மாதம்: ஜனவரி 2014

நூல் ஒன்று – முதற்கனல் – 31

பகுதி ஆறு : தீச்சாரல்

[ 5 ]

நீலநிறமான மரவுரியாடையும் பனைத்தாலங்களால் செய்த நகைகளும் அணிந்த சியாமநாகினியை அரண்மனை வைத்தியர்தான் கூட்டிவந்தார். அவள் தன் முன் வந்து தலைவணங்காமல் நின்றதைக் கண்டு சத்யவதி சற்று எரிச்சல் கொண்டாலும் அதை அடக்கி “அமைச்சர் அனைத்தையும் கூறியிருப்பாரென்று நினைக்கிறேன்” என்றாள். சியாமநாகினி “ஆம்” என்றாள். “நான் விரும்புவதுபோல அனைத்தும் நடந்தால் நீ கேட்பதைவிட இருமடங்கு பரிசுகள் கொடுக்கிறேன்” என்றாள் சத்யவதி . “நான் நினைப்பதில் ஒரு பகுதியை மட்டுமே கேட்பேன் அரசி” என்றாள் சியாமநாகினி.

“ஒருமுனையில் நெருப்பும் இன்னொருமுனையில் பாதாளமும் என்பார்கள், அந்நிலையில் இருக்கிறேன்” என்றாள் சத்யவதி. “என் மகன் கிருஷ்ணன் காவியரிஷி. மென்மையும் கருணையும் பொறுமையும் கொண்டவன். ஆனால் அத்தகையோரிடம் எழும் சினத்தைத்தான் மண்ணுலகம் தாளாது. மறுபக்கம் ஒருநாள் என்றாலும் தன் ஆன்மாவுக்குரியவனைக் கண்டுகொண்ட பத்தினியாகிய என் மருகி. இருவரையும் வென்று நான் எண்ணுவது கைகூடவேண்டும்.”

“அரசி, இவ்வுலகம் ஒரு பெரிய கனவு” என்றாள் சியாமநாகினி. “இதில் நிகழ்வன பொய்யே. பொய்யில் பொய் கலப்பதில் பிழையே இல்லை. இளவரசிகளின் ஒரு சுருள் தலைமயிரையும் காலடி மண்ணையும் அவர்கள் அணியும் ஒரு சிறு நகையையும் எனக்களியுங்கள்” என்றாள்.

சேடிகளிடம் சொல்லி அவற்றைக்கொண்டுவந்து சியாமநாகினியிடம் கொடுக்கச்சொன்னாள் சத்யவதி. அரண்மனைக்குள் இருந்த அகலமான அறை ஒன்றை சியாமநாகினிக்கு பூசனைக்காக ஒருக்கிக் கொடுக்கவைத்தாள். அவளுக்குத்தேவையான ஏவலர்களையும் பொருட்களையும் கொடுக்க ஆணையிட்டாள்.

தன் அறைக்குள் நிலையழிந்தவளாக அவள் அமர்ந்திருந்தாள். அன்றுகாலை வந்திறங்கிய வியாசரைக் கண்டதுமே அவளுடய அகம் அச்சத்தால் நிறைந்துவிட்டிருந்தது. தோளில்புரளும் சடைக்கற்றைகளும் திரிகளாக இறங்கிய தாடியும், வெண்சாம்பல் பூசப்பட்ட மெலிந்து வற்றிய கரிய உடலும் கொண்ட வியாசர் சிதையில் இருந்து பாதியில் எழுந்துவந்தவர் போலிருந்தார். அவள் அரண்மனை முற்றத்தில் இறங்கிச்சென்று வணங்கி “மகாவியாசரை அரண்மனை வணங்கி வரவேற்கிறது” என்று முறைப்படி முகமன் சொன்னதும் அவர் வெண்பற்களைக் காட்டிச் சிரித்தபோதுதான் அவள் தன் மகனை கண்டாள்.

தவக்குடிலில் ஓய்வெடுக்கச்சென்ற வியாசரைக் காண அவள் சென்றபோது சுதனும் சுதாமனும் அவளை எதிர்கொண்டு அழைத்தனர். “என்ன செய்கிறான்?” என்று அவள் கேட்டாள். “பீஷ்மபிதாமகர் எங்கே என்று கேட்டுக்கொண்டிருந்தார்” என்றனர். “அவர் மீண்டும் காட்டுக்குச் சென்றுவிட்டார். என்று மீள்வாரெனத் தெரியாது” என்றாள் சத்யவதி.

வியாசர் அவளைப்பார்த்ததும் உள்ளிருந்து எழுந்து வாசலுக்கு வந்து கைகளைக்கூப்பியபடி வரவேற்றார். உள்ளே அழைத்துச்சென்று பீடத்தில் அமரவைத்து அருகிலேயே நின்றுகொண்டார். “அன்னையே, நீண்டநாட்களுக்கு முன் உங்கள் பாதங்களைப்பணிந்து நீங்கள் அழைக்கையில் வருவேன் என்று சொன்னேன். நீங்கள் அழைக்கவும் நான் வரவும் நிமித்தம் அமைந்திருக்கிறது” என்றார்.

“உன் புதல்வன் சுகன் நலமாக இருக்கிறானா?” என்று சத்யவதி கேட்டாள். கேட்டதும்தான் எவ்வளவு சரியான இடத்தில் தொடங்கியிருக்கிறோம் என்று அவளே உணர்ந்தாள். தேர்ந்த வில்லாளியின் கைகளே அம்பையும் இலக்கையும் அறிந்திருக்கின்றன. “சுகனின் பிறப்பு பற்றி நீ எழுதிய காவியத்தை சூதர்கள் பாடிக்கேட்டேன்” என்றாள் சத்யவதி.

வியாசர் புன்னகை செய்தார். “ஆம், என் அகத்தின் மிகமென்மையான ஓர் ஒலி அது அன்னையே. சிலசமயம் யாழில் அறியாமல் விரல்தொட்டு ஒரு பிறழொலி கேட்கும். இசையை விட இனிய ஒலியாகவும் அது அமையும்…அது அத்தகைய ஒன்று” என்றார். “சுவர்ணவனத்தில் நான் ஒருநாள் காலையில் செல்லும்போது சிறிய மரத்துக்குமேல் ஒரு பறவைக்குடும்பத்தைக் கண்டேன். பூவின் மகரந்தத் தொகைபோல ஒரு சிறிய குஞ்சு. அதன் இருபுறமும் அன்னையும் தந்தையும் அமர்ந்து அதை அலகுகளால் மாறி மாறி நீவிக்கொண்டிருந்தன. வேள்வியை இருபக்கமிருந்தும் நெய்யூற்றி வளர்க்கும் முனிவர்கள் போல பெற்றோரும் குழந்தையும் சேர்ந்து அன்பெனும் ஒளியை எழுப்பி வனத்தையே உயிர்பெறச்செய்தனர். அதைக்கண்டு என் மனம் முத்துச்சிப்பி நெகிழ்வதுபோல விரிந்தது. அதில் காதல் விழுந்து முத்தாகியது…”

“ஹ்ருதாஜி என்பது அவள் பெயர் அல்லவா?” என்றாள் சத்யவதி. “அழகி என்று நினைக்கிறேன்” என்று புன்னகைசெய்தாள். “உலகின் கண்களுக்கு அவள் அழகற்றவளாகக்கூட தெரியலாம் அன்னையே. என் மனதிலெழுந்த பெருங்காதலுடன் நான் சென்றபோது அத்தனை பெண்களும் பேரழகிகளாகத் தெரிந்தனர். ஆனால் ஹ்ருதாஜியின் குரல் எல்லையற்ற அழகு கொண்டிருந்தது. அக்குரல் வழியாகத்தான் நான் அவள் அழகைக் கண்டேன். அவளை நான் கிளி என்றுதான் நினைத்தேன். அவளில் பிறந்த குழந்தைக்கு அதனால்தான் சுகன் என்று பெயரிட்டேன்….என் கையில் இருந்து வேதங்களைக் கற்று அவன் வளர்ந்தான்.”

வியாசரின் முகம் ஒளிகொண்டிருப்பதை கவனித்தபடி சத்யவதி மெதுவாக முன்னகர்ந்து “குழந்தை அனைத்தையும் ஒளிபெறச்செய்துவிடுகிறது கிருஷ்ணா. பல்லாயிரம் மலர்மரங்கள் சூழ்ந்த வனத்தையே அது அழகாக்குகிறது என்றால் ஓர் இருள்சூழ்ந்த அரண்மனையை அது பொன்னுலகமாகவே ஆக்கிவிடும்” என்றாள். அவள் அகம் சென்ற தொலைவை அக்கணமே தாண்டி “ஆம், அன்னையே. உங்கள் எண்ணத்தை தேவவிரதன் சொன்னான்” என்றார் வியாசர்.

“என்குலம் வாழ்வதும் என் இல்லம் பொலிவதும் உன் கருணையில் இருக்கிறது கிருஷ்ணா” என்றாள் சத்யவதி. வியாசர் முகம் புன்னகையில் மேலும் விரிந்தது. “என் அழகின்மை அரண்மனைக்கு உகந்ததா அன்னையே?” என்றார். சத்யவதி அவர் கண்களைக் கூர்ந்து நோக்கி “அரண்மனை என்றுமே அறிவாலும் விவேகத்தாலும் ஆளப்படுகிறது கிருஷ்ணா” என்றாள். அதைச்சொல்ல எப்படி தன்னால் முடிந்தது என அவளே வியந்துகொண்டாள்.

“அன்னையே, தங்கள் ஆணை என் கடமை. அதை நான் தேவவிரதனிடமே சொன்னேன். ஆனால் நான் ஒரேயொரு கோரிக்கையை முன்வைக்க விழைகிறேன். அப்பெண்கள் என்னை மனமுவந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றார் வியாசர். சத்யவதி “ஆம், அவர்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டு விட்டார்கள்” என்றாள்.

சியாமை வந்து அழைத்து பூசனை முடிந்துவிட்டது என்றாள். சத்யவதி பூசனைநிகழ்ந்த அறைக்குச் சென்று பார்த்தபோது சற்று திகைத்தாள். அறையெங்கும் நீலமேகம் படர்ந்ததுபோல தூபப்புகை மூடியிருக்க நடுவே ஏழு நெய்யகல்கள் எரிந்தன. விளக்குகளுக்கு அப்பால் ஏழு நாகங்களின் உருவங்கள் கமுகுப்பாளையால் செய்யப்பட்டு நிறுவப்பட்டிருந்தன. குன்றிமணிகளாலான கண்களும் செந்நிற மலரல்லிகளாலான நாக்குகளும் கொண்டவை. ஏழுநிற மலர்களாலான எண்கோண முற்றம் அமைக்கப்பட்டு அதன் நடுவே தாலத்தில் படையல்கள் வைக்கப்பட்டிருந்தன. சியாமநாகினி நடுவே அமர்ந்து கையில் துடியை மீட்டிக்கொண்டிருக்க சுவரோரமாக அவள் மகள் அமர்ந்து குடமுழவை மெல்ல நீவி விம்மலொலி எழுப்பிக்கொண்டிருந்தாள். அந்த அறையே வலியில் அழுவதுபோல விம்மிக்கொண்டிருந்தது.

“தேவியர் வருக” என்றாள் சியாமநாகினி. சத்யவதி கண்ணைக்காட்ட சியாமை எழுந்து சென்றாள். அவர்களிடம் முன்னரே சத்யவதி சொல்லியிருந்தாள், நீத்தார்கடனின் ஒருபகுதியாக நிகழும் பூசனை அது என்று. ஈரவெண்பட்டு ஆடை மட்டும் அணிந்து நீண்டகூந்தலில் நீர்த்துளிகள் சொட்ட நனைந்த முகம் மழையில் நனைந்த பனம்பாளைபோல மிளிர அம்பிகை வந்தாள். அவள் கையைப்பற்றியபடி மிரண்ட பெரிய விழிகளால் அறையைப்பார்த்தபடி ஈர உடையுடன் அம்பாலிகை வந்தாள்.

“அமருங்கள் தேவி” என்றாள் சியாமநாகினி. “இந்தத் தருணத்தில் கரிய திரை அசைந்துகொண்டிருக்கிறது. நிழல்கள் எழுந்து தங்கள் உண்மைகளுடன் இணைந்துகொள்கின்றன.” அம்பிகை அம்பாலிகை இருவரும் இரு சித்திரப்பாய்களில் அமர்ந்துகொண்டனர். சியாமநாகினி கைகாட்ட அவளுடன் வந்த ஏவல்பெண் தூபத்தில் புதிய அரக்கை போட அறை நீருக்குள் தெரிவது போல அலையடித்தது.

நாகினி தன் முன் கரிய மண் தாலம் ஒன்றை வைத்து அதன் மேல் கைகளை துழாவுவதுபோல சுழற்றியபடி “ஆவணி மாதம் ஆயில்ய மீனில் பிறந்த இவள் அம்பிகையின் கழலின் தோற்றம். அனலில் உருகாத இரும்பு. அணையாத நீலநெருப்பு… அன்னைநாகங்களே இவளை காத்தருள்க! காவல்நாகங்களே இவளை காத்தருள்!. அழியாத நாகப்புதல்வர்களே இவளுக்கு கருணைசெய்க!” என்றாள்.

அவள் கைகளே நாகங்கள் போல நெளிந்தன. மனிதக்கைகள் அப்படி வளைய முடியும் என்பதை சத்யவதி பார்த்ததேயில்லை. தாலத்தின் வெறுமையிலிருந்து நீலச்சுவாலை மேலே எழுந்து நெளிந்தாடியது. அங்கே செந்நிற படம் கொண்ட நீலநாகம் நின்றாடுவதாகவே தெரிந்தது.

சியாமநாகினி “மார்கழிமாதம் மகம் மீனில் பிறந்த இவள் அம்பிகையின் கைவிரல் மோதிரம். ஒளிரும் வெள்ளி. குளிர்வெண்ணிற நிலவொளி. அன்னைநாகங்களே இவளை காத்தருள்க! காவல்நாகங்களே இவளை காத்தருள்க! அழியாத நாகப்புதல்வர்களே இவளுக்கு கருணைசெய்க!” நெளிந்த நாகபடக் கைகளுக்குள் இருந்து வெண்ணிறமான சுவாலை எழுந்து நின்றாடியது.

இருபெண்களும் விழிகளை அகல விரித்து கூப்பிய கரங்களுடன் அமர்ந்திருந்தனர். சியாமநாகினி கரிய தைலம் பாதியளவுக்கு நிறைந்த இரு மண்தாலங்களை அவர்களிடம் கொடுத்தாள். அவற்றை அவர்கள் மடிகளில் வைத்துக்கொள்ளும்படி சொன்னாள். “அந்த திரவத்தைப் பாருங்கள்… அதில் தெரிவது உங்கள் முகம். அதையே பாருங்கள். தியானம் செய்யுங்கள். அதில் உங்கள் முகத்தை விலக்க முடிந்தால் மண்ணுலகம் நீங்கி விண்ணகம் செல்லாமல் இங்கிருக்கும் உங்கள் கணவனை அதில் காணலாம்” என்றாள்.

அம்பிகை “உண்மையாகவா?” என்றாள். “நீங்களே காண்பீர்கள். அவரிடம் நீங்கள் உரையாடலாம். எஞ்சியவற்றை எல்லாம் சொல்லலாம். அவர் உங்களிடம் என்ன சொல்லவிரும்புகிறார் என்று கேட்கலாம்.” அம்பிகை கைகள் நடுங்க யானத்தை பற்றிக்கொண்டாள். அதன் திரவப்பரப்பில் அலைகள் எழுந்தன. அம்பாலிகை ஓரக்கண்ணால் அம்பிகையைப் பார்த்தபின் தனது தாலத்தைப் பார்த்தாள். “அலைகள் அடங்கவேண்டும் தேவி” என்றாள் சியாமநாகினி.

குடமுழவும் உடுக்கையும் சீராக ஒலித்துக்கொண்டே இருந்தன. நெருப்புத்தழல்கள் மெல்ல நிலைத்து தாழம்பூக்களாக, குருதிவழிந்த குத்துவாட்களாக மாறி நின்றன. அம்பாலிகை “தெரிகிறது” என்றாள். கனவுகண்டவள் போல அம்பிகை திரும்பிப் பார்த்துவிட்டு தனது தாலத்தைப் பார்த்தாள். “என்ன தெரிகிறது?” என்றாள் சியாமநாகினி. “அவரைப் பார்க்கிறேன். ஆனால் நான் அவரை இப்படி பார்த்ததே இல்லை.”

“எப்படி இருக்கிறார்?” என்றாள் சியாமநாகினி.  “மிகச்சிறியவர்” என்று அம்பாலிகை சொன்னாள். பரவசத்துடன் அந்த திரவ வட்டத்தையே பார்த்தபடி “விளையாட அழைக்கிறார். அவர் கையில் ஒரு மரத்தாலான பம்பரம் இருக்கிறது.” பின்பு சின்னஞ்சிறுமியின் குதூகலச் சிரிப்புடன் அதை நோக்கி குனிந்தாள். அவள் முகம் மாறுபட்டது. கண்களில் திகைப்பும் புரியாமையும் எழுந்தது. பணிவுடன் தலையை அசைத்தபோது காதுகளின் குண்டலங்கள் கன்னங்களில் மோதின.

அம்பிகை பெருமூச்சுவிட்டாள். அவள் சற்று அசைந்தபோது சியாமநாகினி “பார்த்துவிட்டீர்களா தேவி?” என்றாள். “ஆம்” என்றாள் அம்பிகை. “என்ன சொன்னீர்கள்?” அம்பிகை தலைகுனிந்து “அவரிடம் நான் சொல்வதற்கு ஏதுமில்லை என்று தெரிந்தது” என்றாள். பிறகு “அவரது ஆணைக்கு நான் கட்டுப்பட்டாகவேண்டும்” என்றாள்.

சியாமநாகினி கைகாட்ட தாளம் புரவிப்படை மலையிறங்குவதுபோல ஒலிக்கத்தொடங்கியது. அறையின் அனைத்துத் தழல்களும் கூத்தாடின. பின்பு அவை ஒரேகணத்தில் அணைந்து இருள் மூடியது. “அரசி, தேவியரை இருளிலேயே அழைத்துச்செல்லுங்கள். அவர்கள் அறையில் இருளிலேயே வைத்திருங்கள். இருளிலேயே அவர்கள் மஞ்சம் செல்லட்டும்” என்றாள்.

VENMURASU_EPI_31_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

சத்யவதி வெளியே வந்தபோது ஒரு அச்சமூட்டும் கனவு முடிந்துவிட்டதுபோல உணர்ந்தாள். சியாமையிடம் வியாசரைக் கூட்டி வரலாமென ஆணையிட்டாள். சியாமை சென்றபின் தன் மஞ்ச அறைக்குச் சென்று பதைப்புடன் காத்திருந்தாள். கதவு மெல்லத்திறந்தது. சியாமை வந்து நின்றாள். “கிருஷ்ணன் மஞ்சத்துக்குச் சென்றுவிட்டானா?” என்றாள் சத்யவதி. “ஆம், பேரரசி.” சத்யவதி “அவன் மனநிலை என்ன என்று தெரியவில்லையே… இன்று என்குலம் கருவுறுமா?” என்றாள். சியாமை “பேரரசி, சியாமநாகினி அதை நமக்குக் காட்டுவாள்” என்று சொன்னாள். “அழைத்து வருகிறேன்” என்றாள்.

சியாமநாகினி உள்ளே வந்து அமர்ந்தாள். கோபுரம்போல குவித்துக்கட்டியிருந்த நீண்ட கூந்தலை அவிழ்த்து தோள்களில் பரப்பியிருந்தாள். கரிய உடலில் பூசியிருந்த நீலச்சாயம் வியர்வையில் வழிந்து பின் உலர்ந்திருந்தது. “நாகினி, இந்த அரண்மனை ரகசியம் வெளியாகிவிடாதல்லவா?” என்றாள் சத்யவதி. நாகினி “அரண்மனை ரகசியங்கள் அனைத்தும் வெளியாகிவிடும் அரசி” என்று திடமாகச் சொல்ல மேலே பேசமுடியாமல் சத்யவதி திரும்பிக்கொண்டாள்.

சியாமை “வியாசரின் மனநிலையை பேரரசி அறியவிரும்புகிறார்” என்றாள். “அதை நான் இங்கிருந்தே பார்க்கமுடியும் அரசி” என்றாள் நாகினி. அவர் தன் தந்தை இயற்றிய புராணசங்கிரகம் என்ற நூலை சுவடிக்கட்டாக தன்னுடன் எடுத்துவந்திருக்கிறார். முக்காலங்களையும் அவர் அதன் வழியாகவே உய்த்துணர்கிறார். மஞ்சத்தில் அமர்ந்து கைப்போக்கில் சுவடிக்கட்டை விரிக்கிறார். ஏழுசுவடியும் ஏழு வரியும் ஏழு எழுத்துக்களும் தள்ளி வாசிக்க ஆரம்பிக்கிறார்.” “எதை?” என்றாள் சத்யவதி.

“அது தீர்க்கதமஸின் கதை” என்றாள் நாகினி. “பிரபஞ்சத்தைப் படைப்பதற்காக பிரம்மன் பதினாறு பிரஜாபதிகளைப் படைத்தார். கர்த்தமன், விக்ரீதன், சேஷன், சம்ஸ்ரயன், ஸ்தாணு, மரீசி, அத்ரி, கிருது, புலஸ்தியன், அங்கிரஸ், பிரசேதஸ், புலஹன், தட்சன், விவஸ்வான், அரிஷ்டநேமி, கஸ்யபன் என்று அவர்களை புராணங்கள் சொல்கின்றன. பத்தாவது மைந்தனான அங்கிரஸ் அணையாது மூளாது எரியும் அவியிலா பெருநெருப்பாக விண்ணகங்களை மூடிப்பரவினார்.

வான் நெருப்பான அங்கிரஸில் இருந்து செந்நிறச்சுவாலை பிரஹஸ்பதியாகவும் நீலச்சுவாலை உதத்யனாகவும் பிறந்தது. இரு சகோதரர்களும் ஒருவரை ஒருவர் தழுவியும் ஒருவரை ஒருவர் பகைத்தும் விண்வெளியில் நடனமிட்டனர். உதத்யன் குடலாகவும் பிரஹஸ்பதி நாவாகவும் இருந்தனர். உதத்யன் பசியாகவும் பிரஹஸ்பதி தேடலாகவும் திகழ்ந்தனர். அணையாத பெரும்பசியே உதத்யன். அவ்விழைவின் ஆடலே பிரஹஸ்பதி. பருப்பொருளனைத்தையும் உண்ண வேண்டுமென்ற அவாவை தன்னுள் இருந்து எடுத்து உதத்யன் ஒரு பெண்ணாக்கினார். அவளை மமதா என்றழைத்தார்.

பேரவா என்னும் பெண்ணுக்குள் நீலநெருப்பின் விதை விழுந்து முளைத்தபோது அது இருளின் துளியாக இருந்தது. இருளைச் சூல்கொண்ட பேரவா நாள்தோறும் அழகுகொண்டது. அவ்வழகைக்கண்டு காதல்கொண்ட பிரஹஸ்பதி மமதையிடம் உறவுகொண்டார். கருவுக்குள் இருந்த கருங்குழந்தை உள்ளே வந்த எரிதழல் விந்துவை தன் சிறுகால்களால் தள்ளி வெளியேற்றியது. சினம் கொண்ட பிரஹஸ்பதி “நீ முளைத்தெழுவாயாக. கண்ணற்றவனாகவும் கைதொடுமிடமெல்லாம் பரவுகிறவனாகவும் ஆவாயாக. உன் வம்சங்கள் வளரட்டும். விண்ணிலொரு இருள் விசையாகவும் மண்ணிலொரு முனியாகவும் நீ வாழ்க” என்று தீச்சொல்லிட்டார்.

அனலின் வயிறு திறந்து குழந்தை கண்ணிழந்த கரிய உருவமாக எழுந்தது. அக்கணம் மண்ணில் தண்டகாரண்யத்தில் பத்ரை என்னும் முனிபத்தினியின் வயிற்றில் கண்ணற்ற குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு தீர்க்கதமஸ் என அவர்கள் பெயரிட்டனர். தீர்க்கதமஸ் தீராத காமவேகத்தையே தன் தவவல்லமையாகக் கொண்டிருந்தார். அவரில் இருந்து அங்கன், வங்கன், கலிங்கன், புண்டரன், சுங்கன் என ஐந்து மன்னர்குலங்கள் பிறந்தன.

நாகினி சொல்லிக்கொண்டிருக்கும்போது சியாமை மெல்லத் தலைநீட்டி அம்பிகையை அறைக்குக் கொண்டுசெல்லலாமா என்று கேட்டாள். சத்யவதி ஆம் என தலையை அசைத்தாள். சியாமை திரும்பி வந்ததும் சத்யவதி பதற்றத்துடன் “அவள் எப்படி இருந்தாள்? என்ன சொன்னாள்?” என்றாள். “அவர் கனவிலிருப்பவர் போல நடந்துசென்றார். அறைக்கதவை அவரே மூடிக்கொண்டார்” என்றாள் சியாமை.

“அவள் நாகங்களால் கைப்பற்றப்பட்டிருக்கிறாள். அவள் நரம்புகளில் எல்லாம் நீலநாகங்கள் குடியேறிவிட்டன. அவள் குருதியில் நாகரசம் ஓடுகிறது. அவள் அறைக்குள் சென்று அங்கே காண்பது தன் கணவனைத்தான்” என்றாள் நாகினி. ஒரு வெற்றிலையை எடுத்து அதில் மைபூசி “இதோ அவள் காணும் காட்சி” என்றாள்.

சத்யவதி குனிந்து நோக்கி பின்னடைந்தாள். “என்ன இது? இதையா அவள் காண்கிறாள்?” சியாமநாகினி புன்னகை செய்து “இதுவும் அவனேதான் அரசி. தெய்வங்களுக்கெல்லாம் கரிய மூர்த்தங்களும் உண்டு… பெண்ணின் தாகம் காணாததை நோக்கியே செல்கிறது.” சத்யவதி திகைப்புடன் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். பின்பு “ஆம், இவனை நானும் அறிவேன்” என்றாள். “இதை அறிந்ததனால்தான் விசித்திரவீரியன் என்று பெயரிட்டேன்.”

மைப்பரப்பின் பளபளப்பு காட்டிய பிம்பங்கள் மறைந்தன. சத்யவதி “என்ன?” என்றாள். சியாமநாகினி பரபரப்புடன் வெற்றிலையை மீண்டும் மீண்டும் நீவினாள். அது கருமையாகவே இருந்தது. “என்ன நடந்தது சியாமநாகினியே?” என்றாள் சத்யவதி.

“அவள் விழிகள் திறந்துவிட்டன. அவள் அது வியாசன் என்று கண்டுவிட்டாள்” என்றாள் சியாமநாகினி. அச்சத்துடன் சியாமநாகினியின் தோள்களைப்பற்றி “என்ன நடக்கும் சியாமநாகினியே?” என்றாள் சத்யவதி. சியாமநாகினி புன்னகையுடன் “அவள் பெண், அவர் ஆண். அவருக்குள் உள்ள கருமையை முழுக்க எடுத்துக்கொள்வாள்” என்றாள்.

நூல் ஒன்று – முதற்கனல் – 30

பகுதி ஆறு : தீச்சாரல்

[ 4 ]

மறுநாள் காலையில் வியாசர் வருவாரென்று முந்தைய நாள் இரவு சுதன் வந்து செய்தியறிவித்தபோதே சத்யவதி நிலைகொள்ளாமல் அரண்மனைக்குள் உலவத்தொடங்கிவிட்டாள். குளிருக்கு வைக்கும் செம்புக்கணப்பு போல உள்ளூர கனல் இருந்துகொண்டிருந்தது. சியாமையிடம் “கிருஷ்ணன் தங்குவதற்கான இடத்தை அமைத்துவிட்டார்களல்லவா?” என்றாள். “தாங்கள் முதலில் சொன்னதுமே அதைச்செய்துவிட்டோம் பேரரசி” என்றாள் சியாமை.

“அவன் அரண்மனையில் தங்குவதில்லை. ஓடும் நீரில் மட்டுமே நீராடுவான். ஒவ்வொருநாளும் உதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்க்கும் இடம் அவனுக்குத்தேவை…” என்றாள். “அதையும் முன்னரே சொல்லிவிட்டீர்கள் தேவி” சியாமை புன்னகையுடன் சொன்னாள்.

அவளால் அந்தப்புரத்தில் இருக்கமுடியவில்லை. படுத்தால் அவளுக்குள் ஒரு வில் நாணேறி நிற்பதாகப்பட்டது. நிற்கும்போது மட்டுமே அந்த வில்லை சமன்செய்யமுடிந்தது. நின்றிருக்கையில் அகத்தில் வேகம் அதிகரித்து புறம் நிலையாக நின்றது. ஆகவே நடந்தாள். அரண்மனையின் உபகோட்டங்களிலும் புறக்கோட்டங்களிலும் நடந்தாள். அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சேடியர் அவளைக்கண்டதும் பாய்ந்தெழுந்தனர்.

“அனைத்தும் ஒருங்கமைக்கப்பட்டுவிட்டன அல்லவா?” என்றாள். “ஆம் அரசி” என்றாள் பதுமை. “இங்கே அவன் வரும்போது எந்தப்பெண்ணும் எதிரே வரக்கூடாது. இங்கே பிறழ்வொலிகள் எதுவும் எழலாகாது” என்றாள். அவர்கள் மிரண்ட விழிகளுடன் தலைவணங்கினர். அந்தக்கட்டளை அவர்களுக்கு பலநூறுமுறை அளிக்கப்பட்டுவிட்டிருந்தது.

அறியாத யட்சி ஒருத்தி தன் தோளில் அவளைத் தூக்கிக்கொண்டு அலைவதுபோலிருந்தது. அரண்மனைத் தூண்களெல்லாம் விறைத்து நிற்பதுபோல, சுவர்கள் திரைச்சீலைகளாக மாறி அலையடிப்பதுபோல, கூரை அந்தரத்தில் பறந்து நிற்பதுபோல. இரவு துளித்துளியாக தேங்கித் தயங்கிச் சொட்டியது. வெளியே அறுபடாத நீண்ட சில்வண்டு ஒலியில் அத்தனை ஒலிகளும் கோர்க்கப்பட்டிருந்தன. மௌனமாக வந்து முகர்ந்துநோக்கும் கரடிபோல கரியவானம் அரண்மனைமுகடில் மூக்கு சேர்த்து வெம்மூச்சுடன் குனிந்திருந்தது.

“சியாமை சியாமை” என்றழைத்தாள் சத்யவதி. “அரசி!” என்று வந்தவளை வெறுமே நோக்கிக்கொண்டிருந்தாள். யமுனைக்கரையில் இருந்து அவளுடனேயே வந்த சியாமை அவளைவிட மூன்றுவயது மூத்தவள். கரியவட்டமுகமும் கனத்த உடலும் கொண்டவள். கருநிற அரக்குபூசப்பட்ட உடல் கொண்ட கனத்த நாவாய் போல மெல்ல திரும்புபவள். சத்யவதி “ஒன்றுமில்லை”என்றாள்.

பின்னிரவில்தான் அவள் அதுவரை இரு இளவரசிகளைப்பற்றி எண்ணவேயில்லை என்ற நினைப்பு வந்தது. அவர்களை தன் கைவிரல்கள் போல அன்றி அவள் நினைத்ததேயில்லை. எழுந்து சால்வையைப் போட்டுக்கொண்டு மீண்டும் புறக்கோட்டம் சென்றாள். அங்கே தூண்களில் நெய்யகல்களும் அவற்றின் ஒளியைப்பெருக்கும் உலோக ஆடிகளும் சேர்ந்து பெரிய கொன்றைமலர்க்கொத்துக்களாக ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. தூண்நிழல்கள் நாகங்களாக அறைக்குமேல் எழுந்து கூரைமேல் வளைந்திருந்தன. புறக்கோட்டத்து உள்ளறையில் இருந்து முதியசேடி ஒருத்தி கையில் ஆவிபறக்கும் ஸ்வேதன தளிகையுடன் வந்து சத்யவதியைப்பார்த்து திகைத்து நின்றாள்.

“அரசியர் எப்படி இருக்கிறார்கள்?” என்றாள் சத்யவதி. “மூத்த அரசி இன்னமும் படுக்கையிலேயே இருக்கிறார்கள். நரம்புகள் அதிர்ந்துவிட்டன என்று வைத்தியர் சொன்னார். இப்போதுதான் ஸ்வேதனம் செய்தோம். அரிஷ்டம் கொடுத்து தூங்கவைத்திருக்கிறோம்” என்றாள். “சிறியவள்?” என்றாள் சத்யவதி. “அவர் நேற்றே சரியாகிவிட்டார். மூத்தவரின் துயரத்தைக் கண்டு சற்று அழுகிறார், அவ்வளவுதான்.”

செல்லும்படி தலையை ஆட்டி ஆணையிட்டுவிட்டு சத்யவதி உள்ளே சென்றாள். அறை இருண்டிருந்தது. ஒரே ஒரு நெய்யகலில் செம்முத்துபோன்ற சுடர் அசையாமல் நிற்க வெண்பட்டுப்படுக்கையில் மழைநீர்சொட்டி கலைந்த வண்ணக்கோலம்போல அம்பிகை கிடப்பதைப்பார்த்தாள். கண்களுக்கு இருபக்கமும் கண்ணீர் வழிந்து உப்புவரியாகி கோடையில் மலைப்பாறையில் அருவித்தடம்போல் தெரிந்தது. சிறிய உதடுகள் குவிந்து உலர்ந்து ஒட்டியிருக்க, உதடுகளின் இருபக்கமும் ஆழமான கோடுகள் விழுந்திருந்தன. ஸ்வேதனரசத்தின் பசையால் கூந்தலிழைகள் நெற்றியிலும் கன்னங்களிலும் ஒட்டியிருந்தன. பார்த்து நின்றபோது அறியாமல் சத்யவதி நெஞ்சில் ஓர் எண்ணம் எழுந்தது. இவ்வளவு துயர் கொள்ளுமளவுக்கு அவனிடம் எதைக்கண்டாள் இவள்?

விசித்திரவீரியனை எவரும் மறக்கமுடியாதென்று அவளுக்குத் தெரியும். விரல்நுனியில் ஒற்றியெடுத்த பனித்துளி என அவனை அவள் எப்போதும் நினைத்திருந்தாள். நிலையற்று ஒளிவிடுபவன், தூயவன், அரியவன். அகம் பதறாமல் அவனிடம் பேசமுடிந்ததில்லை அவளால். ஆனால் அவள் அவனை அறியவே இல்லையோ என்று அப்போது தோன்றியது. அவனை முதன்முதலாக அறிந்தவள் இவள்தானா? இவள்மட்டும்தான் இனி இவ்வுலகில் அவனை நினைத்திருக்கப்போகிறாளா? மலைச்சரிவில் பிளந்து சரிந்து சென்ற பாறையின் எஞ்சிய குழித்தடம்போல இவள் மட்டும்தான் இனி காலகாலமாக அவனை சொல்லிக்கொண்டிருப்பாளா?

அவளுக்குத் தோன்றியது, அவள் அப்படி எந்த ஆணிடமும் உணர்ந்ததில்லை என. அவள் உள்ளறைகள் வரை வந்து எந்தக்காற்றும் திரைச்சீலைகளை அசைத்ததில்லை. தீபத்தை நடனமிடச் செய்ததில்லை. அவளுக்குள் விசித்திரவீரியனின் புன்னகைக்கும் முகம் என்றும் இருந்தது. மூடப்பட்ட கோயில் கருவறைக்குள் இருளில் இருக்கும் தெய்வம் போல. ஆனால் விசித்திரவீரியனுக்காகக் கூட அவள் தன்னிலை இழக்கவில்லை.

மெல்லிய பொறாமை எழுந்தது. பேரிழப்பு என்பது பெரும் இன்பத்தின் மறுபக்கம் அல்லவா? வைரத்தை வைக்கும் நீலப்பட்டுமெத்தை அல்லவா அது? இந்தப்பெண் அறிந்திருக்கிறாள். இந்த வைரத்தை ரகசியமாக தனக்குள் வைத்திருப்பாள். வாழ்நாளெல்லாம் அந்தரங்கமாக எடுத்துப் பார்த்துக்கொண்டே இருப்பாள். பார்க்கப்பார்க்கப் பெருகுவது வைரம்.

உடல் சற்றே பதறியதனால்அங்கே நின்றிருக்க அவளால் முடியவில்லை. திரும்பி நடந்தபோது இவளிடம் எப்படி வியாசனின் வருகையைப்பற்றிச் சொல்வது என்ற எண்ணம் எழுந்தது. அவளுக்குள் அழகிய சிறு தடாகமொன்றிருக்கிறது. அதை அவள் கலக்கி சேறாக்கவேண்டும். அதில் மலர்ந்திருக்கும் ஒற்றைத்தாமரையை மூழ்கடிக்கவேண்டும்.

VENMURASU_EPI_30__
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

தன் அறைக்குள் வந்து படுத்துக்கொண்டபோது சத்யவதி நெஞ்சின் படபடப்பை உணர்ந்தாள். ஏன் என கேட்டுக்கொண்டாள். நிலைகொள்ளாதவளாக தன் படுக்கையில் அமர்ந்தாள். எந்தக்காரணமும் இல்லாமல் பேரச்சம் வந்து தொட்டதுபோல அதிர்ந்து தன் இதயத்தை கேட்டுக்கொண்டிருந்தாள். பின்பு எழுந்து “சியாமை! சியாமை!” என்றாள். மௌனமாக வந்து நின்ற சியாமையிடம் “ரசம்” என்றாள்.

சோமக்கொடி போட்டு காய்ச்சியெடுத்த புதுமணம் கொண்ட திராட்சைமதுவை பொற்கிண்ணத்தில் கொண்டுவந்து வைத்தாள் சியாமை. சத்யவதி அதை எடுத்து மெல்லக்குடித்தபடி இருளையே பார்த்துக்கொண்டிருந்தாள். எப்போதும் இருளைப்பார்த்துக்கொண்டுதான் மதுவை அருந்துவாள், அவ்விருளின் துளி ஒன்றை தன்னுள் ஏற்றிக்கொள்வது போல, உள்ளே விரிந்துபரவும் ஒளிக்குமேல் இருளைப்பரப்புவதே அதன் பணி என்பதுபோல.

நீர்ச்சுனைகளுக்கு அருகே நீரோடும் பசுங்குழாயெனக் கிடக்கும் சோமச்செடி. அதற்கு நீராழத்தின் வாசனை. நீரிலிருந்து ஆழத்தை மட்டும் எடுத்து சேர்த்துக்கொள்கிறது. நிழல்களாடும் ஆழம். அடித்தட்டின் பல்லாயிரம் மென்சுவடுகள் பதிந்த மௌனம். சோமம் உடலுக்குள் ஒரு காட்டுக்கொடியை படரவிடுகிறது. நரம்புகளில் எங்கும் அது தளிர்விட்டுப் பரவுகிறது.

தலை சற்று ஆடியபோது படுக்கையில் படுத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டாள். சியாமை வெண்சாமரத்தை மெல்ல வீசிக்கொண்டிருந்தாள். அறைக்குள் இருந்த தூபக்கடிகை அந்தக் காற்றால் வாய்சிவந்து புகையத் தொடங்கியது. கையசைத்து சியாமையை போகச்சொன்னாள். கண்களை மூடிக்கொண்டபோது மஞ்சம் மெல்ல கீழிறங்குவதுபோலத் தோன்றியது. அது இருளுக்குள் விழுந்து பாதாளத்துக்குச் சென்றுவிடும் என்பதுபோல.

திடுக்கிட்டு எழுந்துகொண்டாள். “சியாமை” என்றாள். வாசலருகே நின்றிருந்தாள் போல. உள்ளே வந்து அசையாமல் நின்றாள். முகத்துக்குமேல் வெண்நரைக்கூந்தலை எடுத்துக்கட்டியிருந்தாள், கருகிய கலத்துக்குமேல் வெண்சாம்பல் போல. சத்யவதி அவளையே பொருளில்லாமல் சிறிதுநேரம் பார்த்துவிட்டு “அமர்ந்துகொள்” என்றாள். ஆடையைச் சுருட்டியபடி கனத்த கால்களை மடித்து சியாமை தரையில் அமர்ந்துகொண்டாள்.

சத்யவதி எழுவதற்கு முயன்றபோது தலை கருங்கல் போல தலையணையை விட்டு மேலெழ மறுத்தது. பக்கவாட்டில் புரண்டு “சியாமை, நான் மச்சகந்தியாக இருந்த நாட்கள் முதல் என்னை அறிந்தவள் நீ சொல், நான் ஏன் இப்போது இப்படி நிலையழிந்திருக்கிறேன்?” என்றாள்.

சியாமை சிலகணங்கள் கூர்ந்துநோக்கியபின் “நீங்கள் சித்ராங்கதனை நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்றாள். அதிர்ந்து சற்று புரண்டு “இல்லை, இல்லை, நான் அவனை நினைக்கவில்லை” என்றாள் சத்யவதி. “ஆம், அவரை நினைக்காமலிருக்க வேறெதையோ நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” சியாமை சொன்னாள்.

சத்யவதி பெருமூச்சு விட்டாள். பிறகு “ஆம்” என்றாள். சிறிதுநேரம் இருளின் ஒலி அவர்களுக்கிடையே நீடித்தது. “சியாமை அவனை நான் கொன்றேன் என்று சொல்லலாமா?” என்றாள் சத்யவதி. சியாமை “ஆம் பேரரசி, அது உண்மை” என்றாள். “ஆனால் சிலசமயம் தாய் குட்டிகளில் ஒன்றை கொன்றுவிடுவதுண்டு.”

சத்யவதி பிரமித்த கண்களுடன் அரண்மனைமுகட்டின் மரப்பலகைத் தளத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்விழிகள் கோணலாகி இருந்தன. உத்தரங்கள் நீர்ப்பிம்பங்களாக நெளிந்தன. சிலகணங்கள் கழித்து “குட்டிகளில் மிகச்சிறந்ததை அதற்காகத் தேர்ந்தெடுக்குமோ?” என்றாள். “இல்லை பேரரசி… குட்டிதான் அந்த மரணத்தை தேர்ந்தெடுக்கிறது.” சத்யவதி திடுக்கிட்டு “ஆம்” என்றாள். சியாமை “இல்லையேல் அது அன்னையை கொன்றிருக்கும்” என்றாள்.

சத்யவதி தலையைத்திருப்ப முயன்றாள். கழுத்துக்கும் தலைக்கும் தொடர்பே இருக்கவில்லை. “அவனைக் கருவுற்ற நாட்களில் நான் எப்போதும் கனவில் இருந்தேன்…” என்றாள். “கனவும் நனவும் கலந்துபோன நிலை”

“ஆம் பேரரசி, நீங்கள் ஒரு கந்தர்வனை கனவுகண்டீர்கள். யமுனையின் அடியில் நீர்க்குமிழிகள் கோள்களாகப் பறக்க கத்ருவைப்போல நீங்கள் நீந்திச் சென்றுகொண்டிருக்கையில் அவன் பொன்னிற அடிப்பரப்பில் பேரழகு கொண்ட உடலாக மல்லாந்து கிடப்பதைக் கண்டீர்கள். இளமை என்றும் ஆண்மை என்றும் வீரியம் என்றும் பிரம்மன் நினைத்தவை எல்லாம் கூடிய ஆணுடல். கன்று என்றும் காளை என்றும் ஆனவன்” சியாமை சொன்னாள்.

“ஆம்…அவன் பெயர் சித்ராங்கதன் என்று சொன்னான்” என்றாள் சத்யவதி. கனத்த உதடுகள் சரிவர அசையாமையால் குழறிய குரலில் கனவில் பேசுவதுபோல. “அவன் ஒருமுறைதான் காட்சியளித்தான். ஒருமுறைதான் என் கண்ணைப்பார்த்து நீ பெண் என்று சொன்னான்” என்றாள்.

“நீங்கள் சித்ராங்கதனின் மோகத்தை மட்டுமே அறிந்தீர்கள் பேரரசி. முதிய பராசரனில் முதிய சந்தனுவில்… அவன் உடலைக்காண யமுனைக்கு சென்றுகொண்டே இருந்தீர்கள்…”  “ஆம்” என்றாள் சத்யவதி. “பிறகெப்போதும் நான் அவனைக் காணவில்லை.”

“அவன் கன்னியருக்கு மட்டுமே காட்சியளிப்பவன்” என்றாள் சியாமை. “ஆம், ஆனால் எந்தப் பெண்ணுக்குள்ளும் இருந்து ஒரு கன்னி ஏங்கிக் கொண்டிருக்கிறாள் அல்லவா?” என்று சத்யவதி சொன்னாள். சியாமை “தெய்வங்கள் இரக்கமற்றவை தேவி. அவை விதிகளை உருவாக்கி அவற்றால் தங்கள் கைகளை கட்டிக்கொள்கின்றன.” பெருமூச்சுடன் சத்யவதி “ஆம், அதிகாரம் இரக்கமின்மையில் இருந்து பிறப்பது. தெய்வங்கள் அளவற்ற அதிகாரம் கொண்டவை” என்றாள்.

“முதல் குழந்தை பிறந்தபோது ஈற்றறையில் நானும் இருந்தேன்” என்றாள் சியாமை. “குழந்தையை மருத்துவச்சி தூக்கியதுமே நீங்கள் திரும்பி சித்ராங்கதன் எங்கே என்று கேட்டீர்கள். அது ஆணாபெண்ணா என்றுகூட நாங்கள் பார்த்திருக்கவில்லை” சியாமை சொன்னாள். சத்யவதி முகம் மலர்ந்து “எவ்வளவு இனிய பெயர் இல்லையா சியாமை? சித்திரம்போன்ற அங்கங்கள் கொண்ட பேரழகன்…”

சியாமை “ஆனால் மண்ணில் எந்த மனிதனும் கந்தர்வன் அல்ல பேரரசி…” என்றாள். “முழுமையை தெய்வங்கள் தங்களிடமே வைத்திருக்கின்றன. மனிதர்களுக்கு அளிப்பதேயில்லை” என்றாள்.

பின்பு நெடுநேரம் அவர்கள் நடுவே அமைதி ஓடிக்கொண்டிருந்தது. சத்யவதி பளிங்குத்தரையில் பாம்புபோல நெளிந்த குரலில் “கந்தர்வர்களைப் பார்க்கும் பெண்கள் முன்னரும் இருந்ததில்லையா சியாமை?” என்றாள். “பேரரசி, கந்தர்வனை ஒருமுறையேனும் காணாத பெண்கள் எவரும் இல்லை. மண்ணுலகை விட பன்னிரண்டாயிரம்கோடி மடங்கு பெரிதான கந்தர்வலோகத்தில் ஒவ்வொரு கன்னிக்கும் ஒரு கந்தர்வன் இருக்கிறான்…கோடானுகோடி கந்தர்வர்களுக்கான பெண்கள் இன்னமும் பிறக்கவேயில்லை” என்றாள் சியாமை.

“ஆனால் கந்தர்வர்கள் மிகமிக அந்தரங்கமாகவே வந்துசெல்கிறார்கள். அவர்கள் வந்து சென்ற மனம் மேகங்கள் சென்ற வானம்போல துல்லியமாக எஞ்சும்…” என்றாள் சியாமை. “ஆனால் முன்னொருகாலத்தில் ரேணுகாதேவி கண்ட கந்தர்வனை அவள் கணவனும் காணநேர்ந்தது” என்றாள்.

சத்யவதி ஒருக்களித்து தலையைத் தூக்கி “ரேணுகையா?” என்றாள். “ஆம் அரசி, பிருகுமுனிவரின் குலத்தில் வந்த ஜமதக்னி என்னும் முனிவரின் மனைவி அவள்” என்றாள் சியாமை. “நான் கேட்டிருக்கிறேன். ஆனால் நினைவில் எழவில்லை அந்தக்கதை” என்றாள் சத்யவதி.

வேசரநாட்டில் மாலப்பிரபா என்னும் ஆற்றின்கரையில் வெண்மணல் விரிந்த நிலமொன்றிருந்தது. ஆகவே மணல்நாடு என்று அதற்குப் பெயர். ரேணுநாட்டை ஆண்ட மன்னன் ரேணுராஜன் எனப்பட்டான். அவன் மகள் ரேணுகாதேவி. ரேணுராஜன் செய்த வேள்வியில் எரிந்த நெருப்பில் ரேணுகாதேவி பிறந்தாள் என்று சியாமை சொல்ல ஆரம்பித்தாள்.

வேள்விநெருப்பில் ஒரு பெண் பிறந்ததை அறிந்த அகத்தியரே ரேணுகையைப்பார்க்க வந்தார். அவர் அவளுடைய பிறவிநூலைக் கணித்து அவள் அனலுக்கு அதிபனாகிய முனிவர் ஒருவருக்கு மனைவியாவாள் என்றார். ரேணுராஜன் அத்தகைய முனிவருக்காகக் காத்திருந்தான். ஆணழகர்களும் மாவீரர்களுமான அரசர்களுக்குக் கூட அவளை அவன் அளிக்கவில்லை.

ஒருநாள் அங்கே ஜமதக்னி என்னும் முனிவர் வந்து சேர்ந்தார். சொற்களைக் கொண்டே வேள்விக்குளத்தில் நெருப்பை எழுப்பும் வல்லமை கொண்டிருந்தார் அவர். அவரது ஆசியை வேண்டிய ரேணுராஜன் மகளை ஜமதக்னி முனிவருக்கு மணம்செய்துகொடுத்தான். அரசனுக்கு மூன்று வரங்களை அளித்தபின் அவர் அவளை மணம்கொண்டார்.

ருசிகமுனிவருக்கும் சத்யவதிக்கும் பிறந்து உடலுருக்கும் கடுந்தவத்தால் விண்நெருப்பையும் வெல்லும் தவவல்லமைபெற்ற ஜமதக்னி முனிவருக்கு அவளை ரேணுராஜன் கையளித்தபோது ரேணுகை அவரை நிமிர்ந்துபார்க்கவே அஞ்சினாள். கணவருடன் அவள் மாலப்பிரபா ஆற்றின் கரையில் தவக்குடிலில் வாழ்ந்த வாழ்க்கையை நோன்பு என்றே நினைத்துக்கொண்டாள்.

ரேணுகாதேவிக்கு ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். பிருஹத்யனு, பிருத்வகன்வன், வசு, விஸ்வவசு, ராமபத்ரன் என்ற ஐவரில் இளையவனாகிய ராமன் வீரத்தாலும் பேரழகாலும் அன்னைக்கு பிரியமானவனாக இருந்தான். தந்தைக்கு வேள்விக்கு விறகு வெட்ட மழுவுடன் காட்டுக்குச் சென்றவன் அந்த மழுவை தன் ஆயுதமாகக் கொண்டான். ஆகவே பரசுராமன் என்றே அழைக்கப்பட்டான்.

மைந்தரில் பரசுராமனே அன்னையின் பிரியத்துக்குரியவனாக இருந்தான். அவளுடைய ஆண்வடிவம் போல. அவள் தந்தையின் மழலைத்தோற்றம் போல. ஒவ்வொருநாளும் அவனழகைக் கண்டு அவள் மகிழ்ந்தாள். பேரரசியே பிள்ளையழகையும் தீயின் அழகையும் கண்டு நிறைவுற்றவர் யாருமில்லை.

நோன்பே வாழ்வாக வாழ்ந்த ரேணுகை ஒவ்வொரு நாளும் மாலப்பிரபா ஆற்றுக்குச் சென்று மணலைக்கூட்டி தன் தாலியைக் கையில் பற்றி மந்திரம் சொல்லி அதை ஒரு குடமாக ஆக்குவாள். அக்குடத்தில் நீரும் மலரும் கொண்டுவந்து கணவனுக்கு பூசைக்களம் அமைப்பாள். அவள் தவக்கற்பாலேயே அந்த மணல் குடமாகியது.

ஒருநாள் ஆற்றுநீரில் நீராடி கரைவந்து மணல் அள்ளி தாலியை கையில் எடுத்து மந்திரம் சொன்ன ரேணுகாதேவி வானில் பறந்த கந்தர்வன் ஒருவனின் நிழலை நீரில் கண்டாள். தாலி கைநழுவிய வேளை பாதிசமைந்த குடம் மீண்டும் மணலாகியது. அஞ்சிப்பதறி அவள் மணலை அள்ளி அள்ளிக் குடமாக்கமுனைய அது சரிந்து கொண்டே இருந்தது.

தேவி கண்ணீருடன் தன் தவக்குடில் மீண்டாள். பூசைக்கு வந்த ஜமதக்னி முனிவர் “எங்கே என் வழிபாட்டு நீர்?” என்றுகேட்டார். கைகூப்பி தேவி கண்ணீருடன் அமைதி காத்தாள். தன் தவவல்லமையால் விண்ணில் பறந்த அந்த கந்தர்வனை முனிவர் தன் அகக்கண்ணில் கண்டார். சினம்கொண்டு எரிந்தபடி ஐந்து மைந்தரையும் அழைத்து “நெறி பிறழ்ந்த இவள் அழிக! இக்கணமே இவள் கழுத்தை வெட்டுக!” என்றார். “தாயைக்கொல்லும் பெரும்பாவம் செய்யமாட்டோம், உங்கள் சினத்தால் எரிந்து சாம்பலாவதையே ஏற்கிறோம்” என்று சொல்லி நான்குபிள்ளைகளும் பின்னகர்ந்தனர்.

சத்யவதி விழித்த கண்களுடன் சியாமையையே பார்த்தபடி கிடந்தாள். “ஐந்தாவது மகன் முன்னால் வந்து உடைவாளை உருவினான். அன்னைக்குப் பிரியமான அவன் கண்களைப் பார்த்தாள். அவன் வாளை ஓங்கி அவள் கழுத்தை வெட்டி வீழ்த்தினான்” என்றாள் சியாமை.

சத்யவதி கண்ணீருடன் கண்களை மூடிக்கொண்டாள். இமைகளை மீறி கண்ணீர் இருபக்கமும் வழிந்துகொண்டிருந்தது. சத்யவதியின் நெஞ்சு எழுந்து தணிய ஒரு விம்மலெழுவதை சியாமை கேட்டாள்.

“சித்ராங்கதனை என் மைந்தன் கண்டுவிட்டான் என்கிறார்களே உண்மையா சியாமை?” என்றாள் சத்யவதி அழுகை கனத்துத் ததும்பி மழைக்காலக் கிளைபோல ஆடிய குரலில். சியாமை பதில் சொல்லவில்லை. “சொல் சியாமை, அவன் அந்த கந்தர்வனை சந்தித்தானா?”

சியாமை பெருமூச்சுடன் “அவர் ஆயிரம் ஆடிகளில் அவனைத் தேடிக்கொண்டிருந்தார் தேவி” என்றாள். “ஆம், ஆடி அவனை அடிமைகொண்டிருந்தது” என்றாள் சத்யவதி. சியாமை மெல்ல “ஆடிகள் வழியாக மெல்லமெல்ல சித்ராங்கதன் மன்னரை நோக்கி வந்துகொண்டிருந்தான்” என்றாள்.

“அவன் கண்டிருப்பான்” என்றாள் சத்யவதி. “இல்லையேல் எதற்கும் பொருளே இல்லை.” சியாமை “அவர் சித்ராங்கதனின் முழுமையை நெருங்கியபோது அவன் வந்து அவரை போருக்கு அழைத்தான் என்கிறார்கள். ஒரு சித்ராங்கதன்தான் இருக்கமுடியும் என்றும் நீ என்னைப்போலானால் நான் வாழமுடியாது என்றும் அவன் சொன்னான். மண்ணில் ஒருகணமும் கந்தர்வ உலகில் ஓராயிரம் வருடங்களும் அந்தப்போர் நடந்தது. இறுதியில் அவன் அவரை தன்னுள் இழுத்து தன் ஆழத்தில் கரைத்துக்கொண்டான் என்று சூதர்கள் பாடுகிறார்கள்” என்றாள்.

சத்யவதி “நாளை காலை கிருஷ்ணன் வருகிறான்” என்றாள். “அவர் சித்ராங்கதனைக் கண்டவர்” என்றாள் சியாமை சாதாரணமாக. “யார்?” என்றாள் சத்யவதி. அவள் நெஞ்சு அந்தப் பேரச்சத்தை மீண்டும் அடைந்தது. “காவியம் ஒரு மாபெரும் ஆடி” என்று விழிகள் எதையும் சொல்லாமல் விரிந்து நின்றிருக்க சியாமை சொன்னாள். “நீங்கள் அஞ்சுவது அவரைத்தான்.”

“நான் அவனை அஞ்சவேண்டுமா? அவன் என் மகன்…” என்றாள் சத்யவதி. “ஆம், அதனால்தான் அஞ்சுகிறீர்கள்” என்றாள் சியாமை. “சியாமை, இவ்வளவு குரூரமாக இருக்க எப்படி கற்றாய்?” என்று சத்யவதி கேட்டாள். “நான் தங்கள் ஆடிப்பாவை அல்லவா தேவி? ஆடிகளைவிட குரூரமானவை எவை?”

சத்யவதி பின்பு கண்களைமூடி நெடுநேரம் படுத்திருந்தாள். அசையாமல் அவளை நோக்கியபடி சியாமை அமர்ந்திருந்தாள். பின்பு “சியாமை, கிருஷ்ணன் எப்படி சித்ராங்கதனை முதலில் கண்டான்?” என்றாள். அதன்பின் பெருமூச்சுடன் “ஆம், அவன் அனைத்தையும் காண்பவன்” என்றாள்.

சியாமை “யமுனைத்தீவில் அழகற்ற கரியகுழந்தையை மணலில் போட்டு குனிந்து பார்த்தபோது உங்கள் கண்களை அதுவும் பார்த்திருக்கும்” என்றதும் “சீ வாயை மூடு!” என்று கூவியபடி சத்யவதி எழுந்து அமர்ந்தாள். சியாமை அவளைப்பார்த்தபடி இரு கண்களும் இரு அம்புநுனிகள் போல குறிவைத்து நாணேறி தொடுத்துநிற்க பேசாமலிருந்தாள்.

அதன்பின் சத்யவதி அப்படியே படுக்கையில் விழுந்து “ஆம்! ஆம், உண்மை” என்று விசும்பினாள். “அவன் அறிவான். சியாமை இது அவனது தருணம்…..என் குலத்தில் இனி என்றும் வாழப்போவது அவனுடைய அழகின்மை” என்றாள். மது மயக்கத்துடன் தூவித்தலையணையில் முகம் புதைத்து “ஆம், அதைத்தான் அஞ்சினேன்…” என்றாள். சற்றுநேரம் கழித்து சியாமை மெல்ல எழுந்து கதவுகளை மூடிவிட்டு வெளியேறினாள்.

மறுநாள் காலை சூதர்களும் வைதிகர்களும் மங்கலவாத்தியக்குழுவும் சூழ வியாசரின் ரதம் வருவதை எதிர்பார்த்து அரண்மனை முகமண்டபத்தில் நின்றுகொண்டிருக்கையில் சத்யவதி அருகே நின்ற சியாமையின் கண்களைப் பார்த்தாள். மிகமெல்ல, உதடுகள் மட்டும் அசைய “ரேணுகையின் கந்தர்வனின் பெயரென்ன?” என்றாள். சியாமை அதைவிட மெல்ல “பரசுத்துவஜன்” என்றாள்.

நூல் ஒன்று – முதற்கனல் – 29

பகுதி ஆறு : தீச்சாரல்

[ 3 ]

வியாசவனத்தின் தெற்குமூலையில் சித்ரகர்ணி கண்களும் பிரக்ஞையும் மட்டும் உயிருடனிருக்க இறந்துகொண்டிருந்தது. அதன் உறுமல்கள் அதன் வயிற்றுக்குள் ஒலிக்க, மனதுக்குள் மூடுண்ட அறைக்குள் சிக்கிக்கொண்ட வௌவால் போல பிரக்ஞை பரிதவித்துக்கொண்டிருந்தது. அதன் பின்னங்கால்களை கழுதைப்புலிகள் நான்கு கடித்து இழுத்து தின்றுகொண்டிருந்தன. வெள்ளை எலும்புகள் நடுவே உயிருடனிருந்த தசைநார் புழுப்போல அதிர்ந்து அதிர்ந்து துடிக்க அந்தக்கால் மட்டும் இழுத்து இழுத்து அசைந்தது. சித்ரகர்ணி குப்புறவிழுந்திருந்ததனால் கழுதைப்புலிகள் அதன் அடிவயிற்றையோ இதயத்தையோ கிழிக்க முடியவில்லை.

குஹ்யஜாதை என்ற கழுதைப்புலி தன் நான்கு குட்டிகளுடன் வந்திருந்தது. கழுதைப்புலிகளை அழைத்துவந்தது அதுதான். ஏழுநாட்களாக அது உணவேதும் உண்டிருக்கவில்லை. குட்டிகளுக்கு மூன்றுநாட்களுக்கு முன்னரே பால் தீர்ந்துவிட்டிருந்தது. குட்டிகளை பாறைப்பொந்துக்குள் விட்டுவிட்டு பெரிய முன்னங்கால்களை வேகமாகத் தூக்கிவைத்து பசித்துத் திறந்த வாயை முன்னால் நீட்டி பெரிய செவிகளைக் கூர்ந்து அது காட்டுக்குள் தாவித்தாவி ஓடியது. ஒரு சிற்றோடையைத் தாண்டியபோது குஹ்யஜாதை குருதியின் வாசனையைக் கண்டுகொண்டது. மெல்லக் காலடி எடுத்துவைத்து புதர்கள் வழியாக வந்தபோது சிம்மத்தின் அலறலையும் புலிகளின் உறுமல்களையும் கேட்டது.

புதர்களுக்குள் இருந்து எட்டிப்பார்த்த குஹ்யஜாதை செம்புல்பரவிய குன்றுபோன்ற பெரிய சிம்மத்தை இரு சிறுத்தைகள் தாக்குவதைக் கண்டது. நாக்கை வாய்க்குள் துழாவியபடி பின்னங்கால்களில் அமர்ந்து கவனிக்கத் தொடங்கியது. சிம்மம் இருபக்கமும் சுழன்று சுழன்று சிறுத்தைகளை தன் பெரிய கைகளால் அடிக்க முயன்றது. வாய்திறந்து வெண்பற்களைக் காட்டிச் சீறியும் பின்னங்கால்களில் அமர்ந்து சீறி காலோங்கியும் சிறுத்தைகள் போர்புரிந்தன. பின்னர் ஒரு சிறுத்தை சிம்மத்தின் வலப்பக்கம் பார்வையில்லை என்பதைக் கண்டுகொண்டது. புதர்களுக்குள் நான்குகால்களையும் நிலத்தில் பதித்துப் பதுங்கி மெல்ல ஊர்ந்து சென்ற அது உரத்த ஒலியுடன் பாய்ந்து சிம்மத்தின் கழுத்தை கவ்விக்கொண்டது. சிம்மம் அதை உதறமுயன்று பெருங்குரலெழுப்பி சுழல சிறுத்தை பிடியை விடாமல் காற்றில் சுற்றியது.

இரண்டாவது சிறுத்தை உறுமியபடி சிம்மத்தை நெருங்கியதும் அது இடக்கையால் ஓங்கி அறைந்தது. சிறுத்தைப்புலி தெறித்து புல்லில் விழுந்து எழுந்தோடியது. கடித்துத் தொங்கிய சிறுத்தை தன் பிடியை விடவேயில்லை. பலமுறை சுழன்றபின் சிம்மம் தன் ஆற்றலை இழந்து கால்கள் தள்ளாடி பக்கவாட்டில் சரிந்தது. உடனே கவ்வலை விட்டுவிட்டு சிறுத்தை பாய்ந்து மறுபக்கம் ஓடி காட்டுக்குள் சென்றது. சிம்மம் பலமுறை எழமுயன்றது. உரத்த குரலில் கர்ஜித்தபடி கால்களால் நிலத்தை பிராண்டியது. எழுந்து சில அடிகள் வைத்து மீண்டும் விழுந்தது. மீண்டும் எழுந்து மேலும் சில அடிகள் வைத்து கீழே விழுந்தது.

குஹ்யஜாதை அடிமேல் அடிவைத்து அதை அணுகியது. சிம்மம் மயக்கத்தில் சற்று உறுமியபோது அஞ்சிப்பின்னடைந்து மீண்டும் நெருங்கி விடைத்த காதுகளும் கூரியநாசியுமாக அருகே சென்றது. சிம்மம் கால்களை ஒருமுறை உதைத்துக்கொண்டபோது ஓடி புதரை அடைந்தபின் மீண்டும் வந்தது. மெல்லிய மூச்சொலியுடன் காற்றில் உலைந்த பிடரிமயிருடன் கழுத்தில் குருதி வழிந்து முன் தொடைமேல் வடிய சிம்மம் கிடந்தது. குஹ்யஜாதை அருகே சென்று மெல்லிய நாக்கை நீட்டி அந்தக் குருதியை நக்கியது. அதற்குள் இருந்த அதுவே அறியாத ஒன்று எழுந்து அதன் உடலெங்கும் மயிர்கூச்செறிவாக வெளிப்பட்டது. பின்னங்கால்களில் அமர்ந்து வாயை மேலே தூக்கி உரத்தபெண்குரல் சிரிப்பு போல ஒலியெழுப்பத் தொடங்கியது.

அதைக்கேட்டு நான்குபக்கமும் புதர்களிலிருந்து பல கழுதைப்புலிகள் எம்பி எம்பி குதிப்பவைபோல ஓடிவந்தன. முதல் கழுதைப்புலி வந்தவேகத்திலேயே சிம்மத்தின் வாலைக் கவ்வியது. அந்தவலியில் விழித்துக்கொண்ட சிம்மம் திரும்ப முயல அத்தனை கழுதைப்புலிகளும் ஒரேசமயம் அதை கவ்விக்கொண்டன. அனைத்தையும் தூக்கியபடி சிம்மம் எழுந்து நின்று உதறிக்கொண்டு நிலையழிந்து பக்கவாட்டில் விழுந்தது. குஹ்யஜாதை அந்தக் குருதிவழிந்த புண்ணை ஆழமாகக் கடித்து சதையைப் பிய்த்து எடுத்து உண்டது. குருதியை ஏற்று அதற்குள் வாழ்ந்த தேவன் ’வாழ்க!’ என்றான்.

மேலும் நான்குமுறை கடித்து உண்டபின் குஹ்யஜாதை ஓடிச்சென்று அருகே இருந்த சிறிய பாறைமேல் ஏறி நின்று தன் குழந்தைகளை அழைத்தது. குழந்தைகளில் மிக புத்திசாலியும் துடிப்பானவனுமான மூன்றாவது மகன் குஹ்யசிரேயஸை பெயர்சொல்லி அழைத்தது. சிலகணங்களுக்குப்பின் புதர்வெளிக்கு அப்பால் பாறை உச்சியில் ஏறி நின்ற குஹ்யசிரேயஸ் அன்னையின் குரலுக்கு எதிர்க்குரல் கொடுத்தது.

புதர்களிலிருந்து விரிந்த காதுகளும் சிறிய கருமணிமூக்குகளும் மெல்லிய ரோமத்திரள்களுமாக ஓடிவந்த நான்கு குட்டிகளைக் கண்டு குஹ்யஜாதை பரவசத்துடன் எம்பி எம்பிக்குதித்தது. ஓடிச்சென்று அவற்றை வாயால் நீவியும் முகர்ந்தும் களித்தது. பின் ஒலியெழுப்பியபடி அவற்றை சிம்மத்தை நோக்கி கூட்டிச்சென்றது. அதை எதிர்த்து வந்த மூத்த ஆண் கழுதைப்புலி ஒன்று சீறி பற்களைக்காட்டியபோது பின்னங்கால்களில் மெல்ல அமர்ந்து கண்களில் அனலுடன் மிக மிக மெல்ல உறுமியது குஹ்யஜாதை. அதைக்கேட்டதும் அங்கே சிம்மத்தைச் சூழ்ந்திருந்த அத்தனை கழுதைப்புலிகளும் காதுகளை விடைத்து அமைதியடைந்தன. முன்னால் நின்ற ஆண்கழுதைப்புலி மெல்ல பின்னடைந்து பின்பு விலகி ஓடியது.

நிமிர்ந்த தலையுடன் தன்குழந்தைகளை அழைத்துக்கொண்டு குஹ்யஜாதை சிம்மத்தின் அருகே வந்தது. குட்டிகள் அனைத்தும் பாய்ந்து சென்று சிம்மத்தை பல இடங்களிலாகக் கடித்து பிய்க்க ஆரம்பித்தன. குஹ்யசிரேயஸ் தன்னுடைய சிறிய கூழாங்கற்கண்களினால் அன்னையைப்பார்த்தது. “மகனே, நீ முழு ஆயுளுடனும் இரு. இதோ இது உன் முதல்பெரும் வேட்டை. இந்த மிருகத்தின் இதயத்தை நீ உண்பாயாக. இனிமேல் உன் வாழ்நாளெல்லாம் இதயத்தை மட்டுமே உண்பவனாக இருப்பாயாக!” என்று குஹ்யஜாதை மகனை வாழ்த்தியது. குஹ்யசிரேயஸின் மெல்லிய சாம்பல்நிற மயிர் பரவிய சிறிய தலையின் இனிய வாசனையை முகர்ந்து காதுகளை விடைத்து ஒலியெழுப்பியது. குஹ்யசிரேயஸ் முன்னால் பாய்ந்து சென்று சிம்மத்தின் அடிவயிற்றைக் கவ்வியது.

சிம்மம் வலியில் எழுந்து நின்றுவிட்டது. அத்தனை கழுதைப்புலிகளும் சிதறி தப்பி ஓடின. குஹ்யஜாதையின் மூன்று குட்டிகளும் சிம்மத்தின் மீதிருந்து கீழே விழுந்து புல்லில் அடிவயிறுகாட்டி புரண்டு எழுந்தன. ஆனால் சிம்மத்தின் உடலில் ஓர் உறுப்பு போல குஹ்யசிரேயஸ் கடித்ததை விடாமல் தொங்கிக்கிடந்தது. சிம்மம் முன்னால் ஓடிச்சென்று முகம் தரையில் மோத விழுந்து எலும்பு மட்டுமேயாகிப்போன பின்னங்கால்களையும் கிழிந்து தொங்கிய பிட்டத்தையும் துடிக்கச்செய்தபடி கடைசி உயிர்விசையால் அலறியது.

சிம்மக்குரல் கேட்டு புதர்களுக்கு அப்பால் ஒரு கல்லாலமரத்தடியில் தனித்திருந்த வியாசர் எழுந்து ஓடிவந்தார். ‘ஆ! ஆ!’ என அலறியபடி ஓடிவந்தவர் சிம்மம் ஒன்றை கழுதைப்புலியின் கையளவு சிறிய குட்டி ஒன்று கவ்வி உண்பதைக் கண்டார். திகைத்து நின்ற அவரிடம் பிடிவிட்டு எழுந்த குஹ்யசிரேயஸ் “ஏன் வியப்படைகிறீர் வியாசரே? ஷத்ரியர்களை நீர் முன்னரே கண்டதில்லையா?” என்றது. “நான் என்குலத்தை வாழச்செய்யப் பிறந்தவன்…தலைமுறைகள் தோறும் எல்லா குலங்களிலும் பேருயிர்களாகிய நாங்கள் பிறந்துகொண்டே இருக்கிறோம். ஈயிலும் எறும்பிலும் கிருமியிலும்கூட.”

சித்ரகர்ணி தன் கண்களை மட்டும் விழித்து வியாசரைப் பார்த்தது. “…அத்துடன் நாங்கள் எப்போதுமே கொன்று உண்ணவும் படுகிறோம். அழிவின்வழியாகவே ஆக்கத்துக்கு வழிவகுக்கிறோம்” என்றது. “உன் மனக்குழப்பத்தைக் கண்டு நீ கற்ற சொற்களெல்லாம் சிரிக்கின்றன வியாசா” என்றபடி குஹ்யஜாதை அருகே நெருங்கி வந்தது. “என் பணி இவனைப் பெற்று ஊட்டி உலகளிப்பதேயாகும். இவனை உருவாக்குவதற்காகவே நான் இப்போது என் குலத்திலேயே பேராற்றல் கொண்டவளாகிறேன்… இவனை வளர்க்கும்பொருட்டு நான் இவ்வனத்தை ஆள்கிறேன்.”

“உன்பெயர் சித்ரகர்ணி என்று அறிகிறேன்” என்றார் வியாசர். “பிறவிகளின் தொடரில் கடைசிக்கடனை இதோ செலுத்திக்கொண்டிருக்கிறாய்.” சிரித்தபடி துள்ளிக்குதித்த குஹ்யசிரேயஸ் “என் கடனை நான் ஈட்டிக்கொண்டிருக்கிறேன்” என்றது. குஹ்யஜாதை “நான் அழிவற்ற நிலம் போன்றவள். அனைத்தையும் தாங்குபவள். என்னில் முளைகளெழுந்து கிளைவிடுவனவெல்லாம் என்னில் மடிந்து அமையும் வரை காத்திருப்பவள்” என்றது.

“ஆம், அன்னையே” என்றார் வியாசர். “நான் என் அன்னயையே அறியாமல் வளர்ந்தவன்.” குஹ்யஜாதை “அன்னையை அறியும் கணம் வாய்க்காத மைந்தர் எவரும் மண்ணில் இல்லை” என்றது. வியாசர் புன்னகைசெய்து “ஆம் தாய்மையை அறியும் கணமொன்று எனக்கும் வாய்த்திருக்கிறது.” குஹ்யஜாதை முன்னால் வந்து முகத்தை நீட்டி “அதனால் நீ ஞானம் அடைந்தவனானாய்” என்றது. குஹ்யசிரேயஸ் மெல்ல முன்னால் வந்து தன் கழுத்தின் பிசிர்மயிரைக் குலைத்தபடி “எப்படி?” என்று கேட்டது. சித்ரகர்ணி தன் காதுகளை மெல்லக் குவித்து கேட்கச் சித்தமானது.

VENMURASU_EPI_29
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“ஏழுவயதில் நான் என் தந்தையைப்பற்றி விசாரித்து அறிந்து அவரிடம் சென்றேன். பீதவனத்தில் அவரது நூறு மாணவர்களில் ஒருவனாக என்னையும் சேர்த்துக்கொண்டார்” என்றார் வியாசர். பிற கழுதைப்புலிகளும் வந்து அமர்ந்து கதைகேட்கத் தொடங்கின.

தந்தையின் பாதங்களில் அமர்ந்து வேதவேதாங்கங்களைக் கற்றேன். ஆனால் என்னை என் தோழர்கள் புறக்கணித்தனர். மீனவச்சிறுவனாகவே நான் நடத்தப்பட்டேன். ஒவ்வொருநாளும் முழுமையான தனிமையிலேயே வாழ்ந்தேன். கங்கையில் நீரில்குதித்து நூறுமுறை இருகரையும் தொட்டு நீராடுவது மட்டுமே எனக்கு இன்பமளிப்பதாக இருந்தது. கங்கையில் ஒருமுறைகூட நீர்கடக்கமுடியாத என் தோழர்கள் அதனாலேயே என்னை மீன்குஞ்சு என்று இழித்துரைப்பதை நான் அறிந்திருந்தேன்.

அன்றொருநாள் நீராடிக் கரைசேர்ந்தபோது கரையில் அரசமரத்தடியில் நின்றிருந்த ஒரு பெண் என்னைப்பார்த்தாள். அரசஉடையும் மணிமுடியும் அணிகளும் அணிந்து அருகே சேடியுடன் இருந்த அவளை அஸ்தினபுரியின் பேரரசி என்று அறிந்தேன். அருகே சென்று வணங்கினேன். என்னை வாழ்த்திவிட்டு சேடியை விலகும்படி ஆணையிட்டாள். குனிந்து என்னிடம் நடுங்கும் குரலும் ஆவல் நிறைந்த கண்களுமாக நான் கங்கையில் எத்தனைமுறை நீர்கடந்தேன் என்று கேட்டாள். நூறு முறை என்று சொன்னதும் நான் எதிர்பாராதபடி குனிந்து என் தலையை முகர்ந்தாள்.

என்னை எவரும் தொட்டதில்லை. ஞானயோகியான என் தந்தை எவரையுமே தொடுவதில்லை. சாலைமாணாக்கர்கள் என்னைத் தீண்டுவதை தவிர்த்தனர். தொடுகையினால் அதிர்ந்து பின்னடைந்த நான் “தொடாதே…நீ இல்லறத்துப்பெண். நான் பிரம்மசாரி” என்றேன். “குழந்தை உன் பெயர் கிருஷ்ண துவைபாயனன். நான் உன் அன்னை” என்றாள். நான் குழப்பத்துடன் “இல்லை, நான் ஒரு பித்திக்குப் பிறந்தவன்…” என்றேன். “ஆம், அதுநானே. நீ பிறக்கும்போது நான் பித்தியாக இருந்தேன். இன்று அஸ்தினபுரியின் அரசியாக இருக்கிறேன்” என்றாள்.

நான் சினத்துடன் “பாம்புதான் குழவிகளை கைவிட்டுச் செல்லும். மானுடப்பெண் அதைச் செய்யமாட்டாள். நீ பாம்புக்கு நிகரானவள். விலகிச்செல்” என்றேன். “மகனே, நான் பித்தியாக இருந்தபோது எனக்கொரு குழந்தை பிறந்தது என்று அறிவேன். அக்குழந்தை யாரென்றும் அதன் தந்தை யாரென்றும் எனக்குத்தெரியாது. உன் உடலின் வாசனையைக் கொண்டே நீ என் மகன் என்று சொல்கிறேன்” என்றாள்.

கடும்சினத்துடன் “நீ உன் உடலின் நீங்காத காமவாசனையை எனக்களித்தாய். என் ஞானத்தின்மீது அந்த மாமிசநெடி பரவியிருக்கிறது. வேதங்களனைத்தையும் கற்றிருந்தாலும் என்னால் ஞானத்தில் நிலைகொள்ள முடியவில்லை. அது நீ எனக்களித்த சாபம். என்னைப் பெறுவதற்கு நீ தகுதியானவளல்ல. உன் வயிற்றில் பிறந்ததனால் நானும் கரையேற முடியாதவனானேன். நீ விழுந்து நீந்தும் சேற்றிலேயே என்றுமிருக்கும் தீயூழ் என்னைச்சேர்ந்தது” என்றேன்.

அவள் “தாய் ஒரு நிலம்…என்னில் விழுந்ததை முளைக்கவைப்பதே என் கடன். அது வாழ்வதற்காக நான் என்னில் இறப்பவற்றை எல்லாம் உண்பேன். என் அனல் அனைத்தையும் அளிப்பேன்” என்றாள். “தாய்மையை எந்தப் பாவமும் சென்று சேராது என்கின்றன நூல்கள்” என்று சொன்ன அவளை நோக்கிச் சீறியபடி கங்கையில் ஒரு கைப்பிடி அள்ளி மேலே தூக்கி “என் தவமும் ஞானமும் உண்மை என்றால் நீ இப்போதே மீண்டும் யமுனையில் மீனாக மாறு” என்று தீச்சொல் விடுத்தேன். ஆனால் அவள் புன்னகையுடன் அங்கேயே என்னை நோக்கியபடி நின்றிருந்தாள். மீண்டும் மும்முறை வேதமோதியபடி அவளை தீச்சொல்லால் சுட்டேன். அவள்முகத்தின் கனிந்த புன்னகை விலகவில்லை.

அழுதபடி நான் ஓடிச்சென்று என் குருவின் காலடியில் வீழ்ந்தேன். “கற்றவேதமெல்லாம் எனக்குப் பயனளிக்காதா, என்குல இழிவு என்னை விட்டு நீங்காதா?” என்றேன். “மைந்தா, நீ ஞானத்தின் முடிவில்லா வல்லமையை அறியாமல் பேசுகிறாய். மண்ணுலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஞானம் கடமையாக்கப்பட்டுள்ளது. புள்ளும் புழுவும் பூச்சியும் கிருமியும்கூட ஞானத்தையே உண்டு வாழ்கின்றன என்று அறிக.ஞானத்தால் முழுமைபெற்ற ரிஷிகளின் பிறப்புகள் அறியப்படாதவையே. ரிஷ்யசிருங்கர் மானின் மைந்தர் எனப்படுகிறார். கண்வர் மயிலுக்கும் சோமஸ்ரவஸ் நாகத்துக்கும் பிறந்தவர் என்கிறார்கள் சூதர்கள். வசிட்டரும் அகத்தியரும் ஊர்வசியின் மைந்தர்கள். ஞானமே அவர்களை முனிவர்களாக்கியது. பிறப்பு ஒரு தொடக்கம் மட்டுமே.”’

நான் அழுதுகொண்டே நின்றேன். “உன் பிறப்புக்கு என்ன காரணமென்று நீ என்றோ ஒருநாள் அறிவாய். அன்று உன்னை கருவிலேற்றிய அன்னைக்குள் வாழும் பெருநெறியை வணங்குவாய். அதுவே உன் ஞானம் தொடங்கும் கணமாகவும் அமையும்” என்றார் என் தந்தை.

ஆறுவருடங்களுக்குப் பின் அவருடன் நூறு சீடர்கள் சூழ கைலாய மலைச்சரிவில் இருந்த சதசிருங்கம் என்னும் காட்டுக்குச் சென்றேன். அங்கே பாரதவர்ஷமெங்கும் இருந்து வேதமுனிவர்கள் கூடியிருந்தனர். வேதவேதாங்கங்களை முறையாகத் தொகுப்பதற்கான முயற்சி தொடங்கி முந்நூறாண்டுகள் தாண்டியிருந்தது. ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை தொகுத்தவற்றைப்பற்றி விவாதித்துப் பொருள்கொண்டு முறைப்படுத்துவதற்கான ஞானசபை அது.

முதுமுனிவர்கள் கூடியிருந்து வேதத்தை ஆராய்ந்த அந்த சபையில் ரிஷி மைத்ராவருணி வசிஷ்டர் அழியாநீர்களை நோக்கிச் சொன்ன ரிக்வேத மந்திரம் ஒன்று பாடப்பட்டது என்றார் வியாசர். தன் மெல்லியகுரலால் அதைப்பாடினார்.

‘கடலைத் தலைவனாகக் கொண்ட நீர்கள்
விண்ணகத்தின் மையத்திலிருந்து வருகின்றன
அனைத்தையும் தூய்மையாக்கி
அழியாதொழுகுகின்றன

விண்ணிலிருப்பவை, மண்ணில் பாய்பவை
வழிகளில் ஓடுபவை, ஊற்றெடுப்பவை
கடலை நாடுபவை
தூய்மையானவை, தூய்மை செய்பவை
அந்த நீர்களெல்லாம்
என்னை காத்தருள்க!

விண்ணகம் நடுவே வீற்றிருக்கும் வருணன்
மெய்யும் பொய்யும் அறிந்தவன்
அந்நீர்கள் இனிதாகப் பொழிகின்றன
தூயவை தூய்மையாக்குபவை.
தேவியரே அன்னையரே
என்னை காத்தருள்க!

நீரன்னையரின் நடுவே
இருக்கிறார்கள் வருணனும் சோமனும்
தேவர்கள் அங்கே
அவியேற்று மகிழ்கிறார்கள்
வைஸ்வாநரன் என்னும் நெருப்பு
அங்கே வாழ்கிறான்
நீரன்னைகள் என்னை காத்தருள்க!

அந்தப்பாடலின் இனிமையால் அவர்களனைவரும் ஒளிகொண்டனர் என்றாலும் அதன் பொருள் அவர்களுக்கு விளங்கவில்லை. பொருளறியாத பல்லாயிரம் வேதமந்திரங்களில் ஒன்றாகவே அது இருந்தது. என் தந்தை உரக்க “வானிலிருந்து மழைபொழிகின்றது என்று அறிவோம் முனிவர்களே. விண்ணகத்தின் மையத்திலிருந்து பொழிபவை எந்த நீர்கள்? நீருக்குள் வாழும் நெருப்பு எது?” என்றார்.

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக சொல்லத்தொடங்கினர். என் தந்தை “வேதம் முற்றுண்மை என்றால் அது பிரத்யக்‌ஷம் அனுமானம் சுருதி என்னும் மூன்று அறிதல்முறைகளாலும் நிறுவப்பட்டாகவேண்டும். இந்த மொழிவரிகள் முனிவர்கள் கருத்தால் கேட்ட விண்ணொலிகளை சுருதியாகக் கொண்டவை. ஆகவே அவற்றை நாம் அறிய முடியாது. உய்த்தறிதலோ முதலறிதலால் மட்டுமே நிகழமுடியும். ஆகவே முனிவர்களே ஐம்புலன்களாலும் இங்கே இப்போது நம்மாலறியப்படும் அறிதல் மட்டுமே வேதங்களை அறிவதற்கான மூலமாக அமையும்…அதைக்கொண்டு விளக்குக!”

ஒவ்வொரு விழியாகப் பார்த்துவந்த என் தந்தை “கிருஷ்ணா, நீ விளக்கு” என்று என் கண்களை நோக்கிச் சொன்னார். நான் எழுந்து “முனிவர்களே, யமுனையின் அடித்தட்டில் நூறுநூறாயிரம் முட்டைகள் பரவியிருப்பதைக் கண்டிருக்கிறேன். மீனின் முட்டைகள். புழுக்களின் முட்டைகள். நத்தைகள் சங்குகள் சிப்பிகளின் முட்டைகள். அவற்றையெல்லாம் விரியவைக்கும் வெம்மை எது?” என்றேன்.

அக்கணமே நான் சொல்லவருவதைப் புரிந்துகொண்டு முனிவர்கள் ‘ஆகா’ என்று சொல்லி எழுந்துவிட்டனர். “அந்த உயிர்நெருப்பின் பெயர் வைஸ்வாநரன் என்று அறிக! வானக மையத்தில் விண்மீன்களை விரியவைக்கும் அக்கினியும் அவனே. அங்கிருந்து வருகின்றன அன்னைநீர்கள்” என்றேன். “இது முதலுண்மை முனிவர்களே. இனி உய்த்துண்மை. நீரென்பது நீர்மையேயாகும். நீராகித் திகழும் விதிகளே நீரென்று அறிக! வைஸ்வாநரனால் முடிவிலா விண்மீன்கள் விரியச்செய்யப்படும் பெருவெளி விரிவைத் தழுவியும் ஓடுகின்றன அலகிலா நீர்மைகள்.”

‘ஆம் ஆம் ஆம்’ என முனிவர்கள் ஆமோதித்தனர். கண்வர் என் தந்தையிடம் ‘வாழ்நாளெல்லாம் வேதங்களைக் கற்ற நாம் அறியமுடியாத பொருளை இவன் எப்படி அறிந்தான் பராசரரே?’ என்றார். என் தந்தை ‘நாம் நூல்களில் வேதம் கற்றோம். அவன் கங்கையில் கற்றான். நூல்களின் ஏடுகளுக்கு முடிவுண்டு. கங்கையின் ஏடுகளுக்கு முடிவேயில்லை” என்றார். “முனிவர்களே, மலர்களில் தேன்அருந்திச் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சிக்குத்தான் வண்ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தழை தின்னும் பசுவுக்கு அல்ல.”

“ஆம்” என்றார் கண்வர். “என் குருநாதராகிய நாரதர் சொன்னார். தும்பியின் நாதத்தை எழுதிவைக்க முயலாதே என. நாம் செய்தது அதைத்தான். வேதங்கள் கவிஞர் பாடியவை. மண்ணிலும், நதியிலும், மலரிலும், ஒளியிலும் முழுமையாக வாழ்ந்தவர்கள் அடைந்தவை. உடலில் மீன்வாசனையுடன் வரும் ஒருவனுக்காக அவை நம் நூல்களில் விரிந்து கிடந்திருக்கின்றன. இதோ வைஸ்வாநரன் விண்ணகநெருப்புடன் வந்துவிட்டான், அவன் வாழ்க!”

அன்று அந்த அவை என்னை ஆதரித்தது. வேதங்களைத் தொகுக்கும் பணியை என்னிடம் ஒப்படைத்தது. மூன்று பன்னிரண்டாண்டுகாலம் முயன்று நான் வேதங்களை சம்ஹிதையாக்கினேன். பாரதவர்ஷத்தின் நாநூறு வேதஞானிகள் எனக்கு மாணவர்களாக அமைந்தனர்.

அப்பணியைத் தொடங்கிய அன்று அஸ்தினபுரிக்குச் சென்றேன். அரண்மனையை அடைந்து பேரரசியைக் காணவேண்டுமென்று சொன்னேன். என்னை அந்தபுரத்துக்குக் கொண்டுசென்றார்கள். அங்கே வீட்டுவிலக்காகி திரைக்கு அப்பாலிருந்த என் அன்னையின் முன் நான் நிறுத்தப்பட்டேன். திரையை விலக்கி அவள் முன் சென்று அவள் காலடிகளைப் பணிந்து “அன்னையே உன் மைந்தன் இதோ வந்திருக்கிறேன். உன் ஆணை ஏதும் என் விதியே ஆகும்” என்றேன். குஹ்யஜாதையே, கொற்றவையின் கழல்கால்கள் போலக் கரியவை அவை. பத்துநகங்களும் கண்களாக மின்னும் அவற்றின் ஆசியைப்பெற்று மீண்டேன்.”

குஹ்யஜாதை மூச்சிழுத்து தலையை மெல்லத்தாழ்த்தி “இன்று நீங்கள் இவ்வனத்தில் இவ்வேளையில் ஏன் வந்தீர்கள்?” என்றாள். “இன்றுகாலை என் அன்னையின் ஆணையுடன் இளையோன் வந்தான். அன்னை அவனிடம் சொல்லியனுப்பிய அனைத்தையும் சொன்னான். பாவம், ஆணை என்ற சொல்லை மட்டுமே அவள் சொன்னால்போதுமென்று அவன் அறிந்திருக்கவில்லை” என்றார் மகாவியாசர்.

குஹ்யசிரேயஸ் சிறிய மணிக்கண்களுடன் முன்னால் வந்து “வியாசரே விதைக்குள் வாழும் அழியாநெருப்பு. இங்குள்ள அனைத்தையும் உண்டு வளர்வேன். நான் விராடன். நானே வைஸ்வாநரன். எனக்குள் என் குலத்தின் தலைமுறைகள் வாழ்கின்றன” என்றது.

“ஆம், அவை வாழ்க” என்றார் வியாசர். “பிறிதொருமுறை பிறிதொரு தருணத்தில் என் வழித்தோன்றல்கள் உங்களைச் சந்திப்பார்கள். அதற்காகவே என் அன்னையின் நெருப்பு என்னில் பற்றிக்கொண்டிருக்கிறது” என்றது குஹ்யசிரேயஸ். “இதோ அந்த நெருப்புக்கு நான் அவியிடுகிறேன்” என்றது சித்ரகர்ணி.

வியாசரின் கண்முன் சித்ரகர்ணி பொன்னிறப் பிடரிமயிருடன் எழுந்து நின்றது. அதன் காலடியில் குஹ்யசிரேயஸ் பணிந்து நிற்க அப்பால் குஹ்யஜாதை நின்று அதைப்பார்த்தது. சித்ரகர்ணி “உன் பசியடங்குவதாக. உன்னில் ஆற்றல் நிறைவதாக. என்னிலிருந்து அழியாநெருப்பு உன்னுள் நுழைந்து வாழட்டும்!” என்றது.

சுதாமனும் சுதனும் மரங்களில் ஏறி நோக்கி, புதர்களை விலக்கி வழியில்லாத காடுவழியாக அங்கே வந்து பார்த்தபோது முட்டி மோதி உறுமியபடி இறந்த சிம்மத்தைக் கிழித்துண்ணும் கழுதைப்புலிகளையும் மேலே சிறகடித்து எழுந்து அமர்ந்து கூச்சலிட்ட கழுகுகளையும் அப்பால் எம்பி எம்பி ஊளையிட்ட நரிகளையும் இன்னமும் உண்ணப்படாத சிம்மத்தின் திறந்த  வெண்விழிகளையும் பார்த்தபடி அமர்ந்திருந்த வியாசரைக் கண்டார்கள்.

நூல் ஒன்று – முதற்கனல் – 28

பகுதி ஆறு : தீச்சாரல்

[ 2 ]

காலையொளி நீரில்விரியும் வரை பீஷ்மர் தாராவாஹினியின் கரையில் அப்படியே அசையாமல் நின்றிருந்தார். ஹரிசேனன் பலமுறை சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தான். அவர் ஒரு பெரிய அடிமரமாக ஆகிவிட்டதுபோலத் தோன்றியது. நீரில் விண்மீன்கள் இடம் மாறின. விடிவெள்ளி உதித்து செவ்வொளியுடன் அலைகளில் ஆடியது. காலையில் அஸ்தினபுரியில் இருந்து தூதன் குதிரையில் வந்து சேர்ந்தான். குடில்முற்றத்தில் வேங்கைமரத்தடியில் அவன் நின்றான். ஹரிசேனன் ஏதும் கேட்கவிருக்கவில்லை. பீஷ்மர் அருகே சென்று நின்றுகொண்டான். அவன் நிற்கும் உணர்வை அடைந்த பீஷ்மர் திரும்பினார்.

ஹரிசேனன் “தூதன்” என்று சுருக்கமாகச் சொன்னான். தலையசைத்துவிட்டு பீஷ்மர் பேசாமல் நடந்து குடிலை அடைந்தார். அரைநாழிகைக்குள் குளித்து உடைமாற்றி குதிரையில் ஏறிக்கொண்டு கிளம்பினார். அஸ்தினபுரியின் கோட்டைமேல் விசித்திரவீரியனின் இலைச்சின்னம் கொண்ட கொடி வழக்கம்போல பறந்துகொண்டிருந்தது. கோட்டைமேல் இருந்த காவலன் அவரைக் கண்டதும் சங்கு ஊத கோட்டைமேல் அவரது மீன்கொடி ஏறியது. அவர் ஒவ்வொருவரின் வணக்கத்தையும் தனித்தனியாக ஏற்றும் அனைவருக்கும் புன்னகைமுகம் காட்டியும் உள்ளே சென்றார்.

நகரத்தெருக்களில் காலைப்பரபரப்பு தொடங்கிவிட்டிருந்தது. ஆய்ச்சியர் பால்குடங்களுடனும், உழத்தியர் காய்கனிக்கூடைகளுடனும், மச்சர்கள் மீன்கூடைகளுடனும் தெருக்களில் கூவிச்சென்றனர். காலையிலேயே விருந்தினருக்கு உணவு சமைக்கப்பட்டுவிட்ட இல்லங்களின் முன்னால் அன்னத்துக்கான மஞ்சள்கொடி பறந்துகொண்டிருந்தது. சுமைதூக்கிக் களைத்த சில ஆய்ச்சியர் அங்கே உணவுக்காக அமர்ந்திருந்தனர்.

தெருமுனைகளில் கணபதி, சண்டி, அனுமனின் சிறிய ஆலயங்களில் மணிகள் ஒலிக்க சிறு கூட்டங்களாக கூடி நின்று சிலர் வழிபட்டனர். நான்குயானைகள் காலையில் குளித்து தழைகளைச் சுமந்தபடி அலைகளில் கரியநாவாய்கள் போல உடல்களை ஊசலாட்டியபடி சென்றுகொண்டிருந்தன. நெளியும் வால்களில் அவற்றுக்கு ஆசியளிக்கப்பட்ட மாறாத குழந்தைமை.

பீஷ்மர் அரண்மனைமுற்றத்தில் இறங்கி நேராகவே உள்ளே சென்றார். பேரரசிக்கு அவர் வந்த தகவலைச் சொல்லி அனுப்பினார். சத்யவதி அவரை மந்திரசாலையில் சந்திப்பார் என்று சியாமை சொன்னதும் மந்திரசாலைக்குச் சென்று அமர்ந்துகொண்டார். உடலை நிலையாக வைத்துக்கொள்வது மனதையும் நிலைக்கச்செய்யும் என்பது அவர் அடைந்த பயிற்சி. கைகால்களை இலகுவாக வைத்துக்கொண்டு கண்களை எதிரே இருந்த சாளரத்துக்கு அப்பால் மெல்ல அசைந்த அசோகமரத்தின் கிளைகளில் நிலைக்கவிட்டார்.

தன் அறைக்குள் சத்யவதி வேறு எவரிடமோ பேசிக்கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்தார். தன் அறைக்குள் பேசுவதென்றால் அது சாதாரணமான பேச்சு அல்ல. அசைவை உணர்ந்து அவர் திரும்பியபோது அங்கே அவரது ஒற்றனான சௌம்யதத்தன் நின்றிருந்தான். அவர் பார்த்ததும் அவன் அருகே வந்து “பிதாமகருக்கு அருந்துவதற்கு ஏதேனும் கொண்டுவரலாமா?” என்றான்.

பீஷ்மர் “நீர் மட்டும்போதும்” என்றார். அருகே வந்து “விடகாரியான வஜ்ரசேனன்” என்று விழியசைக்காமல் சொல்லிவிட்டு சௌம்யதத்தன் சென்றான். அவருக்கு அனைத்தும் புரிந்தது. பெருமூச்சுடன் தாடியை வருடிக்கொண்டார்.

அரியணை மங்கலம் முடிந்த மறுநாள் மாலை பீஷ்மர் சத்யவதியை சந்திக்க அரண்மனைக்குச் சென்றிருந்தார். ஒற்றர்கள் கொண்டுவந்த செய்திகளைச் சொன்னார். அஸ்தினபுரியில் அரியணை ஒருங்கிவிட்டது என்பது வெவ்வேறு ஒற்றர்கள் வழியாக ஷத்ரியநாடுகளுக்குச் சென்றுவிட்டது என்று மறுஒற்றர்கள் தகவல்சொல்லியிருந்தனர். “இனிமேல் நாம் ஷத்ரியர்களை அஞ்சவேண்டியதில்லை” என்றார் பீஷ்மர்.

சத்யவதி தலையசைத்தபின் “அனைத்தும் இவ்வளவு எளிதாக முடியும் என நான் நினைக்கவில்லை. இனி அஸ்தினபுரி மக்களுக்குக் கவலை இல்லை…” என்றாள். பார்வையை அவள் மெல்லத் திருப்பியபோது அவள் ஏதோ முக்கியமாக சொல்லப்போகிறாள் என்று பீஷ்மர் உணர்ந்தார். சத்யவதி “விசித்திரவீரியன் எப்போது நகர்மீள்வான் என்றார்கள்?” என்றாள்.

“சொல்லமுடியாது அன்னையே. காட்டுக்குள் வெகுதொலைவு சென்றிருக்கிறான்” என்றார் பீஷ்மர். அந்தப்பேச்சுக்கு சத்யவதி ஏன் செல்கிறாள் என்று மெல்ல அவருக்குப்புரிந்ததும் உள்ளூர ஒரு புன்னகை விரிந்தது.

“எப்படியும் ஒருசில வாரங்களில் அவன் வந்தாகவேண்டும். நமது வனங்கள் ஒன்றும் அவ்வளவு அடர்த்தியானவை அல்ல, தண்டகாரண்யம்போல” என்றாள் சத்யவதி. ஒருகணம் அவள் கண்கள் பீஷ்மர் கண்களை வந்து சந்தித்துச் சென்றன. “மக்கள் என்ன சொல்கிறார்கள்?” என்றாள். “எதைப்பற்றி?” என்று பீஷ்மர் கேட்டார். “நாம் காசிமன்னன் மகள்களை கவர்ந்து வந்ததைப்பற்றி?”

பீஷ்மர் “அது ஷத்ரியர்களின் வாழ்க்கை. அதைப்பற்றி மக்கள் ஏதும் அறிந்திருக்கமாட்டார்கள்” என்றார். “ஆம். உண்மை…ஆனால் அம்பை சென்றகோலத்தைப்பற்றி சூதர்கள் கதைகளைச்சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் அறிந்த தெய்வப்பிடாரிகளின் கதைகளை எல்லாம் அவள்மேல் ஏற்றிவிட்டார்கள். நேற்று ஒரு சூதன் சொன்னான், அவள் உடல் அனலாக தீப்பற்றி எரிந்ததாம். அவள் சென்றவழியில் எல்லாம் காடு தீப்பற்றியதாம்…”

பீஷ்மர் வெறுமனே தலையை அசைத்தார். “மக்களின் நம்பிக்கைகள் எப்போதுமே அச்சங்களில் இருந்து உருவானவை… அவர்கள் தங்கள் கன்றுகளுக்காகவும் வயல்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் அஞ்சிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றாள் சத்யவதி. “அதை நாம் பொருட்படுத்தவேண்டியதில்லைதான்”

பீஷ்மர் “ஆம், உண்மை” என்றார். சத்யவதி “ஆனால் சூதர்கள் அம்பையின் சாபம் இந்நகர்மேல் விழுந்துவிட்டது என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். வடக்கே ஹ்ருஸ்வகிரிமேல் அவள் ஆடைகளில்லாமல் உடம்பெல்லாம் குருதிவழிய ஏறி நின்று இந்நகரைப் பார்த்தாளாம். அப்போது வானம் கிழிவதுபோல மின்னல் வெட்டியதாம்….இவர்களை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது” என்றாள்.

சத்யவதி அவள் விரும்பிய இடத்தை வந்தடைந்துவிட்டாள் என்று உணர்ந்து பீஷ்மர் “ஆம் அன்னையே, நானும் அதையே எண்ணிக்கொண்டிருந்தேன். நான் இந்நகரில் இருந்தால் மக்கள் மேலும் அச்சம் கொள்வார்கள். நான் நகரை நீங்கிவிட்டால் இந்தச்சிக்கல் அகன்றுவிடும்…” என்றார்.

சத்யவதி அவரை நோக்கி “ஆனால் நீ இங்கு இல்லையேல் ஷத்ரியர்கள் துணிவுகொள்வார்கள்” என்றாள். “அறிவேன் அன்னையே. நான் நகருக்கு வெளியேதான் இருப்பேன். கிரீஷ்மவனம் எனக்குப்பிடித்தமானது. தாராவாஹினியின் நீரும் எனக்குப்பிரியமானது” என்றார். அவ்வளவு நேராக அவள் உள்ளத்துக்குள் அவர் சென்றது அவளை சற்று அசையச்செய்தது. நெற்றிக்கூந்தலை நீவி காதுக்குப்பின் விட்டுக்கொண்டாள்.

VENMURASU_EPI_28__
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

சில கணங்கள் மிகுந்த எடையுடன் கடந்து சென்றன. சத்யவதி மேலும் அசைந்து “நீ விட்டுச் செல்வதை அந்தப்புரப்பெண்டிர் அறியவேண்டியதில்லை” என்றாள். “அவர்கள் அஞ்சக்கூடும். நீ இங்குதான் இருக்கிறாய் என்றே அவர்கள் எண்ணட்டும்.”

பீஷ்மர் கண்களுக்குள் மட்டும் புன்னகையுடன் “ஆம், அது உண்மை அன்னையே” என்றார். மிகமிக நுட்பமாக நகைசெய்யும் பொற்கொல்லனின் கவனத்துடன் சொல்லெடுத்து வைத்து “நான் இருப்பதோ செல்வதோ அவர்கள் அறியாதவாறு இருப்பேன்” என்றார்.

சத்யவதியின் கண்கள் அவர் கண்களை சந்தித்ததும் மெல்ல புன்னகை புரிந்தார். சத்யவதி கண்களை விலக்கிக் கொண்டாள். அப்புன்னகையை அவள் ஒவ்வொருநாளும் நினைப்பாள் என்று அவர் எண்ணிக்கொண்டார். அதிலிருந்து தப்ப அவளால் முடியாது.

சியாமை வந்து “பேரரசி வருகை” என அறிவித்ததும் பீஷ்மர் எழுந்து நின்றார். முன்னால் செங்கோலுடன் ஒரு சேடி வர, பின்னால் கவரியுடன் ஒருத்தி தொடர, சத்யவதி வேகமாக உள்ளே வந்தாள். திரும்பிப் பாராமலேயே கையசைத்து அவர்களை போகச்சொல்லிவிட்டு வந்து இருக்கையில் அமர்ந்தாள். “வணங்குகிறேன் அன்னையே” என்றார் பீஷ்மர்.

சத்யவதி ஒன்றும் சொல்லாமல் கைகளை மடியில் வைத்துக்கொண்டாள். அவள் உதடுகள் இறுகி ஒட்டிக்கொண்டு கோடைமழை வந்துமோதும் சாளரப்பொருத்துக்கள் போல நடுங்கின. கழுத்து அதிர்ந்து அதிர்ந்து அடங்க கன்னத்தசைகள் துடித்தன. பின்பு ஒரு கண்ணில் இருந்து மட்டும் ஒருதுளி கண்ணீர் மெல்ல உருண்டது.

பீஷ்மர் அப்போது அவளிடம் ஏதும் சொல்லக்கூடாதென அறிந்திருந்தார். அவரது முன்னில் அல்லாமல் அவள் அந்தத் துளிக்கண்ணீரைக்கூட விட்டிருக்கமாட்டாள். நாலைந்து சொட்டுக் கண்ணீர் வழிந்ததும் அவள் பட்டுச்சால்வையால் அவற்றை ஒற்றிவிட்டு பெருமூச்சுடன் “நீ ஊகித்திருப்பாய் தேவவிரதா” என்றாள். “ஆம்” என்றார் பீஷ்மர். “நான்தான் காரணம்….எல்லாவகையிலும். அவனை நான் கட்டாயப்படுத்தினேன்” என்றாள். “அதில் என்ன?” என்றார் பீஷ்மர். “களத்துக்கு அனுப்புகிறோமே!”

“ஆம்…நான் அப்படித்தான் நினைத்தேன்…உண்மையில் அவன் இப்படி இறந்ததில் எனக்கு நிறைவுதான்…” என்றாள் சத்யவதி. “எனக்கு சற்று குற்றவுணர்வு இருந்தது. ஆனால் அந்த காசிநாட்டு இளவரசி அழுததைப் பார்த்தேன். அக்கணமே நெஞ்சு திறந்து இறந்துவிடுபவள் போல…அப்போது என் மனம் நிறைந்தது. ஒரு பெண்ணின் மனதை நிறைத்துவிட்டுச் சென்றது ஆண்மகன் ஒருவன் மண்ணில் வாழ்ந்தமைக்கான அடையாளம்…”

“ஆம்” என்றார் பீஷ்மர். சத்யவதி “அவனுக்கு என் மனம் புரிந்திருந்தது. அவன் அறியாத எவரும் இங்கே இல்லை. நான் அவனை கட்டாயப்படுத்திவிட்டுத் திரும்பும்போது என்னருகே வந்து சால்வையைப் போடுவதுபோல என்னை மெதுவாகத் தொட்டான்…இவ்வுலகில் என்னை எவரேனும் தொடவேண்டுமென விரும்பினேன் என்றால் அது அவன்தான். ஆனால் என்னை ஒருவர் தொடுவது எனக்குப்பிடிக்காது. தொடுகை தானாகவே நிகழவேண்டுமென நினைப்பேன்….அவன் அதை அறிந்திருந்தான். தேவவிரதா, நான் அன்று ரதத்தில் புன்னகை புரிந்தபடியே வந்தேன். நெடுநாட்களுக்குப்பின் காதல்கொண்ட இளம்கன்னியாக சிலநாழிகைநேரம் வாழ்ந்தேன். மகனைவிட அன்னைக்குப் பிரியமான ஆண்மகன் யார்?”

பீஷ்மர் புன்னகை புரிந்தார். சத்யவதி “நான் உன்னிடமன்றி எவரிடமும் மனம் திறந்து பேசுவதேயில்லை தேவவிரதா. பேரரசர் சந்தனுவிடம்கூட….ஏனென்றால் அவர் என்னை பார்த்ததே இல்லை. என்னில் அவர் வரைந்த சித்திரங்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்” என்றாள். “உனக்கு நான் சொல்வது புரியுமா என்றே எனக்குத்தெரியவில்லை. நீ அறியாத நூல்கள் இல்லை. நீ அறியாத சிந்தனைகளும் இல்லை. ஆனால் உன்னால் பெண்ணைப் புரிந்துகொள்ளமுடியாது. அன்னையையும் காதலியையும் மனைவியையும்…எவரையுமே நீ உணரமுடியாது. ஆனால் நான் உன்னிடம்தான் சொல்லியாகவேண்டும்.” அவள் மூச்சுத்திணறி நிறுத்தினாள்.

பின்பு மேலும் வேகத்துடன் முன்னால் வந்து “ஒரு பெண்ணை யாரோ ஓர் ஆண் மட்டும்தான் முழுப்பெண்ணாக்குகிறான் என்று தெரியுமா உனக்கு? அப்படிப்பட்ட ஆணை சந்திப்பவளே நல்லூழ்கொண்டவள்….ஆனால் ஒன்று சொல்கிறேன். அந்த ஆணை தன் மகனாகக் கொண்டவள் பெரும்பேறு பெற்றவள். அவள் நான். என் மகன் விசித்திரவீரியன் அன்றி எவரையும் நான் ஆணாக எண்ணியதில்லை. அவன் புன்னகையை அன்றி எதையும் நான் எனக்குள் கனவாக நிறைத்துக்கொண்டதுமில்லை. அதனாலேயே அவனிடம் நான் ஒருநாளும் இன்சொல் பேசியதில்லை. என்னை அவன் அறியக்கூடாதென்றே எண்ணினேன். என் அன்பினால் நான் ஆற்றலிழந்துவிடக்கூடாதென்று நினைத்தேன். ஆனால் அவன் என் கண்களை மட்டும்தான் பார்த்தான். என் சொற்களை கண்கள்முன் கட்டப்பட்ட திரையாக மட்டுமே எடுத்துக்கொண்டான்.”

பெருமூச்சுடன் சத்யவதி மெல்ல அமைதியடைந்தாள். பீஷ்மர் “விசித்திரவீரியன் வானேறிய செய்தியை நாம் அறிவிக்கவேண்டாமா அன்னையே?” என்றார். சத்யவதி மெல்ல அவளிருந்த நிலையில் இருந்து இறங்கினாள். உடலசைவு வழியாக அவள் மனம் சமநிலைக்கு வருவது தெரிந்தது. “அவனை விடகாரிகளின் உதவியுடன் ஆதுரசாலையிலேயே வைத்திருக்கிறேன். எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் அவனை அப்படியே வைத்திருக்கலாமென்று சொன்னார்கள்” என்றாள்.

பீஷ்மர் அவளையே பார்த்தார். “தேவவிரதா, இந்த நிலையை நீயும் ஊகித்தே இருப்பாய். இனிமேல் குருவம்சத்திற்கு தோன்றல்கள் இல்லை. விசித்திரவீரியனுடன் பாரதவர்ஷத்தின் மகத்தான மரபு ஒன்று அறுந்து போய்விட்டது…எது நடந்துவிடக்கூடாது என்று வாழ்நாளெல்லாம் அஞ்சிவந்தேனோ அது நிகழவிருக்கிறது.” “அது விதிப்பயன்” என்றார் பீஷ்மர். “இல்லை, இன்னும் நான் உறுதி குலையவில்லை” என்று சத்யவதி உரக்கச் சொன்னாள். “இன்னும் வழியிருக்கிறது.”

“சொல்லுங்கள் அன்னையே” என்றார் பீஷ்மர்.சத்யவதி “தேவவிரதா, நூல்நெறிப்படி விசித்திரவீரியனை சிதையேற்றும்போதுதான் அவன் அரசிகள் விதவையாகிறார்கள். அதுவரைக்கும் அவர்கள் அவன் அறத்துணைவியர்தான். ஆகவேதான் அவனை நான் வைத்திருக்கிறேன். அவன் இறந்த செய்தி ஷத்ரியர் எவரும் அறியவேண்டியதில்லை…” பீஷ்மர் “ஒற்றர்கள் எங்கும் இருப்பார்கள் அன்னையே” என்றார்.

“இருக்கட்டும்…நான் நினைப்பது வைதிகர்களுக்கும் குலமூத்தாருக்கும் சான்றுகள் கிடைக்கலாகாது என்று மட்டுமே” என்றாள் சத்யவதி. “வைதிகநூல்களின்படி நீர்க்கடன்செய்து வானேறும் கணம் வரை மனிதர்கள் மண்ணில் வாழ்கிறார்கள். அவர்களின் உறவுகளும் மண்ணில் எஞ்சுகின்றன.”

பீஷ்மர் “அன்னையே…” என்று ஆரம்பித்தபோது, சத்யவதி கையமர்த்தி “இதுவன்றி வேறு வழியே இல்லை தேவவிரதா….ஒன்று உணர்ந்துகொள். இந்த அஸ்தினபுரி வேள்தொழிலையோ பசுத்தொழிலையோ நம்பியிருக்கும் நாடு அல்ல. இது வணிகத்தை நம்பியிருக்கும் நாடு. அந்த வணிகம் இங்கு மையம் கொண்டிருப்பதே இங்கு ஒரு வல்லமைமிக்க அரசு இருப்பதனால்தான். இந்நகரின் சாலைகளும் சந்தைகளும் முற்றிலும் பாதுகாப்பானவை என்பதனால்தான். இந்நகரை வேற்றரசர் கைப்பற்றினால் மிகச்சில வருடங்களிலேயே இங்கே வறுமை வந்து சூழும். இந்நகரம் பாழ்பட்டு அழியும்…”

“அன்னையே நான் சொல்வது அதுவல்ல” என்றார் பீஷ்மர். சத்யவதி தடுத்து “தேவவிரதா இது சந்திரகுலத்தின் முதன்மை அரசகுலம். இது என்னால் அழியும் என்றால் நான் இப்பூமியில் பிறந்ததற்கே பொருளில்லை…அத்துடன்…” அவள் கண்களுக்குள் ஓர் புதிய திறப்பு நிகழ்ந்தது என்று பீஷ்மர் உணர்ந்தார். சற்று முன்னகர்ந்து திடமான குரலில் “…நான் மீனவப்பெண். என்னுடன் இந்த வம்சம் அழிந்தது என்றால் வம்சக்கலப்பால் அழிந்தது என்றுதான் புராணங்கள் சொல்லும். ஷத்ரியர்களும் பிராமணர்களும் அதை எங்கும் கொண்டுசெல்வார்கள்… அதை நான் விரும்பவில்லை…ஒருபோதும் நான் அதை அனுமதிக்கப்போவதில்லை” என்றாள்.

பீஷ்மர் பெருமூச்சுடன் அவளே முடிக்கட்டும் என்று கைகோர்த்துக் காத்திருந்தார். “தேவவிரதா, ஷத்ரியர்கள் என்பவர்கள் யார்? நாட்டைவென்று ஆள்கின்றவன் எவனோ அவன் ஷத்ரியன். பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பு இந்நிலமெல்லாம் காடாக இருந்தபோது இங்கு ஒலித்த ரிஷிகளின் வேதங்களால் இவை ஊர்களாக மாறின. இங்கே அரசுகள் உருவாகி வந்தன. தொல்குடிவேடர்களும் ஆயர்களும் அரசர்களானார்கள். இங்குள்ள அத்தனை ஷத்ரியர்களும் அவ்வாறு உருவாகி வந்தவர்கள்தான். ஆனால் இன்று அவர்கள் தங்களை தூயகுருதியினர் என்று நம்புகிறார்கள். பிறதொல்குடிகளில் இருந்து உருவாகிவரும் புதிய ஆட்சியாளர்களை எல்லாம் படைகொண்டு சென்று அழிக்கிறார்கள். அதற்காக ஒருங்கிணைகிறார்கள். அதற்குக் காரணமாக ஷத்ரியர்கள் அல்லாத எவரும் அரசாளலாகாது என்று நெறிநூல்விதி உள்ளது என்கிறார்கள்.”

“அவை அவர்கள் நாடுகளை உருவாக்கிக் கொள்வதற்கு அமைத்துக்கொண்ட நூல்கள்” என்றார் பீஷ்மர். “ஆம்… கடல்சேர்ப்பர்களும் மச்ச மன்னர்களும் வேடர்தலைவர்களும் நாகர்குடிவேந்தர்களும் இன்று ஷத்ரியர்களால் அழிக்கப்படுகிறார்கள். ஆனால் கங்கையின் ஜனபதத்துக்கு வெளியே புதிய அரசுகள் உருவாகி வருகின்றன. கூர்ஜரத்து கடற்கரையில் யாதவர்களின் அரசுகள் உருவாகின்றன. தெற்கே மாளவர்களும் தட்சிணத்தில் சதகர்ணிகளும் விரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்பால் திருவிடத்திலும் தமிழ்நிலத்திலும் பேரரசுகள் எழுந்துவிட்டன. சூத்திரர்களிடமிருந்து புதிய அரசகுலங்கள் பிறந்து வரவேண்டும். இல்லையேல் பாரதவர்ஷம் வளரமுடியாது…அதற்கு ஷத்ரியசக்தி கட்டுப்படுத்தப்பட்டாகவேண்டும்.”

பீஷ்மர் தலையை அசைத்தார். “மாமன்னர் சந்தனு கங்கர்குலத்திலிருந்து உன்னை கொண்டுவந்தபோதே ஷத்ரியர்கள் அமைதியிழந்துவிட்டனர். என்னை அவர் மணந்து அரியணையையும் அளித்தபோது நமக்கெதிராக அவர்களனைவரும் திரண்டுவிட்டனர். அஸ்தினபுரம் புலிகளால் சூழப்பட்ட யானைபோலிருக்கிறது இன்று. அதற்குக்காரணம் நம் குருதி…. அவர்கள் நாம் இங்கே குலநீட்சிகொள்ளலாகாது என நினைக்கிறார்கள். அதை நான் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. இந்தக்குலம் வாழவேண்டும். இதில் சத்யவதியின் மச்சகுலத்துக் குருதி இன்னும் பல தலைமுறைகளுக்கு இந்த அரியணையில் இருந்து ஆளவேண்டும். அவர்களின் பிள்ளைகள் தங்கள் வாள்வல்லமையால் ஷத்ரியகுலத்தில் மணம்கொள்ளவேண்டும்…”

பெருமூச்சுடன் சத்யவதி உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டாள். “நான் இவ்வரியணையில் அமர்ந்தது அடையாளமின்றி அழிந்துவிடுவதற்காக அல்ல தேவவிரதா. உன் தந்தை என்னை மணம்கொள்ள வந்தபோது அவரிடம் நான் அரசியாகவேண்டுமென்ற ஆணையை என் தந்தை கோரிப்பெறுவதற்குக் காரணம் நானே. மும்மூர்த்திகளும் எதிர்த்தாலும் என்னை விடமாட்டேன் என்று அவர் சொன்னார். அப்போதே அம்முடிவை எடுத்துவிட்டேன். என் தந்தையிடம் அந்த உறுதியைப் பெறும்படி சொன்னேன். எளிய மச்சர்குலத்தலைவரான அவர் மாமன்னர் சந்தனுவிடம் உறுதிகோர அஞ்சினார்…நான் அவருக்கு ஆணையிட்டேன்.”

“தெரியும்” என்றார் பீஷ்மர். “நீ அதை ஊகித்திருப்பாய் என நானும் அறிவேன்” என்றாள் சத்யவதி. “ஆனால் நான் அந்த உறுதியைப்பெறும்போது உன்னை கங்கர்குலத்துச் சிறுவனாக மட்டுமே அறிந்திருந்தேன். அன்று என்குலம் என் குருதி என்று மட்டுமே எண்ணினேன். என் குழந்தைகள் பிறந்தபின்னர் என் வம்சம் என்று மட்டுமே என்னால் சிந்திக்கமுடிந்தது…” அவரை நோக்கி “என்னை எவரும் சுயநலமி என்று சொல்லலாம். ஆனால் மண்ணில் எந்த அன்னையும் சுயநலமி மட்டுமே” என்றாள்.

“அன்னையே, தாயாக நீங்கள் கொள்ளும் உணர்வுகளை நானறியேன். ஆனால் சக்ரவர்த்தினியாக நீங்கள் எண்ணுவதை ஒவ்வொரு சொல்லாக நான் புரிந்துகொள்கிறேன். நீங்கள் சுயநலம்கொண்ட எளிய பெண்ணல்ல. இந்த பாரதவர்ஷத்தின் விதியை சமைக்கப்போகும் பேரரசி. நீங்கள் கனவு காண்பது உங்கள் நலனையோ உங்கள் வம்சத்தையோ அல்ல, பாரதவர்ஷத்தை. நீங்கள் ஆயிரம் வருடங்களை முன்னோக்கிச் சென்று பார்க்கும் கண்கள் கொண்டவர். அந்தக்கனவுதான் உங்களை முன்கொண்டுசெல்கிறது. உங்கள் விழிகளில் பிறிதனைத்தையும் சின்னஞ்சிறியனவாக ஆக்குகிறது” என்றார் பீஷ்மர். “அதை நான் அன்றே அறிந்தேன். உங்கள் கைகளின் ஆயுதமாக இருப்பதே என் கடமை என்றும் உணந்தேன்.”

“நான் உனக்குக் கடன்பட்டிருக்கிறேன் தேவவிரதா” என்றாள் சத்யவதி. “என் திட்டத்தைச் சொல்லவே நான் உன்னை அழைத்தேன். வரும் முழுநிலவுநாள் வரை அவனை வைத்திருப்போம். அதற்குள் இவ்விரு இளவரசிகளும் கருவுற்றார்களென்றால் மருத்துவர்களைக் கொண்டு அதை அறிவிக்கச் செய்வோம். அதன்பின் விசித்திரவீரியனின் வான்நுழைவை முறைப்படி அறிவிப்போம்” என்றாள்.

சிலகணங்களுக்குப் பின்னர்தான் பீஷ்மர் அச்சொற்களைப் புரிந்துகொண்டார். திடுக்கிட்டு எழுந்து “அன்னையே தாங்கள் சொல்வது எனக்குப்புரியவில்லை” என்றார். “ஆம், அவர்கள் வயிற்றில் குருகுலத்தின் தோன்றல்கள் கருவுறவேண்டும்…” என்றாள். “அதற்கு?” என்றார் பீஷ்மர் சொல்லிழந்த மனத்துடன். “தேவவிரதா, சந்தனுவின் குருதியில் பிறந்த நீ இருக்கிறாய்.”

“அன்னையே” என்று கூவியபடி பீஷ்மர் முன்னால் வந்து சத்யவதியை மிக நெருங்கி அந்த நெருக்கத்தில் அவளைப்பார்த்த திகைப்பில் பின்னகர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள்? சொற்களை சிந்தனை செய்துதான் சொல்கிறீர்களா?” என்றார். தன்குரலை அவரே வேறெவரோ பேசுவதுபோலக் கேட்ட்டார். சத்யவதி “வேறுவழியில்லை தேவவிரதா. நான் அனைத்து நெறிநூல்களையும் பார்த்துவிட்டேன். எல்லாமே இதை அனுமதிக்கின்றன…” என்றாள்.

“அன்னையே, என்னை மன்னிக்கவேண்டும். இன்னொருமுறை நீங்கள் இதைச் சொன்னீர்கள் என்றால் இங்கேயே என் கழுத்தை அறுத்து உயிர்விடுவேன்” என்றார் பீஷ்மர். “தேவவிரதா இது உன் தந்தை…” என்று சத்யவதி ஆரம்பித்ததும் பீஷ்மர் தன் வாளை உருவ கையைக்கொண்டு சென்றார். சத்யவதி அவர் கையைப் பற்றினாள். “வேண்டாம் தேவவிரதா…” என்றாள். “என்னை மன்னித்துவிடு… வேறுவழியே இல்லாமல்தான் நான் இதை உன்னிடம் சொன்னேன்.”

பீஷ்மர் நடுங்கிய கரங்களை விலக்கி நெஞ்சில் வைத்தார். சத்யவதி “வேறு ஒருவன் மட்டும்தான் இருக்கிறான் தேவவிரதா. அவன் சந்தனுவின் குருதியல்ல, என் குருதி” என்றாள். பீஷ்மர் புரியாமல் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றார். “அவன் இங்கு வந்தானென்றால் இவ்வம்சம் வாழும்… அதை நாம் குருவம்சமென வெளியே சொல்லுவோம். அனைத்து நூல்நெறிகளின்படியும் அது குருவம்சம்தான். ஆனால் உண்மையில் அது என் வம்சமாகவே இருக்கும்.”

“நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் பேரரசி?” என்றார் பீஷ்மர். “உன் தமையன்…வியாசவனத்துக்குச் சென்று அவன் சொல்லைக் கேட்டுத்தானே நீ காசிமகளிரை கைப்பற்றச் சென்றாய்?” என்றாள் சத்யவதி. பீஷ்மர் அனைத்து ஆற்றல்களையும் இழந்தவர் போல கால்கள் தளர்ந்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

சத்யவதி “அவன் முனிவன். ஆனால் பிரம்மசரிய விரதமுடையவனல்ல. அவனுடையது கவிஞர்களுக்குரிய பிரேமைநெறி. முன்னரே அவனுக்கு குழந்தை பிறந்திருக்கிறது…” என்றாள். “அவன் கற்றறிந்த சான்றோன். என் குலம் அவன் வழியாக முளைத்து இந்த பாரதவர்ஷத்தை ஆளுமென்றால் அதைவிட மேலானதாக ஏதுமிருக்கப்போவதில்லை.”

“ஆனால் இன்று அவர் என்னைவிட மூத்தவர்” என்றார் பீஷ்மர். சத்யவதி “யோகவீரியமுள்ள முனிவனுக்கு வயது ஒரு தடையே அல்ல. அவன் வந்தால் எல்லா இக்கட்டுகளும் முடிந்துவிடும். அஸ்தினபுரியின் அரசமரபு தொடரும்… தேவவிரதா இது ஒன்றுதான் வழி…”

பீஷ்மர் “அதை எப்படி அவர் ஏற்றுக்கொள்வார்?” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோலச் சொன்னார். சத்யவதி “நீ ஏற்றுக்கொள்ளச்செய். அவனுக்கு உன்மேல் மட்டும்தான் பற்று இருக்கிறது. உன் சொற்களை மட்டும்தான் அவன் பொருட்படுத்துவான்….நீ என் ஆணையை மறுத்தாய். ஆகவே நீ இதைச் செய்தே ஆகவேண்டும்…இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்” என்றாள்.

பீஷ்மர் “அன்னையே என்னால் எதையுமே சிந்திக்க முடியவில்லை.உங்கள் சொற்கள் என்னை சூழ்ந்துகொண்டிருக்கின்றன” என்றார். சத்யவதி “தேவவிரதா, அவனிடம் சொல். காசிநாட்டுப் பெண்களைக் கொண்டுவர அனுமதியளித்தவனே அவன் அல்லவா? அப்படியென்றால் அவனுக்கு இப்பெண்களின் வாழ்க்கையில் பொறுப்பில்லையா? அந்த வினாவுக்கு முன் அவன் பதிலிழந்துவிடுவான்” என்றாள். பீஷ்மர் அவளுடைய முகத்தை சொற்களற்ற மனதுடன் ஏறிட்டுப்பார்த்தார்.

சத்யவதி எங்கோ நின்று பேசினாள். “அவன் அவர்களை தாயாக்கினால் அவர்கள் வயிற்றில் அஸ்தினபுரியின் அரசகுலம் பிறக்கும். அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு பொருள் உருவாகும். அரசியராக அவர்கள் இந்த மண்ணை ஆளமுடியும். இல்லையேல் அவர்களுக்கிருப்பது என்ன? இருண்ட அந்தப்புர அறைகளில் வாழ்நாளெல்லாம் விதவை வாழ்க்கை. அல்லது உடன்சிதையேற்றம்….உயிருடன் எரிவது அல்லது எரிந்து உயிர்வாழ்வது….அவன் கருணைகொண்டானென்றால் அவர்களை வாழச்செய்ய முடியும். இந்த நாட்டையும் இதன் குடிகளையும் வாழச்செய்ய முடியும்.”

பீஷ்மர் அச்சொற்கள் அனைத்தும் கனத்த கற்களாக வந்து தனக்குள் அடுக்கப்பட்டு சுவர்போலெழுவதை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். எத்தனை தெளிவு எவ்வளவு துல்லியம் என அவர் அகம் மலைத்தது.

“அவனைக் கொண்டுவருவது உன் பொறுப்பு…. நீ செய்தேயாகவேண்டிய கடமை. இது என் ஆணை! ஆகவே மண்மறைந்து விண்ணேகிய உன் தந்தையின் ஆணை!” என்றாள் சத்யவதி. பீஷ்மர் பேசாமல் நின்றார். “எனக்கு வாக்களி…அவனை அழைத்துவருவேன் என” என்று அவள் சொன்னாள். “வாக்களிக்கிறேன் அன்னையே” என்றார் பீஷ்மர். அக்கணமே அவருக்கு சொற்கள் தவறிவிட்டன என்று புரிந்தது. வியாசரை அழைக்கிறேன் என்பதற்கு பதில் கொண்டுவருகிறேன் என அவரை சொல்லவைத்துவிட்டாள்.

உடல் கற்சிற்பம் போல கனத்து கால்களில் அழுந்த மெல்ல நடந்து வெளியே வந்து வெயில் பொழிந்துகிடந்த முற்றத்தை அடைந்தபோது பீஷ்மர் திடீரென்று புன்னகை செய்தார். அவர் உள்ளே நுழைவதற்கு முன்னரே சத்யவதி வியாசரை அழைப்பதற்கான திட்டத்தை முழுமைசெய்துவிட்டிருந்தாள் என அவர் உணர்ந்தார்.

நூல் ஒன்று – முதற்கனல் – 27

பகுதி ஆறு : தீச்சாரல்

[ 1 ]

அஸ்தினபுரிக்கு வடக்கே முப்பது நிவர்த்த தொலைவில் இருந்த கிரீஷ்மவனம் என்னும் காட்டுக்குள் ஓடிய தாராவாஹினி என்னும் சிற்றாறின் கரையில் கட்டப்பட்ட குடிலில் தன் பதினெட்டு சீடர்களுடன் பீஷ்மர் தங்கியிருந்தார். அவர்கள் மாலை ஆயுதப்பயிற்சிகள் முடிந்து மீண்டும் தாராவாஹினியில் நீராடி மரத்தடியில் தீயிட்டு அமர்ந்து கொண்டு வெளியூரில் இருந்து வந்திருந்த சூதரையும் விறலியையும் அமரச்செய்து கதைகேட்டுக்கொண்டிருந்தனர்.

நள்ளிரவு தாண்டியிருந்தது. பீஷ்மர் மரத்தடியில் சருகுமெத்தைமேல் விரிக்கப்பட்ட புலித்தோலில் படுத்திருந்தார். அவர் காலடியில் மாணவனான ஹரிசேனன் அமர்ந்திருந்தான். நெருப்பருகே சூதரும் விறலியும் அமர்ந்திருந்தனர். உறுதியான கரிய தோளில் சடைக்கற்றைகள் சரிந்திருக்க சிவந்த அகன்ற கண்கள் கொண்ட சூதர் பெரிய விரல்களால் கிணையை மீட்டினார்.

ஒவ்வொருநாளும் வெவ்வேறு ஊர்களில் இருந்து வரும் நாடோடிகளான சூதர்கள் அஸ்தினபுரியின் அரண்மனைமுற்றத்தில் குழுமுவதுண்டு. அவர்கள் தங்குவதற்கு அரண்மனைக்கு அப்பால் ஸஃபலம் என்ற பெரிய தடாகத்தின் மூன்றுகரைகளிலுமாக குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்கள் காலையில் நீராடி வாத்தியங்களுடன் அரண்மனைக்கு வந்து அரசகுலத்தவரைக் கண்டு பரிசில்பெற்றுச் செல்வார்கள். அரசியர் தங்கள் கைகளாலேயே அவர்களுக்கு கொடையளிக்கவேண்டும் என்று நெறியிருந்தது.

ஆனால் சூதர்கள் பெரும்பாலும் பீஷ்மரை சந்திக்கவிரும்புவார்கள். பீஷ்மரை சந்தித்தால் மட்டுமே அடுத்த ஊரில் அவர்கள் அவரைப்பற்றி சொல்லமுடியும். அன்று மாலை வந்திருந்த சூதர்களில் ஒருவர் அவர் சௌபநகரில் இருந்து வருவதாகச் சொன்னார். பீஷ்மரின் கண்கள் அதைக்கேட்டதும் மிகச்சிறிதாக சுருங்கி மீண்டதை ஹரிசேனன் கண்டான். அவரைத் திருப்பி அனுப்பலாமென அவன் எண்ணியதுமே பீஷ்மர் “சூதரே வருக” என்று அழைத்தார். அருகே அமரச்செய்து “பாடுக” என்று ஆணையிட்டார்.

தசகர்ணன் என்னும் சூதர் சௌபநகரம் பற்றி சொன்னார். அந்நகரில் இருந்து ஒவ்வொருநாளும் கூட்டம்கூட்டமாக மக்கள் வெளியேறி பாஞ்சாலத்துக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள் என்றார். பெண்சாபம் விழுந்த மண் என்று சௌபத்து நிமித்திகர் சொன்னார்கள். நகர்நீங்கி காடுசென்று கொற்றவையாகி வந்து ஷத்ரியர்புரிகளுக்கெல்லாம் சென்ற அம்பாதேவி அந்நகருக்கு மட்டும் வரவில்லை. அவள் மீண்டும் வருவாள் என்று எண்ணி அனைத்துக் கோட்டைவாயில்களையும் மூடிவிட்டு சால்வன் நடுங்கிக்கொண்டிருந்தான். அவள் பாஞ்சாலத்துக் கோட்டைவாயிலில் ஒரு காந்தள் மலர் மாலையைச் சூட்டிவிட்டு காட்டுக்குச் சென்றுவிட்டாள் என அறிந்ததும் நிறைவடைந்தவனாக கோட்டைவாயில்களைத் திறக்க ஆணையிட்டான். அதுவரை கோட்டைக்குள்ளும் புறமும் எவரும் அனுமதிக்கப்படவில்லை.

கோட்டைவாயில் திறந்த அன்று குலதெய்வமான சண்டிதேவிக்கு ஒரு பூசனை செய்து சூதர்களுக்கெல்லாம் பரிசுகள் வழங்க சால்வன் ஒருங்குசெய்தான். வாரக்கணக்கில் கோட்டைக்கு வெளியே தங்கியிருந்த சூதர்கள் ஊர்மன்றுக்கு வந்தனர். நகரமெங்கும் முரசறைந்து அனைவரும் வரவேண்டுமென்று ஆணையிட்டிருந்தமையால் நால்வருணத்து மக்களும் மன்றில் வந்து கூடியிருந்தார்கள். செங்கோலேந்திய காரியகன் முன்னால் வர வெண்குடை ஏந்திய தளபதி பின்னால் வர உடைவாளும் மணிமுடியுமாக வந்து மேடையில் இடப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்த சால்வன் அங்கே வாழ்த்தொலிகளே எழவில்லை என்பதை ஒருகணம் கழித்தே புரிந்துகொண்டான். அவன் பரிசில்களை கொண்டுவரும்படி சொன்னான்.

அரண்மனை சேவகர்களால் பொன், வெள்ளி நாணயங்களும் சிறு நகைகளும் அடங்கிய ஆமையோட்டுப்பெட்டி கொண்டுவந்து மன்றுமுன் வைக்கப்பட்டது. முறைப்படி முதுசூதர் வந்து மன்னனை வாழ்த்தி முதல்பரிசு பெறவேண்டும். தொங்கிய வெண்மீசையும் உலர்ந்த தேங்காய்நெற்று போன்ற முகமும் கொண்ட முதுசூதரான அஸ்வகர் எழுந்து தள்ளாடிய நடையில் சென்று மன்றுமேல் ஏறினார். முறைப்படி அவர் தன் வாத்தியத்துடன் வரவேண்டும். வெறுமே மன்றேறிய அவர் இருகைகளையும் விரித்து மக்களைநோக்கித் திரும்பி “சௌபநாட்டின் குடிகளை அழிவில்லாத சூதர்குலம் வணங்குகிறது. இங்கே நாங்கள் பெற்ற ஒவ்வொரு தானியத்துக்கும் எங்கள் சொற்களால் நன்றி சொல்கிறோம்” என்றார். அவரது குலம் ‘ஆம் ஆம் ஆம்’ என்றது.

சூதர் “இந்தமண் மீது பெண்சாபம் விழுந்துவிட்டது. இங்குவாழும் கற்பரசிகளினாலும் சான்றோர்களாலும்தான் இங்கு வானம் வெளியால் இன்னமும் தாங்கப்படுகிறது” என்றார். சால்வன் திடுக்கிட்டு எழுந்து நின்றான். சூதர் உரக்க “இனி இந்த நாட்டை சூதர் பாடாதொழிவோம் என இங்கு சூதர்களின் தெய்வமான ஆயிரம்நாகொண்ட ஆதிசேடன் மேல் ஆணையாகச் சொல்கிறோம். இந்நாட்டின் ஒரு துளி நீரோ ஒருமணி உணவோ சூதர்களால் ஏற்கப்படாது. இந்த மண்ணின் புழுதியை கால்களில் இருந்து கழுவிவிட்டு திரும்பிப்பாராமல் இதோ நீங்குகிறோம். இனி இங்கு சூதர்களின் நிழலும் விழாது. பன்னிரு தலைமுறைக்காலம் இச்சொல் இங்கே நீடிப்பதாக!” முதுசூதர் வணங்கி நிமிர்ந்த தலையுடன் இறங்கிச்சென்றார்.

சால்வன் கை அவனையறியாமலேயே உடைவாள் நோக்கிச் சென்றது. அமைச்சர் குணநாதர் கண்களால் அவனைத் தடுத்தார். சால்வன் கண்களில் நீர் கோர்க்க உடம்பு துடிக்க செயலிழந்து நின்றான். அவனையும் இறந்த அவனது மூதாதையரையும் பிறக்காத தலைமுறைகளையும் நெஞ்சுதுளைத்துக் கொன்று குருதிவழிய மண்ணில் பரப்பிப்போட்டுவிட்டு அந்த முதுசூதன் செல்வதுபோலப்பட்டது அவனுக்கு. மெல்லிய சிறு கழுத்தும், ஆடும் தலையும் கொண்ட வயோதிகன். அடுத்தவேளை உணவுக்கு காடுகளையும் மலைகளையும் தாண்டிச்செல்லவேண்டிய இரவலன். ஆனால் அளவற்ற அதிகாரம் கொண்டவன்.

மண்ணில் கால்விழும் ஓசை மட்டுமேயாக சூதர்கள் திரும்பிச்செல்வதை சால்வன் பார்த்துக்கொண்டிருந்தான். ஓடிப்போய் அவர்களின் புழுதிபடிந்த கால்களில் விழுந்து மன்றாடுவதைப்பற்றி எண்ணினான். ஆனால் அவர்கள் சொல்மீறுபவர்களல்ல. அவன் உடல்மேல் அவர்கள் நடந்துசெல்வார்கள். சென்று மறையும் சூதர்களை திகைத்து விரிந்த விழிகளுடன் நகரமக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த வாத்தியங்களுக்குள் தங்கள் மூதாதையர் உறைவதுபோல. அவர்களும் இறுதியாக பிரிந்து செல்வதுபோல. இறுதி சூதனும் மன்றில் இருந்து வெளியேறியபோது சால்வன் பெருமூச்சுடன் தன் செங்கோலையும் உடைவாளையும் வீரர்களிடம் கொடுத்துவிட்டு தளர்ந்த காலடிகளை எடுத்து வைத்து மேடையில் இருந்து இறங்கினான்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு பெண்குரல் கல் போல அவன் மேல் வந்து விழுந்தது. கரிய உடலும் புல்நார் ஆடையும் அணிந்த முதிய உழத்தி ஒருத்தி எழுந்து வெண்பற்கள் வெறுப்புடன் விரிந்து திறந்திருக்க, இடுங்கிய கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அவிழ்ந்து தோளில் தொங்கிய தலைமயிர் காற்றிலாட, கைநீட்டி கூச்சலிட்டாள். “எங்கள் வயல்களின்மேல் உப்புபோல உன் தீவினை பரந்துவிட்டதே… உன்குலம் அழியட்டும்! உன் நாவில் சொல்லும் கையில் திருவும் தோளில் மறமும் திகழாது போகட்டும்! நீ வேருடனும் கிளையுடனும் அழிக! உன் நிழல்பட்ட அனைத்தும் விஷம்பட்ட மண்போல பட்டுப்போகட்டும்!”

சால்வன் கால்கள் நடுங்கி நிற்கமுடியாமல் தளபதியை பற்றிக்கொண்டான். அத்தளபதியின் கையிலிருந்த வெண்குடை சமநிலைகெட்டுச் சரிய அதை அமைச்சர் பிடித்துக்கொண்டார். அனைவருமே நடுங்குவதுபோலத் தோன்றியது. கிழவி குனிந்து ஒருபிடி மண்ணை அள்ளி தூற்றிவிட்டு ஆங்காரமாக “ஒழிக உன் நாடு…! எங்கள் மூதாதையரைத் துரத்திய உன் செங்கோலில் மூதேவி வந்து அமரட்டும்!” என்று கூவியபடி நடந்து நகருக்கு வெளியே செல்லும் பாதையில் சென்றாள். அவள்பின்னால் அவள் குலமே சென்றது.

அன்று முதல் சௌபநாட்டிலிருந்து குடிமக்கள் வெளியேறத் தொடங்கினர். குடிமக்களனைவருக்கும் களஞ்சியத்தில் இருந்து பொன்னும் மணியுமாக அள்ளிக்கொடுத்தான் சால்வன். ஊர்மன்றுகள் தோறும் விருந்தும் களியாட்டமும் ஒருங்குசெய்தான். ஒவ்வொரு குலமாக அமைச்சர்களை அனுப்பி மன்றாடினான். ஆயினும் மக்கள் சென்றுகொண்டே இருந்தனர். பதினெட்டாம் நாள் கங்கையிலிருந்து சுமையிறக்கும் யானைகள் இரண்டு மிரண்டு கூவியபடி நகருக்குள் புகுந்து துதிக்கை சுழற்றி தெருக்களில் ஓடின. அவற்றை அடக்கமுயல்கையில் ஒரு யானை வேல்பட்டு மண்ணதிர விழுந்து துடித்து இறந்தது. அதன்பின் மக்கள் விலகிச்செல்லும் வேகம் மேலும் அதிகரித்தது.

VENMURASU_EPI_27 RAIBOW_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

இன்று சௌபநகரில் இருப்பவர்கள் போகிகளும் குடிகாரர்களும் விடர்களும்தான் என்றார் சூதர். மக்கள் நீங்கிய இடங்களிலெல்லாம் வேளாண்நிலத்தில் எருக்கு முளைப்பது போல வீணர் குடியேறினர். மனம் தளர்ந்த மன்னனை மதுவருந்தவைத்து போகியாக்கிய அமைச்சர் குணநாதர் ஆட்சியை தன் கைகளில் எடுத்துக்கொண்டார். சௌபநகரின் துறைகளில் இருந்து வணிகர்களின் சுங்கம் வந்துகொண்டிருந்ததனால் மன்னன் போகிகளுக்கு அள்ளிவழங்கினான். சௌபத்தின் தெருக்களில் எங்கும் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த பரத்தையர் நிறைந்தனர்.

“சௌபநாட்டுக் கோட்டை வாயிலை காலையில் திறந்த காவலர்கள் அழுதகண்ணீருடன் ஒரு பெண் நகர்விட்டு நீங்கிச்செல்வதைக் கண்டனர். அவளிடம் அவள் யார் என்று கேட்டனர். அவள் அவர்களைப் பார்க்கவில்லை. அவர்கள் நின்றதையே அறியவும் இல்லை. அவள் பாதைநுனியை அடைந்தபோது எழுந்த முதற்பொன்னொளியில் அவள் உடல் புதிய பொன்னென சுடர்விட்டதைக் கண்டதும் முதியகாவலன் கைகூப்பி “அன்னையே!” என்று கண்ணீருடன் கூவினான். சௌபமகள் சாவித்ரி என அவளை அவன் அறிந்தான்.

“சௌபத்தின் செல்வத்தின் அரசியான சாவித்ரி அந்நகரை உதறிச்சென்றபின் அந்நகரம் மீட்டப்படாத வீணைபோல புழுதிபடிந்தது” என்றார் சூதர். நகரின் கைவிடப்பட்ட வீடுகளிலும் கலப்பைவிழாத நிலங்களிலும் நாகங்கள் குடியேறின. கதவுகளைத் திறந்தால் நிழல்கள் நெளிந்தோடுவதுபோல அவை விலகின. இருட்டுக்குள் இருந்து மின்னும் கண்களும் சீறும் மூச்சும் மட்டும் வந்தன.

பீஷ்மர் பெருமூச்சுடன் “ஆம், வேதாளம் சேரும், வெள்ளெருக்கு பூக்கும். பாதாளமூலி படரும், சேடன் குடிபுகும்… அதுதான் சொல்லப்பட்டிருக்கிறது” என்றார். ஹரிசேனன் அவன் மனதில் எழுந்த எண்ணத்தை உடையில் பற்றும் தீயை அணைக்கும் வேகத்துடன் அடித்து அவித்தான். ஆனால் அதையே பீஷ்மர் கேட்டார். “அஸ்தினபுரியின் பரிசில்களைப்பெற சூதர்கள் வந்திருக்கிறீர்களே?”

“பிதாமகரே, மன்னன் முதற்றே அரசு. அஸ்தினபுரியின் செங்கோலை இன்று ஏந்தியிருப்பவன் சந்திரவம்சத்தின் மாமன்னர்களில் ஒருவன். அஸ்தினபுரியின் முதன்மை வீரன். அவன் மேல் அம்பைதேவி தீச்சொல்லிடவில்லை. அவனை வாழ்த்தியே அவள் வனம்புகுந்தாள். அறத்தில் அமைந்த கோல்கொண்டவன். ஆயிரம் முலைகளால் உணவூட்டும் அன்னைப்பெரும்பன்றி போன்ற கருணைகொண்டவன். அவனை சூதர்குலம் வணங்குகிறது. இந்தமண்ணும் இங்கு சொல்லும் உள்ளவரை சூதர்மொழி அவனை வாழ்த்தி நிற்கும். அவன் வாழ்க! அவன் செங்கோல் காத்துநிற்கும் இந்த மண் வாழ்க! விசித்திரவீரிய மாமன்னன் பாதங்களில் பணியும் எங்கள் வாத்தியங்களில் வெண்கலைநாயகி வந்தமர்ந்து அருள்புரிக!”

“ஆம்” என்றார் பீஷ்மர் தலையை அசைத்து. “மானுடரில் அவன் கண்களில் மட்டுமே நான் முழுமையான அச்சமின்மையை கண்டிருக்கிறேன்.” பெருமூச்சுடன் “போரும் படைக்கலமும் அறியாத மாவீரன் அவன்” என்றார். ஹரிசேனன் அவர் மேல் ஒரு கசப்பை உணர்ந்தான். அந்தச் சொற்கள் அரசமரபுச் சொற்கள் போல அவனுக்குத் தெரிந்தன. அந்த வெறுப்பை அவனே அஞ்சியதுபோல சூதரை நோக்கி பார்வையை திருப்பிக்கொண்டான்.

சூதரின் கண்கள் செருகின. அவரது வாயின் ஓரம் இழுபட்டு அதிர்ந்தது. ஓங்கியகுரலில், “என் சொற்களில் வந்தமரும் கன்னங்கரிய சிறுகுருவி எது? இதோ என் கிணைத்தோலில் ஒலிக்கும் நெடுந்தாளம் எது? அவன் பேரைச்சொல்லும்போது என் நெஞ்சில் மிதித்தோடும் பிங்கலநிறப்புரவி எது?” முன்னும் பின்னும் ஆடி தன்னுள் ஆழ்ந்து விழித்த கண்களுடன் அவர் முனகிக்கொண்டார்.

பின்பு ஏதோ ஒரு கணத்தில் அவர் கைவிரல்கள் கிணைத்தோலில் வெறிநடனமிட்டன. பெருங்குரலில் “இதோ விண்ணகத்தில் அவன் யானைமேல் சென்றிறங்குகிறான். அவனை வெண்ணிற ஐராவதமேறி வந்து இந்திரன் வரவேற்கிறான். மாமுனிவர்களும் தேவர்களும் கூடி அவனை வாழ்த்தி குரல்கொடுக்கிறார்கள். இந்திரவில் ஏழொளியுடன் கீழ்வானில் எழுந்திருக்கிறது. மண்ணில் இந்திர வீரியம் வானகத்தின் பொற்தூரிகைபோலப் படர்ந்து அவன் புகழை எழுதிச்செல்கிறது” என்றார்.

பீஷ்மர் திடுக்கிட்டு எழுந்துவிட்டார். ஹரிசேனன் பதற்றத்துடன் சூதரைப்பார்த்தான். அவரைத்தடுத்து என்ன சொல்கிறார் என்று கேட்கவேண்டுமென எண்ணினான். ஆனால் அவர் எங்கிருந்தோ எங்கோ பறந்து செல்லும் யட்சன் போலிருந்தார். “அழியாப்புகழுடைய தன் மைந்தன் வந்ததைக் கண்டு சந்திரன் வெண்ணொளிக் கலையணிந்து வந்து கைநீட்டி அணைத்துக்கொண்டான். அதோ வெண்தாடி பறக்க கைவிரித்து கண்ணீருடன் வருபவன் ஆதிமூதாதை புரூரவஸ் அல்லவா? பேரன்புடன் சிரித்து எதிர்கொள்பவன் ஆயுஷ் அல்லவா? நகுஷன் அல்லவா அவனருகே நின்று புன்னகைக்கிறான்? மைந்தன் புருவை அணைத்து நின்றிருப்பவன் யயாதி அல்லவா?”

கிணை துடியாக மாறிவிட்டதுபோல தாளம் வெறிகொண்டது. “ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு ஆகியோர் வந்தார்கள்! பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன் ஆகியோர் வந்தார்கள்! பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன் ஆகியோர் வந்தார்கள்! மூதாதையர் அனைவரும் வந்து நிற்கும் வான்வெளியில் இறங்கினான் அஸ்தினபுரியின் அறச்செல்வன்! வாழ்க அவன் புகழ்!

“அய்யோ, மாமன்னன் ஹஸ்தியல்லவா அவனைத் தழுவுகிறான். அந்த வலியபெருங்கரங்களில் இறுகிநெளிந்து யானைபுஜங்களில் முகம் சேர்க்கிறானே அவனல்லவா இந்நாட்டின் அழியா மணிமுத்து! வீரத்தால் வென்றவருண்டு, மதியுரத்தால் வென்றவருண்டு, நட்பால் வென்றவருண்டு, குலத்தால் வென்றவருண்டு. பெருங்கனிவால் வென்றவன் புகழ்பாடுக! சூதர்குலமே, இம்மாநகரம் அளித்த ஒவ்வொரு மணி தானியத்தையும் மாமன்னன் விசித்திரவீரியனின் புகழாக்குக!

“அஜமீடனை, ருக்‌ஷனை, சம்வரணனை, குருவை அமரர்களாக்கிய பேரன்புச்செல்வனை வணங்குக கையே! ஜஹ்னுவை, சுரதனை, விடூரதனை, சார்வபௌமனை, ஜயத்சேனனை ஒளிகொள்ள வைத்தவனைப் பாடுக நாவே! ரவ்யயனை, பாவுகனை, சக்ரோத்ததனை, தேவாதிதியை, ருக்‌ஷனை அமரருலகில் நிறுத்திய மாமன்னனைப் பணிக என் சிரமே! சூதர்களே மாகதர்களே, இன்று இதோ நம் சிறுசெந்நாவால் அவன் புகழ்பாடும் பேறு பெற்றோம். கைகூப்பி அவன் கைபற்றும் பிரதீபனை, கண்ணீரால் அவன் உடல்நனைக்கும் சந்தனுவைக் கண்டோம். அவனை சிறுகுழந்தையாக்கி மீண்டும் முலையூட்ட வந்து நின்ற மூதன்னையர் வரிசையைக் கண்டோம். சூதரே, இனிது நம் பிறவி! சூதரே இனிதினிது நம் சொற்கள்!

“பாரதமே பாடுக! இன்று வைகானச சுக்லபட்சம் இரண்டாம்நாள். இனியிந்தக் காற்றில் எத்தனை காலங்கள் அலையடிக்கும்! இனியிந்த மண்ணில் எத்தனை தலைமுறைகள் முளைத்தெழும்! இனியிந்த மொழியில் எத்தனை கதைகள் சிறகடிக்கும்! இன்று இதோ நடுகின்றோம் அஸ்தினபுரியின் மாமன்னன் புகழை. அது வளர்க! இன்றிதோ கொளுத்துகிறோம் சந்தனுவின் மைந்தனின் பெயரை. அது எரிக! இன்றிதோ ஏற்றுகிறோம் சந்திரவம்சத்து விசித்திரவீரியனின் பெரும்புகழ்க்கொடியை. அது எழுக! ஓம் ஓம் ஒம்!”

விண்ணில் ஓடும் வானூர்தியிலிருந்து தூக்கிவீசபட்ட யட்சன் போல சூதர் மண்ணில் குப்புற விழுந்தார். தன் கிணைப்பறை மேலேயே விழுந்து மெல்லத் துடித்து கைகால்கள் வலித்துக்கொண்டு வாயில் நுரைக்கோழை வழிய கழுத்துத்தசைகள் அதிர கண்ணீர் வடிய ஏதோ முனகினார். சூதர்கள் தங்களுக்குள் பேசும் ஆதிமொழியில் அவரிடமிருந்து பொருளறியாச் சொற்கள் வந்தபடி இருந்தன. விறலி அவரை மெல்லத்தூக்கி அமரச்செய்து நீர்புகட்டினாள்.

பீஷ்மர் எழுந்து விரைந்து நடந்து தன் குடில்நோக்கிச் சென்றார். ஹரிசேனன் பின்னால் ஓடினான் “என்ன சொல்கிறார் சூதர்?” என்றான். பீஷ்மர் “அவர் சொல்வது உண்மை. அவரில் வாக்தேவி வந்து சொன்னவை அவை. அவர் சொன்ன அக்கணத்தில் விசித்திரவீரிய மாமன்னன் மண்நீங்கியிருக்கிறார்.” “அப்படியென்றால் ஏன் காஞ்சனம் ஒலிக்கவில்லை? பெருமுரசம் முழங்கவில்லை?”

“தெரியவில்லை… காஞ்சனத்தின் நாவும் பெருமுரசின் கோலும் பேரரசியின் ஆணைக்குக் கட்டுப்பட்டவை அல்லவா?” என்றார் பீஷ்மர். “ஹரிசேனா, நீ அந்த தோதகத்தி மரத்தின்மேல் ஏறிப்பார். அவர் சொன்னதுபோல அஸ்தினபுரிக்குமேல் மென்மழையும் விண்வில்லும் இருக்கின்றனவா என்று கண்டு சொல்!”

ஹரிசேனன் “இப்போது இரவு…” என்றபின் அவர் பார்வையை கவனித்து மரத்தில் பரபரவென்று தொற்றி மேலேறினான். பீஷ்மர் கீழே நின்றார். ஹரிசேனன் மேலிருந்து ‘ஆ!’ என்று வியப்பொலி எழுப்பினான். “என்ன?” என்றார் பீஷ்மர்.

“அங்கே அரண்மனை முகடுகளுக்குமேல் வானத்தில் மெல்லிய வெண்ணிற ஒளி நிறைந்திருக்கிறது. அதனருகே இந்திரவில் வண்ணம் கலைந்துகொண்டிருக்கிறது.” ஹரிசேனன் கண்ணீருடன் உடைந்து. “மென்மழைபெய்கிறது பிதாமகரே… மாளிகைமுகடுகள் பளபளக்கின்றன” என்றான். கீழே விழுந்துவிடுவான் என்று தோன்றியது. கைகளால் மரத்தை இறுகப்பற்றிக்கொண்டு நடுங்கும் உடலுடன் மேலேயே இருந்தான்.

பின்பு கீழே பார்த்தபோது பீஷ்மர் நடந்து செல்வதைக் கண்டான். இறங்கி வந்து அவர் பின்னால் சென்றான் ஹரிசேனன். தாராவாஹினிக்கரையில் பீஷ்மர் சென்று நின்றார். இருபக்கமும் அகன்ற மணல்வெளி கொண்ட ஆற்றின் மீது அசைவில்லாததுபோலக் கிடந்த கரிய நீரில் விண்மீன்கள் பிரதிபலித்திருந்தன. கைகளைக் கட்டியபடி அவற்றைப் பார்ப்பவர் போலவோ பார்வையற்றவர் போலவோ பீஷ்மர் நின்றிருந்தார்.

நூல் ஒன்று – முதற்கனல் – 26

நூல் ஐந்து : மணிச்சங்கம்

[ 5 ]

விசித்திரவீரியன் வருவதற்காக இளஞ்செந்நிற மஞ்சத்தில் காத்திருந்தபோது அம்பிகை சொற்களால் நிறைந்திருந்தாள். அவனிடம் நேற்றிரவெல்லாம் பேசிப்பேசி புலரியைக் கண்டபின்னும் மறுநாளைக்குள் மும்மடங்கு பேசுவதற்கு எப்படி சொற்கள் சேர்ந்துவிட்டன என்று அவளுக்குப் புரியவில்லை. முந்தையநாள் இரவு தொண்டை உலர்ந்து குரல் கம்மியதும் எழுந்து நீர் அருந்துவதற்குள்ளேயே சொற்கள் நிறைந்து தளும்பத்தொடங்கிவிட்டன. “ஏனென்றால் நீ சொல்வதையெல்லாம் நானும் உன்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன், நீ உன் மனதால் அவற்றைக் கேட்கிறாய்” என்றான் விசித்திரவீரியன்.

பேச்சுநடுவே நிறுத்திக்கொண்டு “உண்மையிலேயே நான் பேசுவதிலிருந்து உங்கள் மனம் விலகவில்லையா? இல்லை கண்களால் நடிக்கிறீர்களா?” என்று கேட்டாள். விசித்திரவீரியன் புன்னகையுடன் “உன்னிடமல்ல, எவரிடமும் நான் இப்படித்தான் முழுமையாகத் திறந்துகொண்டு கேட்கிறேன்” என்றான். “வியப்புதான்…ஆண்களுக்கு பெண்கள் பேசுவதெல்லாம் பொருளற்ற சிறுமைகள் என்று படும் என கேட்டிருக்கிறேன்” என்றாள். “பெண்களுக்கும் ஆண்களின் பெரியவை எல்லாம் கூழாங்கற்களாகத்தானே தெரியும்?” என்றான் விசித்திரவீர்யன். கையால் வாய் பொத்தி “ஆம்” என அவள் நகைத்தாள்.

விசித்திரவீரியன் அவள் முகத்தை நோக்கி “உனக்கு ஒன்று தெரியுமா? உண்மையில் மனிதர்களுக்கு பிறர் பேசும் அனைத்தும் பொருளற்றவையாகவே தெரிகின்றன” என்றான். “பிறர் பேச்சில் அவர்கள் தன்னை மட்டுமே காண்கிறார்கள். தான் இடம்பெறாத பேச்சைக்கேட்டால் ஒன்று விலகிக்கொள்வார்கள். இல்லையேல் அதற்குள் தன்னை செலுத்த முயல்வார்கள்.”

அம்பிகை வியப்புடன் “ஆம்” என்றாள். அவனருகே சரிந்து, “நீங்கள் ஏன் அப்படி இல்லை?” விசித்திரவீரியன் “நானா? நான் அப்படி பிறர்முன் வைக்க ஒரு விசித்திரவீரியனை உருவாக்கிக்கொள்ளவில்லை. அதற்கான நேரமே எனக்கிருக்கவில்லை. நான் காட்டிலிருக்கும் சிறிய தடாகம். காற்றையும் நிழல்களையும் கவனிப்பவன். அவை இல்லாதபோது வானை” என்றான் .

அவனை நினைத்தபோது ஏன் உள்ளம் துள்ளுகிறது என அவளுக்குப் புரியவில்லை. அவள் தனக்குள் கற்பனை செய்திருந்த ஆணே அல்ல. ஆனால் அவனைப்போல அவளுக்குள் இடம்பெற்ற ஓர் ஆணும் இல்லை. ஆணிடமல்ல, இன்னொரு மனித உயிரிடம்கூட அத்தனை நெருக்கம் தன்னுள் உருவாகுமென அவள் நினைத்திருக்கவில்லை. ஆடைகளைக் கழற்றிவிட்டு அருவிக்குக் கீழே நிற்பவள்போல அவன் முன் நின்றிருந்தாள்.

விசித்திரவீரியன் வந்தபோது அவன் முற்றிலும் இன்னொருவன் போலிருந்தான். நடையில் ஒரு நிமிர்வும் துள்ளலும் இருப்பதுபோலத் தோன்றியது. உடைகள் சற்றுக் கலைந்தும் புழுதியுடனும் இருந்தன. “பயணத்தில் இருந்தா வருகிறீர்கள்?” என்று அம்பிகை கேட்டாள். “ஆம், ஒரு கேள்விக்கு விடைதேடிச் சென்றேன், கிடைத்தது” என்றான்.

அவள் மலர்ந்த முகத்துடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். “என்ன?” என்றான். அவள் விழிவிரிய நோக்கியபடி இல்லை என தலையசைத்தாள். “சொல்” என்று அவள் தலையைத் தட்டினான். அவள் தலையைப் பிடித்துக்கொண்டு “சென்ற இடத்தில் ஏதோ கந்தர்வன் வந்து அருளியிருக்கிறான் போலிருக்கிறதே?” என்றாள்.

“ஏன்?” என மீண்டும் கேட்டான். “அழகாக இருக்கிறீர்கள்…” சிரித்துக்கொண்டு விசித்திரவீரியன் வந்து அவளருகே அமர்ந்தான். அம்பிகை சிவந்த முகத்துடன் “உண்மை, என் ஆன்மாவிலிருந்து சொல்கிறேன். பார்க்கப்பார்க்க பேரழகாகத் தெரிகிறீர்கள்….மனிதனைப்போலவே இல்லை” என்றாள்.

விசித்திரவீரியன் சிரித்து “காதல் விழிகளால் உருவாக்கப்படுவது அழகு என்று சொல்வார்கள்” என்றான். “ஆம், நான் காதல்கொண்டுவிட்டேன்…அது எனக்கு நன்றாகவே தெரிகிறது” என்றாள் அம்பிகை. “கண்விழித்து எழுந்த முதல் எண்ணமே உங்களைப்பற்றித்தான். வேறெந்த எண்ணமும் அற்பமானவையாகத் தெரிகிறது. எதிலும் நினைவு நிற்கவேயில்லை…”

விசித்திரவீரியன் சால்வையை இருக்கையில் போட்டான். “திரும்பத்திரும்ப ஒரே சந்தர்ப்பங்கள்தான்… அந்த முதற்பெரும் வியாசனுக்கு புதியகதைகளே வருவதில்லை” என்றான். அம்பிகை “ஆம், சூதர்கள் இதையே மீண்டும் மீண்டும் பாடுவார்கள். பதினாறு வருடங்களாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இன்று அவை புத்தம் புதியவை, என்னைப்பற்றி மட்டுமே பாடுபவை என்று தோன்றுகின்றன…” என்றாள்.

அவன் மஞ்சத்தில் அமர்ந்தான். அவள் அவனருகே அமர்ந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டு, “இதையெல்லாம் எவரிடமாவது சொல்லவேண்டுமென்று நினைத்தேன். அம்பாலிகையிடம் சொல்லமுடியாது… அவளும் என் சகபத்தினி என நினைத்தாலே என் உடல் எரிகிறது… அந்த சூதப்பெண் சிவையையும் நான் சேர்க்கமாட்டேன். எந்தப்பெண்ணிடமும் உங்களைப்பற்றிச் சொன்னால் காதல் கொண்டுவிடுவாள்… ஆகவே சூதருடன் வந்த விறலியிடம் சொன்னேன். அவள் பெயர் சோணை. நன்றகாக் கனிந்த முதியவள். சிரிக்கும்போது கங்கையில் நீரலைகள் போல முகம் மலர்வதைக் கண்டேன்.”

“என்ன சொன்னாய் அவளிடம்?” என்றான் விசித்திரவீரியன். “எல்லாவற்றையும்… அவளைப்பார்த்தால் முன்னரே அனைத்தையும் அறிந்தவள் போலிருக்கிறாள்” என்றாள் அம்பிகை. “அவளிடம் சொன்னேன், நான் பீஷ்மரை நினைத்ததைப்பற்றி…”

விசித்திரவீரியன் சிரித்தான். “அதற்கு அந்த முதுவிறலி, இப்போது அவரை நினைத்தால் அருவருப்பாக இருக்குமே என்றாள். நான் ஆம் என்றேன். இறைவனின் சன்னிதியில் தலைப்பாகையும் வாளுமாக வந்து நிற்பவர் போலிருக்கிறார்…” அம்பிகை அச்சொற்களை இயல்பாக வந்தடைந்தாள். “நிமிர்ந்து தருக்கி நிற்கும் மனிதனைப்போல பொருளற்றவன் வேறில்லை” என்றாள்.

விசித்திரவீரியன் “சிலசமயம் குழந்தைகளும் பேருண்மைகளை சொல்லிவிடுகின்றன” என்றான். “நான் அதை வேறுவகையில் நினைத்துக்கொண்டேன். நான் பொறுப்பேற்கிறேன் என்று சொல்லும் மனிதனைப்போல பரிதாபத்துக்குரியவன் வேறில்லை. அவனைப்போன்ற மூடனும் இல்லை.” நன்றாக மல்லாந்துகொண்டு “ஆனால் எப்போதும் மாமனிதர்கள்தான் அப்படி நினைக்கிறார்கள். பேரறிஞர்கள்தான் அவ்வாறு நிற்கிறார்கள். அவ்வாறு எவரோ பொறுப்பேற்றுக் கொள்ளாமல் மானுடம் வாழவும் முடிவதில்லை.”

அம்பிகை “இதைப்பார்த்தீர்களா?” என்றாள். நீர்த்துளிபோல ஒரு வைரம் அவள் கழுத்திலிருந்த சங்கிலியில் தொங்கி மார்புகள் நடுவே இருந்தது. “ஒரே ஒரு நகைதான் அணிவேன் என்று சிவையிடம் சொன்னேன். அந்த ஒற்றை நகையில் அஸ்தினபுரியின் செல்வம் அனைத்தும் இருக்கவேண்டும். எந்த வண்ணம் என்று நாங்கள் பேசிக்கொண்டோம். அம்பாலிகை வெண்ணிறம் என்றாள். சிவை செந்நிறம் என்றாள். நான் நீலநிறத்தை எடுத்தேன். ஆனால் அதன்பின் இந்த நீர்த்துளிவைரத்தை எடுத்துக்கொண்டேன்.”

“கண்ணீர்த்துளி போலிருக்கிறது” என்றான்.  “ஆம், மனம் நெகிழ்ந்து துளிக்கும் ஒற்றைத்துளி என்றுதான் எனக்கும் பட்டது…” உவகையுடன் சொன்னாள். “இதை நீளமான சங்கிலியில் கோர்த்துத் தரும்படி சொன்னேன். இது என் ஆடைக்குள்தான் இருக்கவேண்டும். வேறு எவரும் இதைப்பார்க்கலாகாது.”

26
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

விசித்திரவீரியன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். மலர்வனத்தில் சிக்கிய ஒற்றை வண்ணத்துப்பூச்சி போல அவள் ஒன்றிலும் அமராமல் படபடத்துப் பறந்துகொண்டிருந்தாள். “நான் எல்லாவற்றையும் சோணையிடம் சொன்னேன். உங்கள் உடல்நிலையைப்பற்றி…. அவள் எனக்கு சௌபநாட்டு சாவித்ரியின் ஒரு சிறிய சிலையைத் தந்தாள். தந்தத்தால் ஆன சிலை. அதை என் கையிலேயே வைத்திருக்கவேண்டும் என்றாள்” அம்பிகை தன் ஆடைக்குள் இருந்து அந்த சிறிய சிலையை எடுத்துக்காட்டினாள்.

“சாவித்ரியா?” என்றான் விசித்திரவீரியன். “சூதர்களின் பாட்டில் கேட்ட கதை…ஆனால் நினைவில் மீளவில்லை.” அம்பிகை பரபரப்புடன் “நான் சொல்கிறேன்” என்றாள். “சௌப நாடு அந்தக் காலத்தில் இரண்டு நாடுகளாகப் பிரிந்திருந்ததாம். இன்னொரு நாட்டின் பெயர் மத்ரவதிதேசம். அங்குதான் சாவித்ரி தேவி பிறந்தாள்” என்று உற்சாகமாக ஆரம்பித்தாள்.

மத்ரநாட்டை ஆண்ட அஸ்வபதி என்னும் மன்னனுக்கும் அவன் மனைவி மாலதிக்கும் மைந்தர்களில்லை. அறுபது வயதாகியும் அரியணைக்கு குழந்தைகளில்லாததனால் மன்னன் அத்தனை தெய்வங்களையும் வேண்டினான். அவனுடைய விதியை வெல்ல தெய்வங்களாலும் முடியவில்லை. அரசை அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவன் மாலதியுடன் காட்டுக்குச்சென்று அங்கே குடில்கட்டி மாடுகளை மேய்த்துக்கொண்டு வாழ்ந்தான். பசுக்களை மேய்த்து அதைமட்டும் கொண்டே வாழ்பவர்கள் முற்பிறவியின் பாவங்களைக் கழுவுகிறார்கள்.

காலையின் முதல்பொற்கதிர் அரைக்கணம்கூட மண்ணில் நிற்பதில்லை. ஆயிரம் வண்ணங்கள் கொண்ட சூரியனுக்கு ஒவ்வொரு வண்ணத்திலும் ஒரு பெயர், ஒரு தோற்றம். அவனுடைய ஒவ்வொரு பாவமும் ஒரு மகளாகப் பிறந்தன. பொன்வண்ணனாகிய சூரியனை சவிதா என்றனர் ரிஷிகள். அவனை காயத்ரியால் துதித்தனர். பொன்னிறமான சிந்தனைகளை மனதில் எழுப்பவேண்டுமென்று அவனிடம் பிரார்த்தனை செய்தனர். சவிதாவின் மகள் சாவித்ரி. அண்டவெளியில் உள்ள கோளங்களில் பூமியில் அவள் வாழ்வது அரைக்கணம் மட்டுமே. அந்தக்கணத்தில் அவளைப்பார்ப்பது எதுவானாலும் முழுமையடையும்.

ஒருநாள் காலை கணவன் எழுவதற்குள் எழுந்து சவிதம் என்ற அழகிய குளிர்ந்த தடாகத்தில் நீராடி அங்கே நின்ற தளிர்விட்ட மாமரத்தடியில் நின்று வணங்கிய மாலதி சாவித்ரியை கண்டாள். முளைவிட்ட புங்கமும், தளிர்விட்ட மாமரமும், பூவிட்ட கொன்றையும், காய்விட்ட செந்தென்னையும், கனிவிட்ட நெல்லியும், நெற்றான இலவமும் பொன்னிறத்தாளான சாவித்ரிக்கு பிரியமானவை. சாவித்ரி வந்து தொட்டதும் மாலதியின் உள்ளும் புறமும் ஒளியால் நிறைந்தன. மறுநாள் அவளறிந்தாள், அவளுக்குள் ஒரு கரு குடிகொண்டிருந்தது. அது பொன்னிறமான குழந்தையாகப் பிறந்ததும் அதற்கு சாவித்ரி என்று பெயரிட்டாள்.

கன்னிப்பருவமடைந்த சாவித்ரி பொன்னிறக்கூந்தலும் பொன்னிறக் கண்களும் கொண்டவளாக இருந்தாள். ஒளியைப்போலவே எங்கும் நிறைந்து பரவி தொட்டவற்றை எல்லாம் துலங்கச்செய்தாள். பொன்னிறக் குதிரைகளில் ஏறி காட்டில் அலைவதை அவள் விரும்பினாள். ஒருநாள் காட்டில் அவள் சத்யவானைக் கண்டாள். மெலிந்தவனாக துயருற்றவனாக இருந்த அவனை அவளுடைய தாய்மை அடையாளம் கண்டுகொண்டது. காயை கனியச்செய்யும் சூரியஒளிபோல அவள் அவனை அடைந்தாள்.

சௌபநாட்டு மன்னனாகிய தியமசேனரின் மகன் சத்யவான். தியமசேனர் முதுமையில் விழியிழந்தபோது அவரது தம்பியர் நாட்டைக் கைப்பற்றிக்கொண்டு அவரை காட்டுக்குத் துரத்தினர். காட்டில் வாழ்ந்த தியமசேனர் அங்கே சத்யவானை பெற்றெடுத்தார். வேட்டுவனைப்போலவே காட்டில் வளர்ந்த சத்யவானுக்கு அரசநெறியும் புராணங்களும் கலைகளும் தந்தையாலேயே கற்பிக்கப்பட்டன.

சத்யவானை சாவித்ரி ஒரு கொன்றை மரத்தடியில் சந்தித்தாள். கையில் கனிகளும் கிழங்குகளுமாக வந்த அவன் அவளைக் கண்டு திகைத்து நின்றான். அப்பகுதியே பொன்னொளி பெற்றதாகத் தோன்றியது. ஆணும் பெண்ணும் சந்திக்கும் தருணங்களை உருவாக்கும்போது பிரம்மன் மகிழ்ந்து தனக்குள் புன்னகை செய்துகொள்கிறான். அவன் அவளிடம் ஒரு சொல்லும் சொல்லாமல் திரும்பிச் சென்றுவிட்டான். அந்தக் கொன்றை காற்றிலாடி அவள்மேல் மலர்களைக் கொட்டியது. அவள் அவனைத் தொடர்ந்துசென்று அவன் யார் என்று கண்டுகொண்டாள்.

தியமசேனர் அவளுடைய குரலைக் கேட்டதுமே அவள் காதலை புரிந்துகொண்டார். சத்யவான் அவளுக்கேற்ற மணமகனல்ல என்றார். அவன் பிறந்ததுமே நீலம்பாரித்து உதடுகள் கறுத்து அசைவற்றுக்கிடந்தான். மருத்துவச்சி அவனைத்தூக்கி குலுக்கியபோதுதான் அழத்தொடங்கினான். அவனால் மரம் ஏறவோ விரைந்து ஓடவோ முடியாது என்பதை இளமையிலேயே கண்டு அவர் ஒரு மருத்துவரிடம் காட்டினார். மனிதனுக்குள் ஒரு புரவி இருக்கிறது என்றார் அந்த மருத்துவர். அதன் குளம்படிகளைக் கொண்டே மருத்துவர் நாடி பார்க்கிறார்கள். சத்யவானின் குதிரைக்கு மூன்றுகால்களே இருந்தன.

“இன்னும் ஒருவருடம்கூட அவன் உயிர்வாழமுடியாது பெண்ணே… அவனை நீ மறந்துவிடுவதே உன் குலத்துக்கு நல்லது” என்றார் தியமசேனர். ஆனால் “எது ஒன்றுக்காக உயிரைக் கொடுக்கமுடியுமோ அதற்காக மட்டுமே வாழ்வதே வாழ்க்கையின் இன்பம்” என்று சாவித்ரி சொன்னாள். அன்னையும் தந்தையும் குலகுருவும் சொன்னதை அவள் பொருட்படுத்தவில்லை. தியமசேனர் விலக்கியதை கருத்தில் கொள்ளவில்லை. சத்யவான் அஞ்சி விலகியதையும் எண்ணவில்லை. “நான் உன்னை விதவையாக்கிவிடுவேன் தேவி” என்றான் அவன். “அதற்குமுன் காதலால் என்னை மாமங்கலையாக்குவீர்கள்… அதுபோதும்” என்று அவள் சொன்னாள்.

கன்னியருக்கே உரிய மழலையில் விட்டு விட்டு சாவித்ரியின் கதையை சொல்லிக்கொண்டிருந்த அம்பிகை அந்த வரியைச் சொன்னபோது தொண்டை இடறி முகம் தாழ்த்திக்கொண்டாள். விசித்திரவீரியன் அவளைப்பார்த்தபடி பேசாமல் அமர்ந்திருந்தான். அவள் தன்கண்களை விரலால் அழுத்த விரலிடுக்குகள் வழியாக கண்ணீர் கசிந்தது.

பின்பு விடுபட்டு வெண்பற்கள் தெரிய புன்னகைசெய்து “நான் கதைகேட்டு அழுதேன்” என்றாள். “தெரிகிறது…” என்றான் விசித்திரவீரியன். “நீயே ஒரு விறலியைப்போல கதை சொல்கிறாய்.” அம்பிகை புன்னகைசெய்து “இல்லை…நான் விறலி சொன்னதை நினைத்துக்கொள்கிறேன்….என்னால் சொல்லவே முடியவில்லை” என்றாள். “நான் விறலியையும் அவள் கதையைக் கேட்ட உன்னையும் சேர்த்தே கேட்கிறேன். சொல்” என்றான் விசித்திரவீரியன்.

சாவித்ரி சத்யவானை மணம்புரிந்துகொண்டாள். மத்ரநாட்டு இளவரசி கணவனுக்காக அந்த வனத்தில் வந்து விறகுவெட்டி வாழ ஆரம்பித்தாள். அவன் அறிந்த காட்டை அவள் பொன்னொளியால் நிறைத்தாள். அவள் தொட்டதும் வேங்கையும் கொன்றையும் கொங்கும் மருதமும் பூத்து மலர் பொழிந்தன. அவள் கால்பட்டதும் நீரோடைகள் பொன்னிற சர்ப்பங்கள்போல நெளிந்தன. அவள் விழிபார்த்ததும் கருங்குருவிகள் பொன்னிறச்சிறகுகள் பெற்றன. அவளுக்கு சேவை செய்வதற்காக அப்ஸரஸ்கள் பொன்வண்டுகளாக மாறி காட்டுக்குள் நிறைந்தனர்.

ஒருவருடம் கழித்து ஒருநாள் அவர்கள் காட்டில் இருக்கும்போது சத்யவான் படுத்திருந்த மரத்தின் அடியில் காது அடிபடும் ஒலியும் மூச்சொலியும் கேட்டு அவள் எழுந்து பார்த்தபோது அங்கே ஒரு காட்டெருமை நின்றிருந்ததைக் கண்டாள். அதன் பச்சைநிறமான ஒளிவிடும் கண்கள் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தன. மெலிந்து வெளிறி பச்சைநரம்புகள் புடைத்த கழுத்தும் தோள்களுமாக, வாய்திறந்து மூச்சுவாங்கியபடி கிடந்த சத்யவானின் மூச்சு சீரடைவதையும் அவன் முகம் பொலிவுகொள்வதையும் கண்டாள். அவள் பார்த்திருக்கவே அவன் அழகும் இளமையும் ஒளியும் கொண்டவனானான். அவனிடம் அவள் எப்போதும் கண்டிராத வேகத்துடன் துள்ளி எழுந்து சிரித்தபடி அந்த காட்டெருமைமேல் ஏறிக்கொண்டான்.

பாய்ந்துசென்று சாவித்ரி அவனைத் தடுத்தாள். இருகைகளையும் விரித்து “எங்கே செல்கிறீர்கள்? என்னை விட்டுவிட்டுச் செல்கிறீர்களா?” ஏன்று கூவினாள். ஆனால் அவளை அவன் காணவே இல்லை. அவன் கண்கள் ஒளிபட்ட நீர்த்துளிகள் போல மின்னின. சிரித்தபடி “செல்க! செல்க!” என்று அவன் அந்த காட்டெருமையை ஊக்கினான். அது பாய்ந்து புதர்களைத் தாண்டி சேற்றுவெளியை மிதித்துக்கொண்டு காட்டுக்குள் சென்றது. சாவித்ரி அதன் வாலை இறுகப்பற்றிக்கொண்டாள். அவள் உடலில் முட்கள் கீறி குருதிவழிந்தபோதும், அவள் தலை பாறைகளில் மோதி சிராய்த்தபோதும் அந்தப்பிடியை அவள் விடவில்லை.

அந்த எருமை ஒரு கரிய மனிதனின் முன் சென்று நின்றது. கையில் இரும்பு உழலைத்தடியும் கயிறுமாக நின்ற அவன் காட்டெருமையை பிடித்து நிறுத்தினான். சத்யவானை சிரித்தமுகத்துடன் தழுவிக்கொண்டு திரும்பியபோதுதான் அவளைக் கண்டான். “பெண்ணே நீ யார்?” என்று கேட்டான். “மத்ரநாட்டு இளவரசியான என் பெயர் சாவித்ரி” என்றாள் அவள். “நீ இங்கே வரலாகாது. என்னைப்பார்ப்பதும் தகாது. விட்டுச்செல்” என்றான் அவன்.

“நான் என் கணவன் இன்றி செல்லமாட்டேன்” என்றாள் சாவித்ரி. “பெண்ணே, நீ அவனை இனி பெறமுடியாது. அவன் கண்களில் நீ படமாட்டாய். அவன் தன் வாழ்நாளை முடித்துக்கொண்டுவிட்டான். அவனை இறப்புலகுக்கு கொண்டுசெல்ல வந்திருக்கும் என்பெயர் காலன்” என்றான். “நான் எதையும் செவிகொள்ளமாட்டேன். கணவனை பின் தொடர்வது பெண்ணின் உரிமை” என்றாள் சாவித்ரி.

காலன் தன் பின்னால் ஓடிய கன்னங்கரிய நதியைக் காட்டி “இதன் பெயர் காலவதி…இந்த எருமை இதைத் தாண்டிச்செல்லப்போகிறது. இதற்குள் வைத்த இரும்புத்தடி அறுபட்டுத் தெறிக்கும் வேகம் கொண்டது. உடலுடன் எவரும் இதைத்தாண்டமுடியாது. விலகிச்செல்” என்றான்.

சாவித்ரி “என் கணவனை என்னுடன் அனுப்புங்கள். இல்லையேல் இதை நான் விடமாட்டேன்” என்றாள். “பெண்ணே இந்தப் பாதையில் செல்வது மட்டுமே பிரம்மனால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. திரும்புவதற்கு எவருக்கும் அனுமதியில்லை” என்று காலன் பதில் சொன்னான். “நான் என் கணவனில்லாமல் திரும்பமாட்டேன்” என்றாள் சாவித்ரி.

காலன் “காலவதியை கடக்க வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம். நீ உன் வீடு, குலம், பெற்றோர், உலகம் அனைவரையும் துறப்பதாகச் சொல்லி இந்த மரத்திலிருந்து ஓர் இலையைப்பறித்து நீரில் போடு” என்றான். சாவித்ரி அக்கணமே ஓர் இலையைப்பறித்து தன்னுறுதி சொல்லி அதை அந்நீரில் விட்டாள். எருமை நீரில் பாய்ந்து நீந்தியது. அதனுடன் அவளும் சேர்ந்து அந்நதியைக் கடந்தாள்.

அப்பால் வாயு சுழித்தோடும் ஒரு நதி இருந்தது. அதனருகே நின்றிருந்த கரியமனிதன் அதன் பெயர் சிந்தாவதி என்றான். அவன் பெயர் யமன். பாறைகளை தூசாக மாற்றும் வேகம் கொண்டது அது. அதில் இறங்கி தாண்டவேண்டும் என்றால் அவள் தன் உயிரை தானே பிரியவேண்டும். சாவித்ரி அக்கணமே இலையொன்றைப்பறித்து சிந்தாவதியில் இட்டு அதைக்கடந்து சென்றாள்.

மூன்றாவது நதி நெருப்பு சுழித்து ஓடுவதாக இருந்தது. அனைத்தையும் ஆவியாக்கி வானத்தில் கரைக்கும் வேகம் கொண்டது அது. அதன்பெயர் பிரக்ஞாவதி. “அதில் நீ உன் குழந்தைகளை எல்லாம் வீசவேண்டும்” என்றான் அதனருகே நின்ற காவலனாகிய ரௌத்ரன். சாவித்ரி கணமும் நினையாமல் தனக்குப்பிறக்கவிருந்த அத்தனை குழந்தைகளையும் அந்நதியில் வீசி அதைக்கடந்தாள். அங்கே ஒரு கருநிற வாயில் இருந்தது. அதன் வாசல்கதவுகள் இருள்போன்ற திரையால் மூடப்பட்டிருந்தன. எருமை அந்தத் திரையை தாண்டிச்சென்றது.

அந்தத் திரைக்கு அப்பால் நீலநிறமான ஒரு பெருநகரம் இருந்தது. அங்கே ஒளியாலான வீதிகளுக்கு இருபக்கமும் மாடங்கள் நீலவானத்தின் நிறம் கொண்டிருந்தன. நீலநிறமான கல்பக மரங்கள் கொண்ட பூங்காக்களில் நீலத்தின் ஆயிரம் நிறவேறுபாடுகளால் ஆன பறவைகளும் பூச்சிகளும் பறந்தன. நீலக்கலைமான்கள் மிதந்தன. நீல எருதுகள் ஒழுகின. நீலயானைகள் மேகங்களாக தழுவி நின்றன. கருநீலத் தடாகங்களில் நீலம் ஒளிரும் மீன்கள் துள்ளின.

மனிதர்களை மண்ணில் காலூன்றச்செய்யும் தீமைகளேதும் இல்லாத அவ்வுலகில் இறகுகள்போல பறந்தலைந்த மனிதர்கள் அனைவருமே அழியா இளமையுடனும் கலையாத நிறைநிலையுடனும் இருந்தனர். அந்நகர் நடுவே அந்தரத்தில் மிதந்துநின்ற மாபெரும் மாளிகைக்குள் அவள் சென்றாள். அங்கே சபாமண்டபத்தில் பெரும் தராசு ஒன்றின் முள் என அமைக்கப்பட்டிருந்த பீடத்தில் சிம்மாசனத்தில் கரிய உருவம்கொண்ட பேரரசன் ஒருவன் அமர்ந்திருந்தான்.

சாவித்ரியிடம் அவன் “என் பெயர் தருமன். கோடானுகோடி கல்பங்களாக இங்கே எவரும் இவ்வாறு வந்ததில்லை பெண்ணே. துறந்தவர்களுக்கு நான் அடிமை என நூல்கள் சொல்லியும் எவரும் துறப்பதில்லை. ஞானத்தை விட, தவத்தைவிட பிரேமையே மகத்தானது என்று இன்று அறிந்தேன். என்ன வரம் வேண்டும் கேள்” என்றான். “முன்பொருநாள் நசிகேதனுக்கு நான் மெய்ஞானத்தை அளித்தேன். நீ விரும்பும் அனைத்தையும் என்னால் அளிக்கமுடியும்.”

“என் கணவனை திருப்பித்தாருங்கள்” என்று சாவித்ரி கேட்டாள். “வேறெதையும் நான் வேண்டவில்லை.” “பெண்ணே அறவுலகின் வாயிலை நீ தாண்டிச்சென்றால் பிரம்மாவை மீறிச்செல்கிறாய். அழியா நரகில் நீ விழவேண்டியிருக்கும்” என்றான் தருமன். “அழியாநரகத்தில் நான் உழல்கிறேன், என் கணவனை மட்டும் அளியுங்கள்” என்றாள் சாவித்ரி. அவள் பிரேமையைக் கண்ட தருமன் சாவித்ரிக்கு அவள் தந்தையையும் நாட்டையும் கணவனையும் குலவரிசையையும் அளித்து வணங்கி அறவுலகின் வாயில்வரை வந்து வழியனுப்பினான்.

தன் கையைக் காட்டி அம்பிகை சொன்னாள் “இந்த பொற்சரடை விறலி என் கையில் கட்டினாள். வரலட்சுமியாகிய சாவித்ரியை வணங்கி நோன்பிருந்தால் மங்கலம் மறையாது என்றாள். நான் நோன்புகொள்ள உறுதிபூண்டு இதை கட்டிக்கொண்டேன்.” விசித்திரவீரியன் புன்னகையுடன் அவளுடைய முகத்தைப் பார்த்தான். சிறிய நாசி, சிறிய உதடுகள். குழந்தைக்கன்னங்களில் பருவத்தின் சிறிய பருக்கள். நெற்றியில் சுருண்டு காற்றிலாடிய மென்கூந்தல்சுருள்கள். விரிந்த கரிய கண்களுக்கு பேரழகை அளித்த பேதைமை.

“என்ன புன்னகை?” என்று  கேட்டாள். “இல்லை. வளையைவிட்டு வெளியே வரும் குழிமுயல் போலிருக்கிறாய். கன்னியாக வந்து பூங்காவில் உலவுகிறாய். ஆனால் உன் காதுகள் எச்சரிக்கையாக உள்ளன. சிறிய ஆபத்து என்றாலும் ஓடிச்சென்று உன் குழந்தைமைக்குள் பதுங்கிக்கொள்கிறாய்.” புரியாமல் “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “ஒன்றுமில்லை” என்றான். பின்பு மெல்ல அவளை அணைத்து தன் கைகளில் எடுத்துக்கொண்டான்.

அவன் கைகள் வழியாக அவள் தன்னுடலை கண்டுகொண்டாள். அவன் உடல் வழியாக தன் உடலுக்குள் புகுந்து நோக்கினாள். மூச்சுவாங்கும் குரலில் விசித்திரவீரியன் அவள் காதுக்குள் கேட்டான் “தலைமுறைகளாக நம் மனைவியர் சாவித்ரிநோன்பு கொள்கிறார்களே. அவர்களெல்லாம் எதை விட மறுக்கிறார்கள்?” அவள் அவ்வினாவை அக்கணமே சால்வையென நழுவவிட்டு ஆயிரம்காதவேகம் கொண்ட அந்த ரதத்தில் சென்றுகொண்டிருந்தாள். பின்பு ரதம் மலையுச்சியில் இருந்து வானில் எழுந்தது.

மெல்ல அது தரையில் இறங்கி செம்புழுதி கனத்துக்கிடந்த மென்பாதையில் ஓசையின்று உருளத்தொடங்கியதும் அவள் அந்த வினாவை நினைவுகூர்ந்தாள். வெண்ணிறவெளியில் அலையும்போதும் அவள் எண்ணிக்கொண்டது தன் குழந்தையைப் பற்றிதான். ஒருபோதும் தன்னால் பிரக்ஞாவதியை தாண்டமுடியாதென்று அறிந்தாள்.

மூச்சுவாங்கும் குரலில் “குழந்தையை விட்டுவிடமுடியுமா என்ன?” என்றாள். தானும் மூச்சுவாங்க “ஆம்… விட்டுவிடவும்கூடாது” என்றான் விசித்திரவீரியன். அவன் தொண்டையின் இருபக்கமும் இரு நரம்புகள் புடைத்து அசைவதுபோலத் தெரிந்தது. “குழந்தைதான் கணவனை சாகாமல் வைத்திருக்க எளிய வழி என எல்லா பெண்களுக்கும் தெரியும்” அவன் திணறியபடிச் சொல்லி வியர்வையுடன் மல்லாந்தான்.

“ஏன் இப்படி வியர்க்கிறது உங்களுக்கு?” என்றாள் அம்பிகை. ‘குடிநீர்’ என்று அவன் நெஞ்சைப்பற்றிக்கொண்டு சுட்டிக்காட்டினான். அவள் தன் ஆடையை மார்பில் அழுத்திப்பற்றியபடி எழுந்து நீர் இருந்த மண்குடத்தை அணுகி நீர் எடுத்து திரும்பியபோது அவன் கோணலாக விரிந்து கிடப்பதைக் கண்டாள். குரல்வளை புடைத்து எழ முகம் அண்ணாந்து மூக்கின் துளைகள் பெரிதாகத் தெரிந்தன. கைகள் விரிந்து விரல்கள் அதிர்ந்துகொண்டிருக்க இரு பாதங்களும் கோணலாக விரிந்திருந்தன.

அம்பிகை எழுந்தோடி அகல்சுடரைத் தூண்டி திரும்பிப்பார்த்தாள். நீலநரம்புகள் புடைத்தெழுந்து கட்டிவரிந்த வெளிறிய உடல் மெல்லத் தளர்ந்து மெத்தைமேல் படிய, உதடுகளைக் கடித்த பற்கள் இறுகிப்புதைந்திருக்க, கருவிழிகள் மேலே மறைந்து, விசித்திரவீரியன் கிடந்தான். அப்போது உடைகளை முழுதாக அணிவதைப்பற்றித்தான் அவள் மனம் முதலில் எண்ணியது என்பதை பிறகெப்போதும் அவள் மறக்கவில்லை. அவள் மேலாடையை அணியும்போது அவன் கடைசியாக மெல்ல உதறிக்கொண்டான். உடையணிந்து வாசலைத் திறந்து குரலெழுப்பியபடி ஓடும்போது அவன் முழுமையாகவே விலகிச்சென்றிருந்தான்.

நூல் ஒன்று – முதற்கனல் – 25

நூல் ஐந்து : மணிச்சங்கம்

[ 4 ]

ஆதுரசாலையில் உறங்கிக் கொண்டிருந்த விசித்திரவீரியன் ஸ்தானகர் வந்து எழுப்பியதும் கண்விழித்து சிவந்த விழிகளால் பார்த்து என்ன என்று புருவம் அசைத்தான். ஸ்தானகர் “பேரரசி” என்று சுருக்கமாகச் சொன்னதும் பதற்றத்துடன் எழுந்து “எங்கே?” என்றான். ஸ்தானகர் “முகமண்டபத்தில் இருக்கிறார்கள்” என்றதும் அவன் எல்லா புலன்களும் விழித்துக்கொண்டன. “இங்கா?” என்றான். “ஆம்” என்றார் ஸ்தானகர். பின்பு புன்னகையுடன் “கேகயநாட்டரசி போலத் தோன்றுகிறார்கள்” என்றார்.

சிரித்துக்கொண்டே உடையணிந்த விசித்ரவீரியன்மேல் மேலாடையை எடுத்துப்போட்ட ஸ்தானகர் “ஆனால் சொந்த மகனை வனத்துக்கு அனுப்ப வந்திருக்கிறார்கள்” என்றார். “எனக்கு ரகுவம்சத்தின் மூன்று அன்னையரில் கேகயத்து அரசியைத்தான் பிடித்திருக்கிறது ஸ்தானகரே. ஓர் அன்னைக்கு மூன்று குழந்தைகள் இருந்தால் எந்தக்குழந்தை தீராப்பசியுடன் முலையை உறிஞ்சுகிறதோ அதைத்தானே அதிகம் விரும்புவாள்” என்றான்.

ஸ்தானகர் “அன்னைப்பன்றி அந்தக்குழவிக்கு பாலூட்ட மெலிந்த குழவியைத் தின்றுவிடும்” என்று சொல்லி “இன்னும் சற்று பணிவு தங்களில் இருக்கலாமென நினைக்கிறேன் அரசே. கேகய அரசி பணியும் தலைகளை மட்டுமே கண்டு பழகியவர்” என்றார்.

ஸ்தானகர் அவன் கச்சையை கட்டியபடி “கொற்றவைபோல. தலைகளை எற்றி ஆடும்போது மட்டுமே கால்களில் கழல்களை உணர்கிறார்” என தனக்குத்தானே போல சொன்னார். “முதலில் உமக்கு சற்று பணிவு தேவைப்படும்” என்றான் விசித்திரவீரியன்.

அரச உடையுடன் விசித்திரவீரியன் வெளியேவந்தான். முகமண்டபத்தின் சாளரம் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு சத்யவதி நின்றிருந்தாள். ஒரே விழியசைவால் ஸ்தானகரை தலைவணங்கி வெளியேறச்செய்த பின்பு அவனை நோக்கித்திரும்பி “நேற்று என்ன நாள் என அறிவாயா?” என்றாள். விசித்திரவீரியன் பேசாமல் நின்றான். சத்யவதி “நேற்று கருநிலவுநாள்” என்றபின் அழுத்தமாக “உயிர்கள் கருவுறுவதற்கான நாள்” என்றாள்.

“ஆம்” என அவன் பேசத்தொடங்குவதற்குள் “சியாமை மூத்தவளை சோதனையிட்டிருக்கிறாள். அவள் சொன்னாள்” என்றாள் சத்யவதி. “ஆம்” என்று விசித்திரவீரியன் சொல்லி பார்வையை திருப்பிக்கொண்டு “நான் அவளிடம் வெறுமே பேசிக்கொண்டிருந்தேன்” என்றான்.

சத்யவதி சீறும் முகத்துடன் “உனக்கு வெட்கமாக இல்லையா? நீ ஒரு ஆண் என ஒருகணமேனும் உணர்ந்ததில்லையா?” என்றாள். விசித்திரவீரியன் விழிகளை அவளைநோக்கித் திருப்பி “நான் ஆணென்று உணராத ஒரு கணமும் இல்லை அன்னையே” என்றான். “சொல்லப்போனால் இவ்வுலகின் ஒரே ஆண் என்றும் உணர்ந்திருக்கிறேன்.”

சத்யவதி திகைத்தவள்போல நோக்கினாள். “புரவிகளின் கடிவாளத்தை எப்போதும் கையில் வைத்திருக்கிறவன்தான் சாரதி எனப்படுவான்” என்றான் விசித்திரவீரியன். “எனக்கு விரைவின் விதிகளை நீங்கள் கற்பிக்கவேண்டியதில்லை.”

அவள் அந்த நிமிர்வை எதிர்பார்க்காதவளாக சற்று திகைத்து பின்பு தன்னை மீட்டுக்கொண்டு “இதோபார், நான் உன்னிடம் விவாதிப்பதற்காக இங்கே வரவில்லை. உன் கவிச்சொற்களைக் கொண்டு என்னை நீ எதிர்கொள்ளவும் வேண்டாம்” என்றாள்.

“சொல்லுங்கள்” என்றான் விசித்திரவீரியன் அமைதியாக. “நான் அப்பெண்களை கவர்ந்துவரச்சொன்னது இந்தக் குலம் வளர்வதற்காக. உன் குருதியிலுள்ள சந்தனு மன்னரின் வம்சம் அவர்கள் வயிற்றில் முளைப்பதற்காக” என்றாள் சத்யவதி.

“அன்னையே, பெண் என்பவள் ஒரு வயல் என்றாலும்கூட அதை பண்படுத்தவேண்டியிருக்கிறதல்லவா?” விசித்திரவீரியன் கேட்டான். “அதற்கு உனக்கு நேரமில்லை” என்று சத்யவதி வாளால் வெட்டுவதுபோன்ற குரலில் சொன்னாள். “காத்திருக்க எனக்கு பொறுமையும் இல்லை.”

“நல்லது, நான் எக்கணமும் இறந்துவிடுவேன் என நினைக்கிறீர்கள்” என்றான் விசித்திரவீரியன். “ஆம், அதுவே உண்மை. ஷத்ரியப்பெண்ணாக உண்மையை எதிர்கொள்ள எனக்கு தயக்கமில்லை. அடுத்த கருநிலவுநாள் வரை நீ இருப்பாயென எனக்கு எந்த தெய்வமும் வாக்களிக்கவில்லை…”

விசித்திரவீரியன் அவளை இமைகொட்டாமல் சிலகணங்கள் பார்த்தபின் “அன்னையே, உங்களுக்கு நான் யார்?சந்தனுவின் வம்சத்தை ஏற்றிச்செல்லும் வாகனம் மட்டும்தானா?” என்றான்.

சத்யவதி திடமாக அவன் கண்களை உற்றுநோக்கி “ஆம், அது மட்டும்தான். உன்னால் படைநடத்தி ஷத்ரியர்களை வெல்லமுடியாது. அரியணை அமர்ந்து குடிகளுக்கு நீதிவழங்கவும் முடியாது. அப்படியென்றால் நீ யார்? நீ வெறும் விந்தின் ஊற்று மட்டும்தான். கற்களால் அடைக்கப்பட்டிருக்கும் பாழ் ஊற்று. உன்னிலிருந்து எவ்வகையிலேனும் ஒரு சிறுமைந்தனைப் பெறவேண்டுமென்பதற்கு அப்பால் இன்று நீ எனக்கு எவ்வகையிலும் பொருட்டல்ல” என்றாள்.

விசித்திரவீரியன் புன்னகையுடன் “கசப்பானதாக இருப்பினும் உண்மை ஒரு நிறைவையே அளிக்கிறது” என்றான். சத்யவதி அவனை நிலைத்த விழிகளுடன் நோக்கி “விசித்திரவீரியா, வாழைப்பூ இதழ்களைக் களைந்து உதிர்த்துவிட்டு கனிமட்டுமாவதுபோல மனிதர்கள் அவர்கள் மட்டுமாக ஆகும் ஒரு வயது உண்டு. நான் அதில் இருக்கிறேன். இன்று நான் என் விதியை முழுமையாகவே பார்த்துவிட்டேன். எங்கோ ஒரு மீனவர்குடிலில் பிறந்தேன். நதிமீது பித்தியாக அலைந்தேன். பேரரசியாக இந்த அரியணையில் இன்று அமர்ந்திருக்கிறேன். இத்தனை வேடங்கள் வழியாக விதியொழுக்கு என்னை கொண்டுசெல்லும் திசை என்ன என்று இன்று அறிந்தேன். என் அத்தனை முகங்களையும் இன்று களைந்துவிட்டேன். நான் இன்று சந்தனுவின் மனைவி மட்டுமே. என் கடமை மேலுலகம்சென்று அவரைப்பார்க்கையில் அவரிடமிருந்து நான் பெற்றவற்றை சிதையாமல் கையளித்துவிட்டேன் என்ற ஒற்றைச்சொல்லை நான் சொல்லவேண்டும் என்பது மட்டுமே. வேறெதுவும் எனக்கு இன்று முதன்மையானது அல்ல” என்றாள்.

விசித்திரவீரியன் “அன்னையே, நீங்கள் தென்திசையிலிருந்து வந்த சித்தர் சொன்னதென்ன என்று அறிந்தீர்களா?” என்றான். சத்யவதி “ஆம், நான் நேற்றே அவரை அழைத்து அனைத்தையும் அறிந்தேன். உன் மூலாதாரச் சக்கரம் வலுவுற்றிருக்கிறது என்று அவர்தான் சொன்னார். ஆகவேதான் துணிந்து உனக்கு மணிமஞ்சம் அமைத்தேன். முதுநாகரிடம் நாகரசம் கொண்டுவரவும் சொன்னேன்” என்றாள்.

“ஆனால் என் அநாகதம் அனலின்றி இருக்கிறது என்று சொன்னார்” என்றான் விசித்திரவீரியன் அவளை கூர்ந்துநோக்கியபடி. “அதற்கு அவரிடமே மருத்துவம் கேட்போம்” என்று சத்யவதி பார்வையை திருப்பிக்கொண்டாள்.

“அன்னையே, அவரே உங்களிடம் சொல்லியிருப்பார், அதற்கு மருத்துவம் இல்லை என்று. என் உயிர் சிலந்திவலையில் ஒளிரும் நீர்த்துளி போன்றது என்றார் அவர்” என்றான் விசித்திரவீரியன். அவள் என்னசெய்யவேண்டுமென எதிர்பார்க்கிறேன்? சாதாரண பேதைத்தாயைப்போல அழவேண்டுமா? அழுதால் என் அகம் நிறைவுறுமா?

“ஆம், அது நிலையற்றது என்று மட்டும்தான் அதற்குப்பொருள். அது உறுதியாக உதிரும் என அவர் சொல்லவில்லை” என்றாள் சத்யவதி. “அனைத்து ஷத்ரியர்களுக்கும் வாழ்க்கை அப்படித்தான் உள்ளது. களம்செல்பவன் எந்த உறுதியுடன் கச்சை கட்டுகிறான்?”

ஆம், இவள் பேதையென அழுதால் என் மனம் நிறையும். ஆனால் அக்கணமே அவளை வெறுக்கத்தொடங்குவேன். அவ்வெறுப்பு வழியாக இவள்மீது எனக்கிருக்கும் பேரன்பை வென்று விடுதலை பெறுவேன். ஆனால் இவள் என்னை அதற்கு அனுமதிக்கப் போவதேயில்லை. விசித்திரவீரியன் பெருமூச்சுடன் “நான் நேற்று ஒன்றை உறுதியாகவே உணர்ந்தேன்…” என்றான். “அவள் மார்பில் என் தலையை சாய்த்தபோது என்வலையின் அதிர்வை உணர்ந்தேன். நான் அவளுடன் இணைந்தால் உயிர்தரிக்கமாட்டேன்.”

சத்யவதி சினத்துடன் “அது உன்பிரமை…உனது மழுப்பல் அது.. உன் கோழைத்தனத்தைக்கொண்டு ஐயங்களை உருவாக்கிக் கொள்கிறாய்” என்றாள். “உன்னைக் கொல்பவை உன் ஐயங்கள்தான். உன் உதடுகளில் இருக்கும் இந்தச்சிரிப்பு நாகத்தின் பல்லில் இருக்கும் விஷம்போன்றது.”

“நாகவிஷம் அதைக் கொல்வதில்லை அன்னையே” என்றான் விசித்திரவீரியன். “அவளுடன் உறவுகொண்டால் நான் இறப்பது உறுதி…” என்று அவள் கண்களைப்பார்த்தான். அவை சிறு சலனம் கூட இல்லாமல் தெளிந்தே இருந்தன. விசித்திரவீரியன் “அதில் எனக்கு வருத்தமும் இல்லை. வாழ்வை அறிந்தவனாதலால் இறப்பையும் அறிந்திருக்கிறேன்” என்றான்.

“நேற்று முன்தினம் என்றால் இப்படி உங்களிடம் என் உயிருக்காக வாதிட்டிருக்கமாட்டேன். நேற்று அந்தப் பெண்ணை நான் அறிந்துகொண்டேன். விளையாட்டுப்பேழையைத் திறந்து மயிற்பீலியையும் வண்ணக்கூழாங்கற்களையும் எடுத்துக்காட்டுவதுபோல அவள் தன் அகம் திறந்துகொண்டிருந்தாள் நேற்று. அவளுடைய மங்கலமும் அழகும் எல்லாமே என் மெல்லிய உயிரில் உள்ளது என்று அறிந்தபோது நேற்றிரவு என் அகம் நடுங்கிவிட்டது. என்ன செய்துவிட்டேன், எப்படிச்செய்தேன் என்று என் உள்ளம் அரற்றிக்கொண்டே இருந்தது. அந்த இரு கன்னியரையும் அமங்கலியராக்கி அந்தப்புர இருளுக்குள் செலுத்திவிட்டு நான் செல்வது எந்த நரகத்துக்கு என்று எண்ணிக்கொண்டேன்.”

“நிறுத்து” என சத்யவதி கட்டுப்பாட்டை இழந்து கூச்சலிட்டாள். “முட்டாள், கோழை …உன்னை இக்கணம் வெறுக்கிறேன். உன்னைப்பெற்ற வயிற்றை அருவருக்கிறேன். இந்தத் தருணத்துக்காகவே வாழும் என்னை நீ அவமதிக்கிறாய். என் கனவுகளுடன் விளையாடுகிறாய்” மூச்சிரைக்க அவள் அவனைப்பார்த்தாள். அவள் கழுத்தில் மூச்சு குழிகளையும் அலைகளையும் உருவாக்கியது. கண்களில் நீர் வந்து படர்ந்தது. “நீ என் மகன் என்றால், நான் சொல்வதைக் கேட்டாகவேண்டும். இது என் ஆணை!”

“ஆணையை சிரமேற்கொள்கிறேன் அன்னையே” என்று விசித்திரவீரியன் சொன்னான். புன்னகையுடன் “அதற்காக இவ்வளவு பெரிய சொற்களை சொல்லவேண்டுமா என்ன? உங்களுக்குத் தெரியாததா என்ன? வாழ்வும் மரணமும் எனக்கு சமம்தான். ஆகவே நன்மையும் தீமையும்கூட சமமானதே. உங்களுக்காக இப்பெரும் தீமையைச் செய்கிறேன்… நிறைவடையுங்கள். உங்கள் அரண்மனைக்குச் சென்று ஓய்வெடுங்கள்.”

சத்யவதி அவனைப்பார்த்து “உன் சொற்களை நான் உறுதியென்றே கொள்கிறேன். நீ சந்திரவம்சத்து மன்னன் என்பதனால்” என்றாள். விசித்திரவீரியன் என்னதென்றறியாத ஒரு புன்னகை செய்தான். சத்யவதி மெல்லக்கனிந்து “மகனே, நான் சொல்வதை நீ சற்றேனும் புரிந்துகொள். நீ மணம்புரிந்துகொண்டு அரியணை ஏறினால் மட்டும் போதும் என்றுதான் நான் எண்ணினேன். ஆனால் உனக்கு மைந்தரில்லையேல் இந்நாட்டு மக்கள் அமைதியிழப்பார்கள் என்று தோன்றியது. அத்துடன்…”

விசித்திரவீரியன் “அந்த ஐயத்தை உங்கள் சொற்களால் சொல்லவேண்டியதில்லை அன்னையே” என்றான். சத்யவதி பதறி “இல்லை நான் அப்படி நினைக்கவில்லை…” என்றாள். “பதினாறு திசைகளிலும் நினைப்பவர் நீங்கள். அதை விடுங்கள்” என்றான் விசித்திரவீரியன்.

“நீ அரசியரைக் கைப்பிடித்து அரியணையில் அமரவேண்டும். உன் குருதி அவளில் முளைவிடவேண்டும்….நான் சொல்வது ஏனென்றால்…” என்றாள். விசித்திரவீரியன் அவள் தோளைப்பிடித்து “அனைத்தையும் அறிந்துகொண்டேன். நீங்கள் எதையும் சொல்லவேண்டியதில்லை” என்றான்.

“நான் கிளம்புகிறேன். முதுநாகரிடம் இன்றும் பேசினேன். அந்த மருந்தை இன்றும் அளிக்கிறேன் என்றிருக்கிறார். இன்றும் மணியறை அமைக்கச் சொல்கிறேன்” என்றாள். “தங்கள் ஆணை” என்றான் விசித்திரவீரியன் சிரித்தபடி.

சத்யவதி பெருமூச்சுடன் கண்களைத் துடைத்துக்கொண்டு “உன்னை ஆதுரசாலையில் மருத்துவர்கள் சோதனையிட்டபின் நேராகவே மணியறைக்குக் கொண்டுசெல்வார்கள். நாளை காலை நான் உன்னை சந்திக்கிறேன்” என்றாள். “இதுவும் ஆணை” என்றான் விசித்திரவீரியன் அதே சிரிப்புடன்.

சத்யவதி வெளியேறி ரதமருகே சென்றாள். அங்கே ஸ்தானகரும் மருத்துவர்களும் பிற ஆதுரசாலைப் பணியாளர்களும் நின்றனர். சத்யவதி ஒவ்வொருவரிடமும் ஓரிரு சொற்கள் மட்டும் பேசி ஆணைகளிட்டாள். அவர்கள் பணிந்து குறுகிய உடலுடன் அவற்றை ஏற்றனர்.

ஸ்தானகர் உள்ளே வந்து “அரசே பேரரசி கிளம்புகிறார்” என்றார். “ஆம், ஆணையிட்டுவிட்டாரல்லவா?” ஸ்தானகர் புன்னகைசெய்தார். விசித்ரவீரியன் “அவர் கடலாமை போல. முட்டைகளைப் போட்டுவிட்டு திரும்பிப்பார்ப்பதேயில்லை. அவை தானே விரிந்து தன்வழியை கண்டுகொள்ளவேண்டும்…” என்றான். ஸ்தானகர் “திரும்பிப் பார்ப்பவர்களால் ஆணையிடமுடியாது அரசே” என்றார்.

விசித்திரவீரியன் உள்ளிருந்து சத்யவதியின் அருகே வந்து “அன்னையே, இந்தக் கோடைகாலத்தில் இன்னும் சற்று காற்றுவீச நீங்கள் ஆணையிடலாமே” என்றான். சத்யவதி “அதற்கு தவ வல்லமை வேண்டும்…என் அரசை உன் கரத்தில் அளித்துவிட்டு வனம் சென்று அதை அடைகிறேன்” என்றாள். அவளுடைய அழகிய வெண்பற்கள் வெளித்தெரிந்தபோது அவன் ஒன்றை அறிந்தான், அவன் மனதில் பேரழகி என்பவள் அவள் மட்டுமே.

சத்யவதி ரதமேறுவதற்காக ஒரு சேவகன் சிறிய மேடையைக்கொண்டு அருகே வைத்தான். அவள் ரதப்பிடியைப்பற்றி ஏறியபோது அவள் மேலாடை சரிந்தது. விசித்திரவீரியன் புன்னகையுடன் அதை எடுத்து அவள் மார்பின்மேல் போட்டான். அவள் முகம் மலர்ந்து, கண்கள் புன்னகையில் சற்று சுருங்கின. அவன் தலைமேல் கையை வைத்து தலைமயிரை மெல்லக் கலைத்துவிட்டு ரதத்தில் ஏறிக்கொண்டாள்.

விசித்திரவீரியன் தன் அறைக்குச் சென்று உடைகளை மாற்றிக்கொண்டிருந்தபோது ஸ்தானகர் வாசலில் நின்று “பயணம் செல்லவிருக்கிறீர்களா அரசே?” என்றார். “ஆம்” என்றான். “மருத்துவர்களிடம் கலந்தாலோசித்துவிட்டுச் செல்லலாமே” என்றார் ஸ்தானகர். “தாங்கள் களம் காணவேண்டும் அல்லவா?”

விசித்திரவீரியன் உரக்கச்சிரித்துக்கொண்டு திரும்பினான் “இனிமேல் மருத்துவர்கள் தேவையில்லை ஸ்தானகரே. அனைவரையும் இப்போதே அனுப்பிவிடுங்கள்…” ஸ்தானகர் தயங்க “அனைவரையும் முகமண்டபத்துக்கு வரச்சொல்லுங்கள்” என்றான்.

முகமண்டபத்தில் வந்து கூடிய மருத்துவர்கள் அனைவருக்கும் விசித்திரவீரியன் பரிசுகளை வழங்கி நன்றி சொன்னான். “சுதீபரே, சித்ரரே உங்களைப்போன்று பலரின் கைகளை நான் பதினைந்தாண்டு காலமாக என் உடலில் அறிந்துவருகிறேன். அது ஒரு நல்லூழ் என்றே எண்ணுகிறேன். மனிதர்கள் வளர்ந்தபின்னர் அவர்களை எவரும் தீண்டுவதேயில்லை. அதிலும் ஆண்களை அன்னியர் தொடுவதென்பதேயில்லை. எந்தச்சொற்களையும் விட உடல் ஆன்மாவை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கிறது. உங்கள் கைகள் வழியாக உங்களனைவரையும் நன்கறிந்திருக்கிறேன். ஒருவேளை அடுத்தபிறவியில் நாம் இலங்கையை ஆண்ட ராவணனையும் தம்பியரையும்போல பிறக்கமுடியும்…” என்றான். உடனே சிரித்தபடி “முன்னதாகவே விண்ணகம் செல்வதனால் நானே மூத்தவன்” என்றான்.

ஸ்தானகர் தவிர பிறர் உதடுகளை இறுக்கி கழுத்து அதிர கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தனர். பரிசுகளை நடுங்கும் கரங்களால் பெற்றுக்கொண்டனர். விசித்திரவீரியன் ரதத்தில் ஏறிக்கொள்ள ஸ்தானகர் ரதத்தை ஓட்டினார். அவன் எங்கே செல்ல விரும்புகிறான் என்று கேட்காமல் ரதத்தை நகரை விட்டு வெளியே கொண்டுசென்றார். நகரம் முன்மதிய வெயிலில் கண்கூசும் தரையுடனும் கூரைகளுடனும் சுவர்களுடனும் மெல்ல இயங்கிக்கொண்டிருந்தது.

விசித்திரவீரியன் “ஸ்தானகரே, சித்ராங்கதர் கந்தர்வனிடம் போரிட்டு உயிர்துறந்த அந்தச் சுனைக்குச்செல்ல வழி தெரியுமல்லவா?” என்றான் “ஆம் அரசே, இப்போது அவ்விடம் வரை ரதசாலை அமைக்கப்பட்டிருக்கிறது. மாதம்தோறும் பேரரசி அங்கே சென்று மூத்தவருக்கான கடன்களை ஆற்றுகிறார்.”

VENMURASU_EPI_25
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

விசித்திரவீரியன் ரதத்தட்டில் அமைதியாக அமர்ந்துகொள்ள ஸ்தானகர் ரதத்தை நகரம் விட்டு கொண்டுசென்றார். ரதம் ஆழமான நதிப்படுகை போன்ற நிலம் வழியாகச் சென்றது “அஸ்தினபுரியில் முன்பு கங்கை ஓடியதென்று சொல்கிறார்களே ஸ்தானகரே” என்றான் விசித்திரவீரியன்.

“ஆம், மாமன்னர் ஹஸ்தி இங்கே நகரை அமைத்தபோது இது கங்கையாக இருந்தது. பின்பு கங்கை திசைமாறிச்சென்றுவிட்டது” என்றார் ஸ்தானகர். “ஏன்?” என்று விசித்திரவீரியன் கேட்டான். “அதன் நீர்ப்பெருக்கு பெரிதாகிவிட்டது. இந்தச் சிறிய வழி அதற்குப் போதவில்லை.” விசித்திரவீரியன் “சரிதான்” என்று சொல்லி உரக்கச் சிரித்தான்.

ரதத்தை கங்கைச்சாலையில் விரையவைத்து பக்கவாட்டில் திரும்பி தட்சிணவனம் நோக்கிச் சென்றார் ஸ்தானகர். வண்டிச்சக்கரங்களின் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. உயரமற்ற மரங்கள் கொண்ட குறுங்காட்டுக்குள் மான்கூட்டங்கள் நெருப்புக்கதிர்கள் போல சிவந்து தெரிந்து துள்ளி ஓடின.

ரதத்தில் அமர்ந்து காட்டையே பார்த்துக்கொண்டிருந்த விசித்திரவீரியனை ஸ்தானகர் பார்த்தார். குழந்தையாக இருந்தபோது அவ்வாறுதான் பார்த்துக்கொண்டிருப்பான். ஸ்தானகர் பெருமூச்சுவிட்டார். விசித்திரவீரியன் இறந்துவிடுவானென்பதில் அவருக்கும் ஐயமிருக்கவில்லை. நோயில் திளைத்துக் கொண்டிருக்கும்போதுகூட அவன் மரணத்தை அவ்வளவுதூரம் திட்டவட்டமாக சொன்னதில்லை. அவன் ஒருபோதும் வீண்சொற்கள் சொல்பவனும் அல்ல.

ரதத்தை நிறுத்திவிட்டு ஸ்தானகர் காத்திருந்தார். விசித்திரவீரியன் இறங்கி “இந்தக் குன்றுக்குமேல்தானே…நான் ஒருமுறை வந்திருக்கிறேன். அன்று இந்தப்படிகள் இல்லை. என்னை மஞ்சலில் தூக்கிச்சென்றார்கள்” என்றான்.

“தங்களால் ஏறமுடியுமா?” என்று ஸ்தானகர் கேட்டார். “ஏறிவிடுவேன்…நடுவே சற்று அமரவேண்டியிருக்கும்… இளங்காற்று இருக்கிறதே” விசித்திரவீரியன் சொன்னான். பின்பு ஸ்தானகரைப் பார்க்காமல் “ஸ்தானகரே…நீங்கள் என் அன்னையை… ” என ஆரம்பித்தான்.

ஸ்தானகர் இடைமறித்து திடமான குரலில் “அரசே தயைகூர்ந்து புதிய கடமைகளைச் சொல்லவேண்டாம். என் கடமைகளும் முடிகின்றன” என்றார். விசித்திரவீரியன் அவர் கண்களைப் பார்த்தான். ஸ்தானகர் “ஒரு தெய்வத்தை வணங்குபவனே உபாசகன். நான் வனம்புகும் தினத்தை நீங்கள் முடிவெடுக்கவேண்டும்” என்றார்.

விசித்திரவீரியன் சிரித்துக்கொண்டு “அப்படியென்றால் இங்கேயே இருங்கள் ஸ்தானகரே… நான் காற்று வடிவில் திரும்பி வருவதென்றால் நிச்சயமாக இங்குதான் வருவேன்” என்றான். ஸ்தானகரும் சிரித்து “சிறந்த இடம்… அப்பால் ஹிரண்வதிக் கரையில் தேவதாரு மரங்களும் உண்டு. நல்ல மணமுள்ள காற்று இணைந்துகொள்ளும்” என்றார்.

“ஆம்…ஆதுரசாலையிலேயே வாழ்க்கையை கழித்துவிட்டீர்” என்றான். சிரித்தபடி “நோயே இல்லாமல் ஆதுரசாலையிலேயே வாழும்படி உம்மைப் பணித்திருக்கிறான் தலையிலெழுதிய தருமன்” என்றான். ஸ்தானகர் புன்னகையுடன் “அது ஊழ்தான். ஆனால் என் தமையன் குறுவாளைக்கூடத் தீண்டாமல் பீஷ்மரின் ஆயுதசாலையிலேயே இதைவிட அதிகமாக வாழ்ந்திருக்கிறான்” என்றார். விசித்திரவீரியன் வெடித்துச்சிரிக்க ஸ்தானகரும் சிரிப்பில் சேர்ந்துகொண்டார்.

“நீங்கள் நாளையே இங்கு வரவேண்டியிருக்கும் ஸ்தானகரே” என்றான் விசித்திரவீரியன். ஸ்தானகர் சாதாரணமாக “நாளை என்றால் வளர்பிறை இரண்டாம்நாள் அல்லவா? நன்று” என்றார். “இங்கே ஒரு குடிலமைக்க எனக்கு ஒருநாழிகை போதும். நினைவுகளை மீட்டிக்கொண்டிருக்க வளர்பிறை சிறந்த பருவம்…” என்று காட்டைப்பார்த்தார்.

“ஆம், பதினெட்டாண்டுகால நினைவுகள்” என்றான் விசித்திரவீரியன். ஸ்தானகர் இரு கைகளையும் விரித்து “இந்தக்கைகளில் உங்கள் அத்தனை எலும்புகளும் தசைகளும் நரம்புகளும் உள்ளன அரசே! ஒரு கூடைக் களிமண் இருந்தால் அரை நாழிகையில் உங்கள் உருவத்தை வடித்து அருகே வைத்துக் கொள்வேன்” என்றார். விசித்திரவீரியன் சிரித்துக்கொண்டு படிகளில் ஏறத்தொடங்கினான்.

ஆமைமுதுகு போன்ற உயரமில்லாத அந்தப்பாறை எழுந்து நின்ற இரண்டு யானைப்பாறைகளால் சூழப்பட்டிருந்தது. அதன் மையத்தில் நீள்வட்டமான அந்தச் சுனை தொலைவிலேயே ஒளிரும் நீலநிறத்தில் தெரிந்தது. நீருக்கு அந்த நீலநிறம் அமையும் என விசித்திரவீரியன் கண்டதேயில்லை. அருகே நெருங்கியபோது அவன் மூச்சிளைத்தான். அங்கே வெட்டவெளியில் வானத்தின் ஒளி கண்கூசும்படி தேங்கியிருந்தது. ஆமையோட்டு மூடிகொண்ட அலங்காரப்பேழையில் பதித்த நீலக்கல் போன்ற அந்தச் சுனையருகே சென்று விசித்திரவீரியன் அமர்ந்தான்.

பிறசுனைகளைப்போல அது அசைவுகளை அறியவில்லை. அதை உற்றுநோக்கி அமர்ந்திருந்தபோதுதான் விசித்திரவீரியன் அது ஏன் என அறிந்தான். அந்தச்சுனையில் மீன்கள் இல்லை. நீரில்வாழும் எந்த உயிர்களும் இல்லை. சுற்றிலும் மரங்கள் இல்லாததனால் அதில் வானமன்றி எதுவும் பிரதிபலிக்கவில்லை. இருபெரும்பாறைகளும் இருபக்கமும் மறைத்திருந்தமையால் அதன்மேல் காற்றே வீசவில்லை. யுகயுகங்களாக அசைவை மறந்ததுபோலக் கிடந்தது அந்தச் சுனை.

விசித்திரவீரியன் குனிந்து நீரைப்பார்த்தான். சித்ராங்கதனை அதற்குள் இழுத்துக்கொண்டு சென்ற கந்தர்வனான சித்ராங்கதன் உள்ளே வாழ்கிறானா என்ன? சித்ராங்கதன் அந்நீரில் எதைப்பார்த்திருப்பான் என்பதில் அவனுக்கு ஐயமிருக்கவில்லை. எந்நேரத்திலும் வேசரநாட்டு ஆடி முன் நின்று தன்னைத்தானே நோக்கி ஆழ்ந்திருக்கும் சித்ராங்கதனையே அவன் கண்டிருக்கிறான்.

சில கணங்களுக்குப் பின்னர்தான் அவன் அந்த நீர்பிம்பத்தின் விசித்திரத்தை உணர்ந்து பின்னடைந்தான். நம்பமுடியாமல் மெல்லக் குனிந்து மேலும் நோக்கினான். அவன் விலகியபோதும் விலகாமல் அது நோக்கிக்கொண்டிருந்தது. அது சித்ராங்கதன். விசித்ரவீரியன் நெஞ்சின் துடிப்பை சிலகணங்களில் தணித்தபின் மெல்லிய குரலில் “மூத்தவரே, நீங்களா?” என்றான். “ஆம்…ஆனால் இது நீயும்தான்” என்றான் சித்ராங்கதன். “எப்படி?” என்றான் விசித்திரவீரியன்.

“நன்றாகப்பார்…பட்டுத்துணியை நீவி நீவி ஓவியத்தின் கசங்கலை சரிசெய்வதுபோல உன்னை இதோ சீர்ப்படுத்தியிருக்கிறேன்…” விசித்திரவீரியன் பார்த்துக்கொண்டே இருந்தான். அது அவனும் கூடத்தான். “மூத்தவரே, அதுதான் நீங்களா?” என்றான் தனக்குள் போல. “ஆம், அதைத்தான் நான் வாழ்க்கை முழுவதும் செய்துகொண்டிருந்தேன்” என்றான் சித்ராங்கதன்.

விசித்திரவீரியன் துயரத்துடன் “மூத்தவரே, நான் உங்கள் வாழ்க்கையை பாழ்படுத்திவிட்டேனா என்ன?” என்றான். சித்ராங்கதன் இளமை ஒளிரும் முகத்துடன் சிரித்து “பிரியமான முறையில் பாழ்படுத்திக் கொள்வதற்காகத்தானே வாழ்க்கை அளிக்கப்பட்டிருக்கிறது சிறியவனே?” என்றான். விசித்திரவீரியன் வருத்தம் விலகாமலேயே புன்னகை செய்தான்.