முதற்கனல் - 28

பகுதி ஆறு : தீச்சாரல்

[ 2 ]

காலையொளி நீரில்விரியும் வரை பீஷ்மர் தாராவாஹினியின் கரையில் அப்படியே அசையாமல் நின்றிருந்தார். ஹரிசேனன் பலமுறை சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தான். அவர் ஒரு பெரிய அடிமரமாக ஆகிவிட்டதுபோலத் தோன்றியது. நீரில் விண்மீன்கள் இடம் மாறின. விடிவெள்ளி உதித்து செவ்வொளியுடன் அலைகளில் ஆடியது. காலையில் அஸ்தினபுரியில் இருந்து தூதன் குதிரையில் வந்து சேர்ந்தான். குடில்முற்றத்தில் வேங்கைமரத்தடியில் அவன் நின்றான். ஹரிசேனன் ஏதும் கேட்கவிருக்கவில்லை. பீஷ்மர் அருகே சென்று நின்றுகொண்டான். அவன் நிற்கும் உணர்வை அடைந்த பீஷ்மர் திரும்பினார்.

ஹரிசேனன் “தூதன்” என்று சுருக்கமாகச் சொன்னான். தலையசைத்துவிட்டு பீஷ்மர் பேசாமல் நடந்து குடிலை அடைந்தார். அரைநாழிகைக்குள் குளித்து உடைமாற்றி குதிரையில் ஏறிக்கொண்டு கிளம்பினார். அஸ்தினபுரியின் கோட்டைமேல் விசித்திரவீரியனின் இலைச்சின்னம் கொண்ட கொடி வழக்கம்போல பறந்துகொண்டிருந்தது. கோட்டைமேல் இருந்த காவலன் அவரைக் கண்டதும் சங்கு ஊத கோட்டைமேல் அவரது மீன்கொடி ஏறியது. அவர் ஒவ்வொருவரின் வணக்கத்தையும் தனித்தனியாக ஏற்றும் அனைவருக்கும் புன்னகைமுகம் காட்டியும் உள்ளே சென்றார்.

நகரத்தெருக்களில் காலைப்பரபரப்பு தொடங்கிவிட்டிருந்தது. ஆய்ச்சியர் பால்குடங்களுடனும், உழத்தியர் காய்கனிக்கூடைகளுடனும், மச்சர்கள் மீன்கூடைகளுடனும் தெருக்களில் கூவிச்சென்றனர். காலையிலேயே விருந்தினருக்கு உணவு சமைக்கப்பட்டுவிட்ட இல்லங்களின் முன்னால் அன்னத்துக்கான மஞ்சள்கொடி பறந்துகொண்டிருந்தது. சுமைதூக்கிக் களைத்த சில ஆய்ச்சியர் அங்கே உணவுக்காக அமர்ந்திருந்தனர்.

தெருமுனைகளில் கணபதி, சண்டி, அனுமனின் சிறிய ஆலயங்களில் மணிகள் ஒலிக்க சிறு கூட்டங்களாக கூடி நின்று சிலர் வழிபட்டனர். நான்குயானைகள் காலையில் குளித்து தழைகளைச் சுமந்தபடி அலைகளில் கரியநாவாய்கள் போல உடல்களை ஊசலாட்டியபடி சென்றுகொண்டிருந்தன. நெளியும் வால்களில் அவற்றுக்கு ஆசியளிக்கப்பட்ட மாறாத குழந்தைமை.

பீஷ்மர் அரண்மனைமுற்றத்தில் இறங்கி நேராகவே உள்ளே சென்றார். பேரரசிக்கு அவர் வந்த தகவலைச் சொல்லி அனுப்பினார். சத்யவதி அவரை மந்திரசாலையில் சந்திப்பார் என்று சியாமை சொன்னதும் மந்திரசாலைக்குச் சென்று அமர்ந்துகொண்டார். உடலை நிலையாக வைத்துக்கொள்வது மனதையும் நிலைக்கச்செய்யும் என்பது அவர் அடைந்த பயிற்சி. கைகால்களை இலகுவாக வைத்துக்கொண்டு கண்களை எதிரே இருந்த சாளரத்துக்கு அப்பால் மெல்ல அசைந்த அசோகமரத்தின் கிளைகளில் நிலைக்கவிட்டார்.

தன் அறைக்குள் சத்யவதி வேறு எவரிடமோ பேசிக்கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்தார். தன் அறைக்குள் பேசுவதென்றால் அது சாதாரணமான பேச்சு அல்ல. அசைவை உணர்ந்து அவர் திரும்பியபோது அங்கே அவரது ஒற்றனான சௌம்யதத்தன் நின்றிருந்தான். அவர் பார்த்ததும் அவன் அருகே வந்து “பிதாமகருக்கு அருந்துவதற்கு ஏதேனும் கொண்டுவரலாமா?” என்றான்.

பீஷ்மர் “நீர் மட்டும்போதும்” என்றார். அருகே வந்து “விடகாரியான வஜ்ரசேனன்” என்று விழியசைக்காமல் சொல்லிவிட்டு சௌம்யதத்தன் சென்றான். அவருக்கு அனைத்தும் புரிந்தது. பெருமூச்சுடன் தாடியை வருடிக்கொண்டார்.

பத்துநாட்களுக்கு முன்பு அரியணை மங்கலம் முடிந்த மறுநாள் மாலை பீஷ்மர் சத்யவதியை சந்திக்க அரண்மனைக்குச் சென்றிருந்தார். ஒற்றர்கள் கொண்டுவந்த செய்திகளைச் சொன்னார். அஸ்தினபுரியில் அரியணை ஒருங்கிவிட்டது என்பது வெவ்வேறு ஒற்றர்கள் வழியாக ஷத்ரியநாடுகளுக்குச் சென்றுவிட்டது என்று மறுஒற்றர்கள் தகவல்சொல்லியிருந்தனர். “இனிமேல் நாம் ஷத்ரியர்களை அஞ்சவேண்டியதில்லை” என்றார் பீஷ்மர்.

சத்யவதி தலையசைத்தபின் “அனைத்தும் இவ்வளவு எளிதாக முடியும் என நான் நினைக்கவில்லை. இனி அஸ்தினபுரி மக்களுக்குக் கவலை இல்லை…” என்றாள். பார்வையை அவள் மெல்லத் திருப்பியபோது அவள் ஏதோ முக்கியமாக சொல்லப்போகிறாள் என்று பீஷ்மர் உணர்ந்தார். சத்யவதி “விசித்திரவீரியன் எப்போது நகர்மீள்வான் என்றார்கள்?” என்றாள்.

“சொல்லமுடியாது அன்னையே. காட்டுக்குள் வெகுதொலைவு சென்றிருக்கிறான்” என்றார் பீஷ்மர். அந்தப்பேச்சுக்கு சத்யவதி ஏன் செல்கிறாள் என்று மெல்ல அவருக்குப்புரிந்ததும் உள்ளூர ஒரு புன்னகை விரிந்தது.

“எப்படியும் ஒருசில வாரங்களில் அவன் வந்தாகவேண்டும். நமது வனங்கள் ஒன்றும் அவ்வளவு அடர்த்தியானவை அல்ல, தண்டகாரண்யம்போல” என்றாள் சத்யவதி. ஒருகணம் அவள் கண்கள் பீஷ்மர் கண்களை வந்து சந்தித்துச் சென்றன. “மக்கள் என்ன சொல்கிறார்கள்?” என்றாள். “எதைப்பற்றி?” என்று பீஷ்மர் கேட்டார். “நாம் காசிமன்னன் மகள்களை கவர்ந்து வந்ததைப்பற்றி?”

பீஷ்மர் “அது ஷத்ரியர்களின் வாழ்க்கை. அதைப்பற்றி மக்கள் ஏதும் அறிந்திருக்கமாட்டார்கள்” என்றார். “ஆம். உண்மை…ஆனால் அம்பை சென்றகோலத்தைப்பற்றி சூதர்கள் கதைகளைச்சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் அறிந்த தெய்வப்பிடாரிகளின் கதைகளை எல்லாம் அவள்மேல் ஏற்றிவிட்டார்கள். நேற்று ஒரு சூதன் சொன்னான், அவள் உடல் அனலாக தீப்பற்றி எரிந்ததாம். அவள் சென்றவழியில் எல்லாம் காடு தீப்பற்றியதாம்…”

பீஷ்மர் வெறுமனே தலையை அசைத்தார். “மக்களின் நம்பிக்கைகள் எப்போதுமே அச்சங்களில் இருந்து உருவானவை… அவர்கள் தங்கள் கன்றுகளுக்காகவும் வயல்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் அஞ்சிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றாள் சத்யவதி. “அதை நாம் பொருட்படுத்தவேண்டியதில்லைதான்”

பீஷ்மர் “ஆம், உண்மை” என்றார். சத்யவதி “ஆனால் சூதர்கள் அம்பையின் சாபம் இந்நகர்மேல் விழுந்துவிட்டது என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். வடக்கே ஹ்ருஸ்வகிரிமேல் அவள் ஆடைகளில்லாமல் உடம்பெல்லாம் குருதிவழிய ஏறி நின்று இந்நகரைப் பார்த்தாளாம். அப்போது வானம் கிழிவதுபோல மின்னல் வெட்டியதாம்….இவர்களை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது” என்றாள்.

சத்யவதி அவள் விரும்பிய இடத்தை வந்தடைந்துவிட்டாள் என்று உணர்ந்து பீஷ்மர் “ஆம் அன்னையே, நானும் அதையே எண்ணிக்கொண்டிருந்தேன். நான் இந்நகரில் இருந்தால் மக்கள் மேலும் அச்சம் கொள்வார்கள். நான் நகரை நீங்கிவிட்டால் இந்தச்சிக்கல் அகன்றுவிடும்…” என்றார்.

சத்யவதி அவரை நோக்கி “ஆனால் நீ இங்கு இல்லையேல் ஷத்ரியர்கள் துணிவுகொள்வார்கள்” என்றாள். “அறிவேன் அன்னையே. நான் நகருக்கு வெளியேதான் இருப்பேன். கிரீஷ்மவனம் எனக்குப்பிடித்தமானது. தாராவாஹினியின் நீரும் எனக்குப்பிரியமானது” என்றார். அவ்வளவு நேராக அவள் உள்ளத்துக்குள் அவர் சென்றது அவளை சற்று அசையச்செய்தது. நெற்றிக்கூந்தலை நீவி காதுக்குப்பின் விட்டுக்கொண்டாள்.

VENMURASU_EPI_28__

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

சில கணங்கள் மிகுந்த எடையுடன் கடந்து சென்றன. சத்யவதி மேலும் அசைந்து “நீ விட்டுச் செல்வதை அந்தப்புரப்பெண்டிர் அறியவேண்டியதில்லை” என்றாள். “அவர்கள் அஞ்சக்கூடும். நீ இங்குதான் இருக்கிறாய் என்றே அவர்கள் எண்ணட்டும்.”

பீஷ்மர் கண்களுக்குள் மட்டும் புன்னகையுடன் “ஆம், அது உண்மை அன்னையே” என்றார். மிகமிக நுட்பமாக நகைசெய்யும் பொற்கொல்லனின் கவனத்துடன் சொல்லெடுத்து வைத்து “நான் இருப்பதோ செல்வதோ அவர்கள் அறியாதவாறு இருப்பேன்” என்றார்.

சத்யவதியின் கண்கள் அவர் கண்களை சந்தித்ததும் மெல்ல புன்னகை புரிந்தார். சத்யவதி கண்களை விலக்கிக் கொண்டாள். அப்புன்னகையை அவள் ஒவ்வொருநாளும் நினைப்பாள் என்று அவர் எண்ணிக்கொண்டார். அதிலிருந்து தப்ப அவளால் முடியாது. அன்றே அவர் நகரைவிட்டுச் சென்று கிரீஷ்மவனத்தில் குடில் அமைத்துக்கொண்டார்

சியாமை வந்து “பேரரசி வருகை” என அறிவித்ததும் பீஷ்மர் எழுந்து நின்றார். முன்னால் செங்கோலுடன் ஒரு சேடி வர, பின்னால் கவரியுடன் ஒருத்தி தொடர, சத்யவதி வேகமாக உள்ளே வந்தாள். திரும்பிப் பாராமலேயே கையசைத்து அவர்களை போகச்சொல்லிவிட்டு வந்து இருக்கையில் அமர்ந்தாள். “வணங்குகிறேன் அன்னையே” என்றார் பீஷ்மர்.

சத்யவதி ஒன்றும் சொல்லாமல் கைகளை மடியில் வைத்துக்கொண்டாள். அவள் உதடுகள் இறுகி ஒட்டிக்கொண்டு கோடைமழை வந்துமோதும் சாளரப்பொருத்துக்கள் போல நடுங்கின. கழுத்து அதிர்ந்து அதிர்ந்து அடங்க கன்னத்தசைகள் துடித்தன. பின்பு ஒரு கண்ணில் இருந்து மட்டும் ஒருதுளி கண்ணீர் மெல்ல உருண்டது.

பீஷ்மர் அப்போது அவளிடம் ஏதும் சொல்லக்கூடாதென அறிந்திருந்தார். அவரது முன்னில் அல்லாமல் அவள் அந்தத் துளிக்கண்ணீரைக்கூட விட்டிருக்கமாட்டாள். நாலைந்து சொட்டுக் கண்ணீர் வழிந்ததும் அவள் பட்டுச்சால்வையால் அவற்றை ஒற்றிவிட்டு பெருமூச்சுடன் “நீ ஊகித்திருப்பாய் தேவவிரதா” என்றாள். “ஆம்” என்றார் பீஷ்மர். “நான்தான் காரணம்….எல்லாவகையிலும். அவனை நான் கட்டாயப்படுத்தினேன்” என்றாள். “அதில் என்ன?” என்றார் பீஷ்மர். “களத்துக்கு அனுப்புகிறோமே!”

“ஆம்…நான் அப்படித்தான் நினைத்தேன்…உண்மையில் அவன் இப்படி இறந்ததில் எனக்கு நிறைவுதான்…” என்றாள் சத்யவதி. “எனக்கு சற்று குற்றவுணர்வு இருந்தது. ஆனால் அந்த காசிநாட்டு இளவரசி அழுததைப் பார்த்தேன். அக்கணமே நெஞ்சு திறந்து இறந்துவிடுபவள் போல…அப்போது என் மனம் நிறைந்தது. ஒரு பெண்ணின் மனதை நிறைத்துவிட்டுச் செல்வதுதான் ஆண்மகன் ஒருவன் மண்ணில் வாழ்ந்தமைக்கான அடையாளம்…”

“ஆம்” என்றார் பீஷ்மர். சத்யவதி “அவனுக்கு என் மனம் புரிந்திருந்தது. அவன் அறியாத எவரும் இங்கே இல்லை. நான் அவனை கட்டாயப்படுத்திவிட்டுத் திரும்பும்போது என்னருகே வந்து சால்வையைப் போடுவதுபோல என்னை மெதுவாகத் தொட்டான்…இவ்வுலகில் என்னை எவரேனும் தொடவேண்டுமென விரும்பினேன் என்றால் அது அவன்தான். ஆனால் என்னை ஒருவர் தொடுவது எனக்குப்பிடிக்காது. தொடுகை தானாகவே நிகழவேண்டுமென நினைப்பேன்….அவன் அதை அறிந்திருந்தான். தேவவிரதா, நான் அன்று ரதத்தில் புன்னகை புரிந்தபடியே வந்தேன். நெடுநாட்களுக்குப்பின் காதல்கொண்ட இளம்கன்னியாக சிலநாழிகைநேரம் வாழ்ந்தேன். மகனைவிட அன்னைக்குப் பிரியமான ஆண்மகன் யார்?”

பீஷ்மர் புன்னகை புரிந்தார். சத்யவதி “நான் உன்னிடமன்றி எவரிடமும் மனம் திறந்து பேசுவதேயில்லை தேவவிரதா. பேரரசர் சந்தனுவிடம்கூட….ஏனென்றால் அவர் என்னை பார்த்ததே இல்லை. என்னில் அவர் வரைந்த சித்திரங்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்” என்றாள். “உனக்கு நான் சொல்வது புரியுமா என்றே எனக்குத்தெரியவில்லை. நீ அறியாத நூல்கள் இல்லை. நீ அறியாத சிந்தனைகளும் இல்லை. ஆனால் உன்னால் பெண்ணைப் புரிந்துகொள்ளமுடியாது. அன்னையையும் காதலியையும் மனைவியையும்…எவரையுமே நீ உணரமுடியாது. ஆனால் நான் உன்னிடம்தான் சொல்லியாகவேண்டும்.” அவள் மூச்சுத்திணறி நிறுத்தினாள்.

பின்பு மேலும் வேகத்துடன் முன்னால் வந்து “ஒரு பெண்ணை யாரோ ஓர் ஆண் மட்டும்தான் முழுப்பெண்ணாக்குகிறான் என்று தெரியுமா உனக்கு? அப்படிப்பட்ட ஆணை சந்திப்பவளே நல்லூழ்கொண்டவள்….ஆனால் ஒன்று சொல்கிறேன். அந்த ஆணை தன் மகனாகக் கொண்டவள் பெரும்பேறு பெற்றவள். அவள் நான். என் மகன் விசித்திரவீரியன் அன்றி எவரையும் நான் ஆணாக எண்ணியதில்லை. அவன் புன்னகையை அன்றி எதையும் நான் எனக்குள் கனவாக நிறைத்துக்கொண்டதுமில்லை. அதனாலேயே அவனிடம் நான் ஒருநாளும் இன்சொல் பேசியதில்லை. என்னை அவன் அறியக்கூடாதென்றே எண்ணினேன். என் அன்பினால் நான் ஆற்றலிழந்துவிடக்கூடாதென்று நினைத்தேன். ஆனால் அவன் என் கண்களை மட்டும்தான் பார்த்தான். என் சொற்களை கண்கள்முன் கட்டப்பட்ட திரையாக மட்டுமே எடுத்துக்கொண்டான்.”

பெருமூச்சுடன் சத்யவதி மெல்ல அமைதியடைந்தாள். பீஷ்மர் “விசித்திரவீரியன் வானேறிய செய்தியை நாம் அறிவிக்கவேண்டாமா அன்னையே?” என்றார். சத்யவதி மெல்ல அவளிருந்த நிலையில் இருந்து இறங்கினாள். உடலசைவு வழியாக அவள் மனம் சமநிலைக்கு வருவது தெரிந்தது. “அவனை விடகாரிகளின் உதவியுடன் ஆதுரசாலையிலேயே வைத்திருக்கிறேன். எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் அவனை அப்படியே வைத்திருக்கலாமென்று சொன்னார்கள்” என்றாள்.

பீஷ்மர் அவளையே பார்த்தார். “தேவவிரதா, இந்த நிலையை நீயும் ஊகித்தே இருப்பாய். இனிமேல் குருவம்சத்திற்கு தோன்றல்கள் இல்லை. விசித்திரவீரியனுடன் பாரதவர்ஷத்தின் மகத்தான மரபு ஒன்று அறுந்து போய்விட்டது…எது நடந்துவிடக்கூடாது என்று வாழ்நாளெல்லாம் அஞ்சிவந்தேனோ அது நிகழவிருக்கிறது.” “அது விதிப்பயன்” என்றார் பீஷ்மர். “இல்லை, இன்னும் நான் உறுதி குலையவில்லை” என்று சத்யவதி உரக்கச் சொன்னாள். “இன்னும் வழியிருக்கிறது.”

“சொல்லுங்கள் அன்னையே” என்றார் பீஷ்மர்.சத்யவதி “தேவவிரதா, நூல்நெறிப்படி விசித்திரவீரியனை சிதையேற்றும்போதுதான் அவன் அரசிகள் விதவையாகிறார்கள். அதுவரைக்கும் அவர்கள் அவன் அறத்துணைவியர்தான். ஆகவேதான் அவனை நான் வைத்திருக்கிறேன். அவன் இறந்த செய்தி ஷத்ரியர் எவரும் அறியவேண்டியதில்லை…” பீஷ்மர் “ஒற்றர்கள் எங்கும் இருப்பார்கள் அன்னையே” என்றார்.

“இருக்கட்டும்…நான் நினைப்பது வைதிகர்களுக்கும் குலமூத்தாருக்கும் சான்றுகள் கிடைக்கலாகாது என்று மட்டுமே” என்றாள் சத்யவதி. “வைதிகநூல்களின்படி நீர்க்கடன்செய்து வானேறும் கணம் வரை மனிதர்கள் மண்ணில் வாழ்கிறார்கள். அவர்களின் உறவுகளும் மண்ணில் எஞ்சுகின்றன.”

பீஷ்மர் “அன்னையே…” என்று ஆரம்பித்தபோது, சத்யவதி கையமர்த்தி “இதுவன்றி வேறு வழியே இல்லை தேவவிரதா….ஒன்று உணர்ந்துகொள். இந்த அஸ்தினபுரி வேள்தொழிலையோ பசுத்தொழிலையோ நம்பியிருக்கும் நாடு அல்ல. இது வணிகத்தை நம்பியிருக்கும் நாடு. அந்த வணிகம் இங்கு மையம் கொண்டிருப்பதே இங்கு ஒரு வல்லமைமிக்க அரசு இருப்பதனால்தான். இந்நகரின் சாலைகளும் சந்தைகளும் முற்றிலும் பாதுகாப்பானவை என்பதனால்தான். இந்நகரை வேற்றரசர் கைப்பற்றினால் மிகச்சில வருடங்களிலேயே இங்கே வறுமை வந்து சூழும். இந்நகரம் பாழ்பட்டு அழியும்…”

“அன்னையே நான் சொல்வது அதுவல்ல” என்றார் பீஷ்மர். சத்யவதி தடுத்து “தேவவிரதா இது சந்திரகுலத்தின் முதன்மை அரசகுலம். இது என்னால் அழியும் என்றால் நான் இப்பூமியில் பிறந்ததற்கே பொருளில்லை…அத்துடன்…” அவள் கண்களுக்குள் ஓர் புதிய திறப்பு நிகழ்ந்தது என்று பீஷ்மர் உணர்ந்தார். சற்று முன்னகர்ந்து திடமான குரலில் “…நான் மீனவப்பெண். என்னுடன் இந்த வம்சம் அழிந்தது என்றால் வம்சக்கலப்பால் அழிந்தது என்றுதான் புராணங்கள் சொல்லும். ஷத்ரியர்களும் பிராமணர்களும் அதை எங்கும் கொண்டுசெல்வார்கள்… அதை நான் விரும்பவில்லை…ஒருபோதும் நான் அதை அனுமதிக்கப்போவதில்லை” என்றாள்.

பீஷ்மர் பெருமூச்சுடன் அவளே முடிக்கட்டும் என்று கைகோர்த்துக் காத்திருந்தார். “தேவவிரதா, ஷத்ரியர்கள் என்பவர்கள் யார்? நாட்டைவென்று ஆள்கின்றவன் எவனோ அவன் ஷத்ரியன். பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பு இந்நிலமெல்லாம் காடாக இருந்தபோது இங்கு ஒலித்த ரிஷிகளின் வேதங்களால் இவை ஊர்களாக மாறின. இங்கே அரசுகள் உருவாகி வந்தன. தொல்குடிவேடர்களும் ஆயர்களும் அரசர்களானார்கள். இங்குள்ள அத்தனை ஷத்ரியர்களும் அவ்வாறு உருவாகி வந்தவர்கள்தான். ஆனால் இன்று அவர்கள் தங்களை தூயகுருதியினர் என்று நம்புகிறார்கள். பிறதொல்குடிகளில் இருந்து உருவாகிவரும் புதிய ஆட்சியாளர்களை எல்லாம் படைகொண்டு சென்று அழிக்கிறார்கள். அதற்காக ஒருங்கிணைகிறார்கள். அதற்குக் காரணமாக ஷத்ரியர்கள் அல்லாத எவரும் அரசாளலாகாது என்று நெறிநூல்விதி உள்ளது என்கிறார்கள்.”

“அவை அவர்கள் நாடுகளை உருவாக்கிக் கொள்வதற்கு அமைத்துக்கொண்ட நூல்கள்” என்றார் பீஷ்மர். “ஆம்… கடல்சேர்ப்பர்களும் மச்ச மன்னர்களும் வேடர்தலைவர்களும் நாகர்குடிவேந்தர்களும் இன்று ஷத்ரியர்களால் அழிக்கப்படுகிறார்கள். ஆனால் கங்கையின் ஜனபதத்துக்கு வெளியே புதிய அரசுகள் உருவாகி வருகின்றன. கூர்ஜரம் வணிக வல்லமைகொண்டு வருகிறது. யமுனைக்கரையில் யாதவர்களின் அரசுகள் உருவாகின்றன. கங்கைக்கரையில் மகதம் வல்லமைகொள்கிறது.தெற்கே மாளவர்களும் தட்சிணத்தில் சதகர்ணிகளும் விரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்பால் திருவிடத்திலும் தமிழ்நிலத்திலும் பேரரசுகள் எழுந்துவிட்டன. சூத்திரர்களிடமிருந்து புதிய அரசகுலங்கள் பிறந்து வரவேண்டும். இல்லையேல் பாரதவர்ஷம் வளரமுடியாது…அதற்கு ஷத்ரியசக்தி கட்டுப்படுத்தப்பட்டாகவேண்டும்.”

பீஷ்மர் தலையை அசைத்தார். “மாமன்னர் சந்தனு கங்கர்குலத்திலிருந்து உன்னை கொண்டுவந்தபோதே ஷத்ரியர்கள் அமைதியிழந்துவிட்டனர். என்னை அவர் மணந்து அரியணையையும் அளித்தபோது நமக்கெதிராக அவர்களனைவரும் திரண்டுவிட்டனர். அஸ்தினபுரம் முற்றுகையிடப்பட்டிருக்கிறது இன்று. அதற்குக்காரணம் நம் குருதி…. அவர்கள் நாம் இங்கே குலநீட்சிகொள்ளலாகாது என நினைக்கிறார்கள். அதை நான் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. இந்தக்குலம் வாழவேண்டும். இதில் சத்யவதியின் மச்சகுலத்துக் குருதி இன்னும் பல தலைமுறைகளுக்கு இந்த அரியணையில் இருந்து ஆளவேண்டும். அவர்களின் பிள்ளைகள் தங்கள் வாள்வல்லமையால் ஷத்ரியகுலத்தில் மணம்கொள்ளவேண்டும்…”

பெருமூச்சுடன் சத்யவதி உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டாள். “நான் இவ்வரியணையில் அமர்ந்தது அடையாளமின்றி அழிந்துவிடுவதற்காக அல்ல தேவவிரதா. உன் தந்தை என்னை மணம்கொள்ள வந்தபோது அவரிடம் நான் அரசியாகவேண்டுமென்ற ஆணையை என் தந்தை கோரிப்பெறுவதற்குக் காரணம் நானே. மும்மூர்த்திகளும் எதிர்த்தாலும் என்னை விடமாட்டேன் என்று அவர் சொன்னார். அப்போதே அம்முடிவை எடுத்துவிட்டேன். என் தந்தையிடம் அந்த உறுதியைப் பெறும்படி சொன்னேன். எளிய மச்சர்குலத்தலைவரான அவர் மாமன்னர் சந்தனுவிடம் உறுதிகோர அஞ்சினார்…நான் அவருக்கு ஆணையிட்டேன்.”

“தெரியும்” என்றார் பீஷ்மர். “நீ அதை ஊகித்திருப்பாய் என நானும் அறிவேன்” என்றாள் சத்யவதி. “ஆனால் நான் அந்த உறுதியைப்பெறும்போது உன்னை கங்கர்குலத்துச் சிறுவனாக மட்டுமே அறிந்திருந்தேன். அன்று என்குலம் என் குருதி என்று மட்டுமே எண்ணினேன். என் குழந்தைகள் பிறந்தபின்னர் என் வம்சம் என்று மட்டுமே என்னால் சிந்திக்கமுடிந்தது…” அவரை நோக்கி “என்னை எவரும் சுயநலமி என்று சொல்லலாம். ஆனால் மண்ணில் எந்த அன்னையும் சுயநலமி மட்டுமே” என்றாள்.

“அன்னையே, தாயாக நீங்கள் கொள்ளும் உணர்வுகளை நானறியேன். ஆனால் சக்ரவர்த்தினியாக நீங்கள் எண்ணுவதை ஒவ்வொரு சொல்லாக நான் புரிந்துகொள்கிறேன். நீங்கள் சுயநலம்கொண்ட எளிய பெண்ணல்ல. இந்த பாரதவர்ஷத்தின் விதியை சமைக்கப்போகும் பேரரசி. நீங்கள் கனவு காண்பது உங்கள் நலனையோ உங்கள் வம்சத்தையோ அல்ல, பாரதவர்ஷத்தை. நீங்கள் ஆயிரம் வருடங்களை முன்னோக்கிச் சென்று பார்க்கும் கண்கள் கொண்டவர். அந்தக்கனவுதான் உங்களை முன்கொண்டுசெல்கிறது. உங்கள் விழிகளில் பிறிதனைத்தையும் சின்னஞ்சிறியனவாக ஆக்குகிறது” என்றார் பீஷ்மர். “அதை நான் அன்றே அறிந்தேன். உங்கள் கைகளின் ஆயுதமாக இருப்பதே என் கடமை என்றும் உணந்தேன்.”

“நான் உனக்குக் கடன்பட்டிருக்கிறேன் தேவவிரதா” என்றாள் சத்யவதி. “என் திட்டத்தைச் சொல்லவே நான் உன்னை அழைத்தேன். வரும் முழுநிலவுநாள் வரை அவனை வைத்திருப்போம். அதற்குள் இவ்விரு இளவரசிகளும் கருவுற்றார்களென்றால் மருத்துவர்களைக் கொண்டு அதை அறிவிக்கச் செய்வோம். அதன்பின் விசித்திரவீரியனின் வான்நுழைவை முறைப்படி அறிவிப்போம்” என்றாள்.

சிலகணங்களுக்குப் பின்னர்தான் பீஷ்மர் அச்சொற்களைப் புரிந்துகொண்டார். திடுக்கிட்டு எழுந்து “அன்னையே தாங்கள் சொல்வது எனக்குப்புரியவில்லை” என்றார். “ஆம், அவர்கள் வயிற்றில் குருகுலத்தின் தோன்றல்கள் கருவுறவேண்டும்…” என்றாள். “அதற்கு?” என்றார் பீஷ்மர் சொல்லிழந்த மனத்துடன். “தேவவிரதா, சந்தனுவின் குருதியில் பிறந்த நீ இருக்கிறாய்.”

“அன்னையே” என்று கூவியபடி பீஷ்மர் முன்னால் வந்து சத்யவதியை மிக நெருங்கி அந்த நெருக்கத்தில் அவளைப்பார்த்த திகைப்பில் பின்னகர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள்? சொற்களை சிந்தனை செய்துதான் சொல்கிறீர்களா?” என்றார். தன்குரலை அவரே வேறெவரோ பேசுவதுபோலக் கேட்ட்டார். சத்யவதி “வேறுவழியில்லை தேவவிரதா. நான் அனைத்து நெறிநூல்களையும் பார்த்துவிட்டேன். எல்லாமே இதை அனுமதிக்கின்றன…” என்றாள்.

“அன்னையே, என்னை மன்னிக்கவேண்டும். இன்னொருமுறை நீங்கள் இதைச் சொன்னீர்கள் என்றால் இங்கேயே என் கழுத்தை அறுத்து உயிர்விடுவேன்” என்றார் பீஷ்மர். “தேவவிரதா இது உன் தந்தை…” என்று சத்யவதி ஆரம்பித்ததும் பீஷ்மர் தன் வாளை உருவ கையைக்கொண்டு சென்றார். சத்யவதி அவர் கையைப் பற்றினாள். “வேண்டாம் தேவவிரதா…” என்றாள். “என்னை மன்னித்துவிடு… வேறுவழியே இல்லாமல்தான் நான் இதை உன்னிடம் சொன்னேன்.”

பீஷ்மர் நடுங்கிய கரங்களை விலக்கி நெஞ்சில் வைத்தார். சத்யவதி “வேறு ஒருவன் மட்டும்தான் இருக்கிறான் தேவவிரதா. அவன் சந்தனுவின் குருதியல்ல, என் குருதி” என்றாள். பீஷ்மர் புரியாமல் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றார். “அவன் இங்கு வந்தானென்றால் இவ்வம்சம் வாழும்… அதை நாம் குருவம்சமென வெளியே சொல்லுவோம். அனைத்து நூல்நெறிகளின்படியும் அது குருவம்சம்தான். ஆனால் உண்மையில் அது என் வம்சமாகவே இருக்கும்.”

“நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் பேரரசி?” என்றார் பீஷ்மர். “உன் தமையன்…வியாசவனத்துக்குச் சென்று அவன் சொல்லைக் கேட்டுத்தானே நீ காசிமகளிரை கைப்பற்றச் சென்றாய்?” என்றாள் சத்யவதி. பீஷ்மர் அனைத்து ஆற்றல்களையும் இழந்தவர் போல கால்கள் தளர்ந்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

சத்யவதி “அவன் முனிவன். ஆனால் பிரம்மசரிய விரதமுடையவனல்ல. அவனுடையது கவிஞர்களுக்குரிய பிரேமைநெறி. முன்னரே அவனுக்கு குழந்தை பிறந்திருக்கிறது…” என்றாள். “அவன் கற்றறிந்த சான்றோன். என் குலம் அவன் வழியாக முளைத்து இந்த பாரதவர்ஷத்தை ஆளுமென்றால் அதைவிட மேலானதாக ஏதுமிருக்கப்போவதில்லை.”

“ஆனால் இன்று அவர் என்னைவிட மூத்தவர்” என்றார் பீஷ்மர். சத்யவதி “யோகவீரியமுள்ள முனிவனுக்கு வயது ஒரு தடையே அல்ல. அவன் வந்தால் எல்லா இக்கட்டுகளும் முடிந்துவிடும். அஸ்தினபுரியின் அரசமரபு தொடரும்… தேவவிரதா இது ஒன்றுதான் வழி…”

பீஷ்மர் “அதை எப்படி அவர் ஏற்றுக்கொள்வார்?” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோலச் சொன்னார். சத்யவதி “நீ ஏற்றுக்கொள்ளச்செய். அவனுக்கு உன்மேல் மட்டும்தான் பற்று இருக்கிறது. உன் சொற்களை மட்டும்தான் அவன் பொருட்படுத்துவான்….நீ என் ஆணையை மறுத்தாய். ஆகவே நீ இதைச் செய்தே ஆகவேண்டும்…இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்” என்றாள்.

பீஷ்மர் “அன்னையே என்னால் எதையுமே சிந்திக்க முடியவில்லை.உங்கள் சொற்கள் என்னை சூழ்ந்துகொண்டிருக்கின்றன” என்றார். சத்யவதி “தேவவிரதா, அவனிடம் சொல். காசிநாட்டுப் பெண்களைக் கொண்டுவர அனுமதியளித்தவனே அவன் அல்லவா? அப்படியென்றால் அவனுக்கு இப்பெண்களின் வாழ்க்கையில் பொறுப்பில்லையா? அந்த வினாவுக்கு முன் அவன் பதிலிழந்துவிடுவான்” என்றாள். பீஷ்மர் அவளுடைய முகத்தை சொற்களற்ற மனதுடன் ஏறிட்டுப்பார்த்தார்.

சத்யவதி எங்கோ நின்று பேசினாள். “அவன் அவர்களை தாயாக்கினால் அவர்கள் வயிற்றில் அஸ்தினபுரியின் அரசகுலம் பிறக்கும். அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு பொருள் உருவாகும். அரசியராக அவர்கள் இந்த மண்ணை ஆளமுடியும். இல்லையேல் அவர்களுக்கிருப்பது என்ன? இருண்ட அந்தப்புர அறைகளில் வாழ்நாளெல்லாம் விதவை வாழ்க்கை. அல்லது உடன்சிதையேற்றம்….உயிருடன் எரிவது அல்லது எரிந்து உயிர்வாழ்வது….அவன் கருணைகொண்டானென்றால் அவர்களை வாழச்செய்ய முடியும். இந்த நாட்டையும் இதன் குடிகளையும் வாழச்செய்ய முடியும்.”

பீஷ்மர் அச்சொற்கள் அனைத்தும் கனத்த கற்களாக வந்து தனக்குள் அடுக்கப்பட்டு சுவர்போலெழுவதை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். எத்தனை தெளிவு எவ்வளவு துல்லியம் என அவர் அகம் மலைத்தது.

“அவனைக் கொண்டுவருவது உன் பொறுப்பு…. நீ செய்தேயாகவேண்டிய கடமை. இது என் ஆணை! ஆகவே மண்மறைந்து விண்ணேகிய உன் தந்தையின் ஆணை!” என்றாள் சத்யவதி. பீஷ்மர் பேசாமல் நின்றார். “எனக்கு வாக்களி…அவனை அழைத்துவருவேன் என” என்று அவள் சொன்னாள். “வாக்களிக்கிறேன் அன்னையே” என்றார் பீஷ்மர். அக்கணமே அவருக்கு சொற்கள் தவறிவிட்டன என்று புரிந்தது. வியாசரை அழைக்கிறேன் என்பதற்கு பதில் கொண்டுவருகிறேன் என அவரை சொல்லவைத்துவிட்டாள்.

உடல் கற்சிற்பம் போல கனத்து கால்களில் அழுந்த மெல்ல நடந்து வெளியே வந்து வெயில் பொழிந்துகிடந்த முற்றத்தை அடைந்தபோது பீஷ்மர் திடீரென்று புன்னகை செய்தார். அவர் உள்ளே நுழைவதற்கு முன்னரே சத்யவதி வியாசரை அழைப்பதற்கான திட்டத்தை முழுமைசெய்துவிட்டிருந்தாள் என அவர் உணர்ந்தார்.