மாதம்: பிப்ரவரி 2014

நூல் இரண்டு – மழைப்பாடல் – 5

பகுதி இரண்டு : கானல்வெள்ளி

[ 1 ]

விதுரன் ஆட்சிமண்டபத்தில் நான்கு கற்றெழுத்தர்கள் சூழ்ந்திருக்க கடிதங்களையும் அரசாணைகளையும் ஒரேசமயம் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் சொல்லச் சொல்ல ஏடுகளில் எழுத்தாணிகள் மெல்லிய சருகு நொறுங்கும் ஒலியுடன் சுழன்று ஓடிக்கொண்டிருந்தன. எழுதியதும் கற்றெழுத்தர்கள் விடுக்கும் முனகல் ஒலிகளும் விதுரனின் சொற்களும் மட்டும் ஒலித்தன.

பத்ராவதியின் கரையில் நான்கு மீன்பிடிக்குலங்களுக்கு மட்டுமே படகோட்டவும் மீன்பிடிக்கவும் ஒப்பாணை. பிறர் படகுகளை விடவேண்டுமென்றால் அரச ஒப்புதல் பெறவேண்டும் என்று ஓர் அரசாணை. அரக்குக் கொள்முதல் செய்யும் அதிகாரிகள் எப்போதும் தங்களிடம் கொள்முதல்செய்யப்பட்ட அரக்கின் ஒரு துளியை சான்றாக வைத்திருக்க வேண்டும் என்று இன்னொரு அரசாணை. சேதிநாட்டில் இளவரசி பிறந்தமைக்கு பேரரசி வாழ்த்து தெரிவிக்கிறார் என்று ஒரு திருமுகம். கங்கநாட்டில் நிகழவிருக்கும் நீர்த்திருவிழாவுக்கு பேரரசி பரிசும் பட்டுக்கொடியும் கொடுத்தனுப்புவதாக இன்னொரு திருமுகம்.

ஒவ்வொருநாளும் நெடுநேரத்தை எடுத்துக்கொள்ளும் இந்த எளிய மேலாண்மைச்செயல்பாடுகளை ஏன் செய்கிறோம் என விதுரன் அப்போதும் வியந்துகொண்டான். அவற்றில் கொள்கைமுடிவுகள் இல்லை. அரசியலாடல்கள் இல்லை. அறிதலும் அறைதலும் இல்லை. அவை ஒவ்வொன்றும் பிறிதுபோன்றவை. அறிவோ ஆற்றலோ அல்ல பிறழாத கவனம் மட்டுமே அவற்றுக்குத் தேவை. அவற்றை அவன் செய்யவேண்டியதுமில்லை. ஆனால் அவன் ஒவ்வொருநாளும் காலையில் அங்கே வந்து அமர்ந்துகொண்டிருந்தான்.

கானுலாவச் சென்றிருந்தபோது ஒருமுறை காட்டுயானை ஒன்றைக் கண்டான். வெண்தந்தம் நீண்டெழுந்த மதகளிறு அது. வேங்கைமரத்தை வேருடன் சாய்த்து உண்ணும் துதிக்கை கொண்டது. இளவெயிலில் சுடர்ந்து நின்ற சிறிய மலர்களை துதிக்கை நுனியால் கொய்து சுருட்டி வாய்க்குள் போட்டுக்கொண்டிருந்தது. விதுரன் அதைக்கண்டு புன்னகைசெய்தான். அதனால் அந்த வீண்செயலை நிறுத்தமுடியாதென்று எண்ணினான். நிறுத்த எண்ணும்தோறும் அவ்வெண்ணத்தின் விசையே அச்செயலை அழுத்தம் மிக்கதாக ஆக்கிவிடும்.

திருதராஷ்டிரனின் சூத ஏவலனான விப்ரன் வந்து பணிந்து நின்றான். அவனைக் கண்டதும் விதுரன் நிமிர்ந்து புருவங்களாலேயே என்ன என்றான். திருதராஷ்டிரன் அழைக்கிறான் என்று விப்ரன் உதட்டசைவால் பதில் சொன்னான். விதுரன் எழுதவேண்டியவற்றை முழுமையாகச் சொல்லி முடித்து சால்வையைப் போட்டபடி எழுந்துகொண்டான். “எஞ்சியவற்றை நான் மதியம் சொல்கிறேன்… இவை உடனடியாக அனுப்பப்படட்டும்” என்ற பின்பு இடைநாழி வழியாகச் சென்றான்.

அவன் பின்னால் வந்த விப்ரன் “சினந்திருக்கிறார்” என்றான். விதுரன் தலையை அசைத்தான். “நேற்று பிதாமகர் இங்கே வந்துசென்றதை அறிந்திருக்கிறார். அவர் தன்னை வந்து சந்திக்காமல் சென்றதைப்பற்றித்தான் கடும்சினம் கொண்டிருக்கிறார்” என்றான் விப்ரன். “இளையவரிடம் உடனே தன்னை வந்து பார்க்கும்படி ஆணையனுப்பினார். அவரை அவரது அன்னை அனுமதிக்கவில்லை. அது சினத்தை இன்னும் அதிகரித்திருக்கிறது.” விதுரன் அதற்கும் மெல்ல தலையை மட்டும் அசைத்தான்.

புஷ்பகோஷ்டம் என்று அழைக்கப்பட்ட அரண்மனையின் வலப்பக்க நீட்சியில் திருதராஷ்டிரனின் தங்குமிடம். அவனுக்கென்று சேவகர்களும் காவலர்களும் தனியாக இருந்தனர். மைய அரண்மனையில் இருந்து அப்பகுதிக்குச் செல்ல நீண்ட இடைநாழி அமைக்கப்பட்டிருந்தது. விதுரன் செல்லும்போதே விப்ரனிடம் அவனுக்கான ஆணைகளைச் சொன்னான். உடனே பீஷ்மபிதாமகரிடம் சென்று அவர் இளவரசர்களை எப்போது சந்திக்கவிருக்கிறார் என்று கேட்டுவரவேண்டும். பேரரசி பீஷ்மரை இளவரசர்கள் சந்திப்பதை விரும்புகிறாரா என்று கேட்காமல் புரிந்துவரவேண்டும்.

புஷ்பகோஷ்டத்தில் நுழைந்ததும் விதுரன் உள்ளே யாழின் ஒலி கேட்பதை உணர்ந்தான். அவனது முகம் எளிதாயிற்று. உள்ளே மேகராகம் ஒலித்துக்கொண்டிருந்தது. சிலகணங்கள் நின்றுவிட்டு விதுரன் மெல்ல உள்ளே நுழைந்தான்.

இசைமண்டபம் கலிங்கத்துச் சிற்பியால் அமைக்கப்பட்டது. மரத்தாலான வட்டவடிவமான கூடம். அனைத்துப்பக்கங்களிலும் நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறிய பொய்ச்சாளரங்கள். அவை எதிரொலிகளை மட்டும் உண்டு கரைத்தழித்தன. அந்த மண்டபத்தில் இருந்து நேரடியாக வெளியே திறக்கும் சாளரமோ வாயிலோ இல்லை. காற்று வருவதற்கான வழி வளைவாக அமைக்கப்பட்டிருந்தது. அங்கே வெளியோசை ஏதும் கேட்பதில்லை.

அறைக்கான ஒளி நடுவே இருந்த வட்டவடிவமான கூரைத்திறப்பு வழியாக உள்ளே பெய்தது. அது பொழியும் இடத்தில் இருந்த வட்டத்தடாகத்தில் தாமரைகள் மலர்ந்திருந்தன. அதன் ஒருபக்கம் இசைகேட்பவர்களுக்கான பீடங்கள் அமைந்திருந்தன. தடாகத்தின் மறுகரையில் சூதர்கள் அமரும் மேடை. நீரலைகள் வழியாகச் செல்லும்போது இசை இனிமைகொள்கிறது என்றனர் கலிங்கச் சிற்பிகள். குடைவான உட்கூரைகொண்ட அவ்வறையின் எப்பகுதியில் நின்று மெல்ல முணுமுணுத்தாலும் எந்த மூலையிலும் தெளிவாகவே கேட்கும். ஆனால் உள்ளே வரும் வழியிலும் செல்லும் வழியிலும் நின்று பேசினாலும் கால்களால் தட்டினாலும் மிகமெல்லிய ஒலியே எழும். அதற்கும் மேலாக அங்கே மரவுரியாலான கனத்த கால்மெத்தை போடப்பட்டிருந்தது.

விதுரன் மரவுரியாலான இருக்கையில் ஓசையில்லாமல் அமர்ந்துகொண்டான். மூன்று சூதர்கள் குழல்களையும் ஒருவர் பேரியாழையும் வாசித்துக்கொண்டிருந்தனர். மேகராகம் என அதை அறிந்திருந்தாலும் விதுரன் அதன் வண்ணங்களையும் சிறகுகளையும் அறிந்திருக்கவில்லை. சில கணங்களுக்குள் அது மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்லிக்கொண்டிருக்கும் எளிய பறவை என ஒலிக்கத் தொடங்கியது. அவன் உடலை மிக மெல்ல அசைத்து அமர்ந்தான்.

திருதராஷ்டிரன் தன் தலையை ஒருபக்கமாகச் சரித்து ஓடில்லாத முட்டைபோன்று மெல்லிய தோல் ததும்பிய விழிகளை தூக்கியபடி கேட்டுக்கொண்டிருந்தான். அவையிலிருந்த நான்கு ஏவலர்களும் இசையில் ஆழ்ந்து ஓவியங்கள் போல நின்றனர். இசை இவர்களை என்னதான் செய்கிறது என விதுரன் எண்ணிக்கொண்டான். இசை என்பது என்ன? சீரமைக்கப்பட்ட ஒலிகள். அந்த ஒழுங்கை அறிந்தவர்கள் அவற்றை எழுச்சியாக வீழ்ச்சியாக பொழிவாக சுழற்சியாக பொங்கலாக அமைதலாக எண்ணிக்கொள்கிறார்கள். பறவையைக் கண்டு பறத்தலை அடைவதுபோல அது செல்லுமிடமெல்லாம் அகம் செல்லப்பெறுகிறார்கள்.

வாலுடன் விளையாடும் வானரம். ஆனால் தன் வாலன்றி தன்னை அறிந்து விளையாட வேறேதுள்ளது? என் நூலறிவு என் வால். இந்த இசை இவர்களின் வால். இல்லை. இது அவர்கள் அடைவதை அறியவே முடியாத என்னுடைய கற்பனை. அது என்ன என்று அவர்களே அறிவார்கள். அந்தச் சூதர்களுக்கும் அரியணை அமர்ந்த மன்னனுக்கும் நடுவே அவர்கள் பரிமாறிக்கொள்ளும் ஏதோ ஒன்று உள்ளது. நாக்கின் நெளிவு மொழியாகி சிந்தையாகி கண்ணீராகி சிரிப்பாகி நிறைவதுபோலத்தான் அதிரும் கம்பிகளில் நெருடிச்செல்லும் விரல்களும். அறையமுடியாத ஓர் ஆடல்.

இசை ஓய்ந்தது. சூதர்கள் யாழையும் குழல்களையும் ஓசையில்லாமல் வைத்துவிட்டு கைகூப்பி வணங்கினர். அந்தச் சூதர்களில் புல்லாங்குழலிசைத்த ஒருவர் விழியிழந்தவர் என்பதை விதுரன் கண்டான். தலைசரிய அமர்ந்திருந்த திருதராஷ்டிரன் யாழ் எஞ்சிய மீட்டலையும் அளித்து ஒய்ந்ததும் மலைப்பாம்புகளைப்போன்ற தன் பெரிய கைகளைத் தூக்கி வணங்கினான். புலித்தோல்ஆசனத்தில் சாய்ந்து கிடந்த பெரிய கரிய உடலைத்தூக்கி நிமிர்ந்து அமர்ந்தான். பெருங்காற்றில் புடைக்கும் பாய்மரங்கள் போல தோள்கள் இறுகி விம்மி அசைய கைகளை விரித்து “மேகத்தைக் காட்டிவிட்டீர்கள் சூதர்களே” என்றான்.

சூதர்குழுவின் தலைவர் “எங்கள் நல்லூழ் அது அரசே” என்றார். சூதர்கள் மலர்ந்த முகத்துடன் புன்னகைசெய்தனர். “இடதுமூலை புல்லாங்குழலை இசைத்தவர் யார்? அவரது இசை எனக்கு மிக இனியதாக இருந்தது” என்று திருதராஷ்டிரன் சொன்னான். விழியிழந்த சூதர் எழுந்து வணங்கி “அரசே, அதை வாசித்தவன் நான். என்பெயர் அவலிப்தன்” என்றார்.

அவரது பெயரைக் கேட்டதும் திருதராஷ்டிரன் இருகைகளையும் விரித்து “நீர் பார்வையற்றவரா?” என்றான். “ஆம் அரசே.” திருதராஷ்டிரனின் இரு கைகளும் விரிந்தவாறு அசையாமல் நின்றன. பின்பு “அருகே வாரும்” என்றான்.

அவலிப்தன் அருகே சென்றதும் திருதராஷ்டிரன் அவரை நோக்கி கைநீட்டினான். அவலிப்தனை இட்டுச்சென்ற சூதர் அவரை திருதராஷ்டிரனின் கைகளுக்கு அருகே தள்ளினார். திருதராஷ்டிரனின் கனத்த கைகள் தன் தோளில் விழுந்தபோது அவலிப்தன் தடுமாறினார். திருதராஷ்டிரன் அவரது தோள்களையும் முகத்தையும் தலையையும் தன் கைகளால் வருடினான். “விதுரா” என்றான். “அரசே” என விதுரன் அருகே சென்றான். “மூடா, நீ வந்ததை உன் நாற்றம் மூலமே அறிந்தேன்… இவருக்கு நூறு பொற்கழஞ்சுகளைக் கொடு…” என்றான்.

“ஆணை” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “அவலிப்தரே, நீர் மணம்புரிந்தவரா?” என்றான். அவலிப்தன் “இல்லை அரசே” என்றார். திருதராஷ்டிரன் “விதுரா, நம் அரண்மனையின் அழகிய சூதப்பெண் ஒருத்தியை இவருக்குக் கொடுக்க நான் ஆணையிடுகிறேன்” என்றான். விதுரன் பணிந்து, “ஆணை” என்றான். “அந்தப்பெண்ணுக்கு நான் ஆயிரம் பொன்னை சீதனமாக அளிப்பேன். அவள் விரும்பும் ஊரில் ஓர் இல்லமும் நூறுபசுக்களும் அளிக்கப்படும் என்று சொல். அதை விரும்பும் பெண்களில் ஒருத்தியைத் தேர்வுசெய்!” விதுரன் “அவ்வண்ணமே” என்றான்.

அவலிப்தன் தன் குழிவிழுந்த கண்களில் இருந்து கண்ணீர் வழிய கைகூப்பி நின்றார். விதுரன் அவரை இளவரசரின் காலில் விழச்செய்யும்படி இன்னொரு சூதரிடம் கைகாட்டினான். அவர் தோளைத்தொட்டு அழுத்தியதும் அவலிப்தன் அப்படியே குனிந்து திருதராஷ்டிரன் கால்களைத் தொட்டு வணங்கினார். அவரது கண்ணீர் தரையில் சொட்டியது. திருதராஷ்டிரன் அவரைத் தூக்கி தன் மார்போடு அணைத்துக்கொண்டான். பெரிய தேக்குமரத்தில் பொந்தில் முளைத்த சிறிய மரம்போலத் தெரிந்தார் அவலிப்தன் அப்போது. தன் கட்டுகளனைத்தையும் இழந்து அவலிப்தன் உடல்குலுங்க அழத்தொடங்கினார்.

விதுரன் அவரை விலக்கிக் கொள்ளுமாறு கையைக் காட்ட சூதர்கள் அவரை இழுத்து விலக்கிச்சென்றனர். “சூதர்களே சிறந்த இசை. உங்கள் அனைவருக்கும் ஐம்பது பொன் கொடுக்க ஆணையிடுகிறேன். அரண்மனை அதிதிக்கூடத்தில் நீங்கள் மேலும் ஒரு மாதம் தங்கி என்னை இசையால் நிறைக்கவேண்டும்” என்றான். “ஆணை அரசே” என்றார் முதிய சூதர். “விதுரா” என்றான் திருதராஷ்டிரன். “ஆணை நிறைவேற்றப்படும் அரசே” என்றான் விதுரன்.

அவர்கள் தங்கள் கருவிகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். அவலிப்தன் அழுதபடி தன் நினைவில்லாதவராக நடந்தார். அவரை இரு சூதர்கள் ஏந்திச்சென்றனர். அவர் செல்வதைப் பார்த்து சற்று புன்னகைத்தபின் விதுரன் திருதராஷ்டிரன் முன்னால் அமர்ந்துகொண்டான்.

திருதராஷ்டிரன் இசையை தன்னுள் மீட்டியபடி ஆசனத்தில் அமர்ந்திருந்தான். பேச்சைத் தொடங்குவதற்காக விதுரன் “இரவுக்குரிய இசை அண்ணா…” என்றான். “ஆம், ஆனால் நான் அந்த வேறுபாட்டுக்கு வெளியே இருக்கிறேன்” என்றான் திருதராஷ்டிரன். “மழை வரவேண்டுமென்று தோன்றியது. இரவில் வெப்பம் அதிகம். நான் நன்றாகத் துயிலவில்லை. காலையில் எழுந்ததுமே மழைக்காலத்தை நினைவுகூர்ந்தேன். ஆகவேதான் மேகராகம் இசைக்கச்சொன்னேன். அவர்கள் இசைத்துக்கேட்டபோது புதுமழையின் குளிரை என் உடலில் உணர்ந்தேன்.”

விதுரன் “ஆம், மேகராகம் மழையைத்தான் நினைவூட்டுகிறது” என்றான். “மழைக்கால ராகம். ஆனால் மழைகொட்டும்போது அதைப்பாடினால் தோலுறையால் போர்த்திக்கொள்வதுபோல வெம்மையாக இருக்கும்.” திருதராஷ்டிரன் தலையை அசைத்தான். பின் சினந்தெழுந்து “நான் உன்னை அழைத்து இரண்டு நாழிகை ஆகிறது… உன் வேலையை முடித்துவிட்டு நீ வரவேண்டுமென நான் சொல்லவில்லை…” என்று உரத்தகுரலில் சொன்னான்.

VENMURASU_EPI_55
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“அரசே, நீங்கள் ஏன் அழைக்கிறீர்கள் என்று தெரியும். ஆகவே உரிய விசாரணைகளை முடித்துவிட்டு வரலாமென நினைத்தேன்” என்றான் விதுரன். அரசே என்ற விளியே அவனை சமன் செய்துவிடுமென அவன் அறிந்திருந்தான். “பீஷ்மப் பிதாமகரை எப்போது தாங்கள் சந்திப்பது என்றும் பேரரசி அப்போது உடனிருக்கலாமா கூடாதா என்றும் விசாரித்துவர ஆளனுப்பினேன். ஆகவேதான் தாமதம்.”

திருதராஷ்டிரன் தோள் தசைகள் அதிர இரு கைகளையும் சேர்த்து பேரொலியுடன் அறைந்தான். “ஏன்? நான் உன்னிடம் சொன்னேனா அவரை நான் பார்க்கவேண்டும் என்று? நான் இந்நாட்டு மன்னன். என்னை அவர் பார்க்கவேண்டும். அதைத்தான் நான் சொன்னேன்.”

“ஆம், அதைத்தான் நானும் சொன்னேன். மன்னரின் விருப்பம் இது, அவர் வந்து சந்திக்கவேண்டும் என்று.” திருதராஷ்டிரனின் கைகள் காமம்கொண்ட வேழங்கள் துதிக்கை பிணைப்பதுபோல இணைந்தன. “அவர் என்னை மதிக்கவில்லை என்றால் நானும் அவரை மதிக்கவில்லை. எனக்கு எவருடைய ஆசியும் தேவை இல்லை. அதை அவரிடம் சொன்னாயா?” என்றான்.

விதுரன் “அரசே, ஒருபோதும் அரசர் இவற்றை நேரடியாக சொல்லக்கூடாது. சொல்வது பிழை என்றல்ல. மாண்புக்குரியதல்ல என்று சொல்கிறேன். அவ்வுணர்ச்சியை நுட்பமான குறிப்புகள் வழியாக நீங்கள் காட்டலாம்.”

திருதராஷ்டிரன் “எப்படி?” என்றான். விதுரன் “குறைந்த சொற்களில் பேசலாம். அல்லது ஒன்றுமே பேசாமலிருக்கலாம். அவர் புரிந்துகொள்வார்.” திருதராஷ்டிரன் ஆமோதித்து தலையசைத்தான். “அவர் என்னை எப்போது சந்திக்கிறார்? என்ன சொல்லி அனுப்பியிருக்கிறார்?”

விதுரன் “இன்னும் தூதன் வரவில்லை. வந்துவிடுவான்…” திருதராஷ்டிரன் தலையை அசைத்து “விப்ரன் எங்கே? அடேய்!” என்றான். “அவனைத்தான் பீஷ்மரைச் சந்திக்க அனுப்பியிருக்கிறேன்….நான் தங்களை இட்டுச்செல்கிறேன்” என்றான் விதுரன்.

திருதராஷ்டிரன் கைநீட்ட அதை விதுரன் பற்றிக்கொண்டான். எழுந்து நின்றபோது விதுரனின் தலை திருதராஷ்டிரனின் நெஞ்சுக்குழி அளவுக்கே உயரமிருந்தது. திருதராஷ்டிரனின் கைகளை தன் தோளில் தாங்க விதுரனால் முடியவில்லை. ‘தூண், படிகள்’ என செல்லும் வழியை மெல்லச் சொல்லியபடியே விதுரன் நடந்தான். திருதராஷ்டிரன் “இந்த அறைக்குள் நான் சிறையிடப்பட்டிருந்தாலும் எனக்கு அனைத்துச் செய்திகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன விதுரா” என்றான்.

திருதராஷ்டிரன் அன்னசாலைக்குச் சென்று முகம்கழுவிவிட்டு உணவுண்ண அமர்ந்தான். நிலத்திலிட்ட சித்திரப்பலகையில் அமர்ந்து பசுவின் குளம்புகள் போல கால்கள் கொண்ட அன்னப்பலகையை தன் முன் வைத்துக்கொண்டான். அவன் வருவதை அறிந்து அன்னத்துடன் சேவகர்கள் கூடி நின்றனர். “நீயும் உண்கிறாயா?” என்றான் திருதராஷ்டிரன். “இல்லை அரசே, நான் பகலில் உண்பதில்லை” என்றான் விதுரன்.

“எப்போதிலிருந்து?” என்றான் திருதராஷ்டிரன். “சென்ற முழுநிலவுமுதல்….பகலில் உணவு அருந்தாமலிருந்தால் உடல் இலகுவாகிறது.” திருதராஷ்டிரன் “ஏன் உன்னை வதைத்துக்கொள்கிறாய் மூடா….ஏற்கனவே உன் உடல் இறகுபோலிருக்கிறது” என்றான். “நன்றாக உண்ணவேண்டும். கனத்த உடலிருந்தால் உள்ளமும் உறுதியாக இருக்கும்.” விதுரன் புன்னகைசெய்தான்.

சேவகர்களுக்கு அவன் சைகை செய்ததும் அவர்கள் கோதுமை அப்பங்களை அவன் அன்னப்பலகைமேல் இருந்த மூங்கில்கூடையில் அடுக்கினார்கள். ஒவ்வொன்றும் விதுரன் இருக்கைப் பலகை அளவுக்கே பெரியவை. ஆனால் அவை திருதராஷ்டிரன் கைகளுக்குச் சிறியவையாகத் தெரிந்தன. அவன் அவற்றை இரண்டாகக் கிழித்து இரண்டுவாயில் உண்டான். பருப்பையும் மாமிசத்தையும் சேர்த்து சமைக்கப்பட்டிருந்த கூட்டை அவற்றுடன் இணைத்துக்கொண்டான்.

சேடியான ஊர்ணை வேகமாக வந்து “மூத்த அரசி அம்பிகை” என்று வருகை அறிவித்தாள். திருதராஷ்டிரன் தலைதூக்காமலேயே “வருக” என்றான். ஊர்ணைக்குப்பின் அம்பிகை முன்னால் வெண்சங்கமும் பின்பக்கம் கவரியுமாக இரு சேடிகள் வர வெள்ளை ஆடையில் நடந்துவந்தாள். திருதராஷ்டிரன் தலையை சரித்து ஆட்டியபடி “அப்பம்” என உறுமினான். அவன் முன்னாலிருந்த கூடையில் அப்பங்களில்லாததை உணர்ந்த சேவகர்கள் மீண்டும் அப்பங்களை அள்ளி அடுக்கினார்கள்.

விதுரன் எழுந்து வணங்கி “அரசியை வணங்குகிறேன்” என்றான். அம்பிகை சேடியரை கையசைவால் செல்லும்படிப் பணித்துவிட்டு திருதராஷ்டிரன் முன்னால் அமர்ந்தாள். அருகே இருந்த கூடையில் இருந்து அப்பங்களை எடுத்து அவன் முன் வைத்துவிட்டு செம்மொழியில் “இன்றுதான் நான் பீஷ்மர் வந்துசென்ற செய்தியைக் கேள்விப்பட்டேன்” என்றாள்.

“செல்லவில்லை அரசி, ஆயுதசாலையில் இருக்கிறார்” என்றான் விதுரன். “மீண்டும் வருவார்.” அம்பிகை “வந்தாகவேண்டும்…நான் காலையில் திருதராஷ்டிரனிடம் சொன்னேன். நீ இந்தநாட்டின் மன்னன் ஆகப்போகிறவன். அவர் பிதாமகராக இருக்கலாம், ஆனால் குடிகள் எவரும் மன்னனுக்கு பணிந்தாகவேண்டும். அவர் உன்னை வந்து சந்தித்துச்செல்லவேண்டிய கடமை கொண்டவர் என்று” என்றாள்.

“அவரை வந்து சந்திக்கச்சொல்லி ஆணை சென்றிருக்கிறது அன்னையே” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “பால்!” என உரக்கக் கூவினான். அம்பிகை “பால் எங்கே? என்ன செய்கிறீர்கள்?” என்றாள். சேவகர்கள் மூவர் பால்குடங்களுடன் வந்தனர். திருதராஷ்டிரன் அவற்றில் ஒன்றை வாங்கி வாயில் வைத்து யானை துதிக்கையால் நீர் உறிஞ்சும் ஒலியில் குடித்தான்.

“வருவாரா?” என்று அம்பிகை கேட்டாள். “வருவாரென்றே நினைக்கிறேன்” என்றான் விதுரன். “நேற்று பேரரசியிடம் அவர் பேசியதென்ன என்று தெரியுமா?” என்று அம்பிகை கேட்டாள். “நீ பேரரசியின் அணுக்கத்தினன். அவள் ஆணையிடாத எதையும் சொல்லப்போவதில்லை. ஆனாலும் கேட்கிறேன்…”

அம்பிகையின் கண்களில் வந்த கூர்மையை விதுரன் கவனித்தான். “நீ எந்தப்பக்கம் இருக்கிறாய் என்று அறிவதற்காகவே இதைக் கேட்கிறேன்” என்றாள் அவள். அவ்வுணர்ச்சியை அவள் மறைக்காததனாலேயே அது ஒருவகை பேதைத்தனம் கொண்டிருப்பதை உணர்ந்து விதுரன் உள்ளூர புன்னகைசெய்துகொண்டான்.

“இதில் மந்தணமென ஏதுமில்லை அரசி. பேரரசி விரும்பாத எதையும் நான் சொல்லப்போவதில்லை” என்றான் விதுரன். “பீஷ்மபிதாமகரிடம் பேரரசி பெரிய இளவரசரின் மணம்கொள்ளலைப் பற்றித்தான் விவாதித்திருக்கிறார். அரசருக்குப் பதினெட்டு வயதாகிறது. மணநிகழ்வும் முடிநிகழ்வும் இன்னும் மூன்றுமாதங்களுக்குள் நிகழ்ந்தாகவேண்டும். அதுதான் பேசப்பட்டது.”

அம்பிகை “அவள் எண்ணத்தில் என்ன திட்டமிருக்கிறது என்று தெரியுமா?” என்றாள். திருதராஷ்டிரன் “எவராக இருந்தாலும் முதன்மை ஷத்ரியக் குலமாக இருக்கவேண்டும். பார்வையற்றவன் என்பதனால் நான் ஒருபோதும் இழிகுலத்தில் மணம்புரியப்போவதில்லை….” என்றான். “விதுரா, மூடா, உன் பேரரசியிடம் சொல். அப்படி ஒரு எண்ணத்துடன் என்னை நெருங்குவதை அவமதிப்பாகவே கொள்வேன்.”

“இல்லை அரசே….அவர்களின் சிந்தையில் இருப்பது காந்தாரம்” என்றான் விதுரன். அம்பிகை “காந்தாரமா? அது மலைவேடர்களின் நாடல்லவா? குலமில்லாதவர்கள். ஷத்ரியர்களால் ஒதுக்கப்பட்டவர்கள்…அவர்களிடம் மணம் கொண்டால் நம்மை காசிநாட்டில் எள்ளி நகையாடுவார்கள்” என்றாள். திருதராஷ்டிரன் பெருங்குரலில் உறுமினான்.

“அரசே, அரசி சொல்லும் காந்தாரத்தின் கதையெல்லாம் பழையபுராணம். இன்று அதுவல்ல நிலைமை. அஸ்தினபுரியின் மொத்தக் கருவூலத்தைவிடப் பெரியது அவர்களின் அன்றாட நிதிக்குவை என்கிறார்கள். உத்தரபதத்தில் இருக்கிறது அவர்களின் தேசம். பீதர்கள் சோனகநாட்டுக்கும் யவனத்துக்கும் கொண்டு செல்லும் பட்டுக்கும் சுவடிப்புல்லுக்கும் அவர்கள் பெறும் சுங்கத்தால் அவர்களிடம் செல்வம் வெள்ளம்போல பெருகிச்சேர்கிறது. அவர்களுடன் ஒப்பிடுகையில் நாம் சின்னஞ்சிறு நாடு…” என்றான்.

அம்பிகை “இருந்தாலும்…” எனத் தொடங்க இடைமறித்து “பேரரசி காந்தாரத்தை மண உறவுக்குள் கொண்டுவர நினைப்பதில் பெரிய திட்டங்கள் உள்ளன அரசி. அந்த மண உறவு நிகழ்ந்தால் நாம் பாரதவர்ஷத்தின் பெரும் ஆற்றலாக உருவெடுப்போம். கங்கைக்கரை ஷத்ரியர்கள் அனைவரையும் அடக்கி நமக்கு கப்பம் கட்டவைப்போம்” என்றான் விதுரன்.

திருதராஷ்டிரன் “அப்பம்!” என் உறுமிவிட்டு “ஆம் அதைச்செய்தாகவேண்டும்… நான் பார்வையற்றவன் என்று அயோத்திநாட்டரசன் எள்ளினான் என்று சொன்னார்கள். அவனை என் காலடியில் வீழ்த்தவேண்டும்” என்றான்.

“இன்றையச் சூழலில் நம்மை காந்தாரம் ஏற்பதுதான் அரிது” என்றான் விதுரன். “அதற்கான திட்டங்களையே பிதாமகரும் பேரரசியும் பேசினர்.” அம்பிகை “என்ன திட்டங்கள்?” என்றாள். “அவர்களிடம் பேச பிதாமகரே நேரில் காந்தாரம் செல்லவிருக்கிறார். காந்தாரத்துக்கும் அஸ்தினபுரிக்கும் இடையேயான நட்பு எப்படி இருநாடுகளையும் பேரரசுகளாக ஆக்கும் என்பதை விளக்கப் போகிறார். நம் அரசர் விழியிழந்தவரென்றாலும் எல்லையற்ற தோள்வல்லமை கொண்டவர் என்பதை சொல்லவிருக்கிறார்.”

“அதை அவர் சொல்லியாகவேண்டும்…” என்றான் திருதராஷ்டிரன்.  “பார்தவர்ஷத்தின் எந்த மல்லனும் என்னுடன் சமரிட வரலாம்.” விதுரன் புன்னகைத்தபடி “உங்களை வெல்ல இன்று இங்கே எவருமில்லை அரசே. சிபிநாட்டின் பால்ஹிகருக்கு நிகரானவர் நீங்கள். அவரை எவரும் வென்றதேயில்லை” என்றான்.

அம்பிகை “என் மைந்தன் அரசாளவேண்டும். அடுத்த முழுநிலவுநாளில் அவன் ஹஸ்தியின் அரியணையில் அமர்ந்தாகவேண்டும்” என்றாள். “ஒவ்வொருநாளும் நான் எண்ணிக்கொண்டிருப்பது அதைத்தான். சென்ற பதினெட்டாண்டுகளாக நான் அதற்காகக் காத்திருக்கிறேன்.”

“அதில் என்ன ஐயம்?” என்றான் விதுரன். “உடற்குறையிருப்பவன் அரசாளக்கூடாதென்று சில வைதிகர் சொல்கிறார்களே?” என்றாள் அம்பிகை. “அப்படி ஒரு சொல் பிரஹஸ்பதியின் ஸ்மிருதியில் உள்ளது அரசி. ஆனால் சிறந்த அமைச்சர்களைக் கொண்ட மன்னன் நூறு விழிகளைக் கொண்டவன் என்றும் அதே நெறிநூல்கள்தான் சொல்கின்றன. அவ்வாறு நம் அரசருக்கு பார்வையில்லை என்று சொல்லும் எந்த வைதிகனிடமும் நாம் ஒன்றைத்தான் சொல்லப்போகிறோம். நான் நம் அரசரின் அமைச்சன், அவரது குருதியும் கூட. நூலிலோ வழக்கிலோ நம்பிக்கையிலோ நானறியாத ஏதேனும் ஆட்சிமுறையோ முதுநெறியோ அறமோ இருக்கிறதென அவர் நிறுவட்டும்… அப்படி நிறுவவில்லை என்றால் நம் அரசர் ஆயிரம் விழிகள் கொண்டவர் என அவர்கள் ஏற்றாகவேண்டும். அந்த அறைகூவலை ஏற்கும் எவரும் இன்று பாரதவர்ஷத்தில் இல்லை.”

அம்பிகை “அதைத்தான் நானும் நம்பியிருக்கிறேன்” என்றாள். “ஆனாலும் என்னை கவலை அரித்துக்கொண்டிருக்கிறது… என்னைச்சூழ்ந்து ஏதோ வஞ்சம் நிகழ்ந்துகொண்டிருப்பதாக தோன்றிக்கொண்டே இருக்கிறது” என்றாள்.

அன்னசாலை வாயிலில் விப்ரன் வந்து நின்றான். “என்ன?” என்றான் விதுரன். விப்ரன் தயங்கினான். “சொல், என்ன?” என்றான் திருதராஷ்டிரன். “அரசச்செய்தி என்றால் அரசியும் அரசரும் கேட்கலாமே” என்றான் விதுரன். விப்ரன் “நான் பிதாமகரைப் பார்த்தேன்… அவரிடம் அரசர் சந்திக்கவிரும்புவதைச் சொன்னேன்” என்றபின் மீண்டும் தயங்கினான். “எப்போது சந்திக்க வருகிறார்?” என்று அம்பிகை கேட்டாள்.

விப்ரன் “அவர் நம் அரசரை நாளைக்காலை புலரிவேளையில் அவரது ஆயுதசாலையில் சென்று சந்திக்கும்படி சொன்னார்” என்றான். சிலகணங்கள் அது திருதராஷ்டிரனுக்கு புரியவில்லை. புரிந்ததும் தன் இரு கைகளையும் பாறைகள் உடையும் ஒலியுடன் ஓங்கி அறைந்துகொண்டு எழுந்துவிட்டான். “என்ன சொன்னார்? சொல்…இப்போதே சொல்…என்ன சொன்னார்?”

விதுரன் “அவரை தாங்கள் சென்று சந்திக்கும்படி சொல்லியிருக்கிறார் அரசே” என்றான். “விதுரா, நம் தளபதிகளிடம் சொல். இப்போதே அவரை சிறையிட்டுக் கொண்டுவந்து என் முன் நிறுத்தும்படி சொல்” என்று பெருங்குரலில் கூச்சலிட்டபடி திருதராஷ்டிரன் கைகளை விரித்தான். வானை நோக்கி அவற்றைத் தூக்கியபடி “அவர் என் காலடியில் வந்து விழவேண்டும்… இன்றே” என்றான்.

விதுரன் “அரசே, முறையென ஒன்றுள்ளது” என்றான். “அவர் உங்கள் பிதாமகர். இந்தநாட்டு மக்களின் நெஞ்சில் தந்தையுருவாக வாழ்பவர். அவரைச் சிறையிடும்படி நீங்கள் சொன்னால் தளபதிகளும் தயங்குவார்கள். வைதிகர்கள் ஏற்கமாட்டார்கள். அனைத்தையும் விட மக்கள் ஏற்கமாட்டார்கள். தாங்களோ இன்னும் முடிசூடவில்லை. முடிசூட மக்கள் எதிர்ப்பையும் வெல்லவேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். இன்று நீங்கள் எவரையும் பகைகொள்ள முடியாது. எந்த நெறியையும் மீறமுடியாது.”

“அப்படியென்றால் என்ன செய்யலாம்? என் ஆணை தூக்கிவீசப்படுகிறது. விழியற்றவன் என என்னை ஏளனம் செய்திருக்கிறார் பிதாமகர். அவரை விட்டுவிடவா சொல்கிறாய்?” என்றான் திருதராஷ்டிரன். அவன் விழிகள் தனியாக உயிர்கொண்டவை போல துள்ளி ஆடின. விதுரனை நோக்கி குனிந்து “சொல்…நீ என்ன வழி வைத்திருக்கிறாய்?” என்று கூவினான்.

“அரசே, அவரை நீங்கள் தண்டிக்கத்தான் வேண்டும்… அதற்குரிய சிறந்த வழியும் உள்ளது. அவரை நீங்கள் துவந்தயுத்தத்துக்கு அழையுங்கள்” என்றான் விதுரன். “அது வீரர்களின் வழி. எப்பாவமும் அதில் கலக்காது. நாட்டாரும் முனிவரும் வைதிகரும் அதை மறுக்கமுடியாது.”

அம்பிகை “அவர் தனுர்வேத ஞானி…” என்று இடைமறித்துப் பதறினாள். “ஆம்… ஆனால் தங்கள் மைந்தர் இந்நாட்டு அரசர். அரசர் எவரொருவரை போர்செய்ய அழைத்தாலும் போர்முறையையும் போர்க்கருவியையும் அவரே முடிவு செய்யலாம். நம் அரசர் மல்யுத்தத்தை தேர்ந்தெடுக்கட்டும்” என்று விதுரன் சொன்னான். திருதராஷ்டிரன் இருகைகளையும் தட்டியபடி “ஆம்… அது சரியான வழி… என்னுடன் அவர் மல்யுத்தம் செய்யட்டும். அவரை கசக்கி ஒடித்துவிடுகிறேன்” என்றான்.

“ஆனால்” என தொடங்கிய அம்பிகையை இடைமறித்து விதுரன் “இது ஒன்றே வழி அரசி. பீஷ்மரையே நம் அரசர் வென்றுவிட்டாரென்றால் அதன்பின் இந்நகரில் அவரை அவமதிக்க எவரும் துணியமாட்டார்கள். மர்க்கடஹஸ்தி மார்க்கம் என்று இதைச் சொல்வார்கள் நெறிநூல்களில். குரங்குகளிலும் யானைகளிலும் எது வலிமை மிக்கதோ அது இயல்பாகவே அரசனாகிவிடுகிறது. அதை எவரும் அரசனாக ஆக்கவேண்டியதில்லை. அதை ஏற்காதவர்கள் அதனுடன் போரிட்டுக் கொல்ல முயலலாம். முடியாவிட்டால் உயிர்விடலாம்…” என்றான். திருதராஷ்டிரனிடம் “அரசே, மர்க்கடஹஸ்தி நியாயப்படி எது முன்னர் வல்லமை மிக்கதாக இருக்கிறதோ அதை வெல்வதே அரசனாக ஆகும் வழி. நீங்கள் பீஷ்மரை வென்றுவிட்டால் உங்களை இம்மக்கள் அரசனாக ஏற்றாகிவிட்டதென்றே பொருள்” என்றான்.

“ஆம்… அதுதான் வழி… டேய் விப்ரா” என்றான் திருதராஷ்டிரன். “அரசே” என்று விப்ரன் பணிந்தான். “உடனே பீஷ்மருக்கு துவந்தயுத்தத்துக்கான அறைகூவலை முறைப்படி அனுப்பு… என்னுடன் அவர் மல்யுத்தம் செய்யவேண்டுமென்று சொல்!” என்ற பின் திருதராஷ்டிரன் திரும்பி “மல்யுத்தத்தின் விதியை அறிவாயல்லவா விதுரா? தோல்வி என்றால் அது இறப்பு மட்டுமே” என்றான். “ஆம், அதுவே முறை” என்றான் விதுரன்.

“ஆனால்…” என அம்பிகை பேசவர “அரசி, பாரதவர்ஷத்தின் பெருந்தோள்களுக்குரியவர் நம் அரசர். அரைநாழிகை நேரத்தில் மற்போர் முடிந்துவிடும். பீஷ்மர் மாள்வார். அனைத்து இக்கட்டுகளும் எளிதாக முடிவுக்கு வரும்” என்றான் விதுரன்.

நூல் இரண்டு – மழைப்பாடல் – 4

பகுதி ஒன்று  : வேழாம்பல் தவம்

[ 4 ]

சத்யவதி நன்றாக முதுமை எய்தி இளைத்திருப்பதாக பீஷ்மர் நினைத்தார். அவளைப் பார்த்த முதல்கணம் அவருக்குள் வந்த எண்ணம் அதுதான். அவள் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் அறிந்திருந்தார். ஆனால் கோபுரத்தின் எடையைத்தாங்கும் ஆமையைப்போல அவ்வளவு படிந்திருப்பாளென எண்ணவில்லை. அவள் கண்களுக்குக் கீழே தசைவளையங்கள் தொங்கின. வாயின் இருபக்கமும் அழுத்தமான கோடுகள் விழுந்து உதடுகள் உள்ளடங்கி அவள் இறுக்கமாக எதையோ பொத்திப்பிடித்திருக்கும் ஒரு கைபோலத் தோன்றினாள்.

வணங்கியபடி “அன்னையே, உங்கள் புதல்வன் காங்கேயனுக்கு அருள்புரியுங்கள்” என்றார். சத்யவதி அவரை ஏறிட்டு நோக்கி “முதல்கணம் உன்னைக் கண்டதும் என் நெஞ்சு நடுங்கிவிட்டது தேவவிரதா. மெலிந்து கருமைகொண்டு எவரோ போலிருக்கிறாய். ஆனால் உன்னியல்பால் நீ பயணத்தை மிக விரும்பியிருப்பாய் என்று மறுகணம் எண்ணிக்கொண்டேன்” என்றாள்.

“நீங்களும் மிகவும் களைத்திருக்கிறீர்கள் அன்னையே” என்றார் பீஷ்மர். “தங்கள் உள்ளம் சுமைகொண்டிருக்கிறதென நினைக்கிறேன்.” சத்யவதி பெருமூச்சுவிட்டு “நீ அறியாதது அல்ல. இருபத்தைந்தாண்டுகளாக என் சுமை மேலும் எடையேறியே வருகிறது” என்றாள். பீஷ்மர் அவள் அன்பற்ற மூர்க்கனை கணவனாக அடைந்தவள் போலிருப்பதாக எண்ணிக்கொண்டார். அவள் அஸ்தினபுரியிடம் காதல்கொண்டவள் என்று மறுகணம் தோன்றியது.

பீஷ்மர் “மைந்தர்களைப்பற்றி வந்ததுமே அறிந்தேன்” என்றார். சத்யவதி அவர் கண்களை நோக்கி “நான் உன்னிடம் வெளிப்படையாகவே சொல்கிறேனே, நீ இங்கிருந்தால் அரசிகளின் உள்ளங்கள் நிறையில் நில்லாதென்று நினைத்தேன். ஆகவேதான் உன்னை இந்த நகரைவிட்டு நீங்கும்படி நான் சொன்னேன். அன்று அந்த வைதிகர் சொன்னதை அதற்காகப் பயன்படுத்திக்கொண்டேன்” என்றாள்.

பீஷ்மர் மெல்ல தலையசைத்தார். “அதில் பிழையில்லை அன்னையே” என்றார். “இல்லை தேவவிரதா, அது மிகப்பெரிய பிழை என்று இன்று உணர்கிறேன். இரு மைந்தர்களும் உன் பொறுப்பில் வளர்ந்திருக்கவேண்டும். இன்று இருவருமே பயன்படாதவர்களாக இருக்கிறார்கள்” என்றாள் சத்யவதி.

பீஷ்மர் “அன்னையே, அவர்கள் என் தமையனின் மைந்தர்கள். ஒருபோதும் அவர்களிடம் தீமை விளையாது. அவர்கள் பயிலாதவர்களாக இருக்கலாம். அதை மிகச்சிலநாட்களிலேயே நான் செம்மை செய்துவிடமுடியும். அத்துடன் ஆட்சியை நடத்த என் தமையனின் சிறியவடிவமாகவே நீங்கள் ஓர் அறச்செல்வனை உருவாக்கியும் இருக்கிறீர்கள்” என்றார்.

சத்யவதியின் முகம் மலர்ந்தது. “ஆம், தேவவிரதா. இன்று என் குலம் மீது எனக்கு நம்பிக்கை எழுவதே அவனால்தான். அவனிருக்கும்வரை இக்குலம் அழியாது. இங்கு அறம் விலகாது” என்றாள். “அவனைப் பார்த்தாயல்லவா? கிருஷ்ணனின் அதே முகம், அதே கண்கள், அதே முழங்கும் குரல்… இல்லையா?” பீஷ்மர் சிரித்தபடி “யமுனையின் குளுமையை அவன் கண்களில் கண்டேன்” என்றார். அச்சொல் சத்யவதியை மகிழ்விக்குமென அறிந்திருந்தார். அவள் அனைத்துக் கலக்கங்களையும் மறந்து புன்னகைத்தாள்.

பின்பு நினைத்துக்கொண்டு கவலையுடன் “தேவவிரதா, பத்தொன்பதாண்டுகளுக்கு முன்பு அஸ்தினபுரி அடைந்த அதே இக்கட்டை மீண்டும் வந்தடைந்திருக்கிறோம்” என்றாள். “மூத்த இளவரசனுக்கு இப்போது பதினெட்டாகிவிட்டது. அவனை அரியணையில் அமர்த்தவேண்டும். அவனால் அரியணையமர முடியாது என்று ஷத்ரியமன்னர்கள் பேசிக்கொள்கிறார்கள். இரண்டாவது இளவரசன் சூரிய ஒளியில் நிற்கமுடியாதவன் என்பதனால் அவனும் அரசனாக முடியாதென்கிறார்கள். விதுரனை அரசனாக ஆக்க நான் முயல்வதாக வதந்திகளை நம் நாட்டிலும் அவர்களின் ஒற்றர்கள் பரப்புகிறார்கள். பிராமணர்களும் வைசியர்களும் அதைக்கேட்டு கொதிப்படைந்திருக்கிறார்கள்.”

பீஷ்மர் “அன்னையே அவையெல்லாமே சிறுமதிகொண்டவர்களின் பேச்சுக்கள். இந்த கங்கையும் சிந்துவும் ஓடும் நிலம் உழைப்பில்லாமல் உணவை வழங்குகிறது. ஷத்ரியர்கள் அதில் குருவிபறக்கும் தூரத்துக்கு ஓர் அரசை அமைத்துக்கொண்டு அதற்குள் பேரரசனாக தன்னை கற்பனைசெய்துகொண்டு வாழ்கிறார்கள். அவர்களின் கனவுகளெல்லாம் இன்னொரு ஷத்ரியனின் நாட்டைப் பிடித்துக்கொள்வதைப் பற்றித்தான். இல்லையேல் இன்னொருநாட்டு பெண்ணைக் கவர்வதைப்பற்றி. இவர்களின் சிறுவட்டத்துக்கு வெளியே உலகமென ஒன்றிருக்கிறது என்று இவர்கள் அறிவதேயில்லை.”

“ஆம், நீ சென்று வந்த தேவபாலத்தைப்பற்றி ஒற்றன் சொன்னான்” என்றாள் சத்யவதி. பீஷ்மர் அந்தச் சொல்லைக்கேட்டதுமே முகம் மலர்ந்தார். “தேவபாலம் கூர்ஜரர்களின் ஒரு துறைமுகம்தான். ஆனால் அது பூனையின் காதுபோல உலகமெங்கும் எழும் ஒலிகளை நுண்மையாக கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்தத் துறைமுகத்தில் நின்றபோது என்னென்ன வகையான மனிதர்களைக் கண்டேன்! பாறைபோன்ற கருப்பர்கள் சுண்ணம்போன்ற வெண்ணிறம் கொண்டவர்கள் நெருப்பைப்போலச் சிவந்தவர்கள். பீதமலர்களைப்போல மஞ்சள்நிறமானவர்கள். எவ்வளவு மொழிகள். என்னென்ன பொருட்கள். அன்னையே, ஐநூறு வருடம் முன்பு மண்ணுக்குள் இருந்து இரும்பு பேருருவம் கொண்டு எழுந்துவந்தது. அது உலகை வென்றது. இரும்பை வெல்லாத குலங்களெல்லாம் அழிந்தன. இன்று அவ்வாறு பொன் எழுந்து வந்திருக்கிறது. பொன்னால் உலகை வாங்கமுடியும். பீதர்களின் பட்டையோ யவனர்களின் மதுவையோ எதையும் அது வாங்கமுடியும். வானாளும் நாகம்போல பொன் உலகை சுற்றி வளைத்துப் பிணைப்பதையே நான் கண்டேன்.”

VENMURASU_5EPI_54__
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

சத்யவதியின் கண்கள் பேராசையுடன் விரிந்தன. “கூர்ஜரம் பேரரசாக ஆகும். அதைத் தடுக்கமுடியாது” என்றாள். “நதிகள் ஜனபதங்களை இணைத்த காலம் முடிந்துவிட்டது. இனி கடலை ஆள்பவர்களே மண்ணை ஆளமுடியும்.” பீஷ்மர் “அன்னையே, நாம் கடலையும் ஆள்வோம்” என்றார். “அதற்கு நாம் அஸ்தினபுரி என்ற இந்த சிறு முட்டைக்குள் குடியிருக்கலாகாது. நமக்குச் சிறகுகள் முளைக்கவேண்டும். நாம் இந்த வெள்ளோட்டை உடைத்துப் பறந்தெழவேண்டும்.”

சத்யவதியின் மலர்ந்த முகம் கூம்பியது. பெருமூச்சுடன் “பெரும் கனவுகளைச் சொல்கிறாய் தேவவிரதா. நானும் இதைப்போன்ற கனவுகளைக் கண்டவள்தான். இன்று நம் முன் இருப்பது மிகவும் சிறுமைகொண்ட ஒரு இக்கட்டு. நாம் இன்னும் மூன்றுமாதங்களுக்குள் திருதராஷ்டிரனை அரியணை ஏற்றவேண்டும். இல்லையேல் ஷத்ரியர்களின் கூட்டு நம் மீது படைகொண்டு வரும்” என்றாள்.

“வரட்டும், சந்திப்போம்” என்றார் பீஷ்மர். “நீ வெல்வாய், அதிலெனக்கு ஐயமே இல்லை. ஆனால் அந்தப்போருக்குப் பின் நாம் இழப்பதும் அதிகமாக இருக்கும். மகதமும் வங்கமும் கலிங்கமும் நாம் இன்று நிகழ்த்தும் வணிகத்தை பங்கிட்டுக்கொள்ளும்” சத்யவதி சொன்னாள். “நான் போரை விரும்பவில்லை. அவ்வாறு போரைத் தொடங்குவேனென்றால் கங்கைக்கரையிலும் கடலோரமாகவும் உள்ள அனைத்து அரசுகளையும் முற்றாக என்னால் அழிக்கமுடிந்தால் மட்டுமே அதைச் செய்வேன்.” அவள் கண்களைப் பார்த்த பீஷ்மர் ஒரு மன அசைவை அடைந்தார்.

பீஷ்மர் ‘ஆம் அன்னையே’ என்றார். சத்யவதி “நாம் திருதராஷ்டிரனுக்கு உகந்த மணமகளை தேடி அடையவேண்டியிருக்கிறது” என்றாள். பீஷ்மர் “விழியிழந்தவன் என்பதனால் நம்மால் சிறந்த ஷத்ரிய அரசுகளுடன் மணம்பேச முடியாது” என்றார். “சேதிநாட்டில் ஓர் இளவரசி இருப்பதாகச் சொன்னார்கள்.”

சத்யவதி கையை வீசி “சேதிநாடு அவந்திநாடு போன்ற புறாமுட்டைகளை நான் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை” என்றாள். “அவர்களிடமிருந்து நாம் மணம்கொள்வோமென அவர்கள் நினைத்திருக்கிறார்கள். அந்த மணம் நம்மை எவ்வகையிலும் வலுப்படுத்தப்போவதில்லை. சொல்லப்போனால் அந்நாடுகளை பிற ஷத்ரியர் தாக்கும்போது நாம் சென்று பாதுகாப்பளிக்கவேண்டுமென எண்ணுவார்கள். அது மேலும் சுமைகளிலேயே நம்மை ஆழ்த்தும்.”

பீஷ்மர் அவளே சொல்லட்டும் என காத்திருந்தார். “நமக்குத் தேவை நம்மை மேலும் வல்லமைப்படுத்தும் ஓரு மண உறவு.” பீஷ்மர் அதற்கும் பதில் சொல்லவில்லை. சத்யவதி “காந்தாரநாட்டில் ஓர் அழகிய இளவரசி இருப்பதாகச் சொன்னார்கள்” என்றாள். பீஷ்மர் திகைத்து “காந்தாரத்திலா?” என்றார். சத்யவதி “ஆம், வெகுதொலைவுதான்” என்றாள்.

“அன்னையே தொலைவென்பது பெரிய இக்கட்டுதான். ஆனால்…” பீஷ்மர் சற்றுத் தயங்கியபின்பு முடிவெடுத்து “தாங்கள் காந்தாரம் பற்றி சரியான தகவல்களை கேள்விப்பட்டிருக்கவில்லை என நினைக்கிறேன். காந்தாரத்தின் நிலப்பரப்பு நம்மைவிட பன்னிரண்டு மடங்கு அதிகம். அந்நிலம் வெறும்பாலை என்பதனால் முன்பொருகாலத்தில் அவர்கள் வேட்டுவர்களாகவும் நம்மைவிட இழிந்தவர்களாகவும் கருதப்பட்டிருந்தனர். முற்காலத்தில் சந்திரகுலத்திலிருந்து தந்தையின் பழிச்சொல்லால் இழித்து வெளியேற்றப்பட்ட துர்வசு தன் ஆயிரம் வீரர்களுடன் காந்தாரநாட்டுக்குச் சென்று அங்கே அரசகுலத்தை அமைத்தார். ஆகவே சப்தசிந்துவிலும் இப்பாலும் வாழ்ந்த நம் முன்னோர் எவரும் அவர்களை ஷத்ரியர்கள் என எண்ணியதில்லை. அங்கே வலுவான அரசோ நகரங்களோ உருவாகவில்லை. அறமும் கலையும் திகழவுமில்லை.”

பீஷ்மர் தொடர்ந்தார் “ஆனால் சென்ற நூறாண்டுகளாக அவர்கள் மாறிவிட்டனர். பீதர் நிலத்தில் இருந்து யவனத்துக்குச் செல்லும் பட்டும் ஓலைத்தாள்களும் உயர்வெல்லமும் முழுக்கமுழுக்க அவர்களின் நாடுவழியாகவே செல்கிறது. அவர்கள் இன்று மாதமொன்றுக்கு ஈட்டும் சுங்கம் நமது ஐந்துவருடத்தைய செல்வத்தைவிட அதிகம். அவர்கள் நம்மை ஏன் ஒருபொருட்டாக நினைக்கவேண்டும்?”

“அனைத்தையும் நான் சிந்தித்துவிட்டேன். அவர்கள் இன்று ஒரு பேரரசாக வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் இடத்தில் நான் நின்று சிந்தித்தேன். இன்று அவர்களின் தேவை என்ன? பெரும்செல்வம் கைக்கு வந்துவிட்டது. செல்வத்தைக்கொண்டு நாட்டை விரிவாக்கவேண்டும் இல்லையா? காந்தாரம் மேற்கே விரியமுடியாது. அங்கிருப்பது மேலும் பெரும்பாலை. அவர்கள் கிழக்கே வந்துதான் ஆகவேண்டும். கிழக்கேதான் அவர்கள் வெல்லவேண்டிய வளம் மிக்கநிலமும் ஜனபதங்களும் உள்ளன. இன்றல்ல, என்றுமே காந்தாரத்தில் படையோ பணமோ குவியுமென்றால் அவர்கள் சப்தசிந்துவுக்கும் கங்கைக்கும்தான் வருவார்கள்.”

அவள் என்ன சொல்லவருகிறாள் என்று பீஷ்மருக்குப் புரியவில்லை. “அவர்களுக்கு அஸ்தினபுரத்தையே தூண்டிலில் இரையாக வைப்போம்” என்றாள் சத்யவதி. அக்கணமே அவர் அனைத்தையும் புரிந்துகொண்டு வியந்து அவளையே நோக்கினார். “சிந்தித்துப்பார், அவர்கள் சந்திரவம்சத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். ஷத்ரியர்கள் அல்ல என்று இழித்துரைக்கப்பட்டவர்கள். ஆகவே அவர்கள் இங்குள்ள மகாஜனபதங்கள் பதினாறையும் வெல்லவே விரும்புவார்கள். அதற்கு முதலில் இங்குள்ள அரசியலில் கால்பதிக்கவேண்டும். அதன்பின்புதான் இங்குள்ள பூசல்களில் தலையிடமுடியும். ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி ஷத்ரியர்கள்மேல் படையெடுக்கமுடியும்.”

“ஆம்” என்றார் பீஷ்மர். “அதற்கு அவர்களுக்கும் குலஷத்ரியர் என்ற அடையாளம் தேவை. அஸ்தினபுரியுடன் உறவிருந்தால் அவ்வடையாளத்தை அடையமுடியும். அவர்கள் உண்மையில் அஸ்தினபுரியின் பழைய உரிமையாளர்களும்கூட. யயாதியின் நேரடிக்குருதி அவர்களிடம் இருக்கிறது.” சத்யவதி கண்களை இடுக்கி சற்றே முன்னால் சரிந்து “தேவவிரதா, காந்தாரமன்னன் சுபலன் எளிமையான வேடனின் உள்ளம் கொண்டவன். செல்வத்தை என்ன செய்வதென்றறியாமல் திகைப்பவன். அவனுக்கு அஸ்தினபுரியின் உறவு அளிக்கும் மதிப்பு மீது மயக்கம் வரலாம். அதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அதைவிட முக்கியமானது ஒன்றுண்டு. சுபலனின் மைந்தன் சகுனி. அவன் பெருவீரன் என்கிறார்கள். நாடுகளை வெல்லும் ஆசைகொண்டவன் என்கிறார்கள். சிபிநாட்டையும் கூர்ஜரத்தையும் வெல்ல தருணம் நோக்கியிருக்கிறான் என்று சூதர்கள் பாடுகிறார்கள். அவனுக்கு நாம் அளிப்பது எத்தனை பெரிய வாய்ப்பு!”

“அவன் மூடனாக இருக்க வாய்ப்பில்லை” என்றார் பீஷ்மர். “ஆம், ஆனால் ஆசைகொண்டவன் மூடனாக ஆவது மிக எளிது” என்றாள் சத்யவதி. “அவனுடைய கண்களால் பார். இந்த அஸ்தினபுரி இன்று விழியிழந்த ஓர் இளவரசனையும் வெயில்படாத ஓர் இளவரசனையும் வழித்தோன்றல்களாகக் கொண்டுள்ளது. அந்தப்புரத்தில் இருந்து அரசாளும் முதுமகளாகிய நான் இதன் அரியணையை வைத்திருக்கிறேன். ஆட்சியில் ஆர்வமில்லாத நீ இதன் பிதாமகனாக இருக்கிறாய். இந்த அரியணையை மரத்தில் கனிந்த பழம்போல கையிலெடுத்துவிடலாமென சுபலனும் சகுனியும் எண்ணுவார்கள் என்பதில் ஐயமே இல்லை.”

“ஆம் அன்னையே, அவன் அதிகாரவிருப்புள்ளவன் என்றால் அவனால் இந்தத் தூண்டிலைக் கடந்துசெல்லவே முடியாது” என்றார் பீஷ்மர். “அவன் இதை விடப்போவதில்லை, அதிலெனக்கு ஐயமே இல்லை.” பீஷ்மர் தாடியை நீவியபடி “ஆனால் அவனுடன் நம் உறவு எப்படி இருக்கும் என்பதை நாம் இப்போதே அமர்ந்து முடிவெடுக்கமுடியாது. ஒருவேளை…”

அவர் சொல்லவருவதை அவள் புரிந்துகொண்டாள். “முடிவெடுக்கலாம். ஒருபோதும் காந்தாரன் நேரடியாக அஸ்தினபுரியை வென்று ஆட்சியமைக்கமுடியாது. நாம் காந்தாரத்தையும் ஆளமுடியாது. அது பாலை, இது பசும்நிலம். அவன் நம்மைச்சார்ந்துதான் இங்கே ஏதேனும் செய்யமுடியும்… அவன் எதிர்பார்க்கக்கூடியது ஒன்றே. அவன் நாட்டு இளவரசி பெறும் குழந்தை அஸ்தினபுரியை ஆளும் சக்கரவர்த்தியாகவேண்டும் என்று. அது நிகழட்டுமே!”

“அன்னையே, கடைசிச் சொல்வரை நீங்களே சிந்தனை செய்திருக்கிறீர்கள். இனி நான் செய்வதற்கென்ன இருக்கிறது? ஆணையிடுங்கள்” என்றார் பீஷ்மர். “சௌபாலனாகிய சகுனியிடம் நீ பேசு. அவன் தன் தமக்கையை நமக்கு அளிக்க ஒப்புக்கொள்ளச்செய். அவனே தன் தந்தையிடம் பேசட்டும். அவன் ஏற்றுக்கொண்டால் அனைத்தும் நிறைவாக முடிந்துவிட்டதென்றே பொருள். பாரதவர்ஷத்தை அஸ்தினபுரியில் இருந்துகொண்டு ஆளமுடியும் என்ற கனவை சகுனியின் நெஞ்சில் விதைப்பது உன் பணி” என்றாள் சத்யவதி.

“ஆணை அன்னையே” என்றார் பீஷ்மர். “தங்கள் விருப்பப்படியே செய்கிறேன்” என்று எழுந்து தலைவணங்கினார். “தேவவிரதா, இந்த அரியணையுடன் தெய்வங்கள் சதுரங்கமாடுகின்றன. பெருந்தோள்கொண்ட பால்ஹிகனையும் வெயிலுகக்காத தேவாபியையும் மீண்டும் இங்கே அனுப்பிவிட்டு அவை காத்திருக்கின்றன. நாம் என்ன செய்வோமென எண்ணி புன்னகைக்கின்றன. நாம் நம் வல்லமையைக் காட்டி அந்த தெய்வங்களின் அருளைப் பெறும் தருணம் இது.”

“நம் தெய்வங்கள் நம்முடன் இருந்தாகவேண்டும் அன்னையே” என்றார் பீஷ்மர். “நான் பொன்னின் ஆற்றலை அஞ்சத்தொடங்கியிருக்கிறேன். நீங்கள் சொல்லும் அனைத்து நியாயங்களுக்கும் அப்பால் அந்த அச்சம் என்னுள் வாழ்கிறது.” சத்யவதி “அவர்கள் நம்மை ஒன்றும் செய்யமுடியாது தேவவிரதா. நம்மிடம் தேர்ந்த படைகள் இருக்கின்றன. தலைமைதாங்க நீ இருக்கிறாய். அனைத்தையும்விட காந்தாரத்தை நம்மிடமிருந்து பிரிக்கும் கூர்ஜரமும் பொன்னின் வல்லமை கொண்ட நாடுதான்.”

“அன்னையே நீங்கள் காந்தாரத்தை நம்முடன் சேர்த்துக்கொள்ள என்ன காரணம்?” என்றார் பீஷ்மர். “வெறும் அரியணைத் திட்டமல்ல இது.” சத்யவதி “இந்த ஷத்ரியர்களின் சில்லறைச் சண்டைகளால் நான் சலித்துவிட்டேன் தேவவிரதா. குரைக்கும் நாய்களை பிடியானை நடத்துவதுபோல இவர்களை நடத்திவந்தேன். ஆனால் இன்று அந்தப் பொறுமையின் எல்லையை கண்டுவிட்டேன். அவர்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்த விரும்புகிறேன். அத்துடன் கங்கைவழி வணிகத்தில் நம்மிடம் முரண்படுவதற்கான துணிவை எவரும் அடையலாகாது என்றும் காட்டவிரும்புகிறேன்” என்றாள்.

அவள் கண்கள் மின்னுவதை பீஷ்மர் கவனித்தார். “ஏதேனும் மூன்றுநாடுகள். அங்கம் வங்கம் மகதம் அல்லது வேறு. படைகொண்டு சென்று அவற்றை மண்ணோடு மண்ணாகத் தேய்க்கப்போகிறேன். அவற்றின் அரசர்களை தேர்க்காலில் கட்டி இழுத்துவந்து அஸ்தினபுரியின் முகப்பில் கழுவேற்றுவேன். அவர்களின் பெண்களை நம் அரண்மனையின் சேடிகளாக்குவேன்… இனி என்னைப்பற்றியோ என் குலத்தைப்பற்றியோ அவர்கள் ஒரு சொல்லும் சொல்லக்கூடாது. நினைக்கவும் அஞ்சவேண்டும்.”

அவள் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து பீஷ்மர் எழுந்தார். வணங்கிவிட்டு வெளியே சென்றார். வெளியே நின்றிருந்த விதுரனிடம் இன்சொல் சொன்னபிறகு முற்றத்துக்குச் சென்று ரதத்தில் ஏறிக்கொண்டார். ஹரிசேனன் ரதத்தை ஓட்டினான்.

பீஷ்மர் சிந்தனையில் மூழ்கி அமர்ந்திருந்தார். பின்மதியத்தில் வெயில் முறுகியிருந்தது. மண்ணிலிருந்து எழுந்த நீராவி விண்ணிலேயே குளிர்ந்து சில சொட்டுக்களே கொண்ட மழையாகப் பெய்தது. அந்த மழை வெயிலின் வெம்மையை அதிகரித்தது. வியர்வையையும் தாகத்தையும் உருவாக்கியது. ஒவ்வொருவரும் நீர் நீர் என ஏங்குவதை முகங்கள் காட்டின. வேழாம்பல்கள் பேரலகைத் திறந்து காத்திருக்கும் நகரம் என அவர் நினைத்துக்கொண்டார்.

நூல் இரண்டு – மழைப்பாடல் – 3

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம்

[ 3 ]

கிருதயுகத்தில் கங்கை ஓடிய பள்ளத்தின் விளிம்பில் இருந்தது அஸ்தினபுரி. மறுமுனையில் கங்கையின் கரையாக இருந்த மேட்டில் நின்றுகொண்டு நகரின் கோட்டையைப் பார்த்தபோது பீஷ்மர் அந்நகரம் ஒரு வேழாம்பல் பறவை போல வாய்திறந்து மழைக்காகக் காத்திருப்பதுபோல உணர்ந்தார். சுற்றிலும் கோடையைத் தாண்டிவந்த காடு வாடிச்சோர்ந்து சூழ்ந்திருந்தது. பெரும்பாலான செடிகளும் மரங்களும் கீழ்இலைகளை உதிர்த்து எஞ்சிய இலைகள் நீர்வற்றி தொய்ய நின்றிருந்தன.

இலைத்தழைப்பு குறைந்தமையால் குறுங்காடு வெறுமை கொண்டதுபோல ஒளியை உள்ளே விட்டு நின்றது, இரட்டைக் குழந்தைகளுக்கு முலையூட்டியமையால் கண்வெளுத்து பசலைபடர்ந்த தாயைப்போல. தரையெங்கும் எறும்புகள் விதவிதமான வெண்புல்லரிசிகளுடன் நிரைவகுத்துச் சென்றுகொண்டிருந்தன. அடிமரங்களில் செம்புற்றுக் கிளைகளை விரித்தேறியிருந்தன சிதல்கள். அப்பால் ஏதோ பறவை ஊப் ஊப் என ஏங்கியது.

இந்நகரம் ஏன் எனக்குள் மதலையை நோக்கும் அன்னையின் கனிவை நிறைக்கிறது? இதோ என் முன் விரிந்து நிற்கும் இது என்ன? கற்கோட்டைக்குள், மண்வீடுகளில், தசைமனிதர் செறிந்த குவை. பிறந்தும் இறந்தும், நினைத்தும் மறந்தும், சிரித்தும் வெறுத்தும் இருந்து மறையும் எளிய வாழ்க்கைகள். சிற்றெறும்புப் புற்றுகளென மானுடர் இரவுபகல் தேடிச்சேர்த்தவற்றாலான வளை. புராணங்களின் பெயர்க்கடலில் ஒரு சொல். தெய்வங்கள் குனிந்துநோக்கும் மானுடச் சிறுபுரி.

இப்புவியில் எத்தனையோ நகரங்கள். வண்ண ஒளிவிடும் காலக்குமிழிகள். வரலாறு விரல்தொட்டு மீட்டும் சிறுபறைகள். எதிர்காலப்பறவை இட்டு அடைகாக்கும் சிறுமுட்டைகள். நகரம் மானுட இழிமைகளை அள்ளிவைத்த சிறு கிண்ணம். அழுக்கு ஒழுகும் நரம்புகளோடும் உடல்கொண்ட குருட்டு மிருகம். ஏணிகளின் திறப்பில் நாகங்கள் வாய்திறந்து நிற்கும் பரமபதக்களம்.

தூயதென எந்நகராவது மண்ணிலுண்டா என்ன? நகரங்களை அழகுறச்செய்வதே அவற்றில் நுரைக்கும் கீழ்மைகள் தானோ? அதனால்தான் அத்தனை நகரங்களும் இரவில் உயிர்த்துடிப்பு கொள்கின்றனவா? ஒருவரை இன்னொருவர் மறைக்க எதையும் எவரும் செய்யலாகும் ஒரு சிறுவெளியன்றி நகரங்கள் வேறென்ன?

ஆனால் இது இல்லையேல் நான் இல்லை. இந்த நகர் வடிவில் நான் என் அகத்தை விரித்துக்கொள்கிறேன். இது என் களம். எங்குசென்றாலும் என் நகரை சுமந்து செல்கிறேன். இதை ஒருநாளும் நான் இறக்கி வைக்கப்போவதில்லை. தலைக்குமேல் பறவைக்குரல்களைச் சூடி நிற்கும் முதுமரம்போல இந்நகரை நான் ஏந்தியிருக்கிறேன். ஆம். இது என் நகரம்.

நீண்டதாடியும் குழல்கற்றைகளுமாக வெயிலில் கருகிய உடலுடன் புழுதிபடிந்த பாதங்களுடன் அஸ்தினபுரியின் கோட்டைக்கு முன் வந்து நின்ற பீஷ்மரை காவலர்கள் அடையாளம் காணவில்லை. அவரிடம் “வீரரே தாங்கள்…” என பேசத்தொடங்கிய வீரன் அவரது கண்களைக் கண்டதும் தயங்கி “…தாங்கள்” என்றபின் கண்கள் உயிர்கொண்டு வணங்கி “பிதாமகரே அஸ்தினபுரிக்கு நல்வரவு” என்றான்.

அவன் ஓடிச்சென்று “பிதாமகர்!” என்று கூவியதுமே கோட்டைக்குமேல் அவரது மீன்கொடி ஏறத்தொடங்கியது. கோட்டை புத்துயிர்பெற்றதுபோல ஒலிகள் கலைந்து எழுந்தன. உள்ளிருந்து இரட்டைக்குதிரை பூட்டப்பட்ட ஒரு குறுந்தேர் அவரை நோக்கி வந்தது.

வணக்கங்களை ஏற்று, ஒவ்வொரு வீரனிடமும் தனித்தனியாக சிலசொற்கள் சொல்லி நலம் உசாவி, பீஷ்மர் ரதத்தில் ஏறிக்கொண்டார். நகரம் முழுக்க கோடைகாலத்தில் ரதங்கள் கிளப்பிய புழுதி படிந்திருந்தது. மரங்களின் இலைத் தகடுகளில், மாளிகைக் கூரைகளில் சுவர்களின் விளிம்புகளில் எங்கும். அனைத்து மரங்களும் இலைகள் உதிர்த்திருக்க புங்கம் மட்டும் தழைத்து தளிர்த்து இலையொளிர நின்றது. மாதவிப்பந்தல்களில் வெண்ணிற விண்மீன்கள் என மலர்கள் செறிந்திருந்தன.

பீஷ்மரின் படைச்சாலையில் அவர் வரும் செய்தி ஏற்கனவே சென்று சேர்ந்து ஹரிசேனன் தலைமையில் மாணவர்கள் முற்றத்திலேயே நின்றிருந்தனர். அவர் இறங்கியதும் ஹரிசேனன் வந்து பணிந்தான். “நான் நீராடவேண்டும்” என்று பீஷ்மர் சுருக்கமாகச் சொன்னார். “உடனே அரண்மனைக்குச் சென்று பேரரசியை சந்திக்கவேண்டும்.”

ஹரிசேனன் ஆணைகளை விடுத்தபடி முன்னால் ஓடினான். அவர் கிளம்பியபோதிருந்தபடியே இருந்தது அறை. ஆனால் அனைத்துப்பொருட்களும் ஒவ்வொருநாளும் துடைத்து சுத்தம்செய்யப்பட்டிருந்தன. பீஷ்மர் தனக்குப்பிடித்த குத்துவாளை எடுத்து அதன் பளபளப்பில் தன் முகத்தைப்பார்த்தார். அவரை அவராலேயே அடையாளம் காணமுடியவில்லை. சென்ற பதினேழு வருடங்களில் எத்தனைமுறை தன்னை ஆடியில் பார்த்துக்கொண்டோம் என எண்ணிக்கொண்டார்.

VENMURASU_EPI_53_A
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அவர் குளித்து புத்தாடையணிந்து நீர்சொட்டும் குழலும் தாடியுமாக ரதத்தில் ஏறிக்கொண்டபின் ஹரிசேனனைப்பார்த்து அவனையும் ஏறிக்கொள்ள சைகை காட்டினார். ரதம் உருளத்தொடங்கியதும் அவர் எதிர்பார்த்திருந்ததை அவன் சொல்லத் தொடங்கினான். அவனைப்பாராமல் நகரை நோக்கி அமர்ந்தபடி அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

பீஷ்மர் கிளம்பிச்சென்றபின் நடந்ததை அவன் விவரித்தான். அவர் கங்காமுகத்துக்கும் அங்கிருந்து பிரியதர்சினிக் கரைக்கும் சென்றதை அஸ்தினபுரியின் மக்கள் அறிந்திருந்தனர். அதன்பின்னர் அவரை ஒற்றர்கள் மட்டுமே தொடர்ந்தனர். அவர் சப்தசிந்துவைக் கடந்து மூலத்தானநகரிக்குச் சென்றதும் அங்கிருந்து சிபிநாட்டை அடைந்ததும் எல்லாம் அவர் அங்கிருந்து கிளம்பியபின்னரே தெரியவந்தது. பின்னர் மீண்டும் அவர் மறைந்து விட்டார். அவர் தேவபாலபுரத்திலிருக்கும் செய்தி கடைசியாக வந்தது. அதை அறிந்ததுமே பேரரசி உடனே வரச்சொல்லி செய்தி அனுப்பிவிட்டார்.

“பேரரசி இரண்டு ஆண்டுகளாகவே தங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் ஹரிசேனன். “அரண்மனையில் என்ன நிகழ்கிறதென்று தெரியவில்லை. ஆனால் அரண்மனைக்குள் பெண்களுக்குள் மோதல்களும் கசப்புகளும் இருப்பதாக அரண்மனைச்சூதர்கள் வழியாக வெளியே பேச்சு கிளம்பியிருக்கிறது. பேரரசி அதனால் கவலைகொண்டிருக்கிறார்கள்.” பீஷ்மர் “அது நான் ஊகித்ததே” என்றார்.

“இரு இளவரசர்களுமே இருவகையில் குறைபாடுள்ளவர்கள். மூத்த இளவரசர் பார்வையற்றவர். அந்தப்பார்வையின்மை மெதுவாக அவரது அன்னையாகிய காசிநாட்டின் மூத்த இளவரசியிடமும் குடியேறிவிட்டது என்று ஒரு சூதர் பாடுவதைக் கேட்டேன்” என்றான் ஹரிசேனன்.

பீஷ்மர் புன்னகைசெய்து “நெருக்கமானவர்களின் குறைபாடுகள் நம்மையும் மாற்றியமைக்கின்றன. அவர்களை நேசித்து அவர்களையே எப்போதும் எண்ணி அவர்களுடன் வாழ்வதன் வழியாக நாம் அவர்களை பிரதிபலிக்கத் தொடங்குகிறோம்” என்றார்.

“மூத்த அரசியார் மைந்தனைப்பற்றிய எந்த முறையீட்டையும் ஏற்றுக்கொள்வதில்லை. முறையிடுபவர்களை அவர் வெறுக்கிறார். சினந்து தண்டிக்கிறார்” என்றான் ஹரிசேனன். “அதற்கேற்ப மூத்த இளவரசர் மூர்க்கமே இயல்பாகக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரும் தன்னை தானறியாமல் எள்ளிநகையாடுவதாக நினைக்கிறார். தன்னை அனைவரும் ஏமாற்றுவதாக கற்பனை செய்துகொள்கிறார். ஆகவே அருகிருப்பவர்கள் அனைவரையும் வதைக்கிறார். எந்நேரமும் வசைபாடுவதும் அருகே சென்றால் அடிப்பதும்தான் அவரது இயல்பாக இருக்கிறது.”

ஹரிசேனன் சொன்னான் “அவரது உடலைக் கண்டு அரண்மனையில் அனைவரும் அஞ்சுகிறார்கள். குன்றுபோலிருக்கிறார். தங்களுக்கு நிகரான உருவம். தங்களை விட மும்மடங்கு எடை. அவரது கைகளால் ஒரேயொரு அடி வாங்கியவர்கள்கூட எலும்பு முறிந்து உயிர்விட்டிருக்கிறார்கள். பெண்களை அவர் அடிப்பதில்லை என்பதனால் இப்போது பெண்கள் மட்டுமே அவர் அருகே செல்கிறார்கள்.”

பீஷ்மர் தலையை அசைத்தார். “இளையவர் அன்னையின் விளையாட்டுப்பாவையாக இருக்கிறார். அந்தப்புரம் விட்டு அவர் இன்னும் வெளிவரவில்லை. அங்கேயே அன்னை அவருக்கு தோட்டமும் குளமும் ஊஞ்சலும் அமைத்திருக்கிறார். அன்னையுடனும் அவர் சேடியருடனும் பகலெல்லாம் அரண்மனைக்குள் இருந்து விளையாடுகிறார். இரவில் வெய்யோனொளி மறைந்தபின்னர் வெளியே வந்து அன்னையுடன் உபவனங்களுக்குச் செல்கிறார். பெண்களைப்போல மலர்கொய்தும் நாணலால் மீன்களைப் பிடித்தும் மரக்கிளைகளில் ஆடியும் விளையாடுகிறார்.”

“அவரது உடல் பாளைக்குருத்து போலிருக்கிறது. வெளிறி வெண்ணிறமாக. அவருக்குள் குருதியும் வெண்ணிறமாகவே ஓடுகிறது என்கிறார்கள் ஊரார். அவர் உடலில் வெயிலொளி பட்டால் புண்ணாகிவிடுகிறது. அவரது கண்கள் பட்டுப்புழுக் கூடுகளைப்போல மஞ்சளாக இருக்கின்றன. அவரால் இருளில்தான் நன்கு பார்க்கமுடிகிறது. அரண்மனைச் சாளரங்களை சற்றே திறந்தால்கூட அவர் கண்ணீர்விட்டு கண்களை மூடிக்கொள்கிறார். அவரது அன்னையுடன் மட்டுமே இரவும் பகலும் பேசிமகிழ்கிறார்” ஹரிசேனன் தொடர்ந்தான்.

பீஷ்மர் வெளியே சென்றுகொண்டிருந்த மாளிகைகளை நோக்கியபடி சிந்தனையில் மூழ்கியிருந்தார். பின்பு “அவர்களின் கல்வி?” என்றார். ஹரிசேனன் “மூத்தவர் கதாயுதத்தால் பயிற்சி செய்வார். ஆனால் அவர் அருகே எவரும் செல்வதில்லை. அவரது தோள்வல்லமை அரக்கர்களைவிட பலமடங்கு. அரண்மனையின் கற்தூணை ஒருமுறை அடித்து உடைத்துவிட்டார்” ஹரிசேனன் குரல் தாழ்ந்தது. “அவர் உணவுண்ணும்போதும் பயிற்சி செய்யும்போதும் நெருப்பு போலிருக்கிறார் குருநாதரே. அவரால் நிறுத்திக்கொள்ளமுடியாது. ஒவ்வொரு கணமும் வெறி ஏறி ஏறி வரும். அருகே நிற்பவர்கள் அனைவரும் அஞ்சி விலகிவிடுவார்கள். அவரது அன்னைமட்டுமே அவரை கட்டுப்படுத்தி திருப்பமுடியும்.”

பீஷ்மரைப் பார்த்துவிட்டு ஹரிசேனன் தொடர்ந்தான் “மூத்தவருக்கு ஆசிரியர்கள் எவரும் கல்வி கற்பிக்க முன்வரவில்லை. அவருக்கு கற்பிப்பதெப்படி என அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் அவர்களிடம் கேட்கும் வினாக்கள் ஏதும் அவர்களால் பதிலிறுக்கத் தக்கவையாக இல்லை. பதில் வராதபோது அவர் பொறுமையிழக்கிறார். இறுதியாக அவருக்கு எழுத்தறிவித்த பிராமணரான சந்திரசர்மரை அருகே இருந்த ஊஞ்சலை சங்கிலியுடன் பிடுங்கி எடுத்து அறைந்தார். அவர் சற்று விலகியிருந்தமையால் உயிர்தப்பினார். மூத்தவருக்கு அதன்பின் அரசி மட்டும்தான் எண்ணும் எழுத்தும் கற்பிக்கிறார். அவருக்கு அவற்றைக் கற்பிக்கும் விதமென்ன என்று அரசிக்கு மட்டுமே தெரிகிறது.”

“இளையவர்?” என்றார் பீஷ்மர். “இளையவருக்கும் கல்வியில் ஈடுபாடில்லை. அவரது அன்னை அவரை கல்விகற்க அனுமதிப்பதுமில்லை. அவர்களே எண்ணும் எழுத்தும் சொல்லித்தந்திருக்கிறார்கள். விழித்திருக்கும் நேரமெல்லாம் அவர் தன் அன்னையுடன் விளையாடுகிறார். கல்வி கற்பிக்கச்செல்லும் பிராமணர்கள் நாளெல்லாம் காத்திருப்பார்கள். அன்னை வந்து அவர்களை திரும்பிச்செல்லும்படி சொல்வார்.” பீஷ்மர் ஏதோ நினைத்துக்கொண்டு பெரிதாகப் புன்னகை செய்தார். பின்பு “பேரரசி ஏதும் செய்வதில்லையா?” என்றார்.

“பேரரசிக்கும் இரு இளவரசர்களுக்கும் தொடர்பே இல்லை. அன்னையர் இருவரும் அவர்களை தங்கள் சிறகுகளுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிறிய இளவரசருக்கு பேரரசி ஏழுவயதில் ஆயுதப்பயிற்சிக்கு ஒருங்கு செய்தார். விக்ரமசேனர் என்னும் குரு அதற்கு பணிக்கப்பட்டார். முதல்நாளிலேயே கூரற்ற சுரிகை முனையால் தன் முழங்கையைக் கிழித்துக்கொண்டார். குருதி நிலைக்கவேயில்லை. அன்றிரவு கடும் காய்ச்சலும் வலிப்பும் வந்துவிட்டது. பன்னிருநாட்கள் மருத்துவர்கள் முயன்றுதான் அவரை மீட்டனர். தன் குழந்தையை பேரரசி கொல்லமுயல்கிறார்கள் என்று சிறிய அரசி குற்றம்சாட்டினார். ஏழுநாட்கள் உணவு அருந்தாமல் நோன்பெடுத்தார். பேரரசியே வந்து பிழைபொறுக்கும்படிச் சொன்னபின்னரே இறங்கிவந்தார்.”

பீஷ்மர் பெருமூச்சுடன் “அவர்களிருவருக்கும் எதிலாவது ஈடுபாடோ தேர்ச்சியோ இருக்கிறதா?” என்றார். ஹரிசேனன் “மூத்தவருக்கு அன்னையின் கொடையாக வந்தது இசைப்பற்று. அவர் விழித்திருக்கும் நேரமெல்லாம் அருகே சூதர்கள் அமர்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்கள். அவரே யாழை சிறப்பாக வாசிப்பார். இசையில் முழுமையாகவே மூழ்கி அவர் அமர்ந்திருப்பதைக் கண்டால் கந்தர்வர் என்றே தோன்றும்” என்றான்.

“இளையவருக்கு அவரது அன்னை சித்திரமெழுதக் கற்பித்திருக்கிறார்” ஹரிசேனன் சொன்னான். “அந்தப்புரமெங்கும் திரைகளில் வண்ணங்களை நிறைத்து வைத்திருக்கிறார்.” பீஷ்மர் சிரித்து “அவன் பார்க்கமுடியாத நிறங்களை…” என்றார். “ஆம் குருநாதரே, அவரது வாழ்க்கையின் நிறங்களெல்லாம் அந்தத் திரையில் விரிபவைதான்” என்றான்.

ரதம் அரண்மனை முகப்பில் சென்று நின்றது. பீஷ்மர் இறங்கி நின்றதும் நினைத்துக்கொண்டு “அந்த சூதப்பெண்ணின் குழந்தை?” என்றார். “அவர் பெரும்பாலும் பேரரசியின் அந்தரங்கப் பணியாள் போலவே இருக்கிறார். சூதர்களின் ஞானமெல்லாம் அவருக்கு கற்பிக்கப்பட்டது. அதன்பின் பேரரசியே அவருக்கு ஆட்சிக்கலையும் நெறிநூல்களும் நிதியாள்கையும் கற்பித்தார்கள். இன்று அஸ்தினபுரியின் உண்மையான ஆட்சியாளரே அவர்தான் என்று மக்கள் நினைக்கிறார்கள்.”

பீஷ்மர் மெல்ல தலையசைத்துவிட்டு நடந்தார். அரண்மனை முகப்பில் காத்து நின்றிருந்த அமைச்சர் பலபத்ரர் ஓடிவந்து வணங்கி “பிதாமகரை வணங்குகிறேன்… தங்கள் பாதங்களின் ஆசி இவ்வரண்மனையை இன்று நிறைவுகொள்ளச் செய்கிறது” என்றார். “பேரரசியை நான் சந்திக்கவேண்டும்” என்று பீஷ்மர் சொன்னார். “தாங்கள் மாலைவருவதாக பேரரசி சொன்னார்கள். தற்போது ஓய்வெடுக்கிறார்கள்” என்றார் பலபத்ரர். “நான் பேரரசியின் முதற்சேடியிடம் தங்கள் வருகையைத் தெரிவிக்கிறேன்.” பீஷ்மர் தலையசைத்துவிட்டு முகமண்டபம் சென்று அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.

பலபத்ரர் உள்ளே ஓடிச்சென்றுவிட்டு திரும்பிவந்து “பிதாமகரே, தாங்கள் அனுமதித்தால் சிற்றமைச்சரான விதுரர் தங்களை சந்திக்க விரும்புகிறார்” என்றார். வரச்சொல்லும்படி பீஷ்மர் கையை அசைத்ததும் விதுரன் உள்ளே வந்தான். வாசலிலேயே நின்று இருகைகளையும் தலைமேல் தூக்கி “பிதாமகருக்கு எளியவனின் முழுதுடல் வணக்கம். தங்கள் ஆசியால் என் ஞானம் பொலியட்டும்” என்றான்.

அவனைக் கண்டதும் பீஷ்மர் திகைத்தவர்போல எழுந்துவிட்டார். கிருஷ்ணதுவைபாயன வியாசனே இளம் வடிவுகொண்டதுபோல அவன் நின்றான். கண்கள் தெளிந்து அகன்று ஞானமும் குழந்தைத்தன்மையும் ஒன்றுகலந்தவையாகத் தெரிந்தன. காராமணிப்பயறு போன்ற பளபளக்கும் கரிய நிறம். கூரிய நாசியும் சிறிய உதடுகளும் கொண்ட நீள்வட்ட முகம். மெலிந்த தோள்களில் புரண்ட சுரிகுழல். மெல்லியதாடி கருங்குருவி இறகுபோல மென்மையாக பிசிறிட்டு நின்றது. புன்னகையில் ஒளிவிட்ட சீரான உப்புப்பரல் பற்கள். அவரை அறியாமல் இரு கைகளும் நீண்டன.

விதுரன் அருகே வந்து அவர் கால்களைப் பணிந்தான். அவர் அவன் இரு தோள்களையும் பற்றித் தூக்கி தன்னுடன் அணைத்துக்கொண்டு “நான் உன் பெரியதந்தை. அந்நிலையில் இந்த ஒரே வணக்கத்திலேயே என் முழு ஆசியையும் உனக்களித்துவிட்டேன். இனி எப்போதும் நீ என்னை பணிந்து வணங்கலாகாது” என்றார். “நீ என் தமையனின் இளவடிவம். நான் என் நெஞ்சில் வணங்கும் கண்கள் உன்னுடையவை. என்னை நீ வணங்குகையில் என் அகம் கூசுகிறது.” விதுரன் புன்னகையுடன் “அவ்வாறே ஆகட்டும் பிதாமகரே” என்றான்.

பலபத்ரரிடம் செல்லும்படி கையசைத்துவிட்டு விதுரனை அருகே அமரச்செய்தார் பீஷ்மர். “இளையவனே, அஸ்தினபுரியின் நிலை என்ன?” என்றார். விதுரன் “நிதியும் நியதியும் சிறப்பாகவே நிகழ்கின்றன பிதாமகரே” என்றான். “அரசுநிலை மேலும் இக்கட்டுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.” பீஷ்மர் அவனைக் கூர்ந்து நோக்கி “நீ என்ன புரிந்துகொண்டாய், அதைச்சொல்” என்றார்.

“பிதாமகரே, தாங்களறியாதது அல்ல. என் புரிதலை நான் சொல்வது தங்களிடமிருந்து கற்க வேண்டுமென்பதற்காகவே” என்றான் விதுரன். “பாரதவர்ஷத்தில் அரசுகள் அமைந்த வரலாறு புராணங்கள் வழியாகவே நமக்கு அறியக்கிடைக்கிறது. இமயம் முதல் குமரிவரை காமரூபம் முதல் காந்தாரம் வரை விரிந்திருக்கும் ஜம்புத்வீபத்தில் ஒவ்வொரு இடத்திலும் படைப்புக்காலம் முதல் மக்கள் வாழ்ந்திருந்தார்கள் என்கின்றன புராணங்கள். அக்குலங்கள் ஒன்றுடன் ஒன்று போர்புரிந்து கொன்றழித்தபடி பல்லாயிரமாண்டுகள் வாழ்ந்தன. பாரதவர்ஷம் வாழவேண்டுமென எண்ணிய ரிஷிகளால் ஷத்ரியகுலம் உருவாக்கப்பட்டது. அவர்கள் குலங்களைத் தொகுத்து அரசுகளாக ஆக்கினார்கள்.”

விதுரன் சொன்னான். சுக்ரசம்ஹிதையின்படி கிருதயுகத்தில் பாரத வர்ஷத்தில் ஒருலட்சத்து நாற்பத்தி ஒன்றாயிரம் குலங்கள் இருந்தன. அக்குலங்களில் ஷத்ரியர்களை உருவாக்கிக்கொண்ட வலிமையான குலங்கள் பிறகுலங்களை வென்று தங்களுக்குள் இணைத்துக்கொண்டன. அவ்வாறு கிருதயுகத்தின் முடிவில் அக்குலங்களில் இருந்து ஏழாயிரம் அரசுகள் உருவாகிவந்தன. அவற்றிலிருந்து ஆயிரத்து எட்டு ஷத்ரிய அரசுகள் உருவாயின. அவற்றிலிருந்து இன்றுள்ள அரசுகள் உருவாகி வந்திருக்கின்றன” என்றான் விதுரன்.

ஒவ்வொரு அரசுக்கும் ஒரு குலவரலாறு உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சுருதி உருவாகி அன்றிருக்கும் வல்லமைவாய்ந்த அரசர்களை ஷத்ரியர்கள் என அடையாளப்படுத்துகிறது. அந்த சுருதியை அந்த ஷத்ரியர்கள் மாற்றக்கூடாத நெறிநூலாக நினைக்கிறார்கள். வேறு அரசர்கள் உருவாகி வருவதை அவர்கள் விரும்புவதில்லை. ஒன்றுகூடி அவ்வரசை அவர்கள் அழிக்கிறார்கள். அந்த ஜனபதத்தை தங்களுக்குள் அவர்கள் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.

ஷத்ரியர்கள் இல்லாமல் பாரதவர்ஷம் என்னும் இந்த விராட ஜனபதம் வாழமுடியாது. குலங்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கி நிலைநாட்ட ஷத்ரியர்களின் வாள்வல்லமையால்தான் முடியும். பாரதவர்ஷத்தின் வளர்ச்சி ரிஷிகளின் சொல்வல்லமையை வாள் வல்லமையால் நிலைநாட்டிய ஷத்ரியர்களினால்தான். அவர்களின்றி வேள்வியும் ஞானமும் இல்லை. வேளாண்மையும் வணிகமும் இல்லை. நீதியும் உடைமையும் இல்லை. அவர்களின் குருதியால் முளைத்ததே பாரதவர்ஷத்தின் தர்மங்களனைத்தும்.

ஷத்ரியர்கள் கருக்குழவியை மூடியிருக்கும் கருவறைபோன்றவர்கள். ஊட்டி வளர்த்து பாதுகாப்பவர்கள். ஆனால் கருமுதிர்ந்ததும் அதைப்பிளந்துகொண்டுதான் குழந்தை வெளிவரமுடியும். பிதாமகரே, பாரதவர்ஷம் பலமுறை புதுப்பிறவி எடுத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் அது ஷத்ரியர்களை அழித்தபின்னர்தான் வெளிவந்துள்ளது. கடைசியாக பரசுராமர் பாரதவர்ஷத்தை இருபத்தொருமுறை சுற்றிவந்து ஷத்ரியகுலத்தை அழித்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அவ்வாறு அழித்த பாவத்தைக் கழுவும்பொருட்டு சமந்தபஞ்சகத்தில் ஐந்து குளங்களை அமைத்தார். இன்று அக்குளங்களில் மூழ்கி தங்கள் பாவங்களைக் கரைக்க மக்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

பரசுராமர் ஷத்ரியகுலத்தை அழித்தது காட்டைமூடி ஓங்கி நின்றிருக்கும் முதுமரங்களை காட்டுத்தீ அழிப்பதற்கு நிகரானதுதான். அம்மரங்களின் நிழலில் குறுகி உயிரற்றிருக்கும் பல்லாயிரம் சிறிய மரங்கள் புதுவேகம் கொண்டு வான் நோக்கி எழும். காடு தன்னை புதுப்பித்துக்கொண்டு பொலிவுபெறும். பரசுராமர் ஷத்ரியகுலத்தை கருவறுத்தபின்னர்தான் எஞ்சிய மூலகன் என்னும் மன்னனின் குலமரபில் இன்றுள்ள ஐம்பத்தாறு ஷத்ரியகுலங்களும் பாரதவர்ஷத்தில் உருவானார்கள் என்கின்றன புராணங்கள். அவர்கள் இதுவரை தங்கள் அறத்தாலும் கருணையாலும் இம்மண்ணை வாழவைத்தார்கள் என்று விதுரன் சொன்னான். “இன்று இன்னொரு வனநெருப்பு வரவேண்டிய காலம் வந்துள்ளது.”

பீஷ்மர் புன்னகையுடன் “உன் பேரரசியிடமிருந்து பாடங்களை முழுமையாகவே கற்றிருக்கிறாய்” என்றார். “ஆம், பாரதவர்ஷத்தில் இந்த உண்மையை முதலில் உணர்ந்தவர் அஸ்தினபுரியின் பேரரசி சத்யவதிதான். அவரது அனைத்துத் திட்டங்களும் கனவுகளும் இந்த அடித்தளத்தின் மீது அமைந்தவையே. பெரும் போர் ஒன்று வரவிருக்கிறது. அதில் பழைய ஷத்ரியகுலங்கள் ஆற்றல் குன்றும். சிறிய குலங்கள் அழியும். அந்த இடத்தில் புத்தம்புதிய அரசுகள் உருவாகிவரும். பாரதம் புதியபொலிவுடன் வளர்ந்தெழும்” என்றான் விதுரன். “அந்த வனநெருப்பை மீறி வளர்ந்தெழும் வல்லமை கொண்டதாக தன் குலம் இருக்கவேண்டுமென பேரரசி விரும்புகிறார்கள்.”

“இளையவனே, அந்த வனநெருப்புக்குப் பின்னர் பாரதவர்ஷத்தில் உருவாகிவரும் அரசுகள் என்னவாக இருக்கும்?” விதுரன் “இன்று எதைச் சொல்லமுடியும் பிதாமகரே? ஒவ்வொரு விதைக்குள்ளும் வாழவேண்டுமென்ற இச்சை நிறைந்துள்ளது. வாழ்வெனும் சமரில் அவை தங்கள் வழியை கண்டுகொள்கின்றன” என்றான். “சப்தசிந்துவின் ஷத்ரியர்களை இந்திரன் அழிந்தபின்னர் கங்கையின் பதினாறு மகாஜனபதங்கள் உருவாகிவந்தன. பரசுராமருக்குப்பின் ஐம்பத்தாறு ஷத்ரியகுலங்கள் இன்றுள்ளன. வரவிருக்கும் போருக்குப்பின் அவற்றில் ஏழு மட்டுமே எஞ்சுமென எண்ணுகிறேன். அவையும் புண்பட்ட சிம்மங்கள் போல இறந்துகொண்டிருக்கும்.”

விதுரன் சொன்னான் “இன்று நாம் எதையும் திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. ஆனால் நிலத்தையும் நதிகளையும் வைத்து வேளாண்மையை கணிக்கமுடியும். ஜனபதங்களின் செறிவை வைத்து படைபலத்தை கணிக்கமுடியும். துறைகளையும் சாலைகளையும் கொண்டு வணிகத்தை கணிக்கமுடியும். அப்படி நோக்கினால் புதிய பேரரசாக மகதம் எழுந்துவரக்கூடும். அடுத்த சிலநூற்றாண்டுகளுக்கு மகதம் உத்தர பாரதவர்ஷத்தை முழுக்க ஒருகுடைக்கீழ் ஆளலாம்.”

பீஷ்மர் அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார். அவனைக் கண்டதும் அவன் விழிகள் வியாசரின் விழிகளைப் போலிருப்பதை உணர்ந்தது ஏன் என அப்போது தெரிந்தது. அவை காலத்தைத் தாண்டி பார்க்கும் வல்லமை கொண்டவை.

“பாரதவர்ஷத்தின் மாபெரும் பழங்குடிகளில் இருந்துகூட பேரரசுகள் உருவாகலாம். இன்று இருபத்துநான்கு குலங்களாகப் பிரிந்திருக்கும் மூரா மக்கள் இணைந்தால் அவர்களிடமிருந்து பாரதத்தையே அணைத்து ஆளும் பேரரசு ஒன்று பிறக்கலாம்” என்றான் விதுரன். “விந்தியனுக்குத் தெற்கே வேசரத்தில் இன்று சிற்றரசுகளாக ஷத்ரியர்களுக்கு அஞ்சிவாழும் சதகர்ணிகள் ஆற்றல்கொண்டு எழக்கூடும். கலிங்கமும் பேரரசாக வளரக்கூடும். தமிழ்நிலத்தில் முடியுடை மூவேந்தர்கள் சிற்றரசுகளை அழித்து முற்றதிகாரம் பெறக்கூடும்.”

“இந்தக் காட்டுத்தீ நலம்பயக்குமென்பதே என் கணிப்பு” என்று விதுரன் தொடர்ந்தான். “இன்றுள்ள ஷத்ரியகுலங்கள் சென்றகாலத்தின் இறுகிய நெறிகளால் கட்டுண்டவர்கள். நெடுநாள் குலவரலாறுமூலம் பெற்ற அணைக்கமுடியாத அகந்தை கொண்டவர்கள். ஆலமரத்தில் இட்ட இரும்புப்பட்டை போல இவர்கள் பாரதவர்ஷத்தை இறுக்குகிறார்கள். இவர்களின் அழிவில் உருவாகிவரும் புதிய ஷத்ரியகுலங்கள் தங்கள் ஞானத்தாலும் தோள்வல்லமையாலும் ஒற்றுமையின் விவேகத்தாலும் தாங்களே நிலங்களை வென்றவர்களாக இருப்பார்கள். ஆகவே பாரதவர்ஷம் கோரும் புதுக்குணங்களைக் கொண்டிருப்பார்கள்.”

“அத்துடன் இந்தச் சிறுசிறு ஷத்ரியகுலங்கள் அழிந்தபின் எழும் புதுஷத்ரியகுலங்கள் பேரரசுகளையே உருவாக்கும். இமயத்துக்கு அப்பால் பீதர்நிலத்தில் அவ்வாறு பெருநிலம் தழுவிய அரசுகள் உள்ளன என்கிறார்கள் பயணிகள். அவர்களின் படைகள் பற்பல லட்சம் வீரர்களைக் கொண்டவை. அத்தனைபெரிய படை இருந்தால் அதன் பின் போரே நிகழாது. சிறுகுலங்களும் சிற்றரசுகளும் செய்யும் முடிவிலா சிறுபூசல்களால்தான் பாரதவர்ஷம் அழிகிறது. அப்பூசல்கள் அனைத்தும் முற்றிலும் நின்றுபோகும். செல்வம் மேருவென அப்பேரரசுகளின் களஞ்சியங்களில் குவியும். அதைக்கொண்டு அவர்கள் நதிகளைத் தடம்மாற்றுவார்கள். ஏரிகளை அமைப்பார்கள். புதிய சாலைகளையும் துறைகளையும் கட்டுவார்கள். ஆலயங்களை எழுப்பி ஏராளமான புதிய ஜனபதங்களை நிறுவுவார்கள். பாரதம் பொலியும்.”

“ஆகவே ஒரு பெரும்போரை நிகழ்த்தும் விருப்புடன் இருக்கிறாய்” என்றார் பீஷ்மர். “காட்டுநெருப்பு எழாவிட்டால் பற்றவைக்கலாமென நினைக்கிறாய்?” விதுரன் “இல்லை பிதாமகரே, அந்நெருப்பில் இக்குலம் அழியாமல் வாழ்வதெப்படி என்று மட்டும் சிந்திக்கிறேன்” என்றான்.

பீஷ்மர் “இளையவனே, நீ சொல்வதெல்லாம் உண்மை. நானே எண்ணியவைதான் அவை. என் எண்ணத்தை உறுதிசெய்துகொள்ளவே பதினேழுவருடங்கள் பாரதவர்ஷத்தின் விளிம்புகளிலும் எல்லைகளிலும் பயணம் செய்தேன். திரேதாயுகம் முடிந்து புதியயுகம் ஒன்று பிறந்து வருவதை நான் என் கண்களால் கண்டேன். அதன் மொழி செல்வம். அதன் அறம் வணிகம். அதன் இலக்கு போகம். இங்கே ஷத்ரியர்கள் அதை அறியாமல் தங்கள் குலச்சண்டைகளுக்கு குடிகளை பலிகொடுத்து சேற்றில் முதலைகளைப்போல மாறிமாறி கடித்துத்தின்றபடி திளைக்கிறார்கள். அதுவும் உண்மை.”

விதுரன் தோளில் கைவைத்து பீஷ்மர் சொன்னார் “ஆனால் இவர்களெல்லாம் என் மைந்தர்கள், என் குலத்தோன்றல்கள். இவர்கள் என் கண்ணெதிரே அழிய நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. நீ சொன்ன உண்மையை உணர்ந்த நாள் முதல் என் வாழ்க்கையின் நோன்பென நான் கொண்டிருப்பது ஒன்றே. போரைத்தவிர்த்தல். அதன்பொருட்டு நெறிகளையும் மீறுவேன். அதன்பலிபீடத்தில் கள்ளமற்ற சிலரை பலிகொடுக்கவேண்டுமென்றால் அதையும் செய்வேன். வரப்போகும் பேரழிவை தடுத்தேயாக வேண்டுமென்பதையே ஒவ்வொரு செயலிலும் எண்ணிக்கொள்கிறேன்.”

“மாமனிதர்களின் கனவு அது” என்றான் விதுரன். “விராடவடிவம் கொண்ட வரலாற்று வெள்ளத்துக்குக் குறுக்காக தங்களையே அணைகளாக அமைத்துக்கொள்கிறார்கள். அதன் வழியாக அவர்களும் பேருருவம் கொள்கிறார்கள்.”

பலபத்ரர் மெல்ல உள்ளே வந்து வணங்கி “பேரரசி எழுந்தருளிவிட்டார்” என்றார். பீஷ்மர் புன்னகையுடன் “உன் ஞானம் பாரதவர்ஷத்துக்குமேல் மழையெனப் பொழியும் மைந்தனே. அதன் சில துளிகள் இக்குலத்துக்கும் கிடைக்கட்டும்” என்றபின் வெளியே நடந்தார்.

——————————-
வேழாம்பல்: Great Hornbill

நூல் இரண்டு – மழைப்பாடல் – 2

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம்

[ 2 ]

கூர்ஜரத்தின் கடற்கரையில் நின்றிருக்கையில்தான் பீஷ்மர் தெற்கிலிருந்து கிழக்குநோக்கி எழுந்த பருவமழையின் பேருருவை நேரில் கண்டார். சிந்துவின் நீர்ப்பெருக்கினூடாக ஒரு வணிகப்படகில் அவர் கூர்ஜரம் நோக்கி வருகையில் நதி வெய்யநீராக கொதித்து ஆவியெழுந்துகொண்டிருந்தது. சுண்ணமும் அரக்கும் கலந்து பூசப்பட்ட பொதிப்படகுகளின் அறைகளுக்குள் சில கணங்கள் கூட இருக்கமுடியவில்லை. வெளியே வந்து தெற்கிலிருந்து அலையலையாக வீசிக்கொண்டிருந்த காற்றை வாங்கிக்கொண்டு பாய்மரக்கயிற்றைப் பற்றிக்கொண்டு நிற்கையில் மட்டுமே உடலில் வியர்வை கொட்டுவது நின்றது.

சிந்து சமநிலத்தை அடைந்தபோது அதில் வேகமும் அலைகளும் அடங்கின. முறுகித்திரும்பிய பாய்களில் பின்னத்திப்பாய் எதிர்க்காற்றை வாங்கிச் சுழற்றி முன்னத்திப்பாய்க்கு அனுப்ப காற்றை எதிர்த்து மிகமெல்ல அவை நகர்ந்தன. தொலைதூரத்துக் கரையின் நகர்வைக்கொண்டுதான் படகின் ஓட்டத்தையே அறியமுடிந்தது. படகோட்டிகள் நீரோட்டத்தின் சுழிப்பில் படகுகள் நிலையிழந்து சுழலும்போது மட்டும் துடுப்புகளால் மெல்ல உந்தி அப்பால் செலுத்தினர். சுக்கான் பிடித்திருந்தவன்கூட அதன் நுனியைப்பிடித்து ஒரு ஆப்பில் கட்டிவிட்டு தளர்ந்து அமரத்தில் அமர்ந்துவிட்டான். பீஷ்மர் பாய்க்கயிறுகள் நடுவே ஒரு தோலை நீட்டிக்கட்டி அந்தத் தூளிமேல் படுத்துக்கொண்டார். அங்கே பாயின் நிழலிருந்தமையால் வெயில் விழவில்லை.

பகல்கள் தழலுருவான சூரியனால் எரிக்கப்பட்டன. அந்தியில் செம்மை பரவியபோது ஆவியெழுந்த நீர்வெளியே ஒற்றைப்பெரும் தழலாகத் தோன்றியது. மேகங்களில்லாத வானில் சூரியன் அணைந்தபின்னரும் நெடுநேரம் ஒளியிருந்தது. இருள் பரவியபின்பு நதிக்குள் கரையிலிருந்து வந்து சுழன்ற காற்றில் வெந்த தழைவாசனையும் உலரும் சேற்றின் வாசனையும் நிறைந்திருந்தது. பகலில் காலையிலும் மாலையிலும் மட்டும்தான் பறவைகளை நீர்மேல் காணமுடிந்தது. இரவில் மேலும் அதிகமான பறவைகள் இருண்ட வானத்தின் பின்னணியில் சிறகடித்தன.

இரவை பீஷ்மர் விரும்பினார். விண்மீன்களை ஒருபோதும் அவ்வளவு அருகே அவ்வளவு செறிவாக அவர் பார்த்ததில்லை. விண்மீன்கள் ரிஷிகள் என்று புராணங்கள் சொல்வதுண்டு. மண்ணில் வாழும் மானுடரைவிட பலமடங்கு ரிஷிகள் விண்ணில் நிறைந்திருக்கிறார்கள். மண்ணிலிருந்து விண்ணேறியவர்கள். விண்ணுக்கு ரிஷிகளை விளைவிக்கும் வயல்தான் பூமி. மாறாத கருணைகொண்ட ஆர்த்ரை. குன்றா வளம் கொண்ட ஊஷரை. முளைத்துத் தீராத ரிஷிகளைக் கருக்கொண்ட தரித்ரி. அவர்களுக்கான அமுது ஊறும் பிருத்வி. சதகோடி மதலைகளால் மாமங்கலையான புவனை.

கூர்ஜரத்தை நெருங்கியபோது கடற்காற்று வரத்தொடங்கியது. சிற்றாறுகளின் நீரை மலைக்கங்கை நீர் சந்திப்பதுபோல. கடற்காற்றை தனியாகத் தொட்டு அள்ளமுடியுமென்று தோன்றியது. இன்னும் குளிராக அடர்த்தியாக உப்புவீச்சம் கொண்டதாக அது இருந்தது. பகலில் வெங்காற்றை அவ்வப்போது விலக்கி கனத்த கடற்காற்று சற்றுநேரம் வீசும்போது உடம்பு குளிர்கொண்டு சிலிர்த்தது. பின்பு மீண்டும் கரைக்காற்று வீசும்போது வெம்மையில் சருமம் விரிந்து வியர்வை வழிகையில் கடற்காற்றின் உப்பு தெரிந்தது. மேலும் மேலும் கடற்காற்று வரத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் கடலே தெற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி காற்றாகப் பெருகிச்செல்வதுபோலத் தோன்றியது.

படகோட்டியான விகூணிகன் “மழைக்காலம் நெருங்குகிறது வீரரே” என்றான். “காற்றில் நீர்த்துளியே இல்லையே” என்றார் பீஷ்மர். “இப்போது நீர்த்துளிகள் இருக்காது. இன்னும் சற்றுநாட்கள் தாண்டவேண்டும். இப்போது கடலின் உள்ளே கருவுக்குள் மழை பிறந்திருக்கிறது. நாம் அறிவது கடலின் பெருமூச்சைத்தான். மூச்சு ஏறிக்கொண்டே செல்லும். குழந்தை பிறக்கத் தொடங்கும்போது பெருமூச்சு சிந்துவின் நீரையே திரும்பவும் இமயத்துக்குத் தள்ளிவிடுமென்று தோன்றும். கூர்ஜரத்தின் மணல்மலைகள் இடம்பெயரும். நதியிலோ கடலிலோ படகுகளை இறக்கமுடியாது. பறவைகள் வடக்குநோக்கிச் சென்றுவிடும்.”

பீஷ்மர் புன்னகையுடன் “பேற்றுநோவு இல்லையா?” என்றார். “ஆம் வீரரே, அதுவேதான். கடல் இருகைகளையும் அறைவதையும் புரண்டு நெளிந்து ஓலமிடுவதையும் காணமுடியும்…” அவன் சிரித்துக்கொண்டு “ஆனால் அதற்கு இன்னும் நாட்களிருக்கின்றன. இது சிராவணமாதத்தின் முதல்வாரம். நான்காம்வாரத்தில்தான் மழைதொடங்கும்.”

கூர்ஜரத்தில் சிந்து கடலை சந்தித்தது. எதிரே நதிநீரின் நீலத்திரைச்சீலைக்குள் மதயானைகள் புகுந்துகொண்டு மத்தகம் முட்டி ஓலமிட்டு வருவதுபோல அலைகள் பொங்கி வந்தன. படகின் விளிம்பில் அவை ஓங்கி ஓங்கி அறைந்தன. மாலைமங்கியபோது அலைகள் மேலும் அதிகரித்து படகுகளை ஊசலில் தூக்கி மேலே கொண்டுசென்று கீழிறக்கி விளையாடின. படகுக்குள் இருந்த பொருட்கள் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு பாய்ந்தோடி ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு ஒலியெழுப்பின.

படகுகளை ஓரமாகக் கொண்டுசென்று அங்கிருந்த அலையாத்திக் காடுகளின் மரங்களில் பெரிய வடத்தால் கட்டிவிட்டு படகோட்டிகள் காத்திருந்தனர். “இந்தக் கடல்வேலியேற்றம் இல்லையேல் நாம் கடலுக்குள் செல்லமுடியாது” என்றான். ஊர்ணன் என்னும் படகோட்டி. “ஏன்?” என்று பீஷ்மர் கேட்டார். “இவ்வளவு நீரும் மீண்டும் கடலுக்குள் போகவேண்டுமே. அவற்றில் ஏறி நாம் கடலுக்குள் சென்றுவிடமுடியும்.”

இரவில் படகுகளை ஒன்றுடன்ஒன்று சேர்த்துக்கட்டி ஒரு பெரிய படலமாக ஆக்கினார்கள். மிதக்கும் கம்பளம்போல படகுகள் நீரில் வளைந்தாடின. வணிகர்கள் தோலால் ஆன படுக்கைகளுடன் கரையிறங்கி அங்கே நீரில் வேரூன்றி நின்றிருந்த மரங்களுக்குள் புகுந்து மரங்கள் நடுவே தூளிகளைக் கட்டிக்கொண்டு படுத்தார்கள். தீச்சட்டிகளில் கனலிட்டு அவற்றில் தேவதாரு அரக்கைக் கொட்டி புகைஎழுப்பி காட்டுக்குள் மண்டியிருந்த கொசுக்களை விரட்டிவிட்டு அப்புகைக்குள்ளேயே துயின்றனர். புகையை காற்று அள்ளி விலக்கிய சிலகணங்களுக்குள்ளேயே கொசுக்கள் மகுடி ஒலி போல ரீங்கரித்தபடி வந்து சூழ்ந்துகொண்டன.

விடிகாலையில் வெள்ளி கீழே கிளம்பியதுமே அனைவரும் சென்று படகுகளில் ஏறிக்கொண்டனர். இருவர் நீருக்குள் துடுப்புகளை கயிற்றில் கட்டி மிதக்கவிட்டு நீரோட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். நீர் கடலில் இருந்து ஆற்றுக்குள் சென்றுகொண்டிருந்தது. பின்பு அசைவிழந்து நின்றது. மெல்ல துடுப்பு கடலைநோக்கிச் செல்ல ஆரம்பித்ததும் ஒருவன் ஒரு சங்கை எடுத்து ஊதினான். அனைவரும் பெருங்கூச்சலெழுப்பியபடி படகுகளை அவிழ்த்து துடுப்புகளால் உந்தி நீரோட்டத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் நீரோட்டத்தை அடைவதற்குள்ளாகவே கடலை நோக்கிச்செல்லும் வேகம் அதிகரித்திருந்தது.

கடல் பள்ளத்தில் இருப்பதாகவும் மொத்த நதியும் அருவியென அதைநோக்கிச் செல்வதாகவும் தோன்றியது. ஊர்ணன் “விடியற்காலை இரண்டுநாழிகைநேரம் மட்டும்தான் கடலுக்குள் செல்வதற்குரியது வீரரே. நீரோட்டம் நம்மை அள்ளித்தூக்கி மானஸுரா தீவுக்குக் கொண்டுசென்றுவிடும். அங்கேதான் பாரதவர்ஷத்தின் மிகப்பெரிய துறைமுகமான தேவபாலபுரம் உள்ளது” என்றான்.

“பயணிகள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார் பீஷ்மர். “தேவபாலபுரத்தின் நான்குபக்கமும் கடல்துறைகள்தான். வடக்குப்பக்கம் சிந்துகொண்டு சென்று கொட்டும் மணல்மேடுகள் இருப்பதனால் அங்கே படகுகள் மட்டும்தான் செல்லமுடியும். தெற்கே கடல் மிக ஆழமானது. தீவிலிருந்து நீட்டி நிற்கும் பாறைகளுக்கு மேலே மரமேடைகளை அமைத்து கப்பல்துறை அமைத்திருக்கிறார்கள். யவனநாட்டிலிருந்தும் சோனகநாட்டிலிருந்தும் பீதர் நாட்டிலிருந்தும் வரும் நாவாய்கள் அங்கே வந்து பொருள்கொண்டு பொருள்பெற்றுச் செல்கின்றன. வடக்கே ஆரியவர்த்தத்தில் இருக்கும் பொன்னிலும் மணியிலும் பெரும்பகுதி இந்தத் துறைமுகம் வழியாக வருவதுதான். பாரதவர்ஷத்தின் மாபெரும் துறைமுகமான தென்மதுரை மட்டுமே இதைவிடப்பெரியது” என்றான் ஊர்ணன்.

மாபெரும் கோபுரவாயிலைக் கடந்து உள்ளே செல்வதுபோலிருந்தது கடலுக்குள் நுழைவது. தென்கிழக்கே மேகத்திரைக்கு அப்பால் கருவறைக்குள் அமர்ந்த செம்மேனியனாகிய சிவனைப் போல சூரியன் கோயில்கொண்டிருந்தான். செம்பொன்னிற அலைகளாக கடல் கொந்தளித்துக்கொண்டிருந்தது. பீஷ்மர் முதல்முறையாக அன்றுதான் கடலைப்பார்த்தார். தென் திசையையே தடுத்துக் கட்டப்பட்ட பெரும் நீலக்கோட்டைபோலத் தெரிந்தது நீர்தான் என்று உணர்ந்துகொள்ள அரைநாழிகை ஆகியது. அதை அவரது அறிவு உணர்ந்தபின்னும் ஆன்மா உணரவில்லை. அந்த நீர் வானில் எழுந்து நிற்பதாக பின்னர் தோன்றியது. அது எக்கணமும் உடைந்து பொழியத்தொடங்கிவிடும் என தலையுச்சி பதைப்படைந்தபடியே இருந்தது.

அலைகளில் ஏறிக்கொண்ட படகுகள் ஒன்றுக்குப்பின் ஒன்றாக குதிரைக்குட்டிகள் போல எம்பிக் குதித்தபடி சுருக்கப்பட்ட பாய்களுடன் மானஸுரா நோக்கிச் சென்றன. கடலில் ஒரு நாவாய் போல ஆடிக்கொண்டிருந்த தீவின்மீது மரக்கூட்டங்கள் நடுவே மரப்பட்டைக்கூரையிட்ட மாளிகை முகடுகள் தெரிந்தன. கூர்ஜர அரசின் சங்குமுத்திரை கொண்ட பகவாக்கொடி தழலென நெளிந்துகொண்டிருந்தது. படகுகள் நெருங்கியபோது தீவு அசைந்தாடியபடி அருகே வந்தது. அதன் படகுத்துறை ஒரு கை போல நீண்டுவந்து படகுகளைப் பற்றிக்கொள்வதாகத் தோன்றியது. இரு துறைமேடைகளையும் தேனீக்கள் கூட்டை மொய்ப்பது போல படகுகள் கவ்விக்கொண்டன. கரையிலிருந்து சுமையிறக்கும் வினைவலர் படகுகளை நோக்கி ஓடிவந்தனர்.

மறுபக்கம் கடல்நாவாய்களுக்கான மூன்று பெருந்துறைகள் இருந்தன. அங்கே கடலுக்குள் நீண்டிருந்த பாறைகளின்மீது கற்களையும் மரங்களையும் அடுக்கி நீட்டி துறைமேடைகளைச் செய்திருந்தனர். நாவாய்களுக்குள்ளிருந்தே பொதிகளை எடுத்து கனத்த சக்கரங்கள் கொண்ட வண்டிகளில் ஏற்றி வெளியே கொண்டுவந்து பண்டகசாலைகளுக்குக் கொண்டுசென்றனர். நூறுபாய்கள் கொண்ட சோனகமரக்கலங்கள் முந்நூறு பாய்கள் கொண்ட யவனமரக்கலங்கள் நடுவே ஆயிரம்பாய்கள் கொண்ட பீதர் மரக்கலங்கள் இமயத்தின் பனிமலைமுகடுகள் போல நின்றன.

VENMURASU_EPI_52_Final
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

தேவபாலபுரத்தில் பயணிகள் தங்கும் கட்டடங்களில் ஒன்றில் பீஷ்மர் தங்கினார். செங்கற்களால் கட்டப்பட்டு மரப்பலகைகளால் கூரையிடப்பட்ட உயரமற்ற கட்டடத்தின் முன்னால் பெரிய பாறைகளாக நிலம் கடலுக்குள் நீட்டி நின்றது. பாறைகள்மேல் கடல் நுரையெழ அறைந்தபடியே இருக்க நீர்த்துளிகள் சிதறி காற்றிலேறி வீடுகளின் சுவர்களில் பட்டு வியர்வையாக மாறி சிற்றோடைகளாக வழிந்து பாறைகளில் சொட்டி மீண்டும் கடலுக்குள் சென்றன. அறைக்குள் இருக்கையிலும் கடலுக்குள் இருந்துகொண்டிருக்கும் உணர்வு இருந்தது. பயணம் முடிவடையாததுபோலத் தோன்றச்செய்தது.

சிபி நாட்டின் பாலையிலும், மூலத்தானநகரி முதல் தேவபாலபுரம் வரை படகுகளிலும், வணிகர்களுக்கு பாதுகாவலராகப் பணியாற்றி அவர் ஈட்டிய நாணயங்கள் அந்த எளியவாழ்க்கைக்குப் போதுமானவையாக இருந்தன. காலையில் தன் ஆயுதப்பயிற்சியை கடலோரப்பாறைகளில் முடித்துவிட்டு அவர் துறைமுகத்துக்குச் சென்றார். அங்கே கன்னங்கரிய காப்பிரிகளும், செந்நிறமான யவனர்களும், வெண்ணிறமான சோனகர்களும், மஞ்சள் நிறமான பீதர்களும் கூடி வெவ்வேறு மொழிகளில் பேசிய இரைச்சல் எந்நேரமும் கேட்டுக்கொண்டிருந்தது. துறைமுகத்தில் எண் கற்றவர்களுக்கு எப்போதும் அலுவல்கள் இருந்தன.

பீஷ்மர் பகலில் பண்டகசாலைகளில் பணியாற்றி மாலையில் ஊதியம்பெற்று மீள்வதை விரும்பினார். அங்கே வரும் அனைவரிடமும் அவர்களின் மொழியைக் கற்றுக்கொண்டு உரையாடினார். யவனதேசத்தின் ரதங்களைப்பற்றியும் காப்பிரிநாட்டின் பொற்சுரங்கங்களைப்பற்றியும் பீதர்தேசத்தின் மஞ்சள்மண் கலங்களைப்பற்றியும் அறிந்துகொண்டார்.

அழகிய மணிக்கண்கள் கொண்ட தமிழர்கள் பாரதவர்ஷத்தின் கிழக்கே வங்கத்துத் துறைமுகத்தில் இருந்து தென்முனையின் கொற்கை வழியாக அங்கே வந்திருந்தனர். அவர்களறியாத கடல்நகரிகளே இருக்கவில்லை. பாரதவர்ஷத்தின் தென்னகவிரிவைப்பற்றி அவர்கள் சொன்ன ஒவ்வொன்றும் பீஷ்மரை கிளர்ச்சிகொள்ளச் செய்தது. நீர்பெருகியோடும் நர்மதை, கிருஷ்ணை, கோதை, பெண்ணை, காவிரி. வெயில் விரிந்த பெருநிலங்கள். தமிழ்மண்ணின் மூவேந்தர் நாடுகள். அங்கே மண்பூசிய மரக்கூரைகளும் கனத்த மண்சுவர்களும் கொண்ட பெருநகரங்கள். தென்மூதூர் மதுரை. முத்துவிளையும் கொற்கை. தந்தம் விளையும் வஞ்சி. நெல்விளையும் புகார்.

தென்மதுரை என்று பிறந்தது என்றறிந்தவர் தென்னாடுடைய சிவன் மட்டுமே என்று கன்னன் பெருஞ்சித்திரன் என்ற பெருவணிகன் சொன்னான். பஃறுளி ஆறும் பன்மலையடுக்கக் குமரிக்கோடும் கொண்ட தென்னகப் பெருவளநாட்டின் திலகமான அந்நகரம் கடலருகே அமைந்தது. கடல்நீர் நகருள் புகுவதைத் தடுக்க கட்டி எழுப்பப்பட்ட பெருமதில்நிரையால் மதில்நிரை என்றும் மதுரை என்றும் அழைக்கப்பட்டது. கடலாமையோடுகளால் கூரையிடப்பட்டு கடற்சிப்பி சுட்டு எடுத்த வெண்சுண்ணத்தாலான வீடுகளும் கொண்ட அது சந்திரபுரி என்று பாவலரால் பாடப்பட்டது. மீன்கொடிபறக்கும் ஆயிரம் மாளிகைகளால் சூழப்பட்ட அதன்மேல் எந்நேரமும் கடல்துமிகள் மழையெனப்பெய்து வெயிலை மறைத்தன. அருகே குமரிக்கோட்டின் உச்சியில் ஒற்றைக்கால் ஊன்றி நின்ற குமரியன்னையின் குளிர்நோக்கும் மழையெனப் பெய்துகொண்டிருந்தது என்றான் பெருஞ்சித்திரன்.

செம்மயிர்த் தலையும் பாம்பின் வாலும்கொண்ட தெய்வம் அமர்ந்திருந்த அமரம் கொண்ட பீதர்களின் மரக்கலங்கள் அத்தனை மரக்கலங்களையும் உள்ளடக்கிக்கொள்ளும் கடல்நகரங்கள்போல நின்றாடின. முக்கூர் சூலமேந்திய கடல்தெய்வம் ஆடையின்றி நின்றிருந்த முனம்பு கொண்ட யவன மரக்கலங்கள் கடல் ஓங்கில்கள் போல கருநிறமாகப் பளபளத்தன. கடற்பறவைகளுக்கு நிகராக நீரில் பறக்கக்கூடியவை அவை என்றனர் வணிகர்கள்.

தழல்நிறம்கொண்ட யவனர்கள் நீலத்தாமரைபோன்ற பளிங்குப் புட்டிகளில் கொண்டுவந்த இன்கடும்தேறல் பொன்னுக்குநிகரான விலைகொண்டிருந்தது. எப்போதும் துருவனையே நோக்கும் துருவமுள்ளுக்கு நூறுமடங்கு பொன் விலைசொன்னார்கள். தெற்கே தந்தங்களும், மிளகும், முத்தும், தோகையும், சந்தனமும் வாங்கி வந்தவர்கள் தேவபாலத்தில் தேவதாருவின் அரக்கும் சந்தனமும் அகிலும் வெல்லக்கட்டிகளும் வாங்கிக்கொண்டு பொன் கொடுத்தனர். சோனகர்கள் சிந்துவழியாக வந்த கோதுமையையும் உலர்ந்த பழங்களையும், தோலையும் வாங்கிக்கொண்டனர். வெண்களிமண் பாத்திரங்களும் பட்டுத்துணிகளும் கொண்டுவந்த பீதர் நிலத்து நாவாய்கள் விற்கப்பட்ட எதையும் வாங்கிக்கொண்டன.

செல்வங்கள் தெருவெங்கும் குவிந்துகிடந்தன. செல்வத்துள் பெருஞ்செல்வம் மானுடர் தோள்தழுவி அமர்ந்திருக்கும் கணங்களே என்று காட்டின தெருக்கள். ஈச்சங்கள் விற்கும் அங்காடிகளில் மழைநீரும் மலைநீரும் செம்மண்நீரும் ஒன்றாகக் கலக்கும் நதிப்பெருக்குபோல அனைத்து மனிதர்களும் நிரைந்து அமர்ந்து அருந்தினர். சிரித்தும் பூசலிட்டும் மகிழ்ந்தனர். தாழ்ந்த கூரையிடப்பட்ட பரத்தையர்தெருக்களில் ஆடும் கால்களுடன் தோள்பிணைந்து காப்பிரிகளும் யவனர்களும் நடந்தனர்.

வேம்புமரங்களால் மூடப்பட்டிருந்தது தேவபாலம். அவை கடும்கோடையிலும் தீவை குளிரவைத்திருந்தன. அவற்றின் பழுத்தஇலைகளால் தீவின் அனைத்துத் தெருக்களும் பொற்கம்பளம் விரிக்கப்பட்டிருந்தன. பீஷ்மர் வந்தபோது வேம்புக்கூட்டங்கள் காய்த்து பசுங்குலைகள் கனத்து கிளைதாழ்ந்து காற்றிலாடின. அவரது வசிப்பிடத்தின் கூரையிலும் தரையிலும் காற்றில் வேம்பின் காய்கள் உதிரத்தொடங்கின.

ஒருநாளிரவில் அவர் ஓர் இனிய நினைவு நெஞ்சில் மீண்டதுபோல வேம்பின் பழத்தின் நறுமணத்தை உணர்ந்தார். அந்த மணம் சிலநாட்களாகவே தீவில் இருந்தாலும் அப்போதுதான் அவர் சிந்தனையை அடைந்தது. மறுநாள் எழுந்து வேம்புமரங்களை அண்ணாந்து நோக்கி நடந்தபோது கிளிகள் பறந்து உண்டுகொண்டிருந்த வேப்பம் பழங்களைக் கண்டார். கீழே உதிர்ந்துகிடந்த பொன்னிறப்பழங்களை எடுத்து பார்த்தார். வாயில் போட்டு கசப்பே இனிப்பான அதன் மாயத்தை அறிந்தார்.

சிலநாட்களில் வேப்பங்காய்களெல்லாமே பொன்மணிக்கொத்துகளாக மாறின. தலைக்குமேல் நூறு விழவுகள் கூடியதுபோல கிளிகளின் ஓசை நிறைந்தது. சிலநாட்களில் நடப்பதும் அமர்வதும் வேப்பம்பழங்களின் மீதுதான் என்றானது. பண்டகசாலையின் பொதிகளின்மேல், நாவாய்களின் கூரைகளில், படகுப்பரப்புகளில் எங்கும் வேப்பம்பழங்களின் சாறு பரவி மணத்தது. உணவிலும் குடிநீரிலும் அந்த வாசனை எப்போதுமிருந்தது. “இந்த வேம்பின் சாறும் அதன்பின் வரும் மழையும்தான் இத்தனை மக்கள் வந்துசெல்லும் இந்தத்தீவில் எந்த நோயுமில்லாமல் காக்கின்றன” என்று தீவின் வைத்தியரான கூர்மர் சொன்னார்.

வேம்புமணம் விலகத் தொடங்கும்போது மழைவரும் என்பது கணக்கு. பீஷ்மர் ஒவ்வொருநாளும் மழையை எதிர்பார்த்திருந்தார். ஒவ்வொருநாளும் காற்றில் நீராவி நிறைந்தபடியே வந்தது. மதியத்தில் வெயில் எரிந்து நின்றிருக்கையில் வேம்பின் நிழலில் அமர்ந்திருந்தபோதும் உடலில் வியர்வை வழிந்தது. நீரும் மோரும் பழச்சாறும் எவ்வளவு குடித்தாலும் தாகம் தீரவில்லை. நள்ளிரவிலும்கூட படுக்கைநனைந்து குளிரும்படி வியர்வை வழிந்தது. காற்றில் நிறைந்திருந்த நீராவியால் சிலசமயம் மூச்சுத்திணறுவதுபோலிருந்தது. அந்தக் கனத்த காற்றை உள்ளிழுத்தபோது நெஞ்சில் எடை ஏறியது.

நள்ளிரவில் உறுமல் போன்ற ஒலிகேட்டு பீஷ்மர் எழுந்து வந்து வெளியே பார்த்தார். அவரது இல்லத்தின் முன்னால் விரிந்திருந்த கடல் அலைகளின்றி அசைவிழந்து கிடந்தது. கடற்பாறைகள் நீருடனான விளையாட்டை நிறுத்திவிட்டு எதிர்நோக்கி சிலைத்திருந்தன. இருண்ட வானை இருண்ட கடல் தொடும் தொடுவான் கோடு தெரிந்தது. வானில் ஒளியாலான ஒரு வேர் படர்ந்திறங்கியது. பாறைகள் உருள்வதுபோல வானம் அதிர்ந்தது. மறுபக்கம் இன்னொரு ஒளிவிழுது மண்ணிலிறங்கியது. கரியயானைக்கூட்டம் சேர்ந்து ஒலியெழுப்பியதுபோல ஒலித்தது. இரு குழுக்களாக மேகங்கள் பிரிந்து மாறி மாறி ஒளியாலும் ஒலியாலும் போட்டிபோடுவதுபோலிருந்தது.

பீஷ்மர் அந்த விளையாட்டை நோக்கி நின்றிருந்தார். கடலில் இருந்து எழுந்துவந்த காற்றின் கீற்று ஒன்று அவரை மோதி அவர் குழலைத் தள்ளிப் பறக்கவிட்டுப் பின்னால் சென்றது. சற்றுநேரம் கழித்து இன்னொரு காற்றுக்குழவி. பின் மீண்டும் ஒன்று. பிறகு குளிர்ந்த காற்று பேரொலியுடன் வந்து அவரை சற்று நிலையழியச் செய்து பாய்ந்துசென்று வேப்ப மரங்களின் கிளைகளைக் கோதி பின்னுக்குத்தள்ளி கடந்துசென்றது. மின்னல் கண்களை ஒளியால் அழித்தபடி அதிர்ந்து அணைய இருபக்கமும் பேரொலியுடன் இடி ஒலித்தது. பல்லாயிரம் குட்டிக்குதிரைகள் பாய்ந்துசெல்வதுபோல பெரிய நீர்த்துளிகள் நீரிலும் கடற்பாறையிலும் மண்ணிலும் வீடுகளிலும் மரங்களிலும் அறைந்து சென்றன. ஆவேசமாகக் குரலெழுப்பியபடி வந்து மழை அனைத்தையும் மூடிக்கொண்டது.

மழையில் குளிர்ந்து நடுங்கியவராக பீஷ்மர் அந்த பாறைமுனையில் நின்றிருந்தார், மழைக்குள் மின்னல்வெட்டியபோது பலகோடிப் பளிங்குவேர்களின் பின்னலைக் கண்டார். சிலிர்த்துக்கொண்ட பளிங்குரோமப் பரப்பைக் கண்டார். நெளியும் நீர்த்திரையின் ஓரம் தீப்பற்றிக்கொண்டதுபோல எழுந்தணைந்தன மின்னல்கள். இடியோசையை மழைப்படலம் பொத்திக்கொண்டதனால் ஒலி நனைந்த பெருமுழவுபோல ஒலித்தது.

அவர் அறைக்குள் வந்து ஆடையை மாற்றியபின் படுக்கையில் படுத்துக்கொண்டு நீரின் ஓசையைக் கேட்டுக்கொண்டிருந்தார். இங்கிருந்து செல்கிறது பாரதவர்ஷத்தையே உயிரால் மூடும் அன்னையின் கருணை. கடலன்னையின் புதல்வியான வர்ஷை. அள்ளிவழங்கும் விருஷ்டி. பேதங்களற்ற மஹதி. இந்திரனின் மகளாகிய தயை.

பழைய இல்லத்தின் கூரை சொட்டத்தொடங்கியது. அறையின் மண்தரைமுழுக்க நீர் சொட்டிக்கொண்டிருந்தது. அவர்மேலும் துளிகள் விழுந்தன. நீர் எத்தனை இனியதென்றறிய கோடைமழை போல் பிறிதொன்றில்லை.

மறுநாள் விடியவேயில்லை. துறைமுகமே அடங்கி அன்னைக்கோழியின் சிறகுக்குள் குஞ்சுகள் போல மழைக்குள் அமர்ந்திருந்தது. கூரைவிளிம்புகளில் இருந்து பளிங்குத்தூண்கள் போல பட்டுத்திரைபோல மழை தொங்கிக்கிடந்தது. வேம்பின் இலைத்தழைப்புகள் எழுந்து அழுந்திக் குமுறிக்கொந்தளித்தன. மழையே பகலாகி மழையே இரவாகி மறுநாளும் மழையே விடிந்தது. மழையன்றி ஏதுமிருக்கவில்லை.

மூன்றாம்நாள் மழை மெல்ல இடைவெளிவிட்டது. கரியகூரையாக இறுகியிருந்த வானில் கீழ்ச்சரிவில் ஒரு வாசல்திறந்து தளிர்வெளிச்சம் கீழே விழுந்து கடலை ஒளிபெறச்செய்தது. ஆனால் தெற்குச்சரிவிலிருந்து இருண்டமேகங்கள் ஒன்றை ஒன்று முட்டியபடி மேலேறிக்கொண்டிருந்தன. அந்தக்கரும்பரப்பில் மின்னல்கீற்றுகள் துடிதுடித்து அணைந்தன. அவ்வொளியில் வடிவம்பெற்ற கருமேகங்கள் மீண்டும் கருமைவெளியாக ஆயின.

மதிய உணவை உண்டபின் வாயில்திண்ணையில் அமர்ந்து வானைநோக்கிக் கொண்டிருந்த பீஷ்மரை நோக்கி வந்து வணங்கி நின்றான் அஸ்தினபுரியின் ஒற்றனாகிய சுகர்ணன். பீஷ்மர் அவனை என்ன என்பதுபோலப் பார்த்தார். “பேரரசி சத்யவதியின் ஆணை” என்றான் சுகர்ணன். பீஷ்மர் தலையசைத்தார். “வரும் நிறைநிலவுநாளுக்குள் தாங்கள் அங்கே இருந்தால் நன்று என்று எண்ணுகிறார்.”

“ஏன்?” என்றார் பீஷ்மர். அவருக்கு என்ன என்று உடனே புரிந்துவிட்டது. “இளவரசர் திருதராஷ்டிரருக்குப் பதினெட்டு வயது நிறைவடைந்தபின் வரும் முதல் நிறைநிலவு அது” என்றான் சுகர்ணன். பீஷ்மர் தலையசைத்தார். “பேரரசி அஞ்சுகிறார்கள். திருதராஷ்டிரர் இளவரசுப்பட்டம் கொள்ள ஷத்ரியர்களின் எதிர்ப்பிருக்கிறது. நம் குடிமக்களும் எதிர்க்கக்கூடும்.” சற்று இடைவெளிவிட்டு “அத்துடன்…” என்றான்.

பீஷ்மர் ஏறிட்டுப்பார்த்தார். “நிமித்திகரும் கணிகரும் சூதரும் மூன்றுவகையில் ஒன்றையே சொல்கிறார்கள்” என்றான் சுகர்ணன். “அஸ்தினபுரிக்கு மேற்கு வானில் ஒரு எரிவிண்மீன் செந்நிறக் குங்குமத்தீற்றல்போல விழுந்தது என்றும், அது துவாபரன் என்னும் வானகப்பகடை என்றும் நிமித்திகர் சொன்னார்கள். கணிகர் பன்னிரு ராசிசக்கரத்தில் அனைத்து தேவர்களும் இடம்பெயர்ந்து ஒருவரோடொருவர் சினப்பதாகச் சொன்னார்கள்.”

“சூதர்கள்?” என்றார் பீஷ்மர். “அவர்கள் ஒரு பெருமழையைப்பற்றிப் பாடினார்கள். மேற்கே இடி இடிக்கிறது. மின்னல்கள் வெட்டுகின்றன. மழை நெருங்கி வருகிறது என்றனர். ஆனால் அது உதிர மழை. கொழுத்த குருதி வானிலிருந்து செவ்விழுதுகளாக இறங்கும். கூரைவிளிம்புகளில் இருந்து செஞ்சரடுகளாக பொழியும். செந்நிறப்பட்டாடைகள் போல செங்குருதி அஸ்தினபுரியின் தெருக்களில் வழியும். கங்கையும் யமுனையும் செவ்வலைகள் எழுந்து கரைமுட்டி ஒழுகும் என்கிறார்கள்.”

பீஷ்மர் எழுந்து “நான் கிளம்புகிறேன்” என்றார். “செய்திப்புறாவை அனுப்பு” என்று சொன்னபின் நேராக கடலைநோக்கிச் சென்று பாறை நுனியில் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றார். மேலே தெற்கத்தியக் கருஞ்சுவர் ஒன்றாகி இணைந்து இடைவெளியை மூடியது. அந்தியென இருண்டது. மேகச்சுவரில் மின்னல்கள் நடனமிட்டன. பின்பு மழை கடலெழுந்து வருவதுபோல வந்து பீஷ்மரை மூழ்கடித்து கடந்துசென்றது.

நூல் இரண்டு – மழைப்பாடல் – 1

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம்

[ 1 ]

அலகிலா நடனம் மட்டுமே இருந்தது, நடனமிடுபவன் அந்நடனமாகவே இருந்தான். முன்பின்நிகழற்ற முதற்பெருங் காலமோ அவன் கையில் சிறு மணிமோதிரமாகக் கிடந்தது.

அசைவென்பது அவன் கரங்களாக, அதிர்வென்பது அவன் கால்களாக, திசையென்பது அவன் சடைமுடிக்கற்றைகளாக, ஒளியென்பது அவன் விழிகளாக, இருளென்பது அவன் கழுத்துநாகமாக இருந்தது. அவனென்பதை அவனே அறிந்திருந்தான். ஆடுகையில் அவனில்லை என்பதையும் அவனறிந்திருந்தான்.

ஆடலின் முதல்முழுமைக் கணங்களில் ஒன்றில் அவன் இடக்கரமும் வலக்கரமும் ஒரு மாத்திரையளவுக்கு முரண்பட்டன. அவன் இடக்கரம் காட்டியதை இடக்கால் தொடர்ந்தது. இடக்கால் அறிந்ததை இடக்கண் கண்டது. கண்ணறிந்ததை கருத்து உணர்ந்தது. கருத்து கொண்டதை கனிவும் ஏற்றது.

அவன் இடப்பக்கம் நெகிழ்ந்து அங்கொரு முலை முளைத்தது. அதில் தேம்பாலூறி நிறைந்தது. இடக்கண் நீண்டு அதில் கருணை சுரந்தது. அது அணிநீலநிறத்து அன்னையாகியது. செந்தழல்நிறமும் மணிநீல வண்ணமும் கலந்த முடிவிலா ஆடலாக இருந்தது இதுவதுவற்றது.

ஆடலுக்குள் அவன் அகம் அசைவற்ற யோகத்தில் இருந்தது. அந்த நிகழ்விலியில் அவன் நீலமாக நிறைந்திருந்தான். அங்கே செம்பொன்னிற உதயப்பேரொளியாக அவள் எழுந்தாள். அவள் புன்னகையில் அவன் தவம் கலைந்தது. அவன் அவளை தானாகக் கண்டான். அவள் தன்னை அவனாகக் காணவைத்தான். அவர்கள் நின்றாடுவதற்கும் வென்றாடுவதற்கும் தோற்றமைவதற்கும் தோற்றலேவெற்றியென அறிந்து நகைப்பதற்கும் முடிவற்ற மேடைகளைச் சமைத்தது அவர்களின் கனவு.

அக்கனவுகளெல்லாம் அவன் கை உடுக்கையின் நாதமாக எழுந்து அவனைச்சுற்றி விரிந்தன. காலமென்ற ஒன்றும், அது நிகழும் களமென ஒன்றும், அது கலைந்தடுக்கிக்கொள்ளும் விண்ணென ஒன்றும், விண் சுருளும் வெளியென ஒன்றும், வெளி ஒடுங்கும் அளியென ஒன்றும், அளியறியும் அம்மை என ஒன்றும் அங்கே உருவாகி வந்தன.

அம்மை தன் அழகிய கைகளால் அவனை பின்னாலிருந்து தழுவி அவன் செவிகளில் அவன் விரும்பும் சொல்லைச் சொல்லி அவனை எழுப்பினாள். சிரித்தோடிய அவளை அவன் நகைத்துக்கொண்டு விரட்டிச்சென்றான். ‘ஆடலும் ஆக்கலும் அமைதலும் ஆகட்டும். என்னுடன் ஆடி வெல்ல முடியுமா?’ என்றாள் அன்னை. ‘ஆம்’ என்றான் தாதை.

மேருவின் ஒளிமுனையில் அவர்கள் அமர்ந்தனர். உமை தன் வலது கையை விரித்தாள். ஒளிரும் செங்கையில் மலைகள் எழுந்தன. கடல்கள் அலைத்தன. பசுங்காடுகள் பெருகி மலர்ந்தன. உயிர்வெளி உருவாகிப் பெருகியது. அக்கையை அவள் மேருமலை மீது விரித்து ஒரு தாயக்கட்டம் செய்தாள்.

இறைவன் தன் வலக்கையை நீட்டி விண்ணகத்தில் உருண்ட சூரியனையும் இந்திரன் முதலிய தேவர்களையும் பற்றி அந்த தாயக்கட்டத்தில் கருக்களாக்கினான்.

அன்னை தன் நான்கு கைவிரல்களால் நான்கு தாயக்கட்டைகளைச் செய்தாள். திரேதம், கிருதம், துவாபரம், கலி என்னும் அக்கட்டைகளை சிரித்தபடி உருட்டி அவள் ஆடத்தொடங்கினாள்.

மடமையெனும் பாவனையால் பெண்மை ஆடுகிறது. அதன்முன் சரணடையும் பாவனையால் ஆண்மை ஆடுகிறது. வெல்லா வீழா பெருவிளையாடல். அதன் வண்ணங்கள் வாழ்க!

VENMURASU_EPI_51 _Final
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

சமந்த பஞ்சகம் என்னும் குருஷேத்ரத்தின் தென்மேற்கு மூலையில் இருந்த கொற்றவையின் சிற்றாலயத்தின் முகப்பில் அமர்ந்திருந்த ஏழு சூதர்களில் முதல்வர் தன் கிணைப்பறையை மீட்டி பாடிமுடித்ததும் அங்கிருந்த பிறர் ‘ஓம் ஓம் ஓம்’ என முழங்கி அதை ஏற்றனர்.

இரண்டாவது சூதர் தன்னுடைய மெல்லிய கரங்களால் தன் முழவை மீட்டி பாடத் தொடங்கினார்.

சூதரே, மாகதரே, ஆடுபவர்கள் எவரும் அறிவதில்லை, பகடைகளும் ஆடுகின்றன என்பதை. தங்கள் நான்கு முகங்களால் நான்கு வண்ணங்களால் அவை முடிவின்மையை உருவாக்கிக் கொள்ளமுடியும். முடிவின்மையில் அவை எங்கும் செல்லமுடியும். எவற்றையும் அடையமுடியும்.

அன்றொரு காலத்தில் ஆடலின் வேகத்தில் கிருதம் என்னும் பகடை தெறித்தோடியது. ஒளிரும் ஒரு சிவந்த விண்மீனாக அது பெருவெளியில் பாய்ந்து விண்ணகப் பாற்கடலில் விழுந்தது. அதன் அலைகள் எழுந்து அவ்வெண்ணிறப்பரப்பில் கால அகால விகாலமென சுருண்டிருந்த ஆதிசேடனை அறைந்தன. அவன் அசைவில் அறிதுயில் கொண்டிருந்த விஷ்ணு கண் விழித்தெழுந்தார். அவரது சினம்ததும்பிய கணம் பூமி எனும் தாயக்களத்தில் ஒரு மனிதனாகப் பிறந்தது.

சூதரே மாகதரே, அவன் பெயர் பரசுராமன். இப்புவியில் ஜமதக்கினி முனிவருக்கும் ரேணுகை அன்னைக்கும் மைந்தனாகப் பிறந்தான். அளவுமீறும் அமுதம் விஷமானதுபோல அறம் காக்கும் ஷத்ரியவீரமே மறமாக ஆன காலம் அது. தேர்கள் உருளும் பாதையில் ஆயிரம் சிற்றுயிர்கள் மாள்கின்றன. சூதரே, அனைத்து தேர்களுக்கும் மேல் ஓடிச்செல்கிறது காலத்தின் பெருந்தேர்.

தன் பெருந்தவத்தால் சிவனிடமிருந்து பெற்ற மழுவுடன் தந்தையின் வேள்விக்கு விறகுவெட்ட வனம்புகுந்த பரசுராமன் பறவைகளின் குரல்கேட்டு வழி தேர்ந்து சென்றுகொண்டிருந்தபோது நாரதர் ஒரு குயிலாக வந்து கூவி அவனை வழிதவறச்செய்தார்.

மும்முறை வழிதவறிய பரசுராமன் சென்றடைந்த இடம் அஸ்ருபிந்துபதம் என்றழைக்கப்பட்ட நிலம். அங்கே பளிங்குத்துளிகளே மணலாக மாறி சூரியனின் ஒளியில் கண்கூச மின்னுவதை அவன் கண்டான். அந்நிலம் வெம்மையானது என்று எண்ணி அவன் பாதங்களை எடுத்து வைத்தபோது அவை குளிர்ந்து பனிபோலிருப்பதை உணர்ந்தான்.

அவற்றில் ஒன்றை எடுத்து தன் நெஞ்சோடு சேர்த்து ‘பளிங்குமணிகளே, நீங்கள் எவர் என’ அவன் வினவியபோது அது விம்மியழுதபடி ‘நாங்களெல்லாம் அழியாத கண்ணீர்த்துளிகள்…. மண்ணில் ஷத்ரியர்களின் அநீதியால் வதைக்கப்பட்டவர்களால் உதிர்க்கப்பட்டவர்கள். அவர்களின் அகம் அணையாமல் எங்களுக்கு மீட்பில்லை’ என்றன.

சினத்தால் விரிந்த கண்கள் செவ்வரி ஓட ‘அறத்தைக் காக்கும் ஷத்ரியன் என எவரும் இல்லையா?’ என்றான் பரசுராமன். ‘உத்தமரே, அறம்காக்கும் மன்னர்களெல்லாம் அழிந்துவிட்டனர். மன்னனின் மீட்பென்பது அறத்தால். அறம் திகழவே மக்கள். மக்கள் வாழவே மண். மண் காக்கவே அரசு. அரசை முதன்மையாகக் கொள்ளும் ஷத்ரியன் அறத்தை இழக்கிறான். அறம் மறந்த மன்னனின் அருகமரும் மன்னனும் அறத்தை இழக்கிறான். ஷத்ரியகுலமே பாற்கடல் திரிந்ததுபோல் ஆயிற்று’ என்றது கண்ணீர்த்துளி.

‘அழியாத துயரே, ஒன்று தெரிந்துகொள். ஆற்றாது அழுத கண்ணீர் யுகயுகங்களை தன்னந்தனியாகக் கடந்துசெல்லும். தனக்கான வாளையும் வஞ்சினத்தையும் அது கண்டடையும். இன்று இம்மண்ணில் நின்று உங்களுக்கொரு வாக்களிக்கிறேன். உங்கள் வஞ்சத்தை நான் தீர்ப்பேன். இங்குள்ள ஒவ்வொரு துளியையும் நான் விண்ணகம் அனுப்புவேன். அதற்கு என் பெருந்தவமே துணையாகுக’ என்று பரசுராமன் வஞ்சினம் உரைத்தான். ஆம் ஆம் ஆம் என ஐந்து பருப்பொருட்களும் குரல் எழுப்பி அதை ஆதரித்தன.

குருதிவெறி கொண்ட மழுவுடன் மலையிறங்கி ஊர்புகுந்த பரசுராமன் இருபத்தொரு முறை பாரதவர்ஷம் முழுக்கச் சுற்றி ஷத்ரிய குலங்களை கொன்றழித்தான். அவர்களின் கோட்டைகளை எரித்தான், அவர்களின் சிரங்களைக் குவித்தான். அவர்களின் குலங்களை கருவறுத்தான். அவர்களின் ஒவ்வொருதலைக்கும் ஒரு கண்ணீர்மணி விண்ணகம் சென்று ஒரு விண்மீனாகி மண்ணைப்பார்த்து புன்னகைசெய்தது.

அவன் சென்ற திசைகளில் எல்லாம் நதிகள் சிவந்து குருதிவரிகளாக மாறின. அவன் காலடிபட்ட நிலங்களெல்லாம் குருதி ஊறி கொன்றையும் மருதமும் முல்லையும் செண்பகமும் செந்நிற மலர்களைப் பூத்தன.

பரசுராமன் தன் குருதி சொட்டும் மழுவுடன் சூரியநகரியை ஆண்ட மூலகன் என்னும் அரசனைக்கொல்லச் சென்றான். அவன் தன் ஷத்ரியத்தன்மையை முற்றிலும் கைவிட்டு தன் அன்னையருக்கு மைந்தனாக மட்டும் ஆனான். அவன் அன்னையர் அவனைச்சூழ்ந்து அணைத்துக்கொண்டனர். பரசுராமனின் மழு அவர்களை மும்முறை சுற்றிவந்து வணங்கி மீண்டது. நாரிவசன் என்றழைக்கப்பட்ட அம்மன்னனில் இருந்து ஷத்ரியகுலம் மீண்டும் முளைத்தெழுந்தது. அன்னையரின் கைகளாலேயே அரசு காக்கப்படுமென அவ்வம்சம் அறிந்திருந்தது.

பரசுராமன் ஷத்ரியர்களைக் கொன்று வென்ற கிழக்குத் திசையை அத்துவரியனுக்கும், வடக்கை உதகாதனுக்கும், மத்திய தேசத்தை ஆசியபருக்கும், ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்டனுக்கும் அதற்கு அப்பால் உள்ள நிலத்தை சதசியர்களுக்கும் அளித்தான். பின்பு பெருகிப்புரண்டு சென்ற சரஸ்வதி நதியில் இறங்கி தன் மழுவின் குருதியை கழுவிக்கொண்டான்.

பரசுராமன் தன் பணிமுடித்து வந்து நின்ற இந்த இடம் அன்று ஐந்து குளங்கள் கொண்டதாக இருந்தமையால் பஞ்சசரஸ் என்று அழைக்கப்பட்டது. போரில் இறங்கியபின்னர் தன் வில்லை கீழிறக்காத அவன் தன் மூதாதையருக்கு நீர்க்கடன் செய்யவில்லை. ஆகவே நீர்க்கடன்களைச் செய்வதற்காக முதல் குளத்தில் இறங்கி தன் கைகளைக் கழுவினான்.

அக்கணமே அந்த நீர்நிலை கொந்தளித்து அலையெழுந்து குருதித்தேக்கமாக மாறியது. திகைத்தபின் அவன் அடுத்த நீர்நிலையில் தன் கைகளைக் கழுவினான். அதுவும் குருதியாகி நிறைந்தது. ஐந்து குளங்களும் குருதிக்கொப்பளிப்புகளாக ஆனதைக் கண்டு அவன் செயலிழந்து நின்றான்.

கண்ணீருடன் தன் தந்தையையும் மூதாதையரையும் ஏறிட்டு நோக்கி பரசுராமன் கூவினான். ‘எந்தையரே, இக்குளங்கள் எவை? இங்கே நான் செய்யவேண்டியதென்ன?’

இடியோசைபோல வானில் மெய்யிலிக் குரல் எழுந்தது. ‘நீ கொன்ற ஷத்ரியர்களின் குருதி முதல் குளம். அவர்களின் பெண்களின் கண்ணீரே இரண்டாவது குளம். அவர்தம் குழந்தைகளின் அழுகை மூன்றாவது குளம். அவர் மூதாதையரின் தீச்சொல் நான்காவது குளம். பரசுராமனே, ஐந்தாவது குளம் அவர்களின் உருவாகாத கருக்களின் ஏக்கமேயாகும்.’

இடியோசையை நோக்கி பரசுராமன் கேட்டான் ‘நான் அறத்தையல்லவா நிலைநாட்டினேன்? ஆற்றாத ஆயிரம்கோடி விழித்துளிகளை விண்ணேற்றியவன் அல்லவா நான்?’ மெய்யிலி சொன்னது. ‘ஆம், ஆனால் எதன்பொருட்டென்றாலும் கொலை பாவமேயாகும்.’

திகைத்து சற்று நேரம் நின்றபின் இரு கைகளையும் விரித்து ‘ஆம் மூதாதையரே, அதை நானும் என் அகத்தில் உணர்ந்தேன். இந்தக் குருதியெல்லாம் என் நெஞ்சிலிருந்து வழிந்ததே. என்னைப் பொறுத்தருளுங்கள். விண்ணகங்களில் நீங்கள் பசித்திருக்கச் செய்துவிட்டேன். அணையாத விடாயை உங்களுக்கு அளித்துவிட்டேன்’ என்றான்.

’மைந்தனே, தன்னையறிந்தவனுக்கு பாவமில்லை என்கின்றன வேதங்கள். அந்த ஐந்து குருதிச்சுனைகளின் அருகே அமர்வாயாக. அங்கே நீ செய்யும் ஊழ்கத்தில் நீ உன்னை அறிந்து மீள்வாய்’ என்றனர் நீத்தார்.

சூதரே மாகதரே, இந்த சமந்த பஞ்சகத்தின் அருகே கிருத யுகத்தில் பரசுராமர் அமர்ந்து தவம்செய்தார். உடலுருகி உளமுருகி கனவுருகி காரிருள் உருகி கடுவெளியுருகி எஞ்சியபோது அவர் தன்னை அறிந்துகொண்டார்.

அப்புன்னகையுடன் அவர் விழிதிறந்தபோது இந்த ஐந்து குளங்களும் தெளிந்த குளிர்நீர் நிறைந்திருக்கக் கண்டார். எழுந்து அந்தக் குளங்களின் அருகே நின்று வான் நோக்கிக் கேட்டார். ‘எந்தையரே, இந்த நீர்ப்பலியை நீங்கள் பெறலாகுமா?’ வானிலிருந்து அவர்கள் புன்னகையுடன் சொன்னார்கள். ‘ஆம் மைந்தா, அவை உன் கண்ணீரால் நிறைந்துள்ளன. அவை எப்போதும் அப்படியேதான் இருக்கும்.’

பரசுராமரின் கண்ணீரான இந்தக் குளங்களை வாழ்த்துவோம். மாமனிதர்களின் கண்ணீரில்தான் மனிதகுலம் காலம்தோறும் நீராடுகிறதென்பதை அறிக. ஓம் ஓம் ஓம்!

இரண்டாவது சூதர் பாடிமுடிப்பதற்குள் மூன்றாவது சூதர் வெறியெழுந்து தன் துடிப்பறையை மீட்டி பாடத்தொடங்கினார்.

சூதரே கேளுங்கள். மாகதரே கேளுங்கள். செவிகள் கொண்டவர்கள் அனைவரும் கேளுங்கள். சிந்தை கொண்டவர்கள் அனைவரும் கேளுங்கள். இதோ இன்னொரு கதை.

விண்ணிலுருளும் மூன்றாவது பகடையின் பெயர் துவாபரன். முக்கண்ணனின் சுட்டுவிரலில் இருந்து தெறித்து அவன் விண்விரிவில் விரைந்தான். ஒளிசிதறும் நீல விண்மீனாக உருண்டோடி சூரியனின் தேர்ப்பாதைக்குக் குறுக்கே புகுந்தான். ஏழுவண்ணப்புரவிகள் இழுத்த பொற்தேரில் பன்னிரு கைகளில் வஜ்ரம், பாசம், அங்குசம், கதை, தனு, சக்கரம், கட்கம், மழுவுடனும் செந்நிறம் வெண்ணிறம் பொன்னிறம் நீலநிறம் என நான்கு தாமரைகளுடனும் எழுந்தருளிய சூரியதேவனின் ரதசக்கரத்தில் முட்டினான்.

திசைதவறிய சூரியரதம் ஏழுவண்ணத்தலைகள் கொண்ட உச்சைசிரவஸால் இழுக்கப்பட்ட செந்நிறத்தேரில் விண்ணில் ஊர்ந்த இந்திரனின் பாதைக்குக் குறுக்காகச் சென்றது. சூரியனின் சாரதியான அருணன் விலகு விலகு என கூவிக் கையசைத்தபடி முழுவேகத்தில் விண்ணகப்பாதையில் விரைந்தான். இந்திர சாரதியான மாதலி ’விலகு, இது என் தலைவனின் பாதை’ என்று கூவினான். அவர்கள் மாறி மாறி போட்ட அறைகூவலால் விண்ணகங்கள் இடியொலி செய்தன.

விண்ணில் இரு பெரும் ரதங்களும் முகத்தோடு முகம் முட்டி திகைத்து நின்றன. சினம்கொண்ட சூரியன் தன் அங்குசத்தை இந்திரன் மேல் எறிந்தான். இந்திரனின் வஜ்ராயுதம் அதைத் தடுத்தது. அந்த ஓசையில் கோளங்கள் அதிர்ந்து தடம்மாறின. விண்மீன்கள் நடுங்கி அதிர்ந்தன. ஆயிரம்கோடி உலகங்களில் இடியோசையுடன் பெரும்புயல் எழுந்தது.

‘இது என் பாதை விலகு, இல்லையேல் உன்னை அழிப்பேன்’ என இருவரும் அறைகூவினர். அக்குரல்கேட்டு திசைத்தெய்வங்கள் அவர்களைச் சுற்றிக் கூடினர். யமனும் வருணனும் வாயுவும் அவர்களுடன் போரில் இணைந்துகொண்டனர். தேவர்களனைவரும் தங்கள் ஆயுதங்களுடன் அப்போரில் படைதிரண்டனர்.

விண்வெளி புழுதியால் நிறைய, படைக்கலங்களின் ஒளி கோடானுகோடி மின்னல்களாக நெளிந்துபரவ, அவை மோதும் இடியோசை திசைகளை நிறைக்க அப்பெரும்போர் நிகழ்ந்தது. முடிவில்லா ஆற்றல் கொண்ட தேவர்களின் போரில் காலம் ஒரு பாறையாக மாறி சான்றாக அமர்ந்திருந்தது.

விண்ணில் ஓடிய பெருந்தேர்களின் சக்கரங்களுக்குள் புகுந்து அவற்றை திசைமாற்றியும் மோதவிட்டும் துவாபரன் தன் ஆடலை நிகழ்த்திக்கொண்டிருந்தான். வெற்றியும் தோல்வியும் தன் விளையாட்டே என அவன் சிரித்துக்கொண்டான்.

சூரியனின் வெண்கால் சக்கரத்தில் இருந்து யமனின் கருங்கால் சக்கரத்தை நோக்கித் தெறிக்கையில் மேருவின் சிகரமுனையில் மோதி அவன் சரிந்து வானில் இருந்து உதிரலானான். வானம்கிழிபடும் பேரொலியுடன் அலறியபடி கோடியோஜனை தொலைவுள்ள செஞ்சுடராக எரிந்தபடி அவன் மண்ணில் வந்துவிழுந்தான்.

அவன் விழுந்ததைக் கண்டனர் விண்ணகத்தின் மாவீரர்கள். இனி நம் ஆடல் அந்த மண்ணில் என்று சூரியன் சொன்னான். ஆம் என்றான் இந்திரன், ஆம் ஆம் என்றனர் பிறதேவர்கள். ஆம் ஆம் ஆம் என பேரொலியுடன் எதிரொலித்தன திசைகள்.

துடியோசை உச்சவிரைவு கொள்ள கைகளும் கால்களும் வெறியில் துடித்தெழ சூதர் எழுந்து நடனமிட்டார். ‘இனி மண்ணில் நிகழும் பெரும்போர். அலகிலா ஆற்றல்களின் தேர்விளையாடல். ஐந்து பெருங்குளங்களும் ஐந்துமுறை மீண்டும் குருதியால் நிறையும். செங்குருதி! உடல்களுக்குள் எரியும் நெருப்பு! காமமும் குரோதமும் மோகமும் சுழிக்கும் பெருநதி! விண்ணகத்தின் விசைகள் அனைத்தையும் தன்னுள் கரைத்திருக்கும் வானோரின் அமுதம்!’

சூதரின் குரல் எழுந்தது. ‘காலமே, வெளியே, அழிவின்மையே குருதியாகி வருக! அறமே, கனவே, மகத்தான எண்ணங்களே குருதியாகி வருக! தெய்வங்களே தேவர்களே பாதாளநாகங்களே குருதியாகி வருக!’

இடிக்கின்றது கீழ்த்திசை! வெள்ளியென மின்னி அதிர்கின்றது மேல்திசை! மழை மழை என குளிர்கின்றது தென்திசை! மண்பூத்து மணக்கின்றது வடதிசை! வருகிறது உதிரமழை! ஆம், உதிரமழை!

சன்னதம் விலகி அவர் பின்னால் சாய்ந்து விழுந்ததைப் பார்த்தபடி ஆறு சூதர்களும் அந்த ஐந்து குளங்களின் கரையில் அமைதியில் ஆழ்ந்து அமர்ந்திருந்தனர்.

முதற்கனல் – செம்பதிப்பு – முன்பதிவு

நற்றிணை பதிப்பகம் ஜெயமோகன் எழுதும் மாகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் முதல் நாவலான “முதற்கனல்” நாவலை சாதாரண பதிப்பாகவும், கலெக்டர்ஸ் எடிஷன் எனும் செம்பதிப்பாகவும் வெளியிடுகிறது.

செம்பதிப்பில் வாங்குபவரின் பெயருடன் கூடிய ஜெயமோகன் கையெழுத்து முதல் பக்கத்தில் இடம்பெறும்.

செம்பதிப்பு ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஓவியரால் வரையப்பட்ட வண்ண ஓவியம், 80 GSM தாள் (வழக்கமாக 60-70) கெட்டி அட்டை, 40 வருடம் தாங்கும் பைண்டிங், பேஸ்டிங் என மிகச்சிறந்த கட்டமைப்புடன் இருக்கும்.

300 பிரதிகள் உறுதியானால்தான் அதை பதிப்பிக்க இயலும். எனவே செம்பதிப்பு வேண்டும் நண்பர்கள் முன்பதிவு செய்வதுடன் நற்றிணை பதிப்பகத்தின் வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்பி உறுதி செய்யவும் வேண்டுகிறோம்.

வெண்முரசு முதல்கனல் விலை ரூ.600

கீழுள்ள சுட்டியில் உங்கள் பெயர், முகவரியை தாருங்கள் . (உங்கள் தகவல்கள் பதிப்பத்திற்கு மட்டுமே போய்ச்சேரும்)

முன்பதிவுக்கான சுட்டி https://docs.google.com/forms/d/1ssJHh07TmXhttJS1Imrx9jUOMAFhmChIjNkmuAfRblA/viewform

கீழ்கண்ட வங்கிக்கணக்கில் உங்கள் பிரதிகளுக்காக தொகையை செலுத்த வேண்டுகிறோம் (பணம் செலுத்தியபின்பே தங்கள் முன்பதிவு உறுதியாகிறது)

Natrinai Pathippagam Private limited (Current AC)
HDFC Bank : 50200003570705
Triplicane Car Street Branch
IFSC :HDFC0001862

(RTGS  செய்யும்போது உங்கள் மொபைல் எண்ணை தரவும்)

தொடர்புக்கு : நற்றிணை natrinaipathippagam@gmail.com தொலைபேசி: 90956 91222

அல்லது solputhithu@gmail.com

http://www.Jeyamohan.inhttp://www.venmurasu.in

நூல் ஒன்று – முதற்கனல் – 50

பகுதி பத்து : வாழிருள்

[ 2 ]

வான்வெளிப் பெருக்கு சுழித்துச்செல்லும் புள்ளி ஒன்றில் நுழைந்து இருள்வெளியான பாதாளத்தை அடைந்த தட்சனும் தட்சகியும் அங்கே அவர்கள் மட்டுமே இருக்கக் கண்டனர். இருண்ட பாதாளம் ஆறுதிசையும் திறந்து பெரும்பாழ் எனக்கிடந்தது. அதன் நடுவே நாகங்கள் வெளியேறி மறைந்த இருட்சுழி சுழிப்பதன் அசைவையே ஒளியாக்கியபடி தெரிந்தது. அப்புள்ளியை மையமாக்கி சுழன்ற பாதாளத்தின் நடுவே சென்று நின்ற தட்சன் ‘நான்’ என எண்ணிக்கொண்டதும் அவனுடைய தலை ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து படமெடுத்தது. ஆயிரம் படங்களின் விசையால் அவன் உடல் முறுகி நெளிந்தது.

அவனருகே சென்று நின்ற தட்சகியான பிரசூதி ‘நானும்’ என்றாள். அவளுடைய உடலிலும் ஆயிரம் தலைகள் படமெடுத்தெழுந்தன. அவனுடன் அவள் இருளும் இருளும் முயங்குவதுபோல இணைந்துகொண்டாள். இருத்தல் என்னும் தட்சனும் பிறப்பு என்னும் பிரசூதியும் இணைந்தபோது இருட்டு கருக்கொண்டது. திசையழிந்து பரந்த கருமையின் வல்லமைகள் முழுக்க அவர்களிடம் வந்து குவிந்தன. அடியின்மையின் மேலின்மையின் வலமின்மையின் இடமின்மையின் முன்பின்மையின் பின்பின்மையின் இன்மையின் மையத்தில் ஒன்பது யோகங்களாக அவர்கள் ஒன்றாயினர்.

முதல் யோகம் திருஷ்டம் எனப்பட்டது. தட்சனின் ஈராயிரம் விழிகள் தட்சகியின் ஈராயிரம் விழிகளை இமைக்காமல் நோக்கின. கண்மணிகளில் கண்மணிகள் பிரதிபலித்த ஈராயிரம் முடிவின்மைகளில் அவர்கள் பிறந்து இறந்து பிறந்து தங்களை கண்டறிந்துகொண்டே இருந்தனர். ஒருவர் இன்னொருவருக்கு மறைத்துவைத்தவற்றை பேருவகையுடன் முதலில் கண்டுகொண்டனர். தாங்கள் தங்களிடமே மறைத்துக்கொண்டதை பின்னர் கண்டுகொண்டனர். கண்டுகொள்வதற்கேதுமில்லை என்று அறிந்தபின் காண்பவர்கள் இல்லாமல், காணப்படுபவரும் இல்லாமல், கண்களும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தனர்.

இரண்டாம் யோகம் சுவாசம். தட்சனின் மூச்சுக்காற்று சீறி அவள் மேல் பட்டது. அதில் அவன் உயிரின் வெம்மையும் வாசனையும் இருந்தது. உடலுக்குள் அடைபட்ட உயிரின் தனிமையும் வேட்கையும் நிறைந்திருந்தது. அவளுடைய மூச்சு அந்த மூச்சுக்காற்றை சந்தித்தது. மூச்சுகள் இணைந்த இருவரும் விம்மி படம் அசைத்து எழுந்தனர். மூச்சிலிருந்து மூச்சுக்கு அவர்களின் உயிர்கள் தங்களை பரிமாறிக்கொண்டன.

மூன்றாம் யோகம் சும்பனம். தட்சன் முதலில் தன் பிளவுண்ட நாக்கின் நுனியால் தட்சகியின் நாக்கின் நுனியைத் தீண்டினான். பல்லாயிரம் கோடி யோஜனைதூரம் நீண்ட பெரும் சிலிர்ப்பு ஒன்று அவளுடைய உடலில் ஓடியது. இருளுக்குள் அவள் நீளுடல் இருளுடன் இறுகி நெகிழ்ந்து வளைந்து சுழித்து அலைகளாகியது. பின்பு ஆயிரம் நாவுகள் ஆயிரம் நாவுகளைத் தீண்டின. ஈராயிரம் நாவுகள் ஒன்றை ஒன்று தழுவித்தழுவி இறுக்கி கரைத்தழிக்க முயன்றன. இரண்டு பெருநாகங்கள் ஈராயிரம் சிறுசெந்நாக்குகளாக மட்டும் இருந்தன.

நான்காம் யோகம் தம்ஸம். தட்சன் தன் விஷப்பல்லால் மெல்ல தட்சகியின் உடலைக் கவ்வினான். விஷமேறிய அவள் உடல் வெறிகொண்டு எழுந்து உடனே தளர்ந்து வளைவுகளை இழந்து இருளில் துவண்டது. அவள் உடலின் முடிவில்லாத வளைவுகளில் அவன் பற்கள் பதிந்துசென்றன. பின்பு அவள் திரும்பி வளைந்து அவனுடலில் தன் பற்களைப் பதித்தாள். உண்பதும் உண்ணப்படுவதுமாக இரு பேருடல்களும் ஒன்றை ஒன்று அறிந்தன.

ஐந்தாம் யோகம் ஸ்பர்சம். அடியின்மையின் கடைசி நுனியில் தட்சனின் நுனிவால் துடிதுடித்து வளைந்தது. பல்லாயிரம் கோடி யோஜனைதூரம் அது நெளிந்து வளைந்து இருள்வானில் ஊசலாடியது. பின்பு அதன் நுனியின்நுனி தட்சகியின் வாலின் நுனியின் நுனியை மெல்லத் தொட்டது. அந்தத்தொடுகையில் அது தன்னை அறிந்தது. இரு நுனிகளும் முத்தமிட்டு முத்தமிட்டு விளையாடின. தழுவிக்கொண்டன விலகிக்கொண்டன. விலகும்போது தழுவலையும் தழுவும்போது விலகலையும் அறிந்தன.

ஆறாம் யோகம் ஆலிங்கனம். இரு பேருடல்களும் புயலைப் புயல் சந்தித்ததுபோல ஒன்றோடொன்று மோதின. இரு பாதாள இருள்நதிகள் முயங்கியது போலத் தழுவின. சுற்றிவளைத்து இறுகியபோது இருவர் உடலுக்குள்ளும் எலும்புகள் இறுகி நொறுங்கின. தசைகள் சுருங்கி அதிர்ந்தன. இறுக்கத்தின் உச்சியில் வெறியுடன் விலகி இரு உடல்களும் பேரொலியுடன் அடித்துக்கொண்டன. தலைகள் கவ்வியிருக்க இரு உடல்களும் இரு திசைகளில் நகர்ந்து கோடானுகோடி இடிகள் சேர்ந்தொலித்ததுபோல அறைந்துகொண்டன. அந்த அதிர்வில் மேலே மண்ணுலகில் பூமி பிளந்து சுவாலை எழுந்தது. மலையுச்சியின் பெரும்பாறைகள் சரிந்திறங்கின.

ஏழாம் யோகம் மந்திரணம். தழுவலின் உச்சியில் இருவரும் அசைவிழந்தபோது தட்சகன் அவள் காதில் மெல்லிய காதல்சொற்களை சொல்லத்தொடங்கினான். அக்கணத்தில் பிறந்துவந்த மொழியாலான சொற்கள் அவை. அவன் சொல்லி அவள் கேட்டதுமே அம்மொழி இறந்து காற்றில் மறைந்தது. ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு மொழி அவ்வாறு உருவாகி மறைந்துகொண்டிருந்தது. தன் அனைத்துச் சொற்களையும் சொல்லிமுடித்தபின்பு சொல்லில்லாமல் நின்ற தட்சன் சொல்லாக மாறாத தன் அகத்தை முடிவிலியென உணர்ந்து பெருமூச்சுவிட்டான். அவளோ அவனுடைய இறுதிச் சொற்களையும் கேட்டவளாக அப்பெருமூச்சை எதிரொலித்தாள்.

எட்டாம் யோகம் போகம். பாதாளத்தின் இருளில் இரு பெருநாகங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. தட்சன் தட்சகிக்குள்ளும் தட்சகி தட்சனுக்குள்ளும் புகுந்துகொண்டனர். அக்கணத்தில் பதினான்குலகங்களிலும் இணைந்த ஆண்களும் பெண்களுமான அனைத்துயிர்களிலும் அவர்களின் ஆசி வந்து நிறைந்தது. தட்சகிக்குள் வாழ்ந்த கோடானுகோடி நாகக்குழந்தைகள் மகிழ்ந்தெழுந்து அவள் உடலெங்கும் புளகமாக நிறைந்து குதூகலித்தன.

ஒன்பதாம் யோகம் லயம். இருவரும் தங்கள் முழுமைக்குத் திரும்பியபோது முழுமையான அசைவின்மை உருவாகியது. பாதாள இருளில் அவர்கள் இருப்பதை அவர்கள் மட்டுமே அறிந்திருந்தனர். இருவரின் வால்நுனிகளும் மெல்லத்தொட்டுக்கொண்டிருக்க தட்சகனின் தலைகள் கிழக்கிலும் தட்சகியின் தலைகள் மேற்கிலும் கிடந்தன. அவர்கள் இரு முழுமைகளாக இருந்தனர். முழுமைக்குள் முழுமை நிறைந்திருந்தது.

VENMURASU_EPI_50
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

பின்பு அவர்கள் கண்விழித்தபோது தங்களைச் சுற்றி பாதாளம் மீண்டும் முளைத்திருப்பதைக் கண்டனர். வாசுகியின் குலத்தில் பிறந்த கோடிசன், மானசன், பூர்ணன், சலன், பாலன், ஹலீமகன், பிச்சலன், கௌணபன், சக்ரன், காலவேகன், பிரகாலனன், ஹிரண்யபாஹு, சரணன், சக்‌ஷகன், காலதந்தகன் ஆகிய பெருநாகங்கள் பிறந்து வானுக்கு அப்பால் நின்ற பேராலமரத்தின் விழுதுகள் போல ஆடின. தட்சனின் குலத்தைச் சேர்ந்த புச்சாண்டகன், மண்டலகன், பிண்டசேக்தா, ரபேணகன், உச்சிகன், சரபன், பங்கன், பில்லதேஜஸ், விரோஹணன், சிலி, சலகரன், மூகன், சுகுமாரன், பிரவேபனன், முத்கரன், சிசுரோமான், சுரோமன், மஹாகனு போன்ற மாநாகங்கள் காட்டுக்கு அடியில் நிறைந்த வேர்பரப்பு போல செறிந்தாடின.

ஐராவத குலத்தில் உதித்த பாராவதன், பாரியாத்ரன், பாண்டாரன், ஹரிணன், கிருசன், விஹங்கன், சரபன், மோதன், பிரமோதன், ஸம்ஹதாபனன் போன்ற பொன்னிறநாகங்கள் விராடவடிவம்கொண்ட சிவனின் சடைக்கற்றைகள் என நெளிந்தாடின. கௌரவ்ய குலத்தில் அவதரித்த ஏரகன், குண்டலன், வேணி, வேணீஸ்கந்தன், குமாரகன், காகுகன், ஸ்ருங்கபேரன், துர்த்தகன், பிராதன், ராதகன் போன்ற நாகங்கள் விண்வெளி நீர்வெளிமேல் ஏவிய கோடிஅம்புகள் போல எழுந்தன.

திருதராஷ்டிர குலத்தில் பிறந்த சங்குகர்ணன், பிடாரகன், குடாரமுகன், சேசகன், பூர்ணாங்கதன், பூர்ணமுகன், பிரஹாசன், சகுனி, தரி, அமாஹடன், காமடகன், சுசேஷணன், மானசன், அவ்யபன், அஷ்டாவக்ரன், கோமலகன், ஸ்வசனன், மௌனவேபகன், பைரவன், முண்டவேதாங்கன், பிசங்கன், உதபாரான், இஷபன், வேகவான், பிண்டாரகன், மகாரஹனு, ரக்தாங்கதன், சர்வசாரங்கன், சம்ருத்தன், படவாசகன், வராஹகன், வீரணகன், சுசித்ரன், சித்ரவேகிகன், பராசரன், தருணகன், மணி, ஸ்கந்தன், ஆருணி ஆகிய நாகங்கள் முடிவிலியைத் துழாவும் இருளின் விரல்கள் என வானில் நெளிந்தன.

பாதாளத்தில் இருந்து இருள் பெருநதிகளாகக் கிளம்பியது. விண்ணின் ஒளியுடன் கலந்து பின்னி பெருவெளியை நெய்தது. நிழல்களாக உயிர்களைத் தொடர்ந்தது. கனவுகளாக உயிரில் கனத்தது. இச்சையாக எண்ணங்களில் நிறைந்தது. செயல்களாக உடலில் ததும்பியது. சிருஷ்டியாக எங்கும் பரவியது. ஒளியை சிறுமகவாக தன் மடியில் அள்ளிவைத்து கூந்தல் சரியக் குனிந்து முத்தமிட்டுப் புன்னகைசெய்தது.

[ முதற்கனல் நாவல் நிறைவு ]

நூல் ஒன்று – முதற்கனல் – 49

பகுதி பத்து : வாழிருள்

[ 1 ]

ஆடி மாதம் வளர்பிறை ஐந்தாம்நாள் ஜனமேஜயனின் சர்ப்பசத்ரவேள்வி முடிந்து ஒருவருடம் நிறைவுற்றபோது ஆஸ்திகன் வேசரநாட்டில் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் தன் குலத்தினரின் கிராமத்திற்குள் நுழைந்தான். அவனுடைய வருகையை முன்னரே நெருப்பில் கண்டிருந்த மானசாதேவி குடில்முற்றத்தில் நாகபடக்கோலம் அமைத்து அதன்நடுவே நீலநிறமான பூக்களால் தளமிட்டு ஏழுதிரியிட்ட விளக்கேற்றி வைத்து அவனுக்காகக் காத்திருந்தாள். அவன் குலத்தைச் சேர்ந்த அன்னையரும் முதியவரும் அவனைக்காத்து ஊர்மன்றில் கூடியிருந்தனர். ஓங்கிய ஆலமரத்தின் மீதேறி அமர்ந்து சில சிறுவர்கள் கிருஷ்ணையின் நீர்ப்பரப்பைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

கிருஷ்ணையின் மறுபக்கம் நகருக்குச் செல்லும் பாதை தொடங்கியது. அதற்கு இப்பால் புஷ்கரவனத்துக்குள் நாகர்களின் பன்னிரண்டு ஊர்கள் மட்டுமே இருந்தன. நாகர்குலத்தவர் மட்டுமே அந்தத்துறையில் படகோட்ட ஒப்புதல் இருந்தது. நாகர்களல்லாத எவரும் அங்கே நதியைத் தாண்டுவதில்லை. பாறைகள் நிறைந்த அப்பகுதியில் மென்மரத்தைக் குடைந்து செய்யப்பட்ட நாகர்களின் படகுகளன்றி பிற நீரிலிறங்கவும் முடியாது.

சாலையின் மறுபக்கம் நான்குநாகர்களின் படகுகளும் காத்திருந்தன. காலையில் சந்தைக்குச் சென்ற நாகர்கள் மாலையில் திரும்புவது வரை பொதுவாக அப்பகுதியில் படகுகள் கிருஷ்ணையில் இறங்குவதில்லை. பயணிகளும் இருப்பதில்லை. கரையில் நின்றிருந்த மருதமரத்தின் அடியில் படகுகளை நீரிலிறங்கிய வேரில் கட்டிவிட்டு நாகர்கள் அமர்ந்திருந்தனர். வெண்கல்கோபுரம் போல எழுந்து நின்றிருந்த மருதத்தின் வேர்கள் மேல் அமர்ந்திருந்த முதியவர் இருவர் கண்கள் சுருக்கி தங்கள் எண்ணங்களுக்குள் மூழ்கியிருந்தனர். இருவர் இளைஞர்கள். தூரத்தில் தெரியும் அசைவுகளை நோக்கிக்கொண்டு அவர்கள் அமைதியாக நின்றனர்.

சற்றுநேரத்தில் புதர்களுக்கு அப்பால் ஆஸ்திகன் தெரிந்தான். இளைஞர்கள் இருவரும் எழுச்சிக் கூச்சலிட்டபோது முதியவர்கள் எழுந்துகொண்டனர். ஓர் இளைஞன் நேராக தன் படகைநோக்கி ஓடி அதை இழுத்து வழியருகே வைத்து “இதுதான்…இந்தப் படகுதான்” என்றான். முதியவர் புன்னகையுடன் “ஒரு படகே போதும். ஒருவர் நான்கு படகுகளில் ஏறமுடியாது” என்றார்.

ஆஸ்திகன் சடைமுடிகள் இருபக்கமும் தோள்வரை தொங்க செம்மண்போல வெயில்பட்டுப் பழுத்த முகமும் புழுதிபடிந்த உடலுமாக வந்தான். அவன் சென்றபோது இருந்தவையில் அந்த விழிகள் மட்டுமே அப்படியே மீண்டன. அவனைக் கண்டதும் நான்கு படகோட்டிகளும் கைகூப்பி வணங்கி நின்றனர். ஆஸ்திகன் நெருங்கி வந்ததும் முதியவர் இருவரும் அவன் காலடியில் விழுந்து வணங்கினர். அதைக்கண்டபின் இளைஞர்கள் ஓடிவந்து அவனைப் பணிந்தனர். அவன் காலடியில் பணிபவர்களை தன்னிலிருந்து கீழானவர்களாக எண்ணும் மனநிலையை கடந்துவிட்டிருந்தமையால் அவ்வணக்கங்களுக்கு முற்றிலும் உரிய முனிவனாக இருந்தான். அவர்களை சிரம்தொட்டு ஆசியளித்தான்.

முதியவர் “எங்கள் குடில்களுக்கு மீண்டு வரும் ஆஸ்திகமுனிவரை நாகர்குலம் வணங்குகிறது” என்று முகமன் சொல்லி படகுக்குக் கொண்டுசென்றான். ஆஸ்திகன் ஏறியபடகு கிருஷ்ணையில் மிதந்ததும் அப்பால் ஆலமரத்து உச்சியில் இருந்த சிறுவர்கள் உரக்கக் கூச்சலிட்டனர். சிலர் இறங்கி கிருஷ்ணைநதிக்கரை நோக்கி ஓடத்தொடங்கினர்.

கிருஷ்ணை அங்கே மலையிடுக்கு போல மண் குழிந்து உருவான பள்ளத்துக்குள் நீலப்பெருக்காக ஓடிக்கொண்டிருந்தது. மரங்கள் அடர்ந்த சரிவில் வேர்களையே படிகளாகக் கொண்டு அவர்கள் மேலேறி வந்தனர். அவர்கள் வரும் வழியெங்கும் கொன்றைமலர்கள் பொன் விரித்திருந்தன. அரசமரத்தின் இலைகள் கேளா மந்திரத்தில் துடித்தன.

முதுபெண்டிர் ஊர்மன்றிலும் வேலிமுகப்பிலும் கூடி நின்றனர். சிலர் மானசாதேவி வெளியே வருகிறாளா என்று பார்த்தனர். அவள் இல்லமுகப்பில் ஏழுதிரியிட்ட மண்ணகல் விளக்குகள் சுடருடன் நின்றன. ஆஸ்திகன் சிறுவர்களும் நாகர்குலத்து மூத்தாரும் புடைசூழ வேலிமுகப்பை அடைந்ததும் பெண்கள் குலவையிட்டனர். முதுநாகினி கமுகுப்பாளைத் தாலத்தில் நிறைத்த புதுமுயலின் குருதியால் அவனுக்கு ஆரத்தி எடுத்தபின் அந்தக்குருதியை தென்மேற்குநோக்கி மரணத்தின் தேவர்களுக்கு பலியாக வீசினாள். அவன் நெற்றியில் புதுமஞ்சள் சாந்து தொட்டு திலகமிட்டு அழைத்துவந்தார்கள்.

குடில்முன்னால் ஆஸ்திகன் வந்தபோது உள்ளிருந்து கையில் ஒரு மண்பானையுடன் மானசாதேவி வெளியே வந்தாள். ஆஸ்திகன் அவளைப்பார்த்தபடி வாயிலில் நின்றான். “மகனே, இதற்குள் உனக்காக நான் வைத்திருந்த அப்பங்கள் உள்ளன. இவற்றை உண்டுவிட்டு உள்ளே வா” என்று அவள் சொன்னாள். அந்தக்கலத்தை தன் கையில் வாங்கிய ஆஸ்திகன் அதைத்திறந்து உள்ளே இருந்து கரிய தழல்போல கணத்தில் எழுந்த ராஜநாகத்தின் குழவியை அதே கணத்தில் கழுத்தைப்பற்றித் தூக்கினான். அதை தன் கழுத்தில் ஆரமாகப் போட்டுக்கொண்டு உள்ளே இருந்த ஊமைத்தைப்பூவின் சாறும் நாகவிஷமும் கலந்து சுடப்பட்ட மூன்று அப்பங்களையும் உண்டான்.

“அன்னையே, உங்கள் மைந்தன் இன்னும் விஷமிழக்காத நாகனே” என்று அவன் சொன்னதும் மானசாதேவி முகம் மலர்ந்து “இது உன் இல்லம். உள்ளே வருக” என்றாள். ஆஸ்திகன் குடிலுக்குள் நுழைந்ததும் அவன் குலம் ஆனந்தக்கூச்சலிட்டது. மூதன்னையர் குலவையிட்டனர். ஆஸ்திகன் அன்று கிருஷ்ணையில் நீராடி தன் சடையையும் மரவுரியையும் களைந்தபின் முயல்தோலால் ஆன ஆடையையும் ஜாதிக்காய் குண்டலத்தையும் அணிந்து தலையில் நீலச்செண்பக மலர்களையும் சூடிக்கொண்டான்.

ஆஸ்திகன் தன் இல்லத்தில் சாணிமெழுகிய தரையில் அமர்ந்து அன்னை அளித்த புல்லரிசிக்கூழையும் சுட்ட மீனையும் உண்டான். அதன்பின் அன்னை விரித்த கோரைப்பாயில் படுத்து அவள் மடியில் தலைவைத்துத் துயின்றான். அவன் அன்னை அவனுடைய மெல்லிய கரங்களையும் வெயிலில் வெந்திருந்த காதுகளையும் கன்னங்களையும் வருடியபடி மயிலிறகு விசிறியால் மெல்ல வீசிக்கொண்டு அவனையே நோக்கியிருந்தாள்.

அன்றுமாலை ஊர்மன்றில் நாகர் குலத்தின் பன்னிரண்டு ஊர்களில் வாழும் மக்களும் கூடினர். பசுஞ்சாணி மெழுகிய மன்றுமேடையில் புலித்தோலாடையும் நெற்றியில் நாகபட முத்திரையிட்ட முடியுமாக அமர்ந்த முதியநாகர்கள் முதுநாகினிகள் பரிமாறிய தேன்சேர்த்து புளிக்கவைக்கப்பட்ட கடுங்கள்ளை குடுவைகளில் இருந்து அருந்தினர். கூடியிருந்த சிறுவர்கள் பூசலிட்டு பேசிச் சிரித்துக்கொண்டு கிழங்குகளை சுட்டமீன் சேர்த்து தின்றனர். ஆஸ்திகன் தன் அன்னையுடன் வந்து மன்றமர்ந்ததும் வாழ்த்தொலிகள் எழுந்தன.

முதுநாகர் எழுந்து அனைவரையும் வணங்கினார். “‘விண்ணகமாக விரிந்த ஆதிநாகத்தை வணங்குகிறேன். அழியாத நாகங்களையும் அவர்களை ஆக்கிய முதல் அன்னை கத்ருவையும் வணங்குகிறேன். ஒருவருடம் முன்பு இத்தினத்தில் அஸ்தினபுரியின் வேள்விக்கூடத்தில் நம் குலத்தின் இறுதிவெற்றியை நிகழ்த்தியவர் நம் குலத்தோன்றல் ஆஸ்திக முனிவர். இது ஆடிமாத ஐந்தாம் வளர்பிறைநாள். இனி இந்நாள் நாகர்குலத்தின் விழவுநாளாக இனிமேல் அமைவதாக. இதை நாகபஞ்சமி என்று நாகர்களின் வழித்தோன்றல்கள் கொண்டாடுவதாக” என்றார்.

VENMURASU_EPI_49_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அங்கிருந்த அனைவரும் தங்கள் கைகளைத் தூக்கி அதை ஆதரித்தனர். நாகர்குலத்தலைவர்கள் தங்கள் கோல்களை தூக்கி மும்முறை ‘ஆம் ஆம் ஆம்’ என்றனர். முதுநாகர் “ஆதிப்பெருநாகங்கள் மண்ணில் வாழ்ந்த மனிதர்களை கூடிப்பெற்ற ஆயிரத்து எட்டு பெருங்குலங்கள் பாரதவர்ஷத்தில் உள்ளன. அவற்றில் முதுபெருங்குலமான நம்மை செஞ்சு குடியினர் என்றழைக்கிறார்கள். நாம் வாழும் இந்த மலை புனிதமானது. தவம்செய்யாதவர் இங்கே காலடிவைக்கமுடியாது. ஆகவே இது முனிவர்களால் ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படுகிறது.”

“பெருந்தவத்தாரான ஜரத்காரு முனிவர் தனக்குகந்த துணைவியைத் தேடி இங்கு வந்தார். இந்த ஸ்ரீசைலத்தின் கரையில், கிருஷ்ணை நதிக்கரையில் அவர் நம் குலத்துப்பெண்ணை மணந்து ஆஸ்திக முனிவரின் பிறப்புக்குக் காரணமாக ஆனார். அப்பிறவிக்கான நோக்கமென்ன என்பது இன்று நமக்குத் தெளிவாகியிருக்கிறது. நாகர்களே நம் குலம் பெருமைகொண்டது. இம்மண்ணில் நாகர்குலம் வாழும்வரை நம் பெருமை வாழும்.” அனைவரும் சேர்ந்து குரலெழுப்பினர்.

“ஜரத்காருவின் துணைவியாகிய நம் குலத்து தவப்பெண் மானசாதேவி நாகங்களின் தலைவனான நாகபூஷணனை எண்ணி தவம்செய்து அவன் வரம் பெற்றவள். அவன் வாழும் கைலாசத்துக்குச் சென்று மீண்டவள். அவளை பாதாளநாகமான வாசுகி தன் சோதரியாக ஏற்றுக்கொண்டார். ஜனமேஜயமன்னரின் வேள்வியில் பாதாளநாகங்கள் அழியத்தொடங்கியபோது இங்கே அவரே வந்து தன் தங்கையிடம் அவள் மகனை அனுப்பும்படி ஆணையிட்டார். மண்ணைப்பிளந்து மாபெரும் கரும்பனை போல வாசுகி எழுந்த வழி இன்னும் நம் வனத்தில் திறந்திருக்கிறது. அந்த அஹோபிலத்தை நாம் இன்று நம் ஆலயமாக வணங்குகிறோம். அதனுள் செல்லும் கரிய இருள் நிறைந்த பாதைவழியாக பாதாளநாகங்களுக்கு நம் பலிகளை அளிக்கிறோம்.”

“நாகர்களே ஜனமேஜயன் என்னும் எளிய மன்னர் ஏன் பாதாளவல்லமைகளாகிய நாகங்களை அழிக்கமுடிந்தது?” என்று முதுநாகர் கேட்டார். “நாகங்கள் மீது அவர்கள் மூதன்னை கத்ருவின் தீச்சொல் ஒன்றிருக்கிறது நாகர்களே. நாககுலத்தவராகிய நம்மனைவர்மீதும் அந்தத் தீச்சொல் உள்ளது.” முதுநாகர் சொல்லத்தொடங்கினார்.

முதற்றாதை தட்சகரின் மகளும் பெருந்தாதை கஸ்யபரின் மனைவியுமான அன்னை கத்ரு விண்ணையும் மண்ணையும் ஆயிரத்தெட்டு முறை சுற்றிக்கிடக்கும் மாபெரும் கருநாகம். அவள் கண்கள் தண்ணொளியும் குளிரொளியும் ஆயின. அவள் நாக்கு நெருப்பாக மாறியது. அவள் மூச்சு வானை நிறைக்கும் பெரும் புயல்களாகியது. அவள் தோலின் செதில்களே விண்ணகத்தின் மேகத்திரள்களாயின. அவள் சருமத்தின் ஒளிப்புள்ளிகளே முடிவற்ற விண்மீன் தொகைகளாக ஆயின. அவள் அசைவே புடவியின் செயலாக இருந்தது. அவளுடைய எண்ணங்களே இறைவல்லமை என இங்கு அறியப்படலாயிற்று. அவள் வாழ்க!

ஊழிமுதல்காலத்தில் அன்னை ஆயிரம் மகவுகளை முட்டையிட்டுப் பெற்றாள். அவை அழியாத நாகங்களாக மாறி மூவுலகையும் நிறைத்தன. அந்நாளில் ஒருமுறை மூதன்னை கத்ரு விண்ணில் நெடுந்தொலைவில் ஒரு சின்னஞ்சிறிய ஒளிப்புள்ளி போல நகர்ந்து சென்ற இந்திரனின் புரவியான உச்சைசிரவஸின் பேரொலியைக் கேட்டாள். அவளுடைய சோதரியும் வெண்ணிறம் கொண்ட நாகமும் ஆகிய அன்னை வினதையிடம் அது என்ன என்று வினவினாள். பேரொலி எழுப்பும் அதன் பெயர் உச்சைசிரவஸ். இந்திரனின் வாகனமாகிய அது இந்திரநீலம், கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், பொன், சிவப்பு நிறங்களில் அமைந்த தலைகளுடன் விண்ணில் பறந்துசெல்கிறது” என்று வினதை பதில் சொன்னாள்.

“அதன் வால் என்ன நிறம்?” என்று அன்னை கத்ரு கேட்டாள். “அதன் வால் வெண்ணிற ஒளியாலானது” என்று வினதை பதில் சொன்னாள். ‘ஒளியில் இருந்து வண்ணங்கள் எப்படி வரமுடியும்? இருட்டே முழுமுதன்மையானது. வண்ணங்களை உருவாக்கும் முடிவற்ற ஆழம் கொண்டது. அங்கிருந்தே புவிசமைக்கும் ஏழு வண்ணங்களும் வருகின்றன” என்றாள் மூதன்னை கத்ரு. அதை பார்த்துவிடுவோம் என அவர்கள் இருவரும் முடிவெடுத்தனர். அப்போட்டியில் வென்றவருக்கு தோற்றவர் அடிமையாக இருக்கவேண்டுமென வஞ்சினம் கூறினர்.

உச்சைசிரவஸ் விண்ணாளும் பேரொளிக்கதிர். அதன் ஏழுவண்ணங்களும் இன்மையில் இருந்தே எழுந்தன. அதை ஒளியாகக் காணும் கண்கள் வினதைக்கும் இருளாகக் காணும் கண்கள் அன்னை கத்ருவுக்கும் முடிவிலா புடவிகளை வைத்து விளையாடும் முதற்றாதையால் அளிக்கப்பட்டிருந்தன. அங்கே வாலென ஏதுமில்லை என உணர்ந்த அன்னை தன் ஆயிரம் மைந்தர்களிடமும் அங்கே சென்று வாலாகத் தொங்கும்படி ஆணையிட்டாள். அவர்களில் விண்ணில் வாழ்ந்த நாகங்கள் அன்றி பிற அனைத்தும் அதைச்செய்ய மறுத்துவிட்டன. “அன்னையே நாங்கள் மும்முறை மண்ணைக்கொத்தி உண்மைக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று ஆணையிட்டிருக்கிறோம். நாங்கள் பொய்யைச் சொல்லமுடியாது” என்றன.

விண்ணக நாகங்கள் கார்க்கோடகன் என்னும் நாகத்தின் தலைமையில் அன்னையிடம் “அன்னையே நன்றுதீது உண்மைபொய் என்னும் இருமைகளுக்கு அப்பால் உள்ளது அன்னையின் சொல். உன் ஆணையை நிறைவேற்றுவோம்” என்றன. அவ்வண்ணமே அவை பறந்துசென்று விண்ணில் நீந்தி உச்சைசிரவஸின் வாலாக மாறி பல்லாயிரம் கோடி யோஜனை தொலைவுக்கு இருள்தீற்றலாக நீண்டு கிடந்தன.

உச்சைசிரவஸைப் பார்ப்பதற்காக மூதன்னையர் இருவரும் அது செல்லும் வானகத்தின் மூலைக்குப் பறந்து சென்றனர். விண்மீன்கொப்புளங்கள் சிதறும் பால்திரைகளால் ஆன விண்கடலைத் தாண்டிச்சென்றனர். விண்நதிகள் பிறந்து சென்றுமடியும் அந்தப் பெருங்கடலுக்குள்தான் ஊழிமுடிவில் அனைத்தையும் அழித்து தானும் எஞ்சாது சிவன் கைகளுக்குள் மறையும் வடவைத்தீ உறைகிறது. அதன் அலைகளையே தெய்வங்களும் இன்றுவரை கண்டிருக்கிறார்கள். அதை அசைவிலாது கண்டது ஆதிநாகம் மட்டுமே. அது வாழ்க!

அப்பெருங்கடல்மேல் பறந்தபடி மூதன்னையர் கத்ருவும் வினதையும் உச்சைசிரவஸ் வான்திரையைக் கிழிக்கும் பேரொலியுடன் செல்வதைக் கண்டனர். அதன் வால் கருமையாக இருப்பதைக் கண்ட வினதை கண்ணீருடன் பந்தயத்தில் தோற்றதாக ஒப்புக்கொண்டாள். ஆயிரம்கோடி வருடம் தமக்கைக்கு அடிமையாக இருப்பதாக அவள் உறுதி சொன்னாள். அன்னையரின் அலகிலா விளையாட்டின் இன்னொரு ஆடல் தொடங்கியது.

நாகர்களே, தன் சொல்லைக் கேட்காத பிள்ளைகளை கத்ரு சினந்து நோக்கினாள். “நன்றும் தீதுமென இங்குள அனைத்துமே அன்னையின் மாயங்களே என்றறியாத மூடர்கள் நீங்கள். நன்றைத் தேர்வுசெய்ததன் வழியாக நீங்கள் உங்கள் ஆணவத்தையே முன்வைத்தீர்கள். நான் என நீங்கள் உணரும்போதெல்லாம் அந்த ஆணவம் உங்களில் படமாக விரிவதாக. ஆணவத்தின் முகங்களாகிய காமமும் குரோதமும் மோகமும் உங்கள் இயல்புகளாகுக. பறக்கும் திறனை நீங்கள் இழப்பீர்கள். தவழ்ந்துசெல்லும் வேகம் மட்டுமே கொண்டவர்களாவீர்கள். உங்களுக்குரியதென நீங்கள் கொண்டுள்ள அறத்தால் என்றென்றும் கட்டுண்டவர்களாவீர்கள். எவனொருவன் காமகுரோதமோகங்களை முற்றழிக்க முயல்கிறானோ அவன் முன் உங்கள் ஆற்றல்களையெல்லாம் இழப்பீர்கள். உங்கள் தனியறத்தால் இழுக்கப்பட்டவர்களாக நீங்களே சென்று அவன் வளர்க்கும் வேள்விநெருப்பில் வெந்து அழிவீர்கள்” என்று அன்னை தீச்சொல்லிட்டாள்.

“நாகர்குலமக்களே, நாமும் நம் காமகுரோதமோகங்களால் கட்டுண்டவர்களாக இருக்கிறோம். நாமும் நமது அறத்தின் அடிமைகளாக வாழ்கிறோம். மூதன்னையின் தீச்சொல் நம்மையும் யுகங்கள்தோறும் தொடர்கிறது” முதுநாகர் சொன்னார். “அன்று அந்தத் தீச்சொல் கேட்டு நடுங்கி நின்ற மைந்தர்களை நோக்கி முதற்றாதை காசியபர் சொன்னார். மைந்தர்களே நீங்கள் அழியமாட்டீர்கள். புடவி என ஒன்று உள்ளவரை நீங்களும் இருப்பீர்கள். எந்தப்பேரழிவிலும் எஞ்சியிருக்கும் ஒருதுளியில் இருந்து நீங்கள் முழுமையாகவே மீண்டும் பிறந்தெழுவீர்கள்.”

“அவ்வாறே இன்று ஜனமேஜயன் வேள்வியில் பெருநாகங்கள் எரிந்தழிந்தன. நம்குலத்தின் சொல்லால் அவர்களில் மண்ணாளும் பெருநாகமான தட்சன் மீட்கப்பட்டார். அவரிலிருந்து அழியாநாகங்களின் தோன்றல்கள் பிறப்பர். நிழலில் இருந்து நிழல் உருவாவது போல அவர்கள் பெருகி மண்ணையும் பாதாளத்தையும் நிறைப்பர். ஆம் அவ்வாறே ஆகுக!” முதுநாகர் சொல்லி முடித்ததும் நாகர்கள் தங்கள் நாகபடம் எழுந்த யோகதண்டுகளைத் தூக்கி ‘ஆம்! ஆம்! ஆம்’ என ஒலியெழுப்பினர்.

நாகங்களுக்கான பூசனை தொடங்கியது. மன்றுமேடையில் பதிட்டை செய்யப்பட்டிருந்த நாகச்சிலைகளுக்கு மஞ்சள்பூசி நீலமலர்மாலைகள் அணிவித்து கமுகுப்பூ சாமரம் அமைத்து பூசகர் பூசை செய்தனர். இரண்டு பெரிய யானங்களில் நீலநீர் நிறைத்து விலக்கிவைத்து அவற்றை நாகவிழிகள் என்று உருவகித்து பூசையிட்டனர். நாகசூதர் இருவர் முன்வந்து நந்துனியை மீட்டி நாகங்களின் கதைகளைப் பாடத்தொடங்கினர். பாடல் விசையேறியபோது அவர்கள் நடுவே அமர்ந்திருந்த மானசாதேவியின் உடலில் நாகநெளிவு உருவாகியது. அவள் கண்கள் இமையாவிழிகளாக ஆயின. அவள் மூச்சு சர்ப்பச்சீறலாகியது.

“காலகனின் மகளாகிய நான் மானசாதேவி. ஜகல்கௌரி, சித்தயோகினி, நாகபாகினி. எந்தை தட்சன் உயிர் பெற்றான். வளர்கின்றன நாகங்கள். செழிக்கின்றது கீழுலகம்” என அவள் சீறும் குரலில் சொன்னாள். இரு தாலங்களிலும் இருந்த நீலநீர் பாம்புவிழிகளாக மாறுவதை நாகர்கள் கண்டனர். நந்துனியும் துடியும் முழங்க அவர்கள் கைகூப்பினர்.

நூல் ஒன்று – முதற்கனல் – 48

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்

[ 6 ]

பாலையில் இரவில் வானம் மட்டுமே இருந்தது. இருளில் நடக்கையில் வானில் நீந்தும் உணர்வெழுந்தது. ஆனால் மண்ணை மட்டுமே பார்த்து சிறிது நடந்தால் மண்ணில் ஓர் ஒளி இருப்பதை காணமுடிந்தது. புதர்க்கூட்டங்களெல்லாம் இருள்குவைகளாக ஆகி பாதை மங்கித்தெரிந்தது. பீஷ்மர் அனிச்சையாக நின்றார். மெல்லிய ஒளியுடன் ஒரு நாகம் நெளிந்து சென்றது. பெருமூச்சுடன் பொருளில்லாது ஓடிய எண்ணங்களில் இருந்து விடுபட்டு இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு சுற்றிலும் பார்த்தார்.

நீர்வளம் மிக்க மண்ணில் பிறந்து வளர்ந்த எவருக்கும் பாலையைப் பார்க்கையில் வரும் எண்ணங்கள்தான் முதல்முறையாக அந்த வெற்றுநிலவிரிவைப் பார்க்கையில் அவருக்கும் எழுந்தன. கல்லில் செதுக்கப்பட்ட பறைவாத்தியத்தை பார்ப்பதுபோல. ஓவியத்தில் வரையப்பட்ட உணவைப்போல. பயனற்றது, உரையாட மறுப்பது, அணுகமுடியாதது. பிறிதொரு குலம் வணங்கும் கனியாத தெய்வம்.

அலையலையாக காற்று மண்ணில் படிந்திருக்க வெந்த வாசனையை எழுப்பியபடி பொன்னிறத்தில் பரவி தொடுவான்கோட்டில் வளைந்துகிடந்த நிலத்தைப் பார்த்தபோது ஏன் மனதை துயரம் வந்து மூடுகிறதென்று அவருக்குத் தெரியவில்லை. அறிந்தவை எல்லாம் பொருளிழந்து நம்பியவை எல்லாம் சாரமிழந்து அகம் வெறுமைகொண்டது. மண் மட்டுமே எஞ்ச அவர் இல்லாததுபோலத் தோன்றியது. வணிகக்கூட்டத்துடன் நடந்தபோது மெல்ல எதிர்ப்பக்கமாகச் சுழன்ற மண் பெரும்சுழி ஒன்று என மயங்கச்செய்தது.

பின்பு அவர் களைத்து ஒரு பிலு மரத்தடியில் அமர்ந்து ஏதோ எண்ணங்களுடன் கையில் அந்த மண்ணை அள்ளி மெதுவாக உதிர்த்தபின் கைவெள்ளையைப் பார்த்தபோது சிறிய விதைகள் ஒட்டியிருப்பதைக் கண்டார். குனிந்து அந்த மண்ணை அள்ளி அது முழுக்க விதைகள் நிறைந்திருப்பதை அறிந்து வியந்தார். நிமிர்ந்து கண் தொடும் தொலைவுவரை பரந்திருந்த மண்ணைப்பார்த்தபோது அது ஒரு பெரும் விதைக்களஞ்சியம் என்ற எண்ணம் வந்தது. என்றேனும் வடவை நெருப்பு சினந்து மண்ணிலுள்ள அனைத்துத் தாவரங்களும் அழிந்துபோய்விட்டால் பிரஜாபதியான பிருது வருணனின் அருளுடன் அந்தப் பாலைமண்ணில் இருந்தே புவியை மீட்டுவிடமுடியும்.

ஆனால் அது வேறு புவியாக இருக்கும். முற்றிலும் வேறு மரங்கள் வேறு செடிகள் வேறு உயிர்கள் வேறு விதிகள் கொண்ட புவி. பாலைநிலம் என்பது ஒரு மாபெரும் நிகழ்தகவு. இன்னும் நிகழாத கனவு. யுகங்களின் அமைதியுடன் காத்திருக்கும் ஒரு புதிய வாழ்வு. எழுந்து நின்று அந்தமண்ணைப் பார்த்தபோது திகைப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. உறங்கும் காடுகள். நுண்வடிவத் தாவரப்பெருவெளி. மண்மகளின் சுஷுப்தி. அந்தப் பொன்னிறமண் மீது கால்களை வைத்தபோது உள்ளங்கால் பதறியது.

ஐம்பதுநாட்களுக்குள் பாலைநிலத்திலேயே பிறந்து வளர்ந்த ஒரு மிருகம் ஆகிவிட்டார். காற்றுவீசும் திசையில் இருந்து வரப்போகும் மணல்புயலை உய்த்தறிய முடிந்தது. வாசனையைக் கொண்டு நீர் இருக்குமிடத்துக்குச் செல்ல முடிந்தது. அவரை அணுகிய பாலைவன உடும்பு தன் சிறு கண்களை நீர்நிரம்பும் பளிங்குமணிக் குடுவைகள் போல இமைத்து கூர்ந்து நோக்கியபின் அவசரமில்லாமல் கடந்து சென்றது. அவர் உடலிலும் தலையிலும் பாலைவனத்து மென்மணல் படிந்து அவர் அம்மண்ணில் படுத்தால் பத்து காலடி தொலைவில் அவரை எவருமே பார்க்கமுடியாதென்று ஆனது.

இருளில் பாலைநிலம் மெல்ல மறைந்து ஒலிகளாகவும் வாசனையாகவும் மாறிவிட்டிருந்தது. அது பின்வாங்கிப்பின்வாங்கி சுற்றிலும் வளைந்து சூழ்ந்திருந்த தொடுவானில் மறைகிறது என்று அவர் முதலில் நினைத்தார். அந்தியில் தொடுவானம் ஒரு செந்நிறமான கோடாக நெடுநேரம் அலையடித்துக்கொண்டிருக்கும். பின்பு பாலை இருளுக்கும் இருளுக்குமான வேறுபாடாக ஆகும். மெல்ல கண்பழகியதும் தொலைவு என ஏதுமில்லாமல் செங்குத்தாக சூழ்ந்திருக்கும் சாம்பல்நிறப் பரப்பாக பாலைநிலம் உருமாறும்.

பின்னர் அவர் அறிந்தார், பாலைநிலம் அவருக்குள்தான் சுருண்டு சுருங்கி அடர்ந்து ஒரு ரசப்புள்ளியாக மாறிச் சென்று அமைகிறது என்று. எந்த இருளில் கண்களை மூடினாலும் பொன்னுருகிப் பரந்த பெருவெளியை பார்த்துவிடமுடியும். அங்கே துயிலும் விதைகளில் ஒரு விதைபோல சென்றுகொண்டிருக்கும் மண்மூடிய நெடியமனிதனை பார்த்துவிடமுடியும். தனிமையில் அவன் அடையும் சுதந்திரத்தை. அவன் முகத்தில் நிறைந்திருக்கும் புன்னகையை.

பீஷ்மர் கால் ஓய்ந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தார். இடையில் இருந்த நீர்க்கொப்பரையை எடுத்து உதடுகளையும் வாயையும் மட்டும் நனைத்துக்கொண்டார். மணலில் மெல்லப் படுத்து கைகால்களை நீட்டிக்கொண்டார். இரு தோள்களில் இருந்தும் எடை மண்ணுக்கு இறங்குவதை உணர்ந்தார். சூதர் சொன்னது நினைவுக்கு வந்தது ‘அகலமான தோள்கள் கொண்டவர் நீங்கள், வீரரே. இருபத்தைந்தாண்டுகாலமாக அவற்றில் தம்பியரைச் சுமந்து வருகிறீர்கள்.’ பீஷ்மர் புன்னகைசெய்தபோது சூதர் சிரித்துக்கொண்டு ‘சுமைகளால் வடிவமைக்கப்பட்ட உடல்கொண்டவர்கள் பின்பு சுமைகளை இறக்கவே முடியாது’ என்றார்.

அவர் என்ன சொல்லப்போகிறார் என உணர்ந்தவர்போல பீஷ்மர் போதும் என்று கைகாட்டினார். ஆனால் அவர் எவராலும் கட்டுப்படுத்தப்படக்கூடியவர் அல்ல என்று தெரிந்தது. ‘உங்கள் இருதோள்களும் ஒழிவதே இல்லை வீரரே. விழியற்றவனையும் நிறமற்றவனையும் தூக்கிக்கொள்ளலாம்…’ அவரே அதில் மகிழ்ந்து ‘ஆகா என்ன ஒரு அரிய நகைச்சுவை. விழியற்றவனுக்கு கண்களில் நிறங்கள் இல்லை. விழியிருப்பவனுக்கு உடலில் நிறங்கள் இல்லை… ஆகாகாகா!’ இருகைகளையும் ஒன்றுடன் ஒன்று ஓங்கி அறைந்தபடி பீஷ்மர் எழுந்துவிட்டார்.

‘என்னை கொல்லப்போகிறீர்களா?’ என்று இமையாவிழிகளுடன் நாகசூதர் கேட்டார். பீஷ்மர் திகைப்புடன் கைகளை தொங்கவிட்டார். ‘எத்தனை காலமாக நாகங்களைக் கொல்ல ஷத்ரியர் முயன்று வருகிறார்கள் வீரரே? ஷத்ரியகுலத்தின் கடைசிக்கனவே அதுதானோ?’ பீஷ்மர் ‘உங்களுடைய தட்சிணையை நான் அளித்துவிட்டேன்’ என்று சொல்லி திரும்பி நடந்தார்.

முதுநாகர் பின்னால் ஓசையிட்டுச் சிரித்தார் ‘நாகவிஷத்தில் தன்னை அறிய என்னைத் தேடிவந்தவன் நீயல்லவா? நாகங்கள் உன்னைத்தேடிவரும்…உங்கள் குலத்தையே தேடிவருவோம்….ஷத்ரிய இனத்தையே நாங்கள் சுருட்டிக்கவ்வி விழுங்குவோம்…’ அப்பால் நடந்துசென்ற பீஷ்மர் கால்கள் தளர்ந்தவர் போல நின்றார். திரும்பி நாகரின் மின்னும் கண்மணிகளைப் பார்த்தார். நாகருக்குப்பின்னால் இருண்ட சர்ப்பங்களின் நெளிவைப் பார்க்கமுடிந்தது. அது விழிமயக்கா என எண்ணியகணம் அங்கே இருள் மட்டும் தொங்கிக்கிடந்தது.

‘நல்லூழினால் நீயும் அப்போது வாழ்வாய். நானோ அழியாதவன். அங்கே வந்து உன்னை சந்திக்கிறேன்’ என்றார் நாகர். பீஷ்மர் மிக அடங்கி அவருக்குள் என ஒலித்த குரலில் ‘எங்கே?’ என்றார். ‘படுகளத்தில்…வேறெங்கே?’ நாகரின் சிரிப்பு ஊன் கிழித்து உண்ணும் கழுதைப்புலிகளின் எக்காளம் போல ஒலித்தது. பீஷ்மரின் கைகள் செயலிழந்து தொங்கின. தலைகுனிந்தவராக நடந்துவிலகினார்.

அவர் எழப்போனபோது தொலைவில் ஒரு காலடி ஓசை கேட்டது. காதுக்குக் கேட்பதற்குள்ளாகவே நிலத்தில் படிந்திருந்த உடலுக்கு அது கேட்டது. அவர் எழுந்து அமர்ந்து தன் கையை நீட்டி அருகே நின்றிருந்த முட்புதரில் இருந்து ஒரே ஒரு நீளமான முள்ளை ஒடித்துக்கொண்டு பார்த்தார். பாலையின் மீது மெல்லிய தடம்போலக் கிடந்த காலடிப்பாதையில் அப்பால் ஒருவன் வருவது தெரிந்தது. அவனுடைய காலடிஓசை கனத்ததாகவும் சீராகவும் இருந்ததிலிருந்து அவன் போர்வீரன் என்பதும் எடைமிக்கவன் என்பதும் தெரிந்தது.

நெருங்கி வந்தவன் அவரைக் கண்டுகொண்டான். ஆனால் ஒருகணம்கூட அவனுடைய காலடிகள் தயங்கவில்லை. அவன் கைகள் வில்லைநோக்கிச் செல்லவுமில்லை. அதே வேகத்தில் அவரைநோக்கி வந்தவனின் கண்கள் மட்டும் ஒளிகொண்டு அருகே நெருங்கின. கூந்தல் காற்றில் பறந்துகொண்டிருந்தது. காதுகளில் மெல்ல ஒளிமின்னும் குண்டலங்கள் அவன் ஷத்ரியன் என்று காட்டின. அருகே வந்ததும் அவன் முலைகளையும் இடையையும் பார்த்த பீஷ்மர் அவன் யார் என்று புரிந்துகொண்டார். புன்னகையுடன் தன் கையில் இருந்த முள்ளை கீழே வீசினார்.

“வணங்குகிறேன் வீரரே” என்றபடி சிகண்டி அருகே வந்தான். “உத்தரபாஞ்சாலத்தைச் சேர்ந்த என் பெயர் சிகண்டி. நான் மூலத்தான நகரிக்கு சென்று கொண்டிருக்கிறேன்.” பீஷ்மர் “நலம்பெறுவாயாக!” என்றார். “என் பெயர் வாகுகன். நான் திருவிடநாட்டைச் சேர்ந்த ஷத்ரியன். கான்புகுந்தபின் புறநாட்டுப் பயணத்தில் இருக்கிறேன்.” சிகண்டி “நான் தங்களுடன் பயணம் செய்யலாமல்லவா?” என்றான். “ஆம், பாலைவனம் போல அன்னியர்களை நண்பர்களாக ஆக்கும் இடம் வேறில்லை” என்றார் பீஷ்மர்.

VENMURASU_EPI_48
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அவர்கள் நடக்கத் தொடங்கினர். “தாங்கள் துறவுபூண்டுவிட்டீர்களா?” என்றான் சிகண்டி . “ஆம், எது மெய்யான நாடோ அதைத் தேடுகிறேன். எது நிலையான அரியணையோ அதை அடையவிரும்புகிறேன்” என்றார் பீஷ்மர். சிகண்டி சிரித்து “தாங்களும் ரிஷியாக அறியப்படப்போகிறீர்கள்” என்றான். “பாரதவர்ஷத்தில் ரிஷியாக ஆசைப்படாத எவருமே இல்லை என நினைக்கிறேன்.”

பீஷ்மர் சிரித்துக்கொண்டு “நீயும்தான் இல்லையா?” என்றார். “இல்லை வீரரே. ஒருவேளை இந்த பாரதவர்ஷத்திலேயே ரிஷியாக விரும்பாத முதல் மனிதன் நான் என நினைக்கிறேன்” என்றபின் இருளில் ஆவிநாற்றம் வீச வாய்திறந்து “என்னை நீங்கள் மனிதன் என ஒப்புக்கொள்வீர்கள் என்றால்” என்றான். பீஷ்மர் பதில் சொல்லாமல் நடந்தார். சிகண்டி “வீரரே, நீங்கள் அஸ்தினபுரியின் பிதாமகரான பீஷ்மரை அறிவீர்களா?” என்றான்.

“பாரதவர்ஷத்தில் உள்ள ஒவ்வொருவரும் அறிந்ததை மட்டுமே நானும் அறிவேன்” என்றார் பீஷ்மர் . “அப்படியென்றால் நீங்கள் அவரால் கவர்ந்துவரப்பட்டு புறக்கணிக்கப்பட்டு கொற்றவைக்கோலம் கொண்டு மறைந்த அம்பாதேவியை அறிந்திருப்பீர்கள்.” பீஷ்மர் “ஆம்” என்றார். சிகண்டி “அவர் என் அன்னை. ஆகவே நான் அவரேதான்” என்றான். “என் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்துக்கும் ஒன்றே இலக்கு.” சிகண்டியின் குரல் இருளில் மிக அருகே மிக மெல்லியதாக ஒலித்தது. “பீஷ்மரின் நெஞ்சைப் பிளந்து அவர் இதயத்தைப் பிய்த்து என் கையில் எடுப்பது. அது என் அன்னை எனக்கிட்ட ஆணை!” அவன் மூச்சுக்கும் மட்கிய மாமிசத்தின் வெம்மையான வாசனை இருந்தது.

“நீ அதற்கு அனைத்து தனுர்வேதத்தைக் கற்று கரைகடக்க வேண்டுமே..” என்றார் பீஷ்மர். “ஆம், ஆகவேதான் நான் பாரத்வாஜரின் மாணவரான அக்னிவேசரிடம் மாணவனாகச் சேர்ந்தேன்” என்றான் சிகண்டி. “அவரிடம் நான் தொடககப் பாடங்களை கற்றுக்கொண்டேன். பயிற்சியின்போது என்னுள் பீஷ்மர் மீதான சினம் நிறைந்திருப்பதைக் கண்டு அவர் என்னை பீஷ்மரை நன்கறிந்துவரும்படி ஆணையிட்டு அனுப்பினார். ஆகவேதான் நான் இப்பயணத்தைத் தொடங்கினேன்.”

பீஷ்மர் “இங்கே எதற்காக வந்தாய்?” என்றார். “நான் தண்டகர் என்னும் நாகசூதரைப் பார்ப்பதற்காக இங்கே வந்தேன்” சிகண்டி சொன்னான். பீஷ்மர் வெறுமனே திரும்பிப்பார்த்தார். “நான் யாரென அவர் சொல்வார் என்று கேள்விப்பட்டேன். நான் யாரென அறிவது என் எதிரியை அறிவதன் முதல் படி என்றார்கள். ஆகவே சைப்ய நாட்டுக்குச் சென்று அங்கிருந்து இங்கே வந்தேன்.”

“நாகசூதர் நீதான் சிகண்டி என்று சொல்லியிருப்பார் இல்லையா?” என்றார் பீஷ்மர் . சிகண்டி அந்தச்சிரிப்பை உணராமல் தலையை அசைத்தான். தனக்குள் சொல்லிக்கொள்பவன் போல “நான் அவரது யானத்தில் நெளிந்த கருநீல நீரைப் பார்த்தேன். அலையடங்கியதும் அதில் தெரிந்த என் முகம் மறைந்து அஸ்தினபுரியின் பீஷ்மரின் முகம் தெரிந்தது” என்றான்.

காற்றில் பறந்த மேலாடையை அள்ளி உடலுடன் சுற்றியபடி “அவர்தான் உன் எதிரியா?” என்றார் பீஷ்மர். அச்செயல்மூலம் அவர் தன்னை முழுமையாகவே மறைத்துக்கொண்டார். “கனவிலும் விழிப்பிலும் எதிரியை எண்ணுபவன் அவனாகவே ஆகிவிடுவதில் என்ன வியப்பு?” என்றார் பீஷ்மர். “நான் அவராக ஆகவில்லை வீரரே. அவரும் நானும் ஒன்றே என உணர்ந்தேன்” என்றான் சிகண்டி.

பீஷ்மர் “அதுவும் முற்றெதிரிகள் உணரும் ஞானமே” என்றார். சிகண்டி அதை கவனிக்காமல் “நான் கண்டது பீஷ்மரின் இளவயது முகம்” என்றான். “நான் கூர்ந்து பார்ப்பதற்குள் அது மறைந்தது. பீஷ்மரின் வயது பதினேழு. அப்போதுதான் தந்தைக்குச் செய்த ஆணையால் தன்னையும் என்னைப்போல உள்ளத்தால் அவர் ஆக்கிக்கொண்டார்.” பீஷ்மர் நின்று “உன்னைப்போலவா?” என்றார்.

“ஆம். நானும் அவரும் உருவும் நிழலும்போல என்று நாகர் சொன்னார். அல்லது ஒன்றின் இரு நிழல்கள் போல. அவர் செய்ததைத்தான் நானும் செய்தேன்” என்றான் சிகண்டி . “அவரில்லாமல் நான் இல்லை. அவர் ஒரு நதி என்றால் அதில் இருந்து அள்ளி எடுக்கப்பட்ட ஒரு கை நீர்தான் நான்.” சிகண்டி சிலகணங்கள் சிந்தித்தபின் “வீரரே, ஒரு பெரும்பத்தினி கங்கையில் ஒரு பிடி நீரை அள்ளி வீசி கங்கைமேல் தீச்சொல்லிட்டால் என்ன ஆகும்? கங்கைநீர் கங்கையை அழிக்குமா?”

பீஷ்மர் புன்னகையுடன் “தெய்வங்களும் தேவரும் முனிவரும் மூவேதியரும் பத்தினியரும் பழிசுமந்தோரும் தீச்சொல்லிடும் உரிமைகொண்டவர்கள் என்று நூல்கள் சொல்கின்றன” என்றார். சிகண்டி அவர் சொற்களை கவனித்ததாகத் தெரியவில்லை. “அழித்தாகவேண்டும். இல்லையேல் புல்லும்புழுவும் நம்பிவாழும் பேரறம் ஒன்று வழுவுகிறது. அதன்பின் இவ்வுலகமில்லை. இவ்வுலகின் அவியேற்றுவாழும் விண்ணகங்களும் இல்லை” என தனக்குள் போல சொல்லிக்கொண்டான்.

“பீஷ்மரைப் பார்த்ததும் உன் சினம் தணிந்துவிட்டதா?” என்று பீஷ்மர் கேட்டார். “ஆம், என் முகமாக அவரைப் பார்த்த அக்கணத்திலேயே நான் அவர்மேல் பேரன்புகொண்டுவிட்டேன். அவர் உடலில் ஒரு கரம் அல்லது விரல் மட்டுமே நான்” என்றான். “நாகர் என்னிடம் சொன்னார், அவரைச் சந்திக்கும் முதற்கணம் அவர் பாதங்களைத் தொட்டு வணங்குவேன் என்று. அவருக்கும் எனக்குமிடையே இருப்பது என் அன்னையின் பெருங்காதல் என்று அவர் சொன்னார்.”

பீஷ்மர் ஒன்றும் சொல்லாமல் இருளில் நடந்தார். “ஆனால், அவரைக் கொல்லவேண்டுமென்ற என் இலக்கு இன்னும் துல்லியமாகியிருக்கிறது. சினத்தால் அல்ல, வேகத்தாலும் அல்ல. நான் இருக்கிறேன் என்பதனாலேயே நான் அவரைக் கொல்வதும் இருக்கிறது. அந்த இச்சை மட்டுமே நான். பிறிதொன்றில்லை.”

பீஷ்மர் பெருமூச்சுவிட்டார். “ஆம், அதுவே முறையாகும்” என்றார். சிகண்டி “வீரரே, நான் உங்களிடம் இவற்றையெல்லாம் சொன்னதற்குக் காரணம் ஒன்றே. தாங்கள் அகத்தியரின் மாணவர் என்று நினைக்கிறேன்” என்றான். பீஷ்மர் “எப்படி அறிந்தாய்?” என்றார். “தாங்கள் தனுர்வித்தையில் தேறியவர் என நான் தொலைவிலேயே கண்டுகொண்டேன்.”

பீஷ்மர் “ம்?” என்றார். “என் விழிகள் இருளில் பகலைப்போலவே தெளிவாகப் பார்க்கக்கூடியவை. நான் வரும் ஒலியைக் கேட்டதுமே நீங்கள் கைநீட்டி அருகே இருந்த முள் ஒன்றைப் பிடுங்கிக் கொண்டீர்கள் என்பதைக் கண்டேன். உங்களிடம் வேறு ஆயுதமே இல்லை” என்றான் சிகண்டி.

பீஷ்மர் “நன்கு கவனிக்கிறாய்” என்று சொன்னார். “வருவது வழிதவறி பாலைக்குவந்த மதம்கொண்ட வேழமாக இருக்கலாம். விஷவில் ஏந்திய மலைக்கள்வனாக இருக்கலாம். உங்கள் முதல் எதிரியாகக்கூட இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு முள்ளைமட்டும்தான் எடுத்துக்கொண்டீர்கள். அப்படியென்றால் நீங்கள் வல்கிதாஸ்திர வித்தை கற்றவர். ஒரு சிறுமுள்ளையே அம்பாகப் பயன்படுத்தக்கூடியவர். ஒரு முள்தைத்தாலே மனிதனைச் செயலிழக்கச்செய்யும் ஆயிரத்தெட்டு சக்திபிந்துக்களைப்பற்றி அறிந்தவர்.”

பீஷ்மர் “ஆம்” என்றார். சிகண்டி நின்று கைகூப்பி “நான் அதை உங்களிடமிருந்து கற்க விழைகிறேன் குருநாதரே. என்னை தங்கள் மாணவராக ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றான். “அதன்பொருட்டே தங்களிடம் என்னைப்பற்றி அனைத்தையும் சொன்னேன்.” பீஷ்மர் “இளைஞனே, நான் எவரையும் மாணவனாக ஏற்கும் நிலையில் இல்லை. அனைத்தையும் துறந்து காட்டுக்கு வந்துவிட்டவன் நான்” என்றார்.

“வனம்புகுந்தபின் சீடர்களை ஏற்கக்கூடாது என்று நெறிநூல்கள் சொல்கின்றன என நானும் அறிவேன் குருநாதரே. ஆனால் அந்நெறிகளை மீறி தாங்கள் எனக்கு தங்கள் ஞானத்தை அருளவேண்டும். வல்கிதாஸ்திரம் அகத்தியரின் குருமரபினருக்கு மட்டுமே தெரியும். தாங்கள் திருவிடத்தவர் என்பதனால் அதைக் கற்றிருக்கிறீர்கள். இப்புவியிலுள்ள அனைத்து போர்வித்தைகளையும் நான் கற்றாகவேண்டும். ஏனென்றால் நான் கொல்லப்போகும் வீரர் எவற்றையெல்லாம் அறிவாரென எவருக்குமே தெரியாது.”

“நான் எதன்பொருட்டு உன்னை மாணவனாக ஏற்கவேண்டும்?” என்றார் பீஷ்மர். சிகண்டி உளவேகத்தால் சற்று கழுத்தை முன்னால் நீட்டி பன்றி உறுமும் ஒலியில் “என் அன்னைக்காக. அவள் நெஞ்சின் அழலுக்கு நீதி வேண்டுமென நீங்கள் நினைத்தால்…” என்றான். “உங்கள் நெஞ்சத்தைத் தொட்டு அங்கே வாழும் நீதிதேவனிடம் கேட்டு முடிவெடுங்கள் குருநாதரே!”

பீஷ்மர் இருளுக்குள் இருள் போல நின்ற அவனைப் பார்த்துக்கொண்டு சில கணங்கள் நின்றார். தலையை அசைத்துக்கொண்டு “ஆம், நீ சொல்வதில் சாரமுள்ளது” என்றார். வானத்தை அண்ணாந்து நோக்கி துருவனைப் பார்த்தபின் “காசிநாட்டரசி அம்பையின் மைந்தனும் பாஞ்சால இளவரசனும் வழுவா நெறிகொண்டவனுமாகிய சிகண்டி எனும் உனக்கு நானறிந்தவற்றிலேயே நுண்ணிய போர்வித்தைகள் அனைத்தையும் இன்று கற்பிக்கிறேன். அவை மந்திரவடிவில் உள்ளன. உன் கற்பனையாலும் பயிற்சியாலும் அவற்றை கைவித்தையாக ஆக்கிக்கொள்ளமுடியும்” என்றார். சிகண்டி தலைவணங்கினான்.

“என்னை வணங்கி வடமீன் நோக்கி அமர்வாயாக!” என்றார் பீஷ்மர். சிகண்டி அவர் பாதங்களை வணங்கியபோது அவனுடைய புழுதிபடிந்த தலையில் கைவைத்து “வீரனே நீ உன் இலக்கை அடைவாய். அடைந்தபின் ஒருகணமும் வருந்தமாட்டாய். வீரர்களுக்குரிய விண்ணுலகையும் அடைவாய்” என்று வாழ்த்தினார்.

நூல் ஒன்று – முதற்கனல் – 47

பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்

[ 5 ]

தண்டகர் என்ற நாகசூதர் சொன்னார். “வீரரே, பருந்துகளுக்கு தொலைப்பார்வையையும் எலிகளுக்கு அண்மைப்பார்வையையும் அளித்த அன்னைநாகங்களை வாழ்த்துங்கள். பார்வையின் எல்லையை மீறியவர்கள் தங்களை இழக்கிறார்கள். அவர்கள் மீண்டுவருவதற்கு பாதைகள் இல்லை.” அவர் முன் அமர்ந்திருந்த பீஷ்மர் “திரும்புவதற்கு பாதையில்லாமல் பயணம் செய்பவர்களே வீரர்கள் எனப்படுகிறார்கள்” என்றார். “ஆம், அவர்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் பிறந்து வந்துகொண்டே இருக்கிறார்கள்” என்றார் தண்டகர்.

“வீரரே, முடிவின்மையை உணராத எவரும் இப்பூமியில் இல்லை. மண்ணிலும் விண்ணிலும் மனிதனின் அறிதல் வழியாக ஒவ்வொரு கணமும் முடிவின்மையே ஓடிச்செல்கிறது. முடிவின்மையை தேவைக்கேற்பவும் வசதிக்கேற்பவும் வெட்டி எடுத்த காலத்திலும் மண்ணிலும்தான் மானுடர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். முடிவின்மையின் எளிமையை உணர்ந்தவனே விடுதலை பெறுகிறான். அந்த அறிவைத் தாளமுடியாதவன் பேதலிக்கிறான்…” தண்டகர் சொன்னார். “அதை நீங்கள் இந்த யானத்து நீரில் பார்க்கவேண்டியதில்லை. ஒரு கைப்பிடி கூழாங்கற்களில் காணலாம். ஒரு மரத்தின் இலைகளில் பார்க்கலாம். பார்க்கத்தெரிந்தவன் உள்ளங்கையை விரித்தே உணர்ந்துகொள்ளலாம்.”

“அனந்தம் என்று பெயருள்ள இந்த யானம் நாகர்களின் முழுமுதல்தெய்வமான அனந்தனின் விஷம் என்று என் முன்னோர் சொல்வதுண்டு. முடிவின்மையின் ஒருதுளிச்சுழி இது. இதற்கு முப்பிரிக்காலம் இல்லை. மூன்றுகாலம் என்பது அனந்தன் எளியவர்களாகிய நமக்களிக்கும் ஒரு தோற்றமேயாகும். இந்தத் துளியில் நேற்றும் நாளையும் இன்றும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி ஒன்றை ஒன்று நிரப்பி ஒன்றேயாகி நின்றிருக்கின்றன. ஜாக்ரத்தும் ஸ்வப்னமும் சுஷுப்தியும் ஒன்றேயாகிய புள்ளி இது. இதைக்கேளுங்கள் நீங்கள் யார் என்று இது சொல்லும்”

முதுநாகர் யானைத்தை மெல்லத்தட்டினார். அதன் விளிம்புகள் அதிர்ந்து கரியநிறமான தைலத்தில் அலைகளை எழுப்பின. அவர் அந்த அலைகளையே நோக்கியிருந்தபோது மெல்ல அவை அடங்கின. தைலத்தில் பீஷ்மர் தன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். மெதுவாக அலைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒன்றுக்குள் ஒன்றென அமைந்து சுருங்கி வட்டத்தின் மையத்தில் புள்ளியாகி மறைந்தபோது அங்கே ஒரு முகம் தெரிந்தது. அவர் அறிந்திராத ஒரு மனிதர்.

தண்டகர் குனிந்து அந்த முகத்தைப் பார்த்தார். “இவர் யாரென்று நீங்கள் அறிவீர்களா?” என்று பீஷ்மர் கேட்டார். “அன்னை நாகங்கள் அறியாத எவரும் மண்ணில் இல்லை” என்றார் தண்டகர். “சந்திரவம்சத்தில் பிறந்தவரும் நகுஷனின் மைந்தனுமான யயாதி இவர்.” பீஷ்மர் திடுக்கிட்டபோது கருந்திரவம் அதிர்ந்து அந்த முகம் கலைந்தது. “யார்?” என்று அச்சத்துடன் கேட்டார். “உங்கள் குலமூதாதையான யயாதி.”

“நான் என்னையல்லவா பார்க்க விரும்பினேன்?” என்றார் பீஷ்மர். “ஆம், நீங்கள் கேட்டவினாவுக்கு நாகரசம் அளித்த பதில் அது.” பீஷ்மர் சினத்துடன் “இல்லை, இது ஏதோ மாயம்… இது ஏமாற்றுவித்தை” என்றார். “வீரரே, இது மாயை என்று நான் முன்னரே சொல்லிவிட்டேன். நீங்கள் உங்கள் கேள்வியைப்போலவே பதிலையும் உங்களுக்குள் இருந்துதான் எடுத்தீர்கள்…” என்றார் தண்டகர். பீஷ்மர் சினத்துடன் எழுந்து “இல்லை… இது வெறும் மாயம்…” என்று சொல்லிவிட்டு தன் மேலாடையை தோளில் சுற்றிக்கொண்டு நின்றார். “அவர் முகமா இது?” என நாகரிடம் கேட்டார்.

“ஆம். அப்படித்தான் நாகரசம் சொல்கிறது.” “என்னைப்போன்றே இருக்கிறார். அவருடைய அதே முகமா எனக்கு?” தண்டகர் புன்னகைசெய்தார். “அவரது கதையை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்… பரிதாபத்துக்குரிய மூதாதை. அவரா நான்?” தண்டகர் மேலும் புன்னகை செய்தார். பீஷ்மர் மீண்டும் அமர்ந்துகொண்டார். “நாகரே சொல்லுங்கள், அவரது வாழ்க்கையைப்பற்றி நாகம் சொல்லும் கதையைச் சொல்லுங்கள்!”

தண்டகர் புன்னகையுடன் கண்மூடி அமர்ந்தார். பிடரியில் வழிந்திருந்த அவரது கூந்தல் வழியாக இளங்காற்று வழிந்தோடி அதை பின்னுக்குத் தள்ளியது. கண்களைத் திறந்தபோது அவரது விழிவட்டம் மாறியிருப்பதை பீஷ்மர் கண்டார். நீலமணிக்கண்கள். இமைக்காதவை. “அத்ரி சந்திரன் புதன் புரூரவஸ் ஆயுஷ் நகுஷன் என வரும் குலவரிசையில் யயாதி பிறந்தார்” என தண்டகர் கனத்தகுரலில் நாகர்களுக்குரிய நீண்ட மெட்டில் பாடத் தொடங்கினார்.

நகுஷனுக்கும் அசோகசுந்தரிக்கும் பிறந்தவர்கள் அறுவர். யதி, யயாதி, சம்யாதி, யாயாதி, யயதி, துருவன். நகுஷனுக்குப்பின் சந்திரவம்சத்துக்கு மன்னனாக யார் வரவேண்டும் என்று ஜனபதங்களின் தலைவர்கள் மாமுனிவரான விசுவாமித்திரரிடம் கேட்டனர். தர்மதேவன் எவரை தேர்ந்தெடுக்கிறானோ அவனே சந்திரவம்சத்தின் மன்னனாகவேண்டும் என்றார் விசுவாமித்திரர். அதன்படி மக்கள் தலைவர்கள் ஆறு இளவரசர்களிடமும் சென்று அவர்களில் எவர் தர்மதேவனை தங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காகக் கூட்டிவருகிறார்களோ அவனை அரசனாக ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார்கள்.

ஆறு இளவரசர்களும் கடும் நோன்பு நோற்றனர். தவத்தால் அனைத்தையும் துறந்து எளிமையானார்கள். இலவம்பஞ்சு விதையைச் சுமந்து செல்வதுபோல அவர்களின் தவம் அவர்களைக் கொண்டுசென்றது. அவர்கள் தர்மதேவனைத் தேடி தெற்குநோக்கிச் சென்றனர். தர்மதேவனை நோக்கிச் சென்ற பாதையில் முதலில் நீராலான நதி ஒன்று ஓடியது. அது தன்னை தக்கையாக மாற்றிக்கொள்ளமுடியாதிருந்த துருவனை மூழ்கடித்தது. இரண்டாவதாக ஓடிய நதி நெருப்பாலானது. அங்கே தன்னை கல்லாக மாற்றிக்கொள்ளாமலிருந்த யயதி எரிந்துபோனான். மூன்றாவது நதி காற்றாலானது. அங்கே சருகாக இருந்த யாயாதி பறந்து போனான். நான்காவது நதி புதைசேறாலானது. அங்கே தன்னை சருகாக மாற்றிக்கொள்ளாமலிருந்த சம்யாதி புதைந்துபோனான். ஐந்தாவது நதி வானத்தாலானது. அங்கே மேகமாக தன்னை மாற்றிக்கொள்ளாமலிருந்த யதி கரைந்து போனான்.

யயாதி மட்டும் தர்மதேவனின் சன்னிதியை அடைந்து தனக்கு ஆதரவளிக்கும்படி கோரினான். தர்மதேவன் அவன் தவத்தைப் பாராட்டி நேரில்வருவதற்கு ஒப்புக்கொண்டார். குடிமக்கள்சபையில் ஆறு இளவரசர்களின் பெயர்கள் ஆறு ஓலைகளில் எழுதப்பட்டு ஆறு தூண்களில் தொங்கவிடப்பட்டன. அங்கே அவிழ்த்துவிடப்பட்ட காரான் எருமை யயாதியின் பெயர் எழுதிய ஓலையை தன் வாயால் கவ்வியது. யயாதி சந்திரவம்சத்தின் அரசனாக ஆனான்.

நாற்பத்தொன்பதாண்டுகாலம் சந்திரபுரியை ஆட்சிசெய்த யயாதி அறச்செல்வனென்று விண்ணிலும் மண்ணிலும் அறியப்பட்டிருந்தான். அணுவிடை பிறழா நெறிகொண்ட அவன் இந்திரனுக்கு நிகரானவனாக ஆனமையால் தன் அரியணை ஆடியதை அறிந்த இந்திரன் தன் சாரதியான மாதலியிடம் யயாதியை தன் சபைக்கு கொண்டுவரும்படி சொன்னான். ஆட்சியை முடித்துக்கொண்டு இந்திரபோகங்கள் அனைத்தையும் துய்த்து மகிழும்படி மாதலி யயாதியை ஆசைகாட்டினான். அறமே என் பேரின்பம் என்று யயாதி பதில் சொன்னான்.

இந்திரனின் ஆணைப்படி ஏழு கந்தர்வர்களும் ஏழு கந்தர்வகன்னியரும் சூதரும் விறலியருமாக மாறி யயாதியின் அவைக்கு வந்தனர். விஷ்ணுவின் வராகாவதாரம் என்னும் நாட்டியநாடகத்தை அவர்கள் அவன் சபையில் ஆடினர். எல்லையில்லாத வெண்மேகமாகிய காசியப பிரஜாபதியில் பொன்னிறப்பேரொளியை கண்களாகக் கொண்டு பிறந்த ஹிரண்யாக்‌ஷன் என்னும் அரக்கன் விண்வெளியில் வெண்பசுவெனச் சென்றுகொண்டிருந்த பூமாதேவியை ஒரு சிறு பந்தெனக் கைப்பற்றி விண்ணகநீர்ப்பெருவெளியின் அடியில் எங்கோ கொண்டு ஒளித்துவைத்ததை அவர்கள் நடித்தனர்.

எங்கும் நீரொளியலைகள் ததும்ப பூமியன்னையைத் தேடிய தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். விஷ்ணு மதம்திகழ் சிறுகண்ணும் கொம்புப்பல்லும் நீள்காதுமாக பன்றியுருக் கொண்டு பிறந்தார். பன்றிமுகமூடியணிந்த கந்தர்வநடிகன் மேடையில் வெளியை அகழ்ந்து அகழ்ந்து செல்வதை நடிப்பதைக் கண்டு தன் அரியணையில் அமர்ந்திருந்த யயாதி தீவிரமான உள்ளக்கிளர்ச்சியை அடைந்தார். ககனநீர்வெளியை, பின் அதனடியின் இருள்வெளியை பன்றி துழாவித்துழாவிச்சென்றது. இருளுக்கு அடியில் திகழ்ந்த இன்மையையும் தன் பற்கொம்பால் கிழித்தது.

தன்னையறியாமலேயே இரு கைகளையும் நெஞ்சோடு சேர்த்து மெல்ல அதிர்ந்தபடி யயாதி அமர்ந்திருந்தார். மேடையில் விரிக்கப்பட்டிருந்த ஏழுவண்ண கம்பளங்களை ஒவ்வொன்றாக விலக்கி அகழ்ந்துசென்றான் சூதன். நீலம், பசுமை, பொன்மஞ்சள், செம்மை, செம்பழுப்பு, வெண்மை, கருமை. கருமையின் திரையைக் கிழித்து உள்ளிருந்து செம்பொன்னிறமான பூமியை அவன் அள்ளி எடுத்தான். அந்த இளம் விறலி பொன்னிறம் பொலிந்த வெற்றுடல் கொண்டிருந்தாள். கருவறை திறந்து வரும் குழந்தை போல, உறையிலிருந்து எழும் வாள்போல அவள் மெல்ல எழுந்துவந்தபோது முதியமன்னர் காமத்தின் உச்சிநுனியில் அவர் நின்றிருப்பதை உணர்ந்தார்.

இருகைகளிலும் வெண்தாமரைகளுடன் எழுந்து வந்த விறலியை வராகமுகம் கொண்ட நடனசூதன் அள்ளி தன் இடதுதொடைமேல் ஏற்றி தோள்மேல் அமரச்செய்துகொண்டான். மறுபக்கம் இடக்கை அவள் இடையைச் சுற்றியிருக்க வலக்கை தொடைமேல் படிந்திருக்க பேருருத்தோற்றம் காட்டி நின்றான். அவன் பின் வந்து நின்ற பாணன் இருதோள்களிலும் சங்குசக்கரமேந்திய மேலிருகைகளை காட்டினான். தண்ணுமையும் முழவும் உச்சவேகம் கொண்டன. பெருமுரசும் சங்கமும் முழங்கி அமைந்தன. அவையோர் கைகூப்பி ’நாராயணா’ என்று கூவக்கேட்டபின்புதான் யயாதி தன்னிலை அறிந்தான்.

அன்றுமுதல் யயாதி அகழ்ந்தெடுக்கப்பட்ட காமம் கொண்டவனானான். வெல்லப்பட்டவையும் விலக்கப்பட்டவையும் புதைக்கப்பட்டவையும் அழிக்கப்பட்டவையும் அனைத்தும் புதிதென எழுந்துவந்தன. பெண்ணில் பெண்ணுக்கு அப்பாலுள்ளவற்றைத் தேடுபவனின் காமம் நிறைவையே அறியாதது. நிறைவின்மையோ முடிவயற்றது. மண்ணில் முளைத்தவற்றையெல்லாம் உண்டுமுடித்த யானை முளைக்காது புதைந்துகிடக்கும் கோடானுகோடி விதைகளை உள்ளத்தால் உண்ணத் தொடங்கியது. உண்ண உண்ணப்பசிக்கும் தீராவிருந்து என்பர் காமத்தை.

வீரரே, காமம் பெண்ணுடலில் இல்லை. பெண்ணுடலில் காமத்தைக் கண்டடையும் ஆண்விழிகளிலும் அது இல்லை. விழிகளை இயக்கும் நெஞ்சகத்திலும் காமம் இல்லை. காமம் பூமிக்குள் ஆழத்தில் நெருப்பாக உள்ளது. அதன் பெயர் வைஸ்வாநரன். ‘நான் பெருகுவதாக’ என்னும் அதன் விழைவே காமம். தன் வாலை தானே சுவைத்துண்ணும் பெருநாகமே காமம்.

எரிதலே காமம், அதன் கரிநிழலே மூப்பு. ஒளியோ அதன் கனவு. யயாதியின் காமத்தை அறிந்து ஜரை என்னும் அரக்கியும் மதனன் என்னும் தேவனும் அவனுக்கு இருபுறமும் அறியாமல் பின் தொடர்ந்துகொண்டிருந்தனர். காமத்தின் காய்ச்சலில் அன்றாடச் செயல்களெல்லாம் பிறழ்ந்த யயாதி குளித்துவருகையில் கால்நுனியில் ஈரம் பட்டிருக்கவில்லை. அதன் வழியாக ஜரை அவர் மேல் படர்ந்து அவர் கூந்தலையும் தாடியையும் நரைக்கச் செய்தாள். அவர் முகமெங்கும் சுருக்கங்களை நிரப்பினாள். அவர் முதுகை வளைத்து கைகால்களை கோணலாக்கி பற்களை உதிரச்செய்தாள். அவர் கண்கள் பஞ்சடைந்தன. நாக்கு தளர்ந்தது. தசைகள் தொய்ந்தன.

நோய்கொண்டுதளர்ந்த அவர் விட்ட பெருமூச்சு வழியாக மதனன் அவருள் குடியேறினான். அவன் அவருக்குள் கனவுகளை நிறைத்தான். அவரைச்சுற்றிய உலகை நிறமும் வாசனையும் அற்றதாக ஆக்கினான். இசையை ஓசையாகவும் உணவை ஜடமாகவும் மாற்றினான். அனைத்து சொற்களில் இருந்தும் பொருளை நழுவச்செய்தான். அவன் கவர்ந்துகொண்ட அனைத்தையும் அவரது கனவுகளில் அள்ளிப்பரப்பி அங்கே அவரை வாழச்செய்தான். ஒவ்வொரு நாளும் யயாதி மரணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

VENMURASU_EPI_47
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அந்நாளில் ஒரு மருத்துவனைப் பார்ப்பதற்காக யயாதி காட்டுக்குச் சென்றபோது அங்கே அழகிய நீரோடைக்கரையில் பேரழகி ஒருத்தியைக் கண்டார். முன்பொருநாள் தன்னுள் இருந்து அகழ்ந்தெடுத்த பெண் அவளே என்றறிந்தார். அவளையே ஆயிரம் உடல்கள் வழியாகத் தேடினார் என உணர்ந்தார். அவள்பெயர் அஸ்ருபிந்துமதி என்று அவளருகே நின்றிருந்த விசாலை என்னும் தோழி சொன்னாள்.

காமனின் துணைவியான ரதியின் மகள் அவள் என்றாள் விசாலை. முன்பு காமனை சிவன் நெற்றிக்கண் திறந்து எரித்தழித்தபோது கணவனை இழந்த ரதி கண்ணீர்விட்டழுதாள். அக்கண்ணீர்த்துளியில் இருந்து பிறந்தவள் அவள். அதுவரை தான் இழந்தது என்ன என்று யயாதிக்குத் தெரிந்தது. பெருந்துயர் கலவா பேரழகென்பது இல்லை. அவள் முன் சென்று கைகூப்பி தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கோரினார் யயாதி.

அஸ்ருபிந்துமதி அவரை ஏற்கச் சித்தமானாள். ஆனால் அவர் தன் முதுமையை வேறு எவருக்கேனும் அளித்து இளமையை மீட்டுக்கொண்டு வந்தால்மட்டுமே அவரை ஏற்கமுடியும் என்றாள். யயாதி தன் அரண்மனைக்குத் திரும்பி தன்னுடைய நான்கு மைந்தர்களையும் அழைத்து ஐம்பதாண்டுகாலம் தன்முதுமையை ஏற்றுக்கொள்ளும்படி கோரினார். யதுவும் துர்வசுவும் திருஹ்யூவும் அதை ஏற்கமறுத்துவிட்டனர். மண்ணாசையால் தன்னை மறுத்த யதுவுக்கு அரசு அமையாதென்று யயாதி தீச்சொல் விடுத்தார். பிள்ளைகள்மேல் கொண்ட அன்பால் மறுத்த துர்வசுவின் குலம் அறுபடுமெனச் சொன்னார். செல்வத்தின் மீதான ஆசையால் மறுத்த திருஹ்யூ அனைத்தையும் இழந்து ஆற்றுநீரில் செல்வான் என்றார்.

நான்காவது மைந்தன் புரு தந்தையின் முதுமையை ஏற்றுக்கொண்டான். காமத்தை முழுதுணர்ந்து மீண்டுவருக என்று தந்தைக்கு கனிந்து ஆசியளித்து தான் முதியவனாக ஆனான்.இளமையை அடைந்த யயாதி காடுசென்று அஸ்ருபிந்துமதியைக் கண்டு அவளை தன் நாயகியாக ஏற்றுக்கொண்டார். வீரரே, ஆயிரம் பெண்களை ஒரு பெண்ணில் அடைபவனே காமத்தை அறிகிறான்.

ஐம்பதாண்டு காலத்துக்குப்பின் அஸ்ருபிந்துமதி தன் இயல்புருக்கொண்டு விண்ணகம் சென்றபின் யயாதி சந்திரபுரிக்குத் திரும்பிவந்தார். தன் முதுமையை ஏந்தியிருந்த மைந்தனிடம் சென்றார். “மகனே, நீ அனைத்து நிறைவையும் அடைவாய். நான் காமத்தை முழுதுணர்ந்து மீண்டுவிட்டேன். என் முதுமையை பெற்றுக்கொள்கிறேன்” என்றார். புரு தன்னில் திகழ்ந்த முதுமையை தந்தைக்கு திருப்பிக்கொடுத்து தன் இளமையை பெற்றுக்கொண்டான்.

“மகனே, நீ உன் இளமையைக்கொண்டு உன் காமத்தை நிறைவுகொள்ளச்செய்’ என்று யயாதி சொன்னபோது புரு கைகூப்பி “தந்தையே, அந்த முதுமைக்குள் இருந்தபடி நான் காமத்தின் முழுமையை அறிந்துகொண்டேன். இளமையைக்கொண்டு வெற்றியையும் புகழையும் அகவிடுதலையையும் மட்டுமே இனி நாடுவேன்” என்று சொன்னான். அக்கணமே தன் முதுமைக்குள் இருந்த யயாதி காமத்தின் நிறைவின்மையை மீண்டும் அறியத் தொடங்கினார்.

தண்டகரின் இமையாவிழிகளை நோக்கி அமர்ந்திருந்த பீஷ்மர் பெருமூச்சுடன் அசைந்தார். அவர் பாட்டை நிறுத்திவிட்டு தன்னுடைய சிறு முழவை மெல்ல மீட்டிக்கொண்டிருந்தார். பீஷ்மர் நெடுநேரம் கழித்து “தண்டகரே, யயாதி நிறைவை எப்படி அடைந்தார்?” என்றார். தண்டகர் “யயாதி மனித உடல்நீங்கி விண்ணகம் சென்றார். அவர் செய்த அறத்தால் அங்கு அவர் தேவருலகில் அமர்த்தப்பட்டார். ஆனால் மண்ணில் அறிந்த நிறைவின்மையை அவர் விண்ணிலும் அறிந்தார். வீரரே, உள்ளூர நிறைவின்மையை அறிபவர்கள் பொய்யாக அகந்தையை காட்டுவார்கள்” என்றார்.

விண்ணுலகில் யயாதியின் அகந்தையைக் கண்டு பொறுமையிழந்த பிரம்மன் அவரைப் பழித்து மண்ணுக்குத்தள்ளினார். விண்ணில் இருந்து தலைகீழாக மண்ணுக்குச் சரிந்து விழுந்த யயாதி நைமிசாரண்ய வனத்தில் பிரதர்தனர், வசுமனஸ், சிபி, அஷ்டகர் என்னும் நான்கு மன்னர்கள் செய்துகொண்டிருந்த பூதயாகத்தின் நெருப்பில் வந்து விழுந்தார். நெருப்பில் தோன்றிய யயாதியிடம் அவர்கள் அவர் யாரென்று கேட்டனர். அவர் தன் துயரத்தைச் சொன்னபோது யாகத்தின் அவிபாகத்தை அவருக்கு அளிப்பதாக அவர்கள் சொன்னார்கள்.

யயாதி “மன்னர்களே, தேவனாக ஆகாத நான் அவி பெறமுடியாது. தந்தையர் தங்கள் தோன்றல்களின் மூலம் மட்டுமே விண்ணேற முடியும்” என்றார். யயாதியை மீட்கக்கூடியவர் யாரென்று அம்மன்னர்கள் வேள்விநெருப்பில் பார்த்தனர். அவர்கள் யயாதிக்கு அஸ்ருபிந்துமதியில் பிறந்த மாதவி என்ற மகள் இருப்பதை அறிந்து அவளை அழைத்துவந்தனர். மாதவி வனத்தில் விசாலையால் வளர்க்கப்பட்டுவந்தாள்.

வேள்விநெருப்பில் நின்று தழலாடிக்கொண்டிருந்த யயாதி அஸ்ருபிந்துமதியின் பேரழகுத்தோற்றமென நடந்து வந்த மாதவியைக் கண்டார். விழியே ஆன்மாவாக மாற அவளைப் பார்த்து நின்றார். அவள் நெருங்கி வர வர அவர் கண்ணீருடன் கைகூப்பினார். அவரது ஆன்மா நிறைவடைந்து மீண்டும் விண்ணகம் சென்று மறைந்தது.

பீஷ்மர் தலைகுனிந்து சிந்தனையில் ஆழ்ந்து அமர்ந்திருந்தார். சிறுமுழவை மெல்ல விரலால் வருடிக்கொண்டிருந்த தண்டகர் “அறியவேண்டுவனவெல்லாம் நான் சொன்னவற்றில் உள்ளன வீரரே” என்றார். “ஆம்” என்றபடி பீஷ்மர் எழுந்துகொண்டார். “தந்தையின் முதுமையை பெற்றுக்கொண்ட புருவின் முகமாக என் முகமிருக்கும் என நினைத்திருந்தேன்” என்றபின் சிரித்துக்கொண்டு “அந்த முகம் எவருடையது என்று இப்போது எண்ணிக்கொண்டேன்” என்றார்.

“இன்று பிரம்மமுகூர்த்தம் ஆகிவிட்டது. நாளை வாருங்கள்’”என்றார் தண்டகர். “தேவையில்லை, எனக்கு அது தெரியும்” என்றபின் பீஷ்மர் மெல்லச் சிரித்தார். கைகூப்பி தண்டகரை வணங்கிவிட்டு “வருகிறேன் தண்டகரே. அஸ்தினபுரியில் உங்களைப்பற்றி சூதர்கள் சொன்னார்கள். சப்தசிந்துவையும் கடந்து நான் உங்களைப் பார்க்கவந்தது என்னை அறிவதற்காகவே” என்றார்.