மாதம்: ஜனவரி 2014

நூல் ஒன்று – முதற்கனல் – 21

பகுதி நான்கு : அணையாச்சிதை

[ 5 ]

இமயமலையின் அடியில் கங்கை கரையிறங்கும் ரிஷிகேசமென்னும் நீலநிறக்காட்டில் கட்டப்பட்ட தவச்சாலையில் காசியின் அரசி புராவதி தங்கியிருந்தாள். அவளே அங்குவரும் முடிவை எடுத்தாள். காலையில் தன் ஆயுதசாலையில் பயிற்சியில் இருந்த பீமதேவனை அவளது சேடி பிரதமை சென்று அழைத்துவந்தபோது அவள் அரச உடைகளைக் களைந்து மரவுரி அணிந்து அரண்மனை வாயிலில் நின்றிருந்தாள். பீமதேவன் அவளைக்கண்டதும் திடுக்கிட்டு “எங்கே செல்கிறாய் தேவி? என்ன வழிபாடு இது?” என்றார்.

அவர் முகத்தை ஏறிட்டு நோக்கி திடமான விழிகளுடன் பேசவேண்டுமென அவள் எண்ணியிருந்தபோதிலும் எப்போதும்போல தலைகுனிந்து நிலம்நோக்கித்தான் சொல்லமுடிந்தது. “நான் ரிஷிகேசவனத்துக்குச் செல்கிறேன். இனி இந்த அரண்மனைக்கு வரப்போவதில்லை”

காசிமன்னர் சற்றே அதிர்ந்து “உன்சொற்கள் எனக்குப் புரியவில்லை…இந்த அரண்மனை உன்னுடையது. இந்த நாடு உன்னுடையது” என்றார். “என்னுடையதென்று இனியேதும் இல்லை. இந்த அரண்மனையில் நான் சென்ற மூன்று மாதங்களாக விழிமூடவில்லை. இங்கே வாழ்வது இனி என்னால் ஆவதுமல்ல…” என்றாள்.

“அதற்காக? நாம் ஆதுரசாலையை அமைப்போம். அங்கே நீ தங்கலாம். காசியின் அரசி தன்னந்தனியாக வனம்புகுந்தால் என்ன பொருள் அதற்கு?” புராவதி பெருமூச்சுடன் “பொருளறிந்து வாழ்வது எவருக்கும் சாத்தியமல்ல அரசே” என்றாள்.

“என் அனுமதி இல்லை உனக்கு” என்று பீமதேவன் திடமாகச் சொன்னார். அரசி “அனுமதியை நான் தேடவுமில்லை. துறவுபூண அனுமதி தேவையில்லை என்று நெறிநூல்கள் சொல்கின்றன.” அவர் மேலே பேசமுற்பட அவள் கண்களைத் தூக்கி “உயிரை மாய்த்துக்கொள்ளவும் எவரும் அனுமதி தேடுவதில்லை” என்றாள்.

திகைத்து, அதன் பொருளென்ன என உணர்ந்து பீமதேவன் அமைதியானார். “என்னை அரசப்படைகளோ சேவகர்களோ தொடர வேண்டியதில்லை. என்னுடன் என் இளம்பருவத்துத் தோழி பிரதமையை மட்டுமே கூட்டிக்கொள்கிறேன்.” என்றாள்.

அவளை நோக்கிக் குனிந்து ஈரம்படர்ந்த விழிகளால் நோக்கி பீமதேவன் கேட்டார் “நான் எப்போதேனும் உன்னைப்பார்க்க வரலாமா?” அவள் அவரை ஏறிட்டுப்பார்க்காமல் சென்று ரதத்தில் ஏறிக்கொண்டாள். சிக்கிக்கொண்ட பலா அரக்கை அறுத்துக்கிளம்பும் ஈபோல அக்கணத்தை தாண்டமுடிந்ததைப்பற்றி அவளே வியந்துகொண்டாள்.

அவள் தன்னுடையதாக ஏற்றுக்கொண்ட நகரம் ஒவ்வொரு கட்டிடமாக உதிர்ந்து பின்சென்றது. பின்னால் அவை உடைந்து குவிவதை அவள் உணர்ந்தாள். அவள் பயணம்செய்து பழகிய சாலை ரதத்துக்குப்பின்னால் அறுந்து அந்தரத்தில் ஆடியது. அவள் வாழ்ந்த அரண்மனை அடியற்ற ஆழத்தில் விழுந்து மறைந்தபடியே இருந்தது.

ரதம் அரச படித்துறைக்கு அப்பால் குகர்களின் சிறுதுறையில் சென்று நின்றது. அங்கே பிரதமை கையில் சிறிய மான் தோல் மூட்டையுடன் நின்றிருந்தாள். புராவதி இறங்கி தேரோட்டியைக்கூட திரும்பிப்பாராமல் சென்று படகில் ஏறிக்கொண்டாள். பிரதமை ஏறி அவள் அருகே அமர்ந்தாள்.

துடுப்பால் உந்தி படகை நீரில் செலுத்திய குகன் இரு தோள்களிலும் கரிய தசைகள் இறுகியசைய துழாவினான். படகு நீர்நடுவே சென்றதும் கயிற்றை இழுத்து பாயை புடைக்க விட்டான். காற்று தன் கைகளில் படகை எடுத்துக்கொண்டபோது பலமாதங்களுக்குப்பின் முதன்முறையாக புராவதி மெல்லிய விடுதலை ஒன்றை அகத்தில் உணர்ந்தாள். கிளம்பிவிடவேண்டும் கிளம்பிவிடவேண்டும் என ஒவ்வொருநாளும் எண்ணி ஒவ்வொரு கணமும் எண்ணி மீண்டும் மீண்டும் ஒத்திப்போட்டிருக்க வேண்டாமென்ற எண்ணம் அவளுக்குள் எழுந்தது.

படகு சென்றுகொண்டிருக்கையில் மெல்லமெல்ல மனம் அமைதிகொள்வதை புராவதி உணர்ந்தாள். உலைந்த மாலையில் இருந்து மலரிதழ்கள் உதிர்வதுபோல அவளுடையவை என அவள் நினைத்திருந்த ஒவ்வொரு நினைவாக விலகின. ஒளிவிரிந்த நீர்ப்பரப்பு கண்களை சுருங்கச்செய்தது. சுருங்கிய கண்களில் மெல்ல துயில் வந்து பரவியது.

பிரதமை குகனிடம் “குகர்களெல்லாம் பாடகர்கள் என்றாயே…பாடு” என்றாள். அவன் “ஆம் தேவி… பாடுவதற்கேற்ற பருவநிலை” என்றபின் பாடத்தொடங்கினான். பிரதமை “இன்று வளர்பிறை பன்னிரண்டாம் நாள். அன்னையின் ஒளிமிக்க தோற்றத்தையே பாடவேண்டும்” என்றாள். “ஆம் அன்னையே” என்றான் குகன்.

“கேளுங்கள், அன்னையின் கதையைக் கேளுங்கள்! எளிய குகன் பாடும்சொற்களில் எழும் அன்னையின் கதையைக் கேளுங்கள்! கோடிமைந்தரைப் பெற்றவளின் கதையைக் கேளுங்கள்” அவன் குரல் படகோட்டிகளின் குரல்களுக்குரிய கார்வையும் அழுத்தமும் கொண்டிருந்தது.

ஆயிரம் காலம் மைந்தரில்லாதிருந்த அவுணர்களான ரம்பனும் கரம்பனும் கங்கை நதிக்கரையில் தவம் செய்தனர். தானறிந்த அனைத்தையும் தன் கனவுக்குள் செலுத்தி கனவுகளை மந்திரத்துள் அடக்கி மந்திரத்தை மௌனத்தில் புதைத்து அந்த மௌனத்தை பெருவெளியில் வீசி ரம்பன் அமர்ந்திருந்தான். அருகிருந்த கரம்பனை முதலை விழுங்கியபோதும் ரம்பனின் தவம் கலையவில்லை.

அந்த ஒருமையைக் கண்டு வியந்து அக்கினி அவனுக்கு முன்னால் தோன்றினான். “நீ விழையும் மைந்தனின் குணமென்ன?” என்றான். “குணங்களில் மேலானது தமோகுணமே. அசுரர்களின் தமோகுணமனைத்தும் ஒன்றாகத்திரண்டு என் மகன் பிறக்கவேண்டும்” என்று வேண்டினான் ரம்பன். அவ்வாறாக அவனுக்கு எருமைத்தலையும் இருள்நிறமும் கொண்ட மகிஷன் பிறந்தான்.

இருள்போல பரவி நிறையும் ஆற்றல் கொண்ட பிறிதொன்றில்லை. தமோகுணம் மாயையையே முதல் வல்லமையாகக் கொண்டது. மகிஷன் தன் மாயையினால் நூறு ஆயிரம் பல்லாயிரமாகப் பெருகினான். ரத்தபீஜன், சண்டன், பிரசண்டன், முண்டன் என்னும் ஆயிரம் சோதரர்களுடன் மண்ணையும் விண்ணையும் மூடினான். இரவு படர்வதுபோல அனைத்துலகையும் போர்த்தி தன்வயமாக்கினான்.

அவனிருளால் சூரியசந்திரச் சுடர்களெல்லாம் அணைந்தன. அக்கினி ஒளியின்றி தாமரை இதழ்போலானான். முத்தும் மணியும் ரத்தினங்களும் கூழாங்கற்களாயின. பூக்களும் இலைகளும் மின்னாதாயின. மூத்தோர் சொற்களெல்லாம் வெறும் ஒலிகளாயின. நூல்களின் எழுத்துக்களெல்லாம் புழுத்தடங்கள் போலாயின.

விண்ணுலகில் முனிவரும் தேவரும் கூடினர். இருளைவெல்ல வழியேதென்று வினவினர். அவர்கள் இணைந்து விஷ்ணுவின் பாதங்களை சரணடைந்தனர். விஷ்ணு அவர்களுடன் மகேஸ்வரனை தேடிச்சென்றார். கைலாயக் குளிர்மலையில் கோயில்கொண்டிருந்த சிவனின் யோகத்துயில் கலைத்து அவர்கள் இறைஞ்சினர்.

“ரம்பன் அறியாமல் வரம் வாங்கவில்லை தேவர்களே. காரியல்புதான் முதலானது. செவ்வியல்பும் வெண்ணியல்பும் கருமையில் ஒளிர்ந்து அடங்கும் மின்னல்களேயாகும்” என்றார் மகாதேவர். “வெண்ணியல்புடன் மோத செவ்வியல்பால் ஆகாது. செவ்வியல்பு காரியல்புடன் இணைந்து மேலும் வேகம் கொண்ட இருளே உருவாகும். முற்றிலும் இருள் தீண்டா அதிதூய வெண்ணியல்பால் மட்டுமே காரியல்பை வெல்லமுடியும்.”

விஷ்ணு பணிந்து “அவ்வாறு ஒரு தூவெண்மை புடவியிலெங்கும் இருக்கமுடியாதே மகாதேவா!” என்றார். “அது மலரின்றி மணமும், விறகின்றி நெருப்பும், உடலின்றி ஆன்மாவும் இருப்பதைப்போல அல்லவா?”

சிவன் புன்னகைசெய்து “ஆம், ஆனால் ரம்பன் பெற்ற வரமேகூட அவ்வாறு ஒரு தூவெண்ணியல்பு உருவாவதற்கான காரணமாகலாமே” என்றார். “கருமை தீண்டாத வெண்குணம் திகழ்வது அன்னையின் மடிமீதிலேயாகும். அன்னையை வணங்குங்கள். அவள் கனியட்டும் உங்கள்மீது” என்றார்.

தேவர்களும் முனிவர்களும் அவரவர் அன்னையை எண்ணி தவம் செய்தனர். மனிதர்களும் மிருகங்களும் அன்னையரை எண்ணி தவம் செய்தன. பூச்சிகளும் கிருமிகளும் தவம் செய்தன. அனைவரும் அவர்கள் அறிந்த அன்னையின் பெருங்கருணைக் கணங்களை சிந்தையில் நிறைத்தனர்.

அக்கணங்களெல்லாம் இணைந்து ஒரு பெரும்பாற்கடலாகியது. அதில் திரண்டு எழுந்ததுபோல ஒரு வெண்ணிற ஒளி எழுந்தது. விந்தியமலைமுகடில் ஒரு குகையில் தவம்செய்துகொண்டிருந்த கார்த்தியாயனர் என்ற முனிவரின் வேள்வி நெருப்பில் அமுதமெனத் திரண்டுவந்தது. அவளே கார்த்தியாயினி. ஈரேழு உலகுக்கும் பேரன்னை.

அத்தனை தேவர்களின் ஒளியும் அவளில் இணைந்தன. மகேந்திரனின் ஒளியால் முகமும், அக்கினியால் முக்கண்ணும், யமனின் ஒளியால் கருங்கூந்தலும், விஷ்ணுவின் ஒளியால் பதினெட்டு வெண்கரங்களும், இந்திரன் ஒளியால் இடையும், வருணன் ஒளியால் அல்குலும், பிரம்மனின் ஒளியால் மலர்ப்பாதங்களும், சூரியகணங்களின் ஒளியால் கால்விரல்களும், வசுக்களின் ஒளியால் கைவிரல்களும், பிரஜாபதிகளின் ஒளியால் வெண்பற்களும், வாயுவின் ஒளியால் செவிகளும், மன்மதன் ஒளியால் விற்புருவங்களும் கொண்டு தேவி எழுந்தாள். அதிதூய வெண்ணியல்புடன் அன்னை விந்தியமலையுச்சியில் கோயில்கொண்டருளினாள்.

வல்லமை மிக்கது காரியல்பு. அனைத்தையும் அணைத்து விழுங்கிச் செரித்து அதுவாவது இருள். பிரம்மம் பள்ளிகொள்ளும் படுக்கை அது. ஆனால் இருளின் மையத்தில் ஒளிவேட்கை சுடர்கிறது. எனவே காரியல்பு வெண்ணியல்புக்காக தேடிக்கொண்டே இருக்கிறது. விண்மேகங்களில் ஊர்ந்த மகிஷன் விந்தியமலையுச்சியில் வெண்குடைபோல எழுந்த அன்னையின் ஒளியைக் கண்டான். அவனை அவன் படைப்பியல்பு கீழே கொண்டுவந்தது. அன்னையின் பேரெழில்கண்டு அவன் பெருங்காதல் கொண்டான்.

அவன் தூதனாக வந்த தம்பி துந்துபியிடம் “என்னை வெல்பவனே என் மணவாளன் என்றுரை” என்றாள் அன்னை. மகிஷன் தன் இருட்படையனைத்தையும் திரட்டி போர்முரசொலிக்க விந்தியமலைக்கு வந்தான். தோள்கொட்டி போருக்கழைத்தான்.

வெண்ணெழில்தேவி வெண்தாமரை மீதமர்ந்தவள். வெண்ணியல்போ போரையே அறியாத தூய்மை. போரை எதிர்கொள்ள தேவி விண்ணாளும் சிவனருளை நாடினாள். ‘நான் குடியிருக்கும் இமயத்தைக் கேள்’ என்றார் இறைவன். காலைவேளை இமயத்தின் வெண்பனிமேல் கவிகையில் எழுந்த செவ்வொளியை ஒரு சிம்மமாக்கி இமயம் அன்னைக்குப் பரிசளித்தது. செவ்வியல்பே சிம்மவடிவமென வந்து அன்னைக்கு ஊர்தியாகியது. சிம்மமேறி மகிஷனை எதிர்த்தாள் அன்னை. விந்தியனுக்குமேலே விண்ணகத்தின் வெளியில் அப்பெரும்போருக்கு மின்னல் கொடியேறியது. இடிமுழங்கி முரசானது.

அன்னையின் அழியா பேரழகில் கண்கள் ஆழ்ந்திருக்க மகிஷன் முப்பத்துமுக்கோடி கைகளால் அன்னைமீது படைக்கலங்களை செலுத்தினான். ஆயிரம் ஊழிக்காலம் அப்போர் நிகழ்ந்தது. மகிஷனின் படைக்கலன்களையெல்லாம் தன்னவையாக்கி அவனுக்கே அளித்தாள் அன்னை. அன்னையரே, ஆடிப்பாவையிடம் போர்புரிபவன் வெல்வது எப்படி?

குன்றா முதிரா காலத்தில் என்றுமுளது என அவர்களின் போர் நிகழ்ந்தது. படைக்கலங்களெல்லாம் அழிய வலுவிழந்து அன்னையின் அடிகளில் விழுந்த மகிஷனை அவள் சிம்மம் ஊன்கிழித்து உண்டு பசியாறியது. மகிஷனின் அழியாபெருங்காதல் இரு கருங்கழல்களாக மாறி அன்னையின் கால்களை அணிசெய்தது. மகிஷன் அவன் வாழ்வின் பொருளறிந்து முழுமைகொண்டான். அவன் வாழ்க!

VENMURASU_EPI_21
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

பாடல் முடிந்தபோது பிரதமை ஒரு மெல்லிய விசும்பல் ஒலியைக்கேட்டு திரும்பிப் பார்த்தாள். அரசி அழுதுகொண்டிருப்பதைக் கண்டு ஏதும் சொல்லாமல் தலைகுனிந்தாள். அவள் மிகமெலிந்து நோயுற்றவள் போல ஆகியிருப்பதை எண்ணி பெருமூச்சுவிட்டாள்.

இரவு கோடிவிண்மீன்களால் ஒளிகொண்டதாக இருந்தது. நதியின் மீது பிரதிபலித்த விண்மீன்கள் வழியாக படகு விண்ணகப்பயணமென முன்னகர்ந்து சென்றது. அப்போதுதான் பிரதமை அவர்கள் இனியொருபோதும் திரும்பப்போவதில்லை என்று உறுதியாக அறிந்தாள்.

ரிஷிகேச வனத்தில் பார்க்கவ முனிவரின் குடிலருகே குடில்கட்டி புராவதி தங்கினாள். ஒவ்வொருநாள் காலையிலும் இருள் விலகுவதற்கு முன்பு கங்கையில் நீராடி, சிவபூசை முடிந்து, முனிவரின் தவச்சாலைக்குச் சென்று பணிவிடைகள் செய்தாள். அங்கிருந்த நான்கு பசுக்களை அவளும் பிரதமையும் காட்டுக்குக் கொண்டுசென்று மேய்த்து மாலையில் மீண்டனர். மாலையில் கங்கையில் குளித்து மீண்டும் சிவபூசைகள் முடித்து தவச்சாலை சேர்ந்தனர்.

ஆனால் விறகை எரித்து அழிக்க முடியா தீயூழ் கொண்ட நெருப்பைப்போல அவள் சிந்தை அவள் மேல் நின்றெரிந்தது. எப்போதும் நெட்டுயிர்த்தவளாக, தனிமையை நாடியவளாக, சொற்களை தன்னுள் மட்டுமே ஓட்டுபவளாக அவள் இருந்தாள். தனிமையில் தலைகுனிந்து அமர்ந்திருப்பவள் இலைநுனியில் கனக்கும் நீர்த்துளிபோல ததும்பித் ததும்பி ஒருகணத்தில் உடைந்தழத் தொடங்கினாள்.

கண்களை மூடினாலும் தெரியும் வெயிலொளி போல அவளுக்குள் அம்பை தெரிந்துகொண்டிருந்தாள். அவளை கருக்கொண்ட நாளில் ஒருமுறை நீர்நிறைந்த யானம் ஒன்றைப் பார்க்கையில் அவள் விசித்திரமான தன்னுணர்வொன்றை அடைந்தாள். நீர் அது இருக்கும் பாத்திரத்தின் வடிவை அடைகிறது என்பது எவ்வளவு மேலோட்டமான உண்மை. பூமியிலுள்ள அனைத்துப் பாத்திரங்களும் நீருக்கு உகந்த வடிவத்தை அல்லவா வந்து அடைந்திருக்கின்றன? அன்று தன் வயிற்றில் கைவைத்து அவள் அடைந்த தன்னிலையே அவளாக அதன் பின் என்றுமிருந்தது.

ஆகவேதான் பீமதேவன் அவள்மேல் அதுவரை பொழிந்த காதலனைத்தையும் அவள் வயிற்றின்மேல் மாற்றிக்கொண்டதை அவள் ஏற்றுக்கொண்டாள். அவள் வயிறு சுமந்த குழந்தையை எண்ணி அவன் கொண்ட பரவசமும் கவலையும் கொந்தளிப்பும் மோனமும் அவளை உவகையிலாழ்த்தின. அவள் ஈற்றறைக்குச் செல்லும்போது மூதன்னை அவள் கையில் காப்பு கட்டி மெல்லக்குனிந்து ‘அரியணை அமர இளவரசன் ஒருவனை பெற்றுக்கொடுங்கள் அரசி’ என்றபோது அவளுக்கு பீமதேவன் ஒரு பெண்ணைத்தான் விரும்புவான் என்ற எண்ணம் எழுந்தது.

அதைப்போலவே அவன் அவளருகே வந்து குனிந்து குழந்தையைப்பார்த்து பரவசத்துடன் “வளரிள பதினான்காம் நாள்…பரணி நட்சத்திரம்…இவள் இளவரசியல்ல…கொற்றவை” என்று சொன்னபோது பீமதேவனின் கண்ணீர்த்துளிகள் அவள் மேல் விழுந்தன. “இருபத்தெட்டாவது நாள் இவளுக்கு பொன்னணிவிக்கவேண்டும் என்றார்கள். இக்கால்களுக்கு அழலன்றி எது கழலாகும்?” என்றான். குனிந்து குழந்தையைத் தொட அவனால் முடியவில்லை “எரியிதழ் போலிருக்கிறாள். இவள் என்னுடலில் இருந்தோ உன்னுடலில் இருந்தோ வரவில்லை அரசி. விறகில் எரியும் அக்கினி போல நம்மில் இவள் நிகழ்கிறாள்” என்றான்.

அவனுடைய புலம்பல்களை அவள் சிரிப்புடன் எடுத்துக்கொண்டாலும் மெல்லமெல்ல அம்பையை அவளே ஒரு நெருப்பாக எண்ணத்தொடங்கினாள். ஒவ்வொன்றையும் நோக்கி கைநீட்டும் வேட்கையே அம்பை. எதையும் தானாக ஆக்கிக்கொள்ளும் தூய்மை அவள். அவளுடைய சினம் கடைசிக்கணம் வரை எரிப்பதாக இருந்தது. உள்ளூர அவள் அம்பையை அஞ்சினாள். ஆனால் அது ஆளும் இறைவிமேல் கொண்ட அச்சம் என்றும் அறிந்திருந்தாள். “எரியும் விறகாக என்னை உணர்கிறேன். இவள் என் தீ” என்று ஒருமுறை அவள் பீமதேவனிடம் சொன்னாள்.

கையிலெடுத்துக் கொஞ்ச, சினந்து அடிக்க எளிய அம்பை ஒருத்தி தேவை என்று அவள் சொன்னபோது பீமதேவன் சிரித்து “ஆம் பெற்றுக்கொள்வோம்” என்றான். இரண்டாவது குழந்தையை குனிந்து நோக்கி சிரித்து “இவள் குளிர்ந்தவள், இவளுக்கு குளிர்ந்த அம்பையின் பெயரிடுகிறேன்” என்று சொல்லி அம்பிகை என்று பெயரிட்டான்.

அதன்பின் சிலவருடங்கள் கழித்து அவளுடனிருக்கையில் “என் மடியின் தவிப்பு அடங்கவில்லை. அம்பையை ஒரு விளையாட்டுப்பெண்ணாக எனக்குக் கொடு. தேவியர் மூவர் என்றுதானே நூல்களும் சொல்கின்றன” என்று கேட்டு அம்பாலிகையை பெற்றுக்கொண்டான். விழிகளால் அம்பையையும் கைகளால் அம்பிகையையும் உதடுகளால் அம்பாலிகையையும் கொஞ்சினான்.

மூன்று மகள்களுடன் ரதத்தில் செல்லும்போது உஷையும் சந்தியையும் ராத்ரியும் துணைவரும் சூரியன்போல தன்னை உணர்வதாக பீமதேவன் அவளிடம் சொல்வான். “நாடாள மகனில்லையே என என்னிடம் கேட்கிறார்கள். இந்நகரில் நித்திலப்பந்தல் அமைத்து என் மகள்களுக்கு சுயம்வரம் வைப்பேன். ஒன்றுக்கு மூன்று இளவரசர்கள் என் நாட்டை ஆள்வார்கள்” என்று சிரித்தான்.

தனிமையில் மரநிழலில் அமர்ந்திருக்கையில் புராவதி அழத்தொடங்கினால் பிரதமை தடுப்பதில்லை. அழுது கண்ணீர் ஓய்ந்து மெல்ல அடங்கி அவள் துயில்வது வரை அருகிருப்பாள். பின்பு பிறவேலைகளை முடித்துவந்து மெல்ல எழுப்பி குடிலுக்கு கூட்டிச்செல்வாள். இரவிலும் புராவதி தூங்குவதில்லை. விழிப்பு கொள்கையில் இருட்டில் மின்னும் புராவதியின் கண்களைக் கண்டு பிரதமை நெடுமூச்செறிவாள்.

ஒருநாள் புராவதி ஒரு கனவு கண்டாள். தவழும் குழந்தையான அம்பை இடையில் கிண்கிணி மட்டுமே அணிந்தவளாக விரைந்து செல்லக்கண்டு அவள் கூவியழைத்தபடி பின்னால் சென்றாள். படியிறங்கி உள்முற்றம் சென்ற குழந்தை அங்கே புகைவிட்டெரிந்த தூப யானத்தின் செங்கனலை அள்ளி அள்ளி வாயிலிட்டு உண்ணத்தொடங்கியது. ஓடிச்சென்று அதை அள்ளி எடுத்து வாயைத்திறந்து பார்த்தாள். வாய்க்குள் வேள்விக்குளமென செந்நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.

அழுதுகொண்டு கண்விழித்த புராவதி பார்க்கவரிடம் அதன் பொருளென்ன என்று கேட்டாள். “உன்குழந்தை தீராப்பெரும்பசியுடன் எங்கோ இருக்கிறாள்” என்றார் முனிவர். “அய்யனே, அவள் எங்கிருக்கிறாளென நான் எப்படி அறிவேன்? என் குழந்தையின் பெரும்பசியை நான் எப்படிப்போக்குவேன்?” என புராவதி அழுதாள்.

முனிவர் “காணாதவர்களின் பசியைப்போக்கும் நூல்நெறி ஒன்றே. காண்பவர் ஆயிரம்பேரின் பசியைப்போக்கு. வேள்விக்குப்பின் சேரும் அபூர்வம் எனும் பலன் உனக்கிருக்கும். எங்கோ எவராலோ உன் மகள் ஊட்டப்படுவாள்” என்றார்.

பின்னர் பார்க்கவமுனிவர் மண்ணில் வினாக்களம் அமைத்து பன்னிரு கூழாங்கற்களையும் ஏழு மலர்களையும் வைத்து மூதாதையரிடம் வினவிச் சொன்னார். “உன் மகள் தட்சனின் மகளாய்ப்பிறந்து எரியேறிய தாட்சாயணியின் துளி என அறிவாயாக! கங்கைக்கரைக்காட்டில் நாகர்களின் ஊரான கங்காத்வாரம் உள்ளது. அங்கே தாட்சாயணி எரிபுகுந்த குண்டத்தை நாகர்கள் நிறுவி வழிபடுகிறார்கள். அங்கே சென்று ஆயிரம் பயணிகளுக்கு அன்னம் அளி. உன் மகள் அந்த அன்னத்தை அடைவாள்.”

காசிமன்னருக்கு தூதனுப்பி உணவுச்சாலை அமைக்கும்படி புராவதி கோரினாள். அவ்வண்ணமே காசிமன்னர் அறச்சாலையொன்றை அங்கே அமைத்தார். அதன் முதல்நாள் பூசைக்காக புராவதி ரிஷிகேசம் நீங்கி கங்காத்வாரம் சென்றாள். கிளைபின்னிச் செறிந்த ஆலமரங்களில் நாகங்கள் விழுதுகளுடன் தொங்கி நெளியும் இருண்ட காட்டுக்குள் சென்ற ஒற்றையடிப்பாதை வழியாக பிரதமையுடன் நடந்து சென்று நாகர்களின் கிராமத்தை அடைந்தாள்.

கங்காத்வாரத்தில் நூறு நாகதெய்வங்களின் கோயில்கள் இருந்தன. சண்டியன்னைகள், நாகதேவிகள், பிடாரிகள், ஏழன்னைகள். தெற்கே சாலவனக் காட்டுக்குள் தாட்சாயணியின் எரிகுளம் இருந்தது. பாரதவர்ஷமெங்கும் இருந்து நாகர்கள் பயணிகளாக அங்கே வந்து கங்கையில் நீராடி எரிகுளத்து அன்னையை வணங்கிச் சென்றனர். அவர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட குடில்கள் மரக்கிளைகள் மேல் இருந்தன. அவற்றின் கூரைகளிலும் கம்பங்களிலும் நாகங்கள் நெளிந்து நழுவிச்சென்றன.

அன்னசாலையில் அவளைக் கண்டதும் அமைச்சர் நடுவே இருந்து எழுந்து ஓடிவந்த பீமதேவன் அவள் கண்களைக் கண்டதும் தன் மேலாடையை சரிசெய்தபடி தயங்கி நின்றார். “அரசியே, உன் ஆணைப்படி அன்னசாலை அமைக்கப்பட்டுள்ளது” என்றார். “ஒவ்வொரு நாளும் இங்கு வரும் அனைவருக்கும் உணவளிப்போம். இரவும் பகலும் இங்கே அதற்காக ஏவலரை அமைத்திருக்கிறேன்.”

புராவதி “நான் அரசி அல்ல” என்றாள். “உன் கண்களைப்பார்த்தேன் தேவி. இன்னும் உன் அனல் அவியவில்லையா என்ன?” என்று பீமதேவன் கண்ணீருடன் கேட்டார். “என் சிதையெரிந்தாலும் எரியாத அனல் அது” என்று புராவதி சொன்னாள். தாடை உரசி பற்கள் ஒலிக்க “என் குழந்தை மாளிகை வாயிலில் வந்து நின்றாள் என அறிந்த நாளில் என்னுள் அது குடியேறியது” என்றாள்.

சினத்துடன் “தேவி நீயும் ஓர் அரசி. நாடாண்டவன் பெற்ற மகள் நீ. களப்பலிக்கென்றே மைந்தரைப் பெறவேண்டியவள். நாம் உயிராசையாலோ உறவாசையாலோ கட்டுண்டவர்களல்ல. நம் நெறியும் வாழ்வும் நம் நாட்டுக்காகவே. நான் செய்தவையெல்லாம் காசிநாட்டுக்காக மட்டுமே. போர் வந்து என் குடிமக்கள் உயிர்துறப்பதைவிடக் கொடிதல்ல என் மகள் அழிந்தது…” என்றார்.

அச்சொற்கள் அவருக்களித்த உணர்ச்சிகளால் முகம் நெளிய, கண்ணீருடன் “விண்ணிலேறி மூதாதையரை சந்திக்கையில் தெளிந்த மனத்துடன் அவர்கள் கண்களைப்பார்த்து நான் சொல்வேன். என் தந்தையரே, நீங்கள் எனக்களித்த பணியை முடித்திருக்கிறேன், என்னை வாழ்த்துங்கள் என. அவர்களின் முதுகரங்கள் என் சிரத்தைத் தொடும். அதிலெனக்கு எந்த ஐயமும் இல்லை…” என்றார்.

சிவந்தெரிந்த முகத்துடன் புராவதி “ஒன்றுசெய்யுங்கள். நிமித்திகரை அழைத்து என் நெஞ்சிலெரியும் கனலா இல்லை உங்கள் தேசத்தில் அடுமனையிலும் வேள்வியிலும் எரியும் நெருப்பா எது அதிகமென்று கேளுங்கள்” என்றாள்.

“கேட்கவேண்டியதில்லை. அவளை அகற்றியமைக்காக ஒருநாள்கூட நான் துயிலிழக்கவில்லை. அதுவே எனக்குச் சான்று’ என்று பீமதேவன் சொன்னார். அவள் இறுகிய தாடையுடன் நிற்க அவளை சிலகணங்கள் நோக்கிவிட்டு பார்வையை திருப்பிக்கொண்டார்.

“அவளை நினைப்பதில்லையா?” என்றாள் புராவதி. பீமதேவன் தலையை இறுக்கமாக இன்னொரு பக்கமாக திருப்பிக்கொண்டார். “அவளை எப்போதாவது மறந்திருக்கிறீர்களா?” என்று புராவதி மீண்டும் கேட்டாள். கோபத்துடன் வாளை பாதி உருவி திரும்பிய பீமதேவன் தன் அனைத்து தசைநார்களையும் மெல்ல இழுத்துக்கொண்டு தன் உடலுக்குள்ளேயே பின்னடைந்தார். அவரது தோள்கள் துடித்தன. திரும்பிப்பாராமல் விலகிச்சென்றார். புராவதி புன்னகைத்துக் கொண்டாள். தீப்பட்டு எரிந்த சருமத்தில் தைலம் வழிவதுபோலிருந்தது.

அன்னசாலையில் நூற்றுக்கணக்கான பயணிகளும் இரவலர்களும் உணவை வாங்கி மரத்தடிகளுக்குச் சென்று உண்ட ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. உணவுபரிமாறுபவர்கள் சங்கை ஒலித்து உணவுக்கு பயணிகளையும் துறவிகளையும் அழைத்துக் கொண்டிருந்தனர். முற்றிலும் உடைதுறந்த நாகத்துறவிகள் திரிசூலமும் விரிசடையும் சாம்பல்பூசிய உடலுமாக உணவுக்குச் சென்றனர். பலர் கழுத்தில் நாகப்பாம்புகளை அணிந்திருந்தார்கள். ஒருவர் பிணத்தில் இருந்து எடுத்த பெரிய தொடையுடன் கூடிய கால் ஒன்றை தன் தோளில் வைத்திருந்தார்.

நாகத்துறவிகள், அவர்களைக் கண்டதும் அஞ்சி விலகி ஓடிய இரவலரை நோக்கி சிரித்துக்கொண்டு தங்கள் முத்தண்டங்களால் தரையை அடித்து ஒலி எழுப்பினர். உணவை கைகளிலேயே வாங்கி உண்டனர். உணவு உண்டபடியே உரக்கக் கூச்சலிட்டு நடனமிட்டனர். ‘சிவோஹம் !சிவோஹம்!’ என ஆர்ப்பரித்தனர்.

புராவதி கங்கையில் குளித்து ஈர உடையுடன் தட்சவனத்தை அடைந்தாள். படர்ந்த ஆலமரத்தடியில் ஆயிரம் நாகச்சிலைகள் படமெடுத்து மஞ்சள்பூசி குளிர்ந்து அமர்ந்திருந்தன. அவற்றின் நடுவே அமைந்திருந்த கல்லாலான சிறிய வேள்விக்குளத்தில் செந்நெருப்பு சுளுந்துகளில் நெய்யுண்டு நின்றெரிந்துகொண்டிருந்தது. வலப்பக்கத்தில் தட்சன் நூறு உடல்சுருள்களுடன் விழித்தவிழிகளுடன் அமர்ந்திருந்தான்.

அந்த நெருப்பையே நோக்கி நின்ற புராவதியின் இமைகள் மூடவில்லை. கருஞ்சடைக்கற்றைகளுடன் அங்கிருந்த பூசகன் “வணங்குங்கள் அன்னையே” என்றான். அதை அவள் வெறும் அசைவாகவே கண்டாள். எங்கிருக்கிறாள் என்றே அவளுக்குத் தெரியவில்லை. அவன் மேலும் கைகாட்டியதும் திடுக்கிட்டு விழித்து அவள் வணங்கி வழிபடுவதற்காக குனிந்தபோது கால்கள் தளர ‘அம்பை!’ என முனகி நினைவிழந்து நெருப்பில் விழுந்தாள்.

பீமதேவன் கூவியயபடி அவளைப் பிடித்து தூக்கிக்கொண்டார். பூசகர்கள் ஓடிவந்து அவளைத் தூக்கிக் கொண்டுசென்றனர். அவள் முகமும் ஒரு கண்ணும் நெருப்பில் வெந்திருந்தன. பச்சிலைச்சாற்றை அவள்மேல் ஊற்றி அள்ளித்தூக்கிக் கொண்டுவந்து வெளியே அமர்த்தினார்கள். அரசசேவகர்கள் ஓடிவந்து நிற்க பீமதேவன் “அரண்மனை மருத்துவர் என் படைகளுடன் இருக்கிறார். அவரை கூட்டிவருக!” என்று ஆணையிட்டு முன்னால் ஓடினார்.

அப்பால் நாகத்துறவிகளில் ஒருவர் திரும்பி புராவதியை நோக்கி கைசுட்டி உரக்கச்சிரித்து “நெருப்பையே நினைத்தவளை நெருப்பும் அறிந்திருக்கிறான்” என்றார். அவர்களுக்கு அப்பாலிருந்து கருகிவற்றிய முலைகள் ஆட, அகழ்ந்தெடுத்த வேர்போல மண்படிந்த உடலுடன், சடைமுடிவிரித்து தன்னுள் தானே பேசியபடி மெல்ல ஆடிச்சென்ற பித்தி புராவதியை கடந்து சென்றாள்.

புராவதியின் அகம் மணலில் வற்றும் நீர் போல மறைந்துகொண்டிருந்தது. அவள் கண்களுக்குமேல் மதியவெயில் பொழிய அவள் சித்தத்துக்குள் ஒரு வெண்கடல் அலையடித்து விரிந்தது. அதன் நடுவே விரிந்த வெண்தாமரையில் அவளுடைய தெய்வம் வெண்கலை உடுத்தி நிலவெழுந்ததுபோல அமர்ந்திருந்தது. புராவதி நடுங்கும் உதடுகளால் ‘அம்பை அம்பை’ என உச்சரித்துக்கொண்டிருந்தாள். கண்களை அழிக்கும் வெண்மை, நிறங்களெல்லாம் கரைந்தழியும் வெண்மை. இரு கரியகழல்கள். அவையும் வெண்மைகொண்டு மறைந்தன.

பீமதேவர் மருத்துவருடன் வந்து புராவதியைப் பார்த்தபோது கூப்பிய கரங்களுடன் அவள் இறந்திருந்தாள்.

நூல் ஒன்று – முதற்கனல் – 20

பகுதி நான்கு : அணையாச்சிதை

[ 4 ]

‘இளவரசே, உசகன் அருளப்படாததை அனுதினமும் தேடிக்கொண்டே இருந்தான். நெருப்பில் எரிந்தவன் நீரைக் கண்டுகொண்டான்’

இருவிரல்களால் யாழைமீட்டி தீர்க்கசியாமர் பாடினார். ஆனால் வேள்வியாகும் அவியின் பேரின்பத்தையே சந்தனு கங்காதேவியில் அடைந்தார். மண்ணில் நெளியும் புழு விண்ணில் பறக்கும் வழி என்ன மானிடரே? விண்ணாளும் புள்ளுக்கு உணவாவது மட்டும் தானே?

கங்காதேவியிடம் அவருக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. கருமுதிர்ந்து குடவாயிலை தலையால் முட்டத் தொடங்கியதும் கங்காதேவி குடில்விட்டிறங்கி விலகிச் சென்றாள். பின்பு பதினெட்டுநாள் விலக்கு முடிந்து குளித்து புத்தம்புதியவளாக திரும்பி வந்தாள். ஒரு சொல் கூட குழந்தைகளைப்பற்றி சொல்லவில்லை. குழந்தைகள் எங்கோ உள்ளன என்று சந்தனு எண்ணிக்கொண்டார். அவளுக்களித்த வாக்கினால் அதைப்பற்றி ஏதும் கேட்கவில்லை.

கையால் தீண்டாத அக்குழந்தைகளை சந்தனு கற்பனையால் அணைத்துக்கொண்டார். அவற்றுக்குப் பெயர் சூட்டினார். நெஞ்சிலும் தோளிலும் தலையிலும் வைத்து வளர்த்தார். புரூரவஸும் ஆயுஷும் நகுஷனும் ஹஸ்தியும் குருவும் பிரதீபரும் அவனுள் முகம் கொண்டு, கண்மலர்ந்து, சிரிப்பு ஒளிர்ந்து வாழ்ந்தனர். அவருடைய பல்லாயிரம் முத்தங்களை அவர்கள் விண்ணுலகின் ஒளிமிக்க விதானத்தில் இருந்துகொண்டு குட்டிக்கைகளாலும் கால்களாலும் பட்டுக்கன்னங்களாலும் செல்லச்சிறுபண்டியாலும் இன்னும் இன்னும் என பெற்றுக்கொண்டனர்.

ஏழாவது குழந்தையை அவள் கருவுற்றிருந்தபோது ஒருநாள் கனவில் உசகனாக தன்னை உணர்ந்து எழுந்தபோது ஆறு குழந்தைகளும் என்ன ஆயின என்ற எண்ணம் வந்தது. அதை நூறுநூறாயிரம் முறை உள்ளூர கேட்டுக்கொண்டிருந்தவர் ஒருமுறையேனும் வாய்ச்சொல்லாக மாற்றிக்கொள்ளவில்லை. ஏழாவது குழந்தையுடன் அவள் செல்வதைக் கண்டதும் இருளில் அவள் பாதையை பின்தொடர்ந்து சென்றார். கங்காதேவி கங்கர்களின் ஊரை அடைந்ததும் அங்கே கூடியிருந்த அவள் குல மகளிர் குலவையொலியுடன் அவளை கூட்டிசென்றனர். குல மூதாதையருக்கும் பேற்றில் இறந்த பெண்களுக்கும் பலியிட்டு பூசை வைத்தபின்னர் கங்கைக்கரைக்குக் கொண்டுசென்று நீரில் இறக்கி விட்டனர்.

கங்கையின் குளிர்ந்த நீரில் இறங்கி மெல்ல நீந்திய கங்காதேவியைப் பார்த்தபடி கரையில் நின்ற பெண்கள் குலப்பாடல்களைப் பாடினர். அவள் ஈற்று நோவு வந்து நீரில் திளைத்தபோது பாடல் உரக்க ஒலித்தது. குழந்தை நீருக்குள்ளேயே பிறந்ததும் அதன் தொப்புள் கொடியை வெட்டிவிட்டு நீந்திக் கரைசேர்ந்தாள் கங்காதேவி. பெண்கள் நீரை நோக்கி கை நீட்டி நீந்தி வரும்படி குழந்தையை அழைத்தனர். தொலைவில் நின்ற சந்தனு மன்னர் ஓசையில்லாமல் கூவித் தவித்து நெஞ்சில் கரம் வைத்து விம்மினார். குழந்தை கங்கைநீரில் மூன்று சிறு கொப்புளங்களாக மாறி மறைந்தது.

பதினெட்டாம் நாள் புத்தாடையும் புதுமெருகுமாக அவள் வந்தபோது நாக்கின் கடைசி எல்லைவரை வந்த சொல்லை விழுங்கி சந்தனு திரும்பிக்கொண்டார். பின்னர் மீண்டும் அவளது காமத்தின் பொன்னிற இதழ்களுக்குள் விழுந்து எரியத்தொடங்கினார். எட்டாம் குழந்தை கருவுக்கு வந்தபோதுதான் மீண்டும் அவ்வெண்ணங்களை அடைந்தார். ஒவ்வொருநாளும் அவள் வயிற்றை நோக்கியபடி அக்கேள்வியை மனதுக்குள் நிகழ்த்திக்கொண்டார். பத்தாவது மாதம் நிறைவயிற்றுடன் அவள் இருக்கையில் அவள் வயிற்றில் இருந்து விலகாத பிரக்ஞையுடன் அங்கிருந்தார். ஒருகைமேல் தலைவைத்து கங்கையைப் பார்த்திருந்த அவள் உடலில் இருந்து வெம்மைமிக்க குருதிவாசனை எழக்கண்டதும் கைகள் நடுங்க அவளருகே சென்று நின்றார்.

கங்காதேவி எழுந்து தளர்நடையில் படகை நோக்கிச் சென்றதும் சந்தனு அவளைத் தடுத்து “தேவி, நீ எங்கே செல்கிறாய்? என்குழந்தையை என்ன செய்யப்போகிறாய்?” என்றார். அவள் அவரை விழித்துப் பார்த்தபின் ஒரு சொல்லும் சொல்லாமல் சிறுபடகில் ஏறிக்கொண்டாள். “தேவி என் குழந்தையைக் கொல்லாதே…. அது என் மூதாதையரின் கொடை” என்று சந்தனு கூவினார்.

துடுப்பால் படகை உந்தி நீர்ப்பரப்பில் சென்ற கங்காதேவி “மன்னரே, எனக்களித்த வாக்கை மீறிவிட்டீர்கள். என்னிடம் கேள்வி கேட்டுவிட்டீர்கள். இதோ நம் உறவு முறிந்தது. இனி என்னைத் தேடவேண்டியதில்லை” என்று சொன்னாள். ‘தேவி!’ என அலறியபடி அவர் படகுத்துறை வரை வந்தார். சந்தனுவின் அலறலைத் தாண்டி அவள் படகை துழாவிச் சென்றாள். அவளைத் தொடரமுடியாமல் சந்தனு கூவி அழுதார்.

VENMURASU_ EPI_20
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

பதினெட்டு நாட்கள் அவள் திரும்பிவருவாள் என நம்பி அங்கே கண்ணீருடன் காத்திருந்தபின் சந்தனு மன்னர் அஸ்தினபுரிக்குத் திரும்பி வந்தார். வீரியமெல்லாம் மறைந்தது போல வெளுத்து மெலிந்து எப்போதும் நடுங்கிக்கொண்டிருப்பவராக ஆனார். அஸ்தினபுரியில் அவருக்கு ஒருநாளும் இயற்கையாக துயில் வரவேயில்லை. இரவெல்லாம் படுக்கையில் பாம்புபோல நெளிந்துகொண்டிருந்த அவருக்கு மதுவகைகளையும் தூமவகைகளையும் அளித்து சோதித்த மருத்துவர்கள் தோல்வியடைந்தனர். கங்கைக்கரைக்குச் சென்று குடில் அமைத்து தங்கும்போது மட்டுமே அவர் தூங்கமுடிந்தது.

இருத்தலென்பதே இறைஞ்சுதலாக ஆனவனின் குரலை எங்கோ எவரோ கேட்கிறார்கள் இளவரசே! ஏழாண்டுகள் கழித்து ஒருநாள் கங்கைக்கரை வழியாக அவர் காலையில் நடந்துசெல்லும்போது நினைத்துக்கொண்டார். இந்த கங்கை என் பிறவிப்பெரும் துயரத்தின் பெருக்கு. சொல்லற்று விழிக்கும் பலகோடிக் கண்களின் வெளி. என் மூதாதையர் கரைந்திருக்கும் நிலைக்காத நினைவு. என் உலகைச் சூழ்ந்திருக்கும் கருங்கடலின் கரம்.

கங்கையில் வந்துசேர்ந்த பிரபாவதி என்ற சிற்றாறின் நெளிவைக் கண்டு கால் தளர்ந்து அப்படியென்றால் இது என் இப்பிறவியின் தவிப்பு என நினைத்துக்கொண்டார். அப்போது அதன் நீர் மெல்ல நின்று, ஆறு இனிய வெண்மணல் வெளியாக ஆனதைக் கண்டு திகைத்தார். பெருவலி நிற்கும்போது எழும் நிம்மதியை உணர்ந்தார்.

மேலும் முன்னால் சென்று பார்த்தபோது ஆற்றின் குறுக்காக முற்றிலும் கோரைப் புல்லைக்கொண்டு கட்டப்பட்ட அணை ஒன்றைக் கண்டார். அந்த அணைக்கு அருகே அவரைவிட உயரமான சிறுவன் ஒருவன் நின்று தன் நீண்டகரங்களால் கோரைத்தண்டுகளைப் பிடுங்கி வில்லில் தொடுத்து அம்புகளாக எய்து அந்த அணையை கட்டிக்கொண்டிருந்தான். சந்தனு அச்செயலின் பேருருவைக் கண்டு அவன் கந்தர்வனோ என்று எண்ணி பிரமித்தார். அச்சிறுவன் நாணல்களைக் கிள்ளி நீரில் வீசி மீன்பிடித்ததைக் கண்டதும்தான் அவன் மானுடனென்று தெளிந்தார். அவனருகே சென்றதுமே அவன் தோள்களில் இருந்த முத்திரைகளைக் கண்டு உடல்சிலிர்த்து கண்ணீருடன் நின்றுவிட்டார்.

“நீ என் மகன்” என அவர் சொன்னார். உயிர் எடுத்து வந்தபின்பு சொன்னவற்றிலேயே மகத்தான வார்த்தைகள் அவையே என உணர்ந்தார். “நான் உன் தந்தை” என்று அதன் அடுத்த வரியைச் சொன்னார். அதை அவனுக்குக் காட்ட அடையாளம் தேடி அவர் தவிக்கும்போது அவன் அவரது மெலிந்த நடுங்கிய கைகளை தன் வலிய பெருங்கைகளால் பற்றிக்கொண்டு கார்வைமிக்க குரலில் “உங்கள் கண்ணீரைவிட எனக்கு ஆதாரம் தேவையில்லை தந்தையே” என்றான்.

கங்கைக்குப் பிறந்தவனாதலால் காங்கேயன் என்று அழைக்கப்பட்ட அவன் கங்கர்குலத்தில் இருந்தாலும் காடுகளிலேயே வாழும் தனிமை கொண்டிருந்தான். கங்கர் முறைப்படி பிறந்ததுமே கங்கையில் நீந்திக்கரைசேர்ந்த அவனை கங்கர்குலத்திடம் அளித்துவிட்டு கங்கையில் இறங்கிச்சென்ற அவன் அன்னை திரும்பி வரவேயில்லை. காடும் நதியும் அவன் களங்களாக இருந்தன. காற்றிலிருந்து சுருதிகளையும் நீரிலிருந்து அஸ்திரங்களையும் நெருப்பிலிருந்து நெறிகளையும் கற்றிருந்தான். இளவரசே, தலைமுறைக்கு ஒருமுறையே ஒவ்வொரு காலடியையும் மண்மகள் கைவிரித்துத் தாங்கும் குழவியர் மண்ணில் பிறக்கின்றனர்.

தனிமையை நோன்பாகக் கொண்ட அவனை தேவவிரதன் என்று பெயரிட்டு சந்தனு மன்னர் அஸ்தினபுரிக்கு அழைத்துவந்தார். யானைத்துதிக்கை போன்ற அவனுடைய கனத்த கைகளை விடவே அவரால் முடியவில்லை. ‘என் மகன்! என் மகன்! என் மகன்!’ என்ற ஆப்தவாக்கியமே சந்தனுவுக்கு இன்பத்தையும் ஞானத்தையும் முக்தியையும் அளித்தது. ஆப்தவாக்கியங்களின் இறைவிகளெல்லாம் அதைக்கண்டு புன்னகை புரிந்தனர்.

இளையவரே, அன்றுமுதல் அஸ்தினபுரியின் காவல்தெய்வமாக அவரே விளங்கிவருகிறார். அறங்கள் அனைத்தையும் அறிந்தவரும், அறத்தினால் வேலிகட்டப்பட்ட தனிமையில் வாழ்பவருமாகிய பீஷ்மரை வணங்குவோம்! தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்ளும் மாமனிதர்களால்தான் மானுடம் வெல்கிறது என்று அறிக! அவர்களின் குருதியை உண்டுதான் எளியமக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் தசைகள்மேல் வேரோடியே தலைமுறைகளின் விதைகள் முளைக்கின்றன.

தீர்க்கசியாமரின் சொல்கேட்டு கண்ணீர் மல்க கைகூப்பி அமர்ந்திருந்தான் விசித்திரவீரியன். இளவரசே, சந்தனு தன் அன்னையையும் தந்தையையும் ஆசிரியரையும் ஒருங்கே அடைந்தார். விரிந்த பெருந்தோள்களைக் கண்டு அச்சங்களை வென்றார். ஒளிமிக்க கண்களைக் கண்டு அவநம்பிக்கைகளைக் கடந்தார். முழங்கும் குரலைக்கேட்டு ஐயங்கள் தெளிந்தார். அச்சம் நிறைந்த வழக்கமான கனவொன்றில் உசகனாக அவர் நெளிந்து ரதசக்கரத்தால் நசுக்குண்டு திகைத்து எழுந்து நடுங்கி முனகியபோது அங்கே இருந்த தேவவிரதர் அவர் கன்னத்தில் கைவைத்து காதில் “அஞ்சாதீர் தந்தையே, நானிருக்கிறேன்” என்றார். அவர் கையைப்பிடித்து மார்போடு சேர்த்துக்கொண்டு கண்ணீர் விட்டுக்கொண்டே மீண்டும் உறங்கினார்.

தேவவிரதர் தந்தையின் அத்தனை சுமைகளையும் வாங்கிக்கொண்டார். தன் நிழலில் தந்தையை வைத்து காத்தார். காட்டில் வேட்டைக்குச் சென்றபோது மெல்ல தேவவிரதரின் தோளில் கைவைத்து அதன் உறுதியை உணர்ந்த சந்தனு அவர் திரும்பிப்பார்த்தபோது திகைத்து நோக்கை விலக்கிக் கொண்டார். அவர் உள்ளத்தை அறிந்தவர்போல தேவவிரதர் அவரை தன் பெரும் கரங்களில் மதலையெனத் தூக்கிகொண்டார்.

தந்தையை கைகளில் அள்ளிக்கொண்ட தனயனின் மார்புக்குள் நூறு முலைகள் முளைத்து பால்சுரந்தன. அன்னைபோல அணைத்தும், கடிந்தும் தந்தையைப் பேணினார் மைந்தர். தசைகள் இறுகிய படைக்குதிரையுடன் சேர்ந்து ஓடிக்களிக்கும் கன்று போல மகனுடன் விளையாடி சந்தனு மகிழ்ச்சி கொண்டவரானார்.

அஸ்தினபுரியின் அரசே! அந்த மகிழ்வான நாட்களில்தான் உங்கள் தந்தை சந்தனு யமுனையில் படகோட்டிக்கொண்டிருந்த மச்சர்குலத்து இளவரசியைக் கண்டார். கங்கையின் தங்கையல்லவா யமுனை? சென்றவள் வந்தாள் என்றே சந்தனு நினைத்தார். அவள் பாதங்களில் அனைத்தையும் மறந்து தன்னை வைத்தார். அவரது தசைகளில் குருதியும் நரம்புகளில் அக்கினியும் குடியேறின. கண்களில் ஒளியும் உதடுகளில் புன்னகையும் மீண்டு வந்தன. கன்றுகள் குதிக்கும் குதூகலத்துடன் நடந்த தந்தையைக் கண்டு மைந்தர் மனம் மகிழ்ந்தார்.

சந்தனு சத்யவதியின் தந்தை தசராஜனிடம் சென்று மகள்கொடை வேண்டினார். “அஸ்தினபுரிக்கு அரசியென உம் மகளை தருக” என்றார். அவரது பெருங்காதலை உணர்ந்த மச்சகுலத்தலைவன் சத்யவான் ஒரு விதியைச் சொன்னார். “அவளை மணம் புரிவதென்றால் அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளுக்கே அரசுரிமை என்று வாக்களிக்கவேண்டும். உங்களுக்கு கங்கர்குலத்து மைந்தன் இருக்கிறான். அவனே மன்னனாக முடியும். என் குலத்துக்குழந்தைகள் எங்களைவிடக் கீழான மலை கங்கர்களுக்கு சேவகர்களாக வாழமாட்டார்கள்” என்றார்.

“அவன் என் மைந்தன். பெருந்திறல் வீரன். அஸ்தினபுரிக்கு அவன் ஆற்றல் இனிவரும் நான்கு தலைமுறைக்கும் காவல் என்றனர் நிமித்திகர்” என்றார் சந்தனு. “ஆம், அவனுடைய நிகரற்ற வீரத்தையே நான் அஞ்சுகிறேன். அவன் காலடியில் பாரதவர்ஷம் விழும். என்குலங்களும் அங்கே சென்று சரிவதை நான் விரும்பவில்லை” என்றார் சத்யவான்.

“தேவி, என் காதலை நீ அறியமாட்டாயா? சொல்” என்று சத்யவதியிடம் கையேந்தினார் சந்தனு. “அரசே, எந்தையின் சொல் எனக்கு ஆணை” என்று சொல்லி அவள் குடிலுக்குள் புகுந்துகொண்டாள். கண் கலங்க கையேந்தி மச்சர்குடில் முன் அஸ்தினபுரியின் அரசர் நின்றார். “இழப்புகளை ஏராளமாக அறிந்தவன் நான். இனியுமொரு காதலை இழப்பதை என் நெஞ்சும் உடலும் தாங்காது பெண்ணே” என முறையிட்டார். “உங்கள் மைந்தனைத் துறந்து வாருங்கள் அரசே. இனிமேல் பேச்சு இல்லை” என மகற்கொடை மறுத்து மச்சர் வாயிலை மூடினார்.

நெஞ்சில் கைவைத்து “அவன் என் மைந்தன் அல்ல, என் தாதன்” என்று கூவினார் சந்தனு. ரதமுருண்ட வழியெல்லாம் கண்ணீர் உதிர அஸ்தினபுரிக்குத் திரும்பிவந்தார். இனி யமுனைக்குத் திரும்புவதில்லை என்று எண்ணிக்கொண்டார். நதிகளெல்லாம் நிற்காதொழுகும் தன்மை கொண்டவை. கரைகளால் நதி கட்டுப்படுத்தப்படுவதில்லை, கரைகளை நதிகளே உருவாக்கிக் கொள்கின்றன. இனி நதிகள் இல்லை. பாலையில் அலைகிறேன். தாகத்தில் இறக்கிறேன். இனி என் வாழ்வில் நதிகள் இல்லை என்று தன்னுள் பல்லாயிரம் முறை கூவிக்கொண்டார்.

ஆனால் இழந்தவற்றை மறக்க எவராலும் இயல்வதில்லை. பேரிழப்புகள் நிகரெனப் பிறிதிலாதவை. அரசே, கொடிய சூலை நோயென சத்யவதி மீதுகொண்ட காதல் சந்தனு மன்னருக்குள் வாழ்ந்தது. குருதியை இழந்த அவர் உடல் வாழைபோலக் குளிர்ந்து வெளுத்தது. அவர் விலக்கி வைத்திருந்த அனைத்து நோய்களும் ஆழத்தில் இருந்து முளைத்தெழுந்து தழைத்தன.

மாம்பழத்தில் வண்டு போல அரசருள் உறையும் அறியாத ஏதோ ஏக்கமே அவரைக் கொல்கிறது என்று அரசமருத்துவர்கள் தேவவிரதரிடம் சொன்னார்கள். அந்த எண்ணமல்ல அவ்வெண்ணத்தை உதறும் முயற்சியிலேயே மன்னர் நோயுறுகிறார் என விளக்கினர். ஒற்றர்களிடமும் அமைச்சர்களிடமும் விசாரித்து அந்த எண்ணத்தை அறிந்தார் தேவவிரதர். ரதம்பூட்டி தன்னந்தனியே யமுனை நோக்கிச் சென்றார்.

கோடைகால இரவொன்றில் வெண்குளிர்ச் சேக்கையில் துயிலிழந்து புரண்டுகொண்டிருந்த தந்தையின் படுக்கையருகே அமர்ந்து அவரது மெலிந்த கரங்களை தன் பெருங்கரங்களுக்குள் வைத்து, குனிந்து அவரது குழிந்த கண்களுக்குள் பார்த்து, முழங்கிய குரலில் தேவவிரதர் சொன்னார். “எந்தையே, இக்கணம் விண்ணுலகில் என் அன்னை வந்து நிற்கட்டும். இக்கணம் இனி என் வாழ்க்கையை முடிவுசெய்யட்டும். இதோ நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். நான் எந்நிலையிலும் மணிமுடிசூடமாட்டேன். வாழ்நாளெல்லாம் இல்லறத்தை தவிர்ப்பேன். அதற்கென காமத்தை முற்றிலும் விலக்குவேன். உங்கள் பாதங்கள்மீது ஆணை!”

நடுங்கி எழுந்து அவர் தோள்களைத் தழுவி சந்தனு கூவினார், “மகனே, வேண்டாம். நான் உதிரும் இலை. எனக்காக நீ உன் வாழ்க்கையை துறக்கலாகாது.” புன்னகையுடன் எழுந்து, “நான் ஆணை செய்துவிட்டேன் தந்தையே. இனி அது என்னை வாழ்நாளெல்லாம் கட்டுப்படுத்தும்” என்றார் தேவவிரதர்.

“இல்லை, இதை நான் ஏற்கமாட்டேன். இது என் ஆணை அல்ல… நான் அதை சொல்லவில்லை” என்று சந்தனு கூவினார். மகனின் சிம்மபாதம்போன்ற கைகளைப்பிடித்தபடி சந்தனு “மகனே, என் தந்தையே, என் தெய்வமே, இந்தத் துயரத்தை எனக்கு அளிக்காதே” என்றார்.

உறுதியான குரலில் “நேற்றே நான் மச்சர்குலத்து சத்யவானைக்கண்டு பேசிவிட்டேன். நானோ என் தோன்றல்களோ அவரது மகளின் மகவுகளின் அரியணையுரிமைக்குச் செல்ல வாய்ப்பில்லை என்றேன். என் வாக்கை அவருக்கு அளித்து பழுதற்ற ஆயிரம் வைரங்களை கன்யாசுல்கமாக அளித்து மணநாளையும் முடிவுசெய்து வந்தேன்” என்றார் தேவவிரதர்.

“அதைத் தவிர்க்க ஒரேவழிதான்… நான் இறந்துவிடலாம். நான் இறந்துவிடுகிறேன் மகனே” என சந்தனு அழுகையுடன் சொல்லி முடிப்பதற்குள் அன்னையின் கனிவுடன் வாயில் பட்டென்று அடித்து “என்ன அவச்சொல் இது? போதும்” என அதட்டினார் தேவவிரதர். “நான் முடிவை கூறிவிட்டேன். இனிமேல் இதைப்பற்றி பேசவேண்டியதில்லை” என்றார்.

அவரை எதிர்த்துப் பேசியறியாத சந்தனு “ஆம்” என்றார். புன்னகையில் கனிந்து தந்தையின் கண்களில் கசிந்திருந்த கண்ணீரை தன் கனத்தவிரல்களால் மெல்லத் துடைத்தபின் அவரை படுக்கையில் இருந்து இரு கைகளாலும் கைக்குழந்தை போல தூக்கி உப்பரிகைக்குக் கொண்டுசென்றார் தேவவிரதர். “இன்று நிறைநிலவு நாள். பாருங்கள். முதிய வேங்கைமரம் மலர்விட்டிருக்கிறது” என்று காட்டினார். சந்தனு மைந்தனின் தோள்களை அணைத்தபடி குளிர்க்கிரணங்களுடன் மேகவீட்டிலிருந்து தயங்கி எழுந்த சந்திரனைப் பார்த்தார். விண்ணகத்தின் நுண்ணுலகுகளில் எங்கோ காலத்தில் நெளிந்துகொண்டிருந்த உசகன் அருவியில் தலைதூக்கி நிற்கும் நீர்ப்பாம்பு போல அசைவிழந்து மெய்மறந்து நிறைவுகொண்டான்.

“மானுடர்க்கரசே, உமது புகழ் வாழ்க! தந்தையை கருவுற்றுப்பெற்ற தனயனை வாழ்த்துவீராக! இறந்தபின்னரும் ஒருகணமேனும் தந்தையை மார்பிலிருந்து இறக்காத தாயுமானவனை வணங்குவீராக!” என்றார் தீர்க்கசியாமர். விசித்திரவீரியன் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்தது.

“இளவரசே, எட்டு குட்டிகளை ஈன்ற பன்றியைவிட கொடூரமான மிருகம் வனத்தில் இல்லை. தன் நெஞ்சில் ஒவ்வொரு கணமும் குடிகளின் நலனை எண்ணும் அரசன் குரூரத்தின் உச்சிமுனையில் சென்று நிற்பான். அதன் பழியை தான் ஏற்று தன் குடிகளுக்கு நலனைமட்டுமே அளிப்பான். அவன் உதிர்ந்து மண்ணை அடைகையில் மன்னுயிரனைத்தையும் தாங்கும் மண்மகள் அவனை அள்ளி அணைத்து தன் மடியில் அமர்த்துவாள். மண்ணாளும் மன்னன் அவளுக்கு மட்டுமே பதில்சொல்லக் கடமைப்பட்டவன் என்றறிக!”

“வல்லமைகொண்ட நெஞ்சுடையவரே, பெரிய பாறைகளே பெரிய பாறைகளை அசைக்கமுடியும் என்றறிவீராக. மாபெரும் அறத்திலிருந்தே மாபெரும் தீமை பிறக்கமுடியும். எல்லையற்ற கனிவே எல்லையற்ற குரூரத்தின் காரணமாகக்கூடும். பெரும்புண்ணியங்கள் பெரும் பழிகளைக் கொண்டு வரலாகும். விதியால் அல்ல, செய்கைகளாலும் அல்ல, எண்ணங்களினாலேயே மாமனிதர்கள் உருவாகிறார்கள். வேழங்கள் மரங்களை விலக்கி, பாறைகளைப் புரட்டி, காடுகளைத் தாண்டிச்சென்று வேழங்களையே போரிடத் தேர்ந்தெடுக்கின்றன.”

கைகளைக் கூப்பியபின் தீர்க்கசியாமர் ‘ஓம் ஓம் ஓம்’ என முழங்கி அமைதியானார்.

நூல் ஒன்று – முதற்கனல் – 19

பகுதி நான்கு : அணையாச்சிதை

[ 3 ]

நள்ளிரவில் பூவனத்தின் ஒலி மாறுபடத்தொடங்கியது. அங்கிருந்து வந்த காற்றில் மண்மணம் அவிந்து மலர்மணம் எழத்தொடங்கியது. தீர்க்கசியாமர் தன் யாழை மீட்டி பாடிக்கொண்டிருப்பதை விசித்திரவீரியன் இருகைகளிலும் முகம் வைத்து அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தான்.

“சந்தனுவின் மைந்தனே, முன்பொருகாலத்தில் கனகை என்னும் பொன்னிற நாகம் ஒரு தாழைப்புதருக்குள் நூறுமுட்டைகளை இட்டது. முட்டைகளை இட்டுவிட்டு மும்முறை மண்ணைக் கொத்தி பூமாதேவியை காவலுக்கு நிறுத்திவிட்டு திரும்பிப்பாராமல் செல்லும் வழக்கம் கொண்டவை நாகங்கள். சூரிய ஒளியில் அந்த முட்டைகள் விரிந்து சின்னஞ்சிறு புழுக்களைப்போன்ற நாகக்குழந்தைகள் வெளிவந்தன. நாகங்களின் வழக்கப்படி அவை வாசனையை உணர்ந்து, நெளிந்து அருகே இருந்த தாழைமலர்களில் ஏறி அதன் சிறகுகளின் நறுமணம் மிக்க வெம்மைக்குள் அமர்ந்துகொண்டன. அதன்பின் அந்த மலரையே அவை அன்னை என உணர்ந்தன” என்றார் சூதர்.

அன்னை தன் வாசனையால் வண்டுகளை அருகே அழைத்து அக்குழந்தைகளுக்கு உணவூட்டினாள். இரவில் தன் இறகுகளைக்கொண்டு மூடி அவற்றை பாதுகாத்தாள். அவை தங்கள் வழிகளையும் தர்மத்தையும் கண்டுகொள்ளும்வரை அவற்றை அவளே பேணினாள்.

அந்த நூறு பாம்புக்குழந்தைகளில் ஒருவன் பெயர் உசகன். சந்திரவம்சத்தைச் சேர்ந்த அரசநாகமாகிய உக்ரோதனின் மகன் அவன். தன் சகோதரர்கள் அனைவரும் செம்பொன்னிறத்தில் ஒளிவிட்ட தாழைமடல்களில் புகுந்துகொண்டதைக் கண்ட உசகன் மேலும் ஒளிகொண்ட ஒரு தாழைமடலைநோக்கிச் சென்று அதன் இதழ்களுக்குள் புகுந்தான். அது அந்த வனத்தில் எரிந்த காட்டுநெருப்பு.

தன்னில் புகுந்த உசகனை அக்னிதேவன் உண்டான். அக்னிதேவனின் வயிற்றுக்குள் சென்ற உசகன் “அக்னியே, உன்னை என் அன்னை என்று எண்ணி இங்கே வந்தேன். என்னை உணவாக்கியது அறமல்ல” என்றான். அக்னிதேவன் “என்னை அடைந்த எதையும் உண்ணுவதே என் அறமாகும். ஆனால் நீ அன்னையைத் தேடிவந்த குழந்தை என்பதனால் உனக்கு ஒரு வரம் அளிக்கிறேன். நீ சந்திர வம்சத்தில் மனிதர்களின் அரசனாக பிறப்பாய்” என்றான்.

சந்திரவம்சத்து பிரதீபனின் மகனாகப் பிறந்த சந்தனு பிறந்த மூன்றுநாழிகை நேரம் அன்னையைத்தேடும் உசகன் என்றே தன்னை உணர்ந்தான். இரு சிறு கைகளையும் விரித்து இடையை நெளித்து நாகக்குழவி போல நெளிந்து தவழ்ந்து அன்னையின் மடியில் ஏறமுயன்றான். அவன் அன்னை அப்போது உடல்குளிர்ந்து வலிப்புகொண்டு மருத்துவச்சிகளால் ஆதுரசாலைக்கு அகற்றப்பட்டிருந்தாள்.

கண்களை இறுக மூடி கைகளை சினத்துடன் ஆட்டி, உடலெங்கும் சிவக்க, குமிழ் வாய் திறந்து குழந்தை அழுதது. அதை தாதிகள் அணைத்து தூக்கி அவர்களின் ஊறாத முலைகள்மேல் வைத்து அழுகையை அடக்கமுயன்றனர். அரசகுலத்துக்கு முலையூட்ட சூதப்பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதனால் குழந்தைக்கு அன்னையாக அவர்கள் எவராலும் முடியவில்லை. குழந்தை சிவந்து சிவந்து அழுது தொண்டை அடைத்து குரலிழந்தது. அழுகை வெறும் உடல்நடுக்கமாக வெளிப்பட அதன் உடலெங்கும் நீலம் பரவியது.

சந்தனுவின் தந்தை குருவம்சத்து பிரதீப சக்கரவர்த்தி நாற்பதாண்டுகள் குழந்தைகள் இல்லாதவராக இருந்தார். பன்னிரண்டு வனங்களில் தன் பட்டத்தரசி சுனந்தையுடன் தங்கி நோன்புகள் நோற்றார். நூல்கள் சொல்லும் அறங்களை எல்லாம் இயற்றினார். விளைவாக அவரது பிறவிப்பிணிகள் அனைத்தும் விலகியபின் அறுபது வயதில் அரசி கருவுற்றாள்.

கருவைத்தாங்கும் வலிமை முதியவளின் உடலுக்கு இருக்கவில்லை. ஆகவே மருத்துவச்சிகள் நிறைந்த ஆதுரசாலை ஒன்றை அமைத்து அதில் அவளை தங்கவைத்தார் பிரதீப மன்னர். ஒவ்வொருநாளும் அவள் நெய்யிழந்த வேள்விநெருப்பு என தளர்ந்து வெளுத்தாள். தனிமையில் அமர்ந்து தன்னை மரணம் தொடர்வதை நினைத்து நினைத்து அஞ்சி அழுதாள். கருமுதிர்ந்தபோது அவள் வயிறு குலைதாளா வாழைபோல சரிந்தது. அவளை அன்னத்தூவிப்படுக்கையிலேயே வைத்து பார்த்துக்கொண்டனர் மருத்துவச்சிகள்.

அவள் பெற்ற முதல்குழந்தை வெளுத்துக் குளிர்ந்து களிமண் சிலைபோலிருந்தது. அதற்கு சருமமே இல்லையோ என்று தாதிகள் ஐயுற்றனர். அதை ஈற்றறையில் இருந்து எடுத்துச்சென்று மருத்துவசாலையொன்றுக்கு அனுப்பினர். அங்கே மான்களின் பாலை உண்டு அவன் வளர்ந்தான். அவனுக்கு தேவாபி என்று பெயரிட்டனர். சூரிய ஒளிபட்டால் சிவந்து புண்ணாகும் தோல்கொண்ட தேவாபி ஆதுரசாலையின் இருளிலேயே வாழ்ந்தான்.

நாடாள்வதற்கு நீண்ட ஆயுள் கொண்ட குழந்தை வேண்டும் என்று அமைச்சர்கள் பிரதீபருக்குச் சொன்னார்கள். அரசி அஞ்சி நடுங்கி அழுதாள். நிமித்திகரும் குலமூத்தாரும் சென்று அவளிடம் பேசினார்கள். தன்னை நிழல்களும் கனவுகளும் விடாது துரத்துவதாக அவள் சொன்னாள். மகாவைதிகர் பத்மபாதர் வந்து அவளிடம் அரசனைப்பெறுதலே அவள் கடமை என்றும், அதை மறுப்பது பெரும்பழிசூழச்செய்யும் என்றும் சொன்னபோது கண்ணீருடன் ஒப்புக்கொண்டாள்.

மீண்டும் சுனந்தை கருவுற்றாள். அவள் உடலில் இருந்து மழைக்கால ஓடைபோல குருதி வெளியேறிக்கொண்டிருந்தது. கண்களும் உதடுகளும் அல்லியிதழ்கள் போல வெளுத்தன. பேசவும் சொல்லற்றவளாக சுவரில் கையூன்றி அவள் நடந்தபோது உடலின் மூட்டுகளெல்லாம் ஒலியெழுப்பின. ரதம் ஊர்ந்துசென்ற பாம்பு போல மெல்ல நெளிந்தபடி படுக்கையிலேயே கிடந்தாள். ஈற்றுவலி வந்தபோது முதியவள் நினைவிழந்தாள். அவள் உடல் அதிர்ந்துகொண்டே இருக்க, மழைக்கால சூரியன் போல மெல்ல வெளிவந்த சந்தனுவை அவள் பார்க்கவேயில்லை. அவள் மருத்துவச்சிகள் சூழ ஆதுரசாலையில் பேணப்பட்டாள்.

சந்தனு அன்னையின் முலைகளின் வெம்மையையும் சுவையையும் அறியவில்லை.  சூதர்குலச்சேடிகள் சூழ்ந்த அரண்மனையில் அறைகள் தோறும் தவழ்ந்து அலைந்து தனித்து வளர்ந்தான். அறைகளெங்கும் ஏவல் மகளிர் இருந்தனர். எந்த அறையிலும் அன்னை இருக்கவில்லை. பெண்களில் இருந்து பெண்களுக்குத் தாவி அழுதுகொண்டே இருந்த இளவரசனை அவர்கள் வெறுத்தனர். ஒருபெண்ணால் அள்ளப்பட்டதுமே அவள் அன்னையல்ல என்று அறிந்த குழந்தையின் துயரை அவர்கள் அறியவேயில்லை.

சிபிநாட்டு இளவரசியான சுனந்தை மீண்டும் கருவுற்று இன்னொரு மகனைப் பெற்றாள். சந்திரகுலம் ஓங்கி அரசாள வல்லமைமிக்க ஒரு இளைய மைந்தன் வரவேண்டும் என்று நிமித்திகரும் அமைச்சரும் சொன்னதற்கிணங்க அவளிடம் பிரதீபர் மூன்றாவது குழந்தையைப் பெற்றார். அப்போது சுனந்தையின் சித்தம் புயல்காற்றில் படபடத்துப் பறந்துசெல்லும் கொடிபோல அவள் உடலில் இருந்து விலகிவிட்டிருந்தது. முட்களிலும் பாறைகளிலும் சிக்கிக் கிழிந்து மண்ணில் படிந்திருந்தது. அவள் அரசனையே அறியவில்லை. நடுங்கும் குளிர்ந்த விரல்களை கோர்த்துக்கொண்டு மழைபட்ட இலைநுனிபோல் அதிரும் உதடுகளுடன் எதையோ சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் என்ன சொல்கிறாள் என்று மருத்துவர் கேட்கமுயன்றனர். அது சொல்லாக இருக்கவில்லை.

மூன்றாவது குழந்தை மருத்துவர்களால் வயிற்றிலேயே நன்கு பேணப்பட்டது. கொழுத்து தசை உருண்ட பால்ஹிகன் அன்னையை பிளந்துகொண்டுதான் வெளியே வரமுடிந்தது. அலறவும் ஆற்றலில்லாமல் வாழைத்தண்டுபோலக் கிடந்த சுனந்தை குழந்தையை குனிந்தும் பார்க்கவில்லை. இருகைகளையும் மார்பின்மேல் வைத்து கும்பிட்டாள். அவ்வண்ணமே இறந்துபோனாள்.

அவள் இறந்து ஒரு வருடம் கழித்து நீர்க்கடன் செய்யும் நாளில் கங்கை நீரை கையில் அள்ளி அவள் பெயரை மந்திரத்துடன் சொல்லி ஒழுக்கில் விடும் கணத்தில் அவள் சொன்ன சொல்லை பிரதீபர் நினைவுகூர்ந்தார். ஆனகி என்ற அச்சொல்லை நெடுங்காலம் முன்பு அவள் சிறுமியாக பெருநிதியும் பல்லக்கும் சேவகர்கூட்டமுமாக சிபிநாட்டிலிருந்து வந்து அவருக்கு பட்டத்தரசியானபின் அவருடன் இருந்த முதல்நாள் இரவில் சொல்லியிருந்தாள். தேன்சிட்டுபோல சிறகடித்து காற்றிலேயே மிதந்துநிற்கிறாள் என அவளது தூய இளமையை அவர் அன்று உணர்ந்தார். அன்றிரவு அவள் பேசியது பெரும்பாலும் அவள் சிபிநாட்டில் தன் அந்தப்புரத்தில் அன்புடன் வைத்துவிளையாடிய ஆனகி என்ற மரப்பொம்மையைப்பற்றி மட்டும்தான்.

ஆதுரசாலையில் வளர்ந்த தேவாபியும் சூதர்களிடம் வளர்ந்த பால்ஹிகனும் சந்தனுவை அறிந்திருக்கவில்லை.யானைபலம் கொண்டிருந்த பால்ஹிகன் தன் அண்ணனுக்கு வாகனமாக ஆனான். ஒவ்வொருநாளும் ஆதுரசாலைக்குச் சென்று அண்ணனுக்கு பணிவிடைசெய்தான். சூரியன் அணைந்தபின் தேவாபியை தோள்மேல் ஏற்றிக்கொண்டு அரண்மனைத் தோட்டத்துக்கும் அங்கிருந்து குறுங்காட்டுக்கும் சென்றான். இரவெல்லாம் அலைந்தபின் விடியற்காலையில் அண்ணனுடன் பால்ஹிகன் வரும்போது யானைக்காலடிகளின் ஓசை கேட்டது.

தேவாபி மீது வாழைமேல் மழை என பால்ஹிகனின் பேரன்பு பொழிந்துகொண்டிருந்தது. அதற்காக விரிந்த கரங்களே தேவாபியின் ஆளுமையாக இருந்தது. அண்ணனுக்கு மட்டும் கேட்கும் குரலில் தம்பி பேசினான். பேசிப்பேசி பின்பு அவர்கள் பேசவே தேவையற்றவர்களாக ஆனார்கள். தேவாபியின் உடலை பால்ஹிகனின் கைகள் எப்போதும் தீண்டிக்கொண்டிருக்கும். அதன் வழியாக அவன் அகம் அண்ணனுக்குள் சென்றுகொண்டிருக்கும்.

இருவருக்கும் நடுவே புக சந்தனுவாலோ பிரதீபராலோ அரண்மனைக்குள்ளும் புறமும் வாழ்ந்த பிறராலோ முடியவில்லை. அவர்களிடம் ஒரு சொல் பேசினால்கூட அவர்களின் முகம் இறுகி விழிச்சாளரங்களில் ஓர் அன்னியன் எட்டிப் பார்ப்பான். நண்டின் கொடுக்குகள் போல எழுந்த பெருங்கரங்களுடன் பால்ஹிகன் வந்து முன்னால் நிற்பான். விலங்கின் விழிகள் போல அறிமுகம் மறுக்கும் பார்வையுடன் என்ன என்று கேட்பான்.

சந்தனு தேவாபியை விரும்பினான். அண்ணன் அருகே காலடியில் அமர்ந்து பால்ஹிகன் கண்களில் ஒளியுடன் மெல்லியகுரலில் பேசிக்கொண்டிருப்பதை அவன் ஏக்கத்துடன் சாளரம் வழியாக பார்த்துக்கொண்டிருப்பான். அண்ணனை தானும் தோளிலேற்றிக்கொண்டு காட்டுக்குள் செல்வதைப்பற்றி கனவுகண்டான். தனிமையின் குளிர்ந்த இருட்டில் அமர்ந்து அவன் தேவாபியிடம் பேசிக்கொண்டே இருந்தான்.

தனிமை சந்தனுவை நோயுறச்செய்தது. அவன் நிழல்பட்ட செடிபோல வெளிறிச்சூம்பிய உடல்கொண்டவன் ஆனான். அரண்மனை மருத்துவர்களால் அவன் நோயை உணரமுடியவில்லை. மருந்துகள் உண்ணும்தோறும் அவன் தன்னை நோயாளியென எண்ணி மேலும் நோயுற்றான். அவன் கால்கள் பலவீனமாக இருந்தமையால் ஆயுதசாலைக்கு அவன் அனுப்பப்படவில்லை. தலைசுற்றி விழும் வழக்கம் கொண்டிருந்தமையால் கல்விச்சாலைக்கும் செல்லவில்லை. அறைக்குள்ளேயே வாழ்பவனாக ஆனான்.

நோயுற்றபோது சந்தனுவின் மனம் பால்ஹிகன் மேல் படியத்தொடங்கியது. பால்ஹிகனின் புடைத்த எருமைத்தசைகளை உப்பரிகையில் அமர்ந்து பார்த்தபோது அவன் கண்ணீர் மல்கினான். பால்ஹிகன் மேல் ஏறி காட்டுக்குள் செல்வதைப்பற்றி கனவுகண்டான். பால்ஹிகன் தன்னை தீண்டவேண்டும் என்று ஏங்கி பெருமூச்சுவிட்டான்.

அந்த ஏக்கம் தேவாபி மேல் சினமாக ஆகியது. தன் தம்பியை அடிமைகொண்டிருக்கும் வேதாளமாக தேவாபியை சந்தனு எண்ணத்தொடங்கினான். பால்ஹிகன் மீது ஏறிச்செல்லும் தேவாபியைக் காணும்போது மரம் மீது பரவிய ஒட்டுண்ணிக்கொடி என நினைத்தான். தேவாபியிடமிருந்து பால்ஹிகனை மீட்பதைப்பற்றி கற்பனைசெய்யத் தொடங்கினான். மெல்ல விதவிதமாக தேவாபியை கொல்வதைப்பற்றி கற்பனைகள் செய்து அந்த வன்மத்தின் பேரின்பத்தில் திளைத்தான்.

பதினெட்டு வயதில் தேவாபிக்கு இளவரசுப்பட்டம் சூட்ட பிரதீபர் முடிவெடுத்தபோது அமைச்சர்கள் சிலர் எதிர்த்தனர். ‘பகல் ஒளியை அறியமுடியாதவன் மன்னனாக முடியுமா?’ என்றனர். குலமூத்தார் குலநெறிப்படி தேவாபியே மன்னனாக வேண்டும் என்று வாதிட்டனர். பிரதீபர் ‘என் மூதாதையரின் நெறிகளை நான் மீறமுடியாது’ என்றார். தேவாபிக்கு முடிசூட்டுநாள் குறிக்கப்பட்டது.

இளவரசாக முடிசூட்டும் விழவுக்கு தேவாபி பலநாட்களுக்கு முன்னதாகவே சித்தமாகிவிட்டான். அரண்மனை நாவிதர்கள் அவன் வெளுத்த தலைமயிரை வெட்டி ஒழுங்கமைத்தனர். அவனுடைய பால்நிறத்தாடியை குறுக்கினர். ரத்தசந்தனச்சாற்றை அவன் உடலில் பூசி கிழங்குபோல தோல் உரிந்து வெளுத்திருந்த சருமத்தை சற்று செம்மைசெய்தனர்.

இளவரசுப் பட்டம் சூட்டும் நாளன்று காலையில் தேவாபி கலிங்கத்தில் இருந்து பொற்சித்திரவேலை செய்யப்பட்ட செம்பட்டு வரவழைத்து அணிந்துகொண்டான். நவமணி ஆரமும் வைரங்கள் மின்னும் குண்டலங்களும் கங்கணங்களும் அணிந்துகொண்டான். அதிகாலைமுதலே அவன் ஆடிக்கு முன்னால் அமர்ந்திருந்தான். பால்ஹிகன் அண்ணனை தன் கைகளாலேயே அலங்கரித்தான். தேவாபி மீண்டும் மீண்டும் சொன்ன தோற்றக்குறைகளை சரிசெய்துகொண்டே இருந்தான்.

முடிசூட்டுவிழவுக்கு நூற்றெட்டு கோட்டங்களில் இருந்து வந்திருந்த ஐந்துநிலப் பெருங்குடிமக்கள் அவைக்கூடத்தில் கூடியிருந்தனர். தேவாபிக்கு வெயில் உகக்காதென்பதனால் அவை முழுக்க நிழலில் இருந்தது. சாளரங்களுக்கு வெளியே பெரிய துணித்திரைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. தலைக்கோல் நிமித்திகன் வருகையறிவித்ததும் தம்பியின் தோளேறி வந்த தேவாபியைக் கண்ட அவையில் சலசலப்பு ஓடியது. தேவாபி உபாசனத்தில் அமரச்செய்யப்பட்டான். அவனுக்காக இளவரசுக்கான சிம்மாசனம் காத்திருந்தது.

சத்ரமும் சாமரமும் செங்கோலுமாக பிரதீபர் அவையமர்ந்தார். நிமித்திகன் முதியமன்னரை வாழ்த்தியபின் முறைப்படி மக்கள் மன்னனை வணங்கி பரிசில் அளிக்கும் சடங்குகள் நிகழ்ந்தன. தேவாபியை இளவரசாக அறிவிக்க நிமித்திகருக்கு பிரதீபர் சைகை காட்டினார். அப்போது அவைமண்டபத்தின் கிழக்கே சாளரத்தை மறைத்து கட்டப்பட்டிருந்த பெரும்திரை அறுந்து சரிந்தது. பின்காலையின் முறுகிய வெயில் நேரடியாகவே தேவாபிமேல் விழுந்தது.

ஒளிபட்ட தேவாபி கண்கள் குருடாகி இருகைகளாலும் முகம்பொத்தியபடி கூவிச்சுருண்டுகொண்டான். பால்ஹிகன் ஒடிச்சென்று அண்ணனைத் தூக்கியபடி ஓடி அவைமண்டபத்தின் இருண்ட பகுதிக்குச் சென்று சுவரோடு சேர்ந்து நின்று அவனை தன் பேருடலால் மறைத்துக்கொண்டான். தேவாபி மன்னனாக முடியாதென்பதை அக்கணமே பிரதீபர் உணர்ந்தார்.

VENMURASU_ EPI_19_Final
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அதற்கேற்ப நால்வருணத்தினரும் ஐவகை நிலத்தினரும் ஒருங்கே எழுந்தனர். “அரசே எங்கள் நிலமும் கன்றும் நீரும் காற்றும் வெய்யோன் ஒளியின் கொடை. கதிருக்குப் பகையான ஒருவரை நாங்கள் அரசரென ஏற்கமுடியாது” என்றனர் முதுகுலத்து மூத்தார். அமைச்சர்கள் அதை ஆமோதித்தனர்.

பெருமூச்சுடன் “அதுவே விதியின் வழி எனில் அவ்வண்ணமே ஆகுக” என்றார் பிரதீபர். அங்கேயே இடப்பக்கத்து இருக்கையில் தனித்து அமர்ந்திருந்த சந்தனுவை இளவரசாக கோல்தூக்கி நிமித்திகன் அறிவித்தான். சபை மலரும், நெல்மணியும் தூவி சந்தனுவை வாழ்த்தியது. இளவரசனுக்கான மணிமுடியை அணிந்து அவை முன்பு வந்து நின்று அஸ்தினபுரியின் செங்கோலை மும்முறை தூக்கி உயர்த்தினான்.

அவை எழுந்து முகடு அதிர நற்சொல் எழுப்பியது. பல்லியம் முழங்க பெருமறை அதிர்ந்தது. ‘சந்திரவம்சத்தின் குலம் அவன் வழியாக நீள்வதாக!’ என வாழ்த்தினர் அறிவரும் அந்தணரும் அருமறையாளரும். சூதர்கள் அவன் புகழைப்பாடி ஏத்தினர்.

அன்றுமாலையே தேவாபி துறவுபூண்டு வனம் செல்லப்போகிறான் என்ற செய்தி வந்தது. தன் அறையில் அன்றைய நினைவுகளில் திளைத்திருந்த சந்தனு அதைக்கேட்டு திகைத்தான். தேவாபி தன் தூதனை அனுப்பி காட்டில் இருந்த சித்ரகர் என்னும் முனிவரிடம் தனக்கு தீட்சை கொடுக்கும்படி கேட்டதாகவும் அவர் தன் சீடர்களை அனுப்பியிருப்பதாகவும் சேவகன் சொன்னான்.

தேவாபி கிளம்பும்போது சந்தனு அங்கே சென்றான். பிரதீபர் வந்து துணையரண்மனை முற்றத்தில் காத்து நின்றார். புலித்தோலாசனத்துடன் ரதம் காத்து நின்றது. அமைச்சர்களும் அதிகாரிகளும் கூடி நின்றனர். ஆதுரசாலை மருத்துவர்களும், சேவகர்களும் சற்று விலகி தலைகுனிந்து நின்றனர். சித்ரகரின் நான்கு சீடர்கள் மரவுரி அணிந்து சடைக்குழல்களும் நீண்டதாடிகளுமாக எவரையும் பார்க்காமல் எதுவும் பேசாமல் நின்றனர். நெய்ப்பந்தங்களின் கொழுந்தாடலில் அத்தருணம் அதிர்ந்துகொண்டிருந்தது.

உள்ளிருந்து பால்ஹிகன் தேவாபியை தாங்கி அழைத்துவந்தான். தளர்ந்த கால்களில் முதியவன்போல வந்த தேவாபி பந்தங்களுக்குக் கூசிய கண்கள் மேல் கையை வைத்து மறைத்து அனைவரையும் பார்த்தான். பின்பு கைகூப்பி பொதுவாகத் தொழுதான். திரும்பி தான் வாழ்ந்த அரண்மனையை சிலகணங்கள் நிமிர்ந்துபார்த்தபோது அவன் உதடுகள் மெல்ல துடித்தன. கடைசிச்சொல் ததும்பி சொட்டவிருப்பது போல. அச்சொல்லை அவன் விழுங்கிக்கொண்டான். எவரையும் பார்க்காமல் சென்று சித்ரகரின் சீடர்கள் முன் நின்றான்.

அவர்கள் அவனிடம் இடையில் இருந்த புலித்தோலாடையைக் கழற்றி மும்முறை சுழற்றி பின்னால் வீசும்படி சொன்னார்கள். அவன் அவ்வண்ணமே செய்தபின் ஆடையணிகள் அற்றவனாக நின்றான். அவர்கள் தங்கள் மரக்கமண்டலத்தில் கொண்டுவந்திருந்த கங்கை நீரை அவன்மேல் மும்முறை தெளித்தனர். தர்ப்பைப்புல்லை கங்கணமாக்கி அவன் கையில் அணிவித்து ‘விடுகிறேன்! விடுகிறேன்! விட்டுவிடுகிறேன்!’ என மும்முறை சொல்லச்செய்தனர். அதன்பின் அவர்கள் கொண்டுவந்திருந்த மரவுரியை தேவாபி அணிந்துகொண்டான்.

பின்னால் நின்ற பால்ஹிகனை திரும்பிப்பார்க்காமல் தேவாபி முன்னடி எடுத்துவைத்தபோது அவன் தன் கனத்த காலடிகளுடன் அண்ணனைத் தொடர்ந்தான். சித்ரகரின் சீடன் “எவரும் கூடவரலாகாது….இவ்வரண்மனையுடன் இவருக்கிருந்த உறவுகள் அறுந்துவிட்டன” என்றான். “அண்ணா!” என்று பால்ஹிகன் கதறினான். “அப்படியென்றால் நானும் துறவு பூண்டு உங்களுடன் வருகிறேன்” என்று கூவினான்.

“இளவரசே, துறவிக்கு எவரும் துணையில்லை. நீங்கள் துறவுபூண்டால் உங்களுக்கு குருமட்டுமே உறவு. அண்ணன் என எவரும் இருக்கமுடியாது” என்றார் முதன்மைச்சீடர். தேவாபியை நோக்கி பால்ஹிகன் கூச்சலிட்டான், “அண்ணா, இதை அறிந்தே நீங்கள் செய்தீர்களா? ஏன் எனக்கு இந்தக்கொடுமையை இழைத்தீர்கள்? நான் செய்த பிழை என்ன?”

“பால்ஹிகா” என்று முதல்முறையாக தம்பியை பெயர்சொல்லி அழைத்தான் தேவாபி. “இன்று அவைநடுவே அனைவரும் என்னை நோக்கி நகைத்தனர். அதுவல்ல என் சிக்கல். அவர்களில் உரக்க ஒலித்தது என் நகைப்பே” என்றவன் புன்னகையுடன் “இன்னொருவன் மேலேறி நடப்பவன் சிரிக்கப்படவேண்டியவனே என்றுணர்ந்தேன். அக்கணமே இம்முடிவை எடுத்துவிட்டேன்” என்றான்.

பால்ஹிகன் திகைத்து நின்றான். “என்னை நோக்கி அவை சிரித்தது சரிதான். உன்னை நோக்கி ஏன் சிரிக்கவேண்டுமென நினைத்தேன். மனிதக்கால்கள் அவன் உடலை சுமப்பவையாகவே அமைக்கப்பட்டுள்ளன. பிறர் உடலை சுமப்பதற்காக அல்ல. என்னை இறக்கிவைக்காமல் உனக்கு வாழ்க்கை இல்லை. உனக்கு வெற்றியும் சிறப்பும் அமையட்டும்!” என்றான் தேவாபி.

அவர்கள் செல்வதை பிரமித்த விழிகளுடன் நோக்கி நின்றபின் பால்ஹிகன் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டான். அவனை அணுகி ஏதோ சொல்லமுயன்ற பிரதீபரை ஏறிட்டு நோக்கி ‘ம்ம்’ என உறுமினான். பிரதீபர் பின்னடைந்தார். பால்ஹிகன் ஓடி அரண்மனைக்குள் புகுந்துகொண்டான்.

நாற்பதுநாள் அவன் தன் அறையை விட்டு வெளியே வரவில்லை. நாற்பத்தொன்றாம் நாள் கங்கையில் தேவாபிக்கான நீர்க்கடன்களுக்காக பிரதீபரும் சந்தனுவும் சென்றனர். பால்ஹிகனை தனியாக அமைச்சர்கள் அழைத்துவந்தனர். தீயெரியும் கலம்போன்ற உடலுடன் வந்த பால்ஹிகன் அனைத்துச் சடங்குகளையும் அந்தணர் சொல்லியபடி செய்தான்.

கங்கையில் மூழ்கி ஈரம் சொட்டும் கூந்தலும் பெருந்தோள்களுமாக கரையேறி வந்த பால்ஹிகன் கீழே கிடந்த தர்ப்பை ஒன்றை கையிலெடுத்துக்கொண்டு திரும்பினான். “இளவரசே!” என சந்தனுவை அழைத்தான். சந்தனு திகைத்துத் திரும்பியதும் “நான் என் அண்ணன்மேல் கொண்ட அன்பு இந்த நதிக்குத் தெரியும் என்றால் இவளே சான்றாகுக! எந்த நோய்க்குறையால் என் அண்ணன் அவமதிக்கப்பட்டானோ அதே நோய் என்றும் உன் குலத்தில் இருக்கட்டும். ஆணை! ஆணை! ஆணை!” என்றான்.

பதைத்து கால்தளர்ந்து சந்தனு நிற்க அங்கிருந்து அப்படியே சென்று சிபிநாட்டை அடைந்த பால்ஹிகன் பிறகெப்போதும் திரும்பி வரவில்லை. அந்த தீச்சொல் என்றும் சந்தனுவின் உள்ளத்தில் இருந்தது. உசகன் அந்நெருப்பை அறியாதிருந்த காலமே இல்லை.

தேவாபியும் பால்ஹிகனும் அகன்றதும் சந்தனுவின் நோய்கள் மறைந்தன. ஆயுதசாலையிலும் கல்விச்சாலையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான். வில்லும் சொல்லும் கைவசப்பட்டன. ஆனால் உள்ளூர அவன் அஞ்சிக்கொண்டிருந்தான். தன் குருதியில் பிறக்கும் நோயுற்ற குழந்தைகளை கனவில் கண்டு அஞ்சி எழுந்தமர்ந்தான். மலைகளைத் தாண்டி கங்கர்குலத்தில் அவன் பெண்கொள்ளச் சென்றமைக்குக் காரணம் அதுவே. கோபுரம் போன்ற உயரமும் கற்பாறைத் தோள்களும் கொண்ட கங்கர்குலத்தின் வலிமை தன் குலத்தில் சேர்ந்தால் அந்த தீச்சொல்லில் இருந்து தப்பிவிடலாமென அவன் நினைத்தான்.

நூல் ஒன்று – முதற்கனல் – 18

பகுதி நான்கு : அணையாச்சிதை

[ 2 ]

உருவிய வாளுடன் ஆயுதசாலைக்குள் புகுந்த விசித்திரவீரியன் “எங்கே பீஷ்மர்? எங்கே அவர்?” என்று கூச்சலிட்டபடி மரப்பலகைத்தரை தடதடக்க ஓடி, கதவை தோளால் முட்டித் திறந்து உள்ளே நுழைந்தான். அங்கே வாள் ஒன்றை தீட்டிக்கொண்டிருந்த பீஷ்மர் இமைகளை மட்டும் தூக்கி அவனை ஏறிட்டுப்பார்த்தார். “எடுங்கள் உங்கள் ஆயுதத்தை….” என்றான் விசித்திரவீரியன். பிடிக்கத்தெரியாமல் அவன் வைத்திருந்த வாள் கோணலாக ஆடியது. அவனுடைய கால்களில் ஒன்று பலமிழந்து கொடிபோல நடுங்கியது.

(மேலும்…)

நூல் ஒன்று – முதற்கனல் – 17

பகுதி நான்கு : அணையாச்சிதை

[ 1 ]

‘சூதரே! மாகதரே! கேளுங்கள், விண்ணக மின்னல் ஒன்று மண்ணில் எரிந்தோடியதை நான் கண்டேன். பாதாளத்தின் நெருப்பாறொன்று பொங்கிப்பெருகிச்செல்வதை நான் கண்டேன். பாய்கலைப்பாவை புறங்காட்டில் நின்றதைக் கண்டவன் நான்! படுகளக்காளி மலைச்சரிவில் எழுந்ததைக் கண்டவன் நான்! எரிகண்ணுடைய திரயம்பிகை, வெண்பல் நகை அணிந்த சாமுண்டி, முழவென ஒலிக்கும் கங்காளி! சண்டி, பிரசண்டி, திரிதண்டி! அண்டங்களை அழிக்கும் அம்பிகை! நான் கண்டேன், ஆம் நான் கண்டேன்’

நூற்றாண்டுகளாக சூதர்கள் அதைப்பாடினர். காலகாலங்களுக்கு அப்பால் என்றோ செம்மண்கலந்த சாணி மெழுகி, சக்கரக்கோலமிட்டு, மேருபீடத்தில் நவகாளியன்னையரை அமைத்து, ஊன்பலிகொடுத்து கொண்டாடும் விழவு ஒன்றில் முள்ளிருக்கையில் அமர்ந்து, முன்னும் பின்னும் ஆடி முழவைமீட்டி, பாடிக்கொண்டிருந்த சூதர்களில் வெறியாட்டெழுந்தது. எழுந்து கைநீட்டி கூந்தல்கற்றைகள் சுழன்று மார்பிலும் தோளிலும் தெறிக்க, விழிவெறிக்க, மதகரியின் முழக்கமென குருதியுண்ட சிம்மம் என வெறிக்குரலெழுப்பி அந்தக்கதையைப் பாடினர்.

‘சைலஜை, பிரம்மை, சந்திரகந்தை, கூஷ்மாண்டை, ஸ்கந்தை, கார்த்யாயினி, காலராத்ரி, சித்திதாத்ரி, மகாகௌரி! ஓருருவம் ஒன்பதாவதைக் கண்டேன்! ஒன்பதும் ஒருத்தியே எனத் தெளிந்தேன்.அம்பாதேவி! அழியாச் சினம் கொண்ட கொற்றவை! காலகாலக்கனல்! அன்னை! அன்னை! அன்னை!’ எனக் கூவி தாண்டவமாடினர். அங்கே அமர்ந்திருந்தவர்கள் கைகூப்பி ‘அவள் வாழ்க! எங்கள் சிரம் மீது அவள் பொற்பாதங்கள் அமர்க!’ என்று கூவினர்.

அரண்மனை கதவைத் திறந்து வெளியே சென்ற அம்பை விரிந்து பறந்த கூந்தலும் கலைந்து சரிந்த ஆடையும் வெறியெழுந்து விரிந்த சிவந்த கண்களும் கொண்டிருந்தாள். குறுவாட்கள் என பத்து கைவிரல்களும் விரிந்திருக்க, சினம்கொண்ட பிடியானை போல மண்ணில் காலதிர நடந்தபோது அரண்மனைச்சேவகர் அஞ்சி சிதறியோடினர். காவல் வீரர்கள் வாட்களையும் வேல்களையும் வீசிவிட்டு மண்ணில் விழுந்து வணங்கினர்.

VENMURASU_ EPI_17
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

சுழல்காற்றுபோல அவள் நகரத்துத் தெருவில் ஒடியபோது அஞ்சியலறிய குழந்தைகளை அள்ளியணைத்தபடி அன்னையர் இல்லத்து இருளுக்குள் பாய்ந்தோடினர். பசுக்கள் பதறி தொழுவங்களில் சுழன்றன. நாய்கள் பதுங்கி ஊளையிட்டன. நகரமெங்கும் யானைகள் கொந்தளித்தெழுந்து மத்தகங்களால் மரங்களை முட்டி பேரொலி எழுப்பின. கருக்குழந்தைகள் சுருண்டு குமிழியிட்டன. வீடுகளின் கதவுகள் மூடப்பட்டன. தெய்வங்களின் கருவறை தீபங்கள் கருகியணைந்தன.

எரிபோல நிலமுண்டு வான்பொசுக்கி அவள் சென்றவழியில் ஒரு மனிதர்கூட இருக்கவில்லை. நகரை அவள் நீங்கும்தருணம் எதிரே ஓடிவந்த முதியவள் ஒருத்தி முழங்காலுடைபட மண்ணில் விழுந்து இருகைகளையும் நீட்டி “அன்னையே! எங்கள் குலம்மீது உன் சாபம் விழலாகாது தாயே” என்று கூவினாள். “பெற்றபிள்ளைகளுடன் எங்கள் இல்லம் வாழவிடு காளீ.”

அம்பையின் வாயிலிருந்து நூறு சிம்மங்களின் உறுமல் எழுந்தது. முதியவள் அஞ்சி மெய்சிலிர்த்து அப்படியே மண்ணில் சரிந்தாள். அவள் சென்றவழியில் நின்ற அத்தனை மரங்களும் பட்டுக்கருகின. அவளை அப்போது பார்த்தவர்களனைவரும் குருடாயினர். அவள் சென்ற வழியில் பின்னர் மனிதர்கள் காலடிவைக்கவில்லை.

சூதர்கள் பாடினர். அவள் நகரை நீங்கி புறங்காடுவழியாக சென்றாள்.அவளை அன்று கண்ட மிருகங்களும் பறவைகளும்கூட தலைமுறை தலைமுறையாக அவளை நினைத்திருந்தன. அங்குள்ள அத்தனை உயிர்களும் ‘மா!’என்ற ஒலியைமட்டுமே எழுப்பின. பின்னர் கவிஞர் அதை மாத்ருவனம் என்று அழைத்தனர். பெண்குழந்தைகளை அங்கு கொண்டுவந்து அங்கே சுழித்தோடும் பாஹுதா என்னும் செந்நீர் ஆற்றில் மூழ்கச்செய்து முடிகளைந்து முதல்காதணி அணிவிக்கலாயினர். அங்கே அன்னைக்குக் கோயில்கள் இல்லை, அந்த வனமே ஒரு கருவறை என்றனர் நிமித்திகர்.

அம்பை சென்றதை அகக்கண்ணால் கண்டனர் சூதர்கள். காட்டை ஊடுருவி செல்லச்செல்ல முள்ளில் கிழிந்து, கிளைகளில் தொடுத்து அவளுடலில் இருந்து உடைகள் விலகின. பொற்சருமம் எங்கும் முட்கள் கிழித்த குருதிக்கோடுகள் விழுந்தன. அவற்றின் மீது புழுதிப்படலம் படிந்தது. கூந்தலெங்கும் மண்ணும் சருகுகளும் பரவின. இரவும் பகலும் அந்தியும் மாலையும் சென்று மறைய அவள் சென்றுகொண்டிருந்தாள். அவள் உடல்தீண்டிய காட்டு இலைகள் கருகிச்சுருண்டன.

காலைக்குளிர் உறைந்து சொட்டுவதுபோன்ற மலையருவியில் சென்று அவள் நின்றாள். அவளுடல் பட்டதும் அருவியில் நீராவி எழுந்து மேகமாகியது. மலைச்சரிவின் வானம் சுழித்த பொழில்களில் அவளிறங்கினாள். அவை கொதித்துக்குமிழியிட்டன. ஆங்காரம்கொண்டு மலைப்பாறைகளை ஓங்கி அறைந்தாள். அவை உடைந்து சரிந்தன. ஆலமர விழுதுகள் அவளைக்கண்டு அஞ்சி நெளிந்தாடின. மதவேழங்கள் மத்தகம் தாழ்த்தி மண்ணில் கொம்பிறக்கின. ஊன்வாய் சிம்மங்கள் பதுங்கிக் கண்களை மூடிக்கொண்டன.

அவளுடைய உடல்வற்றிச்சிறுத்தது. சருமம் சுருங்கிக் கறுத்தது. பதினெட்டாம் நாள் ஹ்ருஸ்வகிரி என்னும் மலையின் விளிம்பில் ஏறிநின்று ஒரு பிடாரி தொலைதூரத்தில் வசுக்கள் உருவிபோட்ட வைரமோதிரம்போல கிடந்த அஸ்தினபுரியைப்பார்த்தது. அதன் கரிய வாயில் இருந்து காடதிரும் பெருங்குரல் வெளிவந்து மதம்பொழிந்த யானைகளை நடுங்கச்செய்தது.‘சொல்லெனும் தீ!பழியெனும் தீ!ஆலகாலம் அஞ்சும் பெண்ணெனும் பெருந்தீ!’ பாடினர் சூதர்.

அவளைப்பற்றிய கதைகள் ஜனபதங்களெங்கும் பரவின. அவள் வனம்சென்று தவத்தில் ஆழ்ந்திருந்த பரசுராமனின் முன்னால் தன் கையால் ஓங்கியறைந்து எழுப்பி முறையிட்டாள் என்றனர். ‘ஊழியூழியெனப்பிறக்கும் அத்தனைபெண்களும் நின்றெரிந்த அந்த விஷக்கணத்தை வெல்லவேண்டும் நான். என் கையில் பீஷ்மனின் வெங்குருதி வழியவேண்டும். அவன் பிடர்தலை என் காலடியில் விழவேண்டும்’ என்றாள்.

’ஆம், இன்றே, இப்போதே’ என பரசுராமன் மழுவுடன் எழுந்தார். குருஷேத்ரப்போர்க்களத்தில் பீஷ்மரை அவர் எதிர்கொண்டார். மூன்று வாரங்கள் விண்ணிலும் மண்ணிலும் நடந்தபோரில் இருவரும் வெல்லவில்லை. பூமி அதிர்வதைக் கண்ட நாரதர் வந்திறங்கி ‘பரசுராமா, அவன் அன்னை கங்கைக்கு பிரம்மன் அளித்த வரம் உள்ளது. அவனைக்கொல்ல அவனால் மட்டுமே முடியும்’ என்றார். மழுதாழ்த்தி பரசுராமன் திரும்பிச்சென்றார்.

எரியெழுந்த நெஞ்சுடன் அவள் யமுனைக்கரைக்குச் சென்று அதன் நீரடியில் கிடந்து தவம்செய்தாள். ஒற்றைக்கால்விரலில் நின்று உண்ணாமல் உறங்காமல் தவம்செய்தாள். பீஷ்மனைக்கொல்லும் வரம் கேட்டு மும்மூர்த்திகளின் வாசல்களையும் முட்டினாள். அவள் உருகியழியும் கணத்தில் தோன்றிய கங்கை அன்னை ‘பீஷ்மனைக்கொல்ல உன்னால் இயலாது அம்பை. அவன் என் வரத்தால் காக்கப்படுபவன்’ என்றாள்.

‘அவ்வரத்தை வெல்வேன்’ என்று அம்பை தன் நுனிவிரலால் காட்டை எரித்து ஐந்துதிசை நெருப்புக்கு நடுவே நின்று தவம் செய்தாள். அவளைச்சுற்றி கரும்பாறைகள் உருகிவழிந்தன. செந்நெருப்பு நடுவே வெள்ளெலும்புருவாக நின்றாள். அவள் தவம் கண்டு இறங்கிவந்த சிவனிடம் தன் ஆறாநெஞ்சில் ஓங்கி அறைந்து அவள் கேட்டாள். ‘கருப்பை ஈன்று மண்ணுக்கு வரும் ஒவ்வொரு ஆண்மகனும் வணங்கியாகவேண்டிய பெண்மையின் அருங்கணம் ஒன்று உள்ளது. அதை அவமதித்தவனை நான் பலிகொண்டாகவேண்டும். திருமகளின் மணிமுடியை மிதித்தவன் கொற்றவையின் கழல்நெருப்பில் எரிந்தாகவேண்டும். ஆணை! ஆணை!ஆணை!’

‘அவ்வண்ணமே ஆகுக! அது என்றும் வாழ்வின் விதியாகுக!’ என்று சிவன் வரம் கொடுத்தார். ‘உன் கனலை முற்றிலும் பெறுபவன் எவனோ அவனால் பீஷ்மன் கொல்லப்படுவான்’ என்றார்.உச்சிமலை ஏறி பெருஞ்சுடராக எரிந்தெழுந்து அவள் ஆர்ப்பரித்தாள். தொலைதூர நகர்களெங்கும் அந்நெருப்பு தெரிந்தது என்றனர் பெயர்த்தியரை மடியிலிட்டு கதை சொல்லிய மூதன்னையர்.

அவள் நெஞ்சக்கனல் கெடுவதற்காக குளிர்விழியன்னை மீனாட்சியின் கோயில்களில் பெண்கள் நோன்பிருந்தனர். அவள் மூதன்னையர் வந்து அவளை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று முக்கண் முதல்வன் ஆலயத்தில் குலமூத்தவர் வழிபாடுகள் செய்தனர் என்றனர் சூதர்.

உடலே சிதையாக ஆன்மா எரிய அம்பை அங்கிருந்த மலைமீதேறிச் சென்றாள். அங்கே சிறுகடம்பவனமொன்றுக்குள் கைவேலுடன் நின்றிருந்த குழந்தைமுருகனின் சிலையைக் கண்டதும் அவள் முகம் கனிந்தது. உடலெங்கும் நாணேறியிருந்த நரம்புகள் அவிழ்ந்தன. முழந்தாளிட்டு அந்த முருகனின் கரியசிலையை மார்போடணைத்துக்கொண்டதும் அவள் முலைகள் கனிந்து ஊறின. அவன் முகத்தை நோக்கியபடி காலமின்றி உடலின்றி மனமின்றி அவள் அமர்ந்திருந்தாள். பின்பு விழித்தெழுந்து அச்சிலையில் எவரோ மலைக்குடிகள் போட்டுச்சென்றிருந்த செங்காந்தள் மாலையொன்றை கையில் எடுத்துக்கொண்டாள்.

மலையிலிறங்கிய காட்டாறு என அவள் சென்றுகொண்டே இருந்தபோது பிறைநிலவுகள் போல வெண் கோரைப்பற்களும் மதமெரிந்த சிறுவிழிகளும் செண்பகமலர்போல சிறிய காதுகளும் கொண்ட பன்றிமுகத்துடன், புல்முளைத்த கரும்பாறைபோன்ற மாபெரும் மேனியுடன் வராஹி தேவி அவள் முன் வந்து நின்றாள். அவர்களின் கண்கள் சந்தித்துக்கொண்டன. வராஹியின் உறுமலுக்கு அம்பை உறுமலால் பதிலளித்தாள். ‘ஆம் ஆம் ஆம்’ என்றது மரங்களிலோடிய காற்று.

மூன்றுமாதம் கழித்து சிம்மப்பிடரியும், பன்றிமுகமும், தீவிழிகளுமாக கையில்குருதிநிறம் கொண்ட காந்தள்மாலையுடன் அவள் கேகயமன்னனின் கோட்டைவாசலில் வந்து நின்றாள். அவளைக்கண்டு அஞ்சிய காவலர்கள் கோட்டைச்சுவரை மூடிக்கொண்டனர். கோட்டையின் கதவின்மேல் ஓங்கியறைந்து அவள் குரலெழுப்பினாள். “என் கண்ணீரைக் காண வாருங்கள் ஷத்ரியர்களே! என் நிறைகாக்க எழுந்துவாருங்கள்!” கரியகைகளைத் தூக்கி விரிசடை சுழலக் கூவினாள் “என்பொருட்டு பீஷ்மனின் மார்பை மிதித்து அவன் சிரத்தைக் கொய்தெடுக்கும் வீரன் உங்களில் எவன்?”

அவள் குரலைக்கேட்ட கேகயன் அரண்மனைக்குள் அஞ்சி ஒடுங்கிக்கொண்டான். படைகள் ஆயுதங்களுடன் தலை கவிழ்ந்து நின்றன. குலமூத்தோர் உள்ளறைகளுக்குள் பெருமூச்சுவிட்டனர். “உங்கள் விளைநிலங்களில் இனி உப்பு பாரிக்கும். உங்கள் களஞ்சியங்களில் ஒட்டடை நிறையும். உங்கள் தொட்டில்களில் காற்று இருந்து ஆடும்…வருக! எழுந்து வருக!” என்று ஓலமிட்டாள்.

மாகதனின் கோட்டைமுன் அவள் சென்று அந்த செங்காந்தள் மாலையை நீட்டியபோது அவன் தொழுத கைகளுடன் வந்து நின்று “இளவரசி, என்னையும் என் மக்களையும் காத்தருளுங்கள். என் சின்னஞ்சிறிய தேசம் பீஷ்மரின் கோபத்தைத் தாங்காது” என்றான். கண்கள் எரிய, பற்கள் தெரிய ஓசையிட்டுச் சிரித்து அவள் திரும்பிச்சென்றாள். சேதிநாட்டு மன்னன் அவள் வருவதைக்கண்டு கோட்டையை அடைக்கச்சொல்லி நகரைவிட்டே சென்றான். அவள் வரும் செய்தி ஷத்ரியர்களின் பிடரியைக் குளிரச்செய்தது. அத்தனை ஷத்ரியர்களின் வாசல்களிலும் அவள் நின்று அறைகூவினாள். ’என் அடிவயிற்று வேகத்துக்கு கதி சொல்லுங்கள். என் கொங்கைநெருப்புக்கு நீதி சொல்லுங்கள்’

உத்தரபாஞ்சாலநாட்டில் சத்ராவதி மாநகரின் புறங்கோட்டை வாசலில் அவள் குரல் எழுந்தபோது அமைச்சரின் ஆணைப்படி கோட்டைவாசல் மூடப்பட்டது. மந்திரசாலையில் தளபதிகளுடனிருந்த பாஞ்சாலமன்னன் சோமகசேனன் சிம்மத்திலேறிய துர்க்கை போல காற்றிலேறிவந்த அவளுடைய இடிக்குரலை கேட்டுக்கொண்டிருந்தான். ஒருகணத்தில் உடைவாளை உருவிக்கொண்டு “இனி பொறுக்கமாட்டேன் அமைச்சரே, இதோ இதற்காக உயிர்துறக்கவே நான் படைக்கப்பட்டிருக்கிறேன்…” என்று எழுந்தான்.

“அரசே, ஐந்து குழந்தைகள் கொண்டவர்களே வீட்டை பூட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஐந்துலட்சம் குழந்தைகளின் தந்தை நீங்கள்” என்றார் அமைச்சர் பார்கவர். “இப்பழியை பீஷ்மர் ஒருநாளும் பொறுக்கப்போவதில்லை. அஸ்தினபுரமெனும் யானையின் காலடியில் நாம் வெறும் குழிமுயல்கள்.”

“இன்று நின்றுவிட்டால் இனி ஒருநாளும் என் தந்தையை நான் நினைக்கமுடியாது அமைச்சரே” என்றான் சோமகசேனன். “இக்கணத்தில் மடியாமல் எப்படி இறந்தாலும் எனக்கு நரகம்தான்.”

”அரசே, வீரமரணம் ஷத்ரியர்களின் விதி. ஆனால் தேசம் களத்தில் அழிய நெறிநூல்கள் விதிசொல்லவில்லை. என் குலக்கடமை உங்களிடமல்ல, இந்தநாட்டு மக்களிடம்..” என்று பார்கவர் அவன் வழியை மறித்தார். “இதனால் உங்களுக்கு புகழ்வரப்போவதில்லை. தங்கள் குடியையும் குலத்தையும் அழித்தவர் என உங்களை உங்கள் மக்கள் பழிசொல்வார்கள். தலைமுறைகளுக்கு சொல்லிவைப்பார்கள். தனியொரு பழிக்காக தேசம் அழியலாகாது என்பதே அரசநீதி.”

“அமாத்யரே, தர்மம் தவறிய மன்னன் ஆளும் நாடு எப்படி இருக்கும்?” என்றான் பாஞ்சாலன். “அங்கே நடுப்பகலில் நரியோடும். வீட்டுமுற்றத்தில் வெள்ளெருக்கு வளரும். உள்ளறையில் சேடன் குடிபுகுவான் என்று சொல்கின்றன நூல்கள். நான் தர்மம் தவறினால் என் நாடு எப்படி வாழும்? பஞ்சத்திலழிவதைவிட அது நீதிக்காக அழியட்டும்…” என்ற பாஞ்சாலன் வாளை எடுத்துக்கொண்டான்.

”கிளம்புங்கள் வீரர்களே, நான்கு அக்குரோணிகளையும் ஷீரபதம் வழியாக நாளை இரவுக்குள் அஸ்தினபுரத்துக்குக் கொண்டு போவோம்… நம்முடைய படைகளை நான் பீதவனம் வழியாகக் கொண்டுபோகிறேன்… சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும்…” என்று ஆணையிட்டபடி கவசங்களணிந்து பாஞ்சாலன் கிளம்பினான். அவனுடைய தளபதிகள் வாளும் கேடயமுமாக எழுந்தனர்.

“அரசே…இந்த மண்ணை அழிக்கவேண்டாம்……மக்களுக்காக நான் உங்கள் காலில் விழுகிறேன்” என்றார் பார்கவர். “தளகர்த்தர்களே, உங்கள் இச்சைப்படி செய்யலாம்…படைகளும் தேவையில்லை. நான் மட்டுமே சென்று களம்படுகிறேன்” என்றான் பாஞ்சாலன்.

“அரசே, எங்கள் குலமூதாதையர் அனைவரும் செருகளத்தில் வீழ்ந்தவர்கள். இங்கே நாங்கள் மடிந்துவிழுந்தால் அவர்கள் ஆனந்தக்கண்ணீர் வடிப்பார்கள். ஆணைக்கேற்ப அரண்மனையில் நாங்கள் இருந்தோமென்றால் ஆயிரம் பிறவிகளில் அக்கடனை தீர்க்கவேண்டியிருக்கும்” என்றனர் அவர்கள்.

நகர்த்தெருவில் மன்னனின் படைகள் இறங்கியதும் மூடிக்கிடந்த கதவுகள் அனைத்தும் ஒரேகணம் வெடித்துத் திறந்தன. பெருங்குரலெழுப்பியபடி மக்கள் ஓடிவந்து திண்ணைகளிலும் பலகணிகளிலும் திரண்டு வாழ்த்தி மலர்தூவினர். ‘எரியட்டும் பாஞ்சாலம்…பத்தினிக்காக எங்கள் தலைமுறைகளும் அழியட்டும்….’ என அவர்கள் முழங்கினர். கண்ணீருடன் வாளைத்தூக்கி ஆட்டியபடி நடந்த பாஞ்சாலன் கோட்டையைத் திறந்து வெளியே வந்தான்.

வெளியே நின்றிருந்த அம்பையின் கோலம் கண்டு அதிர்ந்து சொல்லிழந்து முழந்தாளிட்டுப் பணிந்தது அவன் படை. “அன்னையே இதோ என் உடைவாள்! இதோ என் சிரம்! ஒருபெண்ணின் நிறைகாக்க ஒருதேசமே அழியலாமென்றிருந்தேன். ஓருலகமே அழியலாமென இன்றறிந்தேன். உன் காலில் என் குலமும் குடியும் நாடும் வாரிசுகளும் இதோ அர்ப்பணம்” என்றான்.

சன்னதம் கொண்டு சிதைநெருப்பென நின்றாடிய அம்பை மெல்லத்தணிந்தாள். அவள் இடக்கை மேலே எழுந்து அவனுக்கு ஆசியளித்தது. அந்தச் செங்காந்தள் மாலையை அவன் கோட்டைவாசல் மேல் அணிவித்துவிட்டு அவள் திரும்பி நடந்து காட்டுக்குள் மறைந்தாள்.

அம்பை நகர் நீங்கிய செய்திகேட்டு ஆதுரசாலை விட்டு ஓடிவந்த விசித்திரவீரியன் படைகளுடன் அப்போதே காட்டுக்குள் சென்று அம்பையைத்தேட ஆரம்பித்தான் என்றனர் சூதர். அஸ்தினபுரியின் மூன்று படைப்பிரிவுகள் தளகர்த்தர்கள் உக்ரசேனன்,சத்ருஞ்சயன்,வியாஹ்ரதந்தன் தலைமையில் அவனை தொடர்ந்து சென்றன.தப்தவனத்தையும் தசவனத்தையும் கண்டகவனத்தையும் காலகவனத்தையும் அவர்கள் துழாவினர். நூறுநாட்கள் அவர்கள் மலைச்சரிவுகளிலும் வனச்செறிவுகளிலும் அவளுக்காக குரல்கொடுத்து அலைந்தனர். ’இளவரசி’ என அவர்கள் மலைச்சரிவுதோறும் முழங்கிய குரலை காடு வன்மத்துடன் வாங்கி தன் இருளுக்குள் வைத்துக்கொண்டது.

விசித்திரவீரியனின் உடல் களைத்துத் துவண்டது. அவன் பார்வை மங்கி கைகால்கள் நடுங்கத்தொடங்கின. காட்டுணவை அவன் வயிறு ஏற்கவில்லை. உக்ரசேனன் அவனை வணங்கி “அரசே, நீங்கள் அரண்மனைக்குத் திரும்புங்கள். இளவரசி இல்லாமல் இந்த வனம் விட்டு வரமாட்டேன் என நான் உறுதியளிக்கிறேன்” என்றான். “இது என் குலத்தின் கடன்…இங்கேயே நான் இறந்தால் என் தந்தை என்னை வாழ்த்துவார்” என்றான் விசித்திரவீரியன். என் சடலமும் இங்கே எரியட்டும்.”

நூறு நாட்களுக்குப்பின் மலைப்பாறை ஒன்றின் மீது அவர்கள் ஓய்வெடுக்கையில் குகைச்சிம்மத்தின் பேரொலி ஒன்றைக்கேட்டு அஞ்சி எழுந்து அம்புகளையும் விற்களையும் எடுத்துக்கொண்டார்கள். உக்ரசேனனும் சத்ருஞ்சயனும் வியாஹ்ரதந்தனும் அந்த ஒலிவந்த திசைநோக்கி எச்சரிக்கையுடன் நடக்க பின்னால் விசித்திரவீரியன் பாறைகளில் கால் வழுக்க நடந்தான். மலைமடிப்புகளில் எதிரொலி எழுப்பிய அந்த கர்ஜனையைக் கொண்டு அங்கிருப்பது ஒன்றல்ல நூறு சிம்மங்கள் என்று அவர்கள் எண்ணினர்.

பாறைகளின் நடுவே கவந்தனின் வாய் எனத் திறந்திருந்த இருட்குகை ஒன்றுக்குள் இருந்து அவ்வொலி எழுந்துகொண்டிருந்தது. ஆயுதங்களுடன் உள்ளே முதலில் நுழைந்த உக்ரசேனன் விதிர்த்து பின்னடைந்தான். சத்ருஞ்சயன் பெருங்குரலில் அலறினான். விசித்திரவீரியன் அவர்கள் இடைவெளி வழியாக உள்ளே பார்த்தபோது அங்கே பெரும்பிடாரியொன்று வெறும்கைகளால் சிம்மம் ஒன்றை கிழித்து உண்டுகொண்டிருப்பதைக் கண்டான். அது அம்பை என்றறிந்தான்.

விசித்திரவீரியனுடன் வந்த அனைவரும் எலிக்கூட்டம் போல பதறி ஓடி விலகிய போதும் கூப்பிய கைகளுடன் பதறா உடலுடன் அவன் அங்கேயே நின்றிருந்தான். கையில் ஊனுடன், உதிரம் வழியும் வாயுடன் அம்பை அவனை ஏறிட்டு நோக்கினாள். விசித்திரவீரியன் திடமான காலடிகளுடன் அவளை அணுகி, தன் உடைவாளை உருவி அவள் காலடியில் வைத்து மண்டியிட்டான். “அன்னையே, நான் விசித்திரவீரியன், அஸ்தினபுரியின் இளவரசன். என் குலம்செய்த பெரும்பிழைக்காக என்னை பலிகொள்ளுங்கள். என் நாட்டை பொறுத்தருளுங்கள்” என்று சொல்லி தலைதாழ்த்தினான்.

அவனை விட்டுச்சென்ற படைகள் திரும்பி ஓடிவந்து குகைவாயிலில் திகைத்து நின்றன. பாறை பிளக்கும் ஒலியுடன் உறுமியபடி தேவி எழுந்து நின்றாள். அவள் தெய்வ விழிகள் அவனைப் பார்த்தன. அவளுக்கு அப்பால் மதவிழிகளில் குவிந்த இருள் என நின்ற பெரும்பன்றி உறுமியது. கூப்பிய கரங்களுடன் தன் முன் கண்மூடி குனிந்து அமர்ந்திருந்த விசித்திரவீரியன் தலைமேல் தன் கருகித்தோலுரிந்த காலைத் தூக்கி வைத்தாள். கண்ணீர் வழிய நடுங்கியபடி விசித்திரவீரியன் அமர்ந்திருந்தான். அவனுடைய அலைகடல்மேல் குளிர்நிலவு உதித்தது. பின்னர் அவள் திரும்பி குகையிருளுக்குள் மறைந்தாள்.

அவள் கால்பட்ட இடங்களெல்லாம் கோயில்கள் எழுந்தன. அவள் வந்த கோட்டைவாயில்களில் விழித்த கண்களும் செந்நிற உடலுமாக வராஹிக்குமேல் ஆரோகணித்து காவல்தெய்வமாக அவள் நின்றிருந்தாள். அங்கத்திலும் வங்கத்திலும் கலிங்கத்திலும் வேசரத்திலும் அப்பால் திருவிடத்திலும் அவள் பாதங்களை ஜனபதங்கள் தலையிலணிந்தனர். சக்கரவர்த்திகுமாரிகள் குருதிபலிகொடுத்து அவள்முன் வணங்கி முதல் ஆயுதத்தை கையில் எடுத்தனர். வீரகுடிப்பெண்கள் அவள் பெயர்சொல்லி இடையில் காப்பு அணிந்தனர்.

பிறிதொரு காலத்தில் திருவிடதேசத்தில் நீலமலைச்சரிவில் ஒரு கிராமத்தில், கருக்கிருட்டு செறிந்து சூழ்ந்த அதிகாலைநேரத்தில், மாதிகையன்னையின் ஆலயமுகப்பில் கன்னங்கரிய உடலும் சுரிகுழலும் எரிவிழியும் கொண்ட முதுபாணன் துடிப்பறையை கொட்டி நிறுத்தினான். விழிநீர் வடிய புலிபதுங்கிச்செல்லும் தாளநடையில் பாடினான்.

‘பிறவிப் பெரும்பாதையைப் போன்ற அக்குகைக்குள் தேவி கருவறை புகும் ஆன்மா போல சென்று கொண்டிருந்தாள். அதன் சுவர்கள் உயிருள்ள குடல்கள் போல ஈரமும் வெம்மையுமாக நெளிந்தசைந்தன. அச்சுவர்களில் அவள் வண்ண ஓவியங்களைக் கண்டாள். பாயும் புலிகளும் விரையும் மான்களும் வந்தன. பறவைகளும் மீன்களும் வந்தன. போர்க்கோலம் கொண்ட மன்னர்களும் தீயால் திலகமிட்ட பெண்களும் வந்தனர். யோகத்திலமர்ந்த முனிவர்கள் வந்தனர். மலரிலமர்ந்த தேவர்களும் யாழுடன் கந்தர்வர்களும் வந்தனர். மும்மூர்த்திகளும் வந்தனர். பின்னர் காலதேவியின் சிகைமயிர்கள் என நெளியும் கருநாகங்கள் வந்தன. முடிவில்லாமல் அவை வந்தபடியே இருந்தன’

நூல் ஒன்று – முதற்கனல் – 16

பகுதி மூன்று : எரியிதழ்

[ 7 ]

ஒரு தெய்வம் இறங்கிச்சென்று பிறிதொரு தெய்வம் வந்து படகிலேறியதுபோல நிருதன் உணர்ந்தான். திரும்பிவந்த அம்பை மெல்லிய நடையும், உடல்பூத்த சலனங்களும், செவ்வாழைமெருகும் கொண்டவளாக இருந்தாள். படகிலேறி அமர்ந்து இசைகலந்த குரலில் ‘அஸ்தினபுரிக்குச் செல்’ என்று அவள் சொன்னபோது துடுப்பை விட்டுவிட்டு கைகூப்பியபின் படகை எடுத்தான். அலைகளில் ஏறியும் படகு ஆடவில்லை, காற்று ஊசலாடியும் பாய்மரம் திரும்பவில்லை. வடதிசையிலிருந்து வானில் பறந்துசெல்லும் வெண்நாரை பொன்னிற அலகால் இழுபட்டுச்செல்வதுபோல அவள் சென்றுகொண்டிருந்தாளென நினைத்தான். அவளருகே ஒரு வீணையை வைத்தால் அது இசைக்குமென்றும் அவள் விரல்பட்டால் கங்கைநீர் அதிரும் என்றும் எண்ணிக்கொண்டான்.

(மேலும்…)

நூல் ஒன்று – முதற்கனல் – 15

பகுதி மூன்று : எரியிதழ்

[ 6 ]

நிருதனின் படகு வாரணாசிப்படித்துறையை அடைந்ததும் அம்பை அதிலிருந்து பாய்ந்திறங்கி அவனை திரும்பிப் பாராமல் கற்படிகளில் மேலாடை வழிந்தோட தாவித்தாவி ஏறி, கூந்தல் கலைந்து தோளில் சரிந்து பின்பக்கம் துவள, மூச்சிரைக்க அரண்மனை நோக்கி ஓடினாள். விஸ்வநாதனின் ஆலயமுகப்பில் நின்றவர்கள் அவள் கடந்துசென்றபின்புதான் அவளை அடையாளம் கண்டனர். அதற்குள் காவலர்கள் இருவர் குதிரையில் அவளைத் தொடர்ந்துசென்று நெருங்கி “இளவரசி…இளவரசி” என்று கூவினர். அவள் எதையும் கேட்கவில்லை. பித்தி போல மூச்சுவாங்க ஓடிக்கொண்டிருந்தாள். எதிரே வந்த குதிரைவீரர்கள் இருவர் திரும்பி அரண்மனைக்குள் ஓடினார்கள்.

(மேலும்…)

நூல் ஒன்று – முதற்கனல் – 14

பகுதி மூன்று : எரியிதழ்

[ 5 ]

இருகரையும் கண்ணுக்குத்தெரியாதபடி விலகும் ஒரு நதியை நதிக்கரையில் பிறந்துவளர்ந்த அவள் அப்போதுதான் பார்க்கிறாள் என்பதை அம்பை அறிந்தாள். பிரபஞ்சத்தில் கைவிடப்பட்டு திசைவெளியில் அலையும் அடையாளம்காணப்படாத கோளத்தைப்போல தன்னை உணர்ந்தாள். அவளைச்சுற்றி நதி அசைவில்லாமல் தேங்கியதுபோலக் கிடந்தது. அதன்மேல் இலைகளும் கிளைகளுமாக மரங்கள் மெல்ல மிதந்துசென்றன. வங்கத்துக்குச் செல்லும் வணிகப்படகுகள் சிக்கிக்கொண்ட பறவைகள் போல வண்ணக்கொடிகள் காற்றில் படபடக்க, வெண்பாய்கள் மாபெரும் சங்குகள் போலப் புடைத்து நிற்க, தென்திசை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன.

(மேலும்…)

நூல் ஒன்று – முதற்கனல் – 13

பகுதி மூன்று : எரியிதழ்

[ 4 ]

அஸ்தினபுரியின் அக்கினிதிசையில் மருத்துவத் தாவரங்கள் நிறைந்த சோலை நடுவே மூங்கில் பட்டைகளால் பின்னப்பட்ட குளிர்ந்த தட்டிகளினாலும் கங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதமான சேற்றைக் கொண்டும் கட்டப்பட்ட அரண்மனை ஆதுரசாலையில் நூற்றியொரு மருத்துவர்களின் பராமரிப்பில் விசித்திரவீரியன் வாழ்ந்து வந்தான். பன்னிரண்டு ஆண்டுகளாக அவனுக்கு அங்கே எவருமறியாமல் மருத்துவம் பார்க்கப்பட்டதென்றாலும் அதை அனைவருமே அறிந்திருந்தனர். பாரதவர்ஷத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் வாஜிகல்ப நிபுணர்களான மருத்துவர்கள் அங்கே வந்துகொண்டே இருந்தார்கள்.

(மேலும்…)

நூல் ஒன்று – முதற்கனல் – 12

பகுதி மூன்று : எரியிதழ்

[ 3 ]

காசிநகரத்தின் சுயம்வரப்பந்தலுக்குள் நுழைந்த பீஷ்மர் அவைமுழுதும் திரும்பிப்பார்க்க தன் வில்லின் நாணை ஒருமுறை மீட்டிவிட்டு “ஃபால்குனா, நான் குருகுலத்து ஷத்ரியனான தேவவிரதன். எனக்குரிய ஆசனத்தைக்காட்டு” என்று தன் கனத்த குரலில் சொன்னார். மன்னனின் அருகே நின்றிருந்த அமைச்சர் திகைத்து மன்னனை ஒருகணம் பார்த்துவிட்டு இறங்கி ஓடிவந்து கைகூப்பி “குருகுலத்தின் அதிபரான பீஷ்மபிதாமகரை வணங்குகிறேன். தங்கள் வருகையால் காசிநகர் மேன்மைபெற்றது…தங்களை அமரச்செய்வதற்கான இருக்கையை இன்னும் சிலகணங்களில் போடுகிறேன்” என்றார். பின்பு ஓடிச்சென்று சேவகர் உதவியுடன் அவரே சித்திரவேலைப்பாடுள்ள பீடத்தின்மீது புலித்தோலை விரித்து அதில் பீஷ்மரை அமரச்செய்தார்.

(மேலும்…)