினேன். என் நரம்புகளும் தசைநார்களும் அனைத்தும் நாகங்கள். என் வயிறு அரசநாகம் சுருண்டுகிடக்கும் மூங்கில்கூடை. கண்களை மூடினால் உருளியில் எண்ணை சுழல்வதுபோல அசையும் கருநாகத்தின் உடலைக் கண்டேன். தேன் என அதன் வழிதல். வேர் என அதன் அடர்தல். புகை என அதன் சூழ்தல். மணல் என அதன் பொழிதல். திசைதிசையென அதன் இருள்சூழ்தல்.

நாள்தோறும் அந்த அச்சம் வலுத்தது. நான் பெறவிருப்பது ஒரு நாகத்தையா. வீங்கிப்பெருக்கும் படமும் மணிவிழியும் அனல்நாவும் கொண்டு என் முன் எழுந்து நிற்கும் ராஜநாகத்தை கனவில் கண்டேன். நீயா நீயா என்று வினவிக்கொண்டேன். அது புன்னகைப்பதுபோல, ஒற்றைச்சொல்லை என்னை நோக்கி ஊதிப் பறக்கவிடுவதுபோல. நீ என் அடிமை என்கிறதா? நான் வாழும் தோலுறை நீ, உன்னை கழற்றிப்போட்டுவிட்டு நான் செல்வேன் என்கிறதா?

எவ்வளவு பெருவியப்பு? ஏன் நாம் இந்த விந்தையை உணர்வதேயில்லை? நம்மைச்சுற்றி வாழும் அனைத்தையும் அறிந்துகொண்டிருக்கிறோம். நூல்களில் எழுதிப்பயின்று தொகுத்துக்கொண்டே இருக்கிறோம். நம் கண்முன் வந்துகொண்டே இருக்கும் இந்த உயிரினம் என்ன என்பதை என்றாவது உணர்ந்திருக்கிறோமா? கால்களற்றது, ஆனால் கால்களுள்ள அனைத்தையும் விட வேகமானது. காதுகளற்றது, ஆனால் காதுகள் கேட்காததையும் கேட்பது. பறக்கும் நாக்குகள் கொண்டது. ஆனால் பேசாதது. புவியிலேயே கொடிய படைக்கலனைக் கொண்ருந்தாலும் துயிலே அற்றது. உயிர்களனைத்தும் அஞ்சும் வல்லமை கொண்டதென்றாலும் குரலற்றது. இது உண்மையில் என்ன? எந்த இயற்கைப்பேராற்றலின் மண்வடிவம்?

அஞ்சிக்குளிர்ந்து எழுந்தமர்ந்தேன். இல்லை, என் வழியாக அது இப்புவியில் வரக்கூடாதென்று முடிவெடுத்தேன். மருத்துவச்சியைத் தேடி அனகை சென்றிருந்தாள். நான் என் குடிலுக்குள் இருளில் காத்திருந்தேன். மழை வலுத்து கொட்டி கூரையை அறைந்தது. வானம் என்னிடம் ஏதோ சொல்ல விழைவதைப்போல. யாரிவன்? சூரியனின் மைந்தனா? சூரியன் ஏன் மண்ணில் பிறக்கவேண்டும்? விண்ணில் அது விரையும் ஒளிமிக்க பாதையில் நாகங்கள் உண்டா என்ன? என்னுள் இருப்பது என்ன ஒளிர்கோளமா? சூரியமகவா? சுருண்டு கிடக்கும் இருள்நாகமா? சிந்தனையின் தேர்ச்சக்கரம் சேற்றில் சிக்கி நிற்க தலையில் அறைந்துகொண்டு கண்ணீர் விட்டேன்.

அப்போதுதான் கதவைத் தட்டும் ஒலி கேட்டது. மழை குறைந்திருந்தது. அந்தத் தட்டல் ஒலியை நான் அச்சமூட்டும் ஒரு காட்சியாக அரைக்கணத்தில் என்னுள் கண்டுவிட்டேன். இடுப்பளவுக்கு படம் தூக்கிய ராஜநாகம் தன் முகத்தைக்கொண்டு என் கதவைமுட்டிக்கொண்டிருந்தது. மயிர்சிலிர்த்து ஒருகணம் செயலற்றுவிட்டேன். நாகத்தின் முன் சிலைத்து மீசை அசையாமல் நின்று தன் இறுதிக்கணத்தை அறியும் எலியைப்போல.

பின்னர் காலடியோசை கேட்டது. சாளரம் வழியாக எட்டிப்பார்த்தேன். அது அனகை. கதவைத்திறந்தபோது அந்த மருத்துவச்சி அவளுடன் வந்திருந்தாள். அனகையிடம் இருந்து வந்த வாசனையை நான் எங்கோ அறிந்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் என் எண்ணங்களால் அதை தொட்டெடுக்க இயலவில்லை. எங்கே அந்த வாசனையை அறிந்தேன் என என் நினைவுகளைத் துழாவிக்கொண்டே இருந்தேன். தமையனும் நானும் உபவனங்களில் அலைந்தபோது அந்தியில் மட்கிக்கிடந்த மரம் ஒன்றை அசைத்தோம். அப்போது உள்ளிருந்து மின்மினிக்கூட்டங்கள் அனல்பொறிகள் என எழுந்தன. அப்போதா? பாறையிடுக்கில் புழுதிக்குவையில் சற்றுமுன்னர் பெற்றிட்ட குட்டிகளுடன் தன் கருச்சரத்தை மென்று தின்றுகொண்டிருந்த செந்நாய் ஒன்றைப்பார்த்தேனே, அப்போதா?

அந்த மருத்துவச்சி என் கருவை உறுதிசெய்தாள். அதைக் கலைத்துவிடலாமா என்று அவள் கேட்டாள். அவளுடைய கண்கள் உயிரற்றிருந்தன. ஒரு சொல்கூட எஞ்சியிராத கண்கள். மண்டையோடுகளில் எஞ்சியிருக்கும் பார்வை அவளுடையது. அந்தத் தீங்கியல்புதான் அவளை நான் நம்பச்செய்தது. அவளால் முடியுமென்று எண்ணவைத்தது. ஆம், செய் என ஆணையிட்டேன். படுத்துக்கொள்ளச் சொன்னாள். நான் மல்லாந்து படுத்துக்கொண்டபோது எனக்குள் ஓர் அசைவை உணர்ந்தேன். ஒருநாகம் சுருள்விரிவதுபோல.

அவள் வெண்கலக்கம்பியை எடுத்து அதை ரசாயனத்தால் சுத்தம்செய்தாள். சிட்டுக்குருவிச்சிறகுகளால் ஆன பஞ்சை ஒரு வெண்கலப்புட்டியில் இருந்த நாகரசத்தைக்கொண்டு துடைத்தாள். அந்த நாகவிஷத்தின் வாசனையை பலமுறை நானறிந்திருக்கிறேன். ஆயர்களுக்கு முதலில் கற்பிக்கப்படுவதே பாம்பின் வாசனையை அறியும் வித்தைதான். அந்த வாசனையா அனகையும் அவளும் வந்தபோது எழுந்தது? அல்ல, அதுவேறு. அந்த வாசனையை நான் நன்கறிவேன், ஆனால் என் நினைவு அதை மீட்டு எடுக்க இயலாமல் வெறும்வெளியில் துழாவிச்சலித்தது.

அப்போதுதான் அந்த ராஜநாகம் மரவுரிக்குள் இருந்து பீரிட்டு அவளைத் தீண்டியது. அதைக் கண்ட அக்கணம் நான் அறிந்தது அதன் வாசனையைத்தான் என்று உணர்ந்தேன். அது அவர்களுடன் வந்து அவர்களுக்குப்பின்னால் மறைந்து நின்றிருந்திருக்கிறது. அதே கணம் அந்த வாசனையை எங்கே அறிந்தேன் என்றும் உணர்ந்தேன். நான் சூரியனைப்புணர்ந்த அக்கணங்களில். அது அவ்வுறவின் வாசனை.

நாகம் சென்றபின் வீரர்களை அழைத்து கிழவியை காட்டுக்குள் சென்று புதைத்துவிடும்படி ஆணையிட்டேன். அக்குடிலில் இரவுதங்க முடியாதென்று அனகை நடுங்கிக்கொண்டே சொன்னாள். ஆனால் என் உள்ளம் நிறைவடைந்திருந்தது. நான் தேடியவினாக்களுக்கெல்லாம் விடைகிடைத்தது என்று உணர்ந்தேன்.

சொல்லிமுடித்தபின்னரும் அச்சொற்களில் இருந்து மீளாதவள் போல பிருதை விழித்த கண்களுடன் படுத்துக்கிடந்தாள். சிலகணங்களுக்குப்பின்னர்தான் தேவகி அவளில் இருந்த அந்த வேறுபாட்டை உணர்ந்தாள். அவள் இமைக்கவேயில்லை. விழிகள் மணிகளென திரண்டு சிலைத்திருக்க அசையாமல் கொடிமண்டபத்து மஞ்சத்தில் அவள் கிடந்தாள்.

நூல் இரண்டு – மழைப்பாடல் – 31

வசுதேவன் குந்தியை தன்னுடன் அழைத்துச்செல்வதைப்பற்றி ஓர் ஓலையை எழுதி கௌந்தவனத்தின் காவலனிடம் குந்திபோஜனுக்கு கொடுத்தனுப்பிவிட்டு அவளை ரதத்தில் அழைத்துவந்து யமுனையில் நின்ற படகில் ஏற்றிக்கொண்டு மதுராபுரிக்குப் பயணமானான். படகு பாய்விரிப்பது வரை அவன் நிலைகொள்ளாதவனாக படகின் கிண்ணகத்திலேயே பாய்க்கயிறுகளைப் பற்றியபடி நடந்துகொண்டிருந்தான்.

படகுக்காரன் கயிற்றை இழுத்து முடிச்சை அவிழ்த்ததும் புகைப்படலம் மேலேறுவதைப்போல வெண்ணிறப்பாய்கள் விம்மி ஏறுவதைக் கண்ட அவன் மனமும் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு விடுதலைபெற்றது. காற்றில் துடித்து விம்மி விரிந்து கருவுற்ற பசுக்களைப்போல ஆன பாய்களையே முகம் மலர்ந்து பார்த்துக்கொண்டிருந்தபின் படகின் உள்ளறைக்குச் சென்று அங்கே புலித்தோல் மஞ்சத்தில் களைப்புடன் படுத்திருந்த பிருதையின் அருகே அமர்ந்தான்.

பிருதை ரதத்திலும் பின்னர் படகிலும் நாலைந்துமுறை வாயுமிழ்ந்திருந்தமையால் சோர்ந்திருந்தாள். வசுதேவன் அவளிடம் “பிருதை, நான் என்றுமே பெண்ணுடல் கொண்ட வசுதேவன் என்றே உன்னை எண்ணிவந்திருக்கிறேன். நீ செய்யவிருந்த பிழையை நானே செய்ததாக உணர்ந்தமையால்தான் என்னால் அதைத் தாளமுடியவில்லை” என்றான். “நான் உங்களை அழைத்ததும் அதனால்தான் மூத்தவரே” என்றாள் பிருதை. “யாதவர்களுக்குக் கன்றும் மைந்தரும் செல்வங்கள். அவற்றை அழிக்க நெறிகள் ஒப்புவதில்லை. பசுக்களும் பெண்டிரும் கருவுறுதலை தெய்வங்களின் ஆடலென்றே நாம் கருதுகிறோம்.”

“நான் அஞ்சிவிட்டேன்” என்றாள் பிருதை. “எதை?” என்றான் வசுதேவன். அவள் சிலகணங்கள் விழிவிலக்கி அமர்ந்திருந்தபின் திரும்பி “நான் அஞ்சியது என் தந்தையின் உளச்சோர்வைக்குறித்தே” என்றாள். வசுதேவன் “ஆம், நானும் அதையே எண்ணினேன். குந்திபோஜரின் நிலையறிந்தபின் நாம் இச்செய்தியை அவருக்கறிவிப்போம்” என்றான்.

பிருதை தலையசைத்தாள். “நாம் மதுராபுரிக்குச் செல்லவில்லை” என்றான் வசுதேவன். “அங்கே உன்னை வைத்திருந்தால் அது செய்தியாக மாறும். ஆரியவர்த்தமே அறிந்துகொள்ளும்.” பிருதை தலையை அசைத்தாள். “நாம் உத்தரமதுராபுரிக்குச் செல்கிறோம். அங்கே தேவகரின் அரண்மனையில் நீ இருக்கலாம்.” அரைக்கணத்துக்கும் குறைவாக வசுதேவனின் கண்களை பிருதையின் கண்கள் வந்து சந்தித்துச் சென்றன. அவள் முகத்தைத் திருப்பி சாளரம் வழியாகத் தெரிந்த யமுனையின் ஒளிமிக்க நீரைப்பார்த்தபடி “அங்கே கன்னிமாடம் இருக்கிறதா என்ன?” என்றாள்.

அவள் உய்த்தறிந்துவிட்டதை உணர்ந்த வசுதேவன் “ஆம்” என்றான். பின்பு மெல்லிய குரலில் “தேவகரின் மகள் தேவகியை நான் அறிவேன்” என்றான். பிருதை தன் மெல்லிய கைவிரல்களால் மேலாடைநுனியை சுழற்றிக்கொண்டிருப்பதை வசுதேவன் உணர்ந்தான். அவள் என்ன கேட்கப்போகிறாள் என அவன் உள்ளம் வியந்தகணத்தில் அவள் இயல்பான பாவனையில் “அழகியா?” என்றாள்.

வசுதேவன் தனக்குள் புன்னகைசெய்தபடி “அவளும் என்னிடம் உன்னைப்பற்றி இப்படித்தான் கேட்டாள்” என்றான். பிருதையின் விழிகள் வந்து அவனைத் தொட்டு மீண்டன. “உன்னைவிட அழகி என்று நான் அவளிடம் சொன்னேன்.” பிருதையின் இதழ்கள் அகல்சுடர் எழுந்தமர்வதுபோல புன்னகையில் சற்று விரிந்து உடனே மீண்டன. காற்றில் பறந்த கூந்தலை ஒதுக்கியபடி மேலும் இயல்பான குரலில் “அவள் ஏன் கன்னிமாடத்தில் இருக்கிறாள்?” என்றாள். “அவளது பிறவிநூலில் பன்னிரு கட்டங்களில் ஒன்றில் அரவுக்குறை இருப்பதாக நிமித்திகர் சொன்னார்களாம்” என்றான் அவன். “அங்கே நீ எவரும் அறியாமல் இருக்கலாம்.”

“எவருமறியாமல் என்றால்?” என்று பிருதை அவன் கண்களைப்பார்த்துக் கேட்டாள். “குழந்தையை அனைவரும் அறிந்தாகவேண்டுமே.” வசுதேவன் அவளைத் தவிர்த்து “ஆம், ஆனால் நாம் என்னசெய்வது. குந்திபோஜரையும் அவர் அமைச்சர்களையும் எப்படி சமன்செய்து அனைத்தையும் வெளிப்படுத்துவது என்று சிந்திக்கவேண்டும். அதற்குச் சற்று காலம் எடுத்துக்கொள்ளலாம்…” என்றான்.

பிருதை “மூத்தவரே, நம்முடைய யாதவகுலம் ஷத்ரியர்களைப்போலவோ வேளாண்குலங்களைப்போலவோ தந்தைவழி குலமுறைமை கொண்டதல்ல. இங்கே பெண்களே குலத்தொடர்ச்சியை உருவாக்குகிறார்கள். ஆகவேதான் குந்திபோஜர் என்னை தத்தெடுத்திருக்கிறார். என் வயிற்றில் பிறக்கும் குழந்தை குந்திபோஜரின் போஜர்குலத்தைச் சேர்ந்த யாதவன் என்றுதான் நம் குலநெறிகள் வகுக்கும்” என்றாள். “அன்னைக்கும் நீருக்கும் விதிகள் இல்லை என்று நம் குலத்தில் பழமொழி உண்டல்லவா?”

“ஆம்…” என்றான் வசுதேவன். “ஆனால் யாதவர்கள் அனைவருமே ஷத்ரியர்களாக மாறிக்கொண்டிருக்கிறோம். யாதவகுலங்கள் ஷத்ரியக்குருதியை விழைகின்றன. யாதவப்பெண்கள் எங்கும் எவரிடமும் கருவுற நெறிகள் ஒப்புதலளிக்கின்றன. ஷத்ரியர்களோ பெண்ணின் கருவறையை நாட்டின் கருவூலத்தைவிட பெரிய காவலுடன் பேணுபவர்கள்…” பெருமூச்சுடன் “குந்திபோஜர் உன்னை மகள்கொடை பெற்றதே அதற்காகத்தான்” என்றான்.

“ஆம்… ஆனால் நான் எப்போதும் யாதவப்பெண்தான்… ஷத்ரியன் என்னை மணந்தால் அவன் யாதவமுறைப்படி என் குழந்தையுடன் என்னை மணக்கட்டும். என் குழந்தைக்கு அவனுடைய குலத்தின் பெயரை அளிக்கட்டும். இல்லையேல் என் மகன் போஜனாக வளரட்டும்…” என்றாள் பிருதை. “என் மகன் யாதவகுலத்தின் வெற்றிவீரன். அதை நான் ஒவ்வொரு கணமும் மேலும்மேலும் உறுதியாகவே உணர்கிறேன்.”

அதன்பின் வசுதேவன் ஒன்றும் சொல்லவில்லை. உத்தரமதுராபுரியின் படித்துறையை அவர்கள் அடைந்தபோது வசுதேவன் முன்னரே விரைவுப் படகுவீரனிடம் செய்தியனுப்பியிருந்தபடி மூடுதிரையிட்ட கூண்டுவண்டி வந்து கரையில் காத்திருந்தது. பிருதை இறங்கி உறை உருவப்பட்ட வாளென ஒருகணம் இளவெயிலில் மின்னி உடனே அந்த வண்டிக்குள் நுழைந்துகொண்டாள். அனகையும் பின்னால் ஏறிக்கொண்டாள்.

வசுதேவன் வண்டிக்குப்பின்னால் குதிரையில் வந்தான். வண்டி வடக்குப்பக்கமாகத் திரும்பி யமுனையின் கரையிலேயே சென்ற பெரிய அரசபாதையில் ஓடி கன்னிமாடம் இருந்த சாயாதலம் என்ற சோலையை அடைந்தது. அடர்ந்த வேங்கையும் கொன்றையும் கொங்கும் மருதமும் நிறைந்த சோலை சுற்றிலும் உயர்ந்த மூங்கில்வேலிகளால் காக்கப்பட்டிருந்தது. கன்னிமாடத்துக்குள் அரண்மனைப்பெண்களும் சேடிகளுமன்றி எவரும் அனுமதிக்கப்படவில்லை.

முதற்காவல்முனையிலேயே வசுதேவன் நின்றுவிட்டான். திரைச்சீலையை அணுகி உள்ளே இருந்த பிருதையிடம் “நான் தேவகியிடம் அனைத்தையும் சொல்லியிருக்கிறேன். அவளிடம் என் தூதுப்புறாக்கள் ஒவ்வொரு நாளும் வந்துசேரும். நீ இங்கிருப்பதை நான் குந்திபோஜருக்கோ நம் குலத்துக்கோ சொல்லப்போவதில்லை” என்று சொல்லிவிட்டு விலகினான்.

பிருதை வண்டி உள்ளே செல்வதை ஓசைகள் வழியாகவே அறிந்தாள். வண்டி கன்னிமாடத்தின் முற்றத்தை சென்றடைந்ததும் உள்ளிருந்து முதியசேடி தொடர வந்த மெல்லிய சிறியபெண்தான் தேவகி என்று திரைவிலக்கி இறங்கும்போதே பிருதை புரிந்துகொண்டாள். தேவகி புன்னகையுடன் வந்து “மார்த்திகாவதியின் இளவரசியை வாழ்த்துகிறேன். இந்த கன்னிமாடம் தங்களால் மகிழ்கிறது” என முறைப்படி முகமன் சொன்னாள். அவளுக்குப்பின்னால் வந்த சேடியிடம் இருந்து மங்கலப்பொருட்கள் கொண்ட தட்டை வாங்கி பிருதை முன் நீட்டினாள். பிருதை அதைத் தொட்டுவிட்டு “உத்தரமதுராவின் இளவரசிக்கு வணக்கம். தங்கள் அன்பினால் உள்ளம் மகிழ்கிறேன்” என்றாள்.

தேவகியின் கண்களைச் சந்தித்ததுமே பிருதை அவளை விரும்பினாள். அக்கண்கள் நாய்க்குட்டிகளின் கண்கள் போல தூய அன்புமட்டுமே கொண்டவையாக இருந்தன. இந்தப்பெண் எந்த அரசையும் தலைமை தாங்கக்கூடியவளல்ல, எந்த அரசியல்சூழ்ச்சியையும் அறிந்துகொள்ளக்கூடியவளுமல்ல என்று பிருதை புரிந்துகொண்டாள். மதுராபுரியின் அமைச்சராக இருக்கப்போகும் வசுதேவனுக்கு உகந்த துணைவிதான் அவள். அவனுடைய எளிய பிள்ளைகளை பெற்றுத்தரப்போகிறவள். வசுதேவனைப்போன்ற மதியூகி எப்படி இத்தனை தூயமனம் கொண்ட பெண்ணைத் தெரிவுசெய்தான் என அவள் அகம் வியந்தது. அடுத்தகணமே அதுவல்லவா இயல்பு என்ற எண்ணமும் எழுந்தது.

கன்னிநோன்புக்காக தேவகி வெண்ணிற ஆடைகள் அணிந்து அணிகளேதுமில்லாமல் இருந்தாள். நீண்ட வெண்ணிறமுகத்தின் இருபக்கமும் கருங்குழல்கள் சுருண்டு தொங்கின. வெண்பளிங்காலானவைபோன்ற கன்னங்களிலும் மெல்லியகழுத்திலும் தோள்களிலும் நீலநரம்புகளும் தாமரைக்கொடிகள் போன்ற கைகளும் சிறிய குமிழ்முலைகளும் உள்ளடங்கிய வயிறும் கொண்ட தேவகியின் அகலமான உதடுகளுக்குள் இருந்து மேல்வரிசைப்பல்லின் கீழ்நுனி முத்துச்சரம்போல எப்போதும் தெரிந்துகொண்டிருந்தது. அது அவள் எப்போதும் புன்னகையுடன் இருப்பது போலத் தோன்றச்செய்தது.

முதல்நாளிலேயே அவர்களுக்குள் நல்லுறவு அமைந்தது. தேவகி பிருதையை வியந்த கண்களுடன் பார்த்தாள். வால்சுழற்றி கூடவே வரும் நாய்க்குழவியின் பாவனைகள் தன்னிடம் பேசும்போது அவளிடமிருந்ததை பிருதை கண்டாள். பேதையான தங்கையைப்பெற்ற தமக்கையின் பாவனையை ஒரேநாளிலேயே பிருதை அடைந்தாள். தாய்மையும் நிமிர்வும்கொண்ட தமக்கையிடம் எல்லா உரிமைகளையும் எடுத்துக்கொள்ளும் தங்கையாக தேவகி தன்னை அமைத்துக்கொண்டாள்.

மூன்றாம்நாள் கன்னிமாடத்தை ஒட்டியிருந்த கொடிமண்டபத்தில் பிருதையுடன் தனித்திருக்கையில் தேவகி அவள் வசுதேவனை முதன்முதலாக மதுராபுரியில் விண்ணவர்கோன் விழவு நிகழ்ச்சியில் கண்டதைப்பற்றியும் அவன் அவளுக்கு ஒரு மலர்மாலையை பாங்கனிடம் கொடுத்தனுப்பியதைப்பற்றியும் சொன்னாள். அதன்பின் இயல்பாக பிருதை எப்படி கருவுற்றாள் என்று கேட்டாள். அது வசுதேவன் சொல்லி அவள் கேட்பது என்பதை பிருதை புரிந்துகொண்டாள்.

VENMURASU_EPI_81_

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“நான் குந்திபோஜருக்கு மகளாக அரண்மனைக்கு வந்தேன். அங்கே எனக்கு பொன்னும் மணியும் பட்டும் பல்லக்கும் இருந்தன. அரண்மனையும் சேவகரும் இருந்தனர். ஆனால் நான் சிறைப்பட்டிருப்பதை விரைவிலேயே அறிந்துகொண்டேன். எங்குசென்றாலும் என்முன் மங்கலச்சின்னங்களை ஏந்திய சேடிகளும் கோலேந்திய நிமித்திகனும் செல்லவேண்டும். பின்பக்கம் கவரியுடன் தாசியர் வரவேண்டும். அறிவிப்பில்லாமல் நான் எங்கும் செல்லமுடியாது. அரசமுறைமைகொண்ட சொற்களை மட்டுமே சொல்லவேண்டும். நான் சற்றும் விரும்பாதவர்களிடமெல்லாம் முகமனும் முகப்புகழ்ச்சியும் சொல்லவேண்டும்” என்றாள் பிருதை.

சில நாட்களிலேயே நான் சலித்து களைத்துப்போய்விட்டேன். எனக்கு உவப்பாக இருந்தது அங்கே எனக்களிக்கப்பட்ட கல்விதான். எனக்கு செம்மொழியும் கணிதமும் கற்பிக்கப்பட்டன. அவற்றில் நான் தேறியதும் அரசுநூல்களும் பொருள்நூல்களும் அறநூல்களும் கற்பிக்கப்பட்டன. அரசுநூல் என்னை ஆட்கொண்டது. சென்றகாலங்களில் பேரரசர்கள் செய்த அரசியல்சூழ்ச்சிகளைப்பற்றிய புராணங்களை நான் பேரார்வத்துடன் கற்று அவற்றையே எண்ணிக்கொண்டு அரண்மனையில் உலவினேன். மாவீரனை மணந்து மைந்தர்களைப் பெறுவதைப்பற்றியும், யாதவக்குருதி பாரதவர்ஷத்தை ஆள்வதைப்பற்றியும் கனவுகள் கண்டேன்.

அந்நாளில்தான் முதல்முறையாக உத்தரவனத்தில் கானூணுக்காகச் சென்றோம். காட்டுக்குள் நுழைந்ததுமே காற்றில் ஆடைகள் பறந்துவிலகுவதுபோல என்னிலிருந்து மார்த்திகாவதியின் அரசி மறைந்துபோவதையும் கட்டுகளற்ற ஆயர்குலச்சிறுமி வெளியே வருவதையும் கண்டேன். காட்டுக்குள் சேடியரை விலக்கி நானே உலவினேன். மரங்களில் இருந்து மரங்களுக்குத் தாவினேன். உச்சிப்பாறை ஏறி நின்று சுற்றிலும் விரிந்த ஒளிமிக்க பசுமையைக் கண்டேன். என் மூத்தவரும் நானும் மதுவனத்தில் அலைந்து திரிந்து அறிந்த அனைத்தையும் நினைவுகூர்ந்தேன். தேனீக்களின் முரளலைக்கொண்டு எங்கே குகையிருக்கிறதென அறிந்தேன். காதில் மோதும் நீராவியைக்கொண்டு நீர்நிலையிருக்கும் திசையை உணர்ந்தேன். தரையின் நகத்தடங்களைக்கொண்டு சிறுத்தைகள் எத்திசையில் உள்ளன என்று கணித்தேன். காட்டில்தான் நான் பிருதையாக இருந்தேன்.

மீண்டும் அரண்மனைக்குச் சென்றபோது குந்தியாக மாறினேன். அதன்பின்னர் என்னால் காட்டை விலக்கவே முடியவில்லை. இளவரசியர் காட்டுக்குசெல்ல ஒரு வழி உள்ளதை கண்டடைந்தேன். மார்த்திகாவதியின் போஜர்களுக்குரிய காட்டுதெய்வங்களை நூல்களிலிருந்தும் சூதர்களிடமிருந்தும் அறிந்தேன். அத்தெய்வங்கள் என் கனவில் வந்து பலியும் பூசனையும் கேட்பதாக என் தந்தையிடம் சொன்னேன். கான்பூசனைக்காக செல்லும்போது என் தளைகளைக் களைந்து பிருதையாக மாறினேன். பிருதைக்கு மன்னர்குல நெறிகள் இல்லை. அவளை எந்நேரமும் கண்காணிக்கும் விழிகள் இல்லை. குளியலறைக்குள் மட்டுமே கன்னியர் அறியும் விடுதலை ஒன்று உண்டு. அதை நானறிந்தது காட்டில்தான்.

துர்வாசர் எனக்கு அந்த மந்திரத்தை அளித்தபோது நான் குந்தியாக இருந்தேன். ஆனால் மறுநாள் அனகையுடன் காட்டுக்குள் சென்றபோது பிருதையாக மாறினேன். இளைய காட்டுமிருகமாக என்னை உணர்ந்து சிரித்துக்கூவியபடி இலைகள் நடுவே ஓடி பாறைகளில் தாவி ஏறி முகடில் நின்றபோது துர்வாசரின் மந்திரத்தை நினைவுகூர்ந்தேன். அப்போது அது முதியவரின் வெற்றுக்கற்பனையாகத் தோன்றியது. அரசும் மைந்தரும் அரியணையும் புகழும் எல்லாம் கேலிக்குரியனவாகத் தெரிந்தன.

அனகையிடம் “இதோ என்னிடம் ஒரு மந்திரமுள்ளது….இதைச்சொன்னால் எனக்கு தேவர்கள் மைந்தர்களாகப் பிறப்பார்கள் தெரியுமா?” என்று சொன்னேன். “நான் சூரியனை ஒருமைந்தனாகப் பிறக்கவைப்பேன். அதன்பின்னர் கனிகளை பழுக்கவைக்கும் பொறுப்பு அவனுக்குரியது. வாயுவை இன்னொருமைந்தனாக்குவேன். அவன் என் தேர்களை இழுப்பான். அக்னியை மைந்தனாக்கி சமையலுக்கு நிறுத்துவேன்” என்றேன். அனகை “இந்திரனை என்னசெய்வீர்கள் இளவரசி?” என்றாள். நான் உரக்கச்சிரித்துக்கொண்டு “இந்திரனை விடவே மாட்டேன். என் மஞ்சத்தின் காலில் கட்டிப்போட்டு சேவைசெய்யவைப்பேன்” என்றேன். இருவரும் உரக்கச் சிரித்தோம்.

நான் அப்போது என்னுடைய செம்புரவி அங்கே திகைத்து விழித்தபடி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். எதையோ கண்டு அஞ்சியதுபோல அதன் தோல் அதிர்ந்துகொண்டிருந்தது. கழுத்தைத் திருப்பி மெல்லக் கனைத்தபடி அது எங்களைப்பார்த்தது. தன் உடலை மரங்களில் தேய்த்துக்கொண்டு கால்களால் மண்ணை அறைந்தது. “அதோ என் குதிரை….காட்டின் தழல் அது” என்று கூவியபடி ஓடிப்போய் அதன்மேல் ஏறிக்கொண்டேன். அதன் மீது கடிவாளமோ சேணமோ இல்லை. “இளவரசி அது கட்டற்றதாக இருக்கிறது” என்று அனகை கூவினாள். நான் “நானும் கட்டற்றவளே” என்றேன். “நான் காட்டரசி. இந்தக்காட்டின் விதிகளே எனக்கும். பெண் வேங்கை. பிடியானை. மடமான். அன்னப்பேடை” என்று கூவியபடி புரவியைத் தட்டினேன்.

கட்டற்ற புரவிமீது அதன் பிடரிக்கூந்தலைப் பற்றி பயணம்செய்வது எனக்கு முன்னரும் வழக்கம்தான். எங்கள் ஆயர்குடியில் அது அனைவருமறிந்த வித்தை. ஆனால் அந்தப் பெண்குதிரை அன்று ரஜஸ்வலையாக இருந்தது. ஆகவே சிலகணங்களிலேயே அதனுள்ளிருந்து அதன் விண்ணகதெய்வங்களின் விரைவு வெளிவந்தது. கால்கள் பெருமுரசுக்கோல்கள் போல மண்ணை அறைய, வால் தீக்கதிரின் நுனி என சுழல, கழுத்தை வடதிசை நாரை போல நீட்டி அது பாய்ந்தோடியது. நான் அதை இறுக்கிப்பிடித்துக்கொண்டு அதன் கழுத்தைத் தட்டி அமைதிப்படுத்த முயன்றேன். அது மரங்களை பாம்புபோல வளைந்து கடந்து, சிற்றாறுகளையும் பள்ளங்களையும் குருவிகளைப்போல தாண்டி, பாறைகளில் குளம்புகள் அதிர ஓடி, முன்னால் சென்றுகொண்டே இருந்தது.

மூன்றுநாழிகை நேரம் சற்றும் விரைவு குறையாமல் ஓடியது புரவி. நான் களைத்து அதன்மேல் இறுகப்பற்றியபடி கண்மூடி ஒண்டியிருந்தேன். யமுனையின் வெள்ளத்தில் செல்லும் மரக்கட்டையைப் பற்றிக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன். பின்னர் புரவி கனைத்தபடி சுழன்று நின்றபோது கண்விழித்தேன். என் முன்னால் புரவியளவே உயரம்கொண்ட கரிய இளைஞன் ஒருவனைக் கண்டேன். அவன் அதன் காதுகளை இறுகப்பிடித்து கழுத்தை வளைத்து மரத்தோடு சேர்த்து அழுத்தி நிறுத்திவிட்டதை அறிந்தேன்.

அவன் என்னிடம் “புரவியில் சேணமில்லாமல் ஏறுவதற்கு நீ என்ன வேடர்குலத்துப்பெண்ணா? அரசியின் காதணிகளுடன் இருக்கிறாய்?” என்றான். அவனுடைய உயரத்தையும் கரிய நிறத்தையும் ஒளிமிக்க கண்களையும்தான் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் என் பார்வையை உணர்ந்ததும் வேறுபக்கம் திரும்பி “இறங்கிக்கொள்…என் புரவியின் சேணத்தை இதற்கு அணிவிக்கிறேன்” என்றான். நான் இறங்கி அவனுடன் சென்றேன். அவன் என் குதிரையின் காதுகளைப் பிடித்து அதை இழுத்துக்கொண்டு வந்தான்.

அந்தக் காட்டுக்குள் இருந்த சிறிய குகைக்குள் அவன் தன் உடைமைகளை வைத்திருந்தான். அந்தக் குகையிருந்த பாறைக்கு முன்னால் நீலநீர் தேங்கிய பெரிய தடாகம் இருந்தது. அதைச்சுற்றியிருந்த காட்டிலிருந்து வேங்கைமரங்கள் நீரைநோக்கிக் குனிந்து தங்கள் ஆடும் நிழல்களை கிளைநுனிகளால் வருடிக்கொண்டிருந்தன. அவன் குகைக்குள் வைத்திருந்த பொன்னாலான பிடிகொண்ட உடைவாளிலிருந்து அவன் அரசகுலத்தவன் என்று அறிந்துகொண்டேன்.

என்னை குகைமுன் அமரச்செய்துவிட்டு அங்கே நின்றிருந்த தன் வெண்குதிரையின் சேணத்தைக் கழற்றி என்னுடைய குதிரைக்கு அணிவித்தான். “நீங்கள் எப்படி ஊர்திரும்புவீர்கள்?” என்று நான் கேட்டேன்.”மரப்பட்டைகளால் சேணம் செய்ய எனக்குத்தெரியும். மதியம் தாண்டிவிட்டது. இருட்டுக்குள் நீ உன் இல்லத்துக்குச் செல்” என்று அவன் சொன்னான்.

நான் தாகத்துடனிருப்பதைக் கண்டு அவன் “இரு, உனக்கு நீரள்ளி வருகிறேன்” என தன் குதிரையின் விலாவில் தொங்கிய வெண்ணிறமான மரக்குடுவையுடன் தடாகத்தை நோக்கி படிகளில் இறங்கிச்சென்றான். வேங்கையின் நடையை அழகுறச்செய்வது அதன் பின்னங்கால்களும் முன்னங்கால்களும் ஒன்றுடனொன்று தொடர்பேயற்றவை போல இயங்குவதுதான் என்று நினைத்துக்கொண்டேன். அவன் இறங்கியபோது கால்களுக்கும் இடைமுடிச்சுக்கு மேலிருக்கும் உடலுக்கும் தொடர்பேயில்லாததனால்தான் அது வேங்கையின் நடையாகத் தெரிந்தது என்று உணர்ந்தேன்.

அப்போது என் குதிரை அவனுடைய வெண்குதிரையுடன் கழுத்துபிணைத்து முகமுரசி பெருமூச்சுவிடுவதைக் கண்டேன். தாழைமடலவிழ்வதுபோலவோ இளம்பாகு புளித்ததுபோலவோ ஒரு மனமயக்கும் வாசனை எழுந்தது. அது நாகப்பாம்புகளின் முட்டைகள் விரியும் மணம் என பின்னர் அறிந்துகொண்டேன். நான் என்னை வெறும் பெண்ணாக அறிந்தேன். உடனே ஒரு எண்ணம் எழுந்தது. அது குந்தி என்ற இளவரசியின் எண்ணம் அல்ல. பெண் மழைபோன்றவள், அனைத்து விதைகளையும் முளைக்கச்செய்து மண்ணை காடாக்கவேண்டியவள் என்று இளமையிலேயே கற்பிக்கப்பட்ட யாதவப்பெண்ணின் எண்ணம்.

நான் துர்வாசர் கற்றுத்தந்த அந்த மந்திரத்தைச் சொன்னேன். அது பொருளற்ற ஓர் ஒலியாகவே இருந்தது. அதை மும்முறை சொன்னதுமே அதில் காலையின் முதல்கரிச்சானின் இசை இருப்பதை அறிந்துகொண்டேன். காலைப்பறவைகளின் குரல், முதல்கதிரொளியில் பறக்கும் சிறுபூச்சிகளின் மீட்டல், மலர்கள் மொக்கவிழும் வெடிப்பு, ஒளிர்ந்து சொட்டும் பனியின் தட்டல் என அனைத்தையும் தொகுத்து சுருக்கி ஒரு துளியாக்கியதாக இருந்தது அந்த மந்திரம்.

அது என்னுள் நிறைந்தபோது நான் எங்கிருக்கிறேன் என்பதையே மறந்தேன். என்னுடைய அகத்தின் ஒவ்வொரு துளியும் ஒளியால் நிறைந்தது. என் உடலே படிகத்தாலானதுபோல ஒளிகொண்டது. காற்றில் பறக்கும் பஞ்சுவிதை போல எடையற்றவளாக, சுடர்கொண்டவளாக உணர்ந்தேன். அவனுடைய அசையும் முதுகையே நோக்கிக்கொண்டிருந்தேன். அவன் திரும்பி என்னை நோக்கினான். என் சொற்களனைத்தையும் அவன் கேட்டான். அவனுடைய விழிகள் விரிவதை அவ்வளவு தொலைவிலும் கண்டேன். அவன் என்னை நோக்கி காற்றில்பறக்கும் திரைச்சீலையின் ஓவியம்போல ஓசையின்றி மிதந்துவந்தான்.

இளையவளே, இது என் உளத்தோற்றமா என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஆனால் அந்த இடமெங்கும் பேரொளி நிறைவதைக் கண்டேன். இலைகளின் பரப்புகளெல்லாம் ஆடித்துண்டுகளாயின. அடிமரங்களெல்லாம் பளிங்காயின. நிலம் நீர்ப்பரப்பு போல மின்னியது. பாறைகள் உயிருள்ள தசைகளென அதிர்ந்தன. அந்தத் தடாகம் ஒரு வேள்விக்குளம்போல செவ்வொளி கொண்டதாகியது. அந்த ஒளி ஏறி ஏறி வந்து கண்களை கூசச்செய்தது. செஞ்சூரியன் தன் கதிர்களுடன் மண்ணில் விழுந்தது போல அந்தத் தடாகம் அங்கே ஒளிகொண்டு திகழ்ந்தது.

அதன் நடுவிலிருந்து வருவதுபோல அவன் என்னை நோக்கி வந்தான். நெருங்க நெருங்க அவனுடைய உடல் வைரக்கல்போல ஒளிகொண்டிருப்பதைக் கண்டேன். ஆயிரம்கரங்கள் போல அவனுடலில் இருந்து ஒளிக்கதிர்கள் நான்குபக்கமும் எழுந்தன. அவனுடலின் விளிம்புகள் செம்பிழம்பாக தகதகக்க, நடுவே அவன் கரிய உடல் நீலப்பரப்பாகத் தெரிந்தது. விழிகளை விரித்து நோக்கினேன். வானில் சூரியன் தென்படவில்லை. வெளியெங்கும் ஒருபோதும் கண்டிராத தூயபச்சைக்கதிர் மட்டும் நிறைந்திருந்தது. தொலைதூரத்து மலையடுக்குகளும் மேகக்குவைகளும் அனைத்தும் ஒளிவிடும் மணிப்பசுமை கொண்டிருந்தன.

அக்கணம் நான் எனக்குள் தாளவியலாத அச்சத்தை அடைந்தேன். என்னசெய்துவிட்டேன், என்னசெய்துவிட்டேன் என என் அகம் அரற்றியது. “தேவா, திரும்பிச்செல்லுங்கள். உங்கள் தவப்பயணத்தை எளியவளாகிய நான் என் விளையாட்டுத்தனத்தால் கலைத்துவிட்டேன். என்னைப்பொறுத்தருள்க. தங்கள் ஒளிமணித்தேருக்குத் திரும்பியருள்க” என்று கைகூப்பினேன். அவன் புன்னகைக்கும் உடலுடன் “நீ அழைத்ததன்பொருட்டே வந்தேன். காதலைத் தேடிவராத ஆண்மகன் எங்குள்ளான்?” என்றான்.

“நான் எளியவள். தங்கள் ஒளியை என்னால் தாளமுடியவில்லை” என்றேன். “விண்ணகத்தில் விரையும் பெருங்கோள்களில் எல்லாம் என் ஒளியே படைப்பாக ஆகிறது. மண்ணில் நெளியும் சிறுபுழுக்களை ஊடுருவி கருவுறச்செய்வதும் நானே. என் ஆற்றல் அளவிறந்தது என்றாலும் எந்தச் சிறுமலரும் என் முன் தலைகுனிவதில்லை. புன்னைகைக்கும் வண்ணங்கள் காட்டி என்னை அள்ளி அள்ளி உண்ணவே அவை எழுகின்றன” என்றான். என் கண்களுக்குள் அவன் ஒளி புகுந்ததும் நான் இமயத்துப் பனிக்கட்டி என ஒளியுடன் உருகலானேன். பிருதை விழிமலர்ந்து, குரல் தழைந்து சொல்லிக்கொண்டிருந்தாள்.

நூல் இரண்டு – மழைப்பாடல் – 30

இருள்கனத்த பின்னிரவில் மதுராபுரியின் அமைச்சனான வசுதேவன் மார்த்திகாவதிக்குக் கிளம்பினான். மார்த்திகாவதிக்கு தங்கையைப் பார்க்கச் செல்வதாக கம்சனுக்கு ஒரு சிறிய செய்தியை அனுப்பிவிட்டு திறமையான இரு படகுக்காரர்களுடன் வேகமாகச் செல்லும் பாய்மரத்தோணியைக் கொண்டுவர ஆணையிட்டான். மழைத்தூறல் இருந்த பின்னிரவு கனத்த கரடித்தோல்போல நகரை மூடியிருந்தது. யமுனையிலிருந்து வெம்மையான ஆவி எழுந்து நகரில் உலவிக்கொண்டிருந்தது.

யமுனைப் படித்துறையில் பால்தாழிகளுடன் படகுகள் இல்லை. கருக்கிருட்டிலேயே அவை ஒவ்வொன்றாக வரத்தொடங்கும். நீரில் ஒளிதோன்றுகையில் யமுனைப்பரப்பெங்கும் கனத்த தாழிக்கு இருபக்கமும் பாய்கள் எழுந்து காலையொளியில் சுடரும் படகுகள் தட்டாரப்பூச்சிகள் போல நீர்ப்பரப்பையே நிறைத்து வந்துகொண்டிருக்கும். கரையெங்கும் தாழிவண்டிகள் வந்து உலோக ஒலிகளுடன் மொய்க்கும். அதன்பின் எதிர்த்திசைப்பயணம் மிகக்கடினம்.

கிழக்கே சூரியன் தோன்றும்நேரத்தில் வசுதேவன் மார்த்திகாவதியின் புறத்தே இருந்த காட்டுப்பகுதியை அடைந்துவிட்டான். அதிகாலைக்காற்றைத் திரட்டி மலராத தாமரை இதழ்கள் போல ஒன்றுக்குள் ஒன்று என திரும்பியிருந்த பாய்களுக்குள் அனுப்பிய படகு அந்த விசையில் மூக்குநுனியை நன்றாகத் தூக்கி வளைந்து வளைந்து வந்துகொண்டிருந்த கரிய அலைகளில் புரவிபோல பாய்ந்து எழுந்து விழுந்து மீண்டும் எழுந்து பாய்ந்து விரைந்தது. இருளில் முரசுத்தோலில் கோல்படும் இடம் தெரிவதுபோல யமுனையின் நீர்த்தடம் தெரிய இருபக்கமும் காடும் ஊர்களும் இருளடர்ந்து நின்றன.

கௌந்தவனம் மார்த்திகாவதியை நெருங்குவதற்கு முன்னரே யமுனைக்கரையை வந்தடையும் ஒரு மண்சாலையின் மறுநுனியில் இருந்தது. அந்தசாலைமுனையில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மரப்படகுத்துறையில் அனகை விட்டு வந்திருந்த வெண்குதிரை மேய்ந்துவிட்டு வந்து சேணத்தை மாட்டியிருந்த மரத்தடியில் மூன்றுகாலில் தூங்கிக்கொண்டு நிற்பது தெரிந்தது. இரண்டுபடகுகள் நீரில் ஆடியபடி ஒன்றையொன்று தோள்களால் முட்டி விளையாடி நின்றன. பாய்மரங்களை சுருக்கிக்கொண்ட வசுதேவனின் படகு படித்துறையை நெருங்கியதும் ஒரு படகோட்டி எழுந்து கைகளை ஆட்டி துறையின் ஆழத்தை சைகையால் தெரிவித்தான்.

வசுதேவனின் படகு கலத்துறையின் மூங்கில்சுருள்களை மோதி விலகி மீண்டும் மோதி அமைதிகொண்டது. படகோட்டி கரையில் குதித்து படகிலிருந்து வீசப்பட்ட கயிற்றைப்பற்றி கரையில் இருந்த தறியில் சுற்றிக்கட்டினான். வசுதேவன் படகிலிருந்து இறங்கி நேராக குதிரையை நோக்கிச் சென்றான். அனகை படகுக்காரர்களால் தூக்கிவிடப்பட்டு கரையேறுவதற்குள் வசுதேவனே குதிரைக்கு அருகே மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சேணத்தை எடுத்து குதிரைமேல் கட்டத் தொடங்கிவிட்டான். சேணம் மழையில் நனைந்து குளிர்ந்து ஊறியிருந்தது. அனகை வசுதேவனின் முகத்தைப் பார்த்தபடி குதிரையின் பட்டைகளை வயிற்றுக்கு அடியில் கட்டி இழுத்து இறுக்கினாள். குதிரை ஆர்வமாகத் திரும்பி வசுதேவனைப் பார்த்து அவனுடைய தோளை நீண்ட கனத்த நாக்கை நீட்டி நக்கியது.

வசுதேவன் குதிரையின் நீண்டு ஒடுங்கிய மூக்கை தன் கைகளால் வருடியும் அதன் மூக்குத்துளைகளை அழுத்தி மூடித் திறந்தும் அதனுடன் கொஞ்சினான். அனகை பின்பக்கம் ஏறி அமர்ந்ததும் வசுதேவனும் சேணத்தை மிதித்து குதிரைமேல் ஏறிக்கொண்டான். அவன் கால்களால் அணைத்ததும் குதிரை பெருநடையில் செல்லத் தொடங்கியது. வசுதேவன் அதுவரை அவனுள் இருந்த இறுக்கம் மெல்லத்தளர்வதுபோல பெருமூச்சுவிட்டான்.

மழைக்காலத்தில் மழைநீர் வழியும் ஓடையாகவும் ஆகிவிடும் அந்தப்பாதை மண் அரித்து வேர்ப்பின்னல்களாக மாறியிருந்தது. குதிரை சிறுசெவி கூர்ந்தும் நாகமெனச்சீறி முகர்ந்தும் வேர்களின் இடைவெளிகளில் காலைத்தூக்கி வைத்து விரைவு குறையாது சென்றுகொண்டிருந்தது. இருபக்கத்திலிருந்தும் பாதைமேல் நீண்டு கூரையென மூடியிருந்த இலைத்தழைப்புக்களிலிருந்து நீர் சொட்டிக்கொண்டே இருக்க சற்றுநேரத்திலேயே அவர்கள் முழுமையாக நனைந்துவிட்டிருந்தனர்.

கௌந்தவனத்தில் முகவாயில் காவல் மண்டபத்தில் எட்டு காவலர்கள் இருந்தனர். அவர்கள் வசுதேவனை நன்றாக அறிந்தவர்கள். அதிகாலையில் அவர்கள் தோலாடைகளைக் கழற்றி வைத்துவிட்டு குளிருக்கு மரவுரியைப் போர்த்தியபடி குவிந்து அமர்ந்திருந்தனர். ஒருவன் சிறிய விறகடுப்பில் காய்ச்சிய பாலை இருவர் மரக்குவளைகளில் அருந்திக்கொண்டிருந்தனர். வசுதேவனை அப்போது எதிர்பாராமையால் முதலிரு காவலர்களும் திகைத்து எழுந்து நிற்க மரவுரிக்கு அடியில் அவர்கள் சிற்றாடை மட்டுமே அணிந்திருப்பது தெரிந்தது. ஒருவன் அப்பால் ஆலம்விழுதால் பல்தேய்த்துக்கொண்டிருந்த தலைவனை நோக்கி ஓடினான். தலைவன் விழுதை வீசிவிட்டு ஓடிவந்தான். வசுதேவன் அவர்களிடம் கையை மட்டும் அசைத்துவிட்டு உள்ளே சென்றான்.

கௌந்தவனத்தில் பன்னிரண்டு குடில்கள் இருந்தன. மையமாக இருந்த பெரியகுடிலில்தான் துர்வாசர் தவத்தின்போது தங்கியிருந்தார். அவரது மாணவர்களுக்காக கட்டப்பட்ட மூன்று குடில்கள் வலப்பக்கம் இருளுக்குள் நின்றன. அரசகுலத்தவர்களுக்கான நான்கு குடில்கள் பின்பக்கமிருந்தன. சேவகர்கள் தங்கும் குடில்கள் சற்று அப்பால் ஒரு தொகையாக அமைந்திருந்தன. அனகை குதிரையிலிருந்து இறங்கி நேராக பிருதையின் குடிலுக்குச் சென்றாள்.

VENMURASU_EPI_80

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அனகை கதவைத் தட்டுவதற்கு முன்னரே பிருதை திறந்தாள். அவள் குதிரைக்குளம்படிகளைக் கேட்டிருந்தாள். அனகையிடம் பிருதை அவள் செல்லலாம் என மெல்ல தலையசைத்து ஆணையிட்டாள். அனகை தலைவணங்கி விலகி குடிலின் பின்பக்கம் சென்றாள். ஈர உடைகளை உதறியபடி வசுதேவன் குடிலுக்குள் நுழைந்தான். பிருதை அவனுக்கு உலர்ந்த மரவுரியாடையை எடுத்துவந்து பீடத்தில் வைத்தாள். அவன் ஆடையை மாற்றிக்கொள்ளாமல் அப்படியே பீடத்தில் அமர்ந்து தன் தலையை கைகளால் பற்றிக்கொண்டான்.

பிருதை அவனருகே ஒரு சிறிய பீடத்தில் அமர்ந்து தன் கைகளை மடியில் குவித்துக்கொண்டு அவனையே பார்த்தாள். அவன் அவளை ஏறிட்டுப்பார்க்காமல் தலையைக் குனிந்து அமர்ந்திருந்தான். அவன் பேசுவான் என எதிர்பார்த்திருந்த பிருதை பின்னர் மெல்ல தன் உடலை அசைத்து சற்றுக் குனிந்து “அந்த ராஜநாகம் வந்தது எனக்கான விடையை அளித்தது மூத்தவரே” என்றாள். “வரவிருக்கும் மைந்தன் பெருவல்லமைகொண்ட ஒருவனாக இருக்கலாம். அவனால் யாதவகுலமே பெருமை அடையலாம்.”

வசுதேவன் சினத்துடன் தலைதிருப்பி “கருவிலுள்ளது மைந்தன் என நீ எப்படி அறிந்தாய்?” எனக் கேட்டான். “நான் அறிவேன்” என பிருதை பதில் சொன்னாள். “எனக்கு சென்ற சிலநாட்களாக வந்துகொண்டிருக்கும் கனவுகளும் நடந்த நிகழ்வுகளும் நன்றாகவே இயைந்துபோயின.” என்ன கனவுகள் என்பதுபோல வசுதேவன் பார்த்தான். “இக்கரு என்னுள் நுழைந்ததுமுதல் நான் நாகங்களையே கனவில் கண்டுகொண்டிருக்கிறேன்.”

வசுதேவன் அவள் கண்களைக்கண்டதும் சற்றே அகக்கசப்பு கொண்டான். அவளிடம் எப்போதுமிருக்கும் அறிவும் சமநிலையும் அழிந்து கருவுற்றிருக்கும் அத்தனை பெண்களிலும் கூடும் பேதைமை திகழ்ந்தது என அவன் எண்ணினான். வெளுத்த கண்களையும் உதடுகளையும் பார்த்துவிட்டு அவன் பார்வையை திருப்பிக்கொண்டான். “இந்தக்காட்டிலிருக்கையில் நாகங்கள் கனவில் வருவது இயல்பே” என்றான் வசுதேவன். “அத்துடன் யாதவகுலத்தில் கருவுறும் அனைத்துப்பெண்களும் நாகங்களையே கனவில் காண்கிறார்கள்.”

பிருதை “நான் நாகங்களை அஞ்சினேன். ஆனால் அவனைக்காக்க அரசநாகமே வந்தது” என்றாள். வசுதேவன் சினத்துடன் “பிருதை, என்னை உனக்குத்தெரியும். நான் அறிவையே கருவியாகக் கொண்ட அரசியல் சூழ்மதியாளன். இந்தச் சிறு நிகழ்வை என்னால் விளங்கிக்கொள்ளமுடியாதா என்ன? கருவை அழிக்க இங்கே மருத்துவச்சிகள் நீர்க்கவைத்த நாகவிஷத்தைத்தான் கையாள்கிறார்கள். அந்த மருத்துவச்சியின் பெட்டியில் நாகவிஷம் இருந்தது. இந்தப்பெண் அதை அசைத்து எடுத்துக்கொண்டுவந்தபோது அது கசிந்து வாசனை கிளம்பியிருக்கலாம். ராஜநாகம் பிற பாம்புகளை மட்டுமே உண்ணக்கூடியது. அந்த நாகவிஷத்தின் வாசனையால் கவரப்பட்டு அந்நாகத்தை உண்பதற்காக ராஜநாகம் பின்னால் வந்திருக்கிறது. அந்தப்பெட்டிக்குள் இருந்த நாகவிஷத்தை அது அணுகும்போது கிழவி மரவுரியை கையால் எடுத்தாள். கொத்திவிட்டது… போதுமா?” என்றான் வசுதேவன்.

பிருதை “இல்லை” என ஏதோ சொல்லவந்தாள். “சற்று பேசாமலிருக்கிறாயா?” என்று உரத்தகுரலில் வசுதேவன் சொன்னான். பிருதை தலைகுனிந்து நெற்றிப்பொட்டை தன் விரல்களால் அழுத்தியபடி அமர்ந்திருந்தாள். சிலகணங்கள் அவளுடைய தலையின் வெண்ணிறமான வகிடையே நோக்கியிருந்தபின் அவள் தோளில் கையை வைத்தான். “சரி, வருந்தாதே. நான் வேண்டியதைச் செய்கிறேன்” என்றான். அவள் தன் முகத்தையும் மூக்கையும் மேலாடையால் அழுத்தித் துடைத்தாள். சிவந்து கனத்த இமைகளுடன் அவனை ஏறிட்டுப்பார்த்தாள்.

“நான் இந்தக்குழந்தையை அழிக்க எண்ணினேன்” என்றாள் பிருதை. “ஏன் அவ்வாறு எண்ணினேன் என்று என்னைக்கேட்டுக்கொள்கிறேன்… என்னால் விடையளிக்க இயலவில்லை.” வசுதேவன் அவள் தானே அதைச் சொல்லிக்கொள்கிறாள் என்று உணர்ந்தான். “நான் யாதவப்பெண். நம்குலத்தில் விரும்பிய ஆணை நாடி கருவுறும் உரிமை பெண்டிருக்குண்டு… நான் கருவுற்றிருக்கும் செய்தியை மார்த்திகாவதியின் அரசருக்குச் சொன்னால் அவர் என்னை அழைத்து பேறுகாலப்பூசனைகள்தான் செய்யவேண்டும். ஆயர்குலத்து மூதாதையர் அதையே ஆணையிடுவார்கள்.”

அவள் அலைபாயும் விழிகளுடன் வசுதேவனை நோக்கினாள். “ஆனால் இக்கரு இது எனக்குள் வந்த நாள்முதல் பாம்புகளின் நெளிவுமட்டும்தான் என் கனவில் வந்துகொண்டிருந்தது. இது ஏதோ தீங்கைக் கொண்டுவருமென எண்ணினேன்… ஆனால் ராஜநாகமே வந்து அதைக் காத்தபோதுதான் அது எளியதோர் மகவல்ல என்று உறுதிகொண்டேன்.”

வசுதேவன் “மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டிருக்காதே…” என்றான். “அப்படியென்றால் ஏன் அது என்னை தீண்டவில்லை? என் கால்கள்தான் அருகே இருந்தன” என்றாள் பிருதை. “என்ன பேசுகிறாய் என்று தெரிந்துதான் சொல்கிறாயா?” என்று வசுதேவன் கோபமாக சொன்னபடி எழுந்தான்.

“மூத்தவரே நான் இக்கருவை எப்படி அடைந்தேன் என்று நீங்கள் இன்னமும் வினவவில்லை” என்றாள் பிருதை. “சிலவற்றை தமையனாக நான் கேட்டுக்கொள்ளமுடியாது அல்லவா?” என அவளை நோக்காமலேயே வசுதேவன் பதில் சொன்னான். “தாங்கள் அறிந்தாகவேண்டிய செய்திதான்…” என்றாள் குந்தி. வசுதேவன் அவளை ஏறிட்டு நோக்கி “இது ஏதோ முனிவரின் கரு என நீ சொல்லப்போவதில்லை என நம்புகிறேன்” என்றான். பிருதை அவன் கண்களைச் சந்தித்தாள். அக்கணத்தில் அவன் நன்கறிந்த களித்தோழியாக மாறி “இல்லை” என புன்னகைசெய்தாள்.

“மூத்தவரே, இரண்டாண்டுகளுக்கு முன்பு மாமுனிவரான துர்வாசர் மார்த்திகாவதிக்கு வந்தார். இங்குள்ள வனத்தில் தவம்செய்ய விரும்புவதாகச் சொன்னார். பொதுவாக முனிவர்கள் ஷத்ரியர்களல்லாத மன்னர்களை நாடி வருவதில்லை. முனிவரைக்கண்டதும் என் தந்தையான குந்திபோஜர் பேருவகை அடைந்தார். முனிவருக்கான அனைத்தும் ஒருக்கப்படவேண்டுமென ஆணையிட்டார். முனிவர் இங்குவந்து தங்கிச்சென்ற செய்தியை வரும்காலங்களில் சூதர்கள் பாடவேண்டுமென்பது அவரது விருப்பம். முனிவர் தங்கும்பொருட்டு கௌந்தவனம் என்ற இந்தச் சோலை ஒருக்கப்பட்டது. இங்கே குடில்கள் அமைந்தன” என்றாள் பிருதை.

அரண்மனைக்கு வந்த முதிர்ந்த முனிவரை நானும் என் தாயும் எதிர்கொண்டு அனைத்துப் பணிவிடைகளையும் செய்தோம். அவர் அரண்மனையில் தங்கியிருந்த நாட்களில் ஒருமுறை நீராட்டறையில் அவர் சுவடி ஒன்றை வாசித்துக்கொண்டிருக்க நான் அவரது முதியபாதங்களை படிகாரமிட்ட வெந்நீரால் ஒற்றிக்கொண்டிருந்தேன். முனிவர் என்னிடத்தில் உடனடியாக ஏடும் எழுத்தாணியும் வேண்டும் என்றார். அப்போது இடைநாழி வழியாக என் சேடி சத்யை சென்றுகொண்டிருந்தாள். நான் அவளுடைய முதுகை உற்று நோக்கி நெஞ்சுக்குள் ஆணையிட்டேன். அவள் திரும்பி என்னைப்பார்த்து என்னருகே வந்து ‘அழைத்தீர்களா இளவரசி?’ என்றாள். ஏடும் சுவடியும் எடுத்துவர நான் சொன்னேன்.

முனிவர் வியந்து “அதை நீ எப்படிச் செய்தாய்? எப்படி அவளை குரலில்லாமல் அழைத்தாய்?” என்று கேட்டார். நான் “தவசீலரே, அது மிக எளிய ஒரு வித்தை. பெரும்பாலான ஆயர்கள் அறிவார்கள். நாங்கள் தனித்து விலகி காட்டுக்குள் நிற்கும் பசுவை அருகே அழைப்பதற்கு அதன் உடலைக் கூர்ந்து நோக்கி ‘பார், பார், பார்’ என அகத்துக்குள் சொல்லிக்கொள்வோம். நம் அகவல்லமையை முழுக்க அந்தச் சொல்லில் குவித்தால் நாம் பார்வையைக் குவித்திருக்கும் பசுவின் உடற்பகுதியின் தோல் சிலிர்த்து அசையும். பசு திரும்பி நம்மை நோக்கும். நாம் அதன் கண்களைப்பார்த்து அருகே வா என்றால் அருகே வரும்’ என்றேன். ‘சிறுவயதிலேயே இவ்வித்தையை நானும் என் தமையனும் கற்றோம். அதை நான் மானுடரிலும் விரிவாக்கிக் கொண்டேன்’ என்றேன்.

முனிவர் வியப்புடன் “பெண்ணே, நான் இப்போது இச்சுவடியில் கற்றறிந்துகொண்டிருந்ததும் அதே வித்தையைத்தான். சூக்‌ஷ்மகதனம் என்று இதை முனிவர்கள் சொல்கிறார்கள். ஒரு மனம் இன்னொரு மனத்துடன் குரலில்லாமலேயே உரையாடமுடியும். அணுக்கள் பூச்சிகள் புழுக்கள் போன்ற சிற்றுயிர்கள் அவ்வாறு ஒன்றோடொன்று உரையாடிக்கொண்டிருக்கின்றன. உயிர்களின் அறிவும் மொழியும் விரிவடையும்தோறும் அத்திறன் இல்லாமலாகிறது. சித்தம் ஒருங்கமைந்த மனிதர்களிடம் அத்திறன் முற்றிலும் இல்லை” என்றார்.

“ஆனால் நம்மனைவருக்கும் உள்ளே நம் அறிவின் அலைகளுக்கு அடியில் அந்த முதற்பேராற்றல் உறைந்திருக்கிறது. குழந்தை அழுவதற்கு ஒருகணம் முன்னரே அன்னை அது அழப்போவதை உணர்ந்துகொள்கிறாள். காதல்கொண்ட மனங்கள் ஒன்றாகின்றன. தியானத்திலமரும் முனிவர்களின் உள்ளங்கள் ஒற்றைப்பெரும்படலமாக ஆகின்றன. சித்த அலைகளை அடக்கி அந்த ஆற்றலை உள்ளிருந்து துயிலெழுப்புவதையே சூக்‌ஷமகதனம் என்று சொல்கிறோம்” என்றார் முனிவர்.

நான் வியப்புடன் அதைப்பற்றி கேட்டேன். “அதன்மூலம் மனிதர்களின் உள்ளங்கள் ஒன்றாக முடியும். வேதங்கள் உங்கள் உள்ளங்கள் சுருதியால் ஒன்றாகட்டும் என அறைகூவுவது இதைப்பற்றித்தான். ஆயிரமாண்டுகாலமாக மானுடஞானம் மண்ணுக்கு அடியில் விரிந்திருக்கும் அந்தக் கடலைக் கண்டடைவதற்காகவே முயன்றுகொண்டிருக்கிறது. நான் தவம்செய்யப்போவதும் அந்த ஆலயவாயில் முன்புதான்” என்றார் துர்வாசர்.

மறுநாள் கௌந்தவனத்துக்குக் கிளம்பும்போது என்னையும் உடனழைத்துக்கொள்ள அவர் என் தந்தையிடம் கேட்டார். தந்தை அதை பெருமகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். நானும் அரண்மனை அறைகளை வெறுக்கத் தொடங்கிய வயது அது. காட்டின் ஒலிகளுக்காகவும் வாசனைக்காகவும் என் புலன்கள் ஏங்கின. துர்வாசருடன் நான் இங்கே வந்தேன். அவரும் அவரது மாணவர்களும் செய்த தவத்துக்கு நானும் என் சேடியரும் அனைத்துப் பணிவிடைகளையும் செய்தோம். அவருக்கு நான் சுவடிகளை வாசித்துக்காட்டினேன். புதியசுவடிகளை எழுதினேன். அவர் சொன்னவற்றை எல்லாம் சீராகக் குறித்துவைத்தேன். இங்கே அவரது இனிய மாணவியாக இருந்தேன்.

ஓரிருமாதங்களுக்குப்பின் நான் துர்வாசரின் பெயர்த்தியைப்போல ஆனேன். அவரைக் கடிந்துகொள்ளவும் கேலிசெய்யவும் உரிமை பெற்றேன். கடும்சினத்துக்கு புகழ்பெற்றிருந்த மாமுனிவர் அவர்மேல் பிறர் சுமத்திய அந்த ஆளுமையையே பலதலைமுறைகளாக தானும் கொண்டிருந்தார். அதனுள் வாழ்ந்து பழகியிருந்தார். அவரது மாணவர்கள் எவரும் அவருக்கு நேர்முன் நிற்பதோ அவர் விழிகளைப் பார்ப்பதோ அவர் சொல்லுக்கு எதிர்ச்சொல் அளிப்பதோ வழக்கமில்லை. மாமன்னர்கள்கூட அவர் முன்னால் முதுகை நிமிர்த்தாமல் நிற்பார்கள் என்றார்கள். என்னிடம் அவர் அந்த கடினமான ஓட்டைத் துறந்து வெளியே வந்து விளையாடினார். நானும் அவரும் காட்டுக்குள் மான்களைத் துரத்தினோம். தர்ப்பைகளால் மலர்களை அடித்து வீழ்த்தினோம். அனைத்து விளையாட்டுகளிலும் நான் அவரை வென்றேன். அவரது சடைகளைப் பிடித்து இழுக்கவோ தாடியில் மலர்களைக் கட்டித்தொங்கவிடவோ நான் தயங்கியதில்லை.

நான்குமாதங்களுக்கு முன்பு துர்வாசர் தன் தவத்தை முடித்துக்கொண்டு இமயத்துக்கு கிளம்பிச்சென்றார். அவர் விடைபெறும் நாளில் நான் அவரைப் பணிந்து வணங்கினேன். என்னை வாழ்த்தி நெற்றியில் கையை வைத்த அவரிடம் “குருவே, உங்கள் ஆய்வை முடித்துவிட்டீர்களா?” என்று கேட்டேன். புன்னகையுடன் “ஆம், நான் மூன்று பெரும் சுவர்களை உடைத்திருக்கிறேன். மனிதர்களுக்கு நடுவே இருக்கும் சுவரை முதலில் உடைத்தேன். அடுத்ததாக மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே இருக்கும் சுவரைத் தகர்த்தேன். மனிதர்களுக்கும் விண்ணகப் பேராற்றல்களுக்கும் நடுவே இருக்கும் சுவரை இறுதியாக விலக்கினேன்” என்றார்.

நான் கண்களில் சிரிப்புடன் “குறிதவறிய மலர்களிடம் கேட்டால் தெரியும் உங்கள் தவவல்லமை” என்றேன். “நீ சிறுமி. உன்னால் அதை நம்பமுடியாது. அதை நானே காட்டுகிறேன் வா” என்று என்னை காட்டுக்குள் கூட்டிச்சென்றார். என்னை முன்பே செல்லவிட்டு அவர் பின்னால் வந்தார். அவர் என்னிடம் “நீ என்னை நம்பவில்லை அல்லவா?” என்று கேட்டார். அதைக் கேட்டபின்னர்தான் அவர் என்னிடம் பேசவில்லை என்பதை நான் உணர்ந்து திகைத்தேன். அவர் சிரித்துக்கொண்டு “ஒரு சிறுமியிடமன்றி வேறெவரிடம் நான் உல்லாசமாக இருக்கமுடியும்? முனிவனாக இருப்பினும் மகளைப்பெறாவிட்டாலும் நானும் ஒரு தாதன் அல்லவா?” என்றார்.

நான் திகைத்து “குருவே, நீங்கள் எப்படி என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றேன். “இப்போது நீ பேசுவதுபோல” என்றார். அப்போதுதான் அவரிடம் நான் உதடுகளால் பேசவில்லை என்று உணர்ந்தேன். உள்ளம் நடுங்கி “குருவே வேண்டாம். எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றேன். “சரி இந்தப் பசுவைப்பார். அது அச்சம்கொள்கிறதா என்ன?” என்றார். அந்தப்பசு “எதற்கு அச்சம்கொள்ளவேண்டும்? நான் ஏற்கனவே என் குழந்தையிடம் இப்படித்தானே பேசிக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னது. பசு என்னிடம் பேசுவதை உணர்ந்த கணமே நான் அஞ்சி திரும்பி ஓடி என் குடிலை அடைந்துவிட்டேன்.

உரக்கச்சிரித்தபடி முனிவர் என் பின்னால் வந்தார். “நீ இளம்பெண். இளவரசி. நானோ மரவுரி அணிந்த கிழவன். என்னுடன் விளையாடி நீ தோற்றுவிட்டாய்” என்றார். “குருவே, எனக்கு அச்சமாக இருக்கிறது… எனக்கு இந்த விளையாட்டு தேவையில்லை. என்னை என் அரண்மனைக்கே அனுப்பிவிடுங்கள்” என்றேன். துர்வாசர் சிரித்துக்கொண்டு “சரி, நான் வென்றேன் என்று சொல்லி மூன்றுமுறை தண்டம்போடு” என்றார். நான் கண்ணீருடன் செவிகளைப் பற்றிக்கொண்டு ‘தண்டம் தண்டம் தண்டம்’ என குனிந்தெழுந்தேன். முனிவர் கைகளைத் தட்டியபடி சிரித்து துள்ளிக்குதித்து என்னைச்சுற்றிவந்து “வெற்றி…துர்வாசரால் மார்த்திகாவதியின் இளவரசி முறியடிக்கப்பட்டாள். சூதர்களே பாடுங்கள். கவிகளே எழுதுங்கள்” என்றார்.

அன்றுமாலை அவரது மாணவர்கள் கிளம்பும்போது அவர் தன் அறைக்குள் என்னை தனியாக அழைத்தார். அப்போது அவர் நானறிந்த இனிய முதுதாதை முகத்தை அகற்றி மீண்டும் முனிவருக்குரிய முகத்தை அணிந்திருந்தார். “பெண்ணே, நீ செய்த பணிவிடைகளால் முதியவனாகிய நான் மீண்டும் இளமையை அடைந்திருக்கிறேன். உனக்கு என் வாழ்த்துக்கள். என்பரிசாக நான் உன் உதவிகொண்டு அறிந்த ஞானத்தில் ஒரு துளியை உனக்களிக்கிறேன்” என்றார்.

முனிவர் எனக்கு ஒரு மந்திரத்தை செவியில் ஓதினார். அதை மும்முறை சொல்லி அகத்தில் நிறுத்திக்கொள்ளும்படி சொன்னார். ” இளவரசியே, இந்த மந்திரம் மூலம் நீ விண்ணகப் பேராற்றல்களுடன் நேரடியாகவே உரையாடலாம். நீ இன்று ஒரு சிற்றரசின் இளவரசி. உன் கணவனுடன் கூடும்போது இந்த மந்திரத்தைச் சொல். விண்ணகதேவன் ஒருவனை வரவழைத்து அவனுடைய ஆற்றலை உன் கணவனின் விந்துவில் நிறையச்செய். அந்த தேவனின் மைந்தனே உன் கருவில் எழுவான். உன் மைந்தர்களால் நீ பாரதவர்ஷத்தின் பேரரசியாக அரியணையில அமர்வாய். என்றும் இந்ததேசம் மறவாத மாதரசியாக நினைவுறப்படுவாய்” என்றார்.

பிருதையின் முகத்தைப்பார்த்தபடி வசுதேவன் திகைத்து அமர்ந்திருந்தான். ஏதோ சொல்லவிழைபவனைப்போல உடலை அசைத்தபின் தலையை காலையொளி நிறைந்த சாளரம்நோக்கி திருப்பிக்கொண்டான். அவனை நோக்கி மெல்லிய குரலில் “மூத்தவரே, என் கருவிலிருப்பது சூரியனின் மைந்தன்” என்று பிருதை சொன்னாள்.